b


குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 ஆவது குருமகா

சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய

சுவாமிகள் வழங்கியருளிய

03 ஆசியுரை

ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்

நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே

பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்

சூடி னாய்அரு ளாய்சுருங் கஎம் தொல்வினையே.

(தி.3 ப.1 பா.1)

சிதம்பரம், சிற்றம்பலம்.

`ஓம்' என்ற பிரணவத்தை முதலில் சொல்லிய பிறகே வேதம் ஓத வேண்டும் என்பது வடமொழி வேத மரபு.

அதைப் போலவே தமிழ் வேதமாகிய திருமுறைகளைப் பிரணவ வடிவாயுள்ள "திருச்சிற்றம்பலம்" என்ற சொற்றொடரைச் சொல்லியபிறகே ஓதவேண்டும் என்பது தமிழ்வேத மரபு.

"சித்பரவியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி" என்பது சேக்கிழார் திருவாக்கு. "சித்பரவியோமம்" என்பது அறிவாகாயம் எனப்படும். அதுவே பிரணவ வடிவம். அதுவே திருச்சிற்றம் பலமுமாம். சித் - அறிவு. அம்பரம் - ஆகாயம், எனவே சிதம்பரம் என்பது அறிவாகாயம் எனப்பெறும்.

அறிவு என்பது பதியறிவையே குறிக்கும். பசு, பாச அறிவைக் குறியாவாம். சிற்றம்பலம் - சிறுமை அம்பலம். சிற்றம்பலம்- இதுவும் ஞானாகாயப் பெருவெளியையே குறிக்கும்.

சிதம்பரம் எனினும் சிற்றம்பலம் எனினும் ஒக்கும்.

ஐந்தொழில் நடனம்:

இச்சிற்றம்பலத்திலே நடனமிடும் பெருமானே நடராஜப் பெருமான். இவருடைய நடனம் "பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவம்" எனப் பேசப்பெறும். ஐந்தொழில் நடனத்தையே வடமொழியில் இப்படிக் கூறுவர்.

இவருடைய நடனத்தால் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களும் ஆனந்தமாக நடைபெறுகின்றன.

படைத்தல், அவர்தம் வலதுமேல் கரத்தில் உள்ள உடுக்கை ஒலியால் நிகழ்கிறது.

காத்தல், அவர்தம் வலதுகீழ்க் கரமாகிய அபயகரத்தால் நிகழ்கிறது.

அழித்தல், அவர்தம் இடது மேல்கரத்தில் உள்ள அக்கினியால் நிகழ்கிறது.

மறைத்தல், முயலகன்மீது அவர் ஊன்றிய வலது திருவடியால் நிகழ்கிறது.

அருளல், அவர்தம் தூக்கிய திருவடி என்றும், குஞ்சிதபாதம் என்றும் பேசப்பெறும் இடது திருவடியால் நிகழ்கிறது.

ஊன நடனம்:

ஐந்தொழிலால்தான் உயிர்கள் பிறந்தும், வாழ்ந்தும், இறந்தும் பலகோடி பிறவிகள் எடுக்கின்றன. எடுப்பதால் பிறவிதோறும் சிறிது சிறிதாக வளர்ச்சியடைகின்றன. வளர்ச்சி அடைய அடைய ஆசாபாசங்கள் சிறிது சிறிதாக அகல்கின்றன. ஆசாபாசம் அகலவே முத்திப்பேற்றை அடையத் தகுதி பெறுகின்றன. ஆசாபாசங்களில் உழன்று நிற்கும் நிலையில் ஆன்மாக்கள் பெத்த நிலையில் உள்ளன. அஃதாவது கட்டு நிலையில் உள்ளன. இவ்வான்மாக்களைப் பக்குவப்படுத்தும் நடனத்தை ஊன நடனம் என்பர்.

ஞான நடனம்:

பிறவியில் அருவருப்புற்று இனிப் பிறவி வேண்டாம் என்ற மனோநிலை எய்திய ஆன்மாக்கள் முத்தான்மாக்கள் எனப்பெறுவர்.

அவர்களை ஈடேற்றம் செய்வதற்குப் புரியும் நடனம் "ஞான நடனம்" எனப்பெறும்.

முன்சொல்லிய நடராஜப் பெருமானின் வலது மேற்கரத்தில் உள்ள உடுக்கை ஒலி, முன்பு பெத்த காலத்தில் உலகைத் தோற்றுவித்தது. அதே ஒலி இப்பொழுது முத்தான்மாக்களின் மாயையை உதறுகிறது.

இடது மேல் கரத்தில் உள்ள அக்கினி வல்வினையைச் சுட்டு அழிக்கின்றது.

முன்சொன்ன அதே வலதுபாதம் முயலகனாகிய ஆணவத்தை அமுக்குகிறது.

முன்சொன்ன அதே இடதுபாதம் ஆகிய குஞ்சிதபாதம் முத்தான்மாக்களாகிய உயிர்களைப் பிறவிக்கடலினின்றும் அருளால் எடுக்கிறது.

குஞ்சிதபாதமாகிய ஆடியபாதம், பிறவிக் கடலினின்றும் எடுத்த உயிர்களை, அத்திருவடியினின்றும் நெகிழ்ந்து விடாமல், அவ்வருள் திருவடியிலேயே பேரின்பம் நுகர, பெருமானின் வரதகரமாகிய இடதுகரம் தூக்கிய திருவடிக்குமேல் வளைந்து நின்று, தூக்கிய திருவடியில் ஆன்மாக்களை அழுத்தி, பேரின்ப வீட்டைப் பெறச் செய்கிறது.

ஒன்றில் இரண்டு:

நடராஜப் பெருமான் ஒரே ஆட்டத்தில் ஊன நடனம், ஞான நடனம் என்ற இருவேறு நடனங்களையும் நிகழ்த்தி, பெத்தான்மாக்களின் ஆசைகளை ஊன நடனத்தால் நிறைவேற்றியும், அநுபவித்து உவர்ப்புத் தோன்றி, வீடுபேற்றில் விருப்புத் தோன்றும் முத்தான்மாக்களுக்கு ஞான நடனத்தால் வீடுபேற்றை நல்கியும் அருள் புரிகிறார்.

இவற்றையெல்லாம் நமக்குத் தெளிவாக விளக்கியுள்ள உண்மை விளக்கம் என்ற சித்தாந்த நூலில் உள்ள இரு பாடல்களையும் காண்போம்.

ஊனமும், ஞானமும்:

ஊனம் என்பது குறைவைக் குறிப்பது. குறைவுடைய உடல் தோற்றத்தையும், பஞ்ச பூத உலகத் தோற்றத்தையும் குறிப்பது. ஊனம்- குறைவு; தசை.

ஞானம் என்பது நிறைவைக் குறிக்கும்.

குறைவுடைய உயிர்களை நிறைவு செய்தற்பொருட்டு முதலில் ஊன நடனம் புரிந்து, அவ்வுயிர்களை முத்தான்மா நிலைக்கு உயர்த்துவதால் அது ஊன நடனம் எனப்பெற்றது.

முத்தியில் விருப்புற்ற அவ்வுயிர்களை ஈடேற்றம் செய்யப் புரிவதே ஞான நடனம். உயிர்களின் மாயையை உதறி, வல்வினையைச் சுட்டு, ஆணவ மலத்தை அமுக்கி, தூக்கிய திருவடியால் உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் எடுத்து, அவ்வாறு எடுக்கப்பெற்ற உயிர்களைத் திருவடியிலேயே வரத கரத்தால் அப்பேரின்பத்திலேயே திளைக்கச் செய்வதும், பேரா இன்பப் பெருவாழ்வாம். முத்தி நிலையைப் பெறுமாறு செய்வதும் ஞான நடனமாம்.

ஊன நடனப் பாடல்:

தோற்றம் துடியதனில் தோயும்திதி அமைப்பில்

சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாம்

ஊன்றுமலர்ப் பதத்தே உற்றதிரோதம் முத்தி

நான்ற மலர்ப்பதத்தே நாடு

-திருவதிகை மனவாசகங் கடந்தார்

ஞான நடனப்பாடல்:

மாயைதனை உதறி, வல்வினையைச் சுட்டு,மலம்

சாயஅமுக்கி, அருள்தான் எடுத்து - நேயத்தால்

ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்

தானெந் தையார் வரதந் தான்

-திருவதிகை மனவாசகங் கடந்தார்

பிறவிக் கடலினின்றும் கரையேறும் ஆர்வமுள்ள முத்தான்மாக்களைப் பெருமானுடைய அருளாகிய இடதுபாதம் எடுக்கிறது.

