பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 12

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே
பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்
சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே.

பொழிப்புரை :

நறுமணம் உடைய நெய்யும் , பாலும் , தயிரும் ஆட்டப் பெற்றவனே ! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே ! நறிய கொன்றைப் பூமாலையை நயந்து ( விரும்பிச் ) சூடியவனே ! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே ! பலவாகிய சடைமேல் , குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவை யுடைய இளம் பிறையைச் சூடியவனே ! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க .

குறிப்புரை :

எல்லாத் தலங்களுள்ளும் ஓர் ஆண்டிற்குள் ஆறு நாள் அபிடேக விசேடமுடைய தலம் சிதம்பரமேயாதலின் ` ஆடினாய் ` என்பது திருநடனத்தையும் கருதிய தொடக்கம் உடையதாகி நின்றது . தில்லைவாழ் அந்தணருள் நடராசப் பிரானாரும் ஒருவராதலின் , பிரியாமை பிரியாதுள்ளது . சிற்றம்பலம் - ஞானாகாசம் , பூதாகாசத்தைப் பிரித்தல் ஒல்லும் , கடத்தற்குரிய தத்துவங்களுள் ஒன்று அது , ஞானாகாசத்தைப் பிரிதல் என்றும் எவ்வுயிர்க்கும் இல்லை . நாடுதல் - சங்கற்பம் . நயத்தல் - விரும்புதல் . மறை - சாமவேதம் , பிறவும் கொள்ளப்படும் . கீதம் - இசைப்பாடல் . திங்கள் சூடிய கருணைத் திறம் , தொல்வினைச் சுருக்கம் வேண்டுங்கால் குறித்தற்பாலது , பல் சடை எனப்பன்மையும் , புன் சடை எனக் குறுமையும் , நீள் சடை என நெடுமையும் பொன் சடை என நிறமும் , விரி சடை எனப் பரப்பும் , நிமிர் சடை என உயர்ச்சியும் பிறவும் திருமுறையுட் காணப்படும் . பொன் சடையைப் புன் சடை எனலும் உண்டு . ` அந்தணர்தம் சிந்தையானை ` ( தி .6 ப .1 பா .1) ` அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை , அவர் தம் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்று எவ்வுலகும் விளங்கிய பொன்னம்பலத்துமேவி ஆடல் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழாற் பின்னும் போற்றல் செய்வார் ` ( பெரியபுராணம் திருநாவு . பா - 175) என்பவற்றால் சிந்தையும் சிவபிரானும் பிரியா வினைக்கு முதலாதல் விளங்கும் . ` நின்று சபையில் ஆனந்த நிர்த்தமிடுவோர்க்கு ஆளாயின் வென்ற பொறியார்க்கு ஆனந்த வெள்ளம் பெருக வுய்ப்பர் ` ( பேரூர்ப் புராணம் . நாவலன் வழிபடு படலம் . பா - 23) என்னும் உண்மையைத் தெளிவிக்க ஆடினாய் என்றெடுத்தார் . ஆடினாய் நறுநெய்யொடு பால் ` பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை ` என்னுந் திருவாசகத்தில் ( பா .35) பாதமலர் என்னும் தொடர் இயைவது போல மீளவும் நெய் , பால் , தயிர் ஆடினாய் என்று இயைவது உணர்க . சிவ வழிபாட்டிற்கு , கூறப்படும் உபசாரங்கள் பலவற்றினும் , அபிடேகமே சிறந்தது ஆதலின் , அதனை எடுத்துக் கூறினார் . அதனை , ` சிவதருமம் பல . அவற்றுட் சிறந்தது பூசனை . அதனுள் , அவமில் பல உபசாரத்தைந்து சிறந்தன .` ` ஆங்கவை தாம் அபிடேகம் அரிய விரை , விளக்கு , மனுத்தாங்கும் அருச்சனை , நிவேதனம் ஆகும் ` என்னும் கச்சியப்ப முனிவர் வாக்கால் அறிக . ( பேரூர்ப் புராணம் மருதவரைப் படலம் . 29) ` தேன் , நெய் , பால் , தயிர் ஆட்டுகந்தானே ` முதலியவற்றையும் நோக்குக . அந்தணர் - தில்லைவாழந்தணர் . எவ்வுயிர்க்கும் கருணைக் கடலென்பார் , வேதியர் மறையோர் என்னாது அந்தணர் என்று அருளினார் . மெய்ஞ்ஞானிகள் , அவனருளே கண்ணாகக் கண்டு திளைக்க , ஆனந்தக் கூத்தாடும் பரஞானவெளி ஆதலின் , ஊன் அடைந்த உடம்பின் பிறவி , தான் அடைந்த உறுதியைச் சார , ஆதியும் நடுவும் முடிவும் இல்லாத அற்புதத் தனிக் கூத்தாடும் இடம் சிதம்பரம் , ஞானாகாசம் எனப்பெற்றது . ` சிற்பரவியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி ` என்றருளிய சேக்கிழார் திருவாக்கினாலும் ( பெரியபுராணம் தில்லைவாழ்அந்தணர் பா .2) உணர்க . நறும் - நறுமணம் உள்ள , கொன்றை - மந்திரங்களிற் சிறந்ததாகிய பிரணவ மந்திரத்துக்குரிய தெய்வம் , தாமே எனத் தெளியச்செய்ய , கொன்றை மாலை யணிந்தனர் . அம்மலர் , உருவிலும் பிரணவ வடிவாயிருத்தலின் பிரணவ புட்பம் எனப்படும் . ` துன்றுவார் பொழில் தோணிபுரவர்தம் , கொன்றைசூடும் குறிப்பது வாகுமே ` ( தி .5 ப .45 பா .7) என்னும் திருக்குறுந்தொகையாலும் ` ஓரெழுத்திற்குரிய பொருள் உயர்நெடு மாலயன் என்பார் நீரெழுத்து நிகர் மொழி நின்னில விதழிமுன் என்னாம் ` என்னும் வாட்போக்கிக் கலம்பகப் பாட்டாலும் அறிக . பனிகால் கதிர் - குளிர்ச்சியை வீசும் ஒளியையுடைய , வெண் திங்கள் சூடினாய் என்றது , ` உற்றார் இலாதார்க்குறுதுணையாவன ` சிவபிரான் திருவடியே என்பதைக் குறிக்கும் . தொல்வினை என்றது சஞ்சித கருமத்தை . பல்சடை - பூணூல் அபரஞானத்தையும் , சடை பரஞானத்தையும் குறிக்கும் என்ப . அதனாலும் , சிவசின்னங்களில் சடையே சிறந்ததாயிருத்தல் புகழ்ச்சோழ நாயனார் வரலாற்றாலும் , விடந்தீர்க்க வேண்டித் திருமருகற் பெருமானை இரத்தற்கண் ` சடை யாய் எனுமால் ` என்றெடுத் தருளினமையானும் அறியப்படும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

கொட்ட மேகம ழும்குழ லாளொடு கூடி னாய்எரு தேறி னாய்நுதற்
பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமா
நட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்
இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே , விடையேறியவனே , நெற்றிப் பட்டம் அணிந்தவனே , பூத கணங்கள் இசை பாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே , ( அறிதற்கரிய ) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே ! இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ ? கூறியருள்க .

குறிப்புரை :

பாரிடம் - பூதம் . நட்டம் - நடனம் . நவிலுதல் - பழகுதல் . ` நட்டம் பயின்றாடும் நாதனே ` மறையோர் - வேதங்களை ஓர்கின்ற . ஓர் நல்லவர் - மறையோராகிய நல்லவர் எனலுமாம் : நல்லவர் ,. சரியை கிரியா யோகங்களைச் செய்து பெறும் நன்னெறியாகிய ஞானத்தைப் பெற்றவர் . கொட்டம் - நறுமணம் ` கொட்டமே கமழுங் கொள்ளம் பூதூர் ` எனப் பின்னும் வருதல் காண்க . நுதற் பட்டம் நெற்றியில் அணியும் ஓர் அணி . ` பட்ட நெற்றியர் நட்டமாடுவர் `. வீரர் அணிவது ` நுதலணியோடையிற் பிறங்கும் வீரப் பட்டிகை ` என்பதாலறிக . இசை பாடுவ - பாரிடம் ஆ ( க ) - பாரிடம் இசை பாடுவன ஆக . பாரிடம் - பூதங்கள் . நட்டம் நவில்வாய் - திருக்கூத்தாடியருள்வீர் . ` ஆளும் பூதங்கள் பாடநின்றாடும் அங்கணன் என வன்றொண்டப் பெருந்தகையார் அருளிச் செயலும் காண்க . நல்லவர் - நல்லொழுக்கின் தலைநின்றவராகிய தில்லைவாழந்தணர் . நன்னெறியாகிய ஞானத்தை யுடையாருமாம் . இவை மேவியது என்னை கொலோ ? - என்று வினவுகின்றார் , அவை பெண் விருப்புடையான் போற் பெண்ணோடு கூடியிருத்தலும் , ஊர்தியாக ஏறு ஏறுதலும் , அணிவிருப்புடையான் போல் நெற்றிப் பட்டம் அணிந்தமையும் , கண்டார் அஞ்சத்தக்க பூதங்களோடு கூடியாடுதலும் , உலகில் எத்தனையோ தலங்களிருக்கத் , தில்லைச்சிற்றம்பலத்தை இட்டமாக விரும்பியதும் அறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்று
சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்
சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழக்
கோலத் தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே.

பொழிப்புரை :

நீல நிறத்தைப் பொருந்திய கரிய திருக் கழுத்தினர் ( திருநீலகண்டர் ). அழகிய நெற்றிக் கண்ணினர் . திரிசூலம் பற்றியவர் , காடுடைய சுடலைப் பொடி பூசியவர் , சடையினர் , சீலம் மிக்கவர் ஆகிய தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது நினைந்து சேர்தலால் . திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே ! நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய் . உன்னுடைய காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம் .

குறிப்புரை :

இத்திருப்பாடல் , தில்லைக்குச் செல்லுங்கால் , திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு எதிர்வந்து தில்லைவாழந்தணர்கள் சிவகண நாதர்களாகத் தோற்றம் அளித்த உண்மையை உணர்த்திற்று . நீலத்து - நீலமணியைப் போல் , ஆர் - பொருந்திய , கரிய - கருமையையுடைய . நீலம் , கறுப்பு , பச்சை இவற்றுள் ஒன்றைப் பிறிது ஒன்றாகக் கூறும் வழக்கு உண்மையை ` பச்சைப் பசுங் கொண்டலே ` ( மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் . பா .1) என்று வருவதாலும் அறிக . மிடற்றார் - கண்டத்தையுடையவர் , பற்று சூலத்தார் - கையில் சூலம் பற்றியவர் , சேர்தலால் பற்றுக் கோடாக , நாங்கள் சேர்ந்தமையாலும் , உன காரணம் கூறுதும் - எல்லாவற்றிற்கும் நீயே காரணனாம் தன்மை களைக் கூறுவோம் . கோலத்தாய் அருளாய் - அழகையுடையவனே , உன் சிவந்த திருவடி மலர்களைத் தொழ எமக்கு அருள்வாயாக . சேவடி ( யைத் ) தொழ அருளாய் எனக் கூட்டுக . ` அவனருளாலே அவன் தாள் வணங்கி ` என்றல் கருத்து . நீலகண்டம் , முக்கண் , சூலம் , திருநீற்றுப் பூச்சு , வார்சடை இக்கோலத்தோடும் தில்லைவாழந்தணரைத் தாம் கண்டமை குறித்தருள்கிறார் . இதனைச் சேக்கிழார் பெருமான் ` நீடும் திருத்தில்லை யந்தணர்கள் நீள் மன்றுள் ஆடும் கழற்கு அணுக்க ராம்பேறு அதிசயிப்பார் ` ( பெரிய . திருஞா . பா - 168) என்று தொடங்குவது முதலிய பாடல்களில் குறித்தருள்வது காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்
டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழ
அம்ப லத்துறை வான்அடி யார்க்கடை யாவினையே.

பொழிப்புரை :

பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச் செய்து அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும் , அழகும் ஒளியும் உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக் கண்களையும் உடைய சிவகாமியம்மையார் கொங்கைகளை விரும்பிய வார்சடையான் , ( நடராசப் பெருமான் ), அரகர முழக்கஞ் செய்து விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப் போன்ற உடற் கட்டினர் . பேரார்வத்தோடு திருக்கழலணிந்த சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழ , பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் முழு முதல்வன் அடியவர்க்கு வினைத் தொடர்பு இல்லை .

குறிப்புரை :

` கொம்பு .. முலை ` என்றது கங்கையைக் குறித்தலுமாம் . ஆயினும் , அஃது அத்துணைச் சிறப்பினதன்று . காளையர் என்பது வழிபடுவோருள் அத்தகையாரைக் குறித்ததெனலும் பொருந்தும் . காளையர்க்கு முன்னும் பின்னும் உள்ள அடைமொழியால் முறையே பெருமானது திருமேனியிற் கொண்ட ஆர்வமும் திருவடிக்கண் நின்ற வேட்கையும் விளங்கும் . கொம்பு - பூங்கொம்பை . அலைத்து ( நமக்கு இத்தகைய அழகே இல்லையென வருந்த ) வருத்தி , அழகு எய்திய - அழகைப்பெற்ற . நுண் இடை - சிறிய இடை , கோலம் - அழகிய , வாள் . ஒளி பொருந்திய முகத்து - முகத்தில் , அம்பு அலைத்த - அம்புகளை , ( அவ்வாறே ) வருத்திய . இரண்டு கண்ணாள் - இரு விழிகளையுடைய உமாதேவியாரின் , வார்சடை - நெடிய சடாபாரம் . கம்பலைத்து - முக்காரம் செய்து , காமுறு - ( கண்டார் ) விரும்பும் , காளையர் - ஏறுபோற் பீடுநடையையுடைய தில்லைவாழ் அந்தணர் மக்கள் , காதலால் - அன்போடு , கழல் சேவடி கை தொழ - கழலையணிந்த சிவந்த திருவடிகளைத் தொழ . அடையாவினை - துன்பங்கள் அடையமாட்டா . இறைவனைப் போற்றும் வீறுடைமையால் பெருமித நடைக்குக் காளை உவமம் . ` ஏறுபோற் பீடு நடை ` என்றார் வள்ளுவரும் . ( திருக்குறள் 59) தில்லைவாழந்தணர்களின் , துதித்தல் , பாடுதல் , புகழ் பாராட்டுதல் ஆகிய செயல்களின் ஓசைக்கு , முக்காரம் செய்தல் ஆகிய உவமையும் பெறப்படும் . ஏற்றின் ஒலி முக்காரம் எனப்படும் . கம்பலைத்து - கம்பலை யென்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம் . கம்பலை - ஓசை . ` கம்பலை சும்மை , கலியே , அழுங்கல் என்றிவை நான்கும் அரவப்பொருள ` ( தொல் . சொல் . உரி . 53) காதலான் : ஆனுருபு ஒடுப்பொருளில் வந்தது . ` தூங்குகையான் ஓங்குநடைய ` என்புழிப்போல . ( புறம் .22. )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் தூம ணிமிட றாபகு வாயதோர்
பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்கா
தில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழ
இல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே.

பொழிப்புரை :

திரிபுரத்தை எரித்தொழிக்க மலை வில்லால் தீக்கணையை எய்தவனே , பழந் தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப் பெருக்கால் , நஞ்சினை உண்டதொரு தூய நீல மணி போலக் கறுத்த திருக்கழுத்தினனே ! பற்கள் நிறைந்த பிளந்த வாயுடையதொரு தலையில் பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே ! தில்லைவாழந்தணர் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக் கழியும் .

குறிப்புரை :

தொல்லையார் - தொன்மையுடைய தேவர்கள் , தூ - தூய ,( கலப்பில்லாத ) மணி - நீல ரத்தினம் போன்ற . மிடறா - கண்டத்தையுடையவனே ! பகுவாய் - பிளந்த வாய் . தலை - மண்டையோடு . பண்டரங்கம் - பாண்டரங்கக் கூத்து எனவும் , ` மதில் எரிய எய்தவனே ` எனவும் ( உன் ) சேவடி கைதொழ வினை இல்லையாம் எனவும் கூட்டுக . திரிபுரதகனம் செய்த மகிழ்ச்சியால் தேரே மேடையாக நின்று சிவபெருமான் ஆடிய கூத்தைப் ` பாண்டரங்கம் ` என்பர் . அது ` திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் தேரே யரங்கமாக ஆடிய கூத்தே பாண்டரங்கமே ` என்பதால் அறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல் அங்கை யாய்அம ரர்க்கம ராவுமை
பாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்கா
மாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம் மன்னி னாய்மழு வாளி னாய்அழல்
நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே.

பொழிப்புரை :

திருமேனியில் தோய்ந்த அழகிய கொன்றை மாலையை யுடையவனே ! தீ ஏந்திய திருக்கையனே ! தேவ தேவனே ! அம்பிகை பாகமுடைய பகவனே ! பலி ஏற்றுத் திரியும் பாண்டரங்கக் கூத்தனே ! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்றவனே ! மழுவாளை ஏந்தியவனே ! நச்சுத் தீயையுடைய அரவக் கச்சணிந்த திருவரையினனே ! உன் அடியவரை வினைகள் அடையா . ( ஆதலின் , உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை இல்லை என்றவாறு .)

குறிப்புரை :

ஆகம் - மார்பில் , தோய் அணிகொன்றையாய் - தோயும் அழகிய கொன்றை மாலையை யுடையவனே ! அனல் அங்கையாய் - உள்ளங்கையில் அனல் ஏந்தியவனே ! அமரர்க்கு அமரா - தேவ தேவனே ! ( அமரர் - தேவர் ; மரணம் இல்லாதவர் .) பகவா - பகவனே ! ஐசுவரியம் , வீரியம் , ஞானம் , புகழ் , திரு , வைராக்கியம் , என்னும் இவ்வாறு குணங்களையும் உடையவன் பகவன் . அது சிவபெருமானையன்றி , மற்றெவரையுங் குறிக்காது . மாகம்தோய் - ஆகாயத்தை அளாவிய . பொழில் - சோலை , மல்கு - வளம் நிறைந்த , அழல் நாகம் - விடத்தையுடைய பாம்பு . தோய் - சுற்றிய , அரையாய் - இடுப்பையுடையவனே ! ( அரை - அளவையாகு பெயர் ) உன் அடியவரை வினை நண்ணாதனவாகும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளிய சங்க வார்குழை யாய்திக ழப்படும்
வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள்
ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம் அங்கை யால்தொழ வல்லடி யார்களை
வாதி யாதகலும்நலி யாமலி தீவினையே.

பொழிப்புரை :

நல்ல இனத்துப் பொருந்திய பளிங்கொடு வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையானே , விளங்குகின்ற மறையோனே , விகிர்தனே , திருவிழாக்கள் நிறைந்த அழகிய தில்லையுள் முதல்வனாகிய நினக்கு இடமான திருச்சிற்றம்பலத்தை அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத் தீவினைப் பெருக்கம் வாதிக்காது ; வருத்தா தொழியும் .

குறிப்புரை :

சாதியார் பளிங்கின் ஓடு - உயர்ந்த சாதிப்பளிங்கு போலும் , வார் - தொங்கும் , சங்கக்குழையாய் - சங்கினாலாகிய காதணியையுடையவனே . இன் - சாரியை , ஓடு ஒப்புப் பொருளில் வந்தது . ` ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல் ` என்புழிப்போல . திகழப்படும் வேதியா - வேதங்களில் விளங்க எடுத்துப் பேசப்படு பவனே . விகிர்தா - மாறானவனே . அம்கையால் - அழகிய கைகளால் . ` என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே ... வழிபடும் அதனாலே ` ( தி .2 ப .106 பா .1) யென்றபடி சிவபெருமானைக் கும்பிட ` எத்தனை கோடி யுகமோ தவம் செய்திருக்கின்றன ` என்று பாராட்டற்குரிய தன்மை பற்றிக் ` கைகளால் தொழ ` - என வேண்டாது கூறினார் , வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து என்பது போலக் கைபெற்றதன் பயன் அவனைக் கும்பிடற்கே யெனல் தோற்றுவித்தற்கு . அதனை , ` கரம் தரும் பயன் இது என உணர்ந்து ... பெருகியதன்றே ` என்னும் ( திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் 61) சேக்கிழார் பெருமான் திருவாக்கானும் உணர்க . மலி - மிக்க . நலியா - துன்புறுத்தாதன ஆகி , வாதியாது - எதிரிட்டு நில்லாமல் , அகலும் - நீங்கும் . ` வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே `( தி .2 ப .106 பா .11) என்ற இடத்தும் ( வாதியாது - பாதியாது ) இப்பொருளில் வருதல் காண்க . வல்ல - குறிப்புப் பெயரெச்சத்தின் ஈறு தொக்கது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

வேயி னார்பணைத் தோளியொ டாடலை வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமு
தாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனே
தீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம்
மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே.

பொழிப்புரை :

மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே , விகிர்தனே , வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே , இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே , தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே , திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திருநடங் கொள்ளும் இடமாக விரும்பியவனே , நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம் .

குறிப்புரை :

வேயின் - மூங்கில் போல . ஆர் - பொருந்திய பணைத் தோளியோடு - திரட்சியாகிய தோளையுடையவளாகிய காளியுடன் , ஆடலை வேண்டினாய் - ஆடுதலை விரும்பியவனே ! ( தோள் + இ ; இகரம் பெண்பால் விகுதி ) உண்ண இனித்து மரணத்தை யொழிக்கும் அமிர்தம்போல் ` சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும் பெருமான் ஆனவனே !` தீயின் ஆர்கணையால் - தீயாகிய அம்பினால் , திரிபுரம் எரித்த அம்பின் நுனிப் பாகம் தீயாயிருந்தமையால் , தீயினார் கணை எனப்பட்டது . அம்பின் அடிப்பாகம் காற்று ; நுனி தீ ; அம்பு திருமால் என்பவற்றை , ` கல்லானிழற் கீழாய்இடர் காவாயென வானோர் எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின் றுய்ப்ப வல்லாய்எரி , காற்று , ஈர்க்கு , அரி , கோல் , வாசுகி , நாண்கல் , வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே ` ( தி .1 ப .11 பா .6) என்னும் இடத்தில் காண்க . மேயினாய் - மேவினாய் . கழலே - திருவடிகளையே , எய்துதும் - அடைவோம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

தாரி னார்விரி கொன்றை யாய்மதி தாங்கு நீள்சடை யாய்தலை வாநல்ல
தேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள்
சீரி னால்வழி பாடொழி யாததோர் செம்மை யால்அழ காயசிற் றம்பலம்
ஏரி னால்அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே.

பொழிப்புரை :

மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே , பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே , தலைவனே , அழகிய தேர்களாலே பொலிவு நிறையப்பெற்ற திருவீதிகளையுடைய செல்வம் நிறைந்த திருத் தில்லையுள் , சிறந்த நூல் முறைப்படி வழிபடுதலை ஒழியாததொரு செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக் கூத்தெழுச்சியால் விரும்பினவனே , உன் சீரடிகளை ஏத்துவேம் . ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு .

குறிப்புரை :

விரி - மலர்ந்த . மறுகு - வீதி . திரு - செல்வம் . அணி - அழகிய . சீரினால் - சிறந்த நூன்முறைப்படி . வழிபாடு - நித்திய நைமித்திகமாகிய பூசை . ஒழியாதது - ஒரு காலமும் நீங்காததாகிய . செம்மை - செந்நெறி . உன - உன்னுடைய . சீர் அடி - சிறந்த அடிகளை , ஏத்துதும் - துதிப்போம் . தேரின் ஆர் மறுகு - ` தேருலாவிய தில்லையுட் கூத்தனை ` எனத் திருநாவுக்கரசு நாயனாரும் அருளுவர் . தலமோ ` அணிதில்லை ` கோயிலோ ` அழகாய சிற்றம்பலம் `, அங்கு அமர்ந்த பெருமானோ ` ஏரினாலமர்ந்தான் ` இவ்வழகிய கூத்தப் பெருமானது பேரழகில் திளைத்த எமது வாகீசப் பெருந்தகையார் , ` கச்சின் அழகு கண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே ,` ` சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டாற் பின்னைக் காண்பதென்னே ,` என்பன முதலாக அருளினமையும் காண்க . ( தி .4 ப .80 முழுவதும் .)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

வெற்ற ரையுழல் வார்துவர் ஆடைய வேடத் தாரவர் கள்உரை கொள்ளன்மின்
மற்ற வருல கின்னவ லம்மவை மாற்றகில்லார்
கற்ற வர்தொழு தேத்துசிற் றம்பலம் காத லால்கழற் சேவடி கைதொழ
உற்ற வர்உல கின்உறு திகொள வல்லவரே.

பொழிப்புரை :

ஆடையில்லாத அரையினராய்த் திரிவாராகிய சமணருரைகளையும் துவரூட்டிய ஆடையால் கொள்ளும் வேடத்தவராகிய தேரருரைகளையும் ஒரு பொருளுரையாகக் கொள்ளாதீர்கள் . அவர்கள் உலகத்து அவலங்களை மாற்ற வல்லாரல்லர் . சிவாகமங்களைக் கற்று நாற்பாதங்களையும் வல்ல சைவர் தொழுது ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைக் கண்ட ஆராத காதலால் , கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழ உற்றவரே உயிர்க்கு உலகினால் உள்ள உறுதி ( ஆன்ம லாபம் ) கொள்ள வல்லவராவர் .

குறிப்புரை :

வெற்றரையர் ( வெறு + அரையர் ) ஆடையணியாத இடுப்பினர் , சமணர் . துவர் ஆடையர் - மருதம் துவர் தோய்ந்த ( காவி ) ஆடையை யுடையவர் , புத்தர் . ( ஆகிய ) அவர்கள் உரை ( யைக் ) கொள்ளன் மின் - கேளாதீர்கள் . அவர் , உலகின் அவலம் - உலகிற் பிறந்திறந்து உழல்வதாகிய துன்பத்தை , மாற்றகில்லார் - போக்கும் வலியற்றவர் . ( ஆதலின் அவற்றை விடுத்து ) கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலத்தில் , காதலால் - அன்போடு , கழல்சேஅடி - கழலை யணிந்ததால் சிவந்த குஞ்சித பாதத்தை . கைதொழ உற்றவர் - கையால் தொழுதல் உறுவோர் , உலகின் உறுதி கொள வல்லார் - உலகில் மானிடப் பிறவியிற் பிறந்த பயனை அடைய வல்லவர் ஆவர் . அது ` மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம் ஆனிடத் தைந்தும் ஆடு அரன் பணிக்காகவன்றோ ` என்றது ( சித்தியார் . சுபக்கம் 92) ` ஆக்கையாற் பயனென் அரன்கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப்போற்றி யென்னாத இவ்வாக்கையால் பயனென் `. ( தி .4 ப .9 பா .8)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத் தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே.

பொழிப்புரை :

மணம் நாறும் பூஞ்சோலைகள் பொருந்திய சீகாழியுள் நான்கு மறைகளிலும் வல்ல திருஞானசம்பந்தர் ஊறும் இனிய தமிழால் சொன்னவையும் , வேத சிவாகமங்களை யுணர்ந்த அந்தணர் மூவாயிரவர் வாழும் தில்லையுள் மேன்மேல் ஏறும் தொன்மைப் புகழ் தாங்கும் திருச்சிற்றம்பலம் உடையானைப் பண்ணிசையால் சொன்னவையும் ஆகிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாடுமாறு வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர் . ( தி .3 ப .6 பா .11; தி .3 ப .31 பா .11; தி .3 ப .52 பா .11.)

குறிப்புரை :

நாறுபூம்பொழில் நண்ணிய காழி - மணக்கும் பூக்களையுடைய சோலை பொருந்திய காழியுள் ` ஞானசம்பந்தன் ` ஊறும் இன் தமிழால் - இனிமை ஊறும் தமிழால் , ஏறு தொல் புகழ் ஏந்து - பழமையான மிக்க புகழைத் தாங்கிய . சிற்றம்பலத்து ஈசனைச் சொன்ன இவை வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவர் - உயர்ந்த சிவனடியாரோடுங் கூடும் பேறு பெறுவர் . அடியாரொடு கூடி வணங்குவோர் உள்ளத்தில் இறைவன் உமாதேவியாரோடும் எழுந்தருள்வானாதலால் இங்ஙனம் கூறியருளினார் . ` அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் ` என்ற திருவாசகத்தும் காண்க . பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் உயர்ந்தார் உறை தில்லையுள் , புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை , ஊறும் இன்தமிழால் , இசையாற் சொன்ன இவை பத்து ( ம் ) கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவர் என்க . கோயில் முதல் திருப்பதிகத்தின் 8ஆம் பாடலில் இராவணனையும் 9ஆம் பாடலில் பிரம விட்டுணுக்களையும் குறிக்கவில்லை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

பந்து சேர்விர லாள்பவ ளத்துவர்
வாயி னாள்பனி மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

பந்து வந்தணைகின்ற விரல்களையும் , பவளம் போன்று சிவந்த வாயினையும் , குளிர்ந்த முழுமதி போன்ற முகத் தையும் , அளவற்ற புகழையுமுடையவளான மலைமகளாகிய உமா தேவியோடு எப்பொருள்கட்கும் முதல்வராக விளங்கும் சிவ பெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருப்பூந்தராய் ஆகும் . அங்குத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நிறைந்து , வலம் வந்து , மனத்தால் , நினைந்து , உடலால் , வணங்கி , சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர் . அத்தலத்தினை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

பந்துசேர் விரலாள் - பந்து பொருந்திய விரலை யுடையவள் . ` பந்தணை விரலியும் நீயும் ` ( திருவாசகம் திருப் பள்ளியெழுச்சி .8) ` பந்தணை விரலாள் பங்க ` ( வாழாப்பத்து 8) எனத் திருவாசகத்தில் வருதலும் காண்க . துவர் - செந்நிறம் , பவளத்துவர் வாயினாள் - பவளம்போலும் செந்நிறம் பொருந்திய வாயையுடையவள் . பனிமாமதி போன்முகத்து - குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனைப் போன்ற முகத்தையுடைய . அந்தம் இல்புகழாள் - அளவற்ற புகழையுடையவள் . விரலாளும் , வாயினாளும் ஆகிய அந்தமில்புகழாள் . அளவில் புகழையுடையவள் . உமாதேவி யாரோடும் . ஆதி - சிவனுக்கொருபெயர் ` ஆதியே ... அருளாயே ` ஆதிப்பிரான் - பெயரொட்டு . ` சத்தியும் சிவமுமாய தன்மை ... வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம் ` என்பதால் ( சித்தியார் சூ - ம் 1-69) அந்தமில் புகழாள் என்றனர் . வந்து , சேர்வு இடம் - சேர்தலையுடைய இடம் . புந்தி செய்து இறைஞ்சி - புந்தி மனம் , இறைஞ்சி - வணங்கி , மனம்கூடாத வழிச் செய்கை பயன் தாராது ஆகலாற் புந்திசெய்து இறைஞ்சியென்றனர் . ` செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாது ` ( மணிமேகலை . மலர் வனம்புக்ககாதை - 76-77.) எனப் பிறர் கூறுதலும் காண்க . வானவர் எத்திசையும் நிறைந்து வலஞ்செய்து இறைஞ்சி மாமலர்பொழி பூந்தராய் என்க . போற்றுதும் - வணங்குவோம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

காவி யங்கருங் கண்ணி னாள்கனித்
தொண்டை வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவி யம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள்
தேவி யும்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றி ரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவி லந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும் , கொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும் , ஒளிவீசுகின்ற முத்துப் போன்ற வெண்மையான பற்களையும் , இறகுகளையுடைய பெண் அன்னப்பறவை போன்ற நடையையும் , பின்னிய மென்மையான கூந்தலையும் உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ள இடம் , மரபுப்படி சீகாழிக்கு வழங்கப்படுகின்ற பன்னிரு பெயர்களுள் ஆறாவதாகக் கூறப்படுகின்ற திருப்பூந்தராய் . தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனை ஒத்த அந்தணர்கள் வசிக்கும் அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

காவி - நீலோற்பலம் , கனித்தொண்டை - தொண்டைக் கனி . கொவ்வைப்பழம் போன்ற வாய் , கதிர் - ஒளி , முத்தம்வெண் நகை - முத்துப் போன்ற வெள்ளிய பற்கள் , தூவியம்பெடை யன்னம் நடை - இறகுகளையுடைய பெண்ணன்னம்போலும் நடை இவற்றோடு சுரிமென் குழலாள் - சுரிந்த மெல்லிய கூந்தலையுடையவள் . ஆகிய தேவியும் திருமேனியோர் பாகமாய் ( ச் சேர்பதி ). ஒன்று இரண்டு ஒரு மூன்றொடு சேர்பதி (1+2+3=6) ஆறாவது திருப்பெயராகப் பொருந்திய பூந்தராயைப் போற்றுவோம் . சீகாழிக்குரிய திருப் பெயர்கள் பன்னிரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக இன்னமுறையாக வழங்க வேண்டும் என்னும் மரபு உண்டு . அம்முறையினால் ஆறாவ தாக வழங்கப்படுவது திருப்பூந்தராய் என்னும் திருப்பெயராம் . அம்முறையைப் பின்வரும் சான்றுகளால் அறிக . இம்முறையைப் பின்பற்றுக என இப்பாசுரத்தால் ஆணைதந்தனர் காழியர் பெருமான் . ` பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த்தோணி , புரமன்னு பூந்தராய் பொன்னஞ்சிரபுரம் புறவஞ்சண்பை , அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங்காதியாய பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம் நாம் பரவும் ஊரே `. ( தி .2. ப .70.) ` பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குருநீர்ப் , பொருவில் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன் , வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம் . பரவுதிருக்கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த் தால் ` ( தி .12 திருஞானசம் . புரா . பா .14). சேர்பதி என்ற தொடரினைத் தேவியும் திருமேனியோர் பாகமாய்ச் சேர்பதியெனவும் ஈரிடத்தும் இயைக்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

பைய ராவரும் அல்குன் மெல்லியல்
பஞ்சின் நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தைய லாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்
செய்யெ லாங்கழு நீர்கம லம்மலர்த்
தேற லூறலிற் சேறுல ராதநற்
பொய்யி லாமறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

பாம்பின் படம் போன்ற அல்குலையும் , பஞ்சு போன்ற மென்மையான அடியையும் , வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும் உடைய தையலாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்ட எங்கள் இறைவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் , செங்கழுநீர்ப் பூக்கள் , தாமரைப் பூக்கள் இவற்றிலிருந்து தேன் ஊறிப் பாய்தலால் ஏற்பட்ட சேறு உலராத வயல்களையும் , பொய்ம்மையிலாத அந்தணர்கள் வசிக்கும் சிறப்பையுமுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

பைஅராவரும் , வஞ்சிகொள் நுண்ணிடை - என்னும் தொடர்களிலுள்ள பைஅரா - படத்தையுடைய பாம்பு , வரும் கொள் - என்ற சொற்கள் உவம வாசகம் , பஞ்சின் ஏர்அடி - பஞ்சைப்போன்ற மெத்தென்ற அழகிய அடி , இன் என்ற உருபு உவமப்பொருளில் வந்ததனால் , பஞ்சின் நேர்அடி எனப் பிரிக்கலாகாமை யறிக , இன் தவிர் வழிவந்த சாரியையெனக் கொள்ளின் பஞ்சு ( இன் ) நேரடி எனப் பிரித்துப் பஞ்சையொத்த அடியெனக் கொள்ளலாம் . கழுநீர் - செங்கழுநீர் , தேறல் - தேன் , மலர்த்தேன் ஊறிப் பாய்ந்து கொண்டே யிருப்பதால் வயலிற் சேறுலராத நல்ல வளம்பொருந்திய பூந்தராய் என்றும் பொய்யிலா மறையோர்பயில் பூந்தராய் என்றும் இயைக்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்பு தேன்கொள் குரும்பைமூ வாமருந்
துள்ளி யன்றபைம் பொற்கல சத்தியல் ஒத்தமுலை
வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின்
மேவி னார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளி னந்துயின் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

தாமரைமொட்டு , கோங்கின் அரும்பு , ஊறும் தேனை உள்ளே கொண்ட இளநீர் , மூவாமருந்தாகிய அமிர்தத்தை உள்ளடக்கிய பசும்பொற்கலசம் இவற்றை ஒத்த திருமுலைகளை யுடைய உமாதேவியாரை , திருநீறு பூசப் பெற்றமையால் வெள்ளிமலை போல் விளங்கும் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் , பறவைகள் அமைதியாய்த் துயில்கின்ற , மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

முள்ளி - தாமரை , தாமரைத்தண்டிலுள்ள கேசரங்கள் முள்ளைப்போலக் காணப்படுவதால் முள்ளியெனப்பட்டது . ( முளரி - தாமரை ) காரணப்பெயர் . ( காரண இடுகுறிப்பெயரென்க ). முகை - காயரும்பு . மொட்டு - முற்றிய அரும்பு . மொட்டு இயல் கோங்கு - மொட்டாகப் பொருந்திய கோங்கு . கோங்கமொட்டு . அரும்பு தேன்கொள் குரும்பை - ஊறும் தேனைக்கொண்ட குரும்பை இல் பொருளுவமை . அரும்புதல் - இங்கு ஊறுதல் என்னும் பொருட்டு . இச்சொல் ` கவர்வரும்ப ` எனப் பிறபொருளில் வருதலும் காண்க . மூவாமருந்து - மூவாமைக்குக் காரணமான மருந்து . எதிர்மறைப் பெயரெச்சம் - ஏதுப்பொருள் கொண்டது . வீமருபொழில் - மலர்கள் பொருந்திய சோலைகளில் . புள்ளினம் துயில் மல்கிய - பறவைக் கூட்டங்கள் துயிலுதல் மிகுந்த ( பூந்தராய் ). தங்களுக்கு வேண்டிய உணவு முதலிய வகைகளெல்லாம் எளிதிற் கிடைத்தலால் கவலை யின்றித் துயிலுகின்றன . இதனால் தலத்தின் சிறப்புக் கூறியவாறு . தாமரையரும்பு , கோங்குமொட்டு , தேனூறுகுரும்பை , அமிர்தம்உள் இயன்ற செம்பொற் கலசம்போன்ற தனபாரம் என்பது பல்பொருள் உவமை ( தண்டியலங்காரம் 32-16).

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பண்ணி யன்றெழு மென்மொழி யாள்பகர்
கோதை யேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணி யன்றமொய்ம் பிற்பெரு மாற்கிடம் பெய்வளையார்
கண்ணி யன்றெழு காவிச் செழுங்கரு
நீல மல்கிய காமரு வாவிநற்
புண்ணி யருறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

பண்ணின் இசையோடு ஒலிக்கின்ற மென்மொழி யாளாய் , நிறைந்த கூந்தலையும் , பசுந்தளிர் போன்ற மேனியையு முடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம் , வளையல்களை அணிந்த பெண்களின் கண்களைப் போன்ற நீலோற்பல மலர்கள் நிறைந்த அழகிய குளங்களையுடையதும் , பசு புண்ணியங்கள் , பதி புண்ணியங்களைச் செய்கின்றவர்கள் வசிக்கின்ற பதியுமாகிய திருப் பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

பண்ணியன்று எழும் - பண்ணின் இசையொடு பொருந்தி வெளிப்படும் , மென்மொழியாள் - மெல்லிய மொழியை உடையவள் . பெண்டிர் மென்மொழியர் என்பதனை ` மென்மொழிமே வல ரின்னரம் புளர ` என்னும் திருமுருகாற்றுப்படை யாலும் அறிக . பகர் - ` ஞானப்பூங்கோதையாள் ` என்று சிறப்பித்துச் சொல்லப்படு கின்ற , கோதை - கூந்தலையும் , ஏர்திகழ் - அழகு விளங்குகின்ற . பைந்தளிர் மேனி - பசிய தளிர் போன்ற மேனியையுடையவளு மாகிய உமாதேவியார் , இயன்ற - கூடிய . மொய்ம்பின் தோளை யுடைய , இன்சாரியை . காவி , செழும் கருநீலம் செங்கழுநீரோடு கூடிய செழிய கரிய நீலோற்பலமலர் , ` காவியிருங் கருங்குவளை ` ( தி .1 ப .129 பா .1) என்றதும் காண்க . மல்கிய - மிகுந்த . காமரு - அழகிய . ( காமம்மருவு ) மரூஉ காமம் - வரு , என்ற தொடரின் மரூஉ எனக் கொண்டு விரும்பத்தக்க எனப் பொருள்கூறலும் ஆம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

வாணி லாமதி போல்நுத லாள்மட
மாழை யொண்க ணாள்வண்ட ரளந்நகை
பாணி லாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும்
சேணி லாத்திகழ் செஞ்சடை யெம்மண்ணல்
சேர்வ துசிக ரப்பெருங் கோயில்சூழ்
போணி லாநுழை யும்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையும் , மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையும் வளமான முத்துக்களைப் போன்ற பற்களையும் , பாட்டில் விளங்குகின்ற இனிய இசைபோன்ற மொழியினையும் உடைய பாவையாகிய உமாதேவி யோடு , வானில் விளங்கும் நிலவு திகழ்கின்ற சிவந்த சடையையுடைய எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடமாவது , உயர்ந்த சிகரத்தையுடைய பெருங் கோயிலைச் சூழ்ந்து பிறைச்சந்திரன் நுழையும் சோலைகளையுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

வாணிலா மதிபோல் நுதலாள் - ஒளிபொருந்திய நிலவினை வீசுகிற பிறைச்சந்திரனையொத்த நெற்றியை யுடைய வளும் , மடமாழை ஒண்க ( ண் ) ணாள் - மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையுடையவளும் , வண்தரளநகை - வளம்பொருந்திய முத்துப்போன்ற பற்களையும் , பாண்நிலாவிய - பாட்டின்கண் விளங்குகின்ற , இன்இசைஆர்மொழி - இனிய இசைபோன்ற மொழியையுமுடைய பாவை போன்றவள் , மதிநுதலாளும் , கண்ணினாளும் , பாவையுமாகிய அம்பிகைஎன இயையும் . சேண் - வானம் , வானத்தில் இயங்கும் நிலா - உருபும் பயனுந் தொக்க தொகை போழ் - பிளவு ; கூறிடுதல் . வட்டமான ஒருபொருளைச் சரிகூறிட்டால் பிறை - வடிவு தோன்றுதலின் , அதனைப் பிறைக்கு உவமை கூறுவர் . ` போழிளங்கண்ணியினானை ` என்ற அப்பர் வாக்கில் உவமையாகு பெயராய்ப் பிறையையுணர்த்தலும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

காரு லாவிய வார்குழ லாள்கயற்
கண்ணி னாள்புயற் காலொளி மின்னிடை
வாரு லாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய்
நீரு லாவிய சென்னி யன்மன்னி
நிகரும் நாமமுந் நான்கு நிகழ்பதி
போரு லாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

கார்மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலையும் , கயல்மீன் போன்ற கண்களையும் , மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற இடையையும் கச்சணிந்த மென்மை யான கொங்கைகளையும் உடைய மலைமகளான உமாதேவியோடு , கங்கையைத் தாங்கிய முடியையுடைய சிவபெருமான் நிலை பெற்றிருக்கும் பதி , பன்னிரு திருப்பெயர்கள் கொண்டு தனக்குத்தானே ஒப்பாக விளங்கும் பெருமை மிகுந்த , போர்க்கருவிகள் பொருத்தப்பட்ட மதில்கள் சூழ்ந்த , சோலைகள் நிறைந்த திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

கார் - மேகம் , உலாவிய - போன்ற ( உவம வாசகம் ) புயல்கால் மின் இடை - முகில் வெளிவிடும் மின்னல் போலும் இடை ` அல்வழியெல்லாம் உறழெனமொழிப ` என்ற தொல்காப்பிய ( எழுத்து . சூ - ம் 368) விதிப்படி புயல் + கால் = புயற்கால் என்றாயிற்று . நிகரும் - தமக்குத் தாமேயிணையான , நாமம் முந்நான்கும் - பன் னிரண்டு திருப்பெயர்களும் , நிகழ் - ( திருப்பிரமபுரம் , முதலாக ... திருக்கழுமலம் ஈறாக முறைப்படி ) வழங்கப்படுகிற . போர் - போர்ப் பொறிகள் . உலா - உலவுகின்ற . எயில் - மதில் . மதிலில் அமைக்கப்பட்ட பொறிகள் பகைவர் வருவரேல் அவர்களையழித்தற்கு அங்கு மிங்கும் திரிவனவாக இருக்கும் . போர்ப்பொறிகளைப் போர் என்றது காரிய ஆகுபெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

காசை சேர்குழ லாள்கயல் ஏர்தடங்
கண்ணி காம்பன தோள்கதிர் மென்முலைத்
தேசு சேர்மலை மாதம ருந்திரு மார்பகலத்
தீசன் மேவும் இருங்கயி லையெடுத்
தானை அன்றடர்த் தானிணைச் சேவடி
பூசை செய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

காயாம்பூப் போன்ற கருநிறமுடைய கூந்தலையும் , கயல்மீன் போன்ற அழகிய அகன்ற கண்களையும் , மூங்கில் போன்ற தோள்களையும் , கதிர்வீசும் மென்மை வாய்ந்த கொங்கைகளையும் , உடைய ஒளி பொருந்திய மலைமகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட அழகிய அகன்ற மார்பினையுடைய சிவ பெருமான் எழுந்தருளியுள்ளதும் பெரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுத்த இராவணனை அந்நாளில் அடர்த்த அச்சிவனின் சேவடிகள் இரண்டினையும் வழிபடுகிறவர்கள் வந்து சேர்கின்றதும் , ஆகிய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

காசை - காயாம்பூ ; நீலநிறமுடைமையால் இது குழலுக்கு உவமை கூறப்பட்டது . கயல்ஏர்தடங்கண்ணி - மீனைப்போன்ற அழகிய அகன்ற கண்களையுடையவள் . காம்பு அ ( ன் ) னதோள் கதிர்மென்முலை - மூங்கில் போன்ற தோளையும் கதிர்வீசும் மெல்லிய தனங்களின் ஒளியையுமுடைய . மலைமாது - இமைய அரையன் புதல்வியாகிய அம்பிகை . மார்பு அகலம் - இருபெயரொட்டுப் பண்புத் தொகை . அமரும் - தங்கும் . மார்பு அகலத்து ஈசன் மேவும் . இரும் - பெரிய .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

கொங்கு சேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்
கொவ்வை வாய்க்கொடி யேரிடை யாள்உமை
பங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனு மாமல ரோனும்
மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய கூந்தலையும் , ஒளி பொருந்திய வெண்ணிறப் பற்களையும் , கொவ்வைக்கனி போன்ற வாயினையும் , கொடி போன்ற அழகிய இடையையும் உடைய உமாதேவியைத் தன்னுடைய ஒரு பாகமாக வைத்துள்ள அழகிய மார்பினையுடையவராய் , கார்மேக வண்ணனான திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அடிமுடியறியாது மயங்கும்படி படர்கின்ற தீயுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமான் எழுந்தருளும் இடம் , வானம்வரை பொங்கிய ஊழி வெள்ளத்திலும் அழியாது மிதந்த நற்பதியான திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

கொங்கு - வாசனை . நிழல் - ஒளி . கொவ்வைவாய் - கொவ்வைக் கனி போன்றவாய் . கொவ்வை - முதலாகுபெயர் கொடிஏர் இடை - பூங்கொடிபோன்ற இடையுடையவளுமாகிய . உமைபங்குசேர் திருமார்புடையார் - உமாதேவியார் ஒரு பாகம் பொருந்திய சிறந்த மார்பையுடையவர் . படர்தீ - படருகின்ற தீ . மங்குல் - மேகம் . வான்மிசை - ஆகாயத்தின் இடம் வரை . வந்து பரவி - வந்து எழும்பிய . பொங்கும்நீரில் - பொங்கிய ஊழி வெள்ள நீரிலே . மிதந்த நற்பூந்தராய் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கலவ மாமயி லார்இய லாள்கரும்
பன்ன மென்மொழி யாள்கதிர் வாள்நுதற்
குலவு பூங்குழ லாள்உமை கூறனை வேறுரையால்
அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள்
ஆக்கி னான்றனை நண்ணலும் நல்கும்நற்
புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

தோகை மயில் போன்ற சாயலையுடையவளாய்க் , கரும்பு போன்று இனிய மொழியை மென்மையாகப் பேசுபவளும் , கதிர் வீசுகின்ற ஒளியுடைய நெற்றியுடையவளும் , வாசனை பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலையுடையவளுமான உமாதேவியை ஒரு பாகமாக வைத்தவர் சிவபெருமான் . கூறத்தகாத சொற்களால் பழித்துக் கூறும் புத்தர்களையும் , சமணர்களையும் பிறக்கும்படி செய்தவன் அவனே . அப்பெருமானை மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டால் சிவபோகத்தைத் தருவான் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் சிவஞானிகள் போற்றும் அழகிய பதியான திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக .

குறிப்புரை :

கலவம் - தோகை . மயில்ஆர் - மயில்போன்ற . இயலாள் - சாயலையுடையவள் . குலவு பூங்குழலாள் உமை - பூங் குழலையுடையவளாகிய குலாவும் உமை . கூறனை - உமாதேவியாரை ஒருபங்கு உடைய சிவபெருமானை , வேறு உரையால் - மாறுபட்ட சொற்களால் . அலவை - தகாத சொற்கள் . தேரமண் - தேரர் அமணர் களாகிய ( மரூஉ ) ஆதர் - பயனற்றவர்கள் . அலவை ... ஆக்கினான் - புத்தரும் சமணரும் ஆகிய பயனிலிகளை , அலவை சொல்லுவாராக ஆக்கினவன் . முன்வினைப் பயனாற் புறமதத்திற் பிறந்து அதன் பயனாகச் சிவபெருமானைப் பழித்துரைத்து மேலும் தீவினைக்கே முயல்கின்றனர் . அவ்வாறு அவர்கள் செய்வது கன்மவசத்தினால் ஆவதெனினும் அதுவும் சிவன் செயலே என்றுணர்த்துவார் , ` ஆக்கினான் ` என இறைவன் மேல் வைத்தோதினார் . ஆக்கினான் தனை நண்ணலும் நல்கும் ... பூந்தராய் - தன்னையடைந்த அளவில் சிவப்பேற்றை யளிக்கவல்ல ( பெருமை வாய்ந்த ) பூந்தராய் எனத் தலத்தின் பெருமை கூறினார் . கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல்களால் நிட்டை கூடுதலுறுவார் எய்தும் பேற்றை அளிக்கவல்லது இத்தலம் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

தேம்பல் நுண்ணிடை யாள்செழுஞ் சேலன
கண்ணி யோடண்ணல் சேர்விடம் தேன்அமர்
பூம்பொ ழில்திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும்என்
றோம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞான சம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
டாம்படி இவை ஏத்தவல் லார்க்குஅடை யாவினையே.

பொழிப்புரை :

மெலிந்த சிற்றிடையையும் , செழுமையான சேல்மீன் போன்ற கண்களையும் உடைய உமாதேவியோடு எங்கள் தலைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் , தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடன் விளங்குகின்ற அழகிய பதியான திருப்பூந்தராய் . அதனை வணங்குவோம் என்று அத்திருத்தலப் பெருமையைப் போற்றி வளர்க்கின்ற முத்தமிழ் , நான்மறை இரண்டிற்குமுரிய திருஞானசம்பந்தனின் சிவஞானம் ததும்பும் தமிழ்ப்பாமாலையாகிய இப்பதிகத்தினைத் தமக்குப் பயன்தர வேண்டி ஓதுபவர்களை வினைகள் வந்தடையா .

குறிப்புரை :

தேம்பு நுண்இடை - இளைத்தசிற்றிடை , ` தேம்பலஞ் சிற்றிடையீங்கிவள் ` எனத் திருக்கோவையாரில் வருதலுங்காண்க . ஓம்புதன்மையன் - அப்பதியின் பெருமையைப் பாதுகாக்கும் தன்மை யையுடையவன் . ஒண் தமிழ்மாலை - சிவஞானம் ததும்பும் தமிழ்ப் பாசுரங்களாலாய மாலையாகிய இப்பதிகம் . ஒண்மை - அறிவு : சிவ ஞானம் , ஆம்படி இவை ஏத்தவல்லார்க்கு அடையாவினையே - தமக்குப் பயனாகும் வண்ணம் பாசுரங்களாகிய இவற்றைக்கொண்டு துதிக்கவல்லவர்களுக்கு மேல்வரக் கடவனவும் எஞ்சியனவுமாகிய வினைகள் அடைய மாட்டா . வினை - பால் பகா அஃறிணைப் பெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

இயலிசை எனும்பொரு ளின்திறமாம்
புயல்அன மிடறுடைப் புண்ணியனே
கயல்அன வரிநெடுங் கண்ணியொடும்
அயல்உல கடிதொழ அமர்ந்தவனே

கலன்ஆவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலன்நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே.

பொழிப்புரை :

இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் இவற்றில் கூறப்படும் பொருளின் பயனாக விளங்குகின்ற , கார்மேகம் போன்ற கருநிறக் கண்டத்தையுடைய புண்ணிய மூர்த்தியே ! கயல்மீன் போன்ற நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு எல்லா உலகங்களும் தொழும்படி வீற்றிருப்பவனே ! உனக்கு அணிகலனாக அல்லது உண் கலனாக விளங்குவது மண்டையோடே ஆகும் . நல்ல மணமுடைய பூஞ்சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வீற்றிருந்து இந்நில வுலகத்தோர் நாடோறும் இன்புறும்படி நிறைந்த அபர ஞான , பர ஞானங்களை அடியேனுக்கு நீ அருளிச் செய்தாய் .

குறிப்புரை :

இயல் இசை எனும் பொருளின் திறமாம் புண்ணியனே - இயற்றமிழ் இசைத்தமிழ் ( நாடகத்தமிழ் ) என்னும் இவற்றில் கூறும் பொருளின் பயனாகிய புண்ணிய மூர்த்தியே . புயல் அனமிடறு உடைப் புண்ணியனே - முகில்போன்ற கரிய கழுத்தை உடைய புண்ணிய மூர்த்தியே . கலன் ஆவது வெண்டலை - உமக்கு அணிகலமாவது நகு வெள்தலையாம் . அத்தகைய அடிகளீரே ! நிலன் நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே - நில உலகத்தில் உள்ளார் நாடோறும் இன்பமடையும்படி நிறைந்த அபரஞான பரஞானங்களை அடியே னுக்கு அருளிச் செய்தவராவீர் . இயல் இசை எனவே உபலக்கணத்தால் நாடகத் தமிழும் கொள்ளப் படும் . ` கற்றல் கேட்டல் உடையார் ` என்புழிப்போல முத்தமிழ் நூல்களை யறிவதின் பயன் - சிவனே பதியென்றுணர்ந்து வீடுபேறு எய்தலாம் . அல்லாத வழி அந்நூல்களை யறிவதாற் பயன் இல்லை யென்பது கருத்து . இதனை ` மந்திபோல் திரிந்து ஆரியத் தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர் ` எனப் பிறிதோரிடத்து அருளிச் செய்தலையும் காண்க . கலனாவது வெள்தலை யென்பதற்கு உண் கலமாவது பிரமகபாலம் என உரைக்கினும் அமையும் . ` அமர்ந்தவனே ` விளி . அமர்ந்தவனே நிறைமதியருளினனே - அமர்ந்தவராகிய நீரே எனக்கு நிறைமதி யருளினீராவீர் . இடவழுவமைதி ; இவ்வாறு கூறுவதே பின்வரும் பாசுரங்களுக்கு ஒப்பக் கூறுவதாகும் . திருஞானசம்பந்தர் பெற்ற ஞானம் உலகம் இன்புறற் பயனை விளைத்தது . மதி - இங்கு அறிவின்மேல் நின்றது . இனி , அமர்ந்தவனே , நிறைமதி யருளினவனே என்பதற்கு அமர்ந்தவன் எவனோ அவனே எனக்கு நிறைமதி யருளினவனுமாவான் என்றுரைத்தலுமொன்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்றோல்
அலைவரு மதகரி யுரித்தவனே

இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.

பொழிப்புரை :

ஆரவாரித்துவரும் மதயானையின் வலிய தோலினை மலைமகளான உமாதேவி அஞ்சும்படி உரித்தவனே ! அழகிய சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வானவர்களும் வந்து உன்திருவடிகளைத் தொழும் பொருட்டு உமாதேவியோடு நிலையாக வீற்றிருக்கின்றாய் . எங்களால் நீக்குவதற்கரிய நிலைத்த துன்பங்களை நீ நீக்கும் வண்ணம் இலைகளையும் , மலர்களையும் கொண்டு உன் திருவடிகளை அர்ச்சித்து நாங்கள் வழிபடுவோம் .

குறிப்புரை :

இப்பாட்டிற்கு , மதகரியுரித்தவனே ... புகலி மன்னினை நிலையுறும் இடர் நிலையாதவண்ணம் இலையுறுமலர்கள் கொண்டு ( நின் ) உயர் திருவடியிணையை ஏத்துதும் யாம் - எனப் பொருள் கோள் கொள்க . நிலையுறும் இடர் - ( நீக்க முடியாமையால் ) நிலைத் துள்ள துன்பங்கள் . நிலையாத வண்ணம் - நிலையாதபடி . இலையுறும் மலர்கள்கொண்டு - பத்திர புட்பங்களால் . ஏத்துதும் - ( துதித்து ) வழி படுவோம் . மலையினில் அரிவையை வெருவ - இமயமலையில் ( அவ தரித்த ) உமாதேவியாரை அஞ்சுவிக்க . வல்தோல் - வலியதோலை யுடைய . மதகரி - மதங்கொண்ட யானை . வெருவ என்ற சொல்லில் பிறவினை விகுதி தொக்கது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே

நினையேஅடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருள்எமக்கே.

பொழிப்புரை :

ஒளி விளங்குகின்ற வளரும் தன்மையுடைய வெண்பிறையைச் சடைமுடியில் சூடிய நின்மலனே ! அரிய வேதங் களை இசையிலக்கண முறைப்படி , பாடியருளினாய் ! முனிவரும் அவர்களின் பத்தினிகளும் காணும்படி அரிய தாருகாவனத்தில் திருநடனம் ஆடினாய் ! மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தாய் ! முழுமுதற்கடவுளான உன்னை அடியார்கள் தொழும்படி நீண்டமதில்கள் சூழ்ந்த திருப்புகலிநகரில் வீற்றிருந்து அருளினாய் ! எங்கட்குத் தவநெறியினை அருள்வாயாக ! சுந்தரர் இறைவனிடம் ` தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே ` என்று வேண்டியது இங்கு நினைவு கூரத்தக்கது .

குறிப்புரை :

வரன்முறையால் - இசையிலக்கண முறைப்படி ; பாடினை அருமறை - அரிய வேதங்களைப் பாடியருளினீர் . அருவனத் தில் - அரியதாருகா வனத்தில் . காண - ( முனிவர் மகளிர் ) காணும்படி , ஆடினை - ஆடியருளினீர் . பெருமான் தானே வலியச்சென்று அருள்புரிந்த இடமாதலின் அதன் அருமைப்பாடு தோன்ற அருவனம் என்றார் . காண என்ற வினைக்கு வினை முதல் வருவித்து உரைக்கப் பட்டது . தக்கன் சாபத்தினால் உடல் குறைந்து அருகி இருந்த பிறை . இறைவனைச் சரணம் புகுந்து வளருந்தன்மை பெற்று அழியா திருந்ததனால் நீடு வெண்பிறை யெனப்பட்டது . நின்மலன் - இயல் பாகவே பாசங்களின் நீங்கியவன் - தன்னைச்சார்ந்த ஆன்மாக்களின் மலத்தை யொழிப்பவனென்றுமாம் . புகலிந்நகர் ; இசையினிமைப் பொருட்டு நகரம் மிக்கது . இடம்மேவினை - இடமாக விரும்பி யருளினீர் , நின் மலனே பாடினை , ஆடினை , சாடினை , மேவினை எமக்கு அருள் எனக் கூட்டுக . ஆடினை முதல் நான்கும் முன்னிலை வினையாலணையும் பெயர் ; அண்மை விளியாய் நின்றன . நினையே அடியார் தொழ என்ற தொடரில் , ஏகாரம் பிரிநிலை ` மற்றத் தெய்வங்கள் வேதனைப்படும் , இறக்கும் , பிறக்கும் , வினையும் செய்யும் , ஆதலால் இவை இலாதான் அறிந்தருள் செய்வனன்றே ` என்ற பிரமாணத்தால் . முன்னிலை வினைஎனலே நன்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே

முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே.

பொழிப்புரை :

ஒளிவிளங்கும் மழுப்படையை ஏந்தியவனே ! யானையின் தோலை நெருப்புப்போல் விளங்குகின்ற உனது சிவந்த திருமேனியில் அணிந்தவனே ! திருவடியில் விளங்கும் வீரக் கழல் களும் , சிலம்பும் ஒலிக்க , நல்ல முழவு முழங்கத் திருநடனம் புரிபவனே ! சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவனே ! அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புகலியில் அடியார்கள் உன்னைப் புகழ்ந்து வணங்கும் படி வீற்றிருந்தருளினாய் .

குறிப்புரை :

நிழல் திகழ் மழுவினை - ஒளிவிளங்குகின்ற மழுப் படை உடையீர் ! அழல் திகழ்மேனி - அக்கினியாய் விளங்குகின்ற உடம்பு . கழல்திகழ் , சிலம்பு ஒலி அலம்ப ... அரும் நடம் முயற் றினனே - வீரகண்டையின் ஒலியும் , விளங்குகின்ற சிலம்பின் ஒலியும் ( கலந்து ) ஆரவாரிக்க அரிய நடனம் புரிந்தருளிய பெருமானே . முருகு அமர்பொழில் - வாசனை பொருந்திய சோலை . அடியார் அவர் ஏத்துற - ` அவர் ` பகுதிப்பொருள் விகுதி . வணங்க உறு துணையாய் இருந்தவள் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

கருமையின் ஒளிர்கடல் நஞ்சம்உண்ட
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பரி தாயவனே

அரவேரிடை யாளொடும் அலைகடன் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே.

பொழிப்புரை :

பாற்கடலில் தோன்றிய கருநிற நஞ்சை உண்டு , உன் முழுமுதற் பண்பினை விளங்குமாறு செய்து உலகுயிர்களைப் பாதுகாத்தருளிய உன்னுடைய பெருமையை மண்ணுலகத்தோர் போற்றலாமே தவிர , மற்ற எவ்வித அளவைகளாலும் ஆராய்வதற்கு அரியவனாய் உள்ளவனே ! அரவம் அன்ன இடையுடைய உமாதேவி யோடு , அலைகளையுடைய கடல்வளம் பொருந்திய திருப்புகலி யிலே , இப்பூவுலகில் நாள்தோறும் அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி நீ வீற்றிருந் தருளுகின்றாய் .

குறிப்புரை :

கருமையின் ஒளிர் கடல் நஞ்சும் - கருமையினால் ஒளிர்கின்ற நஞ்சும் , கடலில் உண்டாகியநஞ்சும் . நஞ்சம் உண்ட உரிமையின் உலகுக்கு உயிர் அளித்து நின்றனன் . பெருமை ... ஆயவனே - நிலத்தவர் , பூமியிலுள்ளவர்கள் உன் பெருமையைப் பருப்பொருட்டாக ஒருவாறு பேசினாற் பேசலாமே தவிர , அருமை யான எவ்வித ஆராய்ச்சித் திறத்தினாலும் அளந்தறியப்படாதவனே . அருமையில் - சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது . அரவு ஏர் இடையாள் - பாம்புபோன்ற இடையையுடைய உமாதேவியார் . கடல்மலிபுகலி - கடல்வளம் நாடோறும் மிகுந்த திருப்புகலியின் கண் . புவிமிசைப் பொருள் சேர்தரப் பொலிந்தவனே - இப் பூமியின் கண் நாள்தோறும் அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி பொலிந்தவனே .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

அடையரி மாவொடு வேங்கையின்றோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே

விகிர்தாபரமா நின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.

பொழிப்புரை :

சிங்கத்தின் தோலைப் போர்த்து , புலியின் தோலையும் உடம்பில் பொருந்துமாறு இடையில் அணிந்துள்ளவனே ! படைக்கருவிகளைக் கொண்ட நீண்ட மதில்களையுடைய திரிபுரத்தின் வலிமையை அழித்தவனே ! இடபக் கொடியுடைய வேத நாயகனே ! விகிர்தனே ! எப்பொருட்கும் மேலானவனே ! விண்ணோர்களும் தொழத் திருப்புகலியிலே உமாதேவியோடு வீற்றிருந்து உன் திரு வடிகளை வணங்கும் அனைவர்க்கும் அருள்புரிகின்றாய் .

குறிப்புரை :

அரிமாவோடு - சிங்கத்தின் தோலோடு , வேங்கையின் தோல் புடைபட - பக்கம்பொருந்தும்படி , அரைமிசைப் புனைந்த வனே - இடுப்பில் அணிந்தருளியவரே . படையுடை நெடுமதில் - சேனைகளையுடைய நெடிய திரிபுரம் . பரிசு அழித்த - திறன்களைத் தொலைத்த . விகிர்தா - வேறுபட்டவனே . பரமா - மேலானவனே . நின்னை ... தாள் பணிந்தவர் தமக்கே - நும்மை விண்ணவர்தொழத் தாள் பணிந்தவர்களாகிய அவர்களுக்குப் புகலியின்கண் அம்பிகை சமேதராய்க் காட்சி கொடுக்கத்தக்கவராகி யிருப்பீர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகல்அல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே

புண்ணியா புனிதா புகர்ஏற்றினை புகலிந்நகர்
நண்ணினாய் கழல்ஏத்திட நண்ணகி லாவினையே.

பொழிப்புரை :

அடியவர்கள் தொழுதெழ , தேவர்கள் புகழ்ந்து வணங்க , அவர்களின் துன்பம்தரும் கொடியவினைகளைத் தீர்த் தருளும் எம் இறைவனே ! உடுக்கை போன்ற இடையையும் , அகன்ற அல்குலையும் , தூய மொழிகளையுமுடைய உமாதேவியைத் திருநீறு அணிந்த தன் திருமார்பில் தழுவியவனே ! புண்ணிய மூர்த்தியே ! புனிதனே ! இடபவாகனனே ! திருப்புகலிநகரில் வீற்றிருக்கும் பெரு மானே ! உன் திருவடிகளை வணங்கிப் போற்றுபவர்களை வினைகள் வந்தடையா .

குறிப்புரை :

செடிய - துன்பம் தருவனவாகிய ; வல்வினை - உயிர்க்கொலை . செய்ந்நன்றி மறத்தல் , சைவநிந்தனை முதலிய பெரும் பாவங்கள் . துடியிடை ... தூமொழி அன்மொழித்தொகை ; பன்மொழித் தொடர் . தூய்மையான மொழியையுடைய அம்பிகை . வினை நண்ணகிலா - கன்மங்கள் அடையமாட்டா . ஆகவே இருவினை யொப்பது , மலபரிபாகம் , சத்திநிபாதம் முறையே எய்திச் சிவப்பேறு அடைவர் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

இரவொடு பகலதாம் எம்மான்உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே

அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.

பொழிப்புரை :

இரவு , பகல் போன்ற கால தத்துவத்தை இயக்கும் எம்பெருமானே ! வழி வழி அடிமையாக வந்த நான் உன்னை நினைந்து வணங்கிப் போற்றுதலில் தவறேன் . குராமலர்களையும் , விரிந்த நறுமணமுடைய கொன்றை மலர்களையும் , பாம்பையும் சடைமுடியில் அணிந்து , எம்மை ஆண்டருளும் பெருமானே ! ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களையும் அடர்த்த நீ அன்னம் போன்ற மென்னடையுடைய உமாதேவியோடு திருப்புகலியில் எழுந்தருளியுள்ளாய் .

குறிப்புரை :

இரவொடுபகல் அது ஆம் எம்மான் . குரா - குராமலரும் , விரிநறும் கொன்றை - விரிந்த நறுமணமுடைய கொன்றை மலரும் . இனம் ஆர்தருதோள் - கூட்டமாகிய இருபது தோள்களையும் . குரா - குர என நின்றது . நடையில் அ ( ன் ) னம் மெல் நடையாளொடும் புகலியுள் இருந்தனையே என முடிக்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

உருகிட உவகைதந் துடலினுள்ளால்
பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனும் பூவுளானும்
பெருகிடும் அருள்எனப் பிறங்கெரியாய்

உயர்ந்தாய்இனி நீஎனை ஒண்மலரடி யிணைக்கீழ்
வயந்தாங் குறநல் கிடுமதிற் புகலிமனே.

பொழிப்புரை :

உள்ளமும் , உடலும் உருக உன்னைப் போற்றும் அடியவர்கட்குச் சிவானந்தம் அளிக்கும் அமுதம் போன்ற இனிமை வாய்ந்தவனே ! கடல் போன்ற நீலநிறமுடைய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் அடிமுடி காணாதபடி நெருப்பு மலை யாய் , உன்னுடைய பெருகும் அருளென உயர்ந்து நின்றாய் . மதில் களையுடைய திருப்புகலியில் வீற்றிருக்கும் இறைவனே ! நீ என்னை உன் ஒளி பொருந்திய திருவடியிணைக்கீழ் விரும்பி வீற்றிருக்கும்படி அருள்புரிவாயாக .

குறிப்புரை :

உருகிட உவகை தந்து உடலின் உள்ளால் பருகிடும் அமுது அ ( ன் ) ன பண்பினனே - என்பதனை ` அனைத்து எலும்பு உள்நெக ஆநந்தத் தேன்சொரியும் குனிப்புடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ ` என்ற திருவாசகத்தோடு ஒப்பிடுக . கடைசி இரண்டு அடிக்கும் , திருமாலும் பிரமனும் ( தம்முட் கொண்ட ) பெருகிய செருக்கு எவ்வளவு பெரியதாய் உயர்ந்திருந்ததோ அவ்வளவு பெரியதாகிய ஒளிப்பிழம்பாய் உயர்ந்தருளியவரே ! வயந்து - விரும்பி . மலரடியிணைக்கீழ் ஆங்குற . நல்கிடு - அருள்புரிவீராக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கையினில் உண்பவர் கணிகைநோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள்எனாத
மெய்யவர் அடிதொழ விரும்பினனே

வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.

பொழிப்புரை :

கையில் உணவேற்று உண்ணும் சமணர்களும் , கணபங்கவாதம் செய்யும் புத்தர்களும் தவமல்லாததைச் செய்யும் அற்பமதியினர் . உண்மைப்பொருளாம் இறைவனை உணராமல் வெறும் உலகியலறங்களை மட்டுமே பேசுகின்ற அவர்களுடைய உரைகளைப் பொருளெனக் கொள்ளாது , மெய்ப்பொருளாம் சிவனையுணர்ந்த ஞானிகள் வந்து திருவடிகளைத் தொழ , விரும்பி அருள் புரிபவனே ! வெண்ணிற எருதினை வாகனமாகக் கொண்டாய் . விண்ணவர்களும் தொழ , திருப்புகலியில் உயர்ந்த அழகிய பெருங் கோயிலினுள் உமாதேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கின்றாய் .

குறிப்புரை :

கணிகை நோன்பர் - போலியான நோன்பு நோற்பவர் . செய்வன தவமலாச் செதுமதியர் - செய்வன அனைத்தும் தவம் அல்லாததாகப் பெற்ற அற்ப மதியையுடையவர்கள் ; பொருள் என்னாத - உண்மையென்று கொள்ளாத ; ` இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் ` என்ற திருக்குறளில் பொருள் - உண்மை யென்னும் பொருளில் வருதல் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவர் அடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்

நடலையவை இன்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.

பொழிப்புரை :

சிவபுண்ணியர்கள் வணங்குகின்ற திருப்புகலிப் பதியில் , விண்ணவர்களும் தன் திருவடிகளைத் தொழும்படி விளங்கும் சிவபெருமானை , மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்று படப் போற்றிய திருஞானசம்பந்தனின் அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள் எவ்வித இடர்களுமின்றித் தவநெறியில் நின்று , பிறவித் துன்பத்தினின்றும் நீங்கிச் சிவனுலகம் அடைவர் .

குறிப்புரை :

நடலையவை - பிறவித் துன்பங்கள் ( அவை - பகுதிப் பொருள் விகுதி ) மேல் வைப்பு ஆகிய இரண்டிற்கும் - அருந் தமிழ் பத்தும் வல்லார்பக்குவராயின் சிவனுலகம் நண்ணுவர் ; அபக்கு வராயின் தவநெறி யெய்துவர் . அதன் பயனாகச் சிவனுலகமும் நண்ணுவர் என அடிமாற்றியுரைப்பினுமாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

திருப்பாற்கடலில் , அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும் , இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும் , தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும் , உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

இடரினும் - துன்பத்திலும் ; தளரினும் - தளர்ச்சியிலும் ; நோய் தொடரினும் - வினைத் தொடர்ச்சியிலும் , உனகழல் தொழுது எழுவேன் - உம்முடைய திருவடிகளைத் தொழுது எழுவேன் . இங்குத் தளர்ந்தாலும் , நோய் தொடர்ந்தாலும் - எனக்கூறின் இடர் என்பதோடு ஒத்து , தளர், தொடர் என்பன முதனிலைத் தொழிற்பெயராய் நின்றன .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும் , பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும் , தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும் , நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும் , வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும் , உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக ) எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

வீழினும் உனகழல் விடுவேன் அலேன் என்பது - ` வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நானறியேன் மறுமாற்றம் ` தாழ் - தங்குகின்ற ; ` வெள்ளம் தாழ்விரிசடையாய் ` என்ற திரு வாசகத்திலும் இப்பொருளில் வருகிறது . தடம் புனல் - பரவிய புனல் . போழ் இளமதி - இங்கு இத்திருமுறை இரண்டாம் பதிகம் - 6 ஆம் பாசுரத்தில் உரைத்தது கொள்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கங்கையையும் , நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும் , கனவிலும் , மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ ? திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில் , அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

மூன்றாம் அடிக்குப் புனலையும் விரிந்த நறுமண முடைய கொன்றைப் பூவையும் அணிந்த என்க . கனல் எரி அனல் புல்கு கையவனே - சுடுகின்ற பற்றி யெரிவதான நெருப்புத் தங்கிய திருக்கரங்களையுடையவனே .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல் , அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

தும்மல் - அடிக்கடி தும்முவதாகிய ஒரு நோய் . ` தும்மல் இருமல் தொடர்ந்த போதினும் ` ( தி .3. ப .22. பா .6.) என்பதிலும் காண்க . ` கணை ஒன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே ` என்பதில் அம்பு ஒன்று ; எரிந்த மதில் மூன்று என ஓர் நயம் வந்தவாறு . ` ஈரம்புகண்டிலம் ஏகம்பர்தம் கையில் ஒர் அம்பே முப்புரம் உந்தீபற ` என்ற திருவாசகத்திலும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும் , மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே ! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும் , பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும் , உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல் , வேறெதனையும் நான் சிந்தை செய்யேன் . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

கையது - கையிலுள்ள பொருள் . கொய் அணி நறுமலர் குலாயசென்னி - கொய்யப்பட்ட அழகிய நறிய மலர்கள் விளங்கும் தலை . மையணிமிடறு - கருமை பொருந்திய கழுத்து .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி , நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே ! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும் , எம் தந்தையே ! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது . அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ . ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

ஓர் வெருவு உறினும் - ஓர் அச்சம் உண்டானாலும் . வெருவு - வெருவுதல் ; முதனிலைத் தொழிற்பெயர் . வெரு - முதனிலை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை , அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும் , அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

ஒப்புடை ஒருவனை - அழகில் தனக்குத் தானே யொப் பாகிய மன்மதனை . அப்படி அழல் எழ விழித்தவனே என்ற தொடரில் அப்படியென்ற சொல் - வியப்புப்பொருள் தந்தது . ` அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல ` ( கோளறு திருப்பதிகம் ) என்புழிப் போல .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை . இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

இராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே - பொறுத்தற்கரிய துன்பமுறும்படி கைலை மலையின்கீழ் அடர்த் தருளியவரே . ஆரிடர் - அருமை + இடர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

திருமாலும் , மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நான் உண்ணும் நிலையிலும் , பசியால் களைத்திருக்கும் நிலையிலும் , உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது . அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

உண்ணினும் பசிப்பினும் நின்மலர் அடி அலால் உரையாது என்நா - ` நலம் தீங்கினும் உன்னை மறந்தறியேன் ` என்பதனை நினைவுறுத்துகிறது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொழிப்புரை :

புத்தரும் , சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே ! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும் , தலைவா ! உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது . திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

குறிப்புரை :

பித்து - பித்தம் . புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கருள் செய்து பயின்றவனே - இவ்வடிகளில் வரும் உரைக்க என்னும் செய என் எச்சம் , காரண , காரிய , உடனிகழ்ச்சி யல்லாத பொருளின் கண்வந்தது ` வாவி தொறும் செங்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்ட ` என்புழிப்போல .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

பொழிப்புரை :

அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர் . துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார் .

குறிப்புரை :

இலைநுனி வேற்படை - இலைபோன்ற நுனியை யுடைய திரிசூலம் ; ` இலைமலிந்த மூவிலைய சூலத்தினானை ` என்புழியும் ( திருமுறை 7) காண்க . ` விலையுடை அருந்தமிழ்மாலை ` இப்பதிகம் . தந்தையார் பொருட்டுப் பொன்பெறுவது . ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் எனப்பாடினமையால் இங்ஙனம் விலையுடை யருந்தமிழ்மாலை எனப்பட்டது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன் தானே.

பொழிப்புரை :

சிவனை மதியாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனாகிய , திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய மிகுந்த சிறப்புடைய , இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின் பெருமையுடைய திருவடிகளைச் சிந்தியுங்கள் . அனைத்துயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற , அனைவராலும் விரும்பப்படுகின்ற அச் சிவபெருமானே நமக்கு வீடுபேற்றினைத் தருவான் .

குறிப்புரை :

தக்கன் வேள்வி தகர்த்தவனாகிய பூந்தராய் நிமலனது பெருமை பொருந்திய திருவடிகளை என முதலிரண்டடிக்குக் கூட்டி யுரைக்க . மிக்க செம்மை - மேலான வீட்டு நெறியை அருளும் . விமலன் - அமலன் . தன்னைச்சார்ந்த உயிர்களின் மலத்தை யொழிப்பவன் என் றும் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் என்றும் பொருள் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி
மூலம் ஆய முதலவன் தானே.

பொழிப்புரை :

பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய திருப் பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத் தாங்கி யுள்ள விகிர்தனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுதலே இந்நிலவுலகில் உயர்வடைவதை விரும்புபவர்கள் சிந்திக்கும் நன்னெறியாகும் . ஏனென்றால் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் அச்சிவபெருமானே ஆவான் .

குறிப்புரை :

புள்ளினம் புகழ்போற்றிய பூந்தராய் - அடியார்கள் பூந்தராயைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டலைக் கேட்டிருந்த கிளி , பூவை முதலிய பறவையினங்களும் புகழைப் போற்றுவன ஆயின . ` தெள்ளுவாய்மைத் திருப்பதிகங்கள் பைங்கிள்ளை பாடுவ கேட்பன பூவையே `

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

வேந்த ராய்உல காள விருப்புறின்
பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி உள்கிடச்
சாதி யாவினை யான தானே.

பொழிப்புரை :

நீங்கள் மன்னராகி உலகாள விரும்பினால் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பொன்னார் திருவடிகளை வழிபடுங்கள் . மேலும் அத்திருவடிகளை விதிமுறைப்படி நினைந்து , போற்றித் தியானித்தால் வினைகள் தம் தொழிலைச் செய்யா . எனவே பிறவி நீங்கும் . வீடுபேறு உண்டாகும் .

குறிப்புரை :

மாந்தரீர் நீங்கள் அரசராகி உலகை ஆளவிரும்பினால் அதனைப் பூந்தராய் நகர் மேவியவன் பொன்னார் திருவடியே தரும் . பின்னும் அத்திருவடியை ஆசான் உணர்த்திய முறைப்படி நினைந்து துதிப்பின் நிட்டை கூட வினையாயினவை தம் தொழிலைச்செய்யா . ஆகவே பிறவியறும் : வீடு பேறு உண்டாம் : என்பதே வைப்பு அடிகளின் பொருள் . நினைந்தேத்தல் - ` மனத்தொடு வாய்மை மொழிதல் ` என்புழிப் போலக்கொள்க . ஆன - சொல்லுருபு . தான் , ஏ ; இரண்டும் ஈற்றசை . மேல் வைப்பு முதலடியில் உள்கிட என்பதற்குச் செயப்படு பொருள் - பொற்கழல் . இங்ஙனம் இருவாக்கியங்களாகக் கொள்ளாத இடத்து வினை முடிவு காண்டல் அரிது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்இ றையே.

பொழிப்புரை :

இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் செம்மை வாய்ந்த திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச் சந்திரனை அணிந்த நீண்ட சடைகளையுடைய இறைவன் நம் மனக்கவலைகளைப் போக்கி அருள்புரிவான் . ` தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ` ( குறள் - 7) என்ற வள்ளுவர் வாக்கு இங்கு நினைவு கூர்தற்குரியது .

குறிப்புரை :

பூந்தராய் மேவிய ஈசன் மலரடிகளை யேத்தி வணங்கச் சந்திரனை யணிந்த நெடிய சடையை யுடையவனாகிய அவ்விறைவன் மனக்கவலைகள் மாற அருள்புரிவன் . நோயவை என்பதில் அவை பகுதிப்பொருள் விகுதி . நல்கிடும் - அருள் புரிவான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல்வினையோட வீடுசெய்
எந்தை யாயஎம் மீசன் தானே.

பொழிப்புரை :

எலும்பு மாலைகளைத் தன் திருமேனியில் அணிந்து திருப்பூந்தராய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை , நிறைந்த உள்ளத்தோடு வணங்கிட , நம் அனைவர்க்கும் தந்தையாகிய அவ்விறைவன் , நீங்கள் முன்பு ஈட்டிய சஞ்சிதவினையைப் போக்கு தலோடு , இனிமேல் வரும் ஆகாமிய வினையும் ஏறாதபடி செய்து வீடுபேறு அருளுவான் . தத்தம் கால எல்லைகளில் நீங்கிய திருமால் , பிரமன் இவர்களின் எலும்புகளைச் சிவபெருமான் மாலையாக அணிந் துள்ளது சிவனின் அநாதி நித்தத்தன்மையையும் , யாவருக்கும் முதல்வனாம் தன்மையையும் உணர்த்தும் .

குறிப்புரை :

புந்தி - மனம் . மலிந்த புந்தியராதல் - உளன் பெருங் களன் செய்தல் . நுந்தம் - உங்கள் . மேல் - காலப்பொருளில் , முற் பிறப்புக்களில் ஈட்டிய எஞ்சிய சஞ்சித வினையையும் ; இடப் பொருளில் , இனி ஈட்டும் வினையாகிய ஆகாமிய வினையையும் குறிக்கும் . வினையோட வீடுசெய் எந்தை ..... ஈசன்தானே - சிவ பெருமான் ஒருவனே நமக்கு உற்ற துணையாவன் என அவாய்நிலை வருவிக்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே.

பொழிப்புரை :

திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள் சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை எந்நாளும் போற்றி வணங்க , குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற நீண்ட சடை முடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும் பேரின்பம் அருளுவான் .

குறிப்புரை :

நளிர்புனல் பில்குவார் சடைப்பிஞ்ஞகன் - குளிர்ந்த கங்கை நீர் சொட்டும் நெடிய சடையில் மயிற்பீலியை யணிந்தவனாகிய சிவபெருமான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றிவாழும் பரமனைப் பாடிடப்
பாவம் ஆயின தீரப் பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன் தானே.

பொழிப்புரை :

புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து , திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள , அனைவருக்கும் மேலான கடவுளான சிவபெருமானைப் பாடி வணங்க , விடையேறும் செல்வனான அவன் , நாம் மனம் , வாக்கு , காயத்தால் செய்த பாவங்களனைத்தையும் தீர்த்தருளுவான் .

குறிப்புரை :

சே அது ஏறிய செல்வன் - விடையேறிய சிவ பெருமான் . பரமனைப்பாட - பரமனாகிய தன்னை நாம்பாட . பாவமாயின தீரப்பணித்திடும் - நம்மைப் பற்றியிருக்கும் பாவங் களானவை பற்று விட்டொழிய ஆணைதருவான் ; அது பகுதிப் பொருள் விகுதி . பரமன் - ` யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடை யான் ` ( திருவாசகம் ). தீர்தல் - பற்றுவிடல் . தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டாகும் . ( தொல் . சொல் . 318 )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்றஎம் பிஞ்ஞ கனே.

பொழிப்புரை :

யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள எனது பிஞ்ஞகனாகிய சிவபெருமானே தனது திருவடி விரல் ஒன்றினால் அரக்கனது ஆற்றலை அழித்துப் பின்னர் அவனுக்கு அருள் செய்தான் .

குறிப்புரை :

போதகம் - யானை . பூந்தராய் காதலித்தான் - திருப் பூந்தராயை இருப்பிடமாக விரும்பினவன் . அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கே மீள அருளும் பெருக்கி நின்ற கடவுளே பூந்தராய் காதலித்தவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

மத்தம் ஆன இருவர் மருவொணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந் தானே.

பொழிப்புரை :

தாமே தலைவர் என்று செருக்குக் கொண்ட திரு மாலும் , பிரமனும் , அறிந்து அடைய முடியாது உயர்ந்து விளங்கிய சிவ பெருமான் எழுந்தருளிய திருப்பூந்தராய் என்னும் தலத்தை அவனுக்கு ஆட்படும்படி அடியவராய்ச் சென்று சேர்ந்து மேல் நிலையை அடை யுங்கள் . அவன் தானே வந்து உங்கள் வினைகள் அழியுமாறு அருள் புரிவான் .

குறிப்புரை :

மத்தம் - மயக்கம் ; செருக்கு . இருவர் - தொகைக் குறிப்பு . நீங்கள் ஆள் ( அது ) ஆக அடையுங்கள் . அவன்தானே வந்து உம்மைத் தலையளித்து உம்வினை மாளுமாறு அருள்செய்யும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

பொருத்த மில்சமண் சாக்கியப் பொய்கடிந்
திருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி யெம்இ றையே.

பொழிப்புரை :

வேத நெறிகட்குப் பொருந்தாத சமணர் , புத்தர் களின் பொய்யுரைகளை ஒதுக்கி , விண்ணோர்கள் வணங்கும்படி வீற்றிருக்கும் கடவுள் , திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக் கொண்டு தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே ஆவான் .

குறிப்புரை :

பொருத்தம் இல் சமண் சாக்கியப் பொய்கடிந்து - அளவை நூலுக்குப் பொருத்தமில்லாத சமணநூலும் சாக்கியநூலும் சொல்லும் பொருளை நீக்கி . இமையோர் தொழ இருத்தல் செய்த பிரான் - இமையோர் தொழ இருந்தபிரான் . கைமான்மறி ஏந்தும் எம் இறை - அவனே கையில் மான்மறியேந்தும் எம் இறை . கைஏந்தும் மான் மறி எந்தை - இலாத வெண் கோவணத்தான் என்பதுபோல நின்றது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

புந்தி யான்மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல்எம் அடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழும்நும்
பந்த மார்வினை பாறி டுமே.

பொழிப்புரை :

உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள , என்றும் அழிதலில்லாத எம் தலைவனான சிவபெருமானைத் திருஞான சம்பந்தன் அருளிச் செய்த இப்பதிகப் பாமாலையைக் கொண்டு போற்றி வாழுங்கள் . உங்களைப் பந்தித்து நின்ற வினைகள் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

எம் அடிகளை ஞானசம்பந்தன் மாலைகொண்டேத்தி வாழுங்கள் . அதனால் ஒளிபுக்க இடத்தில் இருள் தானாக நீங்குதல் போல நம்மைப் பந்தித்து நின்ற பழவினைகள் மாறிவிடும் . அந்தம்இல் அடிகள் - முடிவில்லாத எம்கடவுள் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

நல்லமணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தில் திருநடனமாடும் இறைவனைத் தியானிப்பதால் , இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத்தானே தள்ளப் படுவதாக . எம் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய சிவபெரு மானே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வணங்க அருள்புரிவா யாக .

குறிப்புரை :

கொட்டம் - வாசனை . நம்பனை உள்க , செல்ல , உந்துக . சிவபெருமானை நாங்கள் தியானிப்பதனால் அதன்பயனாக இந்த ஓடமானது ஆற்றைக்கடந்து செல்லத் தனக்குத்தானே தள்ளப் படுவதாக . ஆண்டவனே ! அகமும் உம்மைத் தொழுது கொண்டி ருக்கும் . அகத்திலும் அன்றிப் புறத்திலும் கண்டு தொழுவ தற்கு அருள் புரிய வேண்டும் . அவ்வருள் புரிவதற்கு முன் இவ்வோடம் வந்தணை யும்படியாகத் திருவருள் புரியவேண்டும் என விரும்பினார் . சிந்தையார் , சிந்திக்கும் அடியார் எனலும் ஆம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

கோட்ட கக்கழ னிக்கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

நீர்நிலைகளும் , வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம் பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற நம்பனைத் தியானிக்க , இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

கோட்டகம் - வயலின் புறத்தே நீர்தேங்கி நிற்கும் இடம் . கொள்ளம் பூதூரைச் சேர்ந்த நாடு - கொள்ளம் பூதூர் நாடு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

குலைகளோடு கூடிய தென்னை மரங்கள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் , விலை கொடுத்து வாங்கிய பொருளைப் போன்ற அருமையுடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

குலையின் ஆர்தெங்கு - குலையினால் நிறைந்த தென்னை . விலையில் ஆட்கொண்ட விகிர்தன் - விலைகொடுத்துப் பெற்ற பொருளைப் போல் என்னை ஆட்கொண்டருளியவன் . அதாவது ` இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை யென்னின் அல்லால் விருந்தினனேனை விடுதி கண்டாய் ` ( திருவாசகம் 122) என்றபடியாம் . ஆகவே ` நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே ` என்றபடி தன்வயமிழந்து கூறினபடியாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

குவளை கண்மல ருங்கொள்ளம் பூதூர்த்
தவள நீறணி தலைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

பெண்களின் கண்களைப் போன்று குவளை மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் . புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

குவளைகள் , கண்களைப்போல மலரும் - கொள்ளம் பூதூரில் வெண்மையான நீறுபூசிய தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

கொன்றை பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

கொன்றை மரங்கள் மஞ்சள் நிறமான மலர்களை யுதிர்ப்பது பொன்சொரிவது போற் காணப்படுகின்றது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

திருநடனம் செய்யும் தலைவனான சிவபெரு மானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப் படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

பதிகம் முற்றுப்பெறு முன்னமே ஓடம் கொள்ளம் பூதூரையடைந்து விட்டதாதலால் ` ஓடம் வந்தணையும் கொள்ளம் பூதூர் ` என்று அருளினார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

ஆறுவந்தணையும் கொள்ளம் பூதூர் என்று பாடப் பட்டது . இவ்வாறே மயிலாப்பூரில் அங்கம் பூம்பாவையானபோது பதிகம் முற்றுப் பெறுமுன்னமே பூம்பாவை வெளிப்பட்டமையையும் அறிக . ( பெரியபுராணம் .)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

குரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்
அரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளி யிருக்கின்றவனும் , இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான ஆதிமுதல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

குரக்கினம் - குரங்குக் கூட்டம் . சிலப்பதிகாரம் போன்ற தொடர் . நிலைமொழி மெல்லெழுத்து வல்லெழுத்தாயிற்று . செற்ற - கோபித்த . ஆதிமுதல்வன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

பருவ ரால்உக ளுங்கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

பருத்த வரால்மீன்கள் துள்ளுகின்ற திருக் கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற , திருமாலும் , பிரமனும் காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

பருவரால் - பருத்த வரால் மீன்கள் . உகளும் - துள்ளும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

நீர கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த்
தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

நீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக் கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய் , புத்தர்களும் , சமணர் களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

நீர் அகம் - நீரைத்தன்னிடத்தே உடைய . நீரகக்கழனி என்றதால் கொள்ளம் பூதூரின் நீர் வளம் , நில வளம் இரண்டையும் புலப்படுத்தினார் . தேர் அமண் - தேரரும் அமணரும் , தேரர் - சாக்கியர் , அமணர் - சமணர் உம்மைத்தொகை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்
என்றும் வானவ ரோடிருப் பாரே.

பொழிப்புரை :

கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புக ழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர் .

குறிப்புரை :

நன்று காழி - புண்ணியம் பொருந்திய காழி . ஞான சம்பந்தன் இன்று சொன்ன பாடல்களைக் கொண்டு , இன்னும் பிற்பட்ட பல்லாயிர ஆண்டுகளிற் கூறுவாரேனும் , என்றென்றைக்கும் தமக்கு வந்த ஆபத்தினின்றும் நீங்கி வானவரோடு இருப்பார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப்
பெண்ணினல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணையுடையவனும் , திருவெண் ணீற்றினைப் பூசியுள்ளவனும் , திருவடிகளில் கழல்கள் ஒலிக்கப் பண்ணுடன் இசைபாட நடனம் ஆடுபவனும் ஆகி , மேலான சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள் , சிவபுண்ணியர்களாகிய , நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள் துதிக்கின்ற திருப்புகலி நகரில் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான் .

குறிப்புரை :

திருப்புகலியுள் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவி யோடும் வீற்றிருந்தருளும் பெருமானே நெற்றிக் கண்ணையுடைய வனும் , வெண்ணீற்றவனும் , பண்ணிசை பாட நின்று ஆடியவனும் பரஞ்சோதியும் ஆவான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப்
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்க்
காம்பன தோளியொ டும்மிருந் தகட வுளன்றே.

பொழிப்புரை :

மகாசங்கார காலத்தில் சாம்பலோடு நெருப்பில் ஆடியவனும் , சடைமுடியில் பாம்போடு சந்திரனைச் சூடியுள்ளவனும் , இடபவாகனத்தில் ஏறியுள்ளவனுமான சிவபெருமான் , மலர்ப் பொய்கையில் இள வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற திருப்புகலி நகரில் , மூங்கில் போன்ற தோளுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுளே ஆவான் .

குறிப்புரை :

பூம்படுகல் - மலர்ப்பொய்கையில் . படுகர் :- போலி . காம்பு - மூங்கில் , தோளியொடும் இருந்த கடவுள் - தோளியோடும் புகலிநகர் இருந்த பெருமானே சாம்பலோடு நெருப்பிலாடினவனும் , சடையில் பாம்போடு சந்திரனைச் சூடினவனும் , பகடு ஏறினவனும் ஆவான் . மகாசங்காரகாலத்தில் உலகமெல்லாம் நெருப்புமயமாய் இருக்கும்பொழுது அந்நெருப்பின் நடுநின்று ஆடினான் சிவபெரு மான் என்பது புராண வரலாறு . விடையைப் பசு என்றது சாதி பற்றி . ` பசு ஏறும் எங்கள் பரமன் ` என இரண்டாந் திருமுறையில் வருதலுங் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும்
மருப்புநல் லானையி னீருரி போர்த்தம ணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
விருப்பினல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.

பொழிப்புரை :

நல்ல நீண்ட கரும்பு வில்லையுடைய மன்மதன் எரியும்படி நெற்றிக் கண்ணால் விழித்தவனும் , அழகிய தந்தத்தை யுடைய யானையின் வலிய தோலினை உரித்துப் போர்த்திக் கொண்ட மணாளனுமாகிய சிவபெருமான் , மலைகள் போன்று உயர்ந்து விளங்கும் அழகிய மாடங்களையுடைய திருப்புகலி நகரில் தன்மீது விருப்பமுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனே யாவான் .

குறிப்புரை :

கருப்பு நல்வார் சிலைக்காமன் - நல்ல நெடிய கரும்பு வில்லையுடைய மன்மதன் . கடைக்கண்டானும் - கடைக் கண்ணினால் பார்த்தவனும் . மருப்பு - தந்தம் . மணாளன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர் . ` நித்த மணாளர் நிரம்ப அழகியர் ` ( திருவாசகம் - அன்னைப் பத்து ) காமனைக் கடைக்கண் விழித்து எரித்தவரும் , யானைத் தோலைப் போர்த்தவரும் , தம்மீது விருப்பினையுடைய உமாதேவி யாரோடு திருப்புகலியுள் எழுந்தருளிய பெருமானே யாவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

அங்கையி லங்கழ லேந்தினா னும்அழ காகவே
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடைப்
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.

பொழிப்புரை :

உள்ளங்கையில் நெருப்பை ஏந்தியவனும் , அழகுறக் கங்கையைச் செஞ்சடையில் சூடியவனும் , திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவனும் , திருப்புகலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாவான் .

குறிப்புரை :

உள்ளங்கையில் அழல் ஏந்தினவனும் , கங்கையைச் சடையிற் சூடியவனும் , கடலில்வந்த நஞ்சையுண்டவனும் திருப்புகலியுள் எழுந்தருளிய பெருமானே . அங்கையில் அங்கு அழல் ஏந்தினானும் என்ற தொடரில் அங்கு அசைநிலை . ` போர்த்தாய் அங்கோர் ஆனையின் ஈருரி தோல் ` செந்நிறச்சடையில் வெண்ணிறக் கங்கையைக் கடவுள் சூடினது ஓர் அழகைத் தருகிறது என்பார் அழகாகவே கங்கையைச் செஞ்சடைச் சூடினான் என்றார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும்
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழு நாதனும்
பூமல்கு தண்பொழின் மன்னுமந் தண்புக லிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.

பொழிப்புரை :

நல்ல சாமவேதத்தை அருளியவனும் , சிவனை நினையாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனும் , நூறாயிரம் திருநாமங்களைச் சொல்லித் தேவர்களும் அருச்சித்து வணங்கும் தலைவனும் , பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் நிலைபெற்றி ருக்கும் அழகும் , குளிர்ச்சியுமுடைய திருப்புகலி நகரில் அழகிய இளம் பெண்ணாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் அழகிய சிவ பெருமானேயாவான் .

குறிப்புரை :

சாமவேதம் பாடினவனும் , தக்கன் வேள்வியை அழித்தவனும் , லட்சம்பெயர் சொல்லித் தேவர் அருச்சித்துப் பூசிக்கும் தலைவனும் , ( கோமளமாது ) இளம்பெண்ணாகிய உமாதேவியோடுங் கூடித் திருப்புகலியில் எழுந்தருளியிருப்பவனேயாவான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

இரவிடை யொள்ளெரி யாடினா னும்இமை யோர்தொழச்
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும்
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந் தவழ கனன்றே.

பொழிப்புரை :

மகாசங்காரம் என்று சொல்லப்படும் நள்ளிரவில் ஒளிமிக்க நெருப்பில் ஆடியவனும் , தேவர்கள் தொழுது வேண்டப் போர் முகத்தில் முப்புரங்களைத் தீப்பற்றி எரியும்படி செய்த சிவலோக நாதனும் , இடபவாகனத்தில் உகந்து ஏறியவனும் , திருப்புகலி நகரில் பாம்பு போன்ற இடையினையுடைய உமாதேவியோடு வீற்றிருந் தருளும் அழகிய சிவபெருமானேயாவான் .

குறிப்புரை :

மகா சங்கார காலம் ` இரவு ` எனப்பட்டது , சூரிய சந்திரர் , உடுக்கள் இவையெல்லாம் அழிந்துபட்டமையின் . இப்பதிகம் 2 - ஆம் பாடலைப்பார்க்க . மகா சங்கார காலத்தில் நெருப்பில் ஆடினவனும் , தேவர்கள் தொழுது வேண்டப் போர்முகத்தில் முப்புரத்தைத் தீயால் எரியச் செய்தவனும் , விடையை விரும்பி ஏறினவனும் , திருப்புகலியின் கண்ணே , பாம்பு போலும் இடையை யுடைய உமாதேவியோடும் எழுந்தருளினவனும் இவனேயாவன் . அப்பர் பெருமான் திருவாக்கில் வருதலும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.

பொழிப்புரை :

திண்ணிய கயிலை மலையை விரும்பி இருப்பிட மாகக் கொண்டவனும் , பாலனான மார்க்கண்டேயர் மீது சினம் கொண்டு வந்த கொடுங்காலனைக் காலால் உதைத்தவனும் , வேள்விப் புகையால் மூடப்பட்ட அழகிய மாடங்கள் ஓங்கும் திருப்புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருள்பவனும் எல்லோருக்கும் மேலானவ னான சிவபெருமானேயாவான் .

குறிப்புரை :

சேருமிடம் திண்ணிய கைலை மலையாகத் தங்கின வனும் , மார்க்கண்டர்மீது கோபித்தலைச் செய்து வந்த கொடிய யமனை உதைத்தவனும் , திருப்புகலியில் மலையரையன் மகளோடும் எழுந் தருளிய பெருமானும் ஆவான் . சேர்ப்பது என்ற சொல்லில் ` அது ` பகுதிப்பொருள் விகுதி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர்
அன்னமன் னந்நடை மங்கையொ டும்அமர்ந் தானன்றே.

பொழிப்புரை :

கல் போன்று திண்ணிய நெடிய பெரிய திருக்கயிலை மலையின் கீழ் அரக்கனான இராவணனை இடர் செய்தானும் , வில்லேந்திப் போர்புரியும் வீரமுடைய வேட்டுவ வடிவில் வந்து அர்ச்சுனனுக்கு ஒரு பொன்மயமான பாசுபதம் என்ற அம்பைக் கொடுத்தவனும் , அழகிய குளிர்ச்சியான திருப்புகலி நகரில் அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்து அருளுபவ னான சிவபெருமானேயாவான் .

குறிப்புரை :

கல்லைப்போலும் திண்ணிய நெடிய பெரிய வெள்ளி மலையின்கீழ் இராவணன் துன்பம் கண்டு அருளியவனும் ; வேடனாகி விசயனுக்குப் பொன்மயமான பாசுபதமென்னும் அம்பைக் கொடுத்த வனும் , திருப்புகலியுள் அன்னம் அனைய நடையையுடைய உமா தேவியாரோடும் வீற்றிருந்தருளிய பெருமானும் அவனே ஆவான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்
தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும்
புன்னைபொன் றாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.

பொழிப்புரை :

பொன்னிறப் பிரமனும் , பச்சைநிறத் திருமாலும் என்ற இவர்கள் அடிமுடி காணப் புகுந்தபோது தன்னை இன்னா னெனக் காண்பதற்கியலாதபடி அழற்பிழம்பாய் நின்ற பெருமான் , புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்க அழகிய , குளிர்ச்சியான திருப்புகலி நகரில் மின்னல் போன்ற இடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனாகிய சிவபெருமானே யாவான் .

குறிப்புரை :

பிரமனும் திருமாலும் இன்னானென்று தன்னைக் கண்டறியாதபடி தழல் சோதியானவனும் , மின்னல் போன்ற இடையையுடைய உமாதேவியாரோடும் திருப்புகலியுள் எழுந் தருளிய பெருமானும் இவனேயாவன் . ` எண்ணுங்காலும் அது அதன் பண்பே ` யென்ற தொல் காப்பியப்படி பொன்னிற ( நான்முக ) ன் - பச்சையன் என்று சொல்லப் பட்டனர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையோ டும்மிருந் தமண வாளனே.

பொழிப்புரை :

அசோக மரத்தையும் , அரசமரத்தையும் போற்றும் சமணர்கள் , புத்தர்கள் சொல்லும் உரைகளைப் போற்றாது ஒப்பற்ற தொண்டர்கள் பக்தியுடன் வழிபாடு செய்கின்ற சோதிச் சுடராய் ஒளிரும் இறைவன் தாமரைகள் மலரும் பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலி நகரில் வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியோடு எழுந்தருளியுள்ள மணவாளனான சிவபெருமானே யாவான் .

குறிப்புரை :

பிண்டி - அசோகமரம் ; தங்கள் கடவுள் அதனடியில் இருப்பானென்று அதனைப் போற்றுவர் . போதி - அரசமரம் . தங்கள் தலைமகன் அதனடியில் இருந்து ஞானம்வரப் பெற்றானென்று புத்தர் அதனைப் போற்றுவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

பூங்கமழ் கோதையோ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய வாதியா கவிசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வது முண்மையே.

பொழிப்புரை :

பூ மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட திருப்புகலி நகர் இறைவனை , ஞான சம்பந்தன் சொன்ன தமிழ்ப்பாக்கள் பத்தினைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவமாகவே கொண்டு இன்னிசையுடன் ஓதித் துதிக்க வல்லவர்கள் பெருமையுடைய தேவலோகத்தாரும் தொழும்படி சிவனுலகம் செல்வர் என்பது உண்மையே ஆகும் .

குறிப்புரை :

ஆங்கு - திருப்புகலியுள் . ஆங்கு - அவ்விதமாக என்றுமாம் . உமாதேவியாரோடும் . அமர்வு எய்திய - எழுந்தருளிய , ஆதியாக - சிவம் ஆக . ஞானசம்பந்தன் சொன்ன பத்தும் ஓதி இவற்றை அந்தச் சிவமாகவே கொண்டு இசையாற் போற்றவல்லவர் அமராவதி யோர் தொழச் செல்வர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
உடையுடை யானுமை யார்ந்த வொண்கண் உமைகேள்வனும்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

சடை முடியுடையவனும் , பசுவிலிருந்து பெறப்படும் நெய் முதலான ஐந்து பொருள்களால் திருமுழுக்காட்டப் படுபவனும் , சரிந்த கோவண ஆடையுடையவனும் , மை தீட்டிய ஒளி பொருந்திய கண்ணையுடைய உமாதேவியின் கணவனும் , வாயில் களையுடைய நெடிதோங்கிய நல்ல மாடங்களை உடைய திருக் கடவூரில் இடபவாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனோ ?

குறிப்புரை :

சடையையுடையவன் . மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வன் - மைதீட்டிய கண்களையுடைய உமை கணவனும் , கடை - வாயில் . கடவூரில் விடையுடையவனும் வீரட்டானத் தானல்லனோ ? வீர + அட்ட + தானம் = வீரட்டானம் , மரூஉ . சிவபெருமான் வீரத்தைக் காட்டிய எட்டு இடம் - அவை ` பூமன் சிரங்கண்டியந்தகன் கோவல் புரமதிகை ` என்னும் பாடலால் அறிக . வீரஸ்தாநம் எனலுமாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவே
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

நெருப்புப் போன்று சிவந்த நீண்ட சடைமுடி உடையவனும் , வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும் , சிறந்த கொன்றை மலர்களாலான மாலையைப் புனைந்து ஏத்தி மார்க்கண்டேயன் வழிபட , அவனுயிரைக் கவர வந்த கருநிறக் காலனைக் காலால் உதைத்தவனுமாகிய இறைவன் திருக்கடவூரில் மேன்மேலும் பெருகுகின்ற பழம்புகழுடைய திருவீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ?

குறிப்புரை :

எரிதருவார் சடையானும் - நெருப்புப் போன்ற செந்நிறம் பொருந்திய நெடிய சடையையுடையவனும் . எருது ஏறி - எருது ஏறினவன் . கரிதருகாலன் - கரிய நிறத்தையுடைய இயமன் ; சிவனடியார்க்குத் தீமை செய்பவனுக்கு இந்தக் கதிதான் என்று கரி ( சாட்சி ) யானவன் எனலுமாம் . கடவூர் - இயமனை வீட்டிய வீரஸ் தானம் ஆகையால் காலனைச் சாடினானும் என வரலாறு குறித்தது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

நாதனும் நள்ளிரு ளாடினா னும்நளிர் போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியும்
காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

எல்லா உலகங்கட்கும் தலைவனும் , மகாசங்கார காலத்தில் நடனம் புரிபவனும் , அடியவர்களின் இதயத்தாமரையில் வீற்றிருப்பவனும் , புலித்தோலாடை உடையவனும் , இடபவாகனனும் , அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு பவனுமான இறைவன் யாவரும் வணங்குமாறு வேதத்தை அருளிச் செய்த வீரட்டானத்து அரன் அல்லனோ ?

குறிப்புரை :

நளிர்போதின் கண் பாதனும் - அடியார்களின் குளிர்ந்த தாமரை ( இருதய ) மலரின்கண் தங்கும் திருவடியையுடையவனும் , காதலர் - அன்பர்கள் வசிக்கும் . தண் - குளிச்சி பொருந்திய , கடவூரினானும் - திருக் கடவூரில் எழுந்தருளியிருப்பவனும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன்
முழவொலி யாழ்குழன் மொந்தைகொட் டமுது காட்டிடைக்
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள்
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

மழுப்படையேந்திய செல்வனும் , குற்றமில்லாத பல பூதகணங்கள் முரசு ஒலிக்க , யாழும் குழலும் இசைக்க , மொந்தை என்னும் வாத்தியம் கொட்ட , சுடுகாட்டில் கழல் ஒலிக்கத் தன் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் பெருமான் திருக்கடவூரில் திருவிழாக்களின் ஒலி நிறைந்த வீரட்டானத்து அரன் அல்லனோ ?

குறிப்புரை :

மழு அமர் செல்வனும் - மழுவை விரும்பி ( யேந்தி ) ய செல்வனும் , மொந்தை - ஒருவகை வாத்தியம் . முழவொலி யாழ் குழல் மொந்தை கொட்ட - முழவொலியும் யாழ் ஒலியும் குழல் ஒலியும் ஆகிய இவற்றோடு மொந்தை கொட்ட , குழல் ஒலி என்னுந் தொடரி லுள்ள ஒலி யென்ற சொல்லை , யாழ் , குழல் என்பவற்றோடும் கூட்டுக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர்
படமணி நாகம ரைக்கசைத் தபர மேட்டியும்
கடமணி மாவுரித் தோலினா னுங்கட வூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

சுடர்விடும் மணிபோன்ற உருத்திராக்கம் அணிந் துள்ளவனும் , வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள வனும் , அசைகின்ற படமுடைய பாம்பை இடையில் கச்சாக அணிந்துள்ள கடவுளும் , மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும் , திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ? விடமணி கண்டன் - ` நீலமணி மிடற்று ஒருவன் போல ` ( ஔவையார் , புறநானூறு . ) நினைவுகூர்க .

குறிப்புரை :

சுடர்மணி - ஒளிர்கின்ற உருத்திராக்க மணி . சுழல்வு ஆயது ஓர் படம் மணிநாகம் அரைக்கு அசைத்த - மண்டலம் இடுகிறதாகிய ஒரு பாம்பை இடுப்பிற் கட்டிய . கடம் அணி - மா மதத்தையுடைய அழகிய யானை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும் , நடனம் ஆடுபவனும் , பலவூர்களுக்கும் சென்று மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும் , நெற்றிக் கண்ணை உடையவனும் , வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையிலணிந்துள்ளவனும் , திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூரிலுள்ள வீரட் டானத்து அரன் அல்லனோ ?

குறிப்புரை :

உழல்வான் - சுற்றித்திரிவான் . கண்பொலி நெற்றி வெண் திங்களான் - கண் விளங்குகின்ற நெற்றியின்மீது வெள்ளிய சந்திரனை அணிந்தவன் . வெண்பொடி பூசி - வெண்மையான திருநீற்றைப் பூசியவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனும்
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள்
வெவ்வழல் ஏந்துகை வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

செந்நிற நெருப்பாகவும் , நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியும் , ஆகவனீயம் , காருகபத்தியம் , தட்சிணாக்கினி என்ற மூவகை நெருப்பாய்த் திகழ்பவனும் , இருக்கு , யசுர் , சாமம் , அதர்வணம் என நான்கு வேதங்களாய் விளங்குபவனும் , ஞானநூல்களை ஓதல் , ஓதுவித்தல் , கேட்டல் , கேட்பித்தல் , சிந்தித்தல் என்ற ஞானவேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணைவனாய் விளங்குபவனும் , கவ்வுகின்ற நெருப்பைப் போன்று விடத்தைக் கக்குகின்ற வாயையுடைய சினமிகுந்த பாம்பை அணிந்தவனும் , வெப்பமுடைய நெருப்பை ஏந்திய கரத்தை உடையவனும் , திருக் கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ ?

குறிப்புரை :

சிவமூர்த்தி - மங்களகரமான திருவுருவுடையவன் . முத்தழல் , ஆகவனீயம் ; காருபத்தியம் ; தட்சிணாக்கினியென்பன . ஐந்தும் ஆய - ஐவகை வேள்வியுமாகிய . ` ஐவகை வேள்வியமைத்து ` என வருவது காண்க . ( திருவெழுகூற்றிருக்கை .) முனிகேள்வன் - முனிவரிடத்து நண்பு பூண்டவன் . கேள்வன் - நண்பன் . கேண்மையென்னும் பண்படியாகப் பிறந்தபெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

அடியிரண் டோருடம் பைஞ்ஞான்கி ருபது தோள்தச
முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதன் மூர்த்தியும்
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள்
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

ஓர் உடம்பில் இரண்டு கால்களும் , இருபது தோள்களும் , பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான இராவணனின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும் , முடை நாற்றமுடைய பிரமனின் மண்டையோட்டை ஏந்தியுள்ளவனும் , திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளி யுள்ள அரன் அல்லனோ ?

குறிப்புரை :

ஐந்நான்கிருபது தோள் - ஐந்நான்காகிய இருபது தோள் . தசம் - பத்து . மூர்க்கு - மூர்க்கத்தன்மை . வெடி - முடைநாற்றம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் தேத்தவே
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள்
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துப் பெருமழையிலிருந்து ஆக்களையும் , ஆயர்களையும் காத்த திருமாலும் , குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவனே முழுமுதற்பொருள் என உணர்ந்து துதிக்க , பக்கங்களில் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக் காக்கின்றவன் , திருக்கடவூரில் மணங்கமழ் பூஞ்சோலைகளுடைய வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ?

குறிப்புரை :

வரை - கோவர்த்தன மலை . மழை தாங்கினான் - கண்ணனாகிவந்த திருமால் . புரைகடிந்து - குற்றம்நீங்கி . நான் முகத்தான் - நான்முகத்தானும் என்க . உம்மை விகாரத் தால் தொக்ககது . புரிந்து - விரும்பி . கரை - எல்லை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

தேரரும் மாசுகொள் மேனியா ரும்தெளி யாததோர்
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான்
காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

புத்தர்களும் , அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் தெளிந்தறிதற்கரிய சொல்லும் , பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான் , கார்காலத்தில் மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும் , வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடி யுள்ளவனும் , வீரக்கழல்களை அணிந்துள்ளவனும் ஆகிய , திருக்கட வூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ ?

குறிப்புரை :

தேரர் - புத்தர் . மாசுகொள் மேனியர் - அழுக்குடைய உடம்பையுடைய சமணர் . குளித்தால் நீரில் உள்ள சிறு உயிர்கள் இறந்து விடுமேயென்று நீராடாமையால் மாசுகொள் மேனியர் ஆவர் . ஆர் அரும் சொல் பொருளாகி நின்ற - நிறைந்த அரிய சொல்லும் பொருளுமாகி நின்ற . கார் இளங் கொன்றை - கார் காலத்தில் மலரக் கூடிய இளம் கொன்றை , அன்றலர்ந்த கொன்றைப்பூ . கொன்றை வெண் டிங்களானும் - கொன்றைமாலையோடணிந்த வெள்ளிய சந்திரனை யுடையவனும் , வீரமும் சேர் கழல் - அதுவே பின் கருணையும் செய்தது என்னும் பொருள் தரலால் எதிரது தழுவிய எச்சவும்மை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை
அந்தணர் தங்கட வூருளா னைஅணி காழியான்
சந்தமெல் லாம்அடிச் சாத்தவல் லமறை ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.

பொழிப்புரை :

விதிப்படி அமைக்கப்பட்ட திருவெண்ணீற்றினை அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய் , அந்தணர்கள் வழிபாடு செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை , அழகிய சீகாழியில் அவதரித்த வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும் அன்பர்களின் பாவம் கெடும் .

குறிப்புரை :

சந்தம் எல்லாம் அடிச்சாத்தவல்ல - அழகிய சந்தப் பாடல்களையெல்லாம் திருவடிக்குச் சாத்தவல்ல ( ஞானசம்பந்தன் ) சந்தம் - பண்பாகு பெயர் . வெந்த - விதிப்படி செய்யப்பட்ட கற்பநீறு . அந்தணர் - மாதவக்கலயர் முதலோர் . அகரம் ஆறனுருபு பன்மை . ஆடப் பாவம் கெடும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

கேள்வியர் நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா
வேள்விசெ யந்தணர் வேதியர் வீழி மிழலையார்
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட் கணியரே.

பொழிப்புரை :

கேள்வி ஞானம் உடையவர்களும் , நாள்தோறும் நல்ல வேதத்தை ஓதுபவர்களும் , கெடுதலில்லாத யாகத்தைச் செய்கின்ற , எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுடையவர்களுமான அந்த ணர்கள் , போற்றுகின்ற வேதநாயகர் திருவீழிமிழலையில் வீற்றிருந் தருளும் சிவபெருமானேயாவார் . அவர் ஆருயிர்கட்கெல்லாம் வினைப்பயனுக்கேற்பப் பிறப்பும் , இறப்பும் செய்வார் . கடலாழம் கண்டறியவரப்படாதது போல அவருடைய தன்மை பிறரால் அறிதற்கு அரியது . தம்முடைய திருவடிகளைப் போற்றி வணங்கும் அன்பர்கட்கு நெருக்கமானவர் .

குறிப்புரை :

கேள்வியர் - பலநூல்களைக் கேட்டறிந்தவர்கள் . நாள் தொறும் ஓதும் நல்வேதத்தர் - நாள்தோறும் நல்ல வேதத்தை ஓதுபவர்கள் . கேடு இலா வேள்விசெய் அந்தணர் - கெடுதல் இல்லாத யாகத்தைச் செய்கின்ற அழகிய கருணையையுடையவர்களாகிய வேதியர் . மறையோர் வாழும் வீழிமிழலையார் - திருவீழிமிழலையுள் எழுந்தருளியவராகிய சிவபெருமான் . உயிர்கட்கு எல்லாம் தோற்றமும் கேடும் வைப்பார் - உயிர்களுக்கு உடம்போடு கூடிப் பிறத்தலையும் , அழித்தலையும் வைத்தவர் உலகத்திற்குச் சிருட்டி கர்த்தரும் சங்கார கர்த்தரும் ஆவர் எனவே - இரட்ச கர்த்தரும் - சிவபெருமான் ஒருவரே யென்க . ` படைப்போற் படைக்கும் பழை யோன் படைத்தவை , காப்போற்காக்கும் கடவுள் காத்தவை , கரப் போன் ` எனவரும் சுருதி வாக்கியங்களால் அறிக . ( திருவாசகம் ) கேள்வியர் முதல் வேதியர் ஈறாக உள்ளவை திருவீழிமிழலை அந்தணர்களையம் வீழிமிழலையார் என்பது முதல் வருவன சிவபெருமானையும் குறிப்பனவாம் . ஆழியர் - ( ஆழங்காண முடியாத ) கடல் போன்றவராயிருந்தாலும் தம் அடிபோற்றி என்பார்க்கு - தமது திருவடியைப் போற்றியென்று சரண்புகும் அன்பர்களுக்கு . அணியர் - மிக அணியராகிக் காட்சி கொடுப்பர் . கேள்வியர் எனவே , சிந்தித்து , தெளிந்து , நிட்டை உடையவர் என உபலக்கணத்தாற் கொள்ளலும் ஆம் . முதலீரடிகளில் திருவீழிமிலை அந்தணர்களைப்பற்றிக் கூறப்படுகிறது . தில்லை மூவாயிரம் திருவீழிமிழலை ஆயிரம் என்பது பழமொழியாகலின் நாள்தோறும் ஓதுநல் வேதத்தர் என எடுத்துக் கூறுகின்றார் . இச் சிறப்பை ` பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே `. எனத் திருஞானசம்பந்தப் பெருமான் கூறுதலும் காண்க . அந்தணர் என்ற சொல்லுக்கே திருவள்ளுவர் ` எவ்வுயிர்க்கும் செந்தண்மை ( சீவகாருணியம் ) பூண்டு ஒழுகுபவர் ` என்று பொருள் காண்கின்றார் . வேத அந்தத்தை யணவுவார் என நச்சினார்க்கினியர் கூறுவர் . இங்கு இச்சொல் காரண இடுகுறியாகாது காரணக்குறியாய் நின்றது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

கல்லினற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழி மிழலையார்
நல்லினத் தார்செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.

