செங்காட்டங்குடி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்


மரம்: திருவாத்தி
குளம்: சூர்யதீர்த்தம்

பதிகங்கள்:
அங்கமும் வேதமும் -1 -06 திருஞானசம்பந்தர்
நறைகொண்ட -1 -61 திருஞானசம்பந்தர்
பைங்கோட்டு -3 -63 திருஞானசம்பந்தர்
பெருந்தகை -6 -84 திருநாவுக்கரசர்

முகவரி: திருகண்ணபுரம் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609704
தொபே. 04366 270278

தலம்: சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம், நாகைமாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்றகாலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் தாபித்து வழிபட்டார். அதனால் `கணபதீச்சரம்` எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவ தாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து,

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பில்
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றிற் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா!
மீண்டும்செங் காட்டில் ஓர்சார் மேவிமெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
பூண்டபேர் அன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
காண்டகும் அனைய தானம் கணபதீச் சரம தென்பர்.
என்ற செய்யுட்களான் அறியலாம்.

மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன. சிறுத்தொண்டர், உத்தராபதியினின்றும் வந்த பைரவ வேடம் தாங்கிய பரமனுக்குத் தம்மகன் சீராளனையே கறிசமைத்திட்டு முத்தியடைந்த னர் என்பது வரலாறு. இந்த அடியார் பெருமகனார், திருஞானசம் பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர். சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுதுபடையல் என்றே அது வழங்குகிறது.

இறைவன் - கணபதீச்சரத்தார். இறைவி - திருக்குழல் நன்மாது. விருட்சம் - திருவாத்தி. தீர்த்தம் - சூர்யதீர்த்தம். பைரவ கோலத்துடன் உத்திராபதியார் எழுந்தருளியிருக்கிறார்.



கல்வெட்டு:

முதலாம் இராஜராஜன் முதலாக ஏழு சோழ அரசர் காலத்தனவும், பராக்கிரம பாண்டியன் காலத்ததும், வீரவிருப்பண்ண உடையார் முதலிய இரு விஜயநகர அரசர்கள் காலத்தனவும் ஆகிய கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றால் அறியப் பெறும் சில உண்மைகள்: இத்தலம் கயாமாணிக்க வளநாட்டு மருகல்நாட்டுத் திருச்செங்காட்டங்குடி என வழங்கப் பெறுகின்றது. முதல் இராஜராஜன் காலத்திய கல்வெட்டு(-57 of 1913) மும்முடிச்சோழ வளநாட்டு மருகல்நாட்டுத் திருச்செங்காட்டங்குடி எனக் காட்டுகிறது.

இறைவன் கணபதீச்சரமுடைய நாயனார்(-51 of 1913) கணபதீச்சரமுடைய நாயர் எனவும், பைரவமூர்த்தி உத்திராபதி நாயகர் எனவும், சீராளர் சீராள தேவர் எனவும், சிறுத்தொண்டர் `சிறுத்தொண்ட நம்பி` எனவும்,(-71 of 1913) விநாயகப்பெருமான் வாதாபி கணபதி(-72 of 1913) எனவும் குறிக்கப் பெறுகின்றனர்.

சித்திரைமாதத் திருவாதிரையில் சீராளதேவர்க்குத் திருவிழா நடந்ததாக முதல் இராஜராஜன் காலத்துக் கல்வெட்டுக்(-57 of 1913. ) கூறுகிறது. மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் சிறுத்தொண்டர் மடத்திலிருந்து சீராளப்பிள்ளையை எழுந்தருள்வித்த செய்தி தெரிகிறது(-66 of 1913) .உத்தராபதி நாயனாருக்குச் சித்திரா பௌர்ணிமையில் விழா நடந்தமையை மூன்றாம் இராஜராஜன் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. ஒவ்வொரு மாதமும் பரணி விசேடமாகக் கொண்டாடப் பெற்றமை மற்றொரு கல்வெட்டுக் காட்டும்(-71 of 1913). இந்த விழாவிற்கு விடப்பட்ட நிலம் `திரு வோட்டுக் கட்டளை` என வழங்கப்பெற்றமை அறிந்து இன்புறுக. சித்திரை, ஐப்பசிப் பரணிகள் மிக விசேஷமானவை; ஆதலால் இவ்விழாவைக் கொண்டாட, கி.பி.1245-67-இல் வாழ்ந்த மூன்றாம் இராஜேந்திரன் நிலம்விட்டான்(-77 of 1913). மூன்றாம் இராஜராஜன் ஆட்சி 24-ஆம் ஆண்டில் அரசகாரியம் பார்ப்பவனான அரசூர் உடையார் திருச்சிற்றம்பலம் உடையானான திருச்சிற்றம்பலம் உடைய பல்லவராயன்; உத்தராபதியார் சித்திரா பௌர்ணிமை விழாவிற்கு எழுந்தருளும்போது திருமுத்துவிதான நெறியில் உணவளிக்க ஏற்பாடு செய்தமை ஒரு கல்வெட்டால் அறியப்படும்(-69 of 1913). மற்றும் சீராளதேவர் விழாவிற்கு வேளாளன் உலகஞ் சிறியவனான தாப்பிள்ளை மூவேந்த வேளாளனும்(-56 of 1913), விழாவிற்கு வரும் அடியார்களுக்கு அமுதுபடிக்காகத் தாயன் சிற்றம்பல முடையானும்(-58 of 1913) நிவந்தம் அளித்தார்கள். விளக்கிற்கும், நிவேதனத்திற்குமாக மற்றும் பலர் வழங்கியிருக்கின்றனர்.

 
 
சிற்பி சிற்பி