b

01 பதிப்புரை


திருப்பனந்தாள்

சிறீ காசிமடத்து அதிபர், கயிலை மாமுனிவர்

சீர்வளர்சீர் காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்.

திருச்சிற்றம்பலம்

"அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை

எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே."

- ஞானசம்பந்தர்.

தமிழ் மக்களின் தவப்பயனாகத் தோன்றிய அருளாளர்கள் இருபத்தெழுவர் நமக்கு அளித்துள்ள ஞானக்கருவூலங்கள் பன்னிரு திருமுறைகள். இவை உலக வாழ்க்கையில் மக்கட்கு வேண்டும் நலங் களை அருளுவதோடு முடிவில் இறைவன் திருவடிப் பேற்றையும் நல்குவனவாகும். பன்னிரு திருமுறைகளைப் பக்தியோடு பாராயணம் செய்து நலம் பெறுமாறு நமது தருமை ஆதீன ஆதிபரமாசாரியர் ஷ்ரீகுருஞானசம்பந்தர் நமக்கு அறிவுறுத்துகின்றார். அப்பாடல்,

"ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்

நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீ சீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய்."

என்பதாகும். பன்னிரு திருமுறைகளில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய முதல் 7 திருமுறைகள் தேவாரம் எனப்படும். தேவாரம் என்பதற்குத் தெய்வத்தைப் போற்றும் இசைப்பாடல்கள் என்பது பொருள் ஆகும்.

ஞானசம்பந்தரும் அப்பரும்:

ஞானசம்பந்தரும் அப்பரும் சமகாலத்தவர்கள். இவ்விருவர் காலமும் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். அந்நாளில் தமிழகத்தில் சமண, புத்த சமயங்கள் மேலோங்கிச் சைவம் நிலை குலைந்திருந்தது. தமிழ் நாட்டின் வடபகுதியில் மகேந்திரவர்ம பல்லவனும், தென்பகுதியில் நின்றசீர்நெடுமாற பாண்டியனும் சமண சமயம் சார்ந்து இருந்ததால் மக்களும் வேற்றுச்சமய நெறிகளை விரும்பத் தொடங்கியிருந்தனர். இறைவன் திருவருளால் இவ்விரு பெருமக்களும் தோன்றிச் சைவ சமயத்தைத் தமிழகத்தில் நிலைபெறச் செய்தனர்.

ஞானசம்பந்தர்:

ஞானசம்பந்தர் திருவவதாரத்தால் தமிழ் மொழி தழைத்தது. தமிழ்ச்சமய நெறியே உலகில் உயர்ந்தது என்பதை மக்கள் அறிந்து போற்றத் தொடங்கினர் எனக்கூறுகிறார் சேக்கிழார்.

அடங்கல் முறை:

மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களைப் பண்முறை, தலமுறை, வரலாற்று முறை என மூவகையாக அடைவு செய்வர். இவை அடங்கல் முறை எனப்படும். அடங்கல் - தொகுப்பு. இவற்றுள் பண்முறையே நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பெற்றது. இதுவே திருமுறை வரிசையில் ஒன்று இரண்டு முதலியனவாக எண்ணி யுரைக்கும் நிலையில் உள்ளது. நம்பிகள் ஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாக அமைத்துத் தந்துள்ளார்.

முதல் திருமுறை:

இத்திருமுறையில் நட்டபாடை (22), தக்கராகம் (24), பழந்தக்கராகம் (16), தக்கேசி (12), குறிஞ்சி (29), வியாழக் குறிஞ்சி (25) மேகராகக் குறிஞ்சி (8) ஆகிய ஏழு பண்களில் 136 திருப் பதிகங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பாடல் எண்ணிக்கை 1469.

