திருநல்லூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

உமையம்மை பொருந்திய திருமேனியை உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதி உடைய நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால் விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

பெண்ணமருந்திருமேனி உடையீர் - மங்கை பங்கரே. பிறங்கு - விளங்குகின்ற. பண் - இசை. திண் - உறுதி. மண் அமரு - மண்ணோர் விரும்பும். நிலத்தில் பொருந்தும் என்பது சிறந்ததன்று, `வானமருங்கோயில்` (பா.4) `வான்தோயுங்கோயில் (பா.7).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி யங்கையில்
கொலைமல்கு வெண்மழுவு மனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும், பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற் பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில் மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

தண்புனல் - குளிர்நீர்; கங்கை. அனல் - தீ. கொள்கை - விரதம்; மேற்கோளும் ஆம். சிலை - மேருமலையாகிய வில். வெங்கணை - திருமாலாகிய அம்பில் தீயாகியமுனை உடைமையால் வெம்மை கூறப்பட்டது, கணையின் கொடுமை குறித்தலுமாம். மலைமல்கு கோயில் - மலைபோலத் தோற்றம் நிறைந்த கோயில். `வெள்ளிமால் வரையை - நேர் விரிசுடர்க் கோயில்` (பெரி. திருஞா- 368. பா - 10 பார்க்க).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச்சூடி, குளிர்ந்த மென்மையான சடைகள் தாழப் பறைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர்.

குறிப்புரை :

குறைமதியம்; நிரம்பாமதியம்; வெண்மதியம் என்க. குறை நிரம்பாத மதியமென்றுகொளின் இறைவன் திருமுடி மேற்பிறை என்றும் பிறையாகவே இருப்பதாம். தேய்தலுங் குறைதலுமில்லை என்று கொள்ளலும் ஆம். பறை - வாத்தியங்கள். நவின்ற - மிக்கொலித்த. சிறை - அணை. நவின்ற - செய்த. மறை நவின்ற - வேதங்களைப் பயிலுதற்கு இடமான.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்
மானமரு மென்விழியாள் பாகமாகு மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

வளைந்த வெண்பிறையையும் கங்கையையும் முடியிற்சூடுபவரே! மான் போன்ற மென்மையான விழியினை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! தேன் நிறைந்த பசிய பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில் விளங்கும் வானளாவிய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

கூன் - வளைவு. மான் அமரும் விழி - மான் மருண்டு நோக்குவது போல நோக்கும் விழிகள். கண் வேறு விழிவேறு ஆயினும் இரண்டும் ஒன்றாகக் கொண்டு இருவகை வழக்கிலும் ஆள்வர். மாண்பு - பெருமை. வான் - வானோர். அமரும் - விரும்பித்தொழும். வானளாவிய எனலுமாம். `மண்ணமருங் கோயில்`(பா.1)`வான்தோயுங்கோயில்`(பா.7).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

நிணங்கவரு மூவிலையு மனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ டாடன்மேவு மழகினீர்
திணங்கவரு மாடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும் கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப் பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும் பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

நிணம் - கொழுப்பு. நெறிகுழலாள் - நெறித்த கூந்தலையுடைய உமாதேவியார். அணங்கு - தெய்வம். குழலாளாகிய அணங்கு என்றேனும் தெய்வத்தன்மை பொருந்திய பாடல் என்றேனும் கொள்ளலாம். திணம் (திண்ணம்) - உறுதியாக. கவரும் - (நஞ்சால் உயிரைக்) கவரும். அரவு - பாம்பு. பிறையைத் திண்ணங்கவரும் அரவு எனலும் பொருந்தும். `சொலீர் ....... செஞ்சடையிற் பிறை பாம்புடன் வைத்ததே` (பதி.137 பா.1) மணம் - சிவமணம். கமழும் - மணக்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக விருந்தீரே.
 

பொழிப்புரை :

கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச் சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள் அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர்.

குறிப்புரை :

கார் - கார்காலம். `காரார் கொன்றை` (தி.1.ப.56 பா.1) `கார்மலி கொன்றை`(தி.3 ப.60 பா.6) `காரினார் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்` (பதி.186 பா.6) `கார்க்கொன்றை மாலை கலந்ததுண்டோ` `காரினார் கொன்றைக் கண்ணியார்`(தி.2 ப. 162. பா.6) வார் - கச்சு. `தேர்மருவு நெடுவீதிக் கொடிகள் ஆடும்` என்றதால், திருநல்லூரின் பிரமோற்சவமும் மாடவீதிகளின் சிறப்பும் குறித்தவாறு. ஏர் - அழகு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

ஊன்றோயும் வெண்மழுவு மனலுமேந்தி யுமைகாண
மீன்றோயுந் திசைநிறைய வோங்கியாடும் வேடத்தீர்
தேன்றோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வான்றோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில் ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும் எல்லாத்திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக் கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள் இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக மகிழ்ந்து உறைகின்றீர்.

குறிப்புரை :

ஊன் - தசை. மீன் தோயும் திசை - நட்சத்திரங்கள் பொருந்திய வானம். இது பத்துத் திக்குகளுள் மேலிடம். வேடம் - நடனக்கோலம். வான் தோயும் கோயில்:- `வான் அமரும் கோயில்` (பா.4).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியாண் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா வந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே! சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும் மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க, அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள் பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

காது - காதில். கறுத்த - கோபித்த. கருநிறமுடைய `நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்கவாலினால் கட்டிய வாலியார்` (தி.3 ப.91 பா.8). மாது - காதல். மறுகும் வண்ணம்- கலங்கும்படி. கண்டு உகத்தல்:- மகிழ் விளையாட்டு. தீது அமரா - தீ வினையை வெறுத்த. மாது - பெருமை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

போதின்மே லயன்றிருமால் போற்றியும்மைக் காணாது
நாதனே யிவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்
மாதரா ளவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் போற்றியும் உம்மைக்காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள் முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையாரோடு மகிழ்ந்து உறைகின்றீர்.

குறிப்புரை :

போது - செந்தாமரைப்பூ. அயன் - பிரமன். \\\\\\\'நாதனே இவன்\\\\\\\' என்று ஏத்தமகிழ்ந்து அளித்தீர். நயந்து - விரும்பி, பக்தி கொண்டுமாம். தீ மூன்று - ஆகவநீயம், காருக பத்தியம், தாட்சிணாக்கினி. மாதராள் - அழகுடையாராகிய உமாதேவியார். மன்னு - நிலையுற்ற.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதா ரறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
நல்லார்க ளந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
 

பொழிப்புரை :

பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர் என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள் வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும் கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை :

பொல்லாத - தீய. அறவுரை - இகழ்ச்சிக் குறிப்பு. போற்று - துதி. ஓவா - நீங்காத. மல் - மலை. `மற்பகமலர்ந்த திண்டோள் வானவர்`(கம்பர், பால: உரைக்காட்சிப். 52). `மல்லினும் உயர் தோளாய் மலரடிபிரியாதேன்` (கங்கைப்-66).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையா லுரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.
 

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள் பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர்.

குறிப்புரை :

கொந்து - பூங்கொத்து. புடை - பக்கம். கொச்சை - சீகாழி. செந்தமிழில் மறைப்பொருளை அருளியதால் `செந்தமிழின் சம்பந்தன்` என்னும் உரிமை உண்டாயிற்று. சிறை - அணை. `பந்தார் விரலி` என்னும் அம்பிகையின் திருப்பெயரை நினைக்க. சிந்தனையால் - தியானத்தோடு.
சிற்பி