ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை


பண் :

பாடல் எண் : 1

அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

அந்தம் இன்மை ஞானத்தைச் சிறப்பித்தது. வருகின்ற மந்திரத்தில் எண்ணின்மையும் அன்னது. நோதல் பசியினால். செரு - போர். செருச்செய்வாரது நுட்பமாகிய திறமை செருவின்மேல் ஏற்றப்பட்டது. ``வந்து`` என்றதனில் `வேற்று நாட்டிலிருந்து` என்பது பெறப்பட்டது. இவ்வெச்சம் காரணப்பொருட்டாய் நின்றது. தளை சிதைய ஓதப்படுவன பாடமல்ல.
இதனால் யோகியர் ஞானியரது உடலை எரியூட்டுதலும், வாளா விடுதலும் குற்றமாதல் கூறப்பட்டது. அடுத்து வரும் மந்திரமும் எரிப்படுத்தல் கூடாமையைக் கூறும்.

பண் :

பாடல் எண் : 2

எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

அண்ணல் - இறைவன். ``ஆங்கு`` அசை. இதனுள் ஞானியின் உடல் இறைவன் கோயிலுக்கு ஒப்பாதல் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.

பொழிப்புரை :

மலங்கு ஆர - மனங்கலங்குதல் மிகும்படி, மண்ணில் அழிதல் - கேட்பாரின்றிக் கிடநத் அழிதல். ஏனையவை வெளிப்படை.

குறிப்புரை :

`பங்கமாம்` என்பது பாடம் அன்று. ``அவர்`` என்றது ஆகுபெயர். இதனால் குகைக்குள் அடக்கும் புண்ணியத்தைப் பயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

இதனால் ஞானியின் உடலைச் சமாதி செய்தலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.

பொழிப்புரை :

குகையை (நில அறையை) ஒன்பது சாண் ஆழமும் ஒரு பக்கத்திற்கு ஐந்து சாண் சதுரமும் ஆகச் செய்து அடியில் திருமேனி தவநிலையில் அமர்கின்ற ஆசனம் பக்கத்திற்கு மூன்றாக முக் கோணமாக அமைத்து, அதன் மேல் திருமேனியைப் பதுமாசனமாக இருத்துக.

குறிப்புரை :

மூன்றாம் அடியில் `உட்குகை` என்னாது `குகை` என்றே ஓதின் தளை சிதைதலை நோக்குக. உட்குகை - குகைக்கீழ். `பத்மாசனமாக இருத்துக` என இறுதியில் ஆக்கத்துடன் ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால் நிலக்குகை அமைத்து அதன்கண் திருமேனியை இருத்துமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

``தன்`` என்றது உடலை விட்டு நீங்கிய ஞானியை ``மனை`` என்றது ஆச்சிரமத்தையும், தங்கியிருந்த இடத்தையும் பொது வாகக் குறிக்கின்றது. சாலை - பெருவழி. `குளக்கரை, குளங்கரை` - விகற்பப் புணர்ச்சி. `யாற்றிடைத்திடல்` என்க. நற்பூமி - புனிதமான நிலம்.
இதனால் நிலக்குகை அமைத்தற்குரிய இடங்கள் வரையறுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம்செய்யும் நேர்மைய தாமே.

பொழிப்புரை :

நில அறையின் மேலே அழகிய கோயில் ஐந்து அடிக்கு ஐந்து அடிச் சதுரமாய், உயரம் ஒன்பதடியாக மும்மூன்று அடி உயரத்தில் ஒவ்வொரு நிலையாய் மூன்று நிலைகள் தோன்றும்படி அமைத்தல் முறையாகும்.

குறிப்புரை :

``குகை`` என்பதன் பின், `மேல்` என்னும் பொருட் டாகிய கண்ணுருபு விரிக்க. ``வட்டம்`` என்றது. `சுற்றுப் பக்கம்` என்ற படி. `பாதம்` என்பது பலபொருள் தருமாதலின் `அடிக்கால்` என்பது உணர்த்துதற்கு ``அங்கபாதம்`` என்றார். அங்கம் - உடல் உறுப்பு. நில அறை இரண்டரை முழச் சதுரம் ஆதலின் அதன்மேல், `ஐந்தடிச் சதுரம்` என்பது அந்த நில அறையை உள்ளடக்கியிருப்பதாகும். நிற்கின்ற பாதம் - நிலத்தினின்றும் எழுந்து நிற்கும் வடிவையுடையது. ஓசம் - ஒளி. அஃது பெயராய் யாவரும் காண விளங்கி நிற்கும் கோயிலைக் குறித்தது. `அண்ணி என்பது இடைக் குறைந்து, ``அணி`` என நின்றது. அண்ணி நிற்பவர், ஞானியை அடுத்திருப்பவர்; மாணாக்கர் முதலாயினோர். ``செய்யும்`` என்னும் பெயரெச்சம் ``நேர்மை`` என்பதனோடு முடிந்தது.
இதனால், நில அறையின்மேல் கட்டப்படும் சமாதி கோயிலின் அமைப்பு முறை கூறப்பட்டது. நில அறை அமைப்பு முறை கூறினமையின் அதனோடு இயையக் கோயில் அமைப்பு முறையும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே.

பொழிப்புரை :

நில அறையின் அடியில் ஐம்பொன்களும், ஒன்பான் மணிகளும் நிரம்ப இட்டு மூடி, அதன்மேல் மேற்கூறிய முக்கோண பீடத்தை அமைத்து, அதன்மேல் தருப்பையைப் பரப்பி, திருவெண்ணீற்றைத் திருமேனிக்கு அடியிலும், சுற்றிலும், மேலேயும் நிரம்ப இட்டு, அதன்மேல் பொன்னிறமாய் உள்ள நறுமணப் பொடியை மிகுதியாகத் தூவுதலும் சிறப்புடையதாகும்.

குறிப்புரை :

``ஐம்பொன்`` என்றது பெரும்பான்மை பற்றியே யாகலின். கரும்பொன் ஒழிந்தனவே கொள்க. பொன் செய் - பொன்னினது ஒளியைத் தருகின்ற.
இது முதல் நான்கு மந்திரங்களால் திருமேனியை் பொதியுமாறே கூறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 9

நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக்
கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

பொழிப்புரை :

நடுவில் நில அறை இருக்க, நாற்புறத்திலும் மேலே வரம்பு அமைத்தபின், அதற்கு மேற்கு பக்கத்தில் நிலத்தின்மேல் ஆசனத் தின்மேல் திருமேனியை எழுந்தருளப் பண்ணி, சந்தனத்தின் கருப்பூரம் முதலியவை கலந்த குழம்பு, தனியாக இழைத்த சந்தனம், புனுகு, பனிநீர் முதலியவை களால் திருமுழுக்குச் செய்வித்து, தேன் துளிக்க மலரும் பூவால் ஆகிய மாலையைச் சார்த்தி, தூப தீபம் காட்டுக.

குறிப்புரை :

``அதன்மேற்காக`` என்றமையால், `நிலத்தின் மேல்` என்பது பெறப்பட்டது. வழிபாடுகளை மிகச் சுருங்கக் கூறினாராயிலும் உபலக்கணத்தால் இங்குக் கூறாதனவும் கொள்ளப்படும்.

பண் :

பாடல் எண் : 10

ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.

பொழிப்புரை :

தூப தீபம் காட்டுதல் முதலியவற்றைச் செய்தபின் திருநீற்றைத் திருமேனிமேல் குப்பாயம் போல மிகுதியாகப் பூசி, நில அறையில் அமைத்துள்ள பீடத்தின் மேல் மலர்கள், நறுமணப்பொடி, திருநீறு இவைகளை இட்டு, மேலே திருமேனியை எடுத்து இருத்திச் சுற்றிலும் ஆடையைச் சூழ வையுங்கள்.

குறிப்புரை :

``வைத்து`` என்பதை, ``பொலிவித்து`` என்பதற்கு முன்னே கூட்டுக. விரித்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.

பொழிப்புரை :

குகையில் திருமேனியைச் சுற்றி ஆடையால் மூடியபின் குகையின் மேல நான்கு பக்கங்களிலும் பல வகையான படையற் பொருள்களை வாழைக் குருத்தின்மேல் மேல் இட்டு நிவேதித்த பின்பு திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிவிடுங்கள்.

குறிப்புரை :

படையற் பொருள்களை மேலே நிலத்தில் வாழைக் குருத்தின் மேல் நான்கு பக்கமும் இட்டு நிவேதித்தல் சூழ்ந்துள்ளோர் பலரும் கண்டு வணங்குதற்பொருட்டு. மற்றும் வானவரும் அப் பொழுது ஞானியை வணங்குவர் என்பது கருத்து. அலம் வைத்து - நிரம்ப இட்டு. குழை முகம் - அருள்புரிகின்ற ஞானியின் முகம். பார்வை தரித்தல் - நிவேதனங்களை ஞானி தான் பார்வை செய்து ஏற்றல். பரிவட்டம், ``வட்டம்`` என நின்றது.

பண் :

பாடல் எண் : 12

மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.

பொழிப்புரை :

திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிய பின்பு திருவெண்ணீறு, மணப்பொடி, பலவகை மலர்கள், தருப்பைப்புல், வில்வ இலை முதலியவைகளை நிரம்பச் சொரியுங்கள்; பின் அருக்கியம் முதலியவைகளைக் கொடுத்துக் கோயில் எடுத்தற்குரிய தொடக்கத்தைச் செய்து விடுங்கள்.

குறிப்புரை :

`தொடக்கத்தைச் செய்யுங்கள்` என்றதனால், `திரு மேனியை மண்ணால் மூடி மறையுங்கள்` என்பது தானே பெறப் பட்டது. இவ்விடத்தில் கூறுதற்கு உரிய கோயில் எடுத்தலை ஒரு காரணம் பற்றி, ``பொற்பமர் ஓசம்`` என முன்னே கூறினார் ஆகலின், `அதனை இங்குக்கொள்க` என்றற்கு அங்குக் கூறியதனை இம்மந்திரத்து ஈற்றடியில் அனுவதித்துக் கூறினார். மீது `சொரிந்திடும்` என்பதை `வில்வமும்` என்பதன்பின் கூட்டுக. இங்கு மஞ்சனமாவது அருக்கியபாத்திய ஆசமனங்களைக் கொடுத்தல்.

பண் :

பாடல் எண் : 13

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலிற் கோடல் காண்உப சாரமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`குகையின் மேல் கோயில் எடுத்தபின் கருவறையில் ஒரு பீடத்தின்மேல் அரச மரமாயினும், இலிங்கமாயினும் இவற்றுள் ஒன்றை நிறுவி, நாள்தோறும் பதினாறு வகையான உபசாரங்களுடன் வழிபாடு செய்க` என்பதும், `கோயிலை வடக்கு நோக்கியதாக வேனும், கிழக்கு நோக்கியதாகவேனும் அமைக்க` என்பதும் இதனால் கூறப்பட்டன. `இன்னதை` நிறுவலாம்` என்பது குரு ஆணை பற்றியும், திருவருட் குறிப்பு நோக்கியும் அறியப்படும் எனக் கொள்க.
`வாயிலை வடக்கு நோக்கியேனும், கிழக்கு நோக்கியேனும் அமைக்க` என்றதனால். `அதற்குமுன் திருமேனியும் அவ்வாறு இருத்தப் படும்` என்பதும், திருமேனி இருத்தப்பட்ட வகையிலே வாயிலும் அமைக்கப்படும்` என்பதும் உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.
கோயிலின் கருவறையிலே வில்வ மரம். பாத பீடிகை இவைகளை அமைத்தலும் மரபாக உள்ளது.
இங்ஙனம் இறுதியில் சமாதிக் கோயில்முறை சொல்லி முடிக்கப்பட்டது.
சிற்பி