காப்பு


பண் :

பாடல் எண் : 1

ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவு
களியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்
அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமான
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே.

ஒளியிது காப்பருட் கணபதி கழலிணை
தெளிபவ ருளம்வினை சேரா வென்றது.

பொழிப்புரை :

ஒளியான திருமேனி ஞானப்பிரகாசமான திருமேனியிலே; உமிழ்தானம் மிகமேவு களியார வரும் ஆனை பொழியாநின்ற மதத்தினை மிகவும் பொருந்தப்பட்டுக் கர்வமிகுதியாலே யெழுந்தருளா நின்ற யானைமுகத்தினையுடைய மூத்த நாயனார்; கழல் நாளும் மறவாமல் அவனது ஸ்ரீ பாதத்தை நாடோறும் மறவாமல்; அளியாளும் மலர் தூவும் அடியார்கள் வண்டுகளை யாட்சியாகவுடைய பூக்களினாலே அர்ச்சித்து வழிபடுகிற தொண்டராயுள்ளவர்கள்; உளமான வெளியாகும் உள்ளமானது அஞ்ஞானமாகிய இருள்நீங்கிச் சிவஞானம் பிரகாசியாநிற்கும். ஆகையாலே; வலிதாய வினை கூட நினையாவே அவர்களை மிக்க வினைகளானதும் பொருந்த விசாரியாது. இந்நூல் காப்பது நிமித்தமாக வழிபடாநின்றேமென்பது கருத்து.
ஞானமென்றது அறிவென அறிக. தானமென்றது மதமென அறிக. அடியார்களென்றது தங்கள் சுதந்தரஹானியையறிந்து வழிபடுந் தொண்டர்களென அறிக. சுதந்தரஹானியாவது யானெனது கெட நிற்கையென அறிக. வலிதாய வினையென்றது பிராரத்தம் புசிக்கச் செய்தே யேறுகிற ஆகாமியகன்மமென அறிக. இதற்குப் பிரமாணம், திருவருட்பயனில் “ஏன்ற வினையுடலோ டேகுமிடை யேறும்வினைதோன்றி லருளே சுடும்” (98) என்பது கண்டுகொள்க. இதன் கருத்து இந்நூலுக்குக் காப்பென அறிக.

குறிப்புரை :

உரையாசிரியர் செய்த காப்பு
திருமேவு முண்மைச் சிவப்பிகா சத்தின்
மருமேவு பேருரைக்கு மாணாச் செருமேல்
தொடக்குஞ் சமர்க்கட் சுரிகுழல்மான் தந்த
கடக்குஞ் சரக்கன்றே காப்பு.
இந்தச் சிவப்பிகாசமென்று சொல்லப்பட்ட நூலுக்கு வரலாறாவது : பூரணகர்த்தாவாயிருக்கப்பட்ட ஸ்ரீகண்டபரமேசுவரன் தானருளிச் செய்த முன்னூலாகிய சிவாகமத்தில் ஞானகாண்டமா யிருக்கப்பட்ட பதிபசு பாசத்தினுண்மையை ஸ்ரீநந்திதேவ தம்பிரானார்க்குக் கடாக்ஷித்தருள, அந்த உபதேசத்தின் பயனாயிருக்கப்பட்ட சிவஞானபோதமாகிய மூலக்கிரந்தம் பன்னிரண்டையும் ஸ்ரீ நந்திதேவ தம்பிரானார் சநற்குமாரபகவான் முதலாயுள்ள இருடிகளுக்குக் கடாக்ஷித்தருள, அந்தச் சநற்குமாரபகவான் சத்தியஞானதரி சனிகளுக்குக் கடாக்ஷித்தருள, அந்தச் சத்தியஞானதரிசனிகள் பரஞ் சோதிமாமுனிகளுக்குக் கடாக்ஷித்தருள, அந்தப் பரஞ்சோதிமாமுனிகள் திருவெண்ணெய்நல்லூரே திருப்படை வீடாகவுடைய மெய்க ண்டதேவ தம்பிரானார்க்குக் கடாக்ஷித்தருள, அந்த மெய்கண்டதேவ தம்பிரனார் அந்த மூலக்கிந்தரம் பன்னிரண்டின் வழியே பன்னிரண்டு சூத்திரமாக வகுத்து அந்நூற்பெயராலே சிவஞானபோதம் என்னுந் திருநாமத்தினையுஞ் சாத்தி வழிநூலாகச் செய்தருளித் தமது திருவடியைப் பெற்ற அருணந்திதேவ தம்பிரானார்க்குக் கடாக்ஷித்தருள, அவர் அந்நூலை ஆராய்ந்து பார்த்தருளி அந்நூல் சொற்சுருங்கி அத்தமாழ்ந்திருக்கையினாலே அந்நூலின் அத்தத்தை விரித்துச் சிவஞானசித்தி யென்னுந் திருநாமத்தினையுஞ் சாத்தி வழிநூலாகச் செய்தருள, இந்த இரண்டு நூலையுங் கொற்றவன்குடியில் எழுந்தருளிய உமாபதிதேவ தம்பிரானார் திருவுள்ளத் தடைத்தருளி, அந்த இரண்டு நூலின் அத்தமுந் தீவிரதரமுள்ள புத்திமான்களுக் கொழிந்து மற்றொருவர்க்குந் தெரியாதென்று கண்டு யாவர்க்கும் எளிதாய் அறியத்தக்கதாக அந்த இரண்டு வழிநூலின் அத்தமும் முன்னூலாகிய சிவாகமத்தின் அத்தமுந் தம்மிடத்தில் விளைவதாயிருக்கப்பட்ட திருவருள்ஞானமுங் கூட்டிப் பொது ஐம்பது செய்யுளாகவும் உண்மை ஐம்பது செய்யுளாகவும் ஆகத் திருவிருத்தம் நூறாகக் கொண்டு சிவப்பிரகாசம் என்னுந் திருநாமத்தினையுஞ் சாத்திச் சார்பு நூலாகச் செய்ததென அறிக.
என்றிங்ஙனஞ் சிவாகமம் முன்னூலென்பதற்கும் சிவஞான போதமுஞ் சிவஞானசித்தியும் வழிநூலென்பதற்கும் இந்தச் சிவப்பிகாசஞ் சார்புநூலென்பதற்கும் பிரமாணமாவது: “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூலாகும்.” “முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூ லாகும்.” “இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநு லாகும்” (நன்னூல், சூத்திரம் 6,7,8), “தன்கோள் நிறீஇப் பிறர்கோள் மறுப்பின் எதிர்நூ லென்ப ஒருசாரோரே” என்னும் இலக்கண விதியைப் பற்றி; “வினையி னீங்கி... முதனூலாகும்” என்னும் விதியால் சிவாகமம் முன்னூலானதென அறிக; இரண்டாவது “முன்னோர்... வழி நூலாகும்” என்னும் விதியால் சிவஞானபோதமுஞ் சிவஞானசித்தியும் வழிநூலாதென அறிக; மூன்றாவது “இருவர் நூற்கும்... புடை நூலாகும்” என்னும் விதியால், முன்னூலாகிய சிவாகமத்தின் அந்தமும் வழிநூலாகிய சிவஞானபோதஞ் சிவஞானசித்தியின் அந்தமுங் கருதிலுறை திருவருளாகிய வேற்றுமை அத்தமுங்கூட்டி யருளிச் செய்கையால் இந்தச் சிவப்பிரகாசஞ் சார்புநூலானதென அறிக.
என்றிங்ஙனஞ் சிவாகமம் முன்னூலென்பதற்குஞ் சிவஞான போதமுஞ் சிவஞானசித்தியும் வழிநூலென்பதற்குஞ் சிவப்பிரகாசம் புடையாகிய சார்புநூலென்பதற்கும் பிரமாணமேதென்னில் 1ஞானதீக்கைத் திருவிருத்தத்தில், “தேசுமிகு மருட்பயின்ற சிவப்பிரகாசத்தில் திருந்துபொதுச் சங்கற்ப நிராகரணந் திருத்தி, ஆசிலருள் வினாவெண்பாச் சார்பு நூலா லருளெளிதிற் குறிகூட வளித்து ஞானப் பூசை தக்க, காரணமுன் புகன்றதனிற் புரிந்து புணர்விக்கச் சிவஞானபோத சித்தி வழிநூன், மாசில்சத மணிக்கோவை முன்னூல்சான்று மருவு திரு முறைத்திரட்டு வைத்தனன்மன் னுயிர்க்கே” என்பது கண்டு கொள்க. அன்றியும் இந்தச் சார்பு நூலாகிய சிவப்பிரகாசமென்னும் நூலிலே முன்னூலின் அத்தமும் வழிநூலின் அத்தமும் அது நிங்கலாக வேற்றுமை அத்தமுங்கூட்டி யருளிச் செய்ததற்குப் பிரமாணம்: இந்நூலிலே, “தெரித்தகுரு முதல்வருயர்” (11) என்ற செய்யுளிலே “இறைவனூலுங் கலந்து” என்றமையான் முன்னூலின் அத்தமுங் கூடினதென அறிக; “விளம்பியநூ லவையிரண்டும் விரும்பிநோக்கி” என்றமையால் வழிநூலின் அத்தமுங் கூடினதென அறிக; “கருத்திலுறை திருவருளும்” என்றமையால் திரிபுவேறுடைய வேற்றுமையத்தமுங் கூடினதென அறிக. ஆக மூன்று வகையும் இங்ஙனங் கண்டு கொள்க.
இந்தச் சிவப்பிரகாசமாகிய நூலிற் செய்யுள் நூற்றுக்குங் கருத்து ஏதென்னில்; பாயிரமீ ராறு பதியாறு பல்லுயிரொன், றேயுந் திரோதமல மொன்றென்பர் தூயபத, முத்திதரு மாமாயை யொன்றாகும் மூவுலகிற், புத்திதரு மாயைப் புணர்ப்பாறு பெத்தம்விட, நன்றுதீ தாகும்வினை நாலாகும் நாடோறுந், துன்று மலத்தின் தொகையொன்று பொன்றவருங், கேவல மைந்து கிளக்கி லுயிருக்குப், பாவுணர்த்தும் வைகரியின் பாலிரண்டு தேவர்களுங், கூடுஞ்சகலநா லைந்தாகுங் கூடுமலம், வீடுகின்ற சுத்த வியப்பொன்று நீடுமின்ப, முத்தியொன் றாக மதித்தருளால் முன்னோர்கள், பத்தியாற்சொன்ன பரிசினால் இத்தலமேல், உண்மையுரைக்கி லுயிருண்மை ஒன்பதாம், நண்ணவத்தை மூன்று நலமாக எண்ணரிய, தன்னையுணர்த்துந் தகையைந்து தன்னுணர்த்து, மன்னுணர்வின் ஞானவகை மூன்று பின்னுயிரை, மாசறவே காணும் வகையைந்து மற்றதனில், ஆசொழிக்குந் தன்மை யதுநான்கு தேசனுருப், பார்வையறப் பார்க்கும்வகை பத்தாம்பஞ் சாக்கரத்தைத், தேரும்வகை மூன்று தெரியுங்கால்சீர்மருவும், அன்பாற் சிவனை அநுபவிக்குமெய்யடியார், இன்பப் பகுதி யிருமூன்று துன்பமறச், சொற்றருநூலின் கருத்தொன்று சொற்றருநூல், நற்றவருக் கீயு நலமொன்று முற்றவரும், பந்த மறுத்த சகநாதன் பார்வையென, வந்தளித்த சம்பந்த மாமுனிவன் எந்தைபதஞ், சென்னியின்மேல் வைத்துச் சிவப்பிரகா சக்கருத்தை, யன்ன வயற்காவை யம்பலவன் நன்னயத்தாற், சொன்னா னெழுபிறப்புந் தொல்லைவினை யுந்தீர, மன்னாகமத்தை மதித்து எ து கண்டு கொள்க.
அன்றியும். இந்நூலுக்குத் திருவடிவரைவும் அதிகாரமுமொக்கவரும் வகையாவது : “ஓங்கு பரந்த நலம்வளந் தேவர்பார் ஈங்கிவை யாறும் இறைவன் வணக்கம் புறச்சம யத்தவர் நூற் கருத் தாகும். மூவகை விரும்பிய கிரியையென மூன்று மாவது தீக்கா மறைமைய தாகும் தெரித்த தொன்மை யெனவிவ் விரண்டும் விரித்த நூன் மர பவைய டக்கமே பலகலை நீடிங் குலகங்க கந்த மேற்ற விவ்வாறு மிறைவ னிலக்கணம் எண்ணரி தொன்றும் பசுவி னிலக்கணம் ஏகமா யொன்று மலமுந் திரோதமும உன்ன லொன்றுங் குடிலையி னியல்பாம் உருவாதி யென்னை படைத்த வல்லல் அருத்தி மன்னிய வாறு மசுத்தத் திருத்தகு மாயையின் செய்திய தாகும் நண்ணிய கன்ம மேலை யுற்றவென் றெண்ணிய நான்குங் கன்மத் தியல்பே மோக மிகவென் றெண்ணிய வொன்றும் வேக மிகுமல மைந்தின் விதியே ஓங்கின்மை மாயை யந்நியம் புகலும் ஈங்கிவை யைந்துங் கேவலத் தியல்பே வந்தடைந் தித்தகை பேசரி யைவகை அந்தமி லலகில் குணமான தனுவுடன் சொன்ன முந்தி யிந்நிலை தோற்றி யன்ன பத்துஞ் சகல வவத்தையே இனைய நாடி யென விவ் விரண்டும் முனைவன் சுத்த முறைமைய தாகும் அரிவைய ரொன்றும் பரசம யத்தவர் மருவிய முத்தியின் வாய்மையதாகும் என்னும் பொதுவியல் விருத்த மைம்பதின் மன்னிய கருத்தை வகுத்தன னிப்பால் ஈங்கிவை யொன்று முண்மையிற் பாயிரஞ் செறிந்திடு முருவுண ரறிவெனில் வாயில் அறிவினா லெவ்வறி வசத்தறிந் ததுவுஞ் சத்திது கண்ணொளி யோரிடத் தெட்டும் இத்திற மான்ம விலக்கண மாகும் எண்ண விவ்வகை நிக்கமின் மூன்றும் அண்ண லளித்த வவத்தைய தாகும் மருவிய தனக்கெனக் கண்டறி புலன்கள் இருள்நனி யறிந்திடு மிவையோ ரைந்தும் பொருவிலான் மாவை யுணர்த்தல் புகலுங் காட்டிடும் பன்னிற மாயையிம் மூன்றும் ஊட்டு ஞான வாய்மையை யுரைக்குந் தேசுற மும்மையின் பாரிப்ப தாகுந் தன்னறி தத்துவ முறைதரு சுத்தம் இன்னவை நான்கு மன்னுயிர்த் தரிசனம் புகலரு மின்றுநோக் கிந்நிலை யடைபவர் இகலறு நான்கு மிலங்குயிர்ச் சுத்தி பொற்புறு மொடுங்கிடா பற்றிடு முந்திய சொற்பெறு பாசம் விளம்பிய பாவிக்கில் ஒன்றிரண் டாகி யழிந்திடு மெல்லை என்றிவை பத்து மிலங்குயி ரிலாபம் பந்தத் திருவெழுத் தைந்தி லாசுறும் அந்தமின் மூன்று மைந்தெழுத் தருணிலை தீங்குறு குறிப்பக மண்டமண் தொண்டரென் றாங்கிவை யாறு மணைந்தோர் தம்மை நிலவுல கொன்று நூற்கருத்தாகும் திருவரு ளொன்று மருளுறை நூலைக் கொடுக்கு முறைமைப் பகுதிய தாகுமென் றிப்படி யுமாபதி தேவ னுரைத்த மெய்ப்படு சிவப்பிர காச விருத்தக் கருத்தின துண்மை விரித்துரைத் தருளினன் சண்பையில் வாழுந் தவகுரு நாதன் பண்பமர் சிற்றம்பலவன் தானே” எ து கண்டுகொள்க.
என்றிங்ஙனங் கூறிவந்தவகையில் முன்னுள்ள சிவஞானபோதத்தின் அத்தமும் சிவஞானசித்தியின் அத்தமும் இந்தச் சிவப்பிரகாசவழிநூலின் அத்தமுங் கூடினதேயானால் அந்நூல்களைப் போலச் சூத்திரம் பன்னிரண்டும் இந்நூலினின்ற முறைமையெங்ஙனே யென்னில் அவை வருமாறு : “ஓங்கொளியா” யென்ற விருத்தந் தொடங்கி “தொன்மையவா”மென்னும் விருத்தமுடிவாகிய செய்யுள் பன்னிரண்டும் பாயிரமாக வகுத்தருளிச் செய்து, மேற் பதியிலக்கணமாகிய “பலகலையென்ற” விருத்தந் தொடங்கி “ஏற்றவிவையென்ற” விருத்தமுடிவாகிய செய்யுளாறும் முதற்சூத்திரமாகவும், பசுவிலக்கணமாகிய “எண்ணரிதா” யென்ற விருத்தந் தொடங்கி “அரிவைய ரின்புறு முத்தி” யென்ற விருத்தமுடிவாகிய செய்யுள் முப்பத்திரண்டும் இரண்டாஞ் சூத்திரமாகவும் ஆகப் பொதுவைம்பதும் இங்ஙனம் வகுத்து, மேல் உண்மை யைம்பதில் “இங்கிவை”யென்ற விருத்தமொன்றும் இந்த உண்மைக்கு அதிகார வகுப்பாகவும், மேல் ஆன்ம இலக்கணமாகிய “செறிந்திடு”மென்ற விருத்தந் தொடங்கி “ஓரிடத்திருத்த”லென்ற விருத்த முடிவாகிய செய்யுளெட்டும் ழன்றாஞ் சூத்திரமாகவும், அவத்தைத் தன்மையாகிய “எண்ணவொன்றிலாததீதம்,” “இவ்வகையவத்தை”, “நீக்கமிலதீதம்” ஆகச் செய்யுள் மூன்றும் நாலாஞ் சூத்திரமாகவும், உணர்த்து முறைமையாகிய “மருவிய பொறியி”லென்ற விருத்தந்தொடங்கி “அறிந்திடுமனாதி” யென்ற விருத்தமுடிவாகிய செய்யுளைந்தும் ஐந்தாஞ் சூத்திரமாகவும், ஞான வாய்மையாகிய “காட்டிடுங் கரணம்”, “பன்னிறங்கவரு”, “மாயை மாமாயை” யென்னும் விருத்தமூன்றினுள் “காட்டிடுங் கரண” மொன்றும் ஆறாஞ்சூத்திரமாகவும், நின்ற விருத்தமிரண்டும் மேலதற்கோர் புறனடையாகிய ஏழாஞ் சூத்திரமாகவும், மேல் அதன் பயனென்னும் அதிகாரத்தினுள் “தேசுறமருவு” மென்ற விருத்தந் தொடங்கி “எல்லையில் பிறவி”யென்னும் விருத்தமுடிவாகிய செய்யுள் பத்தொன்பதும் “புனிதனாம”மென்னு மதிகாரமாகிய “பந்தமானவை,” “திருவெழுத்து”, “ஆசுறு” என்னும் விருத்தமூன்றும் ஆக முன்னுங் கூட்டிச் செய்யுள் இருபத்திரண்டினுள் “தேசுறமருவு” மென்ற விருத்தமொன்றும் இவையிற்றுக்கு அதிகார வகுப்பாகவும், ஆன்ம தரிசனமாகிய “தன்னறிவதனா”லென்ற விருத்தந் தொடங்கிச் “சுத்தமாஞ்சத்தி”யென்ற விருத்தமுடிவாகச் செய்யுள் நாலும் எட்டாஞ் சூத்திரமாகவும், ஆன்மசுத்தியாகிய “புகலரு மசத்தர் தம்பா” லென்ற விருத்தந்தொடங்கி “அடைபவர் சிவமேயாகு” மென்ற விருத்த முடிவாகிய செய்யுள் நாலும் பஞ்சாக்கர தரிசனத்தில் விருத்தமூன்றும் ஆக முன்னுங் கூட்டிச் செய்யுளேழும் ஒன்பதாஞ் சூத்திரமாகவும், ஆன்மலாபமாகிய “பொற்புறு கருவி” யென்ற விருத்தந் தொடங்கி “எல்லையில் பிறவி”யென்ற விருத்தமுடிவாகிய செய்யுள் பத்தும் பத்தாஞ் சூத்திரமாகவும்,மேல் அணைந்தோர் தன்மையாகிய “தீக்குறு மாயை” யென்ற விருத்தந் தொடங்கித் “தொண்டர்களிட”மென்ற விருத்தமுடிவாகச் செய்யுள் ஆறினுள் “தீங்குறு”, “குறிப்பிடம்”, “அகம்புறம்”, “அண்டம்”, “மண்முத”லென்னும் விருத்தமைந்தும் பதினொன்றாஞ் சூத்திரமாகவும், சூசூதொண்டர்களிட”மென்ற “விருத்தமொன்றும் பன்னிரண்டாஞ் சூத்திரமாகவும் நின்றதென அறிக. இங்ஙனஞ் சூத்திரம் பன்னிரண்டும் வகுத்து, “நிலவுலகாயதாதி”யென்னும் விருத்தமொன்றும் இந்நூலின் கருத்தாகவும் “திருவருள் கொடுத்து” என்னும் விருத்தமொன்றுஞ் சீடனுக்கு நூலும் அத்தமுங் கொடுக்குமுறையாகவும் வகுத்து இந்நூலருளிச் செய்ததென அறிக. ஆக இங்ஙனஞ் சூத்திரங்கள் வகுத்ததற்கு மேலெழுதுகிற வியாக்கியிலே அந்தந்த அதிகாரங்கள் தோறுஞ் சிவஞானபோதத்திலுஞ் சிவஞானசித்தியிலும் வருஞ்சூத்திரத்தின் ஏதுக்களுங் காட்டியெழுதுகிற முறைமையிலே சூத்திரம் பன்னிரண்டுங் கண்டு கொள்க.
உரை வரலாறு
இந்த வியாக்கியானஞ் செய்தது மெய்கண்ட சந்ததியில் காவையம்பலநாதத் தம்பிரானார் திருவடி மரபில் ஆசாரியரில் மதுரையில் ஞானப்பிரகாசத் தம்பிரானார் திருவடியடியாரில் சிவப்பிரகாசன் செய்த வியாக்கியானமென அறிக. இந்தச் சிவப்பிரகாசமாகிய நூலுக்கு முன்னோர்களும் வியாக்கி செய்திருக்க இப்பொழுது இந்த வியாக்கிசெய்யவேண்டுங் காரணமேதென்னில், முன்னுள்ள தம்பிரான்களெழுதின வியாக்கிகளெல்லாம் பொழிப்புரையாக எழுத அதனோடு சமயிகள் கருத்துக்களுங் காட்டி என் தம்பிரான் ஞானப்பிரகாசத்தம்பிரானார் எழுதின வியாக்கியின் வழியே தொந்தனையும் பாட்டுஞ் சேர்த்து, அது நீங்கலாகக் காவை யம்பலநாதத் தம்பிரானார் இந்நூலின் கருத்தாகச் செய்தருளின குறள்வெண்பா நூறும் இந்நூலிற் பாட்டுக்கள் தோறும் பகுத்துச் சேர்த்து அந்தக் குறளின் கருத்தாகிய அத்தங்களுக்குந் தவறுவராமல் முன்னுண்டான வியாக்கிகளின் பொழிப்போடும் விரிவோடும் நுட்பமும் அகலமுங் காட்டி வழி நூல்களிலுண்டான சூத்திரம் பன்னிரண்டும் இந்நூலிலே வகுத்து வியாக்கி செய்ததென அறிக. இங்ஙனம் பல வகையாக வியாக்கியெழுதுகைக்கு விதியேதென்னில், அஃதாவது: “பொழிப்பகலம் நுட்பநூல் எச்சமென் றாறாக், கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் பழிப்பின், நிரையாமா சேக்கு நெடுங்குன்ற நாட, உரையாமோ நூலுக்கு நன்கு” (நாலடி, 319) என்றமையான் நூல்களுக்கு நால்வகைப் பொருள்களுங்கூட்டி வியாக்கி செய்யும் விதியுண்டாகையால் அவ்விதியைப் பற்றிப் பொழிப்பும் அகலமும் நுட்பமும் நூலெச்சமுங் காட்டி வியாக்கியயெழுதினதென அறிக. அஃதாவது “பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப் பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே” எ ம், “அகல மென்ப தாசறக் கிளக்கின் விகல மின்றி விரித்துரைப் பதுவே” எ ம், “நுட்பமென்பது நுழை பொரு ளியாவுந் திட்ப மாகத் தெளியக் கூறல்” எ ம், “எச்ச மென்ப திருபொரு ளொழிவு மிச்ச மாக விரித்துரைப் பதுவே” எ ம் வரும் இலக்கண விதியைப்பற்றியென அறிக. இதிற் பொழிப்பாவது சத்தத்துக்கு அத்தமாகத் தொகுத்தெழுதுகையென அறிக; அகலமாவது அதனை விரித்தெழுதுகையென அறிக; நுட்பமாவது கடாவுக்கு விடைகொடுத்தெழுதுகையென அறிக. எச்சமாவது பாட்டிற் புகுதாத பொருள்களை யமைத்தெழுதுகையென அறிக.
மேற்பாயிரம் வருமாறு. இங்ஙனம் இந்த நூல்களுக்கு முந்தப் பாயிரங் கூறுகைக்கு விதியே தென்னில்; “ஆயிரமுகத்தா னகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே” (நன்னூல், 53) என்னும் விதியைப்பற்றி முந்தப் பாயிரம் அருளிச் செய்யவேண்டி, இந்நூலுக்குக் காப்பு ஒரு செய்யுளாகவும் பாயிரம் பன்னிரண்டு செய்யுளாகவும் அருள்செய்வா னெடுத்துக்கொண்டருளியது.
சிற்பி