தலைவாயில்              ஆராய்ச்சியுரை தொடர்ச்சி...  |  2 | 345 அடிக்குறிப்புகள் பார்க்க...

 

திருக்கோவையார் - ஆராய்ச்சியுரை

சேக்கிழார் அடிப்பொடி தி.. இராமச்சந்திரன்,

தலைவர், அனைத்துலகச் சைவசித்தாந்த ஆராய்ச்சி நிலையம், தருமபுரம்.

ஆளுடைய அடிகளாகிய மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை ஆகிய இவ்விரு ஞானப் பனுவல்களும் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பெற்றிருக் கின்றன. கோவை என்றால் திருச்சிற்றம்பலக் கோவையே கோவை. ஆகவே இந்நூல் கோவை என்றும் கோவையார் என்றும் வழங்கி வந்தது. திரு என்ற அடைமொழியோடு கூடி இந்நூல் திருக்கோவையார் ஆயிற்று. திருத்தொண்டர் புராணம், பெரிய புராணமாயினதை ஈண்டு நினைவு கூர்தல் பொருத்தமுடையது.

திருக்கோவையாரை மணிவாசகப் பெருமான் அருளவில்லை என்று பெரியவர் மு. அருணாசலம் உள்ளிட்ட ஒரு சிலர் கூறுவர். இது பிழையுடைய கருத்து. முப்பெரும் புலவர்கள் - இவர்கள் அருளாளர்களும் ஆவர் - மாணிக்கவாசகரே திருச்சிற்றம்பலக் கோவையை அருளியவர் என்று அறைந்துள்ளனர்.

இம்மூவரில் முதல்வர் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள கோயில் திருப்பண்ணியர் விருத்தம் எனப் பெயரிய பனுவலின் ஆசிரியராகிய நம்பியாண்டார் நம்பிகள் ஆவர். இப்பனுவலின் 58ஆம் பாடல் பின்வருமாறு:

வருவா சகத்தினில் முற்றுணர்ந்

தோனைவளர் தில்லைமன்னைத்

திருவாத வூர்ச்சிவ பாத்தியன்

செய்திருச் சிற்றம்பலப்

பொருளார் தருதிருக் கோவைகண்

டேயுமற் றப்பொருளைத்

தெருளாத வுள்ளத் தவர்கவி

பாடிச் சிரிப்பிப்பரே.

(தி.11 திருப்பண்ணியர் விருத்தம் பா.58)

இவ்வொரு பாடல்மூலம் திருக்கோவையாரைப் பாடியவர் மாணிக்கவாசகர் என்றும், அவர்தம் பிள்ளைத் திருநாமம் சிவபாத்தியன் என்றும் நம்பியாண்டார் நம்பிகள் உலகத்திற்கு அறிவித்துள்ளார்.

இரண்டாமவர், திருக்கோவையாருக்கு உரை வரைந்த பேராசிரியர் ஆவார். இவர் கோவையாரின் முதற்பாடலுக்கு உரை வரையத் தொடங்கி, எடுத்த எடுப்பிலேயே, "திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி யெடுத்துக் கொண்டாரோ வெனின்" என்று வினவி, மேலும் தம் கடாவிற்கு விடை வழங்கு முகத்தான்,

"திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர்

ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச்

செம்புலச் செல்வ ராயினர் ஆதலின்

அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென

இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர்"

¬ÌâÄ k¥iØZ[C.

மூன்றாமவர் குமரகுருபர சுவாமிகள் ஆவார். இப்பெருமான் தாம் அருளிய சிதம்பர மும்மணிக் கோவை 23ஆம் செய்யுளில், திருக்கோவையாரை,

"ஐந்திணை யுறுப்பில் நாற்பொருள் பயக்கும்

காமஞ் சான்ற ஞானப் பனுவல்"

¬Ìâ úIäiØZ[C.

1997இல் தருமை ஆதீனம் வெளியிட்ட திருவாசகத்திற்கு ஓர் ஆராய்ச்சியுரை வரையும் பேறு எளியேனுக்குக் கிட்டியது. இவ்வுரையில் மணிவாசகரே திருக்கோவையாரின் ஆசிரியப் பெருமான் என்று யான் காட்டியிருக்கிறேன்.

பதிப்பு வரலாறு

இனி, திருக்கோவையார் பதிப்பு வரலாறு பற்றிச் சில செய்திகளும், மேலும் சில தொடர்புடைய செய்திகளும் காண்போம்.

முதன் முதலில் அச்சில் வந்த திருமுறை திருவாசகமே. அதை அடுத்து வந்த நூல் திருச்சிற்றம்பலக் கோவையாரே. திருவாசகம் 1835இலும், திருக்கோவையார் 1841இலும் வெளிவந்தன. கோவையாரின் மூலம் கொளுக்களுடன் பிலவ வருடம் ஆடி மாதம் வெளிவந்தது. அதன் முகப்புப் பக்கத்தின் படிவம் கீழே தரப்படுகிறது.

இந்நூலின் பதிப்பாசிரியர் புதுவை நயநப்ப முதலியார் (நயநப்ப முதலியார் என்றால் கண்ணப்ப முதலியார் என்று பொருள். மாணிக்கவாசகரை வெள்ளியம்பலத் தம்பிரான் அரதனவாக்கிய அடிகள் என்று குறிப்பிப்பர்.)

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் முதன் முதலில் (1841-1842) சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் சென்னைக் கல்விச் சங்கத்தின் புலவர்களுள் ஒருவராக பு. நயநப்ப முதலியாரும் பணிபுரிந்து வந்தனர். இது பற்றிய குறிப்பு, தமிழ்த்தாத்தா .வே.சா. அவர்கள் வரைந்த திரிசிரபுரம் ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் (பாகம் -1) என்ற நூலில் பக்கம் 56இல் காணக் கிடைக்கிறது.

பு. நயநப்ப முதலியார் புதுவை நயநப்ப முதலியார் என்பவரே. அக்காலத்தில் ஒருவர் பெயருக்கு முன்சேர்க்கப்படும் எழுத்து அப்பெயருக்கு உரியாரின் ஊரைக்குறிக்கும் முதல் எழுத்தாகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சிதம்பரம்பிள்ளையின் மகனாவார். அவருடைய ஊர் திரிசிரபுரம். ஆகவே அவர் தி.மீனாட்சிசுந்தரம் என்றே கையெழுத்துச் செய்வார். (மேற்படி நூல், பாகம் இரண்டு, பக்கங்கள் 292, 294 காண்க.)

முதன் முதலில் திருக்கோவையாரை உரையோடு பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரே. நூன்முகப்பில், "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினிய ருரையோடு இராமநாதபுர ஜமீந்தாரவர்களின் மாநேஜராகிய மஹராஜ ராஜஷ்ரீ பொன்னுச்சாமி தேவர் அவர்கள் கேட்டுக் கொண்டபடி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரால் பலபிரதி பேதங்களைக் கொண்டு பரிசோதித்து, சென்னப் பட்டணம் முத்தமிழ் விளக்க வச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது" என்று அச்சிடப்பட்டிருக்கிறது. வெளிவந்த ஆண்டு ரௌத்திரி என்றும், மாதம் ஐப்பசி என்றும் முகப்பில் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, இப்பதிப்பு வெளிவந்த ஆண்டு 1860 ஆகும். இவ்வாண்டில் தமிழ்த் தாத்தா . வே. சாமிநாதய்யருக்கு வயது ஐந்தே.

பேராசிரியர் உரையே நச்சினார்க்கினியர் உரை என்று ஒரு காலகட்டத்தில் கருதப்பட்டது. நாவலர் வெளியிட்ட கோவை பல பதிப்புக்கள் பெற்றது. நச்சினார்க்கினியரே உரையாசிரியர் என்ற குழப்பம் நாவலர் நூலின் மூன்றாம் பதிப்பு வரை நீடித்தது.

அன்பர் தி. வே. சீனிவாசனிடமிருந்து கிடைத்த, பிரமாதி ஆண்டு ஆடித்திங்கள் வெளிவந்த மூன்றாம் பதிப்பைப் பார்வையிட்டபோது, அப்பதிப்பின் முகப்புப் பக்கத்தில் நச்சினார்க்கினியர் பெயர் நீக்கப்பட்டு, நூல்முகப்பின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய தாளில் "இவ்வுரையைப் பிற்காலத்து அறிஞர்கள் பேராசிரியர தென்பர், முற்காலத்து அறிஞர் பலர் நச்சினார்க்கினியரென்றனர். தஞ்சைவாணன் கோவையுரைகாரர் சேனாவரையரதென்றனர்" என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது

நான்காம் பதிப்பை வெளிக் கொணர்ந்தவர் விசுவநாதபிள்ளை ஆவார். இப்பதிப்பு (1922) துந்துபி ஆண்டு புரட்டாசி மாதம் வெளிவந்தது. இதன் முகப்பிலிருந்து நச்சினார்க்கினியர் பெயர் நீக்கப்பட்டு, நூல்முகப்பின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய தாளில் "இவ்வுரையைப் பிற்காலத்து அறிஞர்கள் பேராசிரியரதென்பர், முற்காலத்து அறிஞர் பலர் நச்சினார்க்கினியரதென்றனர். தஞ்சைவாணன் கோவையுரைகாரர் சேனாவரையரதென்றனர்" என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

இங்கு ஒரு முக்கிய செய்தி கூறப்படல் வேண்டும். நான்காம் பதிப்பின் சில படிகள் அச்சாகிவிட்ட நிலையில் அச்சடிப்பதை நிறுத்தி விட்டு, முகப்புப் பக்கத்தின் பின்பக்கத்தில் உரைபற்றி மேலே கூறப்பட்ட செய்தியை ஏற்றியுள்ளனர். துண்டுத் தாளில் அச்சிட்டு ஒட்ட வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு அச்சுப்பணி தொடர்ந்திருக்கிறது. அச்சாகிவிட்ட படிகளில் மாத்திரம் ஒட்டுவேலை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

நூலின் ஐந்தாம் பதிப்பு (1932) ஆங்கிரச ஆண்டு ஆவணி மாதம் வெளி வந்தது. இதை வெளியிட்டவர்கள் சிதம்பர சைவப் பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர்கள் ஆவர். சென்னை வித்தியானுபாலன யந்திர சாலையில் இப்பதிப்பு அச்சிடப்பட்டது. இப்பதிப்பிலும், வீ. பொன்னுஸ்வாமி அவர்கள் (1954) ஜய ஆண்டு, ஆவணி மாதத்தில் வெளியிட்ட ஆறாம் பதிப்பிலும் உரைபற்றிய விவரம் 4ஆம் பதிப்பில் தரப்பட்டபடியே நூல் முகப்பின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. நூலின் ஏழாம் பதிப்பு (1957) துன்முகி ஆண்டு, மாசி மாதம் வெளி வந்தது. பதிப்பாசிரியர் . பொன்னுசுவாமி அவர்கள்.

. பொன்னம்பல பிள்ளையவர்களின் மாணாக்கர் சி.தம்பையா பிள்ளை (1894) ஜய ஆண்டு ஐப்பசி மாதம் திருச்சிற்றம்பலக் கோவையாருண்மை என்ற நூலை வெளியிட்டார். இப்பதிப்புப் பற்றிய குறிப்புக்களைப் பிரிட்டிஷ் நூலகத் தமிழ்நூல் அட்டவணையில் காணலாம்.1

இந்நூல் வெளிவரச் சென்னை வித்துவான் . தணிகாசல முதலியார் அவர்களும், சிந்தாதிரிப்பேட்டை கொ. சண்முகசுந்தர முதலியார் அவர்களும் தங்களிடத்தில் இருந்த பிரதிகளைத் தந்து உபகரித்தனர் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இந்நூலின் கண் ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாகப் பேரின்பக் கிளவி என்ற கொளுவும், சிற்றின்பக் கிளவி என்ற கொளுவும் தரப்பட்டுள்ளன. நூலை இங்ஙனம் சுவடியில் அமைத்து வைத்தவர் இன்னார் என்பது தெரியவில்லை என்று ஒரு குறிப்பும் இந்நூலுள் உள்ளது.

சிற்றின்பக் கிளவிக்குப் பேராசிரியர் உரை வரைந்திருக்கிறார்.

திருவாசகத்திற்குச் சீகாழித் தாண்டவராயர் என்பார் இயற்றிய திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம் (முதற் பகுதி) 1954இல் வெளிவந்தது. இந்நூலின் பதிப்பாசிரியர் ரா. விசுவநாதையர், தமிழ்த் தாத்தாவின் மாணாக்கர் ஆவார். தாண்டவராயர் 1834இல் தம் வியாக்கியானத்தை அரங்கேற்றியதாக நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது.

இவ்வியாக்கியானத்தில் "துறையன்பு முதிர்ச்சி" என்று ஒரு பகுதி காணப்படுகிறது. இப்பகுதி "திருச்சிற்றம்பலக் கோவையார் பேரின்பத்துறையனுபூதி உரைக் குறிப்பு விளக்கம்" என்றும் வருணிக்கப்படுகிறது. இதற்கும், திருக்கோவையார் உண்மை என்னும் நூற்பகுதிக்கும் சில வேற்றுமைகள் உள. இவர்தாம் நாயகி பரம்பொருள் என்று முதன்முதலில் கூறியவர்போலும். இவர் கூற்றுப் பின்வருமாறு: "பத்தி முத்திக்கு உவமை பெத்தம், பேரின்பத்துக்கு உவமை சிற்றின்பம் என வைத்து உடம்பையுடைய யோகிகள் பாலுள்ள சிற்றின்பம் அடங்கத் தன் பேரின்பமாக, பேரின்பமான பிரமக்கிழத்தியோடு ஓரின்பமான அன்பே சிவமாய், அருளே காரணமாக, சுத்தாவத்தையே நிலமாக, நாயகி பரம்பொருளாக, நாயகன் பக்குவான்மாவாக, தோழி திருவருளாக, தோழன் ஆன்ம போதமாக, நற்றாய் பரையாக, திரோதாயி செவிலித்தாயாக, மேலும் நாயகன் கூற்றெல்லாம் நாயகி கூற்றாகவும், நாயகி கூற்றெல்லாம் நாயகன் கூற்றாகவும் நிகழ்ந்துவரும் அவை அநுபூதியாற் காண்க.

"நாயகியைச் சிற்றம்பலம்போல வருணிக்கையால் நாயகி பரம்பொருளாயிற்று. பெறுவார் நாயகனும், பேறு நாயகியுமாக இரசமும் நாவும் போல இருத்தலானும், கொத்தும் துறையும் கருப்பொருளும் உரிப்பொருளும் இடமும் எல்லாம் அருளின்ப மெனக் கொள்க." 2

திருச்சிற்றம்பலக் கோவையார் உண்மை என்ற நூலைச் சுவாமிநாத பண்டிதரும் பதிப்பித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.

"இதனை அச்சிடுங்காலத்துத் `திருக்கோவையார் உண்மை' என்னும் சுவாமிநாத பண்டிதர் அவர்கள் பதிப்பும், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பதிப்பும் மிகவும் துணை செய்தன. இவற்றுள் சிவக்கொழுந்து தேசிகர் பதிப்பால் கொளுவின் உண்மைப் பாடங்கள் துணியப் பெற்றன." இங்ஙனம் .தண்டபாணி தேசிகர் கூறியிருப்பதால்3 சிவக்கொழுந்து தேசிகரும் ஒரு பதிப்பை வெளிக்கொணர்ந்தார் என்பதும், திருச்சிற்றம்பலக் கோவையார் உண்மை என்பது திருக்கோவையார் உண்மை என்றும் வழங்கி வந்தது என்றும் அறியலாம்.

1897இல் பேராசிரியர் உரையோடும், விசாகப் பெருமாள் ஐயர் வரைந்த விளக்கத்தோடும் திருக்கோவையார் சென்னையில் வெளிவந்ததை பிரிட்டிஷ் நூலகத் தமிழ்நூல் அட்டவணை அறிவிக்கின்றது.

திருச்சிற்றம்பலக் கோவையார் உண்மையில் இருபத்து ஐந்து கொத்துக்களுக்கான துறைவகைச் சூத்திரங்கள் காணப்படுகின்றன. தாண்டவராயர் உரையிலும் இவை காணப்படுகின்றன. இவற்றின் சாரம் விசாகப் பெருமாள் ஐயரால் வரையப் பெற்றிருக்கிறது4. அவை பின்வருமாறு (1) சற்குரு தரிசனம், (2) ஆன்மபோத தரிசனம், (3) அன்பால் ஆனந்தம் பெற்று அநுபவித்தல் (4) அருள் சிவங்கலந்து உயிர் தரிசனம் செய்தல் (5) சிவமுயிர் விரவியதருளே தேறல் (6) சிவமுயிர் கூட அருள் வினாவுதல் (7) சிவமுயிர் கலத்தல் அருள் பணியாற் காண்டல் (8) அருள் உயிர்ப் பக்குவம் அறிந்து வியத்தல் (9) சிவமே கருணை என்று அருள் நோக்கல் (10) உயிர் இன்புறவே அருளோடு உரைத்தல் (11) உயிர்ப்பறிவின்புக் கருள் புகன்றிடுதல் (12) கிடையாவின்பத் தருமை காட்டல் (13) இயற்கை போல் சிவத்தொடு இயல் உறக் கூட்டல் (14) அருளே சிவத்தோடாக்கியவ் வருமை தெரியக் கருணை பலவும் எடுத்துக் காட்டல் (15) சிவனது கருணையருள் தெரிவித்தல் (16) அருள் உயிர்க்கு அருமை அறிய உரைத்தலும் ஆனந்தத்திடை அழுந்துவித்தலும் (17) சிவனது கருணை தெரிய உரைத்தவ் இன்பம் பெற அருள் எடுத்தியம்பியது (18) கருணை அருள் திரோதை பரையின் புணர்தல் (19) உயிர் சிவமணம் பெற்றுண்மையாதல் (20) இது ஓதற்பிரிவு எனவும்படும் - பூரண இன்பத் திறம் பாராட்டல் (21) இன்பத் திறத்தை எங்குங் காண்டல் (22) இது பகை தனி வினைப் பிரிவு எனவும் படும். இன்பகனமன்றி வேறிலை உலகு என்றல் (23) இது வேந்தற்குற்றுழி பிரிவு எனவும் படும்(24); தானதுவது தானாகுந் தன்மை (25) அறிவு பூரணமாகி இன்பாதல்.

திருக்கோவையாரை அறிய விரும்புவோர் தாண்டவராயர் உரையை நன்கு பயிலல் வேண்டும். 400 பாடல்களுக்கும் சைவ சித்தாந்த ரீதியாக அவர் குறிப்புரை தந்திருக்கிறார்5.

திருவாவடுதுறை ஆதீன குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் ஆக்ஞையின்படி திரிசொற்பொருள் விளக்கத்துடன் சார்வரி ஆண்டு ஆவணி மாதம் (1900) திருமயிலை செந்தில்வேலு முதலியார் அவர்கள், திருவாசகம் - திருக்கோவையார் முதலிய நான்கு திருமுறைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டார். இது சென்னை, கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் சில வண்ணப் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

1917ஆம் ஆண்டு வெள்ளையர் நிறுவனமாகிய லாங்மென்ஸ் க்ரீன் ஆண்டு கம்பெனியார் (சென்னை) திருக்கோவையாரை மிக நல்லமுறையில் வெளியிட்டார்கள். இதன் முகப்புப் பக்கத்தில் "பேராசிரியர் உரையைத் தழுவி எழுதப்பட்ட துறை விளக்கம் முதலியவற்றோடு கூடிய சுத்தப் பதிப்பு" என்று அச்சிடப்பட்டிருக்கிறது. துறை விளக்கம் அனுபந்தமாக இணைக்கப்பட்டிருக்கிறது. 400 பாடல்களுக்கான விளக்கம் 94 பக்கங்களில் தரப்பட்டிருக்கிறது. இந்நூலில் கிளவிக் கொத்தும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் பதிப்பாசிரியர் ராவ்பகதூர் வீ.பவானந்தம் பிள்ளை ஆவார். திருக்கோவையாருக்கு உரை வரைந்தவர் நச்சினார்க்கினியர் அல்லர் என்றும், உரையாசிரியர் பேராசிரியர் என்றும், அதற்கான ஆதாரங்கள் பிரயோ விவேக உரையில் பரக்கக் காணப்படுகின்றன என்றும் பிள்ளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

தலைவாயில்              ஆராய்ச்சியுரை தொடர்ச்சி... |  2 | 345 அடிக்குறிப்புகள் பார்க்க...