b


சிவமயம்

தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்

திருஞானசம்பந்த சுவாமிகள் திருவடி துணை

02 முன்னுரை

"யாரேஎம் போல அருளுடையார்? இன்கமலத்

தாரேயும் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்

கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி

அடிமைசெயப் பெற்றேன் அறிந்து"

-நம்பியாண்டார் நம்பிகள்.

திருமுறை என்னும் பெயரின் முதலிலுள்ள திரு என்பது சிவத்தையும் சிவனருளையும் அவ்வருளால் எய்தும் பேரின்பத்தை யும் குறிக்கும். சிவமும் அருளும் பேரின்பமும் ஆன்மாக்கள் எய்தும் நெறிநிலையால் வேறுபடினும் பொருளால் ஒன்றே ஆகும். "திரு வொளிகாணியப் பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த கருவரை ஏந்திய மாலும்" (தி-1.ப-39.பா-9) "திருவே என் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே" (தி-6.ப-47.பா-1,)எனச் சிவமுதலையும் "சென்றடையாத திருவுடையான்" (தி-1.ப-98. பா-1,) எனச் சிவனருளையும் "சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்" (திருவாசகம். 5.5) எனச் சிவப் பேறாகிய பேரின்பத்தையும் `திரு' என்னுஞ் சொல்லால் குறித்தல் காண்க.

முறை என்பது நூலைக்குறிக்கும். "இறைநிலம் எழுது முன் இளைய பாலகன் முறை வரைவேன் என முயல்வது ஒக்கும்" என்னும் கந்தபுராணச் செய்யுட்பகுதியால் அது நன்கு புலப்படும். படவே, திரு முறை என்பதற்குச் சிவநூல், அருள்நூல், பேரின்பநூல் என்று பொருள் உரைத்தல் பொருந்தும்.

சிவநெறி, அருள்நெறி, இன்பநெறிஎனப்படும் எல்லாம் ஒன்றே ஆகித் திருநெறி ஆதலின், அத்திருநெறியைக் காட்டும் திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தமிழ், திருநெறிய தமிழ் என்னும் பெயர் பெற்றது. `திருநெறிய தமிழ் வல்லவர் தொல் வினை தீர்தல் எளிது' என அப்பெருமானே அருளியதுணர்க.

திருநெறிய தமிழ் மூன்று திருமுறையாகப் பகுக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் முதற்றிருமுறை சென்றயாண்டின் குருபூசைத் திருநாள் வெளியீடாகி விளங்குகின்றது. இரண்டாவது திருமுறையான இஃது, இக்குருபூசைத் திருநாள் வெளியீடாயிற்று. இதுவும் குறிப்புரை முதலியவற்றோடு திகழ்கின்றது.

இவ்வெளியீடு தருமை ஆதீனம் இருபத்தைந்தாவது குரு மகாசந்நிதானம் தவத்திரு சுப்பிரமணியதேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமிகள் அவர்கள் திருவுள்ளத்தின் எழும் கருணை வடிவங்களுள் ஒன்றாகும். ஏனைய திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் முறையே நன்முறையில் வெளியிடுந் திருக்குறிப்பு அவர்களுக்கு உண்டு. அருள்மிகு சொக்கலிங்கப் பெருமான் திருவருள் துணை யால் எல்லாம் இனிது நிறைவுறும். அவ்வருள் அடியேன் சிற்றறிவில் நின்று தோற்றிய அளவில் இதற்குக் குறிப்புரை எழுதியுள்ளேன். திரு முறைக்குறிப்பு எங்கே? அடியேன் சிற்றறிவு எங்கே? இரண்டற்கு மிடையே தருமைக் குருஞானசம்பந்தம் உண்டாகி இணைத்து வைத்த ஆக்கமே இத்திருமுறை வெளி யீடு. இக்குறிப்புரையில், அடியேன் பல பிழைகள் செய்திருக்கலாம். அவற்றைத் திருத்தும் கடன் அறிஞர்க்கும் அவ்வாறே திருந்தும் வேட்கை அடியேனுக்கும் உண்டு. இத்திரு வருள் வழியில்அடியேனை ஒரு பொருட்படுத்தி, எல்லாவகையிலும் இன்புறுத்தி ஆட்கொண்டருளும் தவத்திரு குருமகாசந்நிதானம் அவர் களுடைய திருவடிமலர்களை முப்பொறித் தூய்மையுடன் மறவாது போற்றுங் கடப்பாடு என்றும் உடையேன்.

நன்றியறிதலுரை:

இத் திருமுறைப் பாடல்களையும் அவற்றிற்கு அடியேன் எழுதிய குறிப்புரையையும் அச்சிடுங்கால், பிழைபார்த்தல் முதலிய பலதிறத்திலும் துணையாயிருந்த வித்துவான்களும் தருமை ஆதீனப் பல்கலைக்கல்லூரித் தமிழ் விரிவுரையாளர்களும் ஆகிய உயர் திருவாளர்கள் வி.சா. குருசாமி தேசிகர், சொ. சிங்காரவேலனார், கே.எம். கிருஷ்ணமூர்த்தி, (சிறீகுமரகுருபரன் உயர்நிலைப்பள்ளி. ஆடுதுறை.) வை. திருஞானசம்பந்தம், நண்பர், திரு.ச. சீனிவாசப் பிள்ளை (தமிழாசிரியர், உயர்பள்ளி. முத்தியாலுப்பேட்டை, சென்னை.) திரு.ரா. வேலாயுத ஓதுவாமூர்த்திகள் (தேவார பாடசாலை ஆசிரியர்) முதலிய எல்லோருக்கும் ஷ்ரீசொக்கலிங்கப் பெருமான் திருவருளும் நம்குருவருளும் பெருகுக. தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்களும் கல்வெட்டுக்களின் குறிப்புக்களும் எழுதியுதவிய பேரறிஞர், உயர்திருவாளர், சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார் B.A., B.L., அவர்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சிப் புலவருள் ஒருவரான வித்துவான், உயர் திருவாளர். வை.சுந்தரேச வாண்டையார் அவர்களுக்கும் என் உள்ளமார்ந்த நன்றி உரியது. இதற்கு ஓர் அணிந்துரை எழுதியவரும், அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராயிருந்தவரும், இப்போது தருமபுரத்தில் தமிழ்த் தொண்டு செய்பவரும், பெரும்புலவரும், சிவ பூசாதுரந்தரரும் ஆகிய உயர்சைவத் திருவாளர். பண்டித. அ. கந்தசாமிப் பிள்ளை அவர்களுக்கு என் நெஞ்சுவந்த நன்றி உரியது. குறிப்புரை மாட்சி எழுதியதுகருதி,வித்துவான், திருவாளர், சொ. சிங்காரவேலனார்க்கு நலம் பல நல்குக என்று அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கேசனை மீண்டும் வேண்டுகின்றேன். இத்திருமுறை வெளியீடு சிறக்கும் வழியில் பெரிதும் உழைத்த ஞானசம்பந்தம் அச்சகத்திலுள்ள எல்லோர்க்கும் இறைவன் திருவருளால் எல்லா நலங்களும் இனிதே விளைக.

வாழ்க திருநெறிய தமிழ்.

சைவநெறி தழைத்தோங்கச் சகலகலை களும்வளரத்

தருமம்

ஓங்கத்

தெய்வவழி பாடுமிகச் சிறந்தோங்கத் தமிழன்னை செழிக்கத்

தோன்றி

மெய்வளருந் தருமைமடத் திருபத்தைந் தாம் ஞான வேந்த ராகிக்

கைவளருங் கொடைக்குருசுப் பிரமணிய தேசிகனார் கழல்கள்

போற்றி.

தருமை ஆதீனம்

அடியார்க்கு அடியன், 23-5-54

முத்து.சு. மாணிக்கவாசகன்

a

 

 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி