உ
குருபாதம்
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் சிறீலசிறீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
வழங்கியருளிய
012 ஆசியுரை
திருச்சிற்றம்பலம்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயல்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். -தி.12 பு.28 பா. 1
வேதம், சிவாகமம், புராணம், இதிகாசம், திருமுறைகள், சித் தாந்த சாத்திரங்களே நமது சைவசமயத்தின் அடிப்படைச் சட்ட நூல்க ளாகும். சிவநெறி கடைப்பிடிப்போர் இந்நூல்களின் வரையறைகளின் படியே நடக்கவேண்டும். நடவாதார் சைவத்திற்குப் புறம்பானவராவர்.
இந்தியப் பேரரசின் அடிப்படைச் சட்டம், அரசியலமைப்பு என்று சொல்லப்பெறும். இந்தியப் பேரரசின் மாநிலங்கள் அனைத்தும் அரசியலமைப்பு என்னும் இந்த அடிப்படைச் சட்டத்தைப் போற்றி மதித்தே நடந்துகொள்ள வேண்டும்.
அதைப்போலவேதான், சைவத்தின் அடிப்படைச் சட்டமாக விளங்குவது, வேதாகம, புராணதிகாச, திருமுறை, சித்தாந்த சாத்திரங்களாகும். ஆகவே இவற்றைப் போற்றியும், மதித்தும் நடந்து கொள்ளவேண்டும் என்பதே விதியாகும்.
அவரவர்களும் மனம் போன போக்கெல்லாம் போய்த் தனிவழி காண்பார்களானால் நாட்டின் ஒழுங்குமுறை கெட்டுச் சிதறிப் போக ஏதுவாகும். இதைச் சைவர்கள் அனைவரும் உணர்ந்து ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.
வேதம்:
வேதம் என்ற சொல், வித் என்ற வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது. வேதம் என்பதற்கு அறிவுநூல் என்பதே பொருள்.
அறிவுநூலாகிய வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு பகுதிகளாக விளங்குகிறது.
வேதம் என்னும் சொல்லுக்குப் பொருள் - காண்டல், கருதல் முதலிய அளவைகளுக்குப் புலப்படாததாய், வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் நெறி முறைகளை அறிவிப்பதாய் உள்ள - அறிவுநூல் என்பதாகும்.
வித்-ஞானே என்பதாலும், வித் என்ற சொல்லுக்கு ஞானம் என்பதே பொருள். அஃதாவது நிச்சய ஞானம். நிச்சயம் என்பது நிலையானது; மாறுபாடு இல்லாதது. எனவே உண்மை ஞானத்தை உணர்த்தும் நூலுக்கு வேதம் என்பது பெயராயிற்று.
வேதங்களின் அங்கமாக உள்ள ஆறு அங்கங்களையும் முறையாகக் கற்றுத் தெளிந்தால்தான், வேதங்கள் நமக்குத் தெளிவா கப் புரியும். எதுபோல எனின், நன்னூல் என்னும் செந்தமிழ் இலக்கண நூலைக் கற்றுத் தெளிவு பெற வேண்டுமானால், அதற்கு முதற்படியாக விளங்கும் சிற்றிலக்கியங்கள், நிகண்டு நூல்களைக் கற்றால்தான், நன்னூல் என்னும் செந்தமிழ் இலக்கண நூல் இனிது விளங்கும்.
இது பற்றி, "நன்றாய்ந்த.... ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல்" என்ற புறநானூறு, 166ஆம் பாடல் குறிப்பிடுவது காண்க. ஈரிரண்டு என்பது நான்கு பகுதியாக உள்ள வேதங்கள் என்றும், ஆறுணர்ந்த என்பது ஆறு அங்கங்களால் உணர்த்தப்பட்டது என்றும், ஒரு முதுநூல் என்பது ஒப்பற்ற பழைய நூலாகிய வேதம் என்றும் பொருள் தரும். ஆறங்கமாவன 1. சிட்சை, 2. கற்பசூத்திரம்,
3. வியாகரணம், 4. நிருத்தம், 5. சந்தோவிசிதி, 6. சோதிடம் என்பனவாகும்.
1. வேதங்களை எடுத்தல், படுத்தல், நலிதல் முதலிய இசை வேறுபாட்டால் உச்சரிக்குமாற்றை உணர்த்துவது, சிட்சை.
2. வேதங்கள் கூறும் நெறிமுறைகளை அநுட்டிக்குமாற்றை உணர்த்துவது, கற்பசூத்திரம்.
3. வேதங்களின் எழுத்து, சொல், பொருளியல்புகளை உணர்த் துவது, வியாகரணம்.
4. வேதங்களின் சொற்பொருள் உணர்த்துவது, நிருத்தம்.
5. வேதமந்திரங்களில் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும், அவற்றிற்குரிய எழுத்து இனைத்தென்றலும் உணர்த்துவது, சந்தோவிசிதி.
`. வேதங்களில் சொல்லப்படும் கருத்துக்களைச் செய்தற் குரிய கால விசேடங்களை உணர்த்துவது, சோதிடம்.
மேலும் புராணம், நியாயம், மீமாம்சம், ஸ்மிருதி என்னும் நான்கும் உபாங்கங்கள் எனப்படும்.
வேதம், உலக மக்களுக்குப் பொது அறம் போதிப்பது. சிவாகமம், சத்தினிபாதத்து உத்தமர்களுக்குச் சிறப்பறம் போதிப்பதாகும்.
வேதம் பற்றித் திருமூலர் அருள்வது காண்க.
வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. (தி.10 பா.96)
வேதம் ஒவ்வொன்றும், கர்ம காண்டம், ஞானகாண்டம் என இரு பிரிவுகளையுடையது.
கர்மகாண்டம், செயல்முறைகளைப்பற்றிக் கூறுவது. ஞான காண்டம் உபநிடதங்களால் தத்துவ விசாரணை செய்வது.
யசுர் வேதத்தின் நடுப்பகுதியில் "நமசிவாயச சிவதராய\u2970?" என்னும் பஞ்சாட்சரம் அமைந்துள்ளது. எனவே, வேதம் சிவபரத்துவத் தைக் கூறுவதாகவே விளங்குகிறது.
ஆகமம்:
ஆகமம்: ஆ என்பது, ஈசுவரனைக் குறிக்கும் ஓரெழுத்தொரு மொழி; கமம் என்பது, வந்தது என்பதைக் குறிக்கும். எனவே ஈசுவர னிடமிருந்து வந்தது என்பதைக் குறிப்பதாகும். வேதம், ஆகமம் இரண் டுமே சிவபெருமானிடமிருந்து ஆன்மாக்களை நன்னெறி செலுத்தற் பொருட்டு வந்தவை என்பதையே அறிவிக்கும். இதை "மஹதோ பூதஸ்ய நிஸ்வசிதம்" என உபநிடதம் கூறுகிறது.
ஆகமங்கள் இருபத்தெட்டாகும். வேதம் நான்கும் பரமேசு வரனின் நான்கு முகங்களிலிருந்து தோன்றின என்பர்; ஆகமங்கள் இருபத்தெட்டும் பரமேசுவரனின் உச்சி முகத்தினின்றும் தோன்றின என்றும் திருமூலர் (தி.10 த.3) குறிப்பிடுகிறார்.
வேதம் நான்கும், முறையே பரமேசுவரரின் தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் நான்கு முகங் களிலிருந்தும் தோன்றின.
சிவ ஆகமங்கள் இருபத்தெட்டும் சிவபெருமானின் உச்சி முகமாகிய ஈசான முகத்தில் தோன்றின என்பார் திருமூலர். அப்பாடல் காண்க.
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே. (தி.10 பா.102)
ஆகமம் - ஆ என்பது சிவம். கமம் என்பதற்கு வந்தது என்பது பொருள். எனவே சிவபெருமானிடமிருந்து வந்தது என்பதே சிவா கமம் என்பதற்குப் பொருளாகும். மேலும் ஆ என்பது ஆன்மாக்கள் என்றும், கமம் என்பது ஆன்மாக்களிடமுள்ள மும்மலங்களையும் நாசம் செய்வித்து மோட்சம் அடையச் செய்வது என்றும் பொருள் தரும்.
புராணம்:
புராணம் என்ற சொல், பழமை என்னும் பொருளைக் குறிப்பது. பழமையானாலும் புதுமையாகவும் விளங்குவது.
பூரணனாகிய பெருமானிடமிருந்து வந்தமையால் பூரணம் என வழங்கி, பின்னர் அச்சொல்லே புராணம் எனத் திரிந்தது என்றும் கூறுவர். புராபிநவம் - பூரணம் எனக் கொண்டு, புராதனமாயும் புதுமை யாயும் உள்ளது எதுவோ, அதுவே புராணம் என்று ஆயிற்று என்றும் கொள்வர்.
"முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" (தி.8 ப.7 பா.9) என்னும் மணிவாசகரின் திருவாசகமே இதற்குப் போதிய சான்றாகும். மேலும் பழமையிலிருந்துதான் புதுமை தோன்ற முடியும் என்பதையும் ஊன்றி உணர்வோர் இவ்வுண்மையை உணர்வர்.
மேலும் அப்பர், பூவனூர்த் தேவாரத்தில்,
நார ணன்னொடு நான்முக னிந்திரன்
வார ணன்கும ரன்வணங் கும்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்னெனை யாளுடைக் காளையே. (தி.5 ப.65 பா.10)
என்று பாடுவதாலும், திருக்காளத்தித் திருத்தாண்டகத்தில்,
"நாரணன் காண், நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்"
(தி.6 ப.8 பா.3) என்று போற்றுவதாலும் இவ்வுண்மையைத் தெளியலாம்.
புராணம், பழமையானது என்ற பொருளைத் தரும்; புராதனம் என்ற சொல்லின் மரூஉ மொழியே புராணம். எல்லாருக்கும் முன்னே தோன்றி முளைத்தவனாகிய சிவபெருமானைப் புராணன் எனத் தேவாரத் திருமுறைகள் கூறுகின்றன. "புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளும் காண்பரிய புராணன் தான்காண்" (தி.6 ப.30 பா.9) என அப்பர் பெருமான் அருளிச் செய்கின்றார்.
இலக்கிய வகைகளில், பழமையான வரலாறுகளை உணர்த்தும் நூல், புராணம் எனப் பொருள் தரும். வேத சிவாகமங்களையடுத்துப் பதினெண் புராணங்கள் சிறப்புடையனவாகப் போற்றப் பெறும்.
கடவுட் கொள்கையில் ஊன்றி நிற்றற்கும், சமய உண்மைகளை உணர்தற்கும், உலகியலில் அறநெறி வழுவாது வாழ்தற்கும் புராணங் களைப் படித்தல் இன்றியமையாததாகும். இவை வடமொழியில் அமைந்துள்ளனவாயினும், இவற்றின் கதைக்கூறுகள் சங்கநூல்கள் தொடங்கி அனைத்துத் தமிழ்நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளன.
வேத சிவாகமங்கள் இறைவனால் அருளிச் செய்யப் பெற்றன போலப் பதினெண் புராணங்களும் அவ்விறைவன் திருவுள்ளப் பாங்கின்படியே தோன்றலாயின என்பதைத் திருஞானசம்பந்தர், திருவையாறு தேவாரத் திருப்பதிகத்தில்,
எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா
மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே. (தி.2 ப.6 பா.6)
என அருளிச் செய்கின்றார். இப்புராணங்களைப் புடை நூல்கள் எனஙு சிவஞான சித்தியார் கூறுகிறது.
அருமறையா கமம்முதல்நூல் அனைத்துமுரைக் கையினால் அளப்பரிதாம் அப்பொருளை அரனருளால் அணுக்கள்
தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளவில்
தர்க்கமொடுத் தரங்களினால் சமயம்சா தித்து
மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம்
மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே தாங்கம்
சுருதிசிவா கமமொழியச் சொல்லுவதொன் றில்லை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொ ணாதே (சித். சூ. 8 பா. 14)
பதினெண் புராணங்கள்:
சிவபெருமான் அம்மைக்கு உபதேசித்த பதினெண் புராணங் களையும் இடையில் வீற்றிருந்த முருகப் பெருமான் கேட்டு, அதைச் சனற்குமாரருக்கு உபதேசிக்க, அவர் அகத்திய முனிவருக்கு உபதே சிக்க, அவர் வியாசருக்கு உபதேசிக்க, அவர் தம் மாணாக்கர் சூத முனிவருக்கு உபதேசிக்க, சூத முனிவர் பதினெண் புராணங்களையும் நைமிசாரணிய முனிவர்கட்கு உபதேசித்து, அஃது உலகில் பரவியது என்பதே புராண வரலாறு.
இந்த அமைப்பிலேயே பதினெண் புராணங்கள் தோன்ற லாயின. பதினெண் புராணங்களாவன,
1. பிரம புராணம், 2. பதும புராணம்,
3. விட்டுணு புராணம், 4. சிவ புராணம்,
5. பாகவத புராணம், 6. நாரதீய புராணம்,
7. மார்க்கண்டேய புராணம், 8. ஆக்கினேய புராணம்,
9. பவிஷ்ய புராணம், 10. பிரமவைவர்த்த புராணம்,
11. இலிங்க புராணம், 12. வராக புராணம்,
13. ஸ்கந்த புராணம், 14. வாமன புராணம்,
15. கௌமார புராணம், 16. மச்ச புராணம்,
17. கருட புராணம், 18. பிரும்மாண்ட புராணம்
என்பனவாம். இப்பதினெட்டும் மகாபுராணங்கள் எனப்படும்.
இவ்வாறே உபபுராணங்கள் பதினெட்டும், அதிபுராணங்கள் பதினெட்டும் உள்ளன.
கந்த புராணம்:
பதினெண் புராணங்களில் சிவ புராணங்களாக விளங்குவன பத்தாகும். அவற்றுள் ஒன்றான ஸ்காந்த புராணம், 50 காண்டங்களைக் கொண்டதாய், ஓரிலட்சம் கிரந்தங்களை உடையதாய் விளங்குவது.
சனற்குமார சங்கிதை, சூத சங்கிதை, பிரம சங்கிதை, விட்டுணு சங்கிதை, சங்கர சங்கிதை, சூர சங்கிதை என்ற ஆறு சங்கிதைகளை உடையது.
அவற்றுள் சங்கர சங்கிதை முப்பதாயிரம் கிரந்தங்களைக் கொண்டது. பன்னிரு காண்டங்களுடன் விளங்குவது. அவற்றுள் பதின்மூவாயிரம் கண்டங்களைக் கொண்ட சிவரகசிய காண்டத்தில் முருகன் வரலாறு - உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தக்ஷ காண்டம், உபதேச காண்டம் என்ற ஏழு காண்டங்களைக் கொண்ட இப் பகுதியை மூலமாக வைத்தே, கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தைப் பாடியுள்ளார்.
திருவிளையாடற் புராணம்:
பதினெண் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த புராணத்தில், சங்கர சங்கிதை, சிவபிரான் உமையம்மைக்குச் சொன்னதாகச் சொல்லப் பெறுவது. அவ்வாறு சொன்னபோது, தாயின் மடியிலிருந்து கேட்ட முருகன் அதனை அகத்தியருக்குச் சொன்னார். அதனால் அச் சங்கிதை, அகத்திய சங்கிதை எனவும் வழங்கப் பெறுகிறது. அச் சங்கிதையுள் விளங்குவது ஆலாசிய மகாத்மியம் (ஆலாசியம் - திருவாலவாய்) இஃது 71 அத்தியாயங்களைக் கொண்டது; 6,085 சுலோகங்களை உடையது. இதனுள் 4ஆவது அத்தியாயம் முதலாகச் சிவனின் திருவிளையாடல்கள் கூறுப்பெறுகின்றன. முதல் மூன்று அத்தியா யங்கள், மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றின் பெருமைகளைக் கூறுகின்றன. ஏனைய அத்தியாயங்கள் ஆலவாய் இறைவனின் அருள் விளையாடல்களைத் தெரிவிக்கின்றன.
தமிழ்த் திருவிளையாடற் புராணத்துக்கு மூலநூல் வடமொழி யில் அமைந்த ஆலாசிய மகாத்மியம் ஆகும்.
இதிகாசம்:
இதிகாசம்: இதி+இக+ஆசம் என்ற மூன்று சொற்களே இதிகாசம் என்றாயிற்று. இதி - இது, இக - இப்படி, ஆசம் - நிகழ்ந்தது. எனவே இது இப்படி நிகழ்ந்தது என்பதே இதிகாசம் ஆயிற்று.
இராமாயணம், பாரதம் ஆகியவற்றை இதிகாசம் என்று வழங்குகிறோம். இராமபிரானின் வரலாறும் பஞ்சபாண்டவர் வரலாறும் இப்படித்தான் நிகழ்ந்தது என்று கூறுவதால்தான், இரண்டு வரலாறுகளும் இதிகாசமாயின என்று உணர்க.
பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும் வேத, சிவாகம, புராண, இதிகாசக் கருத்துக்களையே தெளிவாகத் தூய இனிய தெய்வத் தமிழில் விளக்கமாகக் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், இறையருளால் சமயாசாரியர், சந்தானாசாரியர் உள்ளிட்ட நாயன்மார்கள் வாயிலாகத் தோன்றியவை. இத்திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் இல்லையேல் வேதம், சிவாகமம், புராணங்களைப் பற்றிப் பொது மக்களும், புலவர்களும் புரிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். வேதம், சிவாகமம், புராணங்கள் இல்லையென்றால் பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும் தோன்றுவ தற்கே வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
எனவே வேத, சிவாகம, புராண இதிகாசக் கருத்துகளைத்தாம், திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் பல கோணங்களினின்று பார்த்து, அவற்றின் செம்பொருளை நமக்குப் பக்குவமாக உணர்த்தி வருகின்றன. இவற்றையெல்லாம் செந்நெறி நிற்க விரும்புவோர் கைக்கொண்டு பயன் பெறுவரே அன்றிக் கைவிடார்.
இனி, சமயாசாரியர் நால்வரும், வேதாகம, புராண, இதிகாசம் பற்றிக் கூறுமாற்றைக் காண்போம்.
சமயாசாரியருள் ஞானசம்பந்தர் கூற்று
வேதத்தை அருளிச் செய்தவர் சிவபெருமானே என்றும், வேதத் திற்குப் பொருள் உரைத்தவரும் அவரே என்றும் இருக்கு மறைப் பிள் ளையாராகிய திருஞானசம்பந்தர் அருள்கிறார்.
"மங்கையர்க்கரசி" (தி.3 ப.120 பா.1) என்று தொடங்கும் பதிகத்தின் முதற்பாடலின் மூன்றாம் அடியில், "பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி" (தி.3 ப.120 பா.1) என்று பாடியுள்ளார்.
அவரே திருமுதுகுன்றத் தேவாரத்தில், "அறங்கிளரு நால்வேத மாலின்கீ ழிருந்தருளி" (தி.1 ப.131 பா.7) என்று அருளிய இடத்தையும் குறிப்பிட்டுள்ளார். அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கையும் வகுத்து, வேதம் அறிவிப்பதால் வேதத்தையே அறம் என்ற சொல்லில் அருள்கின்றார் . அது வருமாறு:
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. (தி.1 ப.48 பா.1)
என்று சேய்ஞலூர்த் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வகையான புருடார்த்தங்கள்:
திருமுதுகுன்றத் தேவாரத்தில்,
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லரா நல்லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே. (தி.1 ப.53 பா.6)
என்று அறம் மட்டும் அல்லாமல் பொருள், இன்பம், வீடு ஆகிய புருடார்த்தங்கள் நான்கையுமே ஓதி உணர்த்தியுள்ளது வேதம் என்று கூறியுள்ளார்.
வேதத்தை உலக மக்களுக்காகச் சொன்னதோடு தாமே ஓதியும் வருகிறார் என்பதைத் திருப்பழனத் தேவாரத்தில்,
"வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்"
(தி.1 ப.67 பா.1) என்று ஞானசம்பந்தரே முதல் திருமுறையில் அருளி யுள்ளார்.
சிவபெருமான் வேதத்தை மட்டுமின்றி வேதம், ஆறங்கம், ஆகமம், பதினெண் புராணங்கள், இதிகாசங்களையும் அருளியுள்ள மையை,
எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா
மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே. (தி.2 ப.6 பா.6)
என்று திருவையாறு தேவாரத்தில் பதினெண் புராணங்களையும் நால்வேதங்கட்கு உணர்வாய் உள்ள ஆறு அங்கங்களையும் ஐயாறப் பரே சொன்னார் என்று கூறியுள்ளார்.
பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேதநான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம்
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே. (தி.2 ப.114 பா.2)
என்று திருக்கேதாரத் தேவாரத்தில், வேதம் நான்கும் பதினெண் புராணங்களும் ஆறு அங்கங்களும் விரித்தோதியவர் திருக்கேதார நாதரே என்று அருளியுள்ளார்.
கூறை போர்க்கும் தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
ஆறு நான்கு மமர்ந்தா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. (தி.1 ப.26 பா.10)
என்று திருப்புத்தூர் தேவாரத்தில், கூறை போர்க்கும் புத்தர்களும் அம ணர்களும் கூறுவதைத் தெளியாதீர்; திருப்புத்தூர்ப் பெருமானைத் தெளிந்து போற்றுங்கள். அவர் ஆறு அங்கத்திலும் நான்கு வேதத்தி லும் அமர்ந்துள்ளார் என்று அருளியுள்ளார். அமர்ந்தார் என்பதற்கு, விரும்பி அமர்ந்துள்ளார் என்று பொருள் கொள்வதே சிறப்பாகும்.
வேதத்தை அருளிச் செய்தவனும் வேதப் பொருளாக விளங்கு பவனும் சிவபெருமானேயாவார். உலக மக்கள் குற்றம் செய்யாமல், நன்னெறி நிற்றற் பொருட்டு, அச் சிவபெருமான் அருளிய உபதேசத்தையே முதலாகக் கொண்டு சூத முனிவர் உரைத்த ஒலி மாலையாகிய பதினெண் புராணங்களும் நன்னெறியையே போதிப்பனவாம்.