திருப்பதிகம்:

பதிகம் என்பதற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலானவை பத்துப்பாடல்களைக் கொண்டும் சில கூடியும் குறைந்தும் இருப்பினும் அவை பதிகம் எனவே பெயர் பெறும். ஞானசம்பந்தர் பதிகங்கள் பத்துப் பாடல்களுக்கு மேல், பயன்கூறும் திருக்கடைக்காப்புடன் பதினொரு பாடல்களைக் கொண்டதாய் விளங்குவன.

இத்திருமுறையில் அற்புதப் பதிகங்களாக விளங்குவன ஏழு. அவை ஞானப்பால் உண்டது, பொற்றாளம் பெற்றது, முயலகன் நோய் தீர்த்தது, பனிநோய் போக்கியது, மதுரை அனல் வாதத்தின்போது எரியில் இட்டது, ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது, வாசி தீரக் காசு பெற்றது ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியனவாகும்.

திருமுறைப் பதிப்பு:

'சில நூற்றாண்டுகளுக்கு முன், தஞ்சை மாவட்டம் வேதா ரணியத்திலும், திருநெல்வேலியிலும் வாழ்ந்த சிவநேயச் செல்வர்கள் ஆன தேசிகர்கள் பலர், தேவாரப் பதிகங்கள் முழுவதையும் பனை ஓலைச் சுவடிகளில் எழுதி மக்கள் பலருக்கும் கொடுத்து அதனால் பெறும் ஊதியங்கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்கள் வரைந்த ஓலைச் சுவடிகளே தமிழகத்திலும், யாழ்ப்பாணத்திலும் கிட்டும் சுவடிகளாகும். இச்சுவடிகளிடையே பாட பேதம் காண்டற்கு வாய்ப்பின்று' என மர்ரே கம்பெனி திரு. எஸ். ராஜம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளிலிருந்த மூவர் தேவாரத் திருமுறைகளை, முதன் முதலில் காகித நூல்வடிவில் உலகுக்கு அளித்த பெருமை திருமயிலை சுப்பராய ஞானியார் அவர்களையே சாரும். திருஞானசம்பந்தர் அருளிய முதல் மூன்று திருமுறைகளை, திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு, காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, அப்பாவுப்பிள்ளை, நமச்சிவாய முதலியார் ஆகியோரின் பொருள் உதவியுடன், குமாரய்யர் அவர்களின் அச்சுக் கூடத்தில், ருத்ரோத்காரி ஆண்டு ஐப்பசித் திங்கள் (கி.பி. 1864)இல் பதிப்பித்து இவர் தமிழுலகிற்கு வழங்கினார்.

சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையினை திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, கலாநிதி அச்சுக் கூடத்திலும், சண்முக விலாச அச்சுக் கூடத்திலுமாக குரோதன ஆண்டு (கி.பி. 1865) பதிப்பித்து உதவி னார். திருஞானசம்பந்தர் தேவாரம் அச்சில் வெளிவந்த எட்டுத் திங்களுக்குள் சுந்தரர் தேவாரம் அச்சேறிவிட்டது.

திருநாவுக்கரசர் அருளிச்செய்த நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளையும் திருவாரூர்ச் செப்பேட்டின்படி பனை ஓலையில் எழுதுவித்துத் தருமை ஆதீனத்தில் இருந்த பிரதியை ஆதார மாகக் கொண்டு, சபாபதி முதலியார் அவர்கள் ஆய்வுடன், ஆதி நாராயணப் பிள்ளை அவர்கள் உதவியால் கலாநிதி அச்சுக்கூடத்தி லும், புட்பரத செட்டியாருடைய கலாரத்னாகர அச்சுக் கூடத்திலுமாக அக்ஷய ஆண்டு புரட்டாசித் திங்கள் (கி.பி. 1866) இல் பதிப்பித்து வெளியிட்டார். சுந்தரர் தேவாரம் வெளிவந்த பதினைந்து திங்களுக்குள் திருநாவுக்கரசர் தேவாரம் பதிப்பிக்கப் பெற்றது.

