b

02 குறிப்புரை மாட்சி

தருமை ஆதீனப் புலவர், செஞ்சொற் கொண்டல்

டாக்டர். திரு. சொ. சிங்காரவேலன்

மயிலாடுதுறை

உலகம் உய்ய:

திருமுறைகள் உலகுய்ய எழுந்தவை. உயிர்கள் கடைத்தேற உள்ளம்கொண்ட பெரியோர் திருமொழிகளே திருமுறைகள். இவை மனிதனது அகவாழ்வை முறைப்படுத்துவன. `நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பது திறவோர்காட்சி' என்று புனிதமான முறையைப்பற்றிப் புறநானூறு சொல்லுகிறது. முறைவழிப்படூஉம் உயிரை முறை வழிச் செலுத்துவதே திருமுறை. வினையறுப்பதற்குச் சிறந்த மருந்து திருமுறை. `திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே' என்று சிந்தையினிக்கப் பாடுகிறது சீகாழிக் குழந்தை. உலகம் உய்யத் திருமுறை எழுந்தது. `மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்று அருளாசியும் வழங்குகிறது. ஆகவே தமிழ்மண்ணிற் பிறந்த மக்களெல்லோரும் திருமுறைகளைச் `சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுதல்' இன்றியமையாக் கடமை.

திருமுறைப் பெருமை:

தருமையை நிறுவிய எங்கள் தனிமுதல்வர் ஷ்ரீலஷ்ரீ குருஞான சம்பந்தப்பெருமான், `திருமுறைகள் ஒதாய்' என்று அருளினார்கள். திருமுறைப் பதிகங்கள் அற்புதச் செயல்கள் பலவற்றை நிகழ்த்தி யிருக்கின்றன. தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை உண்ட பாலனை அழைத்ததும் முதலான அற்புதங்கள் திருமுறைத் தெய்வப் பேரொளியால் நிகழ்ந்தவை. அக்காலத்திலும் திரு முறைகளுக்கு நல்ல பெருமை மக்களிடத்திலே மண்டிக்கிடந்தது. கல் வெட்டுக்களில் ` திருப்பதியம்' என்று சிறப்பாகக் குறிப்பிடும் பெருமை திருமுறைக்கு உண்டு. பத்துப் பாட்டுக் கொண்ட எவையும் பதிகமாம் எனினும், திரு என்ற அடையோடு ஆளப்படும் இந்தப் பதிகம் என்ற சொல் தேவாரப்பதிகத்தையே குறித்ததெனின் இதன் சிறப்புக்கு வேறு என்ன சான்று வேண்டும்? இன்னும் பல்லவர் காலத்தும், சோழர் காலத்தும் தேவாரத் திருமுறைகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது. தேவாரம் பாடுவார்க்கு நிவந்தங்கள் விடுக்கப்பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாகத் தஞ்சைப் பெருவுடையார்கோயிற் கல்வெட்டு ஒன்று, ஆண்டுத் தேவாரம் விண்ணப்பித்த 49 பிடாரர்களை (ஓது வார்களை)ப்பற்றிக் குறிப்பிடுகிறது.

திருவாமாத்தூர்க் கல்வெட்டு ஒன்றில் குருடர்கள் திருப்பதிகம் விண்ணப்பம் செய்தமையும் அவர்களுக்குத் துணையாகக் கண் காட்டு வோர் இருந்து ஆலயம் அழைத்துச் சென்றமையும் கூறப்பெறுகின்றன. என்னே திருமுறைக் கிருந்த சீர்மை! மக்கள் மனமெல்லாம் அந்த அள வுக்கு மகிழும்படியாக அருளமுது வாரிவாரி வழங்கியது திருமுறை.

வேதம் பசு எனவும் ஆகமம் பால் எனவும் திருமுறை நெய் எனவும் கூறப்படும் பொருளுரையும் திருமுறைப் பெருமையைத் தெற்றெனக் காட்டும்.

ஆசிரியர்கள்:

திருமுறைகளை உலகம் உய்ய மொழிந்தருளிய பெரியவர்கள் எளியவர்களா என்ன? அநுபவம் கைவந்த அருளாளர்கள்; சித்தமலம் அறுத்துச் சிவம் ஆனவர்கள். காணும் பொருளெல்லாம் கண்ணுதலான் திருவுருவமாக்கண்ட கனிவுள்ளம் படைத்தவர்கள். தமிழ்நாட்டு வீதியெல்லாம் - ஆலயமெல்லாம் இசை கலந்து தேவார அமுதப் பாக்களை வாரிவாரி வழங்கினார்கள்.

கடவுளைப்பற்றிய கவிதையோ கனிந்த உள்ளத்தின் எழுச்சி. அதிலும் இசைவேறு கலந்துவிட்டால் ஒரே மெய்யுணர்வு தான்! மேம்பாடுதான்! இதனால்தான், `நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்' என்றார்கள் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

திருவானைக்காப் பதிகத்துக் கடைக்காப்புச் செய்யுளில்,

"வெண்ணா வல்அமர்ந் துறைவே தியனைக்

கண்ணாற் கமழ்கா ழியர்தந் தலைவன்

பண்ணோடு இவைபா டியபத் தும்வல்லார்

விண்ணோர் அவர் ஏத் தவிரும் புவரே".

என்றும்,

"பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள்"

"பண்ணின் பயனாம் நல்லிை\u2970?"

என்றும் சம்பந்தமூர்த்தி சுவாமிகளே கூறியருளினார்கள்.

இன்னும் திருமறைக்காட்டுப் பதிகத்தில்,

"காழிந்நகரான் கலை ஞானசம்பந்தன்

வாழிம்மறைக் காடனை வாய்ந்தறிவித்த

ஏழின்னிசைமாலை யீரைந் திவைவல்லார்

வாழிவ்வுலகோர் தொழ வானடைவாரே"

என்றும் கூறியருளினார்கள்.

அப்பரடிகளோ தம் திருத்தாண்டகத்தில்,

"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந் தறியேன்"

என்று அருளினார்கள்,

இவற்றால் நம் திருமுறை ஆசிரியர்கள் `திருமுறைகளை இசை வடிவிலே - பண் உருவிலே அமைத்துப் பாடிவந்த பண்பாளர்கள்' என்பது இனிது விளங்கும்.

ஒவ்வொரு நாட்டையே சைவத்திருநாடாக்கிய சான்றோர்கள். சம்பந்தமூர்த்திசுவாமிகள் பாண்டிநாட்டைத் தெய்வ ஒளியாக்கி அருளினார்கள். அப்பரடிகள் பல்லவ நாட்டைப் பண்பாடுபெறச் செய்தருளினார்கள். இவ்வாறு நாட்டையும், மக்களையும் மொழியாலும் இசையாலும் பிணித்து அதன்மூலம் தெய்வச் சைவத்தை வளர்த்துப் பாதுகாத்தார்கள் திருமுறை ஆசிரியர்கள்

உரை உண்டா?

இத்தகைய தமிழர் தெய்வக் கருவூலங்களாகிய திருமுறை களுக்கு இதுகாறும் உரைகள் தோன்றவில்லை. திருமுறைகளுக்கு உரை எழுதக்கூடாது; உரை காணவும் கூடாது என்ற ஒரு வரம்பு நாட்டில் இருந்துவந்தது. என்ன வியப்பு! படித்தவரேயன்றிப் பாமரரும் திருமுறைகளை உணர்ந்துகொள்ளுதல் அரிதாயிற்று. சமுதாயத்தில் கற்றவர் கூட்டமே திருமுறை உணர்ந்து ஓதியது; மற்றவர் அறிந்திலர். இந்த நிலையை மாற்றத் திருவுள்ளம் கொண்டார்கள் தருமையிலே இன்று தவப்பேரரசு நடாத்தும் இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள். எங்களையெல்லாம் ஆட்கொண்ட ஞான வள்ளல். `உலகம் உய்யவந்த ஒப்பற்ற திருநெறிய தெய்வத் தமிழை' உலகம் உணர வேண்டாமா? அவ்வாறு உணர உரை ஒன்று தேவையல்லவா? ஒவ்வொரு திருமுறைக்கும் குறிப்புரை எழுதி வெளியிடுதலால் உலகம் பயன்படும் அல்லவா? என்று சிந்தித்தார்கள். செந்தமிழ்ச்சொக்கர் திருவருள் சிந்தனைக்குள் நின்று செந்தேனாகத் தித்தித்தது.

அருளாணை பிறந்தது:

'கற்றாரேயன்றி மற்றாரும், பண்டிதரேயன்றிப் பாமரரும், உணர்ந்து வாழத் தொடங்கட்டும்; திருமுறைகள் மனிதவாழ்வின் நெறிமுறைகளல்லவா?' மனிதர்காள் இங்கேவம்மின்! ஒன்று சொல்லு கேன்' என்று மனித சமுதாயத்துக்கு அறைகூவல் விடுத்து `அரன் திருவடி மறவாதீர்கள்' என்று வற்புறுத்தும் வாய்மை விளக்கல்லவா? `அதற்கு உரைப்பணி மிகமிக இன்றியமையாதது. அப்பணியை நம் ஆதீனப் புலவர்கள் செய்து முடித்தலே செந்தமிழ்ச்சொக்கர் திரு வுள்ளம்' இப்படி அருளாணை பிறந்தது எங்கள் குருமகாசந்நிதானத் திலிருந்து. 1953 ஆம் ஆண்டு குருபூசைத்திருநாள் வெளியீடாக முதல் திருமுறை ஆதீனப் பல்கலைக் கல்லூரியில் துணைத்தலைவராயிருந்த வித்துவான், திருவாளர். ச. தண்டபாணி தேசிகர் அவர்களால் குறிப்புரை எழுதப்பெற்று வெளிவந்தது. அடுத்து இவ்வாண்டுக் குருபூசைத் திருநாள் வெளியீடாக இரண்டாம் திருமுறைக் குறிப்புரை வெளிவருகிறது.

இரண்டாம் திருமுறை:

இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தசுவாமிகள் திருவாய் மலர்ந்த தெய்வத் தமிழ்த் திருமறையில் நடுவணதாக நின்று நனி பேரின்பம் பயப்பது. நூற்றிருபத்திரண்டு திருப்பதிகங்களை உடையது. ஆதியும் அந்தமும் `பீடுடைய பிரமாபுர மாகவே' பிறங்குவது, திருப்பூந்தராய் என்ற தெய்வப் பெயரோடு தோணிபுரத் தண்ணலைத் தோத்திரித்துத் திருப்புகலி என்ற தீந்தமிழ்ப் பெயரோடு பிரமாபுரமேவிய பெருமானின் பெருமைகளைப் பேசிமுடிப்பது. திருவருட் பெருக்கால் `உலகெலாம்' என்று தொடங்கி `உலகெலாம்' என்று நிறைந்த தொண்டர்சீர் புராணத்தை எண்ணச்செய்வது இத் திருமுறை.

திருவருள் வளம்:

எச்செயலும் ஈசன் துணையின்றி முடியாது, ஈண்டும் அவ்வாறே. திருவருள் வளமாக இருந்தது. அதனை எவ்வாறு உரைத்தல் இயலும்? செந்தமிழ்ச்சொக்கர் மணிவாசகரோடு மிகமிகத் தொடர்புகொண்டவர். மணிவாசகருக்காகப் பிட்டு உண்டார்; மண் சுமந்தார்; அடிவடுச் சுமந்தார்.

அவ்வாறு தொடர்புகொண்ட செந்தமிழ்ச்சொக்கர் இன்றும் இந்த மணிவாசகரோடு தொடர்புகொண்டு இலங்குகிறார். இரண்டாந் திருமுறைக்கு எழுதப்பட்ட இனிய - நயம் செறிந்த - அழகிய - வளமிக்க குறிப்புரை மாலையைச் சூடிக்கொண்டு அருள்மழை பொழிகின்றார்; அம்மட்டோ? குருஞானசம்பந்தரே அருளாணையிட மணிவாசகர் குறிப்புரை மாலை தொகுக்கிறார். என்னே திருவருள் வளம்! குருஞானசம்பந்தரும், மணிவாசகரும் இரண்டுக்கும் மேலாகச் செந்தமிழ்ச்சொக்கர் சுப்பிரமணியர் திருவருளுமாக நான்கும் சேர்ந்து முழுமதிபோல நிறைவுற்று விளங்குகிறது இக்குறிப்புரை.

குறிப்புரை ஆசிரியர்:

இரண்டாம் திருமுறைக்குக் குறிப்புரை எழுதுதலை மேற் கொண்டவர்கள் நல்ல அறிஞர். சைவசித்தாந்த சாத்திரங்களில் நுண்ணிய புலமைமிக்கோர். திருமுறைகளில் ஆழ்ந்த அநுபவம் உள்ளோர். சிவபூஜாதுரந்தரர். தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியராக விளங்குகின்ற புலவர், திருவாளர். முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்கள். திருமுறையாசிரியப் பெருந்தகையார்களாகிய சமயாசாரியர்களிடத்தில் மிக்க ஈடுபாடும், இடையறாப் பேரன்பும் உள்ளவர். இன்னோரை உரையெழுதுமாறு பணித்த எங்கள் குருமகாசந்நிதானம் அவர்களின் குலவுபெருங் கருணைக்குக் குவலயமும் ஈடாமோ?

அம்மட்டுமோ! பழைய இலக்கண இலக்கியங்களை ஆராய்ந்து எம்போன்றோர் மன இருள்போக்கி மாண்பொருள் முழுவதும் முனிவற அருளிய நல்லாசிரியர்; சைவசித்தாந்த ரத்நாகர மாய் விளங்கும் நல்லோர்; எழுத்தாற்றலும், பேச்சுத் திறமையும் மிக்கு, யாவருள்ளங்களையும் எளிதின் ஈர்க்கும் பெரியோர்,

இத்தகையோரது குறிப்புரை, ஆராய்ச்சி பூர்வமான திரு முறைக் குறிப்புரை, `தெய்வீகத் தமிழ் உலகத்துக்குத் தேவை! தேவை!' இதனை எழுதிய சான்றோருக்கும் அருள்வளம் ஈந்து அழகுற முற்று வித்த ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களுக்கும் மிக மிகக் கடமைப் பட்டிருக்கிறோம்.

குறிப்புரை நலங்கள்:

குறிப்புரையின் நலங்களை நடுவுநிலைமையோடு ஈண்டு ஆராய்ந்து காணுதல் அறிவுலகத்துக்குப் பெரிதும் பொருந்துமாதலின் என்னுடைய சிற்றறிவுக்கெட்டியவகையில் அதனைப் பற்றிய மாட்சிகளை ஈண்டுத் தொகுக்க எண்ணுகின்றேன்.

1. சொல் ஆராய்ச்சி தோன்ற உரையெழுதுதல்:

ஆசிரியர் திருமுறைக்கு உரையெழுதப் புகுங்கால் சொல்லாராய்வுணர்வோடு அழகுற எழுதுகின்றார். சொல்லின் பழைய உருவமும் அதுமருவிய திறமும் மாண்புறக் காட்டுகின்றார். அவ்விடங்கள் அறிஞர்க்குப் பெருவிருந்தாவன. அவற்றுட் சிலவற்றை ஈண்டு உணரலாம்.

1. `பின்னு செஞ்சடையிற் பிறைபாம்புடன் வைத்ததே' என்ற 137ஆம் பதிக முதற்றிருப்பாடலின் உரையில், `பாண்பு என்பது பாம்பு என்று திரிந்தது' பாண் - பாட்டு; பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு என்று எழுதியுள்ளார். இது ஒரு அருமையான சொல்லா ராய்ச்சி. `பு' விகுதி உடைமைப் பொருளிலேயே தமிழில் வரும். பொற்பு - பொன்னின் தன்மை உடையது என்றவிடத்துக் காணலாம்.

2. `உடையாய்தகுமோ இவள்உண் மெலிவே' (பதி. 154.1.) `உரையுலாம் பொருளாய் உலகுஆள் உடையீர், உடையானை யல்லாதுள்கா தெனதுள்ளமே' (பதி. 148.பா.5.) (பதி.140.) என்பனபோன்று உடையீர் என்று வரும் இடங்களிலெல்லாம் ஆசிரியர் `சுவாமீ' என்று உரையெழுதியுள்ளதன் நயம் உணரற்பாலது; வடசொற் பொருளறிந்து `சுவாமி என்பதற்கு உடையவன் என்பது பொருள்' என்று நம்மனோர்க்குக்காட்டும் ஆசிரியர் அறிவுநலனை என்னென்பது?

3. `கானயங்கிய தண்கழி' (பதி.140.பா.3.) என்ற விடத்து அயங்குதல் அசங்குதல் என்றதன் மரூஉவாகக் கொண்டுரைத்தலுமாம் என்றும்.

4. `விண்ணினிற் பிறை செஞ்சடைவைத்த வியப்பதே' (பதி.140.பா.5.) என்றவிடத்துப் `பிறை-பிறத்தலுடையது' என்றும்.

5. இப்பிறை என்றதன் காரணத்தையே `விண்ணினாலான பிறை' (பதி.143.பா.7.) என்றவிடத்து நினைவூட்டியும்,

6. 'தெங்குதுங்கப் பொழிற்செல்வம் மல்கும் திருச்சிக்கலுள்' (பதி.144.பா.5) என்றவிடத்து, `தெங்கு - தென்கு-தென்னை என்பதால் அதன் தொல்லுரு விளங்கும்' என்றும்.

7. இப்பதிகத்தேயே பா. 10-இல் `கட்டமண் கழுக்கள் சொல்லினைக் கருதாது' என்றவிடத்து, `அமண் - சமண்; க்ஷமண் என்பதன் திரிபு' என்றும்,

8. மழபாடி மழுவாடி என்பதன் மரூஉ என்றும் (பதி.145. பா.1.உரை.).

9. `பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை' (பதி.14.பா.2.) என்றவிடத்து, `மருமகன் - மருமான்' என்றானது போலப் பெருமகன் பெருமான் என மருவிற்று' என்றும்,

10. `இனிதனை ஏத்துவர் ஏதமிலாதாரே' (பதி.150.பா.3.) என்றவிடத்து, `இனிது+அன்+ஐ இன்புருவானவனை' என்றும்,

11. `தாரானே தாமரைமேல் அயன்றான் தொழும்' (பதி.151. பா.1.) என்றவிடத்து `அயன் - அஜன்; தோன்றாதவன் என்பது அடிச் சொற்பொருள்' என்றும்,

12. `அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்' (பதி.156 பா. 1.) என்றவிடத்து, `அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன் மரூஉ. இது புலவர் செய்துகொள்ளும் மரூஉச் சொற்களுள் ஒன்று. புலியூர் - புலிசை. மறைக்காடு - மறைசை, தொட்டிக்கலை - கலைசை, மறையூர் (திருவோத்தூர்) மறைசை என்பவை வழங்கி மருவாதன ஆயினும் புலவர் வழக்கில் உள' என்றும்,

13, `ஓடும் நதியும் மதியோடு உரகம்' (பதி.158.பா.2.) என்ற விடத்து, `உரகம் - பாம்பு, மார்பால் ஊர்வது' என்றும், (உரம் - மார்பு; கம் - ஊர்வது)

14. `நல்குரவும் இன்பமும் நலங்களவையாகி' (பதி.165.பா. 7.) என்றவிடத்து, ` நல்கூர்தல் - நல்க+ஊர்தல் என்னும் தொடர் நல் கூர்தல் என மருவிற்று' என்றும், (புரவலர் நல்கு மிடந்தோறும் அதனைப் பெறுதற்காக இரவலர் ஊர்ந்து செல்லுதலின் நல்க ஊர்தல் என்றனர் உரையாசிரியர்.)

15. மேற்பதிகத்தேயே பா. 3-இல் `நாவணவும் அந்தணன்' என்றவிடத்து `அம்+தண்+அன் - அழகும் குளிர்ச்சியும் உடையவன். அந்தத்தை அணவுதலை உடையவன் என்றாருமுளர்' என்றும்,

16. `சொற்றமறியாதவர்கள் சொன்ன சொலைவிட்டு' (பதி.167.பா.10.) என்றவிடத்துச் `சொற்றம் - சொல்லும் சொற்கள் சொல்+து+அம்' என்றும்,

17. `ஏடுமலி கொன்றை அரவிந்து விளவன்னி' (பதி.169 பா.1.) என்றவிடத்து, ஏடு - இதழ் இளை+து, எளை+து, ஏள்+து, ஏடு என்றும், (சிந்தாமணி 1552) - உரையை ஒட்டி இவ்வாறு ஏடு என்ற சொல்லின் நுண்பொருள் கொண்டு அதனைப் பிரித்துக் காட்டிப் புணர்த்தியிருப்பதும்,

பெரிதும் போற்றற் குரியதன்றோ?

18. `வேளாளர்' என்றவர்கள் வள்ளன்மையின் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரிற்றான்றோன்றி மாடமே' (பதி. 178.பா.3.) என்றவிடத்துக் தாளாளர், வேளாளர் என்ற சொற்களை ஆராய்ச்சி உணர்வோடு பிரித்துப் பொருள் கூறி `வேள்மண் என்றுகொண்டு உழவர் எனலுமாம்' என்றும்,

19. `அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே' (பதி182.பா.8.) என்றவிடத்து, `அத்தன்-அத்தை, ஆத்தான் - ஆத்தாள் என்பவை தந்தை தாயரைக் குறித்த பழையவழக்கு. அத்தை என்பது தாயைக் குறித்து இன்றும் வழங்குகிறது' என்றும்,

20. `பஞ்சின் மெல்லடி மாதராடவர்' (பதி.188.பா.6) என்றவிடத்து, பஞ்சு - பன்+து என்றதன் மரூஉ, பனுவல் என்பதற்கும் அதுவே பகுதி, பஞ்சினைப் பன்னுதல் இன்றும் உண்டு என்றும், `மஞ்சன்' மைந்தன் என்பதன் மரூஉ என்றும்,

21. `பரிதி இயங்கும் பாரிற் சீரார் பணியாலே' (பதி. 195. பா.5.) என்ற இடத்துப் `பரிதி - இதைப் பருதி என்றெழுதுவது குரிசில் என்பதைக் குருசில் என்றெழுதுவது போலும் பிழை' என்றும்,

22. பேரும் பொழுதும் பெயரும் பொழுதும்' (பதி. 196.பா.2) என்ற இடத்துப் `பெயர்தல் - மீண்டும் வருதல் பேர்தல் முதன்முதலாக இடம்விட்டு அசைதல்' என்றும்,

23. `துன்னுங் கடல் நஞ்சிருள் தோய்கண்டர் தொன்மூதூர்' (பதி.199 பா.1.) என்றவிடத்து, நெடுங்காலமாக உள்ள வெற்றிடத் தையும் அங்குத் தோன்றி நெடுங்காலமாக இருக்கும் ஒன்றனையும் காட்டித் தொன்மைக்கும் முதுமைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தியும்,

24. இப்பதிகத்தேயே பத்தாம் திருப்பாடலில், `கையார் சோறு கவர்குண்டர்களும்' என்றவிடத்து, சோறு - சொல்+து சொல் - நெல்......சோறு என்பதன் பொருள் சொல்லால் ஆனது என்றும்,

25. பதிகம் 208 பா.1. இன் உரையில், ` அருமகன் என்பதன் மருஉ அம்மான், அம்மஹாந் என்பதன் திரிபெனல் பிழை' என்றும்,

26. பதிகம் 220.பா.6இல் `பொன்னி என்றது நீரின் செம்மை யும் மணலின் பொன்மையும் பற்றி வழங்கிய காரணப்பெயர்' என்றும்,

27. `போரிடையன்று மூன்று மதிலெய்த ஞான்று' (பதி.222. பா.3.) என்றவிடத்து `ஞான்று - நாளன்று என்பதன் மரூஉ; இது கல்வெட்டுக்களில் பயின்றுள்ளது' என்றும்,

28. பதிகம் 226.பா.1இல் , அரத்துறை - அறத்துறை என்பதன் மரூஉ. அரன் துறை என்பது சிறவாது என்றும்,

29. `கேழல்பூழ்தி கிளைக்கமணி சிந்தும் கேதாரமே' (பதி.250.பா.5) என்ற இடத்துப், புழுதியின் மரூஉ பூழ்தி; பொழுது - போழ்து என்புழிப்போல என்றும்,

30. குரோதி என்பதன் திரிபு கோதி என்றும் (பதி.162. பா.7) எழுதியுள்ளார்கள். இவ்விடங்கள் ஆசிரியரின் சொல்லாராய்ச்சிப் புலமையையும், தமிழ் இலக்கியப் பயிற்சியையும் நன்கு விளக்கும்.

2. சித்தாந்த சாத்திரப்பயிற்சி:
ஆசிரியரின் சித்தாந்த சாத்திரப்பயிற்சியும் திறமும், இன்றியமையாத இடங்களில் இவர் எழுதும் எடுத்துக் காட்டுக்களால் புலனாகின்றன. அவற்றைக் கீழே காணலாம்.

1. பதிகம் 137.பா.3-ன் உரையில், யானையை `உரித்தது ஆணவமல நாசம்' என்பர்.மங்கைபங்கு; போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல்பற்றியும், உயிர்க்கு இச்சாஞானக்கிரியா பலத்தை மிக விளைத்தல்பற்றியும் ஆயிற்று' என்று எழுதுதலும்,

2. பதிகம் 143.பா.3-இன் உரையில் `ஒன்று முதல் எட்டு ஈறா கிய எண்ணுப்பெயர் அமைந்த அழகு உணரத்தக்கது' என்றுரைத்து, சிவஞான சித்தியார் 245ஆம், விருத்தத்தையும் சிவஞானமாபாடிய 6-ஆம் சூத்திர வசனமும், சிவஞான சித்தியார் 85,66,83 விருத்தப் பாக்களின் உரையையும்கொண்டு விளக்கி எழுதுதலும்,

3. `ஞானமாக நினைவார் வினையாயின நையுமே' (பதி. 144-1) என்புழி, ஞானமாக நினைவார் `பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே நேச மொடும் உள்ளத்தே நாடிப் பாத நீழற்கீழ் நீங்காதே நினைந்து நிற்பவர், என்று சித்தியார் 292-ஆம் விருத்தப் பாவை வசனமாக எழுதுதலும்,

4. `ஆளும் ஆதிப்பிரான் அடிகள்` (பதி. 146.பா.7) என்புழி `அடிகள் - பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய இரண்டு திருவடிகள். யான் எனது என்னும் இருசெருக்கும் அறுதலுமாகிய இரண்டெனலும் சாத்திர சம்மதம், `பரை உயிரில் யான் என தென்றற நின்றதடியாம்' என்று உண்மைநெறி விளக்கத்தை அடியாகக்கொண்டு உரை எழுதுதலும்,

5. இன்னும் (பதி.147.பா.1இல்) துகளறு போதக் கருத் தையும்,

6. (பதி.152.பா.9இல்) திருவருட்பயன் கருத்தையும்,

7. (பதி.155,பா.6-இல்) சிவஞானசித்தியார் 296, 323, கருத்துக்களையும்,

8. (பதி. 157.பா.7-இல்) சிவஞானபோதச் சிற்றுரைப் பகுதியையும் 304, 291 விருத்தக் கருத்தையும்,

9.(பதி.224.பா.4-இல்) சிவதருமோத்தரக் கருத்துக்களையும்,

10. (பதி. 24.பா.3-இல்) திருவுந்தியார் 7-ஆம் செய்யுளின் கருத்தையும் உள்ளடக்கி எழுதுதலும்,

ஆசிரியரின் பரந்துபட்ட சித்தாந்தப் பேரறிவையும், சித்தாந்த ரத்நாகரம் என்ற சிறப்புப் பெயரின் வாய்மையையும் நன்கு விளக்கி நிற்கின்றன.

3. இலக்கணநூற் புலமை:

ஆசிரியரின் இலக்கணநூற் புலமை, உரையில் காட்டும் இலக்கண நுண்கருத்துக்களாலும், நூற்பாக்களாலும் இனிது புலனாகும்.

1. `கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள' (பதி.137. பா.4.உரை)

2. `முந்நிலைக்காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங்காலத்து மெய்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்' (பதி.147.பா.6.உரை)

3. `நம்பும்மேவும் நசையாகும்மே' (பதி.147.8.உரை) (பதி,163.3.உரை)

4. தொல். மரபியல் ; சூ 37, 38. (பதி. 160. பா.6 உரை)

5. `கன்னமும் கோசமும் கையும் என்னும் இன்ன முத்தானத்து இழிவன மும்மதம்' இது பொருட்டொகை நிகண்டு. (பதி.164, பா. உரை)

6. `ஐம்பாலறியும் பண்பு தொகுமொழியும் புணரியல் நிலையிடை உணரத்தோன்றா' (பதி.258. பா.3)

7. `இல்லென்கிளவி இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும் ஐயிடைவருதலும் தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே' (பதி.195. பா.9.)

இவ்வாறு இன்றியமையாத இடங்களில் தொல்காப்பியச் சூத்திரங்களையும் அவற்றின் உரைப் பகுதிகளையும் நினைவுறுத்தி உரையெழுதிச் செல்லுதல் அறிவாளர்க்குப் பெருவிருந்தாம். ஆண்டாண்டுப் பாடலில் வரும் சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு எழுதிச் செல்லுதலும் இவரது இலக்கணப் புலமையை எடுத்துக் காட்டும்,

எடுத்துக்காட்டாக, பதிக எண்கள் முறையே 137,140, 142,161,173,176,204, என்னுமிவற்றிலும் பிறபதிகங்களிலும் ஆசிரியரது இலக்கணக் குறிப்புகளைக் காணலாம்.

அணிநூல்:

அணி இலக்கணத்தில் ஆசிரியர்க்குள்ள புலமையைத் தண்டியலங்கார உரைப்பாடலாகிய,

"சீலத்தால் ஞானத்தால் தோற்றத்தால் சென்றகன்ற

காலத்தால் ஆராத காதலால்-ஞாலத்தார்

இச்சிக்கச் சாலச் சிறந்துஅடி யேற்கினிதாம்

கச்சிக்கச் சாலைக் கனி"

என்பதனை 177-ஆம் பதிக 9-ஆம் பாடல் உரையில் எடுத்தாளுவ தாலும், இன்னும் உரிய இடங்களில் பாடலில் உள்ள அணி விசேடங் களை விளக்கிச் செல்வதனாலும் புலனாம்.

4. வடநூலறிவும் வடசொல்லாட்சியும்:

ஆசிரியரின் வடநூலறிவு ஆகமசாரமாகிய திருமுறைக் குறிப் புரையின் இடையிடையே தெற்றெனப் புலனாகின்றது. 152 -ஆம் பதிகத்து 6 ஆம் பாடல் உரையில்,

"மொழியானை முன்னொருநான் மறையா றங்கம்

பழியாமைப் பண்ணிசையான பகர்வானை"

என்ற இடத்து, பிருகதாரணியோப நிஷத்து 4,4,10,6,5,11 ஆம் சூத்திரக் கருத்துக்களை விளக்குவதனாலும், 189-ஆம் பதிகத்து 4-ஆம் பாடல் உரையில் உருவவழிபாட்டின் சிறப்பைச் சர்வசுரோத சங்கிரகத்துச் சுலோகமொன்றால் விளக்குவதனாலும்,

"பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்டு

உரந்தோன்றும் பாடல்கேட்டு உவகையளித்தீர்"

என்ற இடத்து, உரந்தோன்று பாடல் என்றது சாமவேதமே என்பதனை விளக்க வான்மீக ராமாயணத்து வாக்கியங்களை(பதி.190-8) எடுத்தாளுவதனாலும், பதி. 250. பா.4-ன் உரையில், `உள்ள மிக்கார் குதிரை முகத்தார்', என்பதன் உரையில் குதிரை முகத்தார் கின்னரர்கள் என்பதனை விளக்க அமரகோசம் என்ற வடநூலின் முதற்காண்டத்து 74ஆம் சுலோகம் காட்டி விளக்கிச் செல்வதனாலும், 248 ஆம் பதிகம் 5 ஆம் பாடல் உரையில் "கையணிம்மலரால் வணங்கிட வெய்யவல் வினை வீடுமே" என்புழிக் கைநிறையப் பூத்தூவி வழிபடுதலை வடமொழிச் சான்று காட்டித் தெளிவுறுத்து வதனாலும், இன்னோரன்ன பிறவற்றாலும் ஆசிரியரின் வடநூலறிவு ஒருவாறு புலனாம்.

இவர்தம் உரையில் செந்தமிழ்ச் சொற்களே நிறைந்திருக்கும். இருப்பினும் ஆண்டாண்டு வடசொல்லாட்சியும் உண்டு. உடையாய் என்பதனைச் சுவாமி என்றும், அரவணியன் என்பதனைச் சர்ப்பாபரணன் என்றும், வினையைக் கர்மம் என்றும், முக்கண்ணினன் என்பதனைச் சோம சூரியாக்கினி நேத்திரங்களை உடையவன் என்றும், மருந்து என்பதனை பவரோக வைத்யநாதன் என்றும், அரவா என்பதனை ஹரவா என்றும், நயன் என்பதனை நீதி சொரூபன் என்றும், பொருப்பின் மங்கை என்பதற்கு இமாசல குமாரி என்றும், அறவன் என்பதற்குத் தருமரூபி என்றும், வாய்மையர் என்பதற்குச் சத்தியரூபர் என்றும், தக்கன் என்பதற்குத் தக்ஷன் என்றும், உரையில் பல இடங்களிலும் தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் காணுமிடத்து வடசொல்லாட்சியையும் சிறுபான்மை கையாண்டுள்ளார். இது இவர் வடமொழியின் பால் தமிழோடொத்த பெருமதிப்பு வைத்துள்ளவர் என்பதனைத் தெளிவுற விளக்குவ தாகும்.

5. சோதிடநூற் புலமை:

சோதிடம் நம்நாட்டின் தொன்றுதொட்ட கலை. வானத்து விண்மீன்களைக்கொண்டு காலத்தை - வாழ்வைக் கணக்கிட்ட கலை இது.

"மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்

தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்"

என்கிறது புறநானூறு (117). மைம்மீன் என்பது சனியை. சனி புகைதலாவது இடபம், சிங்கம், மீனம் இவற்றோடு மாறுபடுதல். இந்த மூன்றனுள் சனியின் பகைவீடாகிய சிங்கராசியில் சனிபுகின் உலகிற்கே பெருந் தீங்குவிளையும் என்பது சோதிட நூற் கொள்கை. இதனைத் தமிழ்முன்னோர் தெரிந்திருந்தனர்.

"கரியவன் புகையினும் தூமம் தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்"

என்று இசைக்கிறது சிலம்பு (10-102.103.). எனவே சோதிட நூல் அறிவு தமிழர்க்கு மிக்கிருந்தது என்றறியலாம்.

நம் உரையாசிரியரும் தமிழர்க்குரிய இப்பழங் கலையில் சிறந்த புலமைமிக்குள்ளவர் என்பதனைக் குறிப்புரை கூறுகின்றது.

221-ஆம் பதிகமாகிய `வேயுறு தோளிபங்கன்' எனத் தொடங்கும் பதிகத்துரை இதனை நன்கு காட்டும். திருமறைக்காட்டில் பாலறாவாயர் இருந்த காலத்துப் பாண்டியன் மாதேவியார் வேண்டுகோளுக்கிசைந்து ஆண்டெழுந்தருளுதற்குத் தூண்டிய மனத்தினராய்ப் புறப்படுங்கால் நாவரசப் பெருந்தகையார், அமணர் கொடியர்; உறுகோள் தாமும் கொடிய என உணர்த்தப், பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுதணையாது என்று கூறியருளிப் பின்னர்த் திருவாய் மலர்ந்தது இத்திருப்பதிகம். இதனுள் 2-ஆம் திருப்பாடலில்,

"ஒன்பதொடு ஒன்றொடுஏழு பதினெட்டொ டாறும்

உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே"

எனவரும் வரிகட்குள்ள ஆசிரியர் உரை சீரியதாகும்.

`ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை, பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி என்ற ஆகாத விண்மீன்களும், இன்னும் ஆகாத திதிகளும் கிழமைகளும் அடியார்க்கு நல்லனவே' என்று ஆசிரியர் எழுதுதலும்,

"ஆதிரை, பரணி, ஆரல் ஆயில்யமுப்பூரம் கேட்டை" என்ற சோதிடநூற் பாட்டை உதாரணமாகக் காட்டி விளக்குதலும், இப்பதி கத்து இறுதித் திருப்பாடலில் கோள், நாள் என்பவற்றின் பொருளைத் தெளிவுபடுத்தியிருத்தலும் ,

ஆசிரியரது இத்துறைப் புலமையை நன்கு விளக்கும்.

6. புதியன பொருள்கள்:

1. `நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டிசை

பாடும் ஞானம்வல்லார் அடிசேர்வது ஞானமே'

(பதி.138-11) என்பதன் உரையில், `சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்குக' என்ற தொடரில் தமிழ் என்பது திருமுறைகளையே குறிக்கும் என்று தெளிந்து எழுதுதலும்

2. செந்து என்பது ஒரு பெரும்பண் என்று எழுதுதலும் (பதி. 139-10)

3. இசை - வேதாகம முழக்கம்; புகழ் எனல் பொருந்தாது பதி. (140-10) என்று வரைதலும்.

4. கலிகடந்த கையான் என்றது திருஞானசம்பந்தர் எரி ஓம்பும் திருக்கையால் அளவற்றோரது வறுமை நீக்கிய உண்மையை உணர்த்தி நின்றது என்று எழுதுதலும் (பதி. 142-12)

5. காலகாலர் என்பதற்கு இயமனுக்கும் கால முடிவைச் செய்பவர் என்று எழுதுதலும் (பதி. 143-2.)

6. மேற்கண்ட பாடலிலேயே ஞாலம் என்பது `தொங்குவது' என்ற காரணப் பொருளதாய் முன்னோரது பூகோள ககோள ஞானத்தை உணர்த்துவது அறிக என எழுதுதலும்,

7, பிறை - பிறத்தலுடையது எனப்பொருள் காண்டலும் (பதி. 143-7)

8. ஆனைந்துள் பால், தயிர், நெய், என்ற மூன்றே சைவா சாரியர் கொண்டாடியன என நுண்பொருள் காணுதலும் (பதி. 146.5.)

9. ஏத்தல்-இறைவன்புகழை எடுத்தோதுதல். எடுத்தலோ சையே தோத்திரங்களுக்கு உரியது என்று எழுதுதலும் (பதி.146-7)

10. மாந்தர் மனிதரிற் சிறந்தார் எனப் பொருள் கோடலும் (பதி. 147-6.)

11. `கந்தண்பூங் காழியூரான் கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல' (பதி. 148- 11.) என்ற இடத்துக் கலிக்கோவை என்பதற்கு ஒலிமாலை எனவும், `ஒண்கலியைப் பொன்றும் கவுணியன் அருளிய கோவையாகலின் கலியைத் தீர்க்கும் கோவை எனலுமாம் எனவும், கலியுகத்துக்கோவை கலிவிருத்தக்கோவை எனல் பொருந்துமேற் கொள்க எனவும் அழகுற எழுதுதலும்.

12. `இமையோர் தொழும் வேதனை (பதி. 149-3.) என்புழி இமையோர் தேவர் என்று பொருள் கூறல் சைவ நூல்களுக்குப் பொருந்தாது. கண்ணிமைத்துக் காணாத யோகியர், விழித்தகண் குருடாத்திரிவீரர் என்பதே உண்மைப் பொருள் என்று தெளிவுறுத்தலும்.

13. `கண்ணனும் நான்முகனுங் காணா விண்ணினை என்புழி' (பதி. 150-9) `விண் திருச்சிற்றம்பலம் என்று எழுதுதலும்,

14. மரியார் - திருவடி வழிபாட்டால் பிறவி நீங்கியவர் (ஜீவன்முக்தர்) என்று எழுதுதலும் (பதி.154-9.)

15. `தடுமாறு, வல்லாய் தலைவா! மதியம்' (பதி. 157-7) என்ற இடத்துத் `தடுமாறு வல்லாய் உயிர்கள் உன்னை உணர்வதில் தடுமாறுதலைச் செய்யவல்லவனே என்றும், இச்சொல்லைத் தட்டு மாறுதல் என்பதன் மரூஉவாகக்கொண்டு அஃது ஈண்டுத் திருக் கூத்தைக் குறித்து நின்றது எனலுமாம்' எனப்புத்துரை காண்டலும்,

16. `வண்டிரைமதிச்சடை' என்புழி (பதி.165-2) புனலில் உள்ள வளம் பற்றியதாகவும், அலையின் வளம் பற்றியதாகவும் ஈருரை காண்டலும்,

17. `புடங்கருள் செய்தொன்றினை புறம்பயம் அமர்ந்தோய்' என்புழி (பதி. 166-9) புடம்+கருள்+செய்து எனப்பிரித்து இருள் மறைக்கப்பட்டாற்போல அறியாமையால் மறைக்கப்பட்டு என்றும் புள்+தங்க+அருள்செய்து என்று பிரித்தும் இரு புதுப்பொருள் காண்டலும்,

18, `பருத்துருவதாகி விண் அடைந்தவன்' என்புழி (பதி. 159-9) பிரமன் ஒரு கற்பத்தில் கழுகாகி முடி தேடினான் என்ற திருமுறைப் பேருண்மையைச் செவ்விய முறைநின்று ஆதாரம் காட்டித் தெளிவுறுத்தலும்,

19. `நல்லார்பயில்காழி' என்புழி (பதி. 171- 11) நல்லார் ஞானியர் என்றுரைத்தலும்,

20. `இது நன்கு இறைவைத்து அருள்செய்க' என்புழி, (பதி. 173-1) `பின்வருவன வினாக்களாதலின் அவற்றிற்குச் `செவ்வனிறையோ இறைபயத்தலோ செய்க' என்றருளினார் என்று புத்துரை காண்டலும் `இதற்குப் பிறர் இயையாது பொருள் உரைத்தார் என்பதும் இப்பொருள் மிக்க மகிழ்ச்சி விளைவிப்பதும் ஈண்டு உணரத்தக்கன.

21. தேங்கனி அரியதொரு சொல்வழக்கு என்றலும் (பதி. 174-3)

22. `ஏழைபங்காளன்' என்பதற்கு உமையொருபாகன் என்பதே பொருள் என்றும், வறியர் பங்கை ஆள்பவன் என்று கூறுதல் மாபாதகம் என்று எழுதுதலும்,

23. `தள்ளாய சம்பாதி' என்புழி (பதி. 179-1) தாழ்ந்த பறவைகள் எனக்கருதித் தள்ளிவிடத்தகாத என்றும், தள்ளுதல் ஆனஎனப் பொருள் எழுதுதலும்.

24. `பிச்சை பிறர் பெய்யப் பின்சாரக் கோசாரக்' என்புழி (பதி.180-10) கோசார - தலைமை தன்னைப் பொருந்த என்றும், யானை சார என்றும் பொருளெழுதுதலும்,

25. `பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்' (பதி. 183-10) என்புழிப் பெருஞ்சாந்தி என்பது பவித்திரோற்சவமே; கும்பாபிடேகம் அன்று என்று புதுப்பொருள் உரைத்தலும்,

26. ` கொழுநற் றொழுதெழுவாள்' என்புழி (பதி.188-5.) படுக்கையின் நின்று தொழுதுகொண்டே எழுதல் செய்வாள் என்று பொருள் காணலும்,

27. `துன்னும் கடல் நஞ்சு இருள் தோய்கண்டர் தொன்மூதூர்' என்புழி (பதி.199-1.) தொன்மை முதுமை என்ற இரு சொற்களின் தன்மையைவிளக்கி அழகுற உரையெழுதுதலும்,

28. `தமிழ்க்காழி (பதி.209-5) என்றதால் ஷ்ரீ காளிபுரம் என்றதன் திரிபு சீகாழி என்ற கூற்று ஆராயத்தக்கது' என்று குறிப்பாக அது பொருந்தாது என்றுரைத்தலும்,

29. `மதிலெய்த ஞான்று' என்பதற்கு மதிலெய்த நாளன்று என்று நுண்ணிதின் பொருள்காண்டலும், (பதி. 222-3.)

30. `சொன்னவாறு அறிவார்' என்பதன் கருத்தை விளக்கிய திறனும் (பதி. 234-1) பகலில் துருத்திவாசமும் இரவில் வேள்விக்குடி வாசமும் பரம்பொருளுக்கு உண்டு என்று எழுதுதலும் (பதி. 234-4)

31. `கலங்கொள் கடலோதம் உலாவு கரைமேல் வலங் கொள்பவர் வாழ்த்திசைக்கும் மறைக்காடா, என்புழி, திருமறைக் காட்டில் வழிபடும் முறைமை ஏனையதலங்களினின்று வலம் வருதலின் வேறுபட்டது. திருக்கோயிலை வலம் வரல் ஏனைய தலங்களில். திருமறைக்காட்டையே வலம் வருதல் இத்தலச்சிறப்பு என்று பொருள்கண்டுள்ளதும் முதலிய இடங்களைச் சிந்தித்துப் பார்த்தால் ஆசிரியருடைய நுண்ணறிவும், உரைநலனும், புதிய பொருள் வகுக்கும் புலமையும், பிறவும் இனிதுவிளங்கும்.

7. தருக்கநூற் புலமை

வடமொழியிலும் தமிழிலும் உள்ள தருக்க நூல்களை ஒரு சேரக்கற்ற நம் ஆசிரியர், பொருள் எழுதுங்கால், அவற்றைப் பற்றிய ஐயங்களைத் தாமே எழுப்பிக்கொண்டு அதனைத் தெளிவாக்கிச் செல்வர்; குறிப்புரையின் பல பகுதிகளில் ஆசிரியரது இவ் வழக்கத்தைக் காணலாம்.

எடுத்துக்காட்டாகத் திருவலஞ்சுழிப் பதிகத்து (பதி. 138) இறுதி யில், `சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக' என்ற தொடரில் `தமிழ்' என்றது திருமுறைகளையே குறிக்கும்; பழந்தமிழ்நூல்களை யும், தமிழ் மொழியையும் குறித்ததன்று என்று கூறி, அதற்குரிய காரணத்தையும் தாமே விளக்கி ஐயத்தைத் தெளிவித்துவிடுகின்றார்.

1. `அவை வேறு பல சமயக் குறிப்புக்களையும் கொண்டிருத் தலாலும், 2. சைவத்தோடு நெருங்கிய தொடர்பில்லாமையாலும், 3. தமிழில் பிறசமய நூல்கள் பல உள்ளமையாலும் அவற்றை ஈண்டுச் சைவத் தோடு சேர்த்து வாழ்த்தினார் என்றல் பொருந்தாது, சைவமும் சைவத்தைச் சார்ந்த தமிழும் தழைத்து இனிது ஓங்கவேண்டும் என்று பொருள்காணல் எத்துணை அழகாக உள்ளது! திருவான்மியூர்ப் பதிகத்துத் `தோனயங்கமராடையீனிர்' என்பதற்கு (பதி.140-3) உரைகாணுங்கால் அத்தொடருக்குள்ள பொருளை அறிதலில் உள்ள இன்னல்களைத் தருக்க நூன்முறையில் ஆசிரியர் வரைவது கழி பேருவகை பயப்பதாகும்.

`தோனயங்கமராடையினீர்' என்பதற்குச் செம்பொருள் கொள்ளல் எளிதன்று. தோல் ஆடை இரண்டற்கும் இடையில் உள்ளதைப் பிரித்தல் எவ்வாறு? நயம் கமர் என்னின் கமர் என்பதன் பொருள் யாது? நயங்கு அமர் என்னின் நயங்கு என்பது தமிழில் இல்லை. தோன் எனப்பிரித்தல் ஒவ்வாது?

திருச்சிக்கற் பதிகத்துத் `தெற்றலாகிய தென்னிலங்கைக் கிறைவன்`, என்ற தொடர்க்கு (பதி. 144-8) உரைகாணுங்கால், தெற்றல் - அறிவில் தெள்ளியவன் என எழுதி, அதற்கு இலக்கிய மேற் கோளுண்டோ என்ற வினாவைத் தம்முள் எழுப்பிக் கொண்டு அதற்குச் சான்று பகர்வார்போன்று `நடை கற்ற தெற்றல்' என்ற திரு வாய்மொழி வரியை எடுத்துக் காட்டி, பிறர்கூறும் புதுப்பொருளாகிய மாறுபாடுடையவன் என்பது ஆதாரமில்லாத பொருள் என்று ஆணித்தரமாக முடிவு காட்டியிருப்பது அறிவாளர்க்கோர் பெரு விருந்தாம். இன்னும் அவ்விடத்தே ஆசிரியர் வற்புறுத்தும் கருத்து மிக மிகப் போற்றத் தகுந்தது. அச்சீரிய வரியினைக் காண்க.

`இராவணன் ஒழுக்கத்திற் பிழைத்தவனே, ஆயினும்

அறிவிற் சிறந்தவன்'

திருக்கோழம்பப் பதிகத்து `ஏதனை ஏதமிலா இமையோர் தொழும் வேதனை' என்றவிடத்து (பதி.149-3) உரை கொள்ளுங் கால், `இமையோர் என்பதற்குத் தேவர் என்று பொருள் கூறுவர், இது சைவநூல்கட்கு ஒவ்வாது' என்று முன்னர்க் கூறி, பின்னர் அவ்வாறு பிறர்பொருள் கூறுவதன் காரணத்தை விளக்குவாராய் `இமைத்த லில்லாதவர் என்னும் சாமான்யம் பற்றி இவ்வாறு கூறுவர்' என்று தெளிவுறுத்திப் பின் தாங்கொண்ட பொருளை நிறுவுவாராய், `இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன், என்பதில் தேவர்க்கு அன்பன் எனல் பொருந்துமோ? கண் இமைத்துக்காணாத யோகியர், `விழித்தகண் குருடாத்திரி வீரர் என்பதே உண்மைப்பொருள்' என்று இறுதியில் உறுதியாக இயம்பி யுள்ளமை எண்ணுந்தொறும் உரைகாரர் உலகுக்கு இறும்பூது பயக்கும் இடமாம்.

திருவாக்கூர்த் தான்றோன்றிமாடப் பதிகத்துக் `காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்' (பதி.178-2) என்ற விடத்துச் சிறந்தமுறையிலே ஆசிரியர் உரைகண்டுள்ளார். வேண்டுதல் வேண்டாமை (விருப்பு வெறுப்பு) அற்ற கடவுளுக்கு இவ்வாறு காதல் உண்டென்ற குற்றம் தோன்றும் என்று தாமே தடை எழுப்பிக்கொண்டு, பின் அது பொருந்தாவாற்றையும் தாமே, `அன்பர்க்கு அன்பன், அல்லாதார்க்கு அல்லன்' என்புழிப் பக்குவ அபக்குவங்களைக் காரண மாகக் கொள்ளல்போற் கொள்க. ஆண்டவனுக்கு வேறுபாடில்லை; என்று நிறுவியிருக்கும் அறிவின் திறத்தை என்னெனப் போற்றுவது!

`கொன்றையான் காதலித்த கோயில்' என்ற தொடரில் ஆசிரியர் தம்முடைய நுண்ணறிவால் தடையை எழுப்பி விடைகாண்கின்ற இந்த இடம், தொல்காப்பிய மரபியல் `வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்` என்ற 649ஆம் சூத்திரத்தில், பேராசிரியர் `வினையின் என்ற வேற்றுமை, நிற்பதன் நிலையும் நீங்குவதன் நீக்கமும் கூறுமாகலின் ஒரு காலத்து வினையின்கண் நின்று ஒருகாலத்து நீங்கினான் போலக் கூறியது என்னையெனின், என்று தம் நுண்ணறிவுத் திறத்தால் எழுப்பும் அழகிய தடைப்பகுதி அமைந்த உரைப்போக்கை நினைப்பூட்டுகிற தன்றோ? இதுபோன்று தருக்கநூல் முறையில் உரை எழுதுதலே தமிழர் கண்ட உரைநெறியாம்.

திருப்பாண்டிக் கொடுமுடிப் பதிகத்துத்

`தனைக் கணிமாமலர் கொண்டு தாள்தொழுவாரவர் தங்கள்

வினைப் பகையாயின தீர்க்கும் விண்ணவர்'

(பதி. 205-2) என்புழி, விண்ணவர் என்பதற்கேற்ப முதலில் `தமை' என்று இருத்தல் வேண்டும்; என்று கூறி, ஆசிரியர் திருவாக்கில் அமைதி காண்பாராய், ஒருமைக்கும் பன்மைக்குமுரிய கடவுளைக் கூறலின் குற்றமாகாது? என்று அழகுபெறக் கூறியுள்ள இடம் நெஞ்சை அள்ளும் தீஞ்சுவை மிக்கது.

8. மாறுபாடுநீக்கும் மாண்பு:

மாறுபாடு தெரிந்து கொள்ளவேண்டிய சொல்வழக்குகள் ஆங்காங்கு ஆளப்படும்போது, அவற்றைத் தெளிவாக்கி ஐயம் போக்குவதும் ஆசிரியர் வழக்கமாகும். உதாரணமாக, உணவும், இரையும் வெவ்வேறு என்பதனை (பதி. 137-5) யும், `ஈசன் இந்திர நீலபர்ப்பதம். கூசி வாழ்த்துதும் குணமதாகவே' என்ற சம்பந்தர் திரு வாக்கிலுள்ள கூசுதலும், `நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து ஈசர் தம்மைக் கூசன் காண் கூசாதார் நெஞ்சுதஞ்ே\u2970?' என்ற அப்பர் திருவாக் கிலுள்ள கூசுதலும் வேறு வேறானவை என்பதனை (பதி. 163-4,)யும், குழையும் தோடும் வெவ்வேறானவை என்பதனை (பதி. 164-2)யும், மறை எனப்படுவதும் வேதம் எனப்படுவதும் வெவ்வேறாக விளங்குபவை என்பதனை (பதி. 170-9)யும், தேய்ந்து மலியும் பிறையும் சிவபெருமான் திருமுடிமேற் பிறையும், வேறானவை என்பதனை (பதி. 181-5) யும் ஆர்திரையான் என்பதும் ஆதிரையான் என்பதும் ஒரு பொருளவே என்பதனை (பதி. 183-4) யும், உவகை என்பதே உகவை எனப் புள்ளி மாறி நின்றது என்பதனை (பதி. 196-7)யும், தொன்மையும் முதுமையும் வெவ்வேறு தொல் பொருள் உடையன என்பதனை (பதி.199-1)யும், ஆசிரியர் அழகு பெற விளக்கிச் சிந்தனையில் `அதுவோ இதுவோ' எனத்தோன்றும் ஐயங் களை அறுத்து, மாறுபாடு நீக்கியுள்ள மாண்பு சொல்லுந் தரத்ததன்று.

9. பதசாரம் எழுதுதல்:

பழைய இலக்கியங்களுக்கு உரைகண்ட அறிஞர்கள் பதசாரங் காண்பதனை ஒன்றாகக் கொண்டிருந்தனர். சொல்லின் சாரத்தைப் பிழிந்து வடித்துப் பயில்வோர்க்குத் தரப்படுவதே பதசாரம். நம் ஆசிரியரும் தம் குறிப்புரையில் ஆங்காங்குத் தேவைப்படும் இடங்களில் அழகாகப் பதசாரம் தந்துள்ளார்.

எடுத்துக்காட்டாகச் சில இடங்களை ஈண்டுக் குறிப்போம்; `திரிகரணங்களாலும் ஆகும் வினைகளை அத்திரிகரணங்களாலும் தீர்க்கும் வழிகள் தியானம், தோத்திரம், நமஸ்காரம், பூஜை முதலியவை. அவற்றுள் தியானமே உத்தமமாகலின் `உள்க வல்லார் வினை ஒழியும்' என்று அருளினார். (பதி. 150-5)

`வெள்ளத்தில் மிதந்த வரலாறுபற்றிக் `கடலார் வேணுபுரம்' என்றார். (பதி. 153-1)

காவிரி நீர் நாட்டு வளத்திற்கே பெரிதும் பயன்பட்டுக் கடலிற் சேர்வது மிகச் சிறிதேயாகலின் பாயும் என்னாது "மேவும்" என்றார் (பதி. 174-1)

இன்னோரன்ன பல இடங்களில் ஆசிரியரது பதசாரம் எழுதும் மாண்பு நமக்குப் புலனாகிறது. இதன்மூலம், தேவாரத்தைப் பாடியருளிய சமயாசாரியரது திருவுள்ளம் எப்படியிருந்திருக்கும் என்ற நல்ல சிந்தனைக்குரிய நல்லெண்ணம் உருவாகிற தன்றோ?

10. இலக்கியப்பயிற்சி:

உரையாசிரியரின் இலக்கியப் பயிற்சியை அவர் உரையில் கையாளும் இலக்கியப் பகுதிகளாலும், இலக்கியப் பகுதிகளை உரை நடையாக எழுதிக் காட்டிச் செல்லும் இடங்களாலும் அறியலாம். சங்க இலக்கியங்களில் புறம், அகம், கலி, குறுந்தொகை, பரிபாடல் முதலியவையும், சித்தாந்த சாத்திரங்களில் சித்தியாரும், முத்தி நிச்சயமும், சோமசம்புபத்ததி, சிவதருமோத்தரம், சிவஞான போதச்சிற்றுரை முதலியவையும். திருமுறைகளில் ஏனைய திரு முறைகளிலிருந்து எடுத்தாளப்படும் ஒப்புமைப் பகுதிகள் முதலியன வும் ஆசிரியரின் இலக்கியப் பயிற்சியைக் காட்டும் ஆதாரங்களாகும்.

உரை காண்பது என்பது ஒரு கலை, ஆழ்கடலிலே மூழ்கி அழகு முத்தை எடுத்து அவனிக்கு முன்னே அணிபெற வைப்பது போன்ற அருங்கலை அது. பரந்து ஆழ்ந்த இலக்கியப்பயிற்சியும், இலக்கணப் புலமையும், நுண்மாண் நுழை புலமும் உடையார்க்கன்றிப் பிறர்க்கு அது வாய்க்காது என்பதனைத் தெளிவாக்குகிறது. ஆசிரியரின் அழகுபொதிந்த குறிப்புரை.

11. நன்றிமறவா நன்னயம்:

செய்ந்நன்றி மறவாமை செந்தமிழ்நாட்டின் விழுமியபண்பு. நன்றிமறக்கும் முடத்தெங்குகளை நம் நாட்டில் எங்கும் காண இயலாது, அதனாலன்றோ வள்ளுவரும் இதனை ஒரு அதிகாரப் பொருளாக்கினார்! கம்பன் தன்னையாதரித்த சடையப்பரைத் தன் கவிதையில் வைத்து வாழ்த்திசைத்தான்! சங்ககாலக் கவிஞர்கள் தம்மை ஆதரித்த பெருமன்னரை - அவர்தம் நாட்டை - உவமையின் வாயிலாகவும், பிறவாறாகவும் எடுத்துப் பலபட ஏத்தித்தம் நன்றி மறவா நன்னயத்தை நன்கு புலப்படுத்தினர்! இந்தக் கவிஞர் மரபிலே- பொய்யடிமை இல்லாப் புலவர் குழுவிலே - திகழும் நம் உரை யாசிரியரும் தம்நன்றி மறவா நன்னயத்தை நன்கு புலப்படுத்தி யுள்ளார்.

திருமுறைக்கு உரை எழுத ஆதரவுதந்த தருமையின் 25-ஆவது குருஞானசம்பந்தரை - தமிழ்நாட்டின் ஞானவிளக்கை - தவநெறிக்குன்றை - தமிழ் வளர்க்கும் ஆரமுதை - செந்தமிழ்க் குருமணியைத் தக்க இடத்தில் போற்றிப் புகழ்ந்துள்ளார்; திருக்கடவூர் மயானத்துப்,

`பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார்

ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்' (பதி. 216-7)

என்றவிடத்து, தவத்பததிரு குருமகாசந்நிதானமவர்கள் இப்பாடலுக்குக் கூறியருளிய விளக்கத்தையும், ஆசைதீரக்கொடுப்பார் என்ற தொடர்க்குக் கூறியருளிய நயத்தையும் போற்றிப் புகழ்ந்துள்ளார். இஃது ஆசிரியர் திரு.முத்து.சு.மாணிக்கவாசக முதலியார் அவர்கள் குருமகாசந்நிதானம் அவர்களது திருவருள் வளத்தில் தோய்ந் திருக்கும் மாண்பும் பணிவோடு கூடிய நன்றிமறவாப் பாங்கும் கொண்டவர்கள் என்பதனைத் தெளிவுறுத்தும்.

வாழிய வையகம்:

குறிப்புரை மாட்சிகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கிக் கொண்டே போவோமானால் காலமும் கருத்தும் விரியும். `உரைப் போர் உள்ளக் கருத்தினளவே பெருமை' என்பது வல்லார் வாய் மொழி. எனவே விரிவஞ்சி இவ்வளவில் நிறுத்துகிறேன். இன்னோ ரன்ன மாட்சிகள் பலவும் செறிந்த மாற்றுயர்ந்த பசும் பொன்னை வார்த்து நல்லணி ஆக்கினாற் போன்ற - அழகு பொங்கிப் புது நலம் துளிர்க்கும் குறிப்புரையைத் தக்க தமிழ்ப் பேராசிரியரின் வாயிலாகத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தருளிய எங்கள் குருமகாசந்நிதானமவர்கள் பெருங்கருணைத் திறத்தை என்னெனப் பேசுவது! `குறிப்புரையால் குவலயம் குறிக்கோளை உணர்ந்து தெய்வீக உணர்வு கொள்ளட்டும், என்ற அவர்கள் திருவுள்ளக் குறிப்புக்குத் தமிழ்நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

தருமைத் திருமடம் இன்று திருமுறை வளர்ச்சிக்குப் பெருகிய தொண்டு செய்து பேணுமாபோல், பண்டும் `மிகு சைவத்துறை விளங்கத்' திருமுறைப் பணியும் செய்துளதென்பதனை அறிவுலகம் அறியும். இன்றைக்குச் சற்றேறக்குறைய அறுபதாண்டுகளுக்கு முன்னே, விசய ஆண்டு சித்திரைத் திங்களில், தருமை ஆதீனத்துத் தவப்பெருந்தலைவராக வீற்றிருந்தருளிய தவத்திரு சிவஞான தேசிக மூர்த்திகள் அருளாணைப்படி செந்தில்வேலு முதலியாரால் தலமுறைப் படி அடங்கன் முறையைத் தமிழ்த்திருநாடு தவமெனப் பெற்றது.

தருமைத் திருமடத்தின் ஞானபுத்திரமடமாகிய திருப்பனந் தாட் காசிவாசி இராமலிங்கசுவாமிகள் அருள்பெற்று விஷுஆண்டு மார்கழித் திங்களில், மற்றொரு அடங்கன்முறைப் பதிப்பு ஞான சம்பந்தப் பிள்ளையால் செந்தமிழ்த் திருநாட்டுக்குக் கிடைத்தது. பல்லாண்டுகட்குப்பின் இன்றும் திருமுறைப் பணியைத் தொடர்ந்து புரிகிறது நம் திருமடம். இப்பணி

`நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆரளவின்று'

என்று பாராட்டுவதல்லால் கைம்மாறு வேறு யாது?

இக்குறிப்புரை, இரண்டாம் திருமுறையின் பொருள் உணர்ச்சி என்ற பூங்காவுக்கோர் புனித முகப்பு. வாழும் தமிழின் வளமான பாதைக்கோர் வழிகாட்டி. காழியர் தவமாகிய ஆளுடைய பிள்ளை யாரின் திருவுள்ளத்தைத் தெள்ளிதின் காட்டும் கண்ணாடி. சைவர் அகந்தோறும் சான்றாண்மை பரப்ப முற்பட்டிருக்கும் தெய்வத் தென்றல். தமிழ்நாடு தவம் செய்தநாடு. ஆம், தருமைத் திருமடமும், தமிழ் வெளியீடுகளும் ஒருமுகமாகப் பெற்றுச் சிவானந்தப் பெருங் கடலில் திளைப்பது செந்தமிழ்த் திருநாடுதானே!

வாழிய வையகம்! வாழிய சைவம்! வாழிய எம்தருமை ஆதீனத் திருமடம்! வாழிய எங்கள் முதல்வர் திருவடி!

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்!

வீழ்க தண்புனல்! வேந்தனும் ஓங்குக!

ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே

சூழ்க! வையகமும் துயர்தீர்கவே!

 

a

 

 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி