உ
குருபாதம
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய 05 ஆசியுரை
திருச்சிற்றம்பலம்
விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று
எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னார்அவர் பாலைத் துறையரே. -அப்பர் (தி.5 ப.51 பா.6)
அப்பர் ஒரு புரட்சியாளர்:
புரட்சி என்பது சீர்கெட்டுப் போனதை - மீண்டும் சீர்மைபெறச் செய்வதேயாகும். சுதந்திரமாக வாழ்ந்த இந்தியர்களை ஆங்கிலேயர் 150 ஆண்டுகட்கு மேலாக அடிமைப்படுத்தி ஆண்டு வந்தனர். சீர்கெட்டு நின்ற பாரத தேசந்தன்னை மீண்டும் சுதந்திரமாக வாழ்வதற்கு மகாத்மா காந்தியடிகள் போன்ற தலைவர்கள் பெரும் புரட்சி செய்தனர். மீண்டும் சுதந்திரப்பாதையில் இந்தியர்களை நடையிடச் செய்தனர். இதுவே புரட்சி. சீர்கெட்ட தனிமனிதரை அல்லது சமுதாயத்தை, அல்லது நாட்டை, செப்பஞ்செய்ய எடுக்கும் நடவடிக்கைக்கே புரட்சி என்ற பெயர் பொருந்தும். மக்களிடையே குழப்பம் விளைவிப்பதெல்லாம் புரட்சியாகாது.
இக்காலத்தில், புரட்சி செய்து தேசத்தைச் செம்மை செய்த மகாத்மா காந்தியடிகளைப் போல், அன்று கடமை செய்யத் தவறியோரைக் கடமை வழிச் செலுத்தி, செம்மை செய்த புரட்சியாளர் அப்பர் அடிகள்.
பகவத் கீதையில் கண்ணபிரான் அருச்சுனற்குக் கடமையை உணர்த்தினார்.
"கர்மண்யேவ அதிகாரஸ்த்தே மாபலேஷு கதாசன"
என்பது கீதாசாரியன் வாக்கு. `அர்ச்சுனா, கர்மத்தைச் செய்வதற்குத்தான் உனக்கு அதிகாரம். அஃதாவது உரிமை உண்டே தவிர பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரமில்லை. அஃதாவது உரிமை இல்லை' என்பது இதன்பொருள்.
இது துவாபர யுகத்தில் நடந்தது. இப்போது நடப்பதோ கலியுகம். இதற்கு ஏற்ப அதே தர்மத்தைச் சொல்லவேண்டும். எப்படிச் சொல்வது? அப்பர் அதே உரிமையைக் கடமை என்ற சொல்லால் புரட்சிகரமாகச் சொல்கிறார். அப்பாடல் காண்க.
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்அடி யேனையும் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே. -தி.5 ப.19 பா.9
`கடமையைச் செய்யத்தான் உனக்கு அதிகாரம். பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரம் இல்லை. என்கின்றது கீதை.
ஆனால் கடமையைச் செய்பவனுக்கு அதற்குரிய பலனைப் பகவான் கொடுத்தே தீர்கிறார். அணு அளவுகூடக் குறைக்கமாட்டார். அக்கருத்து அர்ச்சுனற்குத் தெரியும்; உயர்ந்தோரானதால்; யுகமும் துவாபரயுகமானதால். இக்கருத்தைக் கலியுகத்தில் அப்பர் சுவாமிகள் புரட்சிகரமாகத் திருக்கடம்பூர்த் தேவாரத்தில் தெளிவாக விளக்குகிறார். கீதையில் கண்ணன் கர்மத்தைச் செய்யத்தான் அதிகாரம் என்று சொன்னார். அப்பர், உரிமை என்ற சொல்லையும் புரட்சிகரமாக மாற்றி, கடமை என்ற சொல்லாலேயே கடவுளின் கடமையையும், மக்களின் கடமையையும் குறிப்பிட்டுள்ளார். கடவுளின் கடமை மக்கட்கு உரிமையாய் விடுகிறது. மக்களின் கடமை கடவுளுக்கு உரிமையாகி விடுகிறது. உரிமைப் போராட்டத்திற்கே இடமில்லாமல் கடமை என்ற சொல்லாலேயே அவரவர்க்கு உள்ள உரிமையைக் கிடைக்கச் செய்துவிடுகிறார்.
இதை எல்லோரிடத்தும் வைத்துத் தெளிவு பெறலாம். முதலாளி செய்யும் கடமை தொழிலாளிக்கு உரிமை. தொழிலாளி செய்யும் கடமை முதலாளிக்கு உரிமை. கணவன் செய்யும் கடமை மனைவிக்கு உரிமை. மனைவி செய்யும் கடமை கணவனுக்கு உரிமை. பெற்றோர் செய்யும் கடமை மக்களுக்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை பெற்றோர்க்கு உரிமை. ஆசிரியர் செய்யும் கடமை மாணாக்கர்கட்கு உரிமை. மாணாக்கர் செய்யும் கடமை ஆசிரியர்கட்கு உரிமை. அரசு செய்யும் கடமை மக்கட்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை அரசுக்கு உரிமை. இறைவன் செய்யும் கடமை உயிர்கட்கெல்லாம் உரிமை. உயிர்கள் செய்யும் கடமை இறைவனுக்கு உரிமை. கடவுள் கடமையைச் சரியாகச் செய்துவிடுவார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் காலத்தில் உதிப்பது கடவுளின் கடமை தவறாமையைக் காட்டுகிறது.
குறுந்தொகை யாப்பமைப்பு:
அப்பர் அருளிய ஐந்தாம் திருமுறைப் பதிகங்கள் நூறு. இந் நூறும் திருக்குறுந்தொகை எனப் போற்றப் பெறுவது. குறுந்தொகை என்பது யாப்பமைப்பால் பெற்ற பெயர். குறைந்த எழுத்துக்களைப் பெற்று அமைதலின் இப்பெயர் பெற்றது. இது நாற்சீர் நாலடியாய் வருவது.
சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை எனப்பெயர் பெற்று விளங்குகிறது. இந்நூலில் நாலடிக்கு மேலும் பாக்கள் இருப்பினும் மற்ற சங்க நூல்களை நோக்கக் குறைந்த அடிகளைக் கொண்ட பாடல்களை இந்நூல் உடையதாகலின் அப்பெயர் பெற்றது. குறுந்தொகைப்பாடல்களின் முதற்சீர் தேமா, அல்லது புளிமா என்று அமையும். தேமா என்று தொடங்கும் அடி ஒற்று நீக்கிப் பதினொரு எழுத்துக்கள் கொண்டிருக்கும். புளிமா என்று தொடங்கும் அடி ஒற்று நீக்கிப் பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்டிருக்கும். எனவே குறுகிய எண்ணிக்கையுள்ள எழுத்துக் களைக் கொண்டுள்ள அடிகளையும், குறைந்த அடிகளைக்கொண்ட பாடல்களையும் கொண்ட நூல் குறுந்தொகை என்று அழைக்கப்பெற்று வருகிறது.
திருநாவுக்கரசர் இவ்வியாப்பமைப்பை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று சிந்திக்கும் பொழுது, ஒரு தலத்திலிருந்து பிறிதொரு தலத்திற்கு நடந்து செல்லும்பொழுதும், உழவாரத் திருத்தொண்டு செய்யும் பொழுதும் இவ்வியாப்பமைப்பு எளிமையாகப் பாட ஏற்றது எனக்கருதி அமைத்துக் கொண்டார் எனத் தோன்றுகிறது.
தில்லை பற்றிய முதல் பதிகம்:
ஐந்தாம் திருமுறையில் முதல் திருப்பதிகமாகத் திகழ்வது "அன்னம் பாலிக்கும் தில்லை" எனத் தொடங்குவதாகும். இப்பாடலில், `அன்னம்' என்று குறிப்பது சோற்றையும் வீடுபேற்றையும் குறிப்பதாகும். "பாதகமே சோறு பற்றியவா தோள் நோக்கம்" என்று திருவாசகம் வீட்டைச் சோறு எனக் குறிப்பிட்டிருத்தல் இக்கருத்துக்குச் சான்றாகத் திகழ்கிறது.
தரிசித்தால் முத்திதரும் தலம் தில்லை என்பதும் ஈண்டு கருதத்தக்கதாம். வீடுபேற்றைத் தரவல்ல நடராசப் பெருமான் எழுந்தருளியுள்ள தலம் தில்லைச் சிற்றம்பலம் என்பதை முதற்கண் கூறி, அடுத்துப் படிப்படியாகக் கீழிறங்கி வருகின்றார். அது பொன்னுலகமாகிய தேவலோகத்தையும் அளிக்கும்; மேலும் இப்பூவுலகில் என்னுடைய அன்பு விரிந்து பரவுதற்குரிய ஈர்ப்பு நிலை கொண்ட இச்சந்நிதானத்தில் வழிபடுவதற்கு ஏதுவாக இப்பிறவியை அளிக்குமோ? இல்லை வீடுபேற்றைத் தந்தருளுமோ? என்று வினா வடிவில் கேட்டுள்ளார். அம்மை, மறுமை, இம்மை என்ற மும்மைப் பேறும் அளிக்கவல்லது தில்லை என்பதையே இப்பாடல் குறிக்கின்றது, என்று கொள்ளலாம்.
நினைப்பவர் மனமே கோயில்:
தில்லைப் பெருமானைத் தொழுது உழவாரத்தொண்டு செய்திருந்த திருநாவுக்கரசர் திருவேட்களத்து ஈசரையும், திருக்கழிப்பாலை மணவாள நம்பியையும் வணங்கிப் போற்றிப் பாமாலை சூட்டித் தில்லை மீள்கிறார். மீளும் வழியில் வழிநடைப் பயணத்தில் "பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்" என்னும் பதிகம் பாடினார். இப்பாடலில் நினைப்பவர் மனத்தையே இறைவன் தாம் உறையும் கோயிலாகக் கொண்டுள்ளான் என்ற தத்துவத்தை விளக்கியுள்ளார். "உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்" என்ற திருமூலர் வாக்கும் நினைக்கத் தக்கதாகும். இறைவனது மாட்சிமைப்பட்ட திருவடிகளை அன்பால் இடையறாது நினைப்பவரது உள்ளத்தாமரையில் இறைவன் விரைந்து சேர்பவன் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் -குறள் 3
என்பதே அக்குறள். இக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்" ஏகினான் என இறந்த காலத்தாற் கூறினார் என்கிறார். இதனையே, "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்கிறார் அப்பர். அப்பாடல் காண்க.
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந்து உய்வனோ -தி.5 ப.2 பா.1
இமைப்பொழுதும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதிருக்கும் பரமனை (தி.5 ப.2. பா. 1-10) நாம் இமைப்பொழுதும் அவனை விட்டு நீங்காது நினைதல் வேண்டும் என்பதையே இத்திருப்பதிகம் நமக்கு நினைவூட்டுகிறது. நீதியை, ஆதியை, ஐயனை, அமுதை, அத்தனை, பித்தனை, கூத்தனை என்றும் மறவாது நினைந்து போற்றுவோம். என்றும் மகிழ்வோடு வாழ்வோம்.
தொழத்தக்கவன்:
"சிவ ஏகோத்தியேயகா" என்பது உபநிடத வாக்கியம். சிவபெருமான் ஒருவனே தியானிக்கத் தக்கவன் என்பது இதன்பொருள். தியானிக்கத் தக்கவன் சிவனே என்றால் தொழத் தக்கவனும் அவனே என்பது சொல்லாமலே விளங்கும். அக்கருத்தையே அப்பர், திருநெல்வாயிலரத்துறைத் திருக்குறுந் தொகைப் பதிகத்தின் (தி.5 ப.3 பா.1-10) ஒவ்வொரு பாடலிறுதியிலும் "அரத் துறைமேவிய, சுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே. சுரும்பு ஒப்பானை, கரும்பு ஒப்பானை, சுரப்பு ஒப்பானை, கை ஒப்பானை, கதி ஒப்பானை, கனல் ஒப்பானை, தன் ஒப்பானை, ஊழியானை, நிலை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே" என்று நாம் தொழுவது சிவபரம்பொருளையே. அவனையே தொழுது உய்மின்கள் என்று மன்பதைகளுக்கு அறிவுறுத்துகிறார்.
நினைத்தால் முத்தி தரும் தலம்:
நினைத்தால் முத்தி தரும் தலம் திருஅண்ணாமலை, "நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில்" திருவண்ணாமலை என்கிறார் ஞானசம்பந்தர்.
அப்பர் தில்லைப் பெருமானை மறந்து உய்வனோ என்று பாடியவாறே அண்ணாமலைப் பெருமானையும் "இகழ்ந்தார் புரம் மூன்றையும் அட்டனை, ஆனனை, அத்தனை, ஆற்றனை, அன்னனை, ஆரனை, அருவனை, அருத்தனை, என் உடல் உறுநோய்களைத் துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ என்கிறார். மறந்தார்க்குக் கதியில்லை. மறவாதே நினைந்தார்க்குத் தீங்குறும் விதியில்லை. எனவே அண்ணாமலையானை நினைவோம். கண்ணாரக் கண்டு தொழுவோம்.
