வினாவெண்பா


பண் :

பாடல் எண் : 1

நீடும் ஒளியும் நிறையிருளும் ஓரிடத்துக்
கூடல் அரிது கொடுவினையேன் - பாடிதன்முன்
ஒன்றவார் சோலை உயர்மருதச் சம்பந்தா
நின்றவா றெவ்வாறு நீ.

பொழிப்புரை :

நீடும் ஒளியும் நிறை இருளும் ஓரிடத்துக் கூடல் அரிது விரிந்த பிரகாசமும் நிறைந்த இருளும் ஓரிடத்திலே கூடமாட்டாது ; கொடுவினையேன் பாடு இதன்முன் கொடுவினையேன் பக்கல் தரிசிப்பதற்கு முன் ; வார் சோலை உயர் மருதச் சம்பந்தா நீ ஒன்ற நின்றவாறு எவ்வாறு அழகிய சோலை யுயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனிவனே, தேவரீர் அடியேனிடத்துப் பொருந்த நின்றதெப்படி.
அந்தகன் கண்ணுக்கு ஆதித்தப் பிரகாசம் வியாத்தமா யிருந்தும் தெரியாத தன்மைபோலென்பது கருத்து.

குறிப்புரை :

உதாரணம் : சிவஞானபோதத்தில் (11.3) ‘அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க், கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன்’ என்பது கண்டுகொள்க. மலம் ஆன்மாவைச் சகசமாய் மறைத்திருக்கையிலே சிவம் ஆன்மாவைப் பொருந்தி நின்ற தெப்படியென்றும் வினா. உம் : சிவஞான போதத்தில் (7.5) ‘மெய்ஞ்ஞானந் தன்னில் ... தான்’ ; சிவதருமோத்தரத்தில் ‘பரமசிவம் பராசத்தி பல்லுயிர்க்கும் பயின்றிருக்க, விரவுவதெ னிருளெனிற்கேள் வெய்யவழல் பசுமரத்தில், விரவியதே பசுமரமும் வெந்தவல வெந்து விழும், பருவமுறக் கரணமுறப் பதியுமுறப் பழுதறவே’ என்பன கண்டுகொள்க.

பண் :

பாடல் எண் : 2

இருளில் ஒளிபுரையும் எய்தும் கலாதி
மருளின் நிலையருளும் மானுங் - கருவியிவை
நீங்கின் இருளாம் நிறைமருதச் சம்பந்தா
ஈங்குன்அரு ளால்என் பெற.

பொழிப்புரை :

இருளில் ஒளி புரையும் ஆணவம் மேலிட்ட காலத்து ஞானம் ஒழிந்து நிற்கும் ; எய்தும் கலாதி மருளின் நிலை யருளும் கலாதிகளைப் பொருந்தின விடத்திலும் ஆணவத்தையே தந்தது ; மானுங் கருவி யிவை நீங்கின் இருளாம் என்னுடனே கூடிநின்ற கருவி நீங்கின பொழுது இருளாயிருந்தது ; நிறை மருதச் சம்பந்தா ஈங்கு உன் அருளால் என்பெற நிறைந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, இவ்விடத்து உன்னருளால் பிரயோசனம் என்ன.
கேவல சகலத்திலுமல்ல சுத்தத்திற் பிரயோசன மென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (68) ‘காட்டிடுங் கரண மொன்று’ மென்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 3

புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞானம்
அல்லதில துள்ளதெனில் அந்நியமாம் - தொல்லையிருள்
ஊனமலை யாவா றுயர்மருதச் சம்பந்தா
ஞானமலை யாவாய் நவில்.

பொழிப்புரை :

புல்லறிவு நல்லுணர்வது ஆகா சிற்றறிவு பேரறிவாகாது ; பொது ஞானம் அல்லது (விடய ஞானமும் அன்று அது. இங்ஙனம்) ஞானம் மூன்று விதமாயிருக்கும் ; இலது உள்ளதெனில் அந்நியமாம் முன்பு இல்லாத சிவஞானம் மலபரிபாகத்திலே யுண்டாமென்னில் சற்காரிய வாதமாகாமல் அந்நியமாம் ; தொல்லை இருள் ஊனம் மலையாவாறு உயர் மருதச் சம்பந்தா ஞான மலை ஆவாய் நவில் பழைமையாக வருகிற ஆணவமலக் குற்றத்தினாலே மயங்காத முறைமை உயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்தமாமுனியே மலைபோல ஞானத்தையுடையவனே திருவுளம் பற்றவேணும். விடய ஆன்மஞானம் சிவஞானமாகா தென்பது கருத்து.
தத்துவங்களுடைய சுபாவத்தை இது பொய்யென்று அறிவிக்கிறது சிவஞானம். இப்படி யறிகிற வேற்றுமையும் விட்டு, அது வாய் அந்த ஞானமாய் நிற்பது சுத்தம். உம் : சிவப்பிரகாசத்தில் (73) ‘தத்துவ மான வற்றின் தன்மைகள்’ என்னும் பாடத்திற் கண்டு கொள்க. சித்தியாரில் (11.11) ‘சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில் சிவனருட்சித் திவனருளைச் சேருஞ்சித்’ தென்பது கண்டு கொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 4

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா - முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்.

பொழிப்புரை :

கனவு கனவென்று காண்பரிதாம் கனவிலே நின்று கனவைத் தெரிசிக்கப்படாது ; காணில் நனவில் அவை சிறிதும் நண்ணா நனவிலே காணும் கண்டதென்னில், நனவில் அந்தக் கருவிகள் இல்லாத படியாலே காணவில்லை; முனைவன் அருள்தான் அவற்றில் ஒன்றா அருளிலே நின்று கண்டதென்னில், அருள் அவத்தைகளிற் பொருந்தாது; தட மருதச் சம்பந்தா யான் அவத்தை காணுமாறு என் தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே நான் அவத்தைகளைத் தரிசிக்கும்படி எப்படி. சுத்த தத்துவங்களைக் கொண்டு அறிய வேண்டுமென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (39) ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 5

அறிவறிந்த தெல்லாம் அசத்தாகு மாயின்
குறியிறந்த நின்உணர்விற் கூடா - பொறிபுலன்கள்
தாமா அறியா தடமருதச் சம்பந்தா
யாம்ஆர் அறிவார் இனி.

பொழிப்புரை :

அறிவு அறிந்த தெல்லாம் அசத்தாகுமாயின் என்னுடைய அறிவினாலே அறியப்பட்ட தெல்லாம் அசத்தாய் அழிந்து போமேயாயின்; குறி இறந்த நின் உணர்விற் கூடா வாக்கு மனத்துக்கும் எட்டாமல் குறியிறந்து நிற்கிற தேவரீருடைய ஞானத்திலே பொருந்தப் போகிறதே யில்லை ; பொறிபுலன்கள் தாமா அறியா பொறிபுலனாகிய தத்துவங்கள் தாமாய் அறியமாட்டா; தட மருதச் சம்பந்தா யாம் ஆர் அறிவார் இனி தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே யான் ஆரை யறியப் போகிறது தான் இனி. கண்ணானது இருளோடே கூடி இருளாயும் ஒளியோடே கூடி ஒளியாயும் நின்றது போலப் பாசத்தோடே கூடிப் பாசமாய் நின்ற ஆன்மா அருளோடே கூடிப் பாசம் நீங்கி அருளாய் நிற்குமென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (57) ‘சத்திது வென்ற சத்துத் தானறியா’ தென்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 6

சிற்றறிவு முற்சிதையிற் சேர்வார்இன் றாம்சிறிது
மற்றதனில் நிற்கில்அருள் மன்னாவாம் - துற்றமுகில்
மின்கொண்ட சோலை வியன்மருதச் சம்பந்தா
என்கொண்டு காண்பே னியான்.

பொழிப்புரை :

சிற்றறிவு முன் சிதையிற் சேர்வார் இன்றாம் சிற்றறிவு முன்னே கெடுமாயின் பின் அருளைப் பொருந்தப் போகிற பேரில்லை ; சிறிது மற்றதனில் நிற்கில் அருள் மன்னாவாம் சிற்றறிவு கொஞ்சமாக நின்றாலும் அருள் பொருந்தாது ; துற்ற முகில் மின்கொண்ட சோலை வியன் மருதச் சம்பந்தா என்கொண்டு காண்பேன் யான் மேகங்கள் நெருங்கின ஆகாசத்தை யளாவிய சோலை சூழ்ந்த வியன் மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே எதைக்கொண்டு காணவல்லேன் யான்.
சிற்றறிவு கெட்டதுமன்று முன்போல் இருந்தது மன்று, பாசபந்தம் நீங்கித் திருவடியிலே கலந்து கிடக்குமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞானசித்தியில் (11.10) ‘செம்பிரத குளிகையினாற் ... சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே’ என்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 7

உன்னரிய நின்உணர்வ தோங்கியக்கால் ஒண்கருவி
தன்அளவும் நண்ணரிது தானாகும் - என்அறிவு
தான்அறிய வாரா தடமருதச் சம்பந்தா
யான்அறிவ தெவ்வா றினி.

பொழிப்புரை :

உன்னரிய நின் உணர்வது ஓங்கியக்கால் நினைத்தற் கரிதாகிய தேவரீரருள் தோன்றின காலத்து ; ஒண் கருவி தன் அளவும் நண்ணரிது தானாகும் அழகு பொருந்திய முப்பத்தாறு தத்துவங்களாற் பொருந்தப்படாது ; என்னறிவு தான் அறிய வாராது என்னுடைய பசு ஞானத்தாலும் அறியப்படாது ; தட மருதச் சம்பந்தா யான் அறிவது எவ்வாறு இனி தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, அடியேங்கள் அறிகிறது எப்படித்தான் இனி.
பசுகரணங்களும் சிவகரணமாய் ஆன்மாவும் அருளாய்ப் பொருந்திநின் றறியுமென்பது கருத்து.
உதாரணம் : சிவப்பிரகாசத்தில் (70) ‘மாயைமா மாயை மாயா’ என்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 8

அருவேல் உருவன் றுருவேல் அருவன்(று)
இருவேறும் ஒன்றிற் கிசையா - உருஓரிற்
காணில் உயர்கடந்தைச் சம்பந்தா கண்டஉடற்
பூணும்இறைக் கென்னாம் புகல்.

பொழிப்புரை :

அருவேல் உருவன்று உருவேல் அருவன்று இருவேறும் ஒன்றிற்கு இசையா கர்த்தா திருமேனி அருவமானால் உருவமாக மாட்டாது, உருவமானால் அருவமாகமாட்டாது, அருவுமுருவும் ஆனால் ஒரு பொருளுக்கு இரண்டு தன்மை இசையாது ; உரு ஓரிற் காணில் உயர் கடந்தைச் சம்பந்தா கண்ட உடல் பூணும் இறைக்கு என்னாம் புகல் திருமேனியை விசாரித்துக் காணில், உயர்ந்த கடந்தைநகர் வாழ் சம்பந்த மாமுனியே, கொண்ட திருமேனியைப் பூணப்பட்ட கர்த்தாவுக்குத் திருமேனி என்னத்திலே உண்டானது, திருவுளம் பற்றவேணும்.
ஞானத்திலே திருமேனி கொள்ளுவனென்பது கருத்து.
உதாரணம் : சிவஞான சித்தியில் (1.41) ‘மாயை தான் ... சத்தி தன்னால்’ என்பது கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 9

இருமலத்தார்க் கில்லை உடல்வினைஎன் செய்யும்
ஒருமலத்தார்க் காராய் உரைப்பேன் - திரிமலத்தார்
ஒன்றாக உள்ளார் உயர்மருதச் சம்பந்தா
அன்றாகில் ஆமா றருள்.

பொழிப்புரை :

இருமலத்தார்க்கு உடல் இல்லை வினை என் செய்யும் இரண்டு மலமுடைய பிரளயாகலருக்கு மாயை யில்லாதபடியினாலே உடம்பு இல்லை, வினை புசிக்கும்படி எப்படி ; ஒரு மலத்தார்க்கு ஆராய் உரைப்பேன் ஒரு மலமுடைய விஞ்ஞானாகலர்க்கு உரை யாராகச் சொல்லுவாம் ; திரிமலத்தார் ஒன்றாக உள்ளார் மும்மலமுடைய சகலருக்கன்றோ ஒன்றாக உள்ளது ; உயர் மருதச் சம்பந்தா அன்றாகில் ஆமாறு அருள் உயர்ந்த மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே, அப்படியல்லவாகில் ஆகும்படி அருளவேண்டும்.
விஞ்ஞானாகலர் பிரளயாகலர் சரியை கிரியை யோகமுடைய சகலருக்குச் என்பது திருநெல்வேலிப் பிரதியில் அதிக பாடம். பிரளயாகலருக்குச் சுத்தமாயையிலே தேகமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞான சித்தியில் (1.25) ‘வித்தைகள் வித்தையீசர்’ என்ற பாட்டு முழுதுங் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 10

ஒன்றிரண்டாய் நின்றொன்றில் ஓர்மையதாம் ஒன்றாக
நின்றிரண்டா மென்னில்உயிர் நேராகுந் - துன்றிருந்தார்
தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி
ஓங்கியவா றெவ்வா றுரை.

பொழிப்புரை :

ஒன்று இரண்டாய் நின்று ஒன்றில் ஓர்மையதாம் ஒரு பொருள் விவகாரத்திலே இரண்டாய் நின்று ஒன்றா மென்னில் ஒன்று பொருந்தமாட்டாது ; ஒன்றாக நின்று இரண்டா மென்னில் உயிர் நேராகும் ஒன்றாய் நின்று இரண்டா மென்னில் ஒன்றிலே ஒன்று அழிந்துபோம் ; துன்றிருந்தார் தாங்கிய வாழ் தண் கடந்தைச் சம்பந்தா யானாகி ஓங்கியவாறு எவ்வாறு உரை ஞானத்தைப் பொருந்திய பெரியோரால் தாங்கிய வாழப்பட்ட குளிர்ந்த கடந்தை நகர் வாழ் சம்பந்த மாமுனியே, யான் சிவமாகி ஓங்கிய முறைமையைத் திருவுளம்பற்ற வேணும்.
ஆணவத்தைப் பொருந்தின ஆன்மாப்போல என்பது கருத்து.
உதாரணம் : சிவப்பிரகாசத்தில் (87) ‘ஒன்றிரண் டாகி யொன்றி னொருமையா’ மென்ற பாடத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 11

காண்பானுங் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை
காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானுங்
காட்டுவதுங் காண்பதுவுந் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டும்நெறி வாரா தவர்.

பொழிப்புரை :

காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்து உண்மை காண்பார்கள் காண்கின்ற ஆன்மாவும் காட்டுகின்ற சிவனும் காணப் படுகின்ற பொருளும் விட்டு உண்மையைத் தரிசிப்பார்களென்னில் ; நல் முத்தி காணார்கள் நல்ல முத்தியைக் காணார்கள் ; காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் தண் கடந்தைச் சம்பந்தன் வாட்டும் நெறி வாராதவர் ஆனால் காண்கின்றவனும் காட்டுகின்றவனும் காணப்படுகின்ற பொருளுமாகவோ காண்பார்கள் என்னில் அப்படிக் காணப்படுகின்றவர்களும் குளிர்ச்சி பொருந்தின கடந்தைநகர் வாழ் சம்பந்தமா முனி வாட்டும்வழி வாராதவர்.
ஞாதுருஞானஞேயம் என்கிற சங்கற்பனைகளை விட்டு ஒன்றாகச் சிவனியல்பின் உணருகிற ஞானமே பெறவேண்டுமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞானசித்தியில் (8.22) ‘சன்மார்க்கஞ் சகல கலை புராண வேதம்’ என்ற திருவிருத்தத்திற் கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 12

ஒன்றி நுகர்வதிவன் ஊணும் உறுதொழிலும்
என்றும் இடையில் இடமில்லை - ஒன்றித்
தெரியா அருள்மருதச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.

பொழிப்புரை :

ஒன்றி நுகர்வது இவன் ஊணும் உறுதொழிலும் (ஆன்மா வினைப்போகத்தையும் செயலையும் கர்த்தாவைச் சேர்ந்தல்லது நுகர்வதில்லை); என்றும் இடையில் இடமில்லை (எக்காலத்தும் கர்த்தாவுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் நின்று பிறிதொன்று புசிப்பிக்கு மென்பதற் கிடமில்லை); ஒன்றித் தெரியா அருள் மருதச் சம்பந்தா சர்வவியாபியா யிருக்கையிலேயும் தோன்றாத கிருபை பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே; சேர்ந்து பிரியாவாறு எவ்வாறு பேசு தேவரீர் திருவடியைச் சேர்ந்து பிரியாமற் போகங்களைப் புசிக்கும் முறைமையைத் திருவுளம் பற்ற வேண்டும்.
அவன் சர்வ வியாபியாகையினாலும் இவன் சுதந்தர ஹீனனாகையாலும் அவனே போகங்களைப் புசிப்பிக்கிறவ னென்பது கருத்து.
உதாரணம் : திருவருட்பயனிலே (95) ‘அவனையகன் றெங்கின்றா மாங்கவனா மெங்கு, மிவனையொழிந் துண்டாத லில்’ என்றும், சிவஞானபோதத்தில் (11.1) ‘ஈண்டிவ்வான்மாக்கள் அவனை யின்றியமைந் தொன்றையும் விஷயியாவாகலால் அவனும் அவற்றது விஷயத்தை யுணரும்’ என்றும், உண்மை நெறி விளக்கத்தில் (6) ‘பாதகங்கள் ....... பிதுவே’ என்றும் வருவன கண்டுகொள்க.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

பண் :

பாடல் எண் : 13

அருளால் உணர்வார்க் ககலாத செம்மைப்
பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா
வினாவெண்பா உண்மை வினாவாரேல் ஊமன்
கனாவின்பால் எய்துவிக்கும காண்.

பொழிப்புரை :

அருளால் உணர்வார்க்கு அகலாத செம்மைப் பொருளாகி நிற்கும் பொருந்தி ஆசாரியர் அநுக்கிரகம் பெற்ற ஞானவான்களுக்கு விட்டு நீங்கி மலைவு வாராமல் செம்மைப் பொருளாகவே பொருந்தி நிற்கும்; தெருளா வினாவெண்பா உண்மை வினாவாரேல் ஊமன் கனாவின்பால் எய்துவிக்கும் காண் அறியத் தக்கதாக வினாவெண்பாவின் உண்மையை வினாவி யறியாதவர் ஊமன் கனவிலே பால் குடித்தது போல.
ஒன்றுந் தெரியாதென்பது கருத்து.இராசாங்கத்துக் கையெழுத்து நூல் நிலயப் பிரதியில் ‘முற்றும்’ என்பதன்பின் “பால் குடித்ததற்கு ஒக்குமென்றது ஞான மிகுதியுடையார்க்குச் சத்தியமாகவே தோன்றுமென்றும் அல்லாதபேர் எத்தனை சாத்திரம் படித்தாலும் வினா வெண்பா பாராதவனுக்கு ஊமன் கனாவிலே பால் குடித்தது” என்று எழுதப்பட்டுள்ளது.

குறிப்புரை :

உரைத் தொடக்கத்தில் காணப்படும் வரலாறு : “இந்நூலுக்கு வரலாறு பரிபூர்ணகர்த்தாவாயிருக்கிற ஸ்ரீ கண்டபரமேஸ்வரன் அருளிச் செய்த சிவாகமத்திலே ஞானகாண்டமாயிருக்கிறதை நந்திகேசுர சுவாமிக்குக் கடாட்சித்தருள, நந்திகேசுர சுவாமி சனற் குமாரபகவானுக்குக் கடாட்சித்தருள, சனற்குமாரபகவான் சத்தியஞான தரிசனிகளுக்குக் கடாட்சித்தருள, சத்தியஞான தரிசனிகள் பரஞ்சோதி மாமுனிகளுக்குக் கடாட்சித்தருள, பரஞ்சோதிமாமுனிகள் மெய்கண்டதேவநாயனார்க்கு அனுக்கிரகம் பண்ண, மெய்கண்ட தேவநாயனார் அருணந்திதேவர்க்குக் கடாட்சித்தருள, அருணந்தி தேவர் மறைஞானசம்பந்தமா முனிக்கருள, மறைஞான சம்பந்தமா முனி யனுக்கிரகம் பெற்ற கொற்றங்குடி முதலியார் அந்த உபதேசத்தைச் சங்கற்ப நிராகரணமென்று எட்டு வாதிகளை வைத்து மறுத்து, அந்த அர்த்தம் விளங்கச் சிவப்பிரகாசமென்று திருநாமமுஞ் சாத்தி வழி நூலாக அனுக்கிரகம் பண்ணி, அந்தச் சிவப்பிரகாசத்தின் சாரம் விளங்கப் பதின்மூன்று வெண்பாவாக வினாவினதென அறிக. இந்நூலுக்கு வியாக்கியை செய்ய வேண்டி மெய்கண்ட சந்ததியில் திருவாவடுதுறை நமச்சிவாய அய்யர் ஆசாரியமரபில் வேலப்ப பண்டாரம் அனுக்கிரகம் பெற்ற நமச்சிவாய வேலப்ப பண்டாரம் அனுக்கிரகித்த உபதேசத்தை முன்னுள்ள ஞாதாக்கள் இந்நூலுக்கு விருத்தி பண்ணாமையாலேஅசடீளு பிங்களய் வைகாசிமீ பவுரணையில் பண்ணினதென்று அறிக.”
இவ்வரலாறும் இப்பதிப்புக்கு மூலமாயுள்ள உரையும் திருநெல்வேலி திரு. எம்.பி.எஸ். துரைசாமி முதலியாரவர்கள் அனுப்பி வைத்த பிரதியிற் காணப்படுவன. சென்னைச் சிவஞானபோத யந்திர சாலையில் அச்சிட்ட பிரதியும் இராசாங்கக் கையெழுத்து நூல் நிலயத்துள்ள பிரதியும் ஒப்பு நோக்கப் பயன்பட்டன. இறுதிப் பிரதியில் சகாத்தம் 1600 எனக்காலம் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிப் பிரதி குறித்தது கொல்லமாண்டு. சகாத்தம் 1600க்கு நேரானது கி.பி. 1677. கொல்லமாண்டு 840க்கு நேரானது கி.பி. 1665. எனினும் இரண்டு பிரதிகளிலும் பிங்கல வருஷமென்றே எழுதப்பட்டிருப்பதால், அதற்கு நேரான கி.பி. 1677 ஐயே உரையின் காலமாகக் கொள்ள வேண்டும்.
எஸ். அனவரத விநாயகம் பிள்ளை
வினாவெண்பா உரை முற்றும்
திருச்சிற்றம்பலம்
சிற்பி