நக்கீரதேவ நாயனார் - திருமுருகாற்றுப்படை


பண் :

பாடல் எண் : 1

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை 5
மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் உள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் 10
துருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத் தன்ன தோயாப் பூந்துகில் 15
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் 20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரிவயின் வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25
துவர முடித்த துகள்அறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35
வேங்கை நுண்தா தப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் 40
சூர்அர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் 45
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட் 50
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத் 60
தெய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்

இரவலன் நிலை

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும்
செவ்வநீ நயந்தனை ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத் தின்நசை வாய்ப்ப 65
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே

திருப்பரங்குன்றம்

செருப்புகன் றெடுத்த சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து 70
மாடம்மலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன் றமர்ந் துறைதலும் உரியன்
அதாஅன்று.

திருச்சீரலைவாய்

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஒடையொடு துயல்வரப் 80
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழம்மேல் கொண்
டைவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 85
மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாள்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் 90
மனன்நேர் பெழுதரு வாள்நிற முகனே
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம் 95
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் 100
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்
மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் 105
செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை
உக்கம் சேர்த்தியது ஒருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை 110
அசைஇய தொருகை
அங்குசம் கடாவ ஒருகை இருகை
ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப
ஒருகை மார்பொடு விளங்க
ஒருகை தாரொடு பொலிய ஒருகை 115
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப
ஒருகை பாடின் படுமணி இரட்ட
ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய
ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்கப் 120
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப வால்வளை ஞரல
உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ 125
விசும் பாறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே
அதாஅன்று

திருஆவினன்குடி

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு 130
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசற விளங்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு 135
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவனர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத் 140
துனியில் காட்சி முனிவர் முன்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்துச்செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் 145
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப்
பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல் 150
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பலவரிக் கொழுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு 155
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் 160
தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் 165
பலர்புகழ் மூவரும் தலைவர்ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்
பகலில் தோன்றும் இகலில் காட்சி 170
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ
டொன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந்த தன்ன செலவினர் வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட 175
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவி னன்குடி அசைதலும் உரியன் 180
அதா அன்று

திருஏரகம்

இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை 185
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புல உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தற்புகழ்ந் 190
தாறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலும் உரியன்
அதாஅன்று

குன்றுதோறாடல்

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் 195
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல் 200
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரல்உளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் 205
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு 210
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம் 215
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி 220
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே
அதா அன்று

பழமுதிர்சோலை

சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ 225
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும் 230
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி 235
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொ விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் 240
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி 245
இமிழிசை அருவியோ டின்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் 250
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஒடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே 255
ஆண்டாண் டாயினும் ஆக காண்தக
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 260
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி 265
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே 270
வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக 275
நசையுநர்க் கார்த்தும் இசைபேர் ஆள
அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்ற டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெஎழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் 280
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந குரிசில் எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு 285
புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக்
குறித்தது மொழியா அளவையில் குறித்துடன்
வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன் 290
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற திறல்விளங் குருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் 295
மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி
அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவுஇன்
றிருள்நிற முந்நீர் வளைஇய உலகத்
தொருநீ யாகித் தோன்ற விழுமிய 300
பெறலரும் பரிசில் நல்கும்மதி பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்
தாரம் முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த 305
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று 310
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற 315
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொ
டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடா அடி உளியம்
பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட் 320
டாமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்
றிழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே. 323

பொழிப்புரை :

குறிப்புரை :

அடி.1-
உலகம் - உயிர்த் தொகுதி.
`உவப்ப ஏர்பு வலன் திரிதரு` - என இயைக்க. ஏற்பு - எழுந்து; புறப்பட்டு. `வலன் ஆக` என ஆக்கம் வருவிக்க.
வலமாதல் மேரு மலைக்கு ஆதலின் அதனையும் சொல்லெச்சமாக வருவிக்க.
அடி. 2-
`திரிதரு ஞாயிறு`, பலர்புகழ் ஞாயிறு எனத் தனித்தனி இயைக்க. `பலரும்` என உம்மை விரித்து, `எல்லாச் சமயத்தாரும்` என்பர் நச்சினார்க்கினியர். `ஞாயிற்றைக் கடலிலே கண்டாங்கு`,
அடி. 3-
இமைக்கும் ஒளி என்க. கடல், இங்கே கீழ்க்கடல். எனவே, ஞாயிறு இள ஞாயிறாயிற்று. இமைக்கும் ஒளி - இமைத்துப் பார்க்கப்படும் ஒளி. இமையாது பார்க்கும் சிற்றொளியன்று ஆதலின், இமைத்துப் பார்த்தல் வேண்டுவதாயிற்று.
ஓவு அறச் சேண் விளங்கு அவிர் ஒளி - எவ்விடமும் எஞ்சாத படி, நெடுந்தொலைவான பரப்பு இடத்தும் சென்று விட்டு விட்டு விளங்குகின்ற ஒளி. என்றது முருகனது திருமேனி ஒளியை. `ஒவுஅற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி` ஞாயிறாகிய உவமைக்கும் முருகனாகிய பொருளுக்கும் உரிய பொதுத் தன்மை. `கடல்` என்னும் உவமை மயில் ஊர்தியைக் கருதிக் கூறினமையால் அதன்மேல் இருந்த திருமேனியின் ஒளி` என உரைக்க. அங்ஙனம் உரையாக்கால், வாளா `கண்டாங்கு` என்னாது, `கடற்கண் டாங்கு` என்றதனால் பயன் இன்றாம்.
அடி. 4-
உறுநர் - அடைக்கலமாக அடைந்தோரையெல்லாம். தாங்கிய நோன்தாள் - துன்பக் குழியில் வீழாது தாங்கின வலிய திருவடி. மதன் உடை நோன்தாள் - அறியாமையை உடைத்தெறிகின்ற வலிய திருவடி.
அடி. 5-
செறுநர்த் தேய்த்த கை - அழித்தற்கு உரியவரை அழித்த கை. செல் உறழ்கை - (கைம்மாறு கருதாது வழங்குதலில்) மேகத்தை வென்ற கை. தடக்கை - (முழந்தாள் அளவும்) நீண்ட கை.
அடி. 6-
மறு இல் கற்பின் வாள் நுதல் கணவன் - (பின்முறை வதுவைப் பெருங்குலக் குழத்தியாராகிய வள்ளி நாயகியார்மேல் பொறாமை கொள்ளுதலாகிய) குற்றம் சிறிதும் இல்லாத கற்பினையும், (பொறாமையில்லாமையால் வெகுண்டு வேர்த்தல் இல்லாது எப்பொழுதும் மகிழ்ந்தே பார்த்தலால்) ஒளி மழுங்குதல் இல்லாத நெற்றியினையும் உடைய தெய்வயானையார்க்குக் கணவன்.
(`மறுஇல்` என்றதனானே, வள்ளி நாயகியார்க்குக் கணவன்` என்பது பெற வைத்தமையால் முருகன் தனது இச்சா சத்தி கிரியா சத்திகளால் உலகை ஐந்தொழிற்படுத்தருளுதல் குறிப்பால் உணர்த்தப் பட்டதாம்.)
அடி. 7 -
கார் கோள் முகந்த கமஞ்சூல் மா மழை (9 - தலைப் பெயல் தலைஇய) கடல் நீரை முகந்து நிரம்பிய கருப்பத்தைக் கொண்ட கரிய மேகங்கள் (முதல் மழையைப் பொழிந்து விட்ட).
அடி. 8 -
வாள் போழ் விசும்பு - ஞாயிறு, திங்கள் முதலியவற்றின் ஒளிகள் இருளைக் கிழிக்கின்ற வானம்.
அடி. 8, 9 -
விசும்பில் வள் உறை சிதறி தலைப்பெயல் தலைஇய - வானத்தின்கண் வளமான துளிகளைச் சிதறி, முதல் மழை பொழிந்து விட்ட.
அடி. 9 -
தலைப் பெயல் தலைஇய கானம் - முதல் மழை பொழிந்து விட்டகாடு. தண் நறுங் கானம் - குளிர்ந்த நறுமணம் கமழ்கின்ற காடு.
அடி. 9, 10 -
கானத்து இருள்படப் பொதுளிய மரா - காட்டிடத்து இருள் உண்டாகும்படி தழைத்த மரா மரம்.
அடி. 10, 11-
மராஅத்து பூந்தண்தார் புரளும் மார்பினன் - செங்கடப்ப மரத்தினது பூவால் ஆகிய, குளிர்ந்த தார் புரளுகின்ற மார்பினை உடையவன். பராரை - பருத்த அடிமரம், உருள் - தேரினது உருளைப் போலும் (தார்.)
அடி. 12 -
மால் வரை நிவந்த வெற்பில் - பெரிய மூங்கில் வளர்ந்த மலையில் (உள்ள 41 சோலை), சேண் உயர் - வானுலகளவும் உயர்ந்த (மலை).
அடி. 13 -
கிண்கிணி கவைஇய சீறடி - சிறு சதங்கை சூழ அணிந்த சிறிய பாதங்களை உடைய (41- மகளிர்) ஒள் - ஒளி பொருந்திய (பாதம்) செ- செம்மை நிறத்தவனாகிய ( பாதம்).
அடி. 14-
கணைக்கால் - திரண்ட கால்களையுடைய (41- மகளிர்). வாங்கிய நுசுப்பின் - வளைந்து துவளும் இடையினை யுடைய (41-மகளிர்). பணைத் தோள் - பருத்த தோளினையுடைய (41- மகளிர்). `மூங்கில்போலும் தோள்` என்றும் ஆம்.
அடி. 15-
கோபத்து அன்ன துகில் - `இந்திர கோபம்` என்னும் பூச்சியினது நிறத்தோடு ஒத்த சிவந்த நிறத்தையுடைய உயர்ந்த புடைவையை உடைய (41-மகளிர்). தோயா (த் துகில்) - செயற்கையாக ஏற்றப்படாது இயல்பாகவே சிவந்த (துகில்) பூ (பூக்கள் பொறிக்கப்பட்ட (துகில்)
அடி. 16
பல் காசு நிரைத்த சில்காழ் அல்குல் - பல மணிகளைக் கோத்த வடம் ஏழால் அமைந்த `மேகலை` என்னும் அணிகலனை யுடைய பிருட்டங்களையுடைய (41-மகளிர்). முன்னழகிற்கு வேறுபல இடப்படும் ஆகலின் மேகலை பின் அழகிற்கே இடப்படுவது ஆகும். இம் மணிவடக் கோப்பு வடத்தின் எண்ணிக்கை பற்றி வேறு வேறு பெயரால் சொல்லப்படுகின்றன. அதனை,
எண்கோவை காஞ்சி; எழுகோவை மேகலை;
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு; முப்பத் திரண்டு
விரிசிகை என்றுணரற் பாற்று.
என்னும் வெண்பாவால் விளக்கினார் நச்சினார்க்கினியர். இப் பொருள் சேந்தன் திவாகரம், பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு களில் சொல்லப்பட்டது.
அடி. 17-
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின் - சிலர் தம் கைவன்மையால் புனைந்து தோற்றுவியாத அழகாக, இயல்பாற் பெற்ற அழகினையுடைய (41-மகளிர்). `தெய்வ மகளிரது அழகு இயற்கையானது` என்றபடி. `கவினாக` என ஆக்கம் வருவிக்க.
அடி. 18-
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை - நாவலோடு பொருந்தி பொன்னால் (நாவல் - சம்பு. அதனைப் பொருந்திய பெயர் சாம்பூநதம், `பொன் நால்வகைத்து` என வகுத்து, `அவற்றுள் இப்பொன் சிறந்தது` என்பர். `பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புநதம்* என்றதும் காண்க.) செய்யப்பட்டன போன்று மிக்கு விளங்குகின்ற அணிகலன்களையுடைய (41- மகளிர்)
அடி. 19-
சேண் இகந்து விளங்கும் மேனி - நெடுந் தொலைவு கடந்தும் விளங்குகின்ற நிறத்தையுடைய (41-மகளிர்) செயிர்தீர் - குற்றம் அற்ற (மறு வற்ற மேனி.)
அடி. 20-
துணையோர் ஆய்ந்த ஓதி - ஆயத்தார் உற்று நோக்கி மெச்சும் தலை மயிரில். இணை - எல்லாம் ஒன்று போல முனை ஒத்துக் கூடிய (தலைமயிர்). ஈர் - இயற்கையில் நெய்ப்பசையையுடைய (தலைமயிர்.)
அடி. 21-
செங்கால் வெட்சிச் சிறு இதழிடை இடுபு - சிவந்த காம்பையுடைய வெட்சிப் பூக்களின் இடையே இட்டு. (சீறிதழ் - ஆகுபெயர்.)
அடி. 22-
பைந் தாள் குவளை தூ இதழ் கிள்ளி - பசுமையான காம்பை உடைய குவளைப் பூவினது இதழ்களைத் தனித் தனியாகக் கிள்ளி எடுத்து.
அடி. 23
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திருமகள் வடிவாகச் செய்யப்பட்ட `உத்தி` என்னும் தலைக்கோலத் துடனே, வலம் புரிச் சங்கு வடிவாகச் செய்யப்பட்ட தலைக்கோலத்தை யும் வைத்தற்குரிய இடத்திலே வைத்து.
அடி. 24, 25
திலகம் தையஇய பகுவாய் மகரம் தாழ மண்ணுறுத்து - திலகம் இட்டு அழகுபடுத்தப்பட்ட நெற்றியிலே, பிளந்த வாயையுடைய சுறாமீன் வடிவாகச் செய்யப்பட்ட தலைக் கோலத்தைத் தொங்கவிட்டு அழகுபடுத்தி. தேம் கமழ் - மணம் கமழ்கின்ற (திருநுதல்)
அடி. 26-
துவர முடித்த முச்சி - முற்றப் பின்னிப் பின் முடியாக முடித் கொண்டையில். துகள் அறும் - குற்றம் அற்ற (முச்சி)
அடி. 27-
சண்பகம் செரீஇ - சண்பகப் பூவைச் செருகி. பெருந்தண் - பெரிய, குளிர்ந்த (சண்பகம்)
அடி. 27, 28-
மருதின் பூ இணர் அட்டி - மருத மரத்தினது பூக்கொத்தினை (ச் சண்பகத்தின் மேலே தோன்ற) வைத்து. கருந் தகட்டு உளைப்பூ - புறத்தில் கரிய புற இதழினையும், அகத்தில் கேசரத்தினையும் உடைய பூக்களை உடைய (மருது). ஒள் - ஒளி பொருந்திய (இணர்).
அடி. 29, 30-
கிளைக் கவின்று எழுதரு செவ்வரும்பு இணைப் புறு பிணையல் வளைஇ - காம்பினின்றும் அழகாய் எழுகின்ற (அம் மருத) சிவந்த அரும்புகளை இணைத்துக் கட்டிய மாலையை (க் கொண்டையைச் சூழ) வளைத்து. கீழ்நீர் - நீர்க்கீழ் (இட்டுவைத்து எடுத்த அரும்பு. பறித்த அரும்பை நீரில் இட்டு வைப்பின் சிவப்புப் பின்னும் மிக அழகு மிகும்.)
அடி. 30, 31, 32-
வண் காது துணைத் தக நிறைந்த பிண்டித் தளிர் ஆகம் திளைப்ப - வளமான காதுகளில் இரண்டும் ஒருபடியாய் ஒத்துத் தோன்றும்படி வைக்கப்பட்டு நிறைந்த அந்த அசோகந்தளிரே மார்பிலும் அணிகலங்களுக்கு இடையே பொருந்தி அசையச் சேர்த்து. (`சேர்த்து` என ஒரு சொல் வருவிக்க. `அந்த` என்றது சாதி பற்றி.)
அடி. 32, 33-
திண் காழ் நறுங் குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை - திண்ணிய, வயிரத்தையுடைய, நறிய சந்தனக் கட்டையை உரைத்ததனால் உண்டாகிய அழகிய நிறத்தையுடைய சாந்தினை.
அடி. 34-
தேம் கமழ் மருது இணர் கடுப்ப - மணம் கமழ்கின்ற மருதம் பூவின் கொத்துப்போலத் தோன்றும்படி (கொட்டி).
அடி. 34, 35-
கோங்கின் குவி முகிழ் - கோங்க மரத்தினது குவித்த அரும்புபோலும் (முலை) இள - இளமையான (முலை).
அடி. 35-
முலைக் கொட்டி - கொங்கைகளின்மேல் அள்ளியிட்டு.
அடி. 35, 36-
வேங்கை விரி மலர் நுண் தாது அப்பி - (சந்தனச் சாந்து புலர்வதற்கு அதன்மேலே) வேங்கை மரத்தில் மலர்ந்த மலரினது நுண்ணிய மகரந்தத்தை அப்பி.
அடி. 37-
வெள்ளில் குறு முறி கிள்ளுபு காண் வரத் தெறியா - விளா மரத்தினது குறுந்தளிரைக் கிள்ளி அழகு உண்டாக (விளை யாட்டாக) ஒருவர்மேல் ஒருவர் வீசி.
`வெற்பின்கண் உள்ள சோலை` எனவும், `சூர் அர மகளிர் ஆடும் சோலை` எனவும் இயைத்து, `சோலையையுடைய அடுக்கத்துப் பூத்த காந்தள் கண்ணி மிலைந்த சென்னியன்` என முடிக்க.
`13, சீறடியையும், 14. கணைக் காலையும் நுசுப்பையும், பணைத் தோளையும், 15. துகிலையும், 16. அல்குலையும், 17. வனப்பையும், 18. இழையையும், 19. மேனியையும் உடைய, 41. சூர் அர மகளிர் 39. பலர் உடனாகி, 20. ஓதியில், 21. வெட்சி இதழின் இடையில், 22. குவளை இதழ்களை இட்டு, 23. (தலையில்)தெய்வ உத்தியொடு வலம்புரி வைத்து, 25. நுதலில் மகரம் தாழ மண்ணுறுத்து, 26. முச்சியில் 27. சண்பகம் செரீஇ, 28. மருதின் இணர் அட்டி, 30. பிணையல் வளைஇ, 32. திளைப்பச் செய்து, 34. தேய்வை 35. முலைக் கொட்டி அப்பி, 37. தெறியா, 39. ஏத்தி, 40. ஆடும் சோலை` என்க.
அடி. 38
கோழி ஓங்கிய (கொடி) - கோழியோடு உயர்ந்த தோன்றும் (கொடி; முருகன் கொடி,) அட்டு வெல் விறல் (கொடி) - கரவாது எதிர் நின்று பொருது வென்று எடுத்த, வெற்றியைக் குறிக்கும் (கொடி,)
அடி. 40-
சீர் திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி (ஆடும் சோலை)- அழகு விளங்குகின்ற மலையகத்து ஒலியெழும்படி பாடி (விளை யாடும் சோலை). `அம்மகளிரது உருவம் ஈண்டுள்ளார்க்குக் கட்புல னாகாவிடினும் அவர்கள் பாடும் பாட்டின் ஒலி செவிப் புலன் ஆகும்` என்பது கருத்து.
அடி. 41, -
சூர் அர மகளிர் பலர் உடன் ஆடும் சோலை (அடுக்கம்) - மக்களாய் உள்ளார்க்கு அச்சம் தோன்றும் தெய்வ மகளிர் பலர் ஒன்று சேர்ந்து விளையாடுகின்ற சோலையினையுடைய (சாரல்)
அடி. 42-
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து(க் காந்தட் பூ) - மிக உயர்ந்திருத்தலின் மரம் ஏறுதலில் வல்ல குரங்குகளும் உச்சி வரையில் ஏறி அறியாத மரங்கள் நிறைந்த சாரலின்கண் (பூத்த காந்தட் பூ)
அடி. 43, 44-
காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் - காந்தட் பூவால் ஆகிய பெரிய, குளிர்ந்த முடி மாலையைச் சூடிய தலையை உடையவன். சுடர்க் காந்தட் பூ - நெருப்புப் போலும் செங்காந்தட் பூ. சுரும்பும் மூசாக் காந்தட் பூ - நெருப்புப் போறலின் வண்டும் மொய்க்காத காந்தட் பூ. உம்மை, `பிற குற்றங்கள் அணுகாமையே யன்றி` என இறந்தது தழுவிற்று. இனி, `பிற குற்றங்களை விலக்குதல் கூடுமாயினும் வண்டு மூசுதலை விலக்குதல் அரிதாகலின் அக்குற்றமும் இல்லது` எனச் சிறப்பும்மையாகக் கொள்ளுதலும் ஆம்.
அடி. 45, 46-
கடல் கலங்க உள்புக்குத் தடிந்த வேல் - கடல் கலங்கும்படி அதனுள்ளே புகுந்து அழித்த வேற்படையாகிய (61 செவ் வேல்) சூரபன்மா கடலுள் ஒளித்தானாகலின் வேல் கடலுள்ளே புகுந்து அவனை அழித்தது.
அடி. 46-
சூர் முதல் - சூரபன்மாவாகிய தலைவனை.
அடி. 47-
உலறிய கதுப்பின் - எண்ணெய் இன்றிக் காய்ந்த தலைமயிரினையும். பிறழ் பல் பேழ்வாய் - ஒழுங்கில்லாது பல வாறாகப் பிறழ்ந்து காணப்படும் பற்களையுடைய பெரிய வாயையும்.
அடி. 48-
சுழல் விழிப்பசுங்கண் - (எத்திசையையும் வெகுண்டு நோக்குதலால்) சுழலுகின்ற விழியினையுடைய பசிய கண்ணினையும் (`கண்` என்னும் உறுப்பில் உருவத்தைக் கவர்வதே `விழி` எனப் படும்). சூர்த்த நோக்கின் - (அக்கண்களால்) யாவரையும் அச்சுறுத்து கின்ற பார்வையினையும்,
அடி. 49,50-
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப் பெரு முலை அலைக்கும் காதின் - பிதுங்கிய கண்களையுடைய கூகைகளை (கோட்டான்களை) முடிந்து விட்டுத் தூங்குதலால் பெரிய கொங்கைகளை வருந்தப் பண்ணுகின்ற காதினையும், பிணர் மோட்டு- `சொர சொர` என்னும் உடம்பினையும்,
அடி. 51-
உரு கெழு செலவின் - கண்டவர்கள் அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய (51- பேய்மகள்.) அஞ்சு வரு - கண்டவர்க்கு அஞ்சுதல் வருதற்குக் காரணமான (பேய் மகள்)
அடி. 51-
பேய் மகள்.
அடி.52, 53-
குருதி ஆடிய கூர் உகிர்க்கொடு விரல் கண் தொட்டு உண்ட கழி முடை - இரத்தத்திலே தோய்ந்த, கூர்மையான நகங்களையுடைய வளைந்த விரலாலே கண்களை அவள் தோண்டி உண்ட, மிக்க முடை நாற்றத்தையுடைய (கருந்தலை) `3. சேண் விளங்கு அவிர் ஒளியையும், 4. நோன் தாளையும், 5. தடக்கையையும் உடைய கணவனும், 10,11. மராத்துப் பூந்தளிர்தார் புரளும் மார்பினனும், 12. சேண் உயர் வெற்பில் உள்ள, 41. அர மகளிர் ஆடும் சோலையை உடைய 42. அடுக்கத்து 43. காந்தள் 44. கண்ணி மிலைந்த சென்னியனும், 46. சூர் முதல் தடிந்த நெடிய வேலாகிய, 51. பேய் மகள் 56. துணங்கை தூங்கும்படி 59. அவுணர் வலம் அடங்க 60. மா முதல் தடிந்த 61. நல் இசையினையும் உடையவனும் ஆகிய சேய்` என இயைத்துக் கொள்க.
`3. சேண் விளங்கு அவிர் ஒளியையும், 4. நோன் தாளையும், 5. தடக்கையையும் உடைய கணவனும், 10,11. மராத்துப் பூந்தளிர்தார் புரளும் மார்பினனும், 12. சேண் உயர் வெற்பில் உள்ள, 41. அர மகளிர் ஆடும் சோலையை உடைய 42. அடுக்கத்து 43. காந்தள் 44. கண்ணி மிலைந்த சென்னியனும், 46. சூர் முதல் தடிந்த நெடிய வேலாகிய, 51. பேய் மகள் 56. துணங்கை தூங்கும்படி 59. அவுணர் வலம் அடங்க 60. மா முதல் தடிந்த 61. நல் இசையினையும் உடையவனும் ஆகிய சேய்` என இயைத்துக் கொள்க.
அடி. 53-
கருந்தலை.
அடி. 54-
கையின்ஏந்தி,
அடி. 55-
தோள் பெயரா (பெயர்த்து)
அடி. 56-
துணங்கை தூங்க - `துணங்கை` என்னும் கூத்தினை ஆடும்படி (60. மா முதல் தடிந்த) நிணந்தின் வாயள் - (பிணங்களின்) நிணங்களை எடுத்துத் தின்கின்ற வாயினை உடையளாய் (தூங்க) வாயார், முற்றெச்சம்.
அடி. 57, 58, 59-
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை அறுவேறு வகையின் அவுணர் அஞ்சு வர மண்டி - இருவகையை பெரிய உருவத்தினாலே அத்தன்மையைக் குறிக்கும் ஒரு பெயரை உடைய அவுணர்களது உடம்புகள் அற்று வேறாரும்படி அவர்கட்கு அஞ்சுதல் வர நெருங்கிச் சென்று.
அடி. 59-
நல் வலம் அடங்க - அவர்களது மிக்க வலிமை அற்றுப் போம்படி.
அடி. 59-
-
கவிழ் இணர் - கீழ் நோக்கிய பூக்களின் கொத்துகளை யுடைய (60 - மாமரம்.)
சூரபதுமனுடைய படைகளில் குதிரை முகத்தை உடைய அசுரர்கள் சிறப்புப் பெற்று இருந்தனர்` என்பதும், `அசுரர் அனை வர்க்கும் பாதுகாவலாகத் தென்கடலில் மாமரம் ஒன்று இருந்தது` என்பதும் பழமையான சிவபுராண வரலாறுகள். இவ் அசுரர்களது உடம்பே இங்கு `இருவே றுருவின் ஒருபேர் யாக்கை` எனக் குறிக்கப்பட்டது. இவை கந்த புராணத்தில் காணப்படவில்லை. `குதிரை முகம் உடைய அசுரர்கள்` என்றதை ஒட்டி, `அவ்வாறான உடல் அமைப்பை யுடைய ஒரு பூதம் நக்கீரரை மலைக்குகையில் அடைத்தபொழுது அதனினின்றும்` விடுபட வேண்டியே அவர் திருமுருகாற்றுப் படையைப் பாடினார், என்ற வரலாறு சீகாளத்திப் புராணத்தில் கூறப் பட்டது. அப்பூதத்தின் பெயர் `கற்கி முகாசுரன்` என்பதாகச் சொல்வது உண்டு, கற்கி - குதிரை.
அடி. 60-
மறு இல் கொற்றத்து - குற்றம் இல்லாத வெற்றியையும். (`கொடியோரை அழித்தல் குற்றம் அன்று` என்பது குறித்தபடி.)
அடி. 60, 61-
மா முதல் தடிந்த செவ்வேல் - மா மரத்தை அடியோடு அழித்த சிவந்த வேலையும்.
அடி. 61-
எய்யா நல் இசைசேய் -ஒருவராலும் அளந்தறியப் படாத நல்ல புகழையும் உடைய சேயோன். (முருகன்.)
அடி. 61,62, 64-
சேய் சேவடி படரும் உள்ளமொடு. செலவ - முருகனையே எப்பொழுதும் நினைத்தலால் தலைமை பெற்ற உள்ளத் தோடே செல்லும் செலவை உடைய புலவனே. செம்மல் - தலைமை பெற்ற (உள்ளம்)
அடி. 63, 64-
நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும் - நன்மையை விரும்பும் கோட்பாட்டினால், (அலைவைத் தரும்) புலன் இன்பங்களினின்றும் நீங்கி, (நிலைப்பைத் தரும் இன்பத்திலே) தங்குதலைப் பயனாக உடைய (64 செலவ)
அடி. 64-
நீ நயந்தனையாயின் - அங்ஙனம் உறைதலாகிய பயனை நீ விரும்பியே விட்டாயாயின். பலவுடன் - அப்பயனே யன்றி ஏனைப் பல பயன்களுடனும். (`பலவற்றுடன்` - என்பதில் சாரியை தொகுத்தலாயிற்று.)
அடி. 65, 66-
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப நீ முன்னிய வினை இன்னே பெறுதி - நன்றான உனது நெஞ்சத்திலே எழுந்த இனிய விருப்பம் நிறைவுறுதற்பொருட்டு நீ கருதி மேற்கொண்ட வினையாகிய செலவின் பயனை இப்பொழுதே பெறுவாய். (அஃது எங்ஙனம் எனில், முருகனை அவன் இருக்கும் இடத்தில் சென்று பணிதலால், பணிதற்கு அவன் இருக்கும் இடம் எது எனின், ஏனையோர் போல அவன் இருக்குமிடம் ஒன்றன்று; பல. அவை யாவையெனின், ) `வினை` என்றது செலவை. அஃது ஆகுபெயராய் அதன் பயனைக் குறித்து நின்றது.
அடி. 67-
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி - (மாற்றரசர் வந்து புரியும்) போரினை ஏற்க விரும்பி, (அதற்கு அடையாளமாக) உயரத் தூக்கிய, வானளாவ உயர்ந்து பறக்கும். நீண்ட கொடியின் பக்கத்திலே கட்டப்பட்ட. (`கொடி` என்பது 68 `பாவை` என்பதனுடன் ஏழாம் வேற்றுமைத் தொகைபடத் தொக்கது)
அடி. 68-
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க - நூலால் வரிந்து செய்த பந்தையுடைய பாவை (அறுப்பார் இன்மையால்) தூங்கியே கிடக்க. (மாற்று வேந்தரை மகளிராக வைத்து இகழ்தலைக் காட்டும் அடையாளமாகக் கொடியின் பக்கத்தில் பந்தாடுவாளைப் போலப் புனையப்பட்ட பாவை ஒன்று தூங்க விடப்படும். மாற்று வேந்தர் வந்து முற்றுகையிடக் கருதினாராயின் அந்தப் பாவையை முதலிலே அறுத்து வீழ்த்துதல் வேண்டும்.) அங்ஙனம் ஒருவரும் வந்து அதனை அறுத்து வீழ்த்தாமையால் அது தூங்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆகவே,
அடி. 69-
பொருநர் தேய்த்த போர் அரு வாயில் - போர் செய் பவரை இல்லையாக்கிய காரணத்தால் போர் இல்லாத வாயிலையும்.
அடி. 70-
திரு வீற்றிருந்த - திருமகள் சிறப்புடன் இருக்கப் பெற்றதும். தீது தீர் நியமத்து - குற்றம் அற்ற கடைத் தெருக்களையும்.
அடி. 70-
இரு சேற்று அகல் வயல் - கரிய சேற்றினையுடைய அகன்ற வயல்களில். விரிந்து வாய் அவிழ்ந்த - முறுக்கு நீங்கி மலர்ந்து, பின்பு வாய் நன்கு மலர்ந்த.
அடி. 71, 72-
மாடம் மலி மறுகின் மேல் மாடங்களோடு கூடின மாளிகைகள் நிறைந்த மற்றைத் தெருக்களையும் உடைய. கூடல் குடவாயின் - மதுரை மாநகரத்திற்கு மேற்கில் உள்ள (77 குன்று)
அடி. 71, -
கூடற் குடவயின் குன்று அமர்ந்து உறைதலும் உரியன் - மதுரை நகரத்திற்கு மேற்கில் உள்ள திருப்பரங்குன்றத்தில் விரும்பி உறைதலையும் அவன் தனக்கு உரிமையாக உடையன். (எனவே, `அங்குச் சென்றாலும் அவனைக் காணலாம்` என்பதாம்.
அடி. 73-
தாமரைத் துஞ்சி - தாமரை மலர்களில் (பகலில் வீழ்ந்து, மாலையில்) அவை கூம்பிவிட்டமையால் இரவெல்லாம் அவற்றினுள்ளே) உறங்கிக் கிடந்த. முள் தாள் - முள்ளையுடைய தண்டினை உடைய (தாமரை)
அடி. 73, 74-
வைகறை நெய்தல் ஊதி - விடியற் காலையில் (பறந்து சென்று) நெய்தற் பூவில் வீழ்ந்து ஊதி. கள் கமழ் - தேன் மணக் கின்ற (நெய்தல்). எல் பட - ஞாயிறு தோன்றியவுடன்.
அடி. 75, 76, 77-
சுனை மலர் ஒலிக்கும் குன்று - சுனையின் கண் மலர்ந்த மலர்களிலே வீழ்ந்து ஆரவாரிக்கின்ற திருப்பரங்குன்றம். கண்போல் மலர்ந்த - சுனைகளினுடைய கண்களைப் போல விளங்க மலர்ந்த (மலர் எனவே, `இவை நீலப்பூ` என்பது பெறப்படும்.) காமர்- (காண்பாரது) விருப்பம் பொருந்துகின்ற (மலர்). (`காமம் மரு` என்பது `காமர்` என மருவிற்று.
அடி. 76-
அம் சிறை வண்டின் அரிக்கணம் - அழகிய சிறகினை யுடைய வண்டுகளாகிய இசைபாடும் கூட்டம்.
அடி. 78-
அதாஅன்று - அதுவன்றியும் இனி `அம்முருகன் தனது ஆறு முகங்களும், பன்னிரண்டு தோள்களும், `கைகளும் விளங்க யானைமேல் ஏறி, வானில் பல வாச்சியங்கள் ஒலிக்கத் திருச்சீரலைவாயை நோக்கி வான் வழியாக செல்லலும் உரியன்` என்பது கூறப்படுகின்றது.
அடி. 79-
வை நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் - கூரிய நுனியை உடைய அங்குசம் குத்தின வடு சூழ்ந்து காணப்படுகின்ற, பல புள்ளிகளையுடைய நெற்றியில். அடி. 80-
வாடா மாலை ஓடையொடு துயல்வர - வாடுதல் இல்லாத பூவாகிய பொன்னால் ஆகிய அரிமாலை நெற்றிப் பட்டத்துடன் இருந்து அசைய.
அடி. 81-
படு மணி இரட்டும் மருங்கின் - இரு பக்கமும் பொருந்தின மணிகள் மாறி மாறி ஒலிக்கின்ற பக்கங்களையும். கடு நடை - வேகமாக நடக்கும் நடையினையும்.
அடி. 82-
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் வேழம் மேல் கொண்டு - கூற்றுவனைப் போலத் தடுக்க இயலாத வலிமையினையும் உடைய யானையை ஏறி.
அடி. 83-
கால் கிளர்ந்து அன்ன - (ஓடும் வேகத்தால்) காற்று எழுந்தாற் போலக் காணப்படுகின்ற (வேழம்).
அடி. 84, 85-
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண் மிகு திருமணி - ஐந்து வகையான வேறுபட்ட உருவம் உடையனவாகச் செய்யப்பட்ட செயற்பாடுகளெல்லாம் முற்ற முடிந்த முடிகளோடு கூடி விளங்குகின்ற, மாறுபாடு மிக்க நிறங்களை யுடைய மணிகள். (ஐவேறு உரு - தாமம், முகுடம், பதுமம், கிம்புரி, கோடகம் என்பன.)
அடி. 86-
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப- மின்ன லொடு மாறுபட்டு விளங்கும் விளக்கத்துடன் தலையிலே பொலிவு பெற.
அடி. 87-
நகை தாழ்பு துயல் வரூஉம் வகை அமை பொலம் குழை - ஒளியோடு தாழ்ந்து அசைதல் வரும் வகையாக அமைந்த, பொன்னால் இயன்ற மகரக் குழைகள்.
அடி. 88, 89-
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்ப - நெடுந் தொலைவு சென்று விளங்கும் இயல்பினையுடைய ஒளியையுடைய திங்களைச் சூழ்ந்து நீங்காதுள்ள மீன்களைப் போல விட்டு விட்டு விளங்குவனவாய் ஒளியை வீச.
அடி. 90, 91-
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் மனம் நேர்பு எழுதரு வாள் நிற முகன் - குற்றம் இல்லாத கொள்கையையுடைய தங்கள் தொழிலை முடிப்பவரது மனத்தை ஏற்று அவண் தோன்றுகின்ற ஒளிவீசும் நிறத்தையுடைய முகங்களில் (குற்றம் இல்லாத கொள்கையையுடைய தொழிலாவது தவம். `தவத்தோர் மனத்தை இருத்தற் குரிய இடமாக ஏற்று, அங்கு விளங்கும் முகங்கள்` - என்றபடி. இஃது ஆறு முகங்களையும் பொதுவாகச் சுட்டிச் சொல்லியது).
அடி. 92,93-
ஒரு முகம் மா ஞாலம் இருள் மறு இன்றி விளங்கப் பல் கதிர் விரிந்தன்று - ஒரு முகம் - பெரிய உலகம் இருளாகிய குற்றம் தீர்ந்து ஒளியைப் பெறும்படி பல கதிர்களைப் பரப்புதலை உடைத்தாயிற்று. (`எல்லாச் சுடர்களின் ஒளிகளும் முருகன் அருளிய ஒளியை யுடையனவே` என்றபடி.)
அடி. 93, 94, 95-
ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே - மற்றொரு முகம், அன்பர்கள் துதிக்க, அத்துதியை விரும்பி ஏற்று அவர்க்கு ஏற்ப இயங்குதலை உடைத்தாய், அவர்கள் விரும்பிய பொருளை முடிப்பனவாகிய மெய்ம்மொழியை வழங்கியே இருந்தது. (வரம் - விரும்பிய பொருள். அஃது ஆகுபெயராய், அதனை முடிப்பதாகிய சொல்லைக் குறித்தது. ஏகாரத் தேற்றம். இனி வருவனவும் அவை.)
அடி. 95, 96, 97-
ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழா வேள்வி ஓர்க்குமே - மற்றொரு முகம், மந்திரத்தோடு, கூடிய விதி முறைகளினின்றும் வழுவாத வேள்விகள் இனிது முடியும் வண்ணம் நினைந்து நோக்கியே இருக்கும். அந்தணர் வேள்வி. அம் தணர் - அழகிய தட்பத்தை - கருணையை - உடையவர். அக்கருணை காரண மாகச் செய்யப்படும் வேள்வி உலக நலத்தைப் பயக்கும் ஆகலின், அவற்றை முருகன், இனிது முடிய வேண்டுவானாவன். பல வகை வழிபாடுகளும் வேள்விகளே. கருணை காரணமாக உலக நலத்தின் பொருட்டுச் செய்யும் வழிபாடு, `பரார்த்த பூசை` எனப்படும். அவன் ஆன்மார்த்த பூசையைக் காத்தல் இதற்கு முன் கூறிய அதனுள்ளே அடங்கிற்று.
அடி. 97, 98, 99-
ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏம் உற நாடித் திங்கள் போலத் திசை விளக்குமே - மற்றொரு முகம், வேள்வி யொழிந்த பிற பொருள்களையும் அவை பாதுகாவல் பெறும்படி நினைந்து, திங்களைப் போல எல்லாத் திசைகளையும் இடரின்றி விளங்கச் செய்தே இருக்கும்.
அடி. 99, 100, 101-
ஒரு முகம் செறுநர் தேய்த்துச் செல் சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே - மற்றொரு முகம். பகைவரை அழித்து நிகழாநின்ற போரினை வெற்றியாக முடித்துப் பின்னும் பகைவர் தோன்றாதவாறு. வெகுள்கின்ற நெஞ்சத் தோடே கள வேள்வி வேட்டேயிருக்கும். (கறுவு - நீடு நிற்கின்ற பகைமை யுணர்வு அது கொடியார் மேலதாதலின் அறமாயிற்று. `தேய்த்து` என்னும் செய்தென் எச்சம் பின் வரும் செல்லுதல் வினைக்கு நிகழ்காலம் உணர்த்தி நின்றது.
அடி. 101, 102, 103-
ஒரு முகம் குறவர் மடமகள் வள்ளியொடு நகை அமர்ந்தன்று - மற்றொரு முகம், குறவர்தம் இளைய மகளாகிய வள்ளியோடு மகிழ்ந்திருத்தலை விரும்பியே இருந்தது. கொடிபோல் நுசுப்பின் - கொடிபோலத் துவள்கின்ற இடையினையுடைய (வள்ளி), மட வரல் - `மடம்` என்னும் குணத்தினது வருகையைப் பொருந்திய வள்ளி. மடமாவது, கொளுத்தக் கொண்டு, கொண்டது விடாமை. இதுபெண்மைகளுள் ஒன்று.)
அடி. 103, 104, 105-
அம்மூவிரு முகனும் ஆங்கு முறை நவின்று ஒழுகலின் - அந்த ஆறு முகங்களும் அவ்வாறான முறைகளில் பயின்று நிகழ்தலால். (119 பன்னிரு கையும் இயற்றி.)
அடி. 105,106-
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் செம்பொறி வாங்கிய - பொன்னரி மாலை தங்கி, அழகிய, விளக்கமான மார்பின் கண் உள்ள செவ்வையான கீற்றுக்களைத் தம்மிடத்தே வருமாறு வாங்கி வைத்துக் கொண்ட (107 தோள் மார்பில் மூன்று கீற்றுக்கள் தோன்றித் தோளளவும் சென்றிருத்தல் சிறந்த ஆடவர்க்கு உள்ள இயல்பாகக் கூறப்படுகின்றது.)
அடி. 106, 107, 108-
மொய்ம்பின் வண்புகழ் நிறைந்து - வலிமை யினாலே வளவிய புகழ் நிறையப் பெற்று. சுடர் விடுபு வாங்கு - ஒளி பொருந்திய படைக்கலங்களை ஏவிப் பகைவர்களது மார்பைப் பிளந்த பின்பு வாங்கிக் கொள்கின்ற (107 தோள்) நிமிர் தோள் - பருத்த தோள்களில் உள்ள. (சுடர், ஆகுபெயர்.)
அடி. 108, 109, 110-
ஒரு கை விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது. ஒருகை, (உலகம் ஞாயிற்றின் வெம்மையால் அழியாதபடி அதனைத் தாங்கி) எப்பொழுதும் வானத்தில் உலாவிக் கொண்டிருக்கின்ற அறவோர்களைத் தாங்கி உயரச் சென்றது. (நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் - தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால் உணவாகச் சுடரொடு கொட்கும் - `அவிர்சடை முனிவர்` என்றது காண்க.) ஒரு கை உக்கம் சேர்த்தியது - அந்தக் கைக்கு இணையான மற்றொருகை இடையின்கண் வைக்கப்பட்டது. (அதற்குத் தொழில் இன்மையால் வாளா இடையின்கண் வைக்கப்பட்டது. இந்த இருகைகளும் மேல், `மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று` எனக் கூறிய முகத்திற்கு உரியன.)
அடி. 111, 112, 113-
ஒருகை அங்குசம் கடாவ ஒரு கை நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசைஅசைஇயது - மற்றொருவகை யானையைச் செலுத்துதற்கு அங்குசத்தைப் பயன்படுத்த, அதற்கு இணையான மற்றொரு கை அழகைப் பெற்ற உடையின் மேலாய் துடையின்கண் இருத்தப்பட்டது. (வரம் வேண்டினார்க்கு அதனை வழங்கவருமிடத்து யானை மேல் வருவானாகலின், இந்த இருகை களும் காதலின் உவந்து வரங்கொடுக்கும் முகத்திற்கு உரியனவாம்.)
அடி. 114, 115-
ஒரு கை மார்பொடு விளங்க, ஒரு கை தாரொடு பொலிய - மற்றொரு கை, மெய்யுணர்வு வேண்டினார்க்கு, அதனைச் சொல்லாமல் சொல்லும் வகையில் குறிக்கும் அடையாள மாக மார்பின்கண் பொருந்தி விளங்க, அதற்கு இணையான மற்றொரு கை மார்பில் புரளும் தாரொடு சேர்ந்து பொலிந்தது. (மெய்யுணர்வா வது `எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு` ஆதலின், இந்த இருகைகளும் `எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளங்கும் முகத் திற்கு உரியன.)
அடி. 115, 116, 117-
ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீ மிசைக் கொட்ப, ஒருகை இன்பாடு படுமணி இரட்ட - மற்றொரு கை, தோளில் அணிந்த வளை மேல் நின்று கீழே கழன்று வீழ்வதுபோல விழ வேள்வித் தீக்கு மேலே உயர்த்தி ஆகுதி பண்ணுதலாலும், முத்திரை கொடுத்தலாலும் சுழல, அதற்கு இணையான மற்றொரு கை இனிய ஓசை தோன்றுகின்ற பூசை மணியை இடையிடையே எடுத்து அடிக்கின்றது. (எனவே, இந்த இரண்டு கைகளும் கள வேள்வி வேட்கும் முகத்திற்கு உரிய ஆதலை அறிந்துகொள்க.)
அடி. 118-
ஒரு கை நீல நிற விசும்பின் மலி துளி பொழிய - மற்றொரு கை நீல நிறத்தை உடையனவாகிய மேகங்களைத் தூண்டி மிகுந்த மழைத்துளிகளைப் பெய்விக்க. (`பொழிவிக்க` என்பதில் பிற வினை விகுதி தொகுக்கப்பட்டது. ஒரு கை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட - அதற்கு இணையான மற்றொரு கை தேவ மாதர்கட்கு மண மாலையைச் சூட்ட. (இது தன்னை வாழ்க்கைத் தலைவனாகக் கொள்ள விழைந்த மகளிர்க்கு அவரது கருத்து நிரம்புமாறு அருளுதலைக் குறித்தது. எனவே, வதுவை சூட்டுங் கை வள்ளியொடு நகையமர்ந்த முகத்திற்கு ஏற்புடைத்தாதல் தெளிவு. இனி மழை பொழிவிக்கின்ற கையும் மண வாழ்க்கையை ஏற்றோர் இல்லறம் நடத்துதற்கு முதற்கண் வேண்டப்படும் மழை வளத்தைத் தருவதாதலும் தெள்ளிதேயாம்.
அடி. 120, 121-
ஆங்கு அப்பன்னிரு கையும் பாற்பட இயற்றி - அவ்வாறு அப்பன்னிரண்டு கைகளும் ஆறு முகங்களின் வகையில் பொருந்தும்படி பல தொழிகளைச் செய்து.
அடி. 122-
அந்தரப் பல் இயம் கறங்க - வானுலக வாச்சியங்கள் பலவும் ஒலிக்க.
அடி. 122, 123-
திண் காழ் வயிர் எழுந்த இசைப்ப - திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு ஒலி நன்கு எழுந்து ஒலிக்க. (`கொம்பு` எனப்படுவது தாரை, இதன் ஓசை வடமொழியில் `சிருங்க நாதம்` எனப்படும்` வால் வளை ஞரல - வெண்மையான சங்கு முழங்க.
அடி. 124-
உரம் தலைக் கொண்ட உரும் இடிமுரசமொடு - வலிமையைத் தன்னகத்துக்கொண்டு இடி இடித்தாற்போலும் முரசொலியுடன்.
அடி. 125-
வெல்கொடி பல் பொறி மஞ்ஞை அகவ - வெல்லென்று எடுத்த கொடியிலே பல புள்ளிகளையுடைய தோகையை உடைய மயில் அகவாநிற்க.
அடி. 126-
விரை செலல் முன்னி - விரையச் செல்லுதலைக் கருதி. விசும்பு ஆறாக - வான் வழியாக.
அடி. 127-
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர் - உயர்ந் தோர் புகழ்ந்த மிக உயர்ந்த மேலான புகழையுடைய. அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு - (கடல் அலை மோதும் இடம் ஆதலின்) `அலைவாய்` என்னும் பெயருடைய திருத்தலத்திற்கு அவ்வப் பொழுது சென்று தங்குதலும் அவனுக்கு நிலை பெற்ற குணமாகும் (ஆகவே, அங்குச் சென்றும் அவனைக் காணலாம். 83. `வேழம் மேல்கொண்டு, 85 முடியொடு விளங்கிய திரு மணி 86 சென்னிப் பொற்ப, 88 பொலம் குழை 89 இமைப்ப, 104 மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின், 119 பன்னிருகையும் பாற் பட இயற்றி, 120 பல் இயம் கறங்க, 121 வயிர் இசைப்ப, வளை ஞரல, 122 முரசமொடு 123 மஞ்ஞை அகவ 124 விரை செலல் முன்னி விசும்பு ஆறாக அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு` என இயைத்து முடிக்க.
அடி. 129-
அதாஅன்று - அதுவன்றியும்.
அடி. 130-
சீரை - மரவுரியை. தைஇய உடுக்கையர் - உடையாக அமைக்கப்பட்டதனை உடுத்தலை உடையவர்களும்.
அடி. 130, 131-
சீரொடு - அழகோடு கூடியதாக. வலம்புரி புரையும் வால் நரை முடியினர் - நிறத்தால் சங்கினோடு ஒப்ப நரைத்த வெள்ளிய நரையான முடியை, வடிவாலும் சங்கு போலத் தோன்றும் படி முடிந்த முடியினை உடையவர்களும்.
அடி. 132-
மாசு அற இமைக்கும் உருவினர் - (பன்முறை நீரின் கண் மூழ்குதலால்) அழுக்குப் போக விளங்கும் மேனியை உடையவர்களும். (`மாண்டார் நீராடி`* என்றார் திருவள்ளுவரும். சமண் முனிவர் இதற்கு மாறாக உடம்பில் மாசு பூசுபவர்கள்)
அடி. 132, 133, 134-
மானின் உரிவை தங்கிய ஊன் கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் - மான் தோலால் போர்க்கப்பட்டதும், தசை வற்றியதும் ஆகிய மார்பில் எலும்புகள் வெளித் தோன்றி அசையும் உடம்பினை உடையவரும்.
அடி. 134, 135-
நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் - நோன்பினால் `நல்ல நாள்` எனப்படும் நாள்கள் பல தொடர்ந்து சென்று பின்னர் உண்ணும் உணவை உடையவர்களும். (எனவே, `பல நாள் உண்ணாதவர்கள்` என்றதாம். பட்டினி விட்டுப் பின்பு உண்டல் `பௌர்ணை` எனப்படும்.
அடி. 135, 136-
இகலோடு செற்றம் நீக்கிய மனத்தினர் - யாரிடத்தும் மாறுபாட்டினையும், அது காரணமாக உள்ளத்தில் நிற்கும் பகைமை உணர்வையும் நீக்கின மனத்தை உடையவர்களும்.
அடி. 137-
கற்றோர் யாவதும் அறியா அறிவினர் - கல்வியை முற்றக் கற்றவர்கள் சிறிதும் அறியாத மெய்யறிவினை உடையவர் களும்.
அடி. 137, 138-
கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் - `கற்றோர்` என்பவரது பெருமைகட்கெல்லாம் தாம் மேல்வரம்பாகிய தலைமைப்பாட்டினை உடையவர்களும். (`கல்வியைக் கரை கண்டவர்` என்றபடி.)
அடி. 138, 139-
காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் - பலவகை ஆசைகளையும், கடிதாகிய வெகுளியையும் அறவே போக்கின அறிவையுடையவர்களும்.
அடி. 139, 140-
இடும்பை யாவதும் அறியா இயல்பினர் (`இன்பம் விழையாது, இடும்பையை - இது வருதல் இயற்கை 1 - என்று எண்ணி அமைதலால்) உள்ளத்தில் சிறிதா யினும் துன்பம் தோன்றியறியாத இயல்பினை உடையவர்களும்.
அடி. 140, 141-
மேவர துனி இல்காட்சி - யாவருடைய உள்ளமும் விரும்புதல் உண்டாகத் தாம், `எந்நாளும் இன்பமே யன்றித் துன்பம் இல்லை` 2 என மகிழ்ந்திருக்கும் தோற்றத்தினை உடையவர்களும் ஆகிய (முனிவர்கள்)
அடி. 141-
முனிவர் முன்புக - (தங்கள் வேண்டுகோளின் படி) முனிவர்கள் முன்னே புகுத (வருகையை முருகன் மறுக்கா திருத்தற் காக முனிவர்களை முன்னே விடுத்தனர்.)
அடி. 142-
புகை முகந்தன்ன மாசில் தூவுடை - (மென்மையால்) புகையை ஒருங்கியையச் சேர்த்து வைத்தாற் போலும், அழுக்கில்லாத தூய உடையையும்.
அடி. 143-
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - (கட்டிய பின்) அரும்புகள் வாய் மலர்கின்ற மாலை சூழ்ந்த மார்பினையும் உடைய (கந்தருவர்) தகைதல் - கட்டுதல். அஃது ஆகுபெயராய், கட்டப்பட்ட மாலையைக் குறித்தது.
அடி. 145, 146-
நல் யாழ் நவின்ற நயன் உடைய நெஞ்சின் மெல்மொழி மேவலர் இன் நரம்பு உளர - நல்லதாகிய யாழினது இசையிலே பயின்ற பயிற்சியால் இளகிய மனத்திலே (வன்சொல்லை விரும்பாது) மென்சொல்லையே விரும்புகின்ற கந்திருவர்கள் இனிய இசையைத் தோற்றுவிக்கின்ற யாழின் நரம்புகளைத் தடவி இசையை இசைத்துக் கொண்டு வரவும்.
அடி. 147-
நோய் இன்று இயன்ற யாக்கையர் - (தேவர் ஆதலின்) மக்கள் யாக்கை போல நோய் உடையன ஆகாது, நோய் இல்லனவாய் அமைந்த உடம்பினையும்.
அடி. 147, 148-
மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - மா மரத்தினது விளக்கமான தளிர்களை ஒத்த நிறத்தினையுடையவரும்.
அடி. 148, 149-
அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் - விளங்குந்தோறும் பொன்னை உரைத்த உரை விளங்குதல் போலக் காணப்படுகின்ற தேமலையுடையவரும.
அடி. 149,150-
இன் நகைப் பருமம் தாங்கிய அல்குல் - இனிய ஒளியை உடைய பதினெண் கோவை மணிவடங்களைத் தாங்கிய பிருட்டத்தினை உடையவரும் (ஆகிய மகளிர்) பணிந்து ஏந்து அல்குல் - தாழ வேண்டிய பகுதி தாழ்ந்தும், உயர வேண்டும் இடம் உயர்ந்தும் உள்ள (அல்குல் - பிருட்டம்)
அடி. 151-
மாசு இல் மகளிரொடு - (உடம்பிலும், குணத்திலும்) யாதொரு குற்றமும் இல்லாத கந்தருவ மாதரோடு கூடி (இன் நரம்பு உளர` என மேலே கூட்டக)
அடி. 151-
மறு இன்றி விளங்க - (பண்கள் பலவும்) குற்றம் இன்றி வெளிப்படும்படி. `இன் நரம்பு உளர` என மேலே கூட்டுக.
அடி. 152-
கடுவொடு ஒடுங்கிய - நஞ்சுடனே ஒளிந்துள்ள. தூம்பு உடைய எயிறு - உள்துளையில் பொருந்திய பல், வால் - வெள்ளிய எயிறு (எயிற்றினை யுடைய பாம்பு.)
அடி. 154-
அழல் என உயிர்க்கும் - நெருப்புப் போலப் பெரு மூச்செறியும் (பாம்பு) அஞ்சு வரு கடுந் திறல் - கண்டார்க்கு அஞ்சுதல் வருதற்கு ஏதுவாகிய கடுமையான கொலை வன்மையையுடைய (பாம்பு)
அடி. 154-
பாம்பு படப் புடைக்கும் கொடுஞ் சிறை - பாம்புகள் இறக்கும்படி அவைகளை அடிக்கின்ற வளைந்த சிறகு. பல் வரி - பல கோடுகளைப் பொருந்திய. சிறகு (இத்தகைய சிறகினையுடைய புள், கருடன்.)
அடி. 155-
புள் அணி நீள் கொடிச் செல்வனும் - பறவையை அணிந்த நீண்ட கொடியையுடைய தேவனாகிய திருமாலும்.
அடி.155, 156-
வெள் ஏறு வலவயின் உயரிய - வெள்ளிய இடபத்தையுடைய கொடியை வலப்பக்கத்து உயர்த்திக் கொண்ட (செல்வன்) பலர் புகழ் திணி தோள் - (கணபதியும், முருகனும் ஏறி விளையாட இருத்தல் பற்றிப்) பலரும் புகழ்கின்ற `திண்` என்ற தோள்களையுடைய (செல்வன்)
அடி. 157-
உமை அமர்ந்து விளங்கும் - உமையம்மை உடனாக எழுந்தருளி விளங்கும் (செல்வன்) இமையா முக்கண் - இமைத்தல் இல்லாத மூன்று கண்களையுடைய (செல்வன்)
அடி. 158-
மூ எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் - திரிபுரத்தை அழித்த ஆற்றல் மிக்க சீகண்ட உருத்திரனும் இப்பெருமான் திருக்கயிலையில் எழுந்தருளியிருப்பவன்.
அடி. 159-
நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து - நூற்றைப் பத்தாக அடுக்கிய (ஆயிரம் ஆன ) கண்களையுடைய (163 செல்வன்.)
அடி. 159, 160-
நூறு பல் வேள்வி முற்றி - `நூறு` என்னும் எண்ணிக்கையையுடைய பலவாகிய வேள்விகளை வேட்டு முடித்ததனால் பெற்ற (செல்வன் - செல்வத்தையுடையவன். இது பற்றி இவன் `சதமகன்` எனச் சொல்லப்படுவான்.)
அடி. 160-
அட்டு வெல் கொற்றத்து - அசுரர்களை அழித்து வெல்கின்ற வெற்றியையுடைய (செல்வன்)
அடி. 161, 162, 163-
ஏந்திய ஈர் இரண்டு மருப்பின் - வாயில் ஏந்தியுள்ள நான்கு கொம்புகளையும். எழில் நடை - அழகிய நடையினையும். தாழ் பெருந் தடக்கை - நிலத்தளவும், தாழ்கின்ற. பெரிய , வளைந்த கையையும் (தும்பிக்கையையும்) உடைய. உயர்த்த யானை எருத்தம் ஏறிய - யாவராலும் உயர்த்துச் சொல்லப்பட்ட யானையின் பிடரியில் ஏறிவரும் (செல்வன்) திருக்கிளர் செல்வனும்- நல்லூழால் மிகுகின்ற செல்வத்தையுடையவனும். (இந்திரனும்)
அடி. 164-
நால் பெருந் தெய்வத்து - நான்கு திசைகளும் ஞாயிறு, நடுவன், வருணன், திங்கள் ஆகிய பெரிய தேவர்களையுடைய (உலகம்) நல் நகர் நிலைஇய - நல்ல நகரங்கள் பல நிலை பெற்றிருக்கும் (உலகம்).
அடி. 165, 166-
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப் பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக - உலகத்தைச் செவ்வன் நடத்துதலாகிய ஒன்றையே விரும்புகின்ற கொள்கை காரணமாகப் பலராலும் போற்றப் படும் `அயன், அரி, அரன்` - என்னும் மூவரும் ஒத்த தலைவாராய் இருக்கவும்.
அடி. 167, 169-
ஞாலம் தன்னில் தோன்றி ஏம் உறும் நான்முக ஒருவன் சுட்டி - (அத்தலைமையை இழந்து) மண்ணுலகில் பிறந்து மயங்குகின்ற பிரமனாகிய ஒருவனை மீட்டல் கருதியே சென்று. (`சென்று` என்பது சொல்லெச்சம்.)
அடி. 168-
தாமரை பயந்த தாஇல் ஊழி - `தாமரை` என்னும் எண்ணினைத் தருகின்ற வருத்தம் இல்லாத ஊழிகளைத் தன் வாழ்நாளாக உடைய நான்முகன் (தாமரை - `பதுமம்` எனப் பெயர் பெற்ற ஒரு பேரெண். நான்முகன் தன் தலைமையையிழந்து மண்ணில் சென்று மயங்கக் காரணம் முருகன் இட்ட சாபம்.
அஃது, அசுரரை அழித்துத் தனது அரசினை நிலைபெறுத்தினமைக்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகளார் தெய்வயானையாரை மணம்புரிவித்த ஞான்று முருகன், `இச் சிறப்பெல்லாம் நமக்கு இவ் வேலால் வந்தன` என்று சொல்லி வேலினைப் பார்க்க, அங்கிருந்த நான்முகன், `இவ்வேலிற்கு இவ்வாற்றல் என்னால் தரப்பட்டது` என்றான். அங்ஙனம் அவன் கூறியது, `எல்லாவற்றையும் படைப்பவன் தான்` - என்னும் செருக்கினாலாம், அதனால் முருகன், `இவன் இத்தலைமையைப் பெற்றது எவ்வாறு` என்பதை மறந்து செருக்குகின்றான் எனச் சினந்து, `நீ உனது சத்திய லோகத்தை விட்டு மண்ணுலகில் புகக்கடவாய்` எனச் சபித்ததே யாம். இது பழம் புராணமாகச் சொல்லப்படுகின்றது.)
அடி. 170-
பகலின் தோன்றும் இகல் இல் காட்சி - பகுத்துக் காண்டலால் காணப்படுகின்ற, தம்முள் மாறுபாடு இல்லாத அறிவினை யுடைய (பதினொருமூவர்.)
அடி. 171-
நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரோடு - `கதிரவர், உருத்திரர், வசுக்கள், மருத்துவர்` என்னும் நான்கு வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும். (`கதிரவர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் ஆக முப்பத்து மூவர்` என்றபடி. இவர்களைப் பரிவாரங் களொடு கூட்டி, `முப்பது முக்கோடியினர்` என்பர்.)
அடி. 172-
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் - `பதினெட்டு` என்னும் எண்ணளவாக, உயர்ந்த நிலைகளைப் பெற்ற வரும். `பதினெண் கணத்தவர்` என்றபடி. அவராவார், `தேவர், அசுரர், தானவர், கருடர், கின்னார், கிம்புருடர், யட்சர், வித்தியாதார், அரக்கர், கந்தருவர், சித்தர் சாரணர், பூதர், பைசாசர், தாரகையர், நாகர், ஆகாச வாசிகள், போக பூமியர்` என்பர். இவ்வகை சிறிது வேறுபடவும் கூறப்படும்.
அடி. 173-
மீன் பூத்தன்ன தோன்றலர் - விண்மீன்கள் வெளிப் பட்டு விளங்கினாற்போலும் தோற்றத்தை உடையராயும்.
அடி. 173, 174-
மீன்சேர்பு வளி கிளர்ந்தன்ன செலவினர் - அம்மீன்களை யெல்லாம் பொருந்திக் காற்று எழுந்து வீசினாற் போலும் போக்கினை உடையராயும்.
அடி. 174, 175-
வளியிடைத் தீ எழுந்தன்ன திறலினர் - அக் காற்றினிடையே நெருப்பு ஓங்கினால் ஒத்த வலிமையினை யுடையராயும்.
அடி. 175,176-
தீப் பட உரும் இடித்தன்ன குரலினர் - நெருப்புத் தோன்ற இடி இடித்தாற்போலும் குரலினை உடையராயும்.
அடி. 176,177-
தம் விழுமிய உறுகுறை மருங்கின் பெருமுறை கொண்மார் காண - தங்கள் விழுமிதாகிய பெரிய குறையை இவனிடத் திலே பெறும் முறையாலே பெற்றுக் கொள்வாராய்க் காணும்படி (குறையாவது, நான்முகனோடு முன்புபோலக் கூடி முத்தொழிலை இயற்ற வேண்டுதல்)
அடி. 178-
அந்தரக் கொட்பினர் உடன் வர. வானத்தில் சுழலும் சுழற்சியினை உடையராய் உடன்வர (`வந்து` என்பதனை, `வர` எனத் திரிக்க.
அடி. 179, 180-
ஆவினன்குடி சின்னாள் தா இல் கொள்கை மடந்தையொடு அசைதலும் உரியன் - `திரு ஆவினன்முடி` என்னும் தலத்தில் சில நாள், கெடுதல் இல்லாத கோட்பாட்டினை யுடைய தெய்வயானையாரோடு தங்கியிருத்தலையும் தனக்கு உரித்தாக உடையன். மேற் கூறியவாறு, `முருகனது சாபத்தால் மண்ணிடைப் போந்து மயங்கிக் கிடக்கின்ற. நான்முகனைச் சாப விடுதி செய்து முன்பு போலத் தங்களுடன் இருக்கும்படி மீட்டுக்கொள்ள வேண்டித் திருமாலும், உருத்திரனும், இந்திரனும் முருகனைத் திருவாவினன் குடியில் சென்று, தெய்வயானையாருடன் இருக்கக் கண்டார்` என்க. `நான்முக ஒருவனைச் சுட்டி, புள்ளணி நீள் கொடிச் செல்வனும், மூவெயில் முருக்கிய செல்வனும், நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்துச் செல்வனும், முனிவர் முன்புக, யாழ் நவின்ற நயனுடைய நெஞ்சின் மென்மொழி, மேவலர், மாசில் மகளிரொடு மறு இன்றி விளங்க இன் நரம்பு உளர, நால் வேறு இயற்கைப் பதினொருமூவரும், ஒன்பதிற்றிரட்டி உயர்நிலை பெறீஇயரும். தோன்றலராயும், செலவினராயும், குரலினராயும் கொட்பினராயும் உடன் வர, தம் உறு குறை கொண்மார் காண அசைதலும் உரியன்` என இயைத்து முடிக்க. (எனவே, `அப்பொழுது அங்குச் செல்லினும் அவனைக் காணலாம் என்பதாம். நான்முகனை வீடு செய்த பின்பும் அன்பர் பொருட்டாக முருகன் முன் இருந்த குலத்துடன் ஆவினன் குடியில் இருத்தல் பற்றி, `அங்குச் செல்லினும் காணலாம்` என்பது கூறப்பட்டது.
அடி. 181-
அதாஅன்று - அதுவன்றியும்.
அடி 182,183-
இரு மூன்று எய்திய இயல்பினின் வழாது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என ஆறாகப் பொருந்திய ஒழுக்கத்தி னின்னும் வழுவாமையால், `தாய், தந்தை` என்னும் இருவராலும் உயர்த்துக் கூறப்பட்ட, பலவாய் வேறுபட்ட பழைய குடிகளில் பிறந்த (187 இருபிறப்பாளர்.)
அடி. 184-185-
அறு நான்கு இரட்டி இளமை நல்யாண்டு ஆறினில் கழிப்பிய - ஆறாகிய நான்கின் இரட்டியாகிய நாற்பத்தெட்டாகிய, இளமைப் பருவத்தையுடைய நல்ல யாண்டுகளை நன்முறையிலே கழித்த (187 இருபிறப்பாளர்) `நன்முறை` என்றது பிரமசரிய ஒழுக்கத்தை.
அடி. 185-
அறன் நவில் கொள்கை - அறநூல்களில் சொல்லப் பட்ட கொள்கைகளையே தம் தம் கொள்கையாக உடைய (187 இருபிறப்பாளர்)
அடி. 186-
மூன்று வகைக் குறித்த முத் தீச் செல்வத்து - ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினி` - என மூன்றாகப் பகுக்கப்பட்ட வேள்வித் தீயாகிய செல்வத்தையுடைய.
அடி. 187-
இருபிறப்பாளர். ஆகவனீயம், முதலிய மூன்று தீக்களும் முறையே சதுரம், முக்கோணம், வில் வளைவு ஆகிய வடிவில் அமைக்கப்படும் குண்டங்களில் வளர்க்கப்படும். அவ்வடிவங்கள் முறையே நிலம், நெருப்பு, நீர் என்னும் பூதங்களின் வடிவமாகும், காற்றும், வானமும் கட்புலனாகாப் பொருள்கள் ஆதலின் அவற்றின் வடிவில் தீ யெழாது.)
அடி. 188-187-
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் இருபிறப்பாளர் பொழுது அறிந்து - மூன்று நூல்களை ஒன்றாகப் புரித்துப் பின்பு அந்த புரி மூன்றினை ஒன்றாகப் புரித்தமையால் ஒன்பது இழைகளைக் கொண்டபுரி மூன்றினையுடைய நுண்ணிய பூணுலை அணிந்த, உபநயனத்திற்கு முன்னே ஒரு பிறப்பும், உபநயனத்திற்குப் பின்னே ஒரு பிறப்பும் ஆக இருபிறப்புக்களை யுடைய அந்தணர்கள் வழிபாட்டிற்குரிய காலங்களைத் தெரிந்து. அடி. 189-
புலராக் காழகம் புலர உடீஇ - நீரில் தோய்த்து எடுக்கப்பட்டு ஈரம் புலராத உடை, உடம்பிற்றானே புலரும்படி உடுத்து. (உலர்ந்த உடையை உடுத்தலே ஆசாரமாயினும், ஈர உடையை உடுத்தலை ஆசாரமாகக் கொள்ளுதல் மலை நாட்டு வழக்கமாகுதலைக் குறித்தது.)
அடி. 190-
உச்சிக் கூப்பிய கையினர் - தலைமேலே குவித்து வைத்த கைகளை உடையவர்களாய்.
அடி. 191-
ஆறு எழுத்து அடக்கிய கேள்வி - `நமக் குமாராய` என்னும் ஆறு எழுத்துக்களைத் தன்னுள். அடக்கியுள்ள மந்திரத்தை. (ஆறெழுத்து மந்திரத்தை வேறாகச் சிலர் கூறவர். `நாதா குமார நம` என அருணகிரி நாதரும் இம்மந்திரத்தையே வேறோராற்றால் குறித்தார்.)
அடி. 191-
அரு மறை - கேட்டற்கு; அரிதாய்; (மறைத்துச் சொல்லப்படும் கேள்வி)
அடி. 192-
நா இயல் மருங்கில் நவிலப் பாடி (190) தற்புகழ்ந்து (16) நுவல - நாப் புடைபெயரும் அளவாகப் பல முறை கூறித் தன்னைப் புகழ்ந்து தோத்திரங்கள் சொல்ல.
அடி. 193-
விரை உறு நறு மலர் ஏந்தி - மணம் மிக்க நல்ல பூக்களைத் தாங்கி.
அடி. 193-
பெரிது உவந்து (194) ஏரகத்து உறைதலும் உரியன்- அவற்றிற்கெல்லாம் பெரிதும் மகிழ்ந்து `திருவேரகம்` என்னும் தலத்தில் எழுந்தருளியிருத்தலையும் தனக்கு உரிமையாக உடையன். (எனவே, `அங்குச் சென்றாலும் அவனைக் காணலாம்` என்பதாம்). `இருபிறப்பாளர், பொழுதறிந்து, புலராக்காழகம் உடீஇ, நறுமலர் ஏந்தி, உச்சிக் கூப்பிய கையினராய் ஆறு எழுத்து அடக்கி கேள்வியை நா இயல் மருங்கின் பாடித் தற்புகழ்ந்து நுவலப் பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன்` என இயைத்து முடிக்க.
அடி. 194-
அதாஅன்று - அதுவன்றியும்.
அடி. 195, 196, 197-
வேலன் - குறிஞ்சி நிலத்துப் பூசாரி. (இவன் `முருகனுடைய வேல்` என்று சொல்லி எப்பொழுதும் வேல் ஒன்றைக் கையில் வைத்திருத்தலால் - வேலன் - எனப் பெயர் பெற்றான். பைங் கொடி நறைக் காய் இடை இடுபு அம்பொதி புட்டில் விரைஇக் குளவி யொடு வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன் - பச்சைக் கொடியாலே நறிய சாதிக் காய்களை இடையிடையே யிட்டு, அழகிய, உள்ளே பொதிவுடையது போலத் தோன்றும் புட்டில் வடிவாகிய ஏலக்காயையும் கலந்து, காட்டு மல்லிகையுடன் சேர்த்து வெண் தாளி மலரைத் தொடுத்த கண்ணியை உடையவனாய் (கண்ணி - தலையில் அணியும் மாலை.)
அடி. 199-
கொடுந் தொழில் வல்வில் கொலைஇய கானவர் - கொடிய தொழிலை உடைய வலிய வில்லாலே பல விலங்குகளைக் கொன்ற வேட்டுவர்கள்.
அடி. 200-
நீடு அமை விளைந்த தேன்கள் தேறல் - நீண்ட மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் புதைத்து வைத்ததனால் நன்கு புளிப்பேறின, (அவர்கட்குத்) தேன் போல்வதாகிய கள்ளின் வடித்தெடுத்த தெளிவை.
அடி. 201-
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து - சிறு குன்றுகளின் இடையே உள்ள `சிறுகுடி` எனப் பெயர் பெற்ற ஊரின் கண் தங்கள் சுற்றத்தாருடனே உண்டு மகிழ்ந்து.
அடி. 202-
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர - `தொண்டகம்` என்னும் அந்நிலத்துச் சிறிய பறையைக் கொட்டி, அக்கொட்டுக்கு ஏற்ப, `குரவை` என்னும் கூத்தினை ஒருபக்கத்திலே ஆட, (பலர் கைகோத்து நின்று ஆடுவது குரவைக் கூத்து.) அடி. 203-
விரல் உளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறுங்கான் - விரலாலே வலிய மலர்த்தினமையால் வேறுபட்ட நறுமணத்தை யுடைய.
அடி. 204-
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி - ஆழ்ந்த சுனையிலே பூத்த பூக்களால் தொடுக்கப்பட்டு வண்டுகள் மொய்க் கின்ற தலைமாலையையும்.
அடி. 205-
இணைத்த கோதை அணைத்த கூந்தல் - பூக்களை இணைத்துக் கட்டிய மாலையையும் முடித்த கூந்தலினையும்.
அடி. 206-
முடித்த குல்லை - பலகாலும் முடித்துப் பழகிய கஞ்சங் குல்லையினையும். இலை உடை நறும் பூ - இலைகளையுடைய வேறு பல பூக்களையும்.
அடி. 207-
செங்கால் மராத்த வால் இணர் இடை இடுபு - சிவந்த காம்புகளையுடைய, மராமரத்தில் உள்ளனவாகிய, வெண்மையான பூங்கொத்துக்களை இடையிடையே வைத்து.
அடி. 208-
தொடுத்த தழை - தொடுக்கப்பட்ட `தழை` என்னும் உடை, சுரும்பு உண - வண்டுகள் தேனை உண்ணும் படி (தொடுத்த தழை) பெரு தண் மா - பெரிய, குளிர்ந்த, அழகிய (தழை)
அடி. 209-
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ - திருத்தமான மணி வடங்களையுடைய பிருட்டத்தினிடத்தே பொருந்தி அசையும்படி உடுத்து.
அடி. 210-
மயில் கண்டன்ன மகளிரொடு - சாயலால் மயிலைக் கண்டாற் போலும் பெண் அடியார்களோடும். மடநடை பெண்மை ஒழுக்கத்தினை உடைய (மகளிர்)
அடி. 211-
செய்யன் - செஞ்சாந்து பூசிச் சிவந்தவனாயும், சிவந்த ஆடையன் - சிவப்பான உடையை உடுத்தவனாயும்,
அடி. 211, 212-
செ அரைச் செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன் - சிவந்த அடி மரத்தையுடைய அசோக மரத்தினது குளிர்ந்த தளிர்கள் அசையும் காதுகளையுடையவனாயும்.
அடி. 213-
கச்சினன் - உடையின்மேல் இறுகக் கட்டிய கச்சினை உடையவனாயும். கழலினன் - வீரர் அணியும் கழலினைக் காலில் கட்டியவனாயும் செச்சைக் கண்ணியன் - வெட்சி மாலையை அணிந்தவனாயும். (இங்கு மாலை `கண்ணி` எனப்பட்டது.)
அடி. 214-
குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் - குழலையும், கொம்பையும், மற்றும் சில சிறு வாச்சியங்களையும் ஒலிப்பிக்கின்றவனாயும்.
அடி. 215-
தகரன் - ஆட்டுக் கிடாயைப் பின்னே உடையவ னாயும். (இது பலியிடப்படுவது. அன்றி, முருகன் ஊர்தி அடையாளமுமாம்.) மஞ்ஞையன் - மயிலை ஊர்பவனாயும். (இம்மயில், செயல் வல்லோரால் செய்து தரப்பட்டது.)
அடி. 215, 216-
புகர் இல் சேவல் அம் கொடியன் - (ஊர்திக்கு மேலலே பறக்க எடுத்த) குற்றம் இல்லாத கோழிக் கொடியை உடையவ னாயும். நெடியன் - உயரத் துள்ளி ஆடுதலால் நீண்ட உருவம் உடையவனாயும். தொடி அணி தோளன் - தோள்வளையை அணிந்த தோள்களையுடையவனாயும்.
அடி. 217-
நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு - யாழின் நரம்பு ஒலித்தாற் போல ஒலிக்கும் இனிய குரலைடைய பாடல் மகளிர் கூட்டத்தோடும்.
அடி. 218, 219-
மருங்கின் கட்டிய குறும்பொறிக் கொண்ட நிலன் நேர்பு துகிலனன் - இடையிலே புரளக் கட்டிய, சிறிய புள்ளிகளைக் கொண்ட, நிலத்திற் பொருந்துதலையுடைய துகிலை உடையவனாயும், நறுந் தண் சாயல் - நல்ல மென்மைத் தன்மையை உடைய (துகில், நேர்பு, தொழிற் பெயர்)
அடி. 220-
முழவு உறழ் தடக்கையின் ஏந்தித் தழீஇத் தலைத் தந்து - மத்தளம் போலும் தோளோடு கூடிய பெரிய கைகளில் அவர்களை ஏந்தித் தழுவி முதற்கை கொடுத்து. (முதற் கை கொடுத்தலாவது, முன்னே இவன் கை கொடுக்கப் பின்னே அம்மகளிர் அதனைப் பற்றிக் கொண்டு ஆடுதல்)
அடி. 221-
மெல் தோள் பல் பிணை இயல - மெல்லிய தோள்களையுடைய, மான்போலும் மகளிர் பலர் குரவை யாடி வர.
அடி. 222-
குன்று தோறு ஆடலும் நின்ற தன் பண்பு - மலைகள்தோறும் ஆடும் அவ் ஆடலில் தான் பொருந்தி நிற்றலும் நிலையான அவனது பண்பு. (எனவே, `அவ்வாடல்களிலும் அவனைக் காணலாம்` என்பதாம்.)
கானவர்கள் தேறலை கிளையுடன் மகிழ்ந்து குகரவை அயர, வேலன் கண்ணியனாய், மடநடை மகளிரோடும், இன்குரல் தொகுதி யோடும், செய்யனாயும், ஆடையனாயும், காதினனாயும், கண்ணிய னாயும், குழலனாயும், கோட்டனாயும், இயத்தனாயும், தகரனாயும், மஞ்ஞையனாயும், கொடியனாயும், நெடியனாயும், தோளனாயும், துகிலினனாயும் பல் பிணை இயலத் தடக் கையின் ஏந்தித் தழீஇத் தலைத் தந்து ஆடலும் தன் பண்பு` என இயைத்து முடிக்க.
தன்னை முருகனாகவே எண்ணும் எண்ண வலிமையால் வேலன் ஆடும் ஆடல்களை முருகன் தன்னுடைய ஆடலாகவே ஏற்று அந்நிலத்து மக்களுக்கு அருள்புரிந்து வருதலின், `அந்நிலத்துச் சென்று அவன் வழியாகவும் நீ கருதியதைப் பெறலாம்` என முன்பே அப்பேற்றைப் பெற்ற புலவன் கூறினான்.
அடி. 223-
அதா அன்று - அதுவன்றியும்.
அடி. 224-
சிறு தினை மலரொடு விரைஇ - சிறிய தினை அரிசியைப் பூக்களோடே கலந்து (பரப்பி, இதன்மேல் பிரம்பை, மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டுப் பூச்சூட்டி நாட்டி வைப்பர். அதனால் இதன் கீழ் பரப்பப்படும் அரிசி `பிரப்பரிசி` எனப்படும் `விரைஇ` என்பதன்பின், `பரப்பி` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.) மறி அறுத்து - செம்மறியாட்டுக் கிடாயைப் பலியிட்டு. (இவை தீய தெய்வங்களை மகிழ்வித்தற் பொருட்டுச் செய்யப்படுவன.
அடி. 225-
வாரணக் கொடியொடு வயின்பட நிறீஇ - கோழிக் கொடியைக் கோயிலின் முன் உயர்த்துக் கட்டி, அதனையுடைய அவ் விடத்திலே பொருந்தத் தன்னை (முருகனை மந்திரங்களால்) நிறுவி.
அடி. 226-
ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் - ஊர்கள் தோறும் எடுத்த சிறப்புப் பொருந்திய விழாக்களிலும் (அவன் உறைவான்)
அடி. 227-
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் - அன்பர்கள் துதிக்க. அதற்குத் தான் விரும்புதல் வருகின்ற இடங்களிலும் (அவன் உறைவான்)
அடி. 228-
வேலன் தைஇய வெறி அயர் களனும் - வேலன் * அணி செய்த வெறியாடு களத்திலும் (வேலன் வேண்டுதலுக்காக அப்பொழுது உறைவான். வெறி - செம்மறியாட்டுக் கிடாய், அதனைப் பலியிட்டு ஆடும் வழிபாடு வெறியாடுதலாகும். அயர்தல் - கொண்டாடுதல். வெறியாடுதல் பெரும்பாலும் அகத்திணை நிகழ்ச்சிக் குரியதாய் வரும். அஃதாவது களவொழுக்கத்தில் தலைவனைக் காண்டல் அருமையால் தலைவி வேறுபாடுற, அதனைச் செவிலியும், நற்றாயும் தெய்வத்தான் ஆயதாகக் கருதி வேலனை அழைத்து வெறியாடுவித்துக் குறிகேட்டல் முதலியன செய்வர். எனினும் சிறுபான்மை வெட்சியாகிய புறத்திணையிலும் வருதல், `வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்`* என்னும் தொல்காப்பியக் கட்டளையால் விளங்கும். வீரர் போர்க்குச் செல்லுங்கால் வெற்றி வேண்டிக் கொற்றவையையும், முருகனையும் பரவத்தேவராட்டியைக் கொண்டு வழிபடுதல் பெரும்பான்மை. அதனைக் கண்ணப்ப நாயனார் புராணத்தாலும் அறியலாம்.)
அடி. 229-
காடும் - முல்லை நிலத்திலும் (அவ்விடத்து வேண்டினார் பொருட்டு அவன் உறைவன்.) காவும் - சோலைகளிலும் (அங்கு நிறுவினார் வேண்ட உறைவன்) கவின் பெறு துருத்தியும் - அழகு பெற்ற. யாறு பிளவுபட்டு ஓட அவற்றிடை அமைந்த திடல்களிலும் அவன் விரும்பி உறைவன்)
அடி. 230-
யாறும் - ஆற்றங்கரைகளிலும். (அவன் உறைவான்) குளனும் - குளத்தங் கரைகளிலும் (அவன் உறைவான். வேறு பல் வைப்பும் - தன்மையால் வேறுபட்ட பல சிற்றூர்களிலும் (அவன் உறைவன்)
அடி. 231-
சதுக்கமும் - நான்கு தெருக்கள் ஒன்று கூடுகின்ற சந்திகளிலும் (அவன் உறைவன்) சந்தியும் - (மூன்று தெரு, ஐந்து தெரு கூடுகின்ற) மற்றைச் சந்திகளிலும் (அவன் உறைவான்) புதுப் பூ கடம்பும் - (அவனுக்கு மிக விருப்பமாகிய புதிய பூக்களைப் பூத்துக் குலாவுகின்ற கடப்ப மரங்களின் அடிகளிலும் (அவன் உறைவான்)
அடி. 232-
மன்றமும் - அவை கூடுகின்ற அம்பலமாகிய மர நிழலிலும் (அவன் உறைவான்) பொதியிலும் - வழிப் போவார் தங்குதற் பொருட்டு அறமாக அமைக்கப்பட்ட பொது இல்லங்களிலும் (அவன் உறைவான்) கந்து உடை நிலையிலும் - (தறியை உடைய நிலையங்களிலும்) அவன் உறைவான். தறியாவது சிவலிங்கம். இது வட மொழியில் `தாணு` எனப்படும் இஃது உள்ள நிலையங்களில் முருகன் அம்மை அப்பர்க்குப் பிள்ளையாய் இருப்பான். தறி சிவலிங்கம் ஆதலை `கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே` என்னும் அப்பர் திருமொழியால் அறிக. ஆதீண்டு குற்றியுள்ள இடத்தில் முருகனை வழிபடுதல் காணப்படாமையால் `தறி` என்பதற்கு, `ஆ தீண்டு குற்றி` என உரைத்தல் பொருந்துவதன்று,)
அடி. 233-
மாண் தலைக் கொடியொடு அமை வர மண்ணி. மாட்சிமைப்பட்ட, தலைமையையுடைய கோழிக் கொடியோடு பொருந்துதல் வரத் தூய்மை செய்து. (`ஆண்டலை` எனப் பாடம் ஓதி, `ஆண்டலையாவது கோழி` என்று உரைப்பாரும் உளர்.)
அடி. 234-
ஐயவி நெய்யோடு அப்பி - வெண்சிறு கடுகை (மணம் மிகுதற் பொருட்டு) நெய்யோடு கலந்து நிரம்பப் பொருத்தி.
அடி. 234, 235-
ஐது உரைத்துக் குடந்தம் பட்டு - அழகிதாகிய முகமனுரை கூறி உடல் வளைந்து கும்பிட்டு.
அடி. 235-
கொழு மலர் சிதறி - செழிப்பான மலர்களை எங்கும் இறைத்து.
அடி. 236-
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ - மாறுபட்ட நிறத்தையுடைய இரண்டு ஆடைகளை (ஒன்றை உடையாக வும், மற்றொன்றை வல்லவாட்டாகவும்) ஒருங்கு உடுத்து.
அடி. 237-
செந்நூல் யாத்து - சிவப்பு நூலைக் கையில் காப்பாகக் கட்டி.
அடி. 237-
வெண் பொரி சிதறி - வெண்மையான பொரிகளை யும் இறைத்து.
அடி. 239, 239, 240-
மத வலி நிலைஇய மா தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில் பலிச் செய்து - செருக்கும், வலிமையும் நிலை பெற்ற, பருத்த கால்களையுடைய செம்மறியாட்டுக் கிடாயினது இரத்தத்தோடு சேர்த்துப் பிசைந்து, தூய, வெண்மையான அரிசியைச் சிறு படையலாக வைத்து. பல் பிரம்பு இரீஇ - பல இடங்களில் பிரம்புகளை நாட்டி. (பிரம்பு, பிரப்பங் கூடைகளும் ஆம்). அவற்றில் பண்டங்கள் நிரம்பியிருக்கும்.
அடி. 241-
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து - (அரைத்த, சிறிய, பாடம் செய்யப்படாத பச்சை மஞ்சளோடே நல்ல மணம் கலந்த நீரை எங்கும் தெளித்து.
அடி. 242, 243-
பெரு தண் கணவீர நறு தம் மாலை துணை அற அறுத்துத் தூங்க நாற்றி - பெரிய குளிர்ந்த செவ்வலரிப் பூவால் ஆகிய, மணம் கமழும் குளிர்ந்த மாலைகளை ஓர் அளவாக அறும்படி அறுத்து, எங்கும் தூங்கும் படி தூங்க விட்டு. (`துணையாக` என ஆக்கம் வருவிக்க).
அடி. 244-
நளி மலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி - செறிந்த மலைகளின் எதிரொலியை உடைய தங்கள் நல்ல ஊர்களை, `அவை வாழ்வனவாக` என வாழ்த்தி.
அடி. 245-
நறும் புகை எடுத்து - நறுமணம் கமழும் புகையை உயர எடுத்து.
அடி. 245-
குறிஞ்சி பாடி - குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி ஆகிய அந்நிலத்துப் பண்களில் பாட்டுக்களைப் பாடி.
அடி. 246-
இமிழ் இசை அருவியோடு இன் இயம் கறங்க `இழும்` என்னும் ஓசையைத் தருகின்ற அருவிகளோடு கூடி இனிய வாச்சியங்களும் ஒலிக்க.
அடி. 247-
பல் உருவப் பூத் தூஉய் - பல நிறங்களையுடைய பூக்களை நிரம்ப இறைத்து.
அடி. 247, 248-
வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி - கண்டார்க்கு அச்சம் வருமாறு, இரத்தத்தோடு கலந்த செம்மையான தினையைப் பரப்பி வைத்து.
அடி. 248-
குற மகள் - இளையளாகிய குறத்தி. (முதியளாயின் `மூதாட்டி` எனப்படுவாளல்லது வாளா `மகள்` எனப்படாள்.)
அடி. 249-
முருகு இயம் நிறுத்து - முருகனுக்கே உரிய வாச்சியங்களை நிலையாக ஒலிப்பித்து.
அடி. 249, 250-
முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உரு கெழுவியல் நகர் - (`தெய்வம் இல்லை` என்று) முரணிக் கூறினவர்கள் நெஞ்சு நடுங்க முருகனை அவ்வழியில் வந்து பொருந்தச் செய்த, (பல வகையாலும்) அச்சம் பொருந்திய, அகன்ற கோயிலின்கண்.
`குறமகள், கொடியொடு அமை வர மண்ணி, அப்பி, சிதறி, சிதறி, பலிச் செய்து, பிரப்பு இரீஇ, விரை தெளித்து, மாலை தூங்க நாற்றி, பூத்தூஉய், தினை பரப்பி, அருவியோடு இயம் கறங்கக் குறிஞ்சி பாடி, நன்னகர் வாழ்த்தி, ஐது உரைத்துக் குடந்தம் பட்டு, உட்க முருகு ஆற்றுப்படுத்த நகர் என இயைத்துக் கொள்க. முருகனை ஆற்றுப் படுத்தலாவது, அவன் அருளால் குறிபார்த்துக் கூறுதலும் ஆவேசிக்க ஆடிக் குறிசொல்லுதலும் போல்வனவற்றால் அவனை மெய்யாகக் காட்டல்.
அடி. 251-
ஆடு களம் சிலம்ப - வெறியாடுகளம் ஒலிக்க. பாடி - அவ்வொலிக்கு இயையத் தாமும் பல பாட்டுக்களைப் பாடி. அடி. 251, 252-
கோடு பல உடன் வாய் வைத்து - கொம்புகள் பலவற்றை ஒரு சேர வாய் வைத்து ஊதி, (`ஊதி` என்பது சொல் லெச்சம்.) கொடு மணி இயக்கி - பேரோசையை உடைய மணியை அடித்து.
அடி. 253, 254-
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வழிபட - பின்னிடாத வலியினையுடைய, `பிணிமுகம்` என்னும் பெயரின தாகிய யானை ஊர்தியை, `அது வாழ்வதாக` என்று வாழ்த்தி (அவ் விடத்தும் அவன் உறைதலும் உரியன் வழிபாடு செய்ய.)
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்
எனப் புறத்திலும் முருகனுக்கு மயிற்கொடியும், `பிணிமுகம்` என்னும் யானை ஊர்தியும் சொல்லப்பட்டன. இனி, `பிணிமுகமாவது மயல்` என்றே கொள்ளலும் ஆம். மேற்கூறிய `சீர் கெழு விழவு` முதலிய இடங்களிலும் (வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் சென்று வழிபடு வாராயினும், பெரும் பான்மை பற்றிக் குறமகள் முருகாற்றுப்படுத்த கோயிலையே அதற்கு உரித்தாகக் கூறினார்.)
அடி. 254-
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் - பயன்களை விரும்புபவர்கள் விரும்பிய பயன்களை விரும்பியபடியே பெற்றமையால் (சென்று நேர்ச்சிக் கடன் செலுத்துவாராய்)
அடி. 255-
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே - மேற் கூறியவாறு, ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழா முதலிய பல இடங் களிலும் அவன் உறைதலை உரியனாதல் நன்கறியப் பட்ட முறைமையே யாம்.
(`வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபடுதலை இறுதியிற் குறித்த உரு கெழு வியல் நகருக்கே உரித்தாகக் கூறினமை யின், மேற் கூறிய அவை இகந்து படாமைப் பொருட்டு. `ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே` என வலியுறுத்து ஓதினார்.)
அடி. 256-
ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக - கூடற் குடவயின் குன்று முதலாக இதுகாறும் கூறி வந்து அவ்வவ்விடங்களிலே யாயினும் ஆக; (உம்மையால், `பிற இடங்களிலே யாயினும் ஆக` இதனால் அவன் உறையும் இடங்களை வரையறுத்துக் கூறுதல் இயலாமை பெறப்பட்டது.)
அடி. 257-
கண்டுழி, முந்து முகன் காண் தக அமர்ந்து ஏத்தி - நீ சென்று கண்ட பொழுது, முதலில் உனது முகம் அவனால் நோக்கப் படத்தக்கதாகும்படி உவகையால் மலர்ந்து, ஒரு துதியைச் சொல்லிப் பின்பு.
அடி. 258-
கை தொழூஉ - கைகளைக் குவித்துக் கும்பிட்டு - பரவி பல துதிகளைப் பாடி. கால் உற வணங்கி - அவனது திருவடிகளிலே உனது தலை பொருந்தும்படி நிலத்திலே வீழ்ந்து பணிந்து.
அடி. 259, 261-
நெடும் பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை பயந்த ஆறு அமர் செல்வ - இமைய மலையின்) நெடிய பெரிய சிகரங் கட்கு இடையே உள்ள நீல நிறத்தை உடைய, நாணற் புதர்களால் பசுமை மிக்க சுனையிடத்தே (`சரவணப் பொய்கையில்` என்றபடி.) பெறப்பட்ட, ஆறு உருவம் பொருந்திய செல்வ.
(முருகன் அவதாரம் பழைய புராணங்களில், `உமை வயிற்றில் கரு உண்டாயின் அதனால் உலகிற்குத் தீமை பல உளவாம் - என்று இந்திரன் கருதி, - அது வேண்டா - என்று சிவபெருமானை வேண்டிக் கொண்டமையால், அப்பெருமானது வீரியத்தை இருடியர் எழுவரும் ஏற்று வேள்வித் தீயில் இட்டு அதனை வேள்விப் பிரசாதமாக வாங்கித் தம் மனைவியரிடம் கொடுக்க நினைக்கும் பொழுது அருந்ததி அப்பாற் சென்றமையால், அதனை ஆறு கூறு செய்து ஏனை அறுவர்க்கும் கொடுக்க, அவர்கள் அதனை விழுங்கிச் சூல் முதிர்ந்தவர்களாய்ச் சரவணப் பொய்கையில் ஈன்றமைால் ஆறு குழந்தைகளாய் முருகன் அப்பொய்கையில் தோன்றி, விளையாட்டயர்ந்து இருக்க, அதனையறியாது இந்திரன் வந்து போர் தொடுக்க, முருகன் ஆறு முகங்களும், பன்னிரண்டு கைகளும் கொண்ட ஓர் உருவினனாய் அவனை வென்று, பின்னும் அவ்வுருவத்தையே உடையனாயினான்` எனக் கூறப்பட்டது. அதனால், இங்கும், பரிபாடலிலும் அவ்வாறே கூறப்பட்டது. `இவையெல்லாம் பொருத்தம் அற்றன` என்று, பிற் காலத்தில், `முருகன் அவதாரம் வேறு வகையாகப் புராணங்களில் கூறப்பட்டது` என்பதைக் கந்த புராணத்தால் அறிகின்றோம்.)
அடி. 260-
ஐவருள் ஒருவன் அகம்கை ஏற்ப - ஐம்பூதங்களின் தலைவர்களில் ஒருவனாகிய தீக் கடவுள் சிவபெருமானது வீரியத்தைத் தனது அகங்கையிலே ஏற்றலால்.
அடி. 261-
அறுவர் - இருடியர் பத்தினியர் எழுவருள் அருந்ததி யொழிந்த ஏனை அறுவர்.
அடி. 262-
ஆல் கெழு கடவுள் புதல்வ - ஆல நிழலில் அமர்ந் திருக்கும் கடவுளுக்கு (சிவபெருமானுக்கு) மைந்த!
அடி. 262, 263-
மால் வரை மலைமகள் மகனே - மலைகளி லெல்லாம் மிகப் பெரிய மலையாகிய இமயமலைக்கு மகளான உமைக்கு மகனே! மாற்றோர் கூற்றே - அசுரராகிய பகைவர்க்குக் கூற்றுவனே!
அடி. 264-
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ - வேந்தர்க்கு வெற்றியைத் தருபவளும், எப்பொழுதும் வெல்லும் போரையே மேற்கொள்பவளும் ஆகிய கொற்றவைக்கு (துர்க்கைக்கு) மைந்த!
அடி. 265-
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி - அணிகலங்களை அணிந்த சிறப்பினையுடைய காடுகிழாளுக்கு மைந்த (இவள் `மாயோள்` எனப்படுதல் பற்றி இவளை வடமொழியாளர், `காளி` என்றனர். (வனதுர்க்கையாவாள் இவளே` என்னாது, நச்சினார்க்கினியர் கொற்றவையை `வன துர்க்கை` என்றார்.)
அடி. 266-
வணங்குவில் வானோர் தானைத் தலைவ - தேவர் பொருட்டு. வளைந்த வில்லுடன், அவர்தம் சேனைக்குத் தலைமை பூண்டவ (`தேவ சேனாபதி` என்றதாம்.)
அடி. 267-
மாலை மார்ப - (போர்க் காலத்திலும் அதனால் வருந்துதல் இன்மையால்) இன்பத்திற்கு உரிய தாரினை அணிந் திருக்கும் மார்பை உடையவ, நூல் அறி புலவ - எல்லா நூற்பொருள் களையும் இயல்பிலே அறிந்த அறிவ, அடி. 268-
செருவில் ஒருவ - போர்க்களத்தில் ஈடாவார் இன்றி யிருப்பவ. பொருவிறல் மள்ள - போர் பொருமிடத்து வெற்றியே பெறும் வீர.
அடி. 269-
அந்தணர் வெறுக்கை - அந்தணர்க்கு அவர் பெறும் செல்வமாம் தன்மைய. அறிந்தோர் சொல் மலை - அறிந்தோர் புகழ்ந்து சொல்லும் சொற்களின் திரட்சியானவ.
அடி. 270-
மங்கையர் கணவ - ஒருவரன்றி மங்கையர் இருவர்க்குக் கணவ.
அடி. 270-
மைந்தர் ஏறே - வீரருள் அரியேறு ஒப்பவனே!
அடி.271-
வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ -வேல் பொருந்திய பெரிய கையால் வந்து நிறையும் பெரிய வெற்றிச் செல்வத்தை உடையவ.
அடி. 272, 273-
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்துக் குறிஞ்சி கிழவ - `கிரௌஞ்சம்` என்னும் மலையை அழித்த குறையாத வெற்றியையுடைய குறிஞ்சிக் கிழவ. விண் பொரு நெடு வரைக் குறிஞ்சி கிழவ - வானத்தை அளாவும் உயர்ந்த மலைகளை யுடைத்தாகிய குறிஞ்சி நிலத்தை உரிமையாக உடையவ. `குறிஞ்சிக் கிழவ` - என்பதில் ககர ஒற்று விரித்தல்.)
அடி. 274-
பலர் புகழ் நல்மொழிப் புலவர் ஏறே - பலரும் புகழ்ந்து சொல்லும் நல்ல சொல்வன்மையையுடைய புலவர்களில் ஆனேறு போல்பவனே! (ஆனேறு புகழும், பெருமிதமும் உடையது.)
அடி. 275-
பெறல் அரு மரபின் முருக - யாவராலும் பெறுதற் கரிய முறைமையினையுடைய முருக. (`முருகன்` என்னும் பெயர்க் காரணத்தை மேல் விளக்குவார்) பெரும் பெயர் - ஒரு மொழிப் பொருளாய் உள்ள (முருக. ஒரு மொழி யாவது, வேதம் முதலிய அனைத்து நூல்களின் பொருள்களையும் அடக்கி நிற்கும் ஒரு சொல். அச்சொல் முருகன் மேலதாயது மேல், `ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி` என்பதில் சொல்லப்பட்டது.
அடி. 276-
நசையுநர்க்கு ஆர்த்தும் பேர் இசை ஆள - நினது இன்பத்தை நுகர்தலை விரும்பி நின்பால் வந்தவர்க்கு அதனை அருகாதே நுகர்விக்கின்ற பெரும்புகழை ஆளுதலுடையவ.
அடி. 277-
அலந்தோர்க்கு அளிக்கும் சேஎய் - களைகண் காணாது அலமந்து வந்தோர்க்கு இரங்கும் சேஎய்! (அளபெடை விளிப்பொருட்டு.)
அடி. 278, 277-
மண்டு அமர் கடந்த வென்று ஆடு நின் அகலத்துப் பொலம் பூண் - மிகுந்த போர்களைத் தொலைத்த எப்பொழுதும் வென்றே செல்கின்ற நின் மார்பிடத்துப் பொன்னாலாகிய அணிகளையுடைய (சேஎய்.)`
அடி. 279-
பரிசிலர்த் தாங்கும் நெடு வேஎள் - இரவலரை அவர் வேண்டுவன கொடுத்துத் துன்பம் தீர்த்துப் புரக்கின்ற நெடிய வேஎள். (இங்கும் அளபெடை விளிப்பொருட்டு.) உரு கெழு - பகைத்தவர்க்கு அச்சம் தோன்ற நிற்கின்ற (வேஎள்) என இவ்வாறு முதற்கண் சேயனாக வைத்து விளித்தும், பின்பு,
அடி. 280-
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் - உயர்ந்தோர் எடுத்துச் சொல்லித் துதிக்கின்ற எண் மிகுந்த பெயர்களை யுடைய இயவுள். (எண் மிகுந்த பெயர்களை `ஆயிரம் பேர்` என்பர். `இயவுள்` என்பதும் `கடவுள்` என்பதனோடு ஒத்த ஒரு பெயர். `இயக்குதலையுடைய பொருள்` என்பது இதன் பொருள். இதற்கு, `தலைவன்` எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர்.)
அடி. 281, 282-
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மத வலி போர் மிகு பொருந - சூரபன்மனது கிளையை அழித்த வலிமையாலே, எப்பொழுதம் செருக்கினால் வலிய எழும் போரில் வெற்றியால் மேம்பட்டு விளங்குகின்ற போர் வீர. குரிசில் - தலைவ. என - இவ்வாறு அணியனாக விளித்தும் (ஏத்தி) ஆனாது - அவ்வளவின் அமையாது.
அடி. 282, 283-
யான் அறி அளவையின் பல ஏத்தி - நான் அறிந்த அளவு உனக்குக் கூறிய பலவற்றைச் சொல்லித் (மலர்தூவி) துதித்து (பலவாவன).
அடி. 284, 285-
நின் னளந்தறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின்அடி உள்ளி வந்தனென் - நினது பெருமையை அளவிட்டு அறிதல் பலவாகிய உயிர்கட்கு இயல்வதன்று ஆகையால் (யானும் நின்னை அளந்தறிய வாராது) நினது திருவடிக்கீழ் உறைதலையே விரும்பி வந்தேன்.
அடி. 285, 286-
நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்- நீ நின்னோடு ஒப்பார் இல்லாத பேரறிவினை யுடையாய் (ஆயின்)
அடி. 286, 287-
எனக் குறித்தது மொழியா அளவையின் - என்று இவ்வாறு, நீ கருதிச் சென்ற காரியத்தை எடுத்துச் சொல்லி விண்ணப் பித்தற்கு முன்பே.
அடி. 288, 287-
வேறு பல் உருவின் குறு பல் கூளியர் உடன் குறித்து - வேறு வேறான பலவகைப்பட்ட வடிவங்களையுடைய, குறளாராகிய கூளிச் சுற்றத்தவர் (பூத கணங்கள்) பலர் தாமும் நீ கருதியதையே உடன் கருதி.
அடி. 289-
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி - (முருகன் இருக்கும் இடம் எல்லாம் விழாக் கொண்டாடும் களமாகவே யிருக்கும் ஆதலால் அவ்வாறு) விழாக் கொண்டாடும் களத்தில் (உனக்காக முருகன் முன்பு) பெருமிதம் பெறத் தோன்றி.
அடி. 290-
முது வாய் இரவலன் - புலமை முதிர்ந்த, வாய்மையை யுடையனாகிய இரவலன் ஒருவன்.
அடி. 290-
தான் அளியனே - அவன் நின்னால் அருள் பண்ணத் தக்கவனே.
அடி. 291-
என - என்று விண்ணப்பிக்க. (`இவ்வாறு அவர் வழியாக அன்றி நீ அவனை நேரே பெறுதல் அரிது` என்றற்கு இது கூறினான்.
அடி. 291-
பெரும - பெருமானே.
அடி. 291-
நின் வள் புகழ் நயந்து - நினது வளவிய புகழைக் கூறுதலையே விரும்பி.
அடி. 292, 291-
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி வந்தோன் - கேட்டார்க்கு இனிமை பயப்பனவும், உறுதி பயப்பனவும் ஆகிய அப்புகழ்களைச்சொல்லி நின்னைத் துதித்து வந்துள்ளான்.
அடி. 293, 294-
திறல் தெய்வம் சான்ற விளங்கு உருவம் வான் தோய் நிரப்பின் வந்து எய்தி - (யாவரும் வழிபடும் வழிபாட்டு வடிவத்தில் அவனைக் கண்டு நிற்கின்ற உன் முன்னே, தன்னை நீ நேரே கண்டு, `அவனே` எனத் தெளிதற் பொருட்டு, முதலில்,) தெய்வத்திறம் நிரம்பிய பேரொளியுடன் விளங்குகின்ற வடிவம் வானத்தை அளாவும் உயரத்தொடு கூடியதாய்த் தோன்ற உன்முன் எதிர்வந்து நின்று. (பின்னர்).
அடி. 294-
தான் - தானே.
அடி. 295-
அணங்கு சால் உயர் நிலை தழீஇ - (அச்சத்தால் உனக்குத்) துன்பம் நிறைந்ததாகின்ற அந்தப் பெருநிலையைத் தன்னுள் அடக்கி.
அடி. 295, 296-
பண்டைத் தன் தெய்வத்து மணம் கமழ் இளநலம் காட்டி - தான் அவதரித்த அன்று உளதாகிய, இயல்பாகவே தெய்வ மணம் கமழ்கின்ற, இளமையோடு கூடிய, அழகிய அந்த வடிவத்தையே (நீகண்டு நிற்க) நெடு நேரம் காட்டி. (`முருகு` என்னும் சொல் தரும் மணம், இளமை, அழகு - என்னும் இம்மூன்று பொருளையும் இங்கு எடுத்துக் கூறி, முருகன் அப்பெயர் பெற்ற காரணத்தை விளக்கினார்.)
(மக்கள் யாக்கை இயல்பாகவே முடை நாற்றம் உடைத்தாதல் போலத் தேவ யாக்கை இயல்பாகவே மணம் உடையது. அது பற்றியே சிவபிரான் நக்கீரர் தொடுத்த வழக்கில் `தேவ மாதர் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையோ` என வினாவினார். நக்கீரர் தாம் பிடித்தது பிடியாக, `இல்லை; தேவமாதர் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை` எனச் சாதித்தார். அப்பால் சிவபெருமான் நீ நாள் தோறும் வழிபடும் , அருளே திருமேனியாகிய ஞானப் பூங்கோதைதன் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லையோ` என்றார். `இல்லை., அவ்வம்பிகைதன் கூந்தலுக்கும் செயற்கை மணம் அன்றி, இயற்கை மணம் இல்லை` எனப் பிடிவாதம் பேசினார். `அருளே திருமேனியான அம்பிகை கூந்தலுக்கு, அசுத்தத்திலும் அசுத்தமாய பிரகிருதியில் தோன்றும் மலர்களே நறுமணத்தைத் தரும்` என்றது எத்துணைப் பிடிவாதமான பேச்சு! அவ்வாறு பிடிவாதம் பேசிய நக்கீரர் பிற்காலத்தவர். இத்திருமுருகாற்றுப்படை செய்த நக்கீரர் முற்காலத்தவர். இவர், `முருகன் திருமேனி இயற்கையாகவே தெய்வ மணங் கமழ்வது` என உண்மையைக் கூறினார். இவ்வாறு அன்றி, `பிடிவாதம் பேசிய நக்கீரரே பின்பு திருந்திக் கயிலை யாத்திரை செய்யும் வழியில் திருமுருகாற்றுப் படையை இயற்றினார்` என்றலும் உண்டு.)
அடி. 297, 298-
அறிவல் நின் வரவு; அஞ்சல் ஓம்பு என அன்புடை நன்மொழி அளைஇ - (நின்னை நோக்கி, புலவனே!) `நின் வரவு இன்னது பற்றியது` என்பதனை யான் முன்பே அறிவேன்; அது நினக்குக் கிடைக்குங்கொல், கிடையாதுகொல் என அஞ்சுதலை இனி நீ ஒழிவாயாக` என இவ்வாறான அன்புடைய நல்ல மொழிகளை, உனக்கு வீடுபேற்றை வழங்கும் மொழியோடு கலந்து கூறிப் பின், `கூறி` என்பது சொல்லெச்சம்.
அடி. 299, 300,298-
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து நீ ஒருவன் ஆகி விளிவின்று தோன்ற - இருளின் நிறம் போலும் நிறத்தை யுடைய கடல் நீரால் சூழப்பட்ட நிலவுலகத்தில், வீடு பெற்றமையால் நின்னோடு, ஒப்பார் பிறர் இன்றி நீ ஒருவனுமேயாய் இறப்பின்றித் தோன்றும்படி. (`நீ ஒருவன்` என்பது பின் முன்னாக மாறி நின்றது. இறப்பாவது, சூக்கும தேகம் நிற்கத் தூல தேகம் மாத்திரையே நீங்குவது. வீடெய்துவார்க்குச் சூக்கும தேகமும் தூல தேகத்தோடு ஒரு சேர நீங்குமாகலின் முன்னர்க் கூறிய இறப்பு எய்தாமையை `விளி வின்று` என்றும், அவர் அத்தன்மையராதல் தேகம் உள்ள பொழுதே நிகழும் சில நிகழ்ச்சிகளால் வெளிப்படுதல் பற்றி, `நீ ஒருவனுமேயாகித் தோன்ற` என்றும் கூறினார்.
அடி. 301-
பெறலரும் விழுமிய பரிசில் நல்கும் - (நீ கருதிய,) பலர் பெறுதற்கரிய சீரிய பரிசிலை, (அஃதாவது வீடு பேற்றினை) உனக்கு நல்கியருளுவன். (`மதி` என்னும் முன்னிலை யசை. இங்குப் படர்க்கைக் கண் வந்தது.)
அடி. 302-
பல்வேறு பல உடன் துகிலின் நுடங்கி - வகை பலவாய் வேறுபட்டன பல சேர்ந்த துகிற் கொடிகள் அசைவன போல அசைந்து. (`உடன்` என்பதன் பின் `ஆய` என்பது வருவிக்க.) அகில் சுமந்து - அகிற் கட்டைகளை மேலே கொண்டு.
அடி. 303-
ஆர முதல் முழுது உருட்டி - சந்தன மரமாகிய முதலினை முழுதாக உருட்டிக் கொண்டு.
அடி. 303, 304-
வேரல் பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - குறு மூங்கில்களின் பூவையுடைய முனைகள் வளர்க்கும் முதல் இன்றித் தனித்து வாடும்படி, (புதருட் சென்று) அவற்றின் வேர்களைப் பெயர்த்துவிட்டு.
அடி. 305, 306-
விண்பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய - வானத்தைக் குத்தும் நெடுமூங்கில் களில் ஞாயிற்று வட்டத்தைப் போல ஈக்களால் தொடுத்துக் கட்டப்பட்ட குளிர்ந்த, மணக்கின்ற விரிந்த தேன் கூடுகள் சிதையவும்.
அடி. 306, 307-
நல் பல ஆசினி முது சுளை கலாவ - நல்ல, பல ஈரப் பலாக்களின் முதிர்ந்த பழம் (வெடித்து உதிர்தலால் அவற்றின்) சுளைகள் வீழ்ந்து உடன் கலக்கவும்.
அடி. 307, 308-
மீமிசை நாக நறு மலர் உதிர - உச்சியில் உள்ள சுரபுன்னை மரங்கள் அதிர்தலால் அவற்றின் நறிய மலர்கள் உதிரவும்.
அடி. 308,309-
ஊகமொடு மா முக முசுக் கலை பனிப்ப- (அங்கு உலாவுகின்ற) கருங்குரங்கின் ஆண்களோடு, கரிய முகத்தையுடைய முசுக் குரங்கின் ஆண்களும் நடுங்கவும்.
அடி. 309, 310-
பூ நுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி - அழகிய நெற்றியையுடைய பிடி யானை மெய் குளிரும்படி நீரை இறைத்து.
அடி. 310, 311-
பெருங் களிற்று வான் கோடு தழிஇ - பெரிய ஆண் யானைகளின் வெள்ளிய கொம்புகளை உள் அடக்கி. முத்து, உடை- முத்தினை உடைய (கோடு)
அடி. 312, 311-
நல் பொன் மணி நிறம் கிளர தத்துற்று - நல்ல பொன்னும், மணியும் தம் நிறம் கிளர்ந்து தோன்றக் குதித்துக்கொண்டு பொன் கொழியா - பொற்பொடிகளை அரித்தெடுத்து.
அடி. 313, 314-
வாழை முழு முதல் துமிய தாழை இளநீர் விழுக் குலை உதிர தாக்கி - மலை வாழையாகிய முழுமையான முதல் ஓடியவும், தென்னையது இளநீர்கள் சிறந்த குலைகளினின்று உதிரவும் அவ்விரண்டனையும் மோதி.
அடி. 315-
கறிக் கொடிக் கருந்துணர் சாய - மிளகு கொடியில் உள்ள கரிய கொத்துக்கள் மடியவும்.
அடி. 315, 316, 317-
பொறிப் புற மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ கோழி வயப் பெடை இரிய - புள்ளிகளையுடைய தோகையையும், இளமை தோன்றும் நடையையும் உடைய மயில்கள் பலவும் ஒருங்கு சேர்ந்து அஞ்சிக் கானங் கோழியின் ஓடுதல் வல்ல பெடைகளோடு இடம் தேடி நீங்கவும். (`பெடையோடு`) என உருபு விரிக்க.
அடி. 317, 320-
கேழலோடு வெளிற்றின் இரு, பனை புன் சாய் அன்ன கூரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் பெருங் கல் விடர் அளைச் செறிய - காட்டுப் பன்றியின் ஆண்களோடு, உள்ளே வெளிற்றை யுடைய கரிய பனைமரத்தினது புல்லிய துறும்புகளை ஒத்த, நிறம் வாய்ந்த மயிரினை உடைய உடம்பையும், வளைந்த பாதங்களையும் உடைய கரடிகளும் பெரிய கல் பிளந்துள்ள முழையில் போய் ஒளியவும்.
அடி. 320 321-
கரு கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்ப - கரிய கொம்புகளையுடைய, ஆமா இனத்து நல்ல எருதுகள் சினந்து முழங்கவும் (321, 322 - சேண் நின்று இழிதரும் அருவி)
`சோய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு செல்லும் செலவ, நயந்தனையாயின், அவன் கூடற் குடவயின் குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று, விழுச் சீரலைவாய்ச் சேறலும் உரியன்; அதாஅன்று, ஆவினன் குடி அசைதலும் உரியன்; அதாஅன்று, ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று, குன்றுதோறாடலும் நின்ற தன் பண்பு; அதாஅன்று; ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவு முதலிய இடங்களில் உறைதலும் உரியன், குறமகள் முருகாற்றுப்படுத்த நகரில் வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட உறைதலும் உரியன் இவற்றோடு அவன் ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே; ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக; பிற இடங்களிலாயினும் ஆக; நீ சென்று கண்டுழி, முந்து முகன் அமர்ந்து ஏத்தி, பின் கை தொழூஉப் பரவி, கால் உற வணங்கி, யான் அறிந்து கூறிய அளவான பல பெயர்களால் சேயனாக விளித்தும், அணியனாக விளித்தும் மலர் தூவி ஏத்தி, முடிவில் நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின் அடி யுள்ளி வந்தனென் - என்று சொல்லி, நீ கருதிச் சென்றதை விண்ணப்பி. அவ்வாறு நீ விண்ணப்பிக்கும் முன்பே கூளியர் களத்துத்தோன்றி, - பெரும ,முது வாய் இரவலன் நின் புகழ் நயந்து ஏத்தி வந்துள்ளான்; தான் அளியனே என்று கூறப் பழமுதிர் சோலை மலை கிழவோன் முதற்கண் வான் தோய் நிவப்பின் வந்து எய்தி, பின் அணங்கு சால் உயர் நிலை தழீஇப் பண்டைத் தன் இநலங்காட்டி அன்புடை நன்மொழி அளைஇ, முந்நீர் வளைஇய உலகத்து விளிவின்று நீ ஒருவனே யாகித் தோன்றும்படி பெறவலரும் பரிசில் நல்கும்` என இங்ஙனம் முருகன்பால் சென்று வணங்கித் திருவருள் பெற்றான் ஒரு புலவன் அது பெற விரும்பிச் செல்லும் மற்றொரு புலவனை எதிர்ப்பட்டு அவனை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்தியவாறாக இயைத்து முடிக்க.
இத்தனி வெண்பாக்கள் பிற்காலத்தவரால் செய்து சேர்க்கப் பட்டவை.
அடி. 321, 322-
சேண் நின்று இழும் என இழிதரும் அருவி - உச்சியினின்றும் `இழும்` என்னும் ஓசை தோன்ற வீழ்கின்ற அருவிகளையுடைய (சோலை மலை.)
அடி. 323-
பழமுதிர் சோலை மலை கிழவோன் - (மேற்கூறிய இடங்களோடு) பழம் முற்றின சோலைகளை மிக உடைமையால், `பழமுதிர் சோலை மலை` என்றே பெயர் பெற்ற மலையையும் தனக்கு உரிமையாக உடைய அம்முருகன் (கூளியர் கூறியவற்றைக் கேட்டு.)
இவற்றின் பொருள் வெளிப்படை.
திருமுருகாற்றுப்படை முற்றிற்று.

பண் :

பாடல் எண் : 2

குன்றம் எறிந்தாய் குரை கடலில் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை. 1

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். 2

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை. 3

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 4

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே. 5

அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சல்என வேல்தோன்றும் நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். 6

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். 7

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. 8

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9

நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும். 10

பொழிப்புரை :

குறிப்புரை :

சிற்பி