இக்கருத்துள்ள பாடல் சைவ தத்துவத்தை நிலைநாட்டிய புனல் வாதப் பதிகமாகும். "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் திருப் பாசுரப் பகுதியில் எட்டாவது பாடலாக விளங்குகிறது. அப்பாடல்,
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை உலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே. (தி.3 ப.54 பா.8)
கலிக்கோவை - பதினெண்புராணம்:
கூன்பாண்டியனாகிய நெடுமாற பாண்டியனுக்கு உற்ற வெப்பு நோயைப் போக்கப் பாடிய, "மந்திரமாவது நீறு" பதிகத்தில் (தி.2 ப.66 பா.1), மந்திரமாவது திருஐந்தெழுத்தே என்றும், அது நினைப்பவரைக் காப்பது என்றும், அது வேதத்தின் நடுவில் உள்ளது என்றும், ஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.
திருஞானசம்பந்தர், தமது திருமண நிறைவில் எல்லோருக்கும் உபதேசமாக வழங்கியருளிய திருஐந்தெழுத்துத் திருப்பதிகம் "காதலாகி" (தி.3 ப.49 பா.1) என்பது. அப்பாடலில் "வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று அறிவித்துள்ளார். வேதத்தில் பசுமஜாபால உபநிடதம் என்று ஒன்று உள்ளது. அதில் திருநீறு பற்றிய விளக்கம் யாவும் தெளிவாக உள்ளது என்பதாலும் வேதத்தின் சிறப்பை உணரலாம்.
ஞானசம்பந்தர், பாண்டியனின் வெப்புநோய் தீர்ப்பதற்கு முன்பே, இருமுறை ஆலவாய் அண்ணல் கோயில் நண்ணி, "காட்டுமாவது உரித்து உரிபோர்த்து" என்ற பதிகம் (தி.3 ப.47 பா.1) பாடி "அமணர்களை ஓட்டி வாது செய்யத் திருவுளமோ?" என்று வினவி, அதில் மனம் நிறைவு பெறாது, மீண்டும் ஒரு முறை சென்று, ஆலவாய் அண்ணலிடம் "அமணர்களுடன் வாது செய்ய, பெருமானே உன் திருவுளம் யாதோ?" என்று வினவுகிறார். அப்போது பாடியதுதான்,
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி யமணொடு தேரரை
வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே. (தி.3 ப.108 பா.1)
என்று வேண்டிய பதிகம்.
அதில், ஒவ்வொரு பாடல் இறுதியிலும், "ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென், ஆலவாயில் உறையும் எம்ஆதியே" எனவும் வேண்டியுள்ளார்.
அதே பதிகத்தில், இரண்டாம் பாடலில், "வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வம்முடைக் காரமண் தேரரை" என்றும், "மறைவ ழக்கமி லாதமா பாவிகள்" என்றும், "அழல தோம்பு மருமறை யோர்திறம் விழல தென்னு மருகர்" என்றும், "அந்த ணாளர் புரியு மருமறை சிந்தை செய்யா அருகர் திறங்கள்" என்றும், வேதத்தைத் தூற்றும் அருகரை வென்று, வைதிக சைவத்தை மதுரையில் வைகைக் கரையில் நிலை நாட்டினார்.
வேதத்தைத் தழுவியது வைதிகம். சிவாகமத்தைத் தழுவியது சைவம். எனவேதான் "பழைய வைதிக சைவம் பரக்கவே" என்று கோயிற் புராணப் பாடல் (வாழ்த்து) குறிக்கின்றது.
மழை வழங்குக மன்னவன் ஓங்குக
பிழையில் பல்வளம் எங்கும் பெருகுக
தழைக அஞ்செழுத் தோசை தரையெலாம்
பழைய வைதிக சைவம் பரக்கவே. (கோயிற் புராணம்)
ஆகமம்
இனி, ஆகமம் பற்றி ஞானசம்பந்தர் குறிப்பிடும் இரண்டொரு இடங்களைக் காண்போம். திருவொற்றியூர்த் தேவாரத்தில், புத்தரும் சமணரும் கூறும் புறவுரைகளைக் கேளாதீர் என அடியவர்கட்கு அறி வுரை கூறுகின்றார். அந்த இடத்தில், சிவபெருமானை ஆகமச் செல்வ னார் என்று குறிப்பிடுகின்றார். ஆகமச் செல்வனாரை யலர் தூற்றும், சமண புத்தர்களைக் கூகை (கோட்டான்) என்று வெகுண்டு கூறுகின் றார். அப்பாடல் காண்க:
தோகையம் பீலிகொள்வார் துவர்க் கூறைகள் போர்த்துழல்வார்
ஆகமச் செல்வனாரை யலர் தூற்றுதல் காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி னேழுலகும்
ஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட மொற்றியூரே. (தி.3 ப.57 பா.10)
மேலும், திருக்கோகரணத் தேவாரத்தில், பெருமான் திருமேனி யின் மேல் திருநீறாடி, திருவடிகளில் சிலம்பு ஒலிக்க, விளையாடி வரும் காளை மிசை ஊர்ந்து, பிச்சை ஏற்க வருபவர் இடம் திருக்கோகரணம் என்றும், இங்கு ஆறு சமயத்தவர்களும் மிகுதியாக ஆகம வழிபாட்டை விரும்பி, இங்குள்ள பெருமானுக்கு வழிபாடு நிகழ்த்தி அன்பு மிகுதியால் நடுக்கம் எய்தி வழிபடுகின்றனர் என்றும் அருள்கின்றார். அப்பாடல் வருமாறு:
நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல் சிலம்பொலிசெய
ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரு மீசனிடமாம்
ஆறுசம யங்களும்வி ரும்பியடி பேணியர னாகமமிகக்
கூறுமனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே. (தி.3 ப.79 பா.6)
திருநாவுக்கரசர் கூற்று:
ஞானசம்பந்தர் அருளிய அதே நடையில் கச்சி ஏகம்பத் தேவா ரத்தில், திருநாவுக்கரசரும்,
"நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கண் மனத்துறையு மைந்தனை" (தி.4 ப.7 பா.7)
என்று நான்மறையையும் ஆறங்கத்தையும் போற்றி உரைக்கின்றார்.
திருச்செம்பொன்பள்ளித் தேவாரத்தில், "தந்தையும் தாயுமாகித் தானவன் ஞான மூர்த்தி, முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி" (தி.4 ப.29 பா.4) என்று இருக்கு வேதத்தை ஓதி, தேவர்கள் வழிபட்டதைக் குறிக்கின்றார்.
ஆதிபுராணத் திருக்குறுந்தொகைப் பதிகத்தில் முதல் பாடலில், "வேத நாயகன் வேதியர் நாயகன்" (தி.5 ப.100 பா.1) என்று வேதத் திற்கும் வேதத்தை முறையாக ஓதும் வேதியர்கட்கும் நாயகனாக உள்ளவன் என்றும், எட்டாம் பாடலில்,
அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில்
அருக்க னாவா னரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை யீசனை யேதொழும்
கருத்தி னைநினை யார்கன் மனவரே. (தி.5 ப.100 பா.8)
என்றும் அருளியமை காண்க. மேலும் இப்பாடலின் பொருளைக் காண்போம்.
அத்வைதம் பேசும் அந்தணர்களில் பலரும், சந்தியா காலங்க ளில் அருக்கனாகிய சூரியனை வணங்குவார்கள். அரனுக்குள்ள எட்டு உருவில் அருக்கனாகிய சூரியனும் ஒருவன் என்பதை உணராமல் சூரியனாகிய உடலையே தொழுகின்றனர். அதில் உள்ள ஈசனைத் தொழுவாரில்லை. ஆனால் இருக்கு முதலிய வேதங்கள் அருக்கனுக்குள்ளிருக்கும் ஈசனையே தொழுகின்றன. (அருக்கன் - சூரியன்). இக்கருத்தை உணராத கல் மனத்தவராய் உள்ளனரே என்று இரங்குகின்றார்.
மேலும் அப்பர், திங்களூர் அப்பூதி அடிகளின் திருமகனார் மூத்த திருநாவுக்கரசு, விடம் தீண்டி இறந்த போது, அவரை உயிர்ப்பித்த திருப்பதிகம் "ஒன்று கொலாம்" எனத் தொடங்கும், விடம் தீர்த்த திருப்பதிகமாகும். அப்பதிகப் பாடலில், "நாலுகொ லாமறை பாடின தாமே" (தி.4 ப.18 பா.4) என்று மறைகள் நான்கு என்பதைக் குறிப்பிட் டுள்ளார்.
புள்ளிருக்குவேளூர்த் தாண்டகத்தில்,
"பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை" (தி.6 ப. 54 பா.8)
என்னும் பாடலில், மந்திரம் வேத மந்திரம் என்பதையும், தந்திரம் ஆகமம் என்பதையும், மருந்து ஐந்தெழுத்து என்பதையும் குறிப்பிட் டுள்ளார்.
ஞானசம்பந்தரும் மந்திரமாவது திருவைந்தெழுத்து என்றும், தந்திரம் என்பது சிவாகமம் என்றும் குறிப்பிட்டுள்ளமை ஒத்து நோக்கத் தக்கனவாம்.
இதிகாசம் பற்றி அப்பர் குறிப்பிட்டுள்ளமையை இராமேச்சுரம் தேவாரத்தில் காணலாம். அப்பாடல் காண்க.
கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே. (தி.4 ப.61 பா.9)
மேலும் அப்பர், வேத, ஆகம, புராணங்கள் பற்றி அருளி உள்ள அருள் மொழிகள் சில காண்போம். தில்லைப் பெரிய திருத்தாண் டகத்தில், "அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை" (தி.6 ப.1 பா.1) என்று ஓதியுள்ளார். இதில் வேதம் முழுவதிலும் உட்பொருளாய் இருக்கின்றவர் சிவமே எனக் குறிப்பிட் டுள்ளார். அதே பதிகம், ஆறாம் பாடல், இரண்டாம் அடியில் "அருமறையோ டாறங்க மாயி னானை" என்று பாடியுள்ளார்.
அடையாளத் திருத்தாண்டகம், ஐந்தாம் பாடலில் "பாடுமே ஒழியாமே நால்வே தம்மும்" (தி.6 ப.4 பா.5) என்று வேதத்தை இசையோடு பெருமானே ஓதுவதைக் குறிப்பிடுகின்றார்.
திருவதிகைப் போற்றித் திருத்தாண்டகத்தில், "நான்மறையோ டாறங்க மானாய் போற்றி" (தி.6 ப.5 பா.8) என்றும், பந்தணை நல்லூர்த் தாண்டகத்தில், "நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்" (தி.6 ப.10 பா.10) என்றும், மதுரைத் தாண்டகத்தில், "அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும் சீரானை" (தி.6 ப.19 பா.5) என்றும், ஆக்கூர்த் தாண்டகத்தில், "வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்" (தி.6 ப.21 பா.2) என்றும், திருமறைக்காட்டுத் தாண்டகத்தில், "மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய், முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்" (தி.6 ப.23 பா.9) என்றும் போற்றுகிறார்.
திருவாரூர்த் தாண்டகத்தில், "புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளும் காண்பரிய புராணன் தான்காண்" (தி.6 ப.30 பா.9) என்று புராணனையும் புராணத்தையும் போற்றுதலையும், பெருமானைப் புராணன் என்று சொல்லுமாற்றையும் காண்கின்றோம்.
திருமழபாடித் தாண்டகத்தில், "ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்" (தி.6 ப.39 பா.10) என்று, வேதங்கட்கெல்லாம் மூலமாய் உள்ள ஓங்காரத்தைக் குறிப்பிட்டு, அதன் உட்பொருளாய் இருப்பவன் சிவனே என்று உரைக்கின்றார்.
மழபாடியின் மற்றொரு தாண்டகப் பதிகத்தில் இரண்டாம் பாடலில், "மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே" (தி.6 ப.40 பா.2) என்று, பூவும் நீரும் கொண்டு மந்திர புட்பம் சமர்ப்பிப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
திருஆவடுதுறைத் தாண்டகத்தில், "நம்பனை நால்வேதம் கரைகண்டானை" (தி.6 ப.46 பா.1) என்று நால்வேதம் முழுவதும் கண்டவன் சிவனே என்றும் அறிவிக்கின்றார்.
"தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானை" என்னும் தாண்டகத்தின் இரண்டாம் அடியில், "சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை" (தி.6 ப.50 பா.4) என்றும், புள்ளிருக்கு வேளூர்த் தாண்டகத்தில் "ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற பொருளானை" (தி.6 ப.54 பா.4) என்று, வேதங்களைக் கடந்தவன் என்றும் சொல்கின்றார்.
திருவலம்புரம் தாண்டகத்தில், "செங்கண்மால் சிலைபிடித்துச் சேனையோடும் சேதுபந்தனம் செய்து" (தி.6 ப.58 பா.10) என்று இதிகாச வரலாற்றைக் குறிப்பிடுகின்றார்.
திருவெண்ணித் திருத்தாண்டகத்தில், "பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்" (தி.6 ப.59 பா.1) என்று, புராணத்தை உடையவராய் உள்ளார் சிவனே என்றும், திருநாகேச்சுரத் தாண்டகத்தில், "மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை" (தி.6 ப.66 பா.1) என்று, திருமால், பிரமன், மறைவல்ல அந்தணர்கள் போற்றும் மந்திர வடிவாய் உள்ளவனும், தந்திரமாகிய ஆகமமாக உள்ளவனும் சிவபெருமானே என்றும் அருளியுள்ளார். (தந்திரம் = ஆகமம்).
திருவாலங்காட்டுத் தாண்டகத்தில், "நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே" (தி.6 ப.78 பா.4) என்றும், திருப்பாசூர்த் தாண்டகத்தில், "வேதமோர் நான்காய் ஆறங்க மாகி விரிகின்ற பொருட்கெல்லாம் வித்து மாகி" (தி.6 ப.83 பா.4) என்றும், வேத, ஆகம, புராண, இதிகாசம் பற்றி நாவுக்கரசர் அருளியவற்றை ஒரு சிறிது கண்டோம்.
சுந்தரர் கூற்று:
"அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் ஆய நம்பனை" (தி.7 ப.62 பா.2) பெருமான், ஆறு அங்கமாகவும் நால் வேதமாகவும் உள்ளவன் என்கிறார், சுந்தரர்.
திருவீழிமிழலைத் தேவாரத்தில், "வேத வேதியர் வேத நீதிய தோது வார்விரி நீர்மி ழலையுள்" (தி.7 ப.88 பா.10), வேதியர்கள் வேதத்தையும் வேதநீதியையும் ஓதி வந்துள்ளனர் என்பதை இப்பாடற் பகுதி அறிவிக்கின்றது.
திருநனிபள்ளித் தேவாரத்தில், "அங்கமொ ராறவையும் அரு மாமறை வேள்விகளும், எங்கும் இருந்தந்தணர் எரி மூன்றவை யோம்புமிடம்" (தி.7 ப.97 பா.7) என்று குறிப்பிட்டுள்ளார்.
திருக்கானப்பேர்த் தேவாரத்தில், "தொண்டர் தமக்கெளிய சோதியை" என்னும் பாடலின் மூன்றாம் அடியில், "அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் ஆதியை" (தி.7 ப.84 பா.8) என்றும், பரவையுள் மண்டளித் தேவாரத்தில், "அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும் பெம்மானே" (தி.7 ப.96 பா.6) என்றும், நொடித்தான் மலைத் தேவாரத்தில், "அரவொலி ஆகமங்கள் அறி வார்அறி தோத்திரங்கள்" (தி.7 ப.100 பா.8) என்னும் பாடலில், ஆகமங்கள் பேசப்படுகின்றமை காண்க.
திருமுருகன்பூண்டித் தேவாரத்தில், "தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி" (தி.7 ப.49 பா.5) என்றும், "வேத மோதிவெண் ணீறுபூசி" (தி.7 ப.49 பா.7) என்றும், திருஆமாத்தூர்த் தேவாரத்தில், "காண்டனன் காண்டனன்" என்னும் பதிகத்தின் முதல் பாடலில் நான்காம் அடியில், "மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே" (தி.7 ப.45 பா.1) என்று, வேத வித்தல்லாத பாதகர்களிட மிருந்து மீண்டேன் மீண்டேன் என்று இருமுறை குறிப்பிடுகின்றார்.
"நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர் நான்ம றைக்கிட மாய வேள்வியுள்" (தி.7 ப.88 பா.1) என்றும், "தொண்டர் தமக்கெளிய சோதியை" (தி.7 ப.84 பா.8) என்றும், "அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் ஆதியை" (தி.7 ப.84 பா.8) என்றும், மேலே உள்ள பல கூற்றுகளாலும், வேதாகம புராண இதிகாசங்களைச் சுந்தரர் போற்றியுள்ளமை காணலாம்.
மாணிக்கவாசகர் கூற்று:
மணிவாசகரின் சிவபுராணத்தில், "வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே" (தி.8 ப.1 வரி 34,35) என்று பேசுகின்றது. ஐயா எனின், சிவபெருமானையே தலைவன் என்று வேதம் குறிப்பிடுவதாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்தவன் என்றும், எல்லாவற் றிற்கும் கீழாக ஆழ்ந்தவன் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக அகன் றவன் என்றும், எல்லாவற்றிற்கும் நுண்பொருளாய் உள்ளவன் என்ப தால் நுண்ணியன் என்றும் கூறியுள்ள சிறப்பைக் காண்க.
வேதம் பொது நூலாதலின், அங்கு பாலில் நெய் இருப்பதைப் போல விளங்காதிருப்பான் இறைவன். சிவாகமம் சிறப்பு நூலாதலின் அங்கு, தயிரில் நெய்போல இனிது விளங்கித் தோன்றுவான். இதனாலேயே, "ஆகம மாகிநின் றண்ணிப்பான்" (தி.8 ப.1 வரி 4) என்றார். அண்ணித்தல் = இனித்தல்.
கீர்த்தித் திருவகவலில், "மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்" (தி.8 ப.2 வரி 9, 10) என்று சொல்லியுள்ளார். தென்பாண்டி நாட்டில், திருக்குறுங்குடி என்னும் வைணவத் தலத்தின் மேல்பால் மகேந்திரமலை உள்ளது.
திருப்படையாட்சி - நான்காம் பாடலின் மூன்றாம் அடியில், "மாமறை யும்அறி யாமலர்ப் பாதம்" (தி.8 ப.49 பா.4) என்றும், அன்னைப் பத்தின் முதல் பாடலில், "வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர்" (தி.8 ப.17 பா.1) என்றும், வேதங்களாகிய சொல்லை உடையவர் என்பதோடு மூலமாய் உள்ள, நாத தத்துவமாகிய பறையையும் உடையவர் என்கிறார்.
கண்ட பத்தில், "நான்குமறை பயில்தில்லை யம்பலத்தே கண்டேனே" (தி.8 ப.31 பா.9) என்றும், "வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே" (தி.8 ப.31 பா.10) என்றும், திருவேசற வில், "மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா ஓத்தானே பொருளானே" (தி.8 ப.38 பா.10) என்று, எல்லாப் பொருள்களுக்கும் முன்னவன், மூவாத இறையவன், மூப்படையா ஓத்து - வேதமாய் உள்ளவன் என்னும் பொருள் வருமாறு போற்றுகிறார்.
குழைத்த பத்தில், "புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதந் தருளாதே" (தி.8 ப.33 பா.10) என்று புராணன் என்ற பொருளில் குறிப்பிடுகின்றார். புராணன் என்பதற்கு, மிகப் பழமைக்கெல்லாம் பழமையாய் உள்ளவன் என்பதே பொருளாம்.
இவ்வருள்மொழிகளால், மணிவாசகரும் வேதாகம புராணங் கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளமையை ஒருவாற்றான் அறியலாம்.
மூவகை உபதேசம்:
வேத, சிவாகம, புராண இதிகாசங்கள் மக்கட்கு (மறைப் பொருளை) எப்படி உபதேசிக்கின்றன என்பதை முன்னோர் மூன்று வகையாகக் கூறியுள்ளமை பற்றிக் காண்போம்.
உபதேசம் செய்வதை மூவகையாகப் பகுத்துள்ளனர் முன்னோர். அவை பிரபு சம்ஹிதை, காந்தா சம்ஹிதை, சுகிருத் சம்ஹிதை என்பனவாம்.
பிரபு சம்ஹிதை என்பது அரசன் உத்தரவு (ஆணை) இடுவது போன்றது.
காந்தா சம்ஹிதை என்பது, மனைவி கணவனுக்கு இதமாகவும், பதமாகவும், சொல்வது போன்றது.
சுகிருத் சம்ஹிதை என்பது, நண்பன் நண்பனுக்குச் சொல்வது போன்றது.
சம்ஹிதை என்பதற்கு, சொல்லும் முறை என்பது பொருள். அரசன் (பிரபு) ஆணை இட்டுச் சொல்வது போல் வேதம், ஆகமம் இரண்டும் இன்னது செய்க, இன்னது தவிர்க்க என்று உத்தரவிடும்.
மனைவி கணவனுக்கு இதமாகவும், பதமாகவும் நன்மைகளை எடுத்துச் சொல்வது போல், புராணம் நயமாகச் சொல்லும்.
சுகிருத் - நண்பன், தன் நண்பனுக்கு இதமாகவும், பதமாகவும் சொல்வதுடன், இடித்தும் சொல்வான். இதிகாசம் நண்பன் நண்பனுக்குச் சொல்வதைப் போலச் சொல்லும்.
எனவே, அரசன் பணியாளர்க்கு ஆணையிடுவதுபோலவும், மனைவி கணவனுக்கு இதமாகச் சொல்வது போலவும், நண்பன் நண்பனுக்கு சொல்வது போலவும் சொல்லும் இவற்றையெல்லாம் நாம், நம் பன்னிரு திருமுறைகளிலும் காணலாம்.
ஞானசம்பந்தர் தேவாரத்தில் பிரபு சம்ஹிதை போலவும், அப்பர் தேவாரத்தில் காந்தா சம்ஹிதை போலவும், சுந்தரர் தேவாரத்தில் சுகிருத் சம்ஹிதை போலவும் உபதேசங்கள் வருவதை ஆங்காங்குக் காணலாம்.
முப்புராணங்கள்:
முப்புராணங்களாவன: பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்பனவாகும். இவை மூன்றும் சிவபெரு மானின் மூன்று கண்களாகப் போற்றப் பெறுவன.
சூரியகுலத் தோன்றல்களாகிய சோழர்கள் காரணமாகத் தோன்றியதால், சிவபெருமானின் வலது கண்ணாகப் பெரியபுராணம் போற்றப்படுகிறது.
சந்திர குலத்தோன்றல்களாகிய பாண்டியர்கள் காரணமாகத் தோன்றியதால், சிவபெருமானின் இடது கண்ணாகத் திருவிளையா டற் புராணம் போற்றப்படுகிறது.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான் வரலாறு கூறுவதால், சிவபெருமானின் அக்கினிக் கண் ணாகக் கந்தபுராணம் போற்றப்படுகிறது.
பெரியபுராணம், மனிதன் குறிக்கோளுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது. திருவிளையாடற் புராணம் மனிதன் பக்தியுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கந்தபுராணம், மனிதன் நன்றியறிதலுடன் வாழவேண்டும், இல்லையேல் கடுந்தண் டனையை அநுபவிக்க நேரிடும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.
பெரியபுராணம், சிவபெருமானின் அருமைப்பாட்டை அறிவிக் கிறது. திருவிளையாடற் புராணம் சிவபெருமானின் எளிவந்த கருணையை வெளிப்படுத்துகிறது. கந்த புராணம் அக்கினிக் கண்ணுக் கேற்பக் கடுமையைக் காட்டித் திருத்துவதாய் உள்ளது.
திருத்தொண்டர் புராணம்:
சேச்கிழார் பெருமான், விநாயகர் வணக்கத்தில் "எடுக்கும் மாக்கதை" (தி.12 பாயிரம் பா.3) என்று குறிப்பதாலும், செயற்கரும் செய்கை செய்த தீரர்களின் வரலாறுகள் கூறப்பெறுவதாலும், "செயற்கரிய செய்வார் பெரியர்" (குறள் 26) என்ற திருவள்ளுவர் கூற்றின்படியும்
பெரியவர்களின் புராணம், பெரியபுராணம் என வழங்கப் பெறுகிறது. ஆயினும் சேக்கிழார் இப்புராணத்திற்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதேயாம்.
உலகில் புற இருளைப்போக்குகின்ற சூரியனைப் போல மக் களின் அக இருளைப் போக்கும் ஆன்றோர் செயல்களைக் கூறுவதால் இதைத் திருத்தொண்டர் புராணம் என்றே தெரிவிக்கின்றார். அப்பாடல் காண்க.
இங்கிதன் நாமம் கூறின் இவ்வுல கத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புறஇருள் போக்கு கின்ற
செங்கதி ரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம்.(தி.12 பாயிரம் பா.10)
திருத்தொண்டர் புராணத் தோற்றம்:
திருக்கயிலை மலைச்சாரலிலே, வியாக்கிரபாத முனிவரின் குமாரரான உபமன்யு முனிவர், சில முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது வான வெளியில் ஒரு சோதி தோன்றியது. அதைக் கை கூப்பி வணங்கினார், உபமன்யு முனிவர்.
இவர் சிவபிரானையன்றி வேறு எவரையும் வணங்காதவர். எனவே முனிவர்கள் உபமன்யுவைப் பார்த்து, "சம்பு வின்அடித் தாமரைப் போதலால்" (தி.12 சரு.1-1 பா.19)வேறு யாரையும் இறைஞ்சாத தேவரீர், இச்சோதியை வணங்கிய காரணம் என்ன? என்று கேட்டனர்.
"தம்பி ரானைத்தன் உள்ளம் தழீஇயவன் நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்" (தி.12 சரு.1-1 பா.19) என உபமன்யு சொன்னார்.
அப்படியானால் அவரது வரலாற்றைக் கேட்க, பெரிதும் விரும்புகிறோம் என்றனர் முனிவர்கள். "அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்" (தி.12 சரு.1-1 பா.22). அவர் திருக்கயிலையில் இறைவனுக் குத் திருநந்த வனத்தில் வாசமலர் பறித்து நாளும் சூட்டி அணுக்கத் தொண்டராய் இருந்தவர், என்றார் உபமன்யு.
ஆலாலசுந்தரர்:
தேவர்களும் அசுரர்களும் என்றும் சாகாமல் இருக்க அமுதம் உண்ணும் பொருட்டுத் திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது இரண்டு விடம் உண்டாயின.
ஒன்று, வலிபொறுக்காமல் கயிறாகப் பயன்பட்ட வாசுகி என்னும் பாம்பு கக்கிய விடம். மற்றொன்று கடலினின்றும் தோன்றிய விடம். இரு விடமுமே ஆலால விடமாயிற்று.
இவை இரண்டும் தேவாசுரர்களை வெருட்டியபோது, தேவாசுரர்கள் சிவபெருமானைத் தஞ்சமடைந்தார்கள். அந்த விடத்தை எடுத்துவரத் தக்க ஆன்மா இல்லாததால், சிவபெருமான் கண்ணாடி முன் நின்றார். கண்ணாடியில் அவரது அழகிய திருவுருவம் தோன்றியது. அந்தப் பிம்பத்தைப் பெருமான் தமது சுட்டு விரலால் அழைக்க வந்தவரே ஆலாலசுந்தரர்.
இவரைப் பெருமான் அனுப்பினார். அவ்விரு விடத்தையும் நாவல் கனி அளவாகக் கையிலே கொண்டு வந்தார், ஆலாலசுந்தரர். அதனைப் பெருமான் வாங்கி உண்டு கண்டத்தில் அடக்கி நீலகண்டராகத் திகழ்ந்தார்.
மாதவம் செய்த தென்திசை:
இவ் ஆலாலசுந்தரர், பெருமானுக்குக் கயிலை மலையில் நந்தவனத்தில் மலர்பறிக்கும் திருத்தொண்டு செய்யும்போது, பிராட்டியாருக்கு அனிந்திதை, கமலினி என்ற இரு சேடிப்பெண்களும் மலர் கொய்வது வழக்கமாக நிகழ்ந்து வந்தது.
அதில் ஒருநாள், சுந்தரர் அவ்விருவர் மீதும் சிறிது மனம் போக்கினார். காதல் மாதரும் காட்சியில் கண்ணினார். பெரியவர்கள் பிழை செய்யமாட்டார்கள். அப்படி ஏதேனும் பிழை செய்தால் அதனால் நாட்டிற்கு நன்மையே கிடைக்கும். அந்த நன்மைதான் தமிழகத்திற்குக் கிடைத்த நாயனார்களின் பண்பாட்டு வரலாறு. இதைச் சேக்கிழார்,
மாத வம்செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வார்அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதருங் காட்சியிற் கண்ணினார். (தி.12 சரு.1-1 பா.25)
என்று காவியமாகப் பாடி நமக்கு வழங்கினார்.
எத்தனையோ காலம் சுந்தரரும் அனிந்திதை, கமலினியாரும் மலர்த்தொண்டு செய்துதான் வந்தனர். அப்போதெல்லாம் வாராத காதல் இப்போது எப்படி வந்தது? இதனை ஊன்றி உணர்ந்தால், மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடவே இக்காதல் மலர்ந்தது என்பதை உணரலாம்.
காவியத் தலைவர் சுந்தரர்:
இப்பெரியபுராணக் காவியத்தின் தலைவரே சுந்தரர்தான். இவர் வரலாறே திருமலைச்சருக்கம் தொடங்கி, தடுத்தாட்கொண்ட புராணம் வரை முதல் பகுதியாகவும், ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் குண்டையூரில் நெல் பெற்றது முதலாக ஏயர்கோனுடன் நட்பு, மேலும் கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாளின் நட்புவரை இடைப்பகுதி யாகவும், வெள்ளானைச் சருக்கம் நிறைவுப் பகுதியாகவும் அமைந் துள்ள முறை ஒரு காப்பியத்திற்கு வேண்டிய அனைத்துப் பகுதிகளுட னும் அமைந்து அணி செய்கிறது.
சோழநாட்டின் முதல் அமைச்சர்:
சேக்கிழார் கவிஞரல்லர். சோழநாட்டின் முதலமைச்சராக அநபாய சோழனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சோழ மன்னரைச் செந் நெறிப்படுத்த இக்காப்பியத்தை அருளினார்.
காப்பியக் கவிஞராக ஆக்கியது கூத்தப்பெருமானின் குஞ்சித பாதம். நடராசப் பெருமான் திருவருள், "உலகெலாம்" என்று அடியெ டுத்துக் கொடுத்தது. அதையே முதலாகக்கொண்டு காவியம் பாடத் தொடங்கினார். ஓராண்டில் பெரியபுராணத்தைப் பூர்த்தி செய்தார்.
கூத்தப் பெருமானுடைய அருள் வாக்காகிய "உலகெலாம்" என்னும் சொற்றொடர், புராணத் தொடக்கத்திலும், திருஞானசம்பந்தர் புராண இடைப்பகுதியிலும், வெள்ளானைச் சருக்கம் நிறைவிலும் அமையுமாறு திருவருள் துணை செய்துள்ளது.
இடையில் வந்துள்ள, "உலகெலாம்" என்ற பாடலால் ஞானசம் பந்தருக்குத் திருநெல்வாயில் அரத்துறை ஈசன், சிவிகை, பொற்சின் னம் முதலிய ஆசாரிய அங்கங்களை அடியார்கள் மூலம் கொடுத் தருளினார். அச்சிவிகையை எப்படி ஞானசம்பந்தர் ஏற்றுப்போற்றி னார் என்பதை எண்ணி, ஞானசம்பந்தரின் உள்ளக்கிடக்கையை உணர்தல் வேண்டும். பெருமான் அருளால், கேளாமலே வழங்கிய பெருங் கொடை. அதனைப் பெருமான் திருவருளாகவே கருதி, அதனை வலம்வந்து, பார்மீது விழுந்து வணங்கி, ஐந்தெழுத்து ஓதி ஏறினார். "உலகெலாம் உய்ய" என்று சேக்கிழார் படம்பிடித்துக் காட்டுகிறார். அப்பாடல் காண்க.
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றி நின்று
ஆதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி ஏறினார் உய்ய உலகெலாம். (தி.12 பு.28 பா.216)
சாதிகள் நெறியில் தப்பா:
பெரியபுராணத்தில் சாதிகள் இல்லை என்று புலமை சான்றவர்க ளும் இக்காலத்தில் பேசி வருகின்றனர். சாதிகள், குலங்கள், எத்தனை என்பதைப் பட்டியலிட்டு, சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு. மா. பாலசுப்பிரமணிய முதலியார் வெளியிட்டுள்ள தொகுப்பை இரண்டாம் காண்டத்தின் இறுதியில் வெளியிட்டுள்ளோம், காண்க, தெளிக.
அதை அடுத்து, நாட்டுச் சிறப்பில் ஒரு பாடல் சாதி பற்றிக் குறிப்பிடுவதைக் காணலாம். வீதிகளில் விழா தவறாது நடைபெறுகிற ஆரவாரமும், வீடுகளில் விருந்தினர் தவறாது வந்து செல்கின்ற ஆரவாரமும் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு சாதியினரும், அவரவர் ஒழுக்கநெறி நின்றும் தவறாது நடந்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் கலகலப்பாக மகிழ்ந்து விளையாடுகின்றனர். பறவைகளும் விலங்கு களும் கூட அவ்வவற்றிற்குரிய நெறிமுறை நீதிகளுடன் நடந்து வரு கின்றன. இவற்றைப் பார்க்கும் தேவலோகத்தில் உள்ள காமதேனுப் பசுவும் இந்நிலவுலகத்தில் வாழ விரும்பி அவாவுறுகின்றது.
மக்கள் ஒழுக்கநெறி நின்று தீட்சை பெற்று முறையாக அஞ் செழுத்தாகிய `நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தை அஞ்சாது செபிக்கின்றனர். அதனால் மக்கட்கு வரக்கூடிய பிணிகள் யாவும் இவர்களிடம் வர அஞ்சுகிறது என்கிறார் சேக்கிழார்.
இளையான்குடிமாற நாயனார் வரலாற்றில் முதல் பாடலில், "நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்கு லஞ்செய் தவத்தினால், இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை யான்கு டிப்பதி மாறனார்" (தி.12 பு.4 பா.1) என்று குறிப்பிடுகின்றார். அச் சாதி பற்றிய பாடலும் காண்க.
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறு பிணி வரத்தாம் அஞ்சும். (தி.12 சரு.1-2 பா.34)
மனுநீதி கண்ட சோழன்:
சுமிருதி வழி வந்த மனு வேறு. சோழர் குலத்தோன்றலாகிய இம் மனு வேறு என்பதாகக் குறிப்புக் காணப்படுகிறது.
மனுவேந்தன் வரலாற்றில் அரசன் ஒருவன் எப்படிக் குடிகளைக் காக்கவேண்டும் என்பதை இரு பாடல்களால் குறிப்பிடுகின்றார்.
"மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்" (தி.12 சரு.1.3 பா.14)
என்பது ஒரு பாடல். அதில் மன்னுயிர் என்றதனால், உயிர் நிலையாக உள்ளது, உடல்தான் மாய்கிறது என்பதை வலியுறுத்தினார். மாநிலம் காவலனாவான், "மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்கள் தம்மால் ஆனபயம் ஐந்தும் தீர்த் தறம் காப்பான் அல்லனோ" (தி.12 சரு.1-3 பா.36) என்பது அடுத்த பாடல்.
இதில் உயிர்கட்கு இடையூறு செய்வது; முதலில் அரசனால் இடையூறு விளையாமல் காத்தல்; முதல்வன் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை முதலில் சொன்னார். முதல்வன் சரியாக இருந்தால் அறநெறி சரியாக நடைபெறும்.
அடுத்து, தனக்கு உறுதுணையாக இருப்போரால் உயிர்கட்குத் துன்பம் வராமல் காத்தல்.
அடுத்து, பகைத்திறத்தால் என்றார். அரச பகைவர்களாலும் சமுதாயப் பகைவர்களாலும் தனிமனிதப் பகையாலும் உயிர்கட்கு இடர் வராமல் காத்தல். நேரிய அரசு செலுத்தும் திறன் உள்ள அரசிடம் எல்லோரும் நன்றி பாராட்டுவர். அவ்வாறு அரசு நடத்தவேண்டும். இஃது எல்லோராலும் இயலாது.
அடுத்து, கள்வரால் இடையூறு வாராது காத்தல். இதுவும் நேரிய அரசுக்குச் சாத்தியமே.
அடுத்து, உயிர் தம்மால் - உயிர் என்பது இங்கு விலங்குகள், விட சந்துக்களைக் குறிப்பிடுகிறது.
அரச நீதி நேர்மை தவறாது இருக்குமானால், மேற்குறிப்பிட்ட அனைத்தும் சாத்தியமேயாம். மனுவேந்தனைப் போல, தன் ஒரே மகனை முறைசெய்த திறன் இருக்குமானால், எல்லாம் நலமாகவே முடியும். மன்னன் நீதி பிழையாமையால் தனக்கும் தன் மகனுக்கும் மந்திரிக்கும் பசுவிற்கும் கன்றிற்கும் எந்தக் குறையுமில்லாமல் நிறை வாழ்வு கிடைத்ததை எல்லோரும் நினைத்து அதன்வழி நடந்து நலம் பெறுவார்களாக.
ஆணைவழியே தடுத்தாட்கொண்டார்:
திருக்கயிலையில் பெருமான், `மாதர்மேல் மனம் வைத்தனை, ஆதலால் பூமியில் தோன்றி அம்மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய்' என்றார். சுந்தரரோ, "மையல் மானுட மாய்மயங் கும்வழி ஐயனே தடுத் தாண்டருள் செய்" (தி.12 சரு.1-1 பா.28) என்றார்.
திருக்கயிலாய நாதர் அதற்கருள் செய்தார். பிறகு ஆலால சுந்தரர், அறம்தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருளப் பெரும் பேறுபெற்ற திருமுனைப்பாடி நாடு என்றும் நடுநாடு என்றும் போற்றப்பெறும் பகுதியிலே, திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்திலே, சடையனார் இசைஞானியார் என்ற தவத்தில் தலைநின்ற தம்பதியர்க்கு அருந்தவ மகவாய்த் தோன்றினார்.
அப்பகுதியில் நரசிங்கமுனையரையர் ஆட்சி செய்தமையால் தான் திருமுனைப்பாடி நாடு என்னும் பெயர் பெற்றது. அந் நரசிங்க முனையரையரின் காதல் மகவாய் (அபிமான புத்திரர்) வளர்ந்து மணப் பருவம் உற்றார். திருவாமூருக்கு அருகில் உள்ள மணம்வந்த புத்தூரில் பெண் பார்த்து, திருமணம் நிகழும் காலத்தில், முன்பு திருக்கயிலையில் அருளியபடியே பெருமான் வயோதிக அந்தணர் வடிவில் வலிய ஆட்கொள்ள வந்தார்.
சுந்தரரோ, முன்பு கயிலையில் தெரிவித்தபடியே மையல் வாழ்வில் மயங்கி நின்றார். வந்த வயோதிக அந்தணர் `இந்த நாவலூரன் நமக்கு அடிமை, இவ்வழக்கை முடித்தே திருமணம் செய்க' என்றார்.
அப்போதுதான், இம்மறையோன் பித்தனோ என்று கேட்டு, ஓலையை வாங்கிக் கிழித்தார். வழக்கு விரிவடையவே, இதனை நல்லோர் வாழும் வெண்ணெய் நல்லூரில் முடிவு செய்வோம் என்று பெரியவர் புறப்பட்டார்.
திருவெண்ணெய் நல்லூரில், வேதநெறி வல்ல அந்தணர் சபை முன்பு இவ்வழக்கைத் தொடுத்தார். மூல ஓலை காட்டி ஆரூரர் அடிமை என்பதைச் சாதித்தார். `இந்த ஊரில் உமது வீட்டைக் காட்டுக' என மறையவரிடம் சபையோர் கேட்டனர். ஆரூரர் உள்ளிட்ட அந்தணர் களுடன் திருக்கோயிலுள் மறையவர் புகுந்தார். யாவரும் அதிசயித் தனர். மறையவர் மறைந்தார். இடபாரூடராக அம்மை அப்பர் காட்சி யருளினார். "மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம் பெற்றனை, நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின்மிக்க அற்சனை பாட்டே ஆகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்". (தி.12 சரு.1-5 பா.70)
சுந்தரர், `கோதிலா அமுதே, உன்றன் குணப்பெருங்கடலை நாயேன் என் சொல்லிப் பாடுகேன்' என்றார். பெருமானோ, `முன்பு சபையோர் அறிய என்னைப் பித்தன் என்றாய், நான் பித்தன்தான். நீ என்னைப் பித்தன் என்றே பாடுக' என்றருளினார். ஆரூரர் உடன்,
பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தால்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்அருட் டுறையுள்
அத்தாவுனக் காளாய்இனி அல்லேனென லாமே. (தி.7 ப.1 பா.1)
என்று பாடியருளினார். பித்தன் என்ற சொல்லுக்குப் பெருங்கருணை யாளன் என்பது பொருள். "பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு" என்ற பழமொழியாலும் இதனை நன்குணரலாம்.
கயிலையில் நின்றும் பிரியும்போது, ஆலாலசுந்தரர் கேட்ட வரம் யாது? தான் மையல் மானுடமாய் மயங்கும்போது பெருமானே அடியேனைத் தடுத்தாட்கொள்ளவேண்டும் என்பதே.
அதனைச் சுந்தரர் மறந்து, வாதம் பேசினார். பெருங்கருணை யாளனாகிய சிவபெருமான் அவருக்கே உள்ள பெருங்கருணையால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே, கருணையினால் சொன்னபடியே வந்து ஆண்டுகொண்டார்.
மேலும், பித்தனோ மறையோன் என்றவர் சுந்தரர். அது திரு வருள் வழியே வந்தது. அதனால்தான் என்ன சொல்லிப் பாடுவேன் என்ற சுந்தரருக்கு, முன்பே நம்மைப் பித்தன் என்றனை, அதுவே பொருத்தமான சொல், அதையே முதலாக வைத்துப் பாடுக, என்றார்.
திருவருள் நம்மை எப்படியெல்லாம் ஆட்கொள்கிறது என்பதையும் அவனன்றி நாமாக ஒன்றும் செய்ய இயலாது என்பதையும் புலப்படுத்துகிறதல்லவா இந்த நிகழச்சி.
பாடலின் பொருளைக் காண்போம். பித்தா என்றவர் கருணை யாளன் என்பதற்கு ஏற்ப, அடுத்துப் பிறைசூடி என்றார். குற்றம் செய்த பிறைச் சந்திரனைக் கண்டித்து, உயிர் போகாமல் வளரவும் தேயவும் செய்த கருணையை எடுத்துக்காட்டாகக் கூறினார். பெருமானே என்றும் அருளை ஆள்பவனே என்றும் வியந்து, முன்பு வழக்குப் பேசி, இப்போது இடையறாது நினைக்கின்றேன். காரணம் தேவரீர் முன்பு பொதுவாகக் கவனித்த பெருமானே, இப்போது சிறப்பாகக் கவனித்து என்னை அடிமைகொண்டு, என் சித்தத்தே தன்னை வைத்து அருளினீர். இதனை, மனத்து உன்னை வைத்தாய் என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது திருவெண்ணெய் நல்லூர். அடுத்து அதனைக் குறிப்பிட்டார். அதில் உள்ள கோயிலே அருட்துறை என்னும் ஆலயம். அப்பெருமானுக்கு ஆளாயினேன். இனி அல்லேன் எனல் ஆகுமோ? ஆகாது என்று கனிந்து உருகுகிறார்.
புனித நந்தவனங்கள் பணிந்தார்:
அவநெறியில் செல்லாமே தடுத்தாண்டாய். அடியேற்குத் தவ நெறி தந்தருள் என்று திருத்துறையூர்ப் பெருமானைப் பணிந்து வேண் டினார்.
