b

01 உரைத்திறம்

செந்தமிழ்க் கலாநிதி

பண்டித வித்துவான் திரு. தி. வே. கோபாலய்யர்

பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவனம்,

புதுச்சேரி.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள், திருத்தொண்டர் புராணத்திற்குப் பொழிப்புரை சென்ற நூற்றாண்டின் இறுதியில் தவத்திரு ஆறுமுகத்தம்பிரான் அவர்களால் வரையப்பெற்றது. ஏழாம் திருமுறையாகிய சுந்தரர் தேவாரத்திற்கு இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இராமாநந்தயோகி அவர்களால் பதவுரை வரையப் பெற்றது. அடுத்துத் திருவாசகத்துக்குச் சிற்றுரையும் பேருரையுமாகப் பல உரைகள் வரையப்பெற்றன. திருக்கோவையாருக்கு கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பேராசிரியர் உரையோடு வேற்றவர் வரைந்த உரையும் தமிழகத்தில் நிலவுகின்றன. ஆனால் முதல் ஆறு திருமுறை களுக்கும் இதற்குமுன்னர் உரை வரையப்பெற்றதாக அறியக்கூட வில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய ஏகபாதம், எழு கூற்றிருக்கை, மாலைமாற்று, திரு இயமகம் என்பனவற்றிற்குப் பழைய உரை உளது. துண்டீர மண்டலே காஞ்சி மஹாகே்ஷத்ர ஞானப்ரகாச தேசிக நாமதேஹஸ்யஸ்வதஸ்லிகிதம் என்று படியெடுத்தவர் பெயருடன் அவ்வுரை புதுவை பிரஞ்சு இந்தியக் கலை நிறுவனத்தில் உள்ளது. அச்சுவடி 250 ஆண்டுகளுக்கு முந்தையது. அப்பழைய உரையை இயற்றிய பெருமகனார் யாவர் என்பது உறுதியாக அறியக் கூடவில்லை.

இந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏழுதிருமுறைகளாக அமைந்த தேவாரத்திற்குக் குறிப்புரை வரைந்து பதிப்பித்த பெருமை திருத்தருமை ஆதீனத்தையே சாரும். முதல் திருமுறைக்குக் குறிப்புரை வரைந்த பெருமகனார் மகாவித்துவான். ச. தண்டபாணிதேசிகராவார். ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு உரைவரைந்த பெரியவாச் சான் பிள்ளையின் உரை நயத்தில் தோய்ந்து அதனை ஒப்பக் காலத் துக்கு ஏற்றவகையில் தேவாரத்துக்கு நயமாக உரைவரைதல் வேண்டும் என்ற உள்ளத்தோடு அவர் இம்முதல் திருமுறைக்கு உரை கண்டுள் ளார்.

இவ்வுரையில் பதிகம் தோன்றிய வரலாறு, பதிகத்தில் சொல்லப்பட்டவற்றைத் தேவைப்பட்ட இடங்களில் சுருக்கிவரைதல், சில பதிகங்களின் ஒவ்வொரு பாடலுக்கும் கருத்தினைச் சுருக்கமாக உரைத்தல், ஒரே தொடருக்கு இரண்டு முதலிய பொருள் கூறல், சொற்றொடர்களுக்கு நயமான உரைகூறல், இயற்கை வருணனையில் சுட்டு என்ற உள்ளுறைப் பொருளை வெளிப்படுத்துதல், அருஞ் சொற்பொருள், சொற்றொடர்ப் பொருள்களை எடுத்துரைத்தல், சித்தாந்தக் கருத்துக்களை ஆண்டாண்டு விளக்கிக்கூறல், தல புராணம் முதலிய புராண வரலாறு சுட்டுதல், இன்றியமையாத இலக்கணக் குறிப்புவரைதல், பண்டை நூல்களை மேற்கோள் காட்டல், ஒரோவழி வடமொழிநூல் மேற்கோள் காட்டல், சொற்களின் முடிபு கூறல் முதலிய பலசெய்திகள் உளங்கொளத்தக்கன. ஒவ்வொன்றனையும் எடுத்துக் காட்டுக்களைக் கொண்டு சுருங்கக்காண்போம்.

1. பதிகம் தோன்றிய வரலாறு:

ஒவ்வொரு பதிகமும் தொடங்கப்படும் முன்பு அப்பதிகம் தோன்றிய வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தை ஒட்டியும், பதிகப் பாடல்களை உட்கொண்டும் குறிப்பிடுகிறார்.

அ) 4 - திருப்புகலியும் திருவீழிமிழலையும்.

இப்பதிகத்தில் திருவீழிமிழலையில் இருந்த ஞானசம்பந்தப் பெருமானுக்கு, சீகாழிப் பெருமான் காட்சி வழங்க, `எறிமழுவோடு இளமான் கையின்றி' அப்பெருமான் வழங்கிய காட்சியை ஞானசம்பந்தப் பெருமான் அப்பதிகத்தின் ஒன்பதாம் பாடலில் குறிப்பிடும் செய்தியை இவ்வுரையாசிரியர் எடுத்து இயம்புகிறார்.

ஆ) 6 - திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்.

திருமருகலிலிருந்த ஞானசம்பந்தப் பெருமான் பிறதலங் களையும் சென்று வழிபட வேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்போடு மருகற்பெருமான் திருவடிகளை வணங்கியபோது அப்பெருமான் திருச்செங்காட்டங்குடி கணபதீச்சரத்திலுள்ள திருஓலக்கத்தைக் காட்டியருள இப்பதிகம் பாடினார் என்று குறிப்பிடுகிறார்.

இ) 13 - திருவியலூர்

திருமங்கலக்குடியை வணங்கிப் போந்த பிள்ளையார் திருவியலூருக்கு எழுந்தருளி வியலூர்ப்பெருமானை வணங்க அப்பெருமான் பிள்ளையாருக்குத் தம் அருளால் திருவேடம் காட்டியருள, அதனைப் பிள்ளையார் இப்பதிகம் ஐந்தாம் பாடலில் `கண்ணார் தரும் உருவாகிய கடவுள்` என்றும், ஒன்பதாம் பாடலில் `உருவம் விளம்பட்டு அருள் செய்தான்' எனவும் குறிப்பிட்டருளிய செய்தியை இயம்புகிறார்.

ஈ) 28 - திருச்சோற்றுத்துறை

கண்டியூரை வணங்கிய பிள்ளையார் அங்கிருந்து திருச் சோற்றுத்துறை செல்லும் வழியில் அருளிய இப்பதிகத்தைச் சேக்கிழார் பெருமான் `ஒப்பில் வண்தமிழ்மாலை' என்று சிறப்பிக்கிறார். இப்பதிகத்தில் `ஒளி வெண்ணீற்றப்பர் உறையும் செல்வம் உடையார்' என இறைவன் திருநாமமாகிய `தொலையாச் செல்வர்' என்பது தோற்றுவிக்கப்படுகிறது - என நுட்பமான செய்திகளை ஆய்ந்து கூறுவதனை இத்தலைப்பில் பல இடங்களிலும் காணலாம்.

2. பதிகத்தில் சொல்லப்பட்டவற்றைச் சுருக்கி உரைத்தல்:

அ) 91 - திருவாரூர் - திருஇருக்குக்குறள்

வேதங்களுள் இருக்கு, மந்திரவடிவாக உள்ளது. மந்திரம் சொற்சுருக்கம் உடையது. எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றவல்லது. அதுபோல இப்பதிகம் அமைந்துள்ளது.

அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கும் பாசத்தால் இரு வினைக்கு ஈடாகக் கருவயிற் பிண்டமாய் வளர்ந்து பிறந்து, பரிபாக முற்ற வினைகள் துன்ப இன்பங்களை ஊட்டுகின்ற காலத்து வருந்தி மகிழ்ந்து, அலைகின்ற ஒழியாத் துன்பத்தினின்றும் உய்தி வேண்டும் உத்தமர்களை அழைத்து அன்போடு மலர் தூவுங்கள், கைகளால் தொழுங்கள், எடுத்து வாழ்த்துங்கள், உங்களுடைய பற்று அறும், வினைகள் விண்டுபோம், இன்பமுத்தி எய்தலாம் எனப் பயனும் வழியும் வகுப்பன இப்பத்துப் பாடல்கள் என்கிறார்.

ஆ) 108 - திருப்பாதாளீச்சுரம்

இப்பதிகம் முழுதும் செஞ்சடைமேல் பிறை, ஊமத்தம், கொன்றை இவற்றை அணிந்தவனும், கங்கையை அணிந்து உமையை ஒருபாகத்து இருந்தருளச் செய்தவனும் ஆகிய இறைவன் உறை கோயில் பாதாளீச்சுரம் என்கின்றது. பெரும்பான்மையான பாடல் களில் தலத்தின் திருப்பெயருக்கு ஏற்பப் பெருமான் பாம்பு அணிந் தமை போற்றப்படுதல் காண்க என்கிறார்.

3. பதிகப்பாடல் ஒவ்வொன்றன் கருத்தையும் சுருக்கமாக முதலில் தெரிவித்தல்:

அ) 91. திருவாரூர் - திரு இருக்குக்குறள்.

தியாகேசப்பெருமான் எழுந்தருளியுள்ள ஆரூரைப் பத்தி யோடு மலர் தூவி வழிபடுங்கள் முத்தியாகும் என்கிறது முதற் பாடல். முத்தியாகற்குப் பிறவி இடையூறாதலின், அப்பிறப்பு, பாவத்தைப் பற்றிவருவதொன்றாதலின், பாவமோ பற்றுள்ளம் காரணமாக எழுவது ஆதலின், காரியமாகிய பிறப்பினை அறுக்க விரும்பு வார்க்குத் துறவியாதலே சிறந்த உபாயம் என்கிறது இரண்டாம் பாடல்.

நெஞ்சொடுபடாத செயலும் உண்டன்றே! அங்ஙனமின்றி புத்திபூர்வமாக மலர் தூவலே துன்பம் துடைக்க உபாயம் என்று மூன்றாம் பாடல் மொழிகிறது. துன்பம் துடைத்து உய்தியை விரும்புவீராயின் கைகளால் தொழுங்கள் பிராரத்த வினை நைந்து போம் என்று நான்காம் பாடல் நவில்கிறது.

தொழுவாரிடம் வரக்கடவ வினைகளும் விண்டுபோம் என்று ஐந்தாம் பாடல் அறைகிறது.

கீழைத்திருப்பாட்டு வினை நீக்கம் கூறியது. அவ்வினை யோடு ஒருங்கு எண்ணப் பெறுவதாய் அனாதியே பந்தித்துள்ள பாசமும் கெடும்; இறைவன் நேசமாகும் என்று ஆறாம்பாடல் அறிவிக்கிறது.

இருவகை வினையும் தீரவேண்டும் என்றும், தீர்ந்தால் உலகம் முழுதும் உடைமையாம் என்றும் ஏழாம்பாடல் இயம்புகிறது.

செய்யமலர்தூவி வையம் தமதாய காலத்து உண்டாகிய தருக்கையும் களைந்து, திருத்தம் நல்குவர் தியாகேசராதலின், அவர் தலத்தைக் கையினால் தொழ வேண்டும் என்று எட்டாம் பாடல் எடுத்துரைக்கிறது.

அருள் பெற்றுச் சிறிது திருந்திப் பதவியில் நிற்பாரும், பதவிமோகத்தால் மயங்குவார், ஆயினும் அவர்கள் மிகைநோக் காதே, அதுதான் ஆன்ம இயல்பு என்று திருவுள்ளம்கொண்டு அருள்செய்யும் கருணையாளன் எழுந்தருளியுள்ள ஆரூரை நினைக்க வேண்டும் என்றும், நினைத்தால் ஆகாமிய சஞ்சித வினைகள் கழியும் என்றும் ஒன்பதாம் பாடல் உரைக்கிறது.

அதிகார பலத்தால் துள்ளுவாரையும் ஆட்கொள்ளும் இறைவன், ஏனைய விஷத்தன்மை பொருந்திய ஆன்மாக்களையும் அடக்கி ஆளுவன் என்ற கருணையின் மேன்மையைப் பத்தாம்பாடல் பகர்கிறது.

முத்தியாகுமே என முதற்பாட்டில் அருளிய பிள்ளையார் அதற்கு இடையூறான பிறவி வினை பாசம் இவைகளையும், இவை களை நீக்கும் உபாயங்களையும் நீங்கியவர் எய்தும் பயனையும் முறையே கூறினார். இத்தகைய பாடல்கள் பத்தையும் பயில்வாரும் அத்தகைய இன்பத்தை எய்துபவர்; பேரார்; நிலையாவர் எனத் திருக்கடைக்காப்புத் தெரிவிக்கிறது.

கீழ்ப்பாடல்களுள் ஆரூரை மலர்தூவ அடையும் பயனை ஐந்து பாடல்களும் தொழுவார் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், வாழ்த்துவர் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், இப்பதிகம் ஓதுதற் பயனை ஒருபாடலும் உணர்த்துகின்றன.

ஆ) 126 - திருத்தாளச்சதி - முதலியனவும் காண்க.

இங்ஙனம் இவ்வுரையாளர் பாடற் கருத்து உரைத்த பாடல்கள் பல உள.

4. சொற்களும் சொற்றொடர்களும் இருபொருள் தருதல்:

1-1. ஏடுடைய மலரான் - இதழ்களை உடைய தாமரை மலரில் உள்ள பிரமன். இதழ்களை உடைய தாமரை மலர்களால்.

1-10. இறைகாணிய - பிரமனும், திருமாலும் தம்முள் யாவர் இறைவர் என்பதனைக் காணும்பொருட்டு. இறைவனைக் காணும் பொருட்டு.

2-6. கழலின் ஓசை, சிலம்பின் ஓசை - ஆண்பகுதியாகிய வலத்தாள் கழலின் ஓசை. பெண் பகுதியாகிய இடத்தாள் சிலம்பின் ஓசை. சிவபெருமான் கழலின் ஓசை. மகா காளியின் சிலம்பின் ஓசை.

2-10. செய்தவத்தர் - தவத்தைச் செய்யும் அடியார்கள். செய்த + அவத்தர் - தவம் என்று வீண் காரியம் விளைக்கும் தேரர்.

