b


சிவமயம்

தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்

02 பாராட்டுரை

திருவாவடுதுறை ஆதீனம்

இருபத்தோராவது மகாசந்நிதானம்

ஷ்ரீலஷ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள்

திருமுறை, திருவருட்கடலில் முழுகி எடுக்கப்பெற்ற நன் முத்துக்கள். மக்கள் அனைவரும் பிறவிக்கடலைக் கடந்து திருவடிக் கரையை எய்துதற்குக் கிடைத்த இன்பத்தோணி. யாமெல்லாம் நுகர்ந்து உணர்வைப் பெருக்கி, உயிரை யீடேற்றிக்கொள்ளும் வண்ணம் கிடைத்த இசைத்தேன் கலந்த இனிய சிவ அமுதம். என்றென்றும் இன்ப நிலையில் இருத்தும் ஈடற்ற குளிகை. வாய்க் கொண்டாலும், செவிக் கொண்டாலும் சிந்தையிற் புகுந்து மும்மல நோயை முழுவதும் வாட்டி, இருமையும் இன்பமளிக்கும் ஒரு மருந்து.

இத்தகைய திருமுறைகளில், திருஞானசம்பந்த சுவாமிகள் திருவாக்கு, திரிபுரையே நேரில் எழுந்தருளிச் சிவஞானத்தின் னமுதங் குழைத்து ஊட்ட உண்ட திருவாயிலிருந்து வழிந்தமையால் ஞானப் பால் மணம் மாறாத நல்வாக்கு.

இதனை ஓதுங்கால், பொருள் தெரிந்து ஓதுதலும் இன்றியமை யாதது. சொல்லிய பாட்டின் பொருள் தெரிந்து ஓதுகின்றவர்களுக்கே இன்பவுலகு காணியாட்சி என்பது அருளாளர்களின் ஆணைமொழி. இதனையெண்ணித் தருமை ஆதீனம் 25-ஆவது மகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருமுறைகள் எல்லாவற்றிற்கும் முறையே குறிப்புரை முதலியன எழுதுவித்து மிக அழகான பதிப்பாக வெளியிட்டு வருகின்றார்கள்.

மக்கள் மனப் பண்பாடு அறிந்து - காலங்கருதிச் செய்யும் சிறந்த பணி இது. வழக்கம்போல் இப்போது இரண்டாம் திருமுறை வெளிவருகின்றது.

பதிகக் குறிப்புக்களும், தலவரலாறும், குறிப்புரையும் தேவைக்குத் தக்கன; தெளிந்த நடையில் அமைந்துள்ளன.

இத்தகைய திருமுறைப் பணி மிக மிகப் பாராட்டற்குரியது. `தோடு' என்று உள்நின்று உணர்த்தியும் `உலகெலாம்' என்று ஞானாகாயத்தினின்று உணர்த்தியும் திருமுறைகளைத் தோற்று வித்தருளிய எல்லையில் கருணைத் தில்லையம்பலத்து, ஏத்தரும் புகழ்க் கூத்தநாயகன், உருகிநின்று உரைக்கும் அடியவர் திருவும் ஞான மும் சேர்ந்திடத் திருவருள் புரிவானாக.

மகாசந்நிதானம் உத்தரவுப்படி,

ஒடுக்கம், சுப்பிரமணியத் தம்பிரான்

02 அணிந்துரை

பண்டித திரு. அ. கந்தசாமிப்பிள்ளை

தமிழாசிரியர், தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை,

தருமபுரம்.

உலகெலாமாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி அலகிலா உயிர்கள் கன்மத்து ஆணையின் அமர்ந்து செல்லத் தருதல் முதலிய ஐந்தொழிலையும், அவ்வுயிர்கள் மேல்வைத்த பெருங் கருணைத் திறத்தினால் புரிந்து உய்யக் கொண்டருளும் பரமபதியாகிய சிவமே முழுமுதற்கடவுள்.

அவனை வழிபட்டு உய்தி கூடற்கு உரிய நெறி முறையே சைவசமயம். அதுவே `திருநெறி'.

`திருநெறிய தமிழ் வல்லவர் தொல் வினை தீர்தல் எளிதாமே'

-ஞானசம்பந்தர்

அந் நெறியில் நின்று எய்தும் முத்தியின்பமே திருநின்ற செம்மை எனப்படும்.

உலகில் வழங்கும் பல்வேறு சமயங்களும், இனித்தோன்றும் சமயங்கள் உளவேல் அவையும் தன்னுள் அடங்குமாறு, அவற்றுக் கெல்லாம் தலைமைத்தாய் விளங்குவது சுத்தாத்துவிதம் என்னும் சைவசித்தாந்த சமயம். நடுநின்று தருக்க வாயிலாய் உணரவல்லார்க்கு இவ்வுண்மை புலப்படும்.

ஏனையவற்றை நோக்கச் சைவசமயம் எத்தகைய உயர் வுடையதென்பதனையும், ஏனையவற்றினும் இந்நெறியே எளிதில் கடைப்பிடித் தொழுகிப் பெரும்பயனடையத் தக்கதென்பதனையும் நமது ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் அருளிய பாசுரங்களால் அறியலாகும். அவ்விரண்டும் முறையே,

கூவ லாமை குரைகட லாமையைக்

கூவ லோடொக்கு மோகட லென்பபோற்

பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்

தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

- அப்பர்.

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்

சோதிக்கவேண்டா சுடர் விட்டுளன் எங்கள்சோதி

மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்மின்

சாதுக்கண்மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.

-ஞானசம்பந்தர்.

என்பனவாம்.

இத்தகைய சிறப்புவாய்ந்த சைவசமய தத்துவங்கள், பதி பசு, பாச இயல்புகள், சரியை முதல் நாற்பாதங்கள் முதலிய எண்ணிறந்த இலக்கணங்களுக்கெல்லாம் இலக்கியமாய் நின்றன நம் தெய்வத் தமிழ்மறைகளாகிய சைவத் திருமுறைகள்.

உலகில் எந்தநாட்டிலும், எந்தமொழியினும், முதலில் இலக்கியமே தோன்றியது.அதன்பின் சில நூற்றாண்டுகட்குப் பின்னரே அவற்றின் இலக்கணங்கள் தோன்றலாயின என்பது யாவரும் ஒப்ப முடிந்த ஒன்று, `இலக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பல்' என நன்னூலாரும் இக்கருத்தை உணர்த்தியது உணர்க.

ஆதலின் நமது தெய்வத்திருமுறைகள் தோன்றிச் சில நூற்றாண்டுகட்குப் பின்னரே தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் தோன்று வன ஆயின. ஆகவே சித்தாந்த நூல்களின் கருவூலம் திருமுறைகளே என்பதும், அவற்றில் ஆங்காங்குக் காணப்படும் உண்மைக் கருத்துக்களைத் தொகுத்தும், வகுத்தும், விரித்தும், விளக்கியும் வெளிப்படுத்தினர் நமது சித்தாந்த நூலாசிரியர் என்பதும் பெறலாயின.

உதாரணமாக:- `எல்லா உலகமும் ஆனாய் நீயே' என்பது நம் அப்பர் தேவாரம். இதனை, சித்தியாரில், பதியாகிய சிவபெருமான் விசுவரூபி (விசுவகாரணன், விசுவாந்தரியாமி, விசுவாதிகன்) எனக் கூறுமிடத்து `உலகினை யிறந்து நின்றது அரன்உரு என்பதோரார்... உலகமாய் நின்றதோரார்' என்பன முதலாக வகுத்தும் `தேவரில் ஒருவனென்பார்...அவன் உருவிளைவும் ஓரார்' என்றும் அவன் ஆணுருவும் பெண்ணுருவும் கூடிய வடிவன் (அர்த்த நாரீசுவரன்) ஆகி நிற்றலால் உலகில் மரஞ்செடிகொடிகள் முதலிய ஓரறிவுயிரும் ஆணுருவும் பெண்ணுருவுமாய் நிற்கின்றன என்றும் உய்த்துணர விரித்தும் உரைத்தமை காண்க.

இன்னும்,

"இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்

தமையனெம் மையன்"

என்பது திருவாசகம். இதனைச் சித்தியாரில்,

சிவம்சக்தி தன்னையீன்றும் சத்திதான் சிவத்தை யீன்றும்

உவந்திரு வரும்புணர்ந்திங் குலகுயி ரெல்லாம் ஈன்றும்

பவன்பிரம சாரியாகும் பான்மொழி கன்னி யாகும்

தவந்தரு தன்மை யோர்க்கித் தன்மைதான் தெரியும் அன்றே.

என விளக்குவது அறிக.

துதி நூல்களாகிய இத்திருமுறைகள் முற்கூறியாங்குச் சாத்திரக் கருவூலமாய்த் திகழ்தல் மட்டுமோ?

தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெல்லாம்

பின்னை யென்னார் பெருமா னடிகளே.

என இறைவனது அருள் திறங்களை எடுத்துரைக்கின்றன.

"அருளாதொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர் இங்கு?"

என இறைவனை அணுகி இரங்கிக் குறையிரப்பத் தூண்டுகின்றன.

"இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்

கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநர கங்கள் வைத்தார்"

என அறங்கூறுகின்றன.

இன்னும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்களாம் அகப்பொருள் துறையும் புலப்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் அடக்கி "ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்த்" திகழும் இத்தெய்வத் திருமுறைப் பனுவல்களைக் கற்றாரும் கேட்டாரும் புலனொன்றிக் கரணமும் அடங்கிச் சிவானந்தம் திளைத்தல் சுவாநுபூதிகம் ஆகும்.

இப்பெருஞ் சிறப்பினதாகிய நம் புகலியர்கோன் திருவாய் மலர்ந்தருளிய திருநெறிய தமிழின் இரண்டாம் திருமுறை, குறிப்புரை, விசேட உரை, உரைநயங்களோடு வெளிவர வேண்டு மென்று திருவுள்ளங் கொண்டருளினார்கள் கருணையங்கடலாகிய நம் குருமகாசந்நிதானம் அவர்கள்.
"

இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்றவாறு திருவுள்ளத்து எண்ணியருளிய படியே, இனிதின் இயற்றித்தர வல்லுநர் இவரேயென நமது ஆதீனப் புலவரும், ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும் ஆகிய புலவர், சித்தாந்த ரத்நாகரம்,வித்துவான், திரு. முத்து, சு. மாணிக்கவாசக முதலியார் அவர்களுக்கு ஆணையருளினார்கள். அவ்வருளாணைப்படி இரண்டாவது திருமுறைக்கு அரும் பதவுரை முதலியவற்றை எழுதித்தந்து அரிய உழைப்பின் திறனைப் புலப் படுத்தி தவத்திரு குருமகாசந்நிதானம் அவர்கள் கருணைக் கடாட்சத் திற்குப் பாத்திரமானார்கள் நமது முதலியார் அவர்கள்.

அவ்வரும்பெறற் பெரியாரின் புலமையின் திட்ப நுட்ப ஒட்பம் முதலி யவற்றை இத்திருமுறையின் ஒவ்வொரு பதிகத்திலும் காணலாம்.

தாலி புலாகப்படி ஒவ்வொன்று:-

1. இலக்கியநூற் பயிற்சிக்கு:

(பதி. 44. திருவாமாத்தூர்) "பிச்சை பிறர் பெய்யப் பின்சாரக் கோசாரக் கொச்சைப் புலானாறு மீருரிவை போர்த்துகந்தான்" என்பதன் உரையில். `கோ - தலைமை, சார - தன்னையே பொருந்தும்படி, யானைத் தோலைப் போர்த்தும் சாவாமல் மகிழ்ச்சி யோடு இருந்தான். `யானையின் பசுந்தோல் பிறர் உடம்பிற் பட்டாற் கொல்லும்' என்பர் நச்சினார்க்கினியர், சீவகசிந்தாமணி, 2787, என்பது.

2. இலக்கணநூலின் ஆழ்ந்த பயிற்சிக்கு:

(பதி. 62, திருமீயச்சூர்) "வேகமா நல்லி யானை வெருவ வுரிபோர்த்து" என்பதில் நல்லியானை (நன்மை+ யானை) "...உயர்திணை அஃறிணை ஆயிருமருங்கின், ஐம்பாலறியும் பண்பு தொகும் மொழியும்...மருவின் பாத்திய, புணரியனிலையிடை உணரத் தோன்றா" என்ற தொல்காப்பியப்படி (482) நல்லதாகிய யானையென விரித்துரைத்தற்பாலது நன்னூற் சூத்திரப்படி, பண்புத்தொகை யென்றல் குற்றமுடையதாகும்' என்பது.

3. திருமுறைப் பயிற்சிக்கு:

(பதி. 42. திருஆக்கூர்) "...இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னாது ஈத்துவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான்றோன்றி மாடமே" இப்பாசுரப் பகுதியை அப்படியே சேக்கிழார் பெருமான் தமது நூலில் சிறப்புலி நாயனார் புராணத்தில் (செய்யுள் 1) அமைத்திருத்தல் காண்க, என்பது.

4. தருக்கநூற் பயிற்சிக்கு: -

தொன்மையும் முதுமையும் வெவ்வேறு என்ற ஆராய்ச்சி, (பதி.63 -1 உரை)

5. சித்தாந்த சாத்திரப் பயிற்சிக்கு:-

(பதி. 78. திருவிளநகர்.) "துயர் கெடுகெனப் பூசுவெண் பொடி" என்பதில் துயர் - பிறவித்துன்பம், துயர்க்கேடு - பாசநீக்கம். துயர்கெடுக என்றார்க்கு இன்புறுக என்றலும் உட் கோளாம். அவ் வின்பமுத்தி பாசவீடும் சிவப்பேறுமென இரு வகைப் படும் என்பது.

இன்னும் நுண்ணிதில் திறம் தெரிந்துரைப்பன பலவும் உண்டு. அவற்றுள் புள்ளிருக்கு வேளூர்ப் பதிகத்தில் முதற் பாசுரத்தில் இருவரும் வழிபட்டமையையும், 3,5,7 பாசுரங்களில் சம்பாதி வழி பட்டமையையும் ஏனைய பாசுரங்களில் சடாயு வழி பட்டமையையும் குறித்தனர் என்பது.

இவர்களது ஆழ்ந்து அகன்ற பன்னூற் புலமைத்திறனைப் பல இடங்களில் எழுதியுள்ள விரிவுரைச் செப்பத்தாலும் நன்கு அறிய லாகும்.

இதுபோலவே நமது சித்தாந்த ரத்நாகரம் ஐயா அவர்கள் இன்னும் தம் ஆராய்ச்சியின் அரியபயன் விளைக்கும் நூல்களை வெளி யிட்டு உலகின் பேருபகாரிகளாகத் திகழ அவர்கட்கு நலன் அனைத்தும் இனிதின் அருள்க என எனது வழிபடு கடவுளாம் கூத்தப் பெருமானை நாளும் போற்றுகின்றேன்.

இத்தகைய சீரிய உரைக்குறிப்பு, விசேடக் குறிப்புரைகளை உலகம் படித்துத் திருமுறைக் கருத்து உணர்ந்து இருமைப் பயன் களையும் அடைவதாகுக.

நம் பெருவாழ்வாகிய தருமையும் கமலையும் விரிதமிழ்க் கூடலும் உரிமையினுகந்த ஒப்பிலாமணியாய் விளங்கும் தருமை ஆதீனம் இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் என்றும் இன்பம் பெருகும் இயல்பினோடு நீடூழி வாழ்வார் களாகுக. அவர்களது திருவருளாணை எங்களை ஆள்க.

ஏனைய திருமுறைகளும் இவ்வியல்பில் சிறப்புற வெளி வருவன ஆகுக.

திருமுறை வெளியீட்டுச் சிவபுண்ணியத்தைச் செய்யத் தொடங்கி, முதல் திருமுறை வெளிவருமாறு கருணைகூர்ந்த நமது தவத்திரு குருமகாசந்நிதானம் அவர்கள், பதிப்பினும் குறிப்புரை முதலியவற்றினும் சிறப்புடையதாக இவ் இரண்டாவது திருமுறை இதில் குறித்த சீரியமுறையில் வெளிவரத் திருவருள் பாலித் தருளினார்கள். அதற்குக் கைம்மாறுண்டோ?

வாழ்க திருமுறை; வாழ்க உலகம்.

 

a

 

 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி