09 முன்னுரை
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. தி.2 ப.179 பா.5
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்
தனக்கென ஒன்று வேண்டும் குறையில்லாது நிறைவுடை யோனாகிய இறைவன் தனக்கு இயல்பாய் உள்ள எல்லையற்ற பெருங்கருணையாலே, குறைபல உடைய உயிர்களை உய்விக்கத் திருவுளம் கொண்டே எண்ணற்ற செயல்களை மேற்கொள்ளு கின்றான். செயல்களை மேற்கொள்ளுதலால் அவற்றிற்கு ஏற்ற உருவம், பெயர் என்பவைகளையும் கொண்டு நிற்கின்றான். அங்ஙனம் நின்று உயிர்கட்கு அவற்றின் தகுதிக்கேற்பப் பலவகையான உடம்புகளைப் படைத்துக்கொடுத்துப் பலவகையான உலகங்களில் விடுக்கின்றான். அவ்வகைகள் பலவற்றினும் உய்தி பெறுதற்கு வாயிலாக அமைவது நிலவுலகில் மக்களுடம்புடன் வாழும் நிலையே யாம். ஆகவே, இறைவன் உயிர்கட்கு மக்களுடம்பைக் கொடுத்தலின் குறிக்கோள், மனமொழி மெய்களால் அவனை நினைந்தும், வாழ்த்தியும், வணங்கியும் அவனது திருவடியை அடைவித்தலே யாகும்.
"மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத்தைந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ"
என்னும் சிவஞான சித்திச்செய்யுள் இதனை நன்கு விளக்குகின்றது.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. (தி.5 ப.90 பா.7)
என்ற அப்பர் திருமொழியும்,
"வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து" (தி.8 ப.13 பா.7)
என்ற திருவாசகமும் இதனையே அறிவுறுத்துகின்றன.
மனத்தால் நினைதல், வாயால் வாழ்த்தல், காயத்தால் வணங்குதல் என்னும் மூன்றனுள் இடைநிற்கின்ற, வாயால் வாழ்த்தல் தனிச்சிறப்புடைய ஒன்றாகின்றது. ஏனெனில், இறைவன் ஏனைப் பொருள்கள்போல எல்லாராலும் கண்ணாற் காணப்படும் பொருளல்லன்; அதனால் காட்டப்படாத பொருளும் ஆகின்றான். கண்ணாற் காணப்படும் பொருளே காயத்தால் வணங்குதற்கும், கருத் தால் நினைத்தற்கும் உரியதாகும். ஆகவே, கண்ணிற்குக் காணப்படாத இறைவனை மக்கள் நினைத்தலும் வணங்கலும் இயலாவாகின்றன.
கண்ணாற் காண்டலும், கருத்தாற் கருதலும் இயலாத பொழுது இறைவனை மக்கள் உணர்வது எவ்வாறு எனின், முன்னைத் தவ முதிர்ச்சியால் அரியரினும் அரியராய் அவனைக் காணப்பெற்ற பெருமக்கள் ஒரு சிலர் `நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் பெருங்கருணையால் அருளிச் செய்யும் அருள்மொழிகள் வாயிலாகவே அவனை உணர்தல் வேண்டும்.
எனவே, அருளாளர்களது அருள்மொழியைச் செவியால் கேட்டுணரும் கேள்வியுணர்வின் வழியே மக்கள் இறைவனை நினைத்தல் முதலியவற்றை முதற்கண் செய்ய வேண்டியவ ராகின்றனர். ஆகவே, அருளாளர்களது அருள் மொழியை அவர்கள் திரும்பத்திரும்பப் பன்முறை சொல்லிச் சொல்லி அவற்றின் பொருளை உணர்ந்து உணர்ந்து உள்ளம் உருக நினைந்து, உடல் குழைய வணங்கிப் பயன்பெறல் வேண்டும் என்பது இனிது பெறப்படுகின்றது. அதனால், மனம், மொழி, மெய் என்னும் மூன்று பற்றிய இறைவழிபாட்டில் இடைநிற்கின்ற மொழி வழிபாடாகிய வாழ்த்துதலே மக்கட்குச்சிறந்த பற்றுக்கோடு என்பது தெளிவு.
இதுபற்றித்தான் திருநாவுக்கரசரும் மூவகை வழிபாட்டில், "வாழ்த்த வாயும்" (தி.5ப.90 பா.7) என்பதை முதற்கண் வைத்து அருளினார் போலும்! மாணிக்க வாசகரும், `வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்' என்றும், `வானாகி மண்ணாகி ....... நின்றாயை என்சொல்லி வாழ்த்துவன்' (தி8 திருச்சதகம் 19, 20)என்றும், பிறவாறும் அருளிச்செய்தல் காணலாம்.
இறைவனை மந்திரத்தின்வழிக் காண்டல் கூடும் என்பது பலரது கொள்கை. அம்மந்திரமும் ஒருவகை வாழ்த்தே என்பது மறக்கற் பாலதன்று.
இறைவனை வாயார வாழ்த்தி அதுவழியாக மனமார நினைத்துத் தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி அவன் அருளைப் பெறுதற்கு வாயிலாகத் தமிழ் மொழியில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் எண்ணற்றனவாய் உள்ளன. அவைகளில் தலைசிறந்தனவே திரு முறைகள்.
கடவுள் வாழ்த்துப் பாடல்களில் இசைப்பாடலாக அமைந்தன சிறப்புடையனவாம். ஏனெனில், உணர்வை மிகுவிப்பதில் இயற் பாட்டினும் இசைப்பாட்டுக்கள் முன்னிற்கும். ஆகவே, இறையன்பை மிகுவிப்பன இசைத்தமிழாய் அமைந்த திருப்பாடல்களேயாகும்.
ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் தமது அருட்பாடல்களை இசைத் தமிழாக அருளிச்செய்தது புற மதங்களின் வளர்ச்சி காரணமாக மக்க ளிடையே மறைந்திருந்த பத்தியுணர்வைத் தோற்றுவித்தற் பொருட்டே யாகும். இன்னும் இசையால் துதிப்பவர்கட்கே இறைவன் பேரருள் புரிகின்றான் என்று அவர்களே அருளியிருத்தல் காணலாம். இக் காரணத்தால்தான் திருமுறைகளில் தேவாரம் முன்னும், திருவாசகம் பின்னுமாக அமைந்துள்ளன.
முதல் இராஜராஜசோழன் வேண்டுகோளை ஏற்றுப் பொல்லாப் பிள்ளையாரது திருவருள் துணையால் தேவாரத் திருப்பதிகங்களைத் தில்லையினின்றும் எடுத்து அவற்றை ஏழு திருமுறைகளாகவும், முன்பே உள்ள திருவாசகம், திருக்கோவையார் என்பவற்றை எட்டாந் திருமுறையாகவும் நம்பியாண்டார் நம்பிகள் வகுத்தமைத்தார்.
தேவார நெறியைப் பின்பற்றியே திருமாளிகைத்தேவர் முதலிய அருளாசிரியர்கள் திருவிசைப்பாக்களை அருளிச்செய்தனர். ஏழிசையாய் இசைப்பயனாய் உள்ள இறைவனைத் தம்மைப் போலவே இசைத்தமிழால் பாடி ஈறில் இன்பத்தை எய்தும் நெறி தமக்குப் பின்னரும் அற்றொழியாது வளர வேண்டும் என்பதே தேவாரம் அருளிச்செய்த ஆசிரியன்மாரது திருவுள்ளமாகும். இத்திரு வுள்ளத்தின்படி காணப்பட்ட இசைத்தமிழின் வளர்ச்சியே திரு விசைப்பாக்களின் தோற்றம்.
முதல் இராஜராஜ சோழனாகிய தந்தையைப் போலவே வெற்றி யிலும், சிவபக்தியிலும் சிறந்து விளங்கித் தந்தை தஞ்சைப் பெரு வுடையார் கோயிலைக் கட்டியதுபோலக் கங்கைகொண்ட சோழேச் சரத்தைக் கட்டிய முதல் இராஜேந்திர சோழன், தந்தை தேவாரத் திருப்பதிகங்களை ஏழு திருமுறையாக வகுக்கச்செய்தது போலவே திருவிசைப்பா திருமந்திரம் முதலிய திருவருட்பாடல்களை மேலும் சில திருமுறைகளாக நம்பியாண்டார் நம்பிகளைக்கொண்டு வகுப் பித்தான்.
இராஜராஜன் காலத்தில் ஏறக்குறையப் பள்ளிச்சிறுவர் நிலையிலே இருந்த நம்பியாண்டார் நம்பிகள், இராஜேந்திரன் காலத்தில் வயது முதிர்ந்து சிவாநுபூதியில் திளைத்திருந்தவராவர். அந்நிலையில் அவர் அவனது வேண்டுகோளின்படி திருவிசைப் பாக்களை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் திருமுகப்பாசுரம், காரைக்காலம்மையார் திருப்பாடல்கள் முதலியவற்றோடு இறுதியில் தமது பாடல்களையும் தொகுத்துப் பதினொன்றாம் திருமுறையாகவும் வகுத்தருளினார் என்க.
இங்ஙனம் திருமுறைகளை வகுப்பித்த அரசர் இருவராயினும், வகுத்த ஆசிரியர் ஒருவரேயாகலின் ஒன்று முதல் பதினொன்று முடிய உள்ள திருமுறைகள் பதினொன்றும் ஒரு சமயத்திலே வகுக்கப்பட்டன போலத் திருமுறைகண்ட புராணம் கூறிற்று.
`மந்திரங்கள் ஏழுகோடியாதலின் தேவாரங்களை ஏழு திரு முறைகளாகவும், மந்திரங்கள் பதினொன்றாகலின் திருமுறைகளைப் பதினொன்றாகவும் வகுத்தார்கள்' என்று திருமுறைகண்ட புராணம் கூறியதற்கேற்ப, நம்பியாண்டார் நம்பிகளாகிய அருளாளரால் வகுக்கப்பட்ட பதினொரு திருமுறைகளே சைவ சமயத்தின் தலையாய நூல்களாக விளங்கின.
அதன்பின்னர்த் திருத்தொண்டர் புராணம் தில்லைக் கூத்தப்பெருமான் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்று, அப்பெருமான், `இதனை நீ கேட்க' என்று வான்மொழியாக அருளிச் செய்தபடி அநபாயச் சோழன் முன்னர் அரங்கேற்றப்பட்டபொழுது அனைவராலும், `இது முன்னுள்ள திருமுறைப் பாடல்களோடு ஒத்த திருவருட்பாடல்' என்று உடன்படப்பட்ட காரணத்தால் பன்னிரண் டாம் திருமுறையாகச் செப்பேடு செய்யப்பெற்றது. அதனோடு திருமுறைகள், பன்னிரண்டு என்னும் வரையறை பெற்று விளங்கு கின்றன.
"தோடுடைய செவியன்" என முதல் திருமுறையில் ஓகாரத் தில் தொடங்கிய திருமுறை, பன்னிரண்டாம் திருமுறையில் "உல கெலாம்" என்று மகர ஒற்றில் முடிந்தமையால், திருமுறைகள் பன்னிரண்டோடு நிறைவு பெற்றுவிட்டன என்பது தெளிவு.
திருத்தொண்டர் புராணத்திற்குப் பின்னர், சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தல் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வேறு பாடல்கள் தோன்றாமையே இப் பன்னிரு திருமுறைப் பாடல்களோடு ஒத்த பாடல்கள் பின்னர்த் தோன்றவில்லை என்பதைத் தெளிவாக்கும்.
இந் நிலையில் தேவார திருவாசகங்கட்கு அடுத்த நிலையில் திருமுறைகளிற் சிறப்புப் பெற்று விளங்குவன `திருவிசைப்பா திருப்பல்லாண்டு' என்னும் இரண்டுமாம்.
ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு இரண்டும் இசைத்தமிழாய் உள்ளன என்பது முன்பே சொல்லப் பட்டது. இவ்விசைகள் பிற்காலத்து வந்த வடமொழி இராகங்களாகச் சொல்லப்படாமல், தேவாரங்களைப்போலவே பண்டைத் தமிழ்ப் பண் களாகச் சொல்லப்பட்டிருத்தல் நினைவிற் கொள்ளவேண்டிய ஒன்றா கும். இதனால், ஒன்பதாம் திருமுறைப் பாடல்களுக்குப் பிற்காலத்தில் சிலர் இசை வகுத்து, அவற்றை இசைத் தமிழாகச் செய்தனர் என்பதற்கு இடன் இன்றி, அவை தோன்றிய காலத்தே இசைத்தமிழாகத் தோன்றின என்பது தெளிவாகும்.
திருவிசைப்பாவை அருளிச் செய்த ஆசிரியர் திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பதின்மராவர். திருப்பல்லாண்டும் அவ்வொன் பதின்மருள் ஒருவராகிய சேந்தனாராலே அருளிச்செய்யப்பெற்றது. எனவே, ஒன்பதாம் திருமுறை ஆசிரியர் ஒன்பதின்மர் என்பது தெளிவு.
இவ்வொன்பதாம் திருமுறை தேவாரத் திருமுறைகள்போல இசைத்தமிழால் அமைந்து, `திரு இசைப்பா' எனப் பெயர் பெற்ற தோடு, பல தலங்களிலும் சென்று பாடப்பட்ட வகையிலும் தேவாரத் தோடு ஒத்துநிற்கின்றது.
அங்ஙனம் பாடப்பெற்ற தலங்களுள் கோயில் (தில்லை), திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருப்பூவணம், திருவிடை மருதூர், திருவாரூர் என்னும் ஆறுமே தேவாரம் பெற்ற தலங்கள். ஏனைய திருவிசைப்பா மட்டுமே பெற்றவை. அவை, திருவிடைக்கழி, திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம் என்பன. இவற்றுள் கோயில்பற்றிய திருவிசைப்பாக்களே பெரும் பாலன. திருப்பல்லாண்டும் கோயில்பற்றியதே.
திருவிசைப்பாவின் பண்களில் `சாளரபாணி' என்பது ஒன்று தவிர ஏனைய எல்லாப் பண்களும் தேவாரத்தில் உள்ள பண்களே. `சாளரபாணி' என்பது ஒன்றுமட்டும் இவ்வொன்பதாம் திருமுறையுள் புதுவதாய்க் காணப்படுகின்றது. ஏனைய பண்களிலும் `பஞ்சமம்' என்ற பண்ணில் அமைந்த திருப்பதிகங்களே பெரும்பான்மை.
முன்னைத் திருமுறைகள் போல இவ்வொன்பதாம் திருமுறையும் சிவபிரானது திருமேனிச் சிறப்பையும், அவன் தேவர் பொருட்டும், அடியவர் பொருட்டும் அவ்வப்பொழுது மேற்கொண்ட அருட் செயல்களையும் பல்காலும் எடுத்தோதிப் பரவுதலோடு, தத்துவக் கருத்துக்களை இலைமறை காய்போல, அரிதின் விளங்கும் முறையிலே கொண்டு, முன்னை அருளாசிரியர் பெருமைகளை எடுத்தோதுவது. முருகக் கடவுளைப் பற்றிய ஒரு திருப்பதிகம் இத் திரு முறையிற் காணப்படுவது இதன் தனித்தன்மை எனலாம்.
இதன் வழி நின்றே பதினொன்றாம் திருமுறையுள் சிவபிரானைப் பற்றிய பிரபந்தங்களோடு, விநாயகர், முருகக்கடவுள் இவர்களைப் பற்றிய பிரபந்தங்களும், சிவன் அடியார்களைப் பற்றிய பிரபந்தங்களும் உடன் தொகுக்கப்பட்டன.
இத்தகைய சிறப்பமைந்த இவ்வொன்பதாம் திருமுறையும் முன்னைத் திருமுறைகள் போலக் குறிப்புரையுடன் வெளிவருதல் வேண்டும் எனத் தருமை ஆதீனம் 25வது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருவுளம்பற்றிய வண்ணம் திருவள்ளுவர் ஆண்டு 2000 (சௌமிய ஆண்டு) வைகாசித் திங்கள் 23-ஆம் நாள் (5-6-1969) தருமை ஆதீன முதற்குரவர் ஷ்ரீலஷ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் குருபூஜை விழா மலராக வெளிவருகின்றது.
இத்திருமுறைக்கும் குறிப்புரை எழுதுதல் வேண்டும் என்று ஷ்ரீலஷ்ரீ மகாசந்நிதானத்தில் எழுந்த அருளாணையின் வண்ணம் அடியேன் இயன்ற அளவில் அப்பணியை ஒருவாறு நிறைவேற்றி யுள்ளேன். இவ்வரும்பெரும் பணிக்கு அடியேனை ஆளாக்கி யருளிய ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமகாசந்நிதானமவர்களது திருவடி மலர்கட்கு எனது மனமொழி மெய்களாலாகிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்திருமுறையின் ஆசிரியர் ஒன்பதின்மரது வரலாற்றையும் ஆராய்ந்து தெளிவுற எழுதித் தந்தவர்கள் தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரிப் பொறுப்பு முதல்வர் திருநெறிச்செம்மல், நல்லிசைப் புலவர், வித்துவான் திரு. வி.சா. குருசாமி தேசிகர் அவர்கள்.
அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் செஞ்சொற் கொண்டல், வித்துவான். திரு. சொ. சிங்காரவேலனார் எம்.ஏ. டிப்-லிங். அவர்கள் திருவிசைப்பாப் பொருள்நலம் பற்றியும், தருமை ஆதீனப் பல்கலைக்கல்லூரிப் பேராசிரியை வித்துவான் திருமதி ப. நீலா அவர்கள் திருவிசைப்பா இலக்கிய நலமும் பண்பாடும் என்பது பற்றியும், அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி உதவினார்கள்.
கல்வெட்டு ஆராய்ச்சிக் கலைஞர் வித்துவான் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள், திருவிசைப்பாத் தலங்களின் வரலாறு கல்வெட்டுக் குறிப்புக்கள் பற்றிய தங்கள் ஆராய்ச்சிகளை முதற்கண் நன்கு தொகுத்தளித்தார்கள்.
இத்திருமுறைக்குப் பாட்டகராதி, சொல்லகராதிகளைத் தொகுத்தளித்ததுடன், அச்சாகும்பொழுது உடன் இருந்து பிழை திருத்தம் செய்து நன்முறையில் அமைய உதவியவர்கள் தருமையாதீனப் பல்கலைக் கல்லூரிப்பேராசிரியர் சிரோமணி, வித்துவான். திரு. வி. சபேசனார் அவர்கள்.
இப்புலவர் பெருமக்கள் அனைவர்க்கும் எனது உளமார்ந்த நன்றி என்றும் உரியது. இத்திருமுறையைச் செம்மையாகப் பதிப்பித்துத்தந்த தருமபுரம் ஞான சம்பந்தம் அச்சகத்தார்க்கும் எனது நன்றி உரியது.
செந்தமிழ்க்கும், சிவநெறிக்கும் சீரிய துணையாய் நிற்கும் இவ்வொன்பதாம் திருமுறை சீரிய முறையில் வெளிவரத் திருவருள் பாலித்த ஷ்ரீலஷ்ரீ கயிலைக்குருமணியவர்களது திருவுளக்கருணைக் குத் தமிழுலகமும், சைவ உலகமும் என்றும் குன்றா நன்றியறியும் கடப் பாட்டுடன், இத்திருமுறையைப் பெற்று ஓதி உய்வனவாக.
வாழ்க திருமுறைகள்! வளர்க திருநெறி!
தருமபுரம், இங்ஙனம்,
2-6-1969. ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணியவர்கள்
அருளாணைப்படி
அடியேன்
சி. அருணைவடிவேல்.