கலிவெண்பா


பண் :

பாடல் எண் : 1

பூமேவும் உந்திப் புயல்வண்ணன் பொற்பதுமத்
தார்மேவும் மார்பன் சதுமுகத்தோன் - தாம்மேவிப்
பன்றியும் அன்னமுமாய்ப் பாரிடந்தும் வான்பறந்தும்
என்றும் அறியா இயல்பினான் - அன்றியும்
இந்திரனும் வானோரும் ஏனோரும் எப்புவியும்
மந்தர வெற்பும் மறிகடலும் - மந்திரமும்
வேதமும் வேத *முடிவின்விளை விந்துவுடன்
நாதமுங் காணா நலத்தினான் - ஓத
அரியான் எளியான் அளவிறந்து நின்ற 5
பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா
அருவான் உருவான் அருவுருவ மல்லான்
மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான
மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்
பொய்யர்க்குப் பொய்யாய பொய்யினான் - ஐயன்
படநாகம் பூண்ட பரமன் பசுவி
னிடமாய் நிறைந்த இறைவன் - சுடரொளியான்
என்றுமுளன் அன்றளவும் யானும் உளனாகி
நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்றுசென்று
தோற்றியிடும் அண்டசஞ் சுவேதசங்கள் பாரின்மேற் 10
சாற்றும்உற் பீசஞ் சராயுசங்கட் - கேற்றபிறப்
பெல்லாம் பிறந்தும் இறந்தும் இருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா
உணர்வின் மிசையோ டுலகா யதனைப்
புணர்வதொரு புல்லறிவு பூண்டு - கணையிற்
கொடிதெனவே சென்று * குடிப்பழியே செய்து
கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்
தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி இடையும் மனந்தனக்கும் - நாடிஅது
போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன் 15
ஆன திறலார் அகந்தைக்கும் - மேனி
அயர அயர அழிய அழியும்
உயிரின் துயரம் உரையேன் - வயிரமே
கொண்டதொரு காமனுக்குங் கோபனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்குந் - திண்டிறல்சேர்
இந்திரியம் பத்துக்கும் ஈரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்கள் ஐந்துக்குஞ் சிந்தைகவர்
மூன்றுகுற்றம் மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை
ஏன்றுநின்று செய்யும் இருவினைக்குந் - தோன்றாத
வாயுஒரு பத்துக்கும் மாறாத வல்வினையே 20
யாய கிளைக்கும் அருநிதிக்கும் - நேயமாம்
இச்சை கிரியை யிவைதரித்தங் கெண்ணிலா
அச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன்
சீரில்நிலை நில்லாது திண்டாடும் பல்கருவி
வாரில்அகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால்
உன்னை ஒழிய உறவில்லை என்னுமது
தன்னை அறிவை தனியறிவை - முன்னந்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவ ரென்று - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவர்உரைத்த 25
மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கும்
ஆவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமற்
பாவமெனும் பௌவப் பரப்பழுந்திப் - பூவையர்தம்
கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்(கு)
உண்மை நிலையுணர்ச்சி ஓராமல் - திண்மையினால்
நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோறுஞ்
சாவிற் பிறப்பில் தலைப்பட்டிங் - காவிநிலை
நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே
பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை
வந்திருக்க வல்லான் மதியாதார் வல்அரணம் 30
செந்தழலில் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவிலொளி
ஆதி யமலன் நிமலனருட் - போத
அறிவி லறிவை அறியு மவர்கள்
குறியுள் புகுதுங் குணவன் - நெறிகொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியில்
ஒளியில் ஒளியில் ஒளியன் - ஒளியில்
அளியில் அளியில் அளியன் அளியில்
அளவில் அளவில் அளவன் - அளவிறந்து
நின்றான் அனைத்தும் நிறைந்தான் நினைப்பவர்பாற் 35
சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா
விளக்காய் நிறைந்த விரிசுடரான் மண்மேல்
துளக்காமல் நின்றபெருஞ் சோதி - உளக்கண்ணுக்
கல்லாது தோன்றா அமலன் அகிலமெலாம்
நில்லாமல் நின்ற நிலையினான் - சொல்ஆரும்
ஈசன் பெருமை இருவினையேன் இன்றுனக்குப்
பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம்
பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற்
குலவி விளங்குகுணக் குன்றோன் - இலகவே
செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து 40
வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையங்
களவுபயங் காமங் கொலைகோபங் காதி
அளவில்வினை யெல்லாம் அழித்திங் - குளமகிழத்
தொம்மெனவே எங்கும் முழங்கிச் சுருதிபயில்
செம்மைதரும் ஆகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின்
காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங்(கு)
ஓடுபல் பூதத் துணர்வழித்து - நீடுபுகழ்
மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை யவாஅகற்றி - நையும்இயல்
வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவும் 45
நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய
பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கும்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - சிந்திவிழ
மோதி அருணீர்மை ஓங்கிவிறல் முக்குணமுங்
காதி உரோமமெலாங் கைகலந்து - சீதப்
புளகம் அரும்பப் புலன்மயக்கம் போக்கி
விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன
மாதர் மயக்கம் அறுத்துவளர் மண்டலத்துச்
சோதியொரு மூன்றினையுஞ் சோதித்து - நீதியினால்
ஆதாரம் ஆறினுஞ்சென் றாறிஅடல் வாயுக்கள் 50
மீதான பத்தும் மிகப்பரந்து - காதிப்
பிருதிவியப் புத்தேயு வாயுஆ காய
உறுதி நிலமைந்தும் ஓடி - மறுவிலா
நான்முகன்மால் ஈசன் மகேசன் நலஞ்சிறந்த
தான்முகம் ஐந்தாஞ் சதாசிவமும் - ஆனதொரு
விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில்
அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரும்
அவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்டம் உள்ளடக்கிச்
செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்திட் - டெவ்வறிவுந்
தானாய வீடளித்துத் தன்னிற் பிறிவிலா 55
ஊனாகி எவ்வுயிர்க்கும் உள்புகுந்து - மேனியிலா
அஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே
தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்
தான்அந்தம் இல்லாத தண்ணளியால் ஓங்கிவரும்
ஆனந்தம் என்பதோர் ஆறுடையான் - ஆனந்தம்
பண்ணும் பயன்சுருதி ஆகமங்கள் பார்த்துணர்ந்து
நண்ண அரியதொரு நாடுடையான் - எண்ணெண்
கலையால் உணர்ந்து கருத்தழிந்து காம
நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே
தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால் 60
ஓட்டற்று வீற்றிருக்கும் ஊருடையான் - நாட்டத்தால்
தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந்(து)
உண்ணீர்மை யெய்த உரோமமெலாம் - நண்ணும்
புளகம் புனைமெய் யர்பொய் யிற்கூடாமல்
உளகம்பங் கொண்டுள் உருகி - அளவிலா
மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கஅருள்
மேலாய் விளங்கலங்கல் மெய்யினான் - தோலாத
வானம் புவனம் மலைகடல்ஏழ் பாதாளம்
ஊன்ஐந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமாய்
எல்லாமாய் அல்லவாய் எண்ணுவார் எண்ணத்து 65
நில்லாமல் நிற்கும்நீள் வாசியான் - சொல்ஆரும்
பாதாளம் ஊடுருவிப் பாரேழும் விண்ணேழும்
ஆதார மாகி அகண்டம்நிறைந் - தோத
அரிதாய் எளிதாய் அருமறையா றங்கத்
துருவாய் உயிராய் உணர்வாய்ப் - பெரிதாய
வெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித்
துய்ய கடலைத் துகளெழுப்பி - ஐயமுறுங்
காமக் * குரோதலோப மோகமதங் காய்ந்தடர்த்துச்
சாமத் தொழிலின் தலைமிதித்து - நாமத்தாற்
கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டறுத்துத் 70
தத்தம் பயங்கொலைகள் ஆங்கழித்தே - தத்திவரும்
பாசக் குழாத்தைப் படஅடித்துப் பாவையர்தம்
ஆசைக் கருத்தை அறவீசி - நேசத்தால்
ஆனவே கங்கொண் டருள்மும் மதத்தினால்
ஊனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப்
பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டால்
மருவித் திகழ்ஞான ஆனையான் - இருமுச்
சமையங் கடந்து தனக்கொப் பிலாது
சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித்
தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி 75
இம்மை மறுமை இரண்டகற்றிச் - செம்மையே
வாயுவை ஓடா வகைநிறுத்தி வானத்து
வாயுவையும் அங்கே யுறஅமைத்துத் - தேயுவால்
என்றும் ஒரு தகைமை யாயிருக்கும் இன்பருளே
நின்று முழங்கும் நெடுமுரசோன் - அன்றியும்
மாலும் அயனும் வகுத்தளித்த வையமெலாஞ்
சாலும்அதற் கப்பாலும் எப்பாலும் - மேலை
யுலகும் உலகால் உணரவொண்ணா ஊரும்
இலகி நடக்கும்எழில் ஆணையான் - அலகிறந்த
காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான 80
ஆட்சியான் ஆட்சிக்கும் ஆயினான் - சூட்சியான்
பாருந் திசையும் படரொளியா லேநிறைந்தான்
தூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்கள் தானாகிச் - சுத்த
வெறுவெளியாய் பாழாய் வெறும்பாழுக் கப்பால்
உறுபொருளாய் நின்ற ஒருவன் - பொறியிலியேன்
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனியென் தம்பிரான் - அம்புவியோர்
போற்றுந் திருவடியென் புன்தலைமே லேபொறித்தோன் 85
ஏற்றின் புறத்தமைந்த எங்கோமான் - சாற்றுவார்
சாற்றும் பொருளான் தனிமுதல்வன் தானல்லான்
வேற்றின்பம் இல்லா விளங்கொளியான் - போற்றுங்
குருவேட மாகிக் குணங்குறியொன் றில்லாப்
பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங்
கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையான்
எட்டுமவர்க் கெட்டா இயல்பினான் - மட்டவிழ்தார்
வானோன் பவனி வரக்கண்டு வல்வினையேன்
ஏனோரும் ஏத்துதல்கண் டேத்தினேன் - தான்என்னைப்
பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம் 90
நீத்தான் நினைவுவே றாக்கினான் - ஏத்தரிய
தொண்ணூற் றறுவர்பயில் தொக்கிற் றுவக்கறுத்தான்
கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும்
வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்
மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய
அஞ்செழுத்தின் உள்ளீ டறிவித்தான் அஞ்செழுத்தை
நெஞ்சழுத்தி நேய மயலாக்கி - அஞ்செழுத்தை
உச்சரிக்குங் கேண்மை யுணர்த்தி அதன் உச்சரிப்பு
வைச்சிருக்கும் அந்த வழியாக்கி - அச்சமறச்
சென்று விளக்கை எழத்தூண்டிச் செஞ்சுடரின் 95
ஒன்றி ஒருவிளக்கின் உள்ளொளியாய் - நின்ற
பெருவிளக்கின் பேரொளியாய் உள்ளே பிரசம்
மருவும் மலர்போல் மதித்தங் - கருவினுருக்
கொள்ளா அருளைக் கொளுத்திக் குணங்குறியொன்
றில்லா இடத்தே இளைப்பாற்றி - விள்ளாத
உள்ளம் முதலாக உள்ளதெலாம் வாங்கஅருள்
வெள்ள மயலளித்து மேவினான் - கள்ளம்
மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லாம்
இறப்பித்தான் என்பிறவி ஈர்த்தான் - விறற்சொல்லுக்
கெட்டானை யார்க்கும் எழுதா இயற்குணங்க 100
ளெட்டானை ஆற்றா எழுத்தினான் - மட்டாரும்
பாடலார் ஆடலார் பண்பலார் நண்பலார்
ஆடலா ராடல் அகன்பதியாம் - கூடலார்
காணக் கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்
பாணர்க் கிலகு பலகையிட்டான் - சேணிற்
சிறந்த உருவான் திருமாலுக் கெட்டான்
நிறைந்த திருவுருவில் நிற்போன் - கறங்குடனே
சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்டமெனு
மாறு கருணையினால் மாற்றினான் - நீறணிந்த
மெய்யன் நிமலன் அமலன்அருள் வீடளிக்கும் 105
ஐயன் அறிவுக்கறி வாயினான் - பொய்யர்பாற்
பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தம் நெஞ்சத்து
மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவன்
அத்தன்பால் நீசென் றடையும் இடத்தையெலாஞ்
சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே
பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி
ஆசைதனிற் பட்டின்ப ஆர்கலிக்குள் - நேசமுற
நின்று திளைக்கும் இதுமுத்தி யல்லதுவே
றொன்று திளைக்கும் அதுமுத்தி - யன்றென்(று)
இலகா இருளலகை போல்இகலே பேசும் 110
உலகா யதன்பால் உறாதே - பலகாலும்
தாம்பிரமங் கண்டவர்போல் தம்மைக்கண் டாங்கதுவே
நான்பிரமம் என்பவர்பால் நண்ணாதே - ஊன்தனக்குக்
கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல என்றுகுறித்(து)
என்றும்அற மேதெய்வம் என்றென்று - வென்றிப்
பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொல்
மிறையே விரும்பி விழாதே - நிறைமேவி
வாழ்பவர்போல் மன்னுடம்பில் மன்னும்உரோ மம்பறித்துத்
தாழ்வுநினை யாதுதுகில் தான்அகற்றி - ஆழ்விக்கும்
அஞ்சும் அகற்றும் அதுமுத்தி என்றுரைக்கும் 115
வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை
ஆதிமறை ஓதி அதன்பயன்ஒன் றும்அறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே - ஆதியின்மேல்
உற்றதிரு நீறுஞ் சிவாலயமும் உள்ளத்துச்
செற்ற புலையர்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர்
வேடமுடன் பூசைஅருள் மெய்ஞ்ஞான மில்லாத
மூடருடன் கூடி முயங்காதே - நீட
அழித்துப் பிறப்ப தறியா தரனைப்
பழித்துத் திரிபவரைப் பாராதே - விழித்தருளைத்
தந்தெம்மை ஆண்டருளுஞ் சம்பந்த மாமுனிவன் 120
அந்தங் கடந்தப்பா லாய்நின்றோன் - எந்தைபிரான்
வீற்றிருக்கும் ஓலக்கம் எய்திஅடி வீழ்ந்திறைஞ்சிப்
போற்றி சயசய போற்றியென - ஆர்த்தகரி
அன்றுரித்தாய் நின்பவனி ஆதரித்தா ரெல்லாரும்
வென்றிமதன் அம்புபட வீழ்வரோ - நின்றிடத்து
நில்லாத செல்வம் நிலையென் றுனைநீங்கிப்
பொல்லா நரகிற் புகுவரோ - பல்லோரும்
கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ
சித்தம் பலகால் திகைப்பரோ - முத்தம்
பொருத நகைமடவார் புன்கலவி யின்பம் 125
மருவி மயங்கி வருவரோ - இருபொழுதும்
நாள்இருபத் தேழும் நவக்கிரக மும்நலியுங்
கோள்இதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை
எரித்த விழியாய்நின் இன்பக் கடற்கே
தரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந்
தீராய் எனஉரைத்துச் செங்கமலப் பூந்திருத்தாள்
தாராய் எனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - ஏர்ஆரும்
பூங்கொன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே
ஈங்கொன்ற வாராய் இனி.

பொழிப்புரை :

1-2. பூமேவும் இயல்பினான் :
(உரை) அழகிய உதரத் திலஞ்சியிலே பிரமா உதிப்பதற் கிடமாகிய தாமரைப் பூவையும் மேகநிறமாகிய திருமேனியையுமுடைய திருமாலும், ஸ்வர்ண நிறத்தையுடைய தாமரை மாலை நீங்காப் புயத்தையும் நான்கு திருமுகத்தையுமுடைய பிரமாவும், இவர்களிருவரும் இகலாற் பொருந்தி விஷ்ணு வராகரூபமாகியும் பிரமா ஓதிமமாகிய பக்ஷிரூபமாகியும் நிரைநிரையே பூமியை யிடந்து சப்தபாதாளங் களையுங் கீண்டு திருவடியைச் சோதித்துக் காணாத திருவடியும் சப்தலோகங்களினும் பறந்துதேடிக் காணாத திருமுடியும், இவர்கள் சங்கற்பத்தினாற் காண்பா மென்கையால் எக்காலத்திலும் அவர்களுக் கறியப்படாத இயல்பினை யுடையவன்.
பொற்பமைந்த, நாமேவு மாதுபுணர் நான் முகத்தோன் பாட பேதம்.
(இதற்குப் பிரமாணம்) “தேட்டற்று நின்றவிடஞ் சிவமாம்” (திருக்களிற்றுப் படியார், 29) என்பதறிக.
2-8. அன்றியும் சுடரொளியான் :
(உரை) இருதொழிற் கடவுளராகிய இவர்களிருவரு மல்லாமல் தேவேந்திரனும், தேவர்களும், அன்றி ஸ்வர்க்க மேலடுக்குக்களிலே பலப்பிராப்திகள் பலவிதத்திலே யிருக்கப்பட்ட பேர்களும், மந்திர சஞ்சாரரும், பூமி முதலாய அதோமுக அடுக்குக்களி லிருக்கப்பட்ட பலவகை யான்மாக்களும், உலகரடிக்ஷ காரணமாக ஒப்பற்ற ஸ்வர்ண மலை ரூபமாகத் தாங்கியிருக்கப்பட்ட மஹோமேருவும், ஜலரூபமாகி விரிந்து திரைக்கரங்களையுடைய சமுத்திராதிபரும், சப்தகோடியாய் விரிந்திருக்கப்பட்ட மந்திரமூர்த்திகளும், இருக்கு யஜுஸ் சாமம் அதர்வணமென்று பெயர் பெற்றுச் சப்தரூபமாக விரிந்த வேதாதிபரும், அந்த வேதத்துக்குக் காரணமாகிய சுத்தமாயா சத்திகளும் ஓசை வடிவாகிய நாதாதிகளும், முந்த இந்த நிலைமைகள் தாமே கதியென்றும் கடவுளென்றும் பற்றிநிற்கிற ஆன்மகோடிகளுங் காணப்படாததே குணமாகவுடையவன். சொல்லிறந்தவிடத்துத் தோன்றலானாகையால் வாக்குகளாலே யெட்டாதவன். போதருதற்குச் சற்றும் பிரயாசமில்லாத காட்சியான். தர்க்கங்களினாலே அளந்தறிதற் களவுபடாப் பெருமையினாலே தர்க்க நிர்ணயங்கடந்த பெருமையான். அணுவுக்குத்தான் அணுவாய் நுணங்குவனாதலாற் சிறுமையையுடையவன். இப்படிப் பெரிதுஞ் சிறிதுமுடைய பெற்றியனாயினும் பிரத்தியக்ஷத்திற் காணும்படி அடியவர்க்குத் தனது காருண்ய சத்தியை வாமபாகத்திலுடையவன். வாயுப்போல ஆகாயம் போலத் தோன்றாத அருவமே திருமேனியானவன் அன்றியும், அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதமாயுள்ள நான்கு பேதத் திருமேனியுமானவன். அசுத்தமாயை, பிரகிருதி மாயை யதிட்டித்துச் சிருஷ்டி நடத்தும் போது மகேசுரர் உருத்திரர் விஷ்ணு பிரமாவென்று நான்கு பேதமாகப் பிரத்தியக்ஷத் திருமேனியை யுடையவன். உத்தியுக்தராய்ச் சதாசிவமூர்த்தமு மல்லாமற் பேரொளியாய் விளங்குந் திருவுருவத்தையு முடையவன்; அன்றியும் இப்படிப்பட்ட திருமேனியையுங் கடந்தவ னென்றுமாம். நித்தமுத்த சுத்தனாகையாற் சாதலாயது எக்காலமு மில்லாதவன்; அன்றியும் ஒன்றைத் தனக்குச் சுட்டியறிய வேண்டும் பகுதியில்லாதவன். அப்படிப்பட்டவனாயினும், பிறந்திறந்து திரிகிற ஆன்மகோடிகளி னுயிர்க்கு உயிரானவன்; அன்றியும் தன்னை நினைக்குமவ ருள்ளம் நீங்காதவன். தனதிடத்து ஆராமை பூண்ட சத்தியர்க்குச் சத்திய தரிசனனானவன். சரியை கிரியை யோகமென்னுந் தந்திரத்து நின்றவர்களுக்கு ஸ்வதந்தரந் தானாய் நின்றவன். சாருவாகன் புத்தன் முதலாய திரிபதார்த்த நிர்ணயமில்லாத அசத்தியர்க்கெல்லாம் அசத்தியனாயுள்ளவன்; அன்றியும் நாஸ்திவிரத்திகளுக்கும் இல்லாமையாகவே யானவன். எப்படிப் பட்ட ஆன்மாக்களுக்கும் பிதாவானவன். தாருகாவனத்து அவிசார ஓமத்துண்டாய்ச் சங்கரிக்க இருடிகளேவலால் வரப்பட்ட பெரும்பாம்பைத் தானே தனக்கு ஆபரணமாகத் தரித்த எல்லாவற்றிற்கும் மேலானவன். ஆன்மாக்கள் எண்ணிறந்திருந்தாலுந் தானொருவனேயாயினும் ஆன்மகோடிகளுள்ள மட்டும் பூரணனாகிலும் ஓவாது மேலாய்க் கர்த்தனாகப் பட்டவன். சோமசூரியாக்கினி முதற் பலவாகிய பிரகாசத்துக் கெல்லாம் ஒளியைக் கொடா நின்றவன்.முடிவும்விளை பாட பேதம்.
9-16. என்றுமுளன் உரையேன் :
(உரை) இப்படிப்பட்ட சிவனானவன் ஆதியாகத் தோன்றாது நித்தனாக இருக்கப்பட்டவன்றே அவனைப்போல அனாதியாய் யானும் நித்தனாகிலும், அவனைப்போல் அனாதிமலரகிதனாகாத படியாலே அனாதியே அவனுடனே கலந்திருந்துஞ் சலிப்பற நில்லாமல் மலனாகையால் ஏகதேசப்பட்டுச் சிருஷ்டிகள் தோறுங் கர்த்தாவாலே யுண்டாக்கப்பட்ட தோற்றம் நால்வகையாய் அதிலமைந்த பிறப்புத் தாபரம் ஊர்வன தேவர் நீர்வாழ்வன பறவைகள் நாற்காலிகள் மானுடர் உட்பட்ட எழுவகை யெண்பத்து நான்கு நுறாயிரம் யோனிகள் தோறுஞ் ஜனித்தும் மரித்தும், அந்தந்த ஜன்மங்கள்தோறுந் திரிவித கரணங்களால் தரிசிக்கப்பட்ட புண்ய பாவத்தின் பகுதியாகிய பலபதத்தை யுண்டாக்கப்பட்ட தானத்தையுடையேன்; நூலுணர் வில்லாத பாச அறிவால் மிக்குச் சாருவாகன் மதத்தைப் பொருந்துங் கிஞ்சிஞ்ஞவுணர்வனாகி, கோரமாகப் போகுமிடத்துத் தனுவினின்றும் புறப்பட்ட பகழியினது வேகம்போலப் போய், மயக்க மிகுதியாலே தொன்றுதொட்டுப் புண்யபாவத் தாழ்ச்சி யுயர்ச்சியினாலே வரப்பட்ட ஜாதியினது பேதமும் பாராமற் பிறர்மனையால் வருங் குற்றமும் நோக்காமற் பிறனில் விழைந்தும், இந்தப் பூமியினிடத்து நல்லோர்களாலும் நீதி நூல்களாலும் நீக்கப்பட்டுச் சற்றுங் கிருபை யில்லாமற் பண்ணப்பட்ட வதைத் தொழிலும், பிறர் பொருளென்று ஒன்றையும் புத்திபண்ணாது அதற்கான மார்க்கஞ்செய்து அபகரிப்பும், காலம் இடம் வேளை பாராமல் மயக்கமாகிய மாதர் புணர்ச்சி வேட்கையும் இவைகளினிமித்தமாகத் தேசந் திக்கு நாடுகளில் முசிப்பில்லாமல் திரிந்தும், சகல உயிர்ச் செய்தியும் இயற்கையாகக் கண்டு அவைகளை அதற்கேற்றபடி முறை பிறழாது ஊட்டி உறக்கி நடத்திப் பாராமல் நிற்கிற பேரறிவாகியும் அந்தந்த அறிவுக் கீடாக அத்தனுக்கள் அடங்கின திருவருளை நாடாது, தான் பிறவிக்குச் சேரவுமில்லை அப்படிச் செய்தும் வந்ததில்லையென்னும் நினைவு தொழிலினாற் சோம்பி யிடையுங் கருவிகளில் தலைமையாகி மனதுக்கும், மனதாகிய கருவி விளங்காமற் பற்றிய விடயங்களை மறத்தல் பண்ணாது அதற்கேற்றபடி நிச்சயம் பண்ணும் புத்திக்கும், யானென தென்று மேற்செல்லும் வலியினையுடைத்தாய்ப் புந்தியினின்று மூன்றாய ஆங்கார தத்துவத்துக்கும், வாராது நினைத்து நிச்சயித்ததொரு விடயத்தினது குற்றம்பாராது முடித்தலால் அந்த விடயத்திலே வேறொன்றுந் தெரியாமற் படுத்தி நிற்குஞ் சித்தத்துக்கும் இந்தக் கரணங்களுக்குந் தலைமையாய் அதன்வழிக்காய் அவைகள் ஒன்றுசெய்தது ஒன்று செய்யாது மாறுபட்டுத் தனித்தனி செயல்களுக்கெல்லாந் தான் ஏகனாய் நித்தியனாயிருந்து அந்தரங்கத்திற் படும் விதனமுமன்றிப் பிறப்பிற் கருவியாய தனுவின் மூப்பாற் சோர்வுண்டாயபோது அயர்ந்தும் அந்தத் தனுக் கெடும்போது படுந் துயரப்பகுதி முற்றும் படும் ஆன்மாவினது துயரசாகரத்தை யுரைப்பதற்கு வரையறை பண்ண மாட்டேன்.அருவுருவுமில்லான் பாடபேதம்.
16-22. வயிரமே மயங்கினேன் :
(உரை) பதியுள்ளவன்றே தொடங்கி இற்றை வரையும் எடுத்த தனுக்களில் ழைவு முதலாய இன்பத்தை முள்ளிப் பூவினது மதுவெனக் கண்டுங் கேட்டும் ஒழியாது நாடோறும் முற்றிப் பலமுடைய ஆசைப்பற்றுக்கும், சிறிதுஞ் சாந்தியில்லாமல் விரோதமே விளைக்கின்ற கோபனுக்கும், தான் பொருந்திய விடயத்தினது நலம் தீமை காணாது அதுதானாக மயக்குவிக்கும் மோகனுக்கும், மிகுந்த கர்வத்தையுஞ் செய்து பிறர்மாட்டு விரோதங் காட்டாது அனுகூலம் போல இருந்து விரோதத்தை முற்றுவிக்கும் மாச்சரியனுக்கும், மாறுபடாத வல்லமையே வெற்றியாகவுடைய சோத்திரந் தொக்கு சக்ஷசிங்ஙுவை ஆக்கிராணமாகிய ஞானேந்திரியங்களைந்தும் வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தமாகிய கன்மேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்தாகிய இவைகளுக்கும், சத்த பரிச ரூப ரச கந்தமும் வசன கமன தான விசர்க்கம் ஆனந்தமுமான பத்துக்கும், தனுவுள்ள மட்டுங் காரிய காரணங்களாய் அழியாது நின்றுபகரிக்கும் பிருதிவி அப்பு தேயுவாயு ஆகாசமென்னும் பூதமைந்துக்கும், சித்தத்தை நல்வழி சிந்தியாதபடி பற்றிக் கொண்டு நோக்காடு செய்யும் ஆதிதைவிகம் ஆதி பௌதிகம் ஆதியாத்மிகமாகிய துக்கத்திரயங்களுக்கும் அன்றியுங் காமம் வெகுளி மயக்கமுமாமென அறிக சாத்துவிகம் இராசதந் தாமதமாகிய முக்குணங்களுக்கும், முதற்காரணமாகிய ஆணவமும் மாயையும் கன்மமுமாகிய மூன்றுக்கும், கேவல சகல மத்தியமாகிய மூன்றவத்தைகளுக்கும், தனது சுதந்தரமாக வந்த வேளை முறை பிறழாது பொருந்திப் புசிப்பிக்கும் புண்ணிய பாவங்களுக்கும், பிரத்தியக்ஷமல்லாத பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் ஆகப் பத்தாய வாயுகளுக்கும், ஒருகாலும் இதஞ்சொல்லாது பெற்றதினும் அமையாது குறைகளைச் சொல்லி ஆதியே தொன்று தொட்டு வரப்பட்ட மாதா பிதா மாதுலன் முதலாயினோர்க்கும், மிகவும் வருந்தித் தேடப்பட்ட திரவியத்தின் பொருட்டும், அன்புடனே பற்பலவாய இவைகளின் பொருட்டாக இச்சாஞானக் கிரியா சொரூபனாகி, அவ்விடத்துத் தன்னை வினையைத் தலைவனை ஊன்றிப் பாராமல் விஷயாதியின் பொருட்டு அவைகளுக் கேற்ற தொழில் செய்யுமிடத்து எப்படியாமோ என்னுஞ் சங்கையில்லாத பயத்துடனும் அவை முடித்தற் பொருட்டுச் சாருந் தாக்ஷண்யம் இல்லாமையுங் கலனாகத் தரித்து, அரையிலே மஹாநாகத்தைக் கச்சையாகச் சாத்தியருளுஞ் சிவன் அருளிச் செய்த திவ்யாகமங்களினுண்டான வசனத்துவழி ஆதரியாமல், ஒன்று போயவழி ஒன்று போகாமலிருக்க அதனாலே அம்பெடுத்துப் பல்வகையான தத்துவங்களின் சூதாய சூழ்ச்சி வார்க்குத்தியிற் பொருத்தி மருண்டேன்.குடிப்பழுதே பாடபேதம்.
22-29. தேருங்கால் புகலக்கேள் :
(உரை) விசாரிக்குமிடத்து எனக்குச் சகாவாய் யான் படும் பலவாய துயர் நீக்குகைக்கு நீயன்றியிலே ஒருவரு மில்லையென்பதை நீதானே யறிவையே ; அதாவது, எனக்கு விட்டு நீங்காத தானமாக வுடையையாகலின் நீ அறிவையே பாச அறிவு பசு அறிவு போலாது எப்போதும் ஒரு படித்தாய் எல்லா அறிவுக்குந் தான் முதன்மையாய்த் தனக்கொரு சகாவேண்டு மென்பதில்லா ஒப்பற்ற சிவஞானத்தைப் பூர்வத்தில் ‘புறப்பற்றாகிய பொருட்பற்றும் அகப்பற்றாகிய இரண்டுடம் பிற் பற்றும் முற்றத் துறந்தவர்களே சிவஞானம் பெற்றவர்கள். இதில் யாதானு மொன்றிற் சிறிதாயினும் பற்றிருந்ததாயின் அவர்களே ஜனன மரணமாகிய பந்தமுற்றவர்கள்’ என்று தமிழ் நிலையிட்டுச் சங்கப்பலகை யிடங்கொடுத் தேறியிருந்த நாற்பத்தொன்பது பேர்களையும் விழத்தள்ளித் தனக்கு மாத்திரஞ் சங்கப்பலகையாகக் குறுக்கின குறள் வெண்பாவின் சொல்லும் பொருளும் நாவிடங் கொண்ட தெய்விக வித்வானான அழகிய வள்ளுவ நாயனார் ஓதியருளின சத்திய வாசகப் பயனை ஆசையாகப் பாராமல், பஞ்சேந்திரியங்கள் அது அது வேண்டிய விஷயத்திற் செல்வதற் கன்யமாக மாறுபடாமல் அதற்கேற்பப் பொருந்தி அதன் வரம்பு கடவாது நிற்க அதனால் விளைந்த பாவமாகிய நரகசமுத்திரத்திலே தாழக்கரைகாணாத வண்ணம் அமுக்குண்டு, மீண்டு வெளிப்பட்டவிடத்தினும் மெல்லியராகிய மாதர் தம் மான்விழி போன்ற விழிப்பிறழ்வின் பாசப்பிணிப்பினுக்குள்ளாய் அவர்களுடனே கூடுதற்கு வேண்டிய அமருகம் கொக்கோகம் முதலிய நூலின் பயனைப் புத்தி பண்ணி, மெய்யாகிய ஞானத்தைத் தரப்பட்ட நூல்களைப் படித்தறியாமல், அறிவு சிறிதும் புகட்டப்படாமற் சிக்கென்ற நெஞ்சாகையால் நாவாற் கடினமான கற்றுக் கதறியும், தினந்தினம் இந்தப்படி இறக்கிறதும் பிறக்கிறதுமே மேம்பாடாகப் பூண்டு திரியும், இப்படி இன்னதுவன்றியிலே சரிக்கும் ஆன்மாவாகிய நான் அசைவற ஒன்றினும் படாமலிருக்கும் நிலைக்கான உபாயஞ் சிந்தியாய், நீயே நானே யென்று பேதமில்லாத சத்தியாகிய மனமே ! அதற்கு வகையாவது எப்படியாமென்று கேட்பாயாகில், உனக்கு நன்றாய் அழகுறத் தெரியும்படி நான் சொல்லுகிறேன் கேள்.
29-38. வெற்பின்மிசை பேணிக்கேள் :
(உரை) தென்றிசை புனிதமாகவும் தேவர்கள் இருடிகள் பொருட்டாகவும் திவ்யமான திருமேனியாக உமையுடனே வெள்ளி மயமாகிய கைலாய மலையினுச்சியிலே எழுந்தருளியிருக்குந் தகுதியை யுடையவன். அதுவன்றியிலும் தங்கள் தவ மிகுதியின் கர்வத்தாலுங் கோட்டைவலியின் பலத்தாலுந் தேவர்கள் இருடிகள் ஒருவரும் எண்ணிக்கையில்லாதது போல அவர்களுட னொப்பாக நினைந்திருந்த முப்புராதிகளும் அவர்களுடைய கோட்டையுஞ் சிவந்த அக்னி சமுத்ரத்தினாலே காணாமற் போம்படி கோபாக்னியாகிய சிறு நகை செய்தருளின ஸ்வாமி. அப்படிப் பிரத்யக்ஷமான திருமேனியாயினும் சர்வ சப்தங்களையுந் தனக்குள்ளே யடக்கி முடிவில்லாமல் நிற்கும் வேதத்தின் தாற்பரியத்தின் பொருளுக்குத் தொனியர்த்தமான அறிவானது. முதலே மலமில்லாத நின்மலனாயினுங் கிருபையானவன். எல்லா அறிவுக்கும் மேலான ஞானமும் அதற்குத் தலைமையுந் தரிசித்த ஞானானந்திகள் திருமேனிகள் திருமேனியே தனது திருமேனியாகவுடைய இயற்கையன். பிருதிவி ஈறாக அடைவே தரப்பட்ட ஆகாச வெளிக்கும் வெளியாகிய பிரகிருதி வெளி அதற்குக் காரணமாகிய கலையான வெளியிலே நிலையானவன். அந்தக் கலாதத்துவத்திலிருந்தும் அதில் தோய்விலாதவன். அந்தக் கலைக்கு மேலாகிய ஒளியான அசுத்தமாயையொளி அதற்கு மேலாகிய சுத்தவித்தை யொளி அந்தச் சுத்தவித்தை யொளிக்கு மேலாகிய விந்துவாகிய வொளியிலிருந்து சகலமும் உண்டாக்கப்பட்டவன். அந்த விந்துவுக்கு மேலாய் அனுக்ரகமே தொழிலான சதாசிவனுக்கு மேலாய்க் கிருபை தானான பராசத்தி அந்தப் பராசத்திக்குக் காரணமாய பரமசிவம். அப்படிக் கிருபையனாயினும் காண்டல் கருதல் உரையென்னும் அளவளந்த அறிஞரளவிற்கு அளவானவன். ஆகிலும் அறிஞர் அளந்தறிந்ததில் அமிழ்ந்தாது அவ்விடத்து விரகு பிறக்கிற் சற்றுந் தோற்றாதாய் நீங்குஞ் சத்தியுடையவன். அளவையினாலே அளப்பதற்கும் அளப்பரிதாய நிலையையுடைத்தாய் ஜடசித்தாகிய எல்லாம் பூரணமாகி இப்படி ஒருபொருள் உண்டென்று நிச்சயிக்கப்பட்டவர்கள் மனதிலே புதிதாகத் தோன்றப் பட்டவனாகிலும் ஆன்மபோதத்தால் அறியப்படாதவன். ஒருகாலத்து ஓரிடத்து விளங்கியும் ஓரிடத்து ஓர்கால் நந்தியும் வாராது ஒருபடித்தாய் அசைவற்ற சீர்த்தியாய் இருளறுக்கும் விளக்குப்போல ஆன்மாக்கள் மலவிருள் இரிக்கைக்கு விளக்காய் ஏகதேசப் படாமற் சர்வான்மாக்களிடத்தும் நிரம்பி மேன்மேற் பிரகாசிக்கப்பட்ட தேஜசாய்ப் பூமியின்க ணன்றியிலுஞ் சர்வ தேவர்களுக்குந் தேவனாகச் சலனமற்று ஒளியாய் வழங்குவதற் கெல்லாந் தான் ஒளி கொடுப்பதாய்ப் பெருமையுடைய பிரபை. தற்றெரிசனிகள் அறிவின் கண்ணே தோன்றுவதன்றிக் கடபடாதிகள் போல ஊனக் கண்களுக்குக் காணப்படாதவன். அனாதி மலமில்லாதவன். அண்டங்கள் புவனங்கள் யாவையினும் அதன்கண் வாழுந் தாபரசங்கமங்கள்மாட்டுந் தோன்றாத் துணையாய் நிற்பதுதானே நிலைமையானவன். கன்ம மலம் மாயாமலம் இரண்டும் நீங்கின அஞ்ஞான ஆன்மாக்கள் எண்ணிறந்தபடியாக வேதாகமங்களாலே திருவுளம் பற்றப்பட்ட புகழையுடைய சிவனது சரித்திரத்தைப் புண்ணிய பாவப் பகுதியாகிய கன்மமல மாயாமல பந்தனாகிய யானும் இப்போதும் என்னாலியன்ற மரியாதை உனக்கின்னும் ஒருவகைத் தகுதிப்படச் சொல்லுகிறேன். அதை நன்றாகப் புத்தி பண்ணிக் கேட்பாயாக.
38-39. பாசம் குன்றோன் :
(உரை) காமியம் மாயை ஆணவமென்னு மும்மலத்தின் காரிய காரணங்களை யறிந்து நீங்கின உபசாரத்துடன் சிவஞான சம்பந்தரான ஆன்மாக்கள் இருதயமான பொதுவெளியிலே விளங்கி நின்ற குணமான மலையான் ; இதுவன்றி, எண்ணிறந்த படித்தாகும் பிணிப்பை யுடைய ஐவகைச் சத்திகளினது வியாத்தி வியாபகங்களுக்கப்பாலாகியும் அதனுட் கட்டுற்று இலக்கமிலவாய உயிர்க ளிவைக் கந்தரம் போற் றலையளிசெய்யும் பேரறிவா யதுவே பொருந்தும் தில்லைப் பொதுவில் யாவருங் கண்டு மகிழ்வுண்டாக நட்டம் பயில்வனவே குணமான மலையென்றுமாமென்க.விண்மேல் பாட பேதம்.
39-57. இலகவே ஆறுடையான் :
(உரை) விளங்கச் செய்யப்பட்ட சிவபுண்ணியமான மலையிலே யிறங்கி, அபரஞானத்தின் தலைமைகண்டவரது கூர்ந்த அறிவுக்குப் பிரயோசனமாகி யேத்தும்படிக்குச் சந்தோஷத்துடனே வேகமுடைத்தாய், ஒன்றை யொன்றாகத் திரியக் காணுதலையும் அங்குத் தோன்றுபுத் தோன்றுமாக நினைக்குதலையும் அச்சப்படுதலையும் ஆசைப்பற்றையும் பிறவுயிர் வதையையும் அகங்காரத்தையும் முறுக்கி, சத்தி அனந்தமான புண்ணிய பாவங்களையெல்லாங் கெடுத்து, களிப்புடனே ஜடசித்துக்கள் முற்றும் இயல்பாய் நாதமுழக்கஞ் செய்து வேகத்தினாலே நடந்து ஞானத்தின் பகுதியாய்த் திவ்யாகமங்களில் நன்றாய் அறிவாய்ச் சென்று, ஆணவம் மாயை காமியமென்று விரிந்திருண்ட காட்டு விருத்தி நாசமாம்படி அதற்குக் காரணமாகிய கிழங்கைப் பிடுங்கி, சர்வமுமாய்ச் சகல சத்தங்களுஞ் சகல சத்தத்தின் பொருள்களும் உண்டாக்கியறிகையால் அதுவெல்லாந் தனக்குக் கீழாகையாலும் அதனளவில் அளவுபடாமையாலுங் கல்வியினது வரம்பையும் உடைத்து, பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயமென்னும் ஐந்து பூதமும் ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்றென்னும் அதன் ஜடப் பிரஞ்ஞைக் குணங்களின் விரிவையும் போக்கி, அநித்யமான ஊரும் பேரும் குடிமையும் அழகும் பெரியனென்னுங் கீர்த்தியும் நிறுத்தப்பட்ட ஆன்மாக்கள் சரீரத்தில் நிற்கும் பரிசத்தினது தன்மையும் வாயினிடமாக நின்ற சிங்ஙுவையின் தன்மையும் நேத்திரத்தினிடமாய் நின்ற ரூபத்தினது தன்மையும் துண்டத்தினிடமாக நின்ற ஆக்ராணத்தினது தன்மையும் கர்ணத்தினிடமாக நின்ற சோத்ரத்தினது தன்மையும் இப்படிப் பலவாய தன்மையாய்ச் சிங்கம் போன்று ஐந்து வாயினானும் விழைவை விரும்பும் ஞானேந்திரியங்களாற் பற்றும் ஆசையைப் போக்கி, தன்னைப் பெருமைக்காகாது கீழப்படுத்துவிக்கு மியல்பினை யுடைத்தாகிக் கடின பாடணமாகச் சொல்லினின் விளக்கும் வாக்கையும் பாவவேதுவான காரியத்திலே செல்லக் கால் நின்று கமனிக்கும் பாதத்தையும் கியாதிலாப் பூச்சியங்களைத் தழுவாத புண்ணியத்திற் செய்யாது ஆர்வங் கண்ணோட்டமாகிய பசுத் தர்மத்திலே யிடுதலும் இது ஏற்கவொண்ணாதென்று விசாரியாமல் ஏற்குங் கையினின்று செய்யும் பாணியினையும் உதரத்தினின்று ஜலத்தையுங் கட்டத்தையும் வேறுவேறுபடுத்தும் பாயுருவையும் விடயானந்தத்தை இருவகையான கோசபவக் குறியினின்று விளைக்கும் உபத்தத்தையும் இப்படிப் பலபேதப்பட்ட கன்மேந்திரியங்களைந்தையும் விடுவித்துத் தான் நெருங்கி அந்தத் தானங்களெல்லாம் நிரம்புவித்து, என்றும் நீக்கப்படாத சங்கற்ப விகற்பமாகிய பொழிற் செறிவை வெளியாக உருவியும் நிறைந்தோடி, நான்கு நான்கு பேதமாக ஆட்டுக்காணும் அந்தக்கரணங்களினுடைய தற்குணங்கெடத் தாக்கி, பற்பலவாகச் செய்யுந் தத்துவங்களின் சேட்டையை நிறுத்தி யாவுஞ் சிவஞானத்தின் தன்மையேயாகிப் பெருக வளரப்பண்ணி, சாத்விகம் ராசதம் தாமதமென்னும் பெயரினையுடைய குணத்ரயங்களின் செயல் பதி மாறிமாறிவரும் மிகுவெற்றியையெல்லாந் தனது ஒருபடித்தாய இன்பநிறையாற் கோபித்து, உடல் முழுவ துள்ளும் நிரம்பி மிகுதியாற் புறம்பு புக்கோடி மூன்றரைக்கோடி யுரோமவழி யெல்லாஞ் சுகம்பிறந்து மயிர்கள் சிலிர்ப்ப மாயாதனுவின் நித்யகுணமான தாபசோபமும் அனாதி ஜனனமரண அழலிக்கையும் நீக்கித் தட்பமுடையவாய பெருஞ்சுகம் விளையப் புலன்களைந்தின் சிறுதொழிலான் மருட்டுவழிச் சார்தல் அறப்பண்ணி, அண்டத்துந் தனு கரணங்களுக்குக் காரணமாகிய வினைகள் நிரம்பிய சந்திரமுதற் கலையீறா அறுவகை நிலங்களும் அடங்கச்சென்று பாய்ந்து, பசுங்கூட்டாகிய சந்தனங்களினாற் பொதிந்து நெருங்கிய கொங்கைகளையுடைய அங்கனையார்கள் செய்யுங் கோலக்கோட்டிகளால் விழைவுற்றுச் செல்லும் அறியாமையை நீக்கி, அண்டத்தும் பிண்டத்தும் எழுதல் இயல்பாகி வாதனையுடைய அக்னிமண்டலம் ஆதித்தமண்டலஞ் சந்த்ரமண்டலமாகிய முச்சுடர்களுந் தனது காருண்ய ஆணைப்படியே சர்வத்துக்கும் பொதுவாய் நடுவுநிலைமையாயே நில்லாது அதிகார மலத்தால் விகாரப்படாமல் பார்த்து நிறுத்தி, மூலாதாரஞ் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் அனாகதம் விசுத்தி ஆஞ்ஞையென்னும் ஆதாரத்தினடைவே முற்றும் நிறைந்து, ஒன்றோடொன்று மாறுபட்டுப் பொருதல் புரியும் பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்செயனென்னு மேலாய மாருதமும் அண்டத்துக் காரணவாயுப் பத்தும் விளங்க மேற்கொண்டோடி மேலடாது கோபித்து, தேகத்தின் காரியமாய்ப் பஞ்சபூதத்தின் காரணமாகிய அண்டத்து அதோமுகமாய் நீடுநிற்கும் ஐவிதமான பூதத்தானங்கள் கலைகளெங்கும் பரந்துநின்று, அண்டத்தும் பிண்டத்தும் உற்பவநாச குற்றந்தீரா ஆன்மாக்கள் போலாது கடவுளாகி நிராதார அதிட்டிதமாகி நிவர்த்திகலை யதிபரான பிரம சிருஷ்டியையும் பிரதிட்டாகலையினின்று திதிபெற்றுச் செய்யும் விஷ்ணுவின் திதியையும் வித்தியாகலையினிருந்து சங்காரத்தைச் செய்யும் உருத்திரமூர்த்தி சங்காரத்தையும் சாந்திகலையினிலையாகித் திரோபவத்தைப் பண்ணும் மஹேசுரர் மறைப்புச் செய்தலையும் ஆகாயபூத வியாபகவந்தமான சாந்தியாதீதகலைக்குக் காரணராகி அனுக்கிரகத்தை ஐவகை நிறமுடைய முகங்களாற் புரியுஞ் சதாசிவ மூர்த்தி யனுக்கிரகத்தையும் இந்தக் கலைகளும் இந்தச் சதாசிவ மூர்த்திகளுந் தனுகரண முதலியவையாகக் காரணமான சுத்தமாயையின் அதோமுகமான விந்துவான பராசத்தியையும் அந்தச் சுத்த மாயையில் ஊர்த்துவமுகமாய் ஓசைவடிவாகிய அபரநாதத்தையும் பிறகிட்டு மேற்சென்று, சுத்தமாயா காரணங்கடந்து நின்மலமாகி, நிராமயமான பரவிந்துவென்னும் பராசத்தியினது முடிவிலா வியாத்தியாகிச் சித்தஞ் செல்லாத சூனியமெங்குங் குறைவர நிரம்பி, அவ்வளவிலும் நில்லாது பரந்து, ஞானபாதங்களில் முதற் பேசப்பட்ட பராசத்தி ஞானத்து மேலாகிப் பூரணமான பரநாதத்தையுந் தனக்குள்ளேயாக மேல் தனதெல்லையளவு செறிந்தோடும் நீர்மையாய்ச் சுத்தப்பேரறிவேயாகி வேறு சந்தேகமில்லாது தீர்ந்து, பாதாளசத்தி தொடங்கிப் பரந்த வியாபகமும் பலவாய சத்திகளுமன்றி ஜடசித்தாகிய எல்லாப் பொருள்களின் ஞானங்களும் தன்னதேயாகியவாயினுஞ் சேர்ந்த உயிர்களுக்குச் சுத்த முத்தியுங் கொடுத்துத் தனக்கு அபின்னமான நிரதிகாரத்துக்குத் தான் திருமேனியாயிருந்தாலும் மூவகையுமல்லாத உயிர்களுக் குயிராய் நிற்குந் தன்மையுங் குன்றாதுமாகி, கண்டிக்கப்படாததாய்ச் சர்வமும் நிரம்பித் தூலசூக்குமமான இருவகையிற் சிருட்டி திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகங்களாய ஐந்தவதரமும் இல்லாததாகிப் பரமாய் நிர்மலமாய் நித்தமாய் ஒன்றாய்ச் சருவப் பிராணிகளுக்கும் அறிவாகி அசலமாகிப் போதங்களாற் செப்பவரிதாய்த் தற்சிவமாகிய மிகுந்த ஒளியே தனக்குக் காரணமாய்க் கதியாக அதனுடன் இரண்டறப் போய்ப் புக்கு இதுவன்றியுஞ் சுத்தாவத்தையி லுண்டாகிய பஞ்சபேதமான அவத்தையுங் கடந்த பேரொளியே கதியாகச் சென்று பாய்ந்தெனவுமாம். , சொல்லிப் போந்தவை யாவுஞ் செய்யுமிடத்துச் சர்வப் பிராணிகளுக்கும் தத்தம் வினையால் வேறுபாடு காண்டலல்லது தான் செய்தால் பக்கஞ் சார்தலின்றி முடிவும் முதலென்பதும் இலவாகிச் சகல உயிர்களையுந் தனதியல்பில் நிறுத்துமென்னும் நினைவாய் அளவிறந்த காருண்யந் தானே மேன்மேலும் வளர்கின்ற மிகுமின்ப சுகந்தானே தசாங்கப் பொருளுக்கு ஆறாய பகுதியுடைவன்.மோதி யலைக்கும் அருணீர்மை முக்குணமும் பாடபேதம். 57-58. ஆனந்தம் நாடுடையான் :
(உரை) அருளாய் அடைந்த ஆன்மாக்களுக்குஞ் சுகசொரூபமே செய்வதற்குக் காரணமாகி அருநிலைமை அறிதற்குக் காரணக் கருவியான நான்கு வேதமும் இருபத்தெட்டுத் திவ்வியாகமமுங் களங்கமற ஓதி அதன் தாற்பரியமுடிவை யறியச் செய்த மஹத்துக்களுக்கும் அந்த அறிவாற் பொருந்தப்படாது நுண்ணியதான சிற்சத்தித் தானமே தனக்கும் சுத்தமான நாடாக உடையவன்.திகைப்பொழிந்தங் கெவ்வறிவுக் பாடபேதம்.
58-60. எண்ணெண் ஊருடையான் :
(உரை) விரிந்த அபர ஞானமாகிய அறுபத்துநான்கு வகைப்பட்ட கலைகளினது ஞானங்களை ஆராய்ந்து ஒன்றின் கருத்து ஒன்று சொல்லாது வெவ்வேறு பேதப்பட்டுச் சொல்லுகையாற் பயன் நிலையாமை கண்டு மனமுருகி நொந்து திரிவித கரணங்களும் எப்போதும் பற்றாக ஆசைப்படுஞ் சுத்தமாயா பீடத் திருத்தல் முதலிய கீழுள்ள போகத்தானங்கள் முடிய அநித்யமென்று நீத்து அருளுருவாற் சலிப்பற நின்ற ஆன்மாக்களிடத்திலே அவ்விடத்து உதிக்குஞ் சிவஞான மதுவே தனுவாக ஆன்மசகா விதமாகிய போக்குவரவற்ற பூரணத்துவம் வந்தவிடத்து அழகு செறியும் அனுபூதியாய பகுதிக்கு நாயகன்.
60-63. நாட்டத்தால் மெய்யினான் :
(உரை) என்பதை பொய்யிற் கூடாமற் சிந்தைமயக்கந் தெளிந்து நாட்டத்தால் தெண்ணீர் அருவிவிழ உண்ணீர்மையெய்த வுரோம மெலா நண்ணும் புளகம்புனை மெய்ய ருளகம்பங்கொண் டுள்ளுருகி யளவிலா மாலா யிருக்குமவர் மனத்தை வாங்க அருள் மேலாய் விளங்கலங்கல் மெய்யினான் எனமாறுக. பொருளாவது : மலையினுச்சியி னட்டுத் தெளிந்த நறுநீரானது இடையறாது விழுமாப் போல இரண்டு கண்களினாலுங் கண்ணீர் தாரைவிட ஆன்மாவினுடைய ஐயுறவு நீங்கி உள்ளே ஞானம் விளங்க மயிர்க்கால் தோறுஞ் சுகபுளக முண்டாகுஞ் சத்தியத் திருமேனியானவர் இந்தப் பிரபஞ்சப் பொய்யை நீத்தவர்களிடத்திலே கம்பிதமான ஆனந்தமுண்டாகத் தான் ஒருபொருளென்னுந் தன்மைபோய் நீராளமாய்க் கரையிறந்த பற்றாம் வாஞ்சையுடைய ஆன்மாக்கள் செயலானது விஷயாதிகளிற் செல்லாமல் நிறுத்தித் தன்வயத்தாக்கும் அருளே யாவைக்கும் அதிகமாகத் தோற்றப்பட்டவையை அழகு செறிய மாலையாகத் தரித்து அறிவுதானே தடித்தனவே திருமேனியாக உடையவன்.
63-65. தோலாத வாசியான் :
(உரை) பேரிருளாய் வழங்குதலில்லாத வெறுவெளிகளும் இரு நூற்றிருபத்துநான்கு புவனங்களும் அஷ்டகுல பர்வதங்களுஞ் சப்த சமுத்திரங்களுஞ் சப்தபாதாளங்களும் ஆன்மகோடிகளுக் குடம்புண் டாகைக்கு மூலமுங் காரியப்படுவதுமான பஞ்சபூதமும் அந்த ஆன்ம கோடிகள் யாவைக்கும் அறிவு எவ்வளவோ அவ்வளவுக்குத் தேர்தலுள வவ்வளவவ்வளவ தன்றியேயாகியுஞ் சொல்லப் போந்தவை யித்தனையுந் தன்னிடத்திலே யுண்டாக்கி உண்டாக்கியும் வினைப்பகுதியால் விளக்குகையால் தானல்லவுமாய்ப் போதமிக்கால் பகுத்தறியும் அறிவினர் பகுத்துக் காண்கைக்குக் காணாமையுங் காட்டுவதுமான சித்தாய் மனவேகமான இச்சை கிரியை ஞானசத்திகள் இத்தன்மைய வானதே கடுங்குதிரையாக உடையவன்; இதுவன்றி அப்படித் தோய்ந்தும் தோயாமையுமான விசித்திரமான வாசியே வாசியா யுடையனென்க.
65-73. சொல்லாரும் ஆனையான் :
(உரை) ஈசுவரவாக்யங்களாலே அதோமுக உலோகங்களெங்குந் தடையறப் புகுந்து அதன்மேல் ஆதிநடுவாய் அதிற் பிலக்கத்தீவு முதல் புண்டரீகத்தீவு ஈறாகச் சப்ததீவுள்ளும் அதன்மேலாகி ஊர்த்தமுகமான பூலோகமுதலாக அடைவே உயர்ந்த சத்யலோக மீறாக ஏழுமேலுலோகங்க ளுள்ளவாய்த்தான் நிலையாக நிற்கைக்குத் தானமாகி, அன்றியும் அதன்மேலாய வுலோகங்களாய்க் கண்டிதமன்றி அருவாயிருக்குஞ் சுத்த மாயாலோகம் யாவும்நிறைந்து, இப்படியிருந்தாலுஞ் சுட்டிச் சொல்வதற்குக் காட்சியிற் படாது. ஆனால் இல்லாததோ வென்னிற் சுட்டிறந்தாற் சொல்லிற் பட்டதாய், அன்றியும் மேலோர்க் கல்லது உச்சரிக்கப்படாத வேதம் நான்கும் சிடிக்ஷ கற்பம் வியாகரணம் நிருத்தஞ் சோதிடஞ் சத்தமென்று சொல்லப்பட்ட அங்கங்க ளாறும் இவைக்குத் தானல்லதுவேறுயிரின விலதாய் அதிற்பிரித்துப் பிரபஞ்ச சருவமுஞ் சொல்லுவதாய் அதுவே அதனுக்குயிராய் அதிலே நிச்சயமான தாற்பரியமே அந்த உயிர்க்கு ஞானமாய் இந்த விதத்தாலாய சரீரமே மிகப்பருத்து, தனது மெய்யடியார்களிடத்தில் கடினப் பிரவிர்த்தியான பொல்லாத பந்தகட்டை அற்றுப்போம்படி செய்து, திரிவித கரணங்களினால் ஏறுசெய்திக்கீடான பற்பல ஜனிப்புத்தாப சோபமாய்ப் பற்றுக்கோடாய்க் கரையிறந்து நிலைகாணாத சாகரத்தைப் போலப் பயனிலவாய ஜனன சாகரத்தை நன்றாய் நசையீரஞ் சிறிது மில்லாது துகளெழக் கடந்து, சந்தேகப்படுவனவும் விஷய விருப்பும் அதனால் வரும் வெகுளி ஈயாமை யாதுந் தெரியாமல் மயக்கிற்படுகை தன்னை மதித்துக் கெர்வித்தல் முதலானவைகளை வெகுண்டு நெருக்கி, மரித்து மரித்துத் திரிவதற்குக் காரணமாய புவன போகத்தை நசுங்க மிதித்து, வேறுவேறு பெயரிட்டு கொள்ளே அச்சம் பொருந்தி தீர்க்கப் பிரயோசன மில்லாத நூலாகிய பற்பல வார்த்தையாகக் குரைக்கும் புறச்சமயிகளாகிய புன்மையார் கோவைசெய் தகுதியின் வெற்றியைச் சின்னாபின்னமாகத் துணித்து, தன்திறமற்று அச்சமுறல் பிறவுயிர் கோறல் முதலிய செய்வதற்கிசைதலை நாசஞ்செய்து, நாடோறும் நாடோறும் புனைந்த செயலுரைகளின் பிணிப்பாற் பெருகிவரும் புத்ரர் முதலாயின பற்றும் வேரற அடர்த்து மோதி, களத்ரப் பற்றைச் சிறிதுமில்லாமலறுத்து, அளவற்ற கருணையினால் எந்த விதத்தினாலே ஆன்மகோடிகளின் பந்தம் நீங்குமென்கிற நினைவான கடுமைதானே குணமாகி ; அதுவன்றியும் அந்தக் கிருபை தானே மிக்க ஆராமையாகிய மயக்குற்று ; உமை திரு வாணியென்னும் மூன்று சத்திகளையும் மும்மதமாகப் படைத்து அந்த மதங் கரைக்குங் கர்வத்தாற் சாதாரணமாகிய தேக காரியமான தத்துவம் எவ்வளவுள அவ்வளவும் அதனுட் செறிந்து அந்தத் தத்துவங்களுடம்பாய உயிர்கள் அவைகளினாலே விஷய நுகர்ச்சி நுகர்தற்குரியன உட் கலந்து நிற்றலாலே அந்தப் புவனபோகங்களில் தனக்கு யோக்யமான நிர்மலமாய சுத்தமாயா போகத்தில் உண்டோ இல்லையோவெனச் சிறிதே தேன்போன்ற தெளிவைக் குடித்து அதனால் மிகுசல்லாப மடைந்து வீறிட்டு மிகவும் உன்னதமான யாவையினும் நீண்டு வெகு விதமான வேதங்களெல்லாவற்றையுங் தனக்கு நாலு கொம்பாகப் பொருந்தி விளங்காநின்ற கிரியை இச்சா ஞானமே தனக்கு அங்கமான கொலுயானையான உடையவன்.குரோதமத மாச்சரியம் பாடபேதம்.
73-74. இருமுச்சமையம் துவசன் :
(உரை) உட்சமயங்களான வாமம் வைரவம் மஹாவிரதம் காளாமுகம் பாசுபதம் சைவம் ஆறினுங் கொண்ட பொருள்நிலைக்கு மேம்பட்டு அந்த நிலை அந்த அருளினர் நிலைக்கல்லது பின்னை யாவர்க்கும் கட்டாமையால் ஒப்பற்றுச் சர்வதொழிலையுஞ் சுமத்திக் கொண்டு துன்புறும் உயிர்களினை வைத்துத் தாம் யாவைக்கும் பிராத்திகனென்னும் அறிவை விளக்கி அந்தத் துன்பச்சுமை யில்லாதபடி செய்தலால் அவையே அவனுக்குக் கொடியாக உடையவன்.
74-77. கமையொன்றி நெடுமுரசோன் :
(உரை) விஷயப் பகுதியாற் புலன்வழிச் சேறலை யடக்கித் தாப சோபமாற்றி உயிரென்று வேறேயொன் றில்லை பிராணவாயுவே யென்று அறுதியிட்டு முக்கோணமான மூலாதாரத் தக்கினியை ஜொலிப்பதற்காம் வகையாலே ஜொலிக்கப் பண்ணி இந்தப் பூததனுவிற் புசிப்பும் இதுவன்றி நீங்கித் தேவலோகம் முதலான தானங்களுக்கான உடம்பிற் புசிப்பும் இவையிரண்டுமல்லவாய் இந்தத் தனுவிலே சுபாவமாக நடக்கும் இடைபிங்கலையான வாயுக்கள் இரண்டும் நடவாது தம்பிக்கச்செய்து, அதுவன்றியும் புறம்பாய் இதற்குச் சகா காரணமாயுள்ள பூதவாயுவின் சகாயத்தையும் நிறுவித்துச் சுழுமுனை நாடியி னுண்டாய வாயுவாலே மூலாதாரத்தில் ஜொலிக்கிற அக்கினியை யெழுப்பி இலாடத்தானத்துச் சந்திர மண்டலத்திலே தாக்கி அதிலுண்டாய அமிர்த கசிவாய புசிப்பால் உள்ளெங்கு மின்பாய் அதுவே புசித்து முன்னுள்ள தனுவுக்குள் நரை திரை மூப்பு மிருத மற்று அந்த உடம்பே வஜ்ரகாயமாய் இளமைபெற்று அளவிறந்த காலம் நித்யராயிருக்கும் மஹாத்மாக்களுள்ளே நீங்காமல் எப்பொழுதும் விளங்கிய பேரொலியே பெரிய பேரிகையொலியா யுடையவன்.
77-79. அன்றியும் ஆணையான் :
(உரை) அல்லது பிரமாவினாலே சிருஷ்டிக்கப்பட்டு விஷ்ணுவினாலே இரக்ஷியா நிற்கின்ற பிரகிருதிக்குக் கீழ்ப்பட்ட உலகமெங்கும் பெருகினதன்றி அசுத்தமாயையினுடைய உருத்திர மூர்த்திகளாலே நடக்கப்பட்ட உலகங்களும், அன்றியினுந் தனித்தனியாகக் கீழும் மேலும் உண்டாய உலகங்களும் அதற்குக் காரணர்கள் மாட்டு யாவைக்கும் மேலாய் அசுத்த மாயையினுண்டாய உலகங்களினும் அதில் அதிபரிடத்தும் ஆன்மாக்க ளறிவால் அறியப்படாத குய்யத் தானங்களினும் விளங்கப் பிரகாசித்துச் செல்லும் அழகிய ஆக்கினையினை உடையவன்.
79-81. அலகிறந்த தோன்றலான் :
(உரை) எண்ணிறந்த ஆன்மாக்களுக்குந் தான் ஒருவனே புகலிடமாக இருந்தாலும் ஒருபடித்தாகாமல் அவரவர் கோட்பாடுகளுக்குத் தக்கதாக வேறுவேறு ஒன்றோடொன்று இசையாத படியாகக் காணுந் தன்மையன். உயிர்கட்கு மேலாய ஞானங் கொண்டல்லது தற்போதங்களினாற் காணப்படாதவன். வேதாகமங்களின் பொருளினனாக நிச்சயிக்கப்பட்டுள்ளவன். அந்த வேதாகமங்களினால் நிச்சயம் நிலையிடப்பட்டவைக்கெல்லாந் தான் நிலையாதவன். தான் மேலாய ஸ்வரூபியா யிருக்கினும் சர்வான்மாக்களுக்கும் அதுவே பேறாக்குகையின் பொருட்டு அவ்வவர்கள் மதத்துக் கீடாக நன்மைதீமை புசிப்பதற்கு வேதனை விதமான காரியங்களையும் உண்டாக்கப்பட்டுடையவன். பூலோக மெங்கும் எட்டுத்திக்கும் கீழும் மேலுஞ் சஞ்சரிக்கப்பட்ட பரிதி அங்கி இந்து மற்றுமுள்ள ஒளிகட்குத் தான் ஒளியுமாய் அந்த ஒளி மூர்த்திகளுக்கும் பிரபை கொடுத்துள்ளவன்; ஒரு முதல் சொல்லப்படு மிடத்து அதற்கு அடி முடி உண்டாகையால் அப்படிப் போல்வதோர் அடி நடு அந்தமிலாதாகித் தானே தோன்றிய முதலானவன்.
81-83. வேராகி ஒருவன் :
(உரை) தாபர சங்கமமென்னும் இருவகைத் திணையில் தாபரங்களுக்குப் பொருந்தும் உயிர்காறுங் கருவிமுதற் காரணமாகிய பீஜமும் அதற்கு நிலையாகிய மூலமும் அதன்மே லெழுந்துண்டாம் பணை சினை அடை தளிர் பலங்களுமாக்கி, சங்கமங்களுக்குப் பொருந்து முயிர்க்கு அது அதுகளுக்கேற்குங் காரணங்களுந் தனுக்களுமுண்டாக்கி, அதற்குள் நடத்துங் காரண பூதங்களையும் படைத்து, அந்தப் பூதாதிக்குக் காரணமாய தன் மாத்திரையாய்ச் சத்த முதலியவற்றைப் பூதாதியாங்காரத்தினும் உண்டாக்குவித்து, அப்படிப் பிரகிருதி மாயா காரியத்தை அதிஷ்டித்து ஆக்கினானாயினும் அவனுண்மை சொல்லுமிடத்துச் சுத்தமென்ற அபர விந்துவையும் வெறுவெளியாய அபர நாதத்தையும் பாழாய பரவிந்துவையும் வெறும்பாழாய பரநாதத்தை யுங்கடந்து இவைகளிற் றோய்ந்த குணமில்லையாய்த் துகள்தீர்ந்த ஆன்மாக்கள் பெறும் பேறாய்ச் சலனமற்ற தனி முதல்வன். அபரவிந்துவைச் சுத்தமென்றது சதாசிவ முதலிய மூர்த்திகளுக்குத் தனுவாகையினானுஞ் சுத்தமாயா மந்திரம் இதிற் பிறக்கையானுஞ் சிவசத்திகள் இதிற் றோய்ந்திட்டிருக்கையானு மென அறிக. அபரநாதத்தை வெறுவெளியென்ற தென்னையெனில், சிவசத்திகள் தாக்கின் மேற்கொண்டு பராசத்தி வெளியிற் படருகையாலும் அருவாகையாலுஞ் சுத்தமாயையில் ஊர்த்தமுக மாகையாலும் அவ்விடத்துண்டாவது யாது மில்லையாகையாலுமென அறிக. பரவிந்துவைப் பாழென்றது அவ்விடத்துப் பொருந்திய ஆன்மாக்களின் சத்தி செயலில்லாதாகை யாலும் நித்தநிராமயமாகிய நிர்மலமாகையாலு மெனக் கொள்க. பரநாதத்தை வெறும்பாழென்றது அந்தத் தானங்களிற் பற்றிய உயிர்கள் உயிரென்பதொரு முதலுமற்று ஞேயந்தானே யாகுகையால் அப்படிச் சொன்னதென அறிக. அப்பாலுறு பொருளாய் நின்ற ஒருவனென்பது திரிபுடியும் நஷ்டமான பெறும்பேறாய் ஏகாந்தனாய் நிறைந்த அசலமென்றதென அறிக இப்படிப்பட்டவன்,
83-88. பொறியிலியேன் இயல்பினான் :
(உரை) அப்படிச் சர்வசூன்யனாகி மறைந்தவனாயினும் பிரத்யக்ஷ மாகப் பிரபஞ்சத்திலே சத்தாதியாய இந்திரியம் நிற்க மெய் வாய்கண் மூக்குச் செவியென்னுந் தானங்களும் வழக்கமில்லாத யான்; அது வன்றியினும் அவன்செய்த காரியத்துக்குப் பிராத்தியான பாத்ரமில்லாத யான்; துயர அழலினாலே வாட்டும் பிறவிக்கடலில் அழுந்தாமல் மோக்ஷத்தைத் தந்து சம்பந்தமாமுனி யென்னும் மஹத்தாய நாமத்தினையும் புனைந்து எனக்குச் சாமியுமானோன். இம்மட்டுமல்லாமல்,சமுத்திரஞ் சூழ்ந்து அழகிய உலகிலுண்டான மஹத்துக்களும் மானுடராயினோர் யாவரும் வந்தனை செய்யப்பட்ட தனது அழகிய பாதமிரண்டும் ஒன்றுமாகாத ஈனமான என்னுடைய சிரசில் ஒருகாலும் மறையாமல் விளங்கவைத்தவன். அவன் நாமரூபியாயிருந்தாலும் அறிவால் விசாரிக்கில் புண்ணிய ரூபமான இடபநந்தி முதுகின்மேலே யிருக்கப்பட்ட என்னுடைய கர்த்தன். பற்பலவாய சமயிகள் அவரவர்கள் வேறு வேறாகச் சொல்லுஞ் சொற்கு அர்த்தமானவன். ஒன்றோடுங் கூடாது ஒருவனாகச் சர்வத்துக்குங் காரணனாயினும் அப்படிச் சுட்டிக் காணப்படாதவன். நிர்மலமாய் அழியாததாய் வேறொன்று வந்து பொருந்தாததாய் ஒப்பற்றதாயிருக்கப்பட்ட சுகசொரூபமாய்ப் பிரகாசிக்கப்பட்டவன். இப்படி நிகழ்த்தலாய்ப் பிரகாசத்தை யுடையனாயினும், மந்தம் மந்ததரம் தீவிரம் தீவிரதரமென்னும் நான்கு சத்தினி பாதமும் பொருந்திய சகலரை இரக்ஷிக்கை நிமித்தமாக அவர்கள் அறிந்து வழிபடத்தக்க ஆசிரியரூபத்தைத் தரித்துளனாயினும் நாம ரூபக் குணங் குறியிலதாகி எங்கும் நிரம்பி ஒழியாத திருமேனியான பெரிய கர்த்தன். நால்வகைத் தோற்றத்தின் எழுவகைப் பிறப்பினும் அதற்கதற் கேற்ற யோனிகளினுருவாகைக்குக் காரணமான கன்மமல ஆணவமல அனாதிப்பிணிப்பைச் சுத்தமாக அரிந்தவன். வேதாகம சம்பன்னராயுள்ளவர்கள் நிரம்பிய வாழ்வுடைய சிதம்பரமாகிய தில்லைவனமே தனக்கு ஊராக உடையவன்; நூலறிவாலே மிக்கவர்களைப் பிரபஞ்ச வாழ்க்கையில் வாழுதலிலதாகச் செய்பவனெனவுமாம் ; பிரமாவிஷ்ணு இருவருஞ் சபத மிட்டுக்கொண்டு அடிமுடி யறுதியிடுவோமென்று தேட இன்னுங் காணாதவன்; அன்றியும் தற்போத மிகுத்தோர் அளவை கொண்டு மட்டிட அந்த மட்டில் அடங்காதவன்.
88-91. மட்டவிழ்தார் காட்டினான் :
(உரை) ஞானசூரியனாக என்னுடைய ஸ்வாமி எழுந்தருளு கையால் மலபந்தமாய்த் திணிந்த பூதவிருளாய் அந்தகாரமாய் மூடிக்கொண்டிருக்கும் ஆன்மாக்க ளிதயமாகிய மொக்கை விகசிதமாக்கி மலர்த்துதலால் அதில் ஞானாமிர்த மதுக்களை யுண்டு தேக்கிடப் பெற்ற பிரகாசம் பொருந்திய ஞானசிற்சத்தி வடிவாகிய கொன்றைமாலை மார்பிலிலங்க எழுந்தருளி வாராநின்ற பெண்ணாகடந் திருப்படை வீடாகிய மறைஞானசம்பந்த மாமுனி ஒன்றுக்கும் பற்றாத என்னை அடிமைகொள்ளும்படி பவனிவரக் கண்டு நல்வினை வல்வினை யிரண்டும் அறியாத எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதத்தில் மொத்துண்ட உயிர்கள் யாவருங் கண்டு ஆனந்தபரவசமடையும் பகுதியில் யானும் ஓர் உயிராகக் கண்டு தொழுதேன். அடியேன்பேரிற் சிவோகம் பாவித்துப் பூரண திருஞானப் பார்வை செய்து யானெனதென்னும் பழவினையாகிய மூலஆணவமலம் திரோதை மாயை கன்மம் மஹாமாயை இவ்வைந்தினுடைய மூலக்கிழங்கை ஞானாக்கினியினாற் பசையற எரித்துப் பாழ்படுத்தி, யான் ஒரு நாயகபுருடனாகவுந் தமது திருவருளே நாயகியாகவும் அளிகள் மத்தமதுக்களை யுண்டு மயங்கிக் கிடப்பதுபோல என்மனத்து எனக்குத் தெரியாமையாய்ப் பற்றற வேறாக்கிப் பசுகரணஞ் சிவகரண மாக்கி இரதகுளிகையைச் சேர்ந்த செம்புபோல என்னைத் தன்வசமாக்கித் தத்துவக் குப்பைகளாகிய தொண்ணூற்றறுவரையுங் கீழ்ப்படுத்திச் சரீரத்துவக் குப்பைகளனைத்தையும் பதைப்பற அறுத்து ஞானானந்தத் திருநோக்கினாலே பேரின்ப வெள்ளத்தை என்னுள்ளும் புறம்பும் ஒழுகும்படி காட்டினான். தனது சிற்சத்தி விளங்காநின்ற திருவடியை அடியேனுக்கு உள்ளபடி காட்டினான்.
9192. வெண்ணீறும் மனையுமே :
(உரை) பராபரமாகிய வஸ்துவே திருவெண்ணீறும், அகப்பற்றுப் பாழ்படுத்திய அடியார்கள் திருவேடமும், பஞ்சசுத்தி செய்து சித்திர தீபம்போல மனதை நிறுத்திச் செய்கிற பூஜையுமே மெய்யென்றும், பொய்யான திரவியமும் பிரபஞ்ச வாழ்க்கையும் மனைகளும் பொய்யென்றும் ;
92-99. நாடரிய ஈர்த்தான் :
(உரை) சம்பிரதாய வழியிற் கர்ணபாரம்பரையல்ல தறிய அரிதாகிய அஞ்சக்கரத்துக்கு அதிதெய்வஞ் சிவமுதல் மலமீறாக ஐந்து காரணமும் அடைவே நிற்குந் தன்மையுணர்த்தி; அதன்றி அந்த மந்திரம் இருதயத்திலே நீங்காதபடி வடுப்படச்செய்து அதினுண்டாம் அனுபவத்துக்கும் ஆசைப்பற்றுண்டாக்கி; இப்படியல்லது நெஞ்சுள் நடுவாக உயிரடையாளம் நிறுத்தி மேல் தாலு இலாடத்தானத்தில் ஞானநேயத்தை நிறுத்தி அதனோடு பொருந்துமாசையை யுண்டாக்கி யெனவுமாம்; இலாடந் தாலு இருதயம் நாபி மூலமாகிய அஞ்சு கரணத்திலுஞ் சிகாரமுதலாய் அமைத்தபடியே உச்சாரணம் பண்ணும் வகையையும் அனாதியுள்ளபடி யறிந்து அந்த உச்சாரணம் பண்ணுகைக்கே அக்கரமும் அதன் மூர்த்திகளும் நிறுத்தி மார்க்கத்திலே மனதினுடைய சஞ்சலத்தை நிறுத்தி இந்தச் செய்தொழிலிலே பிரவர்த்தித்து, எரியுந் தீபத்தைக் கோல்கொடு தூண்டியபோது உண்டாய மிகுபிரபை போன்றதாகச் சிகார அக்கரத்தையும் அதனை நீங்காத சத்திரூபமான வகரம் நிலையொத்த தீபநிறமாகவும் அதற்குள்ளே கனற்பொறி நிறம் பெற்று நின்ற யகரமாகிய ஆன்மாவை வகர வொளியானது பற்றி மேலாய் மிகுந்த சிகரமாகிய தீடிக்ஷயிலே உச்சரிப்புக் கூட்டி இலாடமுதல் இருதயமீறாக உள்ளேதான் பாவிப் பித்து, இப்படிப் பாவிக்குமிடத்துப் பூவினுண்டாய தேன் போக்கு வரத்தில்லாமல் அவ்விடத்துப் பருவத்தாயதுபோலப் பாவித்து, இப்படிப் பாவிப்பித்தவிடத்து அந்தப் பாவனை இறக்க அவ்விடத்துண்டாகிய மாயையில் தோயாத அருளைப் பிரவேசிப்பித்து, அருளொழியினும் நில்லாது காண்டலும் உணர்ச்சியிற் படலும் இல்லாதாகிய தானத்திலே என்னுடைய ஜனனமரண தாபசோபத்தைப் போக்கின ஞேயமான சுகத்தில் நிறுத்தி, வாயே திறக்க வழக்கில்லாமல் என் உயிர் உடல் பொருளாயதெல்லாந் தான்கொண்டதனுக்கு அவனால் தரப்பட்டது தன்னுடைய கிருபாசமுத்திரமாகத் தலையளி செய்த பற்றே பற்றாக வாழ்ந்து மயங்க எனக்குத் தந்து இரண்டற்ற உணர்ச்சியாகக் கூடினான். எனக்குளதாய அஞ்சவத்தையெல்லாம் போக்கிப் பேரறிவேயாகச் செய்து என் கரணச் செயல் யாவையுங் கெடுத்து எனக்குள்ளதாய நடந்த ஜனனத்தையும் அறுத்தான்.
99-100. விறற்சொல்லுக்கு எழுத்தினான் :
(உரை) சர்வசொற்களுக்கும் மூலமாய் மேலாய வேதங்களுக்கும் அறுதியிடப்படாதவன். ஒருவராலுஞ் செய்துமுடியாக் கிரமமும் யாவராலும் ஒப்பு தீட்டாச் சரீரமு முடையவன். பிரபஞ்ச சிருஷ்டி இரடிக்ஷ காரணமாகிய மாயாகாரியத்துக் காரியமாகிய குணங்களைப் பொருந்தினானாயினும் அதில் தோய்விலாதவன். ஆகில் அதற்கு அறுதி எப்படி என்னில், என்றும் பசுஞானங்களைப் பொருந்தி னானாயினும் அதில் தோய்விலாதவன். ஆகில் அதற்கு அறுதி எப்படியென்னில், நாற்செய்தியுந் தொழிலுஞ் சரித்திரமுங் காட்டலுமே அதுதானே இயற்கையாகிய சர்வகர்த்திருத்துவமுடையவன் என்க; இப்படிப் பட்டவனாகிலும் வழிபடுமடியார் விதியானவன்; அன்றியும் சர்வத்துக்கும் உற்பத்திக் காரணமான பிரணவாக்ஷரகாரணன்.பேரொளியினுள்ளே பாடபேதம். 100-102. மட்டாரும் பலகையிட்டான் :
(உரை) என்பதை ஆடலாராடல் அகன்பதியாங் கூடலார் மட்டாரும் பாடலா ராடலார் பண்பலார் நண்பலார் பாணற்கிலகு பலகையிட்டான் காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான் என்று பொருளுக்கேற்க மாறுக. பொருளாவது : தாளவகை முழுவதும் நவநாடக வீதி முழுவதும் அறிந்து, எந்த வேளையினும் நடம் புரியாது பெருகி மிக்க நகரமாகிய மதுரையிலே மந்தரம் மத்திமை தாரகமென்னும் அறுதியையுடைய பண்கள் இராகங்கள் யாவையுங் கரை கண்டு அந்தப் பண்களுக்குள்ள தாளவகையையும் நூற்றெட்டுத் தாண்டவத்தையும் நிலையிட்டதுமன்றிப் பலபேதமாகிய பண்பு முழுவதுங் குணங்கள் யாவையினும் அதிகமான நண்பாய வகையாவும் நிறைந்த அடியாராகிய யாழ்ப்பாண நாயனார் ஏறியெழுந்தருளியிருந்து தம்மைப்பாடி யாழ்வாசிக்க யுகந்தோறும் யுகந்தோறும் வித்வமுத்திரையா லுயர்ந்தோர் பலரும் ஏறியிருக்க இடங்கொடுத்து விளங்கப் பட்டுவருஞ் சங்கப்பலகை யாசனம் போட்டருளினவன் ; அன்றியிலும் பொற்பலகை போட்டருளினா னெனவுமாம்; எந்தெந்தத் தந்திரங்களினாலுங் காண்போமென் பவர்க்குங் காணப்படாதவன். தனதருட் காட்சியார்க்குப் பிரத்தியக்ஷமானவன்.
103-107. சேணிற் செப்பக்கேள் :
(உரை) அதுவன்றியிலும் அந்திவானில் விளங்குஞ் சிவப்புப் போன்ற திருமேனியனாயினும் பூமிமுதல் ஆகாயமளவாக வளர்ந்த விஷ்ணுவுக்கு முயர்ந்தவன். அதுவுமன்றிச் சர்வ அண்டங்களிலும் சர்வ புவனங்களிலும் எண்ணில் உயிர்கள்மாட்டும் ஒழியாது அழகுபெற நிரம்பியவன். தாபரம் ஊர்வன தேவர்கள் நீர்வாழ்வன பறப்பன நாற்காலுடையன மானுடர் ஆகிய எழுவகை ஜனனத்துள் எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி வகையினுங் காற்றாடி, சுழற்காற்று, வட்டஞ் சுற்றும் வண்டு, கையிற் பிடித்து வீசும் உற்கை இவையின் வேகம்போல மாறிமாறிப் பிறக்கும் வேகச்சுற்றைத் தனது கிருபையினாலே போக்கிச் சலிப்பற நிறுத்தினான். விபூதி தூளனவொளி மிளிருந் திருமேனியன். நிர்மலமானவன். அனாதியே மலமில்லாதவன். தனது ஞானத்தை எனக்கு நிலையாகத் தந்த முன்னோன். சர்வ பிராணிகளும் அறியும் பகுதியாய் கீர்த்திக்குத் தான் காரணனாயுள்ளவன். அஞ்ஞானிகளாயுள்ள ஆன்மாக்களுக் கெல்லாந் தான் உண்மை ஞானமாகச் சூன்யமாயும், தன்னை முதலென்றறிந்து வழிபட்ட ஆன்மாக்க ளுளத்திற் சத்தியமாகத் தோன்றப்பட்டவன். இப்படிப்பட்டவனாகிலுஞ் சீறி யுத்தத்திலே தாருகாவனத்து இருடிகள் கோபித்துச் சங்கரிக்க விட்ட பரசைத் தானே தனக்காயுதமாகச் சதாகாலமுந் தரிக்கப்பட்டவன். என்னுடைய ஸ்வாமி. அவன் பக்கலில் நீ போமிடத்து நடுவே நடுவே இடையூறுகளுண்டு. அவைகளை உனக்கு உளவாகச் சொல்லுகிறேன். அந்தக்கரணங்களின் பகுதியிற் படும் எனதுள்ளமாகிய சத்தியே, சொல்லக் கேட்பாயாக.
107-110. நித்தலுமே உறாதே :
(உரை) நாடோறும் நாடோறும் அநித்தியமாய்க் குற்றமான சரீரத்தை நித்தியமாகக் குணமெனக்கருதி நலமாகச் சந்தனகளப கஸ்தூரிகளால் திமிர்ந்து கொண்டு சுகந்தவகை மாலைகளையும் முடித்து நல்ல சாலியன்னத்துடனே பால் முதலிய வஸ்துக்கள் கூடின அறுசுவை யமைந்த ஐவகை யுண்டியும் புசித்து மேலாய பருத்திவர்க்கம் பட்டு பீதாம்பர முதலிய தரித்துப் பற்பல வாசனையுடனே கூடி நெய்த்திருண்ட குழலினையுடைய மாதர்களுடனே சரசலீலை பிரியாத பற்றாகப் போதிக்கப்பட்டு அவ்விடத்தினுண்டாம் இணைவிழைச்சாய சங்கமச் சிற்றின்ப சமுத்திரத்துக்குள் அழுந்தி விடாத பண்பு பெருக அனுபவிப்பதே பிரத்தியக்ஷமுத்தி; இதுவேயல்லது இந்தச் சரீரத்திலே நித்யனாக ஓர் ஆன்மா உண்டென்றும், பிரத்தியக்ஷமான ராசாவேயல்லது கரணரகிதமாகக் காணும் ஒரு சிவன் உண்டென்றும் அந்தச் சிவயோகத்தை அந்த ஆன்மா அசரீரியாய் இரண்டற்றுப் புசிப்பனென்றும் வேதாகமங்களிற் சொல்லுகிறதெல்லாம் அல்லவென்று கொள்ளிக்கு நீக்கங் கொடாத மைபோன்று அறியாமையே குணமாய்ப் பசாசுகள்போலக் குற்றமே இயல்பாய்ச் செய்து திரியுஞ் சாருவாகனுடைய வெறும் அசத்தாய காட்சியிற் பட்டு நின்றுவிடாதே.வட்டமென மாறில் பாடபேதம். 110-111. பலகாலும் நண்ணாதே :
(உரை) எந்த வேளையினும் எந்தக் காலத்தினும் எந்த அவத்தை யினும் மறவாது தன்னையும் பரத்தையும் பிறித்தறிந்து பெறுவானும் பேறுமாக இரண்டற்றிருக்கும் ஜீவன் முத்தரைப்போலக் கருவி நீக்கத்து ஆன்மாவைத் தரிசித்துத் தானே அகம்பிரமமென்னும் மாயாவாதிகள் பக்கல் போய்விடாதே.
111-113. ஊன் தனக்கு விழாதே :
(உரை) உடம்பு வளர்க்கும் பொருட்டாக நாற்காலுடையவை பறவைகள் சில ஜந்து முதலியவைகளைத் தன்பொருட்டாக ஒருவன் வதைத்துப் புசிப்பதால் தனக்குப் பாவ மில்லையென்று சிருஷ்டித்துக் கொண்டு தன்வயத்தான ஆன்மகோடிகளுக்கும் உபதேசமாகச் செய்ததுமன்றித் தெய்வமென்பது அனாதியாகப் புண்ணியமே தெய்வமாக உள்ளதென்று நூலுடனும் நிச்சயித்து, அந்தப் புண்ணியப் பொருளைப் பெறுவதற்குக் காரணம் வெற்றியாக நட்புபகை யிரண்டினிடத்தும் விருப்பு வெறுப்பற்று ஒத்திருப்பதாதலால் அந்தப் புண்ணியம் பெறலாம் அதுவே நிஜமான முத்தியென்னும் பௌத்தர் பாவத்துக் கேதுவான ஈனவார்த்தையின் வகையிலே பற்றாய் மயக்குற்றுத் தடுமாற்றப்பட்டு நின்று விடாதே.
113-115. நிறைமேவி மருவாதே :
(உரை) பக்கஞ்சார் துலைநாப் போன்று எவ்வுயிர்க்கும் ஒத்துத் துக்கஞ்செயாது நாடோறும் நடப்பாரைப் போலப் புறந்தூய்மையும் நீராற் றூய்மை செய்யாது உள்ளம்போல உடம்பும் அழுக்கடைந்து புழுதி படைத்துத் தலைமுதலாகத் தன் சரீரத்துப் பொருந்திய மயிரெல்லாந் தனது உயிர் வருத்தமுறப் பிடுங்கி உயிர்க்கொலையைத் தவிர்ந்து உடையை நீத்துச் சீவரந் தாங்கித் தாழ்வாகிய பிறப்புக் கேது வாய உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞானமென்னும் பஞ்சகந்தங் கெட இருப்பது மோக்ஷமென்னும் சூழ்ச்சியினைத் தவிராது முன்னிலும் மிகவுடையனாய சமணனாகுமவன் பிரயோசனத்திலே சென்று விடாதே.
115-116. செஞ்சொல்புனை மேவாதே :
(உரை) வேறு சந்தேகப்படுவதற் கிடமில்லாமல் விதிவாக்யமே சத்யமாக எவர்க்கும் பொருந்திய பிரமாணமாய்ச் சர்வ நூலுக்கும் பிரதானமாகிக் கடவுட்டன்மையுடைய வேதத்தை நன்றாக அத்யயனம் பண்ணியும் அதன் தாற்பரியத்தை முன்னொடுபின் சீர்தூக்கி மறவாது பார்த்துப் பொருள் நிச்சயிக்கமாட்டாது கருமமே துணையென்னும் பாட்டப்பிரபாகராதி வைதிகர் சொல்லும் போதகத்தைச் சத்தியமென்று புத்திபண்ணி அவர்கள் பக்கலிற் போய்விடாதே.
116-117. ஆதியின்மேல் செல்லாதே :
(உரை) சர்வகடவுளர்க்குஞ் சர்வாதிகாரத்துக்கும் முதலாகிய சிவன் தனது காருண்யமேனியிற் சாத்தியருளும் பெருமையுடைய விபூதியினையும் மஹாலிங்கங்களாய் ஸ்வயம்பு மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் அழகிய கோயில்களையும் அன்புடனே தரித்தலும் வணங்கலுமின்றி அவ்விரண்டினுந் துவேஷமான மனதினையுடைய பிரத்தியக்ஷமான அறிவினுக்கு அவரே நீசர் அவள்களண்டையிலே போய்விடாதே.
117-118. நற்றவஞ்சேர் முயங்காதே :
(உரை) ‘மாலற நேய மலிந்தவர் வேடமும்’ (சிவஞானபோதம், 12) என்றும், ‘அந்தரி யாகந்தன்னை முத்திசாதனம்’ (சித்தியார், 9.10) என்றும், ‘அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து’ (சித்தியார், 8.30) என்றும், ‘ஆசா னருளா லடிசேர் ஞானம்’ (சித்தியார் 12.6) என்றும், இத்தன்மையுடைய மஹத்துக்களுடன் உசாவியிருத்தலால் ஆன்ம லாபமும் உயிருக்குறுதியுந் தானே விளையும் ; அந்த வழியில் நில்லாமல் என்போலிகள் போன்ற பாஷண்டியான மூடருடன் கூடினால் நல்லறிவு உனக்கு வரமாட்டாது, அஃதெப்படி யென்றால், ஆன்ம சத்தி கூடினதுடனே கூடி நிற்குந் தன்மை அதன் சுபாவ மாகையால், வீணாய் அலக்கழிந்து திரியாதே.
118-119. நீட பாராதே :
(உரை) சகல ஆன்மாக்களையும் சிருஷ்டி திதி தேவதைகளையும் தேவேந்திரன் முதலிய தேவர்களையும் சரம் அசரங்களையும் சர்வமுஞ் சிருஷ்டி திதி சங்காரப்படுத்திச் சகல ஆன்மாக்களுக்கும் ஜனன மரண இளைப்பொழித்துத் தமது திருவடி நீழலில் இருக்கும்படி செய்யுங் கர்த்தவ்யத்தைப் பழித்துச் சொல்லப்பட்ட பேரை நீ பாராதே ; ‘வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி’ (சித்தியார், 2.29) என்றார் மேலோர். அன்றியும், ‘ஈசனை யன்றித் தேவர் கணத்திடை யாரேயோ’ என்றார் மேலோர்.
119-120. விழித்தருளைத் லாய்நின்றோன் :
(உரை) சகலமுந் தனது காருண்யமாய் விளங்காநின்ற பொற் பிரகாசமாய்ப் பொருந்தியிராநின்ற திருவடியிற் பொருந்தும்படி முன்னமே சத்யோநிருவாண தீடிக்ஷக்கிரமத்திலே ஆறத்துவா சோதித்துக் கலாசோதனை பண்ணும்போது அடியேனுடைய பொல்லாத கருக்குழிக்கும்பியில் குருஸ்வாமி நாடீசந்தான வழியாய் உள்புக்கு அவ்விடத்து ஞானசூரியனாகி எழுந்தருளியிருந்து அத்துவாவிற் கட்டுப்பட்டிருந்த சஞ்சித பிராரத்த கன்மத்தைத் தனது ஞானாக் கினியினாலே பசையற அருள்கூர்ந்து திருநோக்கம்பாலித்து அருட்சத்தியை நிலைக்கும்படி நிறுத்தி என்னையுந் தன்னையுங் காட்டி அடிமை படைக்கவும் மலங்களைப் போக்கவும் நாம் வயிரியென்றும் வீரகண்டாமணியையும் துவசக்கொடியையுங் கட்டியிருக்கிறோ மென்றும் ஆன்மாவைத் தனது திருவடிநீழலின்கீழ் இரண்டறப் புணர்ந்து பொருந்தும்படி செய்தான்.‘முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன்’ (சித்தியார். 8.16) என்றும், ‘ஆரியனா மாசான்வந் தருளாற் றோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றுந் தோன்றத், தூரியனாஞ் சிவன்தோன்றுந் தானுந் தோன்றும்’ (சித்தியார், 8.28) என்றார் மேலோர். அன்றியும், பரம்பரையாகையால் குருகொள்லீலை யுபரிசுரதலீலை சையோகஞ் சம்பிரதாய மென்றார். அன்றியும், ‘அன்னத்தின் மேலேறி யாடு மணிமயில்போ, லென்னத்த னென்னையு மாட்கொண்டான்’ என்றார் மேலோர். அன்றியும், அந்த அந்தரங்கத்தில் அடியேனுக்குத் சிந்தாமணி போலுஞ் சிரோரத்னம் போலும் உள்ளங்கை நெல்லிக்கனி போலும் கருவூலமாகப் போதனென்னும் ஒரு பிள்ளையைக் கட்டளையிட்டாராகையால் அடிமைக்குங் குருவுக்குஞ் சம்பந்த மென்பதற்கு ஓர் உத்தரம் வாய்திறந்து சொல்ல வேண்டுவதில்லை. அன்றியும் முனிவனென்னுங் கருத்து குரு அடியேனை அடிமை படைக்க எழுந்தருளி உள்ளபடி கட்டுப்பட்டிருந்த வினைகளை ஞானாக்கினியினாலே பசையற எறித்த தனாலென்றறிக. ‘கட்டறுத்தெனை யாண்டு’ (திருவாசகம், திருச்சதகம், 49) கொண்டானென்றார் மேலோர். ‘பூதவிருள் போமடியிற் பொருந்தமலம் போ’ மென்றார் மேலோர். அண்டங்கடந் தப்பாலாய் நின்றானென்பதற்கு அச்சமயிகள் அவரவர் கொண்ட கோட்பாட்டுக் கேற்ற பொருளாய் அவைகளுக்கும் வேறாய்க் குருகாட்டுங் குறியுடைத்தாய் வேதாகமங்க ளளவைப் பிரமாணங்களின் அளப்பரி தாய்க் குறியிறந்தறியும் அறிவினுள் அறிவாய் அப்பாலுக் கப்பாலாய் இருந்தான் குரு.
120-121. எந்தைபிரான் ஓலக்கம் :
(உரை) ஏகாந்தமாய்க் குருவிருந்த இடம் மனவாக்குக் காயங்களினாலே அளவு பிரமாணஞ் சொல்லி முடியாது. அந்த இடம், ‘அத்தன் பரதத்துவன்’ என்னுந் திருவிருத்தத்திற் கண்டுகொள்க. அன்றியும், ‘ஓங்கார மேநற் றிருவாசி’ (உண்மை விளக்கம், 35) என்றும், ‘உய்யவென் னுள்ளத்தி னோங்காரமாய்’ (திருவாசகம், சிவபுராணம், 33) என்றுமிருப்பது கண்டுகொள்க. குரு இருந்தகோலம் ‘ஓமெனு மோங்காரத்து’ ளென்றும், ‘ஓங்காரத்துட் பொருள்’ (திருவாசகம், அச்சோ. 7) என்றும், ‘துரிய மிறந்திடம்’ என்றும், ‘அத்துவிதப் பொரு’ ளென்றும், ‘முப்பாழும் பா’ ழென்றும், ‘அம்மானிருந்தது’ மென்றும், ‘தான்றான் றம்பிரா’ னென்றும், ‘ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று, மீதானத்தே’ (திருவுந்தியார், 8) யென்றும், ‘குரவுவா ரளகி கணவகே ளொன்றுக்கொன்று குழிமார’ என்றும், ‘நின்றவை சாக்கிரத்துரிய’ மென்றும், ‘முற்றார்ந்த வீதி’ யென்றும், ‘உடையா ளுன்ற னடுவிருக்கும் முடியா முதலே’ (திருவாசகம், கோயில் மூத்த திருப்பதிகம், 1) யென்றும், பின்னும் ‘அளவிறந்த பொரு’ ளென்றும் மேலோர் சொல்லுவார்கள். ‘குருஇருந்த கோலங் கூறரி’ தென்றார் மேலோர். அந்த ரகசியமான இடத்தில் ;
121. எய்திஅடி போற்றியென :
(உரை) தங்கள் நாயகன் இருந்த இடத்துக்குச் செல்லுகிறதற்குத் தங்குதடை யிடையில்லையென்று நீ ஆன்மசத்தி வேகமாய்ப் போகாதே, கைகட்டி வாய்புதைத்து முந்தானை யொதுக்கிப் பையப் பையச்சென்று இடது பாகத்தில் ஓவியம்போல நில்லு, அந்த அவசரத்திற் சிற்பரன் திரும்பி நிரம்பிய கிருபையுடன் அருள்நோக்கம் பாலிக்க அந்தத் திரும்பின முகத்திற் சிற்சத்தி நிற்பள், அந்த அவதரத்தில் உள்ளும் புறம்பும் ஒருதன்மையாக அட்டாங்க பஞ்சாங்க திரிவிதாங்க த்விதாங்க ஏகாங்கமாக உன் உடையவிழ உடலவிழ உரையவிழ உயிரவிழ உணர்வவிழ உளமவிழ இந்த ஜடகாரியமும் அவிழும்படியாகத் தண்டனிட்டு, ‘என் கருத்து முடியும் வண்ணமுன்னின்று’ (திருவாசகம், கோயில் மூத்த திருப்பதிகம், 1) என்றும், ‘ஏகமாய் நின்றே யிணையடிகள் ... உள்குவா ருள்கிற்றை, யுள்ளத்தாற் காணாவோ வுற்று’ (சிவஞானபோதம், 11.2) என்றும், ‘இரும்பைக் காந்தம் வலித்தாற் போல்’ (சித்தியார், 11.12) என்றும் திருவுள்ளத் துதிக்கும் அந்த அவதரத்தில் எக்காலமும் நிறைகுறைவில்லாமல் நீ இப்படியே வாழ்க வாழ்க அளவிறந்த அடிமைகளுக்கும் இனிமேலுந் திருவடிக்காளாய் வருகிற அடியார்களுக்கும் அடிமையாக்கி என்னைப் பாதுகாத்து ரக்ஷிக்க வேண்டுமென்று “இமைப்பொழுது மென்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க”, (திருவாசகம், சிவபுராணம் 2) என்றார் மேலோர். திரிகரண சுத்தியாய்ச் சிரசின் பேரிற் கைகூப்பி அபிநயமாய் அடியேன் படும் இடர்களெல்லாம் விண்ணப்பஞ்செய.
121-122. ஆர்த்தகரி வீழ்வரோ :
(உரை) தாருகாவனத்து ருஷிகள் மஹாகோபத்துடன் அபிசார ஹோமஞ் செய்து அந்த ஹோமத்தில் வரப்பட்ட பெருமை பொருந்திய கன்னமதங் கபோலமதங் கோசமதம் மூன்றும் வெள்ளமாய்ப் பெருக வெகு ஆங்காரத்துடன் வருகின்ற வெறுமலையென்னும் யானையைக் கங்காள வேடமாய் வந்த ஸ்வாமியை விழுங்கும்படி யனுப்ப, அப்படியே யானை ஸ்வாமியை விழுங்க, அதுகண்டு உமையவள் அஞ்சி விநாயகனை முன் நடத்திக் கந்தனை யிடுக்கிக் கொண்டு த்வஜஸ்தம்ப மட்டும் போய்த் திரும்பிப் பார்க்க, ஸ்வாமி மான் மழு சூல கபாலங் கடகங் கேடயம் வரதம் அபயமுடைய அஷ்டபாணியாய் வீரட்டேசுர மூர்த்தமாய் யானை வீறிட்டலறும்படி தலைகீழாக மிதித்து அட்டகாசஞ்செய்து யானையைக் கிழித்துப் போர்வையாகத் தரித்துக் கொண்டு குருஸ்வாமி ஆனந்த நிருத்தஞ் செய்ததைக் கண்டு, உமையவள் ஸ்வாமி பக்கத்தில் வந்து திருவாய் மலர்ந்தருளினாள். ஆதலால் இரண்டாயிரந் தந்த பந்தியையுடைய ஐராவதத்தின்மேல் எழுந்தருளிப் பவனிவருகிற ஸ்வாமியைக் கண்டு தேவர்கள் பொன்மாரி புஷ்பமாரி பொழியத் தேவதுந்துபி முழங்க மூன்று லோகத்தாரும் அடியார்களுந் தோத்திரஞ் செய்து தொழுது பேரானந்தப் பெருவெள்ளத் தழுந்தித் தேக்கிட்டுப் பரவசராகி யிருந்தார்கள். தென்றல் தேராகவும், இரவு யானையாகவும், தத்தை குதிரையாகவும், பெண்கள் பதாதியாகவும், சந்திரன் குடையாகவும், சமுத்திரம் பேரியாகவும், ரதி தேவியாகவும், பூஞ்சோலை பாசறையாகவும், கரும்பு வில்லாகவும், வண்டு நாணாகவும், அரவிந்தம் சூதம் அசோகு முல்லை நீலோற்பலம் பாணமாகவும், இப்படி வெற்றி பொருந்தி மூன்று லோகத்தாரையுந் தனது வசப்படுத்த வல்லமையுடைய மன்மதன் மாய்கையில் வீழார்கள் உம்முடைய பவனி கண்ட பேர். ‘யானை யிரதம் பரியாளவை யில்லை, தானு மனங்கன் றனுக்கரும்பு தேனார், மலரம்பால் வென்று வடுப்படுத்தான் மாரன், உலகங்கள் மூன்று மொருங்கு’ என்றார் மேலோர். இப்படி நொய்யவனாகையால் ‘மதனம்புக் கிளையா’ ரென்றார் மேலோர்.
122-123. நின்றிடத்து புகுவரோ :
(உரை) பிரமவிஷ்ணுக்கள் தேவேந்திரன் முதலாகியார் செல்வமும் அதோமுக அடுக்குகளி லிருக்கப்பட்ட பேர்கள் செல்வமும் பெரிதென்று மனவாக்கு காயத்திலும் எண்ணுவதில்லை. ‘செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே’ (சம்பந்தர் 1.80.5) என்றார் மேலோர். அப்படி யெண்ணாமல் அவர்கள் செல்வத்துக் கவாவாகி நரக வேதனைப் பட்டுழலார்கள் உம்முடைய திருவடி கண்டபேர்.
123-124. பல்லோரும் திகைப்பரோ :
(உரை) சகல வேதாகம புராண கலைஞானம் சமைவாக்கு மற்றுமுள்ள சாத்திரங்கள் இவைகளனைத்தும் சைவ சித்தாந்த சமயமே சமயம் பரமசிவமே அதற்குக் காருண்யமான பொருளென்று சொல்லி முறையிடப் பதிபசு பாசத்தினுண்மையை விளங்கச் சொல்லும் மெய்கண்ட சந்தானமே சந்தானம் அதைப் பெரிதென் றெண்ணாமல் மனம் பலகாலுந் திகைத்துத் திரியார்கள். ‘தலைப்படு சால்பினுக்குந் தளரார்’ (திருக்கோவையார், 25) என்றார் மேலோர். அன்றியும் புறச்சமயிகள் மார்க்கத்திற் செல்லார்கள். ‘வாழ்வெனு மையல்விட்டு ... போழிள மதியினானைப் போற்றுவா ரருள்பெற் றாரே’ (சித்தியார், 2.91) என்றார் மேலோர்.
124-125. முத்தம் வருவரோ :
(உரை) பேதைமுதற் பேரிளம் பெண்ணந்தஞ் சிறியன தந்த பந்திகளைக் கண்டு முல்லையரும்பும் மாதுளம் பழவித்தும் இகலி வெட்கி நாணும், பெண்கள் பாதாதி கேசமளவுங் கரும்புரசனை என்று அவர்களின்பங் கிஞ்சித இன்பம் அதைப் பெரிதென்றெண்ணி மயங்கித் திரியார்கள்.‘இறைவன் கழலேத்து மின்ப மின்பமே’ (சம்பந்தர் 1.80.4) என்றார் மேலோர்.
125-126. இருபொழுதும் குறிப்பரோ :
(உரை) இரவும் பகலும் இருபத்தேழு நக்ஷத்திரமும் நவக்கிரகமுங் கோள்களினாலே வரப்பட்ட நலந்தீங்குகளென்று குறியார்.
126-127. வேளை தையல் :
(உரை) முன்னஞ் சொல்லப்பட்ட வெற்றியையுடைய மன்மதனை யெரித்த பாலநேத்திரத்தினுடைய உண்மையை இவ்வளவென்று சொல்லி முடியாது. அது என்னெனில், ‘தூயநேத் திரத்தினாலே சுட சுடரொளி கொடுத்த பண்பாற், றேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச’ தென்றார் (சித்தி. பர. 72) மேலோர். அந்த இடம் நிறைவு குறைவில்லாத இடம். அஃதெப்படியென்றால், அதனுடைய நுட்பம் ‘விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழ, லுண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்’ (அப்பர் 4.11.3) என்றார் மேலோர். சகல ஆன்மாக்களையும் இருவினையொப்பு மலபரிபாகம் வரும்படி எம்முடைய குரு கருணை கூர்ந்துவிட நேயத்தழுத்த லென்றும் பேரின்பவெள்ளத்து இன்ப மிருக்குமிடமிதுவென்று சுட்டிக் காண்பிக்கு மிடமாய்ப் ‘பிறவி வழக்கறுத் தானந்தவாரியி னேயத்தழுத்த’ லென்றார் மேலோர். அந்த இடம் தான் பெற வேணுமென்று தன் மதி மறந்து பேரானந்தப் பெருவெள்ளத்தின்பம் என்று கிடைக்குமோவென்று சகோர பக்ஷி சந்திர கிரணத்தைப் புசிக்கக் காத்திருந்தது போலும், தலையீற்றுக் கன்றானது கறவை எப்போது வருமென்று அமுதம் புசிக்கக் காத்திருந்தது போலும், பேதைமுதற் பேரிளம்பெண் பருவமட்டும் இந்தத் தையலாகிய பெண் முன்னங் குருபரன் செய்த சகாயத்தை மறந்தவ ளாகையாற் பார்த்துப் பார்த்து ஏங்கி யேங்கியிடருற்றாள்; அன்றியும், முன்னந் தீடிக்ஷயென்னும் இயற்கைப் பெயரையுடைய சிவசத்தியால் என்னை அநாதியிற் பசுத்துவத்தினால் அஞ்ஞானியா யிருக்கின்ற ஜனன மரணத்துக் கேதுவாகிய மலமாயா கன்மங்களோடு பொருந்தாம லிருக்க ஷடத்துவா சோதனைசெய் தெடுத்துச் சமனாந்தம் பாசக்கூட்டங் கூடாதவகை சின்மாத்திரஞ் சுத்தகேவலமாய் சேட்டிக்கப் பண்ணிய குருவுக்குந் தெரியும்படி சொல்.
127-128. வருத்தமெலாம் தாழ்ந்திறைஞ்சி :
(உரை) அடியேன்படுந் துயரமெல்லாந் தீர்க்கவேணுமென்று நீ குருபரனுக்குத் தெரியும்படி சொல்லிப் பொற்பிரகாசம் பொருந்தி ஆயிரத்தெட் டிதழையுடைய செங்கமலப் பூவினுஞ் சிறந்த திருத்தாளைத் தரவேணுமென்று சிரசின்பேரிற் கைகூப்பி மும்முறையே தண்டனிட்டுத் தொழுது தோத்திரஞ் செய்து மயிர்க்கூச் செறிய அந்தத் திருவடியினுடைய பெருமையின் நுட்பமும் யாவராலும் மட்டிட்டுச் சொல்லி முடியாதென்று மேலோர் சொல்லுவார்கள். என்னவெனில், ‘ஏகமாய் நின்றே யிணையடிகள்’ (சிவஞானபோதம், 11.2) என்றும், ‘மெய்ச்சுடருக்கெல்லா மொளிவந்த பூங்கழ’ லென்றும் ‘மின்னே ரனைய பூங்கழல்கள்’ (திருவாசகம், ஆனந்தமாலை, 1) என்றும், ‘போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்’ (திருவெம்பாவை, 20) என்றும் ஆதியெழு பருவமு மென்றும், ‘விரவியெனை யெடுத்தாண்ட செய்யதிருவடி’ யென்றும், ‘ஆனந்த வாரியி லான்மாவைத் தானழுத்தல், தானெந்தை யார்பரதந் தான்’ (உண்மைவிளக்கம், 37) என்றும், ‘உள்ளும் புறம்பு மொழிவின்றி நின்ற, வள்ளன்மை காட்டு மலரடி’ (இருபாவிருபது, 20) யென்றும், ‘ஆட வெடுத்திட்ட பாதமன் றோநமை யாட்கொண்டதே’ (அப்பர் 1.81.10) என்றும் இப்படிச் சொல்லப்பட்ட திருவடியைத் தரவேணுமென்று திருவடியிலே தாழ்ந்து தண்டம் பண்ணிக் கேள். ‘வேண்டுவார் வேண்டியது மெய் தருகுவா’ னென்றார் மேலோர்.
128-129. ஏராரும் இனி :
(உரை) அழகு பொருந்திய அருட்சத்தியாகிய சிவகந்தம் பரிமளிக்கவும் ஆன்மவர்க்கமாகிய மதுகரங்கள் தேன்களை யுண்டு தேக்கிட்டுச் சிவோகம் பாவிக்கப்பட்டவுமான கொன்றை மாலையை வாங்கும் படியாய்ப் புகழ்ந்து, இன்பத்தைச் செய்யும் நெஞ்சமே, மீட்டும் என்னுடன் பொருந்தும்படி இவ்விடத்து வந்து இனிச் சேருவாயாக.புகழ்வது என்னவென்றால், ‘வேண்டுக வேண்டுக மறவாமை’ யென்றும், ‘இந்நிலை யதனி னேழையேற் கிரங்கி’ (இருபாவிருபது, 12), ‘நின்னது கருணை சொல்லளவின்று’ (யூ14) என்றும், ‘உள்குவா ருள்கிற்றை, யுள்ளத்தாற் காணானோ வுற்று’ (சிவஞான போதம் 11.2) என்றும், ‘பெண்டான் சமைந்து பெரியவ ளாகுநாட கொண்டா னறிவான் குணாகுணத்தை’ யென்றும், ‘எழுதாத புத்தகத் தேட்டின் பயனைப் ... பிறவாத வண்டு மணமுண்ட வாறே’ (திருமந்திரம், 2885) யென்றும், ‘பேரா தருளுதல் பெரியோர் கடனே’ (இருபாவிருபது, 16) யென்றும், ‘ஈய வேண்டுமென் னும்விதி யின்றாம்’ (யூ14) என்றும், ‘ஒன்றா காம லிரண்டாகாம, லொன்று மிரண்டு மின்றா காமல்’ (யூ20) என்றும், ‘மாலையா மாற்ற மதி’ (யூ5) என்றும், ‘உரையும் பொருளு முடலு முயிரும் ; விரையு மலரும் போல் விம்மிப் புரையின்றி’ (கைலைபாதி காளத்திபாதி யந்தாதி, 27) யென்றும், ‘மாலை வருகு’ தென்றும், ‘மாலாகினால் கொன்றை மாலைவரக் கண்டு மகிழ்ந்தா’ னென்றும், ‘தான்றான் றம்பிரா’ னென்றும் இங்ஙனஞ் சொல்லி வந்த காரணகாரியங்களெல்லாம் அடியேன் உனக்குச் சொன்ன காரணம் மறந்து மயங்கியிருக்கப் போகிறாயென்று உனக்குத் திடம்வரச் சொன்னது. அடியேன் செய்த பாக்கியம், குருபரனை நீ கண்டு, அவருடைய ‘திருவடியைக் கண்ட பேருக்குத் தீங்கில்லை’ யென்றார் மேலோர். ‘உன் கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலம்’ (திருவெம்பாவை, 19) ‘வெஞ்சே லனைய கண்ணார்தம் ...... பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால், அஞ்சே லென்ன ஆசைப்பட்டேன் கண்டா யம்மானே’ (திருவாசகம், ஆசைப்பத்து, 10) ‘அன்றே யென்ற னாவியுமுடலு முடைமை யெல்லாமுங், குன்றே யனையா யென்னை யாட் கொண்ட போதே கொண்டிலையோ, இன்றோ ரிடையூ றெமக் குண்டோ வெண்டோள் முக்க ணெம்மானே, நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே’ (திருவாசகம், குழைத்த பத்து, 7), ‘கூசி மொழிந் தருண்ஞானக் குறியினின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே’ (சித்தியார், 12.2), ‘மாதாளும் பாகத் தெந்தை, யாவர்கோ னென்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோ மியாது மஞ்சோ, மேவினோ மவனடியா ரடியா ரோடு மேன் மேலுங் குடைந்தாடி யாடு வோமே’ (திருவாசகம், திருச்சதகம், 30), ‘செங்கமலத் தாளிணைகள் சேரலொட்டாத் திரிமலங்க ளறுத்தீச னேசரோடுஞ் செறிந்திட், டங்கவர்தந் திருவேட மாலயங்க ளெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி யாடிப்பாடி, யெங்குமியா மொருவர்க்கு மெளியோ மல்லோ மியாவர்க்கு மேலானோ மென்றிறுமாப் பெய்தித், திங்கண்முடி யாரடியா ரடியோ மென்று’ (சித்தியார், 12.1) இப்படியெல்லாம் மேலோர் திருவுளம் பற்றினார்கள். அன்றியும், ‘அருளி னருளே யருளாபே ரின்பப், பொருளின் பொருளாம் பொருளேகுருவாம், மருதத் தலைவர் கொன்றை மாலைதனை நெஞ்சே, தருகவெனக் கின்று தகும்’, ‘வாராது வாராது வள்ளிதழேய் பூங்கொன்றைத், தாரார் புயமருதச் சம்பந்தன் சீரார்ந்தே, எங்கிலுந் தான்சடசித் தாயிருந் தான்நெஞ்சே, இங்கினியு முண்டோ விடர்’ என்பன கண்டுகொள்க.

குறிப்புரை :

சிற்பி