எந்த மாதவம் செய்தனை:
திருவாரூர்ப் பெருமானைத் தொழுத திருநாவுக்கரசர், நெஞ்சைப் பார்த்துக் கேட்கிறார். பிறவி எடுத்துழலும் பெத்த காலத்தும், பிறவியற்ற முத்திக் காலத்தும் நம்முடனே மறைந்திருந்தே நலம் செய்பவன் ஆரூர் அரநெறிப் பெருமான். அவன் விளக்கமாக நம் சிந்தையுள்ளும், சிரத்துள்ளும் தங்குதற்கு நாம் எந்த அளவு தவம் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும். பெருமான் நமது சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கியிருப்பதைச் சிறப்பாக உணர்ந்தவர்கள் தவம் செய்தவர்கள். அங்ஙனம் தவம் செய்யாதவர்களும் இப்பாடலை எண்ணிப் பார்க்கலாம். என்ன தவம் செய்தாய், செய்தால் அல்லவா இறைவன் நம் உள்ளத்தும் சிரத்தும் எழுந்தருள்வான்? என்று வினாவாகவும் அமைகிறது. இப்பாடல். அது வருமாறு.
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்தம் இல்புகழ் ஆரூர் அரநெறி
சிந்தை யுள்ளும் சிரத்துளும் தங்கவே -தி.5 ப.7 பா.2
இதே கருத்துள்ள, அப்பரின் திருச்சேறைத் திருக்குறுந்தொகைப் பாடலைக் கண்டு மகிழ்வோமாக.
என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே -தி.5 ப.77 பா.2
அம்மையாரைத் தந்தார்:
எம்மையராகிய தாய் தந்தையார் (இரு முது குரவர்) இலராயினர். யானும் வழி அறியாதவனாயினேன். இந்த நேரத்தில் எனக்கு அன்னை(எம்மையராக)யாக உறுதுணையாய் நின்றவர் உடன்பிறந்த திலகவதியம்மையார். அம்மையார் நமக்கு யார் என்று நைந்து அரற்றி நிற்பேனுக்குத் திலகவதியாராகிய அம்மையாரைப் பெருமான் எனக்குத் தந்தருளினார். இளமையில் அவரது சொல்லைக் கேளாது போயினும், தாயுள்ளம் படைத்த தமக்கையாரின் தவம்தான் என்னைக் கரையேற்றியது என்று நன்றியுணர்வோடு பாடுகிறார். அப்பாடல் காண்க.
எம்மை யாரிலை யானும் உளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யார்?எனக்கு என்றென் றரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே -தி.5 ப.7 பா.6
இட்டமாக இருக்கும் இடம்:
திருமறைக்காட்டை விரும்பி உறையும் இடமாகக் கொண் டுள்ளார் சிவபெருமான். இங்குள்ள பெருமான் அஷ்ட புஷ்பம் என்னும் எண்மலர்களை வட்டமாகச் சுற்றிய சடைமிசைச் சூடியுள்ளார் என்கிறார். எண் மலர்களாவன: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோத்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்பனவாம். இவ்வெட்டு மலர்களும் புறப்பூசையில் வழிபடற்கு உரியன. அகப்பூசைக்கு உரிய எண் மலரையும் நாம் தெரிந்து வழிபடல் நன்மை தருவதாம். அவையாவன: கொல்லாமை, அருள், பொறிஅடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாம். அகப்பூசை செய்தே புறப்பூசை செய்தல் வேண்டும். புறப்பூசை மட்டும் பூசையாகாது.
பண்ணின் நேர் மொழியாள்:
திருமறைக் காட்டீசர் சந்நிதிக் கதவு மறைகளால் பூசிக்கப்பட்டு திருக்காப்பிடப்பட்டமையால், அன்று முதல் மக்கள் பக்கத்தில் ஓர் வழி வகுத்துப் பூசை புரிந்து வழிபட்டு வந்தனர். ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் எழுந்தருளியபோது இந்நிலை அறிந்த ஞானசம்பந்தர் நேரே கும்பிடத் திருவருளால் எண்ணினார். அப்பரைத் திறக்கப்பாடுக என்றார். அப்பர், "பண்ணின் நேர்மொழியாள்" என்ற திருப்பதிகம் பாடினார். பத்துப்பாடல்கள் பாடியும் கதவம் திறக்கவில்லை. கடைசிப் பாடலில் இரக்கம் ஒன்றிலீர் என்றபோது கதவம் திறந்தது. இதில் இவ்வூர் அம்மையின் பெயர் தூய தமிழில் "பண்ணின்நேர் மொழியாள்" என்று குறிக்கப்பட்டுள்ளது. யாழைப்பழித்த மொழியம்மை என்று தமிழிலும் "வீணாகானவிதூ ஷினி" என்று வடமொழியிலும் வழங்கி வருகின்றனர். அகச்சான்றாக உள்ள அப்பாடல் காண்க.
பண்ணின் நேர்மொழி யாள்உமை பங்கரோ
மண்ணி னார்வலம் செய்மறைக் காடரோ
கண்ணி னால்உமை காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்மினே -தி.5 ப. 10 பா.1
இளங்கோயில்:
பெருமான் எழுந்தருளியுள்ள கருவறை பழுதுற்றிருக்கு மானால் அப்பகுதியைச் செப்பம் செய்யவேண்டும். செப்பம் செய்யத் தொடங்குமுன், அத்திருமேனியில் எழுந்தருளியுள்ள பெருமான் திருவுருவை, பாலுள்ள பலா மா முதலிய பலகைகளில் எழுதி அல்லது அம் மரத்தாலாகிய திருவுருவத்தில் மூல லிங்கத்தை ஆவாகனம் செய்து திருப்பணி பூர்த்தியாகும் வரை புதிய திருவுருவத்தையே வழிபட்டு வரலாம். இப்படி ஆவாகனம் செய்வதே சிறு கும்பாபி ஷேகம் போலத்தான் ஆகும். எனவே இதனை இளங்கோயில் என்பர். இதனையே வடமொழியில் பால ஆலயம் என்பர். அப்பர் தூய தமிழில் இளங்கோயிலே என்று திருமீயச்சூர்ப் பெருமானைப் பாடுகின்றார். அப்பர் இத்தலத்திற்குச் சென்றபொழுது பெருமான் இளங்கோயிலில் எழுந்தருளி இருந்தமையால் அதையே பாடினார். பெருமான் இளங்கோயிலில் எழுந்தருளிய காலத்தும், கும்பாபிஷேகத்திற்காக வேள்விச் சாலைக்கு எழுந்தருளும் காலத்தும், ஒரு கலை மூலஸ்தானத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மூலஸ்தானத்திலும் வழிபாடு செய்தலே முறையாகும். இளங்கோயில் பாடல் வருமாறு:
தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்கு
ஏற்றம் கோயில்கண் டீர்இளங் கோயிலே -தி.5 ப.11 பா.1
இது இளங்கோயில் என்றதனால், மூலத்தானம் பழமையாகிய முதுகோயில் என்பது தெளிவாகப் புரியும்.
கை தொழுவார், வைதெழுவார்:
மனம் கசிந்துருகித் தொழுவாரையும் விரும்பி அருள் செய்வான். கடவுள் இல்லை என்று நீக்கி வைதெழுவாரையும் துன்பம் செய்யான். வைபவரும் தம்மக்களே ஆகலின் இறைவன் அவர்களையும் காலப்போக்கில் திருந்துமாறு அருள்செய்து ஆட்கொள்வான். இதே கருத்தை ஞானசம்பந்தரும் இரண்டாம் திருமுறையில் திருவாழ்கொளிபுத்தூர்ப் பதிகப் (தி.2 ப.94 பா.5) பாடலில்,
"பரவுவாரையும் உடையார் பழித்திகழ்வாரையும் உடையார்
................
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூருளாரே"
எனக் குறிப்பிட்டுள்ளமை ஒப்புநோக்கி இன்புறற்பாலது.
இப்பாடலில் குறளின் சொற்பொருட்சாயல் வந்துள்ளமை கண்டு மகிழலாம்.
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல் -குறள் 196
என்ற குறளுக்குப் பரிமேலழகர் உரை கூறும்போது, மகன் எனல் என்ற சொல்லுக்கு பயனில் சொல் பாராட்டுவானை மகனென்று சொல்லற்க எனவும், மக்கட் பதடி எனல் என்ற சொல்லுக்கு மக்களில் பதர் என்று சொல்லுக எனவும் கூறுகிறார். எனல் என்ற சொல் சொல்லற்க என்றும் சொல்லுக என்றும் பொருள் தருதலைக் காண்கிறோம்.
இக் கருத்தை ஓரளவு இப்பாடலில் வரும் காதலன், வாடலன் என்ற சொல்லிலும் கண்டு மகிழலாம். காதலன் - விருப்புடையன், வாடலன்-வாட்டம் செய்யான்.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை -குறள் 155
என்ற குறட்கருத்தையும் இப்பாடலில் காணநேர்கிறது. தொழு தெழுதல் மனைவியின் செயல், வைதெழுதல் புறச்சமயத்தார் செயல். சொற்பொருள் கருத்து ஒற்றுமை கண்டு மகிழ்க. அப்பாடல் காண்போம்.
கரைந்து கைதொழு வாரையும் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே. -தி.5 ப.12 பா.1
இனியன் தன்னடைந்தார்க்கு:
தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் இடைமருதீசர் இனியனாக இலங்குகிறார். இதனைக் "கனியினும் கட்டிபட்ட கரும்பினும்" என்ற பாடலால் விளக்குகிறார். குழந்தைப்பருவத்தில் கனியிலே விருப்பம், கொஞ்சம் முதிர்ந்தால் வெல்லக்கட்டியிலும், கற்கண்டிலும் விருப்பம் மிகுகிறது. காளைப் பருவத்தில் பாவையரிடத்து விருப்பம் உண்டாகிறது. அதை அடுத்து அரசியலில் இன்பம் காண்கிறது. இவற்றையெல்லாம் விட இடைமருதீசன் கழல் நீங்காத இனிமை பயப்பது என்று அதைவிட அதைவிட என்று உறழ்ச்சிப் பொருள் காணலாம். மேலும் நாம் ஏழாம் வேற்றுமை இடப்பொருளில் வைத்தும் பொருள் காணுதல் மிகவும் இனிமை பயக்குமாறுள்ளது. கனியின்கண் சுவையாயிருப்பவனும், கட்டிபட்ட கரும்பின்கண் சுவையாயிருப்பவனும், பனிமலர்க்குழல் பாவை நல்லாரிடத்து இன்பமாயிருப்பவனும், தனிமுடி கவித்து ஆளும் அரசிடத்து இன்பமாயிருப்பவனும் இடைமருதூர்ப் பெருமானே என்று இனிமையாக இயம்பியுள்ளார். எல்லா இடத்தும் எல்லாப் பொருள்களிலும் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களிலும் அவன் உடனாயிருந்து நுகரச் செய்கிறான் என்ற கருத்தையே இப்பாடல் எளிமையாக உணர்த்துகிறது
.
ஆகமம் சொல்லும் பாங்கிக்கு:
ஊழிக் காலத்தில் அஃதாவது யுக முடிவில் இறைவனும் இறைவியும் மட்டுமே உள்ளனர். அப்போது இருவரும் தனிமை கழிய பெருமான் பெருமாட்டிக்கு வருகிற யுகத்தில் எப்படியெல்லாம் மக்களை மன்னுயிர்களை ஈடேற்றம் செய்வது என்று திட்டமிடும் ஆகமங்களை பணைத்தெழுந்த மருதமரத்தடியில் உமாதேவியாருக்கு உபதேசித்தார். அப்பாடல் காண்க.
துணையி லாமையில் தூங்கிருட் பேய்களோடு
அணைய லாவது எமக்கரி தேஎனா
இணையி லாஇடை மாமரு தில்எழு
பணையில் ஆகமம் சொல்லும்தன் பாங்கிக்கே.-தி.5ப.15பா.4
பாங்கி பக்கத்திருப்பவர் உமையம்மை.
திருவெண்ணி:
திருவெண்ணி என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய ஊர். சங்க காலத்தில் இவ்வூரில் தோன்றிய பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் கரிகாற்சோழனின் வெண்ணிப் போரைப்பற்றிக் கூறுகிறது. கரிகாலன் வெற்றி பெற்ற ஊர் வென்றி என்றாகி பிறகு வெண்ணி என ஆயிற்று என்பர்.
"கலிகொள்பாணர் வெண்ணிப்பறந்தலை" - புறம் 66.
"ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்" -அகம் 55,246
"இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய -
வெண்ணித் தாக்கிய கரிகால் வளவன்" -பொருநர் - 147-8
இருபெருவேந்தர் - சேர, பாண்டியர்கள். மேலும் பதினொரு வேளிரையும் வென்றமை குறிக்கப்படுகிறது.
இத்தலம் மிகத் தொன்மையானது என்பதையும் இங்குள்ள பெருமானை நினைத்திருந்த நாவுக்கரசருக்கு இனிமை பயந்து அமு தூறிற்று என்பதையும் அவரே ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
வெண்ணித் தொல்நகர் மேய வெண்திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறும்என் நாவுக்கே -தி.5 ப.17 பா.2
எனக்கு இனியர்:
ஒருவன் தனக்கு இனியர் யார்? என்று எண்ணிப்பார்த்தால் தமக்குத் தாமே இனியவராகத் தோன்றுவர். இது சரியன்று. நமக்கு நாமே நன்மை செய்ததாக எண்ணிச் செய்யும் செயலெல்லாம் நமக்கு நல்லனவாக முடியாததைக் காண்கிறோம். நாம் செய்யும் செயல் நமக்குத் தீமையையும் செய்துவிடுகிறது. நமக்கு நன்மை செய்பவன் நம்மினும் இனியவன் ஒருவன் இருக்கின்றான். அவன் நம்முள் உயிர்க்காற்றாய் புறத்தும் அகத்தும் புகுந்து நம் உள்ளத்தே நிற்கின்றான். அவனே திரு இன்னம்பரில் எழுந்தருளியிருக்கின்றான். அவனைத் தொழுது உய்மின்கள் என்கிறார் அப்பர். மேலும், அவ்வின்னம்பர் ஈசன் நாம் செய்வனவற்றையெல்லாம் ஒரு சிறிதும் விடாது குறித்துக்கொண்டு இருக்கிறார் என்கிறார் அப்பர். அவ்விரு பாடல்களையும் சிந்திப்போமாக.
என்னி லாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்இனி யானொரு வன்உளன்
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு
என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே. -தி.5 ப.21 பா.1
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே. -தி.5 ப.21 பா.8
பற்றினாரைப் பற்றா வினை:
பற்றும் பாசமும் விடவேண்டுமானால் பற்றற்ற பரம்பொருளை நாம் பற்றவேண்டும். அப்படிப் பற்றினால் நாளடைவில் நமது பற்று அற்றுப்போகும். பற்றுள்ளாரைப்பற்றாகப் பற்றினால் நாளும் பற்று மிகுமே தவிரக் குறையாது. இதனையே ஞானசம்பந்தரும் "கற்றாங்கு எரியோம்பி" என்ற பாடலில் "முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே" என்கின்றார். அதே கருத்தை இங்கு அப்பர் கூறும் அரிய பாடலில் காண்போம்.
புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்உடை யார்அமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. -தி.5 ப.23 பா.3
நெஞ்சம் வாழி:
நெஞ்சை வாழ்த்துவது பெரியோர் இயல்பு. வாழ்க எம் மனமும் மணி நாவும்மே" என்பார் குமரகுருபரர். நெஞ்சம் நல்லதே நினைத்தால் அது நம்மை நன்னெறியில் செலுத்தும். இறைவனை நினையும் நெஞ்சம் நல்ல நெஞ்சம். எனவேதான் அப்பர்பெருமான் திருநின்றியூர்த் திருக்குறுந்தொகையில் "நெஞ்சமே நீ அஞ்சி வழிபட்டாலும் சரி அன்புடனே வழிபட்டாலும் சரி அது அந்நெஞ்சுடையானை உய்விக்கும் ஆற்றல் உள்ளது. எனவே பெருமானை அச்சத்துடனோ அன்புடனோ வழிபட்டாலும் நீ வாழ்க" என வாழ்த்துகிறார் அப்பர். அறியாப்பருவத்தினர் அச்சம் காரணமாகவும், அறிந்தமெய்யுணர்வினர் அன்பு காரணமாகவும் வழிபடுவர் என்பது அறியத்தக்கது.
அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே. -தி.5 ப.23 பா.9
அந்திக்கோன்:
இச்சொல் அரிய பிரயோகமாய் வந்துள்ளது. அந்தி - மாலைப்பொழுது. இரவு-இரவில் தண்ணளியுடன் குளிர்ச்சியாக ஆட்சிபுரிபவன் சந்திரன். இதனை, "அந்திக் கோன்தனக் கேஅருள் செய்தவன்" என்னும் பாடல் பகுதியால் அறிவிக்கிறார்.
இப்பதிகத்தின் இறுதிப்பாடலில் இறைவன் மகத்துக்கு மகத்தாகவும் அணுவிற்கு அணுவாகவும் இருப்பதைக் குறிப்பிடுகிறார். "பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே" என்பது அப்பாடல் பகுதியாகும்.
பாதிப்பெண் ஒரு பாகத்தன்:
"அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்" என்பது சாத்திரம். "ஒருமை பெண்மை உடையன்" என்கிறார் ஞானசம்பந்தர்.
"பாதி ஓர் பெண்ணை வைத்தாய்" என்பது சுந்தரர் வாக்கு.
"சக்தி இன்றிச் சிவம் இல்லை, சிவம் இன்றிச் சக்தி இல்லை." இரண்டும் இரு தன்மை கொண்ட ஒரே பொருள் என்பதை யாரும் மறத்தற்கியலாது.
இக்கருத்தைத் திருவாவடுதுறை அகத்துறைப்பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அப்பாடல் வருமாறு;
பாதிப் பெண்ஒரு பாகத்தன் பன்மறை
ஓதி என்னுளம் கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடு தண்துறை மேவிய
சோதி யேசுட ரேஎன்று சொல்லுமே -தி.5 ப.29 பா.3
வஞ்சமின்றி வணங்குமின்:
கரவாடும் வன்நெஞ்சர்க்கரியவன் என்பார் காஞ்சிப்பதிகத்தில். ஆனைக்காவிலும் நாளும் வஞ்சமின்றி வணங்குமின் வைகலும் என்கிறார். மேலும் வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுஉற என்கிறார். நெஞ்சில் வஞ்சமின்றியும் நாவில் வெஞ்சொல் இன்றியும் நினைந்தும் வாழ்த்தியும் வழிபடுவாருக்கு ஆனைக்கா அண்ணல் அஞ்சல் என்று அருள்செய்திடும் என்பவர் மேலும் ஒரு பாடலில் திருகுசிந்தையைத் தீர்த்து, உருகி நைபவர்க்கு அருகில் நின்று அருள்செய்பவன் ஆனைக்கா அண்ணல் என்கிறார். மேலும் ஒரு பாடலில் துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும் நீர் இன்பம் வேண்டுவீர் ஆனால் இராப்பகல் ஏத்துமின், அப்படி என்பொன் ஈசன் இறைவன் என்று உருகுவார்க்கு ஆனைக்கா அண்ணல் அன்பனாய் அருள்புரிவன் என்கிறார்.
மேலும், "நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே, படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள், தடை ஒன்று இன்றியே தன்னடைந்தார்க்கெலாம், அடைய நின்றிடும் ஆணைக்கா அண்ணலே" என்று அறம் கூறுகிறார். மேலும் மடநெஞ்சமே நேசமாகி நினை என்று அறிவுறுத்துகிறது ஒரு பாடல். இவற்றையெலாம் சிந்தித்துச் சிறப்புறுவோமாக.
அடிகள் சேவடிக் கீழ் நாம் இருப்பது:
திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஒன்று அமைத்து அங்கேயே நிலையாகத் தங்கிவிடுவது என்ற குறிப்பில் அப்பர் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளினார். அங்குத் தங்கி இருப்பதை இறைவன் சேவடிக்கீழ்த் தங்கியிருப்பதாகவே கொண்டார். அவ்வெண்ணங்கள் பாடல் வடிவு கொண்டன.
"அடிகள் சேவடிக்கீழ் நாம் இருப்பதே"
"தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே"
"ஆதி சேவடிக்கீழ் நாம் இருப்பதே" -தி.5 ப.32.பா.1-10
என்று பத்துப்பாடல்களிலும் பாடியுள்ளார்.
பூணியாய்ப் பணி செய்க:
திருச்சோற்றுத்துறைப் பதிகமாகிய "கொல்லை ஏற்றினர்" என்ற பதிகம் முழுவதும், திருவடிக்கீழ் நாம் இருந்தாலும் பணி செய்வதில் குறை ஏற்படக்கூடாது என்பதில் கருத்தாய் இருக்கிறார் அப்பர். இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்,
"சோற்றுத் துறையர்க்கே வல்லையாய்ப் பணி செய் மடநெஞ்சமே"
"பக்தியாய்ப் பணி செய்மடநெஞ்சமே".
"பட்டியாய்ப் பணிசெய் மடநெஞ்சமே"
(பட்டி - மீளா அடிமை.)
"வாதியாய்ப் பணிசெய் மடநெஞ்சமே"
(வாதியாய் - பரமன் புகழ்களையே பேசுபவனாய் பணி செய்வது.)
"பூணியாய்ப்பணி செய் மடநெஞ்சமே"
(பூணி-அன்பு.)
இப்படி இப்பதிகம் முழுதுமே பாடியுள்ளமை கண்டு நாமும் பணிசெய்து உய்வோம். (தி.5 ப.33 பா.1-10)
ஒருவர் தாம் பலபேர் உளர்:
இறைவன் ஒருவரா, பலரா என்பது பலரது உள்ளத்தே எழும் ஐயம். இவ் ஐயத்திற்கு நம் சமயாசாரிய மூர்த்திகள் பல இடங்களிலும் பல்வேறு விதமாகவும் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவு படுத்தியுள்ளனர்.
அவற்றுள் இது ஒரு இடம். திருச்செம்பொன்பள்ளி திருக் குறுந்தொகையில் "செம்பொன் பள்ளியார் ஒருவர்தாம் பலபேர் உளர் காண்மினே" என்றருளிச் செய்துள்ளார். கடவுள் ஒருவர்தான். பேர்கள் தான் பலவாக உள்ளன என்று இங்கு தெரிவித்துள்ளார். அப்பாடல் வருமாறு.
அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்து
இருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே. -தி.5 ப.36 பா.4
ஒருவர் தாம் பல பேருளர் என்பதற்கு உலகியலிலும் சில உதாரணங்கள் கண்டு தெளியலாம். காவிரி ஒன்றுதான்; பலவாகப் பிரிந்து பலபேர் தரித்து பலருக்கும் பயன் தருகிறது. இந்தியா ஒன்றுதான்; பல மாநிலங்களாகப் பேர் பெற்று பலவாகப் பிரிந்து பலருக்கும் பயன் தந்து நிற்கிறது. இதுபோல் இன்னும் பல உதாரணங்களும் காணலாம்.
பாவமும் பிழையும் தீர்ப்பர்:
கடவூர் மயானப்பெருமானை ஞானசம்பந்தர் "வரிய மறையார்" என்னும் பதிகத்துள் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் "பெரிய பெருமான் அடிகளே" என்றும் "எம்பெருமான் அடிகளே" என்றும் குறிப்பிட்டுள்ளமை காணலாம். இங்கு நாவுக்கரசர் "குழைகொள் காதினர்" என்று தொடங்கும் பதிகத்துள் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "பெருமான் அடிகள்" என்று குறிப்பிட்டிருப்பதும் சிந்தித்தற்குரியது. பழைய அடியார்கள் செய்த பாவத்தையும் பிழையையும் தீர்ப்பர் என்றும், பரவுவார் இடர் தீர்த்துப் பணி கொள்வார் என்றும் இப்பதிகத்துள் குறிப்பிட்டுள்ளார். அப்பாடல் பகுதிகளைக் காண்க.
"பழையதம் அடியார் செய்த பாவமும்
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே" -தி.5 ப.38 பா.1
"பரவுவார் இடர் தீர்ப்பர் பணிகொள்வர்
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே"-தி.5 ப.38 பா.8
மயிலாடுதுறைப் பதிகம்:
"கொள்ளும் காதன்மை" எனத்தொடங்கும் திருப்பதிகம் அகத்துறைப்பாடல்கள் பதினொன்றைக் கொண்டது. முதற்பாடலில் பெருமான் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி பெருமானைக் கண்டபோதெல்லாம் உள்ளம் உருகுவதால் உடல் மெலிகிறாள். கையில் பெய்யும் வளையல்கள் கழல்கின்றன. பெருமான் பெயராகிய வள்ளலையே உரைத்தவண்ணம் உருகுகின்றாள், என்கிறார். இங்குள்ள பெருமான் வள்ளலாய் வீற்றிருக்கின்றார். நாற்றிசையிலும் நான்கு விதமாக வண்மை வழங்கும் பெருமான் இங்கு நடுநாயகமாக எல்லாவற்றுக்கும் மூலமான வள்ளலாகத் திகழ்கிறார். வடக்கே கைகாட்டும் வள்ளல் வள்ளலார் கோயில், கிழக்கே துறைகாட்டும் வள்ளல் - விளநகர், தெற்கே மொழிகாட்டும் வள்ளல்-பெருஞ்சேரி, மேற்கே வழிகாட்டும் வள்ளல் மூவலூர். வேறு ஒருவராலும் வழங்கமுடியாத வீடுபேற்றை, மோட்சத்தை வழங்குபவர் எவரோ அவரே வள்ளல் எனப்படுவார். மற்றவர்க்குச் சொல்வதெல்லாம் உபசாரமே. சிவபெருமான் ஒருவரே வீடு அளிப்பவர் ஆதலின் இவர்க்கு வள்ளல் என்ற பெயர் வந்தது. அப்பாடல் காண்க.
கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடுது றைஉறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே. -தி.5 ப.39 பா.1
அஞ்சொலாள்:
இத்தலக் குறுந்தொகை நான்காம் பாடலில் கொடிய கோபமுடைய காலன் நம்மிடம் வரமாட்டான். அஞ்சத்தக்க இறப்பும் பிறப்பும் அறுக்கலாம், எப்பொழுது? அஞ்சொலாள் உமை பங்கன் அருளில் காலனைக் கடக்கலாம், பிறப்பினையும் இறப்பினையும் அறுக்கலாம் என்று அருளியுள்ளார். அஞ்சொலாள்-அழகிய இனிய சொல்லை உடையவள் அம்மை. இதனைப் பின்னர் வந்தோர் அஞ்சலாள் எனக்கொண்டு இவ்வூர் அம்மை பெயரை "அபயாம்பிகை" என மொழி பெயர்த்தனர். எப்பெயரும் இறைவிக்கு ஏற்றதே. எனினும் உண்மை காண்டல் உலகினுக்கு இனியதே என்க.
நிலைமை சொல்லு:
கயிலாய நன்மலையன் மாமயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்துளும் தங்க நெஞ்சே தவம் என் செய்தாய்? நிலைமை சொல்லு என்று வினவுகிžர். அந்தப் பாடல் வருமாறு.
நிலைமை சொல்லுநெஞ் சேதவம் என்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே -தி.5 ப.39 பா.6
குழலின் நேர்மொழி:
நான்காம் திருமுறையில் திருவாரூர்த் திருநேரிசையில் "குழல் வலம் கொண்ட சொல்லாள்" என்ற அரிய பிரயோகம் உள்ள பாடலை முன்பு கண்டோம். இங்கு ஐந்தாம் திருமுறையிலும் திருக்கழிப்பாலை "வண்ணமும் வடிவும்" என்ற பதிகத்தின் மூன்றாம் பாடலில் இரண்டாம் அடியில் "குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ" என்று குழலுக்கு ஒப்புமையாக அம்மையின் இனிய மொழியைக் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழலாம்.
என்றும் இன்பம் தழைக்க:
தில்லையின் கீழ் எல்லையில் உள்ள திருவேட்களம் சென்றார் அப்பர். அர்ச்சுனற்குப் பாசுபதம் அருளிய பெருமானைப் பணிந்தார். உள்ளத்தெழுந்த உயர்பெரும் கருத்துக்களை "நன்று நாள்தோறும்" என்ற பதிகத்துள் பொதிந்து கொடுத்துள்ளார். மனிதர்கள் நாள்தோறும் சென்று திருவேட்களத்துள் உறைகின்ற பொற்சடைப் பெருமானைத் தொழுவீர்களாக. நாள்தோறும் நல்லனவே உமது வாழ்வில் நடைபெறும். நாம் செய்த தீவினைகள் போய் அறும். என்றும் இன்பம் தழைக்க இனிதே வாழலாம் என்கிறார். அப்பாடல் காண்க.
நன்று நாள்தொறும் நம்வினை போய்அறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே. -தி.5 ப.42 பா.1
மேலும் "வேட்களம் கைதொழுது இருப்பனாகில் எனக்கிடர் இல்லையே" என்றும், "பூக்கள் கொண்டு அவன் பொன்னடி போற்றினால், காப்பர் நம்மைக் கறைமிடற்று அண்ணலே" என்றும், "துன்பம் இல்லை துயரில்லையாம் இனி" என்றும் தம் அனுபவத்தை அகமகிழ்ந்து கூறியுள்ளமை கண்டு இன்புறுக.
நாவரசர் காணும் நல்லத்தான்:
திருநல்லம் என்பது இன்று கோனேரிராஜபுரம் என வழங்குகிறது. இங்கு, பெரிய நடராஜப் பெருமானின் செப்புப்படிமம் வியத்தகு நிலையில் உள்ளது. இங்கு எழுந்தருளிய அப்பர் நல்லத்தானைக் கைதொழுது வணங்கினார். தம் உள்ளத்தெழுந்த அருளுணர்வைத் திருக்குறுந்தொகைப் பதிகமாக வெளிப் படுத்தினார். நம்மைக் கொல்லத்தான் நமனார் வந்தக்கால் அறிவிலும் வலியிலும் பலவகையிலும் ஏழையாக இருக்கின்ற நாம் என் செயவல்லம். ஒன்றுமில்லை. எனவே நல்லத்தான் கழலைச் சொல்ல வல்லீரேல் நம் துயர் தீரும் என்கிறார்.
"பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புலையனேன்" என்றார் மணிவாசகர். அஃது அவருக்குப் பொருந்தாது. நம்மனோர்க்கே மிக மிகப் பொருந்தும். அதனையே அப்பர் நமக்கு இங்கு உபதேசிக்கிறார். பொய்யாக வார்த்தைகளைப் பேசிப் பொழுதினைப் போக்காதே. துக்கம் தீரவகைசொல்லுவன் கேளுங்கள், தக்கன் வேள்வியைத் தகர்த்த தழல்வண்ணன் நம்பெருமான். மேலும் திகம்பரன் - திக்கையே ஆடையாக உடுத்தவன் - நிர்வாண கோலத்தன், அவனை அடைதலே நமக்கு நன்மை எல்லாம் பயக்கும் என்கிறார்.
மேலும் "நமக்கு நல்லது நல்லம் அடைவதே" என்றும் "பரவுமின் பணிமின், பணிவார் அவரோடே விரவுமின் விரவாரை விடுமினே" என்றும் "வல்லவாறு சிவாய நமவென்று தொழ, வெல்ல வந்த வினைப்பகை வீடுமே" என்றும் "நல்லம் நல்லம் எனும் பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே" என்றும் குறித்துள்ளமை கண்டு நாமும் தொழுவோம். தூநெறி - வீட்டு நெறி.
வஞ்ச ஆறுகள் வற்றின:
பஞ்ச பூதங்களும் மாயா காரியங்கள். இதனையே பஞ்சபூத வலை என்கிறார். இவ் வலையில் படாமல் தப்பவேண்டுமானால் பேரொளிப் பொருளாக பேரறிவுப் பொருளாக, பேரின்பப் பொருளாக உள்ள ஆமாத்தூர் அழகனை நெஞ்சினால் நினைதல் வேண்டும். நினைத்தால் வஞ்சனையாக உள்ள ஆறுகள் வற்றி விடும். அப்பர் நினைந்தார், வஞ்ச ஆறுகள் வற்றின. அவர் அனுபவப் பாடலைக் காண்போம்.
பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே -தி.5 ப.44 பா.4
வஞ்சனையால் வரும் தீய வழிகள் பல. அவ்வழிகளெல்லாம் வற்றிப் போயின. ஆறு - வழி. மேலும் இத்தலப் பதிகத்தின் ஐந்தாம் பாடலில் "இராமனும் வழிபாடு செய் ஈசனை, நிரா மயன்தனை நாளும் நினைமினே" என்கிறார். நிராமயன் - நோய் இல்லாதவன். பசுத்துவம் இல்லாதவன். பிறவி அற்றவன். இராமன் வழிபட்ட இத்தல புராணக் குறிப்பை இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். ஆமாத்தூர் இடமதாகக்கொண்ட ஈசனுக்கு என் உளம், இடமதாக்கொண்டு இன்புற்றிருப்பனே என்கிறார். ஆமாத்தூரில் குடிகொண்டுள்ள ஈசனை என் உள்ளத்தில் ஏற்றிப் பூசிப்பேன். போற்றுவேன் எனப் புளகாங்கிதம் கொள்கிறார்.
கண்ணில் உண்மணி:
பண்ணில் ஓசையாகவும், பழத்தில் சுவையாகவும் இருப்பவன் இறைவன். பண் - இராகம். ஓசை - சுரம். பண்வேறு. ஓசை வேறு. என்றில்லாமல் உடல் உயிர் போல ஒன்றாய் இருப்பவன் என்பதை முதல் அடி உணர்த்துகிறது எனலாம். "பெண்ணோடு ஆணென்று பேசற்கரியவன் வண்ணமில்லி வடிவுவேறாயவன்" என்பது கண்ணொளியும் சூரிய ஒளியும் போல வேறாயிருந்து உதவும் தன்மையைக் காட்டுகின்றது எனலாம். "கண்ணில் உண்மணி கச்சிஏகம்பனே" என்பதில் கண் காண்பதற்கு உயிர் உடனாய் இருந்து காண்பதுபோல சிவன் உயிர்க்கு உயிராய் உடனிருந்து உணர்த்துவதைக் கடைசி அடி காட்டுகிறது. இறைவன் ஒன்றாய், வேறாய், உடனாய் இருந்து உதவுவதைக் குறிப்பிடுகிறது இப்பாடல்.
பொய்யர் உளத்தணுகான்:
சிவன் பொய்யர் உள்ளத்திலும், வஞ்சகர் நெஞ்சத்திலும் உறையான். "பொய்யர் உள்ளத்து அணுகானே" என்பது அருணகிரியார் திருப்புகழ். பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கே அருள் செய்வான் அரன் என்பது அப்பர் வாக்கு. பொய் மொழியா மறையோர்களும், மெய்மொழி நான்மறையோர்களும் துதித்துப் போற்றப்படுபவனே காழியிலும் வீழியிலும் வீற்றிருக்கும் பெருமான் என்கிறார் ஞானசம்பந்தர். நாவரசர் திருஏகம்பத்து இறைவனைத் தொழுது எழுந்தார். அப்போது ஏகம்பன் உணர்த்திய நல்லுணர்வை சொல்மாலையாக்கி ஏகம்பவாணர்க்கே சூட்டி மகிழ்கிறார். நாமும் அவ்வாக்கை உணர்ந்து உயர்வோம்.
பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு ஏந்திய
கைய னைக்கச்சி ஏகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை அல்லலே -தி.5 ப.48 பா.9
செந்தமிழ் உறைப்பு:
அப்பர் திருமறைக்காட்டில் பத்துப் பாடல்கள் பாடியும் திருக்கதவு திறக்கவில்லை. பதினொராம் பாடலில் "இரக்கம் ஒன்றிலீர்" என்றதுமே கதவு திறந்தது.
ஆல் ஞானசம்பந்தரோ "சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்" என்று ஒரு பாடல் பாடியமாத்திரத்தே திருக்கதவம் அடைத்துக் கொண்டது.
அப்பர், இதில் நாம் ஏதோ பிழை செய்துவிட்டோம், என்று பிழையை எண்ணி எண்ணி நைந்தபோது, "திருவாய்மூருக்கு நம்பால் வருக" என அசரீரி தோன்ற, அப்பர் நள்ளிரவில் அங்குச் சென்றார். ஞானசம்பந்தர் அப்பர் வாய்மூர் செல்கிறார் என்பதை உணர்ந்து அவரும் அப்பரைப் பின் தொடர்ந்தார். இருவரும் திருவாய்மூர் சேர்ந்தனர். காட்சி ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அப்பர் "எங்கே யென்னை" என்ற திருக்குறுந் தொகைப் பதிகம் பாடினார். அதில் எட்டாம் பாடலில் திறக்கப்பாடிய என்னிலும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தாராகிய ஞானசம்பந்தர் உந்நின்றார் என்றார். அணிமையிலும் இல்லாமல், சேய்மையிலும் இல்லாமல் நடுநின்றவரை உந்நின்றார் என்ற சுட்டினால் அறிவிக்கிறார். உடனே வாய்மூர் இறைவன் ஞானசம்பந்தருக்குக் காட்சியருள அவர் அக்காட்சியை அப்பருக்குக் காட்ட அப்பர் கண்டார். எனவே பெருமான் காட்சியைக் காட்டியருள ஞானசம்பந்தர் கண்டு காட்டியதால், நாவுக்கரசருக்கு ஒருவகையில் குருவுமானார்.
தன்னைப்பெற்ற தவமுடைய சிவபாத இருதயருக்கு தோடுடைய செவியன் விடைஏறி முதலிய அடையாளங்களால் சுட்டிக்காட்டியும், அதைக்காணும் நிலை சிவபாத இருதயருக்குக் கிட்டவில்லை. ஞானசம்பந்தரால் தந்தை என்ற முறையில் அப்பரே என்று அழைத்த அப்பருக்கு அக்காட்சி கிடைத்தது. இவ்வரலாற்று நிகழ்ச்சியை அறிவிக்கும் பாடலைக் காண்போம்.
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்
பிறைக்கொள் செஞ்சடை யார்இவர் பித்தரே -தி.5 ப.50 பா.8
அதிசூக்கும பஞ்சாக்கரம்:
வேதம் நான்கினுள்ளும் மெய்ப்பொருளாய் இருப்பது நாதன் நாமமாகிய நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தேயாம். வேதம் நான்கு எனினும் அதர்வ வேதத்தை நீக்கி வேதம் மூன்று என்றே கொள்வர் மேலோர். அதுபற்றியே `வேதத்திரயி' எனவும் வழங்கலாயிற்று. இருக்கு, யசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களுள் நடுநின்ற யசுர் வேதத்தின் நடுவில் "நமசிவாயச சிவதராயச" என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரம் அமைந்துள்ளது. வடமொழி வேதத்தைப்போலவே தமிழ் வேதமாகிய மூவர் தேவாரத்துள் நடுநிற்பதாகிய அப்பர் தேவாரத்துள்ளும் நடுநின்ற இவ் ஐந்தாம் திருமுறையின் நடுவில் உள்ள 51ஆம் பதிகமாகிய திருப்பாலைத்துறைப் பதிகத்துள் அமைந்த 11பாடல்களுள் நடுநிற்கும் 6ஆம் பாடலில் இவ் அதிசூக்கும பஞ்சாக்கரம் பேசப்படுகிறது.
தூலபஞ்சாக்கரம் நமசிவய என்பது. சூக்கும பஞ்சாட்சரம் சிவயநம என்பது. அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவயவசி என்பது. இதனைச் சிவய சிவ என்றும் சிவய வசி என்றும் உபதேசக் கிரமப்படி ஓதிக்கணித்து வருகின்றனர். "வானிடத்தவரும் மண்மேல்வந்து அரன்தனை அர்ச்சிப்பர்" என்ற அருணந்தி சிவத்தின் வாக்குப்படி விண்ணவர்கள் மண்ணகத்தே வந்து வழிபடுவதைக்கண்ட மண்ணவர்கள் வியப்பு எய்துகின்றனர். மறவாமல் "சிவாய" என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரத்தை ஓதிக் கணிக்கின்றனர். அங்ஙனம் எண்ணினார்க்கு எழில்மிக்க வானகத்தை உறைவிடமாகப் பண்ணிக் கொடுத்தார் பாலைத்துறைப் பரமனார் என்கிறது இப்பாடல். அப்பாடலைச் சிந்திப்போம்.
விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று
எண்ணி னார்க்குஇட மாஎழில் வானகம்
பண்ணி னார்அவர் பாலைத் துறையரே -தி.5 ப.51 பா.6
நாவலந்தீவு:
இமய மலையின் தென்பாலுள்ள இந்தியப்பெருநாட்டிற்கு நாவலந்தீவு என்று பெயர். நாடும் ஊரும் தோன்றுதற்கு முன்னர் இத்தீவு நாவல்மரக்காடாக இருந்தது. காடு திருத்தி நாடாக்கிய முயற்சியால் நாடும், நகரமும் நற்றிருக்கோயிலுமாக நாவலந்தீவு திகழ்கிறது. இதனை ஜம்புத்தீவு என்றும் வழங்குவர். ஜம்பு - நாவல். கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள திருநாகேச்சுரத் திறைவனை, நாவலந்தீவில் வாழ்பவர்கள் எல்லோரும் `வினையொடு பாவமாயின பற்றறுவித்திடலால்' இங்கு வந்து வணங்கி வழிபடுகின்றனர் என்கிறார் அப்பர்.
இராகு பூசித்து அருள்பெற்ற தலம் இது. இதனால் இராகுதோஷம் உடையவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை இராகு காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வழிபட்டு நலமுறுகின்றனர். இப்பாடல் காண்போம்.
நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடும்
தேவர் போல்திரு நாகேச் சரவரே. -தி.5 ப.52 பா.2
எட்டு நாண்மலர்:
எட்டு நாண்மலரை அட்டபுட்பம் என்பர் வடமொழியாளர். புன்னை, வெள்ளெருக்கு சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை என்பன அவ் எண் மலர்களாம். அகப்பூசைக்குரிய எண்மலர்களாவன. கொல்லாமை, அருள், பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாம். இதனை நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் என்பார் அப்பர்.
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னார்அடி சேரும் அவருக்கே -தி.5 ப.54 பா.1
என்னும் இத்திருப்பதிகம் திருவதிகை வீரட்டானத்திறைவரைப் பற்றியது. இப்பதிகத்துப் பல பாடல்களிலும் அஷ்டபுஷ்பம் சார்த்தலையும் அதன் பலன்களையும் குறிப்பிடுகின்றார்.
வையம் ஆளவும் வைப்பர்:
அப்பர் காஞ்சியை அடுத்துள்ள திருமாற் பேறு செல்கிறார், "ஏதும் ஒன்றும்" எனத் தொடங்கும் பதிகம் பாடுகிறார். அதில் ஏதும் ஒன்றும் அறிவிலராயினும் அஞ்செழுத்தை உபதேச வாயிலாகப் பெற்று ஓதி உருவேற்றினால் அவரவர் உள்ளத்தில் அம்மையப்பராகிய சிவம் விளங்கி மகிழ்விப்பார் என்கிறார். விடமுண்ட கண்டா என ஓதின் வைத்த மாநிதியாகப் பயன் தருவார் என்று வழிப்படுத்துகின்றார். சாத்திரம் பல பேசி அதன்வழி நடவாதாரைச் சாடுகின்றார். கோத்திரம், குலம், எல்லாம் நமக்குத் தேவைதான். அதுவே நம்மை ஈடேற்றிவிடும் என்று எண்ணாதே. பாத்திரம் சிவம் என்பதை மறவாதீர், என்று அறிவுறுத்துகின்றார். அவ்வாறு உணர்ந்தால் ஒரு நொடிப் பொழுதில் உனக்கு அருள் செய்வார். மேலும் செவ்விய இரு பாதங்களையும் வணங்கினால் வையம் ஆளவும் வைப்பர் என்று அறிவிக்கிறார். அப்பாடல் காண்க.
ஐய னேஅர னேஎன் றரற்றினால்
உய்ய லாம்உல கத்தவர் பேணுவர்
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே. -தி.5 ப.60 பா.7
கோழம்பம் மேயஎன் உயிர்:
கோழம்பம் என்பது திருவாவடுதுறை, குத்தாலம் முதலிய தலங்களுடன் புராணத் தொடர்புடைய தலம். தேவாரம் பாடுவோர் விநாயகரை அடுத்து முருகனைப் பற்றிப் பாடுவதற்கு இவ்வூர் அப்பர் தேவாரமாகிய "சமர சூரபன்மாவைத் தடிந்த வேல் குமரன்" என்ற பாடலையே ஓதுவர். மேலும் இங்குள்ள இறைவனை அப்பர் பெருமான் தன் உயிராகப் போற்றியுள்ளார். "என் உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே" என்பது அத்தொடராகும். எல்லாத் தலங்கட்கும் முதலாவது கயிலாயம்தான் என்பதையும் இப்பாடலில் குறிப்பிடுகின்றார். குயில் பயிலும் சோலை சூழ்ந்த கோழம்பம் என்று ஊரின் செழிப்பைப் புலப்படுத்துகின்றார். உள்ளம் உருகில் உடன் ஆவார் என்பது சாத்திரம். எனவே உள்ளம் உருகி வழிபட்டு உய்வோமாக. இத்திருத்தலம் உடனடியாகத் திருப்பணி செய்யவேண்டிய தலமாகும். வளமார்ந்த கருத்தமைந்த பாடல் பெற்ற இத்தலம் வளங்குன்றிய நிலையில் உள்ளது. விரைவில் திருப்பணி செய்து சிறப்படைவோம். அப்பாடல் வருமாறு.
கயிலை நன்மலை ஆளும் கபாலியை
மயிலி யல்மலை மாதின் மணாளனைக்
குயில்ப யில்பொழில் கோழம்பம் மேயஎன்
உயிரி னைநினைந்து உள்ளம் உருகுமே. -தி.5 ப.64 பா.2
கோடி அர்ச்சனை:
இறைவன் இறைவியரது கோடி நாமங்களைச் சொல்லி, மலர்தூவி, குங்குமமிட்டு வழிபடுவதைக் கோடி அர்ச்சனை என்பர். இக்குறிப்பை பூவனூர் தேவாரத்தில் அப்பர் குறிப்பிடுகிறார்.
பூவ னூர்புனி தன்திரு நாமம்தான்
நாவில் நூறுநூறு ஆயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினும் செல்வர்க ளாவரே -தி.5 ப.65 பா.1
நூறாயிரம் ஒரு இலட்சம். நூறு நூறு ஆயிரம் ஒரு கோடி ஆகிறது. கோடி நாமங்களைச் சொல்லி வழிபட்டால் நம் பாவம் பறைவதோடு தேவர் கோவாகிய இந்திரனை விட மேலான செல்வத்தைப் பெறலாம்.
மனிதரில் தலையாய மனிதர்:
அனுசயம் - பகை. ஒருவருடனும் பகை பாராட்டாது, நட்புப் பாராட்டி கனிந்த மனத்துடன் கண்ணீர் மல்கிப் புனிதனாகிய பூவனூர் இறைவனைப்போற்றி வழிபட்டால், அப்படி வழிபட்டவர் மனிதர்களிலெல்லாம் தலையாயவராகத் திகழ்வர் என்கிறார் அப்பர். அப்பாடல் :
அனுச யப்பட்டு அதுஇது என்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரில்தலை யான மனிதரே. -தி.5 ப.65 பா.6
வலங்கொள்வர் அடி என் தலை மேலவே:
சைவசமய ஆசாரியர்கள் நால்வரும் அடியவர்களைப் போற்றியவர்கள். சிவபெருமானையும், சிவன்கோயில்களையும், அடியார்களையும் போற்றியவர்களின் பாதங்கள் என் தலைமேலன என்கிறார்கள். நம் ஆசாரியப் பெருமக்கள். அப்பர் திருவலஞ்சுழி சென்று வழிபடுகிறார். அங்கு இலங்கை வேந்தன் இராவணன் நினைவிற்கு வருகிறான். அவனது இருபது தோளும் இற்றுப்போம்படியாக ஒருவிரல் ஊன்றினான் என்கிறார். அவ்விரலும் நலங்கொள் பாதத்து ஒருவிரல் என்கிறார். ஆண்டவன் செய்வன எல்லாம் நல்லனவே. அவன் ஒருவன்தான் நன்றுடையான், தீயதில்லான். எனவே அவன் பாதம் நலம்கொள் பாதம் ஆயிற்று. ஒருவிரல் இராவணனை அழிக்கவில்லை. அடர்த்துத் திருத்தியது. எனவேதான் நலங்கொள் பாதத்து ஒருவிரல் என்கிறார் நாவரசர். அவ்வலஞ்சுழி நீர்வளம் சூழ்ந்தது. நீரில் மீன்வளம் மிக்கது. அம்மீனோ மலங்கு மீன் வகையைச் சேர்ந்தது. அப்படிப்பட்ட வளம் சூழ்ந்த வலஞ்சுழித் தலத்தை வலங்கொள்வார் திருவடிகள் என் தலைமேலன என்கிறார் நம் ஆசாரியமூர்த்தியாகிய அப்பர். இவ்வழியை நாமும் பின்பற்றி உய்யலாமே. அப்பாடல்.
இலங்கை வேந்தன் இருபது தோள்இற
நலங்கொள் பாதத் தொருவிரல் ஊன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வார்அடி என்தலை மேலவே -தி.5 ப.66 பா.10
இதே கருத்தமைந்த ஞானசம்பந்தரின் கச்சியேகம்பப் பாடலும் காண்க.
தூயானைத் தூயவா யம்மறை ஓதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு ஏகம்பம்
மேயானை மேவுவார் என்தலை மேலாரே. -தி.2 ப.12 பா.8
பறப்பையும் பசுவும் படுத்து:
பறப்பை என்பதற்கு பறவை வடிவம் பொறித்த வேள்வித்தூண் என்பர். பசு-வேள்விப்பசு. படுத்து என்பதற்கு சிறந்த பொருளாகக் கொள்ளுதல் என்பர். வேள்வித்தீயின்கண் நெய்யைச் சொரிந்தும் வேள்விச்சாலையின்கண் பசுவிற்கு வாயுறை கொடுத்தும் ஆராதனை செய்து வேள்வியை நடத்தும் அந்தணர்வாழும் ஊர் திருவாஞ்சியம் என்கிறார் அப்பர். இக்கருத்துள்ள பாடல் காண்போம்.
பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்உடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர் தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியம் சேர்மினே -தி.5 ப.67 பா.2
கறை பொருந்திய பிறை அணிந்தவர் என்ற குறிப்பு அரிய பிரயோகமாகக் காணப்படுகிறது. கண்ணுதற் பெருமான் எழுந்தருளியிருப்பதால் சிறப்புடையதாயிற்று திருவாஞ்சியம் என்னும் இத்தலம்.
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறர்.
திருநள்ளாற்று இறைவர் கொல்லும் தன்மை வாய்ந்த நஞ்சினைத்தன் கழுத்தில் கொண்டவர், வியத்தகு செயல்களினால் விளங்கும் ஞானச் செல்வியாகிய சிற்சக்திக்குக் கணவராய் உள்ளவர். இவர் வஞ்ச நெஞ்சத்தார்க்கு அருள் வழங்கமாட்டார். மனம் நைந்த நெஞ்சர்க்கே அருள்செய்வர். இவர் இருக்கும் இடம் திருநள்ளாறு என்கிறார். அப்பாடல் காண்க. நஞ்ச -நைந்த.
வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யின்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும்நள் ளாறரே. -தி.5 ப.68 பா.7
இடர், துன்பம், துயர்:
வெப்புநோயும் பிறவிநோயும் வறுமைநோயும் கொண்டீச்சுரவனை இடைவிடாது வழிபடுவார்க்கு இல்லை என்கிறது திருக்கொண்டீச்சுவரம் பாடல். மேலும் துன்பமும், துயரும், அவற்றிற்கு ஏதுவாகிய வினையும் இல்லை என்கிறார். துன்பம், துயரம், இடர் என்பன துன்பமே ஆயினும், ஒன்றிற்கொன்று வேறுபாடுண்டு, துன்பம் என்பது உடலைப் பற்றியது, துயரம் என்பது மனத்தைப்பற்றியது. இடர் என்பது பிறவித்துன்பத்தைக் குறிப்பது என்பர். இவையெல்லாம் கொண்டீச்சுரவனைப் போற்றுவார்க் கில்லையாம்.
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்பமும் துயரும் எனும் சூழ்வினை
கொம்பனார் பயில் கொண்டீச் சுரவனை
`எம்பி ரான்'என வல்லவர்க்கு இல்லையே -தி.5 ப.70 பா.6
திருவிசயமங்கை:
திருவிசயமங்கை என்பது காவிரியின் வடகரைத்தலங்கள் 63இல் ஒன்று. இது கொள்ளிடத்தின் தென்கரையில் திருவைகா வூருக்கு அண்மையில் சிறு கோயிலாக உள்ளது. இதுவே பாடல்பெற்ற விசயமங்கை என்பர். இதனை விசமூங்கி என மருவி அழைக் கின்றனர். கொள்ளிடத்தின் வடகரையில் ஜெயங் கொண்ட சோழபுரத்தின் தென்மேற்கே உள்ளதுதான் பாடல்பெற்றது என்று அங்குள்ளோர் கூறுகின்றனர். இரண்டில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளதே பாடல்பெற்றது என்பதில் ஐயமில்லை. இவ்வூரைப்பற்றி அப்பர் திருக்குறுந்தொகையில், "கொள்ளிடக்கரை கோவந்தபுத்தூர்" என்று குறிப்பிட்டுள்ளமையும், பசு பூசித்த வரலாற்று உண்மையுமே இதனை வலியுறுத்துகின்றன. இன்று கோவிந்தபுத்தூர் என மருவி வழங்குகிறது.
பிரம்மாவும் சிவபிரானைப் போல ஐந்து தலை உள்ளவனாக ஒருகாலத்திருந்தான். அவன், தானும் சிவபெருமானும் ஒன்றே என்று கூறிச் செருக்குற்றான். அப்போது பெருமான், பைரவரை அனுப்பி, பிரம்மனின் நடுத்தலை - உச்சித்தலையைக் கிள்ளி எடுக்கச் செய்தான் என்பது வரலாறு. அது இப்பாடலில் குறிக்கப்படுகிறது. கோவிற்கும், விசயனுக்கும் அருள் செய்த வரலாறு குறிக்கப்படுவதால் இதுவே கோவந்தபுத்தூராகிய விசயமங்கை எனப்பெறுகிறது. மேலும் பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் பணி செய்து, வேண்டிய வரங்களைப் பெற்றான் என்பதும், இப்பதிகத்தின் எட்டாவது பாடலில் காணப்படுகிறது. விசயனாகிய அர்ச்சுனன் பூசித்துப் பேறு பெற்றமையால் இப்பேர் பெற்றது. அப்பாடல் காண்க.
பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும் நல்வரம் கொள்விச யமங்கை
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
காண்ட லேகருத் தாகி யிருப்பனே -தி.5 ப.71 பா.8
வந்து கேண்மின்:
மக்களைப் பல கோணங்களில் அழைத்து அறம் உரைக்கும் திறன் அப்பர் வாழ்வில் அளப்பிலவாம். "மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்" "நம்புவீர் இது கேண்மின்கள்" "பாருளீர் இது கேண்மின்" போன்றன சில எடுத்துக்காட்டுக்கள்.
இந்த அமைப்பில் விசயமங்கையிலும் ஓர் அழைப்பு விடுக்கிறார். வந்து கேண்மின், மயல் தீர் மனிதர்காள் என்று அழைக்கிறார். விசயமங்கையில் உள்ள நம் எளிய தலைவன், நமது சிந்தையில் நினைவார்களைச் சிக்கெனப் பிடித்து, தன் பந்துவாக்கி, உய்யக்கொள்வான் என்கிறார். அப்பாடல்:
வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து ஆக்கி உயக்கொளும் காண்மினே -தி.5 ப.71பா.9
உள்ளங்கை - நெல்லிக்கனி:
உள்ளங்கை நெல்லிக்கனி என்பது தமிழ்நாட்டுப் பழமொழிகளுள் ஒன்று. தப்பாமல் கிடைத்தே தீரும் என்பதற்கு இப்பழமொழி கூறப்படுகிறது. புறநானூறும் "கையகத்தது அது பொய் ஆகாதே" எனக்கூறுகிறது. "சிற்றம்பலத்தனைத் தலையால் வணங்குவார் தலையானார்களே" (தி.1 ப.80 பா.7) என்பதும் இக்கருத்தே பற்றியது.
"தலையால் வணங்குவார் தலையாவார்களே" என்று எதிர்காலத்தால் கூறவேண்டும். உறுதிபற்றி இறந்த காலத்தாற் கூறினார் ஞானசம்பந்தர். அதைப்போல் மையலுற்று மறந்துவிடாமல் நினைப்பவர்க்கெல்லாம் நிச்சயமாக கையில் ஆமலகக்கனி ஒக்குமே என்று அருளியுள்ளார் அப்பர். ஆமலகக்கனி - அருநெல்லிக்கனி. அப் பாடலைக் காண்போம்.
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்
நெய்அது ஆடிய நீலக் குடிஅரன்
மையல் ஆய்மற வாமனத் தார்க்குஎலாம்
கையில் ஆமல கக்கனி ஒக்குமே. -தி.5 ப.72 பா.2
மையல் -அன்பு.
கல்லினோடு - எனைப் - பூட்டி:
கல்துணைப்பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் என்பது எதிர்காலத்தின் குறிப்பு. எனவே கல்லுடன் இணைத்துக் கடலில் இடவில்லை என்பர் சிலர். அக்கூற்றை அடியோடு அகற்றுதற்கு இதோ ஓர் அகச்சான்று கூறுகிறார் அப்பர் தம் பாடலில்.
கல்லி னோடுஎனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடிஅரன்
நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேன்அன்றே. -தி.5 ப.72 பா.7
திருமங்கலக்குடி:
இத்தலம், ஒரு சுமங்கலியின் மங்கல நாண் காத்து மங்கலம் வழங்கியமையால் திருமங்கலக்குடி எனப்பெயர் பெற்றது. சூரியனார் கோயிலில் உள்ள நவக்கிரகங்கட்கு அருள் செய்த பெருமான் இத்தலத்து இறைவனே. இவரை வணங்கிய பின்னரே சூரியனார் கோயிலை வணங்குதல் முறையாகும். அதுவே பலன்பெறும் வழியுமாகும். இத்தலம் செழுமையானது. செல்வவளம் நிறைந்தது. சிவவேதியர்கள் சிவ நியமத்துடன் வழிபாடு நிகழ்த்துபவர்கள். அவர்களை செல்வமல்கு செழுமறையோர் என்கிறார் அப்பர். மறையோர் தொழுமாறு சிவபெருமான் தேவியோடும் விளங்கும் கோயில் என்கிறார். அப்பாடல் காண்க.
செல்வம் மல்கு திருமங் கலக்குடி
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவியொ டும்திகழ் கோயிலே. -தி.5 ப.73 பா.5
ஊர்தொறும் எறும்பியூர் ஈசன்:
பல ஊர்களிலும் பல கோயில்கள் உள்ளன. அங்குள்ள திருவுருவங்களில் இருந்து அருள் செய்பவன் ஒருவனே. அவ்வீசன் எறும்பியூரில் இருப்பவனே என்கிறார் அப்பர். இது கடவுள் ஒருவரே என்ற தத்துவத்தை இனிதாக விளக்குகிறது. மேலும், பல தலத்தும் கயிலாய நாதனையே காணலாமே என்பது அப்பர் அருள்மொழி. பேரும், ஊரும், உருவமும் பலவாயினும் அதனுள் இருந்து அருள்புரியும் இறைவன் ஒருவனே என்ற தத்துவ உண்மையை இப்பாடல்கள் வலியுறுத்துகின்றன.
"வான் உறும் பொன்மால்வரைப் பேதையொடு ஊர்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே" -தி.5 ப.74 பா.5
என்பது அப்பர் கூறும் எடுத்துக்காட்டு.
மேலும் இன்பமும் பிறப்பும், துன்பமும் இறப்பும் உடனே வைத்த சோதி வடிவினன் எறும்பியூர் இறைவன் என்றவர், அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு இன்பனாவன் என்கிறார். இறை உணர்வுடன் இறைவன் நாமத்தைச் சொன்னால் துன்பம் தோன்றாது இன்பமே தோன்றும் என்று அனுபவம் கூறுகிறார். அப்பாடலைக் காண்போம்.
இன்ப மும்பிறப் பும்,இறப் பி(ன்)னொடு,
துன்ப மும்உட னேவைத்த சோதியான்
அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே -தி.5 ப.74 பா.8
மேலும் இப்பாடற் கருத்து துன்பத்தைக் கண்டு துவளக்கூடாது. துன்பம் தான் நம்மிடம் உள்ள அழுக்கைப் போக்கித் தூய்மை செய்வது. நாம் தூய்மை அடைய அடைய இன்பமே எந்நாளும் பெறலாம்.
அப்பனார் உளர் அஞ்சுவது ஏன்:
ஒழுங்காகச் சிவநெறி பற்றி நின்றால் எந்த இடர்ப்பாடும் நம்மை ஒன்றும் செய்யாது. பிராரத்த வினை வழிப் பல இன்னல்கள் வந்தாலும் அவை உடல் ஊழாய்க் கழியுமே தவிர உயிரைப் பாதிக்காது. மலையே வந்து விழினும் மனிதர்களே அஞ்சாதீர். கொலைசெய் யானையாயினும் அடியவரை ஒன்றும் செய்யாது என்பதையும் தம் அனுபவ வாயிலாக அறிவிக்கின்றார். வானம் மழை பொழியாது பஞ்சம் ஏற்படினும், பூகம்பம் ஏற்படினும் பெருவேந்தர்கள் பலர் சேர்ந்து சீறினாலும் சேறைச் செந்நெறி அப்பனாரை உறுதியாகப் பற்றிவிட்டால் அவர் நம்மைக் காப்பார். அஞ்சவேண்டாம் என அபயம் தருகிறார். அப்பாடல் காண்க.
தப்பி வானம், தரணிகம் பிக்கில்என்?
ஒப்புஇல் வேந்தர் ஒருங்குஉடன் சீறில்என்?
செப்பம் ஆம்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னார்உளர்; அஞ்சுவது என்னுக்கே? -தி.5 ப.77 பா.6
புள்ளிருக்கு வேளூர் அரன்:
இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் பவரோக வைத்திய நாதன். பவம் - பிறப்பு பிறவி நோயைத் தீர்ப்பவர். எனவே உடல்நோய்களையும் தீர்ப்பவர் என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. இப்பெருமானை நினையாதவர் நரகு எய்துவர் என்கிறார். கூற்றுவனின் சீற்றம் தேய்த்து அருளும் வேளூர்ப் பெருமானை நினைந்து உருகுவோர் உள்ளம் குளிரும். பிறவித் துன்பம் இல்லை. இன்பம் பெருகும். பாவம் பறையும். பெருமானை மெல்ல உள்க வினை கெடும். எல்லாவிதத் துன்பங்களையும் போக்கி, எல்லாவற்றிற்கும் மேலான மோட்சத்தை இவனன்றி யாரும் வழங்க இயலாது என்பதாலேயே வள்ளல் என்ற பெயர் இவரையே சாரும். வள்ளல் பாதம் வணங்கித் தொழுதால் இகத்தில் எல்லா நலன்களும் பெற்று பரத்தில் வீடு பேறு அடையலாம் எனக் குறிப்பிடுகிறார். அப்பாடல்:
உள்ளம் உள்கி உகந்து, சிவன்என்று
மெள்ள உள்க வினைகெடும்; மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே! -தி.5 ப.79 பா.8
வானோர் வலம் கொள்வர்:
அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருமானை வலம் வந்து வழிபடுவோரை வானோர் வலம் செய்து வழிபடுவர் என்கிறார் அப்பர். உண்மைத் தொண்டர்களை உலகம் போற்றுகிறது. அதுபோல் நல்ல உள்ளத்துடன் ஆர்வத்தை உள்ளே வைத்து வழிபடுவோரைத் தேவரும் வழிபடுவது இறையருளால் நிகழ்வது. அப்பர் நாலாந் திருமுறையிலும் இக்கருத்தை "தன்னைத், தொழப் படும் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே" என்று குறிப்பிட்டுள்ளமையை ஒப்புநோக்கி மகிழலாம்.
இலங்கை வேந்தன் இருபது தோள்இற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வலம்கொள் வாரைவா னோர்வலம் கொள்வரே. -தி.5 ப.80 பா.10
கைகண்ட யோகம்:
நன்று நகு நாண்மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு ஒன்றி வழிபாடு செய்வாரை உயர்கதிக்கு ஏற்றுபவன் சிவன். இது ஞான சம்பந்தர் வாக்கு. அப்பரும் அதே கருத்தைப் பாண்டிக்கொடுமுடித் திருக்குறுந்தொகைப் பாடலில் குறிப்பிடுகிறார். வானவர்கள் எல்லாம் நெருங்கி வந்து பாண்டிக்கொடுமுடி ஈசனை இருக்கு வேத மந்திரம் கொண்டு வழிபடுகின்றனர். அப்பெருமானை ஏழை அடியார்கள் திருக்கொடுமுடி என்று சொன்னவுடனேயே தீய வினைகளும் பிறவிக்கு ஏதுவாகிய கருவும் கெடும் என்கிறார். தீவினை கெடும் எனவே நல்வினையும் கெடும் என்பது பெற்றாம். இருவினையும் பிறவிக்கு வித்தாம். இருவினை அற்றால் பிறவிக்கு ஏதுவாகிய கருக்கெடும் என்று அருளியுள்ளார். இது கைகண்ட யோகம் என்றும் வலியுறுத்திக் கூறுகிறார்.
நெருக்கி அம்முடி நின்றுஇசை வானவர்
இருக்கொ டும்பணிந்து ஏத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி என்றலும் தீவினைக்
கருக்கெ டும்இது கைகண்ட யோகமே. - தி.5 ப.81 பா.5.
வான்மியூர் ஈசன் வண்மை:
வான்மியூர் ஈசன் அடிதொழுவார் செய்த பாவம் பறைந்திடும். ஆதியே என்று தொழுவாரது மருளை அறுத்திடும். எந்தை ஈசன் என்று ஏத்துவார் முன் வந்து நிற்பன் வான்மியூர் ஈசன், ஆனால் உள்ளம் உள்கலந்து ஏத்துவார்க்கே இப்படி அருள்செய்வான். கள்ளம் உள்ளவர்க்குக் கசிவான் அல்லன். எல்லா நலன்களும் அருளும் வள்ளலாய் இருந்தும் வஞ்சகருக்கு அருள்செய்யான் என்றும் குறிப்பிடுகின்றார். தொழுதெழுவார் வினை மடங்க நின்றிடும். "அஞ்சி நாண்மலர் தூவி அழுவாரானால் நம் உள்ளத்தில் பெருமானை நினைக்க வொட்டாமல் தடை செய்கின்ற வஞ்சனையையே தீர்த்து அருள் செய்பவர். பாதிப்பெண்ணுருவாய பரமனே என்று ஓதி உள்குழைந்து ஏத்த வல்லவர்களின் வாதைகளைத் தீர்த்திடுவார் வான்மியூர் ஈசன். வாட்டம் தீர்த்திடுவார். கயிலை மலையை எடுத்த இராவணனே ஆர்வமாக அழைத்துத் துதித்தலும் பெருமான் வாரமாய் வரம் அருளினன் என்கிறார். அப்பதிகத்தின் ஒரு பாடல் காண்போம்.
உள்ளம் உள்கலந்து ஏத்தவல் லார்க்குஅலால்
கள்ளம் உள்ளவ ழிக்கசி வான்அலன்
வெள்ள மும்அர வும்விர வும்சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே. -தி.5 ப.82 பா.4
வாழ்த்தலே வாழ்வாம்:
எல்லா நலங்களையும் வழங்குபவன் ஈசன் ஒருவனே. மற்றையோர் ஒவ்வொன்றையே கொடுக்க இயலும். அதனால்தான் சிவபெருமானை வள்ளல் என்று நமது சமயாசாரியர்கள் கூறிப்போந்தனர். இங்கும் அப்பர் திருமணஞ்சேரி வள்ளலை வாழ்த்துவதே வாழ்வாவது என்று அருளுகிறார். நமது வாழ்விற்கே முதலாக இருப்பவர் அவராதலின் அவரை வாழ்த்தாத வாழ்வு வாழ்வாகாது. அதனால்தான் மணிவாசகரும் திருப்பள்ளியெழுச்சி முதல் பாடலில் "போற்றி என்வாழ்முதலாகிய பொருளே" என்று போற்றினார். அதனையே வேறு ஒருவகையில் அப்பர் போற்றுகிறார்.
துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர்கரந் தார்சடை மேல்அவர்
அள்ளல் ஆர்வயல் சூழ் மணஞ் சேரிஎம்
வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ்வு ஆவதே. -தி.5 ப.87 பா.5
மேலும் ஞானசம்பந்தர் அருளிய "தோடுடைய செவியன்" என்ற பதிகத்தில் மூன்றாம் பாடலின் (தி.1 ப.1 பா.3) சொற்றொடர் அமைந்த பாடல் ஒன்றும் இப்பதிகத்தில் காணலாம்.
நீர் பரந்த நிமிர்புன் சடையின்மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர்
சீர் பரந்த திருமணஞ் சேரியார்
ஏர் பரந்துஅங்கு இலங்கு சூலத்தரே. -தி.5 ப.87 பா.6
ஈசன் இணையடி:
மாசில் வீணை காதிற்கு இன்பம். மாலை மதியம் கண்ணிற்கின்பம். வீசு தென்றல் மூக்கிற்கு நறுமணம் சேர்த்து இன்பம் நல்கும். வண்டு அறை பொய்கை நாவிற்கு இன்பம். (நீரினால்) இளவேனில் மெய் உடலுக்கு இன்பம். இவ்வாறு ஐம்பொறிகளாகிய மெய்,வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வாயிலாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல இன்பம் நுகர்தல் உலகியல். இதேபோன்று பொறி புலன் இன்றி உயிர் நேரே அனுபவிக்கும் இன்பமே இறையின்பம். சிற்றின்பம் சிறுகாலை இன்பம். பேரின்பம் - என்றும் மாறுபாடு இல்லாது நிலைத்திருப்பது. அதற்கு உலகியல் சிற்றின்பங்களைக் காட்டித்தான் சாதாரண மக்கட்கு இறை இன்பத்தை உணர்த்த இயலும். அந்தமுறையில் அப்பர் நீற்றறையில் தாம் அனுபவித்த இறையின்பத்தை உலகியலோடு இணைத்துச் சுவைபட அருளியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. அப்பாடல் வருமாறு.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே. -தி.5 ப.90 பா.1
நமச்சிவாயவே:
மாசில் வீணை என்ற பதிகத்தின் இரண்டாம் பாடலில் நமச்சிவாய என்னும் தூல பஞ்சாட்சரத்தின் பெருமை பேசுகின்றார். நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தை முறையாக ஓதினால் அதுவே அவனை நன்னெறிக்கண் கொண்டு செலுத்தும் என்கிறார். ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும் இப்பஞ்சாக்கரத்தை ஓதினால் அதுவே கல்வியைத் தரும். அதன்வாயிலாகக் கலைஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் தரும். மந்திர சாத்திர வித்தையும் கைவரும். எல்லாம் ஐந்தெழுத்தை இடைவிடாது ஓதுவதால் கிடைக்கும். நல்ல நெறியும், அதனால் வீடுபேறும் கிடைக்கும் என்கிறார்.
நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. -தி.5 ப.90 பா.2
விறகில் தீயினன்:
இறைவன் எங்கு இருக்கிறான்? எப்படிக் காண்பது?என்று வினவுவார்க்கு அப்பர் எளிமையாக ஒரு வழி காட்டுகிறார். விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.
அப்படியிருந்தும் நம்கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பிய நம்மனோருக்கு அச்சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவாகிய கோலை நட்டு, உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்றருளுவான் என்கிறார். அப்பர். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும். கடைய மணியில் ஒளி தோன்றும். எனவே பக்தியுடன் உறவுடன் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக்கண்டு இன்புறுவோமாக. அப்பாடல்:
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. -தி.5 ப.90 பா.10
புழுவுக்கும் குணம் நான்கு:
புழுவுக்குக் குணம் நான்காவன. உணவின் பொருட்டு முயலுதல், உண்டல், உறங்கல், இன்பத் துன்ப நுகர்வு. இந்நான்கும் எனக்கும் உள்ளன. இங்கு எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை. எனவே புழுவிலும் கடைப்பட்டவனாகிய நான் தூயனாகிய பெருமானது அடியார்களுடன்கூடிவாழ எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று வினவுகிறார்.
என்னை ஏதும் அறிந்திலன்:
காரிட்ட ஆணவக் கருவறையில் கண்ணிலாக் குழவியைப் போல் இருந்த உயிர்களை இறைவன் தயா என்னும் மூல தர்மத்தின் வழியே பிறவிக்குக் கொண்டுவந்த பிறகே ஒவ்வொன்றையும் உணர்கிறோம். இப்படி வாராத வழியில் நாம் ஒன்றையும் உணரும் வாய்ப்பில்லை.
பெருமான் பிறவியைக் கொடுத்துப் பிறவியை அறுக்கிறார். அவ்விறைவன் நமக்குப் பிறவி கருணையினால் கொடாதபோது அவனை நாம் எப்படி அறிவோம். இதனைத்தான் அப்பர், "என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான், அந்நிலையில் அவனையும் நான் அறிந்திலன்" எனகிறார். எனக்கு உடல் முதலிய கருவி கரணங்களைக் கொடுத்து அறியச் செய்தபொழுது அவனை நான் அறியமுடிகிறது என்றார். இதனையே பின் இரண்டடிகளில் "இறைவன் என்னைத்தன் அடியான்" என்று அறிதலும் அவனை நானும் பிரான் - தலைவன் எனக்குப் பிரியமானவன் என்று அறிந்தேன் என்கிறார். அப்பாடல்:
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்
என்னைத் தன்அடி யான்என்று அறிதலும்
தன்னை நானும் பிரான்என்று அறிந்தெனே. -தி.5 ப.91 பா.8.
கால பாசத் திருக்குறுந்தொகை:
சிவனடியார்களிடத்து இயமனோ அவன் தூதுவர்களோ தொடரக்கூடாது என்பது இறைவன் ஆணை. அவ்வாணையைச் செருக்கினால் கடந்தான் இயமன். அதனால் இறைவன் காலினால் காலனைக் காய்ந்தான் மார்க்கண்டேயற்காக. இதனை எல்லோரும் நன்கு உணருமாறு அப்பர் பெருமான் "காலபாசத் திருக்குறுந்தொகை" என்று ஒரு பதிகமே அருளிச் செய்துள்ளார்.
கொடுகொட்டி தாளம் கைக்கொண்ட இறைத்தொண்டர்களை நெருங்காதீர் என்றும், இடுக்கண் செய்யப்பெறீர் என்றும், சிவன் என்று அரற்றுவாரை நீங்கள் சாரப்பெறீர் என்றும், நிறைய நீறணிவார் எதிர் செல்லலே என்றும், சாந்தமும் ஏமமும் புனைவார் எதிர்செல்லலே என்றும், ஐந்தெழுத்தில் ஒரு எழுத்தைச் சொல்வாரிடத்தும் சாராதே என்றும், சாராததோடு அடியார்களைப் போற்றிச் செல்மின்கள் என்றும் நமன் தூதுவர்க்கு அறக் கட்டளையிடுகின்றார் அப்பர். அப்பாடல்களில் ஒன்று காண்போம்.
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நமது ஈசன் அடியரை
விடைகொள் ஊர்தியி னான்அடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே. -தி.5 ப.92 பா.7
ஈசன் என்னை அறிந்தது:
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்,
தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலன்,
என்னைத் தன்அடி யான்என்று அறிதலும்,
தன்னை நானும் பிரான்என்று அறிந்தெனே. -தி.5 ப.9 பா.8
என்ற பாடற்கருத்தை ஒட்டிய பாடல் ஒன்று மறக்கிற்பனே என்னும் மகுடம் உடைய திருப்பதிகத்தில் வருவது சிந்திக்கத்தக்கது. அப்பாடல் காண்க.
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்
ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்
ஈசன் சேவடி ஏத்தப்பெற் றேன்இனி
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.-தி.5 ப.93 பா.3
இங்குற்றேன்:
இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை, திருமாலும் பிரமனும் தாமே தலைவர் என்ற செருக்கித் தருக்கியபோது சிவபெருமான் சோதிப்பிழம்பாய்த் தோன்றினான். அத்தோற்றமே சிவலிங்க வடிவம். அப்பெருமானைப் பொய்யும் பொக்கமும்(வஞ்சகம்) போக்கிப் புகழ்ந்திலர். எருக்கங்கண்ணி கொண்ட இண்டை புனைந்திலர். இவர்கள் எப்படி இறைவனைக் காண்பர். காணகில்லார். இந்த வரலாற்றை இப்பதிக இறுதிப்பாடலில் தெளிய விளக்கியருள்கிறார் அப்பர்.
செங்க ணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்
இங்குற் றேன்என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. -தி.5 ப.95 பா.11
சித்தத் திருக்குறுந்தொகை:
இப்பதிகம் முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது. சித்தத்துள்ளே சிவபெருமானைச் சிந்திக்கும் திறம் கூறுவது. இப்பதிகம் சிந்திப்பார் மனத்தால் என்று தொடங்குவதால் இப்பெயர் பெற்றது.
இதனுள் அகரம் முதல் ஔகாரம் வரை 12 உயிரெழுத்துக் களும் 2ஆம் பாடல் முதல், பாடலின் முதல் எழுத்தாகத் தொடங்கு கிறது. பிறகு ககரம் முதலிய 14 மெய்யெழுத்துக்களையும் முதலெழுத்தாக வைத்து இத்திருப்பதிகத்தைப் பாடி உள்ளார்.
இதில் ஒரு பாடல் பரஞ்சுடர் பாதிப்பெண்ணுருவானவன் என்பதை அறிவிக்கிறது. கந்தபுராணத்துள் அசுரகாண்டத் தொடக்கத்தில் உள்ள கடவுள் வணக்கப் பாடல் "ஊரிலான்" எனத் தொடங்குகிறது. அதைப் போலவே இங்கு அப்பர் ஒரு பாடல் பாடியுள்ளார்.
ஊர்இ லாய்ஒன்று ஒன்றாக உரைப்பதுஓர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
கார்உ லாம்கண்ட னேஉன் கழலடி
சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே. -தி.5 ப.97 பா.7
இப்பாடலுக்கு ஒப்பான கந்தபுராணப்பாடலும் காண்க.
ஊரி லான்குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும்
பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான். -கந்தபுராணம் அசுர. பா.1
குரங்காடுதுறை:
திருவையாற்றிற்குக் கிழக்கே பத்து கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் வடகரையில் இருப்பது வடகுரங்காடுதுறை. இது வாலியால் பூசிக்கப்பெற்ற பாடல்பெற்ற தலம். கும்பகோணத்திற்குக் கிழக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் காவிரியின் தென்கரையில் இருப்பது சுக்ரீவனால் பூசிக்கப்பட்ட தென்குரங்காடுதுறை. இத்தலத்து எழுந்தருளியுள்ள இறைவன் மணவனாக, கணவனாக, எண் குணவனாக, அன்புடை அடியார்கட்கு அணவனாக உள்ளமையை இத்தலப் பதிகப்பாடல் ஒன்றில் அப்பர் குறிப்பிடுகிறார்.
கணவன்:
சிவம் என்ற சொல்லிற்கு மங்கலம் என்பது பொருள். இறவாமல் பிறவாமல் அமங்கலம் இன்றி என்றும் ஒரே பெற்றியனாய் இருப்பவன் சிவபெருமான் ஒருவனே. மனித்த வாழ்வில் மங்கலம், அமங்கலம் இரண்டும் கலந்தே வரும். "குறைவில் மங்கலக் குணத்தனாகலின் சிவம் என்றனர்" பெரியோர்.
நமக்குரிய மணவன் என்பதெல்லாம் உபசாரமே. உண்மை இல்லை. உண்மை மணவன் மகேச்சுவரனேயாவான். மணவன் என்ற சொல்லும் திருமுறையிலும், மற்ற இலக்கியங்களிலும் அரிய பிரயோகமாகும். நம்பெருமான் என்றும் மணவனாயிருக்கிறான். மலைமகளின் நெடுமங்கலக் கணவனாயிருக்கிறான். நெடுமங்கலம் என்பது என்றும் அம்மையப்பர் மங்கலமாகவே இருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
கலைஞானிகள் காதலுடன் - விருப்பத்துடன் ஒன்றாயிருக்கிற பெருமானை எட்டாகப் பிரித்துப் பெரும்பயன் காண்கின்றனர். எண்குணவன் என்கிறார் அப்பர். திருவள்ளுவரும் கலைஞானி யல்லவா?. அவர் இறைவனை எண்குணத்தான் என்கிறார்.
எண்குணங்களாவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேராற்றல் உடைமை, பேரின்பம் உடைமை, பேரருள் உடைமை என்பன. எண் குணத்தானை வணங்காத் தலை பயனற்றது என்கிறார் வள்ளுவர். சிலருக்குக் கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய்ப் பயன்படாதவாறுபோல தலையிருந்தும் எண்குணத்திறைவனை வணங்கவில்லையானால் அத்தலை பயனற்றது என்கிறார். இங்ஙனம் மணவனாய், கணவனாய், குணவனாய் இருக்கும் இறைவன் குரங்காடுதுறையில் அன்புடை அடியவர்கட்கு அணியனாய் அருள்புரிகிறான் என்று பாடியுள்ளார். அப்பாடல் காண்க.
மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதல்எண்
குணவன் காண்குரங் காடு துறைதனில்
அணவன் காண்அன்பு செய்யும் அடியர்க்கே -தி.5 ப.63 பா.4
கண் - அவன். கணவன். மனைவிக்குக் கண்ணாக இருப்பவன் என்ற பொருளில் கணவன் என்ற சொல் வழங்கி வருகிறது. உடல் உறுப்புக்களுள்ளே கண்தான் மிகச் சிறந்த உறுப்பு. கருவிலும் முதலில் தோன்றும் உறுப்பு கண்ணே என்று மருத்துவர்களும் குறிக்கின்றனர். கண்ணைக் கொண்டே ஒருவரின் தகுதியைக் கண்டுபிடிக்கலாம். இதுபற்றியே கோவை நூலும், கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே என்று கூறுகிறது. அப்பரோ, மற்றோரிடத்திலும் கணவன் என்ற சொல்லைக் காட்டியுள்ளார். திருச்சத்திமுற்றத் திருவிருத்தத்தில். "வில்நேர் புருவத்து உமையாள் கணவா விடிற்கெடுவேன்" என்பது அவர் திருவாக்கு.
ஙகரவெல் கொடியான்:
ஙகர இனப் பதின்மூன்றெழுத்துள் ங என்னும் உயிர்மெய் யெழுத்தும், ங் என்ற மெய்யெழுத்தும் மட்டுமே மொழியில் பயின்று வருவன. ங இனத்தில் மற்ற ஙா, ஙி முதலிய எழுத்துக்கள் மொழியில் வருவதில்லை. இருப்பினும் ங என்ற எழுத்துடன் மற்ற 11 எழுத்துக்களும் சுவடியில் வாழ்ந்து வருகின்றன. அதைப் போல் மக்களும் சுற்றத்தாரைத் தழுவி வாழவேண்டும் என்பதற்கு ஔவையார் இந்த ஙகரத்தை உதாரணமாகக் காட்டுகிறார். "ஙப் போல்வளை" என்பது ஔவையின் ஆத்திசூடி. ஙகரம் எப்படி அதனுடன் உள்ள மற்ற 11 எழுத்துக்களும் மொழி வளர்ச்சிக்குப் பயன்படாவிட்டாலும் அவற்றை உடன் வைத்துப் போற்றுகிறதோ அதைப் போலவே திறன் உடைய ஒருவன் திறன் இல்லாத சுற்றத்தாரையும் உடன் வைத்துப் போற்ற வேண்டும் என்பதற்கு இவ்வுதாரணத்தைக் காட்டியுள்ளார்.
இச் சித்தத்திருக்குறுந்தொகையில் ஙகரத்தை முதலாக வைத்துத் தொடங்கும் பாடலில் "ஙகர வெல்கொடியான்" என்று தொடங்குகிறார். இடபம் காலை மடக்கிப் படுத்திருக்கும் போது ங போன்று இருப்பதை உணர்ந்து நமக்கும் அறிவிக்கின்றார். மேலும் அற உருவாகிய இடபம் இல்லாதார்க்கு உதவும் குறிப்பினது என்பதையும் உணர்த்துகிறார். `நல்ல நெஞ்சமே நீ ஙகரம் போன்ற இடபத்தைக் கொடியாகக் கொண்ட சிவபெருமானை உய்வதற்குரியவனாகக் கொள்வாயானால் அதுவே உனக்குச் சிறந்த புகலிடமாகும். அச்சிவன் மகரவெல்கொடியானாகிய மன்மதனைக் காய்ந்தவன். காய்ந் தவனைப் புகலாகக் கொள்வதே உன் உய்விற்கும் உயர்விற்கும் சிறந்தவழி' என்கின்றார். அப்பாடல் காண்க.
ஙகரவெல்கொடியானொடு நன்னெஞ்சே
நுகர நீ உனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே. -தி.5 ப.97 பா.16
பாவமும் பழியும்:
பெரும்பாலான மக்கள் பாவம் செய்வதற்கு அஞ்சுவதில்லை, அதனால் வரும் பழிக்குத்தான் அஞ்சுகின்றனர். பாவநாசத் திருக்குறுந்தொகைப் பதிகத்து முதல் பாடலில் பாவமும், பழியும் பற்றற வேண்டுமானால் நம் காவலனாக உள்ள பெருமானை நினைமின்கள், நினையின் அருள்புரிவான் என்கிறார். மற்றப் பாடல்களில் இறையுணர்வில்லாது சடங்காகச் செய்யும் தீர்த்தமாடல், வழிபாடு செய்தல், வேதம் ஓதல், குருக்களாய் உபதேசித்தல் முதலியன பயன்தராது என்கிறார். அவற்றுள் ஒருபாடல் காண்போம்.
கோடி தீர்த்தம் கலந்து குளித்துஅவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே. -தி.5 ப.99 பா.9
எரி பெருக்குவர்:
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும், சூரியன், சந்திரன், உயிர், என்பனவுமாகிய எட்டுப்பொருள்களும் இறைவனுக்கு உருவங்களாகும். இவ்வெட்டையும் அட்டமூர்த்தம் என்பர். அட்டமூர்த்தங்கள். இறைவனின் உடல்போல்வன. அவற்றுள் மூர்த்திமானாக விளங்குபவர் இறைவன். இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலே எரிஓம்புகின்றனர் சிலர். அவர்கட்கு ஒரு நரியின் வரலாற்றை உதாரணமாகக் காட்டுகிறார் நாவுக்கரசர்.
ஒரு யானை காட்டில் இறந்து கிடந்தது. அதனைக் கொல்வதற்காக எய்த அம்பு அதன் பக்கத்தே கிடந்தது. இவற்றைப் பார்த்த நரி பெரும் பயனாகிய யானையை உணவாக உடனே கொள்ளாமல் அருகிலிருந்த அம்பிலும் வில்லிலும் ஒட்டியிருந்த தசையை முதலில் உணவாகக் கொள்ளக் கருதி வில்நரம்பைக் கடித்தது. நரம்பு அறுபட்ட நிலையில் வில் விசிறி அடித்தது, அதனால் நரியின் வாய் கிழிந்து இறந்துபட்டது.
இதைப்போல் பெரும்பயனாகிய இறைநெறி உணர்ந்து இன்புறாது அக்கினியைப் பார்க்கிறார்களே தவிர அதனுள் இருக்கும் இறையை உணர்கிலர் எரிபெருக்கும் மாந்தர் என்று இரங்குகிறார். அப்பாடல்:
எரிபெ ருக்குவர் அவ்எரி ஈசனது
உருவ ருக்கம தாவது உணர்கிலார்
அரிஅ யற்குஅரி யானை அயர்த்துப்போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே -தி.5 ப.100 பா.7
கல்மனவர்:
இதைப் போன்றே சூரியனை வணங்குவோரும், சூரியனும் இறைவனது எட்டு உருவங்களுள் ஒன்று என்று உணர்ந்திலர். மேலும் சூரியன் உள்ளே உள்ள பேரொளிப் பொருளாகிய பெருமானை உணர்ந்திலர், மேம்போக்காக சூரியன் உருவத்தையே வணங்கி உட்பொருளை உணராமல் வீணாகின்றனர். அவர்கள் ஓதும் இருக்கு முதலிய வேதங்கள் எல்லாம் ஈசனையே தொழுகின்றன. இக்கருத்தை நினைந்து உய்திபெறாதவர் கல்மனவர் என்கிறார். அப்பாடல்:
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரன் உருஅல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தி னைநினை யார்கல் மனவரே. -தி.5 ப.100 பா.8
கயவக்கணம்:
கயவர் - கீழ்மக்கள். இவர்களைப் பற்றித் திருவள்ளுவர் இரண்டு குறள்களில் குறிப்பிடுகிறார். கயவர்கள் என்றால் அவர்கட்கென்று அடையாளங்கள் ஏதும் இல்லை. இருப்பதாக எண்ணி ஏமாந்துவிடாதீர்கள். அக்கயவர்களும் மக்களே போன்றிருப்பர் என்பதனை "மக்களே போல்வர் கயவர்" என்றும், மேலும், மக்களிலும் உயர்ந்த தேவர்களைப் போன்றும் இருப்பர், இதனைத்தான் "தேவர் அனையர் கயவர்" என்றும் கூறியுள்ளார்.
இவர்கள் இறைவனின் பெருந்தன்மையை உணரார்கள் என்று அறிவித்து இத்திருமுறையை அப்பர் நிறைவு செய்கிறார். இத்திரு முறைத் தொடக்கத்தில் அன்னம்பாலிக்கும் என்று முத்திப் பேற்றை விரும்பும் பெரியோர்களைப் பற்றி அறிவித்தார். இறுதியில் என்ன தான், பேரின்பம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது அதை அனுபவிக்கச் சேரவாரும் ஜெகத்தீரே என்று அழைப்பு விடுத்தாலும், கயவர் என்றுமே வாரார். அதுகொண்டு பெருமான் அருள் இல்லை என்று மயங்காதீர் என்று அறிவுறுத்தி நிறைவு செய்கிறார். கயமை அகற்றி நயனைப் பற்றி நலமுடன் வாழ அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
கல் மனம் அகற்றி, நல் மனம் பெறுவோம்.