பண் :

பாடல் எண் : 1

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்

கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

பொழிப்புரை :

ஓலையைத் `திருமுகம்` என்றல் அதனை விடுத்தோரது உயர்வு பற்றி. பாசுரம் - மிகுத்துரை பாட்டு. மதி - சந்திரன். மலிதல் - மகிழ்தல். முதனிலைத் தொழிற்பெயர். இது மகிழ்ந்து தவழ்தலாகிய தன் காரணம் தோற்றி நின்றது. இனி `மலி மதி` என மொழிமாற்றி, `நிறைந்த திங்கள்` என உரைப்பினும் ஆம். ``மாடக் கூடல்`` என்பதற்குப் பொதுப் பொருள் கொள்ளாது, திருவிளையாடற் புராணத்தின் வழி, `நான்மாடக் கூடல்` எனப் பொருள் கொள்ளுதல் சிறப்பு. `கூடற் பதிமிசை நிலவு ஆலவாய்` என இயைக்க. மிசை, ஏழனுருபு. கூடல், தலப்பெயர். ஆலவாய், அத்தலத்தில் உள்ள கோயிலின் பெயர். `அருட்டுறை, பூங்கோயில்` என்பன போலச் சில தலங்களில் கோயிலுக்குத் தனிப்பெயர் இருத்தல் அறியத் தக்கது. `பால் நிறச் சிறகு, வரிச் சிறகு` எனத் தனித்தனி முடிக்க. பால் நிறம் - பாலினது நிறம் போலும் பால், அதன் நிறத்தை உணர்த்தலின் ஆகு பெயராய் திருமுகத்தில் எழுதப்பட்ட வரிவடிவங்களைக் குறித்தது. பருவம் - உரிய காலம்; கார் காலம். கொண்மூ - மேகம். படி - ஒப்பு. ஒருமையின் உரிமையின் - `உதவுதல் தனக்குக் கடன் என ஒருப்பட்ட மனத்தினாலே கொண்ட உரிமையினால்`. குரு - நிறம்; அழகு. மா மதி- பெரிய சந்திரன்; பூரணச் சந்திரன். `புரை குடை; குலவிய குடை` எனத் தனித் தனி இயைக்க. புரை - ஒத்த. குலவிய - விளங்குகின்ற. `குடைக் கீழ்ச் சேரலன்` எனவும், `உகைக்கும் சேரலன்` எனவும் தனித்தனிச் சென்று இயையும். செரு மா - போர்க்கு ஏற்ற நடைகளைக் கற்ற குதிரை. உகைத்தல் - ஏறிச் செல்லுதல். பண்பால் - யாழ் இசைக்கும் தன்மை நிறைந்த நிலைமையினால். தன் போல் - தன்னை (அந்தச் சேரலனை)ப் போலவே, போந்தனன் -தன்பால் புகுந்தனன். மாண் பொருள் - மிகுந்த பொருள். வர விடுப்பது - மீண்டு வர விடை கொடுத்து அனுப்புதல்.

குறிப்புரை :

`கூடற் பதிமிசை நிலவு ஆலவாயில் மன்னிய சிவன் யான் மொழிதரும் மாற்றம் சேரலன் காண்க, அம்மாற்ற மாவன, - பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் என்பதும், அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன் என்பதும், அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து மீண்டு வரும்படி விடை கொடுத்து அனுப்புதல் என்பதுமாகும் என வினை முடிக்க.
முதல் அடி தலச் சிறப்புக் கூறியது. அடுத்த இரண்டடிகள் அத் தலத்தில் உள்ள கோயிற் சிறப்புக் கூறியன. ஐந்து, ஆறாம் அடிகள் சேரலனது கொடைச் சிறப்புக் கூறியன. ஏழு, எட்டாம் அடிகள் அவனது வெற்றிச் சிறப்புக் கூறியன. ஒன்பது, பத்தாம் அடிகள் பாண பத்திரனது அன்புடைமை கூறியன. இறுதி இரண்டடிகள் ஆணை கூறியன.
`இப் பாசுரத்தில் குறிக்கப்பட்ட சேரலன் யாவன்` என்னும் ஆராய்ச்சியில் கருத்து வேறுபாடுகள் உள. பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணத்துள் இப் பாசுரத்திற் குறிக்கப்பட்ட பாண பத்திரரை வரகுண பாண்டியன் காலத்தவராகக் கூறினார். `சுந்தரர் காலத்துப் பாண்டியன் வரகுணன்` என்பதற்கு நூற்சான்றோ, வரலாற்றுச் சான்றோ எதுவும் இல்லை.
பரஞ்சோதி முனிவர்க்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு கட்கு முற்பட்டவராகிய சேக்கிழார், `இப்பாசுரத்தில் குறிக்கப் பட்ட சேரலன் சேரமான் பெருமாள் நாயனாரே` எனத் திட்டமாக வரையறுத்து, இத்திருமுகப் பாசுரத்தைக் கண்டு, சேரர் பெருமான் பாண பத்திரரைப் பெரும் பத்தியோடும், சிறப்போடும் வரவேற்று வழிபட்டுப் பெரும் பொருள் கொடுத்துப் பாசுரத்தில் - வரவிடுப் பதுவே - என்று இருத்தலால் பத்திரரைத் தம்மிடத்தே இருத்திக் கொள்ள மாட்டாது விடை கொடுத்து விடுத்தார்` என இப்பாசுர வரலாற்றினைக் கழறிற்றறிவார் புராணத்துள் பன்னிரண்டு பாடல்களால் விரித்துரைத்தார். `சேரமான் பெருமாள் நாயனார்` சுந்தரர்க்குத் தோழர் என்பது நன்கறியப்பட்டது.
மறைமலை அடிகளார் தமது, `மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்` என்னும் நூலில், மாணிக்கவாசகர் மூவர்க்கு முற்பட்டவர்` என்னும் தமது வாதத்தை நிலை நிறுத்தற் பொருட்டுப் `பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் இடைச் செருகல்; சேக்கிழார் பாடியன அல்ல` என்றார்.
திருமுகங் கொடுத்த வரலாற்றைக் `கல்லாடம்` என்னும் இலக்கியம் குறிப்பிடுகின்றது. ஆயினும் ஞானசம்பந்தர் முதலிய மூவரில் ஒருவரைப் பற்றிய குறிப்பும் அவ் இலக்கியத்தில் இல்லை. `ஆகவே, அவ் இலக்கியம் மூவர் காலத்திற்கு முற்பட்டது` என்றும், அது மாணிக்கவாசகரைக் குறிப்பிட்டு விட்டு மூவரைக் குறியாமை யால் மாணிக்கவாசகரது காலம் மூவர் காலத்திற்கு முற்பட்டது என அடிகளார் முதலில் கூறினார். பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாறு சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுதல் அடிகளார் முதலில் கூறிய கூற்றை மாற்றுவதா கின்றது. அது பற்றி அவ்வரலாறு கூறும் பெயரிய புராணப் பாடல்களை `இடைச் செருகல்` என்றார். ஆயினும் அதனை நாம் அவ்வாறு கொள்ளுதற்கில்லை.
இத்திருமுகப் பாசுரத்தில் சேரலனைப் ``பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு - ஒருமையின் உரிமையின் உதவுபவன்` என அவனது கொடையை ஆலவாய்ப் பெருமான் சிறப்பித்தருளினமை காணப்படுகின்றது. பெருமான் அருளியவாறே பாண பத்திரர்க்குச் சேரர்பிரான் மிகப் பெரும் பொருள் வழங்கியதைச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பெருமான் திருமுகம் விடுக்கும் அளவிற்குத் திருவருள் பெற்று விளங்கிய சேரன் எவனும் சேரமான் பெருமாள் நாயனாருக்கு முன் இருந்ததாகத் தெரியவில்லை.
சுந்தரர், தனது திருத்தொண்டத் தொகையில் சேரமான் பெருமாளைக் குறிப்பிடுகையில்,
`கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்` (தி.7 ப.39 பா.6)
எனக் குறிப்பிட்டார். `கார்கொண்ட கொடை` என்பது திருமுகப் பாசுரத்தில், `பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு - ஒருமையின் உரிமையின் உதவி`` எனக் கூறப்பட்டதனை அப்படியே எடுத்து மொழிந்ததாய் உள்ளது. அதை வைத்துத்தான், சேக்கிழார் சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றில் திருமுகம் கொடுத்த வரலாற்றை விரித்துக் கூறினார். அதை, `இடைச் செருகல்` என்று தள்ளிவிடப் பார்ப்பது முறையாகத் தோன்றவில்லை. சேரமான் பெருமாள் நாயனார் தில்லைத் தரிசனம் செய்த சிறப்பைக் கூறுமிடத்தில் சேக்கிழார்.
`சீரார் வண்ணப் பொன்வண்ணத்
திருவந்தாதி திருப்படிக்கீழ்ப்
பாரா தரிக்க எடுத்தேத்திப்
பணிந்தார், பருவ மழை பொழியும்
காரால் நிகர்க்க அரியகொடைக்
கையார் கழறிற் றறிவார்தாம்` (தி.12 கழறிற். பா.56)
எனக் கூறினார். இதில் நாயனாரது கொடைச் சிறப்பைக் கூறிய தொடர், `திருமுகப் பாசுரத்தில் உள்ள தொடரே` என்பது தெற்றென விளங்குகின்றதன்றோ! பின்னும், `சேரர் பிரான் திருவாரூர் சென்று சுந்தரரைக் கண்டு வணங்கிய பொழுது அவர் பெரிதும் மகிழ்ந்து சேரமானது கையைப்பற்றினார்` எனக் கூறும்பொழுது, `பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு` (தி.12 கழறிற். பா.67) எனக் கூறினார். இதவும் முன்னர்க் கூறியதையே பின்னரும் வலியுறுத்தி மொழிந்ததாகின்றது.
பின்பு சுந்தரர் சேரர்பிரானை அழைத்துக் கொண்டு பாண்டி நாட்டு யாத்திரை செய்ய விரும்பிச் சேரரை அழைத்ததைக் குறிப்பிடும் பொழுது,
`சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
ஆர்வம் பெருகத் தமக்கு அன்று
மதுரை ஆலவாய் அமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பின் வணங்குதற்குச்
சேர எழுந்த குறிப்பாலும்
தாமும் உடனே செலத்துணிந்தார்``
(தி.12 கழறிற். பா.81)
எனக் கூறினார். இதிலும் திருமுகங் கொடுத்த வரலாற்றைச் சேக்கிழார் தெளிவாகக் குறிப்பிட்டமை காணப்படுகின்றது. பின்பு மதுரையில் சென்று தரிசித்ததைக் குறிப்பிடும் பொழுதும்,
``படியேறு புகழ்சேரர் பெருமானும் பார்மிசை வீழ்ந்து
அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை
முடிவேதென் றறிந்திலேன் என மொழிகள் தடுமாற``
(தி.12 கழறிற். பா.94)
என்றார். எனவே `திருமுகங் கொடுத்த வரலாற்றைச் சேக்கிழார் ஏதோ ஓரிடத்தில் போகிற போக்கில் ஒருவாறு கூறிப் போயினார்` என்னாது, `சேரமான் பெருமாள் நாயனாரது வரலாற்றில் அஃதொரு முதன்மை யான பகுதியாகக் கருதி வலியுறுத்தினார் என்றே கூற வேண்டியுள்ளது. அதனால் தான் சுந்தரர் சேரமான் பெருமாளைக் குறிப்பிடுமிடத்து அந்தக் கொடைச் சிறப்பையே எடுத்தோதிக் குறித்தார். ஆகவே, பெரிய புராணத்துள் ஒரு சில பாடல்களை, `இடைச் செருகல்` என்று சொல்லி நீக்கிவிட முயன்றால், அம்முயற்சி பின் பல இடங்களில் தடைப்பட்டு வெற்றி பெறாது மறையும். எனவே திருமுகங் கொடுத்த வரலாறு பெரிய புராணத்துட் கூறப்பட்ட வாறே கொள்ளத்தக்கது. பரஞ்சோதி முனிவர் கூற்ரில் உள்ள காலக் கணக்கை நாம் அப்படே கொள்ளுதற்கில்லை.
இனி, ``ஆல நீழல் உகந்த திருக்கையேஎத் தொடங்கும் திருஞானசம்பந்தரது திருவாலவாய்த் திருப்பதிகத்தில்,
(தி.3 பதி.115)
`தாரம் உய்த்தது பாணற் கருளொடே`(தி.3 பதி.115 பா.6)
என்று ஒரு தொடர் வந்துள்ளது. ``தாரம் பல் பண்டம்`` என்பது நிகண்டு ஆதலின், அத்தொடர் சேரமானால் பாணற்குப் பல் பண்டம் வரச் செய்த திருவிளையாடலைக் குறித்ததாகலாம் - எனச் சிலர் கருதுவர். `தாரம்` என்பது ஏழிசைகளுள் சிறந்த தொன்று, அதனை இனிது இசைக்கப் பாணற்கு ஆலவாய்ப் பெருமான் அருளியதையே அத் தொடர் குறிப்பதாகக் கொண்டு சேக்கிழார். திருநீலகண்டப் பலகை யிட்டருளிய செயலைக் கூறினார். அதனையும் பரஞ்சோதி முனிவர் பத்திரர் பொருட்டுச் செய்த திருவிளையாடலாகவே கூறினார். பரஞ்சோதி முனிவர் பல கலை வல்லவராயினும் தமது புராணத்தை `ஆலாசிய மான்மியம்` என்னும் வடநூலைத் தழுவியே செய்ததாக அவர் கூறியிருத்தலையும் நாம் இங்கு நினைத்தல் வேண்டும். ஆலவாய்ப் பெருமானடிகள் அருளிச் செய்ய, நம்பி யாண்டார் நம்பிகள் பதினொன்றாந் திருமுறையில் முதல் திருப் பாடலாக அதனைக் கோத்து வைத்ததினூல் அத்திருப்பாடல் இத்துணை ஆராய்ச்சிக்கு இடமாயிற்று.
திருமுகப் பாசுரம் முற்றிற்று

பண் :

பாடல் எண் : 1

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரங்கி - வற்றி. குண்டு - ஆழம். குழி வயிறு - ஓட்டிய வயிறு. பங்கி - தலை மயிர். பரடு - புறங்கால். உலறுதல் - பசியால் உடல்மெலிதல். சில வேளைகளில் மற்றைப் பேய்கள் எங்கேனும் போய்விட ஒரு பெண் பேய் தனித்து நின்று அலறுதலும் உண்டு என்க. அங்கம் - திருமேனி. அனல் ஆடுதல் - சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடுதல். `இவ்வாறு ஆடுபவன் அங்கம் குளிர்ந்திருத்தல் வியப்பு` என்றபடி.

பண் :

பாடல் எண் : 2

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கள்ளிக் கவடு - கள்ளி மரத்தின் கிளைகள். கடைக்கொள்ளி - எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை. வாங்குதல் - எடுத்தல். மசித்தல் - மசிய அரைத்தல். `பேய்கள் கண்ணில் எழுதுகின்ற மை கரியே` என்றபடி. எனவே, `இவ்வாறு செய்வனவும் பெண் பேய்களே` என்பது விளங்கும். விள்ள - கண்ணினின்றும் வேறு தோன்ற. `வெடு, வெடு` என்பது சினக் குறிப்பு. எனவே, நகுதல் கோபச் சிரிப்பாயிற்று. (வெருளுதல், தம்மை வெருட்டும் பேய்கள் கடுந்தெய்வங்கள் முதலினவற்றை நினைத்து.) `விளக்காக` என ஆக்கம் வருவிக்க. விலங்காகப் பார்த்தல், நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்தல். `பிணஞ்சுடு தீச் சுட்டிட` என்றபடி. சுளித்தல் - கோபித்தல். பூழ்தி - புழுதி. இது `பூழி` என்றும் வரும். அவித்தல், தன்னைச் சுட்ட தீயை.

பண் :

பாடல் எண் : 3

வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப
மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே
கூகையொ டாண்டலை பாட ஆந்தை
கோடதன் மேற்குதித் தோட வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல்
ஈமம் இடுசுடு காட்ட கத்தே
ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடம் திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வகை - காட்டு வாகை மரம். விரிந்து (விரிய) - தழைத்திருக்க. நெற்று வெண்மையாயது காய்ந்து போனமையால். மயங்கு இருள் - மாலைக் காலத்தில். பகலோடு வந்து பொருந்திய இருள். அது பின் மிகுதலின், `கூர்` என்றார். நடு நாள் - நள்ளிரவு. `நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்`* எனப் புறப்பாட்டிலும் வந்தது. ஐ, சாரியை, ஆண்டலை, மனிதன் தலைபோலும் தலையை யுடைய ஒருவகைப் பறவை. கோடு - மரக்கிளை. கூகையும், ஆண்டலையும் கூவக் கேட்டு ஆந்தை மரக் கிளையின் மேல் இடம் பெயர்ந்து ஓடுகின்றது. வீசுதல் - எழுச்சியுறுதல். ஈகை - இண்டங் கொடி - `ஈகை வீசிப் படர்கின்ற, தொடர் கள்ளியின் நீழலையுடைய சுடுகாடு` என்க. மற்றும், `ஈமம் இடு சுடுகாடு` என்வும் கொள்க. ஈமம்- பிணஞ்சுடும் விறகு. `கூகை முதலிய பறவைகளின் செயல் ஒருபாலாக, ஈமம் ஒருபால் இடப்படுகின்றது` எனக் கொள்க. `ஆகம் குளிரந்து` என்பதற்கு, மேல், `அரங்கம் குளிர்ந்து` என்றதற்கு உரைத்தது உரைக்க. ஆகம் - உடம்பு. `நடு நாள் சுடுகாட்டகத்தே, பாட, ஓட ஆடும் எங்கள் அப்பன்` என இயைத்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 4

குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன அதனை முன்னே
கண்டிலோம் என்று கனன்று பேய்கள்
கையடித் தொ டிடு காட ரங்கா
மண்டலம் நின்றங் குளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்
அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குண்டில் ஓமக் குழி - ஆழத்தை உடைய ஓம குண்டம். இது சுடுகாட்டில் இறுதிக் கடனுக்காகச் செய்யப்படுவது. `வாங்கி` என்றது, `யாவரும் போகட விட்டுப் போனபின்பு எடுத்து` என்றதாம். முன்பு கண்டிலோம் - முன்பே பார்க்கவில்லையே. (பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று) மண்டபம் - வட்டமாகச் சென்று ஆடுதல். உள்ளாலம், `ஆளத்தி` எனப்படும். அஃதாவது குரலால் இசை கூட்டுதல். வாதித்து - காளியோடும் வாதம் புரிந்து `எடுத்த பாதம்` என்க. எடுத்த பாதத்தை அண்டம் உற நிமிர்த்து ஆடினமையால், காளி நாணம் அடைந்து தோற்றாள். `நிமிர்ந்து` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 5

விழுது நிணத்தை விழுங்கி யிட்டு,
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழதி துடைத்து, முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் கா டே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கழுது - பேய். விழுது நிணம் - திரட்டி எடுத்த உருண்டையாகிய கொழுப்பு. `கழுது தன் பிள்ளையை, நிணத்தை விழுங்க நிணம் - திரட்டி எடுத்து உருண்டையாகிய கொழுப்பு.
`கழுது தன் பிள்ளையை, நிறத்தை விழுங்க இட்டு, வெண் தலை மாலை பூட்டி, புழதி துடைத்து, முலைகொடுத்து, - காளி - என்று பேர் இட்டுச் சீருடைத்தா வளர்த்து, (சிறிது நேரம் விட்டுப்) போயினதாக, அத்தாயை வரவிற் காணாது, பிள்ளைப் பேய் அழுது, பின் உறங்கும் புறங் காடு` என இயைத்துக்கொள்க. `போயினதாக` எனவும், `அத்தாய்` எனச் சுட்டும் வருவித்துக்கொள்க. `விழுங்கியிட்டு` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 6

பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய்
பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை
குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள்
குறுநரி சென்றணங் காடு காட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே
அட்டமே பாயநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அணங்கு ஆடு காட்டில் கூகைப் பேய்களும், குறு நரிகளும், குட்டியை ஈன, பருந்தும், கூகையும், பகண்டையும், ஆந்தையும் முட்டையிட, பாறுகாற் பேய்கள் சென்று அவைகளைப் பிட்டு வீசிப் பின் புறங்காட்டில் இடப்பட்ட பிணத்தைப் புரளப் புரட்டி, நெடுக்கும், குறுக்குமாகப் பாயமந்து ஓட ஆடும் எங்கள் அப்பன்` என இயைக்க.
பட்ட அடி - பரந்துபட்ட பாதம். அகரம் தொகுத்தல். நெட்டுகிர் - நீண்ட நகம். பாறுதல் - வற்றுதல். பகண்டை ஒருவகைப் பறவை. கூகைப் பேய்கள், பேய்களில் கூகையாய் உள்ள பேய்கள் அணங்கு, தாக்கணங்குகள் (தீத்தெய்வங்கள்) அட்டம் - குறுக்கு.

பண் :

பாடல் எண் : 7

கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான் தடி தின்றணங் காடு காட்டில்
கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்
அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துணங்கை - இரு கைகளையும் மடக்கி இரு விலாக்களிலும் அடித்துக் கொண்டு ஆடும் கூத்து. இது பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற ஒன்று. தடி - தசை. அணங்கு ஆடுதல் - தெய்வம் வந்ததுபோல ஆடுதல். `காட்டில், ஓரி கதிக்க, கால் வட்டணையிட்டு நட்டம் ஆடும் அப்பன்` என்க. ஓரி - நரி. கதிக்க - குதிக்க (நட்டம்) அழல் உமிழ்தல், வெப்பத்தை வீசுதல். `உமிழ்ந்து` என்பதை, `உமிழ` எனத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 8

நாடும், நகரும் திரிந்து சென்று,
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்ட மாடே,
முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்
காடும், கடலும், மலையும், மண்ணும்,
விண்ணும் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நயத்தல் - விரும்புதல். `பிணம்` என்றது, பிணமான நிலையை, `பிணத்து மூடி` என மாற்றி, `பிணமாய்விட்ட நிலையில் அவர்களைத் துணியால் மூடி மறைத்து` என உரைக்க. மாடு - பக்கம்; இடம் `பிணத்தை இட்ட இடம்` என்றதனால் அது, `முதுகாடு` என்றதாயிற்று. `இட்ட மாடே ஆடும் `புயங்கன்` என இயைக்க, முன்னிய - பலவற்றைக் கருதிய. அரவப் புயங்கன் - பாம்பையணிந்த கூத்தன். `புயங்கம்` என்பது ஒருவகைக் கூத்தா யினும், அஃது இங்குப் பொதுப் பொருளே தந்தது; என்னை? இறைவன் காட்டில் ஆடுவது எல்லா நடனங்களையும் ஆதலின், `காடு, கடல், மலை, மண்` என்பன, `முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம்` என்பவற்றைச் சுட்டியவாறு `நன்னெறி நாடி நயந்த வரை இட்டம் இடம்` என்றது, `தீயோர் மட்டுமன்று; நல்லோருந்தாம் அடையும் இடம் அது` என்றபடி. எனவே, `எங்கள் அப்பன் ஆடும் இடத்தை அடையாதார் எவரும் இல்லை` என்பது உணர்த்தும் முகத்தால், `அவனே அனைத்துயிர்க்கும் புகலிடம் என்பதைக் குறிப்பால் உணர்த்தியதாம். தொல்காப்பியரும், `பலர் செலச் செல்லாக் காடு` -* என்பதனான் இப்பொருளை இங்ஙனமே குறிப்பாற் சுட்டினார்.

பண் :

பாடல் எண் : 9

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஓசை` என்றதனை, `குரல்` எனக் கூறியதாகக் கொண்டு, `துத்தம்` முதலிய ஏழும் ஏழிசைகளின் பெயர் என உணர். இந்த ஏழிசைகளையும் தக்கபடி கூட்டுமாற்றால் பண்கள் பிறக்கும் ஆதலின், இவைகளை, `பண் கெழுமப் பாடி` என்றார். கெழும - பொருந்த. சச்சரி முதல் மொந்தை ஈறாகக் கூறப்பட்டவை வாத்திய வகைகள். `கைக்கிளை` என்பது விரித்தல் விகாரம் பெற்றது.
வன் கை மென்தோல் தமருகம் - வலிய இரு பக்கங்களிலும் மெல்லிய தோலையுடைய உடுக்கை. அத்தனை விரவினோடு, `அத்தனை வாத்தியங்களின் ஒத்திசையோடு ஓத்து நிகழ ஆடும் எங்கள் அப்பன்` என்க. `சச்சரி` இன எதுகை `வாசித்து` என்பதனை, `வாசிக்க` எனத்திரிக்க. இதன்கண் அம்மையார் இசைக் கலையின் சிறப்புக்களைப் புலப்படுத்தினமை காண்க. `புயங்கன்` முதலிய சொற்களால் பரதக் கலையைப் புலப்படுத்தி, `அனைத்துப் பரதங்களை யும் ஆடும் பெருமானே வல்லவன்` என்பதனைப் புலப்படுத்தலும் அம்மையாரது திருவுள்ளம் என்க.

பண் :

பாடல் எண் : 10

புந்தி கலங்கி, மதிம யங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புந்தி - புத்தி, மதி - அறிவு. `கலங்கி, மயங்கி` என்றது, இறப்பு வருங்காலத்து நிகழ்வனவற்றைக் கூறியவாறு. சந்தி, உறவினர் நண்பர்களது கூட்டம். கடமை, ஈமக் கடன், தக்கவர், செய்ய உரிமையுடையவர்; புதல்வர் முதலானோர். தீ, பிணத்திற்கு இட்ட தீ. `அதுவே விறகாய் இருக்க ஆடுகின்றான்` என்க. அவ்வாட்டத்தை மக்கள் காணார் ஆகலான், அதற்கு அமரர்களே வாத்தியம் வாசிப்பா ராவர். முழவு - மத்தளம், திசை கதுவ - திசைகளை உள்ளடக்கி நிகழ. அந்தி, மாலைக் காலம், மா நடம், நெடிது நிகழும் நடனம்.

பண் :

பாடல் எண் : 11

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து,
பப்பினை யிட்டுப் பகண்டை பாட,
பாடிருந் தந்நரி யாழ மைப்ப,
அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்
அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒப்பினை` என்பதில் ஐ, இரண்டாம் வேற்றுமை யுருபு. `இல்லாதனவாகிய வலி பேய்கள்` என்க. `ஒக்கக் கலித்து` என்பது, `ஒக்கலித்து` எனக் குறைந்து நின்றது. ஒரு சேரக் கூச்சலிட்டு` என்பதாம். `பகண்டை` மேலேயும் (பாட்டு -6) கூறப்பட்டது. பாடு - பக்கம். `அந்நரி` என்பதில் அகரம் பண்டறி சுட்டு. `காரைக்காலில் தோன்றியதாகிய இந்தப் பேய், மற்றைப் பேய்கள் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு ஆரவாரிக்கின்ற ஆரவாரத்தின் இடையே, நரியின் குரலையே யாழிசையாகக் கொண்டு பகண்டைகள் பாட, அந்தப் பாட்டோடு ஆலங்காட்டுள் அடிகளைச் செப்பிய செந்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் முறையாகப் பாட வல்லவர்கள் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவார்` என முடிக்க.
அம்மையார் தாம் உலக வாழ்வில் வாழ்ந்த காலத்திலும், `சிவபெருமானே யாவர்க்கும் உண்மை அப்பன்` என்று உணர்ந்து, `அப்பா! அப்பா!` என்று சொல்லி வந்து, கயிலையிலும் பெருமான் `அம்மையே` என்று அழைக்க, தாம், `அப்பா` என்று அழைத்தபடியே, இத்திருப்பதிகத்திலும், \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"எங்கள் அப்பன், எங்கள் அப்பன்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" எனப் பலமுறை சொல்லி இன்புற்றமையைக் காணலாம்.
உலக மக்கள் எளிதில் உணரத் தக்கதாக, `சிவன் இங்குள்ள சுடுகாடுகளிலே அங்குள்ள பேய்கள் சூழ அனலிடை. ஆடுகின்றான்` எனப் பெரியோர் பலரும் ஒரு படித்தாகக் கூறிவந்த போதிலும் அதன் உண்மைப் பொருள், ஊழியிறுதிக்கண் உலகெலாம் ஓடுங்கியுள்ள பொழுது, உடம்பும், கருவிகரணங்களும் ஆகியவற்றுள் ஒன்றும் இன்றி இருளிற் கிடக்கும் உயிர்களை மீள உடம்போடும், கருவி கரணங்களோடும் கூடப் படைத்துக் காக்க வேண்டி யவற்றிற்கு ஆவன வற்றைச் செய்தலாகிய சூக்கும நடனத்தைச் செய்கின்றான்` என்பதே யாகலின், `அந்த உண்மையை உணர்ந்து இப்பதிகத்தினைப் பாட வல்லவர்கள் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவார்கள்` என்பதாம். இவ் வுண்மையை உணராதவர்கள் எல்லாம், `சிவன் சுடுகாட்டில் ஆடுபவன்` எனச் சொல்லி இகழ்வார்கள் என்பதை அம்மையார் தமது அற்புதத் திருவந்தாதியில்,
`இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர்`*
என அருளிச் செய்வார். பதிகந்தோறும் திருக்கடைக்காப்புச் செய்யும் ஞானசம்பந்தர்க்கு முன்பே அம்மையார் அது செய்தமையை அவரது திருமொழிகள் பலவற்றிலும் காணலாம்.
b

பண் :

பாடல் எண் : 12

எட்டி இலவம் ஈகை
சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த
கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த
காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி
பாடக் குழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எட்டியும், இலவமும் மர வகைகள். ஈகையும் சூரையும் கொடி வகைகள். காரை, செடி. `படர்ந்து` என்றது இரட்டுற மொழிதலாய், `பரவி` என்னும் பொருளையும் தந்தது. சுட்ட - பிணங்களைச் சுட்ட. `சுட்ட சுடலை எங்கும் எட்டி முதலியன பரவி, சூழ்ந்த கள்ளிகள் கழுகு முதலியவற்றின் வாயினின்றும் வீழ்ந்த குடர்களைப் பற்றி நிற்கும்படி கிடந்த பிணங்கள்` என்க. பறைபோல் விழி - அகன்ற கண்கள். `காட்டில் பேய் முழவங் கொட்ட, கூளி பாடக் குழகன் ஆடும்` என வினை முடிக்க. கூளி - பூதம். குழகன் - அழகன்.

பண் :

பாடல் எண் : 13

நிணந்தான் உருகி நிலந்தான்
நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்
நோக்கிச்சுடலை நவிழ்த் தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிணம், துணங்கை இவை மேலே கூறப்பட்டன.* நிணம் உருகுதல் பிணம்சுடு தீயால், சூழும் நோக்கி - சுற்றிலும் பார்த்து. நவிழ்த்து - விரும்பி. கணங்கள் - பேய்க் கூட்டம். மாந்தி - உண்டு. களித்தல் - மயங்குதல். அணங்கு - துன்பம் தருகின்ற. `தான் இரண்டும் அசைகள்.

பண் :

பாடல் எண் : 14

புட்கள் பொதுத்த புலால்வெண்
தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை
வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன்
வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும்
இறைவன் பெயரும் பெருங்காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புட்கள் - பின்னர்க் கூறப்படுவன தவிர ஏனைய காக்கை, பருந்து முதலியன. பொதுக்கல் - குத்துதல். `அட்கு` என்பது ஒலிக்குறிப்பாதலை, அதனை அடுக்கிக் கூறியறிக. அழைத்தல், தன் இனத்தை. `சிறகை வீசை` என ஒரு சொல் வருவிக்க.
உட்க - அஞ்சும் படி. ஊமன் - பெரிய கூகை. ஓரி, நரி வகைகளில் ஒன்று. கதித்தல் - ஓடுதல். பிட்க - பிளவு செய்ய. `நட்டம் பெயரும்` என இயைக்க. பேணும் - யாவராலும் வழிபடப்படும். இறைவன் - சிவன். பெயர்தல், அடி பெயர்த்து ஆடுதல். `பெயரும் பெருங்காட்டில்` என ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது. `வெண் தலையை நரி கௌவுதற் பொருட்டுத் தன் இனத்தை `அட்கு` என்று கூச்சல் இட்டு அழைக்கக் கண்டு, ஆந்தை சிறிய சிறகை வீச கூகை, அச்சம் உண்டாகும்படி கண்களை விழித்துப் பார்க்க, பெரிய கூகை தனது குரலால் வெருட்ட, இந்நிலையிலும் ஓரிகள் ஓடித் தசையைப் பிட்டுத் தின்னல் நிகழுகையில் இறைவன் பெருங்காட்டில் ஆடுகின்றான்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 15

செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே.

பொழிப்புரை :

உயிர் நீங்கியதனால் பிணமாம் நிலையை அடைந்த உடம்பை அதன் உண்மையை அறியாமல் `படுத்துக் கிடக்கின்ற ஆள்` என்று நினைத்து ஒரு பேய் அதன் அருகிற் சென்று தனது சுட்டுவிரலைக் காட்டி, உரக்கக்கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை எடுத்து வீசி அப்பாற் செல்ல, அதன் கருத்தையே `மெய்` என்று நினைத்து மற்றைப் பேய்களும் அந்த ஆளுக்கு அஞ்சித் தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு ஓட, (இத் தன்மையதாய் இருக்கின்ற காட்டில்) பெருமான்தானும் ஒரு பித்தன் போல வேடம் பூண்டு நடனம் ஆடுகின்றான்.
`பிணம்` என்றது, `உடம்பு` என்னும் அளவாய் நின்றது. விரலைக் காட்டிக் கத்தி உறுமியது கிடக்கின்ற ஆளை அச்சுறுத்தற்கு, பத்தல், வீணைத் தண்டு பொருத்தப்பட்டுள்ள குண்டுப் பகுதி `அது போலும் வயிறு` என்க. `ஒரு பேய், தெரியாது சென்று, சுட்டி, கத்தி, உறுமி, எறிந்து கடக்க, பல பேய் பாய்ந்து போய் வயிற்றை மோதி இரிந்து ஓட பெருமான் ஆடும்` என வினை முடிக்க.

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 16

முள்ளி தீந்து முளரி
கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில்
பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன்
றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி யிடமும் அதுவே
ஆகப் பரமன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முள்ளி - முள்ளையுடைய செடிகள். முளரி - தீ. அஃது இங்கு அதனையுடைய விறகைக் குறித்தது. வெள்ளில் - விளா மரம். பிறங்குதல் - விளங்குதல். முள்ளிகள் தீந்து போயதும், கள்ளி பால் வற்றியதும் பிணங்களைச் சுடுகின்ற தீயால். எரிகின்ற விறகு கரிந்து போயது, பிணங்களின் முளை சொரிதலால். உகுதல் - சிந்துதல். விளா மரம் மட்டுமே விளங்கியிருந்தது` என்க. உழை, ஒருவகை மான். உழை மான், இருபெயர் ஒட்டு.
பியல் - தோள். பியற்கு. பியலின்கண்; உருபு, மயக்கம். பள்ளி இடம் - நிலையாக இருக்கும் இடம். அதுவே - அந்தக் காடே. உம்மை, சிறப்பு. எண்ணின் கண் வந்த செய்தென் எச்சங்கள், `பிறங்கு` என்னும் ஒருவினை கொண்டு முடிந்தன.

பண் :

பாடல் எண் : 17

வாளைக் கிளர வளைவாள்
எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ
டியம்பக் குழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வாளை` என்பதில் ஐ - சாரியை. வாள், அதன் வடிவைக் குறித்தது. கிளர்தல் - விளங்குதல். `எயிறு` என்றது அலகினை. வளை - வளைந்த. வாள் - ஒளி. வாளின் வடிவு விளங்கு கின்ற, வளைந்த, ஒளி பொருந்திய அலகு` என்க. முரலுதல் - மூக்கால் ஒலித்தல். தாளிப்பனை, விரிந்த மடல்களையுடைய ஒருவகைப் பனை. ஓலையை, `இலை` என்றது மரபு வழுவமைதி. கட்டு அழல் மிகுந்த நெருப்பு. அழல் வாய்ப் பேய் - கொள்ளி வாய்ப் பேய். அழல் கண் பேய் - கொள்ளிக் கண் பேய். கூளி - பூதம். குழலோடு இயம்புதல் - குழலை ஊதித் தாமும் இசைத்தல். `குழகன்` மேலே சொல்லப்பட்டது.*

பண் :

பாடல் எண் : 18

நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின்
ஒசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நொந்திக் கிடந்த - சில நாள் ஏமம் இன்றிக் கிடந்த. தடவி - துழாவி. புழுக்கு - புழுக்கல்; சோறு. சிந்தித்து - கவலை யடைந்து. சிரமம் - துன்பம். `அந்தியில்` என ஏழாவது விரிக்க.

பண் :

பாடல் எண் : 19

வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேய்கள் - மூங்கில்கள். `ஓங்கி வெடிகொள், உதிர வெடிகொள் சுடலை` என்க. ஓய்தல் - இளைத்தல். உலறுதல் - காய்தல். பகுவாய் - பிளந்த வாய் அணங்கும் - வருந்தும் `பேய்களின் வாழ்க்கை துன்ப வாழ்க்கை` என்றபடி. மாயம் - கள்ளத் தன்மை; வேட மாத்திரத்தில் பல பெற்றியனாகத் தோன்றுதல். அப்பன் நடனத்தை அம்மை காணுதலை இத்திருப்பாட்டில் குறித்தருளினார். மருட்சி - வியப்பு.

பண் :

பாடல் எண் : 20

கடுவன் உகளுங் கழைசூழ்
பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஈமப்
புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையுந்
ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங்
கறங்கப் பரமன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடுவன் - ஆண் குரங்கு. உகளும் - கிளைகளில் பாய்கின்ற. கழை - மூங்கில், பொதும்பு - புதர். இடுதல் - புதைத்தல். `புதைத்ததனால் உண்டான வெண்டலை` என்க. ஈமம் - பிணஞ் சுடும் விறகு. வெண்டலையை `எழுந்த` என்றது, `குழியினின்றும் வெளிப் போந்த` என்றபடி. மழுவுக்கு வெண்மை கூர்மையாலும், துடிக்கு வெண்மை அதன் தோலினாலும் ஆகும். ததும்ப - ஒளிவீச. கொள்ளெனல், ஒலிக் குறிப்பு. எனவே, `அங்ஙனம் பாடுவன பூதங்கள்` என்பது பெறப்பட்டது. படுதல் - ஒலித்தல். துடி - உடுக்கை. கறங்குதல் - ஒலித்தல். தடி, இறைவனது. பறை, தேவர்களது.

பண் :

பாடல் எண் : 21

குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குண்டு - ஆழம், ஐ, சாரியை. `குறியனவாயும், சிறியனவாயும், நெடியனவாயும் பிறங்குதலையுடைய பேய்` என்க. பிறங்குதல் - விளங்குதல். இண்டு இண்டை; இண்டங் கொடி. வெருட்டுதல் - அச்சுறுத்தல். `பேய்` இரண்டையும் பன்மையாகக் கொள்க. பிள்ளைப் பேய்களைத் தாய்ப் பேய்கள் இருட்காலத்தில் தடவிக் கொடுத்து, ஆயினும் அச்சுறுத்தி, அவை குறும்பு அடங்கி அமைதியுற்றிருக்க இசை பாடின என்க. முதலில் உள்ள `பேய்` என்பதில் இரண்டன் உருபு விரிக்க.
எரிவாய்ப் பேய் - கொள்ளி வாய்ப் பேய். கொள்ளென்று இசைபாடுதல் முன் பாட்டிலும் வந்தது. `குழவியாக` என ஆக்கம் வருவிக்க. மிண்டுதல் - நெருங்குதல்.

பண் :

பாடல் எண் : 22

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருநட்டமாகச் சுழல்வார்` என ஆக்கம் விரித்து, மாறிக் கூட்டுக. `அருளாலே பாடிய` என ஒரு சொல் வருவிக்க. இதனால் அம்மையார் பாடல்கள் அருள்வழி நின்று அருளிச் செய்தனவாதல் அறிந்துகொள்ளப்படும். காடு மலிந்த - காட்டை மகிழ்ந்து அங்கு வாழ்கின்ற. அம்மையார் தமது பணிவு தோன்ற மற்றைப் பேய்களைப் போலவே தம்மை வருணித்துக் கொண்டார். ஆடுதல், பாடற் பொருள் விளங்கச் செய்கை காட்டி நடித்தல்.

பண் :

பாடல் எண் : 1

கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும்
போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண்
டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்
திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக்
குஞ்சென்னி ஈசனுக்கே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சமே ஈசனுக்கே வந்தி; வெந்துயர் வந்து அடும்போது அஞ்சி, என்பாய் இங்குத் தளர்ந்திருத்தலைத் தவிர்தி` என இயைத்துக் கொள்க.
வெந்துயர் கிளர்ந்து, வந்து அடும் போது - கொடிய துன்பம் மிகுந்து வந்து வருத்தும்போது, என்பாய்த் தளர்ந்திருத்தல் - உடம்பு எலும்பாய் இளைத்துப் போகும்படி மெலிந்திருத்தல்.
வளர்ந்து உந்து கங்கை - பெருகி மோதுகின்ற கங்கை. கோட்டுத் திங்கள் - வளைவையுடைய சந்திரன். `ஈசனுக்கு` என்பதை, `ஈசனை` எனத் திரிக்க. தளராது வந்தி - மனம் சலியாது வணங்கு.
`சிவனை மனம் சலியாது வணங்குவாரைத் துயர்வந்து அணுகாது` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 2

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமை காக்கும் பிரான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈசன் - ஐசுவரியம் உயைவன்; அஃதாவது, உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை உடைமைகளாகவும் உடையவன். எனவே, `முழுமுதல் தலைவன்` என்பதாயிற்று `அவன்` என்பது, முன்னைப் பாட்டிற் போந்த அந்த ஈசனைச் சுட்டிற்று. நினைதல். இங்குத் துணிதலைக் குறித்தது. கூசுதல் - தம்மையும் ஏனையோரை யும் தலைவர்களாக எண்ண நாணுதல். `அவனையே மனத்தகத்துக் கொண்டிருந்து` என்க. `கொண்டிருந்தும், பேசியும்` என எண்ணும்மை விரிக்க. `பிரான்` என்றது, `அவன்` என்னும் சுட்டளவாய் நின்றது. பிறவாமை, எதிர்மறை வினையெச்சம்.
`சிவனைப் பொது நீக்கியுணர்ந்து, மறவாது நினைவாரை அவன் பிறவாமற் காப்பான்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 3

பிரானென்று தன்னைப்பன் னாள்பர
வித்தொழு வார்இடர்கண்
டிரான்என நிற்கின்ற ஈசன்கண்
டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றை பொதும்பர்க்
கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன்
நீள்முடி அந்தணனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அந்தணன், தன்னைப் பன்னாள் பரவித் தொழுவாரது இடரைக் கண்டு (வாளா) இரான் என நிற்கின்ற ஈசன்` என இயைக்க. `பிரான்` என்றது சொல்லுவாரது குறிப்பால், `முழுமுதல் தலைவன்` என்னும் பொருட்டாய் நின்றது. `தன்னையே பிரான் என்று` எனப் பிரிநிலை ஏகாரம் விரித்து, முன்னே கூட்டுக. பரவுதல் - துதித்தல். `ஈசன்` என்பது இங்கு, `இறைவன்` என முன்னர்ப் பொதுமையில் நின்று, பின்னர் `இரான் என நிற்கின்ற` என்னும் அடைபெற்று, சிவனது சிறப்புணர்த்தி நின்றது. `தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே` (தி.7 ப.1 பா.9) என நம்பியாரூரரும் அருளிச் செய்தார். கிண்டுதல் - கிளறுதல். பொருதல் - போர் செய்தல். பொதும்பர் - சோலை. பூக்களால் நிரம்பியிருத்தல் பற்றித் திரு முடியை, `சோலை` என்றார். பொம் மெனல், ஒலிக் குறிப்பு. `துறை` எனவே, `கங்கை` என்பது தானே பெறப்பட்டது. `சடையாகிய செம் பொன் முடி` என்க. `சடை, நிறத்தால் பொன்போல்கின்றது` என்பதாம். `பிற முடிதனை விரும்பாதவன்` என்பது குறிப்பு. அந்தணன் - அழகிய தட்பத்தினை (கருணையை) உடையவன்; காரணப் பெயர். கண்டீர், முன்னிலையசை.
`தன்னைப் பொது நீக்கி நினைந்து, பன்னாள் பரவித் தொழுவாரது இடரை நீக்குபவன் சிவன்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 4

அந்தணனைத் தஞ்சம்என் றாட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முன்னைப் பாடலிற் கூறிய அவ்வந்தணன் அத்தன்மையன் ஆதலின், நெஞ்சே, இனியேனும் அவனது பெருமையைச் சொல்லி அவனைப் புகழ்` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். இதன் முதல் இரண்டடிகள் முன்னைப் பாட்டிற் கூறியவற்றை மீட்டும் அநுவதித்துக் கூறியன. `துயரில் ஆழாமே` எனச் சொல்லெச்சம் வருவித்துரைக்க. கொந்து - கொத்து; என்றது தீக் கொழுந்தை. `இணர் எரி` * என்றல் வழக்கு. `கொந்தில் அணைந்த பொன்` என்க. நெருப்பில் காய்ச்சி ஓட விட்ட பொன், மாசு நீங்கி ஒளி மிக்கதாகும். பொன் ஆகுபெயராய், அதனால் ஆகிய அணி கலங்களைக் குறித்தது. கோள்- கொடுமை. `இனி` என்பதன் பின், `ஆயினும்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. `அந்தணன்` என்றது, `அவ்வந்தணன்` என்னும் பொருட்டாகலின் முதற்கண், `அந்தணன்` என்றே வைத்து, பின், `அவனை என்` எனக் கூட்டி முடிக்க. கண்டாய், முன்னிலையசை. `கோள் அரவம் பூண்டமையே அவன் `தஞ்சம்` என்று அடைந்தாரை ஆழாமாற் காத்தலைத் தெரிவிக்கும்` என்பது குறிப்பு.
`அறியாது` கழிந்த நாள்கள் போக, அறிந்த பின்னராயினும் தாழாது சிவனைத் துதித்தல் வேண்டும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 5

இனிவார் சடையினில் கங்கையென்
பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
கோத்தஎம் சங்கரனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முனிவார் - கோபிப்பவர்; திரிபுரம், (வானத்தில்) திரிந்தபுரம். என வினைத்தொகை. பகைவர், `வெந்து மூழ்க` என்பதனை, `மூழ்கி வேவ` என மாற்றிவைத் துரைக்க. சிலை - வில். `சிலையால்` என்றது, `விற் போரினால்` என்றபடி. வார்கணை- நீண்ட அம்பு. `கணை ஒன்றினால்` என்பதை, `கணை ஒன்றினை` எனத் திரித்துக் கொள்க. அங்கம் - உடம்பு. `காணின் என் செய்தி` என்றது, `நாணித் தலை குனிவை போலும்` என்றபடி. எனினும், `உயிர்களின் நன்மைக்காகவன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை அவன் அறிவான் ஆகலின், `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் முனியப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள்ளுறைச் சிறப்பு இதனை வட நூலார் `நிந்தாத் துதி` என்றும், அதனைத் தமிழில் பெயர்த்துக் கூறுவார், `பழிப்பது போலப் புகழ்தல்`* என்றும் கூறுவர். பின்னும் இவ்வாறு வருவனவற்றை உணர்ந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 6

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். தாழ்ந்த சடை - நீண்டு தொங்குகின்ற சடை. பொங்கு - சினம் மிகுகின்ற. `அங்கொருநாள்` என்றது, கூற்றுவன் வரும் நாளினை. ஆ! ஆ!, இரக்கக் குறிப்பு இடைச்சொல். என்று - என்று இரங்கி. `ஆழாமைக் காப்பான்` என்பது மேலேயும் வந்தது.* ஓவாது - ஓழியாமல். உரை - சொல்லு; துதி. எப்பொழுதும் ஓவாது துதித்தால்தான் காப்பான்` என்பது குறிப்பு. `அன்று துதித்தல் இயலாது` என்பதாம், `சாங்காலம் சங்கரா! சங்கரா என வருமோ` என்பது பழமொழி.

பண் :

பாடல் எண் : 7

உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு
கேட்கின்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றுந்
தொடேல்இழிந் தோட்டத்தெங்கும்
திரைக்கின்ற கங்கையுந் தேன்நின்ற
கொன்றையுஞ் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித்
தலைவைத்த வேதியனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உம்மை, சிறப்பு. செவ்வான் தொடை - செவ்விய உயர்ந்த மலர்மாலை; கொன்றை மாலை. இரைக்கின்ற - சீறிக்கொண்டிருக்கின்ற. தொடேல் - தொடாதே. என்றது, அது, `பிறைச் சந்திரன் வளரும்` என்று பசியோடு காத்திருக்கின்றது; அதனால் சினம் மிகுந்து கடித்துவிடலாம் - என்றபடி. இதனால், `தம்முட் பகையுடையவனவாகிய பாம்பையும், மதியையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருக்கின்றா யல்லையோ` எனக் குறிப்பாற் புகழ்ந்தவாறு. இழிந்து ஓட்டத்து - கீழே வீழ்ந்து ஓடும்பொழுது. திரைக்கின்ற - அலை வீசுகின்ற. விரைக்கின்ற - `வாசனை வீசுகின்ற கொன்றை` என இயைக்க. வன்னி - வன்னியிலை. தலை, ஏழாம் வேற்றுமையுருபு. வேதியன் - வேதம் ஓதுபவன். `சிவன் சாம வேதத்தை ஓதுபவன்` என்பர். ஓதுதல் பிறர் அறியவாம்.

பண் :

பாடல் எண் : 8

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானை` என்க. `சோதித்தற்கு மாலவனும் வல் ஏனமாய்க் கீழ்ப் புக்கு, மாட்டா- கில்லேன் அமா - என்றான்` என வினை முடிக்க. சோதித்தல்- அளந்தறிதல். ஏனம் - பன்றி. கில்லேன் - மாட்டேன். `அம்மா` என்னும் வியப்பிடைச்சொல் இடைக்குறைந்து நின்றது. `மாலவனும்- கில்லேன் - என்றான்` என்றதனால், `ஏனையோர் மாட்டாமை சொல்ல வேண்டுவதோ` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 9

கீழா யினதுன்ப வெள்ளக்
கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்
விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன் எண்
தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன்
னாளுந் தலைநின்மினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இழிந்த துன்பமாகிய பெரிய கடலிலே தள்ளப்பட்டு, அதன் உள்ளே அழுந்தாமல் வேறிருந்து நுகர்கின்ற இன்பம் வேண்டும்` என்று விரும்புகின்றவர்களே - என்று எடுத்து, `தலைநின்மின்` என முடிக்க. நின்றால், `அத்தகைய இன்பம் கிடைக்கும்` என்பது குறிப்பெச்சம். தள்ளுதலுக்கு `வினையால்` என்னும் வினைமுதல் வருவிக்க. `இருந்து நுகர்கின்ற` என ஒரு சொல் வருவிக்க. `துன்பக் கலப்பு இல்லாத இன்பம்` என்றபடி. அது வீட்டின்பமேயாம். விரவார் - கலவாதவர்; பகைவர். `கண்ட` என்றது `செய்த` என்றபடி. கண்டன் - வன்கண்மையுடையவன். `வன்கண்மை குற்றத்தின் மேலது` என்பது கருத்து.
தாழாது - தாமதியாமல். இறைஞ்சுதல் - தலை வணங்குதல். பணிதல் - அடியில் வீழ்தல். தலை, இடைச் சொல்லாதலின், `தலைநின் மின்` என்றது ஒருசொல் நீர்மைத்து. `அச்செயலிலே நின்மின்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 10

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தலையாய ஐந்து - மந்திரங்களுள் தலையாய ஐந்தெழுத்து, சாதித்தல் - கடை போகப் பற்றி முயலுதல். அஃது இங்குக் கணித்தலைக் குறித்தது. தாழ்தல் - வணங்குதல். தலையாயின - மேலான நூல்கள் `அருள் நூலும், ஆரணமும், அல்லாதும், அஞ்சின்- பொருள் நூல்களே` * ஆதலின் அவற்றை உணர்ந்தோர் திருவைந் தெழுத்தையே பற்றிச் சாதிப்பர் - என்றபடி. தலையாய அண்டம் - சிவலோகம். `தலையாயின உணர்ந்தோர் சாதித்துத் தாழ்ந்து கழல் காண்பர்` என வினை முடிக்க, இதனுள் சொற்பொருள் பின்வரு நிலையணி வந்தது.

பண் :

பாடல் எண் : 11

கழற்கொண்ட சேவடி காணலுற்
றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா
வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம்
மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி
நம்அடுந் தொல்வினையே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`நிகர் ஏதுமின்றித் தழற்கொண்ட சோதிச் செம் மேனி எம்மான்` - சிவன். அவன் தனக்குவமையில்லாதவன்; நெருப்பினிடத்துள்ள ஒளிபோலும், சிவந்த மேனியை உடையவன். `அவனது கழலழணிந்த, சிவந்த பாதங்களைக் கண்டவர்களை வணங்குபவர்களது நிழலைக் கண்டாலே வினைகள் ஓடிவிடும் என்றால், அப்பெருமானை நாம் நமது கைகளால் மலர் தூவித் தொழுவதைப் பார்த்த பிறகு நம்மை வருத்துகின்ற நமது பழைய வினைகள் நம்மை நெருங்கி நிற்குமோ` என்க. `சிவன் அடியார்களையும், அடியார்க்கு அடியார்களையும் கண்டால் வினைகள் நிற்க மாட்டாது ஓடி விடும்` என்றபடி. `கழல், நிழல், தழல்` என்பவற்றின் ஈறு திரிந்தது செய்யுள் நோக்கி. உம்மை இரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு; பின்னது உயர்வு சிறப்பு. `போழ்தத்து` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. `வினை துன்னி நிற்குமோ` என மாறிக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 12

தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியலோர்
கூற்றானைக் கூற்றுருவங்காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை.

பொழிப்புரை :

குறிப்புரை :

தொல்லை - பழமை. தாழாமே - தாமதி யாமலே. ஒல்லை - விரைவாக. கூற்று - யமன். காய்தல். உதைத்த லாகிய தன் காரியம் தோற்றிநின்றது. வாய்ந்து - (திருமேனியில்) பொருந்தி. `வணங்கி நினை` என்பதை `நினைந்து வணங்கு` என முன் பின்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க.

பண் :

பாடல் எண் : 13

நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச
மேஇங்கொர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையுந்
தேறிஓர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன் நந்
தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட
வாணன் அடித்தலமே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`நெஞ்சமே, மனையாளையும் மக்கள் தம்மை யும், `இங்கு ஒர் தஞ்சம்` என்று தேறி, அண்ட வாணன் அடித்தலம் நினையாது ஒழிதியோ` என இயைத்துக்கொள்க. மனையாளும், மக்களும் அம்மையார்க்கு இல்லையாதலின், `அவர்களைத் தேறி` என்றது, `அவர்களைத் தேறும் பிறரது மனங்களைப்போலவே நீயும் ஆகி` என்றது என்க. `சிவனதாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே... நெஞ்சமே`1 என அருளிச்செய்தார் ஞான சம்பந்தரும். `ஒழிதியோ` என்பதில் வினாப் பொருட்டாய ஓகாரம் தொகுத்தலாயிற்று, `கடையவ னேனைக் கருணையினாற்கலந் தாண்டு கொண்ட - விடையவனே விட்டிடுதி கண்டாய்` 2 என்பதிற்போல. அவ்வோகாரத்தால், `அங்ஙனம் செய்தியாயின் கெடுவை` என்னும் குறிப்புப் போந்தது. கண்டாய், முன்னிலையசை. இங்கு - இவ்வுலகில். தஞ்சம் - புகலிடம். தேறுதல் - தெளிதல். ஓர் ஆறு, கங்கை. கங்கை யாறு புக்கது; ஆயினும் சடை நனைய வில்லை` என்றது சடைக்கு அதுபோதவில்லை என்றபடி. நொந்தாத- மிகுக்க வேண்டாத. `மிக எரிகின்ற` என்றபடி. அனையான் - போன்றவன். அண்டவாணன் - சிவலோகத்தில் வாழ்பவன். அடித்தலம் - திருவடியாகிய புகலிடம், `புகலிடம் ஆகாததை, ஆகும் என்று மயங்கிப் புகலிடம் ஆவதை விட்டொழியாதே` என அறிவுறுத்தவாறு.

பண் :

பாடல் எண் : 14

அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறாஅனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ.

பொழிப்புரை :

குறிப்புரை :

`அடித்தலத்தின் நெரித்தவாறு` என இயையும். இன், ஐந்தாம் உருபு. அரக்கன், இராவணன். `முரித்தவாறு என்` - என்றது, `பிழை நோக்கி ஓறுத்தல் வேண்டியோ` என்றபடி. ஒறுத்தபின் இசைபாடித் துதிக்க அருள்செய்தமையும் கேட்கப்படுவதால், `பிழை செய்தவரும் அஃது உணர்ந்து பணிந்தால், பிழையை நோக்காது அருள் செய்பவன் நீ` என்பதும் குறிக்கப்பட்டதாம். `ஆடி` நான்கும் பெயர்கள். அவற்றுள் முதற்கண் உள்ளதில் இகர விகுதி செயப்படு பொருட்டாயும் ஏனையவற்றில் அது வினைமுதற் பொருட்டாயும் நின்றது. ஆறு - கங்கை. `அனலோ` என்றாயினும். `அனலின்கண்` என்றாயினும் ஏற்கும் உருபு விரித்துக்கொள்க. `நீற்றின் கண்` என ஏழாவது விரிக்க. `நீ ஆடுபவன்; நீ அரக்கனது தோளையும் முடியையும் முரிக்கக் காரணம் என்ன? என வினை முடிக்க. `தலம்` மூன்றும், `இடம்` என்னும் பொருளன. `அடிகளாகிய தலம், முடியாகிய தலம்` என்க.

பண் :

பாடல் எண் : 15

நீநின்று தானவர் மாமதில்
மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட
வாறென் திரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா
டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யும்
மொய்கழற் புண்ணியனே.

பொழிப்புரை :

குறிப்புரை :

தானவர் - அசுரர். நிரந்து - ஒருங்கே. உடனே- விரைவில். `தீயின்கண் நின்று` என உருபுவிரிக்க. சிலை - வில். தொடுதல் - வளைத்தல். இது, அம்பெய்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. திரங்கு - தசை மெலிந்து தொங்கிய. வல் வாய் - பிணத்தைத் தின்னும் வாய். பெயர்ந்து - புடை பெயர்ந்து. `நட்டம் செய்யும்` என இயைக்க. `பூதம் போய் நின்று தொழ` என மாறிக் கூட்டுக. `வந்து` என்பதனை, `போய்` என்றது இடவழுவமைதி. எனவே, `நின்பால் வந்து தொழ` என்றவாறாம். மொய் கழல் - பாதத்தைச் சூழ்ந்த கழல். புண்ணியன் - அற வடிவினன். `மதில் மூன்றும் வேவச் சிலைதொட்ட வாறு என்` என்றதற்கு முன்பாட்டில் `நீ முரித்தவாறு என்` என்றதற்கு உரைத்தவாறே உரைக்க. பின்னிரண்டடிகள் ஆசெதுகை பெற்றன.

பண் :

பாடல் எண் : 16

புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.

பொழிப்புரை :

குறிப்புரை :

`(யாம்) பொய்ந்நெறிகளில் சேராமல் விலகிய துடன், செய்த செயல்களும் புண்ணியங்களே. அஃது (எவ்வாற்றால் எனின்) எண்ணப்பட்ட ஐம்பொறிகளும் அம்மானுக்கு ஆட்பட்ட அன்பிற்கு இசைந்தவாயின` என இயைத்துப் பொருள் கொள்க. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். எண்ணிய - `ஐந்து` என்று எண்ணப் பட்ட. ஈற்று அகரம் தொகுத்தல். ஆல், அசை. கைம்மா - யானை. `ஈர் உரிவை`, வினைத் தொகை `உரித்த தோல்` என்பது பொருள். மூவுருவம் - மும்மூர்த்தி உருவம். `அன்பிற்கு` என நான்காம் உருபு விரித்து, `அன்பு செய்தற்கு` என உரைக்க. `ஐம்பொறிகள் அன்பு செய்தற்கு இசைந்தன` என்றமையால், `இசையாது மாறிச் செல்லுதலே அவற்றின் இயல்பு` என்பதும், `அவற்றை அவ்வாறு இசையச் செய்தல் வேண்டும்` என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன. `ஈருரிவை, மூவுருவம்` என்பது எண்ணலங்காரநயம் தோற்றி நின்றது.

பண் :

பாடல் எண் : 17

அன்பால் அடைவதெவ் வாறுகொல்
மேலதோ ராடரவம்
தன்பால் ஒருவரைச் சாரவொட்
டா ததுவேயுமன்றி
முன்பா யினதலை யோடுகள்
கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர்
ஏறுகந் தேறுவதே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`கொல், ஐய இடைச்சொல். அதனால், அடையு மாற்றை நீரே அருளுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சமாயிற்று. `ஐயரே, நும் மேலது` என முன்னிலையை வருவித்து, `நும்மைப் பிறர் அன்பால் அடைவது எவ்வாறு கொல்` என முடிக்க. ஓர் அரவு, முடி மேல் உள்ளது. ஆடு அரவு - படமெடுத்து ஆடுகின்ற பாம்பு. `ஆகவே அது சீறுகின்றது` என்றதாம். `முன்பு ஆயின` எனப் பிரித்து, `தலை ஓடுகள்` என முடித்து, `அவை கோத்து` என வேறெடுத்துக் கொண்டு உரைக்க. `கோத்து ஆர்த்து, அணிந்து, உகந்து ஏறுவது ஏர் ஏறு` என்க. ஏறு - இடப. `அது பாய்வதால் அச்சம் உண்டாதலுடன், யானை மீதும், குதிரை மீதும் ஏறாமல், இடபத்தின்மேல் ஏறுவதால், நன்கு மதிக்கவும் இயலவில்லை` என்பதாம்.
`கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ`1
என்றது காண்க. உகத்தல் - விரும்புதல். `பாம்பும், இடபமும் பகையா யினாரைச் சீறுதலும், பாய்தலும் செய்யுமேயல்லது, அன்பரை ஒன்றும் செய்யா` என்பதும், `யானை குதிரைகளின் மேல் ஏறியும், மணி மாலைகளை அணிந்து யாம் பெருமை பெற வேண்டுவதில்லை` என்பதும், `எவ்வாறு கொல்` என்னும் ஐயத்தை நீக்கும் விடைகள் என்பது கருத்து. `பூணாணாவதோர் அரவங்கண் டஞ்சேன்` 2 என்று அருளிச் செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 18

ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.

பொழிப்புரை :

குறிப்புரை :

`எம்பெருமானும், அவிர் சடையாரும் ஆகிய நஞ்சுண்டார் தமக்கு ஏற, ஏறலால் மற்று இல்லையே` என முடிக்க. `பெருமான்` என்பது ஒருமையாயினும் உயர்த்துக் கூறும் சொல்லாதலின் பன்மையோடு மயங்கிற்று. `இல்லையே` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், `உறவாகவும் விரும்பிலர்` என்னும் குறிப்பினதாய் நின்றது. `ஆறு` என்றது ஆகுபெயராய் அதன் நீரைக் குறித்தது. வேறோர் நாகம், உயர்ந்த பாம்பு, அது `வாசுகி` என்பது. `உமிழ்ந்த நஞ்சு, சூழ்ந்த நஞ்சு` எனத் தனித்தனி இயைக்க. `அமரரை` என்னும் இரண்டாம் உருபு தொகுத்தலாயிற்று. `அமரர் சூழ்ந்த` என்பது பாடம் அன்று, முன்னைப் பாட்டில் கூறியவாறு, `ஏற்றையே உகந்து ஏறுவது இல்லாமையாலன்று; விரும்பாமையால்` என்பது இங்குக் கங்கையைத் தாங்கி மண்ணுலகினரைக்காத்தமை, நஞ்சை உண்டு விண்ணோரைக் காத்தமை இவற்றைக் குறித்த குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தமக்கென்றும் இன்பணி செய்திருப்
பேமுக்குத் தாமொருநாள்
எமக்கென்று சொன்னால் அருளுங்கொ
லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெல் ளேறொப்ப
தொன்றுதொண் டைக்கனிவாய்
உமைக்கென்று தேடிப் பொறாதுட
னேகொண்ட உத்தமரே.

பொழிப்புரை :

குறிப்புரை :

`இணை யாதும் இன்றி` என்றது, `காளைகளைப் பயன்படுத்துகின்றவர்கள் இரண்டை இணைத்தே பயன்படுத்துவர் ஆகலின் அவ்வாறு இணைத்தற்கு ஒன்று கிடையாமையால் ஒரு காளையையே உடையவராய் இருக்கின்றார்` என்றபடி.
`இனி ஒற்றைக் காளையையே பயன்படுத்துவதாயினும் உமாதேவி ஊர்வதற்கு மற்றொரு காளை இன்றியமையாது வேண்டும்; அஃது இல்லாமையால், அவளையும் தமது ஒரு காளையின்மேலே உடன் ஏற்றிக் கொண்டு வருகின்றார்` என மேலும் குறிகூறியபடி. `இத்தகைய இலம்பாடு (வறுமை) உடையவர், அவருக்கென்றே நாம் என்றும் பணிசெய்திருப்பினும், `எமக்கு என்று என்று ஒன்று இரந்தால், அதனை ஈய வல்லவராவரோ` - என ஐயுறுகின்றோம்` என்பது இப்பாட்டிற் கூறப்பட்ட பொருள். இதவும் நிந்தாத் துதி. `ஒருநாள் அருளுங்கொல்` என்றமையால், `எந்நாளும் அருள மாட்டாது வாளாதே இருப்பரோ` என்பதும் போந்தது. ஆம், அசை. `எமக்கு என்று` என்பதன் பின், `ஒன்று` என்பது வருவிக்க. `சொன்னால்`` என்றது, `வேண்டினால்` என்றபடி. `பிள்ளை` என்றது, இளமையைக் குறித்தது. `இணை யாதும் இன்றி` என்பது, `தனியே சுமக்கின்றது` என்பதைக் குறித்தற்கும் `வேறு ஒப்பதுஒன்று பெறாது` என்பது இணைத்தற்கு இல்லை? என்பதைக் குறித்தற்கும் கூறியன ஆகலின், கூறியது கூறல் ஆகாமை யறிக. தொண்டைக் கனி - கொவ்வைக் கனி. உத்தமர் - எல்லாரினும் மேலானவர். என்றது, `மற்றொரு காளையை இவர் கொள்ளாமைக்குக் காரணம் வறுமையன்று; உமையாளையும் ஒரு காளைமேல் உடன் கொண்டு செல்ல விரும்புதலேயாம்` என்பதை உணர்த்தி, `ஆகவே, `இவர் எம்மைத் தம் அடிமையென்று கருதியிரங்கி, வேண்டியவற்றை ஈபவரே எனவும் குறித்தவாறு. நம்பியாரூரரும் இவ்வாறே, முன்னர், `ஊர்வது ஒன்று (ஏ) உடையான்`* எனக் கூறிப் பின்னர், `உம்பர் கோன்` என அவனது பெருமையுணர்த்தியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 20

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.

பொழிப்புரை :

குறிப்புரை :

உத்தமராய் - கல்வி, செல்வம், அதிகாரம், முதலியவற்றில் ஒன்றாலேனும், பலவற்றாலேனும் உயர்ந்தவர்களாய். `வாழ்வாரும்` என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. உலந்தக்கால் - இறந்துவிட்டால். `உயர்ந்தவர்களாய் வாழ்ந்தவர் களாயிற்றே` என்று எண்ணுதல் இன்றி, எல்லாரோடும் ஒப்பச் செத்த மரத்தையே (காய்ந்த விறகையே) அடுக்கி, அவற்றோடு ஒன்றாகச் சேர்த்து! உறவினர்கள் தீத்து (எரித்து) விடுவார்கள் `இவ்வளவே இவ்வுலக வாழ்வு` என்றபடி. `ஆகையால் இந்த வாழ்விலே ஆழ்தலை யுடைய நெஞ்சே, உன்னையும் அவ்வாறு செய்தற்கு முன், சிவனது புகழை அறிந்தோர் சொல்லக் கேள்` என்க. `கேட்டால், `நிலையான வாழ்வைப் பெறுவாய்` என்பது குறிப்பெச்சம். `உத்தமன்` என்பதற்கு, முன்னைப்பாட்டில் `உத்தமர்` என்றதற்கு உரைத்தவாறே உரைக்க. `ஆழி` இரண்டில் முன்னது, `கடல்` என்னும் பொருட்டாயும், பின்னது `ஆழ்தல் உடையது` என்னும் பொருட்டாயும் நின்றன. `கிளர்ந்து கேள்` என முன்னே கூட்டி, `ஊக்கம் கொண்டு கேள்` என உரைக்க. இங்ஙனம் உரைக்கவே, `ஊக்கம் இன்றிக் கேட்டல் பயனுடைத்தாகாது` என்பது பெறப்பட்டது.
`இரட்டை மணி மாலை இருபது பாட்டுக்களால் அமைதல் வேண்டும்` என்பதனால் திருக்கடைக் காப்புக் கூறிற்றிலர். இப்பிரபந்தம் முழுவதும் அந்தாதியாய் வந்து மண்டலித்தவாறு காண்க.

பண் :

பாடல் எண் : 1

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பயின்ற - பயின்று நன்கு உணர்ந்த. பின் - பிற்பட்ட காலம். என்றது, `சிறு காலையே` என்றபடி. சேர்ந்தேன் - துணையாக அடைந்தேன். என்றது, தமது ஞானத்தின் இயல்பைக் குறித்தவாறு. இதனையே சேக்கிழார்,
`வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வனபயின்று`*
என அருளிச் செய்தார். நிறம் - அழகு. `மணிகண்டம்` எனப்படுதல் அறிக. மை ஞான்ற - கருமை நிறம் ஓரளவில் (கண்டத்தளவில்) ஒட்டி நின்ற. இடர் - துன்பம்; பிறவித் துன்பம். `எஞ்ஞான்று தீர்ப்பது` என்றது, `அதனை யறிந்திலேன்` என்னும் குறிப்பினது, அதாவது, `இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 2

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படரும் நெறி - செல்லும் கதி என்றது, நற் கதியை. பணித்தல் - உரிமை செய்தல். உம்மைகள், `அவற்றை அவர் செய்யாதொழியார்` என்பதைக் குறித்தலின், எதிர்மறை. சுடர் உரு - ஒளி வீசுகின்ற உருவம். `கோலத்தோடு` என உருபு விரிக்க. `அவர்க்கு` என்பதன் பின், `ஆயினமையால்` என ஒரு சொல் வருவிக்க. `அன்பை அறுத்துவிடாது` என்றேனும், `அன்பு அறப் பெறாது` என்றேனும் உரைக்க.

பண் :

பாடல் எண் : 3

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண், `அல்லால்` என்றது, அன்பாதலைக் குறித்தும், பின்னர், `அல்லால்` என்றது, போழ் சூடும் அவரைக் குறித்துமாம். அன்புடையேமை, `அன்பு` என்றது உபசாரவழக்கு. பவர் - கொடி. `பவர் போலும் சடை` என்க. பாகு - ஒரு பகுதி. பாகு ஆக - ஒரு பகுதியில் பொருந்தும்படி போழ் - பிளவு. திங்களின் பிளவு. ஆள் - ஆளாம் தன்மை. `அவர்க்கு அல்லால், எம் ஆளாம் தன்மை. எஞ்ஞான்றும் மற்றொருவர்க்கு ஆகாதே போம்` என இயைத்துக்கொள்க. `ஆகாது` என்பதில் துவ்வீறும், பின்னர்த் தேற்றேகாரமும் தொகுத்தலாயின.

பண் :

பாடல் எண் : 4

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேள்ஆமை - நீள்ஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கேள் ஆமை யாக` என ஆக்கம் வருவிக்க. கேள் - உறவு. ஆமை, ஆமை ஓடு. அதனை அணியத் தகும் பொருளாக அணிந்த. ஆகம் - மார்பு. மார்பைக் கூறவே, உடல் முழுவதையும் கூறியதாயிற்று. `ஆகம் செம்மையான்` என, சினையினது பண்பு முதல்மேல் ஏற்றப்பட்டது. செம்மையைச் சுட்டிப் பின், `மற்றொன்று` என்றமையால், `கருமை` என்றதாயிற்று. `ஆம் இறை, ஆட்கொண்ட இறை` எனத் தனித்தனி இயைக்க. `கேளாதது என்கொலோ` என்றது, `இன்னும் முறையிடல் வேண்டும் போலும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 5

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இறக்கம் - நீக்குதல்; அழித்தல். `இறைவன்` என்றது, `சிவன்` என்றபடி. `இறைசிவன், கடன்வேந் தன்கையிறை, யிறுப்பு. இறை சிறந்தோன்` * என்னும் நிகண்டினால், `இறைவன்` என்பது சிவனுக்கே உரிய சிறப்புப் பெயராதல் விளங்கும். `உலகம் முழுவதையும் ஆக்கி அழிப்பவனும், உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவனும் சிவனே` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 6

வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வானம் - சிவலோகம். `உம்பர்கோன்` என்றது சீகண்ட உருத்திரரை- அவரது தானம் (இடம்) கயிலாயம். இருண்ட - இருள்மயமான. மொய்யொளி - செறிந்த ஒளி. `என்பாரும், என்பாரும்` என்க. யான் `ஞானத்தானும், என் நெஞ்சத்தானும்` என்பன்` என இயைத்து முடிக்க. சிவலோகத்திலும், கயிலாயத்திலும் இருத்தல் தடத்த நிலையால், ஆகலின், சிவஞானம் பெற்ற சீவன் முத்தர்களது உள்ளத்தில் இருப்பவனாக உணர்தலே அவனது உண்மை நிலையை உணர்தலாம்` என்றபடி. மூன்றாம் அடியை முதலிற் கூட்டி, அதன் இறுதியில் இரண்டாம் உருபு விரித்து, பின் வந்த `என்க` என்பதன்பின் `அவன்` எனச் சுட்டியுரைக்க.

பண் :

பாடல் எண் : 7

யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடி ஈற்றில் உள்ள, `யானே` என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் முடிவில், `ஆதலின்` என்பது வருவித்து உரைக்க. நீற்ற - நீற்றையணிந்த, ஏகாரங்கள் ஏனையோரினின்றும் பிரித்தலின் பிரிநிலை. இவற்றால், `பிறர் தம்மை இவ்வாறு கூறிக்கொள்வன எல்லாம் மயக்க உரைகளாம்` என்றபடி. சிவனுக்கு ஆளாதலின் அருமையையும், பயனையும் குறித்தவாறு. `என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து - முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை... வலஞ்சுழி வாணனை வாயாரப் - பன்னி, ஆதரித்து ஏத்தியும், பாடியும் வழிபடும் அதனாலே` 1 எனவும், `எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே - பந்தம் வீடவையாய பராபரன்... சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே`, `என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே - மின்னு வார்சடை வேத விழுப்பொருள்.... செந்நெறி - மன்னுசோதி நம் பால் வந்து வைகவே`2 எனவும் போந்தவற்றையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 8

ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆள்வானுக்கு (ஆள் ஆயினேன்; அன்றே பெறற்கரியன் ஆயினேன்; அஃதன்றே அவன் அருள் ஆமாறு` என இயைத்து முடிக்க.
ஆள்வான் - உண்மையா ஆள்வான்; சிவன் `ஆள்வான்` என்றதனால், `ஆயினேன்` என்றது, `ஆள் ஆயினேன்` என்ற தாயிற்று. `பெறற்கு அரியன்` என்றது, `சிவன்` என்றபடி. `சிவனுக்கு ஆளாயினேன்; அன்றே யானும் சிவனா யினேன்; தன் அடியவரைத் தானாகச் செய்தலேயன்றோ சிவனது திருவருளின் சிறப்பு` என்றபடி. `திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்` 3 என்றது காண்க. `தூய... போல்வான்` என்றது `சிவன்` என்றபடி. `புனலாகிய கங்கை` என்க. `அனற்கு அங்கை` என்பதை, `அங்கைக்கு அனல்` எனப் பின் முன்னாக நிறுத்தி, உருபு பிரித்துக் கூட்டி, நான்காம் உருபை ஏழாம் உருபாகத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 9

அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசன் அருளே உலகெலாம் ஆள்விப்பது, பிறப்பு அறுப்பது ஆனால், அவன் அருளாலே (யான்) மெய்ப் பொருளையும் நோக்கும் விதியுடையேன்; ஆதலின், எனக்கு எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவது அவன் அருளே` என இயைத்து முடிக்க. ஈசன் - சிவன். `ஆனால்` என்பது தெளிவின்கண் வந்தது, `காண்பவன் சிவனே யானால்`1 என்பதிற் போல. `மெய்ப்பொருளை யும்` என்னும் சிறப்பும், இறந்தது தழுவியதும் ஆகிய உம்மை தொகுத்தலாயிற்று. நோக்குதல் - ஆராய்தல் . அறிவிப்பதொரு துணையின்றித்தானே அறியமாட்டாத இயல்பையுடையது உயிரினது அறிவு. அத்தன்மைத்தாகிய அவ்வறிவு, குறைபாடுடைய கருவி களைத் துணையாகக் கொண்டு அறியுமிடத்து அறியப்படும் பொருள் களது இயல்பு பொதுவாக விளங்குதலன்றி, உண்மையாக விளங்காது. அதனால், குறைவிலா நிறைவாகிய இறைவனது அருளைத் துணையாகக் கொண்டு அறியுமாயின், அப்பொழுது பொருள்களின் இயல்பு உண்மையாக விளங்கும்.
இனிப் பிறபொருளைக் காட்டுகின்ற கதிரவனது ஒளியே தன்னையும் காட்டுவதாகும் அல்லது, அவனைப் பிறிதோர் ஒளி காட்டமாட்டாது. ஆகையால், கதிரவன் ஒளியைக் கொண்டே கதிரவனைக் காணுதல் போல, இறைவனது அருளால் எல்லாப் பொருள்களையும் அறிதலுடன், அவனையும் அவன் அருளாலேதான் அறிதல் வேண்டும். அது பற்றியே `அவன் அருளாலே அவன் தாள் வணங்கி` 2 என்னும் திருமொழி எழுந்தது. அதனையே இங்கு அம்மையார்,`அருளாலே மெய்ப்பொருளையும் நோக்கும் விதியுடையேன்` என்றார். விதி - முறைமை. இங்ஙனம் எப்பொருளையும் அருளாலே நோக்காது, கருவிகளாலும், நூல்களாலும் விளங்கும் தம் அறிவு கொண்டே பொருள்களை நோக்குவார்க்கு மெய்யுணர்வு தோன்றாது, திரிபுணர்வே தோன்றும் என்க.
இதனையே,
இப்படியால் இதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும்,
துப்புரவில் லார்துணிவு துகளாகச் சூழ்ந்தார்.1
என்று அருளிச் செய்தார் சேக்கிழார்.
அருளால் எவையும் பார்என்றான்:- அத்தை
அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி, தோழி 2
எனத் தாயுமான அடிகளும் கூறினார். `மெய்ப்பொருளாவது யாது` என முதற்கண் ஆராய்தல், இறைவன் உள் நின்று உணர்த்தும் முறையை நோக்கும் நோக்கினாலும், அவன் ஆசான் மூர்த்தியாய் வந்து அறிவுறுக்கும் அருள்மொழியாலுமாம் என்க. அவ்வாற்றான் நோக்குவார்க்கே உண்மை புலனாவதன்றிப் பிறவாற்றான் நோக்கு வார்க்கே உண்மை புலனாகாது என்பதை,
சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு
எனத் திருக்களிற்றுப்படியார் 3 வலியுறுத்தி ஓதிற்று.

பண் :

பாடல் எண் : 10

எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசன் - சிவன்` என்பது முன்னைப் பாட்டின் உரையிலும் கூறப்பட்டது. `மனத்துக்கு` என்பதில் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது. வைப்பு - சேம நிதி. `அவனையே பிரானாகக் கொண்டேன்` என ஏகாரம் விரித்து, மாறிக் கூட்டுக. பிரான் - தலைவன்; ஆண்டான். `கொள்வது` என்பது பொதுப்பட அத் தொழிலை உணர்த்திநின்றது. உம்மை, வினையெச்ச விகுதி. எனக்கு அரியது ஒன்று உண்டே` என்க. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய வினா.

பண் :

பாடல் எண் : 11

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நினைதல் - ஆராய்தல். துணிதல் - நிச்சயித்தல். `ஓழி`, துணிவுப் பொருண்மை விகுதி. உள்ளடைத்தல் - எப்போதும் மறவாது நினைதல். இறுதியில் `அவ்வொன்றே` எனச் சுட்டு வருவிக்க. ஏகாரம், எடுத்தோத்துப் பொருட்டாய், எழுவாய்த் தன்மை உணர்த்தி நின்றது. காண், முன்னிலையசை. `அவ்வொன்றே ஆளாம் அது` என முடிக்க. ஒளி - தீ; ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 12

அதுவே பிரான்ஆமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் `அதுவே` என்றது, மேல், `உலகெலாம் ஆள்விப்பது` என்றதையும், இடைக்கண், `அதுவே` என்றது `பிறப்பறுப்பது` என்றதனையும் ஏற்புழிக் கோடாலால் சுட்டி நின்றன. இனி - இப்பொழுது. `அதுவே என அறிந்தோமானால்` என்க. `அதுவே தகவு` என முடிக்க. தகவு - தகுதி; தன்மை, பனிக்கு - பனிக்காலத்திற்கு ஆற்றாமல். அணங்குகின்ற - வாடுகின்ற. கண்ணி - முடிமாலை. `பனிக் காலத்திற்கு ஆற்றாது வாடுகின்ற` என்றது, கொன்றை மலரைக் குறித்தவாறு. அது கார்காலத்தில் மட்டுமே பூப்பது. `கண்ணி கார்நறுங் கொன்றை` * என்ற பழம் பாடலைக் காண்க. நுதல் - நெற்றி. தனிக்கண் - ஒற்றைக் கண். `அங்கும்` என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. அல்லாக்கால், `அங்கு` என்பது நின்று வற்றும். இது சிவனது தகைமையைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 13

தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லே பாவந் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தகவு - தகுதி; நடுவு; நடுவு நிலைமை. அஃதாவது, பிறர்க்கு வரும் துன்பத்தையும் தமக்கு வரும் துன்பம் போன்றதாகவே உணரும் தன்மை. `தாம்` என்றது, `யாரேனும்` என்றபடி. தார் - கொன்றைத்தார். அகலம் - மார்பு. எனவே `சிவனது மார்பு` என்றதாயிற்று. `அதனை மலைமகளைச் சாரத் தனிமையில் புகவிடுதல் பொல்லாது` என்க. பொல்லாது - தீங்கு. தீங்கிற்கு ஏதுவா வதனைத் `தீங்கு` என்றது உபசார வழக்கு. கண்டீர், முன்னிலையசை. `தீங்கிற்கு ஏதுவாவது யாது` எனின், `அவனது மார்பில் மிகத் தீங்கு செய்ய ஊர்ந்து கொண்டிருக்கின்ற பெரிய பாம்பு அவள் மேலே என்றாவது ஒரு நாள் தாவியே விடும். அதனால், தகவுடையோர்க்கு அது பெண் பாவமாய் முடியும்` என்பதாம். அடர்தல் - தீங்கு செய்தல். தான். அசை.
எல்லாம் அறிந்திருந்தும் அம்மையார் பெருமானை நகையாடிப் புகழ்தற் பொருட்டு ஒன்றும் அறியாதார்போல் நின்று இங்ஙனம் கூறினார்; பத்தி பரவசத்தால். `பாம்பு முதலியவற்றுள் எதுவும் அவனையும் ஒன்றும் செய்யாது; அவளையும் ஒன்றும் செய்யாது; அவ்விருவரது தன்மையும் உலகர் தன்மையின் முற்றிலும் வேறானதே` என்பது கருத்து. இதவும் நிந்தாத் துதி
வாள்வரி யதளதாடை; வரிகோ வணத்தர்;
மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி, உழுவையோடு, கொலையானை, கேழல்
கொடுநாக மோடு, கரடி,
ஆளரி நல்ல நல்ல; அவைநல்ல; நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.*
என அருளிச்செய்த மெய்ம்மைத் திருமொழியைக் காண்க.

பண் :

பாடல் எண் : 14

தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நீள் நாகத்தானை நினைந்தமையால், தனி நெஞ்சம் தானே தன்னைக் கடைத்தேற்றிக் கொள்ளுதற் பொருட்டுத் தானே தனக்குப் பெருஞ்சேமத்தைச் செய்து கொள்கின்றது` என்க. `அவனை நினைப்பது ஒன்றே உயிர்க்குப் பாதுகாப்பாவது` என்பதும், `எம் நெஞ்சம் அதனைத் தானே தெரிந்து கொண்டு நினைக்கின்றது` என்பதும் கூறியவாறு.
தனி நெஞ்சம் - துணையற்ற நெஞ்சம். சேமம் - பாதுகாவல். ஆல், அசை. `ஆகம் பூணாற் பொலியாநிற்க` என்க. ஆகம் - மார்பு. பூண் - அணிகலம். `பொலியாநிற்க நீள் நாகத்தை உடையான்` என்றது, `நீள் நாகமே பூணாக ஆம் பொலிய` என்றபடி.

பண் :

பாடல் எண் : 15

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நீள் மலர் - மிக்க மலர். புனைந்தும் - அலங்கரித் தும். `செய்`, உவம உருபு. வான் - உயர்ந்த. இனி - இப்பொழுது, `என் செய்வான்` என்பதில், `செய்தல்` என்னும் பொது வினை, `தருதல்` என்னும் சிறப்பு வினைப் பொருட்டாய் நின்றது. கொல், அசை.

பண் :

பாடல் எண் : 16

இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இறைவன் சிவன்` என்பது மேலேயும்* கூறப்பட்டது. `இறைவன் அருள் சேர்ந்தோம்` என்பதை முதலில் வைத்து, அதன்பின், `ஆதலால்` என்பது வருவிக்க. இனி - இப்பொழுது. ஓகாரம், சிறப்பு. `ஓர் கடல்` என இயையும். வினைக் கடல் உருவகம். வினை, இங்கு ஆகாமியம். கனைத்தல் - ஒலித்தல். கனைக்கடல் - கனைத்தலையுடைய கடல். இனிக் ககர ஒற்றை `விரித்தல்` எனக் கொண்டு, `கனை கடல் என வினைத்தொகை யாகவே உரைத்தலும் ஆம். கனைகடல், இனஅடை. காண், முன்னிலையசை. இதனால் சிவன் அவரவர் தன்மைக்கு ஏற்ப நின்று அருள்புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தொல் உலகுக்கு ஆதியாய் நின்ற அரன்` என்பதை முதலிற் கொள்க. ஆதி - முதல்; முதல்வன். முதலில் உள்ள `காண்பார்` என்பது, `உலகிற்கு முதல்வன் எவனும் இல்லை` என முரணிக் கூறுவாரை. அவர்க்குக் காணலாம் தன்மையாவது, அவரவர் `மெய்` எனக் கொண்ட பொருள்களாய் நின்று அவர்க்குப் பயன் தரும் தன்மை. `அவனின்றியாதும் இல்லை` என்பது கருத்து. பின்னர், `தொழுது காண்பார்` என்றதனால், முன்னர் `காண்பார்` என்றது, தொழாதே காண்பாரையாயிற்று. கை தொழுது காண்பார், தெய்வம் உண்டு ` எனப் பொதுப்பட உணர்ந்து யாதேனும் ஓர் உருவத்தில் கண்டு வழிபடுவார். அவர்க்குக் காண்டல் கூடுவதாவது, அவரவர் வணங்கும் உருவத்தில் நின்று, அவர்க்குப் பயன்தருதல். காதலால் காண்பார், `உலகிற்கு முதல்வன் உளன்; அம்முதல்வனாம் தன்மையை உடையவன் `சிவனே` என உணர்ந்து, அதனானே அவன்பால் அன்பு மீதூரப் பெற்றுக் காண விரும்புவோர். `அவர்கட்குப் புறத்தும் அகத்தும் ஒளியாய் வெளிப்பட்டு நின்று அருளுவான்` என்க. `சிந்தையுளே` என்றே போயினாராயினும், `சோதியாய்` என்றதனால் `புறத்தும்` என்பதும் பெறப்பட்டது. `சுடர் விட்டுளன் எங்கள் சோதி`1 என்ற தற்கு, `ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பில் - ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்` 2 எனப்பொருள் கூறியமை காண்க. தோன்றும் - தோன்றுவான். ஏகாரம் தேற்றம். அரன் - பாசத்தை அரிப்பவன்.

பண் :

பாடல் எண் : 18

அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை
யானவனை எம்மானை இன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரன் - உருத்திரன். என்கோ - என்பேனோ. பரன் - பரமபதத்தில் (வைகுந்தத்தில்) இருப்பவன்; மாயோன். `அரியாம் பரன்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். அப்பாடத்திற்கு, `பரன் - மேலானவன்` என்க. `அவன் பண்பு` எனச் சுட்டுப் பெயர். முரண் - வலிமை. தானவன், இராவணன். யான் அவன் - யானாய் நிற்கும் அவன். `முரண் அழிய` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ஒருவனாய் நில்லாது, மூவராய் நிற்பவனை `ஒரு நாமம், ஓருருவம், ஒன்றும் இன்றி` *மெய்யறிவின்பமே உருவாய் இருத்தலாம். எனவே, சிவனது தன்னியல்பும், பொதுவியல்பும் கூறியவாறாம். பொதுவியல்பு கருணை காரணமாகக் கொள்ளப்படுவது.

பண் :

பாடல் எண் : 19

இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஒர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இன்று நமக்கு எளிதே` என்பதை இறுதியிற் கூட்டி, `எளிதே - எளிதோ` என உரைக்க. அன்றும் - முயன்று தேடிய அன்றும். எனவே, `இன்று அளப்பரியனாதல் சொல்ல வேண்டா` என்பதாம். `என்றும் மூவா ஓர் மதியான்` என்க. மூத்தல் - வளர்தல். `ஓர் மதி` என்றது, அதிசயத் திங்கள் என்றபடி, மூத்த ஏழ் உலகங்கள் என்க. மூத்த உலகு என்பதை, `தொல்லுலகம்` என்றவாறாகக் கொள்க `நமக்கு` என்றது `எளியராகிய நமக்கு` என்றவாறாதலைப் படுத்தல் ஓசையாற் கூறிக் காண்க.
`சிவனை உள்ளவாறுணரும் அறிவையடைதல் எளிதன்று` என்றபடி.

பண் :

பாடல் எண் : 20

அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவன்` என்பதை முதலில் வைத்து, `அவனது இயல்பைக் கூறுமிடத்து` எனப் பொருள் விரிக்க. அறிவான்- உயிர்கட்குச் செய்வது காட்டும் உபகாரம் மட்டும் அன்று; காணும் உபகாரமுங்கூட` என்பதை விளக்கச் சிவஞான போதத்துப் பதினொன்றாம் சூத்திரச் சிற்றுரையில் இவ்வடிகள் எடுத்துக்காட்டப் பட்டமை காண்க. அறிகின்ற - அறியப்படுகின்ற. விரி சுடர், கதிரும், மதியும், தீயும். `அப்பொருள்` என்றது, `மெய்ப்பொருள் அல்லாது வேறு பொருள்` என்றதாம். `அவன்` என்றது, பண்டறி சுட்டாய்ச் சிவனைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 21

அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரு சுடர் கதிரும், மதியும். புவி - பிருதிவி; மண். புனல் - நீர். இயமானன் - எசமானன்; உயிர். அட்ட மூர்த்தி, எட்டுரு உடையவன். உம்மை எதிரது தழுவிய எச்சம். இஃது அவனது பொது நிலை. ஞானமயன் - அறிவே வடிவாய் உள்ளவன். இஃதே அவனது உண்மை நிலை. `உலகுயிர்கட்கு அட்டமூர்த்தியுமாய், வீட்டுயிர்கட்கு ஞானமயனாகி வந்து நின்றானும் ஆவன்` என்க. `ஆவன்` என்பது சொல்லெச்சம்.
சிவனது பொது நிலை, உண்மை நிலை இரண்டையும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 22

வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வந்தோர்` என்பது முதலாகத் தொடங்கி, `பிறைக்கண்` என ஏழாவது விரித்து உரைக்க. `வந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. நீர் - நீர்மை; தன்மை. கொள்வது உட் கொள்வது; விழுங்குவது. `ஒக்கும் சிந்தை` என இயையும். சிந்தை - எண்ணம். அது. பகுதிப் பொருள் விகுதி. காண்மின் - குறிக்கொண்டு நோக்குமின். ஓகாரம், சிறப்பு. `அடைக்கலமாக வந்து அடைந்த திங்களை நினையாது விட்டு விடாதீர்` என்றபடி.
சார்ந்தாரைக் காக்கும் சிவனது இயல்பை அறியாதார் போன்று அறிவித்தவாறு.

பண் :

பாடல் எண் : 23

பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அனல் அரவு - அனலுகின்ற; சீறுகின்ற பாம்பு. பிறை முதலிய அடையாளங்களைக் கூறியது. `இறைவர் சிவபிரான்` என்பது உணர்த்துதற்கு. இனி, அவை அவரது கைம்மாறு கருதாத கருணைக்கும் அடையாளங்கள் ஆதலை உணர்க. அவற்றால், `அவர்` எமக்கு இரங்காதொழியார்` என்னும் குறிப்பும் தோன்றிற்று. `இரங்காரேனும்` என்பதற்கு, மேல் `இடர்களையாரேனும்` என்புழி உரைத்தாங் குரைக்க. `கறை மிடற்ற எந்தையார்` என்றது, `அவர்` என்னும் சுட்டளவாய் நின்றதேனும், அதனாலும் அவரது கருணை மிகுதி குறிக்கப்பட்டதாம். அடுக்குப் பலகாலும் நினைத்தலைக் குறித்தது. இருக்கும் - அமைதியுற்றிருக்கும். `துள்ளித் துடியாது` என்றபடி. ......`உன் அருள்நோக்கி,
இரைதேர் கொக்கொத்து இரவு பகல்
ஏசற்றிருந்தே வேசற்றேன்`
`இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்
என்றென்று ஏமாந் திருப்பேனை.`
`நல்கா தொழியான் நமக்கென்று உன்
நாமம் பிதற்றி`*
என்னும் திருமொழிகளைக் காண்க. `தயா` என்பதில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்து, `தையா` என நின்றது. தயா உள்ளம் - தயவை - அருளை விரும்புகின்ற உள்ளம். `இது` என்றது, எடுத்தல் ஓசையால், `பித்துக் கொண்டதாகிய இது` எனப்பொருள் தந்தது. `உள்ளமாகிய இது, - ஆட்பட்டு விட்டோம்; இனி அவர் செய்வது `செய்க` - என்று என்று அமைதியுற்றே யிருக்கின்றது என்க.

பண் :

பாடல் எண் : 24

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மீண்டு` என்பதை அடுக்கிக் கூறி, `மீண்டும் மீண்டும்` ஆய்கின்ற என் சிந்தனையில் மின்னும் சுடர் உருவாய் (ப் புகுந்து) இன்னும் சுழல்கின்றதாகிய இது அன்றே ஈசன் இங்குச் செய்வது! அவன் திருவுருவத்தின் இயல்பும் இதுவன்றே! என்றனக்கு ஓர் சேமம் ஆவதும் இது வன்றே!` என இயைத்துரைத்துக் கொள்க.
இடைவிடாது நினைப்பவர் உள்ளத்தையே சிவன் தனக்குக் கோயிலாகப் புகுந்து, ஒளியுருவாய் விளங்குவான்; அங்ஙனம் அவன் விளங்கப் பெறுதலே உயிர்க்கு ஆக்கமாவது` என்பதாம். `சிந்தனைக்கு` என்பது உருபு மயக்கம்.

பண் :

பாடல் எண் : 25

இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் பெருமான், எங்கும் சென்று பிச்சை யேற்பதையும், இரவிலே சுடுகாட்டில் ஆடுவதையும், `இவை இழி வல்லவோ` என்று சிறிதும் எண்ணிப் பாராமலே செய்தற்குரிய காரணத்தை நாம் இங்கேயிருந்து கொண்டு என்ன என்று சொல்ல முடியும்? முடியாது. ஆகவே, நாம் அவனை நேரிற் காணமுடிந்த பொழுது அவனிடமே, `இவை எதற்கு` என்ற கேட்டுத் தெரிவோம். (அது வரையில் சும்மா இருப்போம்) என்பது இப்பாட்டின் பொருள். `இறைவனது செயலின் இரகசியங்களை உயிர்கள் அறிதல் அரிது. அதனால் சிலர் அவனை அவை பற்றி இகழவே செய்வர். அவர்களோடு நாம் சேர்ந்து விடுதல் கூடாது; தனியே அமைந் திருத்தலே தக்கது` என்பது குறிப்பு. பொங்குதல் - மிகுதல். அதற்கு `இருள்` என்னும் வினைமுதல் வருவிக்க. ஈமம் - பிணஞ் சுடும் விறகு. `பலி திரிதல், உலகத்தைப் பற்றி நிற்கும் உயிர்கள் அப்பற்றினை விடுதற் பொருட்டு என்பதும், `ஈம வனமாவது உலகம் முற்றும் ஒடுங்கிய நிலை` என்பதும், `அங்கு இரவில் ஆடுதல்` என்பது, `யாதொன்றும் இல்லாது மறைந்த அந்தக் காலத்தில், உலகத்தை மீளத் தோற்றுவதற்கு ஆவனவற்றைச் செய்தலாகிய சூக்கும நடனம்` என்ப தும் ஆகிய உண்மைகளை அறிந்தோர் அறிவர் என்பதும் கருத்து.

பண் :

பாடல் எண் : 26

ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கறை மிடற்றான்` என்பதை முதலிற் கொள்க. ஞான்ற - நான்ற; தொங்கிய. குழல் - குழல்போலப் புரிசெய்த. வரை - கீற்று; என்றது கம்பியை. போல், அசை. போன்ற - போன்றன. `பொன் மார்பு` என்பதில் பொன் - அழகு. அக்கு - எலும்பு மாலை, `அதன் அயலிலே வைத்த அரவு (பாம்பு) அயல் (புறத்தில்) ஏனை எல்லா வற்றிலும் மிக்குத் தோன்றும் முறையில் எங்கும் ஞான்று விளங்கி மிளிரும்` என்க. விளங்கி மிளிர்தல், ஒரு பொருட் பன்மொழி. இது பெருமானது திருவுருவத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 27

அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆகம் - உடம்பு. `ஒன்றும்` என முற்றும்மை விரித்து, `எதனைப் பூண்டாலும் பாம்பு ஒன்றை மட்டும் பூணாதே` என்க. `பாம்பொடு பழகேல்` * என்பார் பெரியோர் ஆதலின், அஃது என்றாயினும் தீமையாகவே முடியும் என்று இரக்கின்றோம் என்பதாம், `ஒன்று` என்பது இனங்குறித்து நின்றது. நயந்து - விரும்பி. என்றதனால், `சிவன் பாம்பை விரும்புகின்றான்` என்பது பெறப்படும். பரவுதல் - துதித்தல். முரண் - வலிமை. ஒன்னாதார் - பகைவர். `மற்றொன்று` என்பதும் மற்றோர் இனத்தையே குறித்தது. `பொன்னாரம்` என்பது, ஒருபொருள் குறித்த வேறு பெயராய் வந்தது. இஃது அன்பே காரணமாக, இறைவனது ஆற்றலை மறந்து, அவனுக்கு வரும் தீங்கிற்கு அஞ்சிக் கூறிய கூற்றாய் அமைந்தது. எனினும், `மூவெயிலும் ஓர் அம்பால் எய்தான்` என அவனது அளவிலாற்றல் குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக, இவர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இவர்` என்றது இறைவரை அண்மையில் வைத்துச் சுட்டியது. இதன் பின், `கோள் நாகம்` என்பதைக் கூட்டி, இரண்டையும் முதலில் வைத்து, `ஒன்று பூண் ஆகப் புனைந்து, ஒன்று அதளின்மேல் மிளிர நாண் ஆக நன்கு அமைத்து, (ஒன்று) முடிமேல் சூடுவதும் ஆகிய இவையெல்லாம் பொறியிலியேற்கு என முடிவதாக` என இயைத்துப் பொருள் கொள்க. கோள் - கொடுமை. பூண் - அணிகலம். பொங்கு - அழகு மிகுந்த. அதள் - புலித்தோல்; இஃது உடுக்கையாக உடுத்தப்பட்டது. நாண், அரைநாண். `பொறியிலியேற்கு` எனத் தம்மையே குறித்தாராயினும், `தம் போலியர்க்கு` என்றலே கருத்து என்க. பொன் முடி - பொன் போலும் முடி; சடைமுடி. பொறி - அறிவு. என் - என்ன பொருள். முடிவதாக - முடிதற் பொருட்டு. `ஓன்று` என்பதை, பொன்முடிக்கும் கூட்டுக. அஃதாவது, `விளங்குதற் பொருட்டு` என்றதாம். `யான் அன்புடை யேன்; ஆயினும் அறிவிலேன்; ஆகவே, இவர் செய்வன எல்லாம் என் போலியர்க்கு என்ன விளங்குதற்பொருட்டு` என்றவாறு. எனவே, `ஆன்றமைந் தடங்கிய அறிவர்க்கே இவர் செய்வன விளங்கும்.
இவ்வாறு அம்மையார் கூறுவன எல்லாம் நம்மனோரை முன்னிட்டுக் கொண்டேயாம்.

பண் :

பாடல் எண் : 29

இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொருள் - மெய்ப்பொருள். `பொருளாக` என ஆக்கம் விரிக்க. `இகழ்வதையே செய்வர்` என ஒருசொல் வருவித்து முடிக்க. கண்டீர், முன்னிலையசை. `இதுவே முறையாதலின், இவரது பேய்க் கோலத்தைக் கண்டு இகழ்பவர் எல்லாம், புறக்கோலத்தை மட்டுமே கண்டு, உண்மையை உணராத பிறரேயாவர்` என்க. முற் பகுதி பொது முறைமையாயும், பிற்பகுதி சிறப்பு முறைமையாயும் நின்றன. பூக்கோல மேனி - பொலிவு வாய்ந்த அழகிய மேனி. `மேனி மேல்` என ஏழாவது விரிக்க. பொடி - சாம்பல். `பூக் கோல மேனிமேல் சாம்பலைப் பூசுகின்றார்` என்பதாம். என்பு - எலும்பு. பேய்க் கோலம் பேய்போலும் கோலம், `கோலம் கண்டார்` என்பது, `கோலத்தை மட்டுமே கண்டவர்` என்னும் பொருளது. `பிறர்` என்றது, `உண்மை யுணராதவர்` என்றபடி. கண்டார், எழுவாய்; பிறர், பயனிலை.

பண் :

பாடல் எண் : 30

பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிறருடைய என்பே அணிந்து; இரவில் பேயும் தாமுமாய் மகிழ்ந்து தீயாடும் எம்மானார்` என எடுத்துக் கொண்டு உரைக்க. பிறர், முன்னைப் பாட்டிற் கூறிய பிறர். பேருணர்வு - மெய்யுணர்வு என்றது, `அவர் மெய்யை உணர்ந்ததாக உணரும் உணர்வு` என்றபடி. `தாமே` என்பன, `பிறர் ஒருவரும் இல்லை` என்னும் பொருளவாய் நின்றன.

பண் :

பாடல் எண் : 31

மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மடம் - அறியாமை. மடநெஞ்சே, யார் என்பே யேனும் இகழாதே அணிந்து உழல்வார்க்கு ஆட்பட்டமையால்` என முதலில் எடுத்துக் கொண்டு, பின்பு `அங்ஙனம் ஆட்பட்ட பேரன்பையே இன்னும் பெருக்கு` என முடிக்க. `பெருக்கினால் இன்னும் பெருநலம் பெறுவாய்` என்பது குறிப்பெச்சம். மகிழ்தி - மகிழ்கின்றாய்; மானுடரில் நீயும் ஒருவனாய்த் திகழ்கின்றாய். சேமம், பாதுகாவல். `என்பே அணிந்து உழல்வார்` என்றதும் நிந்தாத் துதி. அவர்க்கு ஆட்படுதலே மானுடப் பிறப்பின் பயன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 32

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தெரியின் முதற்கண்ணான் - அறிவு வாய்க்கப் பெற்று ஆராய்ந்தால் முதலிடத்தில் வைத்துப் போற்றுதற்கு உரியவன்; `இல்லையேல் இகழப்படுவான்` என்பதாம. இது முதலாகத் தொடங்கி யுரைக்க. `நுதற் கண்ணான்` என்பது, `சிவன்` என்னும் பெயரளவாய் நின்றது. மூவா - கெடாத; இஃது இனம் இல் அடை. ஒளிய - ஒளியை யுடைய. கதிர் - கலை.

பண் :

பாடல் எண் : 33

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நீர்மையே` என்னும் தேற்றேகாரத்தைப் பிரித்து, `ஆம்` என்பதனுடன் கூட்டி, இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. `உலந்த` என்பது பாடம் அன்று. உலந்தது - விரும்பியது; `எக்கோலத்தையுடைய எவ்வுருவினிடத்து` என்க. வாய், ஏழுனுருபு. கோலம் ஆடை அணி முதலியன. உருவு - வடிவும். `அவ்வுருவை நோக்கி` என இசை யெச்சம் வருவிக்க. `ஆமே என்னும் முற்று, சொல்லுவார் குறிப்பால், `ஆதலே` என்னும் தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது. இதன்பின் `நுழைவு இலாதார்` - என்பதைக் கூட்டி இதனை அறிந்து இவனை அடைய மாட்டாதார் திரிக என முடிக்க. நூல், தாம் தாம் அறிந்த நூல். அவை இரணிய கருப்பம், பாஞ்சராத்திரம் முதலியன. அறிவு - அறிந்த பொருள். `தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்று அவர்கட்டு அருளுதலே இவனது இயல்பு` என்பதை யறியாதார், `பொடி பூசி, எலும்பணிந்து, சுடலையாடுதலையே இவனது உண்மை யியல்பாக மயங்கித் தாம் தாம் அறிந்தவாறு பேசுவர்; அது பற்றி எமக்கு வருவ தோர் இழுக்கில்லை` என்றபடி.
ஆர்உருவ உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்.
சுருதிவா னவனாம்; திருநெடு மாலாம்;
சுந்தர விசும்பில்இந் திரனாம்;
பருதிவா னவனாம்; படர்சடை முக்கட்
பகவனாம்; அகவுயிர்க் கமுதாம்;
எருதுவா கனனாம்; எயில்கள்மூன் றெரித்த
ஏறுசே வகனுமாம்; பின்னும்
கருதுவார் கருதும் பொருளுமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
என்னும் திருமொழிகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 34

ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாம் ஆளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமா
றொருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை யடும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வல்வினைகள், அணையாதாரை அடும்; (அணைந்தார்பால்) ஆமாற்றை யறியா` என இயைத்து முடிக்க. `அணைந்தார்பால்` என்பது சொல்லெச்சம். `பிறவிப் பெருங்கடல் நீந்துவர்` 3 என்பதில், `சேர்ந்தார்` என்பது போல. அந்தரம் - ஆகாயம். `அந்தரத்தே வேமாறு` என இயையும். செற்றான் - அழித்தான். `அருகாக` என ஆக்கம் வருவிக்க. அடும் - வருத்தும்.

பண் :

பாடல் எண் : 35

அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மறு, இருள், மதி அடும்` என்று அஞ்சிப் போந்து இடம் கொண்டு இருக்கின்றதை ஒக்கும்` என இயைத்துக் கொள்க. `கண்டாய்` முன்னிலை யசை. அடும் - கொல்லும். `படங் கொள் அரவு, அணி மிடற்ற அரவு, பேழ்வாய் அரவு` எனத் தனித்தனி இயைக்க. பாம்பு படம் எடுத்து ஆடும் பொழுது அதன் கழுத்து அழகாய் இருத்தல் பற்றி. `அணிமிடற்ற அரவு` எனப்பட்டது. பேழ்வாய் - பெரிய வாய்; எலிகளை விழுங்கும் வாய். அசைத்தான் - இறுகக் கட்டினவன். கோலம் - அழகு. மணி மிடறு - நீல மணிபோலும் கழுத்து. மறு - கறை. இருளுக்கு வந்து இடம் கொள்ளுதல் இன்மையால் இல்பொருள் உவமையும், வந்தமைக்கு ஒரு காரணம் கற்பித்தமையால் தற்குறிப்பேற்றமும் கூடி வந்தமையின் இது தற்குறிப்பேற்ற உவமையணி. இதனால் இறைவனது கண்டத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 36

மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாகம், வானத்திலும் தளர மீது ஓடுமேல், `வார்சடைமேல் தெறும்` என்று அஞ்சி பிள்ளை மதி வளருமோ! அதனால்தான், ஆ!,ஆ! தேய்ந்து உழலும்` என இயைத்துப் பொருள் கொள்க. `நாகம் வானத்தில் மதியை விழுங்குதல் யாவரும் அறிந்தது` என்பது கருத்து. `நிறைவு பெற்றால், பெரிய வானத்திலே விழுங்கு கின்ற பாம்பு, சிறிய சடைக் குள்ளே விழுங்குதல் எளிதன்றோ` என்ப தாம். `வான்` என்பதில் ஏழனுருபும், உயர்வு சிறப்பும்மையும் விரிக்க, `அஞ்சி` என்பது ஓகாரத்தால் பெறப்பட்ட எதிர்மறையுடன் முடிந்தது. `பிள்ளை மதி நும் ஆணையால் வளராதிருக்கவில்லை; பாம்பிற்கு அஞ்சியே வளராதிருக்கின்றது` என மறுத்தவாறு. ஆ! ஆ!- வியப்பிடைச் சொல் அடுக்கு. இதுவும் பாம்பையும், மதியையும் பகை தீர்த்து உடன் வைத்திருப்பதைப் பழிப்பது போலப் புகழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 37

மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மதியா அவுணர்` என்க. அடல் - வலிமை, மதி இரண்டில் முன்னது திங்கள்; பின்னது அறிவு. இகழாது, மதியால் ஏத்துவரேல்` என இயைக்க. என்பு ஆக்கையால் - எலும்பை அணிந்துள்ள மேனியைப் பற்றி (இகழாது). ஆதல் - அதுவாய்க் கலத்தல். `இவ்வுலகில்` என்றது, `என்பு ஆக்கைகளாய்ப் பிறப் பதற்கே இடமாய் உள்ள இவ்வுலகு` என இதன் இழிவு கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 38

ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பூண்டது ஓர்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `கொம்பு, போலாதே` என முடியும். ஏகாரம், எதிர்மறை வினாப் பொருட்டாய் உடன்பாட்டுப் பொருளைத் தந்தது. தார் - மார்பில் அணியும் மாலை, `தாராக ஏறிய பாம்பு` என்க. கூர் ஏறு - கூர்மை பொருந்திய. ஏனம் - பன்றி, திருமால் கொண்ட வராகாவதா ரத்தின் இறுதியில் அதனை அழித்து, அதன் கொம்பைச் சிவபிரான் மாலையில் கோத்தணிந்தமை புராணங்களில் கூறப்படுவது. `முற்றல் ஆமை, இளநாகமோடு, ஏன முளைக் கொம்பு அவை பூண்டு`* என்றமையும் காண்க. இறைவன் மார்பு வானத்திற்கும், அதில் அணியப்பட்ட பாம்பு இராகுவிற்கும், ஏனக் கொம்பு திங்களுக்கும் உவமையாகக் கூறப்பட்டன. திங்கள் சிறுகியதற்குக் காரணம் கற்பித்தது தற்குறிப்பேற்றம். எனவே, இது தற்குறிப்பேற்ற உவமையணியாதல் அறிக. இங்ஙனம் இறைவனது. மார்பணியைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 39

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும் பொடி அணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொம்பு, பூங்கொம்பு. அஃது உவம ஆகு பெயராய், உமாதேவியைக் குறித்தது. குழகன் - அழகன். தன், சாரியை. அம், அணி, மணி இவை அழகைக் குறிக்கும் பெயர்கள். பவள மேனி, உவமத் தொகை, அது, பகுதிப் பொருள் விகுதி. வரை - மலை, பொடி- நீறு, மறித்து - மீள, `மேனி, முன்னம் செம்பொன் வரையேபோலும்; பின்பு வெள்ளி வரையே போலும்` என்க. `இஃதோர் அதிசயம்` என்பது குறிப்பெச்சம். இறைவனது திருமேனியின் இயற்கையழகையும், செயற்கை யழகையும் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 40

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, தொண்டர் பாதத்தைச் சேர்; அல்லாதார் கூட்டத்தை நீக்கு` என்க. `முன்னே நெஞ்சால் நினைத்து, மீள வாயாலும் வாழ்த்திப் பின் மெய்யாலும் வணங்குகின்ற தொண்டர்` - என்க. `முப்பொறிகளாலும் தொண்டு செய்பவர்` என்றபடி. உம்மை, இறந்ததையும், எதிரதையும் தழுவிநின்றது. `குறித்து` என்பது, முன்னர்க் காணுதலாகிய காரியத்தையும், பின்னர்ச் சேர்தலாகிய காரியத்தையும் குறித்தது. ஒருவர் கொள்ளாத திங்கள் - சிறிதாதலால் யாரும் விரும்பாத பிறை. `எவரும் விரும்பாதன எவையோ, அவையே எங்கள் பெருமானால் விரும்பப்படுவன` என்பதாம். `இதனால், இவன் ஏனையோரினின்றும் வேறுபட்டவன்; ஆகவே `இவனை, உலகம் - பித்தன் - என்று இகழ்தல் இயற்கை! என்றபடி.
`பித்தரே என்றும்மைப் பேசுவர் பிறரெல்லாம்`* என்று அருளிச் செய்தமையுங் காண்க. `ஒருவரும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 41

ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலகு அளந்த மாலாதல் இடப்பாதியும், உமையவளாதல் வலப்பாதியும் என்க. `சிவன் எல்லாவற்றையும் சத்தி வழியாகவே தோற்றுவிப்பன்` என்பது முடிவாதலால் `மாயோனை இடப்பாகத்தினின்றும் தோற்றுவிக்கும் நிலைமையில் வலப்பாகம் சத்தி பாகமாய் நிற்கும். என்பது பற்றி, `ஒருபால் மாலவனாம், மற்றை ஒரு பால் உமைய வளாம்` என்றும், இந்நிலைமையில் `சிவம்` என்பதே இல்லாதது போலத் தோன்றுதலால், இருபாலில் ஒரு பாலையும் நின்னுருவமாகத் தெரிய மாட்டேம்` என்றும், இங்ஙனமாகவே, சிவமேதான் சத்தியோ? `சிவம்` என்பது வேறு இல்லையோ? என வினாவும் முறையில், `நின்னுருவே மின்னுருவுதானோ` என்றும் அருளிச்செய்தார். மின் - பெண்; உமை. சிவமும், சத்தியும் இரு பொருள்கள் அல்ல` என்பது விளங்குதற்கு இங்ஙனம் நகைச்சுவை தோன்றக் கூறினார். நிறம், `உரு` என்னும் பொருட்டாய், வடிவத்தைக் குறித்தது. `இந்நிறத்தை இரு பாலிலும் நின் உருவமாகத் தெரிய மாட்டேம்` என இயைக்க. ஒகாரம் இரண்டில் முன்னது சிறப்பு; பின்னது வினா, `நின் உருவமாக நேர்ந்து தெரிய மாட்டோம்` எனக் கூட்டுக. `நேர்ந்து தெரியமாட்டோம்` என்றாராயினும், `தெரிந்து நேரமாட்டோம்` எனப்பின்முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டி யுரைக்க. நேர்தல் - உடன் படுதல். சிவம் சத்திகளது இயல்பை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 42

நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ,
இளங்குழவித் திங்கள் இது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கு - வானத்தில். `அங்கு அரவம் நேர்ந்து (எதிர்ப்பட்டுக்) கொள்ள (விழுங்க, அதனால்) சிறுகிற்றோ? இசைய (உனக்குப் பொருந்த) அளவே ஈர்ந்து, (அளவாகப் பிளந்து எடுத்து) வைத்தாயோ? பேர்ந்து காலத்திற்கு ஏற்ப மாறி) வளர மாட்டாதோ? (மாட்டாத தன்மையை உடையதோ?) இளங் குழவித் திங்கள் இது (என்றுமே பசுங்குழவியாய் இருக்கின்ற திங்களாகிய இதன் தன்மை) என்னோ?` என இயைத்துக் கொள்க. `வளக் குழவி` என்பது மெலிந்து நின்றது. குழவித்தாய் குழவித் தன்மையுடையதாய், இளங்குழவி - பசுங்குழவி. இறைவன் அணிந்துள்ள பிறை என்றும் ஒரு பெற்றித்தாய் இருத்தலைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 43

திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே யறிவான் தனக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் பெருமானே` என்பதை முதலில் வைத்து உரைக்க. `இது` என்பது, எடுத்தல் ஓசையால், `இத் தன்மைத்து` எனப்பொருள் தந்து நின்றது, `இவன் எவ்வாறு அவனை வெல்ல முடியும்` எனக் கூறினால் அதில், `இவன், அவன் என்பன ஓசை வேறுபாட்டால், `இத்தன்மையன், அத்தன்மையன்` எனப் பொருள் தருதல்போல. `சிறிதாய்ப் பயன் தாராதது` என்றதாம். `பிச்சை யேற்பவன் வேடத்தாற் பொலிவுடையனாயின் அது பற்றியேனும் பிச்சையிடுவர்; அது தானும் செய்கின்றிலையே ` என்றபடி. சில் பலி `இன்னதுதான் ஏற்பது` என்பதின்றி இடுவார் இடுவனவாகிய எல்லாப் பிச்சையும், `ஊர்` என்பதன்பின், `தொறும்` என்பது தொகுக்கப்பட்டது. பொங்கொளிய - மிக்க ஒளியான உடம்பை யுடைய. `தேவர்` என்பது ஒளியுடம்பினர்` என்னும் பொருளதாதல் பற்றி, `பொங்கு ஒளிய வானோர்` என்றார். `வானோரே` என்னும் சிறப்புணர்த்தும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `விலக்காரேல்` என்றது, விலக்க வல்லரல்லராயின்` என்றபடி. `வல்லமே` என்னும் ஏகாரம் எதிர்மறை வினாவாய் நின்று, மாட்டாமையைக் குறித்தது. ஈற்றடியைத் தனித் தொடராக வைத்து, முதற்கண், `இனி` என்பது வருவிக்க. இறுதியில் `ஆவதை` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. ஈற்றடியால், `எம் பெருமான் தனக்கு ஆவதைப் பிறர் அறிவிக்க வேண்டாது தானே அறிவான் ஆதலின், அவன் இவ்வாறு `பலிக்கு` என்று ஊர் திரிவதில் ஒரு கருத்திருத்தல் வேண்டும்` என்றபடி. அக்கருத்தாவது, உயிர்களின் வினையை நீக்குதலாம்.

பண் :

பாடல் எண் : 44

தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடியன்` என்பது தன்மையொருமைப் பெயர். `தன்னை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. பிரிநிலை ஏகாரத்தை இதனுடனும் கூட்டுக. `எனக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம். பிறர்க்கெல்லாம் அருளினமையைக் குறித்தது. `அருளாவாறு` என்பதை நிகழ் காலத்ததாகவும், `கொல்` என்பதை ஐய இடைச் சொல்லாகவும் கொண்டு உரைப்பதும், அவற்றை முறையே எதிர்காலத்ததாகவும், அசை நிலை இடைச் சொல்லாகவும், மற்றும் `என்` என்பதை இன்மை குறித்து வந்த வினாவினைக் குறிப்புச் சொல்லாகவும் கொண்டு உரைப்பதும் ஆகிய இரு பொருளையும் கொள்க. அங்ஙனம் கொள்ளவே, பின்னர் உரைக்கும் உரையின் படி, `எனக்கு அருளாதொழியக் காரணம் இல்லை` என்னும் துணிவுப் பொருளே வலியுடைத்தாய் நிலை பெறும். பின்னை உரைக்கு `எனக்கே` என்னும் ஏகாரம் தேற்றப் பொருட்டாம். `மனத்துக்கு` என்பதில் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. சீர் - புகழ். பேராளன் பெருமையுடையவன். இனி, `செம்மேனி உடையனாதலைக் குறிக்கும் பெயரையுடையவன்; அப்பெயர் - சிவன் - என்பது` என உரைப்பினும் ஆம்; `சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய. செம்மேனி எம்மான்` 1 என்னும் திருமொழியையும் காண்க.

பண் :

பாடல் எண் : 45

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பேணி, வேண்டி, என்று நீவிர் தேடுகிறீர்கள்; இங்கே என்போல்வார் சிந்தையினும் உற்றான்; (அஃதறிந்து) காண் பார்க்கு (க் காண்டல்) எளிது` என்க. `அவனையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. பெருநெறி - மேலான நெறி. நோக்கு தலையே `பெருநெறி` என்றார் ஆகலின், பெயரெச்சம் வினைப் பெயர் கொண்டதாம். `நின்முகம் காணும் மருந்தினேன்` 2 என்பதிற் போல. பேணுதல் போற்றிக் காத்தல். வேண்டுதல் - விரும்புதல். `பெருநெறி, ேபரருள்` என அடை புணர்த்தமை. `ஏனை நெறிகள் எல்லாம் ஒரு நெறி யல்ல` என்பதும், `ஏனையோர் அருளெல்லாம் பேரருள் அல்ல` என்பதும் தோன்றுதற் பொருட்டு, `பெருநெறி` எனப்படாமை, பிறப்பைக் கடத்தலாகிய பெரும் பயனைத் தாராமை பற்றியும், `பேரருள்` எனப்படாமை, சிலர்க்குச் சில சிறு பயன்களைத் தந்த அளவிலே அற்று விடுதல் பற்றியுமாம். `என்பீர்கள்` என்பது. `என்று தேடுகின்றீர்கள்` என்னும் பொருட்டாய் நிற்றலின், `பிரான் அவனை` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. `என் போல்வார் சிந்தையினும் உற்றான்` என்பது, `உலகியல் வகையில் எளியனாயினும் அன்புடையார் உள்ளத்தில் இருப்பவன் அவன் என்பதை விளக்கிற்று. `இங்கு` என்பது, `இங்கே` என அண்மை குறிக்க வந்தது. `அஃது அறிந்து` என்பதும், `காண்டல்` என்பதும் சொல்லெச்சமாய் எஞ்சி நின்றன. இவ்வாறன்றி, `எளி தாக` என ஆக்கம் வருவித்து, `எளிதாக உற்றான்` என முடிப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 46

எளிய திதுஅன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்
றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒளிகொள் மிடற்று` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. `இது எளியது அன்றே! ஏழை காள், யாதும் அறிவிலீர்; ஆஆ அளியீர்! என முடிக்க. அளியீர் - இரங்கத்தக்க நிலையை உடையீர். ஆ! ஆ!, இரக்க இடைச் சொல் அடுக்கு. ஒளி, நீல ஒளி, `அறிகிலீர்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். தனிச்சீரில் ளகர ஒற்றை நீக்கி அலகிடுக.

பண் :

பாடல் எண் : 47

திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, திருவை, (அடையும்) திறத்தால் அடைவதல்லால், பிறவகையில் பெறவும் ஆதியோ` (உரியை ஆவையோ? ஆகாய்) என இயைத்து முடிக்க. (பிற வகையில் பெற நினைக்கும்) பேதையே, (அந்த நினைவை விடு) என்க. `அடையும்` என்பதும், `பிறவகையில்` என்பதும் `விடு` என்பதும் சொல் லெச்சங்கள். அடையும் திறமாவது, அன்பு செய்தல்.
அழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்,
அறிவரிது அவன்திரு வடியிணை யிரண்டும்.*
என்றது காண்க. நிறம் - அழகு. வடிக் கண் - மாவடுவின் விளவு போலும்கண். ஏழை - பெண்.

பண் :

பாடல் எண் : 48

திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
தது மதியொன் றில்லா அரா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரு - அழகு. ஏன மருப்பு - பன்றிக் கொம்பு. `பெருமான்` என்பது தாப்பிசையாய், முன்னும் சென்று, இயைந்தது. `ஒரு நாளும் ஒன்றும் என்னும் இழிவு சிறப்பும்மைகள் தொகுத்த லாயின. `மதி` இரண்டில் முன்னது திங்கள். பின்னது அறிவு. ஒன்றாக- ஒருதலையாக; நிச்சயமாக. தேராது - அறியாது. `அது யாது` எனின், மதி (அறிவு) ஒன்று இல்லா (சிறிதும் இல்லாத) அரா. இது மயக்க அணி. `மதி ஒன்று இல்லா` என்றதனால், எள்ளல் பற்றிய நகை பிறந்தது.

பண் :

பாடல் எண் : 49

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே ஒப்பான் சடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அராவி - அரத்தால் தேய்த்து, அம் - அழகு. விராவு கதிர் - திங்களிலே பொருந்தியுள்ள கதிர்கள். `விரிய ஓடி` - எங்கும் பரவ ஓடி. விராவுதலால் - இடை இடை செறிதலால். புரி - முறுக்கு. புரிந்தாற்போலாவே - முறுக்குண்டாற்போல இல்லையோ. ஏகாரம் எதிர் மறை வினாப் பொருட்டாய், `போல்கின்றன` எனப் பொருள் தந்தது. `தன்னோடே ஒப்பான் - தனக்குத் தானே ஒப்பானவன்.

பண் :

பாடல் எண் : 50

சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முடிமேல்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கோல மதி - அழகிய திங்கள். பங்கு - இடப் பாகம், `பங்கின் உள்ள பாவை` என்க. குலப் பாவை - உயர் குல மடந்தை, `அவன் சடைமேல் அணிந்த` எனச் சுட்டுப் பெயரும், ஒரு வினைக் குறிப்புச் சொல்லும் வருவிக்க, கொன்றை - கொன்றைப் பூ. பூக்கள் பின்னர்க் காய்த்துப் பழத்தைத் தருதல் இயல்பாகலின், சுவை தருகனிகள்` என்றார் கூந்தலுக்குக் கொன்றைக் கனி உவமையாகச் சொல்லப்படும். புடைமேவி - சடையின் மற்றொரு பக்கத்தில் பொருந்தி. சடை வலப் பால் உள்ளது. `வலப் பக்கம் சடையும், இடப் பக்கம் கூந்தலுமாய் இரு தன்மைப்பட்டுத் தோன்றாது, சடையில் உள்ள கொன்றையின் கனியே இடப்பக்கம் உள்ளது போலும் என ஒருமை கற்பித்தவாறு. இஃது இடத்திற்கு ஏற்ற உவமை.

பண் :

பாடல் எண் : 51

குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்து
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குழல் ஆர் சிறு புறத்து - கூந்தல் புரளுகின்ற சிறிய முதுகையுடைய. கோல் வளை - திரண்ட வளை. இஃது இதனை அணிந்தவளைக் குறித்தது. எழில் - அழகு. `அழகுக்காக அவளை நீ ஆடும் அங்குக் கொண்டு செல்ல வேண்டா` என்க. இப்பாட்டிற்குப் `பெருமானே` என்னும் முன்னிலை வருவிக்க. கழல் - வீரர்கள் காலில் அணியும் அணி. ஆர்த்தல் - ஒலித்தல், ஆரழல் - அணுகுதற்கரிய நெருப்பு.

பண் :

பாடல் எண் : 52

அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செங்கண்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `பங்கில்` என ஏழாவது விரிக்க. ஒவ்வாதே - போலாதே. ஏகாரத்தை வினாவாகவும், தேற்றமாகவும் கொண்டு, `ஒக்கும்` என உடன்பாட்டுப் பொருளும், `ஒவ்வாது` என எதிர்மறைப் பொருளும் இரண்டும் கொள்க. சிர மாலை - தலை மாலை. `பெருமானது சடாடவி செவ்வானம்போல விளங்க, அதில் அணியப்பட்ட வெண்டலை மாலையில் உள்ள தலைகள் பல, பல சந்திரர் செவ்வானம் எங்கும் தோன்றியது போல விளங்குகின்றன` என்பதாம். தலை மாலை அவனது நித்தியத்துவத்தை விளக்குவதாகலின் அதனைப் புகழ்ந்த வாறு. சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 53

சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`போரார்ந்த பாம்பு கொண்டு நாண் அசைத்த நம் ஈசன் பொன்முடி` என்று எடுத்து, முதற்றொட்டு உரைக்க, அசை, நாண் - அரை நாண். அசைத்த இறுகக் கட்டிய. பொன் - அழகு. தழைப்ப - மிகுந்திருக்க. சேண் - வானுலகம். `அங்கு உலவி நீர் மிகுந்திருந்த யாறு` என்க. நீத்தம் - வெள்ளம். `ஆய்` என்பது, `ஆயதனால்` எனக் காரணப் பொருள் தந்தது. செவ் ஏய் ஓர் கார் - செம்மை நிறம் பொருந்திய ஒரு மேகம் போலும் கொன்றை, கார் காலத்தில் பூப்பது. `கண்ணி கார் நறுங் கொன்றை` என்றது காண்க.* எனவே, `கொன்றை மலரும், நீத்தமும் மேகத்தால் விளைந்தன போலத் தோன்றுகின்றன என்றபடி. மேகம் கரிதாயினும் இஃதோர் அதிசய மேகம் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 54

காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோடு உழிதருவான் - நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாயோன், நின்னுடைய பாகத்தானாய் நின்னோடு ஓருருவாய் உழிதருவானாகவும், அவன் பண்டொருகால் காணாதபடி நீ எங்குச் சென்று ஒளித்தாய்` என்க. `பாகத்தான்` என்றது, ஓருருவாய் நின்றவாற்றை விளக்கியது. `எங்கு ஒளித்தாய்` என்றது, `அவனுக்கு இடம் அளித்து நின்றே ஒளிக்கவும் வல்லாய்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 55

பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படுகடல் - ஒலிக்கின்ற கடல். உண்டு - `உண்டமையால்` என்க. பணி உறுவார் - பாம்பை அணிகலமாகப் பொருந்தியவர். `அவர் கறுத்தமையால்` எனச் சினைவினை முதல் மேல் ஏற்றப்பட்டது. மணி மறுவாய் நீல நிறமான களங்கமாய் த் தோன்றும் வடுவும் உண்டாகும் - என உம்மையும் ஆக்கமும் விரித்து முடிக்க `யாம் களங்கமிலேம்` என்று அவர் சொல்லினும், கண்டம் கறுத்ததையேனும், `ஓர் உபகாரம் பற்றி` எனலாம்; `காரணம் இன்றி, மதியினிடத்துத் தோன்ற இருக்கும் வடுவும் ஒன்று உண்டு` என்க. `இவர் களங்கமிலாராவது எங்ஙனம்` என்றபடி. இதனை,
வார மாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்
பெறுவ தென்னே?
ஆரம் பாம்பு; வாழ்வ தாரூர்; ஒற்றி யூரேல்
உம்ம தன்று;
........................
ஊருங் காடு; உடையும் தோலே
ஒண காந்தன் தளியு ளீரே.*
என்றதுபோல உரிமை பற்றிச் சொல்மாத்திரையால் பழித்தவாறாகக் கொள்க. நிறை மதிக்கன்றிப் பிறைக்குக் களங்கம் இன்மையால், `தோன்றும்` என்பதை எதிர்கால முற்றாகக் கொண்டு, `இப்பொழுது இல்லையேனும் பின்பு உண்டாக இருக்கின்றது` என்றவாறாகக் கொள்க.

பண் :

பாடல் எண் : 56

வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையிற் சூடுவாய் நீ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சுடு வெண்பொடி நிறத்தாய், படு வெண் புலால் தலையினுள் ஊண் (பற்றிப் பிறர்) புறம் பேசக் கேட்டோம்; (அதனை) - வடு அன்று - எனக் கருதி நீ மதித்தியாயின், (வடு வாகாமைக்குரிய காரணத்தைச்) சொல்லாய்; நீ நிலாவைத் தலையிற் சூடுபவன்` எனக் கூட்டி முடிக்க. நிறம் - மார்பு. படு - இறந்த. ஊண் - உண்டல், புறம் பேசுதல், `பழித்தல்` என்னும் பொருட்டாகலின் அது, `ஊண்` என்பதில் தொக்கு நின்ற இரண்டவதற்கு முடிபாயிற்று. வடு - குற்றம். நிலாக் கலைகட்கு அடையாளம் ஆதலின், அதனைத் தலையில் சூடுதல், `எல்லாக் கலையும் வல்லவன்` என்பதைக் காட்டும். ஆகவே, `நீ வடுவாவன செய்யாய்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 57

நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவம் மேல்ஆட மிக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எல்லாம்` என்பதன் பின், `சென்று` என்பதும், `கண்டாய்` என்பதன்பின், `ஏன்எனில்` என்பதும் வருவிக்க. கண்டாய், முன்னிலையசை. விடம் - நஞ்சு. `விட அரவம் மிக்கு மேல் ஆடுதலால், மடவார் அஞ்சி, வந்து பலி இடார்` என்க. `எம் அன்பினால் உன்னை, அறியாதார் போல நினைத்துச் சொல்கின்றேம்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 58

மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மிக்க எரி - அளவில் மிகுந்த தீ. எரியின் முழக்கம். `தமதம` என்பது. வீங்கிய பொங்கு இருள் - பெருகிய, மிகுந்த இருள். ஒக்க உடன் இருத்தல் - சமமாக ஒருங்கிருத்தல், `ஒவ்வாதே` என்றதற்கு, மேல், `போலாதே` என்றதற்கு 1 உரைத்தவாறு உரைக்க. செக்கர் - செவ்வானம். ஆகம் - உடம்பு. பண்பு - நிறம், `பண்பினால்` என்னும் மூன்றனுருபு தொகுத்தலாயிற்று. `சடையும், குழலும் பண்பி னால் எரியும், இருளும் உடன் இருந்தால் ஒக்கும்` என்க. ஓருடம்பு இருவராய கோலத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 59

பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவம் மேல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கண்புணரும்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `மேல்` என்பதை, மேலே, `பண்பு` என்பதை, மேலே, `பண்பு` என்பதேனாடு இயைத்து, `மேல் பண்பு - மேலே உள்ள தன்மை` என உரைக்க. பணி - சொல்லியருள். `பணி` என்னும் ஏவல் முற்றினைப் பார்த்துக் காண்` என்றது ஒரு நாட்டு வழக்கு. ஏவல் முற்றுக்கள் அந்த வழக்கில் இவ்வாறு வரும் என்க. இதில் கூறப்பட்ட பொருளின் விளக்கத்தை, மேல், `ஒருபால் உலகளந்த` என்னும் வெண்பாக் 2 குறிப்பிற் காண்க. `நீறணிவ தாகிய நின்னுருவம் எவ் வுருவோ` என்க. `இரண்டு உருவத்திலும் நீறு காணப்படுதலால், உன் உருவம் அறியப்பட வில்லை` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 60

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாலாய` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. மால் - மத மயக்கம். மா - காட்டு விலங்கு `கையையுடைய மாவாகிய களிறு` என்க. கார் உரிவை - கரிய தோல். அன்று, உரித்துப் போர்த்த அன்று. விலங்கல் - மலை. `ஓவ்வாதே` என்பது, மேலேயும் வந்தது. 1 யானைத் தோற் போர்வையைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 61

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்று - ஆட்படாது உலகியலில் இருந்த அன்று. இன்று - உலகியலின் நீங்கி ஆட்பட்ட பின்னதாகிய இன்று. இரு நிலைகளிலும் உன் உருவத்தை நான் காணவில்லையென்றால் எப் பொழுதுதான் நான் அதனைக் காண்பது? நீ சிவனுக்கு ஆள் என்கின் றாயே; அவன் உருவம் எத்தகையது என வினவுவார்க்கு நான் என்ன விடை சொல்லுவேன்` என்றபடி. `எவ்வுருவோ நும்பிரான்` என்பதில், உரு உடையவனை, `உரு` என்றது உபசார வழக்கு. `எவ் வுருவோ` என்னும் ஓகாரத்தை, `ஏது` என்பதனோடும் கூட்டுக. ஏது- எத்தகையது. ஆட்படாதபொழுது எந்த உருவத்தையும் காணவில்லை. ஆட்பட்ட பின் உருவத்தை ஒன்றாகக் காணவில்லை; கயிலையில் கண்டது ஓர் உருவம்; ஆலங்காட்டிற் கண்டது ஓர் உருவம்; அவரவர் கள் சொல்லக் கேட்பன பல உருவங்கள்; அவை கருதுவார் கருதும் உருவங்கள்; ஒருபால் உலகளந்த மாலும், ஒருபால் உமையவளும் ஆகும் உருவம்; அரியும், அயனும் ஆய உருவம் முதலியன. 2 `உருவ சிவன் தடத்த சிவனேயன்றிச் சொரூப சிவன் அல்லன்` என்பதும் `தடத்த சிவனே கண்ணுக்குப் புலனாவன்; சொரூப சிவன் உணர்வுக்கு மட்டுமே புலனாவன்` என்பதும் இதன் கருத்துக்களாகும்.
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவும் உடையான் உளன்.
என்றது காண்க. `என்றுந்தான் எவ்வுரு` என்றது, நிலையான உரு எது` என்று வினாவி அஃது இல்லை, என்றபடி.

பண் :

பாடல் எண் : 62

ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பூதப்பால்` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. `பூதம்` என்றது மண்ணை; எனவே, `பூதப்பால்` என்றது, `மண்ணுலகில்` என்றவாறு `வேடன்` இரண்டில் முன்னது, `வேடம் பூண்டவன்` என்றும், பின்னது, `வேட சாதியினன்` என்றும் பொருள் தந்தன. விசயன் - அருச்சுனன். `போர் ஏற்ற நாள்` என ஒரு சொல் வருவிக்க. ஒக்கும் இரண்டில் முன்னது `நிகர்க்கும்` என்றும், பின்னது, `பொருந்தும்` என்றும் பொருள் தந்தன. `ஏது` ஐந்தில் முன்னிரண்டும் வினாப் பெயர்; அடுத்த இரண்டும் `எத்தன்மையது` என வினைக் குறிப்பு. ஈற்றில் உள்ளதும் வினாப் பெயரே. பின் வந்த `ஏதொக்கும்` என்பது, `எந்த விடை பொருந்தும்` என்பதாம். வினாக்கள் முதல் அடியில் வந்தன. வல்வேடனாய்த் தோன்றினும் தேவ வடிவாய் இருந்ததோ, வேட வடிவாயே இருந்ததோ? அதனை அறிந்தவர் ஆர் என்றபடி.

பண் :

பாடல் எண் : 63

வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கடி உலவு.... சோதியாய்` என்றது விளி. அது, `சொல்லாய்` என்பதனோடு முடிந்தது. ஆல், அசை. கடி உலவு சொல் - விளக்கம் அமைந்த சொல். அத்தகைய சொல் ஒன்றை முடிவாக இல்லாத சோதி. அஃதாவது, சொல்லால் அளவிட்டுச் சொல்ல முடியாத ஒளி `அலகில் சோதியன்` * என்றது காண்க. சோதி யாய் - ஒளியை உடையவனே. `நின் முடிமேல் திங்கள், பகலே நிலா எறிக்குங் கொல்லோ` என இயைக்க. வடிவு - வட்டம் என்றது. `நின் முடிமேல் திங்கள் குறையுடையது` எனக் குறிப்பால் நகை தோற்றியவாறு. செங்கதிர் - ஞாயிறு. நெடிது உலவி நின்று - பகல் முழுதும் மறையாது உலவி நின்று. `எறிக்குங் கொல்` என்றது, சொல்லால் ஐயம் போலக் கூறினும், பொருளால் துணிவு உணர்த்தியதேயாம். ஓகாரம், சிறப்பு, `நீ அணிந்துள்ள திங்கள் உலகத் திங்களன்று; அருளுருவத் திங்களாம்` என்றபடி. `கனக மலை அருகே, போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே` 1 என்றாற் போல, `சிவனை அடைந்த பொருள்கள் யாவும் சிவமேயாதலல்லது வேறாகா` என்பதனைக் குறிப்பால் உணர்த்தியதாம்.

பண் :

பாடல் எண் : 64

நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நிலா இருந்த` என்பது தொடங்கிச் சென்று, `நிலா இலங்கு வெண்மதியை நேடிக் கொள்வான்` என்பதை, `அரவம்` என்பதன் பின்னரும். `போல்` என்பதை, `கொல்லோ` என்பதன் பின்னரும் வைத்து உரைக்க. `போல்` என்பது `போலும்` என முற்றுப் பொருள் தந்தது. `பெறுவது - கொள்வாரும் கள்வரும் நேர்` என்பதில், `நேர்` 2 என்பது போல, இனி `போன்ம்` என்பதே பாடம் எனலுமாம். கொல், அசை, ஏகாரம், சிறப்பு. கொள்வான், வான் ஈற்று வினையெச்சம். செக்கர் அவ்வானம் - செம்மை நிறம் உடைய அந்தவானம். `புக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. திருமுடிக்கே - திருமுடிக்கண்ணே; உருபு மயக்கம் `காலை` என்பதில் ஐ இரண்டாம் வேற்றுமை யுருபு. கால் - காற்று. `காற்றையே போன்று உலாவி உழிதரும்` என இயையும். `அரவம் சடை முடியில் மிக விரைவாக ஊர்ந்து உழலுதல், அங்குள்ள நிலாவை, `எங்கே உள்ளது` எனத் தேடி உழல்வது போல் உள்ளது` என்றது தற்குறிப்பேற்ற அணி. `நிலா` இரண்டில் முன்னது திங்களின் ஒளி; பின்னது திங்கள்.

பண் :

பாடல் எண் : 65

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காலை நேரம், அருணோதயத்தாலும், உதய சூரியனாலும் வானம்மிகச் சிவந்து தோன்றுதலால், அக்காலத்து வானம் சிவனது திருமேனிக்கும், உச்சி வேளையில் சூரியன் வெண்ணிறமாய் நிற்றலால் வானமும் வெளிது ஆதலின், அக்காலத்து வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறை கின்ற ஞாயிற்றின் கதிர்கள் பல திசைகளிலும் பல கம்பிகள் போல வீசுதலால் அவற்றின் தோற்றம் அவனது விரிந்த சடைக்கும், இரவு நேரத்தில் மிகுந்துள்ள இரவு மிகக் கரிதாய்த் தோன்றலின் அஃது அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின. இவை மாலையுவமை யணி. `காலை, பகல்` என்பன அக்காலத்து வானத்தையும், `மாலை` என்பதும் அக்காலத்துக் கதிர் வீச்சினையும் குறித்தன. மாலை - மயங்கும் மாலை. அந்தக் காலம். `மாலையின் உரு` என இயையும். தாங்கு உரு - தாங்கப்படும் உரு. வேலை - பொழுது. கடும் பகல் - மிக்க பகல்; நண்பகல். மற்று, அசை, `அவன்` என்பது சிவபிரானைச் சுட்டியது பண்டறி சுட்டு. வீங்குதல் - மிகுதல். சிவபிரானது திருமேனியது உறுப்பழகைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 66

மிடற்றில் விடம்உடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மிடற்றில் விடம் உடையீர் நும் மார்பில் பைத்து ஆடும் பாம்பு வண்ணம் (நும்) மிடற்றில் மைத்து ஆம் இருள் போலும் கரிது; (அது) உம் மிடற்றை நக்கித் (தனது) மிடற்றில் வடம் கொண்ட வாற்றாலோ?` என இயைத்துப் பொருள் கொள்க. `உமது மிடற்றின் நிறமும், நும் மார்பில் ஆடும் பாம்பின் நிறமும் ஒன்றாய் இருக் கின்றதே` என வியந்துரைத்தவாறு. பின் வந்த மிடற்றுக்கு, `தன்` என்பது வருவிக்க. `உம்` என்பதை ஈற்றில் வந்த மிடற்றுக்கும் கூட்டுக. `விடம் கொண்டவாற்றால்` என உருபு விரிக்க. ஓகாரம் தெரிநிலைப் பொருட்டு. மைத்து ஆம் - மையின் தன்மை யுடையதாகி. `பாம்பு வண்ணம் கரிது` எனப் பண்பின் வினைபண்பிமேல் நின்றது. ஆல், ஓ அசைகள். பைத்து - படத்தை உடையதாய். இது, `பை` என்னும் பெயர் அடியாகப் பிறந்த வினைச் சொல்.

பண் :

பாடல் எண் : 67

பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதனுள் `சிலம்பு` என்றது கழலையே குறித்தது, மாதொரு பாகமாம் வடிவில் சிவன் திருவடியில் மேயது கழலேயாகையால் `கழல் வீரம் உடையார்க்கே உரியது. முதல் இரண்டு அடிகளில் கூறியவாறு. சிவபெருமான் பகைப் பொருள்களைத் தனது மேனியில் பகைதீர்த்துப் பயில வைத்தமையாலும், தாங்கற்கரிய கங்கையைத் தலையில் தாங்கினமையாலும் அவன் கழல் அணிதல் தக்கதே `பயின்று` என்பதை, `பயில` எனத் திரிக்க. தாழ்தல் - வீழ்தல். `அருவி` என்றது கங்கையை. `பயின்று, தாங்குதலால் சிலம்பு ஆம்` என இயைக்க. ஆம் - பொருந்துவதே. உரு - நிறம். `வடிவில் ஓங்கின்ற ஒளி` என்க. சிவபிரானது எல்லாம் வல்ல தன்மையை வியந்தவாறு. பெருமான் புலித்தோலையே உடையனாயினும், மான் அதையே கண்டு, `புலி` என்று அஞ்சும் ஆகலின், `அங்ஙனம் அஞ்சவில்லை` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 68

சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்
றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செந்நிறத்தால் செக்கர் வானமும், சிவ பெருமானது சடைமுடியும் ஒன்றை ஒன்று வெல்லப் பார்க்கும் நிலையில், சிவபெருமான் உமாதேவியின் ஊடலைத் தவிர்க்க வேண்டி அவளது பாதங்களில் தனது முடியைப் பல முறை சேர்த்துதலால் அப்பாதங்களில் தனது முடியைப் பல முறை சேர்த்துதலால் அப்பாதங்களில் உள்ள செம்பஞ்சுக் குழம்பு பட்டுப் பட்டுச் சடைமுடி செக்கர் வானத்தை வென்று விட்டது` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். இஃது உவகைச்சுவை. இதனை, `சிருங்கார ரசம்` என்பர் வட நூலார். அனைத்துச் சுவைகளையும் பத்திச் சுவைக்குத் துணையாகவே திரு முறைகள் கொள்ளும்.
செவ்வரத்தம் - செம்பஞ்சு. `செவ்வரத்தத்தில் சேர்த்தி` என உருபு விரிக்க. `சேர்த்தி` என்றாரேனும், `சேர்த்திச் சேர்த்தி` என அடுக்கிக் கூறுதல் கருத்தென்க. நலம் - அழகு. `பெற்று` என்பதில் `பெறுவித்து` என்னும் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது. செக்கர் - செவ்வானம் இதன்பின், `சிறக்க` என ஒரு சொல் வருவிக்க. `முதிரா மதியான் தனது முடியைச் செவ்வரத்தத்தில் சேர்த்து நலம் பெறுவித்து இக்கோலம் செய்தான்` என்க. மதி திங்களாயினும், `அறிவு` என்றும் பொருள்தரும் ஆதலின், `ஒரு பெண்ணின் அடிகளில் பல முறை முடி தோய வணங்குகின்றான்` என்னும் நகை நயம் தோன்ற அப்பொருள் மேற் செல்லும் குறிப்பும் உடையது.

பண் :

பாடல் எண் : 69

முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொடு மதி - வளைந்த பிறை. `வாலறிவான் நற்றாள்` * என்பதன் உரையில், `பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் `நற்றாள்` என்றார்` எனப் பரிமேலழகர் உரைத்த உரை இங்கு, `நல்ல அடி` என்பதற்குக் கொள்ளத்தக்கது. மேற் கொடு - தலைமேற் கொண்டமையால், `கூற்றை மதியோம்` என்க. கூற்று, இறப்பைத் தரும் தெய்வம்; யமன். படி - பூமி, `படிமேல் பொருந்தத் தலை குனிய வல்ல மாகிய அடிமைத் தன்மையைக் கொண்டாடப் பெற்றோம்` என்பதில் `வல்லம்` என்பது இடைக் குறைந்து நின்றது. கொண்டாடுதல் - பாராட்டுதல். அவலம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 70

எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எந்தாய், சடையாய், இரவில் நீ ஆடும் இடம் எமக்கு ஒருநாள் காட்டுதியோ? இதுவோ எமக்கு ஒரு பேராசையாய் (உள்ளது) தவிராது` என்க. அமைக்கவே போந்த எரி - சிலர் செயற்கையாக அமைக்க அதனாலே உண்டான எரி, பாய்தல் - பரத்தல்; `இயற்கையேயாயினும் செயற்கைபோல அத்தனை அமைப்பாய் உள்ளது` என்பதாம். `போந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பொங்குதல் - இருள் மிகுதல். ஏந்து எரி - ஓங்கி எரியும் எரி. `இதுவோ` என்னும் ஓகாரம் சிறப்பு. `தவிராது` என்றது. `தவிர்க் கினும் தவிராது` என்றபடி. `காட்டுதியோ` என்பதில் ஓகாரம் ஐயப் பொருட்டு ஆகலின், `மாட்டாயோ` என்பதும் கொள்ளப்படும். `சிவன் இரவில் எரியாடும் இடம் இந்தச் சுடுகாடாயின், யாவரும் அதனை எளிதிற் சென்று கண்டுவிடலாம்; `அவன் காட்ட வேண்டும்` என்பதில்லை. ஆசை தோன்றுதலும், அதனை நிரப்ப முடியாதிருத்தலும் நிகழா. அதனால், இரவாவது முற்றழிப்புக் காலமும், எரியாடும் இடமாவது சூக்குமமாகிய காரண நிலையுமாம் - என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 71

இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்.

பொழிப்புரை :

குறிப்புரை :

`முக்கண்ணாய்` என்பதை முதலிற்கொண்டு `உரைக்க. இடப்பால் - `இடப் பக்கத்தில் உள்ள மதி` என்க. ஓர் மடப் பாவை, கங்கை. கங்கை தலையிலேயிருப்பதால், மதியை (பிறையை) அவள் பக்கத்தில்தான் வைக்க வேண்டியுள்ளது. அஃது உண்மைதான்; ஆயினும் அதனால் நீ அழகாகச் சூடிய பிறையில் உன் இடப் பாகத்தில் உள்ள தேவிக்குத் தொடர்பில்லாமல், அவள் மாற்றாட்கன்றோ (கங்கைக்கு) தொடர்புடையதாகின்றது? கண் கண்டாயே இனை நீ உன் கண்ணால் கண்டு கொண்டு தானே இருக்கின்றாள். (`இதற்கு என் செய்தாய்` என்பது இசை யெச்சம். `நீ, இடப்பாகத்தில் ஒருத்தியிருக்க, மற்றொருத்தியைத் தலையில் வைத்தது பிழை` என்பது குறிப்பு.) இதுவும் நிந்தாத் துதி. `கண்டிலம் காண்` என்பதில் காண், முன்லையசை. கண் கண்டாயே` என மாற்றி, `கண்ணால்` என உருபு விரிக்க. இனி, ஈற்றில் `கண்` என்பதை, `காண்` எனப் பாடம் ஓதி, `கண்டாயே; இதற்கு ஒரு வழியைக் காண்` என உரைப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 72

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா ஈதென் கருத்து.

பொழிப்புரை :

குறிப்புரை :

`நின்னைக் கண்டு நினக்குப் பணி செய்யே னேல்` என்க. கைப் பணி - கையால் செய்யும் தொண்டு. சிறப்புடைமை பற்றி இதனை எடுத்தோதினார். ஆகவே, மனத்தொண்டும், வாய்த் தொண்டும் சொல்லாமே அடங்கின. `செய்யேனேல்` என்றது, `செய்யும் வாய்ப்பைப் பெறேனாயின்` என்றபடி. அண்டம் - வானுலக ஆட்சி. இதனைக் கூறவே, மண்ணுலக ஆட்சியும் அடங்கிற்று, திங்களாய் - திங்களை அணிந்தவனே. இதனையும், `கண்ணாளா` என்பதையும் முதலிற் கொள்க. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `கண்` என்றது, கண்போலும் தன்மையை. அஃதா வது நன்னெறி தீநெறிகளை விளக்கும் தன்மை. ஆளன் உடையவன். கைப்பணி பிறப்பை அறுப்பதும், மண்ணுலக விண்ணுலக ஆட்சிகள் பிறப்பை மிகுவிப்பனவும் ஆதலின் அவை முறையே விரும்பப்படு வதும், வெறுக்கப்படுவனவும் ஆயின.

பண் :

பாடல் எண் : 73

கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீ விரும்பி
உள்ளமே எப்போதும் ஒது.

பொழிப்புரை :

குறிப்புரை :

`உள்ளமே` என்பதை, `பருத் தரங்கம்` என்ப தற்கு முன்னே கூட்டி, அது முதலாக உரைக்க. தரங்கம் - அலை. வெள்ள நீர் - மிக்க நீர். வாயின் தொழிலாகிய ஓதுதலை நெஞ்சிற்கு ஏற்றியது இலக்கணை. நெஞ்சிற்குக் கருத்து உள்ளதுபோலக் கூறியதும் அது. திருத்தலாம் - நிரப்பலாம். சிக்கென - உறுதியாக.

பண் :

பாடல் எண் : 74

ஒத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொ: ஓதம் - அலை. `எத்தனை` என்பது ஆகு பெயராய் அவற்றின் நீரைக் குறித்தது. அட்டுதல் - சேர்த்தல். `அட்ட வும்` என உம்மை விரிக்க. `நிறைந்தது` என்பதில் அகரம் தொகுத்தல். அமர் நீதி நாயனார் நாட்டிய துலாக்கோல் மண்ணுலகத்ததாயினும் இறைவனது கோவணத்தை தாங்கிய தட்டு, எதிர்த் தட்டில் எத்தனைப் பொருள்களை வைப்பினும் மேல் எழாது இருந்தமை போல, கபாலம், பிரமன் தலையேயாயினும் இறைவன் கையில் இருத்தலால் எத்தனைக் கடல்களின் நீரை வார்ப்பினும் நிரம்பாதாயிற்று. பேதையர்கள் - பெண்கள். எண்ணாது - பாத்திரத்தின் பெருமையை அறியாமல். பலி- பிச்சை. `கலம் பலியால் நிறைந்தவா என்னோ? என்க. (நிறைய வில்லை, நிறைந்து விட்டதுபோல இறைவன் அப்பாற் சென்றான்` என்பது குறிப்பு. கண் ஆர் - இடம் மிகுந்த. கலம் - பாத்திரம். இறை வனை அடைந்த பொருள்களும் அவனைப் போலவே அளப்பரிதாதல் கூறியபடி.

பண் :

பாடல் எண் : 75

கலங்கு புனற்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதியியங்க லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊடு - உள்ளே, ஆலல் - ஒலித்தல். அசைதலு மாம். பரிசு - தன்மை; இயல்பு. `நீள் முடிமேல் விரி சடை` என இயைக்க. காணில் - பார்க்கும்பொழுது. `சடை விசும்பாம்` என்க. ஆக்கம் உவமை குறித்து நின்றது. `கங்கை மழைபோலவும், பாம்பு இராகு போலவும் தோன்றுகின்றன` என்பதாம். இஃது ஏது உவமை யணி.

பண் :

பாடல் எண் : 76

விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து,
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்து,
எந்தாய் தழும்பேறி யேபாவ பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எந்தாய்` என்பதை முதலிற் கொள்க. விசும்பின் - வானின்கண் உள்ள. விதி, இங்கு நல்வினை. விண்ணோர்` என்பது `தேவர்` என்னும் அளவாய் நின்றது. `மகுடத்தைத் தேய்ப்ப` என்க. `மகுடத்தால் தேய்ப்ப` என்றும் ஆம். முசிந்து - தேய்ந்து. ஏகாரம் பிற காரணங்களினின்று பிரித்தலின் பிரிநிலை. பொல்லா ஆம் - அழகில்லன ஆகின்றன. `நின் அடி` என வருவித்து, `தேய்ப்ப முசிந்து, தழும் பேறிப் பொல்லா ஆம்` என வினை முடிக்க. பாவம், இரக்கக் குறிப்புச் சொல். விண்ணோர் யாவரும் சிவபெருமானது திருவடிகளில் தங்கள் முடி தோய வணங்குதலைக் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 77

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேருங் - கடகம்
மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்;
அறிந்தாடும் ஆற்றா தரங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடிகளது` என உருபு விரித்து, முதலிற் கூட்டுக. அடிகள் - சுவாமிகள். இஃது உயர்வு குறித்து வரும் பன்மைச் சொல். முகடு - அண்டத்தின் உச்சி. அது பேர்தலாவது, உடைதல், `மறிந்து` என்பதை, `மறிய` என திரிக்க. மறிதல் - உழலுதல். வான், இங்குச் சேய்மை. `ஆகலான் அரங்கு ஆற்றாது; அதனை யறிந்து மெல்ல ஆடுமின்` என்பதாம். ஆடும், முன்னிலைப் பன்மை ஏவல், சிவபெருமானது விசுவரூபத்தினைச் சிறப்பித்தவாறு.

பண் :

பாடல் எண் : 78

அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான் தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஏழாய், ஆடுவான் எவ்வுயிர்க்கும் வாளா இரங்குமோ! பன்னாள் பணிந்து இரந்தால் (இரங்கும்), இரங்குமேல், தான், என்னாகவையான்; எவ்வுலகம் ஈந்து அளியான்!` என இயைத்துக் கொள்க. `அரங்கமாப் பேய்க் காட்டில் ஆடுவான்` என்றாரேனும், `பேய்க் காடு அரங்கமா அதன்கண் ஆடுவான்` என்றல் கருத்து என்க. எவ்வுயிர்க்கும் - எத்துணைச் சிறப்புடைய உயிர்க்கும். அவை அயன்,மால், ஏனைத் தேவர் முதலியோர். `அவரெல்லாம் அவனைப் பன்னாள் பணிந்து இரந்தே தத்தம் பதவிகளைப் பெற்றனர் என்றபடி. எனவே, `அவனைப் பன்னாள் பணிந்து இரந்தால் திருவுளம் இரங்குவான்` என்பதற்கும், `இரங்கினால் எத்தகைய சிறப்பைத் தான் அவன் தரமாட்டான்` என்பதற்கும் அவ் அயன், மால் முதலியோரே சான்று` என்றவாறு. ஏழாய் - அறிவிலியே. இது தமது நெஞ்சத்தை விளித்தது. `இரங்குமோ` என்னும் ஓகாரம் எதிர்மறை. `இரங்கு மேல்` என்ற அனுவாதத்தால், இரங்குதலும் பெறப்பட்டது. அளித்தல்- காத்தல். `எத்தகைய சிறப்பையும் எய்தச் செய்வான். எந்த உலகத்தையும் ஈந்து அளிப்பான்` எனக் கூறற்பாலதனை இங்ஙனம் வினாவாகக் கூறினார். வலியுறுத்தித் தெளிவித்தற்கு `சிவன் வாளா இரங்கான்; பன்னாள் பணிந்து இரந்தால் இரங்குவான்` என்பது உணர்த்தியவாறு.
சும்மா கிடைக்குமோ சோணாசலன்பாதம்
அம்மால் விரிஞ்சன் அறிகிலார் நம்மால்
இருந்துகதை சொன்னக்கால் என்னாகும் நெஞ்சே
பொருந்த நினையாத போது*
எனப் பிற்காலத்தவரும் கூறினார்.
சிவன்எனும் நாமம் தனக்கே உடைய
செம்மேனிஎம்மான்
அவன்எனை ஆட்கொண் டளித்திடுமாயின்
அவன்றனை யான்
பவன்எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று
எதிர்ப்படுமே.
என்பது அப்பர் திருமொழி.
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ!
கழப்பின் வாராக் கையற வுளவோ!
என்றார் பட்டினத்தடிகள்.

பண் :

பாடல் எண் : 79

பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`படர்சடையான் பாதங்கள்` என்பதை முதலிற் கொள்க. போது - பேரரும்பு. அணிதல் - அலங்கரித்தல். வினைக்கண் வந்த எண்ணும்மைகள் ஆட்செய்யும் வகைகளை எண்ணி நின்றது. கொல், அசை. ஓகாரம் சிறப்பு. `சிந்தையார்` என உயர்த்தற்கண் அஃறிணை உயர் திணையாய் மயங்கிற்று.
செருக்கு - பெருமிதம். அஃதாவது, `ஒருவரை மதியாது உறாமைகள் செய்தல்` 3 பெரு மிதத்தைத் தம் சிந்தைமேல் வைத்து, அதனை வேறுபோற் கூறினார். `சிவனுக்கு ஆட்செய்யப் பெறுகின்ற பேறு கிடைத்தற்கரியது` என்பதைக் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 80

செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள்
அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருத் தக்க` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. திரு - திருமகள். `திருவுக்குத் தக்க` என நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. திருவினால் தக்க என மூன்றன் உருபு விரிப்பின் மாலுக்குக் குறையுண்டாகும். `காணாது` என்பதை, `காணப்படாது நின்று` எனச் செயப்பாட்டு வினைப் பொருட்டாக்கி, அதனை, `ஏத்தக் காணப்பட்ட` என ஒரு சொல் வருவித்து முடிக்க. இல்லையேல், `ஏத்த` என்பதற்கு முடிபின்றாம். `காணப்பட்ட கால்` என்க. `வென்று உதைத்த` என்பதனை, `உதைத்து வென்ற` எனப்பின் முன்னாக வைத்து, விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. `கால் அடர்த்த` என முடியும். அடர்த்த அடர்த்தன; ஒறுத்தன. வெற்பு - கயிலை மலை. `எத்தனையோ` என்றது, `பல` என்றவாறு. எண் வரையறை கூறாது இங்ஙனம் கூறியது. அவனது வலிமிகுதியைக் குறித்தது, அதனானே அவன் செருக்கியதன் காரணத்தை உணர்த்தற்கு. அரக்கன், இராவணன். உம்மை, பிறருக்கில்லாத அவனது தலைகளும், தோள் களும் பற்றிய சிறப்பைக் குறித்தது. முன் நிற்றல், அனைத்துறுப்புக் களும் பின் நிற்கத் தான் முன்னிற்றல். அதனால், `அஃதே, காண் பார்க்கு முதலிற் காணப்படுவது` என்பதும் பெறப்பட்டது. `அத்துணை வலியன் தோளால் முயன்று எடுத்த மலையை, தாளால் (அதனுள்ளும் ஒரு விரலால்) தடுத்து ஒறுத்தவனோடு இகலி நிற்பார் யாவர்` என அவனது அளவிலாற்றலைக் குறித்தது, அதனானே அவனது தன்வயம் உடைமையையும் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 81

காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கோல அரணார்` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. கோலம் - அழகு. அரண் - மதில். முப்புரம். அரணார் - அவற்றையுடைய அசுரர். `அவிந்து அழிய` என்பது ஒரு பொருட் பன்மொழி. தீ - தீக்கடவுள் `தீக் கடவுளாகிய அம்பு` - என்க. சரண அரவிந்தங்கள் - திருவடியாகிய தாமரை மலர்கள். சார்ந்து - சார்ந்தமையால். கழன்றோம் - நீங்கினோம். கை, இடைச்சொல். மேல், இடமேல். அது காலத்தால் `கீழ்` எனப்படும்.ஐ சாரியை. மேலை வினை- முன்னே சேர்ந்து கிடக்கின்ற வினை; சஞ்சித கன்மம். `வேரோடு` என மூன்றாவது விரிக்க. சஞ்சிதம் இன்மையால், `பிறவியில்லையாயிற்று` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 82

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம் - தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தாழ் சுடரோனை` என்பது முதலாகத் தொடங்கி, `தேர்ந்து உணவில்` என்பதை ஈற்றிற் கூட்டி உரைக்க. தாழ் சுடரோன். மறைகின்ற சூரியன். எனவே, செங்கதிர், மாலை வெயிலாம். சாய்தல் - தோல்வியுறுதல். `சாயும் வண்ணன்` என இயையும். வீழ் - தொங்குகின்ற. மின் - மின்னல். `சடையே என்று உரைக்கும் மின்` என்றது உருவக அணி. `சடையே` என்னும் தேற்றேகாரம் உண்மையுவமைப் பொருட்டாய், உருவகத்தோடு இயைந்து வந்தது. `சார்ந்தார் இன்பமே பெறுதலால் அவர்க்கு அழகி தாயும், சாராதார் ஒறுத்தலே பெறுதலால் அவர்க்கு அச்சம் தருவதாயும் உள்ளது` என்க.

பண் :

பாடல் எண் : 83

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காண்பார் கட்கு என்போலும்` எனக் கூட்டுக. என் போலும் - எதைப்போல இருக்கும். `தன்போலும்` என்றது, `சிவனைப் போல இருக்கின்ற பொற்குன்று` என்றபடி. இதனை நீல மணிக்கும் கூட்டி. `திருமாலைப் போல இருக்கின்ற நீல மணிக்குன்று` என்க. உலக இலக்கியங்களில் உபயோகத்தை மிக உயர்த்துக் கூறுதற்பொருட்டு. உபமான உபமேயங்களை நிலைமாற்றிக் கூறுதல் உண்டு. அங்ஙனம் கூறியவழி அஃது, `எதிர்நிலை உவமம்` என்றும், `விபரீத உவமை` என்றும் சொல்லப்படும். அதற்குக் காரணம் உலகப் பொருள்களில் உண்மையில் உயர்ந்து நிற்பது உவமையே. அதனை, `உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை` 1 என்னும் தொல்காப்பியத் தாலும் அறியலாம். இறையிலக்கியத்தில் உபமேயமாகிய இறையே உண்மையில் உயர்ந்து நிற்பது. எனினும் இலக்கண மரபு பற்றி அங்ஙனம் கூறுதல் கூடும். `பொற்குன்றும் நீல மணிக் குன்றும் உவம மாக வேறிடத்து வைத்துக் கருதப்படாது. அவையே பொருளாகக் காட்சியில் முன்னிலையில் வைத்து உணரப்படும்` என, அரியர்த்த உருவத்தைச் சிறப்பித்தவாறு. உடன் - ஒருசேர, `இரு பாதியாக` என்ற படி. நிற்கின்ற - நிற்கின்றன. நெடிது - நெடுங்காலம். `எல்லையில் காலம்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 84

நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கணாங் கண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கொடிதாக` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்குங்கால், `வெந்தீ - இயற்கையிலே வெப்பம் உடையதாகிய தீ, மேலும் கொடிதாகி எரிக்க, அதனில்` என உரைக்க. விண்டார்கள் - பகையாகியவர்கள்; அசுரர். `ஆறும் கண்` என இயைக்க. ஆறுதல் - மகிழ்தல். காட்சியால் உள்ளம் மகிழ்தலை, `கண்களிப்பக் கண்டார்கள். 2 என்றது போல `கண் களித்தது` என்றல் வழக்கு `மூன்றாகிய கண்` என்றற்பாலதனை, `முக்கண் ஆம் கண்` என்றார். எனவே, முன் உள்ள `கண்` என்பது `பொருள்` எனப் பொதுமையில் நின்றதாம். `முக்கணான் கண்` எனப்பாடம் ஓதி. `சிவனது கண்கள்` என உரைத்தல் சிறக்கும். `நெடிது` என்பதற்கு, முன்னை வெண்பாவில் உரைத்தவாறே உரைக்க. பொங்கு எரி - எரிகின்ற நெருப்பு. நேரே போலும் - ஒப்பனவேபோலும். கடிது - மிக்கது. `கடுஞ் சுடர்` என்பதில் கடுமை வெம்மை குறித்தது. வெஞ்சுடர், ஞாயிறு. `போலும்` என்பது உரை யசை, `மங்கலம் என்பது ஓர் ஊர் உண்டுபோலும்` என்றல் போல. உவமம் அன்று. `சிவனது` மூன்று கண்களே முச்சுடர்கள்` என உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 85

கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. பெரியான் - மகாதேவன்; சிவன். `அவனை` எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. ஆர - நிரம்ப. எண், எண்ணம் - அதனைச் செய்வதாகிய என்றும் - என்று என்றும் சொல்லியும். கொல், அசை, ஓகாரம், ஐயப் பொருட்டு `என்` என்பது தாப்பிசையாய் முன்னும் சென்று இயைந்தது. பேரவாக் காரணமாக இங்ஙனம் ஐயுற்றவாறு. `காணப்பெறின்` என்பது, காணப்பெறலின் அருமை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 86

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீ
துறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மற்றொரு கண் நெற்றிமேல் சிறிது உணர்த்தி வைத்தான்றன் பேய் நற்கணத்தில் ஒன்றாய நாம், (இஃது) உறினும், உறாதொழியுமேனும் பிறிதுயாதும் பெறினும் வேண்டேம்` என இயைத்து முடிக்க. நெற்றிக் கண்ணைச் சிறிது உணர்த்தலாவது, `உளது` என்னும் அளவிலே காட்டுதல். நன்கு திறப்பின் உலகம் வெந்தொழி யும். கணம் - படை. `நற்கணம்` என்றமையால், சிவகணமாகிய பேய்கள். பாவப் பிறவியாகிய பேய்களாகாமை விளங்கும். ஞானி களை உலகம் அவர்களது புறக்கோலம் பற்றி, பித்தராக நினைப்பினும் அவர் பித்தராகாமை போல்வதே இது. ஊழி முடிவில் உடம்பின்றிச் சிறிதே உணர்வு மாத்திரமாய் இருக்கும் உயிர்களே சிவப் படைகளாகக் கூறப்படுதலின் உண்மை. எனவே, பௌதிக உடம்பு நீங்கிச் சிவனைச் சார்ந்திருக்கும் உயிர்களும் அவையாகவே விளங்கும் என்க. அம்மையார் மேற்காட்டிய திருப்பதிகங்களிலும் இவ்வந்தாதியின் இறுதியிலும் தம்மை, `காரைக்காற் பேய்` எனக் குறித்தமையால், அவர் அந்நிலையராகியே இறைவனைச் சார்ந்தமை தெளிவு. அதனால் நம்பியாரூரர் இவரது வரலாற்றை, `பேயார்` என்ற ஒரு சொல்லில் அடக்கி அருளிச் செய்தார்(1) சேக்கிழார். மெய்யில் ஊனுடை வனப்பை யெல்லாம் உதறி, எற்புடம்பே யாகி, வானமும், மண்ணும் எல்லாம் வணங்குப்பேய் வடிவ மானார்.1 பொற்புடைச் செய்ய பாத புண்டரீ கங்கள் போற்றும் நற்கணத் தினில்ஒன் றானேன் நான்என்று நயந்து பாடி. 2 என விரித்தும், அருளிச் செய்தார். இத்தகைய நற்பேறு கிடக்கப் பெற்ற பெருமிதம் பற்றி அம்மையார் தம்மை `நாம்` என்றும், `வேண்டேம்` என்றும், `எமக்கு` என்றும் பன்மைச் சொல்லாற் குறித்தருளினார். `பிற பேறுகளோடு தமக்கு இயைபில்லாமையால் அவை தம்மைக் கிட்டப் போவதில்லை` என்பது தோன்ற, `பெறினும்` என எதிர்மறை உம்மை கொடுத்துக் கூறினார். `பிற பேறுகள் எல்லாம் இதன் முன் எம்மாத்திரம்` என்பது கருத்து. உறுதல் நன்மை பயத்தல்.

பண் :

பாடல் எண் : 87

நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நா மாலை - நாவால் தொடுக்கப் படும் மாலை; சொன் மாலை; பா மாலை. `நம் ஈசன் பொன் அடிக்கே` என்பதை முதலிற் கொள்க. `கொண்டு` என்பது `ஆல்` உருபின் பொருட்டாய இடைச்சொல். புனைந்து - அலங்கரித்து, ஓர் அறிவு, `அவனே நமக்கு எல்லாப் பொருளும், பிறிதொன்றும் பொருளாவதில்லை` என அறியும் அந்த ஒருமை அறிவு. `ஏ தாய், அற்றாய் அடும்` என்க. ஏது, `யாது` என்பதன் மரூஉ. எற்று - என்ன தன்மைத்து. அடும் - வருத்தும். எறி - தாக்குகின்ற. `வினையே` என்னும் ஏகாரம். அசை. `வினை யென்னும் இருள்` என்றது உருவகம். இருள் - துன்பம். துன்பம் தருவதனைத் `துன்பம்` என்றது உபசாரம். பற்றினால், இருள், ஏதாய், எற்றாய் அடும்? என முடிக்க. `வினாக்கள், யாதாயும், எற்றாயும் அடாது` என்னும் எதிர் மறைப்பொருள் குறித்து நின்றன. `சிவனுக்குப் பணி செய்து நிற்பாரை வினை அணுகமாட்டாது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 88

இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நன்றுடையாய்` என்பது முதலாகத் தொடங்கி, `உன்னுடைய கண்டத்து ஒளியை யான் என் என்கோ! எமக்கு அருள்` என முடிக்க. `எமக்கு அருள்` என்பது வேறு தொடராதலின், ஒருமை பன்மை மயக்கம் அன்மை உணர்க. என்கோ - என்பேனோ. ஓகாரங்கள் - ஐயப் பொருள வாயினும், `எவ்வாறு கூறினும் பொருந்தும்` என்பதே. மா - கருமை. மருள் - மருட்கை; வியப்பு. `வியப்பைத் தரும் மணி` என்க. இதில் சாரியை நிற்க இரண்டன் உருபு தொக்கது, பெயர்த் தொகையாகலின். அருள் - சொல்லியருள். நன்று உடையாய் நன்று ஒன்றையே உடையவனே. `நன்றுடை யானைத் தீயதில்லானை`* என அருளிச் செய்தமை காண்க. நக்கு இலங்குதல் - ஒளிவிட்டு விளங்குதல்.

பண் :

பாடல் எண் : 89

ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா றென்இதனைக் கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

ஒளி வில் - அழகையுடைய வில்; கரும்பு வில். வில்லி - வில்லையுடையவன். இஃது இடைக்குறைந்து நின்றது. பொடியாக - சாம்பலாகும் படி, நோக்கி - (நெற்றிக் கண்ணால்) பார்த்து. இவ் எச்சம், எண்ணின் கண் வந்தது. தெளிவு - ஞானம். சேர்வாய் - சேர்பவனே, ஒளி நஞ்சம் - ஒளிக்கப்பட்ட விடம், `வாயாகிய அஃது\\\' என்க. அஃது - அவ்வுறுப்பு. இருப்ப - கறை படாமலே இருக்க. `கண்டமும் கறைபடாமல்தான் உள்ளது; ஆயினும் உள்ளிருக்கும் நஞ்சின் கறை வெளித் தோன்றுதலை உலகம் கண்டம் கறைபட்டதாக எண்ணுகின்றது\\\' என்பதாம். `எந்த ஒரு பொருளும் இறைவனை மாசுபடுத்துதல் இயலாது\\\' என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 90

கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட்
டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எந்தாய்` எனத் தொடங்கி, `கங்கை மிகப் பெருகின், அரவும், மதியும், ஈர்த்து ஒடும்; (அப்பொழுது) நீ என் செய்வாய்? ஈது எமக்குக் கூறு` என இயைத்து முடிக்க. எந்தாய் - எம் தந்தையே. `சடையை அழித்திட்டு மீது ஏறப் பெருகின்` என்க. அழித்தல் - கட்டுக்கு அடங்காது போதல். `சீறி விழித்து ஊரும் அரவு` என்க. தெழித்து - ஆரவாரித்து. திரை - அலை. `என் செய்வாய்` என நகையாடிக் கூறியது, `கங்கை என்னும் அவ்வாறு பெருகப் போவது இல்லை` எனப் பழித்தது போலப் புகழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 91

திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உரை - சிவனைப் பற்றிக் கூறும் புகழுரையும், பொருளுரையும். அவை தோத்திர சாத்திரங்களாம். உணர்ந்தோம் - உணரற்பாலனவற்றை யெல்லாம் உணர்ந்தோம். `இனி வேறு உரைகள் பற்றியாம் உணரற்பாலது யாதுமில்லை` என்பதாம். கண்டீர், முன்னிலை யசை. ஓகாரம், அசை. `அதனால், இம்மைக்கும், அம்மைக்கும் ஆவன யாவற்றாலும் அமைந்தோம்; இஃது அறியாது, நீவிர் எம்மைப் புறங்கூறுதல் ஏன்` - என வேண்டும் சொற்கள் வருவித்து முடிக்க. அமைதல் - நிரம்புதல். ஏகாரம் தேற்றம். புறன் உரைத்தல் - காணாத வழி இகழ்ந்துரைத்தல். அஃதாவது, `பித்தனைப் பேணித் திரிகின்றார்` எனக் கூறுதலாம். இங்ஙனம் கூறுவோர் புறச் சமயிகள் ஆதலின், முதற்கண், `புறச் சமயத்தீர்` என்பது வருவித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 92

என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்
கருளாக வைத்த அவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உடையான் - ஆளாக உடைய தலைவன். ஏகமாய் நிற்றல் - ஒப்பாரும், மிக்காரும் இல்லாது தனி முதல்வனாய் நிற்றல். தன்னை அறியாத தன்மையாவது, எத்துணையும் பெரியவ னாகிய தனது தன்மையைத் தான் எண்ணாமல், எத்துணையும் எளிய வனாய் வந்து அருள் புரியும் குணம். `பெறுமவற்றுள் யாம் அறிவ தில்லை` 1 என்பதிற்போல, அறிதல் இங்கு மதித்தல், `தன் பெருமை தானறியாத் தன்மையன்காண்` 2 என்று அருளிச் செய்ததும் இப் பொருட்டு. `அருளை வானோர்க்கு ஆகும்படி வைத்த அவன்` என்க.

பண் :

பாடல் எண் : 93

அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவன்` என்றது முன்னை வெண்பாவிற் சுட்டிய அவனை. `என்றும் பிரான் ஆவான்` என்க. பிரான் - தலைவன். மைத்து அமர்ந்த - மையின் நிறத்தைக் கொண்டு பொருந்திய. இது தேவர் அமுதுண்ணத் தான் நஞ்சை உண்ட கருணையைக் குறித்தது. மற்று, அசை. `நன்னெஞேசை` என்பதை முதலிற் கூட்டுக. மெய்த்து - மெய்ம்மைப் பட்டு. அஃதாவது, `பயன் யாதும் கருதாத நிலையில் நின்று` என்றதாம். `மெய்த்து அமர்ந்த` என்பதின் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. `மெய்த்து அமர்ந்த அன்பு` என்றது சிறப்பும், `விரும்பு` என்பது பொதுவுமாய்த் தம்முள் இயைந்து நின்றன.

பண் :

பாடல் எண் : 94

விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மஞ்சுபோல் மால் விடையாய்` என்பதை முதலிற்கொள்க. மஞ்சு - மேகம். மேகம் போலும் நிறத்தையுடைய மால், திருமால். விடை - இடபம், `திருமாலாகிய இடபம்` என்பதாம். `சிவபெருமான் திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் அவருக்கு இடபவாகனமாய் இருந்தார்` என்பது புராண வரலாறு. தடமதில்கள் அவைமூன்றும் தழல்எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.* என்னும் திருவாசகத்தைக் காண்க. பொருப்பன் - மலையரையன். அவன் மகள் உமாதேவி. அவளை நீ வேறு வையாது உன் உடம்பில் ஒரு பாதியாக வைத்திருப்பதற்குக் காரணம் யாது? அவள்மீது நீ வைத் துள்ள பெருவிருப்பத்தால் அவளை விட்டு நீ வேறாய் இருக்க ஆற்றாயோ? அவளுக்கு இருக்க வேறு இடம் இல்லையோ? உன்னை விட்டுப் பிரிந்து அவள் தனியேயிருக்க அஞ்சுகின்றாளோ? என் - யாது காரணம்? - என்க. `என்னோ` ஓகாரம் அசை. இவையெல்லாம் காரணங்களல்ல; இருவரும் இருவரல்லர்; ஓருவரே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. `பொருப்பன்மகள்` என்னும் சீரை, னகர ஒற்றுத் தள்ளி அலகிடுக.

பண் :

பாடல் எண் : 95

அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ
றென்பணிவீர் என்றும் பிறந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமினிங் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உம்முடைய ஒரு பாகத்தினின்றும் நீங்கா திருப்பவளாகிய அவள் (நீ முறைப்படி மணந்து கொண்ட) குல மங்கை` என்பது நன்கு விளங்குகின்றது. (அவள் நிற்க) இவள் ஒருத்தி யும் நீர் வடிவாய் (உமது தலையில் இருக்கின்றாள்) இவளையும் நீர் என்றும் பிரிந்தறியீர்; உம்முடைய தன்மை இதுவேயாய் உள்ளது. (இருக்கட்டும்) இவ்விருவருள் அன்பு மிகுதியால் நெருங்கிய உறவுடையவர் யார்? சொல்லுமின்` - என்க. `சொல்லுமின்` - என்றது. `பொருப்பன் மகள்தான் அன்பால் அணியளாய் இருக்க முடியும்; சலமகள் எங்ஙனம் அன்பாய் இருக்க முடியும்` எனக் குறித்தவாறு, `சலம்` என்பதற்கு, - `வஞ்சம்` - என்பதும் பொருளாகலின், அதனாலும் ஒரு சொல்நயம் தோற்றுவித்தவாறு. `பொருப்பன் மகளே உமது அங்கமும், பிரத்தியங்கமும் ஆவள்; ஏனைய வெல்லாம் உமது சாங்க உபாங்கங்களாம்` என்றபடி. பொருப்பன் மகளே சிவனது சத்தி; அவனது சம்பந்தத்தாலே சிவனது அணி, ஆடை, இடம் முதலியன சத்திகள் ஆகின்றன என்பது உணர்க. `கங்கையின் வீழ்ச்சியால் உலகம் அழிந்தொழியாதபடி அவளைச் சிவன் தன் தலையில் தாங்கிய தல்லது, காம தகனனாகிய அவனுக்கும் நம்மைப் போலக் காமம் உள தாகக் கருதுதல் மடமை யாதலின், நகைச் சுவை தோன்றவே புலவர்கள் அவனை இவ்வாறு கூறித் துதிக்கின்றனர்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 96

ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாமும் சீர்வல்ல தாயத்தால்` என மாற்றி முதலிற் கூட்டி, `மாயத்தால் மறைத்து வைத்தோம்; இனி அரன் அவனை ஆர் காண வல்லார்` என இயைத்து முடிக்க. அன்பென்னும் போர்வை, உருவகம். `போர்வையது` என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. அன்பினுள் அகப்படுபவனாதல் பற்றி அன்பு அவனை மறைக்கும் போர்வையாக உருவகிக்கப்பட்டது. சீர், ஆகு பெயராய்ப் பாட்டை உணர்த்திற்று. `அவனைப் பாட்டால் போற்ற வல்ல தாயத்தால் என்க. தாயம் - செல்வ உரிமை. `நாமும்` என்னும் உம்மை மற்றைத் தொண்டர்களோடு என இறந்தது தழுவி நின்றது. தனி நெஞ்சம் - அன்பு மிக்கமையால் ஒப்பற்ற மனம். மாயம் - என்ற உபாயம். `அரனாகிய அவனை` என்க. `அன்புடையவர் கூடித் தங்கள் அன்பாகிய போர்த்து வைத்திருத்தலால் அன்பில்லாத பிறர் அவனை எங்ஙனம் காண முடியும்` என நயம்படக் கூறியவாறு. `அன்பில்லாதார் அரனைக் காணுதல் இயலாது` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 97

மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நீ நிறைத்திட்டு எரிப்ப, உளைந்து எழுந்து, மூவுலகும் உள்புக்கு, அணைந்து எழுந்த செந்தீ அழலை உலகம் ஏழினிலும் மறைத்து வைத்தாயோ? அன்றேல், உறைப்போடும் உன் கைக் கொண்டாயோ? (அஃது இன்று உலகை எரிக்கவில்லையோ,) என இயைத்து முடிக்க. ஈற்றில் வருவித்து உரைத்தது இசையெச்சம். உறைப்போடும் - வலிமையோடும். உம்மை சிறப்பு. உளைந்து - சினந்து. `மூவுலகினும்` என்பதில் சாரியை தொக்கது. அணைந்து - விரவி. அழல் - சுவாலை. `யாதொரு பொருளும் இறைவனது சங்கற்பத்தைக் கடக்கமாட்டாது` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 98

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கை - அகங்கை. ஆறு - பயன். தீ ஆடுவாய் - தீயின்கண் நின்று ஆடுவாய்; விளி. அகங்கையும், தீயும் அழகால் ஒன்றனை ஒன்று விஞ்சுவனவாய் உள்ளன` எனக் கூறி, அகங்கையின் மிக்க அழகைப் புகழ்ந்தவாறு. இஃது ஏது அணியின் பாற் படும்.

பண் :

பாடல் எண் : 99

செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடுன் நடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தான் அங்காந்து` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. செப்பு ஏந்து. கிண்ணம்போல நிமிர்ந்த. `கணமவை` என்பதில் அவை, பகுதிப் பொருள் விகுதி. பின் வந்த, `காணவோ` என்பதன்பின், `நிகழ்கின்றது` என்னும் பயனிலை அவாய் நிலையாக எஞ்சி நின்றது. `நடம் நிகழ்கின்றது` என இயையும். `எனக்கு ஒன்றாகச் செப்பு` என்க. ஒன்றாக - திட்டமாக. இனி, `நீ ஆடும்` என எழுவாய் வருவித்து. முடிப்பினும் ஆம். `எவர் காணுதற் பொருட்டும் நீ ஆடவில்லை; உனது கருணை காரணமாகவே நீ ஆடுகின்றாய்` என்பது குறிப்பு.
`ஆடும் எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும்..........
..............................
நாடும் திறத்தார்க்(கு) அருளல்லது நாட்ட லாமே?* `
என அருளிச் செய்தமை காண்க. அங்காத்தல் - வாய் திறத்தல். ஐவாய - ஐந்து வாய்களை உடைய. நாகத்தாய் - பாம்பை அணிந்தவனே.

பண் :

பாடல் எண் : 100

நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ
றுருமேறோ ஒன்றா உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பொன் ஒப்பாய், நின் ஏறு நடக்கில்` எனக் கூட்டி உரைக்க. படி - பூமி. நோக்கில் - கண் விழித்துப் பார்த்தால். `கண்ணினின்றும் எழும் தீயால் திசைகள் வேகும்` என்க. இடிக்கின் - கதறினால் ஏங்கும் - கதி காணாது கலங்கும். இதன்பின், `ஆதலால்` என்பது வருவிக்க. அடுக்கல் - மலை. `மலையின்கண் நின்று` என விரிக்க. பொரும் ஏறோ - இடபத்தானோ. உரும் ஏறோ - மேகத்தி னின்றும் தோன்றுகின்ற இடியேறோ, சிவனைச் சார்ந்தமையால், ஆனேறும் பிறவகை ஏறுகளினும் மிகுவலி பெற்றமையைக் கூறிய வாறு.

பண் :

பாடல் எண் : 101

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காரைக்காற் பேய் சொல் இம்மாலை அந்தாதி வெண்பாக்களை உரையினால், கரைவினாற் பரவுவார் ஆராத அன்பினோடு சென்று அண்ணலைப் பேராத காதல் பிறந்து ஏத்துவார்` என இயைத்து முடிக்க. `மாலையாய் அமைந்த வெண்பா` என்க. மாலையாதல் சொற்றொடர்நிலைச் செய்யுள் ஆதல். `உரை` என்றது, `மனம், மொழி, மெய்` என்னும் மூன்றனுள் `மொழி` என்னும் மொழியைக் குறித்தது. கரைவு - அன்பு. பரவுதல், ஏத்துதல் இரண்டும் துதித்தலைக் குறிக்கும் சொற்கள். ஆராத - நிரம்பாத. பேராத - மாறாத. காதல் - பேரன்பு. பிறந்து தோன்றப் பெற்று. `கரைவினால் பரவுவார்` என்றது இவ்வுலகத்திலும், பின் வந்தவை சிவலோகத்திலும் ஆதலின் அவை கூறியது கூறல் அல்லவாதலை அறிக. சென்று - சிவலோகத்தை அடைந்து. இது நூற் பயன் கூறியவாறு. ஈற்றில் `பிறந்து` என்றது முதல் வெண்பாவின் முதற் சீரோடு சென்று மண்டலித்தல் காண்க. அற்புதத் திருவந்தாதி முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும், `யாக்கையின் நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறி வுறுத்துகின்றன). இவ்வெண்பா, `தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குக` எனக் கூறுகின்றது.
நீர்மை - தன்மை; `நடத்தலேயன்றி ஓடவும் இருந்த வலிமை நீங்க, மூப்பு வந்தவுடன்` என்றபடி. உற்றார் - பிறவியிலே அன்புடைய வராய்ப் பொருந்தினவர்; சுற்றத்தார்; மனைவி, மக்கள் முதலாயினார். `உற்றாரும்` என்னும் உம்மை உயர்வு சிறப்பு. கோடுகின்றார் - மனம் மாறிவிடுவர்; தெளிவினால் எதிர்காலம் நிகழ்காலமாகச் சொல்லப் பட்டது. `மூப்பும்` என்னும் உம்மை இளமையாகிய இறந்ததனைத் தழுவிற்று. `வரும்` என்று அஞ்சப்பட்ட அதுவும் வந்துவிட்டது - என்ற படி. நாடுகின்ற - மிகவும் விரும்பப்படுகின்ற. நல் அச்சு - வண்டியில் பளுவைத் தாங்குகின்ற நல்ல அச்சுப் போல்வதாகிய உடம்பு. அஃது இறுதலாவது, செயலற்று வீழ்தல். அம்பலம், யாவருக்கும் உரிய பொது இடம். அஃது மயானத்தைக் குறித்தது. `அம்பலமே` என்னும் பிரிநிலை ஏகாரம் செயலற்று வீழ்ந்த உடலுக்கு அது தவிர இடம் இன்மையைக் குறித்தது. `சிற்றம்பலமே` என்னும் பிரிநிலை ஏகாரம், `சேரத் தக்க இடம் பிறிதன்று என்பதை உணர்த்திற்று. `நல்நெஞ்சே` என்பதை முதலிற்கொள்க. `நல்வழியைப் பற்றுதற்கு உரியை` என்பது தோன்ற, `நல் நெஞ்சே` - என்றார். பின்னிரண்டடிகள் `திரிபு` என்னும் சொல்லணி பெற்றன. மேலும் இவ்வாறு வருவன காண்க.

பண் :

பாடல் எண் : 2

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடு - கடுக்காய்; `இது பித்தத்தைப் போக்குவது` என்பர். காடி - பழஞ்சோற்று நீர். இதுவும் அத்தன்மையாதலோடு உணவும் ஆகும். `வெடுவெடுத்தல்` என்பது போல, நடுநடுத்தல், நடுக்கத்தைக் குறித்ததோர் இரட்டைக் கிளவி.
நா அடங்குதல் - பேச்சு நீங்குதல். பொடி - சாம்பல். பாழ்க் கோட்டம் - அழிவிடம், மயானம். தென் குடந்தை - தென்னாட்டில் உள்ளதாகிய `திருக்குடமூக்கு` என்னும் தலம். தென், அழகும் ஆம், செப்பி - துதித்து. `கிட` என்றது `நிலைமாறுதலை விடுக` என்றபடி. இது முதலாக இனி வரும் வெண்பாக்களில் வேண்டும் இடங்களில் `நெஞ்சே` என்பது வருவிக்க. `முன்னம், முன்` என்பன செவ்வெண்.

பண் :

பாடல் எண் : 3

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குந்தி நடத்தல் - நெடுக நடந்துபோக இயலாமல் இடையிடையே குந்திக் குந்தி எழுந்து நடத்தல். `ஐ` இரண்டில் முன்னது கோழை. அது நுரைத்து, மேலே ஏறி, வெளி வந்து, ஓட்டெடுத்து வாய் ஆறு (வாய்வழியால்) பாயா முன்` என்க. ஐயாறு, சோழ நாட்டுத் தலம். தலப் பெயரைச் சொல்லுதலும் அங்குள்ள இறைவன் பெயரைச் சொல்லுதலோடே ஒக்கும். இனி, `ஐயாறு` என்பது ஆகுபெயரில் அங்கு எழுந்தருளியுள்ள இறைவனைக் குறித்தது என்றலும் ஆம், பின்னிரண்டடிகள் `மடக்கு` என்னும் சொல்லணி பெற்றன.

பண் :

பாடல் எண் : 4

காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காளை - கட்டிளைஞன். இஃது அப் பருவத்தைக் குறித்தது. கையறவு - செயலற்ற நிலை. ஐயுறவு - சந்தேகித்தல், அஃது, `இன்றோ, நாளையோ வாழ்வு முடிவது` எனப் பலரும் நினைப்பது. நாள் - இறுதி நாள். உம்மை, முன்னர்க் கூறிய வற்றைத் தழுவிநின்றது. நலிதல் - அடர்த்தல். இதற்கு வினை முதலான `கூற்றுவன்` எனத் தனித் தனி இயைக்க. `முகம்` என்றது தலையை. அதற்கும் `என்` என்பதனைக் கூட்டி, `என் முகம் (தலை) கவிழ்க; (வணங்குக) கை (கள்) கூம்புக` என்க. இதிலும் திரிபணி வந்தது.

பண் :

பாடல் எண் : 5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வஞ்சி - வஞ்சிக் கொடி. நுண்ணிடையார், தேவியார்; உயர்வுப் பன்மை. குஞ்சி - ஆடவர் தலை மயிர். அது விடாத ஆகுபெயராய், அஃது உள்ள தலையைக் குறித்தது. குறங்கு - தொடை. இது தேவியாருடையது. `தேவியார் உனது தலையைத் தமது தொடைமேற் கொண்டிருந்தது, - அருத்த ஒருத்தி கஞ்சி கொண்டு வா - என்னாமுன்` என்க. `அருத்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. திருத்துருத்தி, சோழநாட்டுத் தலம் இது, `குத்தாலம்` என வழங்குகின்றது.

பண் :

பாடல் எண் : 6

காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காலைக் கட்டி` என இயையும். கரையிழை - பழந்துணியின் ஓரத்தில் உள்ள கரையைக் கிழித்து எடுத்த நீள் வடம். இறந்தோரது இரு காற் பெருவிரல்களையும் இத்தகைய இழையாற் சேர்த்துக் கட்டுதல் வழக்கம். `தன்` என்றது. `தன் பிணத்தினது` என்ற படி. உடல் உயிருக்கு வேறாய் வீழ்ந்தமையின் பிறிதாகச் சொல்லப் பட்டது. கைகளையும் ஆட வொட்டாமல் கட்டுவர், ஆர்த்து - கட்டி. தலைக்கு மாலை சூட்டுதலும், கண்ணுக்கு மை யெழுதுதலும் பிணச் சிங்காரம். `மேல் மூடி` என்க. பருக் கோடி - பெரிய புத்தாடை. `பருக் கோடியால் மூடி` என்க. திருக்கோடிகா, சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 7

மாண்டு வாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே
வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் பாண்டவாய்த்
தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்காத்தல் - திறத்தல். வேண்டு வாயாகி - விரும்புதல் தன்மையை உடையையாகி. விரைந்து விரைந்து சென்று. ஒல்லை - சீக்கிரமாக. `பண்டு` என்பது முதல் நீண்டு `பாண்டு` என வந்ததாகக் கொண்டு. பண்டே அவாவி இடைவாய் மேலே சிவனார்` என்க. இனி, பாண்டத்தின் வாய் போலும் உனது வாயில் வைத்து` என்றலும் ஆம். தென் இடைவாய் - தென்னாட்டில் உள்ள `இடைவாய்` என்னும் தலம். சோழ நாட்டில் அண்மையில், `விடைவாய்` என்னும் தலத்து ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைக் கல்வெட்டிலிருந்து கண்டு சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசம் வெளியிட்டது. * `இடைவாய்` என்பது அத்தலத்தின் மறுபெயராகலாம். அல்லது வேறொரு வைப்புத் தலமாகவும் இருக்கலாம். இவ்வெண்பாக்களில் வைப்புத் தலங்களும் சில காணப்படுகின்றன. நின்னிடை - நின்னிடமாக. வாய் வைத்தல், வாசகமாகக் கணித்தல். நினைதல் - மானதமாகக் கணித்தல். இவை ஒன்றின் ஒன்று மிக்கது.

பண் :

பாடல் எண் : 8

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துடிப்பு - இருதயத் துடிப்பு, நாடித் துடிப்பு முதலியன. பெட்ட - முன்பெல்லாம் பலராலும் விரும்பப்பட்ட. இது பழமையை நினைவு கூர்தல் கூறியது. பகர வொற்று விரித்தல். பேர், மாற்றுப் பேர். `அப்பனைக் கண்டேன், அம்மையைக் கண்டேன்` எனற் பாலனவற்றை. `அப்பாவைக் கண்டேன், அம்மாவைக் கண்டேன்` என்னும் நாட்டு வழக்குப் போல, `அத்தனை எடுங்கள்` என்பது `அத்தாவை எடுங்கள்` என வந்ததாகக் கொண்டு, இரண்டாம் உருபு விரித்துரைக்க. அல்லது, `அத்தா` என உரியவரை விளித்தது எனின், ஒருமைப் பன்மை மயக்கமாகும். இனி `அத்தான்` எனப் பாடம் ஓதி, `அத்தன்` என்பது நீண்டு வந்தது, எனினும் ஆம். இப்பொருட்கும் இரண்டன் உருபு விரிக்கப்படும். நெடுங்களம் சோழ நாட்டுத் தலம். ஏழை மடம், ஒரு பொருட் பன்மொழி.

பண் :

பாடல் எண் : 9

அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரி - கெட்டுப்போன. கெட்டது மூப்பினாலும், பிணியினாலும். குரம்பை - குடில். குடில் போலும் உடம்பு. ஆங்கது, ஒரு சொல் நீர்மைத்து. ஆவி - உயிர். ஒழுகுதல் - ஓட்டைக் குடத்தி னின்றும் நீர் நீங்குதல் போல நீங்குதல். இது நீங்குதலே இயல்பாதலைக் குறித்தவாறு. அறிதல், இங்கு நினைத்தல் `கழித்து உண்டு அலையா முன்` என்றாரேனும், `அலைந்து உண்டு கழியாமுன்` என்றலே கருத் தென்க. தண்டலை - `தண்டலை நீணெறி` என்னும் தலம். இது `குழித் தண்டலை` என வழங்கினமை பெறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 10

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி யுண்ப துறும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படி - நிலவுலகம். `ஒரு வெண்குடை` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `கீழாக` என ஆக்கம் வருவிக்க. `படி` என முன்னர் வந்தமையின், `பாரெலாம்` என்றது, `அவற்றை யெல்லாம்` எனச் சுட்டுப் பெயரளவாய் நின்றது. `செல்வத்தின்` என ஒப்புப் பொரு, அல்லது உறழ் பொருப் பொருட்டாகிய ஐந்தாவது விரிக்க. `செல்வத்தின்` என்றே பாடம் ஓதலும் ஆம். மும்மை - மும் மடங்கு. `மும்மடங்கு உறும்` என முடியும். உறும் - நன்றாம். கடி - வாசனை. தோடு - இதழ். `கடியிலங்கு ..... உண்பது` என்பதனை முதலிற் கூட்டியுரைக்க. ஓடு ஏந்துதல், எந்தி இரத்தலாகிய தன் காரி யத்தைத் தோற்றி நின்றது. இந்நாயனார். மன்னர் எலாம் பணிசெய்ய அரசாண்ட பல்லவ மன்னராய் இருந்தும், `அரசை இன்னல்` எனத் துறந்தார் - என்று சேக்கிழார் கூறியதற்கு இவ்வெண்பாவும், இனி வரும் `தஞ்சாக மூவுலகும்` என்னும் வெண்பாவும் அகச்சான்றாய் நிற்றலையறிக.

பண் :

பாடல் எண் : 11

குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக் காஅடைநீ சென்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எவர் ஒருவர் இறப்பினும் இறந்த அத்துக்கக் குழுவினர் இறந்தவரது குற்றங்களையெல்லாம் மறைத்து விட்டுக் குணம் சிலவேயாயினும் அவற்றை எடுத்துக் கூறிப்பாராட்டுதல் வழக்கம். வழுவுதல் - நிலைகெடுதல். அங்கங்கள் - உடல் உறுப்புக்கள். `எல்லா வற்றையும்` என இரண்டாவதன் தொகை. `இருந்தும்` என்னும் உம்மையை வேறு வைத்து, அழுகை ஒலிக் குறிப்பாகக் கொள்க. `ஆனை` என்றது, காதல் பற்றி வந்த உபசார மொழி.* ஆ ஆ - அழுகை ஒலிக் குறிப்பு. தென் ஆனைக் கா - தென்னாட்டில் உள்ள `திரு ஆனைக் கா` என்னும் தலம். சோழ நாடு.

பண் :

பாடல் எண் : 12

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒத்து இருண்ட குஞ்சி` என்க. `குயில் ஒத்து இருண்ட` என்பதனோடு இயைய, `கொக்கு ஒத்து வெளுத்த` என்பது வருவிக்க. பயில - அடிக்கடியாக. முதுமையில் கோழை மிகுதலால், இருமல் அடிக்கடியெழுவதாம். புன்னையங் கானல் - புன்னை மரங்கள் மிக்குள்ள கடற்ரை. மயிலை - மயிலாப்பூர், இது தொண்டை நாட்டுத் தலம். இஃது இங்குள்ள திருக்கோயிலைக் குறித்தது. இக் கோயில் `கபாலீச்சரம்` என்னும் பெயருடையது.
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்.
என்னும் அற்புதத் திருப்பதிக அடிகளைக் காண்க. பின்னை, யாதும் இயலாத இறுதிக் காலம். அங்காந்து - (துயரத்தால்) வாயைத் திறந்து கொண்டு (உயிர் போய்விட,) `இரு - காண் போர் இரங்கக் கிட` என்ற படி `இப்பொழுதே சிந்திப்பாயாயின் இந்நிலைவாராது` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 13

காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈளையர்கள்` என்றது, முதுமையெய் தினமையைக் குறிப்பால் உணர்த்தியது. பூளை - பூளைப் பூ. இது வெண்ணிறம் உடையது. பொங்குதல், படியாது விரிதல். சூளையர்கள்- எரிகொளுவச் சூழ்ந்திருப்பவர்கள். ஓகாளம் செய்தல், அருவருப்பால், முன் உண்டதைக் கக்குதல். உஞ்சேனை - உச்சயினி; இது வட நாட்டில் உள்ள ஒரு நகரம். இதன்கண் உள்ள கோயிலும் `மாகாளம்` எனும் பெயரினது. இஃதொரு வைப்புத் தலம். `நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்` 2 `உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்` 3 என்னும் தேவாரத் திருமுறைகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 14

இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே நல்ல
கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இல் - இல்லாள். மனை - இல்லம். சொல் - இறந்தமை பற்றிய இரங்கிச் சொல்வனவும், தேற்று வனவும். துடிப்பு, வந்து கண்டு நீங்குவதில்` உள்ள கடமையுணர்ச்சி. கிளை - சுற்றம் கிற்றியே - இதனை அறிய வல்லாயோ? ஏகாரம் வினாப் பொருட்டு. வாழ் முதலாகக் கருதியிருந்த பொருள்களுள் ஒன்றேனும் (உடன் வருவதில்லை) என்பது கருத்து. `கிற்றியேல் வாழ்த்து` என்பது குறிப்பு. `கிற்றி யேல்` என்றே பாடம் ஓதுதலும் ஆம். வளைகுளம் ஒரு வைப்புத் தலம்.

பண் :

பாடல் எண் : 15

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அஞ்சனம் - மை மையெழுதிய கண்ணார், மகளிர். பதம் - நிலைமை `வெளுத்து` `வெளுக்க` எனத் திரிக்க. `அரு வருக்கப்படுவதும் உடலமே` என்க. கோடுதல் - வளைதல்; கூன் விழுதல், கூடப்படுங் காடு சுடுகாடு. புலம்புதற்கு, `பலர்` என்னும் எழுவாய் வருவிக்க. காடு போய்க் கூடவிட, பின்னர்ப் பலர் இருந்து புலம்பாமுன்` என்க. `பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காடு` எனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 16

இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச்
சட்டவொரு முட்டைநெய் தான்கலந் தட்ட
அருவாய்ச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முட்டை, முட்டை வடிவமாக எண்ணெய் முகப் பதற்குச் செய்து வைக்கப்படும் சிறிய அகப்பை. ஒரு முட்டையளவான விளக்கெண்ணெயை இருநாழியளவு நீரிற் கலந்து, அதனை ஓர் உழக்களவாகச் சுவறக் காய்ச்சி யெடுத்ததை `உடலுக்கு நல்லது` என ஊற்றப் பிறர் முயலுவர்.
அட்ட - காய்ச்சி எடுக்கப்பட்ட. அருவாய்ச் சாறு - அரிய சாறு; கசாயம். வாய் - வாயில் ஊற்றச் தக்க. `சாறு` என்பதன் பின், `குடியுங்கள்` என்பது வருவிக்க. என்று சொல்லி அழுபவர்கள், சுற்றத்தார். திருப்பாச்சில் ஆச்சிராமம் சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 17

கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் அழிந்தது
இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உயிர் போயது நேற்றையது; அதனால் உடல், கட்டுக்களெல்லாம் தளர்ந்து நாற்றம் எடுத்து விட்டது. இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அஃது அழிந்து விட்டது. ஆகவே, உறவினனான ஐயா, இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அதனை அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்குக் கொண்டு போ என்று அயலார் பலரும் சோல்லுவதற்குமுன், நெஞ்சே, திருச்சிராமலையில் உள்ள சிவன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்று.
`நன்னெற்று` என்பது பாடம் அன்று. `கழிந்தது` என்பதற்கு, `உயிர்` என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. சிராமலை, திருச்சிராப் பள்ளிக் குன்று.

பண் :

பாடல் எண் : 18

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இழவு ஆடுதல் - இழவு கொண்டாடுதல். விழவு ஆடுதல் - விழாக் கொண்டாடுதல். விழா, பிண விழா. `ஆடி` என்ப வற்றை `ஆட` எனத் திரித்துக் கொள்க. `இழவாடி` என்பதனை, `விழா வாடி` என்பதற்கு முன்னே கூட்டுக. மழபாடி, சோழநாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 19

உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உள்ளுதல் - நினைத்தல். அதனுடன் `இடு` என்னும் அசையிடைச் சேர்ந்து, `உள்ளிடை` என வந்தது. தான், அசை. உள்ளிட வல்லையே - நினைக்க வல்லாயோ. கள் இடம் - களவான காலம். அஃதாவது உயிர் சோர்வுற்றிருக்குங்காலம், `கள் இடத்தான்` என்னும் ஆன் உருபு ஏழாவதன் பொருளில் வந்தது. `காலத்தினாற் செய்த நன்றி` * என்பதிற் போல. திருஆப்பாடி சோழ நாட்டுத் தலம். திருவாய்ப் பாடியான் - திருவாயால் பாடினவன். `தாள் உள்ளிடவல்லையே` என மேலே கூட்டுக. `கலவா முன் உள்ளிட வல்லையே எனவும் இயைக்க. `வல்லையே` என்னும் வினா, `வல்லையாயின் நன்று` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 20

என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் வன்னஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரத்தல், குறையிரத்தல், உம்மை, இழிவு சிறப்பு. கன்னம் - செவி. அதனைச் செய்தலாவது, செயற்படச் செய்தல்; கேட்டல் `செவிசாய்த்தல்` என்றலும் வழக்கு. `காலத்தால்` என்பதனை, மேல், `கள்ளிடத்தான்` என்றதனைக் கொண்டவாறு கொள்க. வல் நஞ்சு ஏய் - கொடிய நஞ்சு போன்ற. நஞ்சுய் ஆனை, மா ஆனை, கம்பத்து ஆனை` எனத் தனித்தனி இயையும். மா - பெரிய கம்பத்து - அசைதலையுடைய கச்சி. காஞ்சி. ஏகம்பம் அத்தலத்தில் உள்ள கோயில்.

பண் :

பாடல் எண் : 21

கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரமூன்றி வாய்குதட்டா முன்னம் புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கரம் - கை. முதுமையில், எழும் பொழுது எழுந் திருக்க இயலாமல் கைகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டு எழுதலும், ஒளியை முற்ற வாங்க முடியாமல் கண் கூட இடுக்கிப் பார்ப்பதும், நடக்க முடியாமல் கால்கள் தள்ளாடுதலும், அவை தள்ளாடாமைப் பொருட்டுக் கோல் ஊன்றி நடத்தலும், பல் இல்லாமையால் வாயைக் குதட்டுதலும் இயற்கை. மரம், கோல். மற்று, வினைமாற்று. தீச்சரம் - தீக்கடவுளாகிய அம்பு. திருப்பனந்தாள், சோழ நாட்டுத்தலம். தாடகை யீச்சரம், அதில் உள்ள கோயிலின் பெயர்.

பண் :

பாடல் எண் : 22

தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்
டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தஞ்சம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து, `தஞ்சு` என நின்றது. தஞ்சம் - எளிமை. தலையளித்தல் - குடிகளை நன்கு காப்பாற்றுதல், எஞ்சாமை - அங்ஙனம் காப்பதில் இளையாமை. அத்தகைய பேற்றினைப் பெற்றாலும் அதனை வேண்டேன்` என்க. `கரந்து உண்ட` என்பதை `உண்டு கரந்த` என முன்பின்னாக வைத்து விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. ஒற்றியூர் - தொண்டை நாட்டில் உள்ள கடற்கரைத் தலம். `ஓடு ஏந்தி இரந்து உண்டல்` என்பது துறவு வாழ்க்கையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 23

நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவம் கேட்ட பகல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நூற்று அனைத்து - நூற்றுக் கணக்கான. ஓர் நூற்றனைத்து` என மாற்றி, `ஓர்` என்பதனை நூற்றுக்கு அடையாக்குக. `பல் ஊழி வீற்றிருந்த` என்க. நுண்வயிரம் - நுண்ணிய ஒளியை யுடைய வயிரம் - `செல்வம்` என்பது, செல்வத்தோடு வாழ்ந்த காலம். பாடு அரவம் கேட்ட காலத்தை விழையாது` என்க. விழையாது. ஒவ்வாது. `அரவம்` இரண்டில் முன்னது பாம்பு; பின்னது ஓசை. `அம்மான் தன்னை` என்னும் இரண்டாம் உருபு தொகுக்கப்பட்டது. இதில் தலம்யாதும் குறிக்கப்படவில்லை. அதனால், `கூற்று உதைத் தான்` என்ற குறிப்பினால், `திருக்கடவூர் கூறப்பட்டது` எனலாம்.

பண் :

பாடல் எண் : 24

உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உய்யும் மருந்து - இறவாமல் வாழ்வதற்கு ஏதுவான மருந்து. உற்றார் - சுற்றத்தார் கையைப் பிடித்துக் காட்ட வேண்டிய நிலை. கண் தெரியாமையால் வருவது. பைய எழுந்து - மெல்ல எழுந்து. `யான் வேண்டேன்` என்றல், உண்ண முடியாமை யால். `திருமயானம்` என்பது சில தலங்களில் உள்ள கோயில்களின் பெயராய் அமைந்துள்ளது. கச்சி மயானம், கடவூர் மயானம், நாலூர் மயானம் - இவை காண்க.
சேத்திரத் திருவெண்பா முற்றிற்று.
சேத்திரத் திருவெண்பா குறிப்பிடும் சிவதலங்கள். தில்லைச் சிற்றம்பலம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருஇடைவாய் திருநெடுங்களம், திருத்தண்டலைநீணெறி, திருஆனைக்கா, திருமயிலை, திருஉஞ்சேனைமாகாளம், திருவளைகுளம், திருச்சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிராமம், திருச்சிராப்பள்ளி திருமழபாடி, திருஆப்பாடி, திருக்கச்சியேகம்பம், திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருமயானம் (கச்சி, கடவூர், நாலூர்).

பண் :

பாடல் எண் : 1

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.

பொழிப்புரை :

தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே.
தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே.
பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே.

குறிப்புரை :

``தன்னைக் கண்ட`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
இச்செய்யுள் தில்லைக் கூத்தப் பெருமானைக் கண்டு அவர் மேல் காதல் கொண்டு ஆற்றாமை எய்தினாள் ஒருத்தி கூற்றாகச் செய்யப்பட்டது.
காதலால் வருந்தும் தலைவியரது மேனி பொன்னிற மாகிய பசலையை அடையும் என்பது,
பசப்பித்துச் சென்றாரை உடையையோ? அன்ன
நிறத்தையோ? பீர மலர்
என்பது முதலியவற்றான் விளங்கும்.
``தன்னைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்`` என்பது இவ்வாறு வெளிப் பொருள் தருவதாயினும், `காணப்படாத இறைவனது இயல்பு.
காணப்படுகின்ற அவன் அடியவரிடத்து விளங்குதல் பற்றியே அறியப்படும்` என்பதே இதன் உட்பொருள்.

ஒன்றும் குறியே குறிஆத லால்அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால் ஒன்றோடு
உவமிக்க லாவதுவுந் தான்இல்லை ஒவ்வாத்
தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று.

என்ற திருக்களிற்றுப்படியினைக் காண்க.
மால், மாயோனுமாம்

பண் :

பாடல் எண் : 2

ஈசனைக் காணப் பலிகொடு
செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ
லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன்
தளர அத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென்றான்இமை
விண்டன வாட்கண்களே.

பொழிப்புரை :

(``பிச்சை`` என்று கேட்டு வாயிலில் வந்தவன் சிவ பிரான் - என்று தெரிந்துயான்) `அவனைக் காண வேண்டும்` என்னும் ஆசையால் பிச்சையைப் பிறர் எடுத்துச் செல்வதற்கு முன் யானே விரைந்து எடுத்துச் செல்ல, என் தாய் (செவிலி) `பிறர் செல்லலாகாத இவள் மிக விரைந்து புறம் செல்கின்றாள் ஆதலின் பிச்சைக்கு வந்த இந்தப் பேய்க் கூட்டத்தான் மேல், பித்துப் பிடித்தவள் போல் இவள் காதல் கொண்டாள் போலும்` என்று அறிந்து, தோழியர் பலர்முன் தாய் என்னை, `ஏடி, உள்ளே வா` என்று பற்றி ஈர்க்க, எனக்கு உதவுவார் யாரும் இன்றி யான் சோர்தலைக் கண்டு, பிச்சைக்கு வந்த, நீண்ட சடையையுடைய அவன், `நீ என்னைக் காதலித்து விட்டபின் எவர் உன்னைத் தடுத்து என்ன பயன்.
(நீ என்னைக் காதலித்துவிட்ட பொழுதே நீ எனக்கு உரியவளாய் விட்டாய்; ஆகவே,) நீ யாவரும் அறியவே என்னைத் தழுவ வா` என்று அழைத்தான்.
அவனது பொருளை அறிய, என்னுடைய வாள் போன்ற கண்கள் பொழிந்த அன்பு நீரைத் தடுக்க மாட்டாமல் இமைகள் திறந்துவிட்டன.

குறிப்புரை :

``கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்``* என்று அருளிச் செய்தபடி, ``பக்குவான்மாக்கள் சிவனது வடிவைக் கண்டவுடனே அவன்மேற் கரையிறந்த காதல் உடையனவாம்`` என்பதையும், `அதுபொழுது அவ்வான்மாவை அபக்குவான்மாக்கள் ஏசியும், இகழ்ந்தும் தம் வயப்படுத்த முயலும்` என்பதையும், `எனினும் சிவன் தன்னைக் காதலித்த ஆன்மாவைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுதலை ஒருவராலும் தடுக்க இயலாது` என்பதையும் இவ்வாறு அகப் பொருள்மேல் வைத்து அருளிச் செய்தவாறாக உணர்க.
இதற்குக் கண்ணப்ப நாயனார் சிறந்த எடுத்துக்காட்டு.
அதனையே மேற்காட்டிய சுந்தரர் திருமொழி குறிப்பால் உணர்த்தியது.
பிச்சி - பித்துக் கொண்டவள்.
சகரயகரங்கள் ஒன்றற்கு ஒன்று எதுகையாய் வருதல் உண்டு.

பண் :

பாடல் எண் : 3

கண்களங் கஞ்செய்யக் கைவளை
சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண்
கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம் இவள் பேதுறும்
என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின்
றாடும் பரமனையே.

பொழிப்புரை :

இச்சிறுமியை, அழகிய கண்டத்தையுடைய சிவன் வெறுக்கவும் இவள் அவன்மேற் கொண்ட காதலால், கண்கள் நீர் பொழிய, கை வளைகள் கழல, துகில் நெகிழ, அவனது கொன்றை மாலை போலும் நிறத்தை எய்தியதுடன் அறியாமையுடைய மனம் பித்துக் கொண்டவளாயினாள்.
இஃது இவளது பெண்மைக்குக் குற்றமாம்.

குறிப்புரை :

இது சிவபிரானைக் காதலித்த தலைவி தன் தாய் கூற்று.

வீழப் படுவார் கெழீஇயிலர், தாம்வீழ்வார்
வீழப் படாஅ ரெனின்.
*
என்றபடி, தம்மால் காதலிக்கப்பட்ட தலைவரால் தாமும் காதலிக்கப் பட்ட மகளிரன்றோ பெருமையடைதற்கு உரியர்? இவள் அவ்வா றின்மையின் குற்றப்படுகின்றாள் - எனத் தாய் நொந்து கூறினாள் என்க.
தீவிர பக்குவம் எய்தாத ஆன்மாவின் நிலைமையை இங்ஙனம் அகப்பொருள் முறையில் வைத்துக் கூறியதாக உணர்க.
`கண்கள் அங்கு அம் செய்ய` எனப் பிரிக்க.
அம் - நீர்.
`களக் கண்ணுதல்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
வேர்த்தல் - சிதைத்தல்.
அஃது இங்கு வெறுத்தலைக் குறித்தது.
`வேர்ப்பவும்` ஓர் பேதை நெஞ்சம் அவனையே விரும்பிப் பேதுறுகின்றாள் என்பது பெண் களங்கம்` என இயைத்து முடிக்க.
களங்கம் - குற்றம்.
உருவத்தோடு` என உருபு விரித்து அதனை, ``பேதுறும்`` என்பதனோடு முடிக்க.
`பண்களுக்கு அங்கமான (உறுப்பான) இசைகளை இனிது விளங்கப் பலர் பாட ஆடும் பரமனையே விரும்பிப் பேதுறும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இப்பாட்டுள் `திரிபு` என்னும் சொல்லணி வந்தது.

பண் :

பாடல் எண் : 4

பரமனை யே பலி தேர்ந்துநஞ்
சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யே சிரங் கொண்டுங்
கொடுப்பது பேரருளாம்
சரமனை யேயுடம் பட்டும்
உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக்
கண்ணுடை மாதவனே.

பொழிப்புரை :

மூன்று கண்களையுடைய, பெரியதவக் கோலத்த னாகிய சிவபிரான் அயலார் இல்லந் தோறும் சென்று இரந்த போதிலும் அவன் உண்டது நஞ்சமே.
இதழ்களால் பன்மையைப் பெற்ற மலரின் கண் இருக்கும் பிரம தேவனைச் சிரம் கொய்ததும் அவனுக்கு வழங்கி யது பெரிய அருளே.
(படைப்புத் தொழில் தொன்மையை அளித்தது.
) மலர்க் கணைகளையுடைய மன்மதனை அழித்தபோதிலும் உடம்பில் இடப்பாதியாகக் கொண்டது பெண்ணையே.
இனி மேலாவன மனைவியாகிய அவளே அவனுக்குத் தாயும், மகளும் ஆகிய சுற்றம்.

குறிப்புரை :

`இஃது அவன் இலக்கணம்` எனப் பழித்தல் குறிப் பெச்சம்.
இது பழித்ததுபோலப் புகழ்ந்தது.
சத்திக்குச் சிவன் எவ்வெம் முறையனாம் என்பதை, ``எம்பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன்``.
1 என்னும் திருவாசகத்தாலும், தவளத்த நீறணி யும்தடந் தோள் அண்ணல் தன்னொருபா
லவள் அத்த னாம்; மகனாம் தில்லையான்.
2 என்னும் திருக்கோவையாராலும் அறிக.
இங்ஙனம் கூறவே, இவை உலகில் உள்ள முறைபோலத் தம் பிறப்பினால் ஆகாது தமது அருள் நாடகச் செயலால் ஆவனவாதல் விளங்கும்.
தத்துவங்களில் சுத்த தத்துவங்கள் தோன்றுமிடத்து.
பிறிதொன்றையும் நோக்காது நோக்குங்காலத்தில் `சிவன், சக்தி` என் இரு கூறாய்ப் பரநாதமாகிய சிவன் சுத்த சிவத்தினின்றும் தோன்றித் தன்னின்றும் பரவிந்துவாகிய சத்தியைத் தோற்றுவித்தலால் சத்திக்குச் சிவன் தந்தையாகின்றார்.
பின்பு பரவிந்துவாகிய சத்தியினின்றும், அபரநாதமாகிய சிவன் தோன்றுதலால் சத்திக்குச் சிவன் மகனாகின்றார்.
பின்பு அபர நாதமாகிய சிவன் அபர விந்துவாகிய சத்தியைத் தோற்றுவிக்க அச்சத்தியினின்றும் முதலில் சதாசிவனும், பின்பு மனோன்மனியும் தோன்றுதலால் சத்திக்குச் சிவன் தமையனாகின்றார்.
பின்பு அவ் விருவரும் சேர்ந்தே மகேசுரன் முதலிய தலைவர்களைத் தோற்று வித்து, அவர்கள் வழியால் உலகத்தையும் தோற்றுவித்தலால் சத்திக்குச் சிவன் கேள்வன் (கணவன்) ஆகின்றார்.
எனவே, இத்தத்துவக் குறிப்பே முறையில்லாத முறைகளாக நகைச்சுவை தோன்றச் சொல்லப் படுகின்றன என்க.
இப்பாட்டிலும், `திரிபு` என்னும் சொல்லணி வந்தது.
பர மனை - அயல் வீடு.
சரம், இங்கு பூங்கணையும், மன், மன்மதனுமாம்.
உடம்பு அட்டு - உடம்பை அழித்து.
``உடம்பொடு`` என்பதை `உடம்பின்கண்` எனத் திரிக்க.
வர மனை - மேலான மனைவி.
கிளை - சுற்றம்.
``உடம்பின் கண் இடம் ஆம்`` எனச் சினை வினை முதல்மேல் நின்றது.
கிளை ஆகும் - கிளையாக இருக்கும்.

பண் :

பாடல் எண் : 5

தவனே உலகுக்குத் தானே
முதல் தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ
லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி
கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும்
பெறுவரிப் பாரிடமே.

பொழிப்புரை :

`சிவபெருமானே எல்லோரிலும் மிக்கவன்; (எனவே, முதற்கடவுள் ) உலகிற்கு முதல்வனும் அவனே.
எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் அவன் படைத்தனவே.
(உயிர்கள், பிறப்பெடுத்த உயிர்கள்).
அவன் அனைத்துப் பொருள் களிலும் அவையேயாய் நிறைத்திருக்கின்றான்` என இவ்வாறு உணர்கின்றவர்கள் சிவலோக வாழ்க்கையைப் பெறுவர்.
`அவன் திருமாலை இடபமாகக் கொண்டு ஏறி நடாத்துபவன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தேவர் பொருட்டு உண்டவன், நினைப்பவர் நினைத்த இடத்தில் அவர் நினைத்த வடிவில் தோன்றுபவன்` என இவ்வாறு அவனைப் புகழ்பவரும் இவ்வுலக ஆட்சியைப் பெறுவர்.

குறிப்புரை :

மிகுதியை உணர்த்தும் `தவ` என்னும் உரிச்சொல்லடி யாக, `தவன்` என்னும் பெயர் பிறந்தது.
`சால்` என்பது அடியாக, `சான்றோன்` என்பது பிறத்தல் போல.
பவன் - தோன்றுபவன்.
பெறப்படுவன வேறாயினும் இரண்டும் பேறாதல் பற்றி, ``சொல்லுவாரும்`` என இறந்தது தழுவிய எச்சவும்மை தரப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

இடம்மால் வலந்தான் இடப்பால்
துழாய்வலப் பாலொண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே
திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை
யாம்எங்கள் கூத்தனுக்கே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஓரமையத்தில் இடப்பக்கம் திரு மாலும், வலப்பக்கம் தானுமான ஒரு வடிவத்துடன் நின்றான்.
(அது படைப்புக் காலம் என்க) அப்பொழுது இடப்பக்கம் துழாய் மாலை யும், வலப்பக்கம் கொன்றைப் பூ மாலையும் - இடப்பக்கம் பொன்னாடையும், வலப்பக்கம் தோல் ஆடையும், இடப்பக்கம் சக்கர மும், வலப்பக்கம் மானும், இப்பக்கம் கருநிறமும், வலப்பக்கம் செந் நிறமுமாய் இருந்தன.
இனி இடப்பக்கம் குடக் கூத்தும், வலப்பக்கம் கொக்கரைக் கூத்தும் ஆடின.

குறிப்புரை :

`இதோர் அதிசய வடிவம்` என்பது குறிப்பெச்சம்.
இவ் வடிவம் `அரியர்த்தேசுரவடிவம்` எனப்படும்.
``எங்கள் கூத்தனுக்கு`` என்பதை முதலில் கொண்டு உரைக்க.
வட மால் - தாமோதரன், `இடம், வடமாவது துகில்` என்க.
துகில் - உயர்ந்த ஆடை.
`வலக்கையில் மான்` என்றது இவ்வடிவத்தில் மட்டும் சிறப்பாகக் கொண்டது.
``இடம் ஆல் கரிது ஆல்`` என்னும் `ஆல்` இரண்டும் அசைகள்.
சேது - செய்யது; செந்நிறமானது.
உருவம் கூறியபின் செயல் கூறுகின்றார்.
ஆகலின், ``இவனுக்கு`` என மீட்டும் சுட்டிக் கூறினார்.
எழல் நலம், ஒருபொருட் பன்மொழி.
குடம் கொண்டு ஆடிய கூத்தைக் ``குடம்`` என்றும் 1 கொக்கரித்து ஆடிய கொடுகொட்டிக் கூத்தைக் 2 ``கொக்கரை`` என்றும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

கூத்துக் கொலாமிவர் ஆடித்
திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது
மேனி பவளங்கொலாம்
ஏத்துக் கொலாமிவர் ஆதரிக்
கின்ற திமையவர்தம்
ஓத்துக் கொலாமிவர் கண்ட திண்
டைச்சடை உத்தமரே.

பொழிப்புரை :

`இண்டை` என்னும் வகை மாலையைச் சடையில் தரித்துள்ள மேலானவராகிய இவர், எங்கும் ஆடிச் செல்வது முறைப் படி அமைந்த நடனம்.
எங்கும் சென்று பிச்சை ஏற்பது தம் தேவியர் பகுத்து உண்டற்கு.
இவர் மேனி பவளம்போல்வது, இவர் எவரிடமும் விரும்புவது தம்மைப் புகழ்தலை.
இவர் நினைவு மாத்திரத்தாற் செய்தது வேதம்.

குறிப்புரை :

இஃது இறையது பொது வியல்பைக் கூறியது.
``கூத்து`` எனப் பொதுப்படக் கூறினாராயினும், ``ஆடித் திரிவது`` என எடுத் தோதினமையால், அது முறைப்படி (கூத்த நூல் முறைப்படி) அமைந்த கூத்தாயிற்று.
இது பெத்தான்மாக்களுக்கு ஊன நடனமாயும், முத்தான் மாக்களுக்கு ஞான நடனமாயும் நிகழ்தலை உண்மை விளக்க நூலால் அறிக.
* ``கோல் வளை`` என்பது `திரட்சியான வளையலை அணிந்த வள் என ஒருமையாய் நின்று, பின் `கள்` விகுதியேற்றுப் பன்மையா யிற்று.
சிவபெருமானுக்குத் தேவியர் `உமை, கங்கை` என இருவராதல் வெளிப்படை.
எனவே, `அவர்களைக் காப்பாற்றுதற்கு வழியில்லா மையால் பிச்சை எடுக்கின்றான்` என்பது வெளிப்படைப் பொருளாய் இகழ்ச்சியைத் தோற்றுவித்தது.
ஆயினும், `பிச்சையிட வரும் மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்கின்றான்` என்பது உள்ளுறைப் பொரு ளாய்ப் புகழ்ச்சியைத் தோற்றுவித்தது.
இது சிலேடையணி.
தொழிற் பெயர்கள் வினையொடு முடியுங்கால் வினையெச்சத்தோடே முடிதலும் உண்டு.
ஆகையால், ``திரிவது`` என்னும் தொழிற் பயர் ``பாத்து`` என்னும் வினையெச்சத்தோடே முடிந்தது.
பாத்து - பகுத்து.
இது வெளிப்படைப் பொருளில் `பகுக்க` எனச் செயவெனெச்சப் பொருட்டாயும், உள்ளுறைப் பொருளில் `கவர்ந்து` என்னும் பொருட்டாயும் நின்றது.
ஏத்து - துதி; முதனிலைத் தொழிற்பெயர்.
ஆதரித்தல் - விரும்புதல் ``இமையவர் ஒத்து`` என்றதனால் இறைவன் திருவருட் குறிப்பினை உணரத் தேவர்களும் வேதத்தை உணர்தல் சொல்லப்பட்டது.
`பெத்தான்மாக்கள், முத்தான்மாக்கள் ஆகிய இருவகை ஆன்மாக்களுக்கும் ஏற்புடையவற்றைச் செய்து அவைகளை உய் வித்தலும், தன்னை உணராதவரையும் தக்க வழியால் உணர்வித்தலும், சிறிது உணர்ந்தாரையும் தம்மைப் புகழ்தல் வாயிலாக மிக உணர்ந்து அன்பு கூரச் செய்தலும், உயிர்களுக்கு நூல்கள் வாயிலாக நன் னெறியை உணர்த்துதலும் இறையது பொது வியல்புகள்`` என்பது கூறியவாறு.
`மேனி பவளம்` என்றது வசிகரித்தலைக் கூறியது.
``கொல், ஆம்`` என வந்தன எல்லாம் அசைநிலைகள்.

பண் :

பாடல் எண் : 8

உத்தம ராயடி யாருல
காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம்
பதிநலஞ் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள
வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராயக லாதுடன்
ஆடித் திரிதவரே.

பொழிப்புரை :

தம் அடியார்கள் யாவரினும் மேலானவராய், மண்ணுலகு வானுலகுகளை ஆள, ஊமத்தை மலர், பாம்பு, திங்கள், அவற்றின் அருகே நீர் இவைகளே தமக்கு உரியவாய் மிக அழகும் புகழும் குறையாதனவாய் உள்ளன.
எக்குலத்தவராயினும் தமக்கு அடியார்களாக ஆகும்படி செய்துகொள்ள வல்ல இறைவர் தமது மேல் நிலையினின்றும் இறங்கி வந்து என் உள்ளத்தில் பொருந்தி என்னோடு உடன் இயங்கியே திரியும் தன்மையுடையராகின்றனர்.

குறிப்புரை :

`இதுவும் மேற்கூறிய ஊமத்தை முதலியவற்றை உவந்து கொண்டது போல்வதுதான்` என்பது குறிப்பெச்சம்.
இக்கருத்துக் குறிப்பால் தோன்றவே இதனை இருதொடராக அருளிச் செய்தார்.
``தமக்கு உரியவாய்` என ஆக்கம் விரித்து ``சீர்மை குன்றா`` என்பதற்கு முன்னே கூட்டுக.
மத்தம் - ஊமத்தை.
மாடு - பக்கம்.
`அம்பு + அதி நலம்` எனப்பிரிக்க.
அம்பு - நீர், நலம் - அழகு.
`அதிநலமும், சீர்மை யும் குன்றா` என்க.
ஈற்றடியில், `மருவாய்` என்பது, மராய்` என வந்தது.
மருவு - மருவுதல்; முதனிலைத் தொழிற்பெயர்.
திரிதவர் - திரிதலையே தவமாக - தொழிலாக - உடையவர்.

பண் :

பாடல் எண் : 9

திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின்
உள்ளுந் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப
தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர்
சாந்தம்கண் மூன்றொடொன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து
கொள்வர்தம் பல்பணியே.

பொழிப்புரை :

இறைவர் மேற்கூறியவாறு என் கண்ணினுள்ளும், கருத்தினுள்ளும் என்னோடு அகலாது நின்று உடனே திரிபவராயினும், `அவரது தன்மை இதுதான்` என்று என்னால் வரையறுத்துச் சொல்லுதல் இயலாது.
ஆயினும் கடல் நஞ்சம் பொருந்திய அவரது மிடறு கறுத்தது; அவர் பூசிய சந்தனம் வெளுத்தது; (திருவெண்ணீறு) கண்களோ மூன்று, ஏந்திய வில் பிறரால் ஏந்துதற்கு அரிய ஒன்று (அஃதாவது மலை) தமக்குத் தாமே பல பணிகளைப் பணித்துக் கொள்வார்.
(பிறரால் யாதும் பணிக்கப்படுவாரல்லர்).
என இங்ஙன் ஒருவாறு அவரைப் பற்றிக் கூறலாம்.

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது குறிப்பெச்சம்.
`கண் முன்னொரு பரி தவர் ஒன்றாம்` என்க - பரித்தல் - தாங்குதல்.
தவர் - வில்.

பண் :

பாடல் எண் : 10

பணிபதம் பாடிசை ஆடிசை
யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொள்அப்பனை
அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு
நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம்
நீயென் தனிநெஞ்சமே.

பொழிப்புரை :

எனது ஒப்பற்ற மனமே, சூரியனது பல்லை உகுத்த, யாவர்க்கும் தந்தையாகிய சிவனை அடி பணி; கூத்தாடு; பொருந்தும் வகையால் பல இசைகளைப் பாடு; குளிர்ந்த மலர்களால் அலங்கரி; `அப்பெருமானுக்கேயான் அடிமை` என்னும் நிலைமையை நிச்சயமாக உணர்வதையே விரும்பு.
இச்செயல்களில் உனக்கு அவனைப் போலவே உடம்பில் தோலை உடுத்தலோடு, நீற்றை நிறையப் பூசி அமைதியுற்றிருத்தலாகிய நல்ல பதவியைக் கொடுக்கும்.
இனி உனது கவலையை விடு.

குறிப்புரை :

தம் மொழி வழி நிற்றல் வேண்டி, `ஒப்பற்ற நெஞ்சமே` என்றார்.
இனி, `துணையில்லாது தனித்து நிற்கும் நெஞ்சமே` என்றலும் ஆம்.
`பதம் பணி` என மாற்றியுரைக்க.
இசையாக - இசைவாக; பொருந்தும்படி.
`இசையாக இசை பாடு` என்க.
பதங்கன் - சூரியன்.
`அடிமைப் பதம் துணி` என இயைக்க.
பதம் - நிலைமை.
``தோலொடு.............தணிபதம்`` என்றது சாரூப பதவியை நீ - நீத்துவிடு.

பண் :

பாடல் எண் : 11

நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர்
அரும்ப முகம்மலர
அஞ்செங் கரதலங் கூம்பஅட்
டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல்
லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத்
தான்பெரு வானகமே.

பொழிப்புரை :

மனம், வறட்சியால் வாடிய செடியாகாது, அன்பென்னும் நீரால் குளிர்ந்த செடியாகித் தளிர்க்க, அதினின்றும் தோன்றுகின்ற குருத்து அரும்புவதன் அறிகுறியாக அழகிய, சிவந்த கைகள் குவிந்து தோன்ற அக்கருத்தில் அன்பாகிய தேன் ததும்புவ தாகக் கண்களில் நீர் ததும்ப, அரும்பிய கருத்து மலர்வதாக முகம் மலர, மலர்ந்த கருத்துக்களை வெளிப்படத் தெரிவிக்கின்ற, தமது சொற்க ளாகிய மலர்களைத் தொடுத்த பாக்களாகிய மாலைகளை அணிவித்து, எட்டுறுப்புக்களாலும் அடிபணிய வல்லவர்க்கு என்றே நீண்ட சடையையுடையவனாகிய சிவபெருமான் சிறிதும் கர வில்லாமல் தனது பெரிய சிவலோகத்தை நன்றாகப் படைத்து வைத்தான்.

குறிப்புரை :

``தளிர்விட`` என்பது முதலியன உருவகத்தைக் குறிப் பால் உணர்த்தி நின்றன.
``கண்ணீர்`` என்பது சிலேடையாய் `கள் + நீர்` எனப் பிரித்து, `தேன்` எனப் பொருள் கொள்ள நின்றது.
எட்டுறுப் பாவன; முழங்கால் இரண்டு, மார்பு ஒன்று, தோள் இரண்டு, செவி இரண்டு, முகம் ஒன்று.
இவ் எட்டுறுப்பும் நிலத்தில் தோயப் பணிதல் அட்டாங்க நமற்காரம்` எனப்படும்.
மார்பும், தோள்களும் ஒழிந்த ஐந்துறுப்புக்கள் நிலத்தில் தோயப் பணிதல் பஞ்சாங்க நமற்காரமாகும்.
`மகளிர் அட்டாங்க நமற்காரம் செய்தல் கூடாது` என விலக்கியுள்ளது.
தலைமட்டும் தாழக் கும்பிட்டு வணங்குவது ஏகாங்க நமற்காரம்.
`இறைஞ்சுதல்` என்பதும் இதுவே.
அட்டாங்கத்தோடு கூடியது, `சாட்டாங்கம்` எனப்படும்.
ஈற்றில் வைக்கற்பாலதாய இதனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார்.
`சிவபெருமானை அன்பொடு பணிந்து பணி செய்பவர்கள் தவறாமல் சிவலோகத்தை அடைவர்` என்பது உணர்த்தியவாறு.
``தம் சொல் மலரலா`` என்றமையால் தாமே பாக்களை இயற்றிப் போற்றுவார் குறிக்கப்பட்டனர்.
தம் சொல்லால் தொடுக்கப்படும் பாக்களுக்கு ஒரு தனிச் சிறப்புச் சொல்லப்படுகின்றது.
இதனால், `பாமாலைகளைப் புதிது புதிதாய்த் தொடுத்தணியும் மரபு இடையே அற்றொழியாமல், நீடு செல்லல் வேண்டும்` என்பது இறைவனது திருவுளக் குறிப்பாதல் விளங்கும்.
தேவார திருவாசகங்கட்குப் பின்னரும் அன்புடைத் தொண்டர்கள் பாமாலை சாத்திப் பரவினமை இதற்குத் தக்கச் சான்று.
`பத்திமையால் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித் தானை` 1
`பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்துஎன்
சிந்தைமயக் கறுத்ததிரு அருளினானை`.
2 `நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை.
` 3 `நமக்கும் அன்பிற் பருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார், தூமறை பாடும் வாயார்.
` என்பன முதலிய திருவாக்குகள் இதனை வலியுறுத்தும்.

பண் :

பாடல் எண் : 12

வானகம் ஆண்டு மந் தாகினி
ஆடிநந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல்
வோருஞ் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப்
போருங் கனகவண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும்
அல்லாப் படிறருமே.

பொழிப்புரை :

சிவகங்கையில் ஆடுதல், சிவ நந்தனவனத்தில் நிறைந்த பூக்களைச் சூடுதல் முதலிய சிறப்புக்களுடன் சிவலோகத்தில் வாழ்பவரும், கிழிந்த ஆடையை அரையில் சுற்றிக்கொண்டு, கால் நகம் தேய மண்ணுலகில்`` எங்கும் திரிந்து, இரப்பவரும் யாவர் எனின், முற்பிறப்பில் திருமேனியில் பால்போலும் நிறத்தையுடைய திருநீற்றைப் பூசியுள்ள சிவபெருமானுக்குத் தொண்டு செய்தவரும், அது செய்யாது அதனை இகழ்ந்தவருமேயாவர்.

குறிப்புரை :

`சிவத் தொண்டு தூய இன்பங்களைத் தரும்` எனவும், `அதனை இகழ்தல் இவ்வுலகில் வறுமைத் துன்பத்தைத் தரும்` எனவும் உறுதிப்படக் கூறுவார் இங்ஙனம் கூறினார்.
படிறர் - பொய்யர்.
பொய் நிலையாமையை நிலைத்ததாக உணர்ந்து, நிலைத்ததை நிலையாததாக இகழ்தல்.
ஏகாரம், தேற்றம்.
ஆளுதல் - பயன் கொள்ளுதல்.
அவை மந்தாகினி ஆடுதல் முதலியன.
மந்தாகினி - கங்கை.
அஃது இங்குச் சிவலோக கங்கையைக் குறித்தது.
`நந்தவனம்` என்பது நீண்டு வந்தது.
`கெடாத வனம்` என்றலும் ஆம்.
`இவ்வாறெல்லாம் வானகத்தை ஆள்பவர்` என இறுதிக்கண் கூறற்பாலது செய்யுள் நோக்கி முதலிற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

படிறா யினசொல்லிப் பாழுடல்
ஓம்பிப் பலகடைச்சென்
றிடறா தொழிதும் எழு நெஞ்ச
மேயெரி ஆடியெம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட
பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன்
னேனிவ் வுலகினுள்ளே.

பொழிப்புரை :

``எள் விழுந்த இடத்தைத் தேடிக்கொண்டு, `ஈ மொய்த்தாலும் இழப்பு ஏற்படும்` என்று அது பற்றி ஈயை அடிக்கின்ற உலோபியை `வரையாது வழங்கும் வள்ளலே` எனக் கூறுவது போன்ற பல பொய்களைச் சொல்லி 1 இரந்து, பிறிதொன்றற்கும் பயன்படாத உடலைப் பாதுகாத்தலை மேற்கொண்டு, பல இல்லங்களின் வாயிற் படிகளில் ஏறி இடறுதல் நேராத படி அதனினின்றும் நீங்குவோம்; நெஞ்சமே, புறப்படு.
`எதற்கு` எனின், எரியின்கண் ஆடுபவனும், எம்பெருமானும் கடலில் பரந்து எழுந்த நஞ்சத்தை உண்டவனும் ஆகிய அவனது திருவடிகளைப் பல்லாற்றானும் சார்வனவே, இவ்வுலகத்தில் கிடைத்ததாகிய இவ்வுடலினால் உளவாம் பயன்களாகும்.
இதனை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.
(என்மேற் பழியில்லை).

குறிப்புரை :

`எனவே, அவற்றைச் சார்தற்கே புறப்படுக` என்பதாம்.
அவற்றைச் சாராதவர் நிலை முன்னைப் பாட்டில் கூறப்பட்டமையால், `அந்நிலை நமக்கு வாராது ஒழிய முயல்வோம்` என்றபடி.
படிறு - பொய்.
`சொல்லி ஓம்பி` என இயையும்.
சொல்லுதல் அதன் காரிய மாகிய இரத்தல்.
மேலும், ஓம்புதல் அதன் காரணமாகிய மேற்கொள்ளு தல் மேலும் நின்றன.
தாயின - பரந்த.
கண்டாய், முன்னிலையசை.
மனம், மொழி, மெய் என்பவற்றால் சார்தல் பலவாகலின் பன்மையாற் கூறினார்.
தான், அசை.
``சொன்னேன்`` என்ற விதப்பு இக்கருத்துடைய தாதலைக் ``குற்றமில்லை எனமேல்; நான் கூறினேன்``.

பண் :

பாடல் எண் : 14

உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
நாள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தை ஆள விரும்புகின்றவர்களே, `நீவிர், உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானைக் கைகுவித்துக் கும்பிடுங்கள்.
விண்ணுலகை ஆள விரும்புகின்றவர்களே, (நீவிர், உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானது திருவடிகளில் வீழ்ந்து பணியுங்கள்.
நாள்தோறும் பற்பலவற்றை விரும்புகின்றவர்களே (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானை இடையறாது நினையுங்கள்.
இவைகளையெல்லாம் விடுத்துச்) சிவபெருமானோடு இரண்டறக் கலக்க விரும்புகின்றவர்களே, (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேற) அப்பெருமானை நந்தவனத்தில் உள்ள நல்ல பல மலர்களால் அருச்சனை செய்யுங்கள்.
என்றும் நரகத்தில் நிற்றலாகிய பொல்லாத விளைவை விரும்புகின்றவர்களே, (அதற்கு நீவிர்) சிவ பெருமானுடைய அடியாரை வருந்தப் பண்ணுங்கள்.

குறிப்புரை :

`சிவபெருமானை இந்த இந்த அளவில் வணங்குகின்ற வர்கள் இன்ன இன்ன பயன்களை அடைவார்கள்` என்னும் வகை முறையையும், `சிவாபராதம், சிவனடியார்க்கு அபராதம் நரகம் விளைக்கும்` என்பதையும் இவ்வாறு கூறினார்.
நித்தம் - நாள்தோறும்.
கா - சோலை; நந்தவனம்.
`நாளும்` என்னும் முற்றும்மை தொகுத்த லாயிற்று.
`அல்ல` என்பது இடைக்குறைந்து நின்றது.
நரகங்கள் பல வகையின ஆதல் பற்றி, `அல்ல` எனப் பன்மையாற் கூறினார்.
அலைத்தல் - வருத்துதல்.

பண் :

பாடல் எண் : 15

அலையார் புனலனல் ஞாயி
றவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய
சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங்
கொடித்தேர் அரக்கனென்னே
கலையான் ஒருவிரல் தாங்ககில்
லான்விட்ட காரணமே.

பொழிப்புரை :

(உலகீர்) கொடியை உயர்த்திய தேரை உடைய இராவணன் பத்துத் தலையும், இருபது தோளும் உடைமையால் மிகப் பருத்திருந்தும் சிறிய மானைக் கையில் ஏந்திய சிவபெருமானது கால் விரல்களில் ஒன்றன் ஊன்றலைத் தாங்கமாட்டாது அலறிய காரணம் என்ன? (அதனை எண்ணிப் பார்த்து,) அலை பொருந்திட நீர், ஞாயிறு, நிலம், திங்கள், வானம், காற்று, அழிவற்ற உயிர் ஆகிய எட்டினையும் தனது உடம்பாகக் கொண்ட, ஒளி வடிவாகிய அந்தப் பெருமானையே அவனது திருவடிகளைத் தலையிற் சுமந்தாயினும் சேருங்கள்

குறிப்புரை :

``தலையாற் சுமந்தும்`` என்பதை, ``தொக்குமினோ`` என்பதற்கு முன்னே கூட்டுக.
தடித்தல் - பருத்தல்.
``என்னே`` என்னும் வினா, `அது நன்கு தெரிந்ததன்றோ! என்னும் தேற்றக் குறிப்பினது.
`எத்தனை பேர் எத்தனைப் பெரிய உடலும் பேராற்றலும் படைத் திருப்பினும் அவர்களது ஆற்றல்கள் எல்லாம் எங்கும் நிறைந்த பெரும் பொருள் ஆகிய சிவபெருமானது ஆற்றலின்முன் எவ்வளவு` என்றற்கு அவன் அட்ட மூர்த்தியாய் நிற்றலை எடுத்தோதினார்.
அட்ட மூர்த்தங்கள் செய்யுளுக்கேற்ப வைக்கப்பட்டன.
`அவன் சிறியதொரு மானை ஏந்துதலைக் கண்டு தவறாக உணர்ந்து விடாதீர்கள்` என்றற்கு, ``கலையான்`` என்றார்.
தொகுதல் - சேர்தல்.
``தொக்குமினோ`` என்பதில் ககரமெய் விரித்தல்.
ஓகாரம், அசை.

பண் :

பாடல் எண் : 16

காரணன் காமரம் பாடவோர்
காமர்அம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற
தையலைத் தாங்குவார்யார்
போரணி வேற்கண் புனற்படம்
போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம்
மூடி இருந்தனவே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் காரணனாகிய சிவபிரான் (வீணை யேந்தி) இசை பாடிக் கொண்டு வீதியிலே வர, குறும்பு செய்கின்ற ஒருவனாகிய மன்மதனது அம்பு மார்பில் தைத்து ஊடுருவுதலால் போர்க்குக் கொள்ளப்படுகின்ற வேல்போலும் கண்கள் `நீராகிய துணியால் தம்மை மூடிக்கொண்டன.
அழகோடு அணிகளைத் தாங்கி அழகு தேமலையுடைய கொங்கைகள் பொன்னாடையால் தம்மை மூடிக் கொண்டன.
அவனது கொன்றை மாலையை வேட்ட வேட்கையே தனக்குத் துன்பமாக இவ்வாறு சோர்வடைகின்ற இம் மகளைத் தாங்குவார் யார்?

குறிப்புரை :

இது தில்லைப் பெருமானைக் காதலித்து வருந்தும் தலைவியது ஆற்றாமை நோக்கித் தோழி நெஞ்சழிந்து கூறியது.
``காமர்`` என்பது இழித்தற்கண் வந்த பன்மை.
``ஓர்`` என்றதும் இழிவு பற்றி.
தன் - சிவபிரானது.
``தார்`` என்றது அதனை வேட்ட வேட்கையை.
அணங்கு - துன்பம்.
`இத்தையலை` எனச் சுட்டியுரைக்க.
``புனற்படம்,பொற்படம்`` என்பன உருவகங்கள்.
`கண்கள் நிரம்ப நீரைச் சொரிந்தன; கொங்கைகள் பசலை போர்த்தன` என்பது பொருள்.

பண் :

பாடல் எண் : 17

இருந்தனம் எய்தியும் நின்றுந்
திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் றானே
களையுநம் தீவினையே.

பொழிப்புரை :

நெஞ்சே, நாம் தவறு செய்யாமல் திருந்தும் பொழுது, மாதொரு பாகத்துப் பொருந்தப் பெற்ற புண்ணிய வடிவினனும்,கொடியோரை அழித்தலால் அவர் புண் பொருந்திய சூலத்தை ஏந்தியவனும் ஆகிய எம் சிவபெருமான் நமது தீவினை களை யெல்லாம் அவனே முன் வந்து நீக்கிவிடுவான்.
(ஆகையால் நீ திருந்து.
அஃதாவது,) நின்றும், திரிந்தும், கிடந்து அலைவுற்று மிக்க பொருளை ஈட்டியபோதிலும் வருத்தத்தையே தருகின்ற இவ்வுலக வாழ்க்கையை (நீ விரும்புதலை விடுத்து,) அஃது உன்னை விட்டு நீங்கும்படி நீக்கு.

குறிப்புரை :

``நெஞ்சே`` என்பது முதலாகத் தொடங்கி, `நம் தீவினையைக் களையும்` எனவும் `இருந்தனம் எய்தியும் வருந்திய` எனவும், `போகத் தவிர்த்திடு` எனவும் இயைத்து உரைக்க.
`திருந்தா நிலையாவது இது` என்பதையே வாழ்க்கையின் விளக்கமாக முதலிற் கூறினார்.
``அலைந்தும்`` என்னும் உம்மையைப் பிரித்து, ``கிடந்து`` என்பதனுடன் கூட்டுக.
`இறைவன் நமக்கு அருளாமைக்குக் காரணம் நமது குற்றமேயன்றி, அவனது குற்றம் அன்று` என்பதை விளக்கிய வாறு.
திருந்துதலுக்கு `நாம்` என்பதே தோன்றா எழுவாய் ஆதல் அறிக.
``இருந்தனம் எய்தியும் வருந்திய வாழ்க்கை`` என்றது உலக வாழ்க்கையின் இயல்புணர்த்தியது.

பண் :

பாடல் எண் : 18

தீவினை யேனைநின் றைவர்
இராப்பகல் செத்தித்தின்ன
மேவின வாழ்க்கை வெறுத்தேன்
வெறுத்துவிட் டேன்வினையும்
ஒவின துள்ளந் தெளிந்தது
கள்ளங் கடிந்தடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன்
ஆரணன் பாதங்களே.

பொழிப்புரை :

தீவினையைப் பெரிதும் உடைய என்னை ஐம்புலன் களாகிய வேடர், கருவி கொண்டு சிதைத்துத் தின்னுதல் போன்ற துன்பத்தை உறுவிக்கும்படி இதுகாறும் பொருந்திநின்ற வாழ்க்கையை இதுபொழுது நான் வெறுத்து விட்டேன்.
அதனால் எனது சஞ்சித வினைகளும் என்னை விட்டு ஒழிந்தன.
அதனால் எனது உள்ளம் சிவனை வஞ்சித்து ஒழுகுதலை விலக்கித் தெளிவடைந்தது.
நான் விரிந்த, சிவந்த சடையையும், மூன்று கண்களையும் உடையவனும், வேதப் பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளையே சார்பாகச் சார்ந்தேன்.

குறிப்புரை :

இருவினை ஒப்பு, மல பரிபாகம், சத்தி நிபாதம் இவை வந்தபொழுதே இவையெல்லாம் நிகழ்வன ஆகலின், `இதுபொழுது` என்பது வருவித்துரைக்கப்பட்டது.
உள்ளம் தெளியாமைக்குக் காரணம் சஞ்சித கன்மமேயாதலின் ``ஓவினது`` எனப்பட்ட வினை அதுவேயாயிற்று.
`இவ்வினை சத்தி நிபாதர்க்கு ஞான குருவால் அழிக்கப்படும்` என்பது சைவ சித்தாந்தம்.
ஆயினும், ``சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின்`` (குறள்.
, 359) * என்னும் திருக்குறளின் உரையில் பரிமேலழகர், ``அவ்வழிக் (ஞானத்தைப் பெற்றுவிட்ட பின்பு) கிடந்த துன்பங்கள் எல்லாம் என் செய்யும் - என்னும் கடாவை ஆசங்கித்து, - அவை ஞான யோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பின்மையானும் கெட்டுவிடும் - என்பது இதனாற் கூறப்பட்டது``.
என்றார்.
இன்னும் அவர் இதற்குமுன் சஞ்சித கன்மத்தைப் பற்றி, ``சாரக் கடவனவாய் நின்ற துன்பங்களாவன, பிறப்பு அநாதி யாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும், பிறந்த உடம் பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவன வாய்க் கிடந்தன`` என விளக்கம் தந்தார்.
``ஐவர்`` என்றது தொகைக் குறிப்பு உருவகம்.
செத்தித் தின்னல், வினைநிலை ஒட்டு, ``கான முயல் எய்த அம்பினில் யானை - பிழைத்த வேல் ஏந்தல் இனிது`` 1 என்றது போல், இஃது ``அடையும் பொருளும் அயற்பட மொழிதல்`` 2 என்பதனானே அடை அயற்பட மொழிதலாய் அடங்கும்.
ஆயினும் பரிமேலழகரும் இது பற்றி வாளா போயினார்.

பண் :

பாடல் எண் : 19

பாதம் புவனி சுடர்நய னம்பவ
னமுயிர்ப் போங்
கோதம் உடுக்கை உயர்வான்
முடிவிசும் பேயுடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு
பன்மொழி கீதமென்ன
போதம் இவற்கோர் மணிநிறந்
தோற்பது பூங்கொடியே.

பொழிப்புரை :

என் மகளால் காதலிக்கப்பட்ட இவனுக்கோ இவளால் தழுவப்படுவதோர் உடம்பில்லை.
மற்று, இவனுக்கு நிலமே பாதங்கள்; கதிரும் மதியுமே கண்கள்; காற்றே மூச்சு; பெரிய கடலே உடை; உயர்ந்த வான முகடே தலை; எங்கும் பரந்துள்ள வானமே உடல்; வேதங்களே வாய்; திசைகளே தேர்கள்; பல வகையினவாய் வழங்குகின்ற மொழிகளே இவன் பாட்டு.
இங்ஙனமாக, இவன் பொருட்டு இவள் தனது அழகிய நிறம் கெட நின்று வருந்துவது என்ன அறிவுடைமை!

குறிப்புரை :

இது செவிலிதன் இரங்கற் கூற்று.
சிவ பத்தர்களது நிலையைக் கண்டு பிறர் அறியாமையால் இரங்கிக் கூறும் கூற்றாதல் இதன் உள்ளுறைப் பொருள்.
புவனி - புவனம்; நிலம்.
சுடர் - ஞாயிறும், திங்களும், நயனம் - கண்.
பவனம் - காற்று உயிர்ப்பு - மூச்சு, ஓதம் - அலை; அது கடலுக்கு ஆகு பெயர்.
உடுக்கை - உடை.
``வான்`` என்றது அதன் முகட்டினை; அஃது ``உயர்`` என்றதனானும் விளங்கும்.
விசும்பு - வானம்.
உடம்பு - உடல்; கழுத்திற்குக் கீழும், அரைக்கு மேலும் கை, தோள்கள் அல்லாத பகுதி; மார்பும், வயிறும்.
வாயை `முகம்` என்றல் வடமொழி வழக்கு.
கீதம் - இசை; அஃது அதனையுடைய பாட்டைக் குறித்தது.
போதம் - அறிவு.
இகழ்வது போலச் சிவபெருமானது உலக உருவத்தை (விசுவ ரூபத்தை)ப் புகழ்ந்தவாறு.
மாநிலம் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத், திசைகை யாகப்
பசுஞ்சுடர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப,
தீதற விளங்கிய திகிரி யோனே.
என்னும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளை இதனுடன் ஒப்பு நோக்குக.
இதனுள் ``திகிரி`` என்பதைப் பொதுப்பட ஆஞ்ஞா சக்கரமாகக் கொள்வுழி இது பரம்பொருளின் தடத்தலக்கணத்தை விளக்கியதாதல் அறிக.
சேவடி முதலியவற்றை வேறு வேறு பொருளாகக் கூறிய வர்க்குச் சக்கரத்தையும் வேறுபொருளாக உடம்பொடு புணர்த்துக் கூறலே கருத்தாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 20

கொடிமேல் இடபமுங் கோவணக்
கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தின்
நீறும்ஐ வாய்அரவும்
முடிமேல் மதியும் முருகலர்
கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப்
போதும் வருகின்றவே.

பொழிப்புரை :

கொடிச் சீலையின்மேல் எழுதப்பட்டுள்ள இடபமும், கோவணத்துடன் கூடிய கீளும், முடியின்மேல் ஒப்பற்ற ஒரு கொக்கின் இறகும், திங்களும், நறுமணத்தோடு மலர்ந்த கொன்றை மலர்மாலையும், மார்பில் பூசப்பட்டுள்ள திருநீறும், அங்குத் தவழ்ந்து சென்று முடிக்கு மேலே விரிக்கின்ற படங்களையுடைய ஐந்தலை நாகமும், திருவடியில் கட்டப்பட்டுள்ள கழல்களும், தோள்மேல் சார்த்தியுள்ள இலைவடிவான, கூரிய முத்தலை வேலும் ஆகிய இவை எப்பொழுதும் என் கண்ணில் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

குறிப்புரை :

`இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்காது நிற்கின்ற சிவனது திருவுருவமும் கண்களிலும் தெரிகின்றன` என்றபடி.
செய்யுளுக்கு ஏற்ப முறை பிறழ வைக்கப்பட்டவை முறையானே வைத்து உரைக்கப்பட்டன.
கொக்குருவில் வந்த `குரண்டன்` என்னும் அசுரன் மிக்க வலியுடையன் என்பதைக் குறிக்க ``ஓர் கொக்கு`` என்றார்.
அவனை அழித்து எடுத்த சிறகை அதன் அடையாளமாகச் சிவபெருமான் தனது முடிமேற் சூடியுள்ளான்.

பண் :

பாடல் எண் : 21

வருகின்ற மூப்பொடு தீப்பிணிக்
கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில்
லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண்
டாய்அழல் வாய்அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை
மேல்வைத்த வேதியனே.

பொழிப்புரை :

நெருப்புப்போலும் நஞ்சினை வெளிவிடுகின்ற பாம்பைக் கண்டு அஞ்சுதலை ஒழித்து வெள்ளிய திங்களைச் சிவந்த சடை முடியின் மேல் வைத்துள்ள, வேதப் பொருளானவனே, நாளுக்கு நாள் மிகுந்து வருகின்ற மூப்பும் கொடிய நோயும் செய்கின்ற போருக்கு அடியேன் சிறிதும் ஆற்ற மாட்டாதவனாய் உள்ளேன்.
அதனால், திருநீற்றைப் பூசிக் கொண்டு உன் அருகில் வந்து நிற்கும்படி அடியேனுக்கு அருள்புரி.

குறிப்புரை :

கண்டாய், முன்னிலையசை.
கூற்றுவன் வருகைக்கு அறிகுறியானவற்றை, ``கூற்றம்`` என்றே உபசரித்துக் கூறினார்.
`விரைந்து வீடருளுக` என்பது கருத்து.
வைகல் - நாள்.
வெரு - வெருவுதல்; முதனிலைத் தொழிற் பெயர்.
``வெண்மதி செஞ்சடை`` சொல் முரண் தொடை.

பண் :

பாடல் எண் : 22

வேதியன் பாதம் பணிந்தேன்
பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள்ள உற்றுநின்
றேற்கின்று தொட்டிதுதான்
நீதியென் றான் செல்வம் ஆவதென்
றேன் மேல் நினைப்பு வண்டேர்
ஒதிநின் போல்வகைத் தேயிரு
பாலும் ஒழித்ததுவே.

பொழிப்புரை :

வேதப் பொருளாகிய சிவபெருமானது பாதங் களை யான் பாவித்தேன்; பணிந்து, `ஞானம்` என்னும் ஒளி என்னிடத்தில் வந்து பொருந்துபடி இசைந்து நின்றேன்.
அங்ஙனம் நின்ற எனக்கு, `இன்று முதல் இந்த முறைமையே முறைமை` என அவன் அருளிச் செய்தான்.
ஆயினும், இதற்கு மேலும் எனக்கு ஒரு கருத்து உளது.
அஃதாவது, `உமையையும் உன்னையும் போன்ற வகையில் இருவராய் நில்லாது ஒருவராதலே பெருஞ் செல்வம் என்பதாம் - என்றேன்.

குறிப்புரை :

`அச்செல்வம் வாய்க்குங்கொல்` என்பது குறிப்பெச்சம்.
``என்றான்`` என்பதன்பின், `மேல் நினைப்பு, வண்டு ஏர் ஓதியையும், நின்னையும்போலும் வகைத்தாய் இருபாலும் ஒழித்த அதுவே செல்வம் ஆவது என்றேன்`` என இயைக்க.
``ஆவது`` என்பது, `ஆவ தாகிய நினைப்பு` என்றபடி.
ஏய்தல் - பொருந்துதல்.
`சிவன் சிவத் தொடு இரண்டறக் கலந்து நிற்பதே ஞானத்தின் பயன்.

பண் :

பாடல் எண் : 23

ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்
அறுபகை ஒங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன்
பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்
சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன்
இனிமிகத் தெள்ளியனே.

பொழிப்புரை :

சிவனது திருவடிகளையே பற்றாகச் சேர்ந்தேன்.
அதனால் யான் இனி வரக்கடவதாகிய பிறவி யாதொன்றும் இல்லாமல் ஒழித்துவிட்டேன்.
பிறப்பிற்குக் காரணமாகிய அகப்பகை ஆறினையும் மிதித்து மேல் ஏறினேன்.
எனது உள்ளம் உயர்நிலையை அடைந்தது.
உடம்பின் இழிவை உணராது பற்றியிருந்த நிலையைவிட்டு அதன் இழிவை அறிந்து இனிப் பிறரிடம் சென்று இரத்தலைச் செய்யேன்.
எனக்கு உரியதாக என்றாலும், பிறராலும் மதிக்கப்பட்ட இந்த இல்லத்தையும் இகழ்ந்து நீங்கினேன்.
குற்றங்களையே விளைக்கின்ற பஞ்சேந்திரியங்களாகிய யானைகளை அதட்டி அடக்கினேன்.
ஆகவே, யான் இப்பொழுது மயக்கங்கள் யாவும் நீங்கித் தெளிவடைந்தேனாகியேவிட்டேன்.

குறிப்புரை :

`இல்லம்` என்பது இல்லாளையும் குறிப்பது.
அகப்பகை ஆறு - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.
அடக்குதலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
ஏகாரம், தேற்றம்.
சிவனடி சேர்தலின் பயனை உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 24

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்
தீங்கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும்
பெறேன்உரைத் தாருரைத்த
கள்ளிய புக்காற் கவிகளொட் டார்
கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய வல்லகண் டாய் புன்சொல்
ஆயினுங் கொண்டருளே.

பொழிப்புரை :

சிவபெருமானே, அடியேன் இனிய கவிகளைப் பாடவல்ல தெளிந்த அறிவடையாரை அடுத்ததும், இல்லை.
ஆயினும் ஆசையால் உன்மேல் இனிய கவிகளைப் பாடத் தொடங்கிவிட்டேன்.
அவற்றிற்கு `ஏற்ற விளக்கமான சொற்கள் இவை` என்பதையும் அச்சொற்கள் என்னென்ன பொருள்களைத் தரும் என்பதையும் அறிவினால் பெறப் பெற்றேனில்லை.
பழமையாகப் பாடினவர் களுடைய கவிகளிலிருந்து அவற்றைக் களவு செய்து கொள்ளப் புகுந்தால், அவர்களோ, அல்லது அக்கவிகளைக் கற்று வல்லவர்களோ அதற்கு இடங்கொடுக்க மாட்டார்கள்.
ஆகவே, ஆசையால் வாய்க்கு வந்ததைக் `கவி` என்று சொல்லிப் பாடுகின்ற பாடல்கள் அறிவுடை யோரால் கொள்ளத்தக்கன அல்ல.
அவை மிகப் புல்லிய சொற்களா யினும் ஏற்றருள்; நீ கடலில் தோன்றிய நஞ்சினையும் உண்ட பெருமான் அல்லையோ!

குறிப்புரை :

`அந்நஞ்சினுமா என் கவிகள் கொடியன` என்பது குறிப்பு.
கள்ளிய - களவு செய்ய.
கவிகள் - கவிபாடுவோர்.
கொள்ளிய - கொள்ளப்படுவன.
கண்டாய், முன்னிலையசை.
``நஞ்ச யின்றாய்`` என்பது உடம்பொடு புணர்த்தது ஆகலின், அதனை வேறு வைத்து, இவ்வாறு பொருள் உரைக்கப்பட்டது.
`பாடிப்பரவும் ஆசை யுடையாரை அவர்க்கு அவ்வன்மையின்மை பற்றி இகழாது, அன்பு பற்றி ஏற்றுக் கொள்ளவே செய்வான் என்பதும், `அவன் நஞ்சுண்ட செயல் இதனைக் குறிக்கும் குறிப்பும் ஆகும்` என்பதும் கருத்து.

பண் :

பாடல் எண் : 25

அருளால் வருநஞ்சம் உண்டுநின்
றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன்
சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி
தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி
தானும் விரிகின்றதே.

பொழிப்புரை :

(பெருமானே) இருளாகிய குற்றம் நீங்கும்படி இரவில் அழகு பொருந்தி நிறை நிலாத் தோன்றி விளங்கினாலும், சிறிய மின்மினிப் பூச்சியும் அஞ்சாது அதன் எதிரே சென்று, `எனது ஒளியும் இருளை விழுங்கும்` எனக் கருதித் தனது ஒளியால் சிறிது விளங்கிநிற்கின்றது.
அதுபோல, பாற்கடலினின்றும் தோன்றித் தேவரைத் துரத்தி வந்த நஞ்சினை அவர்கள் மேல் வைத்த கருணை யால் உண்டும் இறவாதிருக்கின்ற உனது கருணை மிகுதியைப் பொரு ளாக நிரப்பி அத்தேவர் கூட்டம் உயர்ந்த கவிகளைப் பாட, நானும் `கவிகள்` என்ற பெயரில் சில சிறுசொற்களைக் கோக்கின்றேன்.

குறிப்புரை :

`உலகர் மின்மினியை வெறாது நகைத்து ஏற்றல்போல, நீயும் எனது கவிகளை வெறாது நகைத்து ஏற்றருள்வாய்` என்பது கருத்து.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
``பொருள்ஆர்`` என்பதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது.
`இறைவன் தனக்கு அர்ப்பணிக்கப்படும் பொருள்களின் தன்மையை நோக்காது, அர்ப்பணிப்பவர்களது உள்ளத்தில் நிற்கும் அன்பையே நோக்குவான்` என்பதும் இதனால் உணர்த்தப்பட்டது.
இச்செய்யுள் எடுத்துக்காட்டு உவமையணி பெற்றது.

பண் :

பாடல் எண் : 26

விரிகின்ற ஞாயிறு போன்ற
மேனியஞ் ஞாயிறுசூழ்ந்
தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது
செஞ்சடை அச்சடைக்கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது
கண்டம் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள
தாலெந்தை ஒண்பொடியே.

பொழிப்புரை :

என் தந்தையாகிய சிவபெருமானுடைய திரு மேனி விரிந்து விளங்குகின்ற ஞாயிற்று வட்டம் போன்றுள்ளது.
எங்கும் வீழ்ந்து சுழல்கின்ற சிவந்த சடைகள் அந்த ஞாயிற்றைச் சூழ்ந்து சுடர்விடுகின்ற வெவ்விய கதிர்களைப் போன்றுள்ளன.
அச்சடைக்குக் கீழ் உள்ள கண்டம், அந்த ஞாயிற்றின் கதிர்கட்கு அஞ்சி ஓடி ஒளிந்த கரிய இருள்போன்றுள்ளது.
கண்டத்தின் கீழ் மார்பில் பூசப்பட்டுள்ள திருநீறு, அந்த இருட்குக் கீழாய்த் தோன்றிப்படரும் வெள்ளிய முகில் கள் போன்றுள்ளது.

குறிப்புரை :

சரிதல் - தோற்று நீங்குதல்.
சடை, சாதியொருமை.
`அச் சடைக்கீழ்க் கண்டம் இருள்போன்றது` என இயைக்க.
வெண்முகில் சூல் கொள்ளாத மேகம்.
பெருமானது திருவுருவத்தை வகுத்துப் புகழ்ந்தபடி.
இது மாலை யுவமையணி.

பண் :

பாடல் எண் : 27

பொடிக்கின் றிலமுலை போந்தில
பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும்
கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங்
கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி
யேன்பிறர் கட்டுரையே.

பொழிப்புரை :

(என் மகளுக்கு) இன்னும் கொங்கைகள் முகிழ்ப் படையவில்லை.
பல் விழுந்து முளைக்கவில்லை.
அவளது சொற்கள் பொருள் விளங்கும் அளவிற்குத் திருந்தவில்லை.
கூந்தல் கூட்டி முடிக்க வரவில்லை.
(`பேதைப் பருவத்தினள்` என்றபடி) ஆயினும் இவள் நிலைமையைக் கேளுங்கள்; பெரிய வெள்ளநீர் எப்பொழுதும் இருக்கும் சிவந்த சடைமுடியையும், மேகம் போன்ற கண்டத்தையும் உடைய சிவபெருமான் தன்மேனியில் அணிந்துள்ள நறுமணம் உள்ள கொன்றைத் தாரின் மணம் கமழ்கின்ற உடம்புடையளாயினாள்.
`இதையறிந்தால் அயலார் சொல்லும் சொற்கள் எவையாய் இருக்கும்` என்பதையான் அறிகின்றிலேன்.

குறிப்புரை :

`பேதைப் பருவத்தே இவள் புத்தியறிந்து சிவனைத் தழுவிவிட்டாள்; இனி, இவள் பிறன் ஒருவனுக்கு உரியளல்லள்` எனப் பலரும் கூறுவார்கள் என்பதாம்.
இது கருவிலே திருவுடையராய்ச் சாமுசித்தராய்ப் பிறந்து, குழவிப் பருவத்தே சிவனையடைந்த ஞானசம்பந்தர் போன்றாரது பெருமையைக் குறிப்பால் உணர்த்தியது.
முதுக்குறைந் தனளே! முதுக்குறைந் தனளே
மலையன் ஒள்வேற் கண்ணி;
முலையும் வாரா; முதுக்குறைந் தனளே!
என்னும் பழம்பாடல் ஒன்றை இதனுடன் ஒப்பு நோக்குக.
`பிறர்க்கு உரியளல்லள்` என்பது, `கைச்சிறு மறியவன் கழல் அலாற் பேணாக் கருத்து` 1 உடையர் ஆதலையும், `அயலார்` என்பது பௌத்தர்களையும் உள்ளுறையாகக் குறிக்கும்.
``முடிக்கின்றில`` என்பது முடிக்கப் படு கின்றில` என்றபடி.
நீங்காதிருத்தலை, `குடிகொண்டிருத்தல்` என்றல் வழக்கு, ``குடிக் கொண்ட`` என்பதில் ககர ஒற்று விரித்தல்.
போக மாலையாவது மார்பிற் புரளும் தார் ஆகலானும் ``கண்ணிகார் நறுங் கொன்றை, காமர் - வண்ண மார்பில் தாரும் கொன்றை`` 2 என்ப ஆகலானும், ``மெய்க்கொண்ட கொன்றை` என்றது, கொன்றைத் தார் ஆயிற்று.
அது மும்மடி ஆகு பெயராய், அத்தாரின் மணத்தைக் குறித்தது.
நாறுதல் - கமழ்தல்.
ஒற்றுமையால் உடம்பும், உயிரும் சினையும், முதலும்போல நிற்றலால், ``நாறுகின்றாள்`` என்றது, சினைவினை முதல்மேல் நின்றதாம்.
இப்பாட்டுச் சிவபெருமானோடு களவிற் கலந்த பேதைப் பெண் ஒருத்திக்குச் செவிலியாயினாள் கூற்றாக அருளிச் செய்யப்பட்டது.
ஞானிகளது செயலை உலகர் அறியார் ஆதலின், அது களவோடு ஒப்பதாயிற்று.

பண் :

பாடல் எண் : 28

உரைவளர் நான்மறை ஓதி
உலகம் எலாந் திரியும்
விரைவளர் கொன்றை மருவிய
மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர்
தீர்த்தம் செறியச்செய்த
கரைவளர் வொத்துள தால்சிர
மாலையெம் கண்டனுக்கே.

பொழிப்புரை :

எம் தலைவனாகிய சொற்கள் வளர்ந்து வாரா நின்ற நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு உலகம் எங்கும் பிச்சைக்குத் திரிகின்ற, சிவபெருமானுக்கு அவனது சடை முடியில் அலையை அடக்கிக் கொண்டுள்ள கங்கை நீர் தீர்த்தமாய் இருக்க, அதைச் சுற்றியுள்ள தலைமாலை, அந்தத் தீர்த்தத்திற்கு உயர்த்துக் கட்டிய கரை போன்று அமைந்து பெருமையைத் தருகின்றன.

குறிப்புரை :

கண்டன் - தலைவன்.
`எம் கண்டனாகிய மார்பனுக்கு அவன் விரிசடைமேல்` எனக் கூட்டியுரைக்க.
சொற்கள்.
வளர்த லாவது, வழிவழியாக ஓதப்பட்டு வருதல்.
வினா - வாசனை.
முன் இரண்டடிகள் சிவனைச் சிறப்பித் துணர்த்த வந்தன.
``திரை வளர்`` என்றதில் வளர்தல், உள்ளே பொங்குதல்.
தீர்த்தம் - புண்ணியப் பொய்கை.
வளர்வு - வளர்ச்சி உயர்தல்.
சிவபெருமானது தலையலங் காரத்தையும் புகழ்ந்துரைத்தவாறு.

பண் :

பாடல் எண் : 29

கண்டங் கரியன் கரிஈர்
உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான்
சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர்
பிரமன் சிரமரிந்த
புண்தங் கயிலன் பயிலார
மார்பனெம் புண்ணியனே.

பொழிப்புரை :

எமது புண்ணியத்தின் பயனாய் விளங்கும் சிவ பெருமான் கண்டம் கரிய நிறமானவன்; யானையை உரித்த தோலைப் போர்வையாக உடையாக உடையவன்; சிறிய மானைக் கையில் ஏந்திய தலைவன்; பிரமனது தலைகளில் ஒன்றைச் சேதித்த குருதி பொருந்திய கூரிய படைக்கலத்தை உடையவன்.
ஆயினும் அவன் தனது இயற்கையில் அனைத்துலகங்களையும் கடந்த பெரியோன்; அநாதியன்; அதனால, `பரம சிவன்` என்று குறிக்கப்படுபவன்.

குறிப்புரை :

`சிவன் தனது இயற்கை நிலையில் அனைத்திற்கும் அப்பாற்பட்டு, அருவத்தையும் கடந்து, கால இட எல்லைகளில் எதுவும் இன்றியிருப்பவனாயினும் உயிர்களின் மேல் வைத்த கருணையால் பலவேறு திருமேனிகளையும், அவற்றிற்கு ஏற்ற பெயர்களையும், செயல்களையும் உடையவன் ஆகின்றான்` என்றபடி.
பரம சிவன் - சுத்த சிவன்.
அல்லது சொரூப சிவன்.
சிவன் தடத்த சிவன்.
`பிரமன் தலையைக் கை உகிரால் கிள்ளினான்` என்பதே வரலாறு.
ஆதலின் அதனை இங்கு, `படைக்கலம்` எனக் கூறினார் என்க.
`பிரமன் ஓர் சிரம் அரிந்த` எனக் கூட்டுக.
`பண்டு` என்பது ஐகாரம் பெற்று, `பண்டை` என வருவது இங்கு ஐகாரம் பெறாது வந்தது.
`ஆரம், எலும்புமாலை` என்பது ஏற்புழிக் கோடல்.

பண் :

பாடல் எண் : 30

புண்ணியன் புண்ணியல் வேலையன்
வேலைய நஞ்சனங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன்
காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன்
பாணி கொளவுமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடல
நாடற் பசுபதியே.

பொழிப்புரை :

பசுக்களாகிய உயிர்கட்கெல்லாம் பதியாகிய சிவன் நல்லோருடைய புண்ணியங்களின் பயனாய் உள்ளவன்; கொடி யோருடைய குருதி ஒழுகும் முத்தலை வேலை ஏந்திய தலைவன்; கடலில் தோன்றிய நஞ்சைக் கண்டத்திலே உடையவன்.
எலும்பு மாலையன்; கண் பொருந்திய நெற்றியை உடையவன்; ஆகாய கங்கையைத் தரித்தவன்; உமையவள் தாளம் இட ஆடுபவன்; பண் பொருந்திய பாடலைப் பாடுபவன்.
அவனையே, நெஞ்சே, நாடுக.

குறிப்புரை :

`பசுபதி` என்பதை முதலிற் கொள்க.
வேல், முத்தலை வேல், வேலை - கடல்.
அங்கம் - எலும்பு.
கண்ணி - மாலை.
`விண்ணன்` என்பது இடையே இகரம் விரித்தல் பெற்று வந்தது.
அடியார்கட்கு வெளிப்படுங்கால் விண்ணில் நின்று காட்சி வழங்குதல் பற்றி இறைவனை, `விண்ணன்` என்றார்.
``பாணி`` இரண்டில் முன்னது நீர்; பின்னது தாளம்.
`உமையாற் பாணி கொளப் பண்ணியன்` என்க.
பண்ணியன் - கூத்தாடுபவன்.
`கோயில் திருப்பண்ணியர் விருத்தம்` என்றது காண்க.
நாடல் - நாடுக.
`அல்` ஈற்று வியங்கோள்.
இதற்கு.
`அவனையே` என்னும் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது.
`ஆடல்` எனப் பிரித்து, `பல்வேறான அருள் நாடகங்களை உடைய பசுபதி` என்று எடுத்துக் கொண்டு உரைப்பினும் ஆம்.
இப் பொருட்குப் பாடம், `ஆடற் பசுபதி` என்பதாகும்.

பண் :

பாடல் எண் : 31

பதியார் பலிக்கென்று வந்தார்
ஒருவர்க்குப் பாவைநல்லீர்
கதியார் விடைஉண்டு கண்மூன்
றுளகறைக் கண்டமுண்டு
கொதியார் மழுவுண்டு கொக்கரை
உண் டிறை கூத்துமுண்டு
மதியார் சடையுள மாலுள
தீவது மங்கையர்க்கே.

பொழிப்புரை :

பாவைபோலும் அழகை உடையவர்களே, நம் தில்லைப் பதியில் இருப்பவராய், பிச்சை ஏற்பதற்கென்று வந்த ஒருவருக்கு வேகமாகக் செல்லும் காலை ஊர்தி ஒன்று உண்டு; கண்கள் மூன்று உள்ளன; கறை பொருந்திய கண்டம் உண்டு; வெப்பம் மிகுந்த மழு உண்டு; `கொக்கரை` என்கின்ற வாச்சியம் உண்டு; தலைமை வாய்ந்த நடனம் உண்டு; பிறையைக் கண்ணியாகச் சூடிய முடிச் சடைகள் உள; இவையேயல்லாமல்; தம்மைக் காண்கின்ற மங்கையர்கட்குத் தருவதாக ஒரு மையலும் அவரிடம் உண்டு.

குறிப்புரை :

`அவர் யாவர் என நீவிர் அறிவீரோ? அறிவீராயின், எனக்காக அவர் பாற் சென்று, எனது மையல் நோயை உரைப்பீராக` என்பது குறிப்பெச்சம்.
இது தலைவன்பால் பாங்கியைத் தூதுவிடக் கருதியாள் கூற்று.
எனினும் உயிர்ப் பாங்கியை நோக்கிக் கூறாது, இறைவனைப் பிரிந்து ஆற்றகில்லாத அதிதீவிர பக்குவரது நிலை இதன் உள்ளுறை.
இறை - இறைமை; தலைமை.
மால் மயக்கம்.

பண் :

பாடல் எண் : 32

மங்கைகொங் கைத்தடத் திங்குமக்
குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் குந்நெகச் சங்கமங்
கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங்
கண்ணர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங்
கும்முடிப் பண்டங்கனே.

பொழிப்புரை :

பெண்மைத்தன்மைத்தாகிய கங்கை நதியின் அலையிடையே, சீற்றம் மிக்க சிவந்த கண்களையுடைய பாம்புகள் மிகுதியாய்ச் சடைகளின் இடையே தங்குவதும், கொன்றை முதலிய மலர்களுக்கிடையே பிறை தங்குவதும் ஆகிய முடியினையுடைய, பாண்டரங்கக் கூத்தனாகிய சிவபெருமான் இம்மங்கையின் கொங்கைச் சரிவிற்கு இடையே இங்கும் அழகிய குங்குமச் சேறு உடல் வெப்பதால் நீராகி உடம்பெங்கும் ஓட, இவள் கையில் உள்ள சங்க வளையல்களையும் கவர்ந்து அங்கே (அயலிடத்தே) செல்பவனாகின்றான்.

குறிப்புரை :

`இனிச் செய்வதென்` என்பது குறிப்பெச்சம்.
இது, நற்றாய்க்கு அறத்தொடு நிற்கக் கருதும் செவிலியது கூற்று.
இப்பாட்டு மெல்லிசை வண்ணக் கலித்துறையாய் நின்றது.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
`பாண்டரங்கன்` என்பது `பண்டங்கன்` என மருவிற்று, பாண்டரங்கம், ஒருவகைக் கூத்து.
பங்கம் - சேறு.
நுங்குதல் - முழுதும் வீழ்ந்து மறைத்தல்.
பங்கி - தலைமயிர்.
அஃது இங்குச் சடையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 33

பண்டங்கன் வந்து பலிதாவென்
றான்பக லோற்கிடென்றேன்
அண்டங் கடந்தவன் அன்னமென்
றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங் குன்னையம்பெய் என்றான்
கொடித்தேர் அனங்கனென்றேன்
உண்டிற் கமைந்ததென் றாற்கது
சொல்ல உணர்வுற்றதே.

பொழிப்புரை :

`பாண்டரங்கம்` என்னும் கூத்தினைச் செய்வோ னாகிய சிவபெருமான் பிச்சாடனனாய் எங்கள் கடைத்தலையில் வந்து நின்று, இருபொருள் பட `பலிதா` எனக் கூறினான்`, அவன் குறும்பாக பல்லை உடையவளே, அவற்றை எனக்குத் தா (முத்தம் கொடு) என உள்ளுறையாக வேறொரு பொருளைத் தருதலை யான் உணர்ந்து கொண்டு, அந்த வார்த்தையை நீவிர் சூரியனிடம் சொல்லுக` என்றேன்.
பின்பு அவர் `அன்னம்` என்றார்.
அது வெளிக்கு, `சோறு (தா - எனப்பொருள் தருமாயினும், உள்ளுறையாக, `நீ ஓர் அன்னப் பறவை போல நடக்கின்றாய்` எனப் பொருள் தருதலை யான் உணர்ந்து கொண்டு, `ஆம்! நீர் சொல்வது பிரமதேவனுடைய ஊர்தி` என்றேன்.
பின்பு அவர், நீ விரைவில் கொண்டு உனது ஐயம்பெய் என்றார்.
அது வெளிக்கு, `பிச்சையிடு` எனப் பொருள் தருமாயினும், உள்ளுறையாக `உன்னிடத்து உள்ள ஐந்து அம்புகளை கொண்டு வந்து எய்` எனவும் பொருள் தருதலை யான் உணர்ந்துகொண்டு, ஆம்! அதற்கு உரியவன் மன்மதன்` என்றேன்.
அவரும் `உண்மை; நீ சொல்லியன எல்லாம் பொருத்தமானவைகளே` (என்று சொல்லிவிட்டு வாயடங்கிப் போனார்).
அவரது சொல்வன்மைக்குத் தக மறுமொழி சொல்ல எனக்கும் உணர்வு உண்டானது வியப்பு.

குறிப்புரை :

வருவித் துரைத்தன இசையெச்சங்கள்.
`பாண்டரங்கன்` என வந்தது பண்டங்கன் செய்யுள் முடிபு, `பலி` என்பது உள்ளுறைப் பொருளில் `பல்லி` என்பதன் இடைக்குறை.
பல்லி - பல்லை உடைய வள்.
`ஐயம்பெய்` என்பதை, `ஐயம் பெய்` எனவும் `ஐ அம்பு எய்` எனவும் பிரித்துக் கொள்க.
அனங்கன் - மன்மதன்.
இது முன்பே தனது உள்ளம் சிவன் வயப்பட்டு அதனை மறைத்து ஒழுகும் தலைவியது நிலையை.
அவள் தன்னிடம் மறையாது வெளிப்படுத்தற் பொருட்டுத் தோழி தானும் அந் நிலை அடைந்தது போலவும், அடையாதது போலவும் இரு பொருள் பயப்பக் கூறியது.
இது, ``மெய்யினும், பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டம்`` ``கயமலர் உண் கண்ணாய்`` என்னும் கலித்தொகைப் பாட்டுப்போல (கலித். - குறிஞ்.37).

பண் :

பாடல் எண் : 34

உற்றடி யாருல காளவோர்
ஊணும் உறக்குமின்றிப்
பெற்றம தாவதென் றேறும் பிரான்
பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய்
இவள்சிர மாலைக்கென்றும்
இற்றிடை யாம்படி யாகவென்
னுக்கு மெலிக்கின்றதே.

பொழிப்புரை :

தன்னைப் புகலிடமாக அடைந்த அடியார்களை (யானைமேல் உலாவந்து) உலகாள வைத்துத்தான் எருதின் மேல் ஏறிச் செல்கின்ற, அத்தகைய கருணையாளனாகிய சிவபிரான், பெரிய வேல் போன்ற, நீண்ட கண்களையும், சிறிய பாதங்களையும், வெண்மையான பற்களையும், சிவந்த வாயினையும் உடைய, என் தாயாகிய இவள் அவன் அணிந்துள்ள தலை மாலையை விரும்ப, அதனைத் தாராமல், அதன் பொருட்டு நாளும் உண்ணும், உறக்கமும் இல்லாமல், தன் இடை இயல்பிலே துவளுவது போல மேனி முழுதும் மெலிந்து போம்படி இவளை மெலியப் பண்ணவது ஏனோ!

குறிப்புரை :

`உற்ற` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
`உறக்கம்` என்பது ஈற்று அம்முக்கெட்டு, `உறக்கு` என நின்றது.
பெற்றம் - எருது.
ஆவது - விருப்பமாவது.
தாய் மகளை, `யாய்` என்றது, காதல் பற்றி வந்த மரபு வழுவமைதி.
இது தலைவியது ஆற்றாமை கண்டு, சிவபெருமானாகிய தலைவனைச் செவிலி இயற் பழித்துக் கூறியது.
இதன் கொண்டு கூட்டினை அறிந்து கொள்க.
``இற்று இடை ஆம்படியாக`` என்பதை, `இடையாய் இற்றிடும் படியாக` என மாற்றிவைத்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 35

மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய்
இழுதழல் வாய்மெழுகு
தலிக்கின்ற காமங் கரதலம்
மெல்லி துறக்கம்வெங்கூற்
றொலிக்கின்ற நீருறு தீயொளி
யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை
சூடிய பல்லுயிரே.

பொழிப்புரை :

நீரின்கண் விரவிய தீ வெளித்தோன்றாது நிற்றல்போல எப்பொருளினுள்ளும் நிறைந்திருப்பவரும், ஒளி பொருந்திய மேனியை உடையவரும், மூன்று கண்களையுடைய முதல்வரும் ஆகிய சிவபெருமானாகப் பிச்சை ஏற்பவராக வேடம் பூண்டு, `பிச்சை` என்று கேட்டு வீதியிலே வந்தார்.
அவர் வரவைக் கண்டதும் பல உயிர்கள் அவரது வாசனை பொருந்திய கொன்றை மாலையைப் பெற்றுத் தாம் சூடிக்கொள்ள விரும்பி, எம்பொருளையும் அழிக்கின்ற, கொடிய தீயினிடத்து வெண்ணெயும், வெயிலிடத்து மெழுகும் போல ஆகிவிட்டன.
(ஆயினும் பயன் என்ன?) தாங்கிக் கொள்கின்ற காமம் கைப்பொருளானதும், உறக்கம் அருகிப் போனதுந்தாம் கண்டது.
கால தூதுவர் வந்து தம்முள்முணு முணுக்கின்ற ஓசைகள் அவற்றின் காதுகளில் ஒலிக்கின்றன.

குறிப்புரை :

`இனி அவைகட்கு நிகழ இருப்பது இறந்து பாடே என்ப தாம்.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.
சூடிய - சூடுதற்கு, `செய்யிய` என்னும் வினையெச்சம்.
பெண்டிரைப் பயனின்றி மெலிதல் நோக்கி, ``உயிர்`` என்றார்.
``வாய்`` என்னும் ஏழன் உருபை தீக்கும் கூட்டுக.
இழுது - வெண்ணெய்.
மெழுகு - அரக்கு.
இவற்றின் பின், `ஆயின` என்பது எஞ்சி நின்றது.
`தரிக்கின்ற` என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றதும் கரதலப் பொருளைக் ``கரதலம்`` என்றது ஆகுபெயர்.
கரதலப்பொருளவாது, கிடைத்த பொருள்.
மெல்லிது, இங்கு மிகக் குறைந்ததைக் குறித்தது.
``கூற்றம்`` என்றது, கூற்றனின் தூதுவரை.
அஃது ஆகுபெயராய் அவர்தம் வாயொலியைக் குறித்தது.
ஒலிக்கின்ற - ஒலிக்கின்றன.
இது பெருமானது பிச்சைக் கோலத்து அழகினைப் புகழ்ந்தவாறு.
`சென்றார்` என்னாது, ``வந்தார்`` என்றது இடவழுவமைதி.
``வருவிருந்து வைகலும் ஓம்புவான்`` * என்பதிற் போல.
``நீருறு தீயே`` என்னும் திருவாசகத்தைக் காண்க.

பண் :

பாடல் எண் : 36

பல்லுயிர் பாகம் உடல் தலை
தோல்பக லோன்மறல்பெண்
வில்லியோர் வேதியன் வேழம்
நிரையே பறித்துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும்
உரித்துங்கொண் டான்புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக்
கெடும்நங்கள் சூழ்துயரே.

பொழிப்புரை :

பகலோனது (சூரியனது) பல்லைப் பறித்தும், மறலி (யமனது) உயிரை உதைத்துப் போக்கியும், பெண் (உமா தேவியது) ஒரு பாதியினைத் தான் பொருந்தியும், வில்லி (மன் மதனது) உடலைச் சுட்டும், ஓர் வேதியனது (பிரமனது) தலையை அறுத்தும், யானையை உரித்தும் புகழைப் பெற்ற சிவபெருமானது புகழை உரையாற் சொல்லியும், பாட்டால் பாடியும் துதித்தால் நம்மைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் அழிந்துபோம்.

குறிப்புரை :

`இது நிரல் நிறைப் பொருள்கோள்` என்பதை ஆசிரியரே, ``நிரையே`` என்பதனாற் குறித்தார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
(குறள்.
, 5) என அருளிச் செய்த வழி நிற்றற்கு இறைவனது பொருள்சேர் புகழ் களைக் கிளந்தெடுத்துக் கூறியவாறு.
``துயர்`` என்றது பிறவித் துயரை யும் உள்ளடக்கியேயாம்.
`மறலி` என்பதைத் தொழிலாகு பெயராக, ``மறல்`` என்றார்.
இது முதல்நிலைத் தொழிற் பெயர்.

பண் :

பாடல் எண் : 37

துயருந் தொழுமழும் சோரும்
துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய்
துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்
தயரும் அமர்விக்கும் மூரி
நிமிர்க்குமந்தோ இங்ஙனே
மயரும் மறைக்காட் டிறையினுக்
காட்பட்ட வாணுதலே.

பொழிப்புரை :

(மறைக் காட்டு இறைக்கு ஆட்பட்ட வாள் நுதல்) திருமறைக்காட்டுப் பெருமானுக்கே தான் உரியளாகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொண்ட என் மகள், (அவன் வந்து தன்னை ஏற்றுக் கொள்ளாமையால்) துன்புறுவாள்.
தொழுவாள்.
அழுவாள்; நெகிழ்கின்ற உடையும் மேகலையும் தன்னைவிட்டு நீங்கத் தான் அலைவாள்; வாயில் வந்தவற்றைப் பிதற்றுவாள், சிலபொழுது சிரிப்பாள், பெருமூச்செறிவாள், தணிக்கலாகா நோய் மிகுந்தவளாய்ச் சோர்வாள்; போராட்டமாக விக்குள் எழ விக்குவாள்; உடல் திமிர் ஏறியது போல முரித்துக்கொள்வாள்.
அந்தோ! அவ்வா றெல்லாம் மையல் மிகுகின்றாளே; (யான் என் செய்வேன்.)

குறிப்புரை :

``துயரும், மயரும்`` என்பனவும் ஏனைய போலச் `செய்யும்` என்னும் முற்றுக்களே.
இப் பொதுவினை இங்குப் பெண் பாலில் வந்தது.
இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி கவன் றுரைத்தது.
அதிதீவிர பக்குவிகளது நிலைமை கண்டு உறவினர் கவறுதல் இதன் உள்ளுறைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 38

வாணுதற் கெண்ணம்நன் றன்று
வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற் கெண்ணாள் பலிகொடு
சென்று நகும்நயந்து
பேணுதற் கெண்ணும் பிரமன்
திருமால் அவர்க்கரிய
தாணுவுக் கென்னோ இராப்பகல்
நைந்திவள் தாழ்கின்றதே.

பொழிப்புரை :

வளர்ந்த சடைகளையுடைய, அடியார்கள் `எந்தை` என்று ஏத்தும் சிவபெருமான் பிச்சை ஏற்க வந்தால், என் மகள் `நாண வேண்டுமே` என்று எண்ணாமல், விரைவில் பிச்சையை எடுத்துக்கொண்டு சென்று, அவன் எதிரிலே சிரிக்கின்றாள்.
அவன் மேல் விருப்பங் கொண்டு அவனுடன் நட்புக் கொள்ள நினைக் கின்றாள், அந்தப் பிரம விட்டுணுக்களாலே அடைதற்கரிய தலை வனைத் தான் அடைய விரும்பி இவள் இராப்பகலாக வருந்தி நகுதற் குரியளாதல் என்ன அறிவுடைமை? இவளுக்குப் புத்தி நல்லதாய் இல்லை.

குறிப்புரை :

நல்லது, இங்குப் பயன்படுவதை விரும்புவது.
இது, தலைவியது பேதைமை பற்றிச் செவிலி இரங்கிக் கூறியது.
இறைவன் அன்பர்க்கு எளியன் ஆதலையறியாத உலகர் அல்லாதார்க்கு அவன் அரியன் ஆகின்ற அஃது ஒன்றே பற்றி அன்பு செய்வார்மேல் இரக்கங் கொள்ளுதல் இதன் உள்ளுறை.
``எந்தை`` என்பதை ஒரு சிலர் கூற்றாக்காவிடின் முறை கெடும்.

பண் :

பாடல் எண் : 39

தாழுஞ் சடைசடை மேலது
கங்கைஅக் கங்கைநங்கை
வாழுஞ் சடைசடை மேலது
திங்களத் திங்கட்பிள்ளை
போழுஞ் சடை சடை மேலது
பொங்கர வவ்வரவம்
வாழுஞ் சடைசடை மேலது
கொன்றையெம் மாமுனிக்கே.

பொழிப்புரை :

எங்கள் பெருமுனிவனாகிய சிவபெருமானுக்கு உள்ளவை நீண்டு தொங்கும் சடை.
அச்சடையின்மேல் உள்ளது கங்கை நதியாதலின் அது கங்கையாகிய நங்கை வாழும் சடையாகின்றது.
அந்தச் சடை மேல் மற்றும் உள்ளது பிள்ளைத் திங்கள் (பிறை) ஆதலின் அந்தச் சடை பிள்ளைத் திங்களால் (பிறையால்) போழப் படும் (நுழைந்து செல்லப்படும்) சடையாகின்றது.
அந்தச் சடைமேல் உள்ளது சீற்றம் மிக்க பாம்பு ஆதலின் அந்தச் சடை பாம்பு வசிக்கின்ற சடையாகின்றது.
அந்தச் சடைமேல் உள்ளது கொன்றை மாலை (ஆதலின் அதுவே அவனுக்கு அடையாள மாலையாய் உள்ளது)

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது இசையெச்சம்.
``மேலது`` என்பவற்றை அடுத்து வந்தன பலவற்றின் பின்னும் `ஆதலால்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது.
இரண்டாம் முறையாக வந்த ``சடை`` என்பவற்றிற்குச் சுட்டு வருவிக்க.
`பிள்ளை` என்பதை முன்னும் கூட்டி, `பிள்ளைத் திங்கள்` என மாற்றியுரைக்க.
புகழை மிகுத் துரைக்கின்றார் ஆதலின், சொற் பொருட் பின்வரு நிலையணி தோன்றப் பல தொடராற் கூறினார்.
எனினும், அடையாள மாலை யாகிய கொன்றையைச் சிறப்பித்தலே இப்பாட்டிற்குக் கருத்தென்க.
`சிவபிரான் பெரு முனிவன்` என்பதை விசுவாதிகோ, ருத்ரோ, மஹருஷி`` 1 என்னும் உபநிடதத் தாலும் அறியலாம்.
`பற்றற்றவன், தவக்கோலம் உடையவன்` என்பது இதற்குக் கருத்து.
``முன்னியாய் நின்ற முதல்வா போற்றி`` 2 என அப்பரும் அருளிச் செய்தார்.
இதன் பின்னும் `உள்ளது` என்னும் எழுவாய் எஞ்சி நின்றது.

பண் :

பாடல் எண் : 40

முனியே முருகலர் கொன்றையி
னாயென்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லாற்
களைகண்மற் றொன்றுமிலேன்
இனியேல் இருந்தவஞ் செய்யேன்
திருந்தவஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம்
ஆர்க்கினிச் சாற்றுவனே.

பொழிப்புரை :

முனிவனே, நறுமணம் கமழ மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, எனக்குச் சாதலைத் தவிர்த்த கனியாய் உள்ளவனே, உனது வீரக் கழல் அணிந்த திருவடிகளைத் தவிர வேறு துணை ஒன்றும் இல்லேன்; (இவ்வுடம்பொடு நிற்றலால்) பெரிய தவத்தைச் செய்ய இயலாமல் ஐம்புலன்களையே நினைந்து தமியேன் படுகின்ற இடர்ப்பாட்டினை யார்க்கு அறிவித்துத் தீர்வு காண்பேன்; இப்பொழுதே என்னை நீ ஏற்றுக்கொள்.

குறிப்புரை :

முதற்கண், `முனியேல்` எனப்பாடம் ஓதுவாரும் உளர்.
``என்னை`` என்பது உருபு மயக்கம்.
அன்றி, `மூப்பொழித்து ஆண்ட` என ஒரு சொல் வருவித்து முடிப்பினும் ஆம்.
கனி, ஔவை உண்ட நெல்லிக் கனி போன்றது.
இப்பாட்டு, பாசப் பற்று அற்றவழியும் வாதனை தாக்குதலைக் கூறியது.

பண் :

பாடல் எண் : 41

சாற்றுவன் கோயில் தலையும்
மனமுந் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்
தாற்றியஞ் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத்
தானென் றெழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின
வேயினிச் சொல்லுவனே.

பொழிப்புரை :

யான் இப்பொழுது அன்பு என்னும் நெய்யைச் சொரிந்து, (அருளாகிய தீயை வளர்த்து) அதில் தலையையும், மனத்தையும் நிறுத்தித் தவம் செய்வேன்; அதனால் அவை யிரண்டையும் `சிவனுடைய கோயில்` என்றே சொல்வேன்.
அழகிய சொல் மாலைகளைச் சிவனுக்கு அணிவிப்பேன்; தோத்திரங்களாய் உள்ளவற்றைச் சொல்லுவேன்; இவ்வாற்றால், `சிவன் என் மனத்தில் தான் உள்ளான்` என்று பலரும் அறியக் கூறுவேன்.

குறிப்புரை :

`தலையும், மனமும் கோயில் எனச் சாற்றுவன் எனவும், `நெய் சொரிந்து இவற்றால் தவம் ஆற்றுவன்` எனவும் இயைக்க.
நெய்சொரிதலாகிய காரணத்தைக் கூறினமையால், தீ வளர்த்தலாகிய காரியம் கொள்ளப்பட்டது.
`என` என்பது எஞ்சி நின்றது.
ஒருகாலை ஊன்றித் தவம் செய்தலேயன்றித் தலைகீழாக நின்று தவம் செய்தலும் உண்டு என்பதை அறிந்து கொள்க.
புறத்து வளர்க்கும் அங்கியிலும், அகத்து வளர்க்கும் அங்கி சிறந்தது என்க.
``சொல் மாலை`` என்றது தாமே இயற்றுவனவற்றையும், ``தோத்திரம்`` என்றது முன்னோர் இயற்றியவற்றையும் என்க.
``மாலையால்`` என்பதை, `மாலையை` எனத் திரிக்க.
இனி - இப்பொழுது.
`தவம் செய்தல், சொல் மாலை அணிவித்தல்,தோத்திரம் சொல்லுதல்.
இவற்றைச் செய்தல் அவ்வாறு செய்பவரது உள்ளத்தில் சிவன் வந்து குடிகொள்ளுதல் உறுதி` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 42

சொல்லா தனகொழு நாவல்ல
சோதியுட் சோதிதன்பேர்
செல்லாச் செவிமரம் தேறித்
தொழாதகை மண் திணிந்த
கல்லாம் நினையா மனம் வணங்
காத்தலை யும்பொறையும்
அல்லா அவயவந் தானும்
மனிதர்க் கசேதனமே.

பொழிப்புரை :

சோதிக்குட் சோதியாய் (ஒளிக்குள் ஒளியாய் - அறிவுக்குள் அறிவாய்) உள்ள சிவபெருமானுடைய பெயரைக் கேளாத செவிகள் செவிகள் அல்ல; ஒலி நுழையாத வன்மையை யுடைய மரங்கள்.
அதனைச் சொல்லாத நாக்கள் நாவல்ல; உழுபடை யின் நாக்கு, அவனைப் பரம்பொருளாகத் தெளிந்து தொழாத கைகள் மண்ணால் செய்து வைக்கப்பட்ட போலிக் கைகள்; மனிதக் கைகள் அல்ல; அவனை நினையாத மனங்கள் மனங்கள் அல்ல; உளியால் போழ்ந்தாலும் போழப்படாத உறுதியான கற்கள்; அவனை வணங் காத தலைகள் தலைகள் அல்ல; பிற உடற் பகுதிகளுக்கு ஏற்றி வைக்கப் பட்ட ஒரு சுமைகள்.
மக்கட்கு அமைந்த பிற உறுப்புக்களும் (கண், கால் முதலியனவும்) அவனுக்குத் தம்மால் ஆகும் பணியைச் செய்யா விடின் மனித உறுப்புக்கள் ஆகா; சடப்பொருட் பகுதிகளே ஆகும்.

குறிப்புரை :

தோத்திரமும், சாத்திரமும் 1 சிவனை, ``சோதியுட் சோதி`` எனக் கூறுதல் இங்கு நினைக்கத் தக்கது.
தான், பன்மை யொருமை மயக்கம்.
இங்குக் கூறியவாறே, கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
(குறள்.
, 9) 2 எனத் திருவள்ளுவரும் கூறினார்.
``வன்பராய் முருடொக்கும் என் சிந்தை; மரக்கண் என் செவி; இரும்பினும் வலிது`` எனவும், ``நெஞ்சம் கல்லாம்; கண்ணிணையும் மரமாம் தீவினை யினேற்கே`` எனவும் போந்த திருவாசகத்தையும் காண்க.
3 ``திணிந்த`` என்ற விதப்பினால் அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.
``மனிதர்க்கு`` என்றதனால், `மனித உடம்பும், அவற்றில் அமைந்த உறுப்புக்களும் சிவன் பணி செய்தற் பொருட்டே தரப்பட்டுள்ளன` என்பது விளங்கும்.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன்.
எனவும் 4 ``வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து`` எனவும், கால்களாற் பயன் என்! கறைக்
கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்
ஆக்கையாற் பயன் என்! - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி யென்னாத
இவ்வாக்கையாற் பயன் என்.
5 எனவும், ஆமாத்தூர் - அம்மானைக் - காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே
ஆமாத்தூர் - அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே
ஆமாத்தூர் - அம்மானைக் கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே
ஆமாத்தூர் - ஆம்மான்எம் வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே
ஆமாத்தூர் - நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.
1 எனவும்,
மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ.
2 எனவும் வருவன பலவும் கண்டுணர்க.

பண் :

பாடல் எண் : 43

தனக்குன்றம் மாவையம் சங்கரன்
தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா
நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யானரு ளாற்புழு
வாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல
கோடொக்க எண்ணுவனே.

பொழிப்புரை :

சிவபெருமானது அருள் வழியன்றிப் பிற வழிகளால் மலைபோலும் நிதியையும், பெரிய உலகம் முழுவதையும், பெற்றாலும் அவைகளை யான் என் மனத்தின் கண் நஞ்சினும் கடைப் பட்டனவாக என்றும் நினைப்பேன்.
கொல்லையில் நிற்கும் கொன்றை மரத்தில் தேனொடு மலரும் பூக்களால் ஆகிய மாலையையணிந்துள்ள சிவபெருமானது அருள் வழிப் புழுவாய்ப் பிறக்கினும் அதனையான் எனக்குத் தேவர்களது பொன்னுலகமே கிடைத்துவிட்டது போல என்று நினைப்பேன்.

குறிப்புரை :

``சங்கரன்றன் அருளாலன்றி`` என்பதனை முதலிற் கொள்க.
``பிறந்திடினும்`` என்னும் எதிர்மறை யும்மையை``, ``பெற்றால்`` என்பதற்கும் கூட்டுக.
``மனக்கு`` என்பது உருபு மயக்கம்.
`மனத்துக்கு` என்பதில் சாரியை தொகுக்கப்பட்டது.
``எனக்கு`` என்பதன்பின் `வாய்த்ததாக` என ஒருசொல் வருவித்து முடிக்க.
திருவருளாலன்றிப் பிற வழியால் வருவன வினையின்றி வருதலால் அசுத்தமும், திருவருள் வழியால் வருவன வினையின்றி வருதலால் சுத்தமும் ஆதல் பற்றி இவ்வாறு எண்ணினார்.
திருவருளால் அன்றி வினையால் மட்டுமே வருவனயாதும் இன்மையின் ``பெற்றாலும்`` என்றும் உம்மையும், திருவருளால் புழுவாய்ப் பிறத்தல் இன்மையின் ``பிறந்திடினும்`` என்னும் உம்மையும் எதிர்மறைப்பொருள.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
(குறள்.
, 755)
எனவும்,
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
(குறள்.
, 657)
எனவும் திருவள்ளுவர் அறம் பற்றிக் கூறியதனை இங்கு ஒப்பு நோக்குக.

பண் :

பாடல் எண் : 44

எண்ணம் இறையே பிழைக்குங்
கொலாமிமை யோரிறைஞ்சும்
தண்ணம் பிறைசடைச் சங்கரன்
சங்கக் குழையன்வந்தென்
உண்ணன் குறைவ தறிந்தும்
ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா திராப்பகல்
எய்கின்ற காமனுக்கே.

பொழிப்புரை :

தேவர் பலராலும் வணங்கப்படும், குளிர்ந்த அழகிய பிறையை அணிந்த சடைமுடியை உடையவனும், சங்கால் ஆகிய குழையை அணிந்தவனும் ஆகிய சிவபெருமான் வந்து என் உள்ளத்தின்கண் நீங்காது இருத்தலை அறிந்திருந்தும் எனது அழகிய நிறத்தை அழித்தற் பொருட்டும் இரவும், பகலும் ஊணோடு உறக்கமும் இன்றித் தன் அம்புகளைத் தொடர்ந்து எய்து கொண்டிருக்கின்ற மன்மதனுக்கு, `யாம் வெல்வோம்` என்னும் எண்ணம் சிறிதாயினும் நீங்காதோ!

குறிப்புரை :

சிவபெருமானைக் கண்ட பின் காமனால் கண்ணும் உறங்காது மெலிகின்றவள் தன் மெலிவை மறைத்துக் காமனைத் தோல்வியுறுபவனாக வைத்து இகழ்ந்தாள்; மக்களிலுள்ள இவள் தோற்பதன்றித் தேவரில் உள்ள காமன் தோற்பது எங்குளது! இதனால் அவட்குப் பெருமிதம் பிறந்ததாயினும், கேட்டார்க்கு நகை பிறந்தது.
நனவினான் நம்நீத்தார் என்பர்; கனவினான்
காணார்கொல் இவ்வூரவர்.
* என்றாற் போல்வனவற்றை இங்கு நினைவு கூர்க.
`இறையேனும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்த லாயிற்று.
கொல், ஐயப்பொருட்டாய், இகழ்ச்சி குறித்து நின்றது.
ஆம், அசை.
``சங்கரன்`` என்பதைச் ``சங்கக் குழையன்`` என்பதன்பின் கூட்டுக.
கவர்தல், இங்குப் போக்குதல்.
போதல், பசலையால், தலைவி சிவனைத் தலைப்பட்டவரும், காமன் பழ அடியார்களும் ஆதல் இதன் உள்ளுறைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 45

காமனை முன்செற்ற தென்றாள்
அவளிவள் காலனென்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற
தென்றுதன் கையெறிந்தாள்
நாம்முனஞ் செற்றதன் றாரையென்
றேற்கிரு வர்க்குமஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அற்றெனக்
கிற்றிலர் அந்தணரே.

பொழிப்புரை :

அழகிய தட்பத்தை (கருணையை) உடையவராகிய சிவபெருமான் முன்னிலையில் ஒரு பெண் `இப்பெருமான் (காமனை எரித்தவன், காலனை உதைத்தவன்) இவ்விரு செயல்களுள் முதலிற் செய்தது காமனை எரித்தது தான்` என்று சொன்னாள்.
அவட்கு எதிராக மற்றொருத்தி, `இல்லைகாலனை உதைத்ததுதான் முதலிற்செய்தது` எனத் தன் கைகளை ஒன்றோடு ஒன்று மோதும் படி அடித்து உறுதி படக் கூறினாள்.
யான் `அச்சம் உண்டாக, அவ்விரு வரில் நீவிர் முற்காலத்தில் முதலில் கொன்றது யாரை` என வினவி னேன்.
பெருமான் அவ்விருவருக்காகவும் அஞ்சி, `எவனை முதலிற் கொன்றது` என ஒன்றைத் திட்டமாக வாய்திறந்து கூறாமல், மௌன மாய் இருந்தார்.
(யான் இவரை, `யாரிடத்தில் அன்புடையவர்` என்று நினைப்பது?)

குறிப்புரை :

`சிவபெருமானது பண்டைச் செயல்கள் பற்றி முன் பின் கால ஆராய்ச்சி செல்லாது` என்பதனை, ஓர் மகளிர் உரையாடலாக வைத்துக் கூறினார்.
``முன்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே`` 1 என்ற அப்பர் திருவாக்கையும் காண்க.
நாம், அச்சப் பொருட் டாய உரிச்சொல் 2 இறைவன் ஒருவர்க்கு மட்டும் உரியன் ஆகாமையும் இங்குக் குறிக்கப்பட்டது.
``அந்தணர்`` என்பது இங்குக் காரணப் பெயராய் நின்றது.

பண் :

பாடல் எண் : 46

அந்தண ராமிவர் ஆரூ
ருறைவதென் றேனதுவே
சந்தணை தோளியென் றார்தலை
யாயசலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவுமுண்
டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமினென்
றேன்துடி கொட்டினரே.

பொழிப்புரை :

துறவிகள் போலப் பிச்சை ஏற்க வந்த இவரைப் பற்றி யான், `இவர் இருக்கும் ஊர் ஆர் ஊர்` (யார் இருக்கும் ஊர்) என்று பிறரை வினாவினேன்; இவர் தாமே முன் வந்து, `சாந்து பூசிய தோளை உடையவளே, நீ வினாவாகச் சொல்லிய அந்த ஊர்தான் (ஆரூர்தான்) நாம் இருக்கும் ஊர்` என்றார்.
பின்பு யான் இவர் முதலில் வைத்து எண்ணத் தக்க `சலவர்` (வஞ்சனைக்காரர்) என்றேன்.
அதற்கு அவர், `பந்து ஏந்தும் கையை உடையவளே, நீ இரண்டாவதாகச் சொன்னதும் உண்மைதான்` (சலத்தை - நீரை - கங்கையைத் தாங்கினவர்) என்றார்.
இப்படி அவர் நகையாடிக் கூறினமையால் `அவர் என்னைக் காதலிக்கின்றார்` என்று கருதி, யான், `மார்பில் கொத்துக் கொத்தாகப் பல மாலையை அணிந்துள்ளவரே, உமை அறிய உம்மை நான் - இன்னார் - என்று நன்கு அறியும்படி சொல்லுவீர்` என்று கேட்டேன்.
அவர் சொல் ஒன்றும் சொல்லாமல் கையில் இருந்த உடுக்கையை அடித்தார்.
(என்னை அவர் பக்கத்தில் உள்ள உமாதேவி பார்த்துத் தெரிந்து கொள்ளும்படிச் செய்தார்.)

குறிப்புரை :

`இவர் மிகவும் வல்லாளர்` என்பது குறிப்பெச்சம்.
`திருவாரூரை இடமாகக் கொண்டிருப்பவரும்.
உலகம் அழியா திருத்தற் பொருட்டுக் கங்கையைச் சடையில் தாங்கியவரும் ஆகிய சிவபெருமான் தம்மை அடைய விரும்புவோர்க்குத் தமது அருளாகிய கையைக் கொடுத்துக் காப்பார்` என்பது குறிப்புப் பொருள்.
``அந்தணர்`` என்பது இங்கு, ``அறவோரை`` * (துறவிகளை)க் குறித்தது.

பண் :

பாடல் எண் : 47

கொட்டும் சிலபல சூழநின்
ரார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும்
பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வருமருஞ் சாரணை
செல்லும் மலர்தயங்கும்
புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக்
காட்டான் பூதங்களே.

பொழிப்புரை :

மலர்கள் விளங்குகின்றனவும், பறவைகள் வாழ் வனவும் ஆகிய பெரிய சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் எழுந் தருளியுள்ள இறைவனது படையாகிய பூதங்களுட் சில (அச்சமும், துன்பமும் இன்றிக் களித்திருத்தலால்) கைகளையும், பறைகளையும் கொட்டும்.
பல சிவபெருமானைச் சூழ்ந்து நின்று ஆரவாரிக்கும்; மற்றும் சில குப்புற வீழ்ந்தும் எழுந்தும் கூத்தாடும்; பல பல விளையாட்டுக்களைச் செய்யும்; பல பாட்டுக்களைப் பாடும்; சிரிக்கும்; ஒன்றை ஒன்று அச்சுறுத்தும்; வட்டமாக ஓடி வரும்; அணி வகுத்துச் செல்லும்.

குறிப்புரை :

`சிவபெருமானுக்கு ஆட்பட்டவர் கட்கு எந்த வகையான அச்சமோ துன்பமோ, கவலையோ இல்லை, ``இன்பமே எந் நாளும்`` 1 என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
அச்சமிலர், பாவமிலர், கேடு மிலர், அடியார் நிச்சம்உறு நோயு மிலர், பச்சமுடை யடிகள் திருப் பாதம்பணி வாரே.
2 என்றது காண்க.
கிரீடித்தல் - விளையாடுதல்.

பண் :

பாடல் எண் : 48

பூதப் படையுடைப் புண்ணிய
ரேபுறஞ்சொற்கள் நும்மேல்
ஏதப் படவெழு கின்றன
வாலிளை யாளொடும்மைக்
காதற் படுப்பான் கணைதொட்ட
காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம்
நீரிறை செப்புமினே.

பொழிப்புரை :

பூதங்களையே படைகளாகக் கொண்டுள்ள புண்ணிய சொரூபரே, உம்மைப் பற்றிப் புறங் கூற்றுக்கள் நீர் குற்றப் படும்படி பலவாய் எழுகின்றன.
(அவற்றை நீர் அறிவீரோ, அறியீரோ! அவற்றுள் தலையாயது) இளையாள் ஒருத்தியின் காதலில் உம்மை அகப்படுத்தற்குத் தனது கணையாகிய மலரை எய்த மன்மதனை நீர் உமது கண்ணாகிய மலரால் அழிவுபடுத்தியது.
`அஃது ஏன்` என்ப தற்கு நீர் விடை கூறுவீர்.

குறிப்புரை :

புறங் கூற்றுக்களாவன தன் கடமையைச் செய்ய வந்த காலனைக் காலால் உதைத்தது, முப்புரத்தவரை அழித்தது; தாருகாவன முனிவரது மனைவியரின் கற்பை நிலைகுலையச் செய்தது முதலி யவை பற்றியன.
`இன்னோரன்னவற்றை நும் எதிரில் கூற மாட்டாது பலர் புறங் கூறுகின்றார்கள்` என்றபடி.
`மன்மதன் செய்தது, தனிய ராய் இருந்த உம்மை இல்வாழ்க்கையர் ஆக்குவிக்க முயன்றதே.
அவனை அழிவு செய்தமை தகுமோ` என்பதாம்.
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை இகழ்வதே கண்டீர் *
என அருளிச்செய்ததே என்பது கருத்து.
ஆல் அசை.
இறை - விடை.
``காரணம்`` என்பதன்பின் `என்` என்பது எஞ்சிநின்றது.

பண் :

பாடல் எண் : 49

செப்பன கொங்கைக்குத் தேமலர்க்
கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனற்
கங்கைவைத் தான்மனத்துக்
கொப்பன இல்லா ஒளிகிளர்
உன்மத் தமும்அமைத்தான்
அப்பனை அம்மனை நீயென்
பெறாதுநின் றார்க்கின்றதே.

பொழிப்புரை :

எல்லோரும் தங்கட்கு `அப்பன்` என்றும், `அம்மை` என்றும் சொல்லிப் போற்றுகின்ற இறைவன், கிண்ணம் போலும் தனங்களையுடைய நின்மகளுடைய தனங்களுக்குத் தான் அணிந்துள்ள கொன்றைப் பூவின் நிறத்தைக் கொடுத்தான் (தனிமை யால் உண்டாகும் பசப்பூரச் செய்தான்.
) மை தீட்டப்பட்ட சிறந்த கண்ணிற்குத் தான் தரித்துள்ள, ஒழுகுகின்ற கங்கை நீரைக் கொடுத்தான் (கண்ணீர்விட்டு அழச் செய்தான்) மனத்துக்குத் தான் அணிந்துள்ள, ஒப்பில்லாத, அழகுமிக்க ஊமத்தம் பூவைக் கொடுத்தான்.
(பித்தம் பிடிக்கச் செய்தான்) இதையறியாது, `இவள் ஏதோ தெய்வந் தீண்டப்பட்டாள்` என்று அதற்குப் பூசை போடுகின்றாயே!

குறிப்புரை :

இது வெறியெடுத்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது.
ஞானியரை உலகர் ஏதோ மனநோய் உள்ளவராகக் கருதி அது தீரத் தெய்வங்களை வேண்டுதல் முதலியன செய்தலும், அவர்க்கு அறிவர் அறிவுறுத்தலும் இதன் உள்ளுறை.
புரை - உயர்வு.
`ஊமத்தம் பூவைத் தலையில் சூடிக்கொண்டால் பித்தம் பிடிக்கும்` என்பது உலக வழக்கு.
``அப்பனை`` என்பதனோடு இயைய, ``அம்மனை`` என்பதிலும் இரண்டன் உருபு விரிக்க.
பெறுதல், இங்கு வரைவு உடன் படுதல்.

பண் :

பாடல் எண் : 50

ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவுமெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.

பொழிப்புரை :

கார் காலத்தில் பூக்கின்ற கொன்றைப் பூவினா லாகிய மாலையைத் தனது அடையாள மாலையாகக் கொண்ட சிவ பெருமானிடத்தில் நீர் - நெருப்பு, திங்கள் - ஐந்து தலைப் பாம்பு, யோக நிலை - இல்லாள், உருவம் - அருவம், புலி - மான், பகல் - இரவு இவ்வாறு எல்லாம் ஒன்றுக்கொன்று பகையாய பொருள்கள்.
அப்பகை நீங்கி நட்புக் கொண்டு உடன் கலந்து வாழ்கின்றன.

குறிப்புரை :

`இஃது அதிசயம்` என்பது குறிப்பெச்சம்.
ஆர்க்கின்ற- ஒலிக்கின்ற.
ஓர்க்கின்ற - தியானிக்கின்ற.
யோகு - யோகம்.
அஃது ஆகுபெயராய்.
அந்நிலையைக் குறித்தது.
`யோகம் துறவிகட்கு உரித்து` என்பது பெரும்பான்மை.
உரு - உருவத் திருமேனி.
அரு - அருவத் திருமேனி.
- முழுமையாக அமைந்த புலித்தோல் உயிருடைய புலி பார்ப்பது போலத் தோன்றுதலின் ``பார்க்கின்ற வேங்கை`` என்றார்.
`அதைக் கண்டு மான் அஞ்சவில்லை`` என்றபடி.
மான் விலங்காதலுடன் மறி (கன்று) ஆதலின், `உயிரில்லது` என அறியும் அறிவில்லதாம்.
பகல் வலக் கண்ணாகிய சூரியனாலும், இரவு இடக்கண்ணாகிய சந்திரனாலும் உளவாகின்றன.
`சிவபெருமானைச் சேர்ந்தவர்க்கு நடுவு நிலையே உளதாவதன்றி, உறவு பகைகள் உளவாவன அல்ல` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
``யோகும், உமையும்`` - என்றதனை,
ஒன்றொடொன்று றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு நின்றலால் உலகம் நீங்கி நின்றனன்.
எனவும், உருவும், அருவும்`` என்றதனை, பந்தமும் வீடும் ஆய/# பதபதார்த் தங்கள் அல்லான்;
அந்தமும், ஆதி யில்லான்/# அளப்பிலன் ஆதலாலே
எந்தைதான் `இன்னன்` எ/#ன்றும், `இன்னதாம், இன்ன தாகி
வந்திடான்` என்றும் சொல்ல/# வழக்கொடு மாற்றம் இன்றே.
1 எனவும் சிவஞான சித்தி நூல் விளக்குதல் காண்க.
`சிவபிரான் அணி யும் கொன்றை கார்க் கொன்றையே` என்பதை ``கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் - வண்ண மார்பில் தாரும் கொன்றை`` 2 ``கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் - தாரன், மாலையன், மிலைந்த கண்ணியன்`` 3 என்பவற்றானும் அறிக.

பண் :

பாடல் எண் : 51

கலந்தனக் கென்பலர் கட்டவிழ்
வார்கொன்றை கச்சரவார்
சலந்தனக் கண்ணிய கானகம்
ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன்
ஆகிய நீலகண்டத்து
அலந்தலைக் கென்னே அலந்தலை
யாகி அழிகின்றதே.

பொழிப்புரை :

இவளால் காதலிக்கப்பட்டவனுக்கு அணிகலம் ஆவன எலும்புகளே; அணியும் பூக்களாவன அரும்பவிழ்ந்த கொன்றைப் பூக்களே.
(இவை சூடும் மலர் அல்ல.
) அரைக்கச்சாவது பாம்பு.
அவனோ நீர் இல்லாமல் நீருக்கு அருகில் வெம்மை பொருந்திய காட்டில் (ஈமத்தில்) ஆடுபவன்.
ஆகவே, அவன் ஒரு சாண் அளவினதான இடமும் `தன்னுடையது` என்று இல்லாத அகதி, கழுத்தில் கறையுடை யனாய் எங்கும் திரிகின்ற அவனை நினைந்து இவள் மனம் அலைதல் என்னோ!

குறிப்புரை :

இது, தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது.
ஞானிகளது நிலைமை யறியாமல் உலகர் அவர் பொருட்டு இரங்குதல் இதன் உள்ளுறை.
``ஆடி`` என்றது பெயர்.
அலந்தலை - அலமரல்.
அது முன்னர் ஆகுபெயராய் அதனை உடையவனைக் குறித்தது.
`இவள் அழிகின்றது என்னே` எனத் தோன்றா எழுவாய் வரு வித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 52

அழிகின்ற தாருயிர் ஆகின்ற
தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த
முலைமேற் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது
வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்னினி நான்மறை
முக்கண் முறைவனுக்கே.

பொழிப்புரை :

நான்கு மறைகளையும் அருளிச் செய்த,மூன்று கண்களையுடைய அறவோன் பொருட்டு எனது அரிய உயிர் போய்க் கொண்டிருக்கின்றது.
அதுபோவதற்கு முன்னே மனக் கவலை உண்டா கின்றது; மயக்கம் ஒருகாலைக் கொருகால் மிகுகின்றது; சங்க வளையல்கள் கழன்று வீழ்கின்றன; இறுமாந்திருந்த கொங்கைகளின் மேல் பீர்க்கம்பூப் போலும் பசலைகள் வெளிப்பட்டுக் கிடந்தன; கண்கள் நீரைப் பொழிகின்றன; வாய் புலர்ந்து விட்டது; மேகலைகள் போயே விட்டன.
எனக்காக அவரிடம் தூது சென்று வந்தவர்கள் என்ன சொல்கின்றனரோ!

குறிப்புரை :

`அவர்களது வாய்ச்சொல்லைப் பொறுத்துள்ளது என் உயிரின் நிலைமை` என்பது குறிப்பெச்சம்.
இது தூது சென்றார் வந்ததையறிந்து தலைவி அவர்சொல்லைக் கேட்க விதுப்புற்றுக் கூறியது.
தூதுவிடக் கருதுதலோடு ஒழியாமல், தூதுவிட்டே நின்றமையால், இது, ``மிக்க காமத்து மிடல்`` * என்னும் பெருந்திணை.
`நன்மைகள் பலவற்றை எய்தாது கழிகின்றது` என்னும் கருத்தால் தலைவி தனது உயிரை ``ஆருயிர்`` என்றாள்.
மால் - மயக்கம்.
பீர் - பீர்க்கு.
அஃது இருமடியாகுபெயராய் முன்னர் அதன் பூவையும், பின்னர் அப்பூப்போலும் பசலையையும் குறித்தது.
மணிக்கோவைகளின் பன்மை பற்றி மேகலை பலவாகச் சொல்லப்பட்டது.
மேகலையை, `கலை` என்றது தலைக் குறை, தீவிரதர பக்குவத்தில் அடியவர் வாய்மொழிகளை நோக்கியிருத்தல் இதன் உள்ளுறை.
`இறைவன், துறைவன், துணைவன்` - முதலியன போல, `முறைவன்` வகர இடைநிலை பெற்ற பெயர்.
இருந்த - கிடந்தன, நான்மறை - முக்கண் இவை முரண்தொடை; விரோத அணி.

பண் :

பாடல் எண் : 53

முறைவனை மூப்புக்கும் நான்மறைக்
கும்முதல் ஏழ்கடலந்
துறைவனைச் சூழ்கயி லாயச்
சிலம்பனைத் தொன்மைகுன்றா
இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர்
சித்தந் தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம்பின்னை
என்சொல்லி ஓதுவதே.

பொழிப்புரை :

அறத்தின் வடிவானவனும், காலப் பழமைக்கும், நான்கு வேதங்கட்கும் முதலாய், ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவு களிலும் வழிபடப்படுபவனும், ஞானியர் சூழ்ந்துள்ள கயிலாய மலை யில் இருப்பவனும், தனது அனாதி நிலையினின்றும் என்றும் குறைவு படாத கடவுளும், எட்டுக் குணங்களையே ஐசுவரியமாக உடைய வனும், தன்னைத் துதித்தவர்களது உள்ளத்திலே என்றும் உறை பவனும் பாம்புகளையே அணிகலமாக அணிந்தவனும் ஆகிய சிவ பெருமானை யாம் இவ்வளவிலன்றி, வேறு எவற்றைச் சொல்லி ஓயாது துதிப்பது?

குறிப்புரை :

`சிவனது அளவிறந்த புகழ்களில் நாம் அறிந்தன மிகச் சிலவே` என்பது கருத்து.
``முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்``* ஆதலை, `மூப்புக்கு முதல்` என்றார்.
முதல் - முதல்வன்; ஆகுபெயர்.
``முதல்`` என்பதில் தொகுக்கப்பட்ட `ஆய்` என்னும் வினையெச்சம்.
``துறைவன்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது.
உலக முழுவதிலும் உள்ளாரால் வழிபடப்படுதல் பற்றி, ``ஏழ்கடல் துறைவன்`` என்றார்.
சூழ்தலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது.
தொன்மை - அனாதி.
அஃதே இயற்கையாதலை அறிக.
எண் குணங்களாவன.
1.
தன்வயம்.
2.
தூய உடம்பு.
3.
இயற்கையுணர்வு 4.
முற்றுணர்வு, 5.
இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்றல் 6.
முடிவில் ஆற்றல், 7.
பேரருள், 8.
வரம்பில் இன்பம் - என்பன.
* இவையே கடவுட் குணங்கள் ஆதலை ஓர்ந்துணர்க.
தம், சாரியை.
இன் சாரியை நீக்கித் தம் சாரியை கொடுத்தார்.
``பின்னை`` என்பது `மற்று` என்னும் பொருட்டு.
``ஓதுதல்`` என்பது இங்கு இடைவிடாது துதித்தலின் மேற்று.

பண் :

பாடல் எண் : 54

ஓதவன் நாமம் உரையவன்
பல்குணம் உன்னைவிட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன்
வாழ்க்கை திருந்தச்சென்று
மாதவ மாகிடு மாதவ
மாளவர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண்
டொழியினி ஆரணங்கே.

பொழிப்புரை :

அரிய தெய்வப்பெண் போன்றவளே, உன்னை நான் இப்பொழுது பெரிய தவக்கோலமாய் வளர்கின்ற புல்லிய சடையை உடைய சிவபெருமான்பால் அனுப்புகின்றேன்; நீ அவ னிடம் சென்று, அவனுடைய பெயர்கள் பலவற்றையும் சொல்; அவ னுடைய இறைமைக் குணங்கள் பலவற்றையும் எடுத்துப் பேசு; அவன் எங்குச் சென்றாலும் அவனைவிடாது அவன் பின்னே செல்; சென்று, அவனது வாழ்க்கைக்கு ஏற்ப உன்னைத் திருத்திக்கொண்டு அவனுக்குப் பொருந்தியவளாய் இரு.
(மற்றும் அவன் மனம் இரங்க வேண்டிப்) பெரிய தவத்தைச் செய்.
(இவ்வளவும் செய்தால் அவன் ஏதாவது ஒரு முடிவைக் கூறாமல் இருக்க மாட்டான்.) அவன் என்ன முடிவைச் சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு வந்துவிடு.

குறிப்புரை :

இது சிவபெருமானிடம் தூது விடுப்பவள் சொல்லியது.
`சிவபெருமான் பேரிரக்க குணம் உள்ளவன்` என்பதும், `அவனைப் பலபடியாலும் வழிபட்டால் அவன் இரங்கா தொழியான்` என்பது அவரது நம்பிக்கை.
நல்கா தொழியான் நமக்கென்றுன்/# நாமம் பரவி நயனம்நீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா/# வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்/# பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி/# யருளாய் என்னை உடையானே.
1 என்றாற் போலும் திருவாக்குகளைக் காண்க.
``மாதவம்`` இரண்டில் பின்னது ஆகுபெயராய்த் தவக்கோலத்தைக் குறித்தது.
``தவம் மறைந்து அல்லவை செய்தல்`` 2 என்பதிற் போல.
`வாழ்க்கையோடு`` என்னும் மூன்றன் உருபு தொகுத்தலாயிற்று.
`புன் சடையானாகிய அவன்` என்க.

பண் :

பாடல் எண் : 55

ஆரணங் கின்முகம் ஐங்கணை
யானகம் அவ்வகத்தில்
தோரணந் தோள்அவன் தேரகல்
அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலையிவை
காணப் புரிசடையெம்
காரணன் தாள்தொழும் அன்போ
பகையோ கருதியதே.

பொழிப்புரை :

அரிய தெய்வப்பெண் போன்றவளாகிய இவளது முகம் மிக அழகிதாய் இருத்தலின் மன்மதன் வாழும் இல்லமாகின்றது; இவளது தோள்கள் தூங்கியசைதலால் அவ்இல்லத்தில் தூக்கப் பட்டுள்ள தோரணங்களாகின்றன.
அகன்ற அல்குல் மன்மதன் ஊரும் தேர் ஆகின்றது.
தனங்கள் பழைய மரபின்படி ஏந்தி வரும் பூரண கும்பங்களாகின்றன.
இவையெல்லாம் பலர்க்கும் தெரிய இவள் வந்து எங்கள் சிவபெருமானது திருவடிகளை வணங்குகின்றாள்.
ஆயினும் (இவள் மன்மதனது படைகளுள் ஒருத்தி யாதலின் இவள்) சிவபெரு மானை (மன்மதனையும் மறந்து) காதலித்து வரவேற்று வரவேற்று வணங்குகின்றாளா? இல்லை; பகைமை காரணமாக வெறும் நடிப்பாக வரவேற்று வணங்குகின்றாளா? இவள் மனத்தில் உள்ளது என்ன?

குறிப்புரை :

சிவபெருமான் வீதியுலா வரும்பொழுது வரவேற்று வணங்குகின்ற பலருள் காதல் பொங்க அவ்வாறு வணங்குவாள் ஒருத்தியைக் கண்டோர் ஐயுற்றுக் கூறியது.
அவனது பேரழகும், முகக் குறிப்பும் அவர்களது ஐயத்திற்குக் காரணம்.
மெய்யன்பர்களது உண்மையன்பின் பெருமையை அறியாது உலகர் அவர்களையும் தம்முட் சிலராக வைத்துக் குறைத்து எண்ணுதல் இதன் உள்ளுறை.
அனைத்து அழகிலும் முகத்தழகே தலையாயது ஆதலின் அதனை யுடைய முகமே மன்மதனது இல்லமாகச் சொல்லப்பட்டது.
ஏனைய வெளி.
உவமைகள் சுட்டிக் கூறா உவமமாய் நின்றமையின் பொதுத் தன்மைகள் விரித்துரைக்கப்பட்டன.
காரணன் - முதல்வன்.
தொழும்.
`செய்யும்` என்னும் முற்று.

பண் :

பாடல் எண் : 56

கருதிய தொன்றில்லை ஆயினுங்
கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்உள ளாகவொட்
டாதொடுங் காரொடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன்
பொங்கிளங் கொன்றையின்னே
தருதிர்நன் றாயிடும் தாரா
விடிற்கொல்லுந் தாழிருளே.

பொழிப்புரை :

ஊரவரே, நீவிர் ஆற்ற வேண்டிய கடமையாகக் கொண்டது யாதொன்றும் இல்லையாயினும், யான் சொல்வதைக் கேட்டருளுங்கள்.
இன்று வர இருக்கும் இருட்பொழுது இந்த அழகி இனி ஒரு நாளாயினும் வாழ விடாது.
ஆகையால் (நீவிர் அருள் கூர்ந்து) பகையாகிய அசுரர் பலர் அழியும்படி போர் செய்த திருமாலை இடப ஊர்தியாக உடைய புண்ணிய சொரூபனாகிய சிவபெருமான் அணிந்துள்ள அழகு மிக்க, அன்றலர்ந்த கொன்றைப் பூமாலையை இப்பொழுதே சென்று அவனிடம் விண்ணப்பித்து வாங்கி வந்து தாருங்கள்; எல்லோருக்கும் நல்லாதாயிடும்.
தாராது விடிலோ, இருட்பொழுது இவளை இன்று கொன்றுவிடும்.

குறிப்புரை :

இது, தலைவி ஆற்றாமை மிகுவது கண்டு தோழி அயலாரிடம் இரங்கிக் கூறியது.
நாணழிந்து அயலார் அறியக் கூறினமையின் இது பெருந்திணைப்பாலது.
தாழ் இருள் - இனித் தங்க வரும் இருள்; எதிர்கால வினைத்தொகை.
இருள் ஆகுபெயராய் அது வருவதற்குரிய காலத்தைக் குறித்தது.
தீவிரதர பத்தியால் சிவனை அடைய விரையும் அன்பரது நிலையை அறிந்து அவரோடு உடன் உறைபவர் அவ்வன்பரது நிலைமையை அடியார்கள் அறியக் கூறுதல் இதன் உள்ளுறை.
`தலைவன் தான் அணிந்திருக்கும் மாலையைக் கழற்றி ஒருத்தி அணிந்து கொள்ள இசைந்து தருவானாயின், அவன் அவளைக் கைவிடாது தன் துணைவியாகக் கொள்ளல் வேண்டும்` என்பது அறநெறி.
அதனால் துயர் கூருந் தலைவியரை ஆற்றுவிக்கத் தலைவன் அணிந்திருக்கும் மாலையை இரத்தல் அகப்பாட்டுக்களுள் சொல்லப்படுகின்றது.
காரிகை - அழகு.
ஒடுங்கார் - பகைவர்.

பண் :

பாடல் எண் : 57

இருளார் மிடற்றால் இராப்பகல்
தன்னால் வரைமரையால்
பொருளால் கமழ்கொன்றை யால்முல்லை
புற்றர வாடுதலால்
தெருளார் மதிவிசும் பால்பௌவந்
தெண்புனல் தாங்குதலால்
அருளாற் பலபல வண்ணமு
மாஅரன் ஆயினனே.

பொழிப்புரை :

சிவபெருமான் கறுத்த கண்டத்தையுடைமையால் இரவாய் இருக்கின்றான்; தனது திருமேனி ஒளியால் பகலாய் இருக்கின்றான்; மானைக் கொண்டிருத்தலால் குறிஞ்சி நிலமாய் இருக்கின்றான்; அடையாளமாகப் பொருந்திய, மணங்கமழும் கொன்றையை அணிந்திருப்பதால் முல்லை நிலமாய் இருக்கின்றான்; பாம்புகள் இயங்கப் பெறுதலால் புற்றாய் இருக்கின்றான்; ஒளி பொருந்திய சந்திரன் தவழப் பெறுதலால் ஆகாயமாய் இருக்கின்றான்; தெளிவாகிய நீரைத் தாங்குதலால் கடலாய் இருக்கின்றான்.
இவ்வாறு அருள் காரணமாக அவன் பலப்பல பொருள் வடிவாய்க் காட்சியளிக்கின்றான்.

குறிப்புரை :

``தன்`` என்பது ஆகுபெயராய்த் தனது உடம்பைக் குறித் தது.
மரை - மான்.
`மதியால்` என்னும் மூன்றன் உருபு தொகுத்தலா யிற்று.
``விசும்பால்`` என்னும் ஆல், அசை.
சிவபிரானது தோற்றத்தை வியந்து கூறி `இத்தனைக்கும் காரணம் அவனது அருள்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 58

ஆயின அந்தணர் வாய்மை
அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு
மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத்
திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்கன்பு
பட்டவெம் ஆயிழைக்கே.

பொழிப்புரை :

மன்மதனது கையில் உள்ள படைக்கலத்திற்கு (கணைகளுக்கு) அவைகளைச் செயற்படாதபடி கட்டி வைக்கின்ற கயிறுபோலத் தோன்றுகின்ற பல சடைகளையுடைய எம்பெரு மானார்க்கு அன்பு செய்த எங்கள் மகளுக்கு இடையில் உடுத்துள்ள உடையும், கையில் அணிந்துள்ள வளையல்களும் அவளை விட்டு நீங்கிப் போய்விட்டன.
வாள் போன்ற கண்களில் தீட்டப்பட்டுள்ள மையோடு வீழ்கின்ற கண்ணீர்த் துளிகள் மார்பிடையே தாரையாய்ப் பாய்கின்றன.
ஆகவே, அறவோர் கூறும் மெய்ம்மொழி இவள்பால் மெய்யாகிவிட்டது.

குறிப்புரை :

அம்மொழியாவது `பற்றற்றான் பற்றினைப் பற்றினால் மற்றைய எல்லாப்
பற்றுக்களும் அற்றுவிடும்` என்பது
பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றிஅப்
பற்றை அறுப்பர்என் றுந்தீபற
என்னும் திருவுந்தியாரையும் காண்க.
வேள் - மன்மதன்.
கர பத்திரம்- கை வாள்.
அது பொதுவே `படைக்கலம்` என்னும் பொருட்டாய்க் கணையைக் குறித்தது.
மன்மதனது குறும்பு சடையையுடைய யோகிகள்பால் செல்லாமை பற்றிச் சிவபெருமானது சடைகளை அவனது கணைகளைக் கட்டிப் போடுகின்ற கயிறாக உவமித்தார்.
``வேங்கைக் கர பத்திரத்துக்கு`` என்பது முதலாகத் தொடங்கி, `அந்தணர் வாய்மை ஆயின` என மாற்றி, இறுதியில் வைத்து உரைக்க ``அந்தணர்`` என்றது அறவோரை.
`வாய்மை` என முன்னர் வந்தமை யால் பின்னும் அதனைக் கூறாது வாளா ``ஆயின`` என்றாள்.
இது காதலால் நலிகின்ற தன் மகளது நிலைமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது ஆகலின், அந்தணர் வாய்மையைப் புகழ்ந்தது வஞ்சப் புகழ்ச்சியாம்.
எனினும் அடியவர் நோக்கில் உண்மையே உள்ளுறைப் பொருளில் செவிலி, உலகர்.

பண் :

பாடல் எண் : 59

இழையார் வனமுலை வீங்கி
இடையிறு கின்றதுஇற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க
என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக்
கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக்
கயற்கண்கள் கூடியவே.

பொழிப்புரை :

மூங்கில்கள் நிறைந்துள்ள `திருக்கழுக் குன்றம்`` - என்னும் மலைமேல் வாழ்கின்றவனும், வரையறைப் படாதவனும் ஆகிய சிவபெருமானை இவள் காதலித்தாள்; அஃது எங்ஙனமெனின், இவளது அழகிய கண்கள் குழை பொருந்திய காதுகளுடன் சென்று சேர்ந்தன.
(நன்றாகத் தன் கண்களை உருட்டி இவள் சிவபெருமானை நோக்கினாள்` - என்றபடி) அதனால் அணிகள் நிறைந்த, அழகிய இவளது கொங்கைகள் மிகவும் பூரித்தலால் இவளுடைய இடை கொங்கைகளைச் சுமக்க மாட்டாது ஒடிந்து கொண்டிருக்கின்றது.
அஃது அறவே ஒடிந்துவிட்டால், இவள் பிழைக்க மாட்டாள் (என்பதைச் சொல்ல வேண்டுமோ! காதலால் இவள் உடம்பு பூரித்தலை, `நமக்குக் கட்டுப்பட்டு அடங்குவதாக` என நாம் சொல்வது வெறும் பேச்சே.

குறிப்புரை :

`அதனால் நாம் சிவபெருமானிடம் சென்று முறையிட்டுக் கொள்வதே வழி` என்பது குறிப்பெச்சம்.
இதுவும் மேற்கூறிய துறையே.
திரிபின்றி உறைத்த பத்தியுடையவரது நிலைமையை உணரும் பொழுது உலகவர் தம் செயல் அற்று அவர்வழி நிற்றல் இதன் உள்ளுறை.
கண்ணப்பர் அடைந்த நிலைமைக்கு முதலில் வருந்தித் தெரிவிக்க முயன்ற தந்தை நாகனும், பிற வேடர்களும் பின்னர்ச் செயலற்றுத் திரும்பினமை இதற்கு எடுத்துக்காட்டாகும்.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
அகண்டனை, `கண்டன்` என்றது தலைக்குறை.
``காதலித்தாள்`` என்பதன் பின், `எங்ஙனம் எனின்` என்பது வருவிக்க.
`கண்கள் செவியொடு கூடின` என்றது நன்றாகப் பார்த்தமையைக் குறிப்பால் உணர்த்தியது.
வீங்கி - வீங்குதலால்.
``பிழையாள்`` என்பதன் பின் இசையெச்சம் வருவிக்கப்பட்டது.
கொல், ஆம் அசைகள்.

பண் :

பாடல் எண் : 60

கூடிய தன்னிடத் தானுமை
யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்து
கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடிய நீறுசெஞ் சாந்திவை
யாமெம் அயனெனவே.

பொழிப்புரை :

உமையவளை விரும்பிக் கூடிய தன் திருமேனியில் அவளை இடப்பாகத்தில் உடையவனைத் திருவையாற்றுத் தலத்தில் சென்று, `இவன் பாடியன நான்கு வேதங்கள், வெகுண்டு கொன்றது கூற்றுவனை; எங்கும் செல்வனவாகிய கோட்டைகளை எரித்துப் பூசிக்கொண்ட சாம்பலே இவனுக்கு நல்ல சந்தனம்; ஆகலின் இவன் எங்கள் சிவபெருமானே` என அடையாளம் கண்டு, `நெருப்பினது நிறம் இவன் தலையிலே உள்ள பல சடைகளிலும் உள்ளது` எனச்சொல்லி வணங்குங்கள்.

குறிப்புரை :

`வணங்கினால் பயன் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம்.
``இடத்தான்`` என இரண்டில் முன்னது, ஏழாவதன் பொருளில் வந்த மூன்றன் உருபை ஏற்ற பெயர்.
அம்மூன்றன் உருபு, பின் வந்த, ``இடித்தான்`` என்னும் குறிப்பு வினையொடு முடிந்தது.
இடத்தான் - இடப்பாகத்திலே உடையவன்.
`ஐயாற்றின் கண்`- என உருபு விரிக்க.
`ஈண்டிய என்பது இடைக்குறைந்து, ``ஈடிய`` என வந்தது.
ஈண்டுதல் - நெருங்குதல்.
பின் இரண்டு அடிகள் அடையாளம் காட்டின.
ஆம் - இவன்பால் உள்ளன.
இதன்பின் `ஆகலின், இவன்` எனவும், ``எம் அயன்`` என்பதன்பின் `கண்டு` எனவும் வேண்டும் சொற்கள் வருவித்து, `எரி வண்ணம் சடை மேற்று எனப் பணிமின்`` என முடிக்க.
ஐயன், `அயன்` எனப் போலியாய் வந்தது.

பண் :

பாடல் எண் : 61

அயமே பலியிங்கு மாடுள
தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி
ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர்
போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம
மாவும்மை நாணுதுமே.

பொழிப்புரை :

தாணுவே, (தலைவரே) நீர் இனிய வார்த்தை களையே பேசிய போதிலும், உமது கோலம் திகம்பரமாய் (நிருவாண மாய்) உள்ளது.
அதனால் உம்மைக் காண நாங்கள் வெட்கப்படுகின் றோம்.
அதனால், உம்முடைய வயிற்றுக்கு இட வேண்டுவது போல இங்கு நீர் பிச்சை ஏற்க வந்த செயலும் ஐயத்திற்கு உரியதே.
`பிச்சையிடு மின்; இட்டால் உங்கட்குப் புண்ணியம்` என்பனபோல், `நீவிர் சொல்லும் சொற்களும் உண்மைதாமோ` என ஐயுறவேண்டியுள்ளது.
இவைகிடக்க, நீர் ஏறிவந்திருக்கின்ற, பசுக்களுக்கெல்லாம் தலையாய எருது எங்களைப் பாய வருகின்றது.
ஆகவே, தங்கள் தோள்களின் மேல் நீர் பொருந்த இசைகின்ற மகளிர்தாம் உண்மையில் புண்ணியம் செய்பவராவர் (பிச்சையிடுவோர் புண்ணியரல்லர்) இப்படி நீர் பிச்சையெடுப்பது தீதாகும்.
இவ்விடத்தை விட்டுப் போய்விடுங்கள்.

குறிப்புரை :

இது, பிச்சைக் கோலத்தவராய்ச் சென்ற பெருமானைக் கண்டு காதலித்த மடவார் கூற்று, உண்மையில் அவரைக் கண்டு அவர்கள் நாணமும், வெறுப்பும் கொண்டவராயின் பொருக்கென இல்லத்துக்குள் போய்விட வேண்டியவர் தாமே? அதை விடுத்துப் பல வார்த்தைகளை விரிப்பது ஏன்?
`தாணு` என்பது விளி.
அது பன்மையொருமை மயக்கமாய் நின்றது.
குக்கி (குட்சி) = வயிறு.
`குச்சிக்கு இட இங்குப் போந்த பலி (ஏற்றல் செயல்) ஐயமே` என்க.
ஐயம், ``அயம்`` எனப் போலி யாயிற்று.
`மாடு உளஏறு, பசுபதியாம் ஏறு` எனத் தனி இயைக்க.
மாடு- பக்கம்.
`உம் பக்கம்` என்றபடி.
பயமே - பொருள் உடையனதாமோ? (உண்மையோ` - என்றபடி.
) ``குழல் `` என்னும் விதப்பினால் `வார் குழல்` (நீண்ட கூந்தல்) எனக் கொள்க.
``ஏய குழலியர்`` என்றது, `ஏய இசையும் குழலியர்` என்றபடி.
`குழலியரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
`அவரே புண்ணியர்` என்றது, `அந்தப் புண்ணியச் செயலை விரும்பித்தான் நீர் வந்தீர்; பிச்சையிடும் புண்ணியச் செயலை விரும்பி வந்தீர்` என்றபடி.
அதை, ``புண்ணியம்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி,.
``இரத்தல்`` என்பதன் முன், `இவ்வாறு` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது.
`பொல்லாது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று.
`அம்மா` என்னும் அச்சக்குறிப்பு இடைச்சொல் இடைக் குறைந்து, `அமா`` என வந்தது.
`சிவன் பிச்சை ஏற்பது, உயிர்களைத் தன்பால் சேர்த்து கொள்ளுதற் பொருட்டே` என்பது இதன் உட் கருத்து.

பண் :

பாடல் எண் : 62

நாணா நடக்க நலத்தார்க்
கிடையில்லை நாமெழுக
ஏணார் இருந்தமி ழார்மற
வேனுந் நினைமினென்றும்
பூணார் முலையீர் நிருத்தன்
புரிசடை எந்தைவந்தால்
காணா விடேன்கண் டிரவா
தொழியேன் கடிமலரே.

பொழிப்புரை :

அணிகலன்கள் பொருந்திய தனங்களையுடைய தோழியர்களே, (உங்கள் உதவியை நாடாது) `நாமே செல்வோம்` என்றால் (நாணம் தடுக்கின்றது) நாணம் உண்டாகாதபடி செல்லச் சமையம் வாய்க்கவில்லை.
நடனம் புரிபவரும் புரியாகிய சடைகளை யுடையவரும், உலகர் எல்லாராலும் `எம் தந்தை` என்று போற்றப்படு பவரும் ஆகிய சிவபெருமான் (இங்கு வருவார்) வந்தால், நான் அவரைக் காணாமல் இருந்துவிடமாட்டேன்.
கண்டு, `உம்மை யான், உம்மை அகப்படுத்தவல்ல பெரிய தமிழாற்பாடி மறவாதிருக் கின்றேன்; இதை நினைமின்` என்று சொல்லி அவர் அணிந்துள்ள வாசனை பொருந்திய மலர் மாலையை இரந்து வாங்கவும் செய்வேன்.

குறிப்புரை :

`முலையீர்`, `நாம் எழுக` என்றால் நாணாது நடக்க இடையில்லை` என மாற்றி ஒரு சொல் வருவிக்க.
`நாணாது` என்பது கடைக் குறைந்தது.
இடை - சமையம்.
எண் - வலிமை, இருமை - பெருமை அஃது இங்கு விரிவைக் குறித்தது.
`சிவபெருமான் தமிழ் விருப்பன்` என்பதை, ``நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்`` * என்பது முதலியவற்றால் அறிக.
`தமிழாற் பாடி` எனவும் ஒருசொல் வருவிக்க.
`உம்மை மறவேன்`` என உருபு விரித்து மாற்றுக.
``என்றும்`` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மையைப் பிரித்து, `இரவாது` என்பதனுடன் கூட்டுக.
இது தூதுவிடக் கருதிய, தோழியரோடு, புலந்து கூறியது, இது வாயிலாக, தமிழாற் பாடுவோரைச் சிவபெருமான் மிக விரும்புதல் குறிக்கப்பட்டது.
``தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்`` * என்பது முதலியவற்றையும் காண்க.

பண் :

பாடல் எண் : 63

கடிமலர்க் கொன்றை தரினும்புல்
லேன்கலை சாரலொட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன்
முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின்
றாய்க் கழ கல்லவென்பேன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு
வாணை தொடங்குவனே.

பொழிப்புரை :

(நாளை இங்கு வருகின்ற சிவபெருமான் என்னைத் துறவாமைக்கு அடையாளமாகத் தனது) வாசனை பொருந்திய கொன்றை மலர்களால் ஆன மாலையை வலிய எனக்குத் தந்தானாயினும் யான் உடல் பொருந்தத் தழுவ மாட்டேன்; எனது உடையை அவன் பற்றவரின் நெருங்க விடமாட்டேன்; என் கூந்தலில் முடிக்கப்பட்டுள்ள மலரைத் தொடும் முறையால் என்னைத் தொட முயல்வானாயின், வெகுண்டு விலக்குவேன், `கொங்கையை அவன் தொட்டு விட்டால் நான் இறந்து விடுவேன்` (என்பது தோன்றப் புறங் காட்டி நிற்பேன்) பிற குறும்புகளும் செய்வானாயின் `தேவர் பலரும் உனது திருவடிகளை வணங்க இருக்கின்ற உனக்கு இவையெல்லாம் அழகல்ல` என அறிவுரை கூறுவேன், அவைகளையும் கடந்து அவன், வளையும், மாலையும் பொருந்திய எனது தோள்களை வலாற்கார மாகப் புல்ல வருவானாயின் அவன்மீதே ஆணை வைக்க முயலுவேன்.

குறிப்புரை :

`ஆகலான் நீ கவலற்க` என்பது குறிப்பெச்சம்.
இது வரைவுகடாவ எண்ணிய தோழியைத் தலைவி உடன்பட்டுக் கூறியது.
`தலைவன் வரைவு நீட்டிப்பின் இருமுது குரவர் பிறர் வரைவுக்கு உடன்படுதல் முதலியன நேரத் தலைவி இறந்துபடுவாள்` எனத் தோழி கவன்று, தலைவனை வரைவு கடாதற்கு விரைதல் இயல்பு.
அவ்வழித் தலைவி புணர்ச்சி மறுப்பாள் என்க.
அதிதீவிர பக்குவிகள் சத்தியோ நிர்வாணத்தையை விரும்பி வேண்டுதல் இதன் உள்ளுறை.
முனிதல் அதன் காரியம் தோற்றி நின்றது.
`தான் இறந்து படின் அவனும் படுவான்` எனத் தலைவி அஞ்சுவாள் ஆதலின், ``கெடுவேன்`` என்றது, கெடுதலைக் குறிப்பித்தலையேயாம்.
ஏனையோர்மீது வைக்கும் ஆணைபோலாது சிவன்மீது வைக்கும் ஆணை தலையாயது ஆகலின் ``திரு ஆணை `` என்றார்.
ஆணை வைத்து விடின் பின்னர்க் கூட்டம் இன்றாம் ஆகலின், ``ஆணை தொடங்குவன்`` என்றாள்.

பண் :

பாடல் எண் : 64

தொடங்கிய வாழ்க்கையை வாளா
துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்பால்
இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண
னார்க்கன்றி இங்குமன்றிக்
கிடங்கின்றி பட்ட கராவனை
யார்பல கேவலரே.

பொழிப்புரை :

(இல்லறத்தார் கிடக்க,) துறவறத்தை மேற் கொண்டவர்களிலே பலர் அந்தத் துறவறத்தைப் பயனிலதாகப் போக்குவர்.
எங்ஙனம் எனின், உலகப் பொருள்களினின்றும் நீக்கிய தங்கள் ஆசையை அரன்பால் செலுத்தாது, வேறு எவ்வெப்பொருளிலேயோ செலுத்துதலால்.
ஆகவே, அவர்கள் சிவனிடத்து அன்பு செய்யாது பிற விடத்து அன்பு செய்தலால் அம்மைக்கும் உரியராகாது, இவ்வுலகப் பொருள்களைத் துறந்தமையால் இம்மைக்கும் உரியராகாது, அகழியுட் கிடக்கும் முதலைபோலத் துன்பத்திற் கிடத்தலல்லது, கரையேறாது தமியர் ஆகின்றனர்.

குறிப்புரை :

`இந்நிலை இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம்.
``துறந்தவரே`` என்பதை முதலில் வைத்து, ``இலர்`` என்பதன் பின் `ஆகலின்` என்பதனைக் கூட்டுக.
அடங்கிய - உலகப் பொருள்மேல் செல்லாது அடங்கிய.
அறுகாற் பறவை, வண்டு.
அவை முடங்குதல் கொன்றை மலரிடத்து.
எனவே, `கொன்றையைச் சூடிய சடை` என்றபடி.
``அன்றி`` இரண்டில் முன்னது, `மாறுபட்டு` என்றதாம்.
பின்னது, `உரியராகாமல் எனப் பொருள் தந்தது.
``இங்கும்`` என்ற உம்மையால், `அங்கும்` என்பது பெறப்பட்டது.
`அங்கு, இங்கு` என்பன, `அம்மை, இம்மை` என்பவற்றைச் சுட்டின.
கிடங்கு - அகழி.
கரா - முதலை அது கரையேறாமைக்கு உவமை.
`கேவலர் தமியர்` என்பன ஒரு பொருளைக் குறிக்கும்.
தமியர் - துணையற்றவர்.
`உலகப் பற்றை விட்டபோதிலும், மெய்யுணர்வு இல்லையேல் துறவு பயன் இலதாம்` என்றபடி.
இதனைத் திருவள்ளுவரும்,
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
1 என அருளிச்செய்தார்.
இத்தன்மையோரையே அப்பர் பெருமானும் ``இருப்பிறப்பும் வெறுவியர்`` 2 என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 65

வலந்தான் கழலிடம் பாடகம்
பாம்பு வலமிடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந்து
எரிவலம் பந்திடமென்பு
அலர்ந்தார் வலமிடம் ஆடகம்
வேல்வலம் ஆழியிடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங்
குழலிடம் சங்கரற்கே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு வலப்பாதியும், இடப்பாதியும் மாறுபட்டதான வடிவம் உள்ளது.
எங்ஙனம் எனின், வலப்பாதியில் காலில் வீரக்கழல், மார்பில் பாம்பு, சாம்பல், இறந்தவர் எலும்பால் ஆகிய மாலை, கையில் மழு, சூலம், தலையில் நீர் தங்கியுள்ள சடை - இவ்வாறு உள்ளது.
இடப்பாதியில் காலில் பாடகம், மார்பில் விலை உயர்ந்த அணி கலம், சந்தனம், பொன்னரி மாலை, கையில் பந்து, மோதிரம், பூச்சூடிய கூந்தல் - இவ்வாறு உள்ளது.

குறிப்புரை :

`வலப்பாதி ஆணும், இடப்பாதி பெண்ணுமாய் உள்ளது` என்றபடி.
`இது ஒரு பெருவியப்பு` என்பது குறிப்பெச்சம்.
`சிவபெருமானது உருவம், ஏனையோரது உருவம் போன்றதன்று` என்பதாம்.
அப்பர் பெருமானும், சிவபெருமானது திருவடிகளை,
``உருவிரண்டும் ஒன்றோடொன்றொவ்வா அடி`` என்று அருளினார்.
செய்யுள் நோக்கிச் சிலவற்றை முறை பிறழ வைத்தார்.
``எரி`` என்றது மழுவை.
சலம் - நீர்.
தாழ்தல் - தங்குதல்.

பண் :

பாடல் எண் : 66

சங்கரன் சங்கக் குழையன்
சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட்
படுமின் தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா
யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரவென்
நெஞ்சம் எரிகின்றதே.

பொழிப்புரை :

தொண்டு மனப்பான்மையுடைவர்களே, யம கிங்கரர்கள் (தூதுவர்கள்) சிவபெருமானுக்கு ஆட்படாதவர்கட்குச் செய்யும் இழிவான பல துன்பங்களை நூல்கள் வாயிலாகக் கேட்ட வுடன் இவ்வுலகத்திற்றானே எனது மனம் ஆயிர அரங்களால் அராவு வது போலத் துன்பத்தால் வெதும்புகின்றது.
ஆகவே, நீவிரும் பிற தொண்டுகளை விடுத்து, சுகத்தைச் செய்தலால், `சங்கரன்` எனப் பெயர் சொல்லப்படுகின்ற.
சங்கக் குழையணிந்த செவியையுடைய சிவபெருமானுடைய திருவடித் தாமரையை அகங்கைகளைக் குவித்துக் கும்பிட்டு, அவனுக்கே ஆளாகித் தொண்டு செய்யுங்கள்.

குறிப்புரை :

`செய்தால், யமகிங்கரர் அணுகார்` என்பது குறிப்பெச்சம்.
மிறை - துன்பம்.
கீழாயின மிறை.
அருவருக்கத் தக்க துன்பம்.

பண் :

பாடல் எண் : 67

எரிகின்ற தீயொத் துளசடை
ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது
சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணியொக்
கின்றகத் தோணியுய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள
தாலத் திறலரவே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு அவனது சடை எரிகின்ற தீயைப் போலவும், அந்தச் சடையில் சுழல்கின்ற நீர் அந்தத் தீயை அணைப்பதற்காகத் தேவர்கள் ஊற்றுகின்ற பாற்கடற் பால் போலவும், அந்த நீரில் மிதந்து செல்கின்ற பிறை ஒரு தோணிபோலவும், அந்தப் பிறையைச் சூழ்கின்ற திறமையுடைய பாம்புகள் அந்தத் தோணியை இயக்குதற்குத் தெரிந்தெடுத்த உறுதியான மூங்கில் போலவும் உள்ளன.

குறிப்புரை :

மாலையுவமை.
திங்கட் கதிரால் நீர் வெண்ணிறம் பெற்றது.
இது சிவபெருமானது தலைக் கோலத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 68

அரவம் உயிர்ப்ப அழலும்
அங்கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழலுமை ஊடற்கு
நைந்துரு கும்அடைந்தார்
பரவும் புகழண்ணல் தீண்டலும்
பார்வா னவைவிளக்கும்
விரவும் இடரின்பம் எம்மிறை
சூடிய வெண்பிறையே.

பொழிப்புரை :

எங்கள் கடவுளாகிய சிவபெருமான் முடியில் சூடியுள்ள வெள்ளிய பிறை, அங்குள்ள பாம்பு தன்னை நோக்கிச் சீறும் பொழுது தான் கோபத்தால் தணலாய் எரியும்.
அங்குள்ள அழகிய கங்கை பாயும்பொழுது குளிர்ச்சியடையும்.
குராமலரைச் சூடியுள்ள கூந்தலையுடைய உமையவள் ஊடல் கொள்ளும் பொழுது, தன்னை அடைந்தோரால் துதிக்கப்படுகின்ற சிவபெருமான் (உமை அறியாத படி) தன்னைக் கையால் தீண்ட, தான் நைந்து உருகி உமையவள்மேல் தனது கதிர்களைப் பொழியும்.
மற்றைய நேரங்களில் நிலத்தையும், வானத்தையும் இருள் நீங்க ஒளி பெற்று விளங்கச் செய்யும்.
ஆகவே, அது துன்பத்தையும், இன்பத்தையும் மாறி மாறி அடைவதாகின்றது.

குறிப்புரை :

திங்களின் கதிர்கள் காதலை மிகுவித்தலால் உமையவள் ஊடல் தணிவாளாவள்.
அதன் பொருட்டுத் திங்களைத் தூண்டச் சில சொற்களைச் சொல்லின் உமை மேலும் வெகுள்வாள் ஆதலின், குறிப்பால் தூண்டச் சிவபெருமான் தனது கையால் தீண்டுவான் என்க.
இவ்வாறு செய்தல் உலக வழக்கம்.
இது சிவபெருமானது தலைக் கோலத்துள் பிறை ஒன்றனையும் புகழ்ந்தவாறு.
``வளாய்`` என்பதனை `வளாவ` எனத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 69

பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை
கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோவென்பும்
நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு
வாயர வாடலுற்றோ
குறைக்கொண் டிவளரன் பின்செல்வ
தென்னுக்குக் கூறுமினே.

பொழிப்புரை :

(மகளிர்) இவள் (தலைவி) சிவன் பின்னே குறையிரந்து செல்லத் துணிந்தது அவன் சூடியுள்ள பிறையைத் தான் சூட விரும்பியோ? (அவனுடன் சென்று) பிச்சை ஏற்றுப்பின் அவ னோடு கூடத் தீயில் நின்று ஆட விரும்பியோ? அவனோடு இணைந்து கண்டத்தினின்றும் சாமவேதம் பாடவிரும்பியோ? அவன் அணிகின்ற எலும்பு மாலையையும், பூசுகின்ற சாம்பலையும் தானும் அணியவும், பூசவும் விரும்பியோ? அவனுடைய கருமையான கழுத்தைக் கட்டித் தழுவ விரும்பியோ? அவன் தன்மேல் ஆடவிட்டுள்ள நஞ்சு பொருந்திய வாயினையுடைய பாம்புகளைத் தன்மேலும் ஆட விட்டுக்கொள்ள விரும்பியோ? `எதனை விரும்பி` என்பதை எனக்கு நீவிர் கூறுமின்.

குறிப்புரை :

இது, செவிலி தலைவியது வேறுபாடு கண்டு இரங்கி ஆயத்தாருடன் கூறியது.
அவளால் காதலிக்கப்பட்ட சிவனைச் செவிலி தலைவியை ஆற்றுவித்தற்கு இயற்பழித்துக் கூறினாள்.
மெய்யுணர்வில்லாதார் சிவனது கோலங்களை இகழ்தலைக் குறித்தல் இதன் உள்ளுறை.
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்.
* என மேல் வந்த அம்மை திருவாக்கினைக் காண்க.
``செல்வது`` என்பது எதிர்காலம்.
ஆதலின் அது செல்லத் துணிந்தமையையே குறித்தது.
பின் செல்லல், வழிப்படுதலைக் குறித்த குறிப்பு மொழி.
`இது துணிந்தவள் உடன் போக்கிற்கும் உடன் படுவாள்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 70

கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற்
றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவைநெரியா
ஏறுமின் வானத் திருமின்
விருந்தாய் இமையவர்க்கே.

பொழிப்புரை :

(உலகீர்; நீவிர் நும்செயல்களை விடுத்து,) சிவனைத் துதியுங்கள்; அவனுக்கு அணுக்கராய் நின்று சிறிய பணி விடைகளைச் செய்யுங்கள்.
(அன்பினால் நீர் துளித்தலால்) கண்கள் குளிர்ச்சியடையுங்கள்; மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள்; `சிவனே முதல்வன்` - என அவனைத் தெளியுங்கள்; எவரிடத்தும் பகைமை கொள்ளுதலைத் தடுங்கள்; ஆசையை அடக்குங்கள்; துன்பத்தினின்றும் நீங்குங்கள்; இவைகளையே வழியாகப் பற்றி வானுலகில் ஏறுங்கள்; ஏறியவராய் அங்கு வானத்தவர்க்கு எய்தற் கரிய விருந்தினராய் அங்கு அவர் உபசரிக்க வீற்றிருங்கள்.

குறிப்புரை :

குற்றேவலே கிரியா பூசையாகச் சொல்லப்படுகின்றது.
``ஏறுமின்`` என்றது குறிப்புருவகம்.
உலகியலில் நிற்போரை நோக்கிக் கூறினார்.
ஆகலின், `அவரது விருப்பமும் இவற்றால் நிறைவுறும்` என்றற்கு.
``வானத்து விருந்தாய் இருமின்`` என்றார்.
`சிவ வழிபாடே எல்லாப் பயன்களையும் தரும்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 71

இமையோர் கொணர்ந்திங் கிழித்திட
நீர்மைகெட் டேந்தல்பின்போய்
அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த
சலமக ளாயணைந்தே
எமையா ளுடையான் தலை
மகளாவங் கிருப்பவென்னே
உமையா ளவள்கீழ் உறைவிடம்
பெற்றோ உறைகின்றதே.

பொழிப்புரை :

(கங்கையானவள் தான் வானுலகத்திலே இருக்கவும்) தேவர்கள் கொணர்ந்து நிலத்திலே இறக்கிவிடத் தன் தன்மை கேட்டு, (ஆகாயகங்கை` என்னும் சிறப்பு நீங்கி,) ஓர் அரசன் பின்னேசென்று, தனக்கு ஏற்புடைத்தாகாத வழியிலே நடந்து, பின்பு ஓர் ஆழமான ஆற்றுவடிவத்தை அடைந்து, தனது கரையில் எம்மை ஆளுடையானாகிய சிவன் தலைவனாய் வீற்றிருக்க.
அதனால் அவன் தேவி உமையவள் தலைவியாய் இருத்தலால் அவருக்குக் கீழே ஓர் உறைவிடம் பெற்றோ இருப்பது! (இஃது என்ன முறை!)

குறிப்புரை :

சிவன் ஆகாய கங்கை மண்ணில் வந்து காசியில் சிறந்த புண்ணிய நதியாய் இருக்கச் செய்து, அதன் கரையில் தானும், தன் தேவியும் வீற்றிருந்து அங்குச் சென்று அந்த கங்கையில் முழுகித் தன்னை வழிபட்டவர்களது பாவங்களைப் போக்குதலும், இறந்தவர் களுக்கு வீடுபேற்றைத் தருதலும் ஆகிய அருட் செயல்களைக் கங்கை யின் பொருட்டு இரங்குவார் போலக் கூறியவாறு.
காசிக் கங்கை நதியின் பெருமையும் இதனால் குறிக்கப்பட்டது.
``ஏந்தல்`` என்றது பகீரதனை.
அமையா நெறி, தரை வழி.
பகீரதன் கங்கையைக் கொணர்ந்த வரலாற்றினை இராமாயணம் முதலியவற்றிற் காண்க.
``இமையோர்`` என்பது பிரமன் ஆணையைப் பெற்ற தேவர்களை.
`கெட்டு, ஆய் அணைந்து, உறைகின்றது` - என்பவற்றிற்கு, `கங்கை` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
``சலமகளாய்`` என்றது, `நதி வடிவாய்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 72

உறைகின் றனரைவர் ஒன்பது
வாயிலோர் மூன்றுளவால்
மறைகின்ற என்பு நரம்போ
டிறைச்சி உதிரம்மச்சை
பறைகின்ற தோல்போர் குரம்பை
பயனில்லை போயடைமின்
அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக்
கொண்டோன் மலரடிக்கே.

பொழிப்புரை :

(உலகீர்) விரிந்து கிடக்கின்ற தோலாகிய கூரை வேய்ந்த சிறு குடிலாகிய இந்த உடம்பில் அக்கூரையால் எலும்பும், நரம்பும், இறைச்சியும், குருதியும், மச்சையுமாகிய கட்டுப் பொருள்கள் வெளித்தோன்றாது மறைந்து கிடக்கின்றன.
(வெளித் தோன்றினால் அருவருப்பைத் தரும்.
) இந்தச் சிறுகுடிலுக்கு வாயில்களோ ஒன்பது உள்ளன.
(ஆகவே பாதுகாப்பில்லை.
) இதில் பண்டங்கள் மூன்றே உள்ளன.
அவைகளை முன்னிட்டு இதில் ஐந்துபேர் வாழ்கின்றனர்.
(ஆகவே, இதில் உங்கட்குப் பயன் எப்படிக் கிடைக்கும்?) கிடையாது, ஆகையால், ஒலிக்கின்ற, தெளிவாகிய நீரைச் சிவந்த சடையிலே வைத்துள்ள சிவபெருமானது மலர்போலும் திருவடிகளை நோக்கிச் சென்று, அவற்றையே அடைமின்கள்.

குறிப்புரை :

ஐவர் - ஐம்புல ஆசைகள்.
மூன்று - வாத பித்த சிலேத்து மங்கள்.
மச்சை - பித்த நீர் ``போர் குரம்பை``, இறந்தகால வினைத் தொகை.
குரம்பையில்` என உருபு விரித்து, `என்பு முதலியன மறை கின்ற` என்க.
மறைகின்ற, அன்பெறா அகர ஈற்றுப் பலவின்பால் வினை முற்று.
`யாக்கையது நிலையாமையையும், துன்ப மிகுதியையும் உணர்ந்து இதன்மேல் உள்ள பற்றினை விடுத்துச் சிவனது திருவடிகளைப் பற்றல் வேண்டும் என்றபடி.
போதல் பற்று விடுதலையும், அடைதல் பற்றுதலையும் குறித்தன.
`உடம்பினால் வரும் துன்பத்தினை எண்ணாமல் அதன்மேல் மக்கள் பற்றுச் செய்கின்றனர்` என்பதைத் திருவள்ளுவர், இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.
* என்பதனால் உணர்த்தினார்.

பண் :

பாடல் எண் : 73

அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன்
ஞாலங் கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத் தொழவளை
கொண்டனை வண்டுண்கொன்றைக்
கடிக்கண்ணி யாயெமக்கோரூர்
இரண்டகங் காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே
றுயர்த்த குணக்குன்றமே.

பொழிப்புரை :

வண்டுகள் தேனை உண்கின்ற கொன்றை மலரால் ஆகிய, நறுமணம் பொருந்திய கண்ணியைச் சூடியுள்ளவனே, நீ, உனது திருவடியை விரும்பி உன்னைக் கையால் தொழுதவர்கட்கெல்லாம் பெரிய இவ்வுலகத்தையே பரிசிலாகக் கொடுத்து, உனது அடிக்கீழ் கிடக்கும் நாய்போன்ற, மாவடு ஒத்த கண்களையுடைய இவள் நின்னைத் தொழ, (இவட்கு ஏதும் கொடாமல்) இவள் அணிந்திருந்த வளையல்களையும் கொண்டுவிட்டாய்.
கொடியை உயர்த்துக் கட்டும் கயிற்றில் அறமாகிய இடபக் குறியை உயர்த்துள்ள குணமலை போல்பவனே, எங்களைப் பொறுத்தமட்டில் ஓர் ஊரில் இரண்டு இல்லங்களைக் காட்டுதல் போலும் செயலைச் செய்தால்; (இது நீதியோ!)

குறிப்புரை :

``அடிக்கண்ணி`` என்பதில் ககர ஒற்று எதுகை நோக்கி விரிந்தது.
``கண்ணி`` - நான்கில் முதலாவது `கருதி` என்றும், இரண்டா வது, `கண்களையுடையவள்` என்றும், மூன்றாவது, `முடியில் அணி யும் மாலை` என்றும், இறுதியது `கயிற்று முடி` என்றும் பொருள் தந்தன.
ஓர் ஊரில் இரண்டு சுகம் - `வேண்டுபவர்க்கு` என்று எல்லா நலங்களும் நிறைந்த ஓர் இல்லமும், `வேண்டாதவர்க்கு` என்று ஒன்றும் இல்லாத ஓர் இல்லமுமாக அமைத்தல்.
ஓர் இல்லமேயிருப்பின் வேற்றுமையில்லை.
அதனால், `இரண்டகம்` என்று சொன்னாலே, `வேண்டாதவர்கட்கு` என்று வேறு இல்லம் அமைப்பதையே குறித்தல் வழக்கு.
`உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே` என்பர்.
நன்மை, அறம்.
``கொல்லேறு`` என்றது இன அடை.
`ஏனையோர்க்கெல்லாம் அருள்செய்து, இவளைக் காதலால் வருந்தவிட்டாய்` என்பது கருத்து.
இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது.
`மாணிக்க வாசகர் போலச் சிவனை அடைதலில் வேட்கை மிக்காரைச் சிவன் இவ்வுலகத்தில் வைத்தல் என்னை` என உலகத்தார் இரங்கி ஆராய்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 74

குன்றெடுத் தான்செவி கண்வாய்
சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன்
அற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக்
கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத்
துறுகுழியே.

பொழிப்புரை :

தான் வீற்றிருக்கும் மலையைப் பெயர்த்த இராவணனை அன்று அவன் தனது காது, கண், வாய், தலை எல்லாம் நெரிந்து அவன் `ஓ` என்று அலறும்படி அடர்த்து, அவனது அகங்காரம் முழுதும் அற்றொழிய அவனை ஒறுத்தவனும், மற்றுப் பற்றுக்கள் எல்லாவற்றையும் விட்டுத் தன்னையே பற்றாகப் பற்றுவோர்க்குத் தானும் தன் பெருமைகளையெல்லாம் விட்டு அவர்க்கு இரங்கி வந்து எவ்வகையிலும் நலம் புரிபவனும் ஆகிய `சிவன்` என்னும் அரு நெல்லிக்கனி வெளியிடத்திலே தோன்றி நிற்க.
மக்கள் அதனை உண்ணாமல் தமக்கு எளிதில் தெரிந்ததை எடுத்துச் சொல்லி இறப்பிற்கு ஆளாகிப் பின்பு மிக ஆழ்ந்த குழியாகிய நரகத்திலும் வீழ்கின்றனர்.

குறிப்புரை :

`இஃது அவரது அறியாமையின் நிலை` என்பது குறிப் பெச்சம் `நிக்கிரகமும், அநுக்கிரகமும் செய்யவல்ல முழுமுதல்` என்பதை முதல் இரண்டடிகள் குறித்தன.
``அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய்`` * என்ற திருஞானசம்பந்தர் திருமொழி காண்க.
சிவன் அற்றவர்க்கு அற்றவன் ஆதலை, வன்றொண்டருக்கு இருமுறை தூது நடந்தமை முதலியன பற்றி அறிக.
செவி, கண் முதலிய வற்றை விதந்தோதியது.
அவை அளவின் மிக்கிருந்தமை குறித்தற்கு.
நெல்லிகனி, ஔவை உண்ட நெல்லிக்கனி போல்வது.
`சிவனை அடைந்தால் இறப்பில்லை` என்பதை அது குறித்தது.
ஒன்று - எளிதாகிய ஒன்று.
அது சிவனது கோலம்.
`அந்தக் கோலத்தின் மெய்ம்மையறியாது இகழ்ந்து, நரகுறுகின்றனர்` என்றபடி.
`உறுகுழி` நரகத்துப் புகுவர்` என மாற்றியுரைக்க.
உறு - மிகுதி.

பண் :

பாடல் எண் : 75

குழிகண் கொடுநடைக் கூன்பற்
கவட்டடி நெட்டிடையூன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச்
சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல்
வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல் கண்டன்
ஆடும் கடியரங்கே.

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனாகிய சிவன் ஆடுகின்ற விளக்கமான அரங்கமாவது, ஆழமான கண்களையும், வேகமான நடையினையும், வளைவான பிளவுபட்ட பாதங்களையும் நீண்ட இடையினையும், ஊன் தின்னும் புலி தொங்குகின்ற விரிந்த செவிகளையும், வெறுந் தோலாய்த் திரைந்த கொங்கைகளையும், பரட்டை மயிரினையும், பிளந்த வாயினையும், `கட்டு, உதை` என்று அதட்டி இரைகின்ற குரலையும், ஒட்டிய வயிற்றையும், முறுக்கிய விரல்களையும் உடைய பேய்களுக்கு உரிய உறைவிடந்தான் போலும்!

குறிப்புரை :

`வேறு இடம் இல்லையோ` என்பது குறிப் பெச்சம்`இங்குக் குறிக்கப்பட்ட இடம் முதுகாடு` என்பது தெளிவு.
`முதுகாடு` என்பது உண்மையில் அனைத்தும் ஒடுங்கிய முற்றொடுக்க நிலையையும், `பேய்கள்` என்பது அந்நிலையில் நிகழும் மூன்று வகையான கேவல நிலையில் நிற்கும் ஆன்மாக்களையும் குறிக்கும்.
அக்கேவலங்களைச் சிவஞான யோகிகளது சிவஞான போத ஆறாஞ் சூத்திரச் சிற்றுரையால் அறிக.
இந்நுட்பம் உணரமாட்டாதார் சிவனை உலக முதுகாட்டில் ஆடுபவனாகவே வைத்து இகழ்வர்.
அவர் அவ்வாறு இகழ்தலையே தாம் இகழ்வதுபோலக் கூறினார்.
``போல்`` என்றதனால், அவனுக்குப் பொன், வெள்ளி, மணி முதலிய நல்லரங்கு களும் உள என்பதனைக் குறிப்பால் உணர்த்துதலும் செய்தார்.
`சிவன் ஆடுவது சுடுகாட்டில் என, யார் அக்காட்டினை எத்துணை இகழினும் அனைவரும் இறுதியிற் செல்லும் இடம் அதுவேயாதல் அறியத் தக்கது.
இறப்பிற்கு அஞ்சுவோர் யாவரும் சுடுகாட்டை நினைப்பினும் துணுக்குறுவர்; இறவாதவன் ஏன் அதற்கு அஞ்சப் போகின்றான்? ``கட்டு`` என்பது கூறினமையால் அதற்கு இனமான `உதை` என்பதும் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 76

அரம்கா மணியன்றில் தென்றலோர்
கூற்றம் மதியம்அந்தீச்
சரம்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால்
இவள் தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை
இரங்கான் இமையவர்தம்
சிரம்கா முறுவான் எலும்புகொள்
வானென்றன் தேமொழிக்கே.

பொழிப்புரை :

தேன்போலும் மொழியையுடைய என் மகளுக்குச் சோலைகளில் உள்ள அழகிய அன்றிலின் குரலாகிய அரம், தென்ற லாகிய ஓர் யமன், திங்களாகிய அழகிய நெருப்பு, மன்மதன் எய்கின்ற ஐந்து மலர்களாகிய அம்பு, பூசப்படுகின்ற சந்தனம் மேலுக்குக் குளிர் வதுபோலக் காட்டி உண்மையில் வெதுப்புகின்ற உட்பகை ஆகிய வற்றால் இவள் உயிர் தளர்ந்தாள்.
இதைக் கண்டு மனம் இரங்காதவர் இல்லை.
ஆயினும், தேவர்களது தலைகளையும், எலும்புகளையும் மாலையாகவும், அணிகலமாகவும் அணிய விரும்புகின்ற அவன் மனம் இரங்கவில்லை.

குறிப்புரை :

`அவனைக் காதலித்தே இவள் இந்நிலையை அடை கின்றாள்` என்றபடி.
இதுவும் செவிலியின் இரங்கற் கூற்றே.
உள்ளுறை யும், ``அடிக்கண்ணி`` என்னும் பாட்டில் கொண்டவாறே கொள்க.
`அழகிய தீ` என்றது.
`பார்ப்பதற்கு அழகாய்த் தோன்றிச் செயலால் வருத்தம் செய்கின்றது` என்றபடி.
அன்றில் தன் துணையை அழைத்து வருந்தும் குரல் தனிமைப்பட்ட காதலர்க்கு வருத்தத்தை மிகுவிக்கும்.
``உட்பகை`` என்பதன்பின், `இவற்றால்` என்று `இவை` என்பது தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 77

மொழியக்கண் டான்பழி மூளக்கண்
டான்பிணி முன்கைச்சங்கம்
அழியக்கண் டானன்றில் ஈரக்கண்
டான்தென்றல் என்னுயிர்மேற்
கழியக்கண் டான்துயர் கூரக்கண்
டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத
லான்கண்ட கள்ளங்களே.

பொழிப்புரை :

தில்லையில் உள்ள சிவபெருமான், என்னைப் பலரும் பழி தூற்றவும், எனக்கு வருத்தம் ஒரு காலைக் கொருகால் மிகவும், முன்கையில் உண்ட சங்க வளையல்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகவும், அன்றிலின் குரல் என்னையும் என் உயிரையும் வேறுபடும்படி பிளக்கவும், தென்றல் எனது உயிர்மேல் சினந்து நோக்கவும், இன்ன பல இன்னல்கள் மிகுதிப்படவும், உடை யும், மேகலையும் நீங்கிப் போகவும் செய்தான்.
இவை என்னிடத்துச் செய்த கள்ளச் செயல்கள்.

குறிப்புரை :

தலைவி தானும் அறியாதவாறு இவை நிகழ்ந்தமையின், ``கள்ளங்கள்`` என்றாள்.
இதன்பின் `இவை` என்பது எஞ்சி பக்குவி களைச் சிவன் அவர்களையறியாமலே அவர்களைத் தன்வயம் ஆக்கல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 78

கள்ள வளாகங் கடிந்தடி
மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற
உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி
வியன்பிறையைக்
கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது
குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

(உலகீர்) மனத்தில் வஞ்சனைக்கு இடம் அளிக்கா மல் போக்கி, உண்மையாக அடிமைப்படத் தெரிந்தவர்களுடைய உள்ளமாகிய வரைவிடத்தல் வீற்றிருக்கின்ற, மேலானவனாகிய சிவ பெருமான் தனது நீண்ட முடியின்மேல் பெருவெள்ளப் பரப்பின் நுரையிலே சூடிய வெள்ளிய பிறையைக் கொள்ளுதற்குச் சூழ்கின்ற பாம்பு ஒன்று இருத்தலைக் கருத்துட் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`அஃது, ஒன்றற்கு ஒன்று பகையாகியவற்றைப் பகை யின்றி வாழச் செய்யும் குறிப்பினது ஆதலின், அவனை யடைந்தால் நீங்களும் பகை முதலிய இடர் இன்றி வாழ்வீர்` - என்றபடி.
வளாகம்- பரந்த வரைவிடம் `நுரைக்கண்` என ஏழாவது விரிக்க.
`சூடிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
வளாவுதல் - சூழ்தல், `வளாவுகின்ற` என்பது, ``வளாய்கின்ற`` எனத் திரிந்து வந்தது.

பண் :

பாடல் எண் : 79

குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை
யேவந்து கோளிழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ
எலும்போ விரிசடைமேல்
உறைக்கொன்றை யோவுடைத் தோலோ
பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக் கென்னோ
சிறுமி கடவியதே.

பொழிப்புரை :

நீல கண்டத்தை உடையவரே, உமக்கு இவள், ஒன்றைக் கருத்திலே கொண்டு இட்டன தான் அணிந்திருந்த வளையல் களையே.
அவைகளை நீர் வந்து கொண்டும் விட்டீர்.
ஆயினும் இச் சிறுமி உம்மை இரக்கக் கருதியது உம்மிடத்துள்ள மணம் பொருந்திய விளாம் பூவோ? எலும்போ? விரிந்த சடைமேல் இருக்கின்ற கொன்றை மாலையோ? உடையாகப் பொருந்திய தோலோ? சாம்பலோ? உடைந்து போன பிச்சைப் பாத்திரமோ?

குறிப்புரை :

`இவை தவிர உம்மிடத்தில் வேறு என்ன இருக்கின்றது` எனச் சொல்லி நகையாடித் தன் தலைவியின் அறியாமைக்குத் தோழி இரங்கியவாறு.
``சிறுமி`` என்றது பேதைமை குறித்ததே.
`இப் பேதைமையுடையாளை நீ கைவிடலாகாது` என ஓம்படுத்தினாள் என்க.
வெறி - நறு நாற்றம்.
வெள்ளில் - விளா.
`உறைதலை யுடைய கொன்றை` - என்க.
உடை கலன், வினைத்தொகை.
`நுமக்குப் பெய்தது` என மேலே கூட்டுக.
கடவியது - கடாவியது.
கேட்டது.

பண் :

பாடல் எண் : 80

கடவிய தொன்றில்லை ஆயினும்
கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை
வார்சடை எந்தைவந்தாற்
கிடவிய நெஞ்சம் இடங்கொடுத்
தாட்கவ லங்கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல்
இருந்து தறிக்குறுமே.

பொழிப்புரை :

இவள் இங்கு வந்த நீண்ட சடையையுடைய, பலரும் `எம் தந்தை` எனப் போற்றுகின்ற சிவபெருமானிடம் எதனையும் இரக்கவில்லையாயினும் அவன் செய்ததைக் கேளுங்கள்; அவனுக்குத் தனது விரிந்த நெஞ்சத்தை இடமாகக் கொடுத்த ஒன்று தான் இவள் செய்தது.
ஆயினும், அதற்குக் கைம்மாறாக அவன் இவளுக்குத் துன்பத்தைக் கொடுத்தான்.
பெரிய கிளைகள் அடிமரத்தின் மேலே இருக்கும் பொழுது அந்த அடிமரம் நிற்கக் கிளை வெட்டப்படுவது உலக இயல்புதானே?

குறிப்புரை :

`அதுபோல, இவட்குப் பற்றுக்கோடாயினார் பலர் இருக்கவும் இவள் இறந்துபடுகின்றாள்` என்பதாம்.
ஈற்றடி ஒட்டணி யாய் நின்றது `ஆகவே, இவளது அறியாமையின் நிலையை யாம் கண்டோம்` என முடிக்க.
கடவியது - கடாவியது கேட்டது.
``காரிகையாள்`` என்பதை முதலிற் கூட்டுக.
மடவியவாறு.
மடமையாளாகிய வகை.
இடவிய - இடம் பரந்த.
தடவிய - பெரிய; `தட` என்னும் உரியடியாகப் பிறந்த பெயரெச்சம்.
கொம்பு - கிளை.
தாள் - அடிமனம்.
தறிக்குறும் - வெட்டப்படும்.

பண் :

பாடல் எண் : 81

தறித்தாய் அயன்தலை சாய்த்தாய்
சலந்தர னைத்தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய்
புரம்புன லுஞ்சடைமேற்
செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற
கண்டிவள் சில்வளையும்
பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ
லாமென்று பாவிப்பனே.

பொழிப்புரை :

(எங்கள் பெருமானே, நீ பிரமன் தலையைக் கிள்ளி னாய்; சலந்தராசுரனைக் கொன்று வீழ்த்தினாய்; காமனைப் பொறிக் கறிபோல ஆகும்படி நெருப்பாக்கினாய்; இவையெல்லாம் உனக்குப் புகழாதலைக் கண்டு, `இவளுடைய சில வளையல்களை நீ கவர்ந்தது உனக்குப் பழியாகும்` என்று கருதி நான் வருந்துகின்றேன்.

குறிப்புரை :

கொல், ஆம் அசை.
பாவித்தல் - கருதுதல்.
``வளையைக் கவர்ந்தாய்` என்றது, `மெலியப் பண்ணினாய்` என்றபடி.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.
1 என்ப ஆதலின், `அவ்வாறு அருளாமை புகழுடைய நினக்கு ஆகாது` என்பதாம்.
இது தோழி தலைவனை இரந்து பின்னிற்றல் ஆகலின் பெண்பாற் கைக்கிளை.
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் தாள்பரவி ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்.
2 நின்னடியார் இடர்களையாய்.
3 என்றாற்போல, அன்பர் பொருட்டு அருளாளர் விண்ணப்பித்தல் இதன் - உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 82

பாவிக்கும் பண்டையள் அல்லள்
பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும்
அகம்நெக அங்கமெங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங்
கறைமிடற் றானைக் கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல்
லோதிக்குச் சந்தித்தவே.

பொழிப்புரை :

எம் சிறுமி, செய்வது அறிகின்றிலள்; கொட்டாவி விடுகின்றாள்; மனம் நெகிழ இவள் உடம்பெங்கும் குங்குலியம் போன்ற மணம் வீசநின்றது.
குவளை மலர் போலும் கண்கள் நீரைச் சொரியாநின்றன.
தன்னை மறக்கின்றாள்; நீல கண்டனைத் தன் கண்களில் நிறுவுகின்றாள்.
இவையெல்லாம் வெண்மையான பற்களையும், மென்மையான கூந்தலையும் உடைய இவளை வந்து பொருந்தின.
ஆகலான் இவள் நாம் முன்பெல்லாம் அறிகின்ற பழைய பெண் அல்லள்.

குறிப்புரை :

`சிவனுக்கு உரியளாய புதியள்` என்பதாம், இது, நாற்றம் தோற்றம் முதலியவற்றால் பாங்கி மதியுடம் பட்டது.
சிவஞானிகளது நிலைமையை அவர்பால் நிகழும் சில மெய்ப்பாடுகள் பற்றி உலகத்தார் ஊகித் துணர்தல் இதன் உள்ளுறை, `செய்யும்` என்னும் வினைகள் பலவற்றுள் முதலதாகிய ``பாவிக்கும்`` என்பது ஒன்றும் எச்சம்; ஏனைய வெல்லாம் முற்று.
``சிறுமி பரிசறியாள்`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
`அகம் நெக, அங்கம் எங்கும் குற்குலு நாறும்` என்க.
இது சிவனைத் தழுவியதால் உண்டாயது.
சோர்த லாகிய, இடத்தின்மேல் நின்ற வினைக்கு, `நீர்` என்னும் வினைமுதல் வருவிக்க.
தாவிக்கும் - தாபிக்கும், ஓதி - ஓதியை உடையாள்.
``ஓதிக்கு`` என்னும் நான்காவதை இரண்டாவதாகத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 83

சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம்
பிணிக்குத் தனிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித்
தித்தித் தமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும்
வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ஆடியி னானடி
யார்களுக் காவனவே.

பொழிப்புரை :

வந்து எதிர்நின்ற நமனுக்கு நமன் ஆவான்; நோய்கட்கு ஒப்பற்ற மருந்தாவான்; நினைத்தால் சிந்தாமணிபோல, நினைப்பவற்றைக் கொடுப்பான்; இனிக்கின்ற அமுதம்போல இனிமையைத் தருவான்; வணங்கினால் எதிர்ப்பட்டுத் தன்வயம் ஆக்கிக் கொள்வான்; தேவர்களும் வணங்க நிற்கின்ற, இரவில் காட்டில் ஆடுகின்ற சிவன் தன் அடியார்களுக்கு ஆகின்ற பொருள்கள் இவைகளாகும்.

குறிப்புரை :

`தித்தித்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
என்னை, `எவன்` என்னும் வினாப் பெயரின் திரிபு.
அஃது இங்கு `எத் துணை` என்னும் பொருட்டாய் மிகுதியைக் குறித்தது.
மால் - மயக்கம்.
அஃது இங்குவசப்படுத்துதலைக் குறித்தது.
`காட்டில்` என்பது ஆற்றலால் வந்தது.
`ஆவன இவை` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 84

ஆவன யாரே அழிக்கவல்
லாரமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற்
புராபுரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத்
திருந்தடி கைதொழுது
தீவினை யேனிழந் தேன்கலை
யோடு செறிவளையே.

பொழிப்புரை :

முப்புரத்தை எரித்த கடவுளாகிய தில்லையிலே எழுந்தருளியுள்ள சிவபெருமானை அடிதொழுதமையால் (நல்லோர் பலரும் பல நன்மைகளைப் பெற) யான் தீவினை செய்தேன் ஆகலின் எனது உடையோடு.
செறிந்த வளையல்களையும் இழந்தேன்.
ஒரு நெறிப்படாத இந்த உலகத்தில் ஊழ் வலியால் மேன்மேல் நன்றாய் வளர்வனவற்றை - அழிக்க வல்லவர் யாவர்! சிறிது சிறிதாய்த் தேய்ந்து போவனவற்றை அவ்வாறு தேயாமல் கட்டிக் காக்க வல்லவர் யாவர்! (ஒருவரும் இல்லை)

குறிப்புரை :

இது, சிவபெருமானைக் காதலித்தாள் அக்காதல் நிறை வெய்தாமை பற்றி ஆற்றாது கூறியது.
பக்குவ மிகுதியால் சிவனை அடைய விரும்பினார் அதற்குத் தடையாய் நிற்கும் பிராரத்தம் பற்றி வருந்திக் கூறுதல் இதன் உள்ளுறை.
ஊழ் வலியாகிய பொதுப் பொருளால் கலை வளையல்களை இழந்த சிறப்புப் பொருளைச் சாதித் தமையால் இது வேற்றுப் பொருள் வைப்பணி ``சிவனை அடியைத் தொழுது`` என்றதை, `கள்வனைக் கையைக் குறைத்தான்`` என்பது போலக் கொள்க.
திருந்து அடி செவ்வியவாய பாதங்கள்.

பண் :

பாடல் எண் : 85

செறிவளை யாய்நீ வரையல்
குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப்
போதென்றெல் லோருமேத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று
வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக் காணப்
பெரிதுங் கலங்கியதே.

பொழிப்புரை :

செறிக்கப்பட்டவளைகளை உடையவளே `சிவனது செவ்விய பாதங்களாகிய தாமரை மலர்களே குடிப்பிறப்பு, கல்வி, மெய்ப்பொருள் எல்லாமாகும்! என யாவரும் புகழ்கின்ற அத் தன்மையையே நிலைபேறாக உடைய உனது மனம், `அந்தச் சிவனைத் தாம் விரும்பியதையே விரும்புகின்ற கீழ்மக்கள் கூட்டத்திற் சென்று காண்பேன்` என்று இப்பொழுது கலக்கமடைந்து விட்டதே; இஃது என்! அந்த மனத்தின்வழி நீ விரைந்து செல்லாதே.

குறிப்புரை :

இது, தலைவியை ஆற்றுவிக்க வேண்டி, `தலைவனை யான் விடர்கள் கூட்டத்திற் சென்று கழற்றுரை கூறி நின்னைச் சேர்விப்பேன்` எனத் தலைவனை இயற்பழித்த வழி, தலைவி, `அவர் விடர்களது கூட்டத்தில் சேர்பவர் அல்லர்` எனத் தலைவனை இயற்பட மொழிந்தது, பக்குவிகள் பால், `சிவஞானம் இன்றியும் வீடு பெறலாம்` என மயங்கிக் கூறுகின்றவர்களைப் பக்குவிகள் `அது கூடாது` எனத் தெருட்டுதல் இதன் உள்ளுறை.
`சேவடித் தாமரைப் போது` என மாற்றுக.
நிறை - வழுவாது நிறுத்துதல்.
``நெஞ்சு இது`` என்றது.
`தான் அவள்` என்னும் வேற்றுமையின்மையால் தோழியது நெஞ்சத்தை.
``கலங்கியதே`` என்பதன்பின் வருவித்தது சொல்லெச்சம்.
விரையல் - விரையாதே.
``வேண்டிற்று வேண்டிய நீசர்`` என்பதனை, ``காணா தான் - கண்டானாம் தான்கண்டவாறு`` 1 ``பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்`` 2 முதலியவற்றோடு ஒப்பிட்டு உணர்க.
`அக்கறை வளர் கண்டனை` எனச் சுட்டு வருவிக்க.

பண் :

பாடல் எண் : 86

கலங்கின மால்கடல் வீழ்ந்தன
கார்வரை ஆழ்ந்ததுமண்
மலங்கின நாகம் மருண்டன
பல்கணம் வானங்கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட
சடைஇமை யோர்அவிந்தார்
அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி
ஆடுவ தெம்மிறையே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானே, கடல்கள் யாவும் தீயால் கொதித்து வற்றிவிட்டன.
கரிய மலைகள் பெருவெள்ளத்தில் மூழ்கி விட்டன.
பூவுலகங்களும் அவ்வெள்ளத்தில் ஆழ்ந்து மறைந்து விட்டன.
வானுலகங்களும் நிலை குலைந்து போயின.
பலவாகிய உமது கணங்களும் `என்ன செய்வது` என்று தோன்றாமல் மயங்கி விட்டன.
`இறவாதவர்` எனப்படுகின்ற தேவர்களும் இறந்துவிட்டனர்.
இந்த நிலையில், ஆகாயம் எங்கும் போய் விட்டுவிளங்குகின்ற மின்னலோடு மின்னலாய் ஒளிர்கின்ற உமது நீண்ட சடைகள் சுழல நல்லதொரு சிறந்த நடனத்தை யார் பார்ப்பதற்கு ஆடுகின்றீர்?

குறிப்புரை :

`பார்ப்பதற்கு ஒருவருந்தாம் இல்லையே என்றபடி.
இது `சிவன் சுடுகாட்டில் ஆடுபவன்` எனக் கூறப்படுவதன் உண்மையை விளக்கியது.
`சுடுகாடு` என்பது எல்லாம் ஒடுங்கிய நிலை.
இது முற்றழிப்பு, அல்லது `சருவ சங்காரம்` - எனப்படும்.
`இந் நிலையில் சிவன் ஆடுகின்றான்` என்பது, புனர் உற்பவத்திற்கு (மறு முறைப் படைப்பிற்கு) ஆவனவற்றைச் செய்தலைக் குறிக்கும்.
அச் செயல் `சூக்கும பஞ்ச கிருத்தியம்` - எனப்படும்.
இந்நிலையில் ஆன்மாக்கள் `சேகல கேவலம்` - என்னும் நிலையில் நிற்கும்.
அந்த ஒரு கேவலத்திற்குள்ளே `பிரளய கேவலம், விஞ்ஞான கேவலம் - என்னும் இருகேவலங்கள் உளவாகும், இவற்றைச் சிவஞானபோத ஆறாம் சூத்திரத்துச் சிவஞான யோகிகளது சிற்றுரையால் அறிக.
இக்கேவலங்களை உடைய ஆன்மாக்களே சிவனோடு உடன் நிற்கும் பேய்களாகச் சொல்லப்படுகின்றன.
இஃது உணராதார், `சிவன் ஆடும் சுடுகாடு உலகில் பல இடங்களில் உள்ள சுடுகாடுகளே` என்றும், `பேய்கள் அங்கு வாழும் பேய்களே` என்றும் கருதிவிடுகின்றனர் என்பது கருத்து.
நாகம் - சுவர்க்க லோகம்.
``இமையோர் அவிந்தார்`` என்பதை, ``பல்கணம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
``இமையோர் வியந்தார் என்பது பாடம் அன்று, அலங்கல் - அசைதல்.

பண் :

பாடல் எண் : 87

எம்மிறை வன்னிமை யோர்தலை
வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப்
படுகின்ற முக்கண்நக்கற்
கெம்முறை யாளிவள் என்பிழைத்
தாட்கிறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக்
கருதிற் றெழிற்கலையே.

பொழிப்புரை :

எமக்கு இறைவனும், தேவர்கட்குத் தலைவனும், உமைக்குக் கணவனும், யாவராலும் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் வணங்கப்படுபவனும், மூன்று கண்களை உடைய வனும், திகம்பரனும் ஆகிய சிவனுக்கு என்னை வஞ்சித்து இவள் என்ன முறை உடையவள் ஆயினான்? (`மனைவி ஆயினளோ` - என்றபடி - அது நிற்க,) என்னை வஞ்சித்த இவளுக்குச் சிவன் இவள் தன்னை விரும்பியதை அறிந்தும் இவளுக்கு மெலிவை நீக்காமல் மெலிவை விளைவித்து, இவளது அழகிய உடையை அகன்று போகும்படி இவ்வாறு தவறு செய்தது ஏன்?

குறிப்புரை :

`அதனை யான் அறிகின்றிலேன்` என்பதாம்.
`இறை பிழைத்தான்; என்` என மாறிக் கூட்டுக.
`எழிற் கலை கவரக் கருதிய தாகிய இம்முறையாலே பிழைத்தான்` என்க.
இது, செவிலி தலைவி யது ஆற்றாமை கண்டு தலைவனை இயற் பழித்தது.
இறைவனைச் சார்ந்தார்க்கு ஆற்றாமை உளதாதலைக் கண்டு உலகர் இறைவனை இயற் பழித்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 88

கலைதலைச் சூலம் மழுக்கனல்
கண்டைகட் டங்கம்கொடி
சிலையிவை ஏந்திய எண்டோட்
சிவற்கு மனஞ்சொல்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்
தார்நின்ற மேருவென்னும்
மலைபிழை யாரென்ப ராலறிந்
தோர் இந்த மாநிலத்தே.

பொழிப்புரை :

`எட்டுக் கைகளில் மான், முத்தலைச் சூலம், மழு, நெருப்பு, மணி, மழுவிற் சிறிது வேறுபட்ட கட்டங்கம், கொடி, வில் - என்னும் இவற்றை ஏந்தியுள்ள சிவபெருமானுக்கு மனம், மொழி, மெய் மூன்றும் பிற வழிகளில் செல்லாது பணிவிடை செய்தவர்கள் நிலையாய் உள்ள மகாமேருமலையைப் போன்ற உயர்ந்த குறிக்கோள்களைக் கொள்ளினும் தவறாமல் பெறுவார்கள்` - என்று, அறிவுடையோர் இந்தப் பெரிய பூமியில் எங்குள்ளவரும் அறியக் கூறுவர்.

குறிப்புரை :

``உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்`` எனக் கூறிய திருவள்ளுவர் `அஃது எய்துதல் அரிது` என்னும் கருத்தால், ``மற்றது- தள்ளினும் தள்ளாமை நீர்த்து`` என்றார் ஆகலின், `சிவனடியார்கள் அத்தகைய குறிக்கோள்களைத் தவறாமல் எய்துவர்` என்றார்.
`மேரு வும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 89

மாநிலத் தோர்கட்குத் தேவர்
அனையவத் தேவரெல்லாம்
ஆநலத் தாற்றொழும் அஞ்சடை
ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு
மாலவர் தேர்ந்துணரார்
பாநலத் தாற்கவி யாமெங்ங
னேயினிப் பாடுவதே.

பொழிப்புரை :

பெரிய பூமியில் உள்ள மக்களினும் மேம்பட்ட பெருமையுடையவர் தேவர்.
அத்தேவர் யாவரும் தம்மால் ஆன மட்டும் நன்முறையில் வணங்கும் சிவபெருமான் பெருமையுடைய வன், அவனது பெருமையைத் தேன் பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரம தேவனும், திருமாலும் ஆகிய அவரே ஆராய்ந்து முற்றும் உணரவல்லரல்லர் என்றால், அவனது பெருமையை நாம் எங்ஙனம் முற்ற உணர்ந்து பாநயத்தோடு கூடிய கவிகளால் பாடுவது!

குறிப்புரை :

`இயலாது ஆகையால் அறிந்த அளவில் பாடுவேம்` - என்பது குறிப்பெச்சம்.
``யான் அறி அளவையின் ஏத்தி` என்றார் முருகாற்றுப் படையிலும் தேவரது பெருமையை உணர்த்தற்கு, ``மாநிலத் தோர்கட்குத் தேவர்`` என்றார்.
``தேவர்`` என்பதன் பின்னும், ``ஈசன்`` என்பதன் பின்னும் `பெருமையுடையர், பெருமையுடையன்` என்பன எஞ்சி நின்றன.

பண் :

பாடல் எண் : 90

பாடிய வண்டுறை கொன்றையி
னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய
திங்களின் ஊறலொத்த
தாடிய நீறது கங்கையுந்
தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தாலுமை
பாகமெம் கொற்றவற்கே.

பொழிப்புரை :

எம் தலைவனாகிய சிவபெருமானுக்கு அவன் பூசியுள்ள திருநீறு அவன் அணிந்துள்ள படத்தையுடைய பாம்பு பெருமூச்சு எறிதலால் கையில் ஏந்தியுள்ள நெருப்பு ஓங்கி எரிய, அதனால் அவன் முடியில் அணிந்துள்ள பிறை உருகி ஒழுகுவது போன்று உள்ளது.
பின்பு அந்நீறும், உமையாளது பாகமும் ஒன்று சேர்வது, கங்கை நதியும், தெளிவாகிய நீரையுடைய யமுனை நதியும் ஒன்று சேர்ந்தது போன்று உள்ளது.

குறிப்புரை :

கங்கை நீர் வெண்மை நிறத்தையும், யமுனை நீர் கருமை நிறத்தையும் உடையன.
``பாடிய வண்டு உறை கொன்றையினான்`` என்பது, ``எம் கொற்றவன்`` எனப்பட்டவனை.
`அவன் எனச் சுட்டும் அளவாய் நின்றது.
`அதுவும், உமை பாகமும் கூடியது, கங்கையும், தெண்ணீர் யமுனையும் கூடிய கோப்பு ஒத்தது` என வேண்டும் சொற்கள் வருவித்து இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 91

கொற்றவ னேயென்றுங் கோவணத்
தாயென்றும் ஆவணத்தால்
நற்றவ னேயென்றும் நஞ்சுண்டி
யென்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேயென்றும் பிஞ்ஞக
னேயென்றும் மன்மதனைச்
செற்றவ னேயென்றும் நாளும்
பரவுமென் சிந்தனையே.

பொழிப்புரை :

என்னுடைய சித்தம் எந்நாளும், யாவர்க்கும் என்றும், `கோவணமாக உடுத்த உடையை உடையவனே` என்றும், `புனைந்துள்ள கோலத்தால் நல்ல தவசியே` என்றும், `நஞ்சை உண்டவனே` என்றும், அஞ்செழுத்தை நெஞ்சில் அமைத்தவர்களால் பெறப்பட்டவனே` என்றும், `தலைக்கோலம் உடையவனே` என்றும், `மன்மதனை அழித்தவனே` என்றும் இவ்வாறே சொல்லித் துதிக்கும்.

குறிப்புரை :

`வேறொன்றையும் செய்யாது` எனத் தமது உள்ளத்தின் உறைப்பை வெளியிட்டவாறு.
சிந்தித்தல் அன்றித் துதித்தல் சித்தத் திற்கு இல்லையாயினும், `சிந்தித்தலே துதித்தலாம்` என்னும் கருத்தால் `துதிக்கும்` என்றார்.
ஆவணம், `ஆய வண்ணம்` என இறந்தகால வினைத்தொகை.
உண்டி - உணவு.
உண்டியை உடையவனை, `உண்டி` என்றது ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 92

சிந்தனை செய்ய மனமமைத்
தேன்செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்யத் தலையமைத்
தேன்கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத்
தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற்
கிவையான் விதித்தனவே.

பொழிப்புரை :

என்னுடைய மனத்தை இடையறாது உன்னுதற்கு வைத்தேன்; நாவைப் புகழ்சொல்லுதற்கு வைத்தேன்; தலையை வணங்குதற்கு வைத்தேன்; கைகளைக் கும்பிடுதற்கு வைத்தேன்; அன்பை அகப்படுத்தற்கு வைத்தேன்.
உடம்பை மயர்க்கூச்சு எறிவ தற்கு வைத்தேன்; வெந்து தணிந்த வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற இறை வனுக்கு யான் நேர்ந்தன இவை.

குறிப்புரை :

`என்னால் ஆயின இவை; இனி அவனது திருவுள்ளம்` என்பதாம்.
`மனம் முதலியவற்றை வேறொன்றற்கு வைத்திலேன்` என்றபடி.
``ஈசற்கு`` என இறுதியிற் கூறியமையால், முன்னர்க் கூறியன பலவும் அவனுக்கேயாதல் தெளிவு.

பண் :

பாடல் எண் : 93

விதித்தன வாழ்நாள் பெரும்பிணி
விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை
குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம் குன்றம்வெண்
சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம் நெஞ்சினி
என்செய்யும் வஞ்சனையே.

பொழிப்புரை :

நன்மை தீமைகளை அறிகின்ற பலவகையான அறிவுகளைக் கொண்டு பிரமன் எமக்கு வகுத்த வாழ்நாள்களிலே பெரிய நோய்கள் வந்து வெதுப்புவதில் சிறிதும் குறைவில்லை.
மகளிரது குங்கும மலைபோலும், மார்பில் அழுந்துதலையுடைய தனங் களை முன்னே கண்டோம், பின்பு அத்தனங்கள் தாமே மலைகளில் வெள்ளிய சந்தனம் பூசப்பட்டனபோல் ஆயினமையை உணர்ந்து பார்த்தோம், (இவ்வளவும் செய்துவிட்டமையால்) எமது மனம் இனிச் செய்வதற்கு என்ன வஞ்சனை உள்ளது?

குறிப்புரை :

`செய்யக் கூடிய வஞ்சனைகள் அனைத்தும் செய்தாகி விட்டன` என்றபடி.
`இங்கு கூறியன எல்லாம் எமது மனம் எம் வழிநின்று சிவனை நினையாமல் தப்பி ஓடிச் செய்த வஞ்சனைகளால் விளைந்தன` என்பதாம்.
`சிவனை நினையாது மனம் போன போக்கிலே போகின்றவர் இவ்வாறு கெடுவர்` என்பது கருத்து.
`மகளிரது தனங்கள் முதலில் குங்குமக் குன்று போலக் காணப்பட்டது` என்றது கலவிக்கு முன்னுள்ள நிலையையும், `அவை வெண்சந்தனம் பூசப் பட்ட குன்று போலக் காணப்பட்டன` என்றது கலவிக்குப் பின்னுள்ள நிலையையும் குறித்தது.
தலைவரது மார்பில் சந்தனக் குழம்பு இருத்தல் இயல்பு.
இன்ப நோக்கில் இன்பமாய்த் தோன்றினும் துறவு நோக்கில் இவை இடர் ஆதல் அறிக.
`பட்டனையவாக` என ஆக்கம் விரிக்க.
`மதித்தனம்` என்பது முற்றெச்சம்.
`விச்சைகள் கொண்டு பண்டே விதித்தனவாகிய வாழ் நாளில் பெரும்பிணி கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை` என இயைக்க.
விதித்தன - விதிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 94

வஞ்சனை யாலே வரிவளை
கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழு
தேன்சொரி மாலருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை
கவ்வியண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி
மூடிய வீரனையே.

பொழிப்புரை :

என்னுடைய மனத்தில் மயக்கம் நிறைந்து ததும்பும்படி, யான் அறியாமலே எனது கீற்றுப் பொருந்திய வளையல் களைக் கவர்ந்து கொண்டு, யானைத் தோலைப் போர்த்துக் கொண்டு இருக்கின்ற வீரனை நான் உறங்கும் பொழுதும் மிக வணங்கினேன்.

குறிப்புரை :

`வணங்கியும் அவன் எனக்கு அருள் செய்திலன்` என்பது குறிப்பெச்சம்.
வஞ்சனையாலே கவர்ந்து கொண்டவன் தன்னை `வீரன்` என்று சொல்லிக் கொள்வதுவெட்கம் - என்பது கருத்து.
`மால் பனிப்பக் கொண்டு` என்க, ``கொண்டு`` என்னும் செய் தென் எச்சம், ``மூடிய`` என்பதனோடு முடிந்தது.
துஞ்சும் பொழுதும் தொழுதல், இடைவிடாத பழக்கத்தால் நிகழ்வது.
``நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே`` * என்று அருளிச் செய்தது காண்க.
``மால்`` மூன்றில் முன்னவை மயக்கம்; ஏனையது பெருமை.
பனித்தல் - ததும்புதல்.
`அருவியை யுடைய வரை` என்க.
வரை - மலை.
`மயக்க அருவி` என்பதில் மயக்கம், அதற்கு ஏதுவாகிய மத நீரைக் குறித்தது.
அஞ்சனம் - மை; அஃது அதன் நிறத்தைக் குறித்தது.
வெள்ளிய தந்தங் களை வாயில் கொண்டு நிமிர்கின்ற கரிய யானைக்கு, வெண்பிறை கௌவி அண்ணாக்கின்ற அஞ்சன மலையை உவமையாகக் கூறியது இல் பொருள் உவமம்.
ஈர் உரி - உரித்த தோல்; இறந்தகால வினைத் தொகை.

பண் :

பாடல் எண் : 95

வீரன் அயனரி, வெற்பலர்
நீரெரி பொன்னெழிலார்
காரொண் கடுக்கை கமலம்
துழாய்விடை தொல்பறவை
பேரொண் பதிநிறம் தாரிவர்
ஊர்திவெவ் வேறென்பரால்
ஆரும் அறியா வகையெங்கள்
ஈசர் பரிசுகளே.

பொழிப்புரை :

எங்கள் இறைவரது தன்மைகள் யாராலும் ஒரு நிலையாக அறிந்து சொல்லுதற்கு இயலாதன.
ஏன் எனில், அவர் பெயர் ஒன்றாகாது, `உருத்திரன், பிரமன், விட்டுணு` - என மூன்று என்றும், அவருக்கு இடம் ஆவதும் ஒன்றாகாது, `மலை, மலர், நீர்` என மூன்று என்றும், அவரது நிறமும் ஒன்றாகாது, `தீ வண்ணம், பொன் வண்ணம், அழகு நிறைந்த மேக வண்ணம்` என மூன்று என்றும், அவரது அடையாள மாலையும் ஒன்றாகாது, `கொன்றை மலர், தாமரை மலர், துளசி` என மூன்று என்றும், அவர் ஏறிச் செல்கின்ற ஊர்தியும் ஒன்றாகாது, `இடபம், அன்னம், கலுழன்` என மூன்று என்றும் இவ்வாறு அனைத்தையும் மூன்று மூன்றாகவே, அறிந்தோர் கூறுகின்றனர்.

குறிப்புரை :

இஃது, ஒருவனாகிய சிவனே `படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழிலை நோக்கி `அயன், அரி, அரன்` என மூவராய் நிற்கின்றான் - என உணர்த்தியவாறு.
ஓர் உருவாயினை மான் ஆங்காரத்து ஈரியல்பாய், ஒரு விண்முதற் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திகள் ஆயினை``.
* என்று அருளிச் செய்ததது காண்க.
சம்பு பட்சமாகப் பார்க்கும் பொழுது மூவரும் ஒருவனே.
அணுபட்சமாகப் பார்க்கின் வேறுவேறாம்.
சம்பு பட்ச அணுபட்சங்களின் இயல்பைச் சித்தாந்த நூல்களுட் காண்க.
இறைவனது தொழிலை மூன்றாகக் கூறும் பொழுது மறைத்தல் காத்தலிலும் அருளல் அழித்தலிலும் அடங்கும் என்க.
தொழில்களை ஐந்தாக விரிக்குமிடத்துச் சிவன் `அயன், அரி, அரன்` என்பவரோடு `மகேசுரன், சதாசிவன்` - என மேலும் இருவராய், ஐவராய் நிற்பன் பேர், பதி, நிறம், தார், ஊர்தி - என்பவற்றுள் ஒவ்வொன்றையும் வீரன் முதலிய மும்மூன்றனோடு முறை நிரல் நிறையாகப் பொருத்திக் கொள்க.
இவர்தல் - ஏறுதல்.
இவர் ஊர்தி, வினைத்தொகை, அன்னமும், கலுழனும் ``பறவை`` என அடங்கின.
`வகையின` என்பதில் சாரியையும், இறுதி நிலையும் தொகுத்தலாயின.
அன்றி, `வகை, ஆகுபெயர்` - என்றலும் ஆம், ``வீரன்`` என்றது ``அரன்`` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 96

பரியா தனவந்த பாவமும்
பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட
னாவன் எனவடியார்க்
கரியான் இவனென்று காட்டுவன்
என்றென் றிவையிவையே
பிரியா துறையுஞ் சடையான்
அடிக்கென்றும் பேசுதுமே.

பொழிப்புரை :

``அடியார்களைப் பிரியாது அவர்களோடு உடன் உறைபவனாகிய சிவபெருமான், பிறர்க்கு அரியவனாயினும், `யான் என்னைப் பணிந்தவர்கட்கு உரியவன்` என்று, சொல்லி உன்னோடு உடன் உறைவான் என்று அவன் அடியவர் சொல்ல, யாம், அவனுடைய அடியவர்களை விட்டு அகலாது வந்து பற்றுகின்ற பாவமும், பற்றும், மற்றும் பழி முதலியனவும் ஆகிய இவை இவை, `அவன் அடியார்க்கு எளியனல்லன்; அவர்கட்கும் அரியவனே` எனக் காட்டுவன்` என்று என்று அவன் திருவடிக்கு என்றும் விண்ணப்பிப்போம்.

குறிப்புரை :

இது, வீர, என்றன்னை விடுதிகண் டாய், விடில்,/# என்னை மிக்கார்
`ஆரடியான்` என்னின், `உத்தரகோச/# மங்கைக்கரசின்
சீரடியார் அடியான்` என்று நின்னைச்/# சிரிப்பிப்பனே.
* என்றது போலப் பிராரத்தத்தை விரைய விலக்காமை பற்றி வருந்திக் கூறியது.
பரிதல் - நீங்குதல்.
`பரியாதனவாய் வந்த` - என ஆக்கம் விரிக்க.
``பணிந்தார்க்கு உரியான் - எனச் சொல்லி, - உன்னுடன் ஆவன் - என`` என்பதை முதலிலும், ``இவை, இவை`` என்பதை ``மற்றும்`` என்பதன் பின்னும் கூட்டியுரைக்க.
`என - என்று அடியவர் சொல்ல` என்க.
``உன்னுடன்`` என்பது வேறு முடிபு ஆகலின் பன்மை யொருமை மயக்கம் இன்று.
`இவன் என்று காட்டுவன்` என்பது பாடம் அன்று.
அடுக்கு, பன்மை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 97

பேசுவ தெல்லாம் அரன்திரு
நாமம்அப் பேதைநல்லாள்
காய்சின வேட்கை அரன்பா
லதுவறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே
லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால்
இவையொன்றும் பொய்யலவே.

பொழிப்புரை :

அந்தச் சிறுமியாகிய அழகி பேசுகின்ற பேச்சு முழுதும் சிவன் திருப்பெயர்களேயாய் உள்ளன.
காய்கின்ற சினத்திற்கு முதலாய் உள்ள அவளது வேட்கை, சிவனிடத்தில் உள்ளதான, வண்டுகள் மொய்க்கும் கொன்றையை உடைய அவனது முடியின் மேலது.
அவள் தன் தனங்களின்மேல் பொருந்திய பூசியுள்ள சந்தனக் குழம்பை (`நீயேனும் சிவனை அடையத் தவம் செய்` என்று) அதனைக் கும்பிடுவாள்.
யான் சொல்லிய இவைகள் சிறிதும் பொய்யல்ல.
(மெய்)

குறிப்புரை :

`ஆகவே, இனி இவளை நாம் சிவனுக்கு வரைவு நேர்தலே செய்யத் தக்கது` என்பது குறிப்பெச்சம்.
இது செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.
பக்குவிகளது நிலைமையை அறிவர் அவர்தம் சுற்றத்தார்க்கு உணர்த்துதல் இதன் உள்ளுறை.
``எல்லாம்`` என்பது எஞ்சாமையைக் குறித்தது.
தலைவி அருகில் இல்லாமையால் ``அப்பேதை நல்லாள்`` எனச் சேய்மைச் சுட்டாகச் சுட்டினாள்.

பண் :

பாடல் எண் : 98

பொய்யா நரகம் புகினுந்
துறக்கம் புகினும்புக்கிங்
குய்யா உடம்பினோ டூர்வ
நடப்ப பறப்பவென்று
நையா விளியினும் நானிலம்
ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற
வாவரம் வேண்டுவனே.

பொழிப்புரை :

பாவிகட்குத் தப்பாது கிடைக்கின்ற நரகத்திலே நான் புகுந்தாலும், அதைவிட்டுச் சுவர்க்கத்தை அடைந்தாலும், இப்பூமியில் வந்து, வெறுப்பைத்தரினும் விட இயலாத உடம்புகளோடு கூடி, `ஊர்வன` என்றும் `நடப்பன` என்றும், `பறப்பன` என்றும் பிறப்புக்களை எடுத்து வருந்தி வாழ்ந்து இறக்கினும், (யாதேனும் ஒரு பிறப்பில்) பேரரசனாகி நிலம் முழுவதையும் ஆளினும் நான் வேண்டுவன எல்லாம் நான்கு வேதங்களில் ஒலி பொருந்திய நீல கண்டத்தினை உடைய சிவபெருமானது திருவடிகளை மறவாதிருக் கின்ற அந்த ஒருவரமேயாகும்.

குறிப்புரை :

``புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே - வழுவாதிருக்க வரந்தர வேண்டும்`` * என அப்பர் பெருமான் அருளிச் செய்ததும் காண்க.

பண் :

பாடல் எண் : 99

வேண்டிய நாள்களிற் பாதியும்
கங்குல் மிகவவற்றுள்
ஈண்டிய வெந்நோய் முதலது
பிள்ளைமை மேலதுமூப்
பாண்டின அச்சம் வெகுளி
அவா வழுக் காறிங்ஙனே
மாண்டன சேர்தும் வளர்புன்
சடைமுக்கண் மாயனையே.

பொழிப்புரை :

(படைப்போன் ஆகிய நான்முகக் கடவுள்) மக்களைப் படைக்கும் பொழுது `ஒவ்வொருவரும் இவ்வுடம்போடு கூடி இத்துணை ஆண்டுகள் வாழ்க` என வேண்டி வரையறுக் கின்றான்.
அவ் ஆண்டுகள் அனைத்தும் மக்களுக்கு வாழும் நாளாக அமைவதில்லை.
பொதுவாக ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழு தாகி விடுகின்றன.
(இரவு வாழ்க்கை வாழ்க்கையன்று) மற்றொரு பாதி ஆண்டுகளே பகலாய் மிஞ்ச, அவைகளிலும் பலவாய்த் திரண்ட கொடிய நோய்கள் உளவாகும்.
இனி, வரையறுக்கப்பட்ட ஆண்டு களில் தொடக்கப்பகுதி குழவிப் பருவமாய்க் கழிகின்றது.
முடிவுப் பகுதி முதுமைப் பருவமாய்க் கழிகின்றது.
(இடையில் எஞ்சும் ஒருசில ஆண்டுகளில் என்ன செய்ய இயலும்!) அவைகளிலும் `அச்சம், வெகுளி, அவா அழுக்காறு` என இப்படி ஆண்டுகள் கழிந்தோடிப் போகின்றன.
ஆகையால் (யாம் மிக இளைய பருவத்திற்றானே வேறு எதனையும் பொருட்படுத்தாமல்) நீண்ட, புல்லிய சடையையும், மூன்று கண்களையும் உடைய கள்வனைக் கண்டறிந்து, அவன் திருவடிகளையே புகலிடமாக அடைவோம்.

குறிப்புரை :

வேண்டுதல் - விரும்புதல்.
அஃது அதன்படி வரை யறுத்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
இதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது.
``பாதியும்`` என்னும் உம்மை சிறப்பு.
கங்குல் இரவு.
`கங்குல் ஆம், பிள்ளைமை ஆம், மூப்பும் ஆம்` என்க.
மிகுதல்- எஞ்சுதல்.
ஈண்டுதல் - திரளுதல்.
ஆண்டின - `ஆண்டு` எனப்படும் காலங்கள்.
`கள்வன்` என்றது, எளிதில் அகப்படாமை பற்றி.

பண் :

பாடல் எண் : 100

மாயன்நன் மாமணி கண்டன்
வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம்
பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும்
கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது பொன்வண்ணமே.

பொழிப்புரை :

எளிதில் அகப்படாமை பற்றி, `கள்வன்` எனப் படுகின்ற, நல்ல, உயர்ந்த நீலமணி போலும் கண்டத்தையுடைய வனும், நீண்ட சடையை உடையவனுமாகிய சிவனுக்குத் தொண்டு பூண்ட அடியார்கள் யாதோர் உடம்பினையும் பற்றா நிலையாகிய வீட்டைப் பெறுதல் உண்மையே.
எங்ஙனம் எனில், பொன் மலையை அடுத்த காக்கையும் அப்பொழுதே பொன்னிறத்தைப் பெற்று விடுகின்றது.

குறிப்புரை :

இஃது எடுத்துக்காட்டுவமை.
தன்னைச் சார்ந்த பொருளைத் தன் வண்ணம் ஆக்குதல், சிவனுக்கும், செம்பொன் மலைக்கும் இடையேயுள்ள பொதுத் தன்மை.
சேர்வார் தாமே தானாகச் செயுமவன் என ஞானசம்பந்தர் அருளிச் செய்தது காண்க.
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாமே என்பது திருமந்திரம்.
கொடி - காக்கை.
``சொல்`` என்றது பொருளை.
``காய்சின ஆனை வளரும்`` என்றது கனக மலைக்கு அடைமொழி.

பண் :

பாடல் எண் : 101

அன்றுவெள் ளானையின் மீதிமை
யோர்சுற் றணுகுறச்செல்
வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு
வெள்ளி மலைஅரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங்
கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்
தந்தாதி வழங்கிதுவே.

பொழிப்புரை :

இதிற் குறிக்கப்பட்ட வரலாற்றைத் திருத் தொண்டர் புராணத்துக் கழறிற்றறிவார் நாயனார் புராணத்தால் அறிக.
இது பிற்காலத்து ஆன்றோரால் செய்யப்பட்டது.

குறிப்புரை :

சுற்று - எப்பக்கத்திலும்.
மன்று - தில்லையம்பலம், பொன்வண்ணத் தந்தாதியாவது, இவ்வாறு வழங்குகின்ற இதுவே` என முடிக்க.
பொன்வண்ணத் தந்தாதி முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்
டிலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்
குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்
தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி யெஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை யென்னுங் குவட்டிடை இழிதரப்
பொங்குபுயல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆரூர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே.

பொழிப்புரை :

பொருள்வயிற் சென்ற தலைவர் குறித்த கார்ப் பருவமும் யாவரும் அறிய வந்திறுத்தது.
அதனால் ஆற்றாமை காரண மாக இவளும் (தலைவியும்) மற்றொரு முகிலின் தன்மையை எய்தி னாள்; தலைவர் தலைவியிடத்து மாறாக் காதலராயினும் (குறித்தபடி வாராமையால்) அவர் மனம் கல்லுப்போல வலிதாகிவிட்டதோ!

குறிப்புரை :

``விரிந்த கடல் நீரைத் தான் முற்றப் பருகியதனால் அது சேறாயிற்றுப் போலத் தோன்றுதற்கு ஏதுவான கரிய மேகம் மலை முகட்டில் ஏறி நுண் துளி பொழிய, அதனை நேரே கண்டு, தலைவி தானும் தனது காதணியாகிய மின்னல் மின்ன, புருவமாகிய வான வில்லைத் தோற்றுவித்து, விளங்குகின்ற எழிலையுடைய தனது சிவந்த வாயாகிய, `இந்திரகோபம்` என்னும் வண்டு ஊர்தர, `அகங்கைகள்` என்னும் காந்தட் பூக்கள் விரிய, முத்துப்போல விளங்குகின்ற பற்க ளாகிய முல்லை அரும்புகள் அரும்ப, கூந்தல் கொன்றைக் காயையும், தேமல் கொன்றைப் பூவையும், எழுச்சியையுடைய சாயல் மயிலையும் தோற்றுவிக்க, உள்ளிருந்து வெளிவரும் நெட்டுயிர்ப்பாகிய காற்று உடன் வீச, தனது கண்ணீராகிய பெருமழையைப் பொழிந்து, அத னானே கண்ணில் உள்ள மையாகிய கொழுவிய சேறு அலம்பப்பட்டு, அந்நீராகிய அருவி தன் கொங்கைகளாகிய மலைகளுக்கு இடையே, மாணிக்கம், பொன், குற்றம் அற்ற வைரம், அழகுமிகுந்த அகில், சந்தனம் இவைகளைத் தேய்த்து ஒழுகுதலால் மற்றொரு மேகமாம் தன்மையை விளக்கினாள்.
தலைவர் காதலுடை யாராயினும், (வந்து சேராமையால் அவர் மனம் இப்பொழுது கல்லாகிவிட்டதோ!`` எனப் பொருள் உரைத்துக் கொள்க.
``தவிர்த்த`` என்னும் பெயரெச்சம், ``சடை`` என்பதனோடு முடிந்தது.
`அண்ணலுக்கு` என நான்காவது விரிக்க.
பலி சொரியும் கல், பலிபீடம்.
பலி சொரியப்படும் கல் வலிதாதலோடு, பலியொன்றற்கன்றி பிறிதொன்றற்கு இடமாகாமையால் அதுவே கைப்பொருளுக்கன்றிப் பிறிதொன்றற்கு இடமாகாத மனத்திற்கு உவமையாயிற்று.
பொருளே காதலர் காதல்
அருளே காதல் என்றி நீயே
என்னும் அகப்பாட்டினையும் காண்க.
இப்பாட்டு உரிப் பொருளாற் பாலையாயிற்று.
இது நேரிசையாசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 2

மனம்மால் உறாதேமற் றென்செய்யும் வாய்ந்த
கனமால் விடையுடையான் கண்டத் - தினமாகித்
தோன்றினகார் தோன்றிலதேர் சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்;
கான்றனநீர் ஏந்திழையாள் கண்.

பொழிப்புரை :

(தலைவர் குறித்துச் சென்ற கார்ப் பருவம் வந்து விட்டமையால்) பெருமை பொருந்திய திருமாலாகிய இடபவாகனத்தையுடை சிவபெருமானது கண்டத்திற்கு ஒத்த வகையினையுடையவாய் முகில்கள் கண் முன்னே தோன்றிவிட்டன.
ஆயினும் தலைவர் ஊர்ந்து சென்றதும், சேமமாகக் கொண்டு சென்றவும் ஆகிய தேர்கள் எம் கண் முன் தோன்றவில்லை.
ஆகவே, இவளுடைய (தலைவியுடைய) மனம் மயக்கம் கொள்ளாது என் செய்யும்! (ஒன்றையும் செய்ய மாட்டாது.
ஆகையால்) இவள் கையில் உள்ள சங்க வளையல்கள் கழன்று வீழ்ந்தன; மேனி முழுவதும் பசலைகள் போர்த்தன; கண்கள் நீரைப் பொழிந்தன.

குறிப்புரை :

`இனி இறந்துபடுவாள் போலும்` என்பது குறிப்பெச்சம்.
இது பருவங்கண்டு ஆற்றாளாய தலைவியது நிலை கண்டு தோழி வருந்திக் கூறியது.
இதுவும் உரிப் பொருளாற் பாலையே.
`கனம் வாய்ந்த மால்` என மாற்றிக் கொள்க.

பண் :

பாடல் எண் : 3

கண்ணார் நுதல்எந்தை காமரு
கண்டம் எனவிருண்ட
விண்ணால் உருமொடு மேலது
கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயில்
ஆல்மட மான் அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க்
கழியும் பிரிந்துறைவே.

பொழிப்புரை :

மேகம், `கண் பொருந்திய நெற்றியையுடைய எம் தந்தையாகிய சிவபெருமானது அழகிய கண்டம்` என்று சொல்லும்படி இருண்டு, தனக்கு இடமாகிய விண்ணின்கண் இடியுடன் மேலே உளதாயிற்று.
விசாலித்த நிலத்தின்கண் மலையிடத்து இளமையான மயிலின் ஆட்டம் கீழே உளதாயிற்று.
(எனவே,) விண்ணும், மண்ணும் கார்ப் பருவம் வந்ததைத் தெளிவாகக் காட்டி நிற்றலால்) இளைய மான் போலும் பெண்ணாகிய இவள் தலைவனைப் பிரிந்து உறையும் தனிமை இனி என்னாய்க் கழியுமோ!

குறிப்புரை :

`இறந்துபாடாய்க் கழியுமோ` என்றபடி ``இருண்ட`` என்னும் பெயரெச்சம் ``விண்`` என்னும் இடப் பெயர் கொண்டது.
`இருண்டு` என்றே பாடம் ஓதலும் ஆம்.
விண்ட - அகன்ற.
ஆல் - ஆலுதல்; முதனிலைத் தொழிற் பெயர்.
`கொண்டல் மேலது; மயில் ஆலுதல் கீழது; இனி என்னாய்க் கழியும்` என்க.
இதன் திணையும், துறையும் மேலனவே.

பண் :

பாடல் எண் : 4

உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்
மின்சரந் துரந்தது வானே நிலனே
கடிய வாகிய களவநன் மலரொடு
கொடிய வாகிய தளவமும் அந்தண்
குலைமேம் பட்ட கோடலுங் கோபமோ
டலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமே அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்
கங்குலும் பகலும் காவல் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே
யானே இன்னே
அலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான்
றுலவா நல்வரம் அருளிய உத்தமன்
அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந் தழியக் கண்துயி லாவே.

பொழிப்புரை :

வானம்; தன்னிடத்து உள்ள மேகங்களின்வழி மின்னலாகிய ஒளி பொருந்திய வாளை உறையினின்றும் உருவி வீசி, இடி முழக்கமாகிய போர்முரசம் ஒலிக்க, எவ்விடமும் அகப்படக் கொடிய வில்லை (வானவில்லை) வளைத்து, எங்கும் நிறைந்த மழைத் தாரைகளாகிய வெள்ளிய அம்புகளை ஏவிப் போர்புரியாநின்றது; நிலம், கடிய களாமலர், கொடிய முல்லை மலர், குலையாக மேம்பட்ட அழகிய, குளிர்ந்த வெண்காந்தள் மலர், அலைவால் மேம்பட்ட செங்காந்தள் மலர், `இந்திர கோபம்` என்னும் வண்டு காயா மலர் இவைகளுடன் கூடி கொடிய துன்பத்தைத் தாராநின்றது.
அவரோ (தலைவரோ) பகை மன்னரது காவல் மிக்க அரணை, வெளி வருவாரையும், உட்புகுவாரையும் அவற்றைச் செய்யாதவாறு தடுத்து முற்றுகையிட்டு, இரவும் பகலும் காவல் புரிதலை விரும்பிக்குற்றம் அற்றவனாகிய அரசன் பாசறைக்கண்ணே இருத்தலால் (எம்மையும், எமக்கு அவர் சொல்லிச் சென்ற சொல்லையும் நினைப்பாரல்லர்; ஆதலின்) யானோ இவ்விடத்திலே, அளவற்ற ஆற்றல் வாய்ந்த அருச்சுனனுக்கு அக்காலத்தில் அவன் போரில் இறந்து படாது வெற்றி பெறும்படி நல்ல வரத்தைக் கொடுத்த மேலோனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள, அழகிய, குளிர்ச்சி மிக்க திருவாரூரை நினைத்து மகிழும் நல் ஊழ் இல்லாது, உலக மயக்கத்திற் கிடக்கும் மாக்களைப் போலத் துயரத்தையே நுகர்ந்து இறந்துபடும்படி என்னுடைய கண்கள் உறங்குகின்றில.

குறிப்புரை :

`இனியான் என் செய்வேன்` என்பது குறிப்பெச்சம்.
இதுவும் உரிப்பொருளாற் பாலை.
வினைவயிற் பிரிந்த தலைவன் நீடத் தலைவி பருவங் கண்டு ஆற்றாமை துறை.
மயரிய - மயங்கிய.
``கடிய, கொடிய`` என்பன, `மணம் பொருந்திய, கொடியில் உள்ள என்னும் பொருளவாயினும் `கடுமையுடைய, கொடுமையுடைய` பிற நயங் களையுந் தந்தன.
இதனுள் இயைபுருவகம் வந்தமை காண்க.
இஃது இடையே குறளடி பெற்றமையால் இணைக்குறள் ஆசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 5

துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக் கொப்பாய கார்.

பொழிப்புரை :

துயிலாமைக்கு ஏதுவாகிய துன்பம் எம்மிடத்திலே தோன்றுமாறு தோன்றிப் பூவாகிய நெருப்புத் தோன்றும்படியும், மயில்கள் ஆடும்படியும் அடுக்கடுக்காய் உள்ள பல அண்டங்கட்கும் அப்பால் உள்ள பல அண்டங்கட்கும் அப்பால் உள்ளவனும், அழகிய திங்களாகிய கண்ணியைச் சூடினவனும் ஆகிய சிவபெருமானது கண்டத்துக்கு ஒப்பாய் உள்ள முகில் வந்துவிட்டது.

குறிப்புரை :

`இனித் தலைவர் வருவார்` என்பது குறிப்பெச்சம்.
`வாராராயின் யாம் துயிலேம் என்பதை அவர் அறிவார்` என்றற்கு, `துயிலாநோய் யாம் தோன்றக் கார் வந்தது` என்றாள்.
இது, `பருவம் கண்டு தலைவி ஆற்றாள்` எனக் கருதி ஆற்றுவித்தற் பொருட்டுத் தலைவனை இயற் பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.
``நோய் யாம் தோன்ற`` என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத் தின் மேல் நின்றது.
தோன்றித் தீ, உருவகம்.
ஆல், மாது, ஓ அசைகள்.

பண் :

பாடல் எண் : 6

காரும் முழக்கொடு மின்னொடு
வந்தது காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப்
புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே
நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆரூரன்
ஐய அணங்கினுக்கே.

பொழிப்புரை :

மேகமும் இடியோடும், மின்னலோடும் வந்தது.
தலைவர் சொல்லியபடி அவரது தேரும், தெருவும் ஆரவாரிக்கும் படி புகுந்தது.
நினைத்தற்கரிய விடத்தை உண்ட கண்டத்தினை உடைய முதல்வராகிய சிவபெருமானது ஆரூரை ஒத்தவளாகிய அழகிய தலைவி தன் கைவளைகள் மெலிவால் கழல்வனவாய் இருந்தவை இப்பொழுது பூரிப்பால் நெரிவனவாயின.

குறிப்புரை :

இது, பிரிந்திருந்த தலைவன் தான் குறித்தபடி வந்தமை யறிந்து கண்டோர் கூறியது.
``காரும், தேரும்`` என்னும் உம்மைகள் எதிரது தழுவியதும், இறந்தது தழுவியதுமாய எச்ச உம்மைகள்.
``தெரு வும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.
`அன்ன` என்பது கடைக் குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 7

அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதில் புரிகுழல்
வான்அர மகளிர்நின் மல்வழங் ககலத்
தானாக் காத லாகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையற வெய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து
அல்லியங் கோதை அழலுற் றாஅங்
கெல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத் தண்ண லாரூர்
வளமலி கமல வாள்முகத்
திளமயிற் சாயல் ஏந்திழை தானே.

பொழிப்புரை :

தலைவ, தெய்வம் தங்கும் பெரிய மலைகளை `அவை அத்தன்மைய` என்றும், `ஏறுதற்கு அரியன` என்றும் எண் ணாது, நறுமணம் கமழும் மலையைச் சூடிக் கொண்டு, நாள்தோறும், வீசுகின்ற ஒளியையுடைய நீண்ட உனது வேற்படையே உனக்கு முன்னே வழியை விளக்கும் விளக்காய் அமைய, மிக்க வேகத்தை யுடைய கான்யாற்று நீண்ட நீரை நீந்திக் கடந்து, நீ ஒருவனே தனியாய் வரும்பொழுது, `பின்னப்பட்ட கூந்தலையுடைய தேவ மகளிர் உன்னை, `தேவன்` என மருண்டு, திண்மை வாய்ந்த உனது மார்பின் கண் பொருந்துதற்கு நீங்காக் காதல் மிகுகின்றவராய் உன் குணத்தை வேறுபடுத்திவிடுவர்` என்று, பகைவரது மூன்று ஊர்களும் ஒருங்கே எரிந்தொழியும்படி ஓர் அம்பையே ஆராய்ந்து எடுத்து எய்த, மாதொரு பாகனாகிய இறைவனது திருவாரூரில் நீர் வளத்தாற் சிறந்த பொய்கையிற் பூத்த தாமரை மலர் போலும் ஒளி பொருந்திய முகத்தை யும், இளைய மயிலினது சாயல்போலும் சாயலினையும், ஏந்திய அணிகலங்களையும் உடைய என் தோழி உன்னை வெறுக்கும் உள்ளத்துடன் இமை குவியாத கண்களையுடையவளாய், எங்கள் குடில்களையடுத்து ஆண்மான்கள் பெண்மான்களோடே பிரியாது திரிதலைக் கண்டு செயலற்று, ஆற்றாமையால் கையிலுள்ள மெல்லிய விரல்களை நெரித்துக் கொண்டு, விம்மி வெப்பமாக மூச்செறிந்து, அக இதழோடு கூடிய பலவகை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்று கண்ணீர் விட்டு அழுதல்போல (இரவு முழுதும்) எல்லையில்லாத பெருந்துயரை எய்தி அழாநின்றாள்; (அவளை யான் ஆற்றுவிப்பது எங்ஙனம்?)

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம்.
இது தலைவன் களவொழுக்கத்தை நீட்டியாது வரைதலை வேண்டித் தோழி இரவு வருவானை `வாரற்க` என இரவுக் குறி விலக்கியது.
இது முதல் கரு, உரி முப்பொருளாலும் குறிஞ்சி.
``கலை பிணை திரிய`` என்றது, `நீயும் அதுபோல இவளை வரைந்து கொண்டு பிரியாதிருத்தல் வேண்டும்`` என்பதைக் குறித்த உள்ளுறை யுவமம்.
`மணங்கமழ் தெரியல் சூடி`` என்றது, அவரது மருட்சிக்கு மற்றுமொரு காரணம் உண்மை கூறியது.

பண் :

பாடல் எண் : 8

இழையார் வனமுலை யீர்இத்தண் புனத்தின்
உழையாகப் போந்ததொன் றுண்டோ - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்த
கைம்மாநேர் அன்ன களிறு.

பொழிப்புரை :

அணிகலன்கள் நிறைந்த, அழகிய தனங்களை யுடையவர்களே, வறிது படாத புகழையுடைய பெரியோனும், தீயில் நின்று ஆடுவோனும், திருவாரூரில் உள்ள முதல்வனும் ஆகிய சிவபெருமான் முற்காலத்தில் உரித்த யானையே போன்ற அந்த யானை இந்தக் குளிர்ச்சியான புனத்தின் பக்கமாகப் போந்ததொரு செயலை நீவிர் கண்டது உண்டோ?

குறிப்புரை :

இஃது, இயற்கைப் புணர்ச்சியிலும், இடந்தலைப் பாட்டிலும், பாங்கற் கூட்டத்திலும் தலைவியைக் கூடி இன்புற்ற தலை வன் பாங்கியிற் கூட்டத்தின் பொருட்டு அவளை மதியுடம்படுத்தற்கு அவர் இருவரும் உள்வழிச் சென்று வேழம் வினாயது.
``அன்ன`` என்பது சுட்டு.

பண் :

பாடல் எண் : 9

களிறு வழங்க வழங்கா
அதர்கதிர் வேல்துணையா
வெளிறு விரவ வருதிகண்
டாய்விண்ணினின் றிழிந்து
பிளிறு குரற்கங்கை தாங்கிய
பிஞ்ஞகன் பூங்கழல்மாட்
டொளிறு மணிக்கொடும் பூண்இமை
யோர்செல்லும் ஓங்கிருளே.

பொழிப்புரை :

யானைகள் உலாவுதலால் மக்கள் செல்லாத வழியில் கையில் உள்ள வேல் ஒன்றே துணையாக, ஆகாயத்தினின்றும் இறங்கிய, ஒலிக்கும் ஒலியையுடைய கங்கையைச் சடையில் தாங்கிய தலைக் கோலத்தையுடைய சிவபெருமானது அழகிய திருவடிகளை வணங்குதற்பொருட்டு அவற்றை நோக்கி, ஒளிவீசுகின்ற இரத்தினங்களால் ஆயவளைந்த அணிகலன்களை அணிந்த தேவர் மட்டுமே செல்கின்ற மிகுந்த இருட் காலத்தில் நீ அத்தேவர்காண இங்கு வருகின்றாய்!

குறிப்புரை :

`இது தகாது` என்பது குறிப்பெச்சம்.
இதன் திணையும், துறையும் மேல், ``அணங்குறை நெடுவரை`` எனப் போந்த பாட்டின வேயாம்.
`அர்த்த யாம பூசையில் தேவர் சிவபெருமானைச் சென்று வணங்குவர்` என்பது பற்றி ``பிஞ்ஞகன் பூங்கழல் மாட்டு இமையோர் செல்லும் இருள்`` என்றார்.
கண்டாய், முன்னிலை அசை.

பண் :

பாடல் எண் : 10

இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது
ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
உள்நிறை கொடுமை உரைப்ப போன்றன
சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு
குழைகெழு திருமுகம் வியர்ப்புள் ளுறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி
என்னிது விளைந்த வாறென மற்றி
தன்னது அறிகிலம் யாமே செறிபொழில்
அருகுடை ஆரூர் அமர்ந்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலைச் சிராமலைச் சாரல்
சுரும்பிவர் நறும்போது கொய்யப்
பெருஞ்செறு வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.

பொழிப்புரை :

நெருங்கிய சோலைகளைப் பக்கத்தே உடைய திருவாரூரில் விரும்பி உறைகின்ற அமுதமாய் உள்ளவனும், நறுமணத்தோடு மலர்கின்ற மாலையை அணிந்தவனும், மூன்று கண்களையுடையவனும் ஆகிய இறைவனது மராமரச் சோலையையுடைய திருச்சிராமலைச் சாரலில், வண்டுகள் வீழும் நறிய போது சிலவற்றைக் கொய்து வருதற் பொருட்டு, அடர்த்தியான காட்டில் இவளை யான் இப்பொழுதுதான் பிரிந்து போய்வந்தேன்.
(நெடும்பொழுது தாழ்த்திலேன்; வந்து பார்க்கும் பொழுது) இவளுடைய இருள் போன்ற கூந்தல் எழுச்சியுடைய அழகு சிதைந்து குலைந்துள்ளது; வியப்பைத் தரும், வண்டுகள் ஒலிக்கும் மாலை அலங்கோலமாகக் கசங்கியுள்ளது, ஒளிபொருந்திய நெற்றியில் இட்டதிலகம் அழிந்துவிட்டது.
கண்களில் தீட்டிய மை கலைய, கண்கள் சிவந்து, எவையோ சில கொடுமையைக் கூறுவனபோல்வன போன்றன; சிவந்த வாய் அந்நிலை குலைந்தது; காதில் குழையணிந்தமையால் அழகிதாய்த் தோன்றும் முகம் வெயர்ப்புடையதாக, அணிகலம் பொருந்திய தனங்களில் பூசப்பட்ட சந்தனம் அழிந்து, மேகலையும் தனங்களில் பூசப்பட்ட சந்தனம் அழிந்து, மேகலையும், உடையும் நெகிழ்ந்தமையால் `இவ்வாறான இந்நிலை எத்தன்மையின் விளைவு` என அறிய யாம் இயலேம்.

குறிப்புரை :

இது, தலைவி தலைவனது களவொழுக்கத்துக்குட்பட்ட மையைத் தலைவியது தோற்றம் பற்றித் தோழி குறிப்பால் உணர்ந்தது, திணை குறிஞ்சி.
``செறி பொழில்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.

பண் :

பாடல் எண் : 11

பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்க
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போல்ஒருவன் வந்து.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கித் தனது சந்நிதியை அடைகின்ற, நெருங்கிய கழல் அணிந்த திருவடியை உடையவனும், மூன்று கண்களை உடையவனும், நான்கு வேதங்களின் முதல்வனும் ஆகிய சிவபெருமான்தன் மைந்தனாகிய முருகன்போன்ற ஒருவன் நமது அழகிய புனத்திலே வந்து, பொழுது போய்விட்டாலும் தான் போகாது, யாவரும் இகழும்படி காத்து நிற்கின்றான்; ஓவியத்தில் எழுதப்பட்டது, போன்ற அழகுடைய கொடிபோலும் இடையை உடையவளே!

குறிப்புரை :

`அவனுக்கு நான் என்ன சொல்வது` என்பது குறிப் பெச்சம்.
இது, தலைவனை மடல் விலக்கி அவனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவியிடம் சென்று மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தது.
இதுவும் குறிஞ்சியே.

பண் :

பாடல் எண் : 12

வந்தார் எதிர்சென்று நின்றேற்கு
ஒளிரும்வண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில்
லேன் தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச்
சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா
வனத்துக் குளிர்புனத்தே.

பொழிப்புரை :

(தோழீ!) தக்கன் வேள்வியை அழித்த, செந்தாமரை மலர்போலும் நிறத்தையும், கங்கையைத் தரித்த சடையையும் உடைய சிவபெருமானது திருச்சிராமலையின் கண், பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டு, நமக்கே உரித்தாய் நாம் சென்று விளையாடுகின்ற நந்தவனத்தின் நடுவிலே நாம் இருக்கின்ற புனத்தின் கண் ஆடவர் ஒருவர் தனியே வந்தார்.
(`இஃது என்` என்று வினாவ) யான் அவர் எதிரே சென்றபொழுது அவர் அழகிய மாலையையும், தழையையும் (`இவை எங்கும் கிடைத்தற்கு அரிய` என்று சொல்லித்) தந்தார்.
அவற்றுள் ஒன்றையும் யான் மறுக்க மாட்டாதவளாய் வாங்கிக் கொண்டேன்.

குறிப்புரை :

இதுவும் மேற்கூறிய வகையில் தழை ஏற்பித்தது.

பண் :

பாடல் எண் : 13

புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதலன் ஆக
விடுசுடர் நடுவண்நின் றடுதலின் நிழலும்
அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியுஞ் செவ்விய ளாகி
முள்ளிலை யீந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்
பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் வேய்ந்து மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.

பொழிப்புரை :

முறைமையறியாத, `யமன்` என்னும் பெயரையும், கொடிய தொழிலையும் உடைய ஒருவனது வலிமையை அழித்த பெருமான் எழுந்தருளியுள்ள திருவாரூர் வயல்களில் பூத்துள்ள தாமரை மலர் போலும் சிறிய பாதங்களையும் கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையும், குயிலின் குரலைப் போன்ற குரலையும், அழகிய மயில்போன்ற சாயலையும், பூவையணிந்த கூந்தலையும் உடையவள் ஆகிய, பூங்கொடி போல்பவளாகிய என் மகள், இந்த இல்லத்தில் நிறைந்த செல்வத்தில் திளைத்தலை விரும்பாதவளாய், அயலான் ஒருவனைத் தன் காதலனாகக் கொண்டு, (அவன்பின்னே போய்) ஒளியை வீசுகின்ற செங்கதிர் வானத்தின் உச்சியில் நின்று காய்தலால் நிலத்தில் உள்ளோரது நிழல்களும் அவர் அவர் அடிக்கீழ் வந்து ஒடுங்குகின்ற (எனவே, எந்த நிழலும் இல்லாத) பொறுத்தற்கரிய வெப்பத்தையுடைய சுரத்தின்கண் கொடுந்தொழிலை உடைய மறவர் கள் முழக்குகின்ற பறைகளின் ஓசையைக் கேட்டு உடம்பு நடுங்கும் நிலையை உடையவளாய் முள்போன்ற இலையை யுடைய ஈச்ச மரமும், அடிமரமும் உலர்ந்துபோன இலவ மரமும், (இலையுதிர்ந்த) விளா மரமும் ஆங்காங்கு உள்ள, மறைவு யாதும் இன்றி வெட்ட வெளியாகிய இடத்தில், கடுமையான குரலையுடைய, சினம் பொருந்திய நாய்களை நீண்ட சங்கிலியாற் கட்டிவைத் திருத்தலால் அந்தச் சங்கிலியால் தேய்ந்து போன கால்களின் மேல் மான்தோலை வேய்ந்து, அதனால் அதன் மயிர்கள் தோன்றும் கூரையையுடைய சிறிய குடில்களில் வாழும், பரட்டையாய் நரைத்துப்போன தலை மயிரையும், பாசடை இன்மையின் வெளுத்த வாயினையும் உடைய மறத்தியர்களுக்கு விருந்தாய்ப் போய்த் தங்கினாளோ!

குறிப்புரை :

`ஒன்றும் தெரியவில்லை` என்பது குறிப்பெச்சம் இது தலைவி தலைவனோடு உடன்போயினமை யறிந்து செவிலி பின் தேடிச் சென்றது.

பண் :

பாடல் எண் : 14

கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தாள் ஆவாக - பொடியாக
நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ணாரூர் சூழ்ந்த தடம்.

பொழிப்புரை :

பகைவரது முப்புரத்தைச் சாம்பல் ஆகும்படி எரித்த.
பாம்பே நாணாகச் சேர்ந்த வலிய வில்லை உடைய பெருமானது குளிர்ந்த திருவாரூர்க்கு அயலாக உள்ள கொடிய வழியிலே கொடிபோலத் துவளுகின்ற இடையினையுடைய என் மகள் கத்தரியால் மட்டம் செய்யப்பட்ட மாலையை அணிந்த ஓர் அயலான்பின்னே காலால் நடந்தே சென்றாள்; இஃது இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`அடைந்தாளாக` என்பது பாடமன்று.
``கொய்தார்`` என்பதனைச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டதாகக் கொண்டு, `கொய்யப்பட்ட மலரால் ஆகிய மாலை` என்றலும் ஆம்.
இதுவும் முன்னைப் பாட்டின் துறையே.
``திண்சிலை`` என்றது, `மலையாகிய வில்` என்பதனைக் குறிப்பால் உணர்த்தியது.

பண் :

பாடல் எண் : 15

தடப்பாற் புனற்சடைச் சங்கரன்
தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச்
சேக்கையிற் பாசம்பிரீஇ
இடப்பால் திரியின் வெருவும்
இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனஅல்ல வால்தமி
யேன்தையல் பட்டனவே.

பொழிப்புரை :

தீர்த்தங்களில் ஒன்றாய் இருக்கற்பாலதாய நீரை சடையிலே உடைய சிவபெருமான் அணிந்துள்ள பிறை போலும் நெற்றியையுடைய, பேதைமைப்பாலளாகிய என் மகள் இயல்பாக மலர் அணையாகிய படுக்கையினின்றும் சிறிது வெறுத்து நீங்கி இடம் மாறினாலும் அஞ்சி வருந்துவாள்.
அத்தகையவள் இப்பொழுது பெரிய பாலை நிலத்திலே நடந்து சென்றாள்.
தமியேன் %

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 16

பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரல்முரம் பதரும் அல்லது படுமழை
வரல்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
தேன்இவர் கோதை செல்ல மானினம்
அம்சில் ஓதி நோக்கிற்கு அழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமுஞ் செலவுடன் படுக
மென்றோட் குடைந்து வெயில்நிலை நின்ற
குன்ற வேய்களும் கூற்றடைந் தொழிக
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்
அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்
கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த
கொங்கலர் கண்ணி யாயின குரவே.

பொழிப்புரை :

நலத்தால் தகுதிப் பட்ட, அலையும் நீரையுடைய திருவாரூரில் விரும்பி உறைகின்ற அமுதமாகியவனும், மான் பொருந்திய கையை உடையவனும், கண் பொருந்திய நெற்றியை உடையவனும் ஆகிய எம் தந்தை கொன்றை மாலையோடு ஒக்க அணிந்த கண்ணியாதற்கு அமைந்த நறுமணத்தொடு கூடிய மலர்களை யுடைய குராமரமே, போரில் இறந்து பட்டோரது பெயர்களையும், அவர் செய்த வீரச் செயல்களையும் எழுதி நடப்பட்ட கற்களும், பழையனவாகிய குடில்களையுடைய சீறூர்களும், பரற்கற்கள் நிறைந்த அருவழிகளும் அல்லது, வானின்றும் வீழ்கின்ற பெய்தலை ஒரு காலத்தும் கண்டிராத மிக்க வெயிலையுடைய சுரத்தில்; தேன் ததும்பும் மாலையை அணிந்த என் மகள் செல்லும் பொழுதும் மான் கூட்டம் அவளது பார்வைக்குத் தோற்றுப் போன பகைமையால் மனம் வெதும்பி விலக்காதுபோகட்டும்; அவளது கொங்கைகளுக்குத் தோற்றுப் போய் மலையிடத்தே ஓடி நின்ற, மணம் மிக்க மலர்களை யுடைய கோங்க மரங்கள் அவளை விலக்காமல் பார்த்துக் கொண் டிருக்கட்டும்; அவளது மெல்லிய தோள்களுக்குத் தோற்றுப் போய் வெயிலிலே நின்று வருந்துகின்ற மூங்கில்கள் அவளை விலக்காமல் ஓரிடத்தில் ஒதுங்கியிருக்கட்டும்; பெரிய சுரத்திடையிலே நாள்தோறும் ஆயிரம் பாவைகளைப் பெற்று வளர்க்கின்ற நீ அவளை விலக்காது குற்றத்திற்கு மிகவும் ஆளாயினை.

குறிப்புரை :

`இது நன்றோ` என்றபடி குராமலர் பாவை போலத் தோன்றுதலின், அது பாவையைப் பெற்று வளர்ப்பதாக இலக்கியங் களில் கூறப்படும்.
`பாவையைப் பெற்று வளர்க்கும் அன்பின்மேலும், உனது மலரைச் சிலர் விரும்பியணியும் தகுதியையும் உடையை யன்றோ` என்றற்கு, ``எந்தை அணிந்த கண்ணியாயின குரவே`` என்றாள்.
`அணிந்த கண்ணிக் கொங்கலர் குரவே` என மாற்றியுரைக்க.
``குரா மலரோடு அரா மதியம் சடைமேற் கொண்டார்`` என்னும் திரு முறையால் (திருமுறை 6-96-11)குராமலர் இறைவனுக்கு இனிதாதல் அறிக.
இது மேலைத் துறையில் குரவொடு புலம்பல்.

பண் :

பாடல் எண் : 17

குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின்
விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் றன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது.

பொழிப்புரை :

குரா மலர் மணம் கமழ்கின்ற மாலையை அணிந்த என் மகள் மாலை யணிந்த வேலை ஏந்தியவன் பின்னே சென்ற கடிய சுரம், கொடிய நஞ்சு பொருந்திய வாயையுடைய பாம்பைச் சடை யிலே அணிந்த சிவபெருமான், மாலையணிந்த மன்மதனை நெற்றிக் கண்ணால் சிறிதே நோக்கிய பொழுது எழுந்த தீயினும் கொடியது.

குறிப்புரை :

`அதில் அவள் எப்படிச் சென்றாள்` என்றபடி.
இதுவும் செவிலி புலம்பல்.

பண் :

பாடல் எண் : 18

கடிமலர்க் கொன்றையுஞ் திங்களுஞ்
செங்கண் அரவும்அங்கண்
முடிமலர் ஆக்கிய முக்கணக்
கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன்
அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ
கடந்ததெம் அம்மனையே.

பொழிப்புரை :

எம் தாய் (மகள்) சுரத்தைக் கடந்தது, வாசனை பொருந்திய கொன்றையோடு திங்கள், சிவந்த கண்களையுடைய பாம்பு இவைகளையும் முடியில் அணியும் மலராகக் கொண்டு அணிந் துள்ள, மூன்று கண்களையுடைய திகம்பரனும், செவ்வானம் போலும் மெல்லிய மேனியை உடையவனும் ஆகிய சிவபெருமானது திருவடி மலர்களைத் துதியாதவர்கள் போலப் பாதங்களாகிய தாமரை மலர்கள் நோகும்படி நடந்தேயோ!

குறிப்புரை :

இதுவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 19

மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈன்இல் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்
பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுனல் ஊரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத் துள்ளது தெள்ளிதின் கரந்து
கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி
எம்மில் லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதிமூர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத்
துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அனைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.

பொழிப்புரை :

பாணனே, இல்லங்களில் வாழும் குருவிகளில் வளைந்த அலகினையுடைய ஆண் குருவி ஒன்று தன் பெட்டைக் குருவி கரு முதிர்ந்து முட்டையிடும் காலத்தை அடைந்திருப்பதை உணர்ந்து அது தங்கி முட்டையிடுவதற்கு உரிய கூடு ஒன்றைக் கட்ட வேண்டி, அப்பெட்டையின் மேல் உளதாகிய அன்பு மிகுந்து தனக்குச் சுமையாதலால், பெட்டை மனம் வருந்தாதபடி அதனை அடிக்கடி தழுவி மகிழ்ச்சி உண்டாக்கிக் கொண்டு பக்கத்து வயலில் கணு முற்றி வளர்ந்திருக்கின்ற கரும்பின் சிறிய சோனைகளில் நார் உரிக்கின்ற வயல் வளம் மிகப் பொருந்திய, பெருமை நிறைந்த இல்லங்களையும், எப்பொழுதும்வற்றாது வரும் நீரினையும் உடைய ஊரை உடையவன் உன் தலைவன்.
அவன் கட்டிவைக்கும் பார்வை மிருகமாய், இளைய கொடிபோல்பவராகிய மகளிரை அவன் வலையில் வீழ்க்க வந்து, வஞ்சக வார்த்தைகள் பலவற்றை இனிமையாகச் சொல்லி, உள்ளத்தில் உள்ள உண்மையை முற்றிலுமாக மறைத்துத் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு, கள்ளக் கும்பிடு போட்டு, (தலைவர் இங்கு உள்ளாரோ` எனப் பொய்யாக வினவிக் கொண்டு) எங்கள் இல்லத்திலே வந்து நிற்கின்றாய்.
(அவன் செய்தியை நீ அறியாயோ? அவன் இங்கா இருப்பான்?) அவனோ அமரரும் அறியா ஆதி மூர்த்தியும், முருகன் தந்தையும், நீரால் குளிர்ந்த சடையை உடைய இறைவனும், ஒலிக்கும் கழலை அணிந்தவனும், எம் தந்தையும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாரூர்க் கடைத் தெருவில் கடை களில் தொங்க விடப்பட்டுள்ள அழகிய தோற்றத்தையுடை கண்ணாடி களைப் போன்ற தன்மையை உடைய, பண்போல இனிமையாகப் பேசுகின்ற அத்தகைய பெண்டிர் இல்லங்களில் இருக்கின்றான்.

குறிப்புரை :

கண்ணாடி போன்ற தன்மையாவது அருகில் வந்தோர் யாராயினும், `இன்னார், இனியார்` என்னும் வரையறையின்றி உடனே அகத்திட்டுக் கொள்ளுதல்.
எனவே, `இந்நீர்மையுடையோர் வரை வின் மகளிர்` என்பது உணர்த்தியவாறு.
இது, தலைவியை வாயில் வேண்டிய பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
திணை, மருதம்.
``மனை வாய்ச் சேவற்குருவிதன் பெடையை அடிக்கடி தழுவித் தலையளி செய்து, ஈன் இல் இழைக்கக் கரும்பின் நுண்தோடு கவரும் ஊரன்`` என்றது, `அக்குருவியின் அன்பு தானும் உன் தலைவனுக்கு இல்லை` எனத் தலைவி உள்ளுறையாகக் கழற்றுரை கூறினாள்.
அவ் வுள்ளுறைக்கண் பொதியப்பட்ட பொருளானே தலைவி புதல் வனைப் பெறும் நிலையில் இருத்தலும், தலைவன் அதனையும் நோக்காது புறத்தொழுக்கினன் ஆயதும் பெறப்பட்டன.
ஈன் இல், வினைத்தொகை.

பண் :

பாடல் எண் : 20

பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே
ஏலா இங் கென்னுக் கிடுகின்றாய் - மேலாய
தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய்.

பொழிப்புரை :

ஏ பாண்மகனே, `மேலாய, இனிய, தண்ணிய கொன்றை மலரைச் சூடியுள்ள சிவபெருமானது திருவடிகளை யான் தலைமேற்கொள்பவன்; பொய்கூறேன்; உண்மையில் என்மேல் தவறு ஒன்றும் இல்லை` என்று தலைவன் கூறிய பொய்களையெல்லாம் இங்கே வந்து எதற்குக் `கொட்டுகின்றாய்? இங்கே அவைகள் ஏலா.
யாருடைய சொல் தலைவனுக்குப் பால்போல இனிக்கின்றதோ அவர் களிடத்தில் போய் அவைகளைச் சொல்லு; (கேட்டுக் கொள்வார்கள்.)

குறிப்புரை :

இதுவும் மேலைத் திணை; துறை.
``சூடும்`` என்றது, `சூடுவேன்` எனச் சொல்வானது சொற் பற்றிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 21

பொய்யால் தொழவும் அருளும்
இறைகண்டம் போல்இருண்ட
மையார் தடங்கண் மடந்தையர்
கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்வனில்
புல்லல் கலையளையல்
ஐயா இவைநன்கு கற்றாய்
பெரிதும் அழகியவே.

பொழிப்புரை :

தலைவனே, இங்கே உன் கையினால் எம் காலைத் தொட்டு வணங்க வேண்டா.
மகனை அன்போடு அணைப்பது போலக் காட்டி, அவ்வழியாக வந்து எம்மைச் சார வேண்டா எம் உடையைப் பற்றி அலைக்கழிக்க வேண்டா ஏனெனில் பொய்யாக வணங்கி னாலும் அதற்கு அருள்செய்கின்ற சிவபெருமானது கண்டம் போலக் கறுத்த மைதீட்டிய, அகன்ற கண்களையுடைய உன் காதலிகள் இவற்றைக் கேள்விப்பட்டால் உனக்கு இடராய் முடியும்.
காதல் இன்றி யும் உடையவன்போல நடித்தற்கு இச்செயல்களையெல்லாம் நன்கு கற்றிருக்கின்றாய்.
இம்முறைமை உனக்கு மிகவும் அழகியவாய் உள்ளன.

குறிப்புரை :

இது, பள்ளியிடத்து ஊடலில் புதல்வன் வாயிலாகத் தலைவன் ஊடல் தணிவிக்கத் தலைவி ஊடல் தணியாளாய்க் கூறியது.
இதுவும் மருதத் திணை.

பண் :

பாடல் எண் : 22

அழகுறு கிண்கிணி அடிமிசை அரற்றத்
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்
தொருகளி றுருட்டி ஒண்பொடி ஆடிப்
பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்த
பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி
அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்
குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்
உடைய வாகிய தடமென் கொங்கை
வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்
பூண்தாங் ககலம் புல்குவன் எனப்போய்ப்
பெருமடம் உடையை வாழி வார்சடைக்
கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும்
சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத்
தண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த
சிறைகெழு செழும்புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.

பொழிப்புரை :

நெஞ்சே, அழகுடையவாகிய கிண்கிணிகள் அடி மேல் ஒலிக்க, அடிக்கத் தக்கதாகிய சிறுபறையைத் தோளில் மாட்டிக் கொண்டு, சிறுதேரை இழுத்துக் கொண்டும், யானையாகச் செய்யப் பட்ட அதனை உருட்டிக்கொண்டும், தெருப் புழுதியிலே முழுகி, போர்செய்தற்குரிய ஆண் யானை தன் பெண்யானையினிடத்துக் கொள்ளும் இன்பம் போலும் இன்பத்தை உள்ளத்தில் எய்தி, தன்னைப் பின்பற்றிவரும் அழகிய கால் அணிகளை அணிந்த மற்றைச் சிறுவர் களுடன் சாய்ந்து சாய்ந்து நடக்கும் நடை பழகி, ஓரங்களில் கரையை உடைய சிறுதுண்டை இடையிலே சுற்றிக்கொண்டு, கழுத்திலே ஐம்படைத்தாலி அணிந்து, பின் எனது ஒக்கலிலே வந்து அமரும், விளங்குகின்ற, சிறிதே வளர்ந்த தலைமயிரையும், மழலைச் சொல்லையும் உடைய என் பிள்ளையை யான் நினைத்ததனால் சுரந்து பொழிந்த வெள்ளம்போலும் இனிய பாலை உடையனவாய்விட்ட என் பருத்த, மெல்லிய கொங்கைகளை வெறுத்து பிரிந்து போய்விட்ட, மிக்க நீரையுடைய ஊரையுடைய தலைவனது அணிகலம் பொருந்திய மார்பினை, `யான் வலியச் சென்று தழுவுவேன்` என்று முயன்று, (அஃது இயலாமையால்) பெரிதும் பேதைமை யுடையை ஆயினாய்; நீ வாழ்வாயாக.
(இனி அது வேண்டா) தான் தனது நீண்ட சடையிலே அணிந்துள்ள, வளைந்த, வெள்ளிய திங்களினது செழித்த நிலவோடொக்கும் சுடுவெண் பொடியை அணிந்து ஒளிவிடுகின்ற மார்பினையுடைய பெருமானது திருவாரூரில் வாய்க்கால்களில் உறுதியாகக் கட்டப்பட்ட மடைகளில் அப்பாற் செல்லாமல் தன் மேகம் தடையுண்டு நிற்கின்ற மிக்க நீர்போல, உறுதிப்பாட்டுடன் என்னிடத் திற்றானே நீங்காது நில்.

குறிப்புரை :

இது புதல்வற் பயந்து தன்தலைக்கடன் இறுத்து வாழும் தலைவி, தலைவன் பரத்தையிற் பிரிந்த வழி ஆற்றாமையால் அவன் உள்வழிச் செல்ல நினைத்து, நாண் தடுத்தலால் அஃது இயலாது நின்ற நெஞ்சினைக் கழறிக் கூறியது.
இது, ``புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரம்` (தொல்.
கற்பு.
6) என்பதன் பகுதியாம்.
இதுவும் மருதத் திணை.
தாழ்தல் தங்குதல்.

பண் :

பாடல் எண் : 23

நீயிருந்திங் கென்போது நெஞ்சமே, நீளிருட்கண்
ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீயரங்கத்
தைவாய் அரவசைத்தான் நன்பணைத்தோட் கன்பமைத்த
செய்வான தூரன் திறம்.

பொழிப்புரை :

நெஞ்சே, நம் தலைவனது செயற்கூறு, நெடிய இருளிடத்து தீ எரிகின்ற அரங்கத்தின்கண், தீயின் நடுவே நின்று கைகள் ஆயிரத்தைச் சுழற்றி ஆடி, ஐந்தலை நாகத்தைக் கட்டியுள்ள சிவபெருமானது அழகிய தோள்களினிடத்து அன்பை அமைத்த செயல்களைச் செய்வதாயிற்று நீ இங்கு இருந்து பெறுவது என்! என்னுடன் வா, போவோம்.

குறிப்புரை :

`நெஞ்சமே, ஊரன் திறம் அரவு அசைத்தான் தோட்கு அன்பு அமைத்த செய்வு ஆனது; நீ இங்கு இருந்து என்! போது` என இயைத்து முடிக்க.
`தோட்கு, தோட் கண்` என உருபு மயக்கம்.
அமைத்த - அமைத்தன.
அமைத்தனவாகிய செயல்கள்.
செய்வு - செய்தல்; தொழிற் பெயர்.
இஃது அறப்புறம் காவற் பிரிவில் ஆற்றா ளாய தலைவி தலைவன் உள்வழிச் செல்ல நினைந்து நெஞ்சத்தொடு கூறியது.
இதுவும் பாலைத் திணையே.

பண் :

பாடல் எண் : 24

திறமலி சின்மொழிச் செந்துவர்
வாயின எங்கையர்க்கே
மறவலி வேலோன் அருளுக
வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்பல் லாயிரத்
துத்தமி யேயெழினும்
நறைமலி தாமரை தன்னதன்
றோசொல்லும் நற்கயமே.

பொழிப்புரை :

நீண்ட சடையை உடைய சிவபெருமானது திருக் கடவூரில் உள்ள குளத்தில் அதன் துறைகளில் நிறைய பல ஆயிரம் ஆம்பல் மலர்கள் பூத்திருக்க, அவற்றின் இடையில் மணம் மிக்க தாமரை மலர் ஒன்றே பூத்திருப்பினும் அந்தக் குளம் `தாமரைக் குளம், என்றுதானே புகழப்படும்? ஆகையால் வீரம் அமைந்த வேலை ஏந்திய தலைவன் எமக்கு அருள் பண்ணாமல், திறமை நிறைந்த சில சொற்களையும் சிவந்த வாயினையும் உடைய எம் தங்கைமார்க்கே அருள் பண்ணட்டும்; (தலைவனாதல் எமக்குத்தானே? அவர்கட்கு ஏது?)

குறிப்புரை :

குளத்திற்குச் சிறப்புத் தருவது தாமரை மலரே ஆகையால் அதைக் குறித்துத் தான் குளத்தை, `தாமரைக் குளம்` எனப் பெருமையாகக் கூறுவார்கள்.
அதுபோல இல்லறத்திற்குத் துணை யாகின்றவள் தலைவியே ஆகையால் `அவளுக்குத் தலைவன்` எனச் சொல்லியே தலைவனை யாவரும் பாராட்டுவர் - என்றபடி.
எனவே, இப்பாட்டில், ``வார்சடையான்`` என்பது முதலாக உள்ள பகுதி ஒட்டணியாம்.
இது, பரத்தையிற் பிரிவில் `தலைவி ஆற்றாள்` எனக் கவன்ற தோழிக்குத் தலைவி `ஆற்றுவல்` என்பதுபடக் கூறியது.
எனவே இது முல்லைத் திணையாம்.
``தன்னது`` என்பதில் தன், சாரியை.
அதில் ஒற்று இரட்டியது செய்யுள் விகாரம்.
`தனதாக` என ஆக்கம் விரிக்க.
``சொல்லும்`` என்பது `சொல்லப்படும்` எனச் செயப் பாட்டுவினைப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 25

கயங்கெழு கருங்கடல் முதுகுதெரு மரலுற
இயங்குதிமில் கடவி எறிஇளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்
தால வட்டம் ஏய்ப்ப மீமிசை
முடிகெழு தருவலை வீசி முந்நீர்க்
குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி
விரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகை
உருவது காட்டும் உலவாக் காட்சித்
தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக்
கோளிழைத் திருக்குங் கொள்கை போல
மணிதிகழ் மிடற்று வானவன் மருவும்
அணிதிகழ் அகலத் தண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னதோர்
பேர்செலச் சிறந்தது சிறுநல் லூரே.

பொழிப்புரை :

ஆழம் பொருந்திய கரிய கடலின் முதுகு அலையும்படி அலைத்துச் செல்கின்ற ஓடங்களைச் செலுத்திய `இளி` என்னும் ஒருவகை ஒலியை வாயினின்றும் எழுப்புகின்ற வலைஞர் கள், `நெய்ம்மீன்` என்னும் ஒருவகை மீனைப் பிடிக்க வேண்டிக் கைமிகுந்து முடிச்சுகள் பொருந்திய வலையை ஆலவட்டம் போலத் தோன்றும்படி மிக உயரத்திலே சென்று வீழ வீசி, வீசிய வலைகள் கடலின் குடர்போலத் தோன்றும்படி வெளியே இழுத்து வாங்கும் பொழுது அவ்வலையில் அகப்பட்ட குவிந்த முனையையுடைய சங்கும், ஒளி வீசுகின்ற பவளமும், பொற்கதிரைப் பரப்புகின்ற முத்துக்களும் ஆகிய இவற்றின் தொகுதிகள் ஒருங்கு தொக்கு, வெள்ளொளியைப் பரப்புகின்ற திங்களும், செவ்வானமும், விண்மீன்களும் ஆகிய இவைகளின் உருவத்தைத் தோற்றுவிக்கின்ற, கெடாத காட்சியையுடைய, குளிர்ந்த, அழகிய துறையையுடைய தலைவனது அகன்ற மார்பினை ஒருமுறை கண்ணுறக் கண்டு, அங்ஙனம் கண்டது முதலாக இந்தச் சிறிய நல்ல ஊர், ஒளிபொருந்திய நிறத்தையுடைய கரும்பாம்பு இளந்திங்களை, `அது முதிரட்டும், முதிரட்டும்`, என்று விடாது பார்த்துக்கொண்டிருப்பது போல என்னைப் பற்றி விடாது எவற்றையேனும் சொல்லி, நீலமணிபோல விளங்குகின்ற கண்டத்தையுடைய பெருமான் எழுந்தருளியுள்ள, அழகு விளங்கும் விசாலித்த திருவாரூரில், நிறைந்த ஆரவாரத்தோடு கூடிய திருவிழாவில் அத்தலப் பெருமானது ஒருபெயரே எங்கும் ஒலித்தல்போலத் துறைவனது ஒரு பெயரே எங்கும் ஒலிக்கின்ற சிறப்பினை உடையதாயிற்று.

குறிப்புரை :

``இவ்வூரவர்க்குத் தொழில் வேறு இல்லை போலும்` என்பது குறிப்பெச்சம்.
இது வரையா நாளின் வந்தோன் முட்டிடக் கண்ட ஆயத்தார் அலர் கூறுதல் அறிந்த தலைவி முன்னிலைப் புறமொழியாற் கழறிக் கூறியது.
இதன் பயன் உடன்போக்காதலின் இது நெய்தலிற் பாலையாயிற்று.
நிலவு, செக்கர், தாரகை என்பவற்றைச் சங்கு முதலிய மூன்றனோடு நிரலே இயைக்க.
``தண்ணந் துறைவன் .
.
.
.
.
கொள்கைபோல`` என்றதனை, கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.
* என்பதனோடு ஒப்பு நோக்கு.
`போலச் சிறந்தது` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 26

ஊரெலாந் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீருலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.

பொழிப்புரை :

ஊர் முழுதும் உறங்கி, உலகம் முழுதும் நள்ளிரவு நிலையை அடைந்து, மண் முழுதிலும் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒலி அடங்கிய இப்பரந்த இருளிடத்து, (தோழீ! என்னை காரணமோ) அழகு பொருந்திய திருமாந்துறையில் உள்ள ஈசனுக்கு உரித்தாய் உள்ள திருமறைக் காட்டில் உள்ள நீலமணிபோலும் நீரினது துறையில் நிரம்ப இரைமேய்ந்த பின்னும் அதில் உள்ள பறவைகள் உறங்காமல் ஆரவாரிக்கின்றன.

குறிப்புரை :

செய்தென் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன.
இஃது இரவுக் குறிக்கண் தலைவன் வந்தமையைத் தோழி தலைவிக்கு அவள் அறியுமாற்றாற் கூறியது.
புட்கள் உறங்காமல் எழுந்து ஆரவாரித்தல் தலைவன் தான் வந்தமை குறிக்கும் குறியாக எழுப்புதலினாலேயாம் இது குறிஞ்சித் திணை.

பண் :

பாடல் எண் : 27

புள்ளுந் துயின்று பொழுதிறு
மாந்து கழுதுறங்கி
நள்நென்ற கங்குல் இருள்வாய்ப்
பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண்
ணனைத்தொழு வார்மனம்போன்
றுள்ளும் உருக ஒருவர்திண்
தேர்வந் துலாத்தருமே.

பொழிப்புரை :

பறவைகளும் துயின்று, ஞாயிறு தன் கதிரும் தோன்றாமல் மறைந்து, பேயும் உறங்கி, இவ்வாறு `பாதி` என உணரப்படுகின்ற இரவில், இருளிலே, மிக்கு ஒழுகும் பனிக் காலத்தில், நினைத்தால் மனம் நெகிழ்ந்துருகும்படி, துள்ளுகின்றமானைக் கையில் ஏந்திய, தீ வண்ணனாகிய சிவபெருமானை வணங்குகின்றவர் களுடைய மனம் அப்பெருமானிடத்தே எவ்வாறு ஓய்வின்றி உலவுமோ அதுபோல ஒருவருடைய திண்ணிய தேர்வந்து வந்து உலவாநின்றது.

குறிப்புரை :

`ஊழது நிலை இவ்வாறாயிற்று` என்பது குறிப்பெச்சம்.
இஃது இரவுக் குறிக்கண் அல்ல குறிப்பட்டுத் தலைவனை எய்தாளாய தலைவி பின், வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப் பாகத் தழீஇத் தேறிக் கூறியது.
இது குறிஞ்சித் திணை.
இறுமாத்தல், இங்குச் செயலின்றி மடிந்திருத்தல்.
`உள்ளும்` என்னும் உம்மை, உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 28

உலாநீர்க் கங்கை ஒருசடைக் கரந்து
புலால்நீர் ஒழுகப் பொருகளி றுரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல்
வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ தட்ட அமுதம் வாய்மடுத்
திடாஅ ஆயமோடு உண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே
விருந்தின் அடியேற் கருளுதி யோஎன
முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின்
நறைகமழ் வெண்ணெய்ச் சிறுநுண் துள்ளி
பொங்குபுனல் உற்றது போலஎன்
அங்க மெல்லாந் தானா யினனே.

பொழிப்புரை :

(தோழீ, கேள்) பாய்ந்து செல்வதாகிய கங்கை நீரை ஒரு சடையிலே ஒளித்துவைத்தும், போர் செய்வதாகிய ஆண் யானை ஒன்றை உதிரம் ஒழுக உரித்தும் தன் ஆற்றலைப் புலப்படுத்திய, பூதப் படைத் தலைவனும், யாவர்க்கும் முன்னேயுள்ள மூர்த்தியும், அழகிய, இளைய மலைமகட்கும் தனது திருமேனியில் பாதியைத் தந்து அன்பினாலே அவளை உடன் கொண்டு இருப்பவனும் ஆகிய சிவபெருமானது இத்திருவாரூரிலே (நாம் தெருவில் விளையாடுகின்ற பருவத்திலே நீ ஒருநாள் அன்னையோடு இருக்க நான் ஆயத்தாருடன் தெருவில்) வலம்புரிச் சங்குகளை அடுப்பாகக் கூட்டி, சலஞ்சலச் சங்கினைப் பானையாக ஏற்றி, அது நிறையச் சிறந்த முத்துக்களை அரிசியாக இட்டு, பவழங்களை: சிவந்த தீயாக மூட்டி அழகு உண்டாக இப்பியை அகப்பையாக இட்டு நன்றாகத் துழாவி இவ்வாறு உண்மையாகச் சமைக்காமல் பொய்யாகச் சமைத்த சோற்றினை வாயில் இடாமலே நான் ஆயத்தாருடன் உண்ணப் போகும் பொழுது (சிறான் ஒருவன் வந்து) `திருத்தமான அணிகளையும், பருத்த தோள்களையும், தேன்போன்ற சொற்களையும் உடைய மாதே, உங்கள் சிற்றில் அயர்வின்கண் விருந்து ஒன்று இல்லாத குறையை யான் நிரப்புதற்கு அருள்செய்வாயோ`` என்று வினவி, என் கொங்கையின் முகங்களை நோக்கி, உள்ளத்து ஆசை வெளிப்படும்படி சிரித்து, என் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்.
அவனது செயல், நறுமணம் கமழும்படி காய்ச்சப்படுகின்ற வெண்ணெயிலே சிறிய, நுண்ணிய நீர்த்துளி ஒன்று வீழின் அந்நெய் முழுவதும் அதனாலே ஆரவாரித்துப் பொங்குதல் போல யான் என் உடம்பு முழுதும் அவனாகி விட்டது போலும் உணர்ச்சியை அடைந்தேன்.

குறிப்புரை :

`இஃது இளமைக் காலத்தில் நிகழ்ந்தது` என்பது இசை யெச்சம்.
`இதனை நம் தாய்க்கு நீ சொல்லுதல் வேண்டும்` என்பது குறிப்பு.
இது களவொழுக்கத்தில் அது வெளிப்படாத வகையில் ஒழுகிய தலைவி தமர் வேற்று வரைவிற்கு முயல்வதை அறிந்து தானே தன் தோழிக்குப் படைத்து மொழியால் அறத்தொடு நின்றது.
இதுவும் குறிஞ்சித் திணை.
``பூத நாதன்`` என்பதற்கு, `உயிர்கட்கு முதல்வன்` என உரைத்தலும் ஆம்.
தனது ஊரையே வேறுபோலக் கூறினார்.
ஆதலின், ``இவ் ஆரூர்`` எனச் சுட்டுவருவித்துக் கண்ணுருபு விரிக்க `நல்லதொரு விளையாட்டு நிகழ்ந்த பகல்` என்பாள் பகலை, ``நன் பகல்`` எனச் சிறப்பித்துக் கூறினார்.
``துடுப்பு`` என்றாராயினும் சோற்றைத் துழாவுவது அகப்பையேயாதல்பற்றி அதற்கு அவ்வாறு உரைக்கப்பட்டது.
`வாய் மடுத்திடா` என்பது ஒரு சொல்.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
`துளி` என்பது ``துள்ளி`` என விரித்தல் பெற்றது.
தான் - அவன் ``ஆயினன்`` என்பது தன்மை யொருமை வினைமுற்று.

பண் :

பாடல் எண் : 29

ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பார்ஓம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.

பொழிப்புரை :

தீயில் நின்று ஆடுபவனும், பேய்க் கூட்டத்தை உடையவனும், உலகத்தைக் காக்கும் பேரருளாளனும், நெருப்புப் பொருந்திய கண்ணை உடையவனும் ஆகிய சிவபெருமானது திருவாரூரோடு ஒத்த, கடற்கரைக் கண் உள்ள, இளையபரவை போல் வாளது குளிர்ச்சி நிறைந்த கொங்கையின் கண்ணே தங்கிவிட்ட அன் பினை இனி அழிப்பவர் யார்?

குறிப்புரை :

இது, குற்றம் காட்டிய வாயில் பெட்ப (கழற்றுரை கூறிய பாங்கன் பின் தன்னை விரும்பும்படி) தலைவன் தன் ஆற்றாமை கூறிக் கழற்றெதிர் மறுத்தது.
இது நெய்தலிற் குறிஞ்சி மயங்கியது.
``ஆடி`` என்பது பெயர்.
``பேயினவன்`` என்பதில் `இன்` சாரியை; அகரம் பெயரெச்ச விகுதி `வன்கண்` என்க.
`ஆரூர் போலும் மடப்பாவை` என்க.
கொங்கைக்கு , `கொங்கைக்கண்` என உருபு மயக்கம்.
தாழ்ந்து `ஆயின அன்பு` என மேலே கூட்டுக.
தாழ்தல் - தங்குதல்.

பண் :

பாடல் எண் : 30

தாழ்ந்து கிடந்த சடைமுடிச்
சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை
போல்அய் வேற்கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல்
திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி
லாதிவ் விரிகடலே.

பொழிப்புரை :

தாழ்ந்து தொங்குகின்ற சடைமுடியை உடைய, `சங்கரன்` என்னும் பெயரினன் ஆகிய சிவபெருமானது திருவடிகளை வணங்காமையால் துன்பத்தில் ஆழ்ந்து கிடந்து வருந்துவாரது சுற்றம் போல வருந்துகின்ற என்பொருட்டு இரங்கி இந்த அகன்ற கடல் தன்னைச் சூழ்ந்து கிடக்கின்ற கரைமேல் அலைகளாகிய கையை அடித்து அடித்து, தரைமேல் வீழ்ந்து, வாய்விட்டு அலறிக் கொண்டு உறங்காமல் உள்ளது.

குறிப்புரை :

`பிறர் ஒருவரும் என்பொருட்டு இரங்குவார் இல்லை` என்பது கருத்து.
இது, `தாளாண் எதிரும் பக்கம்` எனப்படும்.
பொருள் வயிற் பிரிவின்கண் தலைவன் நீட ஆற்றாளாய தலைவி தூது செல்லாத பாங்கியைப் புலந்து கடலை முன்னிலைப்படுத்துக் கூறி இரங்கியது.
இதனை, `காமம் மிக்க கழிபடர் கிளவி` என்பர்.
இது நெய்தல் திணை, பணியாதவரே யன்றி அவர் சுற்றமும் வருந்தும் நிலையை உடைத்தாதல் பற்றி, ``நைவார் கிளைபோல் அயர்வேற்கு`` என்றாள்.
திருவாரூர் மும்மணிக் கோவை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 1

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரு மால் - போக்குதற்கு அரிய மயக்கம்.
அழலாய் - அக்கினிப் பிழம்பாய்.
மாலும், அயனும் அடிமுடி தேடிய சிவபுராண வரலாறு பலவிடத்தும் பரவலாக வழங்கும்.

பண் :

பாடல் எண் : 2

பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பகுதியில் சிவபெருமானது பெருமைகள் விரித்துரைக்கப்படுகின்றன.
`பிறர் செயற்கையால் அடையும் பெருமைகளைச் சிவபெருமான் இயற்கையாகப் பெற்றுள்ளான்` என்பது பலவகையில் கூறப்படுகின்றது.
தோன்றுதல் - உளன் ஆதல், பிறர் எல்லாம் கால வயப்பட்டு ஒரு காலத்தில் பிறத்தலால் உளர் ஆகின்றனர்; சிவபெருமான் அவ்வாறின்றி, என்றுமே உளனாய் இருக்கின்றான்.
எனவே, காலம் அவனுக்கு உட்படுகின்றதேயன்றி அவன் காலத்திற்கு உட்படுகின்றானில்லை.
பிறர் எல்லாம் கண்ணைக் கருவியாகக் கொண்டு அது வழி யாகவே பொருள்களைக் காண்கின்றனர்; சிவபெருமான் அவ் வாறின்றிப் பொருள்களை நேரே காண்கின்றான்.
`பிறர் எல்லாம் பொருள்களைக் கண் காட்டும் அளவில், அது காட்டியவாறு காண்பர்` என்பதும், `சிவபெருமான் அவ்வாறின்றி, எல்லாவற்றையும் உள்ள படி காண்பான்` என்பதும் விளங்கும்.
கட்புலத்திற்குச் சொல்லியது ஏனைச் செவிப்புலம் முதலிய வற்றிற்கும் ஒப்பதே.
பிறர்க்கெல்லாம் உடம்பு அறிவு இச்சை செயல்கட்கு இன்றி யமையாதது ஆதலின் வேண்டப்படுவதாயினும் அதனால் நிகழும் அறிவு முதலியன பிறவிக்குக் காரணமாதலின் பந்தமாய், அவரால் முயன்று துறக்கப்படுவதாக, சிவனது அறிவு இச்சை செயல்கட்கு உடம்பு வேண்டாமையின் அவன் உடம்போடு கூடிநின்றே அதனாற் பந்தம் உறாது இருக்கின்றான்.

பண் :

பாடல் எண் : 3

ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் சூழொளிநூல்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் எப்பக்கத்திலும் வரம்பின்றிப் பரந்துள்ளவன் ஆதலின், `ஆழம், அகலம், உயரம்` என்பவைகளில் இயல்பாகவே எந்த வகையிலும் ஓர் அளவு இல்லாதவன்.
`பிறர் எல்லாம் மேற்குறித்த அளவுகளில் சிறியராய்த் தோன்றிப் பெரியராய் வளர்வர்.
சிவபெருமான் அன்ன தன்மையில்லாதவன் என்பது, ``ஆழாது, அகலாது, ஊழால் உயராது`` என்னும் சொற்களால் குறிக்கப்பட்டது.
ஊழ் - முறைமை.
விரிந்து பரந்த அறிவைத் தரும் நூல்களை அவன் அவை தோன்றியபின் ஓதி உணராமல் என்றுமே உணர்ந்திருக்கின்றான்.
என்றது.
`அவற்றின் பொருளை அவன் தானே இயல்பாக உணர்ந் திருக்கின்றான்` என்றபடி.
எனவே, `அனைத்துப் பொருள்கட்கும் முதல் நூலைச் செய்தவன் அவனே` என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 4

ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகாது அணுகியான் ஆதி

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் முன்பு பரியனாய் இருந்து பின்பு நுணுகி நுணுகித் தீர நுணுகுதல் இன்றி, இயல்பிலே தீர நுணுகியிருப்பவன்.
எனவே, `அவனிலும் நுணுகிய பொருள் ஒன்று இல்லை` என்ப தாயிற்று.
`அவனிலும் பரிய பொருளும் எதுவும் இல்லை` என்பது மூன்றாம் கண்ணியில் சொல்லப்பட்டது.
எந்தப் பொருளையும் புதிதாக ஒருகாலத்தில் அணுகாது, இயல்பாகவே எல்லாப் பொருளிலும் அது அதுவாய்க் கலந்து நிற்கின்றான்.

பண் :

பாடல் எண் : 5

அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுந் தானே பரனாய

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் சுத்த மாயையில், தானே, `அயன், அரி, அரன்` - என்னும் மும்மூர்த்திகளாய் நின்று, படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்வான்.
எனவே, `அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் தன் அருள்பெற்றவரை அயன்முதலிய பதவியினராகச் செய்து, அவர்கள் வழியாகப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்விப்பன்` என்பது போந்தது.

பண் :

பாடல் எண் : 6

தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் ஓவாதே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் தானே கொள்ளும் வடிவங்கள் `சம்பு பக்கத்தின` என்றும், பிறருக்கு அவனால் தரப்படும் அவ்வடிவங்கள் `அணு பக்கத்தின` என்றும், சொல்லப்படும்.

பண் :

பாடல் எண் : 7

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிவபெருமான் எல்லாரினும் மேலாய்த் தேவர்களாலும் அறியப்படாத காட்சியை உடையவன்.
தேவரையெல்லாம் தான் விரும்பிய வண்ணம் படைத்து அவ்வத்தொழிலில் நிறுத்தினான்.

பண் :

பாடல் எண் : 8

தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடை யறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான்.
இங்ஙனம் எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் பிறர் தனது உருவமாய் நின்றாராக எவரும் கண்டிலாத, காண வாராத நிலையை உடையவன்.
அத்தகைய அவனே எம் கடவுள்.
இவற்றால் எல்லாம், மூவரும், பிறரும் ஆகிய தேவர் பலரும் `பசு` எனப்படும் உயிர்வருக்கத்தினரேயாகச் சிவபெருமான் ஒருவனே அனைவர்க்கும் தலைவனாகிய பதி - என்பது பல்லாற்றானும் விளக்கப்பட்டது.
`ஏனோர்க்கும்`` என்னும் உம்மை, `சிவநெறி யாளர்க்கேயன்றிப் பிற சமயத்தார்க்கும்` என இறந்தது தழுவிற்று.

பண் :

பாடல் எண் : 9

சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப ஆராய்ந்து

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அவன் என்றும் நீங்காத சிறப்பினையுடைய சிவலோகத்தில், தன்னுடைய வளாகமாகிய சிவபுரத்தில் அழகு நிறைந்த திருக்கோயிலுள் ஓலக்கமாக வீற்றிருக்கும் பொழுதில் செந் தாமரை போலும் கண்களையுடைய தேவர்கள் செவ்வியறிந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்து குழுமி, `பெருமானே, திரு வோலக்க மேயல்லாமல் தேவரீரது திருவுலாக் காட்சியையும் எங்கட்கு வழங்கியருளல் வேண்டும்` என்று பலநாட்கள் குறையிரந்த நிலைமையில் ஒருநாள்.
பொதுவாக, `ஆடவர்க்குக் கண்கள் செந்தாமரை போன் றிருத்தல் விரும்பத் தக்கது` என்னும் கருத்தால் ``செங்கண்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 10

செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி
எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப அங்கொருநாள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அவன் என்றும் நீங்காத சிறப்பினையுடைய சிவலோகத்தில், தன்னுடைய வளாகமாகிய சிவபுரத்தில் அழகு நிறைந்த திருக்கோயிலுள் ஓலக்கமாக வீற்றிருக்கும் பொழுதில் செந் தாமரை போலும் கண்களையுடைய தேவர்கள் செவ்வியறிந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்து குழுமி, `பெருமானே, திரு வோலக்க மேயல்லாமல் தேவரீரது திருவுலாக் காட்சியையும் எங்கட்கு வழங்கியருளல் வேண்டும்` என்று பலநாட்கள் குறையிரந்த நிலைமையில் ஒருநாள்.
பொதுவாக, `ஆடவர்க்குக் கண்கள் செந்தாமரை போன் றிருத்தல் விரும்பத் தக்கது` என்னும் கருத்தால் ``செங்கண்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 11

பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த சேமங்கொள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மங்கை - இலக்குமி.
புகழ், பெற்றியால் வரும் புகழ்.
எனவே, புகழ் மங்கை கொற்றவையாம்.
நாமங்கை - கலைமகள்.
`இம்மூவரும் நன்கு செய்தமைத்த பாதுகாப்பில் இருக்கின்ற மலைமகள்` என்க.
ஞானக் கொழுந்து, மலைமகள், அவள் ஞானத்தின் முடிநிலையாதல் பற்றி அங்ஙனம் கூறப்பட்டாள்.
நகராசன் - மலையரையன்.
நகம் - மலை.
சிவபெருமான் புறப்படும் பொழுது மலைமகளே அவனைத் தீண்டி அலங்கரிக்கத் தக்கவள் ஆதலின் அவள் அவனுக்குத் தலைக்கோலம் செய்தாள்.
தேன் மொய்த்த குஞ்சி - `தேன் என்னும் வண்டுகள் மொய்த்த தலைமுடி.
நறுமணம் பொருந்திய மலர்கள் நிறைந்திருத்தலால் வண்டுகள் மொய்ப்பவாயின.
ஊனம் - குறை.
சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 12

ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ மங்கை - இலக்குமி.
புகழ், பெற்றியால் வரும் புகழ்.
எனவே, புகழ் மங்கை கொற்றவையாம்.
நாமங்கை - கலைமகள்.
`இம்மூவரும் நன்கு செய்தமைத்த பாதுகாப்பில் இருக்கின்ற மலைமகள்` என்க.
ஞானக் கொழுந்து, மலைமகள், அவள் ஞானத்தின் முடிநிலையாதல் பற்றி அங்ஙனம் கூறப்பட்டாள்.
நகராசன் - மலையரையன்.
நகம் - மலை.
சிவபெருமான் புறப்படும் பொழுது மலைமகளே அவனைத் தீண்டி அலங்கரிக்கத் தக்கவள் ஆதலின் அவள் அவனுக்குத் தலைக்கோலம் செய்தாள்.
தேன் மொய்த்த குஞ்சி - `தேன் என்னும் வண்டுகள் மொய்த்த தலைமுடி.
நறுமணம் பொருந்திய மலர்கள் நிறைந்திருத்தலால் வண்டுகள் மொய்ப்பவாயின.
ஊனம் - குறை.
சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 13

நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் நொந்தா

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நந்தா - கெடாத.
வனம் - பூஞ்சோலை `அதன்கண் மலரும் செந்தாமரை, தடம் சேர் செந்தாமரை` - என்க மந்தாகினித் தடம் - ஆகாய கங்கையாகிய தீர்த்தம்.
நூறாயிரம் - இலட்சம்.
நொந்தா - கெடாத.
வயந்தன் - வசந்தன்.
இவன் மன்மதனுக்குத் தோழன், இவன் ஆகாயகங்கையிற் பூத்த செந்தாமரை மலர் நூறாயிரத்தால் தொடுத்து வனைந்த திருவாசிகையைச் சிவ பெருமானது திருமுடிக்கு மேல் விளங்கும்படி சூட்டினான்.

பண் :

பாடல் எண் : 14

வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் பயன்கொள்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நந்தா - கெடாத.
வனம் - பூஞ்சோலை `அதன்கண் மலரும் செந்தாமரை, தடம் சேர் செந்தாமரை` - என்க மந்தாகினித் தடம் - ஆகாய கங்கையாகிய தீர்த்தம்.
நூறாயிரம் - இலட்சம்.
நொந்தா - கெடாத.
வயந்தன் - வசந்தன்.
இவன் மன்மதனுக்குத் தோழன், இவன் ஆகாயகங்கையிற் பூத்த செந்தாமரை மலர் நூறாயிரத்தால் தொடுத்து வனைந்த திருவாசிகையைச் சிவ பெருமானது திருமுடிக்கு மேல் விளங்கும்படி சூட்டினான்.
பச்சைக் கருப்பூரம், குங்குமப் பூ.
பனி நீர் முதலிய கலவை உறுப்புக்களைச் சேர்த்து உயர்குலப் பெண்டிர் உரு வாக்கிய செழுமையான சந்தனக் குழம்பால் பெருமானது மார்பிடம் முழுதும் பூசி.

பண் :

பாடல் எண் : 15

குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
தலமலிய ஆகந் தழீஇக் கலைமலிந்த

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பச்சைக் கருப்பூரம், குங்குமப் பூ.
பனி நீர் முதலிய கலவை உறுப்புக்களைச் சேர்த்து உயர்குலப்