கி.பி. 1864-66 இல் மூவர் தேவாரமும் ஏழு திருமுறைகளாகப் பண்முறையில் மூன்று தனிநூல்களாக சுப்பராய ஞானியாரால், சபாபதி முதலியார் உதவியுடன் முதன் முதலில் அச்சுப் புத்தக வடிவில் தமிழுலகிற்கு வழங்கப் பெற்றன.

பண்முறை தேவாரப் பதிப்புக்களை சைவ நன்மக்கள் விரும்பி வாங்கியதால் பத்து ஆண்டுகளுக்குள் மறுபதிப்பு வெளிவர வேண்டிய தாயிற்று. அதனை அறிந்த சுப்பராய ஞானியார் பெருமகிழ்வு கொண் டார். கி.பி. 1864-66 இல் பதிப்பிக்கப் பெற்ற தேவார நூல்கள் எத்தனை பிரதிகள் அச்சிடப் பெற்றன என்று குறிப்பிடும் வழக்கம் இன்று வரை வெளிவந்துள்ள தேவாரப் பதிப்புக்களில் குறிப்பிடப்படவில்லை.

சைவ நன்மக்கள், மூவர் தேவாரத்திற்கும் தலமுறைப் பதிப்புக் கிட்டின் ஒருசேரப் பாராயணம் செய்யலாம் என்று எண்ணம் கொண்ட னர். அவ்வெண்ணம் ஈடேறும் வகையில் துறைசை ஆதீனம் மேலகரம் சீலத்திரு. சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் திருவுளப்பாங்கின் வண்ணம், பனசைக் காசிவாசி சிறீமத் இராமலிங்க சுவாமிகளின் ஆதரவோடு, துறைசை ஆதீன அப்பு ஓதுவார் ஓதின பண்ணின்படி மதுரை, துறைசை ஆதீனங்களில் கிடைத்த பிரதிகளை ஒப்பிட்டு மதுரை இராமசாமிப் பிள்ளை என்னும் ஞானசம்பந்தம் பிள்ளை சென்னை புஷ்பரத செட்டியாரின் கலாரத்தின அச்சுக் கூடத்தில் விஷு ஆண்டு (கி.பி. 1881) மார்கழித் திங்களில் தலமுறைத் தேவாரம் முழுவதையும் முதன்முறையாகப் பதிப்பித்து வழங்கினார்.

தலமுறைத் தேவாரத்தில் மக்கள் நாட்டம் கொள்ளவே தருமை ஆதீனம் 18 ஆவது குருமகா சந்நிதானம் தவத்திரு சிவஞான தேசிக மூர்த்திகள் ஆணையின் வண்ணம், திருப்பனந்தாள் காசிவாசி ஷ்ரீமத் சாமிநாத சுவாமிகள் ஆதரவுடன் திருமயிலை செந்தில்வேல் முதலியாரால் சென்னை விக்டோரியா ஜுபிலி அச்சுக்கூடத்தில் கி.பி. 1894 இலும், சென்னைக் கலாரத்நாகர அச்சுக் கூடத்தின் வாயிலாகக் கி.பி. 1905 இலும் அச்சிடப் பெற்றுத் தலமுறைத் தேவார அடங்கன் முறை வெளிவந்தது.

பண்முறைத் தேவாரம் மக்கட்குக் கிட்டாமையின், திரு வேங்கட நாயுடு அவர்களால் பார்வையிடப்பெற்றுச் சண்முக முதலியார் அவர்களால் சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் கி.பி. 1898 இல் பண்முறைத் தேவார அடங்கன் முறை மூன்றாம் முறை யாக வெளியிடப் பெற்றது.