26-10. ஆறும் நான்கும் அமர்ந்தார் - வேதாங்கங்கள் ஆறினையும் வேதம் நான்கினையும் விரும்பியவர். ஆறாறாக அடுக்கப்பட்டு வருகின்ற அகம், அகப்புறம், புறம், புறப்புறம் ஆகிய சமயங்களின் பொருளாய் அமர்ந்திருப்பவர்.

26-11. சேடர் - எல்லாம் தத்தம் காரணத்துள் ஒடுங்க அவை தமக்குள் ஒடுங்கத் தாம் ஒன்றினும் ஒடுங்காது, ஒடுங்கியவைகள் மீட்டும் உதிக்க மிச்சமாய் இருப்பவர். பெருமை உடையவர் என்பதும் ஆம்.

36-3. கொக்கின் இறகு - கொக்கிறகம்பூ. கொக்கின் இறகும் ஆம்.

44-4. தூமதி - ஒருகலைப் பிறையாதலின் களங்கம் இல்லாத மதி. இறைவன் அணிந்தமையின் தூமதி எனலுமாம்.

50-4. மெய்யராகிப் பொய்யைநீக்கி - மெய்யராகி எனவே பொய்யை நீக்கி என்பது பெறப்படவும் மீட்டும் கூறியது வற்புறுத்த. தத்துவஞான உணர்ச்சி உடையவராய்ப் பொய்யறிவை விடுத்து என்றுமாம்.

51-1. ஈர் உரிவை - கிழிக்கப் பெற்ற தோல், உதிரப்பசுமை கெடாத ஈரமாகிய தோல் என்பதும் ஆம்.
73-3. எரியிடை மூன்றினர் - நெருப்பில் சத்தமும் ஸ்பரிசமும் உருவமுமாகிய மூன்று தன்மாத்திரைகளாய் இருப்பவர். ஆகவனீயம் முதலிய முத்தீயாய் இருப்பவர் என்றுமாம்.

73-3. மண்ணிடை ஐந்தினர் - மண்ணில் சத்தம், ஸ்பரிசம், உருவம், இரதம், கந்தம் என்ற ஐந்து தன்மாத்திரைகளாய் இருப்பவர். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணைகளாய் இருப்பவர் எனலுமாம்.

82-5. பெண்ணுக்கு அருள் செய்த பெருமான் - மன்மதனை எரியவிழித்து, பின் இரதிக்கு அருள் செய்த பெருமான். (69-3) உமையம்மைக்கு இடப்பாகத்தை அருளிய பெருமான் எனலுமாம்.

84-5. சேண் நின்றவர் - சேய்மையில் உள்ள அடியார்கள்; தேவரும் ஆம்.

91. திருஇருக்குக்குறள் - வீடு காதலிப்பவரால் விரும்பப் படும் இரண்டு சீர்களால் யாக்கப்பெற்ற இருக்கு மந்திரம் போன்ற பாடல். வேதங்களுள் இருக்கு மந்திர வடிவமாக உள்ளது. அதுபோல இப்பதிகமும் மந்திர வடிவாக உள்ளது எனலுமாம். மந்திரம் சொற்சுருக்கமுடையது. எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றவல்லது. அதுபோல இப்பதிகமும் அமைந்திருக்கிறது என்பதும் ஆம்.

73-7. தேவார் சோலை - தேவு + ஆர் + சோலை = தெய்வத்தன்மை பொருந்திய சோலை. தே + வார் + சோலை = தேன் நிறைந்த சோலை.
இவ்வாறு சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் இரு பொருள் செய்யும் திறத்தை இத்திருமுறை உரையில் பல இடங்களிலும் காணலாம்.

5. சுட்டு என்ற உள்ளுறை:

இயற்கை வருணனை முதலிய பகுதிகளில் நேரிடையான பொருளோடு உள்ளுறைப் பொருளும் விளக்குவதனை இவ்வுரை யாசிரியர் பல இடங்களிலும் பின்பற்றியுள்ளார்.

அ) 14 ஆம் பதிகம்:

பாடல் 1; கூனல் பிறை மழைமேகம் கிழித்தோடிச் சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம். ஆன்மாக்கள் அநாதியான ஆணவ மல படலத்தைக் கிழித்துச் சென்றெய்தி எம்பெருமான் திருவடி நிழலாகிய தண்ணிய இடத்தைச் சென்று சாரலாம் என்பது உள்ளுறை.

பாடல் 2; மயில்புல்குதண் பெடையோடு உடன் ஆடும் வளர்சாரல் குயிலின் இசைபாடும் குளிர் சோலைக் கொடுங்குன்றம். தன்வசம் அற்றுப் பாடியும் ஆடியும் செல்லும் அன்பர்க்குக் குளிர் நிழல் தருவது கொடுங்குன்றம் என்பது உள்ளுறை.

பாடல் 4; `கரியோடு அரி இழியும்', அருவிக் கொடுங்குன்றம். கொடுங்குன்றச் சாரலை அடையின் தம்முள் மாறுபட்ட ஆணவக் களிறும் ஐம்பொறிகளாகிய அரிகளும் தம்வலிமை அற்றுக் கருணை அருவியின் வழியே இழுக்கப் பெற்று அமிழ்த்தப் பெறும் என்பது உள்ளுறை.

பாடல் 5; மேகத்து இடிக்குரலை வெருவிக் கூகைக் குலம் ஓடித் திரிசாரல். அஞ்ஞானமாகிய வாழ்க்கையை உடைய ஆன்மாக்கள் கருணை மழைபொழியும் இறைவனது மறக்கருணை காட்டும் மொழியைக்கேட்டு மலையை அணுக முடியாதே அலைவர் என்பது உள்ளுறை.

25-4. மழுவாள் ஏந்தி மாதொர் பாகமாய் ... ... மேவிய இறைவன். தொழுவார்க்கு துயரம் இல்லாமை ஏது ஒன்று பகையும் பிணியும் தவிர்த்தல். மற்றொன்று இன்பம் பெருக்கல். இவ்விரண்டை யும் அடியவர் பெற இறைவன் மழுவாள் ஏந்திப் பகையும் பிணியும் தடுத்தும் மாதொர் பாகமாய்த் தான் இருந்து இன்பம் பெருக்கியும் காக்கின்றான் என்பது உள்ளுறை.

48-2. ஆறடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே? பெண் ஒரு பாதியராக இருந்தும், மற்றொரு பெண்ணாகிய கங்கையையும், காமத்தால் சாபமுற்றுக் கலைகுறைந்த மதியையும் போகியாகிய பாம்பையும் அணிதல் தகுமா? என்று உள்ளுறுத்து வினவியது.

66-1. கடல்வாழ் சங்கம் பரதர் மனைக்கேறி முத்தம் ஈனும் சண்பை நகர். பிறவிக்கடலில் ஆழ்வாரும் வினைநீங்கும் காலம் வரின் சண்பை நகர் சார்ந்து பேரின்பம் எய்துவர் என்பது உள்ளுறை.

71-2. காதலியும் தாமும் விடையேறி ... செங்கால் அன்னமும் பெடையும் சேரும் சித்தீச் சரத்தாரே,இறைவன் தன் காதலியும் தானும் விடையேறியிருப்பதால் பொய்கைகளில் அன்னமும் பெடையோடு சேர்ந்து இருக்கின்றன எனப்போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தை நல்கும் தன்மையைச் சுட்டியவாறு.

