05 மதிப்புரை
எம். எஸ். சாரங்கபாணி முதலியார் பி. ஏ., பி. எல்.
ஆணையர். இந்து சமய அறநிலைய (ஆட்சித்) துறை சென்னை.
"சொற்குறுதி அப்பர் எனச் சொல்" என்பது முதியோர் வாக்கு. அப்பரது அருள் மொழிகள் அனுபவம் வாய்ந்தவை. உலகத்தின் உண்மை உணர்வுகளைக்கண்டு அல்லலுற்று உய்ந்த பெருமான் இவர். எண்பத்தோராண்டு இவ்வுலகில் வாழ்ந்தார்.
சைவ சமயத்திற்கு இவர் ஆற்றிய தொண்டின் சிறப்பு அளவிடற்கரியது. இப்பெரியாரும் திருஞானசம்பந்தரும் வாழ்ந்து வந்த காலத்தில் சைவ சமய உண்மைகளை வெளிப்படச் சொல்லும் மடங்கள் அல்லது நூல்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. ஓரளவு பெயரளவில் வழிபாடும் நம்பிக்கையும் மட்டும் மக்களிடையே நிலவி இருத்தல் கூடும் என்று ஊகிக்கலாம். அவை பேரறிவு படைத்த அப்பர் பெருமானுக்கு ஆராய்ச்சி செய்தற்குத் தக்க துணையாக அமைய வில்லை.
எனவேதான் அவர் தம் அறிவினால் சமய உண்மைகளை ஆராயத்தொடங்கி, சமண சமய மடங்களுக்குச் சென்று அச்சமய நூல்களை ஆராய்ந்து, தாம்கண்ட உண்மைகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்லி, சமணசமயத்தை வளர்க்கலானார். ஆகவே தருமசேனர் எனப் பட்டமும் பெற்றார்.
இந்நிலையில் அவரது தமக்கையார் திலகவதி அம்மையார் இறைவனிடத்தில் முறையிட, திருவதிகைப் பெருமான் சூலை நோயைத் திருநாவுக்கரசர்பால் ஏவி, தேவாரமாகிய தமிழ் மந்திரத்தால் அது நீக்கப்பெற்றது. அன்றே தாம் பெற்ற அநுபவத்தின் பயனாக இப் பெரியார் மீண்டும் சைவ சமயமே உயர்வுடையது என்று கண்டு அதுமுதல் சைவசித்தாந்தத்தின் உண்மைகள் பொதியப்பெற்ற தேவாரப் பாசுரங்களினால் சமண சமயத்தின் குறைகளை வெளிப்படுத்தி, சைவ சமயத்தைத் தழைத்தோங்கும்படி செய்தார்.
இப்பெரியாரது தேவாரப்பாசுரங்கள் 4, 5, 6 திருமுறைகளாக வகுக்கப்பெற்று இருக்கின்றன. அவற்றுள் தருமை ஆதீனத்து ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் 4ஆவது திருமுறையை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார்கள். இப்பொழுது 5ஆவது திருமுறையை நல்லமுறையில் வெளியிடுகிறார்கள்.
5ஆவது திருமுறையில் அப்பர் சுவாமிகள் வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. திருவாய்மூர்ப் பதிகத்தில் இறைவன் தம்மை `வா' என்று அழைத்ததும், திருமறைக் காட்டுத் திருப்பதிகத்தில் இப் பெரியார் திருமறைக்காட்டுக் கதவு திறக்கப்பாடிய வரலாறும், திருநீலக்குடித் திருப்பதிகத்தில் இவர் கல்மேல் மிதந்த வரலாறும், திருப்பழையாறை வடதளித் திருப்பதிகத்தில் சமணர் அழிவெய்திய வரலாறும், திருக்கோளிலித் திருப்பதிகத்தில் சமணர் மறைத்த இலிங்கம் வெளிப்பட்டமையும், திருவாய்மூர்த் திருப்பதிகத்தில் படிக்காசு பெற்றமையும் காணப் பெறுகின்றன.
இத்தகைய பேரதிசயங்கள் உண்டாகக்கூடிய செயல்களினால் இறைவனது திருவருளை வெளிப்படுத்தித் தீவினைகளை இறைவனது திருவருளால் நசிப்பிக்கச்செய்ய இயலும் என்பதை மக்கள் உய்யும்படி எடுத்துக்காட்டி மாமறைநூல், திருநீறு, ஐந்தெழுத்து ஆகிய இவை சிறக்கும்படி காலத்தால் சைவ சமயத்திற்குச் செய்த பேருதவி, என்றென்றும் சைவ மக்களின் உள்ளத்தே நிலவி இருக்குமென்பதில் ஐயமில்லை.
நல்ல காகிதத்தில் சிறந்த முறையில் தக்க குறிப்புரைகளோடு மக்கள் பயிலுதற்கு ஏற்றமுறையில் 5ஆவது திருமுறையாகிய இந்நூலை வெளியிட்டுள்ள, கயிலைக் குருமணி ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களுக்குச் சைவஉலகம் என்றென்றும் கடப்பாடுடையது.
"வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன்நாமமே
சூழ்க வையகமும் துயர்தீர்கவே."