08 இரண்டாம் பகுதியின் பதிப்புரை
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் கோவ
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஓருவா சகம்என் றுணர்.
- ஓளவையார்
பன்னிரு திருமுறைகளில் எட்டாவதாக இலங்குவன மணிவாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். மணிவாசகர் பக்திச் சுவைக்கு முதன்மை கொடுத்துப் பாடியது திருவாசகம். அப்பக்தியை இலக்கியச் சுவையோடு கூட்டிப் பாடியருளியது திருக்கோவையார்.
தமிழ் மொழியில் வழங்கும் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் கோவை என்பதும் ஒன்றாகும். இதனை இலக்கண விளக்கப் பாட்டியல்,
"முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து
களவு கற்பெனும் வரைவுடைத் தாகி
நலனுறு கலித்துறை நானூ றாக
ஆறிரண் டுறுப்பும் ஊறின்றி விளங்கக்
கூறுவ தகப்பொருட் கோவை யாகும்" -இலக்கண விளக்கப் பாட்டியல், நூற். 56
எனக் கூறுகின்றது. திருக்கோவையார் கோவை இலக்கியங் கட்கெல்லாம் மூல இலக்கியமாக விளங்கும் சிறப்பினது. திருச்சிற்றம்பலக் கோவையார் என்பது இந்நூலின் பெயராகும்.
ஆரணங் காண்என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங் காண்என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங் காண்என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. -ஆன்றோர் வாக்கு
என்பது இந்நூலின் பெருமையை விளக்கும் சாற்றுக் கவியாகும். இப்பாடலில் ஆரணம் என்பது வேதத்தையும், காரணம் என்பது முதலையும், ஏரணம் என்பது அளவைநூலையும், எண்ணர் என்பது அளவை நூல் வல்லாரையும், எழுத்து என்பது இயற்றமிழ் இலக்கணத்தையும் குறிக்கும்.
மணிவாசகர் அருளிய திருக்கோவையாரின் சிறப்பை இலக்கணக் கொத்து நூலாசிரியர் ஷ்ரீ சாமிநாத தேசிகர்,
"பல்காற் பழகினும் தெரியா வுளவேல்
தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும்" -இலக். கொத்து, பாயி. பா.7
என உரைப்பதோடு, `மாணிக்கவாசகர் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கிற் கலந்திருந்து அருமைத் திருக்கையால் எழுதினார்' எனப் பாராட்டி உரைப்பார்.
திருக்கோவையார் நானூறு செய்யுட்களை உடையதாய்ப் புலவர் பெருமக்களால் போற்றப் பெறுவதையும், இந்நூல் திருவளர் தாமரை எனத் தொடங்கப் பெறுதலையும் கருத்துட் கொண்டு, இந்நூலையே நானூறு இதழ்களை உடைய தாமரை எனவும், அத்தாமரை தில்லைப் பெருமானின் அருட்கதிரால் மலர்ந்தது எனவும், புலவர்கள் வண்டுகளாய் அம்மலரில் பொதிந்துள்ள தேனை நுகர்பவர்கள் எனவும் கூறி, மணிவாசகரால் தில்லைப் பெருமான் திருவடிகளில் சூட்டப்பட்டது இத்தாமரை மலர் எனவும் உருவகப்படுத்தி ஒரு புலவர் அழகியதொரு சாற்றுக் கவிதையை அளித்துள்ளார்.
உருவாரும் தமிழ்ச்சங்கத் தடம்பொய்கைத் தோன்றி
உயர்ந்தோங்கு மெய்ஞ்ஞான ஒளியையுடைத் தாகி
மருவாரும் கிளவிஇதழ் நானூ றாகி
மதுப்பொருள்வாய் மதிப்புலவர் வண்டாய் உண்ணத்
தருவாரும் புலியூரின் உலகுய்யக் குனிப்போன்
தடங்கருணை யெனும்இரவி தன்கதிரால் அலரும்
திருவாத வூராளி திருச்சிற்றம் பலவன்
திருவடித்தா மரைச்சாத்தும் திருவளர்தா மரையே. -ஆன்றோர் வாக்கு
குமரகுருபரமுனிவர் இந்நூலைக் காமஞ்சான்ற ஞானப் பனுவல் எனப் போற்றி யுரைப்பார்.
திருக்கோவையார் தில்லைச் சிற்றம்பலவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவ்விறைவனது பொருள் சேர் புகழை விரித்துரைக்கும் நிலையில் விளங்கும் அகப்பொருள்நூலாகும்.
தருமையாதீனம் பன்னிரு திருமுறைப் பதிப்பு வரிசையில் இந்நூல் தருமை ஆதீனப் புலவர் மகாவித்துவான் முனைவர் திரு. சி. அருணை வடிவேலு முதலியார் எழுதிய விளக்கக் குறிப்புரையோடு 1966 ஆம் ஆண்டு குருபூசை விழா மலராக வெளி வந்தது.
பன்னிரு திருமுறைகளில் திருக்கோவையாருக்கு மட்டும் பழமையான பேராசிரியர் உரை உள்ளது. திருப்பணந்தாள் ஷ்ரீ காசி மடத்தில் பேராசிரியர் உரையோடு திருக்கோவையார் வெளியிடப் பெற்றுள்ளது. புலவர்கள் பலரும் போற்றிக் கையாளும் இவ்வுரையுடன் திருக்கோவையாரை வெளியிட வேண்டுமெனத் தருமை ஆதீனம் 26வது குருமகாசந்திதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பணித்தருளிய வண்ணம் இந்நூல், ஈழத்து, மன்னார், மாதோட்டம், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் நன்கொடையால் ஞானசம்பந்தம் பதிப்பகத்தில் வெளியிடப்பெறுகிறது.
இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.
அன்பர்கள் பலரும் இந்நூலை ஓதி உணர்ந்து பயன் பெறுவார்களாக.
கட்டளை விசாரணை, ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானத்தின்
திருக்கடவூர் தேவஸ்தானம், உத்தரவுப்படி,
தருமை ஆதீனம்.
சுந்தரமூர்த்தித் தம்பிரான்