பெருமானுடைய இடது கீழ்க் கரமாகிய வரதகரம் அருள் வெள்ளத்திலே அமுக்கி பேரானந்தம் உறச் செய்கிறது. இதனால் வரதம் என்பதே சிறந்த பாடம். பரதம் என்பது பாடம் அன்று. வரதம்- அருளல்.

இரு பேரரசர்கள்:

சைவ உலகில் இரண்டு இராஜாக்கள் உள்ளனர். ஒருவர் நடராஜா, மற்றொருவர் தியாகராஜா.

நடராஜாவே ஊன நடனம், ஞான நடனம் என்னும் இரு நடனமும் செய்தபோதிலும், ஞான நடனத்தைப் புலப்படுத்தவே, தியாகராஜாவாகத் திருவாரூரில் எழுந்தருளினார். அவர் அமரர் நாட்டிலிருந்த ஐஸ்வர்யங்களை எல்லாம் உதறி, ஆரூர் நுண் மணலையே இடமாகக் கொண்டு தியாகராஜாவாகத் திருவாரூரிலே வீற்றிருக்கிறார்.

நடராஜப் பெருமான் செய்யும் நடனம் ஆனந்த நடனம். தியாகராஜா செய்யும் நடனம் அசபா நடனம். இது மூச்சுக் காற்றால் நிகழ்வது.

நடராஜர் நின்று ஆடுகிறார். இவர் இருந்து ஆடுகிறார்.

நடராஜர் நடனம் போக நடனம், போகம் என்பது இன்ப துன்ப அனுபவம். தியாகராஜர் நடனம் யோக நடனம். யோகம் என்பது துன்பக் கலப்பில்லா இன்ப அநுபவம்.

அவர் நடனம் பிறவியைத் தொடுவது. இவர் நடனம் பிறவியை விடுவது.

எனவேதான் நடராஜப் பெருமானை, "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக, குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக, இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில், தனிப்பெருங்கூத்தின், வந்த பேரின்ப வெள்ளத்துள், திளைத்து, மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்த" சுந்தரரை விரைவில் விடுவிப்பது கருதியே "திருவாரூருக்கு நம்பால் வருக" எனத் தியாகேசர் அழைத்தார் போலும்.

நடராஜ மூர்த்தியும், சத்து - உள்ளது. சித்து - அறிவு. ஆட்டம்- ஆனந்தமாய் உள்ளவர்.

தியாகராஜ மூர்த்தியும் சத்து சித்து ஆனந்தமாய் உள்ளவரே.

இருப்பினும், நடராஜமூர்த்தி உலக போகங்களை உயிர்கட்கு அருத்தி பக்குவப்படுத்துபவராகவும், தியாகராஜ மூர்த்தி உலக போகங்களைத் துய்த்து உவர்ப்புத் தோன்றிய முத்தான்மாக்களை - பக்குவப்பட்ட உயிர்களை- ஈடேற்றம் செய்பவராகவும் கொள்ளலாம்.

சுந்தரர் யோகநெறி விளக்க வந்தவர் என்ற குறிப்பும், திருவாரூர் மூலாதார கே்ஷத்திரம் என்ற குறிப்பும், அருணகிரி நாதரின் ஆதாரத் தொளியானே, ஆரூரிற் பெருமாளே என்ற குறிப்பும், `உயிராவண மிருந்து உற்று நோக்கி, உள்ளக் கிழியின் உரு எழுதி, உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத்தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி, அயிராவணம் ஏறாது ஆன் ஏறேறி, அமரர் நாடாளாதே ஆரூர் ஆண்ட, அயிர் ஆம் வண்ணமே என் அம்மானே, நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே' என்ற அப்பர் குறிப்பும் இக்கருத்தை ஓராற்றால் புலப்படுத்துவது காணலாம்.

ஆசை தீரக் கொடுப்பார்:

மேலும் இரண்டாம் திருமுறையில் உள்ள திருக்கடவூர் மயானத்து "வரிய மறையார்" எனத் தொடங்கும் திருப்பதிகத்துள்,

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்

ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்

காசைமலர்போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்

பேசவருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே (தி.2 ப.80 பா.7)

என்ற பாடல், பெத்தான்மாக்களுக்குள்ள ஆசைகள் தீருமாறு போகப் பொருளைப் பலகாலும் கொடுத்து, அவர்களது ஆசைகள் தீருமாறு செய்வது ஊன நடனம் செய்யும் பேருதவி.

பாசமான களைதலும், பரிவார்க்கு ஆரா அமுதாய் அருளலும், அஃதாவது பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவித்தலும் ஞான நடனம் செய்யும் பேருதவி. இதனைத் தியாகராஜப் பெருமான் செய்கிறார்.

இருநடனத்தையும் நடராஜப் பெருமானே செய்தருள்கிறார் எனினும், ஞான நடனத்திற்கென்று ஒரு தனிமூர்த்தியாகத் தியாகராஜா திகழ்கிறார்.

மூன்றாம் திருமுறை - முதல் பதிகம்:

ஒன்று, இரண்டு திருமுறைகளின் முதலில் தொடங்கும் பதிகம் சீகாழியைப் பற்றியதாகவே பல பதிப்புக்களிலும் பதிப்பித்து உள்ளனர். மூன்றாம் திருமுறையில் அவ்வாறின்றி, சிதம்பரப் பதிகமாகிய `ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்' என்று தொடங்கும் தில்லைப் பதிகத்தை முதலில் அமைத்துள்ளனர். இப்பதிப்பிலும் அவ்வண்ணமே பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

`ஆடினாய்' என்ற சொல், நெய், பால், தயிரை அபிஷேகப் பொருளாக ஆட்டிக் கொண்டாய் என்பதோடு, நடனம் ஆடினாய் - அதனால் உலகுயிர்களை ஈடேற்றம் செய்தாய்-என்ற குறிப்பும் அதில் உள்ளதை உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

கூத்தப்பிரான் பஞ்ச கிருத்திய பரமானந்தத் தாண்டவம் ஆடுகிறார். ஆடுதற்கு ஏற்ற இடமாக, சிற்றம்பலத்தை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார். இக்கருத்தை, `சிற்றம்பலம் நாடினாய்' என்பதனால் தெளிவுபடுத்துகிறார் திருஞானசம்பந்தர்.

நடராஜப் பெருமான் `நாடி' ஏற்ற இடமாதலின், அது சந்தானாசாரியருள் ஒரு ஆசிரியருக்குப் பெயராகவே அமைந்து விட்டது. சித்தர்காடு சிற்றம்பலம் நாடியார் என்ற பெயர் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

ஆறாதாரத் தலங்கள்:

மூலாதாரத் தலம் (மண்) திருவாரூர், சுவாதிட்டானத் தலம் (நீர்) திருவானைக்கா, மணிபூரகத் தலம் (நெருப்பு) திருஅண்ணா மலை, அனாகதத் தலம் (ஆகாயம்) சிதம்பரம், விசுக்தித் தலம், (காற்று) திருக்காளத்தி, ஆக்ஞா தலம் (ஆணைத் தலம் - புருவ மத்தி) ஷ்ரீ காசியாகும்.

உயிரினங்கள் செயல்படுவதற்குப் பூமி மூலமாக இருப்பதால் பூமியை மூலாதாரத் தலமாகக் கொண்டுள்ளனர். சுவாமி பெயர் திரு மூலட்டானர் என்பது குறிக்கத் தக்கது.

அதேபோல் உலகம் முழுவதும் இயங்குதற்கு ஆகாயம் ஆதாரமாக நிற்றலால் ஆகாயமும் மூலாதாரம் எனப்படுகிறது. அதுபற்றியே சிதம்பரமும் ஒருவகையில் மூலாதாரத் தலமாகப் பேசப்படுகிறது. சுவாமி திருமூலநாதர் எனக் குறிக்கப் படுவதும் நினைக்கத் தக்கது. இதனால் சிதம்பரத் தலமும், நடராஜப் பெருமான் கூத்தும் உலக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

நடராஜப்பெருமான் ஆட்டம் இல்லையேல் உலக இயக்கமே இல்லை. அவருடைய ஆட்டமே உலகத்தை இயக்குகிறது. அணு அசைந்து கொண்டே இருக்கிறது என்ற விஞ்ஞான நுட்பமும் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

மனித்தப் பிறவியும் வேண்டுவதே, எப்போது?

இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் ஆறறிவு படைத்த மனிதப் பிறவியும் வேண்டுவதே, என்றார் அப்பர் பெருமான்.

கடவுள் உணர்வும் வழிபாடும் கைவரப் பெறாவிட்டால் ஆறறிவு படைத்த மனிதப் பிறவி தேவையில்லை; ஓரறிவு முதல் ஐயறிவு வரை பெற்றுள்ள தாவரம், கறையான், வண்டு, விலங்கு முதலிய பிறவிகளாகவே பிறந்திருக்கலாம் என்பதே அப்பர் திருவுள்ளம்.

சிதம்பர ரகசியமே ஆகாயம். நடராஜப் பெருமானின் ஆட்டமே அணு அசைவைப் புலப்படுத்தி உலகத்தை இயக்குகிறது. அவர் ஆட்டம் ஓய்ந்தால் உலக இயக்கமே நின்றுவிடும்.

அதுபோல் மனித இதயத்துள் (தகராகாசம்) சிறு ஆகாயம் உள்ளது. அதில் உள்ள, துடிப்பே ஆட்டம். அது நின்றால் மனித இயக்கம் நின்று விடும். இத்தத்துவத்தை உணர்ந்து வழிபட்டு உய்வோமாக.

அந்தணர் பிரியாத சிற்றம்பலம்:

இப்பதிகத்துள், தில்லைவாழ் அந்தணர்களை `அந்தணர் பிரியாத சிற்றம்பலம்' என்றும், `நல்லவர் பிரியாத சிற்றம்பலம்' என்றும் குறித்துள்ளார். இடையீடின்றிப் பிரியாது வழிபடுவது, உடன் பெரும்பயன் தருவது.

மேலும், `சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம்' - `தில்லையார் தொழுதேத்து சிற்றம்பலம்'- என்றும் குறித்துள்ளார். வழிபாட்டிற்குச் `சீலம்' மிக முக்கியமானது.

மேலும், நீலத்தார் கரியமிடற்றார் நல்ல, நெற்றிமேலுற்ற கண்ணினார், பற்றுசூலத்தார், சுடலைப்பொடி நீறணிவார், சடையார், சீலத்தாராகத் தில்லை வாழந்தணர்களைச் சிவனது உருவு கொண்ட சிவகணநாதர்களாகத் தரிசித்தார் ஞானசம்பந்தர்.

இதனைச் சேக்கிழார் பெருமானும் ஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகண நாதர்களாகக் கண்ட காட்சியை, அவர் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் காட்டினார் என்று தெரிவிக்கின்றார் . அப்பாடல் வருமாறு:

அண்டத் திறைவர் அருளால் அணிதில்லை

முண்டத் திருநீற்று மூவாயிர வர்களும்

தொண்டத் தகைமை கணநாதராய்த் தோன்றக்,

கண்டப் பரிசுபெரும் பாணர்க்கும் காட்டினார். (தி.12 -2068)

பொய்யிலா மறையோர்:

அடுத்ததாக உள்ள பதிகம் பூந்தராய்ப் பதிகம் (சீகாழி). `பந்துசேர் விரலாள்' எனத் தொடங்குவது.

முதல் பாடலில் மலைமாதொடும் ஆதிப்பிரான் எழுந்தருளியுள்ள பூந்தராய்ப் பதியில், வானவர்கள் நிறைந்து வலஞ் செய்து, புத்தி பூர்வமாக இறைஞ்சி, மாமலர் துவிப் போற்றுதலைக் குறிப்பிடுகின்றார். `பொய்யிலா மறையோர் பயில் பூந்தராய்' என அந்தணர்களைப் போற்றுகிறார்.

`பொய்மொழியா மறையோர் என்றும், `மெய்மொழி நான்மறையோர்' என்றும் முதல் திருமுறையில் ஞானசம்பந்தரும், `பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப், புகழ்புரிந்தார்க்கு அருள் செய்யும்' என்று நான்காந் திருமுறையில் அப்பரும் போற்றியுள்ளவை கருத்தில் கொள்ளத் தக்கன.

சம்பந்தர், அப்பர் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு. அக்காலத்தில்தான் சீன யாத்திரீகர் யுவான் சுவாங் என்பவர் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் சுற்றிப் பார்த்து இங்குள்ள மக்கள் பொய் பேசாதவர்கள், வஞ்சகம், சூது இல்லாத நல்லவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 1300 ஆண்டுகளில் நாம் எவ்வளவு தூரம் ஆன்மீகத்தில் வளர்ச்சியின்றிச் சரிந்துள்ளோம் என்பதும், அருணகிரிநாதர், இறைவன் `பொய்யர் உள்ளத்து அணுகான்' என்று கூறியிருப்பதும் , சிந்தனைக்குரியன.

அமைப்பு முறை:

மூன்றாந் திருமுறையில் 84 திருத்தலங்கள் 121 திருப்பதிகங் களால் போற்றப் பெறுகின்றன. பொதுப்பதிகங்கள் நான்கினைச் சேர்த்து 125 திருப்பதிகங்கள் உள்ளன. காந்தார பஞ்சமத்தில் 23, கொல்லிப் பண்ணில் 18, கொல்லிக் கௌவாணத்தில் 1, கௌசிகத்தில் 12, பஞ்சமத்தில் 11, சாதாரியில் 33, பழம் பஞ்சுரத்தில் 17, புறநீர்மையில் 6, அந்தாளிக் குறிஞ்சியில் 2, ஆக ஒன்பது பண்களும், 125 பதிகங்களும் உள்ளன.

126ஆவது பதிகம் பிற்சேர்க்கையாகிய திருவிடைவாய்ப் பதிகம் ஆகும். இப்பதிகம் கல்வெட்டிலிருந்து கிடைத்துள்ளது. சென்னை கல்வெட்டறிக்கை 8/1918இல் காணலாம். இப்பதிகம் மூன்றாம் திருமுறை இறுதியில் இடம்பெற்றுள்ளது.

மூல இலக்கியம்:

திருஞானசம்பந்தர் இசைத்தமிழில் இயற்றமிழைக் குழைத்து வளம் பெறும் வகையில் அரிய பலவிகற்பச் செய்யுட்களை அருளிச் செய்துள்ளார். அவை அவரது திருப்பதிகங்களில் மொழி மாற்று, மாலை மாற்று, வழிமொழி மடக்கு, இயமகம், ஏகபாதம், இருக்குக் குறள், எழுகூற்றிருக்கை, ஈரடி, ஈரடிமேல்வைப்பு, நாலடி, நாலடிமேல் வைப்பு, முடுகியலாகிய திருவிராகம், சக்கரமாற்று முதலிய பெயர்களில் உள்ளன.

விகற்பச் செய்யுட்களுக்கு இலக்கணம் காண்போர்க்கு இவையே மூல இலக்கியமாகத் திகழ்வது என்பதைச் சேக்கிழார் இருபாடல்களால் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது.

மூன்றாந் திருமுறையில், இவ்வியாப்புவகைத் திருப் பதிகங்கள் பலவும் சீகாழிப் பெருமானைப் பற்றியனவாகவே அமைந்துள்ளன.

அஞ்செழுத்துப் பதிகம்:

ஞானசம்பந்தருக்கு உபநயன காலத்தில் வேதம் ஓதும் உரிமை தந்தோம் என்ற அந்தணர்கட்கு, வேதத்தில் முக்கியமாயுள்ள அஞ்செழுத்தின் சிறப்பை ஞானசம்பந்தர் எடுத்தோதினார். அத்திருப்பதிகம், "துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்' (தி.3 ப.22 பா.1) என்பது.

சோதியில் கலக்கும்போது நிறைவாக ஓதிய, நமச்சிவாயத் திருப்பதிகமாகிய, "காதலாகிக் கசிந்து" என்பதாகும். இதில் "வேதம் நான்கினும் மெய்ப்பொருள் நாதன் நாமம் நமச்சிவாயவே"(தி.3 ப.40 பா.1) - என்று ஓதி நிறைவு செய்கின்றார்.

தேவாரம் அருளிய மூவருமே, தூலபஞ்சாக்கரமாகிய நமச்சிவாயத் திருப்பதிகம் ஒவ்வொன்றருளியுள்ளனர். ஞானசம்பந்தர், தூலசூக்கும, அதிசூக்கும பஞ்சாக்கரங்களை உள்ளடக்கித் தொகுப்பாக அஞ்செழுத்தின் பெருமையை உணர்த்த "துஞ்சலும் துஞ்சல்" என்ற பதிகம் அருளியுள்ளார்.

முதலில் ஓதிய இத்திருப்பதிகத்திலும், இறுதியில் ஓதிய `காதலாகி' என்னும் பதிகத்திலும் முதல் பாடல்களில் ஓதும் முறையை அறிவித்துள்ளார். "நெஞ்சகம் நைந்து நினைமின்" நினைத்தால் வாழ்வில் வரும் கூற்றம் முதலிய இடர்களை அகற்றலாம் - என்கிறது முதல் பதிகம். அதையே "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது" என்று சொல்கிறது, நிறைவுப் பதிகம்.

அவரவர் தகுதிக்கேற்ப தூலசூக்கும பஞ்சாக்கரத்தை எல்லோரும் ஓதி உய்யலாம் என்கின்றன இவ்விரு பதிகங்களும்.

