திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின்

06 சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 1

அப்பர் தேவாரத்தில்

இலக்கியப் பண்புகள்

செஞ்சொற்கொண்டல்

வித்துவான் சொ. சிங்காரவேலன் எம்.ஏ.,

தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி முதல்வர்

கலைநோக்கு:

உலகின் அழகைக் கண்டு வியந்து போற்றும் இயல்பு நம்மி டம் இல்லை; துன்பங்களைக் கண்டு நொந்து கவலைப்படும் இயல்பே நம்மிடம் கால்கொண்டிருக்கின்றது. ஆனால் அழகு கூத்தாடும் இயற்கைச் செல்வத்தை அறிந்து, உணர்ந்து பாராட்டிசைக்கும் பண்பு பாவலனிடத்தேயே உள்ளது. கவிஞன் உலகின் அழகுக் கூத்தைத் தன் சொற்களாற் காவிய மாக்குகின்றான். சொல்லோவியமாக்கி மகிழ்கின்றான். இதற்குக் காரணம் என்ன? கவிஞன் பெற்றிருக்கும் கவிதைக்காண் - கலைநோக் குத்தான் இதன் காரணமாகும். நம் பார்வை மேம்போக்காக நின்று விடுகின்றது. கவிஞன் அல்லது கலைஞன் பார்வை ஊடுருவிப் பாய்கின்றது. நம் நோக்கு புறத்தோற்றத்திலேயே நின்று வலியிழந்து விடுகின்றது. கவிஞன் அல்லது கலைஞன் நோக்கு அகத்தோற்றத்தில் ஆழ்ந்து அச்சிறப்பியல்புகளால் வலுப்பெற்று விடுகின்றது. இதனாலேயே பாட்டு, கவிஞனின் உயர் கருவியாகின்றது.

மற்றவர்க்குப் பாட்டை நுகர இயலுகின்றதே தவிர புனையும் ஆற்றல் இல்லை. இந்த நுட்பம் சிந்தித்தால் தான் விளங்குவதாகும். இந்த நுட்பம் இயற்கையின் அழகுக் கூத்தை மெய்ம்மறந்து சுவைத்துக் களிவெறி கொள்ளும் கலைஞர்களுக்குத் தனிச்சிறப்பாக உள்ளது.

கவிதையநுபவம் :

அழகை மட்டுமின்றி உலகத் துயரங்களையும் கவிஞன் காணாமல் இல்லை. அவற்றையும் படம் பிடித்துக்காட்ட அவன் தவற வில்லை. ஆனால் கவிதையில் அத்துன்பங்களை மிகவும் விரும்புகின் றோம் நாம். உலகியலில் துன்பங்களை வெறுத்தொதுக்கும் நம்மைக் கலைத் துறை அவலங்கள் கவர்ந்து விடுகின்றன. கலைத்துறைத் துன்பங்களைக் கண்டு கண்ணீர் விடுகின்றோம். ஆனால் இக்கண் ணீரை நாம் விரும்புகின்றோம்.

நுட்பமான உணர்ச்சிகளைத் தூண்டும் சொல்லாட்சி, கற்பனை அமைப்புடைய கவிதைகளை உருவாக்கி நம்மைத் தன்வயப்படுத்தி விடுகின்றான் கவிஞன். இவ்வாறு நம் உணர்ச்சியோடு ஒன்றுபடும் கவிதைச் செல்வத்தை நாம் வாழ்வில் இடையறாது சுவைத்தல் வேண்டும்.

உயர்ந்த கவிஞர்கள் கைம்மாறு கருதியா கவிதைகளை யாத்துள்ளார்கள்? தம் அநுபவத்தை எடுத்து கைம்மாறு வேண்டாக் கார்மழைபோல் பொழிந்து உள்ளார்கள். சுவைக்கும் உள்ளத்துடன் - இலக்கியப் பசியுடன் - அவர்களை அணுகுதல் ஒன்றே நாம் செய்ய வேண்டுவது. அணுகி விட்டால் நம்மை அவர்கள் ஆட்கொண்டு விடுகிறார்கள். வேறு உலகுக்கு - கவியுலகுக்கு அழைத்துச் சென்று பலப்பல காட்சிகளைக் காட்டிக் களிப்பிக்கின்றார்கள்.

உலகியல் மறந்து அவ்வின்பக்காட்சியில், காலம், இடம் முதலிய வேற்றுமைகளை யிழந்து கிடக்கின்றோம் நாம். ஆம், கவிதை அநுபவம் இதுவேயாகும்.

1"கவிஞனுடைய கண், விண்ணுக்கும் மண்ணுக்கும், மண் ணுக்கும் விண்ணுக்குமாகச் சுழல்கின்றது. சுழன்று நோக்கிக் கற்பனை வடிவங்களைப் படைக்கின்றது. அவ்விழுமியோனுடைய எழுதுகோ லால் அறியப்படாத பொருள்கள் வடிவம் பெறுவதுடன் உயிர்த் தன்மையும் எய்துகின்றன" என்று ஆங்கில நாடகப் பெருங்கவிஞராகிய சேக்ஸ்பியர் கூறும் பகுதி இங்கு ஒப்பிட்டு மகிழத்தக்கது.("The Poet's eye in a fine frency rolling, doth glance from heavens to earth, from earth to heaven, and as imagination bodies forth, the forms of things unknown, the Poet's pen turns them to shapes, and gives to airy nothing, a local habitation and a name." -Shakespere)

அருட்பாடல்களின் ஆற்றல்:

இத்தகு கவிஞர்களின் உறவு உள்ளத்தைத் திருத்தும் உயர்வு உடையது. உலகியற்றுன் பங்களினின்று உயர்ந்து பறவையை மேலே மேலே பறக்குமாறு செய்து எங்கும் - என்றும் இன்பமாய பெரும் பேற்றிற்கு உய்ப்பது. அதிலும் திருநாவுக்கரசு சுவாமிகளைப் போன்ற அருட் புல வர்கள் பாடல்கள் என்றால் கூறவா வேண்டும்! அருளே வடிவாகிய இறைவனை அகமுருகப்பாடி மகிழும் அருள் ஆசிரியர்கள் அவர்கள்.

அவர்களது அருங்கவிதைகள் பக்தியை விளைக்கும் பண்பு டைய பாடல்கள்; இசை தழுவிய எண்ணக் குவியல்கள், பண் கலந்த பாடல் தொகுப்புக்கள். இறைவனுடைய கருவியாக நின்று தாம் இயங்குகின்றோம் என்ற எண்ண அழுத்தம் உடைய அவ்வருட் செல்வர்களின் உணர்ச்சிப் பிழம்புகளாகிய கவிதைகள் நம் வாழ்வுக்கு நெறி காட்டும் வான்புகழ் கலங்கரை விளக்குகள் என்றே கூறலாம்.

அவர்கள் தம் வாழ்வில் என்ன கண்டார்கள், தம் வாழ்வில் பட்டறிந்த உண்மைகளால் என்ன உணர்வு பெற்றார்கள், அவ்வுணர் வினின்றும் அவர்கள் தெளிந்ததென்ன, நம்மனோர்க்கு அத்தெளிவி னால் அவர்கள் உரைக்கும் செய்திகள் யாவை என்பதற்கு அவர்களது இலக்கியமே சான்று பகரும். இவையனைத்தையும் காட்டுவதே இலக் கியப் பண்பு என்பர்.("Literature is a vital record of what men have seen in life, what they have experienced of it, what they have thought and felt about those aspects of it which have the most immediate and enduring interest for all of us. - W. H. Hudson)

அருட்செல்வர்:

திருநாவுக்கரசு சுவாமிகள் சிறந்த தோத்திரப்பாக்களை அருளிய ஞானாசிரியர்; அவ்வருட் செல்வரை இத்தகு இலக்கியப் பண்புகள் கனிந்த பனுவல்களை - பக்தி உணர்ச்சிப் பாடல்களை யாத்த ஓர் அருட்புலவராகவும் காணலாம். அவ்வருட் புலவருடைய பாக் களில் காணப்படும் இலக்கிய நலங்களைக் கண்டு, அத்தெய்வக் கவிஞரது பாக்களில் புலனாகும் அவருடைய திருவுள்ளத்தை அறிந்து, தெளிவுறுத்துவதே இச்சிற்றாராய்ச்சியின் நோக்கமாகும்.

பழுத்த அநுபவம் உடைய இப்பெரியார் பழுத்த தமிழ்ப் புலமை எய்தியிருந்த பண்பட்ட பாவலரும் ஆவர். ஆதலின் அவ்வா ராய்ச்சி இவ்வருட் புலவருடைய இனிய திருவாக்குகளை அடியாகக் கொண்டே இயங்குவதாகும்.

முருகியல் அமுதம்:

இலக்கியம் என்பது சொல், பொருள் ஆகிய அடிப்படையில் நயம் தோன்ற - கற்பனை விளங்க - உணர்த்தும் திறம் ஒளிர ஆசிரி யனுடைய அநுபவ வெளியீடாக இருப்பது.

ஆதலினாலேயே, ஆசிரியனுடைய அநுபவ இன்பத்தை இலக்கியத்தில் நாமும் அநுபவித்தின்புற முடிகின்றது.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருட் புலவராக விளங்கிய நல்லா சிரியராதலின் அவருடைய கனிந்த உளத்தின் முருகியல் அமுதம் தமிழ்க் கவிதையாக வெளிவந்தது. அப்பெருமானாரின் கவிதைகள் கல்மனத்தையும் கசிந்துருக்கும் திறன் உடையவை. உறுதியான சொற்களால் இயன்றவை. பொருட்சிறப்பு பொதுளிய அமைப்பு உடையவை.

அப்பர் அருளுருவம்:

இறைவன் திருவடிகளிலேயே பதித்த நெஞ்சுடைய இப்பெரு மானுடைய அருள் பழுத்த திருக்கோலத்தைச் சேக்கிழார் பின்வருமாறு சொல்லோவியமாக்கியுள்ளார்.

தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும்

நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துருகிப்

பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல்

மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே

- தி.12 திருநாவு. புரா.140

இறைவன் `பொருள்சேர் புகழ்' விரிக்கும் செந்தமிழ் அமுதத் திருப்பாடலை ஓதிக் கொண்டேயிருக்கும் ஒட்பம் தோன்றப் `பதிகச் செஞ்சொல் மேய செவ்வாய்' என்றருளிய திறம் இனிது உணரத்தக்கது.

தொடையறாச் செவ்வாய்:

சிவஞான சுவாமிகளும் அப்பரடிகள் அழகுருவத்தைத் தமிழாற் சிறப்பித்துள்ளனர். அதனுள் `ஞானப்பாடல் தொடையறாச் செவ்வாய்' என்று இப்பெருமானாருடைய பாவன்மை தோன்றப் பாடியருளியுள்ளனர். அவ்வருந் தமிழ்ப்பாடல் பின்வருவதாகும்.

இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவா ரத்திண்

படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும்

நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடல்

தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம்.

(காஞ்சிப்புராணம். பா.13)

திருவாரூர்ப் புராணமுடையார்,

"சாலமிகு பாவமுது வேனில் வெம்மைத் தழலாற ஆகமநூற் றருமஞ்சான்ற

சீலநிறை சைவநெறி நிழல்பரப்பும் திருநாவுக்கரசு"

என்று புகழ்தல் இங்கு ஒப்பிட்டுணர்தற்குரியது.

"தேவரசு மனமகிழத் திருப்பதிகம் இசைத்தமிழிற்

சிறக்கப்பாடும் நாவரசு"

என்று புகழ்வர் சிவராத்திரி புராண ஆசிரியர்.

"மதுர மாந்திருத் தாண்டகச் செந்தமிழ்வகுத்த

சதுரன் நாவினுக் கரையன்"

என்று சிவரகசியம் பாடும்.

இவ்வாறு புகழப்பெறும் சிறப்பு உடைய அப்பரடிகள் அமுதத் தமிழ்வாக்கும், அப்பெருமானார் வகுத்தருளிய தமிழ்மரபும், இலக்கிய நுட்பங்களும் பிற மாண்புகளும் கருதிய சேக்கிழார் இவரைத் `தமிழ் மொழித் தலைவர்' (தி.12 திருஞா.புரா. 598) என்றே கூறிப் போற்றுவர்.

`இன்தமிழ்க்கு மன்னான வாகீசத் திருமுனி' (தி.12 திருநா. புரா. 147) `உடையவரசு உலகேத்தும் உழவாரப் படையாளி' (தி.12 தடுத்தாட்கொண்ட புரா.83) `வாக்கின் பெருவிறல் மன்னர்' (தி.12 திருஞா. புரா.269) என்றெல்லாம் சேக்கிழார் பாடும் பகுதிகளைக் காணலாம்.

பாவலர் - அப்பர்:

திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரப் பாக்களில் பெரிதும் ஈடுபட்ட பிற்காலப் பெரியார் ஒருவர் பாடும் பகுதியும் இங்குச் சிந்திக்க இனிக்கும். தண்ணிய தமிழ்க் கவிதைகளை சிவபிரான் திருவைந்தெழுத்துத் திருப்புகழோடு குழைத்துப் பாடிக் கடலில் மிதந்த தாண்டக வேந்தருடைய அருளாற்றல் அப்பெரியார்க்கு எண்ண எண்ண இன்பமளிக்கின்றது. கல்லும் உருகும் கவிபாடிய அப்ப ரடிகளைப் `பாவலர்' என்றே அழைக்கின்றார் அவர்.

"செற்றார் புரம்எரி செய்தவில் வீரன் திருப்பெயரே

பற்றா மறிவெண் டிரைக்கடல் நீந்திய பாவலனே"

ஆம்; சிவப்பிரகாச சுவாமிகளுடைய புகழுரை இது.

அப்பர் தேவாரப் பெயரமைப்பு:

அப்பரடிகள் தேவாரப் பாக்களின் பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். (பன்னிரு திருமுறை வரலாறு: க. வெள்ளைவாரணனார், பக். 563-564)

(1) பொருளமைப்பு: திருஅங்கமாலை, தசபுராணம், குறைந்த நேரிசை, காலபாசத் திருக்குறுந்தொகை, ஆதிபுராணத் திருக்குறுந் தொகை, இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - முதலியன.

(2) பாடல்தோறும் பயின்ற சொற்பொருளமைப்பு: கொப் பளித்த திருநேரிசை, நினைந்த திருநேரிசை, ஆருயிர்த் திருவிருத்தம், சரக்கரைத் திருவிருத்தம், திருவடித் திருத்தாண்டகம், புக்க திருத் தாண்டகம் முதலியன.

(3) முதற்குறிப்பு: `சிவனெனும் ஓை\u2970?' என்ற பதிகம்.

(4) ஈற்றுத் தொடர்: பாவநாசத் திருப்பதிகம்.

(5) பொருட்டொகை: மனத்தொகை, சித்தத்தொகை, உள்ளத் தொகை, கே்ஷத்திரக்கோவை முதலியன.

(6) பாடல்களிற் பயின்ற ஈற்றுச் சொல்: மறக்கிற்பனே, தொழற் பாலதே எனுங் குறுந்தொகைகள்.

(7) சிறப்பு: நமச்சிவாயத் திருப்பதிகம்

(8) பொதுவகை: தனித்திருநேரிசை, தனித்திருக்குறுந் தொகை, தனித்திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம்.

அப்பர் மேற்கொண்ட யாப்பு வகைகள்:

அப்பரடிகள் தமிழ்க் கவிதை யாப்பில் மேற்கொண்டுள்ள வகைகள் தமிழ் இலக்கணத்துடன் மாறுகொளாதவை; சந்த விருத்தங் களும், விருத்த வகைகளும், கலி விருத்தங்களும், கட்டளைக் கலித் துறைகளும் ஆகியவற்றுடன் தாண்டகம் என்ற வகையும் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.

தாண்டகம் என்ற பாட்டியல் வகையை அடிகள் கையாண்டு வெற்றி பெற்றுள்ளமையாலேயே `தாண்டகச் சதுரர்' என்ற சிறப்புப் பெயருக்குரியவரானார். (தி.12 குங்குலியக் கலையர், 32 )

விளங்குபெருந் திருமுன்றில் மேவுதிருப் பணிசெய்தே

உளங்கொள்திரு விருத்தங்கள் ஓங்குதிருக் குறுந்தொகைகள்

களங்கொள்திரு நேரிசைகள் பலபாடிக் கைதொழுது

வளங்கொள்திருப் பதியதனில் பலநாள்கள் வைகினார்

(தி.12 திருநா. புரா.337)

என வரும் சேக்கிழார் திருப்பாடலால் (1) விருத்தம் (2) குறுந்தொகை (3) திருநேரிசை (4) தாண்டகம் ஆகிய யாப்பு வகைகளை அடிகள் மேற்கொண்டார் என்பது விளங்கும்.

திருநேரிசை நேரிசைக் கொல்லி எனவும், திருவிருத்தம் விருத்தக் கொல்லி எனவும் கொல்லிப்பண்ணில் அடக்கப் பெறும். திருநேரிசை, `கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா' எனவரும் கட்டளையடி உடைய செய்யுள் என்றும், அறுசீர்களால் இயன்ற இக்கடளையடியில் முதற்சீரும் நான்காம்சிரும் ஓரோவழிக் கருவிளம் ஆதலும், இரண்டாம் சீரும் ஐந்தாம் சீரும் ஒரோவழி தேமாவாதலும் உண்டு என்றும், மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் எப்பொழுதும் தேமாவாக நிற்பன என்றும் இந்த யாப்பமைதியை யாழ் நூல் (பக்.217) ஆசிரியர் விளக்குவர்.

திருவிருத்தம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பமைதி உடையது. `அடியடிதோறும் ஐஞ்சீராகி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது. கடையொரு சீரும் விளங்காயாகி, நேர் பதினாறு நிரை பதினேழு என்று, ஓதினர் கலித்துறை ஓரடிக்கு எழுத்தே' என்னும் இலக்கணப்படி அமைந்த பகுதி திருவிருத்தம்.

திருக்குறுந்தொகை, நாற்சீர், நாலடியாய் அடிதோறும் தேமா புளிமா என்பவற்றுள் ஒன்று முதல் சீராகவும், கருவிளம் கூவிளம் என்பவற்றுள் ஒன்று நான்காம் சீராகவும், இடையிரு சீர்கள் பெரும்பாலும் விளச்சீர்களாகவும், சிறுபான்மை மாச்சீர்களாகவும், அமைய வரும் செய்யுள் வகை. சிலப்பதிகார வேட்டுவ வரியில் இவ்வமைப்பை உடைய பாடல்கள் உள்ளன. ஆதலால் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே இந்தயாப்பும் பெருகியிருந்த தென்பர். பிற்கால யாப்பிலக்கணப்படிக் கலிவிருத்தம் என்பர். (பன்னிரு திருமுறை வரலாறு: க. வெள்ளைவாரணனார், பக். 326)

தாண்டக விளக்கம்:

இவற்றுள் தாண்டகம் என்ற செய்யுள் வகையை அப்பரடிகள் மிகச்சிறப்பாக எடுத்தாண்டுள்ளார். ஆறாம் திருமுறை முழுதும் இத்தாண்டக யாப்பாலேயே விளங்குகின்றன. இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றிவந்த செய்யுள் என்றும் இது தமிழ் யாப்பே யாகும் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.

யாப்பருங்கல விருத்தி 2ம் சூத்திர விளக்கவுரையிலிருந்து (1) அளவியல் தாண்டகம் (2) அளவழித் தாண்டகம் என்ற இருவகைகள் அறியப்படும்.

பன்னிரு பாட்டியல் என்ற நூலிலிருந்தும் அதன் உரையி லிருந்தும் அறியப்படும் வகைகள் (1) குறுந்தாண்டகம் (2) நெடுந் தாண்டகம் என்ற இரண்டாம் ஒவ்வோரடியினும், `அறுசீரேனும்', `எண்சீரேனும்' வகையாக அமைத்து இயற்றப்பட்ட நான்கடிச் செய்யு ளால் ஆடவரையும் கடவுளரையும் புகழ்வது, தாண்டகம் என்பது பன்னிரு பாட்டியற் கருத்தாகும்.

இவற்றுள் அறுசீரடிப் பாக்களாலாயது குறுந்தாண்டகம்; எண் சீர்ப்பாக்களாலாயது நெடுந்தாண்டகம்.

"மூவிரண் டேனும் இருநான் கேனும்

சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்

கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்

அறுசீர் குறியது நெடியதெண் சீராம்"

என்பது பன்னிருபாட்டியலார் கூற்று. (110)

"அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்

கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி

குறியது நெடிய திருநாற் சீரே"

என்பது பல்காயனார் வாக்கு.

"மங்கல மரபின் மானிடர் கடவுளர்

தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே"

"தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே"

என்பன மாபூதனார் நூற்பாக்கள்.

"அடிவரை நான்கும் எழுத்தெண்ணி

நேரடி வருவது தாண்டகம் ஆகும்"

என்பர் சீத்தலையார். இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும், குருவும், லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம் எனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம் எனவும் பெயர் பெறும் என்பது யாப்பருங்கல் விருத்தி உரைகாரர் விளக்கம் ஆகும்.

அப்பரடிகள் அருளிய தாண்டகங்கள், ஒற்றும் குற்றியலுகர மும் நீக்கி எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழி நெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபதெழுத்தென்னும் அளவி னைக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவனவாகும்.

ஆனால் யாப்பருங்கல விருத்தி கூறும் இலக்கணம் இதனின் வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டது. யாப்பருங்கல விருத்தி உரையின் கருத்துப்படி இந்தயாப்பு அமையவில்லை என்பது அறிந்துணரத்தக்கது.

எனவே, தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப் பாவும், வடமொழித் தண்டக யாப்பினை அடியொற்றிப் புதியன புனைந்த யாப்பருங்கல விருத்தி உதாரணச் செய்யுள்களும் இலக்கண வகையால் தம்முள் வேறுபட்டன என்று உணர்தல் வேண்டும். (பன்னிரு திருமுறை வரலாறு: க. வெள்ளைவாரணனார், பக். 330 காண்க. இப்பகுதியில் இவ்யாப்பு அமைதி விரிவை ஆசிரியர் அழகுற ஆராய்ந்து முடிவு போக்கியிருத்தல் அறிந்தின்புறத்தக்கதாகும்.)

தாண்டக வேந்தராகிய அப்பரடிகள் இந்த வகையை மிக அழகுபடுத்தி இதனை நயம்பெறக் கையாண்டு விளக்கம் புரிந்துள் ளார். கி. பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன் அடைந்திராத செல்வாக்கை இவ்வகை யாப்புலகிற் பெறுவதாயிற்று.

பின்வந்த திருமங்கையாழ்வாரும் இந்த யாப்பை மேற் கொண்டு காத்தனர்.

தாண்டவமாடும் சிவன்தாள் மலரின்பம் நுகர்ந்த அடிகள் அப்பெருமான் புகழ்பாட இதனை மேற்கொண்டது வியந்து போற்று தற்குரியதாகும். இப்போது கிடைத்துள்ள அப்பர் திருத்தாண்டகங்க ளின் தொகை தொளாயிரத்து எண்பத்தொன்று (981) ஆகும் என்பது இங்கு அறியத்தக்கது.

அகப்பொருட் பதிகங்களின் அமைப்பு :

தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக்கற்ற பண்பினர் அப்பரடிகள் ஆதலின், அப்பெரியார் அமுதவாக்குகளில் இலக்கிய ஒட்பங்களும் இணைந்து நிற்கக் காணலாம். அவற்றை இங்கு அறிந்து இன்புறுவோமாக. அகப்பொருள் தமிழ்க்குச் சிறப்பு. மற்ற எம் மொழிக்கும் இல்லாப் பெருஞ் சிறப்பாக அகப்பொருள் இலக்கணம் தமிழ்க்கு வாய்த்துள்ளது.

அகத்தே நிகழும் தன்மையதாய்ப் புறத்தார்க்கு உணர்த்து தற்கரியதாய் இருப்பது அகத்திணை, அவ்வகவொழுக்கம் பற்றிய சங்கப் பாடல்கள் மிக்க நுட்பமும் சீர்மையும் வாய்ந்தவை.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய தொகை நூல்கள் முற்றும் இவ்வைந்திணை நெறி யளாவி வரும் இயல்புடையவை. தமிழ்ப் பாவலர் திலகம் போல் வாரும், நடையறாப் பெருந்துறவியாரும் ஆகிய திருநாவுக்கரசர் பெருந்தகையும் இறைவன் திருவருளில் தோய்ந்து நின்று புனையும் கவிகளில் இவ்வமைப்பு உடையனவாகப் பலவற்றைப் புனைந் துள்ளார். அவை இலக்கியச் சிறப்புடையனவாய் இலங்குகின்றன.

இப்பெருந்தகையார் திருவாக்கில் வரும் அகத்துறைப் பகுதிகள் கீழ்வரும் முறைப்படி அமையும் பெற்றியன.

திருமுறை பதிகம் பாடல்

4 12 1 - 10

4 97 1 - 10

5 29 1 - 10

5 40 1 - 10

5 45 1 - 10

5 53 1 - 12

6 9 1 - 10

6 13 1 - 10

5 7 6 - 8

5 46 1 - 5

5 64 0 - 6

5 66 0 - 9

5 88 4 - 9

6 25 0 - 7

6 35 3 -7

6 45 1 - 4 - 8

6 58 3 - 7 - 0

முழுப்பதிகங்களாக ஒன்பதும் ஏனைய பாடற்பகுதிகளும் அகத்துறை விளக்கமாக அமைந்து இவற்றுள் அழகு செய்கின்றன.

தலைவியின் காதல் நிலைகண்டு இரங்கிக்கூறும் தாய் அல்லது தோழியின் கூற்று, தலைவி கூற்று, ஆகிய இரண்டு துறைகளிலேயே இவ்வகைச் செய்திகள் அமைந்துள்ளன. இவை நயம் பொருந்தியனவாயும், காதல் உணர்வைக் கடவுள் உணர்வாக மாற்றித் தரும் மாண்பினவாயும் அமைந்துள்ளன.

தமிழின் மாட்டுத் தண்ணளி :

அப்பரடிகள் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கூர்ந்து ணர்ந்து, தேர்ந்த பழுத்த தமிழ்ப் புலவர் ஆதலின் இம்மொழிச் சிறப்பை இனிது உணர்ந்து அதனைப் பன்முறையும் எடுத்து ஓதுவதிற் பெருமை கொள்கின்றார்.

`பொருள் நீத்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும் கலை' (தி.12 திருநாவு - 1290) பயின்றவர் எனவும், `சிந்தை மலர்ந்தெழும் உணர்வில் செழுங் கலையின் திறங்க ளெல்லாம், முந்து முறைமையிற் பயின்று முதிர அறிவு எதிரும் வகை. மைந்தனார் மறுஒழித்த இளம்பிறை போல் வளர்கின்றார்' (தி.12 திருநாவு - 1921) எனவும், `அங்கவரும் அமண் சமயத்தருங்கலை நூலான வெலாம், பொங்கும் உணர்வுறப் பயின்றே அந்நெறியிற் புலன்சிறப்ப' (தி.12 திருநாவு - 1309) எனவும், இப்பெருந் தகையாருடைய கலைப் பயிற்சியையும், ஆழ்ந்த புலமையையும் விளக்கிய சேக்கிழார் `உலகின்கண் ஒளிஉடைய வித்தகராய்' என்று முடிவு போக்கியுள்ளமை இங்கு அறியத்தக்கதாகும்.

இவ்வாறு பல கலைகளையும் நன்கு உணர்ந்த இப்பெருந் தகையார் தம் அருட்டிறத்தால் அக்கலைகளையும், அவற்றான் சிறந்து தோன்றும் தமிழையும் சிவபரம்பொருளாகக் கண்டு சிந்தை கனிந்து பாடுகின்றார். அவ்வமுதற்பாடற் பகுதிகள் கலைகளின் மாட்டும், தமிழின் மாட்டும் அடிகள் கொண்டிருந்த அயராவன்மை விளக்குவ தாகும்.

"இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்

எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்"

(தி.6. ப.73 பா.9)

கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்

செல்வ மல்கு திருக்கானூரீசனை

எல்லியும் பகலும் இசைவானவா

சொல்லிடீர் நுந் துயரங்கள் தீரவே.

(தி.5 ப.76 பா.6)

"மூலநோய் தீர்க்கும் வானவர்க்கு மேலா னான்காண்

முத்தமிழும் நான்மறையும் ஆனான்கண்டாய்"

(தி.6 ப.23 பா.9)

"வானவன்காண் வானவர்க்கு மேலானான்காண்

டமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்

ஆனவன்காண்"

(தி.6 ப.87பா.1)

"ஆரி யந்தமி ழோடிசை யானவன்

கூரி யகுணத் தார் குறி நின்றவன்"

(தி.5 ப.18 பா.3)

இவ்வாறு கூறும் அடிகள் சிவபிரானையே ஆரியன் என்றும் தமிழன் என்றும் கூறும் பகுதிகள் அழகுடையவை. தமிழ் ஆகிய மொழி பேசுவோனை - மொழிக்குரியவனைக் குறிக்கும் சீரிய இனப் பெயராகத் `தமிழன்' என்ற சொல் நிற்றல் அறிந்தின்புறத்தக்கது. இவ்வாறு `மொழி வழி இனம்' என்ற புது மரபினைத் தோற்றுவித்து அப்பரடிகளே முதன்முதல் - `தமிழன்' `ஆரியன்' என்ற பெயர்களை மொழிந்துள்ளார் என்பது அறிஞர் கருத்தாகும்.

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணாமலையுறையெம் மண்ணல் கண்டாய்"

(தி.6 ப. 23 பா.5)

"செந்தமிழோ டாரியனைச் சீரி யானை"

(தி.6 ப.46 பா.10)

இன்று நாம் தமிழர் எனப் பெருமிதத்துடன் பேசுதற்கு அன்றே வித்திட்ட பெருமை அப்பரடிகட்கே உரியதென்பதை நாம் மறந்துவிடலாகாது. இதைப் பின்னும் ஒருமுறை சிந்திப்போம்.

தமிழ்ப் பண்களும் தாண்டகவேந்தரும்:

இலக்கியம் என்பது பண்ணோடு கூடிய கருத்து என்று கூறுவர் ஆதலின், பாடலுக்குப் பண் எத்துணை இன்றியமையாத தென்பது விளங்கும். எம்மொழியிலும் பாட்டுப் பண்ணொடு குழைந்தே விளங்கி இயங்குவதாகும். நம் தமிழ் நாட்டிலும் பழைய காலந்தொட்டை பண்ணும் வளர்ந்து வந்திருந்தால் நம் இலக்கி யங்களால் இனிது துணியப்படும்.

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐம்பெரும் பண்களைச் சங்க நூல்களிற் காணலாம். அப்பண்கள் பலவகைகளை உடையவாயிருந்தன. அவற்றை ஓதி வளர்த்து வந்த கலைஞர் குடும்பம் பாணர் என்ற பெயரால் நிலை பெற்றது. தோற்கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக்கருவிகள் என்ற மூவகைப்பட்ட இசைக் கருவிகளில் பண்வளர்த்தனர் பழந்தமிழர். பழந்தமிழ் மரபினை நன்கு உணர்ந்து தெளிந்த அடிகள் வாழ்ந்த காலம் கிறித்துவுக்குப் பின் 7 ஆம் நூற்றாண்டு என்பர்.

சமணர்கள் இசைத் தமிழை மறுத்தும் பழித்தும் பிரசாரம் செய்தமையின், மக்கள் இசையைப் புறக்கணித்து வந்த அக்காலத் தேயே தமிழ் இலக்கண இலக்கியப் பெரும்புலவராக விளங்கிய அடிகள் தெய்வத்திருவருளால் சைவம் பரப்ப முற்பட்டார். பண், இசை ஆகியவற்றில் இறைவன் வீற்று இருக்கின்றான் என்று கூறிய துடன், பழந்தமிழ்ப் பண்களிலேயே தம் கருத்தைத் தமிழ் கூறு நல்லுலகெங்கும் பரப்பத் தொடங்கினார்.

இவ்வாறே திருஞானசம்பந்த சுவாமிகளும் நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் திருத்தொண்டு புரிந்து சைவம் வளர்த்தார்.

இறைவைன் பண் பொருந்திய பாடல்களை விரும்பிக் கேட் கும் கருணை உடையவன் என்ற கருத்தை, தம் பண் கலந்த பாடல் களாலேயே எடுத்து விளக்கிய அப்பரடிகளின் புதுமைக் குரலைத் தமிழ்ப் பெருமக்கள் கேட்டனர்.

"பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை"

(தி.5 ப.18 பா.4)

"பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு

அண்ணித் தாகும் அமுது"

(தி.5 ப.44. பா.8)

"பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி"

(தி.6. ப.5. பா.2.)

என்றெல்லாம் பாடியருளினார்.

கொல்லி, காந்தாரம் பியந்தைக் காந்தாரம், சாதாரி, பழந்தக் கராகம், பழம்பஞ்சுரம், சீகாமரம், குறிஞ்சி, இந்தளம், காந்தாரபஞ்சமம் ஆகிய பத்துப் பண்களில் அமைந்த பதிகங்களையும், திருநேரிசை, திரு விருத்தம் முதலிய பதிகங்களையும் அடிகள் பாடியிருத்தல் காணலாம்.
பாட்டுக்கும் பண்ணுக்கும் பருந்துக்கும் நிழலுக்கும் உள்ள தொடர்பு இருத்தல் வேண்டும் என்பர் பழந்தமிழ் நூலோர். `பாட்டோடு இயையாத பண்ணினால் என்ன பயன்? கண்ணோட்டமில்லாத கண் போன்றது அது' என்று உரைப்பர் ஆசிரியர் திருவள்ளுவரும். அப்பரடிகளுடைய அமுதப்பாக்கள் இனிய பண்ணமைப்பிற்கு இனியவையாய் உள்ளமையை அன்பர்கள் நன்கு அறிவர். (அப்பரடிகள் அருளிய திருமுறைகளின் பண்களையும், அவற்றின் கட்டளை யாப்பு விகற்பங்களையும், பன்னிரு திருமுறை வரலாறு பக். 391-399 விரிவாகக் காணலாம். திருமுறைகண்ட புராணத்தில் வரும் கட்டளையடிக் குறிப்புகள் நன்கு பொருந்துமாறு இவிவாசிரியர் ஆராய்ந்து விளக்கியுள்ளமை பெரிதும் பாராட்டத் தக்கதாகும். )

இவ்வாறு தக்க பண்களுடன் விளங்கும் பழுத்த அநுபவப் பாடல்களாகிய இவற்றிற் காணப்பெறும் இலக்கிய அழகுகளை இனி ஒவ்வொன்றாக இங்குக் காண்போம். இவ்விலக்கிய அழகுகள், ஒன்பான் சுவையமைப்புடனும், கவிதைச் சீரியல்புகளுடனும் கலந்து திகழுமாற்றையும், பழந்தமிழ்ப் பாடல்களுடன் கருத்தொற்றுமை கொண்டு கவினுமாற்றையும் நுகர்ந்து மகிழ்வோம்.

உவமை நலம்:

உவமை, இலக்கியக் கலையெழில்களில் முதலிடம் பெறுவ தாகும். கவிதையில் உவமை கருத்து விளக்கம் செய்வதுடன், அழகும் தருகின்றது. உவமை யமைந்த கவிதை, அணிகலம் பூண்ட அரிவை யொருத் தியைப் போன்ற தென்பர்.

எல்லா அணிகளுக்கும் தாயாகும் பெருமையும், உவமைக் குண்டு. தொல்காப்பியரும் இவ்வுவமையணி யொன்றையே விரிவாக ஆராய்ந்து தம் நூலில் அமைத்துள்ளார். வேறுபடவந்த உவமத்தோற்றம் என மற்றவற்றைத் தழுவி அவை உவம விகற்பங் களே என விளக்கியுள்ளார். அருட்புலவர்கள் அருள் வாக்குக்களிலும் சீரிய உவமைகள் பலவற்றை நுகர்ந்து மகிழ்கின்றோம். அப்பரடிகள் தேவார அருளிச் செயல்களிலும் பலவகைப் பட்ட உவமைகளைக் காணலாகும். வினை, பயன், மெய், உரு எனும் நான்கு வகைகளில் இவ்வுவமைகள் பெரும்பாலும் வினையுவமை யாகவே விளங்குகின்றன எனலாம்.

நீர்நிலை பற்றியது:

நீர்நிலையொன்றினைக் காவல் செய்து வருவோர் சிலர் உள்ளனர். அக்காவலைப் பொருட்படுத்தாமல், நீர்நிலைக்கரைக் கண் நின்றவர். அந்நீர்நிலையின் ஆழம் அறிய வினவ `நீரே இறங்கிக் கண்டு கொள்வீராக' என்று காவலர் கூறிவிட, இறங்கு துறையிலேயே மூழ்கித் தவிக்கும் மக்களை நமக்குக் காட்டுகின்றார், அடிகள்.

தாம் சைவசமயத்தை விட்டுச் சமண சமயம் புகுந்து இடர்ப் பட்டதை இப்பிறிதுமொழிதல் உவமையினால் அவர் விளக்குகின்றார். திலகவதியார் முதலியோருடைய அறிவுரைகளையெலாம் இகழ்ந்து பொருட்படுத்தாது. வேற்றுச் சமய நூல்களை ஆராய்ந்தறிந்து, சமண சமய உண்மைகளை ஆராய்ந்து கண்டுகொள் என்று சமண சமயத்தார் கூற, சமண சமயம் புகுந்து அதனை மேற்கொண்டு, மீளும் வகையின்றி இடர்ப்பட்டவர் அடிகள்.

இந்நிலையை விளக்கும் அடிகள், கூறாமற் கூறித் தம் துயரநிலைமையப் புலப்படுத்துகின்றார். ஆழப்பொருளை அகத்தே உடைய அப்பாடற் பகுதி பின் வருவதாகும் :

"காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்

கரைநின்றவர் கண்டுகொ ளென்று சொல்லி

நீத்தாய கயம்புக நூக்கியிட

நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்"

(தி.4 ப.1 பா.5)

கருதிய பொருளைத் தொகுத்து, அதனைக் கூறாது, ஒத்த பொருள் ஒன்றை, உரைப்பதை இவ்வணியாகக் கூறுவர் திருவள் ளுவர். நுனிக்கொம்பர் ஏறினார். பீலிபெய் சாகாடும் ஆகிய குறட் பாக்களில் கூறும் முறையை ஒட்டியவையாக இவ்வமைப்புக்களை நாம் காணலாம்.

எல்லாம் சிவம் எனல்:

எல்லாம் சிவமயமாகக் காணும் பெருந்தகை அப்பரடிகள். எப்பொருளைக் கண்டாலும் அதனூடு இறைவனைக் கண்டு ஏத்துவது இப்பண்பட்ட அருட் புலவரின் இயல்பு; இதனைத் திருவையாற்றுப் பதிகத்தில், காந்தாரப் பண்ணில் அமைத்து அருளியுள்ளார்.

சோலைகளும், பிற பூங்காக்களும் நிறைந்த திருவையாற் றில், பிடியும் களிறும், கோழியும், பெடையும், குயிலும் பெடையும், மயிலும் பெடையும், பகன்றில்களும், ஏனங்களும், நாரையும், மானும், கிளியும், நாகும், ஏறும் ஆகியவற்றைக் காண்கின்ற அடிகள் சிவமும் சத்தியுமாகவே இவற்றைக் கண்டு களிக்கின்றார். கவிதை இசைக் கின்றார்.

"கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறி யாதன கண்டேன்" (தி.6 ப.? பா.??) என்று இனிக்கப் பாடுகின்றார். ஆணும் பெண்ணு மாகிய அஃறிணை உயிர்களிலும், அம்மையப்பரை உவமை கொண்டு அருளிச் செய்வாராயின் இக்கனிந்த உள்ளத்தின் ஏற்றத்தை என்னென் பது. மெய்ப் பொருளாக விளங்கும் இறைவனை எல்லாமாகக் கண்டு ஏத்தும் பண்பாட்டில் தலைசிறந்து விளங்குகின்றார் தாண்டகவேந்தர்.

சைவத்தின் மாண்பும் புறச்சமயப் புன்மையும்:

இறைவன் திருவாரூரில் எழுந்தருளி அருள்வழங்கவும் தாம் அவனைத் தொழாது சமய சமயம் சார்ந்து இடருற்றமைக்குத் தக்க பழமொழிகள் பலவற்றை உவமை முகத்தான் எடுத்தாளும் திருப்பதிகம் (தி.4 ப.5) ஒன்றைக் காந்தாரப் பண்ணில் காண்கின்றோம்.

"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும்

ஆரூரரைக்

கையினால் தொழாதொழிந்து கனியிருப்பக் காய்கவர்ந்த

கள்வனேனே"

"முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின்

போனவாறே"

"அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக்

கொண்டவாறே"

"பண்டெலாம் அறியாதே பனிநீராற் பாவைசெயப்

பாவித்தேனே"

"என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்கு ஆதனாய்

அகப்பட்டேனே"

"எப்போதும் நினையாதே இருட்டறையில் மலடுகறந்து

எய்த்தவாறே"

"விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித்தீக்

காய்ந்தவாறே"

"பாவியேன் அறியாதே பாழூரிற் பயிக்கம்புக்கெய்த்தவாறே"

"தட்டானைச் சாராதே தவமிருக்க அவஞ்செய்து

தருக்கினேனே

"கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க இரும்புகடித்

தெய்த்தவாறே"

கனியிருப்பக் காய்கவர்தல், முயல்விட்டுக் காக்கைபின் செல் லல், அறமிருப்ப மறம் விலைக்குக் கொள்ளல், பனிநீராற் பாவை செய்ய முனைதல், ஏதன்போர்க்கு ஆதனாய் அகப்படல், இருட்டறையில் மலட்டுப் பசுவைக் கறந்து இளைத்தல், விளக்கிருக்க மின்மினித் தீயிற்குளிர் காய்தல், பாழூரிற் பிச்சை யெடுக்கச் செல்லல், தவம் இருக்க அவம் செய்து தருக்கல், கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தல் ஆகிய உவமைகள் அனைத்தும் சைவசமயம் விட்டுச் சமணசமயம் புக்கு மயங்கியமை குறித்த கழிவிரக்கத்தான் விளைந்த உவமைகள்.

கனி, முயல், அறம், விளக்கு, தவம், கரும்பு ஆகிய ஆறும் சைவத்தை விளக்கும் உவமைகளாக வந்துள்ளன. கனிந்து இனிக்கும் சுவை யநுபவம், முத்தி நோக்கி விரையும் செலவும், அறமே செழிக் கும் உயர்வும், அறிவின்மையை அறுக்கும் விளக்காம் விழுப்பமும், தவநெறியாகும் தாழ்வின்மையும், கரும்பென இனிக்கும் திறமும் உடையது சைவசமயம் என்பது இவ்வுவமைகளாற் பெறப்படும்.

திருவைந்தெழுத்துப் பற்றிய தெளிவு:

நமச்சிவாயப் பதிகத்தில் நலஞ்செறிந்த உவமைகள் பல நயம் பொருந்தித் திகழ்கின்றன. பூவினிற் சிறந்த தாமரை போலவும், அரன் அஞ்சாடுதலாற் சிறந்த ஆவினைப் போலவும், கோட்டமில்லாத கோவினைப் போலவும் நாவினுக்கு அருங்கலமாகச் சிறப்பது திருவைந்தெழுத்து (பா.2) என்கின்றார் அடிகள்.

விண்ணளவும் மிகுமாறு அடுக்கி வைக்கப்பட்ட விறகுக் குவியலிடையே, அழல் உண்ணப் புகுந்தால் ஒன்றும் எஞ்சாது. அது போல், உலகினில் பண்ணிய பாவத்தின் குவியலைத் திருவைந் தெழுத்தே நண்ணிநின்று அறுக்கும் (பா.3) என்னும் பகுதியும் மிக இனிய அறவுரைப் பகுதியாகும்.

விரதம் கொண்டார்க்கு அருங்கலம் திருநீறே ஆதல் போல வும், அந்தணர்களுக்கு அருமறையாறங்கங்கள் அருங்கலம் ஆதல் போலவும், சிவபிரானுக்குத் திங்கள் அருங்கம் ஆதல் போலவும் அடியார்களுக்குத் திருவைந்தெழுத்தே அருங்கலம் ஆகும் (பா.5) என்ற திருப்பாடற் கருத்துச் சீரிய உவமைகளைக் கொண்டுள்ளது.

அகத்திருளைக் கடியும் அகவிளக்கு என்றும், சொல்லின்கண் விளங்கும் சோதி விளக்கு என்றும், எண்ணில்லாத உயிர்களின் அகந்தோறும் ஒளிபெருக்கும் விளக்கு என்றும், அறிவிற்கு அறிவாய் விளங்கும் நல்லக விளக்கு என்றும் திருவைந்தெழுத்தை இனிய உவமைகளால் விளக்கும் திருப்பாடலும் (பா.8) இங்கு அறிதற் குரியதாகும்.

அறுகயிறூசல் அருமைப்பாடு:

கயிற்றிற் கட்டப்பட்ட ஊசலைத் தம் நிலைக்கு உவமையாக்கு கின்றார். பிறிதோரிடத்தில், நெஞ்சு ஒன்றுவிட்டு ஒன்று பற்றும் இயல் புடையது. சென்று பற்றுதலும் பற்றியதை விட்டு நீங்குதலும் அதன் இயல்புகள். தன்னிடத்தை விட்டுப் பிறிதொன்றைச் சேர்ந்து பற்றுவது `உறுகயிறூசல்.' மீண்டும் தன்னிலைக்கு ஆடிக்கொண்டே திரும்புவது `மறுகயிறூசல்'. இவ்வாறு ஆடிக் கொண்டிருக்கும் ஊசலை உடையவ னாகிய அடியேன், அவ்வூசல் அற்று நின்பாதமாகிய நிலத்தை அடைந்தேன் என்கின்றார் அடிகள்.

இவ்வழகிய திருப்பாடல் பன்முறை ஓதி ஓதி உணர்தற்குரிய தாகும். நாமும் அறுகயிறூசலாகி அவன்றாள் சேர்தல் வேண்டும் என்பதை இத்திருப்பாடல் உணர்த்துகின்றது. `ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாந்துணையான்' என்பது சிவஞானபோதம்.

உறுகயி றூசல்போல ஒன்றுவிட் டொன்றுபற்றி

மறுகயி றூசல்போல வந்துவந் துலவுநெஞ்சம்

பெறுகயி றூசல்போலப் பிறைபுல்கு சடையாய்பாகத்

தறுகயி றூசலானேன் அதிகைவீ ரட்டனீரே.

(தி.4ப. 26. பா.6)

துயரங்களுக்குத் தகும் உவமைகள்:

தாம் அடைந்து வருந்துதற்குக் காரணமான துயரங்களை எண்ணி எண்ணிக் களிகின்றார் அடிகள். மன்றத்தில் இருக்கும் புன்னை மரத்தினைப்போல் நான் ஆவேன் என்கின்றார். மன்றத்தில் இருக்கும் புன்னை ஊரார்க்குப் பொதுவானதாகும். இன்னார்க்கு உரியது என்றிருந்தால் மரத்திற்குத் துன்பமில்லை. பொதுவாயிருப் பதால்தான் துயரத்திற்கேதுவாகின்றது. இது போல் இறைவனுக்குரிய தனிமரமாக உயிர் இருந்தால் தான் ஐம்பொறிகளாகிய பிறரால் வரும் தொல்லையின்றி இருத்தல் முடியும் என்பது அடிகளார் திருவுள்ளமாதல் வேண்டும்.

"மன்றத்துப் புன்னைபோல மரம்படு துயரமெய்தி

ஒன்றினால் உணரமாட்டேன்."

(தி.5 ப.26 பா.8)

உப்பங்கழியில் தோணிபோல உழலுகின்றேன் என்றும் இவ் வருந்துயர் நிலையை விளக்குவர் அடிகளார்

"அழிவுடைத் தாயவாழ்க்கை ஐவரா லலைக்கப்பட்டுக்

கழியிடைத் தோணிபோன்றேன் கடவூர்வீ ரட்டனீரே."

(தி.4. ப. 31. பா.6)

தான் விரும்பியபடி எங்கும் உலவும் நிலையை கழியிடைத் தோணியிடம் காணவியலாது; கடலிடைத் தோணியாயின் அந் நிலை யைக் காணலாம். குறுகிய கழியின் இருகரைகளாலும் அலைக்கப் பட்டு அமிழாதும் மிதவாதும் துயருறும் தோணியை ஐம்பொறிகளால் அலைக்கப்படும் உயிர்க்கு ஒப்பிட்டுள்ள ஆழம் அறிந்தின்புறத்தக்கது.

மத்தினால் இடிபட்டுத் தயிர் சுற்றிச் சுழன்று உடைந்து உருவமும் கெடுமாறுபோல, சித்தத்துள் ஐவர் தீயவினை பலவும் செய்ய மறுகும் உள்ளத்தை ஒரு திருப்பாடலில் உரைக்கின்றார். இவ்வருளாளர்,

"சித்தத்துள் ஐவர்தீய செய்வினை பலவும்செய்ய

மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந்தானும்"

(தி.4. ப.52. பா.9)

இவ்வாறெல்லாம் ஒருபுறம் அலைக்கப்பட்டும், இறைவனை உள்குவார் உள்ளத்திற் குடியிருக்கம் உணர்வெனும் பெருமானை, உள்கிக் கொண்டிருக்கின்றார் இவ்வருளாசிரியர். இருதலையிலும் தீப் பற்றிக் கொண்டுள்ள கொள்ளியின்மேல் எறும்பைத் தமக்கு உவமை யுரைக்கின்றார். திருவாசகத்தும் முத்தொள்ளாயிரத்தும் இவ்வுவமை வருதல் இங்கறியத்தக்கது.

"எள்கினேன் எந்தைபெம்மான் இருதலை மின்னுகின்ற

கொள்ளிமேல் எறும்பென்னுள்ளம் எங்ஙனம் கூடுமாறே"

(தி.4. ப.75. பா.6)

சோற்றுருண்டையைக் கண்ட காக்கைகள் அதனைக் கூடி மொய்த்து உண்ணுவது போல, வல்வினைகள் மொய்த்து வருத்து வதனை உரைக்கின்றார்.

"மோத்தையைக் கண்டகாக்கை போலவல் வினைகள்

மொய்த்துஉன்

வார்த்தையைப் பேசவொட்டா மயக்கநான்

மயங்குகின்றேன்.

(தி.4.ப.75.பா.7)

இறைவன் அருள்:
இறைவனுடைய இன்னருள் தேனாறு பாய்வதுபோல் அடிகளார் உள்ளத்தில் `சிறைபெறாநீராய்'ப் பாய்கின்றது. களிவிஞ்சக் கவிதை யிசைக்கின்றார் தாண்டகவேந்தர்.

"நான்ஐ யாறுபுக் கேற்கவன் இன்னருள்

தேனை யாறு திறந்தாலே ஒக்குமே"

(தி.5ப.27.பா.9)

பண்ணில் ஓசைபோலும், பழத்தினில் சுவைபோலும், கண்ணில்மணி போலும் கலந்துள்ளான் இறைவன் என்று கனிகின்றார்.

"பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை....

கண்ணில் உண்மணி கச்சியே கம்பனே."

(தி.5. ப.27. பா.9)

திருவரிசிற்கரைப்புத்தூர் இறைவனைச் சிந்தைசெய்யச் செய்ய அவன் மிகச் சுவை பயக்கும் நிலையில் கரும்புச் சாற்றுச் சுவை யாய் அடிகளின் திருவாக்கில் முந்துகின்றான்.

"திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்

கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே."

(தி.5. ப.61. பா.5)

இறைவன் இணையடி நீழலை நீற்றறையில் காண்கின்றார் அடிகள். இணையடி நீழல் இன்பத்தினைக் கண்டும், கேட்டும், உண் டும், உற்றம், உயிர்த்தும் வெறி கொண்டிசைக்கின்றார். குற்றமற்ற வீணை யிசையும், மாலையில் தோன்றும் மதியின் நிலவும் வீசும் தென்றல் இனிமையும், இளவேனில் மாண்பும், வண்டொலிக்கும் தாமரைப் பொய்கையும் போன்றதென்று, திருவாய் பொலியப் பாடுகின்ற அத்திருப்பாடல் வருமாறு:

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்

மூசுவண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன்எந்தை இணையடி நீழலே.

(தி.5. ப.90. பா.1)

கோடி தீர்த்தங்கள் கலந்து குளித்து அவை ஆடினாலும் அரனுக்கு அன்பில்லையேல் பலனில்லை. ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தில் கொட்டி மூடிவைத்து போலும் அச்செயல், அரனுக்கு அன்பில்லையேல் தீர்த்தங்கள் ஆடினாலும் பலன் இல்லை என்பதைக்

`கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென், கொங்கு தண் குமரித்துறை ஆடிலென், ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென், எங்கு மீசன் எனாதவர்க் கில்லையே' என்று அருளும் அடிகள் இவ்விடத்துத் தெளிவாக உவமையின் மூலம் இதனை விளக்கி விட்டார்.

"ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி

மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே"

(தி.5. ப.99. பா.9)

எள்ளல் உவமை:
தேவதேவனாகிய சிவபிரான் ஞானத்தால் கண்டு தொழத்தன்னையருளும் தலைவன்; பாவகாரிகளாக உள்ளவர்களே அவனைப் பார்க்க அரியவன் என்றுரைப்பர்.

அவர்களுக்கு ஓர் அழகிய உவமை கூறுகின்றார் அடிகள். கிணற்றில் வாழும் ஆமை, கடலில் வாழும் ஆமையைச் சந்தித்து, `இக்கிணற்றினளவைவிடப் பெரியதா உன் கடல்' என்று கேட்பது போன்றது இது என்று உரைக்கின்றார். எள்ளி நகையாடுகின்றார்.

கூவ லாமை குரைகட லாமையைக்

கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்

பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்

தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

(தி.5. ப.100. பா.5)

ஐம்பொறிகளால் அலைக்கப்பட்டுத் துன்புறும் தம் நிலைக்கு இவ்வாறே ஆமையை அணிபெற உவமை கூறும் பகுதியும் இவ்விடத்து அறிந்தின் புறத்தக்கது. உலைநீரில் இட்ட ஆமை சூடேறச் சூடேறத் திளைத்து நின்று இன்புற்றாடிப்பின் அழிந்தொழிவது போலத் தாம் வளைத்துநின்ற கள்வராகிய ஐவரால் தளைக்கப்பட்டு வருந்துவதாக உரைக்கின்றார்.

"உலையை ஏற்றித் தழல்எரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்."

(தி.4.ப.79.பா.6)

பிறபல உவமை நலங்கள்:

வெள்ளிக் குன்றம் போல்வது விடை (தி.6. ப.3. பா.2.) என்றும், தோன்றும் செஞ்ஞாயிறு போன்றது திருவடி (தி.6. ப.6. பா.4) என்றும், தண்ணீர் நிறைந்த ஏரி போன்று தண்ணளிச் செல்வம் உடைய கருணைக் கடலாய் உள்ளான் மறைக்காட்டுறையும் மணாளன் (தி.6. ப.23. பா.5) என்றும், ஆலைப்படு கரும்பின் சாறுபோல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான்காண் (தி.6. ப.52. பா.2) என்றும், கருதியது முகக்கமாட்டாத தாம் காம்பிலா மூழை என்றும், பலபல நினைவு களைத் தாம் கொண்டொழுகுவது பாம்பின்வாய்த் தேரையின் நினைப் புப் போல்வது என்றும் (தி.4 ப.46. பா.1) பிற இடங்களில் வரும் உவமைகளும் இலக்கிய அழகு செறிந்தவை.

உவமனில்லி:

உவமைகள் பலவற்றால் இறைவனை எடுத்துப் போற்றும் அடிகள், இவ்வுவமைகள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு விளங்கு பவன் அவன் என்பதை, நன்கு உணர்ந்தவர். அந்தக் கருத்தமைய அடிகள் பாடியருளும் பகுதிகள் பல.

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்

ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்

ஓரூரன் அல்லன்ஓர் உவமன் இல்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்

அவனருளே கண்ணாகக் காணி னல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

(தி.6. ப.97. பா.10)

தனக்குவமை இல்லாதன் என்று திருவள்ளுவர் கூறும் கருத் துரையை நன்கு தம் அநுபவத்தில் தெளிந்துள்ள அடிகள் இவ்வாறு கூறியருளுவது நன்கு சிந்தித்துத் தெளிதற்குரியதாகும்.

உருவக அமைப்பு நுட்பம்:

உவமைகளாற் கூற இயலாத அடிகள், உருவகத்தால் அழகு படுத்தும் உயர் கவிதைகள் பலவாகும். அவ்வுருவகங்கள் அனைத் தும் ஆழ்ந்த இலக்கிய நலம் அமைந்தவை உவமையின் செறிவே உருவகம் என்பர். (அ. ச. ஞானசம்பந்தன், இலக்கியக் கலை பக். 71-72)

பல திருப்பதிகங்களை இவ்வமைப்பில் அடிகள ருளியுள்ளார். (தி.6. ப.38. பா.15) முதலிய பதிகங்களைக் காணலாம்.

மெய்ம்மை யெனும் உழவினால் சிறந்து, விருப்பமெனும் வித்தை வித்தி, பொய்ம்மையாம் களையை நீக்கிப் பொறையெனும் நீர் பாய்ச்சித் தகவு எனும் வேலியிட்டுச் செம்மையுள் நின்றால் சிவகதி எனும் நல்விளைவு உண்டாகும் என்பது (தி.4. ப.76. பா.4) ஓர் அழகிய உருவகமாகும்.

காயக் கோயிலில் மனமே அடிமையாக, வாய்மையே தூய் மையாக மனமணி இலிங்கமாக, நேயமே நெய்யும் பாலுமாகச் செய் யும் அன்புப் பூசனையை (தி.4. ப.76. பா.4) அடிகள் அருள்வதும் ஓர் இனிய பகுதி ஆகும்.

துன்பக் கடலிடைத் தோணித்தொழில் பூண்ட தொண்டர் தம்மை இன்பக் கரைமுகந்து ஏற்றுந் திறத்தன ஐயாறன் அடித்தல் (தி.4. ப.92. பா.6) என்பதும் இவ்வருளாளர் அருள்வாக்கு.

பித்தராம் அடியார்க்கு முத்திகாட்டும் ஏணியாகவும், இடர்க் கடலுட் சுழிக்கப்பட்டு இளைப்போர்க்கு அக்கரைக்கே ஏறவாங்கும் தோணியாகவும், சுடர் பொற்காசின் ஆணியாகவும் உருவகம் செய் யும் (தி.6. ப.46. பா.4) அமைப்பு அழகுடையதாகும். இவ்வாறே தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே பூணியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே என்றும் (தி.5. ப.33. பா.7) பாடியருள்வர். பத்தர் நெஞ்சுகள் தேனும் இன்னமுதுமாகவே தித்தித்திருப் பான் (தி.4. ப.29. பா.1) என்று இறைவனைப் பரவுகின்றார். வித்தினில் முளையர் (தி.4. ப.64. பா.9), கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனி மலர்க் குழற்பாவை நல்லாரினும் தனிமுடிகவித்தாளும் அரசினும் இனியர் (தி.5 ப.14 பா.10), நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கெலாம் ஊற்றுத் தாண்டவர். (தி.5. ப.24. பா.3), மாலையெழுந்தமதி, காலை முளைத்தகதிர், (தி.6. ப.46. பா.3.), உருகும் மனத்து அடியவர்கட்கு ஊறும் தேன், உண்மை நின்ற பெருகுநிலைக் குரியாளர் அறிவு, மெய்த்தவத்தோர் துணை (தி.6. ப.84. பா.3), தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கம் (தி.6 ப.99 பா.2), என்றெல்லாம் உருவகம் செய்து இறைவனை ஏத்துவது அடிகள் இயல்பு.

உருவகம் செய்யுங்கால் அணிபெற அவற்றை எடுத்து விளக்குவதும், சிலவும் பலவுமாய் அடைமொழிகளால் எடுத்து மொழிவதும், உயர்கருத்தை அருளநுபவம் குழைத்துத் தொடுத்து இனிய கவிதையாக்கி, இனிய பண் கலந்து இறைவன் திருவடியிற் சாத்தி மகிழ்தலும், அடிகளார் அருளிச் செயல்களில் நாம் எங்கெங்கும் கண்டு களிகூரத்தக்க செய்திகளாகும்.

முடிவண்ணம் வான மின் வண்ணம், தம்மார மார்பின் பொடிவண்ணம், தம்புகழூர்தியின் வண்ணம், படிவண்ணம் பாற்கடல் வண்ணம், செஞ்ஞாயிறு அடிவண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே என (தி.4. ப.17. பா.9) வரும் அருள் உருவகத்தை மறக்கலுமாமோ?

உடல்நிலை உருவகங்கள்:

உடலை அடிகள் பலவாறாக விளக்கி, ஐம்பொறித் துயரங் களையும் பலவாறாக உருவகம் செய்து எள்ளுவர். பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகிவீழ மெய்யனாய் வாழ மாட்டேன் (தி.4. ப.26. பா.2), அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழி தரும் ஆதனேன் (தி.4 ப.26. பா.5), கால் கொடுத்து இருகையேற்றிக் கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து, தோல்படுத்து உதிர நீரால் சுவரெடுத்து, இரண்டு வாசல் அமைத்து ஏழுசாலோகம் பண்ணி, மால்கொடுத்து ஆவி வைத்தார் (தி.4. ப.33. பா.4), பொந்தையைப் பொருளா எண் ணிப் பொருக்கெனக் காலம் போனேன் (தி.4. ப.41. பா.5)ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துறை உடைத்தாய் அரைமுழம் அதன் அகலம், அதனின்வாழ் முதலை ஐந்து (தி.4. ப.44. பா.2), மனம் தோணி, மதிகோல், சினம் சரக்கு, பிறவி கடல், மதனெனும் பாறை தாக்க மறிந்து வீழ்கின்றது தோணி (தி.4. பா.46. பா.2), முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடுகுரம்பை அப்பர்போல் ஐவர்வந்து அது தருக, இது விடுக என்று ஒப்பவே நலியலுற்றால் உய்யுமாறு அறிய மாட்டேன் (தி.4. ப.54 பா.3), மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டளவுயரத் தூண்டி உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன். உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர் (தி.4. ப.45. பா.9.), ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகரிப்பதன் முன்னம் கழலடி தொழுக (தி.5. ப.31. பா.7), என்றெல்லாம் வரும் அருள்மொழி விளக்கங்கள் மறக்கவியலாத மாண்பும், பாடி மகிழ்வோர் நெஞ்சைப் பண்படுத்திக் கனிந்துருகு வித்து இறையொளிக்கு ஆட்படுத்தும் திறனும் உடையவை. சிறந்த உருவக அமைப்புடன் கூடிய செய்யுள்களாகவும் இவை திகழ்கின்றன.

உடம்பெனும் மனை யகத்து உள்ளமே தகளி யாக

மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கட்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

(தி.4. ப.75. பா.4)

என்பது அகவிளக்குப் பற்றி அடிகள் அருளும் அழகிய கவிதை.

அருளியற் கற்பனை:

கற்பனை நலம் கனிந்த அப்பரடிகள் கவிதைகள் என்றும் அழியாச் சிறப்புடையவை.

கற்பனை என்பது இலக்கிய அழகுகளில் தலைசிறந்து நிற்கின்றது. கற்பனை கலவாத கவிதை உயிரின்றி நிற்கும் உடல்போல் உள்ளது. அதற்கு இயக்கம் இல்லை. கற்பனை உயிரூட்டச் சக்தியாக நின்று கவிதையை உயிர்படைத்து இயக்குகின்றது.

சங்க காலக் கவிதைகள் முதல் அனைத்தும் கற்பனை நலம் செறிந்து விளங்குகின்றன. பழுத்த அருளியற் புலவரான அடிகள் கற்பனை செய்து தம் படைப்புத் திறத்தால் சிற்சில அரிய கவிதைகளை இனிக்கப் பாடுகின்றார்.

மேலைநாட்டுக் கவிஞர்கள் கற்பனையை இரு கூறாக்குவர். ஒன்று ஆக்கக் கற்பனை, மற்றது மீள்நினைவுக் கற்பனை.

இவற்றுள், ஆக்கக் கற்பனையே மிக விரிந்ததும் ஆழமான தும் ஆகும். பொருளைக் கண்டவுடன் அதன் புறத்தோற்றம் முதலிய வற்றில் ஈடுபடாமல் அதன் அகத்தை ஊடுருவி நோக்கியும், உட்க ருத்தை அறிந்தும் அவற்றின் பயனாகத் தோன்றுவது இந்தக் கற்பனை இம்மட்டோடு நில்லாமல் இக்கற்பனை ஆக்கல் தொழிலில் ஈடுபடு கிறது. அப்பொருளின் உண்மைத்தன்மை, இவ்வுலகில் அது நிலவுவ தற்குரிய காரணம். ஏனைய பொருள்களோடு இதற்குள்ள தொடர்பு முதலியவற்றை வரிசைப்படுத்திக் கவிஞன் கூறுகையிற்றான். அவ னது ஆக்கச் சக்தி வெளிப்படுகிறது என்பர். (அ. ச. ஞானசம்பந்தன், இலக்கியக் கலை பக். 71-72 )

சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம் செய்யும் பெருமானைக் கோடிக்கணக்கான மக்கள் கண்டதுண்டு. எனினும், திருநாவுக்கரசர் என்ற ஒரு கலைஞர் மட்டுமே அக்கலையின் உயிரிப்புத் தன்மையை உணருகிறார். தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாய் என்னும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே (தி.4 ப.81. பா.2) என்று அவர் பாடும்பொழுது பெருமானின் எடுத்த திருக்கை அவருடன் பேசியதை அறிய முடிகிறது. (அ. ச. ஞானசம்பந்தன், இலக்கியக் கலை பக். 76)

கற்பனையின் கடமை:

மனம் அல்லது ஆத்மாவின் சக்தியே கற்பனை. அது புலன் உணர்வு, ஞாபகம், உணர்ச்சி, பகுத்தறிவு என்ற அனைத்தினும் வேறுபட்டு உள்ளது. அது, இவற்றின் துணைக்கொண்டே செல்கிறது. அழகால் உலகம் விரிந்து வளர்கிற தென்றால் ஆக்குவது கற்பனையின் கடமையாம் என்பர்.(The energy of the mind or the soul - for it wields all physical activities - which is the agent of our world winning's and the procreator of our growing life, we term imagination. Through beauty the world grows, and it is the business of the imagination to create the beautiful.A Study of Poetry - B. Perry - p.67) இக்குறிப்பை அடிகள் திருவாக்கில் தெளிவு பெறக் காணலாம்.

அற்புதமான அழகு:
சிவபிரான் திருமுடியிற் பாம்பும், பிறையும் உள்ளன. அவர் கரத்தில் நகுதலையும் உள்ளது. அம்மையொரு பாகத்தில் உள்ளாள். இத்திருக்காட்சி அடிகள் உள்ளத்தே விரிகிறது. பாம்பைக் கண்டு அஞ்சுகின்றாளாம் அம்மை. அம்மையை, நீலமயிலோ என்று அப் பாம்பு ஐயுற்று அஞ்சுகின்றதாம். பிறையோ, அம்மையின் நுதலைக் கண்டு இவ்வழகு தனக்கில்லையே என்று எண்ணி ஏங்குகின்றதாம். கையிற் பிடித்த கபாலமோ இதனைக் கண்டு நகுகின்றதாம்.

ஆம்! இப்படித் தோன்றுகிறது. அடிகளின் கற்பனைக் கண் ணுக்கு அச்சம், ஐயம், ஏக்கம், நகை ஆகிய பண்புகளை இப்படிக் கண்டு காட்டுகின்றார். முரண்பட்ட இப்பண்புகளை இணைத்து அற்புதமான அழகை உருவாக்குகின்றார் அருளியற் புலவர். கவியின்பம் ததும்பும் இக் கற்பனைக் கருவூலம் பின்வருவதாகும்.

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்

கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்

கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.

(தி.4. ப.10. பா.8)

அச்சக் கற்பனை:

உலகெலாம் ஈன்று காத்தளிக்கும் அன்னை ஒரு பாம்பைக் கண்டு அஞ்சுவாள் என்பது அறிவுக் கண்ணுக்குப் பொருந்தாத காட்சி தான். ஆனால் கற்பனைக்கண்ணுக்கு, கலைக்கண்ணுக்கு, உணர்வுக் கண்ணுக்கு ஒத்த காட்சியாகவே அஃது உள்ளது. அடிகள் பாடும் அருங் கவிதையே இதுவும்:

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞைஎன்று

வேகத்தைத் தவிர, நாகம் வேழத்தின் உரிவை போர்த்துப்

பாகத்தின் நிமிர்தல்செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி

ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும்ஆ ரூர னார்க்கே

(தி.4. ப.53. பா.2)

நாகம் திங்களை மின்னென்று கருதி அடங்கியொடுங்கும் என்றும் கூறு வது நயம் மிக்க பகுதியாகும்.

இறைவன் அருளாடல் பற்றி:

இறைவனுடைய திருவிளையாடலை எண்ணி எண்ணி மகிழ் கின்றார் அடிகள். அவற்றை அடிகள் இலக்கிய அழகுடன் எடுத்துரைக்கும் இனிய கவிதைகள் பல. அவற்றுட் சிலவற்றை இங்குக் காண்போம்.

வினவுவோர்போல ஏதோ வினவி நின்ற இறைவன், திடீர் என்று அடிகள் உள்ளத்திற் புகுந்து ஒளித்து கொண்டானாம். வினவி வந்தவனை, அடிகள் சுழன்று சுழன்று பக்கமெங்கும் தேடுகின்றனராம். கள்ளரோ? என்னையறியாது என் உள்ளத்தே புகுந்து கொண்டீர் எனக் கேட்கின்றாராம். அதற்கு இறைவன் மலர்ந்து சிரித்தபடியே நாம் வெள்ளரோம் (வஞ்சனை யில்லாதேம்) என்று கூறிக் கொண்டே வெளிப்பட்டுத் திருக்காட்சி வழங்கினாராம். இவ்வற்புதக் கற்ப னையை உடைய திருப்பாடல் இது.

வெள்ளநீர் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கி நக்கு

வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.

(தி.4. ப.75. பா.9)

இவ்வாறு தம் உள்ளத்தே இறைவன் இருந்தாலும், மூச்சினோடு வெளியே வந்தாலும் தம்மால் அறியப்பட முடியாதபடிக் கள்ளத்தால் நிற்றலையும் அடிகள் கனிந்து பாடுகின்றார்.

"உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும்

கள்ளத்தே நிற்றியம்மா எங்ஙனம் காணுமாறே."

(தி.4. ப.76. பா.7)

என்னைவிட யாரும் எனக்கினியவர் என்றில்லை. என்னை விட எனக்கு இனியவன் ஒருவன் உள்ளான் என்று சுவைபெறக் கூறத் தொடங்கி, அவன் என்னுள்ளே நிற்பவன் என்று முடிக்கும் அழகுடைத் திருப்பாடல், இங்கு அறியத்தக்கது.

என்னி லாரும் எனக்கினி யாரில்லை

என்னி லும்மினி யானொரு வன் னுளன்

என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்

கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே.

(தி.5. ப.21. பா.1)

இவ்வாறு தம்முள்ளமே கோயிலாகப் புகுந்த இறைவன் புகுந்த சுவடும் தெரியவில்லை என்கின்றார் அடிகள். யாதும் சுவடு படாமல் ஐயாறடைந்த உத்தமரன்றோ அடிகள்! அவர் கயிலையி லிருந்து ஐயாறு புகுந்த சுவடு தெரியாமற் போனது போலவே இச் சுவடும் தெரியவில்லையாம்.

"என்மனமே ஒன்றிப்புக்கனன் போந்த சுவடில்லையே."

(தி.4. ப.81. பா.3)

என்று நயப்புறப் பாடுகின்றார்.

பிறவி வேண்டும்:

மனிதப் பிறவி வேண்டும் என்று அப்பரடிகள் கூறுவது கருத் துப் புரட்சிபோல் தோன்றும். வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (குறள் 362) என்ற நெறி பிறழாத் தவவேந்தரா இவ்வாறு கூறுகின்றார் என்று தோன்றும்.
ஆனால், குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிண் சிரிப்பு, பனித்தசடை, பவளமேனி, பால்வெண்ணீறு, எடுத்த பாதம் ஆகியவற்றைக் காணப்பெற்றால் தான் மானிடப் பிறவி வேண்டுவது என்று விளக்கங் கூறுங்கால் அமைதியும் இன்பமும் கொள்கின்றோ மல்லவா? உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியில் உருவெழுதி உருகி உரைக்கும் அப்பர் அடிகள் அருட்கவிதை
இது:

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவுயும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.

(தி.4. ப.81. பா.4)

இத்திருப்பாடல் அழகிய சொல்லாட்சியும், அரும்பொருட் செறிவும், அடைமொழிச் சிறப்பும், கற்பனையிற் கண்டாலும் கனிவிக் கும் அருள்நலமும் உடைய அருட்பனுவல் திருவிருந்தாக உள்ள மையை தமிழ் அன்பர்களும் சமய அன்பர்களும் உணரலாம்.

திருவொற்றியூரர் திருமுடி:

திருவொற்றியூர்ப் பெருமானின்மேல் தேன்போலுந் திருப் பதிகம் ஒன்றை அடிகள் அருளியுள்ளார். அப்பெருமானுடைய திரு முடி, அடிகளுடைய கற்பனைப் பார்வையை எழுப்புகின்றது.

கொன்றை, வெண்டலை, கங்கை, அரவம், திங்கள் ஆகிய அனைத்தையும் அங்குக் காண்கின்றார். கொன்றை எந்த நிலத்தின் கருப்பொருள்? முல்லையென்பது நினைவுக்கு வருகின்றது. கபாலம் சுடுகாட்டை நினைவூட்டுகின்றது. கங்கை கலத்தற்கு இடமாகிய கடல் நினைவுக்கு வருவதும் இயல்பே. பாம்பு உறையும் இடமாகிய புற்றை நினையாமல் இருக்கவியலாது. திங்கள் ஒளிவிரிக்கும் விசும்பும் தோன்றுகின்றது. இவ்வாறு முல்லையாக (கொன்றையினால்), களர் நிலமாக (வெண்டலையினால்), கடலாக (கங்கையால்). புற்றாக (அரவத்தால்), வானமாக (திங்களால்) விளங்குகின்றதாம் பெருமான் திருமுடி.

இனிக்க இனிக்க எழுகின்றது இலக்கிய எழிலுடன் அருட் கவிதை.

அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம் முறுவல் செய்யும்

பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர்

கங்கைக்கு வேலை அரவுக்குப் புற்று கலைநிரம்பாத்

திங்கட்கு வானம் திருவொற்றி யூரர் திருமுடியே.

(தி.4. ப.86. பா.10)

இவ்வாறு பாடும் அடிகள் நகைச் சுவையெழில் தவழ ஓர் விண்ணப்பம் செய்கின்றார்.

வங்க மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனே

எங்கள் பெருமானொர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர்

கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளஉமை

நங்கை அறியிற்பொல் லாதுகண் டாய்எங்கள் நாயகனே.

(தி.4. ப.103. பா.8)

எவ்வளவு அழகாக அமைந்துள்ளது இத்திருப்பாடல் :

சடைமுடியில்:

இவ்வாறு கங்கையைச் சடையில் வைத்துள்ளமை உமையம் மைக்குத் தெரிந்தால் பொல்லாது என்று கூறுவது உலகியல் நலம் உரைக்கும் பகுதியாகவும் உள்ளது. தனக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்வதுடன் அவளைத் தனக்குத் தெரியா மல் ஒளித்துக்கொள்ளும் கணவனை அவன் மனைவி எப்படி உணர் வாள். என்ன நிகழும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். அதனைப் பொல்லாது கண்டாய் என்ற இரு சொற்களில் விளக்கு கின்றார். இப்படியே ஒன்றற்கொன்று பகையாந்தன்மையுடைய பிறை யையும் பாம்பையும் சடையில் வைத்தமை குறித்தும் அடிகள் அரு ளும் நயப்பகுதி இனியதாகும்.

"பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்

எய்தப் பெறின்இரங் காதுகண் டாய்நம் இறையவனே."

(தி.4. ப.106. பா.1)

திருவடிச் செம்மாப்பு:

திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனைத் தம்முள்ளே தேடிக் கண்டுகொண்ட அப்பரடிகள். தம் அரிய அருள் வாய்ப்பை எண்ணி எண்ணி இறுமாந்திருக்கும் தலைவர். செம்மாந்து நிற்கும் செந்தமிழ் நாவலர்.

"திருவடி தரித்துநிற்கத் திண்ணம் நாம் உய்ந்தவாறே."

(தி.4. ப.71. பா.10)

என்றும்,

திருவடி சுமந்து கொண்டு காண்கநான் திரியுமாறே.

(தி.4. ப.75. பா.10)

என்றும் பாடி மகிழ்பவர். உடலுயிர் வேறுபட்டால், இறைவன் திருவடிக் கீழ்த் தலைமறைவு வேண்டி, உருக்கமுடன் ஓதுகின்றார்.

இருகாற் குரம்பை இதுநா னுடைய திதுபிரிந்தால்

தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே.

(தி.4. ப.113. பா.2)

தொழப்படுதலும் தொழுவித்தலும்:

தனக்குத் தொண்டு புரிவோர்க்கு இனிது விளங்கி அருளிப் பாடு புரியும் ஏந்தலாக உள்ள இறைவனை எண்ணுந்தொறும் கழிமகிழ் வெய்துகின்றார் இக்கவியரசர். தொண்டர்களைத் தேவர்களால் தொழுதற்கேற்ற சிறப்புடையவராக்குகின்றானாம். தன்னைத் தேவர் கள் தொழுதேத்தும் தகுதி உடையவன். அத்தகு சிவபுண்ணியம் செய்த தேவர்களும் தொண்டர்களுக்கு வழிபாடு செய்ய வைப்பன் எனின் அவன் கருணைக்கு அளவும் உண்டோ? அக்கருணையைச் சொற்பொருட் பின்வருநிலையணி அமையப்பாடும் பகுதி இது.

தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத்

தொழுதபின்னைத்

தொழப்படுந் தேவர்தம் மால்தொழு விக்கும்தம்

தொண்டரையே.

(தி.4. ப.112. பா.5)

தம் நிலை பற்றிய கற்பனை:

தம் நிலைகளைக் கற்பனை செய்கின்றார் அடிகள். துறக்கப் படாத உடலைத் துறக்க வேண்டும் என்பது அவர் எண்ணம். உறுதி யான எண்ணம். அப்படித் துறந்தால் ஒருவேளை தூதுவரோடு இறத் தலும் கூடும்.

ஆயின் அதன்பின்? இருவிசும்பில் ஏறுதல் அடுத்த நிலை யாதலும் கூடும். அதன்பின் மீண்டும் பிறத்தலும் கூடும். அப்படிப் பிறக்கும் நிலை வந்துற்றால், என் இறைவனை, பிறையணிந்த நீள் சடைப் பெருமானை மறந்துவிடுவேனோ என்று உள்ளம் அழல் கின்றார்.

தம் நிலைகளைக் கற்பனை செய்து, அவ்வாறு வருமுன்னர்க் காத்தல் செய்வது தம் குறிக்கோளாதல் வேண்டும் என்பது அடிகள் கருத்து.

அவ்வற்புதக் கற்பனையமைந்த திருப்பாடல் பின்வருவ தாகும் :

துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோ

டிறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து

பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்

மறப்பன்கொ லோஎன்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே
.

(தி.4. .113. பா.7)

ஒன்றரைக்கண்ணன்:

இறைவனை ஒன்றரைக் கண்ணன் என்று நயம்பெற அப்பர் அடிகள் பாடுகின்ற திருப்பாடல் இனியதாகும். முக்கண்ணன், உமைக்கு ஒரு பாகம் கொடுத்தவுடன், செம்பாதித் திருமேனியில் ஒன்றரைக்கண் உடையனாயினான் என்கின்றார்:

இன்றரைக் கண்ணுடை யார்எங்கு மில்லை

இமயமென்னும்

குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக்

கூறிட்டநாள்

அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும்

பாகம்வைத்த

ஒன்றரைக் கண்ணன்கண் டீர்ஒற்றி யூருறை

உத்தமனே.

(தி.4. ப.86. பா.7)

மற்றும் பல கற்பனை மாண்புகள்:

இறைவன் கீழ்க்கணக்குப் பதிவேடு வைத்துக் கொண்டுள் ளான் என்றும், அதில் தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரையும், பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரை யும் எழுதிக் கொள்வான் (தி.5. ப.21. பா.8) என்றும் அப்பரடிகள் அருளும் திருப்பாடல் கவிநயம் தோன்றும் பகுதியாகும்.

`மெய் யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு, விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும் பொய்யானை' (தி.6 ப.66. பா.7) என் றும், `தன்னுடைய திருவடியென் தலைமேல் வைத்த தீங்கரும்பை' (தி.6. ப.68. பா.4) என்றும், `பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப் பெரியானை அரியானைப் பெண் ஆண் ஆய, நிறத்தானை நின்ம லனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன் தன்னை' (தி.6 ப.80 பா.7) என்றும் பாடும் பகுதிகள் படிக்கப்படிக்க இன்பமூட்டிச் சிந்திக்க வைத்துச் சிவநெறி காட்டும் சீர்க்கவிதைகள்.

நின்றதிருத்தாண்டகத்துப் (தி.6. ப.94) பாக்கள் முழுதும் எல்லாமாய் விளங்கும் இறைவன் அருளெழிலை வகுத்துரைப்பன. `ஊரல்ல அடவி காடே' (தி.6. ப.95 பா.5) என்று உறுதியாக உரைக்கும் கருத்தை எவ்வளவு அழகாகக் காண்கின்றோம்!

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே

உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே

காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே.

(தி.6. ப.95. பா.3)

என்னுந் திருப்பாடல் நல்ல வடிவும், சொல்லமைப்பும் உடைய நறுங்கவிதையாக நின்று, எல்லாவற்றிற்கும் அவனருள் துணை நிற்க வேண்டும் என்ற பேருண்மையை மிக அழகாக அறிவுறுத்துகின்றது.

அருள்வீரம்:

கவிஞர்களுக்கே உரிய அருள்வீரம் அடிகட்கு இயல்பாக உள்ளது :

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்

இருநிலத்தில் எமக்கெதிரா வாருமில்லை

சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்

சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்

ஒன்றினாற் குறையுடையோ மல்லோமன்றே

உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்

பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்

புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.

(தி.6 ப.98. பா.5)

"நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான

காவலரே ஏவி விடுத்தா ரேனும்

கடவமலோம்"

(தி.6.ப.98.பா.6)

"மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்

விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சனெஞ்சே."

(தி.4. ப.94. பா.9)

வானத்துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்

தானந்துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்

மீனம்படி லென்விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்

டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.

(தி.4. ப.112. பா.8)

என்றெல்லாம் வரும் பகுதிகள் அடிகளாரது அஞ்சாமையை விளக்கும் பெருமிதச் சுவையுடைய பாடல்களாய்ப் பிறங்குகின்றன.

அகப்பொருட் கற்பனைகள்:

தலைவனுடைய பெரும்புகழ் கேட்டுத் தலைவி மகிழும் நிலையில் நிகழும் மெய்ப்பாட்டை உறுபெயர் கேட்டல் என்பர் தொல் காப்பியர்.

அகத்துறைப் பாடல் ஒன்றினால் இம்மெய்ப்பாட்டை அமைத்து அடிகள் அருளியுள்ளார். முதற்கண் தலைவி தலைவனின் (ஆரூர் இறைவன்) பெயரைப் பிறர்கூறல் கேட்டாள். அவன் இருக்கும் வண் ணம் பின்னைக் கேட்டாள்; அவன் ஊர் வளம் பிறகு கேட்டாள். அவன் மேலேயே காதல் ஊன்றினாள்; பித்தானாள்; தாய் தந்தையரை, உலகிய லொழுக்க நிலைகளை நீத்து மறந்தாள். தன்னை மறந்து தன் நாமமும் கெட்டுத் தலைவன்தாள் தலைப்பட்டாள் என்கின்றார். ஒரு தலைவியின் அன்புநிலையைக் கூறுவது போன்று, உயிர் இறை வனைத் தோய்ந்து இன்புற்றிருக்கும் பேரின்ப நெறியை இலக்கிய அழகுபட எடுத்துரைக்கும் இத்திருப்பாடல் ஓதுதற்கினியது.

முன்ன மவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி யவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

(தி.6. ப.25. பா.7)

அடிகள் அருளியுள்ள அகத்துறைப் பாடல்கள் முழுவதும் இலக்கிய அழகு ததும்புகின்ற கற்பனைக் கருவூலங்களாக உள்ளன. பழனத்திறைவனிடம் தன் துயரைக் கூறும்படி ஒரு தலைவி இரக்கின் றாள். குயில்கள், கண்டகங்கள், முண்டகங்கள், கைதைகள், நெய்தல் கள், இளங்குருகு, தென்றல், நாரை, பூவைகள் ஆகியவற்றை நோக்கி உரைக்கின்றாள். என் புதுநலம் உண்டு இகழ்வானோ (தி.4 ப.12. பா.1) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ (தி.4 ப.12. பா.7) என்ற தொடர்களில் அவலம் ததும்பி நிற்கின்றது.

உண்டற்குரிய வல்லாப் பொருளை

உண்டன போலக் கூறலும் மரபே.

(தொல். பொருளியல். 18)

என்ற நூற்பாவிற்கு ஏற்ப, இவ்விடத்து உண்டு என்ற சொல்லாட்சி அழகு பயந்து நிற்றலைக் காணலாம்.

நேற்று ஓடொன்று கரத்திலேந்திப் பிச்சைக்கென்று வந்தார் வெண்காடு மேவிய விகிர்தர். வந்தேன் இதோ என்று இல்லம்புக்கு மீண்டேன். அவர் அந்நிலையிலேயே நின்றார். ஐயம் கொண்டார் இல்லை. அருகே வருவார் போல் நோக்கினார். நும் ஊர் ஏது, நும் நிலைமை ஏது? என்று கேட்டேன். ஒரு விடையும் கூறினாரில்லை என்று ஒரு பெண் கூறுவதாகக் கூறும் திருப்பாடல் (தி.6. ப.30. பா.3) அழகுமு நயமும் உடையது.

புணர்ந்துழி உவகை, பிரிவுழிக்கலக்கம் அமைய வரும் பாடல்களும் பல. எட்டு மலர் கொண்டு இறைவனை வழிபடல் வேண்டும் என்ற கருத்தைத் திருவதிகைத் திருப்பதிகம் முழுவதும் (தி.5. ப.54) உரைக்கின்றார். எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி, மட்டலர் இடுவார் வினை மாயுமால் என்கின்றார். (அன்பு, கொல்லாமை, பொறியடக்கம், வாய்மை, பொறை, அருள், அறிவு, தவம் என்பனவற்றை எண்மலர் எனலாம். பன்னிருதிருமுறை வரலாறு பக். 560)

பழமொழியழகு:

பழமொழிகளைப் பல இடங்களில் வைத்து அழகு செய்யப் பெற்ற பாடல்கள் பல. தி.4: ப.5 பா.3, ப.97.பா.6, ப.5.பா.6, ப.75. பா.6, ப.5. பா.10, ப.5. பா.1, ப.99. பா.2, ப.27. பா.5, ப.5. பா.4, ப.5. பா.8, ப.96. பா.3, ப.52. பா.9, ப.26. பா.8, ப.5. பா.2, ப.75. பா.7, ப.5. பா.7, தி.5: ப.100.பா.5, ப.90. பா.3 ஆகிய பாடல்களில் நம்நாட்டுப் பழமொழிகள் பலவற்றை நயம் பெறக் கூறியுள்ளமை காணலாம்.

இயற்கை வருணனைகளிற் சில:

அப்பர் அருள்மணம் கமழக் கமழ வாழ்ந்து வண்டமிழ் பாடி இறைவனை வணங்கியவராதலின் வருணனைகளுக்கு விரிவாக அப்பெருந்தகையாரின் அருட்பாடல்களில் இடமில்லை.

ஞானசம்பந்தர் கவிதைகளில் இயற்கை வருணனைகள் விரிவாக இடம் பெற்றிருப்பது போல் அவ்வளவு இல்லாததற்குக் காரணம் இதுவே. ஆயினும் சிற்சில இடங்களில் இவ்வருணனைகள் வனப்புச் செய் யவும் காணலாம்.

மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப்

பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள்

(தி.4. ப.55. பா.2)

"செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித்

தங்கயம் துறந்து போந்து தடம்பொய்கை அடைந்து நின்று."

(தி.4. ப.55. பா.7)

அருகெலாங் குவளை செந்நெல்

அகவிலை ஆம்பல் நெய்தல்

தெருவெலாம் தெங்கும் மாவும்

பழம்விழும் படப்பை எல்லாம்

குருகினங் கூடி ஆங்கே

கும்மலித் திறகு லர்த்தி

மருவலாம் இடங்கள் காட்டும்

வலம்புரத் தடிகளாரே.

(தி.4. ப.55. பா.8)

"பைங்கால் தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர்

அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவும்

செங்காற் குருகிவை சேரும் செறி கெடி லக்கரை."

(தி.4. ப.104. பா.2)

பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற

புனற்காந்தள் கைகாட்டக் கண்டுவண்டு

தென்காட்டும் செழும்புறவில் திருப்புத் தூரில்

திருத்தளியான் கண்அவன்என் சிந்தையானே.

(தி.6 ப.76. பா.3)

"...............வளங்கொள் மேதி

சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்"

(தி.6. ப.76. பா.4)

அறங்கூறும் இயல்பு:
இலக்கியம் என்றால் கற்பனை முதலிய அனைத்துடன் அறங்கூறும் இயல்பும் அதில் இருத்தல் வேண்டும். ஆங்காங்கு உல கர்க்கு நெறிகாட்டும் உண்மைகள் அதனுள் பொதிந்திருத்தல் வேண் டும். அவ்வரிய உண்மைகள் நேரடியாக உரைக்கப் பெறுதலும் உண்டு. தோத்திரப் பாக்களின் தொகுதியாக உள்ளமையால் அத்தகு உண்மை களை - நீதிக் கருத்துக்களை - அப்பர் வாக்கில் ஆங்காங்குக் காணலாம்.

ஈகை என்பது தலையாய அறம். `செல்வத்துப் பயனே ஈதல்' என்று புறநானூறு கூறும். `ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள்' என்று ஔவையார் வாக்கு விளக்கும். ஈகை எனும் உயர் பண்பு உலகில் இருத்தலே உலகின் இன்பம்.

வாழ்வுக்கு அடிப்படை `வறியார்க் கொன்றீவதே ஈகை' என்று விளக்கிய திருவள்ளுவர், `அற்றார் அழிபசி தீர்த்தல்' என்று பொருள் வைப்புழியை இனிது காட்டி, `உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க்கென்று, ஈவார் மேனிற்கும் புகழ்' என முடித்து ஈவார்க்கே புகழுண்டு என்று நிறுவியுள்ளார்.

அருளாசிரியராகிய அப்பரடிகளோ, ஈபவர்க்கே அருள் உண்டு என்று பாடுகின்றார்.

`கரவு கொள்வோர் நிலையை எண்ணினால் உள்ளம் கரைந்து ஒளிக்கும்' என்று வள்ளுவர் கூற, அடிகள் அவ்வாறு கரப்பவர் கடுநரகங்கள் சேர்வர் என விளக்குகின்றார். அடிகளின் அவ்வறவுரை இது :

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்

கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்.

(தி.4 ப.38. பா.10)

இவ்வாறே கரவுடையார் நெஞ்சிற்கு அரியவனாக, கரவாத வர் பால் விரவுவோனாக உள்ளான் இறைவன் என்றிசைக்கின்றார்.

கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை.

(தி.4. ப.7. பா.1)

அறம் ஒன்றையே உள்ளம் நாட வேண்டும். அவ்வாறு அறம் கனிந்த நெஞ்சுடையாரே, ஆசை, சினம் - வெறுப்பு முதலிய தீக் குணங்களிலிருந்து விடுபட முடியும். அவ்வாறு விடுபடுதலே அறி வின் பயன் என்று குறிப்பாக உணர்த்தும் பகுதி பின் வருவது :

"அறத்தையே புரிந்த மனத்தனாய்

ஆர்வச்செற்றக் குரோதம் நீக்கியுன்

திறத்தனாய் ஒழிந்தேன் திருவாரூர் அம்மானே."

(தி.4. ப.20. பா.8)

"காலமும் கழிய லான கள்ளத்தை ஒழிய கில்லீர்

கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்

சீலமும் நோன்பு மாவர் திருச்செம்பொன் பள்ளி யாரே."

(தி.4. ப.29. பா.6)

இறைவனைப் பற்றிச் சொல்லிச் சொல்லிக் காலங் கழித்தல் அறிவுடைமையாகாது. நீதியால் தியானித்தலே அறிவுடைமையாகும் என்பது ஒரு தக்க அறிவுரை:

"ஓதியே கழிக்கின் றீர்கள் உலகத்தீர் ஒருவன் தன்னை

நீதியால் நினைய மாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்."

(தி.4. ப.41. பா.9)

உலகியலிற் கிடந்து அழுந்திப் பின்னும் பின்னும் துயரப் படுதலினின்றும் விடுபட இறைவனை நினைத்தலில் வன்மை எய்துவீர் களாக என்ற உபதேசம் இனிய ஒன்றாகும்.

மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்

வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே

கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை

நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே.

(தி.4. ப.71. பா.1)

சாத்திரம் பல பேசிச் சிலர் வம்புடன் காலம் கழித்துத் திரித லையும், அவர்கள் பெரிதாகக் கருதும் கோத்திரமும் குலமும் கொண்டு ஒன்றும் செய்யலாகாது என்பதையும் மிக உறுதியாக உரைக்கின்றார்.
சாத்திர ரம்பல பேசும் சழக்கர்காள்

கோத்திர முங்குல முங்கொண் டென்செய்வீர்

பாத்திரஞ் சிவம் என்று பணிதிரேல்

மாத்தி ரைக்குள் அருளும் மாற்பேறரே.

(தி.5. ப.60. பா.3)

மனிதரில் தலையான மனிதராக வாழவேண்டும் என்று உறுதி ஒவ்வொருவர்க்கும் வேண்டும். `உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என் பார் திருவள்ளுவர். கல்வி கற்பதுடன் இறைவனைக் கனிந்து போற்று வோரை தலையானவர் என்று உரைக்கின்றார் அடிகள்.

"கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்

புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்

மனித ரில்தலை யான மனிதரே"

(தி. 5 ப. 65 பா. 6)

நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்

குன்ற மேறி யிருந்தவம் செய்யிலென்

சென்று நீரிற் குளித்துத் திரியிலென்

என்றும் ஈசனென் பார்க்கன்றி யில்லையே.

(தி. 5 ப. 99. பா. 8)

"செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று

பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ"

(தி. 5 ப. 100 பா. 2)

வாது செய்து மயங்கும் மனத்தராய்

ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்

யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்

மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே.

(தி. 5 ப. 100 பா. 4)

என்பனவும் தக்க செவியறிவுறூஉக்களாக இலங்குகின்றன. `திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்' எனத் தொடங்கும் திருத்தாண்டகம் (தி. 6 ப. 95 பா. 6) உலகமாந்தர் நெறியறிந்து உய்தி பெறற்குரிய உயர் ஞான விருந்தாக ஒளிர்கின்றது. இவ்வாறு ஆங்காங்கு அறவுரைகள் பலவற்றையும் அப்பர் அருளிலக்கியத்தில் காணலாம்.

சொல்லாட்சியழகு:

"சொற்குறிதிக் கப்பரெனச் சொல்லு" என்ற வெண்பாவடி அப்பரடிகளின் சொல்லாட்சிச் சிறப்பை எடுத்தரைப்பதாகும். கவிஞ ரின் கவிதைச்சிறப்பு சொல்லாட்சியில் விளங்குகின்றது.

சொற்களை இடமறிந்து, தரமறிந்து எடுத்தாளும் எழில் உயரிய பெருங் கவிஞர்களுக்கே வருவதாகும். சொல்வன்மை எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவன சொல்லுதல் வன்மை மட்டு மன்றி; எழுதுங்கால் சொல்லின் வன்மையறிந்து எழுதும் திறமையும் குறித்ததாகும். வெல்லும்சொல் இன்மை யறிந்து சொல்லைப் பயன் படுத்துவர் உயர்பெருங்கவிஞர். அப்பரடிகள் ஆளும் சொற்கள் இனிய, எளிய தமிழ்ச் சொற் களாக உள்ளன. உணர்ச்சிப் பிழம்புகளாக உள்ளன. சங்கநூல், திருக் குறள் ஆகிய சான்றோர் நூற்சொற்கள் ஆங்காங்கு அப்பரடிகள் திருக் கவிதைகளில் திகழ்ந்து, தமிழின் தனிநலங்காட்டி நிற்கின்றன. ஏற்ற சொல்லை ஏற்ற இடத்தில் பயன்படுத்தி இனியதொரு பொருளைப் பெறவைப்பதே `சொல்லாட்சிச் சிறப்பு' (Poetic diction) என மேலைநாட்டார் போற்றுவர்.

இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை

நச்சுவார்க் கினியர் போலும் நாகஈச் சரவனாரே

(தி. 4. ப. 66 பா. 1)

என்ற பகுதியில், நச்சுதல் என்ற சொல்லைக் காணலாம். நசை - நச்சு - நச்சினார் - நச்சினார்க்கு இனியர் என வருவது இச்சொல்; விருப்பம் என்ற பொருள் உடையது. விரும்புவார்க்கு இனியவராய் - கற்ற வர்கள் உண்ணுங்கனியாய் - கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியாய் உள்ள, இறைவனை நல்ல சொற்களால் நச்சுவார்க்கினியர் என்று போற்றுகின்றார் அடிகள். உளமார விழைதலே நச்சுதல். இச்சை வெறும் ஆசையைக் குறிக்கும் மேம்போக்கான சொல்லாக இருக்க, நச்சுதல் ஆழமான சொல்லாய்ச் சுடர்விடுகின்றது. அதனை அடுத்துப் பெய்து அச்சொல்லினை ஆளும் திறத்தில் முந்துகின்றார் அடிகள்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத்தற்று.

-குறள் 1008

என இச்சொல் வள்ளுவராலும் ஆளப்பட்டுள்ளது. `ஒன்றியிருந்து நினைமின்கள்' என்று உரைக்கும் உத்தமராதலின், அவ்வாறு ஒன்றித்த விழைவை இச்சொல்லாற் குறித்த அருமை பாராட்டற்குரியது.
இவ்வாறே நம்பு, மேவு எனும் இரண்டு சொற்களும் நசை என்னும் பொருளைக் குறிக்கும் பழந்தமிழ் உரிச்சொற்கள். ("நம்பும் மேவும் நசையாகும்மே" (தொல். சொல். 329)) இவற்றையும் அடிகள் உரிய இடங்களில் கையாண்டு ஒளி, பெறுவிப்பர்.

"நம்புவார்க் கன்பர் போலும் நாகஈச் சரவனாரே"

(தி. 4 ப. 66 பா. 4)

இவ்விடத்து, நச்சுவார் எனும் பொருளிலேயே நம்புவார் என்னுஞ் சொற்கு விளக்கம் கூறுமாறு அடிகள் அருளியுள்ளார்.

அன்னை எனுஞ்சொல்லை, அன் என்றும் சில இடங்களில் ஆளுவது அடிகள் இயல்பு. இதனை அடியொற்றிச் சுந்தரர் பாடுவதும் இங்கு ஒப்பிடத்தக்கதாகும். ("அன்னொப்பானை" (தி.5 ப.3 பா.8) "அன்னே உன்னையல்லால்" (தி.7 ப.24 பா.1)) ஐ வியப்பு எனும் பொருளிலும், கை ஒழுக்கம் என்ற பொருளிலும் வருவன. இவற்றை அடிகள் அருளும் திறம் அறியத்தக்கது. ("ஐயொப்பானை அரத்துறைமேவிய கையொப்பானை" (தி.5 ப.3 பா.5))

உறைப்பு என்னும் சொல்லை உறுதி எனும் பொருளில் அடிகள் வழங்குவர். நன்கு உள்ளத்தில் உறைந்து பலன் பெருக்கும் நிலை தானே உறுதி என்பது! இந்த உறைப்பு என்பது ஓர் அரிய சொல்லாட்சி.

"திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்

உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்"

(தி. 5 ப. 50 பா. 8)

அப்பரடிகள் அருளிய இச்சொல்லின் அருமையைச் சேக்கி ழார் மிகவியந்து போற்றி உள்ளங்கொண்டிருத்தல் வேண்டும். இந்த உறைப்பு - அல்லது அன்பின் உறுதியைத் தமிழால் அழகுபடுத்தி இன் னும் விளக்குகின்றார்.

பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும்

மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்

ஓது காதல் உறைப்பின் நெறிநின்றார்

கோதி லாத குணப்பெருங் குன்றனார்.

(தி. 12 பெரிய. திருக்கூட்டச் சிறப்பு-7)

இறைவன் அருட்புகழைக் கேளாத செவிகளை உடையாரை அடிகள் கூறும் வகையில் துளையிலாச் செவித் தொண்டர்காள் என் கிறார். இவ்விடத்துக் `கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால், தோட்கப்படாதசெவி' (குறள். 418) என்பதில் வரும் `தோட்கப் படாத செவி' எனுந்தொடரை இன்னும் விளக்கமாகத் துளையிலாச் செவி என்று அருளியுள்ளமை அறியத்தக்கது.

இளைய காலமெம் மானை அடைகிலாத்

துளையி லாச்செவித் தொண்டர்காள்

(தி. 5 ப. 66 பா. 3)

தோட்கப்படுதல் என்ற சொல் விளங்குதற்கருமையின் துளைக்கப்படுதல் என்ற சொல்லால் அதனை எளிமைப்படுத்தி ஆளு வது அடிகளுக்கு அவசியமாயிற்று. அரிய சொற்களை ஆண்டு புரி யாமல் வைப்பதைவிட, எளிய சொற்களை எடுத்துரைத்து விளங்க வைப்பது அறிஞர் இயல்பாதலை எடுத்துரைக்கவும் வேண்டுமோ? நண்பன் என்ற சொல்லால் காதலனைக் குறிக்கும் (தி. 5 ப. 66. பா. 9) இடமும் உண்டு. பாடி என்னும் சொல் ஊரைக் குறிக்கும் பழந் தமிழ்ச்சொல். பட்டினம், பாடி, பாக்கம் என்பன நெய்தனிலத் தார்களுக்கு வழங்கிய பெயர்கள். இவை சிறுபான்மை உள்நாட்டு ஊர்களுக்கும் மாறிவழங்கும் இயல்பையும் பின்பு பெற்றன. ஊர் காவலைப் பாடி காவல் என்பதும் மரபே. அடிகள் வாக்கில் இதனைக் காண்க.

"கோடி காவனைக் கூறிரேற் கூறினேன்

பாடி காவலிற் பட்டுக் கழிதிரே"

(தி. 5 ப. 78. பா. 2)

"கோடி காவனைக் கூறாத நாளெலாம்

பாடி காவலிற் பட்டுக் கழியுமே"

(தி. 5 ப. 78 பா. 6)
பறைதல் என்னும் சொல்லைக் கெடுதல் எனும் பொருளிற் கையாண்டுள்ள அருள்வாக்குக்கள் பல. இணர் என்றால் பூங்கொத்து எனப் பொருள்படும். அப்பெயர்ச் சொல்லினடியாக ஓர் இலக்கிய நயமிக்க மென்சொல்லை அடிகள் படைத்துள்ளார். கொத்தாக மலர்ந்து எனப் பொருள்படும் வினையெச்சத்தை அதிலிருந்து உரு வாக்கி இசைக்கின்றார்.

"இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும்"

(தி. 5 ப. 97. பா. 20)

தயாமூல தன்மநெறி:

`தயாமூல தன்மம்' (அன்பும், அன்பிற்கு அடிப்படையான அறமும்) என்னும் புதிய சொற்றொடரை அடிகள் வாக்கிற் காண்கின் றோம். அன்பும் அறமுமாகிய பண்புகள் செறிந்த மெய்ம்மையைத் `தயா மூலதன்மம்' என்ற நறுஞ்சொற்றொடரால் ஆண்டு விளக்கு கின்றார்.

".......... தயாமூல தன்ம மென்னும்

தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்

நலங்கொடுக்கும் நம்பியை..."

(தி. 6 ப. 20 பா. 6)

"தயாமூல தன்மவழி எனக்கு நல்கி

மனம்திருத்தும் மழபாடி வயிரத் தூணே"

(தி. 6 ப. 40 பா. 6)

இவ்விடத்துச் சைவசித்தாந்தச் செந்நெறியைக் குறிக்க இத் தயாமூல தன்மவழி எனுஞ்சொற்றொடரை அடிகள் கனிந்து அருளி யுள்ளமை காணலாம். மனிதர்களாகப் பிறந்த நாம், அன்பும் அறமும் கொண்டு உயர்ந்தால் அதனினும் சீரியவாழ்வு உண்டோ? அவ்வாழ் வினை அடையும் நெறியே இத் தயாமூலதன்மம் என்னும் முப் பெருஞ்சொற்களிலே அடங்கியிருக்கின்றது. உலகு இந்நெறி நின் றால் பூசல் உண்டோ? அமைதியன்றோ உலகிற்செழிக்கும்! மாந்த ரினத்தை வாழ்விக்கும் மெய்ம்மருந்தை, உலகிற்கு எடுத்து உரைக்கும் நீர்மையை இத் திருக்கவியிற் காணலாம்.

பரம்பொருளையே தெய்வமென்று பற்றா, சிறுதெய்வங் களைப் பற்றுவோர் மனத்தைப் பாறையாக்கி, `மனப்பாறை'கட்கு நல்லுரை ஏறுமோ (தி. 5. ப. 100. பா. 2) என்கின்றார் ஓரிடத்து.

மயில் + ஆர்ப்பு + ஊர் = மயிலாப்பூர் என்று காண்கின்றோம். இதனை (மயிலா(ர்)ப்பு) மயிலாப்பு என்றே அடிகளும் கூறக் காண்கிறோம். (தி. 6 ப. 2 பா. 1, ப. 7. பா. 12, ப. 45, பா. 6)

பழவினையை, பண்டை வல்வினை (தி. 5. ப. 7. பா. 11) தொல் வினை (தி. 5 ப. 97. பா. 23) முன்னை நான்செய்த பாவம் (தி. 5. ப. 64. பா. 7) என்றும், மேலைவினையை மேலை ஏதங்கள் (தி. 4. ப. 35. பா. 5) மேலைவினை (தி. 5 ப. 5 பா. 8, தி. 5 ப. 14. பா. 5) என்றும் ஆளுவது அடிகள் இயல்பு.

சில சொற்களை விளக்கியுரைத்தலும், சில சொற்களைக் குறிப் பான் விளக்கலும் அடிகள் இயல்பு. இறைவன் அருள் உடையன் ஆதலின் `அருளன்' என்றே அழைத்து மகிழ்வதும் (தி. 4. ப. 90. பா. 10) அடிகள் இயல்பு. இதனைச் சற்றே விரித்து `அருளாளன்' (தி. 7 ப. 1. பா. 1) என்று சுந்தரர் முதலியோர் கொள்வர்; ஆயினும் அருளன் என்பது எளிய சொல்லாய், இறைவனது அருட்பெற்றி தோன்ற நின்று இனிமை பயத்தல் கண்கூடு.

`தவ' எனும் உரிச்சொல்லைத் தக்க இடத்தில் வைத்து `தவப் பெருந்தேவு' செய்தார் என்று (தி. 4 ப. 65 பா. 8) பாடுதல் அறியத்தக்கது. இத்தொடரில் ஈடுபட்ட பிற்கால உலகு, கல்வெட்டுக்களிலும் இதனைப் பொறித்து இச்சொல்லாட்சி அருமையைப் போற்றியுள்ளமை நன்கு உணரத்தக்கது.1

இன்று குறிக்கோள்2 எனும் சொல்லை எங்கும் காண்கின் றோம். இதனை முதன்முதல் தமிழுலகிற்கு வழங்கிய பெருந்தகையார் அடிகளே ஆவர்; ஒரு குறியினைக் கொண்டொழுகுவது என்ற பொரு ளில் இது வழங்கப்படும், `குறிக்கோள் இலாது கெட்டேன்' (தி. 4 ப. 67. பா. 9) எனவரும் திருக்கொண்டீச்சரத் திருப்பதிகம் காண்க.

`தமிழன்' என்று மொழியினடியாகத் தமிழ் மகனை முதன் முத லாக அழைத்த சொல்லாட்சித் திறமும் அடிகட்கே உரியது என்பது முன்னும் விளக்கப்பட்டது. தமிழை உடையான் என்ற பொருள்பட மொழியை விழியாகப் போற்றும் புவுமுதல் மகனாகிய இனக்கொழுந் தைத் தமிழன் என்று வாயார உளமார, இனிய புதுச்சொல்லால் எடுத்துக் கிளக்கும் அப்பரடிகள் அருளமுதம் ஆரா இன்ப ஆரமிர்தமாகும்.

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணா மலையுறையெம் மண்ணல் கண்டாய்

வாரி மதகளிறே போல்வான் கண்டாய்

மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

(தி. 6 ப. 23 பா. 5)

சங்ககாலத்தும் அதன்பின்னும் தமிழ் என்ற சொல்லாலேயே தமிழ் மக்கள், தமிழ்ப் பண்பு, தமிழ் நிலம் முதலிய அனைத்தையும் குறிக்க நேர்ந்தது. புதிதாக முதன்முதல் இந்த மரபை மாற்றி அடிகள் புரியும் கருத்துப் புரட்ச்யின் கால்கோளாக அமைகின்றது இந்தத் தமிழன் என்ற சொல்லாட்சி. தமிழன் என்றொரு இனமுண்டு என இன்று நாம் தலைநிமிர்ந்து செம்மாந்து பேசுவதற்கு இஃதன்றோ அடிப்படையாகும்! பிழைப்பு என்ற சொல்லைப் பிழைசெய்வது என்ற பொரு ளில் அடிகள் ஆளக் காணலாம். (`பிழைப்பு வாய்ப்பொன்றறியா நாயேன்' -தி.8 திருவாசகம்)

"அழைக்கும் அன்பின ராயஅடிய வர்

பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே"

(தி. 5 ப. 16 பா. 8)

பொக்கம் என்ற சொல்லை அடிகள் ஆளும் திறம் இனியது.

"பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்"

(தி. 5 ப. 95 பா. 4)

"பொக்க மிக்கவர் பூவுநீ ரும்கண்டு

நக்குநிற்பர் அவர்தம்மை நாணியே"

(தி. 5 ப. 90. பா. 9)

தாம் ஆளும் சொற்கள் தமிழ்ப் பழைமையும், உறுதியும், அழகும் உடையவாய் இருத்தல் வேண்டும் என்று அடிகள் திருவுள்ளம் கொண்டாராதல் வேண்டும். அடிகள் அருள் மொழியில், வட சொற்கள் பெரும்பங்கு பெறாமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொல்காப்பியர் கூறும் இலக்கிய வனப்பும் அப்பரடிகள் வாக்கும்:

ஆசிரியர் தொல்காப்பியர் வனப்பு என்று ஒதுவன இலக்கிய அழகுகள் என்று கூறலாம்; எட்டு வகைப்பட்ட வனப்புக்களை அகச் சான்றோர் அருளுவர். (வை. கா. சிவப்பிரகாசம் அவர்கள் எழுதிய வனப்பிலக்கியம் (Tamil Culture - Vol. X No. 3, பக். 71-96) என்ற கட்டுரை காண்க. வனப்பிலக்கியம் பற்றிய தொல்காப்பிய உரையாசிரியர்கள் கருத்துகளை இக்கட்டுரை ஆசிரியர் தெளிவுற ஆராய்ந்துள்ளார். )

"அம்மை அழகு தொன்மை தோலே

விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப்

பொருந்தக் கூறிய எட்டொடு"

(தொல். செய்யுளியல். 1)

வனப்பென்பது பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்ட வழிப் பெறுவதோர் அழகு என்பர் பேராசிரியர். இவ்வாறே நச்சினார்க் கினியரும் கூறுவர்; சமுதாய சோபை எனச் சிந்தாமணியுரையில் வரு வது இதுவே. மாத்திரை முதலிய இருபத்தாறும் செய்யுளிலக்கணத் தினைத் தனியே நோக்கிக் கூறியவை. வனப்பு எட்டும் முழுநோக் காகக் கூறியவை. இவ்வனப்புத் தனிச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் இரண்டிற்கும் உரியதென்பர் உரையாசிரியர்கள்.

இந்த எட்டு வனப்புக்களும் (இலக்கிய எழில்களும்) அப்ப ரடிகள் அருள்வாக்கில் ஆங்காங்குப் பொருந்தி விளங்குகின்றன. அவற்றுள் சில இடங்களை இங்கு ஆய்ந்து கண்டு இன்புறுவோம்.

அம்மை:

அம்மையின் இலக்கணம்; `சின்மென்மொழியாற்சீர்புனைந்து யாப்பின் அம்மை தானே அடிநிமிர்பின்றே' என்பது: (செய்யுளியல் 227) சிலவாய மெல்லியவாய சொல்லோடும் இடையிட்டு வந்த பனுவலிலக்கணத்தோடும்
அடிநிமிர்வில்லாதது என்பது இதன் பொருள். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மை யென்றாயிற் றென்பர் பேராசிரியர். சின்மொழியாட்சி, மென்மொழியாட்சி. தாயபனுவ லுடைமை, அடிநிமிர்வின்மை என்பன வெல்லாம் அம்மை எனல் விளக்கும்.

சுருங்கக்கூறல் என்பதனை இதனுள் காணலாம். மென்மொழி - மெல்லிசை வண்ணம் அமைதல், அறம் பொருள் இன்பம் பற்றிக் கூறுவது. அவ்வாறு கூறும்போது இடையிடை வேறுபொருள் பற்றிக் கூறுவது ஆகியனவும் அம்மை இயல்புகளே.

அப்பரடிகளருளிய திருக்குறுந்தொகை முழுதும் அம்மை என்னும் வனப்பிலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாகும். அவ்விலக்கிய அழகு முழுதும் நிரம்பியது ஐந்தாம் திருமுறை என்றே கூறலாம்; எடுத்தக்காட்டுக்களாகக் கீழ்வரும் அருங்கவிதைகளைக் காண்க:

எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே

பந்தம் வீடவை யாய பராபரன்

அந்த மில்புகழ் ஆரூர் அரநெறி

சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே.

(தி. 5 ப. 7 பா. 2)

ஏற தேறும் இடைமரு தீசனார்

கூறு வார்வினை தீர்க்கும் குழகனா
ர்

ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்

கூறி யூறி உருகுமென் னுள்ளமே.

(தி. 5 ப. 14. பா. 6)

நேச மாகி நினைமட நெஞ்சமே

நாச மாய குலநலஞ் சுற்றங்கள்

பாச மற்றுப் பராபர ஆனந்த

ஆசை யுற்றிடும் ஆனைக்கா அண்ணலே.

(தி. 5 ப. 31. பா. 9)

உள்ளம் உள்கி உகந்து சிவனென்று

மெள்ள உள்க வினைகெடும் மெய்ம்மையே

புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்

வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.

(தி. 5 ப. 79 பா. 8)

வேதம் ஓதிலென் வேள்விகள் செய்கிலென்

நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்

ஓதி யங்கமொ ராறு முணரிலென்

ஈச னைஉள்கு வார்க்கன்றி இல்லையே.

(தி. 5 ப. 99. பா. 4)

அழகு:

தொல்காப்பியர் கூறும் இரண்டாவது இலக்கியவனப்பு, அழகு என்பதாகும். `கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமே அழகு' என்பர் பேராசிரியர். கற்போர் உள்ளத்தை யீர்க்கும் திறம் என்று கூறலாம்.

"செய்யுள் மொழியாற் சீர்புனைந் தியாப்பின்

அவ்வகை தானே அழகெனப் படுமே"

(தொல். செய்யுளியல் 228)

செய்யுட்குரிய சொற்களால் சீர்புனைந்து தொடுத்தலும், ஓசை உடைமையும் இதில் காணலாம். இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகியவற்றால் பாடப்படுவது. வழக்குச் சொற் பயிலாமல் செய்யுளுட் பயின்றுவருஞ்சொல் (நச்சினார்க்கினியர்) வழங்குவது, சொல்லழகு, பொருளழகு கூறுந்திறன் ஆகியவற்றால் கற்பவர் உள்ளத்தையீர்க்கும் இவ்வனப்பாகிய அழகு, அப்பரடிகள் வாக்கில் எண்ணற்ற பல இடங்களில் உள்ளன.

எடுத்துக்காட்டாக இரண்டொன்றை இங்குக் குறிப்பாம்:

குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்

நறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாகத் தானைப்

பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானை

உறவினால் வல்ல னாகி உணருமா றுணர்த்து வேனே.

(தி. 4 ப. 60 பா. 3)

பழியுடை யாக்கைதன்னிற் பாழுக்கே நீரிறைத்து

வழியிடை வாழமாட்டேன் மாயமும் தெளியகில்லேன்

அழிவுடைத் தாயவாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்

கழியிடைத் தோணிபோன்றேன் கடவூர்வீ ரட்டனீரே.

(தி. 4 ப. 31. பா. 6)

பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்

பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்

ஏணியை இடர்க் கடலுட் சுழிக்கப் பட்டிங்

கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்கும்

தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்

சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்

ஆணியை ஆவடுதண் துறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

(தி. 6 ப. 46 பா. 4)

தொன்மை:

தொன்மையென்ற மூன்றாவது இலக்கியவனப்புக்கு ஆசி ரியர் தொல்காப்பியர் தரும் விளக்கம்:

"தொன்மைதானே... உரையொடு புணர்ந்த ழைமை மேற்றே"

(தொல். செய்யுளியல் 229)

உரைவிரவிப் பழையனவாகிய கதைப்பொருள்மேல் வரு வது. உரையொடு புணர்தல், நெடுங்காலமாகப் பலராலும் சொல்லப் பட்டு வருதல் என்ற க. வெள்ளைவாரணனார் கருத்திற் கேற்ப, அப்பர் வாக்கில் பழங்கதைக் குறிப்புக்கள் பற்பல இடங்களில் வரக்காணலாம். இவை தொன்மை அழகு துலங்கும் பகுதிகள்.

பாண்டவ சரிதம், இராமசரிதம்

தொன்மைக்கு இலக்கிய மாக உரைகாரர்களாற் கூறப்படும்.

"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடும்

சேதுபந் தனம்செய்து சென்று புக்குப்

பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற

போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ"

(தி. 6 ப. 58 பா. 10)

"பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்

பரிந்தவனுக் கிராவணனென் றீந்தநாம தத்துவனை"

(தி. 6 ப. 79. பா. 10)

"அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானை"

(தி. 4 ப. 7. பா. 10)

"வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்

வில்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்

கூடினார் உமையவளும் கோலம் கொள்ளக்

கொலைப்பகழி உடன்கோத்து"

(தி. 6 ப. 83. பா. 5)

" .................அருச்சுனற் கம்பும் வில்லும்

துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லி"

(தி. 4. ப. 50. பா. 1)

என்பன முதலியஅப்பர் கவிதைப் பகுதிகள் இத்தொன்மையழகு துலங்கும் பகுதிகள் எனலாம்.

தோல்:

தோல் என்னும் இலக்கிய வனப்புக்கு ஆசிரியரின் இலக்கணம்:

"இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்

பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்

தோலென மொழிப தொன்னெறிப் புலவர்"'

(தொல். செய்யுளியல். 230)

"மெல்லென்ற சொல்லான் அறம்பொருளின்பம் வீடென் னும் விழுப்பொருள் பயப்பச்செய்வன' என்பர் பேராசிரியர். இழு மென் மொழியாப்பு, விழுமிய பொருளுடைமை, பரந்தமொழி உடைமை, அடிநிமிர்ந்தொழுகல் ஆகியவை தோலின் இயல்புகள் எனலாம். ஆற்றொழுக்குப் போன்ற ஓசையின்பம், மக்கள் வாழ்வைப் பண்படுத்தும் உயர் கருத்துக்கள் என்பவை ததும்பிநிற்கும் அழகு தோல் என்று கூறலாம்.

அப்பரடிகள், இறைவனாகிய சிவபிரானையே பாடும் இயல் பினராதலின் விழுமியது நுவலல் அச்சான்றோருடைய அருட்பாடல் களனைத்திலும் இலங்கக் காணலாம். அடிநிமிர்ந்தொழுகும் இயல் பைக் காணவியலாதாயினும் முப்பது பாடல்களை உடைய சித்தத் தொகைக் குறுந்தொகைத் தொகுப்பைக் கூறலாம். (தி. 5 ப. 97)

அப்பரடிகள் பண்ணொடு குழைந்த திருப்பதிகங்கள் பாடி யருளியுள்ளாராதலின் ஒழுகிசையின்பம் தழீஇய அவர் உயர் பாடல்கள் அனைத்திலும் இவ்வழகினைக் காணலாம்.

விருந்து:

விருந்து என்பது ஆசிரியரால்,

"விருந்தேதானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே"

(தொல். செய்யுளியல். 231)

என்று விளக்கப்பெறும்.

பொருள், உருவம், கூறும் முறை ஆகியவற்றிற் புதுமை தவழக் கூறும் வகையுடைய அப்பரடிகள் அருட்கவிதைகளை இவ் விருந்திற் கூறலாம். தாண்டகம் என்ற புதிய வகையைத் தமிழில் செல்வாக்கு அடையச் செய்த அப்பர், விருந்து அழகு தோன்ற வித்தகப் பாடல் பாடினர் என்பதற்குத் தடையும் உண்டோ?

சித்தத் தொகைக் குறுந்தொகையில் அகரமுதல் ஔகார இறுவாயும், ககரமுதல் னகர இறுவாயும் முதற்கண் எழுத்தாகத் தொடரகக் கவிதைகள் அருளியுள்ளார். இதுவும் விருந்து வகையாதல் ஓர்ந்துணரலாம்.

இயைபு:

இயைபு, தொல்காப்பியரால்,

"ஞகார முதலா னகார வீற்றுப்

புள்ளி யிறுதி இயைபெனப் படுமே"

(தொல். செய்யுளியல். 232)

அப்பரடிகள் அருள்வாக்கில் இவ்வியைபு காணப்பெற வில்லை. இவ்வாறு தொடர்ந்து பாடத்தக்க பாஇனப்போக்கை அடிகள் மேற்கொண்டிலராதலின் இவ்வழகை நாம் காண இயலவில்லை.

புலன்:

அடுத்து வருவது புலன், ஆசிரியர் தொல்காப்பியர் இதன் இலக்கணத்தை பின்வருமாறு கூறுவர்.

"தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

புலனென் மொழிப புலனுணர்ந் தோரே"

(தொல். செய்யுளியல். 233)

கற்றோர்க்கும் மற்றோர்க்கும் எளிதிற் பொருள் புலப்படுமாறு தெரிந்த சொற்களால் இயற்றப்படும் செய்யுளில் புலன் என்னும் அழகு செறிந்ததென்பர் அறிஞர். சேரிமொழி யென்பது பாடி மாற்றங்கள் என்பர் பேராசிரியர்.

"ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற்றேடிய ஆதரைப்போல்"

(தி. 4 ப. 97 பா. 6)

"மத்தார் தயிர்போல் மறுகுமென் சிந்தை"

(தி. 4. ப. 96 பா. 3)

"முயல் விட்டுக் காக்கைப்பின் போனவாறே"

(தி. 4 ப. 5. பா. 2)

"மோத்தையைக் கண்ட காக்கை போல"

(தி. 4 ப. 75 பா. 2)

என்பன முதலிய உலக வழக்குகளை அடிகள் ஒட்டிப் பொருத்தி உரைக்கும் கவிகளில் இப்புலன் என்னும் அழகு பிறங்கக் காணலாம். பொந்தை, களேபரம், பட்டி, பாடி, மொண்ணை முதலிய உலக வழக்குச் சொற்களை அடிகள் புணர்த்துப் பாடியுள்ள கவிதைகள் புலனுக்கு ஏற்ற நலன் அமைந்தவை.

இழைபு:

இறுதியாக, ஆசிரியர் தொல்காப்பியர் கூறும் இலக்கிய அழகு இழைபு ஆகும். அதற்கு அவர் தரும் இலக்கணம்:

"ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது

குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து

ஓங்கிய மொழியான் ஆங்ஙனம் மொழியின்

இழைபி னிலக்கணம் இயைந்ததாகும்"

(தொல். செய்யுளியல் 234)

வல்லெழுத்துப் பயிலாமை, ஐவகையடிகள் பயிலல், ஓங்கிய மொழியாட்சி, பொருள் புலப்பாடு ஆகியன இழையின் இயல்புகள். இவற்றுள் பின்னைய இரண்டும் அப்பர் தேவாரத்தில் காணக்கிடக்கும் கவின்களே என்பதை இதுகாறும் காட்டிய எடுத்துக்காட்டுக்களான் இனிது உணரலாம். வல்லிசை வண்ணம் நீங்கி நெடுஞ்சீர் வண்ணமும் பயின்று வரும் பாடல்கள் இவ்வழகின்பாற்படும். விடந்தீர்த்த பதிகம் (தி. 4. ப. 18) இதற்குத் தக்க இலக்கியமாக அருளரசர் திருவாக்கில் அமைவதாகும்.

இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியர் இலக்கிய எழினலங் களாக ஓதியுள்ள எட்டழகும் அப்பர் அருட்கவிதைகளில் இலங்கு தலை ஆராய்ந்து அறியுங்கால், பேரின்பமும் பெருமகிழ்வும் தோன்றுதல் இயல்பேயாகும்.

முடிவுரை:

இதுகாறும் ஆராய்ந்தவற்றால், அப்பர் அருட்பாடல்கள் இலக்கியப் பண்புகளாகிய அழகு ததும்பும் பேரருட் கருவூலங்களாம் என்பதும், உவமை உருவகம் முதலிய அணி விகற்பங்களும், கற்பனை, சொல்லாட்சிச் சிறப்பு முதலிய கவிதையியல்புகளும் செறிந்த சீர்மை உடையன என்பதும், இலக்கிய நயமிக்க ஏற்றம் உடையன என்பதும் இனிது பெறப்படும். ஆளுடைய அரசராகத் திகழும் இவ்வருளாசிரியரின் அருளிச் செயல்களை ஓதி ஓதி இன்புறுதலும், அவ்வின்ப நெறியே இறைநெறி பற்றி இருமைப் பயன்களை எய்துதலும் தமிழைக் கற்றறிந்த தகைசால் மாந்தர் கடனாகும்.

நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்

இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்

திருக்கொ டும்முடி என்றலும் தீவினைக்

கருக்கெ டும்இது கைகண்ட யோகமே.

(தி. 5 ப. 81 பா. 5)

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவடி மலர்கள் வாழ்க!

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின்

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 2

நாவுக்கரசர் அருளிய நன்ஞானம்

தருமை ஆதீனத் தமிழ்ப் புலவர், சித்தாந்தக் கலைமணி

வித்துவான் சி. அருணைவடிவேலு முதலியார்,

தமிழ்ப் பேராசிரியர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி.

ஞானம் என்பது, `அறிவு' எனப் பொருள்படும். ஆயினும், அது தலைமைபற்றிப் பேரறிவையே குறிக்குமல்லது, சிற்றறிவைக் குறியாது. சிற்றறிவை, புல்லறிவு என்றும், பேரறிவை, நல்லறிவு என்றும் கூறுதல் உண்டு.

"நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை கடை" என்னும் திருக்குறளால், ஒன்றை மற்றொன்றாக உணரும் மயக்க உணர்வே புல்லறிவாம் என்பது பெறப்படும்.

ஒன்றும் அறியாத தன்மையாகிய அறியாமையே அஞ்ஞானம் ஆயினும், அந்நிலை அறிய நில்லாமையின், அறிய நிற்கும் மயக்க உணர்வாகிய விபரீத ஞானமே பெரும்பான்மையும், அஞ்ஞானம் என வழங்கப்படும்.

ஆகவே, அவ்விபரீத ஞானத்தை நீக்கியருளும் அருள் மொழிகளே ஞானத் திருமொழிகளாம். அத்தகைய ஞானத் திருமொழிகள் சிலவற்றால் அப்பர் அருளும் ஞானத்தின் தன்மையை ஒருவாறு ஈண்டு உணர முயல்வோம்.

உண்மை உணர்த்தல்:

விபரீத ஞானங்களுள் முதலாவது, கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என நினைத்து, காணப்பட்ட உலகம் ஒன்றே மெய்யானது; இதற்கு வேறாக, `கடவுள் உண்டு; உயிர் உண்டு; இரு வினை உண்டு; மறுபிறப்பு உண்டு' என்றாற்போலக் கூறுவன வெல் லாம் அறியாமையின் காரியமாகும் என அறியும் அறிவேயாகும்.

இந்த விபரீத ஞானத்தை அப்பர் பெருமான் அடியோடு அகற்றி, உண்மையை உணர்த்தியருளும் இடங்கள் பல.

"நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே" (தி. 5 ப. 31. பா. 6) என்று உறுதியாக அருளுகின்றார்.

"மிறைபடும்இவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி

வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்ேச"

(தி. 6. ப. 42. பா. 6)

"பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்

பெரிதென்றுள் சிறுமனத்தால் வேண்டி ஈண்டு

வாசக் குழல்மடவார் போக மென்னும்

வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்ேச"

(தி. 6 ப. 42. பா. 7)

"தினைத்தனைஓர் பொறையிலா உயிர்போங் கூட்டைப்

பொருளென்று மிகவுன்னி மதியால் இந்த

அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும்

ஆங்காரம் தவிர் நெஞ்ேச"

(தி. 6 ப. 42. பா. 5)

என்பனவும் அவரது அருட்டிரு மொழிகள். இவை போன்றவற்றால், உலகத்தையே உறுதியாக நினைந்து பற்றுதல் கூடாது என்பதை உணர்கின்றோம்.

இறையுண்மை:

இனி இறைவனைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,

"அந்திவட் டத்திங்கட் கண்ணிய னையா றமர்ந்துவந் தென்

புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பெனோ

(தி. 4. ப. 98. பா. 1)

என அருளுகின்றார். இன்னும்,

"உள்ளத்தில் ஒளியைக் கண்டதுள்ளமே"

(தி. 5 ப. 98. பா. 3)

என்றும்,

"தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே

தேடிக் கண்டு கொண்டேன்"

(தி. 4. பா. 9. பா. 12)

என்றும்,

"தானலா துலக மில்லை"

(தி. 4. ப. 40. பா. 1)

"தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி

யோங்களுக்கே"

(தி. 4. ப. 94. பா. 1)

என்றும் வருவனபோன்ற திருமொழிகள், கடவுள் உண்மையைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

"பாட அடியார் பரவக் கண்டேன்"

(தி. 6 ப. 77 பா. 1)

என்னும் திருத்தாண்டகத்தால், இறைவன் உண்மை கண்கூடாய் அறி யப்படுகின்றது. இறைவன் உண்மையைச் சித்தாந்த சாத்திரங்கள் காரண காரிய முறையில் வைத்து ஆராய்ந்து அளவை முறையால் அரிதில் நிலைநாட்டுகின்றன.

நாயனார் அதனைத் தமது அநுபவத்தில் இருந்து எளிதில் விளக்குதலைக் காண்கின்றோம்.

வினையுண்மை:

"பண்டு செய்த பழவினை யின்பயன்

கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே"

(தி. 5 ப. 47. பா. 1)

"கொடுவினையார் என்றுங் குறுகா அடி"

(தி. 6 ப. 6 பா. 2)

என்றாற் போலும் பகுதிகள் வினை உண்மையை இனிதே விளக்கும்.

உயிர் முதலியன உண்மை:

"துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோ

டிறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து

பிறப்பன்..."

(தி. 4. ப. 113. பா. 6)

என்னும் திருவிருத்தப் பகுதியால் உடலுக்கு வேறான உயிரும், மறுபிறப்பும், சுவர்க்கமும் இருத்தல் அறியப்படும்.

"புள்ளி ருக்குவே ளூர்அரன்பொற்கழல்

உள்ளி ருக்கும் உணர்ச்சியில் லாதவர்

நள்ளி ருப்பர் நரகக் குழியிலே"

(தி. 5 ப. 79. பா. 1)

என்று நரகம் உண்மையைக் குறிப்பித்தருளினார்.

முப்பொருள் உண்மை:

இனி, ஒரு சாரார், `ஒரு பொருளே உள்ளது; இரண்டாவது பொருள் இல்லை' என விபரீத வாதம் பேசுவர். நாவுக்கரசர்,

"சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்

தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை"

(தி. 6 ப. 67. பா. 2)

என்று அருளுகின்றார். இதனுள் இருள் ஒன்றும், இருள் அடைந்த மனத்தை உடையவர் பலரும், அவ்விருளை நீக்குகின்ற தலைவன் ஒருவனும் ஆகிய முப்பொருள்கள் கூறப்படுதல் தெளிவு.

அம்முப் பொருள்களே பாசம், பசு, பதி எனச் சைவ சித்தாந் தத்துள் கூறப்படுதல் வெளிப்படை இன்னும்.

"பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி" (தி. 6 ப. 55. பா. 6) என்கின்றார். இவையெல்லாம் ஏகான்ம வாதமாகிய விபரீத ஞானத்தை அகற்றி, `உயிர்கள் எண்ணிறந்தன' என்னும் உண்மை ஞானத்தை இனிது பெறுவிப்பன.

நிலையான்மையும் நிலையும்:

மேற்காட்டிய,

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை

(குறள். 331)

என்ற திருவள்ளுவர் திருமொழியின்படி, நிலையாத பொருள்களை நிலைப்பனவாக உணரும் திரிபுணர்ச்சியே எல்லாத் துன்பங்கட்கும் அடிநிலையாகலின், அவற்றது நிலையாமை, நூல்களில் யாண்டும் இனிதெடுத்து விளக்கப்படும்.

ஆயினும், நிலைத்த பொருள் இது என்பது, அவைகளில் இனிது விளங்குதல் இல்லை. திருமுறைகளே அதனை இனிது விளக்குவனவாம். அவற்றுள்ளும், திருநாவுக்கரசர் திருமொழியுள் அவை இரண்டும் நன்கினிது விளங்கக் காணலாம்.

"கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறை(யும்)...

இக்களே பரம்"

(தி. 4 ப. 79. பா. 2)

என்று, யாக்கை, நீர்மேற் குமிழியாதல் விளக்கப்படுகின்றது.

"கால பாசம் பிடித்தெழு தூதுவர்

பால கர்விருத் தர்பழை யாரெனார்"

(தி. 5 ப. 86 பா. 1)

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்

சுடலை சேர்வது சொற்பிர மாணமே

கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்

உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

(தி. 5 ப. 90. பா. 4)

"கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்

இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்"

(தி. 5 ப. 43. பா. 1)

"உற்றார் ஆருளரோ - உயிர் – கொண்டு

போம்பொழுது"

(தி. 4. ப. 9. பா. 10)

"இளமை கைவிட் டகறலும் மூப்பினார்

வளமை போய்ப்பிணி யோடு வருதலால்"

(தி. 5 ப. 97. பா. 28)

என்றாற் போலும் திருமொழிகள், யாக்கையது நிலையின்மை யையும், அதன்கண் இளமை அதனினும் நிலையின்மையையும் நம்மனோர் நெஞ்சில் ஆழப்பதிவித்து, உலகியலில் அழுந்தாதவாறு எடுப்பன. இனி, நிலையாமை மட்டில் நினைவூட்டி, `எல்லாப் பொருளும் நிலையாமையுடையன வேயாகலின், செய்வது என்' என்பார்க்கு ஒன்றும் கூறாதொழியாது, அதனைத் தெளிவுபடுத்தும் திருமொழிகள் நம்மனோரால் நன்குணர்தற்பாலன.

யாவரும் எல்லாப் பொருள்களும் நிலையில்லாதனவாக, சிவபிரான் ஒருவனே என்றும் நிலையுடையன் என்பதனை அறைகூவி அருளிச் செய்கின்றார், ஆளுடைய அரசர்.

"சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில்

திருநின்ற செம்மை உளதே"

(தி. 4. ப. 8. பா. 1)

என்பது அத்திருமொழி. திரு என்பது, நன்மை அல்லது இன்பம் எனப் பொருள்தரும். `அஃது என்றும் நிலைபேறுடையதாய் நிற்றல், சிவபிரானிடத்தன்றிப் பிறர் எவரிடத்தேனும் உண்டோ? சொல்மின்' என்கின்றார் நாவரசர்.

சிவபிரானையன்றிப் பிறிதொரு பொருளும் நிலையுடையன அல்ல என்னும் தெளிவான உணர்வே சிவஞானம் எனப்படுவது. அத னையே நமக்கு அவர் பலவாற்றானும் அறிவுறுத்த முயல்கின்றார்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்

ஆறு கோடி நாராயண ரங்ஙனே

ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்

ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.

(தி. 5 ப. 100. பா. 3)

"...வந்த நஞ்சமுது செய்தானை, அமுதம் உண்ட மற்ற

மரர் உலந்தாலும் உலவா தானை"

(தி. 6. ப. 50. பா. 5)

"சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே"

(தி. 6. ப. 99. பா. 2)

என்றற் றொடக்கத்தன காண்க.

உலக இன்பத்தின் நிலை:

நிலையாத பொருள்களை நிலையுடையன என்று பற்றுதலால் இன்பம் உளது போலத் தோன்றினும், உண்மையில் விளைவது பெருந் துன்பமே என்பதனை நாவுக்கரசர்,

"தளைத்துவைத் துலையை ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற ஆமைபோல்"

(தி. 4 ப. 79. பா. 6)

என்ற அரிய உவமையால் அருளிச் செய்தார். "ஆமையை அட்டு உண்பவர், அதனை உலை நீரில் இட்டு அடுப்பில் ஏற்றி வைத்த பொழுது, அவ் ஆமை, தனக்கு நல்ல தண்ணீர் கிடைத்தது என்று எண்ணி அதில் மூழ்கிக் களிக்கின்ற இன்பம் போன்றதே. உலகில் ஐம்புல நுகர்சச்ியால் வரும் இன்பம்" என்னும் இவ் அரிய உவமை, உலகியலின் உண்மை நிலையை நமக்கு எத்துணைத் தெளிவாக உணர்த்துகின்றது.

இறை இன்பத்தின் (சிவானந்தத்தின்) நிலை:
இனி, இறைவன் திருவடி இன்பம் எத்துணைச் சிறப்புடையதாய் நிற்கின்றது என்பதை அவர், குற்றம் அற்ற நல்ல வீணையின் இசையும், மாலைக் காலத்தில் எழுகின்ற நிலவின் ஒளியும், மெல்லென வீசுகின்ற தென்றற் காற்றும் வண்டுகள் ஒலிக்கின்ற தாமரைத் தடாகமும் ஆகிய இவை எல்லாம், இளவேனிற் காலத்தில் ஒருங்கு சேர்ந்தது போன்றதாய் உள்ளது என விளக்கும் அரிய திருப்பாடல்,

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

(தி. 5 ப. 90. பா. 1)

என்பதாகும். இன்னும்,

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்

பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்

தனிமு டிகவித்தாளும் அரசினும்

இனியன் தன்அடைந் தார்க்கிடை மருதனே.

(தி. 5 ப. 14. பா. 10)

என வகுத்து அருளுகின்றார்.

இறை இன்பம், உலகில் உள்ள எக்கனியின் சுவையும் உயி ரோவியம் போல மிக்க அழகினையுடைய மங்கை நல்லாரது மெய்யூற்றமும், உலக முழுதும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆளும் பேரரசாட்சியும் துச்சமென ஒதுக்கத் தக்கவாறு எல்லையற்ற விளையுமாம் அவன் அடியார்க்கு. அதனை அனைவரும் அடைதல் வேண்டும் என்பது நாவரசரது திருவுள்ளம். அதனால்,

"மனிதர்காள் இங்கே வம்ஒன்று சொல்லுகேன்

கனிதந் தாற்கனி உண்ணவும் வல்லிரே"

என அழைத்து வினாவி,

"புனிதன் பொற்கழல் ஈசன் எனுங்கனி

இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே"

(தி. 5 ப. 91. பா. 7)

என்று அறிவிக்கின்றார். மற்றும் இறைவனை அவர், `தேன்' என்றும், `பால்' என்றும், `கரும்பின் தேறல்' என்றும் `அமுதம்' என்றும் பலவாறு உள்ளம் அண்ணித்து ஓதும் இடங்கள் எண்ணில.

இறைபணி:

இனி, துன்பத்திற்கு நிலைக்களமாகிய பிறவியினின்றும் நீங்கி, இன்பக் கடலாகிய இறைவனை அடைதல், அவன் ணியினாலே கிடைப்பதாகும். வேறொரு வழியும் அதற்கு இல்லை என்பதைத் திரு நாவுக்கரசர் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உரைத்தருளுகின்றார்.

இறைவன் பணியே, சைவசித்தாந்த சாத்திரத்துள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகையாக வகுத்துணர்த்தப் படுகின்ற. இந்த நான்கும் ஞானத்தின் படிமுறையான வளர்ச்சி நிலைகளே என்பதைத் தாயுமான அடிகள்,

"விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்

அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே"

என்று, அழகான உவமையில் வைத்து அருளிச் செய்தார்.

சரியை முதலிய நான்கும் இறைவனுக்குச் செய்யும் வழி பாடுகளே என்பதைச் சிவஞான சுவாமிகள் தமது சிவஞான சித்தி உரையுள், "புறத் தொழில் மாத்திரையானே உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு, `சரியை' எனப்படும் என்றும்,"

"புறத்தொழில் அகத்தொழில் என்னும் இரண்டானும் அருவுரு வத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு, `கிரியை' எனப் படும்" என்றும், "அகத்தொழில் மாத்திரையானே அருவத்திருமேனியை நோக் கிச் செய்யும் வழிபாடு, `யோகம்' எனப்படும்" என்றும்,

"புறத்தொழில், அகத்தொழில் இரண்டும் இன்றி, அறிவுத் தொழில் மாத்திரையானே, அம்மூன்று திருமேனிக்கும் மேலாய் அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாய் நிறைந்து நிற்கின்ற சிவபிரானிடத்தில் செய்யும் வழிபாடு, `ஞானம்' எனப்படும் என்றும்" இனிது விளக்கியுள்ளார். எனவே, பிற பிற சமய ஆசிரியர்கள் வேறு எவ்வெவற்றையோ, ஞானம் என்று அறிவிப்பது போல் அல்லாமல், சைவ சமய ஆசாரி யர்கள் சரியை முதலிய நான்கையுமே, ஞானம் என உபதேசித்தரு ளுவார்கள் என்பதை நன்குணரலாம். அந்நிலை திருநாவுக்கரசரது திருமொழிகளில் மிக விளக்கமாக இருத்தல் காணலாம்.

`திருஅங்கமாலை' என்னும் திருப்பதிகத்துள், தலைமுதலாகக் கால்வரையில் உள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக, "தலையே, நீ வணங்காய்," "கண்காள், காண்மின்களோ," "செவிகாள், கேண்மின்களோ," "மூக்கே, நீ முரலாய்," "வாயே, வாழ்த்து கண்டாய்," "நெஞ்சே, நீ நினையாய்," "கைகாள், கூப்பித் தொழீர்," "கால்களாற் பயன் என்" என்று இவ்வாறு விளித்து, உங்களுக்கு உரிய இறைவன் பணியை நீங்கள் செய்யுங்கள். இல்லாவிட்டால், உங்களால் யாதும் பயன் இல்லை என்று அறுதியிட்டு அருளும் அருளிச் செயல், மிகமிக நாம் நம் உள்ளத்தில் கொள்ளத்தக்கது.

இத்திருப்பதிகத்தில் சரியையும் கிரியையும் வெளிப்படையாக விளங்குதல் காண்லாம். நுனித்து நோக்கினால், "நெஞ்சே நீ நினை யாய்" என்பதில் யோகமும் அடங்கியிருத்தல் புலனாகும். `சரியை, கிரியை' என்னும் இரண்டையும், திருக்களிற்றுப்படியார், `சிவதன்மம்' என ஒன்றாகக் கூறுகின்றது. அதனை இத்திருப்பதிகம் நன்கு வலி யுறுத்துகின்றது.

இன்னும், "ஆக்கையாற் பயன் என், அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்வாக்கையாற் பயன் என்" என்பது, "மனிதப் பிறப்பினால் அடையும் பயன், சிவபழிபாடு ஆகிய சரியை, கிரியை யோகங்களைச் செய்து சிவஞானம் முதிரப் பெறுவதே" என்பதைத் தெள்ளத் தெளிய விளக்குகின்றது. எனவே,

"மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக்காயம்

ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ"

என்ற (சிவஞானசித்தி சூ.2.92) செய்யுள், இதனையே விளக் குவதாதல் அறியலாம்.

சரியை முதலிய நான்கும் இறைவன் பணியே என்பதை மேலே காட்டினோம்.

சிவஞான சித்தி (சூ.12.5)யும்

"ஞானயோ கக்கிரியா சரியை நாலும் நாதன்றன் பணி"

என்கின்றது. அதனால், இங்கு, "அரன் பணி" என்றது சரியை முதலிய நான்கையுமே குறிக்கும் என்பது பெறப்படும். ஞானத்தையும், "இறை வன் பணி" என்றும், `ஞானமே, சரியை முதலிய நான்கு நிலைகளாய் நிகழ்கின்றது' என்றும் சைவ சமயம் கொண்டுள்ளமையால்தான், ஞான நெறியில் நிற்போர் அனைவரையும், சைவ சமயம், `திருத்தொண்டர்' எனக் குறிப்பிடுகின்றது.

ஆகவே, ஆளுடைய நம்பிகள் அருளிச் செய்த திருத்தொண்டத் தொகையினாலும், அதன்வகையும் விரியுமாகிய, `திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணம்' என்பவற்றாலும் உணர்த் தப்பட்ட நாயன்மார் அனைவரும் ஞானநெறியில் நின்றவர்களே என்பது தெளிவு.

சரியை:

புறத்தொழில் மாத்திரையானே சிவபிரானது உருவத் திரு மேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, திருக்கோயிலுள் இருக் கும் திருமேனிகளையே சிவபெருமானாகக் கண்டு, அக் கோயிலில் திருவிலகிடுதல், திருமெழுக்குச் சாத்தல், திருவிளக்கிடுதல், திருநந்த வனம் வைத்தல், பூக் கொய்து கொடுத்தல், பூமாலை கட்டித் தருதல், திருவுருவங்களை வணங்கிச் சிவபிரானது புகழ்ப் பாடலைப் பாடுதல், ஆடுதல், சிவனடியார்களைக் கண்டால், அடியேன் செய்ய வேண்டிய பணி யாது? எனக் கேட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்தல் முதலிய பலவகைப் புறத்தொண்டாகும். ஆதலின், அதனைத் திருநா வுக்கரசரே பெரிதும் எடுத்தோதியுள்ளார் என்பது நன்கறியப்பட்டது.

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

நித்தலும்எம் பிரானுடைய கோயில்புக்குப்

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்

சங்கரா சயபோற்றி போற்றி என்றும்

அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும்

ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

(தி. 6 ப. 31. பா. 3)

எவரேனும் தாமாக இலாடத் திட்ட

திருநூறும் சாதனமும் கண்டால் உள்கி

உவராதே அவரவரைக் கண்ட போதே

உகந்தடிமைத் திறம் நினைத்தங் குவந்து நோக்கி

இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி

இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்

கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

(தி. 6 ப. 61. பா. 3)

என்னும் திருத்தாண்டகங்கள், சரியைத் தொண்டினை இனிதெடுத்து விளக்குவனவாம். இவைகள் ஆங்காங்குப் பல இடங்களில் குறிக்கப் படுவதையும் நாம் நாவரசர் திருமுறையில் காணுதல் கூடும்.

கிரியை:

இனி, புறத்தொழில், அகத்தொழில் என்னும் இரண்டானும் சிவபிரானது அருஉருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, பூவும் நீரும் ஆனைந்தும் புகையும் ஒளியும் திரு வமுதும் முதலிய பொருள்களைச் சேர்த்துக் கொண்டு ஐவகைச் சுத்திகளைச் செய்து, இலிங்கத்தில் அகத்தும் புறத்தும் மந்திரங்களால் ஆசனம் முதலியவைகளைக் கண்டு, சிவபிரானை வருவித்தல் (ஆவாகனம்) முதலியவைகளைச் செய்து, நீராடுதல், ஒற்றாடை சாத்துதல் முதலாகத் திருமேனியைத் தீண்டிச் செய்யும் பணிவிடைகளாகிய அணுக்கத் தொண்டாகும். இதனை,

"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்"

(தி. 4. ப. 3. பா. 1)

"போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன்"

(தி.4 ப.3 பா.1)

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி

அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை உள்ளே வைத்து

விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்

கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே.

(தி. 4. ப. 31. பா. 4)

நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி

முகமெலாங் கண்ணீர் வார முன்பணிந் தேத்துந் தொண்டர்

அகமலால்கோயிலில்லை ஐயன்ஐ யாற னார்க்கே

(தி. 4. ப. 40. பா. 8)

நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த

பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா

என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையும் எல்லம்

அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே

(தி. 4. ப. 92. பா. 10)

என்பன முதலிய திருப்பாடல்கள் விளக்கும்.

காயமே யோயி லாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே துய்மை யாக மனமணி இலிங்க மாக

நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டிப்

பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே.

(தி. 4. ப. 76. பா. 4)

என்னும் திருப்பாடல், அகப் பூசையைச் சிறப்பாக விளக்குவது. அகப் பூசை புறப்பூசைகளில் அட்ட புட்பம் (எட்டுப் பூக்கள்) சாத்துதல் என்பது சிறப்பாகச் சொல்லப்படுவது. அதனை ஒரு திருப்பதிகம் முழுவதும் அப்பர் பெருமானார் அருளியுள்ளார்.

"எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி

மட்ட லரிடு வார்வினை மாயுமால்"

(தி. 5 ப. 54 பா. 1)

எனத் தொடங்குவது அத்திருப்பதிகம். ஆனைந்து (பஞ்ச கௌவியம்) ஆடுவதில் சிவபிரான் மிக்க விருப்பம் உடையவன் என்பதை நாயனார் பல இடங்களில் எடுத்தோதி அருளுவார்.

"ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்"

(தி. 4 ப. 11. பா. 2)

"பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானே"

(தி. 4. ப. 63. பா. 9)

"பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்

ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்

மேவ ராய்மிக வும்மகிழ்ந்துள்குமின்"

(தி. 5 ப. 99. பா. 1)

"ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி"

(தி. 6 ப. 57. பா. 1)

என்பவற்றை எடுத்துக்காட்டாகக் காணலாம். இன்னும்,

"நெய்யினொடு பால்இளநீர் ஆடி னான்காண்"

(தி. 6 ப. 52. பா. 5)

"நறப்படுபூ மலர்தூபம் தீபம் நல்ல

நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்

சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில்

திருமூலட் டானத்தெம் செல்வன் தானே"

(தி. 6 ப. 30. பா. 5)

என்றற் றொடக்கத்துத் திருப்பாடல்கள், கிரியையாகிய வழிபாட்டினை நன்கு வலியுறுத்துவனவாம்.

இங்ஙனம் பூவும் நீரும் பிறவுங் கொண்டு சிவபெருமானைப் பூசிக்குங்கால், இன்றியமையாது வேண்டப்படுவது, உள்ளத்துள் இருக்கும் அன்பே என்பதையும், `அவ்வன்பு இல்லாது புறத்தோற்றத் திற்கு மாத்திரம் பூசிப்பவரது பூசையைச் சிவபிரான் எள்ளி நகையாடி, ஆங்கு வருவதற்கு அருவருப்புக் கொண்டு அப்பாலே ஒதுங்கி நிற்கின்றான்' என்பதையும் நாயனார் அருளிச் செய்திருத்தல் பெரிதும் போற்றி உணர்தற்குரியது.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுகளே

புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;

பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

(தி. 5 ப. 90.பா. 9)

என்னும் திருக்குறுந்தொகைப் பாடலைக் காண்க.

`சரியையில் நின்று வழிபடுவோர்க்கச் சிவபெருமான் இலிங்கத் தில் மறைத்து நின்று அருள் செய்கின்றான்' எனவும், `கிரியையில் நின்று வழிபடுவார்க்கு, விறகில் மறைந்து நிற்கின்ற நெருப்பும், பாலில் மறைந்து நிற்கின்ற நெய்யும் அவைகளைக் கடையுங்காலத்து வெளிப்படுதல் போல, மந்திர நியாசங்களைச் செய்யுங்கால் அவற்றில் வெளிப்பட்டு நின்று அருளுவன்' எனவும் சாத்திரம் கூறும். அதனை,

விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

(தி. 5 ப. 90. பா. 10)

என்னும் திருக்குறுந்தொகை பாடலே நமக்கு அருளுகின்றது.

யோகம்:

"உயிரா வணம்இருந் துற்று நோக்கி

உள்ளக் கிழியின் உருவெழுதி

உயிர்ஆ வணம்செய்திட் டுன்கைத் தந்தால்

உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி"

(தி. 6 ப. 25. பா. 1)

என்னும் திருத்தாண்டகம், ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, மனத்தை ஓடாது நிறுத்தி, உள்ளமாகிய கிழியில் சிவபிரான் உருவத்தை எழுதி, அதிலே ஒன்றியிருக்கும் அகத்தொழிலாகிய யோகமுறையை அறி வுறுத்துகின்றது.

"ஞானி நாலினுக்கும் உரியன்" (சிவஞானசித்தி. சூ. 12.5) என்பதனால், சரியை முதலிய மூன்றும் சிவப்பேற்றை அடைய விரும்புவார்க்கு அதனை அடையும் சாதனமாய் மட்டும் இல்லாமல், ஞானத்தாற் சிவனைப்பெற்றார்க்கும், அதனை இழக்காதிருத்தற்கும் சாதனமாம். ஆகையால், மேற்காட்டியவை எல்லாம் ஒவ்வொரு சாரார்க்கு மட்டும் இன்றி, எல்லோருக்குமேயாம் என்க.

சந்தியாநுட்டானம்:

சரியை முதலியவற்றில் நிற்பவர்கள் சமய தீக்கை முதலியன பெற்றுக் காலை நண்பகல் மாலைகளில் சந்தியானுட்டானங்கள் செய் யுங்கால், அவ்வனுட்டானங்களைச் சிவபிரான் சந்தித்தெய்வமாய் நின்று ஏற்று அவர்களக்கு அருள்புரிதலை,

புரிகாலே நேசம் செய்ய இருந்தபுண் டரீகத் தாரும்

எரிகாலே மூன்று மாகி இமையவர் தொழநின் றாரும்

தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று

திரிகாலங் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே

(தி. 4. ப. 29. பா. 7)

என்று, செல்வேந்தர் குறித்தருளுகின்றார்.

ஞானம்:
இனி, சரியை முதலிய நான்குமே ஒருவகையில் ஞானமாயினும், சிவப்பேற்றை நேரே அடைவிப்பதாய், `ஞானம்' எனச் சிறந்தெடுத்துப் பேசப்படுவது, `பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருளின் இயல்புகளை உள்ளவாறு உணர்தலேயாகும். இதுவே, `தத்துவஞானம்,' `ஆத்தும ஞானம்' என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படுவது. இதனையே நாம் சாத்திரங்களில் விரிவாகக் காண்கின்றோம்.

பொருள் வகை:

தத்துவ சாத்திரங்களில் முதற்கண் பொருள் உண்மையும், பின் னர் அப்பொருள்களின் இயல்பும் கூறப்படும். இவை இரண்டு கருத்து களில் சமயங்கள் தம்முள் மாறுபடும்.

உலகாயுதம், `உலகமே உண்டு; ஏனைய, உயிர் கடவுள் முதலிய எவையும் இல்லை' என்று கூறும்.

மீமாஞ்சகம், சாங்கியம் முதலியன, `உலகமும் உயிரும் உண்டு: கடவுள் இல்லை' என்று கூறும்.

ஏகான்மவாதம், `கடவுள் ஒன்றே உண்டு; ஏனைய உலகம் உயிர் எதுவும் இல்லை' என்று கூறும்.

இவைகள் பிறகொள்கையை மறுத்துத் தம் கொள்கையை நிலைநாட்டுதற்குக் கூறும் வாதங்களால் மயங்காது, `பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களும் என்றும் உள்ளன' என்று உணர்வதே மெய்யறிவு.

அதனை, நாவுக்கரசர் தமது அநுபவத்தினின்றும் எடுத்தருளிச் செய்தலை மேற்காட்டினோம்.

இறையியல்பு:

இனி முப்பொருளின் தன்மைகளை வேறு வேறு வகையாகக் கூறும் சமயங்களும் உள்ளன. அவற்றுள், `கடவுளுக்கும் பிறப்பு உண்டு' என்று கூறுவது பாஞ்சாரத்திரம்.

ஞான நோக்கு உடையார்க்கு, இழிவுகளில் எல்லாம் பேரிழி வாகத் தோன்றுவது உடம்பும், துன்பங்களில் எல்லாம் பெருந் துன்பமாகத் தோன்றுவது பிறப்பும், அவை நீங்குதற்கு வாயிலாக அவர் காண்பது, அவ்விழிவும் துன்பமும் சிறிதும் இல்லாது, பெருந்தூய்மையும், பேரின்பமுமே வடிவாய் உள்ள இறைவனை அடைதலுமேயாய் இருக்க, அவை எல்லாவற்றையும் மறந்து, அப்பேரிழிவும் பெருந்துன்பமும் கடவுளுக்கும் உள்ளன என்று கூறும் விபரீத ஞானத்தை, அப்பரடிகள்,

"செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று

பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ"

(தி. 5 ப. 100 பா. 2)

என்று மிக வன்மையாகக் கடிந்தருளுகின்றார். கடவுளுக்கும் அக் குறைபாடுள்ளனவாக, மாயோன் தனது நூலுட் கூறினானாயின், அவ னது எத்துணையோ மாயங்களில் அதுவும் ஒன்றென்று கொள்ளல் வேண்டும் என்பதை,

தாயி னும்நல்ல சங்கர னுக்கன்ப

ராய வுள்ளத் தமுதருந் தப்பெறார்

பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய

மாயன் மாயத்துட் பட்ட மனத்தரே.

(தி. 5. ப. 100. பா. 9)

என விளக்கியருளினார். சிவபிரானது பிறப்பிறப்பில்லாத நிலையை அப்பர் பெருமான் பலவாறு எடுத்தோதிப் புகழ்தலை, அவரது திரு முறையிற்பல இடங்களில் காணலாம்.

இனி, புத்த சமண மதங்கள், பந்தத்துள் அகப்பட்டிருந்தது முத லில் வீடு பெற்ற ஒருவன்தான், கடவுள் எனப்படுகின்றான் எனக் கூறும். இக்கொள்கையில் சமண சமயம் மிகச் சிறந்து நிற்பது. அது பற்றி, கடவுளை, பொறிவாயில் ஐந்தவித்தான் என்று கூறினமையால், திருவள்ளுவரும் சமணரே எனவாதிப்பாரும் உளர்.

இறைவன் எஞ்ஞான்றும் பந்தத்துட்படாதவன் என்று கூறும் சைவசமயம். அதனை இரு வகையில் வைத்துக் காட்டும்; ஒன்று இயல்பாகவே பாசங்கள் இல்லாத நிலை; மற்றொன்று பாசங் களையுடைய உயிர்களோடும், பாசங்களோடும் இரண்டறக் கலந்து நிற்பினும், அவற்றின் தன்மையால் தன் தன்மை சிறிதும் மாறாத நிலை.

இவற்றுள், முதலில் உள்ள நிலையை, நாயனார், தூயன், நின் மலன், விமலன், அமலன் முதலிய சொற்களாலும், பிறவாற்றாலும் விளக்கி, இரண்டாவது உள்ள நிலையை,

"துறவாதே கட்டறுத்த சோதி யானை"

(தி. 6. ப. 11. பா. 1)

"நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும் வென்றானை"

(தி. 6 ப. 50. பா. 3)

என்றாற்போலும் திருமொழிகளால் விளக்கியருள்வர். இரண்டாவதாகக் குறிக்கப்பட்ட நிலையையே, திருவள்ளுவ நாயனார், "பொறிவாயில் ஐந்தவித்தான்" எனக் குறித்தார். ஆதலின், அது பற்றி அவர் சமணராதல் இல்லை.

அன்றியும், முதலிற்குறித்த இயல்பாகவே பாசங்களின் நீங்கு தலை, "வாலறிவன்" என்றும், "வேண்டுதல் வேண்டாமை இலான்" என்றும் அவர் முன்பே கூறிப் போந்தமையால், பின்னர் வந்து கூறிய, "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்பது, அவரைச் சமணராக்க முயல் வோர்க்கு ஒரு பயனையும் தராது.

இனி, சூரியன் அக்கினி முதலிய பொருள்களையோ, அவற் றிற்கு முதல்வராய தேவர்களையோ கடவுளர் என்றும், முதற் கடவுள் என்றும் கூறும் பல தெய்வக் கொள்கை, பிற தெய்வக் கொள்கை ஆகிய அனைத்தையும் நாவுக்கரசர் விலக்கி, சிவபெருமானது முழு முதற் றன்மையை இனிதுணர்த்துகின்றார்.

"அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்

அருக்க னாவான் அரனுரு வல்லனோ"

(தி. 5 ப. 100. பா. 8)

"எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன

துருவ ருக்கம தாவ துணர்கிலார்"

(தி. 5 ப. 100. பா. 7)

இன்னும், இலிங்க புராணத் திருக்குறுந்தொகை, `தொழற் பாலதே' என்னும் திருக்குறுந்தொகை முதலியவற்றால் சிவபிரானது முதன்மையை நாயனார் பலவாற்றாலும் விளக்கியுள்ளார்.

"மற்றெல்லாரையும் விடுத்துத் தியானிக்கப்படத் தக்கவன் சிவன் ஒருவனே" என்னும் அதர்வசிகோப நிடதத்தின் பொருள் `தொழிற் பாலதே' என்னும் திருக்குறுந்தொகையில் அமைந்துள்ளது.

`சிவபிரான், முழுமுதல் தன்மையாகிய பேராற்றலேயன்றிப் பெருங்கருணையையும் உடையவன்' என்பதை விளக்க, அவன் அமரர்க்காக நஞ்சுண்டமை, திரிபுரம் எரித்தமை, மார்க்கண்டேயருக் காக காலனை உதைத்தமை, அருச்சுனனைக் காக்க வேடனாகச் சென்றமை முதலிய வரலாறுகளைப் பலவிடத்தும் பாராட்டி அருளிச் செய்கின்றார்.

இன்னும், அவன் உயிர்கள் செய்யும் பிழைக்காக முன்பு சிறிது ஒறுத்தலைச் செய்யினும், பின்பு அப்பிழையை உணர்ந்து தன்னை அடையின், மனம் இரங்கி அருளுதலைக் குறிக்க. இராவணனுக்கு அருள்செய்த வரலாற்றை ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதிப் பாடல்களிலும் அருளிச் செய்வார். "ஆறாத ஆனந்தத் தடியார் செய்த அனாசாரம் பொறுத்தருளி அவர்மேல் என்றும் - சீறாத பெருமான்" (தி. 6. ப. 80. பா. 5) என்பதைவிடச் சிவபெருமானது கருணைத் திறத்தை விளக்கும் சிறந்த தொடர் வேண்டாவன்றோ!

சிவபிரானுடைய பெருமைகள் பலவற்றையும் பல்லாற்றானும் விரித்தோதும் சிவபுராணங்கள் சிறப்புடையன என்பதை வலியுறுத் துதற்கு, தசபுராணத் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். இலிங்க புராணத்திற்கு மட்டும் ஒரு தனித்திருப்பதிகமே ஐந்தாந் திருமுறையில் உள்ளது என்பதை, மேற்கூறினோம்.

இனி, இறைவன் உயிர்களோடும் உலகத்தோடும் வேறறக் கலந்து நிற்றலை, அத்துவித சம்பந்தம் என்றும், `அஃது ஒன்றாய் வேறாய் உடனாய் இருத்தல்' என்றும் சாத்திரம் கூறும்.

ஒன்றாய் இருக்கும் நிலை பெரும்பான்மையாகப் பலவிடத்தும் கூறப்படுதல் காணலாம். சிறப்பாக, நின்ற திருத்தாண்டகம் அதனையே விரித்தோதுகின்றது. இவ் வொன்றாம் நிலையை, `அட்ட மூர்த்தம்' எனக் கொண்டு போற்றி வருதல், சைவ சமயத்தின் தொன்றுதொட்ட மரபு. அதனை நின்ற திருத்தாண்டகத்தின் தொடக்கத்தே,

"இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி

இயமான னாய்எறியுங் காற்று மாகி

அருநிலைய திங்களாய் ஞாயி றாகி

ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகி"

(தி. 6 ப. 94. பா. 1)

என இனிது விளங்க அருளிச் செய்தார். வேறாய் இருத்தலை,

"விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத

விதியல்லர் விண்ணும் நிலனும்

திரிதரு வாயு வல்லர் செறுதீயு மல்லர்

தெளிநீரு மல்லர்"

(தி. 4. ப. 8. பா. 2)

"மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை

மலையல்லை கடலல்லை வாயு வல்லை

எண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை

இரவல்லை பகலல்லை யாவு மல்லை"

(தி. 6. ப. 45. பா. 9)

போன்றவற்றில் அருளியிருத்தல் காணலாம். உடனாய் இருத்தலை,

"அசிரிப்பெனும் அருந்தவத்தால் ஆன்மாவி னிடம தாகி

உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார் ஒற்றியூ ருடைய கோவே"

(தி. 4 ப. 45. பா. 2)

"................ நினைக்குமா நினைக்கின் றார்க்

குணர்வினோ டிருப்பர் போலும் ஒற்றியூ டைய கோவே"

(தி. 4. ப. 45. பா. 7)

"தானும் யானும் ஆகின்ற தன்மையனை"

(தி. 6 ப. 98. பா.7)

என்றாற் போல்வனவற்றால் உணர வைத்தருள்வார்.

`இறைவன் உலகுயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருந்து செய்வன ஐந்தொழில்கள்' என்பதும், `அவை, `படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்' என்பன' என்பதும் சைவத்தின் கொள்கைகள்.

அவற்றுள், யாவரும் அறிந்த நிலையில் உள்ள, படைத்தல் முதலிய மூன்று தொழில்கள் பெரும்பான்மையாக யாண்டும் கூறப் படும். அதனை, நாவுக்கரசர்,

"மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்

மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்"

(தி. 5 ப. 89. பா. 3)

"மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை

முடியாதே முதல்நடுவு முடிவா னானை"

(தி. 6 ப. 74. பா. 3)

"நாராணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்"

(தி. 6 ப. 8. பா. 3)

என்றாற்போல் வெளியிடுபவர்

இறைவனது தொழில்களை மூன்றாகக் கூறுமிடத்து, மறைத்தல் காத்தலிலும், அருளல் அழித்தலிலும் அடங்கி நிற்கும் என்றலே சிவநெறி மரபு. இனி, ஐந்தொழில்களில், மறைப்பு என்பது, முத்தொழிலின் வேறாய் நிகழ்வது அன்று. அவற்றிற்கு அடிநிலையாய் நிற்பதே, அஃது உயிர்களைப் பிறவியிற் செலுத்தி நிற்பதாகலின், அதுவே உயிர்கட்குப் பந்தமாம்.

அருளல் என்பது, முத்தொழில்கட்கு வேறாயினும், அஃது அம்முத்தொழில்போல ஏனையவற்றோடு ஒப்ப நின்று மாறிமாறி வாராது. அவற்றிற்கு மேலாய் நிலைத்து நிற்கும்; எனவே, அஃது உயிர்களைப் பந்தத்தினின்றும் நீக்குவதாகலின், அதுவே உயிர்கட்கு வீடாம்.

ஆகவே, மறைத்தலும், அருளலும் முறையே, பந்தம் எனவும், வீடு எனவும் வழங்கப்படும். இதனை,

"பந்தமாய் வீடு மாகிப் பரம்பர மாகிநின்று

சிந்தையுள் தேறல்போலும் திருச்சோற்றுத் துறையனாரே"

(தி. 4. ப. 41. பா. 5)

என்றாற்போல்வனவற்றால் அருளுவர் நாயனார். இதனால், ஐந் தொழில்களும் ஒருவாற்றால், பந்தம், வீடு என இரண்டாய் அடங் குதலை அறியலாம்.

இறைவன் செயல் முறை:

தனது தொழில்கள் அனைத்தையும் நம்மைப்போலக் கரணத்தாற் செய்யாது, சங்கற்ப (நினைவு) மாத்திரையாற் செய்தலே இறைவனுக் குள்ள தனிச்சிறப்பு. எல்லாவற்றையும் சங்கற்ப மாத்திரத்தாற் செய் தாலே அவனுக்கு நம்மைப் போன்று, தொழில்களால் வரும் வேறு பாடுகள் இலவாயின. இதனை நாயனார்,

"நோக்காதே யெவ்வளவும் நோக்கி னானை

........

ஆக்காதே யாதொன்றும் ஆக்கி னானை"

(தி. ப. 11. பா. 5)

என்று அருளுதலால் அறியலாம்.

இறைவன் வடிவம்:

உயிர் உடம்பை இயக்குதற்கு வேறோர் உடம்பு வேண்டாமை போல, தனது திருமேனியாகிய உயிர் உலகங்களை இயக்குதற்கு இறைவனுக்கு வேறோர் உடம்பு வேண்டுவதில்லையாயினும், உயிர்களது மனமொழி மெய்கட்குத் தான் அகப்படுதற் பொருட்டுப் பல அருட்டிருமேனிகள் கொண்டு நிற்பன் இறைவன் என்பதனை,

"அரிதரு கண்ணி யாளை ஒருபாக மாக

அருண்கார ணத்தில் வருவார்"

(தி. 4. ப. 8. பா. 2)

என்னும் திருமொழியால் நன்குணர்கின்றோம். அவ்வருட்டிரு மேனிகள்தாம் எண்ணற்றனவாதலே, திருப்பதிகங்களுள் எவ்விடத் தும் எல்லையின்றி விளங்கும்.

`இறைவன் திருமேனிகள் பலவும் பிறரால் படைத்துக் கொடுக் கப்பட்டு அவனைப் பந்தப்படுத்தும் மாயா சரீரங்களாகாது, அவன் தனது இச்சையால் விரும்பியபடி கொள்ளும் அருட்டிருமேனிகளே' என்பதனையும், அத்திருமேனிகளின் அருமை பெருமைகளையும் சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரத்தில் தடை விடைகளால் மிகத் தெளிவாக விளக்கும்.

உணர்த்தும் முறைமை:

`உயிர்கள் இறைவன் உணர்த்தினாலன்றி உணரமாட்டா' என்பதையும், `அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பதையும், "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே" என்பது முதலாகத் தொடங்கி, "காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" என்று, வகுத்தருளினார் நாயனார். (தி. 6 ப. 95. பா. 3)

"சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை யடிமை செய்ய

எந்தைநீ யருளிச் செய்யாய் யாதுநான் செய்வ தென்னே"

(தி. 4. ப. 23. பா. 4)

என்பதும் அப்பொருளுடையதே.

தத்துவங்கள்:

உயிர்களின் பொருட்டு மாயையினின்றும் இறைவன்படைத்துக் கொடுப்பன. தத்துவங்களும் அவற்றின் காரியங்களாகிய தாத்துவிகங் களுமாகும்.

அவை அனைத்தும் தொண்ணூற்றாறு என்னும் தொகையுடை யன. அவை நாவரசர் திருமொழியிற் பல இடங்களிற் பலவாறு கூறப்படுதலைக் காணலாம்.

"திருத்தியாங் குரம்பை தன்னில்

தொண்ணூற்றங் கறுவர் நின்று"

(தி. 4. ப. 25. பா. 4)

"முப்பதும் முப்பத் தாறும் முப்பதும் இடுகு ரம்பை"

(தி.4. ப.54. பா.3)

"எண்பதும் பத்தும் ஆறும் என்னுளே இருந்து மன்னி"

(தி.4. ப.70. பா.3)

என்றாற்போல்வன, தத்துவங்களையே குறித்தன. ஆன்ம தத்துவம் இருபத்து நான்குடன் புருட தத்துவம் கூடத் தத்துவம் இருபத்தைந் தாம் காலம் முதலிய வித்தியா தத்துவங்களைப் புருடதத்துவம் என ஒன்றாக வழங்குவர் என்று கொள்க.

சுத்த தத்துவங்கள் உயிர்கட்கு உடம்பு ஆகாமையின், அதனை, நீக்கி, தத்துவம் முப்பத்தொன்று என்றல் உண்டு.

தத்துவம் முப்பத்தாறனுள், தூல பூதங்கள் ஐந்தும், ஞானேந் திரியங்களின் புலங்கள் ஐந்தும் யாவர்க்கும் இனிது விளங்குதல் பற்றி யாண்டும் சிறந்தெடுத்துக் கூறப்படும்.

அந்தக் கரணங்கள் நான்கும், மனம் என ஒன்றாக அடக்கிக் கூறப்படும். இவைகள் உயிருக்கு இட்ட தளைகளாய் நின்று துன்புறுத் தும் முறையை அப்பர் பலப்பல வகையில் பாடியருளுவார். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுக் கூறுதல் இயல்வதன்று.

தூல புதங்கள் ஐந்தின் குணங்களை,

"மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை

வயங்கெரியில் மூன்றைமா ருதத்திரண்டை

விண்ணதனில் ஒன்றை...

(தி. 6. ப. 60. பா. 3)

என அருளக் காண்கின்றோம்.

தத்துவ நீக்கம்:

இத்தத்துவக் கூட்டங்கள் நீங்கப் பெற்றால், ஆன்மா இறைவன் திருவடியையே தனக்குப் புகலிடமாக அடையும் என்பதனை, கயிறுகள் யாவும் அறப்பெற்று ஊசல் தரையையே சென்று அடைதலாகிய உவமையில் வைத்து, நன்கு விளக்கியுள்ளார்.

உறுகயி றுசல்போல ஒன்றுவிட் டொன்று பற்றி

மறுகயி றூசல்போல வந்துவந் துலவும் நெஞ்சம்

பெறுகயி றூசல்போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்

தறுகயி றூச லானேன் அதிகைவீ ரட்டனீரே

(தி. 4. ப. 26. பா. 6)

என்பது, அவ்வழகிய திருப்பாடல். இதனையே மெய்கண்டதேவ நாயனார், இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாபாதத்தையணையும் என்ற, ஊசல் கயிற்றால் தாய் தரையேயாந் துணையான் (சிவஞானபோதம், சூத். 8. அதிகரணம் 4) என்று உரைத்தருளினார்.

வினை நீக்கம்:

கூவ லாமை குரைகட லாமையைக்

கூவ லோடொக்கு மோகடல் என்றல்போல்

பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்

தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

(தி. 5. பா. 100. பா. 5)

என்னும் திருப்பாடலால், வினை நீங்கினாலன்றி மெய்யுணர்வு தோன் றாது என்பதையும்,

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்

பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்

சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்

உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்

உன்னையல்லா லொருதெய்வம் உள்கேன் என்றும்

புற்றரவக் கச்சார்த்த புனிதா என்றும்

பொழில் ஆரூ ராஎன்றே போற்றா நில்லே.

(தி. 6 ப. 31. பா. 7)

என்னும் திருப்பாடலால், சிவபிரானை வழிபடுதல் ஒன்றே வினை நீக்கத்திற்கு வாயில் என்பதையும் அருளினார்.

திருவைந்தெழுத்து:

சிவபிரானைச் சரியை கிரியை யோகங்களான் வழிபட்டு வினை நீங்கப் பெறுதற்கும், பின்னர்ச் சிவஞானம் பெற்றுச் சிவனை அநுப வமாகக் கண்டு, அந்நிலையிலே நிலைத்து நிற்றற்கும் துணையாய் இருப்பது திருவைந்தெழுத்தே என்பது சிவநெறியின் முடிந்த முடிபு.

அதனை அப்பரடிகள் மிக நன்றாக வலியுறுத்தருளிச் செய்துள் ளார். "சொற்றுணை வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகம் அதன் கருவூலமாகும். அது, நாவுக்கரசர், தமது அநுபவத்தின் வைத்து அருளிச்செய்தது. "மாசில்வீணையும்" என்னும் திருக்குறுந்தொகைப் பதிகத்துள்,

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சி வாயவே நானறி விச்சையும்

நமச்சி வாயவே நாநவின் றேத்துமே

நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

(தி. 5 ப. 90. பா. 2)

என்னும் திருப்பாடலும் அத்தகையதேயாகும். இன்னும், திருவைந் தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதுதல் சிறந்தது என்பர். அதனையும் நாயனார்,

வைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்

சித்தம் ஒருக்கிச் சிவாய நமஎன் றிருக்கினல்லால்

மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்

அத்த னருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே.

(தி. 4 ப. 94. பா. 5)

என்று அருளிச் செய்தார். இது, சுவாமிகள் நமச்சிவாயத் திருப் பதிகத்தை அருளிச்செய்து, கல்லே மிதப்பாகக் கடலைக் கடந்து கரை ஏறியவுடன் அருளிச் செய்ததாதல் அறியத்தக்கது.

அருட்கண்:

இவ்வாற்றால் வினை நீங்கித் திருவருள் கிடைக்கப்பெற்று, `அவ்வருளே கண்ணாகக் காண்பவரே இறைவனைக் காணுதல் கூடும்; அல்லாதார்க்குக் கூடாது' என்பதைச் சுவாமிகள் மிக அழுத் தமாக அருளியுள்ளார்.

"அயிரா வணமேஎன் அம்மா னேநின்

அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே"

(தி. 6. ப. 25. பா. 1)

மைப்படிந்த கண்ணாளும் தானுங் கச்சி

மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்

ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்

ஓரூர னல்லன்ஓர் உவம னில்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

அவனருளே கண்ணாகக் காணி னல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

இவன்இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே.

(தி. 6. ப. 97. பா. 10)

என்பன காண்க.

உள்ளுறைப்பொருள்:

நல்லாசிரியர் திருவைந்தெழுத்தை அறிவுறுக்கக் கேட்டு அதனை முறைப்படி நியமமாக ஓதுதல் முதலியவற்றால் இறைவன் திருவடி ஞானம் வளர்ந்து முதிர, அம் முதிர்ச்சிக்கேற்ப அவன்மாட்டு அன்பும் முறுகி வளரப் பேரன்பினை எய்தி, அவனுடைய திருவடியைத் தலைப் படுமாற்றினை நாயனார் அகப்பொருள் வகையில் உள்ளுறையாக வைத்து நன்கருளிச் செய்திருத்தலைச் சைவ உலகம் நன்கறியும். அத்திருப்பாடல் பின்வருவதாகும்.

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தா ராசா ரத்தைத்

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

(தி. 6 ப. 25. பா. 7)

அணைந்தோர் தன்மை:

இங்ஙனம் இறைவன் தாளைத் தலைப்பட்டவர்க்கு இவ்வுலகில் எவ்வகையான துன்பமோ அச்சமோ யாதும் இல்லை. அவர் யார்க் கும் பணிந்து வாழ்தலும் இல்லை என்பதை நாயனார் விதந் தோதி யருளியதுபோலப் பிறர் ஓதியதில்லை என்றே கூறலாம்.

"நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்" (ப. 98) என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகம் அதனையே விரித்துரைக் கின்றது.

வெம்பருவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்

வெய்ய வினைப்பகையும் பைய நையும்

எம்பரிவு தீர்ந்தோம் இடுக்க ணில்லோம்

எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்

அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி

அனலாடி ஆனஞ்சம் ஆட்டுக ந்த

செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்

செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

(தி. 6. ப. 95. பா. 2)

என்னும் திருத்தாண்டகமும் அத்தகையதே. இதனுள், `எங்கெழில் என் ஞாயிறு' என்னும் அரிய தொடரைக் காண்கின்றோம்.

மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்

விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே

திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்பா திரிப்புலியூர்க்

கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.

(தி. 4. ப. 94. பா. 9)

வானம் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்

தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்

மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்

டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.

(தி. 4 ப. 112. பா. 8)

கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்

பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டென்

றென்னொடும் சூளறு மஞ்சல்நெஞ் சேஇமை யாதமுக்கண்

பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே

(தி. 4 ப. 113. பா. 10)

என்னும் நாயனார் திருமொழிகளை யாவரும் தெளிந்து அந்நிலை யைப் பெறுதல் வேண்டும்.

இங்ஙனம் ஞான நெறியினை நன்கு தெரித்து அருளிச்செய்த நாவுக்கரசரது அருளிப்பாட்டினை உலகம் உணர்ந்து உயர்பயன் எய்துவதாக.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின்

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 3

புராண வரலாற்றுக் குறிப்புகள்

சிரோமணி, வித்துவான் வி. சபேசன்

தமிழ்ப்பேராசிரியர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி.

ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்

நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினைப்பாய் - சீசீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய்.

ஸ்ரீ குருஞானசம்பந்தர்

புராணச்சிறப்பு:

திருமுறைகள் சிவபெருமானது முழுமுதற்றன்மையையும், அடியார்களுக்கு அவன் அவ்வப்பொழுது தோன்றி அருள்செய்த பேரருளையும் இனிது விளக்கி, அவனிடத்தில் அன்பு விளையச் செய் வன. ஆகவே அவை தோத்திரங்களாய் அமைந்தனவாகும். சைவ சமயத்திற்குத் தோத்திரம் சாத்திரம் என்னும் இருவகை நூல்களும் இரண்டு கண்களாய் அமைந்துள்ளன. தோத்திரங்கள் இறைவனிடத்தில் அன்பை விளைவிப்பன. சாத்திரங்கள் அவனைப் பற்றிய அறிவை உண்டாக்குவன. அறிவின் பயன் அன்பேயாகும். ஆகவே அன்பை விளைவிக்கும் தோத்திரங்கள் சாத்திரங்களினும் மேலானவையாய்த் திகழ்கின்றன.

தோத்திரம் என்பது புகழ்மாலை. இறைவனைப் பற்றிய புகழ் மாலைகளே தோத்திரங்களாகிய திருமுறைகள். ஏனையோரைப் புகழும் புகழ்ச்சிகளெல்லாம் முகமனுரையாகக் கூறுவன. சிறிது இருப் பதைப் பெரிதாகப் புனைந்துரைப்பன. இறைவன் புகழ் அவ்வாறின்றி உண்மையையே எடுத்துக் கூறுவதாகும். மற்றும் உள்ளதை முழுதும் கூற முடியாதபடி அவனது புகழ் அளவிறந்துள்ளது. அதனை எத்தகை யோரும் ஒரு சிறிதே கூறமுடியும். இறைவனது புகழின் தன்மையைப் பொருள் சேர் புகழ் என்று திருவள்ளுவர் குறித்தருளினார்.

பிறரைப் புகழ்வதால் உடல் நலத்துக்கு வேண்டியவைக ளையே சிறிது பெற்று சிலநாள் வாழ்தல் கூடும். இறைவனது பொருள் சேர்புகழைக் கூறுவதால் பிறவித் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினைகளும் நீங்கி உயிர்நலம் பெற்று அந்தமில் இன்பத்தில் நீடு வாழலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

(குறள். 5)

என்பது திருவள்ளுவர் திருமொழி.

இறைவனது பெருமைகளில் அவன் அவ்வப்பொழுது ஆங் காங்கு வேண்டிய உருவத்தில் தோன்றி வேண்டுவார் வேண்டிய வற்றை அருளிய அருள் நிகழ்ச்சிகள் தொன்றுதொட்டு என்றும் நிகழ்ந்து வருவதால் அவ்வரலாறுகள் புராணம் எனப்படுகின்றன. ஆகையால் தோத்திரங்களாகிய திருமுறைகளில் புராண வரலாறுகளே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. நாயன்மார் வரலாறுகளும் ஆங்காங்குக் காணப்படுகின்றன.

புராணம் என்பது பழைய வரலாறு எனப்பொருள் தரும். ஆயினும் அது கடவுள் வரலாற்றையே குறிக்கும். வேதம் முதலிய கலைகளிலும் புராணங்கள் சிறப்புடையன என்பது ஆன்றோர் துணிபு. சிறப்புடைய புராணங்கள் என்றார் அருணந்தி சிவாசாரியார். வியாச முனிவரும் வேதங்களை ஓதாது உணர்ந்து புராணங்களைச் சனற்குமார முனிவரிடம் கேட்டார் என்ப.

வேதத்தின் நுண்ணிய பொருள்களை யாவரும் தெளிய உணருமாறு செய்வன புராணங்கள் என்பதும் அதனால் புராணத்தை நன்கு உணர்ந்தவர்களே வேதத்தின் பொருளையும் நன்கு உணர்தல் கூடும் என்பதும் தொன்று தொட்டுச் சொல்லப்பட்டுவரும் மரபு.

மேற்குறித்த திருக்குறளினால் புராண வரலாறுகள் சிறப்புடை யன என்பது திருவள்ளுவருக்கும் கருத்தாதல் விளங்கும். அவ்வகை யில் திருநாவுக்கரசு திருமுறைகளில் புராண வரலாறுகளும் பிறவும் விரிவாகவும் தெளிவாகவும் பல இடங்களில் அருளப்படுகின்றன.
அத்தகைய இடங்கள் சிலவற்றை உணர்தல் பயன்பதருவ தொன்றாம் என்னும் கருத்தால் இவ்வரலாறுகள் கீழே தரப்படுகின்றன.

அருச்சுனற்குப் பாசபதம் தந்தது: (பாரதம் சபா பருவம் - அருச்சுனன் தவநிலைச் சருக்கம்)

இந்திரப் பிரஸ்தம் என்னும் நகரை ஆண்டுவந்த பஞ்ச பாண்ட வர்களில் ஒருவன் அருச்சுனன். துரியோதனனோடு சூதாடி நாட்டை யிழந்து வனவாசம் செய்யும்பொழுது "பாசுபதாஸ்திரம்" பெறுவதற் காகத் தவஞ் செய்தான் அருச்சுனன்.

அப்பொழுது துரியோதனனால் ஏவப்பட்ட மூகன் என்னும் அரக்கன் பன்றியுருக்கொண்டு அருச்சுனனைக் கொல்லவந்தான். அருச்சுனன் அப்பன்றியைக் கொல்ல முயலுகையில் பெருமான் வேடருருக்கொண்டு வந்து எதிர்த்தார். அவரால் துன்புற்று வருந்திய அருச்சுனன், பெருமான் உண்மையுருக் காட்டக் கண்டு வணங்கி வர மும் பாசுபதாஸ்திரமும் வேண்டிப்பெற்றான். இந்நிகழ்ச்சியைச் சுவாமிகள்,

"வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்

வில்பிடித்துக் கொம்புடைய ஏனத்தின்பின்

கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்

கொலைப்பகழிஉடன் கோத்து"

(தி.6 ப. 83 பா.5)

என்றும், மற்றும் பல இடங்களிலும் (தி.4 ப.7 பா.190, ப.50 பா.1) குறித்துப் பாடியிருத்தல் கண்டு மகிழத்தக்கது.

ஆலின் கீழறமுரைத்தது: (கந்த புராணம் - மேருப் படலம்)

பார்வதி இமயமலையில் மலையரசன் மகளாய்த் தோன்றித் தவஞ் செய்கையில், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முத லிய நான்கு முனிவர்களும் தவம்செய்தும் ஞானநிலை பெறாதவர் களாய்த் திருக்கயிலையடைந்து பெருமானிடம் சிவாகமத்து உட் பொருளை உணர்த்தியருள வேண்டினர். பெருமான் தெட்சிணா மூர்த்தியாய்க் கல்லாலமர நிழலில் எழுந்தருளி ஆகமத்தின் முதல் மூன்று பாதமாகிய சரியை, கிரியை, யோகங்களை உபதேசித்து நான்காவது பாதமாகிய ஞானத்தை, "ஞானமுத்திரை அமைந்த திருக்கரத்தைத்" தம் மார்பில் வைத்து ஒரு கணப்பொழுது யோகம் செய்வார்போல் இருந்து உணர்த்தியருளினார்.

இதைச் சுவாமிகள், "ஆலின்கீழ் அறம் நால்வர்க்கு அன்று ரைத்தான்" (தி.4 ப.6 பா.10) என்பது, (தி.4 ப.107 பா.6, தி.5 ப.25 பா.10, ப.59 பா.2) முதலிய பல இடங்களிலும் கூறியிருத்தல் காணலாம்.

இராணவன் குபேரனது புட்பக விமானத்தைக் கைப்பற்றியது: (இராமாயணம் - உத்தர காண்டம், வரையெடுத்த படலம்)

இலங்கையை ஆண்டுவந்த இராவணன் தேவர்களைத் துன் புறுத்தினான். குபேரன் தூதுவன்மூலம் தேவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று தெரிவித்தான். அதனால் சினந்த இராவணன் குபேர னோடு போரிட்டு வென்று அவனது புட்பக விமானத்தைக் கைப்பற்றி னான். இந்நிகழ்ச்சியை நாயனார் "பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகங்கொண்ட மருள்மன்னனை" (தி.6 ப.17 பா.11) என்று கூறியிருத்தல் காண்க.

இராவணன் கயிலை பெயர்த்து பெயரும், வாளும், நாளும் பெற்றது:

குபேரனிடமிருந்து புட்பக விமானத்தைக் கைப்பற்றிய இராவணன் புட்பக விமானத்தின் மீதேறிக் கயிலைக்கு வந்தான்.

இறைவன் வீற்றிருக்கும் இடமாகிய கயிலையில் செல்லதல் கூடாது என்று கூறித் தடுத்தார் நந்திபெருமான். அவரை யிகழ்ந்து பேசிச் சினங்கொண்டு கயிலையைப் பெயர்த்தான் இராவணன்.

அதனால் தேவர்களும், முனிவர்களும் நடுங்கினர். இதை யுணர்ந்த பெருமான் காற் பெருவிரலால் சிறிதே அழுத்தினார். அத னால் துன்புற்று அழுத இராவணன் அமைச்சர்கள் (நாரதர் கூறினார் என்றலே பெரு வழக்கு) சொற்படி தன் தலையைத் தடிந்து தன் கை நரம்பை வீணையாகக் கொண்டு வாசித்துச் சாமகானம் பாடினான். அதனால் மகிழ்ந்த பெருமான் இராவணன் என்ற பெயரும், நீண்ட ஆயுளும், ஆற்றல்மிக்க சந்திரவாளும் ஈந்தருளினான். இவ்வரலாறுகளை நாயனார், "பத்திலங்குவாயாலும் பாடல் கேட்டுப் பரிந்தவனுக் கிராவணனென் றீந்தநாமத் தத்துவனை" (தி.6 ப.79 பா.10) என்றும், "கடுத்த மேனி அரக்கன் கயிலையை கொடுத்தனன் கொற்ற வாளொடு நாமமே" (தி.5 ப.87 பா.10) என்றும், "கடுகியதேர் செலாது கயிலாயமீது கருதேல் உன் வீரமொழி நீ" (தி.4 ப.14 பா.11) என்றும் குறிப்பிடுதல் காண்க.

இராவணனை இராமன் கொன்றது: (இராமாயணம்)

கயிலையைப் பெயர்த்த இராவணன் சிவபெருமான் அருளால் வரங்கள் பெற்று இலங்கையை ஆட்சிபுரிந்து செருக்குற்றுத் தேவர்களுக்குத் துன்பம் விளைத்தான்.

தேவர்களின் வேண்டுகோட் கிணங்கி இராமன் என்னும் பெயருடன் அயோத்தி மன்னன் தசரதன் திருமகனாய்த் திருமால் அவதரித்துக் காட்டில் வசித்து வந்தபொழுது இராவணன் இராமபிரான் மனைவியாகிய சீதையைக் கவர்ந்து சென்றான். அதனால் சினந்த இராமன் சுக்கிரீவன் முதலிய வானர சேனைகளுடன் சேதுபந்தனஞ் செய்து இலங்கையடைந்து போரிட்டு இராவணனைக் கொன்றான்.

இவ்வரலாற்றைச் சுவாமிகள், "செங்கண் மால் சிலை பிடித்துச் சேனையோடுஞ் சேதுபந்தனஞ் செய்து சென்று புக்குப், பொங்கு போர் பலசெய்து புகலால் வென்ற போரரக்கன்" (தி. 6 ப. 58. பா. 10) என்று கூறியிருத்தல் காண்க.

உபமன்னியுவுக்குப் பாற்கடலீந்தது: (கோயிற் புராணம்)

இவர் வியாக்கிரபாத முனிவரின் புதல்வர். இவர் வசிட்டரது காமதேனுவினது பாலை உண்டு வளர்ந்தார். அத்தகைய பால் வேண்டுமெனத் தாயிடம் கேட்க, தாய் மாவைக் கரைத்துப் பால் எனக் கொடுத்தாள். அஃதறிந்த குழந்தை தாயைப் பார்க்கத் தாய் தந்தை யைப் பார்க்க எல்லாமுடையானான பெருமானை வேண்டித் தவம் புரிக என்று தந்தை கூற அதன்படி தவம் புரியலானார். சிவபெருமான் இந்திரன் உருவில் தோன்றிச் சிவனையிகழ்ந்து கூறி அவரது பேரன்பைக் கண்டு பாற்கடலையுண்ண அளித்தான். இப்புராண வரலாற்றைச் சுவாமிகள் திருக்கடவூர்த் திருப் பதிகத்திலும், (தி.4 ப.107 பா.6) திருக்கோளிலித் திருப்பதிகத்திலும் (தி.6 ப.56 பா.6) கூறியுள்ளார்கள்.

உமைகாண நடனமாடியது: (சிவபராக்கிரமம்)

சிவபெருமான் ஆன்மாக்களுக்குப் பெத்தமுத்திகளைத் திரு வருள் செய்தற்பொருட்டுப் பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு பஞ்சகிருத்தியத் திருநடனத்தை யெப்பொழுதும் இயற்றியருள்வர். பெருமான் மூன்று திருக்கரங்களாலும், இரண்டு திருவடிகளாலும் பஞ்சகிருத்தியம் குறித்து நடனம் புரிகின்றார். உடுக்கையேந்திய திருக்கையால் தோற்றமும், அமைத்த திருக்கையால் நிறுத்தலும், தீயேந்திய திருக்கையால் அழித்தலும், முயலகன் முதுகிலூன்றிய திருவடியால் மறைத்தலும் தூக்கிய திருவடியால் அருளலும் புரிகின்றார். அன்றியும்,

உரையுணர்வுக் கெட்டா வொருவன்மிகு பஞ்சாக்

கரத்தால் வரைமகள்தான் பாதி - பரையிடமாய்க்

காணும்படியே கருணையுருக் கொண்டாடல்

பேணுமவர்க் கண்டோ பிறப்பு.

(உண்மை விளக்கம்)

என்று கூறியவாறே ஆன்மாக்கள் அநாதியாகத் தொடர்ந்துள்ள பாசம் போக்கி முத்தியடைதற்பொருட்டு அருள்வடிவாகிய அம்மையார், அடியார்களுக்கு அருள்புரியப் பஞ்சாக்கர வடிவமாகிய ஆனந்தத் திருநடனத்தை இடப்பாகத்திலிருந்து தரிசிப்பர்.

இதனைச் சுவாமிகள், "இவர் ஆறுமாறும் இவள் காணுமாறும் இதுதா னிவர்க்கொ ரியல்பே" (தி.4 ப.8 பா.3) என்று அருளியுள்ளமை காண்க.

உமைதழுவக் குழைந்தது: (காஞ்சிப்புராணம் - தழுவக்குழைந்த படலம்)

பெருமானும் பெருமாட்டியும் திருக்கயிலையில் வீற்றிருக் கும் பொழுது பெருமானின் கண்களைப் பெருமாட்டி தனது திருக் கரங்களாற் புதைத்தார். அதனால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து செயலற்றது. கைகளை எடுத்ததும் உலகம் ஒளிமயமாகி இலங்கியது. கண்ணை மூடியதற்குப் பிராயச்சித்தமாகத் தன்னை வழிபட வேண்டு மென இறைவன் அருளினான்.

அவ்வாறே காஞ்சிபுரத்தில் மாமரத்தடியில் வாழ்கின்ற பெரு மானை நாள்தோறும் அம்மையார் பூசித்தார். ஒரு நாள் இறையரு ளால் கம்பா நதி பெருக்கெடுத்தது. அதுகண்டு திகைத்த அம்மையார் செயலற்று இறைவனைத் தழுவிக் கொண்டார். அதனால் தழுவக் குழைந்த திருமேனியுடன் காஞ்சியில் காட்சி வழங்குகின்றான் பெருமான். இவ்வரலாற்றை,

"கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி

பொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட

தழும்புளவே வரைமார்பில்..."

(தி.6 ப.4 பா.10)

என்பது முதலிய (தி.4 ப.96 பா.7 ப.14 பா.8) மற்றும் பல இடங்களிலும் சுவாமிகள் கூறியிருத்தல் காணலாம்.

காலனை உதைத்தது: (கந்தபுராணம் - மார்க்கண்டேய படலம்)

கடகம் என்னும் நகரில் குச்சகர் என்னும் அந்தணர் வாழ்ந் தார். அவரது புதல்வர் கௌச்சிகர் (மிருககண்டூயர்) தந்தையின் வற்புறுத்தலால் விருத்தை என்பவளை மணந்தார். அவ்விருவரின் புதல்வரான மிருகண்டு மருத்துவதியை மணந்து மக்கட்பேறு இல்லா மல் வருந்திக் காசியை யடைந்து மணிகர்ணிகை என்னும் திருக் கோயிற்குச் சென்று பெருமானை வழிபட்டுத் தவம் இயற்றிப் பெருமானருளால் நற்குணங்கள் நிரம்பிய 16 வயதுடைய பிள்ளை யைப் பெற்று மார்க்கண்டேயர் என்று அவருக்குப் பெயரிட்டார். 16ஆவது வயது நெருங்குவதை யறிந்து பெற்றோர் வருந்தினர். அதன் காரணம் அறிந்த மார்க்கண்டேயர் பெற்றோரைத் தேற்றிச் சிவ பெருமானை நாள்தோறும் பூசனைகள் வழுவாது இயற்றிவந்தார். பதினாறாம் வயது முடிந்தது. இயமன் வந்து அழைக்க, வாராமையால் பாசத்தை வீசி இழுத்தான். பெருமான் "அஞ்சற்க" என்று கூறி இலிங்கத்தினின்றும் தோன்றி இடது பாதத்தால் இயமனை உதைத்தார். இயமன் இறந்தான். மார்க்கண்டேயர் என்றும் பதினாறு வயதுடைய வரானார்.

நாவுக்கரசர் இவ் வரலாற்றை,

"பாலனை யோடவோடப் பயமெய்து வித்த உயிர்

வவ்வுபாசம் விடுமக்

காலனை வீடுசெய்த கழல்போலும்"

(தி.4 ப.14 பா.6)

என்பது முதலாக மற்றும், (தி.4 ப.31 பா.9 ப.49 பா.2 ப.64 பா.1 ப.100 பா.2) பல இடங்களிலும் குறித்துள்ளமை காண்க.

காளி காண நடனமாடியது: (திருவாலங்காட்டுப் புராணம்)

திருவாலங்காட்டில் காளி காண நடனமாடினார் பெருமான், ஆல மரங்கள் நிறைந்திருந்ததால் வந்த பெயரே திருவாலங்காடு என்பது. இவ்வனம் காளிக்கு உரியதாக இருந்தது. முஞ்சிகேச முனிவர், கார்க்கோடமுனிவர் இருவரும் இங்கு இருந்து இறைவனை வழிபட்டனர்.

அவர்கட்காக இறைவன் ஆனந்த நடனமாடினார். அப்பொ ழுது அங்குத் தாருகன் என்னும் அசுரனை அழித்துச் செருக்குற்றிருந்த காளிக்கும் நடராசப் பெருமானுக்கும் நடனத்தில் போட்டியேற்பட்டது. முடிவில் பெருமான் ஊர்த்துவத் தாண்டவம் புரிந்தான். காளி நாண முற்றுத் தோல்வியடைந்தாள். சுவாமிகள் இவ்வரலாற்றை, "பைதற் பிணக்குறை காளி வெங்கோபம் பங்கப்படுப்பான் செய்தற் கரிய திருநடம் செய்தன" (தி.4 ப.100 பா.2) என்று குறிப்பிடுதல் காண்க.

சலந்தரனைக் கொன்றது: (கந்த புராணம் - ததீசியுத்தரப்படலம்)

தேவேந்திரன் இறுமாப்புடன் கயிலையை அடைந்தான். பெருமான் பூதவுருவில் அவன் எதிரில் தோன்றினான். இந்திரன் தனது வச்சிராயுதத்தைப் பூதத்தின் மீது எறிந்தான். பூதவுருக்கொண்ட பெரு மான் தமது சீற்றத்தைக் காட்டி இந்திரன் வேண்டுகோட்படி, சினத்தைக் கடலில் விடுத்தார்.

அது குழந்தையுருவில் வளர்ந்தது. அக் குழந்தை ஜலத்தால் தாங்கப் பெற்றதால் சலந்தரன் எனப் பெயர் பெற்றது. சலந்தரன் பிரமனை வேண்டி வரம் பெற்றுத் தேவர்களைத் துன்புறுத்திப் பல ரையும் வென்று கயிலைக்குப் போர்க்கச் சென்றனன. பெருமான் கிழ வேதியராய்த் தோன்றி, எங்குச் செல்கின்றாய் என வினவியறிந்து, பூமியில் வட்டமாகக் கோடுகிழித்து, இதைப் பெயர்த்து எடு என்று கூறி னர். அவ்வாறே பெயர்த்து எடுத்துத் தலையில் வைத்தான். அதுவே சக்கரமாகி அவன் உடலைக் கிழித்து அழித்தது.

இப்புராண வரலாற்றை, "நேமிவான் படையால் நீளுரவோன் ஆகங் கீண்டானை" (தி.6 ப.54 பா.1) என்று சுவாமிகள் குறித் துள்ளார்கள்.

சிவபெருமான் நஞ்சுண்டது: (கந்த புராணம் - ததீசியுத்தரப் படலம்)

தேவர்களும் அசுரர்களும் ஒன்றுசேர்ந்து போர் செய்கையில் இருவர் பக்கமும் எண்ணிலாதவர் இறப்பது கண்டு போரினை விடுத்தனர். பின்னர் அளவற்ற காலம் உயிர்வாழக் கருதி நான்முகன், திருமால் இவர்களை வேண்டி, அமுதுண்ணத் திருப்பாற்கடலை மந்தர மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர்.

கடலைக் கலக்கக் கயிறாகப் பயன்பட்ட வாசுகி பொறுக்க லாற்றாது விடத்தைக் கக்கியது. அதற்கு அஞ்சிய திருமால் முதலிய தேவர்கள் கயிலையில் வீற்றிருந்தருளும் கண்ணுதற் பெருமானை வேண்ட, பெருமான் அணுக்கத் தொண்டராகிய சுந்தரன் மூலம் விடத்தைக் கொணர்ந்து அருந்தி தேவர்களையும், உலகங்களையும் காத்தான்.

இதனைச் சுவாமிகள்,

வடங்கெழு மலைமத் தாக வானவர் அசுர ரோடு

கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டுபஃறேவரஞ்சி

அடைந்துநுஞ் சரணமென்ன அருள்பெரி துடைய ராகித்

துடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவி னாரே.

(தி.4 ப.65 பா.2)

என்பது முதலாகப் பல இடங்களில் (தி.5 ப.53 பா.6, தி.6 ப.99 பா. 2) கூறியிருத்தலைப் படித்து இன்புறலாம்.

சிவபெருமான் வீணை வாசித்தது: (சிவ பராக்கிரமம்)

இறைவன் திருக்கயிலையில் வீற்றிருந்தருளியபொழுது தும்புரு, நாரதர், சுகர் முதலிய முனிவர்கள் இசையறிவையடையவும், சாமகீதத்தை வீணையிலிசைக்கவும் அருள்புரிய வேண்டுமென வேண்டினர். அவ்வாறே இசையை அருள்புரியம் பெருமான், நால் வகை இசைக்குற்றத்தை யுண்டுபண்ணும் மரங்களை நீக்கி, நன் மரங்களால் செய்யப்பட்ட நால்வகை யாழ்களிலும் அவ்வவற் றுக்குரிய நரம்புகளைத் தொடுத்து எண்வகையான இசைகளைப் பாட வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்கடையாளமாகத் தாமே யார் ஏந்தி இசையெழுப்பி யருளினார். இவ்வரலாற்றைச் சுவாமிகள், "தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்" (தி.4 ப.30 பா.1) என்பது முதலிய பிற இடங்களிலும் (தி.6 ப.35 பா.2, தி.4 ப.112 பா.7) கூறியுள்ளமை காணலாம்.

சிவபெருமான் தருமிக்குப் பொற்கிழியளித்தது: (திருவிளையாடல் புராணம் - தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்)

பாண்டிய நாட்டை ஆண்டவந்த வங்கிய சூடாமணி யென்னும் சண்பக மாறன், சண்பகத் தோட்டம் உண்டாக்கி மலர்க ளைச் சோமசுந்தரக் கடவுளுக்குச் சாத்துவித்துவந்தான்.

இளவேனிற் காலத்தில் ஒரு நாள் அரசியுடன் சண்பக வனத்திற்குச் சென்றபொழுது புதிதாக ஒரு மணம் வீசுவதையறிந்து இது தேவியின் கூந்தல் மணமே என்று உணர்ந்தான். பின்னர்த் தனக்கு ஏற்பட்ட ஐயத்தைப் பாடலால் நீக்கும் புலவர்க்கு ஆயிரம் பொன் னளிக்கப்படும் என்று சங்க மண்டபத்தில் பொற்கிழியைத் தொங்க விட்டான். ஆதிசைவச் சிறுவனாகிய தருமி யென்பவன் திருமணத்தில் விருப்பமுடையவனாய், சோமசுந்தரக் கடவுளை வேண்டி, "கொங்கு தேர் வாழ்க்கை" என்று தொடங்கும் பாடலைப் பெற்று அரசனிடம் கொடுத்துப் பொற்கிழிக்கு உரியவனானான். நக்கீரர், பாடலில் குற்றமுளது என்று கூறித்தடுத்தார்.

தருமியின் வருத்தத்தைப் போக்க, இறைவனே புலவர் வடிவில் தோன்றி, நக்கீரருடன் வாதிட்டு நெற்றிக் கண்ணினால் வெப்பம் உண்டாக்கிப் பொற்றாமரையில் வீழச்செய்து பொற்கிழியைத் தருமிக்குரியதாக்கினார். இவ்வரலாற்றைச் சுவாமிகள், "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக்கருளினோன் காண்" (தி.6. ப.76. பா.3) என்று குறிப்பிடுதல் காண்க.

சிவபெருமான் சந்திரனைச் சடையில் தரித்தது: (கந்தபுராணம்)

அத்திரி முனிவரின் புதல்வன் சந்திரன். பிரமனது மானச புதல்வர்களில் ஒருவனாகிய தக்ஷ்ன் தனது அசுவினி முதலிய நட்சத்திரங்களாகிய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு மணஞ் செய்து வைத்து, நீ இப்பெண்களிடத்தில் வேறுபாடின்றி அன்பு கொள்ள வேண்டும் என்று கூறி அனுப்பினான்.

ஆனால் சந்திரன் சிறிது நாளில் ரோகிணி என்ற பெண்ணிடம் மட்டுமே சிறந்த அன்புடையவனாய் மற்றவர்களைப் புறக்கணித்தான். அதனால் வருந்திய பெண்கள் தன் தந்தையிடம் தெரிவிக்கவே, அவன் நாளுக்கொரு கலையாய்க் குறைத்து அழிவாய் எனச் சந்திரனைச் சபித்தான்.

சாபத்தால் கலைகளை இழந்த சந்திரன் சிவபெருமானிடம் சென்று தன் குறையைப் போக்க வேண்டினான். சிவபெருமான், எஞ்சியுள்ள ஒரு கலையைத் தனது சடைமுடியில் சூடி உனது கலைகளில் ஒன்று என் சடைமுடியில் இருத்தலால் நாளுக்கொரு கலையாக வளர்ந்தும், தக்ஷன் சாபத்தால் நாளுக்கொரு கலையாய்க் குறைந்தும் இருப்பாய் என்று அருளினார்.

இவ்வரலாற்றைத் "திங்களைத் திகழவைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்" (தி.4 ப.48 பா.1) என்பது முதலிய பல இடங்களில் அருளியுள்ளமை காணலாம்.

சிவபெருமான் கங்கையைச் சடையில் தரித்தது: (சிவபராக்கிரமம்)

சிவபெருமானின் கண்களை உமாதேவியார் விளையாட் டாகப் புதைத்தார். அதனால் உலகம் இருளில் மயங்கியது. ஆன்மாக் களுக்கருள்புரியப் பெருமான் தனது நெற்றியில் ஒரு கண்ணைத் தோற்றுவித்து ஒளியுண்டாக்கினான். இதையுணர்ந்த உமாதேவி பிரமித்துத் தனது இரு கைகளையும் எடுக்கும்பொழுது அம்மை யாருக்கு ஏற்பட்ட அச்சத்தால் பத்து விரல்களிலும் வியர்வு தோன்றிப் பத்து கங்கைகளாகிப் பெருக்கெடுத்து சமுத்திரத்திற்குச் சென்றன.

உலகம் முழுவதையும் மூடிப் பரவுவதைக் கண்ட திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானிடம் விண்ணப்பித்தனர். வேண்டு கோட்கிரங்கிய பெருமான் அவ்வெள்ளத்தை வருக என அழைத்துத் தனது திருச்சடையில் தரித்தார். பகீரதன் வேண்டுகோளால் வந்த கங்கையை அவன் வேண்டு கோட்கிரங்கிச் சடையில் தரித்தார் என்ற வரலாறும் சொல்லப்படுகிறது.

இவ்வரலாற்றை, "தரித்தானைக் கங்கை நீர் தாழ்சடைமேல்" (தி.4 ப.7 பா.8) என்பது முதலாகிய பல இடங்களில் சுவாமிகள் கூறியிருத்தல் காண்க.

தக்கன் யாகத்தை அழித்தது: (கந்தபுராணம் - யாகசங்காரப் படலம்)

பிரமனது மானச புதல்வர்களில் ஒருவன் தக்கன். இவன் தவஞ்செய்து சிவபெருமானிடத்தில் உமையைத் தமது புதல்வியாகப் பெறவும், பெருமானை மருமகனாகப் பெறவும், வரம் வேண்டி, அவ்வாறே பெற்றான்.
அதன்படி, தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தாக்ஷா யணி என்று பெயரிட்டுப் பெருமானுக்குத் திருமணஞ் செய்து வைத் தான். பின்னர்த் தனது மகளைப் பார்க்கக் கயிலைக்குச் சென்றபோது பூதகணங்களால் தடுக்கப்பட்டுச் சினமடைந்து மீண்டும் வந்து சிவபெருமானை நீக்கித் திருமால் முதலியவர்களைத் தலைவராக்கி யாகம் செய்தான். யாகத்திற்கு வந்த தனது மகளை வரவேற்காமல் இகழ்ந்தான். அதனால் பெருமான் வீரபத்திரரைஅனுப்பி யாகத்தை அழித்தார். இப்புராண வரலாற்றைச் சுவாமிகள், "ஆமயந் தீர்த்தடி யேனை யாளாக்கொண்ட" என்னுந் திருப்பதிகத்தில் (தி.6 ப.96 ப.9) விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.

திருமால் சக்கரப்படை பெற்றது: (சிவபராக்கிரமம்)

குபன் என்னும் அரசன் காரணமாகத் ததீசி முனிவருடன் போரிட்டுச் சக்கரத்தை யிழந்த திருமால் பெருமானை வேண்டிப் பூசனை புரிந்தார். நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூக்களால் அருச்சித்து வழிபட்டார்.

அவரது அன்பை உலகவர்க்கறிவிக்கத் திருவுளங்கொண்ட பெருமான் ஒரு நாள் ஒரு மலரை மறைவாக்கினார். அர்ச்சிக்குங்கால் ஒரு மலர் குறைந்ததால் தம் கண்ணைப் பறித்து மலராக இட்டு வழிபட்டார். அதனால் மகிழ்ந்த பெருமான் சலந்தாரசுரனைக் கொன்ற சுதர்சனமென்னும் சக்கராயுதத்தையும் கண்ணையும் அருளினார்.

இவ்வரலாற்றைச் சுவாமிகள்,

ஏறுடன் ஏழடர்த்தான் எண்ணிஆ யிரம்பூக்கொண்டு

ஆறுடைச் சடையினானை அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்

வேறுமோர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்

கூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே

(தி.4 ப.49 பா.5) என்பது, முதலிய பல (தி.4 ப.14 பா.10) இடங்களிலும் கூறியிருத்தல் காண்க.

திருமால் இரணியகசிபுவை அழித்தது: (பாகவதம்)

இரணியகசிபு என்ற பெயருடைய அசுரன் சிவபெருமானை வேண்டித் தவமியற்றினான். அத்தவத்திற்கிரங்கிய பெருமானிடம் ஐம்பூதங்கள், ஆயுதங்கள், வானவர், மானிடர், பறவை, விலங்கு முதலிய பிராணிகளால் இரவிலும் பகலிலும் இறாவவாரம் வேண்டிப் பெற்றான். தேவலோகம் முதலிய எல்லாவுலகங்களையும் வென்று தன்னையே கடவுளாக வணங்க வேண்டுமென ஆணையிட்டான். அதனால் வருந்திய தேவர்கள் திருமாலிடம் வேண்டினர். திருமால் தனது ஒரு கூற்றை இரணியகசிபுவின் புதல்வனாகத் தோற்றுவித்தார். அப் புதல்வனுக்குப் பிரகலாதன் என்று பெயரிட்டுப் பள்ளியில் கல்வி பயில வைத்தான் இரணியகசிபு. ஆசிரியர் இரண்யாய நம என்று கூறுவதைக் கேட்டும் தான் நாராயணாய நம என்று கூறினான் பிரகலாதன். இதை யுணர்ந்த இரணியகசிபு சினந்து பிரகலாதனிடம் நீ கூறும் பரம்பொருள் எங்குளது என்று வினவ, இறைவன் தூணிலுமுளன் துரும்பிலுமளன் என்று கூறினான் பிரகலாதன். அப்பொழுது இரணியகசிபு இந்தத் தூணில் அவனைக் காட்டு என் கையாலறைந்தான். திருமால் தூணினின்றும் நரசிங்கமாய்த் தோன்றி இரணியகசிபுவை அழித்தார். இவ்வரலாற்றைச் சுவாமிகள், துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித் தொகுதிறலவ் விரணியனை ஆகங்கீண்ட அங்கனகத் திருமாலும்... (தி.6 ப.84. பா.2) என்று கூறியருளியிருத்தல் காண்க.

திருமால் சேதுவில் வழிபட்டது: (சேது புராணம்)

திருமால் இராமனாக அவதரித்துச் சேதுவில் அணைகட்டி இலங்கை சென்று இராவணனைக் கொன்று திரும்பினான். இராவணன் சிவபூஜை செய்தவனாதலின் அவனைக் கொன்ற பழி (பாவம்) இராமனைத் தொடர்ந்தது. அதனால் அவன் சேதுவை அடைந்து சீதையுடன் இருந்து சிவலிங்கந் தாபித்து வழிபட்டான். பெருமான் அவனுடைய வழிபாட்டிற்கு இரங்கி அவனுடைய பழியைப் போக்கி னான். இராமன் வழிபட்ட தலம் இராமேச்சுரம் என்று வழங்கப் படுகிறது. இவ்வரலாற்றைச் சுவாமிகள், "கடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் கருமம் முற்றித் திடலிடைச் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத் தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன்" என்று (தி.4 ப.61.பா.3) இது முதலிய பல இடங்களில் அருளியிருத்தல் காண்க.

நந்திக்கருளியது: (திருவையாற்றுப் புராணம் - நந்திகேசச் சருக்கம்)

சிலாதமுனிவருடைய திருப்புதல்வராகிய செப்பியேச்சுரர் திருவையாற்றில் ஐவகைத் தீர்த்தங்களால் அபிஷேகித்து வழிபட்டார். அதனால் மகிழ்ந்த பெருமான் மூன்றுவித தீகை்ஷகளும் திருவடி தீகை்ஷயும் செய்து திருநந்திதேவர் என்னும் திருநாமம் சூட்டி சனற் குமாரருக்குத் திருநந்தி தேவரைக் கொண்டு சிவஞானோபதேசமுஞ் செய்வித்தார்.
பின்னர் நந்தியெம்பெருமான் திருக்கயிலாயம் செல்ல அங்குப் பெருமான் கயிலைமலைக்குக் காவலுரிமையும் சிவகணங்க ளுக்குத் தலைமையும் அருளினார்.

சுவாமிகள் பெருமானை, "நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்" (தி.6 ப.41 பா.5) என்று குறிப்பிடுதல் காண்க.

பிரமன் தலையைக் கொய்தது: (கந்தபுராணம் - ததீசியுத்தரப் படலம்)

பிரமன் திருமாலும் மேருமலையில் இருக்கும்பொழுது முனி வர்கள் சிலர் மும்மூர்த்திகளுக்கும் முதன்மையானவரும், அநாதியா யுள்ளவரும், உயிருக்குயிராய் உள்ளவருமாகிய கடவுள் யார் என்று வினவினர். இருவரும் தாமே பரம்பொருள் என்று கூறிப் போர் விளைத் தனர். பெருமான் சோதிவடிவாய்த் தோன்றியருளினார். அதையுணர்ந்த திருமால் அகந்தை நீங்கிப் பெருமானை வணங்கினார். பிரமன் வணங்காது இகழ்ந்துரைத்தார். பெருமான் வைரவக் கடவுளை உண்டாக்கிப் பிரமனுடைய உச்சித் தலையைக் கிள்ளி ஏந்தச் செய்தார்.

இந்நிகழ்ச்சியைச் சுவாமிகள், "அறுத்ததோர் கையுடையான் படைத்தான் தலையை" (தி.4 ப.93 ப.3) என்றும், "அறுத்திருந்த கையானாமந்தாரல்லி யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக் கறுத்திருத்த கண்டமுடையான்" (தி.6 ப.15 பா.10) என்றும் குறிப்பிடுகிறார்.

புள்ளரசைக் கொன்றது: (சிவபராக்கிரமம்)

திருமால், திருக்கயிலை சென்று, நந்திதேவர் அனுமதிப் படி, பெருமானிடம் சென்று, வழிபாடு செய்து கொண்டிருந்தார். காலந் தாழ்ப்பதையறிந்த கருடன் தானும் உள்ளே செல்ல முயன்றபோது, நந்தி பெருமான் தடுத்தார். அதனால் சினந்த கருடன் நந்தி தேவரையும் பெமானையும் இகழ்ந்தமையால் சினந்த நந்தி தேவர் கருடன்மேல் நிசுவாச உசுவாசங்களைச் செலுத்தினர். அதனால் துன்புறுத்த கருடன் திருமாலிடம் வேண்ட, திருமால் பெருமானிடம் வேண்டி உயிர்ப்பித்தார்.

இந்நிகழ்ச்சியை நாவுக்கரசர், "புள்ளரசைக் கொன்றுயிர் பின்கொடுத்தார்" (தி. 6. ப. 53. பா. 8) என்று அருளியுள்ளமை காண்க.

மன்மதனை எரித்தது: (கந்தபுராணம் - ததீசியுத்தரப்படலம்)
மன்மதன் திருமாலின் மனத்தில் உதித்தவன். இவன் உயிர் களுக்குக் காமத்தை விளைவிப்பவன். இவன் தேவியின் பெயர் இரதி.

இவனுக்குக் கரும்பு வில்லாகவும், வண்டுகள் நாணாகவும், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, நீலம் இவை அம்புகளாகவும், கயல்மீன் கொடியாகவும் மங்கையர்கள் சேனையாகவும், தென்றல் தேராகவும், இருள் யானையாகவும், கடல் முரசமாகவும், குயில் எக்காளமாகவும், சந்திரன் குடையாகவும் பயன்பட்டன. இவற்றால் இவன் உலகத்தவரை அடக்கியிருந்தான்.

சூரபன்மன் முதலிய அரக்கர்களால் துன்புற்ற தேவர்கள், முருகப்பெருமானின் தோற்றத்திற்காக சிவபெருமான் மீது படை யேவ இவனை அனுப்பினர். பெருமான் யோகத்திலிருக்கும்பொழுது தன்னிடமுள்ள ஐந்து அம்புகளையும் ஏவினான். அதனால் பெருமான் சிறிதே கண்விழித்துப் பார்த்தவுடன் எரிந்து சாம்பலானான்.

சுவாமிகள் இவ்வரலாற்றை, "கண்ணினாற் காமவேளைக் கனலெழ விழிப்பர்போலும்" (தி.4 ப.68 பா.3) என்பது முதலிய பல இடங்களில் (தி.6 ப.8 பா.4 ப.69, பா.4 தி. 5 ப.63 பா.9) கூறியுள்ளமை படித்தின்புறற்பால.

மாவலி சக்கரவர்த்தியானது (சிவபராக்கிரமம்) (எலி விளக்கெரித்தது):
திருமறைக்காட்டுத் திருக்கோயில் அர்த்தயாக வழிபாட்டிற் குப் பின் பெருமான் திருமுன் இருந்த திருவிளக்கு அணையும் நிலையில் இருந்தது. இவ்விளக்கைத் தூண்டி யெரியவிடுபவர்க்கு மூவுல காட்சி யும் அளிக்கப் போகிறேன் எனப்பெருமான் பெருமாட்டியிடும் அரு ளினான். அப்பொழுது விளக்கில் இருக்கும் நெய்யை உண்ண வந்த எலி திரியைத் தள்ள விளக்கு சுடர்விட்டெரிந்தது. அதைக் கண்ட உமா தேவியார் இவ்வெலிக்கு மூவுலகாட்சி தரவேண்டுமென்று வேண்ட, அவ்வண்ணமே வரமருளினான் பெருமான். இவ்வர லாற்றை,

நிறைமறைக் காடுதன்னில் நீண்டெரி தீபந்தனை்னைக்

கறைநிறத் தெலிதன்மூக்குக் சுட்டிடக்கன்று தூண்ட

நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலகம் எல்லாம்

குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்டனாரே.

(தி.4 ப.49 பா.8)

என்று சுவாமிகள் கூறியிருத்தல்க ாணலாம்.

மாவலியை அழித்தது: (வேதாரணிய புராணம் - மாவலிச் சருக்கம்)

மாவலி விரோசனன் என்னும் அசுரனுக்குப் பிறந்த யாகஞ் செய்து பல சிறப்புப் பொருள்களைப் பெற்றுச் சுவர்க்கம் முதலிய உலகங்களை வென்று அரசாண்டவன்.

தேவர்களுக்கு இடையூறு விளைவித்ததால் அவர்கள் வேண்டுகோட்கிணங்கிய பெருமான் திருமாலிடம் நம் வரத்தால் மூவுலகாட்சி புரியும் மாவலியைக் கொல்லாது தேவர்களின் துன் பத்தை நீக்குக என்று அருளினார். அவ்வாறே காசிபரிடத்தில் மகனாகத் திருமால் வாமன உருவத்துடன் தோன்றி மாவலியிடம் சென்று மூன்றடி மண் இரந்து பெற்று ஈரடியால் மூவுலகங்களையும் பொருள்வலி முதலியவற் றையும் அளந்த மற்றும் ஓரடியைத் தலையில் வைத்து பாதாளவுலகில் பெருமானின் வாக்குப்படி சிறை வைத்தார்.

இவ்வரலாற்றைச் சுவாமிகள், "மாவலிபால் காணிக்கு இரந்த வன் காண்டற்கரியன" (தி.4 ப.108 பா.1) என்று அருளியுள்ளார்.

முயலகனையடக்கியது: (கந்தபுராணம் - ததீசியுத்தரப் படலம்)
தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானைக் கொல்ல ஆபிசாரயாகஞ்செய்ய அதில் எழுந்த பூதன் முயலகன். இவன் சிவபெருமானிடம் தன் உக்கிரமான வடிவுடன் வர, பெருமான் இவன் முதுகில் திருவடியூன்றி மிதித்து நடமாடி யிடுப்பையொடித்தான்.

இவ்வரலாற்றை, "தருக்கழிய முயலகன்மேல் தாள் வைத்தானை" (தி.6 ப.90 பா.9) அடங்காத முயலகனை அடிக்கீழ்க்கொண்டார் (தி.6 ப.96 பா.3) என்று பல இடங்களில் சுவாமிகள் குறிப்பிடுதல் காண்க.

யானைத்தோல் போர்த்தது: (கந்தபுராணம் - ததீசியுத்தரப் படலம்)

யானை வடிவம் கொண்ட கயாசுரன் மேருமலையில் நான் முகனை நோக்கித் தவஞ்செய்து அழியாத ஆயுளையும், வலிமை யையும் வேண்டினான். நான்முகனும் நீ விரும்பும் வரம் தந்தோம்; ஆனால் சிவனுக்கெதிரில் சென்றால் உன் வரம் அழியும் என்று கூறிச் சென்றார்.
எல்லாவுலகங்களையும் வென்று காசியில் உள்ள முனிவர் களைத் துரத்திச்சென்றான் கயாசுரன். அவர்கள் மணிகர்ணிகை என் னும் ஆலய வாயிலை அடைந்து விசுவேசரை வணங்கினர். அப்பொ ழுது பெருமான் உக்கிரவடிவோடு தோன்றி, திருவடிகளால் மிதித்துத் திருக் கரங்களால் அவனுடைய தோலை உரித்துப் போர்த்தார்.

இவ்வரலாற்றைச் சுவாமிகள், "விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகங்கை தரித்ததோர் கோலகால பயிரவனாகி வேழம் உரித்துடட (தி. 4. ப. 73. பா. 6) என்று குறிப்பிடுகிறார்கள்.

விநாயகர் கயாசுரனைக் கொன்றது: (கந்தபுராணம் - கயமுகன் உற்பத்திப் படலம்)

விபுதையென்ற அரக்கர் குலப்பெண் வசிட்டர் மரபில் வந்த மரகத முனிவரை வேண்டித் தவமியற்றினாள். முனிவர் தவத்தினின் றும் கண்விழித்துப் பார்க்கும்போது யானைகள் கலவி செய்வதைக் கண்டு காமக் குறிப்புடனிருந்தார்.

அதையறிந்த விபுதை அவர் அருகில் செல்ல, அவளைப் பெண் யானையாக்கித் தான் ஆண் யானையாகிக் கலந்தார். யானை முகத்துடன் கயாசுரன் தோன்றி சிவபெருமானை வேண்டித் தவமி யற்றி வரங்கள் பெற்று மதங்கபுரத்தில் அரசாண்டு தேவர்களை வருத் தினான். தேவர்கள் வேண்டுகோட் கிணங்க விநாயகர் தமது கொம்பை ஏவி அவனை அழித்தார். பின்னர் அவன் அவருக்குப் பெருச்சாளி வாகனமாயினன்.

கயாசுரன் வரலாற்றை நாவுக்கரசர், "கைவேழ முகத்தவ னைப் படைத்தார் போலும் கயாசுரனை யவனாற் கொல்வித்தார் போலும்" (தி.6 ப.53 பா.4) என்று குறிப்பிடுதல் அறிந்து மகிழ்தற் குரியது.

விருத்த குமார பாலரானது: (திருவிளையாடற் புராணம் - விருத்த குமார பாலரான படலம்)

விக்கிரம பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் மதுரையில் விரூ பாக்கன் என்ற வேதியர் பிள்ளைப் பேறின்றி வருந்திச் சத்த மாதர் களை வேண்டிக் கௌரி என்ற ஒரு பெண் பெற்றார்.

அஃது ஐந்து வயதில் தன் தந்தையிடம் பிறவியைப் போக்கும் மந்திரம் யாது என்று வினவியறிந்து உமாதேவியின் மந்திரத்தைச் செபித்தது. அதனுடைய 8ஆம் வயதில் பிச்சைகேட்டு வந்த வைணவப் பிரமசாரிக்கு நீர் வார்த்துக் கொடுத்துத் திருமணம் செய்து அவனது ஊருக்கு அனுப்பி வைத்தார் வேதியர்.

அங்கு அவன் தாய்தந்தையர் கௌரியின் சிவ வேடத்தைக் கண்டு வருந்தினர். ஒரு நாள் தாங்கள் வேற்றூருக்குச் செல்லும் பொழுது கௌரியைத் தனியே வீட்டில் இருக்கச் செய்து உணவுப் பொருள் இருக்குமிடத்தைப் பூட்டிச் சென்றனர். அப்பொழுது ஒரு வேதியர் வர, கௌரி அவரை வரவேற்று அவர் சொற்படி பூட்டில் கை வைத்துக் கதவைத் திறந்து உணவு தயாரித்துப் படைத்தாள். உண்ட வேதியர் காளைப் பருவத்துடன் தோற்றமளிக்கக் கண்டு அஞ்சி யாது செய்வதெனத் தெரியாமல் திகைத்தாள்.

அப்பொழுது வேற்றூருக்குச் சென்ற மாமன் மாமியார் வர காளைப் பருவத்தில் இருந்த வேதியர் குழந்தை யுருக்கொண்டார். மாமன் மாமியார் இக்குழந்தை ஏது என்று வினவி குழந்தையுடன் கௌரியை வெளியில் அனுப்பி விட்டனர். பெருமான் குழந்தை யுருவம் நீங்கித் தம் திருவுருவம் காட்டிக் கௌரியைத் தம் இடப் பாகத்தில் ஏற்றுக்கொண்டார்.

இவ்வரலாற்றைச் சுவாமிகள், "விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா எரிக்கும் சென்னி நிருத்தனார்" (தி.4 ப.22 பா.9) என்பது முதலிய பல இடங்களில் (தி.4 ப.22 பா.10 ப.43 பா.2) கூறியருளி யுள்ளார்கள்.

வெள்ளை யானை வழிபட்டது: (கந்தபுராணம் - அமரர் சிறைபுகு படலம்)

சூரபன்மன் முதலான அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நிகழ்ந்தபோது தந்தங்கள் ஒடியப் பெற்ற வெள்ளையானை (ஐராவதம்) திருவெண்காட்டை யடைந்து சிவலிங்கம் தாபித்து வழிபட்டது. பெருமான் அருளால் தந்தங்கள் மீண்டும் வளர்ந்தன.

இவ்வரலாற்றை நாயனார், "வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டதற்கு வீடுகாட்டி" (தி.6 ப.83 பா.6) என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை:

அப்பர் சுவாமிகள் கூறியருளிய சில புராண வரலாற்றுக் குறிப்புகள் இக்கட்டுரையில் நம் சிந்தனைக்குரியவாயின.

அப்புராண வரலாறுகளையும், தேவாரத் திருப்பதிகங் களையும் படித்து அவற்றிலுள்ள தத்துவக் கருத்துக்களையறிந்து, கடவுளுணர்வைப் பெற்று உய்தல் அனைவர்க்கும் உரியதாயினும், இறைவன் பொருள் சேர் புகழையே இனிது விளக்கும் இக்குறிப்பு களினூடே இலங்கும் திருவருட் பெற்றியறிந்து தெளிவு பெறல் கற்றறிந்த மாந்தர் கடனாகும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின்

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 4

நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகள்

சிரோமணி, வித்துவான் வி. சபேசன்,

தமிழ்ப் பேராசிரியர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி.

அப்பூதி அடிகள் நாயனார்: (தி.12 பெரியபுரராணம்)

திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தையே மூலமந்திரமாகக் கொண்டு முத்தி எய்திய இவர் சோழமண்டலத்தில் திங்களூரில் அந்த ணர் குலத்தில் அவதரித்துத் திருநாவுக்கரசு நாயனாரின் வரலாற்றைக் கேட்டறிந்து அவர்பால் பேரன்புகொண்டு, அவர் பெயரையே தம் மனைக்கண்ணுள்ள எல்லாப் பொருள்களுக்கும் தம்மக்களுக்கும் வைத்து வழங்கினார்.

திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசு சுவாமிகள், இச்செய்தியைக் கேள்வியுற்று, அப்பூதியடிகள் இருக்குமிடம் சென்று, "உம் பெயரால் தண்ணீர்ப் பந்தல் வையாமல் வேறொருவர் பெயரால் தண்ணீர்ப் பந்தல் வைத்த காரணம் யாது" என வினவினார். அப்பூதி யடிகள், அப்பரடிகளை அறியாமல், "சமண சமயத்தினின்றும் நீங்கிக் கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்த அவர் பெயரினும் வேறு பெயர் சிறப்புடையதோ? சைவராக இருந்தும் இவ்வாறு கேட்கும் நீர் யார்?" என்றார்.
திருநாவுக்கரசு சுவாமிகளோ, "சமண் சமயத்தினின்று கரை யேற இறைவனால் சூலை கொடுத்து ஆட்கொள்ளப்பெற்று உய்ந்த சிறு மையேன் யான்" என்றார். அது கேட்டு அப்பூதியடிகள் ஆனந்தக் கட லில் மூழ்கி அடிபணிந்து திருவமுது செய்ய வேண்டி இசைவு பெற்றார்.

பின்னர், திருவமுது பரிமாறித் தமது மூத்த குமாரனை இலை கொணர ஏவினார். மூத்தகுமாரர் வாழை இலை யறுக்கும்போது அரவு தீண்ட, அடியவர் திருவமுதுக் கிடையூறு ஆமெனக் கருதி, இலையைத் தாயிடம் கொணர்ந்து கொடுத்து மயங்கி வீழ்ந்தார். அப்பூதியடிகள், குமாரரது உடலை மறைத்து, சுவாமிகளைத் திருவமு துக்கு அழைக்க, சுவாமிகள் திருநீறு அளிக்குங்கால், மூத்த திருநாவுக் கரசு எங்கே என வினவி நிகழ்ந்தது அறிந்து, திருவருள் நாடி "ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம்அருளி, உயிர்ப்பித்து அப்பூதியடிகள் வேண்ட அமுதுண்டு சென்றார்.

பின்னர் அப்பூதியடிகள் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவடி தொழுது இறையடி நீழல் அடைந்தார். அப்பூதி அடிகளார் திருநாவுக் கரசர் திருவடியே சிந்தித்து வாழ்ந்தார் என்பதைச் சேக்கிழார் சுவாமிகள்,

அப்பூதி அடிகளார்தம் அடிமையைச் சிறப்பித் தான்ற

மெய்ப்பூதி அணிந்தார் தம்மை விரும்புசொன் மாலை வேய்ந்த

இப்பூதி பெற்ற நல்லோர் எல்லையில் அன்பால் என்றுஞ்

செப்பூதி யங்கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்.

(தி. 12 அப்பூதி. புரா. 43)

என்று குறிப்பிடுகிறார்கள்.

திருநாவுக்கரசர் அப்பூதியடிகளை, "அஞ்சிப் போய்க்கலிமெ லிய அழலோம்பும் அப்பூதி, குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்" (தி.4 ப.12 பா.10) என்று அகப்பொருள் துறையமையப்பாடும் திருப்பழனத் திருப்பதிகத்தில் குறிப்பிடுதல் ஓர்ந்து உணரத்தக்கது.

அமர்நீதி நாயனார்: (தி.12 பெரியபுரராணம்)

இவர் சோழவள நாட்டில் பழையாறை நகரில் வணிகர் குலத்தில் அவதரித்துத் திருமடம் ஒன்றமைத்து நாள்தோறும் அடியவர் களுக்கு அமுது செய்வித்து அவர்கள் கருத்தறிந்து கீளுடை கோவ ணம் உதவிவந்தார். இவரது பெருமையை உலகவர்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்ட பரமன் ஒரு சிவனடியார் போல் வந்தார். அமர்நீதி நாயனார் முகம் மலர்ந்து கடிது வந்து எதிர்வணங்கி இங்கமுது செய் தருளும், என வேண்டினார். வணங்கிய அன்பரை நோக்கி "இக்கோவணத்தைப் பாதுகாப்பாக வைத்திரும்; நீராடி வருவேன்" என்று கூறிக் கொடுத்துச் சென்று மீண்டு வந்து கேட்கையில் அக் கோவணத்தைக் காணாது திகைத்தவராய் வேறு கோவணம் தருகின் றேன் எனப் புகன்றார் நாயனார்.

அது கேட்ட வேதியரும் முன்கொடுத்த கோவணத்திற் கொத்த கோவணம் வேறொன்றுளது. அதற்கு ஒத்தது உன்னிடம் உள தேல் நிறுத்துத்தருக எனக் கூறிக் கோவணத்தை நிறையிடவைத்தார். தம்மிடமுள்ள கோவணம் நிறைக்குச் சரியாக இல்லாமையால் தம்மிட முள்ள எல்லாப் பொருள்களையும் வைத்தார். அவையும் நிறைக்குச் சரியில்லாமற் போகவே, தாமும் மனைவி மக்களுடன் அஞ்செழுத்து ஓதி ஏறி நின்றார்.
கோவணமும், அடியவர் அடிமைத்தொண்டும் ஒத்தலால் நேர் நின்றது துலை. பெருமானும் காட்சி வழங்கினார்.

அமர் நீதி நாயனார் வரலாற்றில் சேக்கிழார் அவரது திருத் தொண்டின் சிறப்பை அழகாக எடுத்துக் கூறுகின்றார். சிந்தை செய் வது சிவன்கழல் அல்லதொன்றில்லார், அந்திவண்ணர் தம் அடியவர்க் கமுது செய்வித்துக் கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார். இவரை இறைவன் ஆட்கொண்ட திறத்தைச் சுவாமிகள் திருநல்லூர்த் திருப்பதிகத்தில் கூறும் திறம் கண்டு மகிழகத்தக்கது.

"கீட்கொண்ட கோவணங் காஎன்று சொல்லிக் கிறிபடத்தான்

வாட்கொண்ட நோக்கி மனைவி யொடும் அங்கொர் வாணிகனை

ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோஇவ் வகலிடமே"

(தி.4 ப.97 பா.7)

கணம்புல்ல நாயனார்: (தி.12 பெரியபுரராணம்)

இவர், இருக்கு வேளூரில் அவதரித்து சிவாலயத்துள் விளக்கெரிக்கும் திருப்பணி புரிந்து செல்வம் குறைய திருத்தில்லை நகர் சென்று தமது வீட்டில் உள்ள எல்லாப் பொருள்களையும் விற்றுத் திருப்பணி செய்துவந்தார். பொருள் முட்டுப்படவே கணம்புல்லை யரிந்து விற்று அதனால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு திருப்பணி செய்தார். ஒரு நாள் அப்புல்லும் விலைபோகாமையால் அப்புல்லையே விளக்காக எரித்து அதுவும் போதாமையால் தமது சிகையை எரித்துப் பெருமானருளால் முத்தி யெய்தியவர். இவர் இரு வினையறுத்த ஏற்றத்தை, தந்திருமுடியை என்புருக மடுத்தெரித்தார் இருவினையின் தொடக்கெரித்தார் என்று குறிப்பிடுகிறார் சேக்கிழார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருக்குறுக்கை விரட்டத்துத் திருப் பதிகத்தில் "கணம் புல்லர்க்கருள்கள் செய்து" (தி.4 ப.49 பா.9) என்றும், திருக்கழிப்பாலைத் திருப்பதிகத்தில் "எண்ணிறைந்த குணத்தினாலே கணம்புல்லன் கருத்துகந்தார்" (தி.6 ப.12 பா.7) என்றும் கூறியுள்ளமை உணரத்தக்கது.

கண்ணப்ப நாயனார்: (தி.12 பெரியபுரராணம்)

இவர் பொத்தப்பி நாட்டு உடுப்பூரில் வேடர் தலைவனாகிய நாகன் என்பவனுக்கு மகனாகப் பிறந்து திண்ணன் என்ற பெயருடன் வளர்ந்தார். காடன், நாணன் என்ற இருவருடன் காட்டில் பன்றி யொன்றை வேட்டையாடிக் களைத்து நீர்வேட்கையால் பொன்முகரி ஆற்றங்கரைக்குச் சென்றார்.

அங்குள்ள காளத்திமலையைக் கண்டு காடனிடம் பன்றியைப் பதப்படுத்துமாறு கட்டளையிட்டு நாணனுடன் மலைமீது சென்று காளத்தியப்பரைத் தரிசித்து மனங்கசிந்து பூசனை புரிய எண்ணினார். பின்னர், மலைமீதிருந்து கீழிறங்கி பொன்முகலி ஆற்று நீரை வாயிலும், மலர்களைப் பறித்துத் தலையிலும், சுவைத்துப் பார்த்த பன்றியிறைச்சியைக் கையிலுமாக எடுத்துக் கொண்டு சென்று வாயிலுள்ள நீரால் அபிஷேகித்துத் தலையிலிருந்து பூக்களைச் சூட்ட, இறைச்சி முதலிய உணவுகளைத் திண்ணனார் உண்பித்தார்.

நாணன், காடன் இருவரும் வலிந்தழைத்தும் திருமப்ாதது கண்டு திண்ணனின் தந்தையிடம் கூற அவனும் வந்து அழைத்துப் பயனின்றித் திரும்பினான். நாடோறும் சிவ பூசனைபுரியும் சிவகோ சரியார் வந்து பார்த்து வருந்தி சம்புரோக்ஷணம் செய்து பூசனை முடித்துச் சென்று வருத்தத்துடன் துயிலும் பொழுதில் கனவில் "திண்ணனாரின் செயல்களைக் கூறி வழக்கம்போல் பூசனை முடித்து மறைந்திருந்து அவரது அன்பினைப் பார்க்க" என்று அருளினான் இறைவன். அவ்வண்ணமே சிவகோசரியார் பூசனையை முடித்து மறைந் திருந்தார். வழக்கம்போல் திண்ணனார் பூசனையியற்ற வந்தார்.

பெருமானின் வலக்கண்ணில் உதிரம் சோர்ந்தது கண்டு மனம் பதைத்தார். பலவகை மூலிகைச் சாறுகளினாலும் அது நிற்காதிருக்கக் கண்டு தமது கண்ணைத் தோண்டி அப்பியதும் நின்றது கண்டு மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். பின்னர் இடக்கண்ணிலிருந்தும் உதிரம் சோர்வதைக் கண்டு தமது மற்றொரு கண்ணையும் தோண்டி அப்ப முயன்றார்.

அதுபொழுது, "நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப, என்னன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப" என்று திருவாய் மலர்ந்து தடுத்துத் தமது வலப்புற மிருக்கும் பேறளித்தான் இறைவன்.

பெரியபுராணத்தில் இறைவன் சிவகோசரியாருக்குத் திண்ண னாரின் (கண்ணப்பரின்) அன்பைக் கூறும் பகுதி படித்தின்புறத்தக்கது.

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்

அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்

அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும்
vஅவனுடைய நிலைஇவ்வா றறிநீஎன் றருள்செய்வார்.

(தி. 12 கண்ணப்பர் புரா. 157)

திருநாவுக்கரசு சுவாமிகள் கண்ணப்பரின் வரலாற்றையே தமது திருப்பாடல்களில் சுருக்கமும் அழகும் தோன்றக் குறிப்பிடு கின்றார். திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகத்தில்,

காப்பதோர் வில்லும் அம்பும் கையதோர் இறைச்சிப் பாரம்

தோற்பெருஞ் செருப்புத் தெர்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்

தீப்பெருங கண்கள் செய்ய குருதிநிர் ஒழுகத் தன்கண்

கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்டனாரே.

(தி. 4. ப. 49. பா. 7)

என்றும், திருச்சாய்க்காட்டுத் திருப்பதிகத்தில், "குவப்பெருந்தடக்கை வேடன்" என்றும, திருக்கழிப்பாலைத் திருத்தாண்டகத்தில் "கண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்தார்" (தி.6 ப.12 பா.6) என்றும், திருமழபாடித் திருத்தாண்டகத்தில் "கண்ணப்பர்க்கருள் செய்த காளைகண்டாய்" (தி.6 ப.39 பா.9) என்றும் குறிப்பிடுகின்றார்.

கோச்செங்கட்சோழ நாயனார்: (தி.12 பெரியபுரராணம்)

சோழநாட்டில் சந்திர தீர்த்தத்திற்கு அருகிலுள்ள சோலையில் வெண்ணாவல் மரத்தின்கீழ் உள்ள சிவபெருமானை யானை ஒன்று வழிபட்டது. அதனால் அவ்வூர் திருவானைக்கா என வழங்கிற்று.

அவ்விலிங்கத்தின் மீது சருகுகள் விழாமல் சிலந்தி ஒன்று தன் வாய்நூலால் பந்தல் அமைத்து வழிபட்டது. அப்பந்தலை யானை அநுசிதம் என்று அழித்தது. சிலந்தி மீண்டும் பந்தல் அமைத்தது. மறுநாள் வழிபடச் சென்ற யானை அதை அழித்தது. சினந்த சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்தது. யானை கையைத் தரையில் புடைக்கச் சிலந்தியும் யானையும் இறந்தன.

இறையருளால் சிலந்தி சோழர் குலத்தில் கோச்செங்கட் சோழனாய்த் தோன்றியது. செங்கணான் அரசாளுகையில் முன்னு ணர்வு பெற்றுத் திருவானைக்காவிலும் மற்றும் பல இடங்களிலும் திருக்கோயில்கள் எடுப்பித்துச் செங்கோலாட்சிபுரிந்து தில்லைக் கூத்தப் பெருமானைத் தொழுது திருவடி சேர்ந்தார்.

இவரது வரலாற்றைச் சுவாமிகள் பல இடங்களிலும் எடுத்துச் சிறப்பித்திருத்தல் காணலாம். திருக்குறுக்கைத் திருப்பதிகத்தில் "சிலந்தியும், ஆனைக்காவில் திருநிழற்பந்தர் செய்து, உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக், கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர்தங்கள், குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே" என்பது (தி.4 ப.49 பா.4, ப.62 பா.9, ப.65 பா.3, தி.6 ப.20 பா.5, ப.23. பா.3, ப.65, பா.6, ப.75 பா.8, ப. 83 பா.6) முதலிய பல இடங்களிலும் கூறியுள்ளமை வரலாற்றிற்கு உரிய மூலங்களாக உள்ளன.

சண்டேசுவர நாயனார்: (தி.12 பெரியபுரராணம்)

சோழநாட்டுத் திருச்சேய்ஞ்ஞலூரில் அந்தணர் குலத்தில் எச்சதத்தன் என்பவருக்கு அவதரித்து, விசாரசருமர் என்ற பெயருடன் வேதம் முதலியன உணர்ந்து சிவபக்தியுடையவராய் இருந்தார். ஒரு நாள் இடையன் ஒருவன் பசுக்களை மேய்க்க ஓட்டிச் செல்லும் பொழுது ஒரு பசுவைக் கோலால் அடிக்கக் கண்டு பொறாது இடையனுக்குப் பசுவின் தன்மைகளை எடுத்துக் கூறித் தானே பசுக் களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்கள் விராசருமரிடம் மிக்க அன்பு டையனவாய்த் தாமே பாலைச் சொரிந்தன. இதைக் கண்ட விசார சருமர் மண்ணியாற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் எடுத்துப் பாலைக் குடத்தில் பிடித்து அபிஷேகித்து வந்தார்.

இந்நிகழ்ச்சியை ஒருவன் கண்டு பசுக்களுக்குரியவர்களிடம் தெரிவித்தான். அவர்களும் எச்சதத்தனிடம் குறைகூறினர். மறுநாள் தாமே நேரில் காண எண்ணியவனாய் எச்சதத்தனும் விசாரசருமர் பசுக்களை ஓட்டிச் செல்லும்பொழுது மறைந்து சென்று ஒரு மரத்தின் மீது ஏறி மறைந்திருந்தான். நாள்தோறும் செய்வது போன்று வழிபாடு செய்வதைக் கண்ட எச்சதத்தன் சினந்து கோல்கொண்டு புடைத்து, பாற்குடத்தைக் காலால் இடறினான். திருவருளில் தோய்ந்து திளைத்திருந்த விசாரசருமர் அருகிருந்த கோலை எடுத்தார். அதுவே மழுவாக மாறிற்று. அம்மழுவால் தந்தையின் தாளை எறிந்தார். விசார சருமர்க்கு இறைவன் காட்சி கொடுத்துத் தொண்டர்க்கு நாயகமாந் தன்மையும் சண்டீசர்பதமும் அளித்தார். இந்நிகழ்ச்சியைச் சேக்கிழார்,

அண்டர் பிரானுந் தொண்டர்தமக் கதிபனாக்கி அனைத்துநாம்

உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்

சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்றங்கவர்பொற் றடமுடிக்குத்

துண்டமதிசேர் சடைக்கொன்றை மாலைவாங்கிச் சூட்டினார்.

(தி. 12 சண்டேசுரர் புரா. 56)

என்று குறிப்பிடுகிறார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருஆப்பாடித் திருப்பதிகத்தில்,

அண்டமார் அமரர் கோமான் ஆதிஎம் அண்ணல் பாதங்

கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் தாப ரத்தைக்

கண்டவன் தாதைபாய்வான் காலற எறியக்கண்டு

தண்டியார்க் கருள்கள் செய்த தலைவர்ஆப் பாடியாரே.

(தி.4 ப.48 பா.4)

என்பது முதலிய பல இடங்களிலும் (தி.4 ப.49 பா.3, ப.65 பா.6, ப.73 பா.5, தி.5 ப.2 பா.4, தி.6 ப.18 பா.10) கூறுவது கண்டு மகிழத்தக்கது.

சாக்கிய நாயனார்: (தி.12 பெரியபுரராணம்)

இவர் திருச்சங்க மங்கை கிராமத்தில் வேளாளர் குலத்துதித்து நன்ஞானம் அடைவதற்குரியவழியை நாடுவாராய்க் காஞ்சியை அடைந்தார். அங்கு சாக்கியர்தம் அருங்கலைநூல் ஓதி, அகச்சமயங் களும், புறச்சமயங்களும் பொருளில்லை என உணர்ந்து, சிவநன் னெறியே பொருளாவது என்றுணர்ந்தார். `எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும், மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்' என்றுணர்ந்து சிவத்தை மறவாது, தான் கொண்ட வேடத்தைத் துறக்காமல் சிவலிங் கம் கண்ட பின்னரே உண்ணுவது என்ற முடிவில், சிவலிங்கம் கண்டு யாது செய்வதென அறியாது பக்கத்திருந்த கல்லை எடுத்து எறிந்தார். இவ்வாறு நாள்தோறும் தவறாது செய்துவரும் நாளில் ஒரு நாள் மறந்து உண்ண முற்பட்டவர் நினைந்து கல்லெடுத்து எறிந்து முத்தி யெய்தியவர். இவரது வரலாற்றில் சேக்கிழார் இந்நிகழ்ச்சியை,

கல்லாலே எறிந்ததுவும் அன்பான படிகானில்

வில்வேடர் செருப்படியுந் திருமுடியின் மேவிற்றால்

நல்லார்மற் றவர் செய்கை அன்பாலே நயந்ததனை

அல்லாதார் கல்லென்பார் அரனார்க்கஃ தலராமால்.

(தி.12 சாக்கியர் புரா. 14)

என்று குறிப்பிடுகிறார். திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகத்தில்,

"கல்லினால் எறிந்து கஞ்சி தாமூணும் சாக்கிய னார்

நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்"

(தி.4 ப.49 பா.6)

என்றும், திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில், "புத்தன் மறவாதோடி எறிசல்லி புதுமலர்கள் ஆக்கினான்காண்" (தி.6 ப.52 பா.8) என்றும் குறிப்பிடுதல் காண்க.

திருஞானசம்பந்தர்: (தி.12 பெரியபுரராணம்)

சைவசமயாசாரியர்களுள் முதல்வராகிய இவ்வருளாளர் சோழநாட்டில் சீகாழியில் கௌணியர் குலத்தில் சிவபாத இருதயருக்கு மகவாக அவதரித்தார். தமது மூன்றாவது வயதில் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்ற தந்தையாருடன் சென்று அங்கு நீரில் அகமருஷண ஜபம் செய்யும் தந்தையைக் காணாது அழுதார்.

உயிர்த் தந்தையாகிய பெருமான் உமாதேவியாருடன் எழுந் தருளி சிவஞானத்துடன் திருமுலைப்பால் ஊட்டச் செய்தார்.

தந்தையார் நீராடி வந்து யார் கொடுத்த எச்சிற்பாலை உண் டாய்? எனக் கோல்கொண்டு ஓச்சி வினவ, "தோடுடைய செவியன்" என்னும் திருப்பதிகம் பாடித் தமக்குப் பால் கொடுத்தருளிய பெரு மானைச் சுட்டிக் காட்டினார்.

அதுமுதல் பல தலங்களுக்கும் சென்று திருப்பதிகம் பாடிப் பரவி பல அருட்செயல்கள் புரிந்தார்.

திருவீழிமிழலையில் பஞ்சம் ஏற்பட்டபோது அடியார் துயர்துடைக்கத் திருவுளங்கொண்ட பெருமான் திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞானசம்பந்தர் இருவருக்கும் படிக்காசு அருளினார்.

சம்பந்தர்க்கு அளித்த காசு வாசியுடைய தாயிருக்க "வாசி தீரவே காசு நல்குவீர்" என்ற திருப்பதிகம்பாடி வாசியில்லாக் காசு பெற்றார். இந்நிகழ்ச்சியைத் திருவாய்மூர்த் திருப்பதிகத்தில், "பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு, வாடிவாட்டந் தவிர்ப்பாரவரைப் போல்" (தி.5 ப.50 பா.7) என்றும் திருவாய்மூரில் பெருமான் காட்சி கொடுத்ததை,

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்

உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்

மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய் மூர்ப்

பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.

(தி.5 ப.50 பா.58)

என்றும் குறித்துப் பாடியுள்ளார்.

மேலும் சிவபாத இருதயர் வேள்விக்காகத் திருவாவடு துறையில் பொன்வேண்டிப் பெற்றார் ஞானசம்பந்தர். அந்நிகழ்ச்சி யைச் சுவாமிகள், "மாயிரு ஞாலமெல்லாம்" என்று தொடங்கும் ஆவடுதண்டுறைத் திருப்பதிகத்தில், "கழுமலவூரர்க் கம்பொன் ஆயி ரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே" என்று குறிப்பிடுதல் காண்க.

நமிநந்தியடிகள் நாயனார்: (தி.12 பெரியபுரராணம்)

இவர் சோழநாட்டு ஏமப்பேரூரில் தோன்றி சிவத்தொண்டு புரிந்தவர். திருவாரூரில் புற்றிடங்கொண்டாரை வணங்கி மாலைக் காலத்தில் அருகில் இருந்த வீட்டில் சென்று விளக்கெரிக்க எண்ணெய் வேண்டி நின்றார். அவ்வீடு சமணர் வீடாயிருந்தமையின் அவர்கள் நாயனா ரிடம் `உங்கள் பெருமான் கையில் தீயிருப்பதால் விளக்கெரிக்கத் தேவையில்லையே' என்றும், `வேண்டுமானால் தண்ணீரை ஊற்றி விளக்கு எரியவிடும்' என்றும் கூறினார். அது கேட்டு வருந்திய அடியவர், பெருமான் சந்நிதியில் முறையிட, பெருமான் அசரீரியாகத் திருக்குளத்து நீரை ஊற்றி விளக் கெரிக்கச் சொல்ல, அதன்படி விடியுமளவும் திருவிளக்குத் திருப்பணி புரிந்து வந்தார்.

ஒரு நாள் வீதிவடங்கப் பெருமான் பவனி வருகையில் உடன் சென்று, மீண்டும் வந்து பலருடன் சென்று வந்ததால் உட்புக மனமில்லாமல் தமது வீட்டின் புறத்தே துயின்றார். இறைவன் கனவில் "திருவாரூர்ப் பிறந்தாரனைவரும் நமது சிவகணங்கள்" என்று கூறக்கேட்டு இல்லின் உள்ளே சென்று சிவார்ச்சனை செய்து பொழுது விடிந்தபின் திருவாரூர்ப் பிறந்தாரனைவரையும் சிவகணங்களாகக் கண்டு தரிசித்தார்.

நம்பிநந்தியடிகள் என்ற பெயரே நமிநந்தியடிகள் என மாறி வழங்கும் என்பர்.

இவ்வரலாற்றை நாயனார், "தொண்டன் நம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடறியுமன்றே" (தி.4 ப.102 பா.2) என்பது முதலிய பல இடங்களில் (தி.4 ப.102 பா.4), (தி.6 ப.33 பா.40) குறிப்பிடுதல் காண்க.

முடிவுரை:

நம் தமிழ்நாட்டில் தத்துவக் கருத்துகளைப் பரப்ப எழுந்த னவே புராணங்கள் என்று கூறலாம். அவை எளிய மக்களும் படித்து இன்புறும் வகையில் அமைந்துள்ளன. அதனால் அவற்றைப் படிப்ப வர்கள் தத்துவக் கருத்துகளை அறிவதோடு கடவுளுணர்ச்சியையும் இனிது பெறுகிறார்கள்.
அத்தகைய புராணக் கருத்துகளையும் நாயன்மார் வரலாறு களையும் அப்பர் சுவாமிகள் தமது அநுபவத்தின் பிழிவாக எழுந்த தோத்திரப் பாமாலையாகிய தேவாரத் திருப்பதிகங்களுள் ஆங்காங்கு எடுத்துக் கூறியருளிப் பொருள் விளக்கம் புரிந்துள்ளார்கள்.

அதனால் அத் தேவாரத் திருப்பதிகங்கள் ஒட்பமும் திட்பமும் நுட்பமும் உடையவையாய்த் திகழ்கின்றன.

அப்பர் சுவாமிகள் கூறியருளிய சில நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகள் இக்கட்டுரையில் நம் சிந்தனைக்குரியவாயின.

அந்நாயன்மார் வரலாறுகளையும், தேவாரத் திருப்பதிகங் களையும் படித்து அவற்றிலுள்ள தத்துவக் கருத்துகளை அறிந்து, கடவுளுணர்வைப் பெற்று உய்தல் அனைவர்க்கும் உரியதாயினும், இறைவன் பொருள் சேர புகழையே இனிது விளக்கும் இக்குறிப்பு களினூடே இலங்கும் திருவருட் பெற்றியறிந்து தெளிவு பெறல் கற்றறிந்த மாந்தர் கடனாகும்.