சுந்தரர்

படம்சிவமயம்

நாயன்மார் வரலாறு

ஏழாம் திருமுறை

சுந்தரர் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்

வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்

பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய அணுக்கத் தொண்டினை மேற்கொண்டவர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார். அங்கு உமையம்மையாரின் சேடியர்களில் அநிந்திதை கமலினி என்ற மதிமுக நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டு காதல் கொண்டார். அந்நங்கையர் இருவரும் ஆலாலசுந்தரர்தம் அழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டனர். மகளிர்பாற் சென்ற மனத்தை மீட்டுச் சுந்தரர் இறைவனுக்குரிய நல்மலர்களைக் கொய்துகொண்டு பெருமான் திருமுன் சென்றார். அம்மகளிரும் அவ்வாறே மலர் கொய்து சென்றனர்.

எல்லா உயிர்களுக்கும் உள்நின்று அருள்சுரக்கும் பெருமான், ஆலாலசுந்தரரின் எண்ணத்தை அறிந்தார். சுந்தரரை விளித்து `நீ மாதர்மேல் மனம்வைத்தாய். ஆதலால் தென்னாட்டில் பிறந்து அம்மகளிருடன் காதல் இன்பத்தில் கலந்து மகிழ்ந்து பின்னர் இங்கு வருக` என்று பணித்தார். சுந்தரர் அதனைக்கேட்டு மனம் கலங்கிக் கைகளைத் தலைமேல் குவித்து `எம்பெருமானே! தேவரீருடைய திருவடித்தொண்டிலிருந்து நீங்கி மானுடப்பிறப்பை அடைந்து மயங்கும்போது அடியேனைத் தடுத்தாட்கொண்டருள வேண்டும்` என வேண்டிக்கொண்டார். பெருமானும் சுந்தரருடைய வேண்டுகோளுக்கு இசைந்தருளினார்.

பிறப்பும் வளர்ப்பும்:

ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் தென்தமிழ் நாட்டில் திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவலூரில் மாதொருபாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவ வேதியருள் சிறந்தவராகிய சடையனார்க்கு அவர்தம் அருமைத் திருமனைவியார் இசைஞானியார்பால் தீதகன்றுலகம் உய்யத் திருவவதாரம் செய்தருளினார். சிவபிரான் அருளால் தோன்றிய தம் குழந்தைக்கு நம்பியாரூரர் என்று திருப்பெயரிட்டனர் பெற்றோர்.

நம்பியாரூரர் நடைபயிலத் தொடங்கித் தெருவீதியில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்து அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையரையர் அக் குழந்தையின் அறிவொளி திகழும் திருமுகப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்து பெற்றோர்களிடம் சென்று நட்புரிமையால் நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுத் தம் அரச பதவிக்குரிய தம் அரசிளங்குமரராகக் கருதி அன்போடு வளர்த்து வருவாராயினார்.

அரசரின் அபிமானப் புதல்வராய் வளர்ந்த நம்பியாரூரர் அந்தணர்மரபுக்கேற்ப முந்நூல் அணிந்து அளவற்ற கலைகளில் வல்லவராய் விளங்கினார். இவ்வாறு இளம் பருவத்திலேயே திருவும் கல்வியும் வாய்க்கப்பெற்ற நம்பியாரூரர் இளவரசராயிருந்து பழகித் திருமணப்பருவத்தை அடைந்தார்.

சடையனார் தம் மைந்தர்க்குத் திருமணம் செய்ய எண்ணி னார். திருநாவலூரை அடுத்த புத்தூரில் சைவ அந்தணர் மரபில் வந்த சடங்கவி சிவாசாரியார் என்னும் பெரியாரின் திருமகளை மணம் பேசி வரப் பெரியோர்களை அனுப்பினார். சடங்கவி சிவாசாரியாரும் பெரி யோரை வரவேற்றுபசரித்தார். தம்முடைய திருமகளை மணம் செய்து தர இசைந்தார். முதியோரும் சென்று இம்மகிழ்ச்சியைச் சடைய னாருக்குத் தெரிவித்தனர்.

அதனைக்கேட்டு மகிழ்ந்த சடையனார் திருமண நன்னாளை உறுதிசெய்து நம்பியாரூரரது அரச பதவிக்கு ஏற்பச் சுற்றத்தார் நண்பர் முதலானோர்க்குத் திருமணத் திருமுகம் அனுப்பினார். புத்தூரில் சடங்கவி சிவாசாரியாரும் திருமணம் நிகழ்த்தற்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவறச் செய்தார்.

தடுத்தாட்கொள்ளப்பெறுதல்:

திருநாவலூரில் திருமணத்திற்கு முதல்நாள் காப்பணிதல் நடைபெற்றது. மறுநாள் வைகறைப்பொழுதில் நம்பியாரூரர் துயி லெழுந்து நாட்கடன் முடித்துத் திருமஞ்சனம் ஆடினார். மன்னவர் திருவும், தங்கள் வைதிகத்திருவும் பொலிய மணக் கோலம் கொண் டார். சிவபெருமானுடைய திருவடிகளை எண்ணித் திருவெண்ணீ றணிந்து மங்கல வாத்தியங்கள் முழங்கக் குதிரைமீதமர்ந்து சுற்றத்தார் நண்பர் புடைசூழப் புத்தூரையடைந்தார். மங்கலமகளிர் நிறைகுடம் முதலிய ஏந்தி எதிர்கொண்டழைத்தனர். நம்பி யாரூரர் குதிரையை விட்டு இறங்கிப் போந்து திருமணப்பந்தலுள் மணத்தவிசில் அமர்ந்தார்.

ஆலாலசுந்தரரைத் தடுத்தாட்கொள்வதாகத் திருக் கயிலாயத் தில் முன்பு உறுதி கூறிய சிவபெருமான் நம்பியாரூரரைத் தடுத்தாட் கொள்ள விரும்பி முதிய வேதியராய்த் திருமேனிகொண்டு தளர்ந்த நடையோடு தண்டூன்றித் திருமணப் பந்தருள் நுழைந்தார்.

முதியராய்வந்த அந்தணர் அங்குள்ளவர்களைப் பார்த்து `வேதியர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள்` என்றார். அதனைக் கேட்ட வேதியர் அவரை வரவேற்றுத் `தாங்கள் கூற வந்ததைக் கூறுங்கள்` என்றனர். அந்தணர் நாவலூர் நம்பியை நோக்கி `எனக்கும் உனக்கும் ஒரு பெருவழக்குள்ளது; அதனை முடித்தபின் திரு மணத்தைச் செய்ய முயலுக` எனக் கூறினார். நம்பியாரூரர் அந்தணரைப் பார்த்து `உமக்கும் எமக்கும் வழக்கு இருப்பது உண்மை யானால் அதனை முடிக்காமல் நான் திருமணஞ் செய்து கொள்ளேன்; உம் வழக்கினைக் கூறுக` என்றார்.

முதியவர் அவையோரை நோக்கி `இந்நாவலூரன் எனக்கு வழிவழி அடிமையாவன். இதுவே நான் சொல்லவந்த வழக்கு` எனக் கூறினார். அம் மொழிகேட்டுத் திடுக்கிட்டனர் சிலர்; திகைப்புற்றனர் சிலர்; இவர் யார் என இகழ்ந்து நோக்கினர் சிலர். நம்பியாரூரரும் `இம் மறையோன் மொழி நன்று நன்று` என்று இகழ்ச்சி தோன்ற நகைத்தார்.

அதுகண்ட கிழவர் அவர் அருகே சென்று `அக்காலத்தில் உனது பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலை என்னிடம் இருக்கையில் நீ நகைப்பதன் பொருளென்ன?` எனக் கேட்டார்.

நம்பியாரூரர் `அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்பது இ

வ்வுலகில் எங்கும் கேட்டதில்லை. இன்றுதான் புதிதாக நீர் சொல்லக்கேட்டேன், மறையோனாகிய நீ பித்தனோ?` என்றார். அதுகேட்ட முதியவர் `யான் பித்தனாயினும் ஆக; பேயனாயினும் ஆக, நீ எத்தனைமுறை இகழ்ந்துரைத்தாலும் நான் நாணமுறுவேன் அல்லேன். நீ என்னைச் சிறிதும் அறிந்து கொள்ளவில்லை என்பதையே நின்மொழிகள் புலப்படுத்துகின்றன. வித்தகம் பேசவேண்டாம். எனக்குப் பணி செய்ய வேண்டும்` என்றார். அதுகேட்ட நம்பிகள் ஆளோலை உண்டு என்று கூறி இவ்வந்தணர் மொழியின் உண்மையை அறிந்து கொள்ளும் அவாவினராய் அவரைநோக்கி `ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டும்; உண்மையை அறிவேன்` என்றார்.

`நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி உடையவனா? அதனை இவ் அவையோர்முன்னிலையில்காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் எனக்கு நீ அடிமைத் தொழில் செய்தற்கே உரியவன்` என்றார் அந்தணர். அம்மொழிகேட்டு வெகுண்ட நம்பிகள் விரைந்தெழுந்து அவ்வேதியர்கையிலுள்ள ஓலையைப் பறிக்கச் சென்றார். அந்நிலையில் அம்முதியவர் விரைந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து நம்பியாரூரரும் ஓடினார். மாலும் அயனும் தொடர ஒண்ணாத அவரைவலிந்து பின்தொடர்ந்த ஆரூரர் அம் முதியவர் கையிலுள்ள ஓலையைப்பறித்து `அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை` என்று சொல்லிக் கொண்டு அவ்வோலையைக் கிழித்து எறிந்தார்.

ஓலையைப் பறிகொடுத்த முதியவர் `இது முறையோ முறையோ` வெனக் கூவி அழுதரற்றினார். அதனைக்கேட்ட அங்குள்ளவர்கள் அவ்விருவரையும் விலக்கினர். முதியவரை நோக்கி `உலகில் இதுவரை இல்லாத இவ்வழக்கைக் கொண்டுவந்து நிற்கும் முதியவரே! நீர் வாழும் ஊர் எது` என்று வினவினர். அதுகேட்ட முனிவர் `நான் வாழும் ஊர் நெடுந்தொலைவிலுள்ள தன்று; மிகவும் அண்மையிலுள்ளதாகிய திருவெண்ணெய் நல்லூரேயாகும். நம்பி யாரூரனாகிய இவன் என்கையிலுள்ள ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்தெறிந்துவிட்டான். அதன் மூலமாக அவன் என் அடிமை என்ற உண்மையை உறுதிப்படுத்திவிட்டான்` என்றார். அம் மொழிகேட்ட நம்பியாரூரர் இம் முதியவர் வழக்காடுவதில் பழக்கப்பட்டவர் போலும் என்று தம்முள் எண்ணி அம் முதியவரை நோக்கி `நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராய் இருக்கு மானால் உமது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக்கொள்வோம்` என்றார்.

முதியவர் `நீ திருவெண்ணெய்நல்லூர்க்கு வந்தாலும் நான்மறை உணர்ந்த அவையத்தார் முன்னிலையில் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்துவேன்` என்று கூறிக் கோலை ஊன்றிக் கொண்டு முன்னே சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நம்பியாரூரரும் சென்றார். இவ்வழக்கு என்னாகுமோ எனக் கலங்கிய நிலையில் சுற்றத்தாரும் உடன் சென்றனர்.

திருவெண்ணெய்நல்லூர் அவையில்:

திருவெண்ணெய் நல்லூரை அடைந்த முதியவர், அந்தணர் நிறைந்த பெரும் சபையின் முன் சென்றார். அவையத்தாரை நோக்கித் `திருநாவலூரனாகிய இவன் என் அடியான். என் அடிமை ஓலையை வலிந்து பிடுங்கிக்கிழித் தெறிந்துவிட்டு உங்கள் முன் வந்துள்ளான். இதுவே என் வழக்காகும்` என்று கூறினார். அது கேட்ட அவையத்தார் `ஐயா! அந்தணர் மற்ற வர்க்கு அடிமையாதல் இவ்வுலகில் இதுவரை இல்லையே` என்றனர். இது பொருந்தாவழக்கு என்றும் தெரிவித்தனர். அம் முதியவர் அவர்களைநோக்கி `இவ்வழக்கு எவ்வாறு பொருத்தமற்றதாகும்? இவன் கிழித்த ஓலை அவன் பாட்டன் எழுதிக்கொடுத்ததாகும்` என்று கூறினார்.

அதைக்கேட்ட அவையோர் ஆரூரரை நோக்கி `நும் பாட்டனார் எழுதிக்கொடுத்த ஓலையை வலியவாங்கிக் கிழித் தெறிவது உனக்கு வெற்றிதரும் செயலோ? இம்மறையவர், தம் வழக்கைப் பொருத்தமாக எடுத்துக் கூறினார்.

உம்முடைய கருத்து யாது` என்று கேட்டார்கள்.

நாவலூரர் அவையோரைப்பார்த்துப் `பெரியோர்களே நான் ஆதிசைவ அந்தணன் என்பதை நீங்கள் அறிவீர்கள் முதியோராகிய இவ் அந்தணர் உலக வழக்குக்கு மாறாக என்னை அடிமை கொண்ட தாகச் சாதிப்பது மனத்தால் உணர்தற்கெட்டாத மாயையாக உள்ளது. இதைக் குறித்துத் தெளிந்து உணர என்னால இயலவில்லை எனக் கூறினார். அதைக்கேட்ட அவையத்தார் அம்மறையவரை நோக்கி `நம்பியாரூரரை அடிமைஎனக் கூறும் இவ்வழக்கிற்கு ஆட்சி, ஆவணம், சாட்சி என்ற மூன்றனுள் ஒன்றைக்கொண்டு உறுதிப் படுத்தல் வேண்டும்` என்று கூறினர்.

முதியவர் `நாவலூரன் சினம் மிகுதியால் என் கையிலிருந்து பறித்துக்கிழித்த அடிமைச் சீட்டு படியோலையாகும். அதன் மூல ஓலையை அவையத்தார்முன் காட்டுதற்கென்றே போற்றிவைத் துள்ளேன். இவன் முன்போல் கிழித்தெறியாதபடி நீங்கள் பார்த்துக் கொள்வீரேயாயின் அவ்வோலையைக் காட்டுவேன்` என்றார். அவையத்தாரும் அதற்கு உறுதியளித்தனர். முதியவர் மூல ஓலை யாகிய ஆவணத்தை அவையோரிடம் கொடுத்தார். கரணத்தான் ஓலையைப் படிக்கத் தொடங்கினான்.

``திருநாவலூரில் இருக்கும் ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதியது. வெண்ணெய்நல்லூரில் வாழும் முனிவர்பெருமானாகிய பித்தனுக்கு யானும் என் குடும்பத்து வழிவழியாக வரும் மரபினரும் அடித்தொண்டு செய்வதற்கு இதுவே ஆவண ஓலையாகும். உளம் ஒத்த நிலையில் இதனை எழுதிக்கொடுத்தேன். இதற்கு இவை என் எழுத்து`` இவ்வாறு எழுதப்பட்ட ஓலை வாசகத்தைச் சபையோர் கேட்டனர். சாட்சிக் கையெழுத்து இட்டவர்களது கையெழுத்துக்களை யும் ஒப்ப நோக்கி இவை ஏற்றுக்கொள்ளத்தக்கன என ஒத்துக் கொண்டனர். பின் நம்பியாரூரரை அழைத்து `உன்னுடைய பாட்ட னாரின் கையெழுத்து இதுதானா` என்பதைத் தெளிவாகப் பார்த்தறிக எனப் பணித்தனர்.

அப்போது அங்கு நின்ற கிழவர் அவையினரை நோக்கி `முன்னர் ஆவண ஓலையைக் கிழித்த இவனா இம் மூல ஓலையைப் பார்த்தற்குத் தகுதியுள்ளவன். இவனது பாட்டன் எழுதிக்கொடுத்த வேறு கைச்சாத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்து நியாயம் கூறுங்கள்` என்றார்.

அவ்வாறே அவையோர் ஒப்பிட்டுப் பார்த்துக் கையெழுத்துக் கள் ஒத்திருப்பதைக்கண்டு `இம் மறையோர் வழக்கை மறுப்பதற்கு இனி ஒரு காரணமும் இல்லை; இம் முனிவருக்கு நீர் தோற்றுவிட்டீர். அவருக்கு அடிமை செய்தலே உனது கடமையாகும்` என்று முடிவு கூறினர்.

நம்பியாரூரரும் அவையோர் முடிவை ஏற்று உடன்பாடு அறி வித்தார். அதன்பின் அவையினர் அவ்வந்தணரைநோக்கி `நும் முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராக ஓலையில் குறிப்பிடப் பெற்றுள்ளதே, இவ்வூரில் உமது வீட்டையும், வாழ்க்கைச் செல்வத்தை யும் எங்களுக்குக் காட்டுக` என்றனர். பொருவருவழக்கில் வென்ற புண்ணிய முதல்வராகிய மறையவர் `உங்களில் ஒருவரும் என்னை அறியீராயின் என்னுடன் வருக` என்று சொல்லி நம்பியாரூரரும் அவையத்தாரும் தம்மைப் பின் தொடர்ந்து வரத் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்டுறை என்னும் திருக்கோயிலுட் புகுந்து மறைந்தார். பின் சென்றார் யாவரும் அவரைக்காணாது திகைத்து நின்றனர். உடன் சென்ற நம்பியாரூரர் `என்னை அடிமைகொண்ட மறையவர் கோயிலுள் புகுந்து மறைந்தது என்கொலோ` என்று வியப் புற்று அவரைத் தொடர்ந்து சென்று கதறி அழைத்தார்.

அர்ச்சனை பாட்டேயாகும்:

மறையவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெரு மான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து `நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். அப்போது மாதர்பால் மனம் வைத்தாய்; ஆதலால் நம் ஏவலால் மண்ணுலகில் பிறந்தாய். இவ் வுலகியல் வாழ்வு உன்னைத் தொடர்ந்து வருத்தாவண்ணம் நாமே உன்னைத் தடுத்தாட்கொண்டோம்` என்று உண்மை உணர்த்தி யருளினார்.

நாவலூரர் பெருமகிழ்ச்சியடைந்து தாய்ப் பசுவின் கனைப் பினைக் கேட்டுக் கதறும் கன்றினைப் போல அன்பினால் கதறி, மெய்மயிர் சிலிர்க்கக் கைகளைத் தலைமேல் குவித்து இறைஞ்சினார். மறையவனாய் வந்து என்னை வலிய ஆட்கொண்டதும் அருட் செயலோவென்று நெஞ்சம் நெக்குருகிப் போற்றினார். அந்நிலையில் பெருமான் அவரை நோக்கி `நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக` எனப் பணித்தருளினார்.

அவ் அருளுரையைச் செவிமடுத்த வன்றொண்டர் `என்னை வழக்கினால் வெல்ல வேதியனாய் வந்த கோதிலா அமுதே! நாயேன் நினது திருவருட் பண்பாகிய பெருங்கடலுள் எதனைத் தெரிந்து எத்தகைய சொற்களால் பாடுவேன்` என்று கூறி உளங்கசிந்து நின்றார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் பித்தன் என்றே பாடுக` என்று இறைவன் அருளிச்செய்தார். வன்தொண்டர் தம்மை ஆண்டருளிய வள்ளலாரின் பெருங்கருணைத் திறத்தைப் ``பித்தா பிறைசூடீ`` என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடி யருளினார். இத் திருப்பதிகத்தைச் செவிமடுத்து மகிழ்ந்த `இறைவன் இவ்வுலகில் இன்னும் இவ்வாறே நம் பொருள் சேர் புகழைப் பாடிப் பரவுக` என்று கூறி மறைந்தருளினார்.

சிவபிரான் வன்றொண்டரைத் தடுத்தாட் கொண்டதால் புத்தூரில் நிகழவிருந்த திருமணம் நின்றது. சடங்கவி சிவாசாரி யருடைய மகளாரும், நம்பியாரூரரையே மனத்தில் கொண்டு அவரையே நினைந்து சிவலோகத்தை எளிதாய் அடையும் வகையை யும் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு நம்பியாரூரர் தம்மை வலிய ஆட்கொண்டருளிய அருட்டுறை இறைவரை இறைஞ்சித் தம்முடைய ஊராகிய திரு நாவலூரை அடைந்தார். அங்குக் கோயில் கொண்டருளிய பெரு மானைப் பணிந்து செந்தமிழ்ப் பாமாலை பாடிப் போற்றினார்.

தவநெறி வேண்டுதல்:

பின்னர் அருகில் உள்ள திருத் துறையூரை அடைந்து பெருமான் திருமுன் நின்று `தவநெறி தந்தருள வேண்டும்` என்று விண்ணப்பம் செய்து திருப்பதிகம் பாடினார். பெருமான் சுந்தரர் வேண்டியவாறே தவநெறி தந்தருளினார். தவநெறி வேண்டிப் பெற்ற நம்பிகள் தில்லையில் பொன்னம்பலத்திலே ஆடல் புரிந்தருளும் கூத்தப்பெருமானை வழிபட்டு மகிழ விரும்பினார். திருத்துறையூரை விட்டுப் புறப்பட்டுப் பெண்ணையாற்றைக் கடந்து திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தின் எல்லையை அடைந்தார்.

திருவதிகையில் திருவடி சூட்டப் பெறுதல்:

திருவதிகை திருநாவுக்கரசர் உழவாரத் திருப்பணி செய்யப் பெற்ற தலம். ஆதலால் அதனை மிதித்துச் செல்ல விரும்பாது அருகில் இருந்த சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார். உடன் வந்த அடியார்களோடு அதிகை வீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றார். இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார். உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து ``அருமறை யோனே! உன் அடிகளை என் தலைமேல் வைத்தனையே`` என்று கேட்டார். ``நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை`` என்றார் அந்தணர். நம்பிகள் வேறொரு திசையில் தலையினை வைத்துத் துயில்கொள்ளத் தொடங்கினார். மீண்டும் அம் முதியவர் நாவலூரர் தலைமேல் தம் திருவடிகளை நீட்டிப் பள்ளி கொண்டார். நாவலூரர் எழுந்து இவ்வாறு பலதடவை மிதிக்கும் நீர் யார் என்று சினந்து கேட்டார். உடனே முதியவர் ``என்னை நீ இன்னும் அறிந்திலையோ`` என்று கூறியவாறு மறைந்தருளினார். அம்மொழி கேட்ட ஆரூரர் தம் முடியில் திருவடி வைத்தருளியவர் சிவபிரானே என்று தெளிந்து தம் பொருட்டு எளிவந்தருளிய எம்பெருமானைக் காணப்பெற்றும் ``அறியாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே`` என்று வருந்தித் ``தம்மானை அறியாத சாதியார் உளரே`` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார்.

மறுநாட்காலை திருக்கெடில நதியில் நீராடி வீரட்டானேஸ் வரரை வணங்கி அங்கிருந்து புறப்பட்டுத் திருமாணிகுழி, திருத்தினை நகர் முதலிய தலங்களைத் திருப்பதிகம் பாடித் துதித்துத் தில்லைப் பதியின் எல்லையை அடைந்தார்.

தில்லைச் சிற்றம்பலவனைத் தரிசித்தல்:

வடதிசை வாயில் வழியாகத் தில்லையில் புகுந்து சிவனடி யார்கள் எதிர்கொள்ளத் திருவீதியை வலம்வந்து வணங்கித் திருக்கோயிலுக்குட் சென்று பேரம்பலத்தை வலஞ்செய்து திருச்சிற்றம் பலத்தின் முன்னேயுள்ள திருவணுக்கன் திருவாயிலையடைந்தார். அருட்கூத்தாடும் அம்பலவனைக் கண்டு அன்புமீதூரத் தலைமேற் குவித்த கையினராய்த் திருக்களிற்றுப்படியின் மருங்கே வீழ்ந்து வணங் கினார். ஐம்பொறிகளின் அறிவெலாம் கண்களே கொள்ளத் திருக் கூத்தியற்றும் பேரின்ப வெள்ளத்திலே திளைத்து மகிழ்ச்சியினால் மனம் மலரப் பெற்றார். கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியக் கைகளை உச்சிமேல் குவித்து இன்னிசைத் திருப்பதிகம் பாடி இறைவனைப் பரவினார். தில்லைச் சிற்றம்பலவன் திருவருளால் ``நீ திருவாரூரில் நம்பால் வருக`` என்ற அருள்மொழி அசரீரியாய் எழுந்தது. அவ் வருளாணையைச் சிரமேற்கொண்டு நடராசப் பெருமானைத் தொழுது விடைபெற்றுத் தென்திசை வாயில்வழியாகப் புறப்பட்டு வழியிடை யேயுள்ள கொள்ளிடத் திருநதியைக் கடந்து திருக்கழுமலமென்னும் சீகாழியின் எல்லையை அடைந்தார்.

காழியில் தோணியப்பர் காட்சி:

உமையம்மையளித்த திருமுலைப்பாலாகிய அமுதத்தை உண்டு உலகம் உய்யத் திருநெறிய தெய்வத் தமிழ் பாடியருளிய திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித் தருளிய இடமாதலால் அத்தலத்தைத் தம் பாதங்களால் மிதித்தல் கூடாதெனக் கருதிப் புற எல்லையை வணங்கி வலஞ்செய்தார் சுந்தரர். ஆரூரரின் அன்பின் திறமறிந்து மகிழ்ந்து காழிப்பெருமான் அம்மையப்பராக விடைமேல் தோன்றிக் காட்சி வழங்கினான். அவ்வருட்காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர் ``சாதலும் பிறத்தலும்`` என்னும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.

பிறகு திருக்கோலக்கா, திருப்புன்கூர் முதலிய தலங்களை வணங்கித் திருப்பதிகம் பாடிக் காவிரியில் நீராடி, அதன் தென்கரையை அடைந்தார். மயிலாடுதுறை, அம்பர்மாகாளம், திருப்புகலூர் ஆகிய தலங்களை வணங்கித் திருவாரூர் எல்லையை அடைந்தார்.

தம்பிரான் தோழராதல்:

திருவாரூரில் கோயில்கொண்டருளிய இறைவர் ஆரூரில் வாழும் அடியார்கள் கனவில் தோன்றி ``நம் ஆரூரனாகிய வன் றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான். நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டழைத்து வருக`` எனக் கட்டளையிட்டார். தொண்டர்கள் பெருமான் கட்டளையை யாவர்க்கும் அறிவித்தார்கள். திருவாரூரை அலங்கரித்து எல்லோரும் கூடி மங்கலவாத்தியங் களுடன் சென்று வன்றொண்டரை எதிர்கொண்டழைத்தார்கள்.

நம்பியாரூரரும் தம்மை எதிர்கொண்டழைத்த அடியார் களைத் தொழுது, ``எந்தையிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்`` என்ற கருத்துக்கொண்ட ``கரையும் கடலும்`` என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக் கொண்டு திருக்கோயில் வாயில் அணுகினார். சிவனடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைத் தொழுது உள்ளே சென்று பூங்கோயிலமர்ந்த பெரு மானை வணங்கி இன்புற்றார். இன்னிசைப் பாமாலைகளாகிய தமிழ் மாலைகள் பாடினார்.

அப்பொழுது யாவரும் கேட்க வானிடையே ``நம்பி யாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத் தாட்கொள்ளப்பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந் நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக` என்ற அருள்வாக்குத் தோன்றிற்று. அசரீரி கேட்ட சுந்தரர் பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார். தியாகேசர் திருமுன் சென்று வலம்செய்து வணங்கினார்.

அன்று முதல் அடியார்களெல்லாம் அவரைத் `தம்பிரான் தோழர்` என்று அழைத்தனர். இறைவன் கட்டளைப்படி திருமணக் கோலத்தோடு தூய தவ வேந்தராய்ப் பூங்கோயிலமர்ந்த பிரானை நாடோறும் வழிபட்டு இன்னிசைத் தமிழ்மாலை பாடியிருந்தார் சுந்தரர்.

பரவையார் திருமணம்:

திருக்கயிலாய மலையில் பார்வதிதேவியாருடைய சேடியர் களாய் ஆலாலசுந்தரரால் காதலிக்கப்பெற்ற மகளிர் இருவருள் ஒருவராகிய கமலினி என்பார் திருவாரூரில் உருத்திர கணிகையர் குலத்துட் பிறந்து பரவையார் என்னும் பெயரைப் பெற்றுத் திருமகளே இவள் என்று சொல்லுமாறு பேரழகோடு வளர்ந்து மங்கைப் பருவம் எய்தினார். பார்வதிதேவிக்குத் தொண்டு புரிந்த பண்டையுணர்வு செலுத்துதலால் பரவையார் நாடோறும் திருக்கோயிலை வழிபடும் கடமையுடையராய் விளங்கினார்.

பரவையார் தம் தோழியர்களுடன் வழக்கம் போல் திரு வாரூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வரும் நாட்களில் ஒருநாள் தம்பிரான் தோழராகிய சுந்தரர் சிவபிரானை வணங்கிக்கொண்டு அடியார்கள் சூழத் திரும்பிவருங்கால் ஊழ்வினை கூட்டப் பரவை யாரைக் கண்டார். காதல் கொண்டார். பரவையாரும் பண்டை நல்விதி கூட்ட நம்பிகளைக் கண்டு காதல் கொண்டார். அச்சம் நாண் மடம் பயிர்ப்பு ஆகிய பெண்மைக் குணங்கள் ஒருபுடை சாய்ந்தன. எனினும் வன்றொண்டர்பால் ஈடுபட்ட மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பரவையார் பூங்கோயிலுக்குள் சென்று பெருமானை வழிபட்டார்.

இவ்வாறு, பரவையார்தம் பேரழகில் ஈடுபட்ட நம்பியாரூரர் அயலே நின்றவர்களை நோக்கி `என் மனம் கவர்ந்த இவள்யார்` என்று கேட்டார். அருகில் இருந்தோர் `அவர்தாம் நங்கை பரவையார் வானோர்க்கும் தொடர்வரிய தூய்மையுடையார்` எனக் கூறினர். வன்றொண்டர் பரவைபால் எல்லையற்ற காதலுடையவராய் `என்னை யாட்கொண்டருளிய இறைவனையடைந்து என் கருத்திற்கு இசைவு பெறுவேன்` என்று எண்ணிய வண்ணம் இறைவன் திருமுன் சென்று பரவையாரைத் தமக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தரவேண்டிப் பணிந்தார்.

பரவையார் வன்மீகநாதரை வலம்செய்து அங்கிருந்து வேறொருபுறமாகப் புறப்பட்டுத் தம் மாளிகை சென்றார். `என் உயிர் போன்ற பரவை எங்கே சென்றாள்?` என்று தேடிச்சென்றார் சுந்தரர். ஆரூர்ப் பெருமான் பரவையை எனக்குத்தந்து என் ஆவியை நல்குவர் என்னும் உறுதிடையராய் வெளிவந்து தேவாசிரிய மண்டபத்தின் ஒருபுடை அமர்ந்திருந்தார். மாலை நேரம் வந்தது.

பரவையாரும் தம்பிரான் தோழர்பால் தம்மனம் ஈடுபட்டதை எண்ணியவாறே தம்மாளிகையை அடைந்து மலர் அமளியிலமர்ந்து அருகிலிருந்த பாங்கியை நோக்கி `நாம் பூங்கோயில் சென்ற பொழுது நம் எதிரே வந்தவர் யார் என்றனர்`. தோழியர் `அவர் நம்பியாரூரர், தம்பிரான்தோழர், சிவபிரானால் வலிய ஆட்கொள்ளப் பெற்றவர்` எனக்கூறினர். அதுகேட்ட பரவையார் `எம்பிரான் தமர்` என்றுரைப் பதைத் கேட்டு அவர்மேல் பெருங்காதல் கொண்டார். அமளியில் வீழ்ந்து வெதும்பிப் பலவாறு புலம்பி வருந்தித் தம் வேதனையை நீக்கி யருளுமாறு இறைவனை வேண்டினார்.

சிவபெருமான் அன்றிரவே அடியார்கள் கனவில் தோன்றிப் பரவையாரைச் சுந்தரர்க்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பணித்தருளினார். சுந்தரர் கனவிலும் தோன்றி ``நங்கை பரவையை உனக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தந்தோம்`` என்று கூறினர். பொழுது புலர்ந்தது, அடியார்கள் திரண்டு வந்து வன்றொண்டர்க்கும் பரவையார்க்கும் விதிப்படித் திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தனர். சுந்தரர் பரவையாருடன் கூடி சிவபிரானருட் கடலில் திளைக்கும் சிவயோகச் செல்வராய்ச் செந்தமிழ்ப் பதிகங்கள் பாடிச் சிவபிரானைப் போற்றி மகிழ்ந்திருந்தார்.

திருத்தொண்டத்தொகை பாடியருளியது:

வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் பூங்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டார். தியாகேசன்

திருக்கோயிலை அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடிய வனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து அவர் முன் காட்சி வழங்கி அடியார்களின் பெருமையை அவர்க்கு உணர்த்த விரும்பிச் சுந்தரரை நோக்கி ``அடியார் பெருமையை எடுத்துக்கூறி இத்தகைய அடியார்கள் கூட்டத்தை நீ அடைவாயாக`` என்றருளிச் செய்தார்.

சிவபிரான் அருளியதைக் கேட்ட சுந்தரர் நான் `நல்நெறி அடையப் பெற்றேன்` என்று கூறித் துதித்தார். பெருமான் அவரைப் பார்த்து ``முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக`` என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், ``அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்`` என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் ``தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்`` என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார்.

நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது:

நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை மூன்று பொழுதும் வணங்கி வாழ்ந்து வரும் நாளில் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத் தில் ஒருசமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. விளை பொருள்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய படித்தரங்களில்லாமைக்கு மனங்கவன்று உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார். பெருமான் அவர் கனவில் தோன்றி ``ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம்`` என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது.

குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் `இறைவன் கருணையை எடுத்தியம்பி அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார். அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக்கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து ``நீளநினைந் தடியேன்`` என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார். `இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும்` என்றதோர் அருள்வாக்கு பெருமானருளால் விசும்பிடையெழுந்தது. அதுகேட்டுமகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்து பரவை யார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.

அன்றிரவு பூதகணங்கள் குண்டையூரிலிருந்து நெல்லை வாரிக்கொண்டுவந்து திருவாரூரில் பரவையார் மாளிகையிலும், திருவீதிகளிலும் நிரப்பின, காலையில் நெற்குவியலைக்கண்டு வியந்து மகிழ்ந்த பரவையார் `அவரவர்கள் வீட்டுமுகப்பிலுள்ள நெல்லை அவர்களே எடுத்துகொள்ளலாம்` எனப்பறையறைவித்தார். ஆரூர் வாழ் மக்களனைவரும் நெல்பெற்றுச்சுந்தரரைப் போற்றினர். சுந்தரர் புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்தார்.

கோட்புலிநாயனார் உபசாரம்:

சுந்தரர் திருவாரூரில் இனிதுறையும் நாட்களில் சோழ மன்னனுடைய சேனைத்தலைவரும் திருக்கோயில் `திருவமுதுக்கு வேண்டும் செந்நெல்லைச் சேகரித்தளிக்கும் திருத்தொண்டரும் வேளாளருமாகிய கோட்புலி நாயனார் தம் ஊராகிய திருநாட்டியத் தான்குடிக்கு எழுந்தருளுமாறு சுந்தரரை வேண்டிக்கொண்டார்.

அவ் வேண்டுகோட்கிசைந்த சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். கோட்புலியாரும் வரவேற்றுத்தம் திருமாளிகைக்கு அழைத்துச்சென்று திருவமுது செய்வித்தார். தம்மக்களாகிய சிங்கடி, வனப்பகை யென்னும் பெண்கள் இருவரையும அழைத்து வணங்கச்செய்து, தம்பிரான் தோழராகிய தாங்கள் என் பெண்கள் இருவரையும் அடிமையாக ஏற்றருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்தம் அன்பின் திறமறிந்த சுந்தரர் `இவர்கள் என் குழந்தைகள்` என்று சொல்லி அன்போடு மடிமீதிருத்தி உச்சி மோந்து அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். இங்ஙனம் கோட்புலியாரின் மகளிரைத் தம் மகள்களாக ஏற்றருளிய சுந்தரர், திருநாட்டியத்தான்குடிக் கோயிலையடைந்து `பூணணாவ தோரரவம்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி வணங்கினார்.

பொன் பெறுதல்:

நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு, வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த சுந்தரர், மீண்டும் திருவாரூரை அடைந்தார். அப்போது பங்குனி உத்திரத் திருவிழா அணுகியது. அத்திருவிழாவில் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலூரை அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறைவனைப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத்திற்குச் செல்லத் திருவுளங் கொண்டு, கோயில் வாயிலிலேயே சிறிது நேரம் இளைப்பாறியிருந்தார். இறைவனருளால் அப்போது அவருக்கு உறக்கம் வருதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பெற்றிருந்த செங்கற்களைக் கொண்டுவரச் செய்து தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மேலாடைய அதன்மேல் விரித்துத் துயில்வாராயினார். பின் துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டு வியந்து, திருவருளைத் துதித்துத் திருக்கோயிலுள்ளே சென்று தொழுது `தம்மையே புகழ்ந்து` எனறு தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.

ஆடல் காட்டியருளல்:

புகலூர்ப் பெருமானளித்த பொற் கட்டிகளை யெடுத்துக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருப்பனையூரின் புறத்தே வரும்போது அத்தலத்திறைவன் நம்பியாரூரர்க்கு ஆடல்காட்டி அருள்செய்தார். ஆடல் கண்டருளிய சுந்தரர், திருப்பதிகம் பாடிப் போற்றித் தொழுது, திருவாரூரையடைந்து ஆரூர்ப் பெருமானை வழிபட்டுப் பரவையாருடன் மகிழ்ந்திருந்தார்.
இறைவன் எழுந்தருளிய தலங்கள் பலவற்றையும் வழிபட எண்ணிய சுந்தரர், திருவாரூரினின்றும் புறப்பட்டு, நன்னிலம், வீழிமிழலை, திருவாஞ்சியம் நறையூர்ச்சித்தீச்சரம், அரிசிற்கரைப்புத்தூர், ஆவடுதுறை, இடைமருது, நாகேச்சரம், சிவபுரம், கலயநல்லூர், குடமூக்கு, வலஞ்சுழி, நல்லூர், சோற்றுத்துறை, கண்டியூர், ஐயாறு, பூந்துருத்தி ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவாலம்பொழிலை அடைந்தார். அன்றிரவு அவர் துயிலும் பொழுது, சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, `மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ` என வினவி மறைந்தார். துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், காவிரியைக் கடந்து, திருமழபாடி சென்று, இறைவனை வணங்கிப் `பொன்னார் மேனியனே` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
பின்னர் காவிரியின் இருமருங்குமுள்ள தலங்களை வழிபட விரும்பித் திருவானைக்காவை யடைந்தார். இறைவனை வழிபட்டு, அங்கிருந்து திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்து தமக்குப் பொன்னைத் தந்தருள வேண்டுமென்னும் குறிப்புடன் பெருமானை வணங்கினார். இறைவன் பொன்னைத் தந்தருளாமையால் இறைவன் பால் மனப்புழுக்கம் கொண்டு, `வைத்தனன் தனக்கே` என்று தொடங்கிப் பதிகம் பாடி, `இவரலாதில்லையோ பிரானார்` என இகழ்ந்து கூறிப் பின் அதனையே பொறுத்தருளவேண்டுமென்று திருக்கடைக் காப்பும் அருளிச்செய்தார். இறைவர் சுந்தரர் வேண்டியவாறே பெரும் பொருட்குவியலை வழங்கியருளினார்.
பொன் பெற்ற சுந்தரர், அத்தலத்தினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞ்லி, ஈங்கோய்மலை முதலிய தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்குநாட்டை அடைந்தார். காவிரிக்குத் தென்கரையில் உள்ள கறையூர்த்திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் திருக்கோயிலை இறைஞ்சி `மற்றுப்பற்றெனக்கின்றி` யென்னும் நமச்சிவாயத் திருப்பதிகம்பாடிப் போற்றினார். பின்பு காஞ்சிவாய்ப் பேரூரை அடைந்து திருக்கோயில் சென்று வழிபட்டார். அங்குப் பெருமான், தில்லை மன்றுள் நின்றாடும் தமது திருக்கோலத்தோடு காட்சி வழங்கியருளினார்.
அவ்வருட் காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், `தில்லையம்பலவன் திருக் கூத்தைக் கும்பிடப்பெற்றால் புறம்போய் எய்துதற்கு யாதுளது` என்று எண்ணிப் பேரூரினின்றும் புறப்பட்டுத் தில்லையை நோக்கிச் செல்வராயினார். வெஞ்சமாக்கூடல், கற்குடி, ஆறை மேற்றளி, இன்னம்பர், புறம்பயம் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டே நடுநாட்டுக் கூடலையாற்றுரை அணுகியவர், அங்கு செல்லாமல் திருமுதுகுன்றை நோக்கிச் சென்றார். அப்பொழுது கூடலையாற்றுார் இறைவன், மறையவர் வடிவம் தாங்கி வழிப் போக்கராய் வன்றொண்டரை அணுகினார். சுந்தரர் மறையவரைப் பணிந்து திருமுதுகுன்றத்திற்குச் செல்லும் வழியை வினவினார். மறையவர், `கூடலையாற்றுரை அடையச் சென்றது இவ்வழி` எனக் கூறித் துணையாய்த் தாமும் ஊர் எல்லையளவும் உடன் சென்று மறைந்தருளினார். உடன் வந்த அந்தணரைக் காணாத சுந்தரர், மறையவர் உருவில் வந்தவர் பெருமானே யென்பதறிந்து திருக்கோயிலை யடைந்து `வடிவுடை மழுவேந்தி` யென்று தொடங்கி, வழித்துணையாய் வந்த பெருமானை வணங்கிப் போற்றித் திருமுதுகுன்றத்தை அடைந்தார்.

ஆற்றிலிட்டுக் குளத்தில் எடுத்தல்:

திருமுதுகுன்றத்திறைவரை வணங்கி, `நஞ்சியிடை` என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி, இறைவன்பால் பொருள் பெறும் மனக்குறிப்புடன் `மெய்யில் வெண்பொடி` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார்.
திருமுதுகுன்றத்திறைவர் நம்பியாரூரர்க்குப் பன்னீராயிரம் பொன்னைப் பரிசிலாக வழங்கியருளினார். பொன் பெற்ற சுந்தரர், மீண்டும் இறைவனைப் பணிந்து, தேவரீர் தந்தருளிய இப் பொன்னைத் திருவாரூரில் உள்ளோர் வியக்கும் வண்ணம் அங்கே வரும்படிச் செய்தல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அப்பொழுது `இப் பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க` என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. மாற்றறிதற்கு மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு பொன்னனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு, `அன்று என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன்` என்று கூறித் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் கடம்பூரைத் தரிசித்துத் தில்லையம்பதியை அடைந்தார்.
தில்லைத் திருவீதியை வலம் வந்து கோபுரத்தை வணங்கிக் கோயிலினுட் சென்று பொன்னம்பலவனைத் தொழுதார். மாறிலா மகிழ்ச்சியில் திளைத்தவராய் `மடித்தாடும்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப்புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார்.
இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி, `முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக` என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க் கரையில் பரவையாரை நிற்கச் செய்து, தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர்தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத்துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே `பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம் பொன்னைத் தந்தரளுக எனப் `பொன்செய்த மேனியினீர்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது, ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது. பொன்னை எடுத்த சுந்தரர் அதனையும் தாம் முன்னே மாற்றறிதற்கு வெட்டி வைத்த மச்சத்தையும் உரையிட்டுப்பார்த்தார். எடுத்தபொன் உரையில் தாழ்ந்துகாணப்பட்டது. அதைக்கண்ட சுந்தரர் மீண்டும் திருப்பதிகம்பாடி மாற்றுயரப்பெற்றார். பொற்குவையைப் பரவையார் மாளிகைக்கு அனுப்பிவிட்டுப் பூங்கோயில் சென்று இறைவனை வணங்கிப் பரவையாருடன் திருமாளிகை சென்று இறையருளை எண்ணி மகிழ்ந்துறைவாராயினார்.
இறைவன் எழுந்தருளிய ஏனையதலங்களையும் வழிபட விரும்பிய சுந்தரர் ஆரூர் இறைவன்பால் விடைபெற்று நள்ளாறு, கடவூர்வீரட்டம், திருமயானம், வலம்புரம், சாய்க்காடு, வெண்காடு, நளிபள்ளி, செம்பொன்பள்ளி, நின்றியூர், நீடூர், திருப்புன்கூர் ஆகிய தலங்களை இறைஞ்சிக்கொண்டே திருக்கோலக்காவை அடைந்தார். அப்பொழுது இறைவன் அவர்க்கெதிரே தோன்றி அருட்காட்சி வழங்கியருளினார். அவ்வருட்காட்சியைக்கண்டு வணங்கி ஞானசம்பந்தர்க்குப் பொற்றாளம் வழங்கிய சிறப்பை அமைத்துத் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.

இறைவன் பொதி சோறளித்தல்:

பின்பு சீகாழிப் பதியைப் புறத்தே வலம் வந்து வணங்கித் திருஞானசம்பந்தர் திருவடிகளைப் போற்றிப் பரவிக் குருகாவூர் என்னும் திருப்பதியை நோக்கிச் செல்வராயினார். வழியிடையே வன்றொண்டர் பசியாலும் நீர் வேட்கையாலும் வருந்தினார். அதனை உணர்ந்த இறைவன், மறையவர் வடிவில் தண்ணிரும் பொதிசோறும் கொண்டுவந்து வேனில் வெம்மை நீங்க நிழல் தரும் பந்தரையும் உண்டாக்கி நம்பியாரூரரின் வருகையை எதிர்பார்த்திருந்தார்.
சுந்தரர் அடியார் கூட்டத்துடன் அங்கு வந்து திருவைந்தெழுத்தோதி அமர்ந்தார். மறையவர் சுந்தரரை நோக்கி, `நீர்மிகவும் பசியுடையவராகக் காணப்படுகின்றீர், யாம் கொண்டு வந்த இப்பொதி சோற்றை உண்டு இளைப்பாறுவீராக` எனக் கூறி, சுந்தரரும் அடியார்களுடன் தாமும் உண்டு உணவளித்துபசரித்த மறையவரைப் பாராட்டி, அடியார்களுடன் இளைப்பாறித் துயில்கொண்டார். மறையவராய் வந்த இறைவன் பந்தருடன் மறைந்தார். துயிலுணர்ந் தெழுந்த சுந்தரர் மறையவரைக் காணாது அதிசயித்து, இவ்வாறருள் புரிந்தவர் குருகாவூர் இறைவனேயெனத் தெளிந்து `இத்தனையா மாற்றை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக்கொண்டே திருக்கோயில் சென்று உணவளித்து உண்வித்த பெருமானைப் போற்றினார்.
குருகாவூர்ப் பெருமானை வழிபட்டபின்னர், சுந்தரர் திருக்கழிப்பாலையை யிறைஞ்சித் தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலவனைக் கும்பிட்டு மகிழ்ந்தார். பின்பு திருத்தினை நகரைத் தரிசித்துத் தாம் பிறந்த தலமாகிய திருநாவலூரை அடைந்து இறைவனை வணங்கி அடியார்களுடன் அப்பதியில் அமர்ந்திருந்தார்.

இறைவன் இரந்து சோறளித்தது:

தொண்டைநாட்டுத் தலங்களை வழிபட விரும்பிய சுந்தரர், திருநாவலூரினின்றும் புறப்பட்டுத் திருக்கழுக்குன்றத்தை அடைந்து வணங்கித் திருக்கச்சூர் ஆலக்கோயிலைப் பணிந்து போற்றிக் கோயிற் புறத்தே வந்தார். அப்பொழுது வெயில் வெம்மை மிக்க நண்பகற் பொழுதாகியும் அவருக்கு அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் அங்கு வந்து சேரவில்லை. அடியார் பசித்திருக்கப் பொறாத இறைவன், மறையவர் வடிவுடன் வந்து, வன்றொண்டரை நோக்கி, `நீர் பசியால் மிகவும் வாட்டமடைந்துள்ளீர். யான் சிறிது நேரத்தில் இங்குள்ள வீடுகளில் இரந்து உணவு கொண்டுவருமளவும் இங்கேயே இருப்பீராக` என்று கூறிச்சென்று, அருகில் உள்ள வீடுகளில் கறியும் சோறும் இரந்து பெற்று வந்து, நம்பியாரூரர்க்கு வழங்கி, `இதனை உண்டு பசிதீரும்` என்று உபசரித்தார். சுந்தரர், அந்தணர் தந்த அமுதை அடியார்களோடு உண்டு மகிழ்ந்தார். மறையவர் விரைவில் மறைந்தார். அந்நிலையில் வன்றொண்டர் தமக்கு உணவு இரந்து பெற்று உண்பித்தவர் இறைவனே யெனத் துணிந்து, இறைவன் பெருங்கருணையை வியந்து ஆலக்கோயில் பெருமானை, `முதுவாயோரி` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை யணைந்து, திரு வேகம்பத்தை யடைந்து ஏகாம்பரநாதரைப் போற்றினார். தொண்டர் குழாங்களோடு சிலநாள் அங்குத் தங்கினார். காஞ்சியில் காமகோட்டம், திருமேற்றளி ஆகிய இடங்களையும் சென்று தரிசித்தார். திருவோணகாந்தன்தளி இறைவனை வணங்கித் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்றார். திருக்கச்சியனேகதங்காவதம் சென்று துதித்தார்.
பின்பு, பனங்காட்டூர், மாற்போறு, திருவல்லம் முதலிய தலங்களைப் பணிந்து போற்றித் திருக்காளத்திமலையை அடைந்தார். காளத்தியப்பரைத் தொழுது போற்றினார். கண்ணப்பர் திறம்போற்றிக் காளத்தியில் சிலநாள் தங்கியிருந்தார். காளத்தி மலையிலிருந்த வண்ணமே வடநாட்டிலுள்ள திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களை நினைந்து இறைஞ்சித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கிக் கொண்டு கடற்கரையிலுள்ள திருவொற்றியூரை அடைந்தார். அப் பதியில் தங்கி மூன்றுபொழுதும் எழுத்தறியும் பெருமானை வழிபட்டு இனிதுறைவாராயினார்.

சங்கிலியார் திருமணம்:

திருக்கயிலாய மலையில் உமையம்மைக்குப் பணிபுரியும் சேடியர்களாய் முன்னர் ஆலாலசுந்தரரைக் காதலித்த மகளிர் இருவருட் கமலினியார், பரவையாராய்த் தோன்றி சுந்தரரை மணந்தார் அல்லவா! மற்றொருவராகிய அநிந்திதையார், தொண்டை நாட்டில் ஞாயிறு என்னும் ஊரில் வாழும் ஞாயிறுகிழார் என்னும் வேளாளர்க்கு அருமைத் திருமகளாய் அவதரித்துச் சங்கிலியார் என்னும் பெயருடன் வளர்ந்து வந்தார். சங்கிலியார் மணப்பருவமெய்திய காலை அவருடைய வடிவு, பண்பு முதலியன மண்ணுலகில் வாழ்வார்க்கு இசையா வண்ணம் மேம்பட்டிருந்தன. தாய்தந்தையர் தனக்கு மணம் பேசுவதைக் கேட்டு, `இவர்கள் பேசுமிவ்வார்த்தை என்திறத்துப் பொருந்தாது, ஈசனடியார் ஒருவர்க்கே யானுரியேன். என் கருத்துக்கு மாறாக யாது விளையுமோ` என அஞ்சி மூர்ச்சித்து நிலமிசை விழுந்தார். தாய்தந்தையர் பதைபதைத்து, தன் மகளை மூர்ச்சை தெளிவித்து, `நினக்கு நிகழ்ந்த துன்பம் யாதென` வினவினர். எனக்குத் திருமணம் பேசுதல் ஏற்புடையதன்று. ஈசனடியார் ஒருவரை யான் மணத்தற்குரியேன், இனித் திருவொற்றியூரையடைந்து இறைபணி செய்வேன் என்றார். தாய்தந்தையார் அச்சமும் வியப்புமடைந்து பிறரறியாவாறு அந்நிகழ்ச்சியை மறைத்தொழுகினார்கள்.
இந்நிலையில் அவர்களோடு குலத்தால் ஒப்புடைய ஒருவன் சங்கிலியாரை மணம் பேசி வரச் சிலரை விடுத்தான். ஞாயிறுகிழார், மகளாரின் மனக்கருத்தை வெளியிடாது வேறொரு வகையால் சமாதானம் கூறி மறுத்துவிட்டார். இதற்குள் சங்கிலியாரை மணம் பேசி வர அனுப்பியவன் விரைவில் இறந்தொழிந்தான். இதனைக் கேள்வியுற்ற ஞாயிறுகிழார் தம் மகளின் மனக்கருத்தைப் பலரும் அறியச் செய்து சங்கிலியாரைத் திருவெற்றியூரில் கன்னிமாடம் அமைத்து அங்கே சிவபிரானது திருப்பணிகளைச் செய்துவருமாறு விட்டனர்.
சங்கிலியார் நாடோறும் பெருமானைப் பணிந்து, திருமாலை தொடுக்கும் மண்டபத்தே திரையிடப்பட்டிருக்கும் இடத்தே அமர்ந்து, அன்பு நாராக அஞ்செழுத்தை நெஞ்சு தொடுக்கத் திருமாலை தொடுத்து எழுத்தறியும் பெருமானுக்குச் சார்த்திவரும் திருத்தொண்டு புரிந்து வருவாராயினார்.
இங்ஙனம் நிகழும் நாள்களில் ஒற்றியூர்ப் பெருமானை வழிபட்டு மகிழும் சுந்தரர், அடியார்கள் செய்யும் தொண்டுகளைக் கண்டு மகிழவிரும்பித் திரு மாலைதொடுக்கும் மண்டபத்தை அடைந்தார். இறைவனுக்குக் கட்டிய மலர் மாலைகளை உரியவர்களிடம் கொடுத்து விட்டுத் திரையினுள் மறையும் சங்கிலியாரைக் கண்டார். அவர்பால் உள்ளம் சென்றது. அம்மண்டபத்தை அகன்று அடியார்களை நோக்கி, `என்னுள்ளம் திரிவித்த இம்மங்கை யார்?` என வினவினார். அருகிலிருந்தோர், `இவர் தாம் நங்கை சங்கிலியார், பெருகுதவத்தால் பெருமான் திருப்பணி புரியும் கன்னியார்` என்றனர்.
அம்மொழி கேட்ட ஆரூரர் மகளிர் இருவர் காரணமாக இப்பிறவியை எனக்கு அளித்தான் இறைவன். ஒருத்தி நங்கை பரவை. மற்றையவள் சங்கிலி என மருண்டார். இவளைச் சிவபெருமானை வேண்டிப் பெறுவேன் எனக்கூறிப் பெருமான் திருமுன் சென்று `சங்கிலியைத் தந்து என் துயர் தீரும்` எனக் குறையிரந்து திருக்கோயிலின் ஒருபாற் சென்று கவலையோடிருந்தார். ஞாயிறு மறைய இரவும் வந்தது. ஒற்றியூர் இறைவர் வன்றொண்டரை யடைந்து, `அடைதற்கரிய சங்கிலியை உனக்கு மணம் முடித்துத் தருவோம் கவலை யொழிக` என்றருளிச் செய்தார். நம்பியாரூரர் ஒற்றியூர் இறைவரைப் போற்றி வணங்கினார்.
அன்று நள்ளிரவில், பெருமான் சங்கிலியார் கனவில் தோன்றி, `சாரும் தவத்துச் சங்கிலி கேள், சால என்பால் அன்புடையவனும் நம்மால் ஆட்கொள்ளப் பெற்றவனுமாகிய சுந்தரனை மணந்துகொள்` எனப் பணித்தருளினார். அவ்வருள் மொழி கேட்ட சங்கிலியார், `உம்மாலருளிச் செய்யப் பட்டார்க்கு யானுரியேன், ஆயினும், திருவாரூரில் மகிழ்ச்சியுடனிருக்கும் விருப்பமுடையவர் அவர் என்பதையும் தாங்கள் அறிந்தருள வேண்டும்` என்று வேண்டிக்கொண்டார். அதைக் கேட்ட இறைவன் `வன்றொண்டன் ``உன்னைப் பிரியேன்`` என உனக்கொரு சத்தியம் செய்து தருவான்` எனக் கூறியருளினார்.
பின்பு இறைவன், சுந்தரரை யடைந்து, `நீ இன்றிரவே சங்கிலிபாற் சென்று ``உன்னைப் பிரியேன்`` என்று சபதம் செய்து கொடுத்தல் வேண்டும்` என்று கூறி, `நாம் செய்யத்தக்கதுண்டாயின் சொல்க` எனவும் கூறி நின்றார். சுந்தரர், `இறைவனெழுந்தருளிய தலங்கள் யாவற்றையும் தரிசிக்கும் விருப்புடையேனாகிய எனக்கு இவ்வுறுதிமொழி பொருந்தாது` என்றெண்ணியவராய், `எம்பெருமானே, அடியேன் நும் சந்நிதிக்குச் சங்கிலியோடு சபதம் செய்யவரும் போது, தேவரீர் அவ்விடத்தைவிட்டு ஆலயத்திலுள்ள மகிழ மரத்தடியில் எழுந்தருளியிருத்தல் வேண்டும்` என வேண்டிக்கொண்டார். இறைவனும் அதற்கு இசைவு தெரிவித்தருளி சங்கிலியார்முன் கனவில் தோன்றி, `நங்கையே, சுந்தரன் சபதம் செய்துதர இசைந்துள்ளான். அவன் நம்திருமுன்பு சபதம் செய்யவரும்போது நீ அதற்குடன்படாமல் மகிழமரத்தடியில் சபதம் செய்து தரும்படிகேள்` என்று கூறி மறைந்தார்.
சங்கிலியார் விழித்தெழுந்து பாங்கியரிடம், தமக்குச் சிவபிரான் அருளியதை எடுத்துரைத்தார். வைகறைப்பொழுதில் தம்திருப்பணி செய்யச் சங்கிலியார் திருக்கோயிலை யடைந்தார். அவர் வருகையை எதிர்பார்த்திருந்த சுந்தரர் அவர் அருகே சென்று தமக்கு இறைவனருளியவாற்றை எடுத்துரைத்தார். சங்கிலியார் நாணத்தால் ஒருபுடையொதுங்கித் திருக்கோயிலுள் சென்றார். சுந்தரரும் பின்தொடர்ந்து சென்று சபதம் செய்து தரற்பொருட்டு `இறைவன் திரு முன் வருக` எனச் சங்கிலியாரை அழைத்தார். பாங்கியர்கள், `இதற்காக இறைவன் திருமுன் சென்று சபதம்செய்தல் தகாது. இங்குள்ள மகிழ மரத்தடியில் சபதம் செய்து தந்தால் போதும்` என்றனர். சுந்தரர் மனம் மருண்டு, மறுத்தால் திருமணம் தடைப்படு மென்று கருதி உடன் பட்டார். மகிழமரத்தை அடைந்து மூன்றுமுறை வலம்வந்து சங்கிலியாரை நோக்கி, `உன்னைப் பிரியேன்` என்று உறுதிமொழி யுரைத்தார். இதனைக் கண்ட சங்கிலியார், சூளுறவு வழுவினால் அவர்க்கு வரும் துன்பத்தையெண்ணி மனங்கலங்கி ஒரு பக்கத்தே மறைந்து நின்றார். சுந்தரர் சூளுறவு முற்றியபின், திருக்கோயிலுக்குள்ளே சென்று இறைவனது அருளிப்பாட்டை வியந்து போற்றிக் கோயிற்புறத்தே வந்தார். சங்கிலியாரும் கன்னிமாடத்தை அடைந்தார். ஒற்றியூரிறைவர் அடியார்கள் கனவில் தோன்றிச் சங்கிலியைச் சுந்தரர்க்கு மணம் முடிக்கும்படி, கட்டளையிட்டவாறு அடியார்கள் கூடிப் பலவகைச் சிறப்புக்களுடன் திருமணம் செய்து வைத்தார்கள். நம்பியாரூரர் தம்வாழ்க்கைத் துணைவியாகிய சங்கிலியாருடன் கூடி ஊழியும் ஒரு கணமெனத் தோன்ற ஐம்புல இன்பமும் ஆரத்துய்க்கும் அந்நிலையில் பேரின்பக் கடலில் திளைத்து மகிழ்வாராயினார்.
வன்றொண்டர் சங்கிலியாரோடு மகிழ்ந்துறையும் அந்நாளில் தென்றற் காற்றுத் திருவொற்றியூரில் வந்து உலாவிற்று. தென்றல் வீசக் கண்டதும் திருவாரூரில் தியாகேசப் பெருமான் வசந்த காலத்து எழுந்தருளிவரும் காட்சியும் அக்காட்சியைக் கண்டு பரவையார் ஆடிப்பாடி மகிழ்வதும் சுந்தரர் தம் எண்ணத்திரையில் உலா வந்தன. `புற்றிடங் கொண்டாரையும் தம்மை விரும்பும் அடியார்களையும் மறந்திருந்தேனே` என்று மனமயங்கி, ஆரூர்ப்பெருமானை எண்ணிப் பிரிவாற்றாமையினால், `பத்திமையும் அடிமையையும்` என்று திருப்பதிகம் தொடங்கி, `எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என்னாரூர் இறைவனை` என்ற குறிப்புடன் பதிகம் பாடினார்.
ஒரு நாள் திருவாரூரை மிக நினைந்து, ஒற்றியூர்ப் பெருமானை வணங்கிக்கொண்டு, ஒற்றியூரைக் கடந்து அடிபெயர்த்து வைத்தார். சங்கிலியார்க்குச் செய்த சபதம் பிழைத்த காரணத்தால், சுந்தரர்க்குக் கண்ணொளி மறைந்தது. சத்தியம் பிழைத்த காரணத்தான் இது நிகழ்ந்த தென்றெண்ணி ஒற்றியூர்ப் பெருமானை நினைந்து, `அழுக்கு மெய்கொடு` என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் தொழுதார். திருவாரூர் செல்லும் உறுதியோடு நடந்தார். உடன் வருவோர் வழி காட்ட, வடதிருமுல்லைவாயிலைத் தொழுது அங்குத் திருப்பதிகம் பாடிப் பரவி, திருவெண்பாக்கம் என்ற ஊரினை அடைந்தார்.

ஊன்றுகோல் பெறுதல்:

தொண்டர்கள் எதிர்கொள்ளச் சென்று திருவெண்பாக்கத் திறைவரை வழிபட்டுத், `தேவரீர் மகிழும் இத்திருக்கோயிலினுள் இருக்கின்றீரோ` என்று விண்ணப்பம் செய்ய, பெருமானும் ஊன்று கோல் ஒன்று கொடுத்து, `உளோம் போகீர்` என்று கூறியருளினார். நம்பிகளும், `பிழையுளன பொறுத்திடுவர்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார். அங்கு நின்றும் நீங்கிப் பழையனூரை வழிபட்டுக் காரைக்காலம்மை வழிபட்ட திருவாலங்காட்டிறைவனைப் பணிந்து திருப்பதிகம் பாடித் திருவூறலை வழிபட்டுக் காஞ்சிமாநகரத்தை அடைந்தார்.

இடக்கண் பெறுதல்:

வன்றொண்டர், திருக்கச்சிக் காமக்கோட்டத்திலுள்ள காமாட்சி அம்மையைச் சென்று வணங்கினார். பின்னர் திருஎகம்பம் சென்று பெருமானைப் பணிந்தார். கண்ணளித்தருளும்படிப் பணிந்து வேண்டிப் பதிகம் பாடினார். தம்மை நினைந்து துதித்த நம்பியாரூரருக்கு இறைவன் இடதுகண் பார்வையினை வழங்கியருளி, தம் திருக்கோலத்தையும் காட்டியருளினான். சுந்தரர் `ஆலந்தானுகந்து` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக்கூத்தாடினார். பின்னர் வெளிவந்து அப்பதியிலேயே சில நாள்கள் தங்கியிருந்தார்.
திருவாரூர் நினைவுவந்தது. `திருவாரூர் எந்தை பிரானை என்று கொல் எய்து வேன்` என்று திருப்பதிகம் பாடிக்கொண்டே சென்றார். வழியில் திருவாமாத்தூரைத் தரிசித்துச் சோழ நாட்டை அடைந்து, திருநெல்வாயிலரத் துறையை வணங்கித் திருவாவடுதுறையை வழிபட்டுத் திருத்துருத்தியை அடைந்தார்.

உடல்நோய் நீங்கப்பெறல்:

திருத்துருத்தியை அடைந்த சுந்தரர் திருக்கோயிலுக்குட் சென்று வழிபட்டு, அடியேன் உடம்பின்மேல் உள்ள பிணியை ஒழித்தருளவேண்டுமென்று வேண்டித் துதித்தார். சிவபிரான், இக் கோயிலுக்கு வடபால் உள்ள குளத்தில் நீராடில் இந்நோய் நீங்கும் என்று திருவருள் புரிந்தார். அவ்வண்ணமே சுந்தரர் திருக்குளத்தை யடைந்து நீராடினார்.
நீராடி எழும்போது, உடல்நோய் நீங்கப்பெற்று ஒளிவீசும் திருமேனியைப் பெற்றார். எழுந்து கரையேறித் திருக்கோயிலுக்குச் சென்று. `மின்னுமா மேகங்கள்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.

வலக்கண் பெறல் :

திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில் திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, `எனது துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும்` என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, `மீளா அடிமை` என்ற திருப்பதிகத்தைப் பாடினார். ஆரூர்ப் பெருமான் மனமிரங்கி வலக்கண்ணை யளித்தருளினான். இருகண்களையும் பெற்ற சுந்தரர் இறைவனைக் கண்களாரக் கண்டு களிப்பெய்தினார். பின்னர் திருவாயிலைக் கடந்து தேவாசிரிய மண்டபத்தை அடைந்தார்.

ஆரூர்ப் பெருமானைப் பரவையார்பால் தூதனுப்புதல்:

சுந்தரர் பூங்கோயிற் பெருமானை வணங்கச்சென்றபொழுது அவருடைய பரிசனங்களிற் சிலர் பரவையார் மாளிகையை அடைந்தனர். சுந்தரர் சங்கிலியாரை மணந்த செய்தியை முன்பே அறிந்த பரவையார் அவர்களைத் தடுத்தார். அதனை அவர்களில் சிலர் சுந்தரரிடம் சென்று கூறினர். அதனைக் கேட்ட ஆரூரர் மனங் கலங்கிச் சங்கிலியை மணந்தமையால் உண்டான வருத்தம் இது என உணர்ந்து, ஆலோசித்துக் கற்றறிந்த பெரியார் பலரைப் பரவையார்பால் தூது விடுத்தார். அவர்களும் சென்று பலவாறு எடுத்துக் கூறியும் சினந்தணி யாதவராய்ப் பரவையார் `மேலும் பேசுவீராகில் என்னுயிர் நீங்குவ துறுதி` என்று கூறினார். பெரியோர் பலரும் அஞ்சிப் புறம்போந்து நிகழ்ந்ததைச் சுந்தரரிடம் கூறினர். சுந்தரர் வருந்தியவாறிருந்தார். நடு யாமம், திருக்கோயிலில் அர்த்தயாம வழிபாடு முடிந்து அனைவரும் சென்றுறங்கினர். சுந்தரர் மட்டும் உறங்காது சிவபிரானை எண்ணி `என்னை ஆளுடைய பெருமானே நீரே எழுந்தருளி வந்து பரவையின் பிணக்கைத் தீர்த்தாலன்றி வேறு உய்வில்லை` என்று வேண்டினார். அடியார் துயர் பொறுக்க லாற்றாத பெருமான் நள்ளிரவில் திருமாலும் காணவியலாத் திருவடிகள் நிலந்தோயச் சுந்தரர் முன் வந்தணைந்தார்.

சிவபெருமான் எழுந்தருளி வந்ததைக் கண்ட சுந்தரர் வீழ்ந்து பணிந்து எழுந்து நின்று, `தமக்குற்ற குறையை எடுத்துக்கூறி எனக்குத் தாயினு மினிய தோழராயின் என்னுடைய துன்பத்தைப் போக்கி யருளுதல் கடன்` என்று வேண்டினார். பெருமானும், `கவலற்க. இப் போதே பரவைபால் தூது சென்று வருகின்றோம்` என்று கூறினார். சுந்தரர் மீண்டும் இறைவனைப் பணிந்து நின்றார்.

திருவாரூர்த் திருவீதியில் சிவபிரான் நள்ளிரவில் தேவரும் சிவயோகியரும் மற்றும் பலரும் மலர்மாரி பொழிந்து பரவத் திருவீதி வழியே தூது சென்றார். தம்மைத் தொடர்ந்து வந்த தேவர்கள் முதலானோரைப் புறத்தே நிறுத்தித் தம்மைப் பூசிக்கும் சிவ வேதியர் போலப் பரவையார் மாளிகையை அடைந்தார். `பரவையே! கதவைத் திற` என்றழைத்தார். பரவையாரும் பதை பதைப்புடன் கதவைத் திறந்தார். வந்த காரணம் வினவிய பரவையாரை நோக்கிச் சிவ வேதியர், `மறுக்காது ஏற்பதாயின் சொல்வேன்` என்றனர். `எனக்கு இசைவதேயாகில் இணங்குவேன்` என்றார் பரவையார். `சுந்தரர் இங்கு வரவேண்டுவதே தாம் வந்த காரணம்` என்று சிவவேதியர் கூறப் பரவையார் `திருவொற்றியூரில் சங்கிலியை மணந்த அவர்க்கு இங்கு ஒரு சார்புண்டோ? உமது பெருமைக்கு இத்தூது ஏற்றதன்று. நான் அதற்கு இசையேன்` என்று மறுத்துக் கூறினார். பரவையார்பால் சுந்தரர் கொண்டுள்ள வேட்கையைக்காண வேண்டுமென்ற திருவிளை யாடலை மனத்திற்கொண்டு பரவையார் வீட்டிலிருந்து சிவபிரான் மீண்டும் சுந்தரரை வந்தடைந்தார்.

வெற்றியுடன் வருவார் என்று எதிர்பார்த்திருந்த சுந்தரரை அணுகினார் பெருமான். சுந்தரர் எதிர்கொண்டு வணங்கிப் `பெரு மானே! அன்று அடியேனை ஆட்கொண்டருளியதுபோல இன்று பரவையின் புலவி தீர்த்து வந்தருளினீர்` என்று கூறி நின்றார். பெருமான் `நாம் பரவையின் இல்லம் அணுகி அவளிடம் வேண்டியும் மறுத்துவிட்டாள்` என்று கூறினார். ஆரூரர் அச்சொற்கேட்டு நடுங்கிப் `பெருமானே! தேவரீர் திருமொழியையும் நும் அடியவளாகிய பரவை மறுத்தற்குரியவளில்லை. பரவையிடம் இன்று என்னைக் கூட்ட வில்லையாயின் என்னுயிர் நீங்குவதுறுதி` என்று பலவாறு கூறித் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.

சிவபிரான் நம்பியாரூரரை அருளோடு பார்த்து, `நாம் மீண்டும் ஒருமுறை தூது சென்று உன்குறை முடிப்போம்! துயரொழிக` என்றருளிச் செய்து பரவையார் மாளிகையை நோக்கி மீண்டும் எழுந்தருளினார்.

பரவையார் மறையவராய்த் தூது வந்தவர் சிவபெருமானே என எண்ணித் துணிந்து அவரிடம் மறுத்து மொழிந்ததற் கிரங்கி யிருக்கும் காலைச் சிவபெருமான் தன் உண்மைத் திருக்கோலத்தோடு பரவையார் மாளிகையை அடைந்தருளினார். பரவையார் மகிழ்ச்சி பொங்க இறைவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி நின்றார். பெருமான் `பரவையே! நம்பியாரூரன் ஏவ மீண்டும் உன்பால் வந்தோம்; முன்போல் மறுக்காதபடிச் சுந்தரனை ஏற்றுக்கோடல் வேண்டும்` என்றருள் செய்தார். பரவையார் அடியவர் பொருட்டு நள்ளிரவில் அங்கு மிங்குமாக அலைந்துழலும் பெருமானின் கருணையை வியந்து, `இசைவு படாது என் செய்ய வல்லேன்` என்றார். பெருமான், `நல்லுரை பகர்ந்தாய்` என்று கூறிப் பரவையாரைப் பாராட்டிச் சுந்தரரிடம் மீண்டும் எழுந்தருளினார்.

வழிமேல் விழிவைத்து இறைவனது வருகையை எதிர்பார்த் திருந்தார் சுந்தரர். இறைவன் எழுந்தருளியதும், `யாதுகுறை கொண்டு வந்தீர்` என வினவினார். பெருமான் `நாம் பரவையின் புலவி தீர்த்து வந்துள்ளோம். இனி நீ சென்று பரவையை அடைவாயாக` என்றருளிச் செய்தார்.

சுந்தரர், போகம் மோட்சம் இவற்றை அளிக்கும் இறைவன் கருணையைப் பாராட்டி வீழ்ந்து வணங்கினார். சிவபிரான் சுந்தரரைப் பரவையார்பால் அனுப்பிவைத்துப் பூங்கோயிலினுள் புகுந் தருளினார்.

நம்பியாரூரர் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார். பரவையாரும் தம் இல்லத்தை இனிதே அலங்கரித்துச் சுந்தரரை வரவேற்று வணங்கினார். சுந்தரர் பரவையாரின் கைகளைப் பற்றிய வண்ணம் உள்ளே சென்றார். இருவரும் இறைவனது எளிவந்த கருணையை வியந்து இன்ப வெள்ளத்துள் திளைத்தனர்.

சுந்தரர் புற்றிடங் கொண்டாரை நாடோறும் வணங்கிச் செந்தமிழ்ப் பதிகங்கள்பாடி இனிதிருந்தார்.

ஏயர்கோன் நட்பு:

நம்பியாரூரர் பெருமானைச் சிறிதும் மனம் நடுங்காது ஒரு பெண்ணிடத்து இரவில் தூதனுப்பி ஏவல் கொண்டார் என்ற செய்தி நாடு முழுதும் பரவியது. சோழநாட்டில் திருப்பெருமங்கலத்தில் வாழும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் இச்செய்தி கேட்டு உளம் வருந்தினார். `இறைவனை அடியவர் ஏவல் கொள்வது தொண்டர்க்கு முறையன்று` என்று கருதியது அவர் உள்ளம். `இச்செய்தி கேட்டும் என்னுயிர் செல்லவில்லையே` என்றிரங்கினார். `அடியவரிடத்துள்ள கருணையால் இறைவன் இசைந்தாலும் அப்பெருமானை ஏவுதல் என்ன முறை? அரிவையரிடத்து வைத்த ஆசைக்கு இறைவனைத் தூது கொண்ட வன்றொண்டரைக் காணின் என்ன நேரும்` என்று சுந்தரர் மேல் சினம் கொண்டிருந்தார்.

ஏயர்கோன் தம்பால் சினங் கொண்டிருத்தலையறிந்த நம்பி யாரூரர் தாம் செய்தது பிழையென வுணர்ந்தார். கலிக்காமர் செற்றத்தைக் தணித்தற் பொருட்டு இறைவனைப் பலமுறை இறைஞ் சினார். இவ்விருவரையும் ஒன்றுபடுத்தத் திருவுளங்கொண்ட இறைவன் ஏயர் கோன் கலிக்காம நாயனார்க்குச் சூலை நோயை ஏவி னார். சூலை நோயால் தளர்ச்சியுற்று வாடிய கலிக்காமர் சிவபிரான் திரு வடிகளைச் சிந்தித்துப் போற்றினார். இறைவன் அவர் முன்னே தோன்றி `இச்சூலை நோய் வன்றொண்டன் வந்து தீர்த்தாலன்றித் தீராது` என்று கூறினார். கலிக்காமர், `இறைவனே! வழிவழியாக நும்மையே வழிபடும் தொண்டனுக்குற்ற நோயைப் புதியவனாகிய வன்றொண்டனோ தீர்த்தற்குரியன்; இந்நோய் தீர்க்கப்படுதல் வேண்டா` எனக் கூறினார். இறைவன் மறைந்தான்.

இறைவன் நம்பியாரூரரை யணுகி, `ஏயர் கோனுற்ற சூலையைத் தீர்ப்பாயாக` எனப் பணித்தார். அவ்வுரை கேட்ட சுந்தரர் ஆரூரை விட்டுப் புறப்பட்டார். தாம் வரும் செய்தியை முன்னரே தெரிவிக்க ஏவலரை அனுப்பினார். வன்றொண்டர் தம் சூலை நோயைத் தீர்க்க வருகின்றார் என்றறிந்த ஏயர்கோன் அவரைக்காண விரும்பாது `வன்றொண்டன் வருவதற்குள் என் சூலை நோயை வயிற் றொடும் கிழித்துப் போக்குவேன்` எனத் துணிந்து உடைவாளால் தமது வயிற்றைக் கிழித்துக்கொண்டு உயிர் நீத்தார். அவர்தம் மனைவி யாரும் உடனுயிர்விடத் துணிந்தார். அதற்குள் சுந்தரர் வருகையைக் கேள்வியுற்று அவரை எதிர்கொண்டழைக்குமாறு வீட்டிலுள்ளவர்க்குப் பணித்துத் தம் கணவர் இறந்ததை மறைத்து, சுந்தரரை எதிர் கொண்டழைக்குமாறு சுற்றத்தார்களை ஏவினார். ஏயர்கோன் மாளிகையை அடைந்த நம்பியாரூரர் ஏயர்கோனைக் காணும் பெரு விருப்பத்தைத் தெரிவித்தார்.

அங்குள்ள பணியாளர் `உள்ளே பள்ளி கொள்கின்றார்` என விண்ணப்பித்தனர். `விரைவில் காணவேண்டும்; என் மனம் தெளிவு பெற்றிலது` என்று மீண்டும் கூறினார். மறுத்தற்கியலாது சுந்தரரை ஏயர்கோன் இருந்த அறைக்கு அழைத்துச்சென்றனர். உள்ளே சென்ற சுந்தரர் ஏயர்கோன் குடர் சரிந்து குருதி சோரக் கிடந்ததைக் கண்ணுற்று உள்ளம் துணுக் குற்றார். நானும் இவர் முன்பு உயிர் துறப்பேன் எனத் துணிந்து அவர் வயிற்றிற் செருகப்பட்டிருந்த குற்றுடை வாளைப்பற்றிக் கொண்டு அவ் வாளினாலேயே தம்முயிரைப் போக்க முனைந்தார். அந்நிலையில் ஏயர்கோன் உயிர்பெற்றெழுந்து சுந்தரர் கையிலிருந்த உடைவாளைப் பற்றிக்கொண்டு தடுத்து நிறுத்தினார். உயிர்பெற்றெழுந்த கலிக்காமர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் சுந்தரர். கலிக்காமரும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினார். இருவரும் அன்பினால் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். இறைவன் திருவருளை வியந்தனர். பின்னர் சுந்தரர் ஏயர்கோனுடன் திருப்புன்கூரை யடைந்து இறைவனை வழிபட்டுத் திருப்பதிகம் பாடிப் பரவினார். பின்னர் அவருடன் திருவாரூரை அடைந்து வழிபட்டார். கலிக்காமர் அங்கிருந்து விடைபெற்றுத் திருப்பெருமங்கலத்தை யடைந்தார்.

பின்பு சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார். இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.

சேரமான் நட்பு:

சேரமண்டலத்தையாண்ட சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரரது பெருமையினைத் தில்லைக் கூத்தனுணர்த்தக்கேட்டு சுந்தரரைக் காணவேண்டுமென்னும் பேரார்வத்துடன் தில்லைச் சிற்றம்பலவரைத் தரிசித்துத் திருவாரூரை அடைந்தார். சேரவேந்தர் வருகையுணர்ந்த சுந்தரர் அடியார்கள் புடைசூழச் சென்று அவரை எதிர்கொண்டழைத்தார். நம்பியாரூரரைக் கண்ட சேரமன்னர் அவர் அடிகளில் வீழ்ந்து இறைஞ்சினார். சுந்தரரும் அவரடிகளில் வீழ்ந்து இறைஞ்சித் தம் இருகைகளாலும் அவரைத் தழுவினார். இருவரும் நட்புப்பூண்டு திருக்கோயிலை யடைந்து வழிபட்டனர். சேரர்கோன் ஆரூர் இறைவனைப் பணிந்து `மும்மணிக்கோவை` என்னும் நூலைப் பாடினார். சுந்தரர் சேரமான் பெருமாளை அழைத்துக்கொண்டு பரவையார் மாளிகையை அடைந்தார். சிறந்த முறையில் சேரமான் வரவேற்கப்பெற்று உபசரிக்கப்பெற்றார். இருவரும் ஆரூர்ப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்துறைந்தனர்.

நம்பியாரூரர் பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிபட எண்ணிச் சேரர்கோனுடன் புறப்பட்டார். திரு மறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடிக்குழகர் முதலிய தலங்களைப் பணிந்து பாண்டிநாடடைந்து திருப்புத்தூரை வழிபட்டு மதுரையை அடைந்தார்கள்.

அப்பொழுது பாண்டியனும், பாண்டியன் மகளை மணம் புரிந்து வேட்டகத்திலிருந்த சோழனும் சுந்தரரையும் சேரமான் பெரு மாளையும் வரவேற்றுத் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சுந்தரர் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சேரமான் தமக்குத் திருமுகமனுப்பிய ஆலவாயண்ணலை வழிபட்டார். பாண்டியன் இவ்விருவரையும் தம் அரண்மனைக்கு அழைத்து உபசரித்தான். இருவரும் சிலநாள் தங்கி ஆலவாயண்ணலை வழிபட்டினி துறைந்தனர்.

சுந்தரர் மூவேந்தருடன் திருப்பூவணம், திருவாப்பனூர், திருவேடகம் முதலிய தலங்களையிறைஞ்சித் திருப்பரங்குன்றத்தை யடைந்து திருப்பதிகம் பாடிப் பரவினார்.

பாண்டிநாட்டுத் தலங்களையெல்லாம் வழிபட விரும்பிய சுந்தரர் சேரமான் பெருமாளுடன் புறப்பட்டபொழுது அந்நாட்டு மன்னன் எல்லா வசதிகளையும் செய்து தரும்படி ஏவலர்களை அனுப்பினான். பாண்டியனும் சோழனும் விடைபெற்றுக்கொண்டு மதுரைக்கு ஏகினர். சுந்தரரும் சேரர்கோனும் திருக்குற்றாலம், திரு நெல்வேலி, திருஇராமேச்சுரம் ஆகிய தலங்களைச் சென்று வழி பட்டார்கள். இராமேச்சுரத்திலிருந்தே ஈழ நாட்டிலுள்ள மாதோட்டக் கேதீச்சரத்தை எண்ணித் துதித்துத் திருப்பதிகம் பாடினார் சுந்தரர். அங்கிருந்து புறப்பட்டுத் திருச்சுழியல் என்ற தலத்தை யடைந்து வழிபட்டு அத்தலத்திலேயே தங்கியிருந்தார். அப்பொழுது சிவபெரு மான் தம் திருக்கையில் பொற்செண்டும், திருமுடியிற் சூழியமும் உடையராய் நம்பியாரூரரின் கனவிலே தோன்றி, `யாம் இருப்பது கானப்பேர்` என்று கூறி மறைந்தார். விழித்தெழுந்த சுந்தரர் சேரமான் பெருமாளுக்கும் அதனை அறிவித்துத் திருச்சுழியலிலிருந்து புறப் பட்டுக் கானப்பேர் சென்று வழிபட்டு அங்குச் சிலநாள் தங்கியிருந் தனர். பின் திருப்புனவாயிலை வழிபட்டுச் சோழ நாட்டை யடைந் தனர். பாம்பணிமாநகரில் உள்ள பாதாளீச்சரம் முதலிய திருக் கோயில்களை வழிபட்டுச் சேரமான் பெருமாளுடன் திருவாரூரை அடைந்தனர்.

காவிரி வெள்ளம் வழிவிட்டது:

பலநாட்களுக்குப் பின் சேரமான் பெருமாள் தம் தோழராகிய சுந்தரரைத் தன்னுடைய நாட்டிற்கு எழுந்தருளவேண்டுமென வேண்டிக்கொண்டார். அதற்கிசைந்த சுந்தரர் ஆரூர்ப் பெருமானைப் பணிந்து சேரர்கோனுடன் காவிரியின் தென்கரை வழியே திருக்கண்டி யூரை அடைந்தார். ஐயாறு எதிரே தோன்றிற்று. காவிரியாற்றிலோ வெள்ளம் கரை புரண்டோடிற்று. ஆற்றைக் கடந்து ஐயாறு சென்று தொழ நினைந்த சுந்தரர் `பரவும் பரி சொன்றறியேன்` என்று தொடங்கிப் பதிகம்பாடி ஐயாற்றிறைவனை ஆராக் காதலால் அழைத்து நின்றார். பெருமான் கன்று அழைத்தலைக் கேட்ட தாய்ப் பசுப்போல் `ஓலம்` என்று உரக்கக் கூறியருளினார். வெள்ளம் இரு புறமும் ஒதுங்கி நின்று நடுவே வழிகாட்டிற்று. சுந்தரர் சேரர்கோனு டனும் அடியார்களுடனும் ஆற்றைக் கடந்து சென்று வழிபட்டனர். பின்னர் இருபெருமக்களும் பல தலங்களை வணங்கிக் கொண்டு கொங்குநாட்டைக் கடந்து சேர நாடடைந்தனர்.

சேரநாட்டுக் கொடுங்கோளூரை அடைந்த சுந்தரரைச் சேரமான் பெருமாள் சிறந்த முறையில் வரவேற்கச் செய்தார். திரு வஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்று தரிசிக்கச் செய்தார். `முடிப்பது கங்கை` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி வழி பட்டுப் புறம் போந்தார் சுந்தரர். சுந்தரரைச் சேரமான் பெருமாள் பட்டத்து யானைமேல் ஏற்றித் தம் இருகைகளாலும் வெண்சாமரை வீசிக்கொண்டு அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அரியணையில் இருத்தி அருச்சித்தார். உடனிருந்து திருவமுது செய்வித்து உப சரித்தார். பல்வகையாலும் சிறந்த முறையில் சுந்தரரை உபசரித்து மகிழ்ந்து அளவளாவியிருந்தார்.

சுந்தரர்க்குத் திருவாரூர்ப் பெருமானைக் கண்டிறைஞ்சி வழி படும் விருப்பு விளைந்தது. அந்நினைவு மீதூரப் பெற்ற சுந்தரர், `ஆரூ ரானை மறக்கலும் ஆமோ` என்று கூறித் தம் ஆற்றாமையைப் புலப் படுத்தி, சேரமானிடம் விடைபெற்றுக் கொள்ள விழைந்தார். சேரர் கோன் இவ்வரசுரிமையை நீரே ஏற்று நடாத்தவேண்டுமென்று இறைஞ் சினார். சுந்தரர் ஆரூர்ப் பெருமான் மேல் உள்ள ஆராக் காதலை வெளிப்படுத்தி விடை பெற்றார். சேரமான் தம் திருமாளிகையிலுள்ள பொருள்களைப் பொதி செய்து உடன் அனுப்பிவைத்தார்.

சுந்தரர் வழி பலவும் கடந்து கொங்குநாட்டுத் திருமுருகன் பூண்டி வழியே செல்லுங்கால், சிவபெருமான் பூதகணங்களை வேடு வராகச் சென்று, வழிப்பறி செய்து வருமாறு பணித்தருள, அவ் வண்ணமே பூதகணங்கள் வேடர்களாய்ச் சென்று அச்சுறுத்திப் பொருள்களைப் பறித்துக்கொணர்ந்தன. இதையறிந்த சுந்தரர் திரு முருகன்பூண்டித் திருக்கோயிலிறைவரை யணுகி, `எற்றுக்கு இங்கிருந் தீர்` என்ற மகுடத்தோடு பதிகம் பாடிப் பரவினார். கொள்ளையிடப் பெற்ற பொருள்களை வேடுவர்கள் மீளக் கொண்டுவந்து முன்றிலிற் குவித்தனர். அவற்றை முன்போற் பொதி செய்து எடுத்துச் செல்லுமாறு ஏவலர்க்குக் கூறிவிட்டுக் கொங்குநாட்டைக் கடந்து திருவாரூரை அடைந்தார். பரவையார் மாளிகையில் இனிது எழுந்தருளியிருந்தார்.

முதலை யுண்ட பாலனை மீட்டருளல்:

திருவாரூர்ப் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளை நினைந்து மலைநாடு செல்லத் திருவுளங்கொண்டார். சோழநாட்டைக் கடந்து, கொங்குநாட்டை யடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசியை அணுகி, திருவீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒலியும், அதன் எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதலைக் கேட்டு இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார். அதுகேட்ட வேதியர்கள் நிகழ்ந்ததைக் கூறினர்.

ஒத்த பருவத்தினராய் ஐந்து வயது நிரம்பப்பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்தபோது ஒருவனை முதலை விழுங்கியது. மற்றொருவன் பிழைத்தான். பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நிகழ்கிறது. இவர்கள் வீட்டில் எழும் மங்கல ஒலி முதலை வாயில் அகப்பட்டிறந்த சிறுவனுடைய பெற்றோர்க்கு, புதல்வனை நினைப்பித்தமையால் அவர்கள் வருந்துகின்றனர் என்று வேதியர் கூறக்கேட்ட சுந்தரர் வேதனைகொண்டார். அந்நிலையில் இறந்த சிறுவனின் பெற்றோர், சுந்தரர் வருகையை அறிந்து முகமலர்ச்சியோடு வரவேற்றனர். தாங்கள் இங்கெழுந்தருளியது எங்கள் தவப்பேறே யாகும் என மகிழ்ந்துரைத்தார்கள். சுந்தரர் இவ் வேதியரும் அவர் மனைவியும் மகனை இழந்த துன்பத்தையும் மறந்து என்னை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். இவர்கள் புதல்வனை முதலைவாயினின்று அழைத்துத் தந்த பின்னரே அவிநாசிப் பெரு மானை வழிபடவேண்டுமென்று உறுதிகொண்டார். அம் மடு இருக்கு மிடத்தைக் கேட்டறிந்து அங்குச் சென்றார். முதலை விழுங்கிய புதல்வனை உயிருடன் கரையில் கொண்டுவந்து தரும்படி அருள் செய்க என இறைவனை வேண்டி, ``எற்றான் மறக்கேன்`` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினார். ``உரைப்பார் உரை`` என்னும் நான்காம் திருப்பாடலைப் பாடும்பொழுது இயமன் மடுவிலிருந்த முதலை வயிற்றுள் புதல்வன் உடம்பைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சி யுடையதாகச் செய்து புகுத்தினன். முதலை கரையிலே வந்து தான் முன் விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் தழுவியெடுத்தாள். தாயும் தந்தையும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினர். இந் நிகழ்ச்சியைக் கண்டோர் அனைவரும் திரு வருட்டிறத்தை வியந்தனர். சுந்தரர் சிறுவனை அவிநாசித் திருக் கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவரைத் தொழுது வேதியர் வீட்டிற்கு வந்து மங்கல வாத்தியங்கள் முழங்க உபநயனம் செய்வித் தருளினார்.

திருக்கயிலைக்கு எழுந்தருளல்:

அவிநாசியிலிருந்து சுந்தரர் தம் அன்புடைத் தோழர் சேரமான் பெருமாளைக் காணவேண்டி மலைநாட்டை நோக்கிச் செல்வாராயினார். சேரர்கோன் சுந்தரர் வருகையை அறிந்து வரவேற்று அரியணையிலிருத்தி அருச்சித்துப் போற்றினார். சுந்தரர் சேரமான் பெருமாளுடன் மலைநாட்டுத் தலங்களை வழிபட்டு மகிழ்ந்திருந்தார்.

ஒருநாள் சேரர்கோன் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்திறைவனை வழிபடச் சென்றார். திருக்கோயிலுக்குட் சென்ற சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்துருகி நிலமிசை வீழ்ந்து `அடியேன் இவ்வுலக வாழ்வை வெறுத்தேன்; அடியேனை நின் திருவடியில் சேர்த்தல் வேண்டும்` என்னும் குறிப்புடன் `தலைக்குத் தலைமாலை` என்னும் திருப்பதிகத்தால் விண்ணப்பித்து வேண்டினர். பெருமான் சுந்தரரைத் திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்துக்கொள்ளத் திருவுளங் கொண்டார். நம்பியாரூரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வரத் தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி யருளினார்.

சிவபிரானினருளாணை மேற்கொண்டு வெள்ளையானை யுடன் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயில்வாயிலை அடைந்தனர் தேவர்கள். இறைவனை வழிபட்டுக் கோயில் வாயிலை யடைந்த சுந்தரரை வணங்கி நின்று தேவர்கள் திருக்கயிலைமலைக்கு வருமாறு இறைவனருளிய கட்டளையைத் தெரிவித்தனர். தம்மை மறந்த வன்றொண்டர் இறைவனருளாணையை ஏற்றுக்கொண்டார். தேவர் கள் சுந்தரரை வலம்வந்து அவரை வெள்ளையானை மேலேற்றினர். சுந்தரர் தம் உயிர்த் தோழராகிய சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சுந்தரர் திருக்கயிலை செல்வதைத் திருவருளாற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரைமீதேறித் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்குச் சென்றார். வெள்ளையானைமீது அமர்ந்து விசும்பிற் செல்லும் சுந்தரரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழி செல்லும் ஆற்றல் பெற்று வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று.

சேரமான் பெருமாளுடன் வந்த வீரர்கள் தம் அரசரை விசும்பிற் கண்ணுக்குப் புலப்படுமளவு கண்டு, பின் வருந்தினர். தம் உடம்பை உடைவாளால் வெட்டி வீழ்த்தி வீரயாக்கைபெற்று விசும்பில் சேரர்கோனைச் சேவித்துச் சென்றார்கள்.

சுந்தரர், `தானெனை முன் படைத்தான்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தவாறு திருக்கயிலையை அடைந்து தென்திசை வாயிலை அணுகினார். சேரர்கோனும் சுந்தரரும் தத்தம் ஊர்தி களினின்று கீழிறங்கிப் பல வாயில்களையும் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தனர். அவ்வாயிலில் சேரர்கோன் உள்ளே செல்ல அனுமதியின்றித் தடைப்பட்டு நின்றார். சுந்தரர், உள்ளே சென்று அம்மையப்பராய பெருமான் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்று, சேரமான் பெருமாள் வருகையை விண்ணப்பித்தார். சிவபிரான் மகிழ்ந்து சேரமானை வரவிடுக என நந்திதேவர்க்குப் பணித்தார். அவரும் இறைவனருளிப்பாட்டைக் கூறிச் சேரமான் பெருமாளை உள்ளே அழைத்து வந்தார். உள்ளேவந்த சேரர்கோன் சிவபிரானை வீழ்ந்திறைஞ்சி நின்றார். பெருமான் சேரர்கோனை `நீ இங்கு நாம் அழையாமை வந்ததேன்` என வினவினார். அதுகேட்ட சேரவேந்தர் அடியேன் ஆரூரர் கழல்போற்றி அவரைச் சேவித்து வந்தேன். திரு வருள்வெள்ளம் இங்கு என்னை ஈர்த்து நிறுத்தியது. அடியேன் பாடிய `திருவுலாப்புறம்` என்ற நூலைச் செவிமடுத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். திருவுலாப்புறத்தை எடுத்துரைத்து அரங்கேற் றினார். பெருமான் அவரை நோக்கிச் சேரனே நீ நம்பியாரூரராகிய ஆலால சுந்தரருடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக எனத் திருவருள் பாலித்தார். இறைவனருளிய வண்ணம் நம்பியாரூரர் அணுக்கத் தொண்டு புரியும் ஆலால சுந்தரராகவும், சேரமான் பெருமாள் சிவகணத் தலைவராகவும் திருக்கயிலையில் நிலைபெற்றுப் பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்தார்கள். நம்பியாரூரரை மணந்த பரவையாரும், சங்கிலியாரும் சிவ பெருமான் திருவருளால் முறையே கமலினியாராகவும், அநிந்திதை யாராகவும் ஆகி உமையம்மைக்குத் தாங்கள் செய்துவந்த அணுக்கத் தொண்டை மேற்கொண்டு மகிழ்ந்தார்கள்.

சுந்தரர், வெள்ளையானையிலமர்ந்து திருக்கயிலையை நோக்கிச் சென்றபொழுது பாடிய ``தானெனைமுன் படைத்தான்`` என்ற திருப்பதிகத்தை, வருணனிடத்துக் கொடுத்தருள அவன் அத் திருப்பதிகத்தினைத் திருவஞ்சைக் களத்தில் கொண்டுவந்து சேர்ப் பித்தான்.

சேரர்கோன் பாடிய திருக்கயிலாய ஞானஉலாவை உட னிருந்து கேட்ட மாசாத்தனார் அத்தெய்வப் பனுவலைச் சோழ நாட்டுத் திருப்பிடவூரிலே வெளிப்படுத்தித் தமிழுலகிற்களித்தார்.

பெரிய புராணத்தில்:

திருக்கயிலை மால்வரையின் அடிவாரத்தில் எண்ணிறந்த முனிவர்களும், சிவயோகியர்களும் கூடியிருந்தனர். அவர்களின் தலைவராய உபமன்யு முனிவரும் வீற்றிருந்தருளினார். அவ்விடத்தே ஆயிரம் சூரியர் ஒன்று திரண்டாற்போன்ற பேரொளி தோன்றிற்று. அதனைக் கண்ட முனிவர்கள் உபமன்யு முனிவரை நோக்கி இவ் வதிசயம் யாது எனக் கேட்டனர். திருவருளைத் தியானித்து உண்மை யுணர்ந்த முனிவர் திருக்கயிலையிலிருந்து தென்திசை யடைந்து அவ தரித்த நாவலூர் நம்பிகளாகிய வன்றொண்டர் மீண்டும் கயிலைக்கு எழுந்தருளுகின்றார் என்று கூறி அப்பேரொளி தோன்றிய திசையைத் தொழுதெழுந்தார். சிவபிரானையன்றிப் பிறரை வணங்காத முனிவர் பிரான் இச்சோதியை வணங்கிய காரணங்கேட்க உபமன்யு முனிவர் சிவ பெருமானைத் தம்முள்ளத்தே கொண்ட நம்பியாரூரர் நம்மால் தொழப்படும் தன்மையுடையார் என்று கூற ஏனைய முனிவர்களும் வணங்கியெழுந்து நம்பியாரூரரைப்பற்றிக் கூறுமாறு கேட்டறிந்தனர் என்பது திருத்தொண்டர் புராணத்துள் சுந்தரர் வரலாற்றுத் தொடக்கம்.

மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீதிலாத் திருத் தொண்டத்தொகை அருளுவதற்காகவே சுந்தரர் அவதாரம் செய் தருளினார் என்பது சேக்கிழார் பெருமான் திருவுள்ளம். `நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து ஈசனடியார் பெருமையினை எல்லாவுயிரும் தொழ எடுத்துத் தேசமுய்யத் திருத் தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன், வாச மலர்மென் கழல் வணங்க வந்தபிறப்பை வணங்குவாம்` என்று சுந்தரர் பெருமானைத் துதிக்கின்றார் சேக்கிழார்.

தேவாரத் திருமுறைகளில் ஏழாந்திருமுறையாகத் தொகுக்கப் பெற்றுள்ளது சுந்தரர் செந்தமிழ். அவற்றுள் சுந்தரர் பாடியருளிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகமே பெரிய புராணம் தோன்று தற்குக் காரணமாயிருந்தது. தென்தமிழ்ப் பயனாய் வந்த திருத் தொண்டத்தொகை எனச் சேக்கிழாரடிகள் இதனைச் சிறப்பித்துப் போற்றுவர். இத்திருப்பதிகமாகிய தொகையின் வகைநூலாக நம்பி யாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை இயற்றச் சேக்கிழார் பெருமான் சுந்தரரையே பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பெரியபுராணமென்னும் பெருங் காவியத்தை இயற்றி யுள்ளார். பெரியபுராணம் தொடக்கம் முதல் முடிவு வரை சுந்தரர் வரலாற்றைத் தொடர்பாக விரித்துரைக்கும் முறையில் அழகுற அமைந்துள்ளது.

தடுத்தாட்கொண்ட புராணம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், கழறிற்றறிவார் புராணம், வெள்ளானைச் சருக்கம் ஆகிய வற்றில் சுந்தரர் வரலாறு கூறப்படுவதோடன்றி ஒவ்வொரு சருக்கத் திறுதியிலும் சுந்தரர் வாழ்த்து அமைந்துள்ளது.

சுந்தரர் காலம்:

சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தை அறிஞர்கள் பலரும் ஆராய்ந்துள்ளனர். அவற்றையெல்லாம் தொகுத்துப் பன்னிரு திரு முறை வரலாறு என்னும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து வெளி யீட்டில் துணைப் பேராசிரியர் வித்துவான். திரு. க. வெள்ளை வாரணனார் அவர்கள் ஆராய்ந்து தெளிவு செய்துள்ளார்கள். அவர்கள் வழிநின்று சுந்தரர் காலத்தைக் காண்போம்.

சுந்தரர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலங் களுக்குப்பின் திருவவதாரம் செய்தவர் என்பது வெளிப்படை. சுந்தரர் தம் பதிகங்களை ஆராயின் திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூன்றடியார்களைப் பரவியுள்ளமையின் அவர்கள் காலத்துக்குப்பின் வாழ்ந்தவர் என அறியலாம். அவ்வடியார்களில் சிலர் சுந்தரரின் சமகாலத்தவராகவும் உள்ளனர்.

சுந்தரர் தம் காலத்தில் தமிழகத்தில் பெரு வேந்தனாகவும் சிறந்த சிவனடியாராகவும் திகழ்ந்த வேந்தனொருவனைக் `கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற் சிங்கனடியார்க்கும் அடியேன்` என்று திருத்தொண்டத்தொகையுள் போற்றியுள்ளார்.

இத்தொடரில் `காக்கின்ற` என்ற நிகழ்காலப் பெயரெச்சம் கழற்சிங்கன் சுந்தரர் காலத்தில் வாழ்ந்தவன் என்பதைத் தெரிவிக்கிறது. காடவர் என்ற பெயர் பல்லவ மரபினரின் பெயர். கழல் என்பது பெருவீரன் என்பதைக் குறிக்கும் அடைமொழி. சிங்கன் என்ற பெயர் பல்லவ மன்னர்களில் இரண்டாம் நரசிங்கவர்மனாகிய இராசசிம்மப் பல்லவனையே குறிக்கின்றதென திரு. வெள்ளை வாரணனார் அவர்கள் தெளிவு செய்துள்ளார்கள். அவன் கி.பி. 690 முதல் கி.பி. 720 வரை காஞ்சிமாநகரிலிருந்து ஆட்சி புரிந்த சிறந்த சிவபக்தன். மேலும் பூசலார் காலத்தில் காஞ்சிக் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவனும் இம்மன்னனே யாவன். இவனது சிவபத்திச் சிறப்பையும், பெரு வீரத்தையும் குறிக்கும்பட்டப் பெயர்கள் பல.

சுந்தரர் பாடிய திருப்பதிகத்தில் `உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார்` என்னும் தொடரில் குறிக்கப்பெற்ற பல்லவனும் இராசசிம்மப் பல்லவனாகிய இரண்டாம் நரசிங்கவர்மனேயாவன்.

சுந்தரரை மகன்மைகொண்டு வளர்த்த மன்னன் திருமுனைப் பாடி நாட்டை ஆட்சி புரிந்த நரசிங்கமுனையரையன் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இம் மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மனின் கீழ்த் திருமுனைப்பாடி நாட்டை யாண்ட குறுநில மன்னனாவன். தம் பேரரசன் பெயரைத் தன் பெயரோடு இணைக்கப்பெற்ற நிலையில் இவன் பெயர் நரசிங்க முனையரையன் என வழங்குகின்றது.

சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள், சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்தபோது பாண்டிய மன்னனும், சோழனும் வரவேற்றனர்.

கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு, சேரமான் பெரு மாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி.பி. 825-க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670-710).

எனவே சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியும், எட்டாம் நூற்றாண்டின் தொடக்கமுமாகிய காலப்பகுதியே யாகும்.

அகச்சான்றுகள்:

தாய்தந்தையர், மரபு, பெயர், ஊர்:

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத் திருப்பதிகக் குறிப்புக்களில் அவருடைய வரலாறு அமைந்துள்ளது. நாவலூரன் என்று தம்மைப் பல இடங்களிலும் குறித்துக் கொள்வதால் ஊரையும், சடையன்தன் காதலன் (தி.7 ப.58 பா.10) இசைஞானி சிறுவன் (தி.7 ப.16 பா.11) என்று பெற்றோர் பெயரைக் குறிப்பிடுவதால் பெற்றோரையும், மறையார்தங்குரிசில் (தி.7 ப.25 பா.10) என்று மரபு கூறிக் கொள்வதால் மரபையும் தம்மைப் பல இடங்களிலும் ஆரூரன் என்றே குறிப்பிடுவதால் இயற்பெயர் நம்பியாரூரர் என்பதனையும் அறியலாம்.

இவருடைய தாயார் திருவாரூரில் பிறந்தவர். மேலும் சுந்தரருடைய பாட்டனார் ஆவணத்தில் ஆரூரன் என்று குறித்துள்ளார். ஆதலால் சுந்தரர்க்கு ஆரூரன் என்றே பெற்றோர் பெயரிட்டனர். நம்பி என்பது ஆண்மக்களுள் சிறந்தாரை அழைக்கும் பெயர்.

அரசிளங்குமரராய் வளர்ந்தது:

திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையரையன் என்னும் மன்னன் சடையனார்பால் நம்பியாரூரரை வேண்டிப்பெற்று அரசிளங்குமரனாக ஆதரித்து வளர்த்தார்.

``நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன்

ஆதரித் தீசனுக்கு ஆட்செயு மூர்அணி நாவலூர் என்று ஓதநற் றக்கவன் றொண்டன்ஆ ரூரன்`` (தி.7 ப.17 பா.11)

``நாடெலாம் புகழ் நாவலூராளி நம்பிவன்றொண்டன்`` (தி.7 ப.64 பா.10)

``வேந்தராயுலகாண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இவ்வுடல்`` (தி.7 ப.64 பா.6)

இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பெற்றது:

நம்பியாரூரர்க்குத் திருமணம் நிகழவிருக்கும் நற்பொழுதில் சிவபிரான் முதிய வேதியராய்த் தோன்றி ஆளோலை காட்டி ஆட் கொண்ட செய்தி பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன.

``மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை வலியவந்தெனை ஆண்டுகொண்டானே`` (தி.7 ப.70 பா.2)

``நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன்

தன்னை ஆட்கொண்ட சம்புவே`` (தி.7 ப.69 பா.8)

``வாயாடி மாமறை யோதியோர் வேதியனாகி வந்து ...... வெண்ணெய் நல்லூரில் வைத்து ஆளுங்கொண்ட`` (தி.7 ப.17 பா.8)

``அடக்கங்கொண் டாவணங்காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்`` (தி.7 ப.17 பா.10)

``வெண்ணெய் நல்லூரில் அற்புதப்பழ ஆவணங்காட்டி அடியனாவெனை ஆளது கொண்ட நற்பதத்தை``

(தி.7 ப.68 பா.6)

``ஓர் ஆவணத்தால் எம்பிரானார்வெண்ணெய்நல்லூரில் வைத்

தென்னை ஆளுங் கொண்ட நம்பிரானார்`` (தி.7 ப.17 பா.5)

``அன்று வந்தெனை அகலிடத்தவர்முன் ஆளதாகஎன்று ஆவணங் காட்டி

நின்று வெண்ணெய் நல்லூர் மிசை யொளித்த

நித்திலத்திரள் தொத்தினை`` (தி.7 ப.62 பா.5)

``ஒட்டியாட் கொண்டு போயொ ளித்திட்ட உச்சிப்போதனை`` (தி.7 ப.59 பா.10)

``தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்டநாள் சபைமுன்

வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார்`` (தி.7 ப.17 பா.2)

``நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார்`` (தி.7 ப.19 பா.2)

``பித்தரை யொத்தொரு பெற்றியர் நற்றவை யென்னைப்பெற்ற

முற்றவை தம்மனை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்`` (தி.7 ப.18 பா.7)

``ஆவணம் செய்து ஆளுங் கொண்டு`` (தி.7 ப.5 பா.10)

தவநெறி வேண்டுதல்:

திருத்துறையூரில் சுந்தரர் தவநெறி வேண்டிப் பதிகம் பாடினார். அத் திருப்பதிகத்திலேயே தவநெறி வேண்டும் குறிப்பைத் தெரிவித்துள்ளார்.
``துறையூர்த் தலைவா உனைவேண்டிக்கொள்வேன் தவநெறியே`` (தி.7 ப.13 பா.1-10)

திருவடி சூட்டப் பெறுதல்:

திருவதிகைச் சித்தவட மடத்தில் பெருமான் திருவடி சூட்டி யருளிய நிலையில் பாடிய திருப்பதிகத்தில் சுந்தரர்,

பெருமான் திருவடி சூட்டிய அற்புதத்தைக் கூறியுள்ளார்.

``எம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்

எம்மானை யெறிகெடில வடவீரட் டானத்து

உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே`` (தி.7 ப.38 பா.1)

காழிக் கடவுள் காட்சி:

சுந்தரர், சீகாழிப் பதியைத் திருவடிகளால் மிதித்தற்கஞ்சிப் புற எல்லையை வலஞ்செய்து வணங்கி நின்றாராக,

காழிப் பெருமான் காட்சி வழங்கினார். அவ்வருட்காட்சியைக் கண்ட அற்புதத்தைப் பாடல் தோறும்,

``கழுமல வளநகர்க் கண்டு கொண்டேன்`` (தி.7 ப.58 பா.1-10)

என்று குறித்துள்ளார்.

தம்பிரான் தோழராதல்:

திருவாரூர்ப் பெருமான் `தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்` என்றருளினார். சுந்தரர் தம்பிரான் தோழரானார். இக் குறிப்புப் பல பதிகங்களில் காணப்படுகின்றது.
``தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை`` (தி.7 ப.68 பா.8)

``என்னுடைய தோழனுமாய் யான்செய்யும்

துரிசுகளுக்கு உடனாகி`` (தி.7 ப.51 பா.1)

``என்றனை ஆள் தோழனை`` (தி.7 ப.84 பா.9)

பரவையார் திருமணம்:

திருவாரூர்ப் பெருமான் அன்புடைத் தோழராய் நங்கை பரவையாரை வாழ்க்கைத் துணையாகத் தந்தருளியதும், பின் தூது சென்று இருவரிடை சந்து செய்வித்த அருளிப்பாட்டையும் குறிக்கும் அகச்சான்றுகள் பல.

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழையொண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா

ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. (தி.7 ப.51 பா.10)

``தூதனைத் தன்னைத் தோழமையருளித் தொண்டனேன்செய்த

துரிசுகள் பொறுக்கும் நாதனை`` (தி.7 ப.68 பா.8)

``தூதனை என்றனை ஆள் தோழனை`` (தி.7 ப.84 பா.9)

திருத்தொண்டத்தொகை யருளியது:

இறைவனருளால் அடியார்களுக்கு ஆட்பட்ட திறத்தினைக் குறிக்கும் பகுதிகள்:

``ஆள்தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டு`` (தி.7 ப.21 பா.2)

``பண்டே நின்னடியேன் அடியாரடியார்கட் கெல்லாம் தொண்டே பூண் டொழிந்தேன்`` (தி.7 ப.24 பா.4)

நெல்லிட ஆள்வேண்டிப் பெற்றது:

பரவையார் பொருட்டுக் குண்டையூரில் பெற்ற நெல் மலையைத் திருவாரூருக்கு எடுத்து வருதற்பொருட்டுப் பணியாள் வேண்டிப்பெற்ற குறிப்பு கோளிலித் திருப்பதிகத்திலேயே குறிக்கப் பட்டுள்ளது.

``கோளிலியெம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்

ஆளிலை யெம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே`` (தி.7 ப.20 பா.1-10)

``பரவையவள் வாடுகின்றாள்`` (தி.7 ப.20 பா.8)

``பரவை பசிவருத்தம் அது நீயும் அறிதியன்றே``

(தி.7 ப.20 பா.6,3)

``நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்தேத்திய பத்தும்`` (தி.7 ப.20 பா.10)

கோட்புலியார் புதல்வியரைத் தம் மகளாகக் கருதியது:

திருநாட்டியத்தான் குடியில் கோட்புலியார் மகளிரைத் தம் புதல்வியராகக் கொண்டருளினார் சுந்தரர்.

``கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற

கொடிறன் கோட்புலி சென்னி நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி

நம்பியை நாளும் மறவார்

சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்

திருவா ரூரன்..`` (தி.7 ப.15 பா.10)

``வனப்பகை யப்பன்`` (தி.7 ப.87 பா.10)

``வனப்பகையப்பன்... சிங்கடிதந்தை`` (தி.7 ப.57 பா.12)

பொன் பெற்றது:

திருப்புகலூரில் சுந்தரர்க்கு இறைவன் செங்கல்லைப் பொன்னாக்கி யளித்தனன். இக் குறிப்பு நம்பியாண்டார் நம்பிகளால் விளக்கப்பெற்றுள்ளது.

``புகலூர் பாடுமின் இம்மையே தரும் சோறும் கூறையும்`` (தி.7 ப.34 பா.1)

``தென்புகலூர் அரன்பால் தூயசெம்பொன் கொள்ள வல்லவன்``

-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, பா.57

பனையூரில் ஆடல் கண்டருளியது:

திருப்புகலூரிலிருந்து திருவாரூர் செல்லும் சுந்தரர்க்குப் பெருமான் திருப்பனையூர் எல்லையில் ஆடல் காட்டியருளினான்.

``பனையூர்த் தோடுபெய்தொரு காதினிற் குழைதூங்கத்

தொண்டர்கள் துள்ளிப்பாட நின்று ஆடுமாறு வல்லார்`` (தி.7 ப.87 பா.1)

மழபாடியை வழிபட்டது:

திருவாலம்பொழிலில் சுந்தரர் தங்கியிருந்த காலத்தில் இறைவன் கனவில் தோன்றி `மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ` என்றருளினான். இக்குறிப்பமைந்த திருப்பாடல் பகுதி:

``மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே`` (தி.7 ப.24 பா.1)

பொற்குவை பெற்றது:

திருப்பாச்சிலாச் சிராமத்தில் இறைவனை இகழ்ந்துரைத்தது போலப் பதிகம் பாடியருளினார் சுந்தரர்.

திருக்கடைக்காப்பில் இகழ்ந்துரைத்ததையும் பொறுத்து அருள்புரிதல் கடமையென்று வற்புறுத்திப் போற்றிப் பொற்குவை பெற்றார். திருநாவலூர்ப் பதிகத்தில் இகழ்வுரையையும் ஏற்று இறைவன் பொன்னளித்தான் என்று கூறுகின்றார்.

``புன்மைகள்பேசவும் பொன்னைத் தந்தென்னைப்போகம் புணர்த்த

நன்மையினார்க்கு இடமாவது நந்திருநாவலூரே`` (தி.7 ப.17 பா.2)

வழித்துணை பெற்றது:

திருமுதுகுன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுந்தரரைக் கூடலையாற்றூர் இறைவர் வழிப்போக்கராய் வந்து கூடலை யாற்றூர்க்கு அழைத்துச்சென்று மறைந்தருளினார். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் பகுதி.

``கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூரில்

அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே`` (தி.7 ப.85 பா.1)

ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடியது:

திருமுதுகுன்றத்து இறைவர்பால் பெற்ற பன்னீராயிரம் பொன்னைச் சுந்தரர் மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூரில் பரவையார் முன்னிலையில் திருக்குளத்தில் எடுத்தார். அருளால் வாசிதீரப் பெற்றார். இந்நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பகுதி,

``முதுகுன்றமர்ந்தீர், மின்செய்த நுண்ணிடையாள்

பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள்`` (தி.7 ப.25 பா.1)

உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்

செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர் வம்பமருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்

எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளங் கெடவே. (தி.7 ப.25 பா.2)

``பூத்தாருங் குழலாள் பரவையிவள் தன்முகப்பே

கூத்தாதந் தருளாய்`` (தி.7 ப.25 பா.9)

நம்பியாண்டார் நம்பிகளும் இதனைக் குறித்துள்ளார்.

செழுநீர் வயல்முது குன்றினிற்

செந்தமிழ் பாடிவெய்ய

மழுநீள் தடக்கையன் ஈந்தபொன்

ஆங்குக்கொள் ளாதுவந்தப்

பொழில்நீள் தருதிரு வாரூரில்

வாசியும் பொன்னுங்கொண்டோன்

கெழுநீள் புகழ்த்திரு வாரூரன்

என்றுநாம் கேட்டதுவே. (தி.11 தி. திருவந்தாதி, 77)

பொதிசோறு பெற்றது:

திருக்குருகாவூர் இறைவன் சுந்தரருக்குப் பொதிசோறு அளித்த அற்புதத்தைச் சுந்தரர் குறிப்பிடும் பகுதி.

``ஆவியைப் போகாமே தவிர்த்துஎன்னை ஆட்கொண்டாய்`` (தி.7 ப.29 பா.2)

``பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்`` (தி.7 ப.2 பா.93)

சங்கிலியாரை மணந்தது:

திருவொற்றியூர் இறைவனைப் பணிந்து வேண்டிச் சங்கிலியாரை மணந்த செய்தியைக் குறிப்பிடும் பகுதிகள்.

``பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீழ் இருஎன்று

சொன்ன வெனைக்காணாமே சூளுறவு மகிழ்க்கீழே

என்ன வல்ல பெருமானே`` (தி.7 ப.89 பா.9)

``மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம் தோன்றவருள் செய்தளித்தாய்`` (தி.7 ப.89 பா.10)

``நொய் யேனைப் பொருட்படுத்துச்

சங்கிலியோ டெனைப் புணர்த்த தத்துவனை`` (தி.7 ப.51 பா.11)

``பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கு மெனக்கும் பற்றாய பெருமானே`` (தி.7 ப.46 பா.11)

ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்

சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்றோள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூரையன் அருளேத. (தி.7 ப.45 பா.4)

துணையும் அளவுமில்லாதவன் றன்னருளே துணையா கணையுங் கதிர்நெடு வேலுங்கறுத்த கயலிணையும் பிணையும் நிகர்த்தகட் சங்கிலி பேரமைத் தோளிரண்டும் அணையுமவன் திருவாரூரனாகின்ற அற்புதனே.

- திருத்தொண்டர் திருவந்தாதி, 40

கண்களை இழந்து வருந்துதல்:

சுந்தரர் சங்கிலியாருக்குச் செய்த சபதம் பிழைத்த காரணத் தால் கண்களை இழந்து வருந்தினார். அதைக் குறிக்கும் பகுதிகள்.

``வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்

மற்று நானறியேன் மறுமாற்றம்

ஒழுக்க என்கணுக்கொரு மருந் துரையாய்

ஒற்றி யூரெனும் ஊருறைவானே`` (தி.7 ப.54 பா.1)

``மூன்று கண்ணுடையாய் அடியேன்கண்

கொள்வதே கணக்கு வழக்காகில்`` (தி.7 ப.54 பா.4)

``கழித்த லைப்பட்ட நாயது போல

ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை

ஒழித்துநீ அருளாயின செய்யாய்`` (தி.7 ப.54 பா.5)

``அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்

அழையேல் போகுருடா எனத் தரியேன்

முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்`` (தி.7 ப.54 பா.9)

``தண்பொழி லொற்றி மாநகருடையாய்

சங்கிலிக்கா வென்கண் கொண்ட

பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே`` (தி.7 ப.69 பா.3)

``கண்மணியை மறைப்பித்தாய்`` (தி.7 ப.89 பா.6)

ஊன்றுகோல் பெற்றது:

சுந்தரர் திருவெண்பாக்கத்து இறைவரை வழிபட்டு ஊன்றுகோல் பெற்றதைக் குறிப்பிடும் பகுதிகள்:

``ஊன்று கோலெனக் காவ தொன்றருளாய்``(தி.7 ப.54 பா.4)

மான்திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம் தோன்றஅருள் செய்தளித்தா யென்றுரைக்க உலகமெலாம் ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீ ரென்றானே. (தி.7 ப.89 பா.10)

இடக்கண் பெற்றது:

காஞ்சிபுரத்திறைவரை வழிபட்டுச் சுந்தரர் இடக்கண் பெற்றதை அறிவிக்கும் பகுதிகள்:

``ஏலவார் குழலாள் உமைநங்கை

என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானைக்

காணக் கண்ணடியேன் பெற்றவாறே`` (தி.7 ப.61 பா.1)

``கற்றவர் பரவப்படுவானைக் காணக் கண்ணடியேன் பெற்றதென்று`` (தி.7 ப.61 பா.11)

உடற் பிணி நீங்கப் பெற்றது:

திருத்துருத்தி இறைவரைப் பணிந்து திருக்குளத்தில் நீராடி உடற்பிணி நீங்கப் பெற்றதை அறிவிக்கும் பகுதிகள்:

``கண்ணிலேன் உடம்படு நோயால்

கருத்தழிந்து உனக்கே பொறையானேன்`` (தி.7 ப.10 பா.2)

``என்னுடம்படும் பிணியிடர் கெடுத்தானை`` (தி.7 ப.74 பா.1)

``உற்றநோய் இற்றையே அறவொழித்தானை``(தி.7 ப.74 பா.5)

``தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர் வறுத்தானை`` (தி.7 ப.74 பா.3)

வலக்கண் பெற்றது:

சுந்தரர் திருவாரூரை யடைந்து இறைவனைப் பணிந்து வலக் கண் பெற்றார். இக்குறிப்பைத் தெரிவிக்கும் பகுதிகள்: விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பியாட்பட்டேன் குற்றமொன்றும் செய்ததில்லை கொத்தை யாக்கினீர் எற்றுக்கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக்கண் தான்தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. (தி.7 ப.95 பா.2)

``பாரூர் அறியஎன்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்`` (தி.7 ப.95 பா.2)

``காணாத கண்கள் காட்டவல்ல கறைக்கண்டனே`` (தி.7 ப.92 பா.8)

ஏயர்கோன் பிணி நீக்கியது:

ஏயர்கோன் கலிக்காமரை அடைந்து சுந்தரர் இறையருளால் நட்புக்கொண்டனர். அதனைக் குறிக்கும் பகுதி:

``ஏதநன்னிலம் ஈரறுவேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து`` (தி.7 ப.55 பா.3)

மூவேந்தருடன் வழிபட்டது:

சுந்தரர், சேரமான் பெருமாளோடு மதுரை சென்று பாண்டியன், சோழன் ஆகிய மன்னர்களோடு பல தலங்களையும் வழிபட்டனர். இதனைக் குறிக்கும் பாடல்.

அடிகேளுமக் காட்செய அஞ்சுது மென்று

அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி

முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

மொழிந்தாறு மோர்நான்கு மோர் ஒன்றினையும் படியா இவை கற்றுவல்ல அடியார்

பரங்குன்றம் மேய பரமனடிக்கே

குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்

குலவேந்த ராய் விண்முழு தாள்பவரே. (தி.7 ப.2 பா.11)

ஐயாற்றிறைவரை வழிபட்டது:

காவிரியில் கரைபுரண்டோடிய வெள்ளத்தை விலக்கி ஐயாற் றிறைவனைச் சென்று வழிபட்டார் சுந்தரர். இதனைக் குறிக்கும் பகுதி.

``விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம்

பரந்து நுரைசிதறி

அதிர்க்கும் திரைக்காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகேளோ`` (தி.7 ப.77 பா.9)

வழிப்பறி செய்த பொருள்களை மீட்டது:

சுந்தரர் திருமுருகன்பூண்டி வழியாக வரும்போது வேடர் களால் பறிக்கப்பெற்ற பொருள்களை இறைவனை வேண்டிப் பெற்றார். இதனைக் குறிக்கும் பகுதிகள்.

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்

விரவ லாமைசொல்லித்

திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு

ஆற லைக்குமிடம்

முடுகு நாறிய வடுகர் வாழ்முரு

கன்பூண்டி மாநகர்வாய்

இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. (தி.7 ப.49 பா.1)

``எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் கொங்கே புகினும் கூறைகொண்டு

ஆறலைப்பாரிலை`` (தி.7 ப.92 பா.3)

முதலையுண்ட பாலனை மீட்டது:

அவினாசியில் முதலையுண்ட பாலனைச் சுந்தரர் இறைவன் அருட்டுணைகொண்டு மீட்டருளினார். இதனைக் குறிக்கும் பகுதிகள்.

உரைப்பார் உரையுகந் துள்கவல்லார் தங்க ளுச்சியாய்

அரைக்காடரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவினாசியே

கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே. (தி.7 ப.92 பா.4)

வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ ஒழிவதழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே பொழிலாருஞ் சோலைப் புக்கொளியூ ரிற்குளத்திடை இழியாக் குளித்த மாணி யென்னைக்கிறி செய்ததே. (தி.7 ப.92 பா.2)

``புள்ளேறு சோலைப் புக்கொளியூரிற் குளத்திடை

உள்ளாடப் புக்க மாணியென்னைக்கிறி செய்ததே`` (தி.7 ப.92 பா.9)

கயிலைக்கு எழுந்தருளியது:

திருவஞ்சைக் களத்திறைவனிடம் சுந்தரர், உலக வாழ்வில் வெறுப்புற்றதை எடுத்துக்கூறி ஆட்கொண்டருள வேண்டினார். சிவ பெருமான் தேவர்களை அனுப்பிச் சுந்தரரைத் திருக்கயிலைக்கு அழைத்துவரச் செய்தான். சுந்தரர் வெள்ளையானைமீது திருக் கயிலைக்குச் சென்றருளினார். இதனைக் குறிக்கும் பகுதிகள்:

``வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்`` (தி.7 ப.4 பா.8)

``வானை மதித்தமரர் வலஞ்செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்

மலைஉத்தமனே`` (தி.7 ப.100 பா.2) ``விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளையானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே`` (தி.7 ப.100 பா.5)

``வானெனை வந்தெதிர்கொள்ள மத்தயானை அருள் புரிந்து

ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே`` (தி.7 ப.100 பா.1)

``துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன் பரமல்லதொரு வெஞ்சின ஆனைதந்தான் நொடித்தான்மலை உத்தமனே`` (தி.7 ப.100 பா.6)

``நிலைகெட விண்ணதிர நிலமெங்கு மதிர்ந்தசைய

மலையிடை யானையேறி வழியே வருவே னெதிரே அலைகட லாலரையன் அலர்கொண்டு முன்வந்திறைஞ்ச`` (தி.7 ப.100 பா.7)

``வரமலிவாணன் வந்து வழிதந்தெனக் கேறுவதோர் சிரமலியானை தந்தான்`` (தி.7 ப.100 பா.8)

இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான் நந்தமர் ஊரன்என்றான் நொடித்தான்மலை யுத்தமனே. (தி.7 ப.100 பா.9)

வருணன் திருப்பதிகத்தை வெளிப்படுத்தியது:

சுந்தரர் பாடிய நொடித்தான்மலைத் திருப்பதிகத்தை வருணனிடம் கொடுத்தருள அவன் அத்திருப்பதிகத்தைத் திரு வஞ்சைக்களத்தில் கொண்டுவந்து சேர்ப்பித்தனன். இதற்குரிய அகச்சான்று,

ஊழிதோறூழி முற்றும் உயர்பொன் நொடித்தான்மலையைச்

சூழிசையின் கரும்பின்சுவை நாவலவூரன் சொன்ன

ஏழிசையின் றமிழால் இசைந்தேத்திய பத்தினையும்

ஆழிகடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே. (தி.7 ப.100 பா.10) சேரர்கோன் திருக்கயிலை சென்றது: சேரமான் பெருமாள் சுந்தரருடன் கயிலை சென்றனர் என்ற வரலாறு, நம்பியாண்டார் நம்பிகள் வாய்மொழிகளால் விளங்குகிறது. திருவிசைப்பாப் பாடற் பகுதியும் இதனை வலியுறுத்தும்.
``சேரற்குத் தென்னா வலர்பெருமாற்குச் சிவனளித்த

வீரக் கடகரிமுன்புதம் பந்தி யிவுளி வைத்த வீரற்கு..``

- தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 86

ஞான ஆரூரரைச் சேரனையல்லது நாமறியோம்

மானவ ஆக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண்

வானவராலும் மருவற்கரிய வடகயிலைக்

கோனவன் கோயிற் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே.

-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 86

``களையா உடலோடு சேரமான் ஆரூரன்

விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள``

- தி.9 திருவிசைப்பா, 189

இவ்வாறுள்ள பகுதிகள் சுந்தரர் வரலாற்றை விளக்கும் அகச்சான்றுகளாகும்.