08 முதற் பகுதியின் உரை மாட்சி
செஞ்சொற்கொண்டல்
வித்துவான் திரு. சொ. சிங்காரவேலன் M.A,Dip.Ling.அவர்கள்
தமிழ் விரிவுரையாளர், அ. வ. அ. கல்லூரி, மயிலாடுதுறை.
`வாழும் உயிர்':
உண்டு உடுத்து உறங்கிக் கழிவதுதான் வாழ்க்கை என்பது பெரும்பாலோர் நினைப்பு. இந்த நினைப்பால் வாழ்வின் பெரும் பகுதியை இத்தகையோர் வீணாக்கி விடுகின்றார்கள். வாழ்நாளின் இறுதிப்பகுதியிலே கூட இத்தகையோர் சிலர்க்கு உண்மையை உணரக் கூடிய வாய்ப்பு இல்லாமற் போய்விடுகிறது. ஒரு சிலர்க்கே வாழ்வின் குறிப்பு உட்கோள், மெய்ம்மை விளங்குகின்றது. அவர்களில் தம் வாழ்வின் மலர்ச்சியுடன் நின்று விடுவோரும், அவ்வாறு தாம் கண்ட மெய்ம்மையினை உலகிற்குக் காட்டி உலகினர்க்கும் அவ்வுண்மையறி வினைப் பரப்பி நலம் பல விளைத்து நன்மை பெருக்குவோரும் ஆகிய இருதிறச் சான்றோரைக் காணலாம்.
இத்தகு சான்றோர்களே `வழிகாட்டும் வான் பொருள்' வாய்த்தவர்களாகக் கொள்ளத்தக்கவர்கள். இவர்களைத் தொழுதும், இவர்களது அருள்மொழிகளைச் சிந்தித்தும் வாழ்வது மனிதர் கடனாம். ஆறறிவு படைத்த மனிதன் மனம் உடையவன். மன உணர் வினால் நன்மை தீமை, மேடுபள்ளம், ஒளி இருட்டு, இன்ப துன்பம் ஆகியவற்றைப் பகுத்தறியும் திறம் உடையவன். அவன் ஒருவனே `வாழ்கின்றேன் என்னும் உணர்வுடன் வாழ்பவன்' எனவே எல்லா உயிர்களும், ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர் வரை பகுக்கப்பட்டனவும் வாழ்வனவே யாயினும், `வாழும் உயிர்' என்று வரையறுக்கப் படுபவன் மனிதன் ஒருவனே. (`வாழுநம் என்னும் செருக்கு', `கண்ணென்ப வாழும் உயிர்க்கு' குறள்).
அருட்கொடை:
இத்தகு சான்றோர் அருளிய அருள்மொழிகளைச் சிந்திக்கும் திறன் உடையவன், சமுதாய நிலையில் மனிதன் ஒருவனே. இஃது இறைவனின் அருட்கொடையாக மனிதனுக்கு வாய்த்துள்ள மாண்புகளுள் ஒன்று.
இன்பக் கருவூலம்:
திருமுறைகள் இத்தகு சமயச் சான்றோரது தெளிவுரைகள் வாட்டத்தைப் போக்கி உறுதியை வழங்கும் ஞானத் தேக்கங்கள் அவை; துன்ப உணர்வைத் தொலைத்து இன்ப உணர்வை எடுத்து வழங்கும் இன்பக் கருவூலங்கள் அவை;
விழுமிய கவிதை:
"அறியாமை ஆசை ஆகிய கட்டுக்களிலிருந்து நீங்கி உயிர்ப் பறவை மேலே மேலே பறந்து அருள் நிழல் சேர வழி காட்டும் அருள் துணைகள் அவை; துன்பமும் பொய்மையும் குழைந்த உலகத்தினின்று விடுபட்டு உண்மை ஒளியும் அன்புமாகிய சுதந்திர அரண்மனைக்குள் உயிரைப்புகுவிக்கும் ஒட்பமுடையவை அவை; அலைவும் உலைவும் உடைய மனத்தின் போக்கினை மாற்றி, இன்பம் பெருமிதம் ஆகிய வற்றுடன் அனைத்து நிலைகளையும் நீக்கி, இன்பமும் அமைதியும் வாய்ந்த எல்லையற்ற ஞானப்பெருவெளியை உள்ளத்துள்ளே கண்டு ஒளி விளங்கச் செய்யும் திறன் உடையவை அவை. "1A. உயர்ந்த கவிதை என்பது இதுவேயகும்.
விழுமிய கவிதை என்பது `வெளி யிடும் ஆற்றல்' வாய்த்த தாகும். அது மனித வாழ்வின் புலன்களுக்கு எட்டும் அழகுகளையும், அவற்றின் ஆழ்பொருள்களையும் காட்டுவ தாகும். அதுமட்டுமின்றி அத்தகு கவிதைகள்இன்றேல் நாம் கண்ணை மூடியே கிடக்கநேரும். சிலர்க்கே இத்தகு கவிதையின் தெய்விகத் தன்மையையும் போக்கையும் உணர்ந்திட முடியும்" என்பர் அட்சன் என்னும் ஆங்கில அறிஞர். 1B.
`திருவாசகத் தேன்: '
எட்டாம் திருமுறையாகச் சைவப் பெருநெறி கண்டுள்ள திருவாசகம் ஞானப்பனுவலாக மணிவாசகர் மலர்வாய்ப் பிறந்த ஞானத் தேனாக - பழம் பிறவித் தளைநீக்கி, துன்பம் தொலைத்து, இன்பம் தருவதுடன், எல்லை இல்லாத ஞானப் பெருவெளிக்கு உயிரை உயர்த்தும் அற்புதத்தேன் மயமாகிய விழுமிய கவிதையாக - உள்ளது என்பது அநுபவ ஞானியர் கருத்து 2.
குருவருள் - உரை:
குருவருள் விளக்கம் எட்டாம் நூற்பாவில் மெய்கண்டார் கூறியருளிய மாண்பொருள். திருப்பெருந்துறையில் ஞானாசிரியராக இறைவனே எழுந்தருளக்கண்டு, `மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து அக்கழற்குத் தன் கைகளால் அஞ்சலி செய்து கண்ணீர் ததும்பி வெதும்பி, உள்ளம் பொய்தான் களைந்து போற்றி சய சய போற்றி' என்று ஆடியும் பாடியும் அழுத அடிகளின் ஞான அநுபவம் கனிந்த இத்திருநூலுக்குத் தருமை ஆதீனம் 25ஆவது ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமகாசந்நிதானமவர்களின் திருவருட்கருணை இன்று ஒரு விளக்க உரையினைத் தந்திருக்கின்றது. இந்த உரையின் மாட்சிகளைத் தமிழுலகம் அறிவதற்கு ஓர் உரைகல்லே இச்சிந்தனை.
உரையாசிரியர் தகுதி:
இதன் உரையாசிரியர் சித்தாந்தக்கலைமணி, மகாவித்துவான். திரு.சி.அருணைவடிவேலு முதலியாரவர்கள், தருமையாதீனத் திருமுறை உரைகளில், ஆறாம் திருமுறை, ஏழாம் திருமுறை ஆகியவற்றை எழுதியதுடன் இப்பேருரையையும் வரைந் துள்ளார். திருவாசகம் திருக்கோவையார்க்கு முன்னே பலப்பல உரைகள் உண்டேனும் இவ்வுரை தனிச் சிறப்புடன் விளங்குகின்றது. இரவுபகல் இப்பாடல்களோடு `ஒன்றியிருந்து நினைந்து', தம் `நுண் மாண் நுழைபுலத்துடன்' திரு. முதலியாரவர்கள் கண்டுள்ள இப் பேருரை கற்றோர்க்குக் கழிபேரின்பம் தருவதாய் உள்ளது. ஒரு நூலுக்குச் சிறந்த உரை யெழுதுவ தென்றால் அது பெரும் புலமையும், மதிநுட்பமும் உடைய சிறந்த போதாகாசிரியர்க்கே வாய்ப்பதாகும். திரு - முதலியாரவர்கள் `காஞ்சிப் புராணத்திற்கும்'3 `சிவபோக சாரத்திற்கும்' 4 அப்பர் 5 சுந்தரர் 6 திருமுறைகட்கும் உரையெழுதிய துடன். ஆதீனத் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருப்பதனால் தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலிய தமிழ்ப் பனுவல்கட்கு உரை விரித்து மாணவர்க்கு உரைத்து வருபவர்கள்; சைவ சித்தாந்தச் செம்பொருளை இளமை முதலே பொது மக்கட்கும், கற்றோர்க்கும் உரை விரித்து - ஓதிவரும் ஒட்பம் உடையவர்கள். நூல், உரை, போதகாசிரியர் ஆகிய முந்நிலைகளிலும் சிறந்து விளங்கும் இவர்களை மணிவாசகர் திருவுள்ளம் தேர்ந்துதெளிதற்கும் திரு வுள்ளம்கொண்டஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணியவர்கள் திருவடிகட்குப் பெருவணக்கங்கள் உரியனவாகும். விரித்துக் கூறப்புகின் பன்னாட்கள் கழிந்தாலும் முற்றக் கூறவியலாத இவ்வுரைத் திட்ப நுட்பங்கள் இச்சிறு கட்டுரை எல்லைப்படுவன அல்ல ஆயினும், அருளாணை மேற்கொண்டு ஒரு நெறியான் இங்குச் சிறிது காண முயல்வேம்.
உரைத் திறனாய்வு:
கவிதைக்கு உரை யெழுதுவதும் ஒருவகைத் திறனாய்வே என்று கூறலாம். நிறைந்த நெஞ்சும், தெளிந்த அறிவும் உடையவரே கவிதைக்கு விளக்கம் கூறமுடியும். இத்தகு திறனாய்வே சீரிய திறனாய்வாக இருக்க இயலும். கூறிய பகுதிக்குச் சீரிய விளக்கம் தருவதும், தாம் ஆராய்ந்து முடிவு கூறலுமே திறனாய்வின் இரண்டு செயல்கள் என்பர் அட்சன் என்பவர். 7 அந்நிலை நின்று நோக்கினால், இவ்வுரை ஒரு சீரிய திறனாய்வாகவே விளங்குகின்றது. அதனை இங்குப் பல நிலைகளில் சிந்தித்துக் காண்போம்.
நடை நலம்:
இவ்வுரையின் நடை தெளிந்த தமிழ் நடை; வடசொற்கள் முதலிய பிற மொழிச் சொற்கள் கலவாத, தனி நடை; பிற மொழிச் சொற்களைக் கையாள வேண்டிய விடத்து, அவற்றை அவ்வாறே மேற்கோளாகக் காட்டலும், அவற்றைத் தமிழ்ப்படுத்தித் தமிழ்க் கோலம் புனைந்து காட்டலும் இவர் இயல்பாகும். நடைவேறுபாடு பற்றி இக்கால ஆய்வாளர் கூறும் கொள்கையளவில் நின்று நோக்கின் 8, எளிய சொற்களால், அரும்பொருளையும் விளக்கும் விழுமிய நடை இவ்வுரையாசிரியர்க்கும் இயல்பாக வாய்ந்துள்ளது என்றறியலாம்.
சில இடங்களில் பிறர் கருத்தை மறுத்துரைக்குங்கால் உணர்ச்சிவயப்படுதலும் இவர்க்கியல்பே. பதசாரம் எழுதுங்கால் இனிய சொற்களைத் தேர்ந்து அணிபெறவும் எழுதுகின்ற இயல்பினர் இவர். இவரது உரை முழுவதையும் ஒருசேர நோக்கினால், ஆற்றொழுக்குப் போன்று தெளிந்த நடையினது இவர் பேருரை என்பதும், தம் அறிவு நலத்தை உரை வாயிலாகப் பிறர்க்குக் காட்ட முயலும் சில உரைகாரர் போலன்றி, மூல நூலின் உட்பொருளை விளக்குவதில் இப்புலவர்க் குள்ள ஆர்வம் பெரிது என்பதும் தெளிவாகும்.
சொற்பொருள் விளக்கம்:
சொற்பொருளைத் தெளிவுற விளக்கிச் செல்வர் இவர். `இறைவன்' என்பதற்கு, எல்லாப் பொருளிலும் தங்கி யிருப்பவன்' என்பது சொற்பொருளாயினும் `தலைவன்' என்பதன் மறுபெயராய் வழங்கும்; `இறு' என்பது இதன் முதனிலை. `இற' என்பது அடியாக வந்ததென உரைப்பார்க்குக் `கடவுள்' என்பதன் பொருளேயன்றி வேறு பொருள் இன்றாமாதலின் அது சிறவாமை அறிந்து கொள்க' என்று எழுதும் பகுதி நோக்கத்தக்கது. 9
இவ்வாறே `சகம்' 10 சங்கரன், 11 ஆகமம், 12 சிவம், 13 தெள்ளேணம்14 முதலிய சொற்களுக்கு உரிய பொருளைத் தம் நுட்பமதி தோன்ற இவர் விரித்துரையெழுதியிருக்கும் பகுதிகள் வியந்து பாராட்டற்குரிய விறல் உடையவை.
கொள்கை விளக்கங்கள்:
"கடவுள் வாழ்த்திற்குப் புறத்திணையே சிறந்தது; 15 பாவினங்களின் அடி வரையறை மிக்குவருதலும் பழைய வழக்கே; 16 மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர்; 17 திருப்பாவைக்கு உரை கூறுவோர் மதமே பற்றித் திருவெம்பாவைக்கும் உரைகூற முற்படுதல் பொருந்தாது; 18 திருவெம்பாவையுள்சக்திகள் ஒன்றையொன்று எழுப்பின எனல் பொருந்துமாறில்லை; 19 திருவெம்பாவைப் பாடல்களுள் பெண்டிர் வயது வரையறை கூறுவோர் உரை நயம் கூறுதலால் முடியுமன்றி வேறாகாது; 20 திருவெம்பாவை தில்லையில் இருந்தபோது நினைந்து பாடியனவாகக் கொள்ளற்கும் உரியது. 21 திருப்பொற்சுண்ணம் காஞ்சித் தலத்திற் பாடப்பெற்றிருக்கலாம். 22 இறைவனால் ஆட்கொள்ளப்பெறுவதற்குமுன் பல சமய சாத்திரங் களை மணிவாசகர் கற்றுத் தேர்ந்தவர். 23 திருவாசகம் திருக்கோவை யாரோடு சொல் நடையாற் பெரிதும் ஒத்துள்ள திருநூல். 24 மேலை நாட்டு விளையாட்டுப்போக்கினால் தமிழகத்தில் அண்மைக் காலம் வரையிலும் கூடக் காணப்பட்ட விளையாட்டுக் களும் மறைவவாயின. 25 உத்தரகோச மங்கையில் ஆசிரியத் திருமேனி யுடன் எழுந்தருளி இலிங்க மூர்த்தியே அருள் செய்தனராதல் வேண்டும். 26 அன்னைப் பத்து, கலி விருத்தம் என்ற யாப்பிற்குரியது அன்று; ஆசிரியத்துறையே ஆகும். 27 அகப்பாட்டுப் புறப்பாட்டு என்ற பாடல்களிடை வேற்றுமை யறிய மாட்டாதாரே திருவாசகம் முற்றும் அகப் பாட்டென்று மொழிவர். 28 வீணை, யாழ் என்பன வெவ்வேறு இசைக் கருவிகள்.29
திருக்கோவையார்ப் பாடல்கட்குத் தத்துவப் பொருள் கற்பித்தல் சான்றோர் கருத்தாகாது. 30 இலக்கணம் பலவற்றிற்கும் இலக்கியமாதலின் திருக்கோவையாரில் முரண் இல்லை.31 இப்பாண்டியன் அடிகளை அமைச்சராகப் பெற்றிருந்தான் எனவும், அவனுக்கு நண்பனாகிய சோழ மன்னன் மாற்றரசரால் நலிவெய்திய காலத்து அவன் விரும்பியவாறே அடிகள் சென்று உதவி, மீண்டு வரத்தாழ்க்க, அவன் திருமுகம் விடுத்து அழைப்பித்தான் எனவும் துணிதற்கு இடம் உண்டு.32
இவ்வாறு உரை யிடையிடையே தம் கொள்கைகள் பலவும் தோன்ற ஆசிரியர் உரை விரித்துள்ளார். திருப்பாட்டிற்குப் பொருள் காண்டலே குறிப்பாயினும், தம்முள்ளத்தே உறைத்து நின்ற மெய்ம்மைகளை இடத்திற்கேற்ப இனிது எடுத்து விளக்கிப்போகும் விழுப்பம் பலர்க்கும் நெறிகாட்டும் பாங்கினதாகும்.
வடநூற் புலமை:
வேதம், ஆகமம், உபநிடதங்களிடம் பற்றுடையவர் இவ் வுரையாசிரியர் என்பதும், சைவத் திருமுறைகளில் அக்கருத்துக்கள் வருங்கால் அவற்றைத் தெளிவுறுத்தவர் என்பதும் மகிழ்ச்சிக்குரிவை. காழ்ப்புணர்ச்சி இல்லாமல், மொழிகளனைத்தினும் உள்ள மெய்ப் பொருள் காண்டலே அறிவு என்ற உண்மையை உலகிற்கு உணர்த் துவது இது.
வடமொழிகளில் உள்ள ஆகமங்கள் எத்தனை என்பதையும், அவற்றைச் சிவபெருமானிடம் கேட்டவர்கள் யாவர் என்பதையும், இவர் விளக்குவர். திருமூலர் `நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே' என்பதும் உரைத்து, `எண்ணில் எழுபது கோடி நூறாயிரம், என்றும் கூறுவது எதுபற்றி எனவும் விளக்குவர். இவ்வாகமங்கள் இறைவனால் சுத்தமாயாபுவனத்தில் தோற்றுவிக்கப்பட்டுப் பிரகிருதிபுவனத்திற்கு வந்தவை என்பதே கருத்து என்பதனை இவ்வுரையாசிரியர் தெளிவுறுத்தியுள்ளார். 33
கீர்த்தித் திருவகவலில் இந்திரஞாலம் போல வந்தருளியது பற்றி விளக்குங்கால் கேனோபநிடதக் கதையொன்றனைததெளிவுற எழுதியுள்ளார். 34
"வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு" என்ற பகுதிக்கு உரை யெழுதுங்கால். `வேதம் என்றதற்கு வேதமுடிவினால் உணர்த்தப் படுவதாகிய ஞானம் எனப் பொருள் கூறுக. `வேள்வி' என்றது கன்ம காண்டத்துள் சொல்லப்பட்ட வேள்விகளையாம்' என்று எழுது கின்றார். 36
"நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென்று ஏத்தினகாண் சாழலோ"
என்ற பகுதிக்கு எழுதும் உரையில், `இஃது ஈசானஸ் ஸர்வ வித்யானாம்' என்ற தொடங்கும் வேத மந்திரத்தை உட்கொண்டு அருளிச் செய்தது என்று எழுதுவர். 36.
"பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
பற்றுநான் பற்றிலேன் கண்டாய்"
என்பதன் உரையில், `காயத்திரி மறையின் பொருளும் இம்மூர்த்தியே யல்லது சூரியனல்லன்' என்பதை அப்பர் தேவாரப் பகுதியொடும் புணர்த்து விளக்கியுள்ள திறம் அறிந்தின்புறற்பாலது. 37
`சிறந்த தவக்கோலம் உடைமை பற்றிச் சிவபெருமானை முனிவன்' எனக் கூறுவர் பெரியோர் என உரைத்து உபநிடத வாக்கியம் ஒன்றினையும் அங்குப் பொருந்தக் காட்டியுள்ளார். இப் பகுதி `முத்தனே முதல்வா முக்கணா முதல்வா' எனுந் திருப்பாட்டில் `முனிவா' என்பதன் விளக்கமாக வருவதாகும். 38
திருக்கோவையாரில் `நான் இவளாம் பகுதிப் பொற்பு' என்பதற்கு இவர் எழுதும் உரைப்பகுதி, உபநிடத வாக்கியங்கட்குச் சைவ சித்தாந்த நெறியிற் பொருள் காணும் இவர் பெரும் புலமையைக் காட்டி, `மகாவித்துவான்' என்ற மாண்பின் மெய்ம்மையை விளக்கி நிற்கின்றது, `நான் இவன் ஆம்' என்றதனால் `நான் பிரமம் ஆகின்றேன் எனவும், `அது நீ ஆகின்றாய் எனவும் பிறவாறும் வரும் உபநிடத மகாவாக்கியங்களின் பொருளையே அறிவுறுத்தமை அறிந்துகொள்க' என்பது இவர் தரும் விளக்கம். `நாம் ஒழிந்து சிவம் ஆனவாபாடி" `சிவமாக்கி எனையாண்ட' என்றும் வரும் பகுதிகள் இந்நிலையையே குறிக்கும் என்று காட்டி அதன்பின், `இத்துரிய நிலைக்கண் நின்ற வுயிரை அங்கு நின்றவாறே அதீதத்திற் செல்ல வொட்டாது மீளவும் அதனைக் கீழ்நிலையிற் செலுத்துவது வாதனாமலம்; அதனின் நீங்கி அதீதத்தைத் தலைப்படுத்தற்கு வழியாக விதிக்கப்படுவன சிவோகம் பாவனையும், திருவைந்தெழுத்துக் கணிப்பும், அந்தரியாகமுமாம். அவற்றுள் சிவோகம்பாவனையும் இங்குக் கூறிய `நான் இவளாம் பகுதி' என்றதனாற் குறிக்கப்படும் இயல்பினதாதல் அறிக' என்றெழுதி அவ்வுபநிடத வாக்கியங்கட்கு மாயாவாதப் பொருள் பொருளாகாமை யும், இவ்வாறு சித்தாந்தத்துட் கூறப்பட்ட பொருளே பொருளாதலும் விளக்கியுள்ளார் இவ்வுரையாசிரியர். இவ்வாறு `கலவி யுரைத்தலில்' வரும், இத் தொடர் சிவோகம் பாவனையோ டொத்த பெருஞ்சிறப்புக் குறிக்கும் என இவர் விளக்கியுள்ளமை கற்றோ ரேத்தும் கவினுடைய தாகும். 39
`சிற்றம்பலம் வடமொழியில் கூறப்படும் தகராகாசம் என்றும். தகரம் சிறுமை என்றும், இதயத்தின்கண் உள்ள சிறு வெளியில் சிற்றொளி வடிவாயுள்ள இறைவனைத் தியானிக்கும் முறையை உபநிடதம் தகரவித்தை எனக் கூறும் என்றும் இவர் எழுதுவர். இஃது அப்பரது திருத்தாண்டகத் திருமுறையினுள்ளும் இவரான் விரிவாக எழுதப்பெற்றவையே. 40
சுருங்கச் சொல்லல்:
மணிவாசகம், `என்போல்வார்' என்று கூறியதன் ஆழ் பொருளைக் காண்பராய், `மேற்கூறிய முயற்சிகளுள் ஒன்றும் செய் யாது உலகியலில் நின்றவர்களை, இறைவனது பெருங்கருணைத் திறத்தை அடிகள் இங்ஙனம் அருளிச் செய்தாராயினும் இவரது முன்னைத் தவ முதிர்ச்சியின் பலனே அங்ஙனம் இறைவன் நேர்நின்று ஆட்கொண்டது என்க' என்றெழுதி, அடிக்கடி இதனை எழுதுவது காலப்பெருக்கம், முதலிய குற்றங்களை விளக்குமாதலின், "இஃது இத்திருமுறையுள் யாண்டும் ஒக்கும்" என்றெழுதுவர். இஃது இவரது சொற் சுருங்கிய திட்ப நுட்பமதியினை விளக்கும் ஒரு சான்று என்று கூறலாம். 41
சைவசித்தாந்த விளக்கம் காணல்:
தாம் சைவசித்தாந்தப் பெரும்புலவராகவும், சைவசித்தாந்தக் கல்லூரியின் பேராசிரியராகவும் உள்ளமையால் திருமுறைகளாகிய தோத்திரங்கட்குரை விரிக்கும்போதே சாத்திரப் பகுதிகள் இயல்பாக இவர் உரையில் வருகின்றன. படிப்போர்க்கும் சைவத்தின் திறம் விளங்க அழுத்தமுடன் அவை பேசப் படுகின்றன.
கேவலம், சகலம், சுத்தம் ஆகியவை பற்றிய விளக்கம், 42 `அற்றவர்க்கு அற்ற சிவன்' ஆதல், 43 நற்குடிப்பிறப்பே ஞானம் பெறுதற்கு வாயில் என்ற சாத்திர முடிவு, 44 `வீடு' என்று சாத்திரங்களிற் கூறப்பெறுதல் எது எனும் குறிப்பு 45 `சிவம் ஆதல்' என்பதன் செம்பொருள், 46 இறைவன் அகள சகளத் திருமேனிகள் கொள்ளல் 47 இறைவன் யோகம்புரிதலின் சாத்திரப் பொருள்நுட்பம், 48 கங்காளமூர்த்தி காயாரோகண மூர்த்தியே எனல், 49 சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் என்ற சிவஞானபோதக் கருத்து விளக்கம், 50 ஆன்மா ஒளியும் இறைவன் அதன் உள்ளொளியும் ஆம் என்ற துணிவு,51 `ஆதி குணம் இலான்' என்பதன் ஆழப்பொருள், 52 சம்புபட்சம் அணுபட்சம் என்பவற்றைத் தெளிவுறுத்தும் திறம், 53 உடை யாள் உன்றன் நடுவிருக்கும்' என்ற அருந்திறம், 54 `சீவனுக்குள்ளே சிவ மணம்' என்பதன் தெளிநிலை, 55 `அப்பணைந்த உப்பேபோல் அத்து விதம் ஆதல் எனத் தெளிவுறுக்கும் உயர்நிலை, 56 மானததீக்கை மாண்பு, 57 திரோதானசக்தி - மறைத்தல் என விளக்கும் எழிற்றிறம், 58 சிவஞான யோகிகள் உரை நலம் காட்டி `வேண்டத்
தக்கது' என்பதனை விளக்கும் நிலை, 59 நிட்டை கைவந்தபின் சிவானந்தம் பெருகும் என்ற தெளிநிலை, 60 `திருந்து உறையுள் வேல் மடுத்து' என்புழி உறை திரோதான சத்தியையும் வேல் சிவஞானத்தையும் குறிக்குமென்ற திறன், 61 சிற்றம்பலம் ஞான அம்பலமே என விளக்கும் பொற்பு, 62 உபநிடத வாக்கியங்கட்குச் சாத்திர நெறியில் பொருள்காணும் எழில்,63 துரியநிலை அதீதநிலை யாவையென விளக்கும் பகுதி, 64 முதலிய பல இடங்களில் சித்தாந்த சாத்திரக் கருத்துக்கள் இவர் உரையில் இழைந்து சாத்திர மணம் வீசுதலைக் காணலாம்.
அகச்சான்று:
மணிவாசகர் வாழ்வோடு நிகழ்ந்த பலவற்றிற்குத் தக்க அகச் சான்றுகள் வரும்வழி அவற்றை விளக்கிச் செல்லலும், இவர் உரை யியல்பு. நரிபரியாடல் நிகழ்ந்ததற்கும், 65 மணிவாசகர் மணங் கொண்டதற்கும், 66 இவர் தரும் விளக்கங்களைக் குறிக்கலாம்.
விழுமிய பாடம் தேர்தல்:
தக்க பாடம் அல்லாதவற்றை மறுத்துரைத்துத் தக்க பாடம் தேர்ந்த பின்னரே இவர் பொருள் உரைப்பர்; `கழலிணை, `அளியேன்', `எழுகேனே', `மெள்ளனவே', `அத்தன்', `செங்கமல மலர்போல்', `விளையாமல்' முதலிய பல பாடங்களை மறுத்துரைக்கும் பகுதிகளை67 இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
விளக்க முறை:
சொற்பொருளை விளக்குதலில் இவர் உரை ஆங்காங்கு மேற்கொண்ட முறை பெரிதும் பாராட்டற்குரியதாகும்.
`சங்கரன் - இன்பத்தைச் செய்பவன்' எனவரும் பகுதி, 68 `நம் சிவனை' என்புழி `நம்' என்ற அடைச்சிறப்பு, 69 மதி மயங்கி என்பதன் விளக்கம், 70 `தெள்ளேணம்' என்பதன் விளக்கம், 71 `புத்தன்' என வருவதின் உண்மைப் பொருள், 72 தாளியறுகு,73 கொக்கிறகு 74 பற்றிய விளக்கங்கள், `தம்பிரான் என்பதன் விளக்கம், 75 `துரை' - தன்முனைப்பு மிகுதிப்பாடு எனக்காண்டல், 76 மூத்த திருப்பதிகம் என் புழி மூப்பு `உயர்வு' குறித்தது எனச் சான்றோர் நெறி விளக்கம்.77 தியானித்தல் வழக்கன்றெனக் குறித்தல்,78 முதற்பரம்பொருளை `அது' என்றிடுதல் வடமொழி வழக்கு; `அவன்' என்றிடுதல் தமிழ் வழக்கு என விளக்கும் திறன், 79 ஏமாத்தல் வேறு ஏமாறுதல் வேறு என்ற நுட்பம், 80 `இடைக்கலம்' என்ற அப்பர் தேவாரப் பொருள் இன்ன தென்ற நுட்பம், 81 அதெந்து என்பது விருப்பப் பொருள், இன்றியமை யாமைப் பொருள் ஆகிய இருபொருள் குறிக்கும் என்ற நன்மை, 82 எத்துக்கு - எற்றுக்கு மரூஉ எனல், 83 `தால் - தாலு என்னும் ஆரியச் சொல் சிதைவு' என்றுரைத்தல் 84 இத்தை - இதனை என்பதன் மரூஉ ஆதல், 85 விளாக்கை - விளாவுகை என்பதன் மரூஉ ஆதல், 86 முருடு - இக்காலத்தார் முரடு என வழங்குப எனல், 87 `தொடுகடல்' என்பதன் பொருள் விளக்கம், 88 அருந்துதி - அருந்ததி மரூஉ வாதல் 89 முதலிய பகுதிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
புழந்தமிழ்நூல் நலம்:
சங்க இலக்கியங்கள் மீதும், தொல்காப்பியத்தும் இவர் கொண்டுள்ள பற்றும், அவற்றின்பால் இவ்வாசிரியர்க்குள்ள புலமைத் திறமும் இவ்வுரைப் பகுதியிடையிடையே எண்ணற்ற இடங்களில் வெளிப்படுகின்றன. தைநீராட்டுப் பற்றிப் பேசுங்கால் பரிபாடலும், 90 பிற பொருட்பகுதிகளை விளக்குங்கால் புறநானூறும்,91 நற்றிணை யும்,92 நெடுநல்வாடையும், 93 அகநானூறு 94 முதலிய பல நூல் மேற் கோள்கள் விரவியுள்ளன. திருக்கோவையார் உரையில் பேராசிரியர் கருத்தைச் சில இடங்களில் வாளா எடுத்துக் காட்டியும் சில இடங்களில் மேற்கொண்டும் செல்லும் இவர், அவற்றுள் சில இடங்களில் தம் கருத்து மாறுபடுமாயின், அஞ்சாது அதனைச் சுட்டி மறுத்துரைத்தலை யும் காணலாம். 95 திருக்கோவையார்
உரையில் திருவாசகக் கருத்துக் களும் சொன்னடையும் பயிலுங்கால் அவற்றை ஆங்காங்குக் குறிப்பர்96 இவ்வாறே அப்பர் தேவாரத்திற்கும் மணிவாசகர் திரு மொழிகட்கும் இடையேயுள்ள ஒப்புமைக் கருத்துக்களைத் தவறாது காட்டிச் செல்லும் இயல்பினர். 97
ஆழ்பொருள் உணர்த்தல்:
உள்ளுறையுவமை 98, இறைச்சி, 99 அணிநலங்கள் அமைந்த பகுதிகளைப் பிரித்துக் காட்டுதலும், அவற்றோடு பெரிதும் ஒத்த சங்கநூல் முதலிய பிறநூல் ஆட்சிகளை எடுத்துக்காட்டுதலும் இவர் உரையின் இயல்புகள் ஆதலை இவ்வுரை நூலை முற்றும் ஓதுவோர் நன்கு உணரக்கூடும்.
யாப்பு விளக்கல்:
ஆங்காங்கு யாப்புக் குறிப்புக்கள் வருமாயின் அவற்றிற்குத் தக்க விளக்கம் தருவர். எதுகை நோக்கிச் சொற்கள் திரிதல். 100 நாலசைச்சீர்கள் மூவசைச்சீராக நின்று அலகுபெறல், 101 சில யாப்புவகைகள் தவறாகக் குறிக்கப்பட்டிருக்குமேல் அவற்றைத் திருத்தல் (அன்னைப்பத்து கலிவிருத்தம் அன்று; ஆசிரியத்துறை என் றிடுதல்) 102 ஒப்பியற் செய்யுள் என்று சிலவற்றை வரையறுத்தல், 103 முதலியவற்றைக் கூறலாம். இவ்வாறே எழுத்துச் சொல்லிலக் கணப் பகுதிக்குறிப்புக்களும் ஆங்காங்கு வருவன, 104 தொல் காப்பியமே திருவாசகத்திற்கு முற்பட்ட இலக்கணம் ஆதலின் விளக்க நூற்பாக்கள் முற்றும் அப்பழம்பெரும் இலக்கண நூலினின்றே தந்துள்ளார் இவ்வாசிரியர்.
பதசாரப் பாங்கு:
சொற்களின் ஆழத்தை யறிந்து அவற்றினை விரித்தெழுதி இன்னபிறவற்றால் இவ்வாறு கூறப்பெற்றது என உரைத்தல் `பதசாரம்' எனப்படும். இவ்வுரையாசிரியரது பதசாரப் பண்பு பெரிதும் சிறந்திருத்தலை இவர் உரையின் பலபகுதிகள் விளக்குகின்றன.
`விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து' என்ற திருப் பாட்டிற்கமைந்த பதசாரப்பகுதி கற்குந்தோறும் கற்குந்தோறும் கழிபேருவகை தருவதாய், மணிவாசகர் பேரருட் புலமையின் பெற்றியை விளக்குவதாய் உள்ளது. இது போன்ற பகுதிகள் எண்ணற்றவை. 105
நயம் காணல்:
`சாழல்' என்ற பகுதியில் தடை விடைகளாக வருவன, களவின்கண் பிரிவிடத்துத் தலைவி தலைவனை இயற்பழித்த வழி, தோழி இயற்பட மொழிந்து மறுத்த அமைப்பினது என விளக்குவது ஒரு புதுமை. 106 இவ்வாறே பரவல் புகழ்தல் என்பன முறையே முன்னிலைக்கும் படர்க்கைக்கும் மட்டுமே பெரிதும் வரும் என்பது ஓர் இனிய பகுதி. 107 தமிழகத்தையே சிவபிரான் சிறப்பிடமாகக் கொண்டவன் என்பதும், 108 சிற்றின்பப் பேரின்ப ஒப்புமைப்பகுதிக் கூற்றுக்களும், 109 சிறுபயன் தரும் சொல்லையும் விலக்குக எனலும் 110 ஐந்திணை அகப்பொருள் ஆன்றோராற் கொள்ளப்பட்டது. 111 என்பதும், `திருவளர் தாமரை' எனத் தொடங்கினாரேனும், `ஈசர் தில்லை' எனத் தொடங்குவதே மணிவாசகர் திருவுள்ளம் என்பதும்,112 திருக்கோவையாருள் வரும் தலைவன் தலைவியர் நம்பியாரூரரும் பரவையாரும் போல்வர் என்பதும், 113 முதலிய பகுதிகளும், சொற்களின் நயம் கூறும் பகுதிகளும் படித்துப் படித்து இன்புறத்தக்க பாங்கு உடையவை என்று கூறலும் மிகையே.
திருவாசகத்தின் இருதயப்பாட்டு:
ஒரு திறனாய்வாளராகவே உரையாசிரியர் விளங்குவதன் அவசியத்தை இக்காலத் திறனாய்வாளர் பெரிதும் புகழந்துரைப்பர். எல்லாப் பாட்டுக்களினும் ஈடுபட்டாராயினும் கோயில் திருப் பதிகத்தின், "இன்றெனக்கருதி" என்ற பாட்டிற்கு உரை யெழுதப் புகுந்த இவர் இதனுட் காணப்பெறும் `பரம சித்தாந்தத்தை' இனிது விளக்கியபின், "இதனைத் திருவாசகத்தின் இருதயமான பாட்டு என்பர் அறிஞர்" என்றெழுதுவது அறிந்து மகிழத்தக்க பகுதி யாகும்.114
உரைவிளக்கம் நிறைவு:
இவ்வாறு பல நிலைகளிலும் கற்றோர்க்கு இன்பம் ஊட்டித் திருவாசகம் திருக்கோவையார் ஆகிய இருநூல்கட்கும் இனியதோர் உரை வரைந்துள்ள மகாவித்துவான், திரு.சி.அருணை வடிவேலு முதலியாரவர்கள் இதன் வாயிலாகத் தமிழுலகிற்கும் சமயவுலகிற்கும் ஒரு புதிய உரைப்படைப்பை வழங்கியிருக்கிறார். இப்படைப்பைத் திருக்கையால் வழங்கியருளும் தருமையாதீனம் இருபத்தைந்தாவது குருமுதல்வரவர்கட்குச் சைவப்பெருமக்கள் நன்றியுணர்வு என்றும் உரியது. உரையெழுதலாகாது என்ற உணர்வு இருந்த காலத்தே, `திரு முறைகட்குத் தெளிந்த உரை வருதலும் வேண்டும்; சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்'க்கே செல்லும் நெறியும் சித்திக்கும்' என்று திருவுளங்கொண்டு, தக்காரைத் தேர்ந்து இத்திரு முறை உரைப்பணியைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றார்கள், சேக்கிழார்திருமொழி வரையும் இவ்வுரைப்பணி மிக விரைந்து நிறைவேற அம்பலக் கூத்தனும் செந்தமிழ்ச் சொக்கனும் அருள் வழங்குவர் என்பது உறுதி.
மெய்ப்பொருள் உணர்வு:
இதுகாறும் வெளிவந்துள்ள திருவாசக உரைகள் பலவற்றின் தொகுப்பின், இவ்வுரை இஞ்ஞான்று மலர்ந்து மணம் வீசுகின்றது. ஒரு நூலுக்குப் பல உரைகள், பல விளக்கங்கள் மேலும் மேலும் வேண்டும். அவரவர் நெஞ்சிற்கும், கனிவிற்கும், புலத்திற்கும் ஏற்ப அவ்வப் போது ஏற்றி வைக்கப்படும் இத்தகைய உரை விளக்குகள் புத்தொளி வீசிடும்; அவ்வொளியின் சுடரில் மூலநூலின் ஆழ்பொருள் இனிது புலனாகும்; அதனை உணர்வார் வாழ்வின் விழுப்பம் உணர்ந்து, மெய்ந்நெறி தலைப்பட்டு, மெய்ப்பொருள் கண்டு இன்புற்று வாழ்வர்.
வாழ்க மணிவாசகர் மலரடி! வாழ்க திருவாசகத் திருநெறி!!