06 பதிப்புரை
அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா
மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சக ரிட்ட நீல
நிறப்பெருங் கடலும் யார்க்கும் நீந்துதற் கரிய வேழு
பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்
- பரஞ்சோதி முனிவர் (தி.11 ஏகாதசபா)
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பதைக் குறிக்கோள் உரையாகக் கொண்டு இவ்வுலகில் எண்பத்தொரு ஆண்டுகள் வாழ்ந்து, தேவாரத் திருமுறைகளில் 4, 5, 6ஆம் திருமுறைகளை நமக்கு அளித்த மெய்ஞ்ஞானச் செல்வர் திருநாவுக்கரசு சுவாமிகள். சமயாசாரியர்களில் இரண்டாமவராகப் போற்றப்பெறும் இவ் ஆசாரியர் திருப்பெரும், அவர் அருளிய திருமுறைகளும் நம்மைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்ற வல்லவை.
அப்பூதி அடிகள் எத்தவமும் செய்யாது திருநாவுக்கரசு என் னும் பெயரை எழுதியும் பேசியும் வழங்கியுமே சிவபதம் பெற்றதை அவர்தம் வரலாறு நன்குணர்த்தும்.
இலைமா டென்றிடர் பரியா ரிந்திர
னேயொத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வ மெனவே கருதுவர்
நீள்சன் மக்கட லிடையிற்புக்
கலையார் சென்றரன் நெறியா குங்கரை
அண்ணப் பெறுவர்கள் வண்ணத்தின்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை
திருநா வுக்கர சென்போரே.
(தி.11 ஏகாதசபா)
என்பார் நம்பியாண்டார் நம்பிகள். நாவரசர் அருளிய தேவாரம் நம்மை இறைவன் திருவருளிலே அழுந்தச் செய்யும் மந்திரங்கள்.
தேவாரத் திருமுறைகள் பண்ணாங்கம், சுத்தாங்கம் என இரண்டு பிரிவுகள் உடையன. அவற்றுள் பண்ணாங்கம் தாள அமைப் புடன் கூடிய பதிகங்களாகும். திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத் தம், திருத்தாண்டகம் ஆகியன சுத்தாங்கமாகப் பாடுவதற்கு உரியன. தேவாரத்தை விரும்பிக் கேட்போர் இவற்றை திருமுறை இசைவாணர் களின் மூலமாகப் பாடச் செய்து, கேட்டு மகிழ்வெய்துவர்.
திருவிருத்தம் நான்காம் திருமுறையில் அமைந்துள்ளது.
திருத்தாண்டகம் ஆறாம் திருமுறையாக விளங்குகிறது.
பன்னிரு திருமுறைகளில் தாண்டகம் என்ற யாப்பு வகையில் திருமுறை அருளியவர் திருநாவுக்கரசு சுவாமிகளே ஆவார். அதனால் இவர் தாண்டக வேந்தர், தாண்டகச் சதுரர் எனப் போற்றப்படுகிறார். இறைவன் புகழை விளங்க விரித்துரைக்கும் முறையில் தாண்டக யாப்பு வகை இவருக்குப் பெரிதும் துணை செய்துள்ளது.
நான்காம் திருமுறையில் அப்பர் அருளிய நேரிசைப் பதிகங் கள் குறுந்தாண்டகம் என்ற யாப்பு அமைப்பையும், ஆறாம் திருமுறை யில் அமைந்துள்ள திருத்தாண்டகங்கள் நெடுந்தாண்டகம் என்ற யாப்பு அமைப்பையும் உடையன என்பர் இலக்கிய ஆய்வாளர்கள்.
திருத்தாண்டகங்களை அப்பர் பல்வேறு பொருள் முறைக ளில் அருளிச் செய்துள்ளார்.
சிவபெருமானுடைய திருவடையாளங்களை உரைப்பனவா கத் திருவதிகை (தி.7 ப.4) திருப்பூவணம் (தி.6 ப.18) திருத்தாண்ட கங்கள் அமைந்துள்ளன.
போற்றிக் கூறும் முறையில் திருவதிகை (பதி.5) திருவாரூர் (தி.6 ப.32) திருக்கயிலை (தி.6 ப.55, 56, 57) திருத்தாண்டகங்கள் அமைந்துள்ளன.
இளமையில் இறைவனை இகழ்ந்திருந்தமைக்கு வருந்தும் முறையில் திருப்புன்கூரையும் திருநீடூரையும் (தி.6 ப.11) இணைத்துப் பாடிய திருத்தாண்டகம் அமைந்துள்ளது.
திருவடிகளைத் தன்முடியில் சூட்டியதற்கு மகிழும் முறையில் திருநல்லூர் (தி.6 ப.14) திருத்தாண்டகமும், மயக்கினை விலக்கியருள வேண்டும் முறையில் திருவாரூர் (தி.6 ப.27) திருத்தாண்டகமும் அமைந்துள்ளன.
திருவாரூரின் பழமையை உரைப்பதாக திருவாரூர் (தி.6 ப.34) திருத்தாண்டகமும், நெஞ்சறிவுறுத்தலாக திருவாரூர் (தி.6 ப.31) திரு நெய்த்தானம் (தி.6 ப.42) திருத்தாண்டகங்களும் அமைந்துள்ளன.
நெய்த்தானன் என் நெஞ்சுளான் என்ற முடிபுடையதாக திரு நெய்த்தானம் (தி.6 ப.41) திருத்தாண்டகமும், அபயம் புக்கதை அறி விப்பனவாக திருச்சோற்றுத்துறை (தி.6 ப.44) திருவாவடுதுறை (தி.6 ப. 47) திருத்தாண்டகங்களும் அமைந்துள்ளன.
கடவுளை எங்கே காணலாம் என்ற வினாவிற்கு விடை கூறுவதாகத் திருக்கன்றாப்பூர் (தி.6 ப.61) திருத்தாண்டகம் அமைந்து உள்ளது.
சிவபெருமானைச் சேராதார் தீநெறி சேர்வர் என்ற பொருளமைப்பில் திருவீழிமிழலை (தி.6 ப.50) திருத்தாண்டகமும், நன்னெறிக்கண் சேராதவர் ஆவார் என்ற பொருளமைப்பில் திரு நாகேச்சுரம் (தி.6 ப.66) திருத்தாண்டகமும் அமைந்துள்ளன.
சிவன் என் சிந்தையான் என்ற பொருளமைப்பில் திருப்புத் தூர் (தி.6 ப.76) திருமுண்டீச்சரம் (தி.6 ப.85) திருத்தாண்டகங்கள் அமைந்துள்ளன.
வாய்மூர் இறைவனைக் கண்ட வண்ணம் உரைப்பதாக திருவாய்மூர் (தி6 ப.77) திருத்தாண்டகமும், இறைவன் எல்லாமாய் நிற்கும் இயல்புரைப்பதாக நின்ற தாண்டகமும் (தி.6 ப.78) உள்ளன.
இறைவனைக் கண்ட முறையை வினாவும் விடையுமாகக் கூறும் முறையில் திருவினாவிடை திருத்தாண்டகம் (தி.6 ப.97) உள்ளது.
திருவடி நிழலில் புகும் விருப்பைத் தெரிவிப்பதாக திருப்புக லூர் (தி.6 ப.99) திருத்தாண்டகம் உள்ளது.
"பேசாத நாளெல்லாம் பிறவா நாளே," "புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே ஏழையேன் நான் பண்டிகழ்ந்தவாறே," "நீதனேன் என்னே நான் நினையாவாறே," "சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே," "நான் அடியேன் நினைக்கப் பெற்றுய்ந்த வாறே" என்பன போன்ற பல மகுடங்களை உடைய திருப்பதிகங்களை அவர் அருளிய திருத்தாண்டகங்களில் காணலாம்.
காண், வைத்தார், போலும், தோன்றும், கண்டாய், தாமே என்பன போன்ற சொற்கள் பலகாலும் பயிலப் பாடிய திருத்தாண்டகங்கள் பலவும் இத்திருமுறையில் உள்ளன.
பன்னெடுங் காலமாகத் திருமுறைப் பதிப்புக்களில் பல திருத்தாண்டகங்களுக்கு அப்பதிக அமைப்புக்கேற்ற தலைப்புக்கள் தரப் பெற்றுள்ளன.
தி.6 பதிக எண்
1. அடையாளத் திருத்தாண்டகம் 4
2. அடைவு திருத்தாண்டகம் 71
3. உபதேசத் திருத்தாண்டகம்
4. ஏழைத் திருத்தாண்டகம் 3
5. காப்புத் திருத்தாண்டகம் 7
6. தனித் திருத்தாண்டகம் 95, 96
7. திருவடித் திருத்தாண்டகம் 6
8. நின்ற திருத்தாண்டகம் 94
9. பலவகைத் திருத்தாண்டகம் 93
10. புக்க திருத்தாண்டகம் 2
11. பெரிய திருத்தாண்டகம் 1
12. போற்றித் திருத்தாண்டகம் 5, 32, 55 - 57
13. மறுமாற்றத் திருத்தாண்டகம் 98
14. வினாவிடைத் திருத்தாண்டகம் 97
15. கே்ஷத்திரக்கோவைத் திருத்தாண்டகம் 70
இன்னோரன்ன பொருட்சிறப்புடைய இத்திருமுறை, தருமை ஆதீன வெளியீடாக ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களின் அரு ளாட்சிக் காலத்தில் (1963) ஆதீனப் புலவர் மகாவித்துவான் திரு. சி. அருணை வடிவேலு முதலியார் எழுதிய விளக்கக் குறிப்புரையோடு வெளி வந்தது.
இதுபோது 26 ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்கள் வெள்ளிவிழா நினைவாக, ஒளியச்சில் பன்னிரு திருமுறைகளையும் ஒருசேர வெளியிடும் திட்டத்தில் பழைய விளக்கக் குறிப்புரையோடு பண்டித வித்துவான் திரு. தி. வே. கோபாலய்யர் அவர்கள் எழுதிய பொழிப்புரையுடன் இத்திருமுறையை வெளியிட்டருள்கிறார்கள்.
இந்நூலை வெளியிட அறக்கொடை வழங்கியவர், மலேசியா, கோலாலம்பூர் சைவப்பெரியார், சிவநெறிச் செம்மல், திரு. அ. ஆறுமுகம் அவர்கள் ஆவார்.
இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை - யாழப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு.க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.
அன்பர்கள் இத்திருமுறையைப் பொருளுணர்ந்து ஓதி இறைவன் திருவருள் பெற்று இன்புறுவார்களாக.
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின்
உத்தரவுப்படி,
அருள்மிகு தர்ப்பாரணியேஸ்வரர் கந்தசாமித் தம்பிரான்
தேவஸ்தானம், திருநள்ளாறு கட்டளை விசாரணை