திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

வேதநெறி தழைத் தோங்க
மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப்
புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித்
திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம்.

பொழிப்புரை :

: இவ்வுலகில் நான்மறைகளின் நெறிகள் தழைத்து ஓங்கவும், அவற்றுள் மேலாய சைவத் துறைகள் நிலைபெற்று விளங் கவும், உலகுயிர்கள் வழிவழியாகத் தழைத்துச் செழித்து விளங்கவும், தூய திருவாய் மலர்ந்து அழுதவரான, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றியருளிய திருஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளைத் தலைமேற் கொண்டு போற்றி, அம்மலரடிகளின் துணையால் அப்பெருமான் செய்த திருத்தொண்டின் இயல்புகளை எடுத்துச் சொல்லுவோம்.

குறிப்புரை :

நான்மறைகள் என்பன அறம் முதலிய நாற்பொருள் களையும் பொதுப்படக் கூறுவன. சைவநெறி என்பது வீட்டு நெறியை அடைதற்குரிய புற (சரியை), அக (கிரியை), ஒன்றிய (யோக) வழிபாடுகளால் அடையத்தகும் ஞான நெறியைச் சிறப்பாக எடுத்துக் கூறுவது. ஆதலின் மறைகளைப் பொது என்றும், சைவ நெறியைச் சிறப்பு என்றும் கூறுவர். இனி, நான்மறைகள் உலகர்க்கும், சைவ நெறியை விளக்கிக் கூறும் ஆகமங்கள் அருள் பதிவுடையார்க்கும் (சத்திநிபாதர்) அருளப்பட்டன என்றும் கூறுவர். `வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல், ஓதும் பொதுவும் சிறப்பும்என் றுள்ளன\' (தி.10 பா.2362) `வேதம் பசுஅதன்பால் மெய்யா கமம்\' (தனிப் பாடல்) எனவரும் திருவாக்குகளும் காண்க.
மறைகள் இறைவனை இன்ன தன்மையன் என்றறியவொண் ணாதவன் என்றே கூற, சைவநெறி அப்பெருமானை இன்னதன்மை யன் என்றும், இவ்வகையில் அறிந்து உணர்தற்குரியவன் என்றும் கூறும் உயர்நெறியாக விளங்குவதென்றும் கூறுவர். அது பற்றியே `மிகுசைவத் துறை\' என்றார். பூதம் - உயிர்க் கூட்டம்.

பண் :

பாடல் எண் : 2

சென்னிவளர் மதியணிந்த
சிலம்பணிசே வடியார்தம்
மன்னியசை வத்துறையின்
வழிவந்த குடிவளவர்
பொன்னிவளந் தருநாடு
பொலிவெய்த நிலவியதால்
கன்னிமதில் மருங்குமுகில்
நெருங்குகழு மலமூதூர்.

பொழிப்புரை :

வளருந் தன்மை வாய்ந்த பிறைச் சந்திரனைத் தலையிலும், சிலம்பைத் திருவடிகளிலும் சூடிய சிவபெருமானின் நிலைபெற்ற சைவத் துறையில், வழிவழியாய் வந்த குடியான சோழரின் காவிரியாறு வளம் செய்கின்ற நாடு பொலிவு பெறும்படி நிலை பெற்றுள்ள பதியே, அழியாத மதிலின் அருகே மேகங்கள் வந்து நெருங்கும் திருக்கழுமலம் என்னும் சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

கழுமலம் என்பது சீகாழியின் பன்னிரண்டு பெயர் களுள் ஒன்று.

பண் :

பாடல் எண் : 3

அப்பதிதான் அந்தணர்தம்
கிடைகள்அரு மறைமுறையே
செப்பும்ஒலி வளர்பூகச்
செழுஞ்சோலை புறஞ்சூழ
ஒப்பில்நகர் ஓங்குதலால்
உகக்கடைநாள் அன்றியே
எப்பொழுதுங் கடல்மேலே
மிதப்பதென இசைந்துளதால்.

பொழிப்புரை :

மறைகளை ஓதிவரும் சிறுவர்கள், அரிய மறை களை ஓதுகின்ற ஒலியுடன் வளர்கின்ற பாக்கு மரங்களின் செழுமை யான சோலைகள் புறத்தே சூழ, ஒப்பில்லாமல் ஓங்குதலால், அப் பதிதான், ஊழிக்காலத்தில் மிதப்பது மட்டுமன்றி எக்காலத்துமே கடலில் மிதப்பதாகும் என்ற தோற்றத்தைப் பொருந்தியுள்ளதாகும்.

குறிப்புரை :

சூழ்ந்துள்ள சோலைகளின் நிறத்தாலும், மறைகளின் முழக்காலும், கடலை ஒத்தலின், காழிப்பதி கடலில் மிதப்பது போல்வ தாயிற்று.

பண் :

பாடல் எண் : 4

அரிஅயனே முதல்அமரர்
அடங்கஎழும் வெள்ளங்கள்
விரிசுடர்மா மணிப்பதணம்
மீதெறிந்த திரைவரைகள்
புரிசைமுதல் புறஞ்சூழ்வ
பொங்கோதம் கடைநாளில்
விரிஅரவ மந்தரஞ்சூழ்
வடம்போல வயங்குமால்.

பொழிப்புரை :

திருமாலும், நான்முகனும் முதலிய தேவர்கள் அடங்குமாறு மேலே எழும் பல நீர்ப் பெருக்குகள், விரிந்த கதிர்களை யுடைய பெரிய மணிகள் அழுந்திய மேடைகளின் மீது வீசும் அலைகளால் உண்டான கீற்றுகள், புறமதிலின் மருங்கினில் நிரல்பட அமைந்திருப்பவை, பொங்கும் பாற்கடலைக் கடைந்த காலத்தில் மந்தர மலையை வரிவரியாகச் சுற்றிய வாசுகி என்ற பாம்பின் வடத்தைப் போல விளங்கும்.

குறிப்புரை :

காழி நகரிலுள்ள மதில்மேடைகள் மந்தர மலையை யும், அவற்றில் படிந்து நிற்கும் நீர்ப்பெருக்காலாய கீற்றுக்கள் அம் மலையைச் சுற்றிய பாம்பினையும் போன்றன. பதணம் - மதிலின் மேலிடமான மேடைகள்.

பண் :

பாடல் எண் : 5

வளம்பயிலும் புறம்பணைப்பால்
வாசப்பா சடைமிடைந்த
தளம்பொலியும் புனற்செந்தா
மரைச்செவ்வித் தடமலரால்
களம்பயில்நீர்க் கடன்மலர்வ
தொருபரிதி யெனக்கருதி
இளம்பரிதி பலமலர்ந்தாற்
போல்பஉள இலஞ்சிபல.

பொழிப்புரை :

: கரிய நீர் நிறைந்த கடலில் மலர்கின்ற ஒரு கதிரவன் என எண்ணி, வளம் மிக்க மணம் கொண்ட மருத நிலத்தின் புறத்தே, மணம் கமழும் பசிய இலைகளிடையே, நெருங்கிய இதழ்களுடன் விளங்கும் நீர்ப் பூவான செந்தாமரை மலர்கள் மலர்ந்ததால், இள ஞாயிறு பல தோன்றினாற் போன்ற தோற்றம் கொண்டனவான பல நல்ல நீர்நிலைகள் அங்கு எங்கும் விளங்கின.

குறிப்புரை :

புறம்பணை - மருத நிலத்தில் வெளிப்பக்கம். தளம் - இதழ். இலஞ்சி - பொய்கை. இலஞ்சி கடல் எனவும், செந்தாமரை பரிதி எனவும் விளங்குகின்றன.

பண் :

பாடல் எண் : 6

உளங்கொள்மறை வேதியர்தம்
ஓமதூ மத்திரவும்
கிளர்ந்ததிரு நீற்றொளியில்
கெழுமியநண் பகலுமலர்ந்
தளந்தறியாப் பல்லூழி
யாற்றுதலால் அகலிடத்து
விளங்கியஅம் மூதூர்க்கு
வேறிரவும் பகலும்மிகை.

பொழிப்புரை :

: மனத்தில் கொண்ட மறை ஒழுக்கத்தை உடைய மறையவர் செய்யும் ஓமப் புகைகளின் படலங்களால் இரவும், கிளர்ச்சி பெற்ற திருநீற்றின் ஒளியால் பொருந்திய நண்பகலுமாய் எக்காலத்தும் மிக்கு விளங்கி, எல்லை அளந்தறியப்படாத பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பதால், அகன்ற உலகில் பெருமை பொருந்த விளங்கிவரும் அப்பழம்பதிக்கு, வேறு இரவும் பகலும் வேண்டப்படாத மிகையாகும்.

குறிப்புரை :

இரவும் பகலுமாய காலநிலை உலகியல் வழிப்பட்டது. மாயையின் விளைவாயது. காழிப் பதியோ அருள் வழிப்பட்டதாகும். ஆதலின் அந்நகருக்கு அருள் வயத்ததாய ஓமப் புகையும், திருநீற்று ஒளியுமே இரவையும் பகலையும் விளைவிக்கத் தக்கன; ஆதலின் நாம் காணும் இரவும் பகலும் மிகை என்றார்.

பண் :

பாடல் எண் : 7

பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால்
ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆ குதிவேட்கும்
தகையவென மணந்துளதால்.

பொழிப்புரை :

பரந்த விளைவுடன் கூடிய வயல்களில் தோன்றிய சிவந்த தாமரை மலராய பெருகிய தீயில், அவ்வயல் வரம்பில் வளர்ந்த தேமா மரத்தின் பழம் விண்டதால் வெளிப்படும் சாறான நறு நெய்யா னது, நீண்ட இலைநுனியின் மூலம் இடையீடின்றி ஒழுகுதலால், அங்குள்ள மக்களே அன்றி, மரங்களும் வேள்வியைச் செய்யும் இயல்புடையன என எண்ணுமாறு அத்திருப்பதி விளங்கியது.

குறிப்புரை :

விளைவயல் - வேள்வி செய்யும் இடம். தாமரை - வேள்வித் தீ. மரங்களில் சாறு - ஓமநெய். மாவிலையின் நுனி - ஓமத் துடுப்பு.

பண் :

பாடல் எண் : 8

வேலையழற் கதிர்படிந்த
வியன்கங்குல் வெண்மதியம்
சோலைதொறும் நுழைந்துபுறப்
படும்பொழுது துதைந்தமலர்ப்
பாலணைந்து மதுத்தோய்ந்து
தாதளைந்து பயின்றந்தி
மாலையெழுஞ் செவ்வொளிய
மதியம்போல் வதியுமால்.

பொழிப்புரை :

கதிரவன் கடலில் மறைந்த பின்பு, இரவில் தோன்றி விளங்கும் வெண்மையான மதியம், சோலைகள் தோறும் புகுந்து வெளிப்பட்டுத் தோன்றும் பொழுது, அடர்ந்த மரங்களினிடையே சேர்ந்து, அவற்றின் தேனில் தோய்ந்தும், மகரந்தங்களை அளாவியும் இங்ஙனம் நெடுநேரம் பயின்றதால், மாலையில் தோன்றும் சிவந்த ஒளியையுடைய சந்திரனைப்போல் தோன்றி விளங்கும்.

குறிப்புரை :

சந்திரன் மாலையில் தோன்றும் பொழுது சிவந்தும், பின் வெள்ளிதாயும் விளங்கும். ஆனால் இப்பதியில் தோன்றும் சந்தி ரனோ சோலைக்கண்ணுள்ள தேனையும் மகரந்தப் பொடிகளையும் அளாவி வருதலால், எஞ்ஞான்றும் சிவந்து விளங்குகின்றது.

பண் :

பாடல் எண் : 9

காமர்திருப் பதியதன்கண்
வேதியர்போற் கடிகமழும்
தாமரையும் புல்லிதழும்
தயங்கியநூ லுந்தாங்கித்
தூமருநுண் துகளணிந்து
துளிவருகண் ணீர்ததும்பித்
தேமருமென் சுரும்பிசையால்
செழுஞ்சாமம் பாடுமால்.

பொழிப்புரை :

அழகிய அத்திருப்பதியில், மணம் கமழும் தாமரை யும், அந்தணர்களைப் போல், புற இதழ்களையும், நூலையும் தாங்கிக் கொண்டு, தூய்மையுடைய நுண்மையான துகள்களை அணிந்து, துளித்து வருகின்ற நீர் ததும்பி, தேன் பொருந்த வரும் வண்டின் இசை யால் இனிய சாமவேத கீதத்தைப் பாடும்.

குறிப்புரை :

அந்தணர்களுக்கு உரிய அடையாள மாலை தாமரை மாலையாகும். அந்தணர்க்காகுங்கால்:- புல்லிதழ் - கருமை இதழ்களாலாய பவித்திரம்; நூல் - பூணூல்; நுண்துகள் - திருநீறு; கண்ணீர் - அன்பினால் இன்பமார்ந்திருப்பதால் வரும் கண்ணீர்; சாமம் பாடுதல் - சாம கீதத்தைப் பாடுதல். தாமரைக்காகுங்கால்:- புல்லிதழ் - புறவிதழ்; நூல் - அதன் தண்டின் நூல்; நுண்துகள் - மகரந்தம்; கண்ணீர்- (கள் + நீர்) தேனாகிய நீர்; சாமம் பாடுதல் - வண்டு இசைத்தல்.

பண் :

பாடல் எண் : 10

புனைவார்பொற் குழையசையப்
பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி
மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தல்
கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர்
வளம்பொலிவ மாடங்கள்.

பொழிப்புரை :

அணிந்த நீண்ட பொன்னால் ஆய குழைகள் காதில் அசைய, அழகிய பட்டுடையின் தானையினைப் பின் பக்க மாய்ச் செருகி, அந்தணர்கள் தமக்குரிய தொழிலாய தீ வளர்க்கும் வேதிகையினை மெழுகியும், வெண்மை நிறமுடைய பொடியைக் கொண்டு கோலம் இட்டும், ஒலி பொருந்திய வானில் எழும் மேகம் போன்ற கூந்தலையுடைய, ஒளி பொருந்திய அருந்ததியின் கற்பு வாய்க்கப் பெற்ற வாழ்க்கைத் துணைவியாராகிய குலமகளிர் நிரம்பிய நல்வளத்தால் மாளிகைகள் விளக்கம் பெற்று விளங்கின.

குறிப்புரை :

மனைக்கு விளக்கம் மடவார் ஆவர். அவர் தாமும் கண வரின் கருத்தின் வழி நின்றொழுகும் கற்பினராயின், அவ்வில்வாழ்க் கையின் நலமும் வளமும் சொல்லப் போமோ? இவ்வரிய விளக் கத்தை அப்பதி பெற்று நிற்கின்றது.

பண் :

பாடல் எண் : 11

வேள்விபுரி சடங்கதனை
விளையாட்டுப் பண்ணைதொறும்
பூழியுற வகுத்தமைத்துப்
பொன்புனைகிண் கிணியொலிப்ப
ஆழிமணிச் சிறுதேரூர்ந்து
அவ்விரதப் பொடியாடும்
வாழிவளர் மறைச்சிறார்
நெருங்கியுள மணிமறுகு.

பொழிப்புரை :

அப்பதியிலுள்ள தெருக்கள் தொறும், வேள்வி வேட்குங்கால், தத்தம் பெற்றோர்கள் செயத்தகும் செயற்பாடுகளைத் தாம் விளையாடும் இடங்களில் எல்லாம் மண்ணாகிய புழுதி பொருந்தச் செய்து, பொன்னால் ஆன கிண்கிணிகள் ஒலிக்க, உருள் (சக்கரம்) பூட்டிய அழகிய சிறு தேர்களை ஊர்ந்து, அதனால் எழும் பிய மண் தூசி படிய விளையாடும் சிறுவர்கள் நெருங்கியுள்ளனர்.

குறிப்புரை :

பண்ணை - விளையாடும் இடம். பூழி - புழுதி : மண்.

பண் :

பாடல் எண் : 12

விடுசுடர்நீள் மணிமறுகின்
வெண்சுதைமா ளிகைமேகம்
தொடுகுடுமி நாசிதொறும்
தொடுத்தகொடி சூழ்கங்குல்
உடுஎனும்நாண் மலர்அலர
உறுபகலிற் பலநிறத்தால்
நெடுவிசும்பு தளிர்ப்பதென
நெருங்கியுள மருங்கெல்லாம்.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய நீண்ட மணிகள் பதித்த தெருக்களின் வெண்ணிறச் சுண்ணச் சாந்தால் இயன்ற மாளிகைகள், மேக மண்டலத்தைத் தொடுமாறு நீண்ட நாசிகள் தோறும் கட்டிய கொடிகளால் இருள் பரவியுள்ள இரவில், விண்மீன்கள் என்னும் புதிய பூக்கள் பூப்பதற்குப் பொருந்திய பகற் பொழுதில் பல நிறங்களுடன் நீண்ட வானத்தில் தளிர்ப்பதைப் போன்று பக்கங்களில் எல்லாம் நெருங்கியுள்ளன.

குறிப்புரை :

நாசி - மாளிகையின் உச்சியில் கொடிகள் கட்டுதற்கென அமைந்த உறுப்பு. மாளிகைகள் வெண்சுதையால் இயன்றவை. அவற் றில் மணிகள் பதிக்கப்பட்டுள்ளன. அம்மாளிகைகளின் உச்சியில் பல் வேறு நிறமுடைய கொடிகள் கட்டப்பெற்றுள்ளன. இவையே இப் பாடற் கருவாம். மாளிகைகளின் வெண்ணிறச் சாந்து பகல் செய்கின் றது. அதன் கண் பதிக்கப்பட்டிருக்கும் மணிகள் விண்மீன்களென உள்ளன. இவை இரவிலேயே காண்பதற்குரியன. இவ்விண்மீன் களாய மலர்கள் பலவும் இரவில் மலர்தற்கு ஏதுவாக அக்கொடிகள் விசும்பில் தளிர்த்துள்ளன என்கின்றார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 13

மடையெங்கும் மணிக்குப்பை
வயலெங்கும் கயல்வெள்ளம்
புடையெங்கும் மலர்ப்பிறங்கல்
புறமெங்கும் மகப்பொலிவு
கிடையெங்கும் கலைச்சூழல்
கிளர்வெங்கும் முரலளிகள்
இடையெங்கும் முனிவர்குழாம்
எயிலெங்கும் பயிலெழிலி.

பொழிப்புரை :

அப்பதியின் நீர் மடைகள் எங்கும், மணிகளின் குவியல்கள் உள்ளன. வயல்களில் எங்கும் நீர் வெள்ளத்துடன் கயல் மீன்களின் கூட்டங்கள் உள்ளன. அங்குள்ள வயல்களின் அருகி லுள்ள இடங்களில் பூக்குவியல்கள் உள்ளன. அவற்றின் வெளியில் எங்கும் வேள்விகளின் பொலிவுகள் நிரம்பியுள்ளன. சிறுவர்க்கு மறை பயிற்றும் பள்ளிகள் எங்கும், கலைகளின் சூழல்கள் விளங்கியுள்ளன. எழுச்சிமிக்க சோலைகள் எங்கும், ஒலிக்கும் வண்டுகளின் கூட்டங்கள் உள்ளன. இச்சோலைகளின் இடம் எங்கும், மறை முனிவர்களின் கூட் டங்கள் உள்ளன. மதில்கள் எங்கும், தவழ்கின்ற மேகங்கள் உள்ளன.

குறிப்புரை :

மடை - வயல்களிலுள்ள நீர் பாய்தற்கும் வடிதற்கும் உரிய மடைகள்.

பண் :

பாடல் எண் : 14

பிரமபுரம் வேணுபுரம்
புகலிபெரு வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம்
பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர்
வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம்
பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.

பொழிப்புரை :

அத்திருப்பதியானது, பிரமபுரம், வேணுபுரம், பெரியபுகலி, வெங்குரு, நீரினுள் ஒப்பில்லாது விளங்கும் திருத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், முன்வரும் புறவம், சண்பை நகர், வளரும் காழி, கொச்சை வயம், போற்றுகின்ற திருக்கழுமலம் என்னும் பன்னிரண்டு திருப்பெயர்களைக் கொண்டதாகும்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 15

அப்பதியின் அந்தணர்தங்
குடிமுதல்வர் ஆசில்மறை
கைப்படுத்த சீலத்துக்
கவுணியர்கோத் திரம்விளங்கச்
செப்புநெறி வழிவந்தார்
சிவபாத விருதயர்என்று
இப்புவிவா ழத்தவஞ்செய்
இயல்பினார் உளரானார்.

பொழிப்புரை :

அப்பதியில் அந்தணர்களின் குடியில் வந்த முதன்மை உடையவரும், குற்றம் தீர்ந்த மறைகள் கூறியவாறு ஒழுகும் ஒழுக்கத்தை உடையவரும், கவுணியர் கோத்திரமும் அதன் உள் நெறி வகைகளாகக் கூறப் பெறுவனவும் மேன்மை அடையுமாறு தோன்றிய வருமான `சிவபாத இருதயர்\' என்பார். அவர் இவ்வுலகம் வாழும் பொருட்டுத் தவம் செய்யும் இயல்புடையவராய் வாழ்ந்து வந்தார்.

குறிப்புரை :

அந்தணர் - குடி மரபு. கவுணியர் கோத்திரம் - அதன் உட்பிரிவு. செப்புநெறி - அதன் உட்பிரிவுகளாகக் கூறப்பெறும் சூத்திரம், பிரவரம் முதலியன.

பண் :

பாடல் எண் : 16

மற்றவர்தந் திருமனையார்
வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினார் எவ்வுலகும்
பெறற்கரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார்
எனப்போற்றும் பெயருடையார்
கற்புமேம் படுசிறப்பால்
கணவனார் கருத்தமைந்தார்.

பொழிப்புரை :

அவருடைய மனைவியார், அவருக்குப் பொருந் திய அந்தணர் மரபில் வந்தவர். எல்லாவுலகமும் பெறுதற்கு அரிய பெருமையையுடையவர். அழகுடைய `பகவதியார்\' என்று போற்றப் படுகின்ற பெயரையுடையவர். கற்பால் மேன்மையுறும் சிறப்பால் தம் கணவரின் கருத்துக்கு ஏற்ப அமைந்து ஒழுகுபவர்.

குறிப்புரை :

`வாய்ந்த மறைமரபு\' என்றார், சிவபாத இருதயரின் குலம், குணம் முதலானவற்றுக்கெல்லாம் பொருந்தியிருத்தல் பற்றி. கணவர் கருத்தமைதல் - கணவனார்தம் திருவுள்ளத்திற்கு ஏற்ப அமைந்து ஒழுகும் வாழ்க்கையராய் வாழ்தல்.

பண் :

பாடல் எண் : 17

மரபிரண்டும் சைவநெறி
வழிவந்த கேண்மையினார்
அரவணிந்த சடைமுடியார்
அடியலால் அறியாது
பரவுதிரு நீற்றன்பு
பாலிக்குந் தன்மையராய்
விரவுமறை மனைவாழ்க்கை
வியப்பெய்த மேவுநாள்.

பொழிப்புரை :

தாய்வழி தந்தைவழி ஆகிய இருமரபுகளும் சைவ நெறிவந்த உரிமையுடைமையின், அவ்விருவரும், பாம்பை அணிந்த சடையையுடைய சிவபெருமானின் திருவடிகளை அன்றி மற்றொன் றையும் பொருள் என்று உணராதவராய், மறை நெறிப்படி மனை வாழ்க்கைத் திறத்தில் யாவரும் வியக்குமாறு வாழ்ந்து வரும் நாள்களில்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 18

மேதினிமேற் சமண்கையர்
சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம்
அருகிஅர னடியார்பால்
பூதிசா தனவிளக்கம்
போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர்ச் சிவபாத
இருதயர்தாம் இடருழந்தார்.

பொழிப்புரை :

உலகில் கீழ்மக்களான சமணர், புத்தர் என்ற இவர்களின் பொய்ச் சமயங்கள் மிகுதியாய் வளர, அதனால் பழைய அரிய மறை வழக்கங்கள் சுருங்கி, அடியார்களிடத்து, திருநீற்றுச் சாதனத்தின் விளக்கமானது போற்றப்பெறாது மறையக் கண்டு, குற்றம் இல்லாத சிறப்புடைய சிவபாத இருதயர் பெரிதும் வருத்தம் அடைந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன. பல்லவன் ஒரு புறமும், பாண்டியன் ஒரு புறமுமாக இருந்து, சமண சமயச் சார்பினால் தாக்குண்டு, தம்மையும், தம் நாட்டையும் கீழ்ப்படுத்தி யிருந்தமை சம்பந்தர், நாவரசர் ஆகியோர்தம் வரலாற்றால் அறிய முடிகின்றது. புத்தச் சார்பும் இருந்தமை புத்த நந்தியால் அறிய முடிகின்றது. இவ்வகையிலேயே சிவபாத இருதயர் பெரிதும் வருந்த லாயினர்.

பண் :

பாடல் எண் : 19

மனையறத்தில் இன்பமுறு
மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே
ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம்
நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப்
பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.

பொழிப்புரை :

இல்வாழ்க்கையில் இன்பம் அளிக்கும் மகவைப் பெறும் விருப்பத்தைக் கொண்ட சிவபாத இருதயர் அந்நிலையில் ஊன்றி நின்று, சிவபெருமானின் ஆடும் திருவடிப்போதுகளை நினைந்து, முன்னர்ப் பரசமயங்களின் தீமையைப் போக்கித் திருநீற் றின் விளக்கத்தை மிகுதிப் படுத்தும் அழகிய அணிகளை அணியும் திருமகனைப் பெறும் பொருட்டுத் தவத்தைச் செய்தார்.

குறிப்புரை :

: `இட்டுந் தொட்டும் கவ்வியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறையில்லைத் தாம் வாழுநாளே\' (புறநா.188) என்பதால் தமக்கும் உலகுயிர்க்கும் பேரின்பம் கிட்ட மகவு இருத்தல் இன்றி யமையாததாயிற்று.

பண் :

பாடல் எண் : 20

பெருத்தெழும்அன் பாற்பெரிய
நாச்சியா ருடன்புகலித்
திருத்தோணி வீற்றிருந்தார்
சேவடிக்கீழ் வழிபட்டுக்
கருத்துமுடிந் திடப்பரவும்
காதலியார் மணிவயிற்றில்
உருத்தெரிய வரும்பெரும்பே
றுலகுய்ய உளதாக.

பொழிப்புரை :

பெருகி எழும் அன்பால், திருநிலை நாயகி அம் மையாருடன் திருத்தோணியில் வீற்றிருந்தருளுபவரான தோணியப் பரின் சேவடிகளின் கீழ் வணங்கி, கணவரின் கருத்து முற்றுப் பெறும்படி பரவும் பகவதியாரின் மணிவயிற்றில், உருவம் தெரிய வரும் கருப்பமான பெரும் பிள்ளைப் பேறு உலகம் உய்ய உளதாக,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 21

ஆளுடையா ளுடன்தோணி
அமர்ந்தபிரான் அருள்போற்றி
மூளுமகிழ்ச் சியில்தங்கள்
முதன்மறைநூல் முறைச்சடங்கு
நாளுடைய ஈரைந்து
திங்களினும் நலஞ்சிறப்பக்
கேளிருடன் செயல்புரிந்து
பெரிதின்பங் கிளர்வுறுநாள்.

பொழிப்புரை :

ஆளும் தன்மையுடைய திருநிலை நாயகியா ருடன் தோணியப்பரின் திருவருளையும் போற்றிக் கருக்கொண்ட காரணத்தினால் மனத்தில் பெருகும் மகிழ்ச்சியுடன், தங்களுக்குரிய மறையின் முறைப்படி செய்யும் செயற்பாடுகளையெல்லாம், நாளினை முதன்மையாகக் கொண்ட பத்துத் திங்களிலும் நன்மை உண்டாகுமாறு உறவினர் மகிழ்ந்து செய்ய, இன்பம் உண்டாகும் அத்தகைய நாள் களில்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 22

அருக்கன்முதற் கோளனைத்தும்
அழகியஉச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப்
பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
வைதிகமுந் தழைத்தோங்க.

பொழிப்புரை :

கதிரவன் முதலான கோள்கள் எல்லாம் தத்தமக் குரிய வலிமை மிகும் இராசிகளில் நிற்கவும், சோதிட நூலார் விரும்பும் நல்ல வேளை வரவும், செம்மை மிக்க திருவாதிரை நாள் எண்திசையும் விளக்கம் அடையவும், மற்ற சமயங்களின் தருக்கிய நிலை ஒழியவும், முதன்மையான சைவத் துறையும் வைதிகத் துறையும் தழைத்து ஓங்கவும்,

குறிப்புரை :

அருக்கன் - கதிரவன். ஓரை பொழுது: இரண்டரை நாழிகையைக் கொண்டது. திரு - சிவம். கிளரும் - உவந்தருளும்: `ஆதிரை நாள் உகந்தான்\' (தி.4. ப. 4 பா.6) எனச் சிவபெருமானைக் குறிப்பதும் காண்க. திசைவிளங்க - பிள்ளையார் அந்நாளில் தோன்றி இருத்தலின் அவர் புகழ் எண் திசைகளிலும் விளக்கம் பெறுவதாயிற்று.

பண் :

பாடல் எண் : 23

தொண்டர்மனங் களிசிறப்பத்
தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப
ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
அந்தணர்ஆ குதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப
மாதவத்தோர் செயல்வாய்ப்ப.

பொழிப்புரை :

அடியவர்களின் உள்ளம் களிப்படையவும், தூய திருநீற்றின் நெறியானது எண்திசைகளிலும் இணையின்றி நடக்கவும், ஏழ் உலகங்களில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக் கவும், தேவரினத்தவர் மிகுவியப்புடன் நோக்கவும், அந்தணர்களின் வேள்விகள் பெருகவும், வண்மையுடைய தமிழ்செய்த தவம் முற்றுப் பெறவும், பெரிய தவத்தைச் செய்பவர்களின் செயல் முற்றுப் பெறவும்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 24

திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக.

பொழிப்புரை :

எண்திசைகளின் பெருமைகள் எல்லாவற்றிலும், தென்திசையின் பெருமையே வெற்றி பெற்று மேன்மை அடையவும், மேல் உலகம், கீழ் உலகம் என்பனவற்றில், இம்மண்ணுலகமே சிறப் படைந்து வெல்லவும், அசைதல் இல்லாத செழுந்தமிழே மற்ற மொழித் துறைகளின் வழக்குகளை வெல்லவும், இசையறிவும் மெய்யறிவும் பொருந்தும் நிலை பெருகவும்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 25

தாளுடைய படைப்பென்னுந்
தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம்
எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி
அமர்ந்தபிரான் அருள்பெருக.

பொழிப்புரை :

உயிர்கள் உய்தி பெறுதற்கென இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் அடிநிலையான படைப்புத் தொழில் தலைமையும் தகவும் பெறவும், காலக் கூறுபாட்டில் நிகழ்விலும் எதிர்விலும் வருகின்ற குற்றங்கள் நீங்கவும், ஒளிபொருந்திய மணிகளையுடைய வீதிகள் சிறந்தோங்கும் சீகாழிப் பதி வாழவும், உயிர்களை அடிமை யாகக் கொண்டு திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானின் அருளானது மேன்மேலும் தழையவும்,

குறிப்புரை :

அடி; முதல். இறைவன் செய்யும் ஐந்தொழில்க ளில் அடிநிலையான படைப்பு, உயிர்களின் வினை வயத்தாலேயாம். ஆனால் பிள்ளையார் தோன்றியது அருள் வயத்தாலேயாம். அவர்தம் வாழ்வின் நிறைவில் ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக! என்றருளித் தம்மோடு பிறரையும் சிவச் சார்பு பெற அழைத்துச் சென்றமையால் அப்பிறப்புத் தலைமையும் தகவும் பெறுவதாயிற்று.

பண் :

பாடல் எண் : 26

அவம்பெருக்கும் புல்லறிவின்
அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
பாழ்படநல் லூழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
தாவில்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
திருஅவதா ரஞ்செய்தார்.

பொழிப்புரை :

பயனில் செயல்களையே செய்து வரும் புல்ல றிவை உடைய சமண் சமயம் முதலிய பிற சமயங்களானவை எல்லாம் பிறப்பதற்கே தொழிலாக்கும் தீயநெறிகள் பலவும் பாழ்படவும், நல்ல ஊழிக்காலந் தோறும் தான் அழியாமல் மிதந்து நின்று தவநெறியைப் பெருகச் செய்கின்ற சண்பைத் திருநகரில், குற்றம் அற்ற இயங்கும் பொருள், இயங்காப் பொருள் என்ற வகையில் நிலவுகின்ற உயிர்கள் எல்லாம் சிவத்தன்மை பெருகச் செய்யும் ஆளுடைய பிள்ளையாரான ஞானசம்பந்தர் தோன்றியருளினார்.

குறிப்புரை :

இயங்கும் பொருள், இயங்காப் பொருள்களில் எல் லாம் பிள்ளையார் சிவம்பெருக்கி வாழ்ந்தமை `ஞாலம் நின் புகழே மிகவேண்டுந் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே\' ( தி.3 ப.108) `எங்கும் அரன் நாமமே சூழ்க\' (தி.3 ப.54. பா.1) எனவரும் அவர்தம் திருவாக்குகளானும், திருவோத்தூரில் இருந்த ஆண்பனை, பெண்பனை களெல்லாம் நிறைவாகச் சிவமே கூடிய பெற்றியினாலும் அறியலாம். காழிப் பிள்ளையார் தோன்றியருளியதால் இன்ன இன்ன வளங்கள் வாய்ந்தன எனப் போற்றும் சேக்கிழார், இவ்வைந்து பாடல்களிலும் இருபத்தொரு வளங்களைக் குறித்தருளுகின்றார். இவற்றால் பிள்ளை யார் யாண்டும் சிவம்பெருக்கி வாழ்ந்தமை அறியலாம். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 27

அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்
எப்பெயரி னோரும்அயல் எய்தும்இடை யின்றி
மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவியறி யாமே
ஒப்பில்களி கூர்வதொர் உவப்புற உரைப்பார்.

பொழிப்புரை :

அதுபொழுது அழகிய அக்கழுமலத்தில் எந்நெறி யிலிருப்பவர்களும் பக்கங்களில் பொருந்தும் வேறு இடம் இன்றி உடல் முழுதும் மயிர்க் கூச்செறியத் தம்மை அறியாமல் ஒப்பற்ற மகிழ்ச்சி மிகுவதாய ஓர் உவகை தோன்றக் கூறுவாராய்,

குறிப்புரை :

: எப்பெயரினோரும் - அறுவகைச் சமயத்தைச் சார்ந்த வர்களும் பிற இனத்தவர்களும்.

பண் :

பாடல் எண் : 28

சிவனருள் எனப்பெருகு சித்தமகிழ் தன்மை
இவண்இது நமக்குவர எய்தியதென் என்பார்
கவுணியர் குலத்திலொரு காதலன் உதித்தான்
அவன்வரு நிமித்தம்இது என்றதி சயித்தார்.

பொழிப்புரை :

: சிவபெருமானின் திருவருளெனப் பெருகும் மனம் மகிழ்கின்ற தன்மை இங்கு இவ்வாறு நமக்கு வருவதற்குக் காரணம் யாது? என வினவுவார், கவுணியர் கோத்திரத்தில் ஒரு மகன் தோன்றினான், அங்ஙனம் அவன் அவதரித்ததன் நன்னிமித்தம் இது வாகும் என்று மனம் தெளிந்து அதிசயித்தார்.

குறிப்புரை :

முன், மனமகிழ்ச்சி பெருகுதற்குக் காரணம் என்ன? எனத் தமக்குள் வினவியவர்கள், பின் அதன் உண்மை தெரிந்து அதிசயித்தார்கள். இவ்விரண்டு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 29

பூமுகை அவிழ்ந்துமணம் மேவுபொழில் எங்கும்
தேமருவு தாதொடு துதைந்ததிசை யெல்லாம்
தூமருவு சோதிவிரி யத்துகள் அடக்கி
மாமலய மாருதமும் வந்தசையு மன்றே.

பொழிப்புரை :

: பூக்களின் மொட்டு அலர்வதால் தோன்றிய மணம் நிரம்பிய சோலைகள் எங்கும் தேன் பொருந்திய மகரந்தம் பரவுதலால் நெருங்கிய திசைகளிலெல்லாம் தூய்மையுடைய ஒளி விரியுமாறு அத்துகளை அடக்கிப் பெருமை பொருந்திய பொதிய மலையினின்றும் வருகின்ற தென்றல் காற்றும் அதுபொழுதே வந்து மென்மையாக வீசும்.

குறிப்புரை :

மகரந்தத்தால் ஒளிகுன்றிய சோலையில் தென்றல் வீசி, அம்மகரந்தத் துகளை யடக்கி ஒளிமிகச் செய்தது.

பண் :

பாடல் எண் : 30

மேலையிமை யோர்களும் விருப்பொடு கரப்பில்
சோலைமலர் போலமலர் மாமழை சொரிந்தே
ஞாலமிசை வந்துவளர் காழிநகர் மேவும்
சீலமறை யோர்களுடன் ஓமவினை செய்தார்.

பொழிப்புரை :

விண்ணுலகத்தவர்களும் மிகு விருப்புடன் ஒழி வில்லாது, பூஞ்சோலைகள் பூக்களைச் சொரிவதைப் போல மலர் மழையைப் பொழிந்து, நிலவுலகத்தில் வந்து, சீலம் வளரும் சீகாழிப் பதியில், பொருந்திய ஒழுக்கமுடைய அந்தணருடன் கூடி வேள்விச் செயல்களைச் செய்தனர்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 31

பூதகண நாதர்புவி வாழஅருள் செய்த
நாதனரு ளின்பெருமை கண்டுநலம் உய்ப்பார்
ஓதுமறை யோர்பிறி துரைத்திடினும் ஓவா
வேதமொழி யால்ஒளி விளங்கியெழு மெங்கும்.

பொழிப்புரை :

சிவகணத் தலைவர்கள் உலகு உய்தற்கென ஞானசம்பந்தரைத் தோன்றச் செய்த சிவபெருமானின் திருவருளின் பெருமையைக் கண்டு, அதற்கு ஏற்ப நலங்கள் பலவற்றையும் செய்வாராயினர். மறை ஓதுபவர்கள், பிற பிற சொற்களைச் சொல்வா ராயினும், இடைவிடாது தாமே பெருகி எழும் மறை ஒலிகள் அவற் றின் மிக்கு எழும்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 32

பயன்தருவ பஃறருவும் வல்லிகளும் மல்கித்
தயங்குபுன லுந்தெளிவு தண்மையுடன் நண்ணும்
வயங்கொளி விசும்புமலி னங்கழியு மாறா
நயம்புரிவ புள்ளொலிகள் நல்லதிசை யெல்லாம்.

பொழிப்புரை :

எல்லாத் திசைகளிலும் பலவகையான மரங்களும் கொடிகளும் பெருகித் தத்தம் பயன்களைத் தரலாயின. கலக்கமுடைய நீர்நிலையங்களும் தெளிவுடனும் குளிர்ச்சியுடனும் விளங்கின. விளங்கும் ஒளிகளையுடைய வானமும் களங்கம் நீங்கினது. மாறுபாடில்லாத பெரிய திசைகளில் எல்லாம் பறவைகளின் ஒலியே மிக்கிருப்பன. இங்ஙனம் எல்லாம் நன்மை பெருக விளங்கின.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 33

அங்கண்விழ விற்பெருகு சண்பையகல் மூதூர்ச்
சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.

பொழிப்புரை :

அழகிய இடங்கள் தோறும் இவ்வாறான விழாவின் மங்கலங்களால் பெருகும் சீகாழிப் பதியில், சங்குகள், ஒருமுகப் பறை, இருமுகப் பறை, வேறு பிற நரம்புக் கருவிகள், தாரை, சின்னம் முதலாய இசைக் கருவிகள், எங்கும் இயக்குபவர் இல்லாம லேயே ஒலித்தன. தெருக்களில் எல்லாம் நிறைந்த மங்கல ஒலிகளே ஒலிப்பனவாயின.

குறிப்புரை :

படகம் - பேரி முதலிய ஒருமுகப் பறைகளும், முழவு முதலிய இருமுகப் பறைகளும்.

பண் :

பாடல் எண் : 34

இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்
தருங்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்
பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே
அருந்திரு மகப்பெற வணைந்தஅணி செய்வார்.

பொழிப்புரை :

இப்பேருலகானது இத்தகைய பெருமகிழ்வை அடைய, அப்பிள்ளையாரைப் பெற்ற அந்தணரின் தலைவரான சிவபாத இருதயர், தம் இல்லத்தின் முன் பெருங்களிப்பும் வியப்பும், பொருந்த, இறைவர் அருளால் அரிய அழகிய மகனாரைப் பெற்றமை யால் பொருந்திய அணிகளைச் செய்வார் ஆயினார்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 35

காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.

பொழிப்புரை :

விருப்பம் மிக்க தம் மன மகிழ்ச்சியால் களிப்பு அடைவார். மேலே பூசப்படுகின்ற நெய்யாட்டு விழாச் செய்து மகிழ்ச்சி அடைவார். மகன் தோன்றியதன் காரணமாகச் செய்யத் தகும் மங்கலச் செயல்களின் ஒலிகளோடு, அவற்றிற்குரிய செயல்கள் பல வற்றையும் செய்வார்.

குறிப்புரை :

மகப்பேற்றின் பின் அத்தொடக்கு நீங்க நெய் அணி வித்து நீராடச் செய்வர். `புதல்வர்ப் பயந்த புனிறுசேர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்\' (தொல். கற்பி யல். 5); `கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி\' (தொல். கற்பியல். 6); `கரும்புடைக் கடுஞ்சூல் நம்குடிக்கு உதவி, நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ், விளங்குநகர் விளங்கக் கிடந்தோள்\' (நற்றிணை 370); `ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கை\' (நற்றிணை 40) என வருங் கூற்றுக்களால் இச் செயல் முறை, பண்டு தொட்டே இருந்தமை புலனாகும். இதுவன்றி இறைவனிடத்தும் முனிவர் தேவர் முதலானோரிடத்தும் தாயும் சேயும் நலம் பெற்று வாழ வழிபாடு நிகழ்த்துதலும் அக்கால வழக்கமாகும். புதல்வன் முகங்காண்டல், ஐம்படைத் தாலி சூட்டல், பெயரிடுதல் போல்வனவும் அக்காலத்துச் செய்து வந்தமை தொல்காப்பியம் இளம்பூரணர்உரையால் அறிய முடிகின்றது. சாதக முறைப் பல சடங்கு - ஆண் மகவுக்குரிய 16 சடங்குகளுள் ஒன்று. சாத கன்மம் என்பர். அத்திர மந்திரத்தால் நூறு முறை ஓமம் செய்து, வாம மந்திரத்தால் மகவை முகமெதிர் நோக்கிப் பஞ்சப் பிரம மந்திரத்தால் உச்சி மோந்து, தற்புருடத்தினை வலக்காதிற் செலுத்துதல் இச்செயல் முறையாகும்.

பண் :

பாடல் எண் : 36

மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயி லென்னத்
தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக்
காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்.

பொழிப்புரை :

சிறந்த அந்தணர் குல மங்கையர்கள் தம்மில் கலந்த பெருமகிழ்ச்சியுடன் சாயலையுடைய மயிலைப் போல, தூய அழகு டைய விளக்குகளால் ஒளியுடைய குழை முதலிய அணிகள் மின்ன, அழகான தம் மாளிகையை அழகுபெறச் செய்வார்கள்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 37

சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன் ஓகையுரை செய்வார்
வெண்முளைய பாலிகைகள் வேதிதொறும் வைப்பார்
புண்ணிய நறும்புனல்கொள் பொற்குடம் நிரைப்பார்.

பொழிப்புரை :

நறுமணப் பொடிகளுடன் குளிர்ந்த மலர்த் தாதுக்களை வீசி உள்ளத்தில் நிறைந்த விருப்பத்துடன் பிள்ளையார் இந்நிலவுலகில் தோன்றியமையை மகிழ்வுடன் எங்கும் உரைப்பர். வெண்மையான முளைப் பாலிகைகளை மேடைதோறும் வைப்பார் கள். மணமுடைய புண்ணியப் புதுநீர் கொண்ட புதுக்குடங்களை நிரல்பட வைப்பர்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 38

செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.

பொழிப்புரை :

செம்பொன் முதலியவற்றை ஈந்து உவப்பார்கள். சிவனடியார்கள் அமுது செய்தற்கு வேண்டும் நலங்கள் பலவற்றை நாடிச் செய்வார்கள். புதிதாய் மலர்ந்த மணமலர் மாலைகளை அவற்றில் மொய்க்கும் வண்டுகளுடன் சேர்த்துக் கட்டுவார்கள். வேம் பின் தழை செருகுதல் முதலான காப்புத் தொழிலைச் செய்வார்கள்.

குறிப்புரை :

வண்டுகள், மலர்களில் அவற்றைத் தொடுக்கும் நிலை யிலும் இருந்தமை, மலர்களிலும் தேனையும் அவற்றில் வதிந்திருக் கும் இருக்கைச் சுவையையும் கருதியாம். அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் வதியும் வண்டுகளும் இருக்கும் போலும்! நிம்பம் - வேம்பு: அதன் இலைகளை வீட்டில் செருகுதல் காப்புக் கருதியாம்.

பண் :

பாடல் எண் : 39

ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் விளைப்பார்.

பொழிப்புரை :

வெண்கடுகு முதலானவற்றைச் சேர்த்து அமைத்த புகையினாலும், நெய்யுடன் நல்ல மணமுடைய அகில் துண்டுகளால் உண்டாக்கப்பட்ட புகையாலும், விருப்பம் அளிக்கும் வேள்வித் தீயின் சிறந்த புகையாலும் கடவுள் தன்மை கமழ்கின்ற செயலைச் செய் வார்கள்.

குறிப்புரை :

ஐயவி - வெண் சிறுகடுகு, இதன் சாற்றை உடலில் தடவலும், இதன் புகையை நுகர்தலும் தீமை நீங்குதற்கு ஏதுவாம். நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்து (தி.11 திருமுருகா. வரி 234) `ஐயவிப் புகையும் ஆட்டி\' என வருவனவற்றான் இவ்வழக்கம் பண்டு தொட்டே இருந்தமை புலனாகும்.

பண் :

பாடல் எண் : 40

ஆயபல செய்தொழில்கள் அன்றுமுதல் விண்ணோர்
நாயகன் அருட்பெருமை கூறுநலம் எய்தத்
தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின்
மேயவிதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.

பொழிப்புரை :

அத்தகைய நற்செயல்கள் பலவற்றையும் தேவரின் தலைவரான சிவபெருமான் திருவருளின் பெருமை மிகுமாறு, நன்மை பொருந்த, நான்மறைகளிலும் அவற்றுடன் தொடர்புடைய கற்ப சூத்திரம் முதலிய ஒழுக்க நூல்களிலும் பொருந்திய முறைப்படி, பிள்ளையார் தோன்றிய நாள் முதல் பத்து நாள்களிலும் செய்வித் தார்கள். கு-ரை: வேதங்களின் வழிவந்த ஒழுக்க நூல்களைக் கற்ப சூத்திரம் என்பர்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 41

நாமகர ணத்தழகு நாள்பெற நிறுத்திச்
சேமவுத யப்பரிதி யில்திகழ் பிரானைத்
தாமரை மிசைத்தனி முதற்குழவி யென்னத்
தூமணி நிரைத்தணிசெய் தொட்டில்அமர் வித்தார்.

பொழிப்புரை :

பெயர்சூட்டும் அழகிய நல்வினையைப் பிள் ளையார் தோன்றிய நாளிற்கு ஏற்பச் செய்வித்து, உலகிற்கு நலம் செய்யத் தோன்றும் இளஞாயிற்றைப் போலவும், தாமரையில் எழுந் தருளியிருக்கும் தனி முதலாம் முருகப் பெருமானைப் போலவும் விளங்கும் அப்பிள்ளையாரைத் தூய மணிகளை நிரல்பட அழுத்தி அழகு செய்யப்பட்ட தொட்டிலில் இட்டனர்.

குறிப்புரை :

நாள்பெற - தோன்றிய நாளிற்கு (விண்மீன்) ஏற்ப, இவ்வாறு பெயரிடுதல் வழக்கு எனினும் அப்பெயர் இன்னது என அறிதற்கு இயன்றிலது. சேம உதயப் பரிதி - உலகிற்கு நலம் தர எழும் கதிரவன். நலம் - ஒளியும் வெப்பமும். தாமரை மிசைத் தனிக்குழவி - முருகன். `அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தில் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந் தருளினானே\' (கந்த புரா. திருவவ. பா.96) எனவரும் கச்சியப்பர் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 42

பெருமலை பயந்தகொடி பேணுமுலை யின்பால்
அருமறை குழைத்தமுது செய்தருளு வாரைத்
தரும் இறைவி யார்பரமர் தாள்பரவும் அன்பே
திருமுலை சுரந்தமுது செய்தருளு வித்தார்.

பொழிப்புரை :

மிகப் பெரிய இமயமலையின் அரசன் பெற்ற கொடி போன்ற பார்வதியம்மையார், ஞானத்தை வழங்கியருளும் திருமார்பகத்தில் உளவாய இனிய பாலுடன் கலந்த அரிய சிவஞா னத்தைக் குழைத்து ஊட்டி அமுது செய்தருளவுள்ள அப்பிள்ளை யாரைப் பெற்ற அந்தணர் குல மாதரான பகவதியார், சிவபெரு மானின் திருவடிகளைப் போற்றும் அன்பே தம் திருமார்பகத்தில் பாலாய்ச் சுரக்க, அதனைத் திருவமுது செய்து அருளுமாறு பால் ஊட்டினார்.

குறிப்புரை :

உயிர்களுக்கு ஞானம் வழங்கும் மார்பகமாதலின் `பேணுமுலை\' என்றார். `போகமார்த்த பூண்முலையாள்\' (தி.1 ப.49 பா.1) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 43

ஆறுலவு செய்யசடை ஐயர்அரு ளாலே
பேறுலகி னுக்கென வரும்பெரி யவர்க்கு
வேறுபல காப்புமிகை என்றவை விரும்பார்
நீறுதிரு நெற்றியில் நிறுத்திநிறை வித்தார்.

பொழிப்புரை :

கங்கையாறு நிலவும் சடையை உடைய சிவ பெருமான் திருவருளால் உலகைக் காத்தற்குரியார் இவராவர் எனத் தோன்றிய பெரியவரான பிள்ளையாருக்கு, மற்றும் பல காப்புகள் மிகையாகும் என, அவை எவற்றையும் விரும்பாதவராய்த் திருநீற்றை அவரின் நெற்றியில் அணிவித்து, அதனையே காப்பாகுமாறு செய்தார் பகவதியார்.

குறிப்புரை :

: `மந்திரமாவது நீறு\', (தி.2 ப.66 பா.1) `ஏலவுடம் பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு\' (தி.2 ப.66 பா.9) என இப்பிள்ளையார் பின்னர் அருளி இருப்பதும் காண்க. `குழவி மருங்கினும் கிழவதாகும்\' (தொல். புறத். 29) எனும் நூற்பாவால் பிள்ளைத் தமிழுக்குத் தோற் றுவாய் செய்தது தொல்காப்பியம். அம்மரபு வழிவந்த பிள்ளைத் தமிழும், ஆண்பாற்கென வகுத்த பருவங்கள் பத்தாம். அவற்றுள் ஆசிரியர் ஈண்டுக் குறிப்பன - காப்பு (பா.43), தால் (பா.44), செங் கீரை (பா.45), சப்பாணி (பா.46), வருகை (பா.48), சிறுதேர், சிற்றில் (பா.52) ஆகிய பருவங்களேயாம்.

பண் :

பாடல் எண் : 44

தாயர்திரு மடித்தலத்தும்
தயங்குமணித் தவிசினிலும்
தூயசுடர்த் தொட்டிலினும்
தூங்குமலர்ச் சயனத்தும்
சேயபொருள் திருமறையும்
தீந்தமிழும் சிறக்கவரு
நாயகனைத் தாலாட்டு
நலம்பலபா ராட்டினார்.

பொழிப்புரை :

சிறந்த பொருண்மையைக் கொண்டிருக்கும் மறைகளும், இனிய தமிழும் சிறப்புப் பெற வந்து தோன்றிய தலை வரான அப்பிள்ளையாரை, நற்றாய் முதலியோர் தம் மடியிலும், விளங்கும் மணிகளையுடைய இருக்கைகளிலும், தூய ஒளிவீசும் தொட்டிலிலும், உறங்குதற்கேற்ற மலர்ப் படுக்கையிலும் தாலாட்டுங் கால், அவர் தோன்றலாய் வாய்த்த பல நலங்களையும் எடுத்துப் பாராட்டி மகிழ்ந்தனர்.

குறிப்புரை :

: நற்றாய், செவிலித்தாய், கைத்தாய், பாலூட்டும் தாய், சீராட்டும் தாய் என அழைக்கப் பெறும் ஐவகைத் தாயரும் அடங்கத் `தாயர்\' எனக்கூறினார். ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓல் உறுத்துவாள், நொடிபயிற்றுவாள் கைத்தாய் எனச் செவிலியர் ஐவர் என்பர் நச்சி னார்க்கினியர்.

பண் :

பாடல் எண் : 45

வருமுறைமைப் பருவத்தின்
வளர்புகலிப் பிள்ளையார்
அருமறைகள் தலையெடுப்ப
ஆண்டதிரு முடியெடுத்துப்
பெருமழுவர் தொண்டல்லால்
பிறிதிசையோம் என்பார்போல்
திருமுகமண் டலமசையச்
செங்கீரை யாடினார்.

பொழிப்புரை :

முறையாக வளர்ந்து வருகின்ற பருவந்தோறும் உரியவாறு வளர்ச்சி பெற்றுவரும் பிள்ளையார், அரிய மறைகள் தலையெடுக்குமாறு தலைமுடியை மேல் எடுத்துப் பெருமழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தொண்டினை அல்லாது வேறொன்றையும் யாம் காணோம் எனக் காட்டுவார் போல், திருமுகமண்டலம் அசையச் செங்கீரை ஆடியருளினார்.

குறிப்புரை :

குன்றியிருந்த மறைவழக்குகள் மீண்டும் பொலிவு பெறப் பிள்ளையாரின் தோற்றம் காரணமாயிருத்தலின், `அருமறை கள் தலை எடுப்ப\' என்றார். `ஒருதாள் உந்திஎழுந் திருகையும் ஒருங்கு பதித்து நிமிர்ந்து அருள் பொழிதிருமுகம் அசைய அசைந்தினிது ஆடுக செங்கீரை\' (முத்துக். செங்கீரைப். 8) எனவரும் குமரகுருபர அடிக ளின் திருவாக்கால் செங்கீரை ஆடுதலின் இலக்கணம் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 46

நாமறியோம் பரசமயம்
உலகிலெதிர் நாடாது
போமகல என்றங்கை
தட்டுவதும் புனிதன்பால்
காமருதா ளம்பெறுதற்
கொத்துவதுங் காட்டுவபோல்
தாமரைச்செங் கைகளினால்
சப்பாணி கொட்டினார்.

பொழிப்புரை :

: `யாம் சைவசமயம் அன்றிப் பிற சமயங்களை அறியோம்! ஆதலின் புறச் சமயத்தவர்களே! இவ்வுலகில் எதிர்ப்பட நாடாது அகன்று செல்லுங்கள்\' என்று அழகிய கைகளைக் கொட்டுவதையும் சிவபெருமானிடத்து விருப்பம் மிகும் தாளத்தைப் பெறுவதற்காகக் கைகளை ஒத்துவதையும் காட்டுவன போல், தாமரை போன்ற சிவந்த கைகளால் அப்பிளையார் சப்பாணி கொட்டினார்.

குறிப்புரை :

பாணி - கை: சக - சேர்த்து. கைகள் இரண்டையும் சேர்த்துக் கொட்டுவது சப்பாணி எனப்படும்

பண் :

பாடல் எண் : 47

விதிதவறு படும்வேற்றுச்
சமயங்க ளிடைவிழுந்து
கதிதவழ இருவிசும்பு
நிறைந்தகடி வார்கங்கை
நதிதவழுஞ் சடைமுடியார்
ஞானம்அளித் திடவுரியார்
மதிதவழ்மா ளிகைமுன்றில்
மருங்குதவழ்ந் தருளினார்.

பொழிப்புரை :

இறைவனின் மறைநெறிகளுக்கு மாறுபட்ட புறச் சமயங்கள் வீழ்ந்து நிலை குலையுமாறு, பெரிய வானத்தினின்றும் போந்த பெரிய கங்கையாறு பொருந்திய சடையையுடைய சிவபெரு மான் ஞானம் தந்தருளுதற்குரிய அப்பிள்ளையார், சந்திரன் தவழும் மாளிகையின் முன் பக்கத்தில் தவழ்ந்தருளினார்.

குறிப்புரை :

கதிதவழ்தல் - ஓங்கிநின்ற நிலையிலிருந்து மாறி, கீழே தாழ்ந்து செல்லும் நிலை பெறல். பிறசமயங்கள் தளர்வுற்றுத் தாழப் பிள்ளையார் தவழ்ந் தருளினார்.

பண் :

பாடல் எண் : 48

சூழவரும் பெருஞ்சுற்றத்
தோகையரும் தாதியரும்
காழியர்தஞ் சீராட்டே
கவுணியர்கற் பகமேஎன்
றேழிசையும் பலகலையும்
எவ்வுலகும் தனித்தனியே
வாழவரும் அவர்தம்மை
வருகவரு கெனவழைப்ப.

பொழிப்புரை :

தம்மைச் சூழநிற்கும் அந்தண மகளிரும் தோழியரும் `சீகாழிப் பதியினர் யாவர்க்கும் சிறப்புச் செய்யும் செல் வமே! கவுணிய குலத்தவரின் கற்பகமே!\' எனப் பாராட்டி, ஏழிசையும், மறைகள் முதலான பல கலைகளும், எவ்வுயிர்களும், தனித்தனியே வாழுமாறு வந்து தோன்றிய அப் பிள்ளையாரை `வருக வருக\' என்று அழைக்க,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 49

திருநகையால் அழைத்தவர்தம்
செழுமுகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலைசிறப்ப
மற்றவர்மேற் செலவுகைத்தும்
உருகிமனங் கரைந்தலைய
உடன்அணைந்து தழுவியும்முன்
பெருகியஇன் புறஅளித்தார்
பெரும்புகலிப் பிள்ளையார்.

பொழிப்புரை :

காழிப்பிள்ளையார் அங்ஙனம் அழைத்தவரின் செழுமையான முகங்களைத் தம் புன்முறுவலால் மலரச் செய்தும், அதனால் உண்டாகும் மகிழ்ச்சி மேன்மேலும் பெருக, அவர்களின் உடல் மீது பொருந்துமாறு உந்தியும், உள்ளம் உருகிக் கரைந்து நிலை கொள்ளாது இளகும்படி உடன் அணைத்துத் தழுவியும், பெருக் கெடுக்கும் இன்பம் பொருந்துமாறு அளித்தருளினர்.

குறிப்புரை :

முகம் நோக்கல், திருவடியால் உந்தல், மெய் தீண்டல் ஆகியன காண்பார்க்கு மகிழ்ச்சி ஊட்டுவனவாகும். `மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம், மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு\' (குறள், 65) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 50

வளர்பருவ முறையாண்டு
வருவதன்முன் மலர்வரிவண்
டுளர்கருமென் சுருட்குஞ்சி
உடனலையச் செந்நின்று
கிளர்ஒலிகிண் கிணியெடுப்பக்
கீழ்மைநெறிச் சமயங்கள்
தளர்நடையிட் டறத்தாமும்
தளர்நடையிட் டருளினார்.

பொழிப்புரை :

முற்கூறியவாறு வளரும் பருவங்களின் முறை யாக ஓராண்டு நிறைவதற்குள், மலர்களில் வரிவண்டுகள் ஒலிக்கும் கருமையான மெல்லிய சுருண்ட தலைமயிருடன் அசையச் செம்மை யாக நேர் நின்று விளங்கும் ஒலியைக் கிண்கிணிகள் ஒலிக்கக் கீழான நெறிகளைக் காட்டுகின்ற சமயங்கள் தள்ளாடி ஒழியுமாறு தாமும் தளர்நடை பயின்றருளினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 51

தாதியர்தங் கைப்பற்றித்
தளர்நடையின் அசைவொழிந்து
சோதியணி மணிச்சதங்கை
தொடுத்தவடம் புடைசூழ்ந்த
பாதமலர் நிலம்பொருந்தப்
பருவமுறை ஆண்டொன்றின்
மீதணைய நடந்தருளி
விளையாடத் தொடங்கினார்.

பொழிப்புரை :

வளர்ப்புத்தாயரின் கைகளைப் பற்றி நடத்தலால், தளர் நடையின் தளர்ச்சி நீங்கி, ஒளியும் அழகும் கொண்ட மணிகள் இழைத்த சதங்கைகள் கட்டிய வடம் சுற்றிய சிறிய அடிகள் நிலத்திற் பொருந்தும்படி, பருவமுறையில் ஓராண்டு நிறைந்து மேற்செல்ல, பிள்ளையார் நடந்து சென்றருளவும் விளையாடவும் தொடங்கினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 52

சிறுமணித்தேர் தொடர்ந்துருட்டிச்
செழுமணற்சிற் றில்கள்இழைக்கும்
நறுநுதற்பே தையர்மருங்கு
நடந்தோடி அடர்ந்தழித்தும்
குறுவியர்ப்புத் துளியரும்பக்
கொழும்பொடியா டியகோல
மறுகிடைப்பே ரொளிபரப்ப
வந்துவளர்ந் தருளினார்.

பொழிப்புரை :

அழகிய சிறுதேரைப் பற்றித் தொடர்ந்து உருட்டிச் செல்ல, செழிய மணலால் சிற்றில் கட்டி விளையாடும் நல்ல நெற்றியை உடைய பேதைப் பெண்களிடத்தில் நடந்தும் ஓடியும் அச்சிற்றில்களை அழித்து விளையாடியும், சிறிய வியர்வைத் துளிகள் உடற்கண் அரும்ப, அதனுடன் திருநீற்றை அணிந்து விளங்கும் திருமேனி அவ்வீதியில் ஒளிபரப்ப வந்து, இவ்வாறாக அவர் வளர்ந்து வரும் நாளில்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 53

மங்கையோ டுடனாகி
வளர்தோணி வீற்றிருந்த
திங்கள்சேர் சடையார்தம்
திருவருட்குச் செய்தவத்தின்
அங்குரம்போல் வளர்ந்தருளி
அருமறையோ டுலகுய்ய
எங்கள்பிரான் ஈராண்டின்
மேல்ஓராண் டெய்துதலும்.

பொழிப்புரை :

திருநிலை நாயகியாருடன் இருந்து, வளர்ந்து வரும் சீகாழியில் வீற்றிருந்தருளும் மதி நிலவும் சடையையுடைய சிவபெருமானின் திருவருட்பயனுக்குச் செய்யும் தவத்தின் வழித் தோன்றிய முளையைப் போன்று வளர்ந்து, அரிய மறைகளால் உலகம் உய்யுமாறு எம்பெருமானான பிள்ளையாருக்கு இரண்டாண்டின் மேல் ஓராண்டு நிறை வெய்தவும்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 54

நாவாண்ட பலகலையும்
நாமகளும் நலஞ்சிறப்பப்
பூவாண்ட திருமகளும்
புண்ணியமும் பொலிவெய்தச்
சேவாண்ட கொடியவர்தம்
சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகுய்ய
நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.

பொழிப்புரை :

திருநிலை நாயகியாருடன் இருந்து, வளர்ந்து வரும் சீகாழியில் வீற்றிருந்தருளும் மதி நிலவும் சடையையுடைய சிவபெருமானின் திருவருட்பயனுக்குச் செய்யும் தவத்தின் வழித் தோன்றிய முளையைப் போன்று வளர்ந்து, அரிய மறைகளால் உலகம் உய்யுமாறு எம்பெருமானான பிள்ளையாருக்கு இரண்டாண்டின் மேல் ஓராண்டு நிறை வெய்தவும்.

குறிப்புரை :

மறை, எழுதாக் கிளவி ஆதலின் `நாவாண்ட பல கலையும்\' என்றார். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 55

பண்டுதிரு வடிமறவாப்
பான்மையோர் தமைப்பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர்
வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார்
தொடர்ந்தபிரி வுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற்
போல்அழுவார் குறிப்பயலாய்.

பொழிப்புரை :

முன்னைய நிலையில் திருவடியை மறவாத பாங்கு உடையவரை, மிகுதவத்தோராய சிவபாத இருதயருக்கு இறைவன் தந்தருளினாராக, அதன்வழி வாய்த்த திருத்தொண்டின் நிலையை உலகத்துக்கு அருள்வதற்கெனத் தோன்றிய அப்பிள்ளை யார், சிவபெருமானையே தொடர்ந்து நின்ற நிலை நீங்காது இருந்தமையின், பிரிந்து போந்த பிரிவுணர்வு ஓரொருகால் எழ, அதனால் அச்சம் கொண்டவரைப் போல் அயலான ஒரு குறிப்புடன் அழுவார்.

குறிப்புரை :

`.................திருந்தடி மறக்குமா றிலாதவென்னை, மையல்செய்திம் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட் டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே\' (தி.2 ப.98 பா.5) எனவரும் பிள்ளையார் திருவாக்கு இவ்வரலாற்றிற்கு அகச்சான்றாய் அமைந்துள்ளது. வெருக்கொள்ளுதல் - விரைந்து தோன்றி மறைவ தொரு அச்சக்குறிப்பு.

பண் :

பாடல் எண் : 56

மேதகைய இந்நாளில்
வேறொருநாள் வேதவிதி
நீதிமுறைச் சடங்குநெறி
முடிப்பதற்கு நீராடத்
தாதையார் போம்பொழுது
தம்பெருமான் அருள்கூடச்
சோதிமணி மனைமுன்றில்
தொடர்ந்தழுது பின்சென்றார்.

பொழிப்புரை :

மேதக்க நிலையில் வளர்ந்து வரும் இந்நாள்களில் ஒருநாள், மறைவழிப்பட்ட நெறியில் செயத்தகும் காலை வழிபாடு களை முடிப்பதற்காக முதலில் நீராடும் பொருட்டுத் தந்தையார் புறப்படும் பொழுது, தம் பெருமானின் அருள்கூடப் பெறுதலால், திருமனையின் ஒளியும் அழகும் உடைய முன்றிலில், பிள்ளையார் தாமும் தந்தையாரைத் தொடர்ந்து அழுதவாறு பின்சென்றார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 57

பின்சென்ற பிள்ளையார்
தமைநோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனையொழிந்து
முனிவார்போல் விலக்குதலும்
மின்செய்பொலங் கிண்கிணிக்கால்
கொட்டியவர் மீளாமை
உன்செய்கை இதுவாகில்
போதுஎன்றுஅங் குடன்சென்றார்.

பொழிப்புரை :

தம் பின் தொடர்ந்து வந்த பிள்ளையாரைத் தந்தையாரான சிவபாத இருதயர் பார்த்து, தாம் மேற் செல்வதை நிறுத்திச் சினம் கொண்டவர் போல் காட்டி, தம் பின் வருவதை விலக்கவும், ஒளி மிக்க பொன்னால் ஆய சிறு கிண்கிணிகள் அணிந்த திருவடிகளை நிலத்தில் கொட்டி, மீளாது நிற்க, `உன் செயல் இதுவானால், வருக\' எனக் கூறித் தம்முடனே அழைத்துச் சென்றார்.

குறிப்புரை :

தம் இச்சையில் விடாது பற்றி நிற்கும் ஞானக் குழந்தை, தன் செயலை மிகு அன்புடன் (செல்லமாகத்) தெரிவித்துக்கொள்ளும் நிலை இதுவாகும்.

பண் :

பாடல் எண் : 58

கடையுகத்தில் தனிவெள்ளம்
பலவிரிக்குங் கருப்பம்போல்
இடையறாப் பெருந்தீர்த்தம்
எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடையுயர்த்தார் திருத்தோணிப்
பற்றுவிடா மேன்மையதாம்
தடமதனில் துறையணைந்தார்
தருமத்தின் தலைநின்றார்.

பொழிப்புரை :

அறநெறியில் சிறந்த சிவபாத இருதயர், ஊழி முடிவில் தோன்றும் பெரு வெள்ளங்கள் பலவற்றையும் தன்னிடத்தில் இருந்து விரியுமாறு தோற்றுவிக்கும் கருப்பம் போல், இடையறாது நிற்கும் பெரிய புனித நீர் நிலைகள் எல்லாவற்றுக்கும் பிறப்பிடமாய், ஆனேற்றுக் கொடியை உயர்த்தியருளிய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் திருத்தோணிபுரத்தின் தொடர்ச்சியை நீங்காத மேலான நீர்நிலையின் துறையை அடைந்தார்.

குறிப்புரை :

நீர் அளவாக இருக்கும் பொழுது அக்குளத்தின் அளவில் நின்று திருத்தோணிபுரத்தைச் சார்ந்தும், ஊழிமுடிவில் நீர் பெருகிய பொழுது அத்தோணிபுரம் தன்மேல் மிதக்க அதனோடு இயைந்தும் நிற்றலின், திருத்தோணி பற்றுவிடாது அக்குளம் அமைந்தி ருப்பதாயிற்று.

பண் :

பாடல் எண் : 59

பிள்ளையார் தமைக்கரையில்
வைத்துத்தாம் பிரிவஞ்சித்
தெள்ளுநீர்ப் புகமாட்டார்
தேவியொடுந் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை
எதிர்வணங்கி மணிவாவி
உள்ளிழிந்து புனல்புக்கார்
உலகுய்ய மகப்பெற்றார்.

பொழிப்புரை :

உலகுய்ய மகப்பெற்ற சிவபாத இருதயர் பிள்ளை யாரை அப்புனித நீர்க்கரையில் இருக்கச்செய்து, தாம் பிரிவதற்கு அஞ்சி, தெளியும் நீரில் நீராடமாட்டாதவராகிப் பின் திருநிலைநாயகி உடனாய திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் வள்ளலாரை முன் நின்று வணங்கிப் பின்பு அக்குளத்தில் இறங்கி நீராடச் சென்றார்.

குறிப்புரை :

பிள்ளையாரைக் கரையில் இருக்கச் செய்து தாம் நீரா டற்குச் செல்ல ஒருப்படாத சிவபாத இருதயர், பின் அம்மையப் பராகிய தோணியப்பரை வணங்கி நீராடப்புகுந்தார். இந்நிலை, உடல் தந்தையாம் தம் பொறுப்பினின்றும் நீங்க, உயிர்த் தந்தையாம் தோணியப்பரின் திருவருளில் அப்பிள்ளையார் திளைத்தும் உய்ந்தும் அருள்பெற இருக்கும் பாங்கைக் குறிப்பால் உணர்த்தும் தகையதாய் உள்ளது.

பண் :

பாடல் எண் : 60

நீராடித் தருப்பித்து
நியமங்கள் பலசெய்வார்
சீராடும் திருமகனார்
காண்பதன்முன் செய்ததற்பின்
ஆராத விருப்பினால்
அகமருடம் படியநீர்
பேராது மூழ்கினார்
பெருங்காவல் பெற்றாராய்.

பொழிப்புரை :

நீரில் ஆடித் தருப்பணம் செய்து, பின் மறைவழிச் செயத்தகும் செயல்கள் பலவற்றையும் செய்பவரான சிவபாத இருதயர், பலரும் பாராட்டவுள்ள மகனார் தம்மைத் தேடிக் காண்பதற்கு முன்னம் அச்செயல்களை யெல்லாம் செய்து முடித்துப் பின், தம் மகனாருக்குத் தம்மை விடப் பெரிய காவல் பெற்றாராகி, அடங்காத விருப்பத்தால் அதன்பின் அகமருட ஸ்நாநம் செய்யும் பொருட்டுத் தாம் நின்ற இடத்தினின்றும் அடிபெயராது நீருள் மூழ்கினார்.

குறிப்புரை :

அகமருடம் - பாவத்தைக் கெடுப்பது. இருக்கு வேதத்துள் தொண்ணூறாவது சூக்தம் அகமருட சூக்தமாகும். நீரில் நின்று இதனை மும்முறை கூறி மூழ்குதல் நியமமாகும். தாம் நீராடி வரும்வரை பிள்ளையாரைக் காப்பதற்குத் தம்மினும் மேலான காப்பான திருவருள் துணையே துணையாயிருத்தலின், சிறிதும் தளர்வின்றி, அச்செயற்பாட்டினைச் செய்பவரானார்.

பண் :

பாடல் எண் : 61

மறைமுனிவர் மூழ்குதலும்
மற்றவர்தம் மைக்காணா
திறைதரியார் எனும்நிலைமை
தலைக்கீடா ஈசர்கழல்
முறைபுரிந்த முன்னுணர்வு
மூளஅழத் தொடங்கினார்
நிறைபுனல்வா விக்கரையில்
நின்றருளும் பிள்ளையார்.

பொழிப்புரை :

மறை முனிவராய சிவபாத இருதயர் நீருள் முழுகவும், அவரைக் கண்ணால் காணாமையால் சிறிது பொழுதும் தரித்திருக்க மாட்டார் என்ற காரணத்தைக் காட்டி, சிவபெருமானின் திருவடிகளை முறையாக இடைவிடாமல் எண்ணியிருந்த முன் நினைவு எழுந்ததால், நிறைந்த நீரையுடைய பொய்கைக் கரையில் நின்றிருந்த பிள்ளையார் அழத் தொடங்கினார்.

குறிப்புரை :

தலைக்கீடு - காரணமாக.

பண் :

பாடல் எண் : 62

கண்மலர்கள் நீர்ததும்பக்
கைம்மலர்க ளாற்பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய்
மணியதரம் புடைதுடிப்ப
எண்ணில்மறை ஒலிபெருக
எவ்வுயிரும் குதூகலிப்பப்
புண்ணியக்கன் றனையவர்தாம்
பொருமிஅழு தருளினார்.

பொழிப்புரை :

கண்களாகிய மலர்களிலிருந்து நீர் வெளிப்படக் கைம்மலர்களால் அவற்றைப் பிசைந்து, அழகிய தாமரை மலரும் சிவந்த கொவ்வைக் கனி போன்ற திருவாயில் அழகிய உதடுகள் துடிக்க, எண்ணில்லாத மறைகளின் ஒலி பெருகவும், எல்லா உயிர் களும் களிப்படையவும், புண்ணியக் கன்றைப் போன்ற பிள்ளையார் பொருமி அழலானார்.

குறிப்புரை :

மணிஅதரம் - அழகிய உதடுகள்.

பண் :

பாடல் எண் : 63

மெய்ம்மேற்கண் துளிபனிப்ப
வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ
சாரும்பிள் ளைமைதானோ
செம்மேனி வெண்ணீற்றார்
திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மேஅப் பாஎன்றென்று
அழைத்தருளி அழுதருள.

பொழிப்புரை :

தம் திருமேனியின் மீது கண்ணீர்த் துளிகள் வீழ, தம்மைச் சூழவுள்ள இடங்களை யெல்லாம் பார்த்து அழும் பிள்ளை யார், தம் முன்னைச் சார்பை உணர்ந்தமையாலோ அல்லது அது பொழுது இருந்த பிள்ளைமைச் சார்பாலோ, அறியோம். செம்மேனி யில் வெண்ணீற்றையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத் தோணிபுரத்தின் சிகரத்தைப் பார்த்து `அம்மே! அப்பா!\' என்று அழுத ருளியவாறே அழைத்தருளினாராக,

குறிப்புரை :

மேலைச் சார்பு - முன்னைய தொடர்பு. மறக்குமாறு இலாதிருந்த உணர்வு: `சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்\' (குறள், 359) என வரும் திருமறையும் காண்க, பாடல் 55ஐயும் காண்க. திருத் தோணிபுரச் சிகரம் - தோணிபுரக் கோயிலின் உச்சி. தோணிபுரத் தின்கண் வீற்றிருக்கும் சிகரம் என்றலுமாம். சிகரம் - சிவபெருமான்: திருவைந்தெழுத்துள் சிகரம் சிவபெருமானைக் குறிக்குமாற்றான் இவ்வாறு பொருள் கோடலுமொன்று. அழைத்தருளி அழுதருள என ஈரிடத்தும் அருள எனும் சொற் பெய்தார்: உயிர்களனைத்தும் இறை வனை நோக்கி அழவும் வேண்டும், அழைக்கவும் வேண்டும் என்பதை அருளுரையாகக் கோடற்கு. `அழுகேன் நின்பால்\', `ஆரூரா என் றென்றே அலறா நில்லே\' (தி.6 ப.31 பா.3,) எனவரும் திருவாக்கு களையும் காண்க.

பண் :

பாடல் எண் : 64

அந்நிலையில் திருத்தோணி
வீற்றிருந்தார் அருள்நோக்கால்
முன்நிலைமைத் திருத்தொண்டு
முன்னியவர்க் கருள்புரிவான்
பொன்மலைவல் லியுந்தாமும்
பொருவிடைமே லெழுந்தருளிச்
சென்னியிளம் பிறைதிகழச்
செழும்பொய்கை மருங்கணைந்தார்.

பொழிப்புரை :

அதுபொழுது திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமான் அருள் நோக்கம் செய்தலால், முன்னைநிலையை நினைந்த அவருக்கு அருள்செய்யும் பொருட்டாக, பொன்மலை வல்லியான திருநிலைநாயகி அம்மையாரும் தாமும், பொருந்துதற் குரிய விடையின் மேல் இவர்ந்தருளி, தலையில் சூடிய இளம்பிறை விளங்கித் தோன்ற, செழுமையான அப்பொய்கையின் அருகில் அடைந்தருளினார்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 65

திருமறைநூல் வேதியர்க்கும்
தேவியர்க்கும் தாங்கொடுத்த
பெருகுவரம் நினைந்தோதான்
தம்பெருமைக் கழல்பேணும்
ஒருநெறியில் வருஞானங்
கொடுப்பதனுக் குடனிருந்த
அருமறையா ளுடையவளை
அளித்தருள அருள்செய்வார்.

பொழிப்புரை :

நான்மறைகளில் வல்ல அந்தணரான சிவபாத இருதயருக்கும் அவருடைய மனைவியாரான பகவதியாருக்கும், தாம் முன் வழங்கியருளிய பெருவரத்தை நிறைவு செய்ய எண்ணியதனால் போலும், தம் பெருமையுடைய திருவடிகளையே போற்றுகின்ற ஒருமையான நெறியில் நிற்க வரும் சிவஞானத்தைக் கொடுப்பதற் காகத் தம்முடன் இருந்த, அரிய மறைகளையே தம் வடிவமாகக் கொண்டு உயிர்களை ஆட்கொண்டருளுகின்ற ஞான முதல்வியா ரான திருநிலை நாயகி அம்மையாரை அளித்தருளுமாறு அருள் செய்வாராகி,

குறிப்புரை :

முன்வரம் அருளியது 19, 20ஆவது பாடல்களில் காண்க. ஒருநெறியில் வருஞானம் - இறைவனை ஒரு நெறிய மனத்துடன் வழிபட்டதால் வரும் ஞானம், `ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்\' (தி.1 ப.1 பா.11) எனப் பிள்ளையார் தாமே அருளி இருப்பதும் காண்க. மறைவடிவு கொள்ளுதலும் உயிர்களை ஆட் கொள்ளுதலும் இறைவன் தன் அருள் வயத்தாலாம். அவ்வருளே அம்மையாதலின் `அருமறை யாளுடையவளை\' என்றார். `பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை\' (தி.8 ப.7 பா.14) `அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை யெல்லாம்\' (சித்தி யார், சுப. முதற்சூத்.69) எனவரும் திருவாக்குகளையும் காண்க.

பண் :

பாடல் எண் : 66

அழுகின்ற பிள்ளையார்
தமைநோக்கி அருட்கருணை
எழுகின்ற திருவுள்ளத்
திறையவர்தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக்கொடியைப்
பார்த்தருளித் துணைமுலைகள்
பொழிகின்ற பாலடிசில்
பொன்வள்ளத் தூட்டென்ன.

பொழிப்புரை :

அழுகின்ற பிள்ளையாரைப் பார்த்து, திருவருட் கருணை பொழியும் உள்ளம் கொண்டவராய சிவபெருமான், எவ்வு லகும் தொழநிற்கும் கொடிபோன்ற திருநிலைநாயகி அம்மையாரைப் பார்த்தருளி, `இரு மார்பகங்களிலிருந்தும் பொழியும் பாலைப் பொற் கிண்ணத்தில் ஏற்று இப் பிள்ளைக்கு ஊட்டுக!\' என்று அருளிச் செய்ய,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 67

ஆரணமும் உலகேழும்
ஈன்றருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு
கருணைதிரு வடிவான
சீரணங்கு சிவபெருமான்
அருளுதலும் சென்றணைந்து
வாரிணங்கு திருமுலைப்பால்
வள்ளத்துக் கறந்தருளி.

பொழிப்புரை :

மேற் சொன்னவாறு பெருமான் கூறியருளவும், மறைகளையும் ஏழுலகங்களையும் பெற்றருளி எப்பொருளுக்கும் மூலகாரணமாய் நிற்பவரும், வளம் பெருகும் கருணையே தம் வடி வமாய்க் கொண்டவருமான சிறப்புடைய திருநிலை நாயகி அம்மை யார், பிள்ளையார் அருகில் சென்று, கச்சணிந்த தம் திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்தருளி,

குறிப்புரை :

அம்மையார் உண்ணா முலையார் ஆதலின், `பாலடி சில் பொன் வள்ளத் தூட்டென்ன\' இறைவனும் அருள் செய்தார்; அம்மையாரும் அவ்வாறே செய்தருளினார்.

பண் :

பாடல் எண் : 68

எண்ணரிய சிவஞானத்
தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனவூட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கணனார் அருள்புரிந்தார்.

பொழிப்புரை :

திருநிலை நாயகி அம்மையார், நினைத்தற்கு அரிய சிவஞானமாய இனிய அமுதத்தைப் பாலுடனே குழைத்தருளி, தம்மை நோக்கி நிற்கும் பிள்ளையாரின் கண்ணீரைத் துடைத்தருளி, `பாலமுதத்தை உண்பாயாக!\' என்று உண்ணச் செய்ய, பெருமை யுடைய பிள்ளையாரை அங்கு அழுகை தீர்த்துச் சிவபெருமான் அருள் செய்தார்.

குறிப்புரை :

`போதையார் பொற்கிண்ணத்து அடிசில்\' (தி.3 ப.24 பா.2) எனப் பிள்ளையாரும்; `ஞான போனகம் அருளட்டிக் குழைத்த\' (தி.11 ப.27 பா.1 வரி 26) எனப் பட்டினத்து அடிகளும், `பொற்கிண் ணத்தின் ஞான வமிர்தளித்த\' (தி.11 ப.34 பா.73) என நம்பியாண்டார் நம்பிகளும் அருளிய திருவாக்குகள் இவ்வரலாற்றிற்கு அரணா கின்றன. இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 69

யாவருக்குந் தந்தைதாய்
எனுமிவர்இப் படியளித்தார்
ஆவதனா லாளுடைய
பிள்ளையா ராய்அகில
தேவருக்கும் முனிவருக்குந்
தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான
சம்பந்த ராயினார்.

பொழிப்புரை :

எவ்வுயிர்க்கும் தந்தையும் தாயுமாக விளங்கும் அம்மையப்பர் வெளிப்பட்டுத் தாமே இவ்வாறு அளித்தமையின், `ஆளுடைய பிள்ளையார்\' என்னும் திருப்பெயரை உடையவராகி தேவர்கள் முனிவர்கள் முதலிய யாவரும் தெளிந்து அறிய இயலாத, மெய்ப் பொருளாகிய, எக்காலத்தும் கெடுதல் இல்லாத, ஒப்பில்லாத சிவத்தை உணரும் நிலையாய சிவஞானத்தை உணர்ந்து வாழும் அருள் பெற்றவராய நிலையில், சிவஞானசம்பந்தர் என்ற திருப் பெயரை உடையவராயினார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 70

சிவனடியே சிந்திக்குந்
திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும்
பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாம்உணர்ந்தார் அந்நிலையில்.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து நிற்குமாற்றான் சிவமாந்தன்மை பெருகச் செய்யும் ஒப்பில்லாத கலை ஞானத்தையும், பிறவிக்குக் காரணமாய மலக்குற்றத்தை வாராமல் தடுக்கும் மேலாய ஞானமான உணர்வரிய மெய்ஞ்ஞானத்தையும் தவ முதல்வரான சிவஞானசம்பந்தர் அந்நிலையில் உணர்ந்தார்.

குறிப்புரை :

சிவத்தைப் பெறவும் பவத்தை விடவும் பெறுவதே ஞானமாகும். சிவபரம்பொருளே மேலாய பொருள் என்றுணரவும் அதனோடு இடையீடின்றி ஒன்றுபட்டு நிற்கவும் கலைஞானம் துணைபுரிவதாகும். ஆதலின் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தை உவமையிலாக் கலைஞானம் என்றார். உலகியல் அறிவையுணர்த்தும் நூல்களினும் மெய்ப்பொருளையுணர்த்தும் நூல்கள் உயர்வும் சிறப்பும் உடையவாதலின் அவற்றை `உவமை யிலாக் கலைஞானம்\' என்றார்.
பிறவிப் பிணியை அறுத்தற்குரிய மெய்யுணர்வு இருப்பினும் அதனை விடுதற்குக் காலம் வேண்டும். பழக்கம் தவிரப் பழகுதல் அத்துணை எளிதன்று. ஆதலின் `அறமாற்றும்\' என்ற தொடரால் குறித்துக் காட்டினார். ஆதலின், இதனை `உணர்வரிய மெய்ஞ்ஞா னம்\' என்றார். இவ்வாறு நிரல் நிரையாகக் கொண்டு உரைசெய்தற்கு,
மேவரு ஞானம் இரண்டவற் றொன்று விமலனார் பாததா மரையே ஓவறு மன்பின் உணர்திரு வளிக்கும் ஒப்பிலா உயர்கலை ஞானம் தாவரும் பவத்தை வேரொடுங் களையும் தக்கமெய்ஞ் ஞானமொன் றிவற்றால் சாவதும் பிறப்புந் தணப்புறச் சிவத்தைச் சார்ந்தது வாய்நிற்றல் யோகம். -திருத்தணிகைப் புராணம், பா - 353 எனவரும் பாடல் துணை செய்கின்றது.

பண் :

பாடல் எண் : 71

எப்பொருளும் ஆக்குவான்
ஈசநே எனுமுணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார்
அடியார்கள் எனுமறிவும்
இப்படியா லிதுவன்றித்
தம்மிசைவு கொண்டியலும்
துப்புரவில் லார்துணிவு
துகளாகச் சூழந்தெழுந்தார்.

பொழிப்புரை :

எப்பொருள்களையும் இயக்குபவன் ஈசனே என் னும் உணர்வும், அப்பொருளாவது ஆளுடையாரும் அவருடைய அடியார்களும் ஆவர் என்ற அறிவும் இன்றித் தத்தம் அறிவிற்கு ஏற்றவாறு எண்ணி இயல்கின்ற தூய்மையில்லாதவரின் துணிவுகளை எல்லாம் தூளாகுமாறு எண்ணி எழுந்தார்.

குறிப்புரை :

இப்பாடற்கண் குறித்த உணர்வும் அறிவும் முன்னைய பாடலில் முதற்கண் குறிக்கப்பட்ட இருவகை ஞானங்களின் பயனாய், முறையே விளைவனவாம். எப்பொருளும் என்பதால் உயிரும் தளைகளும், ஆக்குவான் ஈசனே என்பதால் இறையும் ஆகிய முப்பொருள்களும் குறிக்கப் பட்டன. ஆக்குதல் - உயிரைப்பற்றிய மலம் முதலிய குற்றங்களைப் படைத்தல் முதலிய ஐந்தொழில்களானும் நீக்கிச் சிவப்பேறும் நல்வாழ்வும் பெறச் செய்தலாம். அப்பொருள்தாம் எனும் அறிவு, `மால்அற நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே\' (சிவஞானபோதம், சூ.12) என்னும் ஞானநூல் கூற்றான் அறியலாம். இவ்வுணர்வும் அறிவுமே சிவஞானபோதத்தின் பயனியலில் குறிக்கப் பெற்றுள்ளன. சிவப்பேற்றையடையும் பேரு ணர்வு 11ஆவது நூற்பாவிலும், மலநீக்கமாம் பயன் 10, 12ஆம் நூற் பாக்களிலும் குறிக்கப் பெறுகின்றன.

பண் :

பாடல் எண் : 72

சீர்மறையோர் சிவபாத
இருதயரும் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யும்
நியமங்கள் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற
பிள்ளையார் தமைநோக்கி
யார்அளித்த பாலடிசில்
உண்டதுநீ எனவெகுளா.

பொழிப்புரை :

சிறப்புடைய சிவபாத இருதயரும் சிறிது நேரத்தில் நீராடித் தாம் செய்யும் கடமைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, கரையில் ஏறிப் பேருணர்வில் விளங்கும் தம் மகனாரைப் பார்த்து `நீ யார் தந்த பாலை உண்டாய்\' எனச் சினக்க,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 73

எச்சில்மயங் கிடவுனக்கீ
திட்டாரைக் காட்டென்று
கைச்சிறியது ஒருமாறு
கொண்டோச்சக் காலெடுத்தே
அச்சிறிய பெருந்தகையார்
ஆனந்தக் கண்துளிபெய்
துச்சியின் மேல் எடுத்தருளும்
ஒருதிருக்கை விரற்சுட்டி.

பொழிப்புரை :

`எச்சில் உண்டாக உனக்கு இதை அளித்தவரை எனக்குக் காட்டு\' எனச் சிவபாத இருதயர் உரைத்துச் சிறிய ஒரு கோலைக் கையில் எடுத்து அடிப்பவரைப் போல் ஓச்சிட, அச்சிறிய பெருந்தகையாரான பிள்ளையாரும், ஒருகாலை எடுத்து நின்று கண்களினின்றும் இன்பவெள்ளம் பொழிய உச்சிமேல் தூக்கிய திருக்கையில் ஒருவிரலால் சுட்டிக் காட்டி,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 74

விண்ணிறைந்த பெருகொளியால்
விளங்குமழ விடைமேலே
பண்ணிறைந்த அருமறைகள்
பணிந்தேத்தப் பாவையுடன்
எண்ணிறைந்த கருணையினால்
நின்றாரை எதிர்காட்டி
உண்ணிறைந்து பொழிந்தெழுந்த
உயர்ஞானத் திருமொழியால்.

பொழிப்புரை :

விண்ணில் நிறைந்து பெருகும் ஞானஒளி கொண்டு, ஆனேற்றின்மீது, பண்சுமந்த அரிய மறைகள் வணங்கிப் போற்ற, உமையம்மையாருடன் எண்ணிறந்த கருணைப் பெருக்கால் எழுந்தருளி நிற்கும் திருத்தோணிபுரத்து இறைவரை எதிரே காட்டி, உள் நிறைந்து தேக்கி மேல் எழுந்து பொழிந்த சிவஞானத் திருவாக் கினால்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 75

எல்லையிலா மறைமுதல்மெய்
யுடன்எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழாலிம்
மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
பல்லுயிருங் களிகூரத்
தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத்
திருச்செவியைச் சிறப்பித்து.

பொழிப்புரை :

எண்ணிறந்த மறைகளின் முதல் எழுத்தை மெய்யுடனே தொடங்கி எழுதும் மறையை, வளம் வாய்ந்த நெடுந் தமிழால் இப்பேருலகில் உள்ளவர்க்கு உரை சிறந்து பயனளிக்க, பல உயிர்களும் இன்பம் அடைய, தம் திருப்பாடல் இறைவரிடம் செல்கின்ற வகையைப் பெறும் பொருட்டாய்த் திருச்செவியைச் சிறப்பித்து,

குறிப்புரை :

மறைமுதல் - ஓங்காரம். மெய் - த் என்னும் மெய்; சிவசக்தியின் உண்மைநிலை. இது காயத்திரி மந்திரங்களின் இறுதி எழுத்தாகவும், சாந்தோக்கியம் முதலிய உபநிடதங்களில் பிரமப் பொருளைக் குறிக்கும் சொல்லாகவும் அமைந்துள்ளது. சத் என்பதன் இறுதி மெய்யாகிய `த்\' என்பது சிவமூலம் என வாயு சங்கிதை குறிக்கும் என்பர். த் + ஓ = தோ என்பதாகும். மல்லல் - வளம்; உயிர் உய்திபெறுதற்குரிய வளம். `தோடுடைய செவியன்\' எனச் சிறப்பித் தது பிள்ளையார் தம் திருப்பாடலை ஏற்கும் இறைவனின் உடற்கருவி யாய செவியாய் இருத்தல் பற்றியாம் என்பது ஆசிரியர் தரும் விளக்க மாகும். `திருவுலாப் புறம் பாடினேன்; திருச்செவிசாத் திடப் பெறல் வேண்டும்\' (தி.12 சரு.13 பா.47) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 76

செம்மைபெற எடுத்ததிருத்
தோடுடைய செவியன்எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம்
பிரமபுரம் மேவினார்
தம்மையடை யாளங்க
ளுடன்சாற்றித் தாதையார்க்
கெம்மையிது செய்தபிரான்
இவனன்றே எனவிசைத்தார்.

பொழிப்புரை :

செம்மை பொருந்தும்படி தொடங்கிய, `தோடு டைய செவியன்\' என்ற மெய்ம் மொழியான திருப்பதிகத்தில், திருப் பிரமபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அடையா ளங்களுடன் சொல்லி `எம்மை இது செய்தவன் இப்பெருமான் அன்றே\' (தி.1 ப.1) என்று தந்தையாருக்குக் கூறியருளினார்.

குறிப்புரை :

அடையாளங்கள் - தோடுடைய செவியன், விடை யேறி, மதிசூடி, பொடிபூசி என்பனவாம். திருமுறைகளில் மூத்த திருப்பதிகம் எனக் காரைக்கால் அம்மையாரால் அருளப்பெற்ற `கொங்கை திரங்கி\' (தி.11 மூத்த.1) எனும் பதிகம் நட்டபாடைப் பண்ணில் அமைந்தது போல, சிவஞானசம்பந்தரின் இம்முதற்பதிகமும் நட்டபாடைப் பண்ணில் அமைந்தது திருவருட் செயலாகும். இவ்வைந்து பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 77

மண்ணுலகில் வாழ்வார்கள்
பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை
கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த
ஆக்கப்பா டருள்செய்தார்.

பொழிப்புரை :

இம்மண்ணுலகத்தில் வாழும் உயிர்கள் பிழையைச் செய்தாலும், அவை தம்மை வந்து அடையின் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் தம் பெருங்கருணையினால் அவற்றை மன்னித்தருளிக் கைகொடுத்து ஆள்வார் என்பதைக் காட்டவே, நல்லுணர்வு இல்லாதவன் ஆன வன்கண்மையுடைய அரக்கனான இராவணன் திருக்கயிலை மலையை எடுக்க, உடல் முறிவுபட்டுப் பின் இசையைப் பாடப் பெருமையுடைய இறைவர் அவனுக்கும் அருள்செய்த ஆக்கப்பாடுகளை அந்தத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடினார்.

குறிப்புரை :

பதிகந்தொறும் வரும் எட்டாவது பாடலில் இறைவன் இராவணனுக்குச் செய்த அருளிப்பாட்டைக் குறிப்பிடுவர் பிள்ளை யார். இதற்குக் காரணம் தவறு செய்த உயிர்கள் உண்மையிலேயே அத்தவறை உணர்ந்து, தவறு செய்தமைக்குப் பொறுத்தற்கும், இனித் தவறு செய்யாமைக்கு உறுதிப்பாடும் கொண்டு இறைவனை உள்ளன் போடு வேண்டின், இறைவன் மன்னித்தருளுவன் என்பதை நன்குணர் வாம். எனவே பாவமன்னிப்பு என்பது நம் நெறிக்கு இன்று நேற்றன்று தோற்றமில் காலத்தேயே உண்டு எனினும், பிறபிற மதம் போல அத்துணை எளிமையுடையதன்று. `எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று\' (குறள், 655) என்பதே நம் அறமாம்.

பண் :

பாடல் எண் : 78

தொழுவார்க்கே அருளுவது
சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே
மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும்
பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும்
துதித்துய்ந்த படிவிரித்தார்.

பொழிப்புரை :

தம்மை வணங்குபவருக்கே அருளுவர் இறைவர் என்பதைத் தெரிந்து கொண்டும் தொழாதவராகி, தவறான மனத்தால் மயக்கம் கொண்ட மாலும் அயனும், இழிந்த பன்றியும் அன்னப் பற வையுமாய்க் கீழும் மேலும் போய்க் காண மாட்டாமல் விழுவார்க ளாய்ப் பின்னர் திருவைந்தெழுத்தைப் போற்றி உய்தி பெற்றமையை மேலே விரிவாய் எடுத்து உரைத்தார்.

குறிப்புரை :

இது பதிகந்தொறும் வரும் ஒன்பதாவது பாடலின் கருத்தாகும். வழுவான மனம் - யான் காண்பேன் என முனைப்புடன் சென்ற மனம். உயிர்கள் இவ்வநுபவத்தைக் கருதி, யான் எனது என்னும் செருக்கற வேண்டும் என்பதே இப்பாடற் கருத்தாகும். யான்செய்தேன் பிறர்செய்தா ரென்னதியா னென்னும் இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத் தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே தனையளித்து முன்னிற்கும் வினையொழித் திட்டோடும் நான்செய்தே னெனுமவர்க்குத் தானங் கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம் ஊன்செய்யா ஞானந்தா னுதிப்பி னல்லால் ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே. -சித்தி. பத்தாம் சூத்.2 எனவரும் சித்தியார் கூற்றும் காண்க.

பண் :

பாடல் எண் : 79

வேதகா ரணராய
வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார்
தம்மிலே நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர்
புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே யெனமொழிந்தார்
எங்கள்பிரான் சம்பந்தர்.

பொழிப்புரை :

மறைகளை அருளிய முன்னவரான பிறைச் சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடைய சிவபெருமானின் நெறியை, அறிந்து அடைந்து உய்தி பெறாதவரான புறச் சமயத்தாருள், நன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் ஆன இவர்களின் நெறி கள் பழியை விளைக்கும் கேடுகளேஆம் என எம்பெருமானாகிய ஞானசம்பந்தர் மொழிந்தருளினார்.

குறிப்புரை :

இது பதிகந்தொறும் வரும் பத்தாம் பாடற்கருத்தாகும். `பரசமயங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே\' (சிவஞா. சித்தி. சூ.3 பா.90) எனவரும் ஞானநூற் பொருளைத் தெரிந்து தெளிந்து கடைப்பிடித்தல் கடனாம்.

பண் :

பாடல் எண் : 80

திருப்பதிகம் நிறைவித்துத்
திருக்கடைக்காப் புச்சாத்தி
இருக்குமொழிப் பிள்ளையார்
எதிர்தொழுது நின்றருள
அருட்கருணைத் திருவாள
னார்அருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும் பினிலார்த்துப்
பிரசமலர் மழைபொழிந்தார்.

பொழிப்புரை :

திருப்பதிகத்தை நிறைவாகப் பாடித் திருக்கடைக் காப்பையும் அருளிய மறைமொழியையுடைய பிள்ளையார் இறைவ னைத் தொழுது நின்றாராக, அருட் கருணையுடைய சிவபெருமா னின் நிறைந்த அருளைக் கண்டு, தேவர்கள் விரிந்த விண்ணில் மகிழ் வொலி எழுப்பித் தேனைச் சொரியும் தெய்வ மலர்களை மழையாய்ப் பொழிந்தனர்.

குறிப்புரை :

இறைவன் அருளியது திருமறையாதல் போலப் பிள் ளையார் அருளியதும் மறைமொழியேயாம். பதிகம் நிறைவு பெற்ற தும், அதனை முடித்துக் காட்டும் வகையில், தமது பெயர், பதிகப் பயன் முதலியவற்றைத் தம் இலச்சினையாகக் கூறியருளும் பாடல் திருக் கடைக்காப்பாகும்.

பண் :

பாடல் எண் : 81

வந்தெழும்மங் கலமான
வானதுந் துபிமுழக்கும்
கந்தருவர் கின்னரர்கள்
கானவொலிக் கடல்முழக்கும்
இந்திரனே முதல்தேவர்
எடுத்தேத்தும் இசைமுழக்கும்
அந்தமில்பல் கணநாதர்
அரஎனுமோ சையின்அடங்க.

பொழிப்புரை :

அழிவற்ற சிவகணநாதர்கள் பலர் முழக்கும் `அரகர\' என்ற ஓசையுள் அடங்குமாறு, மங்கலமான தேவமுழக்கும், கந்தருவர், கின்னரர் முதலான தேவ இனத்தாரின் கடல் போன்று முழங்கும் ஒலியும், இந்திரன் முதலிய தேவர்கள் எடுத்துப் போற்றும் இசைகளின் ஒலியும் ஆகிய இத்தகைய ஒலிகளின் தொகுதி இது பொழுது ஒலிப்பதாயின.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 82

மறைகள் கிளர்ந்தொலி வளர
முழங்கிட வானோர்தம்
நிறைமுடி உந்திய நிறைமணி
சிந்திட நீள்வானத்
துறையென வந்துல கடைய
நிறைந்திட ஓவாமெய்ப்
பொறைபெரு குந்தவ முனிவர்
எனுங்கடல் புடைசூழ.

பொழிப்புரை :

மறைகள் எழுந்து ஒலிபெருக முழங்கவும், தேவர் களின் நிறைந்த தலையணிகள் (கிரீடங்கள்) ஒன்றுடன் ஒன்று நெருக் குண்டு நிரல்பட அமைந்த மணிகள் சிதற, அவை நீண்ட வானத்தினின் றும் விழும் பனிநீர்த் துளிகள் போல் வந்து உலகெங்கும் நிறையவும், இடையறாது மெய்ம்மைக்கண் நிற்றலும் அமைதி பெருகவும் வாழும் தவமுனிவர்களின் கூட்டமாகிய கடல் இருமருங்கும் சூழவும்,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 83

அணைவுற வந்தெழும் அறிவு
தொடங்கின அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள்
இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர் பொருவிடை
தங்கிய புணர்பாகத்
துணையொ டணைந்தனர் சுருதி
தொடர்ந்த பெருந்தோணி.

பொழிப்புரை :

தம்மை வந்து அடையும் பக்குவமும் பத்திமையும் உடைய அடியவரிடத்தினின்றும் ஒப்பில்லாத வலிமையுடைய பிறவியாகிய பெருங்கடல்கள் நீங்குமாறு தம் இரு திருவடிகளான இனிய புணையை அருளும் கருணையுடைய திருத்தோணியப்பர், போர் செய்தற்குரிய வலிமையுற்ற ஆனேற்றின் மேல் தம்முடன் அமர்ந்தருளும் துணைவியாருடனே, மறைகள் தொடர்ந்து முழங்கும் திருத்தோணிச் சிகரத்திற்கு எழுந்தருளினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 84

அண்ணல் அணைந்தமை கண்டு
தொடர்ந்தெழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்சிறு
போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து
விடாது கலந்தேகப்
புண்ணியர் நண்ணிய பூமலி
கோயிலின் உட்புக்கார்.

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்கோயிலில் எழுந்தருளப் பெற்றதைப் பார்த்து, அப்பெருமானைத் தொடர்ந்து எழும் அன்பி னால், கண்களின் வழியே சென்ற கருத்துவிடாது கலந்ததால், பொய் கைக் கரையில் நின்றருளிய மறைச் சிறுவரான யானைக்கன்று போன்ற பிள்ளையாரும், புண்ணிய மூர்த்தியாய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அழகிய திருத்தோணித் திருக்கோயிலுக்குள் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

அம்மையப்பராய்க் காட்சி கொடுத்து ஞானப்பாலும் ஊட்டியதால் கண்வழிப் புகுந்த அக்காட்சி, உள்ளத்தே பதிந்தும் கவர்ந்தும் இருந்தமையினால் அவ்வம்மையப்பர் எழுந்தருளியிருக் கும், தோணிக்குள் சென்று, மீண்டும் கண்டு வணங்கி மகிழ எண் ணினார். `கண்வழிப் புகுந்த அக்கள்வனே கொலாம்\' எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 85

ஈறில் பெருந்தவம் முன்செய்து
தாதை யெனப்பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை
குவித்து மகிழ்ந்தாடி
வேறு விளைந்த வெருட்சி
வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமி ழின்பொரு
ளான குறிப்போர்வார்.

பொழிப்புரை :

அளவற்ற தவத்தைச் செய்து இவருடைய தந்தை என அழைத்தற்குரிய சிவபாத இருதயர், பிள்ளையாரை அடிக்க ஓச்சிய சிறுகோலும் நெகிழ, அம்மலர்க் கைகளைக் கூப்பியவாறு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடி, வேறாக விளைந்தனவாய வெருட்சி, வியப்பு, விருப்பு என்ற இவற்றுடன் கூடியவராய்த் தம் பிள்ளையார் எடுத்துச் சொல்லும் அருந்தமிழின் பொருளான குறிப்பை எண்ணு வாராகி,

குறிப்புரை :

மாறு - சிறிய கோல். விழுந்த - தானே கையினின்றும் விழ; `விற்கையினின்று இடைவீழ\' என்புழிப்போல. வேறு விளைந்த - முன் இருந்த மனநிலைக்கு வேறாக. வெருட்சி - அச்சம், சினம் கொண்டதனால் ஆயது. வியப்பு - தாம் இதுகாறும் கண்டறியாத இறைக் காட்சியைப் பிள்ளையார் காட்டக் கண்ட வியப்பு. விருப்பு - உலகியற் பாங்கால் கொண்ட விருப்பினும், அருளியற் பாங்கால் தோன்றிய பெரு விருப்பு.

பண் :

பாடல் எண் : 86

தாணு வினைத்தனி கண்டு
தொடர்ந்தவர் தம்மைப்போல்
காணுதல் பெற்றில ரேனும்
நிகழ்ந்தன கண்டுள்ளார்
தோணி புரத்திறை தன்னரு
ளாதல் துணிந்தார்வம்
பேணு மனத்தொடு முன்புகு
காதலர் பின்சென்றார்.

பொழிப்புரை :

சிவபெருமானைத் தாமே தனியே கண்டு அவரைத் தொடர்ந்தவரான பிள்ளையாரைப் போல், தாம் அவ் இறைவரைக் காணாராயினும், நிகழ்ந்தனவான அடையாளக் குறிக ளையும் திருப்பதிகத் தமிழ்பாடிச் சுட்டிக் காட்டியதையும் கண்டவராத லால், இது தோணிபுர இறைவரின் திருவருள் என்பதை உணர்ந்து, மீதூர்ந்த அன்பு பொருந்திய மனத்துடன் தம்முன்பு சென்று கொண்டிருக்கும் திருமகனாரைத் தொடர்ந்து சென்றார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 87

அப்பொழுது அங்கண் அணைந்தது
கண்டவர் அல்லாதார்
முப்புரி நூன்மறை யோர்கள்
உரோம முகிழ்ப்பெய்தி
இப்படி யொப்பதொர் அற்புதம்
எங்குள தென்றென்றே
துப்புறழ் வேணியர் கோயிலின்
வாயில் புறஞ்சூழ.

பொழிப்புரை :

அதுபொழுது அங்கு நிகழ்ந்தனவற்றைக் கண்டவர்களும், காணாதநிலையில் கேட்டவர்களும், முப்புரிநூல் அணிந்த மறையவர்களும் `இவ்வாறாய அற்புத நிகழ்ச்சி வேறு யாண்டு நிகழ்ந்துள்ளது?\' எனக் கூறியவாறு, பவளம் போன்ற சிவந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்தோணிக் கோயிலின் திருவாயில் புறத்தில் வந்து சூழ்ந்தனராக,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 88

பொங்கொளி மால்விடை மீது
புகுந்தணி பொற்றோணி
தங்கி இருந்த பெருந்திரு
வாழ்வு தலைப்பட்டே
இங்கெனை யாளுடை யானுமை
யோடும் இருந்தான்என்
றங்கெதிர் நின்று புகன்றனர்
ஞானத் தமுதுண்டார்.

பொழிப்புரை :

ஞான அமுதை உண்ட பிள்ளையார் தாமும், பொங்கும் ஒளியையுடைய ஆனேற்று ஊர்தியில் இவர்ந்து அழகிய பொலிவுமிக்க திருத்தோணியுள் எழுந்தருளியிருக்கும் பெருந்திரு வாழ்வைச் சென்று கூடி, `என்னை ஆளுடைய பெருமான் உமையம் மையாருடன் இங்கு எழுந்தருளியிருந்தான்\' என்னும் கருத்துடைய திருப்பதிகத்தை இறைவன் திருமுன்னிலையில் நின்று போற்றி வணங்கினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்த `நறவம் நிறை வண்டு\' (தி.1 ப.74) எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம் முழுதும் `உமையோடு இருந்தானே\' என நிறைவு பெறுவதைத் திரு உளம் பற்றியே, ஆசிரியர் இத்தொடரை எடுத்து இயம்புவார் ஆயினர்.

பண் :

பாடல் எண் : 89

இன்னிசை ஏழும் இசைந்த
செழுந்தமிழ் ஈசற்கே
சொன்முறை பாடு தொழும்பருள்
பெற்ற தொடக்கோடும்
பன்மறை வேதியர் காண
விருப்பொடு பால்நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின்
நின்று புறப்பட்டார்.

பொழிப்புரை :

அன்புடன் ஞான அமுதத்தின் மணம் கமழும் திருவாயையுடைய திருஞானசம்பந்தர், மறைகளை ஓதும் வேதியர் பலரும் காண, இனிய ஏழிசைகளும் பொருந்திய செழுந்தமிழ்த் திருப்பதிகங்களைச் சொன்முறையாகச் சிவபெருமானுக்கே உரியவா கப் பாடுகின்ற திருத்தொண்டாகிய அடிமைத் திறத்தையும் அருளை யும் பெற்ற பிணைப்புடனே கோயிலினின்றும் புறப்பட்டார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 90

பேணிய அற்புத நீடருள்
பெற்ற பிரான்முன்னே
நீணிலை யில்திகழ் கோபுர
வாயிலின் நேரெய்தி
வாணில வில்திகழ் வேணியர்
தொண்டர்கள் வாழ்வெய்துந்
தோணி புரத்தவர் தாமெதிர்
கொண்டு துதிக்கின்றார்.

பொழிப்புரை :

விரும்பிய அற்புதமான நீடிய திருவருளைப் பெற்ற ஞானப் பிள்ளையாரின் முன்பு, ஒளிபொருந்திய சந்திரனை விடச் சிறந்து விளங்குகின்ற சடையையுடைய சிவபெருமானின் தொண்டர்களும், வாழ்வடையும் திருத்தோணிபுரத்தில் உள்ளவர்க ளும், நீண்ட நிலைகளுடன் விளங்குகின்ற கோயிலின் வாயிலை அடைந்து தாம் கூடி எதிர்கொண்டு பின்வருமாறு போற்றத் தொடங் கினர்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 91

காழியர் தவமே கவுணியர்
தனமே கலைஞானத்
தாழிய கடலே அதனிடை
யமுதே அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை
வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திரு
வருள்பெற் றனையென்பார்.

பொழிப்புரை :

`காழிப்பதியில் உள்ளார் தம் தவப்பயனாய்த் தோன்றியவரே! கவுணியரின் செல்வமே! கலைஞானம் நிறைந்த ஆழ்ந்த கடல் போன்றவரே! அக்கடலின் அமுதம் போன்றவரே! அடியார் கண்டு வாழும் பொருட்டு இம்மண்ணுலகத்தின் மீது தோன்றி, வானவரின் ஒப்பற்ற தலைவரான சிவபெருமானும், ஏழிசை மொழியாளாய உமையம்மையாரும் ஆகிய இருவர்தம் திருவருளை யும் ஒருங்கே பெற்றீர்!\' என உரைப்பாரும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 92

மறைவளர் திருவே வைதிக
நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர்
புகலே பொருபொன்னித்
துறைபெறு மணியே சுருதியின்
ஒளியே வெளியேவந்
திறையவன் உமையா ளுடன்அருள்
தரஎய் தினையென்பார்.

பொழிப்புரை :

`மறைகளை வளர்க்கும் செல்வமே! மறை நெறியின் நிலையான பொருளே! வளர்கின்ற ஞானம் என்ற கருத் தாங்கிய மேகமே! புகலி நகரத்தவரின் புகலிடமே! அலைமோதும் காவிரித்துறையில் பெறத்தக்க மணியே! மறைகளில் விளங்கும் ஒளியே! சிவபெருமான் உமையம்மையாருடன் எழுந்தருளி வந்து அருள் வழங்கப்பெறும் பேறு பெற்றீர்! என்பாரும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 93

புண்ணிய முதலே புனைமணி
அரைஞா ணொடுபோதும்
கண்ணிறை கதிரே கலைவளர்
மதியே கவின்மேவும்
பண்ணியல் கதியே பருவம
தொருமூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்
அருள்பெற் றனையென்பார்.

பொழிப்புரை :

`புண்ணியங்களின் முதலே! மணியணிந்த அரை ஞாணுடன் போந்து காட்சியளிக்கும் கண் நிறைந்த கதிரே! கலைகள் வளரும் சந்திரனே! அழகு பொருந்தும் பண்களுக்கும் பெறற்கரிய கதியே! பருவம் மூன்றாண்டி,ல் மனத்தகத்தது என்றறிவார்களுக்கு உள்நின்று அருளும் பொருளாய் நின்ற சிவபெருமானின் திருவரு ளைப் பெற்றீர்!\' என்பாரும் ஆனார்கள்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 94

என்றினைய பலகூறி இருக்குமொழி
அந்தணரும் ஏனை யோரும்
நின்றுதுதி செய்தவர்தாள் நீள்முடிக்கண்
மேல்ஏந்தி நிரந்த போது
சென்றணைந்த தாதையார் சிவபாத
இருதயர்தாம் தெய்வ ஞானக்
கன்றினைமுன் புக்கெடுத்துப் பியலின்மேற்
கொண்டுகளி கூர்ந்து செல்ல.

பொழிப்புரை :

என இவ்வாறெல்லாம் கூறியருளி, மறை மொழி களையுடைய அந்தணர்களும் மற்ற அடியவர்களும் நின்று போற்றி, அப்பிள்ளையாரின் திருவடிகளைத் தம்முடியில் அணிந்து, நிரல்பட நின்றபோது, தாமே முன்சென்ற தந்தையாரான சிவபாத இருதயர் தெய்வத்தன்மை வாய்ந்த சிவஞானக் குழந்தையான பிள்ளையாரை எடுத்துத் தோளில் சுமந்து பெருமகிழ்வுடனே செல்ல,

குறிப்புரை :

பியலில் - தோளில்.

பண் :

பாடல் எண் : 95

மாமறையோர் குழாத்தினுடன் மல்குதிருத்
தொண்டர்குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில்
எறிந்தார்க்குந் தன்மை யாலே
பூமறுகு சிவானந்தப் பெருக்காறு
போத அதன்மீது பொங்கும்
காமர்நுரைக் குமிழியெழுந் திழிவனபோல்
விளங்குபெருங் காட்சித் தாக.

பொழிப்புரை :

சிறந்த மறையவர் கூட்டத்துடன் பெருகிய அடியார்தம் கூட்டமும் சூழ்ந்து, தம் உடையின் மேல் உள்ள ஆடைகளையும் உத்தரியங்களையும் விண்ணில் வீசி மகிழ்வொலி செய்கின்ற தன்மையினால், சீகாழியின் அழகிய தெரு, சிவானந்தமாய வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்ல, அதன் மேல் பொங்கும் நுரைக் குமிழிகள் மேலெழுவதும் இறங்குவதும் போன்ற காட்சியுடையதாக,

குறிப்புரை :

அறுவை - தம் உடைமீது கட்டப்பெற்றிருக்கும் ஆடை. உத்தரியம் - மேலாடை. மறையவரும் அடியவரும் வீதியில் பெருகச் செல்வது சிவானந்த ஆறு செல்வது போன்றிருந்தது. அவர்கள் தம் மகிழ்ச்சி மீதூர்வால் அறுவையையும் மேலாடையையும் விண்ணில் வீசி மகிழ்வது, அவ்வாற்றின் நுரைகள் மேல் எழுவதும் இறங்குவதும் போன்றிருந்தன.

பண் :

பாடல் எண் : 96

நீடுதிருக் கழுமலத்து நிலத்தேவர்
மாளிகைமேல் நெருங்கி அங்கண்
மாடுநிறை மடவார்கள் மங்கலமாம்
மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடுமலி நறுமலருஞ் சுண்ணமும்வெண்
பொரியினொடுந் தூவி நிற்பார்
கோடுபயில் குலவரைமேல் மின்குலங்கள்
புடைபெயருங் கொள்கைத் தாக.

பொழிப்புரை :

நீடும் சீகாழியில் அந்தணர்களின் மாளிகைமேல் நெருங்கி, அவ்விடத்தின் பக்கத்தில் நிறைந்த மறையோரின் மங்கை யர், உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலைகளின் மேலே மின்னல் கூட்டம் புடைபெயர்ந்து போகின்ற காட்சியைக் கொண்டதைப் போல், மங்கலமான பெருஞ்சொற்களால் வாழ்த்தியும், மணமுடைய இதழ் களையுடைய புதிய குளிர்ந்த பூக்களையும் சுண்ணப் பொடிகளையும் வெண்ணெல் பொரியுடனே தூவியும் நிற்பாராய்,

குறிப்புரை :

கோடு - மலை. மங்கையர்கள் சுண்ணமும் பொடியும் தூவி மங்கல வாழ்த்தெடுத்து அடைவது, மின் எழும்பொழுது தோன் றும் ஒளி போன்றது என்றார்.

பண் :

பாடல் எண் : 97

மங்கலதூ ரியந்துவைப்பார் மறைச்சாமம்
பாடுவார் மருங்கு வேதிப்
பொங்குமணி விளக்கெடுத்துப் பூரணகும்
பமும்நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கவர்கள் மனத்தெழுந்த அதிசயமும்
பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்குதிரு மலிவீதிச் சண்பைநகர்
வலஞ்செய்து சாருங் காலை.

பொழிப்புரை :

மற்றும் சிலர், மங்கல இயங்களை இசைப்பார்கள். சிலர், சாம கானங்களைப் பாடுவார்கள். சிலர், அருகில் உள்ள திண் ணைகளில் பொங்கும் அழகிய விளக்குகளை ஏந்தி நிறைகுடங்களை நிரல்பட வைப்பார்கள். இங்ஙனம் அந்நகரத்தவர்கள் தத்தம் மனத்தில் எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பெருகப் போற்றி மகிழ, அவ் வழகிய வீதிகளின் வழியே சண்பை நகரை வலமாக வரும்பொழுது,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 98

தந்திருமா ளிகையின்கண் எழுந்தருளிப்
புகும்பொழுது சங்க நாதம்
அந்தரதுந் துபிமுதலா அளவில்பெரு
கொலிதழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப்பொற் றோணிமிசை இருந்தபிரான்
உடன்அமர்ந்த துணைவி யாகும்
பைந்தொடியாள் திருமுலையின் பாலறா
மதுரமொழிப் பவள வாயார்.

பொழிப்புரை :

அழகிய பொன்மயமான திருத்தோணியின் மேல் எழுந்தருளியிருக்கும் இறைவருடன் கூடிய துணைவியாரான திரு நிலைநாயகி அம்மையாரின் திருமுலைப்பாலின் மணம் மாறாத இனிய மொழியை உடைய பவளம் போன்ற வாயையுடைய பிள்ளை யார், தம் திருமாளிகைக்கு எழுந்தருளி உட்செல்லும் பொழுது, சங்கு ஒலிகளும் தேவதுந்துபி முதலாய அளவில்லாத பெருகிய ஒலிகளும் மிக, உள்ளே புகலானார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 99

தூமணிமா ளிகையின்கண் அமர்ந்தருளி
அன்றிரவு தொல்லை நாத
மாமறைகள் திரண்டபெருந் திருத்தோணி
மன்னிவீற் றிருந்தார் செய்ய
காமருசே வடிக்கமலங் கருத்திலுற
இடையறாக் காதல் கொண்டு
நாமநெடுங் கதிர்உதிப்ப நண்ணினார்
திருத்தோணி நம்பர் கோயில்.

பொழிப்புரை :

தூயதும் அழகியதுமான திருமாளிகையில் அமர்ந்திருந்து சிவஞானம் வழங்கப்பெற்ற அன்றிரவில், பழமை யான ஒலிவடிவாய பெருமறைகள் திரண்டு உருவெடுதாற் போன்ற திருத்தோணியில் நிலைபெற்று எழுந்தருளியிருக்கும் சிவபெருமா னின் திருவடித் தாமரைகள் தம் கருத்தில் பொருந்த நீங்காத காதல் கொண்டவராகி, ஒளிபெருகும் ஞாயிறு தோன்றும் முன், திருத்தோணி யப்பரின் திருக்கோயிலைச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 100

காதலுடன் அணைந்துதிருக் கழுமலத்துக்
கலந்துவீற் றிருந்த தங்கள்
தாதையா ரையும்வெளியே தாங்கரிய
மெய்ஞ்ஞானந் தம்பால் வந்து
போதமுலை சுரந்தளித்த புண்ணியத்தா
யாரையும்முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள்பெற்றுத் திருக்கோலக்
காஇறைஞ்ச விருப்பிற் சென்றார்.

பொழிப்புரை :

பெருகிய அன்புடன் சேர்ந்து திருக்கழுமலம் எனும் அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் தம் தந்தையாரையும், தம்மிடம் வெளிப்பட்டு வந்து யாவராலும் காண்டற்கரிய மெய்ஞ் ஞானத்ததைத் திருமுலைசுரந்து வரும் பாலுடன் கலந்து தமக்கு ஊட் டிய புண்ணிய வடிவான திருத்தாயாரையும் முன் வணங்கிப் போற்றி, மேன்மையான அருளைப் பெற்றுத் `திருக்கோலக்கா\' என்ற திருப் பதியை வணங்கும் பொருட்டு விருப்புடன் சென்றார்.

குறிப்புரை :

வணங்கிப் போற்றிய திருப்பதிகம், `எம்பிரான்\' (தி.2 ப.40) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 101

பெருக்குஓலிட் டலைபிறங்கும் காவிரிநீர்
பிரசமலர் தரளம் சிந்த
வரிக்கோல வண்டாட மாதரார்
குடைந்தாடும் மணிநீர் வாவித்
திருக்கோலக் காவெய்தித் தேவர்பிரான்
கோயில்வலஞ் செய்து முன்னின்
றிருக்கோலிட் டறிவரிய திருப்பாதம்
ஏத்துவதற் கெடுத்துக் கொள்வார்.

பொழிப்புரை :

நீர்ப்பெருக்கால் ஒலிமிகுந்து அலைகள் பெருகும் காவிரியாறு, நல்ல நீருடன் தேன் மிகுந்த மலர்களையும் முத்துக் களையும் சொரிய, அம்மலர்களைச் சூழ்ந்து வண்டுகள் மொய்க்க, மங்கையர் குடைந்து நீராடுகின்ற நீரையுடைய வாவிகள் பொருந்திய `திருக்கோலக்கா\' என்ற பதியையடைந்து, தேவர்களின் தலைவரான இறைவரின் திருக்கோயிலை வலமாக வந்து, திருமுன்நின்று, மறை கள் முறையிட்டும் அறிதற்கு அரிய இறைவரின் திருவடிகளைப் போற் றத் தொடங்கியவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 102

மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின்
விழுப்பொருளை வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித்
திங்கள்பரித் தருளு வானை
மைந்நிறைந்த மிடற்றானை மடையில்வா
ளைகள்பாய என்னும் வாக்கால்
கைந்நிறைந்த ஒத்துஅறுத்துக் கலைப்பதிகம்
கவுணியர்கோன் பாடுங் காலை.

பொழிப்புரை :

மெய்ம்மை நிறைந்த செம்பொருள் எனப் படுகின்ற நான்மறைகளில் கூறப்படும் பொருளாய் உள்ளவரை, திருச்சடையின் மேல் பாம்புடன் பசுமையான பிறைச் சந்திரனைத் தாங்குபவரை, நஞ்சுடைய திருமிடற்றையுடையவரை, `மடையில் வாளைகள் பாய\' என்ற திருப்பதிகத் திருவாக்கினால், திருக்கரங் களைக் கொண்டு அமைக்கும் காலவரையறையினைச் செய்யும் தாள ஒத்துச் செய்து, கலைகள் நிரம்பிய திருப்பதிகத்தைக் கவுணியர் பெருமானான சம்பந்தர் பாடிய போது,

குறிப்புரை :

கைந்நிறைந்த ஒத்து அறுத்து - பாட்டின் இசைக்கு ஏற்றவாறு கைகளைத் தட்டுதல், நிறுத்தல், எடுத்தல் ஆகிய தொழில் களால் தக்கவாறு அளவுபடுத்துவது. இதுபொழுது பாடி அருளிய பதிகம் `மடையில் வாளை\' (தி.1 ப.23) எனத் தொடங்கும் தக்கராகப் பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 103

கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலும்
கண்டருளிக் கருணை கூர்ந்த
செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும்
எழுதியநற் செம்பொற் றாளம்
ஐயரவர் திருவருளால் எடுத்தபா
டலுக்கிசைந்த அளவால் ஒத்த
வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர்
கைத்தலத்து வந்த தன்றே.

பொழிப்புரை :

அங்ஙனம் திருக்கைகளால் தாள ஒத்து அறுதி யிட்டுப் பாடவும் (இறைவர்) கண்டு, அருள் செய்ய, கருணை கூர்ந்த தேவர் பெருமானின் திருவைந்தெழுத்துப் பொறித்த நல்ல செம்பொன் தாளங்கள், இறைவரின் அருளால் எடுத்த அத்திருப்பதிகத்திற்குப் பொருந்திய அளவுபட, வரும் மறைச் சிறுவரான பிள்ளையாரின் திருக்கைகளில் அது பொழுதே வந்து சேர்ந்தன.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. சென்ற பாடலில் கூறியவாறு `மடையில் வாளை\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைக் கையினால் ஒத்தறுத்துப் பாடுமளவில் இறையருளால் திருவைந்தெ ழுத்துப் பொறித்த பொற்றாளம் பிள்ளையார் கையில் வரப் பெற்றன. இவ்வரலாற்றிற்கு, `நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்த\' (தி.7 ப.62) எனவரும் சுந்தரர் திருவாக்கும், `எழுத் தஞ்சும் இட்டசெம்பொற்றாளங்கள் ஈய\' (தி.11 ப.34 பா.82), `பெற்றது ... செம்பொன் தாளம் அவையே\' (தி.11 ப.36 பா.4) எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் வாக்குகளும் அரணாகின்றன.

பண் :

பாடல் எண் : 104

காழிவரும் பெருந்தகையார் கையில்வருந்
திருத்தாளக் கருவி கண்டு
வாழியதந் திருமுடிமேற் கொண்டருளி
மனங்களிப்ப மதுர வாயில்
ஏழிசையுந் தழைத்தோங்க இன்னிசைவண்
தமிழ்ப்பதிகம் எய்தப் பாடித்
தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக்
கடைக்காப்புச் சாத்தி நின்றார்.

பொழிப்புரை :

சீகாழியில் வந்து தோன்றிய பெருந்தகையார் ஆன ஆளுடைய பிள்ளையார், தம் திருக்கையில் வந்த தாளத்தைப் பார்த்துப் பெரும் பேறு எனக் கருதி அதனைத் தம்திருமுடிமீது வைத்து, மனம் மகிழ, இனிமை மிக்க திருவாக்கால் ஏழிசைகளும் தழைத்து ஓங்க, இனிய இசை பொருந்திய அத்தமிழ்ப் பதிகத்தைப் பொருத்த மாகப் பாடி, விரும்பி ஏற்றருளிய குழை அணிந்த சிவபெருமானின் திருமுன்னிலையில் தக்க திருக்கடைக் காப்புச் சாத்தி நின்றார்.

குறிப்புரை :

நலங்கொள் காழி ஞானசம் பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே. (தி.1.ப.23.பா.11) என்பது திருக்கடைக்காப்பாக அமைந்த திருப் பாடலாகும். `வினை போய்\' என்பதால் பாச நீக்கமும் `ஓங்கி வாழ் வரே\' என்பதால் சிவப் பேறும் பெறுதலின், இதனினூங்கு உயிர் பெறத் தக்க தொருபயன் இல்லையாதலின் இதனைத் `தக்க திருக்கடைக் காப்பு\' என்றார்.

பண் :

பாடல் எண் : 105

உம்பருல கதிசயிப்ப ஓங்கியநா
தத்தளவின் உண்மை நோக்கித்
தும்புருநா ரதர்முதலாம் சுருதியிசைத்
துறையுள்ளோர் துதித்து மண்மேல்
வம்பலர்மா மழைபொழிந்தார் மறைவாழ
வந்தருளும் மதலை யாரும்
தம்பெருமான் அருள்போற்றி மீண்டருளிச்
சண்பைநகர் சாரச் செல்வார்.

பொழிப்புரை :

விண்ணுலகத்தவரும் வியப்படைய ஓங்கிய அத்தாளத்தின் ஒலியின் மேன்மையை நோக்கி, தும்புரு நாரதர் முதலிய மறை பயில்கின்ற இசைத்துறை வல்லவர் யாவரும் போற்றி, தேன் மிகுந்த மலர்மழையைப் பொழிந்தனர். மறைகள் வாழத் தோன் றியருளிய பெருமகனாரும், தம் இறைவரின் அருளைப் போற்றி அங்கு நின்றும் விடைபெற்றுச் சீகாழிப் பதியை நோக்கிச் செல்பவராகி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 106

செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத்
துடன்நடந்து செல்லும் போது
தங்கள்குலத் தாதையார் தரியாது
தோளின்மேல் தரித்துக் கொள்ள
அங்கவர்தந் தோளி ன்மிசை எழுந்தருளி
அணைந்தார்சூழ்ந் தமர ரேத்தும்
திங்களணி மணிமாடத் திருத்தோணி
புரத்தோணிச் சிகரக் கோயில்.

பொழிப்புரை :

செந்தாமரை மலர்போன்ற திருக்கைகளில் பொன்னாலாய தாளத்தைக் கொண்டு நடந்து செல்லும் அமையத்தில், தம் குலத் தந்தையார், அவர் நடந்து வருதலைப் பொறாதவராய், அவரைத் தம்தோள்மீது அமர்த்தியபடி, சுற்றிச் சூழ்ந்து தேவர்கள் போற்றுகின்ற, திங்கள் தங்கும் அழகிய மாடங்களையுடைய திருத் தோணிபுரக் கோயிலை வந்து அடைந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 107

திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங்
கொண்டருளித் திருமுன் நின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்
டளையாக்கி அவற்று ளொன்று
விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார்
தமைப்பாட மேவுகாதல்
பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றியெடுத்
தருளினார் பூவார் கொன்றை.

பொழிப்புரை :

திருத்தகவிற்றாகிய பெருங்கோயிலை வலமாக வந்து, இறைவரின் திருமுன்நின்று, அருள் பெருகும் திருப்பதிகத்தைத் தக்கராகப் பண்ணிலமைந்ததாய்ப் பிற்காலத்தார் வகுத்தவாறு, எட்டுக் கட்டளைகளுள் ஒன்றில், தோணியப்பரைப் பாடவேண்டும் என்ற விருப்பம் மீதூர, அப்பெருமானின் அருள் பெற்றுப் `பூவார் கொன்றை\' (தி.1 ப.24) எனத் தொடங்கிப் பாடினார்.

குறிப்புரை :

பண் என்பது இசையாகும். இசையமைப்பின் வேறு பாட்டால் பண்களும் பலவாயின. அவற்றுள்ளும் ஒவ்வொரு பண் ணிலும் பலகட்டளைகள் அமைந்துள்ளன. கட்டளை என்பது அவ் வப்பதிகத்து வரும் சொற்களின் நீட்சியும் குறுக்கமும் குறித்தும், யாப் பமைப்பு குறித்தும் தாள அமைப்பு குறித்தும் இசையமைப்பு வேறு படும் நிலையாகும். இவ்வாறமைந்த கட்டளைகள் தொறும் பாடும் இசையமைப்பு வேறுபடினும், அவற்றின் அடித்தளமாக அமையும் பண் வேறுபடாது.

பண் :

பாடல் எண் : 108

எடுத்ததிருப் பதிகத்தின் இசைதிருத்தா
ளத்தினால் இசைய வொத்தி
அடுத்தநடை பெறப்பாடி ஆர்வமுற
வணங்கிப்போந் தலைநீர்ப் பொன்னி
மடுத்தவயற் பூந்தரா யவர்வாழ
மழவிளங்கோ லத்துக் காட்சி
கொடுத்தருளி வைகினார் குறைவிலா
நிறைஞானக் கொண்ட லார்தாம்.

பொழிப்புரை :

மேற்கூறிய வண்ணம் தொடங்கிய அப் பதிகத்தின் இசையமைதியைத் திருவருளால் பெற்ற அத்தாளத்தால் பொருந்துமாறு, தாள வரையறை செய்து, முன்பாடிய அத்திருப் பதிகத்தினை அடுத்து, அதைப் போன்றே நிகழும்படி பாடியருளி, பேரன்பு பொருந்த வணங்கிப் போய்க் குறைவில்லாத நிறைவான ஞானமழை கருக்கொண்ட மேகத்தைப் போன்ற காழிப் பிள்ளையார், அலைகளையுடைய நீர் பெருகும் காவிரி பாயும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியிலுள்ளோர் பெருவாழ்வு அடையுமாறு இளங்குழவி யின் திருவுருவாகத் தோற்றம் கொண்டிருந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 109

அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார்
தமைமுன்னம் அளித்த தாயார்
முன்னுதிக்க முயன்றதவத் திருநன்னி
பள்ளிமுதன் மறையோர் எல்லாம்
மன்னுபெரு மகிழ்ச்சியுடன் மங்கலதூ
ரியந்துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னிமதிற் சண்பைநகர் வந்தணைந்து
கவுணியர்கோன் கழலில் தாழ்ந்தார்.

பொழிப்புரை :

அவ்வாறு இருக்கும் நாளில் பிள்ளையாரை முன் ஈன்றெடுத்த தாயாரான பகவதியார், முதற்கண் தன்னிடத்தே தோன்றி யருள முயன்ற தவம் உடைய திருநனிபள்ளியில் உள்ள முதன்மை யுடைய மறையவர் அனைவரும், நிலைபெற்ற மகிழ்ச்சியுடன் மங்கல இயக்கமுடன் மறைகளையும் ஓதியவாறு, அழியாத மதில் சூழ்ந்த சீகாழி என்ற நகருக்கு வந்து சேர்ந்து, கவுணியர் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.

குறிப்புரை :

பகவதியார் தன்னிடத்தே தோன்றத் தவம் செய்த இடம் திருநனிபள்ளியாகும். இசை நிறைவு கருதி நன்னி பள்ளி என்றாயிற்று.

பண் :

பாடல் எண் : 110

மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்களிப்பப்
பெற்றபெரு வார்த்தை யாலே
எங்கணும்நீள் பதிமருங்கில் இருபிறப்பா
ளரும்அல்லா ஏனை யோரும்
பொங்குதிருத் தொண்டர்களும் அதிசயித்துக்
குழாங்கொண்டு புகலி யார்தம்
சிங்கஇள வேற்றின்பால் வந்தணைந்து
கழல்பணியுஞ் சிறப்பின் மிக்கார்.

பொழிப்புரை :

பேரின்பப் பெருவாழ்வை வழங்கும் சிவ மெய்ஞ்ஞானத்தை, உலகம் மகிழப் பெற்ற பெருவார்த்தை கேட்ட லால், நீண்ட அத்திருப்பதியின் அருகிலுள்ள இருபிறப்பாளர்கள் யாவ ரும், அவ்வினத்தவரல்லாத மற்றவரும், பெருகும் தொண்டர்களும் வியப்புற்றுத் திரண்டு, சீகாழியில் இளஞ்சிங்கமென விளங்கும் பிள் ளையாரிடத்து வந்து சேர்ந்து, அவருடைய திருவடிகளில் வணங்கும் சிறப்பில் மிக்கவர் ஆனார்கள்.

குறிப்புரை :

மங்கலம் - பேரின்பம். எனவே பேரின்பப் பெரு வாழ்வை யடைவிப்பது மங்கல மாயிற்று.

பண் :

பாடல் எண் : 111

வந்ததிருத் தொண்டர்கட்கும் மல்குசெழு
மறையவர்க்கும் மற்று ளோர்க்கும்
சிந்தைமகிழ் வுறமலர்ந்து திருவமுது
முதலான சிறப்பின் செய்கை
தந்தம்அள வினில்விரும்புந் தகைமையினால்
கடனாற்றுஞ் சண்பை மூதூர்
எந்தைபிரான் சிவலோகம் எனவிளங்கி
எவ்வுலகும் ஏத்து நாளில்.

பொழிப்புரை :

அங்ஙனம் திரண்டுவந்த திருத்தொண்டர்களுக் கும், அந்தணர்களுக்கும் மற்றவர்கட்கும் மனமகிழ்ந்து முகமலர்ந்து உண்பித்தல் முதலான சிறப்புடைய செய்கைகளைத் தத்தம் அளவிலும் நன்றாற்றிவரும் நன்மக்களையுடைய சீகாழிப் பதியானது எம் இறைவரின் சிவலோகமே என விளக்கம் பெற்று எவ்வுலகமும் போற்ற நிற்கும் அந்நாளில்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 112

செழுந்தரளப் பொன்னிசூழ் திருநன்னி
பள்ளியுள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்தணியுஞ் சடையாரை யெங்கள்பதி
யினிற்கும்பிட் டருள அங்கே
எழுந்தருள வேண்டும்என இசைந்தருளித்
தோணிவீற் றிருந்தார் பாதம்
தொழுந்தகைமை யாலிறைஞ்சி அருள்பெற்றுப்
பிறபதியும் தொழமுன் செல்வார்.

பொழிப்புரை :

செழுமையான முத்துக்களைத் தரும் காவிரியாறு சூழ்ந்த நனிபள்ளியில் உள்ளவர்கள், பிள்ளையாரை வணங்கிப் `பிறைச் சந்திரனை அணியும் சடையையுடைய சிவபெருமானை எங்கள் பதியில் வணங்கும் பொருட்டுத் தாங்கள் எழுந்தருள வேண் டும்\' என வேண்டிக் கொள்ள, அவரும் அதற்கு இசைந்து, திருத் தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை முறைப்படி வணங்கி, விடைபெற்று, நனிபள்ளியே யன்றி மற்றத் திருப்பதிகளுக் கும் தொழுவதற்கு எண்ணிச் செல்வார்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 113

தாதவிழ்செந் தாமரையின் அகவிதழ்போல்
சீறடிகள் தரையின்மீது
போதுவதும் பிறரொருவர் பொறுப்பதுவும்
பொறாஅன்பு புரிந்த சிந்தை
மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத்
தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர்கழல் தம்முடிமேற் கொண்டகருத்
துடன்போந்தார் ஞான முண்டார்.

பொழிப்புரை :

ஞானப் பாலமுது உண்ட பிள்ளையாரின், இதழ் கள் விரியும் செந்தாமரையின் அக இதழ்கள் போன்ற சிறிய திருவடி கள் தரையில் பொருந்த நடந்து செல்வதையும், பிறர் எவரும் தாங்கு தலையும் பொறுக்காத அன்புகொண்ட மனமுடைய மாதவம் செய்த தந்தையாரான சிவபாத இருதயர், வந்து எடுத்துத் தம் தோளின் மீது சுமந்தவாறு கொண்டு செல்ல, தாம் சிவபெருமானின் திருவடிகளைத் தம் முடிமீது கொண்ட உள்ளத்தவராய்ப் பிள்ளையார் செல்லலானார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 114

தேனலருங் கொன்றையினார் திருநன்னி
பள்ளியினைச் சாரச் செல்வார்
வானணையும் மலர்ச்சோலை தோன்றுவதெப்
பதியென்ன மகிழ்ச்சி யெய்திப்
பானல்வயல் திருநன்னி பள்ளியெனத்
தாதையார் பணிப்பக் கேட்டு
ஞானபோ னகர்தொழுது நற்றமிழ்ச்சொல்
தொடைமாலை நவில லுற்றார்.

பொழிப்புரை :

தேன் பொழியும் கொன்றை மலரை அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருநனிபள்ளியைச் சேரச் செல்பவரான பிள்ளையார், `வானளாவும் மலர்ச் சோலைகளுடன் தோன்றும் இது எப்பதி?\' என்று வினவ, தந்தையார் மகிழ்ச்சி அடைந்து, `அது குவளை மலர்கள் நிறைந்த வயல்களையுடைய திருநனிபள்ளியாகும்\' எனக் கூற, அதைக் கேட்ட பிள்ளையார், நன்மை தரும் தமிழ்ப் பாமாலையான திருப்பதிகத்தை அருளிச் செய்வார்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 115

காரைகள் கூகை முல்லை
எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீரியற் பதிகம் பாடித்
திருக்கடைக் காப்புத் தன்னில்
நாரியோர் பாகர் வைகும்
நனிபள்ளி உள்கு வார்தம்
பேரிடர் கெடுதற் காணை
நமதெனும் பெருமை வைத்தார்.

பொழிப்புரை :

`காரைகள் கூகை முல்லை\' (தி.2 ப.84) எனத் தொடங்கிச் செல்லும் கலை ஞானமும் சிவஞானமும் விளங்கும் சிறப் புக் கொண்ட இயற் பதிகத்தைப் பாடி, திருக்கடைக்காப்பில் `உமை யம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான், நிலையாய் எழுந்தருளியுள்ள திருநனிபள்ளியை நினைப்பவரின் பெரிய இடர் கள் யாவும் கெடுவதற்கு ஆணை நமதாகும்\' என்ற பெருமையி னையும் குறித்து அருளினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. `கலைசேர் பதிகம்\', `வாய்மைச் சீர் இயற் பதிகம்\' எனத் தனித்தனியே கூட்டுக. கலை - நூலறிவு. வாய்மை - சிவஞானம். `காரைகள் கூகை\'(தி.2 ப.84) எனத் தொடங்கும் இப்பதிகம் பியந்தைக் காந்தாரத்தில் அமைந்ததாகும். இத்திருப்பதிகத்தின் திருக் கடைக்காப்பு, `இசையா லுரைத்த பனுவல் நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே.\' என நிறைவுறுகிறது. இதனையே ஆசிரியர் கொண்டெடுத்து மொழிவாராயினர்.

பண் :

பாடல் எண் : 116

ஆதியார் கோயில் வாயில்
அணைந்துபுக் கன்பு கூர
நீதியாற் பணிந்து போற்றி
நீடிய அருள்முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து
பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல்கண் டங்க மர்ந்தார்
கவுணியர் தலைவ னார்தாம்.

பொழிப்புரை :

நனிபள்ளியில் வீற்றிருந்தருளும் பழம் பொரு ளாய சிவபெருமானின் கோயில் வாயிலை அடைந்து, உட்சென்று, அன்புமிக நெறிப்பட வணங்கிப் போற்றி, அப்பெருமானின் பேரரு ளைப் பெற்று, வெளியே செல்பவரான கவுணியர் தலைவரான பிள் ளையார், தம்மைச் சூழ இருந்து அந்தணர் குழாம் போற்றுகின்ற அன்பைக் கண்டு, அங்கே விரும்பி எழுந்தருளியிருந்தார்.

குறிப்புரை :

இப்பதியின் எல்லையிலிருந்தே பாடியருளிய பிள் ளையார், இறைவன் திருமுன் நின்றும் பாடியிருப்பர். `நீதியாற் பணிந்து போற்றி\' என ஆசிரியர் அருளுமாற்றானும் இவ்வுண்மை உணரலாம். எனினும் இப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 117

அம்பிகை அளித்த ஞானம்
அகிலமும் உய்ய வுண்ட
நம்பெருந் தகையார் தம்மை
எதிர்கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கு மெய்ம்மை
உயர்தவத் தொண்ட ரோடு
தம்பெரு விருப்பால் வந்தார்
தலைசைஅந் தணர்க ளெல்லாம்.

பொழிப்புரை :

உமையம்மையார் அருளிய ஞான அமுதத்தை உலகுய்ய உண்ட நம் பெருந்தகையாரான பிள்ளையாரை எதிர் கொள்ள, தேவர்களும் வணங்கும் மெய்ம்மையுடைய தவத்தில் சிறந்த தொண்டர்களுடனே, திருத்தலைச்சங்காட்டில் வாழும் அந்த ணர்கள் அனைவரும் தம் மிகுவிருப்பத்தால் வந்தார்கள்.

குறிப்புரை :

தலைசை - திருத்தலைச்சங்காடு.

பண் :

பாடல் எண் : 118

காவணம் எங்கும் இட்டுக்
கமுகொடு கதலி நாட்டிப்
பூவணத் தாமந் தூக்கிப்
பூரண கும்ப மேந்தி
ஆவண வீதி எல்லாம்
அலங்கரித் தண்ண லாரை
மாவண மலர்மென் சோலை
வளம்பதி கொண்டு புக்கார்.

பொழிப்புரை :

அந்தணர் முதலியவர்கள், எங்கும் பந்தல் இட்டுக் கமுகு மரங்களையும் வாழை மரங்களையும் நிறுத்தியும், மலர் மாலைகளைத் தொங்கவிட்டும், நிறைகுடங்கள் வைத்தும், வாணிகம் மிக்க தெருக்களை எல்லாம் அணிசெய்தும், பெருமையுடைய பிள் ளையாரை, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த மென்மையான சோலைகள் சூழ்ந்த வளமான தம் பதிக்குள் அழைத்துப் போயினர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 119

திருமறை யோர்கள் சூழ்ந்து
சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெருமறை ஓசை மல்கப்
பெருந்திருக் கோயில் எய்தி
அருமறைப் பொருளா னாரைப்
பணிந்தணி நற்சங் கத்தில்
தருமுறை நெறியக் கோயில்
சார்ந்தமை அருளிச் செய்தார்.

பொழிப்புரை :

அந்தணர்கள் சூழ இருந்து தத்தம் உள்ளத்தில் மகிழ்ச்சி மிக மறைகளை ஒலிக்க, பெரிய திருமாடக் கோயிலை அடைந்து, அரிய மறைகளின் பொருளாய் உள்ளவரை வணங்கி, அழகிய வலம்புரிச் சங்கின் வடிவில் அமைக்கப்பட்ட அக்கோயிலில், அவ்விறைவர் விரும்பி வீற்றிருக்கும் தன்மை பற்றித் திருப்பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை :

இம்மாடக் கோயில் கோச்செங்கட் சோழரால் கட்டப் பெற்றதாகும். முற்பிறவிச் சார்பால், யானை ஏறாதவாறு கட்டப் பெற்றுள்ள கோவிலாகும். வலமாகச் சுழிந்து வரும் திருச்சுற்றுக்களு டன், நடுவில் கருவறையும், அதன் நடுவில் உயர்ந்த நிலையில் இறை வர் விளங்குவதும் வலம்புரிச் சங்குகள் விளங்கும் தோற்றத்தைக் காட் டுவதாகும். இதுபொழுது பாடிய திருப்பதிகம் `நலச் சங்க\' (தி.2 ப.55) எனும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 120

கறையணி கண்டர் கோயில்
காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து
திருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும்
கொடியுடை ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச்சாய்க் காடு
தொழுதற்கு நினைந்து செல்வார்.

பொழிப்புரை :

நஞ்சின் கருமை கொண்ட கழுத்தையுடைய சிவபெருமானது கோயிலைப் பெருவிருப்பால் பணிந்து திருப்பதிகம் பாடியபின், அந்தணர்கள் தம்மைச் சூழ நின்று போற்ற, வெளியே வந்து, `திருவலம்புரம்\' என்ற திருப்பதியில் சிவபெருமானைத் தொழுது `கொடியுடை மும்மதில்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றி, வெளியே வந்து, நிறைந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டுப் பதியைத் தொழுதற்கு நினைந்து செல்பவராய்,

குறிப்புரை :

திருவலம்புரத்தில் அருளிய பதிகம் `கொடியுடை மும்மதில்\' (தி.3 ப.103) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 121

பன்னகப் பூணி னாரைப்
பல்லவ னீச்ச ரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித்
திருந்திசைப் பதிகம் பாடிப்
பொன்னிசூழ் புகாரில்நீடு
புனிதர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த்தொண்ட ரெல்லாம்
மகிழ்ந்தெதிர் கொள்ளப் புக்கார்.

பொழிப்புரை :

பாம்புகளை அணியாய்ப் பூண்ட சிவபெரு மானைத் திருப்பல்லவனீச்சரத்தில் தலையினால் வணங்கிப் போற்றி, திருந்தும் இசையையுடைய இரு திருப்பதிகங்களைப் பாடி, காவிரி யாறு சூழும் புகார் நகரத்தில் என்றும் எழுந்தருளியிருக்கும் புனிதரான இறைவர் வீற்றிருக்கும் திருச்சாய்க்காட்டில் நிலைபெற்ற பெருஞ்சிறப் பினையுடைய திருத்தொண்டர்கள் மகிழ்வுடன் எதிர்கொள்ளப் புகுந்தனர்.

குறிப்புரை :

திருப்பல்லவனீச்சரத்தில் அருளிய பதிகங்கள் இரண்டு. 1. அடையார்தம் புரங்கள் - தக்கேசி (தி.1 ப.65), 2. பரசு பாணியர் - பழம் பஞ்சுரம் (தி.3 ப.112). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 122

வானள வுயர்ந்த வாயில்
உள்வலங் கொண்டு புக்குத்
தேனலர் கொன்றை யார்தம்
திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடந் திரித்தார் தம்மைப்
போற்றுவார் மண்பு கார்என்
றூனெலாம் உருக ஏத்தி
உச்சிமேற் குவித்தார் செங்கை.

பொழிப்புரை :

புகுந்த பிள்ளையார், அக்கோயிலை வலம் கொண்டு, வானளாவ உயர்ந்த திருவாயிலுள் புகுந்து, தேன் சொரிய மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானின் திருமுன் தாழ்ந்து, மானை இடக்கையிற் கொண்ட சிவபெருமானைப் போற்றுபவராய் `மண்புகார்\' என்ற பதிகத்தைத் தொடங்கி, ஊன் எல்லாம் உருகும்படி ஏத்தி, தம் சிவந்த திருக்கைகளை உச்சியிற் கொண்டு கூப்பி வணங்கினார்.

குறிப்புரை :

இது பொழுது அருளிய பதிகம் `மண்புகார்\'(தி.2 ப.41) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 123

சீரினில் திகழ்ந்த பாடல்
திருக்கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர்
போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏரிசைப் பதிகம் பாடி
ஏத்திப்போந் திறைவர் வெண்கா
டாருமெய்க் காத லோடும்
பணிவதற் கணைந்தா ரன்றே.

பொழிப்புரை :

சிறப்புடன் விளங்கும் பாடலால் திருக்கடைக் காப்புச் செய்து போற்றி, உலகில் விளங்கிய திருத்தொண்டர்கள் போற்ற அங்கு இருந்த பிள்ளையார், மேலும், அழகும் இசையும் கொண்ட பதிகத்தைப் பாடிப் போற்றிப் பின், இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்காட்டினை நிறைந்த மெய்யன்புடன் பணிய, அதுபொழுதே புறப்பட்டார்.

குறிப்புரை :

நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் அம்பந்தும் வரிக்கழலு மரவஞ்செய் பூங்காழிச் சம்பந்தன் றமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் எம்பந்த மெனக்கருதி யேத்துவார்க் கிடர்கெடுமே. (தி.2 ப.41.பா.11) என்பது இங்குப் போற்றப் பெறும் திருக்கடைக்காப் பாகும். பிள்ளையார் தாம் அருளிய இத்திருப்பாட்டில் உயிர் உறுதி பெறுதற்கு எனக் கொளத்தகும் பிணிப்பாகும் இறைவன் என அருளப் பெற்றிருத்தலின், இப்பதிகம் சீரினில் திகழ்ந்த பாடல் திருக்கடைக் காப்புப் போற்றி என்றார். இத்திருப்பதியில் பின்னும் பாடிய பதிகம் `நித்தலும் நியமம் செய்து\' (தி.2 ப.38) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 124

பொன்னிதழ்க் கொன்றை வன்னி
புனலிள மதியம்நீடு
சென்னியர் திருவெண் காட்டுத்
திருத்தொண்டர் எதிரே சென்றங்
கின்னதன் மையர்க ளானார்
எனவொணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர்ச் சண்பை யாளும்
மன்னரைக் கொண்டு புக்கார்.

பொழிப்புரை :

பொன்போன்ற இதழ்களையுடைய கொன்றை மலரும், வன்னியும், கங்கையும், பிறைச் சந்திரனும் ஆகிய இவற்றை அணிந்துள்ள தலைமை பொருந்திய சிவபெருமானின் திருவெண் காட்டில் உள்ள தொண்டர்கள், திருமுன்வந்து, இன்னதன்மை ஆனார் என்று இயம்பலாகாதவாறு மேன்மேலும் மகிழ்ச்சி பெருக, நிலை பெற்ற சிறப்பினையுடைய சீகாழியை ஆண்டு வரும் தலைவரான பிள்ளையாரை வரவேற்று, அழைத்துக் கொண்டு அந்நகரத்துள் புகுந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 125

முத்தமிழ் விரகர் தாமும்
முதல்வர்கோ புரத்து முன்னர்ச்
சித்தநீ டுவகை யோடும்
சென்றுதாழ்ந் தெழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப்
பரமர்கோ யிலைச்சூழ் வந்து
நித்தனார் தம்முன் பெய்தி
நிலமுறத் தொழுது வீழ்ந்தார்.

பொழிப்புரை :

முத்தமிழ் வித்தகரான பிள்ளையார், சிவபெரு மானின் திருக்கோபுரத்தை, உள்ளத்தில் பெருகிய மகிழ்ச்சியுடன் முன் தாழ்ந்து வணங்கி, எழுந்து, உட்சென்று, பத்திமை மிக்க தொண்டர்கள் சூழ, இறைவரின் திருக்கோயிலை வலம் வந்து, என்றும் நிலைபெற் றிருக்கும் இறைவரின் திருமுன்பு சென்று, நிலம் பொருந்தத் தொழுது விழுந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 126

மெய்ப்பொரு ளாயி னாரை
வெண்காடு மேவி னாரைச்
செப்பரும் பதிக மாலை
கண்காட்டு நுதன்முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம்
சேரும்முக் குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார்
உளமகிழந் தேத்தி வாழ்ந்தார்.

பொழிப்புரை :

மெய்ப்பொருளாக விளங்கியருளும் திருவெண் காட்டில் வீற்றிருக்கும் இறைவற்குச் சொலற்கரிய சிறப்புடைய திருப் பதிகமான `கண்காட்டு நுதலானும்\' (தி.2 ப.48) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்த பதிகத்தை மாலையாகச் சாத்தி, முப்புரங் களையும் எரித்த இறைவர் திருவடிகளைச் சேரும் முக்குளங்களையும் அப்பதிகத்தில் அமைத்துப் பாடி, ஒப்பில்லாத ஞானப் பாலமுது உண்ட பிள்ளையார், மனம் மகிழ்ந்து போற்றி அங்கு வீற்றிருந்தருளினார்.

குறிப்புரை :

முக்குளங்கள்: மதி - (சோம குண்டம்), ஞாயிறு - (சூரிய குண்டம்), நெருப்பு - (அக்கினி குண்டம்) ஆகிய மூவர் பெயரானும் அமைந்திருக்கும் குளங்கள். இம்மூன்றனுள் முன்னிரு குளங்களின் சிறப்பை, `இருகாமத்திணையேரி\' (பட்டினப். வரி 39) எனப் பட்டினப்பாலையும், `சோம குண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடும் தாம் இன் புறுவர் உலகத்துத் தையலார் போகம் செய் பூமியினும் போய்ப் பிறப் பர்\' (சிலப். புகார்க் கனாத். 59-63) எனச் சிலம்பும் நவிலும். இம்முக்குளச் சிறப்பினைப் பிள்ளையார் 2, 7 ஆகிய பாடல்களில் போற்றியுள்ளார். பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. (தி.2 ப.48 பா.2) `....வினைதுரக்கும் முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே\' (தி.2 ப.48 பா.7) என்பன அப்போற்றி உரைகளாம். இப்பதிகப் பயனாகவே மெய்கண் டார் தோன்றியருளினார் என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 127

அருமையாற் புறம்பு போந்து
வணங்கிஅங் கமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச்
செழுந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும்
வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து
ஞானசம் பந்தர் சார்ந்தார்.

பொழிப்புரை :

அக்கோயிலினின்றும் பிரிதற்கரிய வகையில் வெளிப்போந்து வணங்கிச் சென்று, அத்திருப்பதியில் அவர் எழுந் தருளியிருந்த அந்நாள்களில், தென் திருமுல்லைவாயிலை அடைந்து செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, அவ்விடத்தினின்றும் அணுகப் பொருந்திய மற்றைய திருப்பதிகளையும் வணங்குவாராய், அந்தணர் போற்ற வந்த ஞானசம்பந்தர், அருட்செல்வம் மிக்க சீகாழியை அடைந்தார்.

குறிப்புரை :

`திருமுல்லைவாயில்\' எனும் பெயருடைய பதிகள் தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலுமாக ஈரிடத்தும் உள்ளன. இப்பதி, சோழ நாட்டில் உள்ளதாகும். இவ்வேறுபாடு அறிய இதனைத் தென்திருமுல்லைவாயில் என அழைத்தனர். இங்கு அருளிய பதிகம் `துளிமண்டி\' (தி.2 ப.88) எனத் தொடங்கும் பியந்தைக் காந்தாரப் பண்ணமைந்த பதிகமாகும். இங்கு மருவிய பதிகள் எனக் குறிப்பன இவையிவை எனத்தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 128

தோணிவீற் றிருந்தார் தம்மைத்
தொழுதுமுன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி
அருட்பெரு வாழ்வு கூரச்
சேணுயர் மாட மோங்குந்
திருப்பதி அதனிற் செய்ய
வேணியார் தம்மை நாளும்
போற்றிய விருப்பின் மிக்கார்.

பொழிப்புரை :

திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி, திருமுன்பு நின்று, தூய்மை பொருந்திய உரையாணியான திருப்பதிகத்தைப் பாடி, அருள் பெருக்கும் நல்வாழ்வு பெருக, வானளாவ உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த அப்பெரும் பதியில், வீற்றிருந்தருளும் சிவந்த சடையையுடைய சிவபெருமானை நாளும் போற்றிவரும் விருப்பம் மிக்கவராயினர்.

குறிப்புரை :

தூய ஆணி - தூயதாய பொன்னாலாய ஆணி : அச் சாணி இறைவன். உருள் பெருந்தேருக்கு அச்சாணி இன்றியமையா தாதல் போல, உலகுயிர்களின் இயக்கத்திற்கு இறைவன் இன்றியமை யாத அச்சாணியாக விளங்குதலின், அப்பெருமானைத் `தூய ஆணி\' என்றார். `உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து\' (குறள்,1032) எனவரும் குறளும் நினைவு கூரத் தகும். இவ்வாறு இறைவனை உருவகித்துக் கூறும் பதிகம், `அன்ன மென்னடை\' (தி.2 ப.102) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ண மைந்த திருப்பதிக மாகும். இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடலில் `சிரபுரத் தமர்கின்ற ஆணிப் பொன்னினை அடிதொழு மடியவர்க் கருவினை யடையாவே\' என வருதலின், இப்பதிகமே இதுபொழுது அருளிய பதிகமாகும். இதுவன்றிச் சிவக்கவிமணியாரும், வ. சு. செ. யும் குறிக்கும் `வண்டரங்க\' (தி.1 ப.60) எனவரும் பதிகமோ, அன்றி `எம்பிரான்\' (தி.2 ப.40) எனவரும் பதிகமோ ஈண்டுப் பாடப்பட்டு இருக்கலாம் என்பது அத்துணைப் பொருத்தம் இன்றாம்.

பண் :

பாடல் எண் : 129

வைகுமந் நாளிற் கீழ்பால்
மயேந்திரப் பள்ளி வாசம்
செய்பொழில் குருகா வூரும்
திருமுல்லை வாயில் உள்ளிட்
டெய்திய பதிக ளெல்லாம்
இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப்
பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

பொழிப்புரை :

இவ்வாறு அப்பதியில் வாழ்ந்து வந்த நாள்களில் இப்பதியின் கீழ்த் திசையில் உள்ள திருமயேந்திரப்பள்ளியையும், மணம் கமழ்கின்ற சோலை சூழ்ந்த திருக்குருகாவூரையும், திருமுல்லை வாயில் உள்ளிட்ட முன்பு சென்று வணங்கிய திருப்பதிகள் பலவற்றை யும் இன்பம் பொருந்தப் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மீது தமிழ்ச் சொல் மாலைகளைப் பாடினார்.

குறிப்புரை :

திருமயேந்திரப்பள்ளியில் அருளிய பதிகம்: `திரைதரு\' - பண் : கொல்லி (தி.3 ப.31). திருக்குருகாவூரில் அருளிய பதிகம் : `சுண்ணவெண்\' - பண்: அந்தாளிக் குறிஞ்சி (தி.3 ப.124). திருமுல்லைவாயில் உள்ளிட்ட பதிகளாவன: திருக்கலிக்காமூர், திருவெண்காடு, கீழைத் திருக்காட்டுப்பள்ளி முதலியனவாகலாம். இவற்றுள் திருமுல்லைவாயிலுக்குப் பாடிய பதிகம் ஒன்றே இருத் தலின், அது முதல்முறை சென்ற பொழுது பாடியது என முன்னர்க் குறிக்கப்பட்டது. இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது. திருக்கலிக்காமூரில் அருளிய பதிகம்: `மடல்வரையின்\' - பண்: பழம்பஞ்சுரம் (தி.3 ப.105). திருவெண்காட்டில் அருளிய பதிகங்கள்: `உண்டாய் நஞ்ை\\u2970?\' - பண்: காந்தாரம் (தி.2 ப.61). `மந்திர மறையவை\' - பண்: காந்தார பஞ்சமம் (தி.3 ப.15). கீழைத்திருக்காட்டுப்பள்ளியில் அருளிய பதிகம்: `செய்யருகே\' - பண் : நட்டபாடை (தி.1 ப.5).

பண் :

பாடல் எண் : 130

அவ்வகை மருங்கு சூழ்ந்த
பதிகளில் அரனார் பொற்றாள்
மெய்வகை ஞானம் உண்ட
வேதியர் விரவிப் போற்றி
உய்வகை மண்ணு ளோருக்கு
உதவிய பதிகம் பாடி
எவ்வகை யோரும் ஏத்த
இறைவரை ஏத்து நாளில்.

பொழிப்புரை :

அங்ஙனமே அருகிலுள்ள திருப்பதிகளுக்குச் சென்று, இறைவரின் அழகிய திருவடிமலர்களை, மெய்ஞ்ஞானப் பாலமுது உண்ட பிள்ளையார் போற்றி, இந்நிலவுலகத்தில் உள் ளவருக்கு உய்யும் வகை உதவும் பொருட்டுத் திருப்பதிகங்களைப் பாடி, எவ்வகையோர்களும் போற்றுமாறு சிவபெருமானை வணங்கி வதிந்திருக்கும் நாள்களில்,

குறிப்புரை :

மருங்கு சூழ்ந்துள்ள பதிகள் செம்பங்குடி, திருக் கொண்டல், திருமயிலாடி, நல்லூர்ப்பெருமணம், நல்லூர் முதலாயின ஆகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் இப்பதிகளுக்கு உரிய பதிகங்கள் கிடைத்தில. நல்லூர்ப்பெருமணத்திற்கு இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகம் இவ்வமையத்தில் அருளப்பெற்றதன்று.

பண் :

பாடல் எண் : 131

திருநீல கண்டத்துப்
பெரும்பாணர் தெள்ளமுதின்
வருநீர்மை இசைப்பாட்டு
மதங்கசூ ளாமணியார்
ஒருநீர்மையுடன் உடைய
பிள்ளையார் கழல்வணங்கத்
தருநீர்மை யாழ்கொண்டு
சண்பையிலே வந்தணைந்தார்.

பொழிப்புரை :

திருநீலகண்டத்துப் பெரும்பாணரும், தெள்ளிய அமுதமாய இசைப்பாடலைப் பாடும் மதங்க சூளாமணியாரும், ஒன்றுபட்ட அன்பின் திறத்தால், ஆளுடைய பிள்ளையாரின் திருவடி களை வணங்குவதற்கு, இசையால் இன்பம் பயக்கும் யாழினைக் கொண்டு, சீகாழிப் பதிக்கு வந்து சேர்ந்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 132

பெரும்பாணர் வரவறிந்து
பிள்ளையார் எதிர்கொள்ளச்
சுரும்பார்செங் கமலமலர்த்
துணைப்பாதந் தொழுதெழுந்து
விரும்பார்வத் தொடும்ஏத்தி
மெய்ம்மொழிக ளால்துதித்து
வரும்பான்மை தருவாழ்வு
வந்தெய்த மகிழ்சிறந்தார்.

பொழிப்புரை :

`திருநீலகண்டத்து யாழ்ப்பாண நாயனாரும்\' தெள்ளிய அமுதமாய இசைப் பாடலைப் பாடும் `மதங்க சூளாமணி யாரும்\' வருதலை அறிந்து, ஞானசம்பந்தப் பிள்ளையார் எதிரேற்று வரவேற்க, வண்டுகள் பொருந்திய செந்தாமரை மலர் போன்ற அவருடைய இரு திருவடிகளையும் இருவரும் வணங்கி எழுந்து, விரும்பும் ஆர்வத்தோடும் ஏத்தி, மெய்ம்மொழிகளால் போற்றிவரும் பான்மையினால் கிடைக்கப் பெற்ற பெருவாழ்வு வந்து பொருந்த, மகிழ்ச்சியில் திளைத்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 133

அளவிலா மகிழ்ச்சியினார்
தமைநோக்கி ஐயர்நீர்
உளமகிழ இங்கணைந்த
உறுதியுடை யோமென்றே
இளநிலா நகைமுகிழ்ப்ப
இசைத்தவரை உடன்கொண்டு
களநிலவு நஞ்சணிந்தார்
பாலணையுங் கவுணியனார்.

பொழிப்புரை :

அளவற்ற மகிழ்ச்சியுடைய அவ்விருவரையும் நோக்கி, `ஐயரே! தாங்கள் மனம் மகிழ இங்குச் சேர்ந்ததனால் ஆன உறுதிப் பொருளைப் பெற்றவர் ஆனோம்\' என்று இளநிலா ஒளிவீசும் புன்னகையுடன் கூறி, அவர்களையும் தம்முடனே கொண்டு, கருமை பொருந்திய நஞ்சுடைய கழுத்தினரான சிவபெருமானிடம் சேரும் கவுணியரான பிள்ளையார்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 134

கோயிலினிற் புறமுன்றிற்
கொடுபுக்குக் கும்பிடுவித்
தேயுமிசை யாழ்உங்கள்
இறைவருக்கிங் கியற்றும்என
ஆயபுகழ்ப் பிள்ளையார்
அருள்பெற்ற அதற்கிறைஞ்சி
மேயதொடைத் தந்திரியாழ்
வீக்கிஇசை விரிக்கின்றார்.

பொழிப்புரை :

திருக்கோயிலின் புறத்தேயுள்ள திருமுற்றத்தில் புகுந்து வணங்கச் செய்து `பொருந்திய இசையையும் யாழையும் உம் இறைவற்கு இங்கிருந்து இயக்குங்கள்\' என்று கூறியருள, அவர்களும் புகழ் பொருந்திய பிள்ளையாரின் திருவருளைப் பெற்றதால் வணங்கிப் பொருந்திய தொடை நரம்புகளை வீக்கி, இசையை வாசிப்பார்களாகி,

குறிப்புரை :

திருக்கோயிலின் புறமுற்றத்தே நின்று வணங்கச் செய்தது அக்கால மரபு பற்றியதாம்.

பண் :

பாடல் எண் : 135

தானநிலைக் கோல்வடித்துப்
படிமுறைமைத் தகுதியினால்
ஆனஇசை ஆராய்வுற்
றங்கணர்தம் பாணியினை
மானமுறைப் பாடினியா
ருடன்பாடி வாசிக்க
ஞானபோ னகர்மகிழ்ந்தார்
நான்மறையோர் அதிசயத்தார்.

பொழிப்புரை :

இசையிடங்கள் உரிய நிலையில் உண்டாகுமாறு கருவியினால் அமைத்து, நரம்பு படியும் முறைமையின் தகுதியால் ஆன, எடுத்தும் படுத்தும் இசைக்கும் வகையில் இசையைத் தெரிந்து, இறைவரின் திருப்பாட்டினை அளவுபடும் முறையில் பாடினவரான மதங்க சூளாமணியாருடன் ஒன்றிப் பாடி யாழ் வாசிக்கக் கேட்டு, ஞானப் பால் உண்டவரான சம்பந்தர் மகிழ்ச்சியடைந்தார். மறையவர்களும் வியப்புற்றனர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 136

யாழிலெழும் ஓசையுடன்
இருவர்மிடற் றிசையொன்றி
வாழிதிருத் தோணியுளார்
மருங்கணையும் மாட்சியினைத்
தாழுமிரு சிறைப்பறவை
படிந்ததனி விசும்பிடைநின்
றேழிசை நூற் கந்தருவர்
விஞ்சையரும் எடுத்திசைத்தார்.

பொழிப்புரை :

யாழினின்று எழும் ஓசையோடு இருவர் மிடற் றின் இசையும் ஒன்றித் திருத்தோணியில் உள்ளாரிடம் அணையும் பெருமையை, தாழ்ந்து வரும் கின்னர மிதுனங்களான இரு பறவை களும், சூழ்ந்த ஒப்பற்ற விசும்பில் நின்று, ஏழிசை நூலில் வல்ல கந்தருவர், வித்தியாதரர் என்பவர்களும் பாராட்டினர்.

குறிப்புரை :

கின்னர மிதுனங்கள் - இவை சந்திர மண்டலத்தில் வாழும் பறவை இனத்தவை என்றும், இசை கேட்டு மகிழும் இயல்பு உடையவை என்றும் கூறுப. இப்பறவைகளோடு, கந்தருவர், வித்தியாதரர்களும் இருந்து இவர்கள் இசையை வியந்து கேட்டு மகிழ்ந்தனர் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 137

எண்ணருஞ்சீர்த் திருத்தோணி
எம்பெருமான் கழல்பரவிப்
பண்ணமையா ழிசைகூடப்
பெரும்பாணர் பாடியபின்
கண்ணுதலார் அருளினால்
காழியர்கோன் கொடுபோந்து
நண்ணிஉறை யிடஞ்சமைத்து
நல்விருந்து சிறந்தளிப்ப.

பொழிப்புரை :

நினைத்தற்கு அரிய சிறப்புடைய திருத்தோணி யில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் போற்றி, பண்பொருந் திய யாழும், மிடற்று இசையும் பொருந்துமாறு திருநீலகண்டப் பெரும் பாணரும் அவர்தம் மனைவியாரும் பாடி நிறைவுசெய்த பின்பு, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் அருளால் சீகாழித் தலைவர் ஆன ஞானசம்பந்தர், அவர்களை அழைத்துக் கொண்டு சென்று, அவர்கள் தங்கியிருப்பதற்குத் தனியிடம் அமைத்து, நல்ல விருந்தை யும் சிறப்பாக அளிக்க,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 138

பிள்ளையார் அருள்பெற்ற
பெரும்பாணர் பிறையணிந்த
வெள்ளநீர்ச் சடையாரை
அவர்மொழிந்த மெய்ப்பதிகம்
உள்ளபடி கேட்டலுமே
யுருகுபெரு மகிழ்ச்சியராய்த்
தெள்ளமிர்தம் அருந்தினர்போற்
சிந்தைகளிப் புறத்தொழுதார்.

பொழிப்புரை :

காழிப் பிள்ளையாரின் அருளைப் பெற்ற பெரும் பாணரும், பிறைச்சந்திரனை அணிந்த கங்கையாறு தங்கிய சடையுடை யவரை, அவர் பாடிய மெய்ப் பதிகங்களை உள்ளவாறு அடியார்கள் சொல்லக் கேட்டு மனமுருகும் பெருமகிழ்ச்சி உடையவராய், தெளிந்த அமுதத்தை உண்டவர் போல உள்ளம் களிப்புக் கொள்ள வணங்கினர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 139

காழியார் தவப்பயனாம்
கவுணியர்தம் தோன்றலார்
ஆழிவிட முண்டவர்தம்
அடிபோற்றும் பதிகஇசை
யாழின்முறை மையின்இட்டே
எவ்வுயிரு மகிழ்வித்தார்
ஏழிசையும் பணிகொண்ட
நீலகண்ட யாழ்ப்பாணர்.

பொழிப்புரை :

சீகாழிப் பதியினர் செய்த தவப்பயனாய் உள்ள கவுணியர் குலத்தில் தோன்றிய சம்பந்தர், கடலில் தோன்றிய நஞ்சை உண்ட இறைவரின் திருவடிகளைப் போற்றும் பதிகங்களின் இசையை ஏழிசைகளையும் ஏவல் கொண்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழ் முறைமையால் வாசித்து எவ்வுயிர்களையும் மகிழ்வித்தார்.

குறிப்புரை :

ஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் என்பார், அப்பண்கள் தாமும் தம் ஏவல்வழி நிற்கும் பெற்றியவாய் நிற்றலின். அப்பண்கள் அமையப் பாடத் தாம் அரிதில் இசைப்பதின்றி, இவர் இசைக்கும் அளவில் அவை வந்து அமையும் என்பது கருத்தாம்.

பண் :

பாடல் எண் : 140

சிறியமறைக் களிறளித்த
திருப்பதிக இசையாழின்
நெறியிலிடும் பெரும்பாணர்
பின்னுநீர் அருள்செய்யும்
அறிவரிய திருப்பதிக
இசையாழில் இட்டடியேன்
பிறிவின்றிச் சேவிக்கப்
பெறவேண்டும் எனத்தொழுதார்.

பொழிப்புரை :

சிறிய மறைக் களிறாய பிள்ளையார் அருளிய திருப்பதிக இசையினை யாழிசையின் நெறியில் வாசித்த பெரும் பாணர், மேலும் அவரை நோக்கி, `தாங்கள் ஆணையிட்டருளும் அறிதற்கரிய பெருமையுடைய திருப்பதிகங்களது இசையை யாழில் இசைத்து, அடியேன் தங்களைப் பிரியாமல் வணங்கி, உடன் இருக்கும் பேறு பெற வேண்டும்\' என்று வேண்டி வணங்கினார்.

குறிப்புரை :

சிறிய களிறு, மறைக்களிறு எனத் தனியே கூட்டுக. அவை அவர்தம் இளமைப் பருவத்தையும் தமிழ் மறைசாற்றி வரும் தகைமையையும் குறித்தன.

பண் :

பாடல் எண் : 141

மற்றதற்குப் பிள்ளையார்
மனமகிழ்வுற் றிசைந்தருளப்
பெற்றவர்தாம் தம்பிரான்
அருளிதுவே யெனப்பேணிச்
சொற்றமிழ்மா லையின்இசைகள்
சுருதியாழ் முறைதொடுத்தே
அற்றைநாட் போலென்றும்
அகலாநண் புடன்அமர்ந்தார்.

பொழிப்புரை :

அவ்விண்ணப்பத்திற்கு மகிழ்ந்த பிள்ளையார் உள்ளம் மகிழ்ந்து இசைந்தருள, அத்தகைய பேற்றைப் பெற்ற பாண னார், `இது நம் பெருமானின் அருளேயாம்\' என்று விருப்பத்துடன் பேணி, பிள்ளையாருடைய திருப்பதிகங்களான தமிழ் மாலைகளைப் பண்ணமைந்த யாழிசையின் முறையில் வைத்து வாசித்துக் கொண்டே அந்நாள் போன்றே என்றும் பிரியாதவராய் உடன் இருந்து வந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 142

சிரபுரத்தில் அமர்ந்தருளுந்
திருஞான சம்பந்தர்
பரவுதிருத் தில்லைநடம்
பயில்வாரைப் பணிந்தேத்த
விரவியெழும் பெருங்காதல்
வெள்ளத்தை உள்ளத்தில்
தரஇசையுங் குறிப்பறியத்
தவமுனிவர்க்கு அருள்செய்தார்.

பொழிப்புரை :

சீகாழியில் இருந்தருளும் திருஞானசம்பந்தர், யாவரும் வணங்கிப் போற்றும் திருத்தில்லையில் திருக்கூத்தியற்றும் இறைவரைப் பணிந்து போற்றிட, பொருந்தி எழும் விருப்பமான பெருவெள்ளத்தைத் தம் உள்ளத்தில் கொள்ள, அதற்கு இசையும் அருட் குறிப்பும் நிகழ்ந்ததாக, அவ்வருட் குறிப்பைத் தவ முனிவராம் தந்தையாரான சிவபாத இருதயருக்குக் கூறினார்.

குறிப்புரை :

பிள்ளையாருக்குத் தில்லைக்குச் செல்ல வேண்டும் எனும் விருப்பமும், குறிப்பும் உள்ளத்தில் தோன்றுதற்கேற்ற திருவருட் குறிப்பு நிகழ, அதனைத் தம் தந்தையாரிடம் தெரிவித்தார்.

பண் :

பாடல் எண் : 143

பிள்ளையார் அருள்செய்யப்
பெருந்தவத்தாற் பெற்றெடுத்த
வள்ளலார் தாமும்உடன்
செல்வதற்கு மனங்களிப்ப
வெள்ளிமால் வரையென்னத்
திருத்தோணி வீற்றிருந்த
புள்ளிமா னுரியாரைத்
தொழுதருளாற் புறப்பட்டார்.

பொழிப்புரை :

காழிப்பிள்ளையார் இவ்வாறு அருள்செய்ய, பெருந்தவத்தின் பயனாய்ப் பிள்ளையாரைத் தமக்கு மகனாராகப் பெற்ற வள்ளலாரான சிவபாத இருதயர், தாமும், அவருடன் செல்ல மன மகிழ்ச்சியுடன் ஒருப்பட்டாராக, பெரிய வெள்ளி மலைபோல் விளங்கும் திருத்தோணியில் வீற்றிருந்தருளும் புள்ளிமான் தோலை உடைய இறைவரை வணங்கி, அருள் விடை பெற்றுச் சீகாழியில் இருந்தும் புறப்பட்டனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 144

தாவில்யாழ்ப் பாணரொடும்
தாதையார் தம்மோடும்
மேவியசீ ரடியார்கள்
புடைவரவெங் குருவேந்தர்
பூவின்மே லயன்போற்றும்
புகலியினைக் கடந்துபோய்த்
தேவர்கள்தம் பெருந்தேவர்
திருத்தில்லை வழிச்செல்வார்.

பொழிப்புரை :

குற்றம் இல்லாத யாழ்ப்பாணரோடும், தந்தை சிவபாத இருதயருடனும் பொருந்திய சிறப்புடைய அடியவர்கள் இருமருங்கும் சூழ்ந்து வர, மண்ணுலகில் வந்து நான்முகன் வழிபட்ட சீகாழிப் பதியைக் கடந்து, தேவர்களுக்கெல்லாம் பெருந்தலைவராய கூத்தப் பெருமானின் திருத்தில்லையை நோக்கிச் செல்வாராயினர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 145

நள்ளி ருட்கண்நின் றாடுவார்
உறைபதி நடுவுகண் டனபோற்றி
முள்ளு டைப்புற வெள்ளிதழ்க்
கேதகை முகிழ்விரி மணஞ்சூழப்
புள்ளு டைத்தடம் பழனமும்
படுகரும் புடைகழிந் திடப்போந்து
கொள்ளி டத்திரு நதிக்கரை
அணைந்தனர் கவுணியர் குலதீபர்.

பொழிப்புரை :

நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடுகின்ற இறை வர் எழுந்தருளியிருக்கும் தில்லைத் திருப்பதிக்கு இடையில் கண்ட வற்றை வழிபட்டு, அடியில் முள்களுடன் கூடிய புற இதழ்களைக் கொண்ட தாழைகளின் மொட்டுகள் மலருகின்றதால் மணம் கமழ் கின்ற, நீர்ப் பறவைகளையுடைய இடம் அகன்ற வயல்களும், பள்ள மான நிலங்களும் இருமருங்கிலும் கழிந்திடச் சென்று, கவுணியர் குல விளக்கான ஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்தார்.

குறிப்புரை :

`உறைபதி நடுவு கண்டன போற்றி\' எனவரும் பதிக ளும் பதிகங்களும் இவை எனத் தெரிந்தில. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

பண் :

பாடல் எண் : 146

வண்டி ரைத்தெழு செழுமலர்ப்
பிறங்கலும் மணியும் ஆரமும்உந்தித்
தண்ட லைப்பல வளத்தொடும்
வருபுனல் தாழ்ந்துசே வடிதாழத்
தெண்டி ரைக்கடற்பவளமும்
பணிலமும் செழுமணித் திரள்முத்தும்
கொண்டு இரட்டிவந்து ஓதமங்கு
எதிர்கொளக் கொள்ளிடங் கடந்தேறி.

பொழிப்புரை :

வண்டுகள் ஒலித்து எழுகின்ற செழுமையான மலர்களின் கூட்டத்தையும், மணிகளையும், சந்தனக் கட்டைகளையும் வாரிக் கொண்டு, சோலைகளின் வளங்கள் பலவற்றுடன் வருகின்ற ஆற்றின் நீர், தாழ்ந்த தம் அடிகளை வணங்கவும், தெளிவான அலை களையுடைய தன்னிடத்தினின்றும் பவளங்கள், சங்குகள் ஆகியவற் றையும், மற்ற மணிகளையும், திரண்ட முத்துக்களையும் அலைகளால் வாரிக் கொண்டு வீசி வரும் கடல்நீர் எதிர் கொள்ளவும், கொள்ளிடத் திருநதியினைக் கடந்து வடகரையின் மேல் ஏறி,

குறிப்புரை :

இப்பாடல் ஆற்று வளமும், கடல் வளமும் ஒருங்கு உளங்கொள அமைந்துள்ளது.

பண் :

பாடல் எண் : 147

பல்கு தொண்டர்தங் குழாத்தொடும்
உடன்வரும் பயில்மறை யவர்சூழச்
செல்க திப்பயன் காண்பவர்
போல்களி சிந்தைகூர் தரக்கண்டு
மல்கு தேவரே முதலனைத்
துயிர்களும் வணங்கவேண் டினவெல்லாம்
நல்கு தில்லைசூழ் திருவெல்லை
பணிந்தனர் ஞானஆ ரமுதுண்டார்.

பொழிப்புரை :

நிறைந்த அடியவர் திருக்கூட்டத்துடன் பழகி வரும் அந்தணர்கள் சூழ்ந்துவர, செல்லும் கதியின் பயனைக் காண் பவரைப் போல் உளமகிழ்வு கொண்டு, பெருகிய தேவர் முதலான எவ்வுயிர்களும் வணங்க, அவரவர் வேண்டிய வரங்களையெல்லாம் தரும் தில்லையைச் சூழ்ந்த திருவெல்லையினை, ஞானம் நிறைந்த பால் அமுது உண்ட பிள்ளையார் நிலத்தில் விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

செல்கதி - சிவகதி. `எண்ணில்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை\' (தி.3 ப.24 பா.1)எனவரும் திருவாக்கும் காண்க. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 148

செங்கண் ஏற்றவர் தில்லையே
நோக்கிஇத் திருந்துல கினிற்கெல்லாம்
மங்க லந்தரு மழவிளம்
போதகம் வரும்இரு மருங்கெங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்துரை
எடுத்துமுன் தாமரை மதுவாசப்
பொங்கு செம்முகை கரங்குவித்
தலர்முகங் காட்டின புனற்பொய்கை.

பொழிப்புரை :

இத்திருந்திய உலகுக்கெல்லாம் மங்கலம் தரும் இளமையுடைய யானைக் கன்றான ஞானசம்பந்தர் வரும் இருமருங் கிலும், எங்கும் உறையும் பறவைகளின் ஒலியான வாழ்த்துகள், வழங்க, தாமரை மலர்களின் செம்முகையான கைகள் குவிய, நீர்ப் பொய்கைகள் மலர்ந்த முகத்தைக் காட்டி வரவேற்றன.

குறிப்புரை :

மங்கலம் தருதல் - சிவம் பெருக்குதல். மழ, இளஎன்பன இளமை யென்னும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாம். பிள்ளை யாரை அங்குள்ள பொய்கைகள் வரவேற்கும் திறனை இப்பாடல் கூறுகின்றது.

பண் :

பாடல் எண் : 149

கலவ மென்மயில் இனங்களித்
தழைத்திடக் கடிமணக் குளிர்கால்வந்
துலவி முன்பணிந் தெதிர்கொளச்
கிளர்ந்தெழுந் துடன்வருஞ் சுரும்பார்ப்ப
இலகு செந்தளிர் ஒளிநிறந்
திகழ்தர இருகுழை புடையாட
மலர்மு கம்பொலிந் தசையமென்
கொம்பர்நின் றாடுவ மலர்ச்சோலை.

பொழிப்புரை :

மலர்ச் சோலைகளில், தோகைகளையுடைய மென்மையான மயில் இனங்கள் மகிழ்வுடன் அழைக்கவும், புதிய மணமுடைய குளிர்ந்த தென்றல் காற்று எதிர் கொண்டு வரவேற்கவும், பெயர்ந்து எழுந்து உடன்வரும் வண்டுகள் ஒலிக்கவும், விளங்கும் செந்தளிர்கள் ஒளியுடைய நிறம் விளங்கவும், இருகுழைகள் இரு மருங்கும் ஆடவும், மலர்கள் முகம் பொலிந்து அசையவும், மென்மை யான கொம்புகள் நின்று ஆடின.

குறிப்புரை :

இருகுழை - பெரிய தளிர்கள்: பெண்களுக்கு ஆகுங்கால், காதணியாம். இதனால், சோலைகள் பிள்ளையாரை வரவேற்கும் காட்சி புலனாகும்.

பண் :

பாடல் எண் : 150

இழைத்த டங்கொங்கை இமயமா
மலைக்கொடி இன்னமு தெனஞானம்
குழைத்த ளித்திட அமுதுசெய்
தருளிய குருளையார் வரக்கண்டு
மழைத்த மந்தமா ருதத்தினால்
நறுமலர் வண்ணநுண் துகள்தூவித்
தழைத்த பொங்கெழில் முகஞ்செய்து
வணங்கின தடம்பணை வயற்சாலி.

பொழிப்புரை :

இடம் அகன்ற வயல்களில் உள்ள நெற்பயிர்கள், அணிகள் அணிந்த மார்பகங்களையுடைய, இமயமலையில் தோன் றிய கொடிபோன்ற பார்வதியம்மையார் இனிய அமுதச் சிவஞானத் தைக் குழைத்து அளிக்க, அதை உண்டருளிய ஞானசம்பந்தர் வரக் கண்டு, குளிர்ந்த மென்மையான காற்றினால் மணம் கமழும் மலர் களின் அழகிய நுண்ணிய பூந்தாதுக்களான சுண்ணத்தைத் தூவித் தழைத்த எழில் முகம் செய்து வணங்கின.

குறிப்புரை :

நெற்பயிர்கள், பிள்ளையாரை வரவேற்ற காட்சி இதனால் விளக்கப் பெறுகின்றது.

பண் :

பாடல் எண் : 151

ஞாலம் உய்ந்திட ஞானமுண்
டவர்எழுந் தருளும்அந் நலங்கண்டு
சேல லம்புதண் புனல்தடம்
படிந்தணை சீதமா ருதம்வீசச்
சால வும்பல கண்பெறும்
பயன்பெறுந் தன்மையிற் களிகூர்வ
போல சைந்திரு புடைமிடைந்
தாடின புறம்பணை நறும்பூகம்.

பொழிப்புரை :

வயல்களின் அருகேயுள்ள மணம் கமழும் பாக்கு மரங்கள், உலகம் உய்யும் பொருட்டாக ஞான அமுதையுண்டவர் எழுந்தருளும் திருத்தகைமையைக் கண்டு, சேல் மீன்கள் அலம்பும் குளிர்ந்த நீரையுடைய பொய்கைகளில் படிந்து அணைகின்ற குளிர்ந்த காற்று வீச, மிகப் பல கண்கள் பெற்ற பயன் பெறும் தன்மையினால் மகிழ்ச்சி அடைவன போல், இருமருங்கிலும் அசைந்து நெருங்கி ஆடின.

குறிப்புரை :

பூகம்: கமுகு என்கின்ற பாக்கு மரங்கள். பிள்ளையார் வரவு கண்டநிலையில் அம்மரங்கள் அவரை ஆடி வரவேற்றனவாம்.

பண் :

பாடல் எண் : 152

பவந்த விர்ப்பவர் தில்லைசூழ்
எல்லையில் மறையவர் பயில்வேள்விச்
சிவந்த ரும்பய னுடையஆ
குதிகளின் செழும்புகைப் பரப்பாலே
தவந்த ழைப்பவந் தருளிய
பிள்ளையார் தாமணை வுறமுன்னே
நிவந்த நீலநுண் துகில்விதா
னித்தது போன்றது நெடுவானம்.

பொழிப்புரை :

தவம் தழையத் தோன்றியருளிய ஞானசம்பந்தப் பெருமான் வந்தருள, அவரை வரவேற்று மகிழும் பொருட்டுப் பிற வியை ஒழித்தருளுபவரான கூத்தரின் திருத்தில்லை நகரத்தைச் சூழ்ந்த எல்லையில், மறையவர் பயிலும் வேள்வியில், சிவத்தன்மையை விளக்கும் பயன் கொண்ட வேள்வித் தீயினின்றும் எழுகின்ற செழும் புகையினது பரப்பினால், பெரிய வானம், உயர்ந்த நீலநிறமான நுட்ப மான துகிலை மேற் கட்டியாய்க் கட்டினதைப் போல் விளங்கியது.

குறிப்புரை :

சிவம் தரும் பயன் - பாச நீக்கம் செய்து சிவத்தை அடை விக்கும் பயன்: வீடு பேறாம் பயன். கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்து தில்லையை நோக்கிவரும் பிள்ளையாரை, இருமருங்கிலு முள்ள பொய்கைகளும் (பா.148), சோலைகளும் (பா.149), நெற் பயிர்களும் (பா.150), பாக்குமரங்களும் (பா.151), வானமும் (பா.152) மகிழ்ச்சி மீதூர எதிர்கொண்டவாற்றைத் தொடர்ந்து கூறி யிருக்கும் திறம் அறிந்து போற்றுதற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 153

கரும்பு செந்நெல்பைங் கமுகொடு
கலந்துயர் கழனியம் பணைநீங்கி
அரும்பு மென்மலர் தளிர்பல
மூலமென் றனைத்தின் ஆகரமான
மருங்கில் நந்தன வனம்பணிந்
தணைந்தனர் மாடமா ளிகையோங்கி
நெருங்கு தில்லைசூழ் நெடுமதில்
தென்திரு வாயில் நேரணித்தாக.

பொழிப்புரை :

கரும்பும் செந்நெல்லும் பசுமையான பாக்கு மரங்களுடன் கலந்து உயர்தற்கு இடமான வயல்களைக் கொண்ட மருத நிலத்தைக் கடந்து, அரும்புகளும் மென்மையான தளிர்களும், பழங்களும், வேர்களும் என்றிவை முதலான எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாக உள்ள திருநந்தன வனங்களை வணங்கி, மாடமாளிகை கள் ஓங்கிச் செறியும் தில்லை மாநகரைச் சூழ்ந்த மதிலின் தென்திசை வாயிலின் அருகில், ஞானசம்பந்தர் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

பொய்கை முதலாக உள்ள இயற்கைப் பொருள்கள் யாவும் பிள்ளையாரை வணங்கி வரவேற்கத் திருநந்தனவனத்தை மட்டும் இவர் வணங்கி வந்தனர் என்றது, அஃது இறைவற்குப் பயன் படும் தகவும் பயனும் கருதியாம். `பன்மலர்ப் புனித நந்த வனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்\' எனச் சுந்தரர் வரலாற்றில் (தி.12 சரு.1-5 பா.94) வருமாறும் காண்க.

பண் :

பாடல் எண் : 154

பொங்கு கொங்கையிற் கறந்தமெய்ஞ்
ஞானமாம் போனகம் பொற்குன்ற
மங்கை செங்கையா லூட்டவுண்
டருளிய மதலையார் வந்தார்என்
றங்கண்வாழ் பெருந்திருத் தில்லை
அந்தண ரன்பர்களுடன் ஈண்டி
எங்கும்மங்கல அணிமிக அலங்கரித்
தெதிர் கொள அணைவார்கள்.

பொழிப்புரை :

`பால் பெருகிய மார்பகங்களில் கலந்த மெய்ஞ் ஞானப் பாலமுதினைப் பொன்மலையின் மங்கையாரான உமையம் மையார் தம் கையினால் எடுத்து ஊட்ட, அதனை உண்டருளிய பிள்ளையார் வந்தார்\' என்று அங்கு வாழ்கின்ற தில்லைவாழ் அந்தணர்கள் அடியார்களுடன் கூடி நிறைந்து, யாண்டும் நகரை அணி செய்து, பிள்ளையாரை எதிர்கொள்ள அணைவாராய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 155

வேத நாதமும் மங்கல
முழக்கமும் விசும்பிடை நிறைந்தோங்கச்
சீத வாசநீர் நிறைகுடந்
தீபங்கள் திசையெலாம் நிறைந்தாரச்
சோதி மாமணி வாயிலின் புறஞ்சென்று
சோபன வாக்கமுஞ் சொல்லிக்
கோதி லாதவர் ஞானசம்
பந்தரை எதிர்கொண்டு கொடுபுக்கார்.

பொழிப்புரை :

மறைகளின் ஒலியும், மங்கல முழக்கமும் வானத் தில் நிறைந்து ஒலிக்கவும், குளிர்ச்சியும் மணமும் உடைய நீர் நிரம்பிய குடங்களும் நல்விளக்குகளும் நிறைந்து பொருந்தவும், ஒளி பொருந்திய பெரிய மணிகளையுடைய திருவாயிலின் வெளியே நின்று, மங்கலம் பெருக, `நல் வரவாகுக\' என்ற நன் மொழிகளையும் வாழ்த்துரைகளையும் சொல்லித் தீது நீங்கப் பெற்று வாழ்ந்தவர்களாகி, ஞானசம்பந்தரை எதிர் ஏற்று அழைத்துச் சென்றனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 156

செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் தென்றிசைத் திருவாயில்
எல்லை நீங்கியுள் புகுந்திரு
மருங்குநின் றெடுக்கும்ஏத் தொலிசூழ
மல்லல் ஆவண மறுகிடைக்
கழிந்துபோய் மறையவர் நிறைவாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிறைத்திரு
வீதியைத் தொழுதணைந் தனர்தூயோர்.

பொழிப்புரை :

செல்வம் நிரம்பிய தில்லை மூதூரில் தெற்கு வாயிலின் வழி உட்புகுந்து, இருமருங்கிலும் எடுத்துப் போற்றும் ஒலி சூழ, வளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்துபோய், அந் தணர்களின் நிறைவுடைய வாழ்க்கையைக் காண்டற்குரிய திருமாளி கைகள் நிரல்பட அமைந்து நிற்கும் திருவீதியைத் தொழுது, பிள்ளை யாரான தூயவர் திருநகரத்துள் சென்றனர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 157

மலர்ந்த பேரொளி குளிர்தரச்
சிவமணங் கமழ்ந்துவான் துகள்மாறிச்
சிலம்ப லம்புசே வடியவர்
பயில்வுறுஞ் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர்தஞ் சிந்தையில்
திகழ்திரு வீதிகண் களிசெய்யப்
புலங்கொள் மைந்தனார் எழுநிலைக்
கோபுரம் பணிந்தெழுந் தனர்போற்றி.

பொழிப்புரை :

உலகெலாம் மலர்ந்த பேரொளி தண்ணிதாக அமைய, சிவ மணம் கமழ நிற்பதால் வானளவாய தூசுகள் நீங்கப் பெற்று, சிலம்பு ஒலிக்கும் சேவடிகளையுடைய கூத்தப் பெருமான் வீற்றிருக்கப் பெற்றதால் திருத்தொண்டின் உறைப்புப் பெற்ற அடிய வர்களின் உள்ளம் போல் விளங்கும் அவ்வீதியானது தம் கண்களை மகிழச் செய்ய, இவ்வுலகம் பயன் கொள்வதற்குரிய ஞானசம்பந்தப் பிள்ளையார் எழுநிலைக் கோபுரத்தைப் போற்றிப் பணிந்து எழுந்தார்.

குறிப்புரை :

அடியவர்களின் திருவுள்ளம் எனத் திருவீதி திகழ்ந்தது: திருவீதிக்கு ஆங்கால்: ஒளிதிகழ்தல் - சந்திரகாந்தக் கற்களாலாய மாடங்கள், திருவிளக்குகள் ஒளிதருதல். சிவமணம் கமழ்தல் - பெரு மானுக்குரிய தூபம் முதலாய நறுமணப் பொருள்கள் கமழ்தல். வான் துகள் - வானளாவிய தூசுகள். சிலம்பு அலம்ப சேவடியவர் பயில் வுறல் - பெருமான் திருவுலாப்போதருதல். அடியவர்களின் திருவுள் ளத்திற்கு ஆங்கால்: மலர்ந்த பேரொளி திகழ்தல் - உயிராவணம் இருந்து உற்று நோக்கிய நிலையில் உள்ளத்துள் சிவமுளைதழைதல். சிவ மணம் - சிவயோகத்தால் பெற்ற சிவமணம். வான்துகள் - நீள இருந்த ஆணவம் முதலாய தூசுகள். சேவடிபயில்வுறல் - சிவப் பேற்றை அடைதல்.

பண் :

பாடல் எண் : 158

நீடு நீள்நிலைக் கோபுரத்
துள்புக்கு நிலவிய திருமுன்றில்
மாடு செம்பொனின் மாளிகை
வலங்கொண்டு வானுற வளர்திங்கள்
சூடு கின்றபே ரம்பலம்
தொழுதுபோந் தருமறை தொடர்ந்தேத்த
ஆடு கின்றவர் முன்புற
அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.

பொழிப்புரை :

நீண்டுயர்ந்த நிலைகளைக் கொண்ட தெற்குக் கோபுரத்துள் புகுந்து, நிலைபெற்ற திருமுற்றத்தின் அருகேயுள்ள செம்பொன் மாளிகையைச் சூழ வலமாக வந்து, வானுற ஓங்கிய திங்களைச் சூடிடும் உயர்ந்த பேரம்பலத்தை வணங்கி, மேலும் சென்று, அரிய மறைகள் தொடர்ந்து போற்றத் திருக்கூத்து இயற்றும் கூத்தப் பெருமானின் திருமுன்பு சேர்வதற்கு, அழகு மிகும் மணிகளையுடைய திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார் ஞானசம்பந்தர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 159

நந்தி யெம்பிரான் முதற்கண
நாதர்கள் நலங்கொள்பன் முறைகூட
அந்த மில்லவர் அணுகிமுன்
தொழுதிரு அணுக்கனாந் திருவாயில்
சிந்தை யார்வமும் பெருகிடச்
சென்னியிற் சிறியசெங் கையேற
உய்ந்து வாழ்திரு நயனங்கள்
களிகொள்ள உருகுமன் பொடுபுக்கார்.

பொழிப்புரை :

நந்தி தேவரான நம்பெருமானைத் தலைவராகக் கொண்ட சிவகணநாதர்கள், நலம்மிக நிரல்படக் கூடி நிற்க, எண்ணி றந்த அடியவர்கள், முனிவர்கள், தேவர்கள் முதலியவர்கள் அவர்க ளின் பின்நின்று தொழுகின்ற திருவணுக்கன் வாயிலில், உள்ளத்தில் ஆர்வம் பெருகவும், தலைமீது சிறிய சிவந்த கைகள் ஏறிக் குவியவும், கண்கள் மகிழ்ச்சி பொருந்தவும், உருகிய அன்புடன் உட்புகுந்தார் காழிப் பிள்ளையார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 160

அண்ண லார்தமக் களித்தமெய்ஞ்
ஞானமே யானஅம் பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழும்
ஆனந்த வொருபெருந் திருக்கூத்தும்
கண்ணில் முன்புறக் கண்டுகும்
பிட்டெழுங் களிப்பொடுங் கடற்காழிப்
புண்ணி யக்கொழுந் தனையவர்
போற்றுவார் புனிதரா டியபொற்பு.

பொழிப்புரை :

தலைமையமைந்த இறைவர் தமக்குத் தந்த மெய்ஞ்ஞானமேயாய திருவம்பலத்தையும், தமதுள்ளத்தே நிறைந் துள்ள அச்சிவஞானத்துள் எழுகின்ற சிவானந்தமான ஒப்பில்லாத பெருமை பொருந்திய திருக்கூத்தையும், கண்களின் முன் வெளிப்படக் கண்டு வணங்கியதால் உண்டான பெருமகிழ்வுடன், கடல் சூழ்ந்த சீகா ழியில் தோன்றிய சிவ புண்ணியக் கொழுந்து போன்ற பிள்ளையார், தூயவரான இறைவரின் திருக்கூத்து இயற்றும் அழகைப் போற்று பவராய்,

குறிப்புரை :

மெய்ஞ்ஞானம் - மெய்யுணர்வு : தன்னறிவானும் தனக்குற்ற கருவிகளானும் அறிதற்கரியதாகலின் உணர்வரிய மெய்ஞ் ஞானம் என முன்னர்க் குறித்தார். இவ்வுணர்வின் பயன் இறையைக் கண்டு மகிழ்தலாம்.

பண் :

பாடல் எண் : 161

உணர்வின் நேர்பெற வருஞ்சிவ
போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும்
எளிவர அருளினை எனப்போற்றி
இணையில் வண்பெருங் கருணையே
ஏத்திமுன் எடுத்தசொற் பதிகத்திற்
புணரு மின்னிசை பாடினர்
ஆடினர் பொழிந்தனர் விழிமாரி.

பொழிப்புரை :

`உள் உணர்வால் உணர வருகின்ற சிவபோ கத்தை, வெளிப்படப் புலப்படுத்தி நிற்கும் ஐம்பொறிகளின் அளவி லும் எளிதில் கண்டு மகிழும் வண்ணம் அருள்செய்தீர்\' எனப் போற்றி ஒப்பில்லாத கருணைத் திறத்தை முன்னர்த் தொடங்கிய சொற் பதிகத் தில் பொருந்தும் இனிய இசையுடன் பாடுபவராய், மகிழ்ச்சி மீதூரக் கூத்தாடுபவராய்க் கண்களினின்றும் அவ்வின்பப் பெருக்கைப் பொழிந்தவராய்,

குறிப்புரை :

இக்கருத்தமைவுடைய திருப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 162

ஊழி முதல்வர்க்
குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ்
அந்தணரை முன்வைத்தே
ஏழிசையும் ஓங்க
எடுத்தார் எமையாளும்
காழியர்தங் காவலனார்
கற்றாங் கெரியோம்பி.

பொழிப்புரை :

ஊழிகளின் முதல்வரான கூத்தப் பெருமானுக்கு உரிய அகம்படிமைத் தொழில் புரிந்துவரும் சிறப்பால், தில்லையில் வாழும் அந்தணரை முதலில் வைத்து, ஏழிசையும் பொருந்தி விளங்கக் `கற்றாங்கு எரியோம்பி\' என்ற முதற்குறிப்பை உடைய திருப்பதிகத்தை எம்மை ஆளும் சீகாழிக் காவலர் தொடங்கியவராய்,

குறிப்புரை :

தொடர்ந்து வரும் பிறப்பு இறப்பின் தொடர்பால் இளைப்புற்று நிற்கும் உயிர்களுக்கு அவ்விளைப்பு நீங்குதற்காக அவற்றைத் தன்பால் ஒடுக்கியும், வினை நீக்கத்தின் பொருட்டு மீளத் தோற்றுவித்தும் வரும் பாங்கால், இறைவனை, `ஊழி முதல்வன்\' என்றார். `ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனையே\' (தி.8 ப.7 பா.8) என வரும் திருவாக்கும் காண்க. இவ்வாறு அந்தத்தைச் செய்யும் பெருமானே ஆதியாதல் பற்றி `அந்தம் ஆதி\' என மெய்ந்நூல்கள் குறிப்பதாயின. `கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய\' என இப் பதிகம் (தி.1 ப.80). தொடங்கி வருதலின், `தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே\' எனக் கூறினார். இப்பதிகம் குறிஞ்சிப் பண்ணில் அமைந்துள்ளது

பண் :

பாடல் எண் : 163

பண்ணார் பதிகத்
திருக்கடைக்காப் புப்பரவி
உண்ணாடும் என்பும்
உயிருங் கரைந்துருக்கும்
விண்ணா யகன்கூத்து
வெட்டவெளி யேதிளைத்துக்
கண்ணா ரமுதுண்டார்
காலம் பெறஅழுதார்.

பொழிப்புரை :

காலம் உண்டாகவே காதல் செய்து அழுது அழைத்தவரான பிள்ளையார், பண் நிரம்பிய திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பினை நிறைவித்துப் போற்றி, உடற்கு நிலைக்கள னாய எலும்பும், உயிரும் கரையுமாறு உருக்குகின்ற இறைவரின் அருட்கூத்தை வெட்ட வெளியில் நுகர்ந்து, கண்ணகத்தே நின்று களிதரும் அமுதை உட்கொண்டார்.

குறிப்புரை :

இப்பதிகப் பண் குறிஞ்சியாம். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 164

முன்மால் அயன்அறியா
மூர்த்தியார் முன்னின்று
சொன்மாலை யாற்காலம்
எல்லாந் துதித்திறைஞ்சிப்
பன்மா மறைவெள்ளம்
சூழ்ந்து பரவுகின்ற
பொன்மா ளிகையைவலங்
கொண்டு புறம்போந்தார்.

பொழிப்புரை :

முற்காலத்தில் திருமாலும் நான்முகனும் அறியாத இறைவரின் திருமுன் நின்று, சொல் மாலையான திருப்பதிகங்களால் எல்லாக் காலங்களிலும் போற்றி வணங்கி, அளவற்ற பெருமறை களின் வெள்ளங்கள் சூழ்ந்து வணங்குகின்ற செம்பொன் மாளிகை யான பொன்னம்பலத்தை வலமாக வந்து புறத்தே போந்தார்.

குறிப்புரை :

`சொல்மாலையால் கால மெல்லாம் துதித்து\' எனவே, இக்கால எல்லையில் பிள்ளையார், பல்வேறு பண்களில், பல பதிகங் களை அருளிச் செய்திருத்தல் வேண்டும். எனினும் அவை கிடைத் தில. பன்மாமறை வெள்ளம் - அளவற்ற மறைகள். அம்மறைகளை ஓதிவரும் அளவற்ற அந்தணர் கூட்டம் என்றும் அமையும். இனி அம்மாளிகையின் தூண்கள், பலகணிகள், மேல்வேய்ந்த ஓடுகள் பலவும் மறைகளின் மந்திர உறுப்புக்களாக அமைந்திருத்தல் பற்றி இங்ஙனம் கூறினார் எனலுமாம்.

பண் :

பாடல் எண் : 165

செல்வத் திருமுன்றில்
தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்
மல்குந் திருவாயில்
வந்திறைஞ்சி மாதவங்கள்
நல்குந் திருவீதி
நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறம்அஞ்சு
வார்சண்பை ஆண்டகையார்.

பொழிப்புரை :

செல்வம் பொருந்திய திருமுன்றிலின் கீழே விழுந்து வணங்கி எழுந்து, விண்ணவர் கூட்டம் நிறைந்திருக்கும் திருவாயிலில் வந்து வணங்கி, மாதவங்களைத் தரும் நான்கு வீதிக ளையும் வணங்கி, அவ்விடத்தில் தங்கியிருத்தற்கும் பிள்ளையார் அஞ்சுபவராய்,

குறிப்புரை :

செல்வத் திருமுன்றில் - செல்வராய பெருமானும் அவரை வணங்கும் செல்வமாய செல்வமும் நிலைபெற்றிருக்கும் திருமுன்றில். தவத்தின் பயன் சிவத்தை அடைதலாம். இவ்வீதிகள் சிவமே நிலவிய திருவீதிகளாதலின் அப்பயனை அவ்வீதிகளே நல்குதலின் `மாதவங்கள் நல்கும் திருவீதி\' என்றார். அவ்விடத்துத் தங்குதற்கும் அஞ்சினார் என்பதால் அப்பதியின் பெருமையுணர நின்றது. அன்றியும் தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சார்ந்து நிற்கும் பிள்ளையாரின் பெருமையும் உணர நின்றது.

பண் :

பாடல் எண் : 166

செய்ய சடையார்
திருவேட் களஞ்சென்று
கைதொழுது சொற்பதிகம்
பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளுமிடம்
அங்காக மன்றாடும்
ஐயன் திருக்கூத்துக்
கும்பிட் டணைவுறுநாள்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் சிவந்த சடையையுடைய சிவபெருமானின் திருவேட்களத்துக்குச் சென்று, கையால் தொழுது சொல்பதிகத்தைப் பாடி, எழுந்தருளியிருக்கும் இடம் அவ்விடமாக, நாளும் அப்பேரம்பலத்தில் வீற்றிருந்தருளும் பெருமானாரின் திருக் கூத்தையும் சென்று கண்டு மகிழ்ந்து மீண்டு போந்திருக்கும் அந்நாளில்,

குறிப்புரை :

திருவேட்களத்தில் பாடிய சொற்பதிகம் `அந்தமும் ஆதியும்\' (தி.1 ப.39) என்று தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 167

கைம்மான் மறியார்
கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம்
பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித்
திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்
டருந்தமிழும் பாடினார்.

பொழிப்புரை :

தம் திருக்கையில் மான் கன்றைக் கொண்டி ருக்கும் சிவபெருமான் எழுந்தருளிய திருக்கழிப் பாலையைச் சேர்ந்து மெய்ம்மை பொருந்திய சொற்பதிகத்தைப் பாடி, மணமுடைய கொன்றை மலராலாய அழகான மாலையைச் சூடிய திருச்சடையை உடைய `திருவுச்சி\' என்னும் பதியில் எழுந்தருளிய இறைவரைக் கும்பிட்டு அரிய தமிழ்ப்பதிகத்தையும் பாடினார் காழிப் பிள்ளையார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. திருக்கழிப்பாலையில் அருளிய பதிகங்கள்: 1. `புனலாடிய\' (தி.2 ப.21) - பண், இந்தளம். 2. `வெந்தகுங்கிலியப்புகை\' (தி.3 ப.44) - பண், கௌசிகம். திருநெல்வாயிலில் அருளிய பதிகம்: `புடையினார்\' (தி.2 ப.26) - பண், இந்தளம். இத்திருப்பதி திருவுச்சி என்றும், சிவபுரி என்றும் அழைக்கப்பெறும். இப்பதிகப் பாடல் தொறும் இறைவன் `உச்சியாரே\' எனக் குறிக்கப் பெறுதலும் காணலாம். உச்சியார் - தலை மீது உள்ளவர் எனும் பொருள்படவும் வரும். `தலைமே லான்\' (தி.6 ப.8 பா.5) என வரும் அப்பர் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 168

பாடும் பதிகஇசை
யாழ்ப்பாண ரும்பயிற்றி
நாடுஞ் சிறப்பெய்த
நாளும்நடம் போற்றுவார்
நீடுந் திருத்தில்லை
அந்தணர்கள் நீள்மன்றுள்
ஆடுங் கழற்கணுக்க
ராம்பே றதிசயிப்பார்.

பொழிப்புரை :

பாடப்பட்ட பதிகத்தின் இசையினைத் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும் யாழில் இசைத்து வேண்டத்தகும் சிறப் பைப் பெற்றார். நாளும் தில்லையில் சென்று இறைவரின் திருக்கூத் தைப் போற்றிவரும் பிள்ளையார், தில்லைவாழ் அந்தணர்கள் நீளும் திருவம்பலத்தில் ஆடும் திருவடிகளுக்கு அணுக்கத் தொண்டர்களாக இருக்கும் பேற்றைப் பார்த்து வியப்படைந்து வந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 169

ஆங்கவர்தஞ் சீலத்
தளவின் மையும்நினைந்தே
ஓங்கியெழுங் காதல்
ஒழியாத உள்ளத்தார்
தேங்கமழுஞ் சோலைத்
திருவேட் களங்கடந்து
பூங்கிடங்கு சூழ்புலியூர்ப்
புக்கணையும் போழ்தின்கண்.

பொழிப்புரை :

அங்கு வாழும் அந்தணர்கள் தம் ஒழுக்கத்தில் அளவில்லாத சிறப்புடன் நிற்கும் நிலைமையும் எண்ணி, மேல் கிளர்ந்து எழும் ஆசை நீங்காத மனத்துடன், ஒருநாள் மணம் வீசும் சோலை சூழ்ந்த திருவேட்களத்தைக் கடந்து, மலர்கள் நிரம்பிய அகழி சூழ்ந்த திருப்புலியூரினுள் புகுந்து சேர்கின்ற போழ்தில்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 170

அண்டத் திறைவர்
அருளால் அணிதில்லை
முண்டத் திருநீற்று
மூவா யிரவர்களும்
தொண்டத் தகைமைக்
கணநாத ராய்தோன்றக்
கண்டஅப் பரிசுபெரும்
பாணர்க்கும் காட்டினார்.

பொழிப்புரை :

எவ்வுலகிற்கும் இறைவரான கூத்தப் பெருமான் திருவருளால், அழகிய தில்லையில் வாழ்கின்ற, நெற்றியில் திருநீற்றை அணிந்த அந்தணர் மூவாயிரவரும் திருத்தொண்டின் தன்மையுடைய சிவகண நாதர்களாய்த் தோன்றக் கண்டு, அதனை ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் காட்டினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 171

செல்வம் பிரிவறியாத்
தில்லைவாழ் அந்தணரும்
எல்லையில்சீர்ச் சண்பை
இளவே றெழுந்தருளி
ஒல்லை இறைஞ்சாமுன்
தாமும் உடனிறைஞ்சி
மல்லல் அணிவீதி
மருங்கணைய வந்தார்கள்.

பொழிப்புரை :

அருட்செல்வம் என்றும் நீங்கப் பெறாத தில்லை வாழ் அந்தணர்களும், அளவற்ற சிறப்பையுடைய சீகாழியில் தோன் றிய இளஞ்சிங்க ஏற்றைப் போன்ற ஞானசம்பந்தர் எழுந்தருளி வந்து விரைந்து தம்மை வணங்குதற்கு முன்பே, தாமும் உடனே வணங்கிச் செழுமையும் பொலிவும் கொண்ட வீதியில் அவர் அருகே சூழ வந்தனர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 172

பொங்கி யெழுங்காதல்
புலனாகப் பூசுரர்தம்
சிங்கம் அனையார்
திருமுடியின் மேற்குவித்த
பங்கயத்தின் செவ்வி
பழித்து வனப்போங்கும்
செங்கை யொடுஞ்சென்று
திருவாயி லுட்புக்கார்.

பொழிப்புரை :

மேன்மேலும் பெருகி எழும் மிக்க ஆசையானது வெளித் தோன்றுமாறு அந்தணர்களின் சிங்கம் போன்ற ஆளுடைய பிள்ளையார், தலைமீது கூப்பிய தாமரை மலரின் அழகையும் வென்று அவ்வழகாலே ஓங்கும் கையுடனே சென்று திருவாயிலுள் புகுந்தார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 173

ஒன்றிய சிந்தை
உருக உயர்மேருக்
குன்றனைய பேரம்
பலமருங்கு கும்பிட்டு
மன்றுள் நிறைந்தாடும்
மாணிக்கக் கூத்தர்எதிர்
சென்றணைந்து தாழ்ந்தார்
திருக்களிற் றுப்படிக்கீழ்.

பொழிப்புரை :

இறைவரிடம் ஒன்றுபட்ட மனம் உருக, உயர்ந்த மேரு மலையைப் போன்ற பேரம்பலத்துள் நிறைந்து அருள்கூத்து இயற்றுகின்ற மாணிக்கக் கூத்தரின் திருமுன்பு திருக்களிற்றுப் படியின் கீழே நின்று தாழ்ந்து எழுந்தார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 174

ஆடி னாய்நறு நெய்யொடு
பால்தயிர் என்றெடுத் தார்வத்தால்
பாடி னார்பின்னும் அப்பதி
கத்தினிற் பரவிய பாட்டொன்றில்
நீடு வாழ்தில்லை நான்மறை
யோர்தமைக் கண்டஅந் நிலையெல்லாம்
கூடு மாறுகோத்து அவர்தொழு
தேத்துசிற் றம்பலம் எனக்கூறி.

பொழிப்புரை :

`ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்\' என்று தொடங்கி, மிகுந்த ஆசையுடன் பாடினார். மேலும் அப்பதிகத்தில் போற்றியதொரு திருப்பாட்டில், தில்லைவாழ் அந்தணர்களை அன்று தாம் கணநாதராய்க் கண்ட அந்நிலைகள் எல்லாம் பொருந்துமாறு கோத்து, அத்தகைய தன்மையுடையவர் தொழுது, வணங்கும் திருச்சிற்றம்பலமாகும் என்று எடுத்துக் கூறி,

குறிப்புரை :

`ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்\' (தி.3 ப.1) எனத் தொடங்கும் பதிகம், காந்தார பஞ்சமப் பண்ணில் அமைந்தது. தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணநாதர்களாகப் பிள்ளையார் கண்டு போற்றிய குறிப்பை, இப்பதிகத்துள் 3ஆவது பாடல் கூறும்.
`நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றி மேலுற்ற கண்ணி னார்பற்று
சூலத் தார்சுட லைப் பொடி நீறணி வார்சடையார்
சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்த லாற்கழற் சேவடி கைதொழக்
கோலத் தாயரு ளாயுன காரணங் கூறுதுமே\' (தி.3 ப.1 பா.3)
என்பது அப்பாடலாகும். இதன்கண் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணநாதரின் தோற்றமாகக் கண்டிருப்பதைக் காணலாம். நீலநிறம் பொருந்திய கழுத்தும், நெற்றிக் கண்ணும், சூலமும் தில்லைவாழ் அந்த ணர்களுக்கு இயல்பில் அமைந்தனவல்ல. ஆயினும் அவை அவர்களி டத்துக் கண்டது சிவகணங்களாக இறைவர் காட்டிய நிலையிலேயாம். திருவாரூர்ப் பிறந்தார்களைச் சிவகணங்களாக நமிநந்தி அடிகட்கு இறைவர் காட்டியமையும் ஈண்டு நினைவு கூரலாம். (தி.12 பு.27 பா.27).

பண் :

பாடல் எண் : 175

இன்ன தன்மையில் இன்னிசைப்
பதிகமும் திருக்கடைக் காப்பேற்றி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில்
திளைத்தெதிர் வந்துமுன் நின்றாடும்
பின்னு வார்சடைக் கூத்தர்பே
ரருள்பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலஞ் சூழ்ந்துதாழ்ந்
தெழுந்துபோந் தணைந்தனர் புறமுன்றில்.

பொழிப்புரை :

இவ்வாறாய நிலையில் இனிய இசை பொருந்திய பதிகத்தைத் திருக்கடைக் காப்புச் சொல்லி நிறைவாக்கிப் போற்றி, நிலைபெற்ற ஆனந்த வெள்ளத்துள் முழுகித் திளைத்து, எதிரில் வந்து நின்றாடும் பின்னிய நீண்ட சடையையுடைய கூத்தரின் திருவருளைப் பெறுமாறு பிரியா விடை பெற்றுப் பொன்னம்பலத்தை வலம் வந்து வெளிமுற்றத்தை அடைந்தார் பிள்ளையார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 176

அப்பு றத்திடை வணங்கிஅங்
கருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு றத்தொழு தெழுந்துடன்
போதரப் போற்றிய புகழ்ப்பாணர்
நற்ப தந்தொழு தடியனேன்
பதிமுதல்நதி நிவாக் கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட
வேண்டும்என் றுரைசெய அதுநேர்வார்.

பொழிப்புரை :

அத்திரு முற்றத்தைப் புறத்தில் வணங்கி, அங்குத் திருவருள் பெற்று அழகிய மணிகள் பதித்த திருவாயிலில் தொழுது, வணங்கி, எழுந்தார் பிள்ளையார். அது பொழுது தம்முடன் வரப் பெறும் பேற்றைப் பெற்ற புகழையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் திருவடிகளை வணங்கி, அடியவனின் பதியான `திருஎருக்கத்தம் புலியூர்\' முதலாக `நிவா நதியின் கரையில் உள்ள ஒப்பில்லாத திருப்பதிகளைச் சென்று வணங்க வேண்டும்\' என்று வேண்டிக் கொள்ளப் பிள்ளையாரும் அதற்கு உடன்பட்டவராய்,

குறிப்புரை :

நிவாநதி - வட வெள்ளாற்றை இன்றும் சிற்சில இடங்களில் நிவா நதி என அழைப்பர். திருமுறைகளில் நிவா நதி எனும் பெயரே பெரிதும் குறிப்பிடப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 177

பொங்கு தெண்திரைப் புனிதநீர்
நிவாக்கரைக் குடதிசை மிசைப்போந்து
தங்கு தந்தையா ருடன்பரி
சனங்களும் தவமுனி வருஞ்செல்லச்
செங்கை யாழ்திரு நீலகண்
டப்பெரும் பாணனா ருடன்சேர
மங்கை யார்புகழ் மதங்கசூ
ளாமணி யார்உடன் வரவந்தார்.

பொழிப்புரை :

நீர் பெருகுகின்ற தெளிந்த அலைகளையுடைய, தூய நீர் நிரம்பிய, நிவா நதிக்கரையின் வழியே, மேற்குத் திசையில் சென்று, தம்முடன் வந்தருளும் தந்தையாரான சிவபாத இருதயர், அடியவர்கள், தவமுனிவர்கள், செவ்விய கையில் யாழையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவர் மனைவியாரான மதங்க சூளா மணியாரும் யாவரும் உடன்வர ஆளுடைய பிள்ளையார் சென் றருளினார்.

குறிப்புரை :

கொல்லி மலை, பச்சைமலை ஆகிய இம்மலைகளி லிருந்து வரும் கானாரியாறு, எழுமூர் ஆறு, என்பனவும், கல்விராயன் மலையிலிருந்து பல சிற்றாறுகளாகப் பெருகி, ஆற்றூர், ஆறகனூர், சின்ன சேலம் வழியாக வரும் இப்போது வசிஷ்ட நதி என்று வழங்கும் ஆறும், கல்விராயன் மலை, மற்றும் சில சரிவுகளிலிருந்து வரும் மயூர நதி, திருமணிமுத்தாறு (திருமுதுகுன்றம் வழியாக வருவது), தேனாறு முதலியவைகளும் ஆங்காங்கு வந்து கூடி, வடவெள்ளாறு என்ற பெயரால் பெருகி வரும் சிறப்புடையது நிவா நதியாகும். ஆதலின் ஆசிரியர், `பொங்கு தெண்டிரைப் புனிதநீர் நிவா\' என்றார் (சிவக் கவிமணியவர்கள் குறிப்பு). இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 178

இருந்த டங்களும் பழனமும்
கடந்துபோய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீலகண்
டப்பெரும் பாணனார் வணங்கிக்கார்
நெருங்கு சோலைசூழ் இப்பதி
அடியனேன் பதியென நெடிதின்புற்
றருங்க லைச்சிறு மழஇளங்
களிறனார் அங்கணைந் தருள்செய்வார்.

பொழிப்புரை :

பெரிய நீர் நிலைகளையும் வயல்களையும் கடந்து சென்று திருஎருக்கத்தம்புலியூரின் அருகில் சென்று சேர, திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருமுன் வந்து வணங்கி நின்று, மேகங்கள் நெருங்கிய தும் பூஞ்சோலைகள் சூழ்ந்ததுமான இத்திருப்பதி, அடியேனின் பதியா கும் என்று விண்ணப்பித்துக் கொள்ள, மிகவும் மகிழ்ச்சியடைந்து, அரிய மறை முதலிய கலைகள் யாவும் விளங்குதற்கு இடமான அத் திருப்பதியை சிறிய இளைய யானைக் கன்றைப் போன்ற பிள்ளை யார் அணைந்து அருள் செய்பவராய்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 179

ஐயர் நீரவ தரித்திட
இப்பதி அளவில்மா தவமுன்பு
செய்த வாறெனச் சிறப்புரைத்
தருளிஅச் செழும்பதி இடங்கொண்ட
மைகொள் கண்டர்தங் கோயிலி
னுட்புக்கு வலங்கொண்டு வணங்கிப்பார்
உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப்
பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்.

பொழிப்புரை :

`ஐயரே! நீர் இங்குத் தோன்றுதற்கு இத்திருப்பதி யானது அளவற்ற பெருந்தவத்தைச் செய்திருந்தது எனச் சிறப்பித்துக் கூறி, அச் செழிப்புடைய திருப்பதியில் இடம் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருநீலகண்டரான இறைவரின் திருக்கோயிலுக்குள் சென்று வணங்கி, உலகுய்யத் தோன்றிய பிள்ளையார் செழுந்தமிழ்ப் பதி கத்தை இசையுடன் அருள்செய்தார்.

குறிப்புரை :

இத்திருப்பதியில் பாடியருளியது `படையார் தரு\' (தி.1 ப.89) என்று தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். சிறந்த அடியவர்கள் உடன் இருக்கப் பாடுங்கால் அவர்களை அப்பதி கப் பாடல்களுள் ஒன்றிலோ அல்லது பதிகம் முழுமையாகவோ கூடச் சிறப்பித்துப் பாடுவது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய பெருமக்களின் இயல்பாகும். இதனை அவரவர் வரலாற்றிலும் ஆங்காங்குக் காண இயலுகின்றது. அந்நிலையில், யாழ்ப்பாணர் தில்லையில், தம்பதி முதலாயவற்றிற்கு வரவேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டும், உடன் வந்தும், திருப்பதிகங்களை யாழிலிட்டு இசைத்தும் வர, அவரைச் சம்பந்தர் அவர்தம் திருப்பதியில் அருளிய இப்பதிகத்துள் ஓரிடத்தேனும் வைத்துப் பாடாதிரார் என்றே நினைய வேண்டியுள் ளது. இப்பதிகத்துள் ஏழாவது பாடல் கிடைத்திலது. ஒருகால் அப்பாடலில் இயைத்துப் பாடி இருக்கலாம் அன்றி இத்திருப்பதிக்கு, இப்பதிகம் தவிரப் பிறபதிகங்கள் இருந்து, அவற்றில் வைத்துப் பாடப்பெற்று, அவை இன்று கிடைக்காமலும் இருக்கலாம், திருவருள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 180

அங்கு நின்றெழுந் தருளிமற்
றவருடன் அம்பொன்மா மலைவல்லி
பங்கர் தாமினி துறையுநற்
பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்
துங்க வண்டமிழ்த் தொடைமலர்
பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்
செங்க ணேற்றவர் திருமுது
குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்.

பொழிப்புரை :

அப்பதியினின்றும் புறப்பட்டு மேற்சென்று, அழகிய பொன்மலையில் தோன்றியருளிய உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் இனிதாய் உறைகின்ற பதியாகிய பலவற்றிற்கும் சென்று பணிந்து ஏத்தி, உயர்ந்த வண்டமிழ்ப் பாமா லைகள் பாடிச் சென்று, பழமையான சீகாழித் தலைவரான பிள்ளை யார் சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் `திருமுதுகுன்றத்தை\' வணங்கிச் சென்று அணைப வராய்,

குறிப்புரை :

`பதிபல பரிவோடும் பணிந்தேத்தி\' என்பதால், திருஎருக்கத்தம்புலியூரிலிருந்து திருமுதுகுன்றம் வரையிலுள்ள பல பதிகளுக்கும் சென்று பற்பல திருப்பதிகங்களையும் பாடியருளியிருக் கலாம். எனினும் அப்பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 181

மொய்கொள் மாமணி கொழித்துமுத்
தாறுசூழ் முதுகுன்றை அடைவோம்என்று
எய்து சொன்மலர் மாலைவண்
பதிகத்தை இசையொடும் புனைந்தேத்திச்
செய்த வத்திரு முனிவருந்
தேவருந் திசையெலாம் நெருங்கப்புக்
கையர் சேவடி பணியுமப்
பொருப்பினில் ஆதர வுடன்சென்றார்.

பொழிப்புரை :

`பெருமணிகளை மிகுதியாகக் கொழித்துக் கொண்டு வரும் திருமணிமுத்தாறு சூழும் திருமுதுகுன்றத்தைச் சென்ற டைவோம்\' என்று பொருந்தும் சொல்மலர்களாலாய பதிகத்தை இசையுடன் பாடிப் போற்றி, சிறந்த தவத்தையுடைய முனிவர்களும் தேவர்களும் திசையனைத்தும் நெருங்கப் புகுந்து, இறைவரின் சேவடி களை வணங்குகின்ற அப்பழமலையினிடத்து அன்பு மீதூரச் சென்ற டைந்தார்.

குறிப்புரை :

`முதுகுன்றடைவோமே\' எனும் தொடர், பதிகம் முழுதும் அமைந்துள்ளது. அப்பதிகம் `மத்தா வரை\' (தி.1 ப.12) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணாலாமைந்த பதிகம் ஆகும். இஃது திருப்பதியை அணையும் பொழுது அருளியதாகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 182

வான நாயகர் திருமுது
குன்றினை வழிபட வலங்கொள்வார்
தூந றுந்தமிழ்ச் சொல்லிருக்
குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி
ஞான போனகர் நம்பர்தங்
கோயிலை நண்ணியங் குள்புக்குத்
தேன லம்புதண் கொன்றையார்
சேவடி திளைத்தஅன் பொடுதாழ்ந்தார்.

பொழிப்புரை :

தேவதேவரான சிவபெருமானின் திருமுதுகுன் றத்தை வழிபடும் பொருட்டு, அதை வலமாய் வருகின்றவராய்த் தூய நல்ல தமிழ்ச் சொற்களால் திருவிருக்குக்குறட் பதிகமாகிய துணை மலர்களை மொழிந்து, போற்றிச் சிவபெருமானின் கோயிலை அடைந்து, உட்சென்று, தேன்சிந்தும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை அணிந்த சிவபெருமானின் அடிகளில், ஞான அமுதத்தை உண்ட பிள்ளையார், மிகுந்த அன்புடனே தாழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

திருக்கோயிலை வலம் வரும் பொழுது அருளிய திருவிருக்குக்குறள் பதிகம், `நின்று மலர்தூவி\' (தி.1 ப.93) எனத் தொடங் கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 183

தாழ்ந்தெ ழுந்துமுன் முரசதிர்ந்
தெழும்எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி
அதனிடை வைகுவார் மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத்
தாற்றொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை
விளம்பியே மேவினார் சிலநாள்கள்.

பொழிப்புரை :

வணங்கி எழுந்து, இறைவன் திருமுன்பு நின்று, `முரசதிர்ந்தெழுதரு\' என்ற தண்ணார் தமிழ் மாலையைப் பாடி, இன்புற்று வெளிப்போந்து, வளம் மிக்க அத்திருப்பதியில் தங்கி யிருந்தார். அவர் மணிகளையுடைய அந்தத் திருமுதுகுன்றத்தைச் சூழ்ந்த நீருடைய `முத்தாற்றினுடனே\' சேர்த்து இயற்றிய திருப்பதிக மாலையை விரும்பிய அன்புடனே பலமுறையும் கூறி, அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

இறைவன் திருமுன்பு அருளியது `முரசதிர்ந்தெழுதரு\' (தி.3 ப.99) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதியில் வாழ்ந்தருளிய பொழுது, மணிமுத்தாறு நதியுடன் இணைந்த பல பதிகங்களை அருளிச் செய்தார் என ஆசிரியர் அருளுகின்றார். இப் பதிக்கென இவ்வமையத்து அருளியனவாகக் காணக் கிடைக்கும் பிற பதிகங்கள் நான்காம். அவை:
1. `தேவராயும்\' (தி.1 ப.53) - பழந்தக்கராகம்
2. `மெய்த்தாறு\' (தி.1 ப.131) - மேகராகக் குறிஞ்சி
3. `தேவாசிறியோம்\' (தி.2 ப.64) - காந்தாரம்
4. `வண்ண மாமலர்\' (தி.3 ப.34) - கொல்லி.
2ஆவது பதிகத்தில் 1, 11 ஆகிய இருபாடல்களிலும், 4ஆவது பதிகத்தில் 4ஆவது பாடலிலும் மணிமுத்தாறு பேசப்படுகின்றது. சேக்கிழார் திருவாக்கை நோக்கின், மணிமுத்தாற்றினை இணைத்துப் பாடிய மேலும் சில பதிகங்கள் இருக்கலாம் எனக் கருத இடனுண்டு.

பண் :

பாடல் எண் : 184

ஆங்கு நாதரைப் பணிந்துபெண்
ணாகடம் அணைந்தரு மறையோசை
ஓங்கு தூங்கானை மாடத்துள்
அமர்கின்ற வொருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு
பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்
எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.

பொழிப்புரை :

அங்கு வீற்றிருக்கும் தலைவரை வணங்கி, விடை பெற்றுச் சென்று `திருப்பெண்ணாகடம்\' என்ற பதியை அடைந்து, அரிய மறைகளின் ஓசை முழங்கும் `திருத்தூங்கானைமாடம்\' என்ற அக்கோயிலுள் விரும்பி வீற்றிருக்கின்ற ஒப்பற்ற மேலாய ஒளியான இறைவரின் அருகணைந்து, வலம் வந்து, திருமுன்பு பணிந்து, எழுந்து, போற்றும் சொல் தமிழ் மாலையான, `தீங்கினின்றும் நீங்கும் கருத்துடையீர்களே! இங்குத் தொழுமின்கள்\' என்ற கருத்துடைய இசைப் பதிகத்தைப் பாடியருளினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `ஒடுங்கும்\' (தி.1 ப.59) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகம் ஆகும். இப்பதிகத்துள்ள பாடல்கள் பத்தும், `உலகியலை விடுத்து வீட்டுலகம் அடையக் கருதுவீர் திருத்தூங்கானை மாடம் தொழுமின்களே\' என ஆற்றுப் படுத்துகின்றன. அவற்றை உளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும், இவ்வாறு மொழிந்தருளுகின்றார்.

பண் :

பாடல் எண் : 185

கருவ ரைப்பிற் புகாதவர் கைதொழும்
ஒருவ ரைத்தொழு துள்ள முவந்துபோய்ப்
பெருவ ரத்தினிற் பெற்றவர் தம்முடன்
திருவ ரத்துறை சேர்தும்என் றேகுவார்.

பொழிப்புரை :

பிறவியின் எல்லைக்கு உட்படாத அடியவர்கள் கை தொழுகின்ற சுடர்க் கொழுந்தீசரை வணங்கி, மனம் மகிழ்ந்து, விடைபெற்றுக் கொண்டவர், தோணியப்பரிடம் தவம் கிடந்து பெற்ற வரத்தால் தம்மை ஈன்ற தந்தையாருடன் `திருவரத்துறையைச்\' சேர்வோம் எனச் செல்பவராய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 186

முந்தை நாள்கள் ஒரோவொரு கால்முது
தந்தை யார்பியல் மேலிருப் பார்தவிர்ந்
தந்த ணாளர் அவரரு கேசெலச்
சிந்தை செய்விருப் போடுமுன் சென்றனர்.

பொழிப்புரை :

முன்நாள்களில் செல்லும் பொழுதெல்லாம் முதுமைப் பருவம் உடைய தந்தையாரின் தோள் மீது ஓரொருகால் எழுந்தருளிச் சென்ற அப்பிள்ளையார், இதுபொழுது அந்நிலையை விடுத்து, அந்தணர்களும் அத்தந்தையாரும் தம்மைச் சூழ்ந்துவர மனத்திற் கொண்ட பெருவிருப்போடு, முன்னே நடந்து சென்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 187

ஆதி யார்தம் அரத்துறை நோக் கியே
காத லால்அணை வார்கடி தேகிடத்
தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய.

பொழிப்புரை :

பழைமையுடையவரான சிவபெருமானின் திருவரத்துறையினை நோக்கி, மிக்க விருப்புடன் அணைபவராய், விரைவாய்ச் செல்லவும், தந்தையாரும் வருந்த, ஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளும் சிறிதளவு நொந்தன.

குறிப்புரை :

பைப்பய - பையப்பைய; சிறிது சிறிதாக; மிகப் பெரிதாக இன்றிச் சிறிய அளவில் வருந்தின. திருவடி வருந்தவும் தாம் வருந்தவில்லை என்பார், அத்திருவடிகள் மீது வைத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 188

மறைய னைத்தும் ஒருவடி வாமென
நிறைம திப்பிள்ளை நீள்நிலஞ் சேர்ந்தெனத்
துறைய லைக்கங்கை சூடும் அரத்துறை
இறைவ ரைத்தொழு வான்விரைந் தேகினார்.

பொழிப்புரை :

மறைகள் யாவும் ஒருவடிவம் கொண்டாற்போல் நிறையும் திங்கள் ஒன்று, நீண்ட இம்மண்ணுலகத்தில் வந்து சேர்ந்தாற் போலச் சென்று, நீர்த் துறைகளில் அலைகளை வீசும் கங்கை சூடும் திருவரத்துறையில் வீற்றிருக்கும் இறைவரைத் தொழுவதற்காக விரைந்து சென்றனர்

குறிப்புரை :

மறைகள் திரண்டு ஒரு வடிவு எடுத்தாற் போலக் கலைகள் பதினாறும் திரண்டு ஒரு முழுத் திங்களாய் நிறைவு பெற, அத்திங்கள் மண்ணுலகத்திற்கு வந்தாற் போலக் காழிப் பிள்ளையார் வரலாயினார்.

பண் :

பாடல் எண் : 189

பாச மற்றில ராயினும் பார்மிசை
ஆசை சங்கரற் காயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு வானவர்
ஈச னைத்தொழு தேதொழு தேகினார்.

பொழிப்புரை :

உலகியல் பாசம் சிறிதும் இல்லாதவராயினும் இறைவனிடத்துப் பாசம் கொண்ட தன்மையால் சிவ ஒளி மிக்க திரு உருவான பிள்ளையார் சிவபெருமானை வணங்கியவாறு சென்றார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 190

இந்த மாநிலத் தின்இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி யானவர்
சிந்தை ஆரமு தாகிய செஞ்சடைத்
தந்தை யார்கழல் தாழ்ந்தெழுந்து ஏகினார்.

பொழிப்புரை :

இப்பேருலக இருள் நீங்கத் தோன்றிய வேதியர் குல மணியான சம்பந்தர், மனத்தில் ஊறும் அமுதமான சிவந்த சடையையுடைய தந்தையாம் சிவபெருமானின் திருவடிகளைத் தாழ்ந்து வணங்கி எழுந்து சென்றார்.

குறிப்புரை :

இவற்றால் பிள்ளையாருக்குத் திருவரத்துறைப் பெருமானைக் கண்டு வணங்குதற்குரிய உள்ள மிகுதியும் உடல் பெற்றியும் ஒருங்கு புலனாகின்றன. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 191

மாறன் பாடி யெனும்பதி வந்துற
ஆறு செல்வருத் தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார்
ஏறு மஞ்செழுத் தோதிஅங் கெய்திட.

பொழிப்புரை :

`மாறன் பாடி\' என்ற ஊரில் வந்து சேர, வழி நடந்து செல்லும் வருத்தத்தால் உண்டான சோர்வால் தம்மைச் சூழ வரும் அடியார்கள் இளைப்படைய, சிறந்ததான ஐந்தெழுத்தைப் எண்ணியவாறு பிள்ளையார் அங்குச் சேர,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 192

உய்ய வந்தசம் பந்த ருடன்வந்தார்க்
கெய்து வெம்மை இளைப்பஞ்சி னான்போலக்
கைக ளாயிரம் வாங்கிக் கரந்துபோய்
வெய்ய வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.

பொழிப்புரை :

உலகு உய்வதற்காக வந்த ஞானசம்பந்தருடன் வந்தவர்க்கு, வழிநடந்து வந்ததன் வெம்மையினால் உண்டான இளைப்பைப் பார்த்து, அச்சம் கொண்டவனைப் போல் தன் அளவற்ற கைகளையும் உள்ளே இழுத்துக் கொண்டு, மறைந்து போய்க் கதிரவன் மேலைக் கடலில் விழுந்தான்.

குறிப்புரை :

ஒளி நீங்கி இருள் சேர வந்ததைத் தற்குறிப்பேற்றமாக ஆசிரியர் இங்ஙனம் கூறுவாராயினர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 193

அற்றை நாள்இர வப்பதி யின்னிடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்ற மூர்ந்த பிரான்கழல் பேணுவார்
வெற்றி மாதவத் தோருடன் மேவினார்.

பொழிப்புரை :

அன்றிரவில் அப்பதியில் தம்மைச் சூழ இருந்த திருத்தொண்டர்கள் போற்ற, ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவ பெருமானின் திருவடிகளையே போற்றுபவரான பிள்ளையார், உள் ளொளி பெருக்கும் வெற்றி பொருந்திய மாதவத்தவருடன் அங்குத் தங்கியிருந்தனர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 194

இந்நி லைக்கண் எழில்வளர் பூந்தராய்
மன்ன னார்தம் வழிவருத் தத்தினை
அன்ன மாடுந் துறைநீர் அரத்துறைச்
சென்னி யாற்றர் திருவுளஞ் செய்தனர்.

பொழிப்புரை :

இந்நிலையில் அழகு மிக்க சீகாழித் தோன் றலாரின் வழி வருத்தத்தை, அன்னப் பறவைகள் பொருந்திய நீர்த் துறைகளையுடைய திருவரத்துறையில் எழுந்தருளியிருக்கும் தலை யில் கங்கையாற்றையுடைய இறைவர், தம் திருவுள்ளத்தில் கொண்டார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 195

ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவுபொற் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்.

பொழிப்புரை :

பிள்ளையார் ஏறிச் செல்வதற்குச் சிவிகையும், மேலே கவித்துக் கொள்வதற்குக் குடையும், அவர்தம் பொருள்சேர் புகழை எடுத்துக் கூறி ஊதுவதற்கு விளக்கம் கொண்ட அழகிய சின்னங்களும் ஆகிய இவற்றை முத்துக்கள் பதிய அமைத்த சிறப்புடன் வழங்க, ஒப்பில்லாத திருநீற்றை விரும்பும் அரத்துறை இறைவர் அருள்வாராய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 196

நீடு வாழ்பதி யாகும்நெல் வாயிலின்
மாட மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடு கங்குற் கனவிற் குலமறை
தேடு சேவடி தோன்றமுன் சென்றுபின்.

பொழிப்புரை :

பெருவாழ்வு பெற்ற திருப்பதியான திருநெல் வாயில்அரத்துறையில் மாடங்களைக் கொண்ட பெரிய இல்லங்கள் தோறும் உள்ள மறையவர்களுக்கு அன்றிரவு கனவில், பெருமையு டைய நான்மறைகளும் தேடும் செவ்விய திருவடிகள் தோன்றுமாறு, அவர் முன்போய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 197

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன சின்னம்நம் பாற்கொண் டருங்கலைக்
கோன வன்பா லணைந்து கொடும்என.

பொழிப்புரை :

`ஞானசம்பந்தன் நம்மிடம் வருகிறான். அரிய கலைகளுக்கெல்லாம் தலைவனான அவனிடம் நீங்கள் பெரிய முத்துச் சிவிகையையும் அழகிய குடையையும், பொருந்திய சின்னங்களை யும் நம்மிடம் பெற்றுக் கொண்டு போய்க் கொடுங்கள்\' என்று இறைவர் உரைத்தருள,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 198

அந்த ணாளர் உரைத்தஅப் போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்தற் புதமுறுஞ்
சிந்தை யோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில்வந் தெய்தினர்.

பொழிப்புரை :

இறைவர் உரைத்த அளவில், அந்தணர்கள் வந்து ஒன்றாகக் கூடி, தாம் தாமும் கண்ட கனவைச் சொல்லி மகிழ்ந்து, அற்புதமான சிந்தையுடன் செழுமையான நீர்வளம் பொருந்திய திருவரத்துறையில் எழுந்தருளிய பிறை சூடிய சடையையுடைய பெருமானின் கோயிலின் வாயிலில் வந்து கூடினர்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 199

ஆங்கு மற்ற அருளடி யாருடன்
ஓங்கு கோயிலுள் ளார்க்கும்உண் டாயிட
ஈங்கி தென்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.

பொழிப்புரை :

அங்கு முன் சொன்ன வண்ணம் இறைவர் அருள் அங்குள்ள அடியாருடன் ஓங்கு கோயிலுள் உள்ளவர்களுக்கும் உண்டாகியது. உண்டாகவே `இங்கு இது என்ன பேரதிசயம்\' என்று வியந்தவர்கள், அங்குவந்து கூடிய அம்மறையவர்களுக்குத் தாங்கள் முதலில் கூறினர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 200

சால மிக்க வியப்புறு தன்மையின்
பால ராதலும் பள்ளி யெழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படுஞ்
சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.

பொழிப்புரை :

மிகப் பெரிய வியப்பை அடைந்த நிலையில், அச்சமயத்தில் திருப்பள்ளி எழுச்சிக்குரிய காலம் வரவும் அன்பு வழிப்பட்ட சீலம் உடைய அவர்கள் கோயிலின் கதவைத் திறந்தனர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 201

திங்கள் நீர்மைச் செழுந்திரள் முத்தினால்
துங்க வெண்குடை தூய சிவிகையும்
பொங்க வூதும் பொருவருஞ் சின்னமும்
அங்கண் நாதர் அருளினாற் கண்டனர்.

பொழிப்புரை :

சந்திரன் போன்ற தண்ணிய செழுமையான முத்துக்கள் இழைத்த பெரிய வெண்குடையும், தூய சிவிகையும், ஒலி மிகுமாறு ஊதப்பெறும் ஒப்பிலாத சின்னங்களும் ஆகிய இவற்றை அங்கு இறைவரின் திருவருளால் அவர்கள் பார்த்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 202

கண்ட பின்னவர் கைதலை மேற்குவித்
தெண்டி சைக்கும் விளக்கிவை யாம்எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்தெழுந்
தண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.

பொழிப்புரை :

அவற்றைக் கண்ட அவர்கள் தம் கைகளைத் தலைமீது குவித்து, `இவை எண்திசைக்கும் விளக்காகும்\' எனக் கூறி, தொண்டர்களுடன் சூழ்ந்து, வணங்கி, எழுந்து, தேவர் உலகமும், அறியும்படி மகிழ்வைப் பெருக்கினர்.

குறிப்புரை :

பிள்ளையாரின் அடிமைத் திறனும், அவருக்கு அரத்துறை இறைவர் வழங்கிய அருள் பெருக்குமாகியவற்றை எண் திசையிலுள் ளாரும் அறிதலின், இவ்வியத்தகு நிகழ்ச்சி எண் திசைக்கும் விளக் காயிற்று.

பண் :

பாடல் எண் : 203

சங்கு துந்துபி தாரைபே ரிம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்தெழ
அங்க ணன்அரு ளால்அவை கொண்டுடன்
பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.

பொழிப்புரை :

சங்கு, துந்துபி, தாரை, பேரிகை முதலியவாகப் பேரொலி பெருக்கும் இயங்களின் ஓசை பொலிவு பெற்று எழுமாறு செய்து, இறைவரின் திருவருளால் வரப்பெற்ற அச்சிவிகை, குடை, சின்னங்கள் என்ற இவற்றை உடன் கொண்டு, மேன் மேலும் எழு கின்ற ஆசை எதிர்கொள்ளப் போவாராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 204

மாசில் வாய்மைநெல் வாயில் மறையவர்
ஆசில் சீர்ச்சண்பை ஆண்டகை யார்க்கெதிர்
தேசு டைச்சிவி கைமுத லாயின
ஈசர் இன்னரு ளால்தாங்கி ஏகினார்.

பொழிப்புரை :

குற்றம் இல்லாத வாய்மையுடைய திருநெல் வாயிலில் உள்ள அந்தணர்கள், குற்றமற்ற சிறப்பையுடைய சீகாழியில் தோன்றிய பிள்ளையாருக்கு, ஒளியுடைய சிவிகை முதலியவற்றை இறைவரின் திருவருளால் தாங்கிச் சென்றனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 205

இத்த லைஇவர் இன்னணம் ஏகினார்
அத்த லைச்சண்பை நாதர்க்கும் அவ்விரா
முத்த நற்சிவி கைமுத லாயின
உய்த்த ளிக்கும் படிமுன் உணர்த்துவார்.

பொழிப்புரை :

இவ்விடத்திலுள்ள இவர்கள் இவ்வாறு சென்ற னர். அங்குச் சீகாழித் தலைவரான பிள்ளையாருக்கும் அன்றைய இரவே நல்ல முத்துக்கள் பதித்து வைத்த சிவிகை முதலானவற்றை ஏற்றுப் பயன் கொள்ளுமாறு முன் உணர்த்துவாராய்,

குறிப்புரை :

இத்தலை அத்தலை என்பன இவ்விடம் அவ்விடம் எனும் பொருள் குறித்தன.

பண் :

பாடல் எண் : 206

அள்ளல் நீர்வயல் சூழும் அரத்துறை
வள்ள லார்நாம் மகிழ்ந்தளிக் கும்மவை
கொள்ள லாகும்கொண் டுய்த்தல் செய் வாய்என
உள்ள வாறருள் செய்ய வுணர்ந்தபின்.

பொழிப்புரை :

சேறுமிக்க நீர்வளம் வாய்ந்த வயல்கள் சூழ்ந்த திருவரத்துறையில் எழுந்தருளியிருக்கும் வள்ளலாரான சிவபெரு மான், `நாம் மகிழ்ந்தளிக்கும் இச்சிவிகை முதலானவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகும் ஆதலின், அவற்றை ஏற்றுப் பயன் கொள்வாயாக!\' என்று பிள்ளையாருக்கு அருளிச் செய்ய, அவ்வரு ளிப்பாட்டை அறிந்து உறக்கம் நீங்கிய பின்பு,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 207

சண்பை யாளியார் தாங்கண்ட மெய்யருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்ட ருக்கருள் செய்து தொழாமுனம்
விண்பு லப்பட வீங்கிருள் நீங்கலும்.

பொழிப்புரை :

சீகாழித் தலைவரான சம்பந்தர், தாம் கனவில் கண்ட மெய்யருளின் தன்மையைத் தந்தையாருக்கும் அருகிலிருந்த தொண்டர்களுக்கும் கூறியருளித் திருவருளைத் தொழுவதற்கு முன்னமேயே, வானம் வெளிப்பட்டுத் தோன்ற, இருள் நீங்கவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 208

மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றிவெண் ணீறணி
கோல மேனிய ராய்க்கைம் மலர்குவித்
தேல அஞ்செழுத் தோதி எழுந்தனர்.

பொழிப்புரை :

முன்னர் இருந்த மாலையும் யாமமும் முறையே நீங்க, பொழுது புலரும் விடியற்காலையில் செயத்தக்க கடன்களை முடித்து, வெண்மையான திருநீற்றினை அணிந்த சிவப்பொலிவு கொண்ட அழகிய திருமேனியராகி, கைம்மலர்களைத் தலைமேல் குவித்துப் பொருந்துமாறு திருவைந்தெழுத்தை ஓதி எழுந்தருளி யிருந்தார்.

குறிப்புரை :

`வெய்யவன் சென்று மேல்கடல் வீழ்ந்தனன்\' என முன்னர் (பா. 192) வந்த மாலையும், அதனைத் தொடர்ந்து வந்த யாமமும் நீங்க, பொழுது புலர்வுறும் வேளையில் என வரலாற்றியைபு அறிய, `மாலையாமம் புலர்வுறும் வைகறை\' என்றார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 209

போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகைமே லேற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின்வந் தெய்தினன் வெய்யவன்.

பொழிப்புரை :

மெய்யுணர்தலாகிய ஞானம் பெற்ற தூயவரான சீகாழித் தலைவரைக் குளிர்ந்த முத்துக்களையுடைய சிவிகையில் ஏற்றி வணங்க, மிக்க அன்பு கொண்டவன் போலக் கதிரவனும் கரிய கடல் மீது தோன்றித் தன்தேர் மீது ஏறிவந்தனன்.

குறிப்புரை :

கதிரவன் வந்தமையைத் தற்குறிப்பேற்ற அணி நலம் பொதுளக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 210

ஆய போழ்தின் அரவெனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க்குடை
மேய சின்னங்கள் கொண்டுமெய் யன்பரோ
டேய அந்தணர் தாமெதிர் தோன்றினார்.

பொழிப்புரை :

அதுபொழுது `அரகர\' என்ற முழக்கத்துடன் தூய முத்தினால் ஆய சிவிகையையும், ஒளிபொருந்திய குடையையும், பொருந்திய சின்னங்களையும் தாங்கிக் கொண்டு மெய்யன்பர்கள் உடனே பொருந்திய அந்தணர்களும், அங்கிருந்த பிள்ளையாரின் எதிரே வந்து தோன்றினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 211

வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார்பொழில் காழிநன் னாடர்முன்
அந்த மில்சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.

பொழிப்புரை :

வந்து தோன்றிய அந்தணர்களும் மெய் அன்பர்களும் மணம் மிக்க பொழில்களையுடைய சீகாழித் தலைவர் ஆன சம்பந்தர் திருமுன்புநின்று, `அழிவற்ற சிறப்பையுடைய திருவரத் துறை இறைவர் அளித்தருளிய பேரருள் வடிவான இப்பொருள்களை ஏற்றுக்கொள்வீராக\' என வேண்டினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 212

என்று தங்களுக் கீச ரருள்செய்த
தொன்றும் அங்கொழி யாமை உரைத்துமுன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று ளார்அருள் என்று வணங்கினார்.

பொழிப்புரை :

ஈசர் தமக்குக் கனவில் அருளியதும் நனவில் வழங்கியதுமான அருளிச் செயல்களுள் ஒன்றையும் விடாமல் எடுத்துக் கூறிப் பிள்ளையாரின் முன் நின்று போற்றி வணங்கினர். `இவ்வருஞ் செயல்கள் எல்லாம் பெருமன்றுள் ஆடும் பெருமானின் திருவருளேயாகும்.\' எனப் பிள்ளையார் கூறி வணங்கினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 213

மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை யுன்னும் பரிசுதந் தாள்பவர்
செம்மை நித்தில யானச் சிறப்பருள்
எம்மை யாளுவப் பானின் றளித்ததே.

பொழிப்புரை :

உள்ளவாறு போற்றிப் பற்றுவிடாத விருப்பத்தால் தம்மை நினைத்திருக்கும் தன்மையைக் கொடுத்து அருளுகின்ற இறைவர், செம்மையான முத்துச் சிவிகையாம் சிறப்பை அளித்தல் எம்மைத் தம் அடியவராக உவந்து ஆட்கொள்ளும் பொருட்டாய் இன்று அளித்த பேறுதான் என்னே! என வியந்தனராய்,

குறிப்புரை :

இப்பாடல், அடுத்திருக்கும் `எந்தையீசன்\' எனத் தொடங்கும் பாடலை அடுத்துச் சில பதிப்புக்களிலும், `பொடியணிந்த\' எனும் பாடலை அடுத்துச் சில பதிப்புக்களிலும் காணப்படுகின்றது. இவ்வீரமைவுகளும் வரலாற்றுத் தொடர்ச்சிக்குப் பொருந்துமாறில்லை என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 214

எந்தை ஈசன் எனஎடுத்து இவ்வருள்
வந்த வாறுமற்று இவ்வண மோஎன்று
சிந்தை செய்யும் திருப்பதி கத்துஇசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.

பொழிப்புரை :

`எந்தை ஈசன்\' எனத் தொடங்கிச் சிவபெருமா னின் திருவருள் இருந்த வண்ணம் இவ்வண்ணமோ என்று சிந்தை செய்யும் இத்திருப்பதிகத்து இசையை உள்ளம் நிறைவு கொள்ளும் வரை புகன்று எதிரே நின்று போற்றுவாராய்,

குறிப்புரை :

எதிர்போற்றி - இறைவன் அருளிய அருங் கொடை களை அப்பெருமானது திருமுன்னிலையில் நின்று போற்றி `எந்தை ஈசன்\'(தி.2 ப.90) எனத் தொடங்கும் இப்பதிகம் பியந்தைக் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும். அரத்துறை அடிகள் தம் அருள் அப்பெரு மானை நாளும் மனம், மொழி, மெய்களால் வணங்கி நிற்பார்க்கல் லாது கிட்டாது எனப் பாடல்தொறும் கூறப்பட்டுள்ளது.

பண் :

பாடல் எண் : 215

பொடிய ணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம்மரு ளேயிது வாமெனப்
படியி லாதசொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.

பொழிப்புரை :

திருநீற்றை அணிந்த முன்னைப் பழம்பொருட் கும் முன்னைப்பழம் பொருளாய் திருவரத்துறை இறைவரின் திரு வருளே இதுவாகும் என ஒப்பற்ற சொல்மாலைகளைப் பாடி, நீள நினைந்து வணங்கித் திருப்பதிகத்தை நிறைவு செய்தார்.

குறிப்புரை :

இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல் மாலை ஆகும். ஆதலின் பன்மை வாசகம் படக் கூறினார். இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 216

சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினார் உய்ய வுலகெலாம்.

பொழிப்புரை :

ஒளிபொருந்திய முத்துச் சிவிகையினைச் சூழ்ந்து வலமாக வந்து, நிலத்தின் மேல் விழுந்து வணங்கி, அதன் வெண்ணீற்று ஒளியைப் போற்றி நின்று, அது இறைவரின் அருள் என வியந்து திருவைந்தெழுத்தை ஓதிப் பிள்ளையார் உலகம் எல்லாம் உய்தற் கென அதில் ஏறியருளினார்.

குறிப்புரை :

`உலகெலாம்\' எனும் தொடர் இறைவர் ஆசிரியருக்கு எடுத்துக் கொடுத்த தொடராகும். அதனை ஈண்டுத் தம் காப்பியத்தில் நடுவிடமாய ஈண்டும் வைத்துப் போற்றியுள்ளமை அறியத் தக்கது.

பண் :

பாடல் எண் : 217

தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள்
ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும்
ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன முழவமும்
ஆர்த்தன குழுமி
வண்ட றாப்பொலி மலர்மழை
ஆர்த்தது வானம்.

பொழிப்புரை :

அடியவர் மகிழ்வொலி செய்தனர். மறைகள் முழங்கின. பழைமையுடைய தேவர்கள் மகிழ்வொலி செய்தனர். மேகங்கள் உலகம் உவக்குமாறு முழங்கின. முழவு இயங்கள் ஒலித் தன. கூட்டமாய்ச் சேர்ந்து வண்டுகள் நீங்காத அழகிய மலர் மழையை வானம் சொரிந்தது.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 218

வளையும் ஆர்த்தன வயிர்களும்
ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன திளைஞரும்
ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்ததொர் கருணையின்
ஆர்கவின் முத்தின்
விளையு மாக்கதிர் வெண்குடை
ஆர்த்தது மிசையே.

பொழிப்புரை :

சங்குகள் ஒலித்தன, ஊது கொம்புகள் ஒலித்தன, மறை வேள்விகள் ஒலித்தன, உறவினர் மகிழ்வொலி செய்தனர், உயிர்க்கு உயிராக இருந்தருளும் இறைவரின் கருணையினால் பிணிக்கப்பட்ட முத்துக்களினின்று வீசும் பெருங்கதிர்களுடன் வெண் குடை மேலே கவிழ்க்கப்பட்டு விளக்கம் பெற்றது.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 219

பல்கு வெண்கதிர்ப் பத்திசேர்
நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றொளி யுடன்பொலி
புகலிகா வலனார்
அல்கு வெள்வளை அலைத்தெழு
மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி
உதித்தென வந்தார்.

பொழிப்புரை :

பெருகும் வெண்கதிர்களின் ஒழுங்குடைய முத்துச் சிவிகையின் மீது திருநீற்று ஒளியுடன் விளங்கும் சீகாழித் தலைவர், தங்கும் வெண்மையான சங்குகளை வாரி எழுகின்ற அழ கிய வரிசையான அலைகள் நிறைந்த பாற்கடலில் வளரும் திங்கள் தோன்றினாற் போல எழுந்தருளி வந்தார்.

குறிப்புரை :

பாற்கடல் முத்துச் சிவிகைக்கும், திங்கள் அதன் மீது இயங்கிவரும் பிள்ளையாருக்கும் உவமையாயின. `பான்மதி உவரி ஈன்றால் எனமகப் பயந்த போது\' (தி.12 பு.10 பா.33) என ஆசிரியர் முன் அருளிய திருவாக்கும் நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 220

நீடுதொண்டர்கள் மறையவர்
ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டெழு மகிழ்ச்சியின்
மலர்க்கைமேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர்
அளவில் ஆனந்தம்
கூடு கின்றகண் பொழிபுனல்
வெள்ளத்தில் குளித்தார்.

பொழிப்புரை :

நிறைந்த தொண்டர்களும், அந்தணர்களும் மற்றவர்களும் நெருங்கி வந்து, தங்கள் உள்ளத்தில் மீதூர்ந்து எழுகின்ற மகிழ்ச்சியினால் மலர்க்கைகளை மேலே குவித்துத் தன் வயம் இழந்த நிலையில் ஆடினர்; அளவற்ற மகிழ்ச்சி பொருந்திய கண்களினின்று பொழியும் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 221

செய்ய பொன்புனை வெண்தர
ளத்தணி சிறக்கச்
சைவ மாமறைத் தலைவர்பால்
பெறுந்தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும்
நிறைதவத் தோரும்
உய்ய ஞானசம் பந்தன்வந்
தான்என ஊத.

பொழிப்புரை :

சிவந்த பொன்னாலாய வெண்முத்துக்களின் அழகு சிறக்குமாறு உள்ளதும் சைவத்திற்கும் நான்மறைகட்கும் தலை வர் ஆன சிவபெருமானிடத்தில் பெற்றதும், ஒப்பில்லாததுமான எக்காளம் என்ற சின்னம், உலகு ஏழும் நான்மறைகளும் நிறைந்த தவத்தை உடையவர்களும் உய்யுமாறு `திருஞானசம்பந்தன் வந்தான்\' என்று கூறி ஊதவும்,

குறிப்புரை :

செய்யபொன் புனை வெண் தரளத்து அணி சிறக்கும் காளம், சைவமாமறைத் தலைவர் பாற்பெறுங் காளம், தனிக் காளம் எனத் தனித் தனியே கூட்டுக. ஏனைய காளங்கள் வெறும் உலகியல் பற்றிய நிகழ்ச்சிகளையே ஊதுவன. இதுவோ ஞானசம்பந்தரைப் பற்றியும் அவருக்கு அருளிய இறைவரைப் பற்றியுமான செய்திக ளைக் கூறுவதாகும். ஆதலின் அதன் சிறப்புத் தோன்ற இங்ஙனம் கூறினார்.

பண் :

பாடல் எண் : 222

சுற்று மாமறைச் சுருதியின்
பெருகொலி நடுவே
தெற்றி னார்புர மெரித்தவர்
தருதிருச் சின்னம்
முற்று மானவன் ஞானமே
முலைசுரந் தூட்டப்
பெற்ற பாலறா வாயன்வந்
தான்எனப் பிடிக்க.

பொழிப்புரை :

சூழ்ந்து ஒலிக்கும் பெருமறைச் சுருதிகளின் பெருமுழக்கத்தினிடையே பகைவரின் முப்புரங்களையும் எரித்த இறைவர் அளித்தருளிய திருச்சின்னம் `ஞானமே வடிவாய அம்மையார் தம் ஞானத் திருமுலை சுரந்து ஞான அமுது ஊட்டப் பெற்ற பாலறாவாயன் வந்தான்\' என ஊதவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 223

புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும்
போதுவார் முன்னே
இணைந்த நித்திலத் திலங்கொளி
நலங்கிளர் தாரை
அணைந்த மாமறை முதற்கலை
அகிலமும் ஓதா
துணர்ந்த முத்தமிழ் விரகன்வந்
தானென ஊத.

பொழிப்புரை :

சூழவரும் மெய்த்தவ முனிவர் குழுவுடன் செல்கின்றவர் முன்பு, இணைந்த முத்துக்களின் விளங்கும் ஒளிப் பெருமை சூழ்ந்து கிளர்தற்கு இடமான தாரை என்ற சின்னம் `பெரு மறைகளையும் அவற்றின் வழித்தாய் வரும் எல்லாக் கலைகளையும் ஓதாமல் உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான்\' என ஊதவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 224

தெருளும் மெய்க்கலை விளங்கவும்
பாருளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுதுசொன்
மறையளிப் பவர்தாம்
பொருளும் ஞானமும் போகமும்
போற்றியென் பாருக்
கருளும் அங்கணர் திருவரத்
துறையைவந் தணைந்தார்.

பொழிப்புரை :

தெளிவைத்தரும் உண்மைக் கலைகள் விளங் கும்படியும், அதனுடன் உலகத்தில் உள்ளவரின் சிந்தையில் தங்கிய இருள் நீங்கும்படியும் எழுதும் சொல் மறையை அளிப்பவரான ஆளுடைய பிள்ளையார், `போற்றி\' என்று வழிபடுவோர்க்குப் பொரு ளையும், ஞானத்தையும், இன்பத்தையும் அளிக்கும் சிவபெருமானின் திருவரத்துறையை வந்து அடைந்தார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 225

வந்து கோபுர மணிநெடு
வாயில்சேய்த் தாகச்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்துதாழ்ந் தெழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும்
பொங்கிமுன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர்
கோயிலுள் அடைந்தார்.

பொழிப்புரை :

அத்திருப்பதிக்கு அணுக வந்தருளிய பிள்ளை யார், கோபுரவாயில் தொலைவிலே தோன்றிய அளவில், அழகிய முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கி நிலத்தில் விழுந்து பருவடி வாக விளங்கும் இலிங்கத்திருமேனியாகிய அக்கோபுரத்தை வணங்கி எழுந்து, உள்ளத்தில் எழுந்த ஆசையும் மகிழ்ச்சியும் மேலும் மேலும் பொங்கித் தமக்கு முன் செல்ல, மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடிய திருவரத்துறை இறைவரின் திருக்கோயிலின் உள் அடைந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 226

மன்னுகோயிலை வலங்கொண்டு
திருமுன்பு வந்து
சென்னி யிற்கரங் குவித்துவீழ்ந்
தன்பொடு திளைப்பார்
என்னை யும்பொரு ளாகஇன்
னருள்புரிந் தருளும்
பொன்ன டித்தலத் தாமரை
போற்றி என் றெழுந்தார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற அக்கோயிலை வலம் வந்து, திருமுன்பு வந்து, தலைமீது கைகளைக் குவித்து நிலத்தில் விழுந்து, அன்பில் திளைப்பவராய் `என்னையும் ஒருபொருளாகக் கொண்டு இனிய அருளைச் செய்யும் பொன்னடித் தாமரைகளுக்கு என்றும் வணக்கம் செலுத்தும் கடப்பாடுடையேன்\' என்று எழுந்து போற்றினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 227

சூடி னார்கர கமலங்கள்
சொரிந்திழி கண்ணீர்
ஆடி னார்திரு மேனியில்
அரத்துறை விரும்பி
நீடி னார்திரு அருட்பெருங்
கருணையே நிகழப்
பாடி னார்திருப் பதிகம்ஏ
ழிசையொடும் பயில.

பொழிப்புரை :

கைம்மலர்களைத் தலைமேல் சூடிக்கொண்டார், பெருகி வழிகின்ற கண்ணீர் ஒழுக்கால் திருமேனி நனைய ஆடினார். திருவரத்துறையை விரும்பித் தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இறைவரின் கருணையை நினைந்து ஏழிசையுடன் பொருந்தத் திருப் பதிகம் பாடினார்.

குறிப்புரை :

இவ்வரிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 228

இசைவி ளங்கிட இயல்பினில்
பாடிநின் றேத்தி
மிசைவி ளங்குநீர் வேணியார்
அருளினால் மீண்டு
திசைவி ளங்கிடத் திருவருள்
பெற்றவர் சிலநாள்
அசைவில் சீர்த்தொண்டர் தம்முடன்
அப்பதி அமர்ந்தார்.

பொழிப்புரை :

ஏழ் இசையும் பொருந்துமாறு திருவருட் கருணையைத் திருப்பதிகத்தால் போற்றிப் பாடி நிறைவாக்கி, நின்று வழிபட்டு, மேலே கங்கை நீர் விளங்குவதற்கு இடமான சடையை உடைய சிவபெருமானின் திருவருள் பெற்று, அங்கு நின்று மீண்டும் எழுந்தருளி, எத்திசையில் உள்ளவர்களும் சிவஞானம் பெற்றுய் யும்படி திருவருள் பெற்றவரான பிள்ளையார், தம்நிலையில் தாழாத சிறப்புடைய தொண்டர்களுடன், சில நாள்கள் அத்திருப்பதியில், விரும்பி எழுந்தருளி இருந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 229

தேவர் தம்பிரான் திருவரத்
துறையினில் இறைஞ்சி
மேவு நாள்களில் விமலனார்
நெல்வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம்முடன்
தொழுதுபின் சண்பைக்
காவ லார்அருள் பெற்றுடன்
கலந்துமீண் டணைந்தார்.

பொழிப்புரை :

தேவரின் தலைவரான சிவபெருமானைத் திருவரத்துறையில் இருந்து வணங்கி அங்கிருந்தருளிய நாள்களில், சிவபெருமானின் திருநெல்வெண்ணெய் முதலான திருப்பதிகளைக் குற்றம் அற்ற அன்பர்களுடனே தொழுது, பின் சீகாழித் தலைவரான பிள்ளையார் இறைவரின் திருவருளைப் பெற்று உடன் கலந்திருந்து மீண்டும் திருவரத்துறையில் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

திருநெல்வெண்ணெய் முதலாக உள்ள திருப்பதிகளை வணங்கினார் எனக் குறிக்கப்பெறினும், அப்பதிகள் எவையென அறிதற்கில்லை. திருநெல்வெண்ணெய்க்கு உரிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. பதிகம் - நல்வெணெய் விழுது (தி.3 ப.96) பண் : சாதாரி.

பண் :

பாடல் எண் : 230

விளங்கு வேணுபு ரத்திருத்
தோணிவீற் றிருந்த
களங்கொள் கண்டர்தங்
காதலி யாருடன்கூட
உளங்கொ ளப்புகுந் துணர்வினில்
வெளிப்பட உருகி
வளங்கொள் பூம்புனற் புகலிமேற்
செலமனம் வைத்தார்.

பொழிப்புரை :

பிள்ளையார் வணங்கி வரும் வேணுபுரமான சீகாழியில், திருத்தோணிக் கோயிலில் வீற்றிருந்தருளும் திருநீலகண்ட ரான இறைவர் தம் துணைவியாராகிய திருநிலைநாயகி அம்மையா ருடன், தம் உள்ளத்தே இடம் கொள்ள நிறைந்து உள்புகுந்து உணர்வில் வெளிப்படக் கண்டு, உள்ளம் உருகி, வளம் உடைய அழகிய நீர் பொருந்திய சீகாழிக்குச் செல்ல உள்ளம் கொண்டார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 231

அண்ண லார்திரு வரத்துறை
அடிகளை வணங்கி
நண்ணு பேரரு ளால்விடை
கொண்டுபோய் நடங்கொண்
டுண்ணி றைந்தபூங் கழலினை
உச்சிமேற் கொண்டே
வெண்ணி லாமலர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.

பொழிப்புரை :

பெருமையுடைய திருவரத்துறை இறைவரை வணங்கி, பொருந்திய அவரது பெருந் திருவருளினால் விடைபெற் றுக் கொண்டு சென்று, உள்ளத்தில் ஆனந்தக் கூத்தியற்றி ஆட்கொண் டருளிவரும் அழகிய திருவடிகளைத் தலைமீது கொண்ட வண்ணம், வெண்மையான நிலவு ஒளி வீசும் முத்துச் சிவிகையின் மீது இவர்ந் தருளினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 232

சிவிகை முத்தினிற் பெருகொளி
திசையெலாம் விளக்கக்
கவிகை வெண்மதிக் குளிரொளி
கதிர்செய்வான் கலப்பக்
குவிகை மேற்கொண்டு மறையவர்
குணலையிட் டாடப்
புவிகைம் மாறின்றிப் போற்றவந்
தருளினார் போந்தார்.

பொழிப்புரை :

சிவிகையில் பதிக்கப்பெற்ற முத்துக்களினின்றும் பெருகும் ஒளி எத்திசைகளையும் விளக்கவும், மேலே கவித்த முத்துக் குடையின் வெண்மையான மதிபோன்ற ஒளி, கதிரவனின் ஒளி பரவு கின்ற வானத்தில் கலக்கவும், குவித்த கைகளைத் தலை மேற்கொண்டு தம்மைச் சூழ்ந்துவரும் அந்தணர்கள் மகிழ்ச்சி மீதூர்வால் குணலைக் கூத்து இட்டு மகிழ்ந்து ஆடிவரவும், கைம்மாறு வேண்டாக் கடப்பாட் டுடன் உலகைக் காப்பதற்கு என்றே தோன்றிய பிள்ளையார் எழுந் தருளினர்.

குறிப்புரை :

குணலை - மகிழ்ச்சி மீதூர ஆடும் ஒருவகைக் கூத்து.

பண் :

பாடல் எண் : 233

மறைமு ழங்கின தழங்கின
வண்தமிழ் வயிரின்
குறைந ரன்றன முரன்றன
வளைக்குலங் காளம்
முறையி யம்பின இயம்பல
ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின
போற்றிசை அரவம்.

பொழிப்புரை :

மறைகள் முழுங்கின; வளமையுடைய தமிழ் மறைகள் ஒலித்தன; பல்வேறு வகையான ஊதுகொம்புகளின் ஒலிகள் ஒலித்தன; சங்கின் கூட்டங்கள் முழங்கின; எக்காளங்கள் பிள்ளையா ரின் முறையான மெய்க்கீர்த்திகளைக் கூறி ஒலித்தன; மற்றும் பலவகை இயங்களும் ஒலித்தன; முரசுபோன்ற பெரிய இயங்கள் பலவும் ஒலித்தன; அடியார்தம் போற்றியுரைகளின் ஒலி, இவ்வொலிகளுக் கெல்லாம் மேலாக ஒலித்தது.

குறிப்புரை :

வயிரின் குறைகள் - ஊதுகொம்புகள் நீண்டனவாயும், சிறுசிறு துண்டுகளாகவும் இருத்தலைக் குறைகள் என்றார்.

பண் :

பாடல் எண் : 234

உடைய பிள்ளையார் வருமெல்லை
யுள்ளஅப் பதியோர்
புடையி ரண்டினுங் கொடியொடு
பூந்துகில் விதானம்
நடைசெய் காவணம் தோரணம்
பூகநற் கதலி
மிடையு மாலைகள் நிறைகுடம்
விளக்கொடு நிரைத்தார்.

பொழிப்புரை :

ஆளுடைய பிள்ளையார் வரும் இடங்களில் எல்லாம், ஆங்காங்குள்ள ஊரவர்கள் இருமருங்கிலும் கொடிகளுடன் அழகிய துகில்களையும், நடைக்காவணங்களையும், தோரணங்களை, பாக்கு, வாழை, நெருங்கிய மாலைகள் போன்ற இவற்றால் செய்யும் அணிவகைகளையும், விளக்குடன் நீர்நிறை குடங்களையும் நிரல்பட வைத்து எதிர்கொண்டார்கள்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 235

அனைய செய்கையால் எதிர்கொளும்
பதிகளா னவற்றின்
வினைத ரும்பவந் தீர்ப்பவர்
கோயில்கள் மேவிப்
புனையும் வண்டமிழ் மொழிந்தடி
பணிந்துபோந் தணைந்தார்
பனைநெ டுங்கைமா வுரித்தவர்
மகிழ்பெரும் பழுவூர்.

பொழிப்புரை :

அவ்வகையில் தம்மை எதிர்கொண்ட திருப்பதி களில் வினைவயத்தால் வரும் பிறவிகளை நீக்கியருளும் இறைவரின் திருக்கோயில்களுக்குச் சென்று புனையும் வளமை கொண்ட தமிழ்ப் பதிகங்களைப் பாடி, இறைவரின் திருவடிகளை வணங்கிச் சென்று, பனை போன்ற நீண்ட கையையுடைய யானையை உரித்த சிவபெரு மான் வீற்றிருக்கும் `திருப்பழுவூர்\' என்ற திருப்பதியைப் பிள்ளையார் அடைந்தார்.

குறிப்புரை :

எதிர் கொண்ட பதிகள் எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 236

அங்கணைந் திளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.

பொழிப்புரை :

அங்குச் சென்று பிறைச் சந்திரனைச் சூடிய திருச்சடையையுடைய இறைவரின் பெருகும் அழகுடைய திருக் கோபுரத்தை வணங்கிக் கோயிலுள் புகுந்து, பின்பு, பெரிய விமா னத்தைச் சூழ்ந்து வலம் வந்து, திருமுன்பு சென்று, தாமரை போன்ற திருவடிகளைத் தொழுது பாடுவாராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 237

மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு
தெண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.

பொழிப்புரை :

இந்நிலவுலகில் சிறந்து விளங்கும் அந்தணர் குலத்தில் வந்த மலையாளர்கள் தொழுது, எண்ணற்ற பல சிறந்த பணிகளைச் செய்து போற்றி வரும் பான்மையைச் சிறப்பித்து, இறை வரைப் போற்றிப் பண் இசையால் விளங்கும் திருப்பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை :

இவ்விடத்தருளிய பதிகம் `முத்தன்மிகு மூவிலைநல்\' (தி.2 ப.34) என்ற தொடக்கம் உடைய இந்தளப் பண்ணமைந்த பதிகம் ஆகும். இப்பதிகத்தில் 4, 5, 7, 9, 11 ஆகிய பாடல்களில் மலையா ளர்கள் வழிபட்டமை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. `அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும், பந்தமலி கின்றபழு வூரரனை\' (தி.2 ப.34) எனவரும் திருக்கடைக்காப்பில் இவர்களின் பணி தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 238

பாவின திசைவழி பாடி அங்ககன்
றியாவருந் தொழுதுட னேத்த எய்தினார்
மூவுல குய்யநஞ் சுண்ட மூர்த்தியார்
மேவிய பெருந்திரு விசய மங்கையில்.

பொழிப்புரை :

இத்திருப்பதிகத்தை இசை வழியே பாடி, அங்கு நின்று சென்று, யாவரும் உடன்கூடி வணங்குமாறு, மூவுலகங்களும் உய்ய நஞ்சை உண்டருளிய இறைவர் விரும்பி எழுந்தருளியுள்ள பெரிய `திருவிசயமங்கை\' என்ற பதியைச் சேர்ந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 239

அந்தணர் விசயமங் கையினில் அங்கணர்
தந்தனி ஆலயஞ் சூழ்ந்து தாழ்ந்துமுன்
வந்தனை செய்துகோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையிற் சிறப்பித் தேத்தினார்.

பொழிப்புரை :

`மறையவர் வாழ்கின்ற விசயமங்கை என்ற திருப்பதியில் சிவபெருமானின் ஒப்பற்ற திருக்கோயிலை வலம் வந்து வணங்கி, திருமுன் வணங்கி நின்று, அங்குப் பசுக்கள் வழிபட்ட செயலை, நிலைபெறச் செந்தமிழ்ப் பதிகத்தில் வைத்துச் சிறப்பித்துப் போற்றி வழிபட்டனர்.

குறிப்புரை :

இப்பதியில் பாடப்பட்டது `மருவமர் குழலுமை\' (தி.3 ப.17) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். `கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழு தெழு விசய மங்கையே\' எனவரும் 2ஆவது பாடலை உளங்கொண்டு ஆசிரியர் அருளிச் செய்துள்ளார். கோதனம் - பசுக்களாகிய செல்வம்.

பண் :

பாடல் எண் : 240

விசயமங் கையினிடம் அகன்று மெய்யர்தாள்
அசைவில்வை காவினில் அணைந்து பாடிப்போந்
திசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.

பொழிப்புரை :

விசயமங்கை என்ற பதியினின்றும் நீங்கிச் சென்று, இறைவரின் திருவடி என்றும் நிலைபெற்றிருக்கும் திருவைகா வூர் என்னும் திருப்பதியை அடைந்து திருப்பதிகம் சாத்தியருளினார். பின் அப்பதியினின்றும் சென்று, நாளும் இன்னிசையால் தமிழ் வளர்க்கும் திருஞானசம்பந்தர், எண் திசைகளையே ஆடையாகக் கொண்ட இறைவரின் `திருப்புறம்பயம்\' என்ற பதியை அடைந்தார்.

குறிப்புரை :

திருவைகாவூரில் இவர் பாடிய பதிகம் `கோழைமிட றாககவி\' (தி.3 ப.71) என்று தொடங்கும் சாதாரிப் பண்ணமைந்த பதிக மாகும்.

பண் :

பாடல் எண் : 241

புறம்பயத் திறைவரை வணங்கிப் போற்றிசெய்
திறம்புரி நீர்மையிற் பதிகச் செந்தமிழ்
நிறம்பயி லிசையுடன் பாடி நீடிய
அறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.

பொழிப்புரை :

திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வணங்கிப் போற்றும் பண்ணியல் திறம் அமைந்த செந்தமிழை, வண்ணம் மிகும் இசையுடன் பாடி, நீடிய அறத்தை உதவும் கொள்கையினரான பிள்ளையார், அங்கு விருப்புடன் எழுந் தருளி இருந்தார்.

குறிப்புரை :

இப்பதியில் பாடிய பதிகம் `மறம்பய மலைந்தவர்\' (தி.2 ப.30) எனும் தொடக்கம் உடைய இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். திறம்புரிநீர்மையில் - பண்ணியல் திறம் பொருந்திய தன்மையில். பண், பண்ணியல், திறம், திறத்திறம் எனப் பண் வகை நான்கென்பர். இவற்றுள் திறம் பொருந்திய நீர்மையில் இப்பதிகத்தை அருளினர். நீடிய அறமாவது உயிர் பெறுதற்குரிய நிலைத்த பயனாய வீட்டுலகைப் பெறும் அறமாம். இவ்வறத்தைக் கூற வந்தவரே ஞானசம்பந்தர் ஆவர் `சிவம் பெருக்கும் பிள்ளையார்\' என்றதும் இதுபற்றியேயாம்.

பண் :

பாடல் எண் : 242

அத்திருப் பதிபணிந் தகன்று போய்அனல்
கைத்தலத் தவர்பதி பிறவுங் கைதொழு
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்
செய்த்தலைப் பணிலமுத்து ஈனுஞ் சேய்ஞலூர்.

பொழிப்புரை :

அத்திருப்புறம்பயம் என்ற பதியைப் பணிந்து சென்று, தீயை ஏந்திய கையையுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கும் முத்தமிழ் வல்லவரான பிள்ளையார் வயல் களில் சங்குகள் முத்துக்களை ஈனுவதற்கு இடமான `திருச்சேய்ஞ லூரை\' வந்தடைந்தார்.

குறிப்புரை :

`பதிபிறவும் கைதொழுது\' என்பதால் அப்பதிகள் திருவியலூர், திருந்துதேவன்குடி முதலாயினவாகலாம் எனக் கூறி, அவற்றிற்குரிய பதிகங்களையும் ஈண்டுக் காட்டினர் சிவக்கவிமணியார். எனினும் பின்வரும் 294, 295ஆம் பாடல்களில் இத்திருப்பதிகளை வணங்கினார் பிள்ளையார் என விதந்து கூறும் இடத்தையே இப்பதி கங்கள் அருளியமை சேக்கிழாரால் குறித்துப் போற்றப்படுகின்றது. ஆதலின் இப்பதிகங்களைப் பின்வரும் அவ்விடங்களின் அணியன வாகக் குறிப்பதே பொருந்துவதாகும்.

பண் :

பாடல் எண் : 243

திருமலி புகலிமன் சேரச் சேய்ஞலூர்
அருமறை யவர்பதி அலங்க ரித்துமுன்
பெருமறை யொடுமுழ வொலிபி றங்கவே
வருமுறை எதிர்கொள வந்து முந்தினார்.

பொழிப்புரை :

செல்வம் மிக்க சீகாழிப் பதியின் தலைவர் இங்ஙனம் எழுந்தருள, சேய்ஞலூரில் வாழ்கின்ற அந்தணர்கள், தம் பதியை அணிசெய்து, முன்பாக மறை முழக்கத்துடன் மங்கல முழவுகளின் ஒலிகளும் விளங்க முறைமை வழாது பிள்ளையாரை எதிர்கொள்ளும் பொருட்டு வந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 244

ஞானசம் பந்தரும் நாய னார்சடைத்
தூநறுந் தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி என்று நித்தில
யானமுன் இழிந்தெதிர் இறைஞ்சி எய்தினார்.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தப் பெருமானும், `இறைவர் தம் சடையில் சாத்திய தூய நறிய கொன்றை மலர் மாலையை முன்னர்த் தம் தலையில் சூட்டப் பெறும் பேறுடைய சண்டீசர், எழுமையும் ஏமாப்புடைய நல்லுணர்வோடு வந்து தோன்றிய திருப்பதி இது\' என்று மனத்துள் எண்ணி, முத்துப் பல்லக்கினின்றும் இழிந்து, அப் பதியை வணங்கி வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 245

மாமறை யாளர்வண் புகலிப் பிள்ளையார்
தாம்எழுந் தருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில்வந் தருளக் கண்டன
ராமகிழ் வுடன்பணிந் தாடி ஆர்த்தனர்.

பொழிப்புரை :

பெருமை மிகுந்த அந்தணர்கள், அருட் கொடை யாளரான சீகாழிப் பிள்ளையார் அங்ஙனம் எழுந்தருளிவர, தங்க ளின் சண்டீசப் பிள்ளையாரே அழகிய தம்பதியின் மீண்டும் எழுந் தருளி வரக்கண்டது போன்ற மகிழ்வுடன் வணங்கியும் ஆடியும் மகிழ் வொலி செய்தும் எதிர் கொண்டனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 246

களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர் பொரிகளும் மலருஞ் சிந்தினர்
துளித்தனர் கண்மழை சுருதி யாயிரம்
அளித்தவர் கோயிலுள் அவர்முன் பெய்தினார்.

பொழிப்புரை :

அவ்வூரவர் இங்ஙனம் மகிழ்ச்சியடைந்து புண்ணியக் குடத்திலுள்ள மணம் கொண்ட நீரைத் தெளித்தனர். பொரிகளையும், மலர்களையும் சொரிந்தனர். ஆனந்தக் கண்ணீர் பொழிந்தனர். அளவற்ற மறைகளை வழங்கியருளிய சிவபெருமா னது திருக்கோயிலில் புகுந்து அப்பிள்ளையாரின் முன்னர்ச் சென்றனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 247

வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடைவ லங்கொடு
செங்கைகள் சென்னிமேற் குவித்துச் சென்றுபுக்
கங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.

பொழிப்புரை :

வெங்குரு என்னும் சீகாழித் தலைவரான பிள்ளையாரும், விளங்கும் கோயிலை மிக்க விருப்பத்துடன் வலமாக வந்து, சிவந்த கைகளைத் தலைமேல் குவித்து, உள்ளே புகுந்து, இறைவரின் திருமுன்பு சேர்ந்து வணங்கினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 248

வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலிற் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதைதாள் தடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.

பொழிப்புரை :

அந்தணர் வாழ்தற்கு இடமான சேய்ஞலூரில் எழுந்தருளியிருக்கும், இயல்பாகவே வினையின் நீங்கியவராய இறைவரின் திருவடிகளை வணங்கி, அப்பெருமானின் அருள் திறத்தைப் போற்றுபவராய பிள்ளையார், தம் தந்தையின் காலை வெட்டிய சண்டீசப் பிள்ளையார், கொடுஞ்செயலான அதற்குப் பய னாய் இறைவரின் மகனார் ஆன தன்மையைப் போற்றிப் பாடினார்.

குறிப்புரை :

இத்திருப்பதியில் அருளிய பதிகம் `நூலடைந்த\' (தி.1 ப.48) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகமாகும். இப்பதிகத்தில்,
பீரடைந்த பாலதாட்டப் பேணாத வன்றாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலை சூட்டித் தலைமைவ குத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
-தி.1 ப.48 பா.7 எனவரும் ஏழாவது திருப்பாடலை நினைவு கூருகின்றார் ஆசிரியர் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 249

இன்னிசை வண்டமிழ் பாடி ஏத்தியே
நன்னெடும் பதியுளோர் நயக்க வைகிய
பின்னர்வெண் பிறையணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந் தாள்வ ணங்கினார்.

பொழிப்புரை :

பிள்ளையார், இனிய இசையமைப்புடைய இவ் வண்டமிழ்ப் பதிகத்தைப் பாடிப் போற்றினார்; மிகுந்த பழைமை யுடைய அத்திருப்பதியில் உள்ளவர்கள் விரும்பியதால் அங்குத் தங்கினார்; பின்பு வெண்மையான பிறையைச் சூடிய செஞ்சடையார் எழுந்தருளியிருக்கும் திருப்பனந்தாளுக்குச் சென்று வணங்கினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 250

ஆங்கணி சொல்மலர் மாலை சாத்திஅப்
பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்த்
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும்ஓ மாம்புலி யூர்வந் துற்றனர்.

பொழிப்புரை :

அத்திருப்பதியில் அழகிய சொல்மலர்களால் ஆன பதிகமாலையைச் சாத்தியபின், அருகில் உள்ள `திருப்பந்தணை நல்லூரைப்\' பணிந்து பாடிப் போற்றி, மேற்செல்கின்றவர், தீமையை நீக்கும் பெருமறைபயிலும் வேதியர்கள் விளங்கி உயர்வதற்கு இடமான `திரு ஓமாம்புலியூரினில்\' வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

திருப்பனந்தாளில் இறைவர் திருமுன்பு அருளியது, `கண்பொலி நெற்றியினான்\' (தி.3 ப.62) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். தாடகையீச்சரம் என்றது அப்பெயரு டைய பெருமாட்டி வழிபட்டமையால் ஏற்பட்ட கோயில் பெயர் ஆகும். பந்தணைநல்லூரில் பாடியது, `இடரினார் கூற்றை\'(தி.3 ப.121) எனத் தொடங்கும் புறநீர்மைப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 251

மற்றநற் பதிவட தளியின் மேவிய
அற்புதர் அடிபணிந் தலர்ந்த செந்தமிழ்ச்
சொற்றொடை பாடிஅங் ககன்று சூழ்மதில்
பொற்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.

பொழிப்புரை :

அந்நற்பதியில் வடதளிக் கோயிலில் எழுந்தரு ளிய, அற்புதமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி விளங் கும் செந்தமிழால் ஆன பதிகத்தைப் பாடினார்; அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, சூழ்ந்த மதிலை உடைய அழகிய பதியான திருவாழ்கொளிப் புத்தூரில் வந்து புகுந்தனர்.

குறிப்புரை :

திருஓமாம்புலியூரில் பாடிய பதிகம் `பூங்கொடி மடவாள்\' (தி.3 ப.122) எனத் தொடங்கும் புறநீர்மைப் பண்ணி லமைந்த பதிகம் ஆகும். வடதளி - ஊரின் வடபுறத்துள்ள கோயில். இது கோயிலின் பெயர். ஓமம் - வேள்வி. ஓமமாம் புலியூர் - வேள்வி ஓவாத புலியூர்.

பண் :

பாடல் எண் : 252

சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ்க் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.

பொழிப்புரை :

சிறப்பு மிக்க அத்திருக்கோயிலை அடைந்து, தேன்பொருந்திய கருங்குவளை மலர் போன்ற கரிய நிறம் வளர் வதற்கு இடமான கழுத்தையுடைய இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருமானாரைக் கண்டு மகிழ்பவர், உலகம் புகழும் திருப்பதிகங்களைப் பாடியருளி, நிறைந்த புகழைக் கொண்ட `திருக் கடம்பூரை\'யும் வணங்கினார்.

குறிப்புரை :

திருவாழ்கொளிப்புத்தூரில் பாடிய பதிகம் `பொடி யுடை மார்பினர்\' (தி.1 ப.40) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணில மைந்த பதிகமாகும். இப்பதிகத்து வரும் பாடல் தொறும், அப்பெரு மான் அடியைக் காண்போம், சேர்வோம், சார்வோம் என உலகினரை உளப்படுத்திக் கூறுவதால், `பார் புகழ் பதிகங்கள்\' என்றார். பாரோடு சேர்ந்து புகழும் பதிகங்கள் என்றவாறு. பதிகங்கள் என்ற பன்மையால் மேலும் பல பதிகங்கள் இருந்திருக்கலாம். எனினும் இதனையடுத்து வரும் ஒரு பதிகமே இன்று காணக் கிடைக்கின்றது. இப்பதிகம், `சாகையாயிரம்\' என்பது: பண் - பியந்தைக் காந்தாரம் (தி.2 ப.94). அடுத்துவணங்கிய திருக்கடம்பூர் கரக்கோயிலில் அருளியது `வானமர் திங்கள்\' (தி.2 ப.68) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணி லமைந்த பதிகமாம்.

பண் :

பாடல் எண் : 253

நம்பரை நலந்திகழ் நாரை யூரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடிநின்
றெம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.

பொழிப்புரை :

இறைவரை நன்மை விளங்கும் திருநாரையூரில் வழிபடும் விருப்புடன் சென்று சேர்ந்து, சிவமணம் கமழ்ந்து விரிகின்ற மாலைகளான திருப்பதிகங்களைப் பாடி நின்று, எம் தலைவரான கவு ணியர் குலத்தலைவர் வணங்கினர்.

குறிப்புரை :

வம்பு: சிவமணம். கூடிய - கமழ்கின்ற. இத்திருப்பதி யில் இதுபொழுது பாடிய பதிகங்கள் பல இருத்தல் வேண்டும். எனினும் கிடைத்திருக்கும் பதிகங்கள் மூன்றேயாம். இவற்றுள் முன்னர்ப் பாடியது, பின்னர்ப் பாடியன எவையெனப் பிரித்தறிய இயலாதுள்ளன. எனினும், `உரையினில் வந்தபாவம்\' (தி.2 ப.86) எனத் தொடங்கும் பியந்தைக் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகத்தை முன்னர் அருளியதாகக் கொள்ளலாம். அடுத்துப் பாடிய பதிகங்கள்:
1. `காம்பினை வென்ற\' (தி.3 ப.102) - பழம்பஞ்சுரம்
2. `கடலிடை வெங்கடு\' (தி.3 ப.107) - பழம்பஞ்சுரம்

பண் :

பாடல் எண் : 254

அப்பதி பணிந்தருந் தமிழ்பு னைந்துதம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள்அரன்
பொற்பதி பலவுமுன் பணிந்து போந்தனர்
பைப்பணி யவர்கருப் பறிய லூரினில்.

பொழிப்புரை :

அத்திருப்பதியின் கண்ணுள்ள இறைவரை வணங்கி அரிய தமிழ்ப் பதிகங்களைப் பாடித் தம் உள்ளன்பு நிறைந்த விருப்புடன் தங்கியிருந்த அந்நாள்களில், அருகிலிருக்கும் இறைவ ரின் அழகிய பதிகள் பலவற்றையும் சென்று பணிந்து போந்தவர், பையையுடைய பாம்பைச் சூடிய இறைவர் வீற்றிருக்கும் திருக்கருப் பறியலூர் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

திருநாரையூரில் தங்கியிருந்த நாள்களில், அருகில் இருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கித் திருப்பதிகங்கள் பாடிப் போந்ததாக ஆசிரியர் குறித்தருளுகின்றார். அப்பதிகள், குரக்குக்கா முதலியன போலும் எனக் குறிக்கின்றார் சிவக்கவிமணியார். எனினும் அப்பதிக்கு, பிள்ளையார் பாடிய பதிகம் காணக் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 255

பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்
உரையிசை பாடிஅம் மருங்கி னுள்ளவாம்
சுரர்தொழும் பதிகளுந் தொழுது பாடினார்.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருக்கருப்பறியலூரை வணங்கிச் செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடியருளிய சீகாழிப் பிள்ளையார், அதற்கு அருகிலுள்ள தேவர்கள் வணங்குகின்ற பிற திருப்பதிகளையும் வணங்கிப் பாடினார்.

குறிப்புரை :

திருக்கருப்பறியலூரில் பாடிய பதிகம் `சுற்றமொடு பற்றவை\' (தி.2 ப.31) என்று தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். அருகிலுள்ள பதிகளையும் வணங்கினார் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அப்பதிகள் திருப்புன்கூர், திருப்புள்ளிருக்கு வேளூர் முதலாயினவாகலாம் எனக் கருதுவர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 256

மண்ணுலகு செய்ததவப் பயனா யுள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எண்ணில்முர சிரங்கியெழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கியகா ளம்சின்னம் எங்கும்ஊதக்
கண்வளர்மென் கரும்புமிடை கதிர்செஞ் சாலி
கதலிகமு குடன்ஓங்குங் கழனி நாட்டுத்
தெண்ணிலவு சூடியதம் பெருமான் வைகுந்
திருப்பிரம புரஞ்சாரச் செல்லும் போது.

பொழிப்புரை :

இம்மண்ணுலகம் செய்த தவப் பயனால் தோன்றிய வள்ளலாரான பிள்ளையார், அப்பதிகள் பலவற்றையும் வணங்கி, அப்பால் சென்று அளவற்ற முரசுகள் எழுந்து ஒலிக்கவும், சங்குகள் முழங்கவும், விளங்கும் எக்காளங்களும் சின்னங்களும் எங்கும் இயம்பவும், கணுக்கள் வளரும் மென்மையான கரும்புகளும் நெருங்கிய கதிர்களையுடைய செந்நெல்லும், வாழைகளும், கமுகு களும் ஒருங்கே ஓங்கும் வயல்கள் பொருந்திய சோழ நாட்டில், தெளிந்த பிறையைச் சூடிய தம் இறைவர் எழுந்தருளியுள்ள திருப் பிரமபுரம் என்ற சீகாழியைச் சாரச் செல்லும் போது,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 257

பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத் தருமறையோர் பெருகு காதல்
உள்ளமகிழ் சிறந்தோங்கத் தோணி மேவும்
உமைபாகர் கழல்வணங்கி உவகை கூர
வெள்ளமறை ஒலிபெருகு மறுகு தோறும்
மிடைமகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறைகுடங்கள் தீப தூபம்
செழுங்கொடிகள் நிறைத்தெதிர்கொள் சிறப்பிற் செல்வார்.

பொழிப்புரை :

பிள்ளையார் தம்பதிக்கு வருகின்றார் என்பதைக் கேட்ட செல்வம் பொருந்திய பிரமபுரத்தில் வாழ்கின்ற அந்தணர்கள், பெருகுங் காதலால் தம் உள்ளங்களில் மகிழ்ச்சி பெருகி எழுதலால், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் திருநிலை நாயகியாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, மறைகளின் ஒலி பெருகும் திருவீதிகளில் எல்லாம், நெருங்கிய மாதோரணங்கள், வாழை, பாக்கு தெளிந்த நீர் உடைய குடங்கள், விளக்குகள், நறும் புகை, செழுங்கொடிகள் என்னும் இவற்றை நிரல் பட அமைத்து வரவேற்றற்குரிய சிறப்புக்களை மிகுதியாய்ச் செய்து,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 258

ஆரணங்கள் மதுரவொலி எழுந்து பொங்க
அரசிலையுந் தருப்பையும்பெய் தணிந்த வாசப்
பூரணகும் பங்கள்நிறை கரகம்ஏந்திப்
புதுமலரும் நறுந்துகளும் பொரியுந் தூவி
வாரணங்கு முலைஉமையாள் குழைத்த செம்பொன்
வள்ளத்தில் அமுதுண்ட வள்ள லாரைச்
சீரணங்கு மணிமுத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடைநிழற் கீழ்ச்சென்று கண்டார்.

பொழிப்புரை :

நான்மறைகளின் இனிய ஒலி எழுந்து பெருக, அரசிலையையும் தருப்பையையும் இட்டு அணி செய்யப்பட்ட மண முடைய நிறை குடங்களையும் நிறைந்த கரகங்களையும் தாங்கி, புதிய மலர்களையும் நறுமண மிக்க பொடிகளையும் பொரியையும் தூவி, கச்சணிந்த மார்பகங்களையுடைய உமையம்மையார் தந்த செம்பொன் கிண்ணத்தில் சிவஞானத்துடன் குழைத்த பால் அமுதத்தை உண்ட வள்ளலாரான பிள்ளையாரைச் சிறந்த முத்துக் குடை நிழற்றும் முத்துச் சிவிகையின் மீது கண்டனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 259

கண்டபொழு தேகைகள் தலைமேற் கொண்டு
கண்களிப்ப மனங்களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல்லிறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண்திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
இருவிசும்பின் வெளிதூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ்நா யகரும்இழிந் தெதிரே சென்று
வணங்கியவ ருடன்கூடி மகிழ்ந்து புக்கார்.

பொழிப்புரை :

பார்த்தவுடனே தலைகள் மீது கைகளைக் குவித்துக் கண்கள் களிப்படையவும், உள்ளம் மகிழவும், காதல் பெருகத் தொண்டர்களும் அந்தணர்களும் சென்று பிள்ளையாரைச் சூழ்ந்து, சொலற்கரிய மகிழ்ச்சியால் போற்றிய ஓசை எண்திசை களிலும் நிறையுமாறு செய்தனர். தம் மேலாடைகளை வீசி வானத்தை மறைத்தனர். மேன்மேலும் பெருகும் புகழையுடைய தமிழ்த் தலை வரான ஆளுடைய பிள்ளையாரும் சிவிகையினின்றும் இறங்கி, அவர்கள் எதிரே சென்று வணங்கி, அவர்களுடன் கூடி மகிழ்ந்து அந் நகரத்துள் புகுந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 260

திங்களணி மணிமாடம் மிடைந்தவீதி
சென்றணைந்து தெய்வமறைக் கற்பின் மாதர்
மங்கலவாழ்த் திசையிரண்டு மருங்கும் மல்க
வானவர்நா யகர்கோயில் மருங்கு சார்ந்து
துங்கநிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச்
சூழ்ந்துதிருத் தோணிமிசை மேவி னார்கள்
தங்கள்திரு முன்புதாழ்ந் தெழுந்து நின்று
தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்.

பொழிப்புரை :

சந்திரனைத் தாங்குமாறு உயர்ந்த அழகிய மாளிகைகள் நிறைந்த தெருவில் சென்று அணைந்து, கடவுட்டன்மை கொண்ட மறைவழி வந்த கற்புடைய மங்கையர் முழக்கும் மங்கல வாழ்த்து இருமருங்கிலும் நிறைய, இறைவரது பெரிய நிலைகளை உடைய கோபுரத்தை வணங்கிக் கோயிலுள் புகுந்து, வலம் வந்து, திருத்தாளம் பெற்றவரான பிள்ளையார், திருத்தோணியில் எழுந் தருளிய இறைவரின் திருமுன்பு வீழ்ந்து வணங்கி எழுந்து, தமிழ் மறையான பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம், இப்பொழுது காணப் பெறும் பதிகங்களுள் ஒன்றோ, அன்றிப் பிறவோ என அறுதியிட்டுக் கூறுதற்கு இல்லை.

பண் :

பாடல் எண் : 261

பரவுதிருப் பதிகஇசை பாடி நீடும்
பரங்கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவுமலர்க் கண்பனிப்பக் கைகள் கூப்பி
வீழ்ந்தெழுந்து புறம்போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திருநீல கண்டயாழ்ப் பாணர் பின்னே
வரஅவரை வளம்பெருகு மனையிற் போக
அருள்செய்து தந்திருமா ளிகையின் வந்தார்.

பொழிப்புரை :

போற்றுதற்குரிய இசை பொருந்திய திருப்பதிகத் தைப் பாடிப் பெருங்கருணை செய்த திருவருளின் தன்மையைப் போற்றிப் பொருந்திய மலர் போன்ற கண்கள் இன்ப நீரைப் பொழியக் கைகளைத் தலைமேல் குவித்து, வீழ்ந்து வணங்கி, வெளியே வந்து, மறையின் வாய்மை விளங்கும் காழிப் பிள்ளையார் சென்றருளும் பொழுது, திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்பின்னே வர, வளம் பெரு கும் அவர்தம் இருக்கைக்குச் செல்லுமாறு அருள் செய்து, தம் மாளிகை யின் அருகில் வந்தாராக.

குறிப்புரை :

யாழ்ப்பாணர் தம் மனைவியுடன் தம்மைக் காணவந்த பொழுதே, அவருக்கெனத் தனி மனையொன்று அமைத்து அதில் இருக்கச் செய்தது முன்னர்க் கூறப்பட்டது. அம்முறையிலேயே இது பொழுதும் அவரைத் தம் துணைவியாருடன் இருக்கச் செய்தனர்.

பண் :

பாடல் எண் : 262

மறையவர்கள் அடிபோற்றத் தந்தை யாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலா யுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி யேந்த
இறைவர்திரு நீற்றுக்காப் பேந்தி முன்சென்
றீன்றதா யார்சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமையவர்க் கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.

பொழிப்புரை :

அங்கிருந்த அந்தணர்கள் தம் அடிகளை வணங்கத் தந்தையாரும் தம் அருகில் நெருங்கி வரத் தம் திருமாளி கையை அடையும் பொழுது, மரபு வழாத மறைக்குல மடந்தையர் நிறை குடத்தையும் அழகிய விளக்குகளையும் ஏந்தி நிற்க, அவரன்பைப் பெற்றவரான பகவதியார், சிவபெருமானின் திருநீற்றுக் காப்பினை ஏந்தி முன்வந்து சாத்திப் பணிந்து பாராட்ட, முறைமையாக அவரவர்க்கும் அருள் செய்து பெருமானிடம் மணிமுத்துச் சிவிகை பெற்றவரான பிள்ளையார், திருமடத்துள் புகுந்தார்.

குறிப்புரை :

பிள்ளையாரின் நெற்றியில் நீறு சாத்தியது, தாயார் எனவந்த உலகியல் நிலையிலாம். அவரைப் பணிந்தது, திருவருள் நலத்தால் ஞானம் பெற்ற அருளியல் நிலையிலாம். இவ்விரு நிலைக ளையும் காண நேருவது நாம் பெற்ற புண்ணியமாகும். இது போன்றே பிள்ளையார் இருந்தருளும் இடத்தை ஒருகால் மாளிகை என்றும், பிறிதொருகால் மடம் என்றும் குறிப்பதுமாகும். மாளிகை என்றது அதன் வளத்தைக் காட்டி நிற்கும். மடம் என்றது அதன்கண் ஆற்றி வந்த அறச் செயலையும் அருட்செயலையும் காட்டி நிற்கும்.

பண் :

பாடல் எண் : 263

செல்வநெடு மாளிகையில் அமர்ந்து நாளுந்
திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்குதிருப் பதிகங்கள் பலவும் பாடி
மனமகிழ்ந்து போற்றிசைத்து வைகு நாளில்
ஒல்லைமுறை உபநயனப் பருவ மெய்த
உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத்
தோலொடுநூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.

பொழிப்புரை :

செல்வம் பெருகும் நீண்ட தம் திருமாளிகையில் இருந்து ஒவ்வொரு நாளும், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரைச் சென்று பணிந்து, பொருந்திய பதிகங்கள் பலவற்றையும் பாடி மனமகிழ்வுடன் இருந்து வரும் நாள்களில், விரைவாக முறைப்படி செயத்தக்க உபநயனப் பருவம் வந்துசேர, உலகியலுக்கு அப்பாற்பட்ட சிவஞானத்தை அறியப் பெற்ற பிள்ளையார், தொன்று தொட்டு வரும் மறைநெறிப்படி உபநயனத்துக்குரிய செயற்பாடுகளை அந்தணர்கள் செய்யத் தேவர்களும் போற்றுமாறு பிள்ளையார் அந் நிலையில் தோலுடனே நூலையும் தாங்கிக் கொண்டார்.

குறிப்புரை :

செல்வம் பெருகும் நீண்ட தம் திருமாளிகையில் இருந்து ஒவ்வொரு நாளும், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரைச் சென்று பணிந்து, பொருந்திய பதிகங்கள் பலவற்றையும் பாடி மனமகிழ்வுடன் இருந்து வரும் நாள்களில், விரைவாக முறைப்படி செயத்தக்க உபநயனப் பருவம் வந்துசேர, உலகியலுக்கு அப்பாற்பட்ட சிவஞானத்தை அறியப் பெற்ற பிள்ளையார், தொன்று தொட்டு வரும் மறைநெறிப்படி உபநயனத்துக்குரிய செயற்பாடுகளை அந்தணர்கள் செய்யத் தேவர்களும் போற்றுமாறு பிள்ளையார் அந் நிலையில் தோலுடனே நூலையும் தாங்கிக் கொண்டார்.

பண் :

பாடல் எண் : 264

ஒருபிறப்பும் எய்தாமை உடையார் தம்மை
உலகியல்பின் உபநயன முறைமை யாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறைமுனிவ ரெதிரே நின்று
வருதிறத்தின் மறைநான்குந் தந்தோம் என்று
மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவிறப்ப ஓதினார் புகலி வந்த
புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்.

பொழிப்புரை :

எப்பிறவியிலும் வாராத இயல்புடைய பிள்ளை யாரை, உலகில் மற்றவர் இயல்பில் அவரை வைத்து உபநயன முறையான இருபிறப்பின் நிலையை அதற்குரிய செயற்பாடுகளால் காட்டிச் செய்கின்ற அந்தணர்கள் எதிரில் நின்று, `வழிவழியாகக் கூறப்பெற்று வரும் தன்மையில் நான்மறைகளையும் தந்தோம்\' என்று உரிய மந்திரங்களைச் சொல்லும் அவர்களுக்குத் தம் இனிய வாக்கினால் சீகாழியில் தோன்றிய புண்ணியமே வடிவான பிள்ளை யார் ஒப்பற்ற நிலையில் நின்று எண்ணற்ற புனித மறைகளையும் ஓதினார்.

குறிப்புரை :

`மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண் ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்\' (தி.2 ப.98 பா.5) என வருந்தி நின்றவர் பிள்ளையார். தம் திருமணத்தின் பொழுது யாவரும் புகுக எனத் தம்முடன் வந்தார் அனைவரையும் வீடுபேறு பெற அழைத்துச் சென்றவர். அப்பெருமை உடையாருக்கு இனிப் பிறப்பு என்பது ஏது? ஒன்றுமில்லை. ஆதலின் `ஒரு பிறப்பும் எய்தாமை யுடையார்\' என் றார். அத்தகைய ஞானச் செம்மலுக்கு இருபிறப்பின் நிலைமையினை உணர்த்தவேண்டி, அவ்வந்தணர்கள் நான்மறைகளையும் தந்தோம் என்றது உலகியல் வயப்பட்டதன்றிப் பிறிதன்று என்பார், அவர்க ளுக்கு `எண்ணிறந்த புனித வேதம்\' இப்பிள்ளையார் ஓதினார் என் றார். இதனால் அவ்வந்தணர்களுக்குப் பிள்ளையார், தம் தியானப் பொருள் ஆகவும் (குருமூர்த்திகளாக) ஆனார் என, வரும் பாடலில் ஆசிரியர் சேக்கிழார் கூறுவாராயினர். இந்நிலைகளை யெல்லாம் ஆழமாக நினைதல் இன்றியமையாததாகும்.

பண் :

பாடல் எண் : 265

சுருதியா யிரம்ஓதி அங்க மான
தொல்கலைகள் எடுத்தியம்புந் தோன்ற லாரைப்
பரிதிஆ யிரகோடி விரிந்தால் என்னப்
பரஞ்சோதி அருள்பெற்ற பான்மை மேன்மை
கருதிஆ தரவோடும் வியப்புற் றேத்துங்
கலைமறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வருதியா னப்பொருள்என் றிறைஞ்சித் தாமுன்
வல்லமறை கேட்டையந் தீர்ந்து வாழ்ந்தார்.

பொழிப்புரை :

எண்ணிறந்த பல மறைகளையும் ஓதியதுடன் அவற்றின் அங்கமான பழைய கலைகளையும் எடுத்துக் கூறிய பெருமை வாய்ந்த பிள்ளையாரை, எண்ணற்ற கதிரவர்கள் ஒருங்கு கூடித் தம் கதிர்களை விரித்தாற் போல மேலாக விளங்கும் ஒளிப் பிழம்பாய இறைவரின் திருவருளைப் பெற்ற பான்மையின் மேன் மையை எண்ணி, அன்பும் வியப்பும் கொண்டு போற்றும் அவ்வந் தணர்கள், கவுணியர் பெருமானான பிள்ளையாரைத் `தங்கள் கண் முன் வெளிப்பட்டு வரும் தியானப் பொருள் ஆவார்\' என்று எண்ணி வணங்கித் தாங்கள் முன்னே கொண்ட மறைகளில் ஏற்பட்ட தமக் குள்ள ஐயங்களையும் கேட்டுத் தெளிந்தனர்.

குறிப்புரை :

அங்கமான தொல்கலைகள் தருக்கம், வியாகரணம், முதலிய ஆறு அங்கங்கள். இறைவனின் பேரொளிக்கு ஆயிரங் கோடி கதிரவர்களின் ஒளி உவமை. ஈண்டு ஆயிரங் கோடி என்பது எண்ணற் றவை எனும் பொருளில் நின்றது. கதிரவனுக்கு ஒளி தருபவனே இறைவன் ஆவன். `அருக்கனிற் சோதி அமைத்தோன் காண்க\' (தி.8 ப.3 வரி.20) என வரும் திருவாசகமும் காண்க. ஆதலின் அக்கதிரவர்களின் ஒளி ஒரு புடை ஒப்புமையாகவே அமையும். தியானப் பொருள் - தியானிக்கப்படும் பொருள்: குருவாகவும் சிவமாகவும் எண்ணிப்போற்றப்படும் பொருள்.

பண் :

பாடல் எண் : 266

மந்திரங்க ளானவெலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாஞ்
செழுமறையோர்க் கருளியவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்து மேயென்
றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.

பொழிப்புரை :

மறைவழிப்பட்ட மந்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லியருளியபின், அம்மறைவழிப்பட்ட வேள்விச் செயற்பாடுக ளில் அவர்களின் சிந்தையில் வந்த ஐயங்களையெல்லாம் தெளியு மாறு அவ்வந்தணர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், அவர்கள் மனம் தெளியுமாறு தொன்மையும் முதன்மையும் பெற்ற எல்லா மந்திரங் களும் தோன்றுவதற்குக் காரணம் சிவபெருமானின் திருவைந்தெ ழுத்தே யாகும் என அருளுவாராய் `முப்போதும் ஓதுதற்குரிய மந்திரம் திருவைந்தெழுத்தே யாகும்\' என ஐந்தெழுத்தின் திருப்பதிகத்தையும் அருள் செய்தார்.

குறிப்புரை :

இப்பதிகம் `துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்\' (தி.3 ப.22) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்த பதிக மாகும். இப்பதிகத்தில்,
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
-தி.3 ப.22 பா.2 எனவரும் இரண்டாவது பாடலின் 4ஆவது அடியே ஆசிரியரால் எடுத்துக் கூறப்பட்டதாகும். அந்தி - முப்பொழுதும். இதனால் அவ்வந் தணர்களுக்குக் குரு உபதேசமும் பெற வாய்ப்பாயிற்று.

பண் :

பாடல் எண் : 267

அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
அந்தணர்கள் அருள்தலைமேற் கொண்டு தாழ்ந்து
சித்தமகிழ் வொடுசிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்தஇசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரைமலர்த்தாள் மனங்கொண்டு மீண்டுபோந்து
பத்தருடன் இனிதமரும் பண்பு கூடப்
பரமர்தாள் பணிந்தேத்திப் பயிலும் நாளில்.

பொழிப்புரை :

அவ்வாறான பதிகத்தைப் பிள்ளையார் பாடி அரு ளவே, அம்மறையவர்கள் அவ்வருளிப்பாட்டினை உபதேசமாகக் கொண்டு, சிரமேல் தாங்கி வணங்கி மனம் மகிழ்ந்தனராக, பிள்ளை யார் தாமும் தெய்வத் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறை வரைச் சென்று பணிந்து பாடற் பொருளுக்கு இசைந்த இசையுடன் கூடிய திருப்பதிகங்களால் போற்றி, அவருடைய மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை உள்ளத்தில் வைத்து, வெளிப் போந்து அடியார்களுடன் இனிதாய் அமரும் தன்மை கூடுமாறு இறைவரின் திருவடிகளைப் பணிந்து போற்றி இருந்தருளிய அந்நாள்களில்,

குறிப்புரை :

இதுபொழுது அருளப் பெற்ற மெய்த்த இசைத் திருப்பதிகங்கள் எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 268

பந்தணை மெல்விர லாளும்
பரமரும் பாய்விடை மீது
வந்துபொன் வள்ளத் தளித்த
வரம்பில்ஞா னத்தமு துண்ட
செந்தமிழ் ஞானசம் பந்தர்
திறங்கேட்டி றைஞ்சுதற் காக
அந்தணர் பூந்தராய் தன்னில்
அணைந்தனர் நாவுக் கரையர்.

பொழிப்புரை :

பந்தொடு பழகிய மென்மையான விரலையுடைய உமையம்மையாரும் இறைவரும் ஆனேற்றின் மீது எழுந்தருளி வெளிப்பட்டு வந்து, பொற்கிண்ணத்தில் அளித்த எல்லையில்லாத ஞானப் பாலையுண்ட செந்தமிழ்த் தலைவரான திருஞானசம்பந்தரின் திறங்களைக் கேட்டு, அவரை வணங்குதற்காக, அந்தணர்கள் சிறப்பு டன் இருக்கும் சீகாழிப் பதிக்குத் திருநாவுக்கரசு நாயனார் வந்தருளினார்.

குறிப்புரை :

மூன்றாண்டில் ஞானம் பெற்ற பிள்ளையாரின் அருள் திறங்களை, அவர் உபநயனம் பெற்ற ஏழாவது ஆண்டிற்குப் பிறகே நாவரசர் அறிய நேர்ந்தமை இதனால் புலனாகின்றது. எத்துணை அரிய செய்திகளும் நிகழ்ந்த அவ்வவ்விடத்தே போற்றப் பெற்று வந்ததல்லது நாடெங்கிலும் அவை தெரிதற்குப் போதிய சூழலும் வாய்ப்பும் அக்காலத்தே இல்லாதிருந்தமை விளங்குகின்றன. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 269

வாக்கின் பெருவிறல் மன்னர்
வந்தணைந் தாரெனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ்
புகலிப் பெருந்தகை யாரும்
ஆக்கிய நல்வினைப் பேறென்
றன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெருவிருப் போடும்
எதிர்கொள எய்தும் பொழுதில்.

பொழிப்புரை :

பேராற்றலை யுடைய சொல்லரசர் வந்துள்ளார் என்பதைக் கேட்டு, நீர்ப்பூக்கள் மணம் கமழும் பொய்கைகள் சூழ்ந்த சீகாழியில் வந்தருளிய பெருந்தகையாரான பிள்ளையாரும், `இது முன் நல்வினையினால் நேர்ந்த பேறாகும்\' என்று மனத்துள் கொண்டு, அன்பர்கள் சூழ அவரை வரவேற்கும் பெருவிருப்பத்துடனே எதிர் கொள்ளச் சென்ற போழ்தில்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 270

சிந்தை இடையறா அன்பும்
திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும்
கையுழ வாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும்
வடிவிற் பொலிதிரு நீறும்
அந்தமி லாத்திரு வேடத்
தரசும் எதிர்வந் தணைய.

பொழிப்புரை :

உள்ளத்தில் இடையறாது பெருகும் அன்பும், திருமேனியில் அசைவும், கந்தையும் மிகையாம் என்ற கருத்தும், கையில் உழவாரப் படையும், வெளிப்பட்டுப் பெருகி வழிகின்ற கண்ணீர் மழையும், திருமேனியில் விளங்கும் திருநீறுமாய், அந்தம் இல்லாத திருவேடத்தையுடைய திருநாவுக்கரசரும் எதிரே வந்தாராக,

குறிப்புரை :

நாவரசரின் திருவேடப் பொலிவழகை உள்ளக் கிழியில் உரு எழுதிக் காண்டற்கு ஏதுவாக ஆசிரியர் மூன்று இடங்க ளில் அவ்வழகு பொலி திருவடிவைக் குறித்துள்ளார். அவற்றுள் இஃது ஒன்றாகும். சிந்தை இடையறா அன்பை வந்திழி கண்ணீர் மழை வெளிப் படுத்தி நிற்கின்றது. அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லையன்றோ? அசைவு - தளர்ச்சி. இதனால் அடிகளின் வயதறிய வாய்ப்புண்டு. ஞானசம்பந்தரின் முதல் முறைச் சந்திப்பு இது. திருப்புகலூரில் இரண்டாவது முறையாகவும், திருப்பூந்துருத்தியில் மூன்றாவது முறையாகவும் சந்திக்கவுள்ளார் இவர். இம் முதல்முறைச் சந்திப்பிலேயே `திருமேனி அசைவு\' குறிப்பிடப்படுகின்றது. காத்தாள் பவர் காவல் இகழ்ந்து, சமண் சமயத்தில் சார்ந்தது ஏறத்தாழ இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்குமானால் இவர் மீண்டும் சைவ சமயம் சார்ந்தது அறுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கலாம். இந்நிலையில் இதுபொழுது இவர்தம் வயது 70 ஆகலாம் என எண்ண இடம் உண்டு. இவ்வரையறை முன்பின்னுமாகலாம் . ஞானியர்க்கு ஓடும் கவந்தியுமே உறவாகும் ஆதலால் அவருக்குக் கந்தையும் மிகையாயிற்று. பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பே மிகை என்பர் திருவள்ளுவர்.

பண் :

பாடல் எண் : 271

கண்ட கவுணியக் கன்றும்
கருத்திற் பரவுமெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே
தோன்றிய தென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங்
கரசும் எதிர்வந் திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக
மதுர மொழியருள் செய்தார்.

பொழிப்புரை :

அங்ஙனம் அவர் வருதலைக் கண்ட ஞானசம்பந் தரும் `உள்ளத்தில் பரவி வருகின்ற உண்மையன்பின் பெருக்குக் கிடனான தொண்டர் திருவேடம் நேரேவந்து தோன்றியது\' எனக் கொண்டு தொழுதபடியே தேவர்களும் போற்றுமாறு அங்குச் சேர, அது பொழுது நாவுக்கரசரும் எதிரே வந்து வணங்க, மிகுந்த ஆசைபெருக, அவருக்கு இனிய மொழிகளைக் கூறியருளினார்.

குறிப்புரை :

அடியவர் எனில் எப்படியிருக்க வேண்டும் என்பதைச் சம்பந்தர் உள்ளத்தில் தெளிந்து, அதற்கு ஒரு வடிவங் கொண்டு தொழுது வந்துள்ளார். இதுவரை அவர் அவ்வாறு உருக்கொண்ட திருவேடம் நாவரசர் திருவேடமேயாக இருக்கக் கண்ட நிலையில், மீதூர்ந்த அன்பினால் அவரை வணங்கினார். இவ்வாற்றான் நாவரச ரின் திருவேடப் பொலிவழகு எவ்வளவு போற்றற்குரியது என்பது புலனாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 272

பேரிசை நாவுக் கரசைப்
பிள்ளையார் கொண்டுடன் போந்து
போர்விடை யார்திருத் தோணிப்
பொற்கோயி லுள்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும்
அவருடன் கும்பிட் டருளால்
சீர்வளர் தொண்ட ரைக்கொண்டு
திருமா ளிகையினில் சேர்ந்தார்.

பொழிப்புரை :

மிகு புகழுடைய நாவுக்கரசரைப் பிள்ளையார் உடன் வரவேற்றுச் சென்று, ஆனேற்றூர்தியையுடைய இறைவரின் திருத்தோணி என்ற அழகிய கோயிலுள் புகும்போது, ஆர்வம் மிகுதி யால் அணையும் அவருடனே கூடி, இறைவரை வணங்கித் திருவரு ளால், சிறப்பு மிகச் செய்யும் திருத்தொண்டரான அரசைத் தம்முடன் அழைத்துக் கொண்டு தம் திருமாளிகைக்குச் சென்றார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 273

அணையுந் திருந்தொண்டர் தம்மோ
டாண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திருவமு தாக்கி
இயல்பால் அமுதுசெய் வித்துப்
புணரும் பெருகன்பு நண்பும்
பொங்கிய காதலில் கும்பிட்
டுணருஞ்சொல் மாலைகள் சாத்தி
உடன்மகிழ் வெய்தி உறைந்தார்.

பொழிப்புரை :

சூழவரும் திருத்தொண்டர்களுடன் ஆளுடைய அரசர்க்கும் ஒப்பில்லாத உணவை, ஏற்ற இயல்பால் ஆக்குவித்து உண்ணச் செய்தருளிப் பொருந்திய பேரன்பும் நட்பும் மேன்மேலும் மிக வணங்கிச் சிவபெருமானை உள்ளத்தில் கண்டு மகிழும் திருப்பதி கங்களைப் பாடி, மகிழ்ச்சி பொருந்த உடன் இருந்தனர்.

குறிப்புரை :

இங்கு அருளிய சொல்மாலைகள் எவைஎன உறுதியாக அறிதற்கியலாதுள்ளது.

பண் :

பாடல் எண் : 274

அந்நாள் சிலநாள்கள் செல்ல
அருள்திரு நாவுக் கரசர்
மின்னார் சடையண்ணல் எங்கும்
மேவிடங் கும்பிட வேண்டிப்
பொன்மார்பின் முந்நூல் புனைந்த
புகலிப் பிரானிசை வோடும்
பின்னாக வெய்த விறைஞ்சிப்
பிரியாத நண்பொடும் போந்தார்.

பொழிப்புரை :

அங்ஙனமாக, நாள்கள் சில செல்ல, திருவருள் பெற்றிலங்கும் திருநாவுக்கரசர், மின்னல் போல ஒளிவிடும் சடையை உடைய இறைவர் வீற்றிருக்கும் ஏனைய திருப்பதிகளுக்கும் சென்று கும்பிட விரும்பி அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்த சீகாழிச் செம்மலான பிள்ளையாரின் இசைவுடன் பின்னரும் வந்து பழகி இன்புறும் நட்புரிமையுடன் பிரிந்து சென்றனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 275

வாக்கின் தனிமன்னர் ஏக
மாறாத் திருவுளத் தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த
புகலியில் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத்
திருத்தோணி வீற்றிருந் தாரைத்
தூக்கின் தமிழ்மாலை பாடித்
தொழுதங் குறைகின்ற நாளில்.

பொழிப்புரை :

ஒப்பில்லாத திருநாவுக்கரசர் செல்ல, மாறுபாடு இல்லாத திருவுள்ளத்துடன் மலர்கள் மணம் கமழும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் பிள்ளையார் மீண்டு வந்து புகுந்து, நிறைந்த மறைக ளின் வடிவாய்த் திருத்தோணியில் வீற்றிருக்கின்ற தோணியப்பரை அழகிய செய்யுள்களாலாகிய இனிய தமிழ் மாலைகளைப் பாடி வணங்கி அங்கு இருந்துவரும் நாள்களில்,

குறிப்புரை :

பிள்ளையார் மீண்டுவந்து புகுந்து என்றார், நாவரசருடன் காழி எல்லைவரை சென்று அவரை வழியனுப்பியமை தோன்ற. இதுபொழுது பாடிய பதிகங்களும் இவை எனத் தெரிந்தில. தூக்கு - செய்யுள்.

பண் :

பாடல் எண் : 276

செந்தமிழ் மாலை விகற்பச்
செய்யுட்க ளான்மொழி மாற்றும்
வந்தசொற் சீர்மா லைமாற்று
வழிமொழி எல்லா மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம்
தமிழிருக்குக் குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை
ஈரடி ஈரடி வைப்பு.

பொழிப்புரை :

பல்வேறு வகைப்பட்ட செய்யுள்களாலான செந்தமிழ் மாலைகளாகத் `திருமொழி மாற்று\' என்ற பதிகமும் வழிமொழித் `திருவிராகப் பதிகமும், `எல்லா அடிகளிலும் எல்லாச் சீர்களிலும் மடங்கி வருகின்ற இயமகமாகிய `திரு ஏகபாதப் பதிகமும்\' தமிழில் சிறந்த `இருக்குக் குறள்\' பதிகமும், ஆகிய இவற்றைப் பாடிச் சாத்தியதுடன், எம் தந்தைக்கு அருளிய `எழுகூற்றிருக்கையும்\' `ஈரடி\' என்ற திருப்பதிகமும், `ஈரடிமேல் வைப்பு\' என்னும் திருப்பதிகமும்,

குறிப்புரை :

விகற்பச் செய்யுள்கள் - சொல்லணிநேர் பயின்ற பல்வேறு வகைப்பட்ட செய்யுள்கள். காழிப் பிள்ளையார் திருப்பதிகள் தோறும் சென்று வழிபட்டு வரும் முறையில், இந்நான்காவது செலவு நயப்பு நிறைவுற்றதும் காழியில் தங்கிய நாள்கள் மிகுதியாகும். ஆதலின் இதுபொழுது அருளிய பதிகமும் மிகுதியாகவுள்ளன.
இவ்வகையில் அமைந்த பதிகங்கள்:
1. `மொழிமாற்று\': காடதணி (தி.1 ப.117) - வியாழக்குறிஞ்சி
2. `மாலைமாற்று\': யாமாமாநீ (தி.3 ப.117) - கௌசிகம்
3. `வழிமொழி\': சுரருலகு (தி.3 ப.67) - சாதாரி
4. `ஏகபாதம்\': பிரமபுரத்துறை (தி.1 ப.127) - வியாழக்குறிஞ்சி
5. `இருக்குக்குறள்\': அரனை உள்குவீர் (தி.1 ப.90) - குறிஞ்சி
6. `எழுகூற்றிருக்கை\': ஓருருவாயினை (தி.1 ப.128) - வியாழக்குறிஞ்சி
7. `ஈரடி\': வரமதே கொளா (தி.3 ப.110) - பழம்பஞ்சுரம்
8. `ஈரடி மேல்வைப்பு\' : தக்கன்வேள்வி (தி.3 ப.5) - காந்தார பஞ்சமம்
1. மொழிமாற்று: பாடலில் வரும் சொற்கள் பொருள் அமைவிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுதல் இதன் இலக்கணமாகும்.
2. மாலை மாற்று: ஒரு மாலைக்கு அமைந்த இரு தலைப்புகளுள், எதனை முதலாகக் கொண்டு நோக்கினாலும் அம்மாலை ஒரே தன்மை யதாய்த் தோன்றுமாறு போல, ஒரு செய்யுளை முதலிலிருந்தோ, இறுதி யிலிருந்தோ எவ்வகையில் தொடர்ந்து வாசித்தாலும் அதே செய்யு ளாக அமையுமாறு ஒத்த எழுத்துக்களை நிரலே பெற்றிருப்பது மாலைமாற்றுச் செய்யுளாம்.
3. வழிமொழித் திருவிராகம்: குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத்தொடுப்பது இவ்வகையதாம்.
4. ஏகபாதம்: ஓரடியுள் வரும் சொற்சீர்களே நான்கு அடிகளிலும் மடக்கி வரப் பாடுவதாம். ஏகம் - ஒன்று; பாதம் - அடி = ஒரே அடி.
5. இருக்குக்குறள்: இரு சீரால் இயன்ற நான்கு அடிகளையுடைய பாட்டாம்.
6. திருமுக்கால்: ஒரு பாடலில் இரண்டாவது அடி மடங்கி மூன்றாவது அடியாகவும் வரப்பாடுவது இவ்வகையதாகும். இரண் டாம் அடியே மூன்றாவது அடியாக வருதலின் இப்பாடல் மூன்றடி உடையதாகிறது. ஆதலின் இதனை முக்கால் என்றனர்.
7. எழுகூற்றிருக்கை: ஒன்று முதல் ஏழு வரையிலான எண்கள் தொடர, அவ்வெண்கள் ஒவ்வொன்றும் நிறைவுறும்பொழுது, நிரல் பட ஒன்றுவரைக் கீழிறங்கி நிற்கப் பாடுவதாம்.
8. ஈரடி: இரண்டடிகளால் இயன்ற பாடல் வகையதாம்.
9. ஈரடி மேல் வைப்பு: ஈரடியால் இயன்ற செய்யுளாய் அதன் மேலும் ஈரடிகள் வைத்துப் பாடின் அது ஈரடி மேல் வைப்பாம். பின்னிரண்டடியாக வரும் வைப்புப் பதிகம் முழுமையும் ஒன்றேயாக அமைவதும் உண்டு, வெவ்வேறாக அமைவதும் உண்டு. இது அடுத்து வரும் நாலடி வைப்பிற்கும் பொருந்தும்.

பண் :

பாடல் எண் : 277

நாலடி மேல்வைப்பு மேன்மை
நடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி
விகற்பங்கள் சாற்றும் பதிக
மூலஇலக்கிய மாக எல்லாப்
பொருள் களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப்
பாடினார் ஞானசம் பந்தர்.

பொழிப்புரை :

`நாலடி மேல் வைப்பு\' என்ற திருப்பதிகமும், மேன்மையுடைய முடுகும் நடையில் அமைந்த `திருவிராகம்\' என்ற பதிகங்களும், மேன்மை கொண்ட `திருச்சக்கரமாற்று\' முதலான திருப்பதிகங்களும் ஆகிய இவை மூல இலக்கியங்களாக உலகத்திற்கு வழிகாட்டி நிற்குமாறு, எல்லாப் பொருள்களும் நிரம்பி இருக்கக் காணுமாறு, உலகத்தில் உயரும் சீகாழி இறைவரைத் திருஞானசம் பந்தர் பாடியருளினார்.

குறிப்புரை :

இவ்வகையில் அமைந்த பதிகங்கள்:
1. `நாலடி மேல் வைப்பு\': இயலிசை (தி.3 ப.3) - காந்தாரபஞ்சமம்.
2. `முடுகும் இராகம்\': முன்னிய கலை (தி.2 ப.29) - இந்தளம்
3. `முடுகும் இராகம்\': சங்கமரு (தி.3 ப.81) - சாதாரி
4. `முடுகும் இராகம்\': பெண்ணியல் (தி.3 ப. 84) - சாதாரி
5. `முடுகும் இராகம்\': எந்தமது சிந்தை (தி.3 ப.75) - சாதாரி
6. `முடுகும் இராகம்\': பிறையணி (தி.1 ப.19) - நட்டபாடை
7. `சக்கரம்\' : விளங்கியசீர் ( தி.2 ப.73) - காந்தாரம்
8. `ஆதிவிகற்பம் முக்கால்\': விண்ணவர் தொழு (தி.3 ப.94) - சாதாரி
9. `திருத்தாளச்சதி\': பந்தத்தால் (தி.1 ப.126) - வியாழக்குறிஞ்சி
10. `ஆவின் பாய்ச்சல்\' (கோமூத்திரி): பூமகனூர் - காந்தாரம்
11. `பல்பெயர்ப்பத்து\': எரியார் - தக்கேசி
1. முடுகும் இராகம்: நெகிழ்ந்த ஓசையவாகிய நெட்டெழுத்துக்கள் விரவாது குற்றெழுத்துக்களால் இயன்று இடையறவு படாது பாடப்படுவது.
2. திருச்சக்கர மாற்று: உருள் (சக்கரம்) வடிவாக அடைத்துச் சுழன்று வருவது போலச் சீகாழியின் பன்னிரு பெயர்களும் மாறி மாறிச் சுழன்று வரப் பாடியருளிய பதிகம் இப்பெயர் அமைய அமைந்துள்ளது.
3. திருமுக்கால்: முழுவதும் தொடர், முடுகிய ஓசையுடையதாய் வரும் பாடல் இவ்வகையதாகும்.
இவ்வாறு முடுகி வரும் ஓசை யமைப்பை அராகம் என்பர். காலப்போக்கில் அது இராகம் என மாறிற்று.
4. திருத்தாளச் சதி: ஆடரங்குகளில் மகளிர் பாடியவாறு நடித்தற்குப் பொருந்திய தாளச் சொற்கட்டுக்களாக அமைந்திருப்பது இவ்வகையாலாய பாடலாம்.
5. கோமூத்திரி: நடையன் பசு, நீர்க்கழிவு செய்யும்பொழுது, நிலத்தில் வளைந்து வளைந்து விழும் பாங்குபோலச் செய்யுளை அமைப்பது இவ்வகையதாகும்.
6. திருஇயமகம்: `யமகம்\' என்பது வடசொல். தமிழ் வழக்குப்படி யகரம் மொழிமுதற்கண் வாராமையின் இகரம் பெற்று இயமகம் ஆயிற்று. ஓரடியில் முன் வைத்த சொல்லோ தொடரோ வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வருவது இவ்வகையதாம். இதனை `மடக்கு\' என்றும் கூறுவர்.
7. பல்பெயர்ப் பத்து: சீகாழிப் பதியின் பன்னிருபெயர்களை தனித் தனியே ஒவ்வொரு பாடலில் குறிக்கும் இப்பதிகம் அகப்பொருள் துறையில் அமைந்துள்ளது.
இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 278

இன்னிசை பாடின எல்லாம்
யாழ்ப்பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசைவடி வான
மதங்கசூ ளாமணி யாரும்
பன்னிய ஏழிசை பற்றிப்
பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தா ளம்பெற்றார்
புகலியிற் போற்றி யிருந்தார்.

பொழிப்புரை :

இனிய இசையில் முற்கூறியவாறு பாடிய எல்லாப் பதிகங்களையும் பெரும்பாணரும், பொருந்திய இசை, ஓர் உருவு எடுத்தாற் போன்ற மதங்கசூளாமணியாரும், போற்றப்படும் ஏழிசைகளும் அமையப் பாடி இறைவரைப் போற்றப் பொன் தாளம் பெற்ற பிள்ளையார் சீகாழியில் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 279

அங்கண் அமர்கின்ற நாளில்
அருந்தமிழ்நா டெத்தி னுள்ளும்
திங்கட் சடையண்ண லார்தம்
திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மா லைபாடி
ஏத்திஇங் கெய்துவன் என்று
தங்குலத் தாதையா ரோடுந்
தவமுனி வர்க்கருள் செய்தார்.

பொழிப்புரை :

அப்பதியில் விருப்பத்துடன் எழுந்தருளி இருக்கும் நாள்களில், `அரிய தமிழ் நாட்டிலும், மற்றுமுள்ள நாடுகளி லும், திங்களை அணிந்த சடையையுடைய சிவபெருமான் எழுந்தரு ளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று கும்பிட்டு, எங்கும் தமிழ் மாலைத் திருப்பதிகங்களைப் பாடிப் போற்றிய பின் இங்கு வந்து சேர்வன்\' எனத் தம் பெருமையுடைய தந்தையார் சிவபாத இருதயருக் கும் தவ முனிவர்களான அடியவர் மற்றும் அந்தணர்க்கும் கூறினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 280

பெருகு விருப்புடன் நோக்கிப்
பெற்ற குலத்தாதை யாரும்
அருமையால் உம்மைப் பயந்த
அதனாற் பிரிந்துறை வாற்றேன்
இருமைக்கும் இன்ப மளிக்கும்
யாகமும் யான்செய வேண்டும்
ஒருமையால் இன்னஞ் சிலநாள்
உடன்எய் துவேன்என் றுரைத்தார்.

பொழிப்புரை :

மேன்மேலும் பெருகும் விருப்பத்தோடு பிள்ளை யாரைப் பார்த்து, அவரை ஈன்ற சிவபாத இருதயர், `அரிய தவம் செய்து அதன் பயனாக உம்மை ஈன்றெடுத்தேன், ஆதலால் உம்மைப் பிரிந்து இங்கிருப்பதற்கு ஒருப்படேன், இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயக்கும் சிவவேள்வியையும் யான் செய்தல் வேண்டும், ஆதலால் இன்னும் சில நாள்கள் உம்முடன் வருவன்\' எனக் கூறினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 281

ஆண்டகை யாரும் இசைந்தங்
கம்பொற் றிருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ்ப்
பணிவுற்று நீடருள் பெற்றே
ஈண்டு புகழ்த்தாதை யார்பின்
எய்திட யாழ்ப்பாண ரோடும்
காண்தகு காழி தொழுது
காதலி னால்புறம் போந்தார்.

பொழிப்புரை :

ஆண் தகையாளரான சம்பந்தரும் அதற்கு இசைந்து, அங்கு அழகிய பொன்னார்ந்த திருத்தோணியில் எழுந்த ருளி நீண்ட சடையையுடைய இறைவரின் திருவடிக்கீழ் விழுந்து வணங்கி, நீடிய திருவருளைப் பெற்று, மிகுந்த புகழையுடைய தந்தை யார் பின்தொடர்ந்துவர, திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் உடனே வரக் காணத் தக்க சீகாழிப் பதியை வணங்கி, நீங்காத பத்திமையுடன் புறம் போந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 282

அத்திரு மூதூரின் உள்ளார்
அமர்ந்துடன் போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா
விடைகொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகைமேல் கொண்டு
மொய்யொளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது
நிறைமதி போல நிழற்ற.

பொழிப்புரை :

அப்பழம் பதியில் உள்ளவர்களுள் உண்மைத் தவத்தவர்கள் உடன் வருவாராய்ப் பின் தொடர்ந்து செல்லவும், அந்தணர்கள் பிரியா விடைபெற்றுப் பதியில் மீண்டு செல்பவர்கள் மீளவும், முத்துச் சிவிகையின் மேல் பிள்ளையார் எழுந்தருளி, நெருங் கிய முத்து மாலைகளை நிரல்படக் கட்டிய வெண்மையான முத்துக் குடையானது மேலே முழுச்சந்திரன் போல் நிழலைச் செய்யவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 283

சின்னந் தனிக்காளந் தாரை
சிரபுரத் தாண்டகை வந்தார்
என்னுந் தகைமை விளங்க
ஏற்ற திருப்பெயர் சாற்ற
முன்எம் மருங்கும் நிரந்த
முரசுடைப் பல்லிய மார்ப்ப
மன்னுந் திருத்தொண்ட ரானார்
வந்தெதிர் கொண்டு வணங்க.

பொழிப்புரை :

முத்துச் சின்னமும், ஒப்பில்லாத முத்துக் காளமும், முத்தால் ஆன தாரையும், `சீகாழியில் தோன்றிய ஆளுடைய பிள்ளையார் வந்தருளினார்\' என்னும் தன்மையை உலகுக்கு விளங்கு மாறு அவருடைய பற்பல பெயர்களையும் எடுத்துச் சொல்லி ஊதிப் பிடிக்கவும், திருமுன்பு எம்மருங்கிலும் வரிசையாய் முரசுகளும் மற்றும் பல இயங்களும் முழங்கவும், நிலைபெற்ற திருத்தொண்டர்கள் வந்து எதிர் கொண்டு வணங்கவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 284

சங்க நாதங்கள் ஒலிப்பத்
தழங்குபொற் கோடு முழங்க
மங்கல வாழ்த்துரை எங்கும்
மல்க மறைமுன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார்
திருப்பதி எங்கும்முன் சென்று
பொங்கிய காதலிற் போற்றப்
புகலிக் கவுணியர் போந்தார்.

பொழிப்புரை :

சங்கின் ஒலிமுழங்கவும், விளங்கும் அழகிய கொம்புகள் ஒலிக்கவும், மங்கலமான வாழ்த்துரை எங்கும் பெருக வும், முன்னே மறைகள் முழங்கவும், பிறைச் சந்திரனையும் பாம் பையும் அணிந்த இறைவரின் திருப்பதிகள் எங்கும் உள்ளனவற்றின் முன்சென்று, மேன்மேலும் பெருகும் விருப்பத்துடன் போற்றியும் சீகாழிக் கவுணியர்தம் செல்வத் தோன்றலார் எழுந்தருளிச் சென்றார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 285

திருமறைச் சண்பைய ராளி
சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெருவிருப் பாலணைந் தேத்திப்
பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி
உயர்தமிழ் மாலை கொண் டேத்தி
வருபுனற் பொன்னி வடபால்
குடதிசை நோக்கி வருவார்.

பொழிப்புரை :

அந்தணர்தம் பதியான சீகாழிப் பதியின் தலைவ ரான ஆளுடைய பிள்ளையார், இறைவர் எழுந்தருளியுள்ள திருக் கண்ணார் கோயில் என்னும் பதியைப் பெருகும் விருப்பத்துடன் அணைந்து, திருப்பதியைப் பாடிப் போற்றி, இறைவர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில்கள் பலவற்றையும் உருகும் அன்புடன் சென்று வணங்கி, உயரும் தமிழ் மாலைகளாகிய தேவாரத் திருப் பதிகங்களைப் பாடித் துதித்துப் பெருகிவரும் நீரையுடைய காவிரியின் வழியாய் மேற்றிசை நோக்கி வருவாராய்,

குறிப்புரை :

திருக்கண்ணார் கோயிலில் பாடிய பதிகம் `தண்ணார் திங்கள்\' (தி.1 ப.101) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். குறுமாணக்குடி என இக்காலத்தில் இவ்வூரை அழைப்பர். கோயில் பலவும் என்றது திருக்கடைமுடி, திருநாங்கூர் முதலியனவாக லாம். இவற்றில் திருக்கடைமுடிக்கு அமைந்த திருப்பதிகம் `அருத்தனை\' (தி.1 ப.111) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 286

போற்றிய காதல் பெருகப்
புள்ளிருக் குந்திரு வேளூர்
நாற்றடந் தோளுடை மூன்று
நயனப்பிரான் கோயில் நண்ணி
ஏற்றஅன் பெய்தவ ணங்கி
இருவர்புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி
அஞ்சொற் பதிக மணிந்தார்.

பொழிப்புரை :

உள்ளத் தெழும் விருப்பம் மேன்மேலும் மிக, `திருப்புள்ளிருக்கு வேளூரில்\' நான்கு பெருந்தோள்களையுடைய முக்கண்ணுடைய பெருமான் வீற்றிருக்கும் கோயிலை அடைந்து, உரிய பேரன்பு பொருந்த வணங்கி, பறவையரசர்களான சம்பாதி சடாயு என்பவர்கள் வணங்கிச் செய்த வழிபாட்டின் பெருமையைப் பாராட்டிப் போற்றி, அழகான சொற்களால் அமைந்த திருப்பதிகத்தை இறைவர்க்கு அணிவித்தார்.

குறிப்புரை :

இத்திருப்பதியில் அருளிய பதிகம் `கள்ளார்ந்த\' (தி.2 ப.43) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும். புள் - சம்பாதி, சடாயு எனும் பறவைகள். இருக்கு - மறைகள். வேள் - முருகன். இவர்கள் வழிபட்ட பதியாதலின் இப்பெயர் பெற்றது. முதற் பத்துப் பாடல்களிலும் இப்பறவைகள் ஆற்றிய இறைவழிபாட்டுச் சிறப்பும், இராவணனுடன் செய்த போர்ச் சிறப்பும் குறிக்கப்பட் டுள்ளன. `யோசனைபோய்ப் பூக்கொணர்ந்து அங்கு, பூசனை செய்து இனிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே\'! என வரும் பகுதி அவர்களின் ஆழ்ந்த பத்திமையை விளக்குவது ஆகும்.

பண் :

பாடல் எண் : 287

நீடு திருநின்றி யூரின்
நிமலர்தம் நீள்கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக்
கும்பிட்டு வண்டமிழ் கூறி
நாடுசீர் நீடூர் வணங்கி
நம்பர்திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி
அருந்தமிழ் பாடிஅ மர்ந்தார்.

பொழிப்புரை :

திரு என்றும் நிலைபெற்றிருக்கும் திருநின்றியூரில் இறைவரின் பெருமைமிக்க திருவடிகளைப் போற்றி மிக்க பத்திமை யுடன் வணங்கிக் கும்பிட்டு, வளமையான திருப்பதிகத்தைப் பாடி அருளி, நாளும் சிறப்புடைய திருநீடூரை வணங்கி, இறைவரின் திருப் புன்கூரை அடைந்து, அருட்கூத்து இயற்றும் திருவடிகளை வணங்கி, அருந்தமிழ்ப் பதிகம் பாடி ஆங்கே விருப்பத்துடன் வதிந்தருளினார்.

குறிப்புரை :

திருநின்றவூரில் பாடிய பதிகம், `சூலம்படை\' (தி.1 ப.18) என்று தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருநீடூரில் சுந்தரர் பதிகம் ஒன்றே உள்ளது. திருப்புன்கூரில் அருளிய பதிகம், `முந்தி நின்ற\' (தி.1 ப.27) எனத் தொடங்கும் தக்கராகப் பண் ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 288

அங்குநின் றேகிஅப் பாங்கில்
அரனார் மகிழ்கோயி லான
எங்கணுஞ் சென்று பணிந்தே
ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறைபழ மண்ணிப்
படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ்மாலை சாத்தித்
திருக்குறுக் கைப்பதி சார்ந்தார்.

பொழிப்புரை :

அத்திருப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று அருகி லிருக்கும், இறைவர் வீற்றிருக்கும், கோயில்கள் எங்கணும் சென்று, பணிந்து போற்றி, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெரு மான் வீற்றிருக்கும் `திருப்பழமண்ணிப்படிக்கரைக்\' கோயிலை வணங்கி, தமிழ் மாலை பாடி, `திருக்குறுக்கைப்\' பதியை அடைந்தார்.

குறிப்புரை :

அருகிலிருக்கும் கோயில்களாவன: திருக்குரக்குக்கா, முதலாயினவாகலாம். ஆண்டு அப்பர் அருளிய பதிகமே கிடைத்துள் ளது. திருப்பழமண்ணிப்படிக்கரைக்குடியில் சுந்தரர் அருளிய பதிகம் ஒன்றே உள்ளது. பிள்ளையார் அருளிய பதிகங்கள்கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 289

திருக்குறுக் கைப்பதி மன்னித்
திருவீரட் டானத் தமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப்
போந்தன்னி யூர்சென்று போற்றிப்
பருக்கை வரையுரித் தார்தம்
பந்தணை நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைத்தார்
வேதம் தமிழால் விரித்தார்.

பொழிப்புரை :

திருக்குறுக்கைப் பதியை அடைந்து, அங்குள்ள திருவீரட்டானக் கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக்கும், மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவரைப் போற்றி, அங்கிருந்தும் புறப்பட்டுச் சென்று, `திரு அன்னியூர்\' என்ற பதியை வழிபட்டு, பெரிய கையையுடைய மலை போன்ற யானையை உரித்த சிவபெருமானின் `திருப்பந்தணைநல்லூரைப்\' பணிந்து, மறைகளைத் தமிழால் விரித்துப் பாடினார்.

குறிப்புரை :

அன்னியூரில் பாடிய பதிகம் `மன்னியூரிறை\' (தி.1 ப.96) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருப்பந்தணைநல்லூரில் அருளிய பதிகம் முன்னர் 250ஆம் பாடலில் குறித்தாயிற்று. இப்போது அருளிய பதிகம் காணக் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 290

அப்பதி போற்றி அகல்வார்
அரனார் திருமணஞ்சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடும்
சென்று தொழுதிசை பாடி
எப்பொரு ளுந்தரும் ஈசர்
எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி
ஓங்குவேள் விக்குடி யுற்றார்.

பொழிப்புரை :

அத்திருப்பதியைப் போற்றி மேற்செல்பவராய், இறைவரின் `திருமணஞ்சேரியைச்\' சொலற்கரிய திருத்தொண்டர்கள் உடன்வரச் சென்று வழிபட்டுத் திருப்பதிகத்தைப் பாடி, உயிர்க்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் வழங்கும் இறைவரின் `திரு எதிர்கொள்பாடி\' என்ற பதியை அடைந்து, ஒப்பில்லாத திருப்பதிகங் களைப் பாடி, உயர்ந்த `வேள்விக்குடியை\' அடைந்தார்.

குறிப்புரை :

திருமணஞ்சேரியில் அருளிய பதிகம் `அயிலாரும்\' (தி.2 ப.16) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிக மாகும். திருஎதிர்கொள்பாடியில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 291

செழுந்திரு வேள்விக் குடியில்
திகழ்மண வாளநற் கோலம்
பொழிந்த புனற்பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத்
தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார்
கோடி காவிற்சென் றடைந்தார்.

பொழிப்புரை :

அம்மையப்பராகிய பெருமான், வளம் மிக்க `திருவேள்விக்குடியில்\' வீற்றிருக்கும் மணவாளத் திருக்கோலத்தை, பொய்யாமல் வருகின்ற நீர் வளம் கொண்ட தூய `திருத்துருத்தியில்\' பகலில் காணக் காட்டி, இரவில் இவ்வேள்விக்குடியில் அக்கோலத்துட னேயே எழுந்தருளிய தன்மையையும் சேர்த்துக் குளிர்ந்த தமிழ்மாலை பாடி, முளைக்கும் கொழுந்தைப் போன்ற வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் `திருக்கோடிகா\' என்ற திருப்பதிக்குச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

திருத்துருத்தியையும் திருவேள்விக்குடியையும் இணைத்து ஒரே பதிகத்தில் பாடப் பெற்றுள்ளன. காரணம், இறைவன் உமையம்மையாருக்குப் பகலில் திருத்துருத்தியிலும், இரவில் திரு வேள்விக்குடியிலுமாக வீற்றிருந்தருளிக் காட்சி கொடுத்தருளியமை யாகும். இவ்வகையில் அமைந்த திருப்பதிகம், `ஓங்கி மேலுழிதரு\' (தி.3 ப.90) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த திருப் பதிகமாகும்.
ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
எனவரும் முதல்பாடல், இவ்வீரிடங்களிலும் உறையுமாற்றை விளக்கி நிற்றலும் காண்க. தழும்பிய தன்மை - விளங்க வெளிப்பட்டிருக்கும் நிலை.

பண் :

பாடல் எண் : 292

திருக்கோடி காவில் அமர்ந்த
தேவர் சிகாமணி தன்னை
எருக்கோ டிதழியும் பாம்பும்
இசைந்தணிந் தானைவெள் ளேனப்
பருக்கோடு அணிந்த பிரானைப்
பணிந்துசொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும்
கஞ்சனூர் கைதொழச் சென்றார்.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் அமர்ந்திருக்கும் தேவர்களின் தலைவரான இறைவரை, எருக்கு மலருடனே கொன்றை மலரையும் அணிந்தவரை, வெள்ளைப் பன்றியான திருமாலின் பருத்த கொம் பைப் பூண்ட பெருமானாரைப் பணிந்து சொல்மாலைகளாலான திருப் பதிகங்களை பாடி, பிறப்பு அறுக்கலுற்றோர் அடைவதற்கு இடமான திருக்கஞ்சனூரை வணங்குவதற்குச் சென்றார்.

குறிப்புரை :

இத்திருப்பதியில் அருளியது, `இன்று நன்று\' (தி.2 ப.99) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். சொல்மாலை கள் எனப் பன்மைப்படக் கூறினும் கிடைத்துள்ளது ஈதொன்றேயாம்.

பண் :

பாடல் எண் : 293

கஞ்சனூ ராண்டதங் கோவைக்
கண்ணுற் றிறைஞ்சிமுன் போந்து
மஞ்சணை மாமதில் சூழும்
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி
அங்ககன் றன்பர்முன் னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
திருமங் கலக்குடி சேர்ந்தார்.

பொழிப்புரை :

திருக்கஞ்சனூரை ஆண்டருளுகின்ற தம் இறைவரைக் கண்டு கும்பிட்டு மேற்சென்று, மேகம் தவழ்கின்ற மதில் சூழ்ந்த `திருமாந்துறை\' என்ற பதிக்குச் சென்று வணங்கிச் சொல் மாலைபாடி, அங்கிருந்து புறப்பட்டு அன்பர்கள் எதிர்கொள்ளச் சிவந்த சடையையுடைய அந்தணரான சிவபெருமான் நிலையாக வீற்றிருக்கின்ற `திருமங்கலக்குடியை\' அடைந்தார்.

குறிப்புரை :

திருக்கஞ்சனூர், திருமாந்துறை ஆகிய பதிகளுக்குரிய திருப்பதிகங்கள் கிடைத்தில. திருமங்கலக்குடியில் அருளிய பதிகம் `சீரினார் மணியும்\' (தி.2 ப.10) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணி லமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 294

வெங்கண் விடைமேல் வருவார்
வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடுந்
தமிழ்ப்பதி கத்தொடை சாத்தி
அங்க ணமர்வார்தம் முன்னே
அருள்வே டங்காட்டத் தொழுது
செங்கண்மா லுக்கரி யார்தந்
திருந்துதே வன்குடி சேர்ந்தார்.

பொழிப்புரை :

அப்பதியினின்றும் புறப்பட்ட பிள்ளையார், கொடிய கண்களையுடைய ஆனேற்றின் மீது எழுந்தருளும் `திரு வியலூர்\' இறைவரை வணங்கித் தங்கி, இனிய இசையுடைய தமிழ் மாலை பாடி, இத்திருப்பதியில் விரும்பி எழுந்தருளியுள்ள இறைவர், தம்முன்பு அருள் திருவேடம் நேரே காட்டத் தொழுது, செங்கண் மாலுக்கு அரியவரான இறைவரின் திருந்துதேவன் குடியினைச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

திருவியலூரில் அருளிய பதிகம் `குரவம் கமழ்\' (தி.1 ப.13) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்து வரும் 5ஆவது பாடலில் `கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிடம்\' என வருவது கொண்டு, `அருள்வேடம் காட்டத் தொழுது\' என ஆசிரியர் அருளியிருப்பர் போலும்.

பண் :

பாடல் எண் : 295

திருந்துதே வன்குடி மன்னும்
சிவபெரு மான்கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்குப்
போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திர மாகி
மற்றும் இவர்வேட மாம்என்
றருந்தமிழ் மாலை புனைந்தார்
அளவில்ஞா னத்தமு துண்டார்.

பொழிப்புரை :

உயிர்கள் பிறவியலையாற்றினின்றும் திருந்து தற்கு ஏதுவாய தேவன்குடி என்ற திருப்பதியில் நிலையாக வீற்றிருக் கும் இறைவனின் கோயிலை அடைந்து, பொருந்திய அன்பு மீதூரச் சென்று போற்றி வணங்கி நினைவாராகி, இவர்தம் வேடம் மருந்தும் மந்திரமும் ஆகும் என்று அளவில்லாத ஞானப் பாலையுண்ட பெற்றி மையால், பிள்ளையார் அரிய தமிழ் மாலையைச் சாத்தினார்.

குறிப்புரை :

இப்பதியில் அருளிய பதிகம் `மருந்து வேண்டில் இவை\' (தி.3 ப.25) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும்.
மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.(தி.3 ப.25 பா.1)
எனவரும் முதற்பாடலை முகந்தவாறு சேக்கிழார் இத்திருப்பதிகக் கருத்தை அருளுகின்றார். `தேவன்குடி\' என்பது ஊர்ப் பெயர். திருந்து என்பது அதற்கு அடையாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 296

மொய்திகழ் சோலையம் மூதூர்
முன்னகன் றந்நெறி செல்வார்
செய்தரு சாலிக ரும்பு
தெங்குபைம் பூகத்தி டைபோய்
மைதிகழ் கண்டர்தங் கோயில்
மருங்குள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம் பந்தர்
இன்னம்பர் ஈசர்தம் கோயில்.

பொழிப்புரை :

அரும்புகள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அப்பழமையான ஊரினின்றும் நீங்கி, அவ்வழியில் செல்பவராகி, வயல்களில் விளைந்து நிற்கும் நெல்லும் கரும்பும் தென்னையும் பசிய கமுகும் என்ற இவற்றிடையே சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தை உடைய இறைவரின் கோயில்களுள், அம்மருங்கில் உள்ளனவற்றை யெல்லாம் வணங்கிக்கொண்டு, திருஇன்னம்பர் இறைவரின் கோயி லைத் திருஞானசம்பந்தர் அடைந்தார்.

குறிப்புரை :

மொய் - அரும்பு. மருங்குள்ள கோயில்கள் எல்லாம் என்பன திருக்கொட்டையூர், திருவிசயமங்கை, திருபுறம்பயம், திரு வைகாவூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 297

இன்னம்பர் மன்னும்பி ரானை
இறைஞ்சி இடைமடக் கான
பன்னுந்த மிழ்த்தொடை மாலைப்
பாடல்பு னைந்து பரவிப்
பொன்னங்க ழலிணை போற்றிப்
புறம்போந்த ணைந்து புகுந்தார்
மன்னுந்த டங்கரைப் பொன்னி
வடகுரங் காடு துறையில்.

பொழிப்புரை :

திருஇன்னம்பரில் வீற்றிருந்தருளும் இறைவனை வணங்கி, இடைமடக்கான யாப்பால் அமைந்த `திருமுக்கால்\' என்ற இறைவரின் புகழைப் பரவும் திருப்பதிகத் தமிழ்ப் பாடல் மாலைகளைச் சாத்தி, வணங்கி, இறைவரின் பொன்னடிகளைப் போற்றிப் புறப்பட் டுச் சென்று, நிலை பெற்ற பெரிய கரையையுடைய காவிரியின் வட கரையில் உள்ள வடகுரங்காடுதுறையில் வந்து அணைந்தார்.

குறிப்புரை :

திருஇன்னம்பரில் அருளிய பதிகம் `எண்டிசைக்கும்\' (தி.3 ப.95) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பாடற்குரிய நான்கடிகளில் இடையிலுள்ள இரண்டாவது அடி மடங்கி மீண்டும் மூன்றாவது அடியாகவும் வருவது இடைமடக்காகும். இவ் வகையில் நான்கடிகளில் இரண்டும் மூன்றுமாக அமைந்த அடிகள், சொல்லானும் பொருளானும் ஒரு நிலையவாய் இருத்தலின் அவற்றை ஓரடியாகக் கொள்ள, மூன்றடிகளாக அமைதலின் முக்கால் என்றனர்.

பண் :

பாடல் எண் : 298

வடகுரங் காடு துறையில்
வாலியார் தாம்வழி பட்ட
அடைவுந் திருப்பதி கத்தில்
அறியச் சிறப்பித் தருளிப்
புடைகொண் டிறைஞ்சினர் போந்து
புறத்துள்ள தானங்கள் போற்றி
படைகொண்ட மூவிலை வேலார்
பழனத் திருப்பதி சார்ந்தார்.

பொழிப்புரை :

வடகுரங்காடுதுறையில் வந்து, வாலி வழிபட்டுப் புகலிடமாகக் கொண்ட வரலாற்றைத் திருப்பதிகத்தில் உலகம் அறியச் சிறப்பித்துப் பாடி, திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு அதன் அருகில் உள்ள திருப்பதிகளை யெல்லாம் வணங்கிய வண் ணம் மூவிலைச் சூலத்தைக் கைக்கொண்ட இறைவர் எழுந்தருளிய திருப்பழனத் திருப்பதியைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

வடகுரங்காடுதுறையில் அருளிய பதிகம் `கோங்கமே\' (தி.3 ப.91) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். `கோவமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்\' `நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்\' என இப்பதிகத்து ஆறாவதும் எட்டாவதும் ஆக வரும் பாடல்களை உளங்கொண்டு சேக்கிழார் இவ்வாறு அருளுகின்றார். புறத்துள்ள தலங்கள் என்பன திங்களூர் முதலாயினவாகலாம். பதிகங் கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 299

பழனத்து மேவிய முக்கண்
பரமேட்டி யார்பயில் கோயில்
உடைபுக் கிறைஞ்சிநின் றேத்தி
உருகிய சிந்தைய ராகி
விழைசொற் பதிகம் விளம்பி
விருப்புடன் மேவி யகல்வார்
அழனக்க பங்கய வாவி
ஐயாறு சென்றடை கின்றார்.

பொழிப்புரை :

திருப்பழனத்தில் வீற்றிருக்கும் முக்கண்களை உடைய சிவபெருமான் திருக்கோயிலுள் புகுந்து நின்று போற்றி உருகிய உள்ளத்தையுடையவராகி, விரும்புதற்குரிய தமிழ்ச் சொல் பதிகத்தைப் பாடிப் பெருவிருப்புடன் அங்குத் தங்கியிருந்து, பின் அங்கிருந்தும் நீங்குபவராய்த் தீயைப் பழித்த செந்தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளையுடைய திருவையாற்றை அடைபவர்.

குறிப்புரை :

திருப்பழனத்தில் அருளிய பதிகம் `வேதமோதி\' (தி.1 ப.67) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகமாகும். அழல் நக்க பங்கயம் - நிறத்தால் தீயைப் பழித்த செந்தாமரை மலர்கள், `யாழைப் பழித்தன்ன மொழி\' எனவரும் திருவாக்கினை நினைவு கூர வைக்கின்றது. அழல் நக்க - செம்மை நிறத்தால் நெருப்பினும் மேம்பட விளங்கல்.

பண் :

பாடல் எண் : 300

மாடநிரை மணிவீதித் திருவையாற்
றினில்வாழு மல்கு தொண்டர்
நாடுய்யப் புகலிவரு ஞானபோ
னகர்வந்து நண்ணி னாரென்
றாடலொடு பாடலறா அணிமூதூர்
அடையஅலங் காரஞ் செய்து
நீடுமனக் களிப்பினொடும் எதிர்கொள்ள
நித்திலயா னத்து நீங்கி.

பொழிப்புரை :

நிரல்பட அமைந்த மாடங்களைக் கொண்ட திரு வையாற்றில் வாழ்கின்ற அடியவர்கள், உலகம் உய்யும் பொருட்டுச் சீகாழியில் தோன்றி ஞான அமுதம் உண்ட பிள்ளையார் வருகின்றார் என்னும் பதைப்பு உளங்கொண்ட ஆர்வத்தால், ஆடலொடு பாடல் அறாத அழகிய அப்பழமையான நகரை முழுமையாக அணிசெய்து, பெருகிய உள்ள மகிழ்வுடன் வரவேற்கப் பிள்ளையாரும் முத்துச் சிவி கையினின்றும் இறங்கிவந்து,

குறிப்புரை :

நித்திலயானம் - முத்துச் சிவிகை.

பண் :

பாடல் எண் : 301

வந்தணைந்து திருத்தொண்டர் மருங்குவர
மானேந்து கையர் தம்பால்
நந்திதிரு வருள்பெற்ற நன்னகரை
முன்னிறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்துபுலன் நிலைகலங்கும்இடத்தஞ்சல்
என்பார்தம் ஐயா றென்று
புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை
போற்றிசைத்தார் புகலி வேந்தர்.

பொழிப்புரை :

திரண்டுவந்த தொண்டர்கள் தம்மைச் சூழ்ந்து வர, மானை ஏந்திய கையையுடைய இறைவனிடத்தில் நந்தியெம் பெருமான் அருளைப் பெற்ற அத்திருப்பதியை வணங்கி, புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கியவிடத்து, `அஞ்சற்க\' என்று அருளுரை வழங்கும் இறைவரது திருவையாறு இதுவாகும் எனும் திருவுளத் துடன், மனம் நிறைந்து எழுந்த செந்தமிழினது சந்த இசைப் பதிகத்தால் வணங்கிப் போற்றினார், சீகாழித் தலைவரான சம்பந்தர்.

குறிப்புரை :

திருவையாற்றை நண்ணிய அளவில் அருளிய பதிகம் `புலனைந்தும்\' (தி.1 ப.130) எனத் தொடங்கும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். `புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி, அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்\' எனவரும் இப்பதிகத்தின் முதற்பாட் டினை முகந்து நின்று, ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய் கின்றார். இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 302

மணிவீதி இடங்கடந்து மாலயனுக்
கரியபிரான் மன்னுங் கோயில்
அணிநீடு கோபுரத்தை அணைந்திறைஞ்சி
உள்ளெய்தி அளவில் காதல்
தணியாத கருத்தினொடும் தம்பெருமான்
கோயில்வலங் கொண்டு தாழ்ந்து
பணிசூடும் அவர்முன்பு பணிந்துவீழ்ந்
தெழுந்தன்பாற் பரவு கின்றார்.

பொழிப்புரை :

அழகிய திருவீதிகளைக் கடந்து சென்று திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிதற்கு அரிய சிவபெருமான் நிலையாய் வீற்றிருக்கும் கோயிலின் அழகு பொருந்திய கோபுரத்தைச் சார்ந்து பணிந்து கோயிலுள் சென்று அளவில்லாத ஆசையானது பெருகித் தணியாத மனத்துடன் இறைவரின் திருக்கோயிலை வலமாய் வந்து பாம்பை அணிந்த அப்பெருமானின் திருமுன்பு வணங்கி நிலமுற விழுந்து, எழுந்து, அன்பால் போற்றுவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 303

கோடல்கோங் கங்குளிர்கூ விளம்என்னுந்
திருப்பதிகக் குலவு மாலை
நீடுபெருந் திருக்கூத்து நிறைந்ததிரு
வுள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமா றதுவல்லான் ஐயாற்றெம்
ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும்
கண்பொழிநீர் பரந்து பாய.

பொழிப்புரை :

`கோடல்கோங் கங்குளிர் கூவிளம்\' ( தி.2 ப.6) எனத் தொடங்கும் திருப்பதிகமான சிறந்த சொல்மாலையை, நீடிய பெருந் திருக்கூத்தின் சிறப்பு நிறைவாகத் தம் உள்ளத்திலே தோன்ற `ஆடு மாறுவல் லானும்ஐ யாறுடை யையனே\' என்ற கருத்தை நிறை வாகக் கொண்ட பதிகத்தைப் பாடி, அன்பினால் இன்பமார்ந்திருக்கும் விழிகளிலிருந்து ஆனந்தக் கண்ணீர் இடையீடின்றிப் பரந்து பாய்ந் திடப் பாடினார்; ஆடினார்.

குறிப்புரை :

கோடல் கோங்கம்\' எனத் தொடங்கும் இப்பதிகம் இந்தளப் பண்ணிலமைந்ததாகும். இத்தொடக்கமுடைய பதிகத்தின் முதற் பாடல், `ஆடு மாறுவல் லானுமை யாறுடை யையனே\' என நிறைவு பெறுகிறது. பதிகம் முழுதும் இவ்வாறமைந்த முடிபு கொண்ட தொடர்களை முகந்த நிலையில் சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய்கின்றார்.
இஃதன்றிப் பிள்ளையார் திருவையாற்றில் ஆடிப் பாடியவாறு அருளிய பதிகங்கள் மூன்று:
1. `கலையார்மதி\': (தி.1 ப.36) -தக்கராகம்.
2. `பணிந்தவர்\': (தி.1 ப.120) - வியாழக்குறிஞ்சி.
3. `திருத்திகழ்\': (தி.2 ப.32) - இந்தளம்.
இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 304

பலமுறையும் பணிந்தெழுந்து புறம்போந்து
பரவுதிருத் தொண்ட ரோடு
நிலவுதிருப் பதியதன் கண்நிகழுநாள்
நிகரிலா நெடுநீர்க் கங்கை
அலையுமதி முடியார்தம் பெரும்புலியூர்
முதலான அணைந்து போற்றிக்
குலவுதமிழ்த் தொடைபுனைந்து மீண்டணைந்து
பெருகார்வங் கூரு நாளில்.

பொழிப்புரை :

பலமுறையும் வணங்கி எழுந்து வெளியே வந்து, வணங்கி எழும் திருத்தொண்டர்களுடன் நிலை பெற்று அத்திருப்பதி யில் இருந்தருளிய அந்நாள்களில், ஒப்பில்லாத பெருகிய நீரையுடைய கங்கை அலைதற்கு இடமான முடியில் பிறைச் சந்திரைனைச் சூடிய இறைவரது `பெரும் புலியூர்\' முதலான பதிகளுக்கும் சென்று போற்றித் தமிழ் மாலைகளைப் பாடி, மீண்டும் திருவையாற்றை அடைந்து, பெரு கும் ஆசை மிக அங்கிருந்து வரும் நாள்களில்,

குறிப்புரை :

திருப்பெரும்புலியூரில் அருளிய பதிகம் `மண்ணுமோர்\' (தி.2 ப.67) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். இத்திருப்பதி முதலான பதிகளுக்கும் சென்றார் எனக் குறிப்பதற்கேற்ப அப்பதிகள் இவை என அறிதற்கு இல்லை.

பண் :

பாடல் எண் : 305

குடதிசைமேற் போவதற்குக் கும்பிட்டங்
கருள்பெற்றுக் குறிப்பி னோடும்
படருநெறி மேலணைவார் பரமர்திரு
நெய்த்தானப் பதியில் நண்ணி
அடையுமனம் உறவணங்கி அருந்தமிழ்மா
லைகள்பாடி அங்கு நின்றும்
புடைவளர்மென் கரும்பினொடு பூகமிடை
மழபாடி போற்றச் சென்றார்.

பொழிப்புரை :

இப்பதியின் மேற்குத் திசையில் செல்வதற்கு விடை பெறக் கும்பிட்டுத் திருவருளைப் பெற்று, அங்ஙனம் பெற்ற அவ்வருட் குறிப்பின் வழியே செல்கின்றவர் திருநெய்த்தானத்தை அடைந்து மனம் பொருந்த வணங்கி, அரிய தமிழ் மாலைகளைப் பாடி, அங்கிருந்த இருமருங்கும் வளரும் கரும்புடன் பாக்கு மரங்களும் நெருங்கியுள்ள `திருமழபாடியை\' வணங்கச் செல்லலானார்.

குறிப்புரை :

திருநெய்த்தானத்தில் அருளிய பதிகம் `மையாடிய கண் டன்\' (தி.1 ப.15) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 306

செங்கைமான் மறியார்தந் திருமழபா
டிப்புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழலென்னுந் திருப்பதிகம்
எடுத்தருளி அணைந்த போழ்தில்
மங்கைவாழ் பாகத்தார் மழபாடி
தலையினால் வணங்கு வார்கள்
பொங்குமா தவமுடையார் எனத்தொழுது
போற்றிசைத்தே கோயில் புக்கார்.

பொழிப்புரை :

சிவந்த மான் கன்றை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருமழபாடியின் புறத்தே செல்பவரான பிள் ளையார், `அங்கையாரழல்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தொடங்கி, மேலும் அப்பதியை அணுகும் பொழுது `உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் திருமழபாடியைத் தலை யினால் வணங்குபவர்கள் மேன்மேலும் பெருகும் தவம் பெற்றவர் கள்\' எனப் பாடிப் போற்றித் தொழுதவாறே கோயிலுள் புகுந்தார்.

குறிப்புரை :

`அங்கையார் அழல்\' (தி.3 ப.48) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடல், `திருமழ பாடியைத் தலையி னால்வணங் கத்தவ மாகுமே\' என நிறைவு பெறுகிறது. இக்குறிப்பை உளங்கொண்ட வகையில், இவ்வாறு அருளுகின்றார் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 307

மழபாடி வயிரமணித் தூணமர்ந்து
மகிழ்கோயில் வலங்கொண் டெய்திச்
செழுவாச மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்
சென்றுதாழ்ந் தெழுந்து நின்று
தொழுதாடிப் பாடிநறுஞ் சொல்மாலைத்
தொடையணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசமுடன் உடையவரைக்
கும்பிட்டங் குறைந்தார் சின்னாள்.

பொழிப்புரை :

அத்திருமழபாடியில் அழகிய வயிரமணித் தூண் ஆக வீற்றிருந்தருளும் பெருமானாரின் கோயிலை வலம் வந்து, செழுமையான மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று, தொழுதும் ஆடியும் பாடியும் நல்ல சொல்மாலைத் தொடை பாடிப் போற்றியும் வெளிப்போந்த நிலையில், இடையறாத அன்புடன் தம் தலைவரான இறைவரைக் கும்பிட்டு, அத்திருப்பதியில் சில நாள்கள் தங்கியிருந்தார் பிள்ளையார்.

குறிப்புரை :

இத் திருப்பதியில் சாற்றியருளிய பதிகங்கள் இரண்டு: 1. `களையும்\' : (தி.2 ப.9) - இந்தளம். 2. `காலையார்\' : (தி.3 ப.28) - கொல்லி. இவற்றுள் முன்னையது இதுபொழுதும், பின்னையது இங்கிருந்த நாள்களிலுமாகப் பாடியிருக்கலாம். இப்பதியில் இருந் தருளும் இறைவனின் திருப்பெயர் வயிரமணித்தூண்நாதர் என்ப தாகும். `மழபாடி வயிரத்தூணே\' என்பது அப்பர் திருவாக்காகும்.

பண் :

பாடல் எண் : 308

அதன்மருங்கு கடந்தருளால் திருக்கானூர்
பணிந்தேத்தி ஆன்ற சைவ
முதன்மறையோர் அன்பிலா லந்துறையின்
முன்னவனைத் தொழுது போற்றிப்
பதநிறைசெந் தமிழ்பாடிச் சடைமுடியார்
பலபதியும் பணிந்து பாடி
மதகரட வரையுரித்தார் வடகரைமாந்
துறையணைந்தார் மணிநூல் மார்பர்.

பொழிப்புரை :

அப்பதியைக் கடந்து சென்றவர், திருக்கா னூரைப் பணிந்து போற்றி, பெருமை பெற்ற ஆதிசைவர் இருக்கும் திரு அன்பிலாலந்துறை இறைவரை வணங்கிப் போற்றி, வளம் மிக்க சொற்களமைந்த செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, சிவபெருமானின் பல பதிகளையும் வணங்கிப் போற்றி, அருவியென மதத்தைச் சொரியும் மலையனைய யானையை உரித்த இறைவரின் `வடகரை மாந்துறையை\' அழகிய முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய சம்பந்தர் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

திருக்கானூரில் அருளிய பதிகம், `வானார் சோதி\' (தி.1 ப.73) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும். திருஅன்பிலாலந்துறையில் அருளிய பதிகம், `கணை நீடெரி\' (தி.1 ப.33) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்ததாகும். `சடை முடியார் பல பதியும் பாடி\' என்பதற்கேற்பப் பிள்ளையார் வணங்கிய திருப்பதிகள் எவை என அறிதற்கியன்றிலது. பதம் - வளம் மிக்க சொற் கள்: மந்திரம் என்றலுமாம். மாந்துறை - ஊர்ப்பெயர். காவிரியின் வட கரையில் அமைந்திருத்தல் பற்றி அஃது அதற்கு அடைமொழியாயிற்று.

பண் :

பாடல் எண் : 309

சென்றுதிரு மாந்துறையில் திகழ்ந்துறையும்
திருநதிவாழ் சென்னி யார்தம்
முன்றில்பணிந் தணிநெடுமா ளிகைவலஞ்செய்
துள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்றுகதிர்ப் பரிதிமதி மருத்துக்கள்
தொழுதுவழி பாடு செய்ய
நின்றநிலை சிறப்பித்து நிறைதமிழின்
சொல்மாலை நிகழப் பாடி.

பொழிப்புரை :

சென்றவர், திருமாந்துறையில் விளக்கம் பெற வீற்றிருந்தருளும் கங்கையாறு தங்கப் பெற்று வாழ்வு அடைந்த சடையை உடைய இறைவரின் திருமுற்றத்தை வணங்கி, அழகிய நீண்ட திருமாளிகையை வலம் வந்து, உட்சென்று, திருமுன் விழுந்து பணிந்து, செறிந்த ஒளிர்க் கதிர்களையுடைய ஞாயிறும், சந்திரனும், தேவ மருத்துவர்களும் தொழுது வழிபட, இறைவர் எழுந்தருளிய நிலையைச் சிறப்பித்த சொல்மாலையை நிலவி நிற்கும்படியாகப் பாடி,

குறிப்புரை :

திருமாந்துறையில் அருளியது, `செம்பொனார் தரு\' (தி.2 ப.110) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்ததாகும். பரிதி, மதி, தேவ மருத்துவர்களும் வழிபட்டமை இப்பதிகத்துள் வரும் ஆறாவது பாடலில் காணும் குறிப்பாகும்.

பண் :

பாடல் எண் : 310

அங்கணகன் றம்மருங்கில் அங்கணர்தம்
பதிபிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும்
வயல்மதுவால் சேறு மாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட
கரைமிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா
மம்பணிய நண்ணும் போதில்.

பொழிப்புரை :

அவ்விடத்தினின்றும் நீங்கி அருகில் உள்ள சிவ பெருமானின் பிற திருப்பதிகளையும் வணங்கி, செந்தாமரை மலர்க ளின் மொட்டு அவிழ, சேல்மீன் பாய, தேன் பொழிவதால் சேறு உலராத வயல்களையுடைய, பொங்கும் ஒலிமிக்க நீரையுடைய மழநாட்டில், காவிரியின் வடகரை வழியாகச் சென்ற சீகாழித் தலைவர், நம் இறைவரின் திருப்பாச்சிலாச்சிராமத்தைத் தொழுவதற்குச் சேரும் பொழுதில்,

குறிப்புரை :

பாச்சில் - ஊரின் பெயர். ஆச்சிராமம் - கோயிலின் பெயர். `பதி பிறவும்\' என்பன திருத்தவத்துறை, பூவாளுர், திருமங் கலம் முதலியன வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 311

அந்நகரிற் கொல்லிமழ வன்பயந்த
அரும்பெறல்ஆர் அமுத மென்சொல்
கன்னிஇள மடப்பிணையாங் காமருகோ
மளக்கொழுந்தின் கதிர்செய் மேனி
மன்னுபெரும் பிணியாகும் முயலகன்வந்
தணைவுறமெய் வருத்த மெய்தித்
தன்னுடைய பெருஞ்சுற்றம் புலம்பெய்தத்
தானும்மனந் தளர்வு கொள்வான்.

பொழிப்புரை :

அந்நகரத்தில் கொல்லி மழவன் தான் பெற் றெடுத்த அரிய அமுதம் போன்ற மென்மையான சொல்லையுடைய கன்னியான இளமான் போன்ற அழகான இளங்கொழுந்தினுடைய ஒளி பொருந்திய உடம்பில், முயலகன் வந்து சார்ந்ததால், உடல் வருந்தித் தனது உறவினர் வருந்தத் தானும் உள்ளத் தளர்ச்சி அடைந்தவனாய்,

குறிப்புரை :

முயலகன் - உடலில் வலிப்பு ஏற்பட உணர்வற்றுக் கிடக்கும் நோய். இக்காலத்தில் வலிப்பு எனக் கூறப் படுவதொரு நோய்.

பண் :

பாடல் எண் : 312

மற்றுவே றொருபரிசால் தவிராமை
மறிவளரும் கையார் பாதம்
பற்றியே வருங்குலத்துப் பான்மையினான்
ஆதலினாற் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடுவந்து போர்க்கோலச்
சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர்தங் கோயிலினுள் கொடுபுகுந்து
திருமுன்பே இட்டு வைத்தான்.

பொழிப்புரை :

எவ்வாற்றானும் நீக்க மாட்டாமையால், மான் கன்றினையுடைய திருக்கையைக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளைப் பற்றி வாழ்தலையே வழிவழியாகக் கொண்டு நிற்கும் தன்மையனாதலின், அத்துன்பம் நீங்கும் பொருட்டுப் பொன் வளையல் அணிந்த அப்பெண்ணை அழைத்து வந்து, போர்க்கோலம் கொண்ட வீரராய், முப்புரங்களையும் எரித்த இறைவரின் திருக் கோயிலில், அவர் திருமுன்பு இட்டு வைத்தான்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 313

அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
எழுந்தருளி அணுக வெய்தச்
செவ்வியமெய்ஞ்ஞானமுணர் திருஞான
சம்பந்தன் வந்தான் என்றே
எவ்வுலகுந் துயர்நீங்கப் பணிமாறுந்
தனிக்காளத் தெழுந்த வோசை
வெவ்வுயிர்க்கும் அவன்கேளா மெல்லியலை
விட்டெதிரே விரைந்து செல்வான்.

பொழிப்புரை :

அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் அத்திருப்பதிக்கு எழுந்தருளி, அப்பதியினை அணுகிவரச் `செம்மை தரும் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்த திருஞானசம்பந்தன்\' என எவ்வுலகும் துன்பம் நீங்குமாறு ஒலிக்கின்ற திருக்காளம் முதலான இயங்கள் ஒலிக்க, துன்ப மிகுதியால் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கும் அக்கொல்லி மழவன், அதனைக் கேட்டு, மென்மைத் தன்மை வாய்ந்த அப்பெண்ணை அங்கே விட்டுப் பிள்ளையாரை எதிர் கொள்ள விரைந்து செல்வானாகி,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 314

மாநகரம் அலங்கரிமின் மகரதோ
ரணம்நாட்டும் மணிநீர் வாசத்
தூநறும்பூ ரணகும்பம் சோதிமணி
விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனையணி பிறவுமெலாம் எழில்பெருக
இயற்றும்என ஏவித் தானும்
வானவர்நா யகர்மகனார் வருமுன்பு
தொழுதணைந்தான் மழவர் கோமான்.

பொழிப்புரை :

`பெரிய இந்நகரை அணிசெய்யுங்கள். மகர தோரணங்களைக் கட்டுங்கள்! மணிகளை இட்ட மணநீர் நிறைந்த நிறை குடங்களையும் ஒளியுடைய அழகிய விளக்குகளுடன் நறுமணப் புகையையும் ஏந்துங்கள்! இன்னும் பிறபிற அணிகளையெல்லாம் பெருகச் செய்யுங்கள்!\' என ஆணையிட்டு, அக்கொல்லி மழவன் தானும் தேவதேவரான சிவபெருமானின் மகனாரான பிள்ளையாரின் திருமுன்பு தொழுதபடியே சென்றணைந்தான்.

குறிப்புரை :

அம்மையப்பராய் வந்து ஞானப்பால் ஊட்டியமை யின், பிள்ளையார் அவர் திருமகனார் எனக் கருதப் பெற்றனர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 315

பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேனென்
றானந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழியத் திருமுத்தின்
சிவிகை யின்முன் வீழ்ந்தபோது
வள்ளலார் எழுகவென மலர்வித்த
திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ளமகிழ்ந் துடன்சென்று குலப்பதியின்
மணிவீதி கொண்டு புக்கான்.

பொழிப்புரை :

சென்றவன் `பிள்ளையார் எழுந்தருளப் பேறு பெற்றேன்!\' என எண்ணி, மேன்மேலும் பெருகும் அன்பினால் வெள்ளமாய்க் கண்கள் நீரைப் பொழிய, முத்துச் சிவிகையின் முன்பு விழுந்த பொழுது, வள்ளலாரான பிள்ளையார் `எழுக\' என்ற திரு வாக்கால் அருள, அவன் தன் மலர்க் கைகளைத் தலைமேல் குவித்துக் கொண்டு எழுந்து, அவருடனே சென்று பழமையான அப்பதியின் திருவீதி வழியே அழைத்துக் கொண்டு வந்து நகரினுள் புகுந்தான்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 316

மங்கலதூ ரியம்முழங்கு மணிவீதி
கடந்துமதிச் சடையார் கோயிற்
பொங்குசுடர்க் கோபுரத்துக் கணித்தாகப்
புனைமுத்தின் சிவிகை நின்றும்
அங்கண்இழிந் தருளுமுறை இழிந்தருளி
அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள்பிரான் கோயில்வலங் கொண்டுதிரு
முன்வணங்கச் சாருங் காலை.

பொழிப்புரை :

மங்கல இயங்கள் ஒலிக்கும் அவ்வீதியைக் கடந்து சென்று, பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரின் திருக்கோயிலின் பொங்கும் ஒளி வீசும் கோபுரத்துக்கு அருகில், அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கிய பிள்ளையார், அழகிய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து, தம் இறைவரின் கோயிலை வலம் வந்து, அப்பெருமானைத் திருமுன்பு சென்று வணங்கச் செல் லும் பொழுது,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 317

கன்னியிளங் கொடியுணர்வு கழிந்துநிலன்
சேர்ந்ததனைக் கண்டு நோக்கி
என்இதுவென் றருள்செய்ய மழவன்தான்
எதிர்இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன்இவளை முயலகனாம் பொருவிலரும்
பிணிபொருந்தப் புனிதர் கோயில்
முன்னணையக் கொணர்வித்தேன் இதுபுகுந்த
படியென்று மொழிந்து நின்றான்.

பொழிப்புரை :

கன்னியாகிய இளங்கொடிபோன்ற ஒரு பெண், உணர்வின்றி நிலத்தில் கிடப்பதைப் பார்த்து, இஃது என்ன? எனப் பிள்ளையார் கேட்க, அதனைக் கேட்ட கொல்லி மழவன், அவர் எதிரே வணங்கி, `அடியேன் பெற்ற பொன் போன்ற இப் பெண்ணை ஒப்பில் லாத தீர்ப்பதற்கு அரிய `முயலகன்\' என்ற நோய் பற்ற, அதனைத் தீர்க்க இயலாது இறைவர் தம் திருக்கோயிலில் அவர் திருமுன்பு கொணர்ந்து இவ்வகையில் கிடத்தியுள்ளேன்! இதுவே நிகழ்ந்தது!\' எனக் கூறி நின்றான்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 318

அணிகிளர் தாரவன் சொன்னமாற்றம்
அருளொடுங் கேட்டுஅந் நிலையின்நின்றே
பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய
பரம்பொரு ளாயினா ரைப்பணிந்து
மணிவளர் கண்டரோ மங்கையைவாட
மயல்செய்வ தோஇவர் மாண்பதென்று
தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத்
தண்டமிழ் பாடினார் சண்பைநாதர்.

பொழிப்புரை :

அழகிய மாலையை அணிந்த மழவன் சொல் லியவற்றை அருளோடும் கேட்டருளி, அந்நிலையில் நின்றவாறே, பாம்பு வாழ்தற் கிடனாய சிவந்த சடையினையுடைய திருப்பாச்சிலாச் சிராமத்தில் வீற்றிருக்கும் மேலாய பெருமானைப் பணிந்து, நஞ்சு வளர்தற் கிடனாய கழுத்தினை யுடையவரோ, இம்மங்கையை வாடும்படி மயக்கம் செய்வதோ இவர்தம் மாண்பு என்று எடுத்துத் தீர்த்தற்கரிய அந்நோயினைத் தீர்க்கும் தண்தமிழ்ப் பதிக மாலையைப் பாடியருளினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `துணிவளர் திங்கள்\' (தி.1 ப.44) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்தின் முதற் பாடல், `மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே\' என நிறைவு பெறுகிறது. இதனையே ஆசிரியர் எடுத்து மொழிகின்றார். இப்பதிகப் பாடல்கள் பத்தும் இறைவனின் அரும் பண்புகள் பலவற்றையும் விரித்துக் கூறி, `இவ்வரும் பண்பு உடையவரோ இந்நங்கையை இடர் செய்வதா இவர் மாண்பு\' என எடுத்து மொழிகின்றன. இப்பதிக முதற் பாடலில் `சுடர்ச்சடை சுற்றி முடித்து\' எனக் கூறுதற்கேற்ப இத்திருக் கோயிலில் உள்ள கூத்தப் பெருமானின் திருமுடி இன்றும் காட்சி அளிக்கின்றது.

பண் :

பாடல் எண் : 319

பன்னு தமிழ்மறை யாம்பதிகம்
பாடித் திருக்கடைக் காப்புச்சாத்தி
மன்னுங் கவுணியர் போற்றிநிற்க
மழவன் பயந்த மழலைமென்சொல்
கன்னி யுறுபிணி விட்டுநீங்கக்
கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து
பொன்னின் கொடியென ஒல்கிவந்து
பொருவலித் தாதை புடையணைந்தாள்.

பொழிப்புரை :

புகழ்ந்து பேசப்படுகின்ற தமிழ் மறையான திருப்பதிகத்தைப் பாடி, நிறைவில் திருக்கடைக்காப்பும் அருளிச் செய்து, நிலைபெற்ற கவுணியர் தலைவரான சம்பந்தர் வணங்கி நிற்ப, அதுபொழுது மழவன் பெற்ற மழலையாகிய மென்மையான சொற் களையுடைய அக்கன்னி, நோய் நீங்கப் பெற்று, மிக விரைவாக நிலத் தினின்றும் எழுந்து பொற்கொடிபோல் ஒதுங்கி நடந்து வந்து, போர் வன்மை கொண்ட தந்தையின் அருகே அடைந்தனள்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபுடையன. இவ்வர லாற்றை நினைவு கூரும் வகையில் இப்பதியிலுள்ள கூத்தப் பெரு மானின் திருவடிக்கீழ் முயலகன் இல்லாதுள்ளது. எனினும் முயலகன் என்னும் நோய் வேறு; திருவடிக்கீழ் இருக்கும் முயலகன் வேறு.

பண் :

பாடல் எண் : 320

வன்பிணி நீங்கு மகளைக்கண்ட
மழவன் பெருகு மகிழ்ச்சிபொங்கத்
தன்தனிப் பாவையும் தானுங்கூடச்
சண்பையர் காவலர் தாளில்வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும்
நீரணி வேணி நிமலர்பாதம்
ஒன்றிய சிந்தை யுடன்பணிந்தார்
உம்பர்பிரான் திருத் தொண்டர்ஆர்த்தார்.

பொழிப்புரை :

கொடிய முயலகன் என்ற நோய் நீங்கிய மக ளைக் கண்ட மழவன், பெருகிய மகிழ்ச்சிமீதூர, தன்னுடைய ஒப்பில் லாத மகளும் தானும் சீகாழித் தலைவரான பிள்ளையாரின் திருவடி களில் விழுந்து வணங்க, அங்கு நின்ற பிள்ளையாரும் கங்கை நீரைத் தரித்த சடையையுடைய குற்றமற்ற இறைவரின் திருவடிகளை ஒரு நெறியாகக் கொண்டு பணிந்தார்; தேவ தேவரான இறைவரின் அடிய வர்கள் மகிழ்வொலி செய்தனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 321

நீடு திருவாச் சிராமம்மன்னும்
நேரிழை பாகத்தர் தாள்வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கமர்ந்து
கும்பிடும் கொள்கைமேற் கொண்டுபோந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும்
அணைந்து பணிந்தடி போற்றியேகிச்
சேடர்கள் வாழுந் திருப்பைஞ்ஞீலிச்
சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.

பொழிப்புரை :

என்றும் அருள் நீடுகின்ற திருப்பாச்சிலாச் சிராமத்தில் நிலையாய் எழுந்தருளியிருக்கும் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகிவரும் சிவபெருமானின் அருளுடனே அங்கிருந்த பிள்ளையார், மேலும் பல பதிகளை வணங்கும் திருக்குறிப்பால் சென்று, ஆடலில் மகிழ் வுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் அடைந்து வணங்கித் திருவடிகளைப் போற்றி, மேலும் சென்று அறிவால் சிறந்தவர் உறைகின்ற `திருப்பைஞ்ஞீலிச்\' சிவபெருமானை வணங்குவதற்காகச் சென்றருளினார்.

குறிப்புரை :

இங்குப் பதிபிறவும் என்றது திருப்புலிவலம், திருத்துறையூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 322

பண்பயில் வண்டினம் பாடுஞ்சோலைப்
பைஞ்ஞீலி வாணர் கழல்பணிந்து
மண்பர வுந்தமிழ் மாலைபாடி
வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெருந் தெய்வக் கயிலையில்வாழ்
சிவனார் பதிபல சென்றிறைஞ்சிச்
சண்பை வளந்தரு நாடர்வந்து
தடந்திரு ஈங்கோய் மலையைச்சார்ந்தார்.

பொழிப்புரை :

பண்களைப் பயிலும் வண்டினங்கள் பாடுதற்கு இடனான சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலி இறைவர் திருவடி களை வணங்கி, உலகத்தவர் போற்றும் தமிழ் மாலையான திருப் பதிகத் தைப் பாடி, அத்திருப்பதியில் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேற்சென்று, திண்ணிய பெரிய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்கயிலை மலையில் வாழ்கின்ற சிவபெருமானின் பதிகள் பலவற்றையும் சென்று வணங்கி, வளம் தருகின்ற சீகாழிப் பதிக்குத் தலைவரான பிள்ளையார், `திரு ஈங்கோய்\' மலையைச் சார்ந்தார்.

குறிப்புரை :

திருப்பைஞ்ஞீலியில் அருளியது, `ஆரிடம் பாடிலர்\' (தி.3 ப.14) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும். பதிபல என்றது திருத்தலையூர், திருநெற்குன்றம், முசிறி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 323

செங்கட் குறவரைத் தேவர்போற்றுந்
திகழ்திரு ஈங்கோய் மலையின்மேவுங்
கங்கைச் சடையார் கழல்பணிந்து
கலந்த இசைப்பதி கம்புனைந்து
பொங்கர்ப் பொழில்சூழ் மலையும்மற்றும்
புறத்துள்ள தானங்க ளெல்லாம்போற்றிக்
கொங்கிற் குடபுலஞ் சென்றணைந்தார்
கோதின் மெய்ஞ் ஞானக் கொழுந்தனையார்.

பொழிப்புரை :

சிவந்த கண்களை உடைய குறவரைத் தேவர்கள் வந்து வணங்குவதற்கு இடனான, `திருஈங்கோய்\' மலையில் வீற்றிருக்கும் கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமானைப் பணிந்து, இசையுடன் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி, பெருகிய சோலைகள் சூழ்ந்த மலையையும் மற்றும் அயலில் உள்ள இடங்கள் எல்லாவற்றையும் வணங்கிக் கொங்கு நாட்டின் மேல்பகுதியில், குற்றம் இல்லாத மெய்ஞ்ஞானக் கொழுந்தனைய ஆளுடைய பிள்ளையார் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

இவ்விடத்துப் பாடியருளியது, `வானத்துயர் தண்\' (தி.1 ப.70) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இங்கு மலை எனக் குறிப்பது திருவாட்போக்கி (ஐயர் மலை) யாகலாம். ஆனால் இதனைப் பின்னர் வந்து வணங்குவதாக ஆசிரி யர், 339ஆம் பாடலிலும் குறிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 324

அண்டர்பிரான் ஆலயங்கள்
அம்மருங்குள் ளனபணிந்து
தெண்டிரைநீர்த் தடம்பொன்னித்
தென்கரையாங் கொங்கினிடை
வண்டலையும் புனற்சடையார்
மகிழ்விடங்கள் தொழுதணைந்தார்
கொண்டல்பயில் நெடும்புரிசைக்
கொடிமாடச் செங்குன்றூர்.

பொழிப்புரை :

தேவர்களின் தலைவரான சிவபெருமான் திருக்கோயில்கள் அப்பக்கங்களில் உள்ளவற்றையெல்லாம் வணங்கிச் சென்று, தெளிவான அலைகளையுடைய நீர் கொண்ட காவிரியின் தெற்குக் கரையில் உள்ள கொங்கு நாட்டில், வண்டுகள் அலைதற்கு இடனாகப் பெருகும் நீரையுடைய சடையார் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கி, மேகங்கள் தவழும் நீண்ட மதிலையுடைய திருக்கொடிமாடச் செங்குன்றினை அடைந்தார் பிள் ளையார்.

குறிப்புரை :

தென்கரையாம் கொங்கினிடை எனப் பின்னர் விதந்து கூறுவதால் அண்டர்பிரான் ஆலயங்கள் என முன்னர்க் கூறுவது காவிரியின் வடகரையிலுள்ள திருப்பதிகள் பலவுமாகும். இவ்வகை யில் ஈங்கோய் மலையிலிருந்து ஏறத்தாழ நாமக்கல், சேலம் வரையில் உள்ள திருப்பதிகள் பலவுமாகலாம். இதுபோன்றே காவிரித் தென் கரையிலும் கடம்பந்துறை முதல் கரூர் வரையிலுள்ள திருப்பதிகள் பலவுமாகலாம். கருவூரில் வணங் குவதைப் பின் 339ஆம் பாடலில் ஆசிரியர் குறித்தருளுகின்றார். காழிச்செல்வர் இவ்வகையில் வணங்கிச் சென்ற அத்திருப்பதிகளைப் பெயரளவில் அறிதற்கியலாதுள்ளது. திருவருளாக, கொடிமாடச் செங்குன்றூர் இக்காலத்துத் திருச் செங்கோடு என வழங்கப் பெறுகின்றது.

பண் :

பாடல் எண் : 325

அந்நகரில் வாழ்வாரும்
அடியவரும் மனமகிழ்ந்து
பன்னெடுந்தோ ரணமுதலாப்
பயிலணிகள் பலஅமைத்து
முன்னுறவந் தெதிர்கொண்டு
பணிந்தேத்தி மொய்கரங்கள்
சென்னியுறக் கொண்டணைந்தார்
சினவிடையார் செழுங்கோயில்.

பொழிப்புரை :

அந்த நகரத்தில் வாழ்பவர்களும் சிவனடியார் களும் மகிழ்ந்து, நீண்ட பல தோரணங்கள், வாழை மரங்கள், பாக்கு மரங்கள் முதலானவற்றை அமைத்து அணிசெய்து, எதிர்கொண்டு வணங்கிப் போற்றி, இருகைகளையும் தலைமீது பொருந்த ஏற்றி, சினமுடைய ஆனேற்றை ஊர்தியாகவுடைய இறைவர் எழுந்தருளிய கோயிலின்கண் பிள்ளையாரை அழைத்துக் கொண்டு சென்றனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 326

தம்பெருமான் கோயிலினுள்
எழுந்தருளித் தமிழ்விரகர்
நம்பரவர் திருமுன்பு
தாழ்ந்தெழுந்து நலஞ்சிறக்க
இம்பரும்உம் பருமேத்த
இன்னிசைவண் டமிழ்பாடிக்
கும்பிடும்ஆ தரவுடன்அக்
கோநகரில் இனிதமர்ந்தார்.

பொழிப்புரை :

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர், தம் இறைவர் கோயிலுள் சென்று, அவரது திருமுன்பு தாழ்ந்து வணங்கி, இம்மண் ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் நலம்பெற இனிய இசையுடன் வளம் பொருந்திய தமிழ்ப் பதிகத்தைப் பாடி, மேலும் கும்பிட வேண் டும் என்ற ஆசையால் அந்நகரத்தில் இனிதாக வீற்றிருந்தார்.

குறிப்புரை :

இறைவன் திருமுன்பு அருளிய பதிகம் `வெந்த வெண் ணீறணிந்து\' (தி.1 ப.107) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 327

அப்பாலைக் குடபுலத்தில்
ஆறணிந்தார்அமர்கோயில்
எப்பாலுஞ் சென்றேத்தித்
திருநணா வினைஇறைஞ்சிப்
பைப்பாந்தள் புனைந்தவரைப்
பரவிப்பண் டமர்கின்ற
வைப்பான செங்குன்றூர்
வந்தணைந்து வைகினார்.

பொழிப்புரை :

அப்பகுதியில் மேற்குத் திசையில், கங்கையைச் சூடிய இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் கோயில்களை உடைய எல்லா இடங்களிலும் சென்று வணங்கி, `திருநணா\\\' என்ற பதியை அடைந்து, பாம்பை அணிந்த இறைவரை வணங்கி, முன்னர்த் தாம் விரும்பி எழுந்தருளியிருந்த கொடிமாடச் செங்குன்றூரில் சென்று வீற்றிருந்தார்.

குறிப்புரை :

குடபுலத்திலுள்ள கோயில்கள் எல்லாம் சென்றிறைஞ்சி என்றது, பேரூர், அவிநாசி, கொல்லிமலை, மாட்டூர், சேவூர், தோழூர், ஏழூர், திருமுருகன்பூண்டி, குரக்குத்தளி, குமரிகொங்கு முதலியன வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத் தில. திருநணா என்பது இக்காலத்தில் பவானி என அழைக்கப் பெறுகிறது. இத்திருப்பதியில் அருளிய பதிகம் `பந்தார்விரல்\\\' (தி.2 ப.72) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 328

ஆங்குடைய பிள்ளையார்
அமர்ந்துறையும் நாளின்கண்
தூங்குதுளி முகிற்குலங்கள்
சுரந்துபெய லொழிகாலை
வீங்கொலிநீர் வைப்பெல்லாம்
வெயில்பெறா விருப்புவரப்
பாங்கர்வரை யுங்குளிரும்
பனிப்பருவ மெய்தியதால்.

பொழிப்புரை :

அவ்விடத்தில் ஆளுடைய பிள்ளையார் விரும் பித் தங்கியிருந்த நாள்களில், பெய்யும் துளிகளையுடைய மேகக் கூட்டங்கள் மழை சுரத்தலின்றும் நீங்கப் பெருகிய ஒலியுடைய நீரால் சூழப்பட்ட உலகில் எல்லாரும் வெயில் பெறாததனால், அவ் விருப்பம் மேலிட அருகிலுள்ள மலைகளும் குளிர்ச்சி அடையத்தக்க முன்பனிப் பருவம் வந்து சேர்ந்தது.

குறிப்புரை :

மழைபொழியும் காலம் கூதிர்க் காலம் ஆகும். அது நீங்க முன்பனிக் காலம் வந்தது. இக்கால இயற்கையைத் தொல்காப்பியம் முதலாகவுள்ள இலக்கண நூல்கள் தொடர்ந்து குறித்து வந்துள்ளன. இவ்வாறு மழையும், அது நீங்கியபின் பனியும் தொடர்ந்தமையின், வெயில் வேண்டும் விருப்பைப் பெற்றனர் மக்கள்.

பண் :

பாடல் எண் : 329

அளிக்குலங்கள் சுளித்தகல
அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல்
லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் லறுகுபனி
தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம்
போர்த்தனைய குன்றுகளும்.

பொழிப்புரை :

வண்டின் கூட்டங்கள் வெறுத்து நீங்க, தாமரைகள் முகம் கருக, பளிங்கு மணியை மரகதக் கொடியில் கோத்தது போல மெல்லிய அறுகம்புல்லின் நுனியில் பனித் துளிகள் சேர்ந்து அசைய, சூழ்ந்த பனியினால் நேர்ந்த குளிருக்கு ஆற்றாது உடைந்து, குன்றுகளும் வெண்மையான போர்வை போர்த்தன போல விளங்கின.

குறிப்புரை :

இதில் வரும் உவமைகள் இரண்டும், வருணனைக்கு அழகுக்கு அழகு செய்வன போல் விளங்குகின்றன.

பண் :

பாடல் எண் : 330

மொய்பனிகூர் குளிர்வாடை
முழுதுலவும் பொழுதேயாய்க்
கொய்தளிர்மென் சோலைகளும்
குலைந்தசையக் குளிர்க்கொதுங்கி
வெய்யவனும் கரநிமிர்க்க
மாட்டான்போல் விசும்பினிடை
ஐதுவெயில் விரிப்பதுவும்
அடங்குவது மாகுமால்.

பொழிப்புரை :

மிக்க பனி செறிந்த குளிரையுடைய வாடைக் காற்று முழுமையாக வீசும் காலமானதால், பறித்தற்குரிய தளிர்கள் தழைத்த மெல்லிய சோலைகளும் குளிர்ச்சி பெற்றுத் தடுமாற, குளிரால் ஒருமருங்கு ஒதுங்கி நிற்கும் கதிரையுடைய சூரியனும் தன் கதிர்களை நிமிர்ந்து

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 331

நீடியஅப்பதிகளெலாம்
நிரைமாடத் திறைகள்தொறும்
பேடையுடன் பவளக்கால்
புறவொடுங்கப் பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார்
துணைக்கலச மென்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளும்
மணிமார்பும் அடங்குவன.

பொழிப்புரை :

பழமையால் நீடிய அங்குள்ள திருப்பதிகள் எங் கும் நிரல்பட அமைந்த மாடங்களின் வீட்டு இறப்புகள்தொறும், தம் பெடைகளுடன் பவளம் போன்ற கால்களை உடைய புறாக்கள் ஒடுங்கியிருக்கும்; சிறுசண்பக மலரின் இதழ்கள் விரிவதற்கு இடமான மென்மையான கூந்தலையுடைய தம் பெண்களின் இணைக் கலசம் போன்ற விரும்பத்தக்க மார்பகங்களில், ஆடவர்களின் பருத்த தோள்களும் அழகிய மார்புகளும் அடங்குவனவாம்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 332

அரிசனமும் குங்குமமும்
அரைத்தமைப்பார் அயலெல்லாம்
பரியஅகிற் குறைபிளந்து
புகைப்பார்கள் பாங்கெல்லாம்
எரியுமிழ்பேழ் வாய்த்தோணி
இரும்பீர்ப்பார் இடையெல்லாம்
விரிமலர்மென் புறவணிந்த
மீப்புலத்து வைப்பெல்லாம்.

பொழிப்புரை :

விரியும் மென்மையான மலர்களையுடைய மலை சார்ந்த நிலங்களில் எங்கும், அருகில் மஞ்சளும் குங்குமமும் சேர அரைத்து வைப்பர்; பக்க இடங்கள் எங்கும் பெரிய அகில் துண்டு களைப் பிளந்து புகை எழுப்புவர்; இடை இடங்களில் தீயை உமிழ் கின்ற பெரிய வாயை உடைய தோணி வடிவில் அமைந்த இரும்புச் சட்டியைக் குளிர் காய்வதன் பொருட்டுத் தம் அருகில் இழுத்துக் கொள்வர்.

குறிப்புரை :

மஞ்சளும், குங்குமமும் சேர அரைத்து வைத்து அன லூட்டி அகில் பொடி தூவி சூடான நறுமணப்புகை கொள்ள குளிருக்கு இதமாம். இந்நான்கு பாடல்களும் முன்பனிப் பருவத்தைச் சித்தரித்துக் காட்டும் அழகு எண்ணி மகிழ்தற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 333

அந்நாளில் கொடிமாடச்
செங்குன்றூர் அமர்ந்திருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையா
ருடன்மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில்
பயின்றதனால் பனித்தகுளிர்
முன்னான பிணிவந்து
மூள்வதுபோல் முடுகுதலும்.

பொழிப்புரை :

அந்நாள்களில் கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த பிள்ளையாருடன் உள்ள அடியவர்கள், பல நாள்கள் அங்குத் தங்கியிருந்ததால், நடுங்குதற்கு ஏதுவாய குளிரை முன்னே காணும் மலைச்சுரம் வந்து மேல் அடர்வதைப் போல் வருத்தவே,

குறிப்புரை :

குளிர் முன்னரும், சுரம் பின்னரும் வருதலின், முன்னான பிணி வந்து என்றார். மலைநாட்டியற்கையில் வரும் சுரம் மலைச்சுரம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 334

அந்நிலைமை ஆளுடைய
பிள்ளையார்க் கவர்களெலாம்
முன்னறிவித் திறைஞ்சுதலும்
முதல்வனார் அருள்தொழுதே
இந்நிலத்தின் இயல்பெனினும்
நமக்கெய்தப் பெறாஎன்று
சென்னிமதி யணிந்தாரைத்
திருப்பதிகம் பாடுவார்.

பொழிப்புரை :

அந்நிலைமையை அங்குச் சூழவுள்ளார்கள் எல்லாம் பிள்ளையாரின் திருமுன் போந்து, அவரிடம் கூறி விண்ணப் பித்துக் கொள்ளவும், இறைவரின் திருவருளைத் தொழுது, `இந் நாட்டின் இயல்பே இது; ஆயினும் இதன் கொடுமைகள் நமக்கு வந்து சேர மாட்டா\' என்ற கருத்துடன், சென்னியில் சந்திரனை அணிந்த இறைவரைத் திருப்பதிகம் பாடுவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 335

அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா திருநீல
கண்டம் எனச்செப்பினார்.

பொழிப்புரை :

`அவ்வினைக்கு இவ்வினை\' (தி.1 ப.116) என்று தொடங்கி, `இறைவர் உண்ட கொடிய நஞ்சைத் தடுத்து எம் துன்பங்களை யெல்லாம் வராமல் காத்தது அவரது திருநீலகண்டமே ஆகும்\' என்ற கருத்தினை வைத்துச் `செய்வினை எம்மைத் தீண்டப் பெறா\' என்று திருநீலகண்டத்தினிடம் ஆணை என அருளினார்.

குறிப்புரை :

`அவ்வினைக்கு இவ்வினையாம்\' (தி.1 ப.116) எனத் தொடங்கும் பதிகம் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்ததாகும். நீலகண்டம் - கருமை பொருந்திய கழுத்து. பிறவுயிர்கட்கு இறுதிவாரா வண்ணம் காக்க இறைவர் தாம் நஞ்சையுண்டார். அதனால் அவர் கழுத்துக் கருமை பொருந்தியதாயிற்று; இவ்வருஞ் செயலுக்கு இடனாய உறைப்பின் சிறப்புக் கருதி `திரு\' என்னும் அடைமொழி கூட்டித் `திருநீலகண்டம்\' என அழைக்கப் பெறுவதாயிற்று. உயிர்க்கு வரும் வினை இயல்பைப் பாடல்தொறும் குறித்து, அவை திருநீல கண்டத்தை நினைவதால் உயிர்களைத் தீண்டா எனும் கருத்து அமைவை ஈற்றில் காட்டி அருளுகின்றார். பிள்ளையார், `ஆணை நமதே\' என்று அருளிய இடங்களில் இஃது இரண்டாவதாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 336

ஆய குறிப்பினில் ஆணை
நிகழ அருளிச்செய்து
தூய பதிகத் திருக்கடைக்
காப்புத் தொடுத்தணிய
மேயஅப் பொற்பதி வாழ்பவர்க்
கேயன்றி மேவும்அந்நாள்
தீய பனிப்பிணி அந்நாடு
அடங்கவும் தீர்ந்ததன்றே.

பொழிப்புரை :

அத்தகைய அருட் குறிப்புடன் திருஆணை நிகழும்படி செய்து, தூய திருப்பதிகத்திற்குத் திருக்கடைக் காப்பும் தொடுத்து அணிந்தருளவே, பொருந்திய அத்திருப்பதியில் வாழ்பவர்க்கு மட்டுமன்றி, அந்நாளில் அந்நாடு முழுமையும் இருந்த மலைச் சுரம் அப்பொழுதே நீங்கியது.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 337

அப்பதி யின்கண் அமர்ந்து
சிலநாளில் அங்ககன்று
துப்புறழ் வேணியர் தானம்
பலவும் தொழுதருளி
முப்புரி நூலுடன் தோலணி
மார்பர் முனிவரொடும்
செப்பருஞ் சீர்த்திருப் பாண்டிக்
கொடுமுடி சென்றணைந்தார்.

பொழிப்புரை :

மான்தோலுடன் கூடிய முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய பிள்ளையார், அந்நகரத்தில் சில நாள்கள் விரும்பி இருந்தருளியவர், பின் அப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று, பவ ளம் போன்ற சிவந்த சடையையுடைய இறைவர் எழுந்தருளி இருக் கும் இடங்கள் பலவற்றையும் வணங்கி, சொல்வதற்கு அரிய சிறப்பை யுடைய திருப்பாண்டிக்கொடுமுடியை உடன்வரும் அந்தணர்களுடன் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

`தானம்பலவும்\' என்றது திருச்செங்கோட்டிற்கும் கொடுமுடிக்கும் இடைப்பட்ட திருப்பதிகளாகும். பதிகங்கள் எவை யும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 338

பருவம் அறாப்பொன்னிப் பாண்டிக்
கொடுமுடி யார்தம்பாதம்
மருவி வணங்கி வளத்தமிழ்
மாலை மகிழ்ந்துசாத்தி
விரிசுடர் மாளிகை வெஞ்சமாக்
கூடல் விடையவர்தம்
பொருவில்தா னம்பலபோற்றிக்
குணதிசைப் போதுகின்றார்.

பொழிப்புரை :

காலம் தவறாது நீரைத்தரும் காவிரிக்கரையில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடியில் இறைவர் திருவடிகளை வணங்கி, வளம் தரும் தமிழ்ப் பதிகத்தைப் பாடிச் சாத்தி, ஒளி வீசும் மாடங்களையுடைய `வெஞ்சமாக்கூடல்\' முதலாகச் சிவபெருமானின் ஒப்பற்ற இடங்கள் பலவற்றையும் வணங்கிப் போற்றிக் கிழக்குத் திசையில் செல்ல ஒருப்பட்டவராய்,

குறிப்புரை :

திருப்பாண்டிக் கொடுமுடியில் அருளிய பதிகம், `பெண்ணமர் மேனியி னாரும்\' (தி.2 ப.69) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருவெஞ்சமாக்கூடலில் அருளிய பதிகம் கிடைத்திலது. இப்பதியிலிருந்து கருவூர் வரையில், பிள்ளையார் வணங்கி வந்த பதிகளும் பாடியருளிய பதிகங்களும் இவை என அறியக் கூடவில்லை.

பண் :

பாடல் எண் : 339

செல்வக் கருவூர்த் திருவா
னிலைக்கோயில் சென்றிறைஞ்சி
நல்லிசை வண்தமிழ்ச் சொற்றொடை
பாடிஅந் நாடகன்று
மல்கிய மாணிக்க வெற்பு
முதலா வணங்கிவந்து
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத்
தானம் பலபணிவார்.

பொழிப்புரை :

செல்வ வளம் பொருந்தி கருவூரில் `திருவானிலை\' என்ற கோயிலில் சென்று வணங்கி, நல்ல இசையுடன் கூடிய வளமான தமிழ்ச் சொல் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, கொங்கு நாடான அதைவிட்டு அகன்று, பொருந்திய மாணிக்க மலை (இரத்தினகிரி) எனும் `திருவாட்போக்கியினை\' முதலில் வணங்கி, மேற்சென்று, பெருகும் அலைகளை உடைய காவிரியின் தென்கரைப் பதிகள் பலவற்றையும் வணங்குபவராய்,

குறிப்புரை :

திருக்கருவூர்த் திருவானிலையில் அருளிய பதிகம் `தொண்டெலாமலர்\' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பொன்னித் தென்கரைத் தானங்கள் என்பன கருவூருக் கும் திருவாட்போக்கிக்கும் (இரத்தினகிரிக்கும்) இடைப்பட்ட திருப் பதிகளாகும். இவை எவையென அறியக் கூடவில்லை. திருவாட் போக்கியில் அருளிய பதிகமும் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 340

பன்னெடுங் குன்றும் படர்நெடுங்
கானும் பலபதியும்
அந்நிலைத் தானங்க ளாயின
எல்லாம் அமர்ந்திறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக
வாய்மை மறையவனார்
பொன்னியல் வேணிப் புனிதர்
பராய்த்துறை யுட்புகுந்தார்.

பொழிப்புரை :

பல பெரிய குன்றுகளிலும் பரந்த பெரிய காடுக ளிலும் பல பதிகளிலும் அங்கங்கும் இறைவர் நிலையாய் வீற்றிருக்கும் பதிகளிலுள்ள கோயில்களை எல்லாம் விருப்புடன் சென்று வணங்கி, நிலைபெற்ற சீகாழியில் தோன்றிய மறையுண்மையை நிலை நாட்டும் மறையவரான பிள்ளையார், பொன் போன்ற சடையையுடைய தூயவரான சிவபெருமான் வீற்றிருக்கும் `திருப்பராய்த்துறை\' என்ற பதியுள் புகுந்தார்.

குறிப்புரை :

`பன்னெடுங் குன்றும் படர் நெடுங்கானும் (பெருங்கா னும் என்றும் பாடம்) பலபதியும்\' எனக் குறிப்பன திருவாட்போக்கிக் கும் திருப்பராய்த்துறைக்கும் இடைப்பட்ட இடங்களாகும். அவை, இவை எனத் தெரிந்தில. இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 341

நீடும் பராய்த்துறை நெற்றித்
தனிக்கண்ணர் கோயில்நண்ணிக்
கூடுங் கருத்தொடு கும்பிட்டுக்
கோதில் தமிழ்ச்சொல்மாலை
பாடுங் கவுணியர் கண்பனி
மாரி பரந்திழியச்
சூடுங் கரதலத் தஞ்சலி கோலித்
தொழுது நின்றார்.

பொழிப்புரை :

சிறப்புமிக்க திருப்பராய்த்துறை என்ற பதியில் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருக்கோயிலை அடைந்து, ஒருமையுணர்வுடன் வணங்கி, குற்றம் இல்லாத தமிழ் மாலையைப் பாடுகின்ற கவுணியக் குலத்தலைவரான பிள்ளையார், கண்களினின்றும் நீர் மழை பெருக, கைகளைத் தலை மீது கூப்பித் தொழுது நின்றார்.

குறிப்புரை :

திருப்பராய்த்துறையில் அருளியது, `நீறு சேர்வதொர்\' (தி.1 ப.135) எனத் தொடங்கும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 342

தொழுது புறம்பணைந் தங்குநின்
றேகிச் சுரர்பணிவுற்
றெழுதிரு வாலந் துறைதிருச்
செந்துறை யேமுதலா
வழுவில் கோயில்கள் சென்று
வணங்கி மகிழ்ந்தணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக்கற்
குடிமலை சேரவந்தார்.

பொழிப்புரை :

வணங்கி வெளிப்போந்து, அத்திருப்பதியினின் றும் நீங்கித் தேவர்கள் வந்து வணங்கி எழுகின்ற திருவாலந்துறை திருச்செந்துறை முதலான குற்றம் அற்ற பல கோயில்களையும் வணங்கி, மகிழ்வுடன் அணைபவரான சம்பந்தர், செழுமை பொருந்திய மலர்ச் சோலைகளையுடைய `திருக்கற்குடிமலை\'யைச் சேரச் சென்றார்.

குறிப்புரை :

திருவாலந்துறை, திருச்செந்துறை ஆகிய பதிகளுக்கு உரிய பதிகங்கள் கிடைத்தில. இப்பதிகளுக்கும் திருக்கற்குடிக்கும் இடைப்பட்ட இடங்களும் இவை என அறியக் கூடவில்லை.

பண் :

பாடல் எண் : 343

கற்குடி மாமலை மேலெழுந்த
கனகக் கொழுந்தினைக் கால்வளையப்
பொற்றிரள் மேருச் சிலைவளைத்த
போர்விடை யாளியைப் போற்றிசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி
ஞானசம் பந்தர் புலங்கள்ஐ ந்தும்
செற்றவர் மூக்கீச் சரம்பணிந்து
திருச்சிராப் பள்ளிச் சிலம்பணைந்தார்.

பொழிப்புரை :

திருக்கற்குடி மாமலையின் மீது வீற்றிருக்கும் பொற்கொழுந்து போன்றவரை, பொன்மேரு மலையை வளைத்த ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டவரைப் போற்றி, நல்ல தமிழ் மாலையைச் சூட்டி, ஞானசம்பந்தர், பொறிவாயில் ஐந்துஅவித்த புனி தரின் `திருமூக்கீச்சரத்தினைப்\' பணிந்து சென்று, `திருச்சிராப்பள்ளி\' மலையை அடைந்தார்.

குறிப்புரை :

திருக்கற்குடியில் அருளியது, `வடந்திகழ் மென்முலை\' (தி.1 ப.43) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமா கும். திருமூக்கீச்சரத்தில் அருளிய பதிகம் `சாந்தம் வெண்ணீறென\' (தி.2 ப.120) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமா கும். திருமூக்கீச்சரம் இதுபொழுது உறையூர் என வழங்கப் பெறுவதாம்.

பண் :

பாடல் எண் : 344

செம்மணி வாரி அருவிதூங்கும்
சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம்மலை ஈருரி போர்வை சாத்தும்
கண்ணுத லாரைக் கழல்பணிந்து
மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர
விளங்கிய சொற்றமிழ் மாலைவேய்ந்து
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை
வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார்.

பொழிப்புரை :

செந்நிறமான மணிகளை வாரிக் கொணரும் அருவிகள் பாய்தற்கு இடனான `திருச்சிராப்பள்ளி\' மலையின் மேல் வீற்றிருக்கும், யானையின் தோலை உரித்து அதைப் போர்த்திக் கொண்ட, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, உண்மையான மகிழ்ச்சியை அடைந்து, மனம் குளிர்ந்து விளங்கிய சொல் தமிழ் மாலையைப் புனைந்து, கருமை விளங்கும் கழுத்தினையுடைய இறைவரின் `திருவானைக்கா\' என்ற பதியை வணங்கும் விருப்புடனே பிள்ளையார் வந்து அடைந்தார்.

குறிப்புரை :

திருச்சிராப்பள்ளியில் அருளியது, `நன்றுடையானை\' (தி.1 ப.98) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகம்.

பண் :

பாடல் எண் : 345

விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில்
வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி யிறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து
நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல்கோச் செங்க ணரசன்செய்த
அடிமையும் அஞ்சொல் தொடையில்வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப்
பரவிநின் றேத்தினர் பான்மையினால்.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கும் திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள மெய்ப் பொருளான இறைவரை அடைந்து, வணங்கி எழுந்து, நான்கு கொம்புகளை யுடைய வெள்ளை யானை பணிந்த இயல்பையும், பெருமையுடைய கோச்செங்கட் சோழ அரசர் செய்த அடிமைத் திறத்தையும், அழகிய சொற்றொடையில் வைத்துப் பண் பொருந்திய செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தை அடிமைத் திறம் பிழையாது நின்ற பான்மையினால் போற்றினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளியது, `மழையார் மிடறா\' (தி.2 ப.23) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகம். இப் பதிகத்தின் 4ஆவது பாடலில், வெள்ளை யானைக்கு அருள் செய்த மையையும், 5ஆவது பாடலில் கோச்செங்கட் சோழருக்கு அருள் செய்தமையையும் பிள்ளையார் குறித்தருளுகின்றார்.

பண் :

பாடல் எண் : 346

நாரணன் நான்முகன் காணாவுண்மை
வெண்ணாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை
செல்வத் திருவாரூர் மேயபண்பும்
ஆரணத் துட்பொரு ளாயினாரை
ஆனைக்கா வின்கட் புகழ்ந்துபாடி
ஏரணியும் பொழில் சூழ்ந்தசண்பை
ஏந்தலார் எல்லையில் இன்பமுற்றார்.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் காணாத உண்மைப் பொருளாயவரும் வெண்ணாவலிலும், உண்மைப் பொருளை அருளிய மயேந்திரத்திலும், சிறப்பும் அழகும் பொருந்திய திருக் கயிலையிலும், செல்வத் திருவாரூரிலும் எழுந்தருளியிருக்கும் பண்பு டையவருமான மறைகளின் உட்பொருளாய் உள்ள இறைவரைத் திருவானைக்கா என்ற பதியில் பாடி, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான பிள்ளையார் எல்லையற்ற இன்பத்தைப் பெற்றார்.

குறிப்புரை :

இந்நான்கு திருப்பதிகளையும் ஒருங்கு இணைத்துக் கூறிய பதிகம், `மண்ணது வுண்ட\' (தி.3 ப.109) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பண்ணிலமைந்த பதிகமாகும். மயேந்திர மலை இமயத் தின் ஒரு பகுதி என்பாரும், குமரிக் கடலிலிருந்து நீரில் மூழ்கியதொரு மலை என்பாரும் ஆக இருதிறத்தார் உளர். `ஒலிதரு கயிலை உயர் கிழவோனே\' (தி.8 ப.2 வரி.146) என்றும் `மன்னு மாமலை மகேந்திர மதனுள் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்\' (தி.8 ப.2 வரி.9) என்றும் திருவாசகத்துட் காணும் திருவாக்குகளால் இவற்றுள் முன்னைய கருத்தே வலியுடைத்தாகலாம். ஆகமம் அருளிச் செய்யப்பட்ட இடம் ஆதலின் `உண்மை மயேந்திரம்\' என்றார்.

பண் :

பாடல் எண் : 347

கைதொழு தேத்திப் புறத்தணைந்து
காமர் பதியதன் கட்சிலநாள்
வைகி வணங்கி மகிழ்ந்தணைவார்
மன்னுந் தவத்துறை வானவர்தாள்
எய்தி இறைஞ்சி எழுந்துநின்றே
இன்தமிழ் மாலைகொண் டேத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு
மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார்.

பொழிப்புரை :

கையால் தொழுது போற்றி வெளியே வந்து, அழகிய அப்பதியில் சிலநாள்கள் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேல் செல்பவராய், நிலை பெற்ற `தவத்துறை\' (இலால்குடி)யில் உள்ள இறைவரின் திருவடிகளை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்று, இனிய தமிழ் மாலை பாடிப் போற்றி, மேற்சென்று வைதிக நெறியின் மணிபோன்ற அப்பிள்ளையார், அம் மருங்கில் மற்றும் உள்ள திருப் பதிகளையும் வணங்கிச் செல்வாராய்,

குறிப்புரை :

திருவானைக்காவில், சில நாள் வதிந்த பொழுது அரு ளிய பதிகம் `வானைக்காவல்\' (தி.3 ப.55) எனத் தொடங்கும் கௌசி கப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருத்தவத்துறையில் அருளிய பதிகம் கிடைத்திலது. மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார் என்றது, திருமங்கலம், திருமாந்துறை முதலியினவாகலாம். பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 348

ஏறுயர்த் தார்திருப் பாற்றுறையும்
எறும்பியூர் மாமலை யேமுதலா
வேறுபதி கள்பல வும்போற்றி
விரவுந் திருத்தொண்டர் வந்துசூழ
ஈறில்புகழ்ச் சண்பை ஆளியார்தாம்
எண்திசை யோரும் தொழுதிறைஞ்ச
நீறணிசெம் பவளப் பொருப்பில்
நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.

பொழிப்புரை :

விடைக்கொடியை உடைய இறைவரின் திருப் பாற்றுறையும், திருவெறும்பியூர் மாமலையும் முதலான பிற பதிகளை வணங்கி, மனமியைந்து பரவி வரும் தொண்டர்கள் பலரும் சூழவரும் எல்லையற்ற புகழையுடைய சீகாழித் தலைவர், எண்திசையில் உள்ள வர்களும் தொழுது வணங்கத் திருநீற்றை அணிந்த செம்பவள மலை போன்ற சிவபெருமானின் திருநெடுங்கள மாநகரைச் சென்று அடைந் தார்.

குறிப்புரை :

திருப்பாற்றுறையில் அருளியது, `காரார் கொன்றை\' (தி.1 ப.56) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருஎறும்பியூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. வேறு பதிகள் பலவும் போற்றி என்பதில் குறிக்கத்தக்க பதிகள் இவை என அறியக் கூடவில்லை.

பண் :

பாடல் எண் : 349

நெடுங்களத் தாதியை அன்பால்நின்பால்
நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்என்னும்
இன்னிசை மாலைகொண் டேத்தியேகி
அடும்பணிச் செஞ்சடை யார்பதிகள்
அணைந்து பணிந்து நியமம்போற்றிக்
கடுங்கை வரையுரித் தார்மகிழ்ந்த
காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.

பொழிப்புரை :

திருநெடுங்களத்தில் வீற்றிருக்கின்ற மூலமூர்த்தி யான இறைவரை, `அன்பால் உம்மிடம் உள்ளம் செல்லாதவாறு தகைக்கும் இடும்பைகளையெல்லாம் தீர்த்து அருள் செய்வீராக!\' என வேண்டிக் கொள்ளும் குறிப்பைக் கொண்ட இன்னிசைத் திருப்பதிக மான மாலையினால் போற்றி, மேற்சென்று, கொல்லும் இயல்புடைய பாம்பைச் சூடிய சிவந்த சடையினரான சிவபெருமானாருடைய திருப்பதிகளை வணங்கி, திருநியமத்தைப் போற்றி, வலிய துதிக் கையை உடைய யானையை உரித்த இறைவர் மகிழ்வுடன் வீற்றிருக் கும் `திருக்காட்டுப்பள்ளி\' என்னும் திருப்பதியைக் கைதொழுவாராய்,

குறிப்புரை :

திருநெடுங்களத்தில் அருளியது, `மறையுடையாய்\' (தி.1 ப.52) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகப் பாடல்தொறும் `இடர்களையாய்\' என வருவது பற்றி, நம்மனோர்க்கெல்லாம் அவ்வப்பொழுதும், அடுக்கி வரும் உலகியல் துன்பங்களை யெல்லாம் நீக்க வேண்டும் எனும் குறிப்புடையதாக, இப்பதிகத்தைப் பன்முறையும் ஓதி வருகின்றோம். இதுவும் வாய்மை எனினும், ஆசிரியர் சேக்கிழார் தரும் விளக்கம் வேறாகும் என்பது அறியத்தக்கது. பெருமானிடத்துக் கொள்ளும் அன்புள்ளத்திற்கும் ஆற்றிவரும் வழிபாட்டிற்கும் இடையூறாக வரும் இடர்ப்பாடுகளை நீக்க வேண்டும் எனும் குறிப்பில் அருளுவதாகவே குறிக்கின்றார் சேக்கிழார். பதிகத்து வரும் பாடல்களை ஊன்றிப் படிப் பின் அவர்தம் திருவுள்ளக் கருத்தே உண்மை என்பது தெளியலாம். திருநியமம் என்னும் தலத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது. `செஞ்சடையார் பதிகள் அணைந்து போற்றி\' என்பது, திருநெடுங்களத் திற்கும் திருநியமத்திற்கும் இடைப்பட்ட பதிகளைக் குறிக்கும். கடையக் குடி முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவ்வாறு வரும் இடங்களைக் குறித்துக் கொண்டு, அவ்வவ் விடங்களில் உள்ள பதி களை நேரில் சென்று தெளிவு பெறல் நலம் பயக்கும்.

பண் :

பாடல் எண் : 350

சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச்
செஞ்சடை நம்பர்தங் கோயில்எய்தி
முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து
மொய்கழற் சேவடி கைதொழுவார்
கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக்
கண்ணுத லாரைமுன் போற்றிசெய்து
மன்றுள்நின் றாடல் மனத்துள்வைப்பார்
வாருமன் னும்முலை பாடிவாழ்ந்தார்.

பொழிப்புரை :

சென்று விளங்கும் மேலைத் திருக்காட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் செஞ்சடையை உடைய சிவபெருமானின் கோயிலை அடைந்து, திருமுன்றிலை வலமாக வந்து வணங்கி, வீழ்ந்து எழுந்து வலிய கழலை அணிந்த திருவடிகளை வணங்குவாராய், கன்றைச் சேர்ந்த பசுவின் கருத்தையுடைய அன்பு உள்ளத்தில் பொருந்த நெற்றிக் கண்ணையுடைய இறைவரைத் திருமுன்பு நின்று வணங்கி, மன்றினுள் இருந்து இயற்றும் அருட்கூத்தைத் தம் உள்ளத் தில் கொண்டு, `வாரு மன்னும்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வாழ்வு பெற்றார்.

குறிப்புரை :

`வாரு மன்னும்\' (தி.3 ப.29) எனத் தொடங்கும் பதிகம் கொல்லிப் பண்ணிலமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 351

அங்கப் பதிநின் றெழுந்தருளி
அணிதிரு வாலம் பொழில்வணங்கிப்
பொங்கு புனற்பொன்னிப் பூந்துருத்திப்
பொய்யிலி யாரைப் பணிந்துபோற்றி
எங்கும் நிகழ்திருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள எப்பதி யும்தொழுது
செங்கயல் பாய்வயல் ஓடைசூழ்ந்த
திருக்கண்டி யூர்தொழச் சென்றணைந்தார்.

பொழிப்புரை :

அவ்விடத்தே அப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று, அழகிய திருஆலம்பொழிலினை வணங்கிப் பொங்கும் நீர் வளம் வாய்ந்த காவிரி நடுவிலுள்ள `திருப்பூந்துருத்தி\' என்ற பதியுள் வீற்றிருக்கும் `பொய்யிலியப்பரைப் ` பணிந்து போற்றி, எங்கும் நிலவி வரும் திருத்தொண்டர் கூட்டம் எதிர் வந்து அழைத்துச் செல்ல, அம்மருங்குள்ள பலபதிகளையும் வணங்கிச் சென்று, செங்கயல்கள் பாய்வதற்கு இடமான வயல்களும் ஓடைகளும் சூழ்ந்த `திருக் கண்டியூரை\' வணங்குவதற்குச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

திருவாலம்பொழிலிற்கும் திருப்பூந்துருத்திக்கும் பதிகங்கள் கிடைத்தில. எப்பதியும் என்பன திங்களுர் திருநெய்த்தானம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 352

கண்டியூர் வீரட்டர் கோயிவெய்திக்
கலந்தடி யாருடன் காதல்பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்திறைஞ்சிக்
குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கிநின்று
தொடுத்த இசைத்தமிழ் மாலைதன்னில்
அண்டர் பிரான்தன் அருளின்வண்ணம்
அடியார் பெருமையிற் கேட்டருளி.

பொழிப்புரை :

திருக்கண்டியூர் வீரட்டனாரின் கோயிலை அடைந்து, சூழவந்த அடியார்களுடன் அன்பு மேலிட, விருப்பத்துடன் கீழே விழுந்து வணங்கி, பொருந்திய மகிழ்ச்சியினால் திருத்தொண்டர் குழாத்தினைப் பார்த்து நின்று, தாம் பாடிய இசைத் தமிழ் மாலையான திருப்பதிகத்தில், சிவபெருமானின் திருவருள் வண்ணங்கள் பலவற் றையும் அடியவர் வாயிலாக வெளிப்படுத்தும் வகையால் வினவியருளி,

குறிப்புரை :

திருக்கண்டியூரில் அருளியது, `வினவினேன் அறியா மையில்\' (தி.3 ப.38) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகம் முழுமையும் பெருமானின் திருமேனியிற் காணும் அணிகலன்கள் பற்றியும், அவன்மேற் கொண்ட அருட்செயல் களில் சிலவற்றைப் பற்றியும் அடியவர்களிடம் அவற்றிற்கான காரணங்களை வினவுவதாக அமைந்துள்ளது. இவ்வாறான பதி கத்தை வினாவுரைப் பதிகம் என்பர்.

பண் :

பாடல் எண் : 353

வினவி எடுத்த திருப்பதிகம்
மேவு திருக்கடைக் காப்புத்தன்னில்
அனைய நினைவரி யோன்செயலை
அடியாரைக் கேட்டு மகிழ்ந்ததன்மை
புனைவுறு பாடலில் போற்றிசெய்து
போந்து புகலிக் கவுணியனார்
துனைபுனற் பொன்னித் திரைவலங்கொள்
சோற்றுத் துறைதொழச் சென்றடைவார்.

பொழிப்புரை :

அங்ஙனம் `வினவினேன்\' எனத் தொடங்கிய திருப்பதிகத்தில் பொருந்திய திருக்கடைக்காப்பினில் நினைத்தற்கரிய சிவபெருமானின் அருட்செயலின் திறங்களை, அடியாரைக் கேட்டு மகிழ்ந்த இயல்பைக் கூறிய பாடலால் துதித்து, மேற்சென்று, சீகாழியில் தோன்றிய கவுணியர் குலத் தேன்றலார் விரைவாய்ச் செல்லும் நீரையுடைய காவிரியின் அலைகள் வலம் கொண்டு செல்கின்ற திருச்சோற்றுத்துறையினைச் சென்று அணைவாராகி,

குறிப்புரை :

திருக்கண்டியூர் பதிகத் திருக்கடைக்காப்பில் `கருத் தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை அருத் தனைத்திறம் அடியார்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை\' என வரு வது கொண்டு ஆசிரியர் இவ்வாறு அருளிச் செய்வாராயினர்.

பண் :

பாடல் எண் : 354

அப்பர்சோற் றுத்துறை சென்றடை வோம்என்
றொப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்
செப்பி யேசென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில்முன்.

பொழிப்புரை :

`அப்பரின் திருச்சோற்றுத் துறையைச் சென்று அடைவோம்\' என்று முடியும் கருத்துடையதாய், ஒப்பிகந்த வளமை மிகுந்த தமிழ் மாலையை உள்ளத்தில் கொண்ட ஒருமைப் பாட்டுடன் பாடிச் சென்று, பகைவரின் முப்புரங்களையும் எரித்த முதல்வரின் கோயில் முன்பு பிள்ளையார் சென்றனர்.

குறிப்புரை :

இப்பதியை அணுகவரும் நிலையில் அருளிய பதிகம் `செப்ப நெஞ்(தி.1 ப.28) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும். பாடல்தொறும் திருச்சோற்றுத்துறை சென்றடை வோம் எனும் குறிப்புடையதாய் அமைந்துள்ளது. முதற்பாடலில் `அப்பர் சோற்றுத்துறை சென்றடைவோம்\' என வருவதை ஆசிரியர் எடுத்து மொழிந்துள்ளார்.

பண் :

பாடல் எண் : 355

தொல்லை நீள்திருச் சோற்றுத் துறையுறை
செல்வர் கோயில் வலங்கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்கநஞ் சுண்ட பிரானடி
எல்லை யில்அன்பு கூர இறைஞ்சினார்.

பொழிப்புரை :

நீண்ட பழமையுடைய திருச்சோற்றுத்துறையுள் எழுந்தருளிய அருட் செல்வரான சிவபெருமானின் கோயிலை வலம் வந்து, வணங்கித் தேவர்களின் துன்பங்களைத் தீர்க்கும் பொருட்டு நஞ்சினை உண்ட பெருமானின் திருவடிகளை அளவற்ற அன்பு பெருக வணங்கினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 356

இறைஞ்சி ஏத்தி எழுந்துநின் றின்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவிஅங்
குறைந்து வந்தடி யாருட னெய்தினார்
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில்.

பொழிப்புரை :

வணங்கிப் போற்றி எழுந்து நின்று இனிய பண் ணிசை நிறைந்த செந்தமிழ்ப் பதிகம் பாடி, அப்பதியில் தங்கியவர், அடியவருடன் கூடிச் சிறந்த சீர்மை மிகுந்த திருவேதிகுடியில் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

திருச்சோற்றுத்துறை இறைவர் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 357

வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்
தோதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.

பொழிப்புரை :

மறைகளை ஓதும் மறையவர் வாழும் திருவேதி குடியில் முதல்வரின் கோயிலை அடைந்து, நன்மை பெருகும் திருவடி மலர்களை வணங்கி எழுந்து நின்று, தமிழால் மறைகளினும் சிறந்த இசையையுடைய திருப்பதிகத்தை அருளினார்.

குறிப்புரை :

இவ்விடத்து அருளிய பதிகம், `நீறுவரி\' (தி.3 ப.78) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 358

எழுது மாமறை யாம்பதி கத்திசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்
தொழுது போந்துவந் தெய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.

பொழிப்புரை :

எழுகின்ற பெருமறையான இசையுடைய திருப்பதிகத்தை நிறைவாகப் பாடி, இறைவரை வணங்கி, மேற்சென்று அழகிய சோலைகளால் சூழப்பட்ட குற்றம் அற்ற சிறப்புடைய `திரு வெண்ணி\' என்னும் திருப்பதியை அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 359

வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலில் நாள்மதிக்
கண்ணி யார்தங் கழலிணை போற்றியே
பண்ணில் நீடும் பதிகமும் பாடினார்.

பொழிப்புரை :

திருவெண்ணிப் பதியில் எழுந்தருளியிருக்கும் ஆனேற்றினையுடைய இறைவரின் திருக்கோயிலை அடைந்து, உள் ளம் பொருந்தி அன்பால் இளம்பிறைக் கண்ணியை அணிந்த இறை வரின் திருவடியைப் போற்றிப் பண்ணால் மிக்க திருப்பதிகத்தையும் பாடினார்.

குறிப்புரை :

திருவெண்ணியூரில் அருளியது `சடையானை\' (தி.2 ப.14) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிகமும் - பதிகமுன் என்றும் பாடம்.

பண் :

பாடல் எண் : 360

பாடி நின்று பரவிப் பணிந்துபோய்
ஆடும் அங்கணர் கோயில்அங் குள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறைபுகழ் வேதியர்.

பொழிப்புரை :

பதிகம் பாடி நின்று போற்றி வணங்கி, மேற் சென்று அருட்கூத்தியற்றும் இறைவர் வீற்றிருக்கும் அம்மருங்கில் உள்ளனவாகிய கோயில்களைச் சென்று வணங்கிச் சீகாழியில் தோன் றிய நிறைந்த புகழையுடைய பிள்ளையார் மகிழ்ச்சி அடைந்தார்.

குறிப்புரை :

கோயில் அங்குள்ளன என்றது, திருவெண்ணியூரில் இருந்து திருச்சக்கரப்பள்ளி வரையிலான இடங்களில் உள்ள கோயில் களாம். பதிகங்கள் எவையும் கிடைத்தில. வெண்ணிக் குயத்தியார் எனும் சங்க காலப் பெண்பாற் புலவர் இவ்வூரினர் என்பதும் குறிப் பிடத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 361

மொய்தருஞ் சோலைசூழ் முளரிமுள் ளடவிபோய்
மெய்தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்தசங் கரர்திருச் சக்கரப் பள்ளிமுன்
பெய்தவந் தருளினார் இயலிசைத் தலைவனார்.

பொழிப்புரை :

நெருங்கிய சோலைகள் சூழ்ந்த தாமரைத் தண்டுகளின் முட்காடு எனப்படுகின்ற பொய்கைகள் மிக்க மருத நிலத் தில் சென்று, மெய்ப்பொருளை உணர்ந்து செய்யும் அறிவும் அன்பும் இல்லாத தக்கனின் வேள்வியை அழியச் செய்த சிவபெருமான் வீற் றிருக்கும் `திருச்சக்கரப்பள்ளி\' என்ற பதியில், இயல் இசை வல்ல பிள்ளையார் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

`வெள்ளத் தனைய மலர்நீட்டம்\' (குறள், 595) என்ப வாகலின், அத்தண்டுகள் காடாக மண்டிக் கிடக்கும் காடுகள் குளங்கள் எனப்பட்டன.

பண் :

பாடல் எண் : 362

சக்கரப் பள்ளியார் தந்தனிக் கோயிலுள்
புக்கருத் தியினுடன் புனைமலர்த் தாள்பணிந்
தக்கரைப் பரமர்பால் அன்புறும் பரிவுகூர்
மிக்கசொல் தமிழினால் வேதமும் பாடினார்.

பொழிப்புரை :

திருச்சக்கரப் பள்ளியில் வீற்றிருக்கும் இறைவ ரின் ஒப்பற்ற கோயிலுள் புகுந்து, விருப்பத்துடன் அழகிய மலரனைய திருவடிகளை வணங்கி, எலும்பு மாலையைச் சூடிய அரையை உடைய இறைவரிடத்து, அன்புமிகும் ஆற்றல் மிக்க சொற்களாலான தமிழால், நான்மறைப் பொருள்களையும் உள்ளீடாகக் கொண்ட திருப்பதிகத்தையும் பாடியருளினார்.

குறிப்புரை :

திருசக்கரப்பள்ளியில் அருளிய பதிகம் `படையினார்\' (தி.3 ப.37) என்று தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 363

தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் னிடையகன்
றலைபுனற் பணைகளின் அருகுபோய் அருமறைப்
புலனுறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.

பொழிப்புரை :

அரிய மறையின் உட்பொருளான ஞானத்தைத் தம் அறிவில் நிரம்பப் பெற்ற பிள்ளையார், சிவபெருமானின் திருச் சக்கரப் பள்ளியினின்றும் நீங்கி, அலையும் நீர் பரந்த வயல்களின் அருகாகச் சென்று, `திருப்புள்ளமங்கை\' என்ற திருப்பதியில் விளங் கும் `திருவாலந்துறை\' எனப் பெயர் பெறும் கோயிலை அடைந்தார்.

குறிப்புரை :

திருப்புள்ளமங்கை ஊர்ப்பெயர். ஆலந்துறை கோயில் பெயர்.

பண் :

பாடல் எண் : 364

மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்னடித் தலம்உறப் புரிவொடுந் தொழுதெழுந்
தின்னிசைத் தமிழ்புனைந் திறைவர்சே லூருடன்
பன்னுபா லைத்துறைப் பதிபணிந் தேகினார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற அக்கோயிலில் எழுந்தருளி இருக் கும் மான் கன்றை ஏந்திய கையையுடைய இறைவரின், பொன்னார் திரு வடிகளை அன்புடன் தொழுது, எழுந்து, இனிய இசையையுடைய தமிழ்ப் பதிகத்தைப் பாடி, இறைவர் வீற்றிருக்கின்ற திருச்சேலூரை வணங்கிப் புகழ்ந்து, சொல்லப் பெறும் `திருப்பாலைத் துறை\' என்ற பதியையும் வணங்கினார்.

குறிப்புரை :

திருப்புள்ளமங்கையில் அருளியது, `பாலுந்துறு திரளா யின\' (தி.1 ப.16) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருச்சேலூரிலும், திருப்பாலைத்துறையிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 365

காவின்மேல் முகிலெழுங் கமழ்நறும் புறவுபோய்
வாவிநீ டலவன்வாழ் பெடையுடன் மலர்நறும்
பூவின்மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்
சேவின்மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.

பொழிப்புரை :

பொய்கைகளில் பொருந்திய ஆண் நண்டுகள், பெண் நண்டுகளுடன், மலரும் நல்ல மணமுடைய தாமரை மலரின் மேல் விரும்பி இருத்தற்கிடனாய சீகாழித் தலைவரான பிள்ளையார், சோலைகளின் மீது மேகங்கள் தவழ்கின்ற மணம் கமழும் நல்ல முல்லை நிலத்தின் வழியிலே சென்று, ஆனேற்று ஊர்தியின் மேல் எழுந்தருளும் இறைவரின் திருநல்லூரை வந்து அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 366

மன்றலங் கழனிசூழ் திருநலூர் மறைவலோர்
துன்றுமங் கலவினைத் துழனியால் எதிர்கொளப்
பொன்தயங் கொளிமணிச் சிவிகையிற் பொலிவுறச்
சென்றணைந் தருளினார் சிரபுரச் செம்மலார்.

பொழிப்புரை :

பிள்ளையார், மணம்கமழும் அழகிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வாழும் மறையவர்கள், நெருங்கிய மங்கலப் பொருள்களின் நிறைவுடனே வரவேற்கப் பொன் விளங்கும் ஒளி பொருந்திய முத்துச் சிவிகையின் மீது அழகு விளங்கச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 367

நித்திலச் சிவிகைமேல் நின்றிழிந் தருளியே
மொய்த்தஅந் தணர்குழாம் முன்செலப் பின்செலும்
பத்தரும் பரிசனங் களுமுடன் பரவவே
அத்தர்தங் கோபுரந் தொழுதணைந் தருளினார்.

பொழிப்புரை :

முத்துச் சிவிகையினின்றும் இழிந்த பிள்ளையார், சூழ இருந்த அந்தணர்கள் முன் செல்லப் பின் செல்கின்ற அடியவர் களும் அருகிருந்து பணிசெய்து வரும் தொண்டர்களும் தம்முடன் ஒருங்கிருந்து போற்றிவர, இறைவரின் கோபுரத்தை வணங்கிக் கோயிலுக்குள் சென்றார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 368

வெள்ளிமால் வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினில் பெருகுசீர்
வெள்ளஆ னந்தமெய் பொழியமே லேறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.

பொழிப்புரை :

வெள்ளி மலையைப் போல விளங்கும் ஒளியை யுடைய அக்கோயிலைப் பிள்ளையார் வலம் வரும் பொழுது, பெரு கிய சிறப்பு மிக்க ஆனந்தக் கண்ணீர் வழிந்து திருமேனி எங்கும் பொழிய, அம்மாடக் கோயிலின் மேல் ஏறிச் சென்று, கங்கை நீர் பெரு கப் பொருந்திய சடையையுடைய இறைவரை வணங்கித் திருமுன்பு நின்று வணங்குவாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 369

பரவுசொற் பதிகமுன் பாடினார் பரிவுதான்
வரவயர்த் துருகுநேர் மனனுடன் புறம்அணைந்
தரவுடைச் சடையர்பே ரருள்பெறும் பெருமையால்
விரவும்அப் பதியமர்ந் தருளியே மேவினார்.

பொழிப்புரை :

போற்றத்தகும் சொற்களாலான பதிகத்தினைப் பாடியவராய், மிக்க அன்புடன் மேலிட்டதால் தம்மையும் மறந்து உருகும் நேர்மைபெற்ற உள்ளத்துடன் கோயில் புறத்தை அடைந்து பாம்புகளைப் பூண்ட சடையையுடைய இறைவரின் திருவருளைப் பெறும் பெருமையால், இறைவர் வீற்றிருக்கும் அத்திருப்பதியில் விரும்பி வீற்றிருந்தார்.

குறிப்புரை :

திருநல்லூரில் பாடியது, `வண்டிரிய\' (தி.3 ப.83) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல் களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 370

அன்ன தன்மையில் அப்பதி
யினில் அமர்ந் தருளி
மின்னு செஞ்சடை விமலர்தாள்
விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும்
பலமுறை பாடி
நன்னெ டுங்குல நான்மறை
யவர்தொழ நயந்தார்.

பொழிப்புரை :

அவ்வாறு அப்பதியில் தங்கி, மின் போன்ற சிவந்த சடையையுடைய இறைவரின் திருவடிகளை விருப்புடன் வணங்கிப் புகழ்ந்து சொல்லப்படுகின்ற இனிய இசையுடன் கூடிய பல்வேறு யாப்பமைவுகளும்இசைக் கட்டளைகளும் பொருந்தப் பாடி, நன்மை நீடிய மறையவர்கள் வணங்கி நிற்ப, அங்குத் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

இவ்வாறாய இன்னிசைப் பதிகம் பல பாடி என்றாரே னும், இதுபொழுது இசைத்தருளியனவாகக் கிடைத்துள்ள பதிகங்கள் இரண்டேயாம். 1. `கொட்டும் பறை\': (தி.1 ப.86) - குறிஞ்சிப் பண். 2.`பெண்ணமரும்\': (தி.2 ப.57) - காந்தாரப் பண்.

பண் :

பாடல் எண் : 371

நீடும் அப்பதி நீங்குவார்
நிகழ்திரு நல்லூர்
ஆடுவார் திரு அருள்பெற
அகன்றுபோந் தங்கண்
மாடு முள்ளன வணங்கியே
பரவிவந் தணைந்தார்
தேடும் மால்அயற் கரியவர்
திருக்கரு காவூர்.

பொழிப்புரை :

நிலை பெற்ற அப்பதியினின்றும் நீங்குபவரான பிள்ளையார், விளங்கும் அத்திருநல்லூரில் எழுந்தருளிக் கூத்தியற்றும் இறைவரின் திருவருளைப் பெற்று, அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்று, அருகிலுள்ள திருப்பதிகளை வணங்கிய வண்ணம், தம்மைத் தேடிய திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரான இறைவரின் திருக்கருகாவூரில் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

மாடும் உள்ளன பதிகள் எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 372

வந்து பந்தர்மா தவிமணங்
கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழலிணை தாழ்ந்தே
அந்த மில்லவர் வண்ணம்ஆர்
அழல்வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந்தமிழ்ப் பதிகம்.

பொழிப்புரை :

வந்து, பந்தலில் படர்ந்து ஏறிய முல்லைகள் மணம் கமழ்கின்ற `திருக்கருகாவூரில்\' எழுந்தருளியிருக்கும் இசையமைதி உடைய பெருமறைகளைத் தந்த இறைவரின் திருவடிகளை வணங்கி, என்றும் அழியாமல் நிலைபெற்றிருக்கும் சிவபெருமானின் நிறம் தீயின் நிறமேயாம் என்ற கருத்தும் முடிபும் உடையதாய செந்தமிழ்ப் பதிகத்தை உள்ளம் மகிழப் பாடினார்.

குறிப்புரை :

இப்பதியில் பாடியருளிய பதிகம் `முத்தி லங்கும்\' (தி.3 ப.46) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்ததாகும். பதிகப் பாடல்தொறும் `இறைவனின் வண்ணம் அழல் வண்ணமே\' என்னும் கருத்து முடிபுடையதாக அமைந்திருத்தலின், ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய்வாராயினார்.

பண் :

பாடல் எண் : 373

பதிக இன்னிசை பாடிப்போய்ப்
பிறபதி பலவும்
நதிய ணிந்தவர் கோயில்கள்
நண்ணியே வணங்கி
அணைந்தனர் மன்றுள்
அதிர்சி லம்படி யார்மகிழ்
அவளிவ ணல்லூர்.

பொழிப்புரை :

இவ்வாறாய இன்னிசைப் பதிகங்களைப் பாடிச் செல்பவர் பிற பதிகளிலுள்ள கங்கையாற்றை அணிந்த சிவபெரு மானின் கோயில்களை அடைந்து வணங்கிப் பொன்னம்பலத்தில் கூத்தாடுகின்ற ஒலிக்கும் சிலம்பினையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற `திருஅவள்இவள்நல்லூரை\' இனிய முத்தமிழும் பொருந்திய திருவாக்கையுடைய பிள்ளையார் அணைந்தார்.

குறிப்புரை :

`பிற பதிபலவும்\' எனக் குறிக்கப்பட்டன தென்குடித் திட்டை முதலாயினவாகலாம். தென்குடித்திட்டையில் அருளிய பதிகம் `முன்னை நான்மறை\' (தி.3 ப.35) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 374

மன்னும் அப்பதி வானவர்
போற்றவும் மகிழ்ந்த
தன்மை யார்பயில் கோயிலுள்
தம்பரி சுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட
ஏத்திமுன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப்பதி பலவும்அப்
பாற்சென்று பணிவார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற அத்திருப்பதியில் தேவர்களும் போற்ற மகிழ்ந்து எழுந்தருளும் இயல்பு கொண்ட இறைவரின் கோயிலுக்குள் புகுந்து, `தம்பரிசு உடையார்\' என்ற பெயரும் வெளிப் பட வைத்துப் போற்றித் திருமுன்பு வணங்கிச் சொல்லுதற்குரிய சிறப்புடைய பதிகள் பலவற்றிலும் சென்று வணங்குபவராய்,

குறிப்புரை :

திருஅவள்இவள்நல்லூரில் அருளிய பதிகம் `கொம்பிரிய\' (தி.3 ப.82) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணி லமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் முதற் பாடலில் தம்பரிசி னோடு சுடுநீறு தரவந்து இடபம் ஏறி, எனவருவதால் தம்பரிசுடையார் என்ற நாமமும் வெளிப்பட என்றார். இறைவர், தம்பரிசுடையார் சாட்சிநாதர் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகின்றார்.. ஈண்டுப் பன்னுசீர்ப் பதிபலவும் என்றவை எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 375

பழுதில் சீர்த்திருப் பரிதிநன்
னியமமும் பணிந்தங்
கெழுது மாமறை யாம்பதி
கத்திசை போற்றி
முழுது மானவர் கோயில்கள்
வணங்கியே முறைமை
வழுவில் சீர்திருப் பூவனூர்
வணங்கிவந் தணைந்து.

பொழிப்புரை :

குற்றங்கள் இல்லையாகச் செய்யும் சிறப்புடைய `திருப்பரிதி நியமத்ததை\' வழிபட்டு, அங்கே எழுதும் மறையாகும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, எல்லாமாய் இருக்கும் சிவபெருமானின் திருக்கோயிலை வணங்கி, முறைமையினின்றும் தவறாத சிறப்புடைய `திருப்பூவனூரை\' வந்து சேர்ந்து,

குறிப்புரை :

திருப்பரிதி நியமத்தில் அருளிய பதிகம் `விண் கொண்ட\' (தி.3 ப.104) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பதிகமாகும். வழுவில் சீர் - வழுவி லார் எனவும் பாடம்.

பண் :

பாடல் எண் : 376

பொங்கு காதலிற் போற்றிஅங்
கருளுடன் போந்து
பங்க யத்தடம் பணைப்பதி
பலவுமுன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்தொலி
எடுக்கவந் தணைந்தார்
அங்க ணர்க்கிட மாகிய
பழம்பதி ஆவூர்.

பொழிப்புரை :

வளரும் விருப்ப மிகுதியினால் போற்றி அவ் விடத்தினின்றும் நீங்கிச் சென்று, தாமரை மலர்களையுடைய பெரிய வயல்கள் சூழ்ந்த பதிகள் பலவும் போற்றி, அன்பர்கள் யாண்டும் ஒலிபெருக வாழ்த்தி வரச் சிவபெருமான் அமர்ந்தருளும் பழைய பதியான `திரு ஆவூரினை\' அடைந்தார்.

குறிப்புரை :

திருப்பூவனூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. பதிகள் பலவும் என்பன திருவெண்ணியூர், திருஅரதைப்பெரும்பாழி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருவெண்ணி யூருக்கு முன்னரே சென்று தொழுததாக 228ஆவது பாடலில் காணலாம். திருஅரதைப்பெரும்பாழியைப் பின்னரும் வழிபட்டதாக 403ஆவது பாடலில் காணலாம். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 377

பணியும் அப்பதிப் பசுபதீச்
சரத்தினி திருந்த
மணியை உள்புக்கு வழிபடும்
விருப்பினால் வணங்கித்
தணிவில் காதலில் தண்டமிழ்
மாலைகள் சாத்தி
அணிவி ளங்கிய திருநலூர்
மீண்டும்வந் தணைந்தார்.

பொழிப்புரை :

பணியும் அப்பதியில், பசுபதீச்சரக் கோயிலில் இனிதாக வீற்றிருந்தருளும் மணியான இறைவரைக் கோயிலுள் புகுந்து வழிபடும் விருப்பத்தினால் வணங்கிக் குறைவில்லாத அன்புடன் குளிர்ந்த தமிழ் மாலைகள் பாடிச் சாத்தி, அழகுடைய திருநல்லூரின்கண் மீண்டும் வந்தடைந்தார்.

குறிப்புரை :

திருஆவூர் - ஊர்ப்பெயர். பசுபதீச்சரம் - கோயில் பெயர். இங்கு அருளிய பதிகம் `புண்ணியர்\' (தி.1 ப.8) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 378

மறை விளங்கும்அப் பதியினில்
மணிகண்டர் பொற்றாள்
நிறையும் அன்பொடு வணங்கியே
நிகழ்பவர் நிலவும்
பிறைய ணிந்தவர் அருள்பெறப்
பிரசமென் மலர்வண்
டறைந றும்பொழில் திருவலஞ்
சுழியில்வந் தணைந்தார்.

பொழிப்புரை :

மறைகள் விளங்குதற்கு இடமான அப்பதியில் கரிய கழுத்தினையுடையவரான இறைவரின் பொன்னடிகளை நிறைவான அன்புடன் வணங்கியவாறே எழுந்தருளும் ஆளுடைய பிள்ளையார், பிறைசூடிய இறைவரின் நிலைபெற்ற திருவருளைப் பெற்று, உலகம் உய்வு பெற, தேன் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கின்ற மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியின்கண் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 379

மதிபு னைந்தவர் வலஞ்சுழி
மருவுமா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ்
விரகர்த முன்வந்
தெதிர்கொள் போழ்தினில் இழிந்தவர்
எதிர்செல மதியைக்
கதிர்செய் வெண்முகிற் குழாம்புடை
சூழ்ந்தெனக் கலந்தார்.

பொழிப்புரை :

பிறைச் சந்திரனைச் சூடிய இறைவர் திருவலஞ் சுழியில் வாழ்கின்ற பெருந்தவத்தின் முதிர்ச்சியுடைய அன்பர்கள் திரண்டு முத்தமிழ்ச் செல்வரான பிள்ளையாரின் முன்வந்து, மதியை ஒளி பொருந்திய வெண்மேகங்கள் சுற்றிச் சூழ்ந்தது போல, எதிர் கொண்டனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 380

கலந்த அன்பர்கள் தொழுதெழக்
கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கம லக்கரம்
குவித்துடன் அணைவார்
வலஞ்சு ழிப்பெரு மான்மகிழ்
கோயில்வந் தெய்திப்
பொலங்கொள் நீள்சுடர்க் கோபுரம்
இறைஞ்சியுட் புகுந்தார்.

பொழிப்புரை :

திரண்டு வந்த அன்பர்கள் கீழே வீழ்ந்து தொழுது எழுந்து நிற்க, கவுணியர் தலைவரான பிள்ளையார், அப்பொழுது அலர்ந்த செந்தாமரை மலர் போன்ற கைகளைக் கூப்பி அணைபவ ராய்த் திருவலஞ்சுழி இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் கோயிலைச் சேர்ந்து, பொன்மயமாக ஒளிவிட்டு விளங்கும் கோபு ரத்தை வணங்கி உள்ளே புகுந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 381

மருவலார்புரம் முனிந்தவர்
திருமுன்றில் வலங்கொண்
டுருகும் அன்புடன்உச்சிமேல்
அஞ்சலி யினராய்த்
திருவ லஞ்சுழி யுடையவர்
சேவடித் தலத்தில்
பெருகும்ஆதர வுடன்பணிந்
தெழுந்தனர் பெரியோர்.

பொழிப்புரை :

பகைவரின் முப்புரங்களையும் எரித்த இறை வரின் திருமுற்றத்தை வலம் வந்து, உளம் உருகும் அன்புடனே, தலையின் மேல் கைகுவித்து வணங்கித் திருவலஞ்சுழி இறைவரின் திருவடிகளில் பெருகும் அன்புடனே பெரியவரான சம்பந்தர் பணிந்து எழுந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 382

ஞானபோனகர் நம்பர்முன்
தொழுதெழு விருப்பால்
ஆனகாதலில் அங்கண
ரவர்தமை வினவும்
ஊனமில்இசை யுடன்விளங்
கியதிருப் பதிகம்
பானலார்மணி கண்டரைப்
பாடினார் பரவி.

பொழிப்புரை :

ஞானப்பாலையுண்ட பிள்ளையார் சிவபெரு மானின் திருமுன்பு தொழுது எழும் விருப்பத்தினால் விளைந்த ஆசையினால் இறைவரை முன்னிலைப்படுத்தி, வினவுகின்ற கருத்தை உடைய குற்றம் அற்ற இசையுடனே விளங்கும் திருப்பதிகத்தைக் குவளை மலர் போன்ற கரிய கழுத்தினையுடைய இறைவரை வணங் கிப் போற்றினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `விண்டெலாமலர்\' (தி.2 ப.2) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிள்ளையார் இறைவரை நோக்கியும், அடியவரை நோக்கியும் வினவும் வினாவுரைப் பதிகங்கள் பல. அவ்வினாக்களுள் ஒன்றாய் வருவதும், வேறு வேறாய் வருவனவுமாக அமையும். இப்பதிகத்தில் இறைவரை நோக்கிப் பாடல் தொறும் பலிதேர்ந்து உழல்வது எற்றுக்கு? என ஒரே வினாவாய் அமைந்திருக்கும் பாங்கு அறியத்தக்கது.

பண் :

பாடல் எண் : 383

புலங்கொள் இன்தமிழ் போற்றினர்
புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப்பொன்னி சூழ்திருப்
பதியினி லிருந்து
நலங்கொள் காதலின் நாதர்தாள்
நாள்தொறும் பரவி
வலஞ்சு ழிப்பெருமான் தொண்டர்தம்
முடன் மகிழ்ந்தார்.

பொழிப்புரை :

உளங்கொளற்குரிய அருளுரையாக நன்மக்கள் உள்ளத்தில் கொள்ளும் இனிய இசைத் தமிழ்ப் பதிகங்ளைச் சாத்தி வணங்கியவராய்க் கோயிலின் வெளியே போந்து, பெருகிவரும் நீரையுடைய காவிரி சூழ்ந்த அப்பதியில் தங்கியிருந்து, நன்மை பொருந்திய அன்பினால் இறைவரின் திருவடிகளை நாள்தோறும் வணங்கிப் பெருமானின் தொண்டர்களுடனே கூடி மகிழ்வுடனிருந்து வந்தார்.

குறிப்புரை :

இப்பதியில் இருந்தருளிய பொழுது பாடியருளிய பதிகங்கள் இரண்டாம். 1) `என்ன புண்ணியம் செய்தனை\' (தி.2 ப.106) - நட்டராகம். 2) `பள்ளமதாய\' (தி.3 ப.106) - பழம்பஞ்சுரம். இவ்விரு பதிகங்களிலும் வரும் முதற் பாடல்கள், பிள்ளையார் தம் நெஞ்சிற்கும் நம்மனோர்க்குமாகக் கூறிய அருளுரைகளாக அமைந் துள்ளன. இரண்டாவது பதிகத்தில் 3 முதல் 6 முடிய உள்ள பாடல்களும் அவ்வாறே அமைந்துள்ளன. ஆதலின் `புலங்கொள் இன்தமிழ்\' எனப் போற்றினர் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 384

மகிழ்ந்த தன்தலை வாழும்அந்
நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர்
ஓரையுட் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும்ஏழ்
கடல்நீர்மை குன்ற
வெகுண்டு வெங்கதிர்பரப்பலின்
முதிர்ந்தது வேனில்.

பொழிப்புரை :

மகிழ்வுடன் அப்பதியில் அவர் வாழ்ந்து வரு கின்ற நாள்களில், வானத்தில் விளங்கிய கதிரவன், மிதுன ஓரையுள் சேரப் பொருந்தி, ஏழ்கடலும் தம் நீர்மை குறையுமாறு சினத்துடன் வெம்மையான கதிர்களைப் பரப்புதலால் அக்காலம் முதுவேனிற் பருவமாகச் சிறந்தது.

குறிப்புரை :

வானவீதியிற் செல்லும் கதிரவன் அவ்வவ்விடத்தும் பொருந்திவரும் ஓரைகளாலேயே திங்கள் பெயர்கள் வேறுபடுகின் றன; பருவநிலைகள் மாறுபடுகின்றன. அவ்வகையில் கதிரவன் மிதுன ஓரையில் சேரும்பொழுது வரும் பருவம் முதிர்வேனிற் பருவமாகும். முதிர்ந்தது வேனில் - முதுவேனில் வந்தது. முதிர்ந்தது வேனில் என்றது சமாதியணியாம். இப்பருவத்திற்குரிய திங்கள் ஆனியும் ஆடியுமாகும். `ஏழ்கடல் நீர்மை குன்ற\' என்றது `நெடுங்கட லும் தன்நீர்மை குன்றும்\' (குறள், 17) எனும் குறளை முகந்து நிற்ப தாகும்.

பண் :

பாடல் எண் : 385

தண்பு னற்குறிர் கால்நறுஞ்
சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாசமென்
மலர்பொதி பனிநீர்
நண்பு டைத்துணை நகைமணி
முத்தணி நாளும்
உண்ப மாதுரி யச்சுவை
உலகுளோர் விரும்ப.

பொழிப்புரை :

குளிர்ச்சியுடைய நீர்க் கலப்பால் குளிர்ந்து வீசும் காற்றையும், மணம் பொருந்திய சந்தனத்தையும், மணத்தால் ஊறுபாடு அற்ற நறுமணமுடைய பூக்களுள் பொதிந்த பனிநீரையும், ஒன்றற் கொன்று இயைபுடைய ஒளிபொருந்திய இணைமணிகளால் இயைந்த முத்து மாலைகளையும், உண்ணக் கூடிய சுவைப் பண்டங்களையும் உலகத்தவர் விரும்புமாறு வேனில்காலம் முதிர்ந்தது.

குறிப்புரை :

ஒன்றற் கொன்று இயைபுடைய இணையான மணிகள். நண்புடைத் துணை மணி - அன்புடைய வாழ்க்கைத் துணை என்றலும் ஒன்று. முதுவேனிற்காலத்தில் விரும்புதற்குரிய நுகர்ச்சிப் பொருள்களை ஒருங்கு குறித்திருக்கும் அருமை எண்ணற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 386

அறல்மலியுங் கான்யாற்றின்
நீர்நசையால் அணையுமான்
பெறலரிய புனலென்று
பேய்த்தேரின் பின்தொடரும்
உறையுணவு கொள்ளும்புள்
தேம்பஅயல் இரைதேரும்
பறவைசிறை விரித்தொடுங்கப்
பனிப்புறத்து வதியுமால்.

பொழிப்புரை :

கரியமணல் மிக்க காட்டினிடம் நீர்பெறும் விருப்பத்தால் சேர்ந்த மான் கூட்டம் (அங்கே நீரைப் பெறாததால்) பெறுதற்கு அரிய நீர் என்ற தோற்றம் பற்றி மயங்கிக் கானல்நீரின் பின்னால் தொடர்ந்து செல்லும்; மழைத் துளிகளை உணவாகக் கொள்ளும் சாதகப் பறவைகள், உணவு பெறாது வருந்தி வேறு உணவைத் தேடித் திரியும். பறவைகள் சிறகுகளை விரித்துக் கொண்டு வெம்மை பொறுக்க இயலாது தாம் ஒடுங்குவதற்குத் தக்க குளிர்ந்த இடங்களில் தங்கும்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 387

நீணிலைமா ளிகைமேலும்
நிலாமுன்றின் மருங்கினிலும்
வாணிழனற் சோலையிலும்
மலர்வாவிக் கரைமாடும்
பூணிலவு முத்தணிந்த
பூங்குழலார் முலைத்தடத்தும்
காணும்மகிழ்ச் சியின்மலர்ந்து
மாந்தர்கலந் துறைவரால்.

பொழிப்புரை :

உயர்ந்தோங்கும் மாளிகைகளின் மீதும், நிலா முற்றங்களின் அருகிலும், ஒளியுடைய நிழலைப் பரப்பும் சோலை யிலும், மலர்ப் பொய்கைகளின் கரைகளிலும், முத்துக்களைக் கொண்ட பூங்குழலையுடைய மாதர்களின் கொங்கைத் தடங்களிலும், ஆடவர் மகிழ்ந்துறைவர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 388

மயிலொடுங்க வண்டாட
மலர்க்கமல முகைவிரியக்
குயிலொடுங்காச் சோலையின்மெல்
தளிர்கோதிக் கூவியெழத்
துயிலொடுங்கா உயிரனைத்தும்
துயில்பயிலச் சுடர்வானில்
வெயிலொடுங்கா வெம்மைதரும்
வேனில்விரி தருநாளில்.

பொழிப்புரை :

மயில்கள் ஒடுங்கவும், வண்டுகள் சூழ்ந்து முரலவும், தாமரை அரும்புகள் மலரவும், வளங்குன்றாத சோலை களின் மெல்லிய தளிரைக் கோதிக் குயில்கள் கூவி எழவும், துயில் கொள்ளாத உயிர்கள் எல்லாம் துயில் கொள்ளவும், வானத்தில் விளங்கும் ஒளிக் கதிர்களையுடைய கதிரவன், தன் வெம்மையான கதிர்களை ஒடுக்காமல் வெம்மை தருகின்ற முதுவேனிற் பருவத் திற்குரிய நாள்களில்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 389

சண்பைவரும் பிள்ளையார்
சடாமகுடர் வலஞ்சுழியை
எண்பெருகத் தொழுதேத்திப்
பழையாறை எய்துதற்கு
நண்புடைய அடியார்கள்
உடன்போத நடந்தருளி
விண்பொருநீள் மதிளாறை
மேற்றளிசென் றெய்தினார்.

பொழிப்புரை :

காழிப்பதியில் தோன்றியருளிய பிள்ளையார், சடையை முடியணியாகக் கொண்ட சிவபெருமானின் திருவலஞ்சுழி என்ற அப்பதியினை எண்ணம் பெருகப் போற்றி, பழையாறை என்ற பதியைச் சார்வதற்காக, நட்புக் கொண்டிருக்கும் அடியவர்களுடன் போவதை விரும்பி, நடந்து சென்று, வான் அளாவிய நீண்டுயர்ந்த மதிலையுடைய திருப்பழையாறைமேற்றளியை அடைந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 390

திருவாறை மேற்றளியில்
திகழ்ந்திருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி
உருகியஅன் பொடுபோற்றி
மருவாரும் குழல்மலையாள்
வழிபாடு செய்யஅருள்
தருவார்தந் திருச்சத்தி
முற்றத்தின் புறஞ்சார்ந்தார்.

பொழிப்புரை :

பழையாறைமேற்றளியில் வீற்றிருந்தருளும் செந்தீ நிறத்தவரான இறைவரின் திருவடிகளை உருகிய அன்புடனே வணங்கிப் போற்றி, மணம் பொருந்திய கூந்தலையுடைய மலையர சன் மகள் வழிபட அருள் செய்த இறைவரின் `திருச்சத்தி முற்றம்\' என்ற பதியின் புறத்தே அடைந்தருளினர் பிள்ளையார்.

குறிப்புரை :

பழையாறைமேற்றளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 391

திருச்சத்தி முற்றத்தில்
சென்றெய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள்
ஆர்வமுறப் பணிந்தேத்திக்
கருச்சுற்றில் அடையாமல்
கைதருவார் கழல்பாடி
விருப்புற்றுத் திருப்பட்டீச்
சரம்பணிய மேவுங்கால்.

பொழிப்புரை :

திருச்சத்திமுற்றத்தினைச் சென்றடைந்து திரு மலைவல்லியார் போற்றி வழிபட்ட அழகிய திருவடிகளை ஆர்வத் துடனே வணங்கி, பிறவிச் சுழலில் அகப்படாமல் கைதந்து ஈடேற்று பவரான இறைவரின் திருவடிகளைப் பாடி, விருப்புக் கொண்டு `திருப்பட்டீச்சரத்தை\' வணங்கச் சென்ற போழ்து,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 392

வெம்மைதரு வேனிலிடை
வெயில்வெப்பந் தணிப்பதற்கு
மும்மைநிலைத் தமிழ்விரகர்
முடிமீதே சிவபூதம்
தம்மைஅறி யாதபடி
தண்தரளப் பந்தரெடுத்
தெம்மைவிடுத் தருள்புரிந்தார்
பட்டீசர் என்றியம்ப.

பொழிப்புரை :

வெப்பத்தை மிகுதியாய் அளிக்கும் முதுவேனிற் காலத்தின் வெம்மையைத் தணித்து ஆற்றும் பொருட்டு, முத்தமிழ் வல்லுநரான சம்பந்தரின் திருமுடியின் மீது, தம்மை அறியாத வகையால் சிவபூதம் குளிர்மை தரும் முத்துப் பந்தரை எடுத்துப் பிடித்து, `பட்டீசர் எங்களை இதனுடன் சென்று தருமாறு திருவாய் மலர்ந்தருளினார்\' எனக் கூற,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 393

அவ்வுரையும் மணிமுத்தின்
பந்தரும்ஆ காயமெழச்
செவ்விய மெய்ஞ் ஞானமுணர்
சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசர்திரு
வருளாகில் இசைவதென
மெய்விரவு புளகமுடன்
மேதினியின் மிசைத்தாழ்ந்தார்.

பொழிப்புரை :

அச்சொற்களும் அழகிய முத்துப் பந்தரும் வானத்தில் எழுந்தனவாக, செம்மையான சிவஞானத்தை உணர்ந்த ஆளுடைய பிள்ளையார், `இச்செயல்தானும் இறைவரின் திருவருளா யின் நமக்கு இயைவதாகுக!\' என்று உள்ளத்தில் எண்ணி மேனியில் மயிர்க் கூச்சல் உண்டாக, நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 394

அதுபொழுதே அணிமுத்தின்
பந்தரினை அருள்சிறக்கக்
கதிரொளிய மணிக்காம்பு
பரிசனங்கள் கைக்கொண்டார்
மதுரமொழி மறைத்தலைவர்
மருங்கிமையோர் பொழிவாசப்
புதுமலரால் அப்பந்தர்
பூம்பந்த ரும்போலும்.

பொழிப்புரை :

அதுபோழ்து உடன் வந்த ஏவலர் அழகிய முத்துப் பந்தரைத் திருவருள் சிறக்க ஒளிவீசும் அழகிய காம்புகளைக் கையில் பிடித்தனர். இனிய மொழியையுடைய தமிழ் மறைத் தலைவர் ஆன பிள்ளையாரின் அருகில், தேவர்கள் பொழிந்த மணமுடைய தெய்வப் பூக்களால், அம்முத்துப் பந்தர், பூம் பந்தர் போலவும் விளங்கியது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 395

தொண்டர்குழாம் ஆர்ப்பெடுப்பச்
சுருதிகளின் பெருந்துழனி
எண்திசையும் நிறைந்தோங்க
எழுந்தருளும் பிள்ளையார்
வெண்தரளப் பந்தர் நிழல்
மீதணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்ததிரு
வடிநீழல் எனஅமர்ந்தார்.

பொழிப்புரை :

தொண்டர் கூட்டமானது மகிழ்வொலி செய்யவும், மறைகளின் பேரொலி எண்திசைகளிலும் நிறைந்து எழவும் எழுந்தருளி வருகின்ற பிள்ளையார், வெண்மையான முத்துப் பந்தரின் நிழலானது தம் முடியின் மீது நிழற்றுவதால், பொன்னம் பலத்தில் கூத்தப்பிரானின் தூக்கிய திருவடி நீழலில் அமர்ந்திருத் தலைப் போல் அமர்ந்திருந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 396

பாரின்மிசை அன்பருடன்
வருகின்றார் பன்னகத்தின்
ஆரம்அணிந் தவர்தந்த
அருட்கருணைத் திறம்போற்றி
ஈரமனங் களிதழைப்ப
எதிர்கொள்ள முகமலர்ந்து
சேரவரும் தொண்டருடன்
திருப்பட்டீச் சரம்அணைந்தார்.

பொழிப்புரை :

நிலத்தின் மீது தொண்டர்களுடன் வருகின்ற பிள்ளையார், பாம்புகளையே மாலையாகச் சூடிய இறைவர் அளித்த பெருங்கருணைத் திறத்தைப் போற்றிய வண்ணமே, அன்பு நிறைந்த உள்ளம் களிப்புக் கொள்ள எதிர்கொள்ளும் பொருட்டு முகமலர்ந்து வருகின்ற திருத்தொண்டர்களுடன் திருப்பட்டீச்சரத்தை அடைந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 397

சென்றணைந்து திருவாயில்
புறத்திறைஞ்சி உள்புக்கு
வென்றிவிடை யவர்கோயில்
வலங்கொண்டு வெண்கோட்டுப்
பன்றிகிளைத் தறியாத
பாததா மரைகண்டு
முன்தொழுது விழுந்தெழுந்து
மொழிமாலை போற்றிசைத்தார்.

பொழிப்புரை :

சென்று சேர்ந்து வாயிலின் வெளியில் வணங்கி, உள்ளே புகுந்து, வெற்றி பொருந்திய ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமானின் திருக்கோயிலை வலம் வந்து, வெள்ளைக் கொம்பு டைய பன்றி உருவெடுத்த திருமால் நிலத்தைத் தோண்டியும் காண இயலாத திருவடித் தாமரைகளைக் கண்டு, திருமுன்பு வணங்கி, நிலத்தில் வீழ்ந்து எழுந்து சொல்மாலை கொண்டு போற்றினார்.

குறிப்புரை :

இறைவன் திருமுன்பு அருளிய பதிகம் `பாடல்மறை\' (தி.3 ப.73) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 398

அருள்வெள்ளத் திறம்பரவி
அளப்பரிய ஆனந்தப்
பெருவெள்ளத் திடைமூழ்கிப்
பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே
செம்பொன்மலை வல்லியார்
தருவள்ளத் தமுதுண்ட
சம்பந்தர் புறத்தணைந்தார்.

பொழிப்புரை :

திருக்கருணைப் பெருக்கின் திறத்தைப் போற்றி அதனால் அளவிடற்கரிய இன்ப வெள்ளத்தில் திளைத்து, மாறாத பெருங்காதல் கொண்ட உளம் பெருகிய அன்புடன், செம்பொன் மலையரசனின் மகளாரான உமையம்மையார், பொற்கிண்ணத்தில் தந்தருளிய ஞான அமுது உண்டருளிய பிள்ளையார் திருக்கோயில் புறத்தே அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 399

அப்பதியில் அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செப்பருஞ்சீர்த் திருவாறை
வடதளியில் சென்றிறைஞ்சி
ஒப்பரிய தமிழ்பாடி
உடனமரும் தொண்டருடன்
எப்பொருளு மாய்நின்றார்
இரும்பூளை எய்தினார்.

பொழிப்புரை :

அப்பதியில் விரும்பி எழுந்தருளிய ஆளுடைய பிள்ளையார் சொலற்கரிய சிறப்பினையுடைய பழையாறைவடதளி யில் சென்று வணங்கி, ஒப்பில்லாத தமிழ்ப் பதிகத்தைப் பாடித் தாம் உடனாய் விரும்பிய தொண்டர்களுடனே எல்லாப் பொருள்களுமாய் நின்ற சிவபெருமானின் `திருவிரும்பூளையினை\' அடைந்தார்.

குறிப்புரை :

பழையாறை வடதளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 400

தேவர்பிரா னமர்ந்ததிரு
இரும்பூளை சென்றெய்தக்
காவணநீள் தோரணங்கள்
நாட்டியுடன் களிசிறப்பப்
பூவணமா லைகள்நாற்றிப்
பூரணபொற் குடநிரைத்தங்கு
யாவர்களும் போற்றிசைப்பத்
திருத்தொண்டர் எதிர்கெண்டார்.

பொழிப்புரை :

பிள்ளையார், தேவர்களின் தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருவிரும்பூளையினைச் சென்றடையப் பந்தல்களைத் தோரணங்களுடன் நிறுத்திப் பெருகிய மகிழ்ச்சி ஓங்குதலால் நிறம்பொருந்திய மலர்களால் அமைந்த அழகிய பெரிய மாலைகளைத் தொங்கவிட்டு, நீர்நிறைந்த குடங்களை நிரல்பட அமைத்து, அனைவரும் போற்றத் தொண்டர்கள் அங்கு எதிர் கொண்டனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 401

வண்டமிழின் மொழிவிரகர்
மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர்குழாத் தெதிர்இழிந்தங்
கவர்தொழத்தா முந்தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை
அணைந்திறைஞ்சி முன்நின்று
பண்டரும்இன் னிசைப்பதிகம்
பரம்பொருளைப் பாடுவார்.

பொழிப்புரை :

வளம் பொருந்திய தேவாரத் தமிழையருளும், முகனமர்ந்து இன்சொற்களைப் பேசும் தலைவரான பிள்ளையார், அழகிய முத்துச் சிவிகையினின்றும் தம்மை எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர் கூட்டத்தின் எதிரே இறங்கி, அவர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களை வணங்கி, தேவர் தலைவரின் திருக்கோயிலை அடைந்து, வணங்கித் திருமுன் நின்று, பண்ணிசையை வெளிப்படுத் தும் இனிய இசையுடைய திருப்பதிகத்தால், மேலாய பொருளான இறைவரைப் பாடுவாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 402

நிகரிலா மேருவரை
அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர்தமக்
கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள்
தமைவினவித் தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின்
பொருள்விரியப் பாடினார்.

பொழிப்புரை :

ஒப்பற்ற பெரிய மேருமலையும் ஓர் அணுவாகு மாறு நீண்ட பெருமையுடையவராகியும், துய்ப்பனவும், உய்ப்பனவும் எல்லாம் தாமேயாகத் துய்க்கின்ற தொண்டர்களுக்கு அமுதமாயும் எளியராயும் விளங்கி நிற்கும் அம்மேலாய பொருளைத் தகுதி மிக்க அடியவரை வினவும் தன்மையில், தமிழ் வல்லுநரான பிள்ளையார், சொல்லப்படுகின்ற அரிய மறைகளின் உட்பொருள் விளங்கப் பாடினர்.

குறிப்புரை :

திருஇரும்பூளையில் பாடியருளிய பதிகம் `சீரார் கழலே\' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகம் முழுவதும் அடியவர்களிடம் பலபட அமைந்த வினாக்க ளைக் கேட்டு மகிழும் வினவுரைப் பதிகமாக அமைந்துள்ளது.

பண் :

பாடல் எண் : 403

பாடும் அரதைப்பெரும்
பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை
திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென்
திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந்
நெடுநகரில் இனிதமர்ந்தார்.

பொழிப்புரை :

போற்றப் பெறுகின்ற `அரதைப் பெரும்பாழி\' முதலாக அறிவுடையவர்கள் வாழ்கின்ற `திருச்சேறையும்\', `திரு நாலூரும்\', `திருக்குடவாயிலும்\', சிறப்புகள் பலவும் தாமே நாடி வருதற் குரிய `திருநறையூரும்\', `தென் திருப்புத்தூரும்\' ஆகிய இப்பதிகளை விருப்புடன் வழிபட்டு, நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி, அத்தென் திருப்புத்தூரில் இனிதே வீற்றிருந்தார் பிள்ளையார்.

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: பதியின் பெயர் பாட்டுமுதற்குறிப்பு பண் அரதைப்பெரும்பாழி பைத்தபாம்போடரை கொல்லி - தி.3 ப.30 திருச்சேறை முறியுறு சாதாரி - தி.3 ப.86 திருநாலூர்மயானம் பாலூரும் சீகாமரம் - தி.2 ப.46 திருக்குடவாயில் 1.திகழுந்திருமாலொடு இந்தளம் - தி.2 ப.22 2.கலைவாழும் காந்தாரம் - தி.2 ப.58 திருநறையூர்ச்சித்தீச்சரம் 1.ஊருலாவு தக்கராகம் - தி.1 ப.29 2.பிறைகொள்சடையர் தக்கேசி - தி.1 ப.71 3.நேரியனாகும் பியந்தைக் - தி.2 ப.87 காந்தாரம் தென் திருப்புத்தூர் மின்னும் சடைமேல் காந்தாரம் - தி.2 ப.63 திருஅரதைப்பெரும்பாழி இதுபொழுது அரித்துவாரமங்க லம் என வழங்கப்பெறுகிறது. திருநாலூர்மயானம், திருநாலூர் எனவும், நாலூர் மயானம் எனவும் இரு பதிகளாகவுள்ளன. இப்பதி கம் நாலூர் மயானத்திற்குரிய பதிகமாகும். குடவாயில், குடவாசல் என வழங்கப்படுகிறது. திருநறையூர் - பதியின் பெயர். சித்தீச்சரம் - திருக்கோயிலின் பெயர். தென்திருப்புத்தூர், அரிசில்கரைப்புத்தூர் என வழங்கப்பெறுகிறது.

பண் :

பாடல் எண் : 404

அங்கண்இனி தமருநாள்
அடல்வெள்ளே னத்துருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும்
சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங்
கழல்வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம்
முன்நின்று போற்றிசைத்தார்.

பொழிப்புரை :

அவ்வரிசில்கரைப் புத்தூரில் பிள்ளையார் எழுந்தருளியிருந்த பொழுது, வன்மையுடைய வெண்மையான பன்றி வடிவைக் கொண்ட சிவந்த கண்களையுடைய திருமால் வணங்கும் சிவபுரத்திற்குச் சென்று, கங்கையைச் சடையில் அடக்கிய இறைவரின் திருவடிகளை வணங்கி, மிக்க விருப்பத்தால் இசை பெருகும் திருப்பதிகங்களைத் திருமுன்பு நின்று பாடினார்.

குறிப்புரை :

இப்பதியில் அருளிய பதிகங்கள் மூன்று. 1. புவம்வளி : தி.1 ப.21 - நட்டபாடை 2. இன்குரல் : தி.1 ப.112 - வியாழக்குறிஞ்சி 3. கலைமலி : தி.1 ப.125 - வியாழக்குறிஞ்சி

பண் :

பாடல் எண் : 405

போற்றிசைத்துப் புனிதரருள்
பெற்றுப்போந்து எவ்வுயிரும்
தோற்றுவித்த அயன்போற்றுந்
தோணிபுரத் தந்தணனார்
ஏற்றுமிசை ஏற்றுகந்த
இறைவர்தமை ஏத்துதற்கு
நாற்றிசையோர் பரவுதிருக்
குடமூக்கு நண்ணினார்.

பொழிப்புரை :

போற்றி, இறைவரின் திருவருளைப் பெற்று, எவ்வுயிர்களையும் இறைவரின் ஆணையின் வண்ணம் பிறவியில் புகுத்தும் நான்முகன் வணங்கும் திருத்தோணிபுரத்தில் தோன்றிய பிள்ளையார், ஆனேற்றின் மீது வருதலை விரும்பிய இறைவரைப் போற்றுதற்காக, நாற்றிசையில் உள்ளவரும் வணங்கும் திருக்குட மூக்கை அடைந்தார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 406

தேமருவு மலர்ச்சோலைத்
திருக்குடமூக் கினிற்செல்வ
மாமறையோர் பூந்தராய்
வள்ளலார் வந்தருளத்
தூமறையின் ஒலிபெருகத்
தூரியமங் கலமுழங்கக்
கோமுறைமை எதிர்கொண்டு
தம்பதியில் கொடுபுக்கார்.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த திருக்குட மூக்கினில் வாழ்கின்ற செல்வப் பெருமறையோர், காழி வள்ளலார் ஆகிய பிள்ளையாரை மறையொலி பெருகவும், மங்கல இயங்கள் ஒலிக்கவும், மன்னரை எதிர் கொள்ளும் முறையில் எதிர் கொண்டு, தம் பதியினிடத்து அழைத்துச் சென்றனர்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 407

திருஞான சம்பந்தர்
திருக்குடமூக் கினைச்சேர
வருவார்தம் பெருமானை
வண்டமிழின் திருப்பதிகம்
உருகாநின் றுளமகிழக்
குடமூக்கை உகந்திருந்த
பெருமான்எம் இறையென்று
பெருகிசையால் பரவினார்.

பொழிப்புரை :

திருக்குடமூக்கினைச் சேர வருபவரான திருஞான சம்பந்தர், தம் இறைவரை வளமையுடைய தமிழ்ப் பதிகத்தால் உள்ளம் உருகி மகிழத் திருக்குடமூக்கை உவந்து விரும்பி வீற்றிருந்த பெரு மான் எம் இறைவர் என்று பெருகிய இசையால் பாடினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `அரவிரி\' (தி.3 ப.59) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். பாடல் தொறும் `குடமூக்கை உவந்திருந்த பெருமான் எம்மிறை\' என நிறைவு பெறுதலின், அக்குறிப்பினை எடுத்து மொழியலானார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 408

வந்தணைந்து திருக்கீழ்க்கோட்
டத்திருந்த வான்பொருளைச்
சிந்தைமகிழ் வுறவணங்கித்
திருத்தொண்ட ருடன்செல்வார்
அந்தணர்கள் புடைசூழ்ந்து
போற்றிசைப்ப அவரோடும்
கந்தமலர்ப் பொழில்சூழ்ந்த
காரோணஞ் சென்றடைந்தார்.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு போற்றி வந்து, திருக்கீழ்க் கோட் டத்தில் வீற்றிருந்த இறைவரை மனம் மகிழ வணங்கித் தொண்டர் கூட்டத்துடன் செல்பவரான சம்பந்தர், அந்தணர்கள் சூழப் போற்றி வர, அவரோடும் கூடி, மணம் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்காரோணத்தைச் சென்று அடைந்தார். கு-ரை: திருக்குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 409

பூமருவும் கங்கைமுதல்
புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுதற்கு
வந்துவழி படுங்கோயில்
தூமருவு மலர்க்கையால்
தொழுதுவலங் கொண்டணைந்து
காமர்கெட நுதல்விழித்தார்
கழல்பணிந்து கண்களித்தார்.

பொழிப்புரை :

மலர்கள் பொருந்திய கங்கை முதலான தூய நதிகள் பலவும், தத்தம் இடங்களிலிருந்து இப்பதியிலுள்ள குளத்தில் மாமகத்தன்று ஆடும் பொருட்டாக வந்து வழிபடுகின்ற பெருமை உடைய அக்கோயிலைத் தூய்மையான மலர்போன்ற கைகளால் தொழுது, வலம் வந்து, மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த இறை வரின் திருவடிகளை வணங்கிக் கண்டுகளித்தனர்.

குறிப்புரை :

`தாவி முதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே\' (தி.6 ப.75 பா.10) எனவரும் அப்பர் அடிகளின் திருவாக்கை யுளங்கொண்டு ஆசிரியர் சேக்கிழார் இப்பாடலை அருளிச் செய்துள்ளார்.

பண் :

பாடல் எண் : 410

கண்ணாரும் அருமணியைக்
காரோணத் தாரமுதை
நண்ணாதார் புரமெரித்த
நான்மறையின் பொருளானைப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பணிந்தேத்திப் பிறபதியும்
எண்ணார்ந்த சீரடியா
ருடன்பணிவுற் றெழுந்தருளி.

பொழிப்புரை :

கண்ணகத்தே நின்று களிதரும் அரிய மணி போன்றவரும், திருக்குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் அமுதம் போன்றவரும், பகைவரின் முப்புரங்களை எரித்த நான்மறை களின் பொருளாக விளங்குபவருமான இறைவரை வணங்கிப் பண்ணமைந்த திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து, போற்றிப் பிற பதிகளையும் வணங்க எண்ணி, எண்ணிறந்த அடியவர்களுடன் பணிந்து, அங்கிருந்து மேற்செல்வார்.

குறிப்புரை :

திருக்குடந்தைக் காரோணத்தில் அருளிய பதிகம் `வாரார் கொங்கை\' (தி.1 ப.72) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிறபதிகள் என்றது திருக்குடமூக்கில் உள்ள பிற திருக்கோயில்களான, திருக்கருக்குடி, திருக்கொட்டையூர், திருக்கலயநல்லூர் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருக்கருக்குடியில் அருளிய பதிகம் `நனவிலும் கனவிலும்\' : (தி.3 ப.21) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்ததாகும். பிற பதிகளின் பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 411

திருநாகேச் சரத்தமர்ந்த
செங்கனகத் தனிக்குன்றைக்
கருநாகத் துரிபுனைந்த
கண்ணுதலைச் சென்றிறைஞ்சி
அருஞானச் செந்தமிழின்
திருப்பதிகம் அருள்செய்து
பெருஞான சம்பந்தர்
பெருகார்வத் தின்புற்றார்.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் செம்பொன் மலை போன்ற கரிய யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட பெருமானை வணங்கி, அரிய ஞானம் விளங்கும் செந்தமிழின் இனிய திருப்பதிகத்தைப் பாடி அருள் செய்து, பெருகும் அன்பினால் இன்பம் ஆர்ந்திருந்தார்.

குறிப்புரை :

இப்பதியில் இதுபொழுது அருளிய பதிகம் `தழை கொள்\' (தி.2 ப.119) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 412

மாநாகம் அருச்சித்த
மலர்க்கமலத் தாள்வணங்கி
நாணாளும் பரவுவார்
பிணிதீர்க்கும் நலம்போற்றிப்
பானாறும் மணிவாயர்
பரமர்திரு விடைமருதில்
பூநாறும் புனற்பொன்னித்
தடங்கரைபோய்ப் புகுகின்றார்.

பொழிப்புரை :

ஆதிசேடன் வழிபட்ட தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, நாளும் வணங்குபவர்களின் பிணிகளைப் போக்கும் நன்மையினைப் போற்றி, ஞானப்பாலமுதின் மணம் கமழும் திருவாயினையுடைய பிள்ளையார், மலர்கள் மலர்ந்து மணம் வீசும் காவிரியின் வடகரை வழியாகச் சென்று, இறைவரின் `திருவிடை மருதூரில்\\\' புகுகின்றவர்,

குறிப்புரை :

திருநாகேச்சரத்தில் பாடிய பதிகம் `பொன்னேர் தரு\\\' (தி.2 ப.24) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். `வல்வினை மாய்ந்தறும்\\\' இன்புறும் என்பனவாகிய குறிப்பு கள் அமைந்திருத்தலின், `நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி\\\' என்றார்.

பண் :

பாடல் எண் : 413

ஓங்குதிருப் பதிகம்ஓ
டேகலன்என் றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி
தலைசிறக்குந் தன்மையினால்
ஈங்கெனையா ளுடையபிரான்
இடைமரு தீதோஎன்று
பாங்குடைய இன்னிசையால்
பாடிஎழுந் தருளினார்.

பொழிப்புரை :

உயர்ந்த திருப்பதிகத்தை `ஓடேகலன்\' எனத் தொடங்கித் தாங்குதற்கரிய மகிழ்ச்சி மேன்மேலும் பெருகுதலால், `இங்கு என்னை ஆளுடைய இறைவர் வீற்றிருக்கும் திருவிடைமருது இதுதானோ?\' என்ற கருத்துடன் நல்ல இயல்புடைய இசை பொருந்தப் பாடி அந்தப் பதியினுள் புகுந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளியது `ஓடேகலன்\' (தி.1 ப.32) எனும் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமா கும். பாடல்தொறும் `இடைமருது ஈதோ\' என வரும் தொடர் அமைந்து இருத்தலின் அதனை ஆசிரியர் குறிப்பிடுவாராயினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 414

அடியவர்கள் எதிர்கொள்ள
எழுந்தருளி அங்கணைந்து
முடிவில்பரம் பொருளானார்
முதற்கோயில் முன்னிறைஞ்சிப்
படியில்வலங் கொண்டுதிரு
முன்பெய்திப் பார்மீது
நெடிதுபணிந் தெழுந்தன்பு
நிறைகண்ணீர் நிரந்திழிய.

பொழிப்புரை :

அப்பதியிலுள்ளார் எதிர்கொள்ளச் சென்று, அப்பதியை அடைந்து, நிலைபெற்ற பரம்பொருளான இறைவரின் பெருங்கோயிலை முன்னே வணங்கி, வலம் வந்து, திருமுன்பு அடைந்து, தரையில் விழுந்து அன்பு நிறைவதால் பொழியும் கண்ணீர் இடையறாது வழிய,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 415

பரவுறுசெந் தமிழ்ப்பதிகம்
பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம்
பலபாடி வெண்மதியோ
டரவுசடைக் கணிந்தவர்தம்
தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன்
பணிந்தேத்தி உறையுநாள்.

பொழிப்புரை :

இறைவரைப் போற்றுகின்ற செந்தமிழ்ப் பதிகம் பாடி, விருப்பத்துடன் அப்பதியில் இருந்தருளும் சம்பந்தர், மேலும் பல திருப்பதிகங்களையும் பாடி, வெண்மையான பிறைச் சந்திரனுடன் பாம்பையும் சடையில் அணிந்த பெருமானாரின் திருவடிகளைப் போற்றி, உறைப்புடைய திருத்தொண்டர்களுடன் இறைவரை வணங் கிப் போற்றி, அன்பு மிகுதியால் அங்குத் தங்கியிருந்த காலத்தில்,

குறிப்புரை :

இறைவரின் திருமுன்பு அருளிய பதிகம் `பொங்கு நூல்\' எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். மேலும் இப்பதியில் அருளிய பதிகங்கள் நான்குள்ளன. அவை: 1. `தோடோர்\' : தி.1 ப.95 - குறிஞ்சி 2. `மருந்தவன்\' : தி.1 ப.110 - வியாழக்குறிஞ்சி 3. `நடை மரு\' : தி.1 ப.121 - வியாழக்குறிஞ்சி 4. `விரிதரு\' : தி.1 ப.122 - வியாழக்குறிஞ்சி

பண் :

பாடல் எண் : 416

மருங்குளநற் பதிகள்பல
பணிந்துமா நதிக்கரைபோய்க்
குரங்காடு துறையணைந்து
குழகனார் குரைகழல்கள்
பெருங்காத லால்பணிந்து
பேணியஇன் னிசைபெருக
அருங்கலைநூல் திருப்பதிகம்
அருள்செய்து பரவினார்.

பொழிப்புரை :

அருகில் உள்ள பலபதிகளையும் வணங்கிக் காவிரிப் பெருங்கரை வழியே சென்று, திருத்தென்குரங்காடுதுறை யினைச் சேர்ந்து, இறைவரின் ஒலிக்கும் கழல் பூண்ட திருவடிகளைப் பெருங் காதலால் வணங்கி, விரும்பிய இனிய இசை பெருகவுள்ள அரிய கலை நூல்களின் பொருள்களை விரிக்கும் திருப்பதிகத்தைப் பாடி வணங்கினார்.

குறிப்புரை :

தென்குரங்காடுதுறையில் அருளிய பதிகம் `பரவக் கெடும்\' (தி.2 ப.35) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். `மருங்குள நற்பதிகள்\' என்பன இன்னவென அறிதற் கியன்றிலது. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 417

அம்ம லர்த்தடம் பதிபணிந்
தகன்றுபோந் தருகு
மைம்ம லர்க்களத் திறைவர்தங்
கோயில்கள் வணங்கி
நம்ம லத்துயர் தீர்க்கவந்
தருளிய ஞானச்
செம்ம லார்திரு ஆவடு
துறையினைச் சேர்ந்தார்.

பொழிப்புரை :

அழகிய தாமரை மலர்கள் நிறைந்த குளங்களை உடைய அத்திருப்பதியை வணங்கிப் பின், அதனின்றும் நீங்கிச் சென்று அருகிலுள்ள கருநிறக்கண்டத்தையுடைய இறைவரின் கோயில்களை வணங்கி, நம் பாசத்துன்பங்களை நீக்குவதற்கென்றே தோன்றிய ஞானச் செம்மலாம் சம்பந்தர், திருவாவடுதுறையைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

இறைவரின் கோயில்கள் என்றது சாத்தனூர் முதலா யினவாகலாம்.

பண் :

பாடல் எண் : 418

மூவ ருக்கறி வரும்பொரு
ளாகிய மூலத்
தேவர் தந்திரு வாவடு
துறைத்திருத் தொண்டர்
பூவ லம்புதண் பொருபுனல்
தடம்பணைப் புகலிக்
காவ லர்க்கெதிர் கொள்ளும்ஆ
தரவுடன் கலந்தார்.

பொழிப்புரை :

அயன் முதலிய மூவர்க்கும் அறிதற்கு அரிய மூலப் பொருளாய தேவரான சிவபெருமானின் திருவாவடுதுறையில் வாழ்கின்ற தொண்டர்கள், மலர்களை வாரிக் கொண்டு பொங்கி வரும் குளிர்ந்த அலைகளையுடைய நீர் நிரம்பிய பொய்கைகளையும் வயல்களையும் உடைய சீகாழித் தலைவரான பிள்ளையாரை எதிர் கொள்வதற்கென மிக்குப் பெருகும் அன்புடனே வந்து சேர்ந்தனர்.

குறிப்புரை :

திருமூல நாயனார் வழிபட்ட குறிப்பும் தோன்றத் திருவாவடுதுறைப் பெருமானை `மூலத்தேவன்\' என்றார் ஆசிரியர் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 419

வந்த ணைந்தவர் தொழாமுனம்
மலர்புகழ்ச் சண்பை
அந்த ணர்க்கெலாம் அருமறைப்
பொருளென வந்தார்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்தெதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர்தங்
கோயில்முன் சென்றார்.

பொழிப்புரை :

அங்ஙனம் வந்த தொண்டர்கள் தம்மை வணங்கு வதற்கு முன்னம், விரியும் புகழையுடைய சீகாழி அந்தணர்களுக்கு எல் லாம் அரிய மறையின் பொருளாக உள்ளவர் இவர் என்று தியானப் பொருளாகக் கொள்ளும்படி தோன்றிய பிள்ளையார், அழகான முத் துச் சிவிகையினின்றும் இறங்கி, அவர்களின் எதிரில் வணங்கிப் பின், மனம் இன்பம் அடைய இறைவரின் திருக்கோயில் முன் சென்றார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 420

நீடு கோபுரம் இறைஞ்சியுள்
புகுந்துநீள் நிலையான்
மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு
துறையுள்ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்தெழுந்
தருந்தமிழ் நவின்றார்.

பொழிப்புரை :

உயர்ந்த கோபுரத்தை வணங்கி, உட்சென்று நீண்ட வரிசையாக அருகில் சுற்றிலும் உள்ள மாளிகையை வலமாக வந்து வணங்கி, அருட்பெருங் கூத்தை இயற்றுகின்ற ஆதிமூர்த்தியும், திருவாவடுதுறையுள் எழுந்தருளியுள்ள நிறைந்த அமுதம் போன்ற வருமான இறைவரை, நாடும் பேரன்பினால் வணங்கி எழுந்து அரிய தமிழால் திருப்பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை :

இவ்வருந் தமிழ்ப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 421

அன்பு நீடிய அருவிகண்
பொழியும்ஆர் வத்தால்
முன்பு போற்றியே புறம்பணை
முத்தமிழ் விரகர்
துன்பு போமனத் திருத்தொண்டர்
தம்முடன் தொழுதே
இன்பம் மேவிஅப் பதியினில்
இனிதமர்ந் திருந்தார்.

பொழிப்புரை :

அன்பால் பெருகிய கண்ணீர் அருவிபோல் பொழிகின்ற ஆர்வத்தால், திருமுன்பு போற்றி, பின்பு வெளியே வந்த பிள்ளையார், துன்பம் இல்லாத உள்ளம் கொண்ட தொண்டர்களுடன் தொழுது, இன்பம் பொருந்த அப்பதியில் இனிதாய் விரும்பி வீற்றிருந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 422

மேவி அங்குறை நாளினில்
வேள்வி செய்வதனுக்
காவ தாகிய காலம்வந்
தணைவுற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத்
தாதையார் தாமும்
போவ தற்கரும் பொருள்பெற
எதிர்நின்று புகன்றார்.

பொழிப்புரை :

விரும்பி, அத்திருப்பதியில் வீற்றிருக்கும் காலத் தில், வேள்வி செய்வதற்குரிய காலம் வந்து சேர, குற்றம் இல்லாத சீகாழியின் தலைவரான பிள்ளையாரிடம் வந்து, தந்தையாரான சிவபாத இருதயரும் விடைபெற்றுச் சீகாழிக்குச் செல்லும் பொருட்டு, வேள்வி செய்தற்குரிய பொருளைப் பெறுதல் வேண்டும் என்று அவரிடத்துக் கூறினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 423

தந்தை யார்மொழி கேட்டலும்
புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை
நினைந்தருள் முன்னி
அந்த மில்பொரு ளாவன
ஆவடு துறையுள்
எந்தை யார்அடித் தலங்கள்
அன்றோஎன எழுந்தார்.

பொழிப்புரை :

தம் தந்தையாரின் சொல்லைக் கேட்டதும் சீகாழித் தலைவரான பிள்ளையார், முன் நாளில் கூறியதையும் நினைவு கூர்ந்து, திருவருளை எண்ணி, `அந்தம் இல்லாத பொருளாய் உள்ளவை எம் இறைவரின் திருவடிகளே அல்லவோ?\' என்று மனத்துள் எண்ணி எழுந்தார்.

குறிப்புரை :

முன்நாளில் கூறியது `இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான்செயவேண்டும்\' (பா.278) என்பதாகும்.

பண் :

பாடல் எண் : 424

சென்று தேவர்தம் பிரான்மகிழ்
கோயில்முன் பெய்தி
நின்று போற்றுவார் நீள்நிதி
வேண்டினார்க் கீவ
தொன்றும் மற்றிலேன் உன்னடி
அல்லதொன் றறியேன்
என்று பேரருள் வினவிய
செந்தமிழ் எடுத்தார்.

பொழிப்புரை :

பிள்ளையார் தேவ தேவரான இறைவர் மகிழும் கோயிலில் சென்று, திருமுன்பு நின்று வணங்குபவராகி, `பெருஞ் செல்வம் வேண்டிய தந்தையார்க்கு ஈவதற்கு என்னிடம் ஒரு பொருளும் இல்லை, பொருளாகும் உன் திருவடியன்றி வேறொன்றும் அறியேன்?\' என்று இறைவரின் பேரருளை வினவிய கருத்துடைய செந்தமிழ்ப் பதிகத்தைத் தொடங்கிப் பாடலானார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 425

எடுத்த வண்டமிழ்ப் பதிகநா
லடியின்மே லிருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தஇன்
னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார்
அடியிணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்
தஞ்சலி அளித்தார்.

பொழிப்புரை :

தொடங்கி வளம் கொண்ட தமிழ்ப் பதிகத்தை நான்கடியின் மேலும் இரண்டு அடிகள் தொடுத்த மேல் வைப்பாய்த் தொடர்பு பெற அமைத்த இனிய இசைப் பதிகத்தால் வணங்குபவராய், நிரம்பக் கொண்ட காதலால், வள்ளலாரான இறைவரின் திருவடி களைப் போற்றிப் பொருந்திய சிந்தையால் அன்புமிக்குக் கைகள் கூப்பித் தொழுதார்.

குறிப்புரை :

நான்கடிகளின் மேலும் இரண்டடிகள் வைக்கப் பெற்றிருத்தலின் `நாலடி மேல் வைப்பு\' என யாப்பமைவு கூறப் பெறுவதாயிற்று. இப்பதிகம் `இடரினும் தளரினும்\' (தி.3 ப.4) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணில் அமைந்ததாகும். `இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்\' எனப்பாடல் தொறும் வரும் கருத்தை நினைவு கூர்ந்தே ஆசிரியர் `பேரருள் வினவிய செந்தமிழ்\' எனக் குறிப்பாராயினர்.

பண் :

பாடல் எண் : 426

நச்சி இன்தமிழ் பாடிய
ஞானசம் பந்தர்
இச்சை யேபுரிந் தருளிய
இறைவர்இன் னருளால்
அச்சி றப்பருள் பூதமுன்
விரைந்தகல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன்ஆ
யிரக்கிழி யொன்று.

பொழிப்புரை :

விரும்பிய இனிய தமிழ்ப் பதிகத்தைப் பாடிய ஞானசம்பந்தரின் விருப்பப்படியே, முன்பு அருள்செய்த இறைவரின் திருவருளால், அச்சிறப்பை அருளும் சிவபூதம் ஒன்று விரைவில் வந்து, இடம் அகன்ற பலிபீடத்தின் உச்சியின்மேல், ஆயிரம் பசும் பொன் கொண்ட முடிப்பு ஒன்றை வைத்தது.

குறிப்புரை :

கிழி - பொன் முடிப்பு. `கழுமலவூரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே\' (தி.4 ப.56 பா.1) எனவரும் அப்பர் அடிகளின் திருவாக்கு இதற்கு அகச் சான்றாய் அமைகிறது.

பண் :

பாடல் எண் : 427

வைத்த பூதம்அங் கணைந்துமுன்
நின்றுநல் வாக்கால்
உய்த்த இக்கிழி பொன்னுல
வாக்கிழி உமக்கு
நித்த னாரருள் செய்ததென்
றுரைக்கநேர் தொழுதே
அத்த னார்திரு வருள்நினைந்
தவனிமேற் பணிந்தார்.

பொழிப்புரை :

அங்ஙனம் வைத்த அப்பூதம் அங்குப் பிள்ளை யார் முன் நின்று, நல்ல வாக்கினால் பிள்ளையாரை நோக்கி, `வைத்த இம் முடிப்பு பொன்னைக் கொண்டதாகும். எடுக்க எடுக்கக் குறையாத நிதியுமாகும். இறைவர் உமக்கு அருள் செய்தது இது\' என்று உரைக் கப், பிள்ளையார் இறைவரை நேராகத் தொழுது, தந்தையாரான பெரு மானின் திருவருளினை நினைந்து நிலத்தில் விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 428

பணிந்தெ ழுந்துகை தொழுதுமுன்
பனிமலர்ப் பீடத்
தணைந்த ஆடகக் கிழிதலைக்
கொண்டரு மறைகள்
துணிந்த வான்பொருள் தரும்பொருள்
தூயவாய் மையினால்
தணிந்த சிந்தைஅத் தந்தையார்க்
களித்துரை செய்வார்.

பொழிப்புரை :

வணங்கி எழுந்து கைகளைக் கூப்பித் தொழுது, குளிர்ந்த மலர்கள் சூழ்ந்த பலிபீடத்தில் வைக்கப்பட்ட பொன் முடிப்பை எடுத்துத் தலைமீது கொண்டு, அரிய மறைகளால் துணிய நின்ற பெரும் பொருளான இறைவர் அளித்த அப்பொருளைத் தூய வாய்மையால் தணிந்த மனமுடைய தந்தையாருக்குத் தந்து சொல்லலானார்.

குறிப்புரை :

தணிந்த சிந்தை - செருக்கு, சினம் முதலாய அறுவகைக் குற்றங்களும் நீங்க அடங்கிய சிந்தை. இது தூய வாய்மையால் ஆயது. தூய வாய்மை - `அவரவருக்கு உள்ளபடி ஈசனருளாலே.... எல்லாம் சிவன்செயல் என்று எண்\' (சிவபோகசாரம்) என எண்ணும் வாய்மை.

பண் :

பாடல் எண் : 429

ஆதிமாமறை விதியினால்
ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே
புரியுநல் வேள்வி
தீது நீங்கநீர் செய்யவும்
திருக்கழு மலத்து
வேத வேதியர் அனைவரும்
செய்யவும் மிகுமால்.

பொழிப்புரை :

`பழமையும் பெருமையும் வாய்ந்த மறைகளில் விதித்த முறைப்படி, கங்கையை முடித்த சடையையுடைய முழுமுதற் பொருளான சிவபெருமானையே தலைமையாகக் கொண்டு செய் கின்ற நல்ல சிவ வேள்வியைத் தீமை நீங்கி இன்பம் அடையும் பொருட்டு நீவிர் செய்திடவும், சீகாழியில் உள்ள மறையவர் அனை வரும் செய்திடவும் குறைவில்லாமல் மிகும்\'.

குறிப்புரை :

தந்தையாரை இவ்வாறு செய்க என்று பணிப்பதும் தவறு; தாம் நினைந்ததைக் கூறாதிருப்பதும் தவறு. இந்நிலையிலே சிவபெருமானை தலைமையாகக் கொண்டு செய்கின்ற வேள்வியைத் தாங்கள் செய்யவும் என்று தொடங்கிக் கூறுவாராயினர். காமியத் தழுந்திச் செத்துப் பிறக்கின்ற தெய்வங்களைத் தலைமையாகக் கொண்டு வேள்வி செய்தல் தக்கதன்று என்பது பிள்ளையாரின் திருவுள்ளமாகும். `எரிபெருக்குவர் அவ்வெரி ஈசனது உருவென அறிகிலார்\' (தி.5 ப.100 பா.7) என்பது அப்பர் திருவாக்காகும்.

பண் :

பாடல் எண் : 430

என்று கூறிஅங் கவர்தமை
விடுத்தபின் அவரும்
நன்றும் இன்புறு மனத்தொடும்
புகலிமேல் நண்ண
வென்றி ஞானசம் பந்தரும்
விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில்
மகிழ்ந்தினி திருந்தார்.

பொழிப்புரை :

என்று கூறி அவ்விடத்தினின்றும் தம் தந்தை யாரை விடைகொடுத்து அனுப்பிய பின்பு, அச்சிவபாத இருதயரும் பெருகும் இன்பம் பெற்றுச் சீகாழியை நோக்கிச் செல்ல, ஞான வெற்றியையுடைய திருஞானசம்பந்தரும் விருப்புடனே வணங்கி, மணம் மிகுந்த திருவாவடுதுறையில் மகிழ்வுடன் இனிதாய் அமர்ந்து இருந்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 431

அண்ண லார்திரு வாவடு
துறையமர்ந் தாரை
உண்ணி லாவிய காதலி
னால்பணிந் துறைந்து
மண்ணெ லாம்உய வந்தவர்
போந்துவார் சடைமேல்
தெண்ணி லாஅணி வார்திருக்
கோழம்பஞ் சேர்ந்தார்.

பொழிப்புரை :

திருவாவடுதுறையில் வீற்றிருந்தருளும் இறை வரை உளம் நிறைந்த காதலால் வணங்கி, அங்குத் தங்கி, உலகெலாம் உய்யும் பொருட்டுத் தோன்றிய பிள்ளையார் அங்கிருந்து சென்று, நீண்ட சடையில் தெளிந்த பிறைச்சந்திரனைச் சூடுபவரின் திருக் கோழம்பத்தினைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 432

கொன்றை வார்சடை முடியரைக்
கோழம்பத் திறைஞ்சி
என்றும் நீடிய இன்னிசைப்
பதிகம் முன் இயம்பி
மன்று ளார்மகிழ் வைகல்மா
டக்கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர்
சிரபுரச் செல்வர்.

பொழிப்புரை :

கொன்றை மலரைச் சூடிய நீண்ட சடையை உடைய இறைவரைத் திருக்கோழம்பத்தில் வணங்கி, என்றும் அழி யாது நிலைபெற்றிருத்தற்கு ஏதுவாய இன்னிசை உடைய திருப்பதி கத்தைத் திருமுன்பு நின்று பாடி, பொன்னம்பலம் உடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் `திருவைகல் மாடக் கோயிலின்\' அருகே முத்திச் செல்வம் வளர்தற்கு இடனான சீகாழித் தலைவர் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

திருக்கோழம்பத்தில் அருளிய பதிகம், `நீற்றானை\' (தி.2 ப.13) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 433

வைகல் நீடுமா டக்கோயில்
மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டுதாழ்ந்
தெழுந்துகண் ணருவி
செய்ய இன்னிசைச் செந்தமிழ்
மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்த ராய்த்திர
நல்லத்தில் நண்ணி.

பொழிப்புரை :

வைகலில் நீண்ட மாடக் கோயிலில் பொருந்திய பெருமருந்தான இறைவரைத் தம் கைகள் கூப்பி, விழுந்து வணங்கி, எழுந்து, கண்களினின்றும் நீர் அருவியாய்ச் சொரிய, இனிய இசையை உடைய செந்தமிழ் மாலைகளால் போற்றி, உருகி இளகும் மனத்தை உடையவராகித் `திருநல்லம்\' என்ற பதியை அடைந்து,

குறிப்புரை :

திருவைகல் மாடக்கோயிலில் அருளிய பதிகம், `துளமதியுடை\' (தி.3 ப.18) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 434

நிலவு மாளிகைத் திருநல்லம்
நீடுமா மணியை
இலகு சேவடி இறைஞ்சிஇன்
தமிழ்கொடு துதித்துப்
பலவும் ஈசர்தந் திருப்பதி
பணிந்துசெல் பவர்தாம்
அலைபு னல்திரு வழுந்தூர்மா
டக்கோயில் அடைந்தார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற மாளிகைகளைக் கொண்ட திருநல் லத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் விளங்கும் திருவடிகளை வணங்கி, இனிய தமிழ் மாலை பாடி, அருகிலுள்ள திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச் செல்லும் பிள்ளையார், அலைகளை உடைய நீர் சூழ்ந்த திருஅழுந்தூர் மாடக் கோயிலைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

திருநல்லத்தில் அருளிய பதிகம் `கல்லானிழல்\' (தி.1 ப.85) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 435

மன்னு மாமடம் மகிழ்ந்தவான்
பொருளினை வணங்கிப்
பன்னு பாடலில் பதிகஇன்
னிசைகொடு பரவிப்
பொன்னி மாநதிக் கரையினில்
மீண்டும்போந் தணைந்து
சொன்ன வாறறி வார்தமைத்
துருத்தியில் தொழுதார்.

பொழிப்புரை :

நிலையான மாமடம் என்று திருப்பாட்டினுள் குறிக்கப்பெற்ற கோயிலில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற பெரும் பொருள் ஆன இறைவரை, போற்றி ஏத்தும் திருப்பதிகத்தைப் பண்ணுடன் பாடி, வணங்கி, காவிரிக் கரையில் மீளவும் வந்து சேர்ந்து, சொன்னவாறு அறிவாரைத் திருத்துருத்தியில் பிள்ளையார் வணங்கினார்.

குறிப்புரை :

திருவழுந்தூரில் அருளிய பதிகம், `தொழுமாறு\' (தி.2 ப.20) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில் 5ஆவது பாடல் நீங்கலாக மற்றப் பாடல்களில் எல்லாம் `மாமடம் மன்னினையே\' என அருளப் பெறும் நிலைகண்டு, `மன்னுமாமடம் மகிழ்ந்த வான் பொருளினை\' என்றார். ஏழாவது பாடலில் `மாநகர்\' என்று அருளுகின்றார்.

பண் :

பாடல் எண் : 436

திரைத்த டம்புனல் பொன்னிசூழ்
திருத்துருத் தியினில்
வரைத்த லைப்பசும் பொன்எனும்
வண்டமிழ்ப் பதிகம்
உரைத்து மெய்யுறப் பணிந்துபோந்
துலவும்அந் நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுத
லார்கழல் பணிந்தார்.

பொழிப்புரை :

அலைகளையுடைய காவிரி நீர் சூழ்ந்த திருத்துருத்தியில் `வரைத்தலைப் பசும் பொன்\' எனத் தொடங்கும் வளமை உடைய திருப்பதிகத்தைப் பாடி, உடல் நிலம் பொருந்தப் பணிந்து, சென்று உலவுகின்ற அக்காவிரி ஆற்றின் கரையில் திருமூவ லூரில் இறைவரை வணங்கினார்.

குறிப்புரை :

`வரைத்தலைப் பசும்பொன்\' (தி.2 ப.98) எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணிலமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 437

மூவ லூருறை முதல்வரைப்
பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே
விருப்பொடும் போந்து
பூவ லம்புதண் புனற்பணைப்
புகலியர் தலைவர்
வாவி சூழ்திரு மயிலாடு
துறையினில் வந்தார்.

பொழிப்புரை :

மூவலூரில் வீற்றிருக்கும் இறைவரைப் போற்று கின்ற சொற்களால் மிகுந்த விருப்புடன் போற்றி நின்று, காதல் மிக மலர் களைக் கொண்டு வரும் குளிர்ந்த நீரையுடைய வயல்கள் சூழ்ந்த சீகாழித் தலைவரான சம்பந்தர், பொய்கைகள் சூழ்ந்த `மயிலாடு துறைக்கு\' வந்தார்.

குறிப்புரை :

மூவலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 438

மல்கு தண்டலை மயிலாடு
துறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரோ
டெதிர்கொளச் சென்று
கொல்லை மான்மறிக் கையரைக்
கோயில்புக் கிறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம்முன்
பெருகிட எழுந்தார்.

பொழிப்புரை :

நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த மயிலாடு துறையில் திருவுடை அந்தணர்கள் தொண்டர்களுடன் சூழ எதிர் கொண்டு நிற்பப் புகுந்து, கொல்லையில் வாழும் மான்கன்றைக் கையில் உடையவரைக் கோயிலுள் புகுந்து வணங்கி, அளவில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சி பெருக எழுந்தார்

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 439

உள்ளம் இன்புற உணர்வுறும்
பரிவுகொண் டுருகி
வெள்ளந் தாங்கிய சடையரை
விளங்குசொற் பதிகத்
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும்
புறத்தணைந் தருளி
வள்ள லார்மற்ற வளம்பதி
மருவுதல் மகிழ்ந்தார்.

பொழிப்புரை :

உள்ளத்தில் வைத்து, இன்பம் அடைய, அவ் வுணர்ச்சியுடன் கூடிய அன்பு மிகுதியால் உருகி, கங்கை வெள்ளத் தையுடைய சடையினரான இறைவரையே விளங்கும் சொல் பதிகத் தில் வைத்துப் பாடி, அத்தெளிந்த இனிய இசையுடன் கூடிய மகிழ் வுடன் வெளியே வந்து அவ்வளமுடைய பதியில் மகிழ்ந்து இருந்தார்.

குறிப்புரை :

திருமயிலாடுதுறையில் இறைவரின் திருமுன்பு அரு ளிய பதிகம் `கரவின்றி\' (தி.1 ப.38) எனத் தொடங்கும் தக்கராகப் பண் ணிலமைந்த பதிகமாகும். இங்கிருந்த நாள்களில் பாடிய பிறிதொரு பதிகம், `ஏனஎயிறு\' (தி.3 ப.70) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணி லமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 440

அத்தி ருப்பதி யகன்றுபோய்
அணிகிளர் சூலக்
கைத்த லப்படை வீரர்செம்
பொன்பள்ளி கருதி
மெய்த்த காதலில் விளநகர்
விடையவர் பாதம்
பத்தர் தம்முடன் பணிந்திசைப்
பதிகம்முன் பகர்ந்தார்.

பொழிப்புரை :

அத்திருப்பதியினின்றும் நீங்கிச் சென்று, அழகு விளங்கும் சூலப்படையைக் கையில் கொண்ட வீரரான இறைவரின் திருச்செம்பொன்பள்ளியைக் கருதிச் சென்று பணிந்து, மெய்ம்மை யான பெருவிருப்பால் `திருவிளநகரில்\' எழுந்தருளிய விடையை உடைய இறைவரின் திருவடிகளை அடியார்களுடனே கூடிப் பணிந்து இசையுடைய திருப்பதிகத்தினைத் திருமுன்பு பாடினார்.

குறிப்புரை :

திருச்செம்பொன்பள்ளியில் அருளிய பதிகம் `மருவார் குழலி\' (தி.1 ப.25) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். திருவிளநகரில் அருளிய பதிகம் `ஒளிரிளம் பிறை\' (தி.2 ப.78) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 441

பாடும் அப்பதி பணிந்துபோய்ப்
பறியலூர் மேவும்
தோடு லாமலர் இதழியும்
தும்பையும் அடம்பும்
காடு கொண்டசெஞ் சடைமுடிக்
கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர்
நிறைமறை வேந்தர்.

பொழிப்புரை :

நிறைவான மறைத் தலைவரான பிள்ளையார் முற்கூறியவாறு திருப்பதிகம் பாடிய திருவிளநகர் என்ற அப்பதியை வணங்கிச் சென்று, `திருப்பறியலூரில்\' வீற்றிருக்கும் இதழ்களை யுடைய கொன்றையையும் தும்பையையும் கடம்ப மலரையும் அணிந்த சிவந்த சடையையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக் கும் திருவீரட்டானத்தை அடைந்து வணங்கினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 442

பரமர் தந்திருப் பறியலூர்
வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின்
கரையினை மேவி
அரவ ணிந்தவர் பதிபல
அணைந்துமுன் வணங்கிச்
சிரபு ரத்தவர் திருத்தொண்டர்
எதிர்கொளச் செல்வார்.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருப்பறியலூர் வீரட்டத்தைப் பணிந்து, பொருந்திய அன்பால் அங்கு நின்றும் கடலின் கரையை அடைந்து, பாம்பை அணிந்த இறைவரின் பல திருப்பதிகளையும் சென்று வணங்கிச் சீகாழித் தலைவரான பிள்ளையார், அங்கங்கும் தொண்டர்கள் சூழ வந்து வரவேற்கச் செல்பவராய்,

குறிப்புரை :

திருப்பறியலூரில் அருளிய பதிகம் `கருத்தன் கடவுள்\' (தி.1 ப.134) எனத் தொடங்கும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இங்குப் பதி பல என்றது திருவிடைக்கழி, திருஅளப்பூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவை யும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 443

அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்
குடிபணிந்தங் கலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்
டகன்பதிகள் கலந்து நீங்கிக்
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்
குண்டர்சாக் கியர்தங் கொள்கை
படியறியப் பழுதென்றே மொழிந்துய்யும்
நெறிகாட்டும் பவள வாயர்.

பொழிப்புரை :

அடியவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையத் திரு வேட்டக்குடியைச் சென்று வணங்கி, அவ்விடத்தினின்றும் கடற்கரை வழியே சென்று மணம் கமழும் மலர்களையுடைய வயல்கள் நிறைந்த சோழநாட்டின் பெரும்பதிகளை அடைந்து, உள்ளம் குளிர வணங்கி, அவற்றினின்றும் நீங்கிச் சமண சாக்கியர்களின் கொள்கைகள் குற்றம் உடையவை என்று உலகம் அறிய எடுத்துக் காட்டி, உய்யும் நெறி யைக் காட்டும் பவள வாயை உடைய பிள்ளையார் கொடிகள் கட்டப் பட்ட மதில்கள் சூழ்ந்த தருமபுரத்தை அடைந்தார்.

குறிப்புரை :

திருவேட்டக்குடியில் அருளிய பதிகம்: `வண்டிரைக் கும்\' (தி.3 ப.66), பண் - பஞ்சமம். `அகன் பதிகள் கலந்து\' என்பதற் கேற்பப் பிள்ளையார் வணங்கிய பதிகள் எவை எனத் தெரிந்தில. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 444

தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
பிறப்பிடமாம் அதனாற் சார
வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண்
டடிவணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார்
பிள்ளையா ரருளிச் செய்த
அருமையுடைப் பதிகந்தாம் யாழினால்
பயிற்றும்பே றருளிச் செய்தார்.

பொழிப்புரை :

தருமபுரம் திருநீலகண்டயாழ்ப்பாண நாயனா ரின் தாயாரது பிறப்பிடம் ஆதலால், அப்பதியைச் சாரவரும் அவரு டைய சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அவர் திருவடியை வணங்கி வாழ்த்தினார்களாக, அதைப் பார்த்துப் பெருமை பொருந்திய திரு நீலகண்ட யாழ்ப்பாணர் அவர்களுக்குத் தாம் செய்து வரும் பணியை எடுத்துக் கூறுவாராய், ஆளுடைய பிள்ளையார் அருளிய அரிய திருப்பதிகங்களைத் தாம் யாழில் இட்டுப் பயிற்றப் பெற்ற பேற்றை அருளிச் செய்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 445

கிளைஞரும்மற் றதுகேட்டுக் கெழுவுதிருப்
பதிகத்திற் கிளர்ந்த ஓசை
அளவுபெறக் கருவியில்நீர் அமைத்தியற்றும்
அதனாலே அகில மெல்லாம்
வளரஇசை நிகழ்வதென விளம்புதலும்
வளம்புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப்
பெரும்பாணர் உணர்த்து கின்றார்.

பொழிப்புரை :

உறவினரும்அதைக் கேட்டு, பொருந்திய திருப் பதிகத்தில் பொதிந்த ஓசையானது அளவு பெறும்படி யாழாகிய இசைக் கருவியில் நீவிர் பொருந்தும்படி வைத்து வாசிப்பதானால், உலகம் எல்லாம் அவ்விசை வளரும்படி நிகழ்கின்றது எனக் கூறியதும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் உள்ளம் நடுக்கம் கொண்டு, வளமுடைய சீகாழித் தலைவரான பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங் கிச் சொல்வாராய்,

குறிப்புரை :

பிள்ளையார் அருளிவரும் பதிகங்களை யாழிலிட்டு வாசிப்பதால், யாழிசைக்குப் பெருமையாகுமேயன்றி, அப்பதிகங்க ளுக்குப் பெருமையாதல் இல்லை. உண்மை இதுவாகவும் மாறுபடச் சொன்னமையால் உள்ளம் நடுங்கினார். பதிகங்கள் இசைநுட்பம் உடையன மட்டுமன்றி, இறைவனின் பொருள்சேர் புகழையும் பலபட விரித்துரைப்பன. எனவே அப்பதிகங்கள் பெரிதும் போற்றப்படுகின் றன. யாழிசை, கேட்கும் அளவில் நின்றுவிடுவது என்பதை உள்ளவாறு உயர்ந்த நிலையாலும், தம் தன்னடக்கத்தாலும் இவ்வாறு கருதுவராயினர் பெரும்பாணர்.

பண் :

பாடல் எண் : 446

அலகில்திருப் பதிகஇசை அளவுபடா
வகைஇவர்கள் அன்றி யேயும்
உலகிலுளோ ருந்தெரிந்தங் குண்மையினை
அறிந்துய்ய உணர்த்தும் பண்பால்
பலர்புகழுந் திருப்பதிகம் பாடியரு
ளப்பெற்றால் பண்பு நீடி
இலகுமிசை யாழின்கண் அடங்காமை
யான்காட்டப் பெறுவ னென்றார்.

பொழிப்புரை :

`அளவற்ற திருப்பதிக இசைக் கூறுகளைக் கருவியில் அளவுபடாதவாறு, இவர்களே அன்றி இன்னும் உலகில் உள்ளவரும் அறிந்து அவ்வுண்மையை உணர்ந்து உய்யுமாறு உணர்த்தும் தன்மையினால், பலதிறத்தவரும் புகழும் ஒரு திருப்பதி கத்தைப் பாடியருளுகின்ற பேறுபெறுவேனானால், பண்பினால் நீண்டு விளங்கும் அவ்விசையானது யாழில் அடங்காத நிலையை நான் அவர்க்கு எடுத்துக் காட்டப் பெறுவேன்\' என்று பிள்ளையாரிடம் பாணர் விண்ணப்பித்துக் கொண்டார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 447

வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன்
தொழுதுதிருப் பதிகத் துண்மை
பூதலத்தோர் கண்டத்துங் கலத்தினிலும்
நிலத்துநூல் புகன்ற வேத
நாதவிசை முயற்சிகளால் அடங்காத
வகைகாட்ட நாட்டு கின்றார்
மாதர்மடப் பிடிபாடி வணங்கினார்
வானவரும் வணங்கி ஏத்த.

பொழிப்புரை :

மறைகளின் நெறியை வளர்ப்பவரான பிள்ளை யாரும் ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட இறைவர் திருமுன்பு நின்று, திருப்பதிகத்தின் உண்மைத் திறமானது, உலகத்தவரின் மிடற்றிலும் கருவியிலும், உலகினர் மறைவழிவகுத்த இசைநூல்களின் நாத வகை களினாலும் அடங்காத வகையினை அறியக் காட்டுமாறு நிலைநாட்டு பவராய்த் தேவர்களும் வணங்கிப் போற்றும்படி `மாதர் மடப்பிடி\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வணங்கினார்.

குறிப்புரை :

மாதர் மடப்பிடி\' (தி.1 ப.136) எனத் தொடங்கும் இவ்வரிய பதிகம் மேகராகக் குறிஞ்சியில் அமைந்த பதிகமாகும். வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்தது என்றும் சிலர் கருதுவர். யாழ்மூரி என்பது பண்ணன்று, பாணர்தம் வேண்டுகோளால் பாடி, யாழை முரிக்க நேர்ந்த வரலாற்றைக் குறிக்க வந்த தொடருமன்று. யாழில் இசைக்க இயலாதவாறு அமைந்த இசையமைப்பாகும்.

பண் :

பாடல் எண் : 448

வண்புகலி வேதியனார் மாதர்மடப்
பிடியெடுத்து வனப்பிற் பாடிப்
பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த
அணைந்துபெரும் பாண னார்தாம்
நண்புடையாழ்க் கருவியினில் முன்புபோல்
கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்
கெண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில்
இடஅடங்கிற் றில்லை யன்றே.

பொழிப்புரை :

வளம் மிக்க சீகாழியில் தோன்றிய பிள்ளையார் `மாதர் மடப்பிடி\' எனத் தொடங்கி அழகு பொருந்தப்பாடிப் பண் பயில்கின்ற திருக்கடைக்காப்புச் சாத்தி நிறைவு செய்யத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அங்கு நின்று யாழ்க் கருவியில் அமைத்து முன் போல் அப்பதிக இசையினை இசைக்கப் புகுந்த அளவில், அவருக்கு அப்பதி கத்தின் இசை, யாழ் நரம்பில் வைத்து வாசிக்க அடங்காமல் போயிற்று.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 449

அப்பொழுது திருநீல கண்டஇசைப்
பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப்பயமும் பரிவுமுறப் பிள்ளையார்
கழலிணைவீழ்ந் தெழுந்து நோக்கி
இப்பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்
திசையாழி லேற்பன் என்னச்
செப்பியதிக் கருவியைநான் தொடுதலின்அன்
றோஎன்று தெளிந்து செய்வார்.

பொழிப்புரை :

அதுபொழுது திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழ் வாசிப்பதைக் கைவிட்டு, உடலில் நடுக்கமும், உள்ளத்தில் வருத்தமும் பொருந்தப் பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்து நின்று, அவரைப்பார்த்து, `இந்தப் பெரியவர் அருளிச் செய்த திருப் பதிகத்தின் இசையை யாழில் இசைப்பேன் என்று மேற்கொள்ளச் செய்த இந்த யாழ்க் கருவியை நான் தொடுதலால் விளைந்ததன்றோ!\' என்று உள்ளத்தில் தெளிந்து, அதற்குத்தக, மேற்கொண்ட செயலைச் செய்வாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 450

வீக்குநரம் புடையாழி னால்விளைந்த
திதுவென்றங் கதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்தருளி ஐயரே
உற்றஇசை யளவி னால்நீர்
ஆக்கியஇக் கருவியினைத் தாருமென
வாங்கிக்கொண் டவனி செய்த
பாக்கியத்தின் மெய்வடிவாம் பாலறா
வாயர்பணித் தருளு கின்றார்.

பொழிப்புரை :

`முறுக்கிக் கட்டப்பட்ட நரம்பையுடைய யாழால் இக்குற்றம் உண்டானது\' எனக் கூறி, அதனை முரிப்பதற்குத் திருநீல கண்ட யாழ்ப்பாணர் முயன்ற போது, உலகம் செய்த நற்பேற்றின் வடிவாய் உள்ள பிள்ளையார், பாணரின் அச்செயலைத் தடுத்து `ஐயரே! பொருந்திய இசை நூலில் விதித்த அளவுப்படி நீவிர் இயற்றும் இந்த யாழ்க்கருவியைத் தாரும்\' என்று, அதனைத் தம் கையில் பெற்றுக் கொண்டு, மேலும் ஆணையிடுபவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 451

ஐயர்நீர் யாழ்இதனை முரிக்கும தென்
ஆளுடையா ளுடனே கூடச்
செய்யசடை யார்அளித்த திருவருளின்
பெருமையெலாம் தெரிய நம்பால்
எய்தியஇக் கருவியினில் அளவுபடு
மோநந்தம் இயல்புக் கேற்ப
வையகத்தோர் அறிவுறஇக் கருவிஅள
வையின்இயற்றல் வழக்கே என்றார்.

பொழிப்புரை :

`ஐயரே! இந்த யாழை முரிப்பது ஏன்? ஆளு டைய பிராட்டியாருடன் எழுந்தருளியிருக்கும் சிவந்த சடையை உடைய சிவபெருமான் அளித்த திருவருளின் பெருமையெல்லாம், நம்மிடத்தில் பொருந்திய இக் கருவியின் அளவில் அடங்குமோ? நம் இயல்புக்குத் தக்கவாறு இவ்வுலகத்தவர் மகிழ, இந்தக் கருவியின் அளவுக்குள் அமையும் நிலையில் இயற்றுவதே ஏற்றதாகும்\' என்று அருளி,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 452

சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை
செயலளவில் எய்து மோநீர்
இந்தயா ழினைக்கொண்டே இறைவர்திருப்
பதிகஇசை இதனில் எய்த
வந்தவா றேபாடி வாசிப்பீர்
எனக்கொடுப்பப் புகலி மன்னர்
தந்தயா ழினைத்தொழுது கைக்கொண்டு
பெரும்பாணர் தலைமேற் கொண்டார்.

பொழிப்புரை :

`மனத்தானும் அளவுபடுத்தற்கியலாத இசையின் பெருமையைச் செயலுள் பொருந்தச் செய்ய வருமோ? இந்த யாழைக் கருவியாகக் கொண்டு இறைவர் திருப்பதிகத்தை இதனுள் பொருந்த வந்த அளவில் இயைத்து இசைப்பீராக!\' எனப் பிள்ளையார் பணித்துக் கொடுத்த யாழை, அவரைத் தொழுது ஏற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர், அதனைத் தலைமீது வைத்துப் போற்றிக் கொண்டார்.

குறிப்புரை :

பாணரின் வேண்டுகோளுக்கு ஏற்பவே, பிள்ளையார் பதிகம் அருளினார்; ஆனால் அப்பதிகம் தம் யாழில் இயைத்து இசைக்க இயலாததாயிற்று. அங்ஙனமாகப் பாணனார் யாழை முரிப்பானேன்? என்ற வினா எழலாம். பதிகப் பெருமை, பெரு மானின் அருள் வழிநின்று பாடிவரும் பிள்ளையாருடையதாகத் தம்யாழ் வழியதே எனக் கருதிய சுற்றத்தார்க்கு அது பொய்ம்மை யாதலைக் காட்ட விரும்பியே, பிள்ளையாரிடம் அத்தகையதொரு பதிகம் பாடவேண்டினர். அவ்வளவில் அவரே, அதனைத் தாம் இசைக்க இயலாத நிலையில் மேலும் ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. இவ்யாழ் இருந்தமையால் அன்றோ முன்னர் (பா.140) பிள்ளையார் அருள் செய்யும் அறிவரிய திருப்பதிகத்தை யாழிலிட்டு வாசிக்க வேண்டிக் கொள்ள நேர்ந்தது. இஃது இன்றேல் அவ்வெண் ணமே தோன்றியிராதன்றோ எனக் கருதவே அவ் யாழை முரிக்க ஒருப்பட்டார் என்பது எண்ணத் தக்கதாம். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 453

அணைவுறும்அக் கிளைஞருடன் பெரும்பாணர்
ஆளுடைய பிள்ளை யார்தம்
துணைமலர்ச்சே வடிபணிந்து துதித்தருளத்
தோணிபுரத் தோன்ற லாரும்
இணையில் பெருஞ் சிறப்பருளித் தொண்டருடன்
அப்பதியில் இனிது மேவிப்
பணைநெடுங்கை மதயானை உரித்தவர்தம்
பதிபிறவும் பணியச் செல்வார்.

பொழிப்புரை :

சூழ இருந்த சுற்றத்தாருடன் பெரும்பாணர், ஆளுடைய பிள்ளையாரின் இரு மலர் அனைய திருவடிகளையும் வணங்கிப் போற்றிட, சீகாழியில் தோன்றிய தலைவரும், ஒப்பில்லாத பெருஞ்சிறப்புக்களை அவர்களுக்கு அளித்து, தம் தொண்டர்களு டனே அப்பதியில் இனிதாய் அமர்ந்திருந்த பின், அவர் பெரிய நீண்ட துதிக்கையையுடைய யானையை உரித்த இறைவரின் பிற பதிகளை யும் வணங்கச் செல்பவராய்,

குறிப்புரை :

பிள்ளையார் பாணனாரின் சுற்றத்தாருக்கு அருளிய பெருஞ்சிறப்புக்களாவன, அன்புரைகளும் அருளாசியுமாம். பதி பிறவும் என்பன எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 454

பங்கயப்பா சடைத்தடஞ்சூழ் பழனநாட்
டகன்பதிகள் பலவும் நண்ணி
மங்கையொரு பாகத்தார் மகிழ்கோயில்
எனைப்பலவும் வணங்கிப் போற்றித்
தங்கிசையாழ்ப் பெரும்பாண ருடன்மறையோர்
தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கைமான் மழுவேந்துஞ் சினவிடையார்
அமர்ந்தருளுந் திருநள் ளாறு.

பொழிப்புரை :

இலைகள் பொருந்திய தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த வயல்களையுடைய சோழ நாட்டின் பெரிய பதிகள் பலவற் றையும் அடைந்து, உமையம்மையாரை ஒருகூற்றில் கொண்ட இறை வர் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சிவந்த கைகளில் மானையும் மழுவையும் ஏந்தும் சினமுடைய விடை யினரான இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் `திருநள்ளாற் றினை\' இசை பொருந்திய பாணருடனே அந்தணர் தலைவரான பிள்ளையார் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

`பதிகள் பலவும் நண்ணி\' என்றும், `கோயில் எனைப் பலவும் வணங்கி\' என்றும் ஆசிரியர் குறிப்பதால், பிள்ளையார் வணங்கிய பதிகளும் கோயில்களும் மிகப்பலவாம் எனத் தெரிகிறது. எனினும் அவை இவை என அறிதற்கு இயன்றிலது. திருத்தக்களூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். தருமபுரத்திலிருந்து திருநள்ளாற்றிற்கு இடைப்பட்டும், அப்பகுதியைச் சூழவும் இருக்கும் திருப்பதிகளையும் கோயில்களையும் நேரில் சென்றோ அல்லது தக்கார்வாய்க் கேட்டோ அறிதல் தக்கதாம். திருவருள் முன்னிற்க.

பண் :

பாடல் எண் : 455

நள்ளாற்றில் எழுந்தருள நம்பர்திருத்
தொண்டர்குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றி லெதிர்கொண்டு குலவியுடன்
சூழ்ந்தணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர்தந் திருவளர்கோ
புரமிறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலங்கொண்டு திருமுன்பு
தாழ்ந்தெழுந்தார் உணர்வின் மிக்கார்.

பொழிப்புரை :

திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் இறைவரின் அடியவர் கூட்டமானது விரும்பிச் சென்று, முறையாக எதிர்கொண்டு, மகிழ்வுடன் சூழ்ந்து வரச் சென்று அடைந்து, தெளிவான கங்கை ஆற்றைச் சூடிய சடையையுடைய இறைவரின் செல்வம் வளரும் கோபுரத்தை வணங்கி, அருட்செல்வம் மிக்க கோயிலுள்ளே பன் முறையும் வலம்வந்து, ஞானவுணர்வுடைய பிள்ளையார், பெருமான் திருமுன்பு வணங்கி எழுந்தார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 456

உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி
நனைஈரம் பெற்றாற் போல
மருவுதிரு மேனியெலாம் முகிழ்த்தெழுந்த
மயிர்ப்புளகம் வளர்க்கு நீராய்
அருவிசொரி திருநயனத் தானந்த
வெள்ளம்இழிந் தலைய நின்று
பொருவில்பதி கம்போக மார்த்தபூண்
முலையாள்என் றெடுத்துப் போற்றி.

பொழிப்புரை :

உருகுதற்குக் காரணமான அன்பு மீதூர்ந்த பெருவிருப்பத்தால் மனம் உருக, அதனால் பெருகும் ஈரத்தைப் பெற்றது போல், பொருந்திய திருமேனி முழுதும் எழுந்த மயிர்க் கூச்சலை வளர்க்கும் நீர்போல அருவி போன்று வழிகின்ற ஆனந்தக் கண்ணீர்ப் பெருக்குப் பெருகி அலைய நின்று, ஒப்பில்லாத பதிகத்தைப் `போகமார்த்த பூண் முலையாள்\\\' என்று தொடங்கிப் போற்றினார்.

குறிப்புரை :

`போகம் ஆர்த்த\\\' (தி.1 ப.49) எனத் தொடங்கும் பதிகம், பழந்தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 457

யாணரம்பில் ஆரஇயல் இசைகூடப்
பாடியே எண்ணில் கற்பச்
சேண்அளவு படவோங்குந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் செங்கண்நாகப்
பூண்அகலத் தவர்பாதம் போற்றிசைத்துப்
புறத்தணைந்து புவன மேத்தும்
பாணனார் யாழிலிடப் பாலறா
வாயர்அருள் பணித்த போது.

பொழிப்புரை :

யாழ்நரம்பில் பொருந்த இயல் தமிழும் இசைத் தமிழும் கூடுமாறு பாடி, எண்ணிறந்த காலப் பகுதிகளிலும், விண் ணுக்கு அப்பாலும் நிலைபெறுமாறு, ஓங்கும் திருக்கடைக்காப்புச் சாத்தியருளிச் சிவந்த கண்ணையுடைய பாம்பணியையுடைய மார்பர் ஆன இறைவரின் திருவடிகளைப் போற்றி செய்து, புறமுற் றத்தை அடைந்து, பாலறா வாயரான ஞானசம்பந்தர், உலகம் போற்றும் பெரும்பாணனாரை யாழில் இயற்றும்படி ஆணையிட்டருளினார்.

குறிப்புரை :

பின்னர்ப் பிள்ளையார் சமணரொடு வாதிடும் பொழுது, நெருப்பில் இட்டும் வேகாதிருந்த பச்சைப் பதிகம் இதுவாக அமைதல் நோக்கி, `எண்ணில் கற்பச் சேணளவு பட வோங்கும் திருக்கடைக்காப்புச் சாத்தி\' என எதிரது போற்றியுரைத்தார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 458

பிள்ளையார் திருத்தாளங் கொடுபாடப்
பின்புபெரும் பாண னார்தாம்
தெள்ளமுத இன்னிசையின் தேம்பொழிதந்
திரியாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ளஇடும் பொழுதின்கண் குவலயத்தோர்
களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திருவுள்ளம் மகிழ்ந்துதிருத்
தொண்டருடன் மருவுங் காலை.

பொழிப்புரை :

ஞானப் பிள்ளையார் திருத்தாளத்தைக் கொண்டு அளவு ஒத்து அறுத்து அப்பதிகத்தைப் பாட, அதைப் பின்தொடர்ந்து பெரும்பாணனாரும் தெள்ளிய அமுதமான இனிய இசைத்தேன் பொழியும் நரம்புகளையுடைய யாழைப் பண் அமைதி மிகுமாறு செய்து, பதிக இசையை அமைத்துப் பாடும் போது, உலகத்தவர் யாவ ரும் மகிழ்ச்சியடைய, விளங்கும் சீகாழிப் பெருவள்ளலாரான பிள் ளையார் திருவுள்ளம் கொண்டு மகிழ்ந்து தொண்டர்களுடனே அங்குத் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

யாழ்மூரிப் பதிகத்தை அடுத்துப் பாடிய பதிகம் இது வாதலின், பிள்ளையாரின் திருத்தாளத்தோடு பாணனாரின் யாழிசையும் சிறக்க இப்பதிகம் அமைந்ததாகக் குறிக்கின்றார் ஆசிரியர் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 459

மன்னுதிரு நள்ளாற்று மருந்தைவணங்
கிப்போந்து வாச நன்னீர்ப்
பொன்னிவளந் தருநாட்டுப் புறம்பணைசூழ்
திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந்நெல்வயற் செங்கமல முகமலருந்
திருச்சாத்த மங்கை மூதூர்
தன்னிலெழுந் தருளினார் சைவசிகா
மணியார்மெய்த் தவத்தோர் சூழ.

பொழிப்புரை :

பின், நிலைபெற்ற திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் மருந்தான இறைவரை வணங்கி, விடைபெற்றுச் சென்று, மணமுடைய நல்லநீர் பொருந்திய காவிரியாறானது பல வளங்களையும் தருகின்ற சோழ நாட்டின் புறம்பணை சூழ்ந்த பல திருப்பதிகளையும் வணங்கி வழிபட்டு, மெய் அடியார்கள் சூழச் சைவசிகாமணியாரான பிள்ளையார் செந்நெல் வயல்களிலே செந்தாமரை மலர்கள் மாதர் முகம் என மலர்தற்கு இடமான `திருச்சாத்தமங்கை\' என்ற பழம் பதியை அணுகினார்.

குறிப்புரை :

புறம்பணைசூழ் திருப்பதிகள் பிறவும் என்றது, அருகி லிருக்கும் பழம் பதிகளைக் குறிப்பினும், அவை இவை எனத் தெரிந்தில. எனினும் திருக்கோட்டாறு எனும் பதி இடைப்படவுள்ளது. அங்கு அருளிய பதிகங்கள் இரண்டாம். 1. `கருந்தடங்கண்ணின்\' : (தி.2 ப.52) - சீகாமரம் 2. `வேதியன் விண்ணவர்\' : (தி.3 ப.12) - காந்தார பஞ்சமம்.

பண் :

பாடல் எண் : 460

நிறைசெல்வத் திருச்சாத்த மங்கையினில்
நீலநக்கர் தாமுஞ் சைவ
மறையவனார் எழுந்தருளும் படிகேட்டு
வாழ்ந்துவழி விளக்கி யெங்குந்
துறைமலிதோ ரணங்கதலி கமுகுநிறை
குடந்தூப தீப மாக்கி
முறைமையில்வந் தெதிர்கொள்ள உடன்அணைந்து
முதல்வனார் கோயில் சார்ந்தார்.

பொழிப்புரை :

நிறைந்த செல்வத்தையுடைய சாத்தமங்கையில் வாழ்கின்ற திருநீலநக்க நாயனாரும், சைவ அந்தணரான பிள்ளையார் எழுந்தருளும் நற்செய்தியைக் கேட்டுப் பெருவாழ்வு அடைந்தவராய், அவர் வரும் வழி எல்லாம் விளக்கம் செய்து, எங்கும் இடையிடையே நெருங்கிய தோரணங்களையும் வாழை பாக்கு மரங்களையும் கட்டி, அங்கங்கே நிறைகுடம், நறுமணப் புகை, ஒளிவிளக்கு முதலான வற்றையும் அமைத்து, முறையாக வந்து எதிர்கொள்ள, ஞானசம்பந்தர் இறைவரது கோயிலை அடைந்தார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 461

அயவந்தி அமர்ந்தருளும் அங்கணர்தங்
கோயில்மருங் கணைந்து வானோர்
உயவந்தித் தெழுமுன்றில் புடைவலங்கொண்
டுட்புக்கா றொழுகுஞ் செக்கர்
மயவந்தி மதிச்சடையார் முன்தாழ்ந்து
மாதவம் இவ்வைய மெல்லாம்
செயவந்த அந்தணனார் செங்கைமேல்
குவித்தெழுந்து திருமுன் னின்றார்.

பொழிப்புரை :

`அயவந்தி\' என்னும் அக் கோயிலில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருக்கோயிலின் பக்கத்தைச் சார்ந்து, தேவர்கள் உய்யும் பொருட்டு வழிபாடு செய்து வருகின்ற திருமுன் றிலின் பக்கமாக வந்து, உட்புகுந்து, கங்கையாறு ஒழுகுவதற்கு இடமான, சிவப்பு மயமான அந்தி மாலையில் தோன்றும் மதியினைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் திருமுன்பு தாழ்ந்து வணங்கி, இப்பூவுலகம் முழுவதும் பெருந்தவம் செய்ததன் பயனாய், இங்கு வந்து தோன்றிய அந்தணராம் சம்பந்தர் தம் செங்கையினைத் தலைமீது குவித்து வணங்கி எழுந்து நின்றார்.

குறிப்புரை :

சாத்த மங்கை - ஊர்ப்பெயர். அயவந்தி - கோயிலின் பெயர்.

பண் :

பாடல் எண் : 462

போற்றிசைக்கும் பாடலினால் பொங்கியெழும்
ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர்தம் எதிர்நின்று
துதித்துப்போந் தெல்லை இல்லா
நீற்றுநெறி மறையவனார் நீலநக்கர்
மனையிலெழுந் தருளி அன்பால்
ஆற்றும்விருந் தவர்அமைப்ப அன்பருடன்
இன்புற்றங் கமுது செய்தார்.

பொழிப்புரை :

ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டு வீற்றிருக்கும் இறைவர் திருமுன்பு நின்று, போற்றிசெய்கின்ற பாடல்களால், மேன் மேலும் பொங்கியெழும் அன்புபெருகிக் கண்ணீர்விட்டுப் போற்றி செய்து, ஆனேற்றின் மீது இருந்தருளும் இறைவனின் எதிர் நின்று வெளியே வந்து அளவுபடாத திருநீற்று நெறியான சைவ நெறியை விளக்கும் அந்தணரான பிள்ளையார், திருநீலநக்க நாயனாரின் இல்லத்தில் தங்கி இருந்து, அன்பால் செய்யப்படுகின்ற விருந்து இயல்புக்கு உரியவற்றை அவர் அமைக்க, அன்பர்களோடு இன்பம் பொருந்த உண்டருளினார்.

குறிப்புரை :

இது பொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 463

நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்
விருந்தமுது செய்து நீர்மைப்
பாடும்யாழ்ப் பெரும்பாண ருந்தங்க
அங்கிரவு பள்ளி மேவி
ஆடுமவர் அயவந்தி பணிவதனுக்கு
அன்பருடன் அணைந்து சென்று
நாடியநண் புடைநீல நக்கடிக
ளுடன்நாதர் கழலில்தாழ்ந்து.

பொழிப்புரை :

அன்பு நீடும் திருநீலநக்க நாயனாரின் பெரிய இல்லத்தில் விருந்து அமுது உண்டு, நல்ல நீர்மையுடன் பாடும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உடன்தங்க அன்று அங்குப் பள்ளி அமர்ந்து, கூத்தியற்றும் இறைவரின் `அயவந்தியினைப்\' பணிவதற்கு, அன்பர்களுடனே சேர்ந்து சென்று, நாடிய நட்பையுடைய நீலநக்க நாயனாருடன் இறைவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 464

கோதிலா ஆரமுதைக் கோமளக்கொம்
புடன்கூடக் கும்பிட் டேத்தி
ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின்
திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்
தம்பெருஞ்சீர் நிகழ வைத்துப்
பூதிசா தனர்பரவும் புனிதஇயல்
இசைப்பதிகம் போற்றி செய்தார்.

பொழிப்புரை :

குற்றம் அற்ற அரிய அமிழ்தத்தைப் போன்ற இறைவரை, அழகிய இளம் கொம்பைப் போன்ற அம்மையாருடன் வணங்கி ஏத்தி, பழைய மறைகளின் பொருள் விளங்க அரிய தமிழின் திருப்பதிகம் பாடுவார், மறைவழி ஒழுகும் திருநீலநக்கரின் பெருஞ் சிறப்புகள் விளங்க வைத்து, திருநீற்று நெறியைப் போற்றி வரும் தொண்டர்கள் போற்றுமாறு, தூய இயல் இசை உடைய பதிகத்தை அருளிச் செய்தார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `திருமலர்க் கொன்றை மாலை\' (தி.3 ப.58) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். `கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டேத்தி\' என்றது, இப்பதிகப் பாடல் தொறும் வரும் முன்னிரண்டு அடிகளில் அம்மையுட னாதலைப் போற்றியிருக்கும் குறிப்பை உளங்கொண்டதாகும். `நிறை யினால் நீலநக்கன் நெடுமா நகர் என்று தொண்டர் அறையும் ஊர் சாத்த மங்கை\' எனவரும் திருக்கடைக் காப்பில் நீலநக்கர் சிறப்பிக்கப் பெறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 465

பரவியகா தலிற்பணிந்து பாலறா
வாயர்புறத் தணைந்து பண்பு
விரவியநண் புடையடிகள் விருப்புறுகா
தலில்தங்கி மேவும் நாளில்
அரவணிந்தார் பதிபிறவும் பணியஎழும்
ஆதரவா லணைந்து செல்வார்
உரவுமனக் கருத்தொன்றாம் உள்ளம்உடை
யவர்க்குவிடை உவந்து நல்கி.

பொழிப்புரை :

பாலறா வாயரான திருஞானசம்பந்தர், பெருகிய அன்பு மிகுதியால் கோயிலின் வெளியே வந்து, அன்புடன் பொருந் திய நட்புக்கொண்ட திருநீலநக்க அடிகளின் விருப்புடைய ஆசையி னால் அங்குத் தங்கியிருந்த நாள்களில், பாம்பை அணிந்த இறைவரின் மற்றப் பதிகளையும் வணங்க எழுந்த அன்பினால், அவ்வப் பதிகளுக் கும் செல்வாராய், அறிவால் உள்ளத்தில் எழும் கருத்து ஒன்றேயான மனத்தையுடைய திருநீலநக்கரிடம் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுப் புறப்பட்டார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 466

மற்றவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு
மாலயனுக் கரியபிரான் மருவு தானம்
பற்பலவும் சென்றுபணிந் தேத்திப் பாடிப்
பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்
கண்ணுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொற்றமிழ்மா லைகள் பாடிச் சிலநாள் வைகித்
தொழுதகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.

பொழிப்புரை :

பிள்ளையார், அந்நீலநக்கரின் பெருநட்பை மகிழ்ந்து மனத்துட் கொண்டு, நான்முகன், திருமால் என்பவர்க்கும் அரிய சிவபெருமானின் பதிகள் பலவும் சென்று வணங்கிப் போற்றி, இறைவரின் தொண்டர் கூட்டமானது உடன் சூழ்ந்து வரச்சென்று கற்றவர் வாழும் `திருநாகைக் காரோணம்\' என்ற பதியில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, இசையுடன் கூடிய சொல் நிறைந்த தமிழ் மாலை களைப் பாடிச் சிலநாள்கள் அங்குத் தங்கி, வணங்கி விடைபெற்று நீங்கினார்.

குறிப்புரை :

மருவுதானம் பற்பலவும் என்றது இறையான்சேரி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் தெளி வாக எவையும் தெரிந்தில. திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்: 1. `புனையும் விரி\' : (தி.1 ப.84) - குறிஞ்சி 2. `கூனல் திங்கள்\' : (தி.2 ப.116) - செவ்வழி. இப்பாடற்கு முன்னும் பின்னும் உள்ள சந்தத்திற்கும் இப் பாடல் சந்தத்திற்கும் இடையறவு இருத்தல் கண்டு இதனை இடைச் செருகல் என்பர் சிவக்கவிமணியார். எனினும் இப்பாடலில் கடல்நாகைக் காரோணப் பெருமானை வணங்கினார் எனக் கூறி, அடுத்து வரும் பாடலில் `அந்நாகைக்காரோணத்தினின்றும் நீங்கி\' என வருதலின் பொருளியைபு காணத்தகும் இப்பாடலை இடைச் செருகலாகக் கொள்ள வேண்டுவது இல்லை என்றே தெரிகிறது.

பண் :

பாடல் எண் : 467

கழிக்கானல் மருங்கணையுங் கடல்நாகை
யதுநீங்கிக் கங்கை யாற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
பரவிப்போய்த் தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
விமலர்கழல் வணங்கி ஏத்தி
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்தருளி
அங்ககன்றார் மூதூர் நின்றும்.

பொழிப்புரை :

உப்பங்கழிகள் நிறைந்த சோலைகளின் பக்கங் களில் உள்ள நாகப்பட்டினத்தை நீங்கிச் சென்று, கங்கையாற்றின் சுழிகளில் ஒலித்தல் பொருந்திய சடையையுடைய இறைவரின் பதிகள் பலவும் வணங்கிச் சென்று, மயில் போன்ற சாயலை உடைய மகளிரின் கண்கள் போன்ற கருங்குவளை மலர்கள் மலர்வதற்கு இடனான வயல்கள் சூழந்த திருக்கீழ்வேளூரில் வீற்றிருக்கும் இறைவரின் திரு வடிகளை வணங்கிப் போற்றி, அன்பு மிகுதியால் தமிழ்ப் பதிகங்க ளான மாலைகளைப் பாடி, அப்பழைய பதியினின்றும் புறப்பட்டார்.

குறிப்புரை :

பதிகள் பலவும் என்றது திருச்சிக்கல், திருக்கண்ணங் குடி, திருவாழியூர் முதலாயினவாகலாம். இப்பதிகளுள் திருச்சிக்க லுக்கு மட்டும் ஒருபதிகம் கிடைத்துள்ளது. அப்பதிகம் `வானுலாவும் மதி\' (தி.2 ப.8) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருக்கீழ்வேளூரில் அருளிய பதிகம் `மின்னுலாவிய\' (தி.2 ப.105) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 468

அருகணையுந் திருப்பதிகள் ஆனவெலாம்
அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகியஞா னம்பெற்ற பிள்ளையார்
எழுந்தருளும் பெருமை கேட்டுத்
திருமருவு செங்காட்டங் குடிநின்றும்
சிறுத்தொண்டர் ஓடிச் சென்றங்
குருகுமனங் களிசிறப்ப எதிர்கொண்டு
தம்பதியுட் கொண்டு புக்கார்.

பொழிப்புரை :

பெருகிய ஞானத்தைப் பெற்ற பிள்ளையார், அருகிலுள்ள பதிகளில் எல்லாம் இறைவரை வணங்கிப் போற்றி, எழுந்தருளி வருகின்ற செய்தியைச் செவியேற்றுச் செல்வம் பொருந் திய திருச்செங்காட்டங்குடி என்ற பதியினின்றும், சிறுத்தொண்ட நாயனார், அங்கு ஓடிச் சென்று, அன்பால் உருகும் மனம் மகிழ்ச்சி மிக, எதிர் கொண்டு வரவேற்றுத் தம்பதியுள் அழைத்துக் கொண்டு சென்றார்.

குறிப்புரை :

அருகிலுள்ள பதிகள் எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 469

சிறுத்தொண்ட ருடன் கூடச் செங்காட்டங்
குடியிலெழுந் தருளிச் சீர்த்தி
நிறுத்தெண்திக் கிலும்நிலவுந் தொண்டரவர்
நண்பமர்ந்து நீல கண்டம்
பொறுத்தண்டர் உயக்கொண்டார் கணபதீச்
சரத்தின்கட் போக மெல்லாம்
வெறுத்துண்டிப் பிச்சைநுகர் மெய்த்தொண்ட
ருடன்அணைந்தார் வேதகீதர்.

பொழிப்புரை :

சிறுத்தொண்ட நாயனாருடன் கூடத் திருச்செங் காட்டங்குடிக்கு எழுந்தருளிச் சென்று, தம் சிறப்பை எண்திசையிலும் நிலை நிறுத்திவரும் பெருந்தொண்டரான அவருடைய நட்பை விரும்பி, உலகியல் இன்பங்களை எல்லாம் வெறுத்துத் துறந்து பிச்சை ஏற்ற உண்டியைத் துய்த்துவரும் மெய்த்தொண்டர்களுடனே சேர்ந்து, நீலகண்டத்தைத் தாம் தாங்கித் தேவர்களை உய்யுமாறு கொண்ட இறைவரின் `கணபதீச்சரம்\' என்ற கோயிலில், மறைப்பொருளை இசைப் பாடல்களாகப் பாடும் சம்பந்தர் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 470

அங்கணைந்து கோயில்வலங் கொண்டருளி
அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து
செங்கண்அரு விகள்பொழியத் திருமுன்பு
பணிந்தெழுந்து செங்கை கூப்பித்
தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர்
தொழவிருந்த தன்மை போற்றிப்
பொங்கியெழும் இசைபாடிப் போற்றிசைத்தங்
கொருபரிசு புறம்பு போந்தார்.

பொழிப்புரை :

சென்றவர் கணபதியீச்சரக் கோயிலைச் சேர்ந்து, அதனை வலமாக வந்து, பாம்பை அணிந்த இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கிக் கண்களிலிருந்து கண்ணீர் அருவி இழிய, திரு முன்பு பணிந்து எழுந்து, சிவந்த கைகளைக் குவித்து வணங்கி, தம்மை ஆண்ட இறைவரைச் சிறுத்தொண்ட நாயனார் தொழுமாறு வீற்றிருந்த தன்மையைப் போற்றி, மேலும் மேலும் பொங்கி எழுகின்ற பதிகத்தைப் பாடிப் பரவி, அங்கிருந்து ஒருவாறாக அரிதின் நீங்கி வெளியே வந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகங்கள் இரண்டாம். 1. `பைங்கோட்டு மலர்ப் புன்னை\' : (தி.3 ப.63) - பஞ்சமம் 2. `நறை கொண்ட\' : (தி.1 ப.61) - பழந்தக்கராகம்.

பண் :

பாடல் எண் : 471

போந்துமா மாத்திரர்தம் போரேற்றில்
திருமனையிற் புகுந்து சிந்தை
வாய்ந்தமா தவரவர்தா மகிழ்ந்தருள
அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்
காய்ந்தமால் விடையார்தங் கணபதீச்
சரம்பரவு காதல் கூர
ஏந்துநூ லணிமார்பர் இன்புற்றங்
கன்பருடன் இருந்த நாளில்.

பொழிப்புரை :

கோயிலினின்றும் வெளிப்போந்த பிள்ளையார், மாமாத்திரர் மரபில் அவதரித்த போர் ஏறு போன்ற சிறுத்தொண்ட நாயனாரின் இல்லத்தில் புகுந்து, மாதவம் வாய்ந்த அவர் மனத்தில் மகிழ்ச்சி பொங்க விரும்பி அங்குத் தங்கியிருப்ப, முப்புரங்களையும் எரித்த, திருமாலை ஊர்தியாகக் கொண்ட இறைவரின் கணபதீச் சரத்தைப் போற்றி மகிழும் அன்பு மேன்மேலும் மீதூரப் பூணூலை அணிந்த அழகிய மார்பினையுடைய பிள்ளையார், இன்பம் பெருக அங்கு அன்பர்களுடன் தங்கியிருந்த நாள்களில்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 472

திருமருகல் நகரின்கண் எழுந்தருளித்
திங்களுடன் செங்கட் பாம்பு
மருவுநெடுஞ் சடைமவுலி மாணிக்க
வண்ணர்கழல் வணங்கிப் போற்றி
உருகியஅன் புறுகாத லுள்ளலைப்பத்
தெள்ளுமிசை யுடனே கூடப்
பெருகுதமிழ்த் தொடைசார்த்தி அங்கிருந்தார்
பெரும்புகலிப் பிள்ளை யார்தாம்.

பொழிப்புரை :

`திருமருகல்\\\' என்ற நகரத்திற்கு எழுந்தருளிப் பிறைச் சந்திரனுடன் சிவந்த கண்களுடைய பாம்பு தங்குவதற்கு இடமான நீண்ட சடையையுடைய மாணிக்க வண்ண நாதரின் திருவடிகளை வணங்கிப் போற்றி, உருகிய அன்பு பெருகிய ஆசையானது உள்ளத்தில் பொருந்தி அலைக்க, தெளிந்த இசையுடன் பொருந்தப் பெருகும் தமிழ் மாலையைச் சார்த்தி, அப்பதியில் சீகாழித் தலைவர் எழுந்தருளியிருந்தார்.

குறிப்புரை :

இதுபோது அருளிய பதிகம் கிடைத்திலது. மாணிக்க வண்ணர் - இறைவரின் பெயர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 473

அந்நாளில் ஒருவணிகன் பதிக னாகி
அணைவானோர் கன்னியையும் உடனே கொண்டு
பொன்னார்மே ருச்சிலையார் கோயில் மாடு
புறத்திலொரு மடத்திரவு துயிலும் போது
மின்னார்வெள் ளெயிற்றரவு கவ்வுதலும் கிளர்ந்த
விடவேகங் கடிதுதலை மீக்கொண் டேறத்
தன்னாவி நீங்குமவன் தன்மை கண்டு
சாயல்இளங் கன்னிநிலை தளர்ந்து சோர்வாள்.

பொழிப்புரை :

அந்நாள்களில் வணிகன் ஒருவன் நடந்து செல்பவனாய்த் தன்னுடன் ஒரு கன்னிப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு செல்பவன், பொன்மலையான மேருவை வில்லாக உடைய சிவபெருமானின் கோயிலின் அருகில் உள்ள ஒரு மடத்தில் இரவில் தங்கி உறங்கும் போழ்தில், ஒளிபொருந்திய பற்களையுடைய பாம்பு அவனைத் தீண்டியதால், நஞ்சின் வேகமானது விரைவாய்த் தலை யில் ஏறிடத் தன் உயிர் நீங்கும் அவனுடைய நிலைமையைப் பார்த்து, அவனுடன் வந்த மென்மையான சாயலைக் கொண்ட இளங்கன்னி நிலை கலங்கித் தளர்ந்து சோர்பவளாய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 474

வாளரவு தீண்டவும்தான் தீண்ட கில்லாள்
மறுமாற்றம் மற்றொருவர் கொடுப்பா ரின்றி
ஆளரியே றனையானை அணுக வீழ்ந்தே
அசைந்தமலர்க் கொடிபோல்வாள் அரற்றும் போது
கோளுருமும் புள்ளரசும் அனையார் எல்லாக்
கொள்கையினா லுந்தீர்க்கக் குறையா தாக
நீள்இரவு புலர்காலை மாலை வாச
நெறிகுழலாள் நெடிதயர்ந்து புலம்பு கின்றாள்.

பொழிப்புரை :

ஒளியுடைய பாம்பானது அவனைத் தீண்டவும், தான் தீண்டாதவளாகிய அப்பெண், தனக்கு ஆறுதல் கூறுவார் எவரும் இல்லாதவளாய், ஆண்சிங்கம் போன்ற அவ்வணிகனை அணுகிய நிலையில், அருகில் விழுந்து, அசைந்து வீழ்ந்த மலர்க்கொம்பைப் போல்வாள் ஆன அவள் புலம்பும் போது, வலிய இடியையும் பறவை மன்னனான கருடனையும் போன்ற மந்திரவாதிகள் எல்லாவகையான கொள்கையின் மூலமாகவும் தீர்க்க முயலவும், அந்நஞ்சு குறையா தாக, நீண்ட அவ்விரவில் விடியற்காலம் வரையிலும் மணமுடைய மாலைசூடிய நெறிந்த கூந்தலையுடைய அப்பெண், பெரிதும் தளர்ந்து புலம்புகின்றவள்,

குறிப்புரை :

தீண்டத் தகாதது பாம்பு, தீண்டும் உரிமையுடையவள் இவள். எனினும் அது தீண்டவும் தான் தீண்டாதிருந்தது மணமாகாத நிலையில் அவனைத் தீண்டல் தகாது எனும் பண்பாடு பற்றியாம். தீண்டாத நிலை மட்டும் அன்று, துன்பம் மீதூர்ந்த நிலையில் அவனை யன்றி ஒரு பற்றுக்கோடும் இல்லாத நிலையிலும் தளர்ந்து வீழ்ந்து அரற்றும் அவள். உடலின் மீதன்றி, அவனருகேயே வீழ்ந்து அரற்று கின்றாள். இவை எல்லாம் நினைந்து நினைந்து போற்றற்குரிய பண்பாடாகும். இவ்வரிய பண்பாடுகளையெல்லாம் நினைந்து இக்காலவுலகம் கடைப்பிடித்துப் போற்றத் திருவருள் முன்னின்றருள வேண்டுவோம். இடி, பாம்பு போன்றவற்றால் தாக்குண்டவர்கள், அவ்வத் துன்பங்களினின்றும் நீங்கவேண்டும் எனில், அவ்விடி, கருடன் போல்வதொரு வலிமையைப் பெறுதல் வேண்டும். மந்திர வலிமை யால் அத்தன்மைகளைப் பெற்றோர், அத்துன்பங்களை நீக்க இயலும், இதுபற்றி மாதவச் சிவஞானமுனிவர் உரைத்தருள்வதும் ஈண்டு நினைவு கொள்ளற்குரியதாம். கருட பாவனை யென்றது யாதெனிற் கூறுதும்: ஆதிபௌதிக கருடன், ஆதிதைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக் கருடன் மூன்று வகைப்படும். இவ்வாறு பொருள்தோறும் கண்டுகொள்க. அவற்றுள், உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதிதெய்வமாய் மாந்திரிகர் உள்ளத்தில் அது போல வைத்துத் தியானஞ்செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடனெனப்படும். அவற்றுள், ஈண்டுக் கருடன் என்றது கருடனுக்கதிதெய்வமாய் மாந்திரிகனுளத்திற் காணப் படும் மந்திரரூபமாகிய ஆதிதைவிக கருடனை. அதனைப் பாவித்த லாவது நாடோறும் பயின்று வந்த பயிற்சி விசேடத்தால் அம்மந்திர ரூபமே தானாக அநந்நிய பாவனை செய்து தன்னறிவு அதன் வசமாம்படி உறைத்து நிற்றல். அங்ஙனம் நின்று அம்மந்திரக் கண் கொண்டு பார்க்கவே, அஃது அவ் விடவேகத்தை மாற்றுதல் ஒருதலை யாதலின், அப்பாவனை ஈண்டைக்கு உவமையாயிற்று. இதனானே கருட பாவனை சத்தியமா மென்பதூஉம், அதனை அசத்திய மென்பார் மதம், போலியென்பதூஉம் தெற்றென உணர்க. புள், விலங்கு, மரம் முதலிய சராசரங்களுக்கெல்லாம் அதிதெய்வ மந்திரம் உளவென்பதூஉம், படிகம் போல அதுவதுவா மியல்புடைய ஆன்மா அவற்றுள் எவ்வெவ் மந்திரங்களைக் கணிப்பினும் அவ்வம் மந்திர சொரூபியாவான் என்பதூஉஞ் சர்வ ஞானோத்தர முதலியவற்றுட் காண்க. சிவஞானப் போதப் பேருரை; 9 - 2.

பண் :

பாடல் எண் : 475

அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன்போந்தேன் அரவால் வீடி
என்னையுயிர் விட்டகன்றாய் யான்என் செய்கேன்
இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னியசீர் வணிகர்குல மணியே யானும்
வாழேன்என் றென்றயர்வாள் மதியினாலே
சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயில்
திசைநோக்கித் தொழுதழுதாள் செயலொன் றில்லாள்.

பொழிப்புரை :

`அன்னையையும் தந்தையையும் பிரிந்து உன்னையே சார்வாய் அடைந்து உன்னுடனே வந்தேன், பாம்பு தீண்டப் பெற்று உயிர் நீங்க என்னை விட்டு அகன்றாய்! நான் என் செய்வேன்? இத் துன்பத்தைத் தீர்ப்பார் எவரும் இல்லையே! நிலை பெற்ற சிறப்பையுடைய வணிகர் குலமணியே! நானும் இனி வாழேன்!\' என்று பலவாறாக வருந்தும் அப்பெண், தன் அறிவால், தலையில் இளம்பிறையை அணிந்த இறைவரின் திருக்கோயில் வாயில் திசையை நோக்கி, வேறு செயல் ஒன்றும் இல்லாதவளாய்க் கைகூப்பித் தொழுது அழுவாளாய்,

குறிப்புரை :

இரவெல்லாம் அழுதபோதும், மனித முயற்சியால் எத்துணையும் செய்தபொழுதும் துன்பம் நீங்கப் பெற்றிலாத சூழலில், இனி இறைவனே பற்றுக் கோடாவன்; அவன் எத்துன்பத்தையும் நீக்கவல்லன் எனக் கருதிக் கோயில் வாயிலைத் திசைநோக்கி அழுதாள். அவ்வாறழுததுவே `அவள் மதியினால்\' என்றார். பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்
பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.
(தி.6 ப.31 பா.7) எனவரும் திருவாக்கும் காண்க. காழிப்பிள்ளையாரும் திருத்தோணிச் சிகரம் பார்த்து அழவே ஞானம்பெற்றார் என்பதும் நினைவு கூரத்தக் கதாம்.

பண் :

பாடல் எண் : 476

அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.

பொழிப்புரை :

`அடியவர்களாகிய தேவர்களின் கூட்டம் முழுதும் உய்யும் பொருட்டாய் அலைபொருந்திய பாற்கடலினி டத்துத் தோன்றிய நஞ்சையுண்டருளிய அமுதமே! சிவந்த கண் களையுடைய நீண்ட திருமாலும் நான்கு முகங்களையுடைய நான்முக னும் காணாத கோலம் உடைய நீலநிறமுடைய நச்சுப் பாம்புகளை அணியாய் அணிந்த விமலனே! வெந்து சாம்பலாகிவிட்ட காமனின் உயிரை அவன் மனைவியான இரதியின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் அளித்த புண்ணியனே! மலர்களின் மணம் மிக்க சோலைகள் எங்கும் சூழவுள்ள அழகுடைய திருமருகலில் வீற்றிருக்கும் இறை வனே! காப்பாயாக!\' என்று கூறியவள் பின்னும்,

குறிப்புரை :

இறைவனை அழைத்துக் கூறும் இவ்வழைப்பு விண் ணப்பங்கள் ஆழமும் அருமையும் உடையன. அமரரும் அசுரரும் தத்தம் நலங்கருதி, வாசுகி என்ற பாம்பை வருத்தியதால் எழுந்தது அப்பெருவிடம். இங்கோ அடியவளாய யானும், முறைமையுடைய வனாய் ஏமாற்றப்பட்டவனுமாய என் தாய்மாமனின் வருத்தங்கண்டு, அதனை நீக்க விண்ணப்பித்துக் கொள்கின்ற தகவாகும். அந்நிலையில் அப்பெருமகனை நஞ்சுண்டது தகுமோ? அன்றியும் அங்கெழுந்ததோ அலைகடல்வாய் எழுந்த பெருவிடம். இங்கு ஏற்பட்டதோ ஒருசிறு பாம்பினால் ஏற்பட்ட விடம். அந்நிலையில் இந்நஞ்சை நீக்கலா காதோ? என்பாள், `அடியாராம் இமையவர்தம் கூட்டம் உய்ய அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே\' என்றாள். அந்நஞ்சு பாற்கடலில் தோன்றிய ஒருபெருவிடம் எனினும், அது வாசுகியாம் பாம்பால் ஏற்பட்ட விடமே யாகும். நீயோ அப்பாம்பையே அணிகலனாக அணிந்தவன். அந்நிலையில் இப்பாம்பினாலாய விடத்தை நீக்கல் ஆகாதோ என்பாள், `நீல விட அரவு அணிந்த விமலா\' என்றாள். அமரரும் அசுரரும் விடம் தாக்கும் முன்னமேயே காப்பாற்றப் பெற்றனர். நின்நிலை அதுவன்றே எனின், இரதி, தன் கணவன் வெந்து பொடியான பின்னும் அவள் வேண்ட, நீ உயிர் கொடுத்தவன். அந் நிலையில் உயிர்நீத்த எம்மாமன் உயிரையும் அளித்தருள இயலுமே என்பாள், `வெந்து பொடியான காமன் உயிர் இரதி வேண்டப் புரிந் தளித்த புண்ணியனே!\' என்றாள். நின்மகிழ்வு மட்டுமன்றி, நீ வீற்றிருக் கும் திருமருகலும் மணமும் மலரும் சூழ அழகு பொலிந்திருக்க, யான் மட்டும் அவலத்தில் அழுந்திநிற்பது அறமோ என்பாள், `பொங்கர் வாசக் கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும் கவின் மருகற் பெருமானே! காவாய்\' என்றாள்.

பண் :

பாடல் எண் : 477

வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறி
வருங்காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம்
சிதைந்துருள வுதைத்தருளுஞ் செய்ய தாளா
இந்தவிடக் கொடுவேகம் நீங்கு மாறும்
யான்இடுக்கட் குழிநின்றும்ஏறு மாறும்
அந்திமதிக் குழவிவளர் செய்ய வேணி
அணிமருகற் பெருமானே அருளாய் என்றும்.

பொழிப்புரை :

`உம்மிடம் வந்தடைந்த சிறு மறையவனான மார்க்கண்டேயனின் உயிர்மீது சினந்து வந்த இயமனின் பெரிய நஞ்சின் வடிவனைய சிவந்த கொடுங்கண்ணையும், வெண்மையான பற்களையும் கொண்ட கரிய கோலம் சிதைந்து உருளுமாறு உதைத் தருளிய சிவந்த திருவடியை யுடையவரே! இந்த நஞ்சின் கொடிய வேகம் நீங்குமாறும், நான் துன்பமான குழியினின்றும் மேல் ஏறுமாறும் பிறைச் சந்திரன் வளர்வதற்கு இடமான சிவந்த சடையை உடைய அழகிய மருகலில் வீற்றிருந்தருளும் பெருமானே! அருள் செய்வீராக! என்றாள். மேலும்,

குறிப்புரை :

நின் தலைவனின் உயிர் கவர்ந்தவன் இயமன். அவனோ என் ஆணைவழி நின்றே அச்செயலைச் செய்து வருகின்றவன். அந்நிலையில் அவனிடத்திருக்கும் உயிரை மீட்பது அறமோ? எனின், நீ முன்னொருகால், ஒரு சிறுமறையோன் (மார்க்கண்டேயன்) உயிர் நீங்கும் காலம் வர, நின் ஆணைவழி நிற்கும் அவ்இயமனே அவ் வுயிரைக் கவர வர, நீ முற்பட்டு நின் காலால் அவனை உதைத்தருளி, அச்சிறுமறையோனைக் காத்தது பலரறிந்த வரலாறன்றோ? அங்ஙன மாக என் தலைவன் உயிரையும் அவ்இயமன் வழிப்படாது மீட்டல் அறனுடையதாகாதோ? என்பாள், `வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறிவருங்காலன் பெருங்காலவலயம் போலும் செந்தறு கண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம் சிதைந்தருள உதைத்தருளுஞ் செய்யதாளா!\' என்றாள். இவ்வாறெல்லாம் குறிப்பின் வேண்டும் பெறற்கருந் தொடர்களால் முறையிட்டுக் கொண்ட அப்பெண், இனி வெளிப்படையாகவும் தன் வேண்டுகோளை விண்ணப்பித்து அருள வேண்டுவாள், `இந்தவிடக் கொடுவேகம் நீங்குமாறும் யான்இடுக் கண் குழியினின்றும் ஏறுமாறும், அந்திமதிக் குழவிவளர் செய்ய வேணி அணிமருகற் பெருமானே! அருளாய்!\' என்றாள்.

பண் :

பாடல் எண் : 478

இத்தன்மை சிவனருளே சிந்தித் தேங்கும்
இளங்கொடிபோல் நுடங்கும்இடை ஏழை ஏத்தும்
அத்தன்மை ஓசையெழுந் தெங்கள் சண்பை
ஆண்டகையார் கும்பிடவந் தணைகின்றார்தம்
மெய்த்தன்மை விளங்குதிருச் செவியிற் சார
மேவுதலும் திருவுள்ளக் கருணை மேன்மேல்
வைத்தன்ன மெனஅயர்வாள் மாடுநீடு
மாதவத்தோர் சூழஎழுந் தருளி வந்தார்.

பொழிப்புரை :

இங்ஙனம் சிவபெருமானின், அருளையே எண்ணிய வண்ணமாய் வருந்தும் இளங்கொடியைப் போன்ற துவ ளும் இடைகொண்ட ஏழையான அம்மங்கையின் துன்பத்தின் வயப்பட்ட முறையீடு, எம் இறைவரான சீகாழி ஆண்டகையார் இறை வரைக் கும்பிடும் பொருட்டு வந்து சேர்கின்றவரின் மெய்த்தன்மை யுடைய செவிகளில் சேரப் பொருந்தவும், திருவுள்ளத்தில் கருணை மிகக் கொண்டு, அன்னப் பறவை போன்று வருந்துகின்றவள் பக்கத் தில், அடியார்கள் சூழ்ந்து வர எழுந்தருளி வந்தார்.

குறிப்புரை :

இவ் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 479

சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
சிவபெருமான்அருள்போற்றிச் சிந்தை நைந்து
பரவுறுவாள் தனைநோக்கிப் பயப்ப டேல்நீ
பருவுரலும் நும்பரிசும்பகர்வாய் என்னக்
கரமலர்க ளுச்சியின்மேற் குவித்துக் கொண்டு
கண்ணருவி சொரிந்திழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக்கீழ் வீழ்ந்து தாங்கள்
போந்ததுவும் புகுந்ததுவும் புகல லுற்றாள்.

பொழிப்புரை :

சீகாழியில் தோன்றிய அந்தணரான பிள்ளை யார், அப்பெண்ணின் அருகே சென்று, சிவபெருமானின் அருளையே எண்ணித் துன்புற்று அத்திருவருளையே நினைந்து போற்றும் அப் பெண்ணை நோக்கி, `நீ அஞ்ச வேண்டா! உன் துன்பத்தையும் அதற் குரிய சூழலையும் கூறுவாயாக!\' என்று கேட்க, கையாகிய மலர்களைத் தலைமீது குவித்து வணங்கிக் கண்களினின்று நீர் அருவி சொரிந்து வழியச் சீகாழியிலிருந்து வந்த அந்தணரின் சேவடியில் விழுந்து வணங்கி, தாங்கள் அங்கு வந்த வரலாற்றையும் அத்துன்பம் புகுந்தவாற்றையும் கூறுவாளாயினாள்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 480

வளம்பொழில்சூழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை
மருமகன்மற் றிவன்அவற்கு மகளிர்நல்ல
இளம்பிடியார் ஓரெழுவர் இவரில் மூத்தாள்
இவனுக்கென் றுரைசெய்தே ஏதி லானுக்
குளம்பெருகத் தனம்பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓரொருவ ராகஎனை யொழிய ஈந்தான்
தளர்ந்தழியும் இவனுக்காத் தகவு செய்தங்
கவரைமறைத்து இவன் தனையே சார்ந்து போந்தேன்.

பொழிப்புரை :

வளம் சூழ்ந்த வைப்பூரின் தலைவரான `தாமன்\' என் தந்தையாவான். இவன் அவனுடைய மருமகன். என் தந்தைக்கு இளம்பிடி போன்ற ஏழு பெண் மக்கள். அவ்வேழு பெண்களில் மூத்த வளை இவனுக்கு மணம் செய்வதென்று சொல்லி, அயலவனிடம் இருந்து நிறையப் பணம் பெற்றுக் கொண்டு, அயலவனுக்கு மணம் செய்து தந்து, அதன் பின்னரும் ஒவ்வொருவராய் என்னைத் தவிர மற்றப் பெண்கள் ஐவரையும் அங்ஙனமே மணம் செய்து தந்து விட்டான். மனம் தளர்ந்து வருந்தும் இவனுக்காக அன்பு பூண்டு அங்கு அவர்களை விட்டு நீங்கி இவனையே சார்பாகக் கொண்டு நான் வந்தேன்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 481

மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான்
மறிகடலில் கலங்கவிழ்த்தார் போல நின்றேன்
சுற்றத்தா ரெனவந்து தோன்றி யென்பால்
துயரமெலாம் நீங்கஅருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுதேத்துங் காழி வேந்தர்
கருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு
பணைமருகற் பெருமானைப் பாட லுற்றார்.

பொழிப்புரை :

`என்னுடன் வந்த இவனும் கொல்லுதலை யுடைய பாம்பு தீண்டப் பெற்று இறந்தான். மடிந்து விழும் அலை களையுடைய கடலின் நடுவில் கப்பல் கவிழ்ந்தது போல் நிற்கின்றேன். என் உறவினர்போல் தோன்றி என்னிடம் உற்ற துன்பங்கள் எல்லாம் நீங்குமாறு அருள் செய்தீர்!\' எனக் கூறினாள். கற்றவர்கள் வணங்கிப் போற்றும் காழித் தலைவரான பிள்ளையார், அருள் மிக்கதனால் அப்பெண்ணுக்கு நல்குமாறு, தீண்டிய பாம்பின் நஞ்சு தீருமாறு வயல்கள் சூழ்ந்த திருமருகல் இறைவரைப் பாடலானார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 482

சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச்
சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற் றானை
விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும்
பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உண்மெலிவுஎன் றெடுத்துப் பாட.

பொழிப்புரை :

சடையை உடையவரை, எல்லா உயிர்களுக்கும் தாயானவராகிய சங்கரரை, பிறைச் சந்திரன் தங்கும் முடி உடைய வரை, ஆனேற்றை ஊர்தியாக உடையவரை, வேதியரை, திருவெண் ணீற்றை உடையவரை, பகைவரின் முப்புரங்கள் எரியுமாறு அழித்த படைக்கலமுடையவரை, தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும், பாம்பணையில் துயிலும் திருமாலும் போற்றுகின்ற கோலம் உடைய வரை, திருவாயால் அழைத்து, `பெருமானே! இந்த ஒளி பொருந்திய அணிகளை அணிந்த பெண்ணின் உள்ளம் மெலிவதான துன்பம் உனக்குத் தகுதியாமோ?\\\' என்று தொடங்கிப் பாடினார்.

குறிப்புரை :

இவ்வமைப்பில் அருளிய பதிகம் `சடையாய் எனு மால்\\\' (தி.2 ப.18) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகத்தில் வரும் ஒவ்வொரு தொடரும் கருத்துடை அடை மொழியாய் நின்று, அப்பெண்ணின் துயரத்தையும், அதனை அகற் றுதற்குரிய குறிப்பையும் கொண்டு நிற்கின்றன. முதற்பாடலின் நான்காவது அடியையே இங்கு எடுத்து மொழிந்துள்ளார்.

பண் :

பாடல் எண் : 483

பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான் சூழ்ந்த
பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை யுச்சியின்மேற் குவித்துக் கொண்டங்
கருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கையவள் தனைநயந்த நம்பி யோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல்தவழ் சோலைமலிபுகலி வேந்தர்
மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.

பொழிப்புரை :

அவ்வளவில், வணிகன் நஞ்சு நீங்கப்பெற்று எழுந்து நின்றான். சூழ இருந்த ஒப்பில்லாத அடியவர்களின் கூட்டம் மிகுந்த மகிழ்வொலி செய்தது. கைகளை உச்சிமீது குவித்துக் கொண்டு அங்கு அருளுடைய பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்த நங்கை யான அப்பெண்ணை, அன்பு செய்த நம்பியான அந்த வணிகனோ டும் இவ்வுலகத்தில் இன்பம் பொருந்தி வாழுமாறு, மேகம் தவழும் சோலை மிகச் சூழ்ந்த சீகாழித் தலைவர், மணம் புணர்கின்ற பெரு வாழ்வைச் செய்து இல்வாழ்வில் இயைவித்தார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 484

மற்றவர்க்கு விடைகொடுத்தங் கமரு நாளில்
மருகல்நக ரினில்வந்து வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியிலெழுந் தருள வேண்டிப்
பற்றியெழுங் காதல்மிக மேன்மேற் சென்று
பரமனார் திறத்துன்னிப் பாங்க ரெங்கும்
சுற்றும் அருந் தவரோடும் கோயி லெய்திச்
சுடர்மழுஆண் டவர்பாதந் தொழுவான் புக்கார்.

பொழிப்புரை :

வணிகனுக்கும் அப்பெண்ணுக்கும் விடைதந்து, சீகாழித் தலைவர், திருமருகலில் தங்கி இருக்கும் நாள்களில் வலிய ஆணவ மலத் திண்மையினை அழித்த புகழுடைய சிறுத்தொண்ட நாயனார், திருமருகல் நகரில் வந்து வேண்டிக் கொள்ள, மீண்டும் பிள்ளையார் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளுவதற்கான, மேன் மேலும் தொடர்ந்து எழுகின்ற பெருவிருப்புமிக, இறைவரின் திருவருளைப் பெற எண்ணி, சூழ்ந்திடும் அடியார் கூட்டத்தோடும் திருக்கோயிலை அடைந்து, ஒளியுடைய மழுப் படையை உடைய இறைவரின் திருவடிகளைத் தொழுவதற்காக உள்ளே புகுந்தார்.

குறிப்புரை :

வலிய பாசம் - ஆணவ மலம்; மலக்கல் என உரு வகிப்பதும் காண்க. அதனை யழித்த புகழாவது சிறுத்தொண்டர் என அழைக்கப் பெற்றமையாகும். `மேதகையார் அவர்முன்பு மிகச் சிறிய ராய் அடைந்தார், ஆதலினால் சிறுத்தொண்டர் எனத் திகழ்ந்தார் அவனியின் மேல்\' (தி.12 சிறுத். 15) எனப் பின்னர் அருள இருப்பதும் காண்க.

பண் :

பாடல் எண் : 485

புக்கிறைஞ்சி எதிர்நின்று போற்று கின்றார்
பொங்குதிரை நதிப்புனலும் பிறையுஞ் சேர்ந்த
செக்கர்முடிச் சடைமவுலி வெண்ணீற் றார்தம்
திருமேனி ஒருபாகம் பசுமை யாக
மைக்குலவு கண்டத்தார் மருகற் கோயில்
மன்னுநிலை மனங்கொண்டு வணங்கு வார்முன்
கைக்கனலார் கணபதீச் சரத்தின் மேவும்
காட்சிகொடுத் தருளுவான் காட்டக் கண்டார்.

பொழிப்புரை :

கோயிலுக்குள் புகுந்து வணங்கிப் போற்றுகின்ற பிள்ளையார், பொங்கும் அலைகளையுடைய நீர் நிறைந்த கங்கையும் பிறைச் சந்திரனும் கூடிய சிவந்த சடையான மகுடமுடைய திரு வெண்ணீற்றை அணிந்த இறைவரின் திருமேனி ஒருபாகம் பசுமை யாக, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய இறைவர், திருமருகல் கோயி லில் எழுந்தருளியிருந்த நிலைமையினை உள்ளத்தில் எண்ணிக் கொண்டு வணங்குவாராக அவர் முன்பு, கையில் தீயையுடைய இறைவர், கணபதீச்சரத்தில் பொருந்திய காட்சியை இங்குத் தந்தருளும் பொருட்டுக் காட்டியருளக் கண்டார்.

குறிப்புரை :

`ஒருபாகம் பசுமையாக\' என்றது அம்மையாரை இடனாகக் கொண்டிருப்பது பற்றியாம். திருமருகலில் வணங்குவாருக் குத் திருச்செங்காட்டாங்குடியில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் காட்டியது, அவரை அங்கு வருமாறு அருளிய திருக்குறிப்பாகும்.

பண் :

பாடல் எண் : 486

மருகல் அமர்ந்து நிறைந்த கோலர்
மல்குசெங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்ச ரத்தார்
பீடுடைக் கோலமே யாகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க
உலகர்முன் கொள்ளும் உணர்வு நீட
அருவிகண் வார்வுறப் பாட லுற்றார்
அங்கமும் வேதமும் என்றெ டுத்து.

பொழிப்புரை :

திருமருகலில் விரும்பி நிறைந்த கோலமானது, பொருந்திய திருச்செங்காட்டங்குடியில் நிலைபெற்றுக் காணத்தகும் கணபதீச்சரத்தாரின் பெருமையுடைய கோலமேயாகித் தோன்ற, உள் ளம் உருகுவதால் உள்ளதான காதல் மேன்மேலும் பொங்கவும், உலகத் தார்க்கு அறிவுறுத்தும் கருணை உணர்வு நீடவும், கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் அருவி போல வடிய, `அங்கமும் வேதமும்\' எனத் தொடங்கிப் பாடுவாராய்,

குறிப்புரை :

இத்தொடக்கமுடைய பதிகம் நட்டபாடைப் பண்ணில மைந்த பதிகமாகும் (தி.1 ப.6). பாடல்தொறும், `கணபதியீச்சரம் காமுறவே, மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்\' என வருவதே இவ்வகையில் ஆசிரியர் கூறுதற்குக் காரணமாயிற்று. `மைந்த சொல் லாய்\' எனப் பதிகம் முழுதும் அமைந்திருத்தலின் வினாவுரைப் பதிகமாயிற்று.

பண் :

பாடல் எண் : 487

கண்டெதிர் போற்றி வினவிப் பாடிக்
கணபதி ஈச்சரங் காத லித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும்
அப்பதி யிற்சில நாள்கள் போற்றித்
தொண்ட ருடனருள் பெற்று மற்றத்
தொல்லைத் திருப்பதி யெல்லை நீங்கிப்
புண்டரி கத்தடஞ் சூழ் பழனப்
பூம்புக லூர்தொழப் போது கின்றார்.

பொழிப்புரை :

அவ்வகையில் தோன்றப் பார்த்து, நேரே போற்றி, இவ்வாறு அருளுதற்குக் காரணம் என்ன? என வினவிய கருத்துப்படப் பாடி, கணபதீச்சரத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கும் தேவதேவரைச் சென்று வணங்கி, அத்திருச்செங்காட்டங்குடியில் சில நாள்கள் தங்கிப் போற்றித் தொண்டர்களுடன் விடைபெற்று, அப் பழைய பதியை நீங்கி, தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த வயல்களை யுடைய பூம்புகலூரினைச் சென்று வணங்குதற்கு எழுந்தருளுவாராகி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 488

சீரின் மலிந்த சிறப்பின் மேவும்
சிறுத்தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறுந்தொங் கல்மற் றவரும்
விடையரு ளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
நிகழும் பதிகள் பலப ணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம்
பயில்புக லூர்நகர்ப் பாங்க ணைந்தார்.

பொழிப்புரை :

சீர்மை மிகுந்த சிறப்புடைய சிறுத்தொண்டர் நட்பின் பிணிப்பால் தம்மோடு வர, நல்ல தேன் பொருந்திய மணம் உடைய மாலையைச் சூடிய அந்நாயனாரும் விடைகொடுக்கப் பெற் றுத் தம் நகருக்குத் திரும்பிய பின்பு, கங்கை பொருந்திய சடையை யுடைய இறைவர் எழுந்தருளியிருக்கும் பல பதிகளையும் பணிந்து சென்று பிள்ளையார், உலகில் பெருகி நிறைந்த செல்வம் மிக்க புகலூர் நகரின் அருகணைந்தார்.

குறிப்புரை :

`விடையருளப் பெற்று\' என்றார், சிறுத்தொண்டருக்கு உடன் வரும் விருப்பே மீதூர்ந்திருந்தமை தோன்ற. பதிகள் பல என்பன, திருஇராமனதீச்சரம், திருப்பனையூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இராமனதீச்சரப் பதிகம் ஒன்றேயுள்ளது. அது `சங்கொளிர்\' (தி.1 ப.115) எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 489

திருப்புக லூர்த்திருத் தொண்ட ரோடும்
செம்மை முருகனார் மெய்ம்ம கிழ்ந்த
விருப்பொடு சென்றெதிர் கொள்ள வந்து
வேத முதல்வர்தங் கோயி லெய்திப்
பொருப்புறழ் கோபுரத் துட்பு குந்து
பூமலி முன்றில் புடைவ லம்கொண்
டொருப்படு சிந்தையொ டுள்ள ணைந்தார்
ஓதாது ஞானமெ லாமு ணர்ந்தார்.

பொழிப்புரை :

திருப்புகலூரில் வாழ்கின்ற தொண்டர்களுடன் கூடிச் செம்மை மிக்க முருக நாயனார், மெய்ம்மை மிக்க விருப்பத் துடன் நகரின் வெளியே வந்து தம்மை எதிர்கொண்டு வரவேற்க, நகரத்தின் உள்ளே வந்து, மறைகளை ஓதாதுணர்ந்த ஞானசம்பந்தர், அவற்றையருளிய முதல்வரான சிவபெருமானின் கோயிலை அடைந்து, மலைபோன்ற கோபுரத்துள் புகுந்து, அழகிய திருமுன்றி லின் அருகே வலமாக வந்து, ஒன்றுபட்ட உள்ளத்துடன் கோயிலுக் குள் புகுந்தார்.

குறிப்புரை :

செம்மை முருகனார் - திருநின்ற செம்மையே செம்மை யாகக் கொண்ட முருகனார்.

பண் :

பாடல் எண் : 490

புக்கெதிர் தாழ்ந்து விழுந்தெ ழுந்து
பூம்புக லூர்மன்னு புண்ணி யரை
நெக்குரு குஞ்சிந்தை அன்பு பொங்க
நிறைமலர்க் கண்ணீ ரருவி செய்ய
மிக்க தமிழ்த்தொடை மாலை சாத்தி
மேவிய ஏழிசை பாடிப் போந்து
திக்கு நிறைசீர் முருகர் முன்பு
செல்ல அவர்மடஞ் சென்று புக்கார்.

பொழிப்புரை :

கோயிலுக்குள் புகுந்து இறைவரின் திருமுன்பு வணங்கி, நிலத்தில் விழுந்து எழுந்து, பூம்புகலூரில் நிலைபெற எழுந்தருளியிருக்கும் புண்ணியரான சிவபெருமானை நெகிழ்ந்து உருகும் உள்ளத்தில் அன்பானது பெருக, மலர்க் கண்களில் நிறைந்த நீர், அருவிபோல் வடிய, சொற் சுவையானும், பொருள் திறத்தானும் மிக்க தமிழ்த் திருப்பதிகத்தைப் பொருந்திய ஏழிசையுடன் பாடி, வெளியே வந்து, எண் திசையிலும் நிறையும் சிறப்பையுடைய முருக நாயனார் முன்னே அழைத்துச் செல்ல அவரது திருமடத்தில் சம்பந்தர் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

இப்பதியில் அருளிய பதிகம் `வெங்கள் விட்டு\' (தி.2 ப.115) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 491

ஆங்கவர் போற்றுஞ் சிறப்பின் மேவி
அப்பதி தன்னில்அமரு நாளில்
வாங்கு மலைச்சிலை யார்ம கிழ்ந்த
வர்த்தமா னீச்சரந் தான்வ ணங்கி
ஓங்கிய அன்பின் முருக னார்தம்
உயர்திருத் தொண்டு சிறப்பித் தோங்கும்
பாங்குடை வண்டமிழ் பாடி நாளும்
பரமர்தம் பாதம் பணிந்தி ருந்தார்.

பொழிப்புரை :

அத்திருமடத்தில் பிள்ளையார், அவர் வழிபட்டு விருந்தேற்கும் சிறப்பைப் பெற்றுத் தங்கியிருக்கும் நாள்களில், வளைத்த மலையான வில்லையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந் தருளுகின்ற வர்த்தமானீச்சரத்தை வணங்கி, பெருகிய அன்பினால் முருகநாயனார் அங்குச் செய்துவருகின்ற உயர்ந்த தொண்டைச் சிறப்பித்துப் பாராட்டி, ஓங்கிய பண்பையுடைய வளமான தமிழ்ப் பதிகத்தைப் பாடி, சிவபெருமான் திருவடிகளை வணங்கி மகிழ்ந் திருந்தார்.

குறிப்புரை :

வர்த்தமானீச்சரம் - திருப்புகலூர்த் திருக்கோயிலில் உள்ள தனிக்கோயில். இவ்விடத்து அருளிய பதிகம் `பட்டம் பால்நிற\' (தி.2 ப.92) எனத் தொடங்கும் பியந்தைக் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். `குறிப்பறி முருகன் செய்கோலம்\' (3) `முருகன் முப்போதும் செய்முடிமேல் வாசமாமலருடையார்\' (5) என இப்பதிகத்து முருக நாயனார் இருமுறை பாராட்டப் பெறுகிறார்.

பண் :

பாடல் எண் : 492

மற்றத் திருப்பதி வைகு நாளில்
வாக்கின் பெருவிறல் மன்ன னார்தாம்
புற்றிடங் கொண்டாரை வந்தி றைஞ்சிப்
பொன்மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும்
திருப்புக லூர்தொழச் சிந்தை செய்து
கொற்றவ னாரருள் பெற்ற தொண்டர்
குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்.

பொழிப்புரை :

அப்பதியில் பிள்ளையார் தங்கியிருக்கும் நாள்களில், திருநாவுக்கரசர் புற்றிடங்கொண்ட இறைவரை வணங்கி, அழகிய மதில்களையுடைய திருவாரூரைப் புகழ்ந்து போற்றி, சிறிய இடையையும், பொன்னாலான அணியையும் உடைய உமையம்மை யாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றிருக்கின்ற திருப்புகலூ ரைச் சென்று வணங்க உள்ளம் கொண்டு, இறைவரின் திருவருள் பெற்ற தொண்டர் கூட்டத்துடன் அவ்வூரை அணுக வந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 493

நாவுக் கரசர் எழுந்த ருளும்
நல்லதிரு வார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்த ரான
திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக
விரைந்தெதிர் கொள்ளமெய் யன்ப ரோடும்
பூவிற் பொலிபொய்கை சூழ்புக லூர்ப்
புறம்பணை எல்லை கடந்து போந்தார்.

பொழிப்புரை :

திருநாவுக்கரசர் அப்பதிக்கு வருகின்றார் என்ற நல்ல திருவார்த்தையைக் கேட்டபொழுதே, ஆனேற்று ஊர்தியை யுடைய சிவபெருமானின் மகனாரான திருஞானசம்பந்தர், தம் உள்ளத்தில் அன்பு பொங்கிய ஆசை மிகுதியால் விரைவாய் எதிர் கொள்ளும் பொருட்டு மெய்யன்பர்களுடனே மலர்களால் நிறைந்து விளங்குகின்ற வாவிகள் சூழ்ந்த திருப்புகலூரின் நகர்ப்புறத்து எல் லையைக் கடந்து சென்றார்.

குறிப்புரை :

புறம்பணை - நகர்ப்புறத்திருக்கும் பகுதிகள்.

பண் :

பாடல் எண் : 494

அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
அரசும் எதிர்வந் தணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த
பூசுரர் சிங்கமும் பொற்பி னெய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
தாழ்ந்து வணங்கித் தனித்த னியே
மங்கல மாகிய நல்வ ரவின்
வாய்மை வினவி மகிழும் போது.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருவாரூரை வணங்கிவந்த திருநாவுக்கரசரும் எதிரில் வந்து சேர, மணம் கமழும் நீர் நிறைந்த சீகாழியில் தோன்றிய அந்தணர்களின் தலைவரான திருஞானசம்பந் தரும் அணிதிகழக் கூடி, ஒருவருக்கொருவர் தம் அன்பின் முறைமை யால் எதிர்கொண்டு தாழ்ந்து வணங்கி, அவரவரும் தனித் தனியே மங்கலம் பொருந்திய நல்வரவின் மெய்ம்மையான நிகழ்ச்சியினைக் கேட்டு மகிழ்ந்தபோது,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 495

மெய்த்திரு ஞானசம் பந்தர் வாக்கின்
வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கணை யப்பெ றும்பே
ரருளுடை யோம்யாம் அந்தணாரூர்
எப்பரி சால்தொழு துய்ந்த தென்று
வினவிட ஈறில் பெருந்த வத்தோர்
செப்பிய வண்டமிழ் மாலை யாலே
திருவா திரைநிகழ் செல்வஞ் சொன்னார்.

பொழிப்புரை :

மெய்ம்மையின் வடிவான திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை நோக்கி, `விருப்பினால் அப்பராகிய தங்களை இங்கு வந்து அணையப் பெறுவதான பேற்றினைப் பெற்றோம். அழகிய குளிர்ச்சியையுடைய திருவாரூரினை வணங்கிவந்த பான் மையை அருள வேண்டும்\' என்று கேட்டருள, எல்லையில்லாத பெருந்தவத் தையுடைய திருநாவுக்கரசர் அதற்கு விடையாகக் கூறியருளிய வள மான தமிழ்மாலைத் திருப்பதிகத்தினால் திருவாரூரில் திருவாதிரைத் திருவிழா நிகழும் சிறப்புச் செய்தியை எடுத்துக் கூறினார்.

குறிப்புரை :

நாவரசர் இது பொழுது அருளிய பதிகம், `முத்து விதானம்\' (தி.4 ப.21) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே திருவாரூரில் திருவா திரைப் பெருவிழா நிகழ்ந்து வந்த சிறப்புச் செய்தியை, இப்பதிக வழி நன்கு அறியலாம். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 496

அரசரு ளிச்செய்த வாய்மை கேட்ட
அப்பொழு தேஅருள் ஞான முண்ட
சிரபுர வேந்தருஞ் சிந்தை யின்கண்
தென்திரு வாரூர் வணங்கு தற்கு
விரவிய காதலிற் சென்று போற்றி
மீண்டும்வந் தும்முடன் மேவு வன்என்
றுரவு கடற்கல் மிதப்பின் வந்தார்க்
குரைத்துடன் பாடுகொண் டொல்லை போந்தார்.

பொழிப்புரை :

திருநாவுக்கரசரும் திருப்பதிகத்தால் விடை கூறி யதைக் கேட்ட அப்பொழுதே அவ்விடத்தில், திருவருளால் ஞானவ முது உண்டருளிய சீகாழித் தலைவரான பிள்ளையாரும், தென்திரு வாரூரையடைந்து வணங்குதற்கு மனத்திலுண்டான காதலால் அங்குச் சென்று போற்றி மீண்டும் வந்து உம்மைக் கூடுவன் என்று, வலிய கடலைக் கல்லான மிதவையால் கடந்து வந்த அரசர் பெருமகனார் இடத்துச் சொல்லி, அவரது உடன்பாட்டைப் பெற்று விரைந்து சென் றருளினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 497

சொற்பெரு வேந்தருந் தோணி மூதூர்த்
தோன்றல்பின் காதல் தொடரத் தாமும்
பொற்புக லூர்தொழச் சென்ற ணைந்தார்
புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டஞ் சென்று மேவி
விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரந் தொண்ட ரோடும்
பாடல னான்மறை பாடிப் போந்தார்.

பொழிப்புரை :

திருநாவுக்கரசரும் சீகாழிப் பதியில் தோன்றிய பெருந்தகையாரான சம்பந்தரின் பின்னால் தம் காதல் தொடர்ந்து செல்லத் திருப்புகலூரில் தொழுவதற்குச் சென்று சேர்ந்தார். சீகாழித் தலைவரான பிள்ளையாரும் இடைவிடாத நினைவுடைய மனத்துடன் திருவிற்குடி வீரட்டானத்தை அடைந்து, ஆனேற்றூர்தியையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கிய பின்பு, பற்பல ஆயிரம் தொண்டர்களுடனே `பாடலன்நா மறை\' (தி.1 ப.104) எனத் தொடங் கும் பதிகத்தைப் பாடியவாறு திருவாரூரை நோக்கிச் சென்றார்.

குறிப்புரை :

பிள்ளையார் விடைபெற்றுச் சென்றதும், நாவரசரின் மனம் அவர்பின் தொடர, அவர் திருப்புகலூர் தொழச் சென்றார். பிள்ளையாரிடத்தும் பெருமானிடத்தும் அரசர் கொண்டிருந்த அன்பு மீதூர்வை விளக்கியவாறு. திருவிற்குடி வீரட்டத்தில் அருளிய பதிகம் `வடிகொள் மேனியர்\' (தி.2 ப.108)எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருவாரூர்ப் பெருமானை நினைந்து `பாடலன் நான் மறை\' (தி.1 ப.104)எனத் தொடங்கும் வியாழக்குறிஞ் சிப் பண்ணிலமைந்த திருப்பதிகத்தைப் பாடியவாறே சென்றருளினார். `வெள்ளேற்றான் மேய அள்ளலகன் கழனி ஆரூர் அடைவோமே\' என இப்பதிகத்து வரும் மூன்றாவது பாடற் கருத்தை யுளங்கொண்டே ஆசிரியர் இப்பதிகத்தைப் பாடியவாறே திருவாரூர்த் தொழப் போந் தார் என்றருளினார். இதனை வரும் பாடலில் அவரே விளக்குமாற் றானும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 498

துணரிணர்ச் சோலையுஞ் சாலி வேலித்
துறைநீர்ப் பழனமுஞ் சூழ்க ரும்பின்
மணமலி கானமும் ஞானம் உண்டார்
மருங்குற நோக்கி மகிழ்ந் தருளி
அணைபவர் அள்ளற் கழனி ஆரூர்
அடைவோம் எனமொழிந் தன்பு பொங்கப்
புணரிசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப்
பொன்மதி லாரூர்ப் புறத்த ணைந்தார்.

பொழிப்புரை :

மலர்க்கொத்துகளையுடைய சோலைகளையும், நெல்லை வேலியெனக் கொண்ட நீர்த் துறைகளையுடைய வயல்களை யும், மணம் பொருந்திய கரும்புக் காடுகளையும் ஞானமுண்ட பிள் ளையார், இரு மருங்கும் கண்டு மகிழ்ந்து, அணைபவராய் `அள்ள லகன் கழனியாரூர் அடைவோமே\' எனக் கூறி, அன்பு மேன்மேல் பொங்க இசையுடன் கூடிய செந்தமிழ்ப் பதிகத்தால் போற்றி, அழகிய மதிலையுடைய திருவாரூரின் புறத்தே அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 499

வானுயர் செங்கதிர் மண்டலத்து
மருங்கணை யுங்கொடி மன்னும்ஆரூர்
தானொரு பொன்னுல கென்னத் தோன்றும்
தயங்கொளி முன்கண்டு சண்பை வந்த
பானிற நீற்றர் பருக்கை யானைப்
பதிகத் தமிழிசை பாடி ஆடித்
தேனொடு வண்டு முரலுஞ் சோலைத்
திருப்பதி மற்றதன் எல்லை சேர்ந்தார்.

பொழிப்புரை :

வானத்தே உயரச் செல்கின்ற சிவந்த கதிர் களையுடைய ஞாயிற்று மண்டலத்தின் பக்கத்தில் அணையும் நீண்ட கொடிகள் பொருந்திய திருவாரூர் நகர், ஒருபொன் உலகு என்ன விளங்கக் கண்டு, சீகாழியில் தோன்றிய பால் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்த சம்பந்தர், `பருக்கையானை\' எனத் தொடங் கும் திருப்பதிகத் தமிழ் இசையினைப் பாடியும் ஆடியும் சென்று, தேனுடன் வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த அப்பதியின் எல்லையை அடைந்தார்.

குறிப்புரை :

திருவாரூர்த் திருநகரின் ஒளியைக் கண்ட பிள்ளையார் `பருக்கையானை\' (தி.2 ப.101) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகத்தைப் பாடியருளினர். இப்பதிக முதற்பாடலில் `அருக்கன் மண்டலத் தணாவும் அந்தண்ஆரூர்\' (தி.2 ப.101 பா.1) எனப் பிள்ளையார் அருளிய குறிப்பை உளங்கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும், இப்பாடலை அருளிச் செய்வாராயினர். தேனீ - ஈக்க ளில் ஒரு வகை; தேன் எடுப்பதால் தேன்+ஈ = தேனீ.

பண் :

பாடல் எண் : 500

பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம்
பொழிந்து புவிமேற் பொலிவ தென்ன
எங்குங் குளிரொளி வீசு முத்தின்
இலங்கு சிவிகை இழிந்த ருளிச்
செங்கை நிறைமலர் கொண்டு தூவித்
திருவிருக் குக்குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான்அர சாளும் ஆரூர்
தனைப்பணி வுற்றார் தமிழ் விரகர்.

பொழிப்புரை :

உள்ளத்தினின்றும் பெருகிய பெருங்காதலாகிய வெள்ளத்தைச் சொரிந்து நிலவுலகத்தின் மீது விளங்குவதைப் போன்று எல்லாப் பக்கமும் குளிர்ந்த ஒளியை வீசும் முத்துப் பல்லக்கினின்றும் இறங்கி, தமிழ் வல்லுநரான பிள்ளையார், சிவந்த திருக்கைகளில் நிறைய மலர்களைக் கொண்டு தூவி வழிபட்டு உய்யுமாறு ஆற்றுப் படுத்தும் திருவிருக்குக்குறட் பதிகத்தைப் பாடி வணங்கி, தம் பெரு மான் ஆட்சி செய்கின்ற திருவாரூர் நகரைப் பணிந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய திருவிருக்குக்குறட் பதிகம் `சித்தம் தெளிவீர்காள்\' (தி.1 ப.91) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். ஆரூரை மலர்தூவி வழிபடல் வேண்டும் என்னும் குறிப்பை, இப்பதிகத்தின் 1, 3, 5, 6, 7 ஆகிய பாடல்களில் அருளுகின்றார். இத னையுளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும் `நிறைமலர் கொண்டு தூவிப்... பாடி... பணிவுற்றார் தமிழ்விரகர்\' என்றருளுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 501

படியில் ஞானமுண் டருளிய
பிள்ளையைப் பணிதற்
கடியர் சென்றெதிர் கொளஎழுந்
தருளும்அஞ் ஞான்று
வடிகொள் சூலத்தர் மன்னிய
பொன்மதில் ஆரூர்க்
கடிகொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார்.

பொழிப்புரை :

ஒப்பில்லாத ஞான அமுதத்தை உண்ட சம்பந்தரைப் பணிவதற்காக அடியவர்கள் சென்று எதிர்கொள்ள எழுந்தருளும் அந்நாளில், வடித்தலைக் கொண்ட சூலத்தையுடைய இறைவர் நிலையாய் எழுந்தருளிய பொன்மதிலைக் கொண்ட திரு வாரூரின் ஒளி பொருந்திய அணிநலன்களை முழுமையாகக் காண வல்லவர் யாவர்? ஒருவரும் இலர்.

குறிப்புரை :

காழிப் பிள்ளையாரின் வருகையறிந்த ஆரூர் அடிய வர்கள், அந்நகரை அணி செய்து புனைவித்த பாங்கை யாவரே முழு மையாகக் காணவல்லார்? என்பதால், அந்நகரைத் தோள் கண்டார் தோளே கண்டார் என்புழிப் போல, தாம் தாமும் ஒவ்வொரு பகுதி யைக் கண்டு மகிழ இயலுமேயன்றி முழுமையாகக் கண்டு மகிழ இயலாது என்பதாம்.

பண் :

பாடல் எண் : 502

நான மான்மத நளிர்பெருஞ்
சேற்றிடை நறும்பொன்v தூந றுந்துகள் சொரிதலிற்
சுடரொளிப் படலை
ஆன வீதிகள் அடிவலித்
தவைகரைந் தலைய
வான மாரியிற் பொழிந்தது
மலர்மது மாரி.

பொழிப்புரை :

புனுகும் கத்தூரியும் கலந்த குளிர்ந்த பெருஞ் சேற்றில் உயர்ந்த பொன்னைப் போன்ற தூய சுண்ணப் பொடிகளைத் தூவுவதால், ஒளி பொருந்த அணிசெய்யப்பட்ட அத்தெருக்கள், அடி வழுக்குமாறு அந்தச் சேறும் துகளும் கரைந்து போக, வானத்தினின்று விழும் மழை போல் பூக்களிலிருந்து தேன்மாரி பொழிந்தது.

குறிப்புரை :

நறுமணக் கலவைகளைத் தெளித்தலும், அவற்றின்மீது சுண்ணம் தெளித்தலும், வீதிகளை அழகுபடுத்தவாம். எனினும் அவ் வழிதொறும் செல்வோர்க்கு வழுக்குதலை ஏற்படுத்த, அச்சேறு கரைய மலர்களிலிருந்து தேன்மழை பொழிகின்றதாம்.

பண் :

பாடல் எண் : 503

ஆடல் நீடுவ துகிற்கொடி
கொடிகள் அணிகுழற்
தோடு சூழ்வன சுரும்பொடு
தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலிதோ
ரணநிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங்
களின்மருங் கெல்லாம்.

பொழிப்புரை :

மாடங்கள், மாளிகைகள் மண்டபங்கள் ஆகிய இவற்றின் பக்கங்கள் எல்லாம், துணிக் கொடிகளும், அழகான கூந்த லையுடைய பெண் கொடிகளும் ஆடலில் நீடுவன, வண்டுகளும், பொன் குடங்களும் மலர் இதழ்களில் சூழ்வன, வாழைகளும் தோர ணங்களும் வரிசையான பாக்குகளும் காட்டைப் போன்ற காட்சியுடன் விளங்குவன.

குறிப்புரை :

`ஆடலில் நீடுவன\' என்றது துணிக் கொடிகளும் ஆட லில் தவிர்வனவாயில்லை; பெண்கொடிகளும் தம் ஆடலில் தவிர் பவராய் இல்லை என்பதை விளக்குகின்றன. பொற்குடங்களில் மலர்கள் வைக்கப்பட்டிருத்தல் எதிர்கொள்வதற்குரிய மங்கலப் பொருள்களில் ஒன்றாக இருத்தல் பற்றியாம்.

பண் :

பாடல் எண் : 504

மாலை சூழ்புறங் கடைகளின்
மணிநிரை விளக்கின்
கோல நீள்சுடர் ஒளியுடன்
கோத்திடை தூக்கும்
நீல மாமணி நிழல்பொர
நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவளவே
திகைமலர்ப் பந்தர்.

பொழிப்புரை :

அத்தகைய பக்கங்களைச் சூழ்ந்த புறவாயில் களில், மாலைப் பொழுதில், மணிகளையுடைய வரிசையாய்த் தொங்க விடப்பட்ட விளக்குகளின் அழகிய நீண்ட சுடர் ஒளியுடன் தொடர்பு படுமாறு கோவை செய்து இடையிடையே தொங்கவிடப்பட்ட பெரிய நீலமணிகளின் நிழலானது கூடி அலைத்தலால், பவள நிறமுடைய திண்ணைகளின் மேல் உள்ள பூம்பந்தல்களின் செந்நிறம் கருமை நிறத்தையுடையனவாய் ஆயின.

குறிப்புரை :

திண்ணைகளின் செந்நிறத்தை, அங்குத் தொங்கவிடப் பட்டிருக்கும் மணிகளின் ஒளி கருமைப்படக் கலக்கின்றது என்பது கருத்து. புகர் - கருநிறம்.

பண் :

பாடல் எண் : 505

தழைம லர்த்தடஞ் சாலைகள்
தெற்றிகள் சதுக்கம்
குழைமு கத்தவர் ஆடரங்
கிமையவர் குழாமும்
விழைசி றப்பின வியலிடம்
யாவையு மிடைந்து
மழைமு ழக்கென இயம்பின
மங்கல இயங்கள்.

பொழிப்புரை :

தழைத்த பூம்பொய்கைகளும், சாலைகளும், தெற்றிகளும், சதுக்கங்களும், காதணிகளை அணிந்த பெண்கள் ஆடும் அரங்குகளும், தேவர் கூட்டமும் விரும்பும் சிறப்புடைய அகன்ற இடங்களும் ஆகிய எவ்விடங்களிலும் நெருங்கி மழை ஒலிபோல மங்கல இயங்கள் இயம்பின.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 506

விரவு பேரணி வேறுவே
றின்னன விளங்கும்
பிரச மென்மலர்ச் சோலைசூழ்
பெருந்திரு வாரூர்
அரச ளிப்பவர் அருளினால்
அடியவர் குழுவும்
புரிச னங்களும் புறத்தணைந்
தெதிர்கொளும் பொழுது.

பொழிப்புரை :

மேல் கூறப்பட்டவாறு பொருந்திய வெவ்வேறு வகைப்பட்ட இத்தகைய பேரணிகலன்கள் விளங்கும், தேனையுடைய மென்மையான மலர்கள் நிறைந்த பூஞ்சோலைகளின் பெருமையைக் கொண்ட திருவாரூரில், அரசாளும் தியாகராசப் பெருமான் திருவரு ளால் அடியவர் கூட்டமும் மற்ற மக்களும் நகரத்தின் வெளியே வந்து அணைந்து பிள்ளையாரை எதிர்கொள்கின்ற அளவில்.

குறிப்புரை :

பரிசனங்கள் - அடியவர்களைச் சார்ந்து பணிபுரிந்து வரும் நகர மக்கள்.

பண் :

பாடல் எண் : 507

வந்தி றைஞ்சு மெய்த் தொண்டர்தங்
குழாத்தெதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம்
சண்பையர் தலைவர்
அந்த மாயுல காதியாம்
பதிகமங் கெடுத்தே
எந்தை தானெனை ஏன்றுகொ
ளுங்கொல்என் றிசைத்தார்.

பொழிப்புரை :

தம் எதிரே வணங்கும் மெய்த்தொண்டர் கூட்டத் தின் முன்னம் தாமும் எதிர் வணங்கி; சந்தமுடைய முத்தமிழ் வல்லுநர் ஆன சீகாழித் தலைவர், `அந்தமாயுல காதியாம்\' எனத் தொடங்கு கின்ற திருப்பதிகத்தை அங்குத் தொடங்கி, `எம்பெருமானார்தாம் என்னை ஏற்றுக் கொள்வாரோ?\' என்ற கருத்துடன் பாடி நிறைவு செய்தார்.

குறிப்புரை :

`அந்தமாயுல காதியாம்\' (தி.3 ப.45) எனத் தொடங்கும் பதிகம் கௌசிகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 508

ஆன அத்திருப் பதிகம்முன்
பாடிவந் தணையும்
ஞான வித்தகர் மெய்த்தவர்
சூழஅந் நகரார்
தூந றுஞ்சுண்ண மலர்பொரி
தூஉய்த்தொழு தேத்த
வான நாயகர் கோயில்வா
யிலின்மருங் கணைந்தார்.

பொழிப்புரை :

அத்திருப்பதிகத்தைப் பாடி வந்து சேருகின்ற ஞானவித்தகரான பிள்ளையார், மெய்யடியார்கள் தம்மைச் சூழ்ந்து வரவும், அத்திருவாரூர் நகர மக்கள் தூய்மையான மணமுடைய சுண்ணப் பொடியையும், மலர்களையும் பொரியினையும் தூவித் தொழுது வணங்கவும், இவ்வாறு நகரத் தெருக்களைக் கடந்து சென்று தேவர் தலைவரான சிவபெருமானின் கோயில் வாயிலை அடைந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 509

மன்னு தோரண வாயில்முன்
வணங்கியுள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும்
தாங்கிய தகைத்தாம்
பன்னெ டுஞ்சுடர்ப் படலையின்
பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்துதே வாசிரி
யன்தொழு தெழுந்தார்.

பொழிப்புரை :

தோரணங்கள் நிலைபெற அமைக்கப்பட்டு விளங்கும் வாயிலின் முன்பு வணங்கிக் கோயிலுக்குள் புகுந்தவரான பிள்ளையார், தனக்குள் எல்லா வகையான பெருமையும் கொண்ட நீண்ட ஒளி வரிசையின் பரப்பினைக் கண்டு, தலை வணங்கித் தேவா சிரிய மண்டபத்தை வணங்கினார்.

குறிப்புரை :

இங்குக் குறிக்கப் பெற்ற ஒளி சிவஒளியாகும். ஞானம் உண்ட பெரும் பேற்றால் இவ்வொளி அவருக்குத் தோன்றலாயிற்று.

பண் :

பாடல் எண் : 510

மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கிக்
கூடு காதலிற் கோபுரம்
பணிந்துகை குவித்துத்
தேடு மாலயற் கரியராய்ச்
செழுமணிப் புற்றில்
நீடு வார்முன்பு நிலமுறப்
பலமுறை பணிந்தார்.

பொழிப்புரை :

அம்மண்டபத்தின் அருகே, சுற்றிலும் சூழ்ந்த திருமாளிகையை வலங்கொண்டு வந்து வணங்கிக் கூடும் அன்பு மிகுதியால் கோபுரத்தைப் பணிந்து கைகூப்பித் தொழுது, தம்மைத் தேடிய திருமாலுக்கும், நான்முகனுக்கும் அறிதற்கு அரிய செழுமை யான மணிப்புற்றுள் இடம் கொண்டு நிலையாக எழுந்தருளியுள்ள இறைவரைப் பன்முறையும் நிலத்தில் விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 511

பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர்
பரவிய புளகம்
அணிந்த மேனியோ டாடினர்
பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப்பொரு ளானவர்
தமைக்கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்தெழு
வேட்கையில் தாழ்ந்தார்.

பொழிப்புரை :

பணிந்து விழுந்தார்; பதைத்தார்; உடல் முழுதும் மயிர்க்கூச்செறியப் பரவிய நிலையில் ஆடினார்; பாடினார் தம் அறிவினுள்ளே தெளிவாகக் கண்டு கொண்டிருந்த மெய்ப் பொரு ளான சிவபெருமானை வெளியேயும் பார்த்துப் போற்றுபவராய்த் தம் உள்ளத்துள் விரைந்து எழும் விருப்புடன் வணங்கினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 512

செஞ்சொல் வண்தமிழ்த் திருப்பதி
கத்திசை யெடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய
நம்பர்முன் பாடி
மஞ்சு சூழ்திரு மாளிகை
வாயிலின் புறம்போந்
தஞ்செ ழுத்தின்மெய் யுணர்ந்தவர்
திருமடத் தணைந்தார்.

பொழிப்புரை :

செஞ்சொல்லாலான வண்தமிழ்ப் பதிகத்தைத் தொடங்கி, நஞ்சை அமுதமாய் ஆக்கிய இறைவர் திருமுன்பு போற்றி, மேகங்கள் சூழ்கின்ற மாளிகையின் வாயில் பக்கத்தை அடைந்து, திரு வைந்தெழுத்தின் மெய்ப்பொருளை உணர்ந்தவரான பிள்ளையார் திருமடத்தைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

இவ்வரிய திருப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 513

அங்க ணைந்தமர்ந் தருளுவார்
அரனெறி அமர்ந்த
செங்க ணேற்றவர் சேவடி
வணங்கிமுன் திளைத்துப்
பொங்கு பேரொளிப் புற்றிடங்
கொண்டவர் புனிதப்
பங்க யப்பதந் தொழுதுகா
லந்தொறும் பணிந்தார்.

பொழிப்புரை :

அத்திருமடத்தில் தங்கியிருந்த பிள்ளையார் `திருஆரூர்அரனெறி\' என்ற கோயிலில் விரும்பி எழுந்தருளியுள்ள சிவந்த கண்களையுடைய ஆனேற்று ஊர்தியை உடைய இறைவரின் சேவடிகளை வணங்கித் திளைத்து, பெருகும் பேரொளியை உடைய புற்றிடங்கொண்ட பெருமானின் தூய்மையான தாமரை போன்ற திருவடிமலர்களைக் காலந்தோறும் தொழுதுவந்தார்.

குறிப்புரை :

திருவாரூர் அரனெறியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 514

புற்றி டங்கொளும் புனிதரைப்
போற்றிசை பெருகப்
பற்றும் அன்பொடு பணிந்திசைப்
பதிகங்கள் பாடி
நற்ற வத்திருத் தொண்டர்க
ளொடுநலஞ் சிறப்ப
மற்ற வண்பதி தன்னிடை
வைகுமந் நாளில்.

பொழிப்புரை :

புற்றிடங்கொண்டருளும் தூயவரான இறைவ ரைப் பணிந்து போற்றி இசைபெருகுமாறு பற்றும் அன்புடனே வணங்கி, இனிய இசையால் திருப்பதிகங்களைப் பாடி நல்ல தவத் தினை மேற்கொண்ட தொண்டர்களுடன், நன்மை சிறந்து ஓங்குமாறு, அவ்வளமுடைய பதியில் தங்கியிருக்கும் நாள்களில்,

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகங்கள் எவையும் கிடைத்தில. `ளொடுநலம்\' என்பது `ளுடன்நலம்\' என்றும் பாடம்.

பண் :

பாடல் எண் : 515

மல்லல் நீடிய வலிவலங்
கோளிலி முதலாத்
தொல்லை நான்மறை முதல்வர்தம்
பதிபல தொழுதே
எல்லை யில்திருப் பதிகங்க
ளாற்பணிந் தேத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும்
ஆரூர்தொழ அணைந்தார்.

பொழிப்புரை :

உலகின் துன்பங்களைத் தீர்க்க வந்த பிள்ளை யார், திருவருள் செழிப்பால் சிறந்த `திருவலிவலம்\', `திருக்கோளிலி\' முதலாக உள்ள நான்மறைகளின் முதல்வரான இறைவரின் திருப்பதி கள் பலவற்றையும் தொழுது, அளவில்லாத திருப்பதிகங்ளைப் பாடி, மீண்டும் திருவாரூரின்கண் தொழுவதன் பொருட்டாக வந்தார்.

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: திருவலிவலம்: 1.பூவியல் புரிகுழல் (தி.1 ப.123) - வியாழக்குறிஞ்சி 2.ஒல்லையாறி (தி.1 ப.50) - பழந்தக்கராகம். திருக்கோளிலி: 1.நாளாயபோகாமே (தி.1 ப.62) - பழந்தக்கராகம். இவை முதலான பல பதிகள் என்பன திருஏமப்பேறூர், திருச் சாட்டியக்குடி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதி கங்கள் எவையும் கிடைத்தில. `தொழெுதே\' என்பது `தொழல்\' என்றும் பாடம்.

பண் :

பாடல் எண் : 516

ஊறு காதலில் ஒளிவளர்
புற்றிடங் கொண்ட
ஆறு லாவிய சடைமுடி
ஐயரைப் பணிந்து
நீறு வாழ்வென நிகழ்திருத்
தொண்டர்க ளோடும்
ஈறி லாத்திரு ஞானசம்
பந்தர்அங் கிருந்தார்.

பொழிப்புரை :

மிகுகின்ற அன்பால், ஒளிவீசும் புற்றில் வீற்றி ருக்கும், கங்கை உலாவுதற்கு இடமான சடையை உடைய தலைவரான இறைவரை வணங்கித் `திருநீறே தம் வாழ்வாகும்\' என்னும் திருவுள் ளமுடைய திருத்தொண்டர்களுடனே இறுதியில்லாத சிவஞானம் உடைய ஞானசம்பந்தர் திருவாரூரில் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 517

அங்கு நன்மையில் வைகும்அந்
நாள்சில அகல
நங்கள் தந்திரு நாவினுக்
கரசரை நயந்து
பொங்கு சீர்ப்புக லூர்தொழ
அருளினாற் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை
சார்ந்தருள் செய்வார்.

பொழிப்புரை :

அவ்வாறு இருந்தருளிய நாள்கள் சில கழிய, திருநாவுக்கரசரை விரும்பி, பொங்கும் சிறப்பைக் கொண்ட திருப் புகலூரினை வணங்குவதற்கு விடைபெற்றுக் கொண்டு செல்பவராய்த் தங்கிய அத்திருவாரூர்ப் பதியின் புறம்பணையைச் சேர்ந்து அருள் செய்பவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 518

புவனவா ரூரினிற் புறம்புபோந்
ததனையே நோக்கிநின்றே
அவமிலா நெஞ்சமே அஞ்சல்நீ
உய்யுமா றறிதிஅன்றே
சிவனதா ரூர்தொழாய் நீமற
வாதென்று செங்கைகூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனுந்திருப்
பதிகமுன் பாடினாரே.

பொழிப்புரை :

மண் உலகத்தில் சிறந்த திருவாரூரின் நகர்ப் புறத்தின் மருதநிலத்தில் போய்ச் சேர்ந்து, அந் நகரத்தையே நோக்கி நின்ற வண்ணம், `பயனில்லாது கழிந்து போகாத மனமே! நீ அஞ்சாதே! உய்யும் வகையினை அறிவாய் அல்லையோ! சிவபெருமானின் திருவாரூரை நீ மறக்காது தொழுவாயாக!\' எனச் சொல்லி சிவந்த கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு, `பவனமாய்ச் சோடையாய்\' எனத் தொடங்கும் பதிகத்தை அந்நகரின் முன்பாடி அருளினார்.

குறிப்புரை :

இப்பதிகம் `பவனமாய்\' (தி.2 ப.79) எனத்தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். நெஞ்சறிவுறுத்தலாக அமைந்த இப்பதிகம், பிள்ளையார் தம் அளவில் பிரிவாற்றாமை யாகவும், நம்மனோர் அளவில் அறவுரையாகவும் அமைந்த பதிகமா கும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. `பதிகமுன் பாடினாரே\' என்பது `பதிகமே பாடிநின்றார்\' என்றும் பாடம்.

பண் :

பாடல் எண் : 519

காழியார் வாழவந் தருள்செயும்
கவுணியப் பிள்ளை யார்தாம்
ஆழியான் அறியொணா அண்ணல்
ஆரூர்பணிந் தரிது செல்வார்
பாழிமால் யானையின் உரிபுனைந்
தார்பனை யூர்ப ணிந்து
வாழிமா மறையிசைப் பதிகமும்
பாடிஅப் பதியில் வைகி.

பொழிப்புரை :

சீகாழியிலுள்ளார் வாழ்வதன் பொருட்டாய்த் தோன்றிய கவுணியர், திருமாலும் அறியமுடியாத இறைவரின் திரு வாரூரினைப் பணிந்து மேற்செல்பவராய், வலிமையும் மதமயக்கமும் உடைய யானையின் தோலைப் போர்த்த சிவபெருமானின் `திருப் பனையூரைப்\' பணிந்து, வாழ்வுடைய பெரிய மறைகளின் பொருளை யும் இசையினையும் உடைய திருப்பதிகத்தையும் பாடி அப்பதியில் தங்கியிருந்து,

குறிப்புரை :

திருப்பனையூரில் அருளிய பதிகம் `அரவச் சடைமேல்\' (தி.1 ப.37) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 520

அங்குநின் றரிதெழுந் தருளுவார்
அகிலகா ரணரும் ஆனார்
தங்குநற் பதிகளும் பிறபணிந்
தருளிவண் தமிழ்பு னைந்தே
எங்குமெய்த் தவர்குழா மெதிர்கொளத்
தொழுதெழுந் தருளி வந்தார்
பொங்குதண் பாசடைப் பங்கயப்
புனல்வயற் புகலூர் சார.

பொழிப்புரை :

அப்பதியினின்றும் அரிதாய்ப் புறப்பட்டுச் செல்வாராய், உலகம் எல்லாவற்றிற்கும் காரணர் ஆன சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் நன்மையுடைய பிற பதிகளையும் வணங்கித் திருப்பதிகம் பாடி, எவ்விடத்தும் உண்மைத் தவமுடைய அடியவர்கள் தம்மை எதிர்கொள்ளத் தொழுது, பொங்கும் குளிர்ச்சியான இலை களை உடைய தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலூரை அணு கச் சென்றார்.

குறிப்புரை :

பிறபதிகளும் என்பன, எவையெனத் தெரிந்தில. `காரண ரும்\' என்பது `காரணமும்\' என்றும் பாடம்.

பண் :

பாடல் எண் : 521

நாவினுக் கரசரும் நம்பிசீர்
முருகரும் மற்று நாமச்
சேவுகைத் தவர்திருத் தொண்டரா
னவர்கள்முன் சென்று சீதப்
பூவினிற் பொலிபுனற் புகலியார்
போதகத் தெதிர்ப ணிந்தே
மேவமற் றவருடன் கூடவே
விமலர்கோ யிலைஅ டைந்தார்.

பொழிப்புரை :

திருநாவுக்கரசரும், நம்பி எனத்தகும் முருக நாயனாரும் மற்றும் விடைக் கொடியையுடைய உயர்ந்த சிவபெரு மானின் திருத்தொண்டர்களும் எதிர்கொண்டு, முன்போய்க் குளிர்ந்த பூக்களால் பொலிவுபெற்ற நீர்வளம் கொண்ட சீகாழித் தலைவராம் ஆனைக் கன்றின் திருமுன்பு பணிந்து சேர, அவர்களுடன் தாமும் சென்று இறைவரின் திருக்கோயிலைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 522

தேவர்தந் தலைவனார் கோயில்புக் கனைவரும்
சீர்நிலத் துறவ ணங்கிப்
பாவருந் தமிழிசைப் பதிகமும் பாடிமுன்
பரவுவார் புறம்ப ணைந்தே
தாவில்சீர் முருகனார் திருமனைக் கெய்திஅத்
தனிமுதல் தொண்டர் தாமே
யாவையுங் குறைவறுத் திடஅமர்ந் தருளுவார்
இனிதின்அங் குறையு நாளில்.

பொழிப்புரை :

தேவரின் தலைவர்தம் கோயிலுள் புகுந்து அனைவரும் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கி, பாக்களின் பாகுபாட்டுக்கு இணங்க அமைந்த தமிழிசை பொருந்திய திருப் பதிகத்தைப் பாடித் திருமுன்பு நின்று போற்றுபவரான ஞானசம்பந்தர், வெளியில் வந்து, குற்றமற்ற சிறப்பையுடைய முருக நாயனாரின் இல்லத்தில் சேர்ந்து, ஒப்பில்லாத முதன்மை கொண்ட அத்திருத் தொண்டரே திருவமுது, உறையுள் முதலான எல்லாவற்றையும் குறைவில்லாது அமைக்க, அங்கு விரும்பித் தங்கியிருந்த நாள்களில்,

குறிப்புரை :

இதுபொழுது அருளிய திருப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 523

நீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும்
உடன்அணைந் தெய்து நீர்மைச்
சீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுங்
செய்கைநேர் நின்று வாய்மைச்
சாலமிக் குயர்திருத் தொண்டின்உண் மைத்திறந்
தன்னையே தெளிய நாடிக்
காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந்
தருளினார் காழி நாடர்.

பொழிப்புரை :

இந்நற் செய்தியைக் கேட்டு வந்த நீலநக்க நாயனாரும் புகழையுடைய சிறுத்தொண்ட நாயனாரும் கூடிப் பொருந்திய நீர்மையுடைய சீலமுடைய மற்ற மெய்த்தவர்களான தொண்டர்களும் தம்முடன் இறைவரை வழிபடும் செய்கையில் ஒருப்பட்டு நின்று, வாய்மையில் மிகவும் உயர்வுடைய திருத்தொண் டின் உண்மைத் திறங்களையே தெளிவாக நாடி, சீகாழித் தலைவரான பிள்ளையார் அவர்களுடன் கூடிக் கலந்து, காலம் உண்டாகவே காதல் செய்தவாறு அளவளாவியிருந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. `சாலமிக்கு\' என்பது `சால்பின்மிக்கு\' என்றும் பாடம்.

பண் :

பாடல் எண் : 524

கும்பிடுங் கொள்கையிற் குறிகலந் திசையெனும்
பதிகமுன் னான பாடல்
தம்பெருந் தலைமையால் நிலைமைசால் பதியதன்
பெருமைசால் புறவி ளம்பி
உம்பரும் பரவுதற் குரியசொற் பிள்ளையார்
உள்ளமெய்க் காதல் கூர
நம்பர்தம் பதிகளா யினஎனைப் பலவும்முன்
நண்ணியே தொழந யந்தார்.

பொழிப்புரை :

கும்பிடும் கொள்கையின் குறிப்பை உள்ளடக்கிக் `குறிகலந்த எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தம் பெருந்தலைமைப் பாட்டினால் நன்னிலைமை நிறைந்த அப்பதியின் பெருமையை எடுத்துக் கூறி, தேவர்களும் போற்றுதற்குரிய சொல் வன்மையுடைய பிள்ளையார், உள்ளத்தில் உண்மை அன்பு பெருகி யதால் இறைவரின் பதிகளான பிறபதிகளுக்கும் சென்று வணங்க விருப்பம் கொண்டார்.

குறிப்புரை :

குறிகலந்த (தி.1 ப.2) எனத்தொடங்கும் பதிகம் நட்டபாடைப் பண்ணிலமைந்ததாகும். பதிகப் பாடல்தொறும், திருப் புகலூரில் பெருமான் வீற்றிருக்கும் பெருமையையும், அதன் நீர் வளம், நிலவளம், மக்கள் நலம் முதலாய வளங்களையும் குறித்துப் போற்றியிருத்தலின், `பதியதன் பெருமை சால்புற விளம்பி\' என்றார்.

பண் :

பாடல் எண் : 525

புள்ள லம்புதண் புனற்புக
லூருறை புனிதனார் அருள்பெற்றுப்
பிள்ளை யாருடன் நாவினுக்
கரசரும் பிறபதி தொழச்செல்வார்
வள்ள லார்சிறுத் தொண்டரும்
நீலநக் கரும்வளம் பதிக்கேக
உள்ளம் அன்புறு முருகர்அங்கு
ஒழியவும் உடன்பட இசைவித்தார்.

பொழிப்புரை :

நீர்ப்பறவை ஒலித்தற்கு இடமான குளிர்ந்த நீர் நிலை சூழ்ந்த திருப்புகலூரில் எழுந்தருளிய புனித இறைவரின் அருளைப் பெற்று, பிள்ளையாருடன் திருநாவுக்கரசரும் இறைவரின் மற்றப் பதிகளையும் தொழும் பொருட்டுச் செல்பவராய், வள்ளலா ரான சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் தத்தம் வளம் பொருந்திய பதிகளுக்குச் செல்லவும், உள்ளத்தில் அன்பு கொண்ட முருக நாயனார் அங்கே தங்கியருக்கவும் அவர்கள் உடன் படத் தாமும் இசைந்தார்கள்.

குறிப்புரை :

ஒழிதல் - தங்குதல். `இசைவித்தார்\' என்பது `இசைந்தார் கள்\' என்றும் பாடம். இப்பாடல் முதல் 2515ஆவது பாடல் வரை ஞான சம்பந்தரும், நாவரசரும் சேர்ந்து வழிபட்ட சிறப்பினை விவரிக்கின்றன.

பண் :

பாடல் எண் : 526

கண்ண கன்புக லூரினைத்
தொழுதுபோம் பொழுதினிற் கடற்காழி
அண்ண லார்திரு நாவினுக்
கரசர்தம் அருகுவிட் டகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும்
பின்வர வழிக்கொள உறுங்காலை
எண்ணில் சீர்த்திரு நாவினுக்
கரசரும் மற்றவர்க் கிசைக்கின்றார்.

பொழிப்புரை :

இடம் அகன்ற திருப்புகலூரைத் தொழுது மேற் செல்கின்ற போதில், கடற்கரையில் உள்ள சீகாழிப் பதியில் தோன்றிய பிள்ளையார், திருநாவுக்கரசரை விட்டு நீங்காது அழகிய முத்துச் சிவிகை பின் வரச் செலவு நயப்பைத் தொடங்கிய பொழுது, ஞானி யரின் உளத்தில் நிற்கும் சிறப்புடைய திருநாவுக்கரசர், சம்பந்தருக்கு எடுத்துக் கூறுபவராய்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 527

நாயனார்உமக் களித்தருள்
செய்தஇந் நலங்கிளர் ஒளிமுத்தின்
தூய யானத்தின் மிசை யெழுந்
தருளுவீர் என்றலும் சுடர்த்திங்கள்
மேய வேணியார் அருளும்இவ்
வாறெனில் விரும்புதொண் டர்களோடும்
போய தெங்குநீர் அங்குயான்
பின்வரப் போவதென் றருள்செய்தார்.

பொழிப்புரை :

`இறைவன் உமக்கு அருள் செய்த இந்த நன்மை பொருந்திய அழகிய ஒளிபொருந்திய தூய முத்துச் சிவிகையில் இவர்ந்து வருவீராக!\' என்று அருளுதலும், `ஒளி பொருந்திய பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரின் திருவருளும் இவ்வாறே இருக்குமாயின், விரும்பும் தொண்டர்களுடனே நீவிர் முன் செல்வது எப்பதியோ? அப்பதிக்கு யானும் பின்தொடர்ந்து வரும்படியாகப் போவது\' என விடையளித்தார்.

குறிப்புரை :

இவ்வரிய திருபாடலால் நாவரசரின் திருவுள்ளமும், ஞானசம்பந்தரும் தாமும் ஆகச் செல்லும் செலவு நயப்பை அமைத்துக் கொண்ட பாங்கும் அறிய முடிகின்றன. ஞானசம்பந்தரும் முத்துச் சிவிகையில் வருதலை இறைவர் அருளிய அருளிப்பாடு என்பதால், மறுக்க இயலாது ஏற்பாராயினர். நாவரசர், `நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த ... தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர்\' என்றது அதனை வெல்லும் சொல் இன்றி வெளிப்படுத்திய திறனுடையதாகும். இதனால் நாவரசர் நாவரசரேயாயினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 528

என்று பிள்ளையார் மொழிந்தருள்
செய்திட இருந்தவத் திறையோரும்
நன்று நீரருள் செய்ததே
செய்வன்என் றருள்செய்து நயப்புற்ற
அன்றை நாள்முத லுடன்செலு
நாளெலாம் அவ்வியல் பினிற்செல்வார்
சென்று முன்னுறத் திருஅம்பர்
அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.

பொழிப்புரை :

என்று சம்பந்தர் உரைத்திடவும், பெரிய தவவேந்த ரான திருநாவுக்கரசரும் `நல்லது! நீவிர் அருளியவாறே செய்வேன்\' என்று அருள் செய்து, விரும்பிய அந்நாள் முதற் கொண்டு, பிள்ளை யாருடன் செல்லும் எல்லா நாள்களிலும் அவ் வியல்பில் செல்பவ ராய், செய்தவக் கூட்டமான தொண்டர்களோடும் முன் செல்ல, திருவம்பர் என்ற நகரை அடைந்தார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 529

சண்பை மன்னருந் தம்பிரான்
அருள்வழி நிற்பது தலைச்செல்வார்
பண்பு மேம்படு பனிக்கதிர்
நித்திலச் சிவிகையிற் பணிந்தேறி
வண்பெ ரும்புக லூரினைக்
கடந்துபோய் வரும்பரி சனத்தோடும்
திண்பெ ருந்தவர் அணைந்ததெங்
கென்றுபோய்த் திருஅம்பர் நகர்புக்கார்.

பொழிப்புரை :

சீகாழிப் பதியில் தோன்றிய பிள்ளையாரும், தம் இறைவரின் அருள் வழியே ஒழுகுவதை மேற்கொண்டு செல்வாராய்ச் சிவப் பண்பினால் மேம்படும் குளிர்ந்த ஒளியையுடைய முத்துச் சிவிகையில் அமர்ந்து, வண்மையும் பெருமையும் கொண்ட திருப் புகலூரைக் கடந்து சென்று, `தண்ணிய பெருமையையுடைய தவமுனி வரான அரசு எங்குச் சென்றனர்?\' எனக் கேட்டுத் தாமும் சென்று, அவர் சேர்ந்த திருவம்பர் நகரத்தை அடைந்து புகுந்தார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 530

அம்பர் மாநகர் அணைந்துமா
காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதிற் கோயிலை
வலங்கொண்டு திருமுன்பு பணிந்தேத்தி
வம்பு லாம்மலர் தூவிமுன்
பரவியே வண்டமிழ் இசைமாலை
உம்பர் வாழநஞ் சுண்டவர்
தமைப்பணிந் துருகும்அன் பொடுதாழ்ந்தார்.

பொழிப்புரை :

திருவம்பர் என்ற பதியை அடைந்து மாகாளத் தில் இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் செம்பொன்னால் ஆன பெருமதிலையுடைய கோயிலை வலம் வந்து, இறைவரின் திருமுன்பு தாழ்ந்து வணங்கிப் போற்றி, மணமுடைய மலர்களைத் தூவியும் முறைப்படி வழிபட்டும், வண்மையுடைய தமிழிசை மாலை பாடிப் போற்றித் தேவர் வாழும் பொருட்டு நஞ்சையுண்ட இறைவரை வணங்கி, உள்ளம் உருகிய அன்பினால் நிலத்தில் விழுந்து வணங் கினார்.

குறிப்புரை :

அம்பர் - பதியின் பெயர். மாகாளம் - கோயிலின் பெயர். இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 531

தாழ்ந்து நாவினுக் கரசுடன்
தம்பிரான் கோயில்முன் புறமெய்திச்
சூழ்ந்த தொண்டரோ டப்பதி
அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப்பெறுங்
காலங்கள் விருப்பினாற் கும்பிட்டு
வாழ்ந்தி ருந்தனர் காழியார்
வாழவந் தருளிய மறைவேந்தர்.

பொழிப்புரை :

சீகாழியினர் வாழ்வு அடையுமாறு தோன்றிய மறைத் தலைவரான பிள்ளையார் வணங்கிப் பின் திருநாவுக்கரசு நாயனாருடன் திருக்கோயிலின் வெளியே வந்து, தம்மைச் சூழ்ந்த தொண்டருடனே அப்பதியில் விரும்பித் தங்குபவராய், கங்கை தாங்கிய தாழ்ந்த சடையையுடைய சிவபெருமானைப் பெருகும் காலங்கள் தோறும் விருப்பத்துடன் கும்பிட்டுப் பெருவாழ்வு அடைந்திருந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 532

பொருவி லாதசொற் புல்குபொன்
னிறமுதற் பதிகங்க ளாற்போற்றித்
திருவினார்ந்தகோச் செங்கணான்
அந்நகர்ச் செய்தகோ யிலைச் சேர்ந்து
மருவு வாய்மைவண் டமிழ்மலர்
மாலைஅவ் வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலிற் பணிந்துமுன்
பரவினார் பேணிய உணர்வோடும்.

பொழிப்புரை :

ஒப்பற்ற சொற்களையுடைய `புல்கு பொன்னிறம்\' எனும் தொடக்கம் உடைய பதிகம் முதலாய பல பதிகங்களினால் போற்றி செய்து, சைவமெய்த்திருவால் நிறைவுடைய கோச்செங்கட் சோழர், அத்திருஅம்பர் நகரத்தில் செய்த மாடக் கோயிலை அடைந்து, வாய்மையுடைய வண்மையான தமிழ்மாலையில் அச்சோழர் பெருமானாரைச் சிறப்பித்து, பெருகும் ஆசையினால் பணிந்து, பேணிக் கொண்ட உணர்வுடன் திருமுன்பு நின்று போற்றினார்.

குறிப்புரை :

`புல்கு பொன்னிறம்\' (தி.2 ப.103) எனத் தொடங்குவது நட்டராகப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இவ்வாறு காலங்கள் தொறும் வழிபட்டுப் போற்றிய பதிகங்கள் மேலும் இரண்டுள. அவை: 1. `அடையார்புரம்\' (தி.1 ப.83) - குறிஞ்சி. 2. `படியுளார்\' (தி.3 ப.93) - சாதாரி. கோச்செங்கணார் இப்பதியில் எடுப்பித்த கோயில் திரு அம்பர்பெருந் திருக்கோயிலாகும், இப்பெருமானின் திருமுன்பு அருளிய பதிகம் `எரிதர\' (தி.3 ப.19) எனத் தொடங்கும் காந்தார பஞ்ச மப் பண்ணிலமைந்த பதிகமாகும். இத்திருக்கோயில் கோச்செங்கட் சோழரால் எடுப்பிக்கப் பெற்றது என்பதை இப்பதிகத்தில் 1, 2, 5, 9 ஆகிய பாடல்களில் குறித்துப் போற்றுகின்றார் பிள்ளையார்.

பண் :

பாடல் எண் : 533

இன்ன வாறுசொல் மாலைக
ளால்துதித் திறைஞ்சிஅங் கமர்நாளில்
கன்னி மாமதில் திருக்கட வூர்தொழக்
காதல்செய் தருளிப் போய்
மன்னு கோயில்கள் பிறபதி
வணங்கியே வாக்கின்மன் னவரோடும்
அந்நெ டும்பதி அணைவுறக்
கலயரோ டடியவர் எதிர்கொண்டார்.

பொழிப்புரை :

இங்ஙனம் சொல்மாலைகளினால் போற்றிப் பணிந்து, அங்கு எழுந்தருளியிருக்கும் நாள்களில், பகைவரால் அழிக் கப்படாத பெருமதில் சூழ்ந்த திருக்கடவூரினைத் தொழுவதற்கு மிகவும் விருப்பம் கொண்டு சென்று, வழியில் பிற பதிகளில் உள்ள கோயில்களில் இறைவரை வணங்கிய வண்ணம், திருநாவுக்கரச ருடனே அப்பெரும்பதியான `திருக்கடவூரை\' அடையும்போது, குங்குலியக் கலைய நாயனாருடன் அடியார்கள் வந்து வரவேற்றனர்.

குறிப்புரை :

பிறபதிமன்னும் கோயில்கள் என்பன வழுவூர், வீரட் டம், திருவிடைக்கழி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவி மணியார். எனினும் பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 534

மற்றவ் வண்பதி அணைந்துவீ
ரட்டத்து மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு
காலனை உதைத்துருட் டியசெய்ய
பொற்சி லம்பணி தாமரை வணங்கிமுன்
போற்றிஉய்ந் தெதிர்நின்று
பற்ற றுப்பவர் சடையுடை
யானெனும் பதிகஇன் னிசைபாடி.

பொழிப்புரை :

முற்கூறிய அந்த வளம் பொருந்திய பதியைச் சேர்ந்து, இளமை பொருந்திய ஆனேற்றையுடைய இறைவரின் வீரட்டத் திருக்கோயிலின் சுற்று மாளிகையை வலமாக வந்து, இயமனை உதைத்து உருட்டிய செம்பொன் சிலம்பணிந்த திருவடித் தாமரைகளைத் தொழுது, துதித்து, உய்ந்து, இனிய இசையுடன் `சடையுடையானெனும்\' (தி.3 ப.8) எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி,

குறிப்புரை :

`சடையுடையானெனும்\' (தி.3 ப.8) எனத் தொடங்கும் பதிகம் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 535

பரவி ஏத்திஅங் கரிதினிற்
போந்துபார் பரவுசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி
யப்பெருங் கலயர் தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத்
தருளிய விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா
னமும்பணிந் திருந்தனர் சிறப்பெய்தி.

பொழிப்புரை :

வணங்கிப் போற்றி, அங்கிருந்து அரிதாக வெளியே வந்து, உலகம் போற்றும் சிறப்புடைய திருநாவுக்கரச ருடனே, பொருந்திய நட்புடைய குங்குலியக்கலய நாயனாரின் இல்லத்தில் எழுந்தருளி, எல்லையில்லாத அன்பினால் அவர் அமைத் தளித்த விருந்தை இனிதாய் உண்ட பிள்ளையார், அருகிலுள்ள திருக்கடவூர்த் திருமயானத்தையும் பணிந்து சிறப்பெய்தித் தங்கி யிருந்தார்.

குறிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் அருளிய பதிகம் `வரிய மறையார்\' (தி.2 ப.80) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 536

சிறப்பு டைத்திருப் பதியத
னிடைச்சில நாளமர்ந் தருளோடும்
விறற்பெ ருங்கரி யுரித்தவர்
கோயில்கள் விருப்பொடுந் தொழச் செல்வார்
மறைப்பெ ருந்திருக் கலயரும்
உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அறப்பெ ரும்பயன் அனையஅத்
தொண்டரோ டணைந்தனர் திருவாக்கூர்.

பொழிப்புரை :

சிறந்த அத் திருப்பதியில் சில நாள்கள் விரும்பித் தங்கி, வலிய பெரிய யானையை உரித்த சிவபெருமான் எழுந் தருளியிருக்கும் பிறகோயில்களையும் தொழுவதற்கு அருள் பெற்றுச் செல்பவராய், மறைகளைப் பயின்ற பெரிய சைவ மெய்வடிவுடைய குங்குலியக்கலய நாயனாரும் உடன்பட, வணங்கும் பொருட்டுக் கொண்ட பெருமகிழ்வுடன், அறத்தின் பெரும்பயன் போன்ற நாவரச ருடன் திருவாக்கூரினைச் சென்றடைந்தார் பிள்ளையார்.

குறிப்புரை :

கலயனாரும் உடன்பட - பிற திருக்கோயில்களுக்குச் சென்று தாமும் அரசரும் வழிபடக் கலயரும் உடன்பட.

பண் :

பாடல் எண் : 537

தக்க அந்தணர் மேவும்அப்
பதியினிற் தான்தோன்றி மாடத்துச்
செக்கர் வார்சடை அண்ணலைப்
பணிந்திசைச் செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன்
தொழுதுபோய் மீயச்சூர் பணிந்தேத்திப்
பக்கம் பாரிடம் பரவநின்
றாடுவார் பாம்புர நகர்சேர்ந்தார்.

பொழிப்புரை :

தகுந்த அந்தணர்கள் வாழ்கின்ற அப்பதியில், தான் தோன்றிமாடக் கோயிலில் சிவந்த நீண்ட சடையையுடைய இறைவ ரைப் பணிந்து, இசையையுடைய செந்தமிழ்ப் பதிக மாலையைப் பாடி, பெருமை பொருந்திய பிற கோயில்களையும் உடனே தொழுது சென்று, `திருமீயச்சூரினையும்\' வணங்கி, பூத கணங்கள் அருகிலி ருந்து போற்ற நின்று ஆடும் இறைவரின் `திருப்பாம்புர\' நகரத்தை அடைந்தார்.

குறிப்புரை :

தான் தோன்றிமாடம் - இறைவன் தானே தோன்றி எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில். சுயம்பு என்பதற்குரிய தமிழ்ச் சொல் தான்தோன்றி என்பதாகும். இவ்விடத்து அருளிய பதிகம் `அக்கிருந்த\' (தி.2 ப.42) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும். `பரவுநின்\' என்பது `பாடநின்\' என்றும் பாடம். பிறகோயில்கள் என்பன திருச்செம்பொன்பள்ளி, திருப்பறிய லூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருமீயச்சூரில் அருளிய பதிகம் `காயச் செவ்வி\' (தி.2 ப.62) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 538

பாம்பு ரத்துறை பரமரைப்
பணிந்துநற் பதிகஇன் னிசைபாடி
வாம்பு னற்சடை முடியினார்
மகிழ்விடம் மற்றும்உள் ளனபோற்றிக்
காம்பி னில்திகழ் கரும்பொடு
செந்நெலின் கழனியம் பணைநீங்கித்
தேம்பொ ழில்திரு வீழிநன்
மிழலையின் மருங்குறச் செல்கின்றார்.

பொழிப்புரை :

பிள்ளையார் திருப்பாம்புரத்தில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி நல்ல இனிய இசை பொருந்திய திருப்பதிகத் தைப் பாடியருளி, தாவும் அலைகளையுடைய கங்கை ஆற்றைச் சூடிய முடியையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள பிற பதிக ளையும் போற்றி, மூங்கில் போல் விளங்கும் கரும்பும் செந்நெல்லும் விளைந்த வயல் இடங்களைக் கடந்து, தேனையுடைய சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலையின் அருகே செல்கின்றவராகி,

குறிப்புரை :

திருப்பாம்புரத்தில் அருளிய பதிகம் `சீரணி திகழ்\' (தி.1 ப.41) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிற பதிகளாவன திருச்சிறுகுடி, திருவன்னியூர் முதலாயினவாகலாம். திருச்சிறுகுடிக்கு உரிய பதிகம் `திடமலி\' (தி.3 ப.97) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருவன்னியூர்ப் பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 539

அப்பொழுதின் ஆண்ட
அரசை எதிர்கொண்ட
மெய்ப்பெருமை அந்தணர்கள்
வெங்குருவாழ் வேந்தனார்
பிற்படவந் தெய்தும்
பெரும்பேறு கேட்டுவப்பார்
எப்பரிசி னால்வந்
தணைந்தங் கெதிர்கொண்டார்.

பொழிப்புரை :

அவ்வாறு பிள்ளையார் செல்லும் பொழுது முன் வந்த திருநாவுக்கரசரை எதிர்கொண்ட வாய்மையில் மிக்க பெருமை உடைய அந்தணர்கள், சீகாழித் தலைவர் பின்னர் வந்து சேர இருக்கும் செய்தியைக் கேட்டு மகிழ்ந்து, வரவேற்றற்குரிய எல்லா வகையாலும் குறைவின்றி ஒருங்கு கூடிவந்து அங்கு எதிர் கொள்வார்களாய்,

குறிப்புரை :

எப்பரிசினால் - வரவேற்றற்குரிய எல்லா வகையாலும். உம்மை தொக்கது.

பண் :

பாடல் எண் : 540

நிறைகுடந்தூ பந்தீபம்
நீடநிரைத் தேந்தி
நறைமலர்ப்பொற் சுண்ணம்
நறும்பொரியுந் தூவி
மறையொலிபோய் வானளப்ப
மாமுரசம் ஆர்ப்ப
இறைவர்திரு மைந்தர்தமை
எதிர்கொள்வர வேற்றார்.

பொழிப்புரை :

நிறைகுடம், நறுமணப்புகை, ஒளிவிளக்கு என்ற இவற்றைத் தொடர்ந்து வரிசை பெற ஏந்திய வண்ணம், தேன் பொருந் திய புதிய மலர்களையும் பொன்சுண்ணத்தையும் மணமுடைய பொரி களையும் தூவி, மறையின் ஒலிமிகுந்த வானத்தில் நிறையவும், பெரிய முரசுகள் ஒலிக்கவும், இவ்வாறாக இறைவரின் மகனாரான பிள்ளை யாரை எதிர் கொள்ளும் வகையால் வரவேற்றனர்.

குறிப்புரை :

`எதிர்கொள் வரவேற்றார்\' என்பது `எதிர்கோ ளேற்றார்\' என்றும் பாடம். இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 541

வந்துதிரு வீழி
மிழலை மறைவல்ல
அந்தணர்கள் போற்றிசைப்பத்
தாமும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகைநின்
றிழிந்து தாழ்ந்தருளி
உய்ந்த மறையோ
ருடன்அணைந்தங் குள்புகுவார்.

பொழிப்புரை :

திருவீழிமிழலை என்ற பதியில் உள்ள மறை களில் வல்ல அந்தணர்கள் வந்து போற்ற, பிள்ளையார் தாமும் மணிகளுள் சிறந்த முத்துகளால் ஆன புகழத்தக்க அழகிய சிவிகையினின்றும் இறங்கி, வணங்கி, தம் வருகையால் உய்வு பெற்ற அந்தணர்களுடனே சேர்ந்து அந் நகரத்துள் புகுபவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 542

அப்போ தரையார்
விரிகோ வணவாடை
ஒப்போ தரும்பதிகத்
தோங்கும் இசைபாடி
மெய்ப்போதப் போதமர்ந்தார்
தங்கோயில் மேவினார்
கைப்போது சென்னியின்மேற்
கொண்டு கவுணியனார்.

பொழிப்புரை :

அப்போது, `அரையார் விரிகோவண ஆடை\' எனத் தொடங்கும் ஒப்புக் கூற இயலாத திருப்பதிகத்தில், ஓங்கும் இசையைப் பாடியருளி, கைம்மலர்களைத் தலைமீது குவித்துக் கொண்டு, உண்மையான ஞானத்தால் வழிபடப் பெறும் தத்துவம் முப்பத்தாறாலும் அமைந்த இதய தாமரையில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருக்கோயிலுள் சென்றார்.

குறிப்புரை :

`அரையார் விரிகோவணம்\' (தி.1 ப.35) எனத் தொடங்கும் பதிகம் தக்கராகப் பண்ணிலமைந்ததாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 543

நாவின் தனிமன்னர்
தாமும் உடன்நண்ண
மேவிய விண்ணிழிந்த
கோயில் வலங்கொள்வார்
பூவியலும் உந்தியான்
போற்றப் புவிக்கிழிந்த
தேவியலு மெய்கண்டு
சிந்தைவியப் பெய்தினார்.

பொழிப்புரை :

நாவால் ஒப்பற்ற அரசரான திருநாவுக்கரசர் தம்முடன் கூடியிருக்க, நான்முகன் தோன்றுதற்கிடனாய கொப்பூழ்த் தாமரையை உடைய திருமால் வணங்கி வழிபடும் பொருட்டு, விண் ணுலகத்தினின்றும் இம்மண்ணுலகத்தில் இறங்கிய தெய்வ வடிவாய்த் திகழும் அப்பெருமானைக் கண்டு, உள்ளத்தில் பெருவியப்பை அடைந்தார் ஆளுடைய பிள்ளையார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 544

வலங்கொண்டு புக்கெதிரே
வந்து வரநதியின்
சலங்கொண்ட வேணித்
தனிமுதலைத் தாழ்ந்து
நிலங்கொண்ட மேனியராய்
நீடுபெருங் காதல்
புலங்கொண்ட சிந்தையினால்
பொங்கியிசை மீப்பொழிந்தார்.

பொழிப்புரை :

அப்பிள்ளையார், வலமாக வந்து கோயிலுக் குள்ளே புகுந்து, திருமுன்பு சென்று, வானின்றிழிந்த கங்கை நீரைத் தாங்கிய சடையையுடைய ஒப்பில்லாத முழுமுதலான இறைவரைத் திருமேனி முழுதும் நிலத்திலே பொருந்த விழுந்து வணங்கிப் பெருகிய அன்பு வெள்ளமானது மெய்ம் முழுதும் வழிவதைப் போன்று இசையால் பொழிவார் ஆனார்.

குறிப்புரை :

`வந்து வரநதியின்\' என்பது `நின்று வானநதியின்\' என்றும் பாடம்.

பண் :

பாடல் எண் : 545

போற்றிச் சடையார்
புனலுடையான் என்றெடுத்துச்
சாற்றிப் பதிகத்
தமிழ்மாலைச் சந்தவிசை
ஆற்ற மிகப்பாடி
ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக்கீழ்
நின்றலைந்து நீடினார்.

பொழிப்புரை :

அவ்வாறு போற்றுமவர், `சடையார் புனல் உடை யான்\' எனத் தொடங்கிப் பெருமானின் புகழ் நவிலும் பதிகமான தமிழ் மாலையைப் பாடி, நீற்று அழகரான இறைவரின் திருவடிகளின் கீழ் ஆனந்த வெள்ளத்தினுள் நின்று அதன் கரைகாண மாட்டாது அதனுள் நிலைத்திருந்தார்.

குறிப்புரை :

`சடையார் புனல் உடையான்\' (தி.1 ப.11) எனத் தொடங் குவது நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 546

நீடியபே ரன்புருகி
உள்ளலைப்ப நேர்நின்று
பாடியெதி ராடிப்
பரவிப் பணிந்தெழுந்தே
ஆடிய சேவடிகள்
ஆர்வமுற உட்கொண்டு
மாடுயர் கோயில்
புறத்தரிது வந்தணைந்தார்.

பொழிப்புரை :

நிலையான பேரன்பு உருகுதலால் திளைத்து நிற்கும் அவர், திருமுன்பு நின்று பாடியும், ஆனந்தக் கூத்தாடியும், போற்றியும், பணிந்தும், எழுந்தும், அருட்பெருங்கூத்து இயற்றும் திருவடிகளை அன்பு பொருந்த மனத்துள் வைத்தவராய், உயர்ந்த திருக்கோயிலின் புறத்தே அரிதாய் வந்து, (ஆளுடைய பிள்ளையாரும், ஆளுடைய அரசரும்) சேர்ந்தனர்.

குறிப்புரை :

திருமுன்பு நின்று இதுபொழுது பாடிய பதிகம் கிடைத் திலது.

பண் :

பாடல் எண் : 547

வந்தணைந்து வாழ்ந்து
மதிற்புறத்தோர் மாமடத்துச்
செந்தமிழ்சொல் வேந்தரும்
செய்தவரும் சேர்ந்தருளச்
சந்தமணிக் கோபுரத்துச்
சார்ந்தவட பாற்சண்பை
அந்தணர்சூ ளாமணியார்
அங்கோர் மடத்தமர்ந்தார்.

பொழிப்புரை :

அங்ஙனம் வந்து சேர்ந்து பெருவாழ்வு பெற்றுத் திருமதில் புறத்திலுள்ள ஒரு பெருமடத்தில் செந்தமிழ்ச் சொல் அரச ரான திருநாவுக்கரசரும் தவத்தையுடைய திருத்தொண்டர்களும் சேர்ந் திருப்ப, சீகாழியில் தோன்றிய அந்தணர் பெருமானான சம்பந்தர் அழகிய மணிகளையுடைய கோபுரத்தைச் சார்ந்த வடபகுதியில் அங்கு ஒரு திருமடத்தில் விரும்பி எழுந்தருளினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 548

அங்கண் அமர்வார்
அரனார் அடியிணைக்கீழ்த்
தங்கிய காதலினாற்
காலங்கள் தப்பாமே
பொங்குபுகழ் வாகீச
ருங்கூடப் போற்றிசைத்தே
எங்கும் இடர்தீர்ப்பார்
இன்புற் றுறைகின்றார்.

பொழிப்புரை :

அங்கு விரும்பி எழுந்தருளியிருப்பவர், சிவ பெருமான் திருவடிகளின் கீழ்ப் பொருந்திக் கிடந்த விருப்பத்தினால் வழிபாட்டிற்குரிய காலம்தோறும், தவறாமல், பொங்கும் புகழை உடைய திருநாவுக்கரசரும் கூடச் சென்று, வழிபட்டுப் போற்றி, எங் கும் துன்பம் தீர்ப்பவர்களாய் இன்பமுடன் விரும்பித் தங்கியிருந்தனர்.

குறிப்புரை :

காலந்தொறும் சென்றிசைத்த பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 549

ஓங்குபுனற் பேணு
பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கார் திலதைப்
பதிமுற்ற மும்பணிந்து
வீங்கொலிநீர்வீழி மிழலையினில்
மீண்டும் அணைந்
தாங்கினிது கும்பிட்
டமர்ந்துறையும் அந்நாளில்.

பொழிப்புரை :

பெருகும் நீர்வளம் கொண்ட திருப்பேணு பெருந்துறையையும் அதனை உள்ளிட்ட அருகிலுள்ள திலதைப் பதிமதிமுத்தத்தினையும் போய் வணங்கிப் பெருகும் ஒலியுடைய நீர் சூழ்ந்த திருவீழிமிழலையினில் மீண்டும் எழுந்தருளி, அங்கு இனிதாய் வணங்கி விருப்பமுடனே இருந்து வரும் நாள்களில்,

குறிப்புரை :

பேணுபெருந்துறையில் அருளிய பதிகம் `பைம்மா நாகம்\' (தி.1 ப.42) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். திலதைப்பதிமதிமுத்தத்தில் அருளிய பதிகம் `பொடிகள் பூசி\' (தி.2 ப.118) எனத் தொடங்கும் செவ்வழிப்பண்ணிலமைந்த பதிகமாகும். `டமர்ந்துறையும்\' என்பது `டமர்ந்தொழுகும்\' என்றும் பாடம்.

பண் :

பாடல் எண் : 550

சேணுயர் மாடப் புகலி யுள்ளார்
திருஞான சம்பந்தப் பிள்ளை யாரைக்
காணும் விருப்பிற் பெருகு மாசை
கைம்மிகு காதல் கரை யிகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும்
பொருவிடை யார்மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை யகன்று போந்து
வீழி மிழலையில் வந்த ணைந்தார்.

பொழிப்புரை :

வானளாவ உயர்ந்த மாடங்களை உடைய சீகாழியில் வாழ்கின்ற மறையவர்கள், திருஞானசம்பந்தப் பிள்ளை யாரைச் சென்று காணவேண்டும் என்ற விருப்பத்தால், பெருகும் ஆசைமீதூரத் திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரின் மலரடி களை வணங்கி, விடைபெற்றுச் சீகாழியினின்றும் திருவீழிமிழலையை அடைந்தார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 551

ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்
தோங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்க ளெல்லாம்
வந்து மருங்கணைந் தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதி யர்கள்
கேட்டுமெய்ஞ் ஞானமுண் டாரை முன்னா
ஏழிசை சூழ்மறை எய்த வோதி
எதிர்கொள் முறைமையிற் கொண்டு புக்கார்.

பொழிப்புரை :

ஊழிக்காலத்தில் பெருகும் நீர் வெள்ளத்தில் ஆழாமல் மிதந்த சீகாழியில், பெருவாழ்வை உடைய அந்தணர்கள் எல்லாம் வந்து, தம் பதியின் அருகே சேர்ந்தனர் எனத் திருவீழி மிழலையில் வாழும் மறையோர்கள் கேள்வியுற்று, மெய்ஞ்ஞான அமுது உண்ட பிள்ளையாரை எண்ணி மனத்துள் கொண்டு, ஏழிசை சூழும் மறைகளில் வல்ல அந்தச் சீகாழி மறையவர்பால் சேர்ந்து, முறைப்படி எதிர்கொண்டு வரவேற்று, அவர்களை அழைத்துக் கொண்டு நகரத்துள் புகுந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 552

சண்பைத் திருமறை யோர்கள் எல்லாம்
தம்பிரா னாரைப் பணிந்து போந்து
நண்பிற் பெருகிய காதல் கூர்ந்து
ஞானசம் பந்தர் மடத்தில் எய்திப்
பண்பிற் பெருகுங் கழும லத்தார்
பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே
எண்பெற்ற தோணி புரத்தில் எம்மோ
டெழுந்தரு ளப்பெற வேண்டும் என்றார்.

பொழிப்புரை :

சீகாழியினைச் சேர்ந்த மறையவர்களெல்லாம் கோயிலுள் சென்று, தம் இறைவரை வணங்கிச் சென்று, நட்பால் பெருகிய பெரு விருப்பம் மிக்கு, ஞானசம்பந்தரின் திருமடத்தைச் சேர்ந்து, நற்பண்பினால் பெருகும் சீகாழியில் உள்ளவர்களுக்கு உரிமை உடைய சம்பந்தரின் திருவடிகளை வணங்கித் தலைமீது கொண்டு, `மேன்மையுடைய திருத்தோணிபுரத்தில் எம்முடனே எழுந்தருளும் பேறு யாங்கள் பெற வேண்டும்\' என வேண்டிக் கொண்டனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 553

என்றவர் விண்ணப்பஞ் செய்த போதில்
ஈறில் சிவஞானப் பிள்ளை யாரும்
நன்றிது சாலவுந் தோணி மேவும்
நாதர் கழலிணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும்
இறைவர் அருள்பெற்றுப் போவ தென்றே
அன்று புகலி அரும றையோர்க்
கருள்செய் தவர்க்கு முகமளித்தார்.

பொழிப்புரை :

என அவர்கள் வேண்டிக்கொண்டபோது எல்லையில்லாத சிவஞானம் பெற்ற சம்பந்தரும் `மிகவும் நல்லது\' ஆனால் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருவடி களை நாம் வணங்குவதற்கு இன்று கழிந்து நாளைத் திருவீழிமிழலை இறைவரின் அருளைப் பெற்று நாம் போகலாம்!\' எனக் கூறி, அன்று அவர் சீகாழி மறையவர்களுக்கு அருள் செய்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 554

மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்
வேதியர்க் காய விருந்த ளிப்பப்
பாற்பட்ட சிந்தைய ராய்ம கிழ்ந்து
பரம்பொரு ளானார் தமைப் பரவும்
சீர்ப்பட்ட எ ல்லை யினிது செல்லத்
திருத்தோணி மேவிய செல்வர் தாமே
கார்ப்பட்ட வண்கைக் கவுணி யர்க்குக்
கனவிடை முன்னின் றருள்செய் கின்றார்.

பொழிப்புரை :

மேன்மையுடைய திருவீழிமிழலை அந்தணர்கள், சீகாழியினின்றும் வந்த அந்தணர்களுக்கு விருந்தளிக்க, ஏற்ற அவர் களும் அன்பு கொண்ட உள்ளம் உடையராகி, மகிழ்ந்து இறைவரை வழிபட்டுப் போற்றும் சீர்மை பொருந்திய கால எல்லை இனிதாய்க் கழியத் திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவர், தாமே மேகம் போன்ற வண்மையுடைய பிள்ளையாருக்குக் கனவில் தோன்றி அருள் செய்வாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 555

தோணியில் நாம்அங் கிருந்த வண்ணம்
தூமறை வீழிமிழலை தன்னுள்
சேணுயர் விண்ணின் றிழிந்த இந்தச்
சீர்கொள் விமானத்துக் காட்டு கின்றோம்
பேணும் படியால் அறிதி என்று
பெயர்ந்தருள் செய்யப் பெருந்த வங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார்
விரவும் புளகத் தொடும் உணர்ந்தார்.

பொழிப்புரை :

அச் சீகாழியில் `தோணியில் தாம் இருந்த காட்சியை இங்குத் தூய மறைவடிவாகிய திருவீழிமிழலையுள் விண் ணினின்றும் இழிந்த இந்தச் சிறப்புடைய விமானத்திடம் காணும்படி காட்டுகின்றோம். கண்டு வழிபடும் வகையினால் அறிவாயாக!\' என்று கூறி மறைந்து போக, சீகாழிப் பதியினர் முன் செய்த தவத்தால் தோன்றிய பிள்ளையார், தம் உடலில் தோன்றிய மயிர்க்கூச்சலுடன் துயிலுணர்ந்து எழுந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 556

அறிவுற்ற சிந்தைய ராய்எ ழுந்தே
அதிசயித் துச்சிமேல் அங்கை கூப்பி
வெறியுற்ற கொன்றையி னார்ம கிழ்ந்த
விண்ணிழி கோயிலிற் சென்று புக்கு
மறியுற்ற கையரைத் தோணி மேல்முன்
வணங்கும் படியங்குக் கண்டு வாழ்ந்து
குறியிற் பெருகுந் திருப்ப திகம்
குலவிய கொள்கையிற் பாடு கின்றார்.

பொழிப்புரை :

விழிப்புற்ற சிந்தையுடையவராய் எழுந்து அதிசயம் அடைந்து, தலையின் மேலே அழகிய கைகளை வைத்துக் கூப்பித் தொழுது, மணம் பொருந்திய கொன்றை மலரைச் சூடிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும் விண்ணிழி விமானமுடைய கோயிலுள் புகுந்து மானேந்திய கையையுடைய இறைவரைத் திருத்தோணியின் மேல் முன் வணங்கும் அந்த வண்ணமே அங்குக் கண்டு, வாழ்வடைந்து, அக்குறிநிலையின் பெருமை காட்டும் திருப்பதிகத்தைப் பொருந்திய கொள்கையால் பாடுபவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 557

மைம்மரு பூங்குழல் என்றெ டுத்து
மாறில் பெருந் திருத்தோணி தன்மேற்
கொம்மை முலையினாள் கூட நீடு
கோலங் குலாவும் மிழலை தன்னில்
செம்மை தருவிண் ணிழிந்த கோயில்
திகழ்ந்த படிஇது என்கொல் என்று
மெய்ம்மை விளங்குந் திருப்ப திகம்
பாடி மகிழ்ந்தனர் வேத வாயர்.

பொழிப்புரை :

`மைம்மரு பூங்குழல்\' (தி.1 ப.4) எனத் தொடங்கி ஒப்பில்லாத பெருந் திருத்தோணி மீது இளங் கொங்கையையுடைய திருநிலைநாயகி அம்மையாருடன் கூடநீடும் திருக்கோலம், விளக்கம் உடைய திருவீழிமிழலையில் செம்மை தருகின்ற விண்ணிழி விமானத் தில் விளங்க இருந்த வண்ணம் இது என்? என வினவும் பொருளுடன் உண்மை விளங்கும் திருப்பதிகத்தை, மறைவாயினரான சம்பந்தர் பாடியருளினார்.

குறிப்புரை :

`மைம்மரு பூங்குழல்\' (தி.1 ப.4) எனத் தொடங்கும் திருப்பதிகம் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். `புகலி நிலாவிய புண்ணியனே, மிழலை விண்ணிழி கோயில் விரும்பியது என்கொல்? சொல்லாய்\' எனும் பொருண்மை பாடல் தொறும் அமைந்திருத்தலின், அதுகொண்டு இவ்வரலாற்றுப் பின்னணியை ஆசிரியர் அமைத்துக் கூறுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 558

செஞ்சொல் மலர்ந்த திருப்ப திகம்
பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்தெ ழுவார்
ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சிவர் சோலைப்புகலி மேவும்
மாமறை யோர்தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த
நீர்மைத் திறத்தை அருள்செய் கின்றார்.

பொழிப்புரை :

செம்மையான சொற்கள் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடித் திருக்கடைக்காப்பும் பாடி நிறைவுசெய்து, கைகளைக் கூப்பி, நிலத்தில் விழுந்து எழுபவரான பிள்ளையார், பெருகிய ஆனந்தம் தம்மை அலைப்ப வெளியே வந்து, மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியினின்றும் வந்த மறையவர்களை நோக்கி, உண்மைவடிவாய்த் தம் உள்ளத்தில் நிறைந்த திருவருள் குறிப்பால் உணர்த்தப் பெற்ற அருளியல்பை அருளிச் செய்பவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 559

பிரம புரத்தி லமர்ந்த முக்கட்
பெரிய பிரான்பெரு மாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்குஞ் சென்று
விரும்பிய கோயில் பணிந்து போற்றி
வருவது மேற்கொண்ட காதல் கண்டங்
கமர்ந்த வகையிங் களித்த தென்று
தெரிய வுரைத்தருள் செய்து நீங்கள்
சிரபுர மாநகர் செல்லும் என்றார்.

பொழிப்புரை :

சீகாழியில் வீற்றிருக்கின்ற முக்கண்களை உடைய பெருமான், தம் பெருமாட்டியுடன் வீற்றிருக்கும் இடங்கள் எங்கும் சென்று, விரும்பிப் பணிந்து போற்றி வருதலை அப்பெருமான் தாம் அறிந்துகொண்டு, அங்குத் திருத்தோணியில் வீற்றிருந்த வகையினை இங்குக் காணுமாறு அளித்தார்\' என்று விளங்கக் கூறி, `நீங்கள் சீகாழிக்குச் செல்லுங்கள்\' என்றுரைத்தார்.

குறிப்புரை :

காழிக்காட்சியை வீழியிற் காட்டியது, காழிக்குத் தாம் வருதலைத் தவிர்க்கும் திருவுளக் குறிப்பாதலை யுணர்ந்த பிள்ளை யார், அங்கிருந்து அழைக்க வந்தார்க்குக் கூறி அனுப்பி வைத்தார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 560

என்று கவுணியப் பிள்ளை யார்தாம்
இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண்
ஒழிய ஒருவா றகன்று போந்து
மன்றுள் நடம்புரிந் தார்ம கிழ்ந்த
தானம் பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த்தோணி நீடு வாரைப்
பணியும் நியதிய ராய் உறைந்தார்.

பொழிப்புரை :

என்று கவுணியர்குலத் தோன்றலான பிள்ளை யார் அருள, வணங்கி அவர் உரைத்த கட்டளையை ஏற்றுக் கொண்டு, பொருந்திய பெருவிருப்பத்தால் தங்கள் மனம் அங்கு நிற்க, நீங்காத இயல்பிலே ஒருவாறாக அரிதின் நீங்கிச் சென்றார்கள். நீங்கிச் சென்று, திருக்கூத்தியற்றும் பெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற் றையும் வணங்கிச் சென்று, நிலையான புகழையுடைய தோணிபுரத் தில் வீற்றிருக்கும் இறைவரை நாளும் பணியும் நியதி உடையவராய் விளங்கினர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 561

சிரபுரத் தந்தணர் சென்ற பின்னைத்
திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும்
பண்பின் வழாத்திருத் தொண்டர் சூழ
உரவுத் தமிழ்த்தொடை மாலை சாத்தி
ஓங்கிய நாவுக் கரச ரோடும்
விரவிப் பெருகிய நண்பு கூர
மேவி இனிதங் குறையும் நாளில்.

பொழிப்புரை :

சீகாழி மறையவர்கள் விடைபெற்றுச் சென்றபின்பு, திருவீழிமிழலையில் மேவிய இறைவரின் திருவடிகளை வணங்கி, எந்நாளும் அடிமைப் பண்பினின்றும் நீங்காமல் ஒழுகும் திருத்தொண் டர் சூழ்ந்திருக்க, சிறந்த தமிழால் தொடுக்கப்பட்ட திருப்பதிகங்களைச் சாத்தி, அன்புமிக்க திருநாவுக்கரசருடன் கூடிப் பெருகிய நட்புமிக்கு ஓங்கப் பொருந்தி இனிதாய் அப் பதியில் தங்கி இருந்தனர். அந்நாள் களில்,

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகங்கள் பல. அவற்றுள் கிடைத்தவை: 1. `தடநிலவிய\' (தி.1 ப.20) - நட்டபாடை. 2. `இரும்பொன்மலை\' (தி.1 ப.82) - குறிஞ்சி. 3. `அலர்மகள் மலிதர\' (தி.1 ப.124) - வியாழக்குறிஞ்சி. 4. `ஏரிசையும்\' (தி.1 ப.132) - மேகராகக் குறிஞ்சி. 5. `கேள்வியர்\' (தி.3 ப.9) - காந்தார பஞ்சமம். 6. `சீர்மருவு\' (தி.3 ப.80) - சாதாரி. 7. `மட்டொளி\' (தி.3 ப.85) - சாதாரி. 8. `வெண்மதி\' (தி.3 ப.98) - சாதாரி. 9. `வேலின் நேர்தரு\' (தி.3 ப.111) - பழம் பஞ்சுரம். 10. `துன்று கொன்றை\' (தி.3 ப.116) - பழம் பஞ்சுரம். 11. `புள்ளித் தோலாடை\' (தி.3 ப.119) - புறநீர்மை.

பண் :

பாடல் எண் : 562

மண்ணின் மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு
பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார்மேல்
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வி னோர்க்கும்
கவலைவரு மோஎன்று கருத்திற் கொண்டார்.

பொழிப்புரை :

இம்மண்ணுலகில் மழை மறுத்ததனால் ஆறுகளில் பருவவெள்ளம் பாயாது தவறி, அது காரணமாய் உலகத்து உயிர்கள் வருந்தி, உணவின்றி நின்றமையால், தேவர்களுக்கும் சிறப்பு வழி பாடுகளும் நாள்வழிபாடுகளும் செய்யப்படாமல் மிக்க பெரும் பசியின் கொடுமை உலகில் பொருந்திய நிலையைக் கண்டு, பண் பொருந்திய சொல்லையுடைய உமையம்மையாரின் கொங்கையின் பால் நீங்காதவாயினரான பிள்ளையாருடன் திருநாவுக்கரசரும் `உலகில் நெற்றிக் கண்ணரான திருநீற்றுச் சார்புடைய தொண்டர் களுக்கும் கவலை வருமோ?\' என்று தம் உள்ளங்களில் எண்ணினர்.

குறிப்புரை :

பெருமழையாலும் பஞ்சம் வரும், மழையின்மை யாலும் பஞ்சம் வரும். இப்பஞ்சந்தானும் மழையின்மையால் வந்ததாகும். இப்பாடலின் முன்னிரண்டடிகள், திருக்குறட் கருத்து களைப் பெரிதும் முகந்து நிற்கின்றன. `வான் பொய்த்து\' - விண் ணின்று பொய்ப்பின் (குறள், 13); `நதிகள் தப்பி\' - நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் (குறள், 17); `மன்னுயிர்கள் கண் சாம்பி\' - விசும்பில் துளி வீழின் அல்லால் (குறள், 16); `உணவு மாறி\' - ஏரின் உழாஅர் உழவர் (குறள், 14); `விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசையாற்றா\' - சிறப்பொடு பூசனை செல்லாது (குறள், 18) - மிக்க பெரும்பசி உலகில் விரவக் கண்டு - உள் நின்று உடற்றும் பசி என ஒப்பிட்டுக் காண்க. எனினும் இதனாலாய வறுமை நெற்றிக்கண் உடைய பெருமானின் திருநீற்றுச் சார்புடையோர்க்கும் வருமோ? வராது என்ற நிலையில் அவர்கள் கருதினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 563

வானாகி நிலனாகி அனலு மாகி
மாருதமாய் இருசுடராய் நீரு மாகி
ஊனாகி உயிராகி உணர்வு மாகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக் கப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடிபரவி அன்றிரவு துயிலும் போது
கானாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில்அணைந் தருளிச் செய்வார்.

பொழிப்புரை :

வானமும், மண்ணும், தீயும், காற்றும், கதிரவன், சந்திரன் ஆகிய இருசுடர்களும், நீரும் ஆகியும், ஊனும் உயிரும் உணர்வுமாகியும், உலகங்கள் எல்லாம் ஆகியும்அவற்றின் அப்பாற் பட்டதாகியும், கேடில்லாத வடிவாகி நின்ற இறைவரின் சிவந்த திருவடிகளைப் போற்றி உறங்கும் போது, சுடுகாட்டில் எலும்பணிந்து கூத்தியற்றுபவராய் இருந்தருளும் திருவீழிமிழலைப் பெருமான் கனவில் தோன்றி அருள்செய்வாராய்,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 564

உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசிநோய் உமையடையா தெனினும் உம்பால்
நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மை வாட்டம்
நீங்குதற்கு நித்தம் ஒரோர் காசு நீடும்
இலகுமணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்
யாமளித்தோம் உமக்கிந்தக் காலந் தீர்ந்தால்
அலகில்புக ழீர்தவிர்வ தாகும் என்றே
அருள்புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.

பொழிப்புரை :

`உலக இயல்பு நிகழ்வினால் வந்து அணைந்த தீமை பொருந்திய பசிநோய், உங்களை அடையாது என்றாலும், உங்களைச் சேர்ந்த அடியவர்களின் வருத்தம் நீங்குதற்காக, நித்தமும் ஒவ்வொரு பொற் காசினைக் கிழக்கிலும் மேற்கிலும் விளங்கும் அழகிய பலிபீடங்களில் உங்களுக்கு அளிப்போம்; அளவற்ற புகழை உடையவர்களே, இப்பஞ்சகாலம் நீங்கினால் அது நிறுத்தப்படும்\' எனத் திருவீழிமிழலை இறைவர் உரைத்தருளினார்.

குறிப்புரை :

இறைவன் வழங்கும் பொருளை நாளும் ஒரு காசாக அருளியமைக்குக் காரணம், அவ்வடியவர் பெருமக்கள் இருவரின் திருப்பாடல்களை நாளும் செவிமடுத்து ஏற்கவாம் என்பர் சுந்தரர். `இருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் நித்தல் காசு நல்கினீர்\' (தி.7 ப.88 பா.8) என்பது அவர் திருவாக்காகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 565

தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையார் இளவேறு தாமு ணர்ந்து
நம்பிரான் அருள்இந்த வண்ணம் என்றே
நாவினிசை யரசரொடுங் கூட நண்ணி
வம்புலா மலரிதழி வீழி நாதர்
மணிக்கோயில் வலஞ்செய்யப் புகுந்த வேலை
அம்பிகா பதியருளால் பிள்ளை யார்தாம்
அபிமுகத்துப் பீடிகைமேற் காசு கண்டார்.

பொழிப்புரை :

தம் இறைவர் இங்ஙனம் கனவில் உரைத்து நீங்கவும், சீகாழியின் தலைவரான இளைய ஏறு போன்ற சம்பந்தர், துயில் உணர்ந்து, `நம் இறைவரின் அருள் இருந்த வண்ணம் இவ் வாறு!\' என்று வியப்புக் கொண்டவராய், அவ்வாறே இறைவர் அரு ளப் பெற்றுத் துயிலுணர்ந்த நாவுக்கரசரோடு கூடச் சேர்ந்து, மணம் கம ழும் கொன்றை மலரைச் சூடிய திருவீழிமிழலை நாதரின் மணிக் கோயிலை வலமாக வரப் புகுந்தபோது, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவருளால், பிள்ளையார் தாம் கிழக் குத் திசையில் உள்ள பலிபீடத்தின் மீது ஒரு பொற் காசைக் கண்டார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 566

காதலொடுந் தொழுதெடுத்துக் கொண்டு நின்று
கைகுவித்துப் பெருமகிழ்ச்சி கலந்து பொங்க
நாதர்விரும் படியார்கள் நாளும் நாளும்
நல்விருந்தா யுண்பதற்கு வருக வென்று
தீதில்பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
திருவமுது கறிநெய்பால் தயிரென் றின்ன
ஏதமுறா தினி துண்ண ஊட்டி அங்கண்
இருதிறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில்.

பொழிப்புரை :

பத்திமையோடு வணங்கி அப்பொற்காசை எடுத்துக் கொண்டு, நின்று கைகளைக் குவித்து வணங்கிப் பெரு மகிழ்ச்சி உள்நிறைந்து பொங்க, `இறைவர் விரும்பும் அடியார்கள் ஒவ்வொரு நாளும் நல்ல விருந்தாய் உணவு உண்பதற்கு வருக!\' என்று தீமையில்லாத பறையறைந்து, அங்ஙனம் வந்த தொண்டர்கள் திருவமுதும், கறிகளும், நெய்யும், பாலும், தயிரும் என்று உள்ள இவற்றைக் குறைவில்லாதபடி இனிதாய் உண்ணும்படி உண்பித்து, அத்திருநகரில் இருபெருமக்களும் தங்கியிருந்தனர். அந்நாள்களில்,

குறிப்புரை :

நாவரசருக்கும் இறைவர் இவ்வாறே மேற்குப் பீடத்தில் பொற்காசு வைத்து வழங்கினார். இதனை அவர் வரலாற்றில் (தி.12 பு.21 பா.247) விளங்க உரைத்திருப்பதால், இங்கு இவ்வளவே கூறு வாராயினர்.

பண் :

பாடல் எண் : 567

நாவினுக்கு வேந்தர்திரு மடத்திற் தொண்டர்
நாட்கூறு திருவமுது செய்யக் கண்டு
சேவுகைத்தார் அருள்பெற்ற பிள்ளை யார்தந்
திருமடத்தில் அமு தாக்கு வாரை நோக்கித்
தீவினைக்கு நீர்என்றும் அடைவி லாதீர்
திருவமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவுமிக்க அடியவருக் களியா வண்ணம்
விளைந்தவா றென்கொலோ விளம்பும் என்றார்.

பொழிப்புரை :

திருநாவுக்கரசரின் மடத்தில் தொண்டர்கள், நாள் தொறும் ஒளிநிறைவாக விளங்கும் உச்சிப் போதளவில் திருவமுது செய்து முடிப்பதைப் பார்த்த விடையுடைய சிவபெருமானின் திரு வருள் பெற்ற சம்பந்தர், தமது மடத்தில் உணவு சமைக்கும் பரி வாரங்களை நோக்கி, `தீய தொழிலுக்கு நீங்கள் எப்போதும் இடம் அளிக்க மாட்டீர் அல்லீரோ! ஆதலால் காலத்தால் உணவு சமைத்து இங்கு வரும் அடியவர்களுக்கு அளிக்காதமைக்கு உரிய காரணம்தான் என்ன? சொல்லுங்கள்!\' என வினவினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 568

திருமறையோர் தலைவர்தாம் அருளிச் செய்யத்
திருமடத்தில் அமுதமைப்போர் செப்பு வார்கள்
ஒருபரிசும் அறிந்திலோம் இதனை உம்மை
உடையவர்பாற் பெறும்படிக்கா சொன்றுங் கொண்டு
கருதியஎல் லாங்கொள்ள வேண்டிச் சென்றால்
காசுதனை வாசிபட வேண்டும் என்பார்
பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு
பேணியே கொள்வரிது பிற்பா டென்றார்..

பொழிப்புரை :

அந்தணர்களின் தலைவரான பிள்ளையார் மேற்கண்ட வண்ணம் உரைசெய்ய, `இதன் மெய்ம்மையை நாங்கள் ஒருவிதத்திலும் அறியோம்! உம்மை அடிமையாக உடைய இறைவரிடம் பெறுகின்ற படிக்காசு ஒன்றைக் கொண்டு அமுது சமைக்க வேண்டிப் பொருள்களை வாங்குதற்குச் சென்றால், கடைவீதியில் உள்ள வணிகர்கள் காசுக்கு வட்டம் தரவேண்டும் என்று உரைக்கின் றனர்; பெருமுனிவரான திருநாவுக்கரசர் பெற்ற காசுக்கு அங்ஙனம் கூறாது மிக்க விருப்புடனே ஏற்றுக் கொள்கின்றனர். இதுவே காலம் தாழ்தற்குக் காரணம்\' என்று உரைத்தனர்.

குறிப்புரை :

வாசிபட - வட்டம் கொடுக்க; அதாவது குறையுடைய காசு ஆதலின், உரிய தொகையின்றிக் குறைத்துக் கொடுப்பது.

பண் :

பாடல் எண் : 569

திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒருகாசு வாசிபட மற்றக் காசு
நன்றாகி வாசிபடா தொழிவான் அந்தப்
பெருவாய்மைத் திருநாவுக் கரசர் தொண்டால்
பெறுங்காசாம் ஆதலினாற் பெரியோன் தன்னை
வருநாள்கள் தருங்காசு வாசி தீரப்
பாடுவன்என் றெண்ணிஅது மனத்துட் கொண்டார்.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தர், அதனைக் கேட்டு, எண்ணுப வராய், `இறைவர் நமக்குத் தந்த ஒரு காசு வாசிபட, மற்ற ஒருகாசு வாசிபடாததற்குக் காரணம், அப்பெருவாய்மையுடைய திருமுனிவ ராய திருநாவுக்கரசர் தம் கைத் தொண்டினால் பெறும் காசாகும்; ஆதலால் இனிவரும் நாளில், வழங்கப்பெறும் காசு வாசி நீங்கியதாக அமைய இறைவரைப் பாடுவன்!\' எனத் துணிந்து, தம் மனத்துள் கொண்டார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 570

மற்றைநாள் தம்பிரான் கோயில் புக்கு
வாசிதீர்த் தருளும்எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நற்காசு கொண்டு மாந்தர்
பெயர்ந்துபோய் ஆவணவீ தியினிற் காட்ட
நற்றவத்தீர் இக்காசு சால நன்று
வேண்டுவன நாந்தருவோம் என்று நல்க
அற்றைநாள் தொடங்கிநாட் கூறு தன்னில்
அடியவரை அமுதுசெய்வித் தார்வ மிக்கார்.

பொழிப்புரை :

அடுத்த நாளில் ஞானசம்பந்தர் தம் இறைவரின் கோயிலுள் புகுந்து, `வாசிதீர்த்தருளும்\' என்று வேண்டிப் பதிகம் பாட, அதன் பயனாகப் பிள்ளையார் பெற்ற நல்ல படிக் காசினைக் கைக் கொண்டு பணியாளர்கள் கடைத்தெருவுக்குச் சென்று வணிகர்களிடம் காட்டினர், அதைக் கண்ட வணிகர், நல்ல தவத்தைச் செய்தவர்களே! இக்காசு மிக நல்லது! நீங்கள் வேண்டுவனவற்றை நாங்கள் தருவோம்!\' எனச் சொல்லி அங்ஙனமே வேண்டும் எல்லாப் பண்டங்களும் தர, அந்நாள் தொடங்கி நாள் பகுதியாக நண்பகலில் அடியவர்களுக்கு உணவு உண்ணும்படி செய்வித்து அன்பு பெருக்கினர்.

குறிப்புரை :

வாசி தீரப் பாடிய பதிகம், `வாசிதீரவே\' (தி.1 ப.92) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 571

அருவிலையிற் பெறுங்காசும் அவையே யாகி
அமுதுசெய்யத் தொண்டர்அள விறந்து பொங்கி
வருமவர்கள் எல்லார்க்கும் வந்தா ருக்கும்
மகிழ்ந்துண்ண இன்னடிசில் மாளா தாகத்
திருமுடிமேல் திங்களொடு கங்கை சூடும்
சிவபெருமான் அருள்செய்யச் சிறப்பின் மிக்க
பெருமைதரு சண்பைநகர் வேந்தர் நாவுக்
கரசர்இவர் பெருஞ்சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.

பொழிப்புரை :

அரிய விலைக்கும் பெறுவதற்குரிய காசும் அவைகளேயாகி, அமுதுசெய்வதற்குரிய தொண்டர்கள் அளவு இல்லாது மேன்மேலும் பெருக, வருபவர்கள் எல்லோருக்கும் முன்பு வந்தவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் உணவு உண்ண, இனிய அடிசில் குறைவின்றி இருக்குமாறு, சடையில் திங்களும், பாம்பும், அணியும் இறைவர் திருவருள் செய்ய, சிறப்பால் மிக்க சீகாழி நகரின் அரசரான பிள்ளையாரும், வாக்கின் அரசரான திருநாவுக்கரசரும் என்ற இருவரும் பெருஞ்சோற்று மலைகளை அமுதமாய்த் தந்தருளினர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 572

அவனிமிசை மழைபொழிய உணவு மல்கி
அனைத்துயிருந் துயர்நீங்கி அருளி னாலே
புவனமெலாம் பொலிவெய்துங் காலம் எய்தப்
புரிசடையார் கழல்பலநாள் போற்றி வைகித்
தவமுனிவர் சொல்வேந்த ரோடுங் கூடத்
தம்பிரான் அருள்பெற்றுத் தலத்தின் மீது
சிவன்மகிழுந் தானங்கள் வணங்கப் போவார்
தென்திருவாஞ் சியமூதூர் சென்று சேர்ந்தார்.

பொழிப்புரை :

உலகில் மழை பெய்ததால் உணவுப் பொருள்கள் பெருகி, அதனால் எல்லா உயிர்களும் துன்பம் நீங்கித் திருவருளி னால் உலகம் முற்றும் செழிப்படையும் நற்காலம் வரவே, பிள்ளையார் சுருண்ட சடையையுடைய இறைவரின் திருவடிகளைப் பலநாள்கள் போற்றி, அங்கு எழுந்தருளியிருந்த பின்பு, தவ முனிவரான நாவுக் கரசரோடு கூடத் தம் இறைவரின் திருவருள் பெற்றுக் கொண்டு, உலகத் தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் பலவற்றையும் வணங்கிச் செல்பவராய் அழகிய திருவாஞ்சியம் என்ற பழைய பதியைச் சென்று அடைந்தனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 573

நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீலமிடற் றருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலிநீர்த் தலையாலங் காடு மாடு
பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி
நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றித்
திருவாரூர் தொழநினைந்து சென்று புக்கார்.

பொழிப்புரை :

நிலைபெறும் `திருவாஞ்சியத்தில்\' விரும்பி எழுந்தருளியிருக்கும், மூன்று கண்களும் திருநீலகண்டமும் உடைய அரிய மணியான இறைவரை வணங்கிப் போற்றிப் பெருமை பொருந் திய ஒலியையுடைய நீர் சூழ்ந்த திருத்தலையாலங்காடும், அதன் அருகிலுள்ள இறைவரின் திருப்பெருவேளூரும் பாடி, நாடும் புகழை உடைய ஒப்பில்லாத திருச்சாத்தங்குடியில் சென்று அடைந்து, இறை வரின் திருக்கரவீரத்தையும் விரும்பிப் பாடியருளித் தேடுகின்ற மறைக ளுக்கும் எட்டாத இறைவரின் திருவிளமரையும் போற்றிப் பின் திருவா ரூரைத் தொழுவதற்கு நினைந்து சென்று அந்நகரில் புகுந்தார்.

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: திருவாஞ்சியம் - வன்னிகொன்றை (தி.2 ப.7) - இந்தளம். திருப்பெருவேளூர் - அண்ணாவும் (தி.3 ப.64) - பஞ்சமம். திருக்கரவீரம் - அரியும் நம்வினை (தி.1 ப.58)- பழந்தக்கராகம். திருவிளமர் - மத்தகம் அணிபெற (தி.3 ப.88) - சாதாரி. திருத்தலையாலங்காட்டிலும் திருச்சாத்தங்குடியிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 574

நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலங்கொள்திருக் காறாயில் நண்ணி யேத்தி
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி யேத்தித்
திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

பொழிப்புரை :

சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமை யான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூ ரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில் களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்: திருக்காறாயில் - நீரானே (தி.2 ப.15) - இந்தளம். திருத்தேவூர் - 1. பண்ணிலாவிய (தி.2 ப.82) - காந்தாரம். - 2. காடுபயில் (தி.3 ப.74) - சாதாரி. திருநெல்லிக்கா -அறத்தாலுயிர் (தி.2 ப.19) - இந்தளம். திருக்கைச்சினம் - தையலோர் (தி.2 ப.45) - சீகாமரம். திருத்தெங்கூர் - புரைசெய் (தி.2 ப.93) - பியந்தைக் காந்தாரம். திருக்கொள்ளிக்காடு - நிணம்படு (தி.3 ப.16) - காந்தாரபஞ்சமம். திருக்கோட்டூர் - நீலமார்தரு (தி.2 ப.109) - நட்டராகம்.

பண் :

பாடல் எண் : 575

மற்றவ்வூர் தொழுதேத்தி மகிழ்ந்து பாடி
மாலயனுக் கரியபிரான் மருவுந் தானம்
பற்பலவும் சென்று பணிந் தேத்திப் பாடிப்
பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் தண்டலைநீள் நெறியுள் ளிட்ட
கனகமதில் திருக்களருங் கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவும் சென்று போற்றித்
திருமறைக்காட்டதன் மருங்கு சேர்ந்தா ரன்றே.

பொழிப்புரை :

திருவெண்துறை என்ற நகரத்தை வணங்கிப் போற்றி மகிழ்ந்து பதிகம்பாடி, நான்முகன் திருமால் இவர்களுக்கு அறிவதற்கு அரியவரான இறைவர் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் சென்று போற்றிப் பதிகங்களும் பாடிப் பரவும் தொண் டர் கூட்டம் அருகில் வர, கற்றவர் வாழ்வதற்கு இடமான திருத்தண் டலை நீள்நெறி முதலான திருப்பதிகளும், பொன்மதிலை உடைய திருக்களரும், பகைவரின் வேள்வியை அழித்த இறைவர் எழுந்த ருளிய மற்றப் பதிகளையும் சென்று போற்றி, அதுபொழுதே திரு மறைக்காடு என்ற பதியின் அருகே சேர்ந்தனர்.

குறிப்புரை :

திருவெண்துறையில் அருளிய பதிகம், `ஆதியன்\' (தி.3 ப.61) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும் `மருவும் தானம் பற்பலவும்\' என்பது குன்றியூர், திருச்சிற்றேமம், மணலி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருச்சிற் றேமத்தில் அருளிய பதிகம், `நிறை வெண்திங்கள்\' (தி.3 ப.42) எனத் தொடங்கும் கொல்லிக் கௌவாணப் பண்ணிலமைந்த பதிகமாகும். மற்ற இரண்டு பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில. திருத்தண்டலைநீள்நெறியில் அருளிய பதிகம் `விரும்பும் திங்களும்\' (தி.3 ப.50) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணில் அமைந்ததாகும். திருக்களரில் அருளிய பதிகம் `நீருளார்\' (தி.2 ப.51) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும். பதி பிறவும் என்பதால், மங்களம், திருமுகத்தலை, களப்பாள் தகட்டூர், திருக்குன்றளூர், திருக்கடிக்குளம், திருஇடும்பாவனம், திருஉசாத்தானம், முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றில் முதல் ஐந்து பதிகட்குப் பதிகங்கள் கிடைத்திலது. மற்ற மூன்று பதிகளை வணங்கிய செய்தியைப் பின்னர் 623, 624ஆம் பாடல்களில் ஆசிரியர் சேக்கிழார் குறிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 576

கார்அமண்வெஞ் சுரமருளாற் கடந்தார் தாமும்
கடற்காழிக் கவுணியர்தந் தலைவர் தாமும்
சேரஎழுந் தருளியஅப் பேறு கேட்டுத்
திருமறைக்காட் டகன்பதியோர் சிறப்பிற் பொங்கி
ஊரடைய அலங்கரித்து விழவு கொள்ள
உயர்கமுகு கதலிநிறை குடந்தீ பங்கள்
வார்முரச மங்கலநா தங்கள் மல்க
எதிர்கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார்.

பொழிப்புரை :

கரிய சமணரான கொடிய பாலை நிலத்தைத் திருவருள் துணைக் கொண்டு கடந்து வந்த திருநாவுக்கரசரும், கடலின் சார்பை உடைய சீகாழிப் பதியினர்க்குத் தலைவரான பிள்ளையாரும் ஒருங்கு எழுந்தருளி வருவதைச் செவியேற்ற திருமறைக்காடு என்ற பதியில் உள்ளவர்கள், சிறப்பால் மிக்கவராய், ஊரை முற்றும் அணி செய்து திருவிழாக் கொள்வதென எதிர்கொள்ள, உயர்ந்த பாக்கு மரங்களும், வாழை மரங்களும், நிறைந்த நீர்க் குடங்களும், விளக்கு களும் சிறக்க, வார்முரசு முதலான மங்கல ஒலிகளும் பெருக, வர வேற்க, அடியார்களுடனே கூட மகிழ்ந்து வந்தனர்.

குறிப்புரை :

கடத்தற்கு அருமையும் கொடுமையும் தோன்ற, அமணரை வெஞ்சுரம் என உருவகித்தார்.

பண் :

பாடல் எண் : 577

முன்னணைந்த திருநாவுக் கரசர் தம்மை
முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின்னணைய எழுந்தருளும் பிள்ளை யார்தம்
பெருகியபொற் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னிமிசைக் கரங்குவித்து முன்பு சென்று
சேணிலத்து வணங்குதலுந் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று
வந்திழிந்து வணங்கியுடன் மகிழ்ந்து போந்தார்.

பொழிப்புரை :

அந்நகரில் முன்பு வந்த திருநாவுக்கரசரை முறைப்படி எதிர்கொண்டு வரவேற்றுப் பெருமகிழ்ச்சியடைந்து, பின்னால் சேரவருகின்ற சம்பந்தரின் பெருகிய காளம் முதலான சின்னங்களின் ஓசையினைக் கேட்டுத் தலைமீது கைகளைக் குவித்துக் கொண்டு சென்று, தொலைவில் நிலத்தின் மேல் விழுந்து வணங்கு தலும், திருந்தும் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் அழகான முத்துச் சிவிகையினின்றும் இறங்கி வணங்கி, அவர்களுடன் மகிழ்ச்சி யுடன் சென்றார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 578

சொல்லரச ருடன்கூடப் பிள்ளை யாரும்
தூமணிநீர் மறைக்காட்டுத் தொல்லை மூதூர்
மல்குதிரு மறுகின்கட் புகுந்த போது
மாதவர்கள் மறையவர்கள் மற்று முள்ளோர்
எல்லையில்லா வகைஅரஎன் றெடுத்த ஓசை
இருவிசும்பும் திசையெட்டும் நிறைந்து பொங்கி
ஒல்லொலிநீர் வேலையொலி அடக்கி விண்மேல்
உம்பர்நாட் டப்புறத்தும் உற்ற தன்றே.

பொழிப்புரை :

திருநாவுக்கரசருடன் ஞானசம்பந்தரும் தூய மணிகளையுடைய நீர் சூழ்ந்த திருமறைக்காடு என்ற பழம் பதியின் திருவீதியில் புகுந்தபோது, மாதவர்களும் அந்தணர்களும் மற்றும் உள்ளார்களும் `அரகர\' என்று முழங்கிய பேரொலியானது, பெரிய வானமும் எண் திசைகளும் நிறைந்து, மேல் எழுந்து, ஒலி பொருந்திய நீரையுடைய கடல் ஒலியையும் அடக்கி, வானத்தின் மேல் உள்ள விண்உலகத்தின் அப்பாலும் அப்போதே சென்றது.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 579

அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
அணிமறுகின் ஊடெய்தி அருகு சூழ்ந்த
கொடிநுடங்கு செழுந்திருமா ளிகையின் முன்னர்க்
கோபுரத்தைத் தாழ்ந்திறைஞ்சிக் குறுகிப் புக்கு
முடிவிலிமை யவர்முனிவர் நெருங்குந் தெய்வ
முன்றில்வலம் கொண்டுநேர் சென்று முன்னாள்
படியின்மறை அருச்சித்துக் காப்புச் செய்த
பைம்பொன்மணித் திருவாயிற் பாங்கு வந்தார்

பொழிப்புரை :

அடியவர்களும் அவ்வூர் மக்களும் அருகில் இருந்து போற்றிவர, அழகிய தெருக்களின் வழியே வந்து சேர்ந்து, பக்கத்தில் சுற்றியுள்ள கொடிகள் திகழும் செழிப்பான திருமாளிகை யின் முன் உள்ள பெரிய கோபுரத்தின் முன் தாழ்ந்து, வணங்கி, உள்ளே புகுந்து, எண்ணற்ற தேவர்களும் முனிவர்களும் நெருங்கும் தெய்வத் தன்மையுடைய திருமுன்றிலை வலமாய் வந்து, திருமுன்பு நேராகச் சென்று, முற்காலத்தில் இம் மண்ணுலகத்தில் மறைகள் வழிபாடு செய்து திருக்காப்புச் செய்துவைத்த பசும்பொன் அணிந்த மணிகளை உடைய வாயிலின் பக்கத்தில் வந்தனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 580

அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த
அக்கதவந் திறந்திடஅம் மறைகளோதும்
பெருகியஅன் புடைஅடியார் அணைந்து நீக்கப்
பெறாமையினால் அன்றுமுத லாகப் பின்னை
ஒருபுடைஓர் வாயில்அமைத் தொழுகுந் தன்மை
உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர்வியப் பெய்தி நின்று
திருநாவுக் கரசருக்குச் செப்பு கின்றார்.

பொழிப்புரை :

அருமறைகள் காப்புச் செய்து மூடிவைத்த அத்திருக்கதவைத் திருக்காப்பு நீக்கித் திறப்பதற்கு, மறைகள் ஓதும் பெருமையுடைய அன்புடைய அடியவர்கள் வந்து சேர்ந்து, முயன் றும், கதவின் காப்பு நீக்கப் பெறாத காரணத்தால், அந்நாள் தொடங்கி, அவ்வாயிலின் அருகே வேறு ஒரு வாயில் அமைத்துக் கொண்டு வழிபட்டு ஒழுகும் இயல்பை உள்ளவாறு கேட்டு, உயர்வான சீகாழித் தலைவர் ஆன ஞானசம்பந்தர் வியப்புக் கொண்டு திருநாவுக்கரசரிடம் சொல்லுவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 581

அப்பரே வேதவனத் தையர் தம்மை
அபிமுகத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம்இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்குமாறு
மெய்ப் பொருள்வண் டமிழ்பாடி அருளும் என்ன
விளங்குமொழி வேந்தரது மேற்கொண் டென்னை
இப்பரிசு நீரருளிச் செய்தீ ராகில்
இதுசெய்வேன் எனப்பதிகம் எடுத்துப் பாட.

பொழிப்புரை :

`அப்பரே! திருமறைக்காட்டின் இறைவரை, நேராக அமைந்துள்ள திருவாயிலைத் திறந்து புகுந்து, எவ்வகை யானும் நாம் வணங்கிட வேண்டும். இந்த வாயில் காப்பு நீங்கும்படி நீரே மெய்ப்பொருளில் அமைந்த வண்மையுடைய தமிழைப் பாடி யருளவேண்டும்\' என்ன, விளங்கும் சொல்லரசும் இசைந்து `என்னை இது செய்யும்படி கூறுவீரானால் இதனைச் செய்வேன்\' எனக் கூறித் திருப்பதிகத்தைத் தொடங்க,

குறிப்புரை :

அபிமுகத்துத் திருவாயில் - இறைவரின் திருமுன்புள்ள திருவாயில். பாடத் தொடங்கியருளிய பதிகம் `பண்ணின் நேர் மொழி யாள்\' (தி.5 ப.10) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 582

பாடியஅப் பதிகப்பாட் டான பத்தும்
பாடல்நிரம் பியபின்னும் பைம்பொன் வாயிற்
சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி
நின்றெடுக்கத் திருக்காப்பு நீக்கங் காட்ட
ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பெழுந்த தகிலாண்டம் அனைத்தும் மூழ்க.

பொழிப்புரை :

பாடிய அத்திருப்பதிகத்தின் தொகையான பத்துப் பாடல்களும் நிரம்பிய பின்னும், பசும்பொன் அணிந்த திருவாயிலின் பெருமையையுடைய பொன்கதவு நீங்காதிருந்த செய்கையால், அப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில், அரிதாக வருந்தி வேண்டி நின்று பாடத் திருக்காப்பு நீங்கவே, அருள் திருக்கூத்து இயற்றும் திருவடி களையுடைய சிவபெருமானின் அடியவர்களும் விண்ணவர்களும் எழுப்பிய அரவொலி முழக்கம் அண்டங்கள் எல்லாம் மூழ்குமாறு எழுந்தது.

குறிப்புரை :

பதிகத்திற்குரிய பத்துப் பாடல்களையும் பாடிய பின் பும், திருக்கதவம் திறவாதாகத் திருக்கடைக்காப்பில் அரிதில் வேண்டத் திருக்கதவம் திறந்தது என்றருளுகின்றார் ஆசிரியர். எனவே இப் பதிகம் பதினொரு பாடல்களையுடையதாய், இப்பொழுதுள்ள பத்தா வது பாடல் பதினோராவது பாடலாய் அமைய, இடையில் ஒருபாடல் இருந்து சிதைந்திருத்தல் வேண்டுமோ என எண்ணத் தக்கதாயுள்ளது. அரிது வேண்டி நின்றெடுக்க என்றது `அரக்கனை விரலால் அடர்த் திட்ட நீர், இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே\' (தி.5 ப.10 பா.11) எனவரும் பகுதியை உளங்கொண்ட குறிப்பாகும். இப்பாடல் திருக்கடைக் காப்பாதல் நாவரசர் புராணத்தாலும் (தி12 பு.21 பா.268) அறியப்படும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 583

மற்றது கண்ட போதே வாக்கின்மன்
னவரை நோக்கிப்
பொற்புறு புகலி மன்னர் போற்றிட
அவரும் போற்றி
அற்புத நிலையி னார்கள் அணிதிரு
மறைக்கா டாளுங்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி
குறுகிப் புக்கார்.

பொழிப்புரை :

பொ-ரை: இறைவர் திருக்கதவம் திறந்தமையைக் கண்ட பொழுதே, நாவுக்கரசரை நோக்கி, அழகிய சீகாழி அரசர் போற்ற அரசரும் அவரைப் போற்ற, அற்புதம் அடைந்த நிலையுடையவர்கள் ஆகி, திருமறைக்காட்டில் ஆளும் இறைவரின் திருமுன்புள்ள நேர்வழி யால் உள்ளே சென்றனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 584

கோயிலுட் புகுவார் உச்சி
குவித்தசெங் கைக ளோடும்
தாயினும் இனிய தங்கள்
தம்பிரா னாரைக் கண்டார்
பாயுநீர் அருவி கண்கள்
தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்ய ராகி
விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்.

பொழிப்புரை :

அங்ஙனம் கோயிலினுள் புகுந்த இருபெருமக் களும், தலைமீது கூப்பிய கைகளுடன் சென்று, தாயினும் இனிய தம் இறைவரைக் கண்டனர். அவர்களின் கண்களினின்றும் அருவியைப் போல் பாயும் நீர் வழிந்திட, நிலத்தின் மீது பொருந்திய திருமேனியை உடையவர்களாய் உடல் விதிர்த்து விரைவாக எழுந்து வணங்கினர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 585

அன்பினுக் களவு காணார்
ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்புநெக் குருக நோக்கி
இறைஞ்சிநேர் விழுந்த நம்பர்
முன்புநிற் பதுவும் ஆற்றார்
மொழிதடு மாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப்
பதிகங்கள் விளம்பிப் போந்தார்.

பொழிப்புரை :

அன்பிற்கு எல்லை காணாதார் ஆகி, ஆனந்த வெள்ளத்துள் மூழ்கி, எலும்பும் நெகிழ்ந்து உருக நோக்கி, மீண்டும் எழுவதும் திருமுன்பு விழுவதுமாய்ப் பின் இறைவரின் திருமுன்பு நிற்பது கூட இயலாதவராய்ச் சொல் தடுமாறும் நிலையில் போற்றி, மின்னல் என விளங்கும் சடையையுடைய இறைவரைத் திருப்பதிகங் களால் போற்றி வெளிப்போந்தனர்.

குறிப்புரை :

அன்பு மீதூர்வால் இத்தகைய மெய்ப்பாடுகளுடன் அருளிய இருவர் பதிகங்களும் இது பொழுது கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 586

புறம்புவந் தணைந்த போது
புகலிகா வலரை நோக்கி
நிறங்கிளர் மணிக்க பாடம்
நீக்கமும் அடைப்பும் நிற்கத்
திறந்தவா றடைக்கப் பாடி
யருளும்நீர் என்றார் தீய
மறம்புரி அமணர் செய்த
வஞ்சனை கடக்க வல்லார்.

பொழிப்புரை :

வெளியே வந்து சேர்ந்த அமயத்து, சீகாழித் தலைவரான பிள்ளையாரை நோக்கி, பொல்லாத மறச் செயல்களைச் செய்கின்ற சமணர்கள் செய்த வஞ்சனைகளை எல்லாம் கடக்க வல்லவரான நாவுக்கரசர், `பல நிறங்களையுடைய மணிகள் பதித்த கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய செயல்கள் எப்போதும் வழங்கும் பொருட்டாய்த் திறந்தவாறே அடைக்கவும் பாடியருளுக!\' என்று கூறியருளினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 587

அன்றர சருளிச் செய்ய
அருமறைப் பிள்ளை யாரும்
வென்றிவெள் விடையார் தம்மை
விருப்பினாற் சதுரம் என்னும்
இன்றமிழ்ப் பதிகப் பாடல்
இசைத்திட இரண்டு பாலும்
நின்றஅக் கதவு காப்பு
நிரம்பிட அடைத்த தன்றே.

பொழிப்புரை :

அவ்வாறு நாவுக்கரசர் கூறியருள, அரிய மறை யில் வல்ல சம்பந்தரும் வெற்றி பொருந்திய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட இறைவரை வேண்டிய விருப்பத்துடன் `சதுரம் மறை\' எனத் தொடங்கும் இனிமையான தமிழ்ப் பதிகத்தின் முதல் பாடலை அருளிச் செய்த அளவில், இரண்டு பக்கத்தும் திறந்து நின்ற அக்கதவுகள் காப்பு நிரம்பிட அடைத்தன.

குறிப்புரை :

இத்தொடக்கம் உடைய திருப்பாடல், சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும் மதுரம்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா இதுநன்கிறை வைத்தருள் செய்க எனக்குன் கதவம்திருக் காப்புக் கொளும் கருத்தாலே. (தி.2 ப.37 பா.1) என்பதாகும். கதவம் திருக்காப்புக் கொள்ளவேண்டிய பாடல் ஈதொன் றேயாக ஏனைய பாடல்கள் எல்லாம் வேறுவேறு வினாக்களை உடைய வினாவுரைப் பாடல்களாய் அமைந்திருத்தலின், இப்பாடல் இசைப்பவே திருக்கதவம் காப்பு நிரம்பிடக் கொண்டது என ஆசிரியர் கூறுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 588

அடைத்திடக் கண்டு சண்பை
ஆண்டகை யாரும் அஞ்சொல்
தொடைத்தமி ழாளி யாருந்
தொழுதெழத் தொண்டர் ஆர்த்தார்
புடைப்பொழிந் திழிந்த தெங்கும்
பூமழை புகலி வேந்தர்
நடைத்தமிழ்ப் பதிக மாலை
நிரம்பிட நவின்று போற்றி.

பொழிப்புரை :

அவ்வாறு அடைபடக் கண்டு, சீகாழிப் பெருந் தகையாரான ஞானசம்பந்தரும் அழகிய சொல்தொடைத் தமிழை ஆள்கின்றவராகிய நாவுக்கரசரும் தொழுது எழுந்து நிற்க, அது பொழுது அடியவர்கள் மகிழ்வொலி செய்தனர். அருகெங்கும் கற்பக மலர் மழை பெய்தது. சீகாழித் தலைவரான சம்பந்தரும் சீரிய ஒழுக் கத்தை உணர்த்தும் தம் தமிழ்த் திருப்பதிக மாலையை மேல் பத்துப் பாடல்களும் நிரம்புமாறு அருளிப் போற்ற,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 589

அத்திரு வாயில் தன்னில்
அற்றைநாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல
மேதினி புக்குப் போற்ற
வைத்தெதிர் வழக்கஞ் செய்த
வரம்பிலாப் பெருமை யோரைக்
கைத்தலங் குவித்துத் தாழ்ந்து
வாழ்ந்தது கடல்சூழ் வையம்.

பொழிப்புரை :

அன்றுமுதல் அத்திருவாயில் வழியாக நேரே சென்று மெய் வடிவான மறைகளைப் போலவே உலகத்தவர்களும் புகுந்து வணங்குமாறு நிகழ்வித்து, எதிர்காலத்திலும் இவ்வாறு வழங் குமாறு செய்த எல்லையில்லாத பெருமையுடைய அவ்விரு பெருமக் களையும் கைகூப்பி வணங்கிக் கடல் சூழ்ந்த உலகம் பெரு வாழ்வை அடைந்தது.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 590

அருமறை யான வெல்லாம்
அகலிரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்கப் பஞ்ச
நாதமும் பிறங்கி ஓங்க
இருபெருந் தகையோர் தாமும்
எதிரெதிர் இறைஞ்சிப் போந்து
திருமடங் களின்முன் புக்கார்
செழும்பதி விழவு கொள்ள.

பொழிப்புரை :

அரிய மறைகளும் அவற்றின் அங்கமான நூல் களும் ஆகிய எல்லாம் இடம் அகன்ற பெரிய வானத்தில் மகிழ்ச்சி மீதூரப் பெருமையுடன் முழங்க, தேவ துந்துபிகள் ஐந்தும் ஒலிக்க, பெருந்தகையாரான அவ்விரு பெரியார்களும் எதிர் எதிர் வணங்கிச் சென்று, செழுமையான அந்நகரம் விழாக் கொள்ளத் தத்தமக்கு அமைந்த மடங்களிலே புகுந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 591

வேதங்கள் எண்ணில் கோடி
மிடைந்துசெய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார்
இருவருஞ் செய்து வைத்தார்
நாதங்கொள் வடிவாய் நின்ற
நதிபொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர்
பெருமையார் பகரும் நீரார்.

பொழிப்புரை :

எண்ணற்ற மறைகள் ஒன்று கூடி நெருங்கிச் செய்த பணியை (திறக்கவும் அடைக்கவுமான பணியை) உயிர்களான நம்மிடம் வரும் குறைபாடுகளையெல்லாம் நீக்குபவர்களாகிய அரச ரும், பிள்ளையாரும் செய்து வைத்தனர். ஒலிவடிவான கங்கை தங்கிய சடையையுடைய இறைவரின் திருவடிகளைப் போற்றும் இப்பெரியவர்களின் பெருமையை யாரே அளவிட்டுச் சொல்ல வல்லார்? எவருமிலர்!

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 592

திருமறை நம்பர் தாமுன்
பருள்செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர்
தம்பிரா னார்பால் ஒக்க
வரும்அருட் செய்கை தாமே
வகுத்திட வல்லோ ரென்றால்
பெருமறை யுடன்மெய்த் தொண்டர்க்
கிடையீடு பெரிதா மன்றே.

பொழிப்புரை :

நான்மறைகளின் இறைவர் முன்பு தாம் வழங்கி யருளிய அருளிப்பாட்டின் வழி நின்று, அவ்வருட்டிறத்தையே நினைந்தும் வாழ்த்தியும் வரும் ஒருமையுணர்வுடைய தொண்டர்கள், தம் பெருமான் அருளிச் செய்யும் அருள்செயல்களைப் போலத் தாமும் செய்ய வல்லவர் என்றார். அவ்வரிய மறைகளுடன் மெய்த் தொண்டர்களுக்கு உள்ள ஒற்றுமை மிகவும் பெரிதேயாம் அன்றோ?

குறிப்புரை :

மறைகள் திறக்கவும் அடைக்கவும் பாடிய அருள்நிலை யுடையன திருக்கதவுகள். அக்கதவுகள் ஞானசம்பந்தர் ஒருபாடல் பாடிய அளவிலேயே அடைக்கப்பட்டன. என்றால் அம்மறைகட்கும் ஞானசம்பந்தரின் திருவாக்கிற்கும் வேற்றுமை பெரிதேயன்றோ எனப் பாராட்டி மகிழ்கின்றார் நாவரசர். மனம் மொழி மெய்களால் தன் னையே சார்ந்திருக்கும் ஞானியர்க்கு இறைவன் தான் செய்யும் தன்மைகளை அவர்க்கும் ஆக்கியருளுவன். இதனைத் `துரியங்கடந்த சுடர்த் தோகையுடன், என்றும் பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளித் தான் செய்யும் தன்மைகளும், ஆக்கியிடும் அன்பர்க்கு அவன்\' (திருக்களிற்றுப்படியார் - 69) என வரும் ஞானநூற் கூற்றும் காண்க. இடையீடு - வேற்றுமை.

பண் :

பாடல் எண் : 593

இவ்வகை திரும றைக்காட்
டிறையவர் அருளை யுன்னி
மெய்வகை தெரிந்த வாக்கின்
வேந்தர்தாம் துயிலும் போதில்
மைவளர் கண்டர் சைவ
வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை யிருத்தும் அங்கே
வாஎன அருளிப் போக.

பொழிப்புரை :

இவ்வாறு நினைத்துத் திருமறைக் காட்டு இறைவரின் திருவடிகளின் இயல்பை நினைந்து கொண்டு மெய்ம் மைத் திறம் தெரிந்து ஒழுகும் நாவுக்கரசர் உறங்கும் போதில், திருநீல கண்டரான சிவபெருமான் சைவக் கோலத்தில் எழுந்தருளி, அவருக்குக் காட்சியளித்துத் `திருவாய்மூரில் நாம் இருப்போம்! அங் குத் தொடர வா!\' எனக் கூறி முன்னே போக,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 594

கண்டஅப் போதே கைகள்
குவித்துடன் கடிது செல்வார்
மண்டிய காத லோடு
மருவுவார் போன்றுங் காணார்
எண்டிசை நோக்கு வாருக்
கெய்துவார் போல எய்தா
அண்டர்தம் பிரானார் தம்பின்
போயினார் ஆர்வத் தோடும்.

பொழிப்புரை :

அவ்வாறு கனவில் கண்ட பொழுதே, எழுந்து கைகளைக் கூப்பி விரைவாக உடன் செல்பவரான நாவுக்கரசர், நிரம்பிய பேரன்புடன் பொருந்துவார் போன்றிருந்தும் காணாத வராய், எட்டுத் திசையிலும் தேடிப் பார்த்தவருக்குக் கிட்டுவார் போலிருந்து கிட்டாதவராய் நின்ற தேவ தேவரான பெருமானின் பின்பு மிகுந்து எழும் அன்புடனே தொடர்ந்து சென்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 595

அங்கவர் ஏகச் சண்பை
ஆண்டகை யாரும் அப்பர்
எங்குற்றார் என்று கேட்ப
எய்தினார் திருவாய் மூரில்
பொங்கிய காத லால்என்று
உரைத்திடப் போன தன்மை
சங்கையுற் றென்கொல் என்று
தாமும்அங் கணையப் போந்தார்.

பொழிப்புரை :

திருநாவுக்கரசர் அவர்பின் செல்லச் சீகாழித் தலைவரான சம்பந்தரும், அப்பர் எங்குச் சென்றனர்? என்று வினவ, அறிந்தவர் `மேன்மேல் பொங்கிய அன்பின் மேலீட்டால் திருவாய் மூருக்குச் சென்றார்\' என்று கூற, அப்பர் அங்ஙனம் சென்ற காரணம் தான் என்னவோ? என்று ஐயுற்று அங்குத் தாமும் சேரச் செல்ல லானார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 596

அந்நிலை அணைந்த போதில்
அம்பிகை யுடனே கூட
மன்னிய ஆடல் காட்டத்
தளரிள வளரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர்
அரசொடுஞ் சென்று புக்கங்
கின்னியல் புறமுன் கூடி
இருவரும் போற்றி செய்தார்.

பொழிப்புரை :

அவ்வாறு சென்றவர், நாவுக்கரசர் இருந்த இடத்தை அடைந்தபோது, இறைவர் அம்மையப்பராக இருந்து தம் திருக்கூத்தைக் காட்டியருளவே, அதுகண்ட பிள்ளையார் அரசருக்குக் காட்டி மகிழ்ந்து `தளிரிளவளர்\' எனத் தொடக்கமுடைய பதிகத்தைப் பாடியருளி, தலை தாழ்த்தி வணங்கி, அரசரோடும் திருவாய்மூருக்குச் சென்று, திருத்தொண்டின் இனிய இயல்பு பொருந்தக் கூடி இருவரும் இறைவரைப் போற்றியிருந்தனர்.

குறிப்புரை :

`தளிரிளவளர்\' (தி.3 ப.87) எனத் தொடக்கமுடையது நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 597

நீடுசீர்த் திருவாய் மூரில்
நிலவிய சிவனார் தம்மைப்
பாடுசொற் பதிகந் தன்னால்
பரவியப் பதியில் வைகிக்
கூடுமெய் அன்பு பொங்க
இருவருங் கூடி மீண்டு
தேடுமா மறைகள் கண்டார்
திருமறைக் காடு சேர்ந்தார்.

பொழிப்புரை :

திருவாய்மூரில் நிலைபெற்றெழுந்தருளிய இறைவரைப் பாடும் சொல் பதிகத்தால் போற்றி, அப்பதியில் தங்கி, பொருந்திய அன்பு மேலும் மீதூர, இருபெரு மக்களும் கூடித் தங்கி யிருந்து, பின் அங்கிருந்து மீண்டு, தேடும் பெரிய மறைகளினால் வணங்கிக் காணப் பெற்ற இறைவரின் திருமறைக்காட்டில் சேர்ந்தனர்.

குறிப்புரை :

பாடுசொற்பதிகம் என்று குறிக்கப் பெற்ற பதிகம் இதுபொழுது கிடைத்திலது. அன்றி முற்கூறிய `தளிரிள வளர்\' என்ற பதிகத்தையே மீண்டும் கொண்டு போற்றுவாராயினர் என்றலும் ஒன்று எனக் கூறி, இதுபோன்று முற்கூறிய பதிகத்தையே மீண்டும் எடுத்து ஆண்டமைக்குப் `போக மார்த்த\' எனத் தொடங்கும் பதிகத்தையே அனல் வாதத்திற்கு மீண்டும் எடுத்தாண்டமையையும், திருமறைக் காட்டில் சுந்தரருடன் சென்ற கழறிற்றறிவார் அருட்சேரர் சிறந்த அந் தாதியிற் சிறப்பித்தனவே ஓதித் திளைத்தெழுந்தார் எனக் கூறுதற் கேற்ப, வழிபட்டமையையும் சான்றாகக் காட்டுவர் சிவக்கவிமணி யார். (பெ.பு. திருஞா.பு.உரை, பா.597)

பண் :

பாடல் எண் : 598

சண்பைநா டுடைய பிள்ளை
தமிழ்மொழித் தலைவ ரோடு
மண்பயில் கீர்த்திச் செல்வ
மாமறைக் காட்டு வைகிக்
கண்பயில் நெற்றி யார்தங்
கழலிணை பணிந்து போற்றிப்
பண்பயில் பதிகம் பாடிப்
பரவிஅங் கிருந்தா ரன்றே.

பொழிப்புரை :

சீகாழிப் பதியினரான ஞானசம்பந்தர், தமிழ் மொழித் தலைவரான நாவுக்கரசருடன் கூடி, உலகில் பொருந்திய பெருஞ் சிறப்புடைய செல்வம் நிறைந்த திருமறைக்காட்டில் தங்கி இருந்து, நெற்றிக் கண்ணையுடைய பெருமானின் திருவடிகளை வணங்கிப் பண் பொருந்திய திருப்பதிகங்களைப் பாடிப் போற்றி யவாறே அங்கு எழுந்தருளியிருந்தனர்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய திருப்பதிகங்கள்: 1. `சிலைதனை நடுவிடை\' (தி.1 ப.22) - நட்டபாடை 2. `பொங்குவெண்மணல்\' (தி.2 ப.91) - பியந்தைக் காந்தாரம். 3. `கற்பொலி சுரத்தின்\' (தி.3 ப.76) - சாதாரி.

பண் :

பாடல் எண் : 599

இவ்வகை இவர்கள் அங்கண்
இருந்தனராக இப்பால்
செய்வகை இடையே தப்பும்
தென்னவன் பாண்டி நாட்டு
மெய்வகை நெறியில் நில்லா
வினைஅமண் சமய மிக்குக்
கைவகை முறைமைத் தன்மை
கழியமுன் கலங்குங் காலை.

பொழிப்புரை :

இங்ஙனம் இவ்விருபெரு மக்களும் அவ்விடத்தே இருந்தனராக, இனி இதுகாறும் கொண்டொழுகிய நல்லொழுக்க நெறியினின்றும் இடைக் காலத்தே தவறிய பாண்டிய நாட்டில், உண்மை நெறியில் நில்லா தீவினைப் பயனான சமண சமயம் மிகுந்து, நல்லொழுக்க நெறிமுறை நீங்கியதால் அனைவரும் கலங்கிய காலத்தில்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 600

தென்னவன் தானும் முன்செய்
தீவினைப் பயத்தி னாலே
அந்நெறிச் சார்வு தன்னை
அறமென நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை
வைதிக வழக்க மாகும்
நன்னெறி திரிந்து மாறி
நவைநெறி நடந்த தன்றே.

பொழிப்புரை :

பாண்டியனும் முன்செய்த தீவினையின் பயனால், அச்சமண நெறியின் சார்பையே நல்லறம் என எண்ணி, அவ்வழியிலேயே ஒழுகினானாக, நிலைபெற்ற வைதிக வழக்கமாகும் சைவத்தின் மெய்ம்மையுடைய நன்னெறி, மக்களிடம் வழக்கில் இல்லாது மாறி, அதுபொழுது குற்றம் பொருந்திய தீநெறியாய ஒழுக்கம் பரவியது.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 601

பூழியர் தமிழ்நாட் டுள்ள
பொருவில்சீர்ப் பதிக ளெல்லாம்
பாழியும் அருகர் மேவும்
பள்ளிகள் பலவு மாகிச்
சூழிருட் குழுக்கள் போலத்
தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி
அமணரே யாகி மொய்ப்ப.

பொழிப்புரை :

பாண்டியரின் நாடான தண்தமிழ் நாட்டில் ஒப்பில் லாத சிறப்பை உடைய எல்லாத் திருப்பதிகளிலும் சூழ்ந்த இருள் கூட்டம் போல் கட்டிய மயில் பீலியுடன் நீர்க் கமண்டலங்களையும் கையில்கொண்டு சமணர்களே எங்கும் காணுமாறு திரள,

குறிப்புரை :

சீர்ப்பதிகளாவன - திருபுவனம், திருநெல்வெலி, திருக் குற்றாலம் முதலாயின என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 602

பறிமயிர்த் தலையும் பாயும்
பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித்
திரிபவ ரெங்கு மாகி
அறியும்அச் சமய நூலின்
அளவினில் அடங்கிச் சைவ
நெறியினிற் சித்தஞ் செல்லா
நிலைமையில் நிகழுங் காலை.

பொழிப்புரை :

மயிர் பறித்த தலையுடனே பாயையும் தடுக் கையும் தாங்கி, கையிற் செறிந்த முக்குடையையும் கொண்டு திரியும் சமணர்கள் எங்கும் நிறைந்து, தத்தம் அறிவில் அறிந்தவாறே அச் சமயத்தின் நூல் அறிவில் அடங்கிச் சைவநெறியிலே நாட்டம் செல் லாத நிலையில் அந்த நாட்டில் உள்ளவர்கள் வாழும் அமையத்தில்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 603

வரிசிலைத் தென்ன வன்தான்
உய்தற்கு வளவர் கோமான்
திருவுயிர்த் தருளுஞ் செல்வப்
பாண்டிமா தேவி யாரும்
குரைகழல் அமைச்ச னாராங்
குலச்சிறை யாரும் என்னும்
இருவர்தம் பாங்கு மன்றிச்
சைவம்அங் கெய்தா தாக.

பொழிப்புரை :

கட்டப்பட்ட வில்லையுடைய பாண்டிய மன்னன் உய்யும் பொருட்டுச் சோழர் பெருமான் மங்கலமாகப் பெற்ற செல்வம் பொருந்திய பாண்டிமா தேவியாரான மங்கையர்க்கரசியாரும், ஒலிக் கும் வீரக்கழலை அணிந்த அமைச்சரான குலச்சிறையாரும் ஆகிய இவ் விருவர் பாலன்றி அந்நாட்டில் சைவநெறி எங்கும் வழங்காதாக.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 604

ஆங்கவர் தாங்கள் அங்கண்
அரும்பெறல் தமிழ்நா டுற்ற
தீங்கினுக் களவு தேற்றாச்
சிந்தையிற் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை
ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழற் செழியன் முன்பு
புலப்படா வகைகொண் டுய்த்தார்.

பொழிப்புரை :

அந்நிலையில் அவ்விருபெருமக்களும் பெறு தற்கு அரிய தமிழ்நாடு அடைந்த தீமையின் பொருட்டுத் தங்கள் உள் ளத்தில் அளவற்ற துன்பம் கொண்டவர்களாகித் தாங்கள் ஓங்கிய சைவ நெறியில் நின்று ஒழுகிய தன்மை, கழலை அணிந்த பாண்டியன் முன்பு வெளிப்படா வகையில் கொண்டு செலுத்தினர்.

குறிப்புரை :

அறநெறியோடு, அரன் நெறியையும் காத்துவந்த மரபு பாண்டியர் மரபாகும். கண்ணுதற் பெருங்கடவுளே பாண்டி மன்னன் ஆகவும், கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த புலவர் தலைமகனாகவும் நின்று காத்த பெருமையுடைய பாண்டியநாடு. அந்நாட்டின் தலைவனாய பாண்டி மன்னனும் தொடக்கத்தே சிவ நெறி நின்றவனாயிருந்து இடைக்காலத்தேயே மாறி நின்றனன். இந் நிலையில் அவனைப் புறம் போகாது காத்தற்குரிய கடமை அவன் தன் வாழ்க்கைத் துணைவியார் மேலும், அமைச்சர் மேலும் நிற்பதாயிற்று. அக்கடமையுணர்வில் நின்றமையாலேயே, `கடைக் கொட்கச் செய்தக் கது ஆண்மை\' (குறள், 663) எனும் அறவுரைப்படி அவரிருவரும் சைவ ஒழுக்கத்தில் நின்ற தன்மை, பாண்டியன் முன்பு புலப்படாவகை கொண்டுய்க்க நேர்ந்தது. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 605

இந்நெறி யொழுகு கின்றார்
ஏழுல குய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர்
வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார்
திருமறைக் காடு சேர்ந்த
நன்னிலை கன்னி நாட்டு
நல்வினைப் பயத்தாற் கேட்டார்.

பொழிப்புரை :

இவ்வாறு ஒழுகி வந்த மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும், ஏழுலகம் உய்யுமாறு தோன்றிய நிலைபெற்ற சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர், நிலையான மறையின் உள் ளுறையைக் கொண்ட சைவமான செந்நெறியை உலகில் விளங்கச் செய்பவராய் விளங்கித் திருமறைக் காட்டில் அதுபொழுது வீற்றிருந் தருளும் நன்மை தரும் நிலையைத் தம் பாண்டி நாட்டின் நல்வினைப் பயனால் கேட்டு அறிந்தனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 606

கேட்டஅப் பொழுதே சிந்தை
கிளர்ந்தெழு மகிழ்ச்சி பொங்க
நாட்பொழு தலர்ந்த செந்தா
மரைநகை முகத்த ராகி
வாட்படை அமைச்ச னாரும்
மங்கையர்க் கரசி யாரும்
சேட்படு புலத்தா ரேனுஞ்
சென்றடி பணிந்தார் ஒத்தார்.

பொழிப்புரை :

அங்ஙனம் கேட்டபோதே, வாட்படையை உடைய குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும், உள்ளத்தில் பொங்கி எழுகின்ற மகிழ்ச்சி மீதூர, அப்பொழுது அலர்ந்த செந்தாமரை போன்ற முகத்தையுடையவர்களாகி, தொலைவில் உள்ளவர்கள் ஆயினும் நேரில் சென்று அவருடைய திருவடிகளை வணங்கிய வரைப் போன்றவர் ஆயினர்.

குறிப்புரை :

`சேணன் ஆயினும் கேள் என மொழிந்து\' (பதிற்.44) எனவரும் சங்கச் செய்யுளையும் நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 607

காதலால் மிக்கோர் தாங்கள்
கைதொழு கருத்தி னாலே
போதவிழ் சோலை வேலிப்
புகலிகா வலனார் செய்ய
பாதங்கள் பணிமின் என்று
பரிசன மாக்கள் தம்மை
மாதவஞ் சுருதி செய்த
மாமறைக் காட்டில் விட்டார்.

பொழிப்புரை :

பெருவிருப்பம் கொண்ட அவ்விருவரும் தாங்கள் நேரே கண்டு தொழும் கருத்தால், மலர்கள் மலர்தற்கு இட மான சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான சம்பந்தரின் திருவடிகளைச் சென்று வணங்கி வேண்டிக் கொள்ளுங்கள் என்று தம் ஏவலர்களை மறைவழிபட்ட திருமறைக் காட்டிற்குச் செல்லுமாறு அனுப்பினர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 608

ஆங்கவர் விடமுன் போந்த
அறிவுடை மாந்தர் அங்கண்
நீங்கிவண் தமிழ்நாட் டெல்லை
பிற்பட நெறியின் ஏகி
ஞாங்கர்நீர் நாடும் காடும்
நதிகளும் கடந்து வந்து
தேங்கமழ் கைதை நெய்தல்
திருமறைக் காடு சேர்ந்தார்.

பொழிப்புரை :

அங்ஙனம் விடுக்கப்பட்ட அறிவுடைய ஏவல் செய்யும் மக்களும் அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று, வளமை உடைய தமிழ்நாட்டின் எல்லை, பின்நிற்குமாறு வழிச்சென்று, இடைப் பட்ட சோழ நாட்டிலுள்ள மருத நிலங்களையும் காடுகளையும் ஆறு களையும் கடந்து, தேன் பொருந்திய தாழைகள் மலரும் நெய்தல் நிலப் பகுதியான திருமறைக்காட்டின் புறத்தே அடைந்தனர்.

குறிப்புரை :

ஞாங்கர் - இடைப்பட்ட நிலம்.

பண் :

பாடல் எண் : 609

திருமறைக் காடு நண்ணிச்
சிரபுர நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம்
அமர்ந்தினி தருளுஞ் செல்வப்
பெருமடத் தணைய வந்து
பெருகிய விருப்பில் தாங்கள்
வருமுறைத் தன்மை எல்லாம்
வாயில்கா வலர்க்குச் சொன்னார்.

பொழிப்புரை :

திருமறைக்காட்டில் சேர்ந்து, சீகாழிப் பதியில் தோன்றிய மறையவரான பிள்ளையார் விரும்பி இனிதாய் எழுந் தருளி இருக்கும் செல்வப் பெருமடத்தை அடைந்து, மேன்மேல் பெரு கிய விருப்பினால் தாங்கள் வரும் முறைமை உடைய தன்மை களையெல்லாம் அறியுமாறு வாயிற் காவலர்களிடம் கூறினர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 610

மற்றவர் சென்று புக்கு
வளவர்கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம்
எனச்சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித்
தொழுதுவிண் ணப்பஞ் செய்தார்.

பொழிப்புரை :

அவ்வாயிற் காவலர்கள் திருமடத்தின் உட்புகுந்து திருஞானசம்பந்தரிடம் `சோழன் மகளாரும் பாண்டிய மன்னரின் தேவியாரும் ஆன மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் அனுப்பத் தங்களின் பொற்கழல் அணிந்த திருவடி களை வணங்குதற்கு வந்தோம் என்று சிலர் வெளியே வந்து கூறினர்\' என்று வணங்கி விண்ணப்பம் செய்து கொண்டனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 611

புகலிகா வலர்தாங் கேட்டுப்
பொருவிலா அருள்முன் கூர
அகமலர்ந் தவர்கள் தம்மை
அழையும்என் றருளிச் செய்ய
நகைமுகச் செவ்வி நோக்கி
நற்றவ மாந்தர் கூவத்
தகவுடை மாந்தர் புக்குத்
தலையினால் வணங்கி நின்றார்.

பொழிப்புரை :

சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தர், வாயிற் காவலர் கூறியதைச் செவியேற்று ஒப்பில்லாத அருள்மிகு தலால் உள்ளம் மிக மகிழ்ந்து `அவர்களை இங்கு அழைத்து வாருங்கள்\' என்று ஆணையிட, ஞானசம்பந்தரின் புன்முறுவலோடு கூடிய திரு முகச் செவ்வியைப் பார்த்து, நல்ல தவமக்களான தொண்டர்கள் சென்று அழைக்க, நல்ல தன்மை பொருந்திய பாண்டிய நாட்டு ஏவலர் உட்புகுந்து சம்பந்தரைத் தலையால் வணங்கி எழுந்து நின்றனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 612

நின்றவர் தம்மை நோக்கி
நிகரில்சீர்ச் சண்பை மன்னர்
மன்றலங் குழலி யாராம்
மானியார் தமக்கும் மானக்
குன்றென நின்ற மெய்ம்மைக்
குலச்சிறை யார்த மக்கும்
நன்றுதான் வினவக் கூறி
நற்பதம் போற்று வார்கள்.

பொழிப்புரை :

வணங்கி, எழுந்து நின்ற அவர்களைப் பார்த்துச் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், மங்கையர்கரசியாருக்கும் பெருமையுடைய மலைபோன்று மெய்யடிமைத் திறத்தில் ஒழுகி நிற்கும் குலச்சிறையாருக்கும் நன்மை பொருந்திய நிலையைப் பற்றி வினவ, விடையிறுத்த அப்பணியாளர்கள் பின் பிள்ளையாரின் நல்ல திருவடிகளைப் போற்றுவார்களாய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 613

கன்னிநா டமணர் தம்மாற்
கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்
தழுந்தமா தேவி யாரும்
கொன்னவில் அயில்வேல் வென்றிக்
குலச்சிறை யாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்
கியம்புமென் றிறைஞ்சி விட்டார்.

பொழிப்புரை :

`சமணர்களால் பாண்டிய நாடு தன் நிலைமை அழிந்து, தங்கள் மன்னனும் அவர்களின் அறியாமைக்குட்பட்டு அழுந்த, அதைப் பார்த்து மாதேவியாரும், அச்சம் தரும் கூர்வேலை ஏந்திய வெற்றியுடைய குலச்சிறையாரும் கூடி இந்த நிலைமையைச் சென்று சீகாழி மன்னவருக்குச் சொல்லுங்கள்\' எனக் கூறித் தங்களை அனுப்பியவாற்றைக் கூற,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 614

என்றவர்கள் விண்ணப்பஞ் செய்த பின்னை
ஏறுயர்த்த சிவபெருமான் தொண்ட ரெல்லாம்
நன்றுநமை ஆளுடைய நாதன் பாதம்
நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை
வென்றருளி வேதநூல் நெறியே யாக்கி
வெண்ணீறு வேந்தனையும் இடுவித் தங்கு
நின்றசெயல் சிவனடியார் செயலே யாக
நினைந்தருள வேண்டும்என நின்று போற்ற.

பொழிப்புரை :

என்று அவர்கள் விண்ணப்பிக்க, விடைக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் தொண்டரெல்லாம் நன்றாக நம்மை ஆளுடைய இறைவரின் திருவடிகளைச் சாராத அளவற்ற சமணர்களாகிய குண்டர்களை வெற்றி கொண்டு, மறைநெறியே எங்கும் விளங்கச் செய்து, அங்கு நிகழும் ஒழுக்கங்கள் எல்லாம் சிவனடியார்களின் செயல்களே ஆகுமாறு தாங்கள் திருவுள்ளம் பற்ற வேண்டும் என்று வேண்டி நின்று போற்ற,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 615

மற்றவர்கட் கருள்புரிந்து பிள்ளை யாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றமுயர்த் தவர்பாதம் பணிந்து போந்து
பெரியதிருக் கோபுரத்துள் இருந்து தென்னா
டுற்றசெயல் பாண்டிமா தேவி யாரும்
உரிமைஅமைச் சரும்உரைத்து விட்ட வார்த்தை
சொற்றனிமன் னவருக்குப் புகலி மன்னர்
சொல்லியெழுந் தருளுதற்குத் துணிந்த போது.

பொழிப்புரை :

இவ்வாறு வேண்டிக் கொண்ட அவ்விரு திறத்தவர்களுக்கும் அருள் செய்து, சம்பந்தரும் நாவுக்கரசருடன் சென்று, விடைக் கொடியை உயர்த்திய இறைவரின் திருவடிகளை வணங்கி, வெளியே வந்து, இறைவரின் திருமுன்புள்ள பெரிய கோபு ரத்துள் இருவரும் எழுந்தருளி இருந்து கொண்டு, பாண்டி நாடு அடைந்த நிலையைப் பற்றிப் பாண்டிமாதேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் தமக்குக் கூறியனுப்பிய செய்தியை ஒப்பில்லாத நாவுக்கரசருக்குக் கூறி அதன் பொருட்டாகப் பாண்டிய நாட்டிற்குத் தாம் செல்வதற்குத் துணிந்தபோது,

குறிப்புரை :

ஞானசம்பந்தர் நாவரசரோடு இருந்து, எண்ணித் துணிந்த செய்கையைக் கூறுமிடம், திருக்கோயிலின் உள்ளுமாகாது, புறத்துமாகாது திருக்கோபுரத்திலுள்ளாய அளவில் அமைத்துக் கொண் டது எண்ணற்குரியது. கோயிலின் உட்சென்று இறைவனை வணங் கும் பொழுது எவையும் பேசலாகாது; புறத்தே பலரும் காண்டற்குரிய நிலையில் இத்தகைய செய்தியை எண்ணித் துணிதலும் நலம்பயப் பதன்று. இவ்வகையில் எண்ணித்துணிதற்கென கொண்ட இடம் மிகப் பொருத்தமுடையதாகும்.

பண் :

பாடல் எண் : 616

அரசருளிச் செய்கின்றார் பிள்ளாய் அந்த
அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதி யில்லை
உரைசெய்வ துளதுறுகோள் தானுந் தீய
எழுந்தருள உடன்படுவ தொண்ணா தென்னப்
பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால்
பழுதணையா தெனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய்மலர்த் தாள்போற்றிப் புகலி வேந்தார்
வேயுறுதோ ளியை எடுத்து விளம்பினாரே.

பொழிப்புரை :

அரசர் அருளிச் செய்வாராய். `பிள்ளாய்! சமண வஞ்சரின் வஞ்சகச் செயல்களுக்கு ஓர் அளவில்லை, மேலும் யாம் சொல்வது ஒன்றுண்டு, கோள் நிலைகளும் தீயனவாய் உள்ளன; ஆதலின் அங்கே செல்வதற்கு இசைவளிப்பது தகாது` என்றுரைக்க, சீகாழித் தலைவரான பிள்ளையார், `நாம் வணங்கிப் போற்றுவது பெருமானின் திருவடிகளை` என எண்ணும் பொழுது, தீங்கு எவை யும் அணுகா எனப் பெருமானின் திருவடிகளைப் போற்றி, `வேயுறுதோளி` எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.

குறிப்புரை :

இந்நிகழ்ச்சியை நோக்கி, நாவரசர் அமணர்க்கும், தீய கோள்கட்கும் அஞ்சியவர், எனக் கருதலாகாது. ஒரு பேரரசின் அழைப்பைத் துச்சமாகக் கருதி, `நாமார்க்கும் குடியல்லோம்` (தி.6 ப.98) என முழங்கியவர் அவர். `அல்லல் என்செயும்` (தி.5 ப.1 பா.4) `வானந்துளங்கில் என்` (தி.4 ப.112 பா.8) `பொய்ம் மாயப் பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள், தீவினைகாள்`(தி.6 ப.27 பா.1) என்ற தொடக்கத்தனவாய அரிய பாடல்களை எல்லாம் அருளியவர் நாவரசர். அத்தகைய பெரியவர் ஈண்டு அஞ்சுவது எல்லாம், பிள்ளையாரின் இளம் பருவமும், சமணரின் மலையனைய வஞ்சனைச் செயல்களும் கருதியே யாம் என்பது கருதத் தக்கதாம். `வேயுறுதோளி` (தி.2 ப.85) எனத் தொடங்கும் பதிகம் பியந்தைக் காந்தாரப் பண்ணிலமைந்ததாகும். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபுடையன.

பண் :

பாடல் எண் : 617

சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகங் கேட்டதற்பின் திருந்து நாவுக்
கரசும்அதற் குடன்பாடு செய்து தாமும்
அவர்முன்னே எழுந்தருள அமைந்த போது
புரமெரித்தார் திருமகனார் அப்பர் இந்தப்
புனல்நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று
கரகமலங் குவித்திறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின்
காவலருந் தொழுதரிதாங் கருத்தில் நேர்ந்தார்.

பொழிப்புரை :

சீகாழியில் தோன்றிய பிள்ளையார் பாடி அருளிய அப்பதிகத்தைக் கேட்ட பின்னர், அவர்தம் உறைப்பைத் திருவுள்ளம் கொண்ட திருநாவுக்கரசரும், பிள்ளையார் பாண்டிய நாட்டுக்குச் செல்ல உடன்பட்டு முன்னெல்லாம் நிகழ்வதுபோல் தாம் அவர் முன்னாகச் செல்ல ஒருப்பட்டபோது, முப்புரம் எரித்த இறைவரின் மகனாரான பிள்ளையார் `அப்பரே! இந்நீர் நாடான சோழநாட்டில் எழுந்தருளியிருப்பீர்!\' எனக் கூறிக் கைம்மலர்களைக் கூப்பி வணங்கி, அவரது செயலைத் தவிருமாறு செய்தார்; நாவுக்கரசர் தாமும் எதிர்வணங்கிப் பிரிதற்கு அரிய திருவுள்ளத்துடன் இசைந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 618

வேதம்வளர்க் கவுஞ்சைவம் விளக்கு தற்கும்
வேதவனத் தருமணியை மீண்டும் புக்குப்
பாதமுறப் பணிந்தெழுந்து பாடிப் போற்றிப்
பரசியருள் பெற்றுவிடை கொண்டு போந்து
மாதவத்து வாகீசர் மறாத வண்ணம்
வணங்கியருள் செய்துவிடை கொடுத்து மன்னுங்
காதலினால் அருமையுறக் கலந்து நீங்கிக்
கதிர்ச்சிவிகை மருங்கணைந்தார் காழி நாதர்.

பொழிப்புரை :

மறைநெறியை வளரச் செய்வதற்கும், சைவத்தை விளக்கம் செய்வதற்கும் திருமறைக்காட்டு இறைவரின் திருக்கோயி லுக்குள் மீண்டும் புகுந்து, நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து, பாடியும் போற்றியும், அவரது அருள் விடையைப் பெற்றுக் கொண்டு புறம் போந்தவராய், மாதவமுடைய நாவுக்கரசர் மறுக்க ஒண்ணாதபடி அவரை வணங்கியருளி விடைதந்து, நிலைபெற்ற விருப்பத்துடன், அருமை பொருந்த அளவளாவி, நீங்கிச் சென்று ஒளியுடைய முத்துச் சிவிகையின் அருகே சீகாழித் தலைவர் வந்தார்.

குறிப்புரை :

இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 619

திருநாவுக் கரசரும் அங்கிருந்தார் இப்பால்
திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின்மீ தேறிப் பெற்றம்
உயர்த்தவர்தாள் சென்னியின்மேற் பேணும் உள்ளத்
தொருநாமத் தஞ்செழுத்தும் ஓதி வெண்ணீற்
றொளிவிளங்குந் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத் தன்புருகுங் கடலாம் என்ன
மாதவரார்ப் பொலிவையம் நிறைந்த தன்றே.

பொழிப்புரை :

திருநாவுக்கரசரும் அங்குத் தங்கியிருந்தார். இங்குத் திருஞானசம்பந்தர் செழுமையான தன்மையுடைய முத்துக்கள் நிறைந்த பெரும்புகழையுடைய சிவிகையின் மீது ஏறி, விடைக் கொடியை உயர்த்திய இறைவரின் திருவடிகளைத் தலைமேற் கொண்டு பேணும் உள்ளத்துடன், இறைவரின் ஒப்பில்லாத பெயரான திருவைந்தெழுத்தை ஓதி இறைவரின் திருநீற்றுடன் விளங்கும் திருமேனியை எண்ணிக் கைதொழுதனர். உள்ளத்தில் எப்போதும் வரும் இறைவர் பெயரால் அன்பு உருகிப் பெருக, கடல் ஓசை போல அடியார்களின் அரகர ஒலியான மகிழ்வொலி அப்பொழுது உலகம் எங்கும் நிறைந்தது.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 620

பொங்கியெழுந் திருத்தொண்டர்
போற்றிசைப்ப நாற்றிசையும்
மங்கலதூ ரியந்தழங்க
மறைமுழங்க மழைமுழங்கும்
சங்கபட கம்பேரி
தாரைகா ளந்தாளம்
எங்குமெழுந் தெதிரியம்ப
இருவிசும்பு கொடிதூர்ப்ப.

பொழிப்புரை :

பெருகி எழுகின்ற திருத்தொண்டர்கள் போற்ற வும், நான்கு திசைகளிலும் மங்கல இயங்கள் ஓங்கி இசைக்கவும், மறையொலி பெருகவும், மேகம் போல ஒலிக்கும் சங்கம் முதலிய ஒலிக் கருவிகள் பலவும், எதிரொலி செய்யவும் பெரிய வானவெளி யைக் கொடிகள் மறைக்கவும்,

குறிப்புரை :

படகம், பேரி, தாரை, காளம், தாளம் என்பனவற்றுள், முன்னையது தோற்கருவிகளுள் ஒன்றாகும். ஏனையவை இயங் களின் வகைகளாம்.

பண் :

பாடல் எண் : 621

மலர்மாரி பொழிந்திழிய
மங்கலவாழ்த் தினிதிசைப்ப
அலர்வாசப் புனற்குடங்கள்
அணிவிளக்குத் தூபமுடன்
நிலைநீடு தோரணங்கள்
நிரைத்தடியார் எதிர்கொள்ளக்
கலைமாலை மதிச்சடையார்
இடம்பலவுங் கைதொழுவார்.

பொழிப்புரை :

மலர்மழையைப் பொழிந்தும், மங்கல வாழ்த்துக்களை இனிதாக இசைத்தும், மலர்களை இட்ட மணமுடைய நீர் நிறைந்த குடங்களையும் அழகிய விளக்குகளையும், நறுமணப் புகைகளுடன் ஏந்தி, நீண்ட தோரணங்களை நிரல்பட அமைத்து, அடியவர்கள் வரவேற்கச் சென்று, ஒரு கலையுடைய மாலைமதி யத்தைச் சூடிய இறைவரின் பதிகள் பலவற்றையும் வணங்குவாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 622

தெண்டிரைசூழ் கடற்கானல்
திருவகத்தி யான்பள்ளி
அண்டர்பிரான் கழல்வணங்கி
அருந்தமிழ்மா மறைபாடிக்
கொண்டல்பயில் மணற்கோடு
சூழ்கோடிக் குழகர்தமைத்
தொண்டருடன் தொழுதணைந்தார்
தோணிபுரத் தோன்றலார்.

பொழிப்புரை :

தெளிவான அலைகள் சூழ்ந்த கடற்கரையில் உள்ள திருவகத்தியான்பள்ளியில் வீற்றிருக்கும் தேவதேவரான இறைவரின் திருவடிகளை வணங்கி, அரிய தமிழ்ப் பெருமறையின் தேவாரப் பதிகத்தைப் பாடி, மேகங்கள் தங்குவதற்கு இடமான மணற்குன்றுகள் சூழ்ந்த திருக்கோடிக்குழகரை அடியார்கள் சூழத் தொழுதவாறே சீகாழித் தலைவர் மேற்சென்றார்.

குறிப்புரை :

திருஅகத்தியான் பள்ளியில் அருளிய பதிகம் `வாடிய வெண்தலை\' (தி.2 ப.76) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணி லமைந்த பதிகமாகும். கோடிக்குழகரை வணங்கி அருளிய பதிகம் கிடைத்திலது. இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 623

கண்ணார்ந்த திருநுதலார்
மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி
எண்ணார்ந்த திருவிடும்பா
வனமேத்தி எழுந்தருளி
மண்ணார்ந்த பதிபிறவும்
மகிழ்தரும்அன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப்
பரவியே செல்கின்றார்.

பொழிப்புரை :

நெற்றிக்கண்ணையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் `திருக்கடிக்குளம்\' என்ற பதியை வணங்கி, மக்களின் மனம்நிறைந்த `திருஇடும்பாவனம்\' என்ற பதியையும் ஏத்திச் சென்று, இவ்வுலகத்தில் நிறைந்துள்ள பிறபதிகளையும் மகிழ்வுடன் கூடிய அன் பினால் வணங்கி, அங்கங்கே பண்பொருந்திய தமிழ்ப் பதிகங்களைப் பாடிய வண்ணமே செல்பவராய்,

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருக்கடிக்குளம் (தி.2 ப.104) - பொடிகொள்மேனி - நட்டராகம். 2. திருஇடும்பாவனம் (தி.1 ப.17) - மனமார்தரு - நட்டபாடை. `பதிபிறவும்\' என்பன தில்லைவளாகம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 624

திருவுசாத் தானத்துத்
தேவர்பிரான் கழல்பணிந்து
மருவியசெந் தமிழ்ப்பதிகம்
மால்போற்றும் படிபாடி
இருவினையும் பற்றறுப்பார்
எண்ணிறந்த தொண்டருடன்
பெருகுவிருப் பினராகிப்
பிறபதியும் பணிந்தணைவார்.

பொழிப்புரை :

`திருவுசாத்தானம்\' என்ற பதியில் இறைவரின் திருவடிகளைப் பணிந்து, பொருந்திய செந்தமிழ்ப் பதிகத்தை, அப் பதியில் திருமால் வழிபட்டவாற்றை வைத்துப் பாடி, தம்மை வந்த டையும் அடியார்களுக்கு நல்வினை தீவினை என்ற இரண்டின் பற்றுதலை அறுக்கும் ஞானசம்பந்தர், அளவில்லாத திருத்தொண்டர் களுடனே, பெருகும் விருப்பத்தை உடையவராய்ப் பிற பதிகளையும் வணங்கிச் செல்வாராய்,

குறிப்புரை :

திருவுசாத்தானத்தில் அருளிய பதிகம், `நீரிடைத் துயின்றவன்\' (தி.3 ப.33) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணி லமைந்த பதிகம் ஆகும். இப்பதிகத்தில், நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அனுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்த எம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.
(தி.3 ப.33 பா.1) எனவரும் முதல்பாடலைக் கொண்டே, `மால் போற்றும்படி பாடி\' என்றருளினார் ஆசிரியர். பிறபதிகள் என்பன திருக்களந்தை, திருக் களர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 625

கருங்கழிவே லைப்பாலைக்
கழிநெய்தல் கடந்தருளித்
திருந்தியசீர்ப் புனல்நாட்டுத்
தென்மேல்பால் திசைநோக்கி
மருங்குமிடை தடஞ்சாலி
மாடுசெறி குலைத்தெங்கு
நெருங்கிவளர் கமுகுடுத்த
நிறைமருத வழிச்சென்றார்.

பொழிப்புரை :

கருமையான உப்பங்கழிகளையும் கடலின் பக்கத்தில் உள்ள நெய்தல் நிலத்தையும் கடந்து சென்று, திருந்திய சிறப்புடைய காவிரி நாடான சோழ நாட்டின் தென்மேற்குத் திசையை நோக்கி, அருகில் நெருங்கிய தூறுகொண்டு எழும் பெரிய சாலி என்னும் நெற்பயிர்களையும், எவ்விடத்தும் நெருங்கிய காய்க் குலைகளையுடைய தென்னைகளையும், நெருக்கமாக வளரும் பாக்கு மரங்களையும், சூழக்கொண்ட நிறைந்த மருத நிலத்தின் வழியே சென்றார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 626

சங்கங்கள் வயலெங்கும்
சாலிகழைக் கரும்பெங்கும்
கொங்கெங்கும் நிறைகமலக்
குளிர்வாசத் தடமெங்கும்
அங்கங்கே உழவர்குழாம்
ஆர்க்கின்ற ஒலியெங்கும்
எங்கெங்கும் மலர்ப்படுகர்
இவைகழிய எழுந்தருளி.

பொழிப்புரை :

சங்குகள் நிரம்பிய வயல்களில் எங்கும் நெல்லும் கரும்பும் உள்ளன. நறுமணம் எங்கும் கமழும் தாமரைகள் நிறைந்த, குளிர்ந்த மணமுடைய பொய்கைகள் எங்கும் உள்ளன. அங்கங்கே உழவர் கூட்டங்களின் மகிழ்வொலி செய்யும் ஒலிகள் எங்கும் நிறைந்துள்ளன. மலர்கள் நிறைந்த பள்ளமான நிலங்கள் எங்கெங்கும் உள்ளன. இவற்றையெல்லாம் ஞானசம்பந்தர் கடந்து,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 627

தடமெங்கும் புனல்குடையும்
தையலார் தொய்யில்நிறம்
இடமெங்கும் அந்தணர்கள்
ஓதுகிடை யாகநிலை
மடமெங்கும் தொண்டர்குழாம்
மனையெங்கும் புனைவதுவை
நடமெங்கும் ஒலியோவா
நற்பதிகள் அவைகடந்து.

பொழிப்புரை :

பொய்கைகள் எங்கும் நீராடும் மகளிரின் தொய்யில் குழம்பின் நிறம்; நகர்ப் புறத்தின் இடங்கள் எங்கும் அந்த ணர் ஓதும் இசைகளும், வேள்விச் சாலைகளும்; மடங்கள் எங்கும் தொண்டர் கூட்டங்கள்; இல்லங்களில் எங்கும் திருமண நிகழ்வுகள்; ஆடலின் உடன் எங்கும் பாடலின் ஒலிகள்; இவ்வாறுள்ள தன்மைகள் பலவும் நீங்காமல் நிறைந்துள்ள நல்ல ஊர்களையும் ஞானசம்பந்தர் கடந்து,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 628

நீர்நாடு கடந்தருளி
நெடும்புறவிற் குறும்புதல்கள்
கார்நாடு முகைமுல்லைக்
கடிநாறு நிலங்கடந்து
போர்நாடுஞ் சிலைமறவர்
புன்புலவைப் பிடைபோகிச்
சீர்நாடு தென்பாண்டி
நன்னாடு சென்றணைவார்.

பொழிப்புரை :

இங்ஙனம் நீர் நாட்டைக் கடந்து சென்று, அதன்பின்னர், நீண்ட காடுகளில் உள்ள சிறு புதர்களில் கார் காலத்தை நாடும் முல்லையரும்புகளின் மணம் கமழும் முல்லை நிலங்களைக் கடந்து, போரை நாடும் வில் ஏந்திய மறவர் பயின்று வாழுகின்ற புன்புலங்களான பாலை சார்ந்த இடங்களின் நடுவே சென்று, சீரை விரும்பும் தென்பாண்டியின் கண்ணுள்ள நல்ல நாட்டைச் சென்று அடைவாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 629

மன்றல்மலர்ப் பிறங்கல்மருங்
கெறிந்துவரு நதிகள்பல
சென்றணைந்து கடந்தேறித்
திரிமருப்பின் கலைபுணர்மான்
கன்றுதெறித் தெனவுகைக்கும்
கானஅதர் கடந்தணைந்தார்
கொன்றைநறுஞ் சடைமுடியார்
மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம்.

பொழிப்புரை :

நறுமணமுடைய பூக்குவியல்களை இருமருங்கி லும் அலைகளால் வீசி வருகின்ற பல ஆறுகளையும் கடந்து சென்று, முறுக்குடைய கொம்புகள் பொருந்திய கலைமான்களும் அவற்றுடன் இணைந்து வரும் பெண்மான்களும் அவற்றின் கன்றுகளும் கூட்ட மாய் துள்ளிப் பாய்கின்ற நாடுகளின் இடையே உள்ள வழிகளைக் கடந்து, கொன்றை மலர்களின் மணமுடைய சடையையுடைய இறைவர் வீற்றிருக்கும் `திருக்கொடுங்குன்றத்தைச்\' சேர்ந்தார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 630

கொடுங்குன்றத் தினிதமர்ந்த
கொழும்பவளச் செழுங்குன்றை
அடுங்குன்றம் உரித்தானை
வணங்கிஅருந் தமிழ்பாடி
நெடுங்குன்றம் படர்கானும்
நிறைநாடுங் கடந்துமதி
தொடுங்குன்ற மதில்மதுரைத்
தொன்னகர்வந் தணைகின்றார்.

பொழிப்புரை :

திருக்கொடுங்குன்றத்தில் இனிதாய் விரும்பி வீற்றிருக்கும் செழுமையான பவளமலை போன்றவரான, யானையை உரித்த இறைவரை வணங்கி, அரிய தமிழ் மாலையைப் பாடி, நீண்ட குன்றுகளையும் படர்ந்த காடுகளையும் நிறைந்த நாடுகளையும் கடந்து சென்று, சந்திரனைத் தீண்டுமாறு உயர்ந்த மலை போன்ற மதில்களை உடைய மதுரை மாநகரை ஞானசம்பந்தர் சென்று அடைவாராயினார்.

குறிப்புரை :

திருக்கொடுங்குன்றத்தில் அருளியது, `வானிற் பொலி\' (தி.1 ப.14) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 631

இந்நிலை இவர்வந் தெய்த
எண்பெருங் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் தங்கட்
கழிவுமுன் சாற்ற லுற்றுப்
பன்முறை வெருக்கொண் டுள்ளம்
பதைப்பத்தீக் கனாக்க ளோடும்
துன்னிமித் தங்கள் அங்கு
நிகழ்ந்தன சொல்ல லுற்றாம்.

பொழிப்புரை :

இவ்வாறு ஞானசம்பந்தர் எய்துவாராக, ஆனைமலை முதலிய எண்பெருங் குன்றங்களிலும் வாழ்ந்துவரும் சமணர்களுக்கு, உண்டாக இருக்கும் அழிவை முன்னால் அறியுமாறு செய்து, பன்முறையும் காரணம் இன்றி அச்சம் கொண்டு மனம் பதைக் குமாறு தீக்கனவுகளுடன் அங்குத் தீயநிமித்தங்கள் பலவும் நிகழ்வன வற்றை இனி யாம் சொல்வாம்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 632

பள்ளிகள் மேலும் மாடு
பயில்அமண் பாழி மேலும்
ஒள்ளிதழ் அசோகின் மேலும்
உணவுசெய் கவளங் கையில்
கொள்ளும்மண் டபங்கள் மேலும்
கூகையோ டாந்தை தீய
புள்ளின மான தம்மில்
பூசலிட் டழிவு சாற்றும்.

பொழிப்புரை :

சமணரின் கோயில்கள் மேலும், அவற்றின் அருகில் சமணக் குருமார் தங்கும் குகைகளின் மேலும், ஒள்ளிய இதழ்களை யுடைய அசோக மரங்களின் மேலும், உணவு செய்யும் கவளங்களைக் கையில் ஏந்திக் கொள்ளுவதற்குரிய மண்டபங்களின் மேலும், கோட் டான்களுடன் ஆந்தைகளும் பிற தீய பறவைக் கூட்டமும் தமக்குள் போர் செய்து, பின் நேர இருக்கும் கேட்டைப் புலப்படுத்தும்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 633

பீலியும் தடுக்கும் பாயும்
பிடித்தகை வழுவி வீழக்
கால்களுந் தடுமா றாடிக்
கண்களும் இடமே யாடி
மேல்வரும் அழிவுக் காக
வேறுகா ரணமுங் காணார்
மாலுழந் தறிவு கெட்டு
மயங்கினர் அமண ரெல்லாம்.

பொழிப்புரை :

மயிற் பீலியும், தடுக்கும், பாயும், அவற்றைப் பிடித்த கைப்பிடி முதலியவற்றினின்றும் தாமே நழுவி விழுந்திடவும், கால்களும் பின்னித் தடுமாற்றத்தை அடையவும், கண்களும் இடப் பக்கமாய்த் துடிக்கவும், சமணர்கள் எல்லாம் பின்னால் தமக்கு வரும் அழிவை நீக்குவதற்கு வேறு காரணம் ஒன்றையும் அறியாதவர்களாய் மயக்கம் அடைந்தனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 634

கந்தியர் தம்மில் தாமே
கனன்றெழு கலாங்கள் கொள்ள
வந்தவா றமணர் தம்மில்
மாறுகொண் டூறு செய்ய
முந்தைய உரையிற் கொண்ட
பொறைமுதல் வைப்பும் விட்டுச்
சிந்தையிற் செற்ற முன்னாந்
தீக்குணந் தலைநின் றார்கள்.

பொழிப்புரை :

சமணப் பெண்கள், தமக்குள்தாம் சினந்து எழும் கலகங்களைச் செய்தனர்; தேர்ந்த சமண முனிவர்களும் தம்முள் மாறுபட்டு ஒருவர்க் கொருவர் ஊறு செய்தனர்; தங்கள் பழைய நூல் களில் விதித்த பொறுமை முதலிய நற்பண்புகளையும் கைவிட்டு, உள் ளத்தில் சினம் முதலாய தீய குணங்களில் சிறந்து நின்றனர்.

குறிப்புரை :

கந்தியர் - சமணத் தவமகளிர். ஆரியாங்கனைகள் என்று அழைக்கப்படுவர்.

பண் :

பாடல் எண் : 635

இப்படி அமணர் வைகும்
எப்பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில்உற் பாத மெல்லாம்
ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும்
வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோரும்
தென்னவன் மதுரை சேர்ந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு சமணர்கள் தங்கும் எவ்வகைப்பட்ட பதிகளிலும் பொருந்தி ஒப்பில்லாத தீய நிமித்தங்களையெல்லாம் ஒருவர்க்கொருவர் தங்களுக்குள் சொல்லிக் கொண்டு, தீமை அளிக்கக் கூடிய தீய கனவுகளையும் வெவ்வேறாகக் கண்டு அவற்றையும் சொல் லும் பொருட்டு, வெளியே உள்ளவர்களும் பாண்டியனின் மதுரை யைச் சேர்ந்தனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 636

அந்நகர் தன்னில் வாழ்வார்
புறம்புநின் றணைவார் கூடி
மன்னவன் தனக்குங் கூறி
மருண்டவுள் ளத்த ராகித்
துன்னிய அழுக்கு மெய்யில்
தூசிலார் பலரும் ஈண்டி
இன்னன கனவு கண்டோம்
எனஎடுத் தியம்ப லுற்றார்.

பொழிப்புரை :

இவ்வாறு சமணர்கள் தங்கும் எவ்வகைப்பட்ட பதிகளிலும் பொருந்தி ஒப்பில்லாத தீய நிமித்தங்களையெல்லாம் ஒருவர்க்கொருவர் தங்களுக்குள் சொல்லிக் கொண்டு, தீமை அளிக்கக் கூடிய தீய கனவுகளையும் வெவ்வேறாகக் கண்டு அவற்றையும் சொல் லும் பொருட்டு, வெளியே உள்ளவர்களும் பாண்டியனின் மதுரை யைச் சேர்ந்தனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 637

சீர்மலி அசோகு தன்கீழ்
இருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக்
கண்டனம் அதன்பின் னாக
ஏர்கொள்முக் குடையுந் தாமும்
எழுந்துகை நாற்றிப் போக
ஊருளோர் ஓடிக் காணக்
கண்டனம் என்று ரைப்பார்.

பொழிப்புரை :

`சிறந்த அசோக மரத்தின் கீழ் அமர்ந்தருளிய நம் அருகக் கடவுளின் மீது அம்மரம் வேரொடு சாய்ந்து வீழப் பார்த்தோம். அதன்பின்பு, அழகிய முக்குடையும் தாமுமாக அத்தேவர் எழுந்து கைகளைத் தொங்க விட்டுப் போக ஊரவர் ஓடிச் சென்று காணவும் கண்டோம்\' என்று உரைப்பவர்கள்,

குறிப்புரை :

நாற்றிப்போக - தொங்கவிட்டுச் செல்ல.

பண் :

பாடல் எண் : 638

குண்டிகை தகர்த்துப் பாயும்
பீறியோர் குரத்தி யோடப்
பண்டிதர் பாழி நின்றுங்
கழுதைமேற் படர்வார் தம்பின்
ஒண்டொடி இயக்கி யாரும்
உளையிட்டுப் புலம்பி யோடக்
கண்டனம் என்று சொன்னார்
கையறு கவலை யுற்றார்.

பொழிப்புரை :

`கமண்டலத்தை உடைத்துப் பாயையும் கிழித்து ஒரு பெண் குரு ஓட, புலமை பெற்ற சமண முனிவர்கள் தம் குகைகளி லிருந்து கழுதைகள் மேல் ஏறிச் செல்வாராக, அவர்களின் பின்னால் ஒளியுடைய வளையலை அணிந்த தவப் பெண்களும் ஊளையிட்டு அழுது கொண்டு ஓடக் கண்டோம்!\' என்று கவலை கொண்டவர் களாய் உரைத்தனர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 639

கானிடை நட்ட மாடும்
கண்ணுதல் தொண்ட ரெல்லாம்
மீனவன் மதுரை தன்னில்
விரவிடக் கண்டோ மென்பார்
கோனவன் தானும் வெய்ய
கொழுந்தழல் மூழ்கக் கண்டோம்
ஆனபி னெழவுங் கண்டோம்
அதிசய மிதுவாம் என்பார்.

பொழிப்புரை :

`சுடுகாட்டில் நடனம் ஆடும் நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானின் அடியார் எல்லாம், மீன்கொடியையுடைய பாண்டி யனின் மதுரையில் வந்திடக் கண்டோம்\' என்றனர் சிலர். `மதுரையின் மன்னனும் வெவ்விய கொழுந்து விடும் தீயில் முழுகக் கண்டோம். முழுகிய அவன், பின்பு அதனின்று மேல் எழுவதையும் பார்த்தோம், ஈதோர் அதிசயம்\' என்பார்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 640

மழவிடை இளங்கன் றொன்று
வந்துநங் கழகந் தன்னை
உழறிடச் சிதறி யோடி
ஒருவருந் தடுக்க அஞ்சி
விழவொரு புகலு மின்றி
மேதினி தன்னை விட்டு
நிழலிலா மரங்கள் ஏறி
நின்றிடக் கண்டோம் என்பார்.

பொழிப்புரை :

`இளமையுடைய ஆன்கன்று ஒன்று வந்து, நம் சங்கத்தைச் சுழல மிதித்துக் கலக்க, அதனால் சிதறுண்டு ஓடி, யாரும் அதைத் தடுக்க அஞ்சி, அடைக்கலமாய் விழுந்து ஒளிக்க, வேறு ஒரு புகலிடமும் இல்லாது, பூமியை விட்டு, நிழல் இல்லாத மரங்களின் மீது ஏறி நிற்கவும் பார்த்தோம்\' என்பார்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 641

ஆவதென் பாவி காள்இக்
கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை
விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்த ராகி
நுகர்பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயலென் றெண்ணி
இடர்உழன் றழுங்கி னார்கள்.

பொழிப்புரை :

`பாவிகளே! இக்கனவின் விளைவுதான் யாதோ? எண்ணிப் பார்க்கின், இந்தக் கனவின் விளைவு நம் அடியார்களுக்குப் பொருந்திய தீமையை விளைவிப்பது உறுதியாகும்!\' எனத் துணிந்து சொல்லி, துன்பம் உடைய மனம் கொண்டவராய், உண்ணத் தக்க உணவுகளையும் உண்ணாதவர்களாய், என்ன செய்வது? என்று நினைத்துத் துன்பமடைந்து இவற்றைக் கேட்பவர்கள் வருந்தினார்கள்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 642

அவ்வகை அவர்க ளெல்லாம்
அந்நிலை மையர்க ளாகச்
சைவநன் மரபில் வந்த
தடமயில் மடமென் சாயல்
பைவளர் அரவுஏர் அல்குல்
பாண்டிமா தேவி யார்க்கும்
மெய்வகை அமைச்ச னார்க்கும்
விளங்குநன் னிமித்தம் மேன்மேல்.

பொழிப்புரை :

அவ்வாறு அமணர்கள் எல்லாம் அத்தகைய வருத்தமுற்றவர்களாக, சைவ நன்மரபில் தோன்றிய மாமயில் போன்ற இளமையாகிய மெல்லிய சாயலையும், பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையும் உடைய பாண்டிமா தேவியரான மங்கையர்க்கரசியா ருக்கும், உண்மை நெறியில் நிற்கும் குலச்சிறையாருக்கும் நல்ல நிமித்தங்கள் மேன் மேலும் நிகழ்வனவாயின.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 643

அளவிலா மகிழ்ச்சி காட்டும்
அரும்பெரு நிமித்தம் எய்த
உளமகிழ் வுணருங் காலை
உலகெலாம் உய்ய வந்த
வளரொளி ஞானம் உண்டார்
வந்தணைந் தருளும் வார்த்தை
கிளர்வுறும் ஓகை கூறி
வந்தவர் மொழியக் கேட்டார்.

பொழிப்புரை :

அளவற்ற மகிழ்ச்சியை யுண்டாக்கும் அத்தகைய அரிய பெரிய நல்ல நிமித்தங்கள் வந்து பெருக, மனதில் மகிழ்ச்சியை உணரும் அவ்வமையத்தில், உலகம் உய்யும் பொருட்டாக வந்து தோன்றிய, வளரும் ஒளியையுடைய, ஞான அமுதுண்ட ஞானசம் பந்தர் வந்து கொண்டிருக்கிறார் எனும் சொல்லை, கிளர்ச்சி பொருந் திய உவகைச் செய்தியை, அறிந்தவர்களாய் ஆண்டு வந்தவர்கள் கூற, அம்மையாரும் குலச்சிறையாரும் கேட்டனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 644

அம்மொழி விளம்பி னோர்க்கு
வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல்
விருப்புறு வெள்ளம் ஓங்கத்
தம்மையும் அறியா வண்ணம்
கைமிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர
மேவிய சிறப்பின் மிக்கார்.

பொழிப்புரை :

அத்தகைய நற்சொல்லைக் கூறியவர்களுக்கு வேண்டுவனவற்றை நிறைய வழங்கி, மெய்ம்மையில் விளங்கும் விருப்பம் பொருந்திய அன்பு வெள்ளமானது பெருகிட, தம்மையும் அறியாத நிலையில் எல்லை கடந்து பொங்கித் திரண்ட மகிழ்ச்சி பெருக, இவ்வாறு பொருந்திய சிறப்புமிக்கவர் ஆயினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 645

மங்கையர்க் கரசி யார்பால்
வந்தடி வணங்கி நின்ற
கொங்கலர் தெரிய லாராம்
குலச்சிறை யாரை நோக்கி
நங்கள்தம் பிரானா ராய
ஞானபோ னகர்முன் பெய்தி
இங்கெழுந் தருள உய்ந்தோம்
எனஎதிர் கொள்ளும் என்றார்.

பொழிப்புரை :

மங்கையர்க்கரசியார் தம்மிடம் வந்து அடி வணங்கிய குலச்சிறையாரை நோக்கி, `நம் பெருமானாரான ஞான அமுது உண்டவர் திருமுன்பு சென்று சேர்ந்து `இங்குத் தாங்கள் எழுந்தருளியமையால் யாங்கள் உய்வு பெற்றோம்\' எனக் கூறி வரவேற்பீராக! என மொழிந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 646

மன்றலங் குழலி னாரை
வணங்கிப் போந் தமைச்சனாரும்
வென்றிவே லரச னுக்கும்
உறுதியே எனநி னைந்து
பொன்திகழ் மாட வீதி
மதுரையின் புறத்துப் போகி
இன்தமிழ் மறைதந் தாரை
எதிர்கொள எய்துங் காலை.

பொழிப்புரை :

அமைச்சரான குலச்சிறையாரும், மணம் பொருந் திய கூந்தலையுடைய மங்கையர்க்கரசியாரை வணங்கி, வெளியே வந்து, `வெற்றியையுடைய மன்னருக்கும் இச்செயல் உறுதியை அளிப்பதே ஆகும்\' என்று மனத்தில் எண்ணி, பொன் வேலைப் பாடுகள் பொருந்தி விளங்கும் மாடங்களையுடைய திருவீதிகளை உடைய மதுரையின் புறத்தே விரைவாகச் சென்று, இனிய தமிழால் மறைகளை அருளிச் செய்துவரும் சம்பந்தரை வரவேற்கும் பொருட் டாய்ச் செல்லும் பொழுது,

குறிப்புரை :

அரசியாரின் ஆணைவழியே செல்லினும், அச்செயல் அரசருக்கும் உய்திபயத்தற் சிறப்புடையதாதலின் அவ்வாறு சென்றார் என்பதாம். உறுதி உழையிருந்தான் கூறல் கடனாதலின் இச்செயற்பா டும் அன்னதாதல் வேண்டுமன்றோ? எனவே அச்செயல் ஏற்புடைத் தேயாம்.

பண் :

பாடல் எண் : 647

அம்புய மலராள் போல்வாள்
ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டு மென்று
கொற்றவன் தனக்கும் கூறித்
தம்பரி சனங்கள் சூழத்
தனித்தடை யோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும்
நல்வர வேற்று நின்றார்.

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற மங்கையர்க்கரசியார், திருவாலவாயில் வீற்றிருக்கும் பெருமானைத் தாம் சென்று கும்பிட வேண்டும் என்று மன்னனுக்குக் கூறி, தம்பணியாளர்கள் சூழ்ந்து வர, தனித்த காவலுடன் சென்று தாமும் ஞானசம்பந்தரை வரவேற்க நின்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 648

திருநிலவு மணிமுத்தின்
சிவிகையின்மேல் சேவித்து
வருநிலவு தருமதிபோல்
வளரொளிவெண் குடைநிழற்றப்
பெருகொளிய திருநீற்றுத்
தொண்டர்குழாம் பெருகிவர
அருள்பெருக வருஞானத்
தமுதுண்டார் அணைகின்றார்.

பொழிப்புரை :

சிவபெருமானின் அருட்செல்வம் பொருந்திய அழகிய முத்துச் சிவிகையின் மேலே வணங்கியவாறு வருகின்ற நிலவு பொழியும் மதிபோல் வளரும் ஒளி பொருந்திய முத்து வெண் குடை நிழலைச் செய்யவும், பெருகும் ஒளியுடைய திருநீறணிந்த திருத் தொண்டர்களின் கூட்டம் சூழ்ந்து வரவும், திருவருள் பெருக வந்து தோன்றிய சிவஞானஅமுது உண்ட சம்பந்தர் மதுரையை வந்தடைவா ராயினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 649

துந்துபிகள் முதலாய
தூரியங்கள் கிளராமே
அந்தணராம் மாதவர்கள்
ஆயிரமா மறையெடுப்ப
வந்தெழும்மங் கலநாதம்
மாதிரம்உட் படமுழங்கச்
செந்தமிழ்மா ருதம்எதிர்கொண்
டெம்மருங்குஞ் சேவிப்ப.

பொழிப்புரை :

துந்துபி முதலான இயங்களின் ஓசை மேல் எழாமல், அந்தணர்களான மறைமுனிவர்கள் பலமறைகளை எடுத்துச் சொல்ல வும், வந்து எழுகின்ற மங்கல ஒலிகள் எல்லாத் திசைகளிலும் ஒலிக்க வும், செந்தமிழுடன் வரும் தென்றற் காற்று எதிர்கொண்டு வரவேற்று எம்மருங்கும் வழிபடவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 650

பண்ணியவஞ் சனைத்தவத்தால்
பஞ்சவன்நாட் டிடைப்பரந்த
எண்ணில்அமண் எனும்பாவ
இருஞ்சேனை இரிந்தோட
மண்ணுலக மேயன்றி
வானுலகம் செய்தபெரும்
புண்ணியத்தின் படையெழுச்சி
போலெய்தும் பொலிவெய்த.

பொழிப்புரை :

செய்த வஞ்சனை பொருந்திய தவத்தை நிலைக்களனாகக் கொண்டு, பாண்டி நாட்டில் பரவிய எண்ணற்ற சமணம் என்ற பாவமான பெரிய படை உடைந்து ஓடும்படியாக, இவ்வுலகம் அல்லாமல் வான் உலகமும் கூடிச் செய்ததான பெரும் புண்ணியமான படைஎழுச்சியைப் போலப் பொருந்திய பொலிவு உண்டாகவும்,

குறிப்புரை :

எண்ணில் சேனை எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 651

துன்னும்முழு வுடல்துகளால்
சூழும்உணர் வினில்துகளால்
அன்னெறியிற் செறிந்தடைந்த
அமண்மாசு கழுவுதற்கு
மன்னியொளிர் வெண்மையினால்
தூய்மையினால் வழுதியர்தம்
கன்னிநாட் டிடைக்கங்கை
அணைந்ததெனுங் கவின்காட்ட.

பொழிப்புரை :

நெருங்கிப் பொருந்தியுள்ள உடல் அழுக்கி னாலும், தீய சூழ்ச்சியையுடைய உணர்வின் மாசினாலும், நெறியல் லாத நெறியில் முழுதும் சேர்ந்த சமணம் என்ற அழுக்கைக் கழுவித் தூய்மை ஆக்குவதற்காக, நிலைபெற்று விளங்கும் வெண்மையாலும், தூய தன்மையாலும், கங்கையாறே பாண்டியரின் கன்னிநாட்டில் வந்து சேர்ந்ததைப் போன்ற அழகை எடுத்துக் காட்டவும்,

குறிப்புரை :

கங்கை வெண்மையும் தூய்மையும் உடையது. ஞான சம்பந்தரும் வெண்ணீற்று ஒளியும், திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்து வருவதாலாய உள்ளத் தூய்மையும் உடையவர். ஆதலின் இவர் வருகை, கங்கையாற்றின் வருகையை ஒப்பதாயிற்று.

பண் :

பாடல் எண் : 652

பானல்வயல் தமிழ்நாடு
பழிநாடும் படிபரந்த
மானமிலா அமண்என்னும்
வல்லிருள்போய் மாய்வதனுக்
கானபெரு கொளிப்பரப்பால்
அண்டமெலாம் கொண்டதொரு
ஞானமணி விளக்கெழுந்து
வருவதென நலம்படைப்ப.

பொழிப்புரை :

குவளை மலர்களையுடைய வயல்கள் சூழ்ந்த தமிழ்நாடானது பழியை அடையுமாறு, அங்குப் பரந்து சூழ்ந்த மானம் இல்லாத சமணம் என்னும் வன்மையான இருளானது கெட்டு மாய்வ தற்காகப் பெருகிய ஒளியின் ஆய பரப்பினால், எல்லா அண்டங் களையும் தன் நிறைவுள் அடக்கிக் கொண்டதான ஒப்பில்லாத ஞான விளக்கு ஒன்று, எழுந்து வருவதைப் போன்ற நன்மையைச் செய்யவும்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 653

புரசைவயக் கடகளிற்றுப்
பூழியர்வண் டமிழ்நாட்டுத்
தரைசெய்தவப் பயன்விளங்கச்
சைவநெறி தழைத்தோங்க
உரைசெய்திருப் பேர்பலவும்
ஊதுமணிச் சின்னமெலாம்
பரசமய கோளரிவந்
தான்என்றுபணிமாற.

பொழிப்புரை :

கழுத்தில் கயிற்றையும், வெற்றியையும், மதத்தையும் கொண்ட யானையையுமுடைய பாண்டியரின் தமிழ் நிலம் செய்த தவத்தின் பயன் விளங்கவும், சைவநெறி தழைத்தோங் கவும், போற்றிக் கூறத்தகும் எல்லாப் பெயர்களையும் எடுத்து ஒலிக்கும் முத்துச் சின்னங்கள் யாவும் `பரசமய கோளரி வந்தான்\' என இயம்பவும்,

குறிப்புரை :

பணிமாற - இயம்பவும்

பண் :

பாடல் எண் : 654

இப்பரி சணையும் சண்பையர் பெருமான்
எழுந்தரு ளும்பொழு திசைக்கும்
ஒப்பில்நித் திலப்பொன் தனிப்பெருங் காளம்
உலகுய்ய ஒலித்தெழும் ஓசை
செப்பரும் பெருமைக் குலச்சிறை யார்தம்
செவிநிறை அமுதெனத் தேக்க
அப்பொழு தறிந்து தலத்தின்மேற் பணிந்தே
அளப்பருங் களிப்பின ரானார்.

பொழிப்புரை :

இவ்வாறாய இயல்புடன் அணைகின்ற சீகாழித் தலைவர் வரும்பொழுது, இசைக்கின்ற ஒப்பில்லாத முத்துக்களாலான அழகிய தனிக் காளமானவை உலகம் உய்ய எடுத்துச் சொல்வதால் எழும் ஓசையானது, சொலற்கரிய பெருமையுடைய குலச்சிறையா ரின் திருச்செவிகளில் நிறையும் அமுதம் போல் பெருகிட, அப் பொழுதே அறிந்து, நிலத்தின்மீது உடல்பட விழுந்து, பணிந்து, அளப் பதற்கு அரிய மகிழ்ச்சியுடையவர் ஆயினார்.

குறிப்புரை :

இவ் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 655

அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல்
அணைந்திடக் கடிதுசென் றணைவார்
நஞ்சணி கண்டர் தந்திரு மகனா
ருடன்வரு நற்றவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வமுன் செல்லக்
கண்டு நீள் நிலத்திடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர்
பாங்குற அணைந்துமுன் பணிந்தார்.

பொழிப்புரை :

வணங்கிக் கூப்பிய கைகளும் தலையின் மேலே சேர விரைந்து சென்று அணைவாராகி, நஞ்சையுண்ட கண்டரான இறைவரின் மகனாருடன் வரும் நல்ல தவமுடைய அடியவர்களின் கடல் போன்ற திருக்கூட்டத்தை, உள்ளத்தில் நிரம்பிய ஆசை முன் செல்ல அகநோக்கில் அறிந்தாராதலால், பாண்டிய மன்னரின் அமைச்சருள் தலைவராகிய குலச்சிறையார் பாங்குறச் சென்று, நீண்ட நிலத்தின்மீது திருமேனி பொருந்த விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 656

நிலமிசைப் பணிந்த குலச்சிறை யாரை
நீடிய பெருந்தவத் தொண்டர்
பலரும்முன் னணைந்து வணங்கிமற் றவர்தாம்
படியின்நின் றெழாவகை கண்டு
மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி
வைதிகச் சேகரர் பாதம்
குலவிஅங் கணைந்தார் தென்னவ னமைச்சர்
குலச்சிறை யார்எனக் கூற.

பொழிப்புரை :

நிலத்தின் மீது விழுந்து வணங்கிய குலச்சிறை யாரை, நீண்ட பெருந்தவத்தவரான தொண்டர்கள் பலரும் முன் வந்து சேர்ந்து வணங்கி, மற்று அவர் நிலத்தில் விழுந்தவர் எழாமல் இருந்த வகையினைப் பார்த்து, நான்முகன் வழிபட்ட சீகாழித் தலைவரான சம்பந்தரின் திருவடிகளை வணங்கி, `அங்குப் பாண்டிய மன்னரின் அமைச்சரான குலச்சிறையார் வந்துள்ளார்\' எனக்கூற,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 657

சிரபுரச் செல்வர் அவருரை கேட்டுத்
திருமுகத் தாமரை மலர்ந்து
விரவொளி முத்தின் சிவிகைநின் றிழிந்து
விரைந்துசென் றவர்தமை அணைந்து
கரகம லங்கள் பற்றியே எடுப்பக்
கைதொழு தவரும்முன் நிற்ப
வரமிகு தவத்தால் அவரையே நோக்கி
வள்ளலார் மதுரவாக் களிப்பார்.

பொழிப்புரை :

சீகாழிச் செல்வரான பிள்ளையார், அவர்கள் கூறக் கேட்டு, முகமான தாமரை மலர்ந்து, பொருந்திய ஒளியை யுடைய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி விரைவாகச் சென்று, அக்குலச்சிறையாரை அடைந்து பற்றி மேல்எடுப்ப, அக்குலச்சிறை யாரும் கைதொழுது திருமுன்பு நிற்க, வரம்மிகும் செவ்விய தன்மை யுடன் நின்ற அவரது தவம் காரணமாக அவரையே பார்த்து, ஞான சம்பந்தர் இனிய திருவாக்கை அளிப்பவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 658

செம்பியர் பெருமான் குலமக ளார்க்குந்
திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம்பெரு மான்தன் திருவருள் பெருகும்
நன்மைதான் வாலிதே என்ன
வம்பலர் அலங்கல் மந்திரி யாரும்
மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித்
தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத்
தன்மையாம் நிலையுரைக் கின்றார்.

பொழிப்புரை :

`சோழமன்னரின் மகளாரான மங்கையர்க்கரசி அம்மையாருக்கும், திருந்திய சிந்தையுடைய உமக்கும் சிவபெரு மானின் திருவருள்பெருகும் நலம் தான் சிறந்துள்ளதே!\' எனக் கூற, மணம் கமழும் மாலைசூடிய அமைச்சரும் நிலமுற வணங்கி நின்று, தம் பெருந்தவத்தின் பயனைப் போன்ற ஞானசம்பந்தருக்கு, அந்நாட்டில் நிகழ்ந்த நிலைமையை எடுத்துச் சொல்வாராய்,

குறிப்புரை :

சிறந்துள்ளதே என்றது, சிறந்துள்ளதன்றோ என வினவும் குறிப்புப்பட நின்றது.

பண் :

பாடல் எண் : 659

சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்
இனிஎதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்குந் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் என்பார்.

பொழிப்புரை :

`சென்ற காலத்தில் பழுது இன்றி நின்ற இயல்பும், எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும், இன்று இங்குத் தாங்கள் எழுந்தருளப் பெற்றதால் விளங்கும். இதனால் முக்காலத்திலும் திரு வருள் உடையோம். நன்மையில்லாத சமண சமயத்தில் அழுந்திய இந்த நாடும் நற்றமிழ் மன்னனும் உய்வு பெற்று வெற்றிகொள்ளும் திரு நீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையையும் பெற்றோம்.\' என்பாராய்,

குறிப்புரை :

பிள்ளையார் முன் வினாவிய வினாவிற்கு விடையாய் இப்பாடல் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் யாங்கள் செய்த தவத் தால் தாங்கள் இதுபொழுது எழுந்தருள, இந்நற்பேற்றால் எதிர்காலமும் நன்மை பெருக அருள் நெறியே மிகுவதாகும் என்பது விடையாகும்.

பண் :

பாடல் எண் : 660

இங்கெழுந் தருளும் பெருமைகேட் டருளி
எய்துதற் கரியபே றெய்தி
மங்கையர்க் கரசி யாரும்நம் முடைய
வாழ்வெழுந் தருளிய தென்றே
அங்குநீர் எதிர்சென் றடிபணி வீர்என்
றருள்செய்தார் எனத்தொழு தார்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து
போற்றினார் புரவலன் அமைச்சர்.

பொழிப்புரை :

இங்குத் தாங்கள் எழுந்தருளியதைக் கேட்ட உடனே, மங்கையர்க்கரசியாரும் `நம்முடைய வாழ்வு எழுந்தருளி வருகின்றது\' என இயம்பி `அங்கு நீவிர் எதிர்சென்று வரவேற்றுத் திரு வடிகளைப் பணிவீர்\' என அருள் செய்தார் என்று அன்பு பொருந்திய களிப்பினால் வணங்கி அரசனின் அமைச்சரான குலச்சிறையார் போற்றினார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 661

ஆங்ஙனம் போற்றி அடிபணிந் தவர்மேல்
அளவிலா அருள்புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பித்
தலையளித் தருளும்அப் பொழுதில்
ஓங்கெயில் புடைசூழ் மதுரைதோன் றுதலும்
உயர்தவத் தொண்டரை நோக்கி
ஈங்குநம் பெருமான் திருவால வாய்மற்
றெம்மருங் கினதென வினவ.

பொழிப்புரை :

அவ்வாறு சொல்லித் திருவடியை வணங்க, ஞானசம்பந்தர் அளவற்ற கருணைமிக்க சொற்களால் பொருந்திய வற்றைச் சொல்லி, அருள் செய்தபோது, உயர்ந்த மதில்கள் நாற்புறத் தும் சூழ்ந்த மதுரையம்பதி கண்ணில் புலப்படக் கண்டு, உயர்ந்த தவத் தையுடைய தொண்டரைப் பார்த்து `இவ்விடத்து நம் இறைவர் எழுந் தருளுகின்ற திருவாலவாயானது எம்மருங்கில் உள்ளது?\' என வினவ,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 662

அன்பராய் அவர்முன் பணிந்தசீ ரடியார்
அண்ணலார் அடியிணை வணங்கி
முன்புநின் றெடுத்த கைகளாற் காட்டி
முருகலர் சோலைகள் சூழ்ந்து
மின்பொலி விசும்பை அளக்குநீள் கொடிசூழ்
வியனெடுங் கோபுரந் தோன்றும்
என்பணி அணிவார் இனிதமர்ந் தருளுந்
திருவால வாய்இது வென்றார்.

பொழிப்புரை :

அங்ஙனம் வினவப் பெற்ற சிறப்புடைய அடி யவரான குலச்சிறையார், ஞானசம்பந்தரின் இருதிருவடிகளையும் வணங்கித் திருமுன்பு நின்று, எடுத்த கைகளால் சுட்டிக்காட்டி, `மணம் கமழும் சோலைகளால் சூழப்பட்டு, ஒளிவிளங்கும் வானை அளக் கும்படி நீண்ட கொடிகள் சூழ்ந்த பெரிய நெடிய கோபுரங்கள் தோன் றும் இடமே, எலும்பின் அணிகளை அணிந்த இறைவர் இனிதாய் விரும்பி, வீற்றிருக்கும் திருவாலவாய் ஆகும்\' என உரைத்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 663

தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
துணைமலர்க் கரங்குவித் தருளி
மண்டுபே ரன்பால் மண்மிசைப் பணிந்து
மங்கையர்க் கரசிஎன் றெடுத்தே
எண்டிசை பரவும் ஆலவாய் ஆவ
திதுவேஎன் றிருவர்தம் பணியும்
கொண்டமை சிறப்பித் தருளிநற் பதிகம்
பாடினார் குவலயம் போற்ற.

பொழிப்புரை :

பெருந்தொண்டரான குலச்சிறையார் தாமே இவ்வாறு போற்றிக் காட்டக் கண்டு, மலர் போன்ற கைகளைத் தலை மீது குவித்து, மீதூர்ந்த அன்பினால், தரையின் மீது விழுந்து, பணிந்து, எழுந்து நின்று, `மங்கையர்க்கரசி\' எனத் தொடங்கி, எண்திசையில் உள்ளவர்களும் போற்றும் திருஆலவாய் ஆவது இதுவே என்ற நிறை வுடன் கூடிய, அம்மையாரும் அமைச்சருமாகிய இருவரின் தொண்டு களையும் சிறப்பித்தருளிய திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

குறிப்புரை :

`மங்கையர்க்கரசி\' (தி.3 ப.120) எனத் தொடங்கும் பதிகம் புறநீர்மைப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகத்தில் 1, 3, 5, 7, 9 ஆகிய பாடல்களில் மங்கையர்க்கரசியாரையும், 2, 4, 6, 8, 10 ஆகிய பாடல்களில் குலச்சிறையாரையும் சிறப்பித்தருளிய பிள்ளையார், திருக்கடைக்காப்பில் `பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் அந்நலம் பெறுசீர் ஆலவாய்\' என இருவரையும் ஒருங்கு சிறப்பித்து அருளியுள்ளார். இதனை உளங் கொண்டே ஆசி ரியர், `இருவர் தம் பணியும் கொண்டமை சிறப்பித்தருளி நற்பதிகம் பாடினார்\' என்றார்.

பண் :

பாடல் எண் : 664

பாடிய பதிகம் பரவியே வந்து
பண்புடை யடியவ ரோடுந்
தேடுமால் அயனுக் கரியவர் மகிழ்ந்த
திருவால வாய்மருங் கணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறைபெரு விருப்புடன் புக்கு
மாடுசூழ் வலங்கொண் டுடையவர் கோயில்
மந்திரி யாருடன் புகுந்தார்.

பொழிப்புரை :

அவ்வாறு பாடிய திருப்பதிகத்தில் போற்றியவாறே வந்து, அரியபண்புடைய அடியவரோடும், தேடும் திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரிய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவால வாய்க் கோயிலின் அருகே அடைந்து, நீண்ட உயர்ந்த கோபுரத்தின் உள்ளே புகுந்து, அருகேயுள்ள மாளிகையை வலமாகச் சூழ்ந்து வந்து, இறைவரின் கோயிலுள் அமைச்சர் குலச்சிறையாருடன் புகுந்தார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 665

ஆளும் அங்கணர் ஆலவாய்
அமர்ந்தினி திருந்த
காள கண்டரைக் கண்களின்
பயன்பெறக் கண்டு
நீள வந்தெழும் அன்பினால்
பணிந்தெழ நிறையார்
மீள வும்பல முறைநில
முறவிழுந் தெழுவார்.

பொழிப்புரை :

உயிர்களை ஆட்கொண்டருளுகின்ற அழகிய கண்ணை உடையவராய் ஆலவாயில் விரும்பி இனிதாக வீற்றிருக்கும் கரிய கழுத்தை உடைய இறைவரை, கண்கள் பெற்ற இனிய பயனை அடையுமாறு வழிபட்டும், நீள நினைந்து எழும் அன்பினால் பணிந்து எழுந்தும், அமைதி பெறாதவராய், திரும்பவும் நிலமிசைப் பலமுறை விழுந்து வணங்கி எழுவார் ஆனார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 666

அங்கம் எட்டினும் ஐந்தினும்
அளவின்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப்
புளகமும் பொழியும்
செங்கண் நீர்தரும் அருவியுந்
திகழ்திரு மேனி
எங்கு மாகிநின் றேத்தினார்
புகலியர் இறைவர்.

பொழிப்புரை :

எட்டு உறுப்புகளாலும், ஐந்து உறுப்புகளாலும் அளவுபடாத வணக்கங்கள் செய்து, உள்ளத்தில் நிறைவு பொங்கி எழும் அன்பின் மிகுதியால் உடலில் மயிர்க்கூச்செறிதலும், சிவந்த கண்கள் பொழிகின்ற நீர் அருவிபோன்று பெருகுதலும், திருநீற்றின் ஒளி விளங்கும் திருமேனி முழுவதும் பொருந்துமாறு நின்று, சீகாழித் தலைவர் வணங்கிப் போற்றினார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 667

நீல மாமிடற் றாலவா
யான்என நிலவும்
மூல மாகிய திருவிருக்
குக்குறள் மொழிந்து
சீல மாதவத் திருத்தொண்டர்
தம்மொடும் திளைத்தார்
சாலு மேன்மையில் தலைச்சங்கப்
புலவனார் தம்முன்.

பொழிப்புரை :

`நீலமாமிடற்று ஆலவாயிலான்\' எனத் தொடங்கி, நிலவும் மூலமான `திரு இருக்குக் குறள்\' பதிகத்தைப் பாடிப் பொருந் திய மேன்மையுடைய தலைச் சங்கப் புலவரான சோமசுந்தரப் பெருமான் திருமுன்பு, ஒழுக்கத்தால் மிக்க மாதவமுடைய தொண்டர் ஆன குலச்சிறையாருடன் கூடி அன்பினுள் மகிழ்ந்தார்.

குறிப்புரை :

அளவில் அமைந்த ஈரடிகளைக் கொண்ட பாவகை திருவிருக்குக்குறள் ஆகும். இவ்வகையில் அமைந்த இத்தொடக்கமுடைய பதிகம், குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.1 ப.94).

பண் :

பாடல் எண் : 668

சேர்த்தும் இன்னிசைப் பதிகமுந்
திருக்கடைக் காப்புச்
சார்த்தி நல்லிசைத் தண்தமிழ்ச்
சொல்மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடிவெண்
பிறையணி சென்னி
மூர்த்தி யார்கழல் பரவியே
திருமுன்றில் அணைய.

பொழிப்புரை :

கருதிய பயனைச் சேர்க்கின்ற இனிய இசையை உடைய இப்பதிகத்தையும் திருக்கடைக்காப்புடன் சாத்தி நிறைவாக்கி, நல்ல இசையுடைய தமிழ்ச் சொல்லால் ஆன மலர் மாலையைத் திரும் பவும் இன்பம் பொருந்தப் பாடி, வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த முடியையுடையவரின் திருவடிகளைப் போற்றி, திருமுன் றிலை வந்து அணையும் பொழுதில்,

குறிப்புரை :

பேர்த்தும் இன்புறப் பாடிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 669

பிள்ளையார் எழுந் தருளிமுன்
புகுதும்அப் பொழுது
வெள்ள நீர்பொதி வேணியார்
தமைத்தொழும் விருப்பால்
உள்ள ணைந்திட எதிர்செலா
தொருமருங் கொதுங்கும்
தெள்ளு நீர்விழித் தெரிவையார்
சென்றுமுன் பெய்த.

பொழிப்புரை :

முன்னர்ப் பிள்ளையார், திருக்கோயிலினுள் புகுந்த அப்பொழுது, கங்கை தாங்கும் திருச்சடையையுடைய இறைவரைத் தொழும் விருப்பால் உட்செல்ல தெளிந்த நீர் பொருந்திய கண்களை யுடைய மங்கையர்க்கரசியாரும், அப்பிள்ளையாரின் எதிர்செல்லாது ஒதுங்கியிருந்து, இதுபொழுது அவர் திருமுன்பு எய்த,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 670

மருங்கின் மந்திரி யார்பிள்ளை
யார்கழல் வணங்கிக்
கருங்கு ழற்கற்றை மேற்குவி
கைத்தளிர் உடையார்
பருங்கை யானைவாழ் வளவர்கோன்
பாவையார் என்னப்
பெருங்க ளிப்புடன் விரைந்தெதிர்
பிள்ளையார் அணைந்தார்.

பொழிப்புரை :

உடன் வந்த குலச்சிறையார் சம்பந்தப் பெருமானின் திருவடிகளை வணங்கி நின்று, கரிய கூந்தலின் மீது கூப்பிய கைத் தளிர்களையுடைய அம்மையார், பருத்த கைகளை யுடைய யானைகள் வாழ்கின்ற சோழமன்னரின் மகளார் என்று சொல்லப் பெருமகிழ்ச்சியுடன் விரைந்து, அவ்வம்மையார் எதிரே அவர் சேர்ந்திட,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 671

தென்ன வன்பெருந் தேவியார்
சிவக்கன்றின் செய்ய
பொன்ன டிக்கம லங்களிற்
பொருந்தமுன் வீழ்ந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார்
மகிழ்சிறந் தளிக்கும்
இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந்
திருக்கையால் எடுத்தார்.

பொழிப்புரை :

பாண்டிய மன்னனின் மனைவியாரான மங்கையர்க்கரசியார், சிவக்கன்றான ஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளில் பொருந்த முன் விழுந்தார். நிலைபெற்ற சீகாழிப் பதியினரின் தலைவரான பிள்ளையார், மகிழ்ச்சி மிகஅளிக்கும் இனிய அருள் உடைய பெருஞ்சிறப்பினோடும் திருக்கைகளால் அவரை எடுத்து அருளினார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 672

ஞான போனகர் எதிர்தொழு
தெழுந்தநற் றவத்து
மானி யார்மனக் கருத்துமுற்
றியதென மதித்தே
பான லங்கண்கள் நீர்மல்கப்
பவளவாய் குழறி
யானும் என்பதி யுஞ்செய்த
தவமென்கொல் என்றார்.

பொழிப்புரை :

ஞான அமுது உண்ட ஞானசம்பந்தரின் எதிரில் வணங்கி எழுந்த அரிய தவத்தையுடைய அம்மையாரான மங்கை யர்க்கரசியார், தம்மனத்துள் கொண்ட கருத்தான சைவ சமய நிலை பேறும், பாண்டி நாட்டின் மீட்சியும் நிறைவு பெற்றன என்றே துணிவு கொண்டு, நீலமலர் போன்ற கண்களில் நீர் பொருந்தப் பவளம் போன்ற வாய்குழறி `யானும் எனது பதியும் தாங்கள் இங்கு எழுந்தருளும் இப் பேற்றைப் பெறும் பொருட்டு முன் செய்த பெருந்தவம்தான் என்னோ!\' எனக் கூறினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 673

யாழின் மென்மொழி யார்மொழிந்
தெதிர்கழல் வணங்கக்
காழி வாழவந் தருளிய
கவுணியர் பிரானும்
சூழு மாகிய பரசம
யத்திடைத் தொண்டு
வாழு நீர்மையீர் உமைக்காண
வந்தனம் என்றார்.

பொழிப்புரை :

யாழ் போன்ற இனிய மென்மையான மொழியை உடைய அம்மையார், இவ்வாறு கூறி மீண்டும் தம் திருவடிகளை வணங்கிடச் சீகாழி வாழுமாறு வந்து தோன்றிய கவுணியர் தலை வரும், அவர் சொன்னதைக் கேட்டு, `சுற்றிலும் பரவிய பிற சமயச் சூழலிடையே திருத்தொண்டின் நெறியை விடாது பற்றி வாழ்கின்ற தன்மையுடையவர்களே! உங்களைக் காணும் பொருட்டு வந்தோம்!\' என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 674

இன்ன வாறருள் செய்திடத்
தொழுதடி வீழ்ந்தார்
மன்னு மந்திரி யார்வரு
திறமெலாம் மொழிய
அன்ன மென்னடை யார்தமக்
கருள்செய்து போக்கித்
துன்னு மெய்த்தொண்டர் சூழவந்
தருளும்அப் பொழுது.

பொழிப்புரை :

இங்ஙனம் ஞானசம்பந்தர் அருள் செய்திட, மங்கையர்க்கரசியார் அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி னார். நிலை பெற்ற சீர்மையுடையஅமைச்சரான குலச்சிறையார், பாண்டி நாட்டில் நேர்ந்த துன்பமான நிலைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல, அவற்றை யெல்லாம் கேட்டு, ஞானசம்பந்தர், அன்னம் போன்ற நடையுடைய மங்கையர்க்கரசியாருக்கு அருள்செய்து விடைதந்து அனுப்பினார். பின் நெருங்கிய மெய்த் தொண்டர்கள் சூழ்ந்து வர அவர் எழுந்தருளி வரும்பொழுது,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 675

செல்வம் மல்கியதிரு வால
வாயினிற் பணிசெய்
தல்கு தொண்டர்கள் பிள்ளையார்
மருங்கணைந் திறைஞ்சி
மல்கு கார்அமண் இருள்கெட
ஈங்குவந் தருள
எல்லை யில்தவஞ் செய்தனம்
எனஎடுத் திசைத்தார்.

பொழிப்புரை :

செல்வம் பெருகிய திருஆலவாய்த் திருக்கோயி லில் பணி செய்யும் தொண்டர்கள், பிள்ளையார் அருகில் வந்து சேர்ந்து வணங்கி, நிரம்பிய கரிய சமணமான இருள் கெட, இங்குத் தாங்கள் முழுமதிபோல் எழுந்தருளியதற்கு எல்லையில்லாத பெருந் தவம் செய்தோம் எனக் கூறி வணங்கினர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 676

அத்தி ருத்தொண்டர் தங்களுக்
கருள்முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும்
புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார்
திருமடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்
தொடும்இனி தமர்ந்தார்.

பொழிப்புரை :

அவ்வாறு கூறிய அத்தொண்டர்களுக்கு அருள் முகத்துடன் விடை தந்து, உண்மை பொருந்திய விருப்புடன் அவர்க ளோடு கோயிலின் வெளியே வந்து, உள்ளத்தில் இன்பம் பொருந்திய அமைச்சரான குலச்சிறையார், ஞானசம்பந்தர் இருத்தற்குரிய திரு மடத்தைக் காட்ட, அடியார்கள் சூழ்ந்து போற்றத் தம் பரிவாரங் களுடன் அவர் அங்குத் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 677

பரவு காதலில் பாண்டிமா
தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச்சிறை
யார்விருந் தளிப்பச்
சிரபு ரத்துவந் தருளிய
செல்வர்அங் கிருந்தார்
இரவி மேற்கடல் அணைந்தனன்
எல்லிவந் தணைய.

பொழிப்புரை :

போற்றும் மங்கையர்க்கரசியாரது அருளால், பொருந்தும் அன்புடனே குலச்சிறையார் விருந்து அமைத்து அளிக்க, சீகாழியில் தோன்றியருளிய செல்வரான ஞானப்பிள்ளையார் அத்திருமடத்தில் வீற்றிருந்தருளினர். அதுபொழுது, கதிரவன் மேலைக் கடலில் சென்று அடைய, இரவு வந்த அளவில்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 678

வழுதி மாநகர் அதனிடை
மாமறைத் தலைவர்
பழுதில் சீரடி யாருடன்
பகல்வரக் கண்ட
கழுது போல்வருங் காரமண்
குண்டர்கள் கலங்கி
இழுது மையிருட் கிருளென
ஈண்டினர் ஒருபால்.

பொழிப்புரை :

பாண்டியரின் பெருநகரத்தில், சிறந்த அந்தணர் தலைவரான ஞானசம்பந்தர், குற்றம் இல்லாத சிறப்புடைய அடியார் களுடனே பகலில் வரக் கண்ட, பேய் போன்று வரும் கரிய அமணர் கள், கலக்கத்தை அடைந்து, குழம்பான மை போன்ற இருளுக்கும் மேம்பட்ட இருள்போல ஒருமருங்கில் கூடினார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 679

அங்கண் மேவிய சமணர்கள்
பிள்ளையார் அமர்ந்த
துங்க மாமடந் தன்னிடைத்
தொண்டர்தங் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதி
கத்திசை எடுத்த
பொங்கு பேரொலி செவிப்புலம்
புக்கிடப் பொறாராய்.

பொழிப்புரை :

அவ்விடத்தில் கூடிய சமணர்கள், ஞானசம்பந்தர் எழுந்தருளிய பெருந்திரு மடத்தில், திருத்தொண்டர் கூட்டங்கள் எங்கும் கூடிப் பெருகி, ஓதிய திருப்பதிகத்து இசை ஓங்கி, மேலெழும் பேரொலியானது தம் செவிகளில் புக, அதைப் பொறுக்க மாட்டா தவர்களாய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 680

மற்றிவ் வான்பழி மன்னவன்
மாறனை எய்திச்
சொற்றும் என்றுதம் சூழ்ச்சியும்
ஒருபடி துணிவார்
கொற்ற வன்கடை காவலர்
முன்சென்று குறுகி
வெற்றி வேலவற்கு எங்களை
விளம்புவீர் என்றார்.

பொழிப்புரை :

`மற்று, இப்பெரும் பழியினைப் பாண்டியனை அடைந்து சொல்வோம்,\' என்று எண்ணித் தம் சூழ்ச்சி முடிவையும் ஒருபடியாக மனத்துட் கொண்டு, மன்னனின் வாயில் காப்போர் முன் சென்று, `வெற்றியுடைய வேல் ஏந்திய மன்னனுக்கு யாங்கள் வந்த செய்தியைத் தெரிவியுங்கள்!\' என இயம்பினர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 681

வாயில் காவலர் மன்னவன்
தனைஎதிர் வணங்கி
ஆய மாகிவந் தடிகள்மார்
அணைந்தனர் என்ன
ஏயி னான்அணை வாரென
அவருஞ்சென் றிசைத்தார்
பாயி னால்உடல் மூடுவார்
பதைப்புடன் புக்கார்.

பொழிப்புரை :

வாயில் காவலர் உள்ளே சென்று, அரசன் முன்பு வணங்கிச் `சமண அடிகள்மார் எல்லாரும் கூட்டமாய் வந்துள்ளனர்!\' என்று கூற, அந்தச் சமணத் துறவியருடன் ஒத்த கருத்துடையவனான மன்னனும் `அவர்கள் வருவார்களாக!\' என்ன, அக்காவலர்களும் புறத்தே சென்று, சமணத் துறவிகளிடம் அதனை உரைத்தனர். பாய் உடுக்கையால் உடலை மூடும் அவர்களும் பதற்றத்துடன் உள்ளே வந்தனர்.

குறிப்புரை :

ஏயினான் - ஒத்தவன்: சமணர்களொடு ஒத்த கருத்துடை யவன்.

பண் :

பாடல் எண் : 682

புக்க போதவர் அழிவுறு
மனத்திடைப் புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும்
கண்டெதிர் வினவி
ஒக்க நீர்திரண் டணைவதற்
குற்றதென் என்னத்
தக்க தல்லதீங் கடுத்தது
சாற்றுதற் கென்றார்.

பொழிப்புரை :

அவர்கள், அவ்வாறு புகுந்த அளவில், அவர்களின் உள்ளத்தில் வாட்டம் மிக்கிருந்த தன்மையினை மன்னன் கண்டு, `நீங்கள் யாவரும் ஒன்றாகத் திரண்டு இங்கு வருவதற்குக் காரணம் யாது?\' என்று வினவ, அம்முனிவர்கள், `சொல்லத்தகாத தீமை வந்தது\' என மொழிந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 683

ஆவ தேல்நுமக் கடுத்தது
கூறுவீர் என்று
காவ லன்பரிந் துரைத்தலும்
கார்அமண் கையர்
மாவ லாய்உன்றன் மதுரையிற்
சைவவே தியர்தாம்
மேவ லால்இன்று கண்டுமுட்
டியாமென்று விளம்ப.

பொழிப்புரை :

`அங்ஙனமாயின் உமக்கு நேர்ந்ததை எடுத்துக் கூறுங்கள்!\' என்று பாண்டியன் அன்புடன் உரைக்க, கரிய சமண வஞ்சகர்கள், `யானை வீரனான மன்ன! உம் மதுரை மாநகரத்தில் சைவ வேதியர்கள் வந்து பொருந்தியதைக் கண்டதால் இன்று யாங்கள் `கண்டு முட்டு\' ஆனோம்\' என்று கூற,

குறிப்புரை :

கண்டு முட்டு - இவ்வகையாரைக் காண்பதால் வரும் தொடக்கு, தீட்டு. பிறசமயத்தவரைக் கண்டால் அதைத் தீட்டாய் எண்ணிக் கழுவாய் தேடிக் கொள்ளுவர் சமணர்கள்.

பண் :

பாடல் எண் : 684

என்று கூறலும் கேட்டுமுட்
டியானும்என் றியம்பி
நன்று நல்லறம் புரிந்தவா
நானென்று நகுவான்
கன்றும் உள்ளத்த னாகிஅக்
கண்ணுதல் அடியார்
இன்றுஇம் மாநகர் அணைந்ததென்
அவர்கள்யார் என்றான்.

பொழிப்புரை :

என்று சமண முனிவர்கள் உரைக்கவும், `யானும் அதனைக் கேட்டமையால் `கேட்டு முட்டு\' ஆயினேன்\' என்று கூறி `நான் நல்லறம் புரிந்தவாறு நன்றாக இருந்தது!\' எனத் தன்னையே இகழ்ந்து, நகைத்துக் கறுவு கொண்ட உள்ளத்துடன், அந்நெற்றிக் கண்ணை உடைய சிவனடியார்கள் இன்று இப்பெருநகரத்தை அடைந்த காரணம் தான் யாது? அவர்கள் யாவர்? என வினவினான்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 685

மாலை வெண்குடை வளவர்சோ
ணாட்டுவண் புகலிச்
சூல பாணிபால் ஞானம்பெற்
றானென்று சுருதிப்
பாலன் அன்பர்தங் குழாத்தொடும்
பனிமுத்தின் சிவிகை
மேல ணைந்தனன் எங்களை
வாதினில் வெல்ல.

பொழிப்புரை :

`ஆத்தி மாலையையும் வெண்கொற்றக் குடையையும் கொண்ட சோழரின் வளம் மிக்க சீகாழியில், சூலத்தைக் கையில் கொண்ட சிவனிடத்தில் ஞானம் பெற்றான் என்று, அந்தணச் சிறுவன் அடியார் கூட்டத்துடன் குளிர்ந்த முத்துச் சிவிகையின் மேல் ஏறி, எங்களை வாதில் வெல்ல வந்துள்ளான்\',

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 686

என்று கூறுவார் இத்திற
முன்புதா மறிந்த
தொன்றும் அங்கொழி யாவகை
உரைத்தலும் தென்னன்
மன்ற லம்பொழிற் சண்பையார்
வள்ளலார் நாமம்
சென்று தன்செவி நிறைத்தலும்
செயிர்த்துமுன் சொல்வான்.

பொழிப்புரை :

என்று இவ்வாறு கூறுவாராய், இத்திறங்களைத் தாம் முன்னம் அறிந்த செய்திகள் ஒன்றையும் விடாமல் கூறவும், மணமுடைய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழி வள்ளலாரின் திருப்பெயர் சென்று செவியில் சேரவும், சினம் கொண்டு முற்படக் கூறுவானாகி,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 687

மற்ற மாமறை மைந்தன்இம்
மருங்கணைந் தானேல்
உற்ற செய்தொழில் யாதுசெய்
கோம்என உரைப்பச்
செற்ற மீக்கொண்ட சிந்தையும்
செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கெதிர்
குறித்துரை செய்வார்.

பொழிப்புரை :

`மற்று அவ்வந்தணச் சிறுவன் அங்ஙனம் இங்கு வந்தானாகில், செயத்தக்க தொழிலாய் யாது செய்வோம்?\' என மன்னன் வினவ, மேன்மேலும் பொங்கி எழும் சினமுடைய மனமும், தொழிலும் கொண்ட அச்சமணர், வெற்றித் திருவுடைய மன்னன் மொழிகளுக்கு விடையாகக் குறித்துக் கூறுவாராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 688

வந்த அந்தணன் தன்னைநாம்
வலிசெய்து போக்கும்
சிந்தை யன்றிஅச் சிறுமறை
யோனுறை மடத்தில்
வெந்த ழற்பட விஞ்சைமந்
திரத்தொழில் விளைத்தால்
இந்த மாநகர் இடத்திரான்
ஏகும்என் றிசைத்தார்.

பொழிப்புரை :

`இங்கு அவ்வந்தணனை, வன்முறை செய்து போக்கும் எண்ணம் இன்றி, அவ்வந்தணச் சிறுவன் தங்கியுள்ள மடத்தில், வெம்மையான அழல் சேருமாறு, வித்தையாகும் மந்திரச் செயல் செய்வோமானால், இப்பெருநகரத்தில் இல்லாது போய் விடுவான்!\' எனக் கூறினர்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 689

ஆவதொன் றிதுவே யாகில்
அதனையே விரைந்து செய்யப்
போவதென் றவரைப் போக்கிப்
பொய்ப்பொரு ளாகக்கொண்டான்
யாவது உரையா டாதே
எண்ணத்திற் கவலை யோடும்
பூவணை அமளி புக்கான்
பொங்கெழில் தேவி சேர்ந்தாள்.

பொழிப்புரை :

`செயத்தகுவது ஈதொன்றேயாயின், அதனையே விரைந்து செய்யச் செல்வீராக!\' எனக் கூறி அவர்களைச் செல்லுமாறு அனுப்பிய, பொய்யினைப் பொருள் என்று கொண்ட மன்னன், யாதும் எவரிடமும் பேசாமல் உளம் நிறைந்த கவலையுடன், மலர்கள் பரப்பிய படுக்கையில் சேர்ந்தான்; பேரெழிலையுடைய பாண்டிமா தேவியாரும் அங்குச் சேர்ந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 690

மன்னவன் உரைப்ப தின்றி
இருக்கமா தேவி யார்தாம்
என்னுயிர்க் குயிராய் உள்ள
இறைவநீ உற்ற தென்னோ
முன்னுள மகிழ்ச்சி இன்றி
முகம்புலர்ந் திருந்தாய் இன்று
பன்னிய உள்ளத் தெய்தும்
பருவரல் அருள்செய் என்றார்.

பொழிப்புரை :

அரசன் இங்ஙனம் உரையாடாமல் இருத்தலைக் கண்டு, அப்பேரரசியார், `என் உயிர்க்கு உயிராய் உள்ள இறைவரே! நீவிர் என்ன துன்பத்தை அடைந்தீர்? முன் உள்ள மகிழ்ச்சியின்றி முகம் வாடியுள்ளீர்! இன்று இவ்வாறு எண்ணத்தகும் தம் உள்ளத்தில் பொருந்திய வருத்தத்தை உரைப்பீராக!\' என்றார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 691

தேவியார் தம்மை நோக்கித்
தென்னவன் கூறு கின்றான்
காவிநீள் கண்ணி னாய்கேள்
காவிரி நாட்டின் மன்னும்
தாவில்சீர்க் கழும லத்தான்
சங்கர னருள்பெற் றிங்கு
மேவினான் அடிகள் மாரை
வாதினில் வெல்ல என்று.

பொழிப்புரை :

தன் துணைவியாரை நோக்கிப் பாண்டிய மன் னன் கூறுவானாய், `குவளை மலர் போன்ற நீண்ட விழியை உடை யாய்! கேட்பாயாக. காவிரி பாயும் நாட்டில் நிலை பெற்றுள்ள குற்றம் அற்ற சிறப்பையுடைய சீகாழிப் பதியினன், சங்கரனின் அருள் பெற்று இங்கு நம் சமண அடிகள்மார்களை, வாதில் வெல்வதன் பொருட்டாக வந்துள்ளான்\' என்று கூறி, மேலும் கூறுவானாய்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 692

வெண்பொடி பூசுந் தொண்டர்
விரவினார் அவரை யெல்லாம்
கண்டுமுட் டடிகள் மார்கள்
கேட்டுமுட் டியானுங் காதல்
வண்டுணத் துதைந்த கோதை
மானியே இங்கு வந்த
பண்புமற் றிதுவே யாகும்
பரிசுவே றில்லை என்றான்.

பொழிப்புரை :

`வெண்மையான திருநீற்றைப் பூசும் சிவன் அடியார்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களையெல்லாம் கண்டதால் அடிகண்மார் `கண்டு முட்டு\'. அச்செய்தியைக் கேட்டதால் நானும் `கேட்டு முட்டு\'. என் அன்புக்குரிய, வண்டுகள் தேன் உண்ணுதற்குரிய நெருங்கிச் சேர்த்த மாலை சூடிய மானியே, இங்கு நிகழ்ந்த தன்மை இதுவாகும்! வேறு ஒன்றும் இல்லை!\' என்றான்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 693

மன்னவன் உரைப்பக் கேட்டு
மங்கையர்க் கரசி யார்தாம்
நின்னிலை யிதுவே யாகில்
நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால்
வென்றவர் பக்கஞ் சேர்ந்து
துன்னுவ துறுதி யாகும்
சுழிவுறேல் மன்ன என்றார்.

பொழிப்புரை :

இங்ஙனம் பாண்டியன் உரைக்க அதனைக் கேட்ட மங்கையர்க்கரசியார், `உம் நிலைமை இதுவே யானால் வருந்தாமல், நீடிய தெய்வத் தன்மை விளங்கும்படி அவர்கள் வந்து வாதம் செய்தால், அதில் வென்றவரின் பக்கம் சேர்ந்து பொருந்துவதே நன்மை தருவதாகும்! ஆதலின் வருந்த வேண்டாம்\' என்றார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 694

சிந்தையிற் களிப்பு மிக்குத்
திருக்கழு மலத்தார் வேந்தன்
வந்தவா றெம்மை யாள
எனவரு மகிழ்ச்சி யோடும்
கொந்தலர் குழலார் போதக்
குலச்சிறை யார்அங் கெய்த
இந்தநன் மாற்றம் எல்லாம்
அவர்க்குரைத் திருந்த பின்னர்.

பொழிப்புரை :

உள்ளத்தில் மகிழ்ச்சி மிகுந்து, `திருக்கழுமலத் தவரின் தலைவர் எம்மை ஆளும் பொருட்டு வந்த விதந்தான் என்னே!\' என்று எண்ணுவதால் உண்டாகும் மகிழ்ச்சியுடன், மலரும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மங்கையர்க்கரசியார் வந்த போது, அமைச்சர் குலச்சிறையாரும் அங்கு வந்து சேர, இந்த நல்ல சொற்களை எல்லாம் அவரிடம் சொல்லிய பின்னர்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 695

கொற்றவன் அமைச்ச னாரும்
கைதலை குவித்து நின்று
பெற்றனம் பிள்ளை யாரிங்
கணைந்திடப் பெறும்பே றென்பார்
இற்றைநாள் ஈசன் அன்பர்
தம்மைநாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்றினிச் சமணர் செய்யும்
வஞ்சனை அறியோம் என்றார்.

பொழிப்புரை :

மன்னவரின் அமைச்சரான குலச்சிறையாரும் கைகளைத் தலைமீது குவித்து வணங்கி நின்று, `பிள்ளையார் இங்கு வந்து சேர்வதற்குப் பெரும் பேறுதான் பெற்றோம்!\' எனக் கூறத் தொடங்கி, `இன்று இறைவரின் அடியாரை நாம் கண்டு வணங்கப் பெற்றோம்! இனிச் சமணர் செய்யக் கூடிய வஞ்சனை எதுவோ, அறியோம்!\' எனக் கூறினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 696

மானியார் தாமும் அஞ்சி
வஞ்சகப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார்
செய்வதென் நாம்என் றெண்ணி
ஞானசம் பந்தர் தம்பால்
நன்மையல் லாத செய்ய
ஊனம்வந் தடையில் யாமும்
உயிர்துறந் தொழிவ தென்றார்.

பொழிப்புரை :

அரசமாதேவியாரும் அச்சம் கொண்டு `வஞ்சகர் களாகிய அப்புலையர்கள் ஈனமான செயல்களையே செய்யவல்லார்! அதற்கு நாம் என்ன செய்வது?\' என எண்ணி, `ஞானசம்பந்தருக்கு நன்மையல்லாத செயல்களை இவர்கள் செய்து அதன் மூலம் கேடு வருமானால் நாமும் உயிர் துறப்போம்!\' என்று இயம்பினார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 697

இவர்நிலை இதுவே யாக
இலங்குவேல் தென்ன னான
அவன்நிலை யதுவாம் அந்நாள்
அருகர்தம் நிலையா தென்னில்
தவமறைந் தல்ல செய்வார்
தங்கள்மந் திரத்தால் செந்தீ
சிவநெறி வளர்க்க வந்தார்
திருமடஞ் சேரச் செய்தார்.

பொழிப்புரை :

இவ்விருவர்தம் நிலை இவ்வண்ணமாகவும், விளங்கும் வேல் ஏந்திய பாண்டியனான அவன் நிலை அதுவே யாகவும், அன்றைய நாளில் சமணர்களின் நிலையாது என்றால், தவ வேடத்துள் மறைந்து நின்று தீய செயல்களைச் செய்பவர்களான அவர்கள், தம் மந்திரத்தால், சிவநெறி வளர்க்கத் தோன்றியுள்ள ஞான சம்பந்தரின் திருமடத்தில் செந்தீ சேர்தற்குரிய செயலைச் செய்தனர்.

குறிப்புரை :

`தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று\' (குறள், 274) எனும் திருக்குறள் நினைவு கூருமாறு `தவம் மறைந்து அல்லவை செய்வார்\' எனும் தொடர் அமைந்துள்ளது.

பண் :

பாடல் எண் : 698

ஆதி மந்திரம் அஞ்செழுத்
தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந்
திரவிதி வருமே
பூதி சாதனர் மடத்தில்தாம்
புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண்
குண்டர்கள் தளர்ந்தார்.

பொழிப்புரை :

ஆதி மந்திரமான திருவைந்தெழுத்தை ஓதுகின் றவர்கள், நோக்கும் திசையிலும், மற்ற மந்திரச் செயல்கள் சென்று சேருமோ? சேரா. திருநீற்றுச் சாதனம் பூண்ட ஞானசம்பந்தரின் திரு மடத்தில் தாம் புனைந்த சாதனைகள், ஏவியவாறு குறித்த பயனைத் தாராது ஒழிந்ததைப் பார்த்து, அச்சமணர்களாகிய கீழ் மக்கள் தளர்ச்சி யடைந்தனர்.

குறிப்புரை :

ஏகாரம் எதிர்மறைக்கண்வந்தது. `கண்ணுதலான் திரு நீற்றுச் சார்பினோர்க்கும் கவலை வருமோ?\' என்றவிடத்து ஓகாரம் எதிர்மறைக் கூற்றில் வருமாறும் நினைவு கூர்க. படைக்கலமாகப் பெருமானின் திருவைந்தெழுத்தையும், கவசமாக இறைவரின் திரு நீற்றையும் கொண்டார்க்கு என்றும், எவ்விடத்தும், எவ்விதத் தீங்கும் வாராது என்பதாம்.

பண் :

பாடல் எண் : 699

தளர்ந்து மற்றவர் தாஞ்செய்த
தீத்தொழில் சரியக்
கிளர்ந்த அச்சம்முன் கெழுமிய
கீழ்மையோர் கூடி
விளங்கு நீள்முடி வேந்தன்
ஈதறியின்நம் மேன்மை
உளங்கொ ளான்நமர் விருத்தியும்
ஒழிக்குமென் றுணர்வார்.

பொழிப்புரை :

மற்று, அவர்கள் தாம் செய்த அத் தீத் தொழில், பயன் அளிக்காமல் விழுவதைக் கண்டு, மனம் தளர்ந்து, எழுந்த அச்சமானது முன்னே மிகுந்ததால், கீழான அவ்வமணர்கள் ஒன்றாகக் கூடி, விளங் கும் நீண்ட முடிமன்னனான பாண்டியன் இதை அறியின் நம் வளர்ச்சி யில் மனம் கொள்ளமாட்டான், நாம் பிழைக்கும் வழியையும் ஒழித்து விடுவான் என்று உணர்ந்தாராய்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 700

மந்தி ரச்செயல் வாய்த்தில
மற்றினிச் செய்யும்
புந்தி யாவதிங் கிதுஎனப்
பொதிதழல் கொடுபுக்
கந்தண் மாதவர் திருமடப்
புறத்தயல் இருள்போல்
வந்து தந்தொழில் புரிந்தனர்
வஞ்சனை மனத்தோர்.

பொழிப்புரை :

`மந்திரச் செயல், குறித்த பயனைத் தரவில்லை! இனிச் செயத்தகும் செயல் இதுவேயாகும்!\' எனத் துணிந்து, பொதியும் தழலினை எடுத்துக் கொண்டு புகுந்து, அழகிய குளிர்ச்சியுடைய மாத வர்களாகிய சிவனடியார்கள் உறங்கும் திருமடத்தின் வெளிப்பக் கத்தில், வஞ்சனை நிறைந்த மனத்தையுடைய அச்சமணர்கள் இருள் என வந்து தம் செயலைச் செய்தனர்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 701

திரும டப்புறச் சுற்றினில்
தீயபா தகத்தோர்
மருவு வித்தஅத் தொழில்வெளிப்
படுதலும் மறுகிப்
பரிச னத்தவர் பதைப்பொடும்
சிதைத்தது நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை
தெளிந்துசென் றணைவார்.

பொழிப்புரை :

அம்மடத்தின் புறச்சுற்றில் தீய பாதகர்களான சமணர்கள் செய்த அத்தீத் தொழில் வெளிப்படுதலும், பரிவாரங்கள் கலக்கம் கொண்டு சுழன்று, பதைப்புடனே அத்தீயை அணைத்துப் போக்கிச் சமணர்களே இத்தீயசெயலைச் செய்தனர் எனத் தெளிந்து அடைவாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 702

கழும லப்பதிக் கவுணியர்
கற்பகக் கன்றைத்
தொழுது நின்றமண் குண்டர்செய்
தீங்கினைச் சொன்ன
பொழுது மாதவர் துயிலும்இத்
திருமடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள்
எனப்பரிந் தருளி.

பொழிப்புரை :

சீகாழிப் பதியில் கவுணியர் குடியில் தோன்றிய கற்பகக் கன்றான பிள்ளையாரை, அவர்கள் வணங்கித் தொழுது நின்று, சமணர் செய்த கீழான செயலைச் சொன்ன போது, `சிவனடியார்கள் ஆகிய மாதவர் உறங்கும் இத்திருமடத்தின் வெளிப் பக்கத்தில் தீமை செய்வதோ! பாவிகளே!\' என்று பரிவு கொண்டருள,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 703

என்பொ ருட்டவர் செய்ததீங்
காயினும் இறையோன்
அன்ப ருக்கெய்து மோஎன்று
பின்னையும் அச்சம்
முன்பு றப்பின்பு முனிவுற
முத்தமிழ் விரகர்
மன்பு ரக்குமெய்ம் முறைவழு
எனமனங் கொண்டார்.

பொழிப்புரை :

இச்செயல் என்பொருட்டாக அவர்கள் செய்த தீங்கு எனினும், சிவபெருமானின் அடியவர்க்குப் பொருந்துமோ? என உட்கொண்டு, மேலும் அச்சம் முன் வரப் பின் சினமும் வர, முத்தமிழ் வல்லலுநரான அப்பிள்ளையார், `அரசன் காவல் செய்யும் நீதிமுறை தவறியது\' என்று மனத்தில் எண்ணம் கொண்டவராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 704

வெய்ய தீங்கிது வேந்தன்மேற்
றெனும்விதி முறையால்
செய்ய னேதிரு வாலவாய்
எனுந்திருப் பதிகம்
சைவர் வாழ்மடத் தமணர்கள்
இட்டதீத் தழல்போய்ப்
பைய வேசென்று பாண்டியற்
காகெனப் பணித்தார்.

பொழிப்புரை :

எனவே `வெம்மையான இத்தீங்கு வேந்தன் மேல் ஆகும்\' என்ற விதிமுறையால், `செய்யனே! திருஆலவாய்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் `சிவனடியார் வாழும் மடத்தில் சமணர் வைத்த தீ மெல்லச் சென்று பாண்டியனுக்கு ஆகுக\' என்றுபாடி ஆணையிட்டருளினார்.

குறிப்புரை :

இம்முதற் குறிப்புடைய பாடல் கௌசிகப் பண்ணில் அமைந்ததாகும்(தி.3 ப.51). `செய்யனேதிரு ஆலவாய் மேவிய, ஐயனே அஞ்சல் என்று அருள் செய்யெனைப் பொய்யராம் அமணர் கொளுவும் சுடர், பைய வேசென்று பாண்டியற்கு ஆகவே\' எனவரும் முதற் பாடற் கருத்தை முகந்து ஆசிரியர் இங்ஙனம் அருளுவார் ஆயினர். `ஆகஎன\' என்பது அகரம் தொக்கு `ஆகென\' நின்றது. ஆக - பொருந்துக. அந்நிலையிலன்றி அது ஆக்கச் சொல்லாய், அம்மன் னன் பின்பெறும் பேறுகளுக்கு நிலைக்களனாகவும் உள்ளமை அறிதற்குரியது.

பண் :

பாடல் எண் : 705

பாண்டிமா தேவியார் தமது பொற்பிற்
பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்
ஆண்தகையார் குலச்சிறையார் அன்பி னாலும்
அரசன்பால் அபராதம் உறுத லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடைய னாத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.

பொழிப்புரை :

பாண்டிமாதேவியரின் அழகிய நீண்ட திருமங்கல நாண் பாதுகாக்கப்பட வேண்டியதாலும், ஆண்தகைமை உடைய குலச்சிறையாரது அன்பினாலும், அரசனிடம் சிவஅபராதம் நேர்ந்திருத்தலாலும், மீண்டும் சிவநெறி அடையும் நியதி இருத்த லாலும் வெப்பு நோய் தீருமாறு மன்னனின் மேனியைத் தீண்டித் திரு வெண்ணீற்றைச் சீகாழி மன்னவர் இடும் பேறு, அரசனுக்கு உடைமை யாலும், அத்தீய நோயைப் `பையவே செல்க\' என்று பணித்தார்.

குறிப்புரை :

இப்பாடல் இடைச்செருகலாக இருக்கலாம் எனச் சிவக்கவிமணியார் கருதுவர். இப்பாடலுக்கு அவர் தந்திருக்கும் விளக்கக் குறிப்பைக் காண்க. எனினும் இது ஆசிரியர் திருவாக்கு என்றே கருதத் தக்கதாக உள்ளது. இப்பாடற்கு முன்னும் பின்னும் உள்ள சந்த இசைக்கு இப்பாடல் மாறியிருப்பினும், இப்பாடற் பொருண்மை இதற்கு முன்னும் பின்னும் உள்ள பாடல்களில் பெறப் படாமையானும், ஆசிரியர் சேக்கிழார் தேவாரத் திருமுறைகளுக்கு ஆங்காங்கு விளக்கம் தந்து செல்லும் இயல்பைக் கடப்பாடாகக் கொண்டிருத்தலானும், இங்குக் காழிப் பிள்ளையார் `பையவே செல்க\' என்றருளியமைக்குக் கூறிய காரணத்தைக் கூறுதல் அவர்தம் திருவுள் ளமாகவே இருத்தல் இயல்பு ஆதலானும், இப்பாடல் ஆசிரியர் திருவாக்காகவே கொள்ளத் தோன்றுகிறது. காழிப் பிள்ளையார் `பையவே செல்க\' என்றது தீயையேனும், பாண்டியரிடத்துப் பற்றப் பட்டது பிணியே ஆதலால் ஈண்டுத் தீப்பிணியை என்றார்.

பண் :

பாடல் எண் : 706

திருந்தி சைப்பதி கத்தொடை
திருவால வாயில்
மருந்தி னைச்சண்பை மன்னவர்
புனைந்திட அருளால்
விரிந்த வெந்தழல் வெம்மைபோய்த்
தென்னனை மேவிப்
பெருந்த ழற்பொதி வெதுப்பெனப்
பெயர்பெற்ற தன்றே.

பொழிப்புரை :

சீகாழியில் தோன்றிய தலைவரான ஞான சம்பந்தர் திருஆலவாய் என்ற கோயிலில் வீற்றிருக்கின்ற அருமருந் தாம் இறைவரை, திருந்தும் இசையையுடைய திருப்பதிகம் புனைந்து போற்றிட, அவரது திருவருளால் விரிந்து செலுத்தப்பட்ட செவ்விய தீத்தொழில் முழுவதும் கூடிய வெம்மையின் தொகுதி சென்று, பாண்டியனை அடைந்து, பெரிய தீயின் பொதியான வெப்பு நோய் எனப் பெயர் பெற்றது.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 707

செய்ய மேனியர் திருமக
னார்உறை மடத்தில்
நையும் உள்ளத்த ராய்அமண்
கையர்தாம் நணுகிக்
கையி னால்எரி இடவுடன்
படும்எல்லி கரப்ப
வெய்ய வன்குண கடலிடை
எழுந்தனன் மீது.

பொழிப்புரை :

சிவந்த திருமேனியையுடைய சிவபெருமானின் மகனாரான ஞானப் பிள்ளையார் வீற்றிருக்கும் திருமடத்தில், கவலை யினால் வாடும் மனம் உடையவர்களாய்ச் சமணரான கீழ்மக்கள் அருகில் வந்து, கையினால் கொண்டு சென்று தீயை இட, உடனிருந்து உடன்பட்ட இரவுப் போது மறையக் கதிரவன் கிழக்குக் கடலின் மீது தோன்றினான்.

குறிப்புரை :

நீங்கக் கதிரவன் தோன்றினன் என்பது கருத்து. அதற்குச் சமணர்கள் கையில் கொண்டு சென்று, சைவர்வாழ் மடத்தில் இட்ட தீயைக் கண்டும் இராப் பொழுது வாளாதிருக்க, இதுபொழுது அது தானும் நீங்கியது என ஆசிரியர் தற்குறிப்பேற்றம்பட அருளி யுள்ளார்.

பண் :

பாடல் எண் : 708

இரவு பாதகர் செய்ததீங்
கிரவிதன் மரபில்
குரவ ஓதியார் குலச்சிறை
யாருடன் கேட்டுச்
சிரபு ரப்பிள்ளை யாரைஇத்
தீயவர் நாட்டு
வரவ ழைத்தநாம் மாய்வதே
எனமனம் மயங்கி.

பொழிப்புரை :

முந்நாள் இரவில் பாதகரான சமணர்செய்த இத்தீங்கைக் கதிரவன் மரபில் தோன்றிய குரா மலரை அணிந்த கூந்தலையுடைய மங்கையர்க்கரசியார் குலச்சிறையாருடன் கேட்டுச் `சீகாழிப் பிள்ளையாரை, இத்தீயவர் நாட்டில் வருமாறு அழைத்த நாம் உயிர் துறந்து விடுவதே இதற்குக் கழுவாயாகும்\' என உள்ளம் மயங்கி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 709

பெருகும் அச்சமோ டாருயிர்
பதைப்பவர் பின்பு
திரும டப்புற மருங்குதீ
தின்மையில் தெளிந்து
கருமு ருட்டமண் கையர்செய்
தீங்கிது கடைக்கால்
வருவ தெப்படி யாமென
மனங்கொளும் பொழுது.

பொழிப்புரை :

மேன்மேலும் பெருகும் அச்சத்துடன், அரிய உயிர் பதைக்கும் அவர்கள் இருவரும், அதன் பின்பு திருமடத்தின் வெளியில் தீமை இல்லாமையைக் கேட்டதால் தெளிவடைந்து, `கரிய முருட்டுடல் உடைய சமணர்கள் செய்த இத்தீங்கு இதன் மூலமாக விளைவது எப்படியாகுமோ?\' என்று உளங்கொண்டபொழுது,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 710

அரச னுக்குவெப் படுத்ததென்
றருகுகஞ் சுகிகள்
உரைசெ யப்பதைத் தொருதனித்
தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேற்கொளக்
குலச்சிறை யாரும்
வரைசெய் பொற்புய மன்னவன்
மருங்குவந் தணைந்தார்.

பொழிப்புரை :

`மன்னனுக்கு வெப்புநோய் உண்டாயிற்று\' என்று அவன் அருகில் இருக்கும் கஞ்சுகி மாக்கள் வந்து சொல்லத் துடித்து, ஒப்பில்லாத அரசமாதேவியார் அரசனது இருப்பிடத்தில் புக, விரைந்த செலவும் அச்சமும் பொருந்தக் குலச்சிறையாரும், மலை போன்ற அழகிய தோள்களையுடைய மன்னனின் அருகே வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

கஞ்சுகி மாக்கள் - சட்டை அணிந்த காவலர்கள். இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 711

வேந்த னுக்குமெய் விதிர்ப்புற
வெதுப்புறு வெம்மை
காந்து வெந்தழற் கதுமென
மெய்யெலாங் கவர்ந்து
போந்து மாளிகைப் புறத்துநின்
றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது
விழுந்துடல் திரங்க.

பொழிப்புரை :

மன்னனுக்கு உடல் நடுக்கம் வர வெதுப்புறும் நோயின் வெம்மை எரிதலால், வெப்பத்தை வீசும் தீப்போல விரைவாய் உடல் உள்ளும் புறமும் பரவி, அரண்மனையின் புறத்தே நின்றவர்களும் வாடித் தீய்ந்து போகுமாறு உடல் உலர்ந்து கருக மேலே எழுந்தது.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 712

உணர்வும் ஆவியும் ஒழிவதற்
கொருபுடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகுதூ
ரத்திடை அகலப்
புணர்இ ளங்கத லிக்குருத்
தொடுதளிர் புடையே
கொணரி னுஞ்சுருக் கொண்டவை
நுண்துக ளாக.

பொழிப்புரை :

உணர்வும் உயிரும் ஒழிவதற்காக ஒருபக்கமாய் நிற்கவும், அருகில் வருபவர் தொலைவில் சென்று அகலவும், பொருந்தும் வாழையின் இளங்குருத்தையும் தளிரையும் அருகில் கொண்டுவரினும் வெப்பத்தால் அவை காய்ந்து சுருங்கி நுண்ணிய துகளாக ஆகவும்,

குறிப்புரை :

உடலில் வெப்பம் மிகும் பொழுது, வாழைக் குருத்தில் கிடப்பித்தல் பண்டைய முறை. அதனால் அவ்வெப்பம் குறையும். இக்காலத்துப் பனிக்கட்டியை வைத்துக் கட்டுதல் இயல்பாகவுள்ளது.

பண் :

பாடல் எண் : 713

மருத்து நூலவர் தங்கள்பல்
கலைகளில் வகுத்த
திருத்த குந்தொழில் யாவையும்
செய்யவும் மேன்மேல்
உருத்தெ ழுந்தவெப் புயிரையும்
உருக்குவ தாகக்
கருத்தொ ழிந்துரை மறந்தனன்
கௌரியர் தலைவன்.

பொழிப்புரை :

மருத்துவ நூலில் வல்லவர், தாம் கற்றபல கலைகளிலும் வகுத்துக் கூறப்பட்ட சிறந்த தக்க மருத்துவத் தொழில்கள் எல்லாவற்றையும் செய்யவும், அந்நோய் மேலும் முடுகி எழுந்து, உயிரையும் உருக்குவதாய் ஆக, நினைவு ஒழிந்து உரை யொழிந்து மன்னன் கிடந்தான்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 714

ஆன வன்பிணி நிகழ்வுழி
அமணர்க ளெல்லாம்
மீன வன்செயல் கேட்டலும்
வெய்துயிர்த் தழிந்து
போன கங்குலிற் புகுந்ததின்
விளைவுகொல் என்பார்
மானம் முன்தெரி யாவகை
மன்னன்மாட் டணைந்தார்.

பொழிப்புரை :

இங்ஙனம் வன்மையாக அந்நோய் மூண்டு கிடந்த போழ்து, சமணர்கள் அனைவரும் மன்னனின் நிலைமையைக் கேட்டலும், பெருமூச்சு விட்டு, வருத்தம் அடைந்தனர். அச்சமணர் கள், `கடந்த இரவில் செய்த செயலால் வந்த விளைவுதானோ இது?\' என்று ஐயம் கொண்டு, தமக்கு நேர்ந்த கீழ்நிலை (அவமானம்) முன் தெரியாதவாறு மறைத்து, அரசனிடம் வந்து சேர்ந்தனர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 715

மால்பெருக்குஞ் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதிநிலை கண்டழிந்து வந்த நோயின்
மூலநெறி அறியாதே தங்கள் தெய்வ
மொழிநவில்மந் திரங்கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தைவருதற் கெடுத்த போது
பிடித்தபீ லிகள்பிரம்பி னோடுந் தீந்து
மேலெரியும் பொறிசிதறி வீழக் கண்டு
வெப்பினதி சயம்நோக்கி வெருவின் மிக்கார்.

பொழிப்புரை :

மயக்கத்தைப் பெருக்கும் சமணரான வஞ்சகர் அருகில் வந்து சூழ்ந்து, பாண்டியனின் வெப்பு நோய் முற்றிய நிலை யைப் பார்த்து, உள்ளம் அழிந்து, அவனுக்கு நேர்ந்த நோயின் மூலத்தை அறியாமலேயே தங்கள் இறைவனின் மொழியை எடுத்துச் சொல்லிக் கொண்டு, மயில் இறகால் முன்னும் பின்னுமாகத் தடவுவ தற்கு எடுத்த போது, கையில் பிடித்த பீலிகள் அவற்றுடன் சேர்ந்த பிரம்போடும் தீப்பற்றி எரிதலால் தீப்பொறிகள் சிதறி விழக்கண்டு, வெப்பத்தின் வியக்கத்தக்க நிலையை நோக்கி மிகவும் அஞ்சினர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 716

கருகியமா சுடையாக்கைத் தீயோர் தங்கள்
கைத்தூங்கு குண்டிகைநீர் தெளித்துக் காவாய்
அருகனே அருகனே என்றென் றோதி
அடல்வழுதி மேல்தெளிக்க அந்நீர் பொங்கிப்
பெருகும்எரி தழற்சொரிந்த நெய்போ லாகிப்
பேர்த்துமொரு தழல்அதன்மேற் பெய்தாற் போல
ஒருவரும்இங் கிருமருங்கும் இராது போமென்
றமணரைப்பார்த் துரைத்தரசன் உணர்வு சோர்ந்தான்.

பொழிப்புரை :

கருகிய அழுக்குடைய யாக்கையை உடைய தீயவரான சமணர் தம்கையில் தொங்குகின்ற குண்டிகையின் நீரை மேலே தெளித்து `அருகனே! காப்பாயாக! காப்பாயாக!\' என்று கூறிப் பாண்டியனின் மேல் தெளிக்க, அந்நீர் பொங்கிப் பெருகி எரியும் தீயின் மேல் சொரிந்த நெய்போல் ஆகி, அதன்மேலும் ஒரு நெருப் பினை வாரித் தூவியதுபோல் ஆக, `நீங்கள் எவரும் இங்கு இல்லாது அகன்று செல்லுங்கள்\' என்று மன்னன் அவர்களைப் பார்த்துச் சொல்லி, உணர்வு தளர்ந்து தன்னிலை மறந்தனன்.

குறிப்புரை :

இப்பாடலையும் இதற்கு முன்னுள்ள பாடலையும் இடைச்செருகலாக இருக்கலாம் என்று ஐயுறுவர் சிவக்கவிமணியார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இரண்டாம்:- 1. யாப்பு வேறுபாடு. 2. இவ்வரலாற்றில் வரும் 713ஆம் பாடலில் அரசன் நோய் மிகுதியால் `கருத்தொழிந்து உரை மறைந் தனன்\' எனக் கூறியிருப்ப, இப்பாடலில் `ஒருவருமிங்கு இருமருங்கும் இராது போம்\' எனக் கூறியிருப்பது முரணாகும் என்பது. 2. 714ஆம் பாடல் அமணர்கள் மன்னன் மாட்டணைந்தமை யைக் கூறுகின்றது. அவர்கள் பாண்டியன் மாட்டுச் செய்த செய்கை இவ்விரு பாடல்களில் கூறப்படுகின்றன. ஆதலின் சந்த இசை மாறுவது கூடத் தவறில்லை எனக்கருதலாம். 714ஆம் பாடலில் மன்னன் மாட்டு அணைந்தார் எனக் கூறப்பெற்ற அமணர்கள் மன்னனின் துயர் நோக்கி வாளா இருத்தற்கு இடனில்லை. ஆதலின் அவர்தம் செய்கை களாக இவ்விரு பாடல்களும் இருத்தல் பொருத்தம் என்றே தோன்றுகிறது.

பண் :

பாடல் எண் : 717

பாண்டிமா தேவி யாரும்
பயமெய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப்
புகலியில் வந்து நம்மை
ஆண்டுகொண் டவர்பாற் கங்குல்
அமணர்தாம் செய்த தீங்கு
மூண்டவா றினைய தாகி
முடிந்ததோ என்று கூற.

பொழிப்புரை :

அரசமாதேவியாரும் அச்சத்தை அடைந்து, அமைச்சர் பணியை மேற்கொண்டிருக்கும் குலச்சிறையாரைப் பார்த் துச் `சீகாழியில் தோன்றி நம்மை ஆளாகக் கொண்ட சம்பந்தரிடத்து இரவில் சமணர்கள் செய்த தீங்குதான் இங்ஙனம் முடிந்ததோ!\' என்று சொல்ல,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 718

கொற்றவன் அமைச்ச னாராம்
குலச்சிறை யாருந் தாழ்ந்து
மற்றிதன் கொடுமை இந்த
வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர் தம்பாற்
செய்ததீங் கரசன் பாங்கு
முற்றிய திவர்கள் தீர்க்கின்
முதிர்வதே யாவ தென்பார்.

பொழிப்புரை :

இதனைக் கேட்ட மன்னனின் அமைச்சரான குலச்சிறையாரும் பணிந்து, இவ்வெப்புத் தானும், இச்சமண வஞ்சர் கள் மதில்கள் மூன்றையும் எரித்து அழித்த இறைவரின் அன்பரான ஞானசம்பந்தரிடம் செய்த ஒவ்வாச் செயலால் இங்கு அரசரிடம் இவ்வாறு வந்து நிரம்பியது! இவர்கள் தீர்க்க முயன்றால் இதுமேலும் பெருகி, முடுகியே நிற்கும் என்று உரைத்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 719

இருதிறத் தவரும் மன்னன்
எதிர்பணிந்து இந்த வெப்பு
வருதிறம் புகலி வந்த
வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய
அநுசித மதனால் வந்து
பெருகிய திதற்குத் தீர்வு
பிள்ளையார் அருளே என்று.

பொழிப்புரை :

அம்மையாரும், அமைச்சரும் ஆகிய இருதிறத் தவர்களும், மன்னனை எதிர்நின்று வணங்கி, இவ் வெப்புநோய் வரும் திறமாவது, சீகாழி என்ற பதியில் தோன்றிய வள்ளலாரான ஞானசம்பந்தர் மதுரையில் வந்து தங்க, அதைப் பொறாமல் சமணர் செய்த தீங்கேயாம் என்றுகூறி, இதற்குத் தீர்வு செய்யவல்லது ஞான சம்பந்தரின் அருளேயாகும்! என்று எடுத்துச் சொல்லி,

குறிப்புரை :

சைவநெறி நிற்றலில் இருவரும் ஒன்றுபட்டவர் எனினும், மன்னருக்கு வாழ்க்கைத் துணை நலமாகவும், அமைச்ச ராகவும் அமைந்திருக்கும் முறையில் அம்மையாரும் குலச்சிறை யாரும் `இருதிறத்தவர்\' ஆயினர்.

பண் :

பாடல் எண் : 720

காயமும் மனமும் மாசு
கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை
வளர்ப்பதே வளர்வெண் திங்கள்
மேயவே ணியர்பால் ஞானம்
பெற்றவர் விரும்பி நோக்கில்
தீயஇப் பிணியே அன்றிப்
பிறவியுந் தீரு மென்றார்.

பொழிப்புரை :

`உடலிலும் மனத்திலும் பொருந்திய அழுக்கைக் கழுவாத சமணர்கள் செய்யும் இம் மாயத்திறங்களெல்லாம், இந் நோயை மேலும் வளர்க்குமேயன்றிக் குறைத்தல் செய்யா. வளரும் பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரிடம் ஞானத் தைப் பெற்ற அப்பிள்ளையார் விரும்பி நோக்குவாராயின், தீய இந்நோயே அன்றிப் பிறவிநோயும் நீங்கும்\' என்று கூறினார்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 721

மீனவன் செவியி னூடு
மெய்யுணர் வளிப்போர் கூற
ஞானசம் பந்த ரென்னும்
நாமமந் திரமுஞ் செல்ல
ஆனபோ தயர்வு தன்னை
அகன்றிட அமண ராகும்
மானமில் லவரைப் பார்த்து
மாற்றமொன் றுரைக்க லுற்றான்.

பொழிப்புரை :

பாண்டி மன்னனின் செவியிலே, மெய்யுணர்வு அளிப்பவரான மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் மேற் கூறியவாறு கூற, அதனுள் `ஞானசம்பந்தர்\' என்னும் திருப்பெயரான மந்திரமும் உடன் செல்ல, அதுபொழுது தளர்ச்சி நீங்குதலால், சமணர் கள் என்னும் மானம் இல்லாத மக்களைப் பார்த்து, அம்மன்னவன் சொல்லத் தொடங்கினான்.

குறிப்புரை :

இறைவரின் திருப்பெயராய திருவைந்தெழுத்தே ஆதிமந்திரமாகும், அருந்தமிழ் மந்திரமுமாகும். அதுபோன்றே, ஏகனாகி இறைபணி நிற்கும் அடியவர்களின் திருப்பெயர்களும் மந்திரமாகும். அதுபற்றியே `ஞானசம்பந்தர்\' என்னும் நாம மந்திரமும் சொல்ல என்றார் ஆசிரியர். `திருநாவுக்கரசு\' எனும் திருமந்திரத்தைச் சொல்லியே அப்பூதியடிகளார் உய்திபெற்றதும், நம்பியாரூரர் எனும் திருப்பெயரைச் சொல்லியே சடங்கவி சிவாசாரியார் திருமகளார், பெருமிழலைக் குறும்பர், சோமாசிமாறர் ஆகியோர் உய்தி பெற்றதும் நினைவு கூர்க. ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நம்பியாரூரர், மணி வாசகர் ஆகிய நால்வர் பெருமக்களின் திருப்பெயர்களிலும் உள்ள ஒற்றுகளை நீக்க, அவை ஒவ்வொன்றும் ஐந்தெழுத்தாக அமைதல் காணலாம்.

பண் :

பாடல் எண் : 722

மன்னவன் அவரை நோக்கி
மற்றிவர் செய்கை எல்லாம்
இன்னவா றெய்தும் நோய்க்கே
ஏதுவா யினஎன் றெண்ணி
மன்னிய சைவ நீதி
மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய்
அகலுமேல் அறிவேன் என்றான்.

பொழிப்புரை :

மற்று இவர் செயல்கள் எல்லாம் இத்தகைய நோய்க்கே காரணமாயின என்று மனத்தில் எண்ணி அரசன் அவர் களைப் பார்த்து, `நிலைபெற்ற சைவ ஒழுக்கம் சான்ற பெருமறைச் செல்வரான பிள்ளையார் இங்குவர, அவரது அருளால் இந்தநோய் நீங்குமாயின் தெளிவுபெறுவேன்!\' என மன்னன் இயம்பினன்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. முன்னைய பாட்டில் சமணர்களைப் பார்த்துச் சொல்லலானான் என்பது கொண்டு, இப்பாடற் கருத்தை அவர்களிடம் கூறினான் என்றல் சாலாது. அவர் களைப் பார்த்து இவர் செய்தவையெல்லாம் நோய்க்கே ஏதுவாயின என்று கூறியவன் பின்னுரைக்கும் கருத்துக்களை யெல்லாம் அம்மை யாரையும் அமைச்சரையும் நோக்கிக் கூறியனவேயாம். வரும் பாடல் தொடர்பு கொண்டும் இவ்வுண்மை யறியலாம்.

பண் :

பாடல் எண் : 723

என்றுமுன் கூறிப் பின்னும்
யானுற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன்
விரகுண்டேல் அழையும் என்ன
அன்றவர் உவகை பொங்கி
ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்றநீர் வெள்ளம் போலுங்
காதல்வெள் ளத்தில் செல்வார்

பொழிப்புரை :

என்று முன் கூறிய மன்னன், பின்னும் அங்கிருந்த அம்மையாரையும் அமைச்சரையும் பார்த்து `யான் அடைந்த நோயைப் போக்கி வெற்றி கொள்பவரின் பக்கம் சேர்வேன். என் நோய் நீங்கும் வழியுண்டாயின் அவரை அழையுங்கள்!\' என்று அவர் களிடம் கூற, அவர்களும், அணையை உடைத்துச் சென்ற வெள்ளம் போல், காழியார்பால் பேரன்பு கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்துடன் செல்பவராய்,

குறிப்புரை :

விரகுண்டேல் - அச்சிறுவரை அழைத்தற்குரிய வழி யுண்டேல் என்பாரும் உளர். விரகு - வழி (உபாயம்).

பண் :

பாடல் எண் : 724

பாயுடைப் பாத கத்தோர்
திருமடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி
உள்ளழி திருவுள் ளத்தால்
மேயஅத் துயரம் நீங்க
விருப்புறு விரைவி னோடு
நாயகப் பிள்ளை யார்தம்
நற்பதம் பணிவா ராகி.

பொழிப்புரை :

பாயை உடையாய்க் கொண்ட சமணர்களாகிய பாதகர்கள் திருமடத்தில் செய்த தீவினைச் செயலை எண்ணி, உள் அழியும் திருவுள்ளத்தில் பொருந்திய அத்துன்பம் நீங்குமாறு, விருப் பம் மிக்க விரைவுடன் தம் தலைவரான பிள்ளையாரின் சீரிய திருவடி களைப் பணிவார்களாய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 725

மன்னவன் இடும்பை தீர
மற்றவன் பணிமேற் கொண்டே
அன்னமென் டையி னாரும்
அணிமணிச் சிவிகை யேறி
மின்னிடை மடவார் சூழ
வேற்படை அமைச்ச னாரும்
முன்னணைந் தேகச் சண்பை
முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.

பொழிப்புரை :

அரசனின் துன்பம் நீங்குமாறு அவனது பணியை மேற்கொண்டு, அன்னம் போன்ற மென்மையான நடையுடைய மங்கையர்க்கரசியாரும், அழகிய மணிகள் பதித்த சிவிகையின் மேல் அமர்ந்து மின்போன்ற இடையையுடைய பெண்கள் சூழ்ந்து வர, வேற்படையை யுடைய அமைச்சரான குலச்சிறையார் முன்னால் செல்லச் சீகாழித் தலைவர் இருக்கும் திருமடத்தைச் சேர்ந்தனர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 726

திருமடஞ் சாரச் சென்று
சேயரிக் கண்ணி னார்முன்
வருபரி இழிந்து நின்ற
அமைச்சனார் வந்த பான்மை
சிரபுரப் பிள்ளை யார்க்கு
விண்ணப்பஞ் செய்வீர் என்னப்
பரிசனத் தவரும் புக்குப்
பதமறிந் துணர்த்து கின்றார்.

பொழிப்புரை :

திருமடத்தைச் சேர நெருங்கிச் சென்றபின், சிவந்த வரிகள் படர்ந்த கண்களையுடைய அம்மையாரின் முன்பு ஏறி வந்த குதிரையினின்றும் இறங்கி நின்ற அமைச்சர் தாமும், `நாங்கள் இங்கு வந்துள்ளதைச் சீகாழிப் பிள்ளையாரிடம் கூறுங்கள்!\' என அங்குள்ள பணியாளர்களிடம் கூற, அவர்களும் உள்ளே சென்று விண்ணப்பிக்கத் தக்கதோர் அமையம் அறிந்து கூறுவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 727

பாண்டிமா தேவி யாரும்
பரிவுடை அமைச்ச னாரும்
ஈண்டுவந் தணைந்தா ரென்று
விண்ணப்பஞ் செய்யச் சண்பை
ஆண்டகை யாரும் ஈண்ட
அழையுமென் றருளிச் செய்ய
மீண்டுபோந் தழைக்கப் புக்கார்
விரைவுறு விருப்பின் மிக்கார்.

பொழிப்புரை :

`பாண்டிமாதேவியாரும், அன்புடைய அமைச்ச ரும் ஈண்டு வந்துள்ளனர்\' என்று பணியாளர்கள் உரைக்க, சீகாழித் தலைவரும் `அவர்களை உடன் அழையுங்கள்\' என்று அருள, பணியா ளர்களும் அழைப்பப் பெருவிருப்பத்துடன் அவர்கள் உட்புகுந்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 728

ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி
மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்கமலர்க் கொன்றைச்
செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக்
கண்களிப்பக் கண்டார்கள்.

பொழிப்புரை :

சிவஞானமே உருவாய் அமைந்த திருவுரு உடையாரை, நான்மறைகளின் ஒப்பற்ற துணையாயினவரை, வானத்தின் மீதன்றி மண்உலகத்தில் வளரும் பிறைச்சந்திரன் போன்ற வரை, தேன்ஊறி வழியும் கொன்றை மலரையணிந்த சிவந்த சடை யுடைய சிவபெருமானின் சீர்மைகளை இடையறாது தொடுத்து இசைக்கும் கானத்தின் ஏழு பிறப்புக்கு இடமான பிள்ளையாரைக் கண்கள் களிப்படையப் பார்த்தனர்.

குறிப்புரை :

சிவஞானம் கலந்த திருமுலைப் பாலை உமாதேவியார் ஊட்ட, உண்ட பிள்ளையார், அப்போதே கலைஞானமும் மெய்ஞ் ஞானமும் பெற்றுச் சிவஞானசம்பந்தராயினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். மேலும் திருத்துருத்தித் தேவாரத்தில், `திருந்தடி மறக்குமாறிலாத என்னை மையல் செய்து மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்\' என்று ஞானசம்பந்தரே குறிப்பிடுகிறார். எப்போதும் திருவடி மறக்குமாறிலாத பிள்ளையார், ஞானவடிவாகவே திகழ்கிறார். எனவே மங்கையற்கரசியாரும் குலச்சிறையாரும் அத்திருவுருவத் தைச் சிவஞானத்தின் திருவுருவாகவே கண்டு போற்றினர். உள்ளும் புறமும் ஒரு தன்மைக் காட்சியர் என்பது கருத்து. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாய நாதன் நாமத்தையே என்றும் ஓதியும் உணர்த்தி யும் வருதலின் `நான்மறையின் தனித்துணை\' என்றார். மதி இரவில் காணவல்லது, விண்ணகத்தது, சாபத்தால் வளர்ந்தும் தேய்ந்தும் வருவது. ஆனால் இம்மதியோ எப்பொழுதும் காண்டற் குரியது, மண்ணகத்தது, ஞானத்தால் வளர்ந்து கொண்டே வருவது, என்றும் அழகியது, இளமையானது, இனையபல வேற்றுமைகள் தோன்ற, `வானத்தின் மிசை யன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்து\' என்றார். கானம் - இசை, அது எழுவகைப்பட்ட சுரங்களில் பிறந்து விரிவது. பிள்ளையாரும் எழுவகைக் கானங்களும் ஒன்றி எழும் இசைப் பாடலை, `நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்\' எனப் போற்றி மகிழுமாறு பாடிமகிழ்ந்து வருபவர். ஆதலின் அவரைக் `கானத்தின் எழுபிறப்பு\' என்றார். பாண்டியரின் உடற்பிணியையன்றி உயிர்ப்பிணியையும் நீக்க வரும் குருமூர்த்திகளாயிருத்தலின், ஆசிரி யர் சேக்கிழார், `தெளிவு குருவின் திருமேனி காண்டல்\'(தி.10 பா.138) என்பது பற்றி, அவர்தம் திருவுருவை இவ்வாறு காட்டுவாராயினர்,

பண் :

பாடல் எண் : 729

கண்டபொழு தமண்கொடியோர்
செய்தகடுந் தொழில்நினைந்தே
மண்டியகண் ணருவிநீர்
பாயமலர்க் கைகுவித்துப்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப்
பொருந்தநில முறவிழுந்தார்
கொண்டகுறிப் போடுநெடி
துயிர்த்தழிந்த கொள்கையராய்.

பொழிப்புரை :

அங்ஙனம் பார்த்த பொழுது, சமணரான கொடிய வர்கள் செய்த கொடுந் தொழிலை எண்ணி, கண்களினின்றும் அருவி போல மிகுந்த நீர் சொரிய, மலர் போன்ற கைகளைக் கூப்பி, பிள்ளை யாரின் தாமரை மலர் அனைய சிவந்த திருவடிகளின் கீழே பொருந்தும் படி நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கியவர்களாய், உட்கொண்ட குறிப்புடன் பெருமூச்செறிந்து, உள்ளம் அழிந்த நிலைமையராய்,

குறிப்புரை :

உட்கொண்ட குறிப்பு - பிள்ளையாருக்கு அமணர்கள் செய்த கொடுஞ்செயல்பற்றிய குறிப்பு.

பண் :

பாடல் எண் : 730

உரைகுழறி மெய்ந்நடுங்கி
ஒன்றும்அறிந் திலராகித்
தரையின்மிசைப் புரண்டயர்ந்து
சரணகம லம்பற்றிக்
கரையில்கவ லைக்கடற்கோர்
கரைபற்றி னார்போன்று
விரைவுறுமெய் அன்பினால்
விடாதொழிவார் தமைக்கண்டு.

பொழிப்புரை :

சொல் தடுமாறி உடல் நடுங்கி உள்ளம் கலங்கிய தால் ஒன்றும் அறியாதவர்களாகி, நிலத்தின்மீது புரண்டு, தளர்ச்சி கொண்டு, பிள்ளையாரின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டு, எல்லை இல்லாத கவலைக் கடலில் விழுந்து தளர்பவர்கள், அதனின்றும் ஏறுதற்கு உரிய கரையைப் பற்றிக் கொண்டவர் போல், விரைகின்ற உள்ளத்து அன்பு காரணமாக, விடாமல் பற்றிய படியே கிடந்த அவர்களைப் பார்த்து,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 731

அருமறைவாழ் பூம்புகலி
அண்ணலார் அடிபூண்ட
இருவரையுந் திருக்கையால்
எடுத்தருளித் தேற்றிடவும்
தெருமந்து தெளியாதார்
தமைநோக்கிச் சிறப்பருளித்
திருவுடையீர் உங்கள்பால்
தீங்குளதோ எனவினவ.

பொழிப்புரை :

அரிய மறைகள் வாழ்வதற்காகச் சீகாழியில் வந்து தோன்றிய அண்ணலாரான பிள்ளையார், தம் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கிடந்த அவ்விருவரையும், தம் கைகளால் எடுத்துத் தேறுதல் செய்யவும், உள்ளச் சுழற்சியில் தெளிவடையாமல் கலங்கிய அவர் களைப் பார்த்தருளிச் சிறப்பு செய்து, `திருவுடையவர்களே! உங்க ளிடம் ஏதேனும் தீமை நேர்ந்துளதோ?\' என வினவ,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 732

வெஞ்சமணர் முன்செய்த
வஞ்சனைக்கு மிகஅழிந்தே
அஞ்சினோம் திருமேனிக்
கடாதென்றே அதுதீர்ந்தோம்
வஞ்சகர்மற் றவர்செய்த
தீத்தொழில்போய் மன்னவன்பால்
எஞ்சலிலாக் கொடுவெதுப்பாய்
எழாநின்ற தெனத்தொழுது.

பொழிப்புரை :

`கொடிய சமணர்கள் முன்பு செய்த வஞ்சனை களைப் பற்றி மிகவும் கலங்கி அச்சம் கொண்டோம். தங்கள் திருமேனி யிடத்து அவை ஒன்றும் தீங்கு செய்ய இயலாது எனத் துணிந்து, அவ்வச்சம் தவிர்ந்தோம். வஞ்சகர்களாகிய அவர்கள் செய்த தீய செயலே மன்னனிடத்து அளவில்லாத கொடிய வெப்பு நோயாய் உருக்கொண்டு நிற்கின்றது\' எனக் கூறி வணங்கி,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 733

வெய்யதொழில் அமண்குண்டர்
விளைக்கவரும் வெதுப்பவர்தாஞ்
செய்யுமதி மாயைகளால்
தீராமைத் தீப்பிணியால்
மையலுறு மன்னவன்முன்
மற்றவரை வென்றருளில்
உய்யும்எம துயிரும் அவன்
உயிருமென உரைத்தார்கள்.

பொழிப்புரை :

`கொடிய செயல் செய்துவரும் சமணர்களான கீழ்மக்கள் செய்த தவற்றால் உண்டான வெப்பு நோயானது, அவர்கள் செய்யும் மாயத் தீர்வுத் தொழில்களாலே நீங்காமையின், தீய நோயால் மயக்கம் அடைந்த அரசன் முன்பு, அவர்களை வென்று அருளிச் செய்யின், எம் உயிரும் மன்னவர் உயிரும் உய்யும்!` என்று உரைத்தனர்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 734

என்றவர் உரைத்த போதில்
எழில்கொள்பூம் புகலி வேந்தர்
ஒன்றும்நீர் அஞ்ச வேண்டா
உணர்விலா அமணர் தம்மை
இன்றுநீர் உவகை எய்த
யாவருங் காண வாதில்
வென்றுமீ னவனை வெண்ணீ
றணிவிப்பன் விதியால் என்றார்.

பொழிப்புரை :

என இங்ஙனம் அவர்கள் உரைத்தபோது, அழகு பொருந்திய பொலிவுமிக்க தலைவரான பிள்ளையார், `நீவிர் ஒன்றற்கும் அஞ்சவேண்டா! உணர்வற்ற சமணர்களை இன்று நீவிர் மகிழ்ச்சியடையுமாறு எல்லோரும் காணுமாறு வென்று, பாண்டிய னைத் திருநீறு அணியும்படி இறைவன் ஆணையினால் செய்வன்!\' என மொழிந்தருளினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 735

மொழிந்தருள அதுகேட்டு
முன்னிறைஞ்சி முகமலர்வார்
அழுந்தும்இடர்க் கடலிடைநின்
றடியோமை எடுத்தருளச்
செழுந்தரளச் சிவிகையின்மேல்
தென்னாடு செய்தவத்தால்
எழுந்தருளப் பேறுடையோம்
என்பெறோம் எனத்தொழலும்.

பொழிப்புரை :

இவ்வாறு ஞானசம்பந்தர் உரைத்ததை அவர்கள் கேட்டுத் திருமுன்பு வணங்கி, முகம் மலர்ச்சி கொண்டு, `ஆழ்ந்து கிடந்த துன்பக் கடலினின்றும் அடியோமை மேலே எடுத்தருளும் பொருட்டுச் செழுமையான முத்துச் சிவிகையின் மீது தென்னாடு செய்த பெருந்தவப் பயனால் எழுந்தருளும் பெரும்பேறு பெற்றோம், எனவே இனி என்ன பேறுதான் பெறமாட்டோம்\' என்று சொல்லி வணங்கியதும்,

குறிப்புரை :

இதனையும் இதற்குமுன்னுள்ள பாடலையும் இடைச்செருகலாக இருக்கலாமோ என்று ஐயுறுவர் சிவக்கவிமணி யார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இரண்டாம்: (1) யாப்பு வேறு பாடுடைமை (2) 736ஆவது பாடலில் ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் எனக் கூறும் பிள்ளையார் `சேவுயர் கொடியினார்தம் திருவுள்ளம் அறிவேன்\' என்றும் கூறுகின்றமை. அவ்வாறு கூறுமவர் 734ஆம் பாடலில் `யாவரும் காண வாதில் வென்று மீனவனை வெண் ணீறு அணிவிப்பன்\' எனக் கூறுவதாக இருப்பது பொருந்துவதாகத் தோன்றவில்லை என்பது அவர் கருத்து. எனவே சிவக்கவிமணி யாரின் கருத்துப்படி இவ்விரு பாடல்களும் இடைச்செருகலாக இருக்கலாமோ? எனும் ஐயமே வலுப்பெறுகின்றது.

பண் :

பாடல் எண் : 736

ஆவதும் அழிவும் எல்லாம்
அவர்செயல் அமண ராகும்
பாவகா ரிகளை நோக்கும்
பழுதுடன் நீங்க வெல்லச்
சேவுயர் கொடியி னார்தந்
திருவுள்ளம் அறிவே னென்று
பூவலர் பொழில்சூழ் சண்பைப்
புரவலர் போது கின்றார்.

பொழிப்புரை :

ஆக்கம் அழிவு ஆகிய அவையெல்லாம் `அவர் செயல்\' என்று மறைகள் சுட்டிக் கூறும் இறைவரின் செயலே ஆகும். சமணராய பாவம் செய்பவர்களைப் பார்க்கவும், பேசவும், மற்றும் சிலசெயல்கள் செய்யவும் நேர்தலால் வரும் குற்றங்கள் எல்லாம் அவ்வச் செயல்களுடன் நீங்கவும், அவர்களை வெல்லவும், விடைக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்பை அறிவேன்\' எனக் கூறி, மலர்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான பிள்ளையார் செல்பவராய்,

குறிப்புரை :

தீயவர்களைக் காண்டலும், அவரொடு பேசுதலும், தீய செயல்கள் செய்ய நேர்தலும் தீங்கேயாகும். ஆதலின் இவ்வனைத்துச் செயல்களுக்கும் நேரும் குற்றம் நீங்க இறையருளை வேண்டுவன் என்றார். `பிரட்டரைக் காணாகண், வாய்பேசாது அப்பேய்களோடே\' `வெண்ணீறணி கிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே\' (தி.8 அச்சப். 5) எனவரும் திருவாக்குகளும் காண்க.

பண் :

பாடல் எண் : 737

வையகம் உய்ய வந்த
வள்ளலார் மடத்தி னின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர்
வெள்ளமும் தாமும் போந்து
கையிணை தலையின் மீது
குவியக்கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும்
திருவால வாயுள் புக்கார்.

பொழிப்புரை :

இவ்வுலகுய்ய வந்த ஞானசம்பந்தர், தாம் இருந்த மடத்தினின்றும் உடலில் திருநீற்றை அணிந்து கொண்டுள்ள தொண் டர்களின் வெள்ளமும் தாமுமாகச் சென்று இருகைகளும் தலைமீது குவியவும், கண்கள் மலர்ச்சியைக் காட்டவும், சிவந்த சடையை யுடைய இறைவர் நிலைபெற எழுந்தருளியிருக்கின்ற திருவாலவாய்க் கோயிலுக்குள் புகுந்தனர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 738

நோக்கிட விதியி லாரை
நோக்கியான் வாது செய்யத்
தீக்கனல் மேனி யானே
திருவுள மேஎன் றெண்ணில்
பாக்கியப் பயனாய் உள்ள
பாலறா வாயர் மெய்ம்மை
நோக்கிவண் டமிழ்செய் மாலைப்
பதிகந்தான் நுவல லுற்றார்.

பொழிப்புரை :

`தீயைப் போன்ற திருமேனியையுடையவரே! நோக்குதற்குத் தகுதியில்லாத சமணரை நோக்கி யான் வாது செய் தற்குத் தங்களுக்குத் திருவுள்ளமே?\' என்று எண்ணற்ற நற்பேற்றின் பயனாய் உள்ள பாலறாவாயரான ஞானசம்பந்தர், திருவருளின் உண்மைத் திறத்தை நோக்கி, வளமை பொருந்திய தமிழால் ஆய மாலையான திருப்பதிகத்தைப் பாடியருள்வாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 739

கானிடை ஆடு வாரைக்
காட்டுமா வுரிமுன் பாடித்
தேனலர் கொன்றை யார்தம்
திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி
என்றெடுத் துரையின் மாலை
மானமில் அமணர் தம்மை
வாதில்வென் றழிக்கப் பாடி.

பொழிப்புரை :

சுடுகாட்டில் ஆடல் செய்பவரான இறைவரைக் `காட்டு மாவுரி\' எனத் தொடங்கிப் பாடி, தேன் சிந்துகின்ற கொன்றை மலர் சூடிய இறைவரின் திருவுள்ளக் குறிப்பை அறிந்து கொண்டு , மேலும் ஊனத்தை இல்லையாகச் செய்யும் `வேத வேள்வி\' எனத் தொடங்கி, நற்சொற்களாலாய பதிகத்தை மானம் இல்லாத சமணர் களை வாதத்தில் வென்று அழிக்கப் பாடி,

குறிப்புரை :

`காட்டுமாவதுரித்து\' (தி.3 ப.47) எனத் தொடங்கும் பதிகம் கௌசிகப் பண்ணிலமைந்ததாகும். `வேத வேள்வியை\' (தி.3 ப.108) எனத் தொடங்கும் பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணிலமைந்த பதிகமாகும். இவ்விரு பதிகங்களிலும் `வாது செய்யத் திருவுள்ளமே\' என்பதோடு, `அவர்களை அழிக்கத் திருவுள்ளமே\' எனவரும் குறிப்பும் அமைந்துள்ளன. இவற்றுள் முன்னைய பதிகத்தில் வரும் திருக்கடைக்காப்பு, `தெந்தெனாமுரலும் திருஆலவாய், மைந்தனே என்று வல்லமண் ஆசறச் சந்தமார் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம், பந்தன் சொற்பகரும் பழி நீங்கவே\' என்பதாகும். பின்னைய பதிகத்தில் வரும் திருக்கடைக்காப்பு, `கூடல் ஆலவாய்க் கோனை விடை கொண்டு, வாடல் மேனி அமணரை வாட்டிட, மாடக் காழிச்சம் பந்தன் மதித்த இப், பாடல் வல்லவர் பாக்கியவாளரே\' என்பதாகும். இவ்வரிய குறிப்புகளை உளங்கொண்டே, 736ஆவது பாடலில், சமணர்களைப் பார்த்தும், பேசியும், சில வாதங்களைச் செய்தும் கொண்ட பழிகளைப் போக்கவும், அவர்களை அழிக்கவும் இறை வனின் திருவுளக்குறிப்பை அறிகுவன் எனப் பிள்ளையார் திருக் கோயிலுக்குள் சென்றார் என ஆசிரியர் அருளுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 740

ஆலமே அமுத மாக
உண்டுவா னவர்க்க ளித்துக்
காலனை மார்க்கண் டர்க்காக்
காய்ந்தனை அடியேற் கின்று
ஞாலம்நின் புகழே யாக
வேண்டும்நான் மறைக ளேத்துஞ்
சீலமே ஆல வாயில்
சிவபெரு மானே என்றார்.

பொழிப்புரை :

நான்மறைகளும் போற்றும் சீலமானவரே! திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் பெருமானாரே! தாங்கள் நஞ்சினையே அமுதமாய் உண்டு தேவர்க்கு அருள் செய்ததுடன், மார்க்கண்டேயருக்காகக் காலனையும் உதைத்து அருளினீர்! இன்று அடியேனுக்கு அருள் சுரந்தீர். இந்நிலவுலகம் முழுதும் தங்களது புகழே ஆகப் பரவவேண்டும் என வேண்டிக் கொண்டார்.

குறிப்புரை :

`ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயி லுறை எம் ஆதியே\' எனப் பதிகப் பாடல்தொறும் வரும் பொன் மொழிகளை ஆசிரியர் இப்பாடலில் கொண்டெடுத்து மொழிகின்றார். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 741

நாதர்தம் அருள்முன் பெற்று
நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி
விடைகொண்டு புனித நீற்று
மேதகு கோலத் தோடும்
விருப்புறு தொண்டர் சூழ
மூதெயில் கபாடம் நீடு
முதல்திரு வாயில் சார்ந்தார்.

பொழிப்புரை :

இறைவரின் திருவருளை முன்னே பெற்றுக் கொண்டு, நாடிய அருள் உணரப் பெற்றமையால், பெற்ற மகிழ்ச்சி பொங்கச் செல்பவராய், வணங்கிப் போற்றி, வாதில் வெல்ல இறைவர் அருள் பெற்றுக் கொண்டு, தூய திருநீற்றின் திருக்கோலப் பொலி வுடன் அன்புடைய தொண்டர்கள் சூழ்ந்துவரப் பழமையான மதில் பொருந்திய முதல் திருவாயிலை அடைந்தார்.

குறிப்புரை :

`வாது செய்யத் திருவுள்ளமே\' `அமணரை அழிக்கத் திருவுள்ளமே\' என்றெல்லாம் விண்ணப்பித்துக் கொண்டமைக்கு, இறைவன் அருள் சுரந்தமை தோன்ற, `நாதர்தம் அருள் முன் பெற்று\' என்றார்.

பண் :

பாடல் எண் : 742

அம்மலர்க் குழலி னார்க்கும்
அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம்மணிப் பலகை முத்தின்
சிவிகைமேற் கொண்ட போதில்
எம்மருங் கினிலும் தொண்டர்
எடுத்தஆர்ப் பெல்லை இன்றி
மும்மைநீ டுலக மெல்லாம்
முழுதுடன் நிறைந்த தன்றே.

பொழிப்புரை :

அழகிய மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மங்கையர்க்கரசியாருக்கும் குலச்சிறையாருக்கும் அருள்செய்ய வேண்டி, சிவந்த மணிகள் பொருந்திய பலகையுடைய முத்துச் சிவிகை மீது சம்பந்தர் ஏறியருளியபோது, எம்மருங்கிலும் இருந்த தொண்டர் கள் எழுப்பிய மகிழ்வொலி அப்பொழுதே அளவில்லாது பெருகி, மூன்றாயுள்ள உலகங்களிலும் நிறைந்தது.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 743

பல்லிய நாதம் பொங்கப்
படர்திரு நீற்றின் சோதி
நல்லொளி வட்ட மாகி
நண்ணிமேல் வருவ தென்ன
வில்வளர் தரளக் கோவை
வெண்குடை நிழற்றி வெவ்வே
றெல்லையில் முத்தின் காளம்
தாரைசங் கெங்கும் ஊத.

பொழிப்புரை :

பலவகையான இயங்களின் ஒலிமிகுந்து ஒலிக்க, எங்கும் படர்ந்து பெருகும் திருநீற்றின் ஒளியானது ஒரு நல்ல ஒளிவட்டமாய் உருக்கொண்டு பொருந்தி மேலே வருவது போல, ஒளி பெருகும் முத்துக் கோவைகளையுடைய வெண்குடையானது நிழலைச் செய்ய, வேறு வேறாக அளவில்லாத முத்துக் காளமும் தாரை யும் சங்குகளும் எங்கும் ஒலிக்க,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 744

கண்ணினுக் கணியாய் உள்ளார்
எழுச்சியிற் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு
நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என்கொல்
பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து
மதுரையில் புகுத என்றார்.

பொழிப்புரை :

கண்ணினுக்கு அணியாக விளங்கும் பிள்ளை யாரின் திருவெழுச்சியின் காட்சியைப் பெற்ற அந்நகர மக்கள், தாங்கள் சார்ந்த சமண சமயத்தை நம்பினராயினும், `பாண்டிய மன் னன் அடைக்கலம் புகும் பொருளாய்ப் பொருந்திப் புண்ணிய வடிவி னரான இவர், மதுரையில் வருதற்கு இந்தப் பாண்டியன் முன் செய்த தவங்கள்தாம் எவையோ?\' என உரைத்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 745

தென்னவன் தேவி யாரும்
திருமணிச் சிவிகை மீது
பின்வர அமைச்சர் முன்பு
பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப்
பொன்னணி மாட வீதி
யூடெழுந் தருளிப் புக்கார்
கன்னிநா டுடையான் கோயில்
காழிநா டுடைய பிள்ளை.

பொழிப்புரை :

பாண்டியனின் மனைவியாரும் அழகிய மணி களையுடைய சிவிகையில் அமர்ந்து பின்வர, அமைச்சரான குலச் சிறையார், தம் திருமுன்பு செல்லும் தொண்டர் கூட்டத்துடன் கலந்து செல்ல, இவ்வாறு பொன் அணிகளையுடைய மாடவீதியின் வழியாய் எழுந்தருளிச் சென்று, சீகாழி நாட்டுத் தலைவரான ஞானசம்பந்தர், கன்னிநாட்டரசனான பாண்டியனின் அரண்மனைக்குள் புகுந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 746

கொற்றவன் தன்பால் முன்பு
குலச்சிறை யார்வந் தெய்திப்
பொற்றட மதில்சூழ் சண்பைப்
புரவலர் வரவு கூற
முற்றுயர் சிறிது நீங்கி
முழுமணி அணிப்பொற் பீடம்
மற்றவன் முடியின் பக்கத்
திடுகென வல்ல னானான்.

பொழிப்புரை :

பாண்டியன் முன்னால் குலச்சிறையார் வந்து சேர்ந்து, பொன்னால் ஆன மதில் சூழ்ந்த சீகாழித் தலைவரான ஞான சம்பந்தரின் வருகையை அறிவிக்க, முன்னிருந்த துன்பம் சிறிது நீங்கப் பெற்ற அப் பாண்டியன் `முழுதும் மணிகள் பதித்த பொற் பீடத்தைத் தன் தலைப் பக்கத்தில் இடுவீராக!\' என்று சொல்லவல்ல ஆற்றல் உடை யவன் ஆயினன்.

குறிப்புரை :

பீடத்தைத் தலைப் பக்கம் இடுக என்று சொல்லுவதற்கு வல்லன் ஆயினான் எனவே, சமண சமயச் சார்பால் அதுகாறும் அத் துணையளவு பிணியோடிருந்த பான்மை தெரிய நின்றது.

பண் :

பாடல் எண் : 747

மந்திரி யாரைப் பின்னும்
எதிர்செல மன்னன் ஏவச்
சிந்தையுள் மகிழ்ந்து போந்தார்
செயலையான் சமயத் துள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன்
பரிசுகண் டிதுவோ பண்பால்
நந்தனிச் சமயந் தன்னை
நாட்டுமா றென்று பின்னும்.

பொழிப்புரை :

மேலும், தன் அமைச்சரைச் சென்று ஞானசம் பந்தரை அழைத்து வருமாறு ஏவிட, அவரும் மனத்தில் மகிழ்ச்சி உடை யவராய்ச் சென்றார். அசோக மரத்தினடியில் இருக்கும் அருகனது சமயத்தில் உள்ள சமணர்கள், பசிய பூங்கொத்துகளால் ஆன வேப்ப மாலையை அணிந்த மார்பையுடைய பாண்டிய மன்னனின் தன்மை யைப் பார்த்து `நம் ஒப்பற்ற சமயத்தைப் பண்பாய் நாட்டும் வழி இதுவோ!\' எனக் கூறி மேலும் சொல்வார்களாய்,

குறிப்புரை :

செயலை - அசோகமரம். அதன் அடியில் இருத்தலின் அருகனைச் `செயலையான்\' என்றார்.

பண் :

பாடல் எண் : 748

நின்அற நெறியை நீயே
காத்தருள் செய்தி யாகில்
அன்னவர் தம்மை இங்கே
அழைத்தனை அவரும் யாமும்
முன்னுற ஒக்கத் தீர்க்க
மொழிந்துமற் றவரால் தீர்ந்த
தென்னினும் யாமும் தீர்த்தோ
மாகவும் இசைவா யென்றார்.

பொழிப்புரை :

`நின் அறநெறியான சமயத்தை நீயே காத்தருள் செய்வாயானால், அவரை இங்கே வருமாறு அழைப்பினும், அவரும் நாங்களும் உன் முன்னே ஒருங்கு கூடி, இந்நோயைத் தீர்க்கும்படி சொல்லி, மற்று அவரால் நோய் தீர்ந்தாலும் நாங்களும் தீர்த்தோம் என்று கூற, உடன்படுவாயாக!\' எனக் கூறினர்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 749

பொய்தவ மாகக் கொண்ட
புன்தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன்வந் தெய்தும்
செவ்விமுன் னுறுத லாலே
எய்திய தெய்வச் சார்வால்
இருதிறத் தீருந் தீரும்
கைதவம் பேச மாட்டேன்
என்றுகை தவனுஞ் சொன்னான்.

பொழிப்புரை :

பொய்யை மெய்த்தவமாகக் கொண்ட புன்மை யான தலையையுடைய சமணர்கள் இவ்வாறு சொல்ல, `முன்செய்த தவத்தின் பயன் வந்து நன்மை அளிக்கும் காலம் பொருந்துவதனால், சேர்ந்த உங்கள் தெய்வங்களின் சார்பினால் இருபக்கத்தவரும் தீருங்கள்! நான் நடுவு நிலையினின்று தவறி வஞ்சம் பேசமாட்டேன்!\' எனப் பாண்டியன் கூறினான்.

குறிப்புரை :

கைதவம் - வஞ்சனை ; அஃதாவது நடுவின்றிச் சொல்லு தல், கைதவன் - பாண்டியரின் மரபுப்பெயர்; கைவந்த தவத்தினை யுடையவன் எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 750

என்றவன் உரைப்பக் குண்டர்
எண்ணங்கெட் டிருந்த எல்லைத்
தென்தமிழ் நாடு செய்த
செய்தவக் கொழுந்து போல்வார்
வன்தனிப் பவனம் முன்னர்
வாயிலுள் அணைந்து மாடு
பொன்திகழ் தரளப் பத்திச்
சிவிகைநின் றிழிந்து புக்கார்.

பொழிப்புரை :

என்று அப்பாண்டியன் உரைக்க, அமணர்கள் தம் கருத்தழிய மனம் குன்றியிருந்தநிலையில், தென்தமிழ் நாடான பாண்டிய நாடு முன்செய்த தவத்தின் கொழுந்து அனைய ஞான சம்பந்தர், வலிய ஒப்பில்லாத அரண்மனையின் முன் உள்ள வாயிலை அடைந்து, எம்மருங்கும் பொன் அணிந்து விளங்கும் முத்துக்களை உடைய சிவிகையினின்றும் இறங்கி உள்ளே புகுந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 751

குலச்சிறை யார்முன் பெய்தக்
கொற்றவன் தேவி யாரும்
தலத்திடை இழிந்து சென்றார்
தண்டமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானி னின்று
நீளிருள் நீங்க வந்த
கலைச்செழுந் திங்கள் போலும்
கவுணியர் தம்மைக் கண்டான்.

பொழிப்புரை :

மன்னனிடம் அறிவித்த பின்பு, குலச்சிறையார் ஞானசம்பந்தரின் திருமுன்பு சேர, அரசமாதேவியாரும் அரண்மனை வந்து தம் சிவிகையினின்றும் இறங்கி வந்தனர். குளிர்ந்த தமிழ் நாட்டின் மன்னனான பாண்டியன், வானத்தினின்றும் நீண்ட இருள் நீங்குமாறு, நிலத்தில் வந்து நிறைந்த, நிறை நிலவு எனவரும் கவுணியர் பெருமானைக் கண்டான்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 752

கண்டஅப் பொழுதே வேந்தன்
கையெடுத் தெய்த நோக்கித்
தண்துணர் முடியின் பாங்கர்த்
தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி
அதன்மிசை இருந்தார் மாயை
கொண்டவல் லமணர் எல்லாம்
குறிப்பினுள் அச்சங் கொண்டார்.

பொழிப்புரை :

பார்த்த அப்பொழுதே மன்னன் கைகளைத் தூக்கி வழிபடும் பண்பினை நோக்கி, குளிர்ந்த மலர்களையுடைய தன் முடியின் பக்கத்தில் இடப்பட்ட பீடத்தில் அமருமாறு கைகளைக் காட்டிட, வளம் மிக்க தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அப்பீடத்தின் மீது அமர்ந்தருளினர். மாயங்களைக் கொண்ட அமணர்கள் எல்லோ ரும் தம் மனத்துள் எழுந்த குறிப்பால் அச்சம் கொண்டனர்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 753

செழியனும் பிள்ளை யார்தம்
திருமேனி காணப் பெற்று
விழியுற நோக்க லாலே
வெம்மைநோய் சிறிது நீங்கி
அழிவுறும் மனம் நேர்நிற்க
அந்தணர் வாழ்வை நோக்கிக்
கெழுவுறு பதியா தென்று
விருப்புடன் கேட்ட போது.

பொழிப்புரை :

பாண்டியனும் ஞானசம்பந்தரின் திருமேனியைக் காணப் பெற்றவனாய், விழி பொருந்த நோக்கியதால், வெப்பு நோய் மேலும் சிறிது நீங்கப் பெற்று, ஒருநிலையில் நில்லாத தன் மனம் ஒருமையுற்று நிற்ப, அந்தணர் தம் பெருவாழ்வெனத் தோன்றிய ஞானசம்பந்தரைப் பார்த்து, `உமது ஊர் யாது?\' என்று விருப்புடன் வினவ,

குறிப்புரை :

முன்னர் (பா.720) மீனவன் செவியினூடு ஞானசம்பந் தர் என்னும் நாமமந்திரம் சொல்ல அவன், அயர்வு நீங்கியது என்றார். பின்னர் அவர் தம் திருவுருக் கண்டபோது, வெப்பு நோய் சிறிது நீங்கவும் மனம் ஒரு நெறிப்படவுமானது என்றார். இதுபொழுது அவரைப் பார்த்த அளவில் அவரது ஊர் யாது எனக் கேட்க, அவரும் தம் திருவாயாலேயே சொல்ல, அதனைக் கேட்கவும் நேருகிறது. படிப்படியாக நிகழ்வுறும் இந்நிகழ்ச்சி, `முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்\' எனவரும் அருள் வாக்கை நினைவு கூரவைக்கும். இது பெண்ணின் அநுபவம், பெருமானின் பெயரும் வண்ணமும் ஊரும் கேட்கும் அளவில் அமைகிறது. இப்பாண்டிய னின் அநுபவமோ காணும் பேற்றையும் பெறுமாறு அமைந்துள்ளது. இனி, அவள்தன் தலைவனின் ஆரூரைப் பிறர் சொல்லக் கேட்க, பாண்டியனோ ஊரின் பெயரை உரியவரே சொல்லக் கேட்கின்றான். அவள் பெற்ற அநுபவம் அகவழியது. பாண்டியன் பெறும் அநுபவம் புறவழியது; குருவருள் அநுபவமாக அமைவது, இனி ஞானச் செல்வரின் திருக்கைகளால் திருநீறு பூசப்பெறும் பேறும், அவர்தம் உரையளவானும், பதிக அளவானும் கேட்கப் பெறும் உபதேசப் பேறும் பெறவுள்ளமையும் நினைவு கூரத்தக்கன. இவ்வாறெல்லாம் ஒப்பிட்டுக் காண உவகை தரும்.

பண் :

பாடல் எண் : 754

பொன்னிவளந் தருநாட்டுப்
புனற்பழனப் புறம்பணைசூழ்
கன்னிமதிற் கழுமலம்நாம்
கருதுமூர் எனச்சிறந்த
பன்னிரண்டு பெயர்பற்றும்
பரவியசொல் திருப்பதிகம்
தென்னவன்முன் பருள்செய்தார்
திருஞான சம்பந்தர்.

பொழிப்புரை :

காவிரியாறு பாய்ந்து வளத்தை அளிக்கும் சோழ நாட்டில் நீர் நிறைந்த வயல்களையுடைய மருத நிலம் சூழ்ந்த அழியாத மதிலால் சூழப்பெற்ற `திருக்கழுமலம்\' (சீகாழி) என்பது எமது ஊரா கும் என்று சிறப்புடைய பன்னிரண்டு பெயர்களையும் போற்றிய கருத் துடைய திருப்பதிகத்தை ஆளுடைய பிள்ளையார் அம்மன்னனின் முன்பு பாடியருளினார்.

குறிப்புரை :

`பிரமனூர்\' (தி.2 ப.70) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகத்தில் காழிக்குரிய பன்னிரண்டு பெயர்களுள.

பண் :

பாடல் எண் : 755

பிள்ளையார் செம்பொன்மணிப்
பீடத்தில் இருந்தபொழு
துள்ளநிறை பொறாமையினால்
உழையிருந்த காரமணர்
கொள்ளுமனத் திடையச்சம்
மறைத்துமுகங் கோபத்தீத்
துள்ளியெழும் அனற்கண்கள்
சிவந்துபல சொல்லுவார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் பொன் பீடத்தில் அமர்ந்திருந்த போது, உள்ளத்தில் உண்டான பொறாமையினால், அருகிருந்த கருநிற முடைய சமணர்கள் தம் மனத்திடைக் கொண்ட அச்சத்தை மறைத்து, முகத்தில் சினத் தீயானது துள்ளி எழுவதுபோல் கண்கள் நெருப்பெனச் சிவந்து பலவாறு சொல்பவராய்,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 756

காலையெழுங் கதிரவனைப்
புடைசூழுங் கருமுகில்போல்
பீலிசேர் சமண்கையர்
பிள்ளையார் தமைச்சூழ்வார்
ஏலவே வாதினால்
வெல்வதனுக் கெண்ணித்தாம்
கோலுநூ லெடுத்தோதித்
தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்.

பொழிப்புரை :

காலையில் தோன்றும் கதிரவனைச் சூழ்ந்த கருமையான மேகக் கூட்டத்தைப் போல், மயில் இறகை ஏந்திய சமணர்கள் பிள்ளையாரைச் சூழ்பவராய்ப் பொருந்தியவாறு வாதில் வெல்வதற்கு எண்ணம் கொண்டு, தாம் போற்றும் ஆருகத நூலில் கண்ட பொருள்களை எடுத்துக் கூறித் தலைகள் அசைத்துக் குரைத்தார்கள்.

குறிப்புரை :

தலைதிமிர்ப்ப - தலையசைய.

பண் :

பாடல் எண் : 757

பிள்ளையார் அதுகேளாப்
பேசுகநும் பொருளெல்லை
உள்ளவா றென்றருள
ஊத்தைவாய்ப் பறிதலையர்
துள்ளிஎழுந் தநேகராய்ச்
சூழ்ந்துபத றிக்கதற
ஒள்ளிழையார் அதுகண்டு
பொறாராகி உள்நடுங்கி.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் அதனைக் கேட்டு, `உங்கள் கொள்கையின்படியுள்ள பொருள் முடிவுகளை உள்ளபடி கூறுங்கள்\' என்று அருள, ஊத்தை வாயையும் பறித்த தலையையும் உடைய சமணர்கள், துள்ளிப் பலராக எழுந்து, பிள்ளையாரைச் சூழ்ந்து, பதறிக் கதறவே, ஒளியுடைய அணிகளை அணிந்த மங்கையர்க்கரசியார் அதைக் கண்டு பொறாமல் உள்ளம் நடுங்கி,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 758

தென்னவன் தன்னை நோக்கித்
திருமேனி எளியர் போலும்
இன்னருட் பிள்ளை யார்மற்
றிவர் எண்ணி லார்கள்
மன்னநின் மயக்க மெங்கள்
வள்ளலார் தீர நல்கும்
பின்னையிவ் வமணர் மூள்வார்
வல்லரேல் பேச என்றார்.

பொழிப்புரை :

பாண்டிய மன்னனைப் பார்த்து, `இனிய அருளை யுடைய பிள்ளையாரான இவர் சிறுவர், ஆனால் சமணர்கள் ஆகிய இவர்கள் எண்ணற்றவர்கள். மன்ன! உம் வெப்பு நோயின் மயக்கத்தை எங்கள் பிள்ளையார் நீங்குமாறு அருள் செய்வார். அதன் பின் இவ் அமணர்கள் வாது செய்ய வல்லவரானால் பேசுவாராக!\' என்று கூறினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 759

மாறனும் அவரை நோக்கி
வருந்தல்நீ என்று மற்று
வேறுவா தென்கொல் என்மேல்
வெப்பொழித் தருகர் நீரும்
ஆறணி சடையி னாருக்
கன்பராம் இவரும் நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை
என்னிடைத் தெரிப்பீர் என்றான்.

பொழிப்புரை :

பாண்டியனும் மங்கையர்கரசியாரைப் பார்த்து `நீ வருந்தற்க!\' என்று கூறிப் பின் `பிற வாது என்ன வேண்டும்? அருகர் களாகிய நீங்களும், கங்கையை அணிந்த சடையை உடையவர்க்கு அடியவரான இவரும், என்னிடத்ததான இவ்வெப்பு நோயை ஒழியச் செய்து, பின், நீங்கள் அவ்வவர் தெளிந்த தெய்வங்களின் உண்மைத் தன்மையை என்னிடத்தில் விளக்குக\' எனக் கூறினான்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 760

ஞானஆ ரமுத முண்டார்
நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்கேள்
மற்றெனைப் பால னென்று
நீநனி அஞ்சவேண்டா
நிலையிலா அமணர்க் கென்றும்
யான்எளி யேன லேன்என்
றெழுந்திருப் பதிகம் பாடி.

பொழிப்புரை :

ஞான அமுதை உண்ட ஞானசம்பந்தர் நற்றவம் உடைய மங்கையர்க்கரசியாரை நோக்கி, `மானின் நேர் விழியினாய்! கேட்பாயாக! என்னைச் சிறுவன் என்று எண்ணி அச்சம் கொள்ள வேண்டுவதின்று, நல்ல நிலையில் ஒருமையுறாத சமணர்களுக்கு என்றும் நான் எளியன் அல்லேன்\' எனும் கருத்துப்பட எழுகின்ற திருப்பதிகத்தைப் பாடி,

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம்,
மானி னேர்விழி மாத ராய்வழு
திக்கு மாபெருந் தேவிகேள்
பானல் வாயொரு பாலன் ஈங்கிவன்
என்று நீபரி வெய்திடேல்
இடங்க ளிற்பல அல்லல் சேர்
ஈனர் கட்கெளி யேன லேன்திரு
ஆல வாயரன் நிற்கவே.
எனவரும் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும்
(தி.3 ப.39). இப்பாடற் பொருண்மையை விளக்கி நிற்பது இப்பாடலாகும்.

பண் :

பாடல் எண் : 761

பெற்றியால் அருளிச் செய்த
பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்றுநின் றழைத்தல் ஓவா
அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றைநாள் என்னை உற்ற
பிணியைநீர் இகலித் தீரும்
தெற்றெனத் தீர்த்தார் வாதில்
வென்றனர் என்று செப்ப.

பொழிப்புரை :

திருவருளைப் பற்றிய தன்மையால் அவ்வாறு திருப்பதிகம் பாடியருளிய பிள்ளையாருக்கும், தன் முன்பு சூழ்ந்து நின்று உரைப்பதைக் கைவிடாத சமணர்களுக்கும், ஒன்று போலவே, `இன்று என்னை அடைந்த இவ்வெப்பு நோயை நீவிர் இருவரும் தனித்தனி வேறாகி இகல் வைத்து ஓட்டித் தீருங்கள்! தெளிவுபெறத் தீர்த்தவர்களே வெற்றியுற்றவர் ஆவர்!\' என்று பாண்டிய மன்னன் உரைக்க,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 762

மன்னவன் மாற்றங் கேட்டு
வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர்
தோன்றலை நோக்கி நாங்கள்
உன்னுடம்பு அதனில் வெப்பை
ஒருபுடை வாம பாகம்
முன்னம்மந் திரித்துத் தெய்வ
முயற்சியால் தீர்த்து மென்றார்.

பொழிப்புரை :

பாண்டிய மன்னன் சொல்லைக் கேட்டு, வடிவத்தைப் போன்றே மனமும் மாசுடையராய அமணர்கள், பாண்டிய மன்னனைப் பார்த்து, `நாங்கள் உம் உடலில் ஒரு பக்கமா கிய இடப்பாகத்து வெப்பு நோயை மந்திரித்துத் தெய்வ முயற்சியால் நீக்குவோம்.\' என்றனர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 763

யாதும்ஒன் றறிவி லாதார்
இருளென அணையச் சென்று
வாதினில் மன்ன வன்தன்
வாமபா கத்தைத் தீர்ப்பார்
மீதுதம் பீலி கொண்டு
தடவிட மேன்மேல் வெப்புத்
தீதுறப் பொறாது மன்னன்
சிரபுரத் தவரைப் பார்த்தான்.

பொழிப்புரை :

சற்றும் உண்மை நிலையை அறியாதவரான சமணர்கள், இருளைப் போல மன்னனை நெருங்கிச் சென்று, வாதத்தின் பொருட்டு முற்பட்டு, மன்னனின் இடமருங்குள்ள நோயைத் தீர்க்கத் தொடங்கி, அவனது உடலின் மீது தம் மயிற்பீலிக் கற்றையை மந்திரித்துத் தடவ, வெப்பு நோய் மேன்மேலும் மிகுந்து தீமை செய்ததால், அதை ஆற்றமாட்டாதவனாகி, மன்னன், சீகாழித் தலைவரைத் தன் பிணியைப் போக்க வேண்டும் என்ற குறிப்புடன் நோக்கினான்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 764

தென்னவன் நோக்கங் கண்டு
திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை
ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும்மந் திரமு மாகி
மருந்துமாய்த் தீர்ப்ப தென்று
பன்னிய மறைக ளேத்திப்
பகர்திருப் பதிகம் பாடி.

பொழிப்புரை :

பாண்டியனின் பார்வையின் கருத்தை உணர்ந்த சீகாழிச் செல்வரான ஞானசம்பந்தர், அவனது வலப்பக்க நோயைத் `திருவாலவாய் இறைவரின் திருநீறே நிலையான மந்திரமும் மருந்துமாகித் தீர்ப்பதாகும்!\' என்று மனத்துள் கொண்டு கூறிய மறைகளின் கருத்தைப் போற்றி எடுத்துக் கூறுகின்ற `மந்திரமாவது நீறு\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி,

குறிப்புரை :

இத்தொடக்கமுடைய திருப்பதிகம் (தி.2 ப.66) காந்தா ரப் பண்ணில் அமைந்ததாகும். இப்பதிகத்தில், `மந்திரமாவது நீறு\' `வேதத்திலுள்ளது நீறு\' என வருவன கொண்டு, திருவாலவாயான் திருநீறே `மந்திரமும்\' ஆவது என்றார். `வருத்தந் தணிப்பது நீறு\' `ஏலவுடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு\' என வருவன கொண்டு, `மருந்துமாகித் தீர்ப்பது\' என்றார்.

பண் :

பாடல் எண் : 765

திருவளர் நீறு கொண்டு
திருக்கையால் தடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப்
பொய்கையிற் குளிர்ந்த தப்பால்
மருவிய இடப்பால் மிக்க
அழலெழ மண்டு தீப்போல்
இருபுடை வெப்புங் கூடி
இடங்கொளா தென்னப் பொங்க.

பொழிப்புரை :

திருவளரும் திருநீற்றைக் கொண்டு ஞானசம்பந்தர், தம் திருக்கையினால் மன்னவன் உடலில் தடவிட, அப்பாண்டியன் ஒப்பில்லாத வெப்பு நோயினின்றும் நீங்கியதால், வலப் பக்கம் தண்ணீர்ப் பொய்கை போல் குளிர்ந்தது. பொருந்திய இடப் பக்கம், மேலும் மிகுந்த அனலின் தன்மை எழுந்ததால், செறிந்த தீயைப் போல இரு பக்கத்து வெப்பும் கூடி, இடம் கொள்ள மாட்டாது பெருகிட,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 766

உறியுடைக் கையர் பாயின்
உடுக்கையர் நடுக்க மெய்திச்
செறிமயிற் பீலி தீயத்
தென்னன்வெப் புறுதீத் தம்மை
எறியமா சுடலுங் கன்றி
அருகுவிட் டேற நிற்பார்
அறிவுடை யாரை ஒத்தார்
அறிவிலா நெறியில் நின்றார்.

பொழிப்புரை :

உறியைக் கையில் கொண்ட, பாயினை உடைய சமணர்கள், நடுக்கம் அடைந்து, செறிந்த மயில்பீலி தீய்ந்து போக, மன்னனின் வெப்பு நோயின் வெப்பம் தம்மைத் தாக்குதலால், மாசு கொண்ட உடல் மேலும் கருகி வெதும்பியதால், மன்னனிடமிருந்து அகன்று, தொலைவில் சென்று நிற்பவர்களாய் அறிவில்லாத நெறியில் நின்றவராயினும், அறிவுடையாரைப் போன்று விளங்கினர்.

குறிப்புரை :

இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 767

பலர்தொழும் புகலி மன்னர்
ஒருபுடை வெப்பைப் பாற்ற
மலர்தலை யுலகின் மிக்கார்
வந்ததி சயித்துச் சூழ
இலகுவேல் தென்னன் மேனி
வலமிடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை
ஒதுங்கினால் ஒத்த தன்றே.

பொழிப்புரை :

பலராலும் வணங்கப்படும் சீகாழித் தலைவர் ஆன பிள்ளையார், அரசனின் வலப்பக்கத்து வெப்பத்தைப் போக்க, மலர்தலையுடைய உலகில் அறிவால் சிறந்தவர் அதிசயித்து வந்து சூழ, வேல் ஏந்தும் பாண்டியனின் உடல், வலப்பக்கத்தில் தண்மையும் இடப்பக்கத்தில் வெம்மையும் கூடியதால், நீண்ட உலகில், தண்மையும் வெம்மையும் இணைந்து ஓரிடத்து ஒதுங்கினாற் போல் அப்போது விளங்கியது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 768

மன்னவன் மொழிவான் என்னே
மதித்தஇக் காலம் ஒன்றில்
வெந்நர கொருபா லாகும்
வீட்டின்பம் ஒருபா லாகும்
துன்னுநஞ் சொருபா லாகும்
சுவையமு தொருபா லாகும்
என்வடி வொன்றி லுற்றேன்
இருதிறத் தியல்பும் என்பான்.

பொழிப்புரை :

பாண்டிய வேந்தன், `என்னே வியப்பு\' எனக் குறிப்பிட்டு, ஒரே காலத்தில் கொடிய நரகம் ஒரு பக்கத்தில் உளதாகும், முத்தியின்பம் ஒருபக்கத்தில் உளதாகும், மிக்க நஞ்சின் நுகர்ச்சி ஒருபக்கத்தில் உளதாகும், சுவையுடைய அமுதின் நுகர்ச்சி மற்றொரு பக்கத்தில் உளதாகும், `என் உடல் ஒன்றிலேயே இங்ஙனம் மாறுபட்ட இருவேறு தன்மைகளையும் நான் அடையப்பெற்றேன்\' என்பவனாய்,

குறிப்புரை :

நுகர்ச்சியும், நுகரும் பொருள்களும் வெவ்வேறான காலத்திலும் வெவ்வேறான இடத்திலும் நிகழ்வதே இயற்கை. ஆனால் என்னளவிலோ ஒரே உடம்பில் ஒரே காலத்தில் வேறுவேறாகிய இரு தன்மைகளும் ஒருங்கு நிகழ்கின்றனவே என்று வருந்தினன் மன்னன்.

பண் :

பாடல் எண் : 769

வெந்தொழில் அருகர் தோற்றீர்
என்னைவிட் டகல நீங்கும்
வந்தெனை உய்யக் கொண்ட
மறைக்குல வள்ள லாரே
இந்தவெப்பு அடைய நீங்க
எனக்கருள் புரிவீ ரென்று
சிந்தையால் தொழுது சொன்னான்
செல்கதிக் கணிய னானான்.

பொழிப்புரை :

`கொடிய தொழிலையுடைய அமணர்களே! நீங்கள் தோற்றீர்கள்! என்னை விட்டு நீங்கிச் செல்லுங்கள்! இங்கு வந்து என்னை உய்யுமாறு ஆட்கொண்டருளிய அந்தணர் குலத்து வள்ள லாரே! இவ்வெப்பு நோய் முழுமையாக நீங்குமாறு எனக்கு அருள் செய்வீராக!\' என மனத்தால் வணங்கி, நற்கதிக்கு நெருங்கியவனான பாண்டியன் உரைத்தான்.

குறிப்புரை :

அடைய - முழுமையாக. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 770

திருமுகங் கருணை காட்டத்
திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கு மாற்றால்
பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அங்கண்
ஒழிந்துவெப் பகன்று பாகம்
மருவுதீப் பிணியும் நீங்கி வழுதியும்
முழுதும் உய்ந்தான்.

பொழிப்புரை :

திருமுகத்தின் பொலிவு, உள்ளத்தில் நிறைந்த கருணையினைப் புறத்தே புலப்படுத்த, திருக்கையினால் திருநீற்றைக் காட்டி, அரிய மறைகளும் போற்றும் வகையால், ஞானசம்பந்தர் போற்றிப் பின்னும் ஒருமுறை பாண்டியன் உடலில் தடவிட, வெப்பு நோயானது அப்போதே உடலை விட்டு முழுமையாக நீங்கியமையால் இடப்பக்கத்தில் முன்பொருந்திய வெப்புநோயும் நீங்கப் பாண்டிய னும் முழுதும் உய்தி அடைந்தான்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 771

கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத்
தாமரை சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமை யின்று
பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே
உளங்களித் துவகை மிக்கார்.

பொழிப்புரை :

பாண்டியன் மனைவியாரும், குலச்சிறையாரும், தீங்கினை அழித்த பிள்ளையாரின் சிவந்த திருவடித் தாமரைகளைத் தம்முடி மீது சேர்த்து வணங்கி, `நாங்கள் பெருமை பெற்றோம், இன்றே உய்திபெறப் பிறந்தவர் ஆனோம். மன்னன் இனிப் பிறவியில்லாத மேன்மையை அடைந்தான்!\' என்று கூறி, மனம் களிப்பு அடைந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 772

மீனவன் தன்மேல் உள்ள
வெப்பெலாம் உடனே மாற
ஆனபே ரின்ப மெய்தி
உச்சிமே லங்கை கூப்பி
மானமொன் றில்லார் முன்பு
வன்பிணி நீக்க வந்த
ஞானசம் பந்தர் பாதம்
நண்ணிநான் உய்ந்தேன் என்றான்.

பொழிப்புரை :

பாண்டிய மன்னன், தன்னிடத்துள்ள வெம்மை முழுவதும் நீங்கியதனால் உண்டான பெரிய இன்பத்தை அடைந்து, தலையின்மீது கைகளைக் குவித்துக் கொண்டு `மானம் ஒன்றுமில்லாத சமணர்கள் முன்னே, வலிய நோய் நீங்குமாறு வந்தருளிய ஞான சம்பந்தரின் திருவடிகளைச் சேர்ந்து நான் உய்ந்தேன்!\' எனக் கூறிப் போற்றினன்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 773

கந்துசீறு மாலியானை
மீனவன் கருத்துநேர்
வந்துவாய்மை கூறமற்று
மாசுமேனி நீசர்தாம்
முந்தைமந் திரத்துவிஞ்சை
முற்றம்எஞ்ச அஞ்சியே
சிந்தைசெய்து கைவருந்
திறந்தெரிந்து தேடுவார்.

பொழிப்புரை :

கட்டுத்தறியைச் சீறிவரும் மதயானைபோலப் பாண்டியனும், சமணர்பால் அமைந்த கருத்துப் பிணிப்பினின்றும் நீங்கி, நேர்பட வந்து உண்மை நிலையைக் கூற, அழுக்குப் படிந்த உடலை உடைய இழிந்தவர்களான சமணர்கள், தாம் முன்னால் கைக் கொண்ட மந்திரத்தின் வித்தை முழுதும் வலியில்லாததாகி ஒழியக் கண்டு, அச்சம்கொண்டு, சிந்தித்துத் தாம் வெற்றியடையும் திறத்தை எண்ணி ஆராய்பவராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 774

சைவமைந்தர் சொல்லின்வென்றி
சந்தஇன்சொல் மாலையால்
கைதவன்தன் வெப்பொழித்த
தன்மைகண் டறிந்தனம்
மெய்தெரிந்த தர்க்கவாதம்
வெல்லல்ஆவ தன்றுவே
றெய்துதீயின் நீரில்வெல்வ
தென்றுதம்மில் எண்ணினார்.

பொழிப்புரை :

`சைவ மகனாரான பிள்ளையாருடைய சொற்க ளின் வெற்றிச் சிறப்பை, அவருடைய சொல் மாலைப் பதிகத்தால் பாண்டியனின் வெப்பு நோய் முழுவதும் நீங்கின தன்மையைக் கண்ட னம், ஆதலால் உண்மை தெரிந்த தருக்க வாதத்தில் வெற்றி பெறுவது இயல்வதன்று, பொருந்திய தீயிலும் நீரிலும் வெற்றி பெற முயல்வோ மாக!\' எனத் தங்களுக்குள் எண்ணினார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 775

பிள்ளையாரும் உங்கள்வாய்மை
பேசுமின்கள் என்றலும்
தள்ளுநீர்மை யார்கள்வேறு
தர்க்கவாதி னுத்தரம்
கொள்ளும் வென்றிஅன்றியே
குறித்தகொள்கை உண்மைதான்
உள்ளவாறு கட்புலத்தில்
உய்ப்பதென்ன ஒட்டினார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தரும், சமணர்களைப் பார்த்து `உங்கள் சமய உண்மையினைப் பேசுங்கள்\' என்று சொல்ல, அதைக் கேட்டு, ஏற்பட்ட இரு நிலைகளிலும் (மடத்தையும், மன்னனின் வெப்பையும் மந்திர விதியால் தாம் எண்ணியவாறு செய்தலில்) தவறிய அந்தச் சமணர்கள், `வேறு தருக்க வடிவான கடா விடைகளால் வரும் வெற்றி பெறுதலையும் விடுத்து, அவரவர்களும் தாம்தாமும் கொண்டிருக்கும் கொள்கையின் உண்மைத் தன்மையை உள்ளவாறு கண் முன் நிறுத்திக் காட்டுதலே இப்போது செய்யத் தக்கது\' எனச் சூளுரைத்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 776

என்றுவாது கூறலும்
இருந்ததென்னர் மன்னனும்
கன்றிஎன் உடம்பொடுங்க
வெப்புநோய் கவர்ந்தபோ
தொன்றும்அங் கொழித்திலீர்கள்
என்னவா துமக்குஎனச்
சென்றுபின்னும் முன்னும்நின்று
சில்லிவாயர் சொல்லுவார்.

பொழிப்புரை :

என்று சமணர் தங்கள் வாதத்தைக் கூற, நோய் நீங்கப் பெற்ற பாண்டியனும், அவர்களைப் பார்த்து, `என் உடல் முழு தும் வெதும்பி வெப்பு நோய் என்னை உள்ளாக்கியபோது, ஒரு சிறிதும் அந்நோயைத் தீர்க்காது தோற்றீர்கள். ஆதலால் இனி உங்க ளுக்கு வாது என்ன இருக்கின்றது?\' எனக் கூற, மன்னனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்று அணுகி நின்று கொண்டு, ஓட்டை வாயர்களான சமணர்கள் கூறுவார்களாய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 777

என்னவாது செய்வதென்
றுரைத்ததே வினாவெனாச்
சொன்னவா சகந்தொடங்கி
ஏடுகொண்டு சூழ்ச்சியால்
மன்னுதம் பொருட்கருத்தின்
வாய்மைதீட்டி மாட்டினால்
வெந்நெருப்பின் வேவுறாமை
வெற்றியாவ தென்றனர்.

பொழிப்புரை :

`நீங்கள் செய்வதற்கு என்ன வாது இருக்கின்றது\' என்று, தோல்வியுற்ற உமக்கு வாதம் ஒன்றுமில்லை என்ற குறிப்புப் படச் சொன்னதையே, தம்மை என்ன வாது செய்வது? என்று வினவியதாகக் கொண்டு, முன் தாம் சொன்ன வாசகத்தையே தொடர்ந்து கொண்டு, `ஏட்டைக் கையில் கொண்டு அறிவால் சூழ்ந்து நிலைபெறும் தம் தம் சமய உண்மைப் பொருட் கருத்தினை எழுதி, நெருப்பில் இட்டால் வேகாது இருப்பதுவே வெற்றியாம்\' என்று கூறினார்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 778

என்றபோது மன்னன்ஒன்
றியம்புமுன்பு பிள்ளையார்
நன்றுநீ ருரைத்தவாறு
நாடுதீயி லேடுதான்
வென்றிடிற் பொருட்கருத்து
மெய்ம்மையாவ தென்றிரேல்
வன்றனிக்கை யானைமன்னன்
முன்புவம்மின் என்றனர்.

பொழிப்புரை :

என்று சமணர் உரைத்தபோது, அதற்கு விடையாய் மன்னன் ஒன்று சொல்வதன் முன்பே, ஞானசம்பந்தர் `நீங்கள் கூறிய வழிநன்று! தீயில் இட்ட ஏடு, தான் வேகாது இருக்கின்றமை காட்டி வென்றால், அதில் எழுதிய பொருட் கருத்து உண்மை யுடையதாகும்\' எனக் கூறுவீராயின், வலிய ஒற்றைக் கையையுடைய யானையை யுடைய மன்னன் முன்னர், `அவ்வாறே வாதம் செய்து முடிவு கொள்ள வாருங்கள்\' என்றுரைத்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 779

அப்ப டிக்கெதிர் அமணரும்
அணைந்துறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர்
காவலர் உரையால்
செப்ப ருந்திறல் மன்னனும்
திருந்தவை முன்னர்
வெப்பு றுந்தழல் அமைக்கென
வினைஞரை விடுத்தான்.

பொழிப்புரை :

அங்ஙனமே எதிர் ஏற்றுச் சமணர்களும் வந்து பொருந்திய அளவில், ஒப்பில்லாத உண்மையையும் புகழையும் உடைய சீகாழித் தலைவரின் சொல்லால், சொலற்கரிய வன்மை உடைய மன்னனும் `திருந்தும் அரசவையின் முன்பு வெம்மை உடைய தீயை அமைப்பீராக!\' என்று ஏவி, அதற்கான ஏவலர்களையும் அனுப்பினன்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 780

ஏய மாந்தரும் இந்தனங்
குறைத்துடன் அடுக்கித்
தீய மைத்தலும் சிகைவிடு
புகைஒழிந்து எழுந்து
காயும் வெவ்வழற் கடவுளும்
படரொளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும்
அணையவந் தருளி.

பொழிப்புரை :

தீயை அமைக்க, ஏவப்பட்ட பணியாளர்களும் விறகை வெட்டி உடனே அடுக்கித் தீயினை அமைக்கவும், கொழுந்து விட்டு எரிதலால் புகையானது எழுந்து, பின் அது மாறப் பெற்று, சுடும் வெம்மையான தீக் கடவுளும் படரும் ஒளியினைக் காட்ட, உயர்ந் தோர் ஆய்கின்ற முத்தமிழ் வல்லுநரான பிள்ளையாரும், அத் தீயினுக்கு அருகே நெருங்கி வந்து,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 781

செங்கண் ஏற்றவ ரேபொருள்
என்றுதாம் தெரித்த
பொங்கி சைத்திருப் பதிகநன்
முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம்பொருள்
எனத்தொழு தெடுத்தே
அங்கை யால்முடி மிசைக்கொண்டு
காப்புநாண் அவிழ்த்தார்.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய ஆனேற்று ஊர்தியை உடைய சிவபெருமானே உண்மைப் பொருளாவார் என, உலகம் அறிய உபதேசித்தருளிய, பொங்கும் இசையுடன் கூடிய திருப்பதிகங் களை எழுதிய நல்ல திருமுறைச் சுவடியைப் போற்றி, எங்கள் தலைவரான சிவபெருமானே முழுமுதற் கடவுளாய் எல்லோர்க்கும் மேலான பரம்பொருளாவார் என்று வணங்கி, கையால் எடுத்துத் திரு முடிமேற்கொண்ட பின்பு, அதன் காப்பான கயிற்றை அவிழ்த்தனர்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 782

சாற்று மெய்ப்பொருள் தருந்திரு
முறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும்
வந்துநேர்ந் துளதால்
நாற்ற டம்புயத் தண்ணலார்
மருவுநள் ளாறு
போற்றும் அப்பதிகம் போக
மார்த்தபூண் முலையாள்.

பொழிப்புரை :

வணங்கும் மெய்ப்பொருளைத் தரும் திருமுறையினைத் தாமே திருநீறு பொருந்திய வள்ளன்மையுடைய கையினால் பிரித்த பொழுது, நான்கு பெரிய தோள்களையுடைய இறைவர் எழுந்தருளிய திருநள்ளாற்றினைப் போற்றிய பதிகம் நேர்பட வந்தது, அப்பதிகம் `போகமார்த்த பூண்முலையாள்\' (தி.1 ப.49) எனத் தொடங்கும் திருப்பதிகமாக அமைந்திருந்தது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 783

அத்தி ருப்பதி கத்தினை
அமர்ந்துகொண் டருளி
மைத்த வெங்கடு மிடற்றுநள்
ளாறரை வணங்கி
மெய்த்த நற்றிரு ஏட்டினைக்
கழற்றிமெய்ம் மகிழ்ந்து
கைத்த லத்திடைக் கொண்டனர்
கவுணியர் தலைவர்.

பொழிப்புரை :

அந்தத் திருப்பதிகத்தை விரும்பி மேற்கொண்டு, இருண்ட வெவ்விய நஞ்சு பொருந்திய கழுத்தையுடைய திருநள் ளாற்று இறைவரைப் போற்றி, உண்மை பொருந்திய நல்ல அவ்வேட் டைத் திருமுறைச் சுவடியினின்றும் பிரித்து எடுத்து, மெய்ம் மகிழ்ந்து ஞானசம்பந்தர் கையில் வைத்துக் கொண்டார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 784

நன்மை உய்க்கும்மெய்ப் பதிகத்தின்
நாதனென் றெடுத்தும்
என்னை ஆளுடை ஈசன்தன்
நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொரு ளாமெனக்
காட்டிட வன்னி
தன்னி லாகெனத் தளிரிள
வளரொளி பாடி.

பொழிப்புரை :

நன்மையில் செலுத்தும் மெய்யான அப்பதிகத் தால் போற்றப்பட்ட இறைவன் என்று எடுத்துக் கொண்டு, என்னை ஆளாக உடைய இறைவரின் நாமமே எப்போதும் நிலைபெறும் பொருளாம் எனக் காட்டும்படி, `தீயில் வேகாது இருப்பதாகுக!\' என்று `தளரிள வளரொளி\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி,

குறிப்புரை :

`தளரிள வளரொளி\' (தி.3 ப.87) எனத் தொடங்கும் பதிகம் சாதாரிப் பண்ணிலமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 785

செய்ய தாமரை அகவித
ழினும்மிகச் சிவந்த
கையி லேட்டினைக் கைதவன்
பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை
யவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர்
மகிழ்ந்துமுன் னிட்டார்.

பொழிப்புரை :

செந்தாமரை மலரின் அக இதழை விட மிகச் சிவந்த கையில் கொண்ட அந்த ஏட்டை, பாண்டியனின் அவையினர் காணுமாறு, ஆடையில்லாத அரையை உடைய சமணர்களின் மனங் கள் வெந்து அழியுமாறு, உலகுய்ய, கவுணியர் தலைவர் வெம்மை மிக்க தீயிடத்தில் மகிழ்ச்சியுடன் முன்னர் இட்டார்.

குறிப்புரை :

`போகம் ஆர்த்த\' எனும் தொடக்கமுடைய திருப்பதிகத் தைத் தழலிலிட்டபொழுது அருளிய திருப்பதிகம், `தளிரிளவளர்ஒளி\' எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 786

இட்ட ஏட்டினில் எழுதிய
செந்தமிழ்ப் பதிகம்
மட்டு லாங்குழல் வனமுலை
மலைமகள் பாகத்
தட்டமூர்த்தியைப் பொருளென
உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய்
விளங்கிய தன்றே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு ஞானசம்பந்தர் தம் கையால், தீயில் இட்ட ஏட்டில் எழுதப்பட்ட திருநள்ளாற்றுப் பதிகம், மணம் வீசும் கூந்தலையும் அழகிய மார்பகங்களையும் உடைய மலைமகளான உமையம்மையாரை ஒருமருங்கில் கொண்டவராகவும், எண்வகைப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானையே பொருளாகக் கொண்டமையால், பொருந்திக் கிடந்த தீயிடையே வேகாமல் இருந்த துடன் பச்சையாயும் விளங்கியது.

குறிப்புரை :

போகமார்த்த பூண்முலையாள் தன்னொடும் பொன்னகலம்
பாகம்ஆர்த்த பைங்கண் வெள்ளேற் றண்ணல் பரமேட்டி
ஆகம்ஆர்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகம்ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
(தி.1 ப.49 பா.1) எனவரும் முதற்பாடலையுடைய பதிகமே தீயினில் இட்டதாகும். இதில் உமையம்மையாரைப் `போகமார்த்த பூண்முலை யாள்\' என்றும், பெருமானை `நாகம் ஆர்த்த நம்பெருமான்\' என்றும் குறிக்கப் பெறுகின்றது. இவ்வமைவு பதிகப் பாடல் தொறும் அமைந் துள்ளது. இப்பதிகம் பாடல்தொறும் உமையம்மையாரை மார்பக உறுப்பொடுபடுத்துக் கூறற்குக் காரணம், அம்மையாரிடத்துள்ள அவ்வுறுப்பு உடற்குற்ற போகத்தைக் கொடுத்து வினையை வீட்டு தலன்றி, உயிர்க்குற்ற போகத்தைக் கொடுத்துச் சிவஞானத்தையும் வழங்கி உய்விக்கும் தகையதாலேயாம். இவ்வநுபவம்தானும், தாம் பெற்றமை தோன்றத் திருக்கடைக்காப்பில், `சிற்றிடை அரிவைதன் வனமுலை இணையொடு செறிதரும், நற்றிறம் உறுகழுமலநகர் ஞான சம்பந்தன்\' என்றார். நற்றிறம் - சிவஞானம். `துணைமுலைகள், பொழி கின்ற பால் அடிசில் பொன்வள்ளத்து ஊட்டுக\' என இறைவன் அருளி யதும், அம்மையார் `வார்இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்தருளி எண்ணரிய சிவஞானத்து இன்னமுதமும் குழைத்தருளி உண்அடிசில்\' என ஊட்டியதும் பிள்ளையாரின் திருஉள்ளத்தில் அழுந்தி நின்றதால் அவ் அருள்திறனே இப்பதிகத்தில் கமழ்கின்றது. திருநள்ளாற்றிற்குத் தாம் சென்ற பொழுது `போகமார்த்த பூண் முலையாள்\' எனத் தொடங்கிப் பாட நேர்ந்ததும், இதுபொழுது திருமுறைத் தொகுப்பில் கயிறு சார்த்திப் பார்க்க இப்பதிகம் வர நேர்ந்ததும் ஆகியன திருவருள் தந்த அநுபவமேயாகும். இப்பதிகத்தில் `நம்பெருமான்\' எனப் பாடல் தொறும் வரும் குறிப்பும் `தளிர் இள வளர்ஒளி\' எனத் தொடங்கி வரும் பதிகத்துப் பாடல்தொறும் பெருமானின் நாமமே எரியிடில் பழுதில என அரு ளும் நெறியும் ஒப்பிட்டுக் காண, அப்பெருமானின் திருநாமம் நம் பெருமான் என்பதே ஆகும் என்பது தெளிவு. இதுவன்றித் தற் பொழுது தர்ப்பாரண்யேசுவரர் என அழைத்து வருவது பின்வந் தோரின் புனைவேயாகும்.

பண் :

பாடல் எண் : 787

மையல் நெஞ்சுடை அமணரும்
தம்பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவுசெந்
தீயினில் இடுவார்
உய்யு மோஇது வெனஉறும்
கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சின ராகியே
நடுங்கிநின் றிட்டார்.

பொழிப்புரை :

மயக்கம் கொண்ட மனமுடையவர்களான சமணர்களும், தம் சமய உண்மைப் பொருளை எழுதிய தம் கையில் கொண்ட ஏட்டை, வெப்பம் மிகுந்து காய்கின்ற தீயில் இடுபவராய் `இது தீயிலே வேகாது எஞ்சியிருக்குமோ?\' என்ற கவலை கொண்ட உணர்வால், அழிகின்ற உள்ளத்தை உடையவராய், நடுங்கியவாறு தீயில் இட்டனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 788

அஞ்சும் உள்ளத்த ராகியும்
அறிவிலா அமணர்
வெஞ்சு டர்ப்பெருந் தீயினில்
விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடைப் பட்டது
படக்கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை
சோர்ந்திலர் நின்றார்.

பொழிப்புரை :

அச்சம் கொண்ட உள்ளம் உடையவர் ஆயினும் அதனால் அறிவு பெறாத சமணர்கள், வெம்மையான தீயில் இட்ட ஏடு நெருப்பிலிட்ட பஞ்சென அழிந்ததைக் கண்டு, அச்சத்தினால் மனம் தளர்வடைந்த பின்பும், கையில் ஏந்திய மயிற்பீலியை விடாதவராய் நின்றனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 789

மான மன்னவன் அவையின்முன்
வளர்த்தசெந் தீயின்
ஞானம் உண்டவர் இட்டஏ
டிசைத்தநா ழிகையில்
ஈனம் இன்மைகண் டியாவரும்
வியப்புற எடுத்தார்
பான்மை முன்னையிற் பசுமையும்
புதுமையும் பயப்ப.

பொழிப்புரை :

பெருமை உடைய பாண்டியனின் அவை முன்பு வளர்க்கப்பட்ட தீயினில் இட்ட ஏடு, குறிப்பிட்ட நாழிகையளவில் அழிவு பெறாமல் இருந்ததைப் பார்த்து, முன்னைவிடப் பசுமையான தன்மையும் புதிய தன்மையும் உள்ளதாய் இருக்க, அனைவரும் வியப்படைந்த நிலையில், தீயினின்றும் ஞான அமுது உண்டவரான சம்பந்தர் எடுத்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 790

எடுத்த ஏட்டினை அவையின்
முன் காட்டிஅம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும்
அதிசயித் தரசன்
தொடுத்த பீலிமுன் தூக்கிய
கையரை நோக்கிக்
கடுத்து நீரிட்ட ஏட்டினைக்
காட்டுமின் என்றான்.

பொழிப்புரை :

அங்ஙனம் அத்தீயினின்றும் எடுக்கப்பட்ட அவ்வேட்டை, அவையின் முன்காட்டி, முன்பிரித்து எடுத்த முறை யிலே மீளப் பொருந்தும்படி சுவடியுள் கோத்தலும், பாண்டியன் வியப்பு அடைந்து, கற்றையாய்க் கட்டிய மயிற்பீலியைக் கையில் கொண்ட அமணர்களைப் பார்த்துச் சினந்து, `நீவிர் தீயில் இட்ட ஏட்டைக் காட்டுங்கள்!\' என்றான்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 791

அருகர்தாம் இட்ட ஏடு
வாங்கச்சென் றணையும் போதில்
பெருகுதீக் கதுவ வெந்து
போந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செந்தீத்
தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்ப ரோடும்
கரியலால் மற்றென் காண்பார்.

பொழிப்புரை :

சமணர்தாம் இட்ட ஏட்டைத் தீயினின்றும் எடுக்க அணுகியபோது, பெருகிய தீச் சுட்டமையால், உடல் வெந்து புடை பெயர்ந்து சென்றதைப் பார்த்த மன்னன், கொண்டு தரப்படும் நீரைக் கொண்டு தீயைத் தணிக்கச் செய்தான். சமணர்கள் அங்கே சாம்பலும் கரியுமல்லாமல் வேறு எதனைக் காண்பார்?

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 792

செய்வதொன் றறிகி லாதார்
திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினாற் பிசைந்து தூற்றிப்
பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையி னோடும்
ஏடின்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்யை யாக்கப்
புகுந்தநீர் போமின் என்றான்.

பொழிப்புரை :

மேல் செயத்தக்கது ஒன்றும் அறிய மாட்டாத அச்சமணர்கள், திகைப்பால் அங்கே திரண்ட சாம்பலைக் கையால் பிசைந்து தூற்றி ஏட்டைத் தேடிப் பார்த்தலைக் கண்ட மன்னன், பொருந்திய புன்சிரிப்புடன் `இன்னும் ஏட்டை அரித்துப் பாருங்கள், பொய்ம்மை நெறியைத் துணையாய்க்கொண்டு அதனை மெய்ப் பொருளாக விளக்கப் புகுந்த நீங்கள் அகன்று செல்லுங்கள்\' என்று சொன்னான்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 793

வெப்பெனுந் தீயில் யான்முன்
வீடுபெற் றுய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர்
ஆதலால் அதுஆ றாக
இப்பொழு தெரியில் இட்ட
ஏடுய்ந்த தில்லை என்றால்
துப்புர வுடையீர் நீங்கள்
தோற்றிலீர் போலு மென்றான்.

பொழிப்புரை :

`வெப்பு நோயான தீயினின்றும் நான், முன் சம்பந்தரால் வீடுபெற்று உய்ந்திட, நீங்கள் வாதில் அழிந்து தோற்றீர்கள், ஆகையால், அதனைத் தொடர்ந்து இப்போது தீயில் இட்ட ஏடு, நிலை பெறாமல் ஒழிந்து விட்டது என்றால், வல்லமை மிக்கவர்களே! நீங்கள் தோற்கவில்லைப் போலும்\', எனக் கூறினான்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 794

தென்னவன் நகையுட் கொண்டு
செப்பிய மாற்றந் தேரார்
சொன்னது பயனாக் கொண்டு
சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இருகாற் செய்தோம்
முக்காலில் ஒருகால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை
இனியொன்று காண்ப தென்றார்.

பொழிப்புரை :

பாண்டியன் இகழ்ச்சியான புன்சிரிப்பையும், சொல்லிய மாற்றங்களையும் உள்ளத்துள் தெளிந்து கொள்ளாதவ ராய், சொன்ன சொல்லளவில் அதன் பொருள் இது எனத் தெளியாது, அச்சொல்லையே மேற்கொண்டு கூறுபவர்களாய்த் தொடர்ந்த வாத மாக, `முன்பு இரு முறை செய்தோம், மும்முறையில் ஒருமுறை யேனும் வெற்றியடைவோம்! ஆதலால் உண்மைத் திறம் இனியும் ஒரு முறை காணத் தக்கதாகும்!\' என்றனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 795

தோற்கவும் ஆசை நீங்காத்
துணிவிலார் சொல்லக் கேட்டிம்
மாற்றமென் னாவ தென்று
மன்னவன் மறுத்த பின்னும்
நீற்றணி விளங்கு மேனி
நிறைபுகழ்ச் சண்பை மன்னர்
வேற்றுவா தினியென் செய்வ
தென்றலும் மேற்கோள் ஏற்பார்.

பொழிப்புரை :

ஒருமுறைக்கு இருமுறை தோற்கவும் ஆசை நீங்கப் பெறாத உண்மைத் தெளிவிலாத சமணர்கள், இவ்வாறு கூறக் கேட்ட, மன்னன் `இம் மாற்றத்தால் ஆவதென்ன?\' என்று கூறி மறுத்த பின்பும், திருநீற்றின் அழகு விளங்கும் திருமேனியையும், நிறைந்த புகழையுடைய சீகாழித் தலைவர், `இனிச் செய்யக் கூடிய வேறு வாது யாது?\' என வினவவும், வாதம் செய்வதை மேற்கொண்ட அச் சமணர்கள்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 796

நீடுமெய்ப் பொருளின் உண்மை
நிலைபெறுந் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ்
வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால்
ஒழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் தங்கும் ஏடு
நற்பொருள் பரிப்ப தென்றார்.

பொழிப்புரை :

`நிலையான மெய்ப்பொருளின் வாய்மையா னது நிலைபெறும் தன்மையில் தொடுத்து, ஏட்டில் பொருந்த எழுதி, அவ்வேடுகளை யாமும் நீரும், ஓடிக் கொண்டிருக்கின்ற நீரினை உடைய ஆற்றில் இடுவோமானால், நீருடனே ஓடுவதின்றி, இட்ட அந்த இடத்தைப் பற்றி முன்னர்த் தங்கும் ஏடுஎதுவோ அதுவே நல்ல பொருளை உடையதாகும்!\\\' என்று உரைத்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 797

என்றமண் கையர் கூற
ஏறுசீர்ப் புகலி வேந்தர்
நன்றது செய்வோம் என்றங்
கருள்செய நணுக வந்து
வென்றிவேல் அமைச்ச னார்தாம்
வேறினிச் செய்யும் இவ்வா
தொன்றினுந்தோற்றார் செய்வ
தொட்டியே செய்வ தென்றார்.

பொழிப்புரை :

என்று அச்சமணர்கள் சொல்ல, மேன் மேலும் பெருகும் சிறப்பையுடைய சீகாழித் தலைவர், `நல்லது! அதுவே செய்வோம்!\' என்று அருளிச் செய்தார். வெற்றியுடைய வேல் ஏந்திய அமைச்சரான குலச்சிறையார் அருகில் வந்து, `வேறு இனிச் செய்யப் புகும் இந்த வாதம் ஒன்றிலும் தோற்பவர், அதன்பின் செய்வது இது என்று ஒட்டுதல் வேண்டும்\' என்று இயம்பினார்.

குறிப்புரை :

ஒட்டுதல் - தோற்றவர் இழக்க நேர்வதையும், வென்றவர் பெற நேர்வதையும் முற்கூறித் தொடங்குவதாகும். இதனை உலகிய லில் பந்தயம் என்பர்.

பண் :

பாடல் எண் : 798

அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ்
வேந்தனே யென்று சொன்னார்.

பொழிப்புரை :

அங்கு அவர் உரைத்ததைக் கேட்ட சமணர்கள், அவ்விடத்து மேற்கொண்டு பொங்கிய சினம் மிகுதியால், பொறா மைக் குணமும் மீதூர, தம் வாய் சோர்ந்து, `இந்த ஒரு வாதத்திலும் தோற்றோம் எனில், இம்மன்னனே எங்களைக் கொடிய கழுவில் ஏற்றுவானாக!\'என்று தாங்களே கூறினர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 799

மற்றவர் சொன்ன வார்த்தை
கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள்
செய்கையும் மறந்தீ ரென்று
பற்றிய பொருளின் ஏடு
படர்புனல் வைகை யாற்றில்
பொற்புற விடுவ தற்குப்
போதுக என்று கூற.

பொழிப்புரை :

அவர்கள், அங்ஙனம் உரைத்ததைக் கேட்ட பொதியமலையின் அரசனான பாண்டிய மன்னன், `நீங்கள் சினம் மிகுதியினால் இங்ஙனம் கூறி விட்டீர்கள். உங்கள் செய்கைகளையும் மறந்துவிட்டீர்கள்!\' என்று சொல்லிப்பின், `உண்மை பற்றிய பொருளை உட்கொண்ட உம் ஓலைகளை ஓடும் நீரையுடைய வைகையாற்றில் அழகுபொருந்த விடுவதற்குச் செல்லுங்கள்\' என்று கூற,

குறிப்புரை :

உங்கள் செய்கை, இதுகாறும் ஒவ்வொன்றாக வாதம் செய்து வருவதும், அவையனைத்திலும் தோல்வியுற்று வருவதுமாய செய்கை.

பண் :

பாடல் எண் : 800

பிள்ளையார் முன்னம் பைம்பொற்
பீடத்தின் இழிந்து போந்து
தெள்ளுநீர்த் தரளப் பத்திச்
சிவிகைமே லேறிச் சென்றார்
வள்ளலார் அவர்தம் பின்பு
மன்னன்மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு உணர்கி லாதார்
உணர்வுமால் ஏறிச் சென்றார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் பசும் பொன்னால் ஆன பீடத் தினின்றும் முன்னம் எழுந்து, வெளியில் வந்து, தெளிந்த நீர்மையு டைய முத்துக்கள் நிரல்படப் பதித்த சிவிகையின் மீது ஏறி வைகைக் கரைக்குச் சென்றார். வள்ளலாரான அவர் பின்பு, மன்னன் குதிரை மீது ஏறிச் சென்றான். உண்மையை உள்ளபடி உணர்ந்து ஒழுகுகின்ற ஆற்றல் அற்ற சமணர்கள், தம் உணர்வெனும் மயக்கத்தை மேற் கொண்டு சென்றனர்.

குறிப்புரை :

வள்ளலாரும், மன்னனும் தத்தமக்கு ஏற்ற ஊர்தியின் மேல் ஏறிச் செல்ல, அமணர்கள் மட்டும் ஊர்தியின்றிச் செல்லல் தகாது எனத் திருவுளம் கொண்ட ஆசிரியர் சேக்கிழார், தத்தம் மனத்துட் கொண்ட மயக்கமாகிய ஊர்தியில் ஏறிச் சென்றார்கள் என நகைச் சுவைபடக் கூறியிருக்கும் திறம் அறிந்து இன்புறற்குரியதாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 801

தென்னவன் வெப்புத் தீர்ந்து
செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது
பிள்ளையார் பெருகுஞ் செல்வம்
மன்னிய மதுரை மூதூர்
மறுகில்வந் தருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர்
தொழுதுவே றினைய சொன்னார்.

பொழிப்புரை :

பாண்டியன் வெப்பு நோய் நீங்கிச் செழுமையான அரண்மனையினின்றும் புறப்பட்டுத் தம் பின்னே நெருங்கிவர, பெருகும் செல்வம் நிலையாக நிறைந்த மதுரையான பழம் பதியின் தெருவில் பிள்ளையார் வந்தருளுவதைக் கண்டு, வந்து நெருங்கிய மங்கையரும் மைந்தர்களும் வணங்கி, தத்தமக்குத் தோன்றியவாறே தம்மனத்துட் பட்ட கருத்துக்களைச் சொல்வாராயினர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 802

மீனவன் கொண்ட வெப்பை
நீக்கிநம் விழுமந் தீர்த்த
ஞானசம் பந்தர் இந்த
நாயனார் காணும் என்பார்
பானறுங் குதலைச் செய்ய
பவளவாய்ப் பிள்ளை யார்தாம்
மானசீர்த் தென்னன் நாடு
வாழவந் தணைந்தார் என்பார்.

பொழிப்புரை :

`பாண்டியன் அடைந்த வெப்புநோயை நீக்கி, நம் வருத்தத்தை நீக்கியருளிய திருஞானசம்பந்தர் இந் நாயனார்! பாருங் கள்!\' என்பார்கள், `பால் மணம் கமழும் குதலைச் சொல் எழும் பவளம் போன்ற வாயையுடைய பிள்ளையார் பெருஞ் சிறப்புடைய பாண்டிய நாடு வாழும் பொருட்டு இங்கு வந்து சேர்ந்தார்\' என்பார்கள்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 803

எரியிடை வாதில் தோற்ற
திவர்க்குநம் அருகர் என்பார்
புரிசடை அண்ணல் நீறே
பொருளெனக் கண்டோம் என்பார்
பெருகொளி முத்தின் பைம்பொற்
சிவிகைமேற் பிள்ளை யார்தாம்
வருமழ கென்னே என்பார்
வாழ்ந்தன கண்கள் என்பார்.

பொழிப்புரை :

`நெருப்பில் செய்த வாதத்தில் நம் சமணக் குருமார்கள் தோற்றது இவருக்கு என்பார், புரிந்த சடையையுடைய சிவபெருமானின் திருநீறே மெய்ப்பொருளாவது என்பதைக் கண் ணாரக் கண்டோம் என்பார், பெருகும் ஒளியுடைய முத்துகள் பதித்த பசும் பொன்னால் இயன்ற சிவிகையில் மேலே பிள்ளையார் வரும் அழகுதான் என்னே! என்பார், `இக்காட்சியைக் கண்டு நம்கண்கள் வாழ்ந்தன\\\' என்பார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 804

ஏதமே விளைந்த திந்த
அடிகள்மார் இயல்பா லென்பார்
நாதனும் ஆல வாயில்
நம்பனே காணு மென்பார்
போதமா வதுவும் முக்கட்
புராணனை அறிவ தென்பார்
வேதமும் நீறு மாகி
விரவிடும் எங்கும் என்பார்.

பொழிப்புரை :

`இச் சமணக் குருமார்கள் இயல்பால் தீமையே விளைந்தது என்பார். `முழுமுதற் கடவுளாவார் ஆலவாயில் வீற்றி ருக்கும் இறைவனே எனக் கண்டு மகிழுங்கள்\' என்பார். `மூன்று கண் களையுடை பழமையான சிவபெருமானை அறிவதே ஞானமாகும்\' என்பார். `மறைகளும் திருநீறுமே எங்கும் நிறைந்தனவாகிப் பரவி டும்!\' என்பார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 805

அடிகள்மார் முகங்கள் எல்லாம்
அழிந்தன பாரீர் என்பார்
கொடியவஞ் சனைகள் எல்லாம்
குலைந்தன போலும் என்பார்
வடிகொள்வேல் மாறன் காதல்
மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்த திந்த
வெஞ்சமண் இருளும் என்பார்.

பொழிப்புரை :

`சமண முனிவர்களின் முகங்கள் எல்லாம் வாடிவிட்டன பாருங்கள்\' என்பார். `கொடிய வஞ்சனைகள் எல்லாம் அழிந்தன போலும்\' என்பார். `கூர்மையான வேலையுடைய பாண்டி யன் சமணக் குருமார்கள் மீது வைத்திருந்த பற்று மாறிவிட்ட வண் ணம்தான் என்னே\' என்பார். `இக் கொடிய சமணமாகும் இருளும் நீங்கி இன்று புலர்ந்து விடிவதாய் முடிந்தது\' என்பார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 806

நெருப்பினில் தோற்றார் தாங்கள்
நீரில்வெல் வர்களோ என்பார்
இருப்புநெஞ் சுடைய ரேனும்
பிள்ளையார்க் கெதிரோ என்பார்
பருப்பொரு ளுணர்ந்தார் தாங்கள்
படுவன பாரீர் என்பார்
மருப்புடைக் கழுக்கோல் செய்தார்
மந்திரி யார்தா மென்பார்.

பொழிப்புரை :

`அனல் வாதத்தில் தோற்றவர், புனல் வாதத்தில் வெல்வார்களோ!\' என்பார். `இரும்பு மனம் உடையவராயினும் இப்பிள்ளையாருக்கு எதிராக நிற்க வல்லரோ?\' என்பார். `நுண்பொ ருளை விடுத்துப் பருப்பொருளை மட்டும் உணர்ந்த அவ்வளவில் அடங்கிய சமணர்கள்பட இருக்கும் முடிவினைப் பாருங்கள்\' என்பார் `கொம்புகளைப் போன்ற கூர்மையான கழுமரங்களை அமைச்சரான குலச்சிறையார் தாம் செய்வித்துள்ளார்\' என்பார்.

குறிப்புரை :

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள், 355) என்பர் திருவள்ளுவர். உணர்வில் நேர்பெறக் காணத்தக்க மெய்ப் பொருளை, உடலானும், உரையானும் முறையே கொண்ட வேடத் தானும், மனத்தின் அமையாது சொல்லும் சொற்களாலும் மட்டுமே காண்டற்கு முற்படின் காணத் தகுமோ? தகாது. ஆதலின் சமணர்களைப் `பருப்பொருள் உணர்ந்தார்\' என்ற அளவிலேயே வைத்துப் பேசு கிறார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 807

ஏடுகள் வைகை தன்னில்
இடுவதற் கணைந்தார் என்பார்
ஓடுநீ ருடன்செ லாது
நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார்
நிறுத்தவும் வல்லர் என்பார்
நாடெலாங் காண இங்கு
நண்ணுவர் காணீர் என்பார்.

பொழிப்புரை :

`சமணர்கள் வைகை ஆற்றில் ஏடுகளை இடுவதற்காக வந்தார்கள்\' என்பார். `ஓடுகின்ற நீரில் இடப்பட்ட ஓலை, ஓடாது ஓரிடத்தில் நிற்குமோ?\' என்பார். `சீரிய ஞானம் கைவரப்பெற்ற பிள்ளையார், அவ்வேடுகளை நிறுத்தவும் வல்லார்\' என்பார். `நாடெல் லாம் காணத்தக்க பிள்ளையார் இதுபொழுது வருவர், நேரில் பாருங்கள்!\' என்பார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 808

தோற்றவர் கழுவி லேறத்
துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மைப்
பிள்ளையார்க்கு அழகி தென்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு
நீங்கிய வண்ணங் கண்டார்
போற்றுவா ரெல்லாஞ் சைவ
நெறியினைப் போற்று மென்பார்.

பொழிப்புரை :

`தோல்வியுற்றவர் கழுவில் ஏறச் சமணர் துணியலாமோ?\' என்பார். `இதுகாறும் செய்து காட்டி அருளின் மேம் பாட்டினையுடைய பிள்ளையாருக்கு இஃது அழகேயாகும்\' என்பார். `திருநீற்றினால் பாண்டியர் தீங்கினின்றும் நீங்கிய தன்மையைக் கண்டவர் யாவரும் சைவத் திறத்தைப் போற்றுவர், ஆதலால், எல்லோரும் சைவ நெறியினையே போற்றுங்கள்\' என்பார்.

குறிப்புரை :

மடத்தில் மந்திர விதியினால் தீயிடத் துணிந்தது, பாண்டி யருக்குற்ற வெப்புத் தீயை நீக்க முற்பட்டது, அனல் வாதம் செய்யத் துணிந்தது ஆகிய மூன்றினுமே தோல்வியுற்றவர்கள் சமணர்கள். இங்ஙனம் தொடர்ந்து தோல்வியுற்று வருபவர்களை வெங்கழு ஏற்று வான் வேந்தனேயாக என்றல் தகுமோ எனில் தகும். சைவரோடு தாம் வாழ்ந்திருந்த திருமடத்தில் தீயிட்ட போதும், அதனைப் `பையவே சென்று பாண்டியற்காகவே\' என்று கூறிப் பாண்டியற்கு ஆக்கம் கண்டவர் பிள்ளையார். அச்சமணர்களை வெல்லவும் அவர்கள் குற்றம் நீங்க ஒறுக்கவும் இறைவனின் திருவருட்குறிப்பை ஒரு முறைக்கு இருமுறை அறிந்து வந்தவர். அவர்கள் கூறிய வாதங்களை எல்லாம் தொடர்ந்து ஏற்றுக் கொண்டவர். இவ்வாறு அமைதியும் அருளும் கொண்டு நிற்கும் பிள்ளையார், இறுதியாக அவர்கள் தாமே ஒட்டி நின்ற வாதிற்கு இசைதல் ஏலாதாயின், சைவ மெய்ப் பொருள் உண்மையை நிலைநாட்ட இயலாமல் போகும். அன்றியும் அவ்வம ணர் தாமே ஒட்டிச் செய்யும் வாதில் அரசன் முறை செய்யுங்கால் தாம் தடுப்பது முறையும் அன்று. ஆதலின் பிள்ளையாரின் அருட்செயல் அழகிது என்றார். இவ்வகையான் எல்லாம் அறியத்தக்கது சைவ மெய்ச் சார்பே ஆதலின் அதனை அனைவரும் போற்றும் கடப்பா டுடையர் என்றனர். இக்கூற்றுக்கள் இனி நிகழப் போகும் நிலையினை உட்கொண்டனவாயும் கண்டோரின் கூற்றுக்களின் நிறைவானவை யாயும் அமைந்திருப்பது அறிந்து மகிழ்தற்குரியதாம். இவ்வேழு பாடல்களும் பொருள் வகையால் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 809

இன்னன இரண்டு பாலும்
ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின்னொளி மணிப்பொற் காம்பின்
வெண்குடை மீது போதப்
பன்மணிச் சிவிகை தன்மேற்
பஞ்சவ னாட்டு ளோர்க்கு
நன்னெறி காட்ட வந்தார்
நான்மறை வாழ வந்தார்.

பொழிப்புரை :

தெருவின் இருமருங்கிலும் நின்றவர்கள் இன்னோரன்னவற்றை எடுத்துக் கூற, மின் போன்ற ஒளியையுடைய அழகான பொற்காம்பையுடைய வெண்குடைமேலே நிழற்றப் பல மணிகள் பதித்த சிவிகையின் மீது நான்மறைகளும் வாழும் பொருட்டு வந்தருளிய பிள்ளையார், பாண்டிய நாட்டில் உள்ளவர்களுக்கு நன்னெறியைக் காட்டும் பொருட்டு வந்தருளினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 810

தென்றமிழ் விளங்க வந்த
திருக்கழு மலத்தான் வந்தான்
மன்றுளார் அளித்த ஞான
வட்டில்வண் கையன் வந்தான்
வென்றுல குய்ய மீள
வைகையில் வெல்வான் வந்தான்
என்றுபன் மணிச்சின் னங்கள்
எண்டிசை நெருங்கி ஓங்க.

பொழிப்புரை :

அழகிய தமிழ் மேலும் விளங்குமாறு தோன்றிய திருக்கழுமலத்தோரான பிள்ளையார் வந்தருளினார், தில்லைக்கூத்தர் அளித்த சிவஞானப் பாலையுடைய பொற்கிண்ணத்தைப் பெற்ற அருட்கொடை வளரும் திருக்கைகளையுடைய பிள்ளையார் வந்த ருளினார், முன்னுற்ற வாதங்களில் வென்ற பிள்ளையார், இனிவரும் புனல் வாதத்திலும் வெல்ல வந்தருளினார் என்று இவ்வாறு பல அழ கிய முத்துச் சின்னங்கள் எண் திசைகளிலும் நெருங்கி ஒலிக்க.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 811

பன்மணி முரசம் சூழ்ந்த
பல்லியம் இயம்பப் பின்னே
தென்னனும் தேவி யாரும்
உடன்செலத் திரண்டு செல்லும்
புன்னெறி அமணர் வேறோர்
புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை யாற்றின்
கரைமிசை மருவ வந்தார்.

பொழிப்புரை :

அழகிய முரசுகள் பலவுடன் இணைந்த பலவகை இயங்களும் ஒலிக்க, தம் பின்பு அரசனும் அரசமாதேவியாரும் சேர்ந்து வரக் கூட்டமாய்த் திரண்டு வரும் புல்லிய நெறியில் நின்ற சமணர்கள் வேறு ஒரு பக்கத்தில் வரச் சீகாழி வேந்தரான ஞான சம்பந்தர், நிலை பெற்ற வைகையாற்றின் கரைமீது பொருந்தும்படி எழுந்தருளி வந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 812

கார்கெழு பருவம் வாய்ப்பக்
காமுறு மகளிர் உள்ளம்
சீர்கெழு கணவன் தன்பால்
விரைவுறச் செல்லு மாபோல்
நீர்கெழு பௌவம் நோக்கி
நிரைதிரை இரைத்துச் செல்லும்
பார்கெழு புகழின் மிக்க
பண்புடை வைகை யாறு.

பொழிப்புரை :

கார்காலம் வந்ததும் விருப்பம் மிக்க மகளிரின் மனம் சிறப்புடைய தம் கணவரிடம் விரைந்து செல்வதைப் போல உலகில் புகழால் மிக்க அன்புடைய வைகை ஆறு, நீர் மிக்க கடலை நோக்கி வரிசையான அலைகளால் ஒலி மிக்குச் செல்லும்.

குறிப்புரை :

இப்பாடல் எல்லாப் பதிப்புக்களிலும் உள்ளது. எனி னும் பொருளியைபுபட்டு நிற்கும் வரலாற்றுத் தொடர்போடு இப்பாடல் இயையாமையானும், வைகையாறு கடலோடு கலக்கும் தகையது அன்றாதலானும், இஃது இடைச் செருகலாக இருக்குமெனச் சிவக் கவிமணியார் கருதுவார். `கடல் ஒருவர்க்கும் உதவாத உவரியென மடுத்தறியாப் புனல் வைகை\' (பா.2) எனப் பரஞ்சோதியாரும் கூறுவர் (வாதவூரர்- உபதேசப் படலம்). இதற்கேற்ப, வைகை இன்றும் இராம நாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் என்னும் கண்மாயிலேயே பாய்ந்து வருகிறது என்ப. எனினும் 814, 816ஆவது பாடல்களில் வைகை கடலில் கலக்குமாற்றை ஆசிரியர் கூறுதலானும், மேலும் எண்ணித் துணிதல் தக்கதாதலானும் இப்பதிப்பில் இப்பாடல் கொள் ளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 813

ஆற்றில்நீர் கடுக வோடும்
மருங்குற அரசன் நோக்கி
நீற்றணி திகழ்ந்த மேனி
நிறைமதிப் பிள்ளை யாரும்
வேற்றுரு அருகர் நீரும்
விதித்தஏ டிடுக என்றான்
தோற்றவர் தோலா ரென்று
முன்னுறத் துணிந்திட் டார்கள்.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு ஞானசம்பந்தரும் மற்றும் உள்ளவரும் ஆற்றின் நீர் விரைந்து செல்லும் வைகையாற்றின் கரையைச் சேர, `திருநீற்றின் அழகு விளங்கிய நிறைமதி போன்ற ஞானசம்பந்தரும், அதற்கு மாறான உருவு கொண்ட அருகர்களாகிய நீங்களும் முன் இசைந்தவாறு உங்கள் ஏடுகளை இவ்வாற்றில் இடுங்கள்\' என்று பாண்டியன் கூறச் சமணர்கள் முதலில் தோற்றவர்கள் பின்னும் தோற்கமாட்டார்கள் என்ற உலகியல் வழக்கை உளங் கொண்டு, முற்பட ஏட்டை ஆற்றில் இடத் துணிந்தனர்.

குறிப்புரை :

இன்ப துன்பங்கள் மாறி மாறி வருதல் இயற்கை என்றும், தோல்வி வெற்றிக்கு அறிகுறி என்றும் உலகியலில் கூறப் படும் வழக்கை நோக்கிச் சமணர்களும் இங்ஙனம் கருதினர். `துன்ப முற்றவர்க்கலால் இன்பமில்லையாதலால்\' (சீவக. 579) எனத் திருத் தக்கதேவரும், `துன்பம் துன்பம் துன்பம், துன்பத்திற்கோர் எல்லை காணின் இன்பம் இன்பம் இன்பம்\' பாரதியாரும் கூறுவன காண்க.

பண் :

பாடல் எண் : 814

படுபொரு ளின்றி நெல்லிற்
பதடிபோல் உள்ளி லார்மெய்
அடுபவர் பொருளை அத்தி
நாத்திஎன் றெழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும்
அவாவினாற் கையிலேடு
விடுதலும் விரைந்து கொண்டு
வேலைமேற் படர்ந்த தன்றே.

பொழிப்புரை :

உள்ளீடு இல்லாத நெற்பதர் போன்ற மெய்ம்மையான உள்ஈடு இல்லாத அமணர்கள், மெய்ப்பொருளைப் பொய்ப் பொருள் எனக் கூறுவோராய், ஆருகத நூலில் கூறும் பொருள் தொகுதியான `அத்தி நாத்தி\' என்பதை ஏட்டில் எழுதி, ஆற்றில் விரைந்தோடும் நீரைக் கண்டும், கையில் கொண்ட ஏட்டைப் பேராசை யால் விடுத்திட, அவ்வாற்றின் வெள்ளம் அப்போதே அதைக் கொண்டு கடலை நோக்கி விரைந்து சென்றது.

குறிப்புரை :

அத்தி நாத்தி என்பது சமணர்களின் மந்திரம். அத்தி - உண்டு. நாத்தி - இல்லை. எனவே இது `உண்டு\' என்பதைத் தாமே மறுத்துக் கூறுவதாகும்.

பண் :

பாடல் எண் : 815

ஆறுகொண் டோடும் ஏட்டைத்
தொடர்ந்தெதி ரணைப்பார் போலத்
தேறுமெய் யுணர்வி லாதார்
கரைமிசை ஓடிச் சென்றார்
பாறுமப் பொருள்மேற் கொண்ட
பட்டிகை எட்டா தங்கு
நூறுவிற் கிடைக்கு முன்னே
போனது நோக்கிக் காணார்.

பொழிப்புரை :

இழுத்துக் கொண்டு ஓடுகின்ற ஏட்டைத் தொடர்ந்து சென்று, எதிரே ஓடாமல் அணைப்பவர் போலத் தெளியும் உண்மை அறிவு இல்லாத சமணர்கள் ஆற்றின் கரைமேல் ஓடிச் சென்ற னர். அழியும் பொருளை மேற்கொண்ட அவ்வேடு கிட்டாது அங்குக் கீழ் நோக்கி நூறு விற்கிடை தொலைவு எல்லைக்கு மேல் போய்விடக் கண்ணால் அதனைக் காணவும் இயலாதவர் ஆயினர்.

குறிப்புரை :

பட்டிகை - ஓலை. விற்கிடை -ஒருவில் கிடக்கும் தொலைவு.

பண் :

பாடல் எண் : 816

காணவும் எய்தா வண்ணம்
கடலின்மேற் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை
நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார்
சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது
அஞ்சுவார் அணைய மீண்டார்.

பொழிப்புரை :

காணவும் இயலாதவாறு கடலை நோக்கிச் செல்லும் அவ்வேடு, நாணம் என்பது ஒன்று இல்லாத சமணரை நட்டாற்றில் கைவிட்டு அகன்று போய்விட, அவ்வமணர்கள் தாமும், தொலைவில் சென்றவர்களும், பலவாறு சிதறுண்டவர்களும், திகைப்பு அடைந்தவர்களுமாகி, மன்னனின் ஆணையில் தப்ப மாட்டாது அஞ்சுபவராய், அவன் அருகில் திரும்பவும் வந்தனர்.

குறிப்புரை :

`யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்\' (குறள், 895) என்பர் திருவள்ளுவர். ஆதலின் தொலைவில் சென்றவர்களும் சிதறியவர்களும் மீண்டும் வரலாயினர்.

பண் :

பாடல் எண் : 817

வேறொரு செயலி லாதார்
வெருவுற்று நடுங்கித் தம்பால்
ஈறுவந் தெய்திற் றென்றே
மன்னவன் எதிர்வந் தெய்தி
ஊறுடை நெஞ்சில் அச்சம்
வெளிப்பட வொளிப்பார் போன்று
மாறுகொண்ட வரும் இட்டால்
வந்தது காண்டும் என்றார்.

பொழிப்புரை :

வேறு செய்யத்தக்கது ஏதும் இல்லாதவரான சமணர்கள், அச்சம் கொண்டு நடுங்கித் தங்களுக்கு இறுதி வந்து சேர்ந்து விட்டது என்றே துணிந்து, மன்னன் முன்வந்து சேர்ந்து, புண் பட்ட தம் உள்ளத்தில் அச்சம் வெளிப்பட்டு வரவும், அதனை மறைப் பவர் போல, `எங்களுடன் மாறுபட்ட பிள்ளையாரும் ஏட்டினை ஆற்றில் இட்டால் அதன் பின்பு வரும் முடிவைக் காணலாம்\' என்று கூறினர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 818

மாசுசேர் அமணர் எல்லாம்
மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியிற் சேர்ந்த
அரசனும் அவரை விட்டுத்
தேசுடைப் பிள்ளை யார்தந்
திருக்குறிப் பதனை நோக்கப்
பாசுரம் பாட லுற்றார்
பரசம யங்கள் பாற.

பொழிப்புரை :

அகத்தும் புறத்தும் அழுக்கு மிக்க அமணர்கள் அனைவரும் இங்ஙனம் அறிவு மயங்கிக் கூறக் குற்றத்தை நீக்கும் நெறியில் நிற்கும் பாண்டிய மன்னனும், அச்சமணர்களை விட்டுச் சிவ ஞான ஒளியுடைய ஞானசம்பந்தரின் திருவுள்ளக் குறிப்பு யாதோ? என அறிந்து கொள்ளுமாறு அவரைப் பார்க்க, அவர் பிற சமயங் களால் நேர்ந்த மயக்கம் நீங்குமாறு திருப்பதிகத்தைப் பாடி அருள லுற்றார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 819

தென்னவன் மாறன் தானுஞ்
சிவபுரத் தலைவர் தீண்டிப்
பொன்னவில் கொன்றை யார்தந்
திருநீறு பூசப் பெற்று
முன்னைவல் வினையும் நீங்கி
முதல்வனை யறியுந் தன்மை
துன்னினான் வினைக ளொத்துத்
துலையென நிற்ற லாலே.

பொழிப்புரை :

தென்னவனான பாண்டியனும், சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருக்கரங்களால் தீண்டப்பெற்றுப் பொன் போன்ற கொன்றையைச் சூடிய சிவபெருமானின் திருநீற்றைப் பூசப் பெற்றதால், இருவினைகளும் ஒத்துப் பொருளைச் சமன்செய்து காட்டும் துலாக்கோலைப் போல நின்றதால், முன்னைய கொடிய வினையினின்றும் நீங்கியவனாய், முதல்வனான இறைவனை அறிந்து கொள்ளும் இயல்பைப் பெற்றவன் ஆனான்.

குறிப்புரை :

இருவினை ஒப்பு - இன்பத்துள் இன்பம் விழையா மலும், துன்பத்துள் துன்பமுறாமலும் இருக்கும் மனநிலை. `நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே\' எனத் திரு வருளில் அழுந்தி நிற்கும் உறைப்பால் உளதாகும் நிலை இது. இந் நிலையால் யான் எனது என்னும் செருக்கற்றுநிற்கும் நிலையும் வந்து றும். இதனையே `மலபரிபாகம்\' என்பர்.

பண் :

பாடல் எண் : 820

உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்
கலதிவாய் அமணர்காண் கிலார்க ளாயினும்
பலர்புகழ் தென்னவன் அறியும் பான்மையால்.

பொழிப்புரை :

உலகியல் ஒழுக்கம் மறைநூல்களில் விதித்த ஒழுக்கமே என்பதையும், அழியாமல் நிலைபெறுகின்ற வீடுபேற்றை அடைதற்குரிய உண்மைநெறி சிவநெறியேயாகும். என்பதையும், அழிவு பெறும் சமணர்கள் அறிய மாட்டாராயினும், பலராலும் புகழப் படுகின்ற பாண்டியன் அறியும் பான்மையால்,

குறிப்புரை :

கலதி - தீமை, கேடு. வாய் - வாய்ப்பு.

பண் :

பாடல் எண் : 821

அந்தணர் தேவர்ஆ னினங்கள் வாழ்கஎன்
றிந்தமெய்ம் மொழிப்பயன் உலகம் இன்புறச்
சந்தவேள் விகள்முதல் சங்க ரர்க்குமுன்
வந்தஅர்ச் சனைவழி பாடு மன்னவாம்.

பொழிப்புரை :

`அந்தணர்களும் அமரர்களும் பசுக்களும் வாழ்க\' என்று சொன்ன இந்த மெய்ம்மொழியின் பயனாவது, உலகத்து உயிர்கள் துன்பம் நீங்கி இன்பத்தை எய்தும் பொருட்டு ஒலியுடன் கூடிய மந்திரங்களையுடைய சிவவேள்விகள் முதலாகச் சிவபெருமா னுக்குச் சொல்லப்பட்ட அர்ச்சனைகளும் வழிபாடுகளும் ஆகியவை நிலைபெறுதலாகும்.

குறிப்புரை :

மறைவழிச் செய்வோர் வைதிகர்களாவர். ஆகமவழிச் செய்யும் சிவவேதியர்கள் அந்தணராவர். மறைவழிச் செய்யும் வேள்விகளில் நின்று ஏற்போர் தேவர்கள் ஆவர். ஆகமவழி, குறிப் பாக நம் திருமுறை வழிச்செய்யும் வேள்விகளில், அவ்வேள்விப் பொருளை ஏற்போன் இறைவனேயாவன். இதுவே சிவவேள்வி எனப்படும். பிள்ளையார் ஈண்டுக் குறிப்பதும் இச்சிவ வேள்வியேயாம். வேள்விக்கென இறைவன் வழங்கிய பொருளைத் தந்தையாரிடம் கொடுத்தபொழுது பிள்ளையார் அருளிய திருவாக்கால் இவ்வுண்மை அறியப்படும். இறைவற்குரிய திருமுழுக்கிற்குத் தன்னிடத்தினின்றும் ஐந்துபொருள்களைத் தருதலின் வேள்வி செய்யும் இவர்களோடு பசுவையும் கூட்டி வாழ்க என்றார்.

பண் :

பாடல் எண் : 822

வேள்வி நற்பயன் வீழ்புன லாவது
நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்
ஆளும் மன்னனை வாழ்த்திய தர்ச்சனை
மூளும் மற்றிவை காக்கு முறைமையால்.

பொழிப்புரை :

நல்ல வேள்விகளின் பயன், மழை தவறாமல் பெய்தலாகும் என்று அருள் செய்தது, அதுநாள் தோறும் இறைவரின் அருச்சனைக்கு உறுப்பாதலால் ஆம். உலகை ஆளும் வேந்தனை `ஓங்குக\' என்று வாழ்த்தியது. அருச்சனை முதலாக வரும் இவற்றைக் காக்கின்ற முறையினால் ஆகும்.

குறிப்புரை :

`புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு\' என்ப வாகலின் இறைவழிபாட்டிற்கு வேண்டும் நீரின் முதன்மையும் இன்றி யமையாமையும் விளங்கும். `சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்கு மேல் வானோர்க்கும் ஈண்டு\' (குறள், 18) என்னும் திருக்குற ளும். மன்னனின் ஆட்சி, உயிரினங்கள் வாழ்வாங்கு வாழ்தற்கும், அவை இறைவழிபாடாற்றி இம்மை, மறுமை, அம்மை ஆகிய மும்மை நலங்களையும் அடைதற்கு ஏதுவாகவும் இருத்தல் வேண்டும். `மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய\' எனத் தொடங்கும் தொல்காப் பிய நூற்பாவானும் (தொல். அகத்.28) இவ்வுண்மை அறியப்படும். இது பற்றியே மன்னனை வாழ்த்தினர்.
அரசர்க்குற்ற கடன்களில் இக்கடமை முதன்மையுடைய தாதலை,
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.
(தி.10 பா.238) ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
(தி.10 பா.241) ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையுங்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.
(தி.10 பா.242) கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.
(தி.10 பா.245) தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.
(தி.10 பா.246) எனவரும் திருமூலர் திருவாக்கானும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 823

ஆழ்க தீயதென் றோதிற் றயல்நெறி
வீழ்க என்றது வேறெல்லாம் அரன்பெயர்
சூழ்க என்றது தொல்லுயிர் யாவையும்
வாழி அஞ்செழுத் தோதி வளர்கவே.

பொழிப்புரை :

`ஆழ்க தீயது\' என்று அருளியதன் பொருள், மறைகள் ஆகமங்கள் ஆகியவற்றிற்குப் புறம்பான நெறிகள் வன்மை யில்லாது ஒழிக என்பதாகும். வேறாக எல்லாம் `அரன் நாமமே சூழ்க\' என்றது, இவ்வயல் நெறிக்கு வேறான சிவநெறித் தொடர்பில் நின்று, பழங்காலம் முதலாக வாழ்ந்து வரும் உயிர்கள் எல்லாம், பெரு வாழ்வைத் தருகின்ற திருவைந்தெழுத்தை ஓதி வளர்க என்னும் பொருட்டாம்.

குறிப்புரை :

சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றுவர் ஆதலின், அவற்றின் மெய்ம்மையுணர்ந்து உண்மை நெறியைப் போற்றக் காலம் நீட்டிக்குமாகலின் ஆழ்க தீயது என்றார். வேறு எல்லாம் - அயல்நெறிக்கு வேறான சிவச்சார்புடைய உயிர்கள் எல்லாம். அரன்பெயர் திருவைந்தெழுத்தேயாதலின் அதனையே ஓதி வளர்க என்றார்.

பண் :

பாடல் எண் : 824

சொன்ன வையக முந்துயர் தீர்கவே
என்னும் நீர்மை இகபரத் தில்துயர்
மன்னி வாழுல கத்தவர் மாற்றிட
முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர்.

பொழிப்புரை :

கூறிய `வையகமும் துயர் தீர்கவே\' என்றதன் கருத் தாவது, `இம்மையிலும் மறுமையிலும் நிலைத்து நிற்கும் இவ்வுலகத்து வாழும் உயிர்கள் துன்பம் நீங்கியிடவாகும். இக்கருத்துக்கள் எல்லாம் முதல் பாடலில் அமையத் திருஞானசம்பந்தர் உரைத்தருளினார்.

குறிப்புரை :

சொன்ன வையகம் - பதிகத்துள் சொல்லப்பட்ட இந்நில வுலகம். துயர் - துன்பம் : இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் வரும் துயர். `இம்மைக்கும் மறுமைக்கும் வருத்தம் வந்தடையாவே\' எனவரும் திருமுறைத் திருவாக்கும் (தி.2 ப.106 பா.11) காண்க.

பண் :

பாடல் எண் : 825

அரிய காட்சியர் என்பதவ் வாதியைத்
தெரிய லாநிலை யால்தெரி யாரென
உரிய அன்பினிற் காண்பவர்க் குண்மையாம்
பெரிய நல்லடை யாளங்கள் பேசினார்.

பொழிப்புரை :

முன்செய்யுளில் `அரன்\' என்று உரைத்த ஆதியை, உயிர் தன்னறிவானும் தளையறிவானும் (பசு, பாச, ஞானம்) அறியப்படாத நிலைமையது ஆதலின், `அரிய காட்சியர்\' என்று அருளினர். அங்ஙனம் அவ்விருவகையறிவுகளானும் அறிய மாட்டாமையை அறிந்து, காண்டற்குரிய அன்பின் திறத்தால் காண முயலும் முதிர்ச்சி உடைய அடியவர்களுக்குக் காணுமாறு உள்ளன வாய நல்ல அடையாளங்களையும் எடுத்துரைத்தனர்.

குறிப்புரை :

அடையாளங்களாவன `அங்கைசேர் எரியர், ஏறுகந் தேறுவர், கண்டமும் கரியர், காடுறை வாழ்க்கையர்\' என்பனவாம்.

பண் :

பாடல் எண் : 826

ஆயி னும்பெரி யாரவர் என்பது
மேய இவ்வியல் பேயன்றி விண்முதற்
பாய பூதங்கள் பல்லுயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர்வடி வென்றதாம்.

பொழிப்புரை :

மேற்கூறிய அடையாளங்களைக் கொண்டு இருப்பினும் அக்காட்சியளவுட்பட்டே நிற்பவர் அல்லர். விண் முதலா கப் பரந்த ஐம்பெரும் பூதங்களும், பல உயிர்களும், அண்டங்களும், மற்றுமுள்ளவையும் ஆக யாவும், பேசப்படும் இவர் பெருவடிவைக் கொண்டிருப்பனவேயாம்.

குறிப்புரை :

`அப்பெருவடிவை யார் அறிவார் பேசு\' (திருக்களிற். 5) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 827

பின்பும் ஆரறி வாரவர் பெற்றியே
என்ப தியாருணர் வானும்சென் றெட்டொணா
மன்பெ ருந்தன்மை யாரென வாழ்த்தினார்
அன்பு சூழ்சண்பை ஆண்டகை யாரவர்.

பொழிப்புரை :

மேலும் அவரது இயல்பை யார் அறிவார்? என்று கூறியருளும் இயல்பாவது, அவர் எவரது உணர்வினாலும் சென்று எட்டுவதற்கு இயலாத நிலைமையுடைய தன்மையை உடையவர் ஆவர் என்று அன்புடைய சண்பையை ஆளும் தகையாரான சம்பந்தர் உரைத்தருளினார்.

குறிப்புரை :

`தன்னறிவதனால் காணும் தன்மையன் அல்லன் ஈசன்\' (சித்தியார் 6 ஆம் சூத். 8) எனவரும் ஞானமெய்ந்நூற் கூற்றும் காண்க.

பண் :

பாடல் எண் : 828

வெந்த சாம்பல் விரையென் பதுதம
தந்த மில்லொளி யல்லா வொளியெலாம்
வந்து வெந்தற மற்றப் பொடியணி
சந்த மாக்கொண்ட வண்ணமும் சாற்றினார்.

பொழிப்புரை :

வெந்த சாம்பல் விரை எனப் பூசியே என்றது, தம் அழிவற்ற, நிலையான சிவஒளி அல்லாத மற்ற ஒளிப் பொருள்கள் யாவும், படைப்பு முதலாக அழித்தல் ஈறாக வரும் படிநிலையில், ஒருகால எல்லையில் இருந்து, வெந்து, நீறாகி அழிய, வேறான அச்சாம்பலை, இறைவர் அழகிய சந்தனமாய்க் கொண்ட இயல்பினை விளக்கவாம்.

குறிப்புரை :

`ஈறிலாதவன் ஈசன் ஒருவனே\' (தி.5 ப.100 பா.3) என்பது தெளிய அறிவித்த குறிப்பாம்.

பண் :

பாடல் எண் : 829

தமக்குத் தந்தையர் தாயிலர் என்பதும்
அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ
திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம்.

பொழிப்புரை :

இறைவர், `தந்தையாரொடு தாய் இலர்\' என்று அருளியதன் கருத்து, தம் ஒளியன்றி ஏனைய பொருள்கள் எல்லா வற்றையும் ஒருகால எல்லையில் அழித்தபின் தமக்குள்ளே ஒடுக்கிப் பின்னரும் அவற்றைத் தோற்றுவித்தருளும் குறிப்புடைமையாம்.

குறிப்புரை :

இறைவன் தாயும் தந்தையும் இன்றித் தான் தனியன் ஆயிடினும், இவ்வுலகைக் காத்தும் படைத்தும் கரந்தும் நின்று உய்வித் தருள்பவன் ஆவன். இவ்வாற்றான் உயிர்கட்கெல்லாம் தான் தாயும் தந்தையுமாய் நின்று அருளியதல்லது, தனக்கு ஒரு தந்தை தாயிலன் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 830

தம்மையே சிந்தி யாவெனுந் தன்மைதான்
மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென
இம்மை யேநினை வார்தம் இருவினைப்
பொய்ம்மை வல்லிருள் போக்குவர் என்றதாம்.

பொழிப்புரை :

`தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்\' என்பது, உண்மையாக நிலைத்து நிற்கும் பொருள் தாமே (இறை வனே) என்று தெளிந்து, அப்பெருமானையே இடையறாது நினைப் பவர்களது இருவினைகளையும், பொய்ம்மையை விளைத்து நிற்கும் பல இருளையும் இம்மையிலேயே நீக்கியருளுவர் என்பது தெளியவாம்.

குறிப்புரை :

பொய்ம்மை அறியப்படாமையும், வன்மை உயிரை முழுமையாக மறைத்து நிற்பதுமாகும். `இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு\' (குறள், 5) என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 831

எந்தை யாரவர் எவ்வகை யார்கொலென்
றிந்த வாய்மைமற் றெப்பொருட் கூற்றினும்
முந்தை யோரைஎக் கூற்றின் மொழிவதென்
றந்தண் பூந்தராய் வேந்த ரருளினார்.

பொழிப்புரை :

`எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ\' என்றது உலகில் எவ்வகைப்பட்ட பொருட் கூற்றினும், சொற் கூற் றினும் வைத்துச் சொல்ல இயலாதவாறு அவ்வனைத்திற்கும் முன்னே தோன்றி முனைத்தவராய் இருத்தலின், அவனை எக் கூற்றில் வைத்துச் சொல்வது? என்று அழகிய குளிர்ந்த சீகாழித் தலைவர் அருளிச் செய்தனர்.

குறிப்புரை :

இன்னதன்மையன் என்று அறிய வொண்ணாதவன் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 832

ஆதி ஆட்பா லவர்க்கரு ளுந்திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால்
ஓது மெல்லை உலப்பில வாதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்.

பொழிப்புரை :

ஆளாகி நிற்கும் தொண்டர்களுக்கு அப்பெரு மான் அருள்செய்கின்ற திறங்களையும், இறைவரின் மாண்பையும் பற்றிக் கேட்பின், அதற்கு விடை சொல்லும் எல்லை அளவின்றி விரியும். எனவே, எவ்வகையானும் அவை ஆராய்ச்சிக்குரியவை அல்ல என்று கூறியவாறாம்.

குறிப்புரை :

உயிர்களின் பண்பும் செய்கைகளும் நூறு நூறாயிரம் இயல்பினவாம். அத்தகைய பல்வேறு உயிர்களையும் ஆட்கொள் ளும் இறைவனும், ஆட்கொள்ளும் இயல்பில் ஒரு நிலையனாய் நின்று ஆட்கொள்ளல் இயலாது. ஆதலின், அவ்விறைவனின் இயல்பும் எண்ணற்ற இயல்பினவாய் அமைதலின், அவற்றை எவ்வாற்றானும் ஆராய்தற்கியலாது என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 833

அன்ன ஆதலில் ஆதியார் தாளடைந்
தின்ன கேட்கவே ஏற்றகோட் பாலவும்
முன்னை வல்வினை யும்முடி வெய்துமத்
தன்மை யார்க்கென் றனர்சண்பை காவலர்.

பொழிப்புரை :

உயிரியல்பும் இறையியல்பும் இவ்வகையவை யாகவே, இவைபற்றி நீள எண்ணாது, இறைவரின் திருவடிகளை உளங்கொண்டு, அப்பெருமானின் அருங்குணங்களையும், அருட் செயல்களையும் கேட்கலாயின், அத்தன்மையுடைய அடியவர்க ளுக்கு இயல்பாகப் பொருந்திய மலமும் அதன்வழிவரும் பழைய வினைவலிகளும் முடிவு பெறும் என்று சீகாழித் தலைவரான சம்பந்தர் கூறியருளினார்.

குறிப்புரை :

இறைவரின் திருவடிகளையே நினைந்து, அப்பெரு மானின் பொருள்சேர் புகழ்களைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இருப் பின், உயிர்களுக்குத் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் உளவாகும் என்பது கருத்து. கோட்பால் - தோற்றமில் காலத்ததாய இருள் மலம்.

பண் :

பாடல் எண் : 834

மன்னும் ஏதுக்க ளாலெனும் வாய்மைதான்
தன்ன தொப்புவே றின்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்
டன்ன வாற்றால் அளப்பில னென்றதாம்.

பொழிப்புரை :

நிலைபெற்ற ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா என்றதன் உண்மையாவது, இறைவனுக்கு உவமையாகக் காட்டத்தகும் பொருள், வேறு ஏதும் இல்லை ஆகை யால், அப்பெருமானின் தன்மை அவ்வேதுக்களானும், எடுத்துக் காட்டுகளாலும் அவை போன்ற மற்ற அளவைகளாலும் அளந்து கூறற்கரியது என்று விளக்கியபடியாம்.

குறிப்புரை :

இறைவன் தனக்கு உவமையில்லாதவன். உயிர்களோ சிற்றறிவும் சிற்றுணர்வும் உடையன. இந்நிலையில் அவ்வுயிர்கள் அப்பெருமானை ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிப்பது எங்ஙனம்? இயலாது என்பது கருத்து. எடுத்தமொழி - எடுத்துக் காட்டு.

பண் :

பாடல் எண் : 835

தோன்று காட்சி சுடர்விட் டுளன்என்ப
தான்ற அங்கிப் புறத்தொளி யாய்அன்பில்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க் கிதுபொரு ளென்றதாம்.

பொழிப்புரை :

தோன்று காட்சி `சுடர்விட்டுளன்\' என்பதன் பொருளாவது, அமைந்த நெருப்பின் ஒளியாய்ப் புறத்தே காணப் பட்டு, அன்பின் உறைப்பால் அழுந்திக் காண்பார்க்கு, அவன் உள் எழும் ஒளியாயும் விளங்குதல் கண்டு, அவ்வொளிவழி நின்று காண் பவர்க்கு இது பொருளாகும் என்று அவர் விளக்கியபடியாம்.

குறிப்புரை :

`மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே\' (தி.8 சிவ புரா.வரி.62) எனவரும் திருவாசகத்துள் மாசற்ற சோதி என்றது `தோன்று காட்சி\' என்பதனோடும், `மலர்ந்த மலர்ச் சுடரே\' என்றது `சுடர்விட்டுளன்\' என்றதனோடும் ஒப்பிட்டுணர்தற்குரியவாம். ஒளி விட்டு விளங்குவது அகத்தும் புறத்துமாம் என விளக்கியிருப்பதும் அறிதற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 836

மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றும் என்ப
தாதிச் சுடர்ச்சோ தியைஅன்பி னகத்துள் ளாக்கிப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.

பொழிப்புரை :

`மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றும்\' என்ற தொடரின் பொருள், மூலமான சுடர் ஒளியை அன்பால் உயிருணர் வில் கண்டு, ஐந்தெழுத்தால் அகவழிபாடு செய்து, ஞானாசிரியரால் அருளப்பெற்ற திருவருள் வயப்பட்ட உள்நோக்கில் கண்டு, கூடிய சிவபோகத்தினால் இடையறாமல் கூடி, சிவஞான வாழ்க்கையிலே வாழ்ந்து, தோற்றமில் காலத்தேயே (அநாதியே) தொடர்ந்து அறிவை மறைத்து வேறுபடுத்தி வரும் ஆணவத்தால் ஆன பிறவியில் வரும் நெறியினின்றும் நீங்கள் நீங்குவீர் ஆவீர் என்று விளக்கியதாம்.

குறிப்புரை :

மாதுக்கம் என்பது பிறவித் துன்பம் என்றும், குருவரு ளும் திருவருளும் முன்னின்றும் உள்நின்றும் உணர்த்த உணர்ந்து வரும் பயிற்சியால் உயிரில் நேர்பெற நிற்கும் சிவபோகத்தைத் துய்ப்பதுவே `மனம் பற்றி வாழ்தல்\' என்றும் விளக்கியவாறாம்.

பண் :

பாடல் எண் : 837

ஈண்டுச் சாதுக்கள் என்றெடுத் தோதிற்று
வேண்டும் வேட்கைய வெல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினிற் போற்றுவீர் சார்மின்என்
றாண்ட சண்பை அரச ரருளினார்.

பொழிப்புரை :

`சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே\' என்று இங்குக் கூறப்படுவது, விரும்பும் வேட்கைகள் ஆவன எல்லாம், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய இறைவரின் திருவடிகளை உளங்கொண்ட அன்பினால் வணங்குவதேயாம் எனக் கொண்ட உள்ளம் உடையவர்களே! வந்து சாருங்கள்! என்று சண்பையின் மன்னர் விளக்கியருள் செய்தார்.

குறிப்புரை :

விரும்பும் வேட்கைகள் எல்லாம் இறைவரை வணங்கி வாழ்வதே என்பதை உளங்கொண்டவர்களே, அதனை மறவாது இறைவனின் திருவடியே சார்பாகக் கொண்டு வாழுங்கள் என்பது கருத்து. `சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகும் நிலையினர்\' சாதுக்கள் ஆவர்.

பண் :

பாடல் எண் : 838

ஆடும் எனவருந் திருப்பாட்டில் அமைத்த மூன்றும்
நீடும் புகழோ பிறர்துன்ப நீத்தற்கோ என்று
தேடும் உணர்வீர் உலகுக்கிவை செய்த தீசர்
கூடுங் கருணைத் திறமென்றனர் கொள்கை மேலோர்.

பொழிப்புரை :

ஆடும் எனத் தொடங்கும் திருப்பாட்டில் அமைந் திருக்கும் இறைவனின் அருட்செயல்கள் மூன்றும் அப்பெருமானின் புகழுக்காகவோ, அல்லது உயிர்கட்குற்ற துன்பத்தை நீக்குதற்காகவோ என்று ஆராயும் உணர்வுடையவர்களே! இச்செயல்களெல்லாம் இறைவன் உயிர்கள் மீது வைத்த கருணைத் திறத்தினாலேயே ஆகும் என உரைத்தனர் கொள்கையின் மிக்க காழிப் பிள்ளையார்.

குறிப்புரை :

இப்பாட்டில் குறித்த அருட்செயல்கள் மூன்றாம். அவை: 1) இறைவன் இடையறாது திருக்கூத்து இயற்றுவது, 2) இய மனை உதைத்தது, 3) மறைகளை அருளியது, ஆகியவையாம். இவற்றுள் முன்னையது உயிர்கள் படிப்படியாக வினை நீக்கம் பெற்றுத் தம்மை அடையவாம். இரண்டாவது சார்ந்தாரைக் காக்கும் கருணைத் திறமாம். மூன்றாவது உலகினர் செயத் தகுவனவும் தவிரத் தகுவனவும் அறிந்து உய்திபெறவாம்.

பண் :

பாடல் எண் : 839

கருதுங் கடிசேர்ந்த எனுந்திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும்பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி
தருதன் மையதாதல் சண்டீசர் தஞ்செய்கை தக்கோர்
பெரிதுஞ் சொலக்கேட் டனம்என்றனர் பிள்ளை யார்தாம்.

பொழிப்புரை :

`கருதத்தகும் கடிசேர்ந்த\' எனவரும் திருப்பாட்டில், இறைவன் விரும்பி ஏற்றருளும் சிறந்த பூசையினைச் சிதைவு செய் தவர்களைக் கொல்லுதல் அறச்செயலும் வீடுபேறு அடையத்தகும் அருட் செயலும் ஆகும் என்பதைச் சண்டீசர் வரலாற்றால் அறியத் தகும் எனத் தக்கவர்கள் சொல்லக் கேட்டனம் என்றார் பிள்ளையார்.

குறிப்புரை :

`பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்\' (தி.8 ப.15 பா.7) `பாதகத் துக்குப் பரிசுவைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே\' (தி.9 ப.29 பா.10) எனவரும் திருமுறைக் கூற்றுகளையும்,
பாதக மென்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்பக்
கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
கண்டீசர் தஞ்செயலால் தான்.
-திருக்களிற்றுப்படியார் 19
அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும்
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே.
-சிவஞானசித்தியார் 29 எனவரும் மெய்ந்நூற் கூற்றுக்களையும் காண்க.

பண் :

பாடல் எண் : 840

வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினில்நேர்
ஆதி உலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓதென் றுரைசெய் தனர்யாவும் ஓதா துணர்ந்தார்.

பொழிப்புரை :

வேத முதல்வன் எனத் தொடங்கும் உண்மை யுணர்த்தும் திருப்பாடலில் புலப்படவரும் பொருளாவது, உயிர்களின் துன்பங்களை நீக்குதலையே திருவுளமாகக் கொண்ட இறைவர், உலகுயிர்கள் தத்தம் பிறவித்துன்பம் நீங்கவும் மெய்யுணர்ந்து ஏத்தவும் திருக்கூத்தியற்றுகின்ற திருவடிகளை யுடைய சிவபெரு மானே யாவர். அவரே முதற்கடவுள். பதினெண் புராணங்களும் அவ்வுண்மையைத் தெளிவாக விளக்குவனவாம் எனத் துணிந்து அவற்றை ஓதுவாயாக! என்று, யாவற்றையும் ஓதாமல் உணர்ந்தவரான ஞானசம்பந்தர் உரைத்தருளினார்.

குறிப்புரை :

பதினெண் புராணங்களில் மச்சம், கூர்மம், வராகம் வாமனம், சிவமகாபுராணம், இலிங்கம், பவிடியம், காந்தம், மார்க்கண் டேயம், பிரமாண்டம் என்ற இவை சிவ புராணங்கள். விஷ்ணு புராணம், பாகவதம், கருடம், நாரதீயம் என்ற நான் கும் திருமாலுக்குரிய புராணங்களாம். பிரமம், பதுமம் என்ற இரண் டும் நான்முகனுக்குரிய புராணங்களாம். ஆக்கினேயம் தீக்கடவுளைப் பற்றியும், பிரமகைவர்த்தம் கதிரவனைப் பற்றியும் கூறுவனவாம். சூதன் - புராணங்களைக் கூறிய முனிவர். ஒலிமாலை - உண்மைக் கருத்துக்களைக் கூறும் நூல் வரி சைகள். கலிக்கோவை - கலிவிருத்தம் என்னும் யாப்பு வகையில் அமைந்த புராணங்கள்.

பண் :

பாடல் எண் : 841

பாவுற்ற பாராழி வட்டத் திருப்பாட்டி னுண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல்பெற்ற
தியாவர்க்கு மேலாய ஈசன் அருள்ஆழி பெற்று
மேவுற்ற சீருற் றதுவென்றனர் வேத வாயர்.

பொழிப்புரை :

திருப்பதிகத்தில் பொருந்திய `பாராழி வட்டம்\' எனத் தொடங்கும் பாடலின் உண்மையாவது, உலகம் காக்கும் தொழிலை மேற்கொண்ட திருமால், அக்காவல் தொழிலைப் பெற்ற தற்குக் காரணம் `எல்லோருக்கும் மேலானவரான சிவபெருமானின் அருளும் உருளும் (சக்கரமும்) பெற்ற சிறப்பினாலாகும்\' என்று மறைகள் வெளிப்படும் திருவாக்கையுடைய ஞானசம்பந்தர் அருள் செய்தார்.

குறிப்புரை :

வண்டமரும் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும், புண்ட ரிகப் போதுறையும் புத்தேன் இறுமாப்பும், அண்டர் தொழவாழும் நின் இறுமாப்பும், `ஆலாலம் உண்டவனைப் பூசித்த பேறு என்றுணர்ந் திலையால்\' (திருவிளை. வெள்ளை யானைச். 14) எனவரும் பரஞ்சோதியார் வாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 842

மாலா யவன்என்ன வருந்திருப் பாட்டில் மாலுந்
தோலா மறைநான் முகனுந் தொடர்வாம் அமரர்
ஏலா வகைசுட்ட நஞ்சுண் டிறவாமை காத்த
மேலாங் கருணைத்திறம் வெங்குரு வேந்தர் வைத்தார்.

பொழிப்புரை :

`மாலாயவன்\' எனத் தொடங்கும் திருப்பாட்டில், திருமாலும், மறைகளில்வல்ல நான்முகனும், அவர்களைத் தொடர்ந்த தேவர்களும் தாங்க இயலாதவாறு சுட்ட நஞ்சினைத் தாம் உண்டு, அவர்கள் இறவாத வண்ணம் காத்த மேலான பெருங்கருணையின் வெற்றிப் பாட்டினை `வெங்குரு\' என்ற சீகாழிப் பதியினரான பிள்ளையார் அறியவைத்தார்.

குறிப்புரை :

தோலாமறை - எந்நூல்களானும் மறுக்கப்படாத மறை. இறவாமை காத்த - ஒரு கால எல்லைவரை இறவாது காத்த. ஈறிலா தவன் ஈசன் ஒருவனே யாதலின், இக்கால எல்லை குறிக்க வேண்டுவ தாயிற்று.

பண் :

பாடல் எண் : 843

ஆனஅற் றன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்
மாநக ரத்துச் சங்கம் வைத்தவன் தேறத் தேறா
ஈனர்க ளெல்லைக் கிட்ட ஏடுநீர் எதிர்ந்து செல்லில்
ஞானம்ஈ சன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.

பொழிப்புரை :

பதிகத்தின் நிறைவான `அற்றன்றி அந்தண்\' எனத் தொடங்கும் திருப்பாட்டில், நான்மாடக் கூடல் என்ற மதுரையில் முச்சங்கங்களையும் நிறுவிய பாண்டியன் தெளிவுபெறவும், தெளிவு பெறாத கீழ்மக்களான சமணர்கள் வாதில் தாம் சொன்ன எல்லையில் முடிவு காணுமாறு இட்ட ஏடு, நீரில் எதிர்த்து மேலே செல்ல நேருமா யின் அதனால் உறுதியாய்க் கொள்ளப்படும் உண்மையாவது, `ஈசனிடத்துக் கொள்ளத்தகுவது அன்பே யாகும்\' என்று சிவஞான அமுது உண்ட சம்பந்தப் பிள்ளையார் விளக்கியருளினார்.

குறிப்புரை :

பதிகத்தின் நிறைவான `அற்றன்றி அந்தண்\' எனத் தொடங்கும் திருப்பாட்டில், நான்மாடக் கூடல் என்ற மதுரையில் முச்சங்கங்களையும் நிறுவிய பாண்டியன் தெளிவுபெறவும், தெளிவு பெறாத கீழ்மக்களான சமணர்கள் வாதில் தாம் சொன்ன எல்லையில் முடிவு காணுமாறு இட்ட ஏடு, நீரில் எதிர்த்து மேலே செல்ல நேருமா யின் அதனால் உறுதியாய்க் கொள்ளப்படும் உண்மையாவது, `ஈசனிடத்துக் கொள்ளத்தகுவது அன்பே யாகும்\' என்று சிவஞான அமுது உண்ட சம்பந்தப் பிள்ளையார் விளக்கியருளினார்.

பண் :

பாடல் எண் : 844

வெறியார் பொழிற்சண் பையர்வேந்தர்
மெய்ப்பா சுரத்தைக்
குறியே றியஎல்லை அறிந்துகும்
பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கவர் தந்திருப்
பாதந் தந்த
நெறியே சிறிதியான் அறிநீர்மைகும்
பிட்டேன் அன்பால்.

பொழிப்புரை :

மணம் வீசுகின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழியின் மன்னவரான ஞானசம்பந்தர் அருளிய மெய்ப்பொருள் விரித்த பதிகத்தை, அதன் அருட் குறிப்புச் செல்லும் அளவு அறிந்து போற்றி னேன் அல்லேன், ஆயினும் இதுவரை போற்றி உரைத்தது என்னை எனில்? சிறியவனான என் சிற்றறிவுக்கு அவர்தம் திருவடிகள் உணர்த்திய வழியே நின்று, சிறிய அளவில் நான் அறிந்த தன்மை பற்றுக் கோடாகக் கொண்டு, அதன்பால் அன்பு காரணமாகக் கும்பிட்டு வணங்கினேன்.

குறிப்புரை :

இவ்வரிய திருப்பாசுரத்திற்கு மேல் 822ஆவது பாடல் முதல் 844ஆவது பாடல்வரை 23 பாடல்களில் விளக்கங் கூறி இருப்பி னும் ஆசிரியர் சேக்கிழார், `இப்பாசுரத்தை இதுகாறும் அன்பின் வழி நின்று போற்றினேன் என்பதன்றி விளக்கம் தந்தேன் அல்லேன்\' என்றருளியிருப்பது, இப்பாசுரத்தின் அருமையும் ஆசிரியரின் அடக் கமும் உணர நின்றது.

பண் :

பாடல் எண் : 845

அலரும் விரைசூழ் பொழிற்காழியுள் ஆதி ஞானம்
மலருந் திருவாக் குடைவள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந் துய்யப்பகர்ந்து வரைந்தி யாற்றில்
நிலவுந் திருவேடு திருக்கையால் நீட்டி யிட்டார்.

பொழிப்புரை :

மலர்கள் மலர்தலால் உண்டாகும் மணம் சூழ்ந்த சோலைகளையுடைய சீகாழிப் பதியில் தோன்றிய சிவஞானம் கமழும் திருவாக்கினையுடைய வள்ளலாரான ஞானசம்பந்தர், உண்மைப் பொருள் நிலையினைப் பலரும் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்து, எழுதுவித்து, என்றும் அழியாத மெய்ப்பொருளை உடைய அத்திரு வேட்டினை வைகையாற்றில் தம் திருக்கையினால் நீட்டி இட்டார்.

குறிப்புரை :

ஆற்றில் இட்ட பதிகம் `வாழ்க அந்தணர்\' (தி.3 ப.54) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த பதிகமாகும். இதனைத் திருப்பாசுரம் என்பர். 23 பாடல்களையுடையது. சிவஞான போத நூற்பாக்களோடு ஒப்பிட்டுக் காண்டற்குரியது. இத் திருப்பாசுரத் திற்கு மேல் வரும் 23 பாடல்களால் ஆசிரியர் சேக்கிழார் விளக்கம் தருகிறார். மிக நுணுகியதும் அமைவுடையதுமான இவ்விளக்கம் அறிந்து இன்புறுதற்குரியதாம். இவ்வரிய பாக்களின் பொருளைச் சமணர்கள் அறியமாட்டாராயினும், இருவினைஒப்பும் மலபரிபாக மும் உற்ற நிலையில் பாண்டியன் கேட்டு உய்தற்குரியனாகுவன் என எண்ணி இதனை அருளினார். பக்குவம் உற்ற மன்னன் முன் (பா.819) இவ்வாறு வினைகளொத்து துலையென நின்றதை உளங்கொண்டே அருணந்தி சிவாசாரியாரும் `மன்னவன் கேட்பக் கிளந்த மெய்ஞ் ஞானம்\' என இதனை அருளுவாராயினர். இச்செய்யுள் சில பதிப்புகளில் 820ஆம் பாடலுக்கு அடுத்த பாடலாக வருவதும் காண்க.

பண் :

பாடல் எண் : 846

திருவுடைப் பிள்ளை யார்தந்
திருக்கையால் இட்ட ஏடு
மருவிய பிறவி யாற்றில்
மாதவர் மனஞ்சென் றாற்போல்
பொருபுனல் வைகை யாற்றில்
எதிர்ந்துநீர் கிழித்துப் போகும்
இருநிலத் தோர்கட் கெல்லாம்
இதுபொரு ளென்று காட்டி.

பொழிப்புரை :

சைவ மெய்த்திருவுடைய ஞானசம்பந்தர் தம் திருக்கையினால் ஆற்று நீரில் செலுத்திய அவ்வேடு, பொருந்திய பிறவியான ஆற்றிலே மாதவரின் உள்ளமானது எதிர்த்துச் செல்வ தைப் போன்று, பெருகி ஓடும் நீரையுடைய வைகையாற்றில் பெரிய இவ்வுலகில் வாழ்பவர்களுக்குக் கெல்லாம், `இதுவே உண்மைப் பொருள் உடையது\' என்று எடுத்துக் காட்டிக் கீழ்நோக்கி ஓடும் ஓட்டத்தை எதிர்த்து நீரின் நடுவில் அதைக் கிழித்துக் கொண்டு மேல்நோக்கிச் செல்லலாயிற்று.

குறிப்புரை :

ஆற்றில் எதிர்த்துச் சென்ற ஏட்டிற்கு, மாதவர் மனத்தை உவமை காட்டியிருக்கும் அருமை அறிதற்குரியது. `உரன் என்னும் தோட்டியான் ஓரைந்துங்காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு\' (குறள், 24) வித்தாவர் அல்லரோ?

பண் :

பாடல் எண் : 847

எம்பிரான் சிவனே எல்லாப்
பொருளும்என் றெழுதும் ஏட்டில்
தம்பிரா னருளால் வேந்தன்
தன்னைமுன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன்
அநபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத்
தென்னன்கூன்நிமிர்ந்த தன்றே.

பொழிப்புரை :

`எம் இறைவரான சிவபெருமானே முழுமுதற் பொருளாவர்\' என்று எழுதிய அவ்வேட்டில், தம் இறைவரின் அருளாலே `வேந்தனும் ஓங்குக\' என்று மன்னனை ஓங்குமாறு பாடிய காரணத்தால், திருமகளை மார்பில் உடைய அனபாயன் என்னும் சிறப்புப் பொருந்திய சோழ மன்னனின் செங்கோலைப் போல் பாண்டியனின் கூனும் அப்போதே நிமிர்ந்தது.

குறிப்புரை :

நிமிர்ந்து நிற்கும் உடலிற்கு, என்றும் நிமிர்ந்து நிற்கும் (நிற்கவேண்டிய) செங்கோலை உவமை கூறிய அருமையும் அறிதற் குரியதாம். `வளையாத செங்கோல்\' என இளங்கோவடிகள் குறிப்ப தும் நினைதற்குரியது.

பண் :

பாடல் எண் : 848

ஏடுநீ ரெதிர்ந்து செல்லும்
பொழுதிமை யோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்திற் போற்றி
நிறைந்தபூ மாரி தூர்த்தார்
ஆடியல் யானை மன்னன்
அற்புத மெய்தி நின்றான்
பாடுசேர் அமண ரஞ்சிப்
பதைப்புடன் பணிந்து நின்றார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் இட்ட ஏடு வையையாற்றின் நீரில் முன் கூறியபடி எதிர்த்துச் செல்லும் போது, வானவர்கள் எல்லாம் நீண்ட வாழ்த்து மொழிகளால் வாழ்த்தி மிக்க மலர்மழை பொழிந்து நிலத்தை மறைத்தனர். வெற்றிபெறும் இயல்புடைய யானைப் படை உடைய பாண்டிய மன்னன் வியப்படைந்து நின்றான். அறிவழிய நின்ற சமணரெல்லாம் பயந்து பதைப்புடன் தலைகுனிந்து நின்றனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 849

ஆற்றின்மேற் செல்லும்ஏடு
தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லும்
கடும்பரி ஏறிக் கொண்டு
கோற்றொழில் திருத்த வல்ல
குலச்சிறை யார்பின் சென்றார்
ஏற்றுயர் கொடியி னாரைப்
பாடினார் ஏடு தங்க.

பொழிப்புரை :

ஆற்றின் நடுவில் நீரை எதிர்த்து மேல் நோக்கிச் சென்ற அவ்வேட்டைத் தொடர்ந்து போய் எடுப்பதற்காக, ஆட்சியைத் திருந்தச் செய்யவல்ல குலச்சிறையார் என்ற அமைச்சர் காற்றைப் போல் விரைவாய்ச் செல்லும் குதிரைமீது ஏறி அவ்வேட்டின் பின் சென்றார். ஞானசம்பந்தர் விடைக் கொடியை யுடைய சிவபெரு மானை, அந்த ஏடு மேற்கொண்டு செல்லாது ஓரிடத்தில் தங்கி நிற்குமாறு பாடினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 850

ஏடகம் பிள்ளை யார்தாம்
வன்னிஎன் றெடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு
குலச்சிறை யாருங் கூடிக்
காடிட மாக ஆடும்
கண்ணுதல் கோயில் மாடு
நீடுநீர் நடுவுட் புக்கு
நின்றஏ டெடுத்துக் கொண்டார்.

பொழிப்புரை :

பிள்ளையார் தாமும் அவ்வேடகத் திருப்பதி கத்தை `வன்னியு மத்தமும்\' எனத் தொடங்கிப் பாடியருளவும், ஆற்று நீரொடு சேர்ந்து வந்த ஏட்டினிடத்துக் குலச்சிறையாரும் சென்று அடைந்து, பெருஞ் சுடுகாடே இடமாய் ஆடுகின்ற நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானது கோயிலின் அருகில் நிலைபெற ஓடிக் கொண்டிருக்கும் வைகை ஆற்றின் நடுவில் புகுந்து, மேற்செல்லாமல் நின்ற ஏட்டை எடுத்துக் கொண்டார்.

குறிப்புரை :

`வன்னியும் மத்தமும்\\\' (தி.3 ப.32) எனத் தொடங்குவது கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத் திருக்கடைக் காப்பில் `வைகைநீர் ஏடுசென்று அணைதரும் ஏடகம்\\\' எனவருவது இவ்வரலாற்றிற்குரிய அகச் சான்றாகும்.

பண் :

பாடல் எண் : 851

தலைமிசை வைத்துக் கொண்டு
தாங்கரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனற் கரையில் ஏறி
அங்கினி தமர்ந்த மேருச்
சிலையுடை யவர்தாள் போற்றி
மீண்டுசென் றணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞானம்
உண்டவர் தம்பால் வந்தார்.

பொழிப்புரை :

குலச்சிறையார் எடுத்த ஏட்டைத் தம் தலைமீது வைத்துக்கொண்டு, தாங்கற்கரிய மகிழ்ச்சி மீதூர, அலைகளையுடைய நீர் நிறைந்த வையை ஆற்றின் கரையில் ஏறி, அவ்விடத்து அமர்ந்திருக் கும் மேருவை வில்லாக வளைத்த இறைவரை வணங்கி, மீண்டு மலைமகளாம் உமையம்மையார் குழைத்து ஊட்டிய ஞானத்தை உண்டவரான ஞானசம்பந்தரிடத்து வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 852

மற்றவர் பிள்ளை யார்தம்
மலரடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலா யுள்ளோர்
காணமுன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையி லேந்திப்
பண்பினால் யார்க்குங் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர்
அரவொலி எழுந்த தன்றே.

பொழிப்புரை :

வந்த குலச்சிறையார், பிள்ளையாரின் தாமரை மலர்போன்ற திருவடிகளைப் போற்றி நின்று, அரசன் முதலாக அங் கிருந்தோர்அனைவரும் காணுமாறு, முற்படத் தம் தலைமீது எடுத்துக் கொண்டுவந்த ஏட்டைக் கையில் ஏந்திப் பண்பால் அனைவர்க்கும் காட்ட, இம்மையும் மறுமையுமாய பற்றுக்களை அறுத்துத் திருவரு ளைப் பெற்ற தொண்டர்கள் செய்யும் `அரகர\' என்ற ஒலி முழக்கம், அதுபொழுது எங்கும் எழுந்தது.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 853

மன்னவன் மாறன் கண்டு
மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித்
தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால்
அநுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற
முறைசெய்க என்று கூற.

பொழிப்புரை :

பாண்டிய மன்னன் அமைச்சரை நோக்கிப் பொருந்திய வாதத்தில் தாமே சூளுரைத்துத் தோற்ற இச்சமணர்கள், அச்சூளுரையில் தோற்றதால், ஒறுத்தற்குரியராகின்றனர். அன்றியும் முன்பே ஞானசம்பந்தரிடத்தில் செய்யத்தகாத தீய செயலை முழுமை யாகச் செய்துள்ளனர். ஆதலால் அவர்களைக் கழுவிலேற்றி முறை செய்து ஒறுக்க எனக் கூற,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 854

புகலியில் வந்த ஞானப்
புங்கவர் அதனைக் கேட்டும்
இகலிலர் எனினும் சைவர்
இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த
தன்மையாற் சாலு மென்றே
மிகையிலா வேந்தன் செய்கை
விலக்கிடா திருந்தவேலை.

பொழிப்புரை :

சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர், அங்ஙனம் பாண்டியமன்னன் ஆணையிட்டதைக் கேட்டும், சமணரி டத்துப் பகைமை இல்லாதவராயினும், சைவத்தொண்டர்கள் இருந்து வாழும் மடத்தில் தீங்கைச் செய்த சமணர்களின் தகுதியற்ற தன்மை யினால் இவ்வொறுப்பு மிகவும் பொருத்தமானதேயாகும் என்று எண்ணி, நேர்மையில் திறம்பாத மன்னரின் ஆணைச் செய்தியை விலக்காமலிருந்தார். அப்போது,

குறிப்புரை :

`கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்\' (குறள், 550) `குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்\' (குறள், 549) எனவரும் குறட் பாக்களையும் காண்க.

பண் :

பாடல் எண் : 855

பண்புடை அமைச்ச னாரும்
பாருளோர் அறியு மாற்றால்
கண்புடை பட்டு நீண்ட
கழுத்தறி நிரையி லேற்ற
நண்புடை ஞானம் உண்டார்
மடத்துத்தீ நாடி யிட்ட
எண்பெருங் குன்றத் தெண்ணா
யிரவரும் ஏறி னார்கள்.

பொழிப்புரை :

நற்பண்புடைய அமைச்சரும், உலகில் உள்ளவர் அறியும்படியாகக் கணுக்களைப் பக்கங்களில் வெட்டிக் கூர்மையான கழுக்களை நிரல்பட அமைத்திட, அன்புடைய ஞானசம்பந்தர் எழுந்தருளிய மடத்தில் தீயைக் கொளுத்த வேண்டும் எனச் சூழ்ச்சி செய்து கொளுத்திய எண் பெருங்குன்றுகளிலும் இருந்து வந்த எண்ணாயிரம் சமணக் குருமார்களும் கழுவில் ஏறினர்.

குறிப்புரை :

எண்பெருங்குன்றங்கள் - மதுரையைச் சூழ்ந்துள்ள ஆனைமாமலை, ஆதியாய குன்றுகள். அவை பரங்குன்று, ஒருவகம் பப்பாரம்பள்ளி, அருங்குன்றம், பேராந்தை, யானை, இருங்குன்றம் என்பன. ஏற்ற என்றது அரசன் ஆணையை முறைப்படி செயற்படுத் தியமையைக் குறித்தது. அரசனின் ஆணை என அறிவித்ததும் அவர்களே கழுவில் ஏறினார்கள். சமணர்கள் வாதத்தின் பொழுது தாமே கூறிய கூற்றினாலன்றிப் பிறிதில்லை இச்செயல் என்பதும் கருதத்தக்கது.

பண் :

பாடல் எண் : 856

தோற்றவர் கழுவில் ஏறித்
தோற்றிடத் தோற்றுந் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை
அழிவினால் ஆர்ந்த தம்பம்
வேற்றொரு தெய்வம் இன்மை
விளக்கிய பதாகைத் தம்பம்
போற்றுசீர்ப் பிள்ளை யார்தம்
புகழ்ச்சயத் தம்ப மாகும்.

பொழிப்புரை :

வாதத்தில் தோற்றவர்களான சமணர்கள் எண்ணாயிரம் பேரும் கழுவில் ஏறிட யாவரும் காணும்படி நின்ற அக்கழுமரங்கள், ஆற்றில் சமணர்கள் இட்ட ஓலை அழிந்து போன காரணத்தால் நிறுத்திய வெற்றித் தூண்களாகவும், சிவபெருமானை யன்றி வேறு ஒரு கடவுள் இல்லை என்ற உண்மையினை உலகத்திற்கு விளக்கிக் காட்டி உயர்த்திய கொடித் தூண்களாகவும் விளங்கின. உலகம் போற்றும் சிறப்பையுடைய காழிப் பிள்ளையாரின் புகழைப் புலப்படுத்திய வெற்றித் தூண்களாகவும் அவை விளங்கின.

குறிப்புரை :

பதாகை - வெற்றிக்கொடி.

பண் :

பாடல் எண் : 857

தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து வாங்கி
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவண் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தூயநீ றணிந்து கொண்டார்.

பொழிப்புரை :

பாண்டிய மன்னனுக்குச் சீகாழிச் செல்வரான பிள்ளையார் திருநீறு அளித்தார். அவன், அதனை வணங்கி ஏற்றுத் தன் உடல் முழுவதும் முறைப்படி அணிந்து கொண்டான். மன்னன் திருநீறு அணிந்து கொண்டான் என்பதால், அம் மதுரையில் வாழும் நெருங்கிய மக்கள் எல்லாரும் தூய திருநீற்றை அணிந்து கொண்டனர்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 858

பூதிமெய்க் கணிந்து வேந்தன்
புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேத நீதி
யாகியே நிகழ்ந்த தெங்கும்
மேதினி புனித மாக
வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரந் தூய்மை செய்ய
அமணிருள் மாய்ந்த தன்றே.

பொழிப்புரை :

ஞானப் பிள்ளையார் அளித்தருளிய திருநீற்றை உடலுக்கு மருந்தாக அணிந்து கொண்டு, மன்னன் தூயவனாகப் பெற்று உய்வுபெற்ற அப்போது, அரசியலறங்களும் மறைகளில் விதித்த நீதியேயாக நாடு எங்கும் நிகழலாயின. உலகம் தூய்மை யாகுமாறு திருவெண்ணீற்றினின்றும் விரிந்த பேரொளியானது, எண் திசைகளிலும் தூய்மை செய்தலால், அப்போதே உயிர்களைச் சூழ்ந் திருந்த சமண் இருளும் அழிந்தது.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 859

மீனவற் குயிரை நல்கி
மெய்ந்நெறி காட்டி மிக்க
ஊனமாஞ் சமணை நீக்கி
உலகெலாம் உய்யக் கொண்ட
ஞானசம் பந்தர் வாய்மை
ஞாலத்திற் பெருகி ஓங்கத்
தேனலர் கொன்றை யார்தந்
திருநெறி நடந்த தன்றே.

பொழிப்புரை :

மன்னவனுக்கு உயிரைத் தந்ததுமன்றி உண்மை நெறியையும் காட்டி, மிக்க கேட்டை விளைவிக்கும் சமண சமயத்தைப் போக்கி, உலகம் எல்லாம் உய்யுமாறு ஆட்கொண்டருளும் திரு ஞானசம்பந்தரின் மெய்ந்நெறி, உலகில் பெருகி ஓங்குவதால், வண்டு கள் ஒலிப்பதற்கு இடமான கொன்றை மலர்மாலையைச் சூடிய சிவ பெருமானது திருநெறி அப்பொழுதே பரவுவதாயிற்று.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 860

மறையவர் வேள்வி செய்ய
வானவர் மாரி நல்க
இறைவன் நன்னெறியின் ஓங்க
இகத்தினில் அவனி இன்பம்
குறைவில தெனினும் கூற்றை
உதைத்தவர் நாமம் கூறி
நிறைகடற் பிறவித் துன்பம்
நீங்கிடப் பெற்ற தன்றே.

பொழிப்புரை :

அந்தணர்கள் வேள்விகளைச் செய்ய, அதுகார ணமாகத் தேவர்கள் மழைபெய்யச் செய்ய, மன்னன் நன்னெறியில் நிற்க, இவ்வாறாக இவ்வுலகம் இம்மை இன்பங்களைக் குறைவின்றித் துய்த்தது. ஆயினும் அதன் துய்ப்பு, பிறவித்துன்பத்துக்கு ஏதுவாத லன்றி, வீட்டின்பத்திற்கு ஏதுவாக அமையாமை கண்ட நகர மாந்தர் கூற்றுவனைக் காலால் உதைத்தவரான சிவபெருமான் திருநாமத்தைக் கூறிவர, நிறைந்த கடல் அலைபோல மேன்மேலும் தொடர்ந்து வரும் பிறவியான துன்பத்தினின்று நீங்கவும் ஏதுவாயிற்று.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 861

அங்கயற் கண்ணி தன்னோ
டாலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம்
பணிவன்என் றெழுந்து சென்று
பொங்கொளிச் சிவிகை ஏறிப்
புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க் கரசி யாரும்
மன்னனும் போற்றி வந்தார்.

பொழிப்புரை :

`வாழ்க அந்தணர்\' எனும் திருப்பாடலை மீண்டும் நினைவு கூரும் வகையில் இப்பாடற் கருத்து அமைந்துள்ளது. `அங் கயற்கண்ணியுடனாகத் திருவாலவாயில் விரும்பி வீற்றிருந்தருளும் பேரருளாளரான இறைவரின் தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்குவன்\' என்று, வைகைக் கரையினின்றும் எழுந்து சென்று, மேன்மேலும் ஒளிமிகுந்து நிற்கும் முத்துச் சிவிகையில் இவர்ந்து, சீகாழி மன்னவர் வந்தருளினர். மங்கையர்க்கரசியாரும், நின்றசீர் நெடுமாறனாரும் அவரைப் போற்றியவாறு அவர்பின் வந்தனர்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 862

எண்ணரும் பெருமைத் தொண்டர்
யாவரும் மகிழ்ச்சி எய்திப்
புண்ணியப் பிள்ளை யாரைப்
புகழ்ந்துடன் போற்றிப் போத
மண்ணெலாம் உய்ய வந்த
வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினாற் பயன்கொண் டார்கள்
கன்னிநாட் டவர்க ளெல்லாம்.

பொழிப்புரை :

எண்ணுதற்கரிய பெருமையுடைய தொண்டர்கள் எல்லோரும் மகிழ்ந்து சிவபுண்ணியப் பிழம்பாகும் பிள்ளையாரைப் புகழ்ந்து, அவருடைய திருவடிகளை வணங்கிப் போற்றிவர, பாண்டிய நாட்டவர் அனைவரும் உலகுய்தற்கென்றே தோன்றிய ஞானசம்பந்தரை நேரே காணப் பெற்றதால் கண்கள் படைத்த பயன் களை அடைந்தவர் ஆயினர்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 863

ஆலவாய் அண்ணல் கோயில்
அங்கண்முன் தோன்றக் கண்டு
பாலறா வாயர் மிக்க
பண்பினால் தொழுது சென்று
மாலுநான் முகனும் போற்ற
மன்னினார் கோயில் வாயில்
சீலமா தவத்தோர் முன்பு
சிவிகைநின் றிழிந்து புக்கார்.

பொழிப்புரை :

இறைவரின் `ஆலவாய்\' என்னும் கோயிலானது அங்குத் தோன்றக் கண்டு பிள்ளையார், மிக்க அடிமைப் பண்பினால் வணங்கிச் சென்று, திருமாலும் நான்முகனும் போற்ற நிலைபெற எழுந்தருளிய இறைவரின் கோயிலின் திருவாயில் முன்பு, ஒழுக்க முடைய அடியார்களின் முன்னம், முத்துச் சிவிகையினின்றும் இறங்கி உள்ளே புகுந்தார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 864

தென்னவன் தானும் எங்கள்
செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி அமைச்ச னாரும்
ஞானசம் பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி
உடன் புகப் புனிதர்கோயில்
தன்னைமுன் வலங்கொண் டுள்ளால்
சண்பையர் தலைவர் புக்கார்.

பொழிப்புரை :

பாண்டிய மன்னனும், எங்கள் சோழமன்னரின் மகளாரான மங்கையர்க்கரசியாரும், உலகை நன்னெறிப் படுத்தி வருகின்ற குலச்சிறைநாயனாரும் திருஞானசம்பந்தரின் செம்மை யான அழகிய திருவடிகளைப் போற்றியவாறு உட்புக, திருஞானசம் பந்தர், புனிதரான இறைவரின் திருக்கோயிலை வலமாக வந்து உள்ளே சென்றார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 865

கைகளுந் தலைமீ தேறக்
கண்ணில்ஆ னந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேத
முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடிய னேனை
அஞ்சலென் றருள வல்ல
மெய்யனே என்று வீட
லாலவாய் விளம்ப லுற்றார்.

பொழிப்புரை :

இரு கைகளும் தலைமீது குவிந்திடவும், கண் களினின்றும் பெருகும் நீர்வெள்ளம் திருமேனி முழுவதும் பொழிய வும், மறைமுதல்வரான இறைவரைப் பணிந்து போற்றி, `ஐயனே! அடி யவனையும் அஞ்சேல் என்று அருளிச் செய்து ஆட்கொள்ளவல்ல மெய்ப் பொருளானவரே\' என்று `வீடலாலவாய்\' (தி.3 ப.52) எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

குறிப்புரை :

இம்முதற் குறிப்புடைய பதிகம் கௌசிகப் பண்ணில் அமைந்ததாகும். `ஐயனே! அஞ்சல் என்று அருள் செய் எனை\' என முன்வேண்டியதற்கேற்ப, `ஆட் கொண்டருளினீர்\' என அவர் தம் கருணையை எண்ணி மகிழ்ந்தவராய், இப்பதிகத்தை அருளினார்.

பண் :

பாடல் எண் : 866

ஒன்றுவே றுணர்வு மில்லேன்
ஒழிவற நிறைந்த கோலம்
மன்றிலான் மறைக ளேத்த
மானுடர் உய்ய வேண்டி
நின்றுநீ ஆடல் செய்கை
நினைப்பதே நியம மாகும்
என்றுபூம் புகலி மன்னர்
இன்தமிழ்ப் பதிகம் பாட.

பொழிப்புரை :

`பற்றற்குரிய வேறு உணர்வு ஒன்றும் இல்லாத வனாய, யான் நீக்கம் இல்லாது எங்கும் நிறைந்த அழகிய சிற்றம்பலத் தில், நான்மறைகளும் போற்றுமாறு மக்கள் உய்யும் பொருட்டாய் நீ அருட்கூத்து ஆடுவதை இடைவிடாமல் எண்ணுவதே என் நியமமா கும்\' என்ற கருத்துடன், அழகிய சீகாழியின் தலைவர் ஆன ஞான சம்பந்தர் இனிய தமிழ்ப் பதிகத்தைப் பாடி அருள,

குறிப்புரை :

மேற்கூறிய `வீடலாலவாய்\' எனவரும் திருப்பதிகத்தில் ஆறாவது பாடலில், `கூடலாலவாயிலாய் நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே\' எனவரும் கருத்தை முகந்து இங்ஙனம் ஆசிரியர் அருளினர். `நினைப்பதே நியமமே\' எனவரும் தொடர், இப்பதிகத்தில் 8ஆவது பாடலிலும் வருகின்றது.

பண் :

பாடல் எண் : 867

தென்னவன் பணிந்து நின்று
திருவால வாயில் மேவும்
மன்னனே அமணர் தங்கள்
மாயையால் மயங்கி யாதும்
உன்னையான் அறிந்தி லேனை
உறுபிணி தீர்த்தாட் கொள்ள
இன்னருட் பிள்ளை யாரைத்
தந்தனை இறைவ என்றான்.

பொழிப்புரை :

பாண்டியன் வணங்கி எழுந்து நின்று `திரு ஆலவாயில் எழுந்தருளிய அரசே! சமணர்களின் வஞ்சனைக்கு ஆளாகி மயங்கி உன்அருட் பெருமையினை ஒருசிறிதும் அறியாத என்னை, இறைவனே! உற்ற நோயைத் தீர்த்து ஆட்கொள்ள இனிய அருள் உருவான திருஞானசம்பந்தரை எனக்கு அளித்து அருள் செய்தனை!\' என வணங்கினான்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 868

சீருடைப் பிள்ளை யாரும்
சிறப்புடை அடியா ரோடும்
காரினிற் பொலிந்த கண்டத்
திறைவர்தாள் வணங்கிக் காதல்
ஆரருள் பெற்றுப் போற்றி
அங்குநின் றரிது நீங்கி
ஏரியல் மடத்தின் உள்ளால்
இனிதெழுந் தருளிப் புக்கார்.

பொழிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 869

நீடுசீர்த் தென்னர் கோனும்
நேரியன் பாவை யாரும்
மாடுசென் றிறைஞ்சிநோக்கி
மாளிகை தன்னிற் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
கும்பிடும் விருப்பி னாலே
நாடியங் கிருந்து தங்கள்
நாதரைப் பாட லுற்றார்.

பொழிப்புரை :

மிகுபுகழுடைய பாண்டிய அரசரும், சோழரின் மகளாரான மங்கையர்க்கரசியாரும், அருகிற் சென்று வணங்கிப் பின், தம் அரண்மனைக்குள் சென்றனர். மீதூர்ந்த மகிழ்ச்சிமிக வழிபடும் விருப்பினால் நாடி அங்கிருந்து தம் இறைவரைப் பாடுபவராகி,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 870

திருஇய மகத்தி னுள்ளும்
திருநீல கண்டப் பாணர்க்
கருளிய திறமும் போற்றி
அவரொடும் அளவ ளாவித்
தெருளுடைத் தொண்டர் சூழத்
திருத்தொண்டின் உண்மை நோக்கி
இருள்கெட மண்ணில் வந்தார்
இனிதமர்ந் திருந்தா ரன்றே.

பொழிப்புரை :

திருநீலகண்டயாழ்ப்பாணருக்கு இறைவர் அருள் செய்த திறத்தைத் `திருவியமகத் திருப்பதிகத்துள்\' வைத்துப் போற்றி, அவருடனே உரையாடியிருந்து, தெளிவுடைய அறிவினராய திருத்தொண்டர்கள் பலரும் சூழ இருப்ப, திருத்தொண்டின் அழியாத உண்மைத் திறத்தை நோக்கி மகிழ்ந்து, இருள் கெடுமாறு மண்ணுலகில் தோன்றியருளிய பிள்ளையார் அங்கு இனிதாய்த் தங்கியிருந் தருளினார்.

குறிப்புரை :

பிள்ளையார் அருளிய திருஇயமகப் பதிகம் `ஆலநீழல்\' (தி.3 ப.115) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். ஒரு பாடலில் ஓரடியில் வரும் சொல்லோ அல்லது சொற்றொடரோ மீண்டும் அவ்வடியில் வரப்பெறின் அது இயமகம் ஆகும். அவ்வகையில் இப்பதிகம் முழுவதும் வருதலின் இவ்வியமக வகையதாயிற்று. இதன்கண் `தாரம் உய்த்தது பாணர்க் கருளோடே\' (தி.3 ப.115 பா.6) எனவரும் தொடரை நினைவு கூர்ந்தே, `பாணர்க்கருளும் திறம் போற்றி\' என்றார் ஆசிரியர். தாரம் - பண்பாடும் திறம். நாளும் பண்ணின் திறங்கொள யாழிசைத்துவரும் பாணருக்கு, இறைவன் தன் திருமுன்பழைத்துப் பலகையிடச் செய்து, அதன்மீதிருந்து பாடுக என அருளியது இங்குக் குறிக்கப் பெறும் கருத்தாகும்.

பண் :

பாடல் எண் : 871

பூழியன் மதுரை யுள்ளார்
புறத்துளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும்
பள்ளியு மான எல்லாம்
கீழுறப் பறித்துப் போக்கிக்
கிளரொளித் தூய்மை செய்தே
வாழியப் பதிக ளெல்லாம்
மங்கலம் பொலியச் செய்தார்.

பொழிப்புரை :

பாண்டிய மன்னனின் மதுரை நகரத்து மக்களும், மதுரையின் புறத்துப் பல இடங்களிலும் உள்ளவர்களும், சமணத் துற வியர் தங்கியிருந்த பாழிகளையும், அவர்தம் இறைவர் இடம் கொண்ட பள்ளிகளையும் முழுமையாகக் கீழ்நிலம் காண அகழ்ந்து போக்கி, ஒளி பெருகத் தூய்மை செய்து, வாழ்வுபெறும் அப்பதிகள் எல்லாவற் றிலும் சிவச் சின்னங்களை விளங்கச் செய்தார்கள்.

குறிப்புரை :

மேற்கூறிய இடங்களில் எல்லாம் விடைக்கொடி, விடை இலச்சினை, சூலம் ஆகிய சிவச்சின்னங்களை அமைத்தனர் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 872

மீனவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் மிக்க
ஞானசம் பந்தர் பாதம்
நாள்தொறும் பணிந்து போற்ற
ஆனசண் பையர்கோ னாரும்
ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊனமர்ந் துருக ஏத்தி
உளங்களித் துறையும் நாளில்.

பொழிப்புரை :

பாண்டியனின் மனைவியாரான மங்கையர்க் கரசியாரும் குலச்சிறை நாயனாரும் மிகு சைவத்துறை நிற்கும் ஞானசம்பந்தரின் திருவடிகளை நாள்தோறும் வணங்கிப் போற்றிவர, சீகாழித் தலைவரான பிள்ளையாரும் திருவாலவாயில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை ஊனும் உருகுமாறு போற்றி உள்ளம் மகிழ அங்கு வீற்றிருந்தருளிய நாள்களில்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 873

செய்தவத்தாற் சிவபாத
இருதயர்தாம் பெற்றெடுத்த
வைதிகசூ ளாமணியை
மாதவத்தோர் பெருவாழ்வை
மைதிகழுந் திருமிடற்றார்
அருள்பெற்ற வான்பொருளை
எய்தியபூம் புகலியிலே
இருந்தநாள் மிகநினைந்தார்.

பொழிப்புரை :

முன் செய்த தவத்தால் பெற்றெடுத்த சிவபாத இருதயரும், தம் திருமகனாராய் மறைவழிப் பட்டவர்களின் மணி முடியாய் நிற்பவரை, மாதவத்தோர்களாகிய சிவஞானியர்களின் பெருவாழ்வாக இருந்தருளுபவரை, நஞ்சுடைய திருக்கழுத்தை உடைய இறைவரின் திருவருள் பெற்று மெய்ப் பொருளாய் விளங்கு பவரைச் சீகாழியில் தங்கியிருந்த அந்நாள்களில் மிகவும் நினைந்தார்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 874

ஆனபுகழ்த் திருநாவுக்
கரசர்பால் அவஞ்செய்த
மானமிலா அமணருடன்
வாதுசெய்து வெல்வதற்கும்
மீனவன்தன் நாடுய்ய
வெண்ணீறு பெருக்குதற்கும்
போனவர்பாற் புகுந்தபடி
அறிவனெனப் புறப்படுவார்.

பொழிப்புரை :

`திருவருளாலாய புகழையுடைய திருநாவுக் கரசரிடம் பிழை செய்த, மானம் இல்லாத சமணர்களுடன் வாதம் செய்து, அவரை வெற்றி கொள்வதற்கும், பாண்டிய நாடு உய்யும் வண்ணம் திருநீற்று நெறியைப் பெருக்குதற்கும் சென்றருளிய பிள்ளையாரிடம் நிகழ்ந்தவற்றை அறிவேன்\' என்று சிவபாத இருதயர் புறப்படுவாராகி,

குறிப்புரை :

நாவரசரை நினைவு கூர்ந்தது முன்னம் அவர்தம் வரலாற்றை யறிந்தமையாலாம்.

பண் :

பாடல் எண் : 875

துடியிடையாள் தன்னோடும்
தோணியில் வீற்றிருந்தபிரான்
அடிவணங்கி அலர்சண்பை
அதனின்றும்வழிக்கொண்டு
படியின்மிசை மிக்குளவாம்
பரன்கோயில் பணிந்தேத்தி
வடிநெடுவேல் மீனவன்தன்
வளநாடு வந்தணைந்தார்.

பொழிப்புரை :

துடியைப் போன்ற இடையுடைய திருநிலை நாயகியம்மையாருடனாகத் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, அழகிய சீகாழியினின்றும் புறப்பட்டு வரும் வழியில் இம்மண்ணுலகில் மேம்பட்டு விளங்கும் சிவபெருமானின் கோயில்கள் பலவற்றையும் வணங்கிப் போற்றிக் கூரிய வேல் ஏந்திய பாண்டியனின் வளம்மிக்க நாட்டில் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 876

மாமறை யோர் வளம்பதிகள்
இடைத்தங்கி வழிச்செல்வார்
தேமருவு நறும்பைந்தார்த்
தென்னவன்தன் திருமதுரை
தாமணைந்து திருவால
வாயமர்ந்த தனிநாதன்
பூமருவுஞ் சேவடிக்கீழ்ப்
புக்கார்வத் தொடுபணிந்தார்.

பொழிப்புரை :

சிறந்த அந்தணரான சிவபாத இருதயர், வளம் மிக்க பாண்டிய நாட்டுப் பதிகளுள் தங்கிச் செல்வாராய்த் தேன் பொருந்திய மணம் கமழும் பசுமையான வேப்ப மாலையையுடைய பாண்டியனின் தலைநகரமான மதுரையை அடைந்து, திருஆலவாயில் விரும்பி வீற்றிருக்கும் ஒப்பற்ற முதல்வரான சொக்கநாதப் பெருமா னின் மலர்கள் பொருந்திய சிவந்த திருவடிகளின் கீழ்ச் சென்று மிக்க ஆர்வத்துடன் வணங்கினார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 877

அங்கணரைப் பணிந்துபோந்
தருகணைந்தார் தமைவினவ
இங்கெம்மைக் கண்விடுத்த
காழியார் இளவேறு
தங்குமிடம் திருநீற்றுத்
தொண்டர்குழாஞ் சாருமிடம்
செங்கமலத் திருமடம்மற்
றிதுவென்றே தெரிந்துரைத்தார்.

பொழிப்புரை :

இறைவரை வணங்கி வெளியே வந்து அருகில் வந்து சேர்ந்த நகர மக்களான அடியார்களை, ஞானசம்பந்தர் தங்கி யுள்ள மடம்பற்றி வினவ, இங்குக் குருடராய் இருந்த எம்மைக் கண் திறக்கச் செய்து ஒளிநெறிகாட்டிய சீகாழிப் பதியினரின் இளஞ்சிங்க மான ஞானசம்பந்தர் தங்கும் இடமாவது, திருநீற்றுத் தொண்டர் கூட்டம் சூழும் இடமாய்ச் செந்தாமரை போன்ற திருமடம் இதுவேயாகும் என அவர்கள் அறிந்து கூறினர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 878

செப்புதலும் அதுகேட்டுத்
திருமடத்தைச் சென்றெய்த
அப்பர்எழுந் தருளினார்
எனக்கண்டோர் அடிவணங்கி
ஒப்பில்புகழ்ப் பிள்ளையார்
தமக்கோகை உரைசெய்ய
எப்பொழுது வந்தருளிற்
றென்றெதிரே எழுந்தருள.

பொழிப்புரை :

அவர்கள் அங்ஙனம் கூறக் கேட்ட சிவபாத இருதயர், அம்மடத்தில் சென்று சேர, அங்கு அவரைக் கண்டவர்கள் அடிவணங்கி, ஒப்பில்லாத புகழையுடைய ஞானசம்பந்தருக்கு, அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கூறவே, அவர் `எப்பொழுது வந்தருளி யது\' என வினவிக் கொண்டு எதிரே எழுந்தருள,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 879

சிவபாத இருதயர்தாம்
முன்தொழுது சென்றணையத்
தவமான நெறியணையுந்
தாதையார் எதிர்தொழுவார்
அவர் சார்வு கண்டருளித்
திருத்தோணி அமர்ந்தருளிப்
பவபாசம் அறுத்தவர்தம்
பாதங்கள் நினைவுற்றார்.

பொழிப்புரை :

சிவபாத இருதயர் தாம் அப்பிள்ளையார் முன்பு தொழுது சென்றருளத் தவநெறியில் நின்றருளும் தந்தையார் எதிரில், தாமும் தொழுவாராகி, பிள்ளையார், அவரைக் கண்ட அளவில் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் பிறவிப் பிணிப்பை அறுத் தருளியவரான தோணியப்பரின் திருவடியினை நினைவு கூர்ந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 880

இருந்தவத்தோர் அவர்முன்னே
இணைமலர்க்கை குவித்தருளி
அருந்தவத்தீர் எனையறியாப்
பருவத்தே எடுத்தாண்ட
பெருந்தகையெம் பெருமாட்டி
உடனிருந்த தேயென்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல்
திருப்பதிகம் போற்றிசைத்தார்.

பொழிப்புரை :

பெரிய தவத்தினரான அச்சிவபாத இருதயர் முன்னே, மலர் அனைய இரண்டு கைகளையும் கூப்பியருளி, `அரிய தவத்தையுடையவரே! என்னை அறியாப் பருவத்தில் எடுத்தாண்ட பெருந்தகையாரான தோணியப்பர் எம் பெரியநாயகி அம்மையா ருடன் நன்கு எழுந்தருளியிருந்ததே!\' என்ற கருத்துடன் பொருந்தும் புகழுடைய சீகாழியின் மேல் திருப்பதிகத்தினைப் பாடுபவராய்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 881

மண்ணில்நல்ல என்றெடுத்து
மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உண்ணிறைந்த காதலினால்
கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித்
திருப்பதிகம் அருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத்
தாரணிந்த தமிழ்விரகர்.

பொழிப்புரை :

`மண்ணில் நல்ல\' என்று தொடங்கித் திருவுள் ளத்தில் எழுந்த பெருமகிழ்ச்சியுடன் உளம் நிறைந்த ஆசைப் பெருக் கால், கண்களிலிருந்து அருவி எனக் கண்ணீர் பாய்ந்து வழிய, தோணி யப்பர் இனிதாய் இருந்தமை பற்றித் தம் தந்தையை வினவிக் குளிர்ந்த மணமுடைய அழகிய செந்தாமரை மாலையை அணிந்த தமிழ் வல்லுந ரான பிள்ளையார் திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்தருளினார்.

குறிப்புரை :

இத்தொடக்கமுடைய திருப்பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும்(தி.3 ப.24). ஒருவர் தம் பதியை விடுத்துப் பிற பதிக்குச் சென்று அங்குத் தங்கியிருக்கும்பொழுது, தம் பதியிலிருந்து ஒருவர் வரக் காணின், நம்மவர் நலமாக இருக்கின்றார்களா? என வினவுதல் இயற்கை. உலகியல் வயப்பட்ட இவ்வழக்கு, அருளியல் வயப்பட்ட பிள்ளையாரிடமும் அமைந்திருந்தது. எனினும் இவ்வினா அருளியல் வயப்பட்டதாய்த் தம் உடல் தந்தையாரைக் கண்ட பொழுதே உயிர்த் தந்தையாரும், தாயாரும் திருவுள்ளத்திற்கு வர அருளப்பட்டதாகும். தோணிபுரத்து வீற்றிருக்கும் அம்மையப்பரிடம் அவருக்கிருந்த உணர்வுதானும் அரியதும் பெரியதுமாயதை இந் நிகழ்ச்சி விளக்குவதாகும்.

பண் :

பாடல் எண் : 882

திருப்பதிகந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் சிறப்பின்மிகு
விருப்பினால் அவர்தமக்கு
அருப்புறுமெய்க் காதல்புரி
அடியவர்கள் தம்மோடும்
பொருப்புறுகைச் சிலையார்சேர்
பதிபிறவும் தொழப்போவார்.

பொழிப்புரை :

அப்பதிகத்தின் திருக்கடைக்காப்பையும் அருளி நிறைவித்து, மிக்க விருப்பத்துடன் அத்தந்தையார் தமக்கு விருந்து அளித்து, மகிழ்ச்சிப் பெருக்குடன் இருக்கும் நாளில், அரும்பு எனப் புதியதாய் மலர்ந்த உண்மையன்பின் மிகுதியால், திருத்தொண்டை இடையறாது நினைந்து செய்யும் அடியவர்கள் வீற்றிருக்கும் மற்றப் பதிகளையும் சென்று வணங்குதற் பொருட்டுச் செல்வாராய்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 883

ஆலின்கீழ் நால்வர்க்கன்
றறமுரைத்த அங்கணனை
நூலின்கட் பொருள்பாடி
நூலறிவார்க் கீந்தானைக்
காலம்பெற் றினிதிறைஞ்சிக்
கைதொழுது புறம்போந்தார்
சீலங்கொள் தென்னவனும்
தேவியரும் உடன்போத.

பொழிப்புரை :

கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து அக்காலத்தில் நான்கு முனிவர்கட்கு அறம் உரைத்த இறைவரை, தமிழ் நூல்களுள் சிறந்த பொருள் இலக்கணத்தைப் பாடி நூலறியும் சங்கப் புலவர் களுக்குத் தந்தருளியவரை, உரியகாலம் அறிந்து சேரப்பெற்று இனி தாக வணங்கிக் கையால் தொழுது, சைவ ஒழுக்கத்தை மேற்கொண்ட பாண்டியனும், அவரது தேவியாரும் உடன்வர, ஞானசம்பந்தர் வெளியே வந்தருளினார்.

குறிப்புரை :

நூலின்கண் - தமிழ்நூல்களுள். பொருள் பாடி - இறை யனார் அகப்பொருள் எனும் அகப்பொருள் இலக்கணத்தைப் பாடி. நூலறிவார் - சங்கப் புலவர்கள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 884

தேன்நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த
தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன்நெகிழும் படியழிந்தங் கொழுகு கண்ணீர்
பாய்ந்திழிய உணர்வின்றி வீழக் கண்டே
யான்உம்மைப் பிரியாத வண்ணம் இந்நாட்
டிறைவர்பதி யெனைப்பலவும் பணிவீ ரென்று
ஞானமுணர் வார்அருள அவரும் போத
நம்பர்திருப் பரங்குன்றை நண்ணி னாரே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோகைள் சூழ்ந்த மதுரை மாநகரின் வெளியே வந்து பாண்டியரும், தேவியா ரான மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் தம் ஊன் உருகும் வண்ணம் உள்ளம் அழிந்து, அதனால் பெருகிவரும் கண்ணீர் இடையறாது ஒழுகிவிழ, உணர்வு இழந்து விழுந்ததைக் கண்டு `நான் உங்களைப் பிரியாதவாறு இந்நாட்டின் இறைவரது பதிகள் பலவற் றையும் வணங்குவீர்களாக!\' எனச் சிவஞான உணர்வினரான பிள்ளையார் உரைத்தருள, அவ்வாறே அதற்கு இசைந்து அவர்களும் உடன்வர, இறைவரின் திருப்பரங்குன்றத்தைச் சென்று அடைந்தனர்.

குறிப்புரை :

ஊன் நெகிழ, ஒழுகு கண்ணீர்வழிய, உணர்விழந்து மூவரும் விழுதற்குக் காரணம் பிள்ளையாரின் பிரிவாற்றாமையே யாகும். அதனை யுணர்ந்த பிள்ளையாரும் தம்முடன் அவர்கள் மூவ ரும் போதர இணங்கினர். `யான் உம்மைப் பிரியாத வண்ணம்\' என் றது நனிநாகரிகம் பட நின்றது.

பண் :

பாடல் எண் : 885

ஆறணிந்தார் தமைவணங்கி அங்குப் போற்றி
அணிஆப்ப னூரணைந்து பணிந்து பாடி
நீறணிந்த செல்வர்பதி பிறவுஞ் சேர்ந்து
நிலவுதிருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறணிந்த வயற்பழனக் கழனி சூழ்ந்த
சிரபுரத்து வந்தருளுஞ் செல்வர் செங்கண்
ஏறணிந்த வெல்கொடியார் திருப்புத் தூரை
எய்திஇறைஞ் சிச்சிலநாள்அங் கிருந்தா ரன்றே.

பொழிப்புரை :

கங்கையாற்றைத் திருமுடியிற் கொண்ட சிவபெருமானை அப்பதியில் போற்றி, அழகிய ஆப்பனூரை அடைந்து வணங்கிப் பாடி, திருநீறு பூசிய இறைவரின் பதிகள் பல வற்றையும் சேர்ந்து, பொருந்திய பதிகங்கள் நிகழுமாறு பாடி, சேறு பொருந்திய வயல்கள் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய செல்வரான பிள்ளையார், சிவந்த கண்களை உடைய விடையைக் கொடியாய் உடைய இறைவரின் திருப்புத்தூரை இனிதாய் அடைந்து, வணங்கிச் சிலநாள்கள் அங்குத் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

கங்கையாற்றைத் திருமுடியிற் கொண்ட சிவபெருமானை அப்பதியில் போற்றி, அழகிய ஆப்பனூரை அடைந்து வணங்கிப் பாடி, திருநீறு பூசிய இறைவரின் பதிகள் பல வற்றையும் சேர்ந்து, பொருந்திய பதிகங்கள் நிகழுமாறு பாடி, சேறு பொருந்திய வயல்கள் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய செல்வரான பிள்ளையார், சிவந்த கண்களை உடைய விடையைக் கொடியாய் உடைய இறைவரின் திருப்புத்தூரை இனிதாய் அடைந்து, வணங்கிச் சிலநாள்கள் அங்குத் தங்கியிருந்தார்.

பண் :

பாடல் எண் : 886

பற்றார்தம் புறங்கள்மலைச் சிலையால் செற்ற
பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்றாரும் பணிபூண்ட புனித னார்தம்
பூவணத்தைப் புக்கிறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்
கற்றார்கள் தொழுதேத்துங் கானப் பேரும்
கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலங் குறும்பலாக் கும்பிட் டேத்திக்
கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகினாரே.

பொழிப்புரை :

பகைவரின் முப்புரங்களை, மலையாகிய வில்லினால் அழித்த இறைவரின் திருப்புத்தூரைப் பணிந்து சென்று, புற்றில் வாழும் இயல்புடைய பாம்பை அணிந்த தூயவரின் `திருப் பூவணம்\' என்ற திருப்பதிக்குச் சென்று இறைவரை வணங்கிப் புகழ்ந்து பாடி, கற்றவர் வணங்கிப் போற்றும் `திருக்கானப்பேர்\' என்ற பதியை யும் வணங்கித் தமிழ்ப் பதிகம்பாடி, `திருச்சுழியலைப்\' போற்றி, அதன்பின் `திருக்குற்றாலத்தையும்\' வணங்கிக் கூற்றுவனை உதைத்து அருளிய இறைவரின் திருநெல்வேலியை அடைந்தார்.

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருப்புத்தூர்: வெங்கள் விம்மு (தி.1 ப.26) - தக்கராகம் 2. திருப்பூவணம்: 1. அறையார் புனலும் (தி.1 ப.64) - தக்கேசி 2. மாதமர் மேனியன் (தி.3 ப.20) - காந்தாரபஞ்சமம் 3. திருக்கானப்பேர்: பிடியெலாம் (தி.3 ப.26) - கொல்லி. (காளையார் கோயில்). 4. திருக்குற்றாலம்: வம்பார்குன்றம் (தி.1 ப.99) - குறிஞ்சி. (குறும்பலா) : திருந்தமதிசூடி (தி.2 ப.71) - காந்தாரம். திருச்சுழியலில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 887

புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணியினி தமர்ந்தங்கு நயந்துபாடி
நற்றொண்ட ருடன்நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரைச் செற்றுகந்தான் இலங்கை செற்ற
மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணியபொற் சிலைத்தடக்கை இராமன் செய்த
திருவிரா மேச்சரத்தைச் சென்று சேர்ந்தார்.

பொழிப்புரை :

புண்ணியரான சிவபெருமானின் திருநெல்வே லியை வணங்கிப் பணிந்து, போற்றி, முறுக்கிய சடையையுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று, விரும்பி அங்கங்கும் பாடி, நல்ல தொண்டர்களுடனே நாளும் போற்றிச் செல்பவரான பிள்ளையார், தேவர்களை அழித்து மகிழ்ந்த இராவணனின் இலங் கையை அழித்த மிகப் பெரும் பாதகத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வலிய அழகிய வில்லை ஏந்திய பெரிய கையையுடைய இராமன் நிறுவிய திருஇராமேச்சுரத்தைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

திருநெல்வேலியில் அருளிய பதிகம் `மருந்தவை\' (தி.3 ப.92) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருப் பதிகள் பிறவும் சென்று என்பன திருப்புடைமருதூர் (திருப்பிடவூர்), திருஅகத்தீச்சுரம், திருவுத்தரகோசமங்கை முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 888

செங்கண்மால் வழிபட்ட கோயில் நண்ணித்
திருமுன்பு தாழ்ந்தெழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியா ரும்சூழ மணிநீள் வாயில்
பொங்கியெழும் விருப்பினால் உடனே புக்குப்
புடைவலங்கொண் டுள்ளணைவார் போற்றி செய்து
பங்கயச் செங் கைகுவித்துப் பணிந்து நின்று
பாடினார் மன்னவனும் பரவி யேத்த.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய திருமால் வழிபட்ட இராமேச்சுரத்தை அடைந்து, அதன் திருமுன்பு வீழ்ந்து எழுந்து, பாண்டியனோடும் மங்கையர்க்கரசியாரும் உண்மை ஒழுக்கத்துடன் நிற்கும் அமைச்சரான குலச்சிறையாரும் தம்மைச் சூழ்ந்து தொடர்ந்து வர, அவர்களுடனே அழகிய நீண்ட வாயிலுள் மேன்மேலும் எழு கின்ற விருப்பத்தினால் புகுந்து, உள்ளே சேர்பவராய், மன்னனும் வணங்கிப் போற்றத் தாமரை போன்ற கைகளைக் கூப்பி வணங்கி நின்று பாடியருளினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகங்கள்: 1. அலைவளர் - (தி.3 ப.10) காந்தார பஞ்சமம். 2. திரிதருமாமணி - (தி.3 ப.101) பழம் பஞ்சுரம்.

பண் :

பாடல் எண் : 889

சேதுவின்கண் செங்கண்மால் பூசை செய்த
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந்நகரில் இனிது மேவிக்
கண்ணுதலான் திருத்தொண்டர் ஆனார்க் கெல்லாம்
கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க்
குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல
நாதர்தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி
நளிர்வேலைக் கரையில்நயந் திருந்தா ரன்றே.

பொழிப்புரை :

சேதுவிடத்தில் சிவந்த கண்களையுடைய திருமால் வணங்கிய சிவபெருமானை வணங்கிப் பாடி, புறத்தே வந்து, விருப்பத்துடன் அந்நகரத்தில் தங்கியிருந்து நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானின் தொண்டர்களுக்கெல்லாம், குற்றமற்ற புகழை யுடைய பாண்டிமாதேவியாரும் உண்மை நெறி நிற்கும் குலச்சிறை நாயனாரும் குறைவின்றி வேண்டுவனவற்றை யெல்லாம் தந்து போற்றிவர, இராமநாதரான இறைவரை நாள்தோறும் வணங்கிப் போற்றியவாறு, குளிர்ந்த கடற்கரை நகரில் விருப்புடன் ஞானசம் பந்தர் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

உடன்வரும் மாறனாரின் விருப்பினை நிறைவேற்றி வரும் கடப்பாடுடைமை பற்றி அரசியாரையும் அமைச்சரையும் கூறி னார். சேது - அணை. அதனையுடைமைபற்றி அப்பெயராலேயே அப்பதியும் அழைக்கப் பெறுவதாயிற்று.

பண் :

பாடல் எண் : 890

அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந் தன்னில்
மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்த செங்கண்
மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச்
சென்னிமதி புனைமாட மாதோட்டத்தில்
திருக்கேதீச் சரத்தண்ணல் செய்ய பாதம்
உன்னிமிகப் பணிந்தேத்தி அன்பரோடும்
உலவாத கிழிபெற்றார் உவகை யுற்றார்.

பொழிப்புரை :

அத்திருப்பதியில் பிள்ளையார் இனிதாக இருந்தருளும் பொழுது, கடல் சூழ்ந்த இலங்கையில் பொருந்தியுள்ள திருக்கோணமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் சிவந்த கண்களை உடைய இளைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட இறைவரை வணங்கிப் பாடி, பிறைச் சந்திரன் தவழுமாறு உயர்ந்த மாடங்களை உடைய மாதோட்ட நகரத்திலிருக்கும் `திருக்கேதீச்சரம்\' என்ற கோயிலில் வீற்றிருக்கும் இறைவரின் செம்மையான திருவடிகளை மிகவும் நினைந்து போற்றிப் பணிந்து, இறைவரிடம் பொற்கிழி பெற்ற ஞானப்பிள்ளையார் அன்பர்களுடன் கூடியிருந்து மகிழ்ந்தார்.

குறிப்புரை :

இத்திருப்பதிகளை நினைந்து அருளிய பதிகங்கள்: 1. திருக்கோணமலை: நிரைகழல் (தி.3 ப.123) - புறநீர்மை 2. திருக்கேதீச்சுரம்: விருதுகுன்ற (தி.2 ப.107) -நட்டராகம்.

பண் :

பாடல் எண் : 891

அப்பதியைத் தொழுதுவட திசைமேற் செல்வார்
அங்கையனல் தரித்தபிரான் அமருங் கோயில்
புக்கிறைஞ்சிப் பலபதியும் தொழுது போற்றிப்
புணரிபொரு தலைகரைவாய் ஒழியப் போந்தே
செப்பரிய புகழ்த்திருவா டானை சேர்ந்து
செந்தமிழ்மா லைகள்சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
வணங்கினார் உலகுய்ய ஞானம் உண்டார்.

பொழிப்புரை :

அப் பதியை வணங்கி, வடதிசைநோக்கிச் செல்ப வராய், அழகிய கையில் தீயை ஏந்திய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் கோயிலுள் புகுந்து வணங்கிப் பல பதிகளையும் வணங்கிச் சென்று, கடல் அலைகள் புரண்டு வரும் அவ் எல்லைகள் பிற்படக் கடந்து சென்று, சொலற்கரிய புகழையுடைய திருவாடானை என்னும் பதியை அடைந்து, செந்தமிழ் மாலைகளைச் சாத்தி, உலகம் உய்யும் பொருட்டுச் சிவஞானம் உண்ட பிள்ளையார் ஒப்பில்லாத திருப் புனவாயிலைத் தாழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகங்கள்: 1. திருவாடானை: மாதோர் கூறு (தி.2 ப.112) - நட்டராகம். 2. திருப்புனவாயில்: மின்னியல் (தி.3 ப.11) - காந்தார பஞ்சமம். அப்பதி என்றது திருக்கேதீச்சுரத்தையும், கோயிலுள் புகுந்து என்றது இராமேசுவரத்திலுள்ள திருக்கோயிலுள் புகுந்து என்றும் பொருள்படும். பலபதியும் தொழுது என்றது உப்பூர், திருவெற்றியூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 892

பதிநிலவு பாண்டிநா டதனில் முக்கட்
பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி
விதிநிலவு வேதநூல் நெறியே ஆக்கி
வெண்ணீற்றின் சார்வினால் மிக்குயர்ந்த
கதியருளிக் காழிநகர் வாழவந்தார் கண்ணுதலான்
திருத்தொண்டர் பலருஞ் சூழ
மதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல
மந்திரியார் பதிமணமேற் குடியில் வந்தார்.

பொழிப்புரை :

பலபதிகளும் விளங்கும் பாண்டியநாட்டில் முக்கண்களையுடைய சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் இடங்கள் பலவற்றையும் வணங்கி, ஒழுகலாறுகள் பலவற்றையும் விளங்க உணர்த்துகின்ற மறைநூல்களின் நெறியையே எங்கும் எவரும் பின்பற்றும்படி செய்து, வெண்மையான திருநீற்றின் சார்பு பெற்றதால் உயர்ந்த நற்பேற்றை யாவரும் பெறும்படி அருள்செய்து, சீகாழிப் பதிவாழ வந்தருளிய சம்பந்தப் பெருமான், இறைவரின் திருத் தொண்டர் பலரும் சூழ்ந்துவரச் சந்திரகுல மரபில் வந்த பாண்டியனார் போற்றி உடன் வரவும் சென்று, அமைச்சர் குலச்சிறையாரின் பதியான `திருமணமேற்குடிக்கு\' வந்தருளினார்.

குறிப்புரை :

பரமனார் மகிழ்விடங்கள் ஒலியூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 893

அந்நகரில் இனிதமர்வார் அருகு சூழ்ந்த
பதிகளில்நீ டங்கணர்தங் கோயில் தாழ்ந்து
மன்னுதிருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து
மன்னவனும் மங்கையருக் கரசி யாரும்
கொன்னவில்வேற் குலச்சிறையார் தாமுங் கூடிக்
குறைகழல்கள் பணிந்துகுறை கொண்டு போற்றச்
சென்னிவளர் மதியணிந்தார் பாதம் போற்றிச்
சிரபுரத்துச் செல்வர்இனி திருந்த நாளில்.

பொழிப்புரை :

அம்மணமேற்குடியில் இனிது விரும்பி எழுந்தருளும் பிள்ளையார், அருகிலுள்ள பதிகளில் உள்ள இறை வரின் திருக்கோயில்களுக்குச் சென்று வணங்கிச் சூழவரும் தொண் டர்கள் உடனே மீண்டும் வந்து சேர்ந்து, பாண்டியரும் மங்கையர்க்கரசி அம்மையாரும், வடித்த கூர்மையான வேலையுடைய குலச்சிறை யாரும் சேர்ந்து, ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து போற்ற, சீகாழிச் செல்வரான ஞானசம்பந்தர், தலையில் பிறையைச் சூடிய இறைவரின் திருவடிகளைப் போற்றி, இனிதாக அமர்ந்திருக்கும் அந்நாள்களில்,

குறிப்புரை :

அருகு சூழ்ந்த பதிகள் என்பன திருப்பெருந்துறை முதலிய பதிகளாகலாம். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 894

பொங்குபுனற் காவிரிநா டதனின் மீண்டு
போதுதற்குத் திருவுள்ள மாகப் பெற்று
மங்கையருக் கரசியார் தாமும் தென்னர்
மன்னவனும் மந்திரியார் தாமுங் கூட
அங்கவர்தந் திருப்பாதம் பிரிய லாற்றா
துடன்போக ஒருப்படும்அவ் வளவுநோக்கி
இங்குநான் மொழிந்ததனுக் கிசைந்தீ ராகில்
ஈசர்சிவ நெறிபோற்றி இருப்பீ ரென்று.

பொழிப்புரை :

பெருகிவரும் நீர்ப்பெருக்கையுடைய காவிரி பாய்கின்ற நாடான சோழ நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்குத் திரு வுள்ளம் கொண்டு, மங்கையர்க்கரசியம்மையாரும் பாண்டிய மன்ன ரும் அமைச்சரும் கூட அவர்தம் திருவடிகளைப் பிரிய மாட்டாதவர் களாகி உடன்வருதற்கு மனம் துணியும் அந்நிலையினைப் பார்த்து, `இங்கு நான் கூறுதற்கு இசைந்தீராயின் இந்நாட்டிலிருந்து இறைவரின் சிவநெறியைப் பாதுகாத்து வருவீராக\' என்று உரைத்து,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 895

சாலமிகத் தளர்வாரைத் தளரா வண்ணம்
தகுவனமற் றவர்க்கருளிச் செய்த பின்பு
மேலவர்தம் பணிமறுக்க அவரும்அஞ்சி
மீள்வதனுக் கிசைந்துதிரு வடியில் வீழ்ந்து
ஞாலமுய்ய வந்தருளும் பிள்ளை யாரைப்
பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆலவிட முண்டவரை அடிகள் போற்றி
அந்நாட்டை அகன்றுமீண் டணையச் செல்வார்.

பொழிப்புரை :

பிரிவாற்றாமல் மிகவும் மனம் தளர்பவர்களைத் தளர்ச்சியடையாதவாறு தக்க இன்சொற்களைச் சொல்லித் தேற்றினர். அவர்களும் மேன்மையான அவர்தம் ஏவலை மறுக்க அஞ்சி, சோழ நாட்டிற்குப் பிரிந்து செல்வதற்கு ஒருப்பட்டு, அவரிடம் விடைபெற்றுக் கொள்ளும் வகையால், அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி, உலகுய்யத் தோன்றிய அப்பெருமகனாரைப் பிரியமாட்டாத நண்பு டன் வணங்கி நின்றனர். அப்பிள்ளையாரும் விடைபெற்றுக் கொண்டு, நஞ்சை உண்ட இறைவரை வணங்கிப் போற்றி அந்நாட்டை விட்டு நீங்கித் தம் நாட்டிற்குத் திரும்பவும் செல்பவராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 896

பொன்னிவளந் தருநாடு புகுந்து மிக்க
பொருவில்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
பன்னகப்பூ ணணிந்தவர்தங் கோயில் தோறும்
பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று
கன்னிமதில் திருக்களரும் போற்றிக் கண்டங்
கறையணிந்தார் பாதாளீச் சுரமும் பாடி
முன்னணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி
முள்ளிவாய்க் கரையணைந்தார் முந்நூல் மார்பர்.

பொழிப்புரை :

காவிரியாறு வளம் பெருக்குகின்ற சோழநாட்டில் புகுந்து, ஒப்பில்லாத மிகுந்த சிறப்புகளையுடைய தொண்டர் கூட்டத் துடன், பாம்பை அணியாய்ப் பூண்ட இறைவரின் திருக்கோயில்கள் தோறும் இருந்தருளும் அன்பர்களுடன், அப்பதியில் உள்ளவர்களும் எதிர்கொண்டு போற்றச் சென்று, பகைவரால் அழித்தற்கரிய மதிற் சிறப்புடைய `திருக்களர்\' என்ற பதியையும் போற்றிப் பின்பு, கழுத்தில் நஞ்சுடைய இறைவரின் `பாதாளீச்சுரத்தினையும்\' பாடி வணங்கி, முன்னே வழிபட்டுச் சென்ற மற்றப் பதிகளையும் வணங்கிப் போற்றி, முந்நூல் அணிந்த மார்பையுடைய ஞானசம்பந்தர் முள்ளிவாய்க் கரையைச் சேர்ந்தனர்.

குறிப்புரை :

திருக்களரில் இதுபொழுது பாடிய பதிகம் கிடைத்திலது. திருப்பாதாளீச்சுரத்தில் அருளியது, `மின்னியல்\' (தி.1 ப.108) எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். கோயில் தொறும் என்றது திருவெண்ணியூர், திருவிரும்பூளை முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். முள்ளிவாய்க்கரை என்பது இப்பொழுது ஓடம்போக்கியாறு என வழங்குகிறது. இது காவிரியின் கிளையே. இதனருகே உள்ள ஊர் திருக்கொள்ளம்பூதூராகும். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 897

மலைவளர்சந் தனம்அகிலும் தேக்கு முந்தி
மலர்ப்பிறங்கல் வண்டிரைப்பச் சுமந்து பொங்கி
அலைபெருகி ஆள்இயங்கா வண்ணம் ஆறு
பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலைபுரியும் ஓடக்கோல் நிலையி லாமை
நீர்வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலைபயிலுங் கவுணியர்கோன் அதனைக் கண்டக்
கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை.

பொழிப்புரை :

மலையில் வளர்கின்ற சந்தனம், அகில், தேக்கு முதலிய மரங்களை உந்தி அலைத்துக் கொண்டு, மலைபோன்ற மலர்க்குவியல்களை வண்டுகள் ஒலிக்கச் சுமந்து பெருகி, ஆள்கள் இயங்காதபடி ஆறு பெருகிவருவதால், அத்துறையில் அணையும் ஓடத்தை, நீரில் நிலை கொண்டு செலுத்தும் ஓடக்கோல் நிலைக்க மாட்டாமையால், நீர்வாழ் மக்களான இனத்தவர் கரையில் நிறுத்தி விட்டுச் சென்றுவிடவே, கலைகள் பலவற்றானும் புகழப் பெறும் கவுணியர் தலைவரான பிள்ளையார் அதைப் பார்த்து அக்கரையில் எழுந்தருளி நின்றபோது,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 898

தேவர்பிரான் அமர்ந்ததிருக் கொள்ளம் பூதூர்
எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவா ரின்றி
ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்ட விழ்த்துக்
கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன்மே னின்று
நம்பர் தமைக் கொட்டமென நவின்று பாட.

பொழிப்புரை :

தேவர்களின் தலைவரான இறைவர் வீற்றிருக் கும் `திருக்கொள்ளம்பூதூர்\' என்ற திருப்பதி எதிரில் தோன்ற, அதைப் பார்த்து, அங்குச் சென்று பணிவதற்கு உள்ளம் எண்ணியதால் ஓடம் செலுத்துபவர்கள் அங்கே இல்லாத நிலையில், மிகு விரைவாகச் சீகாழித் தலைவரான பிள்ளையார், ஓடத்தின் கட்டை அவிழ்த்து, நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் தொண்டர்களை அவ் வோடத்தில் ஏற்றித் தன் நாவின் வல்லமையையே கோலாகக் கொண்டு அவ்வோடத்தின் மீது நின்று, இறைவரைப் பணிந்து `கொட்டமே\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட,

குறிப்புரை :

`கொட்டமே\' எனத் தொடங்கும் திருப்பதிகம் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும் (தி.3 ப.6).

பண் :

பாடல் எண் : 899

உம்பருய்ய நஞ்சுண்டார் அருளால் ஓடம்
செலச்செல்ல உந்துதலால் ஊடு சென்று
செம்பொனேர் சடையார்தங் கொள்ளம் பூதூர்
தனைச்சேர அக்கரையிற் சேர்ந்த பின்பு
நம்பரவர் தமைவணங்க ஞான முண்ட
பிள்ளையார் நற்றொண்ட ருடனி ழிந்து
வம்பலரும் நறுங்கொன்றை நயந்தார் கோயில்
வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.

பொழிப்புரை :

வானவர் உய்யுமாறு நஞ்சை உண்டருளிய இறை வரின் திருவருளினால், அவ்வோடம் செல்லும்படி உந்தப்படுதலால், செம்பொன் போன்ற சடையுடைய இறைவரின் திருக்கொள்ளம் பூதூரினைச் சேரும் வண்ணம் அக்கரையில் சேர்ந்த பின்பு, நம்பரான சிவபெருமானை வணங்குதற்கு ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தர் நல்ல திருத்தொண்டர்களுடனே ஓடத்திலிருந்து கீழே இறங்கிச் சென்று, மணம் கமழ்கின்ற கொன்றை மலரை விரும்பிச் சூடிய சிவ பெருமானின் திருக்கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

மேற்கூறிய பதிகத்தில் பாடல்தொறும் `செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்குமாறு அருள் நம்பனே\' என அருளப் பெறுதலின் ஓடம் கரையைச் சேருவதாயிற்று. `ஓடம் செலச் செல்ல உந்துதலால்\' என ஆசிரியர் அருளியதைக் காண்க. இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 900

நீள்நிலைக்கோ புரமதனை இறைஞ்சிப் புக்கு
நிகரிலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாள்நிலவு கோயிலினை வலங்கொண் டெய்தி
மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின்கண் ஓடம் உய்க்குந்
தன்மையால் அருள்தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கட்
புனிதனே எனப்பணிந்து போற்றி செய்தார்.

பொழிப்புரை :

நீண்ட நிலைகளைக் கொண்ட திருக்கோபுரத்தை வணங்கி வாயிலுள் புகுந்து, ஒப்பில்லாத தொண்டர்கள் சூழ நெருங் கிச் சென்று, ஒளியுடைய திருக்கோயிலை வலங்கொண்டு, பிறைச் சந்திரனைச் சூடிய சடையையுடைய இறைவரின் திருமுன்பு வணங்கி நின்று, `அனைத்துயிர்களையும் தாங்குபவரே! ஆற்றிடையே ஓடம் செலுத்தி வர அருள் சுரந்த தலைவரே! பாம்புகளை அணியாய் அணிந் தவரே! யானையின் தோலைப் போர்த்திக் கொண்ட முக்கண்களை யுடைய தூயவரே!\' எனப் பணிந்து போற்றினார்.

குறிப்புரை :

தாணு - தாங்குபவர். `சடையவனே தளர்ந்தேன் எம்பி ரான் என்னைத் தாங்கிக் கொள்ளே\' (தி.8 நீத்தல். 1) எனவரும் திருவாசகத் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 901

போற்றிசைத்துப் புறம்போந்தங் குறையும் நாளில்
பூழியன்முன் புன்சமயத் தமணர் தம்மோ
டேற்றபெரு வாதின்கண் எரியின் வேவாப்
பதிகமுடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும்அங் கருள்பெற்றுப் போந்து முன்னம்
அணைந்தபதி களும்இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவுதிரு நள்ளா றெய்தி
நாடுடைநா யகர்கோயில் நண்ணினாரே.

பொழிப்புரை :

இங்ஙனம் இறைவரைப் போற்றி, வெளியில் வந்து, அப்பதியில் தங்கியிருந்த நாள்களில், பாண்டியனின் முன்னிலையில், புன்மையான சமயத்தவரான சமணர்களுடன் மேற்கொண்ட பெரிய வாதத்தில், தீயில் வேகாமல் இருந்து வெற்றி தந்த திருப்பதிகத்தின் தலைவரான திருநள்ளாற்றின் இறைவரை வணங்க வேண்டி, வழியில் முன்சென்று வணங்கிய பதிகளையும் திரும்பவும் வணங்கி, அன்பர் கூட்டம் சூழ்ந்துவரச் சென்று, நாற்றிசையும் போற்ற வரும் திரு நள்ளாற்றைச் சார்ந்து, நாடுடை நாயகரின் கோயிலை ஞானசம்பந்தர் அடைந்தார்.

குறிப்புரை :

முன்னணைந்த பதிகளாவன: திருக்குடவாயில், திருவாஞ்சியம், திருவம்பர், திருப்புகலூர் முதலாயினவாகலாம். நாடுடை நாயகர் - இறைவரின் பெயர் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 902

நீடுதிருத் தொண்டர்புடை சூழ அங்கண்
நித்திலயா னத்திடைநின் றிழிந்து சென்று
பீடுடைய திருவாயில் பணிந்து புக்குப்
பிறையணிந்த சென்னியார் மன்னுங் கோயில்
மாடுவலங் கொண்டுள்ளால் மகிழ்ந்து புக்கு
மலர்க்கரங்கள் குவித்திறைஞ்சி வள்ள லாரைப்
பாடகமெல் லடியெடுத்துப் பாடி நின்று
பரவினார்கண்ணருவி பரந்து பாய.

பொழிப்புரை :

பெருகவரும் தொண்டர்கள் அருகில் சூழ்ந்து வர, அங்கு முத்துச் சிவிகையினின்றும் இழிந்தருளிச் சென்று, பெருமை உடைய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து, பிறைச் சந்திரனைச் சூடிய இறைவர் நிலைபெற்று வீற்றிருக்கும் கோயிலின் உள்பக்கத்தேயுள்ள திருச்சுற்றுக்களில் வலமாக வந்து, மகிழ்வுடன் உள்ளே புகுந்து, வள்ளலாரான இறைவரைப் `பாடகமெல்லடி\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி நின்று, கண்களினின்றும் நீர் அருவி பெருகப் போற்றினார்.

குறிப்புரை :

`பாடகமெல்லடி\' எனத் தொடங்கும் பதிகம் நட்ட பாடைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.1 ப.6). வினாவுரையாக வரும் இப்பதிகப் பாடல் தொறும் வரும் கருத்தை உளங்கொண்டே வரும் பாடலை அருளுகின்றார் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 903

தென்னவர்கோன் முன்அமணர் செய்த வாதில்
தீயின்கண் இடுமேடு பச்சை யாக்கி
என்னுள்ளத் துணையாகி ஆல வாயில்
அமர்ந்திருந்த வாறென்கொல் எந்தாய் என்று
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவிப் போந்து
பண்பினிய தொண்டருடன் அங்கு வைகி
மன்னுபுகழ்ப் பதிபிறவும் வணங்கச் சண்பை
வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.

பொழிப்புரை :

பாண்டிய மன்னன் முன்பு, சமணர் செய்த வாதில் தீயில் இட்ட ஏடு பச்சையாக இருச்கச் செய்தும், என் மனத்தின்கண் துணையாகியும், ஆலவாயிலில் வெளிப்பட வீற்றிருந்த தன்மைதான் என்ன அதிசயம்! எந்தையே! என நயம் பெறப் போற்றி, நலம் குலாவிப் பன்முறையும் எடுத்துக் கூறும் தமிழ்த் தொடையான திருப் பதிகத்தைப் பாடிப் போற்றி, வெளியே வந்து, அடிமைப் பண்பினால் இனிமை தருகின்ற தொண்டர்களுடன் கூடி அத்திருப்பதியில் தங்கி யருளி, நிலையான புகழையுடைய திருப்பதிகள் பலவற்றையும் வணங்குதற்காகச் சம்பந்தர் திருநள்ளாற்றினை வணங்கி விடை பெற்றுச் செல்வார்,

குறிப்புரை :

இதுபொழுது அருளப் பெற்ற பதிகம் `ஏடுமலி\' (தி.2 ப.33) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 904

சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
சார்தலும்மற் றதுஅறிந்த சைவ ரெல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை
அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார்குலவு தனிக்காளஞ் சின்ன மெல்லாம்
பரசமய கோளரிவந் தான்என் றூத.

பொழிப்புரை :

சிறப்புக்கள் பொருந்திய `திருத்தெளிச்சேரி\' யைச் சேர்ந்து இறைவரைப் போற்றி மேற்செல்லுபோது, நற்சார்பு இல்லாத புத்தர்கள் தங்கும் `போதிமங்கை\' என்ற ஊரின் அணித்தாக வருதலும், அச்செய்தியை அறிந்த சைவர் எல்லாரும் கடல் கிளர்ந்து எழுந்தது போல் தாரை சங்கு முதலான அளவற்ற பல இயங்களையும் ஒலித்து, உலகம் விளங்கும்படி எக்காளம் திருச்சின்னம் ஆகிய எல்லாவற்றிலும் பரசமய கோளரி வந்தார் என்று சொல்லி ஊத,

குறிப்புரை :

கோளரி - சிங்கம். பரசமயம் - பிறசமயங்கள்; பிறசம யங்களாகிய யானைகளைச் சிங்கம் என நின்று வெற்றிகொள்பவர். யானை வடிவாற் பெரியதாயினும் ஊக்க மிகுதியிலாதது : ஆதலின் சிங்கம் அதனை வெல்லும் என்பதாம். திருத்தெளிச்சேரியில் அருளிய பதிகம் `பூவலர்ந்தன\' (தி.2 ப.3) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 905

புல்லறிவிற் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப்
புகலியர்தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர்
எடுத்தஆர்ப் பொலியாலும் எதிர்முன் சென்று
மல்கியெழுந் திருச்சின்ன ஒலிக ளாலும்
மனங்கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி
முதலான தேரர்க்குங் கனன்று சொன்னார்.

பொழிப்புரை :

இதனைப் புல்லிய அறிவுடைய சாக்கியர்களுள் அறிந்தவர்கள் ஒன்று சேர்ந்து, சீகாழியினரின் காவலரான ஞானசம் பந்தர் ஊரின் எல்லையுள் புகுந்தபோது, திருத்தொண்டர்கள் எடுத்த சிவ ஒலிகளின் முழுக்கத்தாலும், அவர்களின் எதிரே முன் அணியில் திரண்டு எழுந்து ஒலிக்கும் திருச்சின்னம் எக்காளம் என்ற இவற்றின் ஒலிகளாலும், தம் உள்ளத்துள் கொண்ட பொறாமையால், மயக்கம் அடைந்து, தம் கல்வியிலே மேம்பட்ட புத்தநந்தி முதலானவர்களுக்குச் சினத்துடன் கூறினர்.

குறிப்புரை :

இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 906

மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளை யார்முன்
வருசின்னப் பெருகொலியும் மன்னுந் தொண்டர்
பொற்புடைய ஆர்ப்பொலியுஞ் செவியினூடு
புடைத்தநா ராசமெனப் புக்க போது
செற்றமிகு முள்ளத்துப் புத்த நந்தி
செயிர்த் தெழுந்து தேரர்குழாஞ் சூழச்சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதி லெம்மை
வென்றன்றோ பிடிப்பதென வெகுண்டு சொன்னான்.

பொழிப்புரை :

மற்று அவர்களின் கொடிய சொற்களும், அதுபொழுது ஞானசம்பந்தர் முன்வரும் சின்னங்களின் பெருகிய ஒலியும், நிலைபெற்ற தொண்டர்களின் மகிழ்வொலியும் கூடி ஒருசேர வந்து தம் காதினுள் காய்ச்சி அடித்த வேல்நுனிபோல் புகுந்த போது, சினம் மிகுந்த புத்த நந்தி மேலும் சினந்து, தம் கூட்டம் சூழ்ந்துவரத் திருக்கூட்டத்தினிடையேபோய் `வெற்றிக்கறிகுறியாக முழக்கப்படும் சின்னங்கள் எம்மை வாதில் வென்ற பின்னன்றோ பிடித்தல் வேண் டும்!\' எனக் கடுமையாகச் சினந்து சொன்னான்.

குறிப்புரை :

அவர்கள் - புத்த நந்தியிடம் சொன்ன சாக்கியர்கள். புடைத்த - காய்ச்சி அடித்த, நாராசம் - அம்பின் நுனி, `நெருப்பு நுனை யுறீஇக் கருநாராசம் செவிசெறித்தாங்கு\' எனவரும் பெருங்கதையும் காண்க.

பண் :

பாடல் எண் : 907

புத்தரினம் புடைசூழப் புத்த நந்தி
பொருவில்ஞா னப்புனிதர் திருமுன் பூதும்
மெய்த்தவிறற் சின்னங்கள் விலக்குங் காலை
வெகுண்டெழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கிவரைத் தடிதல் செய்யா
திதுபொறுக்கில் தங்கணிலை ஏற்ப ரென்று
முத்துநிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து
முறைபணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்.

பொழிப்புரை :

புத்தர் கூட்டம் தன்னைச் சூழ்ந்து வரப் புத்த நந்தி ஒப்பற்ற ஞானமுடைய தூய பிள்ளையாரின் திருமுன்பு, ஊதப்பட்ட உண்மைத்திறம் உடைய திருச்சின்னங்களை விலக்கிய போது, சினத்துடன் எழுந்த திருத்தொண்டர்கள், அவனது செய்கையை வெறுத்துப் பார்த்து இவ்வாறு செய்யும் கொடிய செயலுக்கு இவர்களை ஒறுக்காது பொறுத்துக் கொண்டு போயின், தங்கள் நிலையையே மேலும் மேற்கொண்டொழுகுவர் என எண்ணி, முத்துக்கள் நிரல்படப் பதித்த சிவிகையில் அமர்ந்துள்ள முடிமணியான பிள்ளையாரிடம் வந்து அவரை முறையாய்த் தொழுது, நேர்ந்த செயலைக் கூறி நின்றனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 908

வருமிடத்தில் அழகிதாம் நமக்கு வாதில்
மற்றிவர்தம் பொருள்நிலைமை மறாத வண்ணம்
பொருமிடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி
பொய்ம்மேற்கோள் எனப்புகலி வேந்தர் கூற
அருமுறைசொல் திருப்பதிகம் எழுது மன்பர்
ஆளுடைய பிள்ளையார் திருவாக் காலே
உருமிடித்து விழப்புத்தன் உத்த மாங்கம்
உருண்டுவீழ் கெனப்பொறா உரைமுன் விட்டார்.

பொழிப்புரை :

`வரும் இடத்தில் இது நேர்தல் நமக்கு அழகியதே! மாறுபாடு கொண்ட இவர்களது பொருளுண்மை மறுக்க இயலாதபடி வாதிடும் இடத்தில், புத்த நந்தியின் பொய் மேற்கொண்டு வரும் கொள்கையின் நிலையை உள்ளபடி காட்டுவோம்\' என்று சீகாழித் தலைவர் உரைக்க, அரிய திருமுறைகளாகிய திருப்பதிகங்களை எழு தும் வழக்கத்தையுடைய சம்பந்த சரணாலயர் என்பார், ஆளுடைய பிள்ளையாரின் திருவாக்கின் ஆணையால், `புத்த நந்தியின் தலை, இடிவிழ உருண்டு வீழக் கடவது\' எனத் தாங்கற்கரிய சொல்லை முன்கூறிச் செல்ல விட்டார்.

குறிப்புரை :

பிள்ளையாரின் திருப்பதிகங்களை எழுதிவரும் அன்பர் சம்பந்த சரணாலயர் என்றும், அவர் பிள்ளையாரின் அம்மான் முறையினர் என்றும் கூறுவர். அவர் தாம் தொகுத்திருக்கும் சுவடித் திரளில் கயிறு சார்த்திப் பார்த்ததில், `புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின, வித்தக நீறணிவார் வினைப் பகைக்கு, அத்திர மாவன அஞ்செழுத்துமே\' (தி.3 ப.22 பா.10) எனவரும் திருப்பாட்டுவர, அதனையே அத்திரமாகக் கூற, அப் புத்தன் தலை வீழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 909

ஏறுயர்த்தார் சைவநெறி ஆணை உய்க்க
எதிர்விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறில்வலி மந்திரமாம் அசனி போல
வாய்மைஉரைத் திருத்தொண்டர் வாக்கி னாலே
வேறுமொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன்
மேனியையும் தலையினையும் வெவ்வே றாகக்
கூறுபட நூறியிடப் புத்தர் கூட்டம்
குலைந்தோடி விழுந்துவெருக் கொண்ட தன்றே.

பொழிப்புரை :

விடைக்கொடியையுயர்த்திய சிவபெருமானின் சைவ நெறியின் ஆணையை உலகெங்கும் நடத்த, எதிரே வந்து அடையும் இடையூறுகளை வேர் அறக் களைந்து நீக்கும் ஒப்பில்லாத வலிமையுடைய மந்திரமான இடிபோன்ற உண்மைத் திருவாக்கான சமபந்தரின் திருவாக்கு, வேறுபட்ட மொழிகளால் செய்யும் போரை மேற்கொண்டு வந்த புத்த நந்தியின் உடம்பையும் தலையையும் வெவ்வேறு கூறுபடச் சிதைவு படுத்தியது. அதுபொழுது புத்தர்களின் கூட்டம் விரைந்து அஞ்சி ஓடி நடுங்கியது.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 910

மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி
வாக்கின்போர் ஏற்றவன்தன் தலையும் மெய்யும்
அற்றுவிழ அத்திரவாக் கதனால் அன்பர்
அறுத்ததுவுங் கண்டஅர னடியார் எல்லாம்
வெற்றிதரும் பிள்ளையார் தமக்குச் சென்று
விண்ணப்பஞ் செயவெதிர்ந்த விலக்கு நீங்க
உற்றவிதி அதுவேயாம் அரஎன் றெல்லாம்
ஓதுகென அவ்வொலிவான் உற்ற தன்றே.

பொழிப்புரை :

அப் புத்தர்களின் நிலையையும், வாக்கால் போர் செய்ய வந்த புத்த நந்தியின் தலையும் உடலும் வேறாய் அறுபட்டு விழுமாறு அம்பு போன்ற வாக்கினால் தொண்டர் செய்த செயலையும் கண்ட சிவனடியார்கள் எல்லாம், அவ்வெற்றியை அளிக்கும் ஞான சம்பந்தரிடத்துச் சென்று கூறினர், `எதிர்ப்பட்ட இடையூறு நீங்கும்படி பொருந்திய இறைவரின் அருள் ஆணை அதுவாகும்; ஆதலால் சிவ பெருமானை வணங்கி `அரகர\' என்று எல்லாரும் சிவன் நாமத்தை ஓதி முழக்கம் செய்க!\' என்று பிள்ளையார் உரைத்தருள, அங்ஙனமே அனைவரும் `அரகர\' என்று முழங்கினர். அப்பேரொலியானது வானத்தில் அப்பொழுதே சென்று பொருந்தியது.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 911

அஞ்சிஅகன் றோடியஅப் புத்த ரெல்லாம்
அதிசயித்து மீண்டுமுடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இதுதான்மற் றவர்தஞ்சைவ
வாய்மையோ எனமருண்டு மனத்திற் கொள்வார்
எஞ்சலின்மந் திரவாத மன்றி எம்மோ
டெதிர்ந்து பொருள் பேசுவதற் கிசைவ தென்று
தஞ்செயலின் மிக்குள்ள சாரிபுத்தன்
தன்னையே முன்கொண்டு பின்னுஞ் சார்ந்தார்.

பொழிப்புரை :

அச்சம் கொண்டு ஓடிய அப்புத்தர் எல்லாம் வியப்படைந்து, மீண்டும் தம்முள் ஒன்று கூடி, `அந்நிகழ்ச்சிதான் வஞ்சனையால் உண்டானதோ அல்லது அவர்களது சைவ சமயத்தின் உண்மைத் திறத்தால் விளைந்ததோ\' என்று மயக்கம் கொண்டு, மனத்தில் அதை எண்ணிக் `குறைவில்லாத மந்திர வாதத்தாலன்றி எம்முடன் எதிர்த்து உண்மைப் பொருள் இது என்று பொருள் உண்மை பேசி வாதம் செய்வதற்கு இசைவீராக!\' என்று தம் சமய நிலையில் மிக்க வலிமையுடைய சாரி புத்தன் என்பவனையே தலை வனாகக் கொண்டு பின்னும் வந்து சார்ந்தனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 912

அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த
அடலேறு திருவுள்ளத் தழகி தென்று
மெத்தமகிழ்ச் சியினோடும் விரைந்து சென்று
வெண்தரளச் சிவிகையினின் றிழிந்து வேறோர்
சத்திரமண் டபத்தின் மிசை ஏறி நீடு
சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்கவெனத் திருமுன் நின்றார்
புகலிகா வலர்ஏவல் போற்றிச் சென்றார்.

பொழிப்புரை :

அவர்கள் கூறிய அதனைச் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் திருவுள்ளத்தில் `இது அழகிது!\' என்று கொண்டு, மிக்க மகிழ்ச்சியோடும் விரைவாகச் சென்று, வெண்மை யான முத்துச் சிவிகையினின்று இறங்கி, வேறு ஒரு சத்திரத்தின் மண்டபத்தில் ஏறி, பெருகிய சைவர்களுடனே அமர்ந்து `முற்கூறிய வண்ணம் எதிர்த்துப் பொருள் பேசச் சார்கின்ற புத்தர்களை அழை யுங்கள்!\' என்று சொல்ல, அவரது திருமுன்பு நின்ற தொண்டர்கள், சீகா ழித் தலைவரின் ஆணையை ஏற்று, அவ்வாறே புத்தரை அழைக்கச் சென்றனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 913

சென்றவர்கள் தேரர்குழாம் அணைந்து நீங்கள்
செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றிமழ இளங்களிறு சண்பை யாளி
வேதபா லகன்மும்மைத் தமிழின் வேந்தன்
நன்றுமகிழ்ந் தழைக்கின்றான் ஈண்ட நீரும்
நண்ணுமெனக் கூறுதலும் நன்மை சாராத்
தன்தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்
சத்திரமண் டபமுன்பு சார வந்தான்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தரின் ஆணையின்வண்ணம் சென்ற அடியவர்கள், புத்தர் கூட்டத்தை அடைந்து, `நீங்கள் கூறி வருகின்ற பொருளின் உண்மை நிலையைத் தெரிவிக்குமாறு, எங்களின் வெற்றி பொருந்திய இளங்களிறும் சண்பை நகரத்தவரும் மறைத்தலைவரும் முத்தமிழ் மன்னருமான ஞானசம்பந்தப் பெருமான் மகிழ்ந்து அழைக் கின்றார்; நீங்கள் வாருங்கள்!\' எனக் கூறவும், அதைக்கேட்டு, நன்னெ றியை இதுவரை சாராத புத்தர்களுடனே கூடிச் சாரி புத்தன் சத்திர மண்டபத்தின் முன்னே வந்தான்.

குறிப்புரை :

தேரர் - புத்தர்.

பண் :

பாடல் எண் : 914

அங்கணைந்து மண்டபத்துப் புத்த ரோடும்
பிள்ளையார் அருகணைய நின்ற போதில்
எங்குநிகழ் திருச்சின்னந் தடுத்த புத்தன்
இருஞ்சிரத்தைப் பொடியாக்கும் எதிரில் அன்பர்
பொங்குபுகழ்ப் புகலிகா வலர்தம் பாதம்
போற்றிஅரு ளாற்சாரி புத்தன் தன்னை
உங்கள்தலை வனும்பொருளும் உரைக்க என்ன
உற்றவா தினைமேற்கொண் டுரைசெய் கின்றான்.

பொழிப்புரை :

அங்குச் சென்ற சாரிபுத்தன், மண்டபத்தில் புத்தர்களுடன் கூடிப் பிள்ளையார் அருகில் நெருங்கி நின்ற அமை யத்து, எங்கள் ஆணை செலுத்துகின்ற திருச்சின்னத்தைத் தடுத்த புத்த நந்தியின் பெரிய தலையை அழிவு செய்த ஒப்பில்லாத அன்பரான சம்பந்த சரணாலயர், மேன்மேலும் பெருகும் புகழையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளைப் போற்றி, அவரது அருளைப் பெற்று, வாதத்தில் புகுவாராய்ச் சாரி புத்தனைப் பார்த்து, `உங்கள் தலைவனான கடவுளையும் அவன் கூறும் பொருளான வீடுபேற்றையும் இன்ன தன்மைய எனப் பேசுவாயாக!\' என்று சொல்ல, பொருந்திய சமயவாதத்தை மேற்கொண்டு அச் சாரி புத்தன் சொல்கின்றவனாய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 915

கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து
கதிமாறுங் கணபங்க இயல்பு தன்னில்
பொற்புடைய தானமே தவமே நன்மை
புரிந்தநிலை யோகமே பொருந்தச் செய்ய
உற்பவிக்கும் ஒழிவின்றி உரைத்த ஞானத்
தொழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்துய்ய அறமுன் சொன்ன
பான்மையான் யாங்கள்தொழும் பரமன் என்றான்.

பொழிப்புரை :

எல்லாக் கற்பங்களிலும் அளவற்ற பிறப்பு வகைகளில் பிறந்தும் இறந்தும் அந்நிலையினின்றும் மாறி வீடு பெறுகின்ற கணபங்க இயல்பு கூறம் புத்த சமயத்தில், அழகு உடைய தானம், தவம், பண்பு, மிகுந்த யோகம் என்னும் இவற்றைத் தான் பொருந்தும்படி செய்யவே, அதனால் உண்டாகும் நீங்குதல் இல்லாத நிலையில், சொன்ன ஞானத்தால், அழியாத பேரின்பம் தரும் கந்தவீடு பெற்றவன். பலரும் பிறவித் துன்பத்தினின்றும் நீங்கி உய்யும் பொருட் டாக அறங்கள் பலவற்றை முன்னே சொன்ன அருள் உடையவன், அவனே, நாங்கள் தொழும் கடவுளாவான்\' எனச் சொன்னான்.

குறிப்புரை :

கற்பங்கள் - 432 கோடி ஆண்டுகள் கொண்ட கால எல்லை. பிறப்புவகை - வினைக்கீடாக வரும் மக்கள், தேவ, பிரம, நாக, விலங்கு, பேய் எனவரும் அறுவகைப் பிறப்புக்கள். கணபங்கம் - கணந்தொறும் அழிவது. ஈண்டுக் கணம் என்பது ஷணம் என்பதன் திரிபாகும். இதற்குரிய கால அளவாவது நூறு தாமரை இதழ்களை அடுக்கி, ஊசியினால் குத்த, அவற்றுள் எட்டு இதழ்கள் அறும் காலமாம். இவ்வியல்பைக் கூறுவது புத்த சமயமாகும். புத்தர் இருபத்து நால்வர் என்றும், இவர்களுள் இறுதியாக நின்ற கௌதம புத்தனே இங்குக் கூறப்படும் ஆதி புத்தன் என்றும் கூறுவர். இப்புத்தனைப் பற்றிய வரலாறு:- இவன் தன் தாயின் வலது இடையில் பிறந்து, பின் ஆறு நாள்களில் அத் தாயை உயிர்துறக்கச் செய்தவன். உயிர்கள் உய்தற்கென எண்ணற்ற கற்பங்களில், எண்ணற்ற பிறப்புக்களில் பிறந்தும் இறந்தும் உயிர்கட்கு உறுதி செய்து, பின் அந்நிலை மாறி, வீடு பெற்றவன். (புத்த சரித்திரக் குறிப்பு).

பண் :

பாடல் எண் : 916

என்றுரைத்த சாரிபுத்தன் எதிர்வந் தேற்ற
இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும்
நன்றுமது தலைவன்தான் பெற்றா னென்று
நாட்டுகின்ற முத்திதான் யாவ தென்றார்
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை
நேர்நின்ற ஞானமென நிகழ்ந்து ஐந்தும்
ஒன்றியகந் தத்தழிவே முத்தி யென்ன
உரைசெய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.

பொழிப்புரை :

இவ்வாறு கூறிய தன் தலைவன் தன்மை பற்றி விடை சொன்ன சாரி புத்தன் முன்னம், வாதத்தை ஏற்று நின்ற பெரிய தவத்தையும், பெருந்தன்மையையும் உடைய அன்பரும், `உங்கள் தலைவன் பெற்ற பேறு என உங்கள் சமயம் உறுதிப்படக் கூறும் வீடு பேற்றின் இயல்புதான் யாது?\' என வினவினார். நின்ற உரு, வேதனை, குறிப்பு, செய்கை, நேரே நின்ற ஞானம் என நிகழும் ஐந்தும் கூடிய பஞ்ச கந்தத்தின் அழிவே முத்தியாவது எனத் திரிபிடகம் என்ற புத்த சமய நூலில் அறிவுமிக்க சாரி புத்தன் கூறினான்.

குறிப்புரை :

பஞ்ச கந்தங்கள் : 1. உரு - காணப்படும் பெயரின் கருக் கெல்லாம் காரணமாகிய பொருளை யுணர்வது அது. ஐவகையான் வரும் உணர்வுகள். அவை: நிலம், நீர், தீ, வளி ஆகிய நான்கும் அவற் றிற்குக் காரணமான வன்மை, சுவை, நிறம், மணம் எனும் நான்கும் ஆக எண்வகைப் பொருள்வழி வரும் உணர்வு. 2. வேதனை மூன்று: அவை: சுக அறிவு, துக்க அறிவு, சுகதுக்க அறிவு என்பன. 3. குறிப்பு ஆறு: வாய், கண், மூக்கு, செவி, மனம் என்பனவற்றான் வரும் பொதுவும் சிறப்புமாகிய உணர்வு. 4. பாவனை: மனம், மொழி, மெய்களால் வரும் பக்குவம். இதற்கு ஏதுவாக அமைவன. தீக்குணம் பத்தும் நற்குணம் பத்துமாம். தீக்குணங்களாவன: பொய்சொல்லல், கோட்சொல்லல், சினந்து சொல்லல், பயனில சொல்லல் எனச் சொல் லின் வழிவரும் குணம் நான்கு; களவுக்குப் போதல், வறிதே தொழில் செய்தல், கொலை செய்தல் என உடம்பின் வழிவரும் குணம் மூன்று ; கொலை நினைத்தல், காமப்பற்று, ஆசை என மனத்தின் வழிவரும் குணம் மூன்று; ஆகப் பத்து. நற்குணங்களாவன: மெய்யுரை, நல்வார்த்தை, இனியவை கூறல், பயன்படுசொல் எனச் சொல் குணம் நான்கு; பள்ளி வலம் வரல், தவம் புரிதல், தானஞ்செய்தல், என உடற்குணம் மூன்று; அருள்நினைவு, ஆசையறுத்தல், தவப்பற்று என மனத்தின் குணம் மூன்று; ஆகப் பத்து செய்கை மூன்று ; இவை மனம் மொழி மெய்களால் வருவன. விஞ்ஞானம் 5. அறிவுடையாரிடத்து நின்று அதன் வழிப்படும் உணர்வு. அவை சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், சித்தம் என்பன.

பண் :

பாடல் எண் : 917

ஆங்கவன்தான் உரைத்தமொழி கேட்ட அன்பர்
அதனைஅனு வாதஞ்செய் தவனை நோக்கித்
தாங்கியஞா னத்துடனாம் கந்தம் ஐந்தும்
தாம்வீந்து கெட்டனவேல் தலைவன் தானும்
ஈங்குளன் என் றவனுக்கு விடயமாக
யாவையுமுன் இயற்றுதற்கு விகார மேசெய்
தோங்குவடி வமைத்துவிழ வெடுக்கும் பூசை
கொள்வார்ஆர் உரைக்கவென உரைக்க லுற்றான்.

பொழிப்புரை :

அப்போது அந்தச் சாரி புத்தன் உரைத்ததைக் கேட்ட அன்பரான சம்பந்த சரணாலயர், அவன் கூறிய மொழியைத் தாம் எடுத்து மொழிந்து, அவனைப் பார்த்து, அவன் (புத்தன்) முன் தங்கியிருந்த ஞானம் முதலான ஐந்து கந்தங்களும் தாம் ஒருங்கே அழிந்து கெட்டவனானால், அத்தலைவன்தானே அங்கு வீற்றிருக்கின் றான் என்று கொண்டு, அவன் கொள்ளும்படி எல்லாவற்றையும் செய்வதற்காக, விகாரம் என்னும் கோயில் எடுப்பித்து, அதனுள் அவனது பெரிய வடிவத்தையும் வைத்து, விழாச்செய்யும் பூசையை ஏற்றுக்கொள்பவர் யார் கூறுக? என்று வினவ, சாரிபுத்தன் சொல்லத் தொடங்கினானாக,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 918

கந்தமாம் வினையுடம்பு நீங்கி எங்கோன்
கலந்துளன்முத் தியில்என்றான் என்னக் காணும்
இந்திரியங் கண்முதலாம் கரணந் தானும்
இல்லையேல் அவனுணர்ச்சி யில்லை யென்றார்
முந்தையறி விலனாகி உறங்கி னானை
நிந்தித்து மொழிந் துடல்மீ தாடினார்க்கு
வந்தவினைப் பயன்போல வழிபட் டார்க்கும்
வருமன்றோ நன்மையென மறுத்துச் சொன்னான்.

பொழிப்புரை :

இருவினை காரணமாக வந்த ஐவகை உணர்வு கொண்ட உடம்பு கெட, எம் தலைவன் முத்தியில் சேர்ந்திருக்கின்றான், அதனால் கோயிலும் விழாவும் எடுப்பது பொருந்தும் என்று சாரி புத்தன் உரைத்திட, அவன் அங்ஙனம் முத்தியில் சேர்ந்திருக்கும் உன் தலைவனுக்குப் பொருள்களை உணரும் கருவிகளான கண் முதலாய கருவிகள் இல்லாது ஒழிந்ததால், அவனுக்கு உணர்வு தோன்றல் இல்லையாகும் என்று சம்பந்த சரணாலயர் மறுத்துச் சொன்னார் `முற்பட்ட உணர்வு கெட்டு உறங்குபவனை கழித்துத் தூற்றி அவன் உடலின் மீது மிதித்தாடிய ஒருவனுக்கு, அதனால் தீவினைப் பயன் வருவதைப் போல், ஐந்து கந்தமும் கெட்டு முத்தியடைந்த எம் முதல் வனை வணங்கியவர்க்கும் அந்த நல்வினைப் பயன் வரும் அன்றோ!\' எனச் சாரிபுத்தன் மறுத்துச் சொன்னான்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 919

சொன்னவுரை கேட்டருளி அன்பர் தாமும்
தொடர்ந்தவழி பாடுபல கொள்கின் றானுக்
கன்னவற்றி னுடன்பாடும் எதிர்வு மில்லை
ஆனபோ தவன்பெறுதல் இல்லை யென்றார்
முன்னவற்றி னுடன்பாடும் எதிர்வுமின்றி
முறுகுதுயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன்னுயிர்போய்க் கொலையாகி முடிந்த தன்றோ
இப்படியால் எம்மிறைவற் கெய்தும் என்றார்.

பொழிப்புரை :

சாரிபுத்தனின் இம்மறு மொழியைக் கேட்ட அன்பரான சம்பந்த சரணாலயரும், நீ தொடர்ந்து வழிபாட்டை ஏற்றுக் கொள்ளும் உன் தலைவனுக்கு, உணர்ந்து கொள்வதற்குரிய கருவிகள் இல்லாமையால் அவற்றில் விருப்பும் வெறுப்பும் இல்லை. அங்ஙனமா யின் அவ்வாறான வழிபாட்டை ஏற்றுக்கொள்வதும் இல்லை!\' என்று சொன்னார். தன் முன்புள்ள பொருள்களில் விருப்பும் வெறுப்பும் இன்றி நல்ல உறக்கத்தை உடைய ஒருவனைச் சினந்து கொன்றால், அங்ஙனம் கொல்லப்பட்டவனுக்கு உயிர் போகும். கொன்றவனுக்கு கொலைப் பழியும் வந்து சேரும் அன்றோ? இவ்வாறே எம் இறைவ னுக்கும் எம் வழிபாடு சென்று பொருந்தும் என்று சாரி புத்தன் உரைத்தான்.

குறிப்புரை :

முறுகு துயில் - மிகுதியான தூக்கம்.

பண் :

பாடல் எண் : 920

இப்படியால் எய்துமென இசைத்துநீ இங்கு
எடுத்துக்காட் டியதுயிலும்இயல்பி னான்போல்
மெய்ப்படிய கரணங்கள் உயிர்தா மிங்கு
வேண்டுதியா னும்மிறைவற் கான போது
செப்பியஅக் கந்தத்தின் விளைவின் றாகித்
திரிவில்லா முத்தியிற்சென் றிலனும் ஆனான்
அப்படியக் கந்தத்துள் அறிவுங் கெட்டால்
அம்முத்தி யுடன்இன்ப மணையா தென்றார்.

பொழிப்புரை :

இங்ஙனம் வழிபாட்டில் பயன் தருதல் எம் தலைவன்பாலும் பொருந்தும் என்று நீ இங்கு மேற்கோளாக எடுத்துக் காட்டிய, உடன்பாடும் மறுப்பும் இல்லாது உறங்குபவனின் தன்மை போல், உடம்பில் உள்ள கரணங்களும் உயிரும் ஈண்டு இச்செயலுக்கு வழிபாடு கொண்டு பயன்படும் நிலைக்கு உன் தலைவனுக்கு இருக்க வேண்டும் அன்றோ! அங்ஙனம் உடலும் கரணமும் உயிரும் வழிபாடு கொள்ளும் நிலையில் உள்ளவன் ஆனபோது, உன்னால் முன்பு கூறப்பட்ட ஐந்து கந்தத்தின் விளைவும் இல்லாது போகவே, உம் தலைவனான அவன் முத்தியில் சேர்ந்தவன் அல்லன் ஆகின்றான். அங்ஙனம் அக்கந்தத்தின் அறிவும் கெடுமே ஆனால் அந்த முத்தியுடன் இன்பம் சேராது என்று சம்பந்த சரணாலயர் மொழிந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 921

அவ்வுரைகேட் டெதிர்மாற்றம் அறைவ தின்றி
அணைந்துளன் அம் முத்தியெனும் அதுவும் பாழாம்
கவ்வையில்நின் றவனையெதிர் நோக்கி ஞானக்
கடலமுதம் அனையவர்தங் காத லன்பர்
பொய்வகையே முத்தியினிற் போனான் முன்பே
பொருளெல்லாம் உணர்ந்துரைத்துப் போனான் என்றாய்
எவ்வகையால் அவனெல்லாம் உணர்ந்த தீதும்
இல்லதுரைப் பாய்எனினும் ஏற்போ மென்றார்.

பொழிப்புரை :

அம்மொழியைக் கேட்டு அதற்கு எதிராக ஒன்றும் கூறுவதற்கின்றி, அம் முத்தியில் தலைவன் சேர்ந்துள்ளான் எனச் சொல்லப்பட்டதும் பாழாய் முடிந்த சிறுமையுடன், வருத்தத்தோடு சாரி புத்தன் நின்றான். அத்தகையவனை மீண்டும் பார்த்து, ஞானம் என்ற கடலில் கடைந்தெடுத்த அமுதம் போன்ற ஆளுடைய பிள்ளையாரின் அன்பரான சம்பந்த சரணாலயர், கந்தங்கள் அவிந்து பொய்யாய் முடிந்தபின் முத்தியில் சேர்பவனான உன் தலைவன் அதற்கு முன்பே, எல்லாப் பொருள்களையும் உணர்ந்து அறம் உரைத்துச் சென்றான் என்று கூறினாய்! அவன் அவ்வாறு எல்லாவற்றையும் எங்ஙனம் முழுதும் உணர்ந்து கொண்டவன் ஆனான்? எனவே அனைத்தையும் உணர்ந்து கொண்டான் என்பதும் இல்லையாகின்றது! இதற்கு மறுமொழி கூறுவாயாயின் அதனை யாம் ஏற்றுக் கொள்வோம் என்று சொன்னார்.

குறிப்புரை :

எவையும் கணம் தொறும் அழியும் என்று கொண்ட உம் தலைவனுக்கு ஒன்றுணர ஒன்றழிய இவ்வாறே முழுதும் அழியுமே யன்றி, எல்லாப் பொருள்களையும் முற்ற உணர்ந்தவன் என்றல் எங்ஙனம்? என்பது வினா.

பண் :

பாடல் எண் : 922

உணர்வுபொதுச் சிறப்பென்ன இரண்டின் முன்ன
துளவான மரப்பொதுமை உணர்தல் ஏனைப்
புணர்சிறப்பு மரங்களில்வைத் தின்ன தென்றல்
இப்படியால் வரம்பில்லாப் பொருள்கள் எல்லாம்
கொணரும்விற கினைக்குவைசெய் திடினும் வேறு
குறைத்தவற்றைத் தனித்ததனியே இடினும் வெந்தீத்
துணர்கதுவிச் சுடவல்ல வாறு போலத்
தொகுத்தும்விரித் துந்தெரிக்குந் தொல்லோன் என்றான்.

பொழிப்புரை :

உணர்வு என்பது `பொது\', `சிறப்பு\' என இரு வகைப்படும். அவற்றுள் பொதுவுணர்வு, ஒரு காட்டில் உள்ள மரங் களை மரம் எனப் பொதுவாய் உணர்வது. மற்ற சிறப்பு உணர்வாவது, அக்காட்டில் உள்ள மரங்களை இன்னவகை என்று பிரித்து உணர்வது. இங்ஙனமே எல்லாப் பொருள்களின் உணர்வும் ஆகும். கொண்டு வரும் விறகுகளைக் கூட்டித் தீயில் மொத்தமாக இட்டாலும், அங்ஙன மில்லாது வெவ்வேறாக வெட்டித் தனித்தனியே தீயில் இட்டாலும் வெப்பமுடைய தீயின் கொழுந்து அதைச்சுட்டு நாசமாக்க வல்லவாறு போல், தொகையாய்க் கூட்டியும் தனித்தனியே விரித்தும் பழைய வனான எம் இறைவன் தெரிவிப்பான் எனச் சாரி புத்தன் கூறினான்.

குறிப்புரை :

மரக்காட்டினைப் பொதுவும் சிறப்புமாக உணர்தல் போல, உலகியலுண்மையையும் பொதுவும் சிறப்புமாக உணரவும் உரைக்கவும் வல்லானாய எம் முதல்வன், முத்தியடையும் முன்னும் பின்னுமாக அவற்றை உரைத்துச் சொன்னான். அவ்விருவகை உணர் வும் ஒன்றேயாதல், விறகுக் கட்டைச் சேர்த்து எரிப்பினும், தனித்து எரிப் பினும் ஒன்றேயாதல் போலவாம் என உவமைப் பொருட்படுத் துக் கூறினான் புத்தன்.

பண் :

பாடல் எண் : 923

எடுத்துரைத்த புத்தனெதிர் இயம்பு மன்பர்
எரியுணர்வுக் கெடுத்துக்காட் டாகச் சொன்னாய்
அடுத்தவுணர் உருவுடைய தன்று சொன்ன
அனல்வடிவிற் றாம் அதுவும் அறிதி நுங்கோன்
தொடுத்தநிகழ் காலமே யன்றி ஏனைத்
தொடர்ந்தஇரு காலமுந்தொக் கறியுமாகில்
கடுத்தஎரி நிகழ்காலத் திட்ட தல்லால்
காணாத காலத்துக் கதுவா தென்றார்.

பொழிப்புரை :

இங்ஙனம் எடுத்துக்காட்டி விடை கூறிய சாரி புத்தன் எதிரில், வாதம் கூறும் அன்பர், `நீ, தீயின் செயலுக்குக் காட்டாக உணர்வின் செயலைக் கூறினாய். ஆனால் பொருள்களை அடுத்து நின்ற உணர்வு, வடிவுடையதன்று. அந்த உணர்வுக்குக் காட்டாகக் கூறிய தீயோ வடிவுடையது. அதையும் நீ அறிவாயாக! அன்றியும் உம் இறைவன், நிகழ்காலமன்றி மற்ற இறந்த காலமும் எதிர்காலமும் அறிபவனாயின், அவன் அவ்வாறு அறியும் முக்கால உணர்வுக்கு நீ எடுத்துக் காட்டிய பொருளான எரிக்குந் தீ காட்டாகாது. காரணம் அது நிகழ்காலத்தில் இட்டபோது சுடுவதே அல்லாது, மற்ற ஏனை இரு காலங்களிலும் சுடாதாகும்\' என்றார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 924

ஆதலினால் உன்னிறைவன் பொருள்கள் எல்லாம்
அறிந்ததுநும் முத்திபோல் ஆயிற் றன்றே
ஏதமாம் இவ்வறிவால் உரைத்த நூலும்
என்றவனுக் கேற்குமா றருளிச் செய்ய
வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன்
மற்றவனை வென்றருளிப் புகலி மன்னர்
பாததா மரைபணிந்தார் அன்பர் தங்கள்
பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்.

பொழிப்புரை :

ஆதலால், நீ காட்டிய பொருள் பொருத்தமா னதாக இல்லாததால் உம் தலைவன் எல்லாப் பொருள்களையும் முழுவதும் ஒருங்கே உணர்ந்த செய்தியும், நீ கூறிய முத்தி இலக்க ணமும் பாழாய் முடிந்தவாறுபோல், இதுவும் பாழாய் முடிந்தது. இத்தகைய நிரம்பாத அறிவால் அவன் உரைத்த உம் பிடக நூலும் குற்றமுடையதாகும் என்று அந்தச் சாரி புத்தனுக்கு ஏற்கும் வகையில் உண்மையை உணர்த்தச் சாரி புத்தன் அதன்மேல் வாதிடுவதற்கு ஒன்றுமின்றித் தோல்வியுற்றான். அன்பரான சம்பந்த சரணாலயரும், மாறுபட்ட அவனை இங்ஙனம் வென்று அருளி, சீகாழி மன்னரான பிள்ளை யாரின் திருவடித் தாமரைகளை வணங்கினார். தங்கள் சமயத் தன்மை அழிந்த புத்தர்களும் ஞானசம்பந்தரின் திருவடிகளில் பணிந்து விழுந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 925

புந்தியினால் அவருரைத்த பொருளின் தன்மை
பொருளன்றாம் படியன்பர் பொருந்தக் கூற
மந்தவுணர் வுடையவரை நோக்கிச் சைவம்
அல்லாது மற்றொன்றும் இல்லை யென்றே
அந்தமில்சீர் மறைகள்ஆ கமங்கள் ஏனை
அகிலகலைப் பொருளுணர்ந்தார் அருளிச் செய்யச்
சிந்தையினில் அதுதெளிந்து புத்தர் சண்பைத்
திருமறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்.

பொழிப்புரை :

அறிவையே பற்றுக்கோடாகக் கொண்டு, அப் புத்தர்கள் கூறிய பொருள் உண்மைகள் உண்மை அல்லவாகி முடியும் இயல்பைச் சம்பந்த சரணாலயர் பொருத்தமாக எடுத்துச் சொல்ல, மந்தமான அறிவுடைய அப் புத்தர்களைப் பார்த்துச் `சைவத் திறமே அல்லாது மற்றொன்றும் இல்லை\' என்று அழிவற்ற சிறப்புடைய மறைகளையும் ஆகமங்களையும் அவற்றின் வழிவரும் மற்ற அள வற்ற கலைப் பொருள்களையும் உணர்ந்த ஞானசம்பந்தர் அருளிச் செய்ய, அவ்வுண்மை உணர்ந்த புத்தர்கள், சீகாழியில் தோன்றிய அந்தணராய பிள்ளையாரின் செம்மையான திருவடிகளைச் சென்று வணங்கினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 926

அன்றவர்க்குக் கவுணியர்கோன் கருணை நோக்கம்
அணை தலினால் அறிவின்மை அகன்று நீங்கி
முன்தொழுது விழுந்தெழுந்து சைவ ரானார்
முகைமலர்மா ரியின்வெள்ளம் பொழிந்த தெங்கும்
நின்றனவும்சரிப்பனவும் சைவ மேயாம்
நிலைமையவர்க் கருள்செய்து சண்பை வேந்தர்
சென்றுசிவ னார்பதிகள் பணிய வேண்டித்
திருக்கடவூர் அதன்மருங்கு சேர வந்தார்.

பொழிப்புரை :

அன்று அப்புத்தர்களுக்குச் சீகாழித் தலைவரான குருமூர்த்திகளின் அருட்பார்வை பட்டதால், அறிவை மறைக்கும் தன்மையுடைய ஆணவம் தம்மை விட்டு நீங்கிய நிலையில், அப் புத்தர்கள், ஞானசம்பந்தரின் திருமுன்பு விழுந்து வணங்கி எழுந்து அவரால் திருநீறு தரப்பெற்று, அணிந்து சைவர் ஆயினர். தேவர்களின் மலர் மழை எங்கும் பொழிந்தது. `நிற்பனவும் நடப்பனவுமான எல்லா உயிர் வகைகளும் சைவமே யாகும்\' என்ற நிலைமையை அப்புத்தர் கள் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்து, சீகாழித் தலைவரான ஞான சம்பந்தர் சிவபெருமான் எழுந்தருளிய மற்றப் பதிகளுக்கும் சென்று வணங்கும் பொருட்டுத் திருக்கடவூரின் அருகே வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

`நிற்பனவும் நடப்பனவும் சைவமே\' என்றது, உயிர்த் தொகை யனைத்தும் சிவபெருமானோடு சம்பந்தமுடையவாய், அப்பெருமானின் ஐந்தொழில்களில் ஆட்பட்டு ஒரு கால எல்லையில் அழியத் தக்கனவாய் அமைந்தமையைக் காட்டுகிறது.

பண் :

பாடல் எண் : 927

அந்நகரில் அடியார்கள்
எதிர்கொள்ள புக்கருளிக்
கொன்னவிலுங் கூற்றுதைத்தார்
குரைகழல்கள் பணிந்தேத்தி
மன்னியமர்ந் துறையுநாள்
வாகீச மாமுனிவர்
எந்நகரில் எழுந்தருளிற்
றென்றடியார் தமைவினவ.

பொழிப்புரை :

அத்திருக்கடவூரில், தொண்டர்கள் தம்மை வரவேற்க, ஞானசம்பந்தர் திருக்கோயிலினுள்ளே எழுந்தருளி, உயிரைப் பிரிக்கவரும் இயமனை உதைத்த இறைவரின் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றி, விரும்பி அங்குத் தங்யிருக்கும் நாள்களில், `திருநாவுக்கரசு நாயனார் எந்தத் திருநகரில் எழுந்தருளியுள்ளார்?\' என்று அடியவர்களைக் கேட்டருள.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 928

அங்கவரும் அடிபோற்றி
ஆண்டஅர செழுந்தருளிப்
பொங்குபுனற் பூந்துருத்தி
நகரின்கண் போற்றிசைத்துத்
தங்குதிருத் தொண்டுசெயும்
மகிழ்ச்சியினாற் சார்ந்தருளி
எங்குநிகழ்ந் திடஇருந்த
படியெல்லாம் இயம்பினார்.

பொழிப்புரை :

அப்பொழுது அவ்வடியவர்களும் ஞானசம்பந் தரின் திருவடிகளை வணங்கிப்போற்றி நின்று, ஆண்ட அரசு, பெரு கும் நீர் வளம் உடைய காவிரி சூழ்ந்த திருப்பூந்துருத்தியில் எழுந் தருளி, இறைவரைப் போற்றி, அங்குத் தங்கித் திருத்தொண்டு செய்யும் மகிழ்ச்சியால் எங்கும் தம்பண்பு நிலவுமாறு இருந்தருளும் பாங்கை யெல்லாம் எடுத்து மொழிந்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 929

அப்பரிசங் கவர்மொழிய
ஆண்டஅர சினைக்காணும்
ஒப்பரிய பெருவிருப்பு
மிக்கோங்க ஒளிபெருகும்
மைப்பொருவு கறைக்கண்டர்
கழல்வணங்கி அருள்பெற்றுச்
செப்பரிய புகழ்ப்புகலிப்
பிள்ளையார் செல்கின்றார்.

பொழிப்புரை :

அவ்வாறு கூற, நாவுக்கரசரைக் கண்டு மகிழ வேண்டும் என்ற ஒப்பில்லாத அரிய பெருவிருப்பம் மிக்கு, ஒளிமிகும் கருமை பொருந்திய கழுத்தையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, அவரது அருள் விடையைப் பெற்றுச் சொலற்கரிய புகழு டைய சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர் செல்கின்றாராகி,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 930

பூவிரியுந் தடஞ்சோலை
புடைபரப்பப் புனல்பரக்கும்
காவிரியின் தென்கரைபோய்க்
கண்ணுதலார் மகிழ்ந்தஇடம்
மேவிஇனி தமர்ந்திறைஞ்சி
விருப்புறுமெய்த் தொண்டரொடு
நாவரசர் உழைச்சண்பை
நகரரசர் நண்ணுவார்.

பொழிப்புரை :

மலர்கள் மலரும் பெரிய சோலைகள் நிலவ, நீர் பரந்து ஓடுகின்ற காவிரி ஆற்றின் தென்கரை வழியாய்ச் சென்று, நெற் றிக் கண்ணையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருப்பதிகளை அடைந்து, இனிதாய் விரும்பி வணங்கிச் சென்று, விருப்பம் பொருந் திய உண்மை வாய்ந்த அடியவர்களுடன் நாவுக்கரசரிடம் ஞானசம் பந்தப் பெருமான் நண்ணுவாராகி,

குறிப்புரை :

திருக்கடவூருக்கும் திருப்பூந்துருத்திக்கும் இடைப்பட்ட திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்றுள்ளார் பிள்ளையார். அப்பதிகள் இவை என அறிதற்கு இயன்றிலது.

பண் :

பாடல் எண் : 931

அந்தணர்சூ ளாமணியார்
பூந்துருத்திக் கணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை
வாகீசர் கேட்டருளி
நந்தமையா ளுடையவரை
நாம்எதிர்சென் றிறைஞ்சுவது
முந்தைவினைப் பயனென்று
முகமலர அகமலர்வார்

பொழிப்புரை :

மறையவர்களின் மணிமுடியாய் விளங்கும் ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்திக்கு அண்மையாய் வந்தருளுகின்ற பெருமொழியைக் கேட்ட, நாவரசுப் பெருந்தகையாரும் `நம்மை ஆளாகவுடைய பிள்ளையாரை நாம் எதிர் கொண்டு வணங்குவது முற் பிறவியில் செய்த நல்வினையின் பயனாகப் பெறக் கூடியதாகும்\' என எண்ணி அகமும் முகமும் மலர,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 932

எதிர்சென்று பணிவனென
எழுகின்ற பெருவிருப்பால்
நதிதங்கு சடைமுடியார்
நற்பதங்கள் தொழுதந்தப்
பதிநின்றும் புறப்பட்டுப்
பரசமயஞ் சிதைத்தவர்பால்
முதிர்கின்ற பெருந்தவத்தோர்
முன்னெய்த வந்தணைந்தார்.

பொழிப்புரை :

`எதிர் கொண்டு வணங்குவன்\' என்று, தம் உள் ளத்தில் மேன்மேலும் எழும் பெருவிருப்பத்தால், கங்கை சூடிய சடை யாரின் நல்ல திருவடிகளைத் தொழுது, அத்திருப்பதியினின்றும் புறப் பட்டுச் சென்று, பிறசமயங்களின் தீங்கை அழித்த பிள்ளையார் இடத்து, முதிரும் பெருந்தவத்தவர்களான அடியவர்களின் முன் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 933

திருச்சின்னம் பணிமாறக்
கேட்டநாற் றிசையுள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால்
பிள்ளையார் தமைச்சூழ்ந்த
நெருக்கினிடை யவர்காணா
வகைநிலத்துப் பணிந்துள்ளம்
உருக்கியெழு மனம்பொங்கத்
தொண்டர்குழாத் துடன்அணைந்தார்.

பொழிப்புரை :

திருச்சின்னம் பிள்ளையாரின் புகழ்களை எடுத்து முழங்கக் கேட்டவர்களான நாற்றிசைகளிலிருந்தும் வந்த அன்பர்கள், பெருகும் ஆசையால் ஞானசம்பந்தரைச் சூழ்ந்து வரும் நெருக்கத்தில், ஞானசம்பந்தர் காணாத வகையில் நிலத்தில் விழுந்து பணிந்து, உள்ளத்தை உருக்கி எழும் மனம் ஓங்கத் திருத்தொண்டர் கூட்டத் துடன் சேர்ந்தார்.

குறிப்புரை :

இப்பாடல் சில பதிப்புகளில் இல்லை.

பண் :

பாடல் எண் : 934

வந்தணைந்த வாகீசர்
வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின்
சிவிகையினைத் தாங்கியே
சிந்தைகளிப் புறவருவார்
திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறொன்று
நிகழ்ந்திடமுன் புகல்கின்றார்.

பொழிப்புரை :

அங்ஙனம் தொண்டர் கூட்டத்துள் வந்து சேர்ந்த திருநாவுக்கரசர், கொடைத்தன்மை வாய்ந்த சீகாழிப் பதியை வாழ் விக்க வந்தருளிய பிள்ளையாரது அழகிய முத்துச் சிவிகையைத் தாங்குகின்றவர்களுடன் கூடி, தாமும் தாங்கி உள்ளக் களிப்புடனே வருவாராக, திருஞானசம்பந்தர் தம் உள்ளத்தில் திருவருட் குறிப்பாற் வேறொரு உணர்ச்சி உண்டானதால் முற்படக் கூறுவாராய்,

குறிப்புரை :

வேறொரு உணர்ச்சி - அப்பரைப்பற்றிய நினைவு ணர்ச்சி.

பண் :

பாடல் எண் : 935

அப்பர்தாம் எங்குற்றார்
இப்பொழுதென் றருள்செய்யச்
செப்பரிய புகழ்த்திருநா
வுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவஞ்செய்தேன்
ஆதலினால் உம்மடிகள்
இப்பொழுது தாங்கிவரப்
பெற்றுய்ந்தேன் யான்என்றார்.

பொழிப்புரை :

`அப்பர் தாம் இப்போது எங்கு எழுந்தருளினார்?\' என்று வினவியருள, சொலற்கரிய புகழையுடைய திருநாவுக்கரசரும் விடை தருபவராய் `ஒப்பற்ற தவத்தை முன்னே செய்தேனாதலின் இப்போது உம் திருவடிகளைத் தாங்கிவரும் பெரும்பேற்றை அடைந்து உய்ந்தேன்\' என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 936

அவ்வார்த்தை கேட்டஞ்சி
அவனியின்மேல் இழிந்தருளி
இவ்வாறு செய்தருளிற்
றென்னாம்என் றிறைஞ்சுதலும்
செவ்வாறு மொழிநாவர்
திருஞான சம்பந்தர்க்
கெவ்வாறு செயத்தகுவ
தென்றெதிரே இறைஞ்சினார்.

பொழிப்புரை :

அத்திருமொழிகளைக் கேட்டு அச்சம் கொண்ட ஞானசம்பந்தர், சிவிகையினின்றும் இறங்கியருளி, `இவ்வாறு தாங் கள் செய்தருளுவது என்னோ?\' எனப் பதைப்புடன், வணங்குதலும் செம்மையே மொழியும் நாவுடைய அரசரும் `திருஞானசம்பந்த ருக்கு, வேறு யாது செய்தல் தக்கதாகும்?\' எனக் கூறி வணங்கினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 937

சூழ்ந்துமிடைந் தருகணையுந்
தொண்டரெல்லாம் அதுகண்டு
தாழ்ந்துநில முறவணங்கி
எழுந்துஅங்கை தலைகுவித்து
வாழ்ந்துமனக் களிப்பினராய்
மற்றிவரை வணங்கப்பெற்
றாழ்ந்தபிறப் புய்ந்தோம்என்
றண்டமெலாம் உறஆர்த்தார்.

பொழிப்புரை :

சூழ்ந்து நெருங்கி வரும் உண்மைத் தொண்டர் கள் எல்லாம் அதைப்பார்த்துத் தாழ்ந்து நிலத்தில் பொருந்த வணங்கி எழுந்து அழகிய கைகளைத் தலைமீது குவித்து உள்ளக் களிப்புடைய வராய், `இவ்விரு பெருமக்களையும் வணங்கப் பெற்றதால் நாம் ஆழ்ந்துள்ள பிறவிக் கடலினின்றும் ஈடேறி உய்யப் பெற்றோம்\' என மொழிந்து அண்டங்கள் எல்லாம் பொருந்த மகிழ்வொலி செய்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 938

திருஞான சம்பந்தர்
திருநாவுக் கரசர்தமைப்
பெருகார்வத் தொடும்அணைந்து
தழீஇக்கொள்ளப் பிள்ளையார்
மருவாரும் மலரடிகள்
வணங்கியுடன் வந்தணைந்தார்
பொருவாரும் புனற்சடையார்
மகிழ்ந்ததிருப் பூந்துருத்தி.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தப் பெருமான், பெருகும் விருப்பத்தோடும் திருநாவுக்கரசரை அணைந்து தழுவிக் கொள்ள, நாவுக்கரசர் மணம் கமழும் மலர் போன்ற பிள்ளையாரின் அடிகளை வணங்கி உடன் வர, அலைகள் மோதுகின்ற கங்கை நீரைச் சடையில் கொண்ட இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற திருப்பூந்துருத்திக்கு வந்து சேர்ந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 939

அன்பர்குழாத் தொடும்செல்வார்
ஆனேற்றார் மகிழ்கோயில்
முன்பணித்தா கச்சென்று
கோபுரத்தை முன்னிறைஞ்சித்
துன்பமிலாத் திருத்தொண்ட
ருடன்தொழுது புக்கருளி
என்புருக வலங்கொண்டு
பணிந்தேத்தி இறைஞ்சினார்.

பொழிப்புரை :

அடியார் கூட்டத்துடன் செல்பவரான ஞானசம் பந்தர், விடைக்கொடியை யுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்கோயில் முன்பு அருகில் சென்று, கோபுரத்தை முன் வணங்கித் துன்பம் இல்லாத தொண்டருடன் தொழுத வண்ணமே உள்ளே சென்று எலும்பும் உருகுமாறு கோயிலுள் வலமாக வந்து பணிந்து வணங்கிப் போற்றினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 940

பொய்யிலியா ரைப்பணிந்து
போற்றியே புறத்தணைவார்
செய்யசடை யார்கோயில்
திருவாயில் முன்னாக
மையறுசீர்த் தொண்டர்குழாம்
வந்துபுடை சூழஉல
குய்யவரு வார்தங்க
ளுடன்மகிழ்ந்தங் கினிதிருந்தார்.

பொழிப்புரை :

திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் பொய்யிலி யப்பரை வணங்கிப் போற்றிப் பின்னர், புற முற்றத்தில் சேர்பவரான ஞானசம்பந்தர், சிவந்த சடையையுடைய இறைவரின் கோயிலின் வாயில் முன்பு குற்றமறும் சிறப்புடைய தொண்டர் கூட்டம் வந்து, தம்மைச் சுற்றிச் சூழ்ந்து வர, உலகம் உய்யும் பொருட்டு வருகின்ற நாயன்மார்கள் இருவரும் அடியார்கள் சூழ அவர்களுடன் மகிழ்ந்து அங்கு இனிதாய் விரும்பித் தங்கியிருந்தனர்.

குறிப்புரை :

பூந்துருத்தியில் பொய்யிலியப்பரைப் போற்றிப் பணிந்த பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 941

வாக்கின் தனிமன்னர்
வண்புகலி வேந்தர்தமைப்
போக்கும் வரவும்
வினவப் புகுந்ததெல்லாம்
தூக்கின் தமிழ்விரகர்
சொல்லிறந்த ஞானமறை
தேக்குந் திருவாயால்
செப்பி யருள்செய்தார்.

பொழிப்புரை :

சொற்குறுதிக்கு ஒப்பில்லாத அரசரான திருநாவுக் கரசர், வளமையுடைய சீகாழி மன்னரான ஞானசம்பந்தரை அவர் பாண்டி நாட்டுக்குச் சென்றருளியதும் அங்கு நின்று மீண்டதும் ஆகிய வரலாறுகளை வினவ, அங்கு நிகழ்ந்த வரலாறு முழுவதையும், தமிழ்ப் பாட்டின் தலைவரான பிள்ளையார், சொலற்கு அரிய ஞானமறை களைத் தேக்கும் தம் திருவாக்கால் உரைத்தருளினார்.

குறிப்புரை :

திருமறைக்காட்டினின்றும் பிரிந்த இருபெருமக்களும், திருப்பூந்துருத்தியில் மீண்டும் கூடுகின்றனர். ஒருவர் ஒருவரைப் பார்த்தவுடனேயே பாண்டிய நாட்டு நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொள் ளாது, பெருமானை வழிபட்டு, அதன்பின்னரே அதுபற்றி அளவளா விக் கொள்வது அறிந்து கடைப்பிடித்தற்குரியதாம். அதுவும் திருக்கோ யிலினுள் அளவளாவுதலின்றிப் புறத்தணைந்தபின் நிகழ்த்துவதும் குறிக்கொள்ளதக்கதாம்.

பண் :

பாடல் எண் : 942

காழியினில் வந்த
கவுணியர்தம் போரேற்றை
ஆழிமிசைக் கல்மிதப்பில்
வந்தார் அடிவணங்கி
வாழிதிருத் தொண்டென்னும்
வான்பயிர்தான் ஓங்குதற்குச்
சூழும் பெருவேலி
யானீர்எனத் தொழுதார்.

பொழிப்புரை :

சீகாழியில் தோன்றிய கவுணியர் குலத்தவரின் போர் ஏறு என விளங்கும் ஞானசம்பந்தரை, கடல்மீது கல்லையே மிதப்பாகக் கொண்டு வந்தருளிய திருநாவுக்கரசர் வணங்கி, `வாழ்வை வழங்கும் திருத்தொண்டு என்னும் பெரிய பயிர் ஓங்கி வளர்ந்து பயன்தரச் செய்வதற்கு உரியதாய்ச் சூழும் பெரிய வேலிபோல் நீவிர் ஆயினீர்\' எனக் கூறித் தொழுதனர்.

குறிப்புரை :

வாதம் செய்து வென்றமை தோன்றப் `போர் ஏறு\' என்றார். நாவரசர் தமக்கே உரிய பாங்கில் பிள்ளையாரைத் திருத் தொண்டாம் பயிர்காக்கும் வேலி எனப் புகழ்ந்தது, அவருக்கும் பொருந்துவதாகும். எனவே நம்மளவில் சூழும் பெருவேலியானவர் கள் இவ்விருவருமே யாவர் என்பது அறியத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 943

பிள்ளையார் தாமும்அவர்
முன்தொழுது பேரன்பின்
வெள்ள மனையபுகழ்
மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக்
குலச்சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசெல்லாம்
மொழிந்தங் குவந்திருந்தார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தப் பெருமானார் நாவுக்கரசர் முன் தொழுது, பெரிய அன்பின் வெள்ளத்தைப் போன்ற புகழையுடைய மங்கையர்க்கரசியாரின் மேம்பாட்டையும், பெருமையுடைய குலச் சிறையாரின் திருத்தொண்டின் சிறப்பையும் உள்ளவாறு கூறியருளி அங்கு மகிழ்ந்திருந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 944

தென்னற் குயிரோடு
நீறளித்துச் செங்கமலத்
தன்னம் அனையார்க்கும்
அமைச்சர்க்கும் அன்பருளித்
துன்னுநெறி வைதிகத்தின்
தூநெறியே ஆக்குதலான்
மன்னுபுகழ் வாகீசர்
கேட்டு மனமகிழ்ந்தார்.

பொழிப்புரை :

பாண்டிய மன்னருக்கு உயிருடனே திருநீற்றை அளித்தும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னப் பறவை போன்ற மங்கையர்க்கரசி அம்மையாருக்கும் குலச்சிறையாருக்கும் அன்பைச் சுரந்தருளியும், தூய மறைவழிவரும் சைவ நெறியையே பொருந்தும் நெறியாக ஆக்கியதால், நிலைபெற்ற புகழையுடைய திருநாவுக்கரசர் அதனைக் கேட்டு மகிழ்ந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 945

சொல்லின் பெருவேந்தர்
தொண்டைவள நாடெய்தி
மல்கு புகழ்க்காஞ்சி
ஏகாம் பரமன்னும்
செல்வர் கழல்பணிந்து
சென்றதெல்லாஞ் செப்புதலும்
புல்குநூன் மார்பரும்போய்ப்
போற்றுந்திறம் புரிந்தார்.

பொழிப்புரை :

சொல்லரசரான திருநாவுக்கரசர் திருத்தொண்டை வளநாட்டைச் சேர்ந்து, மிகுபுகழுடைய காஞ்சிபுரத்தில் நிலைபெற வீற்றிருக்கின்ற செல்வரான ஏகம்பநாதரின் திருவடிகளை வணங்கி வந்த வரலாற்றையெல்லாம் கூறியருளவும், பொருந்திய நூலையு டைய மார்பரான பிள்ளையாரும் அங்குச் சென்று வணங்கத் திருவுள் ளம் பற்றினார்.

குறிப்புரை :

தலைமை பற்றிக் காஞ்சித் திருப்பதியில் வணங்கியதை விதந்து கூறினாரேனும் `சென்றதெல்லாம் செப்புதலும்\' என்றமை யால், தொண்டைநாட்டில் அமைந்த பல திருப்பதிகளையும் வணங்கி வந்தமையைக் கூறினார் என்பது பெறுதும்.

பண் :

பாடல் எண் : 946

அங்கணரைப் போற்றியெழுந்
தாண்ட அரசமர்ந்த
பொங்கு திருமடத்திற்
புக்கங் கினிதமர்ந்து
திங்கட் பகவணியும்
சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு
தாம்பரவிச் செல்லுநாள்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் இறைவரை வணங்கி எழுந்து, ஆளுடைய அரசர் விரும்பி எழுந்தருளியிருக்கும் அன்புமிக்க திரு மடத்தில் சேர்ந்து, அங்கு விரும்பி வீற்றிருந்தருளி, திங்களின் பிளவு அனைய பிறையைச் சூடிய திருமுடியையுடைய இறைவரின் சேவடி யின் கீழ்த் தங்கும் திருவுள்ளத்துடன் தாமும் போற்றி எழுந்தருளி யிருந்த காலத்தில்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 947

வாகீச மாமுனிவர்
மன்னுதிரு வாலவாய்
நாகம் அரைக்கசைத்த
நம்பர் கழல் வணங்கப்
போகும் பெருவிருப்புப்
பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெருங்காதல்
பிள்ளையார் ஏற்றெழுவார்.

பொழிப்புரை :

வாகீச முனிவரான நாவுக்கரசருக்கு, நிலைபெற்ற திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் பாம்பை அரையில் கட்டிய இறைவரின் திருவடிகளை வணங்குவதற்காகச் செல்ல வேண்டும் என்ற பெரிய விருப்பம் மேன்மேலும் எழவும், ஞானசம்பந்தரும் சீகாழியில் சென்று சேரும் பெருகிய காதலை மேற்கொண்டவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 948

பூந்துருத்தி மேவும்
புனிதர்தமைப் புக்கிறைஞ்சிப்
போந்து திருவாயில்
புறத்தணைந்து நாவினுக்கு
வேந்தர் திருவுள்ளம்
மேவவிடை கொண்டருளி
ஏந்தலார் எண்ணிறந்த
தொண்டருடன் ஏகினார்.

பொழிப்புரை :

திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் இறைவரைத் திருக்கோயிலுள் புகுந்து வணங்கிப் போந்து, வாயில் பக்கத்தை அடைந்து, திருநாவுக்கரசரின் உள்ளம் பொருந்த அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, பெருமையுடைய பிள்ளையார் அளவில்லாத தொண்டர்களுடன் தம் செலவினை மேற்கொண்டார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 949

மாடுபுனற் பொன்னி
இழிந்து வடகரையில்
நீடுதிரு நெய்த்தானம்
ஐயாறு நேர்ந்திறைஞ்சிப்
பாடுதமிழ் மாலைகளும்
சாத்திப் பரவிப்போய்
ஆடல் புரிந்தார்திருப்
பழனம் சென்றணைந்தார்.

பொழிப்புரை :

அருகில் உள்ள காவிரியில் இறங்கிச் சென்று, ஆற்றின் வடகரையில் நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானத்தையும், திருவையாற்றையும் சேர்ந்து பணிந்து, பெருமையுள்ள தமிழ் மாலைக ளையும் அருளிப் போற்றிச் சென்று, திருக்கூத்து இயற்றும் இறைவரின் திருப்பழனத்தைப் போய்ச் சேர்ந்தார்.

குறிப்புரை :

திருநெய்த்தானத்திலும், திருஐயாற்றிலும், திருப்பழ னத்திலும் இதுபோது அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 950

செங்கண் விடையார்
திருப்பழனஞ் சேர்ந்திறைஞ்சிப்
பொங்கிய காதலின்முன்
போற்றும் பதிபிறவும்
தங்கிப்போய்ச் சண்பைநகர்
சார்ந்தார் தனிப்பொருப்பின்
மங்கை திருமுலைப்பால்
உண்டருளும் வள்ளலார்.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தி யாகக் கொண்ட இறைவரின் திருப்பழனத்தை அடைந்து வணங்கி, பொங்கிய காதலின் முன்போற்றிய திருப்பதிகள் பலவற்றிலும் தங்கிச் சென்று, ஒப்பில்லாத பொன்மலை வல்லியான அம்மையாரின் திரு முலைப் பாலையுண்டருளிய வள்ளலாரான பிள்ளையார், சீகாழிப் பதியினை அணைவாராயினர்.

குறிப்புரை :

முன்பு வணங்கிய பதிபலவும் என்றது திருக்குடந்தை, திருவடகுரங்காடுதுறை, திருப்பனந்தாள், திருப்புள்ளிருக்குவேளூர் முதலாயினவாகலாம் என்பார் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 951

தென்னாட் டமண்மா
சறுத்துத் திருநீறே
அந்நாடு போற்றுவித்தார்
வந்தணையும் வார்த்தைகேட்
டெந்நாள் பணிவதென
ஏற்றெழுந்த மாமறையோர்
முன்னாக வேதம்
முழங்க எதிர்கொண்டார்.

பொழிப்புரை :

பாண்டிய நாட்டில் சமண் சார்பாய குற்றங்களை அழித்துத் திருநீற்றினை அந்நாடு முழுதும் அணியும்படி செய்தருளிய ஞானசம்பந்தர் வருகின்ற திருமொழியைக் கேட்டு, எந்நாளில் அவ ரைப் பணியப் பெறுவோம்? என்று ஆர்வம் கொண்டிருந்த மறைய வர்கள், மறைகள் முழங்க அவர்முன் சென்று எதிர் கொண்டனர்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 952

போத நீடுமா மறையவர்
எதிர்கொளப் புகலிகா வலருந்தம்
சீத முத்தணிச் சிவிகைநின்
றிழிந்தெதிர் செல்பவர் திருத்தோணி
நாதர் கோயில்முன் தோன்றிட
நகைமலர்க் கரங்குவித் திறைஞ்சிப்போய்
ஓத நீரின்மேல் ஓங்குகோ
யிலின்மணிக் கோபுரஞ் சென்றுற்றார்.

பொழிப்புரை :

ஞானம் மிக்க மாமறையவர்கள் தம்மை எதிர் கொண்டு வரவேற்கச் சீகாழித் தலைவரான பிள்ளையாரும், குளிர்ந்த முத்துகளால் இயன்ற சிவிகையினின்றும் இறங்கி, அவர்களின் எதிரே செல்பவர், அதுபொழுது திருத்தோணியில் வீற்றிருக்கும் திருக்கோ யில் முன்னே தோன்ற, புதியதாய் மலர்ந்த தாமரை மலரனைய கைகளைக் கூப்பி, இறைஞ்சிச் சென்று, ஊழி வெள்ளத்தில் மேலே மிதந்த அக்கோயிலின் அழகிய கோபுர வாயிலைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 953

அங்கம் மாநிலத் தெட்டுற
வணங்கிப்புக் கஞ்சலி முடியேறப்
பொங்கு காதலிற் புடைவலங்
கொண்டுமுன் பணிந்துபோற் றெடுத்தோதித்
துங்க நீள்பெருந் தோணியாம்
கோயிலை அருளினால் தொழுதேறி
மங்கை யோடுடன் வீற்றிருந்
தருளினார் மலர்க்கழல் பணிவுற்றார்.

பொழிப்புரை :

தரையில் எட்டு உறுப்புக்களும் பொருந்த வணங்கிக் கோயிலுக்குள் புகுந்து, கைகள் குவித்தவாறு திருமுடியின் மீது பொருந்த, மேன் மேலும் மீதூர்ந்து எழும் அன்புடன் திருக்கோயி லைச் சூழ்ந்து வலமாக வந்து, திருமுன்னர்ப் பணிந்து, பெரிய நீண்ட பெருந்தோணியான கோயிலை அருளால் தொழுது, மலையின் மீது ஏறி, அம்மையாருடன் எழுந்தருளிய இறைவரின் தாமரை மலர் அனைய திருவடிகளை வணங்கியவராய்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 954

முற்றும் மெய்யெலாம் புளகங்கள்
முகிழ்த்தெழ முகந்துகண் களிகூரப்
பற்றும் உள்ளம்உள் ளலைத்தெழும்
ஆனந்தம் பொழிதரப் பணிந்தேத்தி
உற்றுமை சேர்வ தெனுந்திரு
வியமகம் உவகையால் எடுத்துஏத்தி
வெற்றி யாகமீ னவன்அவை
எதிர்நதி மிசைவரு கரனென்பார்.

பொழிப்புரை :

திருமேனி முழுவதும் மயிர்க்கூச்செழவும், முன் னுறக் காணும் கண்கள் களிப்புக் கொள்ளவும், அம்மெய்ப்பாடுகளைக் கொண்ட திருவுள்ளத்தில் ஆனந்தம் பொங்கி வழியவும், வணங்கி `உற்றுமை சேர்வது\' எனத் தொடங்கும் `திருஇயமகத் திருப்பதிகத்தை\' மகிழ்வுடன் எடுத்துப் போற்றி, வெற்றிஆகுமாறு பாண்டியனின் அவையிலும், நீர் எதிர்த்துச் செல்ல வைகையாற்றிலும் வரும் திருவருள் செயல் கொண்டவர் எனப் போற்றுபவராய்,

குறிப்புரை :

`உற்றுமை சேர்வது\' (தி.3 ப.113) எனத் தொடங்கும் திருப்பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணிலமைந்ததாகும். `பருமதில் மதுரையின்மன் அவையெதிரே பதிகம தெழுதிலை அவையெதிரே வருநதியிடைமிசை வருகரனே வகையொடும் அலர்கெட வருகரனே\' என வரும் இத்திருப்பதிகத் திருக்கடைக் காப்பினையுளங் கொண்ட வகையில் ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளுகின்றார்.

பண் :

பாடல் எண் : 955

சீரின் மல்கிய திருப்பதி
கத்தினில் திருக்கடைக் காப்பேற்றி
வாரின் மல்கிய வனமுலை
யாளுடன் மன்னினார் தமைப்போற்றி
ஆரும் இன்னருள் பெற்றுமீண்
டணைபவர் அங்கையால் தொழுதேத்தி
ஏரின் மல்கிய கோயில்முன்
பணிந்துபோந் திறைஞ்சினர் மணிவாயில்.

பொழிப்புரை :

சீர்மை பொருந்திய திருப்பதிகத்தில் திருக்கடைக் காப்பும் சாத்திக் கச்சணிந்த அழகிய மார்பகங்களையுடைய திருநிலை நாயகியம்மையாருடன் நிலைபெற்ற தோணியப்பரை வணங்கி, நிறைந்த அவரது இனிய அருளைப் பெற்று, மீண்டு அணைபவராகி, அங்கைகள் கூப்பித் தொழுது போற்றி அழகால் நிறைந்த திருக்கோயி லின் முன் வணங்கிச் சென்று திருவாயிலை அடைந்து தொழுதார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 956

தாதை யாரும்அங் குடன்பணிந்து
அணைந்திடச் சண்பையார் தனியேறு
மூதெ யில்திரு வாயிலைத்
தொழுதுபோய் முகைமலர்க் குழலார்கள்
ஆதரித்துவாழ்த் துரையிரு
மருங்கெழ அணிமறு கிடைச்சென்று
காத லித்தவர்க் கருள்செய்து
தந்திரு மாளிகைக் கடைசார்ந்தார்.

பொழிப்புரை :

அப்பொழுது அவருடைய தந்தையார் சிவபாத இருதயரும் பணிந்து உடன் அணைந்திடச் சீகாழிப் பதியினரின் சிங்க ஏற்றைப் போன்ற பிள்ளையார், பழமையான மதிலுடன் கூடிய வாயிலை வணங்கிச் சென்று, மலர்களை அணிந்த கூந்தலையுடைய மங்கையர் அன்புடனே வாழ்த்தும் உரைகள் இரு மருங்கிலும் திரண் டெழ, அழகிய வீதியில் சென்று, அன்புடனே வந்தவர்க்கு அருள் செய்து, திருமாளிகையின் முன் வாயிலைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 957

நறவம் ஆர்பொழிற் புகலியில்
நண்ணிய திருஞான சம்பந்தர்
விறலி யாருடன் நீலகண்
டப்பெரும் பாணர்க்கு மிகநல்கி
உறையு ளாம்அவர் மாளிகை
செலவிடுத் துள்ளணை தரும்போதில்
அறலி னேர்குழ லார்மணி
விளக்கெடுத் தெதிர்கொள அணைவுற்றார்.

பொழிப்புரை :

தேன்பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சீகாழியை அடைந்தருளிய திருஞானசம்பந்தர், பாடினியார் உடன் வரும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு மிகவும் அருள் சுரந்து, அவர்தம் இருக்கையான திருமாளிகைக்குச் செல்லுமாறு விடை அளித்து, தம் திருமாளிகைக்கு எழுந்தருளும் பொழுது, கரிய மணல் போன்ற கூந்தலையுடைய பெண்கள் அழகான விளக்குகளை ஏந்தி வரவேற்க, அவர் உள்ளே சென்றருளினார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 958

அங்க ணைந்தரு மறைக்குலத்
தாயர்வந் தடிவணங் கிடத்தாமும்
துங்க நீள்பெருந் தோணியில்
தாயர்தாள் மனங்கொளத் தொழுவாராய்த்
தங்கு காதலின் அங்கமர்ந்
தருளுநாள் தம்பிரான் கழல்போற்றிப்
பொங்கும் இன்னிசைத் திருப்பதி
கம்பல பாடினார் புகழ்ந்தேத்தி.

பொழிப்புரை :

அங்குச் சேர்ந்து, அரிய மறையவர் மரபில் வந்த தாயாரான பகவதியார் வந்து அடிவணங்க, தாமும் தூய்மையான நீண்ட பெரிய திருத்தோணியில் எழுந்தருளிய தாயாரான பெரிய நாயகியம்மையாரின் திருவடிகளை உள்ளத்தில் கொண்டு, எதிர் தொழுவார், அங்கே தங்கியிருக்கும் விருப்பால் எழுந்தருளியிருக் கின்ற நாள்களில், தம் இறைவரின் திருவடிகளைப் போற்றி, பெருகும் இனிய இசையுடைய பல திருப்பதிகங்களையும் பாடினார்.

குறிப்புரை :

சீகாழியில் அருளிய பதிகங்களாக முன் குறித்தனவற்றுள் சில இங்குப் பாடியனவாய் இருக்கலாம். அன்றி மேலும் சில பதிகங்களையும் அருளியிருக்கலாம். அவை இவை எனத் தெளிவாக அறிய முடியவில்லை.

பண் :

பாடல் எண் : 959

நீல மாவிடந் திருமிடற்
றடக்கிய நிமலரை நேரெய்தும்
கால மானவை அனைத்தினும்
பணிந்துடன் கலந்தஅன் பர்களோடும்
சால நாள்கள்அங் குறைபவர்
தையலாள் தழுவிடக் குழைகம்பர்
கோல மார்தரக் கும்பிடும்
ஆசைகொண் டெழுங்குறிப் பினர்ஆனார்.

பொழிப்புரை :

நீலநிறமான பெரிய நஞ்சைத் திருக்கழுத்தில் அடக்கிய குற்றமற்றவரான தோணியப்பரை நேரே சென்று வணங்கு தற்குரிய காலங்களில் எல்லாம் சென்று வணங்கி, உடன் கலந்த அடி யார்களோடும் கூடிப் பலநாள்கள், அச் சீகாழிப் பதியில் தங்கியருளிய ஞானசம்பந்தர், காமாட்சி அம்மையார் தழுவிடத் திருமேனி குழைந்து காட்டிய ஏகம்பநாதரின் திருக்கோலத்தைச் சென்று மணம் நிறைவு பெற வழிபடவேண்டும் என்னும் ஆசை மேற்கொண்டு எழும் உள்ளக் குறிப்பு உடையவரானார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 960

தண்ட கத்திரு நாட்டினைச்
சார்ந்துவந்து எம்பிரான் மகிழ்கோயில்
கண்டு போற்றிநாம் பணிவதென்
றன்பருக் கருள்செய்வார் காலம்பெற்
றண்ட ருக்கறி வரும்பெருந்
தோணியில் இருந்தவர் அருள்பெற்றுத்
தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத்
தொடர்ந்தெழுந் தாதையார்க் குரைசெய்வார்.

பொழிப்புரை :

தொண்டை நாட்டைச் சேர்ந்து சென்று நம் இறைவர் வீற்றிருக்கும் திருக்கோயில்களைக் கண்டு போற்றி வணங்கு வோம்! என அடியார்களுக்கு அருள் செய்பவராய், உரிய காலத்தில் நேர்பட்டுத் தேவர்களுக்கும் அரிய பெரிய திருத்தோணியில் வீற்றி ருக்கும் இறைவர்பால் விடைபெற்றுத் திருத்தொண்டர் தம்முடன் சூழ்ந்து வரப் புறப்படத் தாமும் உடன்வரும் பொருட்டாகப் புறப்பட்ட தந்தையாருக்கு உரை செய்பவராய்,

குறிப்புரை :

தொண்டைநாடு, தண்டகன் என்ற அரசனால் ஆளப் பெற்ற காலத்துத் தண்டக நாடு என்றும், பின் துண்டீரன் எனும் அரசனால் ஆளப் பெற்ற காலத்துத் துண்டீர நாடு என்றும் பெயர் பெற்று வந்து. பின் தொண்டைமானால் ஆளப்பெற்ற காலத்திலிருந்து தொண்டை நாடு எனப் பெயர் பெறுவதாயிற்று.

பண் :

பாடல் எண் : 961

அப்பர் நீர்இனி இங்கொழிந்
தருமறை அங்கிவேட் டன்போடுந்
துப்பு நேர்சடை யார்தமைப்
பரவியே தொழுதிரு மெனச்சொல்லி
மெய்ப்பெருந் தொண்டர் மீள்பவர்
தமக்கெலாம் விடைகொடுத் தருளிப்போய்
ஒப்பி லாதவர் தமைவழி
யிடைப்பணிந் துருகுமன் பொடுசெல்வார்.

பொழிப்புரை :

அப்பரே! நீங்கள் இனி எம்முடன் வருவதைக் கைவிட்டு, இங்கு அருமறை விதிப்படி தீவளர்த்து வேள்விசெய்து கொண்டு, அன்புடன் பவளம் போன்ற சடையையுடைய இறைவரைப் போற்றித் தங்கியிருப்பீராக! எனக் கூறி, பெருமையுடைய மெய்த் தொண்டர்களுள் தம்முடன் வாராது தங்குகிறவர்க்கெல்லாம் விடை தந்து, தமக்கு ஒப்பில்லாத இறைவரை வழியில் கண்டு வணங்கிக் கொண்டு, உருகும் அன்புடனே மேற் செல்பவராய்,

குறிப்புரை :

சீகாழியிலிருந்து தில்லைவரையுள்ள இடைப்பட்ட பதிகளை வணங்கினர் என்பார் `வழியிடைப் பணிந்து\' என்றார்

பண் :

பாடல் எண் : 962

செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் திருநடம் பணிந்தேத்திப்
பல்பெ ருந்தொண்ட ரெதிர்கொளப்
பரமர்தந் திருத்தினை நகர்பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன்
திருமாணி குழியினை அணைந்தேத்தி
மல்கு வார்சடை யார்திருப்
பாதிரிப் புலியூரை வந்துற்றார்.

பொழிப்புரை :

செல்வம் நிறைந்த `தில்லை\' என்ற பழம் பெரும் பதியில் இறைவரின் திருக்கூத்தை வணங்கிப் போற்றிப் பெருந் தொண்டர்கள் பலரும் வரவேற்கச் சென்று, இறைவரின் `திருத்தினை\' நகரை அடைந்து பாடிச்சென்று, அத்தொண்டர்களுடன் `திருமாணி குழியினை\' அடைந்து போற்றி, செறிந்து பொருந்திய நீண்ட சடையை உடைய இறைவரின் `திருப்பாதிரிப்புலியூரை\' வந்து அடைந்தார்.

குறிப்புரை :

இத்திருப்பதிகளில் திருமாணிகுழிக்கமைந்த பதிகம் மட்டுமே கிடைத்துளது. அப்பதிகம் `பொன்னியல்\' (தி.3 ப.77): பண்:சாதாரி. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 963

கன்னி மாவனங் காப்பென
இருந்தவர் கழலிணை பணிந்தங்கு
முன்ன மாமுடக் கால்முயற்
கருள்செய்த வண்ணமும் மொழிந்தேத்தி
மன்னு வார்பொழில் திருவடு
கூரினை வந்தெய்தி வணங்கிப்போய்ப்
பின்னு வார்சடை யார்திரு
வக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் பெரிய `கன்னிவனத்தைத்\' தம் காவலிடமாகக் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் பணிந்து, அப்பதியில் முன் நாளில் முடங்கிய காலுடன் முயலாய் ஒறுக்கப்பட்ட மங்கண முனிவர் சாபநீக்கம் பெற அருள் செய்த தன்மையையும் பதிகத்தில் மொழிந்து போற்றிச் சென்று, நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவடுகூரினை அடைந்து, நீண்ட சடை யுடைய இறைவரின் `திருவக்கரை\' என்ற பதியை அடைந்தார்.

குறிப்புரை :

உமையம்மையார் தவம் செய்து அருள்பெற்ற இடம் ஆதலின், இவ்வூர் கன்னியாவனம் என்றும் அழைக்கப்பெற்றது. திருப்பாதிரிப்புலியூரில் அருளிய பதிகம் `முன்னம் நின்ற\' (தி.2 ப.121) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப் பதிகத்தின் முதற் பாடலில், `முன்னம் நின்ற முடக்கால் முயற்கருள் செய்து, நீள் புன்னை நின்று கமழ்பாதிரிப் புலியூருளான்\' எனவருவது கொண்டு, ஆசிரியர் இவ்வரலாற்றை எடுத்து மொழிகின்றார். திருவடுகூரில் அருளிய பதிகம் `சுடுகூர்எரிமாலை\' (தி.1 ப.86) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 964

வக்க ரைப்பெரு மான்தனை
வணங்கிஅங் கமருநாள் அருளாலே
செக்கர் வேணியார் இரும்பைமா
காளமும் சென்றுதாழ்ந் துடன்மீண்டு
மிக்க சீர்வளர் அதிகைவீ
ரட்டமும் மேவுவார் தம்முன்பு
தொக்க மெய்த்திருத் தொண்டர்வந்
தெதிர்கொளத் தொழுதெழுந் தணைவுற்றார்.

பொழிப்புரை :

அத் திருவக்கரையில் ஞானசம்பந்தர் இறைவ னைத் தொழுது வணங்கித் தங்கியிருந்த நாள்களில், திருவருட் குறிப் பினால் சிவந்த வானம் போன்ற சடையையுடைய இறைவரின் `திரு விரும்பைமாகாளத்தை\'யும் சென்று வணங்கி, உடனே திரும்பி, மிக்க சிறப்புகள் வளர்கின்ற `திருவதிகைவீரட்டானத்தைச்\' சென்று சேர்பவரான அவர், தமக்கு, முன்கூடிய உண்மைத் தொண்டர்கள் வந்து எதிர் கொள்ளத் தொழுது அங்கு அணைந்தார்.

குறிப்புரை :

இரும்பைமாகாளமும் என்ற உம்மையால் திருஅரசிலி யையும் கொள்ளத்தக்கதாம் என்பர் சிவக்கவிமணியார். இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருவக்கரை: `கறையணி\' (தி.3 ப.60) - பஞ்சமம். 2. திருவிரும்பைமாகாளம்: `மண்டுகங்கை\' (தி.2 ப.117) -செவ்வழி. 3. திருஅரசிலி: `வண்டறை\' (தி. 2 ப.95) - பியந்தைக் காந்தாரம்.

பண் :

பாடல் எண் : 965

ஆதி தேவர்அங் கமர்ந்தவீ
ரட்டானஞ் சென்றணை பவர்முன்னே
பூதம் பாடநின் றாடுவார்
திருநடம் புலப்படும் படிகாட்ட
வேத பாரகர் பணிந்துமெய்
உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோதி லாஇசை குலவுகுண்
டைக்குறட் பூதம்என் றெடுத்துஏத்தி.

பொழிப்புரை :

முதன்மையுடைய தேவராய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருவீரட்டானத்தைச் சென்று அடைபவ ரான சம்பந்தர் முன்பு, பூத கணங்கள் பாட நின்றாடும் இறைவர், தம் திருக்கூத்தைக் கண்ணுக்குப் புலனாகும்படி காட்டவே, மறைகளில் வல்லுநரான அவர் வணங்கி, மெய்யுணர்வுடன் உள்ளம் உருகி விருப்பத்துடன் குற்றம் அற்ற இசையுடன் கூடிய `குண்டைக் குறட் பூதம்\' என்று தொடங்கிப் போற்றி,

குறிப்புரை :

வேதபாரகர்: பாரம் - கரை, கர் - கண்டவர். மறைகளின் கரையைக் கண்டவர். `குண்டைக் குறட் பூதம்\' எனத் தொடங்கும் பதிகம் குறிஞ்சிப் பண்ணிலமைந்ததாகும் (தி.1 ப 46). இப்பதிகப் பாடல் தொறும், வீரட்டானத்தில் பெருமான் கூத்தியற்றும் சிறப்பைக் குறித்துப் போற்றும் பிள்ளையார், `ஆடும்வீரட்டானத்தே\' என நிறைவுபடவும் அருளுகின்றார். ஆதலின் ஆசிரியர் சேக்கிழார் `பூதப் படை நின்றாடுவார் திருநடம் புலப்படும்படி காட்ட\' என அதனை வரலாற்று இயைபுபடுத்திக் காட்டுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 966

பரவி ஏத்திய திருப்பதி
கத்திசை பாடினார் பணிந்தங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்தினி
துறைபவர் விமலரை வணங்கிப்போய்
அரவ நீர்ச்சடை அங்கணர்
தாம்மகிழ்ந் துறைதிரு வாமாத்தூர்
சிரபு ரத்துவந் தருளிய
திருமறைச் சிறுவர்சென் றணைவுற்றார்.

பொழிப்புரை :

போற்றி வழிபட்ட அப்பதிகத்தின் இசையினை நிறைவுறப் பாடிப் பணிந்து, அத் திருப்பதியில், அன்புடன் மகிழ்ந்து இனிதாகத் தங்கியவரான சீகாழியில் தோன்றிய அந்தணர் குலத்துப் பிள்ளையார், பாம்பும் கங்கையும் தங்கிய சடையையுடைய இறைவர் மிக்க மகிழ்ச்சியுடன் எழுந்தருளிய திருஆமாத்தூரினைச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 967

சென்ற ணைந்துசிந் தையின்மகிழ்
விருப்பொடு திகழ்திரு வாமாத்தூர்ப்
பொன்ற யங்குபூங் கொன்றையும்
வன்னியும் புனைந்தவர் அடிபோற்றிக்
குன்ற வார்சிலை யெனுந்திருப்
பதிகமெய் குலவிய இசைபாடி
நன்று மின்புறப் பணிந்துசெல்
வார்திருக் கோவலூர் நகர்சேர்ந்தார்.

பொழிப்புரை :

சென்றடைந்து, உள்ளத்தில் மகிழ்ச்சி மீதூரக் கொண்ட விருப்பத்துடனே, விளங்கும் திருஆமாத்தூரில் பொன் போல் விளங்கும் கொன்றையையும் வன்னியையும் அணிந்து வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் போற்றிக் `குன்றவார் சிலை\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை, மெய்ம்மை விளங்கும் இசை யுடன் பாடி, இன்பம் மிகப் பொருந்த வணங்கிச் செல்பவரான ஞான சம்பந்தர், திருக்கோவலூரை அடைந்தார்.

குறிப்புரை :

இத்திருப்பதிக்கு இத் தொடக்கமுடையதொரு பதிகம் அன்றிப் பிறிதொரு பதிகமும் உளது. முன்னர்ப் பாடியது: `குன்றவார் சிலை\' (தி.2 ப.50) - சீகாமரம். பின்னர்ப் பாடியது: `துன்னம்பெய்\' - (தி.2 ப.44) - சீகாமரம்.

பண் :

பாடல் எண் : 968

கோவல் நீடிய வீரட்டம்
அமர்ந்தவர் குரைகழல் பணிந்தேத்தி
ஆவின் ஐந்துகந் தாடுவார்
அறையணி நல்லூரை அணைந்தேத்திப்
மேவு மன்புறு மேன்மையாம்
தன்மையை விளங்கிட அருள்செய்தார்.

பொழிப்புரை :

திருக்கோவலூரில் திருவீரட்டக் கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக்கும் இறைவரின், ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றி, ஆனினிடமாகத் தோன்றும் ஐந்து பொருள்களையும் விரும்பியாடுபவரான இறைவரின் திருஅறை யணி நல்லூரைச் சென்றடைந்து போற்றிப் பாவாக மலர்ந்த தமிழ்ப் பதிகத் தினால் போற்றுபவரான பிள்ளையார், இறைவரின் பொருள் சேர் புகழ்களையே போற்றி வாழும் தொண்டர்களுக்கு, அன்பினால் உள வாகும் மேம்பாடான தன்மைகளை உலகம் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்தார்.

குறிப்புரை :

இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருக்கோவலூர்: `படைகொள்\' (தி.2 ப.100) - நட்டராகம். 2. திருஅறையணிநல்லூர்: `பீடினால்\' (தி.2 ப.77) - காந்தாரம். திருஅறையணிநல்லூரில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவோர்க்கு உளவாகும் நலன்களை இப்பதிகப் பாடல் தொறும் பிள்ளையார் அருளுவதை உளங்கொண்டு ஆசிரியர் இங்ஙனம் அருளுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 969

சீரின் மன்னிய பதிகம்முன்
பாடிஅத் திருவறை யணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள்
பங்கர்தம் மலைமிசை வலங்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள்
இமையவர் நாடொறும் பணிந்தேத்துங்
காரின் மல்கிய சோலைஅண்
ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்.

பொழிப்புரை :

இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருக்கோவலூர்: `படைகொள்\' (தி.2 ப.100) - நட்டராகம். 2. திருஅறையணிநல்லூர்: `பீடினால்\' (தி.2 ப.77) - காந்தாரம். திருஅறையணிநல்லூரில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவோர்க்கு உளவாகும் நலன்களை இப்பதிகப் பாடல் தொறும் பிள்ளையார் அருளுவதை உளங்கொண்டு ஆசிரியர் இங்ஙனம் அருளுவாராயினர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 970

அண்ணா மலைஅங் கமரர்பிரான்
வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கைதொழுது
கலந்து போற்றுங் காதலினால்
உண்ணா முலையாள் எனும்பதிகம்
பாடித் தொண்ட ருடன்போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா
மலையைச் சென்று சேர்வுற்றார்.

பொழிப்புரை :

அவ்விடத்தினின்றும் திருவண்ணாமலை தோன்றும் காட்சி, தேவர் தலைவரான சிவபெருமானின் வடிவம் போல் தோன்றவும், கண்ணால் கண்டு, பருகுவார் அன்ன ஆர்வத் தராகி, கைகளால் தொழுது, போற்றுதற்குரிய பெருவிருப்பத்தால் `உண்ணா முலையாள்\' என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடித் தொண்டருடன் சென்று, தெளிந்த கங்கையைத் தலையிற்கொண்ட இறைவரின் திருவண்ணாமலையைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

திருஅறையணிநல்லூரின் மலையிலிருந்தவாறே திருவண்ணாமலையை அன்பர்கள் காட்டக் கண்ட பிள்ளையார், அவ் வண்ணாமலையை நோக்கியருளிய பதிகம் இத்தொடக்கம் உடைய பதிகம் ஆகும். இது நட்டபாடைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.1 ப.10). அலரவனும் மாலவனும் காணாமே அழலுருவாய் நின்ற மலை ஆதலின், பெருமானின் வடிவு போல்வதாயிற்று.

பண் :

பாடல் எண் : 971

அங்கண் அணைவார் பணிந்தெழுந்து
போற்றி செய்தம் மலைமீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார்
தாள்தா மரைகள் தம்முடிமேல்
பொங்கும் ஆர்வத் தொடும்புனைந்து
புளகம் மலர்ந்த திருமேனி
எங்கு மாகிக் கண்பொழியும்
இன்ப அருவி பெருக்கினார்.

பொழிப்புரை :

அண்ணாமலையை அடைபவரான ஞானசம் பந்தர், நிலத்தில் விழுந்து வணங்கி, அம்மலையின் மீது தங்கும் விருப் புடன் வீற்றிருக்கின்ற இறைவரின் திருவடிகளாகிய தாமரைகளைத் தம்முடியின் மீது மேல் எழுகின்ற ஆசையுடன் சூடி, திருமேனி முழு தும் மயிர்க் கூச்செறியக் கண்களில் பொழியும் ஆனந்தக் கண்ணீரை அருவி எனப் பெருக்கினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 972

ஆதி மூர்த்தி கழல்வணங்கி
அங்கண் இனிதின் அமருநாள்
பூத நாத ரவர் தம்மைப்
பூவார் மலராற் போற்றிசைத்துக்
காத லால்அத் திருமலையிற்
சிலநாள் வைகிக் கமழ்கொன்றை
வேத கீதர் திருப்பதிகள்
பிறவும் பணியும் விருப்புறுவார்.

பொழிப்புரை :

ஆதி மூர்த்தியான அண்ணாமலையாரின் திரு வடிகளை வணங்கி, அங்கு இனிதாய் விரும்பித் தங்கியிருக்கும் நாள் களில், பூதங்களுக்குத் தலைவரான அவரைப் `பூவார் மலர்\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் போற்றி, விருப்புடன் அம்மலையில் சில நாள்கள் தங்கி, மறைகளை இசையுடன் பாடுபவரான ஞான சம்பந்தர், இறைவரின் திருப்பதிகள் பிறவற்றையும் சென்று வணங்கும் விருப்பத்தை மேற்கொள்பவராய்,

குறிப்புரை :

`பூவார் மலர்\' எனத் தொடங்கும் திருப்பதிகம் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும் (தி.1 ப.69).

பண் :

பாடல் எண் : 973

மங்கை பாகர் திருவருளால்
வணங்கிப் போந்து வடதிசையில்
செங்கண் விடையார் பதிபலவும்
பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான்பலவும்
கடந்து தொண்டைத் திருநாட்டில்
திங்கள் முடியார் இனிதமரும்
திருவோத் தூரைச் சேர்வுற்றார்.

பொழிப்புரை :

ஞாசம்பந்தர் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவருளால் வணங்கி விடைபெற்றுச் சென்று, சிவந்த கண்களையுடைய விடையை ஊர்தியாகக் கொண்ட இறைவ ரின், வடக்கில் உள்ள பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, பெரிய மலைகளையும் காடுகள் பலவற்றையும் கடந்து, திருத் தொண்டை நாட்டில் பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய இறைவர் இனிதாய் விரும்பி வீற்றிருக்கின்ற `திருவோத்தூரைச்\' சேர்ந்தார்.

குறிப்புரை :

வடதிசையில் பதிபலவும் பணிந்து என்றது, திருத் தெள்ளாறு, திருவெண்குன்றம், புரிசை நாட்டுப் புரிசை முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.`துங்கவரைகள் கான்பலவும் கடந்து\' என்றது பல்குன்றம், இளங்காடு, திண்டிவனம், புலிவனம், புறவார் பனங்காட்டூர் முதலிய ஊர்ப் பெயர்களை உளங்கொண்டு கூறியிருக்கலாம் என்பர் அவர். இவற்றில் புறவார் பனங்காட்டூரில் அருளிய பதிகம், `விண்ணமர்ந்தன\' (தி.2 ப.53) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 974

தேவர் முனிவர்க்கு ஓத்தளித்த
திருவோத் தூரில் திருத்தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ்விரகர்
தாம்அங் கணையக் களிசிறந்து
மேவுங் கதலி தோரணங்கள்
விளக்கு நிரைத்து நிறைகுடமும்
பூவும் பொரியுஞ் சுண்ணமும்முன்
கொண்டு போற்றி எதிர்கொண்டார்.

பொழிப்புரை :

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மறைகளை ஓதுவித்து அருள் செய்த திருவோத்தூரில் வாழும் திருத்தொண்டர் கள், குற்றம் அற்ற சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ்வல்லுநரான ஞானசம்பந்தர் அங்கு வரவே, மிகவும் மகிழ்ந்து, வாழைகளையும் தோரணங்களையும் விளக்குகளையும் நிரல்பட அமைத்து, நிறை குடங்களையும் பூவும் பொரியும் சுண்ணமும் என்ற இவற்றையும் முன்னே ஏந்திப் போற்றிசெய்து எதிர் கொண்டனர்.

குறிப்புரை :

ஓத்து - மறைகள். `உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான\' (தொல். அகத். 31) என்னும் தொல்காப்பியமும். அவற்றை இறைவன் உபதேசித்த அருளிய இடமாதலின் ஓத்தூர் எனப்பட்டது.

பண் :

பாடல் எண் : 975

சண்பை வேந்தர் தண்தரளச்
சிவிகை நின்றும் இழிந்தருளி
நண்பின் மிக்க சீரடியார்
சூழ நம்பர் கோபுரஞ்சூழ்
விண்பின் னாகமுன் னோங்கும்
வியன்பொற் புரிசை வலங்கொண்டு
பண்பு நீடிப் பணிந்தெழுந்து
பரமர் கோயில் உள்ளடைந்தார்.

பொழிப்புரை :

சீகாழியில் தோன்றிய பிள்ளையார், முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, அன்பின் சிறப்புடைய அடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவர, இறைவரின் கோபுரத்தைச் சூழ்ந்து, வானமும் கீழ்ப்படும் வண்ணம் முன்னால் உயர்ந்து விளங்கும் பெரிய பொன் மதிலை வலமாக வந்து வணங்கிப் பண்பில் நீடிப் பணிந்து, எழுந்து, இறைவரின் திருக்கோயிலினுள் சென்றார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 976

வார ணத்தின் உரிபோர்த்த
மைந்தர் உமையாள் மணவாளர்
ஆர ணத்தின் உட்பொருளாய்
நின்றார் தம்முன் அணைந்திறைஞ்சி
நார ணற்கும் பிரமற்கும்
நண்ணற் கரிய கழல்போற்றும்
கார ணத்தின் வரும்இன்பக்
கண்ணீர் பொழியக் கைதொழுதார்.

பொழிப்புரை :

சீகாழியில் தோன்றிய பிள்ளையார், முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, அன்பின் சிறப்புடைய அடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவர, இறைவரின் கோபுரத்தைச் சூழ்ந்து, வானமும் கீழ்ப்படும் வண்ணம் முன்னால் உயர்ந்து விளங்கும் பெரிய பொன் மதிலை வலமாக வந்து வணங்கிப் பண்பில் நீடிப் பணிந்து, எழுந்து, இறைவரின் திருக்கோயிலினுள் சென்றார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 977

தொழுது விழுந்து பணிந்தெழுந்து
சொல்மா லைகளால் துதிசெய்து
முழுது மானார் அருள்பெற்றுப்
போந்து வைகி முதல்வர்தமைப்
பொழுது தோறும் புக்கிறைஞ்சிப்
போற்றி செய்தங் கமர்வார்முன்
அழுது வணங்கி ஒரு தொண்டர்
அமணர் திறத்தொன் றறிவிப்பார்.

பொழிப்புரை :

தொழுது நிலத்தில் விழுந்து பணிந்து எழுந்து, சொல் மாலைகளால் போற்றி, எல்லாமாய் நின்ற இறைவரின் திரு வருள் பெற்று, வெளியே வந்து தங்கியிருந்தவராய், இறைவரைக் காலங்கள் தோறும் சென்று வணங்கிப் போற்றி, அங்கு விரும்பி இருப்பவரான அப்பிள்ளையாரின் திருமுன்பு, ஒரு தொண்டர் அழுது நின்று, சமணர்களின் தன்மை பற்றிய ஒரு செய்தியை அறிவிக்கத் தொடங்கி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 978

அங்கை அனலேற் றவர்க்கடியேன்
ஆக்கும் பனைக ளானவெலாம்
மங்கு லுறநீண் டாண்பனையாய்க்
காயா வாகக் கண்டமணர்
இங்கு நீரிட் டாக்குவன
காய்த்தற் கடைவுண் டோவென்று
பொங்கு நகைசெய் திழித்துரைத்தார்
அருள வேண்டு மெனப்புகல.

பொழிப்புரை :

`உள்ளங்கையில் தீயினைக் கொண்ட இறைவற்கு அடியவனாகிய யான், வளர்க்கும் பனை மரங்கள் எல்லாம் மேக மண் டலம் பொருந்த நீண்டு வளர்ந்தும், ஆண் பனைகளாய்க் காய்க்காது இருப்பதைக் கண்ட சமணர்கள், `இங்கு நீவிர் வைத்து வளர்க்கும் பனை மரங்கள் காய்ப்பதற்கு வழியுண்டோ?\' என்று எள்ளி மிகவும் நகைத்து, இழிவாய்ப் பேசுகின்றனர்; தாங்கள் அவ்விழிவைப் போக்கி அப் பனைகள் காய்க்குமாறு அருள் செய்ய வேண்டும்\' என விண் ணப்பிக்க,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 979

பரம னார்தந் திருத்தொண்டர்
பண்பு நோக்கிப் பரிவெய்தி
விரவு காத லொடும்விரைந்து
விமலர் கோயில் புக்கருளி
அரவும் மதியும் பகைதீர
அணிந்தார் தம்மை அடிவணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம்
இசையிற் பெருக எடுத்தருளி.

பொழிப்புரை :

சிவபெருமானது திருத்தொண்டரின் அடிமைத் திறத்தைத் திருவுளங்கொண்ட திருஞானசம்பந்தர், மிகவும் இரங்கி, பொருந்திய பெருவிருப்பத்துடன் விரைந்து சென்று, இறைவரின் திருக்கோயிலுக்குள் புகுந்து, பாம்பையும் பிறைச்சந்திரனையும் பகை தவிர்த்துத் தலையில் சூடிய சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கித் திருவருளை இரந்து `பூத்தேர்ந்தாயன\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பண் இசை பெருகப் போற்றியருள,

குறிப்புரை :

`பூத்தேர்ந்தாயன\' எனத் தொடங்கும் பதிகம் பழந்தக் கராகப் பண்ணிலமைந்ததாகும் (தி.1. ப.54).

பண் :

பாடல் எண் : 980

விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்
பதனில் விமல ரருளாலே
குரும்பை ஆண் பனைஈனும்
என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம்
நிறைந்த குலைக ளாய்க்குரும்பை
யரும்பு பெண்ணை யாகியிடக்
கண்டா ரெல்லாம் அதிசயித்தார்.

பொழிப்புரை :

விரும்பத்தக்க மேன்மை பொருந்திய திருக்கடைக்காப்பில், இறைவரின் திருவருளால் `குரும்பைகளை ஆண் பனைகள் ஈனும்\\\' என்னும் வாய்மை பொருந்தி விளங்குதலால், நெருங்கிய அவ்வாண்பனைகள் எல்லாம், நிறைந்த குலைகளை உடையனவாய்க் குரும்பையுடைய பெண்பனைகளாக மாறிவிடவே, கண்டவர் அனைவரும் வியப்படைந்தனர்.

குறிப்புரை :

குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும்பு கலியுண் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.
(தி.1 ப.54 பா.11) என்பது திருக்கடைக்காப்புப் பாடலாகும். `ஆண்பனைக் குரும்பைக் குலைஈன் ஓத்தூர்` என மாறுக. திருவருள் வயப்பட்ட இத்திருவாக்கு மெய்ம்மை பொருந்தி நிற்பதால் ஆண்பனை குலை ஈன்றது. ஆதனால் பெண்பனையாயிற்று. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 981

சீரின் மன்னும் திருக்கடைக்காப்
பேற்றிச் சிவனா ரருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன்
காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து
நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர்
போற்ற அங்கண் இனிதமர்ந்தார்.

பொழிப்புரை :

சிறப்பால் நிலைபெற்ற திருக்கடைக்காப்புச் சாத்திப் பதிகத்தை நிறைவாக்கி, இறைவரின் திருவருளைப் பெற்று, உலகத்தில் நீடிய ஆண்பனைகள் முன்னே காய்த்துப் பழுக்கும் தன்மை வர, விரும்பும் அன்பரின் கருத்தை நேர்பட முடித்துத் தந்து நிறைவான மகிழ்ச்சியடைய, திருத்தொண்டர் போற்ற, அந்நகரத்தில் இனிதாய் எழுந்தருளியிருந்தார் ஞானசம்பந்தர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 982

தென்னாட் டமண்மா சறுத்தார்தம்
செய்கை கண்டு திகைத்தமணர்
அந்நாட் டதனை விட்டகல்வார்
சிலர்தங் கையிற் குண்டிகைகள்
என்னா வனமற் றிவையென்று
தகர்ப்பார் இறைவன் ஏறுயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான்
அன்றே என்று போற்றினார்.

பொழிப்புரை :

பாண்டிய நாட்டில் சமணமான குற்றத்தை நீக்கிய ஞானசம்பந்தரின் இச் செயலைக் கண்டு, திகைத்த சமணர்களிற் சிலர், அந்நாட்டை நீங்கிச் செல்பவர்களாகி, சிலர் தம் கையில் ஏந்திய தம் சமயச் சின்னங்களுள் ஒன்றான நீர்க் குண்டிகைகளை இவற்றால் என்ன பயன் என்று கூறி உடைத்தெறிந்து, `முழுமுதல் கடவுளாவார் விடைக்கொடியை யுயர்த்திய பொன்போன்ற மேனியையுடைய புரிந்த சடையையுடைய சிவபெருமானே!\' என்று போற்றினர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 983

பிள்ளை யார்தந் திருவாக்கில்
பிறத்தலால்அத் தாலம்முன்
புள்ள பாசம் விட்டகல
ஒழியாப் பிறவி தனையொழித்துக்
கொள்ளு நீர்மைக் காலங்கள்
கழித்துச் சிவமே கூடினவால்
வள்ள லார்மற் றவரருளின்
வாய்மை கூறின் வரம்பென்னாம்.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தரின் உண்மைத் திருவாக்கி னால் பெண்பனையாய அப்பனைமரங்களுள், பனையாய்ப் பிறப் பதற்குரியதான வினைநீங்க, ஓயாமல் தொடர்ந்து வருகின்ற பிறவிப் பிணி நீங்கி, உடம்பு இருப்பதற்குக் காரணமான ஏன்ற வினையை நுகரும் கால அளவு நீங்கியபின், சிவப்பேற்றை அடைந்தன. இந் நிலையைக் காண, வள்ளலாரான பிள்ளையாரின் அருளிப் பாட்டை எடுத்துக் கூறுவது என்பது ஒரு வரம்புக்கு உள்ளாகுமோ? ஆகாது.

குறிப்புரை :

இவ்வாற்றான் ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக உள்ள அனைத்துயிர்களுமே வினைவயத்தால் தோன்றின என்பதும், அவ் வினைநீங்கியபின் அவை வீடுபெறற்குரியன என்பதும் விளங்கும். உமாபதிசிவம் முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்த வரலாற்றையும் நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 984

அங்கண் அமரர் பெருமானைப்
பணிந்து போந்தா டரவினுடன்
பொங்கு கங்கை முடிக்கணிந்தார்
மகிழும் பதிகள் பலபோற்றி
மங்கை பாகர் அமர்ந்தருளும்
வயல்மா கறலை வழுத்திப்போய்க்
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட்
டத்தைச் சென்று குறுகினார்.

பொழிப்புரை :

அவ்விடத்துத் தேவதேவரான இறைவரை வணங்கிச் சென்று, ஆடும் பாம்புடன் பெருகும் நீரையுடைய கங் கையை முடியில் சூடிய இறைவர் மகிழும் பதிகள் பலவற்றையும் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றி ருக்கும் வயல்கள் சூழ்ந்த திருமாகறலைப் போற்றிச் சென்று, மணம் கமழும் மலர்களையுடைய நீர் சூழ்ந்த திருக்குரங்கணில்முட்டத்தின் அருகில் செல்வாராயினர்.

குறிப்புரை :

பதிகள் பல என்றது, திருவன்பார்த்தான் பனங்காட்டூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருமாகறலில் அருளிய பதிகம் `விங்கு விளை\' (தி.3 ப.72) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 985

ஆதி முதல்வர் குரங்கணில்முட்
டத்தை அணைந்து பணிந்தேத்தி
நீதி வழுவாத் திருத்தொண்டர்
போற்ற நிகரில் சண்பையினில்
வேத மோடு சைவநெறி
விளங்க வந்த கவுணியனார்
மாதொர் பாகர் தாம்மன்னும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

பொழிப்புரை :

ஆதிமுதல்வரான சிவபெருமானின் திருக்குரங்கணில்முட்டத்தைச் சேர்ந்து வணங்கிப் போற்றிச் சைவநெறியில் வழுவாத ஒழுக்கமுடைய திருத்தொண்டர் போற்றச் சென்று, ஒப்பில்லாத சீகாழிப் பதியில் மறைநெறியுடனே சைவநெறியும் விளங்குமாறு தோன்றியருளிய கவுணியரான ஞானசம்பந்தர், உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட ஏகம்பவாணர் நிலையாக எழுந்தருளியுள்ள மதில் சூழ்ந்த காஞ்சிப் பதியின் அருகில் அடைந்தார்.

குறிப்புரை :

முட்டம் - காகம். குரங்கு, அணில், காகம் ஆகிய மூன்றும் வழிபட்ட திருப்பதியாதலின் இப்பெயர் பெற்றது. இப்பதியில் அருளிய பதிகம் `விழுநீர்` (தி.1 ப.31) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 986

நீடுகாஞ்சி வாழ்நரும்
நிலாவுமெய்ம்மை அன்பரும்
மாடுசண்பை வள்ளலார்
வந்தணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்பநேர்
குலவுவீதி கோலினார்
காடுகொண்ட பூகம்வாழை
காமர்தோ ரணங்களால்.

பொழிப்புரை :

பெருமைமிக்க காஞ்சிமாநகரத்தில் வாழும் மக்களும், மெய்ம்மை நெறி நிலைபெற்ற திருத்தொண்டர்களும், நகரத்தின் அருகே திருஞானசம்பந்தர் வந்து சேர்ந்த மகிழ்ச்சியினால் உண்டான இன்பம் காரணமாக, காடு எனச் செறிந்த பாக்கு மரங் களையும், வாழைகளையும், அழகிய தோரணங்களையும் நிரல்பட அமைத்து வீதிகளை அணிசெய்தனர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 987

கொடிநிரைத்த வீதியில்
கோலவே திகைப்புறங்
கடி கொள்மாலை மொய்த்தபந்தர்
கந்தநீர்த் தசும்புடன்
மடிவில்பொன் விளக்கெடுத்து
மாதர்மைந்தர் மல்குவார்
படிவிளக்கும் அன்பரும்பரந்த
பண்பில் ஈண்டுவார்.

பொழிப்புரை :

கொடிகளை நிரல்படக் கட்டிய வீதியில், அழகிய திண்ணையின் பக்கத்தில் மணமுடைய பந்தலில், மணநீர் நிறைந்த நிறைகுடங்களுடன், கெடுதல் இல்லாத பொன் விளக்குகளை ஏந்திப் பெண்களும் ஆண்களுமாய் நிறைந்து கூடுவார்களும், உலகில் அன்பு நெறியை விளக்கம் செய்யும் அன்பர்களும் பரவிப் போற்றும் இயல்புடன் வந்து நெருங்குபவர்களாகி,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 988

கோதைமாதர் ஆடலுங்
குலாவுதொண்டர் பாடலும்
வேதகீத நாதமும்
மிக்கெழுந்து விம்மவே
காதல்நீடு காஞ்சிவாழ்நர்
கம்பலைத் தெழுந்துபோய்
மூதெயிற் புறம்புசென்
றணைந்துமுன் வணங்கினார்.

பொழிப்புரை :

மாலை சூடிய பெண்களின் ஆடல் ஓசையும், மறை ஒலியும் கூடி மிக்கு எழுந்து பெருகப் பெருவிருப்பினால் காஞ்சி வாழும் மக்கள் மகிழ்வொலி செய்து, எழுந்து சென்று, பழைமை உடைய மதிலின் வெளியில் சென்று கூடி முன்னம் வணங்கினர்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 989

சண்பையாளும் மன்னர்முன்பு
தொண்டர்வந்து சார்தலும்
பண்புநீடி யானமுன்
பிழிந்திறைஞ்சு பான்மைகண்
டெண்பெருக்கு மிக்கதொண்டர்
அஞ்சலித்து எடுத்தசொல்
மண்பரக்க வீழ்ந்தெழுந்து
வானம்முட்ட ஆர்த்தனர்.

பொழிப்புரை :

சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர் முன்பு, அந்தத் தொண்டர்கள் வந்து சேர்ந்தபோது அவர் அடிமைப் பண்பில் தலைநின்று, முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, வணங்கும் இயல் பைப் பார்த்து, எண்ணம் பெருக்கிய தொண்டர்கள் `அரகர\' என்று எழுப்பிய ஒலி உலகத்தில் பரவ, நிலத்தில் விழுந்து எழுந்து, வானம் அளாவ மகிழ்வொலி செய்தனர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 990

சேணுயர்ந்த வாயில்நீடு
சீர்சொள்சண்பை மன்னனார்
வாண்நிலாவு நீற்றணி
விளங்கிட மனத்தினில்
பூணுமன்பர் தம்முடன்
புகுந்திடப் புறத்துளோர்
காணும்ஆசை யிற்குவித்த
கைந்நிரை யெடுத்தனர்.

பொழிப்புரை :

பெருகும் சிறப்புக் கொண்ட சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், ஒளி பொருந்திய திருநீற்றுக் கோலம் திருமேனியினில் விளங்கிட, உள்ளத்தில் சிவபெருமான் மீது கொண்ட அன்பையே அணிகலனாகவுடைய அடியவருடன், வான் அளாவ உயர்ந்த நக ரத்து மதில் புறவாயிலுள் புகுந்தபோது, நகர்ப் புறத்தினின்றும் வந்து கூடிய மக்கள், பிள்ளையாரைக் காண்கின்ற ஆசையினால் வரிசை யாய்க் கைகளைத் தலைமீது குவித்தவாறு வணங்கினர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 991

வியல்நெடுந் தெருவினூடு
மிக்கதொண்டர் ஆர்ப்பெழக்
கயல்நெடுங்கண் மாதரும்
காதல்நீடு மாந்தரும்
புயல்பொழிந்த தாமெனப்
பூவினொடு பொற்சுணம்
இயலுமாறு வாழ்த்தெடுத்
திருமருங்கும் வீசினார்.

பொழிப்புரை :

அகன்ற நீண்ட தெருவினிடையே கூடிய தொண் டர்களின் முழக்கம் எழ, கயல்மீன் போன்ற நீண்ட கண்களை உடைய பெண்களும் காதலால் மிக்க மக்களும், மேகம் மழைபெய்தது போல் பூக்களுடன் பொன் சுண்ணப் பொடியைத் திருமேனியில் ஒவ்வுமாறு தூவி வாழ்த்துக் கூறி இருமருங்கிலும் நின்று கவரி வீசினர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 992

இன்னவண்ணம் யாவரும்
இன்பமெய்த எய்துவார்
பின்னுவார் சடைமுடிப்
பிரான்மகிழ்ந்த கோயில்கள்
முன்னுறப் பணிந்துபோய்
மொய்வரைத் திருமகள்
மன்னுபூ சனைமகிழ்ந்த
மன்னர்கோயில் முன்னினார்.

பொழிப்புரை :

இங்ஙனம் எல்லோரும் இன்பம் அடையுமாறு சேர்பவரான ஞானசம்பந்தர், சுருண்ட நீண்ட சடையையுடைய சிவ பெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் பலகோயில்களுள் இடைப் பட்ட கோயில்களை வணங்கிச் சென்று, மலையரசன் மகளான உமையம்மையாரின் நிலைபெற்ற பூசனையை என்றும் மகிழ்ந்து ஏற்றருளும் ஏகம்பரான இறைவரின் திருக்கோயில் முன்பு சேர்ந்தனர்.

குறிப்புரை :

காஞ்சி நகரில் கோயில்கள் பல உளவாதலை முன்னரும் (பா.1153) ஆசிரியர் குறித்துள்ளார். அக்கோயில்களுள் தம் வழியிடைப்பட்ட கோயில்களை வணங்கிச் சென்றனர் பிள்ளையார்.

பண் :

பாடல் எண் : 993

கம்பவாணர் கோயில்வாயில்
கண்டுகை குவித்தெடுத்
தும்பர்ஓங்கு கோபுரத்தின்
முன்னிறைஞ்சி உள்ளணைந்
தம்பொன்மா ளிகைப்புறத்தில்
அன்பரோடு சூழவந்
திம்பர்ஞாலம் உய்யவந்த
பிள்ளையார் இறைஞ்சுவார்.

பொழிப்புரை :

ஏகம்பவாணரான இறைவரின் திருக்கோயில் வாயிலை நோக்கி, கைகளைக் குவித்துத் தலைமேற் கொண்டு வணங்கி, வானளாவ ஓங்கி நிற்கும் கோபுரத்தின் முன் வணங்கி, கோயிலுள் சென்று சேர்ந்து, அழகிய பொன் மாளிகையின் புறச் சுற்றில் அன்பர்களுடன் வலமாக வந்து, உலகம் உய்யுமாறு தோன்றி யருளிய ஞானசம்பந்தர் வணங்குவாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 994

செம்பொன்மலைக் கொடிதழுவக்
குழைந்தருளுந் திருமேனிக்
கம்பரைவந் தெதிர்வணங்கும்
கவுணியர்தங் காவலனார்
பம்புதுளிக் கண்ணருவி
பாய்ந்துமயிர்ப் புளகம்வரத்
தம்பெருகு மனக்காதல்
தள்ளநில மிசைத்தாழ்ந்தார்.

பொழிப்புரை :

சிவந்த பொன்மயமான மலையரசனின் மகளா ரான கொடிபோன்ற காமாட்சியம்மையார் தழுவக்குழைந்த மேனியை யுடைய ஏகம்பரநாதரை, திருமுன்பு சென்று வணங்கும் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தர், துளிக்கும் துளிகளாகி அருவி எனக் கண்ணீர் பெருகத் திருமேனியில் மயிர்க்கூச்செறிந்து, தம் உள் ளத்தில் நிறைந்து பெருகும் பெருவிருப்பம் உந்த, நிலத்தின்மீது விழுந்து வணங்கியவராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 995

பலமுறையும் பணிந்தெழுந்து
பங்கயச்செங் கைமுகிழ்ப்ப
மலருமுக மளித்ததிரு
மணிவாயால் மறையான்என்
றுலகுய்ய எடுத்தருளி
உருகியஅன் பென்புருக்க
நிலவுமிசை முதற்றாளம்
நிரம்பியநீர் மையில்நிகழ.

பொழிப்புரை :

பலமுறையும் வணங்கி எழுந்து, தாமரையனைய சிவந்த கைகள் குவிய, மலர்கின்ற திருமுகத்தில் தோன்றிய அழகிய ஒளி விளங்கும் வாக்கினால் `மறையானை\' என உலகம் உய்யுமாறு தொடங்கி, உள்ளம் உருகிய அன்பு எலும்பையும் உருக்குவதால் பொருந்திய பண்ணும் தாளமும் கூட நிரம்பிய தன்மையில்,

குறிப்புரை :

இவ்வாறாய மெய்ப்பாடுகள் நிகழ அருளிய பதிகம் `மறையானை\' (தி.2 ப.12) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 996

பாடினார் பணிவுற்றார்
பரிவுறுஆ னந்தக்கூத்
தாடினார் அகங்குழைந்தார்
அஞ்சலிதஞ் சென்னியின்மேல்
சூடினார் மெய்ம்முகிழ்த்தார்
சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவர்க்கும்
தெரிவரியார் திருமகனார்.

பொழிப்புரை :

பன்றியும் அன்னமுமாய் உருவெடுத்து முறையே அடியும் முடியும் தேடியவர்களான இருபெருந் தேவர்களும் அறிதற்கு அரியராய் நிமிர்ந்த இறைவரின் திருமகனாரான பிள்ளையார், பாடி னார், பணிந்தார், அன்பினால் நிறைந்த ஆனந்தக் கூத்து ஆடினார் மனம் குழைந்து உருகினார், கைகளைக் குவித்த அஞ்சலியைத் தலை மேல் கொண்டார், உடல் எங்கும் மயிர்கூச் செறியப் பெற்றார்.

குறிப்புரை :

சூகரம் - பன்றி.

பண் :

பாடல் எண் : 997

மருவியஏ ழிசைபொழிய
மனம்பொழியும் பேரன்பால்
பெருகியகண் மழைபொழியப்
பெரும்புகலிப் பெருந்தகையார்
உருகியஅன் புள்ளலைப்ப
உமைதழுவக் குழைந்தவரைப்
பருகியமெய் உணர்வினொடும்
பரவியே புறத்தணைந்தார்.

பொழிப்புரை :

பொருந்திய ஏழிசைகளையும் வாக்கானது பொழிய, மனத்தினின்றும் மேலிட்டு எழும் அன்பினால் கண்களில் நீர் ஊற்றெடுத்துப் பெருகப் பெருமையுடைய சீகாழியில் தோன்றிய ருளிய பெருந்தகையாரான பிள்ளையார், உள்ளம் உருகுவதற்குக் காரணமான அன்பு மனத்தை அலையச் செய்ய, காமாட்சியம்மையார் தழுவக் குழைந்த ஏகாம்பரநாதரை அநுபவித்த மெய் உணர்ச்சியோ டும் போற்றிசெய்து, கோயில் வெளிப்பக்கத்தை அடைந்தார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 998

புறத்தணைந்த தொண்டருடன்
போந்தமைந்த திருமடத்தில்
பெறற்கரும்பே றுலகுய்யப்
பெற்றருளும் பிள்ளையார்
மறப்பரிய காதலுடன்
வந்தெய்தி மகிழ்ந்துறைவார்
அறப்பெருஞ்செல் வக்காமக்
கோட்டம்அணைந் திறைஞ்சினார்.

பொழிப்புரை :

தம்முடன் வந்தருளிய திருத்தொண்டர்களுடன் சென்று, தாம் எழுந்தருளும் பேறுபெற்ற திருமடத்தில், பெறற்கரிய பேறான சிஞானத்தை உலகம் உய்யும் பொருட்டாய்ப் பெற்று, அவ் வாறே உலகுக்கு அருளும் ஞானசம்பந்தர், இறைவரை மறவாத பெரு விருப்புடன் வந்து மகிழ்ச்சியுடன் தங்கியருள்வார், அறங்கள் எல்லா வற்றையும் வளர்த்து வரும் உமையம்மையார் எழுந்தருளியுள்ள பெரிய செல்வம் பொருந்திய காமக் கோட்டத்தை அடைந்து வணங் கினார்.

குறிப்புரை :

இறைவனையன்றித் தனித்து அம்மையாரையும் வணங்கியதாகக் குறிக்கும் இடம் இஃது. சுந்தரரும் இவ்வாறு வணங் கியமையைப் பின் (தி.12 பு.29 பா.84) காண்க.

பண் :

பாடல் எண் : 999

திருவேகம் பத்தமர்ந்த
செழுஞ்சுடரைச் சேவடியில்
ஒருபோதும் தப்பாதே
உள்ளுருகிப் பணிகின்றார்
மருவுதிரு இயமகமும்
வளர்இருக்குக் குறள்மற்றும்
பெருகும்இசைத் திருப்பதிகத்
தொடைபுனைந்தார் பிள்ளையார்.

பொழிப்புரை :

திருஏகம்பத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் செழுமை பொருந்திய ஞானச் சுடரான இறைவரின் திருவடிகளை வழிபட வேண்டிய காலங்களில், ஒரு பொழுதும் தவறாது உள்ளம் உருகிப் பணிகின்றவராய், ஞானசம்பந்தர், அணிபொருந்திய `திரு இயமகமும்\', பொருளால் வளர்கின்ற `திருவிருக்குக்குறளும்\', மேலும் பெருகுகின்ற இசை பொருந்திய திருப்பதிக மாலையையும் இறை வருக்கு அணிவித்தார்.

குறிப்புரை :

திருஏகம்பத்தில் பாடிய பதிகங்கள்: 1. திருஇயமகம்: பாயும் மால்விடை (தி.3 ப.114) - பழம்பஞ்சுரம். 2. திருவிருக்குக்குறள்: கருவார் கச்சி (தி.3 ப.41)) - கொல்லி. 3. மேலும் பாடிய பதிகமாலை: வெந்த வெண்பொடி (தி.1 ப.133) - மேகராகக் குறிஞ்சி.

பண் :

பாடல் எண் : 1231

அகில்நறுந் தூபம் விம்மி
அணிகிளர் மணியால் வேய்ந்த
துகில்புனை விதான நீழல்
தூமலர்த் தவிசின் மீது
நகிலணி முத்து மாலை
நகைமுக மடவார் வாழ்த்த
இகலின்சீர் மறையோர் சூழ
இனிதின்அங் கிருந்த வேலை.

பொழிப்புரை :

மணம் மிகுந்த அகிற் புகை மிகவும் மணம் வீச, அழகு விளங்கும் மணிகளால் இயன்ற நல்ல பட்டினால் ஆன மேற் கட்டியின் கீழ்த் தூய்மையான மலர்கள் தூவப்பட்ட இருக்கையின் மீது, கொங்கைகளின் மேல் முத்துமாலைகளை அணிந்து மலர்ந்த முகத்தையுடைய மங்கையர் வாழ்த்த, சினம் முதலான பகை இல்லாத சிறப்புக் கொண்ட அந்தணர்கள் சூழ, இனிதாய் அங்கு ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தபொழுது,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1000

நீடுதிருப் பொழில்காஞ்சி
நெறிக்காரைக் காடிறைஞ்சிச்
சூடுமதிக் கண்ணியார்
துணைமலர்ச்சே வடிபாடி
ஆடுமவர் இனிதமரும்
அனேகதங்கா வதம்பரவி
மாடுதிருத் தானங்கள்
பணிந்தேத்தி வைகுநாள்.

பொழிப்புரை :

பெருகிய சோலைகள் சூழ்ந்த `திருக்கச்சி நெறிக்காரைக்காடு\' என்னும் திருக்கோயிலைச் சென்று வணங்கி, அணியும் பிறையான கண்ணியையுடைய இறைவரின் துணையான மலர் அனைய திருவடிகளைப் பாடி, கூத்தியற்றும் இறைவர் இனிதாய் வீற்றிருக்கும் `திருக்கச்சிஅனேகதங்காவதம்\' என்னும் திருப்பதியைப் போற்றி, அருகில் உள்ள பல கோயில்களையும் பணிந்து போற்றி அங்குத் தங்கியிருக்கும் நாள்களில்,

குறிப்புரை :

திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் அருளிய பதிகம் `வாரணவு\' (தி.3 ப.65) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருக்கச்சிஅனேகதங்காவதத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது. `மாடு திருத்தானங்கள்\' என்பன காஞ்சியிலும் அதற்கு அண்மையிலும் உள்ள பல கோயில்களுமாம்.

பண் :

பாடல் எண் : 1001

எண்திசையும் போற்றிசைக்கும்
திருப்பதிமற் றதன்புறத்துத்
தொண்டருடன் இனிதேகித்
தொல்லைவிடம் உண்டிருண்ட
கண்டர்மகிழ் மேற்றளியும்
முதலான கலந்தேத்தி
மண்டுபெருங் காதலினால்
வணங்கிமீண் டினிதிருந்தார்.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் போற்றும் திருப்பதியான காஞ்சிபுரத்தின் புறத்தில், திருத்தொண்டர்களுடன் கூடி இனிதாய்ச் சென்று, முன்நாளில் நஞ்சை உண்டு அதனால் கருநிறம் உடைய கழுத்தையுடைய இறைவர் மகிழ்வுடன் வீற்றிருக்கும் `திரு மேற்றளி\' முதலான பதிகளில் சென்று போற்றிச் செறிந்த பெருங் காதலால் வணங்கி, திருக்கச்சி நகரில் மீண்டும் இனிதாய் எழுந்தருளித் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

திருமேற்றளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 1002

அப்பதியில் விருப்பினொடும்
அங்கணரைப் பணிந்தமர்வார்
செப்பரிய புகழ்ப்பாலித்
திருநதியின் தென்கரைபோய்
மைப்பொலியுங் கண்டர்திரு
மாற்பேறு மகிழ்ந்திறைஞ்சி
முப்புரஞ்செற் றவர்தம்மை
மொழிமாலை சாத்தினார்.

பொழிப்புரை :

இவ்வாறு காஞ்சி நகரத்தில் மிக்க விருப்புடன் இறைவரை வணங்கியவாறு விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பிள்ளையார், கூறுதற்கரிய புகழுடன் கூடிய பாலியாற்றின் தெற்குக் கரையின் வழியில் சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற `திருமாற்பேற்றை\' மகிழ்ச்சியுடன் வணங்கி, முப்புரங்களை எரித்த சிவபெருமானுக்குச் சொல் மாலை ஆன திருப்பதிகம் சாத்தியருளினார்.

குறிப்புரை :

இவ்வாறு காஞ்சி நகரத்தில் மிக்க விருப்புடன் இறைவரை வணங்கியவாறு விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பிள்ளையார், கூறுதற்கரிய புகழுடன் கூடிய பாலியாற்றின் தெற்குக் கரையின் வழியில் சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற `திருமாற்பேற்றை\' மகிழ்ச்சியுடன் வணங்கி, முப்புரங்களை எரித்த சிவபெருமானுக்குச் சொல் மாலை ஆன திருப்பதிகம் சாத்தியருளினார்.

பண் :

பாடல் எண் : 1003

திருமாற்பே றுடையவர்தம்
திருவருள்பெற் றெழுந்தருளிக்
கருமாலுங் கருமாவாய்க்
காண்பரிய கழல்தாங்கி
வரும்ஆற்றல் மழவிடையார்
திருவல்லம் வணங்கித்தம்
பெருமாற்குத் திருப்பதிகப்
பெரும்பிணையல் அணிவித்தார்.

பொழிப்புரை :

திருமாற்பேற்றில் வீற்றிருக்கும் இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து எழுந்தருளிச் சென்று, கரிய நிறம் கொண்ட திருமால் பன்றி வடிவு எடுத்தும் காண இயலாத திரு அடிகளைச் சுமந்து வரும் வலிமை பெற்றுள்ள இளைய விடையை உடைய இறைவரின், திருவல்லம் என்னும் பதியினை வணங்கித் தம் இறைவர்க்குத் திருப்பதிகமான மாலையைச் சார்த்தியருளினார்.

குறிப்புரை :

இப்பதியில் அருளிய பதிகம் `எரித்தவன் முப்புரம்\' (தி.1 ப.113) எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 1004

அங்குள்ள பிறபதியில்
அரிக்கரியார் கழல்வணங்கிப்
பொங்குபுனற் பாலியாற்றின்
புடையில்வட பாலிறைவர்
எங்கும்உறை பதிபணிவார்
இலம்பையங்கோட் டூரிறைஞ்சிச்
செங்கண்விடை உகைத்தவரைத்
திருப்பதிகம் பாடினார்.

பொழிப்புரை :

அவ்விடங்களிலுள்ள திருப்பதிகளில் திருமா லுக்கு அரியவரான இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகும் நீரைக் கொண்ட பாலியாற்றின் அருகே வடபாலில் இறைவர் எங்கும் எழுந்தருளியுள்ள திருப்பதிகளையெல்லாம் வணங்குவாராகி, திருஇலம்பையங்கோட்டூரினைத் தொழுது, சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகச் செலுத்தி வருபவரைத் திருப்பதிகம் பாடி யருளினார்.

குறிப்புரை :

பாலியாற்றின் வடபாலுள்ள திருப்பதிகளாவன திருச்சுரபுரம், விரிஞ்சிபுரம், மகாதேவமலை, தீக்காலி, வள்ளிமலை முதலாயினவாகலாம் என்பார் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில. திருஇலம்பையங்கோட்டூரில் அருளிய பதிகம் `மலையினார்\' (தி.1 ப.76) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 1005

திருத்தொண்டர் பலர்சூழத்
திருவிற்கோ லமும்பணிந்து
பொருட்பதிகத் தொடைமாலை
புரமெரித்த படிபாடி
அருட்புகலி யாண்டகையார்
தக்கோலம் அணைந்தருளி
விருப்பினொடுந் திருவூறல்
மேவினார் தமைப்பணிந்தார்.

பொழிப்புரை :

திருத்தொண்டர்கள் பலரும் தம்மைச் சூழ்ந்து வரத் திருவிற்கோலம் என்ற திருப்பதியைத் தொழுது, மெய்ப்பொருளைப் புலப்படுத்தும் திருப்பதிகமான மாலையினைச் சிவபெருமான் திரிபுரம் எரித்த பொருண்மை அமையப் பாடியருளி, அருளுடைய சீகாழிப் பிள்ளையார் `தக்கோலம்' என்ற பதியைச் சேர்ந்து, விருப்பத்துடன் அங்கு அமைந்திருக்கும் `திருவூறல்' என்ற கோயிலில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கினார்.

குறிப்புரை :

திருவிற்கோலத்தில் அருளிய பதிகம் `உருவினார்\' (தி.3 ப.23) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த திருப் பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் 2, 4, 6, 7, 9 ஆகிய பாடல்களில் முப்புரம் எரித்தமை அருளப்படுகின்றது. அதனை உளங்கொண்டே ஆசிரியர் சேக்கிழார் இங்ஙனம் அருளுவாராயினர். இங்குள்ள இறை வரின் தீண்டாத் திருமேனியின் நிறம் பருவ காலத்திற்கேற்ப மாறு படுகிறது என்பர். தக்கோலம் எனும் பதி பழங்காலத்தே திருவூறல் எனும் பெயரில் வழங்கப்பட்டது. எனினும் தக்கோலம் ஊர்ப் பெயராகவும், திருவூறல் கோயில் பெயராகவும் கருதத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 1006

தொழுதுபல முறைபோற்றிச்
சுரர்குருவுக் கிளையமுனி
வழுவில்தவம் புரிந்தேத்த
மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப்
பதிகஇசை புனைந்தருளி
முழுதும்அளித் தவர்அருளால்
போந்தனர்முத் தமிழ்விரகர்.

பொழிப்புரை :

வணங்கிப் பலமுறையும் போற்றித் தேவ குருவான வியாழனின் தம்பி சம்வர்த்த முனிவர், குற்றம் இல்லாத தவத்தைச் செய்து போற்ற எழுந்தருளிய இறைவரைப் போற்றி, அன் பால் மலர்ந்த குற்றம் இல்லாத செழுந் தமிழ் மாலையான பதிக இசையைப் பாடி, எல்லாவற்றையும் படைத்தளித்த இறைவரிடம் விடைபெற்று முத்தமிழ் வல்லுநர் சென்றார்.

குறிப்புரை :

இப்பதியில் உள்ள கோயிலின் பெயர் திருவூறல் என்பதாகும். இறைவனின் திருவடிகளிலிருந்து நீர் பெருகி வருதலின் இப்பெயர் பெற்றது. இப்பதியில் அருளிய பதிகம் `மாறில் அவுணர்\' (தி.1 ப.106) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 1007

குன்றநெடுஞ் சிலையாளர்
குலவியபல் பதிபிறவும்
நின்றவிருப் புடனிறைஞ்சி
நீடுதிருத் தொண்டருடன்
பொன்தயங்கு மணிமாடப்
பூந்தராய்ப் புரவலனார்
சென்றணைந்தார் பழையனூர்த்
திருவாலங் காட்டருகு.

பொழிப்புரை :

இப்பதியில் உள்ள கோயிலின் பெயர் திருவூறல் என்பதாகும். இறைவனின் திருவடிகளிலிருந்து நீர் பெருகி வருதலின் இப்பெயர் பெற்றது. இப்பதியில் அருளிய பதிகம் `மாறில் அவுணர்\' (தி.1 ப.106) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும்.

குறிப்புரை :

`பதிபிறவும்\' என்றது மணவூர், திருஎவ்வளூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 1008

இம்மையிலே புவியுள்ளோர் யாருங் காண
ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை யாளும்
அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று
தம்மையுடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்று
செம்மைநெறி வழுவாத பதியின் மாடோர்
செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார்.

பொழிப்புரை :

இப்பிறவியில் இம்மண்ணுலகத்தில் எவரும் நேரில் காணும்படி, ஏழ் உலகத்தவரும் போற்றுமாறு எம்மை ஆளு கின்ற அம்மையாரான காரைக்கால் அம்மையார், தம் திருத்தலையி னால் நடந்து சென்று போற்றிய அம்மையப்பர் வீற்றிருக்கின்ற பதி இத்திருவாலங்காடாகும் என்று உள்ளத்தில் எண்ணி, தம்மை ஆளு டைய இறைவரின் பழமை பொருந்திய அவ்வூரைக் காலால் மிதித்து உள் செல்ல அச்சம் கொண்டு, சீகாழியில் தோன்றியருளிய பிள்ளை யார், அப் பதியின் அருகில் சாரச் செம்மை நெறியினின்று சற்றும் வழுவாத தூய ஒழுக்கமுடையவர்கள் வாழ்கின்ற ஒரு செழுமையான நகரில் சென்று இரவிலே தங்கி உறங்கலானார்.

குறிப்புரை :

இத்திருப்பதி யாதெனத் தெரிந்திலது.

பண் :

பாடல் எண் : 1009

மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
மறையவனார் தம்முன்பு கனவி லேவந்
தாலவனத் தமர்ந்தருளும் அப்பர் நம்மை
அயர்த்தனையோ பாடுதற்கென் றருளிச் செய்ய
ஞாலமிருள் நீங்கவரும் புகலி வேந்தர்
நடுஇடையா மத்தினிடைத் தொழுது ணர்ந்து
வேலைவிட முண்டவர்தங் கருணை போற்றி
மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப லுற்றார்.

பொழிப்புரை :

மாலைப் பொழுது கழிய நடுயாமத்தில் பள்ளி கொண்டருளும் வேதியரான பிள்ளையாரின் கனவில் வெளிப்பட்டுத் திருவாலங்காட்டில் வீற்றிருக்கும் இறைவர், `நம்மைப் பாடுவதற்கு மறந்தாயோ?\' என்று வினவியருள, உலகம் இருள்நீங்கி உய்யும் பொருட்டுத் தோன்றியருளிய சீகாழித் தலைவர், அந்நள்ளிருள் யாமத் தில் உறக்கத்தினின்று உணர்ந்து எழுந்து, கடலில் உண்டான நஞ்சை உண்டருளிய சிவபெருமானின் திருவருளைப் போற்றி, மெய் உருகித் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1010

துஞ்சவரு வார்என்றே எடுத்த வோசைச்
சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரார்
இயம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி
அஞ்சனமா கரியுரித்தார் அருளா மென்றே
அருளும்வகை திருக்கடைக்காப் பமையச் சாற்றி
பஞ்சுரமாம் பழைய திறங் கிழமை கொள்ளப்
பாடினார் பாரெலாம் உய்ய வந்தார்.

பொழிப்புரை :

`துஞ்ச வருவாரும்` என்று தொடங்கி ஓசையுடைய மறைநெறி தவறாதவாறு பாடிய பாடலில், குறைவற்ற வகையினால் அறநெறிவழுவாத பழையனூர் வேளாளர், தாங்கள் கூறிய சொல்லைத் தவறாது காத்து, அருள் பெற்ற வரலாற்றைச் சிறப்பித்துப் பாராட்டி, கரிய யானையை உரித்த இறைவரின் திருவருளேயாகும் இது என்று அவர் அருள் செய்யும் தன்மையைத் திருக்கடைக்காப்பில் வைத்து, குறிஞ்சியாழ்ப் பண் அமைதித் திறமும் கிழமையும் பொருந்தப் பாடினார்.

குறிப்புரை :

`துஞ்ச வருவாரும்` எனத் தொடங்கும் திருப்பதிகம் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகம் எனத் திருமுறையில் குறித்துள்ளனர். (தி.1 ப.45). எனினும் ஆசிரியர் சேக்கிழார், பஞ்சுரமாம் பழையதிறம் கிழமை கொள்ள (அஃதாவது குறிஞ்சியாழ்த்திறன் வகைகளுள் ஒன்றான பழம்பஞ்சுரமாகப்) பாடினார் என்றருளுகின்றார். தமிழோடு இசைப்பாடல் திறனையும் ஒருங்கு அறிந்த அறிஞர்களால் இஃது ஆராயத் தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 1011

நீடுமிசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி
நெடுங்கங்கு லிருணீங்கி நிகழ்ந்த காலை
மாடுதிருத் தொண்டர்குழா மணைந்தபோது
மாலையினில் திருவால வனத்து மன்னி
ஆடுமவ ரருள்செய்த படியை யெல்லாம்
அருளிச்செய் தகமலரப் பாடி யேத்திச்
சேடர்பயில் திருப்பதியைத் தொழுது போந்து
திருப்பாசூர் அதன்மருங்கு செல்ல லுற்றார்.

பொழிப்புரை :

எக்காலத்தும் நிலைபெறும் இசையமையந்த திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, பின் நீண்ட இரவின் இருள் புலர்ந்த பகற் காலத்தே, திருத்தொண்டர்களின் கூட்டம் வந்து சேர்ந்த போது, இரவில் திருவாலங்காட்டுப் பதியில் ஆடுகின்ற இறைவர், தமக்கு அருள் செய்த பாங்கை எல்லாம் அவர்களுக்குச் சொல்லி, அத்திருப் பதிகத்தைத் திரும்பவும் உள்ளம் மகிழப் பாடிப் போற்றிய பின்பு, பெரியவர்கள் வாழ்கின்ற அப்பதியை வணங்கி அகன்று போய்த் `திருப்பாசூர்\' அருகில் செல்வாராய்,

குறிப்புரை :

சேடர் - பெருமை மிக்கோர்.

பண் :

பாடல் எண் : 1012

திருப்பாசூர் அணைந்தருளி யங்கு மற்றச்
செழும்பதியோ ரெதிர்கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா கத்துப்
புராதனர்வே யிடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து
வீழ்ந்தெழுந்து மேனியெலா முகிழ்ப்ப நின்றே
அருட்கருணைத் திருவாளன் நாமஞ் சிந்தை
யிடையாரென் றிசைப்பதிகம் அருளிச் செய்தார்.

பொழிப்புரை :

திருப்பாசூரை அணைந்து, அங்கு அச்செழும் பதியார் வந்து எதிர்கொள்ளப் பதியுள் போய்ப் புகுந்து, மலை அரச னின் மகளான பார்வதி அம்மையாரை இடமருங்காகக் கொண்ட பழமை உடையவரும், மூங்கிலை இடமாகக் கொண்டவருமான இறைவரின் திருக்கோயிலுள் விருப்பத்துடன் வலமாக வந்து, உள்ளே புகுந்து, இறைவரின் திருமுன்பு, நிலம் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து, திருமேனி முழுதும் மயிர்க்கூச்செறிய நின்று, அருட்கருணை என்ற செல்வத்தை உடைய இறைவரின் திருநாமத்தைச் `சிந்தை யிடையார்\' எனத் தொடங்கி இசையுடன் கூடிய அத்திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

குறிப்புரை :

`சிந்தை யிடையார்\' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும் (தி.2 ப.60). இம்முதற் பாடலில் வரும் தொடர்கள் பலவும் பெருமானின் திருப்பெயர்களாய் அமைந்திருக்கு மாறும் காணலாம்.

பண் :

பாடல் எண் : 1013

மன்னுதிருப் பதிகஇசை பாடிப் போற்றி
வணங்கிப்போந் தப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலா யுள்ள
பிறபதிகள் பணிந்தணைவார் பெருகு மன்பால்
முன்னிறைந்த திருவாய்மஞ் சனநீ ராட்டு
முதல்வேடர் கண்ணப்ப நாய னாரை
உன்னியொளிர் காளத்தி மலை வணங்க
வுற்றபெரு வேட்கையுட னுவந்து சென்றார்.

பொழிப்புரை :

பிள்ளையார் நிலைபெறும் இசையையுடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிச் சென்று, அப்பதியில் எழுந்தருளி யிருந்தவர், பின்பு அத்திருப்பதியின் அருகில் இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்பாக்கம் முதலான பிற பதிகளையும் வணங்கிச் செல்வாராய், பெருகும் அன்பால் முன் திருவாய் நிறைந்த நீரால் இறைவரைத் திருமுழுக்காட்டும் முதல்வரான கண்ணப்ப நாயனாரை எண்ணி, விளங்கும் திருக்காளத்தி மலையைத் தொழுவதற்குப் பொருந்திய பெருவிருப்புடன் மகிழ்ந்து சென்றருளினார்.

குறிப்புரை :

திருவெண்பாக்கம் முதலாயுள்ள பதிகள் திருக்கள்ளில் முதலாயினவாகலாம். திருவெண்பாக்கப் பதிகம் கிடைத்திலது. திருக் கள்ளிலில் அருளிய பதிகம் `முள்ளின்மேல் முதுகூகை\' (தி.1 ப.119) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 1014

மிக்கபெருங் காதலுடன் தொண்டர் சூழ
மென்புனல்நாட் டினையகன்று வெற்பும் கானும்
தொக்கபெரு வன்புலக்கா னடைந்து போகிச்
சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி
முக்கண்முதல் தலைவனிட மாகி யுள்ள
முகில்நெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று
புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப்
பூதியரோ டுடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர்.

பொழிப்புரை :

மிக்க பெருவிருப்புடனே தொண்டர் சூழ்ந்து வர, மெல்லியதாய்ப் பாய்கின்ற நீர்வளம் கொண்ட பாலியாற்றின் வடகரையில் உள்ள நாட்டின் பகுதியை நீங்கி, மலையும் காடுக ளுமாய்ச் சேர்ந்து நெருங்கிய வலிய காட்டிடங்களை அடைந்து, சூலமும் மண்டை ஓடும் கையில் கொண்டு ஒளி விளங்கும் திருமேனி யையும் மூன்று கண்களையுமுடைய இறைவரின் இடமாகிய மேகம் சூழ்ந்த `திருக்காரிகரையினை\' முன்னர்ச் சென்று, இறைவரை வணங் கிப் போற்றி, அப்பதியில் தங்கித் தொண்டருடன் ஞானசம்பந்தர் மகிழ்ந்திருந்தார்.

குறிப்புரை :

இப்பதியில் அருளிய பதிகம் கிடைத்திலது. பாலியாறு ஊற்றுநீர் சுரக்க வருவதாதலின், அதனைச் சூழ்ந்த நாட்டை `மென் புனல் நாடு\' என்றார்.

பண் :

பாடல் எண் : 1015

இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருக்காரிகரையைத் தொழுது, மேற்சென்று அளவில்லாத பெரிய மலைகளின் இருபக்கங்களிலும் எங்கும் நீர் நிறைந்த அருவிகள் பல வரிசையான மணிகளையும் பொன்னையும் நிறைந்த நீர்த்துளிகளையும் பக்கங்களில் நிரம்பச் சிதற, ஒலிக்கின்ற கழலை அணிந்த தேவேந்திரனின் வச்சிரப் படைத் தாக்குதலால் அறுபட்ட இறகுகளைப் பெற்று, அவன் மீது போருக்கு எழுவதற்காகச் சிறகுகளை விரித்துப் பறக்க முயன்று உயர்ந்தன போன்ற காட்சிதரும் மலைகள் சூழ்ந்த நாட்டின் பகுதியில் எழுந்து அருளிச் செல்பவராய்,

குறிப்புரை :

மலைகள் ஒருகால எல்லையில் சிறகுடையனவாய்ப் பறக்கும் நிலையில் இருந்தன என்றும், அச்சிறகுகளை ஒரு காலத்தில் இந்திரன் அரிந்தனன் என்றும் பண்டைப் பனுவல்கள் கூறுகின்றன. அதனை உளங் கொண்டே சேக்கிழார் அவ்வாறு சிறகை யரிந்த இந்தி ரனை, மலைகள் மீண்டும் சிறகுகள் பெற்று, அவனை அழிக்க முயல் வன போன்று, அம்மலைகளினின்று இழிந்து வரும் அருவிகள் விளங்குகின்றன என்றும் கூறுகின்றார். மலைகள் - பறவைகள். அருவிகள் அவற்றின் சிறகுகள் இது தற்குறிப்பேற்ற அணியாம்.

பண் :

பாடல் எண் : 1016

மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண.

பொழிப்புரை :

திருத்தொண்டர்களின் கூட்டம் பரந்து செல்ல, அழகிய முத்துச் சின்னங்கள் உண்டாக்கும் ஓசை அளவில்லாது எழ, திருநீறு நிறைந்த கடல் அணைவதைப் போல் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் வரும்போது, திருச்சின்னங்களின் ஒப்பில்லாத ஒலி பல முறையாலும் மேன்மேல் மிக, எங்கும் `திருஞானசம்பந்தர் வந்தார்\' என்று உண்டாகும் ஒலி நிறைந்த காதுகளை உடையன ஆதலால், ஐந்து அறிவுடைய விலங்குச் சாதிகள் எல்லாம் தம் இயல் பான தீமையின்றி நன்மை பொருந்திய நினைவு ஒன்றையே மேற் கொண்டு பக்கங்களில் வந்து பொருந்த,

குறிப்புரை :

ஞானசம்பந்தர் எனும் திருப்பெயரைக் கேட்ட அள வில், பொல்லா விலங்குகளும் புன்மை நீங்கி நன்மை பெருக அவரை எதிர் கொள்வனவாயின.

பண் :

பாடல் எண் : 1017

கானவர்தங் குலம்உலகு போற்ற வந்த
கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய
மானவரிச் சிலைவேட்டை ஆடும் கானும்
வானமறை நிலைபெரிய மரமும் தூறும்
ஏனையிமை யோர்தாமும் இறைஞ்சி யேத்தி
எய்தவரும் பெருமையவாம் எண்ணி லாத
தானமும்மற் றவைகடந்து திருக்கா ளத்தி
சாரஎழுந் தருளினார் சண்பை வேந்தர்.

பொழிப்புரை :

வேடுவர் குலத்தை உலகமானது போற்றுமாறு, அக்குலத்தில் வந்து தோன்றிய கண்ணப்ப நாயனாரின் திருவடிகளில் அணிந்த செருப்புத் தேயுமாறு பெரிய கட்டமைந்த வில் வேட்டை ஆடும் காடுகளும், வானத்தை மறைக்குமாறு நீண்ட பெரிய மரச் சோலைகளும், தூறுகளும், தேவர்களும் போற்றும் பெருமையுடைய அளவில்லாத மற்ற இடங்களும் ஆகியவற்றையெல்லாம் கடந்து சென்று, திருக்காளத்தி மலையை அணுகச் சென்றார் சீகாழித் தலைவர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 1018

அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்.

பொழிப்புரை :

அழகிய இமவானின் மகளாரான கொடி போன்ற உமையம்மையாரின் திருமுலைப்பாலில், குழைத்த ஞான அமுதத்தை உண்ட `ஆளுடைய பிள்ளையார் வருகின்றார்\' என்று எண்ணி, மேருமலையை வில்லாகக் கொண்ட இறைவரின் திருக் காளத்தியில் உள்ள திருத்தொண்டர் கூட்டம் நெருங்கி வர, நெருங் கிய சடையையுடைய முனிவர்களும், மண்டை ஓட்டை ஏந்தும் காபாலியர்களும், மற்றும் மாவிரதம் முதலான பற்பல வேடங்களை உடைய சைவர்களும், மேன்மையான தவம் செய்தவரும், அப்பதி யில் உள்ளவருடன் கூடி மகிழ்ந்து, எதிர் கொள்ள, அவர் அருகே சேர்ந்தனர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 1019

திசையனைத்தும் நீற்றினொளி தழைப்ப மண்மேற்
சிவலோக மணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
வேதபா ரகர்இழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி
அரவெனுமோ சையில்அண்டம் நிறைப்ப அன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்கா ளத்தித்
திருமலையிம் மலைகளில்யா தென்று கேட்டார்.

பொழிப்புரை :

எல்லாத் திசைகளிலும் திருநீற்றின் ஒளி பரவ, `இந்த உலகத்தில் சிவலோகம் வந்து சேர்ந்தது\' எனக் கூறுமாறு சென்றபோது, மேலே விளங்கும் அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, மறைகளில் வல்ல ஞானசம்பந்தர், வணங்கி, எதிர் கொண்ட மன அசைவற்ற பெரிய திருத்தொண்டர் கூட்டம் தொழுது வணங்கி `அர அர!\' என்ற பேரொலியால் அண்டம் முழுதும் நிறையுமாறு செய் யப் புகழினால் எங்கும் விளங்கும் தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, `இங்குத் தோன்றும் மலைகளுள் திருக்காளத்தி மலை எது?\' என்று வினவினார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 1020

வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்.

பொழிப்புரை :

எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர்கள் ஞான சம்பந்தரை வணங்கி `மறையவர்களின் வாழ்வாகியவரே! சைவத் தலைவர்களுள் சிறந்தவரே! நம் எதிரே தோன்றும் இம் மலைதான், முன்நாளில் `காளன்\' என்னும் பாம்பும், `அத்தி\' என்னும் யானையும், தம்முள் மாறுபட்டுத் தம்மைப் பூசை செய்த இறைவர் எழுந்தருளி யுள்ள கேடில்லாத சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும்\' என உரைப்ப, அப்போது ஞானசம்பந்தர் விழுந்து வணங்கி எழுந்து, கைகளைத் தலைமீது குவித்து, மனத்துள் மிக்க மகிழ்ச்சி எழுதலால் `வானவர்கள் தானவர்கள்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவிராக அமைப்பில் பாடியவாறு மேற்செல்வாராய்,

குறிப்புரை :

`வானவர்கள் தானவர்கள்\' எனத் தொடங்கும் பதிகம் சாதாரிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.3 ப.69). `வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராகு நயனம், காய்கணையினாலிடந்து ஈசன் அடிகூடு காளத்திமலையே\' எனக் கண்ணப்பரைப் பிள்ளையார் போற்றப்பெறும் சிறப்பே இங்கு எடுத்து மொழியப்படுகிறது.

பண் :

பாடல் எண் : 1021

திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.

பொழிப்புரை :

திருந்திய இனிய பண்ணமைதி பெறத் திருக் கண்ணப்பரின் திருத்தொண்டைச் சிறப்பித்துப் பாடியருளி, பொரு ந்திய பெரிய திருத்தொண்டர் கூட்டம் சூழ்ந்து போற்ற எழுந்தருளி வந்து, பொன்முகலி யாற்றின் கரையை அடைந்து, வணங்கிச் சென்று, அரிய தவத்தவர்களான திருத்தொண்டர்கள் எம்மருங்கும் சூழ்ந்து வர, ஆளுடைய பிள்ளையார், நான்முகனும் திருமாலும் தேடிக் காண இயலாத மருந்தான இறைவர், வெளிப்பட எழுந்தருளியிருந்த திருக் காளத்தி மலையின் அடிவாரத்தினை அணுக வந்து, நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1022

தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி
வாழ்ந்திமையோர் குழாம்நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உட்புகுந்து வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் தாழ்ந்து எழுந்து அம்மலையை வணங்கியவாறே அகன்ற மலைப்படிகளின் வழியே ஏறிச் சென்று, வாழ்வடைந்த தேவர்களின் கூட்டம் நெருங்கியுள்ள மணிகளை உடைய நீண்ட திருவாயிலின் முன் வணங்கிக் கோயிலுள் புகுந்து, அக்கோயிலை வலமாக வந்து, இறைவரின் திருமுன்பு சார்ந்து, தொழுது, தலையின் மேலே கூப்பிய சிவந்த திருக்கைகளுடன் போற்றி, நிலம் பொருந்த விழுந்து வணங்கி, எழுந்து செல்பவராய், அவ்வாறு கும்பிட்டதன் பயனைக் காண்பவரைப் போல், மெய்ம்மையான வேடர் பெருமானாம் திருக்கண்ணப்ப நாயனாரைக் கண்டு அவரு டைய அடிகளில் வீழ்ந்தார்.

குறிப்புரை :

காளத்தி இறைவரை வணங்கும் பேறு தேவர்களுக்குக் கிடைத்தமையின் `வாழ்வடைந்து\' என்றார். உயிர்கட்கு இறைவனை வணங்குதலே பெரும்பயன்; அப்பயனுக்கும் பயன் அவன் அடியார் களை வணங்குதலாம் என்பார் , `கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்\' என்றார். `பேணலால் எம்மைப் பெற்றார்\' என்பதால், அடியவர்தாமும் இறைவனையே தம் மனத்தகத்துப் பெற்றிருத்தலின், அவரை வணங்குதல் பயனுக்குப் பய னாயிற்று. சிலாதலம் - மலை. சோபானம் - படிப்படியாகப் படிகளின் வழியே ஏறிவருதல்.

பண் :

பாடல் எண் : 1023

உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
யுருவினையும் அவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் உடன்கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப்
பைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞானஆ ரமுத முண்டார்
மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்.

பொழிப்புரை :

மனத்தில் தெளிவாய்க் கொள்கின்ற அன்பின் மெய்ம்மையான வடிவத்தையும், அந்த அன்பினுள் நிலையாய் வீற்றிருக்கின்ற கங்கை தாங்கிய சிவந்த சடையையும் நெற்றியில் சிவந்த விழியையும் உடைய குற்றமற்ற இறைவரையும் ஒருசேர ஓரிடத்தில் கண்டதால் ஆன விருப்பமும் மேலிடத்தினின்றும் பள்ளத் தில் இழிந்து ஓடும் நீர்போல் மேன்மேல் மிக பசும்பொன் மலை மன்னன் மகளான கொடிபோன்ற உமையம்மையார் அருளுடன் அளித்த செம்பொன் கிண்ணத்தில் ஞானஅமுதை உண்டருளிய ஞான சம்பந்தர் மகிழ்ந்து வணங்கி எழுந்து பலமுறையும் வணங்குவாராகி,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 1024

பங்கயக்கண் ணருவிநீர் பாய நின்று
பரவும்இசைத் திருப்பதிகம் பாடி யாடித்
தங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத்
தம்பெருமான் கழல்போற்றுந் தன்மைநீட
அங்கரிதிற் புறம்போந்தங் கயன்மால் போற்ற
அரியார்தந் திருமலைக்கீ ழணைந்தி றைஞ்சிப்
பொங்குதிருத் தொண்டர்மடங் காட்ட அங்குப்
புக்கருளி இனிதமர்ந்தார் புகலி வேந்தர்.

பொழிப்புரை :

தாமரை போன்ற கண்களினின்றும் கண்ணீர் வழிந்தோட நின்று, போற்றும் பண் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி, ஆனந்தக் கூத்தாடி, தம் உள்ளத்துள் தங்கிக் கிடக்கும் பெருங்களிப்பும் காதலும் வலிந்து தம்மை அங்கேயே தகைத்து நிறுத்த, அதனால் தம் பெருமானின் திருவடிகளைப் போற்றி நிற்கும் இயல்பு நீடித்தலால், அங்கிருந்து அரிதாக வெளியே போந்து, நான்முகனும் திருமாலும் போற்றுதற்கரிய இறைவரின் திருக்காளத்தி மலையின் அடியில் வந்து அணைந்து, வணங்கிச் சென்று, பெருகிய தொண்டர்கள் திருமடத்தைக் காட்டச் சென்று, புகுந்த பிள்ளையார் அங்குத் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய திருப்பதிகம் கிடைத்திலது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1025

யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்.

பொழிப்புரை :

யாவரும் அறிதற்கரிய இறைவரை, ஏழ் உலகங்களையும் உடையவரை, எண்ணிறந்த தேவர்களின் தலை வரை, திருக்காளத்தி மலையின் மீது வீற்றிருக்கும் சிவந்த தேனை, மலர் கள் மலரும் சோலை சூழ்ந்த சீகாழியை ஆளும் வேந்தரான திருஞான சம்பந்தர், உரிய காலங்கள் தோறும் சென்று திருக்கோயிலுள் புகுந்து, பதிகம் என்ற மலர் கொண்டு அருச்சனை செய்து, போற்றிப் பருகி, நிறைவாகத் துய்த்துச் செம்மையான பண்புகளால் இனிய அத்திருப் பதியைப் பொருந்தித் தங்கியிருந்த அந்நாள்களில்,

குறிப்புரை :

உரிய காலங்கள் தொறும் சென்று பாடிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 1026

அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.

பொழிப்புரை :

அவ்விடத்திற்கு, வடக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளில் அரிய தமிழின் வழக்கு நிகழாததால், ஞானசம்பந்தர், பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் பிற பதிகள் தோறும் சென்று திருப்பதிகத் தமிழ் இசைபாடும் செயல் போல், தேவர்கள் தொழுது போற்றுமாறு எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானின் வடகயிலை மலையை இங்கு இருந்தபடியே வணங்கித் திருப்பதிகம் பாடிச் செந்தாமரை மலர்கள் மலர்வதற்கு இடமான நீர் நிலைகளைக் கொண்ட திருக்கேதாரத்தையும் வணங்கித் திருப்பதிகம் இசையுடன் பாடி,

குறிப்புரை :

இப்பதிகளை நோக்கி அருளிய பதிகங்கள்: 1. வடகயிலை:- 1. பொடிகொள் உருவர் (தி.1 ப.68) -தக்கேசி. 2. வாளவரி (தி.3 ப.68) - சாதாரி. 2. திருக்கேதாரம்:- தொண்டர் (தி.2 ப.114) - செவ்வழி.

பண் :

பாடல் எண் : 1027

கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்.

பொழிப்புரை :

இயமனைக் காலால் உதைத்த இறைவர் மகிழ்ந் தருளும் கோகரணத்தைப் பாடி, விடையின் மீது எழுந்தருளி வரும் இறைவரின் இந்திரநீலபருப்பதத்தையும் பாடி, மற்றும் போற்றுதற்குரிய செம்மலர்களால் திருப்பதிகள் பிறவற்றையும் பாடி, சீகாழிப் பதியினரின் தலைவரான ஞானசம்பந்தர், தூய திருநீற்றின் விளக்கம் மிகுகோலமுடைய தொண்டர்கள் சூழ்ந்து வர, மிகவும் மகிழ்ந்து அப்பகுதியில் தங்கி இருப்பவராய்,

குறிப்புரை :

இப்பதிகளை நோக்கியருளிய பதிகங்கள்: 1.திருக்கோகரணம்: என்றும் அரியான் (தி.3 ப.79) - சாதாரி. 2.திருப்பருப்பதம்: சுடுமணி (தி.1 ப.118) - வியாழக் குறிஞ்சி. 3.திருஇந்திரநீலப் பருப்பதம்: குலவு பாரிடம் (தி.2 ப.27) - இந்தளம். மற்று இறைவர் தானம் பிறவும் என்பன: வாரணாசி, அனேக தங்காவதம், கோடீச்சுரம், சோமேசம், பீமேசம், பிரயாகை, மதுரை, காஞ்சி, அவந்திகை முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றுள் பதிகம் கிடைத்துள்ள பதி ஒன்றே. அது - அனேகதங்கா வதம்: பதிகம்: நீடல் மேவு - பண்: இந்தளம்.

பண் :

பாடல் எண் : 1028

தென்திசையில் கயிலையெனும்திருக்காளத்தி
போற்றிஇனி தமர்கின்றார் திரைசூழ் வேலை
ஒன்றுதிரு வொற்றியூர் உறைவார் தம்மை
இறைஞ்சுவது திருவுள்ளத் துன்னி அங்கண்
இன்தமிழின் விரகரருள் பெற்று மீள்வார்
எந்தையா ரிணையடியென் மனத்த வென்று
பொன்தரளங் கொழித்திழி பொன் முகலிகூடப்
புனைந்ததிருப் பதிகஇசை போற்றிப் போந்தார்.

பொழிப்புரை :

தெற்குத் திக்கில் உள்ள திருக்கயிலை எனக் கூறப்படுகின்ற திருக்காளத்தியைப் போற்றி இனிதாக அங்குத் தங்கியிருப்பவர், அலைசூழ்ந்த கடலின் கரைசார்ந்த திருவொற்றி யூரில் வீற்றிருக்கும் இறைவரைச் சென்று வணங்குதலை மனத்தில் கொண்டு, அங்கிருந்து இனிய தமிழ் விரகரான ஞானசம்பந்தர், இறைவரின் திருவருள் விடைபெற்று, மீண்டு வருபவர், `எந்தையார் இணையடி என் மனத்துள்ளவே\' என்ற கருத்துடன் பொன்னும் முத் தும் கொழித்து வரும் பொன் முகலியாற்றையும் குறித்துத் திருப்பதிக இசையால் போற்றிவருவாரானார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `சந்தமாரகிலொடு\' (தி.3 ப.36) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிக முதற்பாடல் முதல் இரண்டு அடிகளில், பொன் முகலியாற் றின் வளம் கூறி, நிறைவாக `எந்தையார் இணையடி என்மனத்துள் ளவே\' என்றருளுகின்றார் பிள்ளையார். இக்கருத்தை முகந்தே ஆசிரியர் சேக்கிழார், இப்பாடலில் அருளுகின்றார். நிறைவாகவுள்ள இக்கருத்தே, காளத்தியினின்றும் விடைகொண்டு போதருங்கால் பாடியது என அருளுதற்கேதுவாயிற்று.

பண் :

பாடல் எண் : 1029

மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையுங் கானும்
முன்னணைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலுஞ் சாந்தும்
பொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு
சென்னிமதி யணிவார்தந் திருவேற் காடு
சென்றணைந்தார் திருஞான முண்ட செல்வர்.

பொழிப்புரை :

நிலைபெற்ற புகழையுடைய தொண்டர் கூட்டத்துடன் மறைகள் வாழும் படியாய்த் தோன்றிய ஞானசம்பந்தர், மலைகளையும், காடுகளையும் சேர்ந்த பதிகள் பலவற்றையும் கடந்து வந்து, முழுமுதல்வராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் போற்றிச் சென்று, பலமணிகளையும் பொன்னையும் இழுத்துக் கொண்டும், அகில், சந்தனம் முதலான மரங்களை மோதி அடித்துக் கொண்டும் ஓடும் பாலியாற்றின் வடக்குக் கரையில் நிலைபெற்ற திருச்சடையில் பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் திருவேற்காட்டினைச் சிவஞான அமுது உண்ட செல்வரான பிள்ளை யார் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

நிலைபெற்ற புகழையுடைய தொண்டர் கூட்டத்துடன் மறைகள் வாழும் படியாய்த் தோன்றிய ஞானசம்பந்தர், மலைகளையும், காடுகளையும் சேர்ந்த பதிகள் பலவற்றையும் கடந்து வந்து, முழுமுதல்வராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் போற்றிச் சென்று, பலமணிகளையும் பொன்னையும் இழுத்துக் கொண்டும், அகில், சந்தனம் முதலான மரங்களை மோதி அடித்துக் கொண்டும் ஓடும் பாலியாற்றின் வடக்குக் கரையில் நிலைபெற்ற திருச்சடையில் பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் திருவேற்காட்டினைச் சிவஞான அமுது உண்ட செல்வரான பிள்ளை யார் சென்று அடைந்தார்.

பண் :

பாடல் எண் : 1030

திருவேற்கா டமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
சென்றணைந்து பணிந்துதிருப் பதிகம்பாடி
வருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றார்
வலிதாயம் வந்தெய் திவணங்கிப் போற்றி
உருவேற்றார் அமர்ந்துறையும் ஓத வேலை
ஒற்றியூர் கைதொழச்சென் றுற்றபோது
பொருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் திருவேற்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் செழுஞ்சுடரான இறைவரின் அழகான கோயிலில் சென்று சேர்ந்து, வணங்கித் திருப்பதிகம் பாடியருளி, செந்நெறிகளை எதிர்த்துவரும் வேறுபட்ட உள்ளமுடைய பகைவரான அவுணரின் முப்புரங்களையும் எரித்த இறைவரின் `திருவலிதாயத்தில்\' வந்து போற்றி, அழகான விடையூர்தியையுடைய இறைவர் விரும்பி வீற்றி ருக்கும் குளிர்ந்த கடற்கரையில் உள்ள திருவொற்றியூரை வணங்குவ தற்குச் சென்ற போது, பெருவிருப்பம் கொண்டு வாழ்வு பெற்ற தொண்டர்களும் அப்பதியில் உள்ளவர்களும் அவரை எதிர்கொண்டு வரவேற்க அன்புடன் வந்தனர்.

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருவேற்காடு: ஒள்ளிதுள்ள (தி.1 ப.57) - பழந்தக்கராகம். 2. திருவலிதாயம்: பத்தரொடு (தி.1 ப.3) - நட்டபாடை.

பண் :

பாடல் எண் : 1031

மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும்
தொழுதிழிந்து விடையவனென் றெடுத்துப் பாடி
மைக்குலவு கண்டத்தார் மகிழுங் கோயில்
மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர்
தம்பெருமான் திருவாயி லூடு சென்று
புக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு
போற்றெடுத்துப் படியின்மேற் பொருந்த வீழ்ந்தார்.

பொழிப்புரை :

பெருகிய திருத்தொண்டர்கள் தொழுத வண் ணம் வந்து சேர, பிள்ளையார் தாமும் அவர்களை வணங்கிய வண் ணம் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, `விடையவன்\' என்ற தொடக்கம் உடைய பதிகத்தை எடுத்துப் பாடி, கருமை பொருந்திய திருக்கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலின் முன்னுள்ள கோபுரத்தருகில் வந்து, நிலத்தில் விழுந்து வணங்கிப் பொருந்திய திருக்கடைக்காப்பினையும் பாடி, இறைவரின் கோயில் வாயிலின் வழியே உள்ளே புகுந்து, வலம் வந்து, தூயவரான இறைவர் திருமுன்பு போற்றி நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

`விடையவன்\' என்று தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும் (தி.3 ப.57). தொண்டர்கள் எதிர்கொள்ளத் தொடங்கிய இத்திருப்பதிகம், திருவீதி கடந்து, திருகோயிலின் முன் திருக்கடைக்காப்பு அமைய நிறைவுற்றுள்ளது. பாடல் தொறும் `உறை யும் இடம் ஒற்றியூரே\' என நிறைவு பெறுவதும், திருக்கடைக்காப்பில் `ஒற்றியூரைச் சொன்ன\' என அமையப் பெற்றிருப்பதும் இப்பதிகம் அருளப் பெற்ற இடவகைமையை அறிவதற்கு அரணாகின்றன.

பண் :

பாடல் எண் : 1032

பொற்றிரள்கள் போற்புரிந்த சடையார் தம்பால்
பொங்கியெழுங் காதல்மிகப் பொழிந்து விம்மிப்
பற்றியெழும் மயிர்ப்புளகம் எங்கு மாகிப்
பரந்திழியுங் கண்ணருவி பாய நின்று
சொல்திகழுந் திருப்பதிகம் பாடி ஏத்தித்
தொழுதுபுறத் தணைந்தருளித் தொண்ட ரொடும்
ஒற்றிநகர் காதலித்தங் கினிது றைந்தார்
உலகுய்ய வுலவாத ஞானம் உண்டார்.

பொழிப்புரை :

பொன்னின் திரள் என முறுக்கிய சடையை உடைய இறைவர்பால் பெருகி எழுகின்ற பெருவிருப்பம் மிகவும் மேலோங்க விம்மித் திருமேனியைப் பற்றி, மேல் எழுகின்ற மயிர்க் கூச்சு மேனி எங்கும் நிரம்பப் பரவி, வழியும் கண்ணீர்ப் பெருக்குப் பாய்ந்தொழுக நின்று, சொற்பொருள் மிகவும் விளங்கும் திருப்பதிகத் தைப் பாடி, உலகம் உய்யும் பொருட்டுக் கெடுதல் இல்லாத சிவஞான அமுதுண்ட சம்பந்தர், திருவொற்றியூரில் விரும்பி அங்குத் தங்கி யிருந்தார்.

குறிப்புரை :

பொன்னின் திரள் என முறுக்கிய சடையை உடைய இறைவர்பால் பெருகி எழுகின்ற பெருவிருப்பம் மிகவும் மேலோங்க விம்மித் திருமேனியைப் பற்றி, மேல் எழுகின்ற மயிர்க் கூச்சு மேனி எங்கும் நிரம்பப் பரவி, வழியும் கண்ணீர்ப் பெருக்குப் பாய்ந்தொழுக நின்று, சொற்பொருள் மிகவும் விளங்கும் திருப்பதிகத் தைப் பாடி, உலகம் உய்யும் பொருட்டுக் கெடுதல் இல்லாத சிவஞான அமுதுண்ட சம்பந்தர், திருவொற்றியூரில் விரும்பி அங்குத் தங்கி யிருந்தார்.

பண் :

பாடல் எண் : 1033

இன்ன தன்மையிற் பிள்ளையார்
இருந்தனர் இப்பால்
பன்னு தொல்புகழ்த் திருமயி
லாபுரிப் பதியில்
மன்னு சீர்ப்பெரு வணிகர்தந்
தோன்றலார் திறத்து
முன்னம் எய்திய தொன்றினை
நிகழ்ந்தவா மொழிவாம்.

பொழிப்புரை :

இங்ஙனம் ஞானசம்பந்தர் எழுந்தருளி இருந் தார். இவ்வுலகில் புகழ்ந்து பேசப்படுகின்ற திருமயிலாப்பூர்ப் பதியில் நிலைபெற்ற புகழையுடைய பெருவணிகர் குடியில் வந்த பெருமை யுடையவரின் வாழ்நாளில் நிகழ்ந்ததொரு வரலாற்றை இனிப் புகல் வாம்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1034

அருநி தித்திறம் பெருக்குதற்
கருங்கலம் பலவும்
பொருக டற்செலப் போக்கியப்
பொருட்குவை நிரம்ப
வரும ரக்கல மனைப்படப்
பணைக்கரை நிரைக்கும்
இருநி திப்பெருஞ் செல்வத்தின்
எல்லையில் வளத்தார்.

பொழிப்புரை :

அரிய செல்வ வகைகளைப் பெருக்கச் செய்வதற் காக பெரிய மரக்கலங்கள் பலவற்றையும் அலைமோதும் கடலின்கண் செலுத்தி, அவ்வணிகத்தால் திரட்டிய செல்வக் குவியல்கள் நிரம்பத் தம் இல்லத்தில் சேரும்படி கொண்டுவரும் மரக்கலன்களின் குவியல், வரிசை பெறக் குவிக்கும் பெருநிதி முதலான பெருஞ்செல்வங்களின் எல்லையில்லாத வளங்களை யுடையவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1035

தம்மை யுள்ளவா றறிந்தபின்
சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன்
மிக்கதோ ரன்பால்
பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது
எனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார்
சிவநேசர் என்பார்.

பொழிப்புரை :

தம்மை உள்ளவாறு அறிந்து கொண்டமையின் அதன்பின், இன்பந் தருபவரான இறைவரிடத்தில் அடிமைத் திறத்தை மெய்ந்நெறி பிறழாது செய்யும் விருப்பத்துடன் கூடிய அன்பினால், பொய்ம்மையைக் கடிந்த மெய்ப் பொருள் இதுவே எனத் தெரிந்து கொண்ட உள்ளத்தில், செம்மை நெறியையே இடைவிடாது எண்ணி ஒழுகும் திண்மை உடையவர் ஒருவர்; அவர் சிவநேசர் என்று அழைக் கப்படுவர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1036

கற்றை வார்சடை முடியினார்
அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவின்றி
உருகிய மனமும்
பற்றி லாநெறிப் பரசம
யங்களைப் பாற்றுஞ்
செற்ற மேவிய சீலமும்
உடையராய்த் திகழ்வார்.

பொழிப்புரை :

தொகுதியான நீண்ட சடையையுடைய இறை வரின் அடியவர்கள் வரின், பொருந்திய செய்கையில் இடை விடாது உருகிய உள்ளத்தையும், இறைவரிடத்து அன்பு இல்லாத நெறிகளை யுடைய பிறசமயங்களை நீக்குவதில் சினம் பொருந்திய நல்லொழுக் கத்தையும் உடையராய் விளங்குவர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1037

ஆன நாள்செல அருமறைக்
கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும்
நானிலம் உய்ய
ஏனை வெஞ்சமண் சாக்கியம்
இழித்தழித் ததுவும்
ஊன மில்புகழ் அடியர்பால்
கேட்டுவந் துளராய்.

பொழிப்புரை :

அவ்வாறான நாள்கள் பலசெல்ல, அரிய வேதி யரான கவுணியர் குலத்தில் தோன்றிய தலைவரான ஞானசம்பந்தப் பெருமான் சிவஞானம் உண்டதையும், உலகம் உய்யும் பொருட்டா கப் பிற சமயங்களான கொடிய சமண புத்த சமயங்களின் கீழ் நிலையை விளக்கி, அவை அடைந்திருந்த தலைமையை ஒழித்ததையும், குற்றம் இல்லாத அடியவர்கள் வந்து சொல்லக் கேட்டு மகிழந்தவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1038

செல்வ மல்கிய சிரபுரத்
தலைவர்சே வடிக்கீழ்
எல்லை யில்லதோர் காதலின்
இடையறா வுணர்வால்
அல்லும் நண்பக லும்புரிந்
தவர்அருட் டிறமே
சொல்ல வுஞ்செயல் கேட்கவும்
தொழிலின ரானார்.

பொழிப்புரை :

அருட்செல்வம் நிறைந்த சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளின்பால் அளவில்லாத ஒப்பற்ற பெரு விருப்புடன் இடையறாத அன்பு பூண்ட உணர்ச்சியால், இரவும் பகலும் இடைவிடாது அவரையே எண்ணியவராய், அவரது அருள் தன்மையையே தம் வாக்கினால் புகழ்ந்து பாராட்டுதலும் அருட் செயல்களை அன்பர்களிடம் கேட்டலுமாகிய இவையே தம் வாழ்க்கைக்குரிய செயல்களாக மேற்கொண்டவர் ஆனார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1039

நிகழும் மாங்கவர் நிதிப்பெருங்
கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினிற்
சிறந்துள ராகிப்
புகழும் மேன்மையில் உலகினில்
பொலிந்துளா ரெனினும்
மகவி லாமையின்ம கிழ்மனை
வாழ்க்கையின் மருண்டு.

பொழிப்புரை :

அருட்செல்வம் நிறைந்த சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளின்பால் அளவில்லாத ஒப்பற்ற பெரு விருப்புடன் இடையறாத அன்பு பூண்ட உணர்ச்சியால், இரவும் பகலும் இடைவிடாது அவரையே எண்ணியவராய், அவரது அருள் தன்மையையே தம் வாக்கினால் புகழ்ந்து பாராட்டுதலும் அருட் செயல்களை அன்பர்களிடம் கேட்டலுமாகிய இவையே தம் வாழ்க்கைக்குரிய செயல்களாக மேற்கொண்டவர் ஆனார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1040

அரிய நீர்மையில் அருந்தவம்
புரிந்தரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை யுலப்பில
செய்தஅந் நலத்தால்
கரிய வாங்குழன் மனைவியார்
வயிறெனுங் கமலத்
துரிய பூமக ளெனவொரு
பெண்கொடி யுதித்தாள்.

பொழிப்புரை :

அரிய தன்மையுடன் அருந்தவம் ஆற்றிவரும் சிவனடியார்களுக்குரிய அளவற்ற அருச்சனைகளைச் செய்துவர, அந் நன்மையால் அவரது கரிய சிறந்த கூந்தலையுடைய மனைவியாரின் வயிறு என்னும் தாமரையில், உரிமை பொருந்திய பூமகள் போன்ற பெண் ஒருத்தி பிறந்தாள்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1041

நல்ல நாள்பெற ஓரையில்
நலம்மிக வுதிப்பப்
பல்பெ ருங்கிளை யுடன்பெரு
வணிகர்பார் முழுதும்
எல்லை யில்தன முகந்துகொண்
டியாவரும் உவப்ப
மல்ல லாவண மறுகிடைப்
பொழிந்துளம் மகிழ்ந்தார்.

பொழிப்புரை :

நல்லநாளில் நல்ல ஓரையில் நலம் பல பெறுதற் குரிய அக்குழந்தை பிறக்க, பல பெரிய சுற்றத்துடன் பெருவணிகரான சிவநேசர், அளவற்ற செல்வங்களை முகந்து எடுத்து, யாவரும் மகிழச் செழிப்புடைய வீதியில் பொழிந்து உள்ளம் மகிழ்ந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1042

ஆறு சூடிய முடியினார்
அடியவர்க் கன்பால்
ஈறி லாதபூ சனைகள்யா
வையுமிகச் செய்து
மாறி லாமறை யவர்க்குவேண்
டினவெலாம் அளித்துப்
பேறு மற்றிதுவே எனும்படி
பெருங்களி சிறந்தார்.

பொழிப்புரை :

கங்கையைச் சூடிய சடையையுடைய சிவபெரு மானின் அடியார்களுக்கு, அன்பு மிகுதியினால் எல்லையற்ற பூசை களை மிகவும் செய்தும், ஒப்பில்லாத மறையவர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை எல்லாம் தந்தும், இதுவே பெரும் பேறாகும் என்று சொல்லும்படி உள்ளம் மகிழ்ந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1043

சூத நல்வினை மங்கலத்
தொழில்முறை தொடங்கி
வேத நீதியின் விதியுளி
வழாவகை விரித்த
சாத கத்தொடு சடங்குகள்
தசதினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில்
கடிவிழா அயர்ந்தார்.

பொழிப்புரை :

குழந்தை பிறந்தவுடன் செயத்தக்க நல்ல செயற் பாடுகளையெல்லாம் முறைப்படி செய்யத் தொடங்கி, மறைவழித் தவறாது விரித்துக் கூறிய சாதகன்மம் முதலாக வரும் செயற்பாடுகளை குழந்தை பிறந்தபின் பத்து நாள்களிலும் செய்து, பெருவிருப்பம் பொருந்திய சிறப்பால் மங்கல விழாவையும் செய்தனர்.

குறிப்புரை :

குழந்தை பிறந்தவுடன் செயத்தக்க நல்ல செயற் பாடுகளையெல்லாம் முறைப்படி செய்யத் தொடங்கி, மறைவழித் தவறாது விரித்துக் கூறிய சாதகன்மம் முதலாக வரும் செயற்பாடுகளை குழந்தை பிறந்தபின் பத்து நாள்களிலும் செய்து, பெருவிருப்பம் பொருந்திய சிறப்பால் மங்கல விழாவையும் செய்தனர்.

பண் :

பாடல் எண் : 1044

யாவ ரும்பெரு மகிழ்ச்சியால்
இன்புறப் பயந்த
பாவை நல்லுறுப் பணிகிளர்
பண்பெலாம் நோக்கிப்
பூவி னாள்என வருதலின்
பூம்பாவை யென்றே
மேவு நாமமும் விளம்பினர்
புவியின்மேல் விளங்க.

பொழிப்புரை :

யாவரும் பெருமகிழ்ச்சியால் இன்பத்தை அடையப் பெற்றெடுத்த பாவை போன்ற பெண்ணின் அழகு விளங் கும் பண்புகளை எல்லாம் பார்த்து, அவை திருமகளின் திருத்தகவு என விளங்கலின், அப்பெண்ணுக்குப் `பூம்பாவை\' என்ற பெயரை உலகத்தில் மேலாய் விளங்குமாறு கூறிச் சூட்டினர்.

குறிப்புரை :

பூப்பாவை - பூம்பாவையாயிற்று.

பண் :

பாடல் எண் : 1045

திங்கள் தோறுமுன் செய்யும்அத்
திருவளர் சிறப்பின்
மங்க லம்புரி நல்வினை
மாட்சியிற் பெருக
அங்கண் மாநகர் அமைத்திட
ஆண்டெதி ரணைந்து
தங்கு பேரொளிச் சீறடி
தளர்நடை பயில.

பொழிப்புரை :

பூப்பாவை - பூம்பாவையாயிற்று.

குறிப்புரை :

ஓராண்டில் தளர்நடை பயின்றாள்.

பண் :

பாடல் எண் : 1046

தளரும் மின்னின்அங் குரமெனத்
தமனியக் கொடியின்
வளரி ளந்தளிர்க் கிளையென
மணிகிள ரொளியின்
அளவி லஞ்சுடர்க் கொழுந்தென
அணைவுறும் பருவத்
திளவ னப்பிணை யனையவர்க்
ஏழுயாண் டெய்த.

பொழிப்புரை :

ஓராண்டில் தளர்நடை பயின்றாள்.

குறிப்புரை :

ஏழாண்டுகளில் பூம்பாவையினிடத்துப் பொருந்திய பொற்பு இது.

பண் :

பாடல் எண் : 1047

அழகின் முன்னிளம் பதமென
அணிவிளக் கென்ன
விழவு கொண்டெழும் பேதைய
ருடன்விளை யாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம்
என்றுமற் றினைய
மழலை மென்கிளிக் குலமென
மனையிடை ஆடி.

பொழிப்புரை :

ஏழாண்டுகளில் பூம்பாவையினிடத்துப் பொருந்திய பொற்பு இது.

குறிப்புரை :

ஏழாண்டுகளில் பூம்பாவையினிடத்துப் பொருந்திய பொற்பு இது.

பண் :

பாடல் எண் : 1048

பொற்றொ டிச்சிறு மகளிர்
ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்துட
னடுந்தொழிற் சிறுசோ
றுற்ற உண்டிகள் பயின்றொளி
மணியூசல் ஆடி
மற்றும்இன்புறு வண்டலாட்
டயர்வுடன் வளர.

பொழிப்புரை :

பொன்னால் ஆன வளையலை அணிந்த சிறுபெண்களின் கூட்டத்துடன் கூடிச் சிற்றில்களை முற்றக் கட்டியும், அதனுடன் சமைக்கும் தொழிலில் சிறு சோற்றுடன் பொருந்திய உணவு கள் அமைத்தும், உண்டும் பழகியும், ஒளியையுடைய மணிகள் கட்டிய ஊஞ்சல் ஆடியும், இன்னும் இங்ஙனம் இன்பம் பொருந்தும் வண்டல் பயிலும் ஆடல்களை ஆடியும் வளர,

குறிப்புரை :

இறைவனையோ இறைவியையோ அல்லது பெரியவர் களையோ பிள்ளைமைத் தன்மையில் வைத்துப் பாடுவது பிள்ளைத் தமிழாகும். இப்பூம்பாவைக்கோ உண்மையிலேயே பிள்ளைமைத் தன் மையில் இவ்வருஞ் செயல்களை வைத்துக் கூறுகின்றார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 1049

தந்தை யாரும்அத் தளிரிளம்
கொம்பனாள் தகைமை
இந்த வையகத் தின்மையால்
இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்துமற்
றிவள்மணம் பெறுவான்
அந்த மில்லென தருநிதிக்
குரியனென்று அறைந்தார்.

பொழிப்புரை :

தந்தையான சிவநேசரும், அந்தத் தளிர்த்த இளங்கொம்பைப் போன்ற பெண்ணுக்கு ஒத்த பண்பு இவ்வுலகத்தில் வேறு எவருக்கும் இல்லாததால், இன்பத்துடன் கூடிய களிப்புப் பொங் கிய உள்ளத்தில் மகிழ்ச்சியடைந்து, பெறற்கரிய பேறாகிய இவளை மணம் செய்து கொள்ளும் மணமகனே என் எல்லையற்ற அரிய செல் வங்களுக்கெல்லாம் உரிமை உடையவன் ஆவன் என்று சொன்னார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1050

ஆய நாள்களில் அமண்பயில்
பாண்டிநா டதனைத்
தூய ஞானமுண் டருளிய
தோன்றலார் அணைந்து
மாய வல்லமண் கையரை
வாதில்வென் றதுவும்
மேய வெப்பிடர் மீனவன்
மேலொழித் ததுவும்.

பொழிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1051

நெருப்பில் அஞ்சினார் தங்களை
நீரில் ஒட்டியபின்
மருப்பு நீள்கழுக் கோலின்மற்
றவர்கள் ஏறியதும்
விருப்பி னால்திரு நீறுமீ
னவற்களித் தருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம்
போற்றுவித் ததுவும்.

பொழிப்புரை :

அனல் வாதத்தில் தோற்று அஞ்சிய சமணர் களைப் புனல் வாதத்தால் வென்ற பின்பு, கூர்மையான கொம்பைப் போன்ற நீண்ட கழுமரங்களில் அந்தச் சமணர்கள் ஏறியதும் விருப்பத்துடன் பாண்டிய மன்னனுக்குத் திருநீற்றை அளித்து அதன்மூலம் மலையா கிய வில்லையுடைய சிவபெருமானின் திருநீற்றுச் சாதனத்தைப் போற்றுவித்தும்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1052

இன்ன வாறெலாம் அறிந்துளார்
எய்தியங் கிசைப்பச்
சொன்ன வர்க்கெலாம் இருநிதி
தூசுடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார்
தமைத்திசை நோக்கிச்
சென்னி மேற்கரங் குவித்துவீழ்ந்
தெழுந்துசெந் நின்று.

பொழிப்புரை :

(ஆகிய) இவ்வரிய செயல்களை எல்லாம் அறிந் தவர் அங்குச் சொல்ல, வந்து சொன்னவர்க்கெல்லாம் பெருநிதியங் களை ஆடைகளுடன் அளித்து, நிலைபெற்ற சீகாழிப் பதியின் வள்ள லாரான ஞானசம்பந்தரை, அவர் இருந்த திசையை நோக்கித் தலைமீது கைகுவித்துக் கூப்பிக் கொண்டு நிலமுற விழுந்து, வணங்கி எழுந்து நேர்நின்று,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1053

சுற்றம் நீடிய கிளையெலாம்
சூழ்ந்துடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழிநா
டுடையவர்க் கடியேன்
பெற்றெ டுத்தபூம் பாவையும்
பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன்
யானென்று மொழிந்தார்.

பொழிப்புரை :

சுற்றத்தவரும் நீண்ட கிளைஞர்களும் கேட்கு மாறு, உரத்த குரலில் `கற்றவர்களாகிய மக்கள் வாழ்கின்ற சீகாழிப் பிள்ளையாருக்கு, அடியேன் பெற்ற பூம்பாவையையும், விளக்கமான என்பெருஞ் செல்வத்தையும், முற்றவும் அடிமையாக என்னையும் யான் தந்தேன்!\' என உரைத்தார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின. சுற்றத்தார் - பெண்ணை மணங்கொள்ள உரிமையுடையவர்கள். கிளைஞர் - ஆண்மகவு இல்லாத நிலையில் தம் உடைமையைத் தமக்குப் பின் பெறுதற்குரியார். (சிவக்கவிமணியார்).

பண் :

பாடல் எண் : 1054

எல்லை யில்பெருங் களிப்பினால்
இப்பரி சியம்பி
முல்லை வெண்ணகை முகிழ்முலை
யாருடன் முடியா
மல்கு செல்வத்தின் வளமையும்
மறைவளர் புகலிச்
செல்வ ரேயுடை யாரெனும்
சிந்தையால் மகிழ்ந்தார்.

பொழிப்புரை :

அளவு இல்லாத பெரு மகிழ்ச்சியினால் இவ் வாறு சிவநேசர் சொல்லி, முல்லையரும்பைப் போன்ற கூர்மையும் வெண்மையுமான பல்வரிசையையும், முகிழ்க்கும் மார்பகங்களை யும், உடைய மகளுடன் எல்லையற்ற நிரம்பிய செல்வ வளங்களை யும், மறையவரின் சீகாழிப் பதியில் தோன்றிய செல்வரான ஞானசம் பந்தரே உடையவர் என்று துணிவு கொண்ட உள்ளத்தில் மகிழ்வும் அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1055

ஆற்று நாள்களில் அணங்கனார்
கன்னிமா டத்தின்
பால்த டம்பொழில் மருங்கினிற்
பனிமலர் கொய்வான்
போற்று வார்குழற் சேடிய
ருடன்புறம் போந்து
கோற்றொடித் தளிர்க் கையினால்
முகைமலர் கொய்ய.

பொழிப்புரை :

இங்ஙனம் சிவநேசர் செயல் ஆற்றிவரும் நாள்களில், தெய்வப் பெண் போன்ற பூம்பாவையார் கன்னிமாடத் தில், பால் போன்ற தூய நீர் நிறைந்த பொய்கை அருகில், குளிர்ந்த மலர்களைக் கொய்வதற்காகத் தம்மைப் போற்றும் நீண்ட கூந்தலை உடைய தோழியருடனே வெளியே சென்று, திரண்ட வளையலை அணிந்த தளிர் போன்ற கைகளால் முகைக்கும் பருவத்து மலர்களைக் கொய்ய,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1056

அன்பர் இன்புறும் ஆர்வத்தின்
அளித்தபாங் கல்லால்
பொன்பி றங்குநீர்ப் புகலிகா
வலர்க்கிது புணரா
தென்ப துட்கொண்ட பான்மைஓர்
எயிற்றிளம் பணியாய்
முன்ப ணைந்தது போலவோர்
முள்ளெயிற்று அரவம்.

பொழிப்புரை :

அன்பரான சிவநேசர் இன்பம் பொருந்துகின்ற விருப்பத்தால் அளித்த அளவிலன்றிப் பொன்கொழிக்கும் நீரை உடைய சீகாழித் தலைவராய ஞானசம்பந்தருக்கு இது சேர்வுறாது என்பதை மனத்துள் கொண்டுள்ள ஊழானது, நச்சுப் பற்களையுடைய ஒரு பாம்பாகி முன்வந்ததைப் போல, முள் போன்ற பற்களையுடைய ஒரு பாம்பு,

குறிப்புரை :

சிவநேசர், சீகாழித் தலைவருக்கெனத் தம் மகளாரை யும், பொருள்களையும் உரிமைப் படுத்திய அளவிலன்றி, அத்திரு மக ளாரோ, அப்பொருள்களோ அவரைச் சார்தற்குரிய ஊழ்இல்லை. ஆத லின் அவ்வூழே ஒருபாம்பாக வந்தது என ஆசிரியர் குறிப்பாராயினர்.

பண் :

பாடல் எண் : 1057

மௌவல் மாதவிப் பந்தரில்
மறைந்துவந் தெய்திச்
செவ்வி நாண்முகை கவர்பொழு
தினில்மலர்ச் செங்கை
நவ்வி வாள்விழி நறுநுதற்
செறிநெறி கூந்தல்
கொவ்வை வாயவள் முகிழ்விரல்
கவர்ந்தது குறித்து.

பொழிப்புரை :

மல்லிகையும் முல்லையுமாகப் படர்ந்த பந்தலில் மறைந்து வந்து சேர்ந்து, பூம்பாவையார் புதிய அரும்புகளைப் பறிக் கின்றபோது, மான்போன்ற கூர்மையான கண்களையும், நல்ல நெற்றி யையும், செறிவும் நெறிவும் உடைய கூந்தலையும், கோவைக் கனி போன்ற வாயையும் உடைய பூம்பாவையரின் மலர் போன்ற கையில், பூக்கொய்யக் கூப்பிய விரலைக் கடித்தது.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1058

நாலு தந்தமும் என்புறக்
கவர்ந்துநஞ் சுகுத்து
மேலெ ழும்பணம் விரித்துநின்
றாடிவே றடங்க
நீல வல்விடந் தொடர்ந்தெழ
நேரிழை மென்பூ
மாலை தீயிடைப் பட்டது
போன்றுள மயங்கி.

பொழிப்புரை :

நச்சுப் பற்கள் நான்கும், எலும்பளவும் அழுந்தக் கடித்து, நஞ்சைச் செலுத்திப் படத்தை விரித்து நின்று ஆடிய அப்பாம்பு, வேறு இடத்தில் மறைந்து விட்டது. அவ்வாறாகவே, கரிய கொடிய நஞ்சு அதனைத் தொடர்ந்து மேலே எழுந்ததால், மென்மை ஆன பூமா லையில் தீப்பட்டதைப் போல, நல்ல அணிகளை அணிந்த பூம்பாவை யார் உள்ளம் மயங்கி,

குறிப்புரை :

`இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்\' (குறள், 308) என்னும் திருக்குறளும்.

பண் :

பாடல் எண் : 1059

தரையில் வீழ்தரச் சேடியர்
வெருக்கொண்டு தாங்கி
வரைசெய் மாடத்தின் உட்கொடு
புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலையழிந்
துறுதுயர் பெருகக்
கரையில் சுற்றமுந் தாமும்முன்
கலங்கினார் கலுழ்ந்தார்.

பொழிப்புரை :

நிலத்தில் விழ, தோழியர் திடுக்கிட்டு அஞ்சித் தாங்கிச் சென்று, அவருக்கென்று அமைக்கப்பட்ட கன்னிமாடத்தில் கொண்டு புக, அதனால் சிவநேசர் சொல்லும் மனமும் நிலையழிந்து துன்பம் மேலிட, அளவற்ற சுற்றத்தாரும் தாமும் முன்கலங்கி அழுதனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1060

விடந்தொ லைத்திடும் விஞ்சையில்
பெரியராம் மேலோர்
அடர்ந்த தீவிடம் அகற்றுதற்
கணைந்துளார் அனேகர்
திடங்கொள் மந்திரந் தியானபா
வகநிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தொழிலராய்த்
தனித்தனிச் சூழ்வார்.

பொழிப்புரை :

நஞ்சைத் தீர்த்திடும் கலையில் கைவந்த பெரி யோரான மேலோர் பலர், கொடிய அந்நஞ்சைப் போக்குதற்குச் சேர்ந் தவர்களாய், வன்மையுடைய மந்திரமும் தியானமும் பாவனையும் முட்டி நிலையுமாய்த் தொடர்ந்த தீர்வுச் செயல்களைத் தனித்தனிச் செய்யச் சூழ்ந்து,

குறிப்புரை :

மந்திரம் - கருடமந்திரம். தியானம் - அம்மந்திரத்திற்கு அதிதெய்வமூர்த்தியை அழுந்தியறிதல், பாவனை - அம்மூர்த்தியாகத் தன்னைப் பாவித்தல். முட்டிநிலை - மந்திரம் செய்வோர், தன் கை விரல்களில் பெருவிரலை விடுத்து ஏனைய நான்கு விரல்களையும் முட்டியாக மடித்துக் கொண்டு நஞ்சின் வேகத்தைத் தடுத்தற்காகத் தலை முதல் கடிவாய் இறுதியாகத் தீண்டப்பட்டோர் உடலைத் தடவுதல்.

பண் :

பாடல் எண் : 1061

மருந்தும் எண்ணில் மாறில
செய்யவும் வலிந்து
பொருந்து வல்விடம் ஏழுவே
கமும்முறை பொங்கிப்
பெருந்த டங்கண்மென் கொடியனாள்
தலைமிசைப் பிறங்கித்
திருந்து செய்வினை யாவையும்
கடந்துதீர்ந் திலதால்.

பொழிப்புரை :

மேற்கூறப்பட்ட நான்குடன், அளவில்லாத இணையற்ற மருந்துகளைக் கொடுத்தும் தடவியும் சிகிச்சை செய்யவும், வன்மையாய்ப் பற்றிக் கொண்ட கொடிய நஞ்சு, ஏழு வேகமும் முறையாய் மேல்ஏறி, அகன்ற கண்களையுடைய மென்மை ஆன கொடி போன்ற பூம்பாவையாரின் தலையை மேற்கொண்டு விளங்க, திருந்துமாறு செய்த தீர்வினைகள் எல்லாவற்றையும் கடந்து தீராமல் போகவே,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1062

ஆவி தங்குபல் குறிகளும்
அடைவில வாக
மேவு காருட விஞ்சைவித்
தகர்இது விதியென்
றோவும் வேளையில் உறுபெரும்
சுற்றமும் அலறிப்
பாவை மேல்விழுந் தழுதனர்
படரொலிக் கடல்போல்.

பொழிப்புரை :

உயிர் உடம்பில் தங்குவதற்கு உரிய பல குறிகளும் பொருந்தாது போக, வந்து சேர்ந்த காருடக் கலையில் வல்லவரும் இது ஊழ் என்று கைவிடும் வேளையில், பொருந்திய பல சுற்றத்தார்களும், கடலைப் போல் அலறிப் பாவை மீது விழுந்து அழுதனர்.

குறிப்புரை :

காருடக் கலை - கருடனாகப் பாவித்து நஞ்சைத் தீர்க்கும் கலை.

பண் :

பாடல் எண் : 1063

சிந்தை வெந்துயர் உறுசிவ
நேசருந் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில்
வையகத் துள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு
ஈகுவன்என் னுடைய
அந்த மில்நிதிக் குவையெனப்
பறையறை வித்தார்.

பொழிப்புரை :

உள்ளத்தில் கொடிய துன்பம் அடைந்த சிவநேசரும், பின்பு தெளிந்து, செய்யக்கூடிய தீர்வினை ஏதும் இல்லா ததால், `உலகத்தில் உள்ளவர்களில் யாவராயினும் இந்தக் கொடிய நஞ்சை ஒழித்தார் அவருக்கு இங்குள்ளன எல்லையில்லாத செல்வத் திரள் அனைத்தையும் அளிப்பேன்\' என்று எங்கும் யாரும் அறியுமாறு பறை சாற்றினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1064

முரசி யம்பிய மூன்றுநாள்
அகவயின் முற்ற
அரசர் பாங்குளோர் உட்பட
அவனிமே லுள்ள
கரையில் கல்வியோர் யாவரும்
அணைந்துதங் காட்சிப்
புரையில் செய்கையில் தீர்ந்திடா
தொழிந்திடப் போனார்.

பொழிப்புரை :

இங்ஙனம் பறை சாற்றிய பின்னர், மூன்று நாள் எல்லையில், அரச அவையில் உள்ளவர் உட்பட உலகத்தில் உள்ள எல்லை இல்லாத கல்வியுடைய யாவரும் வந்து சேர்ந்து, தாம் தாமும் உறுதியாய்க் கண்ட குற்றமற்ற தீர்தொழில்கள் எவற்றாலும் தீராது ஒழியாமற் போக, நீங்கிச் சென்றனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1065

சீரின் மன்னிய சிவநேசர்
கண்டுளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலைசூழ்
கழுமலத் தலைவர்
சாரும் அவ்வள வும்முடல்
தழலிடை யடக்கிச்
சேர என்பொடு சாம்பல்சே
மிப்பது தெளிவார்.

பொழிப்புரை :

அந்நிலைமையைக் கண்ட சிறப்புப் பொருந்திய சிவநேசர் உள்ளம் மயங்கி, மேகம் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட சீகாழித் தலைவர் வந்து சேரும் நாள் வரையிலும், பூம்பாவையாரின் உடலைத் தீயில் இட்டு அடங்கச் செய்து, அதில் சேரும் எலும்புடன் சாம்பலையும் பாதுகாத்து வைப்பது எனும் தெளிவுடையவராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1066

உடைய பிள்ளையார்க் கெனஇவள்
அடைவு துன்புறு வதற்கிலை
யாம்நமக் கென்றே
இடரொ ழிந்தபின் அடக்கிய
என்பொடு சாம்பல்
புடைபெ ருத்தகும் பத்தினிற்
புகப்பெய்து வைப்பார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தப் பெருமானுக்கு இவளை அளித்தேன் என்று கூறிவிட்டதால், இதனால் தமக்குத் துன்பம் அடைவதற்கு இயைபு இல்லையாம் என்று துணிந்து, துன்பம் நீங்கிய நிலையில், தீயில் எரிந்த எலும்பையும் சாம்பலையும் வாய் அகன்ற குடத்தில் இட்டு வைப்பார் ஆனார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1067

கன்னி மாடத்தின் முன்புபோல்
பொன்னு முத்துமே லணிகலன்
பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை
விரைப்பள்ளி அதன்மேல்
மன்னு பொன்னரி மாலைகள்
அணிந்துவைத் தனரால்.

பொழிப்புரை :

கன்னிமாடத்தில் முன்போலவே காவல் பொருந்த அக்குடத்தை வைத்துப் பொன்னும் முத்தும் மேல் அணி கலன்களும், அழகான மேன்மையான துகில்களும் சுற்றிப் புனைந்து, புகழ்ந்து பேசப்படும் அன்னத்தூவியிட்ட படுக்கையான மணம் கம ழும் பஞ்சணையில் வைத்து, அதன்மேல் நிலைபெற்ற பொன்னரி யான கழுத்தணி வகைகளையும் அழகுபெறக் கோலம் செய்து வைத்தார்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1068

மாலை சாந்தொடு மஞ்சனம்
நாடொறும் வழாமைப்
பாலி னேர்தரும் போனகம்
பகல்விளக்கு இனைய
சாலு நன்மையில் தகுவன
நாள்தொறுஞ் சமைத்தே
ஏலு மாசெய யாவரும்
வியப்பெய்து நாளில்.

பொழிப்புரை :

மாலையும், சந்தனத்துடன் திருமுழுக்கும், நாள்தோறும் விடாமல், பால்சோறும், பகல் விளக்கும் என்ற இவையும் இவை போன்றவற்றையும் பொருந்திய நன்மையினால் தக்கவையாக நாள்தோறும் அமைத்துப் பொருந்தும்படி செய்ய, யாவரும் அதைக் கண்டு வியப்படைந்துவரும் நாள்களில்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1069

சண்பை மன்னவர் திருவொற்றி
யூர்நகர் சார்ந்து
பண்பு பெற்றநற் றொண்டர்க
ளுடன்பணிந் திருந்த
நண்பு மிக்கநல் வார்த்தைஅந்
நற்பதி யுள்ளோர்
வண்பு கழ்ப்பெரு வணிகர்க்கு
வந்துரை செய்தார்.

பொழிப்புரை :

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் திருவொற் றியூரில் வந்து சார்ந்து, பண்புமிக்க நல்ல தொண்டர்களுடன் இறை வரைப் பணிந்து அங்கே எழுந்தருளியிருக்கின்றார் என்ற பொருந்து வதற்குரிய நல்ல சொல்லை, அந்நற்பதியில் வாழும் அடியார்கள், வண்மையும் புகழும் உடைய பெருமை சான்ற வணிகர் தோன்றலார் ஆன சிவநேசரிடம் வந்து கூறினர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1070

சொன்ன வர்க்கெலாந் தூசொடு
காசுபொன் னளித்தே
இன்ன தன்மையர் எனவொணா
மகிழ்சிறந் தெய்தச்
சென்னி வாழ்மதி யார்திரு
வொற்றியூ ரளவும்
துன்னு நீள்நடைக் காவணந்
துகில்விதா னித்து.

பொழிப்புரை :

அங்ஙனம் ஞானசம்பந்தரைப் பற்றித் தம்மிடம் வந்து கூறியவர்களுக்கெல்லாம் சிவநேசர், ஆடையும், காசும், பொன் னும் அன்புடனே கொடுத்து, இன்ன தன்மைதான் பெற்றார் என்று சொல்ல முடியாத மகிழ்ச்சி மேல் ஓங்க, திருச்சடையில் வாழ்வு பெறும் மதியைத் தாங்கிய இறைவர் எழுந்தருளிய திருவொற்றியூர் அளவும் நெருங்கிய நடைக் காவணம் இட்டுத் துணியால் விதானமும் கட்டி,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1071

மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.

பொழிப்புரை :

மகர தோரணங்களும், வளம்மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பில்லாத பலகொடிகளும், மாலை களும் ஆகிய இவற்றை அழகு பொருந்த நிரல்பட அமைத்து, நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்த அணிசெய்து, குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கிய தாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1072

இன்ன வாறணி செய்துபல்
குறைவறுப் பேவி
முன்னம் ஒற்றியூர் நகரிடை
முத்தமிழ் விரகர்
பொன்ன டித்தலம் தலைமிசைப்
புனைவனென் றெழுவார்
அந்ந கர்ப்பெருந் தொண்டரும்
உடன்செல வணைந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு பலவாற்றானும் அணி செய்து, குறைகள் எவையும் இல்லாமல் செய்யும் பணியாட்களை ஏவி, `முன்சென்று திருவொற்றியூர் நகரில் முத்தமிழ் விரகரான பிள்ளை யாரின் பொன்னார் திருவடிகளை வணங்கித் தலைமீது சூட்டிக் கொள்வேன்\' என்று எழுவாராகி, அம் மயிலையில் வாழும் பெருந் தொண்டர்களும் தம் உடன் வரத் திருவொற்றியூரை நோக்கிச் சென்றார்.

குறிப்புரை :

குறைவு + அறுப்பு = குறைவறுப்பு - குறைகள் எவையும் இல்லையாகச் செய்தல்.

பண் :

பாடல் எண் : 1073

ஆய வேலையில் அருமறைப்
புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர்
வியனகர் அகன்று
காயல் சூழ்கரைக் கடல்மயி
லாபுரி நோக்கித்
தூய தொண்டர்தம் குழாத்தொடும்
எதிர்வந்து தோன்ற.

பொழிப்புரை :

அவ்வமையத்தில் சீகாழித் தலைவரான ஞானசம் பந்தப் பெருமானும், தாம் தங்கியிருந்த திருவொற்றியூரைப் பணிந்து, அப் பெருநகரை விட்டு அகன்று, உப்பளங்கள் சூழ்ந்த கடற்கரையின் துறையையுடைய திருமயிலையை நோக்கித் தூய்மையான தொண்டர் களின் திருக்கூட்டத்தோடும் எதிரில் வந்து தோன்ற,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1074

மாறில் வண்பெரு வணிகரும்
தொண்டரும் மலர்ந்த
நீறு சேர்தவக் குழாத்தினை
நீளிடைக் கண்டே
ஆறு சூடினார் திருமக
னார்அணைந் தாரென்
ஈறி லாததோர் மகிழ்ச்சியி
னால்விழுந் திறைஞ்ச.

பொழிப்புரை :

ஒப்பற்ற கொடைத்திறனுடைய பெருவணிக ரான சிவநேசரும், அவருடன் வந்த பெருந் தொண்டர்களும், ஒளி விளங்கும் வெண்ணீறு புனைந்த தவத்தையுடைய அடியார் கூட்டத் தினை நெடுந்தொலைவில் பார்த்து, `கங்கையாற்றைச் சூடிய இறைவரின் மகனார் வந்தனர்\' என்று இறுதியில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சியால் நிலத்தில் விழுந்து போற்ற,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1075

காழி நாடரும் கதிர்மணிச்
சிவிகைநின் றிழிந்து
சூழி ரும்பெருந் தொண்டர்முன்
தொழுதெழுந் தருளி
வாழி மாதவர் வணிகர்செய்
திறஞ்சொலக் கேட்டே
ஆழி சூழ்மயி லாபுரித்
திருநகர் அணைந்தார்.

பொழிப்புரை :

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் ஒளி வீசும் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, சூழ்ந்த பெரிய தொண்டர் களின் முன்னே, தொழுது எழுந்தருளி, வாழ்வுடைய மாதவர்களா கிய அடியவர்கள் சிவநேசரின் அடிமைப் பண்பை எடுத்துச் சொல்லக் கேட்டு, கடற்கரை சூழ்ந்த திருமயிலைத் திருநகரைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1076

அத்தி றத்துமுன் நிகழ்ந்தது
திருவுள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறு சிவநேசர்
தம்செயல் வாய்ப்பப்
பொய்த்த வச்சமண் சாக்கியர்
புறத்துறை அழிய
வைத்த வப்பெருங் கருணைநோக்
கால்மகிழ்ந் தருளி.

பொழிப்புரை :

அத்திறத்தின் முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சியைத் தம் உள்ளத்தில் ஞானசம்பந்தப் பெருமான் அமைத்துக் கொண்டு, உள்ளத்தில் இன்பமடையும் தொண்டரான சிவநேசரின் செயல் வாய்த்திட, பொய்யான தவத்தை மேற்கொண்ட சமணர் சாக்கியரின் புறத்துறைகள் அழியத் திருவுளங் கொண்ட அப் பெரிய அருள் நோக்கத்தினால் மகிழ்ந்தருளி,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1077

கங்கை வார்சடை யார்கபா
லீச்சரத் தணைந்து
துங்க நீள்சுடர்க் கோபுரம்
தொழுதுபுக் கருளி
மங்கை பாகர்தம் கோயிலை
வலங்கொண்டு வணங்கிச்
செங்கை சென்னிமேல் குவிந்திடத்
திருமுன்பு சேர்ந்தார்.

பொழிப்புரை :

கங்கையைச் சூடிய நீண்ட சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் `திருக்கபாலீச்சரம்\' என்னும் திருக்கோயிலைச் சேர்ந்து, உயர்ந்த நீண்ட ஒளியுடைய கோபுரத்தைத் தொழுது, புகுந்தருளி, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் கோயிலை வலமாக வந்து வணங்கி, சிவந்த கை தலைமீது குவித்திடத் திருமுன்பு வந்து சேர்ந்தவராய்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1078

தேவ தேவனைத் திருக்கபா
லீச்சரத் தமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு
பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய
விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையால் போற்றினார்
ஞானசம் பந்தர்.

பொழிப்புரை :

தேவரின் தலைவராயுள்ள இறைவரை, திருக் கபாலீச்சரத்தில் அமர்ந்தருளிய அமுதம் போன்றவரை, உமையம் மையை ஒருகூற்றில் கொண்ட முதல்வரை, அன்பு பொருந்திய பண்பி னால் போற்றிப் பொருந்திய காதலால், விரும்பிய விரைவினால் நிலத்தில் பொருந்த விழுந்து, திருநாவில் பொருந்திய உண்மைத் திருவாக்கினால், ஞானசம்பந்தர் போற்றியருளினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 1079

போற்றி மெய்யருள் திறம்பெறு
பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறைமயிர்ப்
புளகங்கள் நெருங்கக்
கூற்ற டர்த்தவர் கோயிலின்
புறம்புபோந் தருளி
ஆற்றும் இன்னருள் வணிகர்மேற்
செலவருள் செய்வார்.

பொழிப்புரை :

அங்ஙனம் போற்றி, மெய்யருள் திறத்தைப் பெறும் இடைவிடாத எண்ணத்துடன் வணங்கி, திருநீறு பூசிய மேனி யில் நிறைவாக மயிர்க் கூச்செறிய, இயமனைக் காலினால் உதைத்து உருட்டிய இறைவரின் கோயிலின் வெளிப்புறத்தில் சென்று, செய் கின்ற இனிய அருள், வணிகரின் மீது செல்வதாய் அருளிச் செய்பவராய்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1080

ஒருமை உய்த்தநல் லுணர்வி
னீர்உல கவர்அறிய
அருமை யால்பெறும் மகள்என்பு
நிறைத்தஅக் குடத்தைப்
பெரும யானத்து நடம்புரி
வார்பெருங் கோயில்
திரும திற்புற வாய்தலில்
கொணர்கென்று செப்ப.

பொழிப்புரை :

`பெருமானின் அடிமைத் திறத்தில் ஒன்றித்து வைத்த உணர்வுடையீர்! உலகத்தவர் எல்லாம் அறியுமாறு, அரிய தவத்தின் பயனாய்ப் பெற்ற மகளுடைய எலும்பு நிறைந்த அக் குடத்தை, பெரிய மயானத்தில் கூத்தாடுகின்ற இறைவரின் கோயிலின் திருமதில் புறத்துத் திருவாயில் முன்னர்க் கொண்டு வருக\' எனக் கூறியருள,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1081

அந்த மில்பெரு மகிழ்ச்சியால்
அவனிமேல் பணிந்து
வந்து தந்திரு மனையினில்
மேவிஅம் மருங்கு
கந்த வார்பொழில் கன்னிமா
டத்தினில் புக்கு
வெந்த சாம்பலோ டென்புசேர்
குடத்தைவே றெடுத்து.

பொழிப்புரை :

எல்லையற்ற பெருமகிழ்ச்சியால் நிலத்தின் மீது விழுந்து வணங்கிக் கோயிலினின்றும் வந்து, தம் திரு இல்லத்துள் சேர்ந்து, அங்கு மணம் பொருந்திய நீண்ட சோலையிடையில் உள்ள கன்னி மாடத்தில் புகுந்து, மகளது உடல் வெந்தமையாலாய சாம் பலுடன் எலும்பையும் இட்டு வைத்த குடத்தை, பஞ்சணை முதலியவற் றினின்றும் வேறாய் எடுத்து வந்து,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1082

மூடு பன்மணிச் சிவிகையுள்
பெய்துமுன் போத
மாடு சேடியர் இனம்புடை
சூழ்ந்துவந் தணைய
ஆடல் மேவினார் திருக்கபா
லீச்சரம் அணைந்து
நீடு கோபுரத் தெதிர்மணிச்
சிவிகையை நீக்கி.

பொழிப்புரை :

பலமணிகளால் இழைக்கப்பெற்ற மூடிய சிவிகையுள் அக்குடத்தை இனிதாக வைத்து, அதனை முன்போக விட்டு, இருமருங்கிலும் தோழியர் கூட்டம் சூழ்ந்து வர, ஆடலைச் செய்யும் இறைவரின் திருக்கபாலீச்சரத்தைச் சேர்ந்து, நீண்ட கோபுரத் தின் வெளியே எதிரில், மணிச் சிவிகையின் திரையை விலக்கி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1083

அங்க ணாளர்தம் அபிமுகத்
தினில்அடி யுறைப்பால்
மங்கை என்புசேர் குடத்தினை
வைத்துமுன் வணங்கப்
பொங்கு நீள்புனற் புகலிகா
வலர்புவ னத்துத்
தங்கி வாழ்பவர்க் குறுதியாம்
நிலைமைசா திப்பார்.

பொழிப்புரை :

இறைவரின் திருமுன்பாக, அவரது திருவடியில் பதிந்த அன்பின் உறைப்பால், பெண்ணின் எலும்புடைய குடத்தை எடுத்து வைத்துப் பிள்ளையாரின் திருமுன்பு சிவநேசர் வணங்கி நிற்ப, பொங்கிவரும் பெருநீர்ச் சிறப்புடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், இவ்வுலகத்தில் இருந்துவரும் மக்களுக்கு உறுதிப் பொருள் இதுவாம் என நேரே காட்டியருள,

குறிப்புரை :

அபிமுகம் - திருமுன்பு.

பண் :

பாடல் எண் : 1084

மாடம் ஓங்கிய மயிலைமா
நகருளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றியில்
சமயத்தி னுள்ளோர்
மாடு சூழ்ந்துகாண் பதற்குவந்
தெய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர்
விசும்பிடை நெருங்க.

பொழிப்புரை :

மாடங்கள் ஓங்கிய மயிலைப் பெருநகரத்தில் உள்ளவர்களும், மற்றும் அந்நாட்டில் உள்ளவர்களும், நன்றி இல்லாத மற்ற சமயத்தில் உள்ளவர்களும், எம்மருங்கிலும் சூழ்ந்து, இதன் விளைவைக் காண்பதற்கு வந்து பெருகவும், நீடிய தேவர்களும் மற்றவர்களும் வானத்தில் நெருங்கவும்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1085

தொண்டர் தம்பெரும் குழாம்புடை
சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர
வாயில்நேர் அணைந்து
வண்டு வார்குழ லாள்என்பு
நிறைந்தமண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின்
பெருமையே கருதி.

பொழிப்புரை :

திருத்தொண்டர்கள் தம் அருகே சூழ்ந்து வரவும், பழமையான தேவரது கோபுர வாயிலின் நேரில் வந்து சேர்ந்து, வண்டுகள் தங்கும் நீண்ட கூந்தலையுடைய பூம்பாவையாரின் எலும்பு நிறைந்த அம் மண்குடத்தை, அருட்பார்வை செய்து, இறைவரின் கருணையின் பெருமையை உள்ளத்துள் பெரிதும் நினைந்து,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1086

இந்த மாநிலத் திறந்துளோர்
என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட
நன்மையாந் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம்
எனவருள் நோக்கால்
சிந்தும் அங்கம்அங் குடையபூம்
பாவைபேர் செப்பி.

பொழிப்புரை :

இவ்வுலகத்தில் இறந்தவரின் எலும்பை, மேலும் பெரிய நன்னெறியில் பொருந்தியிட, நன்மையாகின்ற தன்மையா னது அவ்வெலும்புடன் கூடிய தொடர்ச்சியால் ஆவதாகும் என்று எண்ணிய அருள் நோக்கத்தினால், சிந்திய அந்த எலும்பை, முன் உடம்பில் வாழ்ந்த பூம்பாவை என்ற பெயரால் விளித்துச் சொல்லி அருளி,

குறிப்புரை :

என்புக் குடத்தை நோக்கிப் பூம்பாவை என்றது, எலும்பும் அதனொடு கூடிய தசைத் திரளாய உடம்பும், அதனுள் வாழும் உயிருமாய் நின்ற முன் தொடர்ச்சி பற்றியாம். எலும்பை வைத்துச் செய்யும் நற்செயல், அதனொடு தொடர்புற்றிருந்த உடற்கும், அதனோடு இயைந்து வாழ்ந்த உயிர்க்கும் ஆதலினாற்றான் இன்றும் அத்தகைய நற்செயல்கள் நடைபெற்று வருகின்றன. `என்போடி யைந்த தொடர்பு\' (குறள், 73) எனத் திருவள்ளுவர் இத்தொடர்ச்சி யைக் கூறுவதும் காண்க. நந்துதல் - பெரிதாதல்; தழைத்தல்.

பண் :

பாடல் எண் : 1087

மண்ணி னில்பிறந் தார்பெறும்
பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை
அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப்
பொலிவுகண்டு ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன்
வருகஎன வுரைப்பார்.

பொழிப்புரை :

`இம்மண்ணுலகத்தில் வினைக்கு ஈடாக வந்து பிறந்த உயிர்கள், பெறும் பிறவிப் பயனாகிய உறுதிப் பொருள்களா வன, பிறையை அணியும் பெருமானின் அடியவர் தமக்குத் திரு வமுது செய்வித்தலும், கண்களால் அவ்வடியவர்களின் உள்ளத்து உயிர்க்கு உயிராய் நிற்கும் இறைவரின் திருவிழாக்களின் பெரும் பொலிவைக் கண்டு மகிழ்தலும் ஆய இவ்விரண்டுமே என்பது உண்மையானால், பூம்பாவையே! இவ்வுலகத்தார் முன் உடலும் உயிரும் பொருந்த வருவாயாக! எனச் சூள் செய்து எடுத்துச் சொல்பவராய்,

குறிப்புரை :

`அண்ணலார் அடியார்\' என இருசொற்கள் முன் இருத் தலின், பின்வரும் அவர் என்ற சுட்டு இறைவர், அடியவர் ஆகிய இரு வரையும் குறிக்கும். எனினும், பதிகப் பொருண்மை வகையால் இறை வர் என்றே கொள்ளத்தகும். `உருத்திரபல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ\' என முதற் பாட்டில் வருதல் கண்டு, அண்ண லார் அடியார் தமை அமுது செய்வித்தலை முன்னர்க் கூறினார். அடுத்து வரும் பாடல்களிலெல்லாம், இறைவற்கு எடுக்கும் விழாக்க ளைக் குறித்துத் தனித்தனியே அவ்வவ் விழாக்களையும் `காணாதே போதியோ\' எனக் குறித்தலின், கண்ணினால் அவர்தம் (இறைவர்) நல்விழாக் காண்டலை இரண்டாவதாகக் குறித்தார்.

பண் :

பாடல் எண் : 1088

மன்னு வார்சடை யாரைமுன்
தொழுதுமட் டிட்ட
என்னும் நற்பதி கத்தினில்
போதியோ என்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனும்
அமுதமவ் வங்கம்
துன்ன வந்துவந் துருவமாய்த்
தொக்கதக் குடத்துள்.

பொழிப்புரை :

நிலைபெற்ற நீண்ட சடையையுடைய இறைவ ரைத் தொழுது `மட்டிட்ட\' எனத் தொடங்கும் அந்தத் திருப்பதிகத்தில் `போதியோ\' என்றுகூறும் அந்த மெய்த் திருவாக்கு என்னும் அமுதமா னது, அக்குடத்தினுள் இருந்த எலும்பினுள்ளே வந்துவந்து பொருந் தப் பெண்ணுருவமாகக் கூடியது.

குறிப்புரை :

`மட்டிட்ட\' (தி.2 ப.47) எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணிலமைந்ததாகும். `போதியோ\' என்றவிடத் தமைந்த ஓகாரம், `போகமாட்டாய், மீண்டும் வந்து விடுவாய்\' எனப் பொருள் படுதலின் எதிர்மறைப் பொருளதாம். ஞானத்தின் திருவுருவாய் நின்றருளும் பிள்ளையாரின் திருவாயில், இவ்வரிய சொல் வருத லின், ஆசிரியர் இதனை `மெய்த் திருவாக்கு\' என்றார். அன்றியும் ஓகாரம் பிரணவமாதலும் அறியத்தக்கதாகும். பாடல்தொறும் வரும் அவ்வரிய திருவாக்கு எலும்பினுள் வந்து வந்து பொருந்த அரிய பெண்ணுருவாயது.

பண் :

பாடல் எண் : 1089

ஆன தன்மையில் அத்திருப்
பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும்
பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத் தடங்கிமுன்
னிருந்தெழு வதன்முன்
ஞான போனகர் பின்சமண்
பாட்டினை நவில்வார்.

பொழிப்புரை :

முன் நான்கு பாட்டுகளில் கூறிய அத்தகைய தன்மையால் `மட்டிட்ட\' எனத் தொடங்கிய அத்திருப்பாட்டைத் தொடர்ந்து முறையே பாடுந்தோறும், போன உயிரும் உருவம் பெறும் உறுப்புப் பகுதிகளும் அழகுபட முறையாய் நிரம்பி, வேறாகிய அக்குடத்தில் முன்பு தொக்குக் கூடியிருந்து உரியபடி வெளிப்பட்டு எழுவதன் முன்பு ஞானஅமுது உண்ட சம்பந்தப் பெருமான், பின் முறையாய் அருளும் சமண் பாட்டான பத்தாம் திருப்பாட்டை அருளிச் செய்பவராகி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1090

தேற்ற மில்சமண் சாக்கியத்
திண்ணர்இச் செய்கை
ஏற்ற தன்றென எடுத்துரைப்
பார்என்ற போது
கோற்றொ டிச்செங்கை தோற்றிடக்
குடமுடைந் தெழுவாள்
போற்று தாமரைப் போதவிழ்ந்
தெழுந்தனள் போன்றாள்.

பொழிப்புரை :

முன் நான்கு பாட்டுகளில் கூறிய அத்தகைய தன்மையால் `மட்டிட்ட\' எனத் தொடங்கிய அத்திருப்பாட்டைத் தொடர்ந்து முறையே பாடுந்தோறும், போன உயிரும் உருவம் பெறும் உறுப்புப் பகுதிகளும் அழகுபட முறையாய் நிரம்பி, வேறாகிய அக்குடத்தில் முன்பு தொக்குக் கூடியிருந்து உரியபடி வெளிப்பட்டு எழுவதன் முன்பு ஞானஅமுது உண்ட சம்பந்தப் பெருமான், பின் முறையாய் அருளும் சமண் பாட்டான பத்தாம் திருப்பாட்டை அருளிச் செய்பவராகி,

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1091

எடுத்த பாட்டினில்வடிவுபெற்
றிருநான்கு திருப்பாட்
டடுத்த அம்முறைப் பன்னிரண்
டாண்டள வணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில்
தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக்
காப்புமேல் விரித்தார்.

பொழிப்புரை :

`மட்டிட்ட\' எனத் தொடங்கிய பாட்டில் பாவை யார் வடிவத்தைப் பெற்று, அதன்மேல் அருளிய எட்டுத் திருப்பாட்டு களில் அம்முறையே பன்னிரண்டு ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியைப் பெற்றுத் தொடுத்த கொடிய சமணர் பாட்டை அருளிய அளவில், குட மானது உடைந்து, பூம்பாவை வெளிப்பட்டுத் தோன்றக் கண்டு, பற்றற்ற பான்மை யுடைய பிள்ளையார், அதன்பின் திருக்கடைக் காப்பை விரித்துக் கூறினார்.

குறிப்புரை :

எடுத்த பாட்டு - இப்பதிகத்தின் முதற் பாடல். அதனைப் பாடிய அளவில், அவ்வென்பும் சாம்பலும் உயிருடன் கூடத் தொடங்கி ஒரு வடிவு பெற்றன. அடுத்து அருளப் பெற்ற எட்டுப் பாடல்களையும், ஒவ்வொன்றாய் அருளப் பெற்ற நிலையில், அவ்வடிவும் வளரப்பெற்று பன்னிரண்டாண்டு நிரம்பப் பெற்ற பூம்பாவை யாயினள். பாம்பு தீண்டி இறந்தது ஏழாவது ஆண்டில் ஆகும். இதுபொழுது பன்னிரண்டு ஆண்டாய் நிரம்பினள் எனவே, அப்பெண் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னையது இந்நிகழ்ச்சி என்பதும் அறியத்தக்கதாகும். திருக்கடைக்காப்பில் இப்பதிகம் பூம்பாவைப் பாட்டு என்றே குறிக்கப் பெற்றுள்ளது.

பண் :

பாடல் எண் : 1092

ஆங்கனம் எழுந்து நின்ற
அணங்கினை நோக்கு வார்கள்
ஈங்கிது காணீர் என்னா
அற்புத மெய்தும் வேலைப்
பாங்குசூழ் தொண்ட ரானோர்
அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய வோசை யும்பர்
நாட்டினை உற்ற தன்றே.

பொழிப்புரை :

அவ்வாறு தோன்றிய தெய்வ நலம் வாய்ந்த பூம்பாவையாரைப் பார்த்தவர் எல்லாம் `இங்கு இதனைப் பாரீர்\' என்று எடுத்துச் சொல்லி அற்புதத்தை அடைந்த போது, அருகில் சூழ்ந்திருந்த திருத்தொண்டர்கள் `அரகர\' என்று இவ்வுலகத்தில் முழங்கிய பேரொலி, அப்போதே சென்று வானுலகத்தை அடைந்தது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1093

தேவரும் முனிவர் தாமும்
திருவருட் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொள் மாரி
பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம்
எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி
மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்.

பொழிப்புரை :

வானத்தில் நெருங்கிய தேவர்கள் முனிவர்கள் முதலானவர்கள் சிவபெருமானின் திருவருட் சிறப்பை நோக்கித் தெய்வ மரங்களின் மலர்களால் ஆன மணமுடைய மலர் மழையைப் பெய்தனர். முன்கூறப்பட்டவர்கள் ஒழிய, மற்றவர்கள் எல்லோரும் `இங்ஙனம் நிகழ்ந்த இவ்விளைவின் வண்ணம் எம்தலைவரான சிவபெருமானின் திருவருட்கருணையே யாகும்\' எனச் சொல்லிப் பொருந்திய கைகளை உச்சிமீது குவித்து வணங்கி, நிலத்தில் விழுந்து தொழுதனர்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1094

அங்கவள் உருவங் காண்பார்
அதிசயம் மிகவும் எய்திப்
பங்கமுற் றாரே போன்றார்
பரசம யத்தி னுள்ளோர்
எங்குள செய்கை தான்மற்
றென்செய்த வாறி தென்று
சங்கையாம் உணர்வு கொள்ளும்
சமணர்தள் ளாடி வீழ்ந்தார்.

பொழிப்புரை :

அங்கு அப்பூம்பாவையின் வடிவத்தைக் காண்பவரான மற்ற சமயத்தில் உள்ளவர்கள், மிக்க அதிசயம் அடைந்து, இச்செய்தியால் தம்தம் சமயங்களும் மறுத்து ஒதுக்கப்பட அவ்வவரும் தோல்வி அடைந்தவர் போல் ஆயினர். இச்செய்கை எங்குத் தான் உள்ளது? எவ்வாறு செயல்பட்டது? எனத் துணிய மாட்டாமல் ஐயம் கொண்ட சமணர், தள்ளாடி நிலத்தில் தடுமாறி விழுந்தனர்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1095

கன்னிதன் வனப்புத் தன்னைக்
கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க் கெல்லாம்
மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா
மரையின்மேல் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற
சூழல்போ லிருண்டு தோன்ற.

பொழிப்புரை :

பூம்பாவையாரின் அழகு முழுமையும், தம் கண்களால் முற்றும் காணாதவராகி அவ்வளவில் அமைந்தார்க்கு எல்லாம், தோன்றிய நிலையாவது, செறிந்து வளர்ந்த கருமையான கூந்தலான பளுவைப் பொருந்திய முகமான செந்தாமரையில், கரிய வண்டுக் கூட்டம் நெருங்கி மொய்த்து வரிசையாகச் சூழந்திருந்தாற் போன்று கரிய நிறம் அடைந்து காணப்படவும்,

குறிப்புரை :

செந்தாமரையில் வண்டின் கூட்டம் மொய்த்திருந்தாற் போல, முகத்தின் மேலதாகக் கூந்தல் அமைந்திருந்தது.

பண் :

பாடல் எண் : 1096

பாங்கணி சுரும்பு மொய்த்த
பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ் ஆரம் சேரும்
திருநுதல் விளக்கம் நோக்கில்
பூங்கொடிக் கழகின் மாரி
பொழிந்திடப் புயற்கீ ழிட்ட
வாங்கிய வான வில்லின்
வளரொளி வனப்பு வாய்ப்ப.

பொழிப்புரை :

பக்கத்தில் அழகிய வண்டுகள் மொய்த்த குளிர்ந்த பூக்களை அணிந்த கூந்தல் ஒழுங்கின் கீழ், மணம் வீசும் திலகம் அணிந்த நெற்றிப் பொலிவைப் பார்க்கில், பூம்பாவையரான பூங்கொடிக்கு அழகின்மழை பொழியும் பொருட்டாக மேகத்தின் கீழே இட்ட வளைந்த வானவில்லின் மிக்க ஒளி பொருந்திய அழகு பொருந்தவும்,

குறிப்புரை :

கூந்தலைச் சேர்ந்து இருந்த நெற்றி, மேகத்தின் கீழிருந்த வானவில்லைப் போன்றது.

பண் :

பாடல் எண் : 1097

புருவமென் கொடிகள் பண்டு
புரமெரித் தவர்தம் நெற்றி
ஒருவிழி எரியில் நீறா
யருள்பெற உளனாம் காமன்
செருவெழும் தனுவ தொன்றும்
சேமவில் லொன்றும் ஆக
இருபெருஞ் சிலைகள் முன்கொண்
டெழுந்தன போல ஏற்ப.

பொழிப்புரை :

புருவம் என்ற இரண்டு கொடிகள், முற்காலத்தில் முப்புரம் எரித்த சிவபெருமானின் நெற்றித் தனிக்கண்ணில் வந்த தீயினால் சாம்பலாகிப் பின், அருள் பெற உள்ளவனான காமனின் போரில் ஏந்திய வில் ஒன்றும் சேமமாய் வைக்கப்படும் வில் ஒன்றுமாக இருபெரு விற்களின் தன்மையை முன்னே கொண்டு தோன்றி எழுந்தாற்போல் அழகு செய்ய,

குறிப்புரை :

நெற்றியின்கீழ் அமைந்த இருபுருவங்களும், மன்மதன் கைக்கொண்டிருந்த இருபெரு விற்கள் என இருந்தன. `அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப் படைவழங்குவதோர் பண்பு உண்டாகலின், உருவிலாளன் ஒருபெருங் கருப்புவில், இருகரும் புருவமாக நிற்க\' (சிலப்பதி.- புகார்க். மனையறம் 42 - 44) என இளங்கோவடிகள் கூறியதும் நினைவு கூர்தற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 1098

மண்ணிய மணியின் செய்ய
வளரொளி மேனி யாள்தன்
கண்ணிணை வனப்புக் காணில்
காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய
கயலிரண் டொத்து லாவ.

பொழிப்புரை :

கடைந்தெடுத்த மாணிக்கத்தினும் செம்மையாய ஒளிபொருந்திய மேனியைக் கொண்ட பாவையாரின் இரண்டு கண் களின் அழகானது, அழகுமிக்க முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்று உலாவ,

குறிப்புரை :

கண்கள் இரண்டும், ஒருநிலா வெள்ளத்தில் இரு கயல்கள் உலாவுவன போலிருந்தன.

பண் :

பாடல் எண் : 1099

பணிவளர் அல்குல் பாவை
நாசியும் பவள வாயும்
நணியபே ரொளியில் தோன்றும்
நலத்தினை நாடு வார்க்கு
மணிநிறக் கோபங் கண்டு
மற்றது வவ்வத் தாழும்
அணிநிறக் காம ரூபி
அனையதாம் அழகு காட்ட.

பொழிப்புரை :

கண்கள் இரண்டும், ஒருநிலா வெள்ளத்தில் இரு கயல்கள் உலாவுவன போலிருந்தன.

குறிப்புரை :

காமரூபி - பச்சோந்தி. வேண்டியவாறு நிறம் கொள்ளும் இயல்பினது. வாய் இந்திர கோபப் பூச்சியையும், மூக்குப் பச்சோந்தி யையும் ஒத்தன. நீண்டிருக்கும் மூக்கின் கீழ் வாய் இருப்பது கவரவரும் பச்சோந்தியின் கீழ்க் கோபப் பூச்சிஇருப்பதைப் போன்றது. வடிவும் நிறமும் பற்றி வந்த உவமை.

பண் :

பாடல் எண் : 1100

இளமயில் அனைய சாயல்
ஏந்திழை குழைகொள் காது
வளமிகு வனப்பி னாலும்
வடிந்ததா ளுடைமை யாலும்
கிளரொளி மகர ஏறு
கெழுமிய தன்மை யாலும்
அளவில்சீர் அனங்கன் வென்றிக்
கொடியிரண் டனைய வாக.

பொழிப்புரை :

இளம் மயிலைப் போன்ற சாயலையுடைய ஏந்திய இழை அணிந்த பூம்பாவையின் காதணி அணிந்த காதுகள், வளமான அழகாலும் வடிந்த காதுத்தண்டை உடைமையாலும் மிக்க ஒளியுடைய ஆண் சுறா மீனானது பொருந்திய தன்மையினாலும் அளவில்லாத சிறப்புடைய மன்மதனின் வெற்றிக்கொடியான மீனக் கொடிகளைப் போன்று விளங்க,

குறிப்புரை :

இளம் மயிலைப் போன்ற சாயலையுடைய ஏந்திய இழை அணிந்த பூம்பாவையின் காதணி அணிந்த காதுகள், வளமான அழகாலும் வடிந்த காதுத்தண்டை உடைமையாலும் மிக்க ஒளியுடைய ஆண் சுறா மீனானது பொருந்திய தன்மையினாலும் அளவில்லாத சிறப்புடைய மன்மதனின் வெற்றிக்கொடியான மீனக் கொடிகளைப் போன்று விளங்க,

பண் :

பாடல் எண் : 1101

விற்பொலி தரளக் கோவை
விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதன மாகும்
பதுமநன் னிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும்
நன்னிதி போன்று தோன்றி
அற்பொலி கண்டர் தந்த
அருட்கடை யாளங் காட்ட.

பொழிப்புரை :

ஒளி திகழும் முத்துக் கோவைகள் விளங்கும் கழுத்து, நல்ல பெரிய சங்கம் என்னும் நிதியைப் போன்றும், அதன்மீது விளங்கும் அழகமைந்த முகம் பதும நிதியைப் போன்றும் தோன்றி விளங்குவது, இருள்போலும் கரிய நஞ்சு விளங்கிய கழுத்தையுடைய திருநீலகண்டரான இறைவர் தந்த பெருங் கருணைக்கு அடையாளத் தைக் காட்ட,

குறிப்புரை :

தாமரை முகத்திற்கும், சங்கு கழுத்திற்கும் உவமையாம். ஆசிரியர் சேக்கிழார் இவ்விரண்டையும் முறையே பதும நிதி, சங்க நிதி என உருவகித்து, அவை யிரண்டும் அழகுபெற அமைந்தாற் போலப் பாவையாரின் முகமும் கழுத்தும் விளங்கின என்றார். இவ்விரு நிதியினையும் வழங்கத்தக்கவன் இறைவனே. இச்செல்வியா ரும் அப்பெருமானின் அருளால் தோன்றியவராதலின், அதற்குரிய அடையாளங்களைக் காட்டி விளங்குபவராயினார் என ஆசிரியர் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 1102

எரியவிழ் காந்தள் மென்பூத்
தலைதொடுத் திசைய வைத்துத்
திரள்பெறச் சுருக்குஞ் செச்சை
மாலையோ தெரியின் வேறு
கருநெடுங் கயற்கண் மங்கை
கைகளால் காந்தி வெள்ளம்
அருகிழிந் தனவோ என்னும்
அதிசயம் வடிவில் தோன்ற.

பொழிப்புரை :

கரிய நீண்ட கயல்மீன் போன்ற கண்களை உடைய பாவையாரின் கைகளைக் காணும்போது, தீயைப் போல் மலர்ந்த மெல்லிய செங்காந்தள் பூக்களைத் தலைத்தலை பொருந்தத் தொடுத்துப் பொருந்துமாறு வைத்து அதன் திரட்சி வரவரச் சுருங்கி வருமாறு அமைந்த வெட்சிப் பூ மாலையோ, அதுவன்றி வேறொரு வகையால் ஆராயுமிடத்து உடலில் உள்ள மேனியின் ஒளி மிகுதி இரு பக்கங்களிலும் மிகுந்து வழிந்தனவோ எனும் அதிசயம் தோன்ற அக்கைகள் அமைய,

குறிப்புரை :

தோளினிடமாகத் தோன்றிய இருகைகளும் மேலே பருத்தும், வரவரச் சிறுத்தும் இருக்கும். அதற்குக் காந்தட் பூக்களைத் தலையில் கொண்டு, கீழ் வரவர வெட்சிப் பூவைத் தொடுத்துக் கட்டிய மாலையை உவமை கூறினார். அக்கைகளின் ஒளிக்கு உடலின் ஒளி இரு மருங்கும் வழிந்தொழுகியது போல்வது என்றார். இவ்வுவமை யழகுகள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்தன.

பண் :

பாடல் எண் : 1103

ஏர்கெழு மார்பிற் பொங்கும்
ஏந்திளங் கொங்கை நாகக்
கார்கெழு விடத்தை நீக்குங்
கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர்திரு வருளிற் பூரித்
தடங்கிய அமுத கும்பச்
சீர்கெழு முகிழைக் காட்டுஞ்
செவ்வியில் திகழ்ந்து தோன்ற.

பொழிப்புரை :

அழகு பொருந்திய மார்பில் பெருகி எழுகின்ற மார்பகங்கள், பாம்பின் கரிய நஞ்சைப் போக்கும் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தப் பெருமானின் நோக்கத்தால் பொருந்திய திருவருள் என்னும் அமுதத்தால் நிறையப் பெற்று, அமைந்த கும்பத் தினை மேல் மூடிய முகிழ் போன்ற தன்மையில் விளங்கித் தோன்ற,

குறிப்புரை :

`போகம் ஆர்த்த பூண்முலையாள்\' (தி.1 ப.49 பா.1) என அன்னையின் மார்பகங்கள் போற்றப்படுதல் போல, இப்பாவையின் மார்பகங்களும் திருவருள் ஆர்த்த பூண் முலையாக விளங்குகின்றன என ஆசிரியர் திருவுள்ளம் பற்றுகின்றார்.

பண் :

பாடல் எண் : 1104

காமவேள் என்னும் வேடன்
உந்தியிற் கரந்து கொங்கை
நேமியம் புட்கள் தம்மை
யகப்பட நேரி தாய
தாமநீள் கண்ணி சேர்த்த
சலாகைதூக் கியதே போலும்
வாமமே கலைசூழ் வல்லி
மருங்கின்மேல் உரோம வல்லி.

பொழிப்புரை :

அழகிய மேகலை என்ற அணியை அணிந்த கொடியைப் போன்ற பூம்பாவையாரின் இடையை அடுத்த கொப்பூழி னின்று தொடங்கி மேல் எழும் மயிர் ஒழுங்கானது, காமன் என்ற வேடன் கொப்பூழுக்குள் மறைந்திருந்து மேலே உள்ள கொங்கைகள் என்ற அழகிய சக்கரவாளப் பறவைகளைப் பிடிப்பதற்கு நேரான கயிற்றில் நீண்ட கண்ணிகளைக் கோத்த ஓர் அம்பினை உயர்த்தியது போல விளங்கிட,

குறிப்புரை :

மார்பகங்களுக்குச் சக்கரவாளப் பறவைகளும், உந்தியிலிருந்து மேற்செல்லும் மயிர் ஒழுங்கிற்கு மன்மதனின் அம்பும் உவமையாயின.

பண் :

பாடல் எண் : 1105

பிணியவிழ் மலர்மென் கூந்தல்
பெண்ணமு தனையாள் செம்பொன்
அணிவளர் அல்குல் தங்கள்
அரவுசெய் பிழையால் அஞ்சி
மணிகிளர் காஞ்சி சூழ்ந்து
வனப்புடை அல்கு லாகிப்
பணியுல காளும் சேடன்
பணம்விரித் தடைதல் காட்ட.

பொழிப்புரை :

கட்டவிழ்ந்த மலர்களைச் சூடிய மென்மையான கூந்தலையுடைய பெண்களுள் அமுதத்தை ஒத்த பூம்பாவையாரது செம்பொன் அணிகளை அணிந்த அல்குலானது, நாக உலகத்தை ஆளும் ஆதிசேடன் தம் உறவாகியதொரு பாம்பு, பூம்பாவையைத் தீண்டிய பிழையின் பொருட்டு, அச்சம் கொண்டு, செம்மணிகள் விளங்கும் காஞ்சி என்னும் எட்டுக் கோவை வடத்தால் சூழப்பெற்று அழகுடைய அல்குலாகிப் படத்தை விரித்துச் சேர்கின்ற தோற்றத்தைக் காட்ட,

குறிப்புரை :

: அல்குலுக்கு ஆதிசேடனின் படத்தை உவமை காட்டிய ஆசிரியர், தற்குறிப்பேற்றமாக அதற்கு ஒரு காரணமும் கூறினர்.

பண் :

பாடல் எண் : 1106

வரிமயில் அனைய சாயல்
மங்கைபொற் குறங்கின் மாமை
கரியிளம் பிடிக்கை வென்று
கதலிமென் தண்டு காட்டத்
தெரிவுறு மவர்க்கு மென்மைச்
செழுமுழந் தாளின் செவ்வி
புரிவுறு பொற்பந் தென்னப்
பொலிந்தொளி விளங்கிப் பொங்க.

பொழிப்புரை :

வரி பொருந்திய மயில் போன்ற சாயலைக் கொண்ட பாவையாரின் பொன் போன்ற தொடைகளின் அழகானது, இளம் பெண் யானையின் துதிக்கையின் அழகை வெற்றி கொண்டு, வாழையின் மெல்லிய தண்டின் அழகையும் புலப்படுத்திக் காட்டக் காண்பவர்க்கு மென்மையுடைய செழுமையான முழந்தாளின் அழகானது கைத்திறம் அமைந்த பொன்னால் ஆன பந்தைப் போல விளங்கி ஒளி பொருந்திப் பெருக,

குறிப்புரை :

தொடைக்குப் பெண்யானையின் துதிக்கையும், வாழைத்தண்டும் உவமையாதல், `ஈர்ந்து நிலம் தோயும் இரும்பிடித் தடக்கையிற், சேர்ந்துடன் செறிந்த குறங்கு, குறங்கென மால்வரை ஒழுகிய வாழை\' (தண்டியலங்காரம்) எனவரும் வாக்காலும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 1107

பூவலர் நறுமென் கூந்தல்
பொற்கொடி கணைக்கால் காமன்
ஆவநா ழிகையே போலும்
அழகினின் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின்
வனப்பினை மீதிட் டென்றும்
ஓவியர்க் கெழுத ஒண்ணாப்
பரட்டொளி ஒளிர்வுற் றோங்க.

பொழிப்புரை :

மலர்கள் மலர்வதற்கு இடமான மென்மையான கூந்தலையுடைய பொற்கொடி போன்ற பாவையாரின் கணைக்கால், காமனின் அம்பறாத் துணியே போன்ற அழகால், மேன்மை பொருந்த, பொருந்திய செம்பொன்னால் ஆன துலாத் தட்டின் அழகை வெற்றி கொண்டு, எக்காலத்தும் சித்திரம் தீட்டுவோர்க்கும் எழுத இயலாத கணைக்காலின் ஒளி விளங்கித் தோன்ற,

குறிப்புரை :

கணைக்காலிற்குக் காமனின் அம்புப் புட்டிலும் தராசுத் தட்டும் உவமையாகின்றன.

பண் :

பாடல் எண் : 1108

கற்பகம் ஈன்ற செவ்விக்
காமரு பவளச் சோதிப்
பொற்றிரள் வயிரப் பத்திப்
பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட
ஞாலமும் விசும்பும் எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி
அழகினுக் கணியாய் நின்றாள்.

பொழிப்புரை :

கற்பக மரம் தந்த சிவந்த அழகிய பவளத்தின் ஒளி வீசும் பொன் திரளுடன் வயிர வரிசைகளையுடைய மலர்க் கொத் துகள் மலர்ந்தவை போன்ற அழகை நல்ல அடிகள் புலப்படுத்த, இம் மண்ணுலகமும் விண்ணுலகமும் மற்ற எல்லா உலகங்களும் அற்புதம் பொருந்தத் தோன்றி அழகுக்கு அழகு செய்யும் பொருளாக நின்றார்.

குறிப்புரை :

இந்நூலுள் முடிமுதல் அடிவரை வருணிக்கப்பட்ட பாவை இப்பூம்பாவையாரே யாவர். காரணம், கண்ணுதல் கருணை வெள்ளத்தால் தோன்றியமையே யாகும். இப் பதினான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1109

எண்ணில்ஆண் டெய்தும் வேதாப்
படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தால் கண்டான்
அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு
பேர்பெறும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிர முகத்தாற் கண்டார்.

பொழிப்புரை :

அளவற்ற ஆண்டுகள் கழிந்த நான்முகன், தான் படைத்த திலோத்தமை என்ற மங்கையின் அழகின் வண்ணங்களைத் தனக்குள்ள நான்கு முகங்களால் கண்டு மகிழ்ந்தான். அவளை விட மேலான நலங்கள் பலவும் அமைந்த பூம்பாவையாரிடம், பதினாறு ஆண்டு எனக் கணக்கிடத்தகும் சீகாழித் தலைவராம் ஞானசம்பந்தர், நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் அருட் பெருக்கையே ஆயிர முகங்களால் காண்பார் ஆயினார்.

குறிப்புரை :

நான்முகனுக்கும் காழிச்செல்வருக்கும் உளவாகும் இடையீடு பெரிதாமாற்றை, ஆசிரியர் சேக்கிழார் இப்பாடலில் காட்டிப் பெரிதும் மகிழ்விக்கின்றார்.
நான்முகன், எண்ணில் ஆண்டு எய்தியவன். வயது முதிர்ந்த வன். தம்மால் படைக்கப்பட்டவள் திலோத்தமை. மகண்மை முறையி னள். அத்திலோத்தமையின் அழகைத் தன் நான்முகங்களாலும் கண்டு, அவளை விரும்பினன்.
பிள்ளையார், பதினாறு ஆண்டு வயதை நெருங்கும் மிக இளைஞர். அவர்தம் திருவருள் திறத்தால் தோற்றுவிக்கப்பட்டவர் பூம் பாவையார். சிவநேசர் மகளாயிருந்த நிலையில் இவருக்கென உரிமை யாக்கப் பெற்றவர். திருவருள் வயத்தால் தம்மால் தோற்றுவிக்கப்பட்ட மகண்மை முறையையும், திருவருள் திறத்தையுமே நினைந்து தம் ஆயிரம் திருமுகங்களானும் அத்திருவருள் பொலிவாகவே கண்டார். இதற்குக் காரணம் என்ன? நான்முகன் படைப்புத் தொழிற்கு உரியவனாயினும், கலையறிவையே (வேதா) பெற்றவன். காழிப் பிள்ளையாரோ அம்மையாரின் பாலமுதத்தோடு சிவஞானமும் குழைத்து ஊட்டப் பெற்றவர். ஆதலின் அந்நான்முகன் பார்வை யினும் இவர் பார்வை வேறுபட்டும் உயர்ந்தும் இருப்பதாயிற்று. `நூலுணர்வு உணரா நுண்ணியோன் காண்க\' (தி.8 ப.3 வ.49), `நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக\' (தி.11 ப.4 பா.33) என்றல் தொடக்கத்தனவாய திருவாக்குகள் எள்ளளவும் மறக்கப் போமோ?

பண் :

பாடல் எண் : 1110

இன்னணம் விளங்கிய ஏர்கொள் சாயலாள்
தன்னைமுன் கண்ணுறக் கண்ட தாதையார்
பொன்னணி மாளிகைப் புகலி வேந்தர்தாள்
சென்னியிற் பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர்.

பொழிப்புரை :

இங்ஙனம் விளங்கிய அழகுடைய மென்மை யான சாயலையுடைய பூம்பாவையைக் கண்முன் பார்த்த தந்தையா ராகிய சிவநேசர், பொன்னால் அணியப்பட்ட மாளிகைகளை உடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளைத் தம் தலையில் பொருந்தும்படி முன்சென்று வீழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1111

அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம்புரி யரவரைப் பரமர் முன்பணிந்
திணங்கிய முகில்மதில் சண்பை யேந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணு ளோர்தொழ.

பொழிப்புரை :

: திருமகளினும் மேன்மையுடையவராய் அன் னம் போன்றவரான பூம்பாவையார், படம் பொருந்திய ஐந்து தலைப் பாம்பை அரையில் அணிந்த கபாலீச்சுரரை முன் வணங்கி, அதைக் கண்ட உலகத்தவர் தொழுமாறு, மேகம் தவழும் மதில்களை உடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரை வணங்கி நின்றார்.

குறிப்புரை :

பூம்பாவையார், முன்னர் இறைவனை வணங்கிப் பின் னர்ப் பிள்ளையாரை வணங்கி நின்றது உலகத்தவரும் ஏற்றுப் போற்று தற்குரியதாகும்.

பண் :

பாடல் எண் : 1112

சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே
கார்கெழு சோலைசூழ் காழி மன்னவர்
ஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டினிப்
பார்கெழு மனையினிற் படர்மின் என்றலும்.

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய சிவநேசரை, முன்னம் மேகம் சூழ்ந்த சோலைகள் பெருகிய சீகாழித் தலைவர், `அழகால் மிகச் சிறப்புடைய உம்மகளை உலகில் ஓங்கி விளங்கும் இல்லத்துக்கு இனி அழைத்துச் செல்வீர்\' என்று அருளிச் செய்யவும்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1113

பெருகிய அருள்பெறும் வணிகர் பிள்ளையார்
மருவுதா மரையடி வணங்கிப் போற்றிநின்
றருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்தருள் செய்யும் என்றலும்.

பொழிப்புரை :

பெருகிய திருவருளைப் பெற்ற வணிகரான சிவநேசர், ஞானசம்பந்தரின் தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்கிப் போற்றி நின்று, `அடியேன் அருமையாய்ப் பெற்றெடுத்த இப்பூம்பாவைப் பெண்ணை மணம் கொண்டருளும்\' என வேண்டிக் கொள்ளவும்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1114

மற்றவர் தமக்குவண் புகலி வாணர்நீர்
பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரைத காதென.

பொழிப்புரை :

அவ்வாறு வேண்டிக் கொண்ட வணிகரான சிவநேசரைப் பார்த்து, வளம் பொருந்திய சீகாழிச் செல்வரான ஞான சம்பந்தர், `நீவிர் பெற்ற பெண் நஞ்சினால் இறந்த பின்பு, தொகுதியான நீண்ட சடையையுடைய கபாலீச்சுரரின் அருள் விளங்க மீளவும் நான் உயிர் பெறச் செய்தலால், நீவிர் சொல்லும் அச் சொல் பொருந்தாது!\' என்று கூறியருள,

குறிப்புரை :

மகளாராகிய நிலையில் மணக்கச் சொல்லுதல் தகாது என்றார். கோட்புலியார் மகளாரைச் சுந்தரர் மகண்மையாகக் கொண் டதையும் எண்ணுக.

பண் :

பாடல் எண் : 1115

வணிகருஞ் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமல ரடியில்வீழ்ந் தரற்ற ஆங்கவர்
தணிவில்நீள் பெருந்துயர் தணிய வேதநூல்
துணிவினை யருள்செய்தார் தூய வாய்மையார்.

பொழிப்புரை :

வணிகரான சிவநேசரும் அவருடைய சுற்றத் தவரும் அதைக் கேட்டு மயங்கி, ஞானசம்பந்தரின் அழகிய மலரடிக ளில் விழுந்து பலவும் கூறிக் குறையிரந்து அழுது புலம்பக் கண்டு, அப்போது அவர்களின் ஆற்ற இயலாத நீண்ட பெருந்துன்பம் தணியு மாறு, தூய்மையான வாய்மையுடைய ஞானசம்பந்தர், மறை நூல் களில் விதிக்கப்பட்டிருக்கும் முறைமைகளை எடுத்துக் கூறித் தேற்றியருளினார்.

குறிப்புரை :

மறைநூல் முறைமையாவது மகளாராகக் கருதத் தக்கவரை, மனைவியாராக ஏற்றல் முறைமையும் அறனும் அன்று என் பதும், `அன்றே அனாதி அமைத்தபடி யல்லாது ஒன்று, இன்றே புதி தாய் இயையுமோ - என்றும், சலியாது இயற்றுவான் தன்னையே நோக்கி, மெலியாது இருந்து விடு\' (சிவபோகசாரம், 95) என்பதும் போன்ற நியதிகளாகும்.

பண் :

பாடல் எண் : 1116

தெள்ளுநீ தியின்முறை கேட்ட சீர்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்
பள்ளநீர்ச் செலவெனப் பரமர் கோயிலின்
உள்ளெழுந் தருளினார் உடைய பிள்ளையார்.

பொழிப்புரை :

தெளிந்த நீதி நூல்களின் ஒழுகலாற்றைக் கேட்ட சிறப்புடைய சுற்றத்தவரான பெருங்கூட்டமும், சிவநேசரும் தாம் கொண்ட விருப்பம் நீங்கிட, ஞானசம்பந்தரும் மேட்டுநிலத்தினின்றும் பள்ளத்திற்குப் பாயும் நீரென விரைவுடன் கோபுர வாயிலினின்றும் இறைவரின் திருக்கோயிலுக்குள் எழுந்தருளினார்.

குறிப்புரை :

இறைவரை ஆர்வமிகுதியோடு விரைந்து சென்று வணங்குதற்காம் உள்ளமிகுதிக்கு, பள்ளநீர்ச் செலவினை உவமை காட்டியது மரபுவழிவரும் உவமையாகும். `பள்ளந்தாழ் உறுபுனலின்\' (தி.8 ப.5 பா.25) எனவரும் திருவாசகத் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 1117

பான்மையால் வணிகரும் பாவை தன்மணம்
ஏனையோர்க் கிசைகிலேன் என்று கொண்டுபோய்
வானுயர் கன்னிமா டத்து வைத்தனர்
தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்.

பொழிப்புரை :

பழவினை வயத்தால் சிவநேசரும், `பூம்பாவை யாரை மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க நான் சம்மதியேன்\' என எண்ணித் துணிந்து, வான் அளாவ உயர்ந்த அவரது கன்னிமாடத்தில் வைத்து, அங்கு வாழச் செய்தார். வண்டுகள் மொய்த்தற்கு இடமான மாலையை அணிந்த பூம்பாவையாரும் சிவபெருமானை அடைந்தார்.

குறிப்புரை :

சடங்கவியார் மகளார், திலகவதியார் ஆகியோர்களின் நிறைவு நிலையும் ஈண்டு ஒப்பிட்டுணர்தற்குரியவாம்.

பண் :

பாடல் எண் : 1118

தேவர்பிரான் அமர்ந்தருளும்
திருக்கபா லீச்சரத்து
மேவியஞா னத்தலைவர்
விரிஞ்சன்முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை
கைதந்த படிபோற்றிப்
பாவலர்செந் தமிழ்பாடிப்
பன்முறையும் பணிந்தெழுவார்.

பொழிப்புரை :

தேவர்களின் தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருக்கபாலீச்சுரத்தினுள் எழுந்தருளிய ஞான சம்பந்தர், நான்முகன் முதலான எல்லா உயிர்களுக்கும் காவலரான இறைவரின் பெருங்கருணை, கைகொடுத்தருளியதைப் போற்றிப் பாக்களாக மலர்ந்த செந்தமிழைப் பாடிப் பன்முறையும் பணிந்து எழுவாராய்,

குறிப்புரை :

முன் அருளிய பதிகம் (தி.2 ப.47) கிடைத்தது போல, இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது; நம்மனோரின் நற்றவக் குறைவே.

பண் :

பாடல் எண் : 1119

தொழுதுபுறம் போந்தருளித்
தொண்டர்குழாம் புடைசூழப்
பழுதில்புகழ்த் திருமயிலைப்
பதியில்அமர்ந் தருளுநாள்
முழுதுலகுந் தருமிறைவர்
முதல்தானம் பலஇறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார்
அப்பதியின் மருங்ககல்வார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் தொழுது வெளியே வந்து, திருத்தொண்டர்களின் கூட்டம் அருகில் சூழ்ந்துவர, குற்றம் இல்லாத புகழையுடைய அம்மயிலைத் திருப்பதியில் விரும்பித் தங்கி இருந் தருளும் நாள்களில், எல்லா உலகங்களையும் தந்து காத்தருளும் இறை வர் எழுந்தருளும் முதன்மையுடைய பதிகள் பலவற்றையும் சென்று வணங்குவதற்காக, அழுது உலகை வாழ்வித்தவரான ஞானசம்பந்தர், அப்பதியினின்றும் நீங்கிச் செல்வாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1120

திருத்தொண்டர் அங்குள்ளார்
விடைகொள்ளச் சிவநேசர்
வருத்தம்அகன் றிடமதுர
மொழியருளி விடைகொடுத்து
நிருத்தர்உறை பிறபதிகள்
வணங்கிப்போய் நிறைகாதல்
அருத்தியொடும் திருவான்மி
யூர்பணிய அணைவுற்றார்.

பொழிப்புரை :

அங்கு இருக்கும் திருத்தொண்டர்கள் விடை பெற்றுக் கொள்ளச் சிவநேசரின் வருத்தம் நீங்கும்படி அவருக்கு இனிய சொற்களைச் சொல்லி விடைதந்து, சிவபெருமான் வீற்றிருக் கும் பிறபதிகளையும் வணங்கிச் சென்று, நிறைந்த காதலால் விளைந்த அன்புடனே திருவான்மியூரை வணங்கச் செல்வாரானார்.

குறிப்புரை :

பிறபதிகளாவன திருமயிலைக்கும் திருவான்மியூருக் கும் இடைப்பட்ட புலியூர், கோட(கன்)ம்பாக்கம், வெளிச்சேரி, முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 1121

திருவான்மி யூர்மன்னும்
திருத்தொண்டர் சிறப்பெதிர
வருவார்மங் கலஅணிகள்
மறுகுநிரைத் தெதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி
அவர்வணங்கத் தொழுதன்பு
தருவார்தங் கோயில்மணித்
தடநெடுங்கோ புரம்சார்ந்தார்.

பொழிப்புரை :

திருவான்மியூரில் நிலைபெற்று வாழ்கின்ற தொண்டர்கள் சிறப்பாக வரவேற்க வருபவர்களாய், மங்கலம் பொருந் திய அணிகளைத் தெருவில் நிரல்பட அமைத்து, எதிர்கொண்டு அருகே வந்த பொழுது, முத்துப் பல்லக்கினின்றும் இறங்கி அருளி, அத்தொண்டர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களை வணங்கி, அன்பை அளித்து ஆட்கொள்கின்ற இறைவரின் திருக்கோயிலின் அழகிய பெரிய நீண்ட கோபுரத்தைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1122

மிக்குயர்ந்த கோபுரத்தை
வணங்கிவியன் திருமுன்றில்
புக்கருளிக் கோயிலினைப்
புடைவலங்கொண் டுள்ளணைந்து
கொக்கிறகு மதிக்கொழுந்தும்
குளிர்புனலும் ஒளிர்கின்ற
செக்கர்நிகர் சடைமுடியார்
சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.

பொழிப்புரை :

மிகவும் உயர்ந்த கோபுரத்தை வணங்கி, பெரிய முற்றத்தினுள் புகுந்து, கோயிலை வலமாக வந்து, உட்சென்று கொக்கு இறகும் பிறைச் சந்திரனும் கங்கையும் விளங்கும் அந்தி மாலையின் சிவப்புப் போன்ற சடையையுடைய இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1123

தாழ்ந்துபல முறைபணிந்து
தம்பிரான் முன்னின்று
வாழ்ந்துகளி வரப்பிறவி
மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச்
சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன்
சாத்திமிக இன்புற்றார்.

பொழிப்புரை :

நிலத்தில் விழுந்து பன்முறையும் வணங்கி, முன்நின்று, வாழ்வு பெற்று, மகிழ்ச்சி பொருந்த, பிறவி நோய்க்கு மருந் தான பெருந்தகைமை மிக்க இறைவரை உளங்கொண்டவாறு, பண் பொருந்திய திருப்பதிகமான வினாவுரையாய் வரும் சொல்மாலையை மிக்க விருப்புடனே பாடி இன்பம் அடைந்தார்.

குறிப்புரை :

இப்பதியில் இதுபொழுது அருளியது, `கரையுலாங் கடலில்\' (தி.2 ப.4) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகப் பாடல்கள் முழுதும் இறைவனிடத்துக் கேட்கும் வினாவுரையாக அமைந்துள்ளன.

பண் :

பாடல் எண் : 1124

பரவிவரும் ஆனந்தம்
நிறைந்ததுளி கண்பனிப்ப
விரவுமயிர்ப் புளகங்கள்
மிசைவிளங்கப் புறத்தணைவுற்
றரவநெடுந் திரைவேலை
அணிவான்மி யூர்அதனுள்
சிரபுரத்துப் புரவலனார்
சிலநாள்அங் கினிதமர்ந்தார்.

பொழிப்புரை :

: சீகாழித் தலைவர், பரவி வருகின்ற ஆனந்தக் கண்ணீர் விழிகளினின்றும் துளித்துப் பெருகவும், மேனி முழுதும் மயிர்க் கூச்செறியவும் பெற்று, கோயிலின் வெளியே வந்து, ஒலி பொருந்திய நீண்ட அலைகளையுடைய கடற்கரையில் அமைந்த அழகிய திருவான்மியூரில், சில நாள்கள் இனிதாய்த் தங்கியருந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1125

அங்கண்அமர் வார்உலகா
ளுடையாரை அருந்தமிழின்
பொங்கும்இசைப் பதிகங்கள்
பலபோற்றிப் போந்தருளிக்
கங்கையணி மணிமுடியார்
பதிபலவும் கலந்திறைஞ்சிச்
செங்கண்விடைக் கொடியார்தம்
இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.

பொழிப்புரை :

அவ்விடத்தில் தங்கியிருப்பவரான ஞானசம் பந்தர், உலகங்களுக்கெல்லாம் தலைவராகிய இறைவரை, அரிய தமிழில் மேன்மேல் வாழும் இசையையுடைய பதிகங்கள் பலவற்றால் போற்றி, அங்கிருந்து நீங்கிக் கங்கையை அணிந்த அழகிய சடையை உடைய இறைவரின் பதிகள் பலவற்றிற்கும் அங்கங்கும் சென்று சேர்ந்து, வணங்கி சிவந்த கண்ணையுடைய விடையைக் கொடியாக உடைய சிவபெருமானின் திருவிடைச்சுரத்தை அடைந்தார்.

குறிப்புரை :

`பதிகங்கள் பலபோற்றி\' என்றாரேனும், `விரையார் கொன்றையினாய்\' (தி.3 ப.55) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த ஒருபதிகமே கிடைத்துள்ளது. பதிபலவும் என்பன, குன்றத்தூர், திருநெடுங்குன்றம், திருக்கச்சூர், ஆலக்கோயில், மாடன் பாக்கம், பல்லவபுரம், திருச்சுரம், திருச்சிவப்பேறூர், கோவூர், மாங்காடு, சோமங்கலம், மணிமங்கலம், படூர், பூஞ்சேரி, திருக்கச்சூர், வயலூர், வீராபுரம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 1126

சென்னியிள மதியணிந்தார்
மருவுதிரு இடைச்சுரத்து
மன்னுதிருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள வந்தருளி
நன்நெடுங்கோ புரம்இறைஞ்சி
உட்புகுந்து நற்கோயில்
தன்னைவலங் கொண்டணைந்தார்
தம்பிரான் திருமுன்பு.

பொழிப்புரை :

திருச்சடையில் பிறையை அணிந்த இறைவர் வீற்றிருக்கின்ற திருவிடைச்சுரத்தில், நிலைபெற வாழ்கின்ற திருத் தொண்டர் கூட்டம் எதிர்கொள்ளச் சென்றருளி, நன்மை தரும் நீண்ட கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து, கோயிலை வலம் வந்து, தம் இறைவர் திருமுன்பு வந்தணைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1127

கண்டபொழு தேகலந்த
காதலால் கைதலைமேல்
கொண்டுதலம் உறவிழுந்து
குலவுபெரு மகிழ்ச்சியுடன்
மண்டியபே ரன்புருகி
மயிர்முகிழ்ப்ப வணங்கிஎழுந்
தண்டர்பிரான் திருமேனி
வண்ணங்கண்டு அதிசயித்தார்.

பொழிப்புரை :

: தம் இறைவரைக் கண்ட பொழுதே, மனம் கலந்து எழுந்த பெருவிருப்பத்தால், கைகளைத் தலைமீது கொண்டு, நிலத்தில் விழுந்து பொருந்திய பெருமகிழ்ச்சியுடன் பெருகிய பேரன்பினால் உள்ளம் உருகி, மெய்ம்மயிர் சிலிர்க்க வணங்கி, எழுந்து, தேவ தேவரான சிவபெருமானின் திருமேனியின் வண்ணத்தைப் பார்த்து வியப்படைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1128

இருந்தஇடைச் சுரம்மேவும்
இவர்வண்ணம் என்னேயென்
றருந்தமிழின் திருப்பதிகத்
தலர்மாலை கொடுபரவித்
திருந்துமனங் கரைந்துருகத்
திருக்கடைக்காப் புச்சாத்திப்
பெருந்தனிவாழ் வினைப்பெற்றார்
பேருலகின் பேறானார்.

பொழிப்புரை :

உலகத்தவரின் பெரும்பேறாகத் தோன்றிய ஞானசம்பந்தர், சாரல் விளங்க இருந்த அத் திருவிடைச்சுரத்தில் வீற்றி ருக்கும், `பெருமானின் வண்ணம்தான் என்ன அதிசயம்\' என்று அரிய தமிழால் ஆன இனிய திருப்பதிக மலர் மாலையால் போற்றி, உள்ளம் கரைந்து உருகத் திருக்கடைக்காப்புப் பாடியருளி, பெரிய ஒப்பில்லாத சிவானந்தப் பெருவாழ்வினில் திளைத்து நின்றார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `வரிவளர் அவிரொளி\'(தி.1 ப.78) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். பாடல் தொறும் `இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே\' எனவருவதையே ஆசிரியர் இங்குக் குறித்துக் காட்டுகின்றார்.

பண் :

பாடல் எண் : 1129

நிறைந்தாரா வேட்கையினால்
நின்றிறைஞ்சிப் புறம்போந்தங்
குறைந்தருளிப் பணிகின்றார்
உமைபாகர் அருள்பெற்றுச்
சிறந்ததிருத் தொண்டருடன்
எழுந்தருளிச் செந்துருத்தி
அறைந்தளிகள் பயில்சாரல்
திருக்கழுக்குன் றினைஅணைந்தார்.

பொழிப்புரை :

சிவானந்தப் பெருவாழ்வில் நிறைவுற்று ஆராத வேட்கையினால் நீண்ட நேரம் நின்று வணங்கி, வெளியே வந்து, அப் பதியில் தங்கியிருந்து பணிந்து வரும் பிள்ளையார், அவ்விறைவரின் அருள்விடை பெற்றுக் கொண்டு, சிறந்த திருத்தொண்டர்களுடன் எழுந்தருளிச் சென்று, செந்துருத்தி என்ற பண்ணைப் பாடி, வண்டுகள் மொய்க்கின்ற சாரலையுடைய திருக்கழுக்குன்றத்தை அடைந்தருளினார்.

குறிப்புரை :

செந்துருத்திப் பண்ணில் அமைந்த பதிகத்தைப் பாடிய வாறு, திருக்கழுக்குன்றத்தினை அடைந்துள்ளார். இப்பதிகம் கிடைத் திலது. செந்துருத்திப் பண்ணில் அமைந்த `மீளா அடிமை\' (தி.7 ப.95) எனத் தொடங்கும் சுந்தரரின் திருப்பதிகம் ஒன்றே இதுபொழுது கிடைத்துள்ளது.

பண் :

பாடல் எண் : 1130

சென்றணையும் பொழுதின்கண்
திருத்தொண்டர் எதிர்கொள்ளப்
பொன்திகழும் மணிச்சிவிகை
இழிந்தருளி உடன்போந்து
மன்றல்விரி நறுஞ்சோலைத்
திருமலையை வலங்கொண்டு
மின்தயங்கும் சடையாரை
விருப்பினுடன் பணிகின்றார்.

பொழிப்புரை :

திருக்கழுக்குன்றத்தில் சென்று அடையும் போதில், அப்பகுதியில் வாழ்கின்ற தொண்டர்கள் வந்து வரவேற்க, பொன் விளங்கும் முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கி, அவர் களுடன் சேர்ந்து, மணம் விரிந்து கமழும் நல்ல மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அம்மலையை வலமாக வந்து, மின்போல் விளங் கும் சடையையுடைய இறைவரை விருப்பத்தோடு பணிபவராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1131

திருக்கழுக்குன் றத்தமர்ந்த
செங்கனகத் தனிக்குன்றைப்
பெருக்கவளர் காதலினால்
பணிந்தெழுந்து பேராத
கருத்தினுடன் காதல்செயுங்
கோயில்கழுக் குன்றென்று
திருப்பதிகம் புனைந்தருளிச்
சிந்தைநிறை மகிழ்வுற்றார்.

பொழிப்புரை :

அத் திருக்கழுக்குன்றத்தின் மீது விரும்பி வீற்றிருந்தருளும் ஒப்பில்லாத செம்பொன்குன்றம் போன்ற மறைக ளின் தலைவரான சிவபெருமானை, வளரும் விருப்பத்தினால் வணங்கி, எழுந்து, ஒன்றிய கருத்துடன் காதல் செய்யும் கோயில் கழுக் குன்று என்ற நிறைவுடைய திருப்பதிகத்தைப் பாடி, உளம் நிறைந்த மகிழ்வை அடைந்தார்.

குறிப்புரை :

: இதுபொழுது அருளிய பதிகம், `தோடுடையான்\' (தி.1 ப.103) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகப் பாடல் பத்தும் `காதல்செய் கோயில் கழுக்குன்றே\' என நிறைவு பெறுதலை உளங்கொண்டு ஆசிரியர் இங்ஙனம் கூறுவார் ஆயினர். திருக்கடைக்காப்பிலும் இத்தொடர் எடுத்து மொழியப்பட் டுள்ளது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1132

இன்புற்றங் கமர்ந்தருளி
ஈறில்பெருந் தொண்டருடன்
மின்பெற்ற வேணியினார்
அருள்பெற்றுப் போந்தருளி
என்புற்ற மணிமார்பர்
எல்லையிலா ஆட்சிபுரிந்
தன்புற்று மகிழ்ந்ததிரு
அச்சிறுபாக் கத்தணைந்தார்.

பொழிப்புரை :

இன்புற்ற நிலையில் அப்பதியில் விரும்பி எழுந்தருளியிருந்து, எல்லை இல்லாத பெருந்தொண்டர்களுடனே, மின்போன்ற சடையையுடைய சிவபெருமானின் திருவருள் பெற்று, அங்கிருந்து நீங்கி, எலும்பு மாலைகளை அணிந்த அழகான மார்பை யுடைய இறைவர் எல்லையில்லாத வண்ணம் ஆட்சி செய்து அன்பு பொருந்தி மகிழ்ந்து எழுந்து அருளியுள்ள அச்சிறுபாக்கத்தைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1133

ஆதிமுதல் வரைவணங்கி
ஆட்சிகொண்டார் எனமொழியும்
கோதில்திருப் பதிகஇசை
குலவியபா டலில்போற்றி
மாதவத்து முனிவருடன்
வணங்கிமகிழ்ந் தின்புற்றுத்
தீதகற்றுஞ் செய்கையினார்
சின்னாள்அங் கமர்ந்தருளி.

பொழிப்புரை :

பழமையுடைய சிவபெருமானை வணங்கி `ஆட்சி கொண்டார்\' எனக் கூறும் நிறைவையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் பண்பொருந்தி விளங்கும் திருப்பாடல்களால் போற்றி, மாதவமுடைய முனிவர்களுடன் வணங்கி, மகிழ்ந்து, இன்பம் அடைந்து, தீமையை நீக்குவதே தம் செய்கையாகக் கொண்டருளிய ஞானசம்பந்தர், சில நாள்கள் அங்கே தங்கியிருந்து,

குறிப்புரை :

இப்பதியில் அருளிய பதிகம் `பொன் திரண்டன்ன\' (தி.1 ப.77) எனும் தொடக்கம் உடைய குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிகப் பாடல் தொறும், `அச்சிறுபாக்கமது ஆட்சிகொண் டாரே\' எனவருதலை ஆசிரியர் கொண்டெடுத்து மொழிந்துள்ளார்.

பண் :

பாடல் எண் : 1134

ஏறணிந்த வெல்கொடியார்
இனிதமர்ந்த பதிபிறவும்
நீறணிந்த திருத்தொண்டர்
எதிர்கொள்ள நேர்ந்திறைஞ்சி
வேறுபல நதிகானம்
கடந்தருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு
அரசிலியை வந்தடைந்தார்.

பொழிப்புரை :

விடையைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பிறபதிகள் பல வற்றையும் திருநீறு அணிந்த தொண்டர்கள் அங்கங்கும் எதிர்கொளச் சென்று, விரிந்த சடையில் கங்கையாற்றை அணிந்த இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற `திருவரசிலிப் பதியினை\\\' வந்தடைந்தார்.

குறிப்புரை :

`பதிபிறவும்\\\' என்பன பெரும்பேறு, திருநெற்குன்றம், உலகூர், உலகாபுரம், கந்தாடு, கிடங்கில், கிளியனூர், தேவனூர், திண்டீச்சுரம், பேராவூர், மரக்காணம், முன்னூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவ்விருபாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 1135

அரசிலியில் அமர்ந்தருளும்
அங்கண்அர சைப்பணிந்து
பரசியெழு திருப்புறவார்
பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார்
மேவுபதி பலவணங்கித்
திரைசெய்நெடுங் கடலுடுத்த
திருத்தில்லை நகரணைந்தார்.

பொழிப்புரை :

திருஅரசிலியில் விரும்பி வீற்றிருக்கும் இறை வரைப் பணிந்து போற்றி, திருப்புறவார் பனங்காட்டூர் முதலான, மணம் கமழ்கின்ற கொன்றை மலரைச் சூடிய இறைவர் எழுந்தருளி யிருக்கின்ற பல பதிகளையும் வணங்கிச் சென்று, அலைகளையுடைய நீண்ட கடல் அணிமையாய்ச் சூழ்ந்த திருத்தில்லை நகரை அடைந்தார்.

குறிப்புரை :

திருஅரசிலியில் அருளியது, `பாடல் வண்டறை\' (தி.2 ப.95) எனும் முதற்குறிப்புடைய பியந்தைக் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருஅரசிலி மற்றும் திருப்புறவார்பனங் காட்டூரில் இதுபோது அருளியது, `விண் அமர்ந்தன\' (தி.2 ப.53) எனும் முதற்குறிப்புடைய சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிபலவும் என்பன திருவக்கரை, திருவடுகூர், திருஇரும்பைமாகா ளம், திருவாமாத்தூர், திருவதிகை, திருச்சோபுரம் முதலாயினவாக லாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றுள் திருச்சோபுரத்திற்கு அமைந்தது, `வெங்கண் ஆனை\' (தி.1 ப.51) எனும் முதற்குறிப்புடைய பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிறபதிகளுக்குரிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 1136

எல்லையில்ஞா னத்தலைவர்
எழுந்தருள எதிர்கொள்வார்
தில்லையில்வா ழந்தணர்மெய்த்
திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கியெதிர் பணிந்திறைஞ்ச
மணிமுத்தின் சிவிகையிழிந்
தல்கு பெருங் காதலுடன்
அஞ்சலிகொண் டணைகின்றார்.

பொழிப்புரை :

அளவற்ற சிவஞானத்தைப் பெற்றவரான ஞானசம்பந்தர் வந்தருளுவதை அறிந்து, அவரை எதிர் கொள்பவ ராய்த் தில்லைவாழ் அந்தணர்களும், சைவத் தொண்டர்களும் எதிர் கொள்வதற்குரிய சிறப்புகளுடனே கூடிச் சென்று, அவரை எதிரே வணங்கிட, அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கிப் பெருங் காதலுடன் அஞ்சலி செய்து ஞானசம்பந்தர் அணைபவராய்,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1137

திருவெல்லை யினைப்பணிந்து
சென்றணைவார் சேண்விசும்பை
மருவிவிளங் கொளிதழைக்கும்
வடதிசைவா யிலைவணங்கி
உருகுபெருங் காதலுடன்
உட்புகுந்து மறையினொலி
பெருகிவளர் மணிமாடப்
பெருந்திருவீ தியைஅணைந்தார்.

பொழிப்புரை :

தில்லையின் எல்லையைப் பணிந்து மேற்செல்ப வராகி, நீண்ட வானளவு உயர்ந்து விளங்கும் ஒளிபெருகும் வடதிசை வாயிலை வணங்கி, உள்ளம் உருகும் பெருங்காதலுடன் நகரத்தின் உள்ளே புகுந்து, மறைகளின் ஒலி பெருகி வளர்வதற்கு இடமான அழகிய மாடங்கள் நிறைந்த பெரிய வீதியை அடைந்தார்.

குறிப்புரை :

தில்லைநகரின் வடஎல்லை நிவா நதிக் கரையும், தெற்கெல்லை கொள்ளிடக் கரையும், மேற்கு எல்லை வாய்க்காலும், கிழக்கெல்லை கடற்கரையும் ஆகும் இவ்வகையிலேயே வடதிசை வாயிலைக் கடந்ததும் நகரினுட்புகுந்து என்றார்.இவ்விரு பாடல்க ளும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1138

நலம்மலியும் திருவீதி
பணிந்தெழுந்து நற்றவர்தம்
குலம்நிறைந்த திருவாயில்
குவித்தமலர்ச் செங்கையொடு
தலம்உறமுன் தாழ்ந்தெய்தித்
தமனியமா ளிகைமருங்கு
வலம் உறவந் தோங்கியபே
ரம்பலத்தை வணங்கினார்.

பொழிப்புரை :

நன்மை பெருகும் திருவீதியை வணங்கி, நல்ல தவமுடையவர்களின் குழுநிறைந்த திருவாயிலைச் செங்கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு நிலத்தில் விழுந்து தாழ்ந்து வணங்கிச் சென்று, பொன்மாளிகையான அம்பலத்தின் அருகே வலமாக வந்து, உயர்ந்த பேரம்பலத்தை வணங்கினார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1139

வணங்கிமிக மனம்மகிழ்ந்து
மாலயனும் தொழும்பூத
கணங்கள்மிடை திருவாயில்
பணிந்தெழுந்து கண்களிப்ப
அணங்குதனிக் கண்டருள
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கடந்த தனிக்கூத்தர்
பெருங்கூத்துக் கும்பிடுவார்.

பொழிப்புரை :

வணங்கி, உள்ளம் மகிழ்ந்து, திருமாலும் நான் முகனும் தொழும் சிவகணங்களும் நெருங்கிய திருவணுக்கன் திரு வாயிலை வணங்கி எழுந்து, கண்கள் களிகூர, சிவகாமி அம்மையார் தனித்திருந்து கண்டருளுமாறு அம்பலத்தில் ஆடல் செய்து அருளு கின்ற குணங்களைக் கடந்த மெய்ஞ்ஞான வெளியில், தனிப்பெருங் கூத்தரின் பெருங்கூத்தை வணங்குபவராய்,

குறிப்புரை :

`பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென, நோயுண் மருந்து தாயுண் டாங்கு\' (சிதம்பர மும்மணிக் கோவை அ.14, 15) அம்மையார் இறைவனின் தனிக்கூத்தைத் தாம் தனியே கண்டு, பின் அதன் பயனை உலகுக்கு அருளுவர். ஆதலின் `அணங்கு தனி கண்டருள\' என்றார்.

பண் :

பாடல் எண் : 1140

தொண்டர்மனம் பிரியாத
திருப்படியைத் தொழுதிறைஞ்சி
மண்டுபெருங் காதலினால்
நோக்கிமுகம் மலர்ந்தெழுவார்
அண்டமெலாம் நிறைந்தெழுந்த
ஆனந்தத் துள்ளலைந்து
கண்டபே ரின்பத்தின்
கரையில்லா நிலையணைந்தார்.

பொழிப்புரை :

தொண்டர்களின் மனத்தினின்றும் பிரியாது விளங்கும் திருக்களிற்றுப் படியை வணங்கி, செறிந்த பெருங் காதலால் நோக்கி முகமலர்ச்சி பெற்று எழுபவராய ஞானசம்பந்தர், அண்டங்கள் எங்கும் நிறைந்து எழுகின்ற சிவானந்தப் பெருக்கினுள் அலைந்து, தம் அநுபவத்துள் கண்ட பேரின்பத்தில் கரையில்லாத நிலையினை அடைந்தார்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1141

அந்நிலைமை யடைந்துதிளைத்
தாங்கெய்தாக் காலத்தின்
மன்னுதிரு அம்பலத்தை
வலங்கொண்டு போந்தருளிப்
பொன்னணிமா ளிகைவீதிப்
புறத்தணைந்து போதுதொறும்
இன்னிசைவண் தமிழ்பாடிக்
கும்பிட்டங் கினிதமர்ந்தார்.

பொழிப்புரை :

அத்தகைய நிலையை அடைந்து, அந்த அநுப வத்தில் மூழ்கியிருந்து, அங்குத் தங்காத காலத்தில், நிலையான திருச்சிற் றம்பலத்தை வலமாக வந்து வெளியே சென்று, பொன்னால் அழகு பெற்ற மாளிகைகளையுடைய வீதியின் பக்கத்தை அடைந்து, காலந் தோறும் இனிய இசையுடன் கூடிய பாக்களைப் பாடியருளிக் கும்பிட் டுக் கொண்டு அங்கு இனிதாய்த் தங்கியிருந்தனர்.

குறிப்புரை :

அங்குத் தங்காத காலம் வழிபாட்டிற்கு உரியவல்லாத காலம். அவை கதவம் திருக்காப்பிட்டிருக்கும் காலமாகும். இறைவற் குத் திருமுழுக்கு முதலியன நிகழும் காலமும் ஆம். இது பொழுது அருளிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 1142

திருந்தியசீர்த் தாதையார்
சிவபாத இருதயரும்
பொருந்துதிரு வளர்புகலிப்
பூசுரரும் மாதவரும்
பெருந்திருமால் அயன்போற்றும்
பெரும்பற்றப் புலியூரில்
இருந்தமிழா கரர்அணைந்தார்
எனக்கேட்டு வந்தணைந்தார்.

பொழிப்புரை :

உலகம் திருந்துவதற்குக் காரணமான சிறப் புடைய தந்தையார் சிவபாத இருதயரும், பொருந்திய சைவத் திரு வளர்வதற்கு இடமான சீகாழியில் வாழும் அந்தணர்களும், சிவனடி யார்களும் பெருந்திருவுடைய திருமாலும் நான்முகனும் போற்றி வரும் பெரும்பற்றப் புலியூரில், பெருந் தமிழாகரரான ஞானசம்பந்தர் வந்திருக்கின்றார் எனக்கேட்டு, தாங்கள் அங்கு வந்து அடைந்தனர்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1143

ஆங்கவரைக் கண்டுசிறப்
பளித்தருளி அவரோடும்
தாங்கரிய காதலினால்
தம்பெருமான் கழல்வணங்க
ஓங்குதிருத் தில்லைவாழ்
அந்தணரும் உடனாகத்
தேங்கமழ்கொன் றைச்சடையார்
திருச்சிற்றம் பலம்பணிந்தார்.

பொழிப்புரை :

உலகம் திருந்துவதற்குக் காரணமான சிறப் புடைய தந்தையார் சிவபாத இருதயரும், பொருந்திய சைவத் திரு வளர்வதற்கு இடமான சீகாழியில் வாழும் அந்தணர்களும், சிவனடி யார்களும் பெருந்திருவுடைய திருமாலும் நான்முகனும் போற்றி வரும் பெரும்பற்றப் புலியூரில், பெருந் தமிழாகரரான ஞானசம்பந்தர் வந்திருக்கின்றார் எனக்கேட்டு, தாங்கள் அங்கு வந்து அடைந்தனர்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1144

தென்புகலி அந்தணரும்
தில்லைவா ழந்தணரும்
அன்புநெறி பெருக்குவித்த
ஆண்தகையார் அடிபோற்றிப்
பொன்புரிசெஞ் சடைக்கூத்தர்
அருள்பெற்றுப் போந்தருளி
இன்புறுதோ ணியில்அமர்ந்தார்
தமைவணங்க எழுந்தருள.

பொழிப்புரை :

அழகிய சீகாழி அந்தணர்களும், தில்லையில் வாழும் அந்தணர்களும், அன்பு நெறியைப் பெருகச் செய்து, இறை வரின் திருவடிகளைப் போற்றிப் பொன்போற் புரிந்த சடையை உடைய கூத்தரின் திருவருள் விடைபெற்று, வெளிவந்து, இன்பம் செய்யும் திருத்தோணியில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்கு வதன் பொருட்டு,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1145

நற்றவர்தங் குழாத்தோடும்
நம்பர்திரு நடம்செய்யும்
பொற்பதியின் திருவெல்லை
பணிந்தருளிப் புறம்போந்து
பெற்றம்உயர்த் தவர்அமர்ந்த
பிறபதியும் புக்கிறைஞ்சிக்
கற்றவர்கள் பரவுதிருக்
கழுமலமே சென்றடைவார்.

பொழிப்புரை :

நல்ல தவமுடைய அடியவர்களின் கூட்டத்து டன் கூடி, இறைவர் திருநடனம் செய்கின்ற அழகிய அப்பதியின் திரு எல்லையை வணங்கிப் புறத்தில் சென்று, விடைக் கொடியை உடைய இறைவர் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற பிற பதிகளையும் போய்த் தொழுது, கற்றவர்கள் போற்றுகின்ற சீகாழிப் பதியை அடைபவராய்,

குறிப்புரை :

பிறபதிகள் என்பன, திருமயேந்திரப்பள்ளி, திருநல் லூர்ப் பெருமணம், திருக்குருகாவூர் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 1146

பல்பதிகள் கடந்தருளிப்
பன்னிரண்டு பெயர்படைத்த
தொல்லைவளப் பூந்தராய்
தூரத்தே தோன்றுதலும்
மல்குதிரு மணிமுத்தின்
சிவிகையிழிந் தெதிர்வணங்கிச்
செல்வமிகு பதியதன்மேல்
திருப்பதிகம் அருள் செய்வார்.

பொழிப்புரை :

பலதிருப்பதிகளையும் கடந்துசென்று, பன்னி ரண்டு பெயர்களையுடைய பழமையான வளம் வாய்ந்த சீகாழிப் பதியானது தொலைவில் காணப்பட, திருந்திய முத்துச் சிவிகையி னின்றும் இறங்கி, வணங்கி, திருவருட் செல்வம் நிறைந்த அச்சீகாழிப் பதியின் மீது திருப்பதிகத்தை அருள்பவராய்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1147

மன்னுமிசை மொழிவண்டார்
குழலரிவை என்றெடுத்து
மின்னுசுடர் மாளிகைவிண்
தாங்குவபோல் வேணுபுரம்
என்னும்இசைச் சொன்மாலை
எடுத்தியம்பி எழுந்தருளிப்
புன்னைமணங் கமழ்புறவப்
புறம்பணையில் வந்தணைந்தார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற இசையுடைய `வண்டார் குழல்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளத் தொடங்கி, ஒளிவீசும் சுடர்களைக் கொண்ட மாளிகைகள் விண்தாங்குவன போல் உள்ளன என்னும் கருத்துக்கொண்ட இசையுடன் கூடிய திருப்பதிகத்தை எடுத் துப் போற்றி, மேற்சென்று, புன்னை மரங்களின் மணம் வீசுவதற்கு இடமான சீகாழியின் புறநகர்ப்பகுதியில் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

`வண்டார் குழல்\' எனத் தொடங்கும் பதிகம் நட்டபா டைப் பண்ணிலமைந்ததாகும் (தி.1 ப.9). இப்பதிக முதற்பாடலில், `தண்டாமரை மலராளுறை தவளந்நெடுமாடம், விண்தாங்குவ போலும் மிகு வேணு புரம் அதுவே\' எனவரும் கருத்தை முகந்தே ஆசி ரியர் இங்ஙனம் அருளிச் செய்வாராயினர். புறம்பணை - புறத்தே உள்ள வயல்கள். புறநகர்ப் பகுதி. இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 1148

வாழிவளர் புறம்பணையின்
மருங்கணைந்து வரிவண்டு
சூழுமலர் நறுந்தீப
தூபங்க ளுடன்தொழுது
காழிநகர் சேர்மின்எனக்
கடைமுடிந்த திருப்பதிகம்
ஏழிசையி னுடன்பாடி
எயில்மூதூர் உட்புகுந்தார்.

பொழிப்புரை :

ஊழிக்காலத்திலும் அழியாது வளர்கின்ற புறம்பணையின் அருகில் வந்து, வரிவண்டுகள் மொய்க்கின்ற மலர்க ளாலும், நல்ல மணமுடைய நறும்புகை, ஒளி விளக்கு ஆகியவற் றாலும், வழிபட்டுத் தொழுது `சீகாழி நகரினுள் சேர்மின்கள்\' எனும் நிறைவுடைய இறுதிச் சீர்களால் அமைந்த திருப்பதிகத்தை ஏழிசை களுடனே பாடியருளியவாறே, மதிலையுடைய அப்பழைய நகரினுள் புகுந்தார்.

குறிப்புரை :

இவ்வருங் குறிப்புக்களையுடைய பதிகம், `நம் பொருள் நம்மக்கள்\' (தி.2 ப.97) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும். `காழிநகர் சேர்மினே\' எனவரும் நிறைவுத் தொடர் இப்பதிகப் பாடல்தொறும் வருகின்றது. `தீபமாலை தூபமும் செறிந்தகையராகிச் சேர்மினே\' எனும் அருளுரை இரண்டாவது பாடலில் வருகின்றது. இவற்றை யெல்லாம் முகந்து நிற்ப இப்பாடலை அருளியுள்ளார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 1149

சேணுயர்ந்த திருத்தோணி
வீற்றிருந்த சிவபெருமான்
தாள்நினைந்த ஆதரவின்
தலைப்பாடு தனையுன்னி
நீள்நிலைக்கோ புரம்அணைந்து
நேரிறைஞ்சிப் புக்கருளி
வாள்நிலவு பெருங்கோயில்
வலங்கொண்டு முன்பணிந்தார்.

பொழிப்புரை :

வானளாவ உயர்ந்து நிற்கும் திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை, நினைந்த அன்பின் மேன்மையை எண்ணியவராய், நீண்ட நிலைகளையுடைய கோபு ரத்தை அடைந்து, எதிரில் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து, உள்ளே புகுந்து, ஒளி விளங்கும் பெருந்திருக்கோயிலை வல மாக வந்து, வணங்கி முன்னின்று தொழுதார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1150

முன்னிறைஞ்சித் திருவருளின்
முழுநோக்கம் பெற்றேறிப்
பொன்னிமயப் பாவையுடன்
புணர்ந்திருந்த புராதனரைச்
சென்னிமிசைக் குவித்தகரம்
கொடுவிழுந்து திளைத்தெழுந்து
மன்னுபெரு வாழ்வெய்தி
மனங்களிப்ப வணங்குவார்.

பொழிப்புரை :

கோயிலுள் ஞானசம்பந்தர், பிரமபுரீசர் திரு முன்பு வணங்கி, அவரது திருவருளின் முழுநோக்கமும் பெற்று, திருத் தோணியான மலையின் மீது ஏறிச் சென்று, பொன்மலை எனும் இமயமலை அரசனின் மகளாரான திருநிலை நாயகியம்மையாருடன் வீற்றிருந்தருளுகின்ற தோணியப்பரைத் தலைமீது கூப்பிய கைக ளுடன் நிலம் பொருந்த விழுந்து வணங்கித் திளைத்தெழுந்து, நிலை பெற்ற வாழ்வையடைந்து, மனம் மகிழ வணங்குபவராய்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 1151

பரவுதிருப் பதிகங்கள்
பலவும்இசை யினிற்பாடி
விரவியகண் ணருவிநீர்
வெள்ளத்திற் குளித்தருளி
அரவணிந்தார் அருள்பெருகப்
புறம்பெய்தி அன்பருடன்
சிரபுரத்துப் பெருந்தகையார்
தந்திருமா ளிகைசேர்ந்தார்.

பொழிப்புரை :

போற்றுகின்ற திருப்பதிகங்கள் பலவற்றையும் பண்ணுடன் பொருந்தப் பாடி, பொருந்திய கண்ணீர் வெள்ளத்தில் முழுதும் தோய்ந்தருளி, பாம்பை அணியாய் அணிந்த இறைவரின் திருவருள் பெற்று, வெளியே வந்து, அன்பர்களுடன் சீகாழிப் பதியி னரான ஞானசம்பந்தர் தம் திருமாளிகையுள் சேர்ந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகங்கள் எவை எனத் தெரிந் தில. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 1152

மாளிகையின் உள்ளணைந்து
மறையவர்கட் கருள்புரிந்து
தாள்பணியும் பெருங்கிளைக்குத்
தகுதியினால் தலையளிசெய்
தாளுடைய தம்பெருமான்
அடியவர்க ளுடன்அமர்ந்து
நீளவரும் பேரின்பம்
மிகப்பெருக நிகழுநாள்.

பொழிப்புரை :

சம்பந்தப் பெருமான் தம் மாளிகையுள் புகுந்து, தம்மைக் காண வந்த அந்தணர்களுக்கெல்லாம் அருள்விடை தந்து, தம் திருவடிகளை வணங்கி நின்ற பெரிய சுற்றத்தவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றவண்ணம் தலையணி செய்து, விடை தந்து, தம்மை ஆள்கின்ற இறைவரின் அடியாருடனே விரும்பி எழுந்தருளியிருந்து, நீண்டு பெருக வரும் பேரின்பமானது மேன்மேலும் பெருகும்படி நிகழ்ந்து வரும் நாள்களில்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 1153

காழிநா டுடையபிரான்
கழல்வணங்கி மகிழ்வெய்த
ஆழியினும் மிகப்பெருகும்
ஆசையுடன் திருமுருகர்
வாழிதிரு நீலநக்கர்முதல்
தொண்டர் மற்றெனையோர்
சூழுநெடுஞ் சுற்றமுடன்
றோணிபுரந் தொழுதணைந்தார்.

பொழிப்புரை :

சீகாழி நாட்டின் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி எய்த எண்ணி, கடலை விடப் பெரி தாகப் பெருகும் ஆசையுடன், திருமுருக நாயனார், வாழ்வு பெருகும் திருநீலநக்க நாயனார் முதலிய தொண்டர்களும், மற்றவர்களும் தம்மைச் சூழ்ந்த பெரிய சுற்றத்துடனே வந்து, திருத்தோணிபுரத்தை வணங்கி, பிள்ளையார்பால் வந்தார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1154

வந்தவரை எதிர்கொண்டு
மனமகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில்சீர் அடியார்க
ளவரோடு மினிதமர்ந்து
சுந்தரவா ரணங்கினுடன்
றோணியில்வீற் றிருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால்
திருப்பதிகம் பலபாடி.

பொழிப்புரை :

அங்ஙனம் வந்தவர்களை எதிரேசென்று அழைத்து, திருவுள்ளம் மகிழ்ந்து, சீகாழிப் பெருமான், அளவில்லாத சிறப்புக்களை உடைய அவ்வடியவர்களுடனே இனிதாக விரும்பி யிருந்து, அழகின் நிலைக்களமான பெரிய நாயகியம்மையாருடன் திருத்தோணியில் வீற்றிருந்தருளும் தோணியப்பரைச் செந்தமிழ் யாப்பால் பல பதிகங்களையும் பாடி,

குறிப்புரை :

இதுபொழுது அருளிய திருப்பதிகங்கள்: 1. கறையணி (தி.2 ப.65) - காந்தாரம்.
2. கரமுனம் மலரால் (தி.3 ப.37) - கொல்லி.
3. இறையவன் ஈசன் ( தி.3 ப.56) - பஞ்சமம்.
4. நிலவும் புனலும் (தி.2 ப.17) - இந்தளம்.
5. பூதத்தின் படையினீர் ( தி.2 ப.81) - காந்தாரம்
6. விதியாய் விளைவாய் (தி.1 ப.30) - தக்கராகம்.
7. ஆடல் அரவசைத்தான் (தி.1 ப.104) - வியாழக்குறிஞ்சி.
8. உகலியாழ்கடல் (தி. 2 ப. 25) - இந்தளம்.
9. உருவார்ந்த (தி.2 ப.54) - காந்தாரம்.
10. விடையதேறி (தி.2 ப.122) - செவ்வழி.
11. கண்ணுதலானும் ( தி.3 ப .7) - காந்தார பஞ்சமம்.
12. காலைநன்மாமலர் (தி.1 ப.75) - குறிஞ்சி.
13. வண்டரங்க (தி.1 ப.60) - பழந்தக்கராகம்.
14. கரும்பமர் (தி.3 ப.100) - பழம்பஞ்சுரம்.
15. செந்நெலங்கழனி (தி.2 ப.1) - இந்தளம்.
16. பந்துசேர்விரலாள் (தி.3 ப.2) - காந்தாரபஞ்சமம்.
17. மின்னன (தி.3 ப.13) - காந்தாரபஞ்சமம்.
18. பல்லடைந்த (தி.1 ப.47) - பழந்தக்கராகம்.
19. வாருறு (தி.1 ப.109) - வியாழக்குறிஞ்சி.
20. எய்யாவென்றி (தி.1 ப.97) - குறிஞ்சி.
21. பங்கமேறு (தி.1 ப.66) - தக்கேசி.
22. அடலேறமரும் (தி.1 ப.34) - தக்கராகம்.
23. நல்லார் தீமேவும் (தி.1 ப.81) - குறிஞ்சி.
24. உரவார்கலை (தி.1 ப.102) - குறிஞ்சி.
25. நல்லானை (தி.2 ப.11) - இந்தளம்.
26. பண்ணின் நேர் (தி.2 ப.49) - சீகாமரம்.
27. நலங்கொள் (தி.2 ப.59) - காந்தாரம்.
28. விண்ணியங்கு (தி.2 ப.75) - காந்தாரம்.
29. பொங்குவெண்புரி (தி.2 ப.96) - பியந்தைக் காந்தாரம்.
30. பொடியிலங்கு (தி.2 ப.113) - செவ்வழி.
31. சந்தமார் (தி.3 ப.43) - கௌசிகம்.
32. நிலநன் (தி.2 ப.83) - பியந்தைக் காந்தாரம்.
33. அறையும் (தி.2 ப.89) - பியந்தைக் காந்தாரம்.
34. திருந்துமா (தி.3 ப.89) - சாதாரி.
35. அயிலுறு படையினர் (தி.1 ப.79) - குறிஞ்சி.
36. சேவுயரும் (தி.1 ப.129) - மேகராகக் குறிஞ்சி.
37. மடல்மலி (தி.3 ப.118) - புறநீர்மை
38. ஆரூர் தில்லை (தி.2 ப.39) - இந்தளம்.
39. கல்லால் நீழல் ( தி.3 ப.40) - கொல்லி.

பண் :

பாடல் எண் : 1155

பெருமகிழ்ச்சி யுடன்செல்லப்
பெருந்தவத்தால் பெற்றவரும்
மருவுபெருங் கிளையான
மறையவரும் உடன்கூடித்
திருவளர்ஞா னத்தலைவர்
திருமணம்செய் தருளுதற்குப்
பருவம்இது என்றெண்ணி
அறிவிக்கப் பாங்கணைந்தார்.

பொழிப்புரை :

பெருமகிழ்வுடன் இங்ஙனம் இருக்க, பெரிய தவம் செய்ததன் பயனாக ஞானசம்பந்தரைப் பெற்றெடுத்த தந்தையார் ஆன சிவபாத இருதயரும் பொருந்திய சுற்றத்தவராகிய அந்தணர்களும் கூடி, முத்திச் செல்வம் வளர்வதற்கு ஏதுவான ஞானத்தின் தலைவராம் பிள்ளையார் திருமணம் செய்ருளுதற்கு ஏற்ற பருவம் இதுவாகும் என நினைந்து, தம் எண்ணத்தைப் பிள்ளையாருக்கு அறிவிக்கும் பொருட்டு அவரை அடைந்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1156

நாட்டுமறை முறையொழுக்கம்
ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார்
கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல
புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென
விண்ணப்பம் செய்தார்கள்.

பொழிப்புரை :

உலகியல் நிலையில், மறைவழிபட்ட ஒழுக்கத்தை ஞானசம்பந்தருக்கும் இசைவித்தலை உள்ளத்தில் கொண்டு, குற்றமில் லாத மறைநெறியில் சொல்லப்படும் செயற்பாடுகளுடன் (சடங்குகளு டன்) கூடிய வேள்விகளைச் செய்வதற்கு, உரிமையைப் பெறும் பொருட்டுத் தாங்கள் ஓர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.

குறிப்புரை :

`போனகருக்கும்\' என்றவிடத்துவரும் உம்மை அவர் தம் சிறப்புணர நின்றது. ஞானத்தின் திருவுருவாக விளங்கும் ஞானசம்பந் தருக்கு, மறைவழிப்பட்ட செயற்பாடுகளோ, அவற்றைச் செய்தற்கு என ஓர் இல்வாழ்க்கையோ வேண்டுவதின்று என்பது போதர நின்றது.

பண் :

பாடல் எண் : 1157

மற்றவர்தம் மொழிகேட்டு
மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத்
தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன்
பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா
தென்றவர்முன் மொழிந்தருள.

பொழிப்புரை :

இங்ஙனம் கூறிய அவர்களின் சொல்லைக் கேட்டு, மாதவத்தின் கொழுந்தென விளங்கும் ஞானசம்பந்தர், சுற்றங்கள் பொருந்திய பெரிய பாசத் தொடக்கினை, விட்டு நீங்குவதற்காக நிலைமை உடையவராகி, விடைக்கொடியை உயர்த்திய சிவபெரு மானின் திருவடி ஞானமான உயர்ந்த சிவஞானத்தை முன்னே பெற்றவர் ஆதலால் அவர்களின் மொழிக்கு இசையாமல் `நீங்கள் கூறுவது பொருந்திய மொழியாயினும், அது என்னளவில் வேண்டாத ஒன்றாகும்\' எனக் கூறியருள,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 1158

அருமறையோர் அவர்பின்னும்
கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம்
எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின்
வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத்
திருவுள்ளம் செய்யுமென.

பொழிப்புரை :

அம் மறையவர்கள் மேலும் கைகூப்பித் தொழுது, ஞானசம்பந்தரிடம் அறிவிப்பாராய், பெரிய மண்ணுலகில் மறைவழிவரும் வழக்கினை நீர் உயர்த்தியருளினீர் ஆதலின், அவ் வழிவரும் முறையில் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களுடன் கூடிய அப்பெருநெறியில் ஒழுகும் திருமணத்தைச் செய்தருளுதற்குத் திரு வுள்ளம் கொள்ளல் வேண்டும் என்று கூற,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 1159

மறைவாழ அந்தணர்தம்
வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார்
தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில்
பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார்
தமைத்தொழுது மனங்களித்தார்.

பொழிப்புரை :

மறைகள் வாழ்வு அடையவும், அந்தணர்களின் மறைவழிப்பட்ட வாய்மையால் வரும் ஒழுக்கம் வாழ்வடையவும், அந்தச் சுற்றத்தார்களுக்கு அருள்செய்து, அவர்களின் வேண்டுகோ ளுக்கு ஞானசம்பந்தர் இசைவு தெரிவிக்கவும், பிறைச் சந்திரன் வாழ் கின்ற திருமுடியில் பெரிய நீர்க் கங்கையுடன் பாம்பையும் அணிந்த நீலகண்டரான இறைவரை வணங்கி, அச்சுற்றத்தார் மகிழ்ந்தனர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1160

திருஞான சம்பந்தர்
திருவுள்ளஞ் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும்
தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப்
பிஞ்ஞகனார் அருளென்றே
உருகாநின்று இன்பமுறும்
உளமகிழ்ச்சி எய்துவார்.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தர் இவ்வாறு திருவுள்ளம் பற்ற, (மணம் செய்து கொள்வதற்கு இசைய), வாய்மையுடைய மறையவர் களும், தந்தையாரான சிவபாத இருதயரும் அளவற்ற, தாங்கற்கரிய பெருவாழ்வைப் பெற்றவர் ஆகி, `இஃது இறைவரின் திருவருளே யாகும்\' எனத் துணிந்து, உள்ளம் உருகி, இன்பம் பொருந்திய மன மகிழ்ச்சியுடையவராகி,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 1161

ஏதமில்சீர் மறையவரில்
ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து
நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா
டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை
எனப்பொருந்த எண்ணினார்.

பொழிப்புரை :

குற்றமற்ற மறையவர் மரபில், பொருந்திய குலம் முதலியவற்றுடன் இசைந்ததாகையால், இறைவரின் திருப்பெருமண நல்லூரில் வாழும் நம்பாண்டார் நம்பி பெற்ற திருமகளாரை, சீகாழித் தலைவரான பிள்ளையார் மணம்செய்தருளுதல் தகுதியுடையதாகும் என்று பொருத்தமுற எண்ணினர்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1162

திருஞான சம்பந்தர்
சீர்பெருக மணம்புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர்
மறையவர்கள் மிகப்பேண
வருவாரும் பெருஞ்சுற்றம்
மகிழ்சிறப்ப மகள்பேசத்
தருவார்தண் பணைநல்லூர்
சார்கின்றார் தாதையார்.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தர் சிறப்புப் பெருகும் திரு மணம் செய்து கொள்ளும் பெருவாழ்வைப் பற்றித் தொண்டர்களும் அந்தணர்களும் மிக விரும்பவும், வருபவர்களாகிய பெருஞ் சுற்றம் மகிழ்ச்சி மிகப் பெறவும், மகட் கொடை நேர்தற் பொருட்டு, மரங்கள் நிறைந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருபெருமணநல்லூரைச் சேர் கின்ற தந்தையார்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1163

மிக்கதிருத் தொண்டர்களும்
வேதியரும் உடன்ஏகத்
திக்குநிகழ் திருநல்லூர்ப்
பெருமணத்தைச் சென்றெய்தத்
தக்கபுகழ் நம்பாண்டார்
நம்பிதாம் அதுகேட்டுச்
செக்கர்முடிச் சடையார்தம்
திருப்பாதம் தொழுதெழுவார்.

பொழிப்புரை :

தொண்டர்களும் அந்தணர்களும் உடன்செல்ல, எண் திசையும் புகழ்கின்ற திருநல்லூர்ப்பெருமணத்தைச் சேரத் தகுந்த புகழுடைய நம்பாண்டார் நம்பிகளும், அவர்தம் வருகையைக் கேட்டு, மகிழ்ந்து, சிவந்த வானத்தைப் போன்ற சடையை உடைய சிவபெரு மானின் திருவடிகளை வணங்கி எழுபவராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1164

ஒப்பரிய பேருவகை
ஓங்கியெழும் உள்ளத்தால்
அப்புநிறை குடம்விளக்கு
மறுகெல்லாம் அணிபெருக்கிச்
செப்பரிய ஆர்வமிகு
பெருஞ்சுற்றத் தொடுஞ்சென்றே
எப்பொருளும் எய்தினேன்
எனத்தொழுதங் கெதிர்கொண்டார்.

பொழிப்புரை :

ஒப்பில்லாத பெருமகிழ்ச்சி ஓங்கி மேல் எழும் மனத்துடன், நன்னீர் நிறைந்த குடமும் விளக்கும் வைத்து, வீதியை எங்கும் அணிசெய்து, சொலற்கரிய ஆசைமிக்க சுற்றத்தாருடன் சென்று, உறுதிப் பொருள் எல்லாவற்றையும் நான் அடைந்தவன் ஆனேன் எனச்சொல்லி அவர்களை வரவேற்றார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1165

எதிர்கொண்டு மணிமாடத்
தினில்எய்தி இன்பமுறு
மதுரமொழி பலமொழிந்து
வரன்முறையால் சிறப்பளிப்பச்
சதுர்முகனின் மேலாய
சண்பைவரு மறையவரும்
முதிருணர்வின் மாதவரும்
அணைந்ததிறம் மொழிகின்றார்.

பொழிப்புரை :

நம்பாண்டார் நம்பி எதிரே போய் வரவேற்று அழைத்துக் கொண்டு சென்று, தம் மணிமாடத்தை அடைந்து, இன்ப முடைய பணிமொழிகள் பலவற்றையும் கூறி, முறையாக வரவேற்று, விருந்து முதலான சிறப்புகளைச் செய்ய, நான்முகனைவிட மேன்மை யுடைய சிவபாத இருதயரும், முதிர்ந்த உணர்வுடைய திருத்தொண்டர் களும் மற்ற அந்தணர்களும், தாங்கள் வந்த திறத்தைத் கூறுபவர்களாகி,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1166

ஞானபோ னகருக்கு
நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பால்
மகட்பேச வந்ததென
ஆனபே றந்தணர்பால்
அருளுடைமை யாம்என்று
வானளவு நிறைந்தபெரு
மனமகிழ்ச்சி யொடுமொழிவார்.

பொழிப்புரை :

ஞானஅமுதுண்ட ஞானசம்பந்தருக்கு நல்ல தவம் பொருந்திய இனிமையான ஒழுக்கத்தால் குற்றமற்ற சிறப்புடைய உம் மகளை மணம் பேசுவதற்கு நாங்கள் வந்துள்ளோம் என்று எடுத் துச் சொல்லவும், இவ்வாறு வரப்பெறுகின்ற பேறு, அந்தணரான நீங்கள் என்மீது வைத்த கருணையாலாகுவதன்றி என் தகுதிபற்றி யன்று என்று வானளவு நிறைந்த பெரும் மனமகிழ்ச்சியுடன், சிவபாத இருதயரை நோக்கி நம்பாண்டார் நம்பி கூறுபவராகி,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1167

உம்முடைய பெருந்தவத்தால்
உலகனைத்தும் ஈன்றளித்த
அம்மைதிரு முலைப்பாலில்
குழைத்தஆ ரமுதுண்டார்க்
கெம்முடைய குலக்கொழுந்தை
யாமுய்யத் தருகின்றோம்
வம்மின்என உரைசெய்து
மனமகிழ்ந்து செலவிடுத்தார்.

பொழிப்புரை :

`உம் பெருந்தவத்தினால் தோன்றிய, உலகங்கள் எல்லாம் பெற்றெடுத்த உமையம்மையாரின் திருமுலைப்பாலில் குழைத்த சிவஞான அமுதத்தை உண்டருளிய பிள்ளையாருக்கு, எம் குலக்கொழுந்தான மகளை, யாங்கள் உய்யும் பொருட்டு திருமணம் செய்து தருகின்றோம். வாருங்கள்\' என்று சொல்லி, உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க அவர்களைச் சீகாழிக்குச் செல்லுமாறு அனுப்பினார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1168

பேருவகை யால்இசைவு
பெற்றவர்தாம் மீண்டணைந்து
காருலவு மலர்ச்சோலைக்
கழுமலத்தை வந்தெய்திச்
சீருடைய பிள்ளையார்க்கு
அவர்நேர்ந்த படிசெப்பிப்
பார்குலவும் திருமணத்தின்
பான்மைவினை தொடங்குவார்.

பொழிப்புரை :

மிக்க மகிழ்ச்சியால் நம்பாண்டாரின் இசைவைப் பெற்ற சிவபாத இருதயர் முதலியவர்கள், மீண்டு சென்று, மேகங்கள் தவழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பகுதியை வந்து அடைந்து, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தரிடம் நம்பாண்டாரின் இசைவு பற்றி விரிவாகச் சொல்லி, உலகம் விளங்குதற்குக் காரணமான திருமணத்தின் செயல்முறைகளைத் தொடங்குவார்களாய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1169

திருமணஞ்செய் கலியாணத்
திருநாளும் திகழ்சிறப்பின்
மருவிய ஓரையுங்கணித
மங்கலநூ லவர்வகுப்பப்
பெருகுமண நாள்ஓலை
பெருஞ்சிறப்பி னுடன் போக்கி
அருள்புரிந்து நன்னாளில்
அணிமுளைப்பா லிகைவிதைத்தார்.

பொழிப்புரை :

திருமணம் செய்யநின்ற நாளையும், விளங்கும் சிறப்புடன் கூடிய ஓரையையும், கணித நூல் உணர்ந்த சான்றோர்கள் வகுத்துச் சொல்ல, பெருகும் மண ஓலையைப் பெருஞ் சிறப்புடன் மணமகள் வீட்டாருக்கும் மற்றச் சுற்றத்தவர் முதலானவர்களுக்கும் அனுப்பி, திருவருள் உணர்த்தியவாறு தேர்ந்தெடுத்த நன்னாளில் அழகிய பாலிகைகளில் அழகான முளையை விதைத்தார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1170

செல்வம்மலி திருப்புகலிச்
செழுந்திருவீ திகளெல்லாம்
மல்குநிறை குடம்விளக்கு
மகரதோ ரணம் நிரைத்தே
எல்லையிலா வொளிமுத்து
மாலைகளெங் கணும் நாற்றி
அல்கு பெருந் திருவோங்க
அணிசிறக்க அலங்கரித்தார்.

பொழிப்புரை :

செல்வம் நிறைந்த சீகாழிப் பதியின் செழித்த வீதிகளில் நிறைகுடங்களையும், விளக்குகளையும், மகர தோரணங்க ளையும் நிரல்பட அமைத்து, பேரொளியையுடைய முத்துமாலைகளை எங்கும் தொங்கவிட்டு, மிக்க பெருந்திரு ஓங்கும்படி, அழகு விளங்க அணிசெய்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 1171

அருந்தவத்தோர் அந்தணர்கள்
அயலுள்ளோர் தாம்உய்யப்
பொருந்துதிரு நாள்ஓலை
பொருவிறந்தார் கொண்டணையத்
திருந்துபுகழ் நம்பாண்டார்
நம்பிசிறப் பெதிர்கொண்டு
வருந்தவத்தால் மகட்கொடுப்பார்
வதுவைவினை தொடங்குவார்.

பொழிப்புரை :

அரிய தவத்தவர்களான தொண்டர்களும் மற்ற வர்களும் மற்றும் அயலில் உள்ளவர்களுமாகக் கூடிய ஒப்பற்ற சான்றோர்கள், தாம் உய்யுமாறு பொருந்தும் திருமண நாள் ஓலையை எடுத்துக் கொண்டு வந்து சேர, பெரும் புகழையுடைய நம்பாண்டார் நம்பிகளும், அச்சிறப்பை முறைமையாக ஏற்றுக் கொண்டு, முன்னைய தவத்தின் பயனால் தம் மகளாரைப் பிள்ளையாருக்கு மணமகளாகத் தருபவராகித் திருமணத்திற்கான செயல்களைச் செய்யத் தொடங் குவார்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1172

மன்னுபெருஞ் சுற்றத்தார்
எல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக்
கெழுநாளாம் நன்னாளில்
பன்மணிமங் கலமுரசம்
பல்லியங்கள் நிறைந்தார்ப்ப
பொன்மணிப்பா லிகைமீது
புனிதமுளை பூரித்தார்.

பொழிப்புரை :

நிலைத்த புகழையுடைய சுற்றத்தவர் அனை வரும் சீகாழியில் வந்து கூடி, திருமணம் நிகழவிருக்கும் நாளுக்கு ஏழுநாள்களுக்கு முன், நல்ல நாளிலே, பல அழகிய மங்கல முரசு களும், பலவகை இயங்களும் நிறைந்து ஒலிக்க, பொன் இட்ட அழகிய பாலிகைகளின் மீது தூய முளையை நிறைத்துத் தெளித்தார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1173

சேணுயரும் மாடங்கள்
திருப்பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள்
நிகரில்அணி பெறவிளக்கிக்
காணவரு கைவண்ணம்
கவின்ஓங்கும் படியெழுதி
வாணிலவு மணிக்கடைக்கண்
மங்கலக்கோ லம்புனைந்து.

பொழிப்புரை :

வானுயர்ந்த மாடங்களையும், செல்வம் மிகும் மண்டபங்களையும், பெரிய நிலைகளை உடைய மாளிகைகளையும் ஒப்பில்லாத அழகு பெறுமாறு அணிசெய்து, காட்சி பொருந்த வரும் ஓவியத்திலும் அழகு மிகுமாறு சித்தரித்துச் சிறந்த உருவங்களை அங்கங்கும் எழுதி, ஒளி பொருந்திய அழகிய மணிகள் பதித்த முதற்கடை வாயிலில் மங்கலக் கோலங்களைச் செய்து,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1174

நீடுநிலைத் தோரணங்கள்
நீள்மறுகு தொறும்நிரைத்து
மாடுயரும் கொடிமாலை
மணிமாலை இடைப்போக்கிச்
சேடுயரும் வேதிகைகள்
செழுஞ்சாந்து கொடுநீவிப்
பீடுகெழு மணிமுத்தின்
பெரும்பந்தர் பலபுனைந்தார்.

பொழிப்புரை :

உயர்ந்த தோரணங்களை நீண்ட வீதிகள் தோறும் நிரல்பட அமைத்து, பக்கங்களில் உயர்ந்த பசிய கொடி மாலைகளையும் மணிமாலைகளையும் இடையிடையே அமைத்து, ஒளியுடைய திண்ணைகளைச் செழுமையுடைய சுண்ணச் சாந்துகளால் மெழுகி, பெருமை விளங்கும் மணிமுத்துக்கள் நிறைந்த பெரும் பந்தல்கள் பலவற்றையும் அமைத்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1175

மன்றல்வினைத் திருமுளைநாள்
தொடங்கிவரு நாளெல்லாம்
முன்றில்தொறும் வீதிதொறும்
முகநெடுவா யில்கள்தொறும்
நின்றொளிரும் மணிவிளக்கு
நிறைவாசப் பொற்குடங்கள்
துன்றுசுடர்த் தாமங்கள்
தூபங்கள் துதைவித்தார்.

பொழிப்புரை :

திருமணச் செயல்களுள், முளை வளர்ந்து வரும் நாள் தொடங்கி, வரும் நாள்களில் எல்லாம் வீதிகள் தோறும், மாடங் களின் முற்றங்கள் தோறும், நீண்ட முன்வாயில்தோறும் விளக்கம் செய்யும் மணி விளக்குகளும், மணமுடைய தூயநீர் நிறைந்த பொன் குடங்களும், நெருங்கிய ஒளியையுடைய மாலைகளும், நறுமணப் பொருள்களுமாகிய இவற்றை நெருக்கமாக அமைத்தனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1176

எங்கணும்மெய்த் திருத்தொண்டர்
மறையவர்கள் ஏனையோர்
மங்கலநீள் மணவினைநாள்
கேட்டுமிக மகிழ்வெய்திப்
பொங்குதிருப் புகலிதனில்
நாள்தோறும் புகுந்துஈண்ட
அங்கண்அணைந் தவர்க்கெல்லாம்
பெருஞ்சிறப்பு மிகவளித்தார்.

பொழிப்புரை :

எல்லா இடங்களிலும் உண்மைத் தொண்டர் களும், அந்தணர்களும், மற்றவர்களும், மங்கலம் பெருகும் மணச் செயல்கள் நிகழும் நாளைக்கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்து, திருப் பெருகும் சீகாழிப் பதியில் நாள்தோறும் வந்து பெருக, அங்ஙனம் அங்கு வந்து சேர்ந்தவர்களுக்கெல்லாம் பெரிய சிறப்பை மிகவும் அளித்தனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1177

மங்கலதூ ரியநாதம்
மறுகுதொறும் நின்றியம்பப்
பொங்கியநான் மறையோசை
கடலோசை மிசைபொலியத்
தங்குநறுங் குறையகிலின்
தழைத்தசெழும் புகையினுடன்
செங்கனல்ஆ குதிப்புகையும்
தெய்வவிரை மணம்பெருக.

பொழிப்புரை :

மங்கலம் பொருந்திய இயங்கள், வீதிகள்தோறும் நின்று ஒலிக்க, மேன்மேல் ஓங்கி எழுந்த நான்மறைகளின் ஒலியா னது கடல் ஒலியைவிட மிக்கு விளங்க, நறுமணம் மிக்க அகில் துண் டங்களின் மிக்க செழும் புகையுடன், வேள்விப் புகையும் சேர்ந்து தெய்வ மணம் பெருக,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1178

எண்திசையில் உள்ளோரும்
ஈண்டுவளத் தொடுநெருங்கப்
பண்டநிறை சாலைகளும்
பலவேறு விதம்பயில
மண்டுபெரு நிதிக்குவைகள்
மலைப்பிறங்கல் எனமலிய
உண்டிவினைப் பெருந்துழனி
ஓவாத ஒலியோங்க.

பொழிப்புரை :

எண்திசையில் உள்ள மக்களும், அங்கங்குள்ள வளம் மிக்க பொருள்களுடன் நெருங்க, பண்டங்கள் நிறையச் சேமிக் கும் சாலைகளும் பல்வேறு விதமாக விளங்க, மிக்க பெருநிதியின் குவியல்கள் மலை என மலிய, உணவு உண்பார் உணவருந்தும் வகையில் எழும் ஓசைகள் இடையறாது பேரொலியாய்ப் பெருக,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1179

மாமறைநூல் விதிச்சடங்கின்
வகுத்தமுறை நெறிமரபின்
தூமணநல் லுபகரணம்
சமைப்பவர்தந் தொழில்துவன்றத்
தாமரையோன் அனையபெருந்
தவமறையோர் தாம்எடுத்த
பூமருவு பொற்கலசப்
புண்ணியநீர் பொலிவெய்த.

பொழிப்புரை :

சிறந்த மறைநூல்களின் வழிச் செயத்தகும் வேள்விகளில், உரிய பொருள்களை அமைத்து ஒழுங்குபடுத்துபவர் களின் தொழில் நெருங்க, நான்முகனைப் போன்று வேள்வி செய்த லில் வல்ல மறையவர்கள் எடுத்த மலர்கள் பொருந்திய பொற்குடங் களில் நிறைந்த புண்ணிய நீர் திகழ,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1180

குங்குமத்தின் செழுஞ்சேற்றின்
கூட்டமைப்போர் இனங்குழுமப்
பொங்குவிரைப் புதுக்கலவைப்
புகையெடுப்போர் தொகைவிரவத்
துங்கநறுங் கர்ப்பூரச்
சுண்ணம்இடிப் போர்நெருங்க
எங்குமலர்ப் பிணைபுனைவோர்
ஈட்டங்கள் மிகப்பெருக.

பொழிப்புரை :

குங்குமப் பூவின் செழுமையான சேறான சந்தனக் குழம்பை அமைப்பவர்களின் இனங்கள் கூட, மிக்க மணம் உடைய மணப் பொருள்கள் கூட்டிய கலவையின் நறும்புகை எடுப்பவர் கூட்டம் பெருக, உயர்வுடைய நறுமணம் உடைய கற்பூரச் சுண்ணத்தை இடிப்போர் கூட்டம் நெருங்க, எங்கும் மலர்களாலான பிணையல் முதலான பலவகைப்பட்ட மாலைகளைத் தொடுப்பவர் கூட்டம் பெருக,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1181

இனையபல வேறுதொழில்
எம்மருங்கும் நிரைத்தியற்று
மனைவளரு மறுகெல்லாம்
மணவணிசெய் மறைமூதூர்
நினைவரிய பெருவளங்கள்
நெருங்குதலால் நிதிக்கோமான்
தனையிறைவர் தாம்ஏவச்
சமைத்ததுபோல் அமைந்துளதால்.

பொழிப்புரை :

இப்படிப் பலவகைப்பட்ட வெவ்வேறு தொழில் களை எல்லாப் பக்கங்களிலும் ஒழுங்குபடச் செய்யும் மனைகள் உள்ள வீதிகளில் எல்லாம், மணவிழாவை விளக்கமாகக் காட்டும் மறையவர்கள் வாழ்கின்ற அவ்வூர், நினைப்பதற்கும் அரிய பெரிய வளங்கள் நெருங்கிய அதனால், குபேரனைச் சிவபெருமான் ஏவிய தால், அவனே வகுத்ததைப் போல விளங்குகிறது.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1182

மாறி லாநிறை வளந்தரு
புகலியின் மணமீக்
கூறு நாளின்முன் னாளினில்
வேதியர் குழாமும்
நீறு சேர்திருத் தொண்டரும்
நிகரிலா தவருக்
காறு சூடினார் அருள்திருக்
காப்புநா ணணிவார்.

பொழிப்புரை :

மாறுபாடில்லாத நிறைந்த வளத்தை அளிக்கும் சீகாழிப் பதியில், திருமணத்தை மேற்கொள்ளும் திருநாளின் முன் நாளில், அந்தணர்களும், திருநீறு அணிந்த தொண்டர்களும் கூடி, ஒப் பில்லாத பிள்ளையாருக்குக் கங்கையைத் தலையில் சூடிய இறைவரின் அருள் பொருந்திய திருக்காப்பு நாணை அணிவிப்பவராகி,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 1183

வேத வாய்மையின் விதியுளி
வினையினால் விளங்க
ஓத நீர்உல கியல்முறை
ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள்திருத் தொண்டர்கள்
மறையவர் கவினார்
மாதர் மைந்தர்பொற் காப்புநாண்
நகர்வலம் செய்தார்.

பொழிப்புரை :

மறைவழிச் செயத்தகும் செயற்பாடுகள் இத னால் விளங்கவும், கடல் சூழ்ந்த உலக நடைமுறை ஒழுக்கங்கள் மிகவும், அன்புமிக்க திருத்தொண்டர்களும் வேதியர்களும் அழகான மங்கையர்களும் ஆடவரும் கூடிப் பொன்னால் ஆன காப்பு நாணை நகர்வலம் வருமாறு செய்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1184

நகர்வ லஞ்செய்து புகுந்தபின்
நவமணி யணிந்த
புகரில் சித்திர விதானமண்
டபத்தினிற் பொலியப்
பகரும் வைதிக விதிச்சமா
வர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார்
திருமுன்பு சேர்ந்தார்.

பொழிப்புரை :

அவ்வாறு நகர்வலம் வரச்செய்து, மங்கலமனை புகுந்த பின்பு, நவமணிகளால் ஆன குற்றம் இல்லாத ஓவியங்களால் மேற்கட்டி அமைக்கப்பட்ட மண்டபத்தில், நூல்களால் எடுத்துக் கூறப்படும் மறைவழி சமாவர்த்தனமாகிய தன்மையை மேற்கொள்ளச் சிறந்த ஞானசம்பந்தரின் திருமுன்பு வந்து சேர்ந்தனர்.

குறிப்புரை :

சமாவர்த்தனம் - இதுகாறும் ஒழுகிய பிரமசரிய நிலை யினின்றும் நீங்கி இல்லறம் மேற்கொள்ளுதற்குரிய நிலை. இதற்கென விதிக்கப்பட்டிருக்கும் செயற்பாடுகளைச் செய்ய அனைவரும் பிள் ளையாரின்முன் வந்தனர்.

பண் :

பாடல் எண் : 1185

செம்பொ னின்பரி கலத்தினில்
செந்நெல்வெண் பரப்பின்
வம்ப ணிந்தநீள் மாலைசூழ்
மருங்குற வமைத்த
அம்பொன் வாசநீர்ப் பொற்குடம்
அரசிலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணிவிளக்
கொளிர்தரும் பரப்பில்.

பொழிப்புரை :

செம்பொன்னால் ஆன தட்டில், செந்நெல்லைப் பரப்பி, அதன்மீது மணம் பொருந்திய நீண்ட மாலைகள் இரு மருங் கிலும் சூழ, அமைக்கப்பட்ட மணமுடைய நீர் நிறைந்த பொன்குடமும், அரசிலையும், தருப்பையும், பரவிய நீண்ட ஒளியையுடைய அழகான விளக்குப் பொருந்திய சூழலில்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 1186

நாத மங்கல முழக்கொடு
நற்றவ முனிவர்
வேத கீதமும் விம்மிட
விரைகமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில்
புனைந்தபுண் ணியம்போல்
மீது பூஞ்சய னத்திருந்
தவர்முன்பு மேவி.

பொழிப்புரை :

பல்வேறு இயங்களால் ஆய மங்கல முழக்கத்து டன், நல்ல தவ முனிவர்களின் மறை ஒலியும் நிறைய, நறுமணம் வீசும் மலர்களும், சாந்தும், அணிகளும், அழகான ஆடையும் புனைந்த புண் ணியத்தின் பொலிவென அழகிய மலர் அமளி மீது வீற்றிருந்த பிள்ளையாரின் திருமுன் அடைந்து,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 1187

ஆர்வ மிக்கெழும் அன்பினால்
மலர்அயன் அனைய
சீர்ம றைத்தொழிற் சடங்குசெய்
திருந்துநூல் முனிவர்
பார்வ ழிப்பட வரும்இரு
வினைகளின் பந்தச்
சார்பொ ழிப்பவர் திருக்கையில்
காப்புநாண் சாத்த.

பொழிப்புரை :

ஆர்வம் மிகுந்து எழுவதால் ஆன அன்பால், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனைப் போன்ற சிறந்த மறை விதிப்படி செயற்பாடுகளைச் செய்யும் நூல்வல்ல வேதியர்கள், உலகில் பிறவி எடுக்க வரும் இருவினைகளின் சார்பை நீக்குபவரான ஞானசம்பந்தரின், திருக்கையில் காப்புநாணை அணிவிக்க,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 1188

கண்ட மாந்தர்கள் கடிமணம்
காணவந் தணைவார்
கொண்ட வல்வினை யாப்பவிழ்
கொள்கைய வான
தொண்டர் சிந்தையும் வதனமும்
மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம்எழுந்
தார்த்தன மகிழ்ந்தே.

பொழிப்புரை :

அதனைப் பார்த்தவர்களும், மணத்தைக் காண்ப தற்காக வந்து கொண்டிருப்பவர்களும், பற்றிய வலிய வினைக்கட்டை அவிழ்த்து நீக்கும் கொள்கையுடைய தொண்டர்களும் ஆகிய இவர்க ளின் உள்ளங்களும் முகங்களும் மலர்ச்சி பெற்றன; ஓசை நிறைந்த மறைக் குலங்கள் மகிழ்ச்சி பெற்று மேல் ஓங்கி ஒலித்தன.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1189

நிரந்த கங்குலின் நிதிமழை
விதிமுறை யெவர்க்கும்
புரந்த ஞானசம் பந்தர்தாம்
புன்னெறிச் சமய
அரந்தை வல்லிருள் அகலமுன்
னவதரித் தாற்போல்
பரந்த பேரிருள் துரந்துவந்
தெழுந்தனன் பகலோன்.

பொழிப்புரை :

பரவிய இரவில் மறைவழி நிதிமழையாகப் பொழிந்து அனைவர்க்கும் அருளிய ஞானசம்பந்தர், முன் புன்மை யான நெறிகளான புறச்சமயங்களின் துன்பம் தரும் வலிய இருள் நீங்க வந்து தோன்றினாற் போல, பரந்த பேரிருளை நீக்கிக் கதிரவன் தோன்றினான்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 1190

அஞ்சி றைச்சுரும் பறைபொழில்
சண்பையாண் டகையார்
தம்சி வத்திரு மணஞ்செயத்
தவஞ்செய்நாள் என்று
மஞ்ச னத்தொழில் புரிந்தென
மாசிருள் கழுவிச்
செஞ்சு டர்கதிர்ப் பேரணி
யணிந்தன திசைகள்.

பொழிப்புரை :

அழகான வண்டுகள் இசைபாடும் பொழில்கள் சூழ்ந்த சீகாழியின் ஆண் தகையாரான ஞானசம்பந்தர், சிவத் திரும ணம் செய்வதற்கிடமாகத் தவம் செய்யப் பெறும் நாள்இது என்று எண்ணித் திருமஞ்சனத் தொழிலைச் செய்தல் போல, மாசுடைய இரு ளைக் கழுவி நீக்கிப் பகலோனது செஞ்சுடரான கதிர்களின் பேரணி யினைத் திசைகள் பூண்டு கொண்டன.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 1191

பரம்பு தம்வயின் எங்கணும்
உள்ளபல் வளங்கள்
நிரம்ப முன்கொணர்ந் தெண்திசை
யவர்நெருங் குதலால்
தரங்க டந்தவர் தந்திருக்
கல்லியா ணத்தின்
வரம்பில் தன்பயன் காட்டுவ
தொத்தது வையம்.

பொழிப்புரை :

பெருகிய தங்களிடத்தில் எவ்வெவ்விடங் களிலும் உள்ள பல வளங்களையும் மிகுதிப்பட முன்கொணர்ந்து, எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் நெருங்கி வந்து கூடியதால், ஒப்பில்லாதவரான ஞானசம்பந்தரின் திருமணத்தில் அளவற்ற தன் பயனை, நிலம் எடுத்துக் காட்டுவது போல விளங்கியது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1192

நங்கள் வாழ்வென வருந்திரு
ஞானசம் பந்தர்
மங்க லத்திரு மணவெழுச்
சியின்முழக் கென்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை
ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேரொலி முழக்குடன்
எழுந்தது புணரி.

பொழிப்புரை :

அடியவரான எங்கள் வாழ்வே உருக்கொண்டு வந்தது போல வரும் திருஞானசம்பந்தரின், மங்கலமான திருமண எழுச்சியில், மங்கல இயங்களின் ஒலி போலப் பெரிய வெண்மை யான அலைகளுடன் சங்குகளின் ஒலியும் சூழ்ந்து, மேன்மேலும் எழும் பெரிய ஒலியான முழக்கத்துடனே கடல் எழுந்தது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1193

அளக்கர் ஏழும்ஒன் றாமெனும்
பெருமையெவ் வுலகும்
விளக்கு மாமண விழாவுடன்
விரைந்துசெல் வனபோல்
துளக்கில் வேதியர் ஆகுதி
தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலஞ்சுழித்
தெழுந்தது வன்னி.

பொழிப்புரை :

கடல்கள் ஏழும் ஒன்றாய்ச் சேர்ந்து எழுந்தன என்ற பெருமை கொண்டு, எல்லா உலகங்களையும் விளங்கிடச் செய்கின்ற திருமண நிகழ்ச்சியான விழாவுடனே, தாமும் கூடிப் பயன் பெறும் பொருட்டு, விரைவாகச் செல்ல ஒருப்பட்டு, எழுபவை போன்று, அசைவில்லாத ஒழுக்கத்தையுடைய வேதியர்கள் ஆகுதி யைத் தொடங்குவதற்கு முன்னம், மூன்று தீ வளர்வதற்கிடமான வேதி கைகளில் தீயானது வலம் சுழித்து எழுந்தது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1194

சந்த மென்மலர்த் தாதணி
நீறுமெய் தரித்துக்
கந்தம் மேவுவண்டு ஒழுங்கெனுங்
கண்டிகை பூண்டு
சிந்தை தூயஅன் பர்களுடன்
திருமணம் போத
மந்த சாரியின் மணங்கொணர்ந்
தெழுந்தது மருத்து.

பொழிப்புரை :

அழகான மெல்லிய பூந்தாதுக்களான திரு நீற்றை மெய்யில் தாங்கிக் கொண்டு, கூட்டமாகப் பொருந்தும் வண்டுகளின் வரிசையான உருத்திராக்க மாலைகளைப் பூண்டு, உள்ளம் தூய்மை யான அன்பர்களுடன் கூடித் திருமண எழுச்சியில் கலந்து செல்ல, மென்மையான வேகத்தினால், பூமணங்களைச் சுமந்த வண்ணம் காற்று வந்தது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1195

எண்தி சைத்தலத் தியாவரும்
புகலிவந் தெய்தி
மண்டும் அத்திரு மணஎழுச்
சியின்அணி வாய்ப்பக்
கொண்ட வெண்ணிறக் குரூஉச்சுடர்க்
கொண்டல்கள் என்னும்
வெண்து கிற்கொடி நிரைத்தது
போன்றது விசும்பு.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளின் பகுதிகளில் வாழ்கின்ற எல்லாத் திறத்தவரும் சீகாழியில் வந்துகூடி, நெருங்கி, எழுந்த அத் திருமண நிகழ்ச்சியில், அழகு பொருந்தும்படி மேற்கொண்டு தூக்கி எடுத்த வெண்ணிறம் பொருந்திய ஒளியையுடைய பெருவெண் மேகங்களாகிய வெண்மையான துணியால் ஆன கொடிகளை, நிரல் பட அமைத்தாற்போன்று வானம் விளங்கியது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1196

ஏல இந்நலம் யாவையும்
எழுச்சிமுன் காட்டும்
காலை செய்வினை முற்றிய
கவுணியர் பெருமான்
மூல மாகிய தோணிமேல்
முதல்வரை வணங்கிச்
சீல மார்திரு வருளினால்
மணத்தின்மேற் செல்வார்.

பொழிப்புரை :

பொருந்துமாறு வந்த இந்நன்மைகள் யாவும், திருமண எழுச்சியின் முன் காட்டுகின்ற, காலையில் செய்யும் கடப்பாட்டை முடித்தருளிய கவுணியர் தலைவரான ஞானசம்பந்தர், மூலமான திருத்தோணியின் மேல் உள்ள இறைவரை வணங்கிச் செம்மையான திருவருள் பெற்றவராய்த் திருமணத்தை மேற்கொண்டு செல்வாராகி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1197

காழி மாநகர் வேதியர்
குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர்
துதைந்துமுன் செல்ல
வாழி மாமறை முழங்கிட
வளம்பதி வணங்கி
நீழல் வெண்சுடர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.

பொழிப்புரை :

சீகாழிப் பதியில் அந்தணர்கள் கூட்டத்துடன் கலந்து சூழ்ந்த அன்பர்களும், மற்றவர்களும் நெருங்கி முன்னே செல்லச் சென்று, வாழ்வுதரும் பெருமறைகள் முழங்க, வளம் வாய்ந்த சீகாழிப் பதியினை வணங்கி, ஒளி மிக்க வெண்மையான சுடரை உடைய முத்துச் சிவிகையின் மேல் எழுந்தருளி அமர்ந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1198

ஆன வாகனம் ஏறுவார்
யாரும்மேற் கொள்ளக்
கான மாகிய தொங்கல்பிச்
சங்குடை கவரி
மேனெ ருங்கிட விசும்பினும்
நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன்
மங்கல வியங்கள்.

பொழிப்புரை :

அவரவர்க்குரிய ஊர்திகளில் அமர்ந்து செல்ப வர்கள், அவ்வவற்றில் ஏறி அமர, காட்டைப் போன்ற தொங்கல் களும், பீலிக் குஞ்சங்களும், குடைகளும், கவரிகளும் மேலே நெருங்க, வானத்திலும் நிலத்திலுமாக முறையே தேவதுந்துபி ஒலியுடன் மங்கல இன்னியங்களின் ஒலியும் ஒருங்கே எழுந்தன.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1199

சங்கொடு தாரை சின்னம்
தனிப்பெருங் காளந் தாளம்
வங்கியம் ஏனை மற்று
மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப்
பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத்
திருமணம் எழுந்த தன்றே.

பொழிப்புரை :

சங்கினொடு தாரை, சின்னம், ஒப்பற்ற பெரிய எக்காளம், தாளம், குழல் என்ற இவை போன்ற ஒலி உண்டாகின்ற கருவிகள் எல்லாமும், மேல் எழுந்த ஒலியினால் ஓங்கி, அந்தணர் களின் மறைப் பாடல்களின் ஒலியுடன் பொருந்தி, எங்கும் பெருகத் திருமணமானது எழுச்சி பெற்றுச் சென்றது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1200

கோதையர் குழல்சூழ் வண்டின்
குழாத்தொலி யொருபால் கோல
வேதியர் வேத வாய்மை
மிகும்ஒலி யொருபால் மிக்க
ஏதமில் விபஞ்சி வீணை
யாழொலி யொருபால் ஏத்தும்
நாதமங் கலங்கள் கீத
நயப்பொலி ஒருபா லாக.

பொழிப்புரை :

மங்கையரின் கூந்தலைச் சூழ்ந்த வண்டுக் கூட்டங்களின் ஒலி ஒருபக்கத்திலும், அழகிய மறையவர் ஓதும் மறை ஒலி ஒருபக்கத்திலும், குற்றம் இல்லாத மிக்க வீணையும் யாழுமான இவற்றின் ஒலி ஒருபக்கத்திலும், போற்றும் நாதத்துடன் கூடிய மங்க லங்களைப் பாடலாய்ப் பாடும் இனிமையான ஒலி ஒரு பக்கத்திலும்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 1201

விண்ணினை விழுங்க மிக்க
வெண்துகில் பதாகை வெள்ளம்
கண்வெறி படைப்ப மிக்க
கதிர்விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப்பூண் நீடும்
அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத் தூசின்
பொதிப்பரப் பெங்கும் நண்ண.

பொழிப்புரை :

மிக்க வெண் துகில் கொடிகளின் கூட்டம் வானவெளியை மறைக்கவும், மிக்க ஒளிவீசும் சாமரைகளின் கூட்டம் கண்கள் கூசவும், விளங்கும் மணிகளையுடைய அணிகளும் நீடும் மஞ்சள் நிறம் மிக்க அழகிய அளவற்ற துணிப் பொதிகளின் கூட்டமும் எங்கும் பொருந்த,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1202

சிகையொடு மான்தோல் தாங்கும்
கிடையும் ஆசானும் செல்வார்
புகைவிடும் வேள்விச் செந்தீ
இல்லுடன் கொண்டு போவார்
தகைவிலா விருப்பின் மிக்க
பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையுஞ் செற்ற
மாதவ ரியல்பின் மல்க.

பொழிப்புரை :

பஞ்சசிகை கொண்ட தோற்றத்துடன், கரியமான் தோலைப் பூணும் நூலில் கொண்ட மறை ஓதும் சிறுவர்களும் ஆசிரிய ரும் ஆகக் கூடிச் செல்லவும், ஓமப் புகைவிடும் வேள்விச் செந்தீயி னைத் தத்தம் மனைவியர்களுடனே கொண்டு அந்தணர் செல்லவும், தடுக்க இயலாத விருப்பத்துடன் பெருமையால் சிறந்த திருப்பதிகங் களை ஓதிக்கொண்டு ஓதுபவர் செல்லவும், ஆறுவகையான பகைகளையும் அறுத்தவர்கள் தத்தம் இயல்புடனே நெருங்கவும்,

குறிப்புரை :

செருக்கு, சினம், காமம், இவறல், மாண்பிறந்த மானம், மாணா உவகை ஆகியன அறுவகைப் பகையாம்.

பண் :

பாடல் எண் : 1203

அறுவகை விளங்குஞ் சைவத்
தளவிலா விரதஞ் சாரும்
நெறிவழி நின்ற வேடம்
நீடிய தவத்தி னுள்ளோர்
மறுவறு மனத்தி லன்பின்
வழியினால் வந்த யோகக்
குறிநிலை பெற்ற தொண்டர்
குழாங்குழாம் ஆகி ஏக.

பொழிப்புரை :

ஆறுவகையான உட்சமயங்களில் எண்ணற்ற விரதங்களைக் கொண்ட ஒழுக்க வழிகளிலே உரிய வேடங்களால் நீடிய தவத்தில் நின்றவர்களும், குற்றமற்ற மனத்துடன் அன்பின் வழியினால் சிவயோகக் குறியில் நிலைபெற்றவர்களும் கூட்டம் கூட்டமாகச் செல்லவும்,

குறிப்புரை :

உட்சமயம் ஆறாவன, பாடாணவாதம், பேதவாதம், சிவசமவாதம், சிவசங்கிராந்த வாதம், ஈசுவர அவிகாரவாதம், சிவாத்து விதம் என்பன இக்கொள்கையினர், சைவசித்தாந்தச் செந்நெறியோடு முடிவில் சிலவேறு பாடுகளை உடையரேனும், மேலாய உண்மையை ஒரு மருங்கு ஏற்கும் இயல்புடையர் ஆதலின் இவர்களும் பிள்ளை யார் திருமணத்திற்கு வந்தனர். சிவயோகக் குறியில் நிற்பவர்கள் கிரியையில் நிற்போர்.

பண் :

பாடல் எண் : 1204

விஞ்சையர் இயக்கர் சித்தர்
கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சனம் நாட்ட ஈட்டத்
தரம்பைய ருடனா யுள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித்
தழைத்த ஆதரவி னோடும்
மஞ்சுறை விசும்பின் மீது
மணவணி காணச் சென்றார்.

பொழிப்புரை :

வித்தியாதரர்களும் இயக்கர்களும் சித்தர்களும் நெருங்கிய தேவர்களும் மைபூசப் பெற்ற கண்களை உடைய கூட்ட மான அரம்பையர்கள் உடன் உள்ளவர்களும், தங்கள் தங்களுடைய ஒளி பொருந்திய வான விமானங்களில் ஏறிக் கொண்டு, மிகு விருப் புடன் மேகங்கள் தவழும் வான் வழியாகத் திருமண நிகழ்ச்சியைக் காண்பதற்காக வந்தனர்.

குறிப்புரை :

வித்தியாதரர், இயக்கர், கின்னரர் ஆகிய இவர்கள் தேவரினத்தவர். சித்தர் தாம் வேண்டியவாறு இயங்கும் வல்லமை உடையவர்.

பண் :

பாடல் எண் : 1205

மற்றிவர் மிடைந்து செல்லும்
மங்கல வனப்பின் காட்சி
முற்றஇத் தலத்தி னுள்ளோர்
மொய்த்துடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த
அணைதலால் மணமேற் செல்லும்
பொற்பமை மணத்தின் சாயை
போன்றுமுன் பொலியச் செல்ல.

பொழிப்புரை :

வித்தியாதரர், இயக்கர், கின்னரர் ஆகிய இவர்கள் தேவரினத்தவர். சித்தர் தாம் வேண்டியவாறு இயங்கும் வல்லமை உடையவர்.

குறிப்புரை :

திருமணஎழுச்சிக்கு விண்ணவர்கள் விண் வழியாகவும், அதே நேரத்தில் மண்ணவர்கள் மண்வழியாகவும் செல்கின்றனர். இவர்களில் மண்ணவர்களின் சாயையே விண்ணவர்களாகக் காட்சி யளிக்கிறதாம். இதனால் மண்ணவர்களின் சிறப்புணரப்படும்.

பண் :

பாடல் எண் : 1206

தவஅர சாள உய்க்கும்
தனிக்குடை நிழற்றச் சாரும்
பவமறுத் தாள வல்லார்
பாதம்உள் ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த
பூந்தராய் வேந்தர் போந்து
சிவனமர்ந் துறையு நல்லூர்த்
திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார்.

பொழிப்புரை :

தவ அரசை ஆட்சி செய்வதற்குப் பிடித்ததைப் போன்று, ஒப்பில்லாத முத்துக் குடைகள் மேலே நிழல் செய்ய, சாரும் பிறவியை அறுத்து ஆட்கொள்ள வல்ல இறைவரின் திருவடிகளைத் தம் திருவுள்ளத்தில் வைத்துக் கொண்டவராய், உலகங்கள் எல்லாம் வாழ்வடையும் பொருட்டு வந்து தோன்றிய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் சென்றருளிச் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருநல்லூர்ப் பெருமணத்தை அடைந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1207

பெருமணக் கோயி லுள்ளார்
மங்கலம் பெருகு மாற்றால்
வருமணத் திறத்தின் முன்னர்
வழியெதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும்
சிரபுரச் செம்ம லார்தாம்
இருள்மறைத்து இலங்கு கண்டத்
திறைவர்தங் கோயில் புக்கார்.

பொழிப்புரை :

திருநல்லூர்ப் பெருமணத்தில் உள்ள கோயிலில் உள்ள தொண்டர்கள் மங்கலம் பெருக, இனி நிகழ உள்ள திருமணத்தின் முன், வழியிலே வந்து எதிர்கொள்ள, திருமணம் செய்து கொள்ள வருகின்ற ஞானசம்பந்தர் சென்று, கரிய நஞ்சினைத் தன்னுள் மறைத்து விளங்கும் திருக்கழுத்துடைய இறைவரின் கோயிலுள் புகுந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1208

நாதரைப் பணிந்து போற்றி
நற்பொருட் பதிகம் பாடிக்
காதல்மெய் யருள்முன் பெற்றுக்
கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம்
புனைந்திட வேண்டும் என்னப்
பூதநா யகர்தங் கோயில்
புறத்தொரு மடத்திற் புக்கார்.

பொழிப்புரை :

இறைவரைப் பணிந்து போற்றி, நல்ல பொருள் பொதித்த பதிகத்தைப் பாடி, பெரு விருப்பத்தை விளைக்கின்ற இறை வரின் மெய்யருளை முன் பெற்றவராய்க் கவுணியர் தலைவரான பிள்ளையார் வெளியே போதர, அதுபொழுது மறையவர்கள், திருமணக் கோலத்தைக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்ள, அதனைச் செவியேற்றுப் பூதகணங்களின் தலைவரான இறைவரின் கோயில் அருகே உள்ளதொரு மடத்தினுள் புகுந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளியபதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 1209

பொற்குடம் நிறைந்த வாசப்
புனிதமஞ் சனநீ ராட்டி
விற்பொலி வெண்பட் டாடை
மேதக விளங்கச் சாத்தி
நற்றிரு வுத்த ரீய
நறுந்துகில் சாத்தி நானப்
பற்பல கலவைச் சாந்தம்
பான்மையில் அணிந்த பின்னர்.

பொழிப்புரை :

பொன்குடத்தில் நிறைக்கப் பெற்ற மணமுடைய புனிதமான திருமுழுக்கிற்குரிய நீரால் ஞானசம்பந்தரை நீராட்டி, ஒளிவிளங்கும் வெண்மையான பட்டாடையை அழகுபெற உடுத்தி, நல்ல மேலாடையான நறுமணத் துகிலையும் அணிவித்து, மணம் கமழும் கத்தூரியுடன் பல பொருள்களைக் கூட்டி அமைத்த சாந்தத் தைப் பண்பு அமையச் சாத்திய பின்னர்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1210

திருவடி மலர்மேற் பூத்த
செழுந்தகைச் சோதி யென்ன
மருவிய தரளக் கோவை
மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது
விளங்குபொற் சரட்டில் கோத்த
பெருகொளி முத்தின் தாமம்
பிறங்கிய தொங்கல் சாத்தி.

பொழிப்புரை :

திருவடி மலர்களின் மீது, பூத்த செவ்விய விளக்கின் ஒளி போன்று பொருந்திய முத்துக் கோவைகளையுடைய மணிவளையைப் பொருந்தச் சாத்தி, விரிகின்ற ஒளியுடைய பரடுகளின் மேல் விளங்கிய பொன்கம்பியில் கோத்த பெருகும் ஒளியுடைய முத்து மாலையில் விளங்கும் குஞ்சத்தைச் சாத்தி

குறிப்புரை :

இப்பாடல் முதலாவுள்ள ஆறுபாடல்களில், பிள்ளை யாரின் திருவடி முதல் திருமுடி வரை செய்த அணிநலன்கள் குறிக்கப் பெறுகின்றன.

பண் :

பாடல் எண் : 1211

தண்சுடர்ப் பரிய முத்துத்
தமனிய நாணிற் கோத்த
கண்கவர் கோவைப் பத்திக்
கதிர்க்கடி சூத்தி ரத்தை
வெண்சுடர்த் தரள மாலை
விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண்திரு அரையில் நீடு
வனப்பொளி வளரச் சாத்தி.

பொழிப்புரை :

குளிர்ந்ததும், ஒளி வீசுகின்றதுமான பெரிய முத்துக்களைப் பொன் கயிற்றில் கோத்துப் பார்ப்பவரின் கண்களைக் கவரத்தக்க கோவை வரிசையுடைய ஒளிகொண்ட அரைஞாணை, வெண்ணிற ஒளி வீசும் முத்துமாலை விரிந்த சுடர்விடும் கச்சத்தின் மீது வளமை வாய்ந்த அரையில் மிக்க அழகுடனே ஒளிவிளங்க அணிந்து,

குறிப்புரை :

கடிசூத்திரம் - அரைஞாண், இது உடையின் மேல் அணி தற்குரியது என்பர்.

பண் :

பாடல் எண் : 1212

ஒளிகதிர்த் தரளக் கோவை
யுதரபந் தனத்தின் மீது
தளிர்ஒளி துளும்பு முத்தின்
சன்னவீ ரத்தைச் சாத்திக்
குளிர்நில வெறிக்கு முத்தின்
பூணநூல் கோவை சாத்தி
நளிர்கதிர் முத்துமாலை
நகுசுடர் ஆரஞ் சாத்தி.

பொழிப்புரை :

ஒளியையுடைய முத்துக் கோவைகளாலான அரைப் பட்டிகையின் மீது தளிர்க்கும் ஒளிமிகும் சன்ன வீரத்தைச் சாத்தி, குளிர்ந்த முத்து ஒளிவீசும் முத்துக் கோவையால் ஆன பூண் நூலை அணிந்து, குளிர்ந்த கதிர்களையுடைய முத்து மாலையான ஒளி பொருந்திய ஆரத்தைச் சாத்தி,

குறிப்புரை :

உதரபந்தனம் - அரையில் ஆடையின் மீது கட்டப்படுவது. சன்னவீரம் - கழுத்திலிருந்து உந்திவரை தொங்குதற்குரிய முத்துமாலை.

பண் :

பாடல் எண் : 1213

வாள்விடு வயிரக் கட்டு
மணிவிரல் ஆழி சாத்தித்
தாளுறு தடக்கை முத்தின்
தண்டையும் சரியும் சாத்தி
நீளொளி முழங்கைப் பொட்டு
நிறைசுடர் வடமும் சாத்தித்
தோள்வளைத் தரளப் பைம்பூண்
சுந்தரத் தோள்மேற் சாத்தி.

பொழிப்புரை :

ஒளிவீசும் வயிரக் கட்டுக் கொண்ட விரலில் மோதிரத்தை அணிந்து, முழந்தாள்வரையும் நீண்ட வன்மையான கையில் முத்தால் ஆன தண்டையையும், கைச்சரியையும் அணிந்து, நீண்ட ஒளி கொண்ட முழங்கைப் பொட்டுடன் வரிசையாய் ஒளிவீசும் மணிவடங்களையும் சாத்தி, தோள் வளையான முத்தால் ஆன அணியை அழகிய தோள் மீது சாத்தி,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1214

திருக்கழுத் தாரந் தெய்வக்
கண்டிகை மாலை சேரப்
பருத்தமுத் தொழுங்கு கோத்த
படரொளி வடமும் சாத்திப்
பெருக்கிய வனப்பின் செவ்வி
பிறங்கிய திருவார் காதில்
வருக்கவெண் தரளக் கொத்தின்
வடிக்குழை விளங்கச் சாத்தி.

பொழிப்புரை :

தெய்வத்தன்மை வாய்ந்த உருத்திராக்க மாலை யுடன் சேருமாறு கழுத்தில் அணியும் ஆரமாய்ப் பெரிய முத்துக்களை ஒழுங்காய்க் கோத்த படரும் ஒளியுடைய வடத்தையும் சாத்தி, மிக்க அழகோடு உரிய இலக்கணமும் அமைந்த திருப்பொருந்திய காதில் நல்ல சாதி முத்துக்களால் ஆன மகர குண்டலத்தை விளங்கச் சாத்தி,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1215

நீற்றொளி தழைத்துப் பொங்கி
நிறைதிரு நெற்றி மீது
மேற்பட விரிந்த சோதி
வெண்சுட ரெழுந்த தென்னப்
பாற்படு முத்தின் பாரப்
பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத் தணிந்த முத்தின்
எழில்வளர் மகுடஞ் சேர்த்தார்.

பொழிப்புரை :

: திருநீற்றின் ஒளி தழைத்துப் பெருகும் நெற்றி யின் மீது, விரிந்த ஒளிபொருந்திய வெண்மையான சுடரானது மேல் எழுந்ததைப் போன்ற நல்ல தன்மையுடைய முத்தால் ஆன குளிர்ந்த ஒளிவிடும் திரணையை அணிந்து, பொருந்துமாறு வைத்து அழகு படுத்திய முத்தால் ஆன அழகு மிக்க மகுடத்தைச் சாத்தினர்.

குறிப்புரை :

திரணை- மகுடத்தின் கீழ் அதனைப் பொருந்த வைத்தற் குரிய விளிம்பு. இவ்வேழு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1216

இவ்வகை நம்மை யாளும்
ஏர்வளர் தெய்வக் கோலம்
கவ்வினை மறையோர் செய்யக்
கடிகொள்செங் கமலத் தாதின்
செவ்விநீள் தாம மார்பர்
திருவடை யாள மாலை
எவ்வுல கோரும் ஏத்தத்
தொழுதுதாம் எடுத்துப் பூண்டார்.

பொழிப்புரை :

இவ்வாறு நம்மை ஆட்கொள்கின்ற அழகுமிக்க தெய்வத்தன்மை வாய்ந்த மணக்கோலத்தை, அத்தொழிலில் வல்ல அந்தணர்கள் செய்ய, மணம் பொருந்திய தாதுக்களையுடைய புதிய தாய் மலர்ந்த நீண்ட தாமரை மாலையை அணிந்த மார்பரான ஞான சம்பந்தர், திருஅடையாள மாலையான உருத்திராக்க மாலையை எல்லா உலகத்தவரும் போற்றுமாறு வணங்கி, தாமே எடுத்து அணிந்து கொண்டார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1217

அழகினுக் கணியாம் வெண்ணீ
றஞ்செழுத் தோதிச் சாத்திப்
பழகிய அன்பர் சூழப்
படரொளி மறுகி லெய்தி
மழவிடை மேலோர் தம்மை
மனங்கொள வணங்கி வந்து
முழுவொலி யெடுப்ப முத்தின்
சிவிகைமேல் கொண்ட போது.

பொழிப்புரை :

அழகுக்கு அழகு செய்கின்ற திருவெண்ணீற் றைத் திருவைந்தெழுத்தை ஓதி அணிந்து கொண்டு, அழகிய அன்பர் கள் சூழ்ந்துவர, ஒலியும் ஒளியும் பொருந்திய தெருவில் வந்து, இளமையான விடையையுடைய சிவபெருமானை மனமார வணங்கி, முழவுகள் ஒலிக்க, முத்துச் சிவிகை மீது அமர்ந்து எழுந்தருளிய பொழுது,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1218

எழுந்தன சங்க நாதம்
இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணோர்
கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர்
சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது
மலர்ந்தன உலகம் எல்லாம்.

பொழிப்புரை :

சங்குகளின் ஒலி எழுந்தன. இனிய இயங்களின் ஒலி எழுந்தன. விண்ணிலிருந்து தேவர்கள் கற்பகப் பூமழையைப் பொழிந்தனர். தொழத்தகும் முனிவர்களும் தொண்டர்களும் எடுத் தோதும் வாழ்த்தொலிகள் மேன்மேலும் பெருகி எழுந்து, எண்திசை களிலும் பரவின. உலகம் மலர்ந்தது.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1219

படர்பெருந் தொங்கல் பிச்சம்
பைங்கதிர்ப் பீலிப் பந்தர்
அடர்புனை செம்பொற் பாண்டில்
அணிதுகிற் சதுக்கம் மல்கக்
கடலின்மீ தெழுந்து நிற்கும்
கதிர்நிறை மதியம் போல
வடநிரை யணிந்த முத்தின்
மணிக்குடை நிழற்ற வந்தார்.

பொழிப்புரை :

பரந்த பெரிய குஞ்சங்களும், வெண்குடைகளும், பச்சை நிறமுடைய பீலியால் அமைந்த பந்தர்களும், நெருக்க மாய் அழகு செய்யப்பட்ட பொன் தகட்டால் ஆன வட்ட அமைப்பு டைய அழகிய துணிகளால் அமைந்த மேற்கட்டிகளும், நெருங்கக் கடல்மீது வந்து தோன்றும் கலைகள் நிறைந்த சந்திரன் போல, முத்து வடங்களால் அழகு செய்யப்பட்ட முத்துக் குடை மேலே நிழல் செய்ய, ஞானசம்பந்தர் வந்தருளினார்.

குறிப்புரை :

பிச்சம் - வெண்குடை.

பண் :

பாடல் எண் : 1220

சீரணி தெருவி னூடு
திருமணம் செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம்
இலங்கொளித் தாரை யெல்லாம்
பேரொலி பெருக முன்னே
பிடித்தன மறைக ளோடு
தாரணி உய்ய ஞான
சம்பந்தர் வந்தா ரென்று.

பொழிப்புரை :

அழகிய தெருவில் திருமண எழுச்சி இவ்வாறு அமைந்து செல்ல, முத்தால் ஆன அழகுடைய எக்காளமும், திருச்சின் னமும், ஒளியுடைய தாரையும் ஆகிய இவையெல்லாம், நான்மறை களும் உய்யவந்த திருஞானசம்பந்தர் வந்தார் என இயம்பின.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1221

மண்ணினுக் கிடுக்கண் தீர
வந்தவர் திருநா மங்கள்
எண்ணில பலவும் ஏத்திச்
சின்னங்க ளெழுந்த போதவ்
வண்ணலார் வதுவை செய்ய
அலங்கரித் தணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட
மங்கலம் பொழிந்து பொங்க.

பொழிப்புரை :

இவ்வுலகத்தவரின் துன்பம் நீங்கத் தோன்றி அருளிய ஞானசம்பந்தரின் திருப்பெயர்கள் பலவற்றையும், திருச்சின் னங்கள் பலவும் கூறி வாழ்த்திவரும் அமயத்தில், ஞானசம்பந்தர் திரு மணம் செய்தற்காக அணிநலன் பொருந்த எழுந்தருளப் பெறும் பேறு பெற்ற புண்ணிய அந்தணரான நம்பாண்டாரது திருமாளிகையில், மங் கல இயங்கள் பலவும் பேரொலி செய்ய,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1222

முற்றுமெய்ஞ்ஞானம் பெற்ற
மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெருந் தவத்தின் நீர்மை
நலம்படைத் தெழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம் பன்னார்
தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறு சடங்கு முன்னர்ப்
பரிவுடன் செய்த வேலை.

பொழிப்புரை :

முற்றிய மெய்ஞ்ஞானத்தையுடைய ஞானசம் பந்தரின் சிவந்த திருக்கையைப் பிடிக்க, நல்ல பெரிய தவத்தன்மை யால் ஆன நலன்களை எல்லாம் கொண்டு எழுந்த தெய்வக் கற்பகப் பூங்கொம்பு போன்ற அம்மையாரையும், காப்பு அணிந்து, திருமணம் செய்தற்குரிய செயற்பாடுகள் பலவற்றையும் முன்னர் விருப்பத்துடன் செய்த போது,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1223

செம்பொன்செய் வாசிச் சூட்டுத்
திருமணிப் புனைபூண் செல்வப்
பைம்பொனின் மாலை வேய்ந்த
பவளமென் கொடியொப் பாரை
நம்பன்தன் அருளே வாழ்த்தி
நல்லெழில் விளங்கச் சூட்டி
அம்பொன்செய் தீப மென்ன
அழகலங் கரித்து வைத்தார்.

பொழிப்புரை :

செம்பொன்னால் ஆன நெற்றி மாலையையும், அழகிய மணிகள் பதித்த ஒப்பனை செய்த அணிகளையும், செல்வம் பொருந்திய பொன் அரிமாலைகளையும், நிரல்படச் சூட்டிய மெல் லிய பவளக் கொடியைப்போன்ற அம்மையாரை, இறைவரின் அரு ளையே வாழ்த்தி, நல்ல அழகு விளங்க ஒப்பனை செய்து, அழகிய பொன்னால் ஆன விளக்கைப் போன்ற அழகையே அழகு செய்தாற் போன்று அழகு செய்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1224

மாமறை மைந்தர் எல்லாம்
மணத்தெதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம்பொற் சுண்ணம்
தொகுநவ மணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார்
அரசிலை தருப்பை தோய்ந்த
காமர்பொற் கலச நன்னீர்
இருக்குடன் கலந்து வீச.

பொழிப்புரை :

சிறந்த அந்தண மைந்தர்கள் அனைவரும் திரு மண எழுச்சியின் முன்வந்து, பொருந்திய தூய்மையான மலர்களு டன் பொன் சுண்ணத்தையும், தொகுதியான நவமணிகளையும் வீச, தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் அர சிலையும் தருப்பையும் தோய்ந்த அழகிய பொற்குடத்தின்கண் உள்ள நல்ல நீரை மந்திரங்களைக் கூறித் தெளிக்க,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1225

விண்ணவர் மலரின் மாரி
விசும்பொளி தழைப்ப வீச
மண்ணக நிறைந்த கந்த
மந்தமா ருதமும் வீசக்
கண்ணொளி விளக்கம் மிக்க
காமர்தோ ரணங்க ளூடு
புண்ணிய விளைவு போல்வார்
பூம்பந்தர் முன்பு சார்ந்தார்.

பொழிப்புரை :

தேவர்கள் மலர் மழையை வானத்தே ஒளி மிகுமாறு வீச, நிறைந்த மணத்தையுடைய தென்றல் காற்றை மண்ணுல கம் வீச, நெருங்கிய ஒளிமிக்க அழகிய தோரணங்களிடையே சென்று, புண்ணியத்தின் பயனைப் போன்ற திருஞானசம்பந்தர் பூம்பந்தலின் முன் அணைந்தார்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1226

பொன்னணி சங்கின் வெள்ளம்
பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி
வளர்மணிச் சிவிகை நின்றும்
பன்மலர் நறும்பொற் சுண்ணம்
பரந்தபா வாடைமீது
முன்னிழிந் தருளி வந்தார்
மூவுல குய்ய வந்தார்.

பொழிப்புரை :

பொன்னை அணிந்த சங்குகளின் கூட்டம் அழகுடன் முழங்கி ஒலிக்க, பொருந்திய முத்து வரிசைகள் பெருகி ஒளி செய்து விளங்கிய சிவிகையினின்றும், பல மலர்களும் மணம் கமழும் பொன் சுண்ணமும் பரவியிருந்த பாவாடையின் மேல் முன்னே இறங்கி, மூவுலகையும் உய்யும் பொருட்டுத் தோன்றிய ஞானசம்பந்தர் வந்தருளினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1227

மறைக்குல மனையின் வாழ்க்கை
மங்கல மகளி ரெல்லாம்
நிறைத்தநீர்ப் பொற்கு டங்கள்
நிறைமணி விளக்குத் தூபம்
நறைக்குல மலர்சூழ் மாலை
நகுசுடர் முளைப்பொற் பாண்டில்
உறைப்பொலி கலவை யேந்தி
உடன்எதி ரேற்று நின்றார்.

பொழிப்புரை :

அந்தணர் குலத்தவராய் இல்வாழ்வில் வாழும் மங்கலம் உடைய அந்தண மங்கையர் எல்லாம், நிறைந்த நீரையுடைய பொற்குடங்களையும், வரிசையான அழகிய விளக்குகளையும், நறு மணப் புகைகளையும், தேன்பொருந்திய நல்ல மலர் மாலைகளையும், நல்ல ஒளியுடைய முளைப் பாலிகைகளை இட்டு வைத்த பொன் தட்டுகளையும், தேய்த்தெடுக்கப்பட்ட விளங்கும் கலவைச் சாந்தை யும் ஏந்தியவாறு ஒன்றுகூடி, மணமகனாரான ஞானசம்பந்தரை வர வேற்று நின்றார்கள்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1228

ஆங்குமுன் னிட்ட செம்பொன்
அணிமணிப் பீடந் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம்
உண்ணிறைந் தெழுவ தென்னத்
தாங்கிய முத்தின் பைம்பூண்
தண்ணிலவு எறிப்ப ஏறிப்
பாங்கொளி பரப்பி நின்றார்
பரசம யங்கள் வீழ்த்தார்.

பொழிப்புரை :

அவ்விடத்தில் முன்னமேயே இட்டுவைத்த செம்பொன்னால் ஆன அழகிய மணிபதித்த பீடத்தில், திருவருள் வயத்தால் பிறசமயங்களை யெல்லாம் வென்றருளிய ஞானசம்பந்தப் பிள்ளையார், எல்லாவற்றுக்கும் மேலாக ஓங்கிய சிவஞானப் பெருக் கானது உள்ளே நிறைந்து மேல் எழுந்து பொழிவதைப் போல, அணி யாய்ப் பூண்ட முத்தால் ஆன நல்ல அணிகள் குளிர்ந்த ஒளியை வீசு மாறு ஏறி, பக்கங்களில் ஒளிபரப்பி நின்றருளினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 1229

எதிர்வர வேற்ற சாயல்
இளமயி லனைய மாதர்
மதுரமங் கலமுன் னான
வாழ்த்தொலி யெடுப்ப வந்து
கதிர்மணிக் கரக வாசக்
கமழ்புன லொழுக்கிக் காதல்
விதிமுறை வலங்கொண் டெய்தி
மேவுநல் வினைகள் செய்தார்.

பொழிப்புரை :

: எதிர் கொண்டு வரவேற்ற, சாயலால் இளைய மயில் போன்ற மங்கையர், இனிய மங்கலச் சொற்களை முன்னாகப் பாடிய வாழ்த்தொலி எங்கும் நிறைய, ஒளி பொருந்திய அழகான கரத்தில் உள்ள மணமுடைய நீரைத் திருமுன் வார்த்து, மிக்க விருப் பத்துடன் விதி முறைப்படி வலமாகச் சுற்றி, பொருந்திய நல்ல மண வினைகளைச் செய்தனர்.

குறிப்புரை :

நீரையுடைய வட்டிலை வலமாகச் சுற்றுதல், கண்ணேறு (திருட்டி) நீங்கவாம்.

பண் :

பாடல் எண் : 1230

மங்கலம் பொலிய ஏந்தி
மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம்பொன்
இமவரை கலந்த தென்ன
அங்கவர் செம்பொன் மாடத்
தாதிபூ மியினுட் புக்கார்
எங்களை வாழ முன்னாள்
ஏடுவை கையினுள் இட்டார்.

பொழிப்புரை :

எங்களை வாழ்விப்பதற்காக வந்து முன்னாளில் வைகையில் ஏட்டை இட்ட பிள்ளையார், மங்கலப் பொருள்களை எடுத்துக் கொண்டு அந்தண மங்கையர் முன்செல்ல, கங்கையின் கொழுந்து போன்ற வெள்ள ஒழுக்கு, சிவந்த பொன் மலையான இமயத்தில் சேர்ந்தாற்போல, அங்கு நம்பாண்டார் நம்பிகளின் அழகான பொன்மாடத்தில் ஆதி பூமி என்ற மணவறையுள்புகுந்தார்.

குறிப்புரை :

கங்கையின் கொழுந்து - பிள்ளையார்: திருமேனி வெண் ணீறு அணியப்பெற்றும், முத்தாலாய அணிகள் அணியப்பெற்றும் இருத்தலின் இவ்வுருவகத்தால் விளக்கம் பெற்றார். ஆதிபூமி - மணவறை. ஆதி - சிவன், பூமி - நகர்: சிவனகர்.

பண் :

பாடல் எண் : 1232

திருமகட் கொடுக்கப் பெற்ற
செழுமறை முனிவர் தாமும்
அருமையால் முன்செய் மெய்ம்மை
அருந்தவ மனைவி யாரும்
பெருமகிழ்ச் சியினாற் பாதம்
விளக்குவார் பிள்ளை யார்முன்
உரிமையால் வெண்பால் தூநீர்
உடனெடுத் தேந்தி வந்தார்.

பொழிப்புரை :

தம் மகளாரை மணமகளாகக் கொடுக்கும் பேற்றைப் பெற்ற செழுமையான மறை முனிவரான நம்பாண்டார் நம்பி களும், அரிய தவப் பேறுடைய அவர்தம் மனைவியாரும் மிக்க மகிழ் வுடன் பிள்ளையாரின் திருவடிகளை விளக்குபவராய், ஞானசம்பந் தரின் திருமுன்பு, வெண்மையான பசுவின் பாலையும் தூய்மையான நீரையும் ஒருசேரக் கொண்டு வந்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1233

வந்துமுன் னெய்தித் தாம்முன்
செய்தமா தவத்தின் நன்மை
நந்துநம் பாண்டார் நம்பி
ஞானபோ னகர்பொற் பாதம்
கந்தவார் குழலி னார்பொற்
கரகநீர் எடுத்து வார்ப்பப்
புந்தியால் நினைதி யானம்
புரிசடை யான்என் றுன்னி.

பொழிப்புரை :

ஞானசம்பந்தரின் முன்வந்து, தாம் முன்பு செய்த பெருந்தவத்தால் பெற்ற நன்மை பெருகும் நம்பாண்டார் நம்பிகள், மணம் வீசும் நீண்ட கூந்தலையுடைய மனைவியார் பொற் கமண்டலத்தின் நீரை எடுத்து வார்க்க, உள்ளத்தில் நினைத்து வரும் ஒருமைப்பாட்டால் சடையையுடைய சிவபெருமானே இவர் என்ற எண்ணத்துடன் ஞானப்பால் உண்ட அவர்தம் திருவடிகளை,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1234

விருப்பினால் விளக்கி மிக்க
புனிதநீர் தலைமேற் கொண்டு
பொருப்புறு மாடத் துள்ளும்
புறத்துளுந் தெளித்த பின்னர்
உருப்பொலி உதரத் துள்ளும்
பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும்
தெளித்தனர் ஆர்வத் தோடும்.

பொழிப்புரை :

விருப்புடன் விளக்கித் தூய நீரைத் தலையின் மேல் தெளித்துக் கொண்டு, அதனை மலைபோன்ற திருமாளிகையின் உள்ளும் வெளியேயும் தெளித்த பின்னர், அழகுமிக்க வயிற்றில் கொள்ளுமாறு மிக்க ஆசையுடன் உட்கொண்டனர். மயிர்க் கூச்செறிய அருகிருந்த உறவினர், மேலும் பெருகும் ஆசையோடு அந்நீரைத் தெளித்தனர்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1235

பெருகொளி ஞானம் உண்ட
பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவுமங் கலநீர் வாசக்
கரகம்முன் னேந்தி வார்ப்பார்
தருமுறைக் கோத்தி ரத்தின்
தங்குலம் செப்பி என்தன்
அருநிதிப் பாவை யாரைப்
பிள்ளையார்க் களித்தேன் என்றார்.

பொழிப்புரை :

பெருகும் ஞானஅமுது உண்ட சம்பந்தரின் தாமரை மலர் போன்ற கையில், பொருந்திய மணமுடைய நீர் நிறைந்த கமண்டலத்தை முன் ஏந்தி அதன் மங்கல நீரை வார்ப்பவராய்த் தரும் முறையில், தம் கோத்திரத்துக்குரிய குலப்பெயரையும் எடுத்துக் கூறி `என் அருமைமிக்க செல்வமான பாவை போன்ற மகளாரைப் பிள்ளையாருக்குத் தந்தேன்\' என்று விதிப்படி மும்முறை கூறினார்.

குறிப்புரை :

கோத்திரம் - மரபின் உட்பிரிவு ; குலம் - அக்கோத் திரத்தின் உட்பிரிவு. அருநிதிப்பாவையார் - இவர் பெயரைத் தோத்திர பூரணாம்பிகை என நல்லூர்ப் பெருமணத்தில் உள்ளவர்கள் கூறுவார் கள் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 1236

நற்றவக் கன்னி யார்கை
ஞானசம் பந்தர் செங்கை
பற்றுதற் குரிய பண்பில்
பழுதில்நற் பொழுது நண்ணப்
பெற்றவ ருடன்பி றந்தார்
பெருமணப் பிணையன் னாரைச்
சுற்றமுன் சூழ்ந்து போற்றக்
கொண்டுமுன் துன்னி னார்கள்.

பொழிப்புரை :

நல்ல தவத்தையுடைய கன்னியாரின் கையைத் திருஞானசம்பந்தர் தம் செங்கையால் பிடிப்பதற்கு உரிய பண்புடைய குற்றம் இல்லாத நல்லவேளை வந்து சேரக் கன்னியைப் பெற்ற தாய் தந்தையரும் உடன்பிறந்தாரும் பெருமையுடைய மணப் பெண்ணான மான் போன்ற கன்னியை உறவினர்முன் சூழ்ந்து போற்ற, அழைத்துக் கொண்டு மணமகனாரான ஞானசம்பந்தர் முன் கொணர்ந்தனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1237

ஏகமாம் சிவமெய்ஞ் ஞானம்
இசைந்தவர் வலப்பா லெய்தி
நாகமார் பணபே ரல்குல்
நற்றவக் கொழுந்தன் னாரை
மாகமார் சோதி மல்க
மன்னிவீற் றிருந்த வெள்ளை
மேகமோ டிசையும் மின்னுக்
கொடியென விளங்க வைத்தார்.

பொழிப்புரை :

ஒருவன் என்னும் ஒருவனாய சிவபெருமா னிடத்திருந்து ஞானத்தை அடைந்த ஞானசம்பந்தரின் வலப் பக்கத்தில் வந்து, பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையுடைய நல்ல தவத்தின் கொழுந்தைப் போன்ற கன்னியாரை, வானத்தில் நிறைந்த ஒளி பொருந்த நிலைபெற்று வீற்றிருந்த வெள்ளை மேகத்துடன் பொருந் தும் மின்னற்கொடி என விளங்குமாறு அமரச் செய்தனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1238

புனிதமெய்க் கோல நீடு
புகலியார் வேந்தர் தம்மைக்
குனிசிலைப் புருவ மென்பூங்
கொம்பனா ருடனே கூட
நனிமிகக் கண்ட போதில்
நல்லமங் கலங்கள் கூறி
மனிதரும் தேவ ரானார்
கண்ணிமை யாது வாழ்த்தி.

பொழிப்புரை :

தூய்மையான மெய்க்கோலத்துடன் நீடிய சீகாழித் தலைவரான பிள்ளையாரை, வளைந்த வில்போன்ற புருவங் களையுடைய மென்மையான பூங்கொம்பைப் போன்ற தேவியாரு டன் ஒருங்கு கண்ட போது, நல்ல மங்கலங்களைக் கூறி, கண்இமை யாது பார்த்து வாழ்த்திய வகையால், மக்களும் தேவர்கள் ஆயினர்.

குறிப்புரை :

விண்ணவர் கண்ணிமையார். அவ்வகையில் இவர்க ளும் பார்த்து வாழ்த்தியமையின் மண்ணவரும் விண்ணவர் ஆயினர் என்றார்.

பண் :

பாடல் எண் : 1239

பத்தியிற் குயிற்றும் பைம்பொன்
பவளக்கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத் தின்கீழ்ச்
செழுந்திரு நீல நக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு
முதன்மறை முறையி னோடு
மெய்த்தநம் பெருமான் பாதம்
மேவுமுள் ளத்தாற் செய்ய.

பொழிப்புரை :

வரிசை பெற அழகு படுத்தப்பட்ட பசும் பொன்னால் ஆன பவளக் கால்களையுடைய பந்தரின் நடுவில், ஓவியம் அமைந்த மேற்கட்டியின் கீழ், செழுமையுடைய நீலநக்க நாயனார் ஆசிரியராய் இருந்து, முத்தமிழ் வல்லுநரான பிள்ளையா ரின் முன், முதன்மையான மறைவழிச் செய்யும் மணவினையை அம்முறைப்படியே மெய்ப்பொருளான நம் பெருமானின் திருவடிக ளைப் பொருந்தும் உள்ளத்துடன் செய்ய,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1240

மறையொலி பொங்கி யோங்க
மங்கல வாழ்த்து மல்க
நிறைவளைச் செங்கை பற்ற
நேரிழை யவர்முன் அந்தப்
பொறையணி முந்நூல் மார்பர்
புகரில்வெண் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை
எரிவலங் கொள்ள வேண்டி.

பொழிப்புரை :

மறையொலிகள் மேன்மேலும் பெருகி ஓங்க வும், மங்கல வாழ்த்தொலிகள் மிகவும், நிறைந்த வளையல்களை அணிந்த மணப் பெண்ணின் சிவந்த கையைப் பிள்ளையார், பற்றும் பொருட்டு நேரிய அணிகளை அணிந்த அக் கன்னியாரின் முன், பொறுமையை அணியாகக் கொண்ட முந்நூல் அணிந்த மார்பினரான திருநீலநக்க நாயனார், குற்றம் அற்ற நெல் பொரியைக் கையிலே எடுத்து வேள்வித் தீயில் ஆகுதியாகப் பெய்து, சிவபெருமானை வணங்கும்போது, எரியை வலமாக வருவதற்கு எண்ணி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1241

அருப்புமென் முலையி னார்தம்
அணிமலர்க் கைப்பி டித்தங்
கொருப்படும் உடைய பிள்ளை
யார்திரு உள்ளந் தன்னில்
விருப்புறும் அங்கி யாவார் விடை
உயர்த் தவரே என்று
திருப்பெரு மணத்தை மேவும்
சிந்தையில் தெளிந்து செல்வார்.

பொழிப்புரை :

அரும்பைப் போன்ற மென்மையான கொங்கைகளை உடைய அம்மங்கையின்அழகான மலர் போன்ற கையைப் பிடித்துக் கொண்டு, அங்கு மணவினை செய்தற்கு ஒருப் பட்ட பிள்ளையார், `மனத்தில் விருப்பம் பொருந்தும் வேள்வித் தீயா யானவர் விடைக் கொடியை உயர்த்திய சிவபெருமானே ஆவார்\' எனத் திருநல்லூர்ப் பெருமணத்தைப் பொருந்திய உள்ளத்திலே தெளிந்து செல்பவராய்,

குறிப்புரை :

`எரி பெருக்குவர் அவ்வெரி ஈசனது உரு என அறிகி லார்\' (தி.5 ப.100 பா.7) எனும் நாவரசரின் திருவாக்கும் காண்க. ஒருப் படும் - எண்ணிய மணவினையைக் செய்தற்குத் தலைப்பட.

பண் :

பாடல் எண் : 1242

மந்திர முறையால் உய்த்த
எரிவல மாக மாதர்
தந்திருக் கையைப் பற்றும்
தாமரைச் செங்கை யாளர்
இந்தஇல் லொழுக்கம் வந்து
சூழ்ந்ததே இவள்தன் னோடும் அந்தமில் சிவன்தாள் சேர்வன்
என்னும்ஆ தரவு பொங்க.

பொழிப்புரை :

மந்திர முறையால் வளர்க்கப்பட்ட எரியை வலம் வரும் பொருட்டு அம்மையாரின் கையைப் பிடிக்கும் தாமரை மலர் போன்ற சிவந்த கைகளையுடைய பிள்ளையார், `இந்த இல்வாழ் வான ஒழுக்க நிலை வந்து வாய்த்ததே! இவளுடன் அழிவில்லாத சிவபெருமானின் திருவடிகளை அடைவேன்\' என்ற ஆசை உள்ளத் தில் பெருக,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1243

மலர்பெருங் கிளையும் தொண்டர்
கூட்டமும் மல்கிச் சூழ
அலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை
அடைவுறுங் குறிப்பால் அங்கண்
உலகில்எம் மருங்கும் நீங்க
உடன்அணைந் தருள வேண்டிக்
குலமணம் புரிவித் தார்தம்
கோயிலை நோக்கி வந்தார்.

பொழிப்புரை :

மலர்ச்சியுடைய பெரிய உறவினரும், திருத்தொண்டர் கூட்டமும் ஆகிய இவர்களுடனே கூட, அளவில்லாத மெய்ஞ்ஞானத்தினது எல்லையை அடைய வேண்டும் என்ற உள்ளக் குறிப்பினால், அங்கு உலகப்பற்றுத் தம்மைச் சாராது நீங்க, இறைவருடன் சேர விரும்பி, அந்தணர் குலத்துக்குரிய மணத்தைச் செய்வித்த இறைவ ரின் திருப்பெருமணம் எனும் திருக்கோயிலை நோக்கி எழுந்தருளி வந்தார்.

குறிப்புரை :

திருப்பெருமணம் - திருக்கோயிலின் பெயர் ஆகும். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1244

சிவனமர்ந் தருளுஞ் செல்வத்
திருப்பெரு மணத்துள் எய்தித்
தவநெறி வளர்க்க வந்தார்
தலைப்படுஞ் சார்பு நோக்கிப்
பவமற என்னை முன்னாள்
ஆண்டஅப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டும்
என்னும்நல் லுணர்வு நல்க.

பொழிப்புரை :

சிவபெருமான் விரும்பி வீற்றிருந்து, உயிர்க ளுக்கு அருட்செல்வத்தை வழங்கியருளிவரும் திருப்பெருமணக் கோயிலுக்குள் சென்று, தவநெறியை வளர்ப்பதற்கென்றே தோன்றிய வரான ஞானசம்பந்தர், உலகக் காட்சியினின்றும் நீங்கி, வீடுபேற்று நிலையில் சார்வதற்குக் காரணமான அருட்குறிப்பைக் கண்டு, பிறப்பற என்னை முற்பிறவியில் ஆளாகக் கொண்ட அத்தன்மைக்கு ஏற்ப, புதிதாக மலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை இதுபொழுது அடைவிக்கும் என்ற மெய் உணர்வானது உள்ளத்தில் பொருந்த,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1245

காதல்மெய்ப் பதிகம் கல்லூர்ப்
பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுறு பிறவிப் பாசந்
தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும்
பெருமண நம்பனே உன்
பாதமெய்ந் நீழல் சேரும்
பருவம் ஈதென்று பாட.

பொழிப்புரை :

பெருவிருப்பைப் புலப்படுத்தும் உண்மை உடைய திருப்பதிகத்தைக் `கல்லூர்ப்பெருமணம்\' எனத் தொடங்கி, அங்கு அத்திருமணத்தைக் கண்டோர் அனைவரும் தீய பிறவிக்குக் காரண மான வினை நீக்கம் பெற்று வீடடைவர் என்பதைச் செம்பொருளாகக் கொண்டு, `இறைவரே! திருநல்லூரில் பொருந்திய திருப்பெரு மணக்கோயிலில் எழுந்தருளிய நம்பரே! உம் திருவடிகளாகிய மெய்ம்மை பொருந்திய நிழலை அடையும் பருவம் இதுவாகும்\' என்று பாடியருள,

குறிப்புரை :

`கல்லூர்ப்பெருமணம்\' எனத் தொடங்கும் திருப்பதிகம் அந்தாளிக் குறிஞ்சி என்னும் பண்ணிலமைந்ததாகும் (தி.3 ப.125). இப்பதிகப் பொருளைச் சேக்கிழார் இருவகையால் சுருங்க விளக்குகின்றார். 1 வினைநீக்கம் பெறுவது. 2. இறையடி அடைவது. பிறவிதீயது. அதுபாசத்தால் வருவது. பாசம் உலகியற் சார்பால் வருவது. எனவே `கல்லூர்ப் பெருமணம் வேண்டா\' என்றார். 8ஆவது பாடலில் `நல்லூர்ப் பெருமணம் புக்கிருந்தீர் எமைப் போக்கு அருளீரே\' என்றும், திருக்கடைக்காப்பில் `நல்லூர்ப் பெருமணத் தானை உறும் பொருளாற் சொன்ன ஒண்தமிழ்\' என்றும் அருளுகின் றார். எட்டாவது பாடலில் `எனை\' என்னாது `எமை\' எனப் பன்மை ஆகக் கூறுகின்றார். இவ்வருங் குறிப்புக்களே, `கண்டோர் தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம்பொருளாக் கொண்டு `... நம்பனே! உன்பாத மெய்ந்நீழல் சேரும் பருவம் ஈதென்று பாட\' எனச் சேக்கிழார் அருளக் காரணமாயிற்று.

பண் :

பாடல் எண் : 1246

தேவர்கள் தேவர் தாமும்
திருவருள் புரிந்து நீயும்
பூவையன் னாளும் இங்குன்
புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பாற் சோதி
இதனுள்வந் தெய்தும் என்று
மூவுல கொளியால் விம்ம
முழுச்சுடர்த் தாணு வாகி.

பொழிப்புரை :

தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெரு மானும், திருவருள் செய்து `நீயும் நாகணவாய்ப் பறவை அனைய நின் மனைவியும், இங்கு உன் புண்ணியத் திருமணத்தில் வந்தவர்கள் யாவரும் எம்மிடத்தில் இந்தச் சோதியுள் வந்து அடையுங்கள்\' என்று அருளாணையிட்டு, மூன்று உலகங்களும் தம் ஒளியினால் மேலிட்டு விளங்கும்படி, முழுமையான சுடர்விட்டெழும் சோதிலிங்கமாய் நிமிர்ந்து எழுந்து,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1247

கோயிலுட் படமேல் ஓங்குங்
கொள்கையாற் பெருகுஞ் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட
மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு
பரஞ்சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞாலம் உய்ய
வழியினை அருளிச் செய்வார்.

பொழிப்புரை :

திருக்கோயில் தன்னகத்துட்பட, மேலே பரந்து பெருகி எழுகின்ற அச் சோதியுள், ஒரு வாயிலையும் அமைத்துக் காட்ட, நிலைபெற்ற புகழையுடைய சீகாழித் தலைவரான ஞானசம் பந்தர், பரந்த பேரொளியால் நீண்டு விளங்கும் பரஞ்சுடரான இறை வரை வணங்கிப் போற்றி, மிகப் பெரிய உலகில் உள்ள உயிர்கள் எல் லாம் உய்யும் வழியை அருள் செய்வாராய்,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 1248

ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத்
திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க
அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
யாவரும் புகுக என்ன.

பொழிப்புரை :

மெய்ம்மை பொருந்திய ஞான நெறிதான் யாவர்க்கும், `நமச்சிவாய\' என்னும் ஐந்தெழுத்தாலாய சொல்லே ஆகும் என்று, ஆக்கம் பொருந்திய சிறப்புக் கொண்ட நமச்சிவாயத் திருப்பதிகத்தை, அங்கு விண்ணோரும் மண்ணோரும் கேட்குமாறு அருள் செய்து, `இம் மணத்தில் வந்தவர் எல்லோரும் இழிவான பிறவி நீங்க யாவரும் இவ்வொளியில் புகுக\' என்று ஆணையிட்டருள,

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `காதலாகி\' (தி.3 ப.49) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும். இப்பதிகப் பாடல் தொறும் `நமச்சிவாய\' எனும் திருவைந்தெழுத்து அருளப் பெற்றிருத்தலின், இதனை நமச்சிவாயத் திருப்பதிகம் என்றழைத்தனர். ஞானத்தைப் பெறவும் அதன்வழி வீடு பேற்றை அடையவும் தக்கதொரு நெறி(வழி) திருவைந்தெழுத்தை குருவரு ளால் பெற்று ஓதி வருதலேயாகும். இவ்வருளுரை தானும் யாவர்க்கும் பொருந்தும் என முன்னர்த் தொகுத்துக் கூறிய ஆசிரியர், பின்னர் `வானமும் நிலமும் கேட்க\' என வகுத்தும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 1249

வருமுறைப் பிறவி வெள்ளம்
வரம்புகா ணாத ழுந்தி
உருவெனுந் துயரக் கூட்டில்
உணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து
முன்செலுஞ் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க
மன்னுசோ தியினுள் புக்கார்.

பொழிப்புரை :

முறையாய் இடையறாது வரும் பிறவி என்னும் பெருவெள்ளத்தின் எல்லை காணாது அழுந்தி `உடல்\' என்ற துன்பம் நிறைந்த கூட்டினுள் இருந்து உணர்வில்லாது மயங்குபவர்களாகிய அம்மக்கள் தாமும், பிள்ளையாரின் திருமணக்கோலத்தை வணங்கி முன்னால் செல்லப் பெற்ற சிறப்பால், பொருந்திய பிறவி நீங்குமாறு நிலையான அப் பேரொளியில் புகுந்தார்கள்.

குறிப்புரை :

இவ்வாறு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 1250

சீர்பெருகு நீலநக்கர்
திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத
இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர்
மற்றேனையோர் அணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழப்
பன்னிகளோ டுடன்புக்கார்.

பொழிப்புரை :

சிறப்பு மிகும் திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், முதலிய தொண்டர்களும், தவ ஒழுக்கத்தின் பொலிவு மிக்க சிவபாத இருதயரும், நம்பாண்டார் நம்பிகளும், சிறப்பு நிறைந்த உண்மை ஒழுக்கத்தையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மற்றும் அங்கு வந்தவர்களும், உலகில் நிலவிய சுற்றத்தார்களும் சூழ்ந்து வரத் தத்தம் மனைவியர்களுடன் புகுந்தனர்.

குறிப்புரை :

முன்னையபாடலில் அனைவரும் சோதியுள் புகுதற்குக் காரணம் கூறினார். இப்பாடலிலும் அடுத்துவரும் இருபாடல்களிலும் அங்ஙனம் புகுந்தவர்களை அடைவுபடுத்திக் கூறியருளுகின்றார்.

பண் :

பாடல் எண் : 1251

அணிமுத்தின் சிவிகைமுதல்
அணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை
மடவார்மங் கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள்
பரிசனங்கள் வினைப்பாசந்
துணிவித்த உணர்வினராய்த்
தொழுதுடன்புக் கொடுங்கினார்.

பொழிப்புரை :

அழகிய முத்துச் சிவிகையைத் தாங்கிச் சென்ற வரும், மணிமுத்து மாலைகளைத் தக்கவாறு அழகுசெய்த மங்கை யரும், மங்கலம் பெருக வரும் மணிகளை எல்லாம் எடுத்து வந்தவர் களும், மற்றும் பணி செய்தவர்களும், வினையால் வரும் பிறவிக்குக் காரணமான பாசங்களையெல்லாம் அறுத்து, உணர்வு உடையவராய்ப் பிள்ளையாரை வணங்கியவாறே உடன்புகுந்து அப்பேரொளியுள் ஒடுங்கினர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1252

ஆறுவகைச் சமயத்தின்
அருந்தவரும் அடியவரும்
கூறுமறை முனிவர்களும்
கும்பிடவந் தணைந்தாரும்
வேறுதிரு வருளினால்
வீடுபெற வந்தாரும்
ஈறில்பெருஞ் சோதியினுள்
எல்லாரும் புக்கதற்பின்.

பொழிப்புரை :

சைவ சமயத்தில் உட்பிரிவான அறுவகைச் சமய நெறியிலும் நின்ற தவத்தவர்களும், சைவத் தொண்டர்களும், மறை வழி ஒழுகும் முனிவர்களும், கும்பிடும் கரத்துடன் வந்து சேர்ந்தவர் களும், முன்சொன்னவாறன்றி எக்காரணமும் அறிய இயலாது திரு வருள் வயத்தால் வந்தவர்களும், எல்லை இல்லாத பெரிய சிவப் பேரொளியுள் எல்லாருமாகப் புகுந்தபின்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1253

காதலியைக் கைப்பற்றிக்
கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும்
திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி
நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப்
புக்கொன்றி உடனானார்.

பொழிப்புரை :

மனைவியாரைக் கைப்பிடித்தவாறே அச் சோதியை வலம் வந்து, உலகில் உள்ள தீமைகளைப் போக்கிச் சைவ நெறி தழைத்தற்கென்றே தோன்றியருளிய திருஞானசம்பந்தர், சிவ பெருமானின் அழகினதாய் வளர்ந்து எழுகின்ற பேரொளியை அடைந்து, அதனுள் புகுபவராய், ஓரொருகால் உலகியலைத் தழுவி நிற்கும் ஒருப்பாடு நீங்கியதால், உள்ளே புகுந்து, ஒன்றாய்ச் சேர்ந்து சிவானந்த நிறைவாம் தன்மையில் வீடுபேற்றை எய்தினார்.

குறிப்புரை :

போத நிலை என்பது மூன்றாண்டு வரை உலகியல் வயப்பட்ட குழந்தையாய் வளர்ந்ததும், ஞானம் பெற்ற பின்பும், கொல்லி மழவன் மகளார், வணிகர் இருவரின் மகளார் போன்றவர் களுக்கு அருளுதற் பொருட்டும், உலகியல் வயப்பட்டு வீழிமிழலை யிலும், தாதையார் வயப்பட்டுத் திருவாவடுதுறையிலுமாகப் பொருள் வேண்டப் பெற்றும் வந்தன போன்ற சூழல்களாம்.

பண் :

பாடல் எண் : 1254

பிள்ளையார் எழுந்தருளிப்
புக்கதற்பின் பெருங்கூத்தர்
கொள்ளநீ டியசோதிக்
குறிநிலைஅவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழய
மணக்கோயில் தோன்றுதலும்
தெள்ளுநீ ருலகத்துப்
பேறில்லார் தெருமந்தார்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் உட்புகுந்து உடனாகிய பின் னர்ப் பேரானந்தக் கூத்தரான இறைவர், இவ்வாறு மணத்தில் வந்தோ ரையும் பிள்ளையாரையும் வீடுபேற்றில் உடனாகக் கொள்ளும் அளவும் நீடியிருந்த பேரொளிப் பெருவடிவையும், அதன் உட்புகக் காட்டிய வாயிலையும் மறையுமாறு செய்ய, சிவலோகத் தியாகரின் பழைய பெருமணக் கோயில் தோன்றவும், தெளிந்த நீருடைய உலகத் தில் இவ்வரிய பேற்றைப் பெறாதவர் பலரும் மயங்கி வருந்தினர்.

குறிப்புரை :

தவமும் தவமுடையார்க்கன்றி ஆகுமோ? ஆகாதன்றே.

பண் :

பாடல் எண் : 1255

கண்ணுதலார் திருமேனி
உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே
கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும்
விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு
தீரஎடுத் தேத்தினார்.

பொழிப்புரை :

நெற்றியில் விழியையுடைய சிவபெருமானின் திருமேனியுடன் கூடத் திருஞானசம்பந்தர் சென்று சேர்ந்ததைத் தாம் தாமும் தொலைவான இடத்தில் இருந்தவாறே கண்டும், வந்து அடைகின்ற பேறு பெறாத தேவர்களும் முனிவர்களும் நான்முகன் முதலான பெருந்தேவர்களும் ஆகிய எண்ணில்லாதவர்கள் தம் வருத்தம் நீங்கப் பெருமானைப் போற்றினர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 1256

அருந்தமிழா கரர்சரிதை
அடியேனுக் கவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி
துதிசெய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையுந் திண்ணனவும்
பேருணர்வுந் திருத்தொண்டால்
வருந்தகைமைக் கலிக்காம
னார்செய்கை வழுத்துவேன்.

பொழிப்புரை :

அரிய தமிழுக்கு இருப்பிடமான ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்றை, அடியேனுக்கு அவருடைய திருவடிகள் அறிவித்தருளிய முறையில் வணங்கிக் கூறினேன். இனிப் பெரிய கொடையும், உறுதிப்பாடான வன்மையும், பேருணர்வும் திருத் தொண்டு செய்த காரணத்தால் பெற்ற அடியவராய ஏயர்கோன் கலிக் காம நாயனார் செய்த திருத்தொண்டின் திறங்களைப் போற்றத் தொடங்குவேன். திருஞானசம்பந்தர் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

***************
சிற்பி