உ
சிவபெருமான் பேரருள்!
ஷ்ரீ திருஞானசம்பந்த சற்குருவே போற்றி
மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம்
292 - ஆவது குருமகாசந்நிதானம்
ஷ்ரீலஷ்ரீ அருணகிரி நாத ஷ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய 011 ஆசியுரை.
வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே.
பன்னிரு திருமுறைகள், அருளாளர்கள் மனித சமுதாயம் உய்தி பெறுதற்கு அளித்துள்ள ஞானச்செல்வங்கள், இவற்றைப் பக்தி யோடு ஓதுவோர், இம்மை மறுமை ஆகிய இருவகை இன்பங்களையும் எய்துவர் என்பது உறுதி.பன்னிரு திருமுறைகளைப் பாராயணம் புரிவோர் அவற்றைப் பொருளுணர்ந்து ஓதுவது பெரும்பயனைத் தரும் என்பதைத் திருவுளம் கொண்ட தருமை ஆதீனம் 25 - ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள், பன்னிரு திருமுறைகள் உரை வெளியீட்டுத் திட்டத்தைத் தொடங்கி, தக்க புலவர் பெருமக்களைக் கொண்டு ஒன்பது திருமுறைகள்வரை வெளியிட்டார்கள். இதுபோது தருமை ஆதீன ஞானபீடத்தில் எழுந்தருளியிருக்கும் ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் தொடர்ந்து அந்நூற்பணியைச் செய்வித்து முற்றுவித்துள்ளார்கள்.
பன்னிரு திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறை ஏனைய திருமுறைகளினின்றும் சற்று வேறுபட்ட சிறப்புடையது. இத்திருமுறை ஆசிரியர்கள் பன்னிருவருள் முதலாசிரியராகத் திருவாலவாயுடைய சோமசுந்தரக் கடவுள் இடம் பெறுகிறார். அப்பெருமான் பாணபத்திரர் மூலம் சேரமான் பெருமாள் நாயனார்க்கு அளித்த திருமுகப் பாசுரம், இத்திருமுறையின் திருமுகம் போல இலங்குகிறது.
காரைக்காலம்மையார், நக்கீரர் சேரமான் பெருமாள் நாய னார், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், நம்பியாண்டார் நம்பிகள் முதலியோர் அருளிய நாற்பது பிரபந்தங்களின் தொகுதியாக இத்திருமுறை அமைந்துள்ளது.
சிவபிரானையே அன்றி விநாயகர், முருகன், நாயன்மார்கள் ஆகியோரைப் போற்றிப் பாடும் மரபைச் சமய உலகுக்கு இத்திருமுறை அறிமுகப்படுத்துகிறது.
நம்பியாண்டார் நம்பிகள் சைவ சமய ஆசாரியர்களில் முதல்வராகிய ஞானசம்பந்தரிடம் கொண்டிருந்த அளவற்ற பத்திமையை அவர் இத்திருமுறையில் அருளிக்கோத்த ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, திருக்கலம்பகம், திருவுலா மாலை முதலிய பிரபந்தங்களால் நன்கு அறியலாம்.
இத்திருமுறையில் அமைந்த பல பிரபந்தங்கள் எளிதில் பொருள் உணர இயலாதவை. தருமை ஆதீனம் ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் பேராசிரியர், மகாவித்துவான், முனைவர் திருமிகு. அருணைவடிவேலு முதலியார் அவர்களைக்கொண்டு தெளிவான உரை எழுதச் செய்து வெளியிட்டிருப்பது சைவ நல்லுலகுக்கு அவர்கள் செய்துள்ள மாபெருந் தொண்டாகும்.
சமய உலகம் போற்றிப் பாராட்டி இத்திருமுறைகளை ஓதி உணர்ந்து பயன்பெற்றிடத் திருவருள் பாலிக்குமாறு எமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றோம்.