73-4. யான் அறியாமையால் எண்ணாதிருக்கச் செய்தேயும் வலியவந்து இல்லில் புகுந்து கலந்து பிரிந்து மிக்க துன்பத்தைச் செய்தான் என்றது ஆன்மாக்கள் தலைவனை தாமே சென்று அடைதற்கும் கலத்தற்கும் பிரிதற்கும் என்றும் சுதந்திரம் இல்லாதன என்று அறிவித்தவாறு.

ஆ) 76. ஆம்பதிகம் - முதற்பாடல்.

மயிலும் மானும் துணையொடும் பெடையொடும் வதிய, நீர்மட்டும் தனித்திருந்து,காதலித்த அடியாளையும் தனித்திருக்கச் செய்து அழகினைக் கவர்வது அழகா என்று உரைக்கின்றாள். இதனால் சிவத்தோடு இடையறாமல் இருத்தலாகிய அத்துவித பாவனையில் பிரிந்து இருக்கின்ற ஆன்மா ஒன்றிய காலத்து உண்டாகிய சிவானந் தாநுபவத்தால் உண்டான ஒளிகுறைய, அதனை எண்ணி, ஆன்ம நாயகியை வந்து ஏற்றுக்கொண்ட தேவரீர் இங்ஙனம் இடையறவுபடச் செய்யலாமா? என்று வருந்திக் கூறுவதாகிய பேரின்பப் பொருள் இதன் உள்ளுறை. இங்ஙனமே ஏனைய திருப்பாடல்களுக்கும் கொள்க.

84-2. அண்ணாமலை நாடன், ஆரூர் உறை அம்மான் ... நாகைக்காரோணத்தானே.திருமாலின் தருக்கு ஒழித்த தலம் மூன்றினையும் சேர்த்துக் கூறியவாறு. திருவாரூரில் வில் நாணைச் செல்லாக அரித்து நிமிர்த்தித் திருமால் சிரத்தை இடறினார். திரு வண்ணாமலையில் தீ மலையாய் நின்று செருக்கு அடக்கினார். நாகையிலும் தியாகேசர் திருவுருவில் இருந்து திருமாலின் தியான வஸ்துவானார் என்பது உட்பொருள்.

97-2. செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம் புன்னை மரங்கள் மகரந்தங்களாகிய செம்பொன்னைக் கொடுக்கும் புறவம் - மரங்களும் வள்ளன்மை செய்யும் நகரம் என அவ்வூர் மக்களின் வள்ளன்மையைச் சுட்டியவாறு.

100-4. கோங்கம் மாதவியோடு மல்லிகைக் குளிர் பூஞ்சாரல் வண்டு அறைசோலைப் பரங்குன்றம். மாதொரு பாகனாகிய எம்பெருமான் போகியாதற்கு ஏற்பக் குன்றமும் மல்லிகை முதலிய மணம் தரும்பூக்கள் மலிந்துள்ளமையும், புணர்ச்சி நலம்மிகும் சாரலோடு கூடியமையும் குறிக்கப்பெற்றன.

105-2. வண்டும் சுரும்பும் இசைமுரல ஆலையின் வெண் புகை முகில் தோயும் ஆரூர். ஆரூர்ப் பெருமானுடைய பாதம்பணிவார் மங்கள வாத்தியம் ஒலிக்க இன்ப உலகு அடைவர் இது உறுதி என்பது உள்ளுறை.

105-4. அரையில் ஐந்தலை ஆடரவம் அசைத்தான். அடியார்களுடைய ஐம்பொறிகளையும் தத்தம் புலன்களில் செல்ல விடாது தடுத்தாட்கொள்ளும் தன்மையைப்போல ஆடும்தன்மை வாய்ந்த ஐந்தலைப் பாம்பைச் சேட்டியாதே திருவரையில் இறுகக் கட்டினான் என்பது குறிப்பு.

இவ்வாறு பலபாடல்களில் இவ்வுரையாசிரியர் சுட்டு என்ற உள்ளுறைச் செய்தியை வெளிப்படுத்தி இருத்தலைக் காணலாம்.

6. சொற்றொடர்களுக்கு நயமான உரை காண்டல்:

3-3. வெய்யபடை - கொடியவர்களுக்கு வெம்மையாய் அடியவர்களுக்கு விருப்பமாய் இருக்கும் படை.

13-1. அரவும் புனலும் மதியும் தலையும் விரவும் சடை - தம்முள் மாறுபட்ட பல பொருள்களும் பகைநீங்கி வாழ்தற்கு இடமாகிய சடை.

51-2. வெண்மழு - இறைவன் திருக்கரத்தில் உள்ள மழு அலங்காரப் பொருளாதலன்றி, யாரையும் அழித்தல் இல்லையாதலின் குருதிக்கறை படியாத வண்ணம் வெண்மழு எனப்பட்டது.

51-3. தீயவல்லரக்கர் செந்தழலுள் அழுந்த - இறைமைக் குணம் வேண்டுதல் வேண்டாமை இல்லையாய் இருக்கச் சிலரை அழித்துச் சிலரைவாழ்விப்பது பொருந்துமோ என்பார்க்குக் காரணம் அருளுவதுபோலத் தீயராகிய வல்லரக்கர் என்று திரிபுராதிகள் தீமை தோன்றக் கூறினார்.

51-5. மதியம்வைத்து உகந்த - உகந்த - மகிழ்ந்த. பலர் சாபத்தால் இளைத்த ஒருவனுக்கு ஏற்றம் அளித்தோமே என்ற மகிழ்ச்சி.

55-5. மாறு இலாமணியே - சில ரத்னங்களை அணிந்தால் தீமையும் நிகழக்கூடும். எம்பெருமானாகிய மணி எத்தகையோருக்கும் நன்மையே செய்தலின் மாறு இலா மணியே என்றார்.

74-3. பந்தம் உடைய பூதம் - உதரபந்தம் என்ற அணியை அணிந்த பூதம்.

75-4. கொடுகொட்டி - ஒரு வகை வாத்தியம். இப்போது கிடுகிட்டி என வழங்குகிறது.

75-5. தக்கைகொள்பொக்கணம் இட்டு - தக்கை என்னும் வாத்தியத்தை வைத்து மறைத்த துணிமூட்டையைப் புறத்தோளில் தொங்கவிட்டு.

75-9. விண்ணவர் கைதொழுது ஏத்த எமை வேறாள விரும்பிய விகிர்தர் - தேவர்கள் தம் போகத்திற்கு இடையீடு வாராமை குறித்து வணங்குவர். ஆதலால் அவர்களுக்கு எளிதில் அருள் வழங்காது எம்மைச் சிறப்பாக வைத்து ஆள்கின்றார்.

75-11. நண்ணிய நூலன் - தான் வருந்திப்பயிலாமல் தாமாகவே அடைந்த வேதத்தை உடைய ஞானசம்பந்தன்.

76-4. தேனுமாய் அமுதமாய்த் தெய்வமும் தானாய் - தேன் இதயத்துக்கு வலி ஊட்டி உடல் வளர்க்கும் இனித்த மருந்தாவது. அமுதம் அழியாமை நல்கும் மருந்து. இவை இரண்டும் எடுத்த பிறவி களுக்கு மட்டுமே இன்பம் அளிப்பன. தெய்வம் எடுத்த எடுக்கப் போகின்ற பிறவிகட்கும் பிறவியற்ற பேரின்பநிலைக்கும் இன்பம் அளிப்பது ஆதலால் தேனுமாய் அமுதமுமாய் என்றருளிய பிள்ளை யார் அடுத்துத் தெய்வமும் தானாய் என்கின்றார்.

77-2. தேனினும் இனியர் பால் அன்ன நீற்றர் தீங்கரும்பு அனையர் தம் திருவடிதொழுவார் ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் - எம்பெருமான் எக்காலத்தும் அள்ளூறிநின்று இனிக்கும் பொருளாக இருத்தலின் நாப்புலனோடு ஒன்றிய கணத்து இனித்துப் பின் புளிப்பதாய தேனினும் இனியர். பால் உண்டார்க்குப் பித்தநோய் தணிக்கும். நீறுகண்டாருக்கும், பூசினாருக்கும் மலமயக்கம் போக்கலின் இங்ஙனம் கூறினார். கரும்பு பருவத்திற்கும் முயற்சிக்கும் ஏற்ப நுகரும் முறையில் இனிப்பைக் கொடுக்கும். எம்பெருமானும் ஆன்மாக்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப இனிப்பவன். சடமாகிய மாயா காரியமாகிய உடல் உயிர்பெறும் இவ்வின்பத்தைப் பெற்றிலமே என்று விரும்பி உருக ஆன்மாவிற்குப் பெருமான் மகிழ்ச்சியை விளைவிப்பான்.

77-4. தமிழ்ச்சொலும் வடசொலும் தாள் நிழல் சேர - ஒலி வடிவாயசொற்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியன வாதலின் அடையுமிடமும் அவன் அடிகளே ஆயின என்பது.

83-8. கொலைஆர்மழு - இது படைக்கலம் என்ற பொதுமை பற்றி வந்த அடை; இறைவன் மழு யாரையும் கொலை செய்தல் இல்லையாதலின்.

கோலச்சிலை - அழகுக்காகத் தரிக்கப்பட்ட வில்.

105-3. வெள்ளம் ஓர்வார் சடைமேல் கரந்திட்ட - வானுலகன்றித் தரணி தனக்கு இடமாதல் தகாது எனத் தருக்கி வந்த கங்கையை ஒரு சடைக்கும் காணாது என்னும்படி தருக்கடக்கி இருக்கும் இடமும் தெரியாதபடி மறைத்த. கரந்திட்ட என்றது மறைத்தவன் வேண்டும்போது வெளிப்படுத்தும் வன்மையும் உடையவன் என்பது தோன்ற நின்றது.

110-7. முனிவரொடு அமரர்கள் முறை வணங்க - முனிவர்கள் வணக்கம் உலகு உய்ய வந்த நிஷ்காமிய வணக்கம். தேவர்கள் வணக்கம் அசுரர் அழியத் தாம்வாழவேண்டும் என்னும் காமிய வணக்கமாதலின் அவர்கள் முன்னும் தேவர்கள் பின்னும் வணங்க.

113-2. அமரர்க்கும் முனிவர்க்கும் சேயவன் - அமரர்கள் போகிகளாகவும் முனிவர்கள் மனன சீலர்களாகவும் இருத்தலின் அவர்களுக்குச் சேயவன்; அவர்களுக்குச் சேயவன் எனவே, ஞானிகளுக்கு அண்ணியன் என்பதாம்.

123-4. முடிமிசை மனமுடையவர் - கங்கையோ செந்தழல் போன்ற சடையின் தீயை அவிக்க வருவதுபோலப் பெருகிக்கொண்டு இருக்கிறது. அக்கங்கையில் நனைந்த அரவமும் நம்மால் விழுங்கத்தக்கது மதி என்ற நினைவோடு வருகிறது. `ஆதலால்' இவை தருக்கும் பகையும் மாறித் தத்தம் எல்லையில் ஒடுங்க இறைவன் எப்போதும் தலைமேல் சிந்தையனாக உள்ளான் என்ற நயம் தோன்றக் கூறியது.

இவ்வாறே 124-9,11 முதலியனவும் நயம் சிறந்த உரைப்பகுதிகளைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.

7. விளக்கவுரை:

82-3. மயிலும் மடமானும் மதியும் இளவேயும் வெயிலும் பொலிமாதர்.

இந்நகரத்து மாதர் இனிமை தரும் மென்மையாகிய சாயலால் ஆண் மயிலையும், மருண்ட நோக்கத்தால் மானையும், நுதல் அழகால் பிறைமதியையும், தோள்களால் மூங்கிலையும், கற்பினால் வெயிலை யும் போல விளங்குகின்றனர்.

129-7. புவிமுதல் ஐம்பூதமாய்ப் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய் அவை அவை சேர் பயன் உருவாய், அல்ல உருவாய்.

நிலன் ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன.

கரணம் நான்கு - மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்பன.

அவை சேர்பயன் உருவாய் - பூதம் முதலியவற்றைச் சேர்ந்த பயனே வடிவாய்; என்றது பூதப்பயனாகிய சுவை முதலிய தன்மாத்திரை ஐந்தும், புலன் ஐந்தின் பயனாய பொறி இன்பம் ஐந்தும், கரணம் நான்கின் பயனாய நினைத்தலும் புத்தி பண்ணலும் சிந்தித்தலும் இது செய்வேன் என அகங்கரித்து எழுதலும் ஆகிய நான்கும் கொள்ளப்படும். அல்ல உருவாய் - இவை அல்லாத அருவாகிய ஞானமாய்.

136-1. மாதர்மடப் பிடியும் மட அன்னமும் அன்னதோர் நடை.

உமாதேவியின் பெருமித நடைக்குப் பெண்யானை நடையும் நடையின் மென்மைக்கு அன்ன நடையின் மென்மையும் உவமை ஆயின.

இத்தகைய விளக்கவுரைகள் பல இம்முதல் திருமுறை உரையில் காணலாம்.

8. தல புராணம் முதலியன:

5-10. அண்ட மறையவன் - இரணிய கருப்பனாகிய பிரமன். பிரமன் நீரையே முதற்கண் படைத்தான் என்பதும் அதன்கண் பொன் மயமான முட்டையாக உலகை ஆக்கினான் என்பதும் புராண வரலாறு.

11-7. தம் திருவடிகளைப் பணிந்த தாரகாக்ஷன், கமலா க்ஷன், வித்யுன்மாலி என்ற மூவர்கட்கும் சுதர்மன், சுநீதி, சுபுத்தி எனப்பெயர் ஈந்து வாயில் காவலராகும் வரத்தால் மிக அருள் செய்தவன்.

இச்செய்தியை அதிகைப்புராண வரலாறு, தர்மசங்கிதை வசனம் என்பனவற்றால் அறியலாம்.

12-5. தன் தவவலிமையால் தேவர்களை வருத்திய அந்த காசுரனைச் சிவபெருமான் பைரவரைக் கொண்டு முத்தலைச்சூலத்தில் குத்திக் கொணர அவன் பெருமானைத் தரிசித்ததும் உண்மை ஞானம் கைவரப்பெற்றான். அவனுக்குக் கணபதியாம் பதவியை அளித்தார் என்பது கந்தபுராணம்.

