04 அணிந்துரை
ஸ்ரீமத். சம்பந்த சரணாலய சுவாமிகள்
கோயம்புத்தூர்
(கோவை. திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களே `சம்பந்த சரணாலயர்`, என்னும் இத் தீட்சாநாமம் உடையவர்கள்.)
திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமை ஆதீனம் 25 ஆவது பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் செய்துவரும் சைவப் பெருந் திருத்தொண்டுகள் மிகப் பலவாம்.
தேவாலய மடாலய பரிபாலனம், தேவார பாடசாலை, சிவாகம பாடசாலை, செந்தமிழ்க்கல்லூரி, ஞானசம்பந்தம் என்னும் மாதாந்த சஞ்சிகை, தேவார அருட்பாசுரங்களின் வெளியீடு முதலியனவாய் அவை எண்ணிறந்து விளங்குவனவாம்.
அவற்றுள் தலைசிறந்தது தேவாரத் திருமுறைகளை உரையுடன் வெளியிடுதலாகும். சைவத் தெய்வத் திருமுறைகள் பனிரண்டனுள் தேவாரங்கள் முதலேழு திருமுறைகளாக வகுக்கப்பெற்றவை. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரங்களாகிய முதன்மூன்று திருமுறைகளை உரையுடன் முன்னமே வெளியிட்டுள்ளார்கள்.
4,5,6 திருமுறைகளாகத் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரங்கள் வகுக்கப்பெற்றுள்ளன.
4-ஆம் திருமுறை பண்களும், திருவிருத்தமும், திருநேரிசையும், 5-ஆம் திருமுறை திருக்குறுந்தொகைகளும், 6 -ஆம் திருமுறை திருத்தாண்டகமும் கொண்டன.
4-ஆம் திருமுறை இப்போது உரையுடன் வெளியிடப் பெறுகின்றது. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரங்கள் எளிமையுடன் பொருட்பொலிவும் பொருளாழமுமுடையவை. இவற்றுக்குப் பொருள் காணுதல் மிகுந்த சிரமமான காரியம்.
தேவாரங்களைப் பொருளுடன் வெளியிடுதல் இதுவரை செய்யாத வேலை. தருமை ஆதீனத்தில் இதனை மேற்கொண்டது சைவ உலகத்திற்கும் தமிழுலகிற்கும் பேருபகாரமான காரியம்.
திருமுறைகளுக்குப் பொருள் காணுதல் எளிதன்று. இலக்கண இலக்கியப் பயிற்சிமட்டும் போதாது. சைவத்திருமுறைகளிலும் மெய்கண்ட சாத்திரங்களிலும் நல்ல பயிற்சி வேண்டும். சித்தாந்த சாத்திரங்களைப் பரம்பரையிலிருந்து பயின்றிருக்கவேண்டும். சிவதீக்கையும் சிவபூசையும் இடைவிடாத சிவசிந்தனையும் வேண்டும். உலக அனுபவமும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாய்த் திருவருளில் நம்பிக்கையும் தற்போதமேலிடாமையும் வேண்டும்.
இத்துணையும் பொருந்தப்பெற்றவர் வித்துவான் சித்தாந்த ரத்நாகரம் ஆசிரியர்,திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்களாவர். இவ் வெளியீட்டுப் பணியை ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் அவர்பால் ஒப்படைத்தது சிறந்த தகுந்த செயலாகும். "இதனை இதனாலிவன் முடிக்குமென்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்றார் திருவள்ளுவ நாயனார்.
இவ்வுரை வெறும் குறிப்புரை மட்டுமன்றிப் பல இடங்களில் விரிவுரையாகவே விளங்குகின்றது.
திருமுறைகளில் இருந்தே பெரும்பாலும் மேற்கோள்கள் தரப்படுகின்றன. "வேதத் திற்குப் பிரமாணம் வேதமே" என்பர் திரு.க. சதாசிவ செட்டியார் அவர்கள்.
பதிக வரலாறு பெரியபுராணத்தை ஒட்டி எழுதப்பட்டு இருக்கிறது. பதிக வரலாறு பதிக விளக்கத்துக்குப் பொருந்துவன செய்வது.
தேவையான இடங்களில் இலக்கணக் குறிப்புக்கள் தரப் பட்டுள்ளன. புராண சரிதங்களும் விளக்கப்பட்டுள்ளன.
பெரியபுராணச் செய்யுட்கள் ஆங்காங்குத் தரப்பட்டது பேருதவியாகும். சித்தாந்த சாத்திர உண்மைகள் ஆங்காங்கு நன்கு விளக்கப்பட்டுள்ளன.
முதன் மூன்று திருமுறை வெளியீடுகளின் அனுபவமும் இதிற் கூடியிருத்தலால் இவ்வெளியீடு அவற்றினும் சிறந்து விளங்குகின்றது. கண்ணைக் கவரும் அழகுடன் விளங்குகின்றது இவ்வெளியீடு.
வாழ்க இவ்வெளியீடு.
வாழ்க ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானங்களின் திருவடிகள்
வாழ்க முத்து. சு. மாணிக்க வாசகனார்.
வாழ்க திருத் தருமை ஆதீனம்.