உழவாரப் படையாளி கைத்தொண்டு செய்து பெருமையுற்ற திருவதிகைப் பதியை மிதிக்க அஞ்சி, அருகிலுள்ள சித்தவட மடத்தில் இரவு தங்கிப் பள்ளி கொண்டார். அதிகைப் பெருமான் வயோதிகராய் அவர்முடிமேல் அடி வைத்தார். பெரியாரை மதித்தமையினால் பெரு மானின் திருவடித் தீட்சை பெற்றார்.
செங்கணவன் வழிபட்ட திருமாணிகுழி பணிந்தார். வேதஒலி கீதஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார்.
வன்னி கொன்றைவழை சண்பகம் ஆரம்
மலர்ப்ப லாசொடு செருந்திமந் தாரம்
கன்னி காரங்குர வங்கமழ் புன்னை
கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்
துன்னு சாதிமரு மாலதி மௌவல்
துதைந்த நந்திகர வீரம் மிடைந்த
பன்ம லர்ப்புனித நந்த வனங்கள்
பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். (தி.12 சரு.1-5 பா.94))
நந்தவனத்தில் உள்ள நறுமலர்ச் செடிகள், கொடிகள், மணமலர் தரும் மரங்கள் தாமரை, குவளை முதலிய நீர்ப்பூக்கள் முதலிய யாவும் ஓரறிவுயிர்கள்தாம். மற்ற மரம் செடி கொடிகளினும் இவை சிறந்தவை என்னெனில்? இவற்றின் மலர்களையும், வில்வம் முதலிய இலை களையும் இறைவன் முடி முதல் அடி வரை சார்த்தப்படும் பெருமை யுடையன. எனவே மரம் செடி கொடிகளினும் சிறந்தனவாம். இது பற்றியே சுந்தரர் நந்தவனங்களைப் பணிந்தார் என்பது சிவக்கவி மணியாரின் குறிப்பு.
ஒன்றி இருந்து நினைமின்கள்:
"ஒன்றி இருந்து நினைமின்கள்" (தி.4 ப.81 பா.2) என்று அப்பர் பாடினார். ஒன்றியிருந்து வழிபடுவது எப்படி என்பதைச் சுந்தரர் நமக்கு வழிபட்டுக் காட்டினார்.
மெய், வாய், கண், மூக்கு, செவி, என்ற ஐந்தும் பொறிகள் எனப் பெயர் பெறும். அவற்றின் வாயிலாகத் தோன்றும் உணர்வை - அறிவை - புலன் என்று பேசப்படும். ஐந்தின் வாயிலாக வெளிப்படும் உணர்வுகளை ஒன்றுபடுத்துவதே ஒருமைப்பாடு என்று சொல்லப் பெறும். கண்ணால் காணும் அறிவையும், காதால் கேட்டல் அறிவை யும், மூக்கால் முகர்தல் அறிவையும், நாக்கால் சுவை உணர்வையும், வாக்கால் பேச்சறிவையும் உயிர்பெறுகிறது. இவ் அனைத்தும் தனித்தனியாகச் செயல்படுமானால் உயிர்க்கு இவற்றால் பயன் இன்றிப் போம்.
ஓர் அறிவு செயல்படும்போது மற்றவை செயல்படாது ஒத்து ழைத்தால்தான் குறித்த பயனை உயிர் அடைய முடியும். ஐந்தும் ஏக காலத்தில் செயல்பட்டால் குறித்த பயனை உயிர் அடைய முடியாது போய்விடும்.
உதாரணத்திற்குக் கீரைப் பாத்திகளை எண்ணிப் பார்ப்போம். கறிகாய்த் தோட்டத்தில் கீரைப் பாத்திகள் ஐந்து உள்ளன என்று கொள் வோம். ஏக காலத்தில் ஐந்து மடைகளையும் திறந்து வைத்துத் தண்ணீ ரைப் பாய்ச்சினால் ஒன்றிலும் சரியாகப் பாயாது. நான்கு மடைகளை அடைத்து ஒவ்வொரு மடையாகப் பாய்ச்சினால் விரைவாகவும் நிறைவாகவும் நீர் பாய்ச்சிப் பயன்பெறலாம்.
இதைப்போலவே ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, மற்ற நான்கு பொறிகளும் செயல்படாதிருக்க வேண்டும்.
அந்தக் கரணங்களாகிய மனம் புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்கில், சித்தம் செயல்பட, மற்ற மூன்று கரணங்களும் செயல்படாது அடங்கி இருக்கவேண்டும்.
அத்துடன் குணம் மூன்றில், ரஜோ குணமும் தமோ குணமும் செயல்படாமல் சத்வ குணம் மேம்பட்டிருக்க வேண்டும்.
அப்படி வழிபடுவதே ஒன்றி இருந்து வழிபடுவதாகும். இதுவே சுந்தரர் நடராசப்பெருமானை வழிபட்ட நிலைமை. அப்பாடல் காண்க.
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்
ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். (தி.12 சரு.1-5 பா.106)
இது அநுபவப் பயனாம். இதனையே தருமை ஆதீனம் நான் காவது குருமூர்த்திகள் குமரகுருபரரை வினாவினார்கள். அநுபவப் பயன்கூற இயலாமல், சீடரானார் என்பதை நோக்குக.
ஆரூரில் நம்பால் வருக:
ஆடலரசர் அசரீரியாக `ஆரூரில் நம்பால் வருக' என்று அருளினார். அதுகேட்ட நம்பிஆரூரர், கொள்ளிடம் கடந்து சீகாழி யைக் காலால் கடக்க அஞ்சி, ஊரையே வலமாக வந்து காழிநாதரின் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்.
ஆரூர்த் தியாகேசர், `நம் ஆரூரன் நாம் அழைக்க வருகின்றான். அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர்' என அருள் புரிந்தார். நம்பி ஆரூரரோ, எளியவனாகிய என்னையும், ஆரூர்ப் பெருமான் ஆள்வரோ கேளீர் என்ற பொருளுடைய பதிகம் (தி.7 ப.73 பா.1) பாடிப் பரவி, வீதி வலம் வந்து, பூங்கோயிலில் புகுந்து பெருமானைத் தரிசித்தார். அங்குத் தங்கியிருக்கும் நாளில்தான் பரவையார் திருமணம், பெருமான் அருளால் நிறைவேறியது. மணக்கோலத்துடன் ஆரூரில் தங்கி, பெருமானை நாளும் வழிபட்டு வந்தார்.
திருத்தொண்டத் தொகை அருளினார்:
நம்பி ஆரூரரைக் குருவாக, நண்பராகக் கொண்டவர்கள் நாயன் மார்களுள் மூவரைக் காணலாம்.
பெருமிழலைக்குறும்ப நாயனார் ஒருவர். இவர் சுந்தரரைக் காணாமலேயே குருவாகக் கொண்டவர். யோக முயற்சியாலே, ஆரூரர் நாளை கயிலை செல்கிறார் என்பதை யோக நிலையில் உணர்ந்து, முதல் நாளே, "கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன் என்று, எண்ணிச் சிவன்தாள் இன்றேசென் றடைவன் யோகத்தால்" (தி.12 பு,23 பா.9) எனக் கயிலைப் பொருப்பர் அடி அடைந்தார்.
யோகநெறி விளக்க வந்த சுந்தரரைக் காணாமலே அவரைக் குருவாகக் கொண்டு யோக நெறிப் பதம் பெற்றார். மேலும் திரு வாரூரும் யோக நெறி விளக்கும் தலம் என்பதும் உணர்தல் வேண்டும். "உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால் உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி" (தி.6 ப.25 பா.1) என்று அப்பர் பெருமானும், "ஆதாரத்து ஒளியானே ஆரூரில் பெருமாளே" (நீ தான் எத்தனை என்னும் திருப்புகழில்) என்று அருணகிரிநாதரும் அருளியமை கண்டு உணரத்தக்கது.
பாரதத்தில், ஏகலைவனுக்கு வில்வித்தையைத் துரோணாச்சாரி யார் கற்பிக்கவில்லை. எனினும், ஏகலைவன் துரோணாச்சாரியாரின் உருவத்தை வழிபட்டே வில்வித்தை பயின்றது போல, இந்நாயனாரும் குருவைக் காணாமலேயே, அவர் பெருமை உணர்ந்து, அவரைத் தியானித்து, யோகக் கலையில் வல்லவராய், அவ் யோகத்தினாலேயே கயிலை சேர்ந்தார் என்பதை நாமும் உணர்ந்து குரு பக்தியால் சாதனை படைப்போமாக.
மற்றொருவர் சேரமான் பெருமாள் நாயனார். இவரும் யோகப் பயிற்சி உடையவர். அதனால்தான், இவர் சிவபூசை முடிவில் சிலம் பொலி கேட்டு மகிழ்ந்தார். எனவேதான் சுந்தரர் தில்லையில் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள ஒன்றிய சிந்தையராய் நடராசப் பெருமானை வழிபட்டபோது, அதிலே கூத்தப் பெருமான் கட்டுண்டு சேரமானுக்குச் சிலம்பொலி கேட்கத் தாமதித்தார். பிராசாத யோக நெறிப் பயிற்சி உடையவர் சேரமான் பெருமாள் நாயனார். அதனால் தான் சுந்தரர் திருவஞ்சைக்களத்தினின்றும் வெள்ளை யானை மீதிவர்ந்து கயிலை செல்கிறார் என்பதை யோகப் பயிற்சியால் உணர்ந்து தமது குதிரையின் செவியில் பஞ்சாட்சரத்தை ஓத, அதுவும் யோகம் கைவரப்பெற்றுச் சுந்தரரை வலம்வந்து முன்பு சென்றது.
மூன்றாமவர் சோமாசி மாற நாயனார் ஆவார். இவர் அம்பர் மாகாளத்தில் வாழ்ந்தவர். மறையவர் குலத்தினர். சோமயாகம் புரிந்தவர். நம்பி ஆரூரரை நண்பராகக் கொண்டவர். "எத்தன்மைய ராயினும் ஈசனுக் கன்பர்
என்றால் அத்தன்மையர் தாம்நமை யாள்பவர்" (தி.12 பு.33 பா.3) என்று கொண்டவர்.
"ஆரந்திகழ் மார்பின் அணுக்கவன் றொண்டர்க் கன்பால் சாரும்பெரு நண்பு சிறப்படைந்து தங்கிப் பாரும்விசும் பும்பணி யும்பதம் பற்றியுள்ளார்" (தி.12 பு.33 பா.4) என்றும், "வன்றொண்டர் பாதந்தொழு தான சிறப்பு வாய்ப்ப என்றும்நில வுஞ்சிவ லோகத்தில் இன்பம் உற்றார்" (தி.12 பு.33 பா.5) என்றும், சோமாசி மாறநாயனார், சுந்தரரைப் பின்பற்றித் தன் வாழ்வில் மேன்மை பெற்றமையைச் சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
பகை கொண்டார் இருவர்:
மலையாளப் பகுதியில் திருச்செங்குன்றூரில் வேளாளர் குலத் துதித்தவர். விறன்மிண்டர் என்னும் மெய்யடியார். தலங்கள்தோறும் சென்று அம்மையப்பரை வழிபடும் நியமம் பூண்டவர். திருவாரூர் சேர்ந்து தேவாசிரிய மண்டபத்தில் உள்ள அடியார்களை வழிபட்டு, தியாகேசப் பெருமானையும் வழிபட்டு வந்தார்.
இந்நாளில் சுந்தரர், பரவையார் திருமணம் கொண்டு தியாகேசரை வழிபட வந்தார். சீரடியார் பலரும் தேவாசிரியக் காவணத்தில் வீற்றிருந்தனர். இவர்க்கு யான் அடியனாகும் நாள் எந்நாள் கூடுமோ? என்ற எண்ணத்துடன் பரமர் தாள் பரவிச் சென்றார். அடியவர்க்கு அடியனாவேன் என்னும் ஆதரவு பொங்க வாயிலைப் பணிந்து உள்புகுந்தார். தியாகேசரும் அவர்க்கு எதிர்க்காட்சி கொடுத்து அருளினார் என்பது சேக்கிழார் வாக்கு.
பெருமான் மேலும் சுந்தரருக்கு, அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கி,
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம்மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையுங் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய். (தி.12 சரு.1-5 பா.196)
என்றார்.
நம்பிஆரூரரோ, "இன்னவா றின்ன பண்பென் றேத்துகேன். அதற்கியானார், பன்னுபா மாலை பாடும் பரிசெனக் கருள்செய்" (தி.12 ப.1-5 பா.198) என்றார். அதற்குத் தியாகேசர், "மறையளித்த திருவாக்கால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று எல்லையில்வண் புகழாரை எடுத்திசைப்பா மொழி" (தி.12 ப.1-5 பா.199) என்றார்.
அந் நிலைகண்டு அடியார்பால் சார்ந்து, திருக்கூட்டம் பல முறையால் தொழுது, அழியா வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று, ஆர்வத்தால் திருத்தொண்டத் தொகைப் பதிகம் அருள்செய்து பணிந்து எழுந்தார்.
தம்பிரான் தோழர் தாம் மொழிந்த முறைப்படியே, எம்பிரான் தமர்களாகிய திருத்தொண்டர்களை வரிசைப்படி, விரிநூலாகிய பெரியபுராணம் செய்கிறேன் என்கிறார் சேக்கிழார்.
சுந்தரர் முறையாகத்தான் நடந்துள்ளார். விறன்மிண்டர் தீவிர பக்தர். ஆகையால், நம்பிஆரூரர் கோயிலில் நுழைந்தவுடனே அடிய வர்களை முதலில் வணங்கவேண்டும் என்ற விதிமுறையை அழுத்தமாக எண்ணி, நம்பிஆரூரரையும், அவரை ஆட்கொண்ட பெருமானையும் புறகென்று கூறி, வெளிச்சென்றார்.
இருவரும் நல்லவர்களே. இந்நிலையைத் தியாகேசர் நன்கறிந்தே இருவரையும் ஏற்று அருள்புரிந்தார். திருத்தொண்டத் தொகையே அடியார்கள் வாழ்வை உலகத்தார்க்கு அறிவித்துத் தமிழ்ச் சைவப் பண்பாட்டு வரலாற்றை உலகறியச் செய்துள்ள பெருமையை நாம் இன்று உணர்ந்து உயர்வடைகிறோம்.
கயிலையில் காதல் புரிந்தமையால் சுந்தரர் வழிகாட்டும் ஆசாரியராக நமக்குக் கிடைத்தார். சுந்தரர் அவதார நோக்கம் நிறை வேறியது. அவரது வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை. எல்லோரும் இனிது வாழவே இறையருள் அவ்வப்போதும் துணை நிற்கிறது.
மற்றொருவர்:
பகைமேற்கொண்டாரில் மற்றொருவர் ஏயர்கோன் கலிக்காமர் ஆவர். இவர் வைத்தீசுவரன்கோயிலை அடுத்துள்ள பெருமங்கலம் என்னும் ஊரினர். குலத்தலைவர்; போர்வீரர்; திருப்புன்கூர்த் திருக் கோயிலுக்கு மழை பெய்வதற்காகப் பன்னிருவேலி நிலமும் அதிக மழையை நிறுத்துவதற்காகப் பன்னிருவேலி நிலமும் அளித்த குடும் பத்தைச் சேர்ந்தவர். இதனைச் சுந்தரர், "ஏத
நன்னிலம் ஈரறு வேலி ஏயர்கோன்" (தி.7 ப.55 பா.3) என்ற பாடலால் விவரித்துள்ளார்.
பரவை நாச்சியார்பால் தியாகேசப் பெருமானைச் சுந்தரர் தூது விட்டதற்காக வருந்தி இச்செயலைச் செய்தவர் அடியவரா என்று பகைமேல் கொண்டார். இவர் பகையை அறிந்த சுந்தரர், ஒரு பெரியவர் மனம் வருந்தச் செய்த தன்னிலைக் கிரங்கினார்.
தியாகேசப் பெருமான், இவ்விருவரும் நல்லவர்களே, இவர்கள் நட்பாக வேண்டும் என்று விரும்பினார். ஏயர்கோனுக்குச் சூலைநோய் பற்றச் செய்தார். சூலையால் வருந்திய ஏயர்கோனுக்குச் சுந்தரர் வந்தால் இந்நோய் தீரும் என்று அசரீரியாக அறிவித்தார். ஏயர் கோனோ சுந்தரர் வந்து தீர்ப்பதைவிட இச்சூலையை வயிற்றொடும் கிழிப்பேன் என்று உடை வாளால் தம் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்தார்.
சுந்தரருக்குப் பெருமான் அறிவித்தார். அவர் உடனே ஏயர் கோன் வீடு சேர்ந்தார். மனையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் உடலைக் கண்டார். தம்முடைய செயலால் அல்லவா இவர் இந்நிலை எய்தினார் என்று எண்ணி, அவர் உடைவாளை எடுத்துத் தமது உடலைக் கிழிக்கத் தொடங்கினார். பெருமான் அருளால் ஏயர்கோன் ஊறு நீங்கி எழுந்து சுந்தரரின் உடைவாளைப் பற்றி இருவரும் நண்பர்களானார்கள். நல்லோர் பகை நண்பர்களாய் முடிந்தது.
இருவரும் சேர்ந்து திருப்புன்கூர் இறைவனைத் தொழுது, திரு வாரூர் சேர்ந்து பரவையார் மாளிகையில் உணவருந்தி மகிழ்ந்தனர்.
தென்தமிழ்ப் பயன்:
ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பயன் உண்டு. சேக்கிழார் சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டீச நாயனர் தோன்றிய சேய்ஞலூரை, "மண்ணின் பயன்" சேய்ஞலூர் (தி.12 பு.20 பா.9) என்கிறார். சண்டீசர் தோன்றியதே பெரும்பயன் அல்லவா! அதே பாடலில் "பண்ணின் பயனாம் நல்லிை\u2970?" என்கிறார். பாடற் பொரு ளைச் சிதைவுறாமல் பாடத் துணை புரிவதே நல்லிசையாகும். சிவக் கவிமணியின் குறிப்பும் இதுவே.
திருவள்ளுவரும் "பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்" (குறள் 573) என்கிறார். பாடல் பொருளை விளக்காத பண்ணும், கருணையில்லாத கண்ணும் பயனற்றன என்பதே இதன் பொருள்.
கண்ணின் பயன் ஒளி உடைமை என்பது சேக்கிழார் கருத்து. அறிவின் பயன் இறைவன் பெயராகிய அஞ்செழுத்தாம் நமசிவாய என்பதை இடையறாது நெஞ்சில் நிறுத்தலேயாம் என்கிறார்.
எனவே தமிழின் பயன் எத்தனையோ உண்டு. அவற்றுள் சிறந் தது மனிதப் பண்பேயாம். இதனை வளப்படுத்த வந்ததே பெரிய புராணம். அதில் கூறப்பெறும் அடியவர்களின் பண்பாட்டுச் சிறப்பு, அறுபத்து மூவர் வரலாறும் அறுபத்து மூன்று கோணங்களில் நம்மைப் பண்படுத்த வல்லவையாம்.
தொட்ட தொட்ட இடங்களிலெல்லாம் மனித இனத்தைப் பண்படுத்தும் பாங்கை ஒவ்வொரு நாயன்மார் வரலாற்றிலும் நன்கு உணரலாம். எனவேதான் தென்தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை தோன்றியது. அதில்தான் அறுபான் மும்மை நாயன்மார்களின் பண்பாட்டு வரலாறு வரன்முறையாக அமைந்துள் ளது. தொகுத்துச் சொன்னவர் சுந்தரர். வகுத்துச் சொன்னவர் நம்பியாண்டார் நம்பிகள். விரித்துச் சொன்னவர் சேக்கிழார் பெருமான்.
இத்திருத்தொண்டத் தொகைக்கு முதல் அடி எடுத்துக் கொடுத் தவர் திருவாரூர் தியாகேசப் பெருமானே. சேக்கிழார்க்குக் கூட நடராசர், "உலகெலாம்" என்றுதான் அடியெடுத்துக் கொடுத்தார்.
பண்பாட்டு வரலாறு கூறும் திருத்தொண்டத் தொகைக்கோ அடிமைப் பண்பு முதன்மையானது. ஆதலால், தில்லைவாழ் அந்தணர் என்றதோடு நில்லாமல் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்து முடித்துக் கொடுத்தார்.
மேலும் தில்லைவாழ் அந்தணர்க்கு அடியேன் என்னாமல் அவர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அருளிச் செய்தார். சைவத்தின் உயிர்நாடி அடிமைப் பண்புதான்.
வரலாறு அறிவிப்பதுதான் பண்பாடோ எனில், வாழ்வின் முதிர்ந்த நிலை இதுவே. எனவே, இதனைப் பெருமானார்தானே மனிதகுலத்திற்கு உணர்த்தவேண்டும். ஆகவே சுந்தரர் மூலம் நமக்கெல்லாம் உணர்த்தினார். பெருமானே அடிமைப் பண்பை முதலில் உணர்த்தினார் என்றால், உயிர்கள் - சிறப்பாக மனித உயிர்கள், எவ்வளவு அழுத்தமாக இப்பண்பை மேற்கொள்ளவேண்டும் என் பதை, மனிதரும் உணர்ந்து நடை பயிலவேண்டும். இதைத்தான் சித் தாந்த சாத்திரப் பேராசிரியராகிய நமது ஆச்சாரியர் அருள்நந்தி சிவனார் சிறிது விளக்கமாகவே நமக்கு அறிவுறுத்தினார்.
"வாழ்வெனும் மையல்விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது" (சித்தியார் சுபக். 181)
என்று அநுபவப் பூர்வமாக அறிவித்தார்.
வளமான வாழ்விலே பகட்டாக வாழ்தலையே மக்களில் பெரும்பாலோர் விரும்புகின்றனர். வறுமை வந்தால் சிறுமையும் அதனூடே பிறந்து விடுகிறது. அப்போதும் பண்பு உணர வாய்ப் பில்லை. இவ்விரண்டையும் கடந்து தாழ்வெனும் பண்புடன் சைவப் பண்பை உணர்ந்து நடத்தல், கடலைக் கையால் கடத்தற்கு ஒப்பாகும்.
இவ்வளவு ஆழங்கால்பட்டது நமது சைவப்பண்பு. என்பதைத்தான் நாயன்மார் வரலாற்றால் சுந்தரரும் நம்பியாண்டார் நம்பிகளும் சேக்கிழாரும் தெரிவிக்கிறார்கள். உணர்ந்து உய்தி பெறுவோமாக. தில்லைவாழ் அந்தணர் புராணத்துள், "இன்றிவர் பெருமை" (தி.12 பு.1 பா.9) என்ற பாடலால் சேக்கிழார் செம்மை நெறிச் சிறப்பை எடுத்தோதியுள்ளார்.
அற்புதத் தனிக்கூத்து:
அற்புதம் என்பது இன்னதென்று சுட்டி அறியப்படாதது. காணும் பொருள்களிலேயே அழுந்தி அதுவாய் நின்று அநுபவிக்கப் பெறுவதோர் இன்ப அநுபவம் என்பார் சிவக்கவிமணி. எனவே கூத்தப் பெருமானின் கூத்து அற்புதக் கூத்து, தனிப்பெருங்கூத்து, ஆனந்தக்கூத்து என்பர். பஞ்சகிருத்தியக் கூத்து என்பது இதுவே. ஐந்தொழில் புரிவதும் இக்கூத்தே.
இக் கூத்துத்தான் உயிர்களின் பொருட்டு உடம்பையும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணங்களையும், உடம்பும் கருவிகளும் உலாவுதற்குப் பஞ்ச பூதங்களாலாகிய உலகத்தையும் உயிர்கள் அநுபவிப்பதற்கான போகப் பொருள்களையும் படைத்து, அவற்றைக் காத்தும், உயிர்களின் பக்குவத்திற்கேற்ப மறைத்தும், அவ்வுயிர்களின் பக்குவக் காலத்தில் அநுபவிக்க அருளியும் இளைப் பாறுதற்கு ஒடுக்கியும் ஐந்தொழில் புரிகின்றது.
இவ்வற்புதக் கூத்து ஆதியும் முடிவும் இல்லாத அற்புதக் கூத்து. இதனைத்தான் திருநீலகண்ட நாயனார் நாள்தோறும் வழிபடும் நியமம் பூண்டவர்.
பெரியபுராணத்துத் தனிஅடியார்கள் அறுபதின்மர்; தொகை யடியார்கள் ஒன்பதின்மர்; சுந்தரர், அவர்தம் பெற்றோர் இவர்கள் மூவரும் சேர்த்து எழுபத்திருவர் ஆவர்.
ஆனால், நாயன்மார்கள் 63 ஆவார் என்று வழங்கி வருகிறது. அறுபத்து மூவரில் சுந்தரர், அவர் தந்தை சடையனார், தாய் இசைஞானியார் மூவரையும் சுந்தரர் நாயன்மார்களில் சேர்க்கவில்லை. "என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன்" (தி.7 ப.39 பா.11) என்று இன்னாருடைய பிள்ளை ஆகிய திருநாவலூர்க்கோன் என்று தான் குறிப்பிடுகிறார்.
ஆனால் நம்பியாண்டார் நம்பிகள் இம்மூவரையும் நாயன்மார் களுடன் சேர்த்தே, தி.11 திருத்தொண்டர் திருவந்தாதியில் பாடியுள்ளார். நாயன்மாரை நமக்கு அறிவித்த சுந்தரரையும் அவர்தம் அருந்தவப் பெற்றோர்களையும் நம்பியாண்டார் நம்பிகள் சேர்த்துப் பாடியதே மரபுப் பண்பாகும்.
இப் பெரியபுராணம் முழுமையான நூல் என்று சொல்வதற்கு, பின்னே நாயன்மார்களை ஒத்த தொண்டர்களை இவர்களுடன் இணைப்பதற்கு வழி இருக்கவேண்டும். இங்குதான் திருவருளின் சிறப்பு, சுந்தரர் வாயிலாக வெளிவருகிறது. இன்ன இன்ன தன்மை யுடையவர்கள் எல்லாம் இன்ன இன்ன தொகுப்பிலே வைத்துப் போற் றத் தக்கவர்கள் என்பதை ஒன்பது தொகுதியாகத் தொகுத்துள்ளார். தொகுத்ததும் திருவாரூர் தியாகேசப் பெருமானே ஆவார்.
பெருமான் பெருமையை எப்படிப் பாடுவேன் என்றபோது பித்தா என்று அடியெடுத்துக் கொடுத்தது போல, அடியவர்கள் தம்மை எப்படிப் பாடுவேன் என்று வேண்டியபோதும் தியாகராசரே தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று முதல் வரியே, தொகையாக உள்ள தில்லைவாழ் அந்தணர்தம் அடியவர்க்கும் அடியேன் என்று பாடிக் காட்டினார். சுந்தரர் அதைச் சிரமேற்கொண்டு தனி அடியார்களையும் தொகை அடியார்களையும் முறைப்படுத்திப் பாடினார்.
திருநீலகண்டம்:
சுந்தரர் பாடியருளிய அறுபதின்மரில் முதல் நாயனார், திரு நீலகண்டத்துக் குயவனார். திருநீலகண்டத்தின் மீது பக்தி செலுத்தி யமையால் வந்த காரணப் பெயர். இயற் பெயர் தெரியவில்லை. நிறைவாக மன்னிய சீர்ச் சருக்கத்தில் கடைசியாகக் குறிப்பிடும் நாயனாரும் திருநீலகண்டத்துப் பாணனார் ஆவர். திருநீலகண்டமே நாயன்மார்களை முதலிலும் கடைசியிலுமாக நின்று காப்பதாகவே அமைகின்றது. இது திருவருட் செயலே.
திருநீலகண்டம் என்பது நஞ்சு. தேவர்களும் அசுரர்களும் சாவா மூவா மருந்தாகிய அமிர்தம் பெறவேண்டித் திருப்பாற்கடலைக் கடைந்தனர்.
மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி, அசுரர்கள் பாம்பின் தலைப்பக்கமும், தேவர்கள் பாம்பின் வால் பக்கமும் பிடித்து இழுத்துக் கடைந்தனர்.
வாசுகி வலி பொறுக்கமாட்டாமல் விடத்தைக் கக்கியது. பெருமானை வணங்கி வேண்டாமல் கடைந்ததால் பாற்கடலில் விடம் உண்டாகியது. விடமும் ஆலகால விடமாய்த் தோன்றித் தேவ அசுரர் களையும் மற்றும் உலக உயிர்களையும் துன்புறுத்தியது.
எல்லோரும் பெருமானிடம் முறையிட்டனர். பெருமான் சுந்தரரைத் தோற்றுவித்து, ஆலகால விடத்தை, நாவல்கனி அளவாகத் திரட்டிக் கொண்டு வரச்செய்து, விடத்தை அமுதமாகத் தாமே உண்டு கண்டத்தே அடக்கினார். இதனால், பெருமானுடைய கண்டம் நீல கண்டமாயிற்று. தேவர்களையும், அசுரர்களையும் மற்ற உயிர்களை யும் காப்பாற்றியது திருநீலகண்டம். ஆனதால் அதன் மீது திருநீல கண்ட நாயனார் பக்தி கொண்டார்.
சிவ அஷ்டோத்திர சத நாமாவளியில் "ஷ்ரீ கண்டாய நமஹ" என்ற ஒரு நாமாவளி உள்ளது. ஷ்ரீ கண்டம் என்றாலே நீலகண்டம் என்பதே பொருள்.
வேததிற்குப் பாடியம் செய்தவர்களிலே ஒருவர் நீலகண்ட சிவாச்சாரியர் ஆவர். இவர் செய்த பாடியத்தை, நீலகண்ட சிவாச்சாரி யர் பாடியம் என்றும் ஷ்ரீ கண்ட பாடியம் என்றும் வழங்குவர். எனவே ஷ்ரீ கண்டம் என்றாலும் திருநீலகண்டம் என்றாலும் ஒன்றேயாம்.
இன்றும் சிவபூசையை முறையாகச் செய்ய இயலாதவர்கள், "ஓம் ஷ்ரீ கண்டாய நமஹ" என்று ஒரு வில்வ பத்திரம் சார்த்தினால் போதும். அதுவே, சிவபரம்பொருளின் அருளைப் பூரணமாக அரு ளும் என்பது ஆன்றோர் ஆச்சாரம்.
மேலும் திருஞானசம்பந்தர், திருச்செங்கோட்டிற்கு எழுந்தரு ளிய போது குளிர்காலமாதலால் அடியவர்களைக் குளிர் சுரம் பற்றியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர், "செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்" (தி.1 ப.116 பா.1) என்று பாடிக் குளிர் சுரத்தைப் போக்கினார்.
ஆகவே இந் நாயனார் நீலகண்டத்தின் பெருமையை உணர்ந்து, சதாகாலமும், நீலகண்டம் நீலகண்டம் என்றே ஓதி வந்தார். ஆதலின் இவருக்குத் திருநீலகண்டர் என்பதே காரணப் பெயராயிற்று. இயற் பெயர் தெரிந்திலது.
தொழில் என்பது, தனது வாழ்க்கைக்காகப் பொருளீட்ட முயற்சிப்பது. தொண்டு என்பது, பலனை எதிர்பாராமல் பிறர் நலத்தின் பொருட்டுச் செய்யப்படும் செயல்கள்.
இவரது குலத் தொழில் சட்டி, பானை முதலிய மட்கலம் செய்து வாழ்க்கை நடத்துவது. இத்தொழிலில் தொண்டு செய்வது எளிமை யாகும். தொண்டிற்கென்று தனியே எதையும் செய்யவேண்டுவ தில்லை. அத்தொழிலிலேயே சில திருவோடுகளை உற்பத்தி செய்வது எளிமையான செயல்.
இளமை மீதூர, இன்பத் துறையினில் எளியரானார். இது அவர் மனைவிக்குத் தெரியவே, அயலறியாமலே கணவனைத் திருத்துவ தைக் கடமையாகக் கருதினார். நாயனார் மிகுந்த பக்தி கொண்டு சொல்லி வந்த திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டு, `எம்மைத் தீண்டுவீர் ஆயின் திருநீலகண்டம்' என்றார்.
`எம்மை என்று சொன்னமையால், பிற மாதரையும் மனத்தினால் தீண்டேன்' என்றார் நாயனார். அவ்வாறே இருவரும் தம் வாழ்வியல் முறை அயலறியாது வாழ்ந்தார்கள். இப்பண்பு இருவர்க்கும் அமைந்த பண்பு. பல்லாண்டுகள் ஆகியும் இவர்கள் குடும்ப வாழ்வைப்பற்றி யாரும் அறியாது வாழ்ந்தனர்.
நிறைவாக, இருவரும் கடைசிவரை சபதத்தை மீறவில்லை. இங்கே வாழ்வியல் நெறியைக் கடைசியில்தான் சொல்லி, குளத்தில் மூழ்கினார். அதிலும் ஒரு தண்டைப் பிடித்து இருவரும் மூழ்கினார்கள். எப்படியாவது இவர்கள் வாயிலாக வாழ்க்கை முறையினை வெளிப்படுத்த இறைவனே ஒவ்வொன்றாகச் சொல்கிறார்.
ஓட்டினைக் கவரவில்லை என்பதற்கு மகனைப் பிடித்து மூழ்கிச் சத்தியம் செய்க என்றார். அப்போதாவது நாங்கள் உடன் உறைய வில்லை என்பதைச் சொல்லாமல் இருக்கிறார்கள். இறுதிவரை விளக்கம் தரவில்லை.
இப்படிப்பட்ட அன்பு வாழ்வு வாழ்வது அரிதினும் அரிதாகும். எனவே இந்தப் பண்பை உலகறியச் செய்ததுடன், யானையால் யானை யாத்தற்று (ஒரு யானையை ஏவி மற்றொரு யானையைப் பிடிப்பது) போல, இவர் பற்றிய விளக்கத்தை உலகறியச் செய்தல் பலரும் நல்வாழ்வு மேற்கொள்ளவே.
இறைவனும் வேலைச்சுமை குறையும் என்பதற்காகவே அவர் தொண்டின் பெருமையையும், இல்லற வாழ்வின் கற்புத்திறனையும் ஒருங்கே வெளியிடவே, திருவோடு கொடுத்து இவர்தம் பெருமையை உலகறியச் செய்தார். இதனைச் சேக்கிழார், `தொண்டரை விளக்கம் காணத் திருவோடு மறைத்து நிகழ்ச்சி நடைபெற்றது' என விளக்குகிறார்.
நீதிபதிகளின் நிலைமை:
நீதிபதிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை, திருநீலகண்ட நாயனாருக்கு எதிரான வழக்கை விசாரித்த, தில்லைவாழ் அந்தணர்கள் நடவடிக்கையுள் வைத்து விளக்குகிறார்.
முதலில் நீதிபதிகள் நல்லொழுக்கம் உடையவர்களாய் இருத்தல் வேண்டும். அடுத்து வாழ்வியல் சட்ட நூல்களைக் கற்று அதன் நுணுக்கம் வல்லவராய் இருந்தல் வேண்டும் என்கிறார் சேக்கிழார். "நல்லொழுக்கம் தலைநின்றார் நான்மறையின் துறைபோனார் தில்லைவாழ் அந்தணர்கள் வந்திருந்த திருந்தவை" (தி.12 பு.2 பா.31).
எனவே, முதலிலும் முடிவிலும் திருநீலகண்டம் பெயர் தரித்த நாயனார்களை வைத்தருளியது திருவருள் வாய்ப்பேயாகும். திருநீல கண்டம் நாயன்மார்களையும் நம் எல்லோரையும் இன்றும் காத்து வருகிறது.
இயற்பகை நாயனார்:
இவர், "யாதும் ஒன்றும் என் பக்கல் உண் டாகில் அன்ன தெம்பிரான் அடியவர் உடைமை' (தி.12 பு.3 பா.7) என்ற திடமான குறிக்கோள் உடையவர். எனவே தம்மிடம் உள்ள, தமக்கு உரிமையான மனைவியை அடியவர்க்குக் கொடுக்க இசைந்தார். மனைவியாரும் முதலில் மனம் கலங்கி, பின் கணவன் வழி நிற்றலே கடன் என்று தெளிந்தார்.
இறைவனும் இயற்பகையார் மனைவியாரும் அண்மையில் நின்றனரே அன்றி ஒருவரை ஒருவர் தீண்டவும் இல்லை. நாயனாருக்கு விடை கொடுத்த பின், நாயனார் பார்க்குமளவில் சிறிது தூரம் சென்றதுமே, வேதம் ஓலமிட்டும் உணராதவராகிய இறைவன், இம்முனிவரை, "இயற்பகை முனிவா ஓலம்" என்றும் "ஈண்டு நீ வருவாய்" (தி.12 பு.3 பா.29) என்றும் அழைத்தார். எனவே, குறிக் கோளுடைய இவரின் வாழ்க்கையைப் புலப்படுத்தவே இந் நிகழ்ச்சி நடந்தது என்பதே தெளிவாம்.
மேலும் உலக தருமத்தைக் கடைப்பிடித்த நாயனாரின் சுற்றத் தார், நாயனாரின் வாளுக்கு இரையாயினர். அவர்களும் வானுலகில் இன்பமுற்றனர். உலகப் பற்றை அறவே நீத்த இந் நாயனாரும் சிவ லோகத்தில் உடனுறையும் பெருமை பெற்றார். இரு திறத்தாரும் நலமே பெற்றனர். இதனால் சிவநெறிப் பண்பு சிறக்கிறது.
இவர் வரலாற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, ஒவ்வொருவரும் அவரவர் தொழிலிலேயே தொண்டு செய்யலாம் என்பதே.
இளையான்குடிமாறர்:
அடியவர்கட்குச் சோறிட்டுச் சோறு பெற்றார். உணவையும் முத்திப்பேற்றையும் சோறு குறிக்கிறது. இந்நாயனார் வரலாற்றில், சோறு என்பது முத்திப்பேற்றைக் குறிப்பதை மணிவாசகர் திருவாசகத் தில், சண்டேச நாயனார் வரலாறு பேசும். மணிவாசகர், "பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" (தி.8 ப.15 பா.7) என்று பாடியுள் ளமையில் காணலாம்.
நாயன்மார்களை இறைவன் சோதித்தார் என்பது சரியன்று. அவர்தம் குறிக்கோளை நிறைவேற்றுவதில், சிறிதும் மனம் மாறாமல் ஒரே நிலையில் நின்றார்கள் என்பதை மக்கட்கு அறிவிக்கவே, இறைவன் நாயன்மார்களின் வாழ்வியல் முறையை விளக்கம் செய் யவும், அதைக் காணும் நம்மனோர்கள் உரிய தொண்டை மேற்கொண் டால் அதை இடையறவு படாமல் காத்து நடத்தவேண்டும் என்பதை உணர்த்தவுமே நிகழ்த்தினார் என்பதை உணர்தல் வேண்டும்.
இதனை, "அல்லல் நல்குர வான போதினும் வல்லர் என்றறி விக்கவே....., ஒல்லை யில்வறு மைப்ப தம்புக உன்னி னார்தில்லை மன்னினார்" (தி.12 பு.4 பா.6) என்று சேக்கிழார் குறிப்பிடுவதால், நன்கு உணரலாம். மேலும் நாயன்மார்கள் வளம் சுருங்கினும் மனம் சுருங் குதல் இல்லாதவர்கள் என்பதையும் இங்கு காண்கிறோம்.
விறன்மிண்டர்:
திருத்தொண்டத் தொகையைச் சுந்தரர் பாடக் காரணமாயிருந் தவர் விறன்மிண்டர். சேர நாட்டின் கேரளம், சேர நாடாயிற்று. கினி என்பது அசைதல். அதுவே சினி என்றாயிற்று என்பர் மொழிநூல் வல்லவர். எனவேதான் கேரளம் சேர நாடாயிருக்கிறது. இது மலைநாடு. பழமையான புராண வரலாற்றில், பரசுராமன் தவத்தினால் பெற்ற நாடு என்பர் சேக்கிழார்.
செங்குன்றூர் ஊரினர் வேளாண் குலத்தவர். புண்ணியத் தலங் கள் தோறும் சென்று சென்று வழிபடும் நியமம் பூண்டவர். திருவாரூர்ப் பூங்கோயிலில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியவர்களுடன் உறையும் பெருமை பெற்றவர்.
அமர்நீதியார்:
வணிகர் குலத்தில் வந்தவர். சிவன் கழலே சிந்திக்கும் திறத் தினர். அந்தி வண்ணர் தம் அடியார்க்கு அமுது செய்வித்து, ஆடை கீழ்க்கோவணம் உதவி, தாம் பெற்ற வளத்திலே வரும் பயன் கொள் பவர். திருநல்லூரில் திருவிழாக்காலத்தில் வருவோருக்கு உணவு, உடை வழங்கத் திருமடம் அமைத்து அறம் பல செய்தவர்.
சிவபெருமான் பிரமச்சாரியராக இரு கோவணம் கொண்டு வந்தார். ஒன்றை இவரிடம் கொடுத்து, `மழை வரும் போல் இருக் கிறது. இதனைப் பாதுகாப்பாக வைத்திருப்பாயாக' என்று கொடுத்தார். திருநீலகண்டரை விளக்கம் கண்டது போலவே, கோவணத்தை வைத்த இடத்திலிருந்து மறையச்செய்து கோவணக் கள்வராகிய சிவபெரு மான், இந்நாயனாரிடம் வந்து கோவணம் கேட்டார்.
வைத்த இடத்தில் கோவணம் இல்லாதது கண்டு திகைத்தார். புதிய கோவணம், நெய்த கோவணம் ஏற்றுப் பிழை பொறுக்க வேண்டினார். நாயனாரின் அன்பெனும் தூயநீர் ஆடுதல் வேண்டி, தாம் வைத்த கோவணமே தரக்கேட்டனர் கேடிலாதார்.
நாயனார் தம்மிடம் உள்ள பொருள்களை எல்லாம் கொடுக்க இசைந்தார். பெருமானும் ஒரு துலாக்கோலில் தாம் வைத்திருந்த கோவணத்திற்கு நிகராகப் பொருள்களை ஏற்க இசைந்தார். எல்லாப் பொருள்களும் இட்டார்; சரிவரவில்லை. இறுதியாக நாயனார், மனைவி, புதல்வர்களை உடன்கொண்டு துலாக்கோலை வலம் கொண்டு கூறுகின்றார். தாம் இதுவரை செய்த, "இறைதிரு நீற்றுமெய் யடிமை பிழைத்தி லேம்எனில் பெருந்துலை நேர்நிற்க என்று.... தழைத்த அஞ்செழுத் தோதி" (தி.12 பு.7 பா.43) ஏறினார்கள்.
அத் துலாக்கோலே விமானமாக அழிவில்லாத வான்பதம் பெற்றார். பெருமான் பேதையும் தாமுமேயாய்க் காட்சியருளினார். திருத்தொண்டில் சிறிதும் பிழை இன்றிச் செய்திருப்போமானால், துலை நேர் நிற்கும் என்பதுதான், தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டிய உறுதிப்பாடாகும் என்பதை உணர்த்தியது இவ் வரலாறு.
மெய்ப்பொருள்:
என்றும் நிலையாக நிற்பதே மெய்ப்பொருள். உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் எரித்தால், அவை சாம்பலாகும். சாம்பலை எரித்தால் அது சாம்பலாகவே இருப்பதன்றி மாற்றம் அடையாது.
இதனால்தான் சிவநெறியாளர் நிலையாத செல்வத்தை நிலையின என்று உணரும் புல்லறிவில் புரளாமல், நிலையான செல்வமாம் பேரின்பம் பெறுவதே தமது குறிக்கோள் என்பதைத் தாம் உணர்வதுடன் உலகத்தார்க்கும் உணர்த்துவாராய், என்றும் மாறாமல் பிரகாசிக்கும் திருநீறே மெய்ப்பொருள் என்று காட்டிய நாயனாராம் மெய்ப்பொருளைப் போற்றி வழிபட்டு வருகின்றனர்.