27-5. திருப்புன்கூர்த்தலத்து அம்மை திருநாமம் சொக்க நாயகி; அழகிய நாயகி, ஆதலின் இங்கு உகந்தருளியிருக்கும் பெருமான் அழகர் எனக் குறிப்பிடப்பட்டார். இது தலபுராணச்செய்தி.

31-5. இறையார் வளையாள் - குரங்கு அணில் முட்டத் திருத்தலத்து இறைவியின் திருநாமம் - இது தலபுராணச் செய்தி.

32-5. திருவிடைமருதூரில் சிவபெருமான் தைப்பூசத் திருநாள் அன்று காவிரியில் தீர்த்தம் கொள்வது தலபுராணச் செய்தி.

42-9. கொக்கு வடிவில் வந்த பகாசுரன் என்பவனை வாயைப் பிளந்து கண்ணன் கொன்ற செய்தி பாகவத புராணத்தில் குறிப்பிடப் படுவதாகும்.

45-1. கணவனால் கொல்லப்பட்ட நவஞானி என்னும் பார்ப்பனி மறுபிறப்பில் தரிசனச் செட்டி என்ற பெயரோடு பிறந்த தன் கணவனைப் பேய் வடிவினை மறைத்துப் பெண்வடிவில் வந்து பழையனூர் ஆலங்காட்டில் கொன்ற செய்தி அவ்வூர்த்தல புராணம் முதலியவற்றில் உள்ளது.

48-6. அருச்சுனன் செய்த தவத்தைக்கெடுத்து அவனைக் கொல்ல வந்த மூகாசுரன் என்னும் பன்றியைக் கொன்று, அருச்சுனனுடைய போர் வன்மையைப் பார்வதிக்குக்காட்டி அவனுக்கு இறைவன் அருள்செய்த செய்தி பாரதத்தில் உள்ளது.

56-1. ஆதி முதல்வர் - ஆதி முதல்வர் என்பது திருமூலநாதர் என்னும் தலத்திறைவர் பெயரைக் குறிக்கிறது - திருப்பாற்றுறைச் செய்தி.

62-9. பாணனிசை பத்திமையால் பாடுதலும் பரிந்தளித்தான் - இது பாணபத்திரன் வரலாறு எனப்படுகிறது - பெரியபுராணம்.

63. சீகாழியின் பன்னிரு பெயர்களும் சீகாழித் தலபுராணச் செய்திகளாக உள்ளன.

83-6. அம்பர்மாகாளத்து இறைவர் நஞ்சை உண்டு களித்தவர் - இவர் பெயர் காளகண்டேசுவரர் என்பது தலபுராணம். இவையன்றி, 101-5,7; 105-9,10; 114-6; 120-3; 21-5 போன்ற இடங்களிலும் புராணச் செய்திகளை உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்

9. அருஞ்சொற்பொருள்:

2-2. குழை - பனந்தோட்டால் செய்யப்படும் மகளிர்காதணி. ஆடவர் காதில் செருகிக் கொள்ளும் மணத்தழை.

2-7. வெள்ளம் ஆர்ந்துமதிசூடி - தருக்கினாரை ஒடுக்கித் தாழ்ந்தாரை உயர்த்தி.

3-7. வருகாமன் - தேவகாரியத்தை முடிப்பதற்காக இந்திரன் கோபத்துக்கு ஆளாகி இறப்பதனைக் காட்டிலும் சிவபெருமான் மறக்கருணையால் உய்வேன் என்று விரும்பிவந்த காமன்.

3-11. வானத்திலும் உயர்வர் - பெருமானை இசைபாட வல்லார்க்கு, வானத்தின்பம் ஒருபொருளாகத்தோன்றாது ஆதலின் வானத்திலும் உயர்வர் என்றார்.

4-5. வெந்த வெண்ணீறு - இனிவேதற்கு இல்லாத - மாற்றமில்லாது ஒருபடித்தான வெண்ணீறு.

4-7. காம்பு - முள் இல்லாத மூங்கில்.

5-11. பாடல் மாலை - ஒவ்வொரு திருப்பாடலுமே தனித்தனிப்பயனுடையதாய், வழிபடும் முறைகளை உடையதாய் இருக்கும் சிறப்புநோக்கி ஒவ்வொரு பாடலுமே ஒரு மாலை போன்றது.

6-2. மூவெரி காவல் ஓம்பும் - அந்தணர்கள் மணக்காலத்து எடுத்த தீயை அவியாதே பாதுகாக்க வேண்டியது மரபு ஆதலின் மூஎரி காவல் ஓம்பும் மறையாளர் என்றார்.

6-6. புனை அழல் - சாதகன்மம் முதலான பதினாறு கிரியைகளாலும் அழகு செய்யப்பட்ட யாகாக்கினி.

6-9. மந்திர வேதங்கள் - மந்திரவடிவான வேதங்கள். அவை இருக்கு வேதத்தில் வழிபாட்டு மந்திரங்களும், யசுர் வேதத்தில் பிரயோகங்களும் சாமவேதத்தில் கானங்களுமாக அமைந்தன.

7-3. யார்க்கும் நண்ணல் அரிய நள்ளாறு - நாடிழந்தும், நகரிழந்தும் மனைவியையிழந்தும் உருமாறியும் வினையை நுகர்ந்து கழித்த நளன் போன்றார் அன்றி வினைச் சேடமுடைய எவரும் நணுக முடியாத நள்ளாறு.

8-7. நீறுடையார் - தாம்தொன்மைக்கெல்லாம் தொன்மை யாய் இருத்தலைத் தோற்றுவிக்கச் சர்வசங்காரகாலத்துத் திருநீற்றினைத் திருமேனியிலணிந்தவர்.

10-4. எதிரும்பலி - பிச்சை ஏற்பார் யாசியாது தெருவில் செல்ல மகளிர் தாமே வந்து இடுதல் மரபாதலின் அதனை விளக்க எதிரும்பலி என்றார்.

10-7. கரிகாலன - எரிபிணத்தை நுகர எரியில் நிற்பதால் கரிந்துபோன கால்களை உடையன.

10-9. தளராமுலை - உண்ணத்தளர்தல் நகிற்கு இயல்பாத லின் உண்ணாமுலை என்பார் தளரா முலை என்றார்.

11-5. ஆயாதன சமயம் பல - இறை உண்மையையும் இறை இலக்கணத்தையும் அளவையானும் அநுபவத்தானும் உள்ளவாறு ஆராயாதனவாகிய சைவம் ஒழிந்த ஏனைய சமயம்.

11-6. எல் ஆம் ஒருதேர் - ஒளிப்பொருள்களாகிய சூரிய சந்திரர்கள் சக்கரங்களாக அமைந்த ஒருதேர்.

18-11. குன்றாத்தமிழ் - எஞ்ஞான்றும் திருவருள் குறையாத தமிழ்.

21-5. மலர்மிசை எழுதருபொருள் - பிரமரந்தரத்தின் கண்ணதாகிய சகஸ்ர தளத்தை உடைய தாமரை மலர்மேல் எழுந்தருளியிருக்கும் பேரொளிப் பிழம்பாகிய பொருள்.

24-3 கானமான் - சாதி அடை. இறைவன் கையில் உள்ளது காட்டு மான் அன்று.

27-8. மலையதனார் - சண்டையிடுதற்குரிய முப்புராதிகள்.

27-9. நாடவல்லமலரான் - பிரமனுக்கு நான்கு முகங்கள் ஆதலின் திரும்பித் திரும்பித் தேடவேண்டிய அவசியமில்லை என்று நகைச்சுவை தோன்றக் கூறியது.

29-2 ஆகம் வீடும் மறையோர் - வினைவயத்தான் வந்த உடலை விடுத்து முத்தி எய்தும் அந்தணர்.

32-7. திமில் - வேங்கை மரம்.

33-2. கிடை ஆர் ஒலி- மாணவர்கள் கூட்டமாயிருந்து ஒலிக்கும் வேத ஒலி. இதனைச் சந்தை கூறுதல் என்ப.

33-9. சுணங்கு - பிரிந்த பெண்களுக்கு உண்டாகும் தேமல்.

36-3. கொக்கின் இறகு - கொக்கிறகம்பூ

45-3. பொழில், சோலை: பொழில் - பொழில் இயற்கையே வளர்ந்த காடு. சோலை - வைத்து வளர்க்கப்பட்ட பூங்கா.

47-6. மூன்று வேள்வியாளர் - தேவயஜ்ஞம், பிதிர்ஜ்யஜ்ஞம், ருஷியஜ்ஞம் என்னும் மூன்று வேள்விகளையும் செய்பவர்கள்.

47-7. பொறைபடாத இன்பம் - பொறுக்க முடியாத அளவு கடந்த இன்பம்.

48-1. அருமறை - அரிய அநுபூதி நிலையாகிய இரகசியம்.

48-5. ஐவேள்வி - தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐவருக்கும் செய்யப்படும் வேள்வி.

50-7. ஆயம் ஆய - படைக்கப்பெற்ற.

53-5. மொந்தை, தக்கை - மொந்தை - ஒருமுகப்பறைவகை களில் ஒன்று.

தக்கை - இருமுகப்பறை வகைகளில் ஒன்று. (உடுக்கையும் ஆம்)
53-6. சழிந்த - நெருங்கிக் கிடக்கின்ற.

53-9. மூலம் உண்ட நீற்றர் - மூலமலமாகிய ஆணவத்தின் வலிகெடுத்த திருநீற்றினை உடைய அடியவர்கள்.

54-1. பூத்தேர்ந்து - வண்டு, ஈக்கடி, எச்சம், முடக்கு முதலிய குற்றமில்லாத பூக்களை ஆராய்ந்து

54-4. தோட்டீர் - செங்காந்தள் பூவை அணிந்தவரே.

57-9. பரக்கினார் - அலைந்து திரிந்தவர்களாகிய அயனும் மாலும்.

விரக்கினான் - சாமர்த்தியம் உடையவன். விரகினான் எதுகை நோக்கி விரிந்தது.

59-1. ஒடுங்கும் பிணி - தமக்குரிய பருவம் வருந்துணையும் வெளிப்படாதே ஒடுங்கி இருக்கும் நோய்.

59-10. பகடு ஊர்பசி - யானைத்தீப்பசி.

64-4. செடி ஆர்வைகை - புதர்நிறைந்த வைகை.

65-5. விழைவு, காதல் - விழைவு - பற்று, காதல் - ப

12. செய்யுள் முடிபு முதலியன:

ஆற்றொழுக்காகப் பொருள் செய்ய இயலாத சில பாடல்களில் உள்ள சொற்றொடர்களைப் பிரித்துத் தனித்தனியே கூட்டிப் பொருள் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அத்தகைய இடங்களை இவ்வுரையாசிரியர் விளக்கியுள்ளார்.

6-5. பாடலும் முழவும் விழாவும் இடையறாத மருகல் எனவும், மறையோர் பரவ நிலாவியமைந்த எனவும், கொடிதடவும் மருகல் எனவும் இயைத்துப் பொருள் காண்க.

32-5. வண்டு புகுந்து ஈண்டி, செம்மை உடைத்தாய் இருக்க, பூசம்புகுந்து ஆடி அழகாய ஈசன் உறைகின்ற இடைமருது என வினை முடிபு செய்க.

32-9. மால்நயந்து ஏத்த எனப்பிரிக்க. உறைகின்ற இடை மருது ஈதோ எற்றே எனக் கூட்டுக.

77-1. குன்று இரண்டு அன்னதோள் எனவும், அன்று இரண்டு உருவம் ஆய எனவும், பிரித்துப் பொருள் செய்க.

111-3. இறைஞ்சி என்னும் செய்து என் எச்சத்தைச் செய என் எச்சமாக மாற்றி இறைஞ்சக் கமழும் காலன நகர் என முடிக்க.

பொருள் தெளிவு கருதி இங்ஙனம் சொற்றொடர்கள் முறைப்படுத்தப்பட்ட இடங்கள் பல இவ்வுரையில் சுட்டப்பட்டுள்ளன.

13. பண்டை நூல் மேற்கோள்கள்:

2-9. போகம்வைத்த பொழில் - தனிமகன் வழங்காப்பனி மலர்க்கா (புறநா.33)

8-6. நிதானம் - பொன்.

நிதானம் - முற்காரணம் தூய்மை நியமம்

நிதி மறைத்துக்கொள் பொருள் கன்றின் கயிறாம் - நானார்த்த தீபிகை.

9-2. கிடை - வேதம் ஓதும் கூட்டம்.

`ஓதுகிடையின் உடன் போவார்' (பெரிய. சண்டே-17)

19-10. நமையல - வருத்தா.

நமைப்புறு பிறவிநோய் - சூளாமணி

நும்மால் நமைப்புண்ணேன் - தேவாரம்.

32-8. ஏ ஆர் சிலை-பெருக்கத்தோடு கூடிய கயிலைமலை.

ஏ பெற்றாகும். தொல். உரி. பெற்று - பெருக்கம்

ஏ கல் அடுக்கம் - (நற்றிணை 116)

33-8. விடத்தார் திகழும் மிடறன் - `கறைமிடறு அணியலும்
அணிந்தன்று '- (புறநா-1)

35-1. விரிகோவணம் - `அற்றம் மறைப்பது முன்பணியே' - 3-371-1.

`ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கும்மே' - தேவாரம்.

43-1. ஒருமாதைத் தலையிலும் ஒருமாதைப் பாகத்திலும் வைத்தும் கற்குடியார் பிரமசாரியே. `பவன் பிரமசாரியாகும்' .

52-7. மூன்றும் ஒன்றாகக் கூட்டி ஓர் வெங்கணையால்.

எரி காற்று அரிகோல் - 1-11-6.

65-3. அயம் சேர்புணரி - அயம் - பள்ளம். அயம் இழி அருவி கலி - 46.

57-4. தாழ்வுடை மனம் - பணிந்த உள்ளம்

தாழ்வு எனும் தன்மை (சித்தியார்)

60-3. கண்பு அகத்தின் - சம்பங்கோரையின் நடுவில்.

`களிறுமாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர' (மதுரைக்-122.)

இவ்வுரையில் மிகத்தேவைப்பட்ட இடத்தன்றிப் பண்டை நூல் மேற்கோள்கள் இடம் பெற்றில.

14. வடமொழிச் சார்பு:

கர்ணாவதம்சம் (2-1) க்ருஷ்ண மிருகம் (2-1) அரிஷட் வர்க்கம் (21-5) அணோரணியான் மஹதோர் மஹீயான் -(61-6) முதலிய வடசொற்றொடர்கள் உரையில் விரவி வருகின்றன. ரத்நம், ஸ்பரிசம், ரூபம் முதலிய தனிச் சொற்களும் பயில்கின்றன. முதல் திருப்பாடல் உரையிலும், 22-7 உரையிலும் வடநூல் மேற் கோள்கள் காட்டப்பட்டுள்ளன. உரை ஆசிரியர் வடமொழியும் பயின்றவர் ஆதலின் இன்னோரன்ன அவர் உரையுள் இடம் பெற்றுள்ளன.

15. சாத்திரக் கருத்துகள்:

1-4. என் உள்ளம் கவர்ந்தார் என்றது, என்னுடைய பரிபாகம் இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார் போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித் தமதாக்கினார்.

3-3. முடிமன்னனைக் கண்டு பிடிஅரிசி யாசிப்பாரைப் போலல்லாது வலிதாய நாயகரைத் தியானித்துக் காமியப் பயனைக் கருதாதீர்கள். உய்யுநெறியைக் கேளுங்கள். அப்போது அதற்கு இடையூறாகிய வினைகள் நீங்கும். இன்பம் உண்டாகும் வினை நீங்குதல் ஒன்றுமே இன்பம் என்பது சித்தாந்த முத்தி அன்றாதலின் நலமாமே என்று மேலும் கூறினார்.

6-6. உடன்பிறந்தே கொல்லும் பகையாய், தன்னையும் காட்டாது தலைவனையும் காட்டாது நிற்கின்ற மூலமலப்பகையை வெல்லும் வீரனாதலின் இறைவனை மைந்த! என்றார்.

11-2. தானாய் - ஒன்றாய், வேறாய் - அவற்றின் வேறாய், உடனானான் - உடனாய் நிற்பவன். இறைவன் கண்ணும் ஒளியும், கதிரும் அருக்கனும், ஒளியும் சூடும்போல உயிர்களோடு கலந்து இருக்கின்ற மூவகை நிலைகளையும் உணர்த்தியவாறு.

17-6. அறிவானும் அறியப்படும் பொருளும் அறிவும் ஆகிய மூன்றும் தனி நிலையற்று ஒன்றாய் இருந்து அறியும் பரம ஞானி களுக்குச் சிவமாகிய தன்னை அறியத்தக்க அறிவை அருளுவான். இறைவன் அறியுமாறு செய்தாலன்றி ஆன்மாக்கள் தாமாக அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லன.

17-7. சொற்பொருள் போல இறைவன் அம்மையோடு ஒன்றாய் இருக்கும் தன்மையும் சொல்லும் பொருளும்போல அம்மையை வேறாய் வைத்து விரும்பும் தன்மையும் உடையன்.

18-4. திருவடிகளைத் தொழுதாலல்லது ஆன்மாக்கள் தம் அறிவான் அறியா.

19-1. பரஞானம் அபரஞானம் என்ற இரண்டு முலைகளை உடைய உமாதேவியோடு இணைபவன் சிவன்.

19-3. ஒளிப் பொருளாகிய சூரியனையும் வெறுத்து ஓட்டுகின்ற இருள், ஆணவமலம்.

42-2. அயன் மால் உருத்திரன் என முத்தொழிலைச் செய்யும் மூவரையும் அதிட்டித்து நின்று தொழிற்படுத்தும், தன்னிடத்து ஒடுங்கிய உலகமாதியவற்றைப் புனருற்பவம் செய்யுங்காலைச் சிவன் சக்தி என்னும் இருவருமாகி இவர்களின் வேறாய் நின்று இயக்கும் பரசிவமுமாகி வினை ஒய்ந்து ஆன்மாக்கள் பெத்த நிலையில் நில்லா ஆகலின், தீவினைகள் நீங்கி நிற்கப் பரங்கருணைத் தடங்கடலாகிய பரமன் நல்வினைகளை அவைகள் ஆற்ற அருளுகிறான்.

76-1. ஆன்ம போதம் கழன்று சிவபோதத்தில் நிற்பார் சொல்லுவனயாவும் சிவத்து உரையே ஆதலின் `எனதுரை தனது ரையாக' என்றார்.

85-9. நாகத்து அணை இருந்தும் அணையிலேயே அருகில் திருமகள் இருந்தும் மாலுக்குப் போகம் கூடவேண்டுமாயின் இறைவன் போகியாய் இருந்தாலல்லது பயனில்லை என்பது கூறப்பெற்றது.

113-5. இறைவன் தேர்ந்த ஞானியரையும் தேடச் செய்து அவர்களுக்குப் பாலின் நெய்போலவும், தேடுவாரைத் தேடச் செய்து விறகின் தீப்போலவும் தோன்றிநிற்பவன்.

131-1. சுவைகளும் இசைகளும் எண்குணங்களும் வேதமும் முதலியன மாயாகாரியங்கள் ஆதலின் அவற்றால் அறியப் பெறாதவன் ஆயினான் இறைவன்.

16. பிறர் கருத்துக் கூறல்:

1-1. கயப்பாக்கம் திரு. சதாசிவ செட்டியார் இம்முதல் திருப்பாடலில், விடையேறி - சிருட்டி. மதி சூடி - திதி; பொடிபூசி - சங்காரம்; கள்வன் - திரோபவம்; அருள்செய்த - அநுக்கிரகம் என்ற ஐந்தொழிலையும் குறிப்பிட்டு விளக்கியுள்ளார் - என்கிறார்.

ஷ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் தோடுடைய செவியன் முதலான இறைவனுடைய எண்குணங்களாகிய சிறப்பியல்புகள் உணர்த்துவன, பிரமபுரம் விடைஏறி, பொடிபூசி, உள்ளம்கவர் கள்வன் என்பன இறைவனுடைய உருவம், அரு உருவம், அருவம் என்ற முத்திறத் திருமேனிகளையும் உணர்த்துவன என்று குறிப்பிடுகின்றார், - என்கின்றார்.

இவ்வாறு பிறர் கருத்துக்களும் ஒரோ வழிக்குறிப்பிடப் படுகின்றன.

இவ்வுரையாளருடைய உரை இயற்றும் ஆற்றலை `வண்ட ரங்கப் புனற்கமல மது'- என்னும் இத்திருமுறை 60 ஆம் பதிகத்துக்கு இவர் எழுதியுள்ள சுவையான உரைகண்டு உணரலாம்.

இங்ஙனம் நுண்ணுணர்வினால் வரையப்பெற்ற இம்முதல் திருமுறைக் குறிப்புரையைத் தெளிவுகருதி வரையப்பட்டுள்ள பொழிப்புரையோடும் பயின்று எல்லோரும் முழுப்பயன் பெற இறைவன் அருளுவானாக. இவ்வரிய குறிப்புரையைப் புதிதாக வரையப் பெற்ற பொழிப்புரையோடும் வெளியிட்டருளுகின்ற நம் குருமகாசந்நிதானத்திற்கு அடியேங்கள் எவ்வாறும் கைம்மாறு இலேம்.

a

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி