பரணதேவ நாயனார்

படம்



சிவமயம்

நாயன்மார் வரலாறு

பதினொன்றாம் திருமுறை

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

பரணதேவ நாயனார் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்

வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்

பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

பதினொன்றாம் திருமுறையில் இருபத்துமூன்றாவது பிரபந்தமாக இலங்கும் சிவபெருமான் திருஅந்தாதியை அருளியவர் இவர்.

ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல

ஒன்றைப் பகரில் ஒருகோடி - ஒன்றைத்

தவிரா துரைப்பார் தளரார் உலகில்

தவிரார் சிவலோகம் தான்

என்று இந்நூலின் இறுதியில் கூறப்பட்டுள்ள வெண்பாவால் இந்நூலை அருளியவர் பரணர் என்பதையும், இந்நூல் மிக்க அருள் நலம் உடையது என்பதையும் அறியலாம்.

கபிலபரணர்

சங்ககாலப் பரணர், கபிலரோடு கொண்டிருந்த நட்பின் சிறப்பால் கபில பரணர் என இருவர் பெயரையும் இணைத்து வழங்கு வதால் அறியலாம். சங்க காலத்தில் வாழ்ந்த இப்பரணர் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடியவர் ஆவார். இவர் மற்றும் பல அரசர்கள் மீது பாடல்கள் பாடியுள்ளார். சங்காலப் புலவர்களில் பரணரும் வன்பரணரும் வேறு வேறான வர்கள். இச் சங்கப்புலவர் பெயர் தாங்கிய பதினொன்றாம் திருமுறை ஆசிரியராகிய பரணதேவர் பிற்காலத்து அருட் கவிஞர் ஆவார்.