பத்தாண்டுகளுக்குள் மீண்டும் பண்முறைத் தேவார அடங்கன் முறை தேவை ஏற்பட, அது, திருமுறை வரலாறு, மூவர் சரித்திரக் குறிப்புரை முதலியவற்றுடன், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை அவர்களால் பார்வையிடப்பெற்று, எஸ். பி. ராஜாராம் அவர்களின் ஸன் ஆப் இந்தியா அச்சியந்திரசாலையில் அச்சிட்டு கி.பி. 1906 ஆம் ஆண்டு ஜுலைத் திங்களில் வெளிவந்தது.

இதனை மீண்டும் நமச்சிவாய முதலியார் கி.பி. 1917 ஆம் ஆண்டு நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலையில் வெளியிட்டார்.

பங்காளம் அப்புப் பிள்ளை அவர்கள் சென்னை நேஷனல் அச்சுக்கூடத்தின் வாயிலாக கி.பி. 1907 ஆம் ஆண்டு தேவாரப் பதிப்பொன்றை வழங்கினார்.

நாகலிங்க முதலியார், சென்னை ஆதிமூலம் செட்டியார் ஆகியோரால் கி.பி. 1908 இல் கலாரத்னாகர அச்சுக் கூடத்தில் சுந்தரர் தேவாரம் செய்யுள் முதற்குறிப்பு அகராதியுடன் வெளியிடப் பெற்றது. தேவாரத்தைப் பொறுத்தவரையில் இப்பதிப்பிலேயே அகராதியுடன் நூல் வெளியிடும் மரபு தொடங்கியது எனலாம்.

யாழ்ப்பாணத்து வண்ணைநகர்ச் சுவாமிநாத பண்டிதர் அவர்கள், பல்லாண்டுகள் திருமுறை ஏட்டுப் பிரதிகளை ஆய்வு செய்து, பாடபேதங்கள், புதிய பல செய்திகள் என்பவற்றுடன் சென்னை வித்தியாநுபாலன அச்சுக்கூட வாயிலாக வெளியிட்ட, தலமுறை மூவர் தேவார அடங்கன் முறைத் தொகுதி, கி.பி. 1911 ஆம் ஆண்டு மக்களுக்குக் கிட்டுவதாயிற்று.

சைவ நன்மக்கள் பொருள் உணர்வோடு தேவாரத்தைப் பயில வேண்டும் என்ற பெருங்கருணையால் காஞ்சிபுரம் மகா வித்துவான் ஷ்ரீமத் இராமானந்த யோகிகள் பண்முறையில் சுந்தரர் தேவாரத்திற்குப் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விசேடவுரை என்பனவற்றை வழங்கினார். இது கி.பி. 1913 இல் வெளிவந்தது. இவையே தேவாரம் பற்றிய பழைய பதிப்புக்களாம்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் அவர்களைக் கொண்டு கி.பி. 1927 பிப்ரவரித் திங்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்தையும், கி.பி. 1928 பிப்ரவரித் திங்கள் திருநாவுக்கரசர் தேவாரத்தையும், கி.பி. 1929 ஏப்ரலில் சுந்தரர் தேவாரத்தையும் பண்முறையை ஒட்டி தனித்தனி நூல்களாக அச்சிட்டு வழங்கியது.

அடுத்து பண்முறைத்தேவாரப்பதிப்பு சைவசித்தாந்த சமாஜத்தினரால் அரும்பொருள் அகராதியுடன் கி.பி. 1929 - 1931 இல் மூன்று தொகுப்புக்களாக மிகக் குறைந்த விலையில் வெளியிடப் பெற்றன.

திருப்பனந்தாள் சீறீகாசி மடத்தின் சார்பில் தேவாரத் திரு முறைகள் பல பதிப்புக்களாக வெளியிடப் பெற்றுள்ளன.

திருவாவடுதுறை ஆதீனம் பண்முறையில் தேவாரத் திருமுறைகளை வெளியிட்டு உள்ளது.

திருமுறை உரைப் பதிப்பு:

இத்தகைய திருமுறைகள் அனைத்தையும் உரையோடு படித்துப் பொருள் உணர்ந்து ஓதினால் அவை நம் நெஞ்சில் நிலைத்து நின்று பயன் விளைக்கும் என்று திருவுளத்தெண்ணிய தருமை ஆதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பன்னிரு திருமுறைகளில் உரை இல்லாதவற்றுக்கும் உரை எழுதச் செய்து ஆதீனப் பதிப்பாக அவற்றை வெளியிடவேண்டும் என்று திருவுளம் பற்றினார்கள்.

தக்க தமிழறிஞர்களைக் கொண்டு உரை எழுதச்செய்து ஆதீன வெளியீடுகளாக அவற்றை 1953 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வந்தார்கள். சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்கள் அருளாட்சிக் காலத்தில் 9 திருமுறைகள் வரை உரையுடன் வெளியிடப் பெற்றன. சமய உலகம் இவ்வுரைகளைப் போற்றிப் பாராட்டியது.
1

971ல் சீர்வளர்சீர் கயிலைக் குருமணி அவர்கள் பரிபூரணம் அடைந்தபின் அவர்கள் தொடங்கிய திருமுறை வெளியீட்டுப் பணியை தருமை ஆதீனம் 26 ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் 1974, 1984, 1995ஆம் ஆண்டுகளில் பத்தாம் திருமுறையாகிய திரு மூலர் திருமந்திரத்தை உரையோடு மூன்று தொகுதிகளாக வெளியிட்டு அருளினார்கள்.

1995 ஆம் ஆண்டிலேயே பதினொன்றாம் திருமுறையும் வெளியிடப் பெற்றது. பன்னிரண்டாம் திருமுறை வெளியிடப் பெறுவதற்குரிய வகையில் உரை எழுதுவிக்கப் பெற்று வந்தது.

பல திருமுறைகளும் விற்பனையான நிலையில் அவை ஒருசேர அன்பர்கட்குக் கிடைக்க இயலாததால் அன்பர்கள் அவற்றை ஒருசேர அச்சிட்டு வழங்கியருளுமாறு கேட்டுக்கொண்டனர்.

சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்கள் பெருங்கருணை யோடு பன்னிரு திருமுறைகளையும், பதினாறு தொகுதிகளாக ஒரு சேர ஒளியச்சில் பதிப்பித்து, சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்கள் திரு வுளத்து எண்ணியவாறு தில்லையில் வெளியிடத் திருவுளம் பற்றி னார்கள்.

1,2,11 ஆகிய திருமுறைகளை ஆதீனச் செலவிலேயே வெளியிடலாம் எனவும், ஏனையவற்றை அன்பர்கள் அளிக்கும் நன்கொடை களைக் கொண்டும் வெளியிடத் திருவுளம் கொண்டார்கள். சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் திருவுளத்தெண்ணியபடி பலரும் இத்திருமுறைப் பதிப்புக்களை வெளியிடும் பொறுப்பை ஏற்றனர்.

இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

பன்னிரு திருமுறைகளில் இம்முதல் திருமுறைக்கு, தருமை ஆதீனப் புலவர் பத்மபூஷண் மகாவித்துவான், முனைவர், திரு ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் எழுதிய குறிப்புரை, விசேட உரைகளோடு , ஆதீனப் புலவர், வித்துவான், திரு. வி.சா. குருசாமி தேசிகர் அவர்கள் எழுதிய பொழிப்புரையும் சேர்க்கப் பெற்றுள்ளது.

புதுச்சேரி, பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவனம், ஆய்வறிஞர், பேராசிரியர் திரு. தி. வே. கோபாலய்யர் அவர்கள் இம் முதல் திருமுறையின் உரைத்திறம் பற்றி எழுதியுள்ளார்.

சைவ மெய்யன்பர்கள் சீர்வளர்சீர் குருமகா சந்நிதானத்தின் பெருங்கருணையைப் போற்றி இத்தொகுதியைப் பெற்று, ஓதி உணர்ந்து பயன் எய்துவார்களாக.

a

 

 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி