கானப்பேர் (திருக்கானப்பேர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சொர்ணவல்லி உடனுறை காளையீசுரர்


மரம்: வில்வம்
குளம்: யானை மடு

பதிகங்கள்: பிடியெலாம -3 -26 திருஞானசம்பந்தர்
தொண்டர்அடித் -7 -84 சுந்தரர்

முகவரி: காளையார் கோயில் அஞ்சல்
சிவகங்கை மாவட்டம், 623351
தொபே. 04575 232516

இது காளையார் கோயில் என்று வழங்கப்பெற்று வருகிறது. சுந்தர மூர்த்தி சுவாமிகளும், சேரமான்பெருமாள் நாயனாரும் திருச்சுழியலில் எழுந்தருளியிருந்தபோது கானப்பேருடைய இறைவர், காளை வடிவங்கொண்டு, கையிற் பொற்செண்டும், திருமுடியில் சுழியமும் உடையவராய் இரவில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கனவில் தோன்றி யாம் இருப்பது கானப்பேர் என்று அருளிச்செய்ய, சுவாமிகள் உணர்ந்து ``கண்டு தொழப்பெறுவது என்று கொலோ அடியேன் கார்வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே`` என்னும் ஈற்றடியையுடைய பதிகத்தைப்பாடிக்கொண்டு வந்து வணங்கிய பதியாதல் பற்றி, இப்பெயர் (காளையார்கோயில்) பெற்றது.

மானாமதுரை - திருச்சி இருப்புப்பாதையில் சிவகங்கை தொடர்வண்டி நிலையத்திற்குப் 18. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. பாண்டி நாட்டுப் பாடல்பெற்ற பதிகளுள் பத்தாவது பதி.

இறைவர் திருப்பெயர் - காளையீசுரர். இறைவி திருப்பெயர் -சொர்ணவல்லி. தீர்த்தம் - யானைமடு. காட்டானை வழிபட்ட தலம்.

இச்செய்தியை, ``மானமா மடப்பிடி வன்கையாலலகிடக்
கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்``
என்னும் சம்பந்தப்பெருமானின், இவ்வூர்ப்பதிக அடிகளால் விளங்கும். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

இவ்வூர்க் கோயிலில், பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மனாகிய திரிபுவனச்சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர்; மாறவர்மன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவர், இவர்கள் காலங்களிலும்; வாண அரசர்களில் சுந்தரத்தோளுடையான் மாவலி வாணராயர் காலங்களிலும் செதுக்கப்பட்ட(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902, No. 575 - 587.

See also the South Indian Inscriptions, Volume VIII No. 166 - 184.)
கல்வெட்டுக்களில் சிவபெருமான் திருக்கானப்பேருடைய நாயனார், காளையர் சோம நாதர் எனவும், அம்மன் திருகாமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்றும் கூறப்பெற்றுள்ளனர்.

கோமாறபர்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவரின் பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டு இவ்வூரில் ஆலால சுந்தரன் திருமடம் ஒன்று இருந்ததைக் குறிப்பிடுகின்றது. இக் கோயிலில் உள்ள திருவீதி நாச்சியார் விக்கிரம பாண்டிய தேவரால் செய்து வைக்கப்பெற்றவராவர். இவ்விக்கிரம பாண்டிய தேவர் திருக்காம கோட்டத்து ஆளுடைய நாச்சியார்க்கும், திருவீதி நாச்சியார்க்கும், அமுதுபடி, சாத்துப்படி, திருப்பரிசட்டம் இவைகளுக்கும், விஷுவயன சங்கிரமம், திருக்கார்த்திகை இவைகளுக்கும், நாச்சியார்கோயில் திருப்பணிக்கும் நிவந்தங்கள் அளித்திருந்தான், மாவலிவாணாதிராயன் தன்பேரால் சுந்தரத் தோளுடையான் சந்தி ஒன்றை ஏற்படுத்தியிருந்தான். இவன் காலத்தில் தான் இறைவர் திருக்கானப்பேருடைய நாயனார் காளையர் சோமநாதர் எனக் கூறப்பெற்றுள்ளனர். இக்கோயிலிலுள்ள மேற்குத் திக்குமேல் ஸ்ரீகோமாற பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவரின் 41-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் ``தளியிலார் நக்கன் செய்யாளான காலிங்கராயத் தலைக்கோலிக்கு இறையிலி பிடிபாடுசெய்து கொடுத்த பரிசாவது`` என்னும் தொடர் காணப்படுகிறது. இதில் தளியிலார் என்பவர் தேவரடியார் ஆவர். அவர்கள் தளிச்சேரிப் பெண்டுகள் எனவும் வழங்கப்பெறுவர். அவர் பெயர் முன்கொடுக்கப் பெற்ற நக்கன் என்னும் சொல்லால் அவர் சிவப்பணிக்கு உரியவர் என்பதும், தலைக்கோலி என்ற பட்டம் இருப்பதால் ஆடல் பாடலில் சிறந்தவர் என்பதும் பெறப்படுகின்றன. தலைக்கோல்பட்டம் அளிக்கப் பெற்றிருப்பதைச் சிலப்பதிகாரத்தாலும் அறியலாம்.

இவ்வூர் ``திருக்கானப்பேர்க் கூற்றத்துத் திருக்கானப்பேர் எனக் குறிக்கப்பெற்றிருப்பதால், இது அக்காலம் ஒரு கூற்றத்தின் தலைநகராய் இருந்த செய்தி அறியக்கிடக்கின்றது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி