குருபாதம்

07 பதிப்புரை

நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து

ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத்

தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்

வாச மலர்மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்.

-தி.12 சேக்கிழார்

அவதாரம் என்ற சொல்லுக்குக் கீழிறங்கிவருதல் என்பது பொருள். அருளாளர்கள், வையகத்து மக்களை உய்விப்பதற்காக, மேல் நிலையிலிருந்து கீழிறங்கிவந்து, மக்களோடு மக்களாய்க் கலந்து, வாழ்ந்து, அவர்களை நன்னெறிப்படுத்துவர் ஆதலின், அவர்களை அவதார புருஷர்கள் எனக் கூறுவர்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் அத்தகையோரே என்பதை, `அவதரித்தார்' என்ற சொல்லாட்சியால் பெரியபுராணத்தில் சேக்கிழார் தெரிவிக்கிறார்.

"தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்களெல்லாம்

சிவம்பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்"

-தி.12 திருஞான. புரா. பா.26

"அலகில்கலைத் துறைதழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ

மலரும்மருள் நீக்கியார் வந்தவதா ரம் செய்தார்"

- தி.12 திருநாவு. புரா. பா.18

"...........சடையனார்க்கு

ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால்

தீதகன் றுலகம் உய்யத் திருவவ தாரம் செய்தார்"

- தி.12 தடுத்தாட். புரா. பா.3

என்பன இம்மூவர் திருவவதாரம் குறித்துச் சேக்கிழார் அருளிய பெரியபுராணப் பாடல்களாகும். அவர்கள் அருளிய தேவாரத் திருமுறைகளில் அவரவர் முன்னைய நிலைகள் குறிப்பால் உணர்த்தப்பெறுகின்றன.

சுந்தரர் என்ற திருப்பெயர் அவர் திருக்கயிலையில் சிவபிரானது அணுக்கத் தொண்டராய் விளங்கியபோது வழங்கிய திருப்பெயர். இதனைத் திருநாவுக்கரசர்,

"அந்தகனை அயிற்சூலத்து அழுத்திக் கொண்டார்

அருமறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்

சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்" (தி.6 ப.96 பா.5)

எனத் தெரிவித்தருளுகின்றார். சுந்தரரும் தன்னை,

`அணுக்கன் வன்றொண்டன்' (தி.7 ப.70 பா.10)

எனக் குறிப்பிட்டருள்கிறார்.

மாதவம் செய்த தென்திசை வாழவும், தீதிலாத் திருத்தொண்டத் தொகையைச் சைவ உலகம் பெற்றுய்யவும், சுந்தரர் அநித்திதை, கமலினி ஆகியோர்பால் தன் மனத்தைப் போக்கி, அதன் காரணமாக மண்ணுலகில் திருநாவலூரில் மாதொருபாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் சிவவேதியர் குலத்தில் சடையனார் இசை ஞானியாருக்குத் திருமகனாராகத் தீதகன்றுலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்.

அவர்தம் வரலாறு பெரியபுராணத்தில், திருமலைச் சருக்கம், தடுத்தாட் கொண்ட புராணம், ஏயர்கோன் கலிக்காமர் புராணம், கழறிற்றறிவார் புராணம், வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சேக்கிழார் பெருமானால் விரித்துரைக்கப் பெறுகின்றது.

திருவெண்ணெய்நல்லூரில் இறைவனால் ஆவணம் காட்டி ஆட்கொண்டருளப் பெற்ற சுந்தரரை இறைவன் `அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக' எனக் கட்டளையிட்டருளியவாறு, சுந்தரர் `பித்தாபிறைசூடி' என்னும் திருப்பதிகம் முதலாக, `தானெனை முன்படைத்தான்' என்னும் திருப்பதிகம் ஈறாக, நூறு திருப்பதிகங்களை அருளிச் செய்துள்ளார்.

சுந்தரர் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களில், அவர் தம் வரலாற்று அகச்சான்றுகள், அவர் இறைவன்பால் கொண்டிருந்த பக்திமை, தோழமை உரிமை முதலியன விளங்கக் காணலாம்.

`அன்று வந்தெனை அகலிடத்தவர் முன்

ஆளதாக என்று ஆவணங்காட்டி

இன்று வெண்ணைநல்லூர் மிசை ஒளித்த

நித்திலத்திரள் தொத்தினை' (தி.7 ப.62 பா.5)

`அற்புதப்பழ ஆவணம் காட்டி அடியனாய்

எனை ஆளதுகொண்ட நற்பதத்தினை' (தி.7 ப.68 பா.6)

`தன்மையினால் அடியேனைத்தாம் ஆட்கொண்ட

நாட் சபைமுன்

வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர்

வாழ்வு தந்தார்' (தி.7 ப.17 பா.2)

என்பன போன்ற படல்களால் இறைவன் சுந்தரரைத் தடுத்தாட் கொண்டருளிய வரலாறு கூறப்படுதலைக் காணலாம் இவ்வாறே அவர்தம் வரலாற்றுக் குறிப்புக்கள் பலவும் அவர் தம் தேவாரத்துள் குறிக்கப்படுகின்றன.

சரியை, கிரியை, யோகம், ஞானம், என்பனவற்றுள் யோகநெறி நின்றவர் சுந்தரர் என்பது திருத்துறையூர் இறைவர்பால் தவநெறி வேண்டிப் பெற்றதன் மூலம் அறியலாம்.

சுந்தரர்க்கு இறைவன் தன்னைத் தோழனாகத் தந்தார். தோழமையுரிமையோடு தம்மோடு பழகி, மண் மீது விளையாடுக என அருளிச் செய்தார் என்பது வரலாறு.

`தோழமை அருளித் தொண்டனேன் செய்த

துரிசுகள் பொறுக்கும் நாதன்' (தி.7 ப.68 பா.8)

`ஏழிசையாய் இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய்

யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி' (தி.7 ப.51 பா.10)

என்பன போன்ற பாடல்களால் தம்பிரான் தோழர் என்ற பெருமைக் குரியவராய்த் தாம் வாழ்ந்ததை அவர் உணர்த்தியருளுகிறார்.

சங்கம வழிபாட்டின் சிறப்பை, நாயன்மார்களின் பெருமையை, உலகிற்கு அறிவுறுத்திய பெருமைக்குரியவர் சுந்தரர்.

`ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே' (தி.7 ப.52 )

எனவும்

`ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன்

அடியவர்க்கடியனும் ஆனேன்' (தி.7 ப.14 பா.11)

எனவும்

திருத்தொண்டத் தொகையுள் `அடியார்க்கு அடியேன்' எனவும் கூறும் சுந்தரர் தேவாரப் பாடல்கள், அடியார் வழிபாட்டின் சிறப்பை நமக்கு உணர்த்துவன. சிவனடியார்களின் வரலாறுகளைச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையிலும் பிற தேவாரப் பாடல்களிலும் விளங்கக் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசரை,

`இணைகொள் ஏழெழு நூறு இரும்பனுவல்

ஈன்றவன் திருநாவினுக் கரையன்' (தி.7 ப.65 பா.2)

என அவரருளிய தேவாரத் தொகையையும் குறிப்பிட்டு அருளியுள்ளார். அடியவர்கள் குற்றம் செய்யினும் குணம் எனக் கொள்ளும் இறைவனியல்பினை,

`நற்றமிழ் வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன்

நாளைப் போவானும்,

கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன்

என் றிவர்கள்,

குற்றம் செய்யினும் குணமெனக் கருது கொள்கை கண்டு

நின்குரை கழல் அடைந்தேன்' (தி.7 ப.55 பா.4)

எனக் குறிப்பிட்டுள்ளார்.

சண்டேசர், சாக்கியர் வரலாறுகளை,

"இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி

இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்

துண்டமிடு சண்டியினை அண்டர் தொழுதேத்தத்

தொடர்ந்தவனைப் பணி கொண்ட விடங்கர்" (தி.7 ப.16 பா.3)

`வார்கொண்ட வனமுலையான் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்' (தி.7 ப.39 பா.6)

என விவரித்துள்ளார்.

மக்களைச் சிவநெறியில் ஆற்றுப்படுத்தும் முறையில்,

`பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின்' (தி.7 ப.34 பா.1)

எனப் புகலூர் இறைவன் இம்மையில் சோறும் கூறையும் தருவதோடு அம்மையில் சிவலோகமும் அருள்பவன் எனக் கூறியருள்கிறார்.

ஞானசம்பந்தர், நாவரசர் அருளிய தேவாரத் திருமுறைகளை எத்தனைமுறை பாடினாலும் கேட்டு மகிழ்பவன் இறைவன் என்பதை,

`நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரையனும்

பாடிய நற்றமிழ்மாலை

சொல்லியவே சொல்லி ஏத்துகப் பானை' (தி.7 ப.67 பா.5)

எனக் கூறியருள்கிறார்.

தேவாரம் அருளிய மூவர் பெயரும் ஒருங்கமைந்த தேவாரம் அவர் திருமுறையில் காணப்படுகிறது. திருக்கேதாரம் திருப்பதிகத்தில்,

நாவின்மிசை யரையன்னொடு தமிழ் ஞானசம் பந்தன்

யாவர் சிவ னடியார்களுக் கடியான்அடித் தொண்டன்

தேவன் திருக் கேதாரத்தை ஊரன்உரை செய்த

பாவின் தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.(தி.7 ப.78 பா.10)

எனக் கூறியருள்கிறார். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தி மக்களை இறைநெறியில் ஈடுபடுத்தும் பாடல்கள் பலவும் அவர் திருமுறையில் காணப்படுகின்றன.

இன்னோரன்ன பொருட் சிறப்புடைய சுந்தரர் தேவாரத்தைப் பொருள் உணர்ந்தோதிப் பரவும் வகையில் தருமையாதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம், ஷ்ரீலஷ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகள் அவர்கள், மகாவித்துவான் திரு.சி. அருணைவடிவேலு முதலியார் அவர்களைக் கொண்டு உரை எழுதச் செய்து 1964ஆம் ஆண்டு ஷ்ரீ குருஞானசம்பந்தர் குருபூசை விழாமலராக வெளியிட்டருளினார்கள்.

இதுபோது அந்நூலை ஏனைய திருமுறைகளுடன், ஒளியச்சில் அழகிய பதிப்பாக ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணிகளின் வெள்ளிவிழா மலராக 26ஆவது குருமகா சந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டருளுகின்றார்கள்.

இத்திருமுறை வெளியீட்டுக்கு மலேசியா அன்பர், டான்ஷ்ரீ திரு. எம். சோமசுந்தரம் அவர்கள் நன்கொடை வழங்கியுள்ளார். சைவ நல்லுலகம் இத்திருமுறையின் சிறப்பை உரை நலத்தோடு ஓதி உணர்ந்து, இம்மை, மறுமை, அம்மை ஆகிய மும்மைப்பயன்களையும் பெற்று இன்புறுவதாக.

இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

அன்பர்கள் இத்திருமுறையைப் பொருளுணர்ந்து ஓதி இறைவன் திருவருள் பெற்று இன்புறுவார்களாக.

தருமை ஆதீனம்

மயிலாடுதுறை

இங்ஙனம்

ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானத்தின்
.

உத்தரவுப்படி,

திருநாவுக்கரசுத் தம்பிரான்