வாழ்க அந்தணர்:

சைவநெறியே மெய்ந்நெறியென்று நிலைநாட்டிய திருப்பாசுரம் எனப்படும் "வாழ்க அந்தணர்" என்னும் திருப்பதிகம், இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

நல்லவர்களால்தான் நாடு வாழ்கின்றது. இதனை அவ்வையார், "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்றார். திருவள்ளுவரும், "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்றார். நல்லோரைப் பண்புடையார் என்றார் வள்ளுவர்.

நல்லவர்களை, பண்பாளர்களை, சான்றோர் என்று பேசுகிறது புறநானூறு. "யாண்டு பலவாக நரையில வாகுதல்" எப்படி சாத்தியமாயிற்று, என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடையாக அதே பாடலின் நிறைவில், "ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" என்று தெளிவுபடுத்துகிறார்.

எனவே, அரைகுறையான, வளர்ச்சியடையாத மக்களும், பிற உயிரினங்களும் வாழ்வாங்கு வாழவேண்டுமானால், நல்லவர்கள் அந்த நாட்டில் வாழவேண்டும்.

இது குறித்தே மற்றொரு புறநானூற்றுப் புலவரும் "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே" எனக் கூறிப்போந்தார்.

இவ்வரிய கருத்தை ஒட்டியே ஞானசம்பந்தர், சைவ நெறியை நிலைநிறுத்தப் பாடியருளிய, "வாழ்க அந்தணர்" என்ற பதிகத்தில், உலகம் வாழவேண்டுமானால், மூவர் முதலில் வாழ வேண்டும், என்று அருளினார். அம்மூவரார், அந்தணர், வானவர், ஆனினம் என்பர். ஆம். பிற உயிர்களிடத்துச் செந்தண்மை பூண்ட அந்தணர்களால் சாதாரண மக்களும் நல்லவர்கள் ஆகின்றனர். இதனால் அந்தணர்கள் முதலில் வாழவேண்டும்.

இவர்கள் பூசுரர் எனப் பெயர் பெறுவர். சுரர் என்றால் தேவர் எனப்பெறுவர். இவர்களை நல்லவர்கள் என்பர். அசுரர் என்றால் நல்லவர்கள் அல்லாதவர்கள். அசுரர்களே வல்லவர்கள், திறமை மிக்கவர்கள். ஆனால் பிற உயிர்களுக்கு பெரும்பாலும் தீங்கு செய்பவர்கள். இக்கருத்தை அருணகிரிநாதர் ஒராற்றால் குறிப்பிடுவது காண்க. "வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடிவேலைத் தொடுவோனே" என்பது அவர் வாக்கு.

அந்தணர்களைப் பூசுரர் என்பார்கள். பூ-பூமியில் சுரர்-தேவர்கள். சேக்கிழார் ஓர் இடத்தில் இவ்வந்தணர்களை, நிலத்தேவர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தணர் நல்லவராய் இருப்பதோடு, வேள்வி செய்து மழை பெய்யவும் காரணராய் இருப்பர். அந்தணரும், வானவரும், ஆனினமும் வாழ்வதால் தண்புனல் வீழும். நல்லவர்கள் வாழ்ந்து அதனால் மழை பொழியுமானால் வளம் பெருகும். வளம் பெருகும்போது அவ்வளத்தை ஒப்புரவினால் எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். அதற்கு நீதிவேந்தன் ஒருவன் தேவை. அதனைத்தான் வேந்தனும் ஓங்குக, என்றார் ஞானசம்பந்தர். நல்லரசன் ஆட்சியில் தீயது ஆழவும், வேந்தன் ஓங்கவும், நல்லோர் நெறியுடன் வாழவும், அரன் நாமம் உலகெலாம் சூழவேண்டும். அரன் நாமம் சூழ்ந்திருக்குமானால் வையகம் துயர் தீர்ந்து சுகம் பெறும். இவற்றையெல்லாம் உள்ளடக்கியே, வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரம் பாடலுற்றார் ஞானக் குழந்தை. அப்பாடல் காண்க.

வாழ்க அந்தணர், வானவர், ஆன்இனம்,

வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயது, எல்லாம் அரன்நாமமே

சூழ்க, வையகமும் துயர் தீர்கவே (தி.3 ப.54 பா.1)

திருமணம் நடைபெற:

திருவேதிகுடி என்ற தலம் திருவையாற்றைச் சேர்ந்த சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தின், `நீறுவரி யாடரவோடு' என்ற பதிகத்தில், ஏழாம் பாடலில், திருமணம் தடைபடாமல் நடைபெறும் குறிப்பு காணப்பெறுகிறது. மணங்காண விரும்புவோர், இத்திருப்பதிகத்தை ஆசாரத்துடன் முறையாக ஓதி, திருமணங் கொண்டு, சிறப்பெய்துவார்களாக.

"..........

கன்னியரொ டாடவர்கள் மாமணம்

விரும்பிஅரு மங்கலமிக

மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையர்

இயற்றுபதி வேதிகுடியே" (தி.3 ப.78 பா.7)

என்பது அப்பாடற் பகுதி.

அகச் சான்று:

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" என்ற மங்கலத் திருப்பதிகத்தில் இரண்டாம் பாடலில் தமக்கு அம்மையப்பர் ஞானப்பால் கொடுத்தாண்டமையை அகச்சான்றாகக் காட்டிப் பாடியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது.

போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத்

தாதையார் முனிவுறத் தானெனையாண்டவன்...... (தி.3 ப.24 பா.2)

என்பது அப்பாடற்பகுதி.

தவநெறி சித்திப்பதற்கு `இயலிசை எனும் பொருளின் திறமாம்' என்ற திருப்பதிகம் ஓதியும், பொருள் சித்திப்பதற்கு "இடரினும் தளரினும்" (தி.3 ப.4 பா.1) என்னும் திருப்பதிகத்தை ஓதியும் பயன்பெறலாம். பயனடைந்தோர் பலராவர்.

சுந்தரரும், திருத்துறையூரில், "மலையார் அருவி" எனத் தொடங்கும் பதிகத்தின் 11 பாடல்களிலும் தவநெறி வேண்டுவதை ஏழாந் திருமுறையில் இனிதே காணலாம்.

அச்சக் குறிப்பு:

திருவாரூர்த் தலத்திற்குச் செல்லும்போது தேவார மூவரும் தம்மையும் ஆரூர் இறைவன் ஆள்வரோ? ஏற்பரோ? என்று அச்சத்துடன் அணுகினர், என்ற குறிப்பு மூவர் பாடல்களிலும் காணக்கிடக்கின்றன.

"தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம், நமக்கும் உண்டு கொலோ?"

என்கிறார் அப்பர்.

"இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்"

என்பது சுந்தரர் வாக்கு.

"அந்தமாய் உலகாதியும் ஆயினான்" என்று தொடங்கும் பதிகத்தில், `எந்தைதான் எனை ஏன்றுகொளும் கொலோ?' என்கிறார் சம்பந்தர். எனவே, அச்சக் குறிப்பு மூவர் பாடலிலும் காண்கிறோம். அன்பு முதிர்ந்துள்ளமையால் இவ்வச்சம் அவர்களுக்கு இருந்துள்ளது. அச்சமும், அன்பும் கொண்டு வணங்கி வழிபடுவதே சிறந்த வழிபாடாகும்.

வரலாற்றுக் குறிப்பு:

சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது முத்தாரம் காவிரியில் நழுவிப்போக, அஃது இறைவனுக்கு ஆகட்டும் என்றான். அஃது அவ்வாறே மறுநாள் சுவாமிக்குத் திருமஞ்சனம் எடுக்கும் குடத்தில் புகுந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது இறைவன் திருவுருவிற்கு அணியாரமாயிற்று என்பது வரலாறு. இதனைச் சுந்தரர்,

தாரமாகிய பொன்னித் தண்துறையாடி விழுத்தும்

நீரில் நின்றபடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே

ஆரம்கொண்ட எம்மானைக் காவுடை ஆதியை..... (தி.7 ப.76 பா.7)

என்று குறிப்பிடுகிறார்.

இதனையே அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் தோன்றிய ஞானசம்பந்தர், இத்திருமுறையில் "வானைக்காவில் வெண்மதி" என்ற பதிகத்தின் (தி.3 ப.53 பா.1) திருப்பாடலில், "ஆரம்நீரோ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே" என்றருளிச் செய்துள்ளார்.

ஆகுதிப் புகையின் ஆக்கம்:

புகழ்மிக்க வேதியர்கள் செய்யும் வேள்விப்புகை வானளவு உயர்ந்துள்ள சோலைமீது மேகம்போல் மூடியுள்ளது என்கிறார் ஞானசம்பந்தர். இது மயிலாடுதுறை அந்தணர்களின் வேள்விச் செயல். இதுகுறித்த பாடல் காண்க:

...............

ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது

புகை போகி அழகார்

வானமுறு சோலைமிசை மாசுபட

மூசு மயிலாடுதுறையே (தி.3 ப.70 பா.1)

ஓமப்புகையால் மழை பொழியும் நிலையை ஓமாம்புலியூர்த் தேவாரத்தில் இரண்டாம் பாடலில் காட்டியுள்ளார். அப்பாடற்பகுதி காண்க:

.................

அம்பரமாகி அழல்உமிழ்புகையின்

ஆகுதியால் மழைபொழியும்

உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர்

உடையவர் வடதளி அதுவே (தி.3 ப.122 பா.2)

மேலும், அவ்வூர் அந்தணர்கள் ஆகவநீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினியம் எனும் முத்தீயும் வளர்த்தனர் என்று ஒரு பாடலால் அறிவிக்கின்றார். அது வருமாறு:

"ஆங்கெரிமூன்றும் அமர்ந்துடன் இருந்த, அங்கையால் ஆகுதி வேட்கும், ஓங்கிய மறையோர்" (தி.3 ப.122 பா.3)

அவ்வெரிஓம்புதலால் நாட்டில் காலத்தில் மழை பொழிந்து கலி என்னும் வறுமை வாராது நீங்குகிறது.

இக்கருத்தை முன்பே, முதல் திருமுறையில் ஞானசம்பந்தர் அருளியுள்ளார். தில்லைவாழ் அந்தணர்கள் "கற்றாங்கு எரிஓம்பிக் கலியை வாராமே செற்றவர்கள்" என்பதே அக்குறிப்புள்ள பாடல் பகுதி.

மேலும், அப்பரும் திருப்பழனத் தேவாரத்தில் "அஞ்சிப் போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி" என்று சிறப்பித்து உள்ளமை காணலாம். சுந்தரரும் "கலிவலங்கெட ஆரழலோம்பும் கற்ற நற்றவர் முற்றனலோம்பும்" என்று அழலோம்பும் சிறப்பை அருளியுள்ளார்.

ஓமப்புகையால் ஆயுள் நீள்கிறது. ஈமப்புகையால் ஆயுள் குறைகிறது என்கிறது வடமொழி நீதி நூல். வேள்வியினால் வீடும் நாடும் நலம்பெறுவதை அறிகிறோம்.

வேத வனச் சிறப்பு:

ஊர் எனப்படுவது உயர்ந்தோர், தாழ்ந்தோர், இடை நிலைப் பட்டோர் முதலிய பல்லோரும் வாழ்வதேயாகும். உயர்ந்தோர், தாழ்ந்தோர், நிலைகுறித்து "ஒல்லும் வகையெல்லாம் அறவினை ஓவாதே, செல்லும் வாயெல்லாம்" செயவேண்டும் என்பது நியதி. இதனை, வேதாரணியம் தேவாரத்தில் குறிப்பிடுகிறார் ஞானசம்பந்தர். "பலதுயர், கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து" என்பது அப்பகுதி. மேலும் அதே பாடலில் "புலவாணர் வறுமை விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே" (தி3.ப.76.பா.8) என வேதாரணிய மக்கட் சிறப்பை விதந்தோதி யுள்ளார்.

கோகர்ணக் காட்சி

ஞானசம்பந்தர், திருக்கோகர்ணம் செல்கிறார். அங்கு ஆலயத்தில் பெருமான் திருமுன்னர் அடியவர்கள் பலரும் நின்று வழிபடுகின்றனர். அவர்கள் ஒருமைப்பாட்டு உணர்வுடன் கூடி வழிபாடு நிகழ்த்தினர். அந்த அழகார்ந்த காட்சியை எடுத்துக்கூறி நம்மையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்துகிறார். அப்பாடல் பகுதி காண்க:

.................

ஒன்றியம னத்தடியர் கூடிஇமை யோர்பரவு நீடரவமார்

குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே (தி.3 ப.79.பா.1)

வழிபாடு வல்வினை தீர்க்கும்:

வினை என்பது செயல். கைவினைப்பொருள் - கையால் செய்யப்பட்ட பொருள் என்பதால் இதனை நன்கறியலாம், எனவே நல்வினை செய்தால் இன்பம் பெறலாம். தீவினை செய்தால் துன்பம் பெறலாம். தீவினையாளர்களும் இறைவனை வழிபட்டால் தீவினையைக் குனைத்து மெலிவடையச் செயயலாம் என்கிறது தேவாரம்.

வினை மூவகைப்படும். முன்னாள் சேர்த்துவைத்துள்ள வினை, சஞ்சித வினை எனப்படும். அம்முதலில் சிறிது எடுத்துக்கொண்டு வந்திருப்பதுதான் இப்பிறவி. இப்போது அதனை அநுபவித்தே தீர்க்க வேண்டும். இதுதான் பிராரத்தவினை எனப்படுவது. அநுபவிக்கும்போதே மேலும் சில வினைகளைச் செய்கிறோம். அதுதான் எதிர்காலத்திற்குச் சேமிக்கப்படும் வினை. இதனை ஆகாமியம் என்பர்.

பிராரத்த வினையை அநுபவித்தே ஆகவேண்டும் என்னும் போது அதனை வழிபாட்டினால் நீக்கிவிடலாம் என்பது சரியாகுமா? என்பது கேள்வி. இதற்குத் தேவாரப் பாடல்களைச் சிந்தித்தால் தெளிவான விடை கிடைக்கும்.

ஒருவனைக் கொலை செய்தவன் என்று நிருபித்துவிட்டால் அவனுக்குத் தூக்கு தண்டனைதான் விதிக்கவேண்டும். கொலை செய்தவன் குற்றத்தை உணர்ந்து திருந்துவான் எனத்தோன்றினால் அவன் இதுவரை அநுபவித்த இன்னல்களை வைத்தே அவனுக்குத் தூக்கு தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

ஒருவன் கடன் வாங்குகிறான். திரும்பக் கொடுக்க இயல வில்லை. அவனுக்குத் தண்டனையாகக் கடன் கொடுத்தவருக்குக் கடன் வாங்கியவன் சில மாதங்கள் அல்லது வருடங்கள் வேலை செய்து கடனைக் கழித்துவிடுகிறான். பணமாகக் கொடுக்கவில்லை என்றாலும் உழைப்பால் கடனைக் கொடுத்து விடுகிறான். கடன் தீர்ந்துவிட்டதால் தண்டனை இல்லை. உழைப்பே அநுபவமாகி விடுகிறது.

இதுபோல் அனைத்துலகிற்கும் முதல்வனாகிய கடவுளை நாளும் வழிபட்டால் வழிபாடே வினையைத் தீர்க்கும் பணியாக, உழைப்பாக, நின்று நாம் செய்த பாவத்தை நீக்கிவிடுகிறது. வினையினின்றும் நீங்கியவனின் எண்ணங்களும், பேச்சுக்களும் செயல்களும் முன்னிலும் உயர்ந்ததாய் விளங்குகின்றன. இதனை உணர்ந்தே நமது சமயாசாரியர்கள் இறைவழிபாட்டால் வினையை வீட்டலாம் என்றனர். இக்கருத்தை ஞானசம்பந்தர்,

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர், பரிவிலார்பால்

கரவினர், கனலன உருவினர்.......... (தி.3 .ப.99.பா.3)

என அறிவிக்கிறார்.

பரவினர்க்குப் படுதுயர் கெடுப்பவர் என்றவர், பரிவிலார்பால் பரமன் மறைந்து விடுகிறான் என்கிறார். அவருக்கு வழிபடும் எண்ணம் தோன்றவில்லை. தோன்றும் அளவும் மறைந்திருந்துதோன்றியபோது, அவர் தீவினையையும் அகற்றி விடுவார். இதே கருத்தைத் தென்குரங்காடுதுறைத் தேவாரத்தில் இரண்டாம் திருமுறையில் அருள்வதும் காண்க.

பரவக் கெடும் வல்வினை பாரிடம் சூழ

இரவிற் புறங் காட்டிடை நின்றெரி ஆடி

அரவச் சடை அந்தணன் மேய அழகார்

குரவப் பொழில் சூழ்குரங் காடு துறையே ( தி.2 ப.35 பா.1)

கற்றறிந்தோர் கடன்:

உயிர்கள் உய்வதற்கு, தனு - உடம்பு, கரணம் - மனம் முதலிய அந்தக்கரணங்களும் கண், காது முதலிய 36 தத்துவக் கருவிகளும், புவனம் - உலகங்களும், போகம் - இன்ப துன்ப அநுபவங்களும். கருணையினால் கொடுத்து வளர்ப்பவன் கருணாநிதியாகிய இறைவன் ஒருவனே. இக்கருத்தை நினைத்தால் ஒவ்வொருவரும் நன்றிக்கடனாக இறைவனை வழிபடக் கடமைப்பட்டவர் என்பதை உணரலாம்.

வழிபாடு இறைவன் உயர்வதற்கன்று. வழிபடுவதால் அதன் பயனாக நாம் உயர்கின்றோம். பள்ளிக்குச் சென்று முறையாகப் படிப்பதால் படிப்பவன் உயர்கின்றான். இதனை யார் உணர்வார்கள்? கற்றவர்கள்தான் உணர்வார்கள். இதனை, திருஞானசம்பந்தர் இத்திருமுறையில் திருநெல்வெண்ணெய்ப் பதிக ஆறாம் பாடலிற் குறிப்பிடுகின்றார்.

நெற்றியோர் கண்ணுடை நெல்வெண்ணெய் மேவிய

பெற்றிகொள் பிறைநுதலீரே

பெற்றிகொள் பிறைநுதலீர் உமைப் பேணுதல்

கற்றறி வோர்கள்தம் கடனே (தி3 ப.96 பா.6)

அரசராகலாம்

அரசு என்பது ஆட்சிபுரிதல். அது எல்லோர்க்கும் வாய்ப்பதன்று. சிலருக்கே வாய்ப்பது. பல்லூழிகாலம் பயின்றால் நல்லாட்சி நடத்தும் தகுதி நமக்கும் வாய்க்கும். இறைவழிபாட்டால் அவரவர் தகுதிக்கேற்பப் பலன் கிடைக்கவே செய்யும்.

நமது உழைப்பிற்கும் தகுதிக்கும் ஏற்பவே நமது வேண்டுகோளும் அமைந்தால் அவரவர் விரும்பிய பலனைப் பெற்றிடுவர். முதுகுன்றத்து இறைவனைப் பரவி வழிபடுபவர் உலகில் அரசர்களாவார்கள் என்கிறது ஞானசம்பந்தர் அருள்வாக்கு. அப்பாடல் வருமாறு.

முரசதிர்ந் தெழுதரும் முதுகுன்றம் மேவிய

பரசமர் படையுடை யீரே

பரசமர் படையுடை யீர்உமைப் பரவுவார்

அரசர்கள் உலகில்ஆ வாரே (தி.3 ப.99 பா.1)

அரசராவது மட்டும் இல்லை. நைவில்லாமல் நாளும் நலமாக வாழலாம். பழியொடு பகையில்லாமல் வாழலாம். திருவொடு தேசினராகலாம். பயன்தலை நிற்பவராகலாம் என்று பாடுவார். வாழ்த்துவார் பயனைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். தோணிபுரப் பதிகப் பாடல் ஒன்றில் "பாமருபாடல்கள் பத்தும் வல்லார் பார்முழுதாள்பவரே" என்று ஏகச் சக்கராதிபதியாகவும் வாழலாம் என்று அருளியுள்ளார்.

வீடலாலவாய் விளம்பலூற்றார்:

விழுமியவர்களாகிய மெய்ஞ்ஞானிகள் வீடுபேற்றையன்றி வேறு ஒன்றையும் விரும்பாதவர்கள். அப்படிப்பட்டவர்களால் வழிபடப்பெறும் பண்பாளனே பரமன். பரமனே பண்பாளனாய் வாழ்ந்துகாட்டுவதாக இப்பாடலை அமைத்துள்ளார் ஞானசம்பந்தர். கடவுள், விழுமியவர்கள் பாடலையும் முதுகாட்டையுமே விரும்பி உள்ளான். இவனது திருவிளையாடலால்தான் மூன்று வாதங்கள் நிகழ்ந்தன. மூன்றிலும் சைவத்திற்கே வெற்றி கிடைத்தது. இதைத் திருவிளையாடலாகச் செய்தார் என்ற குறிப்பு இப்பாடலில் "குலாயதென்ன கொள்கையே" என்றதனால் போந்தது.

மூன்று வாதங்களும் முடிந்துவெற்றியுடன் வருகின்ற ஞானசம்பந்தர் முதலில் ஆலவாய் அண்ணலைச் சென்று வழிபடுகிறார். அக்காட்சியைச் சேக்கிழார் பெருமான் விளக்குதல் காண்க.

கைகளும் தலைமீ தேறக் கண்ணில்ஆ னந்த வெள்ளம்

மெய்யெலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி

ஐயனே அடிய னேனை அஞ்சலென்று அருள வல்ல

மெய்யனே என்று வீட லாலவாய் விளம்ப லுற்றார். (தி.12 திருஞன.புரா.865)

மன்னன் சமணர்களைக் கழுவேற்றிய நிலையில் சற்றே மனம் மறுகிய ஞானசம்பந்தர் குற்றம் நீ, குணங்கள் நீ, சுற்றம் நீ, பிரானும் நீ, தொடர்ந்திலங்கு சோதி நீ, முற்றும் நீயென்று ஆற்றாமையைப் புலப்படுத்துகிறார். பின்பு "நின்தயங்கி ஆடலே நினைப்பதே நியமமே"என்று நிறைவுபெறுகிறார்.

குரவப் பொழில்:

குராமலர் இறைவனுக்குச் சூட்டக்கூடிய நன்மணம் மிக்க மலராகும். இக்குரா மரம் சோழநாட்டில் காவிரிக்கரை இருமருங்கும் இருந்ததாகத் தேவாரம் முதலிய இலக்கியங்களால் அறிகிறோம். இப்போது முருகன் தலமாகிய திருவிடைக்கழி என்னும் தலத்தில்தான் தலவிருட்சமாகக் காண்கிறோம். மற்ற இடங்களில் காண இயல வில்லை.

கும்பகோணத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளியபோது, "குரவிரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு" என்றருளினார். ஆடு துறை என வழங்கும் தென்குரங்காடுதுறையைப் பரவும்போது சம்பந்தர், "பரவக்கெடும்" என்று தொடங்கும் பதிகத்தில் `குரவப்பொழில் சூழ் குரங்காடு துறையே' என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விரு தலங்களும் காவிரித் தென்கரைத் தலங்கள். குடந்தைக்கு நேர் காவிரியின் வடபால் உள்ளது திருவியலூர். `குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை' என்று அத்தலத்து அம்பிகையைப் போற்றியுள்ளார்.

குமரகுருபரரும் தமது முத்துக்குமாரசாமிப் பிள்ளைத் தமிழில், "குரவுகமழ்தரு கந்தபுரியில் அருள்குடி கொண்ட குமரகுருபரன் வருகவே" என்று குறிப்பிட்டுள்ளார். இம்மரம் திருவிடைக்கழியில் மட்டுமே உள்ளது. வனத் துறை இதனைக் கவனிப்பதாகுக.

புவியதனில் பிரபு:

வாக்கிற்கு அருணகிரி என்றும், தாக்கிற்குத் திருஞான சம்பந்தர் என்றும் ஒரு பாடல் கூறுகிறது. தாளக்கட்டமைந்த பாடலுக்கு முதல்வர் திருஞானசம்பந்தரே. அதனைப் பலவகையாக வளர்த்தவர் அருணகிரியார். இதனைத் திருப்புகழில் நன்கு காணலாம். "புவியதனில் பிரபுவான புகலியில் வித்தகர் போல அமிர்த கவித்தொடை பாட அடிமைதனக்கருள்வாயே" என்பது அருணகிரியார் வாக்கு. ஞானசம்பந்தரைப்போல் பாடவேண்டு மென்று முருகப்பெருமானை வேண்டியவர். ஞானக்குழந்தையைப் போலவே திருப்புகழ் பாடினார். "நிராமய பராபரபுராதன பராவுசிவராக அருள்' என்பது ஞானசம்பந்தர் வாக்கு. அதனை அப்படியே `நிராமய புராதன பராபரவராம்ருத நிராகுல இராசித' என்று பாடியுள்ளார் அருணகிரியார்.

மேலும் ஞானசம்பந்தர், சுரருலகு எனத்தொடங்கும் பதிகம் 12 பாடல்களிலும் சீகாழி பற்றிய 12 பெயர்களைக் குறித்துப் பாடியுள்ளமையும், சுரருலகு என்ற பாடலைக் குற்றெழுத்துக்களைக் கொண்டே பாடியுள்ளமையும், கடைசிப்பாடலில், ஒழுகலரி தழிகலியின் உழியுலகு பழிபெருகு வழியை நினையார், என்று ழகர எழுத்துக்கள் மிகுதியாக வருமாறு பாடியுள்ளதையும் கண்டு மகிழலாம். இவையெல்லாம் அருணகிரியாருக்கு வழிகாட்டியாகும்.

ஆணை நமதே:

இரண்டாம் திருமுறையில், "காரைகள் கூகை முல்லை" (தி.2 ப.84 பா.1) என்ற திருப்பதிகக் கடைசிப் பாடலிலும், "வேயுறு தோளி பங்கன்" (தி.2 ப.85 பா.1) என்ற திருப்பதிகக் கடைசிப்பாடலிலும் ஆணை நமதே என்று அருளிய ஞானசம்பந்தர், மூன்றாந் திருமுறையில் திருவெண்காட்டுத் திருப்பதிகத்து இறுதிப்பாடலில் "ஆணையே" என்றும், வேதிகுடித் திருப்பதிகத்து இறுதிப்பாடலில் "ஆணை நமதே' என்றும், "மடன்மலி கொன்றை" (தி.3 ப.118 பா.1) என்ற பதிகத்து இறுதிப் பாடலில் "வானிடை வாழ்வார், மண்மிசைப் பிறவார் மற்றிதற்காணையும் நமதே" என்றும், ஆக ஐந்திடங்களில் "ஆணை நமதே" என்று அருளியுள்ளமை கண்டு தெளியலாம்.

வாது செய்யத் திருவுள்ளமோ:

பாண்டிய மன்னன் வெப்பு நோயால் வாடியபோது அந்நோய் தீர்க்க அரசன் அநுமதி பெற்று, மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் ஞானசம்பந்தரை அழைத்தபோது "ஆலவாய் அண்ணல் திருவுளம் அறிவேன்" என்று ஆலவாய்க்கோயில் சென்று, "நோக்கிட விதியிலாரை நோக்கி யான் வாது செய்யத் தீக்கனல் மேனியானே திருவுள்ளமோ" என்று வினவிப் பிரார்த்தனை செய்தும் தெளிவுபெறாமையால், மற்றொரு முறையும் திருக்கோயில் சென்று "வேத வேள்வி" பதிகம் பாடித் திருவுள்ளம் அறிந்தே அரசமாளிகை சேர்ந்து, வெப்புநோய் அகற்றினார். மேலும் அனல் வாதம், புனல் வாதத்தில் வென்று சைவ சமயமே சமயம் என்று சமய ஸ்தாபனம் செய்தார்.

பாதிமாதுடனாய பரமனே:

சிவம் சக்தி என்ற இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கம் போல ஒரே பொருள்தான். தன்மையால் இரண்டாகக் கொள்ளப் பெறும். வேதவேள்வி என்னும் இப்பாடலில் "பாதிமாதுஉடனாய பரமனே" என்று அருளியுள்ளார். இதன் பொருள் ஒரு பாதி அம்மை, ஒரு பாதி அப்பன் என்பதே. அதிலும் பாதிமாது உடனாகிய பரமனே என்றுள்ளது. இருதன்மையில் முதன்மையானது சிவமே என்பதைத் தெரிவிக்கின்றார். பரம் -மேலானது என்ற சொல்லால் இக்கருத்து இனிது புலனாகிறது.

இதே கருத்தை மணிவாசகரும் திருவாசகத்தில், "சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழல் பணைமுலை மடந்தை பாதியே" என்றவர், அடுத்துப் பரனே என்றருளி, பரம் சிவமே என்ற அக்கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

உலகிலும் ஆண் பெண் என்ற அமைப்பில் உடற் கூறுவகையால் வேறுபாடு உண்மை அறிந்தும், முதன்மை யாருக்கு என்பதில் உடன்பாடில்லாதவராகின்றனர். ஞானசம்பந்தர் தேவாரமும், மணிவாசகரின் திருவாசகமும் பாதியாயினும் பரம் சிவத்திற்கே என்பதைத் தெளிவுறுத்துகிறது.

இது சரிதானா என்பதில் ஐயப்பாடுள்ளோர், வித்து - உயிர் யாரிடம் உள்ளது என்பதைச் சிந்தித்தால் ஐயம் அகன்றுவிடும்.

இதைத் தெளிவு செய்ய சில உதாரணங்களைக் காணலாம்.

நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?

உயிருக்கு உடல் ஆதாரமா, உடலுக்கு உயிர் ஆதாரமா?

மரத்திற்கு இலை ஆதாரமா? இலைக்கு மரம் ஆதாரமா?

இப்படியே பல உதாரணங்களைப் பார்த்துக்கொண்டே போகலாம். ஆனால் முன்கண்ட உதாரணங்களில் ஒன்றுக்கு ஒன்று ஆதாரம் என்பதில் மறுப்பில்லை. எது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் என்பதில்தான் உண்மை காணவேண்டியுள்ளது. நெய்யை வைத்துத்தான் தொன்னையை மதிக்கிறோம். உயிரை வைத்துத்தான் உடலை மதிக்கிறோம். இலையினால் மரம் வளர்ந்தாலும் இலைக்கு மூலம் மரமே என்பதை உணர்கிறபோது மரத்தையே மதிக்கிறோம்.

ஒருபாதி சிவம் - ஆண், ஒரு பாதி சக்தி - பெண் என்றாலும் அதில் சிறப்புடையது சிவம் என்றாகிறது. இக்கருத்தைச் சிந்தித்துத் தெளிக. உலகில் சமநிலையில் ஒருபொருளும் இல்லை என்பதும், ஏற்றத் தாழ்வில்தான் வாழ்வு சிறக்கிறது என்பதும் சிந்திக்கத்தக்கது.

தாயினும் நல்ல தலைவர்:

தாய்தான் கருணையின் இருப்பிடம், அக்கருணையை உடையவரே சிவபெருமான். எனவே கருணை வேறு சிவம் வேறு இல்லை. ஆகவே தாயினும் நல்ல தலைவர் என்று அடியார்கள் திரிகோணமலைப் பெருமானைப் போற்றுகின்றனர். அவர்களுடைய வாயிலும், மனத்திலும் பொருந்தி வாழ்கிறார் அப்பெருமான். இதனை அப்பர், "வாயானை மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை, கருத்தறிந்து முடிப்பான் தன்னை" என்றருளியுள்ளார். ஞானசம்பந்தர், திரிகோணமாமலைப் பெருமானைப் பாடியுள்ள பகுதியைக் காண்க.

தாயினும் நல்ல தலைவர்என் றடியார்

தம்மடி போற்றிசைப் பார்கள்

வாயினும் மனத்தும் மருவிநின் றகலா

மாண்பினர்...... (தி.3 ப.123 பா.5)

வாயுதேவனுக்கும், நாகராசனுக்கும் ஏற்பட்ட வலிமைப் போட்டியால் கயிலையினின்றும் பிரிந்த மலைகளே திரிகாளத்தி மலை, திரிசிரா மலை, திரிகோண மலை என்பனவாம். இவை கயிலைமலை போலவே மூன்று பகுதிகளாக விளங்குவதால் இப்பெயர்களைப் பெற்றன.

உறுநோய் அடையா:

நாம் நாள்தோறும் நலமாக வாழக் கடவுள் வழிபாடு மிக மிக இன்றியமையாதது. நமது வாழ்விற்கு முதலாகிய பொருளே சிவம்தான். அதனை மறந்தால் நமக்கு வாழ்வேது?

பரம்பொருளை நினைத்து உருகி வழிபடுவோமானால் நோய் நம்மை அணுகாது. இதனை ஞானசம்பந்தர் முதல் திருமுறையில் அண்ணாமலைப் பதிகத்தில், `பெருகும் புனல் அண்ணாமலை' என்ற பாடலில் அருளியுள்ளார்.

.............

கருகும் மிடறுடையார் கமழ்சடையார் கழல்பரவி

உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே (தி.1 ப.10 பா.6)

என்பது அப்பாடற்பகுதி. மேலும் இம்மூன்றாந் திருமுறையில், வலஞ்சுழிப் பதிகப் பாடல் ஒன்றில், பழம்பஞ்சுரப் பண்ணில்

...............

வள்ளல் வலஞ்சுழி வாணன் என்று மருவி நினைந்தேத்தி

உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே (தி.3 ப.106 பா.1)

என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

மன இறுக்கம் நோயைத் தோற்றுவிக்கும். மன உருக்கம் நோயைத் தீர்த்து வைக்கும். மன உருக்கம் கண்ணீர்ப் பெருக்கிற்குக் காரணமாகும். கண்ணீர்ப் பெருக்கினால் நோய் வலி குன்றும்.

சிறு குழந்தைகள் அடிக்கடி யாது காரணத்தாலோ அழுது கண்ணீர் வடிக்கின்றனர். அதனால் அவர்களை நோய் அணுகுவதில்லை.

பெண்களும் அடிக்கடி அழுவதால் மன இறுக்கம் இன்றியும், நோய் இன்றியும் வாழ்கின்றார்.

வயது வந்த ஆடவர்கள் இறைவனின் பேருதவியை நினைந்து உருகவேண்டும். உருகி வழிபடுவோர் நோயின்றி வாழ்கின்றனர். உருகாதார் நோய்வாய்ப்படுகின்றனர். இது ஒரு மருத்துவ ஆய்வு.

பொருள் ஈட்டுவோர்க்கு:

நல்லவழியில் பொருளை ஈட்டி நல்லவழியில் செலவு செய்தலே அறம் எனப்படும். இதனை ஔவைப் பிராட்டியார், "ஈதல் அறம், தீவினை விட்டு ஈட்டல் பொருள்" என்றார். திருவள்ளுவரோ, "திறன் அறிந்து தீதின்றி வந்த பொருளே அறம் செய்ய ஏற்றது" என்றார். மேலும் "சலத்தால் பொருள் செய்து ஏம் ஆர்த்தல் பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று" என்றும் கூறியுள்ளார். இக்கருத்தை ஞானசம்பந்தர், ஓமாம்புலியூர் பதிகத்தில் தெளிவு செய்கிறார்.

..................

சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்

தன்மையார், நன்மையான் மிக்க

உலப்பில் பல்புகழார் ஓமமாம் புலியூர்

உடையவர் வடதளி அதுவே ( தி.3 ப.122 பா.5)

சலம் - பாவம். பாவத்தால் பொருள் ஈட்டிப் பெருமை அடைய விரும்பாத நன்மைமிக்கவர் வாழும் ஊர் ஓமாம்புலியூர் என அறிவிக்கின்றார்.

நல்லிசையாளன்:

இசை நல்லிசை, வல்லிசை, மெல்லிசை, இன்னிசை எனப்பாடுவோர் மனப் பண்பிற்கேற்பப் பலதிறப்படுகிறது. நல்லிசையே இருமைக்கும் பயன் தருவது. இன்னிசையும் இதுவே. இவ்வரிசையில் ஞானசம்பந்தர் நல்லிசையாளர். அதுமட்டுமல்ல புல்லிசை கேளாதவர். இதனை அவரே பந்தணைநல்லூர் திருப்பதிகப் பாடல் ஒன்றில் "நல்லிசையாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம்பந்தன்" என்றருளுகிறார்.

புல்லிசையே இக்காலத்தில் மெல்லிசை எனப்படுகிறது. இசையை ஆள்பவர் இசையாளர். அதிலும் நல்லிசையாளர். இது ஞானசம்பந்தரே கூறிய அகச்சான்று.

மேலும் சுந்தரர், இவரை நல்லிசை ஞானசம்பந்தர் என்று போற்றியுள்ளார். நல்லிசை என்பது பாடலின் பொருள் புரியுமாறும், கேட்போர் உளங்கொள்ளுமாறும் பண் அமைத்துப் பாடுவதேயாம். இதனையே சேக்கிழார் பெருமானும், "பண்ணின் பயனாம் நல்லிசையும்" என்று குறிப்பிடுகின்றார். "பண் ஒன்ற இசைபாடும் அடியார்கள்" என்று சம்பந்தரும், "பண் பொருந்த இசைபாடும் பழனம் சேர் அப்பனை" என்று அப்பரும் பாடியுள்ளனர். அப்பர் கூற்றால் பழனப் பெருமானே பண்பொருந்த இசைபாடியுள்ளார் என்பதைத் தெளிகின்றோம். எனவே, பொருள் புரியாமல் பண் மாற்றிப் பாடுதலைத் தவிர்ப்போமாக.

கல்லுர்ப் பெருமணம் வேண்டா:

அம்மி மிதித்து அருந்ததி காட்டும் திருமணம் வேண்டா, ஏனெனில் கழுமலம் முதலாகப் பல்லூர்களிலும் நான் பாடிய பாடல்கள் மெய்யாகமாட்டா. நான் இதுவரை சொல்லிய பாடல் கருத்துக்களைத் தொண்டர்கள் ஏற்கவும் மாட்டார்கள். நல்லூர்ப் பெருமணத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, இவ்வேண்டுகோளை ஏற்று எனக்குப் பெருமணத்தைக் கொடுத்தருள்க (முத்தி) என்பது"கல்லுர்ப் பெருமணம்" என்ற பாடலின் கருத்தாம்.

"அவ்வினைக் கிவ்வினை" என்ற திருநீலகண்டத் (தி.1 ப.116) திருப்பதிகத்துள் 3ஆம் பாடலில், `முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம், விலைத்தலையாவண்ணம் கொண்டு எமையாண்ட விரிசடையீர்" என்ற சொல்மலருக்கு, இத்திருமணம் மாறுபாடாக அமைகிறது. எனவே தொண்டர்கள் என்சொல்லை மெய்யாகக் கொள்ளார்கள். ஆதலால் "கல்லூர்ப் பெருமணம் வேண்டா" என்றருளினார்.

மேலும், எனக்கு இவ்வுலக போகங்களில் விருப்பமும் இயல்பாகவே இல்லை. எனவே என்னை இணையார் திருவடியில் ஏற்றருள்க என்கிறார்.

"கல்லூர்ப் பெருமணம்" என்ற இப்பதிக இறுதிப் பாடலில் இப்பதிகத்தை ஓதுவார்க்கு "அறும்பழி, பாவம், அவலம் இலரே"என்றதனாலும் இதனை வலியுறுத்தினார். அவலம் இலர் - எனவே பிறவித்துன்பம் இலராவர். வீடு பெறுவர் என்ற குறிப்பும் காணப்படுகிறது. எனவே ஞானசம்பந்தர் - `திருமணம் வேண்டாம் - பெருமணம் வேண்டும்' என்று வேண்டிப் பெற்றார் ஆயிற்று.

தொண்டு செய்வார் துன்புறார்.

ஞானசம்பந்தர் நிறைவாகப் பாடிய "கல்லூர்ப் பெருமணம்' என்ற பதிகத்தின் மூன்றாம் பாடலின் கருத்தை நோக்குக. நன்மை எல்லாம் பொருந்தியுள்ள நல்லூர்ப் பெருமணத்தில் பொருந்தி நின்று இன்புறும் எந்தை ஆச்சாள்புரம் சிவலோகத் தியாகராசர், அவரது இணை அடிகளை அன்புறு சிந்தையராய் மனத்தால் நினைப்போரும், வாக்கினால் ஏத்தித் துதிப்போரும், காயத்தால் தொண்டு செய்வோரும், மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களாலும் பெருமானை வழிபடுவோரும் துன்புறார். எனவே இன்புறுவர் என்பது தெளிவு. பாடலைக் காண்போம்:

அன்புறு சிந்தைய ராகி அடியவர்

நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்று

இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்

துன்புறு வார்அல்லர் தொண்டுசெய் வாரே. (தி.3 ப.125 பா.3)

ஆச்சார்யபுரம்:

சைவ சமய ஆசாரியராகிய ஞானசம்பந்தருக்கு முத்திப்பேறு அளித்த இடமாதலின் இத்தலம் ஆச்சாரியபுரம் எனப்பெற்றது. ஆச்சார்யபுரம்தான் ஆச்சார்யாள்புரம் என்றாகி ஆச்சாள்புரம் ஆகியது எனத்தெரிகிறது.

இதற்குமுன் இத்தலம் நல்லூர்ப் பெருமணம் என்றும், திருப்பெருமணம் என்றும் பெயர் பெற்றிருந்தது என்பது சேக்கிழார் திருவாக்கால் புலனாகிறது. ஞானசம்பந்தரும் "நல்லூர்ப் பெருமணம்" என்றே குறிப்பிடுகின்றார். சம்பந்தருக்குத் திருமணம் "நல்லூர்ப் பெருமணத்தில்" நடந்ததும், அத்திருமணமே பெருமணமாக (முத்திப் பேறாக) நிறைவெய்தியதும், திருவருட் பொருத்தமேயாம்.

மணம் - கலப்பு. ஈருயிர் ஒருயிராகக் கலத்தல். பெருமணம் - ஆருயிர் இறைவனுடன் கலத்தல் - அஃதாவது முத்திப்பேறு. ஞானசம்பந்தர் முத்திப்பேற்றுக்குரிய பெருமை நல்லுர்ப் பெருமணமாகிய இத்தலத்திலேயே எய்தியது என்பது திருவருட் சிறப்பாகும்.

இத்தகைய புனிதத் தலங்களின் சிறப்பையும், திருமுறையின் பெருமையையும் ஓதி உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், உயிர்கள் உய்திபெற ஷ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

ஒண்தமிழ் ஓதி உயர்வுறுவோமாக.

 

a

 

 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி