உண்மைநெறிவிளக்கம்


பண் :

பாடல் எண் : 1

மண்முதற் சிவமதீறாம் வடிவுகாண் பதுவே ரூபம்
மண்முதற் சிவமதீறாம் மலம்சடம் என்றல் காட்சி
மண்முதற் சிவமதீறாம் வகைதனில் தான்நி லாது
கண்ணுத லருளால் நீங்கல் சுத்தியாய்க் கருது மன்றே.

பொழிப்புரை :

மண்முதற் ... ரூபம் பிருதிவி தத்துவ முதலாகச் சிவதத்துவமீறாக வரும் முப்பத்தாறு தத்துவத்தின் வடிவை இம்முறையிலே காண்பதுவே தத்துவ ரூபம் ; மண்முதற் ... காட்சி இப்படி வந்த தத்துவம் முப்பத்தாறும் ஆன்மா கூடியறியினல்லாது தானாக அறியாதாகையால் சடமென்று காண்பதுவே தத்துவ தரிசனம் ; மண்முதற் ... மன்றே சிவன் ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளி வந்து மண் முதலாகச் சிவமீறாக வரும் பூதம் பொறி அந்தக்கரணம் கலாதி சுத்ததத்துவமென்று அஞ்சுவகையாம் முப்பத்தாறு தத்துவமும் அசத்தாய்ச் சடமா யழிந்து போயிறதென் றறிவிப்பதா லொக்கு மெனப் பொருந்தி, ஆன்மா பூதமல்லவென்று பழித்தும் பொறி யல்லவென்று உணர்ந்தும் அந்தக் கரணமல்லவென்று நீக்கியுங் கலாதி ஞானமல்லவென்று நிராகரணம் பண்ணியுஞ் சுத்ததத்துவ மல்லவென்று தூடணஞ் செய்தும், இவையிற்றின் நில்லாது நீங்கித் தத்துவாதீதமாய் இந்தத் தத்துவத்தின் மீண்டுங் கூடாமல் விஞ்ஞானகலத்துவம் பிறந்து சகல தரிசனமாய் நிற்றல் தத்துவ சுத்தியாம்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 2

பாயிருள் நிங்கி ஞானந்
தனைக்காண்டல் ஆன்ம ரூபம்
நீயும்நின் செயலொன் றின்றி
நிற்றலே தெரிச னந்தான்
போய்இவன் தன்மை கெட்டுப்
பொருளிற்போய் அங்குத் தோன்றா
தாய்விடில் ஆன்ம சுத்தி
அருள்நூலின் விதித்த வாறே.

பொழிப்புரை :

பாயிருள் ... ரூபம் பரந்த இருளாகிய கேவலம் அதீதமாய் அவ்விடத்துண்டாகிய ஞானத்தைத் தானென்று காணுதல் ஆன்ம ரூபமாம் ; நீயும் ... தான் நீ கண்ட ஞானத்துக்கே செயலெனக் கண்டு உனது செயல் சற்றேனுமின்றி நீயும் அந்த ஞானமுமாய் நிற்றல் ஆன்ம தரிசனமாம் ; போய் ... வாறே அந்தச் சிவஞானத்தோடு ஒத்து நில்லாது பரையிற் போய் இவன் தன்மையாகிய போதப் பதைப்புக் கெட்டு அவன் தன்மையாய் அதில் அழுந்திச் சிவமெனும் பேறுபெற்றோமென்னும் பரமானந்தப் பொருளிற் போய்த் தரிசித்து அவ்விடத்துத் தான் தோன்றாது அந்தப் பரமானந்தப் பொருளோடு கூடி அதுவாய் விடில் ஆன்ம சுத்தியாமென்று சிவாகமங்களில் விதித்தவாறு இவ்வாறாம்.
‘பாயிருள் நீங்கி’ என்றது தத்துவங்களெல்லாம் நீங்க வருந் தன்னுண்மையாங் கேவலத்தைச் செம்பிற் களிம்பு போல் ஒன்றாய் நீரில் நிழற்போல் தோன்றாது இன்றளவும் நின்றது இதுவோவென்று தரிசித்து அதீதமாவதை. ‘நீயும்நின் செயலொன் றின்றிநிற்றல்’ என்றது ஞானசொரூபியாய் நின்ற நீயும் அந்த ஞானத்தோடொத்து உனது போதம் சற்றேனுமின்றி நிற்குமதை. ‘போய் இவன் தன்மை கெட்டு’ அவன் தன்மையா யென்றது தற்றெரிசனம் பண்ணிநின்ற உன்னிடத்திலே, மலரும் பக்குவம்வர மேலே மணம் பிரகாசித்தாற் போல, உன்னறிவிலே பிரகாசித்து நீ யொத்து நின்ற ஞானத்தை இதுவாகிலும் நமக்கு அறிவித்ததென்று தரிசித்துக் கண்பெற்றார் கண்ட கதிரொளிபோல மற்றொன்றையுங் காணாது உள்ளும் புறம்பும் இந்த ஞானம் பூரணமான பரையையும் தரிசித்துக் கண்ணிற் கதிரோன் கலந்தாற்போல தெரிசித்த பரையிலே வியாத்தமாய், விண்ணின் விகற்பமற மேவிய கால் நின்றது போலவும் திரையற்ற நீர்போலவும் விகற்பமற ஒன்றாய் நிற்கும் பராயோகமாய், அப்படித் திரையற்ற நீர்போல நின்று தெளிவு பெற்றுப் பராபோகமாய், உண்மை ஞானப் பயனாந் தசகாரியம் ஒன்றுமில்லாத சுழுத்தியில் உன்னைவிட்டு நீங்காமல் நிற்க நீ கண்ட பரை பஞ்சகிருத்தியஞ் செய்து உன்னை மோட்சத்திலே விடவேண்டுமென்று விரும்பின அதன் விருப்பத்தை மிகுதியும் நீ பொருந்தினதால் அதைப்போல நாமும் பஞ்சகிருத்தியஞ் செய்ய வேண்டுமென நின்ற சுத்த பராயோகமாய், அந்தச் சுழுத்தியிலுள்ள பரையினது விருப்பத்தி லழுந்தின மயக்கந் தீர்ந்து கண்ணுஞ் சூரியனும் போல உன்னையும் பரையையுங் கண்டு பரையினது கிரியையைப் பொருந்திப் பணிசெய்து நிற்கும் முத்திச் சாக்கிரமாய், சிவனையன்றிப் பரைசெய்யமாட்டாத பஞ்ச கிருத்தியத்துக்குப் பரைக்குக் கருவியாயிருந்த நமக்குப் பணிசெய்வதற்கும் ஒரு செயலுண்டோவெனப் பணிசெய்யாது விட்டுச் சாக்கிரா தீதமாய், இப்படிப் பணியையும் பணியறுதியையும் பாராது பஞ்ச கிருத்தியம் பண்ணுதற்குப் பரைக்குமேலும் ஒரு முதலுண்டோ அதெப்படி யறியப் போகிறோமென்று இச்சை கிரியை ஞானம் மூன்றையும் விட்டுப் பரையாதீதமாய், ஒன்றுங்குறியாது திகைக்குஞ் சுத்தாவத்தையிற் போய் இவன் தன்மையாகிய போதப் பதைப்பற்றுச் சோகம் பிறந்த போது சிவன் தனது தன்மையாஞ் சுகந்தோன்றுவதை. ‘பொருளிற் போய் அங்குத் தோன்றா தாய்விடில்’ என்றது இந்தச் சுகமும் சிவனுக்கு ஓர் இன்பசத்தியென்று கண்டு அது நீங்குஞ் சுகாதீதத்தின் உண்மையாஞ் சிவத்தைக் கிட்டி அதனாலே வரும் பரமானந்த வெள்ளப் பொருளிற் போய்த் தரிசித்து அவ்விடத்துத் தான் தோன்றாது அந்தப் பரமானந்தப் பொருளதுவாய்விடும் பரமானந்த யோகத்தையென விரித்துணர்ந்து கொள்க.
நீயும் நின் செயலொன்றின்றி யென்னும் உம்மை உயர்வு சிறப்பின் கண்ணும், நிற்றலே யென்னும் ஏகாரம் தேற்றத்தின் கண்ணும் வந்தன. இவன் தன்மைகெட்டு அவன் தன்மையாயெனச் சொல்லெச்சமாய் வருவிக்கப்பட்டது.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

எவ்வடி வுகளும் தானாம் எழிற்பரை வடிவ தாகிக்
கவ்விய மலத்தான் மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப்
பவ்வமீண் டகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவ னென்றே
செவ்வையே உயிருட் காண்டல் சிவரூப மாகு மன்றே.

பொழிப்புரை :

எவ்வடிவு ... ஆகி சிவஞ் சத்தி நாதம் விந்து சதாசிவன் மயேசுரன் ருத்திரன் விட்டுணு பிரமா மற்றுமுள்ள வடிவுகளெல்லாந் தானே யாகின்ற சிறந்த பரைவடிவே தனக்கு வடிவாகி ; கவ்விய ... ஆக்கி மலத்தைப் பிடித்துக் கிடக்கும் ஆன்மாக்களையும் அவ்வான்மாக்கள் ஆர்ச்சித்த வினைகளையும் அறிந்து பொசிப்பிப்பது காரணமாக மாயா காரியமாகிய உடலுந் தத்துவங்களும் புவனங்களும் பொசிக்கும் பதார்த்தங்களுமாக விசாரித்து நிறுத்திப் பொசிப்பித்துத் தொலைப்பிக்கு மளவிலே, வேலை கொள்வானொருவன் வேலை செய்வானொருவ னிளைப்புக்கண்டு நடுவே யிளைப்பாற்றி வேலை கொள்ளும் முறைமை போல, மலத்திடைப்பட்டுக் கிடக்குந் துயரந் தீருமளவும் மாயையின் காரியத்தை யொடுக்கிப் பின்னுமுண்டாக்கி ; பவ்வம் ... அன்றே அப்படித்தாகு முறைமையை அடைவிலே தொலைப்பித்து இரட்சிப்பானொரு பரமேசுரன் வடிவு பரையென்றும் அது உயிர்க்குயிராய்த் திருவடி ஞானமாய் நின்று அறிவிப்பதைத் திருவருளையே இடமாக நின்று காணுதல் சிவரூபமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 4

4. பரைஉயிரில் யானெனதொன் றறநின்ற தடியாம்
பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
உரையிறந்த சுகமதுவே முடியாகும் என்றங்
குண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன் றின்றித்
தரைமுதலிற் போகாது நிலையினில்நில் லாது
தற்பரையி னின்றழுந்தா தற்புதத்தி னாகுந்
தெரிவரிய பரமானந் தத்திற் சேர்தல்
சிவனுண்மைத் தெரிசனமாய்ச் செப்பும் நூலே.

பொழிப்புரை :

பரை உயிரில் ... அடியாம் முன் உயிர்க்குயிராய் நின்றறிவித்த அடிஞானமாகிய பரையானது உயிரிலே யானெனதென்பதற நின்றது திருவடியாமென்றும் ; பார்ப்பிடம் ... முகமாம் சோகந் தோன்றிச் சுகத்திற்பட்டுப் பார்க்கப்பட்ட பாசப் பரப்பெங்குஞ் சோதிக்குட் சோதியாஞ் சிவமாய்த் தோன்றலது முகமாமென்றும் ; உரையிறந்த ... என்று தரிசித்த அந்தச் சிவப்பேற்றில் வாக்கு மனாதீதமாய் ஒரு ஆனந்தமுண்டாம் அதுவே முடியாமென்றும் ; அங்குண்மையினை ... நூலே சிவனுக்குத் திருவடி யென்றுந் திருமுகமென்றுந் திருமுடி யென்றுஞ் சொல்லப்படுமவைகளின் உண்மையை மிகவுந் தெளிந்து அதுவே பொருளாய் மண் முதலான தத்துவங்களின் மீண்டும் போகாது, துறந்து நின்ற நான் பிரமமென்னும் பசுஞானமான தன்னிலையிலேயும் நில்லாது, மேலான பரையிலேயும் நின்றழுந்தாது, சிவப்பேற்றிலாகும் அறிதற்கரிய பரமானந்தத்தே சேர்தல் சிவனை உள்ளபடி தரிசிப்பதாஞ் சிவதரிசனமென்று சிவாகமங்கள் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 5

எப்பொருள்வந் துற்றிடினும் அப்பொருளைப் பார்த்திங்
கெய்தும்உயிர் தனைக்கண்டிவ் வுயிர்க்கு மேலாம்
ஒப்பில்அருள் கண்டுசிவத் துண்மை கண்டு
உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதும்அதுவே நினைப்பும்அது தானே
தரும்உணர்வும் பொசிப்பும்அது தானே யாகும்
எப்பொருளும் அசைவில்லை யெனஅந்தப் பொருளோ
டியைவதுவே சிவயோகம் எனும்இறைவன் மொழியே.

பொழிப்புரை :

எப்பொருள் வந்து உற்றிடினும் அந்தப் பரமானந்த நிலை குலைந்து உலகமே வந்து பொருந்தினும்; அப்பொருளைப் பார்த்து அந்த உலகப்பொருளை அசத்தாய்ச் சடமாய் அழிந்து போகிற பாசமெனப் பார்த்து; இங்கு எய்தும் உயிர்தனைக் கண்டு இந்தப் பாசத்துட் பொருந்தாநின்ற உயிருக்குச் சுதந்தரமாய் ஒரு செய்தியும் இல்லையெனப் பார்த்து; இவ்வுயிர்க்கு மேலாம் ஒப்பில் அருள் கண்டு இவ்வான்மாவுக்கு ஒரு செயலற்றுந் தனக்கு மேலாய் ஒப்பற்ற அருள் கண்ணாக நிற்குமதனைக் கண்டு; சிவத்துண்மை கண்டு அவ்வருளினுட் பரையை அடியாகவுஞ் சுகத்தை முகமாகவும் ஆனந்தத்தை முடியாகவுங் கொண்டு நின்ற சிவத்தினது உண்மையைக் கண்டு ; உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கி பொருந்திய உலகப் பொருளாகிய அவன் அவள் அதுவென்னுஞ் சடசித்துக்க ளெல்லாவற்றையும் அந்தச் சிவத்தினாலேதானே பற்றிப் பார்த்து ; தப்பினை ... மொழியே மறப்பினைச் செய்வதும், நினைப்பினைச் செய்வதும், அறிவிக்க அறியும் ஆன்மபோதமும், கர்மப் பொசிப்புஞ் சிவன் தானேயென அறிந்து, அவனை யொழிய வேறொரு திரணமும் அசைவில்லை யெனக் கண்டு, அகமும் புறமும் அந்தச் சிவத்துடனே கூடி நிற்றலே சிவயோகமாமென்று சிவாகமங்கள் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 6

பாதகங்கள் செய்திடினும் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினும் நெறியல்லா நெறிபயிற்றி வரினும்
சாதிநெறி தப்பிடினும் தவறுகள்வந் திடினும்
தனக்கெனஓர் செயலற்றுத் தான்அதுவாய் நிற்கில்
நாதன்இவன் உடல்உயிராய் உண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப் பேசுநெறி இதுவே.

பொழிப்புரை :

பாதகங்கள் செய்திடினும் அப்படித் தற்செயலற்று நின்றவன் ‘காமங் கோபங் கசடுறு முலோபந், தீமன மோகஞ்சேர் மதமச்சம்’ (சிற்றம்பல நாடிகள் திருச்செந்தூரகவல்) இவை முதலிய பாதகங்கள் செய்யினும் ; கொலைகளவு கள்ளுப் பயின்றிடினும் பஞ்சமாபாதகமாகிய ‘கடுங்கொலை வெறும்பொய் களவுகட்காமம்’ செய்யினும்; நெறியல்லா நெறி பயிற்றி வரினும் நெறியல்லாத அவநெறியைத் தவறாது நடத்திவரினும்; சாதிநெறி தப்பிடினும் தனதான சாதி முறைமை குலையினும்; தவறுகள் வந்திடினும் ஒரு குற்றம் தன்னை யறியாமல் வந்துற்ற காலத்தும்; தனக்கென ஓர் செயலற்றுத் தான் அதுவாய் நிற்கில் தான் அதுவாய் ஏகனாகி இறைபணி வழுவாது தனக்கென ஓர் செயலற்றே நிற்பானாகில் ; நாதன் இவன் ... இதுவே அந்தச் சிவன் இவனுடலும் உயிருமாய் நின்று உண்டு உறங்கி நடந்து பிராரத்தமாகிய நானாவித விடயபோகங்களையும் சிவபோகமாகவே செய்து இவனைப் பேதமற நின்று தானாக்கி விடுவன்; இது ஆன்மலாபமான பரமானந்தத்தைப் பொசித்து நிரம்பி அது பொங்கி மேலிட்டது கரைபுரண்டு அவசமுறுஞ் சிவபோகமென்று சிவாகமங்கள் சொல்லும்வழி இதுவாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை
சிற்பி