இவர், நடு நாட்டிற்கு மேல்பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சேதி நாட்டினில், திருக்கோவலூரில் சிற்றரச ராய்த் திகழ்ந்தவர். மலைநாட்டைச் சேர்ந்தமையால் மலாடுடையார் என வழங்கப்பெற்றார்.
இவர் மலையமான், நத்தமான், சுருதிமான் என்ற முப்பகுப் புடைய குலத்தில், மலையமான் வகுப்பைச் சேர்த்தவர். தமிழகத்தில் இன்று உடையார் என்று வழங்கும் மரபினர், இம் முப்பிரிவில் ஒன்றைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மலையமான் நத்தமான் ஆகிய இரு பிரிவினரும் உடையார் என்றே வழங்கப்படுகின்றனர். சுருதிமான் என்பவர்கள் மூப்பர் என்று வழங்கப்படுகின்றனர் என்பது சிவக்கவிமணியின் குறிப்பு. எனவே மூப்பனார் என்ற பிரிவும் இவ்வுடையார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றே தெரிய வருகிறது.
மெய்ப்பொருள் நாயனார், திருநீறே மெய்ப்பொருள் என்பதை உலகறியச் சாதித்துக் காட்டியவர். தம் உயிர் துறக்க நேர்ந்தபோதும் கொள்கையில் தவறாது நின்று வென்றவர். முத்தநாதனை இடையூ றின்றி எல்லை தாண்டிவிட்டு வந்த தத்தன் கூறக்கேட்கும் வரை, உயிர் தரித்து ஆயத்தார்க்கும், சுற்றத்தார்க்கும் கடைசியாகக் கொடுத்த சேதி நாட்டரசர் செய்தி, "திருநீற் றன்பு பாதுகாத் துய்ப்பீர்" (தி.12 பு.5 பா.22) என்பதேயாம். எனவே இந்நாயனாரின் கொள்கைப் பிடிப்பை நாமும் கடைப்பிடித்து வாழ்வோம். இதனால் உலகம் இன்புற்று வாழ வழி வகுப்போம்.
எறிபத்தர்:
சிவனடியார்கட்கு யார் இடையூறு செய்தாலும், அதனை எறிந்து பத்தி செய்த காரணத்தால், எறிபத்தர் எனும் பெயர், காரணப் பெயராயிற்று.
சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவர், கருவூர் ஆனிலையப்பருக்கு மலர்த்தொண்டு செய்தவர். அவர் தூய்மையாகத் கொய்து வந்த மலர்க் கூடையைப் புகழ்ச்சோழ நாயனார் என்னும் அரசரின் பட்டத்து யானை சிதைத்தது. அது கேட்ட எறிபத்தர், சிதைத்த யானையையும், பாகர்களையும் வெட்டி வீழ்த்தி அங்கேயே நின்றிருந்தார்.
எதிரிகள் யாரோ இச்செயல் புரிந்தனர் என்று, குதிரை மீது வந்து புகழ்ச்சோழர் பார்த்த போது, சிவ வேடத்துடன் எறிபத்தர் நிற்பதைக் கண்டு, குதிரையிலிருந்து புகழச்சோழர் கீழே இறங்கினார். "குழையணி காதி னானுக் கன்பராங் குணத்தின் மிக்கார், பிழைபடின் அன்றிக் கொல்லார்" (தி.12 பு.8 பா.37) என்று உணர்ந்து விவரத்தை எறிபத்தர் வாயிலாகவே கேட்டுணர்ந்தார்.
`பிழைசெய்த யானையைத் தடுக்காத பாகர்களைக் கொன்றது போதாது, பிழை செய்த பாகர்களையும், பாதுகாத்த எம்மையும் கொல் லவேண்டும். தேவரீரின் அரன் பணி புனிதமானது. எனவே என்னு டைய வாள் பாவம் செய்தது. பாவியாகிய என்னை என் வாளினாலே கொல்க' என்று கொடுத்தார். இவ்விருவரும் நண்பர்களாயினர்.
இதனால், நாம் கடைப்பிடிக்கவேண்டுவது, கோலத்திற்கு ஏற்ற சீலம் உடையவர்களாக வாழவேண்டும் என்பதாகும். சீலமும் கோலமும் ஒத்து வாழக் கற்றுக்கொள்வோம். கடைப்பிடிப்போம்.
ஏனாதிநாதர்:
ஈழம் = கள். கள் இறக்கும் தொழிலோரைச் சான்றார் என்று அழைத்தனர். இவர்களைச் சோழ நாட்டிலும், கொங்கு நாட்டிலும், சாணார் என்று வழங்குவர். இவர்களையே சான்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது. முற் காலத்தில் போதைப் பொருளாக இல்லாமல், நோய் தீர்க்கும் மருந்துப் பொருளாகவே கள் பயன் பட்டதால் இவர்களைச் சான்றார்கள் என்றிருக்கலாம்.
வேலூரைச் சார்ந்த இவர்கள் வாழும் ஒருபகுதி, சான்றோர் குப்பம் என இன்றும் வழங்கப்படுகிறது. இவரும் திருநீற்று அன்பைப் பாதுகாத்து வெற்றி கண்டவர். ஏனாதி என்பது அரச சேனைகளில் உத்யோகப் பட்டப் பெயராய் வழங்கியது. இக்குறிப்பு, சீவகசிந் தாமணி, புறநானூறு முதலிய நூல்களாலும் அறியப்படுகிறது. ஏனாதி, எட்டி, காவிதி என்பன அரசர்கள் சேனாதிபதிகட்கு வழங்கிய பட்டப் பெயர்கள் என்றும் தெரியவருகிறது. சோழநாட்டில் உள்ள எயினனூரில் வாழ்ந்த ஏனாதிநாதர், தன்னை எதிர்த்த அதிசூரன், அண்டர்பிரான் சீரடியார் ஆயினார் என்றறிந்து, அவர் வெற்றிபெற வேண்டும் என்ற குறிப்பால், தன் ஆயுதங்களைப் புறம்போக்கக் கருதாமலும், நிராயுதரைக் கொன்றார் என்னும் தீமை அவருக்கு எய்தாமைப் பொருட்டும் படைக்கலங்களுடன் நின்றார். இந்நிகழ்வு,
தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயனால் - மும்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன். (நாலடியார் - துறவு பா.8)
என்னும் கீழ்க்கணக்குப் பாடலுக்கு இலக்கியமாகிறது எனலாம்.
பெரியவர்கள், தம்மை யாரும் இகழ்ந்தால், அது பொறுப்பதே அன்றி, தம்மை இகழ்வதால் எதிரி நரகத்தில் வீழாமல் காக்கும் எண் ணம் உடையவர்களாகவும் வாழ்ந்தனர் என்று அறநூல்கள் பலவும் அறிவிக்கின்றன.
இதனைக் கடைப்பிடித்தே, அதிசூரன் நெற்றியில் திருநீறு கண்டபோது, அவனை எதிர்க்காவிடில் அவன் நரகம் புக நேரிடும் என்று எதிர்ப்பாரைப் போல வாளுடன் போரிட்டார்.
இது மிக மிக மேம்பட்ட பண்பாட்டைக் காட்டுகிறது. இதுவே மேன்மை கொள் சைவநீதி என்று உணர்வோமாக.
கண்ணப்பர்:
திருக்காளத்தி இப்போது ஆந்திர மாநிலத்தில் உள்ளது. கண் ணப்பர் வாழ்ந்த நாட்டை, பொத்தப்பி நாடு எனப் பேசுகிறது பெரியபுராணம்.
கண்ணப்பர் தமது கண்ணைப் பொத்து அப்பி இறைவன் கண்ணுக்கு வந்த இடையூற்றைப் போக்கியதால், இவர் வரலாற்றுக்குப் பின்பே இந்நாட்டிற்குப் பொத்தப்பி நாடு எனப் பெயர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்று மணிவாசகர் பாடியிருப்பதால், சேக்கிழாரும் கண்ணப்பரை அன்பின் பிழம்பாய்ப் போற்றியுள்ளார்.
அன்பு என்பது இரக்க உணர்வு. இரக்கம், அன்பு, பரிவு, தயை முதலியன எல்லாம் ஏறத்தாழ அன்பு என்ற பொருளில்தான் ஆளப் படுகின்றன. இதனை அப்பர் சுவாமிகள் திருநள்ளாற்றுத் தாண்டகத் தில் "குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான்" (தி.6 ப.20 பா.6), என்னும் பாடலில், "தயாமூல தன்மம்" (இரக்கமே அடிநிலை அறம்) என்று குறிப்பிட்டுள்ளதே அடிப்படையாகும். மூல தருமம் தயை என்பது அவர் குறிப்பிடும் உண்மை.
கடவுள், உயிர்களின் பொருட்டு உலகத்தையும், உயிர்கட்கு உடம்பையும் கரணங்களையும் படைத்து அவ்வுயிர்களை வழி நடத்துகின்றாரே. எதன்பொருட்டுச் செய்கின்றார் என்றால், தம் பொருட்டு அன்று, உயிர்களின் பொருட்டே செய்கின்றார்.
உயிர்களின் பொருட்டு ஏன் செய்கின்றார் எனின், உயிர்கள் மீது வைத்துள்ள கருணையினால், தயையினால், அன்பினால் ஆகும். உயிர்கள் மீது கடவுள் வைத்த அன்பினால், தனது புவன போகங் களைப் படைத்து, உயிர்களை ஈடேற்றம் செய்கிறார்.
கண்ணப்பரோ, தமது இரக்க உணர்வால், அன்பினால் கடவுளின் கண்ணுக்கு வந்த இடையூற்றைப் போக்கி அன்பினால் இன்பம் ஆர்ந்தார்.
குங்குலியக் கலயர்:
திருக்கடவூரில் அமிர்த கலயமே சிவலிங்க சொருபமாக இருப் பதால், அவ்வூரில் தோன்றிய இவருக்குக் கலயனார் எனப் பெயரா யது. பெருமானுக்குக் குங்குலியத் தூபம் இட்டதால் குங்குலியக் கலயர் எனப் பெயர் பெற்றார்.
தாலி என்றும், திருமாங்கல்யம் என்றும், மங்கலநாண் என்றும் குறிப்பிடும் இவ்வணியை, சங்க இலக்கியம் "ஈகை அரிய இழை யணி" (புறநானூறு, 127) என்று குறிப்பிடுகிறது. அருமை - இன்மை குறித்தது. இவ்வணியைத் தமிழக மகளிர் உயிரினும் சிறந்த ஒண்பொருளாகப் போற்றி வாழ்ந்தனர்.
குழந்தைகள் பலநாள் பட்டினியாக வாடுவதால், இரக்க உணர்வால் தாலியைக் கொடுத்து உணவுப்பொருள் வாங்கக் கொடுத்தார் மனைவி. மாங்கல்யத்தை விற்றுக் குங்குலியம் வாங்கிப் பெருமானுக்குத் தூபம் இட்டார் கலயர்.
எல்லாம் இறை காக்கும் என்ற நாயனார் கருத்து வீண்போக வில்லை. `அன்பர், கோயிலில் தூபம் இடுகிறார், அவர் மனையில் அளக வேந்தனைக் கொண்டு பொற்குவை, நெல், பல்வளமும் படைத்து உணவருந்தி வா' என்று ஆணையிட்டார் என்றால், இவர் தம் அன்புதான் என்னே!
இவர்தம் அன்பிற்கு எடுத்துக்காட்டு: திருப்பனந்தாளில், தாடகை என்னும் பெண்ணின் அன்பிற்குத் தலை குனிந்த சடையப்பர்; சோழமன்னர்களின் சேனைகட்கெல்லாம் நிமிராமல் நின்ற பெருமான்; ஊனிற்கு ஊன் இடல் வேண்டும் என்று கண்ட கண்ணப்பர்; அவை போல அன்பிற்கு அன்பிடல் வேண்டும் என்னும் உண்மையை உணர்ந்த இந்நாயனாரை, நாருறு பாசத்தாலே ஈர்க்க நேர் நின்றார் அருணசடேசர்.
இவர் வரலாற்றால் நற்பணி செய்வதில் இளைப்புற்றவர்கட்குத் தாமும் முன் சென்று இளைப்புற வேண்டும் என்ற இரக்க உணர்வை எடுத்துக்காட்டுவதாய் உள்ளதல்லவா? இந்நிலைமையை நாமும் மேற்கொண்டு உயர்வோம்.
மானக்கஞ்சாறர்:
கஞ்சாறூர் என்பது மயிலாடுதுறை வட்டத்தில் ஆனந்தத் தாண்டவபுரம் என்னும் ஊரின் அருகில் உள்ளது. அதுதான் கஞ்சாறூர் எனப்போற்றப்படுகிறது.
அவ்வூரில் பஞ்சவடீசுவரர் திருக்கோயிலும் உள்ளது. இவர் வேளாளர் குலத்தில் அரசர் சேனாதிபதியாய் பணியாற்றிய பெருமையரே மானக்கஞ்சாற நாயனார். அவர் பெயரே மானம் மிக்கவர் என்பதைக் காட்டுகிறது.
இவர்தம் மனைவியர் கற்பில் சிறந்த காரிகையாவார். இதனைச் சேக்கிழார், "மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார்தம்பால்......, இப்பிறவிக் கொடுஞ்சூழல் பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார்" (தி.12 பு.12 பா.11) என்று பெருமையுடன் பேசுகிறார்.
"வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை, நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை, மாதர் கற்பின் மங்கையர்க்கோர் மழை" என்பது விவேக சூடாமணிப் பாடல். எனவே கற்பின் கனலுக்கு ஓர் மழை என்பது நீதி நூல்களின் துணிந்த முடிவு.
இத்தம்பதியர்க்கு ஓர் அரிய பெண் மகவு பிறந்தது. அது பிறவிக் கொடுஞ் சூழலினின்றும் பிழைக்குமாறு உதவி செய்யவே பிறந்தது என்கிறார் சேக்கிழார். இல்லற நெறி நிற்போர்க்குப் புத்திரர் இல்லை என்றால், புத்தேள் நரகம் பெற்றோருக்கு உண்டென்பது சுமிருதி நூல்.
ஆனால் பிறவிக் கொடுஞ் சூழலினின்றும் விடுவிக்கும் பெண் மகளைப் பெற்றெடுத்தார் என்கிறார் சேக்கிழார். முரண்போலத் தோன்றுகிறதே? என்றால் இல்லை. ஆணாயிருந்தாலும், பெண்ணாய்ப் பிறந்தாலும் அவரவர் பெற்றோர்க்குச் செய்யும் புனிதப் பணியினாலேயே பெற்றோர்கட்குப் பெருமையும் வீடுபேறும் கிடைக்கிறது.
இங்கே, இந்நாயனார் திருமகளாரின் திருமணத்தன்று அவர்தம் கூந்தலைப் பெருமான் தமது பஞ்சவடி என்னும் மயிர்ப் பூணூலிற்குப் பயன்படுமாறு வழங்கியதால் பெற்றோர் விடுதலை பெற்றனர். இதனால்தான், பிழைக்கும் நெறி தமக்குதவப் பெண் கொடியைப் பெற்றெடுத்தார் என்றார் சேக்கிழார்.
பஞ்சவடிக்கு உதவும் சடைக்கற்றையைப் பெருமான் பெற வில்லை. பெறுவார்போல் கோலம் காட்டி வானவீதியில் பெருமாட்டி யுடன் விடை மீது காட்சி கொடுத்து நாயனாருக்குச் சிவலோக வாழ்வு அருளினார் பஞ்சவடீசுவரர்.
இப்பெண்கொடியை மணம் கொள்ள வந்தவரும் அரசரின் சேனாதிபதியாகப் பணிசெய்பவர். திருப்புன்கூர் அருகில் பெருமங் கலத்தைச் சேர்ந்தவர். ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்னும் பெய ரினர். சுந்தரர், தியாகேசப் பெருமானைத் தூது விட்டது தவறு என்று, சுந்தரருடன் முரண்பட்டு, நிறைவில் பெருமானால் சுந்தரர் நட்பைப் பெற்றவர்.
அரிவாட்டாய நாயனார்:
இவர் திருத்துறைப்பூண்டி வட்டம் கணமங்கலம் ஊரினர். தண்டலை நீள்நெறிப் பெருமானுக்கு வழிபாடு செய்து பேறு பெற்றார். நாயனார் என்னும் பெயரினர். வேளாண் குலத் தலைமையர். செந்நெல்லும், செங்கீரையும், மாவடுவும் மிகச் சிறந்த உரமுள்ள உணவு. சிறந்த பொருளைச் சிவபெருமானுக்கே நிவேதனம் செய்யவேண்டும் என்ற உயர்ந்த கொள்கை உடையவர். மிக உயர்ந்த செல்வந்தர்.
களிறுண்ட விளாங்கனிபோல செல்வம் இழந்த காலத்தும் குறிக்கோளை விடாது செய்து வந்தவர். கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் செந்நெல் அரிசி முதலியவற்றை இறைவனுக்கு அமுதாக் கினார். பெருமான் அருளால் எல்லாம் செந்நெல்லாகவே விளையவே மகிழ்ச்சி கொண்டார்.
இலை உணவு மேற்கொண்டார். சில நாளில் அதுவும் முட்டுப்படவே நீரருந்தியே வாழ்ந்தவர். அதனால், செந்நெல் முதலிய உணவுப்பொருளை, மனைவியும் தாமும் வயல்வழியே தண்டலை நீள்நெறி என்னும் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லும்போது, கால் இடறி வீழ்ந்தார். உணவுப் பொருள்கள் எல்லாம் வயல் வெடிப்புகளில் சிதறிப் போயின. பெருமான் அமுது செய்யப் பெறவில்லையே என்ற பெருங்கவலையுடன் இனி வாழ்வு வேண்டாம் என்று அரிவாளால் ஊட்டியை அரிந்தார்.
பெருமான் இவர் பக்திப் பண்பை உலகினுக்குக் காட்ட மாவடுவைக் கடிக்கும் விடேல் விடேல் என்னும் ஒலியை எழுப்பி உணவை மேற்கொண்டதாக உணர்த்தினார். என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அறவிடைக்காட்சி தந்தார். சிவலோக வாழ்வு பெற்றனர் நாயனாரும் மனைவியாரும். இவர் வாழ்வு நமக்கு அறிவிக்கும் பண்பு, உயர்ந்த பொருளை இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்பதே. நாமும் கடைப்பிடிப்போம். நலமுடன் வாழ்வோம்.
ஆனாயர்:
மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியைச் சேர்ந்தது கொல்லி மலை. கொல்லி மலையிலிருந்து அரியலூர் வரை உள்ள பகுதிகளை மழநாடு என ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு வழங்கினர். அப்போது மழவர்கள் என்று வகுப்பினர் சிற்றரசர்களாக இப்பகுதியில் ஆண்டு வந்தனர்.
திருஞானசம்பந்தர் காலத்தில் கொல்லிமழவன் ஆட்சி புரிந்தான். அவன் பெண்ணிற்கு முயலகன்நோய் வந்தது. திருப் பாச்சிலாச்சிராமத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளியபோது, "துணி வளர் திங்கள்" (தி.1 ப.44 பா.1) என்னும் பதிகம் பாடி இறையருளால் முயலகன் நோய் தீர்த்த வரலாறு அறிகிறோம்.
அம் மழ நாட்டைச் சேர்ந்ததே திருமழபாடி என்னும் தலம். அதற்கு மேற்கே, மேல்மழநாட்டில் விளங்குவது திருமங்கலம் என்னும் ஊர். இத்தலத்தில் தோன்றியவரே ஆயர்குலத் தோன்றலாகிய ஆனாயர்.
அறவுணர்வுடன் பசுக்களை மேய்த்துப் பாதுகாத்த குடியினர்; நல்லிசையாளர். வேய்ங்குழலில் இசையமைத்து, பஞ்சாட்சரத்தை, அஞ்செழுத்தை வைத்தே அரன் புகழை மொழியில்லா இசையினால் எவ்வுயிரையும் பகை நீக்கி நட்புக்கொள இசைவித்தார். இவ்விசையில் இறைவனும் உமையுடனே கேட்டருள்புரிய வந்தார். இதனைச் சேக்கிழார் காட்டும் திருப்பாட்டால் தெளிவோம்.
ஆனாயர் குழலோசை கேட்டருளி அருட்கருணை
தானாய திருவுள்ளம் உடையதவ வல்லியுடன்
கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார் மதிநாறுஞ் சடைதாழ. (தி.12 பு.14 பா.38)
மும்மையால் உலகாண்ட மூர்த்தியார்:
விந்திய மலைக்குத் தென்பகுதி தென்னிந்தியா எனப் போற்றப் பெறுகிறது. இத்தேசம் கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் என்ற நான்கு பகுதிகளும் அடங்கியதாம். முற்காலத்தில் இதன் தலைநகர் பெங்களூர், மைசூர் என்று இருந்தது. காலாந்தரத்தில் நான்கு மாநிலங்களாகப் பிரிந்தது. ஒன்றாக இருந்த காலத்தில் கர்நாடக மாநிலமாக வழங்கியதால் அதன் தாக்கம் இன்றும் தமிழகத்தில் இருந்து வருகிறது.
பழமையை மேற்கொள்வோரையும் கர்நாடகம் என்று பேசு வதை இன்றும் கேட்கலாம். மேலும் தமிழிசையைக் கர்நாடக சங்கீதம் என்று வழங்குவதாலும் இதனை நன்கு தெளியலாம்.
கி. பி. 1956இல் ஆந்திரம் தமிழ்நாட்டினின்றும் பிரிந்தது, இராஜாஜி முதல்வராக இருந்தபோதாம்.
மதுரையில் அருள்மிகு சொக்கநாதப் பெருமானுக்குச் சந்தன மெய்ப்பூசும் பணி பெரும் புண்ணியப்பணி என்று செய்து வந்தவர். மூர்த்தியார் என்னும் பெயருடைய வணிகர் குலத்தினார்.
இவர் பணி செய்யும் நாளில் வடுக கருநாடர் என்பார் மதுரை மீது படையெடுத்து மதுரைப் பகுதியையும் ஆட்சி செய்து வந்தார். அவர் சமணச் சார்புடையவர். இச் சிவப்பணிக்கு முட்டுப்பாடு செய்தார்.
இந்நாயனார் தாம் மேற்கொண்ட பணியை விடாது செய்யத் தமது செழு முழங்கையையே சந்தனக் கட்டையாகக் கொண்டு வட்டமாகிய சந்தனக் கல்லில், நரம்பு எலும்பு தேயும்படியாகத் தேய்த்தவர். குருதி பெருகிற்று; பொறுப்பரோ சிவபெருமான். அசரீரியாக, `இன்று கர்நாடக மன்னன் ஆட்சி அகன்று உனக்கே ஆட்சிப்பொறுப்பு வரும். நாளை முதல் உன் பணி தொடர்க' என்பதைக் கேட்ட மூர்த்தியார், ஊறு நீங்கிய திருமேனியுடன் திருக் கோயிலில் புறத்திருந்தார். அன்றிரவே விதி வசத்தால் கர்நாடக வேந்தன் இறக்க, அமைச்சர்கள் ஆலோசனைப்படி பட்டத்து யானையின் கண்ணை வெண்துகிலால் கட்டி, இந்த யானை யாரை எடுத்து வருகிறதோ, அவரே இந்நாட்டின் மன்னர், என விட்டனர்.
அந்த யானை திருக்கோயில் புறம்நின்ற இவரைத் தன் பிடரியில் ஏற்றி வந்தது. அமைச்சர்கள் அரச பாரத்தை ஏற்க வேண்டினர். இவரோ, `நான் அரச பாரம் ஏற்க வேண்டுமானால் திருநீறே எனக்கு அபிஷேகப் பொருளாம். உருத்திராக்கமே அணிகலன்களாம், சடா முடியே மகுடமாம். இப்முப்பொருள்கொண்டே ஆட்சி செய்வேன்' என்றார். அமைச்சர்கள் இசைந்து முடிசூட்டினர்.
திருநீறு, உருத்திராக்கம், சடாமுடி என்ற இம்முப்பொருள் களையே அரச கோலமாகக்கொண்டு உலகாண்ட காரணத்தால் மும்மையால் உலகாண்ட மூர்த்தியார் என்னும் புனிதப் பெயர் பெற்றார். இவர்தம் புனிதப்பணிப் பண்பை நாமும் மேற்கொண்டு மேன்மையுறுவோமாக.
முருக நாயனார்:
இவர் அந்தணர். திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயத்தில் சந்நிதிக் குத் தென்பால் உள்ள வர்த்தமானீச்சரம் ஆலயப்பெருமானுக்கு நாள்தோறும் தூய்மையாக முறையாக மலர்கொய்து கொன்றை மலரில் இண்டை, மாலை, கண்ணி, முதலியன தொடுத்து, காலை, மதியம், மாலை என முப்போதும் சூட்டி வழிபடும் நியமம் தவறாது செய்து பெருமானின் பேரருள் பெற்றார். இதனால் திருஞானசம்பந் தரின் நண்பரானார். ஞானசம்பந்தரின் வர்த்தமானீச்சரப் பதிகத்தில்,
ஈச னேறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
பூசு மாசில் வெண்ணீற்றர் பொலிஉடைப் பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதும்செய் முடிமேல்
வாச மாமலர் உடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. (தி.2 ப.92 பா.5)
எனப் பாடியுள்ளமையைக் காண்க.
உருத்திரபசுபதியார்:
இந்நாயனார், அந்தணர், அருமறைப் பயனாக உள்ள ஷ்ரீ உருத் திர மந்திரத்தைப் பகலும், இரவும் அந்தணர்கள் வாழும் திருத்தலை யூரில் கோயில் அருகேயுள்ள தாமரைக் குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று ஷ்ரீ உருத்திரத்தைச் செபித்த காரணத்தால், பசுபதியார் என்ற இயற்பெயருடைய இவர், உருத்திர பசுபதியார் எனும் பெயர் பெற்றார்.
உருத்திரத்திற்குப் பெருமை என்னவென்றால், "வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே" (தி.3 ப.49 பா.1) என்ற ஞானசம்பந்தர் வாக்குப்படி வேதத்தில் நடுவதாக உள்ள யசுர் வேதத்தில் நடுவில் உள்ளது ஷ்ரீ உருத்திரம். அதிலும் நடுவில் தான் பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து உள்ளது. அதுதான் நமசிவாயச சிவதராயச என்பது. எனவே இந்த ஷ்ரீ உருத்திரத்தைக் கழுத்தளவு நீரில் நின்று ஓதியே இறைவனுக்கு அண்மையில் சாமீபப் பேறு பெற்றார்.
கழுத்தளவு தண்ணீரில் எவரும் நிலையாக நிற்க இயலாது. எவருக்கும் இயலா நிலை இந்நாயனாருக்குக் கிட்டியது என்றால் அது இவர் பெற்ற பெரும்பேறு. இவர் திருத்தலையூரில் தோன்றியவர். பேறு பெற்றதும் தலையூரே. இத்தலம் நாகை மாவட்டம் பேரளம் அருகில் உள்ள கொல்லுமாங்குடியின் மேல்பால் உள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி என்னும் ஊரின் பக்கல் உள்ள தலையூர் என்பாரும் உண்டு. அதில் அந்தணர் வாழ்ந்ததாகவும் செய்தி இல்லை. வாழ்வதாகவும் தெரியவில்லை.
திருநாளைப்போவார்:
இந்நாயனாரின் இயற்பெயர் நந்தனார் என்பது. இவர் முன் செய் தவத்தால் ஆதித் திராவிட மரபில் தோன்றியவர். ஊர் ஆதனூர். இது கொள்ளிடம் நதியின் வடகரையில் ஓமாம்புலியூர் என்னும் பாடல் பெற்ற தலத்தின் மேல்பால் இரண்டு கிமீ. தொலைவில் உள்ளது.
ஆதித் திராவிடர் என்ற பெயராலும், பரிதிமாற்கலைஞர் என் னும் புனை பெயருடைய சூரியநாராயண சாஸ்திரிகள் எழுதியுள்ள வரலாற்றாலும், இவர்களே ஆதித்தமிழர்கள் ஆவரெனத் தெரிய வருகிறது. ஆனால் அன்று முதல் இன்று வரை வளர்ச்சி சிறிதளவே அடைந்து வருகின்றனர். சுதந்திரம் பெற்ற காலம் வரை மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். நல்ல உழைப்பாளிகள். சேக்கிழார் குறிப்பிட்டுள்ளதுபோல் சாதி நெறியில் தப்பாதவர்கள்.
ஆதன் என்றால் அறிவில் குறையுடையவர் என்றும், குருடர் என்றும் இலக்கியங்கள் பேசுகின்றன. "ஆதன் எழினி" (புறநானூறு) சங்க இலக்கியம். "ஆதன் பொருளானேன்" (தி.7 ப.1 பா.5) என்பது சுந்தரர் வாக்கு.
தமிழ்நாட்டில் ஆதனூர் பல இடங்களில் உள்ளன. இருப்பினும் இரு ஊர்களைத்தான் இந்நாயனார் தொடர்பாக ஊகிக்கின்றனர்.
ஒன்று வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மேற்கே ஐந்து கிமீ. உள்ளது. திருப்புன்கூருக்கு அண்மையில் உள்ளது.
மற்றொன்றுதான் முதலில் குறிப்பிட்ட ஓமாம்புலியூர் அருகில் உள்ளது. கொள்ளிடக்கரையில் இருந்து வடக்கே பெண்ணையாறு வரை மேற்கா நாடு, கீழ்க்கா நாடு என வழங்கியது என வரலாற்றால் தெரிய வருகிறது. கீழ்க்கா நாடு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. கா- சோலை. காடு திருத்தியே நாடு புகுத்தினர் என்பது வரலாறு.
காடு வெட்டிய சோழன் என்பதாலும் தென்னார்க்காடு, வடார்க் காடு மாவட்டம் என்பதாலும் தெளியலாம். மேலும், ஆல்காடா? ஆர்க்காடா? என்பதும் ஆய்விற்குரியது. ஆல், ஆலமரங்கள் நிறைந்த காடு. ஆர், ஆத்தி மரங்கள் நிறைந்த காடு. இரண்டிற்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. எப்படியும் காடுகள் நிறைந்த பகுதி என்பது உறுதியாகின்றது.
சேக்கிழார் அருளிய நந்தனார் வரலாற்றில் முதல் பாடலில் கொள்ளிடக் கரையில் உள்ளது என்பது மேற்கா நாடு என்பது தெளிவாகிறது. எனவே, ஓமாம்புலியூருக்கு மேற்கே உள்ள ஆதனூர் என்பதே சரி எனத் தோன்றுகிறது. அப்பாடல் காண்க.
பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகும்
திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிகள் திரைக்கரத்தால்
முகந்துதர இருமருங்கும் முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு மேற்கானாட்டு ஆதனூர். (தி.12 பு.16 பா.1)
இவர் தவம்செய் சாதியினில் பிறந்தவர். என்னெனில் தவம் செய்யாவிடில் இவருக்குப் பிறந்து மொழி பயின்ற மாத்திரத்தே சிவ உணர்வு தலைப்பட்டிராது. உலகியல் சாதி ஆதித் திராவிடராயினும் இவர் பிறந்த குடி தவம் செய்தது என்பதே உறுதியானது.
உலகியல் சாதி பற்றிய எண்ணம் இவரின் உள்ளத்தே நெருடியதால், தில்லை நடராசப் பெருமானைத் தரிசிக்க வேண்டிய எண்ணம் நாளுக்கு நாள் மிக்கிருந்தும் தானே தடைப்பட்டு நாளைப் போவேன் என்றமையால், திருநாளைப்போவார் எனக் காரணப் பெயர் பெற்றார்.
கூத்தப் பெருமான் இவர்தம் குறிப்புணர்ந்தமையால் தில்லை வாழ் அந்தணர்கட்கு உணர்த்தி, தீவேட்டு அதில் முழுகச் செய்து நடராசப் பெருமானைத் தரிசிக்கச் செய்தனர். கூத்தப் பெருமானைத் தரிசித்தவர் அவர் தம் திருவடியில். இரண்டறக் கலந்து பேரா இன்பப் பெருவாழ்வுற்றார்.
சைவ வரலாற்றில் இவ்வாழ்வு இருவர்தான் பெற்றனர். ஒருவர் நந்தனார் என்னும், திருநாளைப்போவார், மற்றவர் மாணிக்கவாசகர். திருவாசகத்திற்கு எல்லோரும் பொருள் கேட்டனர். மணிவாசகரோ வாசகத்திற்குப் பொருள் - வாச்சியம் நடராசப்பெருமானே என்று அப்போது தோன்றிய சோதியுள் புகுந்தார். பெருமானுடன் இரண்டறக் கலந்தார். இவ்விருவரே அந்தணராம் பேறு பெற்றனர்.
திருக்குறிப்புத் தொண்டர்:
செய்யும் தொழிலே தெய்வம், திறமை அதுவே செல்வம் என்று பாரதியார் சொன்னதுபோல எத்தொழிலைச் செய்தாலும் அத்தொ ழிலே தெய்வம் என்று கருதிச் செய்தனர். அக்காலம் நாயன்மார்கள் வாழ்ந்த காலம். அதனைத் தான் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி யாரும் குறிப்பிட்டுள்ளார்.
அடியவர்களின் குறிப்பறிந்து தொண்டு செய்தமையால் திருக்குறிப்புத் தொண்டர் எனக் காரணப்பெயர் பெற்றார். சேக்கிழார் தாம் பிறந்த பொன்னாட்டைப் பெருமைபெறப் போற்றுகிறார். "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்பது பாரதியார் வாக்கு.
"தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தை
தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்புசொல் வரைத்தோ?" (தி.12 பு.19 பா.47)
இவர் பிறந்த நாட்டை அபிமானம் பற்றிச் சொல்லவில்லை. உண்மை பற்றியே ஓதினார். என்னை? "தொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து" (தனிப்பாடல் திரட்டு) என்பது ஔவையாரின் அமுதவாக்கன்றோ. பாலாற்றின் பெருமையையும், பண்புடனே போற்றுகின்றார்.
பாலாறு என்பதற்கு ஏற்பவே, குழந்தைகள் தாயின் மார்பகத் தைத் தமது பிஞ்சுக் கைகளால் வருட, தாய் முலை சுரந்து அக்குழந்தை களுக்கு அமுது ஊட்டுவாளன்றோ?
அதைப்போலவே பாலாற்றுத் தண்ணீர், மற்ற ஆறுகளைப் போல் அன்றி, மள்ளர்களாகிய உழவர்கள் தங்கள் கைகளினால் கருவி கொண்டு பாலாற்றை வருட, நீர் ஊற்றுப் பெருகி நூற்றக்கணக்கான ஏக்கர்களைச் செவிலிபோல் வளர்த்து, உழவர்களையும் வளர்த்து வரும் சிறப்பினது என்று கூறும் சேக்கிழாரின் பண்புமிக்க பாராட்டு நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. அப்பாடல் காண்க.
பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட
வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப்
பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி. (தி.12 பு.19 பா.22)
உடல் வளர்த்து அதன் வாயிலாக உயிரை வளர்க்கும் பாலா றாக, தாயைப்போற்றிய சேக்கிழார், "ஈ அறியாப் பசுந்தேனாய், எழுத்தறியா, மறைப்பொருளாய், தாய் அறியாக் கருவில் இருந்து உயிர் வளர்க்கும் தனித்துணையாய்" (திருக்குற்றாலத் தல புராணம்) திரோதான சக்தியாய் உள்ள காமாட்சியைப் போற்றுகின்றார்.
"வேணியார் அருள்செயத் தொழுது தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாந்" (தி.12 பு.19 பா.50) கேட்டருளிய காமாட்சி அம்மை "எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் விரும்புவது பூசனை ஒன்றே" (தி.12 பு.19 பா.51) எனத் தெளிந்தார்.
கம்பை ஆற்றில் ஏகாம்பரரை மணல் இலிங்கத்தைத் தாபித்தார். ஒன்றி இருந்து வழிபட்டார். வழிபாட்டின் ஒருமைப்பாட்டை அம்மை வாயிலாக உணர்த்தத் திருவுளம் பற்றிய ஏகம்பரநாதர், வெள்ளம் காட்டி வெருட்டினார். அம்மையோ முலைத்தழும்பும் வளைத் தழும்பும் என்றும் இறைவன் திருமேனியில் பதித்து, பூசனை புரிவது எப்படி என்பதை நம்போன்றோருக்கும் காட்டி நெறிப்படுத்தினார்.
வெள்ளத்தால் பூசனை சிறிது தடைப்பட்டதால், `பெருமானே இன்றைய பூசனை இன்னும் நிறைவாகவில்லை, எனவே குறை நிரம்பிக் கொள்க' என வேண்டினார். அதற்கு ஏகாம்பரர், `நின் பூசனை நம்பால் என்றும் முடிவதில்லை' என மொழிந்தார்.
பூசனை என்பது நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும், நடந் தாலும், நின்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் குன் றாமல் புரிவதுவே என்றருளினார். எனவே நீள நினைந்து ஒன்றி யிருந்து நினைவதுவே வழிபாடு என்று அம்மைக்கு அருள்வது போல் நமக்கு உணர்த்தியருளினார். இவ்வுண்மை தலைப்பட்டு உய்தி பெறுவோமாக.
இத்தகைய இறையருள் நிரம்பப்பெற்ற தொண்டை நாட்டின் தலைநகரம் காஞ்சியம்பதியில் துணி வெளுக்கும் ஏகாலியர் குலத்தில் தோன்றிய ஏந்தலார்தான் திருக்குறிப்புத்தொண்டர். இவரின் இயற்பெயர் தெரியவில்லை. இது காரணப்பெயரே.
இவரும் தொழிலிலேயே தொண்டு செய்து பெறுதற்குரிய பேறு பெற்றவர். இறைவனே தமது மலர்க் கரத்தால் இவர் தலையைப் பிடித்துத் தாங்கினார் என்றால், இதனினும் பேறு என்ன வேண்டும். நினைவு அகலாது இறைத் தொண்டு செய்து வாழ்வோம்.
சண்டேசர்:
சோழர்கள் முடிசூடும் தலைநகரங்கள் ஐந்து. அவை, சிதம்பரம், திருவாரூர், உறையூர், பழையாறை, திருச்சேய்ஞலூர் என்பனவாம். அவற்றுள் மண்ணின் பயனாக உள்ளது திருச்சேய்ஞலூர்.
அது எதுபோல் எனின், பண்ணின் பயன் நல்லிசை போலவும், பாலின் பயன் இனிய சுவை போலவும், கண்ணின் பயன் பெருகிய ஒளியுடன் திகழ்வது போலவும், கருத்தின் பயன் சிவபெருமானின் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைச் சதாகாலமும் சிந்தித்தல் போலவும், விண்ணின் பயன் மழை பொழிவது போலவும், வேதத்தின் பயன் சைவ மெய்ந்நெறியைப் போலவும், மண்ணின் பயனாகத் திகழ்வது இத்திருச்சேய்ஞலூர்.
இத்தலத்தில், எச்ச தத்தன் பவித்திரை என்பார்க்கு அருந்தவ மகவாய் அவதரித்தவரே விசார சருமர். இவர்தாம் சண்டீசர். பதவி பெற்றுச் சண்டீசராக, இறைவனின் குமாரராக விளங்குகிறார்.
பசுவின் பெருமை உணர்ந்தவர் ஆதலால் பசுக்களை மேய்ப்பவன், அதனை அடித்தல் கண்டு, அவனை அகற்றித் தாமே மேய்ப்பார் ஆயினர். நல்ல முறையில் மேய்த்தமையால் அப்பசுக்கள் அவற்றை உடையவர்கட்குப் பால் குறைவின்றிக் கொடுப்பதுடன் விசார சருமரைக் கண்டால் அவர் பக்கம் சென்று தாமே பாலைப் பொழிந்தன.
இதனைக்கண்ட விசார சருமர், இப்பால் பரமேசுவரருக்கே ஆக வேண்டும் என்று, மண்ணியாற்றங்கரையில் திருஆத்தி மரத்தின் கீழ் மணலால் சிவலிங்கம் அமைத்து பசுக்கள் தாமே தரும் பாலைப் பெருமானுக்கு அபிடேகம் செய்து முறையாகப் பூசனை புரிந்தார்.
பசுக்களின் பாலை, பாலனாகிய விசார சருமர், மணலில் ஊற்றி விளையாடுகின்றார் எனப் பசுக்களின் உரிமையாளர்களிடம் இவ்வுண்மையைச் சொல்ல, அவர்கள் எச்சதத்தனிடம் சொல்ல எச்ச தத்தன் மறுநாள் விசார சருமர் அறியாதே பின் சென்று தூரத்தில் உள்ள குரா மரத்தின்மீதேறி ஒளிந்து பார்த்து வந்தார்.
விசார சருமர் ஒன்றி இருந்து சிவபூசையில் ஈடுபட்டு பாலாபிடேகம் இறைவருக்குச் செய்யும்போது வாக்கினால் ஏசியும், கையிலுள்ள கோலால் அடித்தும் அவர் ஒன்றி வழிபட்டமையால் பூசையிலேயே ஈடுபட்டிருந்தார்.
எச்ச தத்தரோ சினம் மிக்கவராய் சிவலிங்கத்தையே காலால் இடறினார். உடனே சிவஅபராதம் செய்தவர் தன் தந்தை என்றும் பாராமல், பக்கத்தில் கிடந்த பசு மேய்க்கும் கோலை எடுக்க, அது மழுவாயிற்று. அம்மழுவால் எச்ச தத்தன் கால்களை வெட்டினார். அவரும் உடனே இறந்தார்.
சிவபெருமான் உன் தந்தையை வெட்டி இறக்கச் செய்ததால் நாமே உனக்குத் தந்தையானோம் என்று தமக்குரிய அடையாள மாலையாம் கொன்றை மாலையைச் சூட்டி உண்பனவும் உடுப்பன வும் உமக்காகட்டும் என்று அருள்பாலித்தார்.
இவர் பெருமானுக்கு மகனாம் முறைமை தந்தமையால் இவரை யும் திருஞானசம்பந்தர் திருமாமகனார் முறையிலும் இருவரையும் சிறிய பெருந்தகையார் எனக்குறிப்பிட்டுப் பாராட்டி உள்ளார்.
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங்கு காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டுமன்றே. தி.3 ப.54 பா.7)
என்று அறிவார் சொலக் கேட்டும் மன்னே என்று சொல்வதற்கு அஞ்சி பிறர் கூற்றாகச் சொல்லியுள்ளார்.
சேக்கிழார் மரபு காப்பவர் ஆதலினால், எச்ச தத்தன் பாற் குடத்தை இடறியதாகக் குறிப்பிட்டார். சுந்தரர், "கோத னங்களின் பால்கறந் தாட்டக் கோல வெண்மணற் சிவன்தன்மேல் சென்ற தாதைதாள்" (தி.7 ப.55 பா.3) என்றே உண்மையைச் சொன்னார்.
திருநாவுக்கரசர்:
இவர் அவதாரத் தலமே சிவம் பெருக்கும் திருவாமூர். நாவுக்கரசரே முதல் முதலில் தேவாரம் அருளிச்செய்தவர். இவர் பதிகமே தேவாரம் எனப் போற்றப்பெறுவது.
இவர் காலம் கி. பி. 580 - 660. மகேந்திரவர்ம பல்லவன் காலம் கி. பி. 600 - 630. ஞானசம்பந்தர் காலமோ கி. பி. 640 - 656. மகேந்திரன் மகன் நரசிம்மவர்ம பல்லவன் காலம் கி. பி. 630 - 668. ஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடிக்கு வந்தது கி. பி. 650 இக்கல்வெட்டுக் குறிப்பெல்லாம் குடந்தை சேதுராமன் குறிப்பு.
ஏறத்தாழ இக்கால ஆய்வு பலருடைய ஆய்விற்கும் ஒத்து வருகிறது. எனவே ஞானசம்பந்தர், நரசிம்மவர்ம பல்லவன் காலத் தில்தான் அவதாரமே செய்துள்ளார். ஆகவே மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் அவனால் துன்புறத்தப்பட்ட நாவுக்கரசர் தான் முதன்முத லில் தேவாரம் பாடியவர் என்பது உறுதியாகிறது.
அறுபத்து மூவர் வரலாற்றினை, எடுத்த எடுப்பிலேயே நாயனார் பெயரை வைத்தே தொடங்கிய வரலாறு இரண்டு. அதிலும் நாவுக்கரசர் வரலாறே முதலில் இடம்பெற்றுள்ளது. இரண்டாவதாக மங்கையர்க்கரசியார் வரலாறு இடம்பெற்றுள்ளது.
திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன். தி.12 ப.21 பா.1)
நான்கு வகையாக விளித்து அழைக்கிறார். ஒரு நாவால் உரை செய்ய ஒண்ணாமை உணராததேன், பெருநாமச்சீர் பரவல் உறுகின் றேன் என்கிறார்.
அப்பர் - சம்பந்தர் சந்திப்பு:
நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் முதலில் சீகாழியில் சந்திக் கிறார்கள். ஞானசம்பந்தர் திருமுலைப்பால் உண்டு சிவஞானியாய்த் திகழ்வதைக் கேள்விப்பட்டு, ஞானக் குழந்தையைப் பார்க்கத் திருநாவுக்கரசரே வருகிறார்.
அப்பர் அன்புக் கடலாக, ஞானசம்பந்தர் அருட் கடலாகச் சந்தித்து, சீகாழி செஞ்சடை வானவர் கோயில் சேர்ந்தனர்.
இரண்டாவது சந்திப்புத் திருப்புகலூரில். இங்கு அப்பர் ஆரூர்ப் பெருமானை ஆதிரை விழாவில் தரிசித்த பாங்கை ஞானசம்பந்தர் கேட்க, செப்பி உரைக்கிறார். முத்து விதானப் பதிகத்தால் இருவரும் திருமறைக்காடு வரை பல தலங்களையும் இருவரும் சேர்ந்தே வழிபட்டனர்.
அப்பர் மூன்றாவதாகத் திருப்பூந்துருத்தியில் சம்பந்தர் எழுந்தருளிய சிவிகையைத் தாங்கி வரும் பேறு பெற்றதுடன் சந்தித் தனர். இம்மூன்று சந்திப்புக்களிலும் இரு ஆச்சாரியப் பெருமக்களும் சைவ சமயப் பண்பு மிளிர நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சைவத்தின் பண்பாட்டை விளக்குவதாக அமைந்துள்ளது போற்றத் தக்க புனிதச் செயல்களாகும்.
திருவையாற்றில் கயிலைக் காட்சி:
அப்பர் சுவாமிகள் சோழநாட்டு யாத்திரையில், திருப்பழனம் திங்களூர் வரை வந்து, அப்பூதியடிகள் மூத்த திருநாவுக்கரசை விடம் நீக்கிப் பதிகம் பாடிய சிறப்பெல்லாம் நிகழ்ந்த பிறகு, அப்படியே 3 கிமீ. தூரத்தில் உள்ள திருவையாற்றைத் தரிசிக்காமல் சென்று உள்ளார். காரணமும் தெரிந்திலது.
அப்பர், கயிலை யாத்திரை சென்ற வழியில், இறைவன் முதிய முனிவராய் வந்தார். அங்குள்ள ஒரு தடாகத்தில் மூழ்கச் செய்தார். திருவையாற்றுத் திருக்குளத்திலே எழச் செய்தார். திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் காட்டியருளினார். "யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது" (தி.4 ப.3 பா.1) என்பது அகச் சான்று. முன்பே திருவையாற்றைத் தரிசிக்காது வந்தருளிய குறையை நிறைவு செய்வதற்காகவே பெருமான் ஐயாற்றில் கயிலைக்காட்சி காட்டி யருளினார் போலும் எனத் தோன்றுகிறது.
திருமறைக்காட்டில் திறக்கப்பாடிய அருமை:
"பண்ணின் நேர் மொழியாள்" எனும் பதிகத்தின் பத்துப் பாடல் பாடியும், திருக்கதவு திறவாமல், "இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ, சரக்க விக்கத வம்திறப் பிம்மினே" (தி.5 ப.10 பா.11) என்றதும்தான் கதவம் திறக்கப் பட்டது.
சம்பந்தர், "சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்" (தி.2 ப.37 பா.1) என்ற பாடல் முடிந்ததுமே அடைக்கப்பட்டது. இதில் ஏதோ பிழை இருப்பதாகக் கருதி அப்பர், பேழ் கணித்தார் (பிழையைக் கணித்தார்). இதில் பிழை என்ன என்பது தெளிவாகவில்லை. அப்பர் பாடல் 11 பாடல்களிலும் நான்கு மறைகளும் பூசித்துப் பூட்டிய குறிப் பைக் காணமுடியவில்லை. சம்பந்தர் அடைக்கப் பாடிய பதிகத்தில், சதுரம் மறைதான் துதி செய்து விளங்கும் என்ற பழைய வரலாற்றைக் குறிப்பிட்டுள்ள பாங்கினால் உடன் கதவு அடைக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
மேலும் அப்பருக்குப் பெருமான் காட்சி கொடுத்து, `வாய் மூருக்கு நம்பால் வருக' என்று காட்சி கொடுத்தவாறே வாய்மூர் வரை வந்தவர் உடனே மறைந்தார். நாவரசர் வாய்மூர் செல்கிறார் என்பதை உணர்த்த ஞானசம்பந்தரும் அப்பருடனே செல்கிறார். திருவாய்மூரில் இடப வாகனக்காட்சி மறைந்ததும் அப்பர், பெருமானை நோக்கி, "திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்" (தி.5 ப.50 பா.8) என்ற மாத்திரத்தில் பெருமான் ஞானசம்பந்தருக்குக் காட்சி கொடுத்தார் அக் காட்சியைத் தரிசித்த ஞானசம்பந்தர் காட்டக் கண்டார் அப்பர்.
தேவாரம் முதலில் பாடியவர் அப்பரேயாயினும் ஆசாரியத் தன்மை ஞானசம்பந்தருக்கே உள்ளது என்பதை இதன் மூலம் விளக்கம் செய்துள்ளமை புலனாகிறது என்று கொள்ளலாம்.
குலச்சிறையார்:
பாண்டியநாட்டைச் சேர்ந்த மணமேற்குடியே இவரின் அவதாரத் தலம். சுந்தரரால், "பெருநம்பி குலச்சிறையார்" (தி.7 ப.39 பா.4) என்று போற்றப் பெற்றவர். பாண்டியநாட்டு நெடுமாற பாண்டியனிடம் முதலமைச்சராகப் பணிபுரிந்தவர்.
மன்னன் சமண சமயம் சார்ந்திருந்த போது, எப்படியும் அவனைச் சைவம் சாரச் செய்யவேண்டும் என்ற கடமை உணர்ச்சி யால் அரசமா தேவியாராம் மங்கையர்க்கரசியாருக்கு உறுதுணையாக இருந்து, பாண்டிய நாட்டையும் மன்னனையும் பற்றி நின்ற சமண சமயத்தை அகற்றப் பெருந்துணை செய்தார்.
சிவனடியார்களிடம் பண்பு மிக்க தொண்டராய்த் திகழ்ந்தார். தீமை புரிந்ததுடன் வாதிலும் தோல்வியுற்ற தீயவராகிய அமணர்களைக் கழுவேற்றி முறை செய்தார்.
பெருமிழலைக்குறும்பர்:
"மிழலை நாட்டு மிழலைவெண் ணிந்நாட்டு மிழலையே" (தி.7 ப.12 பா.5) என்பது சுந்தரர் தேவாரம். இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டம் தென் வெள்ளாற்றுக்குத் தென்கரையில், புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. பேரையூரினின்றும் மேல்பால் உள்ள தேவமலையில் உள்ள குடவறையில் சிவலிங்கத் திருவுருவத்தின் முன்னர் யோக நிலையில் அமர்ந்து சடைமுடியுடைய முனிவர் உருவம் உள்ளது. இது குறும்ப நாயனாரின் திருவுருவமாகப் போற்றப்படுகிறது. இவர் சுந்தரரைக் காணாமலேயே அவர்மீது பக்திமை பூண்டு அவர்தம் திருப்பெயரையே மந்திரமாகச் செபித்து யோகநிலை கைவந்தவர். இவர் வரலாறு முன்பே குறிக்கப்பட்டது.
புனிதவதியார்:
புனிதவதியாராகிய காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசி யார், இசைஞானியார் இம்மூவரும் அறுபத்து மூவர்களுள் பெண் ணடியார்கள் ஆவார்கள். இவர்தம்முள்ளும் இயற்றமிழும் இசைத் தமிழும் பாடி ஏற்றமுற்றவர் காரைக்காலம்மையார்.
இவர்தான் நமது சைவசமயத்தின் தாயாகக் கொள்ளப்படுபவர். இவர் தமிழ்ப்பண்பாட்டின் தாயாகவும் நடந்து காட்டியவர். ஞானசம் பந்தர் சுந்தரர்கட்கெல்லாம் முன்னோடியாகத் தமிழ்ப் பண்பாட்டுக்கு வழி காட்டியவர்.
திருக்கயிலையைத் தரிசிப்பதற்கும் கயிலைக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதற்கும் வழிகாட்டியாக நடந்து காட்டியவர். பெண்கள் தனியே தல யாத்திரை போக வேண்டுமானால் கவர்ச்சி உடலுடன் செல்வது தமக்கும் பிறருக்கும் தீமையே பயக்கும் என்று வயோதிக வடிவுடன் பேய் உருவந்தாங்கிச் சென்று புனித கயிலாயத்தைத் தலையால் நடந்து பெருமானைத் தரிசித்த சால்புடையவர். கயிலைப் பெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்.
அம்மையே என்று அழைத்தமையால் தாயும் இலி, தந்தை இலியாகிய பெருமான் இவரைத் தாய் என்ற முறைப் பெயரில் அழைக்கவில்லை. குழந்தை என்ற முறையிலேயே அம்மையே என்று அழைத்தார். இன்றும் தமிழகத்தில் பெண்களைச் சிறியவராயினும் பெரியவராயினும் அம்மா என்று அழைப்பது மரபாகவே இருந்து வருகிறது. இது பல இடங்களிலும் பலரிடத்தும் வழங்கி வருவதும் காணலாம்.
இவர் திருக்கயிலாயத்திலும், பெருமான் குறிப்பிட்ட திரு ஆலங்காட்டிலும் தலையால் நடந்தமையால், பண்பாட்டுத் தாயாகிய காரைக்காலம்மையாரைப் பின்பற்றியே ஞானசம்பந்தர் திரு ஆலங்காடு சென்றபோது திருஆலங்காட்டை மிதிக்க அஞ்சிப் பழையனூரில் தங்கினார். அந்தப் பத்திமைக்கு இரங்கிய பரமன் நடு இரவில் சம்பந்தரின் கனவில் தோன்றி, நம்மைப் பாட மறந்தனையோ என்று கேட்க, "துஞ்ச வருவாரும்" (தி.1 ப.45 பா.1) என்னும் பதிகம் பாடிப் பரவினார்.
இதே வழியில் சுந்தரர் திருவதிகை சென்றபோது, அப்பர் பெருமான் கைத்தொண்டு செய்த திருவதிகையைக் காலால் மிதித்தல் கடன் அன்று என்று சித்தவடம் மடத்தில் தங்கினார். அன்றிரவு அதே பெருமான் சுந்தரருக்குத் திருவடி தீட்சை புரிந்தார்.
மேலும், சுந்தரர் சீகாழிக்குச் சென்றபோது, ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய நிலையைக் கேட்டு அத்தலத்தையும் மிதிக்க அஞ்சி, தலத்தையே வலமாக வந்தார். கழுமலத்து ஈசனோ, ஞானசம்பந்தருக்கு வழங்கிய அதே காட்சியைச் சுந்தரருக்கும் வழங்கினார். "சாதலும் பிறத்தலும்" (தி.7 ப.58 பா.1) என்ற பதிகம் பாடி, அதில் "காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே" என்று பாடிப் பரவினார்.
இவையெல்லாம் காரைக்காலம்மையார் நம்மனோருக்கு வழங்கிச் சென்ற பண்பாட்டு மரபுச் செல்வமாகும். இதனையே மரபுவழி எனச் (ட்ரடிஷன் என்று ஆங்கிலத்தில்) சொல்கின்றனர்.
மேலும் இவரிடம் உள்ள தெய்வத் தன்மையை இறுதிவரை எவரிடத்தும் தெரிவிக்காமல் இருந்த அழுத்தமான நிறைமனம், நாம் பின்பற்றவேண்டிய பண்பாடாகும்.
இவரிடம் உணவு வேண்டி வந்த அடியவர் மிகவும் வயோதிகர். எனவேதான் வீட்டிற்குள் அழைத்து உபசரித்து உணவருத்தி அனுப்பினார்.
சிறுத்தொண்ட நாயனார் வீட்டிற்கு வந்தவரோ வயிரவர் கோலத்து மிடுக்குடையவர். ஆதலினால் பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் நாம் இரோம், திருஆத்தியின் கீழ் இருப்போம்; அங்கு சிறுத்தொண்டரை வரச்சொல் என்று சென்றுள்ளார். இதிலும் நாயன்மார் பண்பு நலம் பெரிதும் மிளிர்கிறது. நாமும் பின்பற்றி நலமடைவோம்.
அப்பூதியடிகள்:
இவர், `செப்பரும் சீர் அப்பூதி' என்றும் `அந்தணரின் மேம்பட்ட அப்பூதியார்' என்றும் போற்றப்பெறுபவர். திருநாவுக்கரசரைக் காணாமலே அவரிடம் பத்தி பூண்டவர். இவர் வீட்டில் உள்ள எல்லாப் பொருள்களுக்குமே `திருநாவுக்கரசு' என்று பெயர் சூட்டினார். "அளவில்சனஞ் செலவொழியா வழிக்கரையில்" (தி.12 பு.25 பா.5) தண்ணீர்ப்பந்தல் அமைத்தும், அதிலும் `திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்' என எழுதியும் வைத்தார்.
இவ்வழிவந்த நாவரசர் இதைக் கண்ணுற்று, இவ்வளவு செய்த அப்பூதியாரைக் காண விழைந்தார்; கண்டார்; `நீர் அமைத்த தண்ணீர் பந்தரில் வேறு ஒரு பெயர் எழுதக் காரணம்' கேட்டார். அப்பூதி யாருக்கு கோபம் மிக வந்தது.
பொங்குகடற் கல்மிதப்பில் போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத் துடனின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார் இயம்பும்என இயம்பினார். (தி.12 பு.25 பா.15)
இதில், `எம் குறைவை அகற்ற வந்த நீர் யார்?' என்ற கேள்வியும் அடங்கி உள்ளது கண்டு, சேக்கிழார் கவி நயம் போற்றி இன்புறுவோர் பலர்.
மூத்த திருநாவுக்கரசை, வாழைக் குருத்து அறுத்து வரச் செய்தார் தந்தையாராகிய அப்பூதியார். அப்போது மூத்த திருநாவுக்கரசு "நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப்பெற்றேன்" (தி.12 பு.25 பா.24) என்று மகிழ்வுடன் வாழைக் குருத்து அரியச் சென்று இலையை அறுத்தபோது, வாளரவு தீண்டியது. அடியவர் திருஅமுதுக்கு இடையூறின்றி, வாழைக் குருத்தைத் தாயாரிடம் கொடுத்து மயங்கி வீழ்ந்தார்.
மாகேசுவர பூசையில், அப்பர் மூத்த திருநாவுக்கரசை வினவ, `அவன் இப்போது இங்கு உதவான்' என்ற அப்பூதியடிகளை, `மெய் விரித்துரைமின்' என்றார் அப்பர். அஃதாவது மெய்தான் சொல்கிறீர், அதனைச் சற்று விரிவாகச் சொல்லுக என்பதுதான் கருத்து. இருந்த போதிலும் மூத்த திருநாவுக்கரசின் உடலை ஒரு பாயில் சுருட்டிக் கிடத்தியிருப்பதை - பாயை விரித்து உண்மை உரையும் என்றது சேக்கிழார் கவிநயத்தை விளக்குவதாகவே அமைந்துவிட்டது. அன்று முதல் இன்றுவரை திங்களூரில் எவரையும் பாம்பு கடித்ததில்லை என்பது இன்றும் பிரசித்தம்.
மேலும் அப்போதும் விடம் நீங்கப்பாடிய "ஒன்றுகொலாம்" (தி.4 ப.18 பா.1) என்னும் பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்வாரையும் பாம்பு தீண்டுவதில்லை என்பது நடைமுறை அநுபவம்.
திருப்பழனத் தேவாரத்தில் அப்பர், அப்பூதியாரை, "அஞ்சிப்போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதி, குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே" (தி.4 ப.12 பா.11) என்று போற்றியுள்ளமை கொண்டு அப்பூதியாரின் பெருமை உணர்வோ மாக.
திருநீலநக்கர்:
வேதங்களின் உள்ளுறையாவன அரனையும், அரன் அடியார் களையும் பூசித்தலும் வணங்கலுமே என்றறிந்து அவ்விரண்டனையும் செய்யும் கருத்துடையவராய் வாழ்ந்தவர் திருநீலநக்கர்.
திருச்செங்காட்டங்குடிக்கு அருகில் உள்ள சாத்தமங்கை என் னும் ஊரில், அந்தணர் குலத்தில் தோன்றியவர். நாளும் ஆன்மார்த்த பூசை செய்யும் நியமம் உடையவர். திருவாதிரைதோறும் அயவந்தி என்னும் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு, மனைவியுடன் சென்று செய்யும் நியமம் உடையவர். திருநீலநக்கரின் ஊரான சாத்தமங்கை, அயன் பூசித்துப் பேறு பெற்றமையால் ஆலயம், அயவந்தி என்னும் காரணப்பெயர் பெற்றது.
ஒரு நாள் மாலையில் திருவாதிரைப் பூசை முடித்து, செபம் செய்யும் போது, சிலந்திப் பூச்சி ஒன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. குழந்தை மீது விழுந்தால் கொப்புளம் உண்டாகும் என்றறிந்திருந்த நாயனாரின் மனைவியார் உமிழ்நீர் காற்றுப்பட வாயால் சிலந்தியை ஊதினார். `அஃது ஆசாரம் இல்லை' என்று நாயனார் மனைவியைத் துறந்தார்.
வீட்டிற்குச் சென்று நித்திரை செய்தபோது, அயவந்திநாதர் நாயனாரின் கனவில் தோன்ற, ஊதி உமிழ்ந்த இடம் நீங்கலாகச் சிலந்தியின் கொப்புளம் சிவலிங்கத்தில் இருப்பதைக் கண்டார். நாயனாரும் விடியலில் கோயில் சென்று மனைவியை அழைத்து வந்து, குறைதீர்த்து வாழ்ந்தார். கண்ணப்பரும் சிவகோசரியாரும் போல அன்பும் ஆச்சாரமும் கொண்ட மனைவியாரையும் அவர் தம் கணவரையும் அன்பு ஆசாரம் பற்றி வழிபட்ட இருவரையும் ஏற்று இறைவன் அருள்புரிந்தமைகண்டு உலகோர் மகிழ்ந்தனர்.
திருஞானசம்பந்தர், அயவந்தி தரிசனத்திற்கு வந்தபோது வரவேற்று வணங்கி உபசரித்தவர் திருநீலநக்கர். ஞானசம்பந்தருடன் வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருக்குத் தாம் நித்தியாக்கினி நடத்தும் யாகசாலையில் தங்குவதற்கு இடமளித்தவர்.
இவ்வூரில் அந்தணர்கள் ஆகவநீயம் காருகபத்தியம் தக்ஷிணாக்கினி என்னும் முத்தீ வளர்த்து மழை பொழியச் செய்தனர். அந்தணர் மகளிரோ கற்பென்னும் நன்மழை பொழிவித்தனர். திருநீலநக்க நாயனார் இயம நியமங்களுடன் பூசனை புரிந்து வாழ்ந்தவர்.
திருஞானசம்பந்தர் திருமணத்தை ஆச்சாள்புரத்தில் வேத ஆகம விதிப்படி செய்து அவருடனே சிவச்சோதியில் கலந்து பேர ருளை எய்தினார்.
நமிநந்தியடிகள்:
திருவாரூருக்கு அண்மையில் ஏமப்பேரூர் என்னும் ஊரில் தோன்றியவர். அந்தணர் மரபினர். திருவாரூர்ப் பூங்கோயிலுக்குள் புற்றிடம்கொண்ட பெருமான சந்நிதியின் எதிரில், தென்பகுதியில் அசலேச்சரம் என்னும் அரநெறியப்பர் ஆலயத்தின் நாளும் திரு விளக்கு இட்டுத் தரிசித்தவர்.
ஒரு நாள் தீப நெய் முட்டுப்பாடு எய்த அருகிலிருந்தவை அமணர்கள் வீடு என்பதறியாமலே அமணர் வீட்டில் தீபம் போட நெய் கேட்க வந்தார். நீரை முகந்து எரியுங்கள் என்றனர். அரநெறி அப்பர், அசரீரியாக அருளிய ஆணைப்படி, நீரால் திருவிளக்கு இட்டுப் பேறு பெற்றார். இதனை அப்பர் சுவாமிகள்,
ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கி
பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீராற் றிருவிளக் கிட்டமை நீணாடறியு மன்றே. (தி.4 ப.102 பா.2)
ஞானசம்பந்தரும் திருக்கோளிலி தேவாரத்தில்,
"நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோல் கோளிலிஎம் பெருமானே" (தி.1 ப.62 பா.6)
என்று ஓதி உள்ளமை கண்டு உண்மை உணர்வோமாக.
பெரியபுராணம் முதற் காண்டப் பகுதி, நமிநந்தி அடிகளின் விளக்கீட்டுடன் நிறைவுறுகிறது.
இம் முதற் காண்டத்தில் கண்டுள்ள நாயன்மார்கள் இருபத்தெழுவர் வரலாற்றுப் பண்பை அனைவரும் உள்ளவாறு உணர்ந்து அதன் வழி ஒழுகி உயர் நலம் பெற்றுவாழ அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
வாழ்த்து:
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.
வளர்க சிவநெறி. வாழ்க உலகெலாம்.