பொழிப்புரை :

இறைவர் மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . பக்தியோடு துதிக்கும் மென்மையான இனத்தாராகிய அந்தணர்கள் விரும்பிப் போற்றுகின்ற வீழிமிழலை யில் விளங்குபவர் . சிவனை நினையாது செய்த தக்கனது யாகத்தை அழித்தவர் . அந்த யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களைத் தகர்த் தவர் . தம்மைத் தொழும் அடியவர்களின் பாவத்தைப் போக்குபவர் .

குறிப்புரை :

அடியார் பாவநாசர் - அடியார் செய்த பாவத்தைத் தொலைப்பவர் . கல்லின் நற்பாவை ஓர் பாகத்தர் - இமயமலை மகளாகிய உமாதேவியாரை யொருபாகத்தில் வைத்தவர் . மெல்லி னத்து நல் இனத்தார் செய்த வேள்வி - நல்லினத்தாரென்றது இகழ்ச்சிக்குறிப்பு . எழும் - ஓடுவதற்கு எழுந்த . ஞாயிற்றின் பல்லனைத்தும் - சூரியன் பல் முழுவதையும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.

பொழிப்புரை :

இறைவர் நஞ்சுண்டதால் இருள் போன்ற கறுத்த கண்டத்தையுடையவர் . கடுங்கோபம் கொண்டு அந்தகாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற மூவிலைச் சூலப்படையையுடையவர் . திருவீழி மிழலையில் வீற்றிருந்தருளுபவர் . மைதீட்டிய கண்களையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . கங்கையால் அபிடேகம் செய்யப்பட்ட சிவந்த சடைமுடியையுடையவர் . அத்தகைய சிவபெருமானைத் தொழும் அடியவர்களின் கொடு வினை யாவும் அழியும் .

குறிப்புரை :

நஞ்சினை உண்டு இருள் கண்டத்தர் - செய்து என்னும் வினையெச்சம் பிறவினை கொண்டது . ` வினையெஞ்சுகிளவியும் வேறுபல் குறிய ` என்னும் தொல்காப்பிய விதிப்படி ( சொல் ) அமைந்தது . கங்கை மஞ்சனம் ஆடிய செஞ்சடையார் எனக்கூட்டுக . கங்கையால் அபிடேகம்கொண்ட செந்நிறமான சடையை யுடையவர் . அங்கு - அசை . வல்வினைமாயும் - கொடிய பாவங்கள் நீங்கும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.

பொழிப்புரை :

மான் , மழுப்படை , யோகதண்டம் , உருத்திராக்கம் , குண்டலம் முதலியன கொண்டு , விலைமதிப்புடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் இறைவர் வீற்றிருந்தருளுகின்றார் . தலையிலே பிறைச் சந்திரன் திகழ , கழுத்திலே எலும்புமாலை விளங்க , கையில் சூலம் , உடுக்கை கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று இடபக்கொடி கொண்டு விளங்கு பவர் . யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்ற உருவம் ( சாரூப பதவி ) பெறச் செய்வார் . ( ஒத்த தோழர்கள் ஒன்று போல் அலங்கரித்துக் கொள்வது போல ).

குறிப்புரை :

கலை - மான் , இலங்கும் மழு - ஒளிரும் மழு ஆயுதம் . கட்டங்கம் - யோகதண்டம் . கண்டிகை - உருத்திராட்சக் கண்டிகை ; தலை தாழ்வடம் . தமருகம் - உடுக்கை . அலை இலங்குபுனல் - அலையினால் விளங்குகின்ற கங்கை . ஏற்றவர் - இடபக்கொடி யுடையவர் . இத் திருப்பாசுரத்தில் சிவபெருமான் தன் அடியவர்களில் ஒருசார் பக்குவமுடையோர்க்கும் சாரூப்பியபதவி அளிக்குந்திறன் கூறப்படுகிறது . மேற்கூறியவை சிவபிராற்கு உரிய அடையாளங்கள் . கட்டு அங்கம் - எலும்புமாலை . விலை யேறப்பெற்ற இரத்தினங்கள் பதித்த மாடங்களால் நிறைந்த திருவீழிமிழலையிலெழுந்தருளியிருப்பவரும் இடபக் கொடியையுடையவருமாகிய சிவபிரானுக்கு உரிய மான் , மழு யோக தண்டம் , உருத்திராக்கக்கண்டிகை , குண்டலம் , தலைமாலை , எலும் பாலாகிய தாழ்வடம் , ஆலம் , உடுக்கை , கங்கை ஆகிய இவை அவன் அடியார்க்கும் உண்டு . சிவசின்னங்களாகிய இவைகள் சாரூப் பியருக்கும் உண்டு . தலையிலங்கும் பிறை என்பதற்குத் தலையில் விளங்கும் பிறை எனக்கொள்க . அதனால் அனையவற்றிற்கும் கையிலிலங்கும் மான் , மழு , கட்டங்கம் , சூலம் , தமருகம் , கழுத்திலி லங்கும் கண்டிகை , தாழ்வடம் , காதிலிலங்கும் குண்டலம் , தலையிலி லங்கும் புனல் எனக்கூறலுமாம் . இனி , நகுவெண்டலை என்பதற்குக் கையிலேந்திய கபாலம் எனவும் கொள்ளலாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார்
முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் றொண்டர்கள்
இறையுறை வாஞ்சிய மல்லதெப் போதுமென் னுள்ளமே.

பொழிப்புரை :

திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் பிறைச் சந்திரனைச் சூடிய சிவந்த சடைமுடியையுடையவர் . இடபத்தை வாகன மாக உடையவர் . பிச்சையெடுத்தலை விரும்பும் நாள்களில் பலி யேற்றுத் திரிவார் . தொண்டர்கள் பண்முறைப்படி இசைபாடி அதற் கேற்ப ஆட முற்பட அவர்களின் இதயத் தாமரையில் வீற்றிருப்பார் . அவரையல்லாது எனது உள்ளம் வேறெதையும் நினையாது .

குறிப்புரை :

பிச்சையை விரும்பி வெறியுறுநாள் . பலியேற்றுத்திரி முறை திருவீழிமிழலையார் , ( அவருக்கு ) முறை முறையாலிசை பாடுவார் ஆடி - முறையால் இசைபாடுவாராய் முறையாகவே ஆடி . முன் - முற்பட . இறை - தங்கும் இடம் . உறை - உறைதல் - தங்குதல் , முதல் நிலைத் தொழிற் பெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

வசையறு மாதவங் கண்டு வரிசிலை வேடனாய்
விசையனுக் கன்றருள் செய்தவர் வீழி மிழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்ல வடமிட்டுத்
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.

பொழிப்புரை :

திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் அருச்சுனன் செய்த குற்றமற்ற பெருந்தவம் கண்டு இரங்கி , அழகிய வில்லேந்திய வேட்டுவ வடிவில் வந்து அவனுக்கு அருள்புரிந்தவர் . தம்மை இசைத்தமிழால் பாடி , தம் திருப்புகழைப் போற்றி உரைத்துப் பிறரைக் கேட்கும்படி செய்து , முரசொலிக்கத் திசைநோக்கித் தொழுது ஆடிப்பாடுவார் சிந்தனையில் வீற்றிருப்பர் .

குறிப்புரை :

இசை வரவிட்டு - இசை பொருந்தும்படியாகப் பாடி , இயல் கேட்பித்து - இயற்றமிழ்ப் பொருள்களை விண்ணப்பித்து . திசை நோக்கித்தொழுது ஆடிப்பாடுவார் ஆகிய அடியாரது சித்தத்தின் கண் சேர்வர் . கல்லவடம் - ஒருவகைப் பறை . முரசு , பேரி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர்
வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழி மிழலையார்
காடரங் காவுமை காணவண் டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.

பொழிப்புரை :

திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் விண்ணோர்கட்குத் தூரமானவர் . மேன்மை வாய்ந்த வேதாங்க நூல்கள் ஆறினையும் கற்று வல்லவர்களாய் , மூவகை அழலை ஓம்பி , நால் வேதங்களையும் பயின்ற அந்தணர்கட்கு அணியராகி வீட்டின்பம் நல்குபவர் . சுடுகாட்டை அரங்காகக் கொண்டு , உமாதேவியார் கண்டு மகிழ , எல்லா அண்டங்களிலுமுள்ள தேவர்கள் தொழத் திருநடனம் செய்பவராகிய சிவபெருமானை ஏத்தி வழிபடுபவர்களின் வினையாவும் அழியும் .

குறிப்புரை :

சேடர் விண்ணோர்கட்கு - தேவர்களுக்குத் தூரமான வர் . தேவர்கள் பூசுரர்களாய் ஆறு சாத்திரங்களும் கற்றவர்களாய் முத்தியில் இச்சையவர்களாய் மூவகை அழலை ஒம்பி , நால் வேதங்களையும் பயின்றவர்களாகிய அந்தணர்கட்கு அணியராய்த் திருவீழிமிழலையுள் எழுந்தருளியுள்ள , நாடகம் ஆடியை - நடனம் செய்பவராகிய சிவபெருமானைத் துதிக்க வினை நசிக்கும் . விண்ணாடர்கட்குச் சேடர் எனவே திருவீழிமிழலையுடையார்க்கு அணியர் என்பது சொல்லாற்றலாற் பெறவைத்தார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

எடுத்தவன் மாமலைக் கீழ வி ராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழி மிழலையார்
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
கொடுத்தன ரின்பங் கொடுப்பர் தொழக்குறை [ வில்லையே.

பொழிப்புரை :

பெரியகயிலை மலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனை அம்மலையின் கீழேயே கிடந்து அலறுமாறு அடர்த்து , பின் அவன் சாமகானம் பாடிய இசை கேட்டு அருள்புரிந்தார் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான் . அவர் கொடிய காலனை உதைத்து , தம்மருகில் நின்று வழிபாடு செய்த பாலனான மார்க்கண்டேயனுக்குப் பேரின்பம் கொடுத்தார் . அச் சிவபெருமான் தம்மைத் தொழுது போற்றும் அடியவர்கட்கு எவ்விதக் குறைவு மில்லாமல் எல்லா நலன்களையும் கொடுப்பார் .

குறிப்புரை :

பெரியமலையை யெடுத்தவனாகிய ( இராவணன் ) மாமலைக்கீழ் அ + இராவணன் . வீழ்தரவிடுத்து - விழுந்தலறவிடுத்து , அருள் செய்து இசை கேட்டவன் என்ற விடத்து இசைகேட்டு அருள் செய்தவன் என மாறிக் கூட்டுக . வெம் காலனைப்படுத்து - கொடிய யமனைத் தொலைத்து . பால் - பக்கத்தில் நின்று வழிபாடுசெய்த பாலனுக்கு . இன்பம் கொடுத்தனர் . தொழ - வணங்க ` தந்த துன் றன்னை ` ` உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே ` என்பதும் காண்க . ( திருவாசகம் )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

திக்கமர் நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.

பொழிப்புரை :

நான்கு திக்குகளையும் நோக்குகின்ற முகங்களை யுடைய பிரமனும் , திருமாலும் மேலுள்ள அண்டங்கள் அனைத்திலும் , கீழுள்ள அண்டங்களிலும் முடி , அடி தேட , காணமுடியாவண்ணம் , மிகுந்து எழும் தீப்பிழம்பாய் நின்றவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான் . அவர் சொக்கு எனப்படும் ஒருவகைத் திருக்கூத்து ஆடியும் , பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் நக்கர் . அவருடைய திருநாமமாகிய நமச்சிவாய என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவராவர் .

குறிப்புரை :

திக்கு அமர் நான்முகன் - திக்கைப் போல் பொருந்திய நான்கு முகங்களையுடைய பிரமனும் . மாலும் முறையே அண்டம் மண்தலம் தேடத் திரளாய் மிக்கவர் . சொக்கம் - ஒரு கூத்து . நக்கர் - ஆடையில்லாதவர் . அவர் நாமமாகிய திருவைந்தெழுத்தை உச்சரிப் போர் நல்லவர் - சிவபுண்ணியச் செல்வராவர் . நான்முகன் மால் . அண்டம் மண்தலம் தேட - நிரனிறை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா
வெற்றரை யார்அறி யாநெறி வீழி மிழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற [ சோதிதான்
மற்றறி யாஅடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.

பொழிப்புரை :

பொருந்திய காவியாடை அணிந்த புத்தர்களும் , ஆடையணியாத சுத்தமில்லாச் சமணர்களும் அறியாத நெறியில் விளங்குபவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் . சொல்லை யும் , பொருளையும் கடந்து அருள் ஒளியாக விளங்கும் இறைவர் , தம்மைத் தவிர வேறெதையும் அறியாத அடியார்களின் சிந்தனையில் நிலையாக வீற்றிருப்பார் .

குறிப்புரை :

துற்று - பொருந்திய . துவர் ஆடையார் - மருதம் தோய்க்கப்பட்ட ஆடையையுடையவர் . துப்புரவொன்றில்லார் - ஒரு பயனும் அறியாதவருமாகிய சமணர் . ` துப்புரவில்லார் துணிவு ` ( பெரிய 1973.) வெறு அரையார் - ஆடையில்லாதவர் ; திகம்பரர் . வெற்றுச்சொல் . தெரியா - சொல்லால் அறியப்படாத சொல்லுக்கு அப்பாற்பட்ட பொருளாகிய ஒளிக்கு அப்பால் நின்ற . ` சொல்லும் பொருளும் இறந்த சுடர் ` என்றபடி ( திருவாசகம் ) சோதிதான் - பேரொளிப்பிழம்பானது . மற்று அறியா - பரமே கண்டு , பதார்த்தங்கள் பாராத . அடியார்கள் தம் சிந்தையுள் மன்னும் திருவீழிமிழலை யாராகிய சோதி , சொல்லையும் பொருளையும் கடந்து நின்றதாயினும் அடியார் சிந்தையுள் மன்னும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

வேதியர் கைதொழு வீழி மிழலைவி ரும்பிய
ஆதியை வாழ்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்ஆய்ந்
தோதிய வொண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.

பொழிப்புரை :

அந்தணர்கள் கைகூப்பித் தொழுது போற்றும் திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக்கும் இறைவனை , சோலைகள் விளங்கும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் ஆராய்ந்து ஓதிய ஒண்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் கூறிப்போற்றி வழிபடுபவர்கள் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் மலர் போன்ற திருவடிகளைச் சேர்ந்து முக்திப் பேற்றினைப் பெறுவர் .

குறிப்புரை :

வேதியர் கைதொழும் திருவீழிமிழலையாரை ஞானசம்பந்தன் ஆய்ந்து பாடிய ஒண்தமிழ் பத்தும் வல்லவர் அம் மாது பொருந்திய பாகனது மலர்போன்ற அடியைச் சேரவும் வல்லராவார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

அலைவளர் தண்மதி யோடய லேஅடக் கிஉமை
முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே. 

பொழிப்புரை :

கங்கையையும், குளிர்ந்த சந்திரனையும் சடை முடியிலே அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல முதல்வனாகிய சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள் மலர்ந்துள்ள கடற்கரைச் சோலையையுடைய இராமேச்சுரத்துள், தலைகளால் ஆகிய அழகிய நல்ல மாலையை அணிந்து அருளாட்சி செய்கின்றான்.

குறிப்புரை :

அலை - கங்கையை. குளிர்ந்த சந்திரனைச் சடையின் பக்கத்தே அடக்கி - தேக்கி. உமைபாகம் கூடவல்ல முதல்வன். கிளை- கொம்பு, மிளார் முதலிய வேறுமரவகைக் கிருப்பதுபோல தாழை மரங்களுக்கின்மையால் இது வளர்தாழை யெனப்பட்டது. தழைகளை யுடையது - தாழை - நீளல். முதல்உயிர் நீண்டசொல்.
விம்மு - தழைத்த. கானல் - கடற்கரைச்சோலை. தலையால் ஆகிய மிகும் அழகையுடைய நல்ல மாலையையுடையவனாகிய சிவபெருமான் இருந்து ஆட்சிபுரியும் இடம் இராமேச்சுரம் என்க. அலை - சினையாகு பெயர். ஆட்சிசெய்யுமிடத்தை ஆட்சியென்றது தொழிலாகு பெயர்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே. 

பொழிப்புரை :

சீதாப்பிராட்டியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான தசமாமுகனின் பூச்சூடிய முடியையுடைய தலைகளை அறுத்துக் கொன்ற பழி நீங்குமாறு அம்பினைச் செலுத்தும் வில்லை யுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தை இடைவிடாது சிந்திப்பவர்களின் வினை அழியும்.

குறிப்புரை :

தேவி - சீதை. வவ்விய - கவர்ந்த, தசமாமுகன், தென் இலங்கை தன்னோடியைபின்மை மாத்திரை விலக்கிய விசேடணம். பூ இயலும் முடி - வெற்றிமாலை அசையும் முடியையுடைய தலையை. பொன்றுவித்த - தொலையச்செய்த. பழிபோய் நீங்குமாறு செய்த; நிருமாணித்த. இராமேச்சுரம் என்னும் பெயரையுடைய திருக்கோயில். மேவிய சிந்தையினார்கள் தம் - இடைவிடாது பொருந்திய சிந்தையை யுடையவர்களின். மேல் வினை வீடும் - முன்னை வினைகளாகிய சஞ்சிதமும், இப்பிறப்பில் ஈட்டப்படுகின்ற; இனியீட்டப்படுவதாகிய ஆகாமிய வினையும் ஒருங்கேமாயும் என்பதாம்.
மேல்வினை யென்பது - நுகர்ந்து கொண்டிருக்கும் பிராரத்த வினையையும் குறிக்குமாதலின் அதுவும் அழியும் என்பதாம். வீடு மாறு துய்க்கவரும் இன்ப துன்பங்கள் சிவனருளெனக் கொண்டு விருப்பு வெறுப்பின்றி யிருத்தலாம்.
தலத்தின் பெயர் - சேது. (சேதுபுராணம், சேதுமான்மியம் முதலியவற்றால் அறிக.) இராமேச்சுரம்:- ஈச்சுரம் அத்தலமேவிய கோயிலின் பெயர். `திருப்பனந்தாள், திருத்தாடகையீச்சரம்`, \\\"பட்டினத் துறை பல்லவனீச்சரம்\\\" என்பனவற்றால் அறிக. \\\"தேடிமால் செய்த கோயில் திருவிராமேச்சுரத்தை நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறி யாகுமன்றே\\\" என்பது திருநேரிசை.
\\\"ஒயாதே உள்குவாருள்ளிருக்கும் உள்ளானை\\\" திருவாசகம். சிவஞானசித்தியார் \\\"தனதாகக் கொள்வன்\\\". பூ - ஆகுபெயர். கோயில் மேவிய சிந்தையினார் வினைவீடும் \\\"ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே\\\" என்ற சிவஞான போதத்தால் அறிக. ஏஇயலும் சிலை அண்ணல் - அம்பைச் செலுத்தும் வில்லையுடைய இராமன்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக் கன்உயிர் செற்றவன்
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.

பொழிப்புரை :

மான் போன்ற மருண்ட பார்வையையுடைய சீதாப்பிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய அரக்கனாகிய இராவணனின் உயிரை நீக்கிய குற்றமில்லாத பெரும் புகழுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுர மானது மன்னுயிர்கட்கு நன்மைதரும் சிவஞானத்தையும், அதன் பயனான முத்தி இன்பத்தையும் தரும்.

குறிப்புரை :

மான் அ(ன்)ன நோக்கு இயைதேவிதன்னை - மான் போன்ற பார்வை பொருந்திய தன் அரசியாகிய சீதையை. கான் (அது) இல் - தண்டகவனத்தில், அது பகுதிப்பொருள் விகுதி. கார் அரக்கன் - கரிய இராவணன். ஓர் மான்தனால் வவ்வியது - வஞ்சமானால் கணவனைப் பிரித்துக் கவர்ந்தது. செற்றவன் - அழித்தவன், செற்றவ னாகிய அண்ணல்; கடைசி அடிக்கு இராமேச்சுரம் சிவஞானமும் அதன் பயனாகிய முத்தியின்பமும் பயப்பதாகிய, புண்ணிய ஸ்தானமாம் என்க. நன்பொருளும் என்று விரிக்க. எண்ணும்மை விகாரத்தாற்றொக்கது. முத்தியின்பம் நன்பொருள் எனப்பட்டது, உடனெண்ணப்படும் ஞானம் முதலியவற்றிற் சிறத்தலின் நன்மை பண்பாகுபெயர். வைதேகி என்ற பாடம் சிறக்கும்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்
தரையர வாடநின் றாடல்பே ணுமம்மா னல்லனே. 

பொழிப்புரை :

மிகுந்த காமவேட்கையால் பிறன்மனைவியைக் கவர்தல் தவறு என்ற அறவுரையை உணராத, இராவணனின் மலை போன்ற தோள்களைத் தொலைத்த இராமன் மகிழ்ந்து போற்றிய, புலவு நாறும் கடற்கரையையுடைய இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் இறைவன் அரையில் பாம்பை கச்சாகக் கட்டித் திருநடனம் புரியும் தலைவனான சிவபெருமான் அல்லனோ?

குறிப்புரை :

உரை - சாபம். சாபம் தனக்கு நேர்ந்ததை உணராதவன், மிக்க காம வேட்கையான். உறு - மிக்க. மலையைப் பொருவும் தோள். பொருதோள் வினைத்தொகை. இற - சிதைய. செற்ற - அழித்த. வில்லி- இராமன். இகரம் ஆண்பாலில் வந்தது. விரை மருவும் கடல் - புலவு நாறுங்கடலை இங்ஙனம் கூறியது. இறைவனைத் தொழ உவந்து நீராடிய அரம்பை மாதர் முதலியோரது மெய்ப்பூசல் என்க. ஒதம் - அலை. அரை - இடுப்பின் கண்ணே. அரை - ஆகுபெயர். நல்லன் - நல்லவன், சிவபிரானுக்கு உரிய பெயர். \\\"நல்லானை நான் மறையோ டாறங்கம் வல்லானை\\\".

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே. 

பொழிப்புரை :

கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள் தோறும் சென்று அழகிய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய், வீரமுடைய இடபம் பொறிக்கப்பட்ட வெற்றிக் கொடி யுடைய எந்தையாகிய சிவபெருமான் இராமேச்சுரத்தில் வீற்றிருந் தருளுகின்றான். வீடுபேற்றை நல்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும்.

குறிப்புரை :

ஊறு - திருக்கையால் தொட்டுப் பறிக்கப் பெறும் பொறி, ஐந்தனுள் அத்தலைக்குமட்டும் வாய்த்ததால் `ஊறுடை வெள்தலை` எனப் பட்டது. `சுவை ஒளி ஊறு` என்பவற்றில் வரும் ஊறு எனில் பொருட் சிறப்பில்லை. (உறுவது - ஊறு. பெறுவது - பேறு) வீறு - வேறு ஒன்றிற்கு இல்லாத அழகு. ஐயம் - பிச்சை. விறல் - வலி, வெற்றி. ஏறு - விடை. சிவனது கொடியில் எருதுருவம் உண்டு. பெயர் - பவாதி சிவநாமங்கள். பிணி - பிறவிப்பிணியும் அதுபற்றி வருவனவும். பேரும் - பெயரும். வந்தவழி மீண்டொழியும். (முத்து.சு.)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.

பொழிப்புரை :

அலைகளையுடைய கடலில் அன்று அணைகட்டிக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப் போக்கிய இணையற்ற இறைவன், என்றும் வீற்றிருந்தருளும் கோயில் இராமேச்சுரம். தனக்கு ஒப்பு ஒருவருமில்லாத அப்பெருமானின் தூய மலர் போன்ற திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களின் துன்பம் நீங்கும்.

குறிப்புரை :

அலையையுடைய வளைந்த கடலை அணையால் அடைத்து அன்று வழி செய்தவன் என்பது முதலடிக்குப் பொருள். பொருப்பணை முரசம் தலைக்கு உவமை. இனி பணை இலங்கும் முடி எனப் பருத்து விளங்கும் முடியென்னலுமாம். அதற்கு \\\"அறு வேறுவகையின் அஞ்சுவரமண்டி\\\" என்ற திருமுருகாற்றுப் படையைப் போலப் பகுதியே வினையெச்சப் பொருள்தந்தது என்க. \\\"இணை இலி\\\" சிவனுக்கு ஒரு பெயர் \\\"இணையிலி தொல்லைத்தில்லோன்\\\" என்றது திருக்கோவையார். இணை - ஒப்பு. இலி - இல்லாதவன்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தவிரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே. 

பொழிப்புரை :

சனி, புதன், சூரியன், வெள்ளி, சந்திரன் மற்றும் அங்காரகன், குரு, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களால் தீமை வரும் எனச் சோதிடன் கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்டு அவர்களைச் சிறையில் வைத்த தன் ஆற்றலுக்கு மகிழ்ந்த இராவணனை அழித்து வெற்றி கொண்ட பழி தீர, அருளை வேண்டி அண்ணல் இராமபிரான் வழிபட்ட தலம் இராமேச்சுரம். அங்கு எழுந்தருளியிருப்பவர் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் முழுமுதற் பொருளான சிவபெருமானே ஆவார்.

குறிப்புரை :

பல தீமை விளைவிப்பனவாகிய சனி முதலிய நவக் கிரகங்களை என்பது முதலடிக்குப் பொருள். முனிவுசெய்து - கோபித்துச் சிறையிலிட்டு. உகந்தான் - தன்னாற்றலை மெச்சியவன். இந்திரசித்துப் பிறக்கும் பொழுது சோதிடம் இன்றுள்ள கிரக நிலையில் குழந்தை பிறந்தால் தீமையே தரும் என்றுகூற இராவணன் தான்பெற்ற வரத்தின் வலியால் - அக்கிரகங்களை யொருசேரச் சிறையில் இட்டுக் குழந்தை பிறந்த பின்னர் அக்கிரகங்களை விடுதலை செய்தான் இராவணன் என்பது இராமாயணம்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

பெருவரை யன்றெடுத் தேந்தினான் றன்பெயர் சாய்கெட
அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
இருவரு நாடிநின் றேத்துகோ யிலிரா மேச்சுரத்
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே. 

பொழிப்புரை :

பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனது புகழ் குறைந்து அழியும்படி அவனை அம்மலைக்கீழ் அடர்த்தலும், தன் தவறுணர்ந்து சாமகானம் அவன் பாடியபோது அவனுக்கு அருளுதலும் செய்தவர் சிவபெருமான். பிரமனும், திருமாலும் முழுமுதற்பொருள் சிவன் என்பதை உணர்ந்து வந்து ஏத்தியபோது விளங்கித் தோன்றி, இராமேச்சுரத்திலுள்ள கோயிலில் எழுந்தருளி யுள்ள சிவபெருமான் ஒருவனே எல்லாப் பொருள்களிலும் விளங்கித் தோன்றுகின்றான்.

குறிப்புரை :

பெயர் - புகழ். சாய்கெட - சாய்ந்து ஒழிய. \\\\\\\"சாய்தல் - (குறைதல்) ஓய்தல்\\\\\\\" என்பன. தொல் \\\\\\\"உரியியல்\\\\\\\" உலகேழெனத் திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. என்னும் திருவாசகத்தோடு ஒப்பிடுக.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

* * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * *

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

சாக்கியர் வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார்
வாக்கிய லும்முரை பற்றுவிட்டுமதி யொண்மையால்
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே. 

பொழிப்புரை :

புத்தர்களும், சமணர்களும் கூறுகின்ற உண்மை யல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப்பற்றி நிற்காது, ஒளிமிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ண லாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை ஞானத்தால் ஏத்தி வாழுங்கள். அவனருளால் எல்லா நலன்களும் உண்டாகும்.

குறிப்புரை :

ஏ(வு)க்கு - அம்புக்கு. \\\\\\\"கோளிலி எம் பெருமாற்கு\\\\\\\" என்புழிப் போல இராமேச்சுரம் ஆக்கித் தனது தலமாகச் செய்து கொண்ட செல்வன் சிவபெருமான். அருள் ஆக - திருவருள் கிடைக் கும்படி. ஏத்தி வாழ்மின்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை
இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிட மெங்குநின் றேத்தவல் லார்க்கில்லை [யல்லலே. 

பொழிப்புரை :

தான் பெற்ற வரத்தின் வலிமையால் சூரியன் தன் நகருக்கு மேலே செல்லக் கூடாது என்று ஆணையிட்ட இலங்கைக் கோனாகிய இராவணனைப் போரில் அழித்த இராமபிரான் வழிபட்ட கோயிலாகிய இராமேச்சுரத்தினை, திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் சொன்ன இத்தமிழ்ப் பதிகத்தால் மனம் ஒன்றி இப்பூமியில் எங்கும் ஓதவல்லவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை.

குறிப்புரை :

தான் பெற்ற வரத்தின் ஆற்றலால், சூரியன் தன் நகருக்கு மேலே நேரே செல்லக்கூடாது என ஆணைசெய்த இராவணன் என்பது முதலடியில் குறித்த பொருள். இராமேச்சுரத்தை ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களை மனத்தோடு துதிக்க வல்லவர்களுக்கு அல்லல் இல்லை என்பது திருக்கடைக்காப்புச் செய்யுளின் கருத்து.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
அன்னமன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.

பொழிப்புரை :

மின்னல் போன்று ஒளிரும் சிவந்த சடைமுடியும் , வெண்மையான பிறைச்சந்திரனும் , விரிந்த மார்பினில் முப்புரிநூலும் கொண்டு , அடிக்கடி ஓதப்படும் நான்கு வேதங்களையும் பாடியாடிப் பல திருத்தலங்கட்கும் சென்று , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமானது , புன்னை மலர்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்கும் திருப்புனவாயில் ஆகும் .

குறிப்புரை :

மின் இயல் - ஒளிபொருந்திய . செஞ்சடை வெண் பிறையன் - முரண்தொடை . பன்னிய - சொல்லியவற்றையே திருப்பிச் சொல்லுகின்ற . மறை - கனம் சடைபோன்றவை பல . ஊர்கள் போய் (5 ஆம் வே - தொகை ) பல ஊர்களினின்றும் போய் அமரும் இடம் . மாமலர் போன்று உதிர்க்கும் - பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புனவாயில் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

விண்டவர் தம்புர மூன்றெரித் துவிடை யேறிப்போய்
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடம்
கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.

பொழிப்புரை :

பகையசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து , இடபவாகனத்தில் ஏறி , வண்டமர்ந்துள்ள கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்து , இறைவன் எழுந்தருளி யிருக்கும் இடமாவது , தாழையும் , புலிநகக் கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும் , தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த திருப்புனவாயில் ஆகும் .

குறிப்புரை :

பின்னிரண்டடிக்கு - பெருங் கடற்கரைச் சோலையில் தாழையும் . புலிநகக் கொன்றையும் நிலைக்கப்பெற்று , தாமரை மலர் களையுடைய பாய்கயல் சூழப்படப் புனவாயிலே மங்கையொடும் மகிழ்ந்தானிடமாவது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலில்
தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப்
படைவல னேந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.

பொழிப்புரை :

இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவனும் , வீரமிக்க பூதகணங்கள் சூழ நடனம் செய்யும் கோலத்தை உடையவனுமான சிவபெருமான் திருப்புனவாயில் என்னும் திருத் தலத்தில் எழுந்தருளி , கொன்றை மாலை அணிந்து , ஒளியுடைய மழுப் படையை வலக்கையிலே ஏந்தி , பாலாலும் , நெய்யாலும் திருமுழுக் காட்டப்பட்டு அடியவர்கட்கு அருள்புரியும் பரம்பொருள் ஆவான் .

குறிப்புரை :

வெல்கொடி - வெல்லும்கொடி . விறல்பாரிடம் புடைபட - வலிமையையுடைய பூதங்கள் சூழ . ஆடிய வேடத் தானும் - ஆடிய கோலத்தை உடையவனும் . தொடைநவிலக் கொன்றை அம்தாரினானும் - மாலையாக எடுத்துச் செல்லப்படும் கொன்றை மாலையையுடையவனும் , கொன்றை மலர் ஓங்கார வடிவு உடைமையால் பிரணவமந்திரத்துக்கு உரியபொருள் . சிவபெருமானே ( பிறரல்லர் ) எனற்கு அறிகுறியாய் நிலவுவது . மழுப்படை ஏந்திய ஆடும் பரமனன்றே - புனவாயிலில் கொன்றை யந்தாரினானுமாயிருப்பவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே
அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலில்
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே.

பொழிப்புரை :

திருப்புனவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வெண்சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன் . தாழ்ந்த நீண்ட சடையுடையவன் . உள்ளங்கையில் நெருப்பு ஏந்தியவன் . சீறிப் படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்த மார்புடையவன் . திருப்புனவாயில் என்னும் திருத்தலத்திலே பசிய கண்களையுடைய வெண்ணிற இடபவாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மேலான பரம்பொருள் ஆவான் .

குறிப்புரை :

வெண்சங்கத்தோடு அணிகாதினான் - ` சங்கக் குழையார் ` என்ற சுந்தர மூர்த்திகள் தேவாரத்தாலும் காண்க . அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் - உள்ளங்கையில் விளங்கும் நெருப்பை ஏந்தினவனும் . அரவம்மணிமார்பு விரித்தல் விகாரம் , இசையின் பொருட்டு . பைங்கண் வெள்ஏறு - பசிய கண்ணையுடைய வெள்ஏறு - இவ் ஈற்றடி திருநள்ளாற்றுப் பதிகத்திலும் ஞானசம்பந்தப்பெருமான் திருவாயில் வருகிறது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற குளிர்ச்சியான பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் கறுத்த கண்டத்தை உடையவன் சிவபெருமான் . புலித்தோலை ஆடையாகவும் , பாம்பை அரையில் கச்சாகவும் கட்டியவன் . அவன் திருப்புனவாயில் என்னும் தலத்தில் , ஒலிக்கின்ற குளிர்ந்த கங்கையோடு , எருக்கு , ஊமத்தம் ஆகிய மலர்களையும் , மெலிந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் சடையில் சூடி இடப வாகனத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கலிபடு - ஓசைபொருந்திய கடல் - இதனால் கடல் ஆர்கலி எனவும் படும் . மதம் - ஒருவகை வாசனை . மத்தம் - பொன்னூ மத்தை . தக்கனிட்ட சாபத்தினால் நாடோறும் ஒவ்வோர் கலையாய்க் குறைந்து ஒரு கலையோடு சிவனைச் சரண்புகுந்தமையின் ` மெலிதரு பிறை ` யெனப்பட்டது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க்
காருறு கொன்றைவெண் டிங்களா னுங்கனல் வாயதோர்
போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலில்
சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.

பொழிப்புரை :

கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவி பாட , அதற்கேற்ப நடனம் ஆடி , கார்காலத்தில் மலர்கின்ற கொன்றைமலரையும் , வெண்ணிறத் திங்களையும் சடையிலே சூடி , நெருப்புப் போன்று ஒளிர்கின்ற போர் செய்யப் பயன்படும் வெண்மழுப்படையைக் கையில் ஏந்தித் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவலோகநாதனாகிய சிவபெருமான் தன் அடியார்கட்குச் சீருறு செல்வம் அருள்வான் .

குறிப்புரை :

மங்கை - சிவகாமவல்லி . மங்கை பாட நடமாடி . கொன்றைமரம் விசேடமாகப் பூப்பது கார்காலத்தில் ஆதலால் ` காருறு கொன்றை ` எனப்பட்டது ` கண்ணி கார்நறுங்கொன்றை ` எனப் புறநானூற்றில் வருவது காண்க . சிறப்புப்பொருந்திய செல்வம் பெருகப் புனவாயிலில் இருந்தருளியவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் காட்டிடைத்
திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புர மூன்றுமெய் துபுன வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிடர் இல்லையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , பெரிய பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட நஞ்சை உண்டு மகிழ்ந்தவன் . சுடுகாட்டில் இளமென் முலையுடைய உமாதேவி பாட நடனமாடியவன் . பகையசுரர்களின் புரம் மூன்றையும் அம்பு எய்து அழித்தவன் . திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் தொழுபவர்கட்கு எவ்விதத் துன்பமும் இல்லை .

குறிப்புரை :

பொருந்தலர் - பகைவர் . நஞ்சு அமுதுண்டு , நடமாடி , புரம் எய்து , புனவாயிலில் இருந்தவன் கழல் ஏத்த இடர் இல்லை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின் மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.

பொழிப்புரை :

செருக்குடைய மனம் உடையவனும் , வேல் , வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு , அழகும் , பெருமையுமுடைய கயிலை மலையால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , அவனுடைய பழம்புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும் , ஆடல்களும் நிறைந்து அழகுற விளங்குகின்றதும் , கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமான திருப்புனவாயில் ஆகும் .

குறிப்புரை :

மனம்மிகு - ஊக்கம் மிகுந்த . வேலன் - இங்கு வேல் முதலிய போர்ப்படைகளை யுடையவன் . வேல் - உபலக்கணம் . இராவணனுக்குச் சிவபிரான் தந்த வாளைத் தவிரப் பிற ஆயுதங்களும் உண்டு ஆதலால் , வேலன் எனப்பட்டான் . வேலன் - காரணக்குறி , காரண இடுகுறியன்று . வலிஒல்கிட - வலிமை குறையும்படி , வனம் - சோலைகள் . இனம் மிகு - பல்வகைப்பட்ட , தொல் புகழ் - சிவபிரானது பழமையான புகழைப் பாடுவதும் , பாடி ஆடுவதும் ஆகிய அழகுமிகுந்த புனவாயில் , அடர்த்தானது இடம் ஆகும் . புனம் - காடு ; முல்லைநிலம் . கொன்றை முல்லைக் கருப்பொருளாதலால் ` புனம் மிகுகொன்றை ` எனப்பட்டது . கொன்றை மரச்சோலையிலே தென்றல் உலாவு வாயில் என்க . இது ` தென்றலார் புகுந்துலவும் திருத்தோணி புரத்துறையும் சடையார் ` என்று வேறு இடத்தும் வருவதறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

திருவளர் தாமரை மேவினா னும்திகழ் பாற்கடற்
கருநிற வண்ணனும் காண்பரி யகட வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.

பொழிப்புரை :

அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும் , விளங்கும் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத் திருமாலும் காண்பதற்கரியவன் சிவபெருமான் . அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற சுரிசங்குகளும் , சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும் திருப்புனவாயில் ஆகும் .

குறிப்புரை :

திருவளர்தாமரை - திணைமயக்கம் . ` உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே ` யென்பது சூத்திரம் . நரல் - ஒலிக்கின்ற . சுரிசங்கு - சுரிந்த முகத்தையுடைய சங்கு . பொருகடல் - கரையை மோதும் கடல் . காண்பரியான் - காண்டல் அரியவன் . காண்பு - தொழிற்பெயர் . கடவுளிடம் புன வாயில் ` கடவுள்ளிடம் `, ` உந்திந் நலம் ` என்பனவும் , மேலைப்பாடலில் ஆடல் லெழில் என்பதும் இசைநோக்கி விரித்தல் விகாரப்பட்டன .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில்
வேதனை நாடொறு மேத்துவார் மேல்வினை வீடுமே.

பொழிப்புரை :

புத்தர்களும் , சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய வேண்டா . பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த அழகிய குளிர்ந்த திருப்புனவாயிலில் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

போதி - அரசமரம் . போதி எனப் பெயராயினாரும் என்பது புத்தரைக் குறித்தது . சமண் - சமணர் . எய்தன்மின் - எய்தா ( அடையா ) தீர்கள் . வேதன் - வேதத்தின் பொருளாயுள்ளவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லார்அருள் சேர்வரே.

பொழிப்புரை :

பொன் வளையலணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்புன வாயில் என்னும் தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள் தொழுது போற்றுமாறு கடல்வளமிக்க சீகாழியில் அவதரித்த நற்றமிழ் ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் இறையருளைப் பெறுவர் .

குறிப்புரை :

கடல்காழி - கடலுக்கு அணித்தான சீர்காழி . நற்றமிழ் - வீட்டு நெறி தரவல்ல தமிழ் . ` நற்றவஞ் செய்வார்க்கிடம் `. அற்றம் - சொற்பொருளறவு . இல் - இல்லையாக்குகின்ற . பாடல் - அற்றம் முன் காக்கும் அஞ்செழுத்து .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறை
ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

வேதங்களை அருளிச் செய்த சிவபெருமான் விண்ணோர்களாலும் தொழப்படுகின்றான் . அவ்வேதங்களால் போற்றப்படும் உயர்ந்த பொருளாகவும் விளங்குகின்றான் . அழகிய கிளிகள் கொஞ்சும் குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிப் பிரானான அவனை நினைந்து வணங்க வல்லவர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

மறை - வேதம் , ஓதிய - சொல்லப்பட்ட . ஒண்பொருள் ஆகி நின்றான் . வேதம் - பிரபலசுருதி . ஆதியிற் கூறுவதே ஏனைய வற்றினும் சிறந்த பிரமாணமாகும் . ஆகவே அவ்வேதத்தாற் பிரதி பாதிக்கப்பட்ட எவற்றிலும் சிறந்த பொருள் எனப்படுதலின் மறையோதிய ஒண்பொருளாகி நின்றான் என்றார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

ஏலம லர்க்குழன் மங்கைநல் லாள்இம வான்மகள்
பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியும்
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
ஆலநீ ழற்கீ ழிருந்தறஞ் சொன்ன அழகனே.

பொழிப்புரை :

மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாளான , இமவான் மகளான உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான் , வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அழகனாவான் .

குறிப்புரை :

ஏலம் - மயிர்ச்சாந்து . பால் - ( இடம் ) பக்கம் . ` அறம் சொன்ன அழகன் ` அறம் என்பது , புருடார்த்தங்களையன்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

இலைமல்கு சூலமொன் றேந்தினா னுமிமை யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனும்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந் தவழ கனன்றே.

பொழிப்புரை :

சிவபெருமான் இலைபோன்ற சூலப்படையைக் கையில் ஏந்தியவன் . விண்ணோர்களும் தொழுது வணங்க மலை மகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன் . கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன் , காய்களும் , கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

இலை மல்கு சூலம் , மல்கு உவமானம் . மலைமல்கும் மங்கை - மலைகளோடு மிக்க உறவுடைய மங்கையாகிய உமாதேவி , இமயமலை , கயிலை நீங்கிய ஏனையமலைகளுக்கும் அரசனாதலின் அம்மலைகளெல்லாம் அம்பிகைக்கு உரியவாயின . கயிலைமலை அவளுடையதேயானால் ` மலை மல்கு மங்கை ` என்பதில் யாது வியப்பு ? குலை -சோலைகளின் மரங்களிற் காய்த்துத் தொங்கும் குலைகள் . அலை - சினையாகு பெயராய்க் கங்கையை யுணர்த்திற்று . உகப்பு - உயர்வு என்னும் பொருளில் வரும் உரிச்சொல் . உகந்த - உவந்த , விரும்பிய என்ற பொருளில் இங்கு வந்தது . ` ஆயிரம் பேருகந் தானும் ஆரூரமர்ந்த அம்மானே ` என்னும் அப்ப மூர்த்திகள் தேவாரம் முதலியவற்றானும் அறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை பங்கனும்
வானம ரும்மதி சென்னிவைத் தமறை யோதியும்
தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே.

பொழிப்புரை :

இறைவன் உடம்பினை இயக்கும் உயிர்க்குள் உயிராய் விளங்குபவன் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன் . வேதங்களை அருளிச் செய்தவன் . இடபத்தை வாகனமாக உடையவன் . அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான் .

குறிப்புரை :

ஊன் - மாமிசம் . உடலுள்ளிருந்த உமைபங்கன் என்றது . உடலில் உள்ளது உயிர் . உயிரில் உள்ளது சிவம் . உயிரால் உடல் இயங்குகிறது . சிவத்தினால் உயிரியங்குகிறது . ` எவ்வுயிரும் ஈசன் சந்நிதியதாகும் ` என்று சிவஞான சித்தியார் ஒற்றுமை நயம்பற்றி உயிரிலிருக்கும் சிவனை உடலுள் இருப்பானாகக் கூறியது இப்பாட்டு . மறை ஓதி - வேதங்களை ஓதினவன் . மழுவாள் வலனேந்தீ மறையோதீ என்பது சுந்தரமூர்த்திகள் தேவாரம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனும்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனும்
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்
நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.

பொழிப்புரை :

சிவபெருமான் நறுமணம் கமழும் மாலையணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழும் வலிமையுடையவன் . செம்பவளம் போன்ற திருமேனியில் வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள செல்வன் . அனைத்துயிர்களும் விரும்பி அடையத்தக்க அவன் , கொம்புகளிலுள்ள மலர்களை வண்டுகள் கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து , தன்னைப் பணிந்து வணங்குபவர்கட்கு அருள்புரிபவன் . அவனே எங்கள் தலைவன் .

குறிப்புரை :

வம்பு அலரும் மலர்க்கோதை - வாசனை விரியும் மாலையணிந்த கூந்தலையுடைய உமாதேவியார் . மைந்தன் - வலியவன் , மைந்து - வலிமை , இரண்டாம் அடி முரண்தொடை , ` செல்வன் ` - சிவபெருமானுக்கொரு பெயர் . மலர் வண்டு கெண்டும் - மலரில் வண்டுகள் உளர்கின்ற . ( அருள்செய் எங்கள் நாதன் ) நம்பன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர் . விரும்பத் தக்கவன் என்பது பொருள் . ` நம்பும் மேவும் நசையாகும்மே ` என்பது தொல்காப்பியம் . பதிப்பொருளைத்தவிரப் பிறபொருள்களில் விருப்பம் வைத்தால் அவை துன்பமே பயக்குமாதலால் எல்லா உயிரும் விரும்பியடையத் தக்கவன் சிவபெருமான் ஒருவனேயாதலால் நம்பன் எனப்பட்டான் . ` நதிசேர் செஞ்சடை நம்பாபோற்றி ` என்ற திருவாசகமும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

பந்தம ரும்விரன் மங்கைநல் லாளொரு பாகமா
வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்மிகும்
கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.

பொழிப்புரை :

சிவபெருமான் பந்துபோன்ற திரட்சியான விரல்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள விகிர்தன் . மிகுதியாகக் கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருள்கின்ற , அனைத்துயிர்களிடத்தும் செவ்விய அருளுடைய அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

`பந்து அமரும் விரல்`. அமரும் - என்ற சொல் போலும் என்ற பொருள்தரலால் உவமவாசகம் . மாதர் கைவிரல் நுனியின் திரட்சிக்குப் பந்து உவமை . வெந்து அமரும் - வெந்து தணிந்த . பொடி - திருநீறு . பொடி பூசவல்ல விகிர்தன் - மேலானவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
வண்டம ருங்குழன் மங்கைநல் லாளொரு பங்கனும்
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அண்டமு மெண்டிசை யாகிநின் றவழ கனன்றே.

பொழிப்புரை :

துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சடையில் சூடியவன் சிவபெருமான் . நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவன் . பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டவன் . கடலும் , நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும் , எட்டுத்திசைகளுமாகி நின்ற அழகன் அல்லனோ ?

குறிப்புரை :

வண்டு அமரும் குழல் - பூவில் உள்ள தேனை விரும்பி வண்டுகள் தங்கும் கூந்தல் . அண்டமும் எண்திசையும் ஆகித் திருக்கோட்டாற்றுள் எழுந்தருளியுள்ள அழகனே சுடர் வண்ணனும் மங்கையாளோர் பங்கனும் ஆவான் . சுடர் - தீ . ` சோதியே சுடரே ` என்ற திருவாசகம் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

இரவம ருந்நிறம் பெற்றுடை யவிலங் கைக்கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அரவம ருஞ்சடை யானடி யார்க்கருள் செய்யுமே.

பொழிப்புரை :

இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை மன்னனான இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க , அவன் வலிமையை அழித்த சிவபெருமான் , குரா மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து , சடைமுடியில் பாம்பணிந்து விளங்கி , தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான் .

குறிப்புரை :

`கரவு அமரக் கயிலை எடுத்தான்` - திக்கு விசயம் பண்ணவந்த இராவணன் , விமானத்தோடு கயிலையைக் கடக்க வேண்டியபொழுது , தன் ஆற்றல் கருதாது பொருதற்குந் தூது அனுப்பிப் போர்புரிந்து வென்று கடக்க வேண்டும் ; அன்றேல் , தன் எளிமை கருதி அஞ்சி விரும்பி வரம் பெற்றுச் செல்ல வேண்டும் ; இவ்விரண்டுமல்லாதது வஞ்சச் செயலாதலால் கரவு அமரக் கயிலை எடுத்தான் எனப்பட்டான் . குரவு - ஒருவகை மரம் ; அதன் பூ சிவபூசைக்குரியது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

ஓங்கிய நாரண னான்முக னும்உண ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்னிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மானம ரர்க்கம ரனன்றே.

பொழிப்புரை :

செருக்குடைய திருமாலும் , பிரமனும் உணரா வண்ணம் அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் . நிழல்தரும் கோங்குமலர்ச் சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான் . தேவர்கட்கெல்லாம் தேவனாவான் .

குறிப்புரை :

ஓங்கிய - செருக்கால் மிக்க . நீங்கிய - அளவு நீங்கிய ; அளவு அறியமுடியாத - தீ உரு ஆகி நின்றவன் . அமரர்க்கமரன் - மகாதேவன் . இவை சிவபெருமானுக்கு உரிய பெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் லாததோர்
தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்னருள்
கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திருக் கோட்டாற்றுள்
இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே.

பொழிப்புரை :

சாயம் பற்றும் பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த காவி ஆடை அணிந்த புத்தர்களுக்கும் , சிறுபாயைச் சுமந்து திரியும் சமணர்களுக்கும் தன்னை நாடாததால் , அருள் புரியமாட்டாத அழகன் சிவபெருமான் . திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியால் வழிபடு கின்றவர்களும் , தேவர்கட்குத் தலைவராவர் .

குறிப்புரை :

சாயம் ஆடையில் பற்றுதற் பொருட்டுக் கடுக்காய் நீர் உதவலால் கடுக்கொடுத்தது . செல்லுமிடங்களில் உட்காருவதற்குத் தடுக்கை இடுக்கிச் செல்லுவர் . பீலி , உறித்தாழ்ந்த கரகம் முதலியன கையிற் பற்றுதலின் தடுக்கை இடுக்கிச் செல்லுவர் . சமணேதிரிவார் - சமணமதத்திலே திரிபவர் . இடுக்கண் இன்றித் தொழுவார் - இடுக்கண் துன்பம் . இங்குச் சிரமம் என்றபொருள் , எளிய முயற்சியால் வழிபடுவாரேனும் என்றது . பித்தன் என்றொருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்வீர் . தலவிசேடத்தால் சிறு சிவபுண்ணியமும் பெரும் பயன் விளைக்கும் என்பது கருத்து .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக்
கடிகம ழும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

இடபத்தைக் கொடியாகவும் , வாகனமாகவும் கொண்டு திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க , திருநடனம் புரியும் அருளாளன் . அப்பெருமானை நறுமணம் கமழும் சோலைகளை யுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

கொடி உயர் மால்விடை ஊர்தியினான் - கொடியின் கண் உயர்த்திய பெரிய இடபத்தைவாகனமாகவும் , உடையவன் . மால்விடை யென்பதற்குத் திருமாலாகிய விடை எனலுமாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே.

பொழிப்புரை :

மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான சிவபெருமான் , புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில் , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந் தருளுகின்றார் .

குறிப்புரை :

மின் அன்ன எயிறுஉடை விரவலோர்கள் தம் - மின்னலைப் போன்ற பற்களையுடைய பகைவர்களாகிய அசுரர்களின் துன்னியபுரம் . உகச்சுளிந்த தொன்மையர் - நெருங்கியபுரம் ( மூன்றும் ) அழியும்படி , கோபித்தருளிய பழமையானவர் . புன்னையம்பொழில் - புன்னை மரச்சோலைகளின் அழகுடைய பூந்தராய் நகரில் எழுந்தருளி யிருப்பவர் - அரிவை பங்கரே , புரம் உகச் சுளிந்த தொன்மையரே , திருப்பூந்தராய் எழுந்தருளிய கடவுள் ஆவர் . விரவலோர் - ஆர்விகுதி ஓர் என ஆயிற்று . சுளிதல் - கோபித்தல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.

பொழிப்புரை :

பழமையான அணிவகுப்பையுடைய முப்புரத் திலிருந்த அளவற்ற அசுரர்களை வெம்மையுடைய அம்பினால் அழித்தவராகிய சிவபெருமான் , மலர்கள் நிறைந்த அழகிய சோலை களையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் மகரந்தப் பொடிகள் தங்கிய கூந்தலையுடைய உமாதேவியின் தலைவராய் வீற்றிருந்தருளுகின்றார் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

மூது அணி - பழமையான அணிவகுப்பையுடைய . முப்புரத்து எண்ணிலோர்களை - முப்புரத்திலிருந்த அளவற்ற அசுரர்களை . வேது அணி சரத்தினால் வீட்டினார் அவர் - வெம்மை யையுடைய அம்பினால் அழித்தவராகிய அப்பெருமான் . திரிபுரம் எரித்தநாளில் அம்பின் அடிப்பாகம் வாயு , இடைப்பாகம் திருமால் , நுனிப்பாகம் நெருப்பு ஆக அமைந்தமையால் , வேது அணி சரம் எனப்பட்டது . போது அணிபொழில் - மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சோலைகளை உடைய . தாது அணி குழல் உமை - மகரந்தப் பொடி களைக் கொண்ட கூந்தலையுடைய உமாதேவியார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.

பொழிப்புரை :

செருக்குக் கொண்ட திரிபுரத்தசுரர்கள் அழியு மாறும் , தேவர்களின் இன்பம் பெருகுமாறும் , மேருமலையை வில்லாகப் பிடித்த சிவபெருமான் , அலைவீசுகின்ற கடல் பக்கங்களில் சூழ்ந்திருக்க , பெருமையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவாராய் , கூந்தலுக்கு உவமையாகக் கூறப்படும் பொருள்களெல்லாம் தமக்கு அத்தகைய நிறமும் , அழகும் இல்லையே என்று வருத்தமுறும்படி அழகிய , கரிய கூந்தலையுடைய உமா தேவியின் கணவர் ஆவார் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

தருக்கிய - இறுமாந்த . திரிபுரத்தவர்கள்தாம் உக - அழியவும் . பெருக்கிய - தேவர்க்கு இன்பத்தைப் பெருக்கவும் . சிலை - மேருவில் . பெற்றி - நன்மை . பொருகடல் - கரையை மோதும் கடல் . வினைத்தொகை . பொரு + கடல் எதுகைநோக்கியது . கருக்கிய குழல் - அம்பிகை குழலுக்கு . உவமைகூறும் பொருள்களையெல்லாம் வருத்திய குழல் . கருக்கிய - கருகும்படி செய்த ( வருத்திய என்றவாறு .) போர்க்கு அணிவகுத்துச் செல்லுதல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.

பொழிப்புரை :

வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , மேரு மலையை வில்லாகவும் கொண்டு , ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை அழித்த மாண்புடைய சிவபெருமான் , கமுக மரங்கள் நிறைந்த சோலைகளால் அழகுடன் திகழும் திருப்பூந்தராய் என்னும் திருத் தலத்தில் வெல்லப்பாகு போன்று இனிமையாகப் பேசுகின்ற உமா தேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் . அவரைத் தரிசித்துப் பிறவிப்பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

நாகமும் வரையுமே நாணும் வில்லும் ஆக எனக் கொள்ள நிற்றலால் இது நிரனிறை . மாகம் ஆர் - ஆகாயத்துப் பொருந்திய . புரங்களை - திரிபுரங்களை . மறித்த - அவர் வழியிற் செல்லாது தடுத்துத் தொலைத்த . மாண்பினர் - மாட்சிமையுடையவர் . பூகம் - கமுகு . பாகம் ஆர்மொழி - இனிமை தங்கிய மொழி . பாகு + அமர் மொழி என்று பிரித்து , வெல்லப் பாகுபோலும் இனிமை பொருந்திய சொல் எனலே பொருந்தும் . ` பாகமார் ` என்ற பாடம் யாண்டுளது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர்
ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.

பொழிப்புரை :

வெண்ணிறப் பற்களையுடைய அசுரர்களின் திரிபுரங்கள் , ஒளி பொருந்திய நெருப்பால் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் சிவபெருமான் . மின்னுகின்ற பறவைகளை உடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானார் தேன்கமழும் கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார் . அப்பெருமானாரைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள் .

குறிப்புரை :

வெள் எயிறு உடைய - கரிய உடம்பில் வெள்ளைப் பற்கள் மிக வெண்மையாய்த் தோன்றுகையால் வெள் எயிறு உடைய . புறவு - பன்னிரு பெயர்களுள் ஒன்று . ஊரை எரியூட்டிய ஒருவனார் . ஒளிர் - மின்னுகிற . புள் - பறவை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

துங்கிய றானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி யரிவை பங்கரே.

பொழிப்புரை :

அசுரர்களின் நெடிய வடிவங்களைப் போன்று தோற்றத்தையுடைய பெரிய முப்புரங்களையும் , நெருப்பால் அழியுமாறு செய்த அக்கினிக் கணையை உடைய சிவபெருமான் , பொங்கும் கடலையுடைய அழகிய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமான் அழகிய கயல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவர் . அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப்பயனைப் பெறுங்கள் .

குறிப்புரை :

துங்கு இயல் தானவர் தோற்றம் மாநகர் - அசுரர்களின் தோற்றத்தையுடைய பெரிய புரங்களை . ஆய்ந்த - ஆராய்ந்து செலுத்திய . அம்கயல் அ ( ன் ) ன கணி அரிவை - அழகிய கயல்மீனை ஒத்த கண்ணியாகிய உமாதேவியார் ( உடையவர் .)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

அண்டர்க ளுய்ந்திட வவுணர் மாய்தரக்
கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே

பொழிப்புரை :

சிவபெருமான் எல்லா அண்டத்தவர்களும் நன்மை அடையும் பொருட்டுத் திரிபுர அசுரர்களை மாய்த்தவர் . கடலில் தோன்றிய நஞ்சை உண்ட கருநிறக் கண்டத்தர் . தாமரை மலர்கள் பூத்துள்ள வயல்களையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர் . பூவிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு வண்டு அமர்கின்ற கூந்தலையுடைய உமாதேவியின் மணாளர் ஆவார் . அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள் .

குறிப்புரை :

மாய்தர - மாய் - பகுதி . தர - துணைவினை . கண்டவர் - செய்தவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

மாசின வரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.

பொழிப்புரை :

சிவபெருமான் குற்றம் செய்த அரக்கனான இராவணனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்தவர் . கோபத்தால் பிற உயிர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்த நீலகண்டர் . அந்தணர்கள் நிறைந்து விளங்குகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் , வீற்றிருந்தருளும் அவர் காயாம்பூவைப் போன்ற கருநிறக் கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள் .

குறிப்புரை :

மாசு இன் + அ அரக்கனை வரையின் வாட்டிய - பாவத்தையுடைய பாவியாகிய இராவணனைக் கயிலை மலையின்கீழ் வாடச்செய்த , காய்ச்சின - துன்புறுத்தும் கோபத்தையுடைய . கறுத்த - கோபித்த . கண்டனார் - கண்டத்தையுடையவர் . அரசன் குற்றத்தைக் கண்டித்தான் என்றதில் வரும் கண்டித்தல் என்பதுபோல , காசை - காயாம்பூ . செய் - உவமவாசகம் . மாசின - பெயரடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம் . அடுத்த அடியிற் காய்சினம் என வருதலால் முதலடியிலும் சினம் என்று பிரித்தல் சிறப்புடைத்தன்று . வரையின் - இன் ஏழனுருபில் வந்தது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

தாமுக மாக்கிய வசுரர் தம்பதி
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமக னறிகிலாப் பூந்த ராய்நகர்க்
கோமக னெழில்பெறு மரிவை கூறரே.

பொழிப்புரை :

தம் விருப்பம்போல் தேவர்கட்குத் துன்பம் செய்த அசுரர்களின் மூன்று நகரங்களை வெந்தழியுமாறு செய்த விகிர்தர் சிவபெருமான் . திருமாலும் , பிரமனும் அறிய ஒண்ணாதவர் . திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் அழகிய உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டவர் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

தாம் - தாங்கள் . முகம் ஆக்கிய - முகம்போற் சிறப்புடையதாகக் கொண்ட . வேம்முகம் ஆக்கிய - வேகும் இடமாகச்செய்த . விகிர்தர் - வேறுபட்ட தன்மையையுடையவர் . பூமகன் - பிரமன் . முகம் - முதலடியிற் சிறப்புடையது என்னும் பொருளிலும் . இரண்டாமடியில் இடம் என்னும் பொருளிலும் வந்தது . பூமகன் - இங்கு எண்ணும்மை தொக்கது . கோமகன் - தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

முத்தர வசுரர்கண் மொய்த்த முப்புரம்
அத்தகு மழலிடை வீட்டி னாரமண்
புத்தரு மறிவொணாப் பூந்த ராய்நகர்க்
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.

பொழிப்புரை :

சிவபெருமான் மூன்று தரத்தினராகிய அசுரர்கள் மிகுந்த முப்புரங்களை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் . சமணர்களாலும் , புத்தர்களாலும் அறிய ஒண்ணாதவர் . திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர் , பூங்கொத்துக்களால் அழகுபடுத்தப்பட்ட கூந்தலையுடைய உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டவர் . அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

முத்தர அசுரர்கள் - மூன்று தரத்தினராகிய அசுரர்கள் மிகுந்த முப்புரம் . அ தகும் + அழல் + இடை + வீட்டினார் - அப்படிப் பட்ட தக்க நெருப்பின் மத்தியிற் சிக்கி அழியும்படி தொலைத்தவர் . கொத்து - பூங்கொத்து . இரும்பு வெள்ளி பொன் ஆகிய மூன்று கோட்டைகளை யுடையராதலால் முத்தர அசுரர் எனப்பட்டனர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்
பரமலி குழலுமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.

பொழிப்புரை :

முப்புரம் எரித்த சிவபெருமான் திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் அடர்த்தியான கூந்தலையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் . அப் பெருமானை ஞானசம்பந்தன் நவின்ற இம்மெய்ம்மைப் பதிகத்தால் போற்ற வல்லவர்கள் தலையானதாகக் கருதப்படுகின்ற சிவகதியை நிச்சயம் பெறுவர் .

குறிப்புரை :

பரம் - பாரம் . கூந்தல் ; அளகபாரம் எனப்படுவதால் , பரம்மலி குழல் எனப்பட்டது . மிக்க கூந்தல் என்பது பொருள் . சிரம்மலி - உயர்நிலையதாகிய சிவகதி . ஒவ்வொரு பாசுரத்திலும் திரிபுரத்தை எரித்தவர் , பூந்தராய் நகரில் வீற்றிருக்கும் உமாபதி என்று கூறிவந்து , திருக்கடைக் காப்பிலும் புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர் பரமலிகுழலுமை நங்கை பங்கரைப் பரவிய பந்தன் மெய்ப்பாடல் வல்லவர் , சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே எனத் தொகுத்துக் கூறியிருப்பது இப்பதிகத்துக் குரிய சிறப்பியல்பு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்
ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.

பொழிப்புரை :

சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச் செய்தவர் . வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர் . அணிவது கோவண ஆடை . சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர் . இடபவாகனத்தில் ஏறியவர் . தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

ஆரிடம் - இருடிகளுக்கு அருளிய நூலாகிய வேதத்தை . பாடிலர் - பாடலாகவுடையவர் . காடு அலால் - புறங்காடு அல்லாமல் . ஓர் இடம் இலர் - ஓர் இடம் குறை இலர் . அதனால் ஒரு குறைவும் இல்லாதவர் . நீர் இடம் சடை - தண்ணீர் இருக்கும் இடம் சடை ; பாரிடம் - பூதம் ; பாடுவது . வேதம் , தங்குவதும் புறங்காடு . வேலை செய்வது பூதம் . அத்தகையார் வீற்றிருப்பது திருப்பைஞ்ஞீலியாகும் என்பது . பயிலல் , முதல் நிலைத் தொழிற்பெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

மருவிலார் திரிபுர மெரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத்
திருவிலா ரவர்களைத் தெருட்ட லாகுமே.

பொழிப்புரை :

பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . இத்தகைய வடிவமுடையவன் அவன் என்று வரையறை செய்து உணர்த்த இயலாத அப் பெருமானுடைய பெருமையை உணராதவர் அவனருளைப் பெறாதவர் . அவர்களின் அறிவைத் தெளிவித்தல் இயலுமா ?

குறிப்புரை :

மருவிலார் - பகைவர் . பரு வில் ஆ - பருத்த வில்லாதலின் . குனிதல் - வளைதல் . பைஞ்ஞீலிமேவலான் - திருப்பைஞ்ஞீலியில் மேவுதலையுடையவன் . உருஇலான் - வடிவமில்லாதவன் . அவன் பெருமையையுணர்பவர் திருவுடையவர் . உணர்கிலாதவர் ; திருவிலாதவர் . அவர்களை அறிவுரை கூறித்தெளிவிக்க இயலாது என்பது பாசுரத்தின் இறுதிப் பகுதியின் பொருள் . உருவிலான் - சிவனுக்கு ஒரு பெயர் . உளங்கொளல் - உணர்தல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

அஞ்சுரும் பணிமல ரமுத மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.

பொழிப்புரை :

அழகிய வண்டு மலரை அடைந்து தேனைக் குடித்துப் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் , வெப்பம் மிகுந்த காட்டில் உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன் .

குறிப்புரை :

அம் சுரும்பு அணிமலர் அமுதம் மாந்தித் தேன் பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி - அழகிய சுரும்பு என்னும் சாதி வண்டினம் மலரை அடைந்து தேனைக்குடித்துத் தேன் என்னும் சாதிவண்டினங்களுக்குப் பஞ்சுரம் என்னும் பண்ணைப்பாடிப் பழக்கும் திருப்பைஞ்ஞீலி . வெம்சுரம் - வெப்பமாகிய காடு . மேவலான் . மேவல் ஆன் - தங்குதலையுடையவன் . கொள்கையே ; இங்கு என்னே என்னும் பயனிலை அவாய்நிலையாற் கூடி முடிந்தது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடல ராணலர் பெண்ணு மல்லதோர்
ஆடலை யுகந்தவெம் மடிக ளல்லரே.

பொழிப்புரை :

காந்தள் மலர்களிலும் , முல்லை நிலத்திலுள்ள காடுகளிலுமுள்ள முல்லை மலர்களின் மீதும் அமர்ந்திருக்கும் வண்டுகள் செய்யும் ரீங்காரம் பண்ணிசைபோல் ஒலிக்க , திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் அலியல்லர் . ஆணுமல்லர் . பெண்ணுமல்லர் . திருநடனம் புரிவதில் விருப்பமுடைய அப்பெருமானார் எங்கள் தலைவர் ஆவார் .

குறிப்புரை :

கோடல் - காந்தள் புறவணிகொல்லை முல்லைமேல் பாடல் வண்டிசை முரல் பயில் பைஞ்ஞீலி - முல்லை நிலத்தைச் சார்ந்த காடுகளில் முல்லை மலரின் மேல் பாடுதலையுடைய வண்டினம் இசைமுரலுதல் பொருந்திய திருப்பைஞ்ஞீலி . முரலுதல் மூக்கினால் - ஒலித்தல் . முரலுதல் என்ற சொல் பகுதியளவாய் முரல் என்று நின்றமை முதனிலைத் தொழிற் பெயர் . பயில் பைஞ்ஞீலி - வினைத்தொகை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.

பொழிப்புரை :

விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி , இளம்பிறையையும் , கங்கையையும் சடையில் தாங்கியுள்ளவன் சிவபெருமான் . பழியிலாத அடியவர்கள் போற்றிப் பாடத் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வமில்லாத வறுமைநிலையைப் போக்குவான் .

குறிப்புரை :

நகு வெண்டலையையும் பிறையையும் கங்கை நீரைச் சுற்றிய சடையிடத்தே தரித்தவன் . சுழியில் ஆர் - சுழியோடு பொருந்திய , வேற்றுமை மயக்கம் . பைஞ்ஞீலி பாடலான் - திருப்பைஞ்ஞீலியின் கண் பாடுதலையுடையவனாகி வீற்றிருப்பவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுர னல்லனே.

பொழிப்புரை :

இடபம் பொறித்த கொடியை வலக்கையில் ஏந்தி , வெண்மழுப்படையையுடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான் . உடுக்கை போன்ற குறுகிய இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து , சீலையால் மறைத்த அல்குலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு , சடையிலே கங்கையைத் தரித்த சதுரன் ஆவான் .

குறிப்புரை :

வெண்மழு - இரும்பால் ஆகிய ஓர் ஆயுதம் . தீட்டப்பெற்று வெண்மையாயிருப்பதால் வெண்மழு எனப்பட்டது . ` விரவார் வெருவத்திருப்பு சூலத்தினன் . ஆதலால் இரத்தக்கறை முதலியன படியாத வெண்மழு என்றார் . ஒருத்தி தன்னுடம்பில் ஒருபாகத்திலிருக்கவும் சடையில் மற்றொருத்தியை நீர்வடிவமாகத் தோன்றுமாறு வைத்த சாமர்த்தியவான் அல்லரோ ?

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

தூயவன் தூயவெண் ணீறு மேனிமேல்
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவ னெனைச்செயுந் தன்மை யென்கொலோ.

பொழிப்புரை :

இறைவன் தூயஉடம்பினன் . தூய்மையான திருநீற்றைத் தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன் . திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் சீவனான என்னைச் சிவனாகச் செய்யும் பண்புதான் என்னே !

குறிப்புரை :

பாய்தல் - பரவுதல் . வெண்ணீறுமேனி மேல்பாயவன் - வெண்ணீற்றை உடம்பின்மேல் பரவப்பூசினவன் . பாய - இடமகன்ற ( விஸ்தாரமான ) பைஞ்ஞீலி . கோயில் - மரூஉ . மேயவன் - விரும்பியவன் . மே - விருப்பம் . ` நம்பும் மேவும் நசையாகும்மே ( தொல் , சொல் , உரி .) வேய்புரை தோளி - மூங்கில் போன்ற தோளை யுடையவள் . பாகமா ஏயவன் - பாகமாகப் பொருந்தியவன் . சிவனாகிய என்னைச் சீவனாகச் செய்யும் பண்பு என்னே ? எனக் கடைசியடிக்குப் பொருள் கொள்க . கொல் - அசைநிலை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.

பொழிப்புரை :

கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான் . அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றான் . முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன் . அப் பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக .

குறிப்புரை :

தொத்தின - கொத்தாகிய . தோள் - தோள் இருபதையும் . முடியுடையவன் தலை , பத்தினை - பத்தையும் . முத்தினை முறுவல் செய்தாள் - முத்தைப் பல்லாகச் செய்து கொண்ட உமா தேவியார் என்றது , முத்துப் போன்ற பல்லையுடையவள் என்றபடி , பொத்தினன் - அணைத்துக் கொண்டவன் . முத்தை இகழ்ந்தவள் என்றும் ஆம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

நீருடைப் போதுறை வானு மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.

பொழிப்புரை :

நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் திருமுடியையும் , சிறப்புடைய கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க , இவ்வுலகை உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் கொன்றைமாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

நீருடைப்போது - தண்ணீரைப் பிறப்பிடமாகவுடைய தாமரைப்பூ . பிரமனும் மாலுமாய் இருவரும் கூடித்தேடியும் அடி சென்னி காண்கிலார் என்பது எதிர்நிரல் நிறையாகலின் , முறையே சென்னி , அடிகாண்கிலார் எனக்கூட்டுக . பார் உடைக் கடவுள் - உலகம் உடைமைப் பொருளாகத் தான் உடையோனாகிய ( உலகத்துப் பதியாகிய ) கடவுள் . பார் - பூமி . இங்கே உலகம் என்ற பொருளில் வந்தது . போதுறைவானும் மாலும் காண்கிலர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
சாலியா தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.

பொழிப்புரை :

மயிற்பீலி யேந்திப் பெருமை கொள்ளும் சமணர்களும் , திரிபிடகம் என்னும் சமயநூலுடைய புத்தர்களும் , தங்கள் நூற்பொருளோடு பொருந்தாதவர்களை வாதிட்டு வெல்லும் வல்லமையில்லாதவர்கள் . எனவே , அவர்களின் உரைகளைக் கேளாது , வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்து அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்தவனும் , திருப் பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனுமான சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை நினைந்து வணங்கி வாழ்வீர்களாக !

குறிப்புரை :

பீலியார் - மயிற்பீலியை யேந்திவரும் சமணர் . எறும்பு முதலிய உயிர்களுக்கும் துன்பம் நேராதவாறு மெல்லிய பொருளாகிய மயில் தோகையால் வழியைச் சீத்துச் செல்வது சமணமுனிவர் செயல் . பிடகர் - புத்தர் ; புத்த தருமம் உரைக்கும் நூல் பிடகம் எனப்படும் . வகைநோக்கித் திரிபிடகம் எனவும் படும் . நூன்மை - நூலின் பொருள் . சாலியாதவர் - சாதியாதவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
நண்புண ரருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.

பொழிப்புரை :

தண்ணீர் பாய்கின்ற வயல்வளமுடைய சீகாழியில் , கற்பகமரம் போன்று அன்பினால் அனைத்துயிர்கட்கும் நலம் சேர்க்கும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் , நற்பண்புடையவர் வணங்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் , வினைப்பயன்களை நுகர்வதற் காகப் பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி வாழ்வர் .

குறிப்புரை :

கண் - இடமெல்லாம் . புனல் - நீர் நிலையையும் விளைவயல் - விளையும் வயல்களையும் , உடைய . காழி - சீகாழியுள் . கற்பகம் - கற்பகத்தருவாகிய . உண்பின உலகினில் - முற்பிறப்பில் செய்த வினைகளை நுகர்தற்குரியபுவனமாகிய இவ்வுலகத்தில் . உண்பின - குறிப்புப் பெயரெச்சம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மந்திர மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை யடிக ளல்லரே.

பொழிப்புரை :

பஞ்சாக்கர மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட வேதங்களும் , தேவர்களும் , இந்திரனும் வழிபட வீற்றிருக் கின்ற எங்கள் இறைவனாய் , வெந்த வெண்ணீற்றினைத் திருமேனியில் பூசித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் அந்தமும் , ஆதியுமாகிய அடிகள் அல்லரோ ?.

குறிப்புரை :

ஸ்ரீ பஞ்சாட்சரமாகிய திவ்விய மந்திரத்தைத் தனி நடுப்பகுதியுள்ளதாகிய வேதங்களும் தேவர்களும் இந்திரனும் வழிபாடு புரிய எழுந்தருளிய எமது பதி . இது , முதல் இரண்டடிகளுக்கு உரை . இறுதியாம் பொருள் எவற்றினுக்கும் இறுதியானவரும் முதலாம் , பொருள் எவற்றிற்கும் முதலானவரும் ஆவர் . முதல் அடியில் வரும் எண் ஒடுச் சொல்லை மறையொடும் , இந்திரனொடும் ஒட்டுக . மந்திர மறைகளோடும் தேவர்களோடும் இந்திரனும் வழிபட நின்ற இறை . மறை அவை , இதில் அவை , பகுதிப் பொருள் விகுதி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
உடைவிரி கோவண முகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய
சடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே.

பொழிப்புரை :

இறைவர் மழுவைப் படையாக உடையவர் . பாய்கின்ற புலித்தோலை ஆடையாக உடையவர் . கோவணத்தை உகந்து அணிந்தவர் . இடபவடிவம் பொறிக்கப்பட்ட கொடியுடையவர் . திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் சடையிலே கங்கையைத் தாங்கிய திறமையானவர் அல்லரோ ?

குறிப்புரை :

படையுடை மழுவினர் - மழுவைப் படையாக வுடையவர் . தோலின் உடை - தோலாகிய உடை , இங்கு இன் - தவிர் வழிவந்த சாரியை யென்பர் நச்சினார்க்கினியர் . ` முள்ளின் ஊசித்துன்ன ` - சீவக சிந்தாமணி . சடையில் புனல் வைத்த திறமையை யுடையன் . இதில் திறமை என் எனில் நீரானது உச்சியிலிருந்து கீழே வழிந்து ஒருவழி நில்லாமல் பரந்து ஓடிச்செல்லும் ; நிலத்துக்கு ஏற்ற இயல்பையுடையது . சுவையடையும் இயல்பினது , அதனை அடக்கித் திவலையாக்கிச் சடையில் நிலையாகவைத்தல் ஒரு திறமையேயாம் . அவ்வாறு செய்து பழகி அப்பழக்கத்தால் கீழ்நோக்கிப் பல்லாயிர நினைப்பாகப் பரவிச் சார்ந்ததன் வண்ணமாக விரிந்து ஓடும் என் மனத்தை அணு அளவிற்றாக்கித் தன் திருவடியை நினைக்க நிலைக்க வைத்த வல்லாளன் என்னும் கருத்து .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவுவெண் காடு மேவிய
ஆலம தமர்ந்தவெம் மடிக ளல்லரே.

பொழிப்புரை :

இறைவர் பாலொடு , நெய் , தயிர் மற்றும் பலவற்றாலும் திருமுழுக்கு ஆட்டப்படுபவர் . யானைத்தோலைப் போர்வையாகவும் , புலித்தோலை ஆடையாகவும் அணிந்தவர் . முப்புரி நூலணிந்த மார்பினர் , சிவஞானிகள் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து அறம் உரைத்த எம் தலைவர் அல்லரோ ?

குறிப்புரை :

தோலொடு நூலிழைதுதைந்த மார்பினர் . ஆலம் அது அமரும் - கல்லாலின் அடியில் அமரும் எம் அடிகள் . இனி நஞ்சை விரும்பியுண்ட எனினும் அமையும் . அது - பகுதிப்பொருள் விகுதி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

ஞாழலுஞ் செருந்தியு நறுமலர்ப் புன்னையுந்
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழம துரித்தவெண் காடு மேவிய
யாழின திசையுடை யிறைவ ரல்லரே.

பொழிப்புரை :

புலிநகக் கொன்றையும் , செருந்தியும் , நறுமணமிக்க புன்னை மலர்களும் , தாழையும் , குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் , யானையின் தோலையுரித்த ஆற்றல் உடையவராயும் , யாழிசை போன்ற இனிமை உடையவராயும் உள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ ?

குறிப்புரை :

ஞாழல் - புலிநகக்கொன்றை . ஞாழற்பூவும் , செருந்திப் பூவும் ( செருந்தி - செந்நிறப் பூவையுடைய ஒரு மரம் ,) புன்னைப்பூவும் ஆகிய இவைகள் விளங்கும் கடற்கரைச் சோலையில் உள்ள திருவெண்காடு மேவிய - யானையையுரித்த - இசையையுடைய - இறைவர் எனத் தனித் தனிக் கூட்டுக . ஞாழல் , செருந்தி இரண்டும் முதல் ஆகுபெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பலவிடர் தீர்க்கு மெம்மிறை
வேதங்கண் முதல்வர்வெண் காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே.

பொழிப்புரை :

எம் இறைவர் , பூதகணங்கள் பல உடைய புனிதர் . புண்ணிய வடிவினர் . தம்மை வழிபடுபவர்களின் குற்றங்களையும் , துன்பங்களையும் தீர்த்தருளுபவர் . அவர் வேதங்களில் கூறப்படும் முதல்வர் . திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ ?

குறிப்புரை :

ஏதம் - குற்றம் . ஏதங்களையும் பல இடர்களையும் தீர்க்கும் எமது பதி . வெண்காடு மேவி . பரமர் பாதங்களைத் தொழ என்பதற்கு அடியார் என வினைமுதல் வருவித்துரைக்கப்படும் . ` அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலும் ` என்புழிப்போல . ( தி .2. ப .43. பா .5.) பரமர் - பரம்பொருள் , மேலான பொருள் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தோரும் , விண்ணுலகத்தோரும் , மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை வழிபட்டுப் போற்றுகின்றனர் . வானளாவிய சோலைகளையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

மண்ணவரும் விண்ணவரும் , ஏனை விண்ணவரும் தம்பொருட்டு எம்மிறையை வணங்குகின்றனர் . அவர்கள் திருவெண்காடு மேவிய அண்ணலைக் கடிது வணங்கிப் பிறவியறுக்க அறிகிலர் என்பது இப்பாடலிற் குறித்த பொருளாகும் . அது ` வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் ` என்னும் திருவாசக ( தி .8 பா .20) த்தின் கருத்தாகும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

நயந்தவர்க் கருள்பல நல்கி யிந்திரன்
கயந்திரம் வழிபடநின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவுவெண் காடுமேவிய
பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே.

பொழிப்புரை :

விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன வேண்டியவாறு அருளி , இந்திரனின் வெள்ளையானை வழிபட அதற்கும் அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் ஆவார் . அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய பரமர் அல்லரோ ?

குறிப்புரை :

கயந்திரம் வழிபட :- கஜேந்திரம் பூஜைசெய்ய . யானை ( கஜங் ) களுக்குத் தலைமையுடையது கஜேந்திரம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

மலையுட னெடுத்தவல் லரக்கன் நீள்முடி
தலையுட னெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
அலையுடைப் புனல்வைத்த அடிகள் அல்லரே.

பொழிப்புரை :

கயிலைமலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனின் நீண்டமுடி , தலை , உடல் ஆகியவற்றை நெரித்து , பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட , அருள் செய்த சங்கரர் , மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர் . அலையுடைய கங்கையைச் சடையில் தாங்கித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளும் பெருமான் அவர் அல்லரோ ?

குறிப்புரை :

விலையுடை நீற்றர் . அன்பே விலை . ஆநந்தமே பயன் . வைத்த - சடையில் வைத்த .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

ஏடவிழ் நறுமலர் அயனு மாலுமாய்த்
தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார்
வேடம துடையவெண் காடு மேவிய
ஆடலை யமர்ந்தஎம் அடிகள் அல்லரே.

பொழிப்புரை :

பூவிதழ்களுடைய நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் திருமுடியையும் , திருஅடியையும் காணத்தேடியும் காண்பதற்கு அரியவராய் நெருப்புமலையாய் விளங்கியவரும் , பலபல வேடம் கொள்பவருமான இறைவன் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ ?

குறிப்புரை :

ஏடு - பூ இதழ் . தேடவும் தெரிந்தவர் தேரகிற்கிலார் வேடம் உடைய திருவெண்காடு ஆடலை . அமர்ந்த - விரும்பிய . எம் அடிகள் எனத் தனித்தனிக் கூட்டுக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
வேதியர் பரவுவெண் காடு மேவிய
ஆதியை யடிதொழ அல்லல் இல்லையே.

பொழிப்புரை :

புத்தரும் , சமணரும் பொருத்தம் இல்லாதவராய் , இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும் , நல்வாழ்வு இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதவர் ஆயினர் . எனவே அவர்களைச் சாராது , வேதம் ஓதும் அந்தணர்கள் பரவித் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அனைத்துலகுக்கும் முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லையாம் .

குறிப்புரை :

நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார் - சைவத்தின் உயர்வு முதலிய நீதிகளை எடுத்துரைத்தலும் நல்லூழ் இன்மையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.

பொழிப்புரை :

பசுபுண்ணியம் , பதிபுண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன் , செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டின் மேல் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும் .

குறிப்புரை :

பிறவித் துன்பங்கள் அவற்றிற்கு மூலகாரணமான தொலைத்தற்கரிய வினைகளோடும் விட்டொழியும் . நமது ஆணை - மேலும் மேலும் வரக்கடவதுடன் , வினையால் ஆனமையின் அல்ல லோடு அருவினையறுதல் ஆணை கூறியருளினார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

நிணம்படு சுடலையி னீறு பூசிநின்
றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினும்
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர் , உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பர் . ஆயினும் அப்பெருமான் உயர்ந்த குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

சுடலையில் எழும்பிய நீறு பூசிப் பேய்களோடு இணங்குவர் . அங்குப் பெரிய கூத்து ஆடுவர் . உலர்ந்த மண்டை யோட்டில் உண்பர் . ஆயின் அவரிடத்தில் என்ன குணம் உளதாவது என்னற்க ; உயர்ந்த குணம் எல்லாம் உடையர் என்க ` கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி ..... காயின் உலகனைத்தும் கற்பொடி காண் சாழலோ .`

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

ஆற்றநல் லடியிணை அலர்கொண் டேத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் னடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

நலம் தரும் இறைவனின் திருவடிகளை மலர்கொண்டு போற்றி வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள் இறுதியை அறிந்து யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி மார்க்கண்டேயனை நெருங்கி வந்தடைந்த கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவர் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் .

குறிப்புரை :

நல்ல திருவடிகளை மலர்கொண்டு முற்றப் பூசிப்பவனாய் . சாற்றிய - அபயம் என்று சொல்லிய . அந்தணன் - மார்க்கண்டேயர் . ஆற்ற ஏத்துவானாய்ச் சாற்றிய அந்தணன் என்க . தகுதி - இறுதி . மாற்றலன் ஆகி - யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி . வந்து அணை - வந்து அடைந்த . கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடர் . மாற்றுதல் - ` மாற்றேனெனவந்த கூற்றனை மாற்றி ` என்று திருவாசகத்திலும் வருதல் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

தாம் வாழ்வான் வேண்டி வணங்கும் வானவர்களைக் காப்பதற்காகக் கொடிய விடத்தை உண்டு தம் கண்டத்தில் அடக்கிய சிவபெருமான் , ஊமத்தம் பூவும் , வன்னியும் அணிந்த சடைமுடியில் கொத்தாகக் கொன்றைமலர் சூடியவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அத்தகு - அப்படிப்பட்ட . மால்விடம் - கொடிய விடத்தை , மால் என்ற சொல் இங்குக் கொடுமையென்னும் பொருளில் வந்தது . இப்பொழுது நீலமணி போற்காணப்படுவதாகிய கண்டத்தின் உட்பாகத்தில் வைத்தவர் . மத்தம் - பொன்னூமத்தை . மலிந்த - மிகுதி யாக அணியப்பட்ட . கொத்துக் கொத்தாக அலரும் கொன்றையை அணிந்தவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

பாவண மேவுசொன் மாலை யிற்பல
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினும்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன் நவிலுமாறு செய்தவர் இறைவர் . அவர் உயிர்களாகிய எங்களை அடிமை கொண்டு ஆள்பவராயினும் கோவணஆடை உடையவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பாவ ( ண் ) ணம் - பாட்டின் இலக்கணம் ( யாப்பு ). மேவு - பொருந்திய . சொல் மாலையில் பல - சொல்லைத் தொடுக்கும் மாலைபோன்ற பாடல்களிற் பலவற்றை . நாவணம் - நாவிற்குப் பொருந்து விதமாக . கொள்கையின் - விதிப்படி . நவின்ற - பாடிய ஆவணம் கொண்டு - அடிமை ஓலை எழுதி . எமை ஆள்வர் - எங்களையாட்கொள்பவர் . ஆயினும் , கோவணங் கொள்கையர் - கோவணம் உடையாகக் கொள்பவர் . அத்தகையர் அடியோங்களுக்கு யாது தரற்பாலர் என்பது குறிப்பெச்சம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

வாரணி வனமுலை மங்கை யாளொடும்
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லாரெயில்
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

கச்சணிந்த அழகிய முலையுடைய உமாதேவியோடு , சிறந்த அழகிய திருவுருவத்துடன் விளங்கும் சிவபெருமான் , நாண் பூட்டிய மேருமலையை வில்லாகக் கொண்டு பகைவர்களாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அக்கினியை அம்பின் நுனியாகக் கொண்டு கொளுத்தியவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

சீர் அணி திருவுரு - சிறந்த அழகோடு கூடிய திருவுருவம் . நார் - நாரி , நாணி , நணுகலார் - பகைவர் . கூர் எரி - மிக்க நெருப்பு . கொளுவினார் - பற்றவைத்தார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு , மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள கயிலைமலையில் மகிழ்ந்திருந்து நாள் தோறும் தம்மை வழிபடுபவர்கட்கு அருள் பாலிக்கும் இறைவர் , கொடிய சினத்தோடும் , கொம்போடும் வேகமாக வந்தடைந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

செம்பஞ்சுக்குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தை யுடைய பதுமை போன்ற அம்பிகை . மஞ்சு - மேகம் . கொடிய சினத்தோடும் மருப்போடும் வந்தடைந்த குஞ்சரம் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

இறையுறு வரிவளை யிசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

திருக்கையில் விளங்கும் அழகிய வளையல்களையுடைய உமாதேவி இசைபாட , திருவடிகளில் விளங்கும் வீரக்கழல்கள் ஒலிக்க , இறைவர் திருநடனம் புரிகின்றார் . அப் பெருமான் பாய்கின்ற கங்கையைத் தடுத்துச் சடையில் தாங்கி , கலைகுறைந்த சந்திரனையும் தலையில் சூடி , திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

இறை - முன்கை . உறும் - பொருந்திய . வரிவளை - கீற்றுக்களையுடைய வளையலையணிந்த உமாதேவியார் . வரிவளை என்பது அன்மொழித்தொகை . அறை உறு - ஒலித்தலையுடைய . சிறை உறு - தடுக்கப்படுதலையுடைய . குறையுறுமதி - கலை குறைந்த சந்திரன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

எடுத்தனன் கயிலையை யியல்வ லியினால்
அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்
படுத்தன ரென்றவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

தன்னுடைய வலிமையினால் கயிலைமலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனை , தம் காற்பெரு விரலையூன்றி அம்மலையின்கீழ் அடர்த்து அவறும்படி செய்ய , இராவணன் தவறுணர்ந்து , தன்னை வருத்திய சிவனைப் போற்றிச் சாமகானம் பாட , இறைவர் இரங்கி வீரவாளை அருளினார் . அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

இயல் - தனக்கு உள்ள . வலியினால் - வலிமையினால் . அலறிடத் திருவிரலால் அடர்த்தனர் என்க . ` நம்மைச் சிவன் வருத்தினன் ` என்று தன்னுள் நினைத்து . அவன் - அவ்விராவணன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

பிரமன் திருமுடியினையும் , திருமால் திருவடியையும் தேட , அவர்களால் எப்பொழுதும் அணுகமுடியாதவராய் விளங்கும் சிவபெருமான் , பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட அருள்செய்வார் . அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அயன்முடி , மால் சேவடி , தேடினார் என்க . தேடினவர்களாகிய அவர்களால் எப்பொழுதும் அணுக முடியாதவராயிருப்பர் . அன்போடு பாடியவர்களாய் மனமும் ஒருமைப்பட்ட பத்தர்கட்கு நணுகுபவராய் இருப்பதன்றி அருளும் செய்வர் திருக்கொள்ளிக்காடர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் னோதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

இறையுண்மையை உணரும் அறிவில்லாத நாணமற்ற சமணரும் , புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள் மெய்யானவை அல்ல . அவர்களைச் சாராதுவிட்டு , நான்கு வேதங்களை அருளிய சிவபெருமான் , நன்கு பழகிய உமாதேவியோடு திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து உய்தி அடையுங்கள் .

குறிப்புரை :

அறிவில் நாண் இலிகள் - அறிவும் நாணமும் இல்லாதவர் . ஆடையின்றி யிருக்கும் துறவிகளை நாணிலிகள் என்றார் . ` நாணமும் உடையும் நன்கனம் நீத்து ` என்பது மணி மேகலை . அவர் உரைகள் அனைத்தும் பொய் . அவற்றை விட்டு நான்மறை பாடிய , மாதோடும் கூடியிருப்பவராகிய கொள்ளிக்காடர் உளார் . ` அவரைச் சார்ந்து உய்தி கூடுங்கள் ` என்பது குறிப்பெச்சம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

நற்றவர் காழியுண் ஞானசம் பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமி ழின்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே.

பொழிப்புரை :

நல்தவத்தோர் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , குற்றமற்ற பெரும்புகழுடைய திருக்கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை , அழகு தமிழில் , இன்னிசையோடு பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத வல்லவர்கள் அப்பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்கள் .

குறிப்புரை :

நல்ல தவத்தைச் செய்தவர்களையுடைய சீகாழி . குற்றமில் பெரும் புகழ்க் கொள்ளிக்காடர் :- இறைவன் புகழே புகழ் . ஏனையோர் புகழ் அனைத்தும் பொய்ப்புகழ் என்பதாம் . ` இறைவன் பொருள் சேர் புகழ் ` என்ற திருக்குறட் பரிமேலழகருரையானும் உணர்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட , நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் , குரவம் , சுரபுன்னை , கோங்கு , வேங்கை ஆகிய மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை ஆகும் .

குறிப்புரை :

மரு - வாசனை . தெய்வக் கற்புடைய அம்பிகையின் கூந்தல் இயற்கை மணம் கமழ்வது ஆதலால் ` மரு அமர் குழல் உமை ` என்றார் . வார்சடை ...... எம் அடிகள் - நெடிய சடையின் கண்ணே பாம்பையும் விரும்பத்தக்க கொன்றை மாலையையும் உடைய எம் அடிகள் . குரவும் ஏனைய மரங்களும் கலந்தபொழில் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

கீதமுன் னிசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.

பொழிப்புரை :

கீதங்களை முன்னே இசைக்க விளங்கும் வீணையினை உடையவரும் , பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான சிவபெருமானின் பொன்னகர் என்பது , இடபதேவர் வழிபட விளங்குவதும் , நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் . கோதனம் வழிபட - பசுக்கூட்டங்கள் வழிபட என்றும் பொருள் உரைப்பர் . ஒரு காலத்தில் இவ்வூர் கோவந்த புத்தூர் என வழங்கப்பட்டதாகக் கூறுவர் .

குறிப்புரை :

இசைப்பாட்டு முன்னே இசைக்க விளங்கும் வீணையையுடையர் என்பது முதலடியின் பொருள் . பூதம் ... புனிதர் - பூதங்கள் முன்னால் தம்மைச் சூழ நடந்துவரச்செல்லும் தூயோர் . கோதனம் - பசு . இங்கே இடபதேவரைக் குறிக்கும் . ` புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் ` ` வெள்விடைக் கருள்செய் விசய மங்கை ` என்னும் அப்பர் மூர்த்திகள் திருவாக்கிலும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

அக்கர வரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
தக்கநல் வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே.

பொழிப்புரை :

உருத்திராக்கத்தையும் , பாம்பையும் அணிந்த இடுப்பையுடையவரும் , உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட வரும் , சிறந்த நல் இடபத்தை வாகனமாக உடைய சோதி வடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமை வாய்ந்த நகர் , தகுதியுடைய நல்ல தேவர்களும் , அவர்களுடைய தலைவர்களும் நாள்தோறும் வணங்கிப் போற்றுகின்ற திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் . அக்கு - உருத்திராக்கம் . இதனை ` அக்கு மாலைகொடங்கையி வெண்ணுவார் ` ( தி .3 ப .307 பா .3) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கால் அறிக .

குறிப்புரை :

அக்கு அரவு அரையினர் - அக்குப் பாசியையும் பாம்பையும் அணிந்த இடுப்பை உடையவர் . அரை - அளவையாகு பெயர் . சோதி - சிவனுக்கு ஒரு பெயர் . வானவர் ..... மிக்கவர் - வான வரும் அவர்கள் தலைவராகிய இந்திரன் , பிரமன் , திருமால் முதலியோரும் அவரினும் மிக்க அடியார்களும் . தொழுது எழு விசய மங்கையே சோதி தொல் நகர் . அக்கு - எலும்பும் , உருத்திராக்கமும் ஆம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

தொடைமலி யிதழியுந் துன்னெ ருக்கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல் விசய மங்கையே.

பொழிப்புரை :

கொன்றை மாலையும் , நெருக்கமாகத் தொடுக்கப் பட்ட எருக்க மாலையும் பக்கங்களிலே விளங்கும் சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் அழகிய நகரம் , மழுவை ஆயுதமாக உடையவரும் , பசிய கண்களையுடைய வலிமை யுடைய வெண்ணிற எருதுவை கொடியாக உடைய சிவபெருமானின் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இதழி - கொன்றை . துன் - நெருங்கிய . எருக்கு - வெள் எருக்கம் பூமாலை . புடை - பாகம் . படை மலி மழு - ` படைமலிந்த மழு ` என அப்பர் மூர்த்திகள் திருவாக்கிலும் இத்தொடர் வருதல் காண்க . மூரி - வலிமை . வெள்விடை . மூரி என்ற சொல் மலையாளத்தில் - எருத்துக்கு வழங்கும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோ டினித மர்விடம்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல் விசய மங்கையே.

பொழிப்புரை :

இறைவன் இடப்பாகத்தில் தோடணிந்த காதினன் . நன்கு குழையத் திருநீறு பூசிய மேனியன் . காட்டிலே வசிக்கின்ற பெரிய யானை கதறும்படி அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட ஒப்பற்ற திருக்கோலத்தையுடைய அண்ணலான சிவபெருமான் , பூவிதழ்களை அணிந்த கூந்தலையுடைய உமாதேவியோடு இனிது வீற்றிருக்கும் இடம் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஏடு - பூ இதழ் . கோதை - கூந்தல் , ஏடு அமர் கோதை - உமாதேவியார் ; அன்மொழித்தொகை . பன் மொழித் தொடர் . மாகரி கதறப் போர்த்தது , இங்கு ( கதற ) உரித்து என ஒரு சொல் வருவிக்க . கரி போர்த்தது ஓர் வேடம் , யானைத்தோலைப் போர்த்த கோலம் . அ ( ண் ) ணல் - தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட வருள்புரி விசய மங்கையே.

பொழிப்புரை :

நீலோற்ப மலர் போன்ற கண்ணுடைய உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டவன் இறைவன் . சிறந்த நெருப்புப் போன்ற திருமேனியுடையவன் . எம்மை ஆளும் அவரின் நகர் நீரும் , மலரும் கொண்டு தேவர்கள் உண்மையாக வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் . பூவும் , நீரும் கொண்டு அன்புடன் வழிபடுபவர்களின் பூசையை ஏற்று இறைவன் அருள் செய்வான் என்று கூறுவது அன்பில்லாதவர்களின் பூவையும் , நீரையும் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதைப் புலப்படுத்தும் . ` பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே ` ( தி .5 ப .90 பா .9) என்ற திருநாவுக்கரசரின் திருவாக்கை இங்கு நினைவுகூர்க .

குறிப்புரை :

மை - கருமை - கரிய நீலோற்பல மலருக்கு ஆகுபெயர் . நீலோற்பல மலரையொக்கும . கண் உமை - கண்களையுடைய உமாதேவியார் . வண்தழல் - சிறந்த நெருப்பை . ஒப்பு உரை மேனி ஒப்பாக உரைக்கும் உருவத்தையுடைய . எம் உடையவன் - எம்மை ஆளாக உடையவன் . அப்பு - நீர் . இறைஞ்சி - மெய்ப்பட வணங்கி , உண்மையான தியானத்திலிருக்க . ` மைப்பயந்த வொண்கண் ` ( பூம்பாவைத் திருப்பதிகம் ) என்றதில் கண்ணின் கருமைக்கு ஒப்பாகாமையால் மை அஞ்சியதாதலின் மையைப் போன்ற கரியகண் எனலுமாம் . பயன்பட்ட எனின் பொருந்தாது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

இரும்பொனின் மலைவில்லின் எரிச ரத்தினால்
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடையணல் விசய மங்கையே.

பொழிப்புரை :

பெரிய மேருமலையாகிய வில்லினால் எய்யப்பட்ட நெருப்பாகிய அம்பினால் திரிபுரங்களைப் பொடிசெய்த பெரும் வீரமுடையவன் இறைவன் . வண்டுகள் அமர்கின்ற கொன்றை மலர் மாலையையும் , தூய ஊமத்தை மலரையும் விரும்பி அணிந்த சடைமுடியுடைய தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

இரும் பொ ( ன் ) னின் மலைவி ( ல் ) லின் - பெரிய பொன்மலை ( மேரு ) வில்லினால் . எரி - நெருப்பாகிய சரத்தினால் ( அம்பினார் ) திரிபுரமெரித்த அம்பின் நுனிப்பாகம் தீக்கடவுளாய் இருந்தமையால் ` எரி சரம் ` எனப்பட்டது . அ ( ண் ) ணல் - தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

உளங்கைய இருபதோ டொருபதுங் கொடாங்
களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்
தளர்ந்துட னெரிதர வடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.

பொழிப்புரை :

தன்னுடைய வழியில் இம்மலை தடுக்கின்றது என்று மனம் கசந்து , இருபது தோள்களும் , பத்துத் தலைகளும் கொண்டதால் தான் வலிமையுடையவன் என்று எண்ணி , எடுத்தற்கு அரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுக்க முயன்ற அரக்கனான இராவணன் தளர்ந்து உடல் நெரியும்படி அடர்த்த தன்மையுடைய சிவபெருமான் , ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு வீற்றிருந் தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

உளம் கைய ( இம்மலை செல்லுதற்குத் தடையாயிருந்த தென்று ) மனம் வெறுக்க . அளந்து - தன் இருபது தோளும் பத்துத் தலையும் கொண்ட தன் வலிமையை அளந்து தெரிந்துகொண்டு . அருவரை - எடுத்தற்கரிய கயிலைமலையை . விளங்கு இழை - ( அம்மையாரால் அணியப்பெற்றதால் ) விளங்கும் இழை . ( அணி ) யை யுடைய அம்மையார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.

பொழிப்புரை :

மண்ணினை உண்ட திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அளத்தற்கரிய தலைவனான சிவபெருமானது ஊர் , குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும் சந்தனமும் , பூவும் நீரும் கொண்டு விண்ணவர் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இப்பாடலின் முற்பகுதிக்குத் திருமால் பிரமர்கள் என்பது பொருள் . அத்தன் - தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.

பொழிப்புரை :

கஞ்சி உண்ணும் புத்தர்களும் , கவனமாக உணவு உண்ணும் சமணர்களும் உரைக்கின்ற கருத்துக்கள் நஞ்சினும் கொடியனவாகும் . நம்மவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளார் . சிவந்த சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம் வித்தியாதரர்கள் தொழுது வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கவணர் - மாறுபட்ட தன்மையை யுடையவர்கள் , வட சொல் . கஞ்சியும் கவளமும் உண்பவர் , முறையே சமணரும் புத்தரும் ஆவார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞானசம் பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.

பொழிப்புரை :

விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசய மங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து , திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தழிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர் . அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும் .

குறிப்புரை :

ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் . சிவ புண்ணியச் செல்வர் ஆவர் . அவர்கள் சிவாநந்தப் பெரு வாழ்வு அடைவது திண்ணம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே.

பொழிப்புரை :

இறைவன் , துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன் . இளம்பிறையை அணிந்துள்ள சடையன் . எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , அழகிய சந்திரனை வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

து ( ள் ) ளமதியுடைமறி - துள்ளிக் குதிக்கக் கருத்து உடையமான் கன்று . உளம் - உள்ளம் . வைகல் - தலத்தின் பெயர் . மாடக்கோயில் ஆலயத்தின் பெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.

பொழிப்புரை :

இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர் . வேதத்தை அருளிச்செய்தவர் . அவர் , மை தீட்டிய கரிய கண்ணுடைய மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் இடமாவது , இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும் திருத்தலத்தில் மேற்குத் திசையில் , சிவந்த கண்ணுடைய கோச்செங்கட் சோழ மன்னனால் முற்காலத்தில் எழுப்பப்பட்ட மாடக்கோயிலாகும் .

குறிப்புரை :

மெய் அகம் - உடம்பினிடத்தில் . மிளிரும் - விளங்குகின்ற - வேதியர் - வேதத்தாற் பிரதிபாதிக்கப்படுபவர் . செய்ய கண் வளவன் - கோச்செங்கண்ணன் என்னும் சோழ அரசர் . கோச்செங்கட் சோழ நாயனார் வரலாற்றை அவர் மாடக்கோயில் எழுபது கோடியமையும் தலவரலாற்றில் அறிக . கோச் செங்கட்சோழ நாயனார் பெருமையைத் திருநாவுக்கரசு நாயனார் ஐந்தாம் திருமுறையிலும் , ஆறாந் திருமுறையிலும் சுந்தரமூர்த்தி நாயனார் ஏழாந் திரு முறையிலும் அருளினமை காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

கணியணி மலர்கொடு காலை மாலையும்
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி யுமையொடு தாமும் தங்கிடம்
மணியணி கிளர்வைகன் மாடக் கோயிலே.

பொழிப்புரை :

வேங்கைமரத்தின் அழகிய மலர்களைக் கொண்டு காலையும் , மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு அருள்செய்யும் தன்மையுடைவர் இறைவர் . அவர் குளிர்ந்த அருளையே தம் வடிவ மாகக் கொண்டு உமாதேவியோடு தாமும் வீற்றிருந்தருளும் இடமாவது இரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்ட திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக்கோயிலாகும் .

குறிப்புரை :

கணி - கண்ணி , அதே குறிக்கோளாகக் கருதி . அணி - அழகிய . பணி - திருப்பணியாகக்கொண்டு . அணிபவர்க்கு - காலையும் மாலையும் அணிமலர் கொணர்ந்து அணிபவர்களுக்கு . அருள் செய்த . பான்மையர் - தன்மையுடையவர் . தணி - ( தண் + இ ) குளிர்ந்த அருள் . அணி - தன் வடிவாகக்கொண்ட உமை . மணி அணிகிளர் - இரத்தினங்களால் அழகு விளங்குகின்ற வைகலில் . மாடக்கோயில் , பான்மையர் உமையொடும் தங்கும் இடம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.

பொழிப்புரை :

பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த மேன்மையுடையவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

கொம்பு இயல் கோதை - ஸ்தலத்து அம்பிகையின் பெயர் . பூங்கொம்பு அசைவதுபோல் நடக்கின்ற அம்பிகை ; கோதை - பெண் . குஞ்சரத்தும்பி - இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை . துங்கர் - மேலானவர் . வம்பு இயல் - வாசனையையுடைய சோலை சூழ்ந்த தலத்துக்கு மேற்றிசையிலுள்ள கோயில் . அடுத்த பாடலிலும் இக் குறிப்பு வருதல் காண்க . செம்பியன் - சோழன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

விடமடை மிடற்றினர் வேத நாவினர்
மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக்கோயிலே.

பொழிப்புரை :

இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து வைத்துள்ள கண்டத்தினர் . வேதங்களை ஓதும் நாவினர் . அவர் , இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான உமாதேவி யோடு வீற்றிருந்தருளும் இடம் , இள அன்னப்பறவைகள் நடை பயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத்திசையில் நிலவும் மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

விடம் அடைமிடற்றினர் - விடந்தங்கிய கழுத்தை யுடையவர் . வேதம் நாவினர் - வேதத்தைப்பாடும் நாவினை யுடையவர் . மடம்மொழி - குதலைச் சொல்லையுடைய . மலைமகள் . மட அனம் - இளம் அன்னப் பறவைகள் . நடைபயில் - மாதர் நடையைப் பழகுகின்ற . நிலவிய - விளங்குகின்ற , மாடக்கோயில் துங்கர் தங்குமிடம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவிடம் இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.

பொழிப்புரை :

புனிதமான கங்கையையும் , பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள நீண்ட சடைமுடியுடைய இறைவர் வீற்றிருந்தருளும் இடமாவது , மூவகை அக்கினிகளை வேதங்களோடு வளர்க்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , சிற்றரசர்கள் கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும் கோச்செங்கட்சோழன் என்ற மாமன்னன் கட்டிய மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

நிலவும் நீள்சடை . மூஎரி மறையொடு வளர்வு செய்வாணர் - மூவகை அக்கினிகளை - வேதத்தினோடு வளர்க்கின்றவர் . எரிவாணர் - அக்கினியில் வாழ்பவர் ; வாணர் . ( வாழ் + க் + அர் ) திறை உடை நிறை செல்வன் - அரசர்கட்டும் கப்பத்தையுடைய நிறைந்த செல்வன் ; கோச்செங்கட் சோழ நாயனார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுர மெரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகில் அணவிய மாடக் கோயிலே.

பொழிப்புரை :

அக்கினியாகிய அம்பை , மேருமலையை நீண்ட வில்லாக வளைத்துச் செலுத்தி முற்காலத்தில் திரிபுரங்களை எரி யுண்ணுமாறு செய்த செல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமாவது , வரிவளையல்கள் அணிந்த பெண்கள் பழகுகின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத் திசையில் விரிந்துள்ள மேகத்தைத் தொடும்படி ஓங்கியுள்ள மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

அக்கினியாகிய அம்பை . வரிசிலை வளைய - நீண்ட வில்லை வளைத்து . ஏவி - செலுத்தி . திரிபுரம் எரி செய்த செல்வர் என்பது இப்பாடலின் முற்பகுதிக்குப் பொருள் . வரிவளையவர் - கீற்றுக்களையுடைய வளையணிந்த மகளிர் . வரும் முகில் அணவிய - படர்ந்து வருகின்ற மேகங்கள் அளாவிய சோதியாரிடம் மாடக்கோயில் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

மலையன இருபது தோளி னான்வலி
தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாடக் கோயிலே.

பொழிப்புரை :

மலை போன்ற இருபது தோள்களையுடைய இராவணனது வலிமையை அழித்து , பின்னர் அவன் சாம கானம் பாடிப் போற்ற அவனுக்கு அருள் செய்த சோதியாகிய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது , மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய திருவைகலில் வாழ்கின்றவர்கள் வலம் வந்து வணங்கும் மலை போன்ற மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

அன - அன்ன - போன்ற . வலி தொலைவு செய்து அருள் செய்த - வலிமையைத் தொலைத்து மீள அவனுக்கே அருளும் செய்த ( சோதியார் ) என்பது இரண்டாம் அடியின் பொருள் . வலம் வந்து வணங்குகின்ற மலையை ஒத்த மாடக்கோயில் என்பது நான்காம் அடியின் பொருள் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

மாலவன் மலரவன் நேடி மால்கொள
மாலெரி யாகிய வரதர் வைகிடம்
மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாடக் கோயிலே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் இறைவனின் அடிமுடி களைத் தேடியும் காணமுடியாது மயக்கம் கொள்ள , நெருப்பு மலையாய் நின்ற , வழிபடுபவர்கட்கு வேண்டிய வரங்களை அளிக்கவல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பூமாலைகளை இறைவனுக்கு அணிவித்து , வேதங்களை ஓதி வழிபாடு செய்யும் அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , மேகம் போலும் நிறத்தையுடைய நீலமணிகளால் அழகுபடுத்தப்பட்ட மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

மால் - ( அவன் ) திருமால் . மால்கொள்ள - மயக்கம் கொள்ள . மால் எரி ஆகிய - நெருப்பு ( மலை ) ஆகிய . வரதர் - சிவபெருமானுக்கொரு பெயர் . வேண்டிய வரங்களை அளிக்க வல்லவர் , சிவபெருமானொருவனேயாவர் ; ஏனையர் , அத்தகையர் அல்லர் . மறைவாணர் - மறையால் வாழ்பவர் ; அந்தணர் . மால் அ ( ன் ) ன மணி அணிமாடம் - மேகம்போலும் நிறத்தையுடைய நீலமணிகளாலும் அழகுபடுத்தப் பெற்ற மாடக்கோயில் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாடக் கோயிலே.

பொழிப்புரை :

கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும் , கஞ்சி குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும் , புத்தர்களின் பிடகநூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது , மடம் என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில் மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும் .

குறிப்புரை :

கடு - உடைவாயினர் - கடுக்காயைத் தின்பவர் ( புத்தர் ). கஞ்சி வாயினர் - கஞ்சியைக் குடிப்போர் ( சமணர் ). இவர்கள் சொல்லப்படுகின்ற திரிபிடகம் முதலிய அவர்கள் சமய நூல்களைப் பொருட்படுத்தாதவராகிய சிவனடியார்கள் பாராட்டும் கோயில் . வட மலை - மேருமலை ( போன்ற ) மாடக்கோயிலாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.

பொழிப்புரை :

அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய அழகிய திருச்சண்பை நகரில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச் சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர் .

குறிப்புரை :

சந்து - சந்தன மரங்கள் . சண்பை - சீகாழி . சிந்தை செய்பவர் சிவலோகத்து இருப்பர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

எரிதர அனல்கையில் ஏந்தி யெல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.

பொழிப்புரை :

இறைவர் எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்தி நள்ளிருளில் , நரிகள் திரிகின்ற மயானத்தில் திருநடனம் புரிகின்றார் . அப்பெருமானார் அரிசில் ஆறு பாய்வதால் நீர்வளமிக்க அம்பர் மாநகரில் பெருமையிற் சிறந்த , சிவந்த கண்களையுடைய கோச்செங்கட்சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

நெருப்பு , கையில் எரிய ஏந்திக் கொண்டு இரவில் மயானத்தில் நட்டம் ( நடனம் ) ஆடுவாய் என்பது முதலிரண்டு அடியின் கருத்து . அரிசில் அம்பொரு புனல் அம்பர் - அரிசில் ஆற்றின் நீர்வளம் பொருந்திய திருஅம்பர் . குரிசில் - சிறந்தோன் . செங்கண்ணவன் - கோச்செங்கட்சோழ நாயனார் . நட்டம் ஆடுபவராகிய சிவபெருமான் அம்பர்மா நகர்க்கோயில் சேர்ந்திருப்பர் என்பது முடிவு . மகாப்பிரளய காலத்தில் எங்கும் ஒரே இருள்மயமாய் இருத்தலின் , எல்லியில் என்றார் . நரி திரிகான் - சுடுகாடு . ` கோயில் சுடுகாடு ` என்பது காண்க . ( திருவாசகம் )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.

பொழிப்புரை :

மைபூசிய கண்ணையுடைய மலைமகளான உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு , இருளில் , இறைவர் கையில் கனன்று எரிகின்ற நெருப்பானது சுவாலை வீச , நடனம் ஆடுவார் . அப்பெருமானார் கரையை மோதுகின்ற அரிசிலாற்றினால் நீர்வளமிக்க அழகிய நல்ல அம்பர் மாநகரில் கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

மையகண் - மையை அணிந்த கண் . மைய - குறிப்புப் பெயரெச்சம் . இருள் ... ஆடுவர் . இருளில் கையில் உள்ளதாகிய நெருப்பானது சுவாலை வீச , ஆடுவர் . ஐய ... அம்பர் - அழகிய நல்ல கரையை மோதும் ( அரிசிலாற்றின் ) நீர்வளம் பொருந்திய அம்பர் . செய்யகண் - செங்கண் . இறை - அரசன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுன னிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.

பொழிப்புரை :

வேதங்களை அருளிப் பாடுகின்ற இறைவர் , சுடர்விடு நெருப்பு கையில் விளங்கவும் , பிறைச்சந்திரன் சடைமுடியில் அசையவும் ஆடுவார் . ஒலிக்கின்ற அரிசிலாற்றினால் நீர் நிறைந்த வயல்களையுடைய அம்பர் மாநகரில் , கோச்செங்கட்சோழ மன்னன் எழுப்பிய அழகுமிகு கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

மறை - வேதத்தை . புனைபாடலர் - புனைந்து பாடு தலையுடையவர் . சுடர் - நெருப்பானது . கைமல்க - கையிலே தங்க . அறை - ஒலிக்கின்ற . இறை - கோச்செங்கட் சோழ நாயனார் . புனை - அலங்கரித்துச் செய்யப்பட்ட . எழில்வளர் - அழகுமிகும் , இடம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

இரவுமல் கிளமதி சூடி யீடுயர்
பரவமல் கருமறை பாடி யாடுவர்
அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல் கெழினகர் மருவி வாழ்வரே.

பொழிப்புரை :

இரவில் ஒளிரும் இளம்பிறைச் சந்திரனைச் சூடி , தம் பெருமையின் உயர்வைத் துதிப்பதற்குரிய அருமறைகளை இறைவர் பாடி ஆடுவார் . பாம்பணிந்து உயர்ந்து விளங்கும் செம்மலாகிய சிவபெருமான் , கொம்புகளில் மலர்களையுடைய வெண்கடம்ப மரங்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய அம்பர் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

மல்கு இளமதி - மிகுந்த இளமையையுடைய பிறைச் சந்திரன் . ஈடுஉயர் பரவமல்கு அருமறை - ( தன் ) பெருமையின் உயர்வைத் துதிப்பதற்குப் பொருந்திய அரிய வேதத்தைப்பாடி ஆடுவர் . ஈடு - பெயர் உயர் - ( உயர்வு ) ` உ ` பண்புப்பெயர் விகுதி . அரவமோடு உயர் செம்மல் அம்பர் - ஆரவாரத்தோடு உயர்ந்த ( அரிசில் நதியின் ) மிகு வளத்தையுடைய அம்பர் . செம்மல் - மிகுதி . கொம்பு ... நகர் - கொம்புகளில் மலர்களையுடைய வெண்கடம்பச் சோலைகளையுடைய ( அம்பர் ) நகர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கணல் இறைசெய்த கோயில் சேர்வரே.

பொழிப்புரை :

இறைவர் சங்கினாலாகிய குழை அணிந்த காதினர் . சாமவேதத்தைப் பாடுவார் . மிகுந்த வெப்பமுடைய நெருப்புச் சுவாலை வீசத் தோள்வீசி ஆடுவார் . அழகிய திருவிழாக்கள் நடை பெறும் அம்பர் மாநகரில் கோச்செங்கட்சோழ மன்னன் எழுப்பிய திருக்கோயிலில் அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

சங்கை அணிந்த காதையுடையவர் . சாமவேதத்தைப் பாடுவார் கொடிய நெருப்புச் சுவாலிக்கத் தோளை வீசி ஆடுவர் - என்பது முதலிரண்டடியின் பொருள் . சங்கு - ஆகுபெயர் . ` எண்தோள் வீசி நின்றாடும் பிரான் ` என அப்பர் பெருமான் வாக்கில் வருவதால் வீசி என்பதற்குத் தோள்வருவித்துரைக்கப் பட்டது . அழகிய திருவிழாக்களை உடைய அம்பர் . செங்கண்நல் இறை - நல்ல கோச்செங்கட் சோழர் , செய்த கோயில் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.

பொழிப்புரை :

இறைவர் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகள் உடையவர் . சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தியுள்ளவர் . நீர்ச்சுழிகளையுடைய குளிர்ந்த கங்கையைச் சடையில் சூடி ஆடுவர் . அப்பெருமானார் , வேள்வித்தீ வளர்க்கும் அந்தணர்கள் வாழ்கின்ற அம்பர் மாநகரில் அழகிய சோலைகளையுடைய நிழல்தரும் பெருந் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

கழல்வளர் - கழலோசை மிகும் , காலையுடையவர் . சுடர் - நெருப்பு . சுழல் ... புனல் - நீர்ச்சுழிகளையுடைய கங்கை நீரைச் , சூடி ஆடுவர் . அழல் - நித்திய அக்கினி . நெடுநகர் - பெருந்திருக் கோயில் . நகர் - கோயில் . ` நடுவூர் நகர்செய்து அடுபவம் துடைக்கும் ` என்னும் கல்லாடத்தால் அறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

இகலுறு சுடரெரி யிலங்க வீசியே
பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்
அகலிட மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிட நெடுநகர் புகுவர் போலுமே.

பொழிப்புரை :

இறைவர் , வலிமைமிக்க சுடர்விட்டு எரியும் நெருப்பை ஏந்தித் தோள்களை வீசிப் பலி ஏற்கும் பொருட்டுப் பாடி ஆடுவர் . அப்பெருமானார் அகன்ற இப்பூவுலகெங்கும் பரவிய மிகு புகழையுடைய அம்பர் மாநகரில் , தெய்விக மணம் கமழும் திருக்கோயிலைத் தமது இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

இகல்உறு - வலிமை மிக்க . அகல் இடம் மலிபுகழ் அம்பர் - இந்த உலகமெங்கும் மிகப் பரவிய புகழையுடைய அம்பர் . போலும் - உரையசை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

எரியன மணிமுடி யிலங்கைக் கோன்தன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.

பொழிப்புரை :

சிவபெருமான் , நெருப்புப் போன்று ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிந்த இலங்கை மன்னனான இராவணனின் கரிய , பருத்த கைகளை அடர்த்த திருவடிகளை யுடையவர் . அருந்தவத்தோர் வாழ்கின்ற வளம் பொருந்திய அம்பர் மாநகரில் , தம்மைப் பிரிவில்லாத பூதகணங்கள் புடைசூழ இனிதே வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

எரி அ ( ன் ) னமணி - நெருப்புப் போன்ற ஒளியுடைய இரத்தினம் . கரியன - கருநிறத்தையுடையன ஆகிய . தடக்கைகள் - பருத்த கைகள் . கரியன - வினைப்பெயர் . அரியவர் வளநகர் ... சூழவே - அருந்தவத்தோர் வாழ்கின்ற வளநகராகிய திருவம்பர்ப் பெருங்கோயிலுக்குத் தம்மைப் பிரிதலில்லாத பூதகணம் சூழ , மகிழ்வோடு போதலையுடையவர் . புரிதல் - செய்தல் என்னும் பொதுவினை - போதல் என்னும் சிறப்புவினைப் பொருளைத்தந்தது . புரீ இயவர் என்பதன் மருஉ புரியவர் எனக்கொண்டு விரும்புதலை யுடையவர் எனினும் ஆம் . இனி , அரியவர் ... நகர் - என்பதற்கு யாராலுங் காண்டற்கு அரியராய் இருப்பவர் . அவர் வளநகர் அம்பர் ஆகும் எனலும் ஆகும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிள ரரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழ லிறைசெய்த கோயில் சேர்வரே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , கொல்லும் தன்மையுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்டுள்ள செல்வனாகிய திருமாலும் , அறிதற்குஅரியரான இறைவர் திருஅம்பர் மாநகரில் கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய திருக்கோயிலில் தம் கழலணிந்த திருவடி பொருந்த வீற்றிருந்தருளு கின்றார் .

குறிப்புரை :

வெறி - வாசனை . வெந்தொழில் ... அரவு - கொடிய கொலைத் தொழிலையுடையதாகிய அரவு . படப்புள்ளிகளையுடைய தாகிய அரவு . புல்கு - பொருந்திய . அடிதேடி அறியாதவனைச் செல்வன் என்றது குறிப்பு மொழி . ` அறனன்று மாதவனென்பதுலகு எந்தை தாள்காணான் நாணுக் கொள ` என்ற குமரகுருபரர் வாக்கு இங்கு நினைவிற்கு வருகின்றது . செறிகழல் - அணிந்த கழல் , செம்பியர் இறை - சோழ அரசர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.

பொழிப்புரை :

மழித்த தலையையும் , முடி பறித்த தலையையும் உடைய புத்தர்களும் , சமணர்களும் கட்டுரையாகக் கூறியவற்றைப் பயனுடையவெனக் கொள்ள வேண்டா . கங்கையைச் சடையிலே தாங்கி , அங்குமிங்கும் சுற்றித் திரிதலை ஒழிந்து , அம்பர் மாநகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இறைவனைத் தரிசித்து அருள் பெற வாருங்கள் .

குறிப்புரை :

வழிதலையவர் - மழித்த தலையை யுடையவர்கள் - புத்தர் . பறிதலையவர்கள் - மழித்ததால் , மீளவும் முளைத்திடுமென்று பிடுங்கி விடப்படுதலால் ` பறிதலையவர் ` எனப்பட்டனர் ; சமணர் மொழியல் என்றதற்கு மொழியா தொழிதல் பொருளாகக் கொள்க . ஒருமை பன்மை மயக்கம் . அழிதலை பொருபுனல் அம்பர் - அங்கும் இங்கும் சுற்றித் திரிதலை ஒழிந்து , அம்பர் மாநகரில் உமையும் தாமுமாக . உளர் - இருப்பர் . அவரை வணங்கிப் பயனெய்த வம்மின் என்பது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

அழகரை யடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.

பொழிப்புரை :

அழகரை , அடிகளை , திருஅம்பர் மாநகரில் எழுந்தருளியிருக்கும் ஒளிர்கின்ற சடைமுடியுடைய நீலகண்டரான சிவபெருமானை , அலைவீசுகின்ற கடலுடைய இவ்வுலகினில் , முத்தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையாகிய திருப்பதிகத்தை ஓதிச் சிவகதி பெறுமின் .

குறிப்புரை :

நிழல் - ஒளி . உமிழ்திரை - வீசுகின்ற அலைகளை யுடைய கடல் . தமிழ்கெழுவிரகினன் - முத்தமிழ் விரகனாகிய நான் தமிழாற் பாடப்பட்ட மாலையாகிய இப்பதிகத்தை . ஓதுவீர் - சிவபெருமானைப் பாடுவீர் ! இப்பாடல்களைக் கொள்ளுங்கள் ! இப்பாடல் குறில் வருக்க எதுகை . முதல் ஏழு பாசுரங்களிலும் ஆடுவர் என்றே கடவுளைப் பற்றிக் கூறப்படுகிறது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மாதமர் மேனிய னாகி வண்டொடு
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரண மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாக மாகக்கொண்டு , வண்டமர்கின்ற மலர்கள் உள்ள சோலையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளு கின்ற , துன்பம்தரும் பகையசுரர்களின் மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த நாதனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ எல்லா நலன்களும் உண்டாகும் .

குறிப்புரை :

போது அமர்பொழில் - மலர்கள் உள்ள சோலை . விரவலர் - பகைவர்களாகிய அசுரர்கள் . அரணம் மூன்றும் எய்த - மதில் மூன்றையும் எய்த ( நாதன் ).

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
தேனணி பொழிற்றிருப் பூவ ணத்துறை
ஆனநல் லருமறை அங்கம் ஓதிய
ஞானனை அடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

வானில் அழகுறத் திகழும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்தோங்கிய , வண்டு நுகரும் தேனையுடைய மலர்களுள்ள அழகிய சோலையையுடைய திருப்பூவணத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நலம்தரும் நான்கு வேதங்களையும் , அவற்றின் ஆறு அங்கங்களையும் ஓதியருளிய ஞானவடிவினனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ , எல்லா நலன்களும் உண்டாகும் .

குறிப்புரை :

` வானணி ... பூவணம் `- வானத்தை அழகுசெய்கின்ற சந்திரமண்டலம் அளாவிய உச்சியையும் , கருவண்டு களுடன் தேன்வண்டுகளின் வரிசையையுடைய சோலைசூழ்ந்த திருப்பூவணம் . ஆன - பொருந்திய . நல் அரு மறை - நல்ல அரிய வேதங்கள் ; இருக்கு , யசுர் , சாமம் இவையே சிறந்த வேதம் எனப்படும் . இவை மூன்றுமே சிறந்தன என்பதை , ` சிறந்தவேதம் விளங்கப்பாடி ` என்ற மதுரைக் காஞ்சிக்கு நச்சினார்க் கினியர் எழுதிய உரையானும் காண்க . ஆறு அங்கம் - வேதத்தின் ஆறு அவயவம் . அவை ; சிக்கை , கற்பசூத்திரம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோவிசிதி , சோதிடம் என்பவை . ஞானன் - சிவனுக்கு ஒரு பெயர் . ` ஞானன் என்பவர்க்கன்றி நன்கில் லையே ` என்ற ( திருக்குறுந்தொகை ) அப்பமூர்த்திகள் அருளிச் செயலிலும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
நந்தியை அடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

கொடுந்துன்பம் தரும் நோயும் , அதற்குக் காரணமான வினைகளும் சிவனருளாலேயே தீரும் என்பதை நிச்சயித்து , அவனைத் தொழுது போற்றுகின்றவர்கள் வசிக்கும் திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , மாலைக்காலத்தில் உதிக்கும் வெண்பிறையோடு கங்கையும் சூடிய சிவபெருமானின் திருவடிகளைத் தொழ , எல்லா நலன் களும் உண்டாகும் .

குறிப்புரை :

வெந்துயர் - கொடுந்துன்பம் . அதைத் தருவதாகிய பிணியும் , அதற்குக் காரணமான கன்மமும் முற்றும் பற்றறத் தீர் விக்கும் புந்தியர் என்றது , தாங்கள் செய்வனவற்றைச் சிவார்ப் பணமாகச் செய்தலும் , தங்கட்கு வருவனவற்றைச் சிவனரு ளெனக் கொண்டு அமைந்து நுகர்தலுமாகிய புத்தி பண்ணுபவர் . இதனை ` நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே ` என்ற திருவாசகத் தொடராலும் அறிக . தொழுது எழு - பேராசிரியர் உரை கொள்க . பிரயோக விவேகமுடையார் கருத்துக் கொள்ளற்க . ` மாலைக் காலத்தில் உதிக்கும் வெண் பிறையோடு கங்கையைச் சூடிய நந்தி ` என்பது மூன்றாம் அடியின் பொருள் . நந்தி சிவனுக்கொரு பெயர் . ` நந்தி நாமம் நமச்சிவாயவே ` என்பது இத்திருமுறை . ஆறு - கங்கை . பொதுப் பெயர் சிறப்புப் பெயராயிற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை
நாசனை யடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் மலர்மாலைகளை அணிந்துள்ள மார்பில் , திருவெண்ணீற்றினைப் பூசி , சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் , மலர்புனைந்து ஏத்தும் அன்பர்களின் வினையைப் போக்குவான் . அப்பெருமானின் திருவடிகளைத் தொழ எல்லா நன்மைகளும் உண்டாகும் .

குறிப்புரை :

வெண்பொடி பூசனை - வெள்ளியநீறு பூசிய வனை ; ஈசனை . வினை - பாவம் . பாவநாசனை அடிதொழ நன்றி யாகும் . பாவநாசன் , சிவனுக்கொரு பெயர் . ` மன்ன ... பாவநாச நின்சீர்கள் பரவவே ` என்பது திருவாசகம் . பூசன் - இரண்டுறுப்பால் முடிந்த குறிப்பு வினைமுற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழிற்றிருப் பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரண மூன்றெய்த
பெருந்தகை அடிதொழப் பீடை யில்லையே.

பொழிப்புரை :

குருந்து , மாதவி , கோங்கு , மல்லிகை மலர்ந்துள்ள சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அரு வலிமையுடைய அசுரர் களின் மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த பெருந் தகையான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ , துன்பம் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

அரும்திறல் -( வெலற்கு ) அரிய வலிமை . பெருந்தகை - சிவனுக்கு ஒரு பெயர் ; ` பெண்ணினல்லாளொடும் பெருந்தகை இருந்ததே ` என்பது இத்திருமுறை . பீடை - தோடம் , காரணப்பெயர் ; பிடித்துக் கொள்வது . தமிழ்மொழி . இதனை வட சொல் எனவுங் கூறுவர் . தமிழில் அரிய பொருள் காணா வழியே வடசொல்லுக்கு ஏகல் வேண்டும் . குருந்து ஒரு மரவிசேடம் ; மணிவாசகப் பெருமானைப் பெருந்துறையில் ஆட்கொண்டருளியது இம் மரத்தினடியிலேதான் . ` பெருந்துறையில் வந்தோர் கொந்தலர் நெருங்கிய குருந்தடியிருந்தார் ` என்பது பழைய திருவிளையாடல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை
கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்
நறுமல ரடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் புன்னை , புலிநகக் கொன்றை முதலான மரங்கள் நிறைந்த அழகிய சோலையையுடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , கோவண ஆடை தரித்த , அழிதலில்லாத கொள்கைகளை உடைய சிவ பெருமானின் நறுமணமிக்க மலர் போன்ற திருவடிகளைத் தொழ , எல்லா நலன்களும் உண்டாகும் .

குறிப்புரை :

கிறிபடும் - பரிகசிக்கத்தகுந்த . உடையினன் என்றது ஆடையில்லாத கோலத்தையுடையவன் என்றபடி . கேடு இல் - கெடுக்க முடியாத கொள்கையன் . மலர் அடி - மலர்போன்ற அடி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

பறைமல்கு முழவொடு பாட லாடலன்
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.

பொழிப்புரை :

பறையின் ஒலியும் , முழவின் ஓசையும் ஒலிக்கப் பாடி ஆடுபவன் இறைவன் . அமைதி தவழும் சோலையையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளு பவன் . நால்வேதங்களையும் பாடுபவன் . உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன் . அப்பெருமானின் ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளைத் தொழத் துன்பம் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

பாடல் ஆடலன் - பாடுதலோடு ஆடலையுடையவன் , இங்குப் பாடல் - ஆடுங்காற்பாடுவது ; மூன்றாம் அடியிற் கூறுவது :- இருந்து பாடும் வேதப்பாடல் . அறைமல்கு - ஒலித்தல் மிகுந்த ; கழல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்
பரவிய அடியவர்க் கில்லை பாவமே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிமை வாய்ந்த அரக்கனான இராவணனின் நீண்ட முடிகளைத் தம் காற் பெருவிரலை ஊன்றி அடர்த்தவர் சிவபெருமான் . தம் திருமேனி முழுவதும் திருவெண்ணீற்றினைப் பூசி , ஒலிக்கின்ற கங்கையைத் தம் சடைமுடியின் ஒரு பக்கத்தில் அணிந்து திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானைத் தொழுது போற்றும் அடியவர்களின் பாவம் நாசமாகும் .

குறிப்புரை :

விரறனில் - விரல் + தனில் . பொருபுனல் புடையணி பூவணம் - கரையை மோதுகின்ற வைகைநீரை ஒரு பக்கத்திலே யணிந்த பூவணம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

நீர்மல்கு மலருறை வானும் மாலுமாய்ச்
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே.

பொழிப்புரை :

நீரில் வளரும் தாமரைமலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் , தன்னைத் தொழுபவர்களை நன்னெறிப் படுத்தும் இறைவனின் சிறந்த திருவடிகளைச் சேர்தற்கு இயலாத வராயினர் . போர்த் தன்மையுடைய மழுப்படையுடைய சிவ பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூவணத்தை அழகிய மலர் கொண்டு போற்றுதல் இன்பம் தரும் .

குறிப்புரை :

நீர்மல்கும்மலர் - தாமரை ; நீரஜம் என்பது வட சொல் . இரண்டாம் அடிக்குப் பிரம விட்டுணுக்கள் முதற்கண் தாம் செருக்கு அழியப் பெற்றுப் பெருமானைச் சரண் புகுந்திருந்தால் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை என்பது பொருள் . பூவணம் வணங்குவதே முத்தியின்பமாம் . ` ஆலயம் தானும் அரனெனத் தொழுமே ` என்பது சிவஞான போதம் . ` கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி , வீடும் வேண்டா விறலின் விளங்கினார் ` என்பது பெரியபுராணம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

மண்டைகொண் டுழிதரு மதியில் தேரரும்
குண்டருங் குணம்அல பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழின் மல்கு பூவணம்
கண்டவ ரடிதொழு தேத்தல் கன்மமே.

பொழிப்புரை :

மண்டை என்னும் ஒருவகைப் பாத்திரத்தை ஏந்திப் பிச்சையெடுத்துத் திரிகின்ற புத்தர்களும் , சமணர்களும் , இறையுண்மையை உணராது கூறும் பயனற்ற பேச்சைக் கேளாது , வண்டுகள் மொய்க்கின்ற வளமுடைய சோலைகள் நிறைந்த திருப்பூவணம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றுதல் நம் கடமையாகும் .

குறிப்புரை :

மண்டை - ஒருவகைப் பாத்திரம் . வாய்பாடு இல்லாதது . உழிதரு தேரர் - அலைந்து திரிகின்ற தேரர் , புத்தர் . குண்டர் - போக்கிரிகள் . குணம் அல பேசுங்கோலத்தர் - பயனில்லாத பேசுங் கோலத்தையுடையவர்கள் . திருப்பூவணத்தைத் தரிசித்து அவருடைய அடியைத் தொழுது துதிப்பது . கன்மம் - காரியம் . நமது கடமையாகும் . ` தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே ` என்ற அப்பர் சுவாமிகள் வாக்காலும் அறிக . நான்காம் அடிக்குப் பூவணம் கண்டு அவர் அடிதொழுது என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞானசம் பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.

பொழிப்புரை :

புண்ணியர்கள் தொழுது போற்றுகின்ற திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றி , அழகிய , குளிர்ச்சியான சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாடல்களை ஓதவல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

பண்ணிய - செய்த ; இயற்றிய . ` புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு ` என்பதனாலும் ; செய்யுள் என்னும் பெயராலும் அறிக . பறையும் - வெளிக்கிளம்பி நீங்கும் ` பறையும் பாவங்களான ` என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்கினாலும் அறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்குவந் தெய்து நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே.

பொழிப்புரை :

நான் விழித்திருக்கும் பொழுதும் , கனவு காணும்பொழுதும் , உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும் எனக்குக் காட்சி தரும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாகிய இறைவனாய் , ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற எம் தலைவரான சிவபெரு மானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக .

குறிப்புரை :

நான் விழித்திருக்கும்பொழுதும் , கனாக் காணும் பொழுதும் எந்நாளும் தன்னுடைய ஞான ஒளி வடிவு நினைவிலும் ( வாக்கிலும் ) எனக்குவந்து எய்தும் நின்மலன் என்பது முதலிரண்டடிகளின் கருத்து . நினைவிலும் என்ற எச்சவும்மையால் , வாக்கிலும் என்பது வருவித்துக் கொண்டது . எரி ஆடும் - நெருப்பில் ஆடும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
காதியல் குழையினன் கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ அல்ல லில்லையே.

பொழிப்புரை :

வேதத்தை அருளிச் செய்தவனும் , வேதப் பொருளாக விளங்குபவனும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனும் , பகையசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான் காதில் குழை அணிந்தவனாய்த் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . எப்பொருட்கும் முதல்வனான அப்பெருமானின் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

மூது எயில் - பழமையான மதில் , இங்குத் திரிபுரம் . இயல் - பொருந்திய .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

மஞ்சுறு பொழில்வள மலிக ருக்குடி
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ.

பொழிப்புரை :

மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான் , அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சும்படி கொடிய சுடுகாட்டில் ஆடல் செய்வது என்கொல் ?

குறிப்புரை :

மஞ்சு - மேகம் . அஞ்சுரும்பார் குழலரிவை - அழகிய வண்டுகள் ஒலிக்கும் குழலையுடைய அம்பிகை ; வெம்சுரம் - கொடியகாடு . பிரளயத்து உலகம் வெந்து சாம்பலான இடம் வெஞ்சுரம் எனப்பட்டது . அதில் இறைவன் நடித்தது ஒரு விளையாட்டாக இருந்தது என்பார் ; ` வெஞ்சுரம் விளையாடல் என்கொலோ ` என்றார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கானிடை யாடலான் பயில்க ருக்குடிக்
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.

பொழிப்புரை :

வினைப்பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை ஒழிக்க நினைக்கும் மாந்தரீர் ! சுடுகாட்டில் திருநடனம் செய்யும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள உயர்ந்த கோயிலை வணங்கியும் , நாள்தோறும் வானவர்கள் தொழுகின்ற அப்பெருமானின் திருவடிகளை வாழ்த்தி யும் வாழ்வீர்களாக !

குறிப்புரை :

ஊன் - உடம்பு . அறுக்க - ஒழிக்க . உன்னுவீர் - நினைக் கும் மாந்தரீர் . கான் இடை ஆடலான் - சுடுகாட்டில் ஆடுதலை யுடைவன் . கழல் - திருவடி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
கூடுவர் உலகிடை ஐயங் கொண்டொலி
பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.

பொழிப்புரை :

இறைவர் சடைமுடியில் கங்கையைச் சூடி உள்ளார் . தம் திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை வைத்துள்ளார் . இவ்வுலகில் பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு பாடுவார் . பறை கொட்ட நள்ளிருளில் நடனம் ஆடுவார் . இது திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் அருள் தன்மையாகும் .

குறிப்புரை :

நங்கை - பெண்களிற் சிறந்தவள் . ஒலிபாடுவர் இசை - இசையை ஒலியோடு பாடுவர் . ` நட்டு நள் + அ + து நள்ளது = நடுவினது ; அகரச் சாரியை நீக்கினால் நள் + து = நட்டு என்று ஆகும் . நட்டு இருள் - நடுவினதாகிய இருளில் . நடு இராத்திரியில் ஆடுவர் . ` நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே ` என்பது திருவாசகம் . அண்ணல் வண்ணம் - இது கருக்குடி அண்ணல் தன்மையாம் . நடு + இருள் - நட்டிருள் என்பதே தக்கது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

இன்புடை யாரிசை வீணை பூணரா
என்புடை யாரெழின் மேனி மேலெரி
முன்புடை யார்முதல் ஏத்தும் அன்பருக்
கன்புடை யார்கருக் குடியெம் அண்ணலே.

பொழிப்புரை :

திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் வீணையை இசைத்துப் பாடுவதில் மகிழ்பவர் . தம்முடைய அழகிய திருமேனியில் பாம்பையும் , எலும்பையும் ஆபரணமாக அணிந்துள்ளவர் . எரிகின்ற நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளவர் . யாவற்றுக்கும் மூலப் பொருளாகிய , முதற்பொருளாக விளங்குபவர் . அன்பர்களிடத்து அன்புடையவர் .

குறிப்புரை :

இன்பு - வீணை - இசை வீணை பாடுதலில் மகிழ்வுடையார் . பூண் - ஆபரணமாக . அரா என்பு உடையார் - பாம்பையும் எலும்பையும் உடையவர் . மேனிமேல் எரிமுன்பு உடையார் . முதல் - காரணம் . முதல் ஏத்தும் அன்பர் - உலகமாகிய காரியத்துக்கு இறைவன் நிமித்த காரணமாம் தன்மையை அறிந்து ஏத்தும் இக்கருத்து ` கோலத்தாய் அருளாய் உனகாரணம் கூறுதுமே ` என்னும் இத்திருமுறை முதற்பதிகத்தும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

காலமும் ஞாயிறுந் தீயும் ஆயவர்
கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திருக்க ருக்குடிச்
சாலவும் இனிதவ ருடைய தன்மையே.

பொழிப்புரை :

சிவபெருமான் கால தத்துவமாகவும் , அதனைக் கடந்தும் விளங்குபவர் . ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர் . நெருப்பு முதலிய பஞ்சபூதங்களானவர் . தம் சடைமுடியில் பாம்பணிந்தவர் . சிறந்த புகழை உடையவர் . திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானின் தன்மை சாலவும் இனிதாகும் .

குறிப்புரை :

காலம் இடம் முதலிய பொருள்களும் சூரியன் முதலிய கோள்களும் தீ முதலிய பஞ்சபூதங்களும் , ஆயவர் - ஆனவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
கறைபடு பொழின்மதி தவழ்க ருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.

பொழிப்புரை :

அலைவீசுகின்ற கடலையுடைய இலங்கை மன்னனான இராவணனை நிலை கெடும்படி மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியாகிய இறைவர் , மரங்களின் அடர்த்தியால் இருண்ட சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவராய் , தம்மை ஞானத்தால் தொழும் அடியவர்கட்கு நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார் .

குறிப்புரை :

கறைபடு பொழில் . நன்மை ஆள்வர் - நன்மை களையெல்லாம் உடையராயிருப்பர் . அறிவொடு தொழுமவர் என்ற இலேசினான் அபுத்திபூர்வமாகச் செய்யும் சிவபுண்ணியமும் பயன் தாராதொழியாது என்பதும் கொள்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

பூமனுந் திசைமுகன் றானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
ஆமென வுயர்ந்தவன் அணிக ருக்குடி
நாமன னினில்வர நினைதல் நன்மையே.

பொழிப்புரை :

தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும் , அழகிய வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம் , ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும் .

குறிப்புரை :

பூம ( ன் ) னும் - பூவில் வாழும் . பொற்பு அமர் வாமனன் - அழகு பொருந்திய வாமன அவதாரமெடுத்த திருமாலும் . பொற்பு அமர் என்பது குறிப்பு . கருக்குடி ...... நன்மையே - கருக்குடி நமது மனத்தில் வரும்படி நாம் நினைத்தல் நன்மையேயாகும் . மனம் - மனன் எனப் போலியாய் ஏழனுருபுபெற்று மனனில் என்று ஆகி அதனோடு இன்சாரியை பெற்று ` மனனினில் என்று ஆயிற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய வுரைகொளேல் அருந்தி ருந்நமக்
காக்கிய அரனுறை அணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.

பொழிப்புரை :

புத்தரும் , சமணர்களுமான வஞ்சகர் கூறும் பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா . பெறுதற்கரிய சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள் .

குறிப்புரை :

சமண்படு - சமணக் கோட்பாடு . பொருந்திய . கையர் - வஞ்சகர் . அருந்திரு - சைவசமயத்திற் பிறத்தல் பிறர் எவருக்குங் கிடைத்தற்கரிய திரு - செல்வம் , பாக்கியம் . ` நரர்பயில் தேயந்தன்னில் நான்மறை பயிலா நாட்டில் ...... பரசமயங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே .` சிவஞான சித்தியார் . அத்திருவை நமக்கு ஆக்கிய அரன் . புடைபட்டு - சார்ந்து ; ஒருமை பன்மை மயக்கம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கானலில் விரைமலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன் றன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க் குயரு மின்பமே.

பொழிப்புரை :

கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சீகாழியில் அவதரித்த , வானவர் தொழுதெழு திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான மெய்ஞ்ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பேரின்பம் மிகும் .

குறிப்புரை :

மைந்தன் - சம்பந்தன் . சிவனொளியே தான் ஆன மெய்ஞ் ஞானசம்பந்தம் பெற்ற வலிமையோடு கூடியவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

தூங்கும்பொழுதும் , விழித்திருக்கும் பொழுதும் , மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள் . பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே .

குறிப்புரை :

துஞ்சலும் துஞ்சல் இலாதபோழ்தினும் - தூங்கும் போதும் விழித்துக்கொண்டிருக்கும்போதும் ; போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதினோடுங் கூட்டித் துஞ்சல் பொழுதினும் , துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்க . நெஞ்சகம் - மனம் . நைந்து - உருகி . நாள்தோறும் மாந்தரீர் நினைப்பீர்களாக . வஞ்சகம் இன்றிச் சிவபெருமான் திருவடியை மார்க்கண்டேயர் வாழ்த்தி வழிபட அவர் வாழ்நாள்மேல் வந்த யமன் அஞ்சும்படி உதைத்தன திருஐந்தெழுத்துமே . வஞ்சகமாவது , இறைவன் மேற் படரும் சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிறவிடங்களிற் செலுத்தி வஞ்சித்தல் . இதனை ` நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ ` என்ற திருநேரிசையால் அறிக . திருஐந்தெழுத்தை ஓதுவார் எமவாதை நீங்குவார் என்பது இதனாற் பெற்றாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

மந்திரங்களாகவும் , நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும் . செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

மந்திரமும் நான்கு வேதங்களும் ஆகி ; திருவைந் தெழுத்தே வேதம் என்றது . மறையிற்கூறும் அனைத்தும் ஐந்தெழுத்தில் அடங்கும் என்பதுபற்றி ` அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் ` என்ற உண்மை விளக்கம் 45 காண்க . செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்தும் - அழல் ஓம்பிச் செந்நெறி நிற்கும் வேதியருக்கும் மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்கத்தக்க மந்திரம் திரு ஐந்தெழுத்தேயாம் என்க . அந்தி - சந்திவேளை மூன்று . காலை , நண்பகல் , மாலை ; ` காலை அந்தியும் மாலை அந்தியும் ` என்பது புறநானூறு . ` அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் , அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ ` ( திருக்குறுந்தொகை ) இவற்றால் அந்தி என்ற சொல் மூன்று வேளையையும் குறிப்பதை அறிக . இப்பதிக வரலாற்றைச் செழு மறையோர்க்கருளி அவர் தெளியுமாற்றால் முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து அஞ்சு என்பார் . அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்துமே என்று அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார் என்னுந் திருத்தொண்டர் புராணத்தால் அறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி , ஞானவிளக்கம் பெறச் செய்து , அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந் தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

ஊன் உடம்பு . உயிர்ப்பு - மூச்சு . நன்புலம் - நல்ல அறிவு . நிட்டைகூடி இருப்போருக்கு அந்நிட்டை கலையவரும் யோக சமாதியில் வாசனாமலம் முதலிய இடர்களைக் கெடுப்பதும் திரு ஐந்தெழுத்தேயாம் என்க . ` பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும் . அங்ஙனம் விளங்கிய ஞானத்தான் ஞேயத்தைக் கண்ட காட்சி சலியாமைப் பொருட்டு , அப்பொருள் பயக்கும் திருவஞ்செழுத்து , அவ்விதிப்படி அறிந்து கணிக்கப்படும் .` ( சிவஞானபோத மாபாடியம் . சூ .9.)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

புண்ணியர் , பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும் . எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும் , மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

நல்லவர் - புண்ணியர் . தீயவர் , பாவியர் , என்று பிரிக்காமல் யாவரேயாயினும் விரும்பித் திருவைந்தெழுத்தைச் செபிப்பார்களேயாயின் , துன்பந்தரும் மலங்கள் நீங்கச் சிவப்பேறாகிய முத்தியின்பத்தை அடையலாம் . உயிர்போகும் தறுவாயில் நினைத்தாலும் உச்சரித்தாலும் எமவாதை இல்லாதொழிக்கலாம் என்பது . இதனை ` மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனை யவர் தாமும் பகர்வரேல் , சிந்தும்வல்வினை செல்வமும் மல்குமால் நந்திநாமம் நமச்சிவாயவே ` என்ற பாசுரத்தாலும் , ` விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணியபுகில் அவையொன்றும் இல்லையாம் , பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை , நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே ` என்னும் பாசுரத்தாலும் அறிக . கொல்ல ... இடத்து - மரணத் தறுவாயில் வரக்கடவனவாகிய துன்பங்களைக் கெடுக்கும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை , அசோகு , மா , முல்லை , கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும் . இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்ற ஐந்தாகும் . சோலைகள் அரிசந்தனம் , கற்பகம் , சந்தானம் , பாரிசாதம் , மந்தாரம் என ஐந்தாகும் . பாம்பின் படம் ஐந்து ஆகும் . செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும் . இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப , மந்திரமும் திருவைந்தெழுத்தே யாகும் .

குறிப்புரை :

முதல் இரண்டடிக்கு - வல்மதன் கொங்கு அலர்வாளி ஐந்து - வலிய மன்மதனது மணத்தையுடைய மலர் அம்பு ஐந்து என்க . அகம் - இடம் ; உலகம் . இவ்வுலகத்தில் உள்ள பூதங்களும் அஞ்ச . ( அஞ்சு + அ ) ஐந்து ஆவன . ஐம்பொழில் - கற்பகச் சோலைகளும் , ஐந்தாவன - தங்கு அரவின் படம் அஞ்சு , தம்முடைய அங்கையில் ஐவிரல் , இறைவன் திருமேனியில் அணியாக உள்ள பாம்பின் படமும் ஐந்து , செபிப்போரது கையில் உள்ள விரலும் ஐந்து . இவற்றிற்கொப்ப மந்திரமும் அஞ்செழுத்து மாயின .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

தும்மல் , இருமல் தொடர்ந்து வந்த பொழுதும் , கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும் , முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும் , இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

தும்மும்போதும் இருமும்போதும் உடலில் நீங்குவது உள்ளமையால் அப்பொழுதும் , கொடிய நரகத்துன்பம் நுகரவந்த விடத்தும் , முற்பிறப்பிற் செய்தவினை இம்மைக்கண் அடர்த்துச் சேரும்பொழுதும் , உச்சரிக்கத் துணையாவதும் இம்மையில் ஓயாது ஓதி வந்ததின் பயனாக மறுபிறவியில் வந்து துணையாவதும் திருவைந்தெழுத்தே .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

இறப்பு , பிறப்பு இவற்றை அறுத்து இத்திரு மந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன . தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன . நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தே யாகும் .

குறிப்புரை :

வீடு - இங்குச் சாதல் என்னும் பொருளில் வந்துள்ளது . பிறப்பு - பிறத்தல் . சாதலும் பிறத்தலும் தவிர்த்து . மெச்சினர் - தன்னைப் பாராட்டிப் பயில்பவர் . பீடை - பிறவியில் வரக்கடவ துன்பங்கள் . அவை :- பிற உயிர்களால் வருவன , தெய்வத்தால் வருவன , தன்னால் வருவன என மூவகைப்படும் . மாடு - செல்வம் . கொடுப்பன . திருவைந்தெழுத்து செல்வமும் தரும் என்பதைச் ` சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் , நந்திநாமம் நமச்சிவாயவே ` என்பதற்கண் காண்க மன்னும் - நிலைபெற்ற , மா நடம் - பெரிய கூத்தை , ஆடி மகிழ்வனவும் திருவைந்தெழுத்துக்களாம் . அஞ்செழுத்தே நடம் ஆடி உகப்பன என்றது ` சிவாயநம வென்னும் திருவெழுத்தைந்தாலே அபாய மற நின்றாடுவான் .` என்ற உண்மை விளக்கச் செய்யுட்கருத்து .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும் . முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான் . அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு , செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும் .

குறிப்புரை :

வண்டுஅமர் ..... பேணின - வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய அம்பிகையாரால் பாராட்டிச் செபிக்கப்பெற்றன . இராவணன் பாடியது இப் பஞ்சாக்கரமே என்கிறது இரண்டாம் அடி . தொண்டர்கள் - அடியார்கள் . கொண்டு - தங்கள் கடமையைக் கொண்டு . துதித்தபின் - செபித்த அளவில் . அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந் தெழுத்துமாம் . தொண்டர்கள் கொண்டு துதித்தமை ஆனாய நாயனார் புராணம் ( தி .12) முதலியவற்றாலறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந் தெழுத்தாகும் .

குறிப்புரை :

பிரம விட்டுணுக்களால் காண முடியாத அடி என்றது . அத்தகுசீரிய அடியைக் காணுவதுமட்டும் அன்று . அத் திருவடிப் பேறாகிமேல் இன்பத்தில் திளைத்தலுமாகும் . பேர்வணம் - இறைவ னுடைய திருப்பெயராகிய தன்மையை ( அஞ்செழுத்தை ). பேசி - உச்சரித்து , பிதற்றும் அதனையே எண்ணிப் பன்னிப் பன்னிப் பலதரமும் சொல்லும் பக்தருக்கு (` பிடித்தொன்றை விடாதுபேசல் பிதற்றுதல் என்று மாமே ` என்பது சூடா மணி நிகண்டு .) ஆர்வணம் - ஆர்தல் ; திளைத்தல் . பித்தர் - இங்குப் பேரன்பினர் என்னும் பொருளில் வந்தது . ` நின்கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய் ` திருவாசகம் . ` அம்பலவர்க்குற்ற பத்தியர்போல ..... ஓர் பித்தி தன்பின்வர முன்வருமோஓர் பெருந்தகையே ` ( திருக்கோவையார் - 242) என வருவனவற்றால் அறிக . பிரமன் முடியையும் திருமால் அடியையும் தேடிக் காணமாட்டாமை ஏனைய பதிகங்கள் குறிக்க , இப்பதிகம் இருவரும் காணாத சேவடி என்று மட்டும் குறிக்கிறது . அதன் கருத்து , திருமாலால் காணமுடியாத அடி பிரமனாலும் காணமுடியாது என்பதாம் . அநுபலப்தியால் பெறவைப்பான் ` கார்வணன் நான்முகன் காணுதற்கொணாச் சீர்வணச் சேவடி ` யென்று ; அடியே காணாதார் முடிகாண மாட்டாமையும் பெற வைத்தமையறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.

பொழிப்புரை :

புத்தர்களும் , சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும் . சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.

குறிப்புரை :

சமணர்களாகிய கழுவையேந்திய கையையுடையவர் . வித்தகம் நீறு - திறமையைத் தரும் விபூதி . அத்திரம் - அம்பு . நீறணிவார் - சிவனடியார் . வினை - போர் . ` வினைநவின்ற யானை ` என்பது புறநானூறு . சிவனடியார் மேற் போர்புரியப் பகைவர் எவர்வரினும் அவரை எதிர்த்து அம்பு போற்பாய்ந்து அழிக்க வல்லது திரு ஐந்தெழுத்துமே . போதி மங்கையில் கூட்டத்தோடு புகலியர் கோனை எதிர்த்த புத்த நந்தி தலையில் இடிவிழச் செய்தது இப்பாசுரமே . வினையாகிய பகைக்கு ஐந்தெழுத்து ஆகிய அத்திரம் என்றது உருவகம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.

பொழிப்புரை :

நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும் , ஞானசம்பந்தன் , நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய , கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள் .

குறிப்புரை :

உன்னிய - நினைத்துப்பாடிய . அற்றம் இல் மாலை - கேடு அவமானம் முதலியன இல்லையாக்குவிக்கும் ( வாராமல் தடுக்கும் ) மாலை . ஐந்தெழுத்து உற்றன ஆகிய இம்மாலையிலுள்ள பத்துப் பாசுரங்களில் வல்லவர் தேவர் ஆவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.

பொழிப்புரை :

அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற, செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும் சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான் வீற்றிருந்தருளுகிற இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

உரு - அழகு. உருவின் ஆர் - அழகினால் நிரம்பிய. உமையொடும் ஒன்றி நின்றது. ஓர் திருவினான் - வேறறக் கலந்து நின்ற செல்வத்தன். \\\"அவளால்வந்த வாக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம்\\\" (சிவஞான சித்தியார். சூ 1.69.) திங்கள் கங்கையான் - திங்களோடு அணிந்த கங்கையையுடையவன்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில்
உற்றதோர் எரியினன் ஒரு சரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

சிறிய இடையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, அழகிய கையில் நெருப்பு ஏந்தி விளங்கும் சிவபெருமான், ஓர் அம்பால் அசுரர்களின் மூன்று புரங்களும் வெந்தழியுமாறு போர்செய்து வெற்றி கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்னும் கோயிலாகும்.

குறிப்புரை :

சரம் - அம்பு. ஒரு சரத்தினால் செற்றவன் (அழித்தவன்) என்றமையானே புரங்கள் மூன்றென்பதும் பெற்றாம். \\\\\\\"ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற\\\\\\\" என்னும் திருவாசகமும் (தி.8 பா.296) காண்க.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல வேடம் கொள்ளும் அதிசயர். பிரமனும், மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

ஐயன் - தலைவன். அதிசயன் - \\\"பல பல வேடமாகும் பரன்\\\" என்னும் மேம்பாட்டையுடையவன். அயன் விண்ணோர் - பிரமனும் தேவரும். மை:- நஞ்சுண்ட கறுப்புக்கு ஒப்பு. கண்டனார் - திருக்கழுத்துடையவர். வண்ணம் செய்யவன்; வண்ணவான் பையரவு அல்குலாள் (அம்பிகை) பாகம் ஆகவும் செய்யவன். `செந்தீ வண்ணன்` `பவளம் போல் மேனியன், அம்பிகையின் நிறம் கலந்தும் வேறுபடாத செம்மையன். அவன் உறைவிடம் திருவிற்கோலம். இவ்விற்கோலம் நீங்கிப், பண்டைய தற்கோலம் உடைமை விளங்கிய தலத்தின் பெயரே, தற்கோலம் என மருவிற்று. (தி.12. திருஞான. 1005.)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறைவன் சனகாதி முனிவர்கட்கு அறக்கருத்துக்களை நன்கு பதியும்படி உபதேசித்தவன். மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உருண்டு விழும்படி செய்தவன். திரிபுரங்கள் மூன்றையும் எரித்துச் சாம்பலாகுமாறு சிதைத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்பதாம்.

குறிப்புரை :

முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு. அறம் முன் விதைத்தவன் - சரியையாதி நாற்பதப் பொருள்களையும் மனத்தில் பதிய உபதேசித்தவன். அறம் என்பது சரியை கிரியை இரண்டினையும் குறிக்கும். அதனை \\\"நல்ல சிவதன்மத்தால்\\\" எனவரும் திருக்களிற்றுப் படியாரால் அறிக. ஈண்டு `அறம்` முடிவான ஞானத்தின் மேலது. விதைத்தவன் என்றதனால் சிவானந்தப் பெரும்போகம் விளைந்தமையும் காண்க.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே.

பொழிப்புரை :

இறைவன் எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன். மும்மூர்த்திகளுக்குள் தலைவனாவன். கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருப்பவன். மாலையில் வானில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடியவன். அடியவர்களைப் பற்றியுள்ள வினைகள் நீங்கும்படிச் செய்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

கூகம் - ஊர் (கூவம் என வழங்குகிறது) திருவிற் கோலம் - திருக்கோயில். \\\"முந்தைகாண் மூவர்க்கும் முதலானான் காண்\\\" என்னும் திருத்தாண்டகத்தோடு முதலடியை ஒப்பிடுக.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறைவன் அரிய நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறங்கங்களையும் தொகுத்தவன். சிவாகமங்களை அருளிச் செய்தவன். வளமையான சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவன், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். செருக்குற்று மிகுந்த கொடுமைகளைச் செய்த அசுரர்களின் முப்புரங்களை வெந்தழியும்படி செய்தவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

தொகுத்தல் - பலவாய்க் கிடப்பனவற்றை ஒருமுறைப் படுத்திச் சேர்த்தல். மறைகளையும் அங்கங்களையும் தொகுத்தவன். ஆகம நூற் பொருளை நந்தியெம்பெருமானுக்கு வகுத்து உபதேசித்தவன் என்றது \\\"முந்தொரு காலத்தின் மூவுலகந்தன்னில், அந்தமில் மறையெல்லாம் அடிதலை தடுமாறி\\\" என்பது கந்தபுராணம்; பாயிரப் படலம் 1 முதல் 39 வரையுள்ள பாடல்களால் அறிக.
மிகுத்தவன் - தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். மிகுத்தவர் - செருக்கு உற்றவர்களாகிய அசுரர்களின், புரங்கள். செகுத்தவன் அழித்தவன். மிகுத்தல்; இப்பொருட்டாதலை \\\"மிகுதியான் மிக்கவை செய்தாரை\\\" என்ற திருக்குறளால் (158) அறிக.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளம்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோன்இ டர்படச்
சிரித்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

அரும்பொருளுரைக்கும் வேதங்களை இறைவன் விரித்து அருளியவன். விரிந்து சென்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவன். பகையசுரர்களின் முப்புரங்கள் அற்றொழியும்படி எரித்தவன். இலங்கை மன்னனான இராவணன் கயிலையின் கீழ்த் துன்புறும்படி செய்து, பின் அருள் புரிந்த விளையாடல் செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

ஆசுஅற - பற்றற (முற்றிலும்). சிரித்தல் - திரு விளையாட்டு. அவனைக் கதறச் செய்தல் தமக்கொரு திருவிளையாட்டாய் இருந்தது.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமன தாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறைவன் வானத்திலே பறந்து திரிந்து தேவர்கட்குத் தீங்குகள் செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவன். வரிகளையுடைய பாம்பையும், சந்திரனையும் சடையிலே அணிந்தவன். திருமாலும், பிரமனும் தமது ஆற்றலைப் பெரிதாகக் கொண்டு முனைந்ததால் காண்பதற்கு அரியவனானவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

திரிதரு - வானத்திலே பறந்து திரிந்து கொண்டிருந்த; புரம். சிவபிரான் காட்டிய எட்டு வீரங்களில் ஒன்றாகையால் சேவகன் என்றார். ஆற்றலால் உருத்தெரியலன் - அவனைத் தெரிய வேண்டியவன் அதற்குரிய வழிகள் பல இருக்கவும் அவற்றிலொன்றையேனும் பற்றாமல் தம் ஆற்றலைக் கருதின அவர்தம் பேதைமைக் கிரங்கி நம் திருநாவுக்கரசர் பாடியுள்ள இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை (5ஆம் திருமுறை) இங்கே கருதத்தக்கது \\\"மரங்களேறி மலர் பறித்திட்டிலர், நிரம்ப நீர் சுமந்தாட்டி நினைந்திலர் உரம் பொருந்தி ஒளிநிற வண்ணனை நிரம்பக் காணலுற்றார் அங்கிருவரே\\\" என்பது அதில் ஒருபாடல்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறையுண்மையை உணரும் தன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ளாது, இறை நம்பிக்கையுடன் அவன்மீது பக்தி செலுத்துபவர்கட்கு உலகில் பெருஞ்செல்வத்தைப் பரிவுடன் இறைவன் தருவான். அத்தகைய மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

சீர்மை - ஒழுங்கு. நான்காமடியிற் சீர்மை - மேன்மை. \\\"சீர்மை சிறப்பொடு நீங்கும்\\\" (குறள் - 195) என்பதிற்போல, சமணர் என்ற சொல் சமண் என விகுதி குன்றி வந்தது; தூது, அரசு அமைச்சு என்றாற்போல். சீவரம் - புத்தமதத் துறவி யுடுத்தும் காவி ஆடை. கையர் வெறுக்கத் தக்கவர். கைத்தல் - வெறுத்தல்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே. 

பொழிப்புரை :

வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய, வளமையான மதில்களை யுடைய திருவிற்கோலம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்லவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

கோடல் - கோடுதல்; வளைதல். சேடன - சிவ பெருமானுடைய (திருவிற்கோலத்தை).

பண் :கொல்லி

பாடல் எண் : 1

மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம் . தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம் . இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கதிக்கியாதும் - கதிக்கு + யாதும் . ஓர் குறை இ ( ல் ) லை . கண்ணின் நல்லது உறும் - கண்ணுக்கினிய நல்லவளத்தையுடைய . கழுமலவளநகர் கண்ணின் நல்லஃது .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட , பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து ` யார் தந்த அடிசிலை உண்டனை ?` என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார் . அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

போது - மலர் . போதை ஆர் - மலரை யொத்த ; பொற் கிண்ணம் . அடிசில் - சோறு . போனகம் ; இங்கே அடிகளார் உண்டருளியது பாலேயாயினும் , அதிற்குழைத்த உணவு ஞானம் ஆதலால் அடிசில் எனப் பட்டது . ` ஞானபோனகர் ` என்று சேக்கிழார் சுவாமிகள் வழங்குவதாலும் அறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும் , நெற்றியில் ஒரு கண் கொண்டும் , கழுமலம் என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

தொண்டு அணைசெய் தொழில் துயர் - தொன்று தொட்டே ஆன்மாவைப்பற்றி வருத்தும் தொழிலையுடைய வினைகள் . ` தொல்லை வல்வினை தொந்தம் ` என்ற அப்பர் திருக்குறுந்தொகை காண்க . பெண்துணையாக ஓர் பெருந்தகையிருந்தது என்றது - எவ்வுயிர்க்கும் ` அருந்துணையாயும் , பெருந்துணையாயும் உற்றார் இலாதார்க்கு உறுதுணையாயும் உள்ள ஒரு பெருந்தகை ` ஓர் பெண் துணையாக வீற்றிருக்கிறார் என்பது ஒரு நயம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! வினையால் இத்துன்பம் வந்தது என்று எண்ணித் தளர்ச்சியுற்றுச் சோம்பியிருத்தலை ஒழிப்பாயாக . ( இறைவனை வழிபட்டு இத்துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்பது குறிப்பு ). ஒளிமிக்க வளையல்கள் முன்கைகளில் விளங்க , சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு , கயல்மீன்கள் அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு நீர்வளமும் , நிலவளமுமிக்க திருக்கழுமலம் என்னும் வளநகரில் பல பெயர்கள் கூறிப் போற்றும்படி பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

நியர் - நிகர் . நிகர் என்பது எதுகை நோக்கித் திரிந்தது . அசைவு - சோம்பல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! நமக்குப் புகலிடம் இல்லையே என்று தளர்ச்சி அடைவதை ஒழிப்பாயாக ! இடபக் கொடியினைக் கொண்டு விண்ணவர்களும் தொழுது போற்றும்படி , கடைவாயில்கள் உயர்ந்த மாளிகைகளையுடைய கழுமலம் என்னும் வளநகரில் பெண்அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

அடைவு - பற்றுக்கோடு . சேருமிடம் - புகலிடம் . அயர்வு - தளர்ச்சி . கடை உயர் மாடம் ஆர் - கடைவாயில்கள் உயர்ந்த மாளிகைகளையுடைய . ( கழுமலவளநகர் ). இனி , கடைஉயர் ( மாடம் ஆர் ) கழுமலம் என்றுகொண்டு , ஊழிக்காலத்தில் உயர்கின்ற கழுமல வளநகர் எனினும் ஆம் . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 4 ஆம் செய்யுட் கருத்து என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! இறைவனைத் தவிர மற்றோர் பற்று எதுவுமில்லை . நான்கு வேதங்களையும் நன்கு கற்று , கற்றதன்படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில் சிற்றிடையும் , பெரிய அல்குலும் உடைய , அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு , என்னை ஆட்கொண்ட பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பெற்று எனை ஆளுடைப் பெருந்தகை . ` யாவருக்குந் தந்தைதாய் எனுமிவரிப்படியளித்தார் ஆவதனால் ஆளுடைய பிள்ளையார் ஆய் அகில தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும் தாவில் தனித்திரு ஞானசம்பந்த ராயினார் ` என்னும் பெரிய புராணம் நோக்குக .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை விடுவாயாக . நிறைந்த வளையல்களை முன்கையில் அணிந்து , சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு , இருண்ட சோலைகளையுடைய அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில் , பிறைச்சந்திரனைச் சடைமுடியில் சூடிப் பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

குறைவளைவது மொழிகுறைவு ஒழி - ( பல ) குறைபாடுகள் ( நம்மை ) வளைந்து கொண்டிருப்பதைப் ( பிறரிடம் ) சொல்லித் தவிர்க்க வேண்டுகின்ற குறைவை இனி ஒழிவாயாக ( நெஞ்சமே ).

பண் :கொல்லி

பாடல் எண் : 8

அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவா ளருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

பெருமையுடைய கயிலைமலையை எடுத்த அரக்கனான இராவணன் அலறும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி இறைவர் அம்மலையின்கீழ் அவனை நெருக்கினார் . பின் அவன் தன் தவறுணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட , கூர்மையான வாளை அருளினார் . திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்கட்கு மிக்க இன்னருள் செய்யும் உமாதேவியோடு பெருந்தகை யாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அரக்கனார் அருவரை எடுத்தவன் - முதலில் உயர்த்திப்பின் எடுத்தவன் எனத் தாழ்த்திக்கூறிய நயத்தை ` எனைத் துணையர் ஆயினும் என் ஆம் ` என்னுந் திருக்குறளோடு ஒப்பிட்டுக் காண்க . நீடியாழ் - நீடு + யாழ் - நெடியவீணை , வீணையாற்பாட . கருக்கு - முனை ; கூர்மை . பெருக்கும் நீர் அவள் - அன்பர்க்குத் திருவருளைப் பெருக அளிக்கும் தன்மையுடையவள் ; என்பது ` அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருள் ` என்ற திருவெம்பாவைப் ( தி .8) பாடற்கருத்து .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர்
அடியொடு முடியறி யாஅழல் உருவினன்
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும் , பிரமனும் அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய் ஓங்கி நின்றனன் . நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண்யானையின் நடைபோன்று விளங்கும் நடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

நினைந்துருகும் தன்மையில்லாதவர்களாகிய பிரம விட்டுணுக்களால் அறியமுடியாத அழல் உருவாய் நின்றவன் . அரிது - இன்மைமேல் நின்றது . ` மனக்கவலை மாற்றலரிது ` என்புழிப்போல . ( திருக்குறள் ).

பண் :கொல்லி

பாடல் எண் : 10

தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந் தடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

மாலை போன்று , பாயை விரும்பி ஆடையாக அணிந்துள்ள சமணர்களும் , புத்தர்களும் , இறையுண்மையை எடுத்துரைக்காது , தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால் , அவற்றை விடுத்து , இறைவனின் திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக . பசுமைவாய்ந்த அழகிய சோலைகள் வளர்ந்துள்ள திருக்கழுமலம் என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

தார் உறுதட்டு உடைச்சமணர் - மாலையைப்போல விரும்பி உடுத்திய பாயை உடைய சமணர் . தட்டு - பாய் . ` தட்டை யிடுக்கி ` என்பதனாற்கொள்க ` தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவார் ` என்பது இங்குக் காண்க . பேர் அறத்தாள் - முப்பத்திரண்டறமும் வளர்த்தவள் . அறத்தாள் - தரும சொரூபி : அம்பிகை எனக் கொண்டு பெரிய நாயகி எனலும் ஒன்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.

பொழிப்புரை :

நீர்வளமும் , தேன்வளமும் பெருகிய திருக்கழுமல வளநகரில் , மேல்நோக்கி வளைந்த பெரிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவ பெருமானை , அருந்தமிழ் வல்லவனான ஞானசம்பந்தன் செழுந்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓத வல்லவர்கள் விண்ணுலகை ஆள்வர் .

குறிப்புரை :

கரும் தடம் - கரிய சேற்றையுடைய குளங்கள் . பெருந்தடங்கொங்கை - அம்பிகை ; அன்மொழித் தொகை , பன்மொழித் தொடர் . சம்பந்தன செந்தமிழ் ; அகரம் , ஆறனுருபு . ஆகையால் செந்தமிழ் என்பதற்குச் செந்தமிழ் ( ப்பாசுரங் ) கள் என்க . ஒவ்வொரு பாசுரத்திலும் ` பெருந்தகை எம் பெருமாட்டியுடன் இருந்ததே என்று .... அண்ணலார் தமை வினவித் திருப்பதிகம் அருள் செய்தார் ` என்ற பெரியபுராணப் ( தி .12) பாடலின்படி எம் பெருமாட்டியுடன் பெருந்தகை ( நன்கு ) இருக்கிறாரா ? என்று வினவினதாக இருத்தலால் ஈற்றேகாரம் வினாப்பொருளில் வந்தது . இதனை ஈற்றசை என்று உரைத்தாருமுளர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் , தேவர்கட் கெல்லாம் தேவனாக விளங்குபவனும் , அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் ( திருநீறு , உருத்திராக்கம் , சடாமுடி ) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும் , மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும் , சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும் .

குறிப்புரை :

திருந்து தேவன்குடியில் உள்ள தேவனும் அருந்தவத்தோர்கள் வணங்கும் அடிகளும் ஆகிய சிவபெருமானது வேடங்களாகிய திருநீறு உருத்திராக்கம் சடைமுடி ஆகிய இவற்றைக் கண்ணாற் கண்டாலும் , இவ்வேடத்தை மனத்தால் நினைத்தாலும் அவை மருந்து வேண்டினார்க்கு மருந்தாகவும் , மந்திரம் விரும்பினார்க்கு மந்திரமாகவும் , சிவ புண்ணியச் சரிதை கேட்க விரும்பினார்க்கு அப்புண்ணியப் பலனாகவும் பயன்தரும் என்பது இதன் கருத்து . இங்கு ` அடிகள் ` என்றது சிவபெருமானை , ` எம் அடிகள் நின்றவாறே ` என்ற அப்பர் திருவாக்காலும் அறிக . இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இச்சொல் பயின்று வருகிறது .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

தேவர்கட்கெல்லாம் தேவனாக , தீமையில்லாத திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவ பெருமானின் சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன . தீவினைகளைப் போக்குவன . கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின் நுண்பொருள்களைத் தெளிவாக உணரும்படி செய்வன .

குறிப்புரை :

வீதிபோக்கு ஆவன - திருவீதி வலம் வருங்கால் அணிவதற்குரிய அணிகலன்களாக அணிசெய்வன . போக்கு - போதல் . இங்கு ஆகுபெயர்ப் பொருளை உணர்த்திற்று . ஒரு நூலைப் படித்துப் பொருள் விளங்காதிருக்கும் பொழுது இவ்வேடத்தை நினைத்தால் அப்பொருள் தெள்ளிதில் விளங்கும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

தேன் மணமும் , வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவ பெருமானின் சிவவேடங்கள் , மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன . வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன . முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன .

குறிப்புரை :

மாசு நீக்குவன - மனத்துக்கண் மாசை நீக்குவன . வான் - வெளி - இன்பவெளி . உள்க - நினைக்க . ஆன் அஞ்சு - பஞ்ச கவ்வியம் ; அபிஷேகத்திரவியங்களில் ஒன்று . ` ஆனைந்தும் ஆடினான்காண் ` என்பது அப்பர் திருவாக்கு .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

இப்பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து , வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திருவேடங்களின் சிறப்புக்கள் கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன . நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன . கவிபாடும் ஆற்றலைத் தருவன . சிவவேடக்காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன .

குறிப்புரை :

திருவேடத்தின் புகழைக் கேட்டாலும் மகிழ்வு உண்டாம் . அவி - வேள்வித்தீயில் இடும் அவிசு .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி
மண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும் திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானின் திருவேடம் , இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி , தத்துவங்களே தான் என மயங்குவதைத் தீர்க்கும் . சிவலோகம் செல்லும் நெறிகாட்டும் . முக்தி நெறி காட்டும் .

குறிப்புரை :

விண் - சுவர்க்கலோகம் :- போகபூமி . மதி தீண்டும் - சந்திர மண்டலத்தை யளாவிய , தேவன்குடி .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

சந்திரனைத் தொடுமளவு ஒங்கி வளர்ந்துள்ள , நந்தனவனச் சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின் ஆறு அங்கங்களையும் விரித்துச் சொன்ன சிவபெருமானின் திருவேடங்களை நினைப்பூட்டும் வகையில் சிவவேடம் கொள்பவர்களை முன்னர்ப் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க . அவர்கள் உயர்வு வாயினால் சொல்ல முடியாத அளவு புகழைத் தருவதாகக் கருதுக .

குறிப்புரை :

தற்போது இவ்வேடம் அணிந்திருப்போர் முன் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க . உயர்வு என்று வாயினும் சொல்ல முடியாத அவ்வளவு புகழைத் தருவதாகக் கருதுக என்பது முதல் இரண்டடியின் கருத்து . ` எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி உவந்தடிமைத் திறம் நினைந்தங் குவந்து நோக்கி ... ஈசன் திறமேபேணித் தொழு மடியார் ` என்னும் அப்பர் அருண் மொழிகளால் இதனை உணர்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக்
குரையில்ஊ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

அலைகள் வீசுகின்ற ஆறுபாயும் திருந்து தேவன் குடியில் இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள சிவபெருமானின் திருவேடங்கள் முழுதும் குணமேயாகும் . குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை . அவ்வேடங்களை நினைத்து அவற்றின் பெருமையைச் சொல்பவர்களின் குறைகள் நீங்கும் . அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் .

குறிப்புரை :

கரைதல் - குற்றமாகச் சொல்லுதல் , ஒன்றும் இல்லை . ( ஒரு பொருளென்றால் குணம் குற்றம் இரண்டும் கலந்திருக்கும் . இவ்வேடத்தில் முழுதும் குணமேயன்றி , குற்றமென்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை ) என்பதாம் . உரையில் ஊனம் இலை - இதன் பெருமையைச் சொன்னால் நமக்குள்ள குறைகள் நீங்கும் ( உரை + கு + இல் ) = உரைக்கில் என்பதின் ` கு ` ச்சாரியை யின்றி வந்த செயின் என்னும் வினையெச்சம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

சிறந்த நந்தனவனச்சோலை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம் , உலகத்தைத் தனக்குக்கீழ் அடக்கும் ஆற்றலுடைய இராவணனது வலியும் பின்வாங்கத்தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ விளங்குவது . எனவே அவ்வேடம் அஞ்சத்தக்க பிற பொருள்கள் அடியார்களை வந்தடையாதபடி வெருட்டவல்லது .

குறிப்புரை :

இராவணனது வலியையும் பின்வாங்கத் தக்க வலியையுடைய பூத கணங்கள் , ( அவ்வேடம் உடைமையால் ) பிற அஞ்சத்தக்க எப் பொருள்களையும் அடியார்மாட்டு எய்தவொட்டாது வெருட்ட வல்ல திருவேடத்தையுடையன என்பது முன்னிரண்டடிகளின் கருத்து .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

துளக்கம்இல் லாதன தூயதோற் றத்தன
விளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கின்ற மலர்களையுடைய நறுமணம் கமழும் நந்தனவனச் சோலை விளங்கும் திருந்துதேவன் குடியில் , பிரமனும் திருமாலும் காணவொண்ணாச் சிவபெருமானின் திருவேடங்கள் மன்னுயிர்களை நிலைகலங்காமல் காக்கவல்லன . கண்டவர் மனத்தைத் தூய்மைசெய்யும் தோற்றத்தை உடையன . அஞ்ஞானத்தை நீக்கி ஞானவிளக்கம் தருவன .

குறிப்புரை :

துளக்கம் இல்லாதன :- ` மண்பாதலம்புக்கு மால் கடல் மூடி மற்று ஏழுலகும் விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் ` - இவ் வேடம் புனைந்தவர்க்கு நடுக்கம் இல்லை . தூய தோற்றத்தன - கண்டவர் மனத்தையும் தூய்மை செய்யும் தோற்றத்தையுடையவை . விளக்கம் ஆக்குவன - மனத்தில் விளங்காமலிருக்கும் பொருள்கள் இவ்வேடத்தைக் கண்டால் விளங்கும் . ஆக்குவன - வகரம் விரித்தல் விகாரம் . வெறி - வாசனை . அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் - ` இன்ன தன்மையனென்று அறிவொண்ணா இறைவன் ` என்றது சுந்தரமூர்த்திகள் தேவாரம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

செருமரு தண்டுவர்த் தேரம ணாதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணிந்த புத்தர்களும் , சமணர்களும் இறைவனை உணரும் அறிவற்றவர்கள் . அருகில் நெருங்க முடியாத தோற்றமுடைய அவர்களின் உரைகளை ஏற்க வேண்டா . இலக்குமி வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம் , உயிர்களின் பிறவிப்பிணிக்கு அருமருந்தாகி இன்பம் பயக்கும் .

குறிப்புரை :

செருமருதண்துவர் - நெருங்கிய மருதமரத்தின் குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணியும் . மரு - மருது : கடைக்குறை . தேர் அமண் ஆதர்கள் - புத்தரோடுகூடிய சமணர்களாகிய தீயோர் , உருமருவப் படாத் தொழும்பர் - நெருங்க முடியாத அருவருப்பான தோற்றம் . அருமருந்து - கிடைத்தற்கரிய தேவாமிர்தம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
மாடம்ஓங் கும்பொழின் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

தேவர்கள் தொழும் திருந்துதேவன்குடியில் வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான சிவ பெருமானைப் பற்றி , ஓங்கிய மாடமாளிகைகளும் , சோலைகளும் நிறைந்த , குளிர்ச்சிபொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் விரும்பும் இன்தமிழில் அருளிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

சேடர் தேவன்குடி - தேவர் வணங்கும் தேவன்குடி . திருநீறு அணிதல் உருத்திராக்கம் பூணுதல் சடை தரித்தல் இவை சிவவேடம் எனப்படும் . இவ்வேடம் புனைந்தாரைக் குணம் குற்றம் பாராது வேடத்தையே கருதி வழிபடல்வேண்டும் . இவர்கள் அஞ்சுவது யாதொன்றுமில்லை . இவரைப் பூசிப்போருக்கு எய்தாதன இல்லை என்பன இப்பதிகத்தால் தெளிவுறுத்தப்படும் பொருள் . இவற்றில் திருநீறு ஒன்றையே பொருளெனக்கொண்டு முத்தி யடைந்தவர் ஏனாதிநாதநாயனார் ` கடையவன்றன் நெற்றியின்மேல் வெண்ணீறு தாம் கண்டார் ` ` கண்ட பொழுதே கெட்டேன் . முன்பு இவர் மேற்காணாத வெண் திருநீற்றின் பொலிவு கண்டேன் . வேறு இனி என் ? அண்டர்பிரான் சீர் அடியார் ஆயினார் ` என்று மனம்கொண்டு இவர்தம் கொள்கைக் குறிவழி நிற்பேனென்று ` நேர் நின்றார் `. மின் நின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார் ` ( தி .12 ஏனாதி நாயனார் புராணம் . 40.) சடைமுடி யொன்றே காரணமாக , எரியிற்புகுந்து உயிர்நீத்து முத்தியுற்றவர் புகழ்ச்சோழ நாயனார் . திருநீறு முதலிய அனைத்தும் கூடிய வேடத்தைப் பொருளென்றுகொண்டு முத்தி பெற்றவர் மெய்ப்பொருள் நாயனார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண் உடையரோ வடியரே.

பொழிப்புரை :

பெண் யானைகள் பின்தொடர , பெரிய தும்பிக்கை யுடைய ஆண்யானையானது , விடியற்காலையிலேயே குளத்தில் மூழ்கி , மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளையன்றி , அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது ?

குறிப்புரை :

பெரும் கை ( ம் ) மா - தலைவனாகிய துதிக்கையை யுடைய யானை . மலர்தழீஇ - மலர்களை ஏந்திக்கொண்டு . கடி - வாசனை . உலாம் - உலாவும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

நுண்ணிடைப் பேரல்குல் நூபுர மெல்லடிப்
பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்
கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.

பொழிப்புரை :

நுண்ணிய இடையையும் , பெரிய அல்குலையும் , சிலம்பணிந்த மென்மையான பாதங்களையும் உடைய பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை , விண்ணுலகை ஆளும் விருப்பமுடையவர்கள் விரும்பி ஏத்துதல் கடமையாகும் .

குறிப்புரை :

நுண்இடை - சிறிய இடுப்பு . நூபுரம் - சிலம்பு . விண் - ஞான ஆகாயம் . இடை - ஏழன் உருபு .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம்
காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளு ஞானநீர்
தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே.

பொழிப்புரை :

பகலில் குளத்திலுள்ள தாமரை மலர்களில் தங்கித் தேனைப் பருகிய வண்டினம் , இரவில் அப்போது மலரும் நீலோற்பல மலரை அடைந்து தேனுண்ட மகிழ்ச்சியில் பண்ணிசைக்க விளங்கும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை , கஸ்தூரி என்னும் மான் , புழுகுப்பூனை இவற்றிலிருந்து பெறப்படும் வாசனைப்பொருள் , சந்தனம் , புனித நீர் முதலியன கொண்டு அடியவர்கள் திருமுழுக்காட்டி , மலர்தூவி அர்ச்சித்துப் போற்றி வழிபடுவர் .

குறிப்புரை :

குளத்தில் தாமரையில் தங்கிய வண்டின் கூட்டங்கள் மாலைக் காலத்தில் அது குவிவதால் அப்போது மலர்வதாகிய நீலோற்பலத்தை அடைந்து அங்கே தேனுண்ட மகிழ்ச்சியினால் பாடும் கானப்பேர் . நீலோற்பலம் இரவின் மலர்வதென்பதை அறிக . நாவி வாய் .... தொண்டர் புழுகு பூனையின் இடத்து உண்டாகும் புழுகிலும் மலர்களிலும் . ஞானநீர்தூவி - திரவிய சுத்தியின் பொருட்டு அஸ்திரமந்திரத்தால் நீர் தெளித்து , வாய்ப்பெய்து - அத்திரவியங்களை அபிடேக கலயத்தில் வார்த்துக்கொண்டு நின்று ( ஆட்டுவார் ) வாய் - இங்குப் பாத்திரத்தின் இடத்தைக் குறித்தது . கிரியையெல்லாம் அறிவோடு கூடிய வழியே பெரும்பயன் விளைப்பதால் அவ் வொப்புமைபற்றிக் கிரியையை ஞானமெனக் கூறினார் . ஞானம் கிடைத்தற்கு நிமித்தம் , கிரியை ஆதலின் ஞானம் என்றார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை அவர்க்கலாற் களைகிலார் குற்றமே.

பொழிப்புரை :

திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவ பெருமானை , மனத்தைப் பொறிவழிஓடாது ஒருமுகப்படுத்தி நிறுத்திய நெஞ்சுடன் , பூவும் நீரும் கொண்டு , முழவு முழங்க , இறைவனின் புகழைப்பாடி நைவேத்தியம் செய்து வழிபடுகின்ற மெய்யடியார் களுக்கு அல்லாது ஏனையோர்களுக்குக் குறைகள் தீருமோ !

குறிப்புரை :

நிறை - மனம் பொறி வழி போகாமல் அறிவின் வழி நிறுத்துதல் . இறைவனுக்கு வழிபாடு ஆற்றுவோர்க்கு முதற்கண் வேண்டப்படுவது நிறை உடை நெஞ்சு . பூசனைத் திரவியங்களாகிய நீரும் , பூவும் , நைவேத்தியமும் , தோத்திரமும் , வாத்திய வகைகளும் இங்குக் கூறப்படுகின்றன . இவற்றுள் எல்லாம் இறைவன் தங்கியிருத்தலையறிந்து பூசிப்பதையே தமக்குக் கருமமாகக்கொண்டு திருக்கானப் பேரைப் பூசிக்கும் மெய்யடியார் , தமது குறைகள் நீங்கப் பெறுவார்களேயன்றி ஏனையோர் அவற்றைக் களையமாட்டாதவராவர் என்பது பாடலின் கருத்து . ` பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி ` என்பது தாயுமானவர் வாக்கு .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா
ஞானப்பே ராயிரம் பேரினா னண்ணிய
கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர்
வானப்பேர் ஊர்புகும் வண்ணமும் வல்லரே.

பொழிப்புரை :

பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த மார்பின்மேல் , எலும்புமாலையும் அணிந்து , அழிவில்லாத சிவஞானம் தருகின்ற திருநாமம் ஆயிரம் கொண்டு திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தினை விரும்பித் தொழும் அடியவர்கள் தீவினைகளற்றவர் ஆவர் . தேவர்களின் நகரமான அமராவதியை அடையும் சிறப்புடையவர் ஆவர் .

குறிப்புரை :

ஏனம் - பன்றியின் கொம்பாகிய . பூண் - அணிகலத்தை யுடைய , மார்பினில் , என்பு பூண்டு - எலும்பு மாலைகளையணிந்து . ஞானம் - சிவபோதம்தருவன ஆகிய . பேர் ஆயிரம் - சிறந்த ஆயிரம் பெயர்களும் . பெயரன் - பெயராக உடையவன் . ` பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான் ` ( அப்பர் ) ` ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே ` ( சுந்தரமூர்த்திகள் ) ` ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ` ( தி .8 திருவாசகம் ) எனவருவனவும் அறிக . ஆயிரம் என்பது மிகப் பல என்னும் பொருட்டு ` பழுதெண்ணு ... எழுபது கோடியுறும் ` என்ற திருக்குறளிற்போல . (639)

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும்என் உள்ளமே.

பொழிப்புரை :

பள்ளம் போன்ற படர்ந்த சடையில் , வெள்ளம் போலப் பாய்ந்த கங்கையைத் தாங்கி வெண்ணிறச் சந்திரனையும் சூடினான் சிவபெருமான் . கள்ளம் என்பதை அறியாது வெள்ளை உள்ளத்துடன் இறைவனை வழிபடுகின்ற , திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள மெய்யடியார்களின் உள்ளத்தில் இறைவன் விளங்குவதால் , அவ்வடியவர்களின் திருவுள்ளத்தைக் கோயிலாக நினைத்து என் மனம் வழிபடும் .

குறிப்புரை :

பள்ளம் - பள்ளம்போல் . மே - மேவிய - பொருந்திய . படர்ந்த சடையில் . பாய்ந்தநீர் வெள்ளம் தாங்கினான் . நீர் பாய்வது பள்ளத்தில் ஆதலால் கங்கை நீருக்குச் சடை பள்ளம் போல் இருந்தது என்பது . பள்ளம் மே ( வு ) படர்சடை . மே + சடை - வினைத்தொகை . கள்ளம் நினைத்தலையும் செய்தறியாதவர்களாகிய மெய்யன்பர் கருதிய கானப்பேர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.

பொழிப்புரை :

பெரிய பெண் யானை தன் வலியகையால் அலகிடக் கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது வழிபடுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனை , குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள ஆணவமாகிய நோய் தீர ஞானமாகிய மலர்கொண்டு மனம் , வாக்கு , காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும .

குறிப்புரை :

தலவரலாறு இப்பாட்டிலும் முதற்பாட்டிலும் காண்க . ஞான மாமலர் :- ஞானம் அட்டபுட்பங்களில் ஒன்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளுநாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.

பொழிப்புரை :

வாட்போர் வலியாலும் , வேற்படைப் பயிற்சியாலும் , பெரிய கயிலைமலையை எடுத்த வலிமை வாய்ந்த தோள்களை உடைய இராவணனின் நீண்டமுடிகள் நலியுமாறு , பெருவிரலை ஊன்றிய திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தலையால் வணங்கும் அடியவர்கள் நாளுக்கு நாள் உயர்நிலை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள் .

குறிப்புரை :

வாளினால் - வாட்போர் வலியாலும் . வேலினால் - வேற்படைப் பயிற்சியாலும் , வரை எடுத்த தோளினான் . நாளும் நாளும் உயர்வதோர் நன்மை அவனை வணங்குவார்க்கன்றிப் பிறர்க்குச் செய்தலாகாமையறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

சிலையினான் முப்புரந் தீயெழச் செற்றவன்
நிலையிலா இருவரை நிலைமைகண்டு ஓங்கினான்
கலையினார் புறவிற்றேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தைத் தீப்பற்றும்படி செய்து அழித்த சிவபெருமான் , நிலையிலா பிரமன் , திருமால் இவர்களின் செருக்கைக் கண்டு அவர்கள் காணாத வண்ணம் நெருப்பு மலையாய் ஓங்கி நின்றான் . அழகிய குறிஞ்சியும் , முல்லையும் சார்ந்த நிலமான , தேன் மணம் கமழத் திகழும் திருக் கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்றுபவர்கள் தவமுடையவர்கள் ஆவர் .

குறிப்புரை :

செற்றவன் - அழித்தவன் . நிலைமைகண்டு ஓங்கினான் - செருக்கு ஒழியாத நிமையைக்கண்டு , அழலாய் ஓங்கினவன் ; இறைவன் அவ்வாறு ஓங்காவிடின் , அவர்களின்றும் செருக்கு ஒழிந்திரார் . ` தாளை வணங்காத்தலை ` ( திருக்குறள் ) ` வணங்கத் தலைவைத்து ` ( தி .8 திருவாசகம் ) ` தலையே நீ வணங்காய் ` ( அப்பர் ) என்பதனால் தலையினால் வணங்குவார் என்றார் . இருவரை நிலைமையை ; இரண்டு செயப்படுபொருள் வருவதால் இருவரை என்பதற்கு , இருவரது என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளர்இளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.

பொழிப்புரை :

உறியினிடத்துச் சுரைக்குடுக்கை , கமண்டலம் இவற்றைத் தாங்கிக் கையில் பிடித்து அலையும் , இறைவனை உணராத பாவிகளாகிய சமணர் , புத்தர்கள் முறையே செய்யும் தலையிலுள்ள முடிகளைப் பறித்தலும் , காவியாடை போர்த்தலும் ஆகிய செயல்களால் பயனில்லை . மடமையுடைய பெண்யானையும் வளர்கின்ற இளங்கொழுங்கொடியும் போன்ற உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைக் கைகூப்பித் தொழுவது நம் கடமையாகும் .

குறிப்புரை :

உறித்தலை - உறியினிடத்து . சுரை - சுரைக்குடுக்கை . ஓர் பாத்திரமும் ஆம் . குண்டிகை பிடித்து - கமண்டலத்தையும் தாங்கி , உச்சி - தலையில் . மயிர் பறித்தலும் . போர்த்துதலும் , மயிரை வளர்த்தலும் ஆகிய இவற்றால் பயனில்லை . கறித்து - கடித்து .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத் திளவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன
பாட்டகத் திவைவலார்க்கு இல்லையாம் பாவமே.

பொழிப்புரை :

சுடுகாட்டில் ஆடுகின்ற சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை , இளவரால் மீன்கள் துள்ளிப்பாயும் நீர்நிலைகளையுடைய வளமையான சீகாழி என்னும் நகரில் அவதரித்த மிகுந்த புகழுடைய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தால் போற்ற வல்லவர்கட்குப் பாவம் இல்லை . ( அவர்கள் பாவத்திற்குக் காரணமான தீவினைகளைலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர் .)

குறிப்புரை :

கோட்டகம் - நீர்நிலை . குதி - துள்ளல் . முதனிலைத் தொழிற் பெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வெண்ணிற மழுவைப் படைக்கலனாக உடையவர் . பாயும் புலித்தோலை அரையில் ஆடையாக அணிந்தவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . இடபத்தை வாகனமாகக் கொண்டவர் . திருவெண்ணீற்றைப் பூசியவர் . கங்கையைச் சடையிலே தாங்கியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருச்சக்கரப்பள்ளி என்னும் கோயிலாகும் .

குறிப்புரை :

படையினார் வெண்மழு - வெண்மையாகிய மழுவைப் படையாக உடையவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்எருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் அரிய நால்வேதங்களை ஓதி அருளியவர் . குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர் . மண்டை யோட்டு மாலையுடன் எருக்கம் பூவும் அணிந்தவர் . திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர் . தம்மை உறுதியாகப் பற்றி வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப் பள்ளி என்னும் திருக்கோயிலை உடைய ஊராகும் .

குறிப்புரை :

மதியை வெள்ளியதலையோடும் எருக்கமாலையோடும் சடைமிசைச் சூடினார் . படுதலை , தலைமாலையைக் குறித்தது . துன் - நெருங்கிய . இடு பலி - ( மாதர் ) இடும் பிச்சையை ; ( நாடினர் .)

பண் :கொல்லி

பாடல் எண் : 3

மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்
துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் மின்னலைப் போன்ற சடையின் மீது , ஒளிக்கதிர்களை வீசுகின்ற சந்திரனையும் , பொன் போன்ற கொன்றை மலரையும் நெருப்புப் பொறி போன்று விடத்தைக் கக்குகின்ற பாம்பையும் அணிந்தவர் . உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு வேதங்களின் உட்பொருளாக விளங்குபவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

மின்னின் ஆர்சடை - மின்னலைப் போன்ற சடை . பொன்னின் ஆர் - பொன்னைப்போன்ற . துன்னினார் - நெருங்க அணிந்தவர் . நான் மறை தன்னினார் - நான்கு வேதங்களிலும் உள்பொருள் ஆனவர் . தன் - அசை .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழும்ஊர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும் பெருங்கருணையாளர் . நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர் . வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர் . அப்பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஊர் , வண்டுகள் ஒலிக்கின்ற , தேன்துளிகளைக் கொண்ட மலர்கள் மணம் வீச , வேகமாகப் பாயும் காவிரியாறு சலசல என ஒலிக்கும் , மணிகளைக் கரையிலே ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

வந்து இழி - வந்து பாய்கின்ற ( காவிரி ). சலசல என்னும் ஓசையோடு மாணிக்கங்களைக் கொழித்துவீசும் சக்கரப்பள்ளி .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோ டமரும்ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்த வேதநாயகர் . கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர் . அவர் அழியா அழகுடைய மலைமங்கையான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் ஊர் , நறுமணம் கமழும் மலர் , அகில் , பலவகை மணிகள் , சந்தனமரம் இவை வந்தடைகின்ற நீர்வளமிக்க திருச்சக்கரப் பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

விரிபுனல் - பரவும் நீர்வளம் பொருந்திய . ஊர் - வேதியர் மலைமங்கையோடு அமரும் ஊர் என்க . சந்து - சந்தனமரம் . அந்தம் இல் அணி - பேரழகு ; அழியா அழகு எனலும் ஆம் . ` அழியா அழகுடையான் ` என வருதலும் காண்க . ( கம்பராமாயணம் .)

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு எரிந்து சாம்பலாகும்படி , கோபத்துடன் , வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்தவர் . தேவர்களும் , அசுரர்களும் வணங்கும் பெருமை பெற்றவர் . உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டவர் . ஒலிக்கின்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

முப்புரம் பாழ்பட . வெம்சிலை - விரும்பத்தக்க ( மேரு ) மலையை . பாங்கினால் - இனங்களுக் கேற்க . வாங்கினார் - வளைத்தவர் . வெம்மை விருப்பம் . கொடியவில் என்பதில் பொருள் சிறவாது ; தேர் ஆதற்கு இயைபில்லாதது . அம்பு ஆதற்கு இயைபில்லாதது , குதிரை ஆதற்கு இயைபு இல்லாதது . ( பூமி , திருமால் வதம் ) முறையே தேரும் , அம்பும் குதிரையும் ஆனாற்போல , வில்லாதற்கு இயைபு இல்லாத மலை வில்லாயிற்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் இப்பூவுலக மக்களெல்லாம் தொழுது போற்றும் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களை உடையவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . பேரொலியோடு பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர் . கொத்தாக மலரும் கொன்றை மலர்களை அழகிய மாலையாக அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

பாரினார் - பூமியிலுள்ளோர் . தொழுது எழும் - துதித்தற்குரிய பல ஆயிரம் பெயரை உடையவர் , எழும் என்ற பெயரெச்சம் ( பெயரை ) உடையவர் என்ற பெயரைத் தழுவும் . பரவு பெயர் ; வினைத் தொகை . பல்லாயிரம் - இடைப்பிறவரல் . நிரை - வரிசை . அடுக்கு அடுக்காகப் பூத்தலினால் கொன்றைமலர் நிரைமலர் எனப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

முதிர்வு அடையாத இள வெண்திங்களைச் சிவபெருமான் சடைமுடியில் சூடியவர் . முன்பொருநாள் தம்மை எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில் திரிந்த அசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர் . கயிலைமலையினால் வல்லசுரனான இராவணனின் வலிமையை அடக்கிய திறமையாளர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

முதிர் , அதிர் - என்பன முதிர்தல் , அதிர்தல் என்ற பொருளில் வருதலால் முதனிலைத் தொழிற்பெயர் . வரை தன் ஆல் - தன் - அசை . சதிர் - திறமை .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

கிழிக்கப்பட்ட துணியைக் கோவணமாகச் சிவ பெருமான் அணிந்தவர் , மணம் கமழும் திருவெண்ணீற்றினைப் பூசியவர் . பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர் . குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர் . திருமாலும் , பிரமனும் தங்களையே தலைவராகக் கருதிய செருக்கைத் தணியச் செய்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

துணி படு - கிழிக்கப்பட்ட , பணி - பாம்பு . மணி - நீலமணி . தணிவினர் - செருக்குத்தணியச் செய்தவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

உடம்புபோர் சீவரர் ஊண்டொழிற் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று சொல்லப்படும் மஞ்சள் உடை உடுத்தும் புத்தர்களும் , உண்பதையே தொழிலாகக் கொண்ட சமணர்களும் உரைப்பவை நஞ்சு போன்று கொடுமையானவை . மெய்ம்மையானவை அல்ல . அவற்றைப் பொருளாகக் கொள்ளவேண்டா . விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு அபிடேகம் செய்தும் , மலர் மாலைகளைச் சார்த்தியும் , குளிர்ந்த குளங்கள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து விளங்கும் திருச்சக்கரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை நாளும் வணங்குவீர்களாக !

குறிப்புரை :

உடம்பைப் போர்க்கும் சீவர மென்னும் ஆடையையுடைய புத்தர் . விடம் - நஞ்சு . புனல் கொடு - நீரைக்கொண்டும் ; வடம்படு மலர் கொடு - மலர்மாலைகளைக்கொண்டும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்
கண்ணுத லவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே.

பொழிப்புரை :

குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய , நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளை , திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும் .

குறிப்புரை :

மெய்ப்பாவமே - உடம்பினாற் செய்த பாவம் . எனவே ஏனைக்கரணங்களாற் செய்த பாவமும் அடங்குதலறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

காலையார் வண்டினங் கிண்டிய காருறும்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.

பொழிப்புரை :

காலைப்பண்ணாகிய மருதப்பண்ணை இசைக்கின்ற வண்டினங்கள் கிளர்ந்த மலர்களையுடைய , மரங்கள் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகளில் பைங்கிளிகள் அத்தலத்திலுள்ளோர் பயிலும் சைவநூல்களில் , சொல்லையும் , பொருளையும் பயில்வன . கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் மணிபோல் உள்ளடக்கிய வேதப்பொருளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , மாடங்களில் சந்திரன் தவழ்கின்ற திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

காலை - மருதப்பண்ணை . காலை - காலைப்பண் ; ஆகுபெயர் . ஆர் - பாடிய ( ஆர்த்தல் - ஒலித்தல் ) வண்டினம் . கிண்டிய - தம்கால்களால் கிளர்ந்த , ( மலர்களையுடையசோலை ). கார் உறும் - மேகம்தங்கும் . சோலை - சோலையிற் பொருந்திய . பசிய கிளிகள் அத்தலத்தினர் பயிலும் சைவ நூல்களின் சொல்லையும் பொருளையும் பயில , வேதியன் விரும்பும் இடம் மழபாடியென்க . பயில - என்பது காரண காரியம் ஒன்றும் இன்றி வந்த வினையெச்சம் . ` வாவி செங்கமலம் முகங்காட்ட ...... குவளைக் கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே .` என்பதில் காட்ட என்புழிப்போல . ( தி .1 பதி .129) கார் - பண்பாகுபெயர் . பைங்கிளி சொற்பொருள் பயில என்பதனை ` வேரிமலிபொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலையாமே ` என்பதனோடு ஒப்பிடுக . மாடங்களில் சந்திரன் தவழும் மழபாடி என்க . விடம் அணி வேதியன் - விடக் கறையைக் கழுத்திலணிந்த வேதத்தின் பொருளானவன் . விடம் காரண ஆகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழ பாடியே.

பொழிப்புரை :

நீலகண்டராயும் , நெற்றிக்கண்ணை உடையவரும் தம்மை அடைக்கலமாக வந்தடைந்த சந்திரனை அழகிய செஞ்சடையில் சூடிய பிஞ்ஞகருமான சிவபெருமான் வேதங்களை ஓதுபவர் . அவர் வீற்றிருந்தருளும் ஊர் , நீர்த்துறைகளிலே வெண்ணிறப் பறவைகள் அங்கு மலர்ந்துள்ள வெண்ணிற மலர்கட்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி விளங்கும் திருமழபாடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கண்ணுதலும் பிஞ்ஞகனுமாகிய இறைவன் . பேணும் - விரும்பும் . ( ஊர் ). நண்ணிய பிறை - தன்னைச் சரண் அடைந்தபிறை . பிஞ்ஞகம் - மயில் தோகை ; வேட உருத்தாங்கியபோது தரித்தலால் பிஞ்ஞகன் என்று சிவபெருமானுக்குப் பெயர் . நீர்த்துறைகளிலே வெள்ளிய பறவைகள் அங்கு மலர்ந்த வெண்மலர்களுக்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி நெருங்கியுள்ள வளம்பொருந்திய மழபாடி என்பது மூன்றாம் அடிக்குப் பொருள் . ( துதைய -) பொருந்திய என ஒரு சொல் வருவிக்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர லாளொடு பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.

பொழிப்புரை :

அந்தணர்கள் வேள்வி செய்யும்போது கூறுகிற வேதங்கள் ஒலிக்கவும் , செந்தமிழ்ப் பக்திப்பாடல்கள் இசைக்கவும் , சிறப்புடன் , இறைவன் , பந்து வந்தடைகின்ற மென்மையான விரல் களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் , தென்றற் காற்று வீசும் புகழ்மிக்க திருமழபாடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

துழனி - ஓசை . செந்தமிழ்க்கீதம் - தனித் தமிழிசைப் பாடல் . சீர் - முறை , சிறப்பு , தாளஒத்து . வேள்விகள் முறையோடும் , மறைத்துழனி சிறப்போடும் , செந்தமிழ்க்கீதம் , தாள ஒத்துக்களோடும் விருத்தியடைய அம்பிகையோடும் இறைவன் பயிலும் இடம் என்பது முதல் மூன்றடியின்பொருள் . பயில் + இடம் = பயில்விடம் - உடம்படுமெய்யல்லாத மெய் . இறைவன் என்பது சொல் எச்சம் . ( பரிமேலழகர் ). தோன்றா எழுவாய் எனினும் ஆம் . மந்தம் - தென்றற் காற்று , பண்பாகு பெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.

பொழிப்புரை :

யானையின் தோலை உரித்து அழகுறச் சிவபெருமான் போர்த்திக் கொண்டவன் . வீடுபேறாயும் , மும்மூர்த்தி கட்கு முதல்வனாயும் விளங்குபவன் . பக்தியால் பாடிப் போற்றும் அன்பர்கட்கு அருள்புரியும் தலைவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பேரழகுடைய அவன் போர்த்ததனால் யானைத் தோலும் ஓர் அழகுடையதாயிற்று என்பது முதலடியின் பொருள் . ` நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு ஆறுசூடினும் அம்ம அழகிதே ` என்ற அப்பர் வாக்கானும் அறிக . ( திருக்குறுந் தொகை .) வீடு பேறாயும் , மூவரினும் முதல்வனாயும் நிற்பவன் என்பது இரண்டாம் அடியின்பொருள் . இவற்றை முறையே `..... விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை ` என்ற அப்பர் பெருமான் ( திருப்பழனம் . 5.) திருவாக்கானும் , ` மூவண்ணல் தன்சந்நிதி முத்தொழில் செய்ய வாளா மேவண்ணல் ` என்ற பரஞ்சோதியார் வாக்கானும் ( திருவிளையாடற் புராணப் பாயிரம் ) உணர்க . பரிந்து - இரங்கி .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்
வெங்கண்வாள் அரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே.

பொழிப்புரை :

கங்கையைத் தாங்கிய சடைமுடியின் இடையில் ஒளிரும் சந்திரனை அணிந்தவன் சிவபெருமான் . கொடிய கண்ணை யுடைய ஒளியுடைய பாம்பை ஆபரணமாக அணிந்தவன் . வேதத்தை அருளி வேதப்பொருளாகவும் விளங்குபவன் . தன்னை வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்கும் அருளுடைய சிவந்த கண்ணையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

வாள் அரவு - ஒளியையுடைய பாம்பு . வாள் என்னும் சொல் பாம்புக்கு அடைமொழியாக வருவதைப் பல இடங்களிலும் காண்க . தீது இலா உமையாள் - தன்னை யடைந்தவர்களின் பாவத்தை இல்லையாகச் செய்விப்பவளாகிய உமையாள் . இலா என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்துப் பிறவினை விகுதி தொக்கது .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழ பாடியே.

பொழிப்புரை :

பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்ததும் அவன் ஆருயிரைக் கவரவந்த காலனின் உயிர் அழியும்படி அவனைக் காலால் உதைத்த சிவபெருமான் , சேல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருமால் முதலான பெருமையுடையவர்கள் வழிபடும் சிறப்புமிக்க திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

பாலனார் - மார்க்கண்டேயர் . பாங்கினால் :- அளந்த வாழ்நாள் முடிந்தவர் உயிரைக்கவரத் தனக்கு இறைவன் அளித்த ஆணை இங்குப் , பாங்கு எனப்பட்டது . செக - அழிய . காலன் ஆகையினால் அவனைக் காலினாற் சாடினான் என்பது ஓர் சொல்நயம் . சேல் - மீன் . மாலினார் - திருமால் . இறைவனை வழிபடும் பேறு உற்றமையின் மாலினார் எனச்சிறப்புக் கிளவியாற் கூறினார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர் . நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

விண் - தேவ உலகம் . எண் இலார் - ( வழிபட்டு உய்யும் ) எண்ணம் இல்லாதார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

கரத்தினால் கயிலையை யெடுத்தகார் அரக்கன
சிரத்தினை ஊன்றலுஞ் சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.

பொழிப்புரை :

தன் கையால் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த கரிய அரக்கனான இராவணனின் தலைகள் அம்மலையின்கீழ் நலிவுற்றுத் துன்புறும்படி தம்காற்பெருவிரலைச் சிவபெருமான் ஊன்றியவர் . பின் இராவணன் சிவன் திருவடியையே சரணம் எனக் கொண்டு அருள்புரியும்படி கெஞ்சி வேண்டித் தன் கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டிச் சாமகானம் பாட , அவனுக்கு வரமருளிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

அரக்கன சிரம் - அரக்கனுடைய தலைகள் . வருமொழி பன்மையாதலினால் ஆறனுருபில் அகரம் வந்தது . அதனால் சிரம் என்பதைப் பால் பகா அஃறிணைப் பெயராகக் கொள்க . இரத்து - இரத்தல் . கெஞ்சி வேண்டல் , து - தொழிற்பெயர் விகுதி , பாய்த்து என்பதிற்போல . வரத்தினான் - வரத்தைத் தந்தவன் . பாடலும் , அவனுக்கு அருளிய வரத்தையுடையவன் ( வரன் அருளியவன் ) என்பது .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்
நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.

பொழிப்புரை :

இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் அடிமுடி தேட , காண்பதற்கு அரியவராய் விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஒருபக்கம் பனைமரங்களின் பழுத்த பழங்கள் உதிர மறுபக்கம் பசுமையான சோலைகள் விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

எழில் - அழகையுடைய . மால் , பன்றி உரு எடுத்தமையின் இங்ஙனம் கூறப்பட்டது . இகழ்ச்சிக்குறிப்பு . ` எழில்செய் கூகை ` என்றார் சிந்தாமணியில் . இனி , எழில் - கோலம் . அச்சொல் பன்றியைக் குறிக்கும் . ` இலட்சிதலட்சணையால் ` எனக்கொண்டு அதற்கேற்ப அன்னமாகப் பிரமனும் ( பன்றியாகத் திருமாலும் ) நாடினார்க்கு அறிதற்கரிதாயிருந்த நாதனார் எனலும் ஆம் . பக்கங்களிலெல்லாம் பனைமரங்கள் பழுத்துப் பழம் உதிர்விக்கவும் , மற்றப் பக்கங்களிலெல்லாம் பசிய சோலைகள் வளம் மிகுவிக்கவும் பொருந்திய மழபாடி . பழம் பழுத்தவுடனே உதிர்தல் பனை மரத்துக் குண்மையால் ` காகதாலியம் ` என வடநூலார் கூறுவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.

பொழிப்புரை :

நீர்க்கலசத்தை உறியிலே தாங்கி அதைப் பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்லும் , வாய் கழுவும் வழக்கமில்லாத சமணர்களும் , புத்தர்களும் இறையுண்மையை அறியாது கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ள வேண்டா . படமெடுத்தாடும் , புள்ளிகளையுடைய பாம்பை ஆபரணமாக அணிந்து , இள மான்கன்றைக் கரத்தில் ஏந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

உறி பிடித்து :- நீர்க்கரகத்தில் எறும்பு விழுந்து கொலைப் பாவம் சேராதிருக்க அதனை ஓர் உறியில் வைத்து அவ்வுறியை ஒரு பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்வது சமணர் வழக்கம் . ஊத்தை வாய் - ஊற்றை வாய் , பல் விளக்கினால் அதில் இருக்கும் சிறு கிருமிகள் சாம் என்று விளக்காமையினால் ஊத்தை வாயையுடைய சமண் எனப்பட்டது . பொறி பிடித்த அரவு இனம் - படத்திற் புள்ளிகளையுடைய பாம்பு . பிடித்த அரவு ; பெயரெச்சத்து விகுதி அகரம் தொக்கது .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

ஞாலத்தா ராதிரை நாளினான் நாள்தொறும்
சீலத்தான் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
கோலத்தால் பாடுவார் குற்றமற் றார்களே.

பொழிப்புரை :

இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் நட்சத்திரத்திற்குரிய சிவபெருமானுக்கு , நாள்தோறும் சிவாகமவிதிப்படி பூசைகள் நடைபெறுகின்ற திருமழபாடி என்னும் திருத்தலத்தினை , உலகத்தோரால் போற்றப்படுகின்ற மிகுந்த புகழையுடைய திருஞானசம்பந்தன் அருளிய திருப்பதிகத்தைச் சிவவேடப் பொலிவுடன் பாடுபவர்கள் தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர் .

குறிப்புரை :

ஆதிரை நாளினான் - சிவபெருமான் . திருவாதிரை சிவனுக்குரியது . ஞாலத்து ஆர் - உலகில் எங்கும் நிறைந்த ; ஆதிரை நாளினான் . கோலத்தால் பாடுவார் - சிவவேடத்தோடு பாடுவோர் ; குற்றமற்றாராவர் - தேவாரத் திருமுறைகளையும் , சித்தாந்த நூல்களையும் ஓதுங்கால் இயன்ற அளவு உடற்சுத்தியோடு , விபூதி , உருத்திராக் கமணிந்து ஓதவேண்டுமென்பது முறை . ஆதலாற் கோலத்தாற் பாடுவார் என்றார் . ஆல் உருபு ஒடுப் பொருளில் வந்தது . இவ்வாறு வருதலைத் ` தூங்குகையா னோங்குநடைய ` என்ற புறநானூற்றானும் அறிக . நாள்தொறும் சீலத்தான்மேவிய திருமழபாடி . நித்திய நைமித்திக வழிபாட்டு முறைகள் நாள்தோறும் தவறாது பொருந்திய திருமழபாடி . சீலம் - ஒழுக்கம் ; இங்குச் சிவாலயபூசையைக் குறிக்கிறது .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி உண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.

பொழிப்புரை :

கச்சணிந்த முலையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்பவர் . அப்பெருமான் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய நிமலராய் விளங்குவது அவர்தம் சிறந்த குணமாகும் .

குறிப்புரை :

வார் , ஊர் , கார் , நீர் - ரகரவீற்றுச் சொற்கள் உகரச் சாரியை பெற்றன . ஊரில் ஏற்கும் பிச்சையை யுண்பதும் வெண் தலையில் . மன் உம் இரண்டும் அசைநிலை . இது திருக்காட்டுப்பள்ளி நிமலர்தம் நீர்மையாகும் . பங்கினன் நிமலர் ; பால் வழுவமைதி .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநடனம் செய்பவர் . நீண்ட சடைமுடியில் சந்திரனோடு பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கண்ணாற்காணும் பொருள்வடிவாயும் விளங்குபவர் . அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குதலே பயனுடைய செய்கையாகும் .

குறிப்புரை :

அருத்தனார் - பொருளாய் உள்ளவர் . அறிவாற்காணும் கருத்துப் பொருளாய் இருத்தலன்றித் திருக்காட்டுப்பள்ளியிற் கண்ணாற்காணும் பொருள் வடிவாயுமுள்ளவர் . பொருத்தனார் - பொருந்துதலையுடையவர் . பொருத்தம் - பொருந்தல் . அதையுடையவன் பொருத்தன் , கழலிணை போற்றுதல் , பொருளது - பயனுடைய செய்கையாகும் . ஏனைய அவம் உடையனவே என்பது குறிப்பெச்சம் . பொருள் என்னும் பல பொருள் ஒருசொல் ஈற்றடியில் பயன் என்னும் பொருளில் வந்தது . ` போற்றுதல் பொருளதே ` என்ற தொடரில் பிரிநிலை யேகாரத்தைப் பிரித்துப் போற்றுதலே பொருளது எனக்கூட்டுக .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் எம்மையா ளுடையஎம் மடிகளே.

பொழிப்புரை :

சிவபெருமான் அரிய வேதங்களை உரிய பண்ணோடு பாடியருளினார் . அவர் நெற்றிக்கண்ணை உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் , ஆகாயத்திலிருந்து விரிந்த கங்கையைத் தாங்கிய சடைமுடியுடையவராய் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானே எம்மை ஆட்கொண்டருளும் எம் தலைவர் ஆவார் .

குறிப்புரை :

பண்ணின் ஆர் - பண்ணோடு பொருந்திய . அருமறை பாடினார் . ஆகாய கங்கை சடைமுடியின்கண் தங்கப்பெற்றவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

பணங்கொள்நா கம்அரைக் கார்ப்பது பல்பலி
உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக்
கணங்கள்கூ டித்தொழு தேத்துகாட் டுப்பள்ளி
நிணங்கொள்சூ லப்படை நிமலர்தம் நீர்மையே.

பொழிப்புரை :

சிவபெருமான் இடுப்பிலே கச்சாக அணிந்திருப்பது படமெடுத்தாடும் நாகமாகும் . பல இடங்களில் பிச்சையேற்று வந்த உணவை உண்ணும் பாத்திரம் , உலர்ந்த பிரமகபாலமாகும் . வசிப்பது சுடுகாடாகும் . அத்தகைய பெருமானார் சிவகணத்தோர் தொழுது போற்றும்படி திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார் . கொழுப்பினைக் கொண்ட சூலப்படையை ஏந்திய நிமலராய் விளங்கும் இயல்புடையவர் .

குறிப்புரை :

அரைக்கு ஆர்ப்பது - இடுப்பிற் கட்டிக்கொள்வது ; நாகம் . பல இடங்களில் ஏற்றுவந்த பிச்சைச் சோற்றையுண்ணும் பாத்திரம் . உணங்கல் ஓடு - உலர்ந்த மண்டையோடு . தங்குவது சுடுகாட்டில் . இது திருக்காட்டுப்பள்ளி நிமலர்தம் நீர்மை யாகும் . எனினும் , அன்னன் என்று அகலற்க . ` பாரிடம் சூழ் வரத்தான் பலிகொண்டும் தன்பாதமலர் சேர் அடியார்க்குப் பெருவாழ்வு அளிப்பன் ` ( திருக்கருவைக் கலித்துறையந்தாதி ) ` கோயில் சுடுகாடு ..... ஆயிடினும் காயில் உலகனைத்தும் கற்பொடிகாண் `, ` எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும் தன் பெருமை தானறியாத் தன்மையன் ` என்பது கொண்டு தேறி அவனைச் சரண்புக்குப் பெரும்பயன் எய்துக என்பது பாட்டிடை வைத்த குறிப்பு .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வரையுலாம் சந்தொடு வந்திழி காவிரிக்
கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
திரையுலாம் கங்கையும் திங்களும் சூடியங்
கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

மலையில் செழித்த சந்தனமரங்களை நீரோட்டத்தால் உந்தித் தள்ளிக் கரையினில் சேர்க்கும் காவிரியின் மணல் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தின் இறைவர் அலைவீசும் கங்கையையும் , சந்திரனையும் சடைமுடியிலே சூடி , இடுப்பிலே கோவண ஆடையுடன் காட்சிதரும் கோலமுடையவர் .

குறிப்புரை :

வரை உலாம் - மலையிற் செழித்த . சந்து - சந்தன மரங்கள் . உலாம் - உலாவும் : இங்குச் செழித்த என்னும் பொருட்டு . அரையின் கண் கோவணம் அசைக்கும் அடிகள் வேடங்கள் இருந்தவாறு .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

வேதனார் வெண்மழு வேந்தினார் அங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே.

பொழிப்புரை :

வேதத்தை அருளிச்செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர் சிவபெருமான் . வெண்ணிற மழுப்படையை ஏந்தியவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . ஒளி பொருந்திய குழையணிந்த காதை உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான அப்பெருமானின் திருவடிகளைத் தினந்தோறும் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

ஏத்தும் - துதியுங்கள் . உம் ஏவற் பன்மை விகுதி .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
தையலோர் பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார் அடிதொழ அல்லல்ஒன் றில்லையே.

பொழிப்புரை :

மை போன்ற கரிய கண்டத்தையுடைய சிவ பெருமான் மானையும் , மழுவையும் ஏந்திய கையினர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடிய தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றத் துன்பம் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

மையின் ஆர் மிடறனார் - கருமை நிறைந்த கழுத்தையுடையவர் . கடி - வாசனை .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார்
மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்
கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை அழித்தவர் . சிறப்புடைய கயிலை மலையினால் இராவணனின் வலிமையை அடக்கியவர் . மான்கள் உலவும் முல்லைநிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன் தலைதாழ்த்தி வணங்க நல்தவப்பேறு உண்டாகும் .

குறிப்புரை :

இப்பாடலுள் , தன் என்பன நான்கும் அசைகள் . சீரின் ஆர்மலை . சிறப்பின் மிகுந்த மலை ; கயிலை . உலகமெல்லாம் அழியும் ஒவ்வோர் பிரளயத்திலும் தான் அழியாமை மட்டுமன்றி வளரும் தன்மை உடையது . கலைதன் ஆர்புறவு - மானினத்தின் நிலமாகப் பொருந்திய முல்லை நிலம் . அந்நிலக் கருப்பொருள்களில் ஒன்று மான் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
தங்கையால் தொழுதெழத் தழலுரு ஆயினான்
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழும்அவர்க் கல்லல்ஒன் றில்லையே.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற அழல் உருவமாய் விளங்கியவர் சிவபெருமான் . கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானை அழகிய கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

கைபெற்ற பயன் கடவுளைத் தொழுவது , ஆதலால் கையால் தொழுது எனல் வேண்டா கூறலன்று ` கரம் தரும் பயன் இது என உணர்ந்து ` என்பது பெரியபுராணம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

போதியார் பிண்டியார் என்றவப் பொய்யர்கள்
வாதினால் உரையவை மெய்யல வைகலும்
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே.

பொழிப்புரை :

அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழிவந்த புத்தர்களும் , அசோகமர நிழலில் அமரும் அருகக் கடவுளை வணங்கும் சமணர்களும் , தங்கள் வாதத்தால் உரைப்பவை மெய்ம்மை யானவை அல்ல . மேகம் தவழும் , நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை நாள்தோறும் சீலத்தால் தொழுது போற்ற இன்பம் வந்தடையும் .

குறிப்புரை :

போதி - அரசமரம் . கௌதம புத்தர் அம்மரத்தினடியில் இருந்து ஞானம் அடைந்தமைபற்றி அதனைப் போற்றுவர் புத்தர் . பிண்டி - அசோகு . அருகக்கடவுள் அம்மர நிழலில் உளன் என்பர் சமணர் . வாதினால் உரை அவை - வாதினால் உரைக்கும் அச் சொற்கள் . ஏர் - அழகு ; சிவவேடம் . இப்பாடல் குறிலெதுகை .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
அருமறை யவைவல்ல வணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே.

பொழிப்புரை :

நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட சீகாழியில் அவதரித்த , அருமறைகளில் வல்ல , சிவஞானத் தையே ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன் , நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை வணங்கிப் போற்றிய இத்திருப் பதிகத்தை ஓத , பாவம் நீங்கும் .

குறிப்புரை :

புறவம் - சீகாழி . கருமணி - நீலமணி போன்ற . மிடற்றினன் - கண்டத்தை யுடையவன் . பரவிய - துதித்த . பறையும் - நீங்கும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

இடுப்பில் படத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி , கோவணமும் புலித்தோலும் அணிந்து , பூதகணங்கள் சூழ்ந்து , முழங்கச் சுடுகாட்டில் நிலைபெற்ற நடனம் ஆடி , திருவெண்ணீறு அணிந்த பித்தரான சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும் .

குறிப்புரை :

பைத்த - படத்தையுடைய , பாம்பு . பைத்த குறிப்புப் பெயரெச்சம் . பாம்பு கோவணத்தோடு - என உருபு பிரித்துக் கூட்டுக . முழக்கம் முதுகாடு - முழக்கத்தையுடைய முதுகாடு . நடம் ஆடி வெண்ணீற்றை அணிந்த பித்தர் கோயில் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும்
பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்
பெயரர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

கயல்மீன் போன்றும் , சேல் மீன் போன்றும் அழகிய கருநிறக் கண்களையுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு அழகிய தோற்றத்துடன் பலியேற்று உழலும் தன்மை யுடையவர் சிவபெருமான் . அவருடைய தன்மைகள் வானவர்களும் , அடியவர்களும் எண்ணுதற்கு அரிய . பல திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும் அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

கயல் போன்ற கண்ணியரும் , சேல் போன்ற கண்ணியருமாகிய பல பெண்கள் ( தாருகா வனத்து முனிபன்னியர் ) பயலை - பசலை . பான்மையார் - தன்மையுடையவர் . இயலை - தம் தன்மைகளை ; நினைந்தோர்களுக்கு எண்ணுதற்கரிய பல பெயரை யுடையராயிருப்பார் . அவர் எழுந்தருளியிருக்குங் கோயில் , அரதைப் பெரும்பாழி .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின்
மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை
ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
பீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று இறைவர் அருள்புரிபவர் . கொல்லும் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . அருவருக்கத்தக்க சுடுகாட்டில் நடனம் புரிபவர் . அழகிய பெருமையுடைய அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

கோடல் - பிச்சை கொள்ளுதல் . மூடல் - போர்வை ; தொழிலாகுபெயர் . முளிகான் - சுடுகாடு . பீடர் - பெருமை யுடையவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
விண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்
பண்ணர்பா டல்உடை யாரொரு பாகமும்
பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்ற ஐம்பூதங்களாக விளங்குபவர் இறைவர் . வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுபவர் . மெய்ப்பொருளாகியவர் . பண்ணோடு கூடிய பாடலில் விளங்குபவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர் . அப்பெருமானார் கோயில் கொண்டருளுவது திருஅரதைப்பெரும்பாழியே .

குறிப்புரை :

பஞ்சபூத சொரூபியாய் இருப்பார் என்பது முற்பகுதியின் பொருள் . வேதம் மெய்ப்பொருள் விரித்து ஓதுவார் - வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுவார் , என்றது வேதத்துக்குப் பொருளருளிச் செய்த ( திருவிளையாடற் புராண ) வரலாறு . பண் - இசை .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்
நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல்
பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்தவர் , மானும் , வெண்மழுவும் , சூலமும் ஏந்திய கையர் . கார் காலத்தில் மலரும் தேன் துளிக்கும் நறுமணமுடைய கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளவர் . சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவர் . அப் பெருமான் கோயில் கொண்டருளுவது திரு அரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

வாயின்மொழி மறையர் என்க . மான் , மழு , சூலம் உடைய கையர் . ஓடு ; பிரிந்து , பொருள் தோறும் சென்று பொருளுணர்த்திற்று . கார் ஆர்தரும் கொன்றை - கார்காலத்தில் நிறையப் பூக்கும் கொன்றை . நறை - வாசனை ; தேன் . சென்னிமேல் தரும் பிறையர் என்க . தரும் - வைத்த .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

புற்றர வம்புலித் தோலரைக் கோவணம்
தற்றிர வின்னட மாடுவர் தாழ்தரு
சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்
பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

புற்றில் வாழும் பாம்பையும் , புலித்தோலையும் , கோவணத்தையும் இடையில் அணிந்து , இரவில் நடனமாடும் சிவபெருமான் , பூதகணங்கள் சூழ்ந்து நின்று வணங்க இடபக் கொடியுடையவர் . அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

தற்று - இடையில் உடுத்து , ` மடிதற்றுத்தான் முந்துறும் ` என்பது திருக்குறள் 1023. இரவில் நடம் ஆடுவர் . தாழ்தரு - வணங்குகின்ற . துற்று அமர் ( வன ) பாரிடம் - சுற்றியுள்ளவை பூதப்படை . அமர் ; பகுதியே நின்று வினைமுற்றுப் பொருளுணர்த்திற்று . ` பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் ` என்ற திருக்குறளிற் (813) போல . கொடியின் மிசைப் பெற்றத்தை உடையவர் . பெற்று - பெற்றம் , விடை .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி
இணையிலேற் றையுகந் தேறுவ ரும்எரி
கணையினான் முப்புரம் செற்றவர் கையினில்
பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

அழகிய சுரிந்த சங்கினாலாகிய குழைகளைக் காதில் அணிந்தும் , திருவெண்ணீற்றைப் பூசியும் விளங்குபவர் இறைவர் , ஒப்பற்ற இடபத்தை விரும்பி வாகனமாக ஏறுபவரும் , அக்கினிக் கணையைச் செலுத்தி முப்புரங்களை அழித்தவரும் , கையினில் இள மான்கன்றை ஏந்தியவருமான அச்சிவபெருமான் கோயில் கொண்டு அருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும் .

குறிப்புரை :

அம் - அழகிய . சுரிசங்கு - சுரிந்த சங்குக் குழையை . துணை - ஒன்றோடொன்று ஒக்க . இறுத்து - தங்கவிட்டு ( காதில் அணிந்து ). அமர் - விரும்பத்தக்க . வெண்பொடி - வெள்ளிய திருநீற்றை . உகந்து - விரும்பி . இணை இல் - நிகர் அற்ற . ஏற்றை - இடபத்தை . ஏறுவரும் - ஏறுபவரும் . எரிகணையினால் - அக்கினியாகிய அம்பினால் ; முப்புரம் அழித்தவரும் . கையினில் மானை யுடையவருமாகிய சிவபெருமான் கோயில் அரதைப் பெரும்பாழியே . சுரி - சங்குக்கு அடைமொழி , சங்கம் - கருவியாகுபெயர் . இறுத்தல் - தங்குதல் . துணையிறுத்த ` துணையற இறுத்துத் தூங்க நாற்றி ` என்னும் திருமுருகாற்றுப்படையால் அறிக . இறுத்தல் என்பதில் பிறவினை விகுதி குன்றி நின்றது . அமர்தல் - விரும்பல் ; ` அமர்தல் மேவல் ` ( தொல் , சொல் ). உகந்து என்பதை வெண் பொடியோடும் கூட்டுக . ஏறுவர் - வினையால் அணையும் பெயர் . பிணை - மானின் பொதுப்பெயர் . ` ஆரிணம் நவ்வி குரங்கம் சாரங்கம் மறியுழை ஆனம் பிணை மானின் பெயர் ` என்பது பிங்கலந்தை . 2498. ஏறு ( ப ) வரும் என்ற உம்மையை , செற்றவர் , பிணையர் என்பவற்றோடும் கூட்டுக .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

சரிவிலா வல்லரக் கன்றடந் தோடலை
நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்
அரிவைபா கம்அமர்ந் தாரடி யாரொடும்
பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

தளர்ச்சியே இல்லாத வல்லசுரனான இராவணனின் வலிமையான பெரிய தோள்களும் , தலைகளும் நெரியுமாறு அடர்த்த சிவபெருமான் , அடர்த்தியான மென்மை வாய்ந்த கூந்தலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , அடியவர்களோடு பிரிவில்லாது வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

சரிவு இலா - தளர்தல் இல்லாத . தோடலை - தோள் + தலை . நெரிவில்லார் அடர்த்தார் - நெரித்தலால் முற்ற அடர்த்தவர் . நெறி குழலுக்குவரும் அடை . ` வணர்வார் குழல் ` எனவருவதும் அது .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்
எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்
கரியமா லோடயன் காண்பரி தாகிய
பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

வரிகளையுடைய பாம்பு , எலும்பு ஆகியவற்றை ஆபரணமாக அணிந்த மார்பினர் இறைவர் . கங்கையைத் தாங்கிய நெருப்புப் போன்ற சிவந்த சடையில் பிறைச்சந்திரனைச் சூடியவர் . கருநிறத் திருமாலும் , பிரமனும் காண்பதற்கரிய ஓங்கிய பெருமை யுடைய சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

வரி அரா - கோடுகளை உடைய பாம்பு . மல்கும் - நிறைந்துள்ள . எரியராவுஞ்சடை - நெருப்புப்போன்ற நிறமுடைய செஞ்சடை .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்
ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்
சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

சமணர்களும் , புத்தர்களும் நாள்தோறும் பெருமையற்ற சொற்களை மொழிகின்றனர் . அவற்றை ஏலாது அழகுடையவராய் , ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

ஏண் இலாத மொழி - பெருமையற்ற சொற்கள் . சேண் - ஆகாயம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்
பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத் தோரால் போற்றி வணங்கப்படும் திருஅரதைப் பெரும்பாழியைப் போற்றி , புகழுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

நீரின்ஆர் - நீரினால் நிறைந்த . ஏரின் ஆர் - அழகால் நிறைந்த . தமிழ்வ ( ல் ) லார்க்கு இல்லையாம் பாவமே .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரு மகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலா லெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை யழகனை யடியிணை பணிமினே.

பொழிப்புரை :

கடலலைகள் அடித்துவரும் பவளங்களும் , சிறப்புடைய வைரமும் , கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும் , கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில் , மேருமலையாகிய வில்லால் , அக்கினிக் கணையாகிய அம்பை எய்து முப்புரங்களை எரியும்படி செய்த , இடையில் பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

திரைதரு - கடல் அலைகள் அடித்துவந்த , பவளம் . கரைதரு - கரையில் ஒதுக்கப்பட்ட . ( அகில் ) வளை - சங்கு . பின் இரண்டடிக்கு , எயில் எய்த அழகன் , மயேந்திரப்பள்ளியுள் அழகன் , அரவு : அரை அழகன் , எனப்பொருள் கொள்க . அரை - இடுப்பு . ஆகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் றிருந்தடி பணிமினே.

பொழிப்புரை :

மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும் , அழகிய மாளிகைகளும் , நீர்முள்ளியும் , தாழையும் , தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் , வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக நடைபயிலும் இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின் , உயிர்களை நன்னெறியில் செலுத்தும் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

கண்டல் - நீர்முள்ளி . உலாம் - உலாவும் . செண்டு - வட்டமாக நடை பயிலுதல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.

பொழிப்புரை :

கோங்கு , வேங்கை , செழுமையான மலர்களையுடைய புன்னை , தேன் துளிகளையுடைய கொன்றை , சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும் , மாமரங்களும் , கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

சோலைகளில் கோங்கு குரவம் முதலிய மரங்களும் ; வயல் - வயல்களில் . கரும்பும் பொருந்திய , மயேந்திரப்பள்ளி என்பது முன்னடிகளின் பொருளாதலின் அதற்கேற்பச் சோலையில் என்று ஒரு சொல் வருவித்து , வயல் மாவும் கரும்பும் எனமாற்றி ஏழனுருபு விரிக்க . மா + கரும்பு = மாங்கரும்பு என்ற உம்மைத்தொகையிலும் மெலிமிக்கது , எதுகை நோக்கி . மயேந்திரப்பள்ளியுள் ஆங்கு என்பதை ` எம்மூர் ஆங்கண் ` என்பதுபோற் கொள்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
சங்கமா ரொலியகில் தருபுகை கமழ்தரு
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கணா யகன்றன திணையடி பணிமினே.

பொழிப்புரை :

வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும் , அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப் பள்ளியுள் , உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

உயர்சேண் ஆர் வங்கம் - மிக்க நெடுந்தூரம் ( வாணிகத்தின் பொருட்டுச் ) சென்ற கப்பல் . வருகுறியால் மிகுசங்கம் ஆர் ஒலி தரு - திரும்பி வரும் குறிப்பை ஊரார்க்கு உணர்த்த ஊதுவதால் பல சங்குகள் ஆரவாரிக்கும் ; ஒலியையுடைய மயேந்திரப்பள்ளி . சேண் - நெடுந்தூரம் , ` சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி ` என்னும் திருமுருகாற்றுப்படையாலும் அறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.

பொழிப்புரை :

இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி வருதல் போல , பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கத் திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் இறைவனும் , மை போன்று கருநிறம் கொண்ட கழுத்தையுடையவனும் , கையில் மழு என்னும் ஆயுதத்தை ஏந்தியவனுமான சிவபெருமானைத் தரிசித்து அவன் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

நித்திலத்தொகை - முத்துக்குவியல் பல . நிரைதரு - வரிசையாகப் பொருந்திய . மலர் என - மலர்களைப்போல . சித்திரம் - விதம் விதமான . புணரி - அலைகளில் . சேர்த்திட - சேர்க்க . கடலானது , இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி வருதல் போல முத்துக்குவியலை அலையினால் அடித்து வருகிறது என்பது முன்னிரண்டடிகளின் கருத்து . கைத்தலம் மழுவன் - கையினிடத்து மழுவை ஏந்தியவன் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

சந்திரன் கதிரவன் றகுபுக ழயனொடும்
இந்திரன் வழிபட விருந்தவெம் மிறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமி லழகனை யடிபணிந் துய்ம்மினே.

பொழிப்புரை :

சந்திரன் , சூரியன் , மிகுபுகழ்ப் பிரமன் , இந்திரன் முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய் , வேதமந்திரங்கள் சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக .

குறிப்புரை :

அந்தம் இல் அழகன் - பேரழகன் ; மேல் , ` அந்தமில் அணி மலை மங்கை ` எனக்கூறியதற்கேற்ப ( தி .3 ப .27. பா .5.) இங்கு அந்தமில் அழகன் என்றதூஉம் காண்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடநவில் புரிவின னறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவ னடிபணிந் துய்ம்மினே.

பொழிப்புரை :

சடைமுடியுடைய முனிவர்கள் பூசைத்திரவியங்களைச் சேகரித்து வழிபட , திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளுபவனும் , திருநடனம் செய்பவனும் , தேன் துளிக்கும் வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில் சந்திரனைச் சூடியவனும் , வலிமையுடைய எருதினை வாகனமாக உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக !

குறிப்புரை :

சமைவு ஓடும் - சேகரித்த பூசைத்திரவியங்களோடும் ( வழிபட ). சமைவு - சேகரித்தல் , அமைத்தல் . இங்கு ஆகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை யடிபணிந் துய்ம்மினே.

பொழிப்புரை :

பத்துத் தலைகளையுடைய , போர் செய்யும் வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும் கெடுமாறு , கனத்த கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய் , வெண்கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் பாம்பணிந்த சடைமுடியுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடையுங்கள் .

குறிப்புரை :

சிரம் , ஒருபதும் - ஒருபத்தும் , செருவலி - போர் செய்யும் வலிமையையுடைய . மரவு - வெண்கடம்பு .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.

பொழிப்புரை :

ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயில்பவனான திருமாலும் , அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேட முற்பட்டு , பன்றி உருவெடுத்த திருமால் சிவனின் திருவடிகளை நெருங்கவும் இயலாதவரானார் . ( அன்ன உருவெடுத்த பிரமன் திருமுடியை நெருங்க இயலாதவரானார் என்பதும் குறிப்பு .) ஆகாயமளாவிய பூஞ்சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோகமூர்த்தியாய் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உணர்ந்து தியானித்து நன்மை அடைவீர்களாக !

குறிப்புரை :

நாகணை , நாக + அணை - ஆதிசேடனாகிய படுக்கை . அதில் துயில்பவனும் , மலரவனும் , இருவருமாகத் தேடத் தொடங்கி , மாகணைந்து - ( மாகம் அணைந்து ) - ஆகாயத்தை அளாவி . மாகம் - மாகு எனக் கடைக்குறைந்து நின்றது . யோகு அணைந்தவன் - யோகம் செய்பவன் . யோகியாயிருந்து ` முத்தியுதவுதலதுவும் ஓரார் ` என்பதுங் காண்க . ( சிவஞானசித்தியார் சுபக்கம் சூ - ம் . 1-50)

பண் :கொல்லி

பாடல் எண் : 10

உடைதுறந் தவர்களு முடைதுவ ருடையரும்
படுபழி யுடையவர் பகர்வன விடுமினீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை யீசனை யிணையடி பணிமினே.

பொழிப்புரை :

ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும் , மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக . மடையின் மூலம் நீர் பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய மயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

உடை துறந்தவர் - சமணர் . உடை துவர் உடையவர் - மருதந்துவரினால் தோய்த்த காவி உடையை யுடைய புத்தர் . துவர் - இங்கு மருதந்துவர் மஞ்சட்காவியை யுணர்த்திற்று . மயேந்திரப் பள்ளியுள் ; இடம் உடை - தனக்கு இடமாக உறைதலையுடைய . முடை - தீ நாற்றம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென நாவினா னவில்பவர்
உம்பரா ரெதிர்கொள வுயர்பதி யணைவரே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப்பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ` இது நம்முடைய கடமை ` என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை அடைவார்கள் .

குறிப்புரை :

நம்பரம் - நமது கடமை . பரம் - பாரம் . வம்பு - மணம் . உம்பர் + ஆர் = தேவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

வன்னியு மத்தமு மதிபொதி சடையினன்
பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட வடியவர்
இன்னிசை பாடல ரேடகத் தொருவனே. 

பொழிப்புரை :

வன்னியும், ஊமத்த மலரும், சந்திரனும் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானின் பொன்போன்ற திருவடிகளைப் புதுமலர்களைக் கொண்டு பெருமையுடைய அந்தணர்கள் போற்றி வழிபடவும், அடியவர்கள் இன்னிசையுடன் பாடிப் போற்றவும் ஒப்பற்ற இறைவனான சிவபெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.

குறிப்புரை :

மத்தம் - பொன்னூமத்தை. மதிபொதி - மதியை மறைக்கும். பொன் இயல் - பொன்போன்ற. திருவடி - (பொன்னார்) திருவடி.
அடியவர் இன் இசைப்பாடல் அர் - அடியவர்களின் இனிய இசைப் பாடல்களையுடைய (ஏடகத்து ஒருவன்).

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
வடிவுற வமைதர மருவிய வேடகத்
தடிகளை யடிபணிந் தரற்றுமி னன்பினால்
இடிபடும் வினைகள்போ யில்லைய தாகுமே. 

பொழிப்புரை :

கொடிகளையுடைய நீண்டு உயர்ந்த மாளிகையின் கோபுரம் குளிர்ந்த சந்திரனைத் தழுவுதலால் மதிபோல் ஒளிரும் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் திருவடிகளைக் கீழே விழுந்து வணங்கி இறைவனுடைய புகழைக்கூறி அன்பினால் வழிபடுங்கள். நம்மைத் துன்புறுத்தும் தீவினைகள் யாவும் அழிந்து விடும்.

குறிப்புரை :

மாளிகை மதிவடிவு உற, கோபுரம் மதி அமைதர மருவிய ஏடகமென நிரல்நிறையாகக்கொண்டு, மாளிகைகள் நிறத்தினால் மதியின் வடிவை நிகர்க்கவும், கோபுரம் உயர்வால் மதியை அளாவவும் பொருந்திய திருவேடகம் எனப் பொருள்கூறுக. இடிபடும் - இடியை ஒத்த, (வினைகள்).

பண் :கொல்லி

பாடல் எண் : 3

குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனூ ரேடகம்
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே. 

பொழிப்புரை :

காதில் இரு கந்தருவர்களைக் குண்டலமாகக் கொண்டு விளங்கும் அழகராய், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரையும், வானில் விளங்கும் சந்திரனையும் சடைமுடியில் அணிந்து, மணியோசை ஒலிக்க வீரநடை போடும் இடபவாகனத்தின் மீது வீற்றிருந்தருளும் மேன்மையுடையவரான சிவபெருமானின் ஊர் திரு வேடகமாகும். அத்திருத்தலத்தைத் தரிசித்துக் கைகூப்பி வணங்கிப் போற்ற, மனக்கவலையால் வரும் நோய் நீங்கும்.

குறிப்புரை :

செண்டு - வட்டமாகச் சுற்றிவரும் சாரிநடை. அலம்பும் விடை - அணிந்த மணியோசை முதலியவற்றால் ஒலிக்கும் விடை. சேடன் - மேன்மையுடையவன். கவலை - நோய்; பலவழியால் வருந்துன்பம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 4

ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே. 

பொழிப்புரை :

மயிர்ச்சாந்து தடவிய மணமிகு கூந்தலையுடைய உமாதேவியோடு, அழகிய இடபவாகனத்தில் ஏறும் அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமான ஆல், மாதவி, சந்தனம், செண்பகம் முதலியன மிகுந்து விளங்கும் சிறப்புடைய திருவேடகம் சென்று அவனை வழிபட்டால் செல்வம் பெருகும்.

குறிப்புரை :

ஏலம் - மயிர்ச்சாந்து. எழில் பெறும் - அழகு உடைய. கோலம் - தோற்றம். சாலம் - ஆலமரம், சேர்தலாம் செல்வம் - சேர்தல் செல்வம் ஆம், என மாறிக்கூட்டுக.

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வரியணி நயனிநன் மலைமகண் மறுகிடக்
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவ னுறைவிட மேடகக் கோயிலே. 

பொழிப்புரை :

செவ்வரி படர்ந்த கண்களையுடைய, நல்ல மலை மகளான உமாதேவி கலங்க, யானையின் தோலை உரித்த, விடம் அணிகண்டரான, பெருமை மிகுந்தவரான சிவபெருமான், பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் விளங்கும் சோதி உருவினர். அவர் வீற்றிருந்தருளும் இடமாவது திருவேடகக் கோயிலாகும்.

குறிப்புரை :

செவ்வரி பரவிய கண்களையுடையவளாகிய, மலை மகள் கலங்கக் கரியினை உரிசெய்த மிடற்றினான் என்பது முதலிரண்டடியின் பொருள். கறை - விடக்கறை. எரியவன் - நெருப்பு உருவினன்.

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய வேடகத்
தையனை யடிபணிந் தரற்றுமின் னடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே. 

பொழிப்புரை :

குளங்களிலும், சோலைகளிலும் அன்றலர்ந்த புது மலர்களின் மணத்தைச் சுமந்து தென்றல் காற்று வீச, வைகை ஆற்றின் வடகரையிலுள்ள திருவேடகத்தில் வீற்றிருக்கும் தலைவனான சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து அவனைப் போற்றிப் பாடுங்கள். அது இம்மையில் துன்பம்தரும் கொடிய நோய்களைத் தீர்த்து, மறுமையில் முத்திப்பேற்றினை எளிதாகக் கிடைக்கச் செய்யும்.

குறிப்புரை :

குளங்களிலும், சோலைகளிலுமுள்ள புதுமலர்களில் தென்றல் தவழ்ந்து வருகின்ற வைகை, என்பது முதலடிகளின் கருத்து. அரற்றுமின் - கதறுங்கள். வெய்யவன் பிணி - கொடிய, கடிய பிணி; துன்புறுத்தலால் வெய்யபிணி எனவும் எளிதில் நீங்கப் பெறாமையால், வன்பிணி எனவும் கூறப்பட்டது.

பண் : கொல்லி

பாடல் எண் : 7

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :கொல்லி

பாடல் எண் : 8

தடவரை யெடுத்தவன் றருக்கிறத் தோளடர்
படவிர லூன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவர லெருக்கொடு வன்னியு மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே. 

பொழிப்புரை :

பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனின் செருக்கைக் கெடுத்துத் தோள்கள் நொருங்கும்படி காற்பெருவிரலை ஊன்றிப், பின்னர் தவறுணர்ந்து இராவணன் இசைத்து வழிபட அவனுக்குப் பரிவுடன் அருள்செய்த இறைவனாய், இளைய எருக்கு, வன்னி, ஊமத்தம் மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவ பெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் ஆவான்.

குறிப்புரை :

தருக்கு - கர்வம். இற - கெட. தோள் அடர்ப்பட - தோள்கள் அடர்க்கப்பட. பரிந்து - இரங்கி. மடவரல் - இளமை பொருந்திய.

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
அன்னமா மயனுமா லடிமுடி தேடியும்
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே. 

பொழிப்புரை :

பொன்னும், மணிவகைகளும், சந்தனம், அகில் ஆகிய மரங்களும் வீசுகின்ற அலைகள் வாயிலாகக் கொண்டுவந்து சேர்க்கப்படும் வைகையின் கரையில், அன்னப் பறவையாகப் பிரமன் திருமுடியையும், பன்றி வடிவாகத் திருமால் திருவடியையும் தேடியும் இன்னவெனக் காணொணாது விளங்கிய சிவபெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற இறைவன் ஆவான்.

குறிப்புரை :

பொருதிரை - கரையை மோதும் அலைகளாற் கொணர்ந்த பொன்னும், மணிகளும், சந்தனம் அகில் மரங்களும் கொண்ட வைகை.

பண் :கொல்லி

பாடல் எண் : 10

குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை யேடகத் தெந்தையே. 

பொழிப்புரை :

கையில் குண்டிகையேந்திய சமணர்களும், இறை உண்மையை உணராத புத்தர்களும், உண்டு வயிற்றைப் பெருக்கச் செய்யும் பாவிகள். அவர்கள் இறைவனை வணங்காதவர்கள். அவர்களின் உரைகளைப் பொருளாகக் கொள்ளவேண்டா. வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை மலரையும், வன்னியையும் மாலையாக அணிந்த சடைமுடியுடைய, திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானை ஏத்தி வழிபடுங்கள்.

குறிப்புரை :

பண்டி - வயிறு. பளகு - பாவம். \\\\\\\"பளகு அறுத்து உடை யான் கழல் பணிந்திலை\\\\\\\" (தி.8 திருச்சதகம் - 35) இண்டை - தலைக்கு அணியும் மாலை.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 

பொழிப்புரை :

யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டுவரும் வைகைநீரில் எதிர் நீந்திச் சென்ற திருவேடு தங்கிய திருவேடகம் என்னும் திருத்தலத் திலுள்ள ஒப்பற்ற இறைவனை நாடிப் போற்றிய, அழகிய புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை. அவர்கள் தீவினை களிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.

குறிப்புரை :

கோடு - யானைத்தந்தம். ஏடுசென்று அணைதரும் ஏடகம். இப்பாடல் அகச்சான்று குறிக்கும் பாடல்களில் ஒன்று. (தி.12 திருஞா. புரா. 850.)

பண் :கொல்லி

பாடல் எண் : 1

நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீ வன்அநு மான்றொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே. 

பொழிப்புரை :

பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும், இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிற நஞ்சை உண்டு காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல்கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.

குறிப்புரை :

நீரிடைத்துயின்றவன் - இராமன். பாற்கடலில் துயிலும் திருமாலிடம் வானவர், அரக்கர் தந்த துயரை முறையிட, இராமனாகப் பிறந்தமை குறித்து `இராமனை நீரிடைத் துயின்றவன்` என்றார். நீர்; கடலை ஆகு பெயராற் குறிக்கப் பொதுப்பெயர் சிறப்புப் பெயராய்ப் பாற்கடலைக் குறித்தது. அனுமன் தொழச் சேடர்வாழ் திருவுசாத்தானம் என்க. சேடர், வாழ் - வாழ்த்தல்; வாழ்த்துவது என்னும் பொருளாதலின் வாழ் முதனிலைத் தொழிற்பெயர்.

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்
பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்
முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்
தில்லையா னுறைவிடந் திருவுசாத் தானமே. 

பொழிப்புரை :

முல்லைநிலம் சார்ந்த எருதை (திருமாலை) இறைவன் வாகனமாக உடையவன். கோவண ஆடை உடையவன். முன்பல்லிருந்த உலர்ந்த பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்கும் பரமன். முல்லைக்கொடிகளையுடைய முல்லை நிலத்தில், தேன் துளிக்கும் சோலைகளையுடைய அழகிய பழம்பதியான தில்லையில் விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.

குறிப்புரை :

கொல்லை - முல்லைநிலம். பல்லை ஆர்தலை - பல்லை முன் உடையதாயிருந்த தலை. படுதலை - உலர்ந்த மண்டையோடு. `பல்லில் வெள்ளைத் தலையன்` (தி.7. ப.81. பா.10.) என வருதலால் இங்ஙனம் பொருள் கூறப்பட்டது. முல்லை ஆர்புறவு - முல்லைக் கொடிகளை உடைய முல்லை நிலம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 3

தாமலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தங்கனா வாக்கினா னொருநொடிக்
காமனா ருடல்கெடக் காய்ந்தவெங் கண்ணுதல்
சேமமா வுறைவிடந் திருவுசாத் தானமே.

பொழிப்புரை :

தான் அயலார் போலத் தன் மாமனான தக்கன் செய்த வேள்வியை ஊமன் கண்ட கனவு போலப் பயனற்றதாக்கினான். ஒரு நொடியில் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகு மாறு செய்த நெற்றிக் கண்ணுடைய கடவுளாவான். அப்பெருமான் அடியவர்கட்கு நன்மை தரும் பொருட்டு வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.

குறிப்புரை :

பகையும் நட்புமில்லாத பரஞ்சுடர். பகைவன் போலாகித் தக்கனார் வேள்வியை ஊமன் கனவுபோல ஒன்று மில்லாமற் செய்தவன். ஊமனார் இகழ்ச்சிக்குறிப்பு; தாம் ஆக்கினான். ஒருமை பன்மை மயக்கம். சேமம் ஆ(க) - உலகினருக்கு நன்மை உண்டாதற் பொருட்டு.

பண் :கொல்லி

பாடல் எண் : 4

மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான்
குறிதரு கோலநற் குணத்தினா ரடிதொழ
நெறிதரு வேதியர் நித்தலு நியமஞ்செய்
செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே. 

பொழிப்புரை :

இள மான்கன்றைத் திருக்கரத்தில் ஏந்தி, பெருமையுடைய இடப வாகனத்திலேறி, சிவவேடப் பொலிவுடைய நற்பண்புடைய அடியவர்கள் தன் திருவடியைத் தொழுது போற்றவும், சிவாகமநெறியில் ஒழுகும் அந்தணர்கள் நாள்தோறும் நியமத்துடன் பூசை செய்யவும் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருவுசாத்தானம் ஆகும்.

குறிப்புரை :

மறி - மான் கன்று. சிவனடியாரெனக் குறிக்கும் கோலமும் சீலமும் உடைய அடியார் தொழ என்பது இரண்டாம் அடியின் பொருள். நெறிதரு - நெறியில் ஒழுகுகின்ற. நித்தம் - நித்தல் என்றாயது கடைப்போலி. செறிதரு - அடர்த்தியான பொழில்.

பண் : கொல்லி

பாடல் எண் : 5

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் : கொல்லி

பாடல் எண் : 6

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள்
தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக்
கொண்டிரைக் கொடியொடுங் குருகினி னல்லினம்
தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே. 

பொழிப்புரை :

பண்டைக்காலம் முதல் மகிழ்ச்சியால் ஆரவாரித்துப் பிரமனும், திருமாலும், மற்றுமுள்ள பல பக்தர்களும் அடிமைத் திறத்தினால் மலர்களைத் தூவித் தோத்திரம் சொல்லி வழி பட, இறைவன் வீற்றிருந்தருளுவது, மீன் முதலிய இரைகளைக் கவரும் காக்கையோடு, நல்ல பறவை இனங்கள் தங்குகின்ற, நீர்வளமிக்க வயல்கள் சூழ்ந்த திருவுசாத்தானம் ஆகும்.

குறிப்புரை :

பண்டு - தொன்றுதொட்டு. இரைத்து - மகிழ்ச்சியால் ஆரவாரித்து. தொண்டு - அடிமைத்திறத்தினால். \\\"மந்திரத்தைப் பிறர் காதிற் படாதவாறு உச்சரிக்க; தோத்திரம் பிறரும் கேட்குமாறு ஓசை யோடும் பாடுக\\\" என்பது ஆகம வசனக் கருத்து என்ப. கொண்ட இரை - மீன் முதலிய இரைகளைக் கவர்ந்த. கொடியொடும் - காக்கை யோடும். குருகினில் நல் இனம் - பறவைகளில் நல்ல சாதிக் கூட்டங்கள்.
தெண்திரை கழனி சூழ் - தெளிவாகிய அலைகளையுடைய கழனி சூழ்ந்த (திருவுசாத்தானம்) கொண்ட + இரை = பெயரெச்ச விகுதி தொகுத்தல் விகாரம். அது \\\\\\\"அறு கானிறை மலரைம் பானிறை யணிந்தேனணங்கே\\\\\\\" என்ற திருக்கோவையாரிற் போல.

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மடவரல் பங்கினன் மலைதனை மதியாது
சடசட வெடுத்தவன் தலைபத்து நெரிதர
அடர்தர வூன்றியங் கேயவற் கருள்செய்தான்
திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே. 

பொழிப்புரை :

உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் இறைவன், கயிலைமலையை மதியாது பெயர்த் தெடுத்த இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படி தன் காற் பெருவிரலை ஊன்றி அம்மலையின்கீழ் அவனை அடர்த்து, பின்னர் இராவணன் தன் தவறுணர்ந்து வழிபட அவனுக்கு அருள் செய்தவன். அப்பெருமான் உறுதியாக வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.

குறிப்புரை :

மடவரல் - (என்றும்) இளமைத் தன்மையையுடைய அம்பிகை. திடம் என - ஏனைத் தலங்களிலும் இஃது உறுதியை உடையதாக.

பண் :கொல்லி

பாடல் எண் : 9

ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்கும்
காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடம்
சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே. 

பொழிப்புரை :

இறைவர் ஆணுமல்லர். பெண்ணுமல்லர். பிரமனும், திருமாலும் காணொணாத வண்ணம் விளங்குபவர். தம்மை நினைந்து வழிபடும் அன்பர்களின் மனத்தில் நிறைந்துள்ளவர். தம்மை வழிபடும் அடியவர்களின் உடல்நோயை நீக்குவதோடு பிறவி நோயையும் தீர்ப்பவர்.அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் ஆகாயமளாவிய மாளிகைகள் உடைய திருவுசாத்தானம் ஆகும்.

குறிப்புரை :

பிணியொடும் பிறப்பு அறுப்பான் - மலமாயை கன்மங் களோடும் பிறப்பை அறுப்பவன். சேண் - ஆகாயம்.

பண் : கொல்லி

பாடல் எண் : 10

கானமார் வாழ்க்கையான் காரமண் டேரர்சொல்
ஊனமாக் கொண்டுநீ ருரைமினுய் யவெனில்
வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்
தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே. 

பொழிப்புரை :

சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை உணராது கூறும் சொற்கள் பயனற்றவை. நீங்கள் உய்ய வேண்டும் என்றால் சுடுகாட்டில் திருநடனம் செய்யும் இறைவன் வீற்றிருந் தருளுகின்ற, வானளாவிய உயர்ந்த மதில்களும், மாளிகைகளும், செழித்த சோலைகளும் சூழ்ந்த இனிய நிலவு தோயும் திருவுசாத்தானம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.

குறிப்புரை :

கானம் - சுடுகாடு. ஊனம் - தீங்கு விளைவிப்பது. தேன்: அமிர்த கிரணத்தை உடையன மாமதி.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன்
திரைதிரிந் தெறிகடற் றிருவுசாத் தானரை
உரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார்
நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே. 

பொழிப்புரை :

மலையிலிருந்து தன் தன்மை மாறுபட்டுப் பாயும் காவிரியின் நீர் வளமும், வயல் வளமும் மிகுந்த புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன், அலைவீசுகின்ற கடலையுடைய திருவுசாத்தானத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை உணர்ந்து போற்றிய இந்த ஒண் தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நரை, திரை என வந்து தாக்கும் மூப்பின் தளர்ச்சியின்றி, இளமை மிடுக்குடன் வாழ்ந்து சிவஞான நெறியில் நிற்பர்.

குறிப்புரை :

வரை - சையமலையினின்றும். திரிந்து - தான் அடுத்த நிலத்தின் இயல்பால் தன்மை மாறுபட்டு. இழிதரு - இறங்கி வருகின்ற. நீர் - காவிரி நீரினால். வளவயல் - வளம்படைத்த வயல்களை உடைய; புகலி. திரை - அலை. திரிந்து - ஒன்றோடொன்று மாறுபட்டு. எறி - வீசுகின்ற; கடல். உரைதெரிந்து - உரைக்கும் முறைதெரிந்து. (உரைத்து) உணரும் சம்பந்தன் தமிழ் வல்லார். நன்னெறி - ஞானநெறி. `சன்மார்க்கம்`.

பண் :கொல்லி

பாடல் எண் : 1

வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலா ராயிழை யாளொடு மமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

பல வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள் வழிபடச் சிவபெருமான் அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடமாவது , வானத்திலிருந்து மழை பொழிந்து வெள்ளருவியாகப் பாயச் செழித்த திண்மையான முல்லைநிலம் சூழ விளங்கும் அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

திண்ணில் ஆர் - பிருதிவியின் தன்மையாகிய திண்மையில் பொருந்திய . புறவு - முல்லை நிலத்தை . அணி - அணிந்த ; சூழ உடைய திருமுதுகுன்றம் . ` மண் கடினமாய்த் தரிக்கும் ` ( உண்மை விளக்கம் . பா .10.) என்பதால் திண்ணில் ஆர் புறவு எனப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு
பொறியுலா மரவசைத் தாடியோர் புண்ணியன்
மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடம்
செறியுளார் புறவணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

வாசனை பொருந்திய கொன்றை மாலையை அணிந்து , படமெடுக்கும் புள்ளிகளையுடைய பாம்பை இடையில் கட்டி ஆடுகின்ற புண்ணிய மூர்த்தியான சிவபெருமான் , இளமான் கன்றை ஏந்திய திருக்கரத்தை உடையவனாய் , உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற இடமானது சோலைகள் நிறைந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

பொறி உலாம் மா - புள்ளியுடை மான்தோலை . அசைத்து - உடுத்து . செறியுள் ( வளம் ) செறிதல் . செய்யுள் , விக்குள் என்புழிப்போல , செறியுள் - என்பதிலும் உள் தொழிற்பெயர் விகுதி . செறியுள் - மண்டிணிந்த வன்னிலம் . ஆர் - பொருந்திய புறவு .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

ஏறினார் விடைமிசை இமையவர் தொழவுமை
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடம்
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

இறைவன் , இடபவாகனத்தில் ஏறித் தேவர்கள் தொழுது போற்ற , உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு , கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை ஆடையாக அணிந்து , திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து , நிறைந்த கங்கையைச் சடைமுடியில் தாங்கி வீற்றிருந்தருளும் இடமாவது , தேன் துளிகளையுடைய மலர்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

உமைகூறனார் - மாதுபாதியார் . நீறனார் - திருநீறு அணிந்தவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

உரையினா ருறுபொரு ளாயினா னுமையொடும்
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினா ரொலியென வோங்குமுத் தாறுமெய்த்
திரையினா ரெறிபுனற் றிருமுது குன்றமே.

பொழிப்புரை :

இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக விளங்குபவன் . உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பக்தர்கள் உரைக்கும் அரநாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும் , பெருகுகிற மணிமுத்தாறுடைய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

( சொல் வடிவாயிருப்பதோடு ) சொல்லிற் பொருந்திய பொருளும் ஆயினவன் ` சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானை ` ( அப்பர் பெருமான் ) என்பதும் காண்க . சொல் வடிவு அம்பிகை , பொருள் வடிவு இறைவன் என்ற திருவிளையாடற்புராணத்தோடு மாறுபாடின்மை சிவம் சத்தி அபேதத்தாற் கொள்க . விரை - வாசனை .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறவோர்
இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடம்
செடியதார் புறவணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற , இடிபோன்ற குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில் , கூரிய முனையுடைய மழுப்படை ஏந்தி , உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது செடிகொடிகள் அடர்ந்த குறிஞ்சிப் புறவிடமான அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

பிளிற - ( யானை ) முழங்க , கடிய ஆயின குரல் களிற்றினை - கடுமை உடையன ஆன குரலையுடைய அவ் யானையை . ஓர் - ஒரு . ஆளி - சிங்கம் . இடிய - இடிபோன்ற . வெங்குரலினோடு - கொடிய குரலோசையோடு . சென்றிடும் - செல்லும் . நெறி - வழிகளையுடைய - ( திருமுதுகுன்றம் ) புறவணி முதுகுன்றம் என்க . வடிய . - கூரிய .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

கானமார் கரியினீ ருரிவையார் பெரியதோர்
வானமார் மதியினோ டரவர்தா மருவிடம்
ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடும்
தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

காட்டில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திய இறைவன் , அகன்ற வானத்தில் தவழும் சந்திரனையும் , பாம்பையும் அணிந்து , உயிர்களைப் பற்றியுள்ள குற்றமான ஆணவம் என்னும் நோயைத் தீர்த்து , அருளும் பொருட்டு உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடமாவது , தேன் துளிக்கும் பூஞ்சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

பெரியதோர் வானம் - பெரியதாகிய வானம் . ஓர் - அசை . அரவர் - அரவையணிந்தவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

மஞ்சர்தா மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
அஞ்சொலா ளுமையொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயிறருந் திருமுது குன்றமே.

பொழிப்புரை :

வலிமை மிகுந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள் மலர்தூவிப் போற்றி வணங்க , கொடுந்தொழில் செய்யும் வேடர்களும் , பிற ஆடவர்களும் விரும்பித் தொழ , அழகிய இன்சொல் பேசும் உமாதேவியோடு இறைவர் வீற்றிருந்தருளும் இடம் வேதங்களை நன்கு கற்றவர்களும் , பக்திப் பாடல்களைப் பாடுபவர்களும் வசிக்கின்ற திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

மஞ்சர் - சிவபெருமான் . மைந்து - வலிமை . வலிமை யுடையவர் மைந்தர் ; அது போலியாய் மஞ்சர் என ஆயிற்று . ` மஞ்சா போற்றி மணாளாபோற்றி ` ( தி .8 திருவா . பா .4 அடி . 183) செஞ்சொல் - நேரே பொருளுணர்த்தும் சொல் . ( குறிப்பிற் பொருளுணர்த்தல் முதலியன வியங்கியச் சொல் ) கலைச்செஞ்சொலார் ( விருத்தாசல புராணம் ).

பண் :கொல்லி

பாடல் எண் : 8

காரினா ரமர்தருங் கயிலைநன் மலையினை
ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.

பொழிப்புரை :

மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர்கட்கு அருள்புரியும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்மைதரும் கயிலை மலையினை , அழகிய முடியுடைய இராவணன் எடுத்தபோது , அவனை நலியச் செய்த இறைவன் , கச்சணிந்த முலையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் சிறப்பு மிக்க திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

கார் மேகம் - பருவம் அறிந்து பெய்யும் மேகம் போல . பக்குவ நோக்கி ஆன்மாக்களுக்கு அருள் செய்ய வரலால் . காரினார் - மேகம் போன்றவர் . இராவணன் இறச் செய்து - என ஒரு சொல் வருவிக்க , சொல்லெச்சம் . சீரினார் - மேலோர்கள் . திகழ்தரு - விளங்கி வாழ்கின்ற . ( திருமுதுகுன்றம் ).

பண் :கொல்லி

பாடல் எண் : 9

ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்
பாடினார் பலபுகழ்ப் பரமனா ரிணையடி
ஏடினார் மலர்மிசை யயனுமா லிருவரும்
தேடினா ரறிவொணார் திருமுது குன்றமே.

பொழிப்புரை :

இறைவர் சுடுகாட்டில் திருநடனம் ஆடியவர் . அரிய வேதங்களை அருளி , அவற்றின் உட்பொருளை விரித்தோதியவர் . எவ்வுயிர்கட்கும் தலைவரான அவர் தம் திருவடிகளை இதழ்களையுடையை தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் தேடியும் அறியப்படவொண்ணாதவர் . அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

கானகத்து ஆடினார் . பொருளைப் பாடினார் . புகழையுடைய பரமனார் . ஏடின் - இதழ்களால் . ஒணார் - ஒன்றக் கிடைக்காதவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் மிசைசெயத்
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.

பொழிப்புரை :

அழுக்கு உடம்பையும் , அழுக்கு உடையையுமுடைய சமணர்களும் , புத்தர்களும் கூறும் மொழிகள் மெய்ம்மையானவை அல்ல . வாசனை பொருந்திய சோலைகளில் வண்டினங்கள் இசைக்க , அழகும் , புகழும் மிகுந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து , அங்குள்ள இறைவனைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

மாசு - அழுக்கு . அச்சொல்லைத் தூசு என்ற சொல்லினும் கூட்டி அழுக்கு உடம்பையும் அழுக்கு உடையையும் உடைய என உரைக்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

திண்ணினார் புறவணி திருமுது குன்றரை
நண்ணினான் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
எண்ணினா னீரைந்து மாலையு மியலுமாப்
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

செழுமையான சோலைகளையுடைய திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டு , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையோடு பாடவல்லவர்களின் பாவம் நீங்கும் .

குறிப்புரை :

இயலுமாப் பண்ணினால் பாடுவார் ` கோழைமிடறாகக் கவி கோளுமில வாக இசை கூடும் வகையால் ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல் மகிழும் ஈசன் ` ( தி .3 ப .71. பா .1.) ஒப்பிடுக . பதிகக் குறிப்பு முதுகுன்றம் என்பதற்கேற்ப 1, 5, 7 இப்பாடல்களிற் குறிஞ்சி நில வருணனை கூறப்படுகிறது .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற , உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும் .

குறிப்புரை :

தன்னதாள் - தன்னுடைய திருவடிகள் . அகரம் - ஆறன் உருபு ` மன்னுமா காவிரி .`

பண் :கொல்லி

பாடல் எண் : 2

மகரமா டுங்கொடி மன்மத வேடனை
நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
பகரவா ணித்திலம் பன்மக ரத்தொடும்
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , வாள் போல் மின்னும் முத்துக்களும் , பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று உயர்ந்து விளங்கும் மாளிகைகளையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

மீன்அசையும் கொடியையுடைய மன்மதனாகிய வேளை . வேள் , எனலாகுமெனில் ஏனையவற்றினின்றும் பிரித்தற்கு மன்மத வேள்தனை என்றார் . மன்மதவேடனை - மன்மதவேள்தனை . மன்மதவேள் இருபெயரொட்டுப் பண்புத்தொகை .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கருவினா லன்றியே கருவெலா மாயவன்
உருவினா லன்றியே யுருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோ டாடலும்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

இறைவன் கருவயப்பட்டுப் பிறவாமலே எல்லாப் பொருள்கட்கும் கருப்பொருளாக விளங்குபவன் . தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவமில்லாத இறைவன் பிற பொருள்களெலாம் உருவு கொள்ளும்படி தோற்றுவித்து அருள்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பருவகாலங்களிலும் , திருவிழாக்காலங்களிலும் பாடலும் , ஆடலும் செல்வத்தால் மிகச் சிறப்புற நடக்கும் புகழையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . கருவினாலன்றி என்றது சிவபெருமான் கருவயப்பட்டுப் பிறவான் என்பதை உணர்த்தும் . ` பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை ` ( தி .6 ப .11 பா .1) என்ற திருநாவுக்கரசர் திருவாக்கை இங்கு நினைவுகூர்க . பிறப்பில்லாத அவனுக்கு இறப்புமில்லை . அவன் அநாதி நித்தப்பொருள் . ( அநாதி - தோற்றமும் , அழிவுமில்லாதது ) உருவினாலன்றி - தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாதவன் . தன்பொருட்டு உருவு கொள்ளாது அடியார் பொருட்டு உருவம் கொள்பவன் . ` நானாவித உருவால் நமை ஆள்வான் ` ( தி .1 ப .9 பா .5) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கையும் , ` இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே ` என்ற திருநாவுக்கரசர் திருவாக்கையும் ( தி .6 ப .97 பா .10) இங்கு நினைவுகூர்க .

குறிப்புரை :

பருவநாள்களிலும் , திருவிழாக்களிலும் பாடல் , ஆடல் முதலியவை செல்வத்தினால் மிகச்சிறப்புற நடக்கும் புகழையுடைய தென் குடித்திட்டை என்பது பின்னிரண்டடிக்கும் பொருள் . பருவ நாளொடும் விழாவொடும் , என ஒடு , உம் இரண்டையும் முன்னும் கூட்டுக . மூன்றன் உருபு ஏழன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம் . பருவம் - அமாவாசை , பௌர்ணமி என்பவை .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

உண்ணிலா வாவியா யோங்குதன் றன்மையை
விண்ணிலா ரறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர் . அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல் , தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

உள் - உயிருக்குள் . நிலாவு - விளங்கும் . ஆவியாய் - உயிராய் . ஓங்கும் தம் தன்மை . ` உயிர்க்குயிராம் ஒருவனையும் ` என வருதல் காண்க . ( சிவஞானசித்தியார் . சூ . 9. பா . 5) ஆர் - நிறைந்த . எண்ணில் - அளவற்ற . அழகையுடைய மணிகள் அழுத்திய பொன் மாளிகையின்மேல் தெளிவான நிலாவிரித்துப் பரவும் தென்குடித் திட்டை .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
அருந்தியா ரமுதவர்க் கருள்செய்தா னமருமூர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சின் வெப்பத்தால் துன்புற்ற தேவர்கள் தன்னைத் தஞ்சமென வந்தடைய அவர்களுக்கு இரங்கி நஞ்சைத் தான் அருந்தி அமுதத்தை அவர்கட்கு அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் , செருந்தி , மாதவி , செண்பகம் இவை மிகுதியாக வளரும் நீண்ட சோலைகளை உடைய தென்குடித்திட்டையாகும் .

குறிப்புரை :

வந்துஅடைய - வந்து சரண்புக . தான் நஞ்சு அருந்தி அரிய அமிர்தத்தை அவர்களுக்கு அருள்செய்தவன் என , அவன் பெருங்கருணைத்திறம் வியந்தவாறு . மாதவிக்கொடி பந்தல் போலப் படர்தலால் , மாதவிப்பந்தல் என்றே கூறப்படும் . மாதவிமரம் என்றலும் உண்டு . திருந்து நீள் என்றது பொழிலொடும் சேரும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

ஊறினா ரோசையுள் ஒன்றினா ரொன்றிமால்
கூறினா ரமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

இறைவர் எப்பொருள்களிலும் நிறைந்தவர் . எல்லா ஓசைகளிலும் ஒன்றியவர் . திருமாலை ஒரு கூறாகக் கொண்டவர் . குமரக்கடவுளின் தந்தை . அப்பெருமானார் வீற்றிருந்தருளும் நகரானது ஆறு பகைகளாகிய காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் இவற்றைக் களைந்து , நிலையற்ற பொருள்கள்மேல் செல்லும் அவாவினை அடக்கி , மனத்தைப் பொறி வழிச் செல்ல விடாது ஒருமுகப்படுத்தி , சிவனே மெய்ப்பொருள் எனத் தெளிந்தவர்கள் வழிபடும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

பொய்யகத்து ஆறினார் - பொய்ப்பொருள்கள் மேற்செல்லும் அவா அடங்கினவர் . ஐ உணர்வு - ஐந்தாகிய உணர்வு மனம் . ` அஃது எய்தலாவது , மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல் `. ( திருக்குறள் 354 பரிமேலழகருரை . ) இவை எய்திய வழியும் , மெய்யுணர்வு இல்லாவிடத்து வீடுபய வாமையின் மெய்தேறினார் என்றருளினர் . மெய்தேறுதல் - சிவனே பரம்பொருளெனத் தெளிதல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

காட்டிலுள்ள உயிர்களை வருத்தும் வேடர் குலத்தவராகிய கண்ணப்ப நாயனார் கண் இடந்து அப்பியபோது , தேவர்களும் பொறாமையால் வருந்தும்படி , தவத்தையுடைய கண்ணப்பரைத் தெய்வமாகச் செய்தான் சிவபெருமான் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தெளிந்த நீர்நிலைகளில் மலர்ந்துள்ள தாமரைகளில் தண்டிலிருந்து தேன்பெருகிப் பாயும் வயல்வளமுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

கான் அலைக்கும் அவன் - காட்டிலுள்ள உயிர்வருக்கங்களை வருத்துகின்ற அவ்வேடர் குலத்தினராகிய கண்ணப்ப நாயனார் . வான் - தேவர்களையும் . அலைக்கும் - ( பொறாமையினால் ) வருந்தச் செய்வதாகிய . தவம் - தவத்தையுடைய . தேவு செய்தான் - தெய்வமாகச் செய்தவன் . ` குவபெருந்தடக்கை வேடன் ... ... தவப் பெருந்தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே ` என்பதும் ` நரகரைத் தேவு செய்வானும் ` என்பதும் அப்பர் திருவாக்கு . தெள்ளம் ஊர் ... தென்குடித்திட்டை - தாமரைகளையுடைய தண்ணிய துறையிலிருந்து தேன் அலை வீசிப்பாயும் வயல் வளத்தையுடைய தென்குடித்திட்டை .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மாலொடும் பொருதிறல் வாளரக் கன்னெரிந்
தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடம்
காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித்திட்டையே.

பொழிப்புரை :

திருமாலின் அவதாரமான இராமனோடும் போர் புரியும் வல்லமைபெற்ற அரக்கனான இராவணன் கயிலைமலையின் கீழ்ச் சிக்குண்டு ஓலமிட்டு அலறும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , கால்வாய் வழியாகச் செல்லும் நீரில் பொன்னிற மூக்குடைய கயல் , வரால் , சேல் போன்ற மீன்கள் வந்து பாயும் வயல்களையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

மாலொடும் பொருதிறல் - திக்குவிசயத்தில் திருமாலொடும் போர் செய்யும் வலிமை வாய்ந்த . ( வாளரக்கன் ) நெரிந்து - அரைபட்டு . ஓல் - ஓலம் . விரல் ஒன்று வைத்தான் - ஒரு விரலை வைத்தவன் ; ஊன்றவுமில்லை , வைத்த அளவிலேயே வாளரக்கன் நெரிந்து ஓலமிட்டான் என்பதை வைத்தான் என நயம்படக் கூறினார் . கால் ஓடும் - கால்வாய் வழியாகச் செல்லும் . கயல் - ஒரு வகை மீன் . கனகம் மூக்குடன்வர - பொன்மயமான மூக்கோடும்வர . பொன்மூக்கு மீன் என ஒரு மீன் இருப்பதாகத் தெரிகிறது . ( வ . சு . செங்கல்வராயப்பிள்ளை , தேவார ஒளிநெறிக் கட்டுரை - பாகம் 1, பக் 143. )

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நாரணன் றன்னொடு நான்முகன் றானுமாய்க்
காரணன் னடிமுடி காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் தேடியும் அடிமுடி காணவொண்ணாதவாறு விளங்கிய , உலகிற்கு நிமித்த காரணமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இப்பூவுலக தேவர்கள் என்று சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன் திருவடிகளை வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய புகழுடன் சிவ பெருமான் விளங்கும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய சிவபிரான் . சீர் அணங்கும் - சிறப்பினால் தெய்வத்தன்மை வாய்ந்த . புகழ்த் தென்குடித்திட்டை . அணங்கும் - பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழிற் றண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

கமண்டலம் ஏந்திய கையுடைய சமணர்களும் , புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி நில்லாதீர் . வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த மேகங்கள் தவழ , தெளிந்த அலைகளையுடைய குளிர்ச்சியான ஆறுபாயும் திருத்தென்குடித்திட்டையைச் சார்ந்து இறைவனை வழிபடுங்கள் .

குறிப்புரை :

பற்றுவிட்டீர்தொழும் - பற்றுவிட்டீர்களாகித் தொழு மின்கள் . விட்டீர் - முற்றெச்சம் . தொழும் - ஏவற்பன்மை . பொழில் தண்தலை கொண்டல் ஆர் - சோலைகளின் குளிர்ந்த உச்சியில் மேகங்கள் படியும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி , கடற்கரையின்கண் அமைந்துள்ள நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த , சிவஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

கானல் ஆர் - கடற்கரையின் கண்ணே பொருந்திய . கடி பொழில் - வாசனையையுடைய பொழில் சூழ்ந்த காழி . பால்நல் ஆர் மொழி - பால்போலும் நன்மை பயக்கும் மொழியாலாகிய . மாலை வல்லார்க்குப் பாவம் இல்லையாம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினி லுமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையா ரிணையடி யென்மனத் துள்ளவே. 

பொழிப்புரை :

சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய மரங்களை அலைகளால் உந்தித் தள்ளிவரும் சிறப்பான பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில், தென்றல் காற்று வீசும் சோலைகள் வளர்ந்து பெருக, வள்ளல் தன்மையுடைய எம் தந்தையாகிய காளத்தி நாதர் உமாதேவியோடு, அவருடைய திருவடிகள் எம் மனத்தில் பதியுமாறு வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

சந்தம் - சந்தனமரம். ஆர் - ஆத்தி. சாதி - சாதிக்காய் மரம்.
உந்தும் - அலையால் தள்ளி வரும். மந்தம் - தென்றல் காற்று. மல்குவளன் - வளம் மிகுந்த; காளத்தி.

பண் :கொல்லி

பாடல் எண் : 2

ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனம்
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே. 

பொழிப்புரை :

ஆல், மா, குங்கும மரம், சந்தனம் ஆகிய மரங்களும், மிகுதியான மயிற்பீலியும், சண்பகமும் அலைகளால் தள்ளப்பட்டுப் பருவக்காலங்களில் நிறைகின்ற பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நீலகண்டனான இறைவனை எவ்வகையில் நினைந்து வழிபடுதல் பொருந்துமோ அத்தன்மையில் நினைந்து வழிபடுதல் நம் கடமையாகும்.

குறிப்புரை :

ஆலம், மா, மரவம் ஓடு. சாலம் - மரவிசேடம். காலம் - பருவக் காலங்களில். ஆர் - நிறை(ந்தோடு)கின்ற, `காரூர்புனல் எய்திக் கரை கல்லி` என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாக்கு. நினையும் ஆ(று) நினைவது; நினைவீர்களாக, வியங்கோள். நினையுமாறு நினைவதாவது - \\\"நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே.\\\" (தி.4 ப.23 பா.9); \\\"உற்றவரும் - உறுதுணையும் நீயேயென்றும், உன்னையல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும்\\\" (தி.6 ப.31 பா.7); \\\"பொதுநீக்கித் தனைநினையவல்லோர்க்கு\\\" (தி.6 ப.1 பா.5)

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை யடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே. 

பொழிப்புரை :

கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில் ஆகிய மரங்களைத் தள்ளிக் கொண்டுவரும் பொன்முகலி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் காளத்திநாதரின் திருவடிகளைத் தொழுது போற்ற, பெருகிவரும் கொடிய துன்பம் கெடும். முத்திப்பேறு எளிதாகக் கைகூடும்.

குறிப்புரை :

வீங்கு - வளர்ந்து வருகிற. வெந்துயர் - கொடிய துயர். கன்மங்கள்; காரணத்தைக் காரியமாக உபசரித்தார்.

பண் :கொல்லி

பாடல் எண் : 4

கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கடாம் விண்ணுல காள்வரே.

பொழிப்புரை :

கரும்பு, தேன் கட்டி, வாழைக்கனி ஆகியவற்றை விளைவிக்கும் நீர்வளமுடைய பொன்முகலி ஆற்றின் கரையில், அழகிய பிறைச்சந்திரனை நீண்ட சடையில் சூடி வீற்றிருந்தருளும் ஒப்பற்ற காளத்திநாதரை விரும்பிப் பணிபவர்கள் விண்ணுலகை ஆள்வார்கள்.

குறிப்புரை :

கரும்பு தேன்கட்டி - கரும்பில் தொடுத்த இறாலின் தேனும், கரும்பு (சுடு) கட்டியும், அரும்பும் - விளைவிக்கும். நீர்வளம் உடைய முகலி அரும்பும். பிறவினை விகுதி தொக்கு நின்றது.

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வரைதரு மகிலொடு மாமுத்த முந்தியே
திரைதரு முகலியின் கரையினிற் றேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.

பொழிப்புரை :

மலையில் வளரும் அகிலும் முத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், தேன் துளிக்கின்ற நறுமண மலர்களைச் சடைமுடியில் அணிந்து விளங்கும், காளத்தியிலுள்ள தேவாதி தேவனாகிய சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தினந்தோறும் நினைந்து போற்றி வழிபடுவீர்களாக.

குறிப்புரை :

வரை - மலை. அகில் - மரம். திரைதரு - அலைகளால் தருகின்ற.
முகலி - பொன் முகலியாறு. விரை - மணம். விண்ணவன் - தேவாதி தேவனாகிய சிவபிரான். நித்தல் - நாள்தோறும்.

பண் :கொல்லி

பாடல் எண் : 6

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :கொல்லி

பாடல் எண் : 7

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :கொல்லி

பாடல் எண் : 8

முத்துமா மணிகளு முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினி லெழில்பெறக்
கத்திட வரக்கனைக் கால்விர லூன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.

பொழிப்புரை :

இராவணன் கயிலைமலையின் கீழ் நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான், முத்துக்களும், மணிகளும், மலர்க்கொத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அத்திருத்தலத்தை அடைந்து அப்பெருமானை வணங்குதல் நம் கடமையாகும்.

குறிப்புரை :

இராவணன் என்ற பெயர்க்காரணம் புலப்பட, கத்திட என்றார்.

பண் :கொல்லி

பாடல் எண் : 9

மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின் கரையினி னன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி யாங்கணைந் துய்ம்மினே. 

பொழிப்புரை :

வேங்கை, மருது ஆகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்பட்டுச் சேற்று மண்ணுடன் கலந்து தள்ளப்பட்டு வரும் பொன்முகலியாற்றின் கரையில், அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவனும், எவ்வுயிர்கட்கும் நன்மையே செய்கின்றவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளு கின்றான். அத்திருத்தலத்தை அடைந்து வணங்கிப் போற்றி உய்தி பெறுங்கள்.

குறிப்புரை :

மண்ணும் - நிலத்தையும், (மா) வேங்கை மரங்களையும். மருதுகள் - மருதமரம் முதலியவற்றையும். பீழ்ந்து - பிளந்து. உந்தி - அடித்துக்கொண்டு.

பண் :கொல்லி

பாடல் எண் : 10

வீங்கிய வுடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே. 

பொழிப்புரை :

பருத்த உடலுடைய சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களைக் கை விடுக. இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுங்கள். வளமுடன் ஓங்கும் வள்ளலாகிய திருக்காளத்திநாதனை உள்ளத்தால் உணர்ந்து மனம் ஒன்றி வழிபட்டால் தேவர்களுக்கெல்லாம் தலைவனான அச்சிவபெருமான், வழிபடும் உயிர்களின் வினைகளைத் தீர்த்து நன்மை செய்வான்.

குறிப்புரை :

வீங்கிய உடலினர் - சமணர். விடும் - ஒழியுங்கள். பன்மையேவல் வினைமுற்று. வாங்கிடும் - நீக்கிடும்.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார்
சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே. 

பொழிப்புரை :

அட்டமா சித்திகளைத் தரும் திருக்காளத்தியில் வீற்றிருந்தருளும் நீண்ட சடைமுடியுடைய சிவபெருமானைப் போற்றி, வயல் வளமிக்க அழகிய சீகாழியில் அவதரித்த நான்கு வேதங்களை யும் நன்கு கற்றுவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

அட்டமாசித்திகளாவன; அணிமா - சிறியதிற் சிறிதாதல், மகிமா - பெரியதிற் பெரிதாதல் அண்டங்களெல்லாம் அணு ஆதல், அணுக்கள் எல்லாம் அண்டங்கள் ஆதல் (திருவிளையாடற் புராணம்). லகிமா - மிகத் திண்ணியபொருளை மிக நொய்ய பொரு ளாக்குதல். கரிமா - மிக நொய்ய பொருளை மிகத் திண்ணிய பொரு ளாக்குதல். பிராத்தி - பாதாளத்திலிருப்பவன்; அடுத்த நிமிடம் வானுல கிலும் காணப்படுதல். பிராகாமியம் - பரகாயப் பிரவேசம். (வேற்று உடலில் புகுதல். இருந்த இடத்திலிருந்தே எண்ணிய போகமெல்லாம் அடைதல்). ஈசத்துவம் - சிவபெருமானைப்போல முத்தொழிலையும் செய்து நாள் கோள் முதலியவை தம் ஏவல் கேட்ப இருப்பது. வசித் துவம் - அனைத்துயிரும் அனைத்துலகும் தன் வசமாகச் செய்தல். கோளில் ... எண்குணத்தான் என்ற தொடருக்குப் பிறர் கருத்தாகப் பரிமேலழகர் இவற்றையும் காட்டினர். இச்சித்திகள் இன்றும் இத் தலத்துக் காணலாகும் என்பர். சிட்டம் - முறைமை, ஒழுக்கம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 1

கரமுனம்மல ராற்புனன்மலர் தூவியேகலந் தேத்துமின்
பரமனூர்பல பேரினாற்பொலி பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரமுன்னவ்வருள் செய்யவல்லவெம் மையனாடொறு மேயசீர்ப்
பிரமனூர்பிர மாபுரத்துறை பிஞ்ஞகன்னருள் பேணியே.

பொழிப்புரை :

யாவர்க்கும் மேலான பொருளான சிவபெருமானது ஊரும் பல திருப்பெயர்களை உடையது . பக்தர்களும் , சித்தர்களும் போற்றி வணங்க , அவர்கள் வேண்டும் வரங்களை நல்கி அருள் செய்ய வல்ல என் தலைவன் நாள்தோறும் விரும்பி வீற்றிருந்தருளும் சிறப்புடைய பிரமனூர் ஆகிய திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பிஞ்ஞகனின் அருளைப் போற்றிக் கைத்தாமரையால் தூய நீரை அபிடேகம் செய்து , மலர்களைத் தூவி ஒரு நெறிய மனம் வைத்து வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

கரம் முனம் மலரால் :- கரமலர் , முனமலர் , கைம்மலராலும் , மனமலராலும் . முனம் - முன்னம் - கருத்து . புனல் மலர் தூவி - நீரையும் பூவையும் தூவி . கலந்து - முக்கரணமும் ஒன்றுபட்டு . பலபேரினால் - பன்னிரண்டு திருப்பெயரோடு . பொலியும் சீர்ப் பிரமனூர் எனக்கொள்க . ஆல் , ஒடுப்பொருளில் வந்தது . ` தூங்கு கையானோங்குநடைய ` ( புறம் . 22 ) ` முன்ன - நினைத்தளவில் , வரம் அருள் செய்யவல்ல ஐயன் பிஞ்ஞகன் அருள் பேணி ஏத்துமின் `.

பண் :கொல்லி

பாடல் எண் : 2

விண்ணிலார்மதி சூடினான்விரும் பும்மறையவன் றன்றலை
உண்ணநன்பலி பேணினானுல கத்துளூனுயி ரான்மலைப்
பெண்ணினார்திரு மேனியான்பிர மாபுரத்துறை கோயிலுள்
அண்ணலாரரு ளாளனாயமர் கின்றவெம்முடை யாதியே.

பொழிப்புரை :

இறைவர் விண்ணிலே விளங்கும் சந்திரனைச் சடையில் சூடியவர் . விரும்பும் நான்மறைகளை ஓதுகின்ற பிரமனின் மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு பிச்சை ஏற்றவர் . உலகத்து உயிர்கட்கு உடம்பும் , உயிருமானவர் . மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும் , திருப்பிரமபுரத்துறைகின்ற கோயிலினுள் அருளைப் பொழிபவராய் அமர்ந்துள்ள தலைவரும் ஆகிய எம்முடைய சிவபெருமானே ஆதிப்பிரான் ஆவார் .

குறிப்புரை :

தலைஉண்ண நன்பலிபேணினான் - உண்ணுவதற்குத் தலையோட்டிற் பிச்சையேற்றவன் . உலகத்துள் உயிரின் - உடம்பும் உயிரும் ஆனவன் ` ஊனுயிரானாய் உலகானாய் ` என்பது சுந்தர மூர்த்திகள் திருவாக்கு . அண்ணல் - தலைமை . சூடினான் - சூடினவன் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

எல்லையில்புக ழாளனும்மிமை யோர்கணத்துடன் கூடியும்
பல்லையார்தலை யிற்பலியது கொண்டுகந்த படிறனுந்
தொல்லைவையகத் தேறுதொண்டர்கள் தூமலர்சொரிந் தேத்தவே
மல்லையம்பொழி றேன்பில்கும்பிர மாபுரத்துறை மைந்தனே.

பொழிப்புரை :

இறைவர் எல்லையற்ற புகழ் உடையவர் . தேவர்கள் கூட்டம் சூழ விளங்குபவர் . பற்களையுடைய பிரமனின் மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்ந்த வஞ்சகர் . அவர் பழமையான இந்நிலவுலகில் தத்துவங்களைக் கடந்து ஏறிய தெளிந்த அறிவுடைய தொண்டர்கள் தூய மலர்களைத் தூவி ஏத்தி வழிபட , வளம் மிக்க அழகிய சோலைகளில் தேன் சொட்டும் திருப்பிரமபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வலிமையுடைய சிவபெருமானே யாவார் .

குறிப்புரை :

பல்லையார்தலை , படிறன் - வஞ்சகன் . எல்லாச் செல்வமும் வழிபட்டோர்க் களித்து ஒன்றும் இல்லான் போல் பிச்சையேற்றலின் . ஏறு - வினையைக் கடந்தேறிய . மல்லல் - வளம் , எதுகை நோக்கி மல்லை எனத் திரிந்தது . தேன்பில்கும் - தேன் சொட்டுகின்ற .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

அடையலார்புரம் சீறியந்தண ரேத்தமாமட மாதொடும்
பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர மாபுரத்துறைகோயிலான்
றொடையலார்நறுங் கொன்றையான்றொழி லேபரவிநின் றேத்தினால்
இடையிலார்சிவ லோகமெய்துதற் கீதுகாரணங் காண்மினே.

பொழிப்புரை :

பகையசுரர்களின் மூன்று புரங்களையும் கோபித்து அழித்து , அந்தணர்கள் போற்றி வணங்க , உமாதேவியோடு , பெண் பறவைகள் தங்கள் ஆண் பறவைகளுடன் கூடும் கடற்கரைச் சோலைகளையுடைய திருப்பிரமாபுரத்தில் கோயில் கொண்டருளியவன் சிவபெருமான் . இடையீடில்லாதவர்களாய்ச் சிவலோகம் சென்று அடைவதற்கு , நறுங்கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் வழிபாட்டிற்குரியவைகளைச் செய்து , அவன் அருட்செயல்களைப் போற்றி வழிபடும் நெறியே சாதனமாகும் என்பதை அறிவீர்களாக .

குறிப்புரை :

அடையலார் - பகைவர் . தொடையல் - மாலை . கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் சிவலோகம் எய்துதற்கு இடைஇல்லார் . காரணம் ஈது காண்மின் என்க . இடை - காலம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வாயிடைம்மறை யோதிமங்கையர் வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்மெரி கானிடைப்புரி நாடகம்மினி தாடினான்
பேயொடுங்குடி வாழ்வினான்பிர மாபுரத்துறை பிஞ்ஞகன்
றாயிடைப்பொரு டந்தையாகுமென் றோதுவார்க்கரு டன்மையே.

பொழிப்புரை :

இறைவன் தன் திருவாயால் வேதங்களை அருளிச் செய்தவன் . தாருகாவனத்து முனிபத்தினிகள் வந்து பிச்சையிடப் பிரமகபாலத்தில் பலிஏற்று , சுடுகாட்டையே அரங்கமாக் கொண்டு நடனம் ஆடுபவன் . பேய்க் கணங்களுடன் கூடி வாழ்பவன் . திருப்பிரமாபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பிஞ்ஞகனாகச் சிவபெருமானே , பெற்ற தாயும் , தந்தையும் , மற்றுமுள்ள அனைத்துப் பொருளுமாய் விளங்குபவன் என்பதை உணர்ந்து ஓதுபவர்கட்கு அவன் அருள்செய்பவன் .

குறிப்புரை :

போய்ப்போய் - அடுக்கு , பன்மைப்பொருட்டு ; பலகாலும் போய் என்று பொருள் . இடம் - நாடகமாடும் இடமான , எரிகான் , இடை - ஏழனுருபு . தாயும் , இடைக்காலத்தில் வந்து சேரும் பொருளும் , தந்தையும் ஆவான் என்று ஓதுவார்கட்கு அருள்தன்மை அத்தகையதாயிருந்தது என்பது ஈற்றடியின் பொருள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

ஊடினாலினி யாவதென்னுயர் நெஞ்சமேயுறு வல்வினைக்
கோடிநீயுழல் கின்றதென்னழ லன்றுதன்கையி லேந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர மாபுரத்துறை வேதியன்
ஏடுநேர்மதி யோடராவணி யெந்தையொன்றுநின் றேத்திடே.

பொழிப்புரை :

உயர் நெஞ்சமே ! என் சொல்வழி நில்லாது பிணங்கினால் அதனால் உனக்கு ஆகப்போவது என்ன ? வல்வினையை ஈட்டுவதற்கென்றே நீ ஓடி உழல்வது தான் என்ன ? பண்டைக்காலத்தில் தன் திருக்கரத்தில் நெருப்பேந்தியவன் சிவ பெருமான் . தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரின்பத்தை வழங்கும் தன்மையன் . திருப்பிரமாபுரத்து வீற்றிருந்தருளும் வேதங்களை அருளிச் செய்தவனும் , மலரை ஒத்த பிறைச் சந்திரனையும் , பாம்பையும் அணிந்தவனுமான சிவபெருமானை எம் தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

வல்வினைக்கு ....... என் ( உறுதுணையாய் அவனிருக்கவும் ) எளிதினீங்காத தீவினை நீங்குவதற்கு நீ ஓடியுழல்வது ஏன் ? சேர்ந்தாரைக் கொல்வதாகிய கொடியபொருளும் அவனையடைந்தால் நற்பொருளாகும் . அவன் என அறிவித்தற்கன்றோ ? அக்காலத்தில் அழலை ஏந்தினான் ? மெய்யடியாரோடு பொய்யடியோமையும் ஆட்கொள்பவன் என்பதறிவித்தற்கு மதியோடு அராவணி எந்தையாயிருந்தான் , என்றுகொண்டு நீ ஏத்துவாயாக என்பது இப்பாசுரத்தின் கருத்து .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

செய்யன்வெள்ளிய னொள்ளியார்சில ரென்றுமேத்தி நினைந்திட
ஐயனாண்டகை யந்தணனரு மாமறைப்பொரு ளாயினான்
பெய்யுமாமழை யானவன்பிர மாபுரமிடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந் தேத்துமின்வினை வீடவே.

பொழிப்புரை :

இறைவன் சிவந்த திருமேனியுடையவன் . வெள்ளிமலை எனப்படும் கயிலைக்கு நாயகன் . சிவஞானம் பெற்ற பெருமக்களால் எக்காலத்திலும் போற்றப்பட்டு வணங்கப்படும் தலைவன் . அளவில்லா ஆற்றலும் , எவ்வுயிரிடத்தும் பேரிரக்கமும் உடையவன் . அரிய நான்மறைகளின் உட்பொருளாய் விளங்குபவன் . பெய்யும் மழைபோன்றவன் . திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும் மழுப்படையேந்திய சிவபெருமானை உங்கள் வினைகள் நீங்க வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

பெய்யும் மாமழை ஆனவன் . வெண்மழு முன்னும் வந்தது . வினைவீட - வினை ஒழிய .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

கன்றொருக்கையி லேந்திநல்விள வின்கனிபட நூறியுஞ்
சென்றொருக்கிய மாமறைப்பொரு டேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்னடி யும்முடியவை காண்கிலார்
பின்றருக்கிய தண்பொழிற்பிர மாபுரத்தரன் பெற்றியே.

பொழிப்புரை :

ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளமரத்தின் கனியை அழித்த திருமாலும் , தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்ற பிரமனும் , அன்று தன்காற் பெருவிரலை ஊன்றி இராவணனைக் கயிலையின்கீழ் நெருக்கிய சிவபெருமானுடைய திருவடியையும் , திருமுடியையும் தேடியும் காணாதவராயினர் . அப்பெருமான் அருள் தன்மையும் , ஆற்றலும் கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த சோலைகளையுடைய திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

ஒருகை , ஒருக்கை என இசை நோக்கி ஒற்றுமிகுந்தது . நூறி - அழித்தவன் ; பெயர்ச்சொல் . ஒருக்கிய - ஒருங்கு சேர்ந்த , தொகுத்த , ( மாமறை ) பின்தருக்கிய . இந்தப் பதிகத்தில் அரக்கனையும் அடி , முடி தேடிய இருவரையும் ஒரு பாசுரத்தில் கூறியதுணர்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

உண்டுடுக்கைவிட் டார்களும்முயர் கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டடக்கு சொற்பேசும்அப்பரி வொன்றிலார்கள்சொற் கொள்ளன்மின்
தண்டொடக்குவன் சூலமுந்தழன் மாமழுப்படை தன்கையிற்
கொண்டொடுக்கிய மைந்தனெம்பிர மாபுரத்துறை கூத்தனே.

பொழிப்புரை :

உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களும் , மண்டை என்னும் பாத்திரத்தில் கஞ்சியேற்று உண்ணும் புத்தர்களும் மக்களிடம் பரிவில்லாதவர்கள் . உயர்ந்தவையும் தொன்றுதொட்டு வருவனவுமாகிய வேத ஆகம நூல்களைப் பழித்துப் பேசுபவர் . அவர்கள் சொற்களைக் கொள்ள வேண்டா . வீணை , அக்குமாலை , சூலம் , நெருப்பு , பெரிய மழுப்படை இவற்றைத் தன்கையில் கொண்டு இவ்வுலகமனைத்தையும் ஒடுக்கி அருளும் வல்லமையுடையவன் எம் திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளும் கூத்தனாகிய சிவபெருமானேயாவான் . அவனை வணங்கிப் போற்றி உய்வீர்களாக !

குறிப்புரை :

உடுக்கை - ஆடை . பண்டு அடக்கு சொல் - தொன்று தொட்டு வந்த சற்சமயக் கருத்துக்களை . தண்டு ( ஒடு ) - யோக தண்டத்துடன் . அக்கு - செபமாலை , இவை யோகரூபங் குறித்தவை . ஒடுக்கிய - உமாதேவியாரை இடப்பாகத்தே சேர்த்த . மைந்தன் - ஆண்மையுடையோன் . இது போகரூபங் குறித்தது . ஒடுக்கிய என்ற வினைக்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது . ஆக இறைவனது மூன்று ரூபமும் இதனுள் அமைந்தமை காண்க . ` யோகியாய் ` ( சிவஞானசித்தியார் . 50 ) ஒருவனே மூன்றுருவும் கொள்ளுதல் அவனது திருவிளையாடல் என்பார் ` கூத்தன் ` என்றார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

பித்தனைப்பிர மாபுரத்துறை பிஞ்ஞகன்கழல் பேணியே
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை செய்துநன்பொருண் மேவிட
வைத்தசிந்தையுண் ஞானசம்பந்தன் வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை போற்றிசெய்யுமெய்ம் மாந்தரே.

பொழிப்புரை :

பித்தனும் , திருப்பிரமபுரத்து உறைகின்ற பிஞ்ஞகனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி , மெய்த் தவநெறிகளில் நிற்போர்கட்கு உரைசெய்து வீடுபேறு அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தையில் , ஞானசம்பந்தன் திருவாய்நவின்ற இத்திருமாலைகளைப் பொய்த்தவத்தில் செலுத்தும் பொறிவழிச் செல்லும் புலன்களின் குற்றம் நீங்க இன்னிசையால் போற்றுபவர்களே மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர் .

குறிப்புரை :

சிந்தையுள் தங்கி நா நவின்று எழுந்த , மாலைகள் . நன் பொருள் - வீடு . போற்றி செய்யுங்கள் - செய்வீரேல் , மெய்யுணர்ந்த மாந்தர் ஆவீர்கள் , நன்பொருள் , ஞானம் எனலும் பொருந்தும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

வினவினேனறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே.

பொழிப்புரை :

இறையருளை வேண்டிப் பணிசெய்யும் அன்பர்காள் ! அறியாமை காரணமாக வினவுகின்றேன் . உரைசெய்வீர்களாக ! ஆரவாரத்தோடு மிகுந்தநீர் செல்லும் காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்ட நாதன் , தனக்கு நெருக்கமான திருமாலும் , பிரமனும் அண்டங்களை ஆளத்தான் சுடுகாட்டில் வாழ்ந்து ஆடியும் , பாடியும் பிச்சையேற்றுத் திரிவது ஏன் ? தனக்கு முன்னோர் தேடிவைத்த பொருள் இல்லாத காரணத்தினாலா ?

குறிப்புரை :

கனைவு - வேகம் . கண்டியூர் வீரட்டன் . தமர் ஆயினார் - தம்தம் இனத்தவரான பிரம விட்டுணுக்கள் . அண்டம் ஆளத்தான் வனத்தில் குடியிருந்து இவ்வுலகில் பெரிய பிச்சை எடுப்பது . முன்னே தனம் - முன்னோர் தேடிவைத்த பொருள் , தனக்கு இல்லாமையாலோ ? அவன் அருளை வேண்டிப் பணிசெய்யும் அடிகளீர் , நீர் முற்றிலும் உணரும்படி விடை சொல்வீர்களாக என்பது இதன் பொழிப்பு . அறியாமை இல் உ ரை செய்தல் - கேட்போர் ஐயந்திரிபு இல்லையாக அங்கை நெல்லியென உணருமாறு உரைத்தல் வினவினேன் , அருள வேண்டுவீராகிய நீவிர் அறியாமை இல்லாத விடையாக உரை செய்யுமின் என்றார் கேட்டோர் . அறியாமை என்பதற்கு வேறு பொருள் கூறுதல் பிழையாகும் . தமர் ஆயினார் என்றது அரசினையும் , தண்டலையாளரையும் . குடியரசுகள் அரசியலார் என்பது போன்று , தமர் அண்டம் ஆளத்தான் பிச்சை எடுப்பது ஏன் ?

பண் :கொல்லி

பாடல் எண் : 2

உள்ளவாறெனக் குரைசெய்மின்னுயர் வாயமாதவம் பேணுவீர்
கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை காதலான்
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை வைத்ததும்பெரு நீரொலி
வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு மங்கையா ளுடனாகவே.

பொழிப்புரை :

உயர்ந்த பெரிய தவநெறியில் நிற்பவர்களே !. எனக்கு உள்ளவாறு உரைசெய்வீர்களாக ! தேன்கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூரில் தனக்கு ஒப்பாரும் , மிக்காருமில்லாத , உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சிவந்த சடையின்மீது வைத்ததும் , பெருநீர்ப் பெருக்காகிய கங்கையைச் சடையில் தாங்கியதும் என் கொல் ?.

குறிப்புரை :

உறைகாதலான் - வாழ்வதில் காதலுடையவன் . பிள்ளைப்பிறை - இளம்பிறை . மிகும் மங்கையாள் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாது மேன்மையுற்ற மங்கை , அம்பிகை . கடவுளாயின் மங்கை உடனாகத் தலையிற் பிறையும் நீர்ப்பெருக்கையும் தாங்கியது என்கொல் ?.

பண் :கொல்லி

பாடல் எண் : 3

அடியராயினீர் சொல்லுமின்அறி கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்துகண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாய்இவ்வைய முழுதுமாய்அழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி நூலும்பூண்டெழு பொற்பதே.

பொழிப்புரை :

என் சிற்றறிவினால் சிவபெருமானின் செய்கையை அறிய இயலவில்லை . எப்பொழுதும் சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்துக் கொண்டிருக்கும் அடியவர்களே ! நீங்கள் எனக்குச் சொல்வீர்களாக ! உலகமெல்லாம் தொழுது போற்றுகின்ற திருக்கண்டியூரில் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இவ்வுலகிற்கு அந்தமாயும் , ஆதியாயும் இருப்பவன் . இவ்வுலகம் முழுவதும் நிறைந்து விளங்குபவன் . அப்பெருமான் தன் அழகிய மார்பில் திருநீற்றுப்பூச்சும் , முப்புரிநூலும் பூண்டு தோன்றுவது ஏன் ?

குறிப்புரை :

அறிகின்றிலேன் என்றது - முற்பிறப்பிற் செய்த சிவ புண்ணிய மேலீட்டினால் சைவநெறி தலைப்பட்ட ஒருவர் கூறுவதாக வந்தது . கழை - மூங்கில் . முடிவும் முதலும் ஆய் - எல்லா இடமும் , எல்லாக் காலமுமாகிய ஒரு பொருளுக்கு இவ்வையகம் முழுதும் ஒரு உடம்பு . அதில் மார்பும் அழகிய திருநீற்றுப் பூச்சும் , முப்புரிநூலும் பூண்டு தோன்றும் தோற்றம் ஏன் ? பொற்பு என்றது இங்குத் தன்மை என்னும் பொருளில் வந்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

பழையதொண்டர்கள் பகருமின்பல வாயவேதியன் பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி மன்னுகண்டியூர் வீரட்டன்
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு குன்றின்மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது போர்த்துகந்த பொலிவதே.

பொழிப்புரை :

சிவனடியார் திருக்கூட்டமரபில் வழிவழியாய் வருகின்ற பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குப் பலவாகிய தன்மைகளையுடைய இறைவனின் தன்மையைக் கூறுங்கள் . மலையிலிருந்து பெருகும் காவிரியால் வளம்மிகுந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , தன் காதில் ஒரு குழையணிந்து மகிழ்ந்து , மலைமகளான உமாதேவி அஞ்சுமாறு துளையுடைய நீண்ட தும்பிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தது ஏன் ?

குறிப்புரை :

ஈசனது பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குத் தெளியப் பகருமின் . கடவுள் - எனின் அவன் காதில் குழை அணிந்ததும் யானையை உரித்து அதைப் போர்த்ததும் ஏன் ?

பண் :கொல்லி

பாடல் எண் : 5

விரவிலாதுமைக் கேட்கின்றேன்அடி விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
கரையெலாந்திரை மண்டுகாவிரிக் கண்டியூருறை வீரட்டன்
முரவமொந்தை முழாவொலிக்க முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல் நஞ்சமுண்ட பரிசதே.

பொழிப்புரை :

அடியார் நடுவுள் கலந்திருக்கப் பெறாமையால் இவற்றை வினவுகின்றேன் . இறைவனின் திருவடிகட்கு விரும்பிப் பணிசெய்யும் அடியவர்களே ! விளம்புவீராக . அலைகள் மோதுகின்ற காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , முரவு , மொந்தை , முழவு முதலான வாத்தியங்கள் முழங்க , பேய்க்கணங்களும் , பூதகணங்களும் சூழ்ந்து நிற்க , தன்னை வழிபட்ட தேவர்கள் பொருட்டுப் பெரிய பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட தன்மைதான் என்கொல் ?.

குறிப்புரை :

விரவு இலாது - ( அடியார் நடுவுள் ) கலந்திருக்கப் பெறாமையினால் இவற்றை வினவுகிறேன் . இறைவன் கிளம்பும் பொழுது பூதகணம் முதலிய கணங்களோடு பேய்க்கணங்களும் போவன ஆதலின் . பேயொடுங்கூடி என்ற தொடரில் பேய் என்பது உபலட்சணம் ஆகலின் பேய் முதலிய கணங்களோடும் என்க . வானவர்க்காக விடத்தை உண்பானேன் ? உண்ணச் சோறின்றி நஞ்சுண்டவன் கடவுளாவானா ? விடமுண்டவன் சாவவில்லை என்பது நம்பத்தகுமா ? எனப் பிற மதத்தினர் கூறுவது ` அம்பரமாம் புள்ளித் தோல் ஆலாலம் ஆரமுதம் ` என்னும் திருவாசகத்தால் அறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

இயலுமாறெனக் கியம்புமின்னிறை வன்னுமாய்நிறை செய்கையைக்
கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி கண்டியூருறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக் காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில் ஊணுகந்த வருத்தியே.

பொழிப்புரை :

மெய்யடியார்களே ! இறைவன் உலகினுக்கும் , உயிருக்கும் தலைவனாய் இருப்பதோடு , உலகப்பொருள்களிலும் , அனைத்து உயிர்களிடத்தும் அவையேயாய்க் கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக ! கயல் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்கட்காகப் பிரமனுடைய ஐந்தாவது சிரத்தை அயலார் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து , அதில் பிச்சையேற் றுண்ணும் விருப்பம் என்கொல் ?.

குறிப்புரை :

இறைவனுமாய் நிறைசெய்கையை - உலகினுக்கும் உயிருக்கும் தலைவனுமாய் , அவையெயாகி அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற செய்கையை . புயல் - மேகம் . பொழிந்து - மழைபோல் பெய்து . பொய் இன்மைப் பொருளில் வந்தது . அயல் - அயலார் . நக - அவனைப் பரிகசிக்கும்படியாக அது அரிந்து எனவும் , அயலார் , தன்னை நக அதில் ( அம்மண்டை யோட்டில் ) உணவை உகந்து ( உண்டு ) எனவும் - இருவழியும் கூட்டுக . வானவர்களுக்காக அயன்தலையைக் கொய்ததென்பது - படைத்தற்கர்த்தா தன் தலையைப் படைத்தளிக்கும் வலியின்மையும் படைப்போற் படைக்கும் பழையோன் இவனே என்பதும் வானவர் தெளிவதற்காக ஒருவன் தலையைக் கொய்து , அதில் உணவு நுகர்தல் கடவுட்டன்மைக்கு ஒக்குமா ?

பண் :கொல்லி

பாடல் எண் : 7

திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச் செல்வன்றன்னது திறமெலாம்
கருந்தடங்கண்ணி னார்கடாந்தொழு கண்டியூருறை வீரட்டன்
இருந்துநால்வரொ டானிழல்லற முரைத்ததும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யாலம்மாமதின் மூன்றுமாட்டிய வண்ணமே.

பொழிப்புரை :

தெளிந்த சிவஞானம் பெற்று இறைவனுக்குத் தொண்டு செய்யும் அன்பர்களே ! மெய்ச் செல்வனாக விளங்கும் சிவபெருமானின் தன்மைகளை எனக்கு உரைப்பீர்களாக ! கருநிற அழகிய கண்களையுடைய மகளிர் வழிபடும் திருக்கண்டியூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , அன்று ஆலமரநிழலில் நால்வர்க்கு அறம் உரைத்ததும் , தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு மேருமலையை வில்லாக வளைத்ததும் என்கொல் ?.

குறிப்புரை :

திருந்துமாறு சொல்லவல்லீர் நீவிரே என்பான் , திருந்து தொண்டர்கள் என்றான் . இன்றேல் ` குருடும் குருடும் குருட்டாட் டமாடிக் குழி வீழ்ந்தவாறே `. தொண்டர்கள் அண்மைவிளி . இருந்து நால்வரோடு ... வண்ணமே - துறவியாய் உபதேசம் செய்த தூயோன் , திரிபுரத்தசுரர்களைக் கொலை செய்யலாமா ? சரியை கிரியை இரண்டும் - அறம் , சிவதன்மம் . ( திருக்களிற்றுப்படியார் ) மாட்டிய - மாள்வித்த . மாள் என்பதன் பிறவினை .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

நாவிரித்தரன் றொல்புகழ்பல பேணுவீரிறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர் வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப்பய னானஞ்சாடிய கொள்கையுங்கொடி வரைபெற
மாவரைத்தலத் தாலரக்கனை வலியைவாட்டிய மாண்பதே.

பொழிப்புரை :

நாவால் சிவபெருமானது பழம்புகழ் போற்றும் அடியவர்களே ! எனக்கு விடை கூறுவீர்களாக . காவிரியால் நீர் வளம்மிக்க திருக்கண்டியூர் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் , பசுவிலிருந்து பெறப்படும் பால் , தயிர் , நெய் , கோசலம் , கோமயம் ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் தன்மையும் , கொடி போன்ற பார்வதி அமைதி பெற , பெரிய கயிலைமலையில் தன் காற்பெருவிரலை ஊன்றி மலையின் கீழ் இராவணன் நெரியுமாறு செய்து அவன் வலிமையை அழித்த மாண்பும் என்கொல் ?.

குறிப்புரை :

( அரன் தொல் புகழ் ) நாவிரித்து , ` உன் திருவார்த்தையை விரிப்பார் ` என்பது திருவாசகம் . புனல் - நீர்வளம் . செய் - உண்டாக்குகின்ற . கண்டியூர் வீரட்டம் . கோ - பசுவினின்றும் கிடைக்கக் கூடிய . விரிப்பயன் - பெரும் பயனையுடைய . ஆன் அஞ்சு ஆடிய - பஞ்சகவ்வியத்தை ஆடுகின்ற கொள்கையும் , அரக்கனை வலியை வாட்டிய மாண்பும் . இறைநல்குமின் - விடை அளியுங்கள் . ஆனஞ் சாடுதல் - சத்துவ குணத்தைத் தரும் . அதற்கு மாறாக அரக்கனை அடர்த்தலாகிய ரஜோகுண வினை புரிந்தமை ஏன் ? கொடிவரை - கொடி போன்ற பார்வதி அமைதி உற , பெற .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பெருமையேசர ணாகவாழ்வுறு மாந்தர்காளிறை பேசுமின்
கருமையார்பொழில் சூழுந்தண்வயற் கண்டியூருறை வீரட்டன்
ஒருமையாலுயர் மாலுமற்றை மலரவன்உணர்ந் தேத்தவே
அருமையாலவ ருக்குயர்ந்தெரி யாகிநின்றவத் தன்மையே.

பொழிப்புரை :

சிவபெருமானுடைய பெருமையைப் புகழ்ந்து கூறி , அவனைச் சரண்புகுந்து அவனருளால் வாழும் மாந்தர்காள் ! விடை கூறுவீர்களாக ! மரங்களின் அடர்த்தியால் வெயில் நுழையாது இருண்டு விளங்கும் சோலைகள் சூழ்ந்த , குளிர்ச்சியான வயல்களையுடைய திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளுகின்ற வீரட்டநாதன் , திருமாலும் , பிரமனும் சிவபெருமானின் முழுமுதல்தன்மையை உணர்ந்து போற்றும்படி , அவர்கள் காண்பதற்கு அரியவனாய் உயர்ந்து நெருப்புமலையாய் நின்ற தன்மை என் கொல் ?.

குறிப்புரை :

மரச்செறிவால் வெயில் . நுழையாமையால் கருமை ஆர்பொழில் என்றார் . ` வெயில் நுழைபு அறியாக் குயின் நுழை பொதும்பர் ` என்பது மணிமேகலை . ஒருமையால் ... ... அத்தன்மையே அருமையால் - காண்டற்கரிய தன்மையால் அவர்க்கு உயர்ந்து , எரியாகிநின்ற , ஓங்கி அனலாகி நின்ற அத்தன்மையை . இறைபேசுமின் - பிரம்மா , விட்டுணு , உருத்திரனென்று உடனெண்ணப்படுகின்ற கடவுள் அவரினும் மிக்கோனாய் அழலாகிநின்றது ஏன் ?

பண் :கொல்லி

பாடல் எண் : 10

நமரெழுபிறப் பறுக்குமாந்தர்காள் நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற் கண்டியூருறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண் ஆதரோது மதுகொளா
தமரரானவ ரேத்தவந்தகன் தன்னைச்சூலத்தில் ஆய்ந்ததே.

பொழிப்புரை :

தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தவர்களின் ஏழு பிறப்புக்களையும் அறுக்கும் மெய்யடியார்களே ! உங்களை வினவு கின்றேன் . விடை கூறுவீர்களாக . பூமியில் வெடிப்பு ஏற்பட்டு வறட்சி உண்டாகாதவாறு குளிர்ந்த நீர் பாயும் வயல்கள் சூழ்ந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , தமது சமயத்தவர் பயனெய்தாது அழியும்படி இறைவனைச்சாரும் வழிகளை எடுத்துரைக்காத புத்தர் , சமணர்கள் உரைக்கும் உலகியல் அறங்களான கொல் லாமை , பரதுக்க துக்கம் இவற்றை மறுத்து , தேவர்கள் ஏத்த அந்தகாசுரனைச் சூலத்தால் குத்திக் கொன்றது ஏன் ?

குறிப்புரை :

நமர் - நம்மவர் . சுற்றத்தார் ஏழுபிறப்பு அறுக்கும் மாந்தர் காள் என்றது . ஒருவன் சிவஞானியாய் வீடு பேறு அடைவானாகில் அவனது இருபத்தொரு வமிசத்திலுள்ளவர்கட்கும் நரக மில்லை என்ற கருத்து . அது திருவாசகம் . ` மூவேழ்சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி ` என்பதனால் அறிக . ஈரேழுலகை ஏழுலகு என்பது போல வானவர் மக்கள் நரகர் ஆகிய ஒவ்வோர் வகையிலும் ஏழு பிறப்பு என்றுணர்க . கமர் - பூமி வெடிப்பு . நீர் பாய்வதால் அது அழிகின்றது . தமர் அழிந்து - தமது சமயத்தவர் பயனெய்தாது அழிய . அழிந்து வினையெச்சத்திரிபு . கொல்லாமையும் பரதுக்க துக்கமுமாகிய அவர்களின் கொள்கையை மறுத்து , அவர் தொழிலினும் தாழ்ந்ததாக அந்த காசுரனைச் சூலத்திற் குத்திக் கொன்றது தகுமா ?.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம் பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே.

பொழிப்புரை :

அன்பர்தம் கருத்தாக விளங்குபவனாய் , சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூர் வீரட்டானத்தில் பிறரால் காணப்பெறாது மறைந்திருந்து மனத்தைக் கவரும் கள்வனாய் , சொல்லின் பொருளாக இருக்கும் , அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழும் முறையில் சீகாழியில் அவதரித்த , இறைவனின் இயல்புகளை நன்கு உணர்ந்த ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஒருவராகத் தனித்தும் , பலராகச் சேர்ந்தும் ஓதவல்லவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர் .

குறிப்புரை :

கருத்தனை - ` மனத்துள் நின்ற கருத்தானை `. கள்வனை - மேற்கூறிய காரணங்களால் இத்தன்மையன் இறைவன் ஆகான் எனச் சைவம் சாரும் ஊழிலார் மறுக்கும் வண்ணம் , மறைந்து நிற்றலின் கள்வன் என்றார் . வினாவுரையாகிய சம்பந்தன் நிரப்பிய செந்தமிழ் பாடுவார் உயர்ந்தார்கள் . பதிகக் குறிப்பு : புத்தர் சைவத்திற் குறை கூறும் கூற்றுக்களையே வினாவாக வைத்து மணிவாசகப்பெருமான் , திருச்சாழலில் வினாவியதை ஒக்கும் இப்பதிகம் . அட்டவீரட்டத்தில் இத்தலம் அயனைச் சிரங்கொய்த தலம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவ னென்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

மான்போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே ! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே ! கேள் . ` பால்வடியும் நல்ல வாயையுடைய பாலன் ` என்று நீ இரக்கமடைய வேண்டா . திருஆலவாயரன் துணைநிற்பதால் ஆனை மலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும் , பல துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த இச்சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன் .

குறிப்புரை :

மானின் நேர்விழி - மருண்டு பார்க்குந்தன்மையால் மாதர்விழிக்கு மானின் விழி உவமை . மாதராய் - மாதராள் என்பதன் விளி . பானல்வாய் - ( பால் + நல் + வாய் - ) பால்வடியும் நல்ல வாயையுடைய . ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ . பரிவு - இரக்கம் . எய்திடேல் - அடையாதே . பல அல்லல் சேர் - பல துன்பங்களையும் பிறர்க்கு விளைவிக்கின்ற . பிற வினைதொக்கது . திருவாலவாய் அரன் துணை நிற்கையினால் எளியேன் அலேன் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

வேத ஆகமங்களையும் , மந்திரங்களையும் , நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய யானைபோல் திரிந்து நின்றுண்ணும் அழுக்கு மேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன் , திருஆலவாய் அரன்துணை நிற்பதால் .

குறிப்புரை :

பங்கமா ( க ) ( பக்கமாக ) புரிந்து எனக் கூட்டுக . சங்கதம் - சமஸ்கிருதம் என்பதன் திரிபு . பாகதம் - ப்ராகிருதம் என்பதன் சிதைவு . ( வடமொழி ) வடமொழியின் திரிபு ஆகியமொழி இரண்டாம் . எப்பொழுது வந்தாய் என்ற தொடரை எப்போவந்தே என்று பேசுவது போன்றது . பாகதத்தொடு இரைத்துரைத்த - பிராகிருத மொழியினால் ஆரவாரித்துச் சொல்லிய . சனங்கள் - வைதீகமாந்தர் . வெட்குறு - வெட்கமடையத்தக்க . பங்கம் ஆ - பங்கப்படவும் . வெட்குறுபக்கமாப் புரிந்து - பாகதத்தோடு இரைத்துரைத்தல் முதலிய செயல்களைச் செய்து . மா - பெரிய . கதம் - கோபத்தை உடைய . கரிபோல் , திரிந்து - செருக்குற்று . மாசு சேர் ஆகதர் - ஆர்கதர் என்பதன் திரிபு . நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்தலால் மாசு சேர் என்றார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

அத்தகுபொரு ளுண்டுமில்லையு மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி லழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது , இல்லை என்றும் சொல்ல முடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும் , ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று , எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர் . பார்ப்பவர் வெட்கப் படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திரவார்த்தை பேசுபவர்கட்கு , நான் ஆலவாயரன் துணைநிற்றலால் எளியேன் அல்லேன் .

குறிப்புரை :

அத்தகு பொருள் - கடவுள் என்ற பொருள் உண்டும் ஆம் இல்லையும் ஆம் . உண்டென்றும் சொல்லமுடியாது . இல்லையென்றும் சொல்லமுடியாது என்னும் அத்திநாத்தி , என்பது அவர்கள் மதக்கொள்கை . ஏத்தும் முன்பின் முரண்படச் சொல்லி , வாதில் அழிந்து தோற்றுக் கவிப்பெயரெச்சத்தின் மடிந்து . ஒடிந்து நக்கம் - நக்நம் என்ற வடசொல்லின் திரிபு . சித்திரர்க்கு - அழகென்று கொள்பவர்களுக்கு ( எளியேன் ஆகேன் .)

பண் :கொல்லி

பாடல் எண் : 4

சந்துசேனனு மிந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனு முதலதாகிய பெயர்கொளா
மந்திபோற்றிரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பய னறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

சந்துசேனன் , இந்து சேனன் , தருமசேனன் , மாசுடைய கந்தசேனன் , கனகசேனன் முதலான பெயர்களைக் கொண்டு மந்திபோல் திரிந்து , வடமொழி , தென்மொழிகளைக் கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள் , சைவமே சீரிய சமயநெறி என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன் . திருவாலவாயரன் என்னுள்ளிருந்து அருள்புரிவார் .

குறிப்புரை :

மந்தி - பெண் குரங்கு . ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் யாதெனின் , சிவனே முழுமுதற்கடவுள் எனவும் , சைவநெறியே சீரிய நெறியெனவும் ஆற்றல் அறியாததால் அகக் கண் இழந்தவர் . அந்தகர் - குருடர் . நெறி தெரியாது தியங்குதல் அவ்வழிச்சென்று இடர்ப்படல் உடைமை , குருடர் செயல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கூட்டினார்கிளி யின்விருத்த முரைத்ததோரொலி யின்றொழிற்
பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவரு மாடெலாங்கவர் கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு ஏற்ப , கிளிவிருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை மெய்யென்று சொல்லி ஏமாற்றுகிறவர்கட்கும் , பல தருமங்களைச் செய்தவர்களாக வெளியில் காட்டி அவற்றால் வரும் செல்வங்களைக்கவரும் கீழோர் கட்கும் இரக்கமில்லாத குறும்பர்கட்கும் யான் எளியேனல்லேன் . திருவாலவாயரன் என்றும் நின்று அருள்புரிவார் .

குறிப்புரை :

கிளிவிருத்தம் , எலி விருத்தம் முதலிய சுவடிகளை . மெய் சொலி - மெய்யென்று சொல்லி . பக்கம் - ஓரமான வழியே செல்லுகின்ற எக்கர் பல அறம் காட்டி வரும் மாடு எலாம் கவர்கையர் - பல தருமங்களும் செய்தவர்களாக வெளிக்குக்காட்டி அதனால் வரும்நிரைப் பொருள்களை எல்லாம் கவர்கின்றவர் . கசிவு - மன இரக்கம் . ஒன்று இலா சிறிதும் இல்லாத . சேட்டை - மூதேவி , குறும்பு . எக்கர் தங்களை . கையரை என்பதில் உள்ள இரண்டனுருபுகள் நான்கன் பொருளில் வந்ததனால் வேற்றுமை மயக்கம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந் திவணநந்தியு மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ மேதவம்புரி வோமெனும்
சினகருக்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

கனகநந்தி , புட்பநந்தி , பவணநந்தி , குமண மாசுனகநந்தி , குனகநந்தி , திவணநந்தி என எண்ணற்ற பலவகை நந்திகள் என்னும் பெயர் கொண்டவர்களாய் மது உண்பதை ஒழித்து , அவமாகிய நிலையைத் தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன் , திருவாலவாயரன் என்னுள் நிற்பதால் .

குறிப்புரை :

மொழி - நமது உபதேச மொழிகளைக் கொள்ளாத . சினகர் - ஜினனே கடவுளென்னும் கொள்கையுடைய .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பந்தணம்மவை யொன்றிலம்பரி வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயரனிற்கவே.

பொழிப்புரை :

சுற்றமும் , பற்றும் இல்லை என்று கூறியும் , இரகசியமான வாசகங்களைப் பேசியும் , குற்றமற்ற ஒழுங்கு நெறியின்றியும் , நியாயமற்ற நெறிநின்று , ஆருகதசமயத்தின்கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் சமணர்கட்கும் , புத்த சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் புத்தர்கட்கும் , அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும் ஆலவாயரன் என்றும் துணை நிற்றலால் , யான் எளியவன் அல்லேன் .

குறிப்புரை :

பந்தணம் - பந்தணைகள் . ஒன்று இலம் - சிறிதும் இல்லோம் , பரிவு - ஆசை - வாசகமந்தணம் . இரகசியமான வாசகங்களை . சீர்மை - ஒழுங்கு . ( அநாயமே . அந்தணம் ). அருகந்தணம் அது - ஆருகத சமயத்தின் கொள்கை அத்தகையது . புத்தனம் அது - பௌத்த சமயத்தின் கொள்கை அத்தகையது . சித்தனம் - சித்தர் தன்மை . ` அருக்கரிலிருத்தி பெற்றோர் ` என்பது சூடாமணி நிகண்டு .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மேலெனக்கெதி ரில்லையென்ற வரக்கனார் மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி நடுக்கியேபிறர் பின்செலும்
சீலிகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

தனக்கு மேலானவரும் , எதிரானவரும் இல்லை என்று கருதிய இராவணனது செருக்கை அழித்த , தீயைப்போன்று செந்நிற மேனியுடைய சிவபெருமானைப் பணிந்து , ஏத்தாது , பொய்த்தவம் பூண்டு , குண்டிகை , மயிற்பீலி ஆகியவற்றைக் கொண்டு , பாயை அக்குளில் இடுக்கி நடந்து செல்லுங்கால் சிற்றுயிர்க்கு ஊறுநேருமோ என அஞ்சி நடுக்கத்துடன் ஒருவர்பின் ஒருவராய்ச் செல்வதைச் சீலம் எனக்கொள்ளும் சமணர்கட்கு , யான் , திருவாலவாயரன் என்னுள்துணை நிற்றலால் எளியவனல்லேன் .

குறிப்புரை :

அரக்கனார் , இகழ்ச்சிக் குறிப்பு . தீப்போலி - தீப் போன்றவன் . அழலுருவன் . நிறத்தில் அழல்போலினும் அருளில் நீர் போல்பவன் என்பார் தீ என்னாது தீப்போலி என்றார் . பணியக்கிலாது . ககரம் விரித்தல் விகாரம் . குண்டிகை ...... சீலிகள் - சமணர் இயல்பைக் குறித்தது . சீலம் - ஒழுக்கம் ; சீலி - ஒழுக்க முடையோன் . வழியில் எறும்பு முதலிய சிற்றுயிர்கட்கும் ஊறுபடாது நடப்பார் போன்று மயில் ( பீலி ) தோகையால் நிலம் கூட்டி மிதித்துச் செல்வர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பூமகற்கு மரிக்குமோர்வரு புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போறலை யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் அறியவொண்ணாத புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது , இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக் களைந்து , பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி , பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன் , திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால் .

குறிப்புரை :

பூமகன் - பிரமன் . ஓர்வு அரு - நினைத்தற்கும் அரிய. சாம் அவத்தையினார் - இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்யும் நிலையுடையோர் . அவத்தை - நிலைமை . வேம் - வருத்துகின்ற , பிறவினை விகுதி குன்றி நின்றது . மெய் - உடம்பில் . பொடி அட்டி - நீராடாமையால் புழுதி படிந்து வாய் சகதிக்கு நிகர் ஆவார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

தங்களுக்குமச் சாக்கியர்க்குந் தரிப்பொணாதநற் சேவடி
எங்கணாயக னேத்தொழிந்திடுக் கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

சமணர்கட்கும் , புத்தர்கட்கும் அரியவராகிய , நல்ல சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய சிவ பெருமானை வழிபடுதலைவிட்டு , பொய்த்தவம் பூண்டு , நல்ல நூல்கள் கூறும் வழியும் நில்லாது அறிஞர்களைப் பொல்லாப் பழிச்சொல் பேசுபவர்கட்கு , யான் திருவாலவாயரன் என்னுள் நிற்பதால் எளியேன் அல்லேன் .

குறிப்புரை :

ஏத்து ஒழிந்து - ஏத்துதலை நீங்கி . ஏத்தாமல் , இடுக்கு மடுத்துத் துன்புறுத்துதலையே பொருந்தி . வாய்த்தவம் .... பழிக்கும் - நூல் வழியில்லாமலே ஒரு பொய்த்தவம் நாட்டி அறிஞரைப் பழிக்கின்ற . புலம் - அறிவு . புலவோர் - அறிஞர் , அங்கதர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

எக்கராமமண் கையருக்கெளி யேனலேன்றிரு வாலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங் கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ் நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்து முரைப்பவர்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில் இருத்தலால் , செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று பாண்டிய மன்னன் முன்னிலையில் திருப்புகலியில் அவதரித்த தமிழ்நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

சொக்கன் - கண்டார் மயங்கி விழும்படியான பேரழகுடையவன் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

கல்லானீழல் , அல்லாத்தேவை
நல்லார்பேணார் , அல்லோநாமே.

பொழிப்புரை :

கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கட்கு அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிறிதொரு தெய்வத்தை மெய்யுணர்ந்த ஞானிகள் பொருளாகக் கொள்ளார் . நாமும் அவ்வாறே சிவனையன்றி வேறு தெய்வத்தை வழிபடோம் .

குறிப்புரை :

கல்லால் நீழல் அல்லாத்தேவை - கல்லாலின் நிழலின் இருக்கும் தெய்வமாகிய சிவம் அல்லாத பிறிதொரு தெய்வத்தை . நல்லார் - மெய்யுணர்ந்த ஞானிகள் . பேணார் - பொருளாகக் கொள்ளார் . ( ஆகையால் ) நாமும் அல்லோம் - நாங்களும் அவற்றைப் பொருட்படுத்தோம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கொன்றைசூடி , நின்றதேவை
அன்றியொன்று , நன்றிலோமே.

பொழிப்புரை :

கொன்றை மலரைச் சூடிவிளங்கும் சிவபெருமானை அன்றி , பிறிதொரு தெய்வம் முக்திச் செல்வம் தருவதாக நாம் கருதோம் .

குறிப்புரை :

நன்று இலோம் - நன்மை தரும் பொருளாகக் கொள்ளுதல் இலோம் . இல்லோம் - கொள்ளோம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கல்லாநெஞ்சின் , நில்லானீசன்
சொல்லாதாரோ , டல்லோநாமே.

பொழிப்புரை :

இறைவனை இடைவிடாது தியானிக்காதவர் உள்ளத்தில் அவன் நில்லான் . ஆதலால் அப்பெருமானின் பெருமைகளைப் போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம் .

குறிப்புரை :

கல்லாநெஞ்சில் - இடைவிடாது தியானிக்காத உள்ளத்தில் . நில்லான் ஆதலால் திருநாமம் அஞ்செழுத்தும் செப்புதல் , அவர் திறம் ஒருதரமேனும் சொல்லாதவரோடு நாங்களும் சேரோம் என்பது பின்னிரண்டடிகளின் கருத்து . ` இன்னீரமிர்தன்னவள் கண்ணிணை மாரிகற்ப ` என்ற சிந்தாமணியின் உரையால் இப்பொருள் கொள்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

கூற்றுதைத்த , நீற்றினானைப்
போற்றுவார்கள் , தோற்றினாரே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த கூற்றுவனைத் தன் திருப்பாதத்தால் உதைத்த , தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள சிவபெருமானைப் போற்றுபவர்களே பிறந்ததன் பயனை அடைவர் .

குறிப்புரை :

தோற்றினார் - பிறந்த பயன் எய்துவர் . ` தோன்றிற் புகழொடு தோன்றுக ` - ( திருக்குறள் ) என்பதனோடு ஒப்பிடுக .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

காட்டுளாடும் , பாட்டுளானை
நாட்டுளாரும் , தேட்டுளாரே.

பொழிப்புரை :

சுடுகாட்டில் நடனம் ஆடும் இறைவன் அடியாரேத்தும் பாமாலையை உடையவன் . சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று தம் உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்களே பேரின்பச் செல்வத்தில் திளைப்பவர்கள் .

குறிப்புரை :

பாட்டு உள்ளானை - அடியாரேத்தும் பாமாலையை உடையவன் . நாட்டு - அவனே முதற்பொருளென்று நாட்டிய . உள் - ( தம் ) உள்ளத்தில் . ஆரும் - திளைக்கின்ற . தேட்டு - செல்வம் . உளாரே - உள்ளவர்களே ; செல்வர் எனத் தக்கவர் என்பது அவாய் நிலையான் வந்தது . ` செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே ` என்ற கருத்து . ஆடும் என்ற பெயரெச்சம் உள்ளான் என்ற பெயர் கொண்டது . ஆர்தல் - திளைத்தல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

தக்கன்வேள்விப் , பொக்கந்தீர்த்த
மிக்கதேவர் , பக்கத்தோமே.

பொழிப்புரை :

முழுமுதற்பொருளான சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியின் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும் , அருளுமுடைய சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் யாம் உள்ளோம் .

குறிப்புரை :

பொக்கம் - பொய் . வேள்விப் பொக்கம் - போலி வேள்வி , தீர்த்த - பற்றற ஒழித்த . மிக்கதேவர் . பக்கத்தோம் - அணுக்கத் தொண்டராயுள்ளோம் . தீர்த்த - இப்பொருட்டாதலைப் பின்வரும் 8 ஆம் பாசுரத்தினும் காண்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பெண்ணாணாய , விண்ணோர்கோவை
நண்ணாதாரை , எண்ணோநாமே.

பொழிப்புரை :

பெண்ணாகவும் , ஆணாகவும் ஆகி தேவர்கள் போற்றும் தலைவரான சிவபெருமானை மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும் நினைப்பதில்லை .

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :கொல்லி

பாடல் எண் : 8

தூர்த்தன்வீரம் , தீர்த்தகோவை
ஆத்தமாக , ஏத்தினோமே.

பொழிப்புரை :

துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து , பின் அவன் தன் தவறுணர்ந்து சாமகானம்பாடி இறைஞ்ச அவனுக்கு ஒளி பொருந்திய வாளும் , நீண்ட வாழ்நாளும் அருளிய இறைவனை நாம் விரும்பிப் போற்றி வணங்கினோம் .

குறிப்புரை :

தூர்த்தன் - இராவணன் . ஆத்தம் - நண்பன் . பண்பாகு பெயர் . ` ஆத்தமென்றெனை ஆளவல்லானை ` - ஆளுடைய நம்பிகள் வாக்கு .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பூவினானும் , தாவினானும்
நாவினாலும் , நோவினாரே.

பொழிப்புரை :

தாமரைப்பூவின்மேல் வீற்றிருந்தருளும் பிரமனும் உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும் , இறைவனின் திருமுடியையும் , திருவடியையும் உடல்வருந்தித் தேடியும் காணாதவர்களாய்ப் பின்னர் நாவால் அவனைப் போற்றி உருகிநின்றனர் .

குறிப்புரை :

தாவினான் - உலகம் அளந்தவன் .- ` திருமால் அடியளந்தான் தாஅயதெல்லாம் ` என்ற திருக்குறளில் இப்பொருள் காண்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

மொட்டமணர் , கட்டர்தேரர்
பிட்டர்சொல்லை , விட்டுளோமே.

பொழிப்புரை :

தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன் விளங்கும் சமணர்களும் , கட்டான உடலமைப்புடைய புத்தர்களும் , சைவசமய நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக் கொள்ளாது விட்டோம் .

குறிப்புரை :

மொட்டு - பூ . அரும்பு - அதுபோன்ற தலையுடைமையின் மொட்டமணர் என்றார் . கட்டர் - துன்புறுத்துவோர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

அந்தண்காழிப் , பந்தன்சொல்லைச்
சிந்தைசெய்வோர் , உய்ந்துளோரே.

பொழிப்புரை :

அழகிய குளிர்ச்சி பொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சிந்தனை செய்து பாடுபவர்கள் உய்தி பெற்றவர்களாவர் .

குறிப்புரை :

அந்தண்காழி - அழகிய குளிர்ந்த காழி . பந்தன் - ஞானசம்பந்தன் ஒருபுடைப்பெயர் கொளல் எனும் வடமொழி யிலக்கணம் பற்றி .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

கருவார்கச்சித் , திருவேகம்பத்
தொருவாவென்ன , மருவாவினையே.

பொழிப்புரை :

யாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானைப் போற்றி வணங்க வினைவந்து சாராது .

குறிப்புரை :

கரு - கர்ப்பம் ..... ஏக ஆம்பரம் - ஏகம்பம் என மரீஇயிற்று . ஒற்றை மாமரத்தினடி , கோயிலின் பெயர் . வினை - வினைகள் , பால்பகா அஃறிணைப்பெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

மதியார்கச்சி , நதியேகம்பம்
விதியாலேத்தப் , பதியாவாரே.

பொழிப்புரை :

மதி தவழும் மாடங்களையுடைய கச்சியில் கம்பை நதியின் கரையில் விளங்குகின்ற திருவேகம்பத்தைச் சிவாகம விதிப்படி அன்பர்கள் போற்றி வணங்கச் சிவகணங்களுக்குத் தலைமையாய் விளங்குவார்கள் .

குறிப்புரை :

மதி ஆர்கச்சி - மதி தவழும் மாடங்களையுடைய கச்சி .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கலியார்கச்சி , மலியேகம்பம்
பலியாற்போற்ற , நலியாவினையே.

பொழிப்புரை :

விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எப்பொழுதும் விளங்கும் கச்சியில் வீற்றிருந்தருளுகின்ற திருவேகம்பநாதரைப் பூசைக்குரிய பொருள்களைக் கொண்டு பூசை செய்து போற்றி வழிபடத் தீவினையால் வரும் துன்பம் இல்லை .

குறிப்புரை :

கலி ஆர் - ஓசைமிக்குடைய கச்சி , இதனை ` மலி தேரான் ` என்ற தண்டியலங்கார உதாரணச் செய்யுளாலும் , பெரிய புராணத்தாலும் அறியலாம் . பலி - பூசைக்குரிய பொருள் ; காரிய ஆகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

வரமார்கச்சிப் , புரமேகம்பம்
பரவாவேத்த , விரவாவினையே.

பொழிப்புரை :

தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை நல்கும் தெய்வத்தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும் . இத்திருத்தலத்தில் திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற வினை தொடராது நீங்கும் .

குறிப்புரை :

பரவா - பரவி , துதித்து . உடன்பாட்டு வினையெச்சம் . கச்சிப்புரம் - காஞ்சிபுரம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

படமார்கச்சி , இடமேகம்பத்
துடையாயென்ன , அடையாவினையே.

பொழிப்புரை :

சித்திர வேலைப்பாடுகளையுடைய அழகிய கச்சியை இடமாகக் கொண்டு திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் எங்கள் தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது .

குறிப்புரை :

படம் - மாடங்களில் ஆடும் கொடியினையுடைய . உடையாய் - தலைவனே . என்ன வினை அடையா .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

நலமார்கச்சி , நிலவேகம்பம்
குலவாவேத்தக் , கலவாவினையே.

பொழிப்புரை :

நலம் தரும் கச்சிநகரில் விளங்குகின்ற திருவேகம்பத்தை அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை நீங்கும் .

குறிப்புரை :

நிலவு - விளங்குகின்ற . குலம் ஆக . குலவா - குலவி .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

கரியின்னுரியன் , திருவேகம்பன்
பெரியபுரமூன் , றெரிசெய்தானே.

பொழிப்புரை :

யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட இறைவனான திருவேகம்பப் பெருமான் , தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்கள் வாழ்ந்த மூன்றுபுரங்களையும் எரியுண்ணும்படி செய்தார் .

குறிப்புரை :

பெரியபுரம் - தீமை செய்தலிற் பெரியதாகிய திரிபுரம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

இலங்கையரசைத் , துலங்கவூன்றும்
நலங்கொள்கம்பன் , இலங்குசரணே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணனைக் கயிலை மலையின் கீழ் நெரியுமாறு காற்பெருவிரலை ஊன்றி , அவன் நலத்தை அழித்த திருவேகம்பன் திருவடியைச் சரணடைதலே ஒளிமிக்க வாழ்விற்குரிய வழியாகும் .

குறிப்புரை :

துலங்க - அவன் வலி இது என்பது அனைவருக்கும் விளங்க . கம்பன் - ஏகம்பன் என்பதன் ஒருபுடைப்பெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

மறையோனரியும் , அறியாவனலன்
நெறியேகம்பம் , குறியாற்றொழுமே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் அறியமுடியாத வண்ணம் நெருப்பு மலையாய் நின்ற சிவபெருமான் கச்சியில் திருவேகம்ப நாதராக நெறியாகவும் , போற்றித்தொழப் பெறும் குறியாகவும் உள்ளார் .

குறிப்புரை :

( அறியா ) அனலன் - நெருப்பாகி நின்றவன் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

பறியாத்தேரர் , நெறியில்கச்சிச்
செறிகொள்கம்பம் , குறுகுவோமே.

பொழிப்புரை :

தலைமயிர் பறியாத புத்தர்களும் , அது பறிக்கப் பட்ட சமணர்களும் கூறும் நெறியில் அமையாது , கச்சியில் ஞானம் பெருகும் திருவேகம்பநாதனின் திருக்கோயிலை அடைந்து வழி படுவோமாக .

குறிப்புரை :

பறியாத் தேரர் - தலைமயிர் பறியாத புத்தர் ; என்ற இலேசானே அது பறிக்கப்பட்ட சமணரும் கூறியதாயிற்றாம் . நெறியில் - அவர்கள் வழியிற் சேர்தலில்லாத . கம்பம் - கோயில்.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

கொச்சைவேந்தன், கச்சிக்கம்பம்
மெச்சுஞ்சொல்லை, நச்சும்புகழே.

பொழிப்புரை :

கொச்சைவயம் என்னும் திருப்பெயருடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் திருக்கச்சியேகம்பத்தைப் போற்றிப்பாடிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் நிலைத்த புகழுடன் விளங்குவார்கள் .

குறிப்புரை :

கொச்சை - கொச்சைவயம் , சீகாழி . மெச்சும் சொல்லை - வியந்து பாடிய இப்பதிகத்தை . நச்சும் புகழ் - புகழ் விரும்பும் ; என்றது இப்பதிகத்தைப் பாடவல்லார்க்குப் புகழ் முதலிய மேன்மைகள் தாமாகவே விரும்பி வந்தடையும் என்பதாம் . புகழ் - உபலட்சணம் .

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 1

நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலா மேத்தநின்ற பெருமானே.

பொழிப்புரை :

வெண்மையான முழுநிலவு போன்று ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, நடனம் புரிகின்ற இயல் புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பசுமையான சோலைகளும், வயல்களும் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவர் உலகமெல்லாம் ஏத்திப் போற்றுகின்ற சிவபெருமானே ஆவர்.

குறிப்புரை :

நிறைவெண் திங்கள் - பூரணசந்திரன். அதுபோலும் வாள் (ஒளி) முகம். மாதர்பாட. குறைவெண்திங்கள் சூடி - பிறையை அணிந்து. மேய - விரும்பிய. பொழிலும் பழனமும் சூழ்ந்த சிற்றேமம். குறை வெண் திங்கள் சூடியதாதலின், நிறைவெண் திங்கள் முகத்தர் பாடலை விரும்பினான். முகமாதர் - உமாதேவியார். மேல்வரும் எல்லாப் பாடலிலும் இதைக் காண்க. சிற்றேமத்தானே இறைவன் என்றும், உலகம் ஏத்த நின்றபெருமான் என்றும், ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 2

மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ ராடன்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேம மேவினான்
ஆகத்தேர்கொ ளாமையைப் பூண்டவண்ண லல்லனே. 

பொழிப்புரை :

ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்று ஒளியுடைய முகத்தையுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச்சந்திரனைச் சூடிப் பண்டரங்கம் என்னும் கூத்தாடும் இறைவர், மேகம் திகழும் சோலைசூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந் தருளுகின்றார். அப்பெருமான் திருமார்பில் ஆமை ஓட்டினை ஆபரணமாகப் பூண்ட அண்ணலான சிவபெருமான் அல்லரோ?

குறிப்புரை :

மாகம் - ஆகாயம். பாகம் - ஒரு பகுதி. (ஒரு கலைத் திங்கள்) பண்டங்கன் - பாண்டரங்கம் என்னும் ஒரு கூத்தை விரும்பி ஆடியவன். மிடை - (வளம்) மிகுந்த. ஆகத்து - மார்பில். ஏர் - அழகு. இடை ஒன்பது பாட்டிலும் முடிவு ஒன்றாயிற்று.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 3

நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவு ளல்லனே.

பொழிப்புரை :

வெண்ணிறப் பூரண சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி நடனம் செய்கின்ற பெருமானாய், வண்டுகள் யாழ்போன்று ஒலி செய்யப் பசுமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவன் கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளான சிவபெருமான் அல்லனோ?

குறிப்புரை :

தன் நிலவை உலகெலாம் விரித்தலால் நெடியதாகிய வெண்திங்கள். கொடு - வளைந்த. கடுவெம் கூற்று - மிகக் கொடிய கூற்றுவன். கடு என்பது - மிகுதியைக் குறிக்கும் கடியென்ற உரிச் சொல்லின் திரிபு. சிவனடியார்மேற் சென்றமை கருதிக் கடுவெங்கூற்று எனப்பட்டான்.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 4

கதிரார் திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ ராடன்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை எழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்க ணேறுடை யாதிமூர்த்தி யல்லனே. 

பொழிப்புரை :

கதிர்வீசும் சந்திரனைப் போன்ற ஒளிபொருந்திய முகம்கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சூடி, ஆடுகின்ற முக்கண்ணர் ஆவார். அவர் கங்கையும், சடைமுடியும் கொண்டவராய் அழகுடைய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர், கழுத்தில் கட்டிய சதங்கைமணி ஒலிக்கும், பசிய கண்களையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்ட ஆதிமூர்த்தி அல்லரோ?

குறிப்புரை :

முதிரார் திங்கள் - முதிராத் திங்கள் என்று பாடமிருக்க வேண்டும். இளம்பிறைச் சந்திரன் என்று அப்பொருள் கோடலுக்கு. இனி இப்பாடத்துக்கு முதிர் - முதிர்தல். ஆர் - நிறைந்துவிட்ட. இனி முதிர்தலில்லாத இன்னும் பிறைச் சந்திரனாகவேயுள்ள, திங்கள் என்று பொருள் கொள்ளல் தகும். எதிர் ஆர்புனல் அம்புன்சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் - அலைமோதும் எதிரொலியையுடைய (கங்கை) நீரைத் தாங்கிய அழகிய சிறிய சடையின் அழகு பொருந்திய சிற்றேமத்துக் கடவுள். அதிர்தல் (சதங்கை மணி முதலியவற்றால்) ஒலித்தல். ஆர் - பொருந்திய. பைங்கண் ஏறு - பசிய கண்களையுடைய விடை.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 5

வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்தமைந்த னல்லனே. 

பொழிப்புரை :

வானில் விளங்கும் சந்திரனைப் போன்று ஒளிபொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணோடு பாட, நீண்ட சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்பவனாய்ப் பூக்களிலுள்ள தேனை அருந்திய வண்டு இசைபாடுகின்ற அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளும் இறைவன், மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் வீரமுடைய சிவபெருமான் அல்லரோ?

குறிப்புரை :

கூன் ஆர் திங்கள் - கூன்பொருந்திய திங்கள். திருஆரும் - சிறப்புப் பொருந்திய, சிற்றேமம். அந்த ஆடலுக்கு அம்பிகாஜத்ய நடனம் என்று பெயர். மான்போன்ற விழியையுடைய அகிலாண்டேசுவரியென்னும் அம்மையோடும் பொன்வைத்தநாகனெனப் பெயர்பூண்டு இங்குத் திருச்சிற்றேமத்திலெழுந்தருளிய இறைவன் முன்பு சிவகாமசுந்தரியார் பாட நடனமாடிய கொள்கையன் அல்லனோ?என இப்பாடலுக்குப் பொருள் கூறுக.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 6

பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமம்சூழ்சிற் றேமத்தான்
முனிவு மூப்புநீக்கிய முக்கண்மூர்த்தி யல்லனே. 

பொழிப்புரை :

குளிர்ந்த வெண்ணிலவைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப் பாட, சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி ஆடல்புரிகின்றவர் இறைவர். அவர் ஒற்றை வெள் இடபத்தை வாகனமாகக் கொண்டு, பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் விருப்பு வெறுப்பு அற்றவராய், மூப்பினை அடையப்பெறாதவரான முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அல்லரோ?

குறிப்புரை :

மேய - மேவிய. தனி - ஒப்பற்ற. புள்ளினத்தாமம் - மாலைபோற் பறக்கும் பறவைக்கூட்டம். முனிவும் மூப்பும் நீக்கிய முக்கண் மூர்த்தி. முனிவு - வெறுப்பு (விருப்பும், நீங்கிய \\\\\\\"ஆசை முனிவு இகந் துயர்ந்த அற்புதமூர்த்தி\\\\\\\" என்றார் பிறரும்) மூப்பும், உபலக்கணத்தால், நரை, திரை சாக்காடும் கொள்க.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 7

கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ ராடன்மேய மாதவன்
தளிருங்கொம்பு மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூன் மார்பனென் உள்ளத்துள்ளான் அல்லனே.

பொழிப்புரை :

கிளர்ந்து எழுந்த பூரண சந்திரனைப் போன்று ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, குறைவிலாது வளரும் தன்மையுடைய பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் இறைவர், தளிரும், கொம்புகளும், தேன் துளிக்கும் மலர்மாலைகளும் சூழ விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமான் ஒளிரும் முப்புரிநூலை அணிந்த திருமார்பினராய் என் உள்ளத்திலுள்ளவர் அல்லரோ?

குறிப்புரை :

வளரும் திங்கள் - தன்மை மாத்திரை கூறியது. வளராத திங்கள் ஆதலால் இளம் திங்கள் என்றபடி.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 8

சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ ராடன்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் றடவரையைத்தன் றாளினால்
ஆழ்ந்தவரக்க னொல்கவன் றடர்த்தவண்ண லல்லனே. 

பொழிப்புரை :

சந்திரனைப் போன்று ஒளியுடைய முகம் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், வயல்வளமிக்க திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தம்காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அரக்கனான இராவணன் நெருக்குண்ணும்படி அன்று அடர்த்த அண்ணல் அல்லரோ?

குறிப்புரை :

போழ்ந்த - போழ்ந்தாலனைய. \\\"குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாயிக் கொடியிடை\\\" என்பதுபோல. தாழ்ந்த பள்ளமான வயல், தாள் முயற்சியினால், \\\"வாளுழந்ததன் தாள் வாழ்த்தி\\\" என்பது மதுரைக் காஞ்சி. \\\"தாளுளான் தாமரையினாள்\\\" என்பது திருக்குறள்.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 9

தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தா னலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வ னல்லனே.

பொழிப்புரை :

ஒப்பற்ற வெண்ணிறச் சந்திரன் போன்று ஒளிரும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசையோடு பாட, தாழ்ந்த சடையில் இளம்பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்கின்ற மிகப் பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், நீலரத்தினம் போன்ற நிறமுடைய திருமாலும் காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வர் அல்லரோ?

குறிப்புரை :

தனி - ஒப்பற்ற. தணி என்று பாடமாயின் - குளிர்ந்த என்று பொருள் கொள்ளலாம். துணி - துண்டம். துண்ட வெண்பிறை (நிறைமதியின் ஒரு துண்டம்) மணி - நீல ரத்தினம். \\\"மழுவாட் செல்வர்\\\" என்பர் அப்பர் சுவாமிகள்.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 10

வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடன்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தா னுருவார்புத்த ரொப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே. 

பொழிப்புரை :

வெண்ணிறச் சந்திரன் போன்ற ஒளி திகழும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, திருநடனம் செய்யும் இறைவன் விரும்பி வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான் புத்தர், சமணர் ஆகியோர்களைப் படைத்தும், அவர்கட்குத் தோன்றாதவாறு மறைந்தும் விளங்குபவர்.

குறிப்புரை :

ஒப்பில்லாக் கள்ளத்தார் - என்றது சமணரை.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 11

கல்லிலோத மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலுஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவா ரல்லலின்றி வாழ்வரே. 

பொழிப்புரை :

கற்களால் ஆகிய மதிலில் கடல்அலைகள் மல்கும், குளிர்ந்த கடற்கரைச் சோலைசூழ்ந்த சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருச்சிற்றேமத்தைப் போற்றி நல்ல இன்தமிழில் அருளிய சிறப்புடைய இப்பாடல்களை நாவினால் ஓதவல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள்.

குறிப்புரை :

கல்லில் - கற்சுவரால் ஆகிய மதிலில். ஓதம் - கடல் அலைகள் மல்கும். தண்கானல் சூழ்ந்த - குளிர்ந்த கடற்கரைச் சோலை சூழ்ந்த, காழியான். சீர்காழி வரையின் கீழ்ப்பால் நெய்தல் நிலமும் ஏனைய மருத நிலமும் உள்ளமையின் சில பாசுரங்களில் நெய்தல் நிலமாகவும், சிலவற்றில் மருதநிலமாகவும், சிலவற்றில் இவ்விரு நிலமாகவும் ஆளுடையபிள்ளையார் அருளிச்செய்தனர். அவற்றில் திருக்கடைக்காப்பு நெய்தல் நிலவருணனை. கல் - கற்சுவருக்கு ஆகி அது மதிலைக் குறித்தலால் இரு மடியாகு பெயர். \\\\\\\\\\\\\\\"கல்நடந்த மதிற் பிரமபுரத்துறையும் காவலனை\\\\\\\\\\\\\\\" என்ற திருப்பாடலிலும் இக்கருத்துக் காண்க. கல் நடந்த என்ற சொல்லில் பிற வினை விகுதி குன்றியதாகி, எடுத்த என்று பொருள் கொள்ளுதல் முறை. குறிப்புரை (தி.2. ப.40. பா.11) நோக்குக.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

சந்த மார்முலை யாடன கூறனார்
வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே

பொழிப்புரை :

இறைவர் அழகிய திருமுலைகளையுடைய உமாதேவியாரைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . வெந்த திருவெண்ணீற்றினைப் பூசிய திருமேனி உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியுள் வீற்றிருந்தருளிய என் தந்தையாராகிய சிவபெருமானின் திருவடிகள் என் மனத்தில் நன்கு பதிந்துள்ளன .

குறிப்புரை :

முலையாள் தனகூறனார் ; தன - தன்னதாகிய . இது குறிப்புப் பெயரெச்சம் . கந்தம் - நறுமணம் . ஈற்றடி , திருக்காளத்தி முதற் பாட்டின் ( தி .3 ப .36. பா .1.) ஈற்றடியிலும் சிறிது மாறி வருகிறது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத்
தேனி டங்கொளுந் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டெ னுச்சியி னிற்பரே.

பொழிப்புரை :

மானை இடக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் நீண்ட சிவந்த சடைமுடியின்மீது , தேன் துளிக்கும் கொன்றைமாலையை அணிந்தவர் . நறுமணம் திகழும் குளிர்ந்த வயல்களையுடைய சீகாழியில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் இந்த உடலை இடமாகக் கொண்டு எனது உச்சியில் நிற்பர் .

குறிப்புரை :

வரம்புகளில் மலர்ந்த தாமரை முதலிய மலர்களின் மணம் பரவுவதால் கானிடம் கொளும் தண்வயல் காழி என்றார் . கான் - வாசனை . மானிடங்கொண்டு - மானை இடப்பக்கத்தில் ஏந்தி . ஊன் - உடம்பு . இடங்கொண்டு என்பது . ` எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் ` என்ற திருவாசகத்திலும் காண்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளர வாட்டும் படிறனார்
கைகொண் மான்மறி யார்கடற் காழியுள்
ஐய னந்தணர் போற்ற இருக்குமே.

பொழிப்புரை :

நஞ்சுண்டதால் மை போன்ற கறுத்த கண்டத்தை உடையவரும் , வானில் விளங்கும் சந்திரனைச் சடைமுடியில் சூடி , படமெடுத்தாடும் பாம்பினை ஆட்டும் படிறரும் , இளமான்கன்றை இடக்கரத்தில் ஏந்தியுள்ள தலைவருமான சிவபெருமான் , அந்தணர்கள் போற்றக் கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பை - படம் , அரவு ஆட்டும் , படிறனார் ; வஞ்சகர் , அரவு ஆட்டும் . மான்மறி - மான்கன்று . மை - கருமைநிறம் , கண்டத்தர் சென்னியர் , படிறனார் , மான்மறியார் . குறிப்பு :- இன்னதெனத் தோற்றாமையால் படிறனார் என்றார் . அதன் கருத்து இத்திருமுறை ( தி .3 ப .107. பா .10.) காண்க . தலைவனாய் முனிவர் போற்ற இருப்பர் என முடிக்க . ஒருமை பன்மை மயக்கம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

புற்றி னாகமும் பூளையும் வன்னியுங்
கற்றை வார்சடை வைத்தவர் காழியுட்
பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல்
உற்ற போதுட னேத்தி யுணருமே.

பொழிப்புரை :

புற்றில் வாழும் பாம்பையும் , தும்பைப்பூ மாலையையும் , வன்னிப் பத்திரத்தையும் தமது கற்றையான நீண்ட சடைமேல் அணிந்து , சீகாழியில் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின் பொன்போன்ற திருவடிகளைச் சமயம் நேர்ந்தபொழுது தாமதியாது உடனே துதித்துத் தியானித்து அவனருளை உணர்வீர்களாக .

குறிப்புரை :

பாம்பும் , பூளைப்பூவும் , வன்னிப்பத்திரமும் சடையில் , வைத்தவர் - அணிந்தவர் , வைத்தல் - அணிதல் . ` மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் ` என்று திருப்புகழிலும் வருகிறது . உற்றபோது - அமயம் நேர்ந்தபோது , உடனே ( தாமதியாது ). ஏத்தி - துதித்து . உணரும் - தியானித்திருங்கள் . உணரும் - ஏவற்பன்மை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

நலியுங் குற்றமு நம்முட னோய்வினை
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே.

பொழிப்புரை :

நம் மனத்தை வருத்தும் குற்றங்களும் , தீவினைகளால் நம் உடலை வருத்தும் நோய்களும் , மெலிந்து விலக விரும்புவீர்களாயின் , கையால் வேள்வி வளர்த்துக் கொடிய கலியினால் ஏற்படும் துன்பத்தை ஓட்டும் அந்தணர்கள் வாழ்கின்ற கடல்சூழ்ந்த சீகாழியில் , அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய செஞ்சடையானாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

நலியும் நமது மனத்தைப்பற்றி வருத்துகின்ற , குற்றமும் கவலைகளும் நம் உடல் ( நலியும் ). நோய்வினை - நம் உடலைப்பற்றி வருத்துகின்ற பிணிகளாகிய தீவினைகளும் . மெலியும் - மெலிந்தொழியும் . ஆறு அது - அந்தவழியை வேண்டுதிரேல் , வெய்யகலி கடிந்த கையார் - கையாற் செய்யும் வேள்வி முதலியவற்றால் உலகில் துன்பம் வாராது ஓட்டிய அந்தணர்கள் வாழும் , கடற்காழி என்றது , ` கற்றாங்கு எரியோம்பிக்கலியை வாராமே செற்றார் வாழ்தில்லை ` ( தி .1. ப .80. பா .1) என்றதை , ` சமன் செய்து சீர்தூக்குங்கோல் போல் அமைந்தொருபாற் கோடாமை ` ( குறள் . 118) என்பதிற்போல உடல் என்பதற்கேற்ப உளம் என்றும் , நோய் என்பதற்கேற்பக் கவலை என்றும் தந்துரைத்து நலியும் என்பதனைப் பின்னும் கூட்டப்பட்டது . அலை - கங்கையைக் குறித்தது சினையாகுபெயர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

பெண்ணொர் கூறினர் பேயுட னாடுவர்
பண்ணு மேத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாய வடிகள் சரிதையே.

பொழிப்புரை :

சிவபெருமான் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர் . பேய்க்கணங்கள் சூழ ஆடுபவர் . உலகத்தார் போற்றும்படி நல்ல பண்களை ஏழிசைகளோடு பாடிய வேடத்தர் , மூன்று கண்களை உடையவர் . இவை கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் புகழை உணர்த்துபவைகள் ஆகும் .

குறிப்புரை :

ஏத்து - உலகத்தார் போற்றத்தக்க இசையும் ஏழிசையும் , பண்ணும் - உருக் ( சாகித்தியம் ) களையும் , பாடிய வேடத்தார் . சரிதை - இங்குப்புகழ் என்ற பொருளில் வந்தது , இவை அண்ணலாகிய அடிகள் புகழ்களேயாகும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

பற்று மானு மழுவு மழகுற
முற்று மூர்திரிந் துபலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுட்
பெற்ற மேற துகந்தார் பெருமையே.

பொழிப்புரை :

பெருமானார் தம் திருக்கரத்திலே மானையும் , மழுவையும் அழகுற ஏந்தி , ஊர்முழுவதும் திரிந்து பிச்சை எடுக்க முற்படுவார் . வேதங்களை நன்கு கற்ற பெருமையுடைய நல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் இடபத்தை வாகனமாக விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அச்சிவபெருமானது தன்மை இத்தன்மைத் தாகும் .

குறிப்புரை :

ஊர் முற்றும் திரிந்து பலி ஏற்பதற்கு முற்படுவர் என்பது இரண்டாம் அடியின் பொருள் . மூன்றாம் அடியில் கற்ற மா நல் ( ல ) மறையவர் எனக்கொள்க . கற்ற என்பதனால் நூலறிவாகிய அபர ஞானமும் நல் என்றதனாற் பரஞானமும் குறித்தபடி . பெற்றம் ஏறு - பசுவின் ஆண் . சிங்க ஏறு என்றாற் போல . பெருமையே - பெருமை இத்தகையது ஆகும் என்பது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுட்
கொடித்த யங்குநற் கோயிலு ளின்புற
இடத்து மாதொடு தாமு மிருப்பரே.

பொழிப்புரை :

திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வல்லரக்கனான இராவணனின் முடியும் , தோளும் நெரியுமாறு அடர்த்து , பின் அவன் எழுப்பிய சாமகானத்தால் மகிழ்ந்து அருள் செய்த சிவபெருமான் சீகாழியில் கொடிகள் விளங்குகின்ற அழகிய திருக்கோயிலுள் தம் திருமேனியின் இடப்புறத்தில் உமாதேவியை உடனாகக் கொண்டு இன்புற வீற்றிருந்தருளுவர் .

குறிப்புரை :

கொடி - பதாகைகள் . தயங்கும் - விளங்குகின்ற . இடத்து - இடப்பாகத்திலுள்ள , மாது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
மாலு நான்முகன் றானும் வனப்புற
ஓல மிட்டுமுன் றேடி யுணர்கிலாச்
சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே.

பொழிப்புரை :

காலன் உயிரைப் போக்கிய இறைவன் திருவடியைத் திருமாலும் , பிரமனும் வனப்புறும் தோற்றத்தினராய் ஓலமிட்டுத் தேடியும் காணவொண்ணாத சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் பெருமையுடன் திகழும் சீகாழியாகும் .

குறிப்புரை :

` மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்றும் கீழிடந்து மாலும் அறிந்திலன் ...... காலன் அறிந்தான் அறிதற் கரியான் கழலடியே ` என்ற கருத்து .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

உருவ நீத்தவர் தாமு முறுதுவர்
தருவ லாடையி னாருந் தகவிலர்
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

தமது கடுமையான சமய ஒழுக்கத்தினால் உடலின் இயற்கை நிறம் மாறிக் கருநிறமான சமணர்களும் , துவர் நிறம் ஊட்டப் பட்ட ஆடையை உடுக்கின்ற புத்தர்களும் தகைமை யற்றவர்கள் . உங்களுக்கு நல்ல காரியம் கைகூட வேண்டுமென்று விரும்பினீர்களேயானால் , கடலை அடுத்த சீகாழியில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானின் சிவந்த திருவடிகளைச் சரணடைந்து உய்வீர்களாக !

குறிப்புரை :

ஒருவன் - சிவனுக்கு ஒரு பெயர் . ` ஒருவனென்னும் ஒருவன் காண்க `. ( தி .8 திருவா . - திருவண்டப்பகுதி . அடி - 43.)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

கானல் வந்துல வுங்கடற் காழியுள்
ஈன மில்லி யிணையடி யேத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே.

பொழிப்புரை :

கரையிலுள்ள சோலைகளிலிருந்து நறுமணம் வீசும் கடலை அடுத்த சீகாழியில் , அழிவற்று என்றும் நித்தப் பொருளாக விளங்கிடும் சிவபெருமானுடைய இரண்டு திருவடி களையும் வணங்கிடும் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை மனமகிழ்ச்சியுடன் பாட அத்தமிழ் மேலான வீடுபேற்றைத் தரும் .

குறிப்புரை :

ஈனம் இல்லி - சிவபெருமான் , காரணப்பெயர் . மானம் - பெருமை . அது வீடு பேற்றைக் குறிக்கும் . ` உரைத்த நாற் பயனுட் பெரும்பயன் ஆயது ஒள்ளிய வீடு , அது உறலால் தரைத்தலைப் பேரூர் என்பர்கள் சிலர் ` என்பது பேரூர்ப்புராணம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

வெந்த குங்கி லியப்புகை விம்மவே
கந்த நின்றுல வுங்கழிப் பாலையார்
அந்த மும்மள வும்மறி யாததோர்
சந்த மாலவர் மேவிய சாந்தமே.

பொழிப்புரை :

நெருப்பிலிடப்பட்ட குங்கிலியத்தின் புகைப் பெருக்கால் நறுமணம் கமழும் திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் அழிவில்லாதவர் . இன்ன தன்மையர் என்று அளந்தறிய முடியாதவர் . அப்பெருமானின் சாந்தநிலையும் அளக்கொணாத தன்மையுடையதாகும் .

குறிப்புரை :

விம்ம - மிக . அந்தமும் அளவும் எனவே , ஏனைய ஆக்கமும் கொள்ளப்படும் . ` ஆக்கம் அளவு இறுதியில்லாய் ` என்பது திருவாசகம் . ஆக்கம் - பிறப்பு . அந்தம் - இறப்பு . அறியாத - அறியப்படாத ; செயப்படுபொருளுணர்த்தும் படுவிகுதி குன்றியது , அறியப் படாத என்று கூறினாரேனும் இல்லாத என்பது பொருள் . சந்தம் - தன்மை . அது திருக்கோவையாரில் ` அடிச்சந்தம் ` என வருவதாற் காண்க . அவர் மேவிய சாந்தம் - அவர் மேவிய சாந்தநிலையும் அத்தகையதே (அறியப்படாததே). என்பது குறிப்பெச்சம். ஆல் - அசை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

வானி லங்க விளங்கு மிளம்பிறை
தான லங்க லுகந்த தலைவனார்
கானி லங்க வருங்கழிப் பாலையார்
மான லம்மட நோக்குடை யாளொடே.

பொழிப்புரை :

வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்பிறைச் சந்திரனை மாலைபோல் விரும்பி அணிந்த தலைவரான சிவபெருமான் , கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில் மான் போன்ற பார்வையுடைய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

வான் இலங்க - வானம் பிரகாசிக்க விளங்கும் இளம் பிறையை . அலங்கல் உகந்த - மாலையாக விரும்பிய . ( தலைவனார் ) கான் - ( சோலை முதலியவற்றின் ) நறுமணம் . இலங்க - மிக . வரும் - பரவி வருகின்ற . ( கழிப்பாலையார் ) மான் - மானின் . நலம் - அழகு மட நோக்கு - மடப்பத்தோடு நோக்குதலையுடையவளாகிய ; அம்பிகையோடும் திருக்கழிப்பாலையுள் எழுந்தருளியுள்ளார் என்க . தலைவனார் - எழுவாய் . கழிப்பாலையர் - பயனிலை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

கொடிகொ ளேற்றினர் கூற்றை யுதைத்தனர்
பொடிகொண் மார்பினிற் பூண்டதொ ராமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
அடிகள் செய்வன வார்க்கறி வொண்ணுமே.

பொழிப்புரை :

இறைவர் எருதுக் கொடியுடையவர் . காலனைக் காலால் உதைத்தவர் . திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின் ஓட்டினை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் பூஞ் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் அப்பெருமானின் செயல்களை யார்தான் அறிந்துகொள்ளமுடியும் ? ஒருவராலும் முடியாது .

குறிப்புரை :

கொடியின் கண் கொண்ட இடபத்தையுடையவர் - இடபக்கொடியை உடையவர் . ஆமை ; ஆமையோட்டைக் குறிப்பதால் முதலாகுபெயர் . கடி - நறுமணம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பண்ண லம்பட வண்டறை கொன்றையின்
தண்ண லங்க லுகந்த தலைவனார்
கண்ண லங்கவ ருங்கழிப் பாலையுள்
அண்ண லெங்கட வுள்ளவன் அல்லனே.

பொழிப்புரை :

பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள் பண்ணிசைக்கக் குளிர்ச்சி பொருந்திய கொன்றைமாலையை விரும்பி அணிகின்ற தலைவரான சிவபெருமான் கண்ணைக் கவரும் பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் அண்ணலாவார் . அவரே எம் கடவுள் அல்லரே ?

குறிப்புரை :

பண் - இசையின் . நலம் - இனிமை . பட - பொருந்த . வண்டு , அறை - பாடுகின்ற . ( கொன்றை ). அலங்கல் உகந்த - மாலை விரும்பிய , தலைவனார் . நலம் கண்கவரும் கழிப்பாலை - எனமாற்றி , கண்ணைக் கவரும் பொலிவை உடைய கழிப்பாலை யென்க . நலம் - பொலிவு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

ஏரி னாருல கத்திமை யோரொடும்
பாரி னாருட னேபர வப்படுங்
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.

பொழிப்புரை :

எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு , மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும் , மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிறப்புடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள் .

குறிப்புரை :

ஏரின் ஆர் - அழகால் மிகுந்த . உலகத்து - விண்ணுலகத்திலுள்ள . இமையோரோடும் - தேவர்களுடனே ; மண்ணுலகத்திலுள்ள யாவரும் கலந்து துதிக்கின்ற . காரின் - மேகத்தினால் . ஆர் - படியப் பட்ட . சோலை ஆர் என்பதில் செயப்பாட்டு வினைவிகுதி குன்றியது . சீரினார் - சிறப்பை உடையவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

துள்ளு மான்மறி யங்கையி லேந்தியூர்
கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின வோயுமே.

பொழிப்புரை :

துள்ளுகின்ற இளமையான மானை , அழகிய கையில் ஏந்தி , ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை நினைந்து ஏத்த வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

இடுபலி வெண்டலையிற் கொள்வனார் எனக்கூட்டி இடும் பிச்சையை வெண்தலை யோட்டிற் கொள்பவர் என்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
பெண்ணி னார்பிறை நெற்றியொ டுற்றமுக்
கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே.

பொழிப்புரை :

மண்ணுலகில் பொருந்திய மிக்க செல்வங்களையும் , வானுலகில் மறுமையில் பெறக்கூடிய செல்வத்தையும் தருபவன் இவனே என்பதை மனத்தில் எண்ணி , தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டுள்ளவனும் , பிறைச் சந்திரனைச் சடைமுடியில் அணிந்தவனும் , முக்கண்ணனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை இனிதே போற்றி நீங்கள் வணங்குவீர்களாக !

குறிப்புரை :

மண்ணின் - பூமியில் . ஆர் பொருந்திய . மலி - மிக்க . செல்வமும் வானமும் - வானத்திற் பொருந்திய மிக்க செல்வமும் . எண்ணி ( அழியாத இன்பம் தாரா என்பதையும் ) தெளிந்து . இனிது - நன்கு ( ஏத்துமின் ) கழிப்பாலை - கழிப்பாலையைத் துதியுங்கள் . பேரின்பத்தைத் தரத்தக்கவன் சிவனே என்பதையும் . பிறை நெற்றியோடு உற்ற - நெற்றியினருகே ( சடாபாரத்தில் ) பிறைமதி பொருந்திய .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

இலங்கை மன்னனை யீரைந் திரட்டிதோள்
துலங்க வூன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நொறுங்கும்படி கயிலைமலையில் தன்காற்பெருவிரலை ஊன்றிய , தூய்மையான மழுவாகிய படைக்கலத்தை உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற , மரக்கலங்கள் வந்து உலவும் திருக்கழிப்பாலையை வலமாக வருபவர்களுக்கு வினைகள் யாவும் அழிந்துவிடும் .

குறிப்புரை :

துலங்க - துளங்க ( நடுங்க ) போலி . ல , ள , ஒற்றுமை . கலங்கள் வந்துலவும் கழிப்பாலை என்றதனால் அது ஒரு துறைமுகப் பட்டினமாய் இருக்கவேண்டும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

ஆட்சி யாலல ரானொடு மாலுமாய்த்
தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்
காட்சி யாலறி யான்கழிப் பாலையை
மாட்சி யாற்றொழு வார்வினை மாயுமே.

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் தாங்கள் செய்கின்ற படைத்தல் , காத்தல் ஆகிய தொழில்களின் ஆளுமையால் ஏற்பட்ட செருக்குக் காரணமாக இறைவனுடைய திருமுடியையும் , திருவடியையும் அறிய முற்பட்டு , தமது தாழ்ச்சியால் அவற்றை அறியமுடியாது தளர்ச்சியடைந்தனர் . நூலறிவாலும் , ஆன்ம அறிவாலும் அறியப்படாதவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை அதன் மாட்சிமை உணர்ந்து தொழுவாருடைய வினைகள் யாவும் மாயும் .

குறிப்புரை :

ஆட்சியால் - படைத்தலும் காத்தலுமாகிய தொழிலை ஆளுகிறோம் என்னும் செருக்கினால் , ஆட்சி என்ற சொல் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது . தாழ்ச்சியால் - அது தங்கள் மாட்டின்மையாகிய குறைவால் ; அறியாது தளர்ந்தனர் . தாட்சி - தாழ்ச்சியென்பதன் மரூஉ . அல்லது வீரசோழிய விதிப்படி எனினும் ஆம் . அன்றி தாள் + சி = முயற்சியின் தன்மையெனினும் ஆம் ; ஆயின் சி என்பது பண்புப்பெயர் விகுதி யென்க . காட்சியால் - நூலறிவாலும் ஆன்ம அறிவாலும் அறியப்படாதவன் . மாட்சி - மாணுதல் . சி . தொழிற்பெயர் விகுதி . மாட்சியால் தற்போதம் அற்றுத் தொழுவார் வினைமாயும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

செய்ய நுண்டுவ ராடையி னாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மை யெனோகழிப் பாலையெம்
ஐயன் சேவடி யேயடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

சிவந்த மெல்லிய மஞ்சட்காவி உடைகளை உடுத்தும் புத்தர்களோடும் , அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற கீழ்மக்களாகிய சமணர்களோடும் நட்பு உங்கட்கு ஏனோ ? திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் எம் தலைவராகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளையே சரணாக அடைந்து உய்தி பெறுங்கள் .

குறிப்புரை :

செய்ய - சிவந்த . நுண் - மெல்லிய . துவர் ஆடையினார் - காவி உடையை உடைய புத்தர் ( மெய்யில் நீராடாமையால் ) உடம்பில் அழுக்கு மிகுந்த . வீறு இலா - பெருமையில்லாத . கையர் - வஞ்சகராகிய சமணர் . வீறு - பெருமை . கையர் - வஞ்சகர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

அந்தண் காழி யருமறை ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுல காடன் முறைமையே.

பொழிப்புரை :

அழகிய , குளிர்ச்சி மிகுந்த சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் , பாய்கின்ற நீர் சூழ்ந்த திருக்கழிப் பாலையைப் போற்றிச் சிவ சிந்தையோடு சொன்ன செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் எல்லோரும் முன்னதாக வானுலகத்தை ஆளுதற்கு உரியவராவர் .

குறிப்புரை :

அம் - அழகு . தண் - குளிர்ச்சி . சிந்தை - சிவனடிக்கு இடமாக்கிய கருத்து , முந்தி - ஏனைய தவிர்த்தோர்க்கும் முன்னரே . உலகு + ஆள்தல் = உலகாடல் - உலகை ஆளுதல் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

அந்த மாயுல காதியு மாயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்றிரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

பொழிப்புரை :

சிவபெருமான் உலகத்தின் ஒடுக்கத்திற்கும் , தோற்றத்திற்கும் நிமித்த காரணன் . திருவெண்ணீறு பூசிய வேத நாயகன் . என் சிந்தையில் புகுந்து விளங்குபவன் . திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையான அவன் என்னை ஏற்று அருள் புரிவானோ !

குறிப்புரை :

உலகின் முடிவும் முதலும் ஆகியவன் என்பது உலகின் தோற்ற ஒடுக்கங்கட்கும் நிமித்தகாரணனாய் உள்ளவன் . எம் எந்தை - எங்கள் அனைவருக்கும் உரிய என் தந்தை . எம் என்றது பலதிறத்தின ராகிய அடியவரை . அது ` உருத்திர பல் கணத்தார் ` ` பல்லடியார் ` என்பனவற்றால் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

கருத்த னேகரு தார்புர மூன்றெய்த
ஒருத்த னேயுமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு வாரூரெந் தீவண்ண
அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே..

பொழிப்புரை :

இறைவர் என் கருத்திலிருப்பவர் . தம்மைக் கருதிப் போற்றாத பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அக்கினிக்கணை தொடுத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர் . ஒப்பற்றவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . தூயவர் . திருவாரூரில் வீற்றிருந்தருளும் தீ வண்ணர் . எப்பொருட்கும் விளக்கமாய் அமைந்த பெரும்பொருள் . அவர் என்னை அஞ்சற்க என்று மொழியாததன் காரணம் யாதோ ?

குறிப்புரை :

கருத்தனே - கருத்திலிருப்பவனே . ` வாயானை மனத் தானை மனத்துள் நின்ற கருத்தானை ` ( தி .6. ப .19. பா .8) என்றதுங் காண்க . திருத்தம் - தீர்த்தம் ; தூய்மை . ` திருத்தமாம் பொய்கை ` என்புழியுங் காண்க . திருத்தன் - தூயவன் . இனித்திருத்த சொரூபமானவன் என்றலும் ஒன்று . என் - எதனால் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூரெம்
இறைவன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

பொழிப்புரை :

இறைவன் , வேதங்களை அருளிச் செய்து வேதப் பொருளாகவும் விளங்குபவன் . பெரிய தவத்தன் . பகையசுரர்களின் முப்புரங்களை நொடிப்பொழுதில் எரியூட்டியவன் . சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன் என்னை அடியவனாக ஏற்றுக் கொள்வானோ !

குறிப்புரை :

இறையில் - சிறு தீப்பொறியால் . மாத்திரையில் - ஒரு நொடிப் போதில் . இறை - சிறியது , தீப்பொறிக்கு அளவையாகுபெயர் . இறையில் ; இல் - வேற்றுமை உருபுமயக்கம் . முனிவன் , மருவார் புரம் - பகைவரது புரங்கள் ( எரி ஊட்டினான் ).

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பல்லி லோடுகை யேந்திப் பலிதிரிந்
தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான்
செல்வ மல்கிய தென்றிரு வாரூரான்
அல்ல றீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.

பொழிப்புரை :

இறைவர் பிரமனின் பல் இல்லாத மண்டையோட்டை ஏந்திப் பலி ஏற்றுத் திரிபவர் . இரவில் சுடுகாட்டில் நடனம் புரிபவர் . செல்வச் செழிப்பு மிக்க அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் என் துன்பத்தைத் தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ !

குறிப்புரை :

பல் இல் ஓடு - பல் இல்லாத மண்டையோடு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு வாரூரான்
வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.

பொழிப்புரை :

குருந்த மரத்தில் ஏறிப்படரும் மாதவியும் , விரிந்து மலர்ந்து நறுமணம் கமழும் தேனுடைய கொன்றை மரங்களும் திகழ , மாடமாளிகைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவர் நான் வருந்தும்போது , என்னை வருந்தாதே என்றுரைத்து அருள் புரிவாரோ !

குறிப்புரை :

வாடல் - வாடாதே , வாடற்க , ` மகனெனல் ` என்ற திருக்குறளிற் போல , அல் ஈறு , எதிர்மறை வியங்கோள் குறித்தது . இப் பாசுரத்தின் முதலீரடிகளால் மாடங்களின் அருகே பூந்தோட்டங்கள் இருந்தமை புலப்படுகிறது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

வார்கொண் மென்முலை யாளொரு பாகமா
ஊர்க ளாரிடு பிச்சைகொ ளுத்தமன்
சீர்கொண் மாடங்கள் சூழ்திரு வாரூரான்
ஆர்க ணாவெனை யஞ்சலெ னாததே.

பொழிப்புரை :

கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , ஊரிலுள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்கும் உத்தமனாய் , செல்வவளமிக்க அழகிய மாடங்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் நான் வேறு யாரைச் சரணாகப் புகுந்துள்ளேன் என்று கருதி அவன் என்னை அஞ்சாதே என்று கூறாமலிருக்கிறான் ?

குறிப்புரை :

ஊர்களார் - ஊர்களிலுள்ளவர் . சீர் - செல்வவளம் ( இலட்சுமி கரம் ). ஆர்கண்ஆக - யாரை யான் பற்றுக்கோடாக உடையேன் எனக்கருதி , கண் - ( சரண்புகும் ) இடம் . ஊர்களார் என்பதை ஊரார்கள் என்று வழங்குவதோடு ஒத்திட்டுணர்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு வாரூரான்
இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ.

பொழிப்புரை :

வளையலணிந்த கைகளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட இறைவன் , தன்னை எதிர்த்து வந்த யானையானது கலங்குமாறு அடர்த்து அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன் . குளிர்ந்த புனல் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன் , இளைத்து வருந்தும் காலத்தில் என்னை ஏற்று அருள் புரிவானோ !

குறிப்புரை :

யானைதுயர்படப் போர்த்தவன் - யானை துயர்பட உரித்து என ஒரு சொல் வருவித்துரைக்க . திளைக்கும் - நீராடுதற்குரிய .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

இலங்கை மன்ன னிருபது தோளிறக்
கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ்திரு வாரூரான்
அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ.

பொழிப்புரை :

இலங்கை வேந்தனான இராவணனுடைய இருபது தோள்களும் நொறுங்கிக் கலங்கத் தன் காற்பெருவிரலை ஊன்றியவர் இறைவர் . வலிமையுடைய பெரிய மதில்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் எனக்குப் பெருமை சேர்க்கும் மாலை தந்து அருளி , நான் வருந்தும் காலத்தில் அஞ்சாதே என்று அபயம் அளித்துக் காப்பாரோ !

குறிப்புரை :

தோளிறவும் . அவன் கலங்கவும் . கடை - அவனது ( வலிமையின் ) முடிவை . அலங்கல் - மாலை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படிய வன்பனி மாமதிச் சென்னியான்
செடிக ணீக்கிய தென்றிரு வாரூரெம்
அடிக டானெனை யஞ்சலெ னுங்கொலோ.

பொழிப்புரை :

நீண்டு உயர்ந்த திருமாலும் , பிரமனும் காணமுடியாத தன்மையராய்க் குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் தாங்கிய இறைவர் , மன்னுயிர்களின் பாவங்களை நீக்கி அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அடிகளாவார் . அவர் என்னை அஞ்சாதே என்று அருள் புரிவாரோ !

குறிப்புரை :

நேர்கிலா - சிந்திக்க மாட்டாத . கில் - ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல் . படியவன் - தன்மையன் , வடிவினன் எனலும் ஆம் . செடிகள் - தீமைகள் , பாவங்கள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

மாசு மெய்யினர் வண்டுவ ராடைகொள்
காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல்
தேச மல்கிய தென்றிரு வாரூரெம்
ஈசன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

பொழிப்புரை :

அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் , துவராடை அணிந்த புத்தர்களும் , கூறும் பயனற்ற சொற்களைக் கொள்ளாதீர் , அருளொளி விளங்கும் அழகிய திருவாரூரில் வீற்றிருந் தருளும் எம் இறைவரான சிவபெருமான் என்னை ஏற்று நின்று அருள்புரிவாரோ !

குறிப்புரை :

துவர் ஆடை மேற்கொள்ளும் - செந்நிறப் போர்வையைப் போர்க்கும் . காசை - காஷாய உடை . திவ்வியப்பிரபந்தம் 1658. காசை மலர் போல்மிடற்றார். தேசம் - ஒளி.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான்றிரு வாரூரை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

வன்னி , கொன்றை , சந்திரன் , வில்வம் , ஆகியவற்றைச் சடைமுடியில் திகழச் சூடிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருவாரூரை , நிலைபெற்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் வாய்மலர்ந்து அருளிய இத்திருப்பாடல்களை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

ஓடு எண்ணுப் பொருளது . சென்னி - தலைமீது . வாய் - திருவாயினால் . பன்னு - சொல்லிய , வல்லார்க்குப் பாவம் இல்லை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

முத்துப் போன்ற புன்னகை கொண்டு விளங்கும் உமாதேவி அஞ்சுமாறு மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்திய கடவுள் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர். அவர் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

முத்து இலங்கும் - முத்தைப்போல் விளங்குகின்ற. அழலும் அழல் - கடு நெருப்பு. வண்ணம் - நிறம். தன்மையுமாம்; செழுநீர் புனற்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீ வண்ணனே.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே. நும் பணி ஆனது அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி நீழலை விட்டு அகலாத செல்வமாகும். வெண்ணிற முல்லை மணம் கமழ்கின்ற திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் இறைவன் அமுதம் போன்று இனிமை தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

விமுதம் - விஸ்மிதம் என்னும் வடசொல்லின் திரிபு. கங்கையை அடக்கிய ஆச்சரியம். விமுதவல்ல சடையான் வினை - சிவபெருமானுக்கு அடியவர் செய்யும் திருத்தொண்டுகள். உள்குவார்க்கு - நினைக்கின்ற தொண்டர்களுக்கு. அமுதநீழல் - அமிர்தம் போல இன்பம் விளைக்கும் திருவடிநீழல். அகலாததோர் செல்வம் -அழியாத செல்வம்; \\\"சென்றடையாத திரு\\\". கம் - மணம். வெண்மை, முதம் - உவகை. கமுதமுல்லை:- வெண்மையும், மணமும், உவகை செய்வதும் முல்லைக்கும் உள்ளன.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழக ரென்றுகுழை யாவழை யாவரும்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

பழகுவதற்குரிய சிறப்புடைய சிறுத்தொண்டர்கள் இன்னிசையோடு பாடி அழகனான சிவபெருமானைக் குழைந்து, அழைத்து, கழலணிந்த திருவடிகளையே பொருளாகக் கொண்ட பாக்களைப் பாட, திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் அழகரான சிவ பெருமானின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

இதிலுள்ளதொரு வரலாறு விளங்கவில்லை. குழையா - குழைந்து. அழையா - அழைத்து. உள்ளம் குழைந்து அழைத்து வரும். கழல் கொள் பாடல் - கழலணிந்த திருவடியையே பொருளாகக் கொண்ட பாக்கள்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பொடிமெய் பூசிமலர் கொய்து புணர்ந்துடன்
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி, மலர் கொண்டு தூவிப் போற்றி வழிபடும் அடியவர்கட்குக் குற்றமில்லாச் செம்மையான உள்ளம் நல்கும் செல்வரான சிவபெருமான், நறுமணம் கமழும் முல்லைகளையுடைய திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் அடிகளாவார். அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

உள்ளம் நல்கிய செல்வத்தர் - திருநீற்றுப்பூச்சும் மலர் பறித்து வழிபடும் பூசையும் புரிதற்குத்தக்க உள்ளம் அருளிய திருவருட்செல்வம் உடையவர்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

மைய லின்றிமலர் கொய்துவ ணங்கிடச்
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே . 

பொழிப்புரை :

மயக்கமில்லாமல் மலர்கொய்து போற்றி வணங்கும் அடியவர்கட்குச் செம்மையான உள்ளம் நல்கும் செல்வத்தராகிய சிவபெருமான், தாழையும் முல்லையும் மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார். அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

செய்ய - செவ்விதாகிய. கைதல் - தாழை.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட
ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. 

பொழிப்புரை :

மாசில்லாத தொண்டர்கள் மலர்தூவி வணங்கிட அவர்கள் விருப்பம் நிறைவேற அருள்நல்கும் செல்வரான சிவபெருமான், சினம் கொள்ளும் இடபத்தை வாகனமாகக் கொண்டு திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் இறைவர் ஆவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

ஆசை ஆர - ஆசை நிரம்ப. அருள் நல்கிய செல்வத்தர், ஆசை தீரக் கொடுப்பர், என்பதும் காண்க.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. 

பொழிப்புரை :

திருநீறு பூசிய வேதியராய், அடியவர்தம் சிந்தையுள் நின்று அருள்புரியும் செல்வரான சிவபெருமான், நறுமணம் கமழும் முல்லைகள் மலரும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

கந்தம் - மணம். மௌவல் - முல்லை. எம் எந்தை - முன் உரைத்தமை கொள்க.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடும்
கண்ண னேடவரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

பண்போன்று இனிய மொழிபேசும் உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட இறைவன், அலங்கரிக்கப்பட்ட கோலமுடைய அழகிய மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவராய்த் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார். அவனது வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

மண்ணு - அலங்கரிக்கப்பட்ட, கோலம். கண்ணன் - திருமால்; கரிய நிறமுடையவன். கண்ணனாக அவதரித்தவன் எனலும் ஒன்று. நேட - தேட.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

மஞ்சட் காவி ஆடையால் போர்த்த உடம்பினர் களும், பொழுதெல்லாம் அலைபவர்களும் சொல்கின்ற மொழிகளை உயர்வானவாகக் கொள்ள வேண்டா. மேகம் சூழ, குளிர்ந்த முல்லை மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் சிவனின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணம்.

குறிப்புரை :

போர்த்த மெய்யினர் - சீவரவுடையால் மறைத்த உடம்பினர். போது உழல்வார்கள் - பொழுதெல்லாம் அலைபவர்கள். கார்த்தண் முல்லை - கார்காலத்தில் மலரும் தண்ணிய முல்லைப்பூ. ஆத்தர் - ஆப்தர்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

கலவ மஞ்ஞையுல வுங்கரு காவூர்
நிலவு பாட லுடையான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே. 

பொழிப்புரை :

மயில், தோகை விரித்து ஆடுகின்ற திருக்கருகாவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் புகழ்ப்பாக்கள் கொண்டு போற்றி வழிபடப் பெற்றவர். அப்பெருமானுடைய திருவடிகளில் அன்பு செலுத்தி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப் பதிகத்தை ஓத வல்லவர்களின் தொல்வினை தீரும்.

குறிப்புரை :

கலவம் - கலாபம்; தோகை. நிலவு - விளங்குகின்ற; கழல் குலவும் - திருவடிகளில் குலாவும்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய இறைவனே ! மூன்று கண்ணுடைய பெருமானே ! நல் வேள்வியைப் புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம் செய்து அவரை விரட்டுவதற்குத் திருவுளக்குறிப்பு யாது ? உரை செய்வாயாக !

குறிப்புரை :

காட்டுமா - காட்டிலுள்ள யானை . உரி - உரிவை ; தோல் . உடல் போர்த்து - உடலிற் போர்த்து . நாட்டம் - கண் , நாட்டம் மூன்றுடையாய் என்றது ; ஏனையர்போல இருகண் அன்றி , மேலும் ஒரு கண் ( நெற்றிக்கண் ) தீயோரை அழித்தற்கெனக் கொண்டருளினாய் . இது பொழுதும் அச்செயல் செயவேண்டும் என்ற குறிப்பு . வன்றொண்டப் பெருந்தகையும் வேறு திருவுளம்பற்றியருளற் குறிப்போடு ` மூன்று கண்ணுடையாய் அடியேன் கண் கொள்வதே ` என்றமையும் காண்க . உரை செய்வன் - நான் விண்ணப்பம் செய்து கொள்வேன் . அது திருக்கடைக் காப்பில் கேட்ட ` ஞானசம்பந்தன் ` என்றமையாலும் அறியப்படுகிறது . ஓட்டி வாதுசெய - வாதுசெய்து ஓட்ட என விகுதி மாற்றிக் கூட்டுக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

மத்த யானையின் ஈருரி மூடிய
அத்த னேயணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே ! அழகிய ஆலவாயில் விளங்கும் நாதனே ! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து அழிப்பதற்குத் திருவுள்ளம்யாதோ ? உரைப்பாயாக .

குறிப்புரை :

மத்தம் - மயக்கம் , மதங்கொண்டமையாலுண்டாவது . ஈர் - உரிக்கப்பட்ட . திருவுள்ளமே , பணி சொல்லி அருள்வீராக . பொய்த்த வன் தவவேடத்தர் - பொய்யாகிய வலிய தவவேடத்தை யுடையவர் . சித்தர் - மேல் பாசுர உரையால் அறிக . ` நிற்பதுபோல் நிலையிலா நெஞ்சு ` என்பது மூன்றாம் அடியிற் குறித்த பொருள் . அதனை ` இனம் போன்று இனமல்லார் கேண்மை ` எனவரும் திருக்குறளால் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

இப் பூவுலகத்திலும் , விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே ! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வாயாக .

குறிப்புரை :

எங்கும் ஆம் - எங்குமாய் நிறைந்து , திருவால வாயினில் வெளிப்பட்டருளிய பெருமானே என்பது முதலிரண்டடியின் கருத்து . அருள் - சொல்லி யருள்வீராக . எழில் இகழ்ச்சிக் குறிப்பு . திண்ணகத் திருவாலவாய் - பகைவரால் அழிக்கமுடியாத வலிய அரண்களையுடைய திருவாலவாய் . தெண்ணர் - திண்ணர் என்பதன் மரூஉ . குண்டர் முதலிய பிற பெயர்களைப்போல்வது இது , சாக்கியப் பேய் அமண் - சாக்கியரோடு கூடிய பேய்போன்ற சமணர் . கற்பு - கல்விநிலை ; அல்லது கல்போன்ற உறுதிப்பாடு . பெண்ணகத்துக்குச் சாக்கியர் கற்பு என்ற சொல் அமைப்பை நோக்குக . நாங்கள் பகைகளை ஒழிக்க எண்ணுவதுபோல அவர்களும் எண்ணலாமோ எனின் , தானவிசேடத்தால் சைவத்துக்கு வாழ்வும் புறச் சமயத்துக்கு வீழ்வும் அளிக்கவல்ல தலம் என்பார் ; ` திண்ணகத் திருவாலவாய் ` என்றார் . இடவிசேடம் இத்துணைத்து என்பதை ` முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய , புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்து ` எனவரும் சிலப்பதிகாரத்தால் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

ஓதி யோத்தறி யாவம ணாதரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
ஆதி யேதிரு வாலவா யண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதி உணரும் ஞானம் அற்றவராகிய சமணர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாது ? ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே ! நடுநிலையிலிருந்து அருள் செய்வாயாக !

குறிப்புரை :

ஓதி - அறிவு , ஞானம் . ஓத்து - வேதம் , ஞானம் தரக்கூடிய வேதம் . நீதியா - நடுநிலையுடன் , நினைந்து அருள் செய்திடு . திருவுள்ளமே - திருவுள்ளமோ ? ஏகாரம் வினாப்பொருட்டு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

வைய மார்புக ழாயடி யார்தொழும்
செய்கை யார்திரு வாலவா யாய்செப்பாய்
கையி லுண்டுழ லும்மமண் கையரைப்
பைய வாது செயத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

உலகெங்கும் பரவிய புகழை உடையவனே ! அடியவர்கள் தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே ! கையில் உணவு வாங்கி உண்டு திரியும் அமணராகிய கீழ்மக்களுடன் மெதுவாக நான் வாதம் புரிவதற்குத் திருவுள்ளம் யாது ? உரைத்தருள்வாயாக !

குறிப்புரை :

வையம் ஆர் - உலகமெங்கும் ( பரவிய ). புகழாய் - புகழையுடையவனே . பைய - அவசரமின்றி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

நாறு சேர்வயற் றண்டலை மிண்டிய
தேற லார்திரு வாலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு உள்ளமே.

பொழிப்புரை :

நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களிலும் , சோலைகளிலும் பெருக்கெடுத்து வழியும் தேன் நிறைந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! பெருமையில்லாத தவத்தைப் புரியும் முரடர்களாகிய சமணர்களைச் சினந்து வாது செய்ய உன்னுடைய திருவுள்ளம் யாது ? சொல்லியருள்வாயாக !

குறிப்புரை :

நாறு - நாற்றுக்கள் . சேர் - பொருந்திய ( வயல் ) நாறு ( தல் ) கமழ்தல் . தண்டலை - சோலை . மிண்டிய தேறல் ஆர் - பெருக்கெடுக்கும் தேன் நிறைந்த . வயல்களிற் கரையோரம் உள்ள தாமரை முதலிய மலர்களாலும் , சோலைகளில் உள்ள கொன்றை முதலிய மலர்களாலும் தேன் பெருக்கெடுக்கின்றது என்பதாம் . வீறு - பெருமை . மோட்டு - முரட்டுத்தன்மை யுடையவர்கள் . வேடர் கொலைத் தொழிலில் அநுபவமுடையவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும்
தொண்ட ருக்கெளி யாய்திரு வாலவாய்
அண்ட னேயமண் கையரை வாதினில்
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

தொன்றுதொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால் உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு எளியவரே ! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே ! அண்டப் பொருளாக விளங்கும் பெருமையுடையவரே ! சமணர்களை வாதில் வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன் . உமது திருவுளம் யாது ?

குறிப்புரை :

பண்டு - தொன்று தொட்டு . அடித்தவம் - அடிப்பட்ட தவம் ` பழவடியார் ` திருப்பல்லாண்டு . அண்டன் - தேவன் . செண்டு அடித்து - வளைத்து அடித்து .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

அரக்கன் தான்கிரி யேற்றவன் றன்முடிச்
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு வாலவாய்ப்
பரக்கு மாண்புடை யாயமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்தவனாகிய இராவணனின் முடிகளை நெரித்து , அவனது செருக்கினை அழித்தவரே ! திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! எங்கும் பரவிய புகழை உடையவரே ! இறைவனை நினைந்து வழிபடும் பேறு பெறாதவர்களான சமணர்களை அடக்குவதற்கு அவர்களுடன் அடியேன் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது ?

குறிப்புரை :

கிரியேற்றவனாகிய அரக்கன் என்க . முடிச்செருக்கு - பத்துத்தலை உடையேன் என்னுஞ் செருக்கு . பரக்கும் - எல்லா உலகினும் பரவிய . மாண்பு - பெருமை . பாவரை - பாவியரை ; வாது செய்யுமிடம் . கரக்க - ஒளிக்க . ஒழியும் வண்ணம் , இது இடைப் பிறவரல் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

மாலும் நான்முக னும்மறி யாநெறி
ஆல வாயுறை யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு வுள்ளமே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் அறியாத தன்மையராய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே ! இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை அடைவதற்குரிய வழியை உணராது ஆடையின்றித் திரியும் சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது ?

குறிப்புரை :

சால - முற்றிலும் . வாது செயத் திருவுள்ளமே பணிப்பீராயின் என்பது கருத்து .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு வாலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.

பொழிப்புரை :

நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும் புத்தர்களையும் , நன்மார்க்கங்களை அழித்து வரும் சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன் . ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திருவால வாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! மழுப்படையை உடைய மைந்தரே ! உமது திருவுள்ளம் யாது ?

குறிப்புரை :

மீன் கவர்வார் புத்தர் . அழிப்பவர் - நன்மார்க்கங்களை யெல்லாம் அழிப்பவர்கள் . தெழிக்கும் - ஒலிக்கின்ற . பூம்புனல் - மெல்லியநீர் . நல்கிடே - தெரிவித்தருள்வீராயின் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

செந்தெ னாமுர லுந்திரு வாலவாய்
மைந்த னேயென்று வல்லம ணாசறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே.

பொழிப்புரை :

வண்டுகள் முரலும் திருஆலவாயில் வீற்றிருந் தருளும் மைந்தனே என்று விளித்து வலிய அமணர்களின் நெறி களிலுள்ள குற்றங்கள் நீங்கச் சந்தமுடைய தமிழால் இறைவன் திருவுள்ளம் யாது எனக் கேட்ட மெய்ஞ்ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பழிநீங்க ஓதுவீர்களாக !

குறிப்புரை :

தமிழ்கேட்ட - தமிழாற் கேட்ட என்பது ஒவ்வொரு பாடலிலும் திருவுள்ளமேயெனக் கேட்டமையைக் குறிக்கிறது . பழி நீங்கப் பகருமின் - பழி நீங்குவதற்குச் சொல்வீராக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யாற்றொழு வார்தக வாளரே.

பொழிப்புரை :

இறைவன் அழகிய கையில் நெருப்பேந்தியவன் . அழகிய செஞ்சடையில் கங்கையைத் தாங்கி , இடம் , பொருள் , காலம் இவற்றைக் கடந்து என்றும் நிலைத்துள்ள அச்சிவபெருமான் தன் திருமேனியின் இடப்பாகமாக உமாதேவியைக் கொண்டு வீற்றிருந்தருளும் மழபாடியைக் கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கள் நற்பண்பாளர்கள் ஆவர் .

குறிப்புரை :

சடைக் கங்கையான் - சடையில் தாங்கிய கங்கையை உடையவன் . கடவுள் - எவற்றையும் கடந்தவன் ; சிவபெருமானுக்கொரு பெயர் . ` கடவுளே போற்றி ` என்பது திருவாசகம் . ( தி .8. திருச்சதகம் - 64). கடவுள் - கடத்தல் . உள் தொழிற்பெயர் விகுதி . ` விக்குள் ` என்பதுபோல தொழிலாகு பெயராய்ச் சிவபெருமானை உணர்த்திற்று . ` அண்டம் ஆரிரு ளூடு கடந்துஉம்பர் உண்டு போலும்ஓர் ஒண்சுடர் அச்சுடர் , கண்டிங்கு ஆர்அறி வர்அறிவார் எலாம் , வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே ` ( தி .5 ப .97 பா .2) என்னுந் திருக்குறுந் தொகையாலறிக . இடம் மேவிய மங்கையான் - இடப்பாகத்தில் பொருந்திய பெண்ணை உடையவன் . கங்கையைச் சடையில் தாங்கியவன் , மங்கையை இடம் மேவியவன் என்பவற்றைமுறையே , ` சடைக் கங்கையான் ` ` இடம் மேவிய மங்கையான் ` என்றது வடமொழி விதி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாமழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.

பொழிப்புரை :

திருமழபாடியில் வீற்றிருந்தருளும் கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானின் திருவடிகளே ஆன்மாக்களுக்கு விதியாவதும் , அவ்விதியின் விளைவாவதும் , ஒளியிற் கலப்பதாகிய முத்தி ஆவதுமாம் . மனத்தைக் கசியவைத்துத் தன்வயப்படுத்தும் சிவஞானத்தை விளைவிக்கும் அத்தகைய திருவடிகளை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மழபாடியுள் தலைவராகிய சிவபெருமானது திருவடியே ஆன்மாக்களுக்கு விதியாவதும் , அவ்விதியின் விளைவாவதும் , ஒளியிற் கலப்பதாகிய முத்தியாவதும் , மனம் கசிவிப்பதும் , அதனால் தன்வயமாகச் செய்வதும் , சிவஞானமாகி விளைவதும் , வலிய பற்றுக்கோடாவதும் , அனைத்தும் ஆம் என்க . மதி - இங்குச் சிவஞானம் . வலி - ஆகுபெயர் . நற்பாதம் :- ` நற்றாள் ` என்ற திருக்குறட் சொற்றொடர்க்குப் பரிமேலழகர் உரைத்ததுரைக்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல வுங்கையி லேந்திய
மழுவி னானுறை யும்மழ பாடியைத்
தொழுமி னுந்துய ரானவை தீரவே.

பொழிப்புரை :

இறைவன் முழவு என்னும் வாத்தியம் உடையவன் . சுடுகாட்டில் உறையும் பேய்க்கணத்துடன் குலவி நடனம்புரிபவன் . அழகிய கையில் மழுப்படையை உடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படி தொழுது போற்றுங்கள் .

குறிப்புரை :

குழு - கூட்டம் . குலவும் - விளங்குகின்ற . ( நும் துயரானவை தீரத் ) தொழுமின் - வணங்குங்கள் . ஆனவை சொல்லுருபு . முழவின் - முழவு என்னும் வாத்தியத்தால் . ஆல் - ஆரவாரிக்கின்ற ; பேய்க்கணங்களின் குழு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

கலையி னான்மறை யான்கதி யாகிய
மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.

பொழிப்புரை :

இறைவன் ஆயகலைகள் அறுபத்துநான்கு ஆனவர் . நான்கு மறைகள் ஆகியவன் . உயிர்கள் சரண்புகும் இடமாகிய கயிலை மலையினை உடையவன் . பகையசுரர்களின் திரிபுரங்களை எரியுண்ணுமாறு அக்கினிக்கணையை ஏவிய , மேருமலையை வில்லாக உடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைத் தலையினால் வணங்கிப் போற்றத் தவத்தின் பலன் கைகூடும் .

குறிப்புரை :

கலை - சாத்திரம் . அவை அறுபத்து நான்கு என்ப . கதி ஆகிய - சரணம் புகும் இடம் ஆகிய . மலையினான் - கயிலை மலையை உடையவன் . மருவார் - சேராதவர் , பகைவர் . வணங்க அதுவே தவமாம் . வரும் பாடலில் ` புல்கி ஏத்துமது புகழாகும் ` என்றதையும் காண்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

நல்வி னைப்பய னான்மறை யின்பொருள்
கல்வி யாயக ருத்தனு ருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்து மதுபுக ழாகுமே.

பொழிப்புரை :

இறைவன் நல்வினையின் பயனாகியவன் . நான்மறையின் பொருளாகியவன் . கல்விப் பயனாகிய கருத்தன் . உருத்திரனாகத் திகழ்பவன் . அச்செல்வன் வீற்றிருந்தருளும் திருமழ பாடியைப் போற்றுங்கள் . அது உமக்குப் புகழ் தரும் .

குறிப்புரை :

புல் + கு + இ = புல்கி . கு , சாரியை . ஏத்தும் அது - துதித்தலாகிய அப்பணி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
ஆடி னானெரி கானிடை மாநடம்
பாடி னாரிசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே.

பொழிப்புரை :

பரந்த இவ்வுலகிற்கு இறைவன் உயிராய் விளங்குகின்றான் . அப்பெருமான் சுடுகாட்டில் திருநடனம் ஆடுபவன் . பத்தர்கள் இசையோடு போற்றிப் பாடத் திருமழபாடியில் இனிது வீற்றிருந்தருளும் அவனைச் சார்ந்து போற்றுபவர்கட்கு வறுமை இல்லை .

குறிப்புரை :

நீடினார் உலகுக்கு - பரப்பான் மிக்க உலகத்திற்கு . ` மலர் தலை உலகம் ` என்றபடி . எரி - எரியும் . கான்இடை - காட்டிடை . ( மயானத்தில் ) பாடின் ஆர் இசை - பாடுதலால் உண்டாகிய இனிய இசைமிக்க ( திருமழபாடி ).

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
மன்னி னானுறை மாமழ பாடியைப்
பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின வோயுமே.

பொழிப்புரை :

மின்னலைப் போன்று ஒளிரும் நுண்ணிய இடையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற மாமழபாடியை இசைப்பாடலால் போற்றி வழிபாடு செய்யும் அன்பர்களின் வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

மின்னின் - மின்னற் கொடிபோல் . ஆர் - பொருந்திய ; இடையாள் . பண்ணினார் - ( புகழ்ந்து ) சொல்பவர்களாய் . இசையால் வழிபாடு செய்தலாவது , இறைவன் புகழை இன்னிசையோடு துதித்தல் . ` அளப்பிலகீதஞ் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே ` என்பதனாலும் அறிக . ( தி .4 ப .77 பா .3) ` கோழை மிடறாக கவி கோளுமிலவாக இசை கூடும் வகையால் ஏழை அடியார் அவர்கள் யாவை சொனசொல் மகிழும் ஈசனிடமாம் ` ( தி .3 ப .71. பா .1) என்னும் திருவைகாவூர்ப் பதிகத்தாலும் அறிக . வழிபாடு செய்து - வழிபட்டு . உன்னினார் - தியானிப்பவர்கள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
தன்னி லங்கவ டர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னி லங்க வுறுபிணி யில்லையே.

பொழிப்புரை :

இராவணனைச் செழுமையான கயிலைமலையின் கீழ் அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான் . அவர் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை நினைந்து போற்ற உடம்பில் உறுகின்ற பிணி யாவும் நீங்கும் .

குறிப்புரை :

மன்னன் - மன்னனை . செழுவரை தன்னில் - கயிலை மலையில் ; அடர்த்துப் பின் அவனுக்கு அருள்செய்தவன் என்பது இரண்டாமடியின் பொருள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

திருவி னாயக னுஞ்செழுந் தாமரை
மருவி னானுந் தொழத்தழன் மாண்பமர்
உருவி னானுறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.

பொழிப்புரை :

திருமகளின் நாயகனாகிய திருமாலும் , செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருந்தருளும் பிரமனும் , தொழுது போற்ற நெருப்பு மலையாக நின்ற மாண்புடைய வடிவினரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் பரவிப் போற்றும் அன்பர்கள் பற்றிலிருந்து நீங்கியவராவர் .

குறிப்புரை :

தழல் - நெருப்பாகிய . மாண்பு அமர் உருவினான் - பெருமை தங்கிய வடிவினை உடையவன் . பரவினார் - துதிப்பவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினு மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திற முள்கவே
மெலியு நம்முடன் மேல்வினை யானவே.

பொழிப்புரை :

நன்மை அறியாத சமணர்களும் , புத்தர்களும் பிறரை வருத்தும் சொற்களை வலிய உரைத்தாலும் அவற்றைப் பொருளாகக் கொள்ளாது , திருமழபாடியுள் வீரக்கழல்கள் ஒலிக்கத் திருநடனம் புரியும் சிவபெருமானின் அருட்செயலை நினைந்து போற்றினால் நம்மைப் பற்றியுள்ள வினையாவும் மெலிந்து அழியும் .

குறிப்புரை :

நலியும் - பிறரை வருத்துகின்ற . நன்று அறியா - நீதியை அறியாத . உடல் மேல் வினை - உடலைப்பற்றிய பிழைகள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

மந்த முந்து பொழின்மழ பாடியுள்
எந்தை சந்த மினிதுகந் தேத்துவான்
கந்த மார்கடற் காழியுண் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

தென்றல் காற்று வீசும் சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானைச் சந்தம் பொலியும் இசைப்பாடல்களால் போற்றி , வாசனை வீசும் கடலுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிக மாலையை ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

மந்தம் - தென்றற்காற்று . சந்தம் - இசைப்பாடல்கள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும் , நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும் , அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .

குறிப்புரை :

காதல் - அன்பு . மல்கி - மிக்கு . ஓதுதல் - சொல்லுதல் . இங்கே செபித்தல் என்னும் பொருளில் வந்தது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால் , நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது , எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தே ஆகும் .

குறிப்புரை :

நம்புவார் - விரும்புவார் . ` நம்பும் மேவும் நசை யாகும்மே ` என்பது தொல்காப்பியம் ( சொல் . உரி .) வம்புநாண் மலர்வார் மது - வாசனையுடைய புதிய மலரில் சொரிகின்ற தேன் . இம் மந்திரம் எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது . நம்பன் சிவபெருமானுக்கு ஒரு பெயர் . ` நம்பனே எங்கள் கோவே ` என்ற அப்பர் வாக்கால் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து , தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

உள் நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து . ஆர்வம் - ஆசை . அங்கையில் - அழகிய கையிலே . அக்குமாலை கொடு - உருத்திராக்கச் செபமாலை கொண்டும் . ( அங்கையில் - விரல் இடையினாலும் ). எண்ணுவார் - செபிக்கிறவர்களை . ( தகுதியற்றவர்கள் ஆயினும் ) தக்க - தகுதிவாய்ந்த . வானவராய் - தேவர்களாய் . தகுவிப்பது - தகுதிபெறச் செய்வது . நக்கன் - ஆடையிலியாகிய சிவபெருமான் . நாமம் நமச்சிவாயவே .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும் , நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் . இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால் , அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான் .

குறிப்புரை :

நியமம்தான் நினைவார்க்கு - தன்னை நாடோறும் தியானிப்பதையே நியமமாகக்கொண்டு வழிபடும் அடியவர்கட்கு . இனியான் - என்றும் நன்மை செய்பவனும் . நெற்றி நயனன் - நெற்றிக் கண்ணை உடையவனாகிய சிவபெருமானின் . நாமம் - திருப்பெயர் ஆகிய . நமச்சிவாயவே - ஸ்ரீ பஞ்சாட்சரத்தை . இதனை ` திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் ` என்ற அப்பர் வாக்காலுமறிக . இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார் தமை நண்ணினால் - இனிய சொல்லோடு நட்புக்கொண்டு பிறர் , ஸ்ரீ பஞ்சாட்சரத்தைச் செபிக்கும் பெரியோரைச் சேர்வரேல் அப்பிறர் ( செபிக்காதவர் ) பக்கலில் சேர , இயமன் தூதரும் அஞ்சுவர் , என்பது அஞ்செழுத்தைச் செபிப்போர்க்கே அன்றி அவரைச் சார்ந்த பிறருக்கும் எமவாதை இல்லை என்பதாம் . ` கொண்டதொண்டரைத்துன்னிலும் சூழலே ` என்ற காலபாசத் திருக்குறுந்தொகையில் துன்னிலும் என்பதால் குறித்த பொருளது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும் , நற்குணமும் , பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர் . அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

குணம் - நற்குணமும் . பல நன்மைகள் - பல நல்ல ஒழுக்கங்களும் . இல்லாரேனும் - இல்லாதவராயினும் . நல்லான் - சிவபெருமானுக்கொரு பெயர் . ` நல்லானை நல்லான நான் மறையொடு ஆறங்கம் வல்லானை ` என்ற அப்பர் வாக்காலும் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும் , திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும் . அவர்கட்குச் செல்வமும் பெருகும் . அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்பதாகும் .

குறிப்புரை :

மந்தரம் அன - மந்தர மலைபோன்ற ( பாவங்கள் ). மன்னிய - நிலை பெற்ற . பந்தனையவர் - பாசங்களால் கட்டுண்டவர் . அவர் தாமும் - அத்தகையோரும் . பகர்வரேல் - உச்சரிப்பார்களானால் . வல்வினை சிந்தும் செல்வமும் மல்கும் ( பெருகும் ) நந்தி - சிவபெருமான் . ` பேர்நந்தி உந்தியின் மேலசைத்த கச்சின் அழகு ` என்றார் அப்பர் . முதலிரண்டடிக்குப் பாவங்கள் பந்தனை இவையுடைய அத்தகையோரும் எனப் பொருள்கோடலன்றிப் பாவங்கள் மன்னிய பாசங்களாற் கட்டுண்டவர்களும் என ஓரிடத்திற்கு ஆக்குதலுமாம் . மந்தரம் - பாற்கடல் கடைந்த மலை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால் , உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர் . அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமும் திருவைந்தெழுத்தே ஆகும் .

குறிப்புரை :

வரதன் - கேட்ட வரம் அனைத்தும் தருவோன் . உருத்திரர் ... புகுவித்தாரும் என்ற கருத்து உருத்திர பல்கணத்தாருடன் கலந்து புகச் செய்யும் . என்பர் - என்று மெய்ஞ்ஞானிகள் கூறுவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல , சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும் , கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி , நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .

குறிப்புரை :

அடுக்கல் - மலை . மலங்கி - திகைத்து ; ` மலங்கினேன் கண்ணின் நீரைமாற்றி ` என்பது திருவாசகம் . வாய்மொழி செய்தவன் - வாயால் உச்சரித்தவன் . உய்வகை - பிழைக்கும்படியான வகை . நலம் கொள் - அத்தகைய நன்மையைத் தன்கட் கொண்டதான .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

போதன் போதன கண்ணனு மண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது `நமச்சிவாய` என்ற திருவைந்தெழுத்தேயாகும்.

குறிப்புரை :

போதன் - தாமரைப் பூவிலிருப்பவனாகிய பிரமனும். போது அன கண்ணனும் - ( தாமரைப் ) பூப்போன்ற கண்களையுடைய திருமாலும். நேடிய - தேடிய. யாதும் - பற்றுக்கோடு எதுவும். காண்பு - காண்டல். அரிதாகி - இல்லையாகி. அரிது - இல்லை என்னும் பொருளில் இங்கு வந்தது. `மனக்கவலை மாற்றலரிது` என்புழிப்போல் ஆகும்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.

பொழிப்புரை :

தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை , மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும் , கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர் .

குறிப்புரை :

கஞ்சி மண்டையர் - கஞ்சி குடிக்கும் பாத்திரத்தைக் கைக்கொண்டவர் . மண்டை - ஒருவகைப் பாத்திரம் ( புத்தர் ). கையில் உண்கையர்கள் - கையே பாத்திரமாக உண்ணுகின்ற கீழோர் . ( சமணர் ) மிண்டர் - மண்டையரும் கையருமாகிய மிண்டர் என்க . விஞ்சை - அறிவு . வித்தை - விச்சை எனப் போலியாய் , அது மெலித்தல் விகாரம் பெற்று விஞ்சை என்றாயிற்று . நஞ்சு - விடக்கறை . உள் கண்டன் - உள்ள கண்டத்தையுடையவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.

பொழிப்புரை :

நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப் பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர் .

குறிப்புரை :

சந்தையால் - இசையோடு, பாடிய என ஒரு சொல் வருவிக்க.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடம்
கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

விரும்பப்படுகின்ற சந்திரனையும், கங்கையையும் தாங்கி, சுரும்பு, தும்பி ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடியுள்ள சடை முடியையுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது கரும்பும், செந்நெலும், பாக்கு மரங்களும் நிறைந்து வளம் கொழிக்கும் திருத் தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

குறிப்புரை :

விரும்பும் - விரும்பப்படுவதாகிய. திங்களும் - சந்திரனும். (கங்கையும்). விம்ம - பொலிவு அடைய. வெறுக்கப்படும் தன்மைவாய்ந்தது, பின்கடவுள் அணிதலால் விரும்பப்படுவதாயிற்று. சுரும்பு, தும்பி, இவை வண்டின் சாதி விசேடம். மலரின் நறு மணத்துக்காகச் சூழ்கின்றன.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

இகழுங் கால னிதயத்து மென்னுளும்
திகழுஞ் சேவடி யான்றிருந் தும்மிடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

சிவபக்தரான மார்க்கண்டேயரை மதியாது இகழ்ந்த காலனின் இதயத்துள்ளும், என்னுள்ளும் திகழும், சிவந்த திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், புகழுடைய திருமகளும், அந்தணர்களும் விளங்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும். அத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

குறிப்புரை :

காலன் இதயத்துத் திகழுதல் அச்சத்தால்; என் உள் (உள்ளம்) திகழுதல் அன்பினால்; இக்கருத்தை \\\"அஞ்சியாகிலும், அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ\\\" என்னும் அப்பர் வாக்கால் அறிக. \\\"காலனறிந்தான் அறிதற்கரியான் கழலடியே\\\" என அவர் பாராட்டுவதாலும் அறிக. புகழ் - உபலட்சணத்தால் புண்ணியத்தையும் தழுவும். பூமகள் - இலக்குமி. செல்வமிகுதியால் (பழிபாவங்கள் ஈட்டுதலின்றிப்) புகழ் புண்ணியங்களையீட்டுந் தன்மையை உடைய பூசுரர் என்பது மூன்றாம் அடியின் குறிப்பு. நிகழும் - வசிக்கின்ற.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

பரந்த நீலப் படரெரி வல்விடம்
கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடம்
சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டனாக இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, ஓடையில் எருமை படிந்து பால் சொரியும் வளமிக்க திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு அப்பெருமானை வணங்கி வழிபடுங்கள்.

குறிப்புரை :

பரந்த - பரவிய. எரிவல்விடம் - கொதிக்கும் வலிய நஞ்சு. சுரந்த - பால்சுரந்த, (மடியினையுடைய.) மேதி - எருமைகள். மேதி - பால்பகா அஃறிணைப்பெயர். சுரந்த மேதி - சினைவினை முதல் மேலேற்றப்பட்டது. சொரிந்த பால் ஓடையில். நிரந்த - பரவித் தோன்றும், தண்டலை நீணெறி என்க. (ஓடையில்) நிரந்த என்ற எச்சத்திற்குச் (சொரிந்த) பால் என்னும் வினைமுதல் வருவித்து உரைக்கப்பட்டது. `காலுண்ட சேற்று மேதிக் கன்றுள்ளி கனைப்பச் சோர்ந்த பால்\\\' (கம்பராமாயணம் - நாட்டுப்படலம். 13) என்ற கவியின் கருத்துக் கொள்க. நிரந்த - இயல்பு பற்றிய கால வழுவமைதி.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

தவந்த வென்புந் தவளப் பொடியுமே
உவந்த மேனியி னானுறை யும்மிடம்
சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

வெந்த எலும்பும், திருவெண்ணீறும் உவந்து திருமேனியில் தரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சிவந்த பொன்னும், செழுமையான முத்துக்களும் மிகுந்த திருத்தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

குறிப்புரை :

தவந்த - வெந்த, என்பும் - எலும்பும், தவளப்பொடி - வெண்திருநீறு, தவந்த என்ற அடையை அடுத்தும் ஒட்டுக. வெந்த வெண்ணீறணிந்து என்ற வாக்குங் காண்க. நிவந்த - மிகுந்த, ஓங்கிய.

பண் : கௌசிகம்

பாடல் எண் : 5

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் : கௌசிகம்

பாடல் எண் : 6

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் : கௌசிகம்

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

இலங்கை வேந்த னிருபது தோளிற
விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடம்
சலங்கொ ளிப்பி தரளமுஞ் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு கயிலைமலையின்கீழ் அடர்த்த இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, நீரில் உள்ள சிப்பிகளும், முத்துக்களும், சங்குகளும் அலைகள் வாயிலாக அடித்துவரப்பட்டுச் செல்வவளம் மிகுந்த திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.

குறிப்புரை :

விலங்கல் - கைலைமலை, ஆறு தனதாகக் கொண்ட சிப்பி முத்து சங்கு, ஆகிய பொருள்களை, நிலம் தனதாகக் கொள்ளும் வளம் பொருந்திய தண்டலை நீணெறி.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

கருவ ருந்தியி னான்முகன் கண்ணனென்
றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடம்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

சிருட்டி செய்யும் பிரமன் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றினான். அவனும், திருமாலும் தெரிந்து கொள்ள முடியாத ஒப்பற்றவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது போரில் முயன்ற கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய கோயிலாகிய திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.

குறிப்புரை :

கருவரு உந்தியினான் - சிருட்டி எல்லாம் தன்னிடத் தினின்று உண்டாக்கத்தத்க உந்தியினான், உந்தியில் நான்முகன் தோன்றினான். செரு - போரில். வருந்திய - பகைவரை வருந்துவித்த. கோச்செங்கட்சோழ நாயனார்நாட்டிய தண்டலை நீணெறிநாயனார் ஆகையினால் நிருபன் என்னாது நிருபர் என்றார்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

கலவு சீவரத் தார்கையி லுண்பவர்
குலவ மாட்டாக் குழக னுறைவிடம்
சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

சீவரமென்னும் ஆடையைச் சுற்றிய புத்தர்களும், கையில் உணவைக் கவளமாய் வாங்கி உண்ணும் சமணர்களும் அன்பு செலுத்துவதற்கு எட்டாதவனாய் விளங்கும் அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வளைந்த மாமதில்களும், சுண்ணச்சாந்தினாலாகிய மாடங்களும் விளங்குகின்ற திருத்தண்டலை நீள்நெறி ஆகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.

குறிப்புரை :

கலவு - சுற்றிய, சீவரத்தார் - சீவரமென்னும் ஆடையையுடையவர்; புத்தர். இவர்கள் கொண்டாடுதற் கெட்டாத. குழகன் - அழகன். சுலவும் - வளைந்த. நிலவு - விளங்குகின்ற.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
சாற்று ஞானசம் பந்தன் றமிழ்வலார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே. 

பொழிப்புரை :

திருநீறு அணியப்பெற்ற அடியவர்கள் வாழும் திருத்தண்டலை நீணெறியில் வீற்றிருக்கும் நாதனை, அத்தகைய திருநீற்றின் மேன்மை விளங்கும் தோணிபுரத்தில் வீற்றிருந்தருளும் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் நிலைத்த செல்வத்தை உடையவர்களாய்ப் பிறவிப்பிணி நீங்கப் பெற்றவராவர்.

குறிப்புரை :

நீற்றர் - திருநீறணிந்த அடியார்கள் வாழும் தண்டலை நீணெறி. தோற்றம் - (விளங்கித்) தோன்றுகின்ற. (மேன்மையர்) தோணிபுரம் என்பதற்கும் இவ்வாறே உரைக்க. மாற்றில் - மாறுதல் இல்லாத (செல்வர்) - வந்து அழிந்து மாறும் பிற செல்வங்கள் அல்ல. மாற்று - முதனிலை திரிந்த தொழிற்பெயர். மறப்பர் பிறப்பை - இனிப் பிறவார் என்பது கருத்து.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

செய்ய னேதிரு வாலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

நடுநிலைமை உடையவரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரே ! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக . பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக .

குறிப்புரை :

செய்யனே - நடுநிலைமையை யுடையானே . ` ஒப்பநாடி அத்தக ஒறுத்தல் ` என்னும் குறிப்புப்போலும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

சித்த னேதிரு வாலவாய் மேவிய
அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எத்த ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

எல்லாம் வல்ல சித்தரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளிய தலைவரே ! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக . ஏமாற்றித் திரிவோராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு ஆருக மதத்தில் பக்தியுடையோனாகிய பாண்டிய மன்னனைப் பற்றுவதாக .

குறிப்புரை :

சித்தன் - எல்லாம் வல்ல சித்தராகியவன் . அத்தன் - தலைவன் . எத்தர் - ஏமாற்றுவோர் . கொளுவும் சுடர் - பற்றவைத்த தீ . பத்திமான் - ( ஆருக மதத்திற் ) பக்தியுடையவனாகிய அரசன் . தென்னன் - பாண்டியன் ; தமிழ்நாட்டின் தென்பகுதியை ஆள்பவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

தக்கன் வேள்வி தகர்த்தரு ளாலவாய்ச்
சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எக்க ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

சிவனை மதியாது தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்த திருஆலவாய்ச் சொக்கரே ! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக . இறுமாப்புடைய சமணர்கள் இம்மடத்திற்குப் பற்ற வைத்த நெருப்பு அத்தகையோர் பக்கமே சார்ந்து பாண்டிய மன்னனைப் பற்றுவதாக .

குறிப்புரை :

சொக்கன் - கண்டாரைச் சொக்கச் ( மயங்க ) செய்யும் பேரழகுடையவன் ; சுந்தரபாண்டியன் என்னும் பெயர் பூண்டமையும் காண்க . எங்கள் பக்கம் ஏவப்பட்ட தீ , அவர்கள் பக்கமே சென்று பாண்டியற்கு ஆகுக என்பது நான்காம் அடியின் கருத்து . எக்கர் - இறுமாப்புடையோர் , ஆடையிலிகள் எனினுமாம் ( பிங்கலம் ).

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

சிட்ட னேதிரு வாலவாய் மேவிய
அட்டமூர்த்திய னேயஞ்ச லென்றருள்
துட்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பட்டி மன்றென்னன் பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

நீதிநெறி தவறாதவரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அட்டமூர்த்தி வடிவானவரே ! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக ! கொடியவரான அமணர் இம்மடத்தில் பற்ற வைத்த நெருப்பு கல்வியறிவுடையோனாகிய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

சிட்டன் - நீதிமுறை வழுவாதவன் . பட்டிமன் - கல்வியறிவு உடைய அரசன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

நண்ண லார்புர மூன்றெரி யாலவாய்
அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பண்ணி யற்றமிழ்ப் பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

பகையசுரர்களின் திரிபுரங்களை எரித்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே ! என்னை அஞ்சேல் என்று அருள்செய்வீராக . சிந்திக்கும் திறனில்லாத சமணர்கள் இம்மடத்தைக் கொளுத்திய நெருப்பானது பண்ணிசையோடு தமிழ் வழங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

எரி ஆலவாய் அண்ணல் - எரித்த ஆலவாயிலுள்ள அண்ணல் . எண்ணிலா - நினைத்தல் இல்லாத . பண் இயல்தமிழ்ப் பாண்டியன் - பண்பு அமைந்த தமிழ்மொழி வழங்கும் பாண்டிநாட்டரசன் என்பது . ஈற்றடியின் பொருள் . பண்பு உணர்த்தும் விகுதி குன்றியது . இதில் முதல் தொடருக்கு இசையோடு கூடிய என்றுரைப்பினுமாம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
அஞ்ச லென்றரு ளாலவா யண்ணலே
வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
பஞ்ச வன்தென்னன் பாண்டியற்காகவே.

பொழிப்புரை :

திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே ! அபயம் என்று உம்முடைய திருவடிகளைச் சரணம் அடைந்த அடியேனையும் அஞ்சேல் என்று கூறி அருள்புரிவீராக . வஞ்சகம் செய்யும் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த இந்த நெருப்பு , பஞ்சவன் , தென்னன் முதலிய பெயர்களையுடைய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

தஞ்சம் - ( தண் + து + அம் ) அபயம் . அஞ்சல் - அஞ்சாதே . வஞ்சம் - ( வல் + து + அம் ) கொடுமை . பஞ்சவன் ; தென்னவன் ; பாண்டியனைக் குறித்த பெயர்கள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய்
அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
கங்கு லாரமண் கைய ரிடுங்கனல்
பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அழகிய கண்களையுடைய சிவபெருமானே ! அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வீராக ! இருள்மனம் கொண்ட சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது , உயிருக்குத் தீங்கு நேராதபடி பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

அங்கணன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர் . ` அங்கணன் கையிலை காக்கும் ` ( காஞ்சிப் புராணம் .) கங்குலார் - இருள் போன்றவர் . மீளவும் சைவம் திரும்புகின்றமையின் ` பங்கம் இல் தென்னன் ` என்றார் . ( தி .12 பெரியபுராணம் ) பங்கம் - குற்றம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

தூர்த்தன் வீரந் தொலைத்தரு ளாலவாய்
ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
ஏத்தி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற்காகவே.

பொழிப்புரை :

பிறன் மாதரை விரும்பிய தூர்த்தனாகிய இராவணனின் வீரத்தை அழித்துப்பின் அருள்செய்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருங்கருணையுடைய சிவபெருமானே ! அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வீராக ! இறைவனைத் துதிக்கும் பேறு பெறாத சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பு , இப்பூவுலகை ஆளும் தென்னன் பாண்டியனைச் சென்று பற்றுவதாக !

குறிப்புரை :

பிறன் மாதரை விரும்பினமைபற்றி இராவணன் தூர்த்தன் எனப்பட்டான் . ஏத்து ( தல் ) - துதித்தல் . இல்லா ( த ) அமணர் . பார்த் திவன் - பூமியை ஆள்பவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

தாவி னானயன் றானறி யாவகை
மேவி னாய்திரு வாலவா யாயருள்
தூவி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பாவி னான்தென்னன் பாண்டியற்காகவே.

பொழிப்புரை :

உலகத்தைத் தாவியளந்த திருமாலும் , பிரமனும் அறிய முடியாதவாறு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற திருஆலவாய் இறைவனே ! அடியேனுக்கு அருள் புரிவீராக ! நீராடாமையால் தூய்மையற்ற சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட இந்நெருப்பு இதற்குக் காரணமான பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக !

குறிப்புரை :

தாவினான் - உலகத்தைத் தாவி அளந்த திருமால் . தூஇலா - நீராடாமையால் தூய்மை இல்லாத அமணர் . பாவினான் - ( அத்தீயைத் திருமடத்தில் ) பற்றுவித்தவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

எண்டி சைக்கெழி லாலவாய் மேவிய
அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளிலும் எழில் பரவும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் , அண்டங்களுக்கெல்லாம் நாயகனான சிவபெருமானே ! அடியேனை அஞ்சேல் என்று அருள்புரிவீராக ! சிறுமையுடைய சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது தொன்மையாக விளங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

அண்டன் - தேவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

அப்ப னாலவா யாதி யருளினால்
வெப்பம் தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்த னுரைபத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.

பொழிப்புரை :

` எனக்குத் தந்தையாக விளங்கும் திருஆலவாய் ஆதிமூர்த்தியின் திருவருளால் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த நெருப்பின் வெப்பமானது பாண்டிய மன்னனைப் பற்றுவதாக ` என்று உலக நியதிக்கு ஏற்ற தன்மையில் ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் குற்றமற்ற செல்வர்களாகத் திகழ்வர் .

குறிப்புரை :

மேதினிக்கு ஒப்ப - உலகுக்கு ஒக்கும்படியாக ( உரைத்த பதிகம் .) முதற்பாடலில் செய்யனே என அழைத்தமையுங் காண்க . பதிகக் குறிப்பு . ஒவ்வொரு பாட்டிலும் கடவுளை விளிப்பன இங்கு உய்த்து உணரத்தக்கன . எனை அஞ்சல் என்று அருள்செய் , தீ பாண்டியர்க்கு ஆக என இருவாக்கியங்களாகக் கொள்வது பொருத்தம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.

பொழிப்புரை :

வீடுபேற்றிலன்றி வேறொன்றில் விருப்பம் இல்லாதவராய் மெய்ஞ்ஞானிகள் உம் திருவடிகளைப் போற்றிப்பாட , அவர்தம் வாக்கினிடமாக விளங்குபவரே ! அவர்கள் துதித்துப் போற்றுகின்ற பண்புகள் பலவற்றை உடையவரே ! சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தை விரும்பி நில்லாதவரே ! கபாலி என்னும் பெயரையுடையவராய் , மதில் சூழப்பெற்ற நான்மாடக்கூடல் என்னும் திருஆலவாயில் எழுந்தருளியுள்ள பெருமானாரே ! நீர் மதுரையம் பதியில் குலாவி விளையாடுவது எம்மால் அறியும் தரத்த தன்றா யுள்ளது .

குறிப்புரை :

விழுமியார்கள் - மெய்ஞ்ஞானிகள் . வீடு அலால் - முத்திப்பேற்றையன்றி . அவாய் , ( வேறொன்றை ) அவாவி - விரும்பி ( நிற்றல் ) இல் ஆய் - இல்லையாகி . நின் - உனது . கழல் - திருவடிகளை . ( பாடல் வாயிலாய் ) ஆல - கொண்டாட . பரவநின்ற பண்பனே - துதிக்கின்ற பண்பையுடையவனே . காடு அலால் - முதுகாட்டைத் தவிர . அவாய் - விரும்பி ( நிற்றல் ). இல்லாய் - இல்லாதவனே . நீள் - நெடிய . கபாலிமதில் - கபாலி என்னும் பெயரையுடையமதில் , விழுமியார்கள் நின்கழல்பரவநின்ற பண்பனே . காடு அல்லால் விரும்புதலில்லாதவனே , நான்மாடக்கூடலாகிய திருவாலவாயில் எழுந்தருளிய பெருமானே , குலாவி விளையாடியது எம்மால் அறியுந் தரத்ததன்று என்றவாறு . வீடல் ஆல ஆய் இல்லாய் - இறத்தல் அகல ( பிறத்தற்கு வாயிலான ) தாயில்லாதவரே . விழுமியார்கள் - மெய்யுணர்தலிற் சீரியோர்கள் . நின்கழல் - தேவரீர் திருவடித் தாமரைகளை . பாடல் - பாடுதலையுடைய . ஆலவாய் இல்லாய் - கல்லால மரத்தினகமே இல்லமாகக் கொண்டவரே . பரவ நின்ற பண்பனே - மண்ணும் விண்ணும் மற்றும் வாழ்த்த நின்றருளிய பண்புடையவரே . காடு அல்லால் அவாய் இல்லாய் - மகா சங்கார காலத்தில் யாவும் ஒடுங்கும் காடு அல்லாமல் வேறு யாதும் விரும்பியில்லாதவரே . கபாலிநீள் கடிமதில் - நீண்ட கபாலிஎன்று வழங்கப்பெறும் கடிமதில் ( சூழப் பெற்ற ). கூடல் - நான்மாடக் கூடல் ( என்றும் திருமருதந்துறை மதுரை என்றும் பெயர்கொண்ட நகரின் ) கண் உள்ள , ஆலவாயிலாய் - திருவாலவாய் என்று வழங்கப்பெறும் திருக்கோயிலை உடையவரே . குலாயது என்ன கொள்கை - ( கால்மாறி ) ஆடுவதற்கு என்ன கருத்து ? வீடல் ( வீடு + அல் ) - அழிதல் . ஆல - அகல . அகலல் என்றதன் மரூஉவே . ஆலல் என்பது . மயிலின் தோகை சுருங்கி யிருந்து அகலும் போது செய்யும் ஒலியை அகவுதல் என்பர் . அகலுவது தோகை , அகவுவது மயில் . இரண்டற்கும் சிறிது வேறுபாடு இருந்தும் , இரண்டும் ஒருசேரக் கருத்துள் வரும் வண்ணம் ` மயில் ஆல ` என்பது மரபு . திருஞானசம்பந்த சுவாமிகளே , ` மயில் ஆலச் செருந்திகாலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடு ` ` வண்டு பாட , மயில் ஆல , மான்கன்று துள்ள , வரிக்கெண்டை பாயச் சுனைநீல மொட்டு அலரும் கேதாரம் ` என்று அருளியதில் , ` ஆல ` என்ற சொல்லாட்சி உள்ளதை அறிக . ` அகன்றோர் ` என்பதன் மரூஉவே ஆன்றோர் . ` அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும் ` ( புறம் . 128) என்புழி , ஆலும் என்பது ஒலிக்கும் என்ற பொருளதாய் நின்றதும் ` ஆலோலம் ` என்னும் வழக்கும் உணர்க . ஆலோலம் ( அகல ஓலம் , ஆல ஓலம் , ஆலோலம் ) என்று மருவும் முன்பு இருந்த வடிவம் உய்த்துணர்தற்பாலது . ` பயில் பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும் ` ( புறம் . 116) என்புழி ` ஆலவும் ` என்ற பொருள் பயப்பதுணர்க . : முயங்கல் ஆன்றிசின் ` ( புறம் . 151) என்புழி , ` அமைந்தேன் ` என்று பொருளுரைத்ததும் , அதற்குரிய அடிச்சொல் ( பகுதி ) ஆங்கு இல்லாமையும் , அதன் அடி ` அகல் ` என்பதும் , அஃது அகன்றிசின் என்பதின் மரூஉவே என்பதும் அறிதல் சிலர்க்கே எளிது . ` ஆனாது உருவும் புகழும் ஆகி ` ( புறம் . 6) ` அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடி சில் ` ( புறம் . 10) ` ஆனா ஈகை அடுபோரண்ணல் ` ( புறம் . 42) என்னும் இடங்களில் , எதிர்மறையில் வந்த ` ஆனாமை ` க்கு எவ்வடிவின் அமைந்த சொல் உடன்பாடாகலாம் ? ஆனுதல் எனலாமோ ? ஆன்றல் என்றுள்ளதேல் அதன் பகுதி யாது ? அகல் + தல் = அகறல் . அகல் - ஆல் என மருவி , அது , தல் என்னும் விகுதியொடு சேருங்கால் ` ஆன்றல் ` என்றாயிற்று , ஆகவே , வீடல் ஆல என்றதற்கு இறப்பு அகல என்ற பொருளே உரியதென்க . எனவே இறப்பின்மை பெறப்பட்டது . ஆய் :- யாய் என்றதன் மரூஉ . யாய் தன்மைக்கும் , ஞாய் முன்னிலைக்கும் , தாய் படர்க்கைக்கும் உரியன . ` யாயும் ஞாயும் யாராகியரோ ` ( குறுந்தொகை ). ` யாயை வெறுத்ததன் பின்னை விதியை வெறுத்தனன் ` ( வில்லி பாரதம் ). ஆய் இல்லாய் :- ஆய் இல்லாமை பிறப்பின்மையைக் குறிக்கநின்றது . நிற்கவே இறப்பகலப் பிறப்பில்லாய் என்றவாறாம் . ` தோற்றம் உண்டேல் மரணம் உண்டு `. இறப்பும் பிறப்பும் இல்லாத கடவுள் . ` பிறப்பில் பெருமான் ` ` பிறப்பினோடிறப்பிலே ` என்னும் இப்பெருமான் திருவாக்குணர்க . ஆலவாய் - ஆலமர நிழலகம் . வாய் - இடம் . இல் வாழும் இடம் . பரவ - வாழ்த்த . ` பரவுவார் இமையோர்கள் `. ` யானும் உன்னைப் பரவுவனே .` (` வாழ்த்துவதும் ` எனத்தொடங்குந் திருவாசகம் ). பண்பு - அருட்பண்பு . எண் குணம் . காடு - ` கோயில் சுடு காடு `. சருவசங்கார காலத்தில் ` தானொருவனுமே ` நிற்றலின் , அது சிறந்த வீடாயிற்று . மதுரையில் உள்ள திருமதிலுக்கு , ` கபாலி ` என்ற பெயர் உண்டு . கடி - காவல் . கூடல் :- கன்னி , கரியமால் , காளி . ஆலவாய் என்னும் நான்கன்கூட்டம் பற்றிய காரணப்பெயர் . நான்மாடக் கூடலான படலத்து வரலாறும் கொள்ளலாம் . ஆலவாய் : மதுரையில் உள்ள திருக்கோயிலின் பெயர் . குலாயது என்ன கொள்கை :- பின்னர் ( பா .2,3,7,10) உள்ள வினாக்களுக்கு ஏற்பப் பொருள் கொள்க . குலாவுதல் - ஆடுதல் . ` ஆடுங்குலாத்தில்லையாண்டான் ` கொள்கையும் கோட்பாடும் ஒன்றாகா ? கொள்கை செய் வினை . கோட்பாடு செயப்பாட்டுவினை . கொள்கைக்குக் கோட்பாடு என்று பொருளுரைத்தல் சில இடத்திலன்றி எல்லா இடத்திலும் பொருந்தாது . ` ஒன்று வேறுணர்வும் இல்லேன் தெளிவற நிறைந்த கோலம் , மன்றில் நான் மறைகள் ஏத்த மானிடர் உய்ய வேண்டி , நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் , என்று பூம் புகலி மன்னர் இன்தமிழ்ப் பதிகம் பாட ` எனச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய கருத்தே இப்பதிகப் பாடல்களில் அமைந்திருத்தல் காண்க . 1. வீடு ஆலால வாயிலாய் :- ` அழிக்கத்தக்க ஆலகால விடத்தை உண்ட திருவாயினை உடையவரே . 2. கரிய விடத்தையுடைய பாம்பினால் காட்டப்பட்ட இடத்தை இருப்பாகக் கொண்டவரே . 3. வீடு பெறற் பொருட்டுக் கல்லால் ஆகிய அவ்விடத்தில் ஆய்ந்த ( விழுமியோர்கள் ) ( சனகாதி முனிவர் ) பாடலாலவாயிலாய் : பாடுதலினால் அந்த வாக்கினிடம் விளங்குபவரே . காடலால் அவாயிலாய் - சுடுகாடேயன்றி வேறு இருப்பிடம் விரும்பாதவரே . குலாயது - எம்முடன் உள்ளே விளங்க விரவி எழுந்தருளியிருந்து அருள்புரிந்து ஏற்றுக்கொண்டது என்றாருமுளர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

பட்டிசைந்த வல்குலாள் பாவையாளோர் பாகமா
ஒட்டிசைந்த தன்றியும் முச்சியாளொ ருத்தியாக்
கொட்டிசைந்த வாடலாய் கூடலால வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.

பொழிப்புரை :

பட்டாடை அணிந்த திருமேனியுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாவண்ணம் கொண்டதோடு , சடைமுடியின் உச்சியில் கங்கா தேவியையும் தாங்கியவரே ! கொட்டு என்னும் பறை முழங்க ஆடுபவரே ! கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள்பவரே ! அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே ! உம் அருள்தன்மை எம்மால் எடுத்தியம்ப வல்லதோ .

குறிப்புரை :

ஒட்டு இசைந்தது - பொருந்தியிருந்தது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

குற்றநீ குணங்கணீ கூடலால வாயிலாய்
சுற்றநீ பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.

பொழிப்புரை :

திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! நீரே உயிர்க்குள் உயிராய் ஒன்றி உடனிருந்து இயக்குகிறீர் . ஆதலால் எனது குற்றமும் நீரே ; குணமும் நீரே ; என் சுற்றமும் தலைவரும் நீரே . என்னுள்ளிருக்கும் அறியாமையாகிய இருளை நீக்கி அறிவொளி தொடர்ந்தொளிரச் செய்யும் சோதி நீரே . பொதுவும் , சிறப்புமாகிய வேத , ஆகம நூல்களில் கருத்தும் நீரே . நூல்களில் உட்பொருளை அடியேன் நனிவிளங்கச் செய்பவரும் , அவ்விளக்கத்தால் இன்பம் அடையச் செய்பவரும் நீரே . உம் திருமுன் அடியேன் இவ்வாறு உம்மைப் புகழ்வது உண்மையேயன்றி வெறும் புகழ்ச்சியன்று .

குறிப்புரை :

அருத்தம் - பொருள் . முன்புகழ்ந்து உரைப்பது - முன்னால் புகழ்ந்து சொல்வது . என்? ( ன )? எத்தகையது ? ( முகமன் பாற் படும் .)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

முதிருநீர்ச் சடைமுடி முதல்வன்நீ முழங்கழல்
அதிரவீசி யாடுவா யழகன்நீ புயங்கன்நீ
மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே.

பொழிப்புரை :

மதுரை என வழங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே ! தூயகங்கையைச் சடைமுடியில் தாங்கிய முதல்வன் நீ . சப்தத்துடன் எரியும் நெருப்பிடையே நின்று நிலமதிர ஆடுபவன்நீ . அழகன் நீ . பாம்பை ஆபரணமாக அணிந்தவன் நீ . வரம்பில் இன்பம் உடையவன் நீ . மணவாளன் நீ . மதுரை எனப்படும் ஆலவாயில் வீற்றிருந்தருளுபவன் நீ . சாமர்த்தியமுடையவன் நீ . பிரமகபாலமேந்திப் பலியேற்றுத் திரியும் சிவபிரான் நீ .

குறிப்புரை :

புயங்கன் - பாம்பை அணிந்தவன் . மதுரன் - இனியவன் . சதுரன் - சாமர்த்தியவான் . சம்பு - சிவபிரான் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

கோலமாய நீண்மதிற் கூடலால வாயிலாய்
பாலனாய தொண்டு செய்து பண்டுமின்று முன்னையே
நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.

பொழிப்புரை :

அழகிய நீண்ட மதில்களையுடைய கூடலில் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருமானே ! மார்க்கண்டேயர் , சண்டேசுரர் போன்ற பாலர்கள் சிவபூசை செய்து பண்டைக் காலத்தும் , இக்காலத்தும் வழிபட விளங்கும் நீலகண்டனே . தேவர்கள் உன்னையன்றிப் பிற தெய்வங்களைத் தமது தூயசிந்தையில் கொள்ளாதவராய் வாழ்கின்றனர் .

குறிப்புரை :

பாலன் ஆய - சண்டேசுவர நாயனார் போன்ற . தொண்டு செய்து - வழிபாடு புரிந்து . ஆலவாயிலாய் - நீலம் ஆய கண்டனே . தேவர் நித்தலும் தொண்டு செய்து நின்னையே தேர்வ தன்றிப் பிற தெய்வங்களைச் ( சீலமாய சிந்தையில் ) தேர்வதில்லை என முடிவுகொள்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

பொன்றயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை
பின்றயங்க வாடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய் கூடலால வாயிலாய்
நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.

பொழிப்புரை :

பொன்போல் ஒளிரும் அழகிய சடைமுடி பின்னால் தாழ்ந்து அசைய நடனம் ஆடுபவரே ! தலைக்கோலம் உடையவரே ! பிறப்பற்றவரே ! கொன்றைமாலை சூடிய முடி உடையவரே ! நான்மாடக் கூடலில் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! உம் ஒளிமயமான திருநடனத்தை நினைத்து இன்புற்றிருப்பதே உயிர்கள் உய்தி பெறுதற்குரிய நியமம் ஆகும் .

குறிப்புரை :

பொன்தயங்கு - பொன்போல் விளங்கும் . இலங்கு - பிரகாசித்த ; விளங்குகின்ற . ஒளிநலம் - சிறந்த ஒளியையுடைய , குளிர்ந்தசடை . நின் - உனது . தயங்கிய - விளங்குகின்ற . ஆடல் - திருக்கூத்தை . நினைப்பதே - நினைந்து இன்புற்றிருப்பதே . நியமம் - ஆன்மாக்கள் உய்தி கூடுதற்குரிய நியமம் ஆகும் . ஆடலே - ஏ - அசை நிலை . ` குறியொன்றுமில்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாறு ` என்ற திருவாசகமும் கொண்டு ஈற்றடிப் பொருள் தெளியப்படும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

ஆதியந்த மாயினா யாலவாயி லண்ணலே
சோதியந்த மாயினாய் சோதியுள்ளொர் சோதியாய்
கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால்
ஓதிவந்த வாய்மையா லுணர்ந்துரைக்க லாகுமே.

பொழிப்புரை :

உலகத் தோற்றத்திற்கும் , ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! பேரொளிப் பிழம்பாக விளங்குபவரே ! பெருஞ்சோதிக்குள் சோதியாய் ஒளிர்பவர்நீர் . உபதேச வழியாகச் சிவஞானம் பெற்ற பக்குவமுடைய ஆன்மாக்களுக்கு அல்லாமல் ஏனைய அபரஞானமாகிய கல்வி அறிவுடையோர்க்கு உம் அருட்பண்பை உணர்தற்கும் , உரைப்பதற்கும் இயலுமோ ?

குறிப்புரை :

சோதி அந்தம் - ஒளியின் முடிவு . கீதம்வந்த - உபதேசம் வழியாய்ப்பெற்ற . வாய்மையால் - சிவஞானத்தால் . கிளர் - விளங்குகின்ற . தருக்கினார்க்கு - பக்குவ ஆன்மாக்களுக்கு . அ ( ல் ) லால் - ( கேட்டுச் சிந்தித்தவருக்கு அல்லாமல் ) ஓதி வந்த வாய்மையால் - கற்று அறிந்த அபர ஞானத்தால் . உணர்ந்து உரைக்கலாகுமே ?

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.

பொழிப்புரை :

விடக்கறை விளங்கும் கழுத்தை உடையவரே ! கரிய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனின் தோள்கள் நொறுங்கும்படி திருக்கயிலைமலையில் காற்பெருவிரலை ஊன்றியவரே ! வேதங்களிலுள்ள பாடல்களால் போற்றப்படுபவரே ! மதுரையிலுள்ள திருஆலவாயில் வீற்றிருந்தருளுபவரே ! மனத்தை ஒரு வழியே நிறுத்தி உம்மை நினைப்பதே உய்தற்குரிய நியமமாகும் .

குறிப்புரை :

கறை - விஷத்தின் கறுப்பு . கருத்திலாமை மன்னனைச் சார்வது . நிறை - ( புலன்வழியோடாது ) நிறுத்தல் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறும்
கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனு மாலுநின்
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.

பொழிப்புரை :

தாவிச் செல்லும் இடபத்தை வாகனமாக உடையவரே ! தலைமை உடையவராய் நாடொறும் கோவண ஆடையோடு கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள் செய்பவரே ! நெருப்புப் போன்று செந்நிறமான தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் , உம் முழுமுதல் தன்மையை அறியாதவர்களாய்க் கலக்கம் உற்றார்கள் .

குறிப்புரை :

தாவண்ணம் - தாவும் தன்மை . தீவணம் மலர் - செந்தாமரை மலருக்குத் தீவணம் நிறத்தால் உவமை . ` எரியாத தாமரை மேல் இயங்கினாலும் ` ( அப்பர் ) ` எரியகைந்ததன்ன தாமரை நாப்பண் ` எனவரும் புறநானூற்றாலும் அறிக . தூவணம் - பற்றுக் கோடாம் தன்மை . ( புறம் )

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

தேற்றமில் வினைத்தொழிற் றேரருஞ் சமணரும்
போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்து புண்ணியங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.

பொழிப்புரை :

தெளிவில்லாத செயல்களைச் செய்யும் புத்தரும் , சமணரும் உம் திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியங்களைத் தேடிக்கொள்ளாதவராயினர் . காலனை மார்க்கண்டேயர்க்காக உதைத்த திருவடிகளை உடையவரே ! கூடல் ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே ! உலகனைத்திற்கும் தலைவராக விளங்கி உயிர்கட்கு எல்லா நன்மையும் தருபவர் நீவிர் அல்லிரோ ?

குறிப்புரை :

நால்திசை - அன்மொழித் தொகையாய் உலகம் என்னும் பொருளிலும் , மூர்த்தி என்பது கடவுள் என்னும் பொருளிலும் வந்தன . ` உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே `. ( தி .6. ப .38. பா .1)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயிலண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.

பொழிப்புரை :

நீர்வளம் தரும் , ஒலிக்கின்ற ஆறு பாய்கின்ற சீகாழியில் அவதரித்த பரந்த கேள்வி ஞானமுடைய ஞானசம்பந்தன் இறைவனுடைய நற்பண்புகளைப் போற்றி அருளிய இச்சொல் மாலையை ஓதித் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இச்சிவ பெருமானை வழிபடுபவர்கள் தீமைகள் நீங்கப்பெற்று நற்சிந்தையுடைய தேவர்களாவர் .

குறிப்புரை :

போய் - வந்து பாய்ந்த . நீர் , பாய - பரந்த . தீய ( வை ) - தீவினைகள் . இனிப்போதல் என்பதற்கு நேர்மை என்னும் பொருள் உண்மையால் பருவகாலத்திற் பெய்த நீர் எனினும் பொருந்தும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவி லின்மொழித் தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேத மில்லையே.

பொழிப்புரை :

வானிலுள்ள இருளைப் போக்கும் வெண்மதியைச் சடையில் தாங்கி , தேன் போன்ற இனிய மொழிபேசும் உமாதேவியைத் தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு , திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைச் சரணாக வாழ்பவர்கட்குத் தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாமல் பிறதுணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் எதுவும் இல்லை .

குறிப்புரை :

வானை - செவ்வானத்தை ; கா - காத்திருத்தல்போல . வெண் மதி , மல்கு - ஒளிமிகும் . புல்கு - பொருந்திய . வார்சடை , செவ்வானம் சடைக்கு உவமை . கா - முதனிலைத் தொழிற்பெயர் . இல் - ஐந்தன் உருபு ஒப்புப்பொருள் . தேனைக்காவில் இன்மொழி - தேனைக் கலந்துள்ள இனிமைதங்கிய மொழி . ( காவில் காவுதலில் உள்ள இனிமை . காவுதல் - கலந்திருத்தல் ). அபயம் - சரண் ; புகலிடம் ` வார்தல் , போகல் , ஒழுகல் மூன்றும் , நேர்பும் , நெடுமையும் செய்யும்பொருள ` என்பது தொல்காப்பியச் சூத்திரம் ( சொல் . சூத் . 317. ) ஏனைக்காவல் வேண்டுவார் . ஏதம் - தம்மைத்தாமே காத்துக்கொள்ள முடியாமற் பிற துணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் . ஏதும் - எதுவும் , ஆனைக்காவில் அண்ணலைச் சரணாக வாழ்பவருக்கு இல்லை . வாழ்பவர் - நான்கன் உருபுத்தொகை . ` ஐந்தவித்தான் ஆற்றல் ` என்புழிப்போல ( திருக்குறள் ) பாடபேதம்: வானைக்காவல்

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று சேணுலா
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவி லண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாத மேத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே.

பொழிப்புரை :

சேறுடைய குளிர்ச்சி பொருந்திய வயல் வளம் பெருகுமாறு , நெடுந்தொலைவு சென்று ஓடிவரும் காவிரி ஆற்றின் துறையில் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாகிய சிவபெருமான் , திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர் . ஒப்பற்ற அப்பெருமானின் திருவடிகளைப் போற்றுபவர்கள் , சிந்தை முதலிய பசுகரணங்கள் , பதி கரணங்களாக மாறியவர்களாய் , முத்தியின்பம் பெறுவதற்குரிய சிவஞானம் கைகூடப் பெற்றவர்கள் ஆவர் .

குறிப்புரை :

சேண் உலா - நெடுந்தூரத்திலிருந்து உலாவி வருகின்ற ; ஆறு . சென்று சென்று - பலதரமும் சென்று . சிந்தை முதலிய பசு கரணங்கள் . பதிகரணங்களாக மாறியவராய் விண்ணில் எண்ண வல்லர் - முத்தியின்புற்றோராய்க் கருதத்தக்கவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

தாரமாய மாதரா டானொர்பாக மாயினான்
ஈரமாய புன்சடை ஏற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை யானைக்காவி லண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.

பொழிப்புரை :

தாரமாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான் . கங்கையைத் தாங்கிய சடை முடியில் சந்திரனையும் சூடியவர் . சோழ அரசனின் வேண்டுகோளுக்கிணங்க , அவனது தொலைந்த இரத்தின மாலையைத் திருமஞ்சன நீரோடு தம் திருமார்பில் ஏற்றவர் . திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை அன்புடன் வணங்குவார்களின் தீவினைகள் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

வாரம் - உரிமை . ஆரம் ஆய மார்பு - என்றது , உறையூர்க் காவிரித் துறையில் நீராடிய சோழ அரசர் ஒருவர் தமது இரத்தின ஆரம் ஆற்றில் நழுவியதையறிந்து இவ்வணிகலன் ஆனைக்காவில் அண்ணலுக்கு ஏற்பதாகுக என்றனராக இங்குத் திருவானைக்காத் திருமஞ்சனத்துறையில் நீர் சுமந்தோர் இறைவனுக்கு விட்ட அந்நீரோடு அந்தமணி ஆரம் இறைவர் திருமார்பில் விழ ஏற்றனர் என்னும் வரலாறு ` ஆரம் நீரொடேந்தினான் ஆனைக்காவு சேர்மினே ` என வருவதும் காண்க . ( தி .3 ப .5. பா .7)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

விண்ணினண்ணு புல்கிய வீரமாய மால்விடைச்
சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான்
அண்ணல்கண்ணொர் மூன்றினா னானைக்காவு கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க் கேதமொன்று மில்லையே.

பொழிப்புரை :

வானில் நண்ணிச்சென்று முப்புரம் எரித்தபோது திருமால் இடபமாகத் தாங்கினான் . இறைவன் திருவெண்ணீறு அணிந்தவன் . சூலமேந்திய கையினன் . மூன்று கண்களையுடைய மூர்த்தியான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்காவைக் கைதொழ எண்ணும் அன்பர்கட்குத் தீமை எதுவும் இல்லை .

குறிப்புரை :

விண்ணின் நண்ணு - வான்வழியாக வருகின்ற . புல்கிய வீரம் ஆய - பொருந்திய வீரத்தையுடைய , மால்விடை . கைதொழ வல்லவர்க்கும் - ( எண்ணும் வண்ணம் ) தியானிக்குமாறு வல்லவர்க்கும் தீங்கு எதுவும் நேராது என்பது இப்பாடலின் இறுதிப் பகுதியின் பொருள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

வெய்யபாவங் கைவிட வேண்டுவீர்க ளாண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று சென்னியெம்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு சேர்மினே.

பொழிப்புரை :

கொடிய பாவமானது விலக வேண்டும் என்று விரும்புகிற அன்பர்களே ! தேவர்களைக் காத்து அருள்புரிந்த நஞ்சுண்ட இருண்ட கண்டத்தினனும் , வெப்ப மிகுந்த நெருப்பினை ஏந்தி ஆடுகின்ற அன்புடையவனும் , அன்றலர்ந்த கொன்றை மலரைக் கொய்து தலையிலணிந்தவனுமான எம் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

வெய்ய , தீ மாலையாடு காதலான் - தீயிற் காதலோடு ஆடும் இயல்புடையவன் . மாலை - இயல்பு ( தொல் - சொல் ).

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
ஆணும்பெண்ணு மாகிய வானைக்காவி லண்ணலார்
காணுங்கண்ணு மூன்றுடைக் கறைகொண்மிடற னல்லனே.

பொழிப்புரை :

அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத பிறர் நாணத்தக்க நாணமும் , பதியை ஓர்ந்து அறிதலும் , அறிந்தபின் சார்ந்திருத்தலும் , சார்தலினால் மகிழ்ச்சியும் , மனத்தை அடக்கி உள்கித் தியானம் செய்தலுமாகிய நன்மையும் உடையவர்களாய் , எவற்றையும் பொருட்படுத்தாத வீரியமும் கொண்ட அடியவர்கள் கொண்டாடிப் பேசத்தக்க தன்மையை உடைய , சிவபெருமான் ஆணும் , பெண்ணும் சேர்ந்ததாகிய அர்த்தநாரித் திருக்கோலத்தில் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாய் மூன்று கண்களையுடையவராய் விளங்குபவர் அல்லரோ ?

குறிப்புரை :

நாணும் ஓர்வு - பிறர் நாணத்தக்க ஞானமும் , சார்வும் - எவருக்கும் பற்றுக் கோடாதற்குரிய ஐசுவரியமும் . முன்நகையும் - எவருக்கும் முற்பட்ட மகிழ்ச்சியை விளைக்கும் புகழும் . உட்கும் - எவரும் அஞ்சத்தக்க வீரியமும் , நன்மையும் திருவும் . பேண் உறாத செல்வமும் - எவற்றையும் பொருட்படுத்தாத வீரியமும் . ஆகிய இவ்வாறு குணங்களையும் ; பேசநின்ற - அடியவர் கொண்டாடிப் பேசத்தக்க . பெற்றியான் - தன்மையை உடையவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

கூருமாலை நண்பகற் கூடிவல்ல தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
பாரும்விண்ணுங் கைதொழப் பாயுங்கங்கை செஞ்சடை
ஆரநீரொ டேந்தினா னானைக்காவு சேர்மினே.

பொழிப்புரை :

காலை , மாலை , நண்பகல் முக்காலங்களிலும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள் ஒன்று கூடி , இறைவனின் திருநாம மகிமைகளையும் திருத்தலங்களின் சிறப்புக்களையும் , அவன் அருட்செயல்களையும் போற்றிப் பேச விளங்கும் தன்மையன் சிவபெருமான் . பூவுலகத்தோரும் , விண்ணுலகத்தோரும் கைதொழுது வணங்கக் கங்கையைச் செஞ்சடையில் தாங்கியுள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மாலை , நண்பகல் கூறவே ஏனைக்காலையும் அடங்கிற்று , முப்பொழுதிலும் என்க . ` முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தியவனிருக்கும் வண்ணங்கேட்டாள் , பின்னையவனுடைய ஆரூர்கேட்டாள் ` என்ற அப்பர் வாக்கோடு இரண்டாமடி யொத்திருத்தல் காண்க . கங்கை நீரோடு செஞ்சடை ஆர ஏந்தினான் என்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

பொன்னமல்கு தாமரைப் போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்டுறை யானைக்காவி லண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழ றுன்னவல்லர் விண்ணையே.

பொழிப்புரை :

இலக்குமி வீற்றிருந்தருளும் தாமரை மலரில் வண்டினம் ரீங்காரம் செய்யவும் , அன்னப்பறவைகள் வைகும் குளிர்ந்த நீர்நிலைகளின் துறைகலை உடைய திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை நான்கு வேதங்களிலுமுள்ள பாடல்களைப் பாடி , அவன் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கள் இப்பூவுலகின்கண் குறைவற்ற செல்வராய்த் திகழ்வதோடு மறுமையில் விண்ணுலகை ஆள்வர் .

குறிப்புரை :

பொன்னம் - இலக்குமி . தனிமொழியும் சாரியை பெற்றது . திருவடியை நினைக்கும் தன்மைவல்லர் ஆவார் விண்ணையும் அடைய வல்லர் ஆவார் . ( விண் - முத்திப்பேறு ) என்றது ஈற்றடியின் பொருள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

ஊனொடுண்ட னன்றென ஊனொடுண்டல் தீதென
ஆனதொண்ட ரன்பினாற் பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்று
ஆனொடஞ்சு மாடினா னானைக்காவு சேர்மினே.

பொழிப்புரை :

ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் நன்று என்று சுவைமிகுந்த இறைச்சியைப் படைத்த கண்ணப்பநாயனாரின் அன்பிற்கும் , ஊன் உணவு இறைவனுக்குப் படைத்தல் அபசாரம் அது தீது என மருண்ட சிவகோசரியார் அன்பிற்கும் கட்டுண்ட தன்மையினனும் , பிறைச்சந்திரனைச் சடையில் சூடி , சத்தியப் பொருளாக என்றும் நிலைத்து நின்று , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப் படுகின்றவனுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தைச் சார்ந்து அவனை வழிபட்டு உய்யுங்கள் .

குறிப்புரை :

மூதலீரடி கண்ணப்பநாயனார் வழிபாட்டையும் , சிவகோசரியர் வழிபாட்டையும் குறிப்பன . வானொடு ஒன்று - வானில் பொருந்துதலையுடைய ( மதியை ) சூடினான் . ஒன்று - ஒன்றுதலையுடைய மதிக்கு ஆனது தொழிலாகு பெயர் . ஆனோடு அஞ்சு - மூன்றனுருபு ஆறன் பொருளில்வந்த வேற்றுமை உருபு மயக்கம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

கையிலுண்ணுங் கையருங் கடுக்கள்தின் கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை யறிகிலார்
தையல்பாக மாயினான் றழலதுருவத் தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு சேர்மினே.

பொழிப்புரை :

கையில் உணவு வாங்கி உண்ணும் சமணரும் , கடுக்காய்களைத் தின்னும் புத்தர்களும் , மெய்ப்பொருளாம் இறைவனை உணராது பொய்ப்பொருளாம் உலகியலைப் பற்றிப் பேசுபவர்களாய் வேதநெறியை அறியாதவர்கள் . எனவே அவர்களைச் சாராது , உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும் , நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியை உடையவருமான எங்கள் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து அவரை வழிபட்டு உய்யுங்கள் .

குறிப்புரை :

கடுக்கள் - கடுக்காய்கள் . கழுக்கள் - கழுந்து போல்வார் . மெய்யைப்போர்க்கும் பொய்யர் , உடம்பைப் போர்வையாற் போர்ப்போர் எனவும் , பொய்யை மெய்யாக நடிப்போர் எனவும் பொருள்தரும் . சிலேடை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

ஊழியூழி வையகத் துயிர்கடோற்று வானொடும்
ஆழியானுங் காண்கிலா வானைக்காவி லண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகண் மாயுமே.

பொழிப்புரை :

ஊழிக்காலந்தோறும் உயிர்களுக்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைக்கின்ற பிரமனும் , திருமாலும் இறைவனின் முடியையும் , அடியையும் தேடிச்சென்றும் காண்பதற்கு அரிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானைச் சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை மண்ணில் நல்ல வண்ணம் வாழக் கற்று ஓதவல்லவர்களின் கொடியவினையாவும் மாய்ந்தழியும் .

குறிப்புரை :

ஊழிக்காலம் தோறும் , உயிர்கள் தோற்றுவான் - உயிர்களுக்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைப்பவன் . வாழி - வாழ்வு தருவது . இகரம் கருவிப் பொருளில் வந்தது . பதிகக் குறிப்பு எட்டாம் பாடலில் இராவணன் செயல் குறிக்கப் பெறாமலும் , ஒன்பதாம் பாடலில் வரும் அரி , பிரமர் செயல் திருக்கடைக்காப்பில் வரப்பெறவும் அமைந்துள்ளது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

பொழிப்புரை :

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக .

குறிப்புரை :

( அ ) அந்தணர் , வானவர் . ஆன் இனம் வாழ்க என்றது வேள்வி முதலியவற்றாலும் ஆலயங்களில் சிவார்ச்சனை முதலிய வழிபாடுகளும் நிலைத்து நிற்கவும் , அங்ஙனம் நிலைத்து நிற்றலால் உலகம் சுபிட்சமாக வாழவும் வேண்டி இங்ஙனம் வாழ்த்துவது வேள்வியால் உலகம் சுபிட்சம் உறும் எனலை , ` கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் ` என்பதாலும் அறிக . ( முதல் திருமுறை ) ( ஆ ) தண்புனல் வீழ்க என்றது . வேள்வியின் பயன்மழை பெய்தலும் , குறித்து . மழையை வாழ்த்தியவாறு . ( இ ) வேந்தனும் ஓங்குக என்றது - சிவாலய பூசை முதலாகிய இவற்றை என்றும் அழியாது காத்துவருபவன் அரசன் , ஆதலின் அரசனை வாழ்த்தியவாறு . ` ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் ` என்பதை நோக்குக . ( குறள் . 560) ( ஈ ) தீயது எல்லாம் ஆழ்க என்றது . சைவசமய மல்லாத மற்றைச் சமய நெறிகளெல்லாம் ஒழிக , என்றும் உயிர்கட்குத் தீமை பயப்பன பிற அனைத்தும் ஒழிக என்றவாறு . எல்லாம் என்னும் எழுவாய்க்குப் பயனிலை சூழ்க என்பது . இது சேக்கிழார் அருளிய பொருளிற் கண்டது . ( உ ) அரன்நாமமே சூழ்க என்றது . ஆன்மவர்க்கங்கள் அனைத்தும் சிவபெருமான் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை ஓதி வாழ்ந்து , ஓங்குவன ஆகுக என்றவாறு . ` ஐந்தெழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை , முனைவனே முதல் அந்தம் இல்லாமல்லற் கரை காட்டி ஆட்கொண்டாய் ` என்ற திருவாசகக் கருத்தும் காண்க . ( ஊ ) வையகமும் துயர்தீர்கவே என்றது . உலகத்தவர்க்கு இம்மை மறுமை இரண்டிலும் நேரக்கூடிய துன்பங்கள் நீங்குக என்றவாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.

பொழிப்புரை :

பாச ஞானத்தாலும் , பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர் . பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து , நெருப்பேந்திய கையர் , ஏறுகந்தேறுவர் , கண்டமும் கரியவர் , காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர் . ஆயினும உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர் . அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும் ?

குறிப்புரை :

அரிய காட்சியராய் ... வாழ்க்கையர் என்றது . அன்பில்லார்க்குக் காண்டற்கு அரியர் ( ஆகி ) ( இருந்தும் ) மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் உருமேனி தரித்துவந்து , தமது அங்கை சேர் எரியர் , ஏறுகந்தேறுவர் , கண்டமும் கரியர் , காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காணக் காட்சி அருளுவர் என்றவாறு . ஆயினும் பெரியர் என்றது . இவ்வடிவே அன்றி , பிருதிவி முதலாகிய பூதங்களும் , ஆன்மகோடிகளும் , பல்கோடியண்டங்களும் பிற அனைத்தும் தம்வடிவாக நிற்பர் என்றவாறு - சிவஞானசித்தியார் . ஆர் அறிவார் அவர் பெற்றி ( பெற்றி - தன்மை ) என்றது . பசுகரணம் கெட்டுப் பதிகரணத்தால் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் எவராலுங் காண்டற்கரியவனென்றபடி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.

பொழிப்புரை :

இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர் . தந்தையும் , தாயுமில்லாதவர் . தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர் . அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது .

குறிப்புரை :

வெந்தசாம்பல் விரைஎனப் பூசி என்றது . ( விரை - வாசனை ) தம் திருவுருவின் பேரொளிப்பிழம்பின் முன் , ( பிரளய காலத்து ) உலகெலாம் வெந்த ஒளி , ஒரு சிறு ஒளியாகவும் சாலாமையை விளக்கி ` அதன் அறிகுறியாக அச்சாம்பலைச் சாந்தாகப் பூசினர் என்றபடி . சிவம் - பேரொளிப் பிழம்பு . ` அண்டம் ஆரிருளூடு கடந்து உம்பர் , உண்டுபோலு மோர் ஒண்சுடர் அச்சுடர் , கண்டிங்கார் அறிவார் , அறிவாரெலாம் வெண்டிங்கட்கண்ணி வேதியன் என்பவே `. தந்தையாரொடுதாய் இலர் என்றது - உலகை ஒடுக்கி மீளத்தோற்று வித்தலால் , உலகிற்குத்தாமே தாயும் தந்தையும் ஆவதல்லது , தாம் பிறப்பு . இறப்பு இல்லாதவர் என்றபடி . தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பவர் என்றதை , ஒளியாகிய தம்மை நினைத்தலால் , இருளாகிய வினை நீங்கச் செய்பவர் என்றபடி . எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ என்றது . அளப்பரும் காட்சிப் பொருளாந் தன்மையை எவ்வகைக்ககூற்றிலும் கூறமுடியாது என்பதாம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.

பொழிப்புரை :

இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும் , பழமை வாய்ந்த புகழ்களும் கேட்கவும் , சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன . ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா . எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழ்களைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும் , தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது . தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை .

குறிப்புரை :

ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் வண்ணமும் மாண்பும் ... வேண்டா என்றது . முதல்வராகிய அவர்தம் அடியார்களுக்கு அருளும் விதத்தையும் அவர்தம் மாட்சிமையையும் . கேட்பான்புகில் - கேட்கவும் சொல்லவும் தொடங்கினால் . அளவு இல்லை - அளவில்லாதன ஆதலால் , கிளக்க வேண்டா - அவைபற்றிய ஆராய்ச்சியொன்றும் இயம்பவேண்டா என்றவாறு . கோட்பால ... தக்கார் என்றது . எந்தை தாள்பால் - எம் இறைவனின் திருவடியில் வணங்கி , தலைநின்று - சார்ந்து . தக்கார் - பக்குவிகள் , இவை - அருளும் வண்ணம் மாண்பு ஆகிய இவற்றை ( க் கேட்பாராக ) அது நம்மைப்பற்றித் துன்புறுத்தும் துன்பங்களும் அவற்றின் காரணமாகிய வினைகளும் சாராமல் ஒழியும் பொருட்டு என்றவாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

பொழிப்புரை :

இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா . அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும் , அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன் . அவனை விரைவில் வந்து சார்ந்து , மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் . இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன் .

குறிப்புரை :

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா என்றது - சிவன் ஒப்புயர்வற்ற பொருளாதலால் ஏதுக்களுக்கும் , எடுத்துக்காட்டுக்களுக்கும் , அப்பாற்பட்டவன் - அளந்தறிய முடியாதவன் . ஏதுக்களாற் சோதித்தல் - அநுமானப் பிரமாணத் தாலறிதல் . எடுத்த மொழியாற் சோதித்தல் - உரையளவையாற் சோதித்தறிதல் , ஆகமப்பிரமாணமும் , உவமைப் பிரமாணமும் ஆம் . சுடர்விட்டுளன் எங்கள் சோதி என்றது - தன்னைக் காணலுறுவார் புறக்காட்சிக்கு அனற்பிழம்பாயும் , அகக்காட்சிக்கு ஆழ்ந்த அன்பினாலும் நினைய உள் எழுந்த சோதியாயும் விளங்குகின்றவன் என்றபடி . மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம்பற்றி வாழ்மின் என்றது - ஆதிச்சுடர்ச் சோதியாகிய அரனை அன்பினால் மனத்தின்கண் பாலித்து , அறிவானந்த நோக்கோடு அவனையே இடைவிடாது நோக்கி வாழ்ந்து பிறவித்துயர் நீக்குமின் என்றபடி . சாதுக்கள் ... சார்மின்களோ என்றது - வேண்டும் விருப்பம் எல்லாம் இறைவன் திருவடியே என்று பேரன்பினால் போற்றுவீர் , இறையே வந்து சார்மின் - கணப்பொழுதேனும் அவன்பால் வந்து சார்மின் என்றபடி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.

பொழிப்புரை :

இறைவன் திருநடனம் புரிவதும் , மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும் , வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா , மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா , பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின் , இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம் . இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம் .

குறிப்புரை :

ஆடும் எனவும் நாட்டல் ஆமே என்றது - ஆடுதல் , கூற்றம் உதைத்தல் , வேதம் பாடுதல் , என்னும் இறைவன் செயலாகிய இம் மூன்றும் புகழ்கருதியோ ஆன்மாக்களை உய்விக்கவேண்டியோ என ஆராய்வீராகில் புகழலால் அவனுக்கு ஆவது என்னை ? துன்பம் அடைதலும் அதற்குக் காரணமான பிறப்பும் நீங்கி உயிர்கள் உய்தி கூட வேண்டும் என்னும் நிர்ஹேதுக கிருபையன்றிப் பிறிதென் ? உயிர்களை உய்விக்கக் கருதியே இறைவன் இவை செய்கிறான் என்றபடி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே.

பொழிப்புரை :

சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவபூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ?

குறிப்புரை :

கடி ... ... அன்றே என்றது :- ` அரனடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமதாகும் , பரனடிக்கு அன்பிலார்செய் புண்ணியம் பாவமாகும் , வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி , நரரினில் பாலன்செய்த பாதகம் நன்மையாய்த்தே ` ( சித்தியார் - சுபக் . 29)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.

பொழிப்புரை :

வேதத்தை அருளிச் செய்தவனாய் , வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு , குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க , பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும் .

குறிப்புரை :

வேதமுதல்வன் ... ... சொல்லே என்றது :- பதினெண் புராணங்களும் - சிவ பரத்துவம் சொல்வனவே , உலகத்தவர் , ஏதப்படாமை - ஒழுக்க நெறி தவறுதலாகிய குற்றம் அடையாமைப் பொருட்டுக் கூறிய இப்புராணங்கள் ஓதியுணரத்தக்கன என்றவாறு . ( சூதன் - சூதபுராணிகர் ) ஒலிமாலை - உண்மைக் கருத்துக்களை விரிவுறக் கூறும் , நூல் வரிசைகள் எனப்பொருள்படும் . கலிக்கோவை - புராணங்கள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.

பொழிப்புரை :

கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட , அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி , தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து , தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ ?

குறிப்புரை :

நலிந்து ஆட்ட - நலிவுறுத்தி அலைக்கப்பட , ஆடி - அலைந்து . இடர் கண்டு - துன்பத்தை அறிந்து , அருள் செய்தல் பேணி - அதற்கு அருள் செய்யுங்கடமையைக் கருதி , போர் ஆழிஈந்தபுகழ் - போர்க் கருவியாகிய சக்ராயுதத்தையன்றோ ? நீர் ஆழிவிட்டு ஏறி - கண்துயிலும் கடலை விட்டுப் பூமிக்கு வந்து , நெஞ்சு இடம் கொண்டார்க்கு - தம்மைத் தன் நெஞ்சிடத்திற்கொண்ட திருமாலுக்கு , நெஞ்சிடம் கொண்டார் . தியாகேசமூர்த்தியைத் திருமால் தனது இருதயத்திற் பூசித்துவந்தமையும் , பின் இந்திரன் பால்வந்த அம்மூர்த்தி முசுகுந்த சக்கரவர்த்திமூலம் திருவாரூரில் எழுந்தருளினரென்பதும் வரலாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.

பொழிப்புரை :

திருமாலும் , நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும் , பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி , பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு , தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான் .

குறிப்புரை :

மாலாயவனும் ... செய்ததாமே என்றது :- திருமால் முதலிய தேவர்கள் இறந்தொழியாமைப் பொருட்டு இறைவன் நஞ்சுண்டு காத்த கருணைத்திறம் கூறியபடி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை [ தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.

பொழிப்புரை :

சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி , மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர் . சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தெளிவு பெறாதவர்கள் தெளிவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல , வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில் , இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும் . ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு . ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும் , அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும் .

குறிப்புரை :

அற்றன்றி ... அன்றே என்றது :- மதுரையிற் சங்கம் வைத்தருளியவனும் , சிவனேபரம் என்று தோற்றவும் தேறாத சமணர்கள் தெளிய , வையையிலிட்ட ஏடு எதிர்ந்துசெல்ல வைத்தவனுமாகிய பெருமானல்லனோ இறைவன் என்னத்தக்கவன் . ஆதலின் அவனுக்கே அன்பு செலுத்தத்தக்கது என்றவாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 12

நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
எல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல்
பல்லார் களும் மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.

பொழிப்புரை :

சிவஞானிகள் வாழ்கின்ற புகலி எனப்படும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , மெய்யன்பர்களால் நன்கு வணங்கப்படும் சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்கள் பலராலும் மதிக்கப்படும் திருப்பாசுரம் ஆகும் . இதனை ஓத வல்லவர்கள் வானுலகை ஆளும் வல்லமை பெறுவர் .

குறிப்புரை :

பத்து - என்றது இலக்கணை . ` மும்மதத்தன் ` என்ற சிவஞான சித்தியார் காப்புக்கு மாதவச் சிவஞானயோகிகள் உரைத்த உரையாலும் அறிக . ` உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் நிலவும் மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும் கலதிவாய் அமணர் காண்கிலார் கண் ஆயினும் பலர்புகழ் தென்னவனறியும் பான்மையால் ` என்பதும் ` உள்ள வண்ணம் பலரும் உணர்ந்துய்யப் பகர்ந்து ` என்பதும் சேக்கிழார் பெருமான் திருவாக்கு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழா யுமைநங்கையொர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும்
அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப் புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம் ஆதரவாக வேறெதையும் அடையாது.

குறிப்புரை :

விரை - வாசனை. உரைஆர் - (அடியவர்) பேச்சில் பொருந்திய. அரையா - அரசனே, ஆதரவு - புகலிடமாகக் கொள்வது; ஆசை எனினும் ஆம். அரசன் - அரையன் என வந்தது எழுத்துப் போலி.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

இடியா ரேறுடையா யிமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மி யூருறையும்
அடிகே ளுன்னையல்லா லடையாதென தாதரவே.

பொழிப்புரை :

இடிபோல் முழங்கும் இடபத்தை வாகனமாக உடையவனே! தேவர்கள் தங்கள் மணிமுடி உன் திருப்பாதத்தில் படும்படி வணங்க அவர்கட்கு வாழ்வளிக்கும் முதற்பொருளே! இடபக்கொடியும், சந்திரனும், பாம்பும், கொன்றைமலரும் உடைய இறைவனே! செடிகளோடு கூடிய மாதவி மலரின் மணம் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தலைவனான சிவபெருமானே! உன்னைத் தவிர என் மனம், ஆதரவாக வேறெதையும் அடையாது.

குறிப்புரை :

இடி ஆர் ஏறு - இடியைப்போல் ஒலிக்கும் ஏறு. ஆர்த்தல் - ஒலித்தல். கொடி - ஒழுங்கு. செடி ஆர் மாதவி - செடிகளோடு கூடிய மாதவி முதலிய தருக்கள் சூழ்திருவான்மியூர். மாதவி ஏனை மரங்களையும் தழுவலால் உபலட்சணம்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

கையார் வெண்மழுவா கனல்போற்றிரு மேனியனே
மையா ரொண்கணல்லா ளுமையாள்வளர் மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூருறையும்
ஐயா வுன்னையல்லா லடையாதென தாதரவே.

பொழிப்புரை :

கையின்கண் பொருந்திய வெண்மையான மழு வாயுதத்தை உடையவனே! கனல் போன்ற சிவந்த திருமேனியனே! மை பூசப் பெற்ற, ஒளி பொருந்திய கண்களை உடைய நல்லவளாகிய உமையம்மை கண்வளரும் மார்பினனே! வயல்களில் செங்கயல்கள் பாயும் வளம் பொருந்திய திருவான்மியூரில் உறையும் ஐயனே! உன்னையல்லால் எனது அன்பு பிறிதொருவரைச் சென்றடையாது.

குறிப்புரை :

வளர் - தங்குகின்ற.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

பொன்போல் ஒளிரும் சடைமேல் கங்கையைத் தாங்கிய புண்ணியமூர்த்தியே! மின்போல் ஒளிரும் முப்புரிநூல் அணிந்து, இடப வாகனத்திலேறி, வேதங்களை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்குபவனே! உலகெலாம் இன்புறத் திருவான்மியூர் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் அன்புருவான உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

புனல் - கங்கைநீர். புரிநூலொடு விடையேறிய வேதியனே. வேதியன் என்பதற்கேற்ப, புரிநூல் அடை அடுத்தது. அந்தணனாகி அறவிடையேறி வருவான் என்பது, தென்பால் - தமிழ்நாடு. தமிழ் நாட்டிலுள்ளதாகிய, உலகமெங்கும் விளங்கும் திருவான்மியூர் என்க

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மி யூருறையும்
அண்ணா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

நெற்றிக்கண்ணை உடையவனே! கதிர்போல் ஒளிரும் திருமேனி மீது திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவனே! அழகிய சோலைகள் சூழ்ந்த உறுதியான மதில்களை உடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தந்தையே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

எண் ஆர் - பாராட்டுதற்குரிய, பொடி நீறு - பொடியாகிய திருநீறு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அண்ணா - தந்தையே, திசைச்சொல். அண்ணல் என்பதன் விளியுமாம்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

நீதீ நின்னையல்லா னெறியாதும் நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்றலை யொன்றினையும்
சேதீ சேதமில்லாத் திருவான்மி யூருறையும்
ஆதீ யுன்னையல்லா லடையாதென தாதரவே.

பொழிப்புரை :

நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை அறிந்திலேன். நால்வேதங்களை அருளிச் செய்தவனே! பிரமன் தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே! எத்தகைய குறைவுமின்றி வளம் பொருந்திய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

நீதீ - நீதி வடிவாயுள்ளவனே, உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுவதற்குரிய முறை எதனையும் நினைந்தறியேன் என்பது முதலடிக்குப் பொருள். ஓதீ - நான்மறைகள் - நான்கு வேதங்களையும் ஓதினவனே, சேதீ - சேதித்தவனே, சேதித்தல் - வெட்டுதல், (நகத்தாற்கிள்ளினமை.) ஆதீ - முதல்வனே.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவரும்
கானா ரானையின்றோ லுரித்தாய்கறை மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மி யூருறையும்
ஆனா யுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

வானில் விளங்கும் சந்திரனைச் சடையில் தரித்தவனே! மலைபோல வரும் காட்டிலுள்ள யானையின் தோலை உரித்தவனே! நஞ்சுண்டு கறுத்த கண்டத்தையுடையவனே! தேன் துளிக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில் இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் இறைவனே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

கான் ஆர் ஆனை - காட்டிலுள்ள யானை, ஆனாய் - இடபவாகனத்தை யுடையவனே. ஆன் - பொதுப்பெயர். இங்குக் காளையை உணர்த்திற்று. `பசுவேறும் எங்கள் பரமன்` என்றதும் காண்க. (தி.2. ப.85. பா.9.) தேன் - வண்டு.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழன்மேன் முடிகாண்பரி தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மி யூருறையும்
அறிவே யுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

நெருப்புப் பொறிபோல் விடம் கக்கும் வாயுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், நன்னெறி காட்டும் உனது நீண்ட திருவடியையும், மேலோங்கும் திருமுடியையும் காண்பதற்கு அரியவனாய் விளங்கியவனே! நெருக்கமாக நீண்ட பெரிய மதில்கள் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் முற்றுணர்வும், இயற்கை உணர்வுமுடையவனே! உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

பொறிவாய் - புள்ளிகள் பொருந்திய, நாகணையான் - நாக அணையான், நாகணை என்பது மரூஉ `கோணாகணையானும்` எனப் பின்னும் வருதல் அறிக. நீள்கழல் - பாதாளத்தின் கீழும் நீண்ட திருவடிகள். மேல்முடி - வானுலகின் மேலும் சென்றமுடி. நெறியார் கழல்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
திண்டேர் வீதியதார் திருவான்மி யூருறையும்
அண்டா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும், முரட்டுத் தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய் உன்னைப்பேச வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும் வீதிகளையுடைய திருவான்மீயூரில் வீற்றிருந்தருளும் தேவனே! உன்னையல்லால் என் மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது.

குறிப்புரை :

குண்டு ஆடும் சமணர் - விதண்டை பேசுகின்ற, கண்டார் காரணங்கள் கருதாதவர் - சிலவற்றையறிந்தும், அவற்றின் காரணங்களை அறியாதவர் என்றது, உலகு உள் பொருள் என்று அறிந்தும் அது ஒருவனாற் படைக்கப்படவில்லை எனல் போல்வன. அண்டா - தேவனே.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்
நன்றான புகழான் மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி யூரதன்மேல்
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே. 

பொழிப்புரை :

பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த ஞானசம்பந்தன், இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குக் கொடிய தீவினையானது நீங்கும்.

குறிப்புரை :

கன்று - இளஞ்செடி, திருவான்மியூர் அதன்மேல் ஞானசம்பந்தன் உரை என இயைக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

இறையவ னீசனெந்தை யிமை யோர்தொழு தேத்தநின்ற
கறையணி கண்டன்வெண்டோ டணி காதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையா ளொடு மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் , ஈசன் , எம் தந்தை என்று வானவர்கள் தொழுது போற்ற நின்று , நஞ்சுண்ட கறுத்த கண்டத்தினன் . சங்கினாலாகிய குழையணிந்த காதினையுடையவன் . அக்காலத்தில் வேதத்தின் பொருளை உபதேசித்தருளியவன் . மலைமகளான உமாதேவியோடு தலையில் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

வெண்தோடு - சங்கக்குழை . காலத்து அன்று மறைமொழி வாய்மையினான் - அக்காலத்தில் வேதத்தின் பொருளை உபதேசித்தருளியவன் . வாய்மை - உபதேச மொழி , வாய்மை என்க . என்றது வேதத்துக்குப் பொருளைச் செய்த திருவிளையாடற் புராணசரிதையை . சென்னி - சென்னியின்கண் , சடையான் . பிரமாபுரம் , பிரமபுரம் இரு விதமும் வழக்குண்மை அறிக .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

சடையினன் சாமவேதன் சரி கோவண வன்மழுவாட்
படையினன் பாய்புலித்தோ லுடை யான்மறை பல்கலைநூல்
உடையவ னூனமில்லி யுட னாயுமை நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் சடைமுடியுடையவன் . சாமவேதத்தில் விருப்பமுடையவன் . சரிந்த கோவண ஆடையை அணிந்தவன் . மழுவாகிய படை உடையவன் . பாயும் புலியின் தோலை உடையவன் . வேதம் முதலான பல கலைநூல்களில் கூறப்படும் தலைவன் . எத்தகைய குறைபாடும் இல்லாத அவன் , உமாதேவியோடு விரும்பி வீற்றிருந்தருளுமிடமான திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

சாமவேதன் - சிவனுக்கொரு பெயர் . ` சங்கரன் சாமவேதி என்ற ` அப்பர் திருவாக்கானும் அறிக . ( திருநேரிசை ) மறைபல்கலை நூல் உடையவன் - வேதம் முதலிய பலகலை நூல்களுக்கும் தலைவன் . பெடை - பெண்பறவை , அன்னம் - மயில் - குயில் இவற்றைக் குறிக்கும் - உருவகம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

மாணியை நாடுகால னுயிர் மாய்தரச் செற்றுக்காளி
காணிய வாடல்கொண்டான் கலந் தூர்வழி சென்றுபிச்சை
ஊணியல் பாகக்கொண்டங் குட னேயுமை நங்கையொடும்
பேணிய கோயின்மன்னும் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் பிரமசாரியான மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனின் உயிரை மாய்த்தவன் . காளிதேவி காணுமாறு திருநடனம் புரிந்தவன் . பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சையேற்று உண்ணுதலை இயல்பாகக் கொண்டவன் . அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலாக நிலைபெற்றுள்ள திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மாணி - பிரமசாரி , மார்க்கண்டர் . செற்று - கொன்று . காணிய - காணும்படி . ஊர்வழி கலந்து என்க . ஊன் - உண்ணுதல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பாரிடம் விண்ணுமெங்கும் பயி னஞ்சு பரந்துமிண்டப்
பேரிடர்த் தேவர்கணம் பெரு மானிது காவெனலும்
ஓரிடத் தேகரந்தங் குமை நங்கையொ டும்முடனே
பேரிட மாகக்கொண்ட பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

நிலவுலகிலும் , விண்ணுலகிலும் எங்கும் பயின்ற விடமானது பரவிப் பெருக , அதனால் பெருந்துன்பத்திற்குட்பட்ட தேவர்கள் அனைவரும் , ` பெருமானே ! காப்பாற்றுவீர்களாக ` என்று பிரார்த்திக்க , அவ்விடத்தைக் கண்டத்தில் கரந்து அருள்புரிந்த அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற பெருமை மிகுந்த திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மிண்ட - அதிகரிக்க . இதுகா - இதனின்றும் காத்தருள்க . ஐந்தனுருபுத்தொகை . ஓரிடத்தே - கண்டமாகிய ஓரிடத்தே , கரந்தான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

நச்சர வச்சடைமே னளிர் திங்களு மொன்றவைத்தங்
கச்ச மெழவிடைமே லழ கார்மழு வேந்திநல்ல
இச்சை பகர்ந்துமிக விடு மின்பலி யென்றுநாளும்
பிச்சைகொ ளண்ணனண்ணும் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் விடம் பொருந்திய பாம்பைச் சடை முடியில் தரித்து , குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் அதனுடன் ஒன்றி இருக்குமாறு செய்தவன் . அழகிய இடபவாகனத்தின் மீது அமர்ந்து அச்சம் தரும் மழுப்படையை ஏந்தியவன் . இன்மொழிகள் பேசி ` மிக இடுங்கள் ` என்று நாள்தோறும் பிச்சை ஏற்கும் தலைவனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

நச்சரவம் - நச்சு + அரவம் . நளிர் - குளிர்ந்த . அங்கு - அசை . ` போர்த்தாய் அங்கு ஓர் ஆனையின்தோல் ` என்புழிப்போல் ( தி .4. ப .1. பா .10.) அச்சம் எழ மழு ஏந்தி என்க , மிக இச்சை பகர்ந்து எனவும் , பலிஇடுமின் எனவும் மாற்றுக .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

பெற்றவன் முப்புரங்கள் பிழை யாவண்ணம் வாளியினாற்
செற்றவன் செஞ்சடையிற் றிகழ் கங்கை தனைத்தரித்திட்
டொற்றை விடையினனா யுமை நங்கையொ டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் திரிபுர அசுரர்கள் தவத்தினால் பெற்ற வலிய மூன்றுபுரங்களையும் தப்பாவண்ணம் ஓரம்பினால் அழித்தவன் . சிவந்த சடையில் அழகிய கங்கையைத் தரித்தவன் . ஒற்றை இடபவாகனம் ஏறினவன் . உமாதேவியோடு அவன் வீற்றிருந்தருளும் பெருமையுடைய திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

பெற்றவன் - இடபவாகனத்தையுடையவன் . ` பெற்றொன்றேறி ` என வருதலும் காண்க . ( தி .2. ப .80. பா .8.) பெற்றிமையால் - தன்மையோடும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

வேத மலிந்தவொலி விழ வின்னொலி வீணையொலி
கீத மலிந்துடனே கிள ரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முக டேறவொண் மால்வரையான்
பேதையொ டும்மிருந்தான் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதுகின்ற ஒலி , வீணையின் இன்னொலி , கீதஒலி இவை ஒருசேர எழுந்த கடல்ஒசையை அடக்குமாறு , வானத்தின் உச்சியை அடைவதாய் உள்ள , ஒளி பொருந்திய பெரிய கயிலைமலையானாகிய சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

வேதஒலி முதலிய ஒலிகள் மிக , அவை . பௌவம் - கடல் ஒலியையும் . மறை - மறைக்கவல்ல , ஓதம் மலிந்து - ஓசையாகப் பெருகி . வான்முகடு ஏற - ஆகாயத்தின் உச்சியை அடைய , ஒள் பிரமாபுரம் - அழகாகிய பிரமாபுரம் . மால்வரையான்பேதை - மலைமகள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

இமையவ ரஞ்சியோட வெதிர் வாரவர் தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன் னடர்த் தும்மலை யன்றெடுப்பக்
குமையது செய்துபாடக் கொற்ற வாளொடு நாள்கொடுத்திட்
டுமையொ டிருந்தபிரான் பிர மாபுர முன்னுமினே.

பொழிப்புரை :

தேவர்கள் அஞ்சியோடத் தன்னை எதிர்ப்பவர் யாருமில்லாது அமைந்த வல்லசுரனாகிய இராவணன் பண்டைக் காலத்தில் கயிலையைப் பெயர்த்து எடுக்க , சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி அவன் அம்மலைக்கீழ் நசுங்கும்படி துன்பம் செய்து , பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாடித் துதிக்க , அவனுக்கு வெற்றிதரும் வாளொடு , நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள்செய்து , உமாதேவியாரோடு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

அடர்த்து - மோதி , குமை ( அது ) செய்து - குழைத்தல் செய்து , குழைத்து , அது - பகுதிப்பொருள் விகுதி . பாட - பாடினதினால் , உன்னுமின் - நினையுங்கள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

ஞால மளித்தவனும் மரி யும்மடி யோடுமுடி
காலம் பலசெலவுங் கண்டி லாமையி னாற்கதறி
ஓல மிடவருளி யுமை நங்கையொ டும்முடனாய்
ஏல விருந்தபிரான் பிர மாபுர மேத்துமினே.

பொழிப்புரை :

இப்பூவுலகைப் படைத்த பிரமனும் , திருமாலும் , பலகாலம் இறைவனுடைய அடிமுடியைத் தேடி அலைந்து காண முடியாது கதறி ஓலமிட அவர்கட்கு அருள்புரிந்த அச்சிவ பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

ஞாலம் - பூமி , அளித்தவன் - படைத்தவன் , ஏல - பொருத்தமாக , ஏத்து மின் - துதியுங்கள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

துவருறு மாடையினார் தொக்க பீலியர் நக்கரையர்
அவரவர் தன்மைகள்கண் டணு கேன்மின் னருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக் கழி காலமெல் லாம்படைத்த
இவரவ ரென்றிறைஞ்சிப் பிர மாபுர மேத்துமினே.

பொழிப்புரை :

மஞ்சட்காவி ஊட்டப்பட்ட ஆடையணிந்த புத்தர்களும் , தொகுத்துக் கட்டிய மயிற்பீலியைக் கையிலேந்தியவராய் , ஆடையில்லாத இடையையுடைய சமணர்களும் , இறையுண்மையை அறியாதவர்களாதலால் அவர்களை அணுகாதீர் . திருவருள் பெற விரும்பும் அடியார்களே ! ஐயம் பல நிறைந்த மனத்தை ஒருமுகப்படுத்தி , சென்ற காலம் முதலிய எல்லாக் காலத்தையும் படைத்த முழுமுதற்கடவுள் சிவபெருமான் என்று வணங்கி , அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

தொக்க - தொகுத்துக்கட்டிய , நக்கரையர் - நக்க - அரையர் என்பதன் மரூஉ . நக்கம் - நக்நம் ஆடையின்மை , அரையர் - இடுப்பையுடையவர் , அணுகேன்மின் அருள் பெறுவீர் - அருள்பெற விரும்புவீர் அணுகாதீர்கள் . கழிகாலம் - சென்ற காலம் முதலிய , எலாம் - எல்லாத் தத்துவங்களையும் படைத்த , இவரவர் என்பதனை அவர் இவர் என மாற்றி - அந்தப்பரம்பொருள் பிரமாபுரத்தில் எழுந்தருளிய இறைவனென்று பொருள் கொள்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

உரைதரு நான்மறையோர் புகழ்ந் தேத்தவொண் மாதினொடும்
வரையென வீற்றிருந்தான் மலி கின்ற பிரமபுரத்
தரசினை யேத்தவல்ல வணி சம்பந்தன் பத்தும்வல்லார்
விரைதரு விண்ணுலகம் மெதிர் கொள்ள விரும்புவரே.

பொழிப்புரை :

சிவபெருமானது பெருமையை உரைக்கும் நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் அப்பெருமானைப் புகழ்ந்து போற்ற , அழகிய உமாதேவியோடு மலைபோன்று உறுதிப் பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற பிரமாபுரத்தில் அருளாட்சியைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களை நறுமணம் கமழும் விண்ணுலகத்துத் தேவர்கள் எதிர்கொண்டழைத்துச் செல்ல விரும்புவர் .

குறிப்புரை :

பத்தும் - பத்துப்பாசுரங்களும் . ( ஆகுபெயர் ) விரை தரு - கற்பகப்பூமணம் வீசுகின்ற , ( விண்ணுலகம் ) விரும்புவர் - விரும்பியடைவர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

விடையவன் விண்ணுமண்ணுந் தொழ நின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோ லுடை கோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்கவெண்டோ
டுடையவன் னூனமில்லி யுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன் . விண்ணுளோரும் , இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன் . கறைபடியாத மழுப்படை உடையவன் . பாயும் புலித்தோலுடையும் , கோவணமும் உடையவன் . பலவிதமான மலர்களைச் சடையில் அணிந்தவன் . சாமகானப் பிரியன் . சந்திரனைச் சடையில் தாங்கி , சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன் . குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

வெண்மழு - இரத்தக்கறை தோய்தலின்மையினால் வெண்மையாகவுள்ள மழு . மழு - மழுவாள் எனவும் படும் . ஆகையினால் மழுவாள் படையவன் என்றார் . படை - ஆயுதம் . சசி தங்கிய - சந்திரனைப் போன்ற , வெண்சங்கத்தோடு , உடையவன் . தங்கிய - உவமவாசகம் . அடைந்தவர்க்கு ஊனம் இல்லையாகச் செய்பவன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாரிடம் பாணிசெய்யப் பறைக் கட்செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடலாட லில யஞ்சிதை யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன் றலைவன்றலை யேகலனா
ஊரிடும் பிச்சைகொள்வா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட , பறைகள் கொட்ட , கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன் . கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன் . பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

பாரிடம் - பூதம் , பாணி செய்ய - பாட . பறைக்கண் - பறை போன்ற கண்பார்வையினாலேயே , செறு - கண்டாரைக் கொல்லவல்ல . பல்கணப் பேய் - பல பேய்க்கூட்டங்களின் , சீரொடும் - தாளவொத்தோடும் . இலயம் - ஒன்றுதல் , சிதையாத கொள்கை - சிதையாத முறையோடு . பாடல் ஆடல் - பாடலுக்கேற்ற ஆடலையுடைய . விடையன் . தார் - கிண்கிணிமாலை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

விளிதரு நீருமண்ணும் விசும் போடனல் காலுமாகி
அளிதரு பேரருளா னர னாகிய வாதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

ஓசையுடன் பாயும் நீர் , நிலம் , ஆகாயம் , நெருப்பு , காற்றுமாகி , மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த காரணனாவான் . மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

விளிதருநீர் - பிரளயகாலத்து உலகை அழிக்க வல்ல தண்ணீர் . அளிதரு - ( உயிர்களைக் ) காக்கின்ற . பேர் அருளான் - பெருங்கருணையுடையவன் , அரன் ஆகிய - சங்காரகர்த்தாவும் ஆகிய ஆதிமூர்த்தி . எவன் சங்கார கர்த்தாவோ அவனே முழுமுதற்கடவுள் என்னும் உண்மை நூற்கருத்துப்பற்றி இங்ஙனம் கூறினார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

அரவமே கச்சதாக வசைத் தானலர் கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை மார்பனெந்தை
பரவுவார் பாவமெல்லாம் பறைத் துப்படர் புன்சடைமேல்
உரவுநீ ரேற்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்தவர் . கொன்றை மலர்மாலை அணிந்தவர் . வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர் . எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர் . அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

அசைத்தான் - கட்டியவன் . விரையார்வரைமார்பன் - கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பையுடையவன் . பரவுவார் பாவம் எல்லாம் . பறைத்து - ஓட்டி . ` பரவுவார் பாவம் பறைக்கும் அடி ` என்ற அப்பர் வாக்கிலும் ( திருமுறை 6) இத்தொடர் பயில்கிறது . உரவுநீர் - உலாவும் நீர் ( சீவகசிந்தாமணி ) - கங்கை . ஏற்ற - தாங்கிய . பெம்மான் - பெருமான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

விலகினார் வெய்யபாவம் விதி யாலருள் செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண் டடி மேலல ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

கொடிய பாவத்திலிருந்து விடுபட்ட பக்குவ ஆன்மாக்கட்கு , விதிப்படி அருள்செய்து , சிவபெருமான் நல்ல பல வகையான வாத்தியங்களான மொந்தை , தாளம் , தகுணிச்சம் என்னும் ஒருவகை தோற்கருவி முதலியன ஒலிக்கப் பாட்டோடும் , தாளத் தோடும் எண்தோள் வீசி நின்று ஆட , உலகத்தோர் அவன் திருவடியில் மலர்களைத் தூவி , தங்கள் வழிபாடு தடைப்படா வண்ணம் துதித்து வணங்க அவன் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வெய்யபாவம் விலகினார் - கொடிய பாவம்நீங்கிய பக்குவிகளுக்கு . விதியால் - விதிப்படி . அருள் செய்து - தீக்கை முதலிய செய்வித்து . பாணியால் - பாட்டோடும் , அலகினால் - தாளத்தோடும் . வீசி - ( எண்தோள் ) வீசிநின்று ஆடி , உலகினார் நீர் கொண்டு ( ஆட்டி ) அடிமேல் அலர் இட்டு . முட்டாது ஏத்த - தங்கள் வழிபாடு தடைப்படாவண்ணம் துதித்து வணங்க , நின்றான் - அருள்செய்து , வீசி , ஏத்தநின்றான் என முடிவு கொள்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

கமையொடு நின்றசீரான் கழ லுஞ்சிலம் புமொலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான் விரி கொன்றையுஞ் சோமனையும்
அமையொடு நீண்டதிண்டோ ளழ காயபொற் றோடிலங்க
உமையொடுங் கூடிநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

பொறுமையுடன் விளங்கும் தலைவனான சிவபெருமான் , தன் திருவடிகளிலுள்ள கழலும் , சிலம்பும் ஒலிக்கச் சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும் , சந்திரனையும் தாங்கிய , நீண்ட வலிமையான தோளழகு உடையவன் . காதில் பொன்னாலாகிய தோடு பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

கமை - பொறுமை . கழலும் சிலம்பும் ஒலிப்ப என்றது - உமையொரு கூறன் என்பது உணர்த்தியது . சுமையொடு - சுமையாக . ஒடு - இசைநிறை . அமையொடு - அழகின் அமைதியோடு , நீண்ட திண்ணிய தோளின் மீது , பொன்மயமான காதணி , இலங்க - பிரகாசிக்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

நன்றியால் வாழ்வதுள்ளம் முல குக்கொரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலுங் கரு மால்வரை யேசிலையாப்
பொன்றினார் வார் சுடலைப் பொடி நீறணிந் தாரழலம்
பொன்றினா லெய்தபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

உள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான் , உலகத்தார்க்கு தீமை செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும் , பெருமை வாய்ந்த மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினிக்கணை ஒன்றை எய்து அழித்தவர் . நெடிய சுடலைப்பொடியாகிய நீற்றினை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

உள்ளம் - உள்ளத்தில் . நன்றியால் - பிறருக்கு உபகாரம் ஆம் தன்மையோடு . வாழ்வது - வாழவேண்டுமென்பதை , உலகுக்கு - உலகத்துக்கு . ஒரு நன்மையாலே - நல்லது என்னும் நோக்கத்தினால் . உலகுக்குத் தீமை செய்த திரிபுரங்களை அழித்தார் என்றது இடை இரண்டடிகளின் கருத்து . கன்றினார் - தீமை செய்வோர்களாகிய அசுரர்கள் . கரு - பெருமைதங்கிய . மால் - பெரிய , வரையேசிலையா - மலையே வில்லாக . பொன்றினார் - பொன்றுவிப்பாராகி ( பொன்றுதல் - சாதல் ) அழல் அம்பு ஒன்றினால் - அக்கினியாகிய ஒரு பாணத்தினால் . எய்த - எய்து அழித்த பெம்மான் . வார் - நெடிய , சுடலைப்பொடி நீறணிந்தாரும் ; மும்மதிலும் பொன்றுவிப்பாராகி அழல் அம்பு எய்த பெம்மானுமாகிய சிவபிரான் உறையும் இடம் ஒற்றியூரே எனக்கொண்டு கூட்டுக . பொன்றினார் , பிறவினை விகுதி குன்றியது , முற்றெச்சம் ; காலவழுவமைதி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

பெற்றியாற் பித்தனொப்பான் பெரு மான்கரு மானுரிதோல்
சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க் கண்ணுதன் மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன் னுட லைச்செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றுமாள்வா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான் , செய்கையால் அறிவில் பெரியவனாவான் . கலைமானின் தோலைச் சுற்றி உடுத்தவன் . சுத்தி , சூலம் என்பன ஏந்தியவன் . நெற்றிக்கண் உடையவன் . கோபமுடைய அரக்கனான இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க , அவன் அம்மலையின்கீழ் நெரியுமாறு தன் காற்பெருவிரலை அழுத்தியவன் . உலகம் முழுவதையும் ஆட் கொண்டருளும் அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பெற்றி - தன்மை , பித்தனொப்பானாயினும் , செய்கையால் அறிவிற்பெரியானாவான் என்பார் பெருமான் என்றார் . சுற்றியான் - சுற்றியுடுத்தவன் , சுத்தி - இப்பியாலாகிய பொக்கணமும் , சூலம் - சூலமும் , ( கையில் விளங்க ) சுடர்க்கண் - அக்கினியாகிய கண் , நுதல்மேல் விளங்க - நெற்றியின் மேல் விளங்க , நுதல்மேல் விளங்க என்ற சொல்லாற்றலால் கையில் விளங்க என்பதும் பெற்றாம் . தெற்றி - உதை , தெற்றியால் - உதையால் , ஒற்றியான் - அழுத்தினவன் , ` ஒற்றியான்முற்றும் ஆள்வான் ` உலகம் முழுவதையும் ஒற்றிகொண்டு ஆள்வான் என ஒரு பொருள் தோன்றிற்று .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

திருவினார் போதினானுந் திரு மாலுமொர் தெய்வமுன்னித்
தெரிவினாற் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ
டொருவனாய் நின்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

இலக்குமி எழுந்தருளிய தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் , திருமாலும் ஒப்பற்ற தெய்வத்தைக் காணவேண்டும் என நினைத்துத் தம் அறிவால் தேடிக் காணமாட்டாதவர் ஆயினர் . சிவபெருமானின் சிவந்த திருவடிகளை மனத்தால் சிந்தித்து வழிபடுபவர்களின் பாவம் எல்லாம் அழியப் படர்ந்த பேரொளியோடு ஒப்பற்றவனாயிருந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

திருவின்ஆர் - அழகால்மிகுந்த . ஓர் தெய்வம் முன்னி - தாங்கள் ஓர் தெய்வமாக நினைத்து . தெரிவில் - தம் அறிவால் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

தோகையம் பீலிகொள்வார் துவர்க் கூறைகள் போர்த்துழல்வார்
ஆகமச் செல்வனாரை யலர் தூற்றுதல் காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி னேழுலகும்
ஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

நடந்து செல்லும்போது எறும்பு முதலிய சிறு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடாதிருக்க மயில்தோகை ஏந்திப் பெருக்கிச் செல்லும் சமணர்களும் , துவர் ஆடையைப் போர்த்திய புத்தர்களும் , ஆகமம் அருளிய , ஆகம நெறியில் பூசிக்கப்படும் செல்வரான சிவபெருமானைப் பழித்துக் கூறுவதால் , கோட்டான் போன்று ஐயறிவுடைய விலங்குகட்கு ஒப்பாவாராதலால் அவர்கள் கூறும் சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . ஏழுலகும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஆகம செல்வனாரை - சிவபெருமானை , அலர்தூற்றுதல் - பழித்துரைத்தல் , கூகை - கோட்டான் , மாக்கள் - ஐயறிவுடை விலங்குகளோடொப்பவர் . ` மாவும் புள்ளும் ஐயறி வினவே `. ( தொல்காப்பியம் . 576 ) ஓகை - மகிழ்ச்சி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

ஒண்பிறை மல்குசென்னி யிறை வன்னுறை யொற்றியூரைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும் பர விப்பணிந் தேத்தவல்லார்
விண்புனை மேலுலகம் விருப் பெய்துவர் வீடெளிதே.

பொழிப்புரை :

ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை , சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் . பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர் .

குறிப்புரை :

மல்கு - ஒளி விளங்குகின்ற , விண் - வானிலுள்ள , புனையப்பட்ட , மேலுலகம் - சுவர்க்கலோகம் , எய்துவர் , அவர்கட்குப் பின் வீடும் எளியது ஆகும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

திருமலர்க் கொன்றைமாலை திளைக் கும்மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோ டுட னாவது மேற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேக முரிஞ் சும்பெருஞ் சாத்தமங்கை
அருமல ராதிமூர்த்தீ யய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

தெய்வத்தன்மை பொருந்திய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும் , சந்திரனைத் தலையில் தரித்தவனும் , இரு தாமரை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு , நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் , உலகிற்கு ஒப்பற்றவனாகி விளங்கும் ஆதிமூர்த்தியும் ஆகிய சிவபெருமான் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . இத்திருத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயரான இருமலர்க்கண்ணம்மை என்பது இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது .

குறிப்புரை :

கொன்றை மாலையில் திளைக்கும் மதி , கொன்றை சிவபிரானுக்குரியதாந் தன்மையாலும் , பிரணவபுட்பம் எனப் படுவதாலும் - திருமலர் என்னப்பட்டது . இரண்டு மலர்களையொத்த கண்களையுடையவள் . மலர் என்றது - தாமரை மலரைக் குறிக்கும் . ` உயர்ந்ததன்மேற்றே யுள்ளுங்காலை ` ( தொல் . பொருள் . 274) ` மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய ` ( கம்பர் . ஆரண்ய . சூர்ப் . 14 ) ஏற்பது ஒன்றே - அனைவரும் உடன்படக் கூடிய ஒரு செயலா ? உரிஞ்சும் - உராயும் , மலர் - உலகமெங்கும் பரவிய . அரு - ஒப்பற்ற . ஆதிமூர்த்தி , அயவந்தி - ஆலயத்தின் பெயர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொரு பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
கடிமண மல்கிநாளுங் கம ழும்பொழிற் சாத்தமங்கை
அடிகணக் கன்பரவ வய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய திருமார்பில் முப்புரிநூல் அணிந்து , பூங்கொடி போன்ற மெல்லிய சாயலுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் . நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கையில் சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி வழிபட அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கொடி அன சாயலாள் - பூங்கொடிபோன்ற தோற்றப் பொலி வினை உடையவள் . கூடுவதே - கூடுவது தகுமா ? கடிமணம் - புது வாசனை . அடிகள் நக்கன் - அடியராகிய திருநீல நக்கநாயனார் . பரவ அயவந்தி அமர்ந்தவனே .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் தேறதேறி
மானன நோக்கிதன்னோ டுட னாவது மாண்பதுவே
தானலங் கொண்டுமேகந் தவ ழும்பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தவெம்மா னயவந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

முப்புரிநூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றினைப் அணிந்து , இடப வாகனத்திலேறி , மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான் . மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

நூல் நலம் - நல்லபுரி நூல் . நுகர் - பூசிய நீறு . மாண்பு அதுவே - பெருமையாமா ? நோக்கி - கண்களையுடையவள் . ஆன்நலம் - பசுவினிடம் கிடைக்கும் பஞ்சகவ்வியத்தை . தோய்ந்த - திருமஞ்சனம் கொண்டருளிய . எம்மான் - எமது தலைவனே .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

மற்றவின் மால்வரையா மதி லெய்துவெண் ணீறுபூசிப்
புற்றர வல்குலாளோ டுட னாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த வய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களை எய்து அழித்து , திருவெண்ணீற்றினைப் பூசி , புற்றில் வாழ்கின்ற பாம்பு போன்ற அல்குலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் சிவபெருமான் . வேதாகமங்களை நன்கு கற்றவர்கள் வாழ்கின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழப் பாவம் நீங்கும் . உலகப் பற்றற்ற மெய்யடியார்கள் , தமக்குப் பற்றுக் கோடாக விளங்கும் சிவ பெருமானை நாள்தோறும் போற்றி வழிபட திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் அவன் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

மற்ற - ( எதிரிகள் வில்லுக்கு ) எதிராகிய வில் மால் வரையா ( க ) பெரிய ( மேரு ) மலையாக . பொற்பதுவே - அழகு உடையதா ?. கற்றவர் சாத்தமங்கை - கற்றவர் வாழும் திருச்சாத்த மங்கையில் . அற்றவர் - பற்றற்ற மெய்யடியார் ` அற்றவர்க் கற்ற சிவனுறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே ` என்புழியும் ( தி .3. ப .120. பா .2.) காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

வெந்தவெண் ணீறுபூசி விடை யேறிய வேதகீதன்
பந்தண வும்விரலா ளுட னாவதும் பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் சாத்தமங்கை
அந்தமா யாதியாகி யய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

இறைவன் திருவெண்ணீற்றனைப் பூசியவன் . இடபவாகனத்தில் ஏறியமர்பவன் . வேதத்தை இசையோடு பாடியருளி , வேதப் பொருளாகவும் விளங்குபவன் . பந்து வந்தணைகின்ற விரல்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டவன் . வேதமும் , அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உலகத்திற்கு அந்தமும் , ஆதியுமாகிய சிவபெருமான் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

வேதகீதன் - வேதத்தை இசையோடு பாடுபவன் . சந்தம் - அழகிய . ஆறு அங்கம் - ஆறு அங்கங்களையும் . வேதம் - வேதத்தையும் . தரித்தார் - உச்சரிப்பவர்களாகிய அந்தணர்கள் . ` உன் திருநாமம் தரிப்பார் ` ( திருவாசகம் - கோயிலின் மூத்த . 9) என்பதும் காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

வேதமாய் வேள்வியாகி விளங் கும்பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந் நிலை தான்சொல்ல லாவதொன்றே
சாதியான் மிக்கசீராற் றகு வார்தொழுஞ் சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மா னய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

இறைவன் வேதங்களை அருளி வேதப் பொருளாகவும் விளங்குபவன் . எரியோம்பிச் செய்யப்படும் வேத வேள்வியாகவும் , ஞானவேள்வியாகவும் திகழ்பவன் . ஒண் பொருளாகவும் , வீடுபேறாகவும் உள்ளவன் . சோதிவடிவானவன் . உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன் . இப்பெருமான் இத்தகையவன் என்பதை வாயினால் சொல்லவும் ஆகுமோ ? அத்தகைய சிறப்புடைய பெருமான் , தக்கவர்கள் தொழும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் ஆதிமூர்த்தியாய் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

பொருள்வீடு - பொருளாகிய வீடு . சொல்லலாவதொன்றே - புகழ்ந்து சொல்லக்கூடிய ஒருசெயலாகுமோ . ஆதியாய் - முதல்வனாகி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

இமயமெல் லாமிரிய மதி லெய்துவெண் ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த நிலை தானுன்ன லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் சாத்தமங்கை
அமையவே றோங்குசீரா னய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

சிவபெருமான் இமயம் முதலான பெரிய மலைகளும் நிலைகலங்குமாறு , முப்புரங்களை எரித்து , திருவெண்ணீற்றினைப் பூசி உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்த தன்மை பாராட்டிப் பேசக் கூடிய அரிய செயலாகும் . அவன் சமயநூல்களையும் , வேதத்தையும் , அதன் அங்கங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் ஓங்கித் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

இமயம் எல்லாம் - இமயம் முதலிய மலைகளெல்லாம் . இரிய - ( அதிர்ச்சியால் ) நிலை பெயர , மதில் எய்து , உன்னலாவது . ஒன்றே - பாராட்டி நினைக்கக் கூடியது ஓன்றா ? சமயம் - சமய நூல்களையும் . அமைய - இடமாகப் பொருந்த . வேறு ஓங்குசீரான் - பிறிதொன்றற்கு இல்லாத மிக்கசிறப்புடன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவ ழும்பொழிற் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றவெம்மா னய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

இறைவன் பண்ணிசையோடு கூடிய பாடலை வீணையில் மீட்டிப் பாடுவான் . பரமயோகி அவன் . மலையரசன் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் குளிர்ச்சி பெருந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருசாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி , திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

பயில்வான் - பயின்றவனாகிய . ஓர் பரம யோகி - ஓர் மேலான யோகியே . மகள்பாகமும் வேண்டினை ஒரு நயம் . அண்ணலாய் - தலைவனாகி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

பேரெழிற் றோளரக்கன் வலி செற்றதும் பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி யுட னாவது மேற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு கன கம்மனை யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை யய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

மிகுந்த எழிலுடைய வலிமை வாய்ந்த தோள்களினால் மலையைப் பெயர்த்த இராவணனின் வலிமையை அடக்கிய சிவபெருமான் உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பனாகவும் , உடனாகக் கொண்டு அழகிய இரண்டு கோலமாகவும் , கார்மேகம் போன்ற அழகிய வண்ணனான திருமாலும் , பொன்போன்ற நிறமுடைய பிரமனும் , காண முடியாவண்ணம் நெருப்பு வண்ணமுமாகி , திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் , திரு அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

பெண்ணோர் பாகம் - ஒரு பாகத்திற் பெண்ணும் ஒரு பாகத்தில் ஆணுமாகி . ஈரெழிற் கோலமாகி - அழகிய இரண்டு கோலமாகி . உடன் ஆவது - ஓருருவமாவதும் . கனகம் அனையான் - நிறத்தினால் பொன்னொப்பான் ஆகிய பிரமன் . ஆர் அழல் வண்ணம் ஆகி , அருமை + அழல் அணுகற்கரிய தீயின் வண்ணம் - இங்கு வடிவின் மேல் நின்றது . மங்கை - சாத்தமங்கை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

கங்கையோர் வார்சடைமே லடை யப்புடை யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே
சங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழு சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தா யயவந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில் தாங்கி , பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை சொல்லக் கூடிய தொன்றா ? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உள்ளங்கையில் பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கங்காதேவி ஓர் வார்சடையின் பால் , அடைய , புடை - ( உடம்பின் ) ஒருபக்கல் . மணம் புரிந்து கொண்ட உமாதேவியோடு ஓருடம்பாகி நின்ற அறிவுடைமை - புகழ்ந்து சொல்லக் கூடிய தொன்றா ? கமழ்தல் - மணத்தல் , அச்சொல்லால் அறியக்கூடிய மற்றொரு பொருள் விவாகம் செய்து கோடலுக்கு ஆகியது . இலட்சித இலட்சனை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம் பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்க னெடு மாநக ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை யய வந்திமே லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லா ரிமை யோரிலு முந்துவரே.

பொழிப்புரை :

நான்மறைவல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , மனத்தைப் புறவழியோடாது நிறுத்தி , திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள திருஅயவந்தி என்னும் திருக்கோயிலைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் தேவர்களைவிட மேலானவர்கள் ஆவர் .

குறிப்புரை :

நிறை - மனத்தைத் தன்வழியோடாது நிறுத்தல் . இமையோரிலும் முந்துவர் - ` யான் எனது என்னுஞ் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் `. ( குறள் . 346) எட்டாம் திருப்பாடலில் வரும் இராவணன் செயல் ஒன்பதாம் திருப்பாடலில் அயன் செயலோடு கூறப்பட்டுள்ளது . இரண்டாம் திருப்பாடலிலும் , திருக்கடைக்காப்பிலும் இத்தலத்தில் வாழ்ந்து வந்த திருநீலநக்க நாயனாரைப்பற்றிக் கூறப்படுகிறது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

அரவிரி கோடனீட லணி காவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவன் மண மல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

பாம்பைப் போலும் தண்டோடு மலர் விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால் , அழகிய காவிரியாற்றின் பக்கம் , மராமரங்கள் விரிந்த மலர்களும் , முல்லையும் , மணம் வீசும் மல்லிகையும் , தேனோடு முறுக்கு உடையும் மலர்களைஉடைய குராமரங்களும் விரிந்த சோலை சூழ்ந்த கும்பகோணத்தினை இடமாகக் கொண்டு குழகனாகிய சிவபெருமான் , இரவில் ஒளிரும் சந்திரனைச் சூடி வீற்றிருக்கிறான் . அப்பெருமானே எம் இறைவன் .

குறிப்புரை :

அரவிரி கோடல்நீடல் - பாம்பைப்போலும் , தண்டோடு மலர் விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால் , அணி - அழகு செய்கின்ற . அயலே - காவிரியாற்றின் அருகில் . மர - மராமரங்கள் . விரி - விரிந்த . போது - மலர்களும் . மௌவல் - முல்லையும் . மண மல்லிகை - மணத்தையுடைய மல்லிகையும் . கள் அவிழும் - தேனோடும் முறுக்கு உடையும் . குர - குராமரங்கள் . விரி - விரிந்த . சோலைசூழ் , குடமூக்கு - கும்பகோணம் . இடம் ஆ - இடம் ஆக . இரவு - இரவில் . விரி - பரப்புகின்ற . திங்கள் , குழகன் , காவி யாற்று அயலே குடமூக்கு இடமாக இருந்தான் அவனே எம் இறை யாவான் என்க . நீடல் மூன்றன் உருபுத்தொகை . இத்திருப்பாடலின் நான்கடியினும் முதலசைகளாகிய , அரா , மரா , குரா , இரா - இந்நான்கும் கடைகுறுகி வந்தன . காந்தள் தண்டு பாம்பின் உருவிற்கும் அதன் பூவிரிதல் - படத்திற்கும் உவமை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

ஓத்தர வங்களோடு மொலி காவிரி யார்த்தயலே
பூத்தர வங்களோடும் புகை கொண்டடி போற்றிநல்ல
கூத்தர வங்களோவாக் குழ கன்குட மூக்கிடமா
ஏத்தர வங்கள்செய்ய விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

வேதங்கள் ஓதப்படும் ஒலியோடு , காவிரியாறு பாயும் ஒலியும் சேர்ந்தொலிக்க , பக்கத்திலுள்ள பூஞ்சோலைகளில் மலர்ந்துள்ள பூக்களைக் கொண்டு தூவி , தூபதீபம் காட்டி இறைவனைப் போற்றுவதால் உண்டாகும் ஒலி விளங்க , திருநடனம் புரியும் அழகனாகிய சிவபெருமான் , திருக்குட மூக்கினை இடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றான் . எல்லோரும் போற்றி வணங்கும் புகழுடைய அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

ஓத்து - வேதங்களின் . அரவங்களோடு - ஓசைகளுடனே . ஒலி - எதிர் ஒலியாக . ஆர்த்து - தானும் ஆரவாரித்து . அயலே - அருகிலுள்ள பூந்தோட்டங்களில் . பூத்து - மலர்ந்து இருக்க . ( அம்மலர்களையும் ) புகை - நறும்புகைகளையும் , பிற பூசைத் திரவியங்களும் கொண்டு . அரவங்களோடும் - ( சிவ ; போற்றி என்னும் ) ஓசைகளோடும் . ( திருக்கோயில் வந்து ) மெய்யடியார்கள் அடிபோற்றி - திருவடியைப் போற்றி வழிபாடுசெய்ய . நல்ல கூத்து - நன்மை பயக்கும் கதை தழுவி வரும் கூத்தும் சிறந்த நாட்டியமும் , உண்டாகும் அரவங்கள் . ஓவா - நீங்காத . குடமூக்கு இடமாக . ஏத்து - துதித்தலின் . அரவங்கள் செய்ய இருந்தான் . பூத்து வினையெச்சத் திரிபு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

மயில்பெடை புல்கியால மணன் மேன்மட வன்னமல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங் காவிரிப்பைம் பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாட லுடை யான்குட மூக்கிடமா
இயலொடு வானமேத்த விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

ஆண்மயில் பெண்மயிலைத் தழுவி ஆட , காவிரியாற்றின் கரையிலுள்ள மணலின் மீது ஆண் அன்னம் தன் பெண் அன்னத்தோடு நடைபயில , வண்டுகள் பண்ணிசைக்க , நிறைய பழங்கள் கனிந்துள்ள பசுமையான சோலைகளில் குயிலானது பெடையோடு சேர்ந்து கீதமிசைக்கத் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் விண்ணோர்கள் வேதாகம முறைப்படி பூசிக்க வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

புல்கி - தழுவி . ஆல - ஆட . மல்கும் - நிறைந்திருக்கும் . பயில் - தங்கியுள்ள . இயலொடு - முறைப்படி . வானம் ஏத்த .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

மிக்கரை தாழவேங்கை யுரி யார்த்துமை யாள்வெருவ
அக்கர வாமையேன மருப் போடவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாட லுடை யான்குட மூக்கிடமா
எக்கரை யாருமேத்த விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் புலியின் தோலை உரித்து நன்கு தாழ இடுப்பில் கட்டியவர் . உமாதேவி அஞ்சுமாறு எலும்பு , பாம்பு , ஆமையோடு , பன்றியின் கொம்பு ஆகியவற்றை அழகிய ஆபரணமாகப் பூண்டு , கொக்கரை என்னும் வாத்தியம் இசைக்கப் பாடும் சிவபெருமான் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் எத்தன்மையோரும் போற்றி வணங்க வீற்றிருந்தருளுகின்றான் . அவனே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

அரை - இடுப்பில் . மிக்கு - மிகவும் . தாழ - தொங்க . வேங்கை உரி - வேங்கைத்தோலை . ஆர்த்து - கட்டி . அக்கு - அக்குப் பாசி . அரவு , ஆமையொடு . ஏனம் - பன்றியின் . மருப்பு - கொம்பு . கொக்கரை முதலிய வாச்சியங்களோடு எக்கரையாரும் , தீவிலுள்ளவர்களும் , ஏத்த இருந்தான் . இறைவனுக்குப் புலித்தோல் உடையும் , கரித்தோல் போர்வையும் , சிங்கத்தோல் ஏகாசமுமாம் என்பர் . ஆமை - முதலாகுபெயர் . கரை - தீவு . சம்புத்தீவன்றிப் பிற தீவிலுள்ளவர்களும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

வடிவுடை வாட்டடங்கண் ணுமை யஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட வுரி கொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங் குழ கன்குட மூக்கிடமா
இடிபடு வானமேத்த விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

அழகிய உருவமுடைய வாள்போன்ற ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்து , திருவெண்ணீறணிந்த திருமேனிமீது போர்த்தவனும் , சடைமுடியுடையவனும் , அழகனும் ஆன சிவபெருமான் , கொடிகள் அசைகின்ற ஆகாயத்தைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள நீண்ட மாடங்கள் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வானவர்கள் போற்ற வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

வடிவு உடை - அழகிய உருவமுடைய . வாரணம் - யானையை . உரிகொண்டவன் - உரித்தவன் . இடிபடு - இடியையுடைய . வானம் - வானுலகில் உள்ளவர்களும் . ஏத்த இருந்தான் . மேக மண்டலம் வானிற் காணப்படுதலால் அதன் கண்படும் இடியை , வானத்தின் மீது ஏற்றப்பட்டது . இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

கழைவளர் கவ்வைமுத்தங் கமழ் காவிரி யாற்றயலே
தழைவளர் மாவினல்ல பல வின்கனி கள்தங்கும்
குழைவளர் சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடு மிருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

முற்றிய மூங்கில்களிலிருந்து மிகுதியாகக் கிடைக்கும் ஒலிக்கின்ற முத்துக்கள் நிறைந்த காவிரியாற்றின் பக்கத்திலே , தழைகள் மிகுந்த மாங்கனிகளும் , பலாவின் கனிகளும் கொத்தாக விளைகின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் , அழகான சிவபெருமான் , நல்ல ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

கழை - மூங்கிலினின்று . வளர் - மிகுதியாகக் கிடைக்கும் . கவ்வை - பெருவிலையையுடைய , கமழ்கின்ற - கலவைச்சாந்து பூசிய பெண்கள் ஆடிய நீர்த்துறையில் தெறிக்கப்பட்டமையின் முத்துக்களும் கமழ்கின்றன . தழைவளர் - தழைகள் மிகும் . தயங்கும் - விளங்கும் . குழை - கொழுந்து . இழை - ஆபரணங்கள் . வளரும் - மிகும் . மாவின் - மாமரத்தின் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

மலைமலி மங்கைபாகம் மகிழ்ந் தானெழில் வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத் தான்புர மூன்றினையும்
குலைமலி தண்பலவின் பழம் வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி யிருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

மலைமகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , மகிழ்ந்து விளங்கும் சிவபெருமான் எழில்மிக்க இவ்வுலகம் உய்யுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு , அக்கினியைக் கணையாக்கித் தொடுத்து , மூன்று புரங்களையும் சிதைத்தவன் . கொத்தாகக் காய்க்கும் பலாக்கனிகள் தாமாகவே கனிந்து வீழும் வளம் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இலைபோன்ற சூலப்படையை ஏந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

வையம் உய்ய மங்கைபாகம் மகிழ்ந்தான் . உலகம் அவன் உரு ஆகலான் . உலகில் இல்லற தருமம் நடத்தற்கு அவன் அம்மையோடு கூடியிருத்தலின் வையம் உய்ய மங்கை பாகம் மகிழ்ந்தான் என்றார் . ` பெண்பால் உகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ ` - என்ற திருவாசகத்தாலும் அறிக . இலைமலி சூலம் - இலைவடிவத்தையுடைய சூலம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

நெடுமுடி பத்துடைய நிகழ் வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப் பரு மால்வரைக் கீழடர்த்தான்
கொடுமட றங்குதெங்கு பழம் வீழ்குட மூக்கிடமா
இடுமண லெக்கர்சூழ விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய இராவணனின் உடலானது துன்பப்படுமாறு கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய் , வளைந்த மடல்களையுடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் மணல் திட்டு சூழ வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

இடர்கண்டு - துன்பப்பட்டு , அயர - தளர , அடர்த்தான் . கொடு - வளைந்த , மணல் எக்கர் - மணல் திடல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

ஆரெரி யாழியானு மல ரானும ளப்பரிய
நீரிரி புன்சடைமே னிரம் பாமதி சூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட குழ கன்குட மூக்கிடமா
ஈருரி கோவணத்தோ டிருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

அக்கினிபோல் ஒளிரும் சக்கராயுதப் படையுடைய திருமாலும் , பிரமனும்அளக்கமுடியாதவனாய் , கட்டுப்படுத்த முடியாமல் பெருக்கெடுத்த கங்கையைப் புன்சடைமேல் தாங்கி , இளம்பிறைச் சந்திரனைச் சூடி , நல்ல நெருப்புப் பிழம்பு போல் ஓங்கி நின்றஅழகனானசிவபெருமான் , திருகுடமூக்கு என்னும் திருத்தலத்தில் தோலும் கோவணஆடையும்அணிந்து வீற்றிருந்தருளுகின்றான் . அவனே யாம் வணங்கும் கடவுள் ஆவான் .

குறிப்புரை :

ஆர் - பொருந்திய . எரி - அக்கினிபோல் ஒளிரும் . ஆழி - சக்கராயுதம் . நீர் - கங்கைநீர் . இரி - வழிந்தோடுகின்ற . கூர் எரி - மிக்க நெருப்புப் பிழம்பு . ஈர் உரி - உரித்த தோல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லா நயந் தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா முடை யான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

மஞ்சட் காவியுடையணிந்த , இறைவனை உணராத பேதையராகிய புத்தர்களும் , இறுமாப்புடைய சமணர்களும் , கூறுவன பயனற்றவை . தன்னை நாடித் தேவர்கள் எல்லாம் விரும்பி வழிபட , அவர்கட்கு நல்லதையே அருளும் சிவபெருமான் , மன்னுயிரைக் குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி அருள்புரிவான் . திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இதழ் விரிந்த கொன்றைமாலையைச் சூடி வீற்றிருந்தருளும் அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

மூடிய சீவரத்தார் - சீவர ஆடையைப் போர்த்தவர் . முதுமட்டையர் - மிக்க பேதையராகிய புத்தர் . மோட்டு அமணர் - இறுமாப்புடைய அமணர் . ஏடு அலர் - இதழ்விரிந்த .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

வெண்கொடி மாடமோங்கு விறல் வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் றமிழ்ஞானசம் பந்தனல்ல
தண்குட மூக்கமர்ந்தா னடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே.

பொழிப்புரை :

வெண்கொடி அசைகின்ற மாடங்கள் ஓங்கி விளங்கும் வெங்குரு எனப்படும் சீகாழியில் அனைவரிடத்தும் நட்புக் கொண்டு பழகும் புகழ்மிக்க தமிழ் ஞானசம்பந்தன் நல்ல குளிர்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து இன்புறுவர் . அவர்கட்கு முக்திப்பேறு எளிதாகக் கைகூடும் .

குறிப்புரை :

வெண்கொடி மாடம் ஓங்கும் - புகழின் அடையாளமாக வெண்கொடி கட்டிய மாடம் . வெங்குரு - சீர்காழி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

கறையணி மாமிடற்றான் கரி காடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினா னொரு பாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் றன்றலையிற் பலி கொள்பவன் வக்கரையில்
உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழ லுள்குதுமே.

பொழிப்புரை :

இறைவன் நஞ்சுண்ட கறுத்த கண்டத்தை உடையவன் . சுடுகாட்டில் திருநடனம் செய்பவன் . பிறைச் சந்திரனையும் , கொன்றைமாலையையும் அணிந்தவன் . உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . பிரமன் தலையைக் கொய்து அதன் ஓட்டில் பிச்சை ஏற்பவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவனான சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளைத் தியானிப்பீர்களாக .

குறிப்புரை :

கரிகாடு - ( கொள்ளிகள் ) கரிந்தகாடு . அரங்கு ஆக - ஆடும் இடமாக . பிறை அணி - ( கொன்றையினான் ) - பிறையினோடு ) அணிந்த கொன்றையினான் . மறையவன் - பிரமன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர் பாகமதா
ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்க டொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடி செப்புதுமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் சிவபெருமான் உதைத்தவன் . பருத்த தோள்களை உடைய உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவன் . முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் தேய்ந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக !

குறிப்புரை :

ஏய்ந்தவன் - பொருந்தியவன் . தேய்ந்து - தன் கலைகளெல்லாம் தேய்ந்து . ( சரண்புக்க ) இளம்பிறைசேர்ந்த , சடையான் . அடி - திருவடிப் புகழ்ச்சியை . செப்புதும் - சொல்லுவோம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

சந்திர சேகரனே யரு ளாயென்று தண்விசும்பில்
இந்திர னும்முதலா விமை யோர்க டொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் மன லாய்விழ வோரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத் தானிடம் வக்கரையே.

பொழிப்புரை :

` சந்திரனைச் சடைமுடியில் சூடியுள்ள சிவபெருமானே ! அருள்புரிவீராக ` என்று குளிர்ந்த விண்ணுலகத்தில் விளங்கும் இந்திரன் முதலான தேவர்கள் தொழுது போற்ற , அந்தரத்தில் திரிந்து கேடுகளை விளைவித்த மூன்று கோட்டைகளும் அக்கினியாகிய கணையினால் எரிந்து சாம்பலாகுமாறு மந்தர மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

சேகரன் - முடியை யுடையவன் . அந்தரம் - ஆகாயத்திலே ( திரிந்த .) முப்புரம் வளைத்தான் - வளைத்து எய்தான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

நெய்யணி சூலமொடு நிறை வெண்மழு வும்மரவும்
கையணி கொள்கையினான் கனன் மேவிய வாடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரி கோவண வாடையின்மேல்
மையணி மாமிடற்றா னுறை யும்மிடம் வக்கரையே.

பொழிப்புரை :

நெய் தடவப்பட்ட சூலத்தையும் , வெண்ணிற மழுவையும் படைக்கலனாக ஏந்தி , பாம்பைக்கையில் ஆபரணமாகப் பூண்டு , நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன் சிவபெருமான் . அவன் தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன் . விரித்து ஓதப்பெறும் வேதங்களைக் கோவணமாக அணிந்தவன் . மை நிறம் பெற்ற கரிய கண்டத்தையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நெய் அணி - நெய்பூசிய . நிறை வெண்மழு - வெண்மை நிறைந்த மழு . கை அணி - கையிற் பற்றிய . கனல் மேவிய ஆடலினான் - உலகெலாம் எரியும் மகா சங்கார காலத்தில் அவ்வக்கினி நடுவில் நின்று ஆடுதலையுடையவன் . விரி - விரித்துக் கட்டிய , கோவண ஆடையின் - கோவணமாகிய ஆடையினோடும் . மெய்மேல் - தன்னுடம்பின்மீது , அணிந்த வெண் திருநீற்றை யுடையவன் . மூன்றாம் அடி கொண்டு கூட்டுப் பொருள்கோள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

ஏனவெண் கொம்பினொடும் மிள வாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையுங் குளிர் மத்தமுஞ் சூடிநல்ல
மானன மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்க ளெரி செய்த தலைமகனே.

பொழிப்புரை :

பன்றியின் கொம்பும் , ஆமையின் ஒடும் அணிகலனாகக் கொண்டு , வளைந்த பிறைச்சந்திரனையும் , குளிர்ந்த ஊமத்த மலரையும் சூடி , நல்ல மான்போன்ற மென்மையான விழிகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பகையசுரர்களின் முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த முதல்வன் ஆவான் .

குறிப்புரை :

ஏனம் - பன்றி . ஆமையும் - ஆமையோடும் . பூண்டு - அணிந்து . அதனால் மகிழ்ச்சியுற்று . மத்தம் - பொன்னூமத்தை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

கார்மலி கொன்றையொடுங் கதிர் மத்தமும் வாளரவும்
நீர்மலி யுஞ்சடைமே னிரம் பாமதி சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை மேவியவன்
பார்மலி வெண்டலையிற் பலி கொண்டுழல் பான்மையனே.

பொழிப்புரை :

கார்காலத்தில் மிகுதியாக மலரும் கொன்றை மலரும் , ஊமத்த மலரும் , ஒளி பொருந்திய பாம்பும் , கங்கையும் சடைமுடியில் திகழ , கலைநிரம்பா பிறைச்சந்திரனைச் சூடி , நல்ல கச்சணிந்த மென்மையான முலைகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான் . அப்பெருமான் இப்பூவுலகில் வெண்ணிறப்பிரம கபாலத்தில் பிச்சையேற்றுத் திரியும் தன்மையன் .

குறிப்புரை :

கார் - கார்காலத்தில் . மலி - மிகுதியாக மலரும் , கொன்றை , வாள் அரவு - ஒளிபொருந்திய பாம்பு . நிரம்பாத மதி - கலை நிரம்பாத பிறை . பார் - பூமியின்கண் . மலிவெண்தலை - வெண்மை மிக்க தலை . பலி கொண்டுழல் - பிச்சையேற்றுத் திரிகின்ற , பான்மையன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கானண வும்மறிமா னொரு கையதோர் கைமழுவாள்
தேனண வுங்குழலா ளுமை சேர்திரு மேனியனான்
வானண வும்பொழில்சூழ் திரு வக்கரை மேவியவன்
ஊனண வுந்தலையிற் பலி கொண்டுழ லுத்தமனே.

பொழிப்புரை :

காட்டில் உலவும் மானை ஒரு கையில் ஏந்தி , மழுவாளை மற்றொரு கையிலேந்தியவன் சிவபெருமான் . வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பிரமனின் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை எடுத்துத் திரியும் உத்தமனாவான் .

குறிப்புரை :

கான் அணவும் - காட்டில் பொருந்திய . மறிமான் - மான் கன்று . ஓர் கையது ; ஒர் கை ( யது ) - மற்றொரு கையது ( மழுவாள் .) தேன் - வண்டு . அணவும் - பொருந்திய . வான் அணவும் - ஆகாயத்தை யளாவிய பொழில் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

இலங்கையர் மன்னனாகி யெழில் பெற்ற விராவணனைக்
கலங்கவொர் கால்விரலாற் கதிர் பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனா யருள் பெற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவே லுடை யானிடம் வக்கரையே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான அழகிய இராவணன் கலங்குமாறு , சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி , ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்தும் அலறுமாறு செய்தான் . பின் இராவணன் செருக்கு நீங்கி , நல்ல சிந்தனையோடு இறைவனைப் போற்றிசைக்க , திருவருளால் இறைவன் அவனுக்கு வீரவாளும் , நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள் புரிந்தான் . அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல் ஏந்தி வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஓர் கால்விரலால் , கதிர் பொன் முடி பத்து அலற . கால் ஐந்து விரலிலும் ஒருவிரல் - அடர்த்ததோ முடி , அவையும் பத்து , முடியணிந்தது , பொன் முடி - கதிர்விடும் பொன் என்ற நயம் காண்க . செருக்குற்ற தீய சிந்தையனாகாது . செருக்கு ஒழிந்து நலங்கெழு சிந்தையனாகி . அருள் பெற்றலும் - திருவருளுக்குப் பாத்திரமான அளவில் , நன்கு - நல்லனவாகிய வாளும் , நாளும் , அளித்த - அருள் புரிந்த - மூவிலை வேல் உடையவன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

காமனை யீடழித்திட் டவன் காதலி சென்றிரப்பச்
சேமமே யுன்றனக்கென் றருள் செய்தவன் றேவர்பிரான்
சாமவெண் டாமரைமே லய னுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகை யானிடம் வக்கரையே.

பொழிப்புரை :

மன்மதனுடைய அழகிய வலிய தேகத்தை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி இரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்கச் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான் . வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும் , உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஈடு அழித்திட்டு - வலிமைக்கு இடமாகிய உடம்பை அழித்து . அவன் காதலி - இரதி . உன்தனக்குச் சேமமே - ( உன் கண்ணுக்கு மட்டும் புலப்படுவான் ஆகையினால் ) உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு நன்மையே . சாமம் - வேதம் பாடுகின்ற ( வெண்தாமரைமேல் ) அயனும் . தரணி - பூமி . அளந்த , வாமனனும் வாமனாவதாரம் கொண்ட திருமாலும் . சிறப்புப்பெயர் பொதுப் பெயருக்கு ஆயிற்று .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மூடிய சீவரத்தர் முதிர் பிண்டிய ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ் சப்படுந் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக் கென்றுபல் வீதிதொறும்
வாடிய வெண்டலைகொண் டுழல் வானிடம் வக்கரையே.

பொழிப்புரை :

காவியாடை போர்த்திய புத்தர்களும் , அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் , தேடுகின்ற தேவர்களால் வணங்கப் படுகின்ற தேவர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமான் நான்மறைகளை அருளிச்செய்து , பல வீதிகள்தோறும் சென்று உலர்ந்த பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பிண்டியர் - அசோக மரத்திற் பற்று உடையவர்கள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

தண்புன லும்மரவுஞ் சடை மேலுடை யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகா ரிறை வன்னுறை வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே.

பொழிப்புரை :

குளிர்ந்த கங்கையும் , பாம்பும் சடைமுடியில் அணிந்த அழகனான சிவபெருமான் , உறையும் சந்திரனைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள செழுமைவாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தைப் போற்றி , சண்பை நகர் எனப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் , அருளிய பண்ணோடு கூடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினையிலிருந்து நீங்கப் பெறுவர் .

குறிப்புரை :

பண்புனை பாடல் - பண்ணாற் புனைந்து பாடிய பாடல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

ஆதிய னாதிரையன் னன லாடிய வாரழகன்
பாதியொர் மாதினொடும் பயி லும்பர மாபரமன்
போதிய லும்முடிமேற் புன லோடர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஆதிமூர்த்தியானவர் . திருவாதிரை என்னும் நட்சத்திரத்திற்கு உரியவர் . நெருப்பைக் கையிலேந்தித் திருநடனம் புரியும் பேரழகர் . தம் திருமேனியின் ஒரு பாகமாகக் உமாதேவியை ஏற்று மேலான பொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவர் . கொன்றை முதலிய மலர்களை அணிந்த முடிமேல் , கங்கையையும் பாம்பையும் அணிந்தவராய் , வேதங்களை அருளிச் செய்தவர் சிவபெருமான் ஆவார் . அப்பெருமானார் மிக்க அன்புடன் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்பதாகும் .

குறிப்புரை :

ஆதிரையான் - திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரியவன் . அனல் ஆடிய அரு அழகன் - அனலில் ஆடிய அரிய அழகையுடையவன் , பரமா பரமன் - மேலானபொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவன் . பயிலும் - பொருந்திய . போது இயலும் - மலர்களை யணிந்த .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

காலனை யோருதையில் லுயிர் வீடுசெய் வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின் றாடிய பண்டரங்கன்
மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உயிர்விடும்படி செய்த சிவபெருமான் வாரால் கட்டிய வீரக்கழலையணிந்தவன் . பால் , நெய் , தயிர் முதலியவற்றால் திருமுழுக்காட்டப்பட்டுப் பண்டரங்கம் என்னும் திருக்கூத்துப் புரிந்தவன் . மாலை நேர சந்திரனொடு , கங்கை , பாம்பு இவற்றை அணிந்த விரிந்த சடையுடையவன் . வேல்போன்ற கண்களையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

உயிர்வீடுசெய் - உயிர்விடச்செய்த ( வீடு - விடுதல் ) வார் - வாராற் கட்டிய கழலையுடையவன் . பயின்று ஆடிய - பலதரமும் திருமஞ்சனம் கொண்டருளுகின்ற , மாலை மதி - மாலைக்காலத்தில் தோன்றும் சந்திரன் , நீர் - கங்கைநீரையும் , புனை - அணிந்த . வார்சடையன் - நெடிய சடையையுடையவன் . வேல் அ ( ன் ) ன - வேலையொத்த , கண்ணியோடும் - கண்களையுடைய உமாதேவியோடும் . பயின்று - இப்பொருளாதலை ` பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி ` என்புழியும் காண்க . ( தி .1. ப .61. பா .5.) ஆடிய - ஆடுகின்ற - காலவழுவமைதி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

படைநவில் வெண்மழுவான் பல பூதப் படையுடையான்
கடைநவின் மும்மதிலும் மெரி யூட்டிய கண்ணுதலான்
உடைநவி லும்புலித்தோ லுடை யாடையி னான்கடிய
விடைநவி லுங்கொடியான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் தூய மழுப்படை உடையவர் . பலவகையான பூதகணங்களைப் படைவீரர்களாகக் கொண்டுள்ளவர் . பாவங்களைச் செய்து வந்த மூன்று மதில்களையும் எரியுண்ணும்படி செய்த நெற்றிக் கண்ணையுடையவர் . புலித்தோலாடை அணிந்தவர் . விரைந்து செல்லக்கூடிய ஆற்றல் பொருந்திய இடபத்தைக் கொடியாக உடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

படைநவில் - படையாகக் கொள்கின்ற . கடைநவில் - பாவங்களைச் செய்துவந்த , மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான் கடை - பாவம் ` அறன்கடை ` ( திருக்குறள் ). உடைநவிலும் - உடையாகக் கொள்ளப்படும் . புலித்தோல் , உடை ஆடையினான் - ஆடையாக உடையவன் . உடை - உடு என்னும் வினையடியாகச் செயப்படுபொருள் உணர்த்தும் ஐகாரவிகுதி புணர்ந்தும் , உடைமை என்னும் விகுதி குன்றி வினைத்தொகையின் நிலைமொழியாயும் நின்றது . கடிய - விரைந்து செல்லக் கூடிய ( விடை ) நவிலும் - பொருந்திய , கொடியான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பண்ணமர் வீணையினான் பர விப்பணி தொண்டர்கடம்
எண்ணமர் சிந்தையினா னிமை யோர்க்கு மறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிர மன்றலை யிற்பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் வீணையிலே பண்ணோடு கூடிய பாடலை மீட்டுபவர் . தம்மைப் போற்றி வணங்குகின்ற தொண்டர்களின் சிந்தையில் எழுந்தருளியிருப்பவர் . தேவர்களால் அறிவதற்கு அரியவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றவர் . தேவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பரவி - துதித்து . வணங்குகின்ற . எண் அமர் சிந்தையினான் - நினைத்தலையுடைய சிந்தையில் எழுந்தருளியிருப்பவன் . பிரமன் தலையிற் பிச்சை ஏற்பவன் , ஏற்கும் - சொல்லெச்சம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பாரிய லும்பலியான் படி யார்க்கு மறிவரியான்
சீரிய லும்மலையா ளொரு பாகமும் சேரவைத்தான்
போரிய லும்புரமூன் றுடன் பொன்மலை யேசிலையா
வீரிய நின்றுசெய்தான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் உலகத்தார் செய்யும் பூசைகளைத் தான் ஏற்பவன் . தன் தன்மையை உலக மாந்தர்களின் சிற்றறிவால் அறிவதற்கு அரியவனாய் விளங்குபவன் . புகழ்மிக்க உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . போர் செய்யும் தன்மையுடைய முப்புரங்களுடன் பொன்மயமான மேருமலையே வில்லாகக் கொண்டு தன் வலிமையைக் காட்டிப் போர் செய்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பார் இயலும் பலியான் - உலகம் முழுவதிலும் , செய்யும் பூசையைக்கொள்பவன் . பார் - பூமி - இங்கு உலகம் என்னும் பொருளில் வந்தது . ` உலகுக்கொருவனாய் நின்றாய் நீயே ` எனப் படுவதால் . ( தி .6 ப .38 பா .1) உலகத்தார் பலவடிவிலும் போற்றும் பூசையெல்லாம் அவனுக்கேயாதலின் - இங்ஙனம் கூறியருளினார் . படி - நிலைமை , யார்க்கும் அறிவு அரியான் . ` அப்படியும் , அந்நிறமும் அவ்வண்ணமும் , அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் .... காட்டொணாதே ` ( தி .6 ப .97 பா .10) என்ற கருத்து . மலையாள் - இமய மலையில் வளர்ந்த உமாதேவியார் . ` மலையான் மருகா ` என ஆண் பாலில் வந்துள்ளதுபோலப் பெண்பாலில் மலையாள் என வந்தது . சீர் - தனக்கு ஒத்த பண்பு அது . சிவஞான சித்தியாரில் ` எத்திறன் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் ` ` சத்திதான் சத்தனுக்குச் சத்தியாம் , சத்தன் வேண்டிற்றெல்லாம் ஆம் சத்திதானே ` ( சித்தியார் 75, 76) என்னுங் கருத்து . கங்கையைத் தலையில் வைத்ததன்றி யென்னும் பொருள்தருதலால் பாரகமும் என்றது இறந்தது தழுவிய எச்ச உம்மை . இயலும் - ( வானில் ) இயங்கிய , புரம் மூன்றுடன் - திரிபுரங்களுடன் , பொன் மலையே - மேருமலையே சிலையா ( க ). வீரியம் நின்று - தன்வீரியங்காட்டி நின்று போர் செய்தான் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

ஊழிக ளாயுலகா யொரு வர்க்கு முணர்வரியான்
போழிள வெண்மதியும் புன லும்மணி புன்சடையான்
யாழின் மொழியுமையாள் வெரு வவ்வெழில் வெண்மருப்பின்
வேழ முரித்தபிரான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஊழிக்காலங்கள்தோறும் உலகப்பொருட்களுள் கலப்பால் ஒன்றாய் விளங்கினும் , ஒருவர்க்கும் உணர்வதற்கு அரியவனாய் விளங்குகின்றான் . பிளவுபட்ட வெண்ணிறச் சந்திரனையும் , கங்கையையும் அணிந்த சடையுடையவன் . யாழ் போன்று இனிமையான மொழி பேசுகின்ற உமாதேவி அஞ்சும்படி அழகிய வெண் தந்தமுடைய யானையின் தோலை உரித்தவன் . அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஊழிகளாய் - ஊழிக்காலங்களாய் . உலகமாகி நின்றும் - ஒருவர்க்கும் உணர்வரியன் . ஒரு நயம் . ` மரத்தில் மறைந்தது மாமதயானை . பரத்தை மறைத்தது பார் முதற்பூதம் ` ( தி .10 பா .2256) என்று உவமை முகத்தாற் கூறுவர் திருமூல நாயனார் . போழ் - பிளவாகிய , வெண்மதி . மருப்பின் வேழம் - கொம்பையுடைய யானை . யாழின் மொழி - இன் - ஒப்புப் பொருளில் வந்தது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கன்றிய காலனையும் முரு ளக்கனல் வாயலறிப்
பொன்றமு னின்றபிரான் பொடி யாடிய மேனியினான்
சென்றிமை யோர்பரவுந் திகழ் சேவடி யான்புலன்கள்
வென்றவ னெம்மிறைவன் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சினந்து வந்த காலன் அலறி விழுமாறு காலால் உதைத்து அழித்தவன் . திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசியவன் . தேவர்களெல்லாம் சென்று போற்றி வணங்கும் செம்மையான திருவடிகளை உடையவன் . ஞானிகள் புலன்களை வெல்லும்படி செய்பவன் . எம் தலைவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கன்றிய - ( மார்க்கண்டேயரைக் ) கோபித்த . உருள , வாய் அலறிப் பொன்ற - இறக்க முனிந்த பிரான் . கனல்வாய் - பிறர்க்கு நெருப்பைக் கக்கும் வாய் இங்கு அலறிற்று என்றது ஒருநயம் . ` கன்றிய காலன் ` ( தி .4. ப .26. பா .8.) அப்பர் பெருமான் திருவாக்கிலும் அமைகிறது . ஐம்புலன் வென்றவன் - ஞானிகளுக்கு ஐம்புலன்களையும் வெல்லுவித்தவன் என்க . ` பொறிவாயிலைந்த வித்தான் ` என்ற திருக்குறளுக்கும் இப்பொருள் நேரிது . பிறவினை விகுதி தொக்கு நின்றது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

கரமிரு பத்தினாலுங் கடு வன்சின மாயெடுத்த
சிரமொரு பத்துமுடை யரக் கன்வலி செற்றுகந்தான்
பரவவல் லார்வினைக ளறுப் பானொரு பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

பத்துத் தலைகளையுடைய அரக்கனான இராவணன் , தன் இருபது கரங்களினாலும் கடும் கோபத்துடன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க அவனது வலிமையை சிவபெருமான் அழித்தான் . அவன் தன்னைப் போற்றி வழிபடும் பக்தர்களின் வினைகளை அறுப்பவன் . தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்ட கோலத்துடன் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இருபதினாலும் - இருபத்தினாலும் என்றது விரித்தல் விகாரம் . கடு ( ம் ) வன் சினம் - மிகவலிய கோபம் . ` கடி ` என்னும் உரிச்சொல் மிகுதிப்பொருளில் வந்தது . எடுத்த என்ற பெயரெச்சத்துக்கு மலையை என்ற செயப்படு பொருள் வருவித்துரைக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

கோல மலரயனுங் குளிர் கொண்ட னிறத்தவனும்
சீல மறிவரிதாய்த் திகழ்ந் தோங்கிய செந்தழலான்
மூலம தாகிநின்றான் முதிர் புன்சடை வெண்பிறையான்
வேலை விடமிடற்றான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , குளிர்ந்த மழைநீர் பொழியும் மேகம் போன்று கருநிறமுடைய திருமாலும் , தனது தன்மையை அறிதற்கு அரியவனாய்ச் சிவந்த நெருப்பு மலைபோல் ஓங்கி நின்றவன் சிவபெருமான் . அவன் எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக விளங்கி நின்றான் . முதிர்ந்த சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்தவன் . கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கோலம் - அழகையுடைய மலர் . குளிர் கொண்டல் - என்றமையாற் கரியமேகம் என்க . சீலம் தனது நிலையை . திகழ்ந்து தங்கிய - பிரகாசித்து உயர்ந்த , செந்தழலான் மூலம் அது - எல்லாத் தத்துவங்கட்கும் முதலாம் பொருள் . ஆகி நின்றார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

நக்குரு வாயவருந் துவ ராடை நயந்துடையாம்
பொக்கர்க டம்முரைகள் ளவை பொய்யென வெம்மிறைவன்
திக்கு நிறைபுகழார் தரு தேவர்பி ரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

ஆடையணியா உடம்புடைய சமணர்களும் , மஞ்சட் காவியாடை அணிந்த புத்தர்களும் மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றி ஏதும் கூறாது , தோன்றி நின்று அழியும் தன்மையுடைய உலகப் பொருள்கள் பற்றிக் கூறும் உரைகளைப் பொருளெனக் கொள்ளற்க . எம் தலைவனான சிவபெருமான் எல்லாத் திக்குகளிலும் நிறைந்து புகழுடன் விளங்குபவன் . தேவர்கட்கெல்லாம் தலைவன் . பொன் போன்று மிக்குயர்ந்த சோதியாய் விளங்குபவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நக்குரு - நக்க உரு . ஆடையணியா உடம்பு . நயந்துடை - நயந்த உடை , பொக்கர் - பொய்யர் . பொக்கு - திசைச்சொல் . பொய்யென - பொய் என்னும்படி திக்கு நிறைந்த புகழ் உடைய பிரான் என்க . கனகம் - பொன்போலும் . மிக்கு உயர்சோதியவன் - மிகுந்த உயர்ந்த உடம்பின் ஒளியையுடையவன் ` பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து ` என்றும் ( தி .4. ப .81. பா .9.) ` பொன்னார் மேனியனே ` என்றும் ( தி .7. ப .24. பா .1.) வருவன காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தரு சண்பையர் தந்தலைவன்
எண்ணமர் பல்கலையா னிசை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினை யாயின பற்றறுமே.

பொழிப்புரை :

உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி , குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் அவதரித்த தலைவனான , பலகலைகளில் வல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு கூடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

திண் ( ண ) ம் அமரும் புரிசை - உறுதி தங்கிய மதில் . திண்மை - திண் என்று ஆயது . ` ஈறுபோதல் ` என்னும் விதி . சூழ் தரு - சூழ்ந்த . எண் அமர் - பாராட்டுதல் அமைந்த பல்கலை . இசை - இசைத்தமிழால் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை ஈச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன் . தூய வெண்மழுவினைக் கையிலேந்தியவன் . உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன் . மிக்க பெருமையுடைய திருமாலை இடப வாகனமாகக் கொண்டவன் . விண்ணிலே விளங்குகின்ற பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையினையுடைய , வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானுடைய உறைவிடம் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

கண் பொலிகின்ற நெற்றியினான் , திகழ்கையில் - கையில் விளங்கும் . புணர் - ஒருபால் கலந்த . பீடு - பெருமித நடையையுடைய , விடையன் . ` ஏறுபோற் பீடுநடை `. ( குறள் - 59.) மால் விடை - திருமாலாகிய இடபம் . ` தடமதில்க ளவைமூன்றும் தழல் எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ ` ( திருவாசகம் . 269). ` திருத்தாடகையீச்சரம் ` திருக்கோயிலின் பெயர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

விரித்தவ னான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் ளிய லேழுல கில்லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமே னிறை பேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நான்கு வேதங்களின் பொருளை விரித்து ஓதியவன் . தேவர்களெல்லாம் வந்து வேண்ட முப்புரங்களை எரித்தவன் . ஏழுலகங்களிலுமுள்ள உயிர்களைச் சங்கார காலத்தில் பிரித்தவன் . சிவந்த சடையின்மேல் நிறைந்த பேரொலியோடு பெருக்கெடுத்து வந்த கங்கையைத் தாங்கியவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

நான்மறையை - நான்கு வேதத்தின் பொருளையும் . விரித்தவன் - விரித்துரைத்தவன் , வேதத்துக்குப் பொருளருளிச் செய்த திருவிளையாடல் இங்குக் குறித்தது . இயல் - பொருந்திய , உலகில் உயிர் , பிரித்தவன் , ஆசாரியனாகவந்து , தத்துவ ரூபம் , தத்துவ தரிசனம் , தத்துவ நீக்கம் செய்து , ஆன்மரூபம் முதலியன காட்டத் தொடங்கும் . அவதாரத்தை உலகில் உயிர் பிரித்தான் என்றருளிச் செய்தனர் . வெள்ளம் - நீர்ப் பெருக்கம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான்
மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவனூர் பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மான்தோலை ஆடையாக அணிந்தவன் . தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவன் . இனிய இசையுடைய நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் உட்பொருளாகவும் விளங்குபவன் . பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன் . தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் கோயிலாகும் .

குறிப்புரை :

உடுத்தவன் மான் உரிதோல் - மானை உரித்த தோலை உடையாக உடுத்தவன் , மான் தோலும் இறைவனுக்கு உடை என்பதை ` புள்ளியுழைமானின் தோலான் கண்டாய் ` என்ற அப்பர் வாக்காலும் அறிக . கழல்கள் உள்க வல்லார் வினை - திருவடிகளை நினைப்பவரது வினைகளைக் ( கெடுத்து , அருள் செய்ய வல்லான் ) கிளர் - மிக்கு ஒலிக்கின்ற . கீதம் - கீதத்தினோடும் . ஓர் நான்மறையான் - ஒரு நான்கு வேதங்களையும் உடையவன் . ( நஞ்சு அமுதாகுமாறு ) மடுத்தவன் - உண்டவன் . மாதவர் - தாருகவனத்து முனிவர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும் புனைந்த
தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற எளிதில் நீங்காத வினைகளும் , அவற்றின் காரணமாக உடலில் தோன்றும் பலவகை நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணுவீராயின் பாய்கின்ற கங்கையையும் , பிளவுபட்ட இளமையான வெண்ணிறச் சந்திரனையும் , நெருப்புப் போல் விடம் கக்கும் பாம்பையும் அணிந்த தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலைப் மிகவும் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

சூழ் தரு - பற்றிவிடாது சூழ்ந்த , வல்வினையும் ( எளிதில் நீங்காத ) வலிய வினைகளும் . ` பற்றி நின்ற வல்வினை ` என்பர் அப்பர்பெருமான் . உடன் தோன்றிய - உடலோடு தோன்றிய . பல் பிணி - பல நோய்களும் . ` உடன் பிறந்தே கொல்லும் வியாதி ` என்பது மூதுரை . ஏத்துமின் - துதியுங்கள் . அனல் பொங்கு அரவும் - விடம் பொங்கும் அரவும் . தாழ் - தொங்குகின்ற ; சடையான் . இடமாகிய தாடகையீச்சரத்தை ஏத்துமின் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறை சேருமிடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணி யுங்கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை உடையவன் . வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு நள்ளிருளில் திருநடனம் புரிபவன் . எங்கள் தலைவனான சிவ பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , படமெடுத்தாடும் பாம்பு கக்குகின்ற நவரத்தினமணிகளோடு , அலைகள் பலவகையான மணிகளை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய மண்ணியாறு சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

இருள் - மகாசங்கார காலத்தில் எங்கும் இருள் மயமாய் இருத்தலின் இருள் என்றார் . ( அக்காலத்தில் நடம்புரிவர் என்பர் ) இதனை ` நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே ` ( திருவாசகம் .1. அடி . 89) காண்க . இறைவி காண்பவளாய்த் தான் ஆடுபவனுமாய் அமைதலின் ` வெள்வளை மங்கையொடும் நடம்புரி கொள்கை யினான் ` என்றார் . படம்புரி - படத்தை விரிக்கின்ற ; நாகம் . புரிதல் , செய்தல் , பொதுவினை சிறப்பு வினைக்கு ஆயிற்று . நாகமொடு - நாகரத்தினங்களுடன் ( பல இரத்தினங்களையும் ) அலை - அடித்து வரும் . தடம் புனல் - பெருமை பொருந்திய காவிரி நீர் சூழ்ந்த ; திருப்பனந்தாள் . ` தடவுங் கயவும் நளியும் பெருமை ` ( தொல்காப்பியம் - சொல் . 320.)

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

விடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட வாடவல்லான் மிகு பூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக் கும்மணிந்த
சடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் வெற்றிக் கொடியாக இடபம் பொறித்த கொடி உடையவன் . விண்ணுலகமும் , மண்ணுலகமும் , மற்றுமுள்ள எல்லா உலகங்களும் தன் திருவடிபதியுமாறு விசுவரூபம் எடுத்து ஆடவல்லவன் . பலவகையான பூதகணங்களைப் படையாக உடையவன் . கொன்றைமாலையோடு , வன்னி , எருக்கம் இவை அணிந்த சடையுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

விண்ணொடு மண்ணும் எல்லாம் புடைபட - விண்ணுலகம் ` மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களும் , தன் அடியின் பக்கத்திலே தங்கும்படி ; ஓங்கி ஆடவல்லான் என்றது , பேருரு எடுத்து ஆடுதலைக் குறித்தது . அது ` பூமே லயனறியா மோலிப் புறத்ததே , நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் ... கூத்துகந்தான் கொற்றக் குடை ` ( கோயில் நான்மணிமாலை . பா .1.) என்பதுங் காண்க . படையான் - சேனைகளையுடையவன் . தொடை - மாலை . துன் - நெருங்கிய .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

மலையவன் முன்பயந்த மட மாதையொர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற் புர மூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதி யாடர வும்மணிந்த
தலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மலையரசன் பெற்றெடுத்த உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டவன் . மேரு மலையை வில்லாக்கி , அக்கினியைக் கணையாக்கி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகும்படி அழித்தவன் . அலைகளையுடைய குளிர்ந்த கங்கையையும் , சந்திரனையும் , பாம்பையும் அணிந்த சடைமுடியுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

மலையவன் - இமயமலையரசன் . பயந்த - பெற்ற . அலை மலி தண்புனல் - கங்கை . தலையவன் - தலைமையானவன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான்
புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும்
தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்காற்பெருவிரலை ஊன்றி அழித்தவன் . முற்றும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன் . உருவம் , அருவம் , அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன் . புற்றில் வாழ்கின்ற பாம்பையும் , புலித்தோலையும் , கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

திரு மெல் விரலால் அடர்த்து - அரக்கன் வலியைச் செற்று (அழித்து) என மாற்றுக . அரவம் கோவணமும் , புலியின் உரித்த தோலை ( உடையும் ) ஆக . தற்றவன் - உடுத்தியவன் . கோவணமும் என்ற இலேசால் உடையும் என ஒரு சொல் வருவிக்க . தற்றுதல் (தறுதல்) = உடுத்தல் . ` மடி தற்றுத் தான் முந்துறும் ` ( குறள் - 1023.) மேனியன் மும்மையினான் என்றது உரு , அரு , அருவுருஆம் மேனியை - ` உருமேனி தரித்துக் கொண்டதென்றலும் உருவிறந்த , அருமேனியதுவும் கண்டோம் அருவுரு வானபோது , திருமேனி யுபயம் பெற்றோம் ` ( சிவஞானசித்தியார் சுபக்கம் - 55.)

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

வின்மலை நாணரவம் மிகு வெங்கன லம்பதனால்
புன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனுந் நண்ணு நாரண னும்மறியாத்
தன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மேருமலையை வில்லாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , மிகுந்த வெப்பமுடைய அக்கினியை அம்பாகவும் கொண்டு , தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகுமாறு அழித்தவன் . நல்ல தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் அறியாத தன்மையன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது திருப்பனந்தாள் என்னும் திருத்தலமாகும் . அங்குத் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளான் .

குறிப்புரை :

வில் :- மலை . நாண் :- அரவம் . அம்பு :- மிகுவெம் கனல் - மிகுந்த வெப்பத்தையுடைய அக்கினி . புன்மைசெய் - தீமையைச் செய்த . தானவர் - அசுரர் . கீழ்மக்கள் செயலாதலின் தீமை புன்மை எனப்பட்டது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

ஆதர் சமணரொடும் மடை யைந்துகில் போர்த்துழலும்
நீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மி னின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

பயனிலிகளாகிய சமணர்களும் , அழகிய துணிகளைப் போர்த்துத் திரிகின்ற புத்தர்களும் உரைக்கின்ற மொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள் . நின்மலனான சிவபெருமானது உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில் புள்ளினங்கள் ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிரும் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகை யீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

ஆதர் - பயனிலிகள் , ஐந்துகில் .... நீதர் - நீசர் - புத்தர் . உரைக்கும் மொழி கொள்ளன்மின் . நின்மலன் ஊராகிய திருப்பனந்தாளை . அடைந்துய்ம்மின் என்பது அவாய்நிலை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரத்துக்
கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பந்தனல்ல
பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே.

பொழிப்புரை :

குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் , வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி , சீகாழியில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு கூடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும் .

குறிப்புரை :

கண் அயலே - பிறையான் - மேல் நோக்கிய திருவிழி நெற்றியில் உண்மையால் அதன்மேல் ( தலையின் பாகத்தில் ) பிறையை யணிந்தவன் , நல்ல - நற்பயனைத் தருதலாகிய , பண் இயல் பாடல் - பண்ணொடு கூடிய பாடல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்  தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்  பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

பொழிப்புரை :

பசுமையான கிளைகளில் மலர்களையுடைய புன்னைமரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற, ஓடி ஆடி உல்லாசமாக இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத் தாங்காத துன்பம் தந்தான். அவன் திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் சிறுத்தொண்டர் பணி செய்ய சுடுகாட்டுள், கையில் அனல் ஏந்தி திருநடனம் புரியும் பெருமானாவான்.

குறிப்புரை :

பைம்கோட்டு - பசிய கிளைகளில். மலர்ப்புன்னை - மலர்களையுடைய புன்னை மரத்திலுள்ள (பறவைகாள்). பயப்பு - பசப்பு, பசலைநிறம். ஊர - உடம்பிற்பரவ. சங்கு ஆட்டம் - சங்குப் பூச்சிகள் திரையில் தவழ்வதுபோலத் தனியே உலாவிய என் மகிழ்ச்சியை, தவிர்த்து - நீக்கி, என்னைத், தவிரா - அழியாத; துயர்தந்தான். ஏகாரம் இரங்கற்குறிப்பு. இடைச்சொல் - இடத்துக்கு ஏற்ற பொருள் தரும் என்பர். வெம்காட்டுள் - கொடிய மயானத்துள் (அனல் ஏந்தி விளையாடும் பெருமான்.) ஏகாரம் - ஈற்றசை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பொன்னம்பூங் கழிக்கானற் புணர் துணையோ டுடன்வாழும்
அன்னங்கா ளன்றில்கா ளகன் றும்போய் வருவீர்காள்
கன்னவிறோட் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய
இன்னமுத னிணையடிக்கீ ழெனதல்ல லுரையீரே.

பொழிப்புரை :

பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தம் துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே! அன்றில் பறவைகளே! நீங்கள் இச்சோலையிலிருந்து வெளி இடங்கட்கும் சென்று வரும் இயல்புடையவர்கள். கல் போன்று திண்மையான அழகிய தோள்களையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யக் கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற இனிய அமுது போன்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் இருந்து என்னுடைய துன்பத்தைச் சொல்லமாட்டீர்களா?

குறிப்புரை :

பொன்னம்பூம் கழிக்கானல் - பொன்போன்ற மகரந்தத்தை யுதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கழியருகே உள்ள கடற்கரைச் சோலையில். புணர் துணையோடு - கூடிய துணையுடனே. உடன் வாழும் - இணைபிரியாது வாழ்கின்ற. அன்னங்காள் - அன்னப் பறவைகளே. அன்றில்காள் - அன்றிற்பறவைகளே.
அகன்றும் போய் - இரையின்பொருட்டு (இச்சோலையை) நீங்கிப் போய். வருவீர்காள். தங்குவதற்கு இங்கே வந்து கொண்டிருக்கின்றீர்கள். இன் அமுதன் - இனிய அமுதுபோல்வானது. இணை அடிக் கீழ் - இரு திருவடிகளின் முன்பாக. எனது அல்லல் எனது பிரியாத் துயரை. உரையீரே - சொல்ல மாட்டீரோ.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தா லிரைதேரு மிருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே. 

பொழிப்புரை :

குட்டை, குழி, குளிர்ந்த பொய்கை ஆகிய இடங்களில் விருப்பத்துடன் இரையைத் தேர்கின்ற பெரிய இரு சிறகுகளை உடைய இள நாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் நியமத்தோடு வழிபடத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற நீண்ட அடர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ? உரைப்பாயாக என்பது குறிப்பு.

குறிப்புரை :

குட்டத்தும் - நீர் நிலையிலும்; குளத்திலும் சிறியது. \\\"கடற்குட்டம் போழ்வர் கலவர்\\\" என்பது நான்மணிக்கடிகை. பொய்கைத் தடத்தும் - பொய்கையாகிய தடாகத்தினிடத்தும்; பொய்கை, தடம் இரண்டும் ஒரு பொருளையே குறித்தலால் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. இட்டத்தால் - விருப்போடு. இரை தேரும் - இரையைத் தேர்கின்ற, மடநாராய் - இள நாரையே. சிட்டன் - நியமம் உடையவன். சென்று சடையை யுடையவனாகிய பெருமானுக்கு என் வருத்தம் உரையாய். பொய்கை - மானிடர் ஆக்காத நீர் நிலை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலி லிரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.

பொழிப்புரை :

கடற்கரைச் சோலையின் அருகிலும், வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் ஓடுகின்ற மீன்களை இரையாகத் தேரும் வெண்ணிறமான மட நாரையே! தேன் துளிக்கும் மாலைகளையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யத் திருச்செங்காட்டங் குடியில் வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம் போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைப்பாயாக.

குறிப்புரை :

கான் - கடற்கரைச் சோலை. (வயல், கழி, கடல் ஆகிய இவ்விடங்களில் வரும் நீரில்) மீன் இரிய - சிறுமீன் ஓட (பெரிய மீனை) இரை தேரும், எனத் தனித்தனி சென்றியையும், வானமரும் சடை யார்க்கு - செவ்வானம் போலும் சடையையுடைய பெருமானுக்கு. என் வருத்தம் உரையாய்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே. 

பொழிப்புரை :

ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக.

குறிப்புரை :

கழனியின் கண்ணே சிறகையுலர்த்துகின்ற பார் அல்வாய் - நெடிய மூக்கையுடைய. சிறு குருகே - சிறிய உள்ளான் பறவையே, பயில் - அடர்ந்த, தூவி - இறகையுடைய நாரையே.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

குறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச்  சரமேய
சிறுத்தொண்டன் பெருமான்சீ ரருளொருநாட் பெறலாமே. 

பொழிப்புரை :

தங்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுபவர்களின் துன்பத்தைப் போக்குதல் தலைவரானவரின் கடமை அன்றோ? குளிர்ந்த குளத்தின் கரையில் கெண்டை மீனைக் கவர்ந்து இரையாகக் கொள்ளும் பறவையே! துணையைப் பிரியாதிருக்கும் மடநாரையே! நீலகண்டரும், பிறைச்சந்திரனைத் தலையிலே சூடியுள்ளவரும், கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் சிறுத்தொண்டரால் வழி படப்படுபவரும் ஆகிய சிவபெருமானது சீராகிய எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது சென்றுரைப்பீர்களாக!

குறிப்புரை :

குறைக்கொண்டார் - குறைவேண்டிக் கொள்பவர்களின் இடர்தீர்த்தல் - நேர்ந்த துன்பத்தைப் போக்குதல். கடன் அன்றே உபகாரிகளுக்குக் கடமையல்லவா. பெருமானது சீர் எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது சென்றுரைப்பீர்களாக. (பொய்கைத் துறையில்) கெண்டை - கெண்டை மீனை. கவர் - கவர்ந்துண்ணும், குருகே - பறவையே; நாரையே. கறைக்கண்டனும், பிறைச் சென்னியையுடைய பெருமானும். சிறுத்தொண்டன் பெருமான் - சிறுத்தொண்டர் வழிபடும் பெருமானும் ஆகிய இறைவன். மூன்றன் உருபும் பயனுந்தொக்க தொகை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்
ஒருவடியா ளிரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.

பொழிப்புரை :

கரிய சேற்றில் அளைந்த பசுங்காலையுடைய வெண்குருகே! அழகிய கழியிலுள்ள நாரையே! போர் செய்வதால் வலிமை பெற்ற அழகிய வடிவுடைய தோள்களையுடைய சிறுத் தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியிலுள்ள திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திரு வடிகளை வழிபடும் திறத்தவர்களே அவன் திருவருளைப் பெறலாமோ? ஓர் அடியாள் அவருடைய திருவருளைக் கெஞ்சி வேண்டினாள் என்று ஒரு நாளாவது சென்று அவரிடம் உரைப்பீராக!

குறிப்புரை :

கரு அடிய - கரிய பாதத்தை உடைய. (பசுங் காலைக் கொண்ட) ஒண் - அழகிய, கழி - கழியில் உள்ள, கரு + அடிய. `காரடிய` ஒரு அடியாள். ஒருஅடியாள் இரந்தாள் - கெஞ்சி வேண்டிக் கொண்டாள். என்று ஒருநாள் - ஒரு நாளைக்கேனும். சென்று - போய். உரையீர் - சொல்வீர். செரு - போரில், வடித்ததோள், சிறுத்தொண்டன் - சிறுத்தொண்டரது (செங்காட்டங்குடி) மேய - மேவிய. திரு அடிதன் திருவருளே திறத்தவர்க்கு - அவன் வழிச்செல்பவர்கட்கு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

கூரார லிரைதேர்ந்து குளமுலவி வயல்வாழும்
தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்ற னருளொருநாட் பெறலாமே. 

பொழிப்புரை :

கூர்மையான அலகால் இரையைக் கொத்திக் குளங்களிலும், வயல்களிலும் வாழ்கின்ற தாரா என்ற பறவையே! மட நாரையே! என் பொருட்டுச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியைச் சொல்வீரோ? சிறந்த புகழுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கீர்த்தியுடைய சிவபெருமான் திருவருளை ஒருநாள் அடியேன் பெறுதல் இயலுமா?

குறிப்புரை :

கூர்ஆரல் - மிக்க ஆரல் என்னும் மீனாகிய இரையை தமியேற்கு - ஒன்றியாகிய எனக்கு; என்றமையால் (துணை பிரியாத) தாராவே, மடநாராய் என்பது பெறப்படும்.
ஒன்று - (ஆற்றி யிருக்கத்தக்க) ஒருவழி, தமியேற்கு - தமியேன் பொருட்டு. ஒன்று - ஒரு தூது மொழியை. (உரைப்பீர் ஆக) பேராளன் - கீர்த்தியை யுடையவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

நறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட லழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.

பொழிப்புரை :

தேனுடைய பூக்கள் நிறைந்த கழியின் கரையிலுள்ள சோலையில் வாழ்கின்ற பறவையே! உலக மக்களெல்லாம் அறத்தைக் கருதி இடுகின்ற பிச்சையை ஏற்று உழல்கின்ற சிவபெருமானுக்குப் பிறர் என்னைத் தூற்றுமாறு செய்வது அழகாகுமா? சிறப்புடைய சிறுத்தொண்டன் வழிபடும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற பிறப்பிலியாகிய சிவபெருமானுடைய திருநாமத்தைப் போற்றித் துதிசெய்யும் நான் எல்லாவிதப் பெருமைக்குரிய நலங்களை இழப்பது முறைமையா?

குறிப்புரை :

நறவு - தேன், நவில் - வாழ்கின்ற, (பலி உலகெல்லாம் தேர்ந்து) அறப்பலி - அறத்தைக் கருதித் தரும் பிச்சை. என் அலர் கோடல் - என்னைப்பற்றி எழும்பிய அலர் தூற்ற நின்ற பழியைக் கோடல்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே.

பொழிப்புரை :

சிறந்த, குளிர்ந்த, அழகிய ஆறுபாயும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு அணிந்த மார்புடைய சிவனை, சிறுத்தொண்டர் வழிபட்டபடி, அழகிய, குளிர்ந்த ஒலிமிக்க காழியிலுள்ள இறைவனின் திருவடிகளை வணங்கும் ஞானசம்பந்தன் சந்தம் மிகுந்த திருத்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் மனிதப்பிறவி எடுத்ததன் தகுதியைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

அம் - அழகிய, தண் - குளிர்ந்த, பூ - பொலிவுற்ற. கலி - ஒலிமிக்க (காழி). காழியடிகள் - திருத்தோணியப்பர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

அண்ணாவுங் கழுக்குன்று மாயமலை யவைவாழ்வார்
விண்ணோரு மண்ணோரும் வியந்தேத்த வருள்செய்வார்
கண்ணாவா ருலகுக்குக் கருத்தானார் புரமெரித்த
பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவண்ணாமலையும் , திருக்கழுக் குன்றமும் ஆகிய மலைகளில் தம்மை அடைந்தோர்க்கு வாழ்வுதரும் பொருட்டு எழுந்தருளியுள்ளார் . விண்ணுலகத்தவரும் , மண்ணுலகத்தவரும் வியந்து போற்ற அருள்செய்வார் . உலகிற்குக் கண்ணாக விளங்குபவர் . வழிபடுபவர்களின் கருத்தில் இருப்பவர் . முப்புரங்களை எரித்தவர் , பெண்ணும் , ஆணுமாக விளங்கும் அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தைப் பிரியாது வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அண்ணாமலையும் , திருக்கழுக்குன்றமும் ஆகிய மலைகளில் வாழ்வார் . கண்ணாவார் , உலகுக்குக் கருத்தானார் . உலகுக்கு :- இடை நிலைத் தீவகம் . பெண்ணும் , ஆணும் ஆகிய பெருமான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

கருமானி னுரியுடையர் கரிகாட ரிமவானார்
மருமானா ரிவரென்று மடவாளோ டுடனாவர்
பொருமான விடையூர்வ துடையார்வெண் பொடிப்பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கரியமானின் தோலை ஆடையாக உடுத்தவர் . சுடுகாட்டில் ஆடுபவர் . இமவான் மருமகன் இவர் என்று சொல்லும்படி உமாதேவியை உடனாகக் கொண்டவர் . போர்புரிய வல்ல பெருமையையுடைய இடப வாகனத்தில் ஊர்ந்து செல்பவர் . திருவெண்ணீற்றினைப் பூசியவர் . பிஞ்ஞகன் என்று போற்றப்படும் அச்சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரிய நாதர் ஆவார் .

குறிப்புரை :

கருமானின் - கரிய மானினது ; மானில் கருநிறம் உடைய ஒரு சாதி உண்டென்றும் , அதனால் மானுக்குக் கிருஷ்ணம் எனப் பேர் என்றும் கூறுப , மருமானார் - மருமகனார் என்பதன் மரூஉ ; இவரென்று உலகத்தவர் சொல்ல . என்று - என்ன என்னும் வினையெச்சத் திரிபு . பொரு - போர்புரியவல்ல . மானவிடை - பெருமை பொருந்திய விடை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

குணக்குந்தென் றிசைக்கண்ணுங் குடபாலும் வடபாலும்
கணக்கென்ன வருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும்
வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்
பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு என எத்திசையிலுள்ளோர்க்கும் ஒன்றுபோல் அருள்புரிவார் . அஞ்ஞானத்தால் நாள்களைக் கழிப்பவர்கட்கும் , மெய்ஞ்ஞானத்தால் தம்மைப் போற்றுவார்கட்கும் , மனத்தால் சிந்தித்துக் காயத்தால் தம்மை வழிபடும் அடியவர்கட்கும் அருள்புரிபவர் . வணங்கிப் போற்றாதவர்கட்கு மாறுபாடாக விளங்குபவர் . அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

குணக்கு - கிழக்கு . குடபால் - மேற்குப் பக்கம் . வடபால் - வடக்குப் பக்கம் . கணக்கு என்ன - ஒரு நிகராக . பிணக்கம் - மாறுபாடு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

இறைக்கொண்ட வளையாளோ டிருகூறா யொருகூறு
மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த சிலைவலவர்
கறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளருஞ் சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் , முன்கையில் வளையலணிந்த உமாதேவி ஒரு கூறாகவும் , தாம் ஒரு கூறாகவும் இருகூறுடைய அர்த்தநாரியாய் விளங்குபவர் . வேதங்களை அருளிச் செய்த நாவுடையர் . மும்மதில்களை எய்த மேருமலையை வில்லாக உடையவர் . நஞ்சை அடக்கியதால் கறைகொண்ட கண்டத்தர் . நெருப்புப்போல் மிளிரும் ஒளிரும் சிவந்த சடையில் பிறையணிந்த பெருமானாகிய அவர் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

இறை - முன்கை . கனல் கிளரும் - தீப்போற் பிரகாசிக்கும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக்
குழையாதார் குழைவார்போற் குணநல்ல பலகூறி
அழையாவு மரற்றாவு மடிவீழ்வார் தமக்கென்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

உலகப் பொருள்களில் பற்றுக் கொண்டு விழையாமல் இறைவன்பால் விழைந்து பலவாறு போற்றி , உலகியலில் மருள்கொண்டு குழையாது , இறைவனின் திருவருளில் குழைந்து அவன் புகழ்களைப் பலவாறு எடுத்துக்கூறி , ` பெருமானே ! அருள் புரிவீராக !` என அழைத்தும் , அரற்றியும் , அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்குபவர்கட்கு என்றும் தவறாது உடனே அருள்புரியும் சிவ பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

விகிர்தம் - வேறுபாடு ஆனமொழி . அழையாவும் அரற்றாவும் - அழைத்தல் ஆகவும் , அரற்றுதல் ஆகவும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

விரித்தார்நான் மறைப்பொருளை யுமையஞ்ச விறல்வேழம்
உரித்தாரா முரிபோர்த்து மதின்மூன்று மொருகணையால்
எரித்தாரா மிமைப்பளவி லிமையோர்க டொழுதிறைஞ்சப்
பெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் நான்மறைகளை விரித்துப் பொருள் உரைத்தவர் . உமாதேவி அஞ்சும்படி யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர் . மும்மதில்களையும் ஓர் அம்பினால் இமைக்கும் அளவில் எரித்தவர் . தேவர்கள் வணங்கிப் போற்ற விசுவரூபம் கொண்ட எம்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

ஆம் - அசை . பெருத்தார் - விசுவரூபம் கொண்டு அருளியவர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

மறப்பிலா வடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாம்
சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லா ரொருகணையால்
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும் கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

இறைவர் தம்மை மறவாது தமக்கு அடியவர்களாய் விளங்குபவர்கள் மனத்தில் வீற்றிருப்பவர் . சிறப்பில்லாத பகையசுரர்களின் மும்மதில்களை மேருமலையை வில்லாகக் கொண்டு , அக்கினியைக் கணையாக எய்து நெருப்புண்ணும்படி அழித்தவர் . அவர் இறப்பற்றவர் . நோயில்லாதவர் . கேடு இல்லாதவர் . பிறப்பில்லாத அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

மறப்பு இலா அடிமைக்கண் மனம் வைப்பார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் றனைவீழ
முரியார்ந்த தடந்தோள்க ளடர்த்துகந்த முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

நெருப்புப் போல் சிவந்த வேற்படை உடைய சேனைகளைக் கடல்போல் விரியப் பெற்றுள்ள இராவணன் அலறுமாறு , வலிமை வாய்ந்த அவனுடைய அகன்ற தோள்களை நெரித்துப் பின்னர் அவன் சாமகானம் பாடக் கேட்டுகந்த முதல்வரான சிவபெருமான் , கட்டுக்களையுடைய கொடிய வில்லேந்தி , உமா தேவியைத் தம்திருமேனியின் ஒருபாகமாகப் பிரியாது பெற்று , திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

எரி ஆர் - நெருப்புப் பொருந்திய . வேல் :- வெல்லக் கூடியது என்னும் காரணக் குறியாய் , இங்கு ஆயுதப் பொதுப்பெயராய் நின்றது . மூரி என்ற வலிமையைக் குறிக்கும் சொல் , குறுக்கல் விகாரம் உற்றது . முதல் ஆளர் - முதன்மையை ஆள்பவர் . வரி ஆர் - கட்டுக் களையுடைய . வெஞ்சிலை - கொடியவில் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக்
காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ண ரடியிணைக்கீழ்
நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து
பேணியவெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

திருவிக்கிரமாவதாரத்தில் வானை அளந்த திருமாலும் , பிரமனும் செருக்குற்றுத் தாமே தலைவர் எனக் கருதி இறைவனைத் தேட , அவனைக் காணும் முறையை அறியாதவராய் , நெருப்பு வண்ணமாய் நின்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் நாண முற்று நின்று தொழுது போற்ற , அவர்களின் நாணத்தைப் போக்கி அருள்செய்து பாதுகாத்த அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

சேண் இயலும் நெடுமாலும் - திரு விக்கிரமாவதாரத்தில் வானை அளந்த திருமாலும் . திசைமுகனும் - பிரமனும் . செரு எய்தி - தம்முள் மாறுபட்டு . செரு - போர் ; அதன் காரணமாகிய மாறுபாட்டைக் குறித்தமையால் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது . காண் இயல்பை - காணும் முறையை ( அறியாது ) அது , திருக் குறுந்தொகையிற் கூறியபடி ` மரங்களேறி மலர் பறித்திட்டிலார் , நிரம்ப நீர் சுமந்தாட்டி நினைந்திலார் , உரம் பொருந்தி ஒளிநிற வண்ணனை , நிரம்பக் காணலுற்றார் அங்கிருவரே ` என்பதால் அறியப்படும் . இவர்கள் தங்கள் அறியாமைக்கு நாணினர் . அது ஆன்ம இயல்பு என உணர்த்தி இறைவர் நாணம் போக்கி அருள் செய்தனர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

புற்றேறி யுணங்குவார் புகையார்ந்த துகில்போர்ப்பார்
சொற்றேற வேண்டாநீர் தொழுமின்கள் சுடர்வண்ணம்
மற்றேரும் பரிமாவு மதகளிறு மிவையொழியப்
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

புற்றேறும்படிக் கடுமையான தவத்தால் உடம்பை வாட்டும் சமணர்களும் , மஞ்சட்காவியூட்டிய ஆடையை அணியும் புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களை நீங்கள் ஏற்க வேண்டா . நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையவனும் , தேரும் , குதிரையும் , யானையும் வாகனமாகக் கொள்ளாது , இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள தலைவனுமான , திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதனை நீவிர் தொழுது வணங்குங்கள் .

குறிப்புரை :

புற்றேறி உணங்குவார் - சமணர் . புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் - புத்தர் . சொல் தேற வேண்டா . வண்ணமாவது சுடர் . மல்தேர் , மல்லல்தேர் - சிறப்புடைய தேர் . மல்லல் - கடைக் குறைந்து நின்றது . பெற்று - இடபம் . ஏறும் பெருமானார் பெருவேளூர் பிரியார் , அவர் வண்ணம் சுடர் , அவரைத் தொழுமின்கள் என்க . ` கடகரியும் பரிமாவும் தேரும் உகந்தேறாதே இடபம் உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடி ` என வரும் பாடலடிகளோடு பின்னிரண்டு அடியையும் ஒப்பிடுக . ( தி .8 திருச்சாழல் - 15.)

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

பைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர் கனியுந்தி
அம்பொன்செய் மடவரலா ரணிமல்கு பெருவேளூர்
நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் சாராவே.

பொழிப்புரை :

அழகிய பொன்னையும் , சிறந்த மணிகளான இரத்தினங்களையும் , பலவகையான கனிகளையும் அடித்துக் கொண்டுவரும் காவிரியில் , பொன்னாலாகிய அழகிய ஆபரணங்களை அணிந்த , நீராடும் மகளிர்கள் மிகுந்த திருப்பெருவேளூரில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிஅருளிய வேதம்வல்ல ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்களை அருவினைகளும் , அவற்றால் வரும் பிறவிநோயும் சாரா .

குறிப்புரை :

பைம்பொன் - பசிய பொன்னையும் . சீர் - சிறப்புப் பொருந்திய . மணி - இரத்தினங்களையும் ( வாரி ). சேர் - திரட்சியான . கனி பலவும் - கனிகள் பலவற்றையும் . உந்தி - அடித்துக் கொண்டு வரும் ( காவிரியில் ). அம்பொன்செய் - அழகிய பொன் அணிகளால் ( அலங்கரித்தலைச் ) செய்த . மடவரலார் - நீராடும் மகளிரின் . அணி - வரிசை . மல்கும் - மிகுந்த ( பெருவேளூர் நம்பன் ). செய் - பொதுவினை சிறப்பு வினைக்காயிற்று . ( சிவபெருமானின் ) கழல் - திருவடிகளை ; துதித்து . நவில்கின்ற - பாடுகின்ற . மறை - வேதநூல் ; வல்ல ஞானசம்பந்தன் . தமிழ் வல்லார்க்கு வினையால் நேரும் நீக்குதற்கு அரிய துன்பங்கள் சாரமாட்டா . வினைநோய் - வினையால் வரும் நோய் என மூன்றன் உருபும் பயனும் தொக்க தொகை . உந்தி பெயர்ச்சொல் - உந்து + இ = இகரம் வினை முதற்பொருளில் வந்தது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

வாரணவு முலைமங்கை பங்கினரா யங்கையினில்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கச்சு அணிந்த மெல்லிய முலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . அழகிய கையில் போருக்குரிய மழுவை ஏந்தியவன் . திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன் . மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகளையும் , பிரளயகாலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுமுடைய காஞ்சியில் , நீர் நிரம்பிய மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

வார் அணவும் - கச்சு அணிந்த . போர் அணவும் - போருக்குரிய ; மழு . அங்கு - அசை . கார் அணவும் - மேகத்தை அளாவிய . மணிமாடம் - இரத்தினங்கள் பதித்த வீடுகளையும் . கடை நவின்ற கலி - பிரளய காலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுடைய , கச்சி - காஞ்சியின் . நீர் அணவும் - நீர் நிரம்பிய . பொய்கை - குளங்களையுடைய ; நெறிக்காரைக்காடு . காஞ்சி மிக்கொலியை உடையதென்பது . ` மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும் \\\' என்ற தண்டி அலங்கார உதாரணச் செய்யுளாள் அறிக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

காரூரு மணிமிடற்றார் கரிகாட ருடைதலைகொண்
டூரூரன் பலிக்குழல்வா ருழைமானி னுரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கார்மேகம் போன்ற நீலநிறமுடைய கண்டத்தார் . கொள்ளிகள் கரிந்த சுடுகாட்டிலிருப்பவர் , பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சை எடுத்துத் திரிவார் . மான்தோலை ஆடையாக உடுத்தவர் . அப்பெருமான் தேரோடும் நீண்ட வீதிகளையுடைய செழிப்புடைய திருக்கச்சிமாநகரில் நீர் நிறைந்த , மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக் காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

கார் ஊரும் - மேகம்போன்ற . மணி - நீலநிறம்வாய்ந்த . மிடற்றார் - கண்டத்தையுடையவர் . கரி - கொள்ளிகள் கரிந்த . காடர் - மயானத்திலிருப்பவர் . ஊர் - ஊர்கள்தோறும் . ஊரான் - ( பிச்சைக்குத் ) திரிபவனைப் போல . பலிக்கு - பிச்சையின்பொருட்டு . உழல்வார் - திரிவார் . உரி - உரியாகிய . அதளர் - தோலாடையையுடையவர் ` புள்ளி உழைமானின் , தோலான் கண்டாய் ` ( தி .6. ப .23. பா .4.) என்னும் திருவாக்காலும் அறிக .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமே லிளமதியோ
டாறணிந்தா ராடரவம் பூண்டுகந்தா ரான்வெள்ளை
ஏறணிந்தார் கொடியதன்மே லென்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

ஒலிநிறைந்த திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கொடிபோன்ற இடையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவர் . குளிர்ந்த சடைமீது இளம்பிறைச் சந்திரனோடு , கங்கை , பாம்பு இவற்றை அணிந்து மகிழ்ந்தவர் . வெற்றிக் கொடியில் வெண்ணிற இடபத்தைக் கொண்டுள்ளார் . மலைபோன்ற மார்பில் எலும்பு மாலையை அணிந்துள்ளார் . திருநீற்றையும் அணிந்துள்ளார் .

குறிப்புரை :

கொடி இடையை - பூங்கொடிபோலும் இடையுடைய உமா தேவியாரை . கூறு அணிந்தார் - ( இடப் ) பாதியாகக் கொண்டார் . உகந்தார் - மகிழ்ந்தார் . கொடியதன்மேல் - கொடியின்மேல் . வெள்ளை - வெண்மையாகிய . ஆன் ஏறு அணிந்தார் - இடபத்தைக் கொண்டார் . வரைமார்பில் - மலைபோன்ற மார்பில் . என்பு - எலும்பு ; மாலையை அணிந்தார் . நீறு அணிந்தார் - திருநீற்றையும் அணிந்தார் . கொடி இடை - அன்மொழித்தொகை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பிறைநவின்ற செஞ்சடைகள் பின்றாழப் பூதங்கள்
மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடைகள் பின் பக்கம் தொங்க , பூதகணங்கள் நால்வேதங்களை ஓதப் பாடலும் , ஆடலும் கொண்டு மழுப்படை ஏந்திச் சிவபெருமான் விளங்குகின்றார் . அப்பெருமான் சிறகுகளையுடைய வண்டுகள் இனிய கனிகளில் சொட்டும் தேனை உறிஞ்சி உண்ட மகிழ்ச்சியில் இன்னொலி செய்யும் திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

நவின்ற - தங்கிய . பின் - பின்புறத்தில் . தாழ - தொங்க . பூதங்கள் - பூதங்கள் ; பாடும் . மறை நவின்ற - வேதங்களைப் பாடுகின்ற ( பாடலோடு ) ஆடலர் ஆய் - ஆடுதலை உடையவராய் . ( சோலைகளில் ) சிறைநவின்ற - சிறகுகளையுடைய ; வண்டு இனங்கள் . தீங்கனி வாய்த்தேன் - மலரிலுள்ள தேனை வெறுத்து இனிய கனிகளில் சொட்டும் தேனை . கதுவும் - பற்றியுண்பதால் . நவின்ற - உண்டான . நிறைகலி - நிறைந்த ஓசையையுடைய ( கச்சி ).

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த வருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோளரவ நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்று மோங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் அன்று ஆலமரநிழலின் கீழிருந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அருளாளர் , குன்றாத வலிமையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு , கொல்லும் தன்மையுடைய பாம்பை நாணாகப்பூட்டி , பகையசுரர்களின் முப்புரங்களை மிக்க நெருப்பில் வெந்தழியும்படி செய்தவர் . அப்பெருமான் ஒலிமிகுந்த திருக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அன்று - அக்காலத்தில் . ஆலின்கீழ் இருந்து - கல்லால மரத்தின் அடியில் வீற்றிருந்து . அறம் - சிவதருமமாகிய சரியை , கிரியைகளையும் . ( யோக , ஞானங்களையும் ) புரிந்த - விரும்பியுரைத்த . அருளாளர் - கிருபையுடையவர் . குன்றாத - வலிமையிற் குறையாத . கோள் அரவம் - கொல்லுதலையுடைய பாம்பை . நாண் கொளுவி - நாணாகப்பூட்டி . ஒன்றாதார் - பகைவராகிய அசுரர்களின் ( புரம் மூன்றும் ). ஓங்கு எரியில் - மிக்க நெருப்பில் . வெந்து அவிய - வெந்தொழிய .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்று மொருநொடியில்
வின்மலையி னாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

தேவர்கள் பலவகையான மலர்களைத் தூவி இறைவனின் திருவடிக்கீழ்ப் பணிந்து வணங்க , நன்மைபுரியாது தீமை செய்த வலிய அசுரர்களின் மூன்று நகரங்களையும் , ஒரு நொடியில் , மேருமலையை வில்லாகக் கொண்டு , வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு அக்கினியாகிய அம்பை எய்து அழித்த , இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பன்மலர்கள் கொண்டு - பலவகை மலர்களையும் கொண்டு . ( தூவி ) அடிக்கீழ்ப்பணிந்து இறைஞ்ச - திருவடியின்கீழ்ப் பணிந்துவணங்க . நன்மை இலா - தீமை செய்தலையுடைய . வில் மலையின் - வில்லாகிய மலையில் . வெம்கணையால் - திருமாலாகிய கொடிய அம்பினால் . நகர் மூன்றும் - முப்புரங்களையும் . ஒரு நொடியில் - ஒரு மாத்திரைப்பொழுதில் . நின்மலனார் - இயல்பாகவே பாசங்களின் நீங்கிய பெருமானார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா வலைபுனலோ டிளமதிய மேந்துசடைப்
பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க பாம்பையும் , கொன்றை மலரையும் , ஊமத்தை மலரையும் அணிந்து , ஓய்தல் இல்லாது அலைவீசும் கங்கையோடு , பிறைச்சந்திரனையும் தாங்கிய சடையையுடையவர் . தம் திருமேனியில் ஒருபாகமாக உமாதேவியைக் கொண்டவர் . நெற்றிக்கண்ணையுடையவர் . அப்பெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

புற்று இடை - புற்றில் உள்ள . வாள் - ஒளியையுடைய . அரவினொடு - பாம்பினோடும் . புனை - அணிந்த . மதம் வாசனையையுடைய . மத்தம் - பொன்னூமத்தை ( இவற்றோடும் ) எற்று ஒழியா - மோதுதல் ஒழியாத . அலை - அலைவீசும் . புனலோடு - கங்கைநீரோடு . இளம்மதியம் - பிறைச் சந்திரனையும் . ஏந்து - தாங்கிய . சடைபெற்று உடையார் - சடையாகிய பெருக்கத்தை யுடையவர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலா லூன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குங் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
நீண்டமறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

ஏழுகடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனை அழகிய கயிலையின் கீழ் நொறுங்கும்படி தம் காற்பெரு விரலை ஊன்றி வலியழித்த தன்மையுடையவர் சிவபெருமான் . அவர் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்வார் . அப்பெருமான் ஆழ்ந்த அகழியும் , சுற்றிய வயல்களும் , மதில்களும் நிறைந்த அழகுடன் திகழும் , நீண்ட வீதிகளையுடைய ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

எழில் வரைவாய் - அழகிய ( கைலை ) மலையினிடத்து . தாழ் - ( சற்றே ) வளைத்த . விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் - ஊன்றி வலியழித்த தன்மையையுடையவர் . நன்மையினார் - ( அவ்வாறு செய்த அதுவும் மறக்கருணையேயாகலான் ) நன்மையே செய்பவர் ; இறைவன் செயல் . சிவஞானசித்தியார் சுபக்கம் 5,6,15,16. ` நிக்கிரகங்கள் தானும் நேசத்தாலீசன் ` என்றும் , ` தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் ` என்றும் தொடங்கும் சிவஞானசித்தியார் விருத்தங்களும் , ` இமையளவும் உபகாரம் அல்லா ஒன்றை இயக்கா நிர்க்குணக் கடலாய் இருந்த ஒன்றே ` என்ற தாயுமானவர் வாக்கும் அறியத்தக்கன . மதில் புல்கி - மதிலைச் சேர்ந்து . ஆழ் கிடங்கும் - ஆழ்ந்த அகழியும் ( ஆகிய இவற்றால் ). அழகு அமரும் - அழகு தங்கிய . கச்சி நீள்மறுகின் - நெடிய வீதியையுடைய கச்சி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

ஊண்டானு மொலிகடனஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
மாண்டார்தம் மெலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரு மோரிருவ ரறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமானின் உணவு ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சு . உடைந்த தலையாகிய பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவார் . இறந்த தேவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர் . வரிகளையுடைய பாம்போடு , அழகிய ஆமையோட்டையும் அணிந்தவர் . திருமால் , பிரமன் இருவரும் அறியா வண்ணம் ஓங்கிய நெருப்புப் பிழம்பாய் நின்றவர் . அப் பெருமான் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

ஊன் தானும் - உணவு தானும் ; கடல் நஞ்சு . உடை - தலையில் பலிகொள்வர் . மாண்டார் தம் - இறந்த தேவர்களுடைய ; எலும்பு அணிவர் . வரி - நெடிய . ( அரவோடு ) எழில் - அழகிய . ஆமை - ஆமையோட்டை . பூண்டாரும் - அணிந்தவரும் . ஓர் இருவர் - பிரமவிட்டுணுக்கள் . அறியாமை - அறியாதவாறு . பொங்கு - மிகுந்த . ( எரியாய் நீண்டாரும் கச்சி நெறிக் காரைக் காட்டாரே ) இருவர் என்பது தொகைக் குறிப்பு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவா ருரைப்பனகண் மெய்யல்ல
வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகம்
கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

விதண்டாவாதம் பேசி நல்லூழ் இல்லாமையால் சமண சமயம் சார்ந்தோரும் , மஞ்சள் காவியாடையை உடம்பில் போர்த்திய வலிய உரைகளைப் பேசித் திரியும் புத்தர்களும் இறை யுண்மையை உணராதவர்கள் . ஆதலால் அவர்கள் பேசுவதை விடுத்து , வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் மலை போன்ற திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு கண்டவர்கள் மகிழும்படி ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்குங்கள் .

குறிப்புரை :

குண்டாடி - விதண்டை பேசி . சமண்படுவார் - ( நல்லூழ் இன்மையின் ) சமணசமயமுற்றவரும் . கூறைதனை - ஆடையை . மிண்டு ஆடி - வலிய உரைகளைப் பேசித் திரிவாராகிய புத்தரும் . உரைப்பனகள் - சொல்லுவன . ( மெய்யல்ல ) அவற்றை விடுத்து , சார்புணர்ந்து சாரத்தக்கவர் யார் எனின் , அவர் வண்டு ஆரும் குழலாளை மலைபோன்ற உடம்பில் ஒரு பாகம் வைத்துக்கொண்டு பொருந்தும் கச்சிநெறிக்காரைக்காட்டார் ஆவர் என்க . உரைப்பனவற்றிலும் பல வகைகள் என்பதை உரைப்பனகள் என விகுதிமேல் விகுதி தந்து விளக்கினார் . ` பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே ` என இவ்வாறே அப்பர்பெருமானும் அருளினமை காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே.

பொழிப்புரை :

கண்ணுக்கு இனிமை தரும் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் , தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை வைத்த சிவபெருமான் திருவடிகளை வாழ்த்தி , குளிர்ச்சி பொருந்திய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் இறைவனுலகில் இருப்பதாகிய சாலோக பதவியை அடைவர் .

குறிப்புரை :

கண் ஆரும் - கண்ணுக்கினிமை நிறைந்த . ( கலிக்கச்சி நெறிக் காரைக்காடு )

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை விரிந்த சடையின்மேல் அணிந்து , வரிகளையுடைய பாம்பைக் கண்டு பயத்தால் ஆரவாரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள சிவ பெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க , விளங்குகின்ற ஒளியையுடைய கடலிலுள்ள சுடர்போல் செந்நிறமான பவளத்தை அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அவர் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

( வண்டு ) இரைக்கும் - ஆரவாரிக்கும் . ( மலர்க் கொன்றை விரிசடைமேல் .) வரி அரவம் - கொடிய பாம்பை , கண்டு இரைக்கும் - ( பயத்தால் ) ஆரவாரிக்கும் ; பிறையையணிந்த சென்னி - தலையையுடைய . காபாலி - சிவபெருமான் . கனைகழல்கள் - ( தனது ) ஒலிக்கின்ற வீரத்தண்டையை யணிந்த திருவடிகளை . தொண்டு - தொண்டர்கள் . இரைத்து - ஆரவாரித்து . இறைஞ்சித் தொழுது - வணங்கிக் கும்பிட ; திருவேட்டக்குடியிலுள்ளார் . தெள்திரைகள் - தெள்ளிய அலைகள் . துளங்கு - விளங்குகின்ற . ஒளி - ஒளியையுடைய . நீர் - கடலிலுள்ள , சுடர்ப்பவளம் - சுடரையுடைய பவளத்தை ; அணியும் காபாலி யாண்டையாரெனின் திருவேட்டக்குடியார் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்கும்
காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்
போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாருந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

வலைஞர்கள் பாய்ந்து செல்லும் படகுகளில் , வலையுடன் கடலில் எப்பக்கமும் திரிந்து வலைவீசி மீன்களைப் பிடித்து வாரி தரைக்குக் கொண்டு வந்து குவிக்கும் தாழை சூழ்ந்த கழியுடைய சோலை விளங்க , நள்ளிரவில் பேய்க் கூட்டங்களோடு சுடுகாட்டில் கையில் நெருப்பேந்தி நடனம் ஆடும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றான் .

குறிப்புரை :

பாய் - ( நீரிற் ) பாய்கின்ற . திமிலர் - வலைஞர் . எங்கும் பயின்று - கடலின் எப்பக்கங்களிலும் திரிந்து . காசினியில் கொணர்ந்து - நீரிலிருந்து தரைக்குக் கொணர்ந்து . அட்டும் - குவிக்கும் . கைதல் - தாழை . கழிக்கானல் - கழியருகேயுள்ள கடற்கரைச் சோலையையுடைய . திருவேட்டக்குடியார் . இரவில் புறங்காட்டில் போய்ப் பேயொடும் . புரிந்து - நடனமாடிய . அழகு ஆர் - அழகையுடைய . தீ - தீக்கும் ( கறுக்கும் ). எரி - நெருப்பை . கை மகிழ்ந்தார் - கையின்கண் விரும்பியேற்றவர் . புரிந்து என்ற பொதுவினை சிறப்பு வினையைக் குறித்தது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியவா னிரையிற்பால்
பாத்திரமா வாட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

வழிபாடு செய்வதற்காக மணலில் இலிங்கத்தை அமைத்து , தாம் மேய்க்கும் பசுக்கூட்டங்களின் பாலைப் பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு , அபிடேகம் செய்து வழிபட்ட சண்டேசுரர்க்கு மேலான சோதிவடிவை அருள்புரிந்தவன் சிவபெருமான் , தனக்கு அன்பர் என்று வேதங்களில் வல்ல சனகாதி முனிவர் நால்வர்க்கும் அன்று அறம் உரைத்தவன் சிவபெருமான் . அப்பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையிலே தாங்கித் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

மணல் - மணலில் . இலிங்கம் - சிவலிங்கவடிவை , தொடங்கி - நிறுவி , ஆன் நிரையில் - கூட்டமாகிய பசுக்களில் ( கறந்த ) பால் , பாத்திரம் ( ஆ ) பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு , ஆட்டுதலும் - ( சண்டேசுர நாயனார் ) அபிடேகித்தலும் , பரிந்து - விரும்பி . பரஞ்சோதி - மேலான சோதிவடிவை அருளி - அவர்க்கு அருள் புரிந்து , ஆத்தம் என - ( நமக்கு ) அன்பர் என்று , மறை - வேதங்களில் வல்ல , நால்வர்க்கு - சனகர் முதலிய முனிவர்களுக்கு , அறம் - சிவதருமம் . நூல் - நூற்பொருளை , உரைத்த - சொல்லாமற் சொல்லிய , தீர்த்தம் . கங்காதீர்த்தம் . ஆட்டுதலும் - என்ற வினைக்கு எழுவாய் வருவித்துரைக்கப்பட்டது . ஆத்தம் - நட்பு ` ஆத்தம் என்றெனையாள் உகந்தானை ` என்பதும் ( தி .7. ப .62. பா .4) அறிக . சண்டேசுவர நாயனார்க்கு ஒளிவடிவாயதை ` சிறுவனார் .... சூழ்ந்த ஒளியில் தோன்றினார் ` என்ற பெரிய புராணத்தும் அறிக . ( தி .12 சண்டீசர் 55).

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும்
அலவஞ்சே ரணைவாரிக் கொணர்ந்தெறியு மகன்றுறைவாய்
நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடும்
திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

மயில்கள் தோகை விரித்து ஆடும் கடற்கரைச் சோலைகளை உடைய , கடல் நண்டுகள் சேர்ந்த குவியல்களை வாரிக்கொணர்ந்து சேர்க்கின்ற காவிரியின் அகன்ற கரையில் , ஒளி பொருந்திய குறுகிய இடையை உடைய அழகான அணிகலன்களை அணிந்த உமாதேவியோடு , திலகம் போன்று சுடர்தரும் நெற்றியுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கழிக்கானல் எங்கும் என்க . அலவன் சேர் - கடல் நண்டுகள் சேர்ந்த . அணை - குவியலை . நிலவம்சேர் - ஒளி பொருந்திய . இடைய - இடையையுடையவளாகிய , குறிப்புப் பெயரெச்சம் . நேர் இழையாள் - அழகான அணிகலனை யணிந்தவள் . நிலவு என்னும் சொல் அம்சாரியை பெற்றது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பங்கமார் கடலலறப் பருவரையோ டரவுழலச்
செங்ண்மால் கடையவெழு நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
அங்கநான் மறைநால்வர்க் கறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

சேறாகும் வண்ணம் கடல்நீர் அலைப்புற , மேருமலையை மத்தாகவும் , வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு , சிவந்த கண்களையுடைய திருமால் முன்னின்று கடைய எழுந்த நஞ்சையருந்தியவர் சிவமூர்த்தி . நால் வேதங்களையும் , அவற்றின் ஆறங்கங்களையும் உணர்ந்த சனகாதிமுனிவர்கள் நால்வர்க்கும் அறநூற் பொருளின் பயனாகிய அனுபவத்தை உணர்த்தியருளிய பிறை சூடிய சடையையுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பங்கம் - சேறு . பருவரையோடு - பருத்த ( மந்தர ) மலையுடனே . அரவு உழல - வாசுகி என்னும் பாம்பு சுழல . மால் - திருமால் . கடைய - ( முன்னின்று ) கடைய . எழு - உண்டான . நான்மறை - அங்கத்தோடு கூடிய நான்கு வேதங்களையுமுணர்ந்த . நால்வருக்கு அறம் பொருளின் பயன் - அறநூற் பொருளின் பயனாகிய அநுபவத்தை , அளித்த - உணர்த்தியருளிய . திங்கள்சேர் சடையார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையா லெயின்மூன்று மெரிசெய்த
தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் தோணிபோன்ற வடிவுடைய பிறைச்சந்திரனைச் சடையிலே தரித்தவர் . அழகாய் விளங்கும் சங்குப்பூச்சிகளையும் , கோத்தற்குரிய துளையில்லாத நல்முத்துக்களையும் கடலலைகள் கொணர்ந்து சேர்க்கின்ற குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடைய திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அக்கினியாகிய கணையினால் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த தேவாதி தேவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

நாவாய - தோணியின் வடிவையுடைய ( பிறை ) என்றது சடையில் கங்கையுண்மையால் பிறை அங்குத் தோணி போன்றது என்று ஒரு குறிப்பு . நலம் திகழும் - அழகால் விளங்குகின்ற . தேவாதி தேவனார் என்க . இலங்கு இப்பி - விளங்குகின்ற சங்குப் பூச்சிகளையும் . கோவாத - கோத்தற்குரிய துளையில்லாத . நித்திலங்கள் - முத்துக்களையும் , ( கடல் திரைகள் ) கொணர்ந்து எறியும் - வீசுகின்ற குளிர் கானல் - குளிர்ந்த கடற்கரைச் சோலையையுடைய திருவேட்டக்குடியாரென்க . ஏ ஆரும் - அம்பு பொருந்திய . வெஞ்சிலையால் - கொடிய வில்லால் . எயில் - மதில் . நாவாய் - கப்பல் , இங்குத் தோணி என்ற பொருளில் நின்றது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

பால்போல் விளங்குகின்ற வெண்தாமரையானது ஒளிர , பசுமை வாய்ந்த கடற்கரைச் சோலைகளில் வெண்ணிறப் பறவைகள் விளங்க , மணம் வீசும் மலர்களையுடைய குளங்களும் , தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலைகளும் , தேன்துளிர்க்கும் மலர்ச் சோலைகளும் விளங்கும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் , மான் போன்ற மருண்ட பார்வையுடைய மலைமகளான உமா தேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிதலில்லாமல் வீற்றிருந்தருளுகின்றார் சிவபெருமான் .

குறிப்புரை :

பால் நிலவும் - பால்போல் விளங்குகின்ற . பங்கயத்து - தாமரை மலரில் . நல் - நல்ல . வெண்குருகு - வெண்மையான அன்னப் பறவை ( தங்கும் ) கான்நிலவும் - வாசனைவீசும் . மலர்ப்பொய்கை - மலர்களையுடைய குளங்களையும் . கைதல் - தாழைகள் . சூழ் - சூழ்ந்த கழிக்கானல் - கழியருகேயுள்ளே கடற்கரைச் சோலையையும் உடைய திருவேட்டக்குடி என்க . பிரிவு அரியார் - பிரிவு இல்லாதவர் . அரிது ` இன்மைப் பொருளில் வந்தது . ` உறற்பால தீண்டாவிடுதல் அரிது ` - என்புழிப்போல .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும்
இறைபயிலு மிராவணன்றன் றலைபத்து மிருபதுதோள்
திறலழிய வடர்த்தாருந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

கரையை வந்தடைகின்ற கடலலைகள் சுரி சங்குகளை வீச , தேன் துளிக்கும் நறுமணமுடைய புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் நிழலைத்தரத் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இலங்கை வேந்தனான இராவணனின் தலைகள் பத்தும் இருபது தோள்களும் வலிமை இழக்குமாறு அடர்த்தவர் .

குறிப்புரை :

துறை - துறையில் . உலவு - உலாவுகின்ற . கடல் ஓதம் - கடல் அலைகள் . சுரிசங்கம் - சுரிந்த சங்குகளை . இடறி - வீச ; போய் - ( அவை ) சென்று . நறையுலவும் - நறுமணம் வீசும் . பொழில் - சோலையிலுள்ள , புன்னை , ( நல் நீழல்கீழ் .) அமரும் - தங்கும் . இறைபயிலும் - ( இலங்கைக்கு , அரசனாகப் பொருந்திய இராவணன் . திறல் - வலிமை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

அருமறைநான் முகத்தானு மகலிடநீ ரேற்றானும்
இருவருமா யளப்பரிய வெரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

அரிய நால்வேதங்களையும் கற்ற பிரமனும் , மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் வேண்டி நீர் ஏற்ற திருமாலும் ஆகிய இருவரும் அளந்தறிய முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . பெருக்கெடுத்துவரும் காவிரியாற்றின் , வீசுகின்ற அலைகள் மணிகளை உந்தித் தள்ளிச் சேர்க்கும் வளமிகுந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் , சுடர்விடும் பவளம் போன்ற தம் திருமேனியில் திருவெண்ணீறு பூசப் பெற்றவராய் , சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அரு மறை - அரிய வேதங்களை வல்ல . நான் முகத்தானும் - பிரமனும் . அகல் இடம் - அகன்ற இடத்தையுடைய இப்பூமியை . நீரால் - நீரினால் , ஏற்றானும் - ( மாவலியினிடம் ) யாசித்தவனும் . அளப்பு அரிய - அளவிடற்கு அரிய . நான்கு முகத்தானும் வேதங்களை வல்லவன் . தன் கலையறிவினாலும் , உலகம் அளந்தவன் தன் உடல் வலியினாலும் இருவருமாய்க் காணமுடியாத எனஒரு நயம் . எரி உருவாய் - அழல் வடிவாய் ( நீண்ட .) நீர் ஏற்றல் - தத்தம் பண்ண வாங்குதல் . மறி - மடக்கி . வீசுகின்ற . திரை - அலைகள் . புனலின் - நீரினால் மணி முத்துக்களை . உந்தி - தள்ளி . ஆர் - நிறைந்த . சுடர்ப்பவளம் - ஒளியையுடைய பவளம் போலும் . திரு உருவில் - அழகிய உடம்பில் . வெண்நீற்றார் - வெள்ளிய திருநீற்றைப் பூசியவர் . இது சிவபெருமானது கோலம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

இகழ்ந்துரைக்குஞ் சமணர்களு மிடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற் கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலி ணிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

வேதவேள்வியை நிந்தனை செய்யும் சமணர்களும் , பௌத்தர்களும் இறைவனைப் புகழ்ந்துரையாத பாவிகள் . ஆதலால் அவர்களுடைய சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . வெண்மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் கொண்டு திகழும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

நிகழ்ந்து - துறையிற் பொருந்தி . இலங்கும் - விளங்குகின்ற . வெண்மணலின் - மணலின் வெண்மையைப்போல . நிறை - வெள் ஒளியால் நிறைந்த . துண்டப் பிறை - பிறைத்துண்டம் அணிந்த , ( கற்றையாகத் திகழ்ந்து இலங்கும் , செஞ்சடையார் திருவேட்டக் குடியார் ).

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்டமிழ்நூ லிவைபத்து முணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோ டுயர்வானத் திருப்பாரே.

பொழிப்புரை :

தெளிந்த நீர் அலைகளையுடைய வயல்கள் நிறைந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி , சோலைகள் சூழ்ந்த , திருவிழாக்களின் ஓசை மிகுந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் ஒண்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும் , ஓதியும் வழிபடுபவர்கள் மானிடர்களைப் போல் உண்டலும் , உடுத்தலும் இல்லாது வேறுபட்ட தன்மையுடைய தேவர்களை ஒத்து உயர் வானுலகில் இருப்பர் .

குறிப்புரை :

தண்டலை - சோலை . கலி - ஓசை . உண்டு - அமுத உண்டியை உண்டு . உடுப்பில் ` தோயாப் பூந்துகிலையுடுத்தலால் ` ஐந்தாம் வேற்றுமை உருபு இல் - மூன்றன்பொருளில் வந்தது . இல் என்பதற்கு இல்லாத எனப்பொருள் கூறி மானிடரைப்போல் உண்டலும் , உடுத்தலும் இல்லாத எனினும் ஆம் . வானவரோடு வானத்திருப்பார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.

பொழிப்புரை :

தேவர் வாழ்கின்ற விண்ணுலகமும் , மனிதர்கள் வாழ்கின்ற இப்பூவுலகமும் வலிமை அழியும்படி துன்புறுத்திய , காவலாகக் கோட்டை மதில்களையுடைய முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு ஒர் அம்பை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர் சிவபெருமான் . எல்லாச் சுரங்களும் வரிசைபெற அமைந்த , வேதசிரமாகிய உபநிடதஉரைகளை வரன்முறையோடு ஓதி , அரனாரின் எழில் மிகுந்த புகழை எடுத்துரைத்துச் சரணடைந்து அவர் இணை மலரடியைத் தான் வரம் பெற வேண்டிப் பிரமன் துதித்தலால் புகழால் ஓங்கிய பிரமாபுரம் எனப்பட்டது .

குறிப்புரை :

சுரர் உலகும் - தேவலோகமும் . நரர்கள் பயில் - மனிதர் வாழும் . தரணி தலம் - பூலோகமும் , முரண் அழிய - வலிமை அழியும்படி . ( அதனால் ,) அரணம் - காவலாகிய . முப்புரம் - முப்புர முடிய . சரவிசை - அம்பின் விசையால் , விரவுவகை எரிய - கலந்து பல இடமும் எரியும்படி . கொள் - ( அவ்அம்பைக் ) கொண்ட , கரம் உடைய , பரமன் இடமாம் . நிரை - வரிசையாக , நிறைகொள் - நிறைவையுடைய . வரன்முறையின் வரு - வரன்முறையில் ஓதிவருகின்ற . சுருதி சிரம் - வேத முடிவாகிய உபநிடதங்களின் , உரையினால் - வசனங்களினால் . உயர் - எவரினும் உயர்ந்த , அரன் - சிவபெருமானின் . எழில் கொள் - அழகையுடைய , சரண இணை - இரு திருவடிகளையும் . வரம் அருள - தனக்கு வரம் அருள்வான் வேண்டி , பிரமன் . பரவ - துதிக்க . வளர் - புகழால் ஓங்கிய . பிரமபுரமே - பிரமபுரம் என்னும் பெயர்பெற்ற தலமாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

தாணுமிகு வாணிசைகொ டாணுவியர் பேணுமது காணுமளவிற்
கோணுநுத னீணயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொண் மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே.

பொழிப்புரை :

தன்னை அன்பால் வழிபடும் தேவர்கள் கயமுகாசுரனால் துன்புற்று அஞ்சி வழிபட , நிலைபெற்ற சிவபெருமான் வலிமைமிகுந்த ஆண்யானையின் வடிவம் கொண்டருளினார் . வளைந்த நெற்றியையும் , நீண்ட கண்களையுமுடைய உமாதேவி குற்றமில்லாதபடி பெண்யானையின் உருவை எடுத்தாள் . மது என்னும் அசுரன் வெட்கப்படும்படியும் , வலிமைகொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல்மிக்க அழகிய விநாயகக் கடவுளைத் தோற்றுவித்த பெருமைக்குரிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , வானுலகிலுள்ள தேவர்களின் தலைவனான இந்திரன் சூரபதுமனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்ததால் மூங்கிலை ஏணியாகக் கொண்டு , தான் நேரே காணமுடியாத தேவலோகத்தின் நிலையை ஒளிந்து காணும்பொருட்டு நட்ட வேணுபுரம் ஆகும் . சூரபதுமனுக்கு அஞ்சி இந்திரன் வந்து மூங்கிலில் மறைந்திருந்து பூசித்த வரலாற்றால் போந்த பெயர் வேணுபுரம் என்பது .

குறிப்புரை :

ஆணு - ( தன் ) அன்பர்களாகிய தேவர்கள் . வியர் பேணு மது - ( கயமுகாசுரனால் ) அச்சம் கொள்வதை . காணும் அளவில் - அறிந்ததும் . தாணு - சிவபெருமான் . மிகு - வலிமை மிகுந்த . ஆண் இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண இசைந்து . ( நிற்க - அதற்கேற்ப .) கோணுநுதல் - வளைந்த நெற்றியை . நீள்நயனி - நீண்ட கண்ணையுமுடையவளாகிய அம்பிகை . கோண்இல் - குற்றமில்லாத படி . பிடி - பெண் யானையின் உருவை . மாணி - பெருமையையுடையவளாய்க் காண . மது - மது என்ற அசுரனும் . நாணும் வகை ஏணு - வெட்கும்படி வலிமைகொண்ட . கரி - கயமுகாசுரன் . பூண் - தான் மேற்கொண்ட தீய தொழில்கள் . அழிய - அழியும்படி . ஆண் - ஆண் தகையாகிய விநாயகக் கடவுள் . ( கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய தேவர் துயரந் தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர் ) இயல் - ( அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் ) அருளை , கொள் - கொள் வித்த . மாணி - பெருமையுடையோனாகிய சிவபெருமானின் . பதி - இடம் . சேண் - வானுலகில் உள்ள , அமரர்கோன் - இந்திரன் . வேணு வினை - மூங்கிலை . ஏணி - ஏணியாகக்கொண்டு . காண்இல் - தான் நேரேகாண முடியாத . திவி - தேவலோகத்தின் நிலையைக் காண - ஒளிந்து காணும் பொருட்டு . நடு - நட்ட , வேணுபுரம் - வேணுபுரமாம் ஆணு - அன்பு ; ` ஆணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே ` ( சீவக சிந்தாமணி . 1002)

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பகலொளிசெய் நகமணியை முகைமலரை நிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையிலறு முகவிறையை மிகவருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழவெழி றிகழநிக ழலர்பெருகு புகலிநகரே.

பொழிப்புரை :

சூரியனைப் போல் பிரகாசிக்கும் மலையிற் பிறந்த நாகரத்தினத்தையும் , அரும்பு விரிந்த செந்தாமரையையும் போன்ற திருவடிகளைச் சரணாக அடைந்த சனகாதி முனிவர்கட்குச் சகல கலைகளையும் நன்கு உணருமாறு விரித்து உபதேசித்தருளிய திருவருள் நோக்கத்தையுடையவர் சிவபெருமான் . அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பகையசுரர்களை வேர் அறுக்கும் வகையில் அறுமுகக்கடவுளை அருளும்படி ஒப்பற்ற தேவர்கள் சரண்புக அழகுடன் திகழும் புகழ்மிக்க திருப்புகலி என்னும் திருத்தலமாகும் . தேவர்கள் புகலடைந்தமையால் புகலி எனப் பெயர் பெற்றது .

குறிப்புரை :

பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும் . நகம் மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும் . முகை மலரை - அரும்பு விரிந்த செந்தாமரை ( நாண் ) மலரையும் . நிகழ் - போன்ற . சரண - திருவடிப் பேற்றுக்குரிய . அகவு - விருப்பம் மிக்க . முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு , அகலம்மலி - விஸ்தார மாகிய , சகலகலை - கலைகளனைத்தையும் . மிக - ( தெளிவு ) மிகும்படி . உரை செய் - உபதேசித்தருளிய . முகம் உடைய - திருவருள் நோக்கம் உடைய . பகவன் - சிவபெருமானின் . இடம் ஆகும் . ` அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி ` ` மணியடி ` என்னும் திருவடித் திருத்தாண்டகத்தாலும் முதலடியின் முற்பகுதி தெளிவாம் , முகை மலர்ந்த மலர் - புதுப்பூ . பகவன் - சிவபெருமான் ஒருவர்க்கே உண்மையில் உள்ளது , ஏனைக் கடவுளர்க்கு உபசாரமாத்திரையே . ` முகந்தான் தாராவிடின் முடிவேன் பொன்னம்பலத்தெம் முழுமுதலே ` - என்னும் திருவாசகத்தில் ( கோயில் மூத்த திருப்பதிகம் 3) முகம் - என்னும் சொல் திருவருள் நோக்கம் என்னும் பொருளில் வந்தமை காண்க . பகை - தேவர் பகைவர்களாகிய அரக்கர் முதலாயினோரை . ` பகை ` பகைவருக்கு ஆயினமையின் பண்பாகுபெயர் . இறை - கடவுள் . மிக - அறச்செயல்கள் அதிகரிக்க . அருள - தர . அதனால் . நிகரில் இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள் . புக - சரண்புக , எழில் திகழ - அழகு விளங்க . நிகழ் - ( இவற்றால் ) நேர்ந்த ( புகலியெனும் பெயர் ). அலர்பெருகு - அனைத்துலகினும் மிக்குப் பெருகிய ( புகலி நகர் என்க .)

பண் :சாதாரி

பாடல் எண் : 4

அங்கண்மதி கங்கைநதி வெங்கணர வங்களெழி றங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிக ரெங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே.

பொழிப்புரை :

அழகிய சந்திரனும் , கங்கை நதியும் , கொடிய பாம்புகளும் , அழகிய இதழ்களையுடைய கொன்றை மலரும் நெருப்புப் போன்ற சடைமுடியில் அணிந்தவர் , எங்கள் இறைவராகிய சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , சூரியனால் விளங்குகின்ற இவ்வுலகிலுள்ளோர் நல்வழிக்கு மாறாக மிக வருத்துகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையால் வரும் துன்பத்தைக் களைய விரும்புபவர்கள் பணியும் வெங்குரு ஆகும் . அது தேவகுருவாகிய வியாழபகவான் உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும் .

குறிப்புரை :

அங்கண்மதி - அழகிய ஆகாயத்தினிடத்தில் உள்ள சந்திரனும் , வெங்கண் அரவங்கள் - கொடிய பாம்புகளும் . எழில் தங்கும் இதழித் துங்கமலர் - அழகு தங்கிய கொன்றையின் தூயமலரும் . தங்கு சடை - பொருந்திய சடையானது . அங்கி நிகர் - தீயையொக்கும் . எங்கள் இறை - எங்கள் தலைவன் . ( சினை வினை . முதலொடு முடிந்தது ) வெங்கதிர் - சூரியனால் , விளங்கும் - விளங்குகின்ற . உலகமெங்கும் - உலகில் உள்ள அனைவரும் . எதிர் - நல் வழிக்குமாறாக . பொங்கு - மிக . எரி - வருத்துகின்ற . புலன்கள் - மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையை . களைவோர் - நீக்க விரும்புவோர் . வெங்குரு - கொடிய தேவ குருவினால் . விளங்கி - தமது துயர் களைதற்கிடமிதுவேயென்று தெளிந்து . உமைபங்கர் - சிவபெருமானின் - சரணங்கள் பணி - பாதங்களைப் பணிந்த . வெங்குரு அது . வெங்குரு என்னும் அத்தலமாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருண் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே.

பொழிப்புரை :

விசயனுடைய வீரத்தன்மையை உமை காண வனத்தில் வாழும் வேடன் வடிவம் கொண்டு , அவனுக்கு எதிராகப் போர் தொடங்கி , அவன் சொரியும் மழைபோன்ற அம்புகளும் , அவ்வம்புகள் தங்கிய அம்பறாத்துணியும் நீங்கவும் , வில்நாண் அறு படவும் , வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லைத் துணித்தவர் . அதனால் அர்ச்சுனன் நாணமுற்றுக் கையால் அடித்துச் செய்யும் மற்போர் செய்யவர , அவனுக்கு அருள்புரிந்தவர் , பிரமாணமான மறைகட்கு வாச்சியமாக ( பொருளாக ) உள்ள சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது காலாந்தரத்தில் பிரளய கால வெள்ளமானது உலகம் முழுவதையும் மூழ்கச் செய்ய , ஆற்றல் பெருகுமாறு ஊழி வெள்ளத்தில் தோணிபோல் மிதந்த தோணிபுரம் எனப்படும் திருத்தலமாகும் . பிரமாணி - பிரமாணமாகிய மறைகட்கு வாச்சியமாக உள்ளவர் .

குறிப்புரை :

ஆண் இயல்புகாண ( விசயனுடைய ) வீரத்தன்மையை உமைகாண . வன வாணஇயல் - வனத்தில் வாழ்பவர்களாகிய வேடர் வடிவம் . பேணி - கொண்டு , எதிர் . அவனுக்கு எதிராக . ( போர் தொடங்கி ) பாணமழை - ( அவன் சொரியும் ) மழைபோன்ற அம்புகளும் . சேர் - அவ்வம்புகள் தங்கிய . தூணி - அம்பறாத் தூணியும் . அற - நீங்கவும் . நாணி அற - வில்நாண் அறுபடவும் . வேணுசிலை பேணி - அவனது மூங்கிலால் ஆகிய வில்லின் வளைவு . அற - நீங்கவும் . விசயன் - அவ்வர்ச்சுனன் . நாணி - நாணமுற்று . பாணி அமர் பூண - கையால் அடித்துச் செய்யும் மற்போரைச் செய்ய வர . அருள் மாணு - அவனுக்கு மிகவும் அருள் புரிந்த , பிரமாணி இடம் - கடவுட்டன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சிவபெருமானின் இடம் . ஏணி முறையில் - மிக்கது என்ற முறையினால் . பாணி - பிரளயகால வெள்ளமானது . உலகு ஆள - உலகம் முழுதும் மூழ்கச் செய்ய . மிக ஆணின் - அதனின் மிகவும் பொருந்திய . ஆண்மை வலிமையினால் . மலி - சிறந்த . தோணி நிகர் - அதனைக்கடக்கவல்ல தோணியை யொத்த ( தோணிபுரம் ஆம் ).

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழி றராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே.

பொழிப்புரை :

இறைவன் நோயற்றவன் . அனைத்துப் பொருட்கட்கும் மேலான பரம்பொருள் . மிகப்பழமையானவன் . பராவுசிவன் என்று இரவும் , பகலும் போற்றித் தியானிக்கப்படுகின்ற பழமையானவன் . தேவர்கட்கெல்லாம் தலைவனாக விளங்கும் அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இரணியாக்கனால் கொள்ளப்பட்டுக் கடலில் கிடந்த அழகிய பூமியை , திருமால் பாற்கடலில் அரவணையிலிருந்து எழுந்து வந்து வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நிராமய - நோயற்றவனே . பராபர - உயர்வுடையதும் , உயர்வற்றதும் ஆனவனே ; புராதன - பழமையானவனே . பராவு - அனை வரும் துதிக்கின்ற . சிவ - சிவனே . ராக - விரும்பத்தக்கவனே . அருள் என்று - அருள் வாயாக என்று . இராவும் - இரவிலும் . எதிராயது - பகலினும் . பரா - பரவி . நினை - உயிர் அனைத்தும் தியானிக்கின்ற . புராணன் - பழமையானவனும் . அமர ஆதி - தேவர்களுக்குத் தலைவனுமாகிய சிவபெருமானின் . பதி - இடமாகும் . அராமிசை - ஆதிசேடனாகிய பாம்பின்மேல் . இராத - இல்லாத . ( இரணியாக்கனாற் கொள்ளப்பட்டுக் கடலிற் கிடந்த ) எழில் - அழகிய பூமியை . தரு - கொம்பினால் கொண்டு வந்த . ஆய - அத்தகைமை பொருந்திய . அரபராயண - சிவனைத் துதிக்கின்ற . வராக உரு - வெள்ளைப் பன்றி வடிவுகொண்ட . வாதராயனை - திருமாலை . விராய் - கலந்த . எரி - தீப்போன்ற பழி நீங்குதற்பொருட்டு . பராய் - அவனால் வணங்கப்பட்டு . ( அதனால் ) மிகு - புகழ்மிகுந்த . தராய் மொழி - பூந்தராய் என்னும் பெயர் . விராய - கலந்த , பதி ஆம் . எழில் - ஆகுபெயர் . பராயணன் - குறுக்கல்விகாரம் . விராயெரி - விராய எரி எனப்பிரிக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே.

பொழிப்புரை :

மும்மதில்களை அரணாகக் கொண்ட திரிபுரத்தசுரர்களால் பலருக்கு மரணம் ஏற்பட , காயங்கள் முதலான உண்டாக்கித் துன்புறுத்தும் அம்மதிலின் மேல் அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தைக் கையினால் ஏவிய சமர்த்தனும் , தன்னைச் சரணடைந்தவர்களின் கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும் , யாவரினும் உயர்ந்த மேன்மையுடையவனும் , உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , எல்லோராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற் கடலிலிருந்து கடைந்து எடுத்த காலத்தில் , தனக்குக் கிடைக்கும்படி பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச , அந்தத் தலையானது சிவபெருமானைச் சரணடைந்து துதித்தலால் இரு கிரகங்களாக நவக்கிரக வரிசையில் பொலியும் சிரபுரம் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

அரணையுறும் - மதிலைப்பொருந்திய , முரணர் - திரிபுரத்தசுரர்களால் . பலர் மரணம்வர - பலருக்கு மரணம் நேர . இரணம் - காயங்கள் முதலியன உண்டாக்கித் துன்புறுத்தும் , மதில் - அம்மதிலின்மேல் . அரமலி படை - அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தை , கரம் - கையினால் . விசிறு - ஏவிய , விரகன் - சமர்த்தனும் , அமர் கரணன் தன்னை அடைந்தவருக்கு கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும் . ( உயர்பரன் - யாவரினும் உயர்ந்த மேன்மை உடையவனும் ). நெறி கொள்கரன் அது - உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் , இடமாம் - தலமாகும் . பரவு - துதிக்கத்தக்க . அமுது - அமிர்தம் , விரவ - தனக்குக்கிடைக்கும்படி உறும் அரவை - பந்தியில் வந்த பாம்பை . விடல் - விடத்தோடு . புரளம் உறும் - புரளுதல் உறும் , அரிசிரம் அரிய - திருமால் அதன்தலையை வெட்ட . அச்சிரம் - அந்தத் தலையானது , அரன் - சிவபெருமானது , சரணமவை - பாதங்களை , பரவ - துதித்ததினால் இருகிரகம் - இரண்டு கிரகங்களாக , அமர் - நவக்கிரக வரிசையில் அமரச்செய்த , சிரபுரம் - சிரபுரமாம் . உபதேசிக்கும் முறையைக் கொண்ட கரன் என்றது ` மும்மலம்வேறு பட்டொழிய மொய்த்துயிர் , அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக் , கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய ` என்னும் கச்சியப்ப முனிவர் வாக்கால் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறவருளு மிறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே.

பொழிப்புரை :

தருமம் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது வலிமை அழியுமாறு தம் காற்பெருவிரலை ஊன்றி , பின் இராவணன் தவறுணர்ந்து சாமகானம் பாடிப் போற்ற வளைந்த பற்களையுடைய அந்த இராவணனுக்கு நீண்ட வாழ்நாளும் , ஒளிபொருந்திய வாளும் அருளியவர் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , வேதங்கட்கும் , தேவர்கட்கும் ஒத்ததாகிய நீதியை வழங்கும்படி , முறையிட்டு வந்த புறாவிற்குரியவனாகிய வேடன் எதிரே , புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்தும் நிரம்பாது தான் துலையேறி எடை சமன்பெறுமாறு செய்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும் , தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள் பூசித்ததும் ஆகிய புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அறம் அழிவுபெற - தர்மம் அழியும் படியாக . உலகு - உலகத்தை , தெறு - அழித்த , புயவன் - தோள்களையுடைய இராவணனது . விறல் அழிய - வலிமை யொழியும்படி , விரல் நிறுவி - விரலை அழுத்தி ; ( பின் ) மாமறையின் ஒலி - சிறந்த சாமவேத கானத்தை , முறை - வரிசையாக , முரல் செய் - பாடிய , பிறை எயிறன் - பிறை போன்ற பற்களையுடைய அவ்விராவணன் . உற - நாளும் , வாளும் பெற . அருளும் இறைவன் இடமாம் . மறை அமரர் - வேதங்களுக்கும் தேவர்களுக்கும் ஒத்ததாகிய , நிறை - நீதியை . அருள - வழங்கும்படி . முறையொடு வரும் - முறையிட்டு வந்த , புறவன் - புறாவிற்குரியவனாகிய வேடன் , எதிர் - எதிரே , குறைவில் - புறாவின் எடைக்குச் சரியாக இட்ட மாமிசத்தின் குறைவில் . மிக அதிகரிக்க , நிறைதை உழி - நிறைவுவேண்டியிருந்த பொழுது . நிறை நிலவு - அந்த எடையின் நிறை சரியாகப் பொருந்த இட்ட . பொறையன் - உடலின் அரிந்த மாமிசத்தை எடையாக்கினவனாகிய சிபி , உடல் பெற - தன் உடம்பைப்பெற , அருள் - ( அவன் வந்து பணிய ) அருள் புரிந்த - புறவம் அது - புறவம் என்னும் பெயருடைய திருத்தலமாம் . நிறைதை - நிறைவு . பொறை - பாரம் , எடை .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

விண்பயில மண்பகிரி வண்பிரம னெண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே.

பொழிப்புரை :

சிறந்த பிரமன் அன்ன உரு எடுத்து ஆகாயத்தில் சென்றும் , மிக்க மதிப்புடைய தகுதியான சக்கராயுதப் படையைக் கொண்ட திருமால் பன்றி உரு எடுத்து மண்ணைப் பிளந்து சென்றும் காணப்பெறாது , கண்ணால் பற்றக்கூடிய ஒளி நீங்க , நுண்ணிய பொருளாக , இனிய கீர்த்தியைக் கொண்ட அகண்டனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , மண்ணின் நுண்புழுதிபோல் அராவிய இரும்பு உலக்கைத்தூள் சண்பைப் புல்லாக முளைக்க அவற்றால் யாதவ குமாரர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு இறந்து விண்ணுலகை அடைய , துருவாச முனிவரை இழிவு செய்து பழிகொண்ட தன் இனத்தவர்கட்கு நற்கதி உண்டாகுமாறும் சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால் , சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும் .

குறிப்புரை :

மண்பகிரி - மண்ணைப்பிளக்கும் பன்றி ( யாகி ). எண் பெரிய - மிக்க மதிப்புடைய . பண் - தகுதியான , படைகொள் - சக்கராயுதத்தைக் கொண்ட . மால் - திருமால் ( பூமியிற் சென்றும் ) வண் பிரமன் - சிறந்த பிரமன் . விண்பயில - ஆகாயத்தில் சென்றும் , கண்புரியும் - கண்ணாற் பற்றக்கூடிய . ஒண்பு - ஒளி . ஒழிய - நீங்க . நுண் பொருள்கள் - அவற்றிற்கு எட்டாததாகிய நுண்ணிய பொருள்களாக . தண்புகழ்கொள் - இனிய கீர்த்தியைக்கொண்ட . கண்டன் இடமாம் - அகண்டனாகிய சிவபெருமானின் இடமாகும் . அகண்டன் என்பது முதற்குறைந்து நின்றது . மண்பரியும் - உலகத்தைக் காக்கின்ற , ஒண்பு ஒழிய - ஆண்மை நீங்க . நுண்பு - அற்பர்களாகிய . சகர் - யாதவர்கள் . புண்பயில - ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு செத்து . விண்படர - விண்ணுலகை அடைய . பண்பமுனி தவப்பண்பையுடைய துருவாசமுனிவர் . கண்பழி செய் - கருதத்தக்க பழியைச் செய்த . பண்பு - சாபத்தை . களை - நீக்கியதனால் . சண்பை மொழி - சண்பையென்று மொழியப்படும் . சண்பைநகர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொண் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகி லூழிவளர் காழிநகரே.

பொழிப்புரை :

பாழியில் தங்கும் , யானையை ஒத்த சமணர்களும் , கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள் . ஏழிசையும் , யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும் , மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய இந்திரனும் , மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று , தன் குற்றம் நீங்குமாறு அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல் சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும் பெருமையுடைய காழிநகராகும் .

குறிப்புரை :

பாழி உறை - பாழியில் தங்கும் , வேழம் நிகர் - யானையை யொத்த , பாழ் அமணர் - பாழ்த்த அமணர்களும் . சூழும் - கூட்டமாக உள்ள , உடல் ஆளர் - உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் , உணரா - உணராத , ஏழின் இசை - ஏழு சுரங்களையுடைய , யாழின்மொழி - யாழ் போற் பேசுகின்ற , ஏழையவள் - பெண்ணாகிய அம்பிகையுடன் , வாழும் இறை - வாழ்பவராகிய சிவபெருமான் , தாழும் - தங்கும் , ( இடம் ஆம் ) கீழ் ( உலகில் ) கீழ் உலகில் , சூழ் - சூழ்ந்த அரசு - அரசர்களும் , இசைகொள் - புகழ்கொண்ட , மேல் உலகில் மேல் உலகத்தில் , வாழ் - வாழ்கின்ற , அரசு - அரசனாகிய இந்திரனும் ; வாழ - ( காளியின் துன்புறுத் தலினின்று ) வாழும் பொருட்டு ( நடனம் ஆடுதலில் ) அரனுக்கு சிவபெருமானுக்கு , ஆழிய - ஆழ்ந்த , தோற்ற , சில்காழி - சிலகோவைகளையுடைய மேகலாபரணம் அணிந்தவளாகிய அக்காளி , செய - தன் குற்றம் நீங்கும்படி வந்துபோற்ற , அருள் பெற்ற செயல் ஏழுலகில் - சப்த லோகங்களிலும் , ஊழி - பல ஊழி காலமாக , வளர் - பெருகும் காழிநகர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க ணச்சிமிடை கொச்சைநகரே.

பொழிப்புரை :

நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி , சந்திரனைத் தலையிலே சூடி , ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி , உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க , தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நச்சு அரவு - நஞ்சு அரவு , நஞ்சையுடைய பாம்பை : கச்சென - கச்சாக . அசைச்சு - அசைத்து - கட்டி , மதி - சந்திரனை , உச்சியில் - தலையில் , மிலைச்சு - மிலைத்து , மிலைந்து , ஒரு கையான் - ஒரு கையில் மெய் - ( பிரமன் ) உடம்பினின்றும் ( கிள்ளிய ) சிரம் - தலையை , அணைச்சு - தாங்கி , உலகில் - உலகிலே , நிச்சம் - நாடோறும் , இடு - இடுகின்ற , பிச்சை - பிச்சையை , அமர் - விரும்பும் , பிச்சன் இடமாம் - பித்தனாகிய பெருமானின் இடமாகும் . மச்சம் - மீனின் . மதம் - நாற்றத்தை , நச்சி - விரும்பி . மதமச்சிறுமியை - வலையர் சிறுமியை , அச்சவரதம் - ( அச்சத்ததைத் தரும் , விரதம் ) அச்சத்தைத் தரும் கொள்கையின் பயனாக நேர்ந்த . கொச்சை - கொச்சைத் தன்மைக்கு . முரவு - கதறிய . அச்சர் - பராசர முனிவர் . பணிய - வணங்க ( அதுகண்டு ) சுரர்கள் - தேவர்களும் . மிடை - நெருங்குகின்ற .

பண் :சாதாரி

பாடல் எண் : 12

ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகண் மொழிதகையவே.

பொழிப்புரை :

நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி , உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி , சிவபெருமானைத் தொழுது , உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும் , எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன .

குறிப்புரை :

அழிகலியில் - அறம் அழிகின்ற கலியுகத்தில் , உலகு உழி - உலகினிடத்தில் , ஒழுகல் அரிது - அறவழியில் ஒழுகுவது அரியது ( என்றும் ) பழிபெருகு வழியை - பாவம் பெருகுகின்ற வழியையும் , நினையா - நினைந்து . முழுது உடலின் - உடல் முழுவதும் , எழும் மயிர்கள் - முளைத்த உரோமங்களைக்கொண்ட , முனி - உரோமச முனிவர் , குழுவினொடு - தமது கூட்டத்தொடு . ( வந்து ) கெழுவு - அங்கே தங்கிய . சிவனை - சிவபெருமானை ! தொழுது - வணங்கி , உலகில் - உலக இச்சையில் , இழுகும் - வழுக்கச் செய்கின்ற . மலம் அழியும் வகை - பாசங்கள் நீங்கும் விதம் . கழுவும் - போக்கிய , உரை - வார்த்தையை ( புகழை ) யுடைய . கழுமலநகர் - கழுமலமென்னும் பதியின் , பழுதில் இறை - வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும் , எழுதும் மொழி - எழுதக்கூடிய வேதமொழியாகிய தமிழ் , விரகன் - தமிழில் வல்லவனுமாகிய திருஞான சம்பந்தனேன் . வழி மொழிகள் - வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் . மொழி தகையவே - பாடிப்பயன்பெறும் தன்மை உடையனவாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகின் மூளுமிருள் கீளவிரி தாளகயி லாயமலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிபொருந்திய வரிகளையுடைய புலியின் தோலை உடுத்தவர் . அது பாதத்தில் பொருந்த எக்காலத்திலும் ஆனந்தமாய் இருப்பவர் . அடியவர்களை ஆட்கொள்பவர் . எதிரிட்ட விலங்குகளைக் கிழிக்கும் கூரிய பற்களை யுடைய திரண்ட வடிவுடைய யானையை அடக்கியாண்டவர் . சிறந்த வில்லினை ஏந்திய தோளர் . கூளிகள் தாளமிட நடனம் புரிபவர் . திருவெண்ணீற்றினை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் கயிலாய மலையானது கரிய மேகங்களால் மூண்ட இருட்டை ஓட்டும் வெண்பொன்னாகிய ஒளியை விரிக்கும் அடிவாரம் உடையதாகும் .

குறிப்புரை :

வாள - ஒளி பொருந்திய . வரி - கீற்றுக்களையுடைய . கோள - கொலைபுரிவதாகிய . புலி - புலியை . கீளது - கிழித்ததாகிய . உரி - தோல் ( உடுப்பதால் ) தாளின் மிசை - ( அது ) பாதத்தில் பொருந்த . நாளும் மகிழ்வர் - என்றும் மகிழ்வர் . வேள் - கண்டவர் விரும்பும் . அநகர் - தூயோர் . ஆளுமவர் - ஆள்பவர் . போள் - ( எதிரிட்ட விலங்குகளை ) கிழிக்கும்படியான . அயில - கூரிய பற்களையுடைய . கோள - திரண்டவடிவையுடையதான . களிறு - யானையை . ஆளி - அடக்கியாண்டவர் . வர வில் - சிறந்த வில்லைத் தாங்கிய . தோள் - தோளையுடைய . அமரர் - தேவராவர் . மதர் - செருக்கிய . கூளி - கூளிகள் . தாளம் எழ - தாளத்தை எழுப்ப . மீளி - ( நடனமாடும் ) வலியர் . மிளிர் - பிரகாசிக்கின்ற . தூளி - திருநீற்றைப் பூசியவர் . காளமுகில் - கரிய மேகங்களாய் . மூளும் - மூண்ட . இருள் - இருட்டை . கீள - ஓட்ட . பொன் - வெண்பொன்னாகிய . விரி - ஒளியை விரிக்கும் . தாள - அடிவரையையுடைய கயிலாயமலை . போழ் - போள் என எதுகை நோக்கி நின்றது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருக ணொற்றைவிடையன்
செற்றதெயி லுற்றதுமை யற்றவர்க ணற்றுணைவ னுற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு குற்றமில தெற்றெனவினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி பெற்றகயி லாயமலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பைப் பற்றிய கையை உடையவர் . நெற்றியில் ஒரு கண்ணுடையவர் . ஒற்றை இடபத்தை உடையவர் . முப்புரத்தை எரித்தவர் . உமாதேவியை ஒரு பாகமாக உடையவர் . உலகப் பற்றை நீக்கிய அடியவர்கட்கு நல்ல துணையாக விளங்குபவர் . அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மலையிற் பிறக்கும் மணிகள் ஒளியிழக்குமாறு தன்னொளி மிக்க கயிலாய மலையாகும் . கற்றவர்கள் போற்றித் துதிப்பதால் ஞான ஒளி பெற்ற சிறப்புடையது இக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

புற்று அரவு - புற்றில் உள்ள பாம்பை . பற்றிய - பிடித்தகை . நெற்றியது - நெற்றியில் உள்ளது . மற்று ஒரு கண் - மூன்றாவது ஆகிய ஓர் கண் . ஒற்றைவிடையன் - ஒரு இடபத்தையுடையவர் . செற்றது எயில் - ( அவர் ) அழித்தது மதிலை . உற்றது உமை - பிரியாது உடம்பில் பொருந்தியது , உமையை . அற்றவர்கள் - பற்றற்றவர்களின் . நல்துணை - நல்ல துணைவராவார் . ( அத்தகைய சிவபெருமான் ) உற்ற - தங்கிய . நகர் தான் - தலமாவது . சுற்றுமணி - சுற்றிலுமுள்ள இரத்தினங்கள் , பெற்றது ஒளி உடையதாகிய ஒளியை : ( அழித்த ) செற்றமோடு - பகைமையோடு ( இருந்தும் ) குற்றம் இலது எற்று என - ( இம்மலை ) குற்றம் அற்றது ஆயினது எதனால் என்று , வினாய் - வினாவி , கற்றவர்கள் - அறிஞர்கள் . சொல் தொகையின் - சொல்லும் புகழினோடு , முற்றும் - உலகை வளைப்பதாகிய , ஒளி பெற்ற - ஒளியைப்பெற்ற கயிலாயமலை . தன்னைச் சார்ந்தவர்களை அழிப்பது அறமா ? மலையிற்கிடக்கும் மணிகள் ஒளியிழந்தனவே தன்னொளியால் அவ்வாறு செய்த இம்மலை குற்றமில்லாதது ஆகுமா ? என்பது மூன்றாம் அடியின் பொருள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

சிங்கவரை மங்கையர்க டங்களன செங்கைநிறை கொங்குமலர் தூய்
எங்கள் வினை சங்கையவை யிங்ககல வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிரு ணொங்கவொளி விங்கிமிளிர் தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை தங்குகயி லாயமலையே.

பொழிப்புரை :

சிங்கங்கள் வாழ்கின்ற மலைகளிலுள்ள வித்தியாதர மகளிர் தங்கள் சிவந்த கைகளால் தேந்துளிக்கும் , நறுமணம் கமழும் மலர்களைத் தூவிப் போற்றி , ` எங்கள் வினைகளும் , துன்பங்களும் அகலுமாறு அருள்புரிவீராக ` என்று அங்கமாய் மொழியும் தோத்திரங்கள் எங்கும் ஒலிக்க , சந்திரனிடத்துள்ள குறையைப் போக்கி ஒளிமிகும்படி செய்து , மாலையோடு பக்கத்திலே கங்கையையும் மிகுந்த சடையிலே தாங்கி எங்கள் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

சிங்கம் - சிங்கங்களையுடைய . வரை - மலையில் வாழும் , மங்கையர்கள் - வித்தியாதர மகளிர் முதலியோர் . தங்களன - தங்களுடைய , செங்கை - சிவந்த கைகளில் , நிறை - நிறைந்த , கொங்குமலர் - வாசனை பொருந்திய . மலர்களை . தூய் - தூவி , எங்கள் வினை - எங்கள் வினைகளும் . சங்கையவை - துன்பங்களும் . இங்கு அகல - இங்கு விலகுவது ஆக என்று , அங்கம் - அங்கமாக , மொழி - மொழியும் தோத்திரங்கள் . எங்கும் உள ஆய் - எல்லாப் பக்கங்களிலும் உள ஆகி . திங்கள் - சந்திரன் , இருள் நொங்க - இருள் கெட , ஒளி வீங்கி - ஒளி மிகுந்து , மிளிர் - விளங்குகின்ற , தொங்கலொடு - மாலையோடு , தங்க - தங்கவும் , அயலே - பக்கத்தில் , கங்கையோடு - கங்கா நதியோடு , பொங்கும் - மிகுந்த , சடை - சடையையுடைய , எங்கள் இறை - எங்கள் தலைவன் , தங்கும் - தங்கும் கயிலாயமலை , விங்கி - குறுக்கல்விகாரம்

பண் :சாதாரி

பாடல் எண் : 4

முடியசடை பிடியதொரு வடியமழு வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி நொடியமகி ழடிகளிடமாம்
கொடியகுர லுடையவிடை கடியதுடி யடியினொடு மிடியினதிரக்
கடியகுர னெடியமுகின் மடியவத ரடிகொள்கயி லாயமலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் தலையில் சடைமுடியையும் , கையில் கூரிய மழுவையும் உடையவர் . வெறுக்கத்தக்க கொலைத் தொழிலை உடைய அசுரர்களை அழித்தவர் . பிச்சையேற்றுத் திரியும் அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் இடபத்தின் கனத்த குரலும் , யானையின் பிளிறலும் இணைந்து மிகுந்த ஓசையுடன் , மேகங்களின் இடிமுழக்கத்தை அடக்கி அடிவாரம்வரை செல்லும் திருக்கயிலாயமலையாகும் .

குறிப்புரை :

முடிய - தலையில் உள்ளதாகிய . சடை - சடையையும் . பிடியது - கையில் பிடிப்பதாகிய . வடிய - கூரிய . ஒரு மழு உடையர் - ஒரு மழுவையும் உடையவர் . செடியுடைய தலையில் - புதர்போன்ற தலையோடு . வெடிய - வெறுக்கத்தக்க . வினை - கொலைத் தொழிலையுடைய . கொடியர் - கொடியோராகிய , அசுரர்கள் . கெட - கெடவும் . இடு - இடுகின்ற . சில் - சில . பலி - பிச்சைக்காக . நொடிய - சில வார்த்தைகளைப் பேசவும் . மகிழ் - விரும்புகின்ற , சிவபெருமானின் இடமாம் . கொடிய குரல் - கொடிய குரலை உடைய . விடை - இடபங்கள் . கடிய - வேகத்தையுடைய . துடியடியினொடு - யானைக் கன்றுகளுடனே . இடியின் - இடியைப்போல . அதிர - ஒலிக்க . ( அதனால் ) கடிய குரல் - மிக்க ஓசையையுடைய . நெடிய முகில் - விரிவாகிய மேகங்கள் . மடிய - தமது ஒலி கெட . அடி - தாள் வரையின் இடத்தில் . அதர்கொள் - செல்லும் , கயிலாயமலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ விடங்கிளர் படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு விடங்கன திடந்தண் முகில்போய்த்
தடங்கட றொடர்ந்துட னுடங்குவ விடங்கொளமி டைந்தகுரலால்
கடுங்கலின் முடங்களை நுடங்கர வொடுங்குகயி லாயமலையே.

பொழிப்புரை :

உள்ளங்கையில் நெருப்பானது எரிய , படம் கொண்டு ஆடுகின்ற பாம்பானது ஒளிர்ந்து திருமேனியில் படர , நடனம் புரியும் பேரழகரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மேகங்கள் கடல்நீரை முகந்து , மேலே சென்று எல்லா இடங்களிலும் பரவி , இடிமுழக்கத்துடன் மழை பொழிய , அந்த இடியோசை கேட்ட மெலிந்த நாகம் வளைந்த புற்றிலே பதுங்குகின்ற திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

குடங்கையின் - உள்ளங்கையிலே . நுடங்கு - ஒசிந்து . எரி - அக்கினி . தொடர்ந்து - விடாது . எழ - பிரகாசிக்க . விடம்கிளர் - நஞ்சு மிகுந்த . படங்கொள் - படத்தைக் கொண்ட . அரவம் - பாம்பின் ( தலையில் உள்ள நாகரத்தினத்தினால் ) மடங்கு - ஏனைய ஒளிகள் மடங்கும் ; ஒளிபடர்ந்திட - ஒளி பரவ , நடம்தரு - ஆடும் விடங்கனது இடம் - பேரழகுடைய சிவபெருமானின் ( இடமாவது ) தண் முகில் - குளிர்ச்சி பொருந்திய மேகங்கள் . போய் - சென்று . தடங்கடல் - அகன்ற கடலை . தொடர்ந்து - பற்றி ( நீர் உண்டு ). உடன் - உடனே . நுடங்குவ - தவழ்வன . இடங்கொள - எல்லா இடங்களும் கொள்ளும்படி . மிடைந்த - நெருங்கிய . குரலால் - இடியின் ஓசையினால் . கடுங்கல்லின் - விளக்கம் மிகுந்த மலைச்சாரலிலே . முடங்கு - வளைவான . அளை - வளையிலே . நுடங்கு அரவு - மெலிந்த பாம்பு . ஒடுங்கு - பதுங்குகின்ற ; கயிலாயமலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

ஏதமில பூதமொடு கோதைதுணை யாதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற வாதுபயி னாதனகர்தான்
தாதுபொதி போதுவிட வூதுசிறை மீதுதுளி கூதனலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில் கோதுகயி லாயமலையே.

பொழிப்புரை :

குற்றமில்லாத பூதகணங்கள் சூழ்ந்திருக்க , உமாதேவியைத் துணையாகக் கொண்டு , ஆதிமூர்த்தியாகிய சிவபெருமான் , வேதங்களை இசையோடு பாடியருளி , அதன் பொருளையும் விரித்து , நீதிக்கருத்துக்கள் பலவற்றையும் ஓதியவன் . தேவர்களாலும் , முனிவர்களாலும் , அடியவர்களாலும் நாள்தோறும் மறவாது வணங்கப்படும் தலைவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மகரந்தப் பொடிகளைத் தன்னுள் அடக்கிய அரும்பு மலர , தேனை ஊதி உறிஞ்சிய சிறகுகளையுடைய வண்டுகள் தம்மேல் சிதறிய தேன்துளிகளால் குளிர் வருத்த , அன்புமிக , ஒளிர்கின்ற , அழகிய குயில்கள் தளிர்களைக் கோதும் திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

ஏதமில - குற்றமில்லாதனவாகிய . பூதமொடு - பூதங்களோடு . கோதை - அம்பிகைக்கு , துணை - துணையாகிய , ஆதி முதல் - பழமையாகிய முதற்கடவுள் . வேதவிகிர்தன் - வேதத்திலே எடுத்துக் கூறப்படும் . வேறுபட்ட தன்மையையுடையவன் . ஓதி - ஓதி அருளியவன் . மறவாது பயில் நாதன் - தேவர் முனிவர் முதலியோர் தன்னை மறவாமல் நாடோறும் வந்து வணங்கப் பெற்ற தலைவனாகிய சிவபெருமானது ; நகர்தான் - தலமாவது . தாது - மகரந்தப்பொடிகளை , பொதி - அடக்கிய , போது - அரும்புகள் . விட - மலர , ஊது - ஊதுகின்ற , சிறை - சிறகுகளையுடைய வண்டுகள் . மீது - தமது மேல் சிதறிய . துளி - தேன்துளிகளால் , கூதல் - குளிர் . நலிய - வருத்த ( வும் ) காதல் மிகு - ( அச்சோலையின் கண்ணே தங்குவதற்கு ) அன்பு மிகும் , சோதி கிளர் - ஒளி பிரகாசிக்கின்ற , மாது பயில் - அழகுதங்கிய , கோது - குயில்கள் தளிர்களைக்கோதும் ; கயிலை மலையே .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

சென்றுபல வென்றுலவு புன்றலையர் துன்றலொடு மொன்றியுடனே
நின்றமர ரென்றுமிறை வன்றனடி சென்றுபணி கின்றநகர்தான்
துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன் னின்றகயி லாயமலையே.

பொழிப்புரை :

நன்மக்கள் ஐம்புலன்களையும் வென்றவர்களாய் குறுமயிர் பொருந்திய தலைகளையுடைய பூதகணங்களோடு சேர்ந்து , தேவர்களும் உடன்நிற்க எக்காலத்தும் இறைவனின் திருவடிகளை வணங்குகின்ற நகர் , கொத்தாக மலரும் பொன்போல் விளங்கும் கொன்றை மலர்களின் நறுமணம் தென்றற்காற்றோடு பரவ , இள யானைக்கன்றுகளும் , பெண் யானைகளும் , ஆண் யானைகளும் மலையின் முற்பக்கங்களில் உலவுகின்ற திருக்கயிலாயமலையாகும் .

குறிப்புரை :

சென்று - பகைவர் இருக்குமிடம் போய் . பல - பல போர்களிலும் , வென்று - செயித்து . உலவு - திரிகின்ற , புன் தலையர் - குறு மயிர்கள் பொருந்திய தலையுடையவர்களாகிய பூதகணங்களின் ; துன்றலொடும் - கூட்டத்தொடும் , ஒன்றி - சேர்ந்து . உடனே நின்று - ஒரு சேர நின்று , அமரர் தேவர்கள் சென்று - போய் என்றும் எக்காலத்தும் ; இறைவன் தன் அடி - கடவுளின் பாதங்களை - பணிகின்ற , வணங்குகின்ற , நகர்தான் - தலமாவது . துன்றும் - கொத்தாகப் பொருந்திய , மலர் - பூக்கள் , பொன் - பொன்னைப் போல , திகழ் செய் - விளங்குகின்ற , ( கொன்றை மாலையின் ) விரை - வாசனை , ( தென்றற்காற்றொடு ) சென்று - பரவி , கமழ - மணக்க , கன்று - கன்றுகளும் , பிடி பெண்யானைகளும் , துன்று - நெருங்கிய . களிறு - ஆண் யானைகளும் , என்று இவை இத்தகைய மிருகங்கள் ; முன்நின்ற - மலையின் முற்பக்கங்களிலே நிற்கின்ற ; கயிலாயமலை . புன்தலையர் ` புன்றலைய பூதப்பொருசடையாய் ` என்னும் திருமுருகாற்றுப்படை ( தி .11) வெண்பாவாலறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை யொருக்குட னரக்கனுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலு நெருக்கென நிருத்தவிரலால்
கருத்தில வொருத்தனை யெருத்திற நெரித்தகயி லாயமலையே.

பொழிப்புரை :

தந்தத்தில் நெருப்புப்பொறி பறக்க , மலையோடு கர்வத்துடன் போர்செய்த பருத்த யானையைப் போல , கயிலை மலையில் சிவபெருமான் வீற்றிருத்தலைப் பொருட்படுத்தாது , இராவணன் அதனைப் பெயர்க்க முயல , ஒப்பற்ற உமாதேவி அஞ்சவும் , சிவபெருமான் நடனம்புரியும் தன் காற்பெருவிரலை ஊன்றி அறிவற்ற இராவணனின் கழுத்து முறியும்படி செய்த கயிலாயமலையே சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாகும் .

குறிப்புரை :

பொருப்பிடை - மலையில் , விருப்புற - ஆசையோடு , இருக்கையை - பெருமான் வீற்றிருத்தலை , அரக்கன் உணராது - இராவணன் பொருட்படுத்தாமல் , மருப்பிடை - தந்தத்தில் , நெருப்பெழு - அக்கினிப்பொறி கக்கும்படியாக , செரு - போரை , தருக்கொடு - கர்வத்துடன் செய்த , பருத்தகளிறின் - பருத்த யானையைப் போல , ( மலையொடு பொருதமால் யானையைப்போல எடுக்கலுற்று ) ஒருத்தியை - ஒப்பற்றவளாகிய உமாதேவியை , வெருக்குற - அச்சம் உறும்படி . ஒருக்கு - ஒருங்கு . உடன் - உடனே , வெருட்டலும் - அஞ்சச் செய்த அளவில் , நிருத்தவிரலால் - நடம்புரியும் விரல் ஒன்றினால் , கருத்தில ஒருத்தனை - அறிவற்ற ஒருத்தனாகிய அவ்விராவணனை : எருத்துஇற - கழுத்து முறியும்படி , நெருக்கென - நெருக்கென்று . நெரித்த - முறித்து அரைத்த ; கயிலாய மலையே . பெருமான் இடமாகும் என்பது குறிப்பெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பரியதிரை யெரியபுனல் வரியபுலி யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு புரிவினவர் பிரிவினகர்தான்
பெரியவெரி யுருவமது தெரியவுரு பரிவுதரு மருமையதனால்
கரியவனு மரியமறை புரியவனு மருவுகயி லாயமலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் நெருப்பையும் , பெரிய அலைகளையுடைய கங்கையையும் கொண்டவர் . வரிகளையுடைய புலித்தோலை ஆடையாக அணிந்தவர் . கீற்றுக்களையுடைய வளையல்களை அணிந்த செவ்வரி படர்ந்த கண்களையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிவில்லாது வீற்றிருந்தருளும் இடமாவது , சிவபெருமான் பெரிய சோதிப்பிழம்பாய் நிற்க அதன் அடியையும் , முடியையும் தேடத்தொடங்கிக் காண்பதற் கரியதாய் விளங்கியதால் நீலநிறத் திருமாலும் , அருமறைகள் வல்ல பிரமனும் தவறுணர்ந்து மன்னிப்பு வேண்டும் பொருட்டுப் பொருந்திய திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

பரிய திரை - பருத்த அலைகளையுடைய , எரிய - அக்கினி தோன்றுவதற்கு இடமாகிய , புனல் - கங்கைநீரும் , வரிய - வரிகளையுடைய , புலியுரியது - புலியின் தோலாகிய , உடை - ஆடையையும் , ( கொண்ட ) பரிசையுடையான் - தன்மையையுடையவன் . வரிய - கீற்றுக்களையுடைய , வளை - வளைகளையணிந்த , அரிய - செவ்வரியுடைய , கணி - கண்ணி ( உமாதேவியாரின் ) உருவின் ஒடு - உடம்போடு , புரிவின் அவர் - கலத்தலையுடைய அச் சிவபெருமான் ; பிரிவு இல் நகர்தான் - பிரியாத தலமாவது , பெரிய - மிகப்பெரியதாகிய , எரி உருவம் அது - தீயாகிய வடிவத்தை , தெரிய - தேடத் தொடங்க , உரு - அவ்வடிவம் . பரிவு தரும் - துன்பத்தைத் தரக்கூடிய , அருமை அதனால் - அரிய தன்மை உடைமையினால் , கரியவனும் , - திருமாலும் , ( அரிய ) மறை - வேதத்தை . புரியவனும் - விரும்புகின்ற பிரமனும் , மருவு - ( மன்னிப்பு வேண்டும் பொருட்டு ) பொருந்திய கயிலாய மலையே .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

அண்டர்தொழு சண்டி பணி கண்டடிமை கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர சண்டவிருள் கண்டரிடமாம்
குண்டமண வண்டரவர் மண்டைகையி லுண்டுளறி மிண்டுசமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி யாதகயி லாயமலையே.

பொழிப்புரை :

தேவர்களும் தொழுது போற்றும் சண்டேசுவர நாயனாரின் சிவவழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து ஆட்கொண்டவர் சிவபெருமான் . பிறைச்சந்திரனை இண்டைமாலையால் அலங்கரிக்கப் பட்ட சடைமுடியில் தரித்தும் , மண்டையோட்டை மாலையாக அணிந்தும் , கடிய இருள் போன்ற கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , குண்டான சமணர்களும் , கையிலேந்திய மண்டையில் உணவு உண்டு திரியும் புத்தர்களும் , அச் சமயங்களைக் கண்டவர்களும் , அநுட்டிப்போர்களும் முன்பு அறியாத திருக்கயிலாய மலையாகும் .

குறிப்புரை :

அண்டர் தொழு - தேவர்கள் வணங்கக் கூடிய , சண்டி - சண்டேசுவர நாயனாரின் , பணி கண்டு - வழிபாட்டைக் கண்டு , அடிமை கொண்ட - ஆட்கொண்ட , இறை - கடவுளும் , துண்டம் - துண்டாகிய , மதியோடு - பிறைச் சந்திரனோடு , இண்டை - இண்டை மாலையால் . புனைவு உண்ட - அலங்கரிக்கப்பட்ட . சடை - சடையினிடத்தில் , முண்டதர - நகுவெண்டலையைத் தரித்தருளியவரும் , சண்ட இருள் - கடிய இருள் போன்ற , கண்டர் - கழுத்தையுடைய வரும் , ஆகிய சிவபெருமானின் இடமாம் . குண்டு அமணவண்டர் அவர் - மூர்க்கத்தனத்தையுடைய சமணர்களாகிய கீழ் மக்களும் , மண்டைகையில் உண்டு - கையில் ஏந்திய மண்டையில் உணவு உண்டு , உளறி - உளறித்திரிந்து , மிண்டு - ஏமாற்றுகின்ற , சமயம் - சமயங்களை , கண்டவர்கள் - அறிந்தவர்களும் , கொண்டவர்கள் - அநுட்டிப்போரும் , பண்டும் அறியாத - அக்காலத்திலும் அறியாத கயிலாயமலையே .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

அந்தண்வரை வந்தபுன றந்ததிரை சந்தனமொ டுந்தியகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழி சைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகமெளிதே.

பொழிப்புரை :

அழகிய , குளிர்ச்சி பொருந்திய மலையிலிருந்து விழும் நீரின் அலைகள் சந்தனம் , அகில் இவற்றை உந்தித் தள்ள , நறுமணம் கமழும் மலர்க் கொத்துக்களோடு குரங்குக் கூட்டங்கள் சிதறும் திருக்கயிலாயமலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி , சந்த இசையோடு செந்தமிழில் திருப்புகலியில் அவதரித்த திருஞானசம்பந்தர் அருளிச்செய்த இத்திருப் பதிகத்தை மனத்தால் சிந்தித்து , வாயால் ஓத வினையாவும் நலியப் பரலோகம் எளிதில் பெறக்கூடும் .

குறிப்புரை :

அம் தண் - அழகிய குளிர்ந்த , வரை வந்த புனல் தந்த - மலையில் வரும் அருவிகளில் உண்டாகிய , திரை - அலைகள் , சந்தனமொடு - சந்தனக் கட்டைகளோடு , உந்தி - தள்ளிக் கொண்டு வந்து , அகில் - அகில் கட்டைகளும் , கந்த மலர் - வாசனை பொருந்திய மலர்களின் , கொந்தினொடு - கொத்தோடும் , மந்தி பல - பல குரங்கின் கூட்டங்கள் , சிந்து - சிதறும் ; கைலாய மலையின்மேல் . எந்தையடி - எமது தந்தையாகிய சிவபெருமானின் திருவடியை , வந்து அணுகும் - வந்து சேர்ந்த ; சந்தமொடு - வழி மொழித் திருவிராகமாகிய சந்த இசையோடு , ( செந்தமிழ் இசைத்த ); புகலி - சீர்காழியில் அவதரித்த , பந்தன் உரை - திருஞானசம்பந்தமூர்த்திகள் அருளிச் செய்த இப்பாடல்களை , சிந்தை செய - தியானிக்க , வந்த வினை - துன்புறுத்த வந்த பிணிகள் , நைந்து - கெட்டு , ( அதனால் ) பரலோகம் எளிது - பரலோகம் எளிதில் பெறக்கூடியதாகும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்
ஏனமிள மானினொடு கிள்ளைதினை கொள்ளவெழி லார்கவணினால்
கானவர்த மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

தேவர்களும் , அசுரர்களும் வருந்தித் துன்புறுமாறு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விடத்தை , தான் அமுது போன்று உண்டு அருள் செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை எது என வினவினால் , பன்றிகள் , இளமான்கள் , கிளிகள் இவை தினைகளைக்கவர வேட்டுவ மகளிர்கள் பொன்னாலும் , இரத்தினங்களாலும் ஆகிய ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

விடம் - ஆலகால விடத்தை . தான் அமுது செய்து - தாம் உண்டு . அருள் புரிந்த - அவர்களுக்கு அருளின . ஏனம் - பன்றிகள் . இளம் மானினொடு - இளமான்களொடு . கிள்ளை - கிளிகளும் . தினை கொள்ள - தினைகளைக் கவர . எழில் ஆர் - அழகு பொருந்திய . கவணினால் - கவணால் . கானவர்தம் மாமகளிர் - வேடுவர்களுடைய சிறந்த பெண்கள் ; வீசியெறிகின்ற . கனகம் - பொன்னாலும் . மணி - இரத்தினங்களாலும் . விலகு - அவை விலகுதற்கிடமாகிய ( காளத்தி மலை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 2

முதுசினவி லவுணர்புர மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய வெழுபொறிகள் சிதறவெழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிக ளிருளகல நிலவுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

மிகுந்த கோபத்துடன் மேருமலையை வில்லாகக் கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் எரியுண்ணும்படி செய்த சமர்த்தர் சிவபெருமான் . அவர் சந்திரனைத் தரித்த சடையையுடையவர் . எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்பவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் மலை , எதிரெதிராக உள்ள மூங்கில்கள் உராய்வதால் தோன்றிய நெருப்புப் பொறிகளாலும் , பன்றிகள் கொம்பினால் மண்ணைக் கிளறும்போது கிடைத்த மணிகளாலும் இருள் நீங்க விளங்குகின்ற திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

முது - பழமையான ( வில் ). சினம் - கோபத்தையுடைய . வில் - வில்லினால் . அவுணர் புரம் மூன்று - அசுரர்கள் புரம் மூன்றும் . ஒரு நொடி வரையில் - ஒரு நொடிப் பொழுதில் . மூள - எரிமூளும்படியாக எரிசெய் - எரித்த . சதுரர் - சமர்த்தர் . மதி - சந்திரன் . பொதி - தங்கிய . சடையர் - சடாபாரத்தையுடையவர் . சங்கரர் - ஆன்மாக்களுக்கு நன்மையைச்செய்பவர் . ( விரும்பும் மலை ) எதிர்எதிர - எதிர்எதிர் உள்ளனவாகிய . வெதிர் பிணைய - மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று மோத ( உராய ). எழு - உண்டான . பொறிகள் - நெருப்புப் பொறிகள் . ( சிதற , அவற்றாலும் ). ஏனம் உழுத - பன்றிகள் கொம்பினால் கிளறுவதால் தோன்றிய . கதிர் மணியின் வளர் ஒளிகள் - ஒளியையுடைய இரத்தினங்களின் மிகும் ஒளியினாலும் . இருள் அகல - இருள் நீங்க , நிலவு - விளங்குகின்ற ; காளத்திமலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாரகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
பல்பலவி ருங்கனி பருங்கிமிக வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

தாரகன் இழைத்த துன்பம் கண்டு , விரைந்து நீக்கவரும் காளியை நோக்கி , ` வலிமை மிகுந்த தாரகன் என்னும் அசுரனை நீ கொல்வாயாக ` என்று மொழிந்து அருள்செய்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் மலை , பலவகைச் சுவைமிகுந்த பெரிய கனிகளின் சாற்றை அருந்தி , ஒரே கூட்டமாய் மொய்த்து , மலை அதிரும்படி கருங்குரங்குகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

வல்லைவரு - விரைவிலே வந்த . வகுத்து - நியமித்து . வலியாகி - வலிமை பொருந்தி . மிகு - மிக்க ; ( தாருகனை ). இருங்கனி பருங்கி - பெரிய பழங்களின் ( சாற்றைக் ) குடித்து . மிகவுண்டலை - மிகவும் உண்டவைகளாகி . இனமாய் நெருங்கி - ஒரே கூட்டமாய் மொய்த்து . கல் அதிர - மலை அதிரும்படியாக . கருமந்தி - கரிய பெண் குரங்குகள் . ( விளையாடுகின்ற காளத்தி மலை .) மந்தி - பெண் குரங்கின் பொதுப் பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

வேயனைய தோளுமையொர் பாகமது வாகவிடை யேறிசடைமேல்
தூயமதி சூடிசுடு காடினட மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெய்யும் வேடன்மல ராகுநயனம்
காய்கணை யினாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , இடப வாகனத்தில் ஏறி , சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி , சுடுகாட்டில் நடனம் ஆடும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர் , தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி இறைவனுக்கு அப்பி , இறைவனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

வேய் அனைய - மூங்கிலையொத்த . ( தோள் ). விடை ஏறி - விடையை ஊர்தியாக உடையவன் . தூய - வெண்மையான . மதிசூடி - சந்திரனை அணிந்தவன் ; ( சுடுகாட்டில் நடனமாடி ). வாய் கலசமாக - வாயே அபிடேக கலசமாக . வழிபாடு செய்யும் - பூசித்த . வேடன் - கண்ணப்ப நாயனார் . மலராகும் நயனம் - மலர் போன்ற கண்ணை . காய் கணையினால் - கோபிக்கின்ற அம்பினால் . இடந்து - தோண்டி . ஈசன் அடி கூடும் - சிவபிரானின் திருவடி சேர்ந்த ; காளத்தி மலை . காய் கணை - வினைத்தொகை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மலையின்மிசை தனின்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபொலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புன லருவிபல சுனைகள்வழி யிழியவய னிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே.

பொழிப்புரை :

மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற , அதனைக் கொன்று உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , அலைகளையுடைய நீர் மலையிலிருந்து அருவிபோல் இழிந்து , பல சுனைகளின் வழியாக வயல்களில் பாய , அருகிலுள்ள முற்றிய மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன் , கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

மலையின் மிசைதனின் - மலையின் மேல் இடத்தில் , முகில்போல் வருவது ஒரு மதகரி - முகில்போல் வந்த ஓர் மதங் கொண்ட யானை , மழைபோல் அலற - இடியைப் போல் பிளிறும்படி , ( கொலை செய்து உரிபோர்த்த சிவன் .) அலைகொள் - அலைகளையுடைய , புனல் அருவி பல - நீரையுடைய அருவிகள் , பல சுனைகள் வழி - பல சுனைகளிடத்தில் . இழிய - பாய , அயல் - அருகிலே , நிலவும் - பொருந்திய , முதுவேய் - முதிய மூங்கில்கள் , ஒளிகொள் - பிரகாசிக்கின்ற , கதிர் - கிரணங்களையுடைய , முத்தம் அவை - முத்துக்களை , கலகலவென ( அருவியின் வெள் ஒளிக்கு எங்கள் ஒளி தோற்றனவா என்று சொரிவது போல் ) சிந்து - சொரிகின்ற ( காளத்தி மலை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பாரகம் விளங்கிய பகீரத னருந்தவ முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றவரன் மலையைவினவில்
வாரத ரிருங்குறவர் சேவலின் மடுத்தவ ரெரித்தவிறகில்
காரகி லிரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே.

பொழிப்புரை :

பாரதபூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் மன்னன் , பிதிரர்கட்கு நற்கதி உண்டாகுமாறு அரியதவம் செய்து வானிலுள்ள கங்கையைப் பூவுலகிற்குக் கொண்டுவர , அவனுக்கு அருள்செய்து , பெருக்கெடுத்த கங்கையைத் தன் சடையில் தாங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெடிய வழிகளையுடைய கானகக் குறவர்கள் தங்கள் குடிசையில் அடுப்பெரித்த , கரிய அகில் கட்டையிலிருந்து கிளம்பிய பெரியபுகை ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

பாரகம் - பூமியில் ( விளங்கிய பகீரதன் ). அருந்தவம் முயன்ற - அரிய தவம் செய்த , பணி கண்டு - வினையைக் கண்டு , ஆர் அருள்புரிந்து - அரிய கிருபைசெய்து , ( அலைகொள்கங்கையை ) சடைஏற்ற அரன் - சடையில்தாங்கிய சிவபெருமானது , வார் அதர் - நெடிய வழிகளையுடைய , இரும் - பெரிய , சேவலின் - தங்கும் இடமாகிய குடிசையில் , அவர் - அவர்கள் , மடுத்து - மூட்டி , ( எரித்த விறகில் - கரிய , அகில் கட்டையிலிருந்து கிளம்பிய ) இரும்புகை - பெரிய புகை , விசும்பு - வான் உலகில் , கமழ் - மணக்கின்ற காளத்தி மலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

ஆருமெதி ராதவலி யாகிய சலந்தரனை யாழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவ னிருந்தமலை தன்னைவினவில்
ஊருமர வம்மொளிகொண் மாமணி யுமிழ்ந்தவை யுலாவிவரலால்
காரிருள் கடிந்துகன கம்மென விளங்குகா ளத்திமலையே.

பொழிப்புரை :

தன்னை எதிர்த்துப் போர்செய்ய யாரும் வாராத , வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச் சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் உமிழ்ந்த இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று , பொன்மலைபோல் பிரகாசிக்கின்ற திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

ஆரும் எதிராத - எவரும் தன்னோடு சண்டைக்கு எதிராத , வலியாகிய - வலிமை பொருந்திய ( சலந்தராசுரனை ) ஆழி அதனால் - சக்கரத்தினால் , ஈரும் வகைசெய்து - அவன்தலையை அறுக்கும்படி செய்து , தேவர்களுக்கு அருள் புரிந்தவன் . ஊரும் அரவம் - ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் ; உமிழ்ந்தவை - உமிழ்ந்தவைகளாகிய , ஒளி கொள் மாமணி - ஒளியைக் கொண்ட சிறந்த இரத்தினங்கள் , உலவி வரலால் - ஒளி உலாவி வருதலினால் , கார் இருள் கடிந்து - கரிய இருளை ஓட்டி , கனகம் என - பொன்மலையைப் போல , விளங்கு - விளங்குகின்ற , காளத்திமலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

எரியனைய சுரிமயி ரிராவணனை யீடழிய எழில்கொள்விரலால்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்க ளாடவர்க ணீடுவரை யூடுவரலால்
கரியினொடு வரியுழுவை யரியினமும் வெருவுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

நெருப்புப்போல் சிவந்த சுருண்ட முடிகளையுடைய இராவணனின் வலிமை அழியுமாறு , தன் அழகிய காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை அழுத்தி , பின் அருள்செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால் , யானைகளும் , வரிகளையுடைய புலிகளும் , சிங்கக் கூட்டங்களும் அஞ்சுகின்ற திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

சுரி - சுரிந்த , எரி அனைய மயிர் - அக்கினியைப் போன்ற செம்பட்டை மயிர்களையுடைய ( இராவணனை - வலிமை அழியும்படி ). பெரிய வரை ஊன்றி - பெரிய மலையின் அடியில் அழுத்தி , அருள் செய்த சிவன் - மீண்டும் அவனுக்கே அருள் செய்த சிவன் ( மேவும் ). மலை - மலையையும் , பெற்றி - அதன் சிறப்பையும் வினவின் - வினவினால் ( முறையே ) வரிய - நெடிய , சிலை - வில்லை யேந்திய , வேடுவர்கள் ஆடவர்கள் - வேட்டுவ ஆண் மக்கள் , நீடுவரை யூடு - நெடிய மலையின் வழியாக , வரலால் - வருவதால் , வரி - கீற்றுக்களையுடைய , உழுவையும் - புலியும் , அரியினமும் - சிங்கக் கூட்டமும் ( யானைகளோடு ) வெருவு - அஞ்சுகின்ற காளத்திமலை . மலை , பெற்றி - எதிர் நிரனிறை . பெற்றி , ` கரியினொடு வெருவு ` என்பதனாலும் , மலை - காளத்திமலை என்பதனாலும் கொள்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென விகலுமிருவர்
தனதுருவ மறிவரிய சகளசிவன் மேவுமலை தன்னை வினவில்
புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரு மணம்புணருநாள்
கனகமென மலர்களணி வேங்கைக ணிலாவுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள் இவன் திருவடியும் , திருமுடியும் அறியவேண்டும் என்று தமக்குள் மாறுபட்ட திருமாலும் , பிரமனும் முனைந்து தேடியும் அறிவதற்கு அரியவனாய் விளங்கியவன் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருக்கும் மலை , தினைப்புனத்திலுள்ள வேடுவர்கள் மயிலொத்த சாயலுடைய பெண்களை மைந்தர்களுக்கு மணம் செய்விக்கும் நாளில் பொன் போன்ற மலர்களைப் பூத்து அழகிய வேங்கைகள் விளங்கும் திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

இ ( ன் ) னது அளவில் - குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள் . ( இவனது அடியும் முடியும் ) அறிதும் - அறிவோம் , இகலும் - மாறுபட்ட . சகள சிவன் - திருவுருவுடைய சிவன் , புனவர் - தினைப்புனத்திலுள்ளவர்களாகிய வேடுவர்கள் , மயில் அனைய - மயிலையொத்த . மாதருடன் - பெண்களோடு , மைந்தரும் , ஆட வரும் , மணம் புணரும் நாள் - மணம் புணர்விக்கும் நாளில் . அணி வேங்கை - வேங்கை மரங்களின் வரிசை . கனகம் என - தங்கத்தைப் போல , மலர்கள் - பூக்களால் , நிலாவு - விளங்குகின்ற காளத்திமலை . வேங்கை பூத்தலால் மணம் செய்காலம் இது வென உணரும் மரபு கூறியவாறு . இறைவன் வடிவம் சகளம் , நிஷ்களம் , சகள நிஷ்களம் என மூன்று . சகளம் - மான் , மழு , சதுர்ப்புசம் , சந்திரசூடம் முதலிய உருவத்தோற்றம் . நிஷ்களம் - அருவத்தோற்றம் . சகள நிஷ்களம் - உரு அருவத்தோற்றம் - சிவலிங்க வடிவம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவில்
குன்றின்மலி துன்றுபொழி னின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

நின்று கொண்டே கவளமாக உணவு உண்ணும் சமணர்களும் , உடம்பில் போர்த்த போர்வையுடைய புத்தர்களும் தனது பேரருளை அறியாவண்ணம் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெருங்கிய சோலைகளில் உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத் தம் கன்றுகளுடன் சென்று தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

நின்று - நின்று கொண்டே , கவளம் பல கொள் - பல கவளங்களை யுண்ணுகின்ற , கையரொடு - கையையுடைய சமணர்களுடன் . மெய்யில் இடு - உடம்பில் போர்த்த , போர்வையரும் - போர்வையை உடையவர்களாகிய புத்தர்களும் , நன்றி - தனது அனந்த கல்யாண குணங்களை , அறியாதவகை - தெரியாத விதம் ; நின்ற - அவர்களை மறைத்து நின்ற . ( சிவன் மேவும் மலையை ) நாடி - ஆராய்ந்து , வினவில் - கேட்பீர்களே யானால் , பிடி - பெண் யானைகள் ; குன்றில் - மலையில் , துன்று - நெருங்கிய , பொழில் - சோலையில் , நின்ற - உள்ள , மலிகுளிர் - மிக்க குளிர்ச்சியாகிய , சந்தின் முறி - சந்தனத் தழைகளை , கன்றினொடு தின்று - தமது கன்றினுடனே தின்று , குலவி - மகிழ்ந்து திரிந்து , விளையாடுகின்ற காளத்திமலை , கையர் - அற்பர் என இரு பொருளும் கொள்க . மலைவளம் கூறியது : தன்மை நவிற்சியணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைக ணீடுவளர் கொச்சைவய மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்க ணல்லர்பர லோகமெளிதே.

பொழிப்புரை :

சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி , மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள கொச்சைவயம் என்னும் சீகாழியின் நிலைபெற்ற தலைவனும் , பலநாடுகளிலும் பரவிய புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர் . அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும் .

குறிப்புரை :

காடு ( அது ) மயானம் , இடமாக - அரங்காக , நடம் ஆடு - கூத்தாடுகின்ற சிவன் , நீடுவளர் - மிக உயர்ந்த : கொச்சை வயம் - சீகாழியில் , மன்னு - நிலைபெற்ற தலைவனாகிய : நாடுபல - பல நாடுகளிலும் , நீடு புகழ் - சென்று பரவிய , புகழையுடைய , ( ஞான சம்பந்தன் ) உரை - பாடிய . பாடலொடு பாடும் இசை - பாடலொடு இசைத்துப் பாடும் இசையில் வல்லவர்கள் . நல்லர் - சிறந்தவர்கள் ஆவார்கள் . ( அவர்களுக்கு ) பரலோகம் - சிவலோகம் . எளிது - அடைவதற்கு எளிதாகும் . பிறர் அடைவதற்கு அரியதாயினும் என்பது இசையெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

ஏனவெயி றாடரவொ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்க ளாகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் பன்றியின் கொம்பும் , படமெடுத்து ஆடும் பாம்பும் , எலும்பும் , வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து , இளைஞராய் , காட்டில் வாழும் , வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர் . படர்ந்து விரிந்த சடையுடைய அச்சிவ பெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம் , புகழ்மிக்க அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை , அழகிய தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப்படப் படியும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஏன எயிறு - பன்றியின் கொம்பும் . ஆடு அரவொடு - ஆடும் பாம்பும் . என்பு - எலும்பும் . வரி - வரிகளையுடைய . ஆமை - ஆமையோடும் . இவை - ( ஆகிய ) இவற்றை . பூண்டு - அணிந்து . இளைஞராய் - வாலிபராகி . ( சதாசிவமூர்த்தத் தியானம் பதினாறு வயதினராகப் பாவிக்கச் சொல்வது காண்க .) கானம் - காட்டில் வாழும் . வரி - கீற்றுக்களையுடைய . நீடு - நெடிய . உழுவை அதள் - புலித்தோலை . உடைய - ஆடையாக உடைய . படர் சடையர் - படர்ந்த சடையை உடையவராகிய சிவபெருமானது . காணி - உரிய இடம் எனலாம் . ஆன புகழ் - சிறந்த புகழையுடைய . வேதியர்கள் ( செய்யும் ) ஆகுதியின் மீது - வேள்வியில் ( கிளம்பும் ) புகை - புகையானது . போகி - மேற்சென்று . அழகார் - அழகு மிகுந்த . வானம் உறு - தேவலோகத்தில் உள்ள . சோலைமிசை - கற்பகச் சோலையின் மீது . மாசுபட - அழுக்கு உண்டாக . மூசு - மூடுகின்ற மயிலாடுதுறை .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடையவர் . அச்சடையிலே அழகிய கொன்றை மாலையை அணிந்த அழகரான எம் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இனிய இடம் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலமானது மணம் கமழும் சந்தனமரங்களோடு , கரிய அகில் மரங்களையும் வாரிக் கொண்டு வரும் காவிரியின் அலைகள் தம்மேல் நீர்த்திவலை வீசுவதால் , அதனைக் கோபித்து அதற்கு எதிராக , கரையோரத்துச் சோலைகளிலுள்ள குரங்குகள் மலர்களை வீசுகின்ற தன்மையுடன் திகழ்வதாகும் .

குறிப்புரை :

அந்தண்மதி - அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த . ( செஞ்சடையர் ). அங்கண் - அந்தச் சடையினிடத்தில் . எழில் - அழகிய . கொன்றையொடு - கொன்றை மாலையோடு . அணிந்து - சூடி . அழகராம் - அழகராகிய . எந்தம் அடிகட்கு - எமது கடவுளாகிய சிவபெருமானுக்கு . இனிய - விருப்பமான . தானம் அது - இடமாவது . வேண்டில் - எது என அறிய வேண்டுவீரேல் , எழிலார் பதியதாம் ; அழகு மிக்க பதி அது ஆகும் . ( மயிலாடுதுறை ) கந்தம் மலி - வாசனை மிகுந்த . சந்தினொடு - சந்தன மரங்களோடு . கார் அகிலும் - கரிய அகில் மரங்களையும் . வாரிவரு - வாரிக்கொண்டு வருகின்ற . காவிரி உள் - காவிரி நதியில் . வந்ததிரை - வந்த அலைகள் . உந்தி - தம்மேல் நீர்த்திவலை வீசுவதால் . எதிர - அதற்கு எதிராக . மந்தி - கரையோரத்துச் சோலைகளிலுள்ள குரங்குகள் . மலர் சிந்து - மலர்களை வீசுகின்ற . மயிலாடுதுறை . தம்மீது திவலை சிந்திய காவிரியைக் கோபித்து , மந்திகள் அதற்கு எதிராக மலர்களை வீசுகின்றன எனத் தலத்தின் வளம் கூறியவாறு . உந்தி - உந்த . வினையெச்சத்திரிபு .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

தோளின்மிசை வரியரவ நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையு முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமண நாறுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , தோளின்மீது வரிகளையுடைய பாம்பு நஞ்சை உமிழுமாறு , அதனை இறுக அணிந்தவர் . எண்ணுதற்கு அரியவராய் விளங்குபவர் . மூளை நீங்கிய பிரமகபாலத்தில் பலியேற்று உண்டு சுடுகாட்டில் வசிப்பவர் . எப்பொருட்கும் முதல்வரான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , காவிரியிலுள்ள வாளைமீன்கள் கரையோரங்களிலுள்ள பாளைபொருந்திய பசிய கமுக மரங்களில் பாய , அவை சிவந்த பழங்களை உதிர்க்க , அதனால் பூ இதழ்கள் விரிய நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தோளின் மிசை - தோளின் மீது . வரி அரவம் - நெடிய பாம்புகளை . நஞ்சு அழல - விஷத்தைக் கக்க . வீக்கி - கட்டி . மிகு - மிகுந்த . நோக்கு அரியராய் - அரிய அழகுடையவராய் . மூளைபடு - மூளையிருந்த . வெண் தலையில் - வெள்ளிய மண்டையோட்டில் ( உண்டு ). முதுகாடு உறையும் - சுடுகாட்டில் வசிக்கும் . முதல்வர் இடமாம் . வாளை குதி கொள்ள - வாளை மீன்கள் தாவ . ( அதனால் ). பாளைபடு - பாளை பொருந்திய . பைங்கமுகு - பசிய கமுகு மரங்கள் . செங்கனி - சிவந்த பழங்களை . உதிர்த்திட - உதிர்க்க , அதனால் நிரந்து - பரவி . கமழ் - மணக்கும் . பூமடல் - கோட்டுப்பூ முதலிய மலர்களின் இதழ்கள் . விரிய - விரிவதனால் . மணம் நாறும் ( மயிலாடுதுறை .) உதிர்த்திட காரணகாரியப் பொருட்டு . குதிகொள்ள - காரணப் பொருட்டு .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

ஏதமில ரரியமறை மலையர்மக ளாகியவி லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாம்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் எவ்விதக் குற்றமுமில்லாதவர் . அரிய வேதங்களை அருளிச் செய்து அவற்றின் பொருளாகவும் விளங்குபவர் . மலையரசன் மகளான , ஒளி பொருந்திய வளைந்த நெற்றியையுடைய உமாதேவியின் அகன்ற மார்பு தன் இடப்பகுதியாக உறைகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , ஆரவாரித்து வரும் அலைகள் மூலம் மல்லிகை முதலிய நறுமணமலர்கள் கூடிவரும் காவிரியில் நீராட மாதர்கள் புக , மணமற்ற பொருள்களும் மணம் கமழப்பெறும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அரிய மறை ஏதமிலர் - அரிய வேதங்களில் சொல்லப் படுகின்ற நிஷ்களங்கர் . மலையர் மகளாகிய - மலையரனுக்கும் , மலையத்துவசபாண்டியனுக்கும் மகளாகிய . விலங்குநுதல் - வளைந்த புருவத்தையுடைய . பேதை - உமாதேவியாரின் . தடம் - விசாலமான ( மார்பு ) காதல் - விருப்பம் . கவ்வை - ஓசை . மவ்வல் - மல்லிகை முதலாகிய நறுமண மலர்கள் . கூடிவரு - சேர்ந்து வருகின்ற . காவிரியுள் - காவிரியில்வரும் . திரைகள் - அலைகள் . புக - பாய்வதால் . வெறிய - மணமற்ற மற்றைப் பொருள்களும் . வெறி கமழும் - மணம் வீசப்பெற்ற ( மயிலாடுதுறை ). மலையர் என்ற பன்மையால் , இமயமலைக்குரியார் , பொதியமலைக்குரியார் ஆம் இருவரையும் கொள்க . காவிரிச் சிறப்பு : வீறுகோளணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறு நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாம்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

மலர்ந்த பூக்களைக் கூந்தலில் சூடியுள்ள , தாருகாவனத்து முனிபத்தினிகளின் இல்லங்கள்தோறும் சென்று பிச்சையெடுத்துப் பண்ணோடு கூடிய பாடல்களை இசைக்கும் சிவபெருமான் மிகப் பழமையானவர் . காவிரியின் அலைகள் இரு கரைகளிலுமுள்ள சோலைகளில் இரத்தினங்களைச் சிதற , அதனால் அஞ்சி மந்திகள் குதிக்க , மரக்கிளைகளில் மோதி , மாமரத்தில் கட்டப்பட்ட தேன்கூடுகள் கிழியத் தேன் சிந்த , அதனை வண்டுகள் கவர்ந்துண்ணும் வளமிக்க திருமயிலாடுதுறையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பூவிரி - மலர்கள் விரிந்த . கதுப்பின் - கூந்தலையுடைய , மடமங்கையர் - இளம்பெண்கள் . அகம்தொறும் நடந்து - வீடுதோறும் சென்று , பலிதேர் - பிச்சைஎடுக்கும் , பாவிரி - பாக்கள் விரிந்த , இசைக்குரிய - இராகத்திற்கு ஏற்ற , பாடலொடுபயிலும் - பாடல்களைப் பாடும் . பரமர் - சிவபெருமானின் . பழமை எனலாம் - பழமையாகிய பதி என்று சொல்லலாம் . ( பழமை - பண்பாகுபெயர் ) காவிரி . நுரைத்து - நுரையையுடையதாகி . இருகரைக்கும் - இருபாலும் உள்ள ஆற்றங்கரைச் சோலைகளில் . மணிசிந்த - இரத்தினங்களைச் சிதற ( அதற்கு அஞ்சி மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறை ). வண்டு கவர - வண்டுகள் கவர்ந்துண்ணுமாறு . மா - மரங்களில் . விரி - விரிவாகத் தொடுக்கப்பட்ட . மது - தேன் . இறால் ( தேன்கூடு ) கள் கிழிய - கிழியும்படி , மந்தி குதிகொள்ளும் - குரங்குகள் குதித்துப்பாயும் . மயிலாடுதுறை . காவிரி மணி சிதற , ( அஞ்சி ) மந்தி குதிகொள்ள ( அதனால் ) மரக்கிளைகள் மோதி இறால்கிழிய - அதை வண்டுகள் கவர்ந்துண்ணும் வளம்மிக்க மயிலாடுதுறை என்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

கடந்திகழ் கருங்களி றுரித்துமையு மஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழு மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாம்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் மதம் பொருந்திய கரிய யானையின் தோலை உரித்து உமாதேவி அஞ்சுமாறு போர்த்திக் கொண்டவர் . மனத்தால் எண்ணுதற்கு அரியவர் . பகைவர்கட்குக் கேடு விளைவிக்கும் மூவிலைச் சூலம் கொண்டவர் . வேதங்களை அருளிச் செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர் . அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது ஒளிர்கின்ற மேனியும் , கொவ்வைப் பழம் போல் அழகிய சிவந்த வாயும் கொண்ட தேவமகளிர் நீரைக் குடைந்து ஆடுவதால் நீர் நறுமணம் கமழும் சிறப்புடைய திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கடந்திகழ் - மதம் மிகுந்த . கருங்களிறு - கரிய யானையை . உரித்து நோக்கு அரியராய் - அரிய அழகு உடையராய் , விடம் திகழும் - விடம் பூசிய . மூவிலை நல்வேல் உடைய - நல்ல மூன்று இலை போலும் வேலையுடைய . வேதியர் - வேதத்தின் பொருளாய் உள்ள சிவபெருமான் . கிடந்தது - மேனியில் தங்கியதாகி , ஒரு - ஒப்பற்ற , சோதி - ஒளி , தொடர்ந்து - பற்றி . ஒளிர் பிரகாசிக்கின்ற , தொண்டை - கொவ்வைப் பழத்தின் . மிகுஎழில் - மிகுந்த அழகைக் கொண்ட . துவர்வாய் - சிவந்த வாயையுடைய . மடந்தையர் - தேவ மகளிர் . குடைந்தபுனல் - நீராடிய தண்ணீர் . மிகநாறும் ( மிகவாசனை ) மணக்கும் . மயிலாடுதுறை ( உடலில் ) சோதியுடைய மடந்தையர் என்றமையால் - தேவ மடந்தையரென்றும் , அவர் ஆடுவதால் - புனல் முன்னையினும் மணம் மிக்கதென்றும் பொருள் கொள்ளக்கிடக்கின்றது . மூவிலைய வேல் - சூலம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

அவ்வதிசை யாருமடி யாருமுள ராகவருள் செய்தவர்கண்மேல்
எவ்வமற வைகலு மிரங்கியெரி யாடுமெம தீசனிடமாம்
கவ்வையொடு காவிரி கலந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கிமண நாறுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

அந்தந்தத் திக்குகளிலுள்ள எல்லா அடியவர்களும் நல்ல வண்ணம் வாழும் பொருட்டு அருள்செய்து , அவர்களுடைய வினைகள் நீங்க நாள்தோறும் இரங்கித் தீயேந்தி ஆடுகின்ற எம் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஆரவாரத்தோடு வரும் காவிரி - மணமிக்க மல்லிகை , மாதவி முதலான மலர்களைத் தள்ளிவர நறுமணம் கமழும் அதன் தென்கரையிலுள்ள திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அவ்வதிசையாரும் - ( அவ் . அ . திசையாரும் ). அந்தந்தத் திக்குகளில் உள்ள ஏனைமாந்தரும் . உளர் ஆக - நன்றாக வாழும் பொருட்டு , அவர்கள்பால் உள்ள . எவ்வம்அற - வினைகள் நீங்க . வைகலும் - நாடோறும் . இரங்கி அருள்செய்து , எரி ஆடும் - அக்கினியில் ஆடுகின்ற . எமது ஈசன் இடமாம் . கவ்வையொடு கலந்து காவிரி வரும் தென்கரையில் கமழ்பூ மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறை எனக் கூட்டுக . கவ்வை - ஆரவாரம் . மவ்வல் - முல்லை . மாதவி - ஒரு வகை மரவிசேடம் . மடங்கி - கலந்து . நிரந்து - பரவி . அவ்வத்திசை - சந்தம் நோக்கி வலிமிகாதாயிற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினொ டிருபதுதொ ணெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேல்
கலங்கனுரை யுந்தியெதிர் வந்தகய மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரி நிரந்துபொழி கின்றமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணனின் பத்து முடிகளையும் , இருபது தோள்களையும் நெரியும்படி தன்காற் பெருவிரலைக் கயிலைமலையில் ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள்புரிந்தவர் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , கலங்கலோடு நுரையைத் தள்ளி , எதிரேயுள்ள குளத்தில் பாய்ந்து அங்குள்ள மணமிக்க மலர்களை அடித்துக் கொண்டு களிப்புடன் சுழித்து வருகின்ற காவிரியாறு பாய்வதால் வளமிக்க திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

( இலங்கை நகர் மன்னன் முடியொருபதினொடு இருபது ) தோள் நெரிய - தோள்கள் அரைபடும்படி . விலங்கலில் - கைலைமலையில் . அடர்த்து - நெருக்கி , அருள்புரிந்தவன் . வினவுதிர்களேல் - கேட்பீர்களேயானால் , கலங்கல் நுரை உந்தி - கலங்கலோடு நுரையைத் தள்ளி . எதிர் வந்த - எதிரேயுள்ள . கயம் மூழ்கி - குளத்தில் பாய்ந்து , மலர்கொண்டு - அங்குள்ள மலர்களை அடித்துக்கொண்டு , ( அதனால் ) மகிழ்ந்து , மலங்கி வரு - சுழித்து வருகின்ற , காவிரியாறு , நிரந்து - பரவி . பொழிகின்ற - வளம் கொழிக்கின்ற , மயிலாடுதுறை . வந்த - உள்ள என்னும் பொருள் தந்து நின்றது . ` வான் வந்த தேவர்களும் மாலயனோடிந்திரனும் ` என்புழிப்போல ( தி .8 திருவம்மானை . 4). தோள் - இசை நோக்கிக் குறுக்கல் விகாரமுற்றது . மேல்வீழிமிழிலைப் ( தி .3 ப .85) பதிகத்தும் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

ஒண்டிறலி னான்முகனு மாலுமிக நேடியுண ராதவகையால்
அண்டமுற வங்கியுரு வாகிமிக நீண்டவர னாரதிடமாம்
கெண்டையிரை கொண்டுகெளி றாருட னிருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டன்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

மிகுந்த வலிமையுடைய பிரமனும் , திருமாலும் தேடியும் உணரமுடியாவண்ணம் , ஆகாயம்வரை அளாவி நெருப்புப் பிழம்பாய் நீண்டு நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , கெண்டைமீனை இரையாக உண்டு , கெளிறு , ஆரல் முதலிய மீன்கள் விளங்குகின்ற ஆற்றின் கரையிலுள்ள நாரை , தண்ணீர் அறுத்தலால் உண்டான வண்டல் மண்ணைக் கிளறி விளையாடும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஒண்திறலின் - மிக்க வலிமையுடைய . நான்முகனும் , மாலும் , மிகநேடி - மிகவும்தேடி , உணராத வகையால் - அவர்கள் அறியாத வண்ணம் , அண்டமுற - ஆகாயமளவும் , அங்கி உருவாகி - நெருப்பின் வடிவாகி , ( மிக நீண்ட ) அரனாரது இடமாம் - சிவபெருமானது இடமாகும் . மடநாரை - இளம் நாரைகள் . கெண்டை இரை கொண்டு - கெண்டை மீனை இரையாக உண்டு , கெளிறு ஆர் உடன் இருந்து - கெளிற்று மீன்களோடும் ஆரல் மீன்களோடும் இருந்து , கிளர் - விளங்குகின்ற . வாய் - கரையினிடத்தில் . அறுதல்சேர் - தண்ணீர் அறுத்தலால் உண்டாகிய . வண்டல் மணல் - வண்டல் மணலை . கெண்டி - கிளறி - விளையாடும் மயிலாடுதுறை . வாய் - ஆற்றோரம் ` காவிரியதன் வாய்க்கரை ` என்ற சுந்தரமூர்த்திகள் தேவாரத்தாலும் அறிக . ( நமச்சிவாயத் திருப்பதிகம் ) ஆற்றோரம் தண்ணீரறுக்காமல் கட்டப்படும் அணையை - வாய்க்கணை , வாய்கணை . வாகணை என வழங்குப .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

மிண்டுதிற லமணரொடு சாக்கியரு மலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை திளைக்கமது வந்தொழுகு சோலைமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

துடுக்காகப் பேசுகின்ற சமணர்களும் , புத்தர்களும் பழித்துக்கூற , அவர்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட ஆற்றலுடையவனும் , இண்டைமாலை சூடிய சடைமுடி உடையவனுமான எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , தெள்ளிய அலைகள் உடன் பாயும் காவிரியாற்றின் தென்கரையில் மணமிக்க பூக்களில் வண்டுகள் மூழ்கியுண்ண , தேன் வெளிப்பட்டு ஒழுகுகின்ற சோலைகளையுடைய அழகிய திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மிண்டுதிறல் - ஏமாற்றுகின்ற வலிமை மிக்க , ( அமணர் ஒடு ) சாக்கியரும் புத்தரும் . அலர்தூற்ற - பலரும் அறியும்படி , பழிக்க . மிக்க திறலோன் - அவர் அறிவுக்கு மேற்பட்ட ( எட்டாத ) வலிமையுடையோன் . இண்டை குடிகொண்ட - இண்டை மாலை குடி கொண்ட ( சடையையுடைய எங்கள் பெருமான் அது இடம் .) தெண் திரை பரந்து ஒழுகு - தெள்ளிய அலைகள் பரவி ஓடிவருகின்ற . காவிரிய - காவிரியினுடைய , ( தென்கரை ) நிரைந்து - நிரம்பி , கமழ்பூ - மணக்கின்ற மலர்களில் , வண்டு அவை - வண்டுகள் திளைக்க - மூழ்கியுண்ண . மது - தேன் , வந்து - வெளிப்பட்டு , ஒழுகுகின்ற சோலை சூழ்ந்த மயிலாடு துறை . ஒழுகு - ( காவிரி ) நேர்மையாய் ஓடிவருகின்ற , ஒழுகு - நேர்மை . ( தொல் - சொல் . உரி . )

பண் :சாதாரி

பாடல் எண் : 11

நிணந்தரு மயானநில வானமதி யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம் பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் வார்பெறுவர் பொன்னுலகமே.

பொழிப்புரை :

இறந்தார் உடலின் கொழுப்புப் பொருந்திய சுடுகாட்டில் , பூவுலகிலும் , வானுலகிலும் உள்ள வீரர் எவரையும் பொருட்படுத்தாத சிறப்புடைய சூலப்படையோடு , பேய்க்கூட்டங்கள் தொழ , பிரமகபாலத்தை ஏந்தியுள்ள சிவபெருமானின் திருவடிகளை வணங்கி மிக்க அன்புடன் , நறுமணமும் , குளிர்ச்சியும் பொருந்திய சீகாழியில் அவதரித்த வேதங்களின் உட்பொருளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் , திருமயிலாடுதுறையைப் போற்றிப் பாடிய இத் தமிழ்ப்பாக்கள் பத்தினையும் இசையோடு பாடுகிறவர்கள் சொர்க்கலோகம் அடைவர் .

குறிப்புரை :

நிணந்தரு - இறந்தார் உடவின் கொழுப்புப் பொருந்திய , மயானம் - சுடுகாட்டில் , நிலம் , வானம் , மதியாததொரு சூலமொடு - பூவுலகிலும் , வானுலகிலும் உள்ள வீரரெவரையும் பொருட்படுத்தாததாகிய ஒரு சூலத்தோடு , பேய்க்கணம் தொழு - பேய்க்கூட்டம் தொழும் கபாலி . பிரமகபாலத்தை ஏந்தும் சிவ பெருமானது - கழல் ஏத்தி - திருவடியைத் துதித்து , மிக வாய்த்ததொரு காதன்மையினால் - மிகப் பொருந்திய ஒப்பற்ற அன்பினால் , மணம் தண் மலிகாழி - மணமும் குளிச்சியும் மிகுந்த சீகாழியில் ( அவதரித்த ) மறை - வேதங்களை உணர்ந்த . ஞானசம்பந்தன் - ( மயிலாடுதுறையில் புணர்ந்த தமிழ் ;) இசையால் உரை செய்வார் - இசையொடு பாடுகிறவர் . பொன்னுலகமே பெறுவார் - சொர்க்கலோகமே அடைவார்கள் . புணர்ந்த பிறவினை விகுதி குன்றியது .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும்வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு மீசனிடமாம்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிக ளூறிவயல் சேறுசெயும் வைகாவிலே.

பொழிப்புரை :

சிவனைத் தவிர வேறு பற்றுக்கோடில்லாத ஏழையடியவர்கள் , கோழை பொருந்திய கழுத்து உடையராயினும் , பாடும் கவிகளைப் பொருளுணரும்படி நிறுத்திப் பாடாவிடினும் , தங்களால் இயன்ற இசையில் , பக்தியுடன் பாடுகின்ற பாடல்கள் எவையாய் இருந்தாலும் , அவற்றிற்கு மகிழ்கின்றவன் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தென்னை மரத்தின் முற்றிய காய்கள் கமுக மரத்தில் விழ , அதன் வரிசையான குலைகள் சிதறி வாழைக்குலையில் விழ , அவ்வாழை மரங்களினின்றும் உதிர்ந்து வீழ்கின்ற கனிகள் வயலில் ஊறி அதனைச் சேறாகச் செய்யும் வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கோழை மிடறு ஆக - கோழைபொருந்திய கண்டம் ஆயினும் . கவிகோளும் இலவாக - பாடும் கவிகள் பொருள் கொள்ளும்படி நிறுத்திப் பாடுதலும் இல்லனவாயினும் , கூடும் வகையால் இசை - இசை இயன்ற அளவில் , ( ஏழை அடியார் அவர்கன் ) யாவை சொன்னசொல் - தன்னை அன்பினால் பாடின பாடல்கள் எவையாய் இருந்தாலும் . மகிழும் - அவற்றிற்கு மகிழ்கின்ற ( ஈசன் இடமாம் ) தாழை - தென்னைமரத்தின் . இளநீர் முதியகாய் - இளநீர்முற்றிய நெற்றுக்கள் . கமுகில் - கமுகமரத்தில் ( வீழ ) நிரைதாறுசிதறி - வரிசையான குலைகள் சிதறி ( வாழைக்குலையில் வீழ ) வாழை - அவ்வாழைமரங்களினின்றும் . உதிர்வீழ் - உதிர்ந்து வீழ்கின்ற கனிகள் . வயல் ஊறி - வயலில் ஊறி . சேறுசெய்யும் - அதனைச்சேறாகச் செய்கின்ற . திருவைகாவில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகவெழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில் வைகாவிலே.

பொழிப்புரை :

வானளாவிய பெரிய மேருமலையை வில்லாகவும் , அக்கினியைக் கணையாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு , பகையசுரர்களின் அழகிய முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , தாமரை மலர்களில் வண்டுகள் புகுந்து தேனுண்டு விளையாடி , வயல்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள குளங்களிலும் தேனுண்ட மகிழ்ச்சியில் இசைபாட , அதற்கேற்ப அழகிய குயில்கள் கூவுகின்ற சோலைகளையுடைய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அண்டம் உறு - ஆகாயத்தை அளாவிய . மேருவரை - மேருமலை ( வில் ). அங்கி - கணை . அக்கினி - அம்பு . அரவு - ( அது ) பாம்பு . நாண் ( ஆக ) விண்டவர்தம் - பகைவர்களாகிய அசுரர்களின் . எழில் ஆர் முப்புரம் - அழகிய திரிபுரங்களையும் . எரித்த - எரியச் செய்த . விகிர்தன் - சிவபெருமான் . ( விரும்பும் இடம் ). வண்டு - வண்டுகள் . புண்டரிக மாமலர்கள் புக்கு விளையாடும் - சிறந்த தாமரை மலர்களில் புகுந்து விளையாடும் . வயல் - வயல்களிலும் . சூழ் - அவை சூழ்ந்த . தடம் - தடாகங்களில் எல்லாம் . இன்இசை பாட - இனிய சுதியைப்போல் பாட . அழகு ஆர் குயில் - அழகு மிகுந்த குயில்கள் . மிழற்று - அவற்றிற்கேற்பப் பாடுவதைப் போலக் கூவுகின்ற . பொழில் - சோலைகள் உடைய . ( வைகாவிலே ).

பண் :சாதாரி

பாடல் எண் : 3

ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்தவடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்க டோறுமழகார்
வானமதி யோடுமழை நீண்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.

பொழிப்புரை :

மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்களால் செய்யப்படும் குற்றங்கள் இல்லாதவர்களாய் , நல்ல தவத்தை மேற்கொண்டு , பதிநூல்களை நன்கு கற்று , கேட்டுத் தெளிய உணர்ந்த அடியார்கள் ஞானத்தால் வணங்க , நாடோறும் அருள்செய்ய வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நல்ல வயல் வளமும் அழகிய சந்திரனைத் தொடும்படி ஓங்கியுயர்ந்த மதில்களும் , மழைதரும் மேகங்கள் தவழும் சோலைகளும் விளங்குகின்ற திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஊனமிலராகி - யாதொரு குற்றமும் இல்லாதவராய் . நல்தவம் - நல்ல தவத்தை மேற்கொண்டு . மெய் - உண்மை நூல்களைக் கற்று , ( கேட்டு ), ( அவை உணர்ந்த அடியார்கள் ) ஞானம் மிக . நின்று தொழ - நின்று வணங்க , நாடோறும் அருள் செய்ய வல்ல நாதன் இடமாம் . ஆன வயல் - பொருந்திய வயல்களில் . மல் - ( மல்லல் ) வளங்கள் . சூழ்தரும் - நிறைந்திருக்கும் . சூழியருகு - நீர் நிலைகளின் பக்கங்களிலும் . பொழில்கள் தோறும் - சோலைகள் தோறும் . ( சந்திரனும் முகில்களும் ) வந்து . அணவும் - வந்து தவழும் வைகாவிலே .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது நீதிபலவும்
தன்னவுரு வாமெனமி குத்ததவ னீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போய்வகையி னான்முழு [ துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னவிரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

பொழிப்புரை :

சிவபெருமானை இன்ன உருவம் உடையவன் ; இன்ன நிறம் உடையவன் என்று உயிர்கள் தம் ஆன்ம போதத்தால் அறியமுடியாது . புண்ணியங்கள் பலவும் தனது உரு என்று சொல்லும்படி மிகுந்த தவக்கோலத்தை உடையவன் . அப்பெருமான் அருளோடு வீற்றிருந்தருளும் இடம் , முன்னை வினைகளெல்லாம் நீங்க , அவனை வணங்கும் நெறிகளை முறைப்படி முழுவதும் உணர்ந்து நிட்டைகூட முயல்கின்ற முனிவர்கள் காலை , மாலை என்ற இருவேளைகளிலும் சென்று தொழுது போற்றும் , வயல்வளம் பொருந்திய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இன்ன உரு - இன்னவடிவம் ( இன்ன நிறம் என்று ) அறிவதேல் அரிது - ஆன்மபோதத்தினால் அறிவதானால் அறிய முடியாது . நீதிபலவும் - பலவாகிய புண்ணியங்களெல்லாம் , ( தன்ன உருவு ஆண் என ) மிகுத்ததவன் - மிகுந்த தவக்கோலத்தையுடையவன் , நீதியொடு - அருளொடு . தான் அமர்வு இடம் - தான் விரும்புதலையுடைய இடமாகும் முன்னை வினை போய் - முற்பிறப்பில் செய்த வினைகள் நீங்க . வகையினால் - முறைமைப்படி முழுதுணர்ந்து - முழுவதும் அறிந்து , முயல்கின்ற - ( நிட்டை கூடுதற்கு ) முயல்கின்ற . முனிவர் - முனிவர்கள் . மன்ன - நிலைபெறும்படியாக . இருபோதும் - இருவேளையும் . மருவி - அடைந்து . தொழுதுசேரும் - தொழுது சேர்கின்ற , வயல் - வயல் வளம் பொருந்திய வைகாவில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கவழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில். வைகாவிலே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதியும் , ஓதுவித்தும் , வேள்விகள் பல செய்தும் , விதிப்படி ஆறு சமயநூல்களைக் கற்றும் , உணர்ந்தும் உள்ள பூவுலகதேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் தொழ அவர்கட்கு அருள்செய்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , சிறந்த தாழைகள் , புன்னை , புலிநகக்கொன்றை மிகுந்துள்ளதும் , மிக்க அழகுடைய மாதவிக் கொடிகள் நறுமணம் கமழவும் வண்டுகள் பல பாடவும் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததுமாகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வேதமொடு - வேதத்தைக்கற்றதோடு , பலவாயின வேள்வி - பலவாகிய யாகங்களையும் , மிகுந்து - மிகச்செய்து . விதி - விதிப்படி . ஆறு சமயம் - ஆறுசமய நூல்களையும் . ஓதியும் - கற்றும் . ( உணர்ந்தும் ) உள - உள்ள . தேவர்தொழ - பூ தேவர்களாகிய அந்தணர் ( தொழ ) மேதகைய - மேன்மை தங்கிய . கேதகைகள் - தாழைகளும் . புன்னையொடு ஞாழல் - புன்னைமரத்தோடு புலிநகக் கொன்றைகளும் . மிகுந்த அழகோடு கூடிய . மாதவி - மாதவிக்கொடிகளும் ( மணங்கமழ ) வண்டு பல பாடும் ( சோலைசூழ்ந்த வைகாவில் ).

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நஞ்சமுது செய்தமணி கண்டனமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவலோகனமர் கின்றவிடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழினிசை யெண்ணரிய வண்ணமுளவாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

பொழிப்புரை :

சிவபெருமான் நஞ்சை அமுது போன்று உட்கொண்டவன் . நம்மை ஆட்கொள்கின்ற ஞானமுதல்வன் . சிவந்த சடையிலே கங்கையை ஒளித்த சிவலோக நாயகனாகிய அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அழகிய தீபச்சுடருடன் , பிரணவம் முதலாகிய பஞ்சாட்சரத்தைப் பொருளுணர்ந்து உச்சரித்து , ஏழுசுரங்களோடு பாடும் தோத்திரப் பாடல்களைப் பாடி , எண்ண முடியாத விதத்தில் ஆடவர்களோடு மகளிர்கள் பலரும் தொழுது வணங்கும் , வயல்வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நஞ்சு - அமுதுசெய்த விடத்தை உண்டருளிய . மணிகண்டன் - நீலகண்டனும் , நமை - நம்மை . ஆளுடைய - ஆளாகவுடைய . ஞானம் - முதல்வன் . ஞானமே திருவுருவாகிய முதல்வன் . செஞ்சடையிடை - சிவந்த சடையினிடத்தில் . புனல்கரந்த - கங்கை நீரை ஒளித்த . சிவலோகன் - சிவலோக நாயகனுமாகிய சிவபெருமான் . அமர்கின்ற - தங்கும் ( இடமாம் ) அஞ்சுடரொடு - அழகிய தீப முதலியவற்றுடன் . ஆறுபதம் :- பஞ்சப்பிரம மந்திரங்கள் ஐந்தையும் , ஐந்தாகவும் , அங்க மந்திரம் ஆறினையும் ஒன்றாகவும்கொண்டு ஆறுபதம் என்றார் . இதற்கு வேறு பொருள் கூறுவாருமுளர் . ( பதம் - மந்திரம் ) ஏழிசை - ஏழுசுரங்களோடு பாடும் தோத்திரப் பாடல்களுடனும் . எண்ணரிய வண்ணம் உளவாய் - எண்ணமுடியாத விதம் உளவாக . மஞ்சரொடு - ஆடவர்களொடு ( மாதர் பலரும் ) தொழுது - வணங்கி . சேரும் - அடைகின்ற வயல்சூழ்ந்த திருவைகாவில் என்க . அஞ்சுடர் .... எண்ணரிய இவை குறிப்பாக இலக்கங்களை யுணர்த்துகின்றன . அதனால் இவை எண்ணலங்காரம் எனப்படும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையால்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதிகொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.

பொழிப்புரை :

நாள்தோறும் பக்தியோடு தோத்திரப் பாடல்கள் பாடி , ஞானமலர்களான கொல்லாமை , அருள் , ஐம்பொறி அடக்கல் , பொறை , தவம் , வாய்மை , அன்பு , அறிவு இவை கொண்டு தோள்களும் , கைகளும் கூப்பித் தொழுபவர்கட்கு அருள் செய்கின்ற சோதிவடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நீண்டு வளர்ந்த சோலைகளிலுள்ள தென்னைகளிலிருந்து முற்றிய நெற்றுக்கள் உதிர , அதனால் வாளைமீன்கள் துள்ளிப்பாய , அதனால் தேன்மணக்கும் மலர்கள் விரிய வயல்கள் சூழ்ந்த திருவைகாவூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

நாளும் - நாடோறும் . மிகுபாடலொடு - மிகுந்த பாடலொடு . ஞானமிகும் - சிவஞானமிக்க . நல்லமலர் - நல்ல மலர்களோடு . தோளினொடு கைகுளிர - தோளும் கையும் குளிரும் படியாக . தொழுமவர்க்கு - வணங்குகின்றவர்களுக்கு . அருள்செய் - அநுக்கிரகம் பண்ணுகின்ற . சோதி இடமாம் - ஒளிவடிவானவனது இடமாகும் . நீளவளர்சோலை தொறும் - உயரமாக வளர்ந்த சோலைகள்தொறும் . நாளிபல - தென்னை மரங்கள் பலவற்றில் . நின்றது - நின்ற தாகிய . துன்றுகனி - அடர்த்தியான நெற்றுக்கள் . உதிர - உதிரும்படி , வாளை - வாளைமீன்கள் . குதிகொள்ள - துள்ளிப்பாய , ( அதனால் ) மதுநாற - தேன் மணக்கும்படி . மலர் விரியும் - மலர்கள் விரிகின்ற , வயல் - வயல்கள் சூழ்ந்த , வைகாவிலே .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடனெ ரித்தவழ கன்றனிடமாம்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.

பொழிப்புரை :

இருபது கைகளும் , வலிமையான உடம்பும் துன்புறும்படி பெரிய கயிலைமலையைப் பெயர்த்த தீயோனான இராவணனின் பத்துத் தலைகளையும் ஒருங்கே நெரித்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இவ்வையகத்திலுள்ள அடியவர்கள் பலர் கையில் மலர் கொண்டு , காலையும் , மாலையும் தியானித்து , பக்தியுடன் பலவிதத் தோத்திரங்களைப் பாடி வணங்கிப் போற்றுகின்ற அழகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

விலங்கலை ( கயிலை ) மலையை ( எடுத்த ) கடியோன் - தீயோனாகிய இராவணன் , ( கை இருபதோடும் ) மெய் - உடம்பு . கலங்கிட - குழம்ப . ஐஇருசிரங்களை - பத்துத் தலைகளையும் , ஒருங்கு உடன் - ஒருசேர . நெரித்த - அரைத்த . ( அழகன் தன் இடம் ஆம் ) வையகம் எல்லாம் - உலகம் முழுவதும் . மருவி - வந்து தங்கி . ந ( ல் ) ல காலையொடு - அதிகாலை வேளையிலும் . மாலை - மாலை வேளையிலும் . கருதி - தியானித்து , ( கையில் மலர் கொண்டு ) பல விதம் நின்று தொழுது ஏத்து - பலவிதமாக நின்று தொழுது துதிக்கும் . எழில் - அழகினையுடைய , வைகாவில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

அந்தமுத லாதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மானிறைவ னென்றுதொழ நின்றருள்செ யீசனிடமாம்
சிந்தைசெய்து பாடுமடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.

பொழிப்புரை :

இவ்வுலக ஒடுக்கத்திற்கும் , தோற்றத்திற்கும் நிமித்த காரணனான சிவபெருமான் , பிரமனும் , திருமாலும் தங்கள் செருக்கொழிந்து ` எம் தந்தையே ! தலைவனே ! இறைவனே ` என்று தொழுது போற்ற அவர்கட்கு அருள் செய்துவீற்றிருந்தருளும் இடமாவது , சிந்தித்துப் பாடும் அடியார்களும் , தன் மேனியிலே திருநீற்றைப் பூசியுள்ள தொண்டர்களும் நறுமணம் கமழும் மலர்களை ஏந்தி , வழிபடுவதற்கு ஒருவரையொருவர் முந்துகின்ற , நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும் .

குறிப்புரை :

அந்தம் ( இறுதியாம் எவற்றிற்கும் ) இறுதியானவனும் . முதல் ஆதி - முதலாம் எவற்றிற்கும் முதலானவனும் . பெருமான் - பெருமையையுடையவனும் . அமரர்கோனை - தேவர் தலைவனும் ஆகிய இறைவனை . ( அயனும் மாலும் இவர்கள் ). எந்தைபெருமான் - எமது தந்தையாகிய தலைவனே . இறைவன் - கடவுளே . ( என்று தொழ நின்று ). அருள்செய் - அவர்களுக்கு அருள்புரியும் ( ஈசன் இடம் ஆம் ) சிந்தைசெய்து - சிந்தித்து . ( பாடும் அடியார்களும் ). பொடி - திருநீற்றை . மெய்பூசி - உடம்பிற் பூசிக்கொண்டு . எழுதொண்டர் - வருகின்ற தொண்டர்களும் வந்து - பல சந்தம் மலர் - பலவித மலர்களைக் கொண்டு . முந்தி - ஒருவரின் ஒருவர் முற்பட்டு . அணையும் - சேரும் . பதி - தலம் , நல்வைகாவில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

ஈசனெமை யாளுடைய வெந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடம்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.

பொழிப்புரை :

சிவபெருமானை எம்மை ஆட்கொள்ளும் தந்தை , தலைவன் , இறைவன் என்று போற்றுதல் செய்யாத சமணர்கள் , புத்தர்கள் இவர்களின் சித்தத்தில் புகாத அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , எல்லா தேசத்தாரும் கூடிநின்று போற்ற , நிலைத்த புகழுடைய அப்பெருமானை நறுமணமிக்க நல்மலர்களைத் தூவி வழிபட நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும் .

குறிப்புரை :

பேசுதல் செயா - பேசாத , சித்தம் அணையா - மனத்திற் புகுதாத . அவனது - அத்தகையானது . ( இடம் ) தேசம் அது எலாம் - எல்லாத் தேசத்தினரும் , மருவிநின்று - பொருந்திநின்று , பரவி - துதித்து , திகழ நின்ற புகழோன் - புகழ் நிலைத்து விளங்குவோனாகிய சிவபெருமானை . வாசமலரான பல தூவி - வாசமிக்க பல மலர்களைத் தூவி ( ஆன சொல்லுருபு ) அணையும் - வந்து சேரும் பதியாகிய , நல்வைகாவில் , தேசமது எலாம் மருவிநின்று பரவி வாசமலரான பல தூவித் திகழநின்ற புகழோனையணையும் பதியெனக் கூட்டுக . ஆன - பூசைக்குரியவாகிய எனினும் ஆம் . ` பூத்தேர்ந் தாயன கொண்டு ` என முன்வந்தது . பல வகையான மலர் என்றும் கொள்க . அது ` பரந்து பல்லாய் மலர் இட்டு ` என்னும் திருவாசகக் ( தி .8) கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை காவிலதனைச்
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனு ரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ ருருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.

பொழிப்புரை :

முழுவதுமாய் நம்மை ஆட்கொண்ட முக்கண்ணுடைய முதல்வனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவைகாவில் என்னும் திருத்தலத்தைப் போற்றி , தன்னையடைந்தோர் வினைகளை அழிக்கும் சிரபுரத்தில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் உருத்திரர்களாகிச் சிவலோகத்தில் முத்தியின்பத்தில் இருந்து பிரியாது புகழுடன் வாழ்வர் .

குறிப்புரை :

செற்ற - மிகுத்த . ம ( ல்ல ) லின் - வளங்களால் , ஆர் - நிறைந்த ( செற்ற - தன்னையடைந்தோர் வினைகளை அழித்த , எனினும் ஆம் .) சிரபுரத்தலைவன் - சீகாழித் தலைவராகிய , ஞானசம்பந்தர் , உருத்திரர் எனப்பெற்று அமரலோக மிக உருத்திரர் ஆகி சிவலோகத்தில் . பெரும் புகழோடு - பெரிய புகழ்ச்சிக் குரியதாகிய முத்தியின்போடு , பிரியார் - நீங்காதவராகி மிக வாழ்வார் என்க . அமரன் - ( சாவாதவன் ) சிவபெருமான் ஒருவர்க்கேயுரியது . ` செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று , பத்தி செய் மனப்பாறைகட்கேறுமோ ` என்பதும் ` சாவா மூவாச் சிங்கமே ` என்பதும் அப்பமூர்த்திகள் திருவாக்கு . ( திருக்குறுந்தொகை : திருத்தாண்டகம் ). ஆகையால் அமரலோகம் என்பது சிவலோகத்தைக் குறிக்கும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

பொழிப்புரை :

நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும் , ஆடலுமாகிய ஓசை விளங்க , மேகத்தைத் தொடும்படி நீண்ட கொடிகளும் , உயர்ந்த மாடமாளிகைகளும் , அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான் . நறுமணம் கமழும் கொன்றை மலரும் , கங்கையும் , பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும் .

குறிப்புரை :

விங்கு விளைகழனி - இஞ்சி விளையும் கழனியிலே , மிகு கடைசியர்கள் - மிக்க பள்ளத்தியர்கள் , பாடல் விளையாடல் - பாடலும் விளையாடலுமாகிய , அரவம் - ஓசைகளையும் , மங்குலொடு நீள்கொடிகள் - மேகமண்டலம் வரை நீண்ட கொடிகளையுடைய . மலிமாடம் - நெருங்கிய மாடங்களையும் , நீடுபொழில் - நெடிய சோலைகளையும் உடைய , மாகறல் உளான் - திருமாகறலில் இருப்பவன் . கொங்குவிரி - வாசனை விரிகின்ற . வளர்திங்கள் - வளரக்கூடிய பிறைச் சந்திரனையும் . செங்கண்விடை அண்ணல் - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தையுமுடைய . சிவபெருமானது அடிசேர்பவர்களும் - திருவடியை இடைவிடாது நினைப்பவர்களுக்கு . தீவினைகள் - கொடியவினைகள் . தீரும் - நீங்கிவிடும் . ` பைங்கண்வெள் ளேற்றண்ணல் ` ( திருநள்ளாறு ) என்னாமல் செங்கண் விடையென்றதனால் திருமாலாகிய விடையென்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவி னெய்தியழகார்
மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வல னேந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.

பொழிப்புரை :

வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும் , பெண்களின் பாடல் , ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர , அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசைய செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . இலைபோன்ற அமைப்புடைய வேலையும் , கூர்மையான நுனியுடைய சூலத்தையும் , வலக்கையிலே ஏந்தி , நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும் .

குறிப்புரை :

கலையின் ஒலி - கலை கற்பவர்களின் ஒலியும் , ( மங்கையர்கள் பாடல் ஒலி . ஆடல் ( ஒலி ஆகிய இவ்வொலிகள் சேர்ந்து ) கவின் எய்தி - இனிமைதர . அழகு ஆர் மலையின் நிகர் மாடம் - அழகு பொருந்திய மலையையொத்த மாடங்களில் . உயர்நீள் கொடிகள் - மிக நீண்ட கொடிகள் . வீசும் - வீசுகின்ற . மலி - ( செல்வ வளத்தால் ) மிகுந்த . மாகறல் - உள்ளான் . இலையின் மலி - இலையைப் போன்ற வடிவையுடைய . வேல் - வேலையும் . நுனைய - கூரிய நுனியையுடைய . சூலம் - சூலத்தையும் . வலம் ஏந்தி - வலக்கையில் ஏந்தி . எரிபுன்சடையினுள் - நெருப்புப் போன்ற சிறிய சடையினுள் . அலைகொள்புனல் - அலைகளையுடைய கங்கைநீரை . ஏந்து பெருமான் - தரித்த சிவபெருமானது . அடியை ஏத்த - திருவடிகளைத் துதிக்க . வினைமிக அகலும் - வினை முற்றிலும் நீங்கும் . இலையின் மலி :- உவமவாசகம் ஆகலால் இன் என்பது சாரியை .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்க ளேத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

பொழிப்புரை :

துந்துபி , சங்கு , குழல் , யாழ் , முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து , அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி , அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான் . அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க , உடனே வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

துந்துபிகள் - சங்கு , குழல் , யாழ் , முழவு - இவ் வாத்தியங்களோடு . காமருவுசீர் - அழகிய சிறப்பினையுடைய . காலையொடு - காலையிலும் . மாலை - மாலையிலும் . வழிபாடு செய்து - பூசித்து . மாதவர்கள் - முனிவர்கள் . ஏத்தி - துதித்து . மகிழ் - மகிழ்கின்ற மாகறல் உளான் . தோலையுடை பேணி - தோலை ஆடையாக விரும்பி . ( அதன்மேல் ) ஓர் சுடர்நாகம் - ஒளி பொருந்திய பாம்பை . அசையா - கச்சாகக்கட்டி ; அழகிது ஆய் - அழகை யுடையதாக . பாலை அ ( ன் ) ன பாலையொத்த . நீறுபுனைவான் - திருநீற்றைப் பூசுபவராகிய சிவபெருமான் . ` பால்கொள் வெண்ணீற்றாய் ` என்பது திருவாசகம் ; அடிகள் ஏத்த - திருவடிகளைத் துதிக்க . உடனே வினை பறையும் - உடனே வினைநீங்கும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக ளுந்தியெழின் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக வேத்திவழி பாடுநுகரா வெழுமினே.

பொழிப்புரை :

ஒளிர்கின்ற முத்து , பொன் , மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும் , குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான் . அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக .

குறிப்புரை :

இங்கு - இஞ்சி முதலிய குறிஞ்சி நிலப் பொருள்களையும் . கதிர் - ஒளியையுடைய ( முத்தினொடு , பொன் , மணிகள் ) உந்தி - ( அடித்துக் கொண்டு வரும் ) நதியில் . ( உந்தி - பெயர் . இகரம் வினை முதற்பொருளில் வந்தது ) எழில்மெய் , ( எழில் ) உள் உடனே - அழகிய தோற்றப் பொலிவோடும் , அழகிய மனத்தோடும் . ( மனத்திற்கு அழகாவது ; தூய்மையுடைமை ). மங்கையர்களும் மைந்தர்களும் - மாதரும் ஆடவரும் . மன்னு புனல் ஆடி - நிலைபெற்ற நீரில்மூழ்கி . மகிழ் மாகறல் - மகிழ்கின்ற திருமாகறல் , உள்ளான் . நுங்கள் - உங்கள் . வினை நீங்கும்படி . வழிபாடு நுகரா - வழிபாடு செய்து . எழுமின் . மன்னுபுனல் என்றது அதனருகில் ஓடும் சேயாற்றினை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கணட மாடமலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து , இருள்நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன . நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன . அருகிலுள்ள , மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன . இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் வஞ்சமுடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான் . ஒப்பற்ற மழுப்படையை உடையவன் . நஞ்சையுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன் . அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா .

குறிப்புரை :

இருள் நீங்க - விடிய . துஞ்சும் நறும் நீலம் - குவியும் நறும் மணமுள்ள நீலோற்பலம் , ஒளிதோன்றும் ( கழனி ) இருட்டோடு இருளாய் இருந்த நீலோற்பலம் . விடிந்ததும் நிறம் விளங்கிக் காட்டுகிறது . ( வரம்பில் பல பூக்கள் மலர்வதால் ) மதுவார் கழனி தேன் சொரியும் ( கழனி ) கழனிவாய் - கழனிக்கருகிலுள்ள . மஞ்சுமலி - மேகங்கள் படிந்த . பூம் பொழிலின் - மலர்ச் சோலைகளில் . மயில்கள் நடம் ஆடல் - மயில்கள் நடித்தல் . மலி - மிகுந்த . மாகறல் உ ( ள் ) ளான் . வஞ்சம் - வஞ்சத்தையுடைய . மதயானை - மதஞ்சொரியும் யானையின் . உரி - தோலை , ( போர்த்து மகிழ்வான் ). ஓர் - ஒப்பற்ற . மழுவாளன் - மழு ஆயுதத்தையுடையவன் . ( வாள் சிறப்புப் பெயர் , பொதுப் பெயர் குறித்தது ). நஞ்சம் - நஞ்சம் உண்டதினால் . வளரும் இருள் - மிக்க இருளையுடைய . நாதன் - தலைவனாகிய சிவபெருமானின் , ( அடியாரை ). வினைநலியா - வினைகள் துன்புறுத்தமாட்டா .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.

பொழிப்புரை :

என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும் , பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ் சடையின்மேல் மலர்களையும் , கங்கையையும் , பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான் . அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க , உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர் .

குறிப்புரை :

பல்படிமம் - பல தவ வேடத்தையுடைய . மாதவர்கள் - முனிவர்கள் , இன்ன - இது போன்ற . வகையால் - விதங்களால் , ( இனிது ). இறைஞ்சி - வணங்கி , இமையோரில் எழு - நரை திரை மூப்புச் சாக்காடின்றி , வானவரைப்போல் தோன்றும் . மின்னை விரி புன்சடையின்மேல் - மின்னலைப்போல் ஒளியை விரிக்கின்ற சிறிய சடையின்மேல் - ( மலர்களும் கங்கையும் திங்களும் ). என - எனவரும் இவற்றை . உன்னுவார் - நினைப்போர் ; சொரூபத்தியானம் பண்ணுபவர்கள் . வினைகள் ஒல்க - வினைகள் ஒழிய . உயர் வானுலகம் ஏறல் எளிது . சைவ வேடம் , பஞ்சாட்சரசெபம் , சோகம் பாவனை முதலியன இன்னவகையாலெனக் குறிக்கப்பட்டவை . ` புன்சடை ....... மலர் திங்கள் என ` - எனவரும் இவற்றை என்றது ;- பாம்பு அணி , வெண்டலை மாலை , தோல் ஆடை முதலிய கோலத்தை .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சியடை யாவினைக ளகலுமிகவே.

பொழிப்புரை :

கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும் , இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே ! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன் . யாவர்க்கும் தலைவனான அப் பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும் .

குறிப்புரை :

வெய்யவினை நெறிகள் செல - கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும் - ` வந்த வழியே செல் ` என்பது உலக வழக்கு . வந்து அணையும் மேல் வினைகள் - ஆகாமியங்கள் ( பலவாய் ஈட்டப்படுவதால் பன்மையாற் கூறினார் .) வீட்டலுறுவீர் - ஒழிக்கத் தொடங்குகின்றவர்களே . மைகொள் - மேகங்கள் படிந்த . விரி - விரிந்த . கானல் - ஆற்றங்கரைச் சோலைகளின் . மதுவார் கழனி - தேன்மிகும் கழனிகளையுடைய . ( மாகறல் ) கானல் இப்பொருளிலும் வருவதைச் ` செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேரும் திருவையாறே ` என்றருளிச் செயலால் அறிக . ( தி .1. ப .130. பா .3.)

பண் :சாதாரி

பாடல் எண் : 8

தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்க ளோதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென வேத்தவினை நிற்றலில போகுமுடனே.

பொழிப்புரை :

பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப்பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத , பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன் . திருவெண்ணீற்றைப் பூசியவன் . அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும் .

குறிப்புரை :

பொன்மாடம்மிசை - பொன்மயமான மாடங்களின் மேல் கட்டிய . தூசு துகில் - வெள்ளாடையினாலாகிய . நீள்கொடிகள் - நெடிய கொடிகளே . மேகமொடு - கரிய மேகத்தோடு . தோய்வன - படிவனவாய் . மாசுபடுசெய்கை - மாசுபடுசெய்கை மிக . பிற மாசுபடு செய்கை இல்லாத - ( மாகறல் ) மிசையே . என்பதின் ஏகாரத்தைக் கொடிகளோடு கூட்டுக . ( மாதவர்கள் ) ஓதி - வேதங்களை ஓதிக்கொண்டு . மலி - திரள்கின்ற , மாகறல் உளான் . பாசுபத இச்சை - பாசுபத வேடத்தில் இச்சையையும் . வரி - நெடிய . நச்சரவு - ( நஞ்சு + அரவு ) விடப்பாம்பை . கச்சை உடை - கச்சையாக உடுத்தலையும் . பேணி - மேற்கொண்டவன் , ( இகரவிகுதி ஆண்பாலில் வந்தது . உடை : ( உடு + ஐ ) உடுஐ - உடுத்தலை , முதனிலைத் தொழிற்பெயர் , அணிதல் என்னும் பொது வினையாற் கூறற் பாலது . உடுத்தல் என வேறு வினையாற் கூறப்பட்டது . ( அழகு ஆர் பொடி பூசு ஈசன் என ஏத்த ). வினை - வினைகள் . இலபோகும் - இல குறிப்பு முற்றெச்சம் . பாசுபத வேடமாவது :- ` சவந்தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு , தலையோடு மயிர்க்கயிறு தரித்தான்றன்னைப் , பவந்தாங்கு பாசுபத வேடத்தானை ` என்னும் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தால் உணரப்படுவது .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே.

பொழிப்புரை :

தூய்மையான தாமரை , நெய்தல் , கழுநீர் , குவளை போன்ற மலர்கள் விரிய , அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன் . அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும் .

குறிப்புரை :

தூய - தூய்மையான . விரிதாமரைகள் - தாமரை மலர்களும் . நெய்தல் கழுநீர் குவளைதோன்ற - இம்மலர்களும் தோன்ற - விரிய ; ( மது உண்கின்ற ) பாய - பரந்த . வரி - கீற்றுக்களையுடைய ( பல வண்டுகள் ) பண் - பாடல்களை . முரலும் - இசைபாடும் . ஓசைபயில் - ஓசைமிகுந்த ( மாகறல் ) சாய - வலி குறையும்படி . விரல் ஊன்றிய - விரலால் அடர்க்கப் பட்ட . இராவணன் - இராவணனுடைய . தன்மைகெட - நிலைகுலைய நின்ற பெருமான் . ஆய - பொருந்திய . புகழ் - புகழை . ஏத்தும் - துதிக்கும் . அடியார் , வினை ஆயினவும் - வினை அனைத்தும் அகல்வது எளிது . ஆயின வினையெனக்கொண்டு - இப்பிறப்பில் ஈட்டிய ஆகாமிய வினைகளும் எனலும் ஆம் . அப்பொழுது உம்மை இறந்தது தழுவிற்றாம் . சாய்தல் :- உரிச்சொல் . இப்பொருட்டாதலைத் தொல்காப்பியம் உரியியற் சூத்திரம் (34) கொண்டறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.

பொழிப்புரை :

பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும் , நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும் , பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான் . உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும் , தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும் , அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா .

குறிப்புரை :

காலின் - திருவடிகளில் அணிந்த . நல - நல்ல . பைங்கழல் மேல் - பைம்பொன்னால் ஆன வீரகண்டையின் மேலும் . நீள் முடி - நீண்ட முடியின்மேல் . சிரசின்மேல் அணிந்த சந்திரன் முதலியவற்றின் மேலும் . உணர்வு - அறிதலில் . காமுறவினார் - விருப்பமுற்றவர்களாகிய . மாலும் மலரானும் - திருமாலும் , பிரமனும் . அறியாமை - அறியாதபடி . எரியாகி - நெருப்புப் பிழம்பாகி . உயர் - உயர்ந்த ( திருமாகறலில் உள்ளவன் ) நாலும் எரி - சிரிப்பு , நெற்றிக்கண் , கை , திருமேனிமுழுதும் ஆகிய நாலிடத்தும் நெருப்பும் . நாலும் - ( அளவையாகுபெயர் ஏழாம் வேற்றுமைத் தொகை .) உரியும் தோலும் , சட்டையுரிக்கின்ற நாகமும் ஆகிய இவற்றோடு பொருந்தி என்பது மூன்றாம் அடியின் பொருள் . உரிநாகம் - வினைத்தொகை . ஆலும் - அசைந்து நடக்கும் விடை . அடிகள் அடியாரையடையா வினைகளே - பெருமானின் அடியாரை வினைகள் அடையா .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின் மாகறலுளா னடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைக ளொல்குமுடனே.

பொழிப்புரை :

வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும் , நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன் , சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து , மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும் , நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும் , நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

கடைகொள் - வாயில்களையுடைய . நெடுமாடம் - நீண்ட மாடங்கள் . மிக ஓங்கு - மிகவும் உயர்ந்த . கமழ்வீதி - வாசனை கமழும் வீதிகள் . மலி - மிகுந்த . காழியவர் - சீகாழியில் உள்ளவர்களுக்கு . கோன் - தலைவனான ( திருஞானசம்பந்தன் ). அரனை அடையும் வகையால் - சிவ பெருமானைச் சேர்வதற்குரிய விதத்தால் . பரவி - துதித்து . அடிகூடு - திருவடியைப் பற்றுக்கோடாகச் சேர்ந்த ( சம்பந்தன் ). மடைகொள் - மடைகளில் தேங்கிய தண்ணீர் . ஓடும் - ஓடிப்பாய்கின்ற . வயல்களும் . கூடு - கூட்டமான . பொழில் - சோலைகளும் உடைய . மாகறல் உளான் . தொல்வினைகள் - பழமையான வினைகள் . ஒல்கும் - வலிகுறைந்து நீங்கும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

பாடன்மறை சூடன்மதி பல்வளையொர் பாகமதின் மூன்றொர்கணையால்
கூடவெரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.

பொழிப்புரை :

சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்து வேதப் பொருளாயும் விளங்குபவர் . பிறைச்சந்திரனைச் சூடியவர் . பல வளையல்களையணிந்த உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் . மதில்கள் மூன்றினையும் ஒரு கணையால் எரித்த வீர அழகைக் காட்டியவர் . நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில் , மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில் , திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . வேடநிலைக்கேற்ப நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப் போக்கி முத்திநெறி அருளவல்லவர் .

குறிப்புரை :

பாடல் மறை - பாடுவது வேதம் . சூடல்மதி - சூடுவது சந்திரன் . ஓர்பாகம் - ஓர்பாகத்தில் ( அமர்ந்திருப்பவர் ). பல்வளை - பல வளையல்களை அணிந்த உமாதேவியார் . மதில் மூன்று - திரிபுரங்களையும் . ஓர் கணையால் - ஓர் அம்பினால் . கூட எரியூட்டி - ஒருசேர நெருப்பை உண்ணச்செய்து . எழில்காட்டி - தனது வீரத்தின் அழகைக்காட்டி . ( சிரித்துப் புரம் எரித்ததை ) நிழல் கூட்டு பொழில் - நிழலைத் தரும் சோலை சூழ்ந்த . பழசையுள் - திருப்பழையாறையில் . மாடம் மழபாடி - மாடங்களையுடைய மழபாடியென்னும் பகுதியில் . உறை - தங்குகின்ற . பட்டிசரம் மேய - திருப்பட்டீச்சரத்தில் எழுந்தருளியுள்ள . கடிகட்டு அரவினார் - அரையில் கட்டிய பாம்பையுடையவர் . வேடநிலைகொண்டவரை - தமது வேடத்திற்கேற்ப ஒழுக்கத்தின் நிற்றலையுடைய அடியவரை . வீடுநெறிகாட்டி - அடைதற்குரிய முத்தி மார்க்கத்தையும் அறிவித்து . வினை வீடும் அவர் - அவர்களது கன்மங்கள் தாமே யொழியும்படி செய்ய வல்லவராவர் . பட்டீச்சரம் மே ( வி ) ய அரவினார் வினை வீடுமவராவர் என்க . பழையாறை - பெரிய நகரமாயிருந்த இடம் . இப்பொழுது அதன் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு பெயர்களால் வழங்குகின்றது . பட்டீச்சரம் கோயிலின் பெயராகவும் , இக்கோயிலிருக்கும் ஊரைப் பட்டீச்சரம் என இன்று வழங்குவர் . சம்பந்தப் பெருமான் காலத்தில் இவ்வூர் மழபாடியென வழங்கப்பட்டது . மழ நாட்டில் கொள்ளிட நதியின் வடகரையிலுள்ள மழபாடி என்னும் தலம் வேறு . கடி - இடக்கரடக்கல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

நீரின்மலி புன்சடையர் நீளரவு கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது வேந்தியுடை கோவணமு மானினுரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள் காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர மேத்தவினை பற்றழியுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் கங்கையைச் சடையில் தாங்கியவர் . நீண்ட பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . கூர்மையான இலைபோன்ற வடிவுடைய கொடிய சூலப்படையை ஏந்தியவர் . கோவண ஆடை அணிந்தவர் . மான் தோலையும் அணிந்தவர் . கார்காலத்தில் மலரும் கொன்றையை மாலையாக அணிந்தவர் . அத்தகைய கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் தலமாவது பூமியில் மிக்க புகழையுடைய திருப்பழையாறை ஆகும் . அங்குள்ள திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலிலுள்ள இறைவனைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும் .

குறிப்புரை :

நீரின்மலி புன்சடையர் - கங்கை நீரினால் நனைந்த புன்சடையை உடையவர் . நீள் அரவு கச்சை ( அது ) - அவர்கட்கும் கச்சையாவது நீண்ட பாம்பு . நச்சு இலையது ஓர் கூரின் மலிசூலம் ( அது ) ஏந்தி - நஞ்சு பூசிய இலை வடிவத்தையுடையதாகிய ஓர் கூரின் மிகுந்த சூலத்தினை ஏந்தினவர் . உடைகோவணமும் மானின் உரித்தோல் - உடையும் கோவணமும் மானினுடைய உரித்த தோல் . காரின்மலி கொன்றை விரிதார் - கார்காலத்தில் மிக மலரும் கொன்றை விரிந்த மாலையாகும் . கடவுள் - இத்தகைய கடவுள் . காதல்செய்து - விரும்பி . மேய - மேவிய . நகர்தான் - தலமாவது . பாரின் மலிசீர் - பூமியில் மிகுந்த புகழையுடைய . பழைசை - திருப்பழையாறையில் உள்ள . பட்டிசரம் - திருப்பட்டீச்சரத்தை . ஏத்த - துதிக்க . வினை - நமது வினைகள் , பற்று அழியும் - அடியோடு அழியும் . கொன்றை கார்காலத்தில் மலர்வதென்பதைக் ` கண்ணி கார்நறுங் கொன்றை ` என்னும் புறநானூற்றாலும் அறிக . - (1)

பண் :சாதாரி

பாடல் எண் : 3

காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமண நாறுபழை யாறைமழ பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி விண்ணுலக மாளுமவரே.

பொழிப்புரை :

பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய் , மாலையில் பூசை செய்வதால் வீதிகளிலெல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில் , தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக , மறுமையில் விண்ணுலகை ஆள்வர் .

குறிப்புரை :

காலை மடவார்கள் புனலாடுவது கௌவை - காலைவேளையில் தண்ணீர்த்துறைகளில் மகளிர் நீராடுவதால் உண்டாகும் ஓசையும் . மாலை - மாலைவேளையில் . கடி ஆர் - புதுமை மிகுந்த , மறுகு எலாம் - வீதிகளில் எல்லாம் . மணம் நாறும் - மணம் மணக்கும் ( ஓசையும் மணமும் என இருபுலன்களின் இனிமை கூறவே , ஏனையமூன்றும் : கண்ணுக்கினிய காட்சியும் வாய்க்கினிய சுவையும் , தென்றற்காற்றால் உடற்கினிய ஊறும் எக்காலத்தும் எவ்விடத்தும் நுகர்வர் எனப் ( பதிவளம் குறிப்பித்தவாறு ). பழையாறை மழபாடி - பழையாறை என்னுந் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில் . அழகாய - அழகாகிய . மலிசீர் - மிக்க சிறப்புடைய , பாலையன நீறுபுனை பாலையொத்த திருநீற்றை யணிந்த , மார்பனுறை பட்டிசரமே பரவுவார் - மார்பினை உடையவராகிய சிவபெருமான் தங்கும் பட்டீச்சரம் என்னும் கோயிலைத் துதிப்போர் ( இம்மையில் மேலை மேன்மை தருவனவாகிய செல்வங்கள் ) மால்கடல்கள்போல் பெருகி - வளரப்பெற்று ( மறுமையில் ) விண்ணுலகம் - சொர்க்கலோகத்தை . ( ஆளுமவர் ) தொன்மை - தொல்லை யென்று வருவதுபோல் , மேன்மை - மேலையென்றாகிப் பண்பாகுபெயராய்ச் செல்வத்தை யுணர்த்தி நின்றது .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட வாடவல பான்மதியினான்
மண்ணின்மிசை நேரின்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழுமிமை யோரொடுட னாதலது மேவலெளிதே.

பொழிப்புரை :

சிவபெருமானின் கண்களை உமாதேவி பொத்த , அதனால் அரும்பிய வியர்வையைக் கங்கையாகச் செஞ்சடையில் தாங்கியவன் . அப்பெருமான் பண்ணிசைகளோடு பாடல்களைப் பாடவும் , ஆடவும் வல்லவன் . பால் போன்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடியவன் . அப்பெருமான் மண்ணுலகில் ஒப்பற்ற பெருமையுடைய திருமழபாடி என்னும் தலத்தில் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் . அவனைப் போற்றி வணங்குபவர்களுக்கு விண்ணுலகிலுள்ள தேவர்களுடன் வாழ்வது எளிதாகும் .

குறிப்புரை :

கண்ணின்மிசை - தமது கண்களின் இடத்தில் . நண்ணி - ( உமாதேவியாரின் கரங்கள் ) சேர்ந்து ( மறைத்ததால் அக் கரங்களின் அரும்பிய வியர்வை நீர் ) முகம் - ( பரவிய ) ஆயிர முகங்களையும் . இழிவிப்ப - ஓர் திவலையாகச் சிறுகுவித்துச் சடையின் ஓர் உரோமத்தில் தாங்க . ஏத்து - ( அதன் பிரவாகத்தால் உலகமழியாமைக் காத்தருளிய திறனைப் பிரமன் முதலியோர் ) துதிக்கப்பெற்ற ( செஞ் சடையினான் ). கமழ் - ( அடியார் புனைந்த மாலைகளால் ) மணம் வீசும் ; செஞ்சடையினான் . பண்ணின் மிசை - இசைவழியே பொருந்தி . பலபாணிபட - பல தாள ஒத்துக்களும் பொருந்த . ஆடவல - ஆடவல்ல . பான்மதியினான் - வெண்மையான சந்திரனை அணிந்தவன் . மண்ணின்மிசை நேர் இல் - பூமியில் தனக்குச் சமானமில்லாத . மழபாடி - மழபாடி என்னுந் தலத்தில் . மலி - தங்கிய . பட்டிசரமே மருவுவார் - பட்டீச்சரத்தையே பற்றாக அடைவோர் . விண்ணின்மிசை வாழுமிமையோரொடு உடன் ஆதல் அது - வான் உலகில் வாழும் தேவருடன் வாழ்வதாகிய அத்தகைமை . மேவல் - அடைவது . எளிது - அவர்களுக்கு ஓர் அரியதன்று . அதனினும் மிக்க சிவலோகத்தில் வாழ்வர் என்பது குறிப்பெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கவரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை யஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கடொழ வுள்ளமுடை யாரையடை யாவினைகளே.

பொழிப்புரை :

முழவு முதலிய வாத்தியங்கள் அதிர்ந்து ஒலிக்க , திருமழபாடி என்னும் திருத்தலம் கோயில் உற்சவங்களாலும் , விழாக் களியாட்டங்களாலும் ஓசை மிகுந்து விளங்குகின்றது . மலை உள்ளதால் பருவகாலத்தில் மழை பொழிய , வளம் மிகுந்து , கண்டவர் மனத்தைக் கவர்கின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் படர்ந்த செஞ்சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் அஞ்சத்தக்க மதயானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு உரித்துப் போர்த்துக் கொண்டவன் . வெண்ணிற இடபத்தை வாகனமாகக் கொண்டவன் . நெருப்புப்போன்ற சிவந்த திருமேனியுடைய அச்சிவபெருமானின் திருவடிகளை உள்ளம் ஒன்றித் தொழுபவர்களை வினையால் வரும் துன்பம் சாராது .

குறிப்புரை :

மரு ( வு ) வ - பொருந்தியனவாகிய , முழவு - முழவு முதலிய வாச்சியங்களோடு . மலி மத்தம் - விழாக்களியாட்டுக்கள் மிகுந்த . விழவு - உற்சவத்தால் எழும் ஓசைகள் . ஆர்க்க - ஆரவாரிக்க . வரை ஆர் - மலையின் கண்தங்கிப் பொழிகின்ற . பருவம் மழை - பருவகாலத்திற் பெய்யும் மழையால் உண்டாகிய . பண் ( பு ) - வளங்கள் . கவர்செய் - கண்டார் மனத்தைக் கவர்கின்ற , ( பட்டீச்சரம் மே ( வி ) ய , படர்ந்த ) புன்சடையினான் - புன்சடைகளையுடையவனும் . விடையினான் - விடையையுடையவனும் எனக்கூட்டுக . அனைவரும் அஞ்சுமாறு யானைத்தோலைப் போர்த்து அக்கோலத்தோடே உமாதேவியாரும் அஞ்ச அவர் முன்வந்த விடையினான் . அவனது உருவம் நெருப்பு , அவனது கழல் தொழுவாரை வினைகள் அடையா என்பது பின்னிரண்டடிகளின் கருத்து . மருவு - உகரச் சாரியை தொக்குநின்றது . மரூஉ எனினும் ஆம் , பண்பு - பண் எனக் கடைக் குறையாயிற்று . கவர்தலுக்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப் பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மறையினொலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டமமர் பட்டிசர மேயபனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையினிடை யேற்றபுன றோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையி னேத்துமவர் தீத்தொழில்க ளில்லர்மிகவே.

பொழிப்புரை :

வேதங்கள் ஓதும் ஒலியும் , கீதங்கள் பாடும் ஒலியும் , பூதகணங்கள் திருவடிக்கீழ் அமர்ந்து போற்றும் ஒலியும் கலந்து ஒலிக்க , பறை என்னும் வாத்திய ஓசையும் பெருகத் திருநடனம் புரியும் சிவபெருமான் திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் . குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த சடையிலே கங்கையையும் தாங்கிய நிலையான தோற்றப் பொலிவு உடையவன் . அத்தகைய இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர் .

குறிப்புரை :

மறையின் ஒலி - வேதங்களின் ஓசையும் , பூதம் அடிமருவி - பூதகணங்கள் அடியின் கீழ்ப் பொருந்தி . கீதமொடு - கீதத்தோடும் , பாடுவன - பாடப்படுவனதாகிய . ( ஒலி ) - ஓசையும் . விரவு ஆர் - கலத்தலையுடைய . பறையின் - முழவ வாத்தியங்களின் . ஒலிபெருக - ஓசையும் பெருகும்படியாக . நிகழ் நட்டம் அமர் - பொருந்திய நடனமாடுகின்ற , பட்டிசரமேய - பட்டீச்சரம் என்னும் ஆலயத்தில் தங்கிய . பனிகூர் - குளிர்ச்சி பொருந்திய . பிறையின்ஒடு - சந்திரனுடனே . மருவியது - பொருந்தியதாகிய . சடையின் இடை - சடையில் . புனல் ஏற்ற - கங்கை நீரை ஏற்ற . தோற்றம் - தோற்றப் பொலிவு . நிலையாம் - நிலையாகவுள்ள . இறைவனடி - கடவுளின் திருவடிகளை , முறை - நாடோறும் . முறையில் ஏத்தும் அவர் - முறைமையோடு துதிப்போர் . தீத்தொழில்கள் இல்லர் மிகவே - துன்புறும் வினைகள் முற்றிலுமிலராவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்
துறவியெனு முள்ளமுடை யார்கள்கொடி வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவவரே.

பொழிப்புரை :

பிறவியாகிய நோயும் , மூப்பும் நீங்கித் தேவலோகத்தில் உள்ளவர்களால் பாராட்டப்படுகின்றவர்களும் , உலகப் பற்றைத் துறந்த உள்ளமுடைய ஞானிகளும் வாழ்கின்ற , கொடி அசைகின்ற வீதிகளையுடைய திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் அழகிய சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அக்கோயிலைப் போற்றி வணங்குபவர்கள் வினை சிறிதும் இல்லாதவராகி , தேன் ஒழுகுகின்ற நறுமணம் கமழும் மலர்களாலும் , தோத்திரங்களாலும் சிவனை வழிபட மறவாதவர்களாவர் . அவர்கள் சிவகணங்களோடு உறைவர் என்பது குறிப்பு .

குறிப்புரை :

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி - பிறவித்துன்பமும் , அதில் அடையக்கூடிய பிணியும் , மூப்பும் ஒழிந்து . இமையோர் உலகு பேணலுறுவார் - தேவர் உலகமும் பாராட்டி எதிர்கொண்டு அழைக்கும் தன்மை உள்ளவராவார்கள் . துறவி என்னும் உள்ளம் உடையார்கள் - துறத்தலாகிய உள்ளமுடைய மெய்யடியார்கள் . ( தங்கிய ) கொடிவீதி - கொடிகட்டியவீதியும் . அழகாயதொருசீர் - அழகுடைய பொருள்கள் எல்லாம் வந்து தொகும் சிறப்பையுடைய . இறைவன் உறை பட்டிசரமே - தலைவன் தங்கியிருக்கும் பட்டீச்சரமே . ஏத்தி எழுவர் - துதித்துத் துயில் எழுபவர் . வினையேதும் இலராய் - வினைசிறிதும் இல்லாதவராகி , நறவம் - தேன் ஒழுகுகின்ற . விரையாலும் - வாசனைபொருந்திய மலர்களாலும் . மொழியாலும் - தோத்திரங்களாலும் . ( வழிபாடுமறவாத ) அவர் - சிவன் ; உலகில் சிவகணத்தவரோடு உறைபவராவர் என்பது குறிப்பெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

நேசமிகு தோள்வலவ னாகியிறை வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலி னண்ணலெளி தாமமரர் விண்ணுலகமே.

பொழிப்புரை :

திக்குவிசயம் செய்வதில் விருப்பம் கொண்டுவரும் இராவணன் தன் புய வலிமையினால் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க , இழிபண்புடைய இராவணனின் வலிமையை வாட்டியவராய் , தன்னுடைய எல்லையும் , தன்னுடைய நிலைமையும் பிறரால் அறியப்படாது , பிறைச்சந்திரனை அணிந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலைத் தொழுது வணங்குவார்களின் வினை முழுவதும் நீங்க , இனிப் பிறந்திறத்தலும் நீங்க அவர்கள் சிவஞானம் பெறுதலால் விண்ணுலகத்தை எளிதில் அடைவர் .

குறிப்புரை :

நேசம் மிகு - திக்குவிசயத்தில் விருப்பம் மிகுந்த . தோள்வலவன் ஆகி - புயவலிமையுடையவனாய் . இறைவன் மலையை - சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கைலாய மலையை . நீக்கியிடலும் - தூக்கி அப்பால் இட முயன்ற அளவில் . நீசன் விறல் வாட்டி - இழிதகவினனாகிய இராவணனது வலிமையை வாட்டியவன் . வரை - தன்னுடைய எல்லையையும் . உற்றது - தன்னுடைய நிலைமையையும் . உணராத - பிறரால் அறியப்படாத . நிரம்பா மதியினான் - நிரம்பாத ( பிறைச் ) சந்திரனை அணிந்தவன் ( ஆகிய ). ஈசன் உறை - கடவுள் தங்கிய ( பட்டீச்சரம் தொழுது எழுவார் ) வினை ஏது மிலவாய் - கன்மங்கள் முற்றும் அழிந்தனவாகி , நாசம் ( இனிப்பிறந்து ) இறத்தல் . அற - நீங்க . வேண்டுதலின் - வேண்டிச்சிவஞானம் பெறுதலினாலே . அமரர் விண்ணுலகம் - ( அவர்களுக்குத் ) தேவர் உலகம் . எளிதாம் - ஓர்பொருளன்று . நேசம் - இங்கு ஆசையை யுணர்த்திற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

தூயமல ரானுநெடி யானுமறி யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி வாரணிகொண் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தவெளி தாகுநல மேலுலகமே.

பொழிப்புரை :

தூய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் சிவபெருமானுடைய தோற்றத்தையும் , பலவகையான நிலைகளையும் அறியாதவர்களாயின் வேறுயார்தான் அவற்றை அறிவர் ? அழகிய அகன்ற மார்பு முழுவதும் திருநீற்றினை அணிந்து உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளுகின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை அடைந்து அவன் இரு திருவடிகளைப் போற்றி வணங்கச் சிவஞானம் பெறுதலும் , அதன் பயனால் முக்தியுலகை அடைதலும் எளிதாகும் .

குறிப்புரை :

தூயமலரானும் நெடியானும் - தூய்மையாகிய தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் திருமாலும் . அவன் - அவ்விறைவனுடைய . தோற்றம் - தோற்றத்தையும் . நிலையின் - நிலைமையின் . ஏய - பொருந்திய . வகையானதனையும் - வகையையும் ( பலவகையான நிலைமையையும் ) அறியார் - அறியாதவர்களாவார்கள் . ( ஆயின் ) யார் அது அறிவார் - அவரது தோற்றத்தையும் நிலமையையும் அறியவல்லவர்கள் யார் ? அணிகொள் மார்பின் அகலம் - அழகான மார்பின் அகன்ற இடத்தில் . பாய - முழுவதும் , ( நல்ல ) நீறு அது அணிவான் - திருநீற்றை அணிபவனுமாகிய சிவ பெருமான் . உமைதனோடும் உறை - உமாதேவியோடும் தங்கும் , ( பட்டீசரமே ) மேய் - அடைந்து . ( மேவியவனது ) ஈரடியும் ஏத்த - இரண்டு திருவடிகளையும் துதிக்க . எளிதாகும் நலம் - சிவஞானம் அடைதல் எளிதாகும் . ( அதன்பயனாக அடைய வல்லது ) மேல் - மேலான . உலகமே - முத்தியுலகாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

தடுக்கினை யிடுக்கிமட வார்களிடு பிண்டமது வுண்டுழல்தரும்
கடுப்பொடி யுடற்கவசர் கத்துமொழி காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல் வயற்கொண்மழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர மேத்தவினை பற்றறுதலே.

பொழிப்புரை :

தடுக்கையேந்திப் பெண்கள் இடுகின்ற உணவை உண்டு , சுற்றித் திரிகின்றவர்களும் , கடுக்காய்ப் பொடியைத் தின்பவர்களுமான சமணர்களும் , உடம்பைப் போர்த்திக் கொள்கின்ற பௌத்தர்களும் கூறும் அன்பற்ற மொழிகளை ஏற்க வேண்டா . மடைகளில் கயல்மீன்கள் பாய வளப்பம் மிகுந்த வயல்களையுடைய நெடிய திருப்பழையாறையின் , திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியில் , திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் மழுப்படையைக் கையிலேந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்க வினையாவும் முற்றிலும் நீங்கும் .

குறிப்புரை :

தடுக்கினை - இடுக்கி - ( சென்ற இடங்களில் உட்காரத் ) தடுக்கை இடுக்கிக்கொண்டு . மடவார் - பெண்கள் . இடு - இடுகின்ற பிண்டமது - உணவை . உண்டு உழல்தரும் - உண்டு சுற்றித்திரிகின்ற . கடுப்பொடியார் - கடுக்காய்ப் பொடியைத் தின்பவரும் . உடற்கவசர் - உடம்பைப் போர்த்துக்கொள்பவருமான சமணரும் பௌத்தரும் . ( கத்துமொழி ) காதல் செய்திடாது - விரும்பாமல் . கமழ்சேர் - வாசனையுடைய . மடைக்கயல் - மடையின்கண் கயல் மீன்கள் . ( உலாவும் ) வயல் - வயல்களையுடைய . மழபாடி நகர் - மழபாடி நகராகிய . நீடுபழையாறையதனுள் - விஸ்தாரமான பழையாறை நகருள் . படைக்கு ஓர் கரத்தன் - சூலப்படைக்கு ஏற்ற ஒரு கையையுடையவன் . ( கரத்துக்கு ஏற்ற ஓர் படையன் - கையில் ஒரு சூலப்படையை ஏந்தியவன் என்பது நேரிய பொருள் ) மிகு - வளம்மிகுந்த . பட்டீச்சரம் ஏத்த , வினைபற்றறுதலே அதன் பயன் . அதன் பயனென்பது அவாய் நிலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

மந்தமலி சோலைமழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி ஞானசம் பந்தனணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர்வினை நிற்பதிலவே.

பொழிப்புரை :

தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும் திருத்தலத்தில் , தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும் , வீடும் அருளவல்ல நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் படர்ந்த சிறுசடைகளையுடைய சிவபெருமான் . அப்பெருமானைப் போற்றி எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய இப்பதிகத்தைக் கேட்டற்கும் , உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

மந்தம் - தென்றல் காற்று . மலி - மிகுந்துலாவும் . ( சோலைகளையுடைய ) மழபாடிநகர் - மழபாடி என்னும் நகரப் பகுதியைத் தன்னுட் கொண்ட . நீடு - நெடிய ( பழையாறை என்னும் தலத்தில் ) பந்தம் உயர் வீடும் - பந்தமும் உயர்ந்த முத்தியும் . நல - அடைந்தவர்க்கு அளிப்பதில் நல்லதாகிய . ( பட்டீச்சரம் மேவிய .) படர்புன் சடையனை - படர்ந்த சிறு சடைகளை உடையவனாகிய சிவபெருமானை . அந்தண் - அழகிய ஜீவ காருண்ணியம் உடைய ( மறையோர் ). இனிதுவாழ் - இனிமையாக வாழ்கின்ற . ( புகலி , ஞானசம்பந்தன் ) அணியார் - அணிகளோடு கூடிய . செந்தமிழ்கள் - செந்தமிழ்ப் பதிகங்களை . கொண்டு - பிறவிக் கடல்கடக்கும் புணையாகக்கொண்டு . இனிது செப்பவல தொண்டர் - கேட்டற்கும் உணர்தற்கும் இனியதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் . வினை - வினைகள் . நிற்பது இல - நில்லாவாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம் மறிப்பநலமார்
சேடுமிகு பேடையன மூடிமகிழ் மாடமிடை தேவூரதுவே.

பொழிப்புரை :

சிவபெருமான் வசிக்கும் வீடு சுடுகாடாகும். முடைநாற்றம் பொருந்திய மண்டையோடு அவன் உண்கலமாகும். அவனது ஆடை புலித்தோலாகும். உணவு தேடியுண்ணும் பிச்சையாகும். இத்தகைய கோலமுடைய, வேதத்தை அருளிச் செய்த வேதப் பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, சோலைகளில் மயில்கள் ஆட, வண்டுகள் பாட, காந்தள்கள் அசைந்து கைத்தாளமிட, அழகிய இளம் பெண்அன்னம் போன்ற பெண்கள் ஆடவர்களோடு ஊடி, பின் ஊடல் நீங்கி மகிழ்கின்ற மாடங்கள் நிறைந்த திருத்தேவூர் என்பதாகும்.

குறிப்புரை :

பயில் வீடு - தங்கும் வீடு. காடு - மயானம். கலன் - உண்கலம். முடைஓடு - முடை நாற்றம் பொருந்திய மண்டையோடு. மூடும் - அரையை மூடும். உடை ஆடை - உடுத்துக் கொள்வதாகிய ஆடை. புலி தோல் - புலித்தோல். ஊண் - உணவு. தேடுபலி - தேடியுண்ணும் பிச்சை. உடை வேடம்மிகு - இவற்றையுடைய கோலம் மிக்க. வேதியர் - வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானது. திருந்துபதியாம் - திருத்தமான தலமாகும் (சோலைகளில்). மஞ்ஞை நாடகம் அது ஆட - மயில் நாட்டியம் ஆட. அரி - வண்டுகள். பாட - இசைபாட. கோடல் - காந்தள்கள். கைமறிப்ப - கரக்கம்பஞ்செய்ய. நலமார் - அழகுடைய. சேடுமிகு - இளமை மிக்க. பேடை அனம் - பெண் அன்னம்போன்ற மகளிர். ஊடி - ஆடவரோடு பிணங்கி மகிழ் - அவர்கள் பிணக்கு நீக்குவதால் மகிழ்கின்ற. மாடம்மிடை - மாடங்கள் நெருங்கிய (தேவூர் அதுவே) அன்னம் - உவம ஆகுபெயர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம் விரைக்குமணமார்
தேளரவு தென்றறெரு வெங்குநிறை வொன்றிவரு தேவூரதுவே. 

பொழிப்புரை :

கொல்லும் தன்மையுடைய பாம்பு, கொன்றை, சிரிக்கும் மண்டையோடு, எருக்கு, வன்னி, கொக்கு இறகு, ஒளி பொருந்திய பாம்பு, குளிர்ச்சி பொருந்திய கங்காதேவி, இவை குலவுகின்ற சிவந்த சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், மன்மதனும் விரும்பும் கொங்கைகளை உடைய, கணவரோடு கூடிய இள மங்கையர்கட்குக் குங்குமக் குழம்பின் மணத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையதும், கணவரைப் பிரிந்த மகளிர்கட்குத் தேள் கொட்டுவது போல் துன்பஞ் செய்கின்ற தன்மையுடையதுமான தென்றல் காற்று தெருவெங்கும் நிறைந்து பெருகும் திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

கோள் அரவு - கொலைத் தொழிலையுடைய பாம்பு. (கொன்றை). நகுவெண்டலை - சிரிக்கும் வெண்டலை. (எருக்கு) வன்னி - வன்னியிலை. (கொக்கு இறகொடும்) வாள் அரவும் - ஒளிபொருந்திய பாம்பும்; தண் சல மகள் - குளிர்ச்சி பொருந்திய கங்காதேவியும். குலவு - குலவுகின்ற (செஞ்சடை) வரத்து - வளர் தலையுடைய. (இறைவன் ஊர்). வேள் அரவு - விரும்புதல் பொருந்திய (கொங்கை). இளமங்கையர்கள் - (கணவரோடு கூடிய) இளம் பெண்களின். குங்குமம் விரைக்கு - குங்குமக் குழம்பின் வாசனைக்கு. மணமார் - மேலும் மணத்தைத் தருகின்ற (தென்றல்பிரிந்த மகளிர்க்கு) தேள் அரவு - தேள் கொட்டுவதைப்போல் மோதுகின்ற (தென்றல் தெருவெங்கும்) நிறைவு ஒன்றி - நிறைந்து. வரு தேவூர் அதுவே. தென்றல் காற்று கணவரொடு கூடிய மகளிர்க்கு, பலமலர்களிற் படிந்து கொணர்ந்த வாசனையை வீசி இன்பஞ் செய்கின்றதென்றும், பிரிந்த மகளிர்க்குத் தேள் கொட்டுவதுபோல் துன்பஞ் செய்கின்றதென்றும் கூறியவாறு. கொங்கையிள மங்கையர் என்று கூறப்பட்டிருப்பினும், மங்கையர் கொங்கையெனப் பொருள் கொள்ளல் நேர். வேள் அரவு - தொழிற்பெயர், தோற்று தேற்று என்னும் பகுதிகளில் தல் விகுதிக்குப் பதில் அரவு என்னும் தொழிற்பெயர் விகுதி வந்து தோற்றரவு தேற்றரவு என்றாதற்போல, வேள் + தல் வேட்டல். தல்விகுதிக்குப்பதில், அரவு நின்று, வேளரவு என்றாயிற்று.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பண்டடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கனெமை யாளுமிறைவன்
எண்டடவு வானவரி றைஞ்சுகழ லோனினிதி ருந்தவிடமாம்
விண்டடவு வார்பொழி லுகுத்தநற வாடிமலர் சூடிவிரையார்
செண்டடவு மாளிகை செறிந்துதிரு வொன்றிவளர் தேவூரதுவே. 

பொழிப்புரை :

பண்ணிசை போன்ற இனிய மொழிகளைப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு எம்மையாளும் இறைவன் எண்ணற்ற தேவர்கள் தன் திருவடிகளை வணங்க இனிது வீற்றிருந்தருளும் இடம், வானளாவி உயர்ந்த சோலைகள் உகுக்கும் தேன்துளிக்கும் மலர்களைச் சூடி, அதனால் நறுமணம் கமழ, ஆகாயமளாவிய உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருமகள்வாசம் செய்யும் திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

பண் தடவு - பண்ணின் இனிமை பொருந்திய (சொல்லின்) மலைவல்லி உமை - மலையின் மகளாகிய உமாதேவியாரை. பங்கன் - ஒரு பங்கில் உடையவனும். எமை - எம்மை (ஆளும் இறைவன்) எண் தடவு - எண்ணத்தக்க. வானவர் - தேவர்கள். இறைஞ்சு கழலோன் - வணங்கும் திருவடியையுடையோனுமாகிய சிவபெருமான். இனிது இருந்த இடம் - மகிழ்வோடிருந்த இடம். விண் தடவுவார் பொழில் - ஆகாயத்தை அளாவிய நெடிய சோலைகள். உகுத்த - சொரிந்த. நறவு ஆடி - தேனில் மூழ்கியும். மலர் சூடி - மலர்களை அணிந்தும். விரை ஆர் - இவற்றால் வாசனைமிகுந்த. சேண் தடவு - ஆகாயமளாவிய. மாளிகை - மாளிகைகள். செறிந்து - நெருங்கி. திருஒன்றி - லக்ஷ்மிகரம் பொருந்தி (வளர் தேவூர் அதுவே) மாளிகைகளைச் சூழப் பூஞ்சோலைகள் உள்ளன. காற்று வீசுவதால் பூந்தேனும் பூக்களும் அவற்றில் வீசப்படுகின்றன. அதனால் அம்மாளிகைகள் (நீரில் மூழ்கி மலர் சூடிவரும் மாதர்கள் போலத்தாங்களும்) தேனில் மூழ்கி மலர்சூடி நிற்பன போற் காணப்படுகின்றன. அவற்றால் வாசனையும் உடையனவாகக் காணப் படுகின்றன வென்பது பின்னிரண்டடிகளின் கருத்து. சேண் என்பது செண் என எதுகை நோக்கிக் குறுக்கல் விகாரம் பெற்றது.

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மாசின்மன நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி யாடிமிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமு மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே. 

பொழிப்புரை :

சிவபெருமான் களங்கமற்ற மனமுடைய அடியார்கள் தன்மேல் கொண்ட பக்தி மேன்மேலும் பெருக விளங்குபவன். சூலப்படையை ஏந்தியவன். வானுலகிலுள்ள தேவர்கட்குத் தலைவன். வேதங்களை ஓதியருளி வேதப்பொருளாயும் விளங்குபவன். நெருப்பேந்தி நடனம் ஆடுபவன். வெற்றிதரும் பாசுபத அஸ்திரம் உடையவன். அத்தகைய சிவபெருமான் இனிது வீற்றிருந்தருளும் தலமாவது, நறுமணமிக்க மலர்களை மூக்கால் கோதுகின்ற குயில்களின் கூவலும், நாகணவாய்ப் பறவை போன்று பேசுகின்ற பெண்களின் இனிய மொழியும், அடியவர்கள் இறைவனைப் புகழும் ஒலியும், வீணை மீட்டும் ஒலியும், கீதங்களின் ஒலியும் நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

மாசில் மனநேசர் - களங்கமற்ற மனத்தையுடைய, அடியார்கள் (தன்மேல் வைத்த) ஆசைவளர் - ஆசை வளர்தற்குரிய. சூலதரன்- சூலத்தைத் தரித்தவனும். மேலை இமையோர் ஈசன் - வானுலகத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவனும், மறைஓதி - வேதங்களை ஒதி அருளியவனும். எரி ஆடி - அக்கினியில் ஆடியவனும், மிகு - வெற்றியை மிகுக்கும். பாசுபதன் - பாசுபத அஸ்திரத்தை யுடையவனும் ஆகிய சிவபெருமான். மேவுபதிதான் - தங்கும் தலமாவது. வாசம் மலர் - வாசனையுடைய மலர்களை. கோதுகுயில் - மூக்கால் கோதுகின்ற குயில்களின். வாசகமும் - கூவுதலும் மாதரவர் - பெண்களின் (மொழிவார்த்தையும்). பூவைமொழி - நாகண வாய்ப்புட்களின் வார்த்தையும், தேசஒலி - வேறு நாட்டில் இருந்து வணங்க வந்தவர்களின் ஓசையும், வீணையொடு - வீணையின் ஒலியுடன் கூடிய. கீதமது - கீதங்களின் ஒலியும். வீதிநிறை - வீதிகளின் நிறைகின்ற. (தேவூர் அது) இனி மாதரவர் பூவைமொழி என்பதற்குப் பெண்கள் பூவைகளைப்பயிற்றும் மொழியின் ஓசையென்றும், பெண்களின் பூவைபோன்ற மொழியின் ஓசையென்றும் பொருள் கோடலும் ஆம்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

கானமுறு மான்மறிய னானையுரி போர்வைகன லாடல்புரிவோன்
ஏனவெயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவி பலாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூரதுவே.

பொழிப்புரை :

சிவபெருமான் காட்டில் வாழ்கின்ற மான்கன்றைக் கரத்தில் ஏந்தியவன். யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தியவன். நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன். பன்றியின் கொம்பு, ஆமை ஓடு, இளம் பாம்பு, இவற்றை மார்பில் அணிந்தவன். தேவர்களின் தலைவன். அவன் உகந்தருளிய திருத்தலம் வானளாவிய மா, வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய மரங்கள் தழைத்து, சொரிகின்ற தேனை உண்டு, வரிகளையுடைய வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் பாடும் திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

கானம் உறும் - காட்டில் வாழும். மான்மறியன் - மான்கன்றை ஏந்தியவன். யானை உரிபோர்வை - யானைத்தோலாகிய போர்வையோடு. கனல் ஆடல் புரிவோன் - நெருப்பில் ஆடுபவன். ஏன எயிறு - பன்றியின் கொம்பும். ஆமை - ஆமையோடும். இளநாகம் - இளம் பாம்புகளும். வளர் - பொருந்துகின்ற. மார்பின் - மார்பை யுடைய (இமையோர் தலைவன்) ஊர் - (தேவர்கள் நாயகனாகிய சிவ பெருமானின்) தலம். வான் அணவு சூதம் - ஆகாயத்தை அளாவிய மாமரங்களும். (வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய மரங்களும்) நிலவி - தழைத்து. வார்தேன் அமுது உண்டு - சொரிகின்ற தேனாகிய உணவை உண்டு. வரிவண்டு - இசைபாடும் வண்டுகள். மருள் - அந்தக் காலத்திற்குரியதல்லாத பண்ணை (தேன் உண்ட மயக்கத்தால்) பாடி வரு(ம்) தேவூர் அதுவே. மருள் - மருள்தல் தொழிலாகுபெயர். வளர் என்பது இங்குப் பொருந்திய என்னும் பொருள் தந்து நின்றது. வண்டு மருள் பாடி என்பதனை \\\\\\\"மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி வரவெமர் மறந்தனர்\\\\\\\" என்னும் செய்தியிலும் காண்க. (புறநானூறு - 149.)

பண் :சாதாரி

பாடல் எண் : 6

ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறனடை யார்நகர்கடான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறனமை யாளுமரனூர்
வீறுமல ரூறுமது வேறிவளர் வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்பவிள வாளைவரு தேவூரதுவே. 

பொழிப்புரை :

சிவபெருமான் சடையிலே கங்கையோடு, பிறைச்சந்திரனையும் அணிந்தவன். இடபவாகனம் ஏறியவன். கோபம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தும் பகையசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகும்படி செய்தவன். திருமேனியில் திருநீற்றைப் பூசியவன். நம்மையாட்கொள்ளும் அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், செழிப்பான மலர்களிலிருந்து ஊறும் தேன் வயல்களில் பாய்ந்து சேறுபடுத்த, கயல்மீன்கள் விளையாட அழைக்க இள வாளைமீன்கள் வருகின்ற திருத்தேவூர் என்பதாகும்.

குறிப்புரை :

ஆறினொடு - கங்காநதியுடனே. கீறுமதி - பிறைச் சந்திரனும், ஏறு - ஏறியுள்ள. சடை - சடையையுடைய, ஏறன் - இடப வாகனத்தையுடையவனும், சீறும் அவை (தேவர் முதலியோரை) சீறி அழிப்பனவாகிய. அடையார் நகர்கள் - பகைவர்களின் முப்புரங்களையும், வேறுபட நீறுசெய்த - அழியும்படியாக எரித்து. நீறன் - திருநீற்றைப் பூசியருளியவனும் (ஆகிய) நமையாளும் அரன் - நம்மை யாட்கொள்ளும் சிவபெருமானின் (ஊர்) வீறுமலர் ஊறும் மது - செழித்த மலரில் ஊறிவடிகின்ற தேன் வெள்ளமானது. ஏறி - பாய்ந்து. வளர்வாய - விளைகின்ற. கழனி - வயல்களின். சேறுபடு - சேற்றிலுள்ள, செங்கயல் விளிப்ப - செவ்விய கயல்மீன்கள் (தம்மோடு விளையாடக்) கூப்பிட. இளவாளைவரு - இளமை பொருந்திய வாளைமீன்கள் வரும் (தேவூரதுவே.)

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுர மன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையம ரின்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிக டின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி யொன்றவிளை யாடிவளர் தேவூரதுவே. 

பொழிப்புரை :

கோபித்து உலகையழிக்க எண்ணி வெற்றிபெற்ற பகையசுரர்களின் நெருங்கிய மூன்றுபுரங்களையும், சிவபெருமான் சிரித்துச் சாம்பலாகுமாறு செய்தவன். நான் சென்றடையக் கூடிய பற்றுக்கோடாக விளங்குபவன். என் தந்தைக்குத் தந்தையாகிய அச்சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இனிய தலமாவது, வீட்டின் முன்னால் நின்ற பலாக்கனிகளைத் தின்று கறவைப் பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி வளர்கின்ற திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

கன்றி எழ - கோபித்து (உலகை அழிக்கக் கிளம்ப) வென்றி நிகழ் - வெற்றிபெற்ற. துன்று - நெருங்கிய. புரம் - திரிபுரங்களையும். அன்று அவிய - அக்காலத்தில் அழியும்படி. நின்று நகை செய் - நின்று சிரித்த. என்தனது - என்னுடைய. சென்று நிலை - சென்று (அடையக் கூடிய) பற்றுக்கோடும். எந்தை தனதந்தை - என் தந்தைக்குத் தந்தையுமாகிய சிவபெருமான். அமர் - விரும்பும். இன்பநகர் - இன்பகரமான தலம். கறவைக் குருளைகள் - கறவைப் பசுக்களின் கன்றுகள். சென்று - போய். முன்றின்மிசை நின்ற - வீட்டின் முன்னால் நின்ற. (பலவின் கனிகள் தின்று) இசைய நின்று - பொருந்த நின்று. ஒன்ற - ஒருசேர. து(ள்)ளி விளையாடி - துள்ளி விளையாடி. வளர் - வளர்கின்ற (தேவூர் அதுவே.)

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஓதமலி கின்றதெனி லங்கையரை யன்மலி புயங்கணெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில் அடர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கணட மாடலொடு பொங்குமுரவம்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே. 

பொழிப்புரை :

கடல் அலைகள் மோதுகின்ற தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமை மிகுந்த புயங்கள் நெரிபடத் தன் காற்பெருவிரலை ஊன்றி அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, மகிழ்ச்சி மிகுந்த பெண்கள் நடனமாடவும், முழவு ஒலிக்கவும், சேற்றில் பயில்கின்ற கையினால் உழவுத் தொழில் செய்து வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் வேளாளர்கள் நிறைந்த திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

ஓதம் மலிகின்ற - கடல் அலைகள் மோதுகின்ற. தென் இலங்கை அரையன் - இராவணனது, வலி - வலிமை மிகுந்த. புயங்கள் - தோள்கள். நெரிய - அரைபட. பாதம் மலிகின்ற - பாதத்தில் பொருந்திய. விரல் ஒன்றினில் - ஒருவிரலால். அடர்த்த - நெருங்கிய. (பரமன் தனது இடம் ஆம் நகரில்) போதம் மலிகின்ற மடவார் - மகிழ்ச்சி மிகுந்த பெண்கள். நடமாடல் ஒடு - நாட்டிய மாடுவதொடு, பொங்கும் முரவம் - ஒத்து முழங்கும் முழவின் ஓசை ஒலிக்க (வயலுள்) சேதம் மலிகின்ற - சேற்றில் பயில்கின்ற. கரம் - கையினால். தொழிலாளர் - உழவுத் தொழிலினர். வெற்றி புரி - வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் (வேளாண்மை விளைவைச் செய்யும் தேவூரதுவே.)

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வண்ணமுகி லன்னவெழி லண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனு மெண்ணரிய விண்ணவர்கள் கண்ணவ னலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையி னெண்ணரிய வன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தவிசை யாழ்மருவு தேவூரதுவே.

பொழிப்புரை :

கருநிற மேகத்தையொத்த அழகிய திருமாலும், மகரந்தப்பொடி நிறைந்த தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், அளவற்ற தேவர்களும் `இவர் நிலைமையை அறியும்வழி என்ன` என்று யோசிக்கும்படி நெருப்புப்பிழம்பாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், அழகிய நிறமும், சிறிய இடையும், அன்ன நடையும், அளவற்ற இனிய மொழிகளுமுடைய பெண்கள், உறுதியாக அமைந்த மாளிகைகளில் யாழிசைக்க விளங்கும் திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

வண்ணமுகில் அன்ன எழில் அண்ணலொடு - கருநிறத்தையுடைய மேகத்தையொத்த அழகிய திருமாலுடன், சுண்ணமலி வண்ண - மகரந்தப் பொடிநிறையும் இயல்பையுடைய. மலர்மேல் - தாமரைமேல். நண் அவனும் - தங்கும் பிரமனும். எண் அரிய - அளவற்ற. விண்ணவர்கள் - ஏனைத் தேவர்களும். கண்ண - இவர் நிலைமையை அறியும் வழி என் என்று யோசிக்குமாறு (வளர்ந்த) அனலம் - அக்கினி வடிவமான சிவபெருமான். கொள் - இடமாகக் கொண்ட. பதி - தலம். வண்ணம் வனம் - நிறத்தின் அழகையும் (அழகிய நிறத்தையும்). நுண்ணிடை - சிறிய இடையையும், அன்னம் நடை - அன்னம் போன்ற நடையினையும் உடைய. எண்ணரிய - அளவற்ற. இன்மொழியினார் - இனிய மொழிகளையுடைய பெண்கள். (தங்குகின்ற) திண்ணவணம் - உறுதியான அமைவுடைய. மாளிகை - மாளிகைகளில், செறிந்த - மிகுந்த, யாழ் இசை - யாழ் முதலிய கருவிகளில் ஓசையும். மருவு - பொருந்திய. (தேவூர் அதுவே.)

பண் :சாதாரி

பாடல் எண் : 10

பொச்சமமர் பிச்சைபயி லச்சமணு மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
* * * * * * 

பொழிப்புரை :

பொய்யான துறவு வேடம்கொண்டு பிச்சை யெடுக்கும் சமணர்களும், புகழற்ற புத்தர்களும் கூறும் விருப்பமான உபதேச மொழிகளை விலக்கி, பித்தன் எனப்படுபவனும், விடமுடைய பாம்பை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானுடைய, மொய்த்த மெய்யடியார்கள் நெருங்கிய தலமாவது, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

பொச்சம் அமர் - பொய் பொருந்திய. (துறவி வேடங் கொண்டு) பிச்சையெடுக்கும். அச்சமணும் - அந்தச் சமணர்களும். எச்சம் அறு - புகழற்ற. போதியரும் - புத்தர்களும். ஆம் - ஆகிய. மொச்சை - இழி தொழிலர். பயில் - சொல்லும். இச்சை - விருப்பமான உபதேசமொழிகளை. கடி - விலக்கும். பிச்சன் - பித்தன் என்னும் பெயருடையவனும். மிகு நச்சு அரவன் - மிகுந்த விடத்தைக்கக்கும் பாம்பை அணிந்தவனுமாகிய சிவபெருமானது. மொச்ச - (மொய்த்த) அடியார்கள் நெருங்கிய (நகர்தான்) மைசில் முகில் - கரிய சில மேகங்கள். வைச்சபொழில் - தங்கிய சோலைகள் ..... எச்சம் - புகழ் என்னும் பொருளில் வருதலை \\\"எச்சமென்றென்னெண்ணும் கொல்லோ\\\" (குறள். 1004) என்பதாலும் அறிக. பிச்சன்:- \\\"பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி.\\\" (தி.10 திருமந்திரம்).

பண் :சாதாரி

பாடல் எண் : 11

துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே. 

பொழிப்புரை :

நீண்டு வளர்ந்து படமெடுக்கும் பாம்பைச் சிவந்த சடையில் அணிந்தவர் நம் தலைவரான சிவபெருமான். அவர் அடர்ந்த கூந்தலையும், செவ்விய கயல்மீன் போன்ற கண்களையுமுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். அவர் வீற்றிருந்தருளும் தலம் திருத்தேவூர், அதைப் போற்றிப் பசிய தாமரை மலர்கள் அழகு செய்கின்ற வலிய திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப்பாக்கள் ` அடியார் கூட்டங்களில் ஓத வல்லவர்கள் குற்றமற்றவர் ஆவர்.

குறிப்புரை :

துங்கம் மிகு - உயர்ச்சி மிகுந்த. பொங்கு அரவு - மிகுந்த பாம்புகள். தங்கு - தங்குகின்ற. சடை - சடையையுடைய. நங்கள் இறை - எங்கள் தலைவனும். துன்று - அடர்ந்த. குழல் ஆர் - கூந்தலையுடைய. செங்கயல்கண் - செவ்விய மீன்போன்ற கண்களையுடைய. மங்கை - பெண்ணாகிய. உமைநங்கை - உமாதேவியார். ஒருபங்கன் - ஒரு பாகமாக உடைய சிவபெருமான். அமர் - விரும்புகின்ற. (தேவூர் அதன் மேல்) பைங்கமலம் - பசிய தாமரை மலர்கள். அணிகொள் - அழகைச் செய்கின்ற. திண்புகலி - வலிய சீகாழியில் (அவதரித்த, ஞானசம்பந்தன்.) உரைசெய் - பாடிய. சங்கம் மலி - அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய. (செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்) சங்கை இலர் - குற்றமற்றவர் ஆவர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 1

எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானென விறைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல வர்ச்சனைகள் செய்யவமர் கின்றவழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.

பொழிப்புரை :

`எங்கள் சிந்தையிலிருந்து நீங்காத தலைவனே !` என்று தேவர்கள் தொழுது போற்ற , நறுமணம் கமழும் தூபதீபம் முதலிய உபசாரங்களோடு பூசாவிதிப்படி மாலை , முதலிய சந்தியா காலங்களில் அர்ச்சனைகள் செய்ய வீற்றிருக்கும் அழகனான சிவபெருமான் , நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற தலம் திருச்சண்பைநகர் ஆகும் .

குறிப்புரை :

இமையோர் - தேவர்கள் . எம் தமது - எம்முடைய . சிந்தை பிரியாத - மனத்தினின்றும் நீங்காத . பெருமான் என - தலைவனென்று . வந்து துதிசெய்ய - வந்து துதிக்கவும் . வளர் - வாசனை மிகுந்த . தூபம் ஒடு - தீபம் ( ஒடு ) - தூப தீபங்கள் முதலிய உபசாரங்களோடு . மலிவாய்மை அதனால் - சிறந்த விதிப்படி , அந்தி - மாலை நேரங்களிலும் . அமர் - பொருந்திய . பலசந்தி - பலசந்தியா காலங்களிலும் . அர்ச்சனைகள் செய்ய - அருச்சிக்கவும் , அமர்கின்ற - விரும்புகின்ற . அழகன் - சிவபெருமான் . சந்தம்மலி - அழகுமிக்க , குந்தளம் - கூந்தலையுடைய , நல்மாதினொடும் - நல்ல உமாதேவியாரோடும் . மேவு - பொருந்திய . பதி - தலம் . ( சண்பை நகரே ). அழகன் - சிவபெருமானுக்கொருபெயர் ; ` அணங்கு காட்டில் அனல்கையேந்தி அழகன் ஆடுமே ` ( தி .11 காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம் பா .2.) என்பதும் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன்
பங்கய முகத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரை கொணர்ந்துபவ ளத்திரள் பொலிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள் பிறங்கொளிகொள் சண்பைநகரே.

பொழிப்புரை :

திருமேனியிலே பரந்த புள்ளிகளையுடைய பாம்பையும் , ஆமையோட்டையும் கலந்த மாலையாக மார்பிலே விரும்பியணிந்த அழகனாகிய சிவபெருமான் , தாமரை மலர்போன்ற முகத்தையுடைய உமாதேவியாரோடு பிரியாது வாழ்கின்ற தலமாவது , பொங்கியெழும் கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து குவிக்கின்ற பவளத்திரள்களின் பக்கத்திலே , வலம்புரிச் சங்குகளும் , சிப்பிகளும் சொரிந்த முத்துக் குவியல்களின் மிகுதியான பிரகாசத்தைக் கொண்ட திருச்சண்பை நகராகும் .

குறிப்புரை :

அங்கம் - உடம்பில் , விரி - பரந்த . துத்தி - புள்ளிகளையுடைய . அரவு - பாம்புகளையும் . ஆமை - ஆமையோட்டையும் . மார்பில் . விரவு - கலந்த . ஆரம் - ஆரமாக . அமர் - விரும்பும் . அழகன் - சிவபெருமான் . பங்கயம் - தாமரைபோன்ற . முகத்து - முகத்தையுடைய . அரிவையோடு - உமாதேவியாருடன் . பிரியாதுபயில் - பிரியாமல் வாழ்கின்ற . பதி - தலம் . பொங்கு - மிகுந்த . பரவைத்திரை - கடலலைகள் . கொணர்ந்து - அடித்துக் கொண்டுவரக் ( குவிந்த ) பவளத்திரள் - பவளக்குவியல்களின் . அயலே - பக்கத்தில் . சங்கு - சங்குகளும் . புரி - வலமாகச் சுற்றிய . இப்பி - சிப்பிகளும் . ( சொரிந்த ) தரளத்திரள் - முத்தின் குவியல்கள் . பிறங்கு - சிவப்பும் . வெண்மையும் கலந்து விளங்கும் . ஒளிகொள் - பிரகாசத்ததைக்கொண்ட ; சண்பை நகரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழன்மகிழ் மன்னுபுனை துன்னுபொழின் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென வுந்துதகு சண்பைநகரே.

பொழிப்புரை :

வட்டவடிவைப் பிளந்தாற் போன்ற பிறைச் சந்திரனும் , கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும் , சீறும் பாம்புகளும் தங்குகின்ற முறுக்குண்ட செஞ்சடையுடையவன் சிவபெருமான் , யாழ் போன்ற இனிய மொழியையும் , மாம்பிஞ்சு போன்ற விழிகளையும் கொண்டு தன்னையே பற்றுக் கோடாகக் கொண்ட உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் , வாழை , புலிநகக் கொன்றை , மகிழ் , புன்னை முதலிய மரங்கள் நிறைந்து அடர்ந்த சோலைகளின் பக்கத்தில் மடல்கள் பொருந்திய தாழையின் அரும்பை யானையின் ஒடிந்த தந்தம் என்று சூடாது அலட்சியம் செய்யும் திருச்சண்பை நகராகும் .

குறிப்புரை :

போழும் - ( வட்டவடிவை ) பிளந்தால் அனைய . மதி - பிறைச்சந்திரனும் . தாழும்நதி - கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும் . பொங்கு அரவு - மிகுந்த பாம்புகளும் . தங்கு - தங்குகின்ற . புரி - முறுக்கிய ( புன்சடையினன் ) யாழின் மொழி - வீணையின் ஓசையை யொத்த ( மொழி ). மாழை விழி - மாம்பிஞ்சுபோன்ற கண்ணையும் . ஏழை இள மாதின் ஒடு - தனக்கென ஒரு செயல் இல்லாதவளாகிய இளமையுடைய பெண்பிள்ளையுடனே . இருந்த பதிதான் - தங்கி இருக்கும் தலமாவது . வாழை - வாழை மரங்களும் , வளர்ஞாழல் - வளர்கின்ற புலிநகக் கொன்றையும் . மகிழ் - மகிழமரங்களும் . மன்னு பு ( ன் ) னை - நிலைபெற்ற புன்னை மரங்களும் . துன்னு - அடர்ந்த . பொழில்மாடு - சோலைகளில் . தாழை முகிழ் - தாழம் அரும்பை . வேழம் - யானையின் . இகு - ஒடித்த . தந்தமென - தந்தமென்று . உந்துதரு - ( சூடாது ) அலட்சியம் செய்யும் ( சண்பைநகரே .) ` எத்திறன் நின்றான் ஈசன் அத்திறத்து அவளும் நிற்பள் ` என்னும் உண்மை நூல் ( சித்தியார் சூ . 2.75.) மொழிபற்றி ` ஏழை ` யென்றார் . ` தாழை .... உந்து ` - திரிபதிசய அணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை யெட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே.

பொழிப்புரை :

முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , வைத்த பாதங்கள் வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்யத் திருநடனம் செய்யும் சிவபெருமான் பட்டத்தை நெற்றியில் அணிந்து , சூடிய மலர்மாலைகளின் நறுமணம் மிகுந்த பாவை போன்ற உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுகின்ற தலமாவது , எப்போதும் உண்மையே பேசுகின்ற , அறுபத்து நான்கு கலைகளையும் பயில்கின்ற கற்றவர்கள் கூறுவனவற்றை , சந்திரனொளி நுழைய முடியாதவாறு ஓங்கி உயர்ந்து அடத்தியாக உள்ள சோலைகளில் வளர்கின்ற கிளிகள் சொல்லும் பான்மையுடன் விளங்கும் திருச்சண்பை நகராகும் .

குறிப்புரை :

முழவுகொட்ட - வாத்தியங்கள் அடிக்க . இட்ட - வைத்த . அடி - பாதங்கள் . வட்டணைகள் கட்ட - வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்ய . நடமாடி - நடனமாடும் சிவபெருமான் . குலவும் - விளங்கும் . பட்டம் - பட்டத்தை . நுதல்கட்டு - நெற்றியில் அணிந்த . மலர் - சூடியமலர் மாலைகளின் . மட்டு - வாசனை . மலி - மிகுந்த . பாவையொடு - பதுமைபோன்ற உமாதேவியுடன் . மேவுபதி - தங்கும்தலம் . தமது வாய்மை வழுவாத - தமது உண்மை தவறாத . மொழியார் - வார்த்தைகளையுடைய கற்றோர்களின் . சட்ட - முறையான் . கலை எட்டும் மருவெட்டும் - கலைகள் அறுபத்து நான்கையும் . வட்டமதி - வட்டமான சந்திரன் . தட்ட - தடுக்கப்பட்ட . பொழிலுள் - சோலையிலே . வளர் - வளர்கின்ற . தத்தை - கிளிகள் . பயில் - சொல்லும் ( சண்பைநகர் ) சட்டகலை ...... பயில் என்பது வீறுகோள் அணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை யாகமுடை யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதி னீடுவிரை யார் புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொ டாமரையி லன்னம்வளர் சண்பைநகரே.

பொழிப்புரை :

பண்ணிசையோடு கூடிய பாடலும் , ஆடலும் நீங்காத பரம்பொருளும் , ஐசுவரியம் முதலிய ஆறுகுணங்களை உடையவனும் , உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பாகமாகக் கொண்டவனும் , அன்பர்கட்கு அருள்புரிகின்ற பெருமானுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , ஒன்றோடொன்று இணங்கியாடுமாறு நாட்டப்பட்ட கொடிகளையுடைய மாடங்களும் , மதில்களும் உடையதும் , மணம் பொருந்திய புறவிடங்களிலெல்லாம் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் விரிந்த தாமரைமலர்கள் மேல் அன்னங்கள் வளர்கின்ற இயல்பினதும் ஆகிய திருச்சண்பைநகர் ஆகும் .

குறிப்புரை :

பண் ( அம் ) - இசை . கெழுவு - பொருந்திய . பாடலினொடு ஆடல் பிரியாத - பாடலையும் ஆடலையும் நீங்காத ; பர மேட்டி , பகவன் - ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களையும் உடையவனும் . அணங்கெழுவு - பெண் பொருந்திய . பாகமுடை - இடப்பாகம் உள்ள . ஆகம் உடை - உடம்பை உடைய . அன்பர் பெருமானது - அன்பர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானது ( இடம் ஆம் ). எழுவி - நாட்டப்பட்டு . இணங்கு - ஒன்றோடு ஒன்று ஒத்த . ஆடுகொடி - ஆடும் கொடிகளையுடைய . மாடம் அதில் - மாளிகைகளில் . நீடுவிரையார் - மாதர் ; பூசுவன , சூடுவனவற்றால் வாசனை மிக்கு . புறவு எலாம் - புறாக்கள் எல்லாம் . தண்அம்கெழுவி - மகிழ்ச்சி பொருந்தி . ( உலாவ ). ஏடு அலர்கொள் தாமரையில் - இதழ்கள் விரிந்த தாமரை மலர்களில் . அன்னம் வளர் - அன்னங்கள் வளர்கின்ற ( சண்பை நகரே ). ஆர் - ஆர்ந்து . வினையெச்சம் பகுதியளவாய் நின்றது . நம் மினத்தில் ஒரு பறவை வந்து பேறு பெற்ற இடம் நமக்கு மிக்க உறவாகுமென்று புறாக்கள் மகிழ்கின்றன . தண் - குளிர்ச்சி ; மகிழ்ச்சி மேல் நின்றது . ` சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறவென்னுள்ளம் குளிரும்மே ` என்புழிப்போல . தண்பண் என்பன தனிமொழிக்கண்ணும் சாரியை யேற்றன .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பாலனுயிர் மேலணவு காலனுயிர் பாறவுதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி யாயிழைத னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர் கிண்டிநற வுண்டிசைசெயச்
சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பைநகரே.

பொழிப்புரை :

பாலனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த எமனது உயிர் நீங்கும்படி உதைத்த பரமன் , ஆடுகின்ற மயில் போன்ற சாயலையுடைய ஆராய்ந்து தேர்ந்தெடுத்த ஆபரணங்களையணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலமாவது , ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் மிகுந்த சோலைகளில் வண்டுகளின் கூட்டம் மலர்களைக் கிளறி , தேனைக்குடித்து இசைபாட , அழகிய மீன்கள் துள்ளிப்பாய , நீலோற்பல மலர்கள் செழித்து வளர்கின்ற திருச்சண்பை நகர் ஆகும் .

குறிப்புரை :

பாலன் உயிர்மேல் அணவுகாலன் உயிர்பாற - மார்க்கண்டேயனது உயிர்மேற் சென்ற யமன் உயிர் நீங்க . உதை செய்த பரமன் - உதைத்த மேன்மையுடையவனும் . ஆலும் - ஆடுகின்ற . மயில் போல் - மயில்போன்ற . இயலி - சாயலையுடையவராகிய , ஆயிழைதனோடும் - ஆராய்ந்த ஆபரணத்தையணிந்த உமாதேவியாரோடும் . அமர்வு எய்துமிடம் - தங்குதல் பொருந்திய தலம் . ஏலம் மலி சோலை - ஏலம் முதலிய ஓடதி வர்க்கங்கள் மிகுந்த சோலையிலே . இளவண்டு - இளம் வண்டுகள் . மலர்கிண்டி - மலரைக் கிளறி . நறவு உண்டு - தேனைக் குடித்து . இசை செய - பாட . சாலிவயல் - நெல் விளைந்த வயல்களிலே . கோலமலி - அழகுபொருந்திய . சேலுகள - மீன்கள் துள்ளிப்பாய . நீலம் வளர் - நீலோற்பலங்கள் செழிக்கின்ற ( சண்பை நகரே ). செய்யஉகள என்பன காரணகாரியப் பொருளின்றி வந்த வினையெச்சங்கள் . ` வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டச் செங் குமுதம் வாய்கள் காட்டக் கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே ` என்புழிப்போல் . ( தி .1. ப .129. பா .1.)

பண் :சாதாரி

பாடல் எண் : 7

விண்பொயத னான்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை
மண்பொயத னால்வளமி லாதொழியி னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல தோறுநிலை யானபதிதான்
சண்பைநக ரீசனடி தாழுமடி யார்தமது தன்மையதுவே.

பொழிப்புரை :

வானம் பொய்த்து மழை பெய்யாது ஒழிந்தாலும் , மிகுந்த விளைச்சலைத்தரும் நிலம் வறண்டதால் வளம் இல்லாமல் போனாலும் , அடியவர்கட்கும் , மற்றும் பசித்தவர்கட்கும் உணவுதரத் தம் கொடைத்தன்மையில் தவறாதவர்கள் , நெடிய உலகத்தில் பல ஊழிகளிலும் நிலையாக இருந்த தலம் திருச்சண்பைநகர் ஆகும் . அங்குக் கோயில் கொண்ட சிவபெருமான் திருவடிகளைத் தொழுது வணங்குகின்ற அடியார்களின் தன்மையும் அதுவேயாகும் .

குறிப்புரை :

விண் - மேகம் . பொய் அதனால் - பொய்த்ததனால் . மழை விழாது ஒழியினும் - மழைத்துளிகள் விழாது ஒழிந்தாலும் . விளைவுதான் மிகவுடை - விளைவு மிகுதலையுடைய . மண்பொய் அதனால் - நிலம் வறண்டமையால் . வளம் இராது ஒழியினும் - வளம் இல்லாமல் போயினும் . தமது வண்மை வழுவார் - தமது கொடை தவறாதவர்களாகி . உண்பகர - அடியவர்களுக்கு உணவு தர . வார் உலகின் - நெடிய உலகத்தில் , ( பல ஊழிதோறும் , நிலையான பதி சண்பை நகராகும் .) ஈசன் அடி - அங்குள்ள சிவபெருமானின் திருவடிகளை . தாழும் அடியார் - வணங்கும் அடியார்களது . தன்மை அது - தன்மையும் அதுவாம் என்றது தலத்திலுள்ள வள்ளியோர் ` வான்பொய்ப்பினும் , மண்பொய்ப்பினும் வண்மைகுன்றாவாறு போல ` அடியார்களும் வானந்துளங்கினும் மண்கம்பமாகினும் , அஞ்சகில்லாது தம்வழிபாடு குறைவின்றிப் பூசிப்பர் என்பதாம் . மழைவிழாதொழிதலும் மண்வளமிலாதொழிதலும் ஒரு காலத்தும் நேரா என்ற பொருள் தரலால் அவை எதிர்மறையும்மைகள் . உணவு என்ற பெயர்ப்பகுபதம் உண் எனப் பகுதியளவாய் நின்றது .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
அரக்கனது ரக்கரசி ரத்துற வடர்த்தருள் புரிந்தவழகன்
இருக்கையத ருக்கன்முத லானவிமை யோர்குழுமி யேழ்விழவினிற்
றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்து இமயமலையரசனின் மகளான உமாதேவிக்கு அச்சத்தை உண்டாக்கிய , அறிவற்ற ஆனால் வலிமையுடைய இராவணனின் மார்பு , கைகள் , தலைகள் ஆகியவை மலையின்கீழ் நொறுங்கும்படி தன் காற்பெருவிரலை ஊன்றி , பின் அவன் தன் தவறுணர்ந்து இறைஞ்ச ஒளிபொருந்திய வெற்றிவாளும் , நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திருவிழாவில் கூடிவந்து வணங்க , தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி , மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்க திருச்சண்பைநகர் ஆகும் .

குறிப்புரை :

வரை - இமயமலையில் அவதரித்த . குலமகட்கு - சிறந்த உமாதேவியாருக்கு . ஒரு மறுக்கம் - ஓர் அச்சத்தை . வருவித்த - உண்டாக்கிய . மதி இல் - புத்தியில்லாத . வலியுடை - வலிமையையுடைய . அரக்கனது இராவணனது . உரகரசிரத்து - மார்பு , கைகள் , தலைகளில் . உற - அழுந்த . அடர்த்து - நெருக்கி , ( பின் அவன் வேண்ட அருள் புரிந்த ). அழகன் - அழகனாகிய சிவபெருமானின் . இருக்கை அது - இருக்கும் தலமாவது . ஏழ் விழவினில் - ஏழாந்திருவிழாவில் . இமையோர் குழுமி - தேவர்கள் கூடி வணங்க . கொண்டலன - மேகம் படிந்தனவாகிய . மலி - செழித்த . தண் பொழில்கள் - குளிர்ச்சி பொருந்திய சோலைகள் . தருக்குலம் - கற்பகச் சோலையை . நெருக்கும் - வருத்தும் ; சண்பைநகர் , வணங்க என ஒரு சொல் வருவிக்க . அக்காலத்துத் திருவிழாக்கள் பெரும்பாலும் ஏழாம் நாளில் முடிவுற்று வந்தனவென்பதை இப்பதிகத்தாலும் அப்பர் திருநேரிசையில் வருவதாலும் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானுமறி யாமைவளர் தீயுருவ மானவரதன்
சேலுமின வேலுமன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே.

பொழிப்புரை :

நீலமலைபோன்ற பெரிய பன்றி உருவம் கொண்ட திருமாலும் , பெரிய அன்னப்பறவையின் உருவம் தாங்கிய பிரமனும் , அறியாத வகையில் வளர்ந்தோங்கிய நெருப்புப் பிழம்பு வடிவாகிய வணங்குவோர்க்கு வேண்டும் வரங்கள் தருகின்ற சிவபெருமான் , சேல்மீனும் , வேலும் ஒத்த கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலம் , சுற்றியுள்ள அயலிடங்களிலெல்லாம் நெற்பயிர்கள் மலிந்ததும் , சோலைகளில் குயில்களும் , மற்ற பறவைகளோடு கிளிகளும் வசிக்கின்றதுமான திருச்சண்பை நகராகும் .

குறிப்புரை :

நீலவரைபோல - நீலமலையைப்போல . நிகழ் - பொருந்திய . கேழல் உருஆம் - பன்றியின் வடிவம் தாங்கிய . மாலும் - திருமாலும் . நீள் பறவை - பெரிய அன்னப்பறவையாகிய . நேர் உருவம் ஆம் - நேரிய உருவம் ஆன . மலரானும் - பிரமனும் . அறியாமை - அறியாவாறு . வளர்தீ உருவம் ஆன - வளர்ந்த நெருப்பின் வடிவு தாங்கிய . ( பரமன் ) வரதன் - சிவபெருமான் . சேலும் - மீனையும் . இனம் - சிறந்த . வேலும் அடை - வேலையும்போன்ற . கண்ணியொடு - கண்களையுடைய உமாதேவியாரோடு . நண்ணுபதி - தங்கும் தலமாவது . சூழ்புறவு எலாம் - தலத்தைச் சூழ்ந்த புறம்பு ஆகிய இடங்களில் எல்லாம் . சாலி - நெற்பயிர்களும் . மலி - செழித்த . சோலை - சோலைகளில் . குயில் - குயில்களும் . புள்ளினொடு - ஏனைப் பறவைகளும் . கிள்ளை - கிளிகளும் . பயில் - தங்கியுள்ள ( சண்பை நகர் ) வரதன் - வரந்தருபவன் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை யாளுடைய வரிவையொடு பிரிவிலி யமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல் புகவெறிகொள் சண்பைநகரே.

பொழிப்புரை :

அரசமரத்தை வணங்கும் புத்தர்களும் , அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் நேரம்தோறும் தவறாது உண்டு பொய்ப்பொருளாம் நிலையற்ற உலகப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்ற , மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றிப் பேசாத அவர்கள் உரைகளை மேற்கொண்டு , செய்யத்தக்க பயனுடைய செயல் யாதுமில்லை . பயன்தரும் நெறி எது என்று அறிபவர்களே ! முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானும் , எங்களை ஆட்கொள்ளும் உமா தேவியும் பிரியாது தங்கி இருக்கும் தலமாவது , உயர்ந்த சாதி இரத்தினங்களைத் தெளிந்த கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து வயல்களில் விழும்படி செய்கின்ற திருச்சண்பை நகராகும் . அதனைப் புகழ்ந்து பேசி அத்தலத்து இறைவனை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

போதியர்கள் - அரசமரத்தை வணங்கும் புத்தர்களும் . பிண்டியர்கள் - அசோக மரத்தைப் பாராட்டும் சமணர்களும் . போது வழுவா வகை - நேரம் தோறும் தவறாத விதம் , ( உண்டு .) பல பொய் ஓதியவர் - பல பொய்யுரைகளைச் சொல்லுபவர் . கொண்டு - மேற்கொண்டு . செய்வது - செய்யத்தகுந்த பயனுடைய செயல் . ஒன்றுமிலை - சிறிதும் இல்லை . நன்று அது - பயன்தரும் நெறி . உணர்வீர் - அறிவீர்கள் . உரைமின் - புகழ்வீர்களாக . ஆதி - முதன்மைக் கடவுளும் . எமை - எங்கள் . ஆளுடைய - ஆட்கொள்ளும் . அரிவையொடும் - அம்பிகையொடும் . பிரிவு இலி - பிரியாதவனுமாகிய சிவபெருமான் . அமர்ந்த பதி - தங்கியிருக்குந் தலமாகிய . சாதி மணி - உயர்ந்த சாதி இரத்தினங்களை . தெண்திரை கொணர்ந்து - தெளிவாகிய அலைகள் அடித்துக்கொண்டு வந்து . வயல் புக - வயலில் போய் விழும்படி . எறிகொள் - எறிதலைக்கொண்ட . சண்பை நகரே - திருச்சண்பை நகர் ஆகும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமருமூர்
சாரின்முர றென்கடல் விசும்புற முழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே.

பொழிப்புரை :

கச்சணிந்த கொங்கைகளையுடைய உமைநங்கையோடு எவ்வுயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற சங்கரன் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலமாவதும் , வீதிகள் முதலிய இடங்களில் கடலோசைபோல் முழங்குகின்ற பேரொலியானது , வானுலகைச் சென்றடையுமாறு உள்ளதும் ஆகிய திருச்சண்பை நகரைப் போற்றி , இப்பூவுலகில் நிலைத்த புகழுடைய தமிழ் ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இச்செந்தமிழ்ப் பாக்களைப் பாடுகிறவர்கள் சிவலோகத்தை அடைவர் .

குறிப்புரை :

வாரின்மலி - கச்சையணிந்த . நங்கை - மகளிரிற் சிறந்தவள் . சங்கரன் - நன்மையைச் செய்பவனாகிய சிவபெருமான் . மகிழ்ந்து அமரும் ஊர் - மகிழ்ந்து வீற்றிருக்கும் தலமாகிய . சாரின் - வீதி முதலிய இடங்களில் எல்லாம் . தெண்கடல் - தெளிவாகிய கடல்போல . முரல் - ஒலிக்கின்ற . முழங்கு ஒலி - பேரோசையானது . விசும்பு உறக்கொள் - வானுலகை யடையுமாறு கொண்ட ( சண்பைநகர் மேல் ). பாரில் - பூமியில் . மலிகின்ற - மிகுந்த . புகழ்நின்ற - புகழ் நிலைத்துநின்ற ( தமிழ் ஞானசம்பந்தன் ) உரைசெய் - பாடிய . சீரின்மலி - தாளவொத்துக்களுக்கு இசைந்த . ( செந்தமிழ் இசைப் பாடல்களை .) செப்பும் அவர் - பாடுவோர் . சிவலோக நெறி சேர்வர் - முறையே சிவலோகம் சேர்வர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்
இற்பலி கொளப்புகுது மெந்தைபெரு மானதிட மென்பர் புவிமேல்
மற்பொலி கலிக்கடன் மலைக்குவ டெனத்திரை கொழித்தமணியை
விற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகை மார்கவரும் வேதவனமே.

பொழிப்புரை :

பருக்கைக் கற்கள் மிகுந்த,பாலைவனம் போன்ற வெப்பம் உடைய சுடுகாட்டில் சிவபெருமான் நடனமாடுகின்றார். அவர் மகளிர்களின் இல்லந்தோறும் புகுந்து பிச்சை ஏற்பவர். எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூமியில், ஒலிக்கின்ற கடலலைகள் மலைச்சிகரங்களைப் போல உயர்ந்து ஓடிவந்து கரையிலே ஒதுக்குகின்ற இரத்தினங்களை வில்லைப் போன்ற வளைந்த நெற்றியும், பூங்கொடி போன்ற மெல்லிய, குறுகிய இடையும் உடைய உருத்திரகணிகையர்கள் வாரிக் கொள்கின்ற வளமிக்க திருவேதவனமாகும்.

குறிப்புரை :

கல் - பருக்கைக் கற்கள். பொலி - வெப்பம் மிகும். சுரத்தின் - பாலைநிலம் போன்ற. எரிகான் இடை - கொதிக்கும் மயானத்தில். மாநடம் அது ஆடி - சிறந்த கூத்தை ஆடி. மடவார் - பெண்களின். இல் - வீடுகளில். பலிகொள் - பிச்சை கொள்வதற்கு. புகுதும் - புகும். எந்தை பெருமான் - எனக்குத் தந்தையாகிய தலைவனின்; இடம் என்பர். புவிமேல் - இந்தப் பூமியின்மீது. மல்பொலி - வளம் மிகுந்த. கலிக்கடல் - ஓசையையுடைய கடல். மலைக்குவடு என - மலையின் சிகரங்களைப்போல (வரும்) திரை - அலைகள். கொழித்த - கொழிப்பதுபோல் மடக்கிச் சொரிந்த. மணியை - இரத்தினங்களை. வில்பொலி - வில்லைப்போன்ற. நுதல் - புருவத்தையும். கொடி (பொலி) இடை - பூங்கொடி போன்ற இடையையும் உடைய. கணிகைமார் - உருத்திர கணிகையர். கவரும் - வாரிக்கொள்கின்ற (வேதவனம்) புகுதும்:- `து\\\' சாரியை.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பண்டிரை பயப்புணரி யிற்கனக மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல்வெறியார்
வெண்டிரைகள் செம்பவள முந்துகடல் வந்தமொழி வேதவனமே. 

பொழிப்புரை :

முற்காலத்தில் ஒலிக்கின்ற அலைகளையுடைய பாற் கடலில், பொன்மயமான மந்தரமலையை மத்தாக ஊன்றி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் கடைய எழுந்த ஆலகால விடத்தை, அமுது போன்று உண்டருளிய அழகனான சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம், நிழல்தரும் சோலைகளில் வண்டுகள் ஆரவாரிப்பதாய், மாதவி முதலிய மரங்களின் மீது தவழும் தென்றற் காற்றின் நறுமணமுடையதாய்க் கடலின் வெண்ணிற அலைகள் செம்பவளங்களை உந்தித் தள்ளும், புகழுடைய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

பண்டு - முற்காலத்தில். இரை -ஒலிக்கின்ற. பயம் - பால். புணரியில் - அலைகளையுடைய பாற்கடலில். கனகமால் வரையை - பொன்மயமான பெரிய மந்தர மலையை. நட்டு - மத்தாக ஊன்றி. அரவினை - வாசுகி என்னும் பாம்பை. கயிறிற்கொண்டு - கயிறாகக்கொண்டு. கடைய - தேவர்கள் கடைய. வந்த விடம் - எழுந்த ஆலகாலவிடத்தை. உண்ட - உண்டருளிய. குழகன்றன் இடமாம் - அழகனாகிய சிவபெருமானின் இடமாகும். வண்டு இரை - வண்டுகள் ஆரவாரிக்கின்ற. நிழல் - நிழலையுடைய. பொழிலில் - சோலையிலே. மாதவியின்மீது - மாதவி முதலிய மரங்களின் மீது. அணவு - தாவிய. தென்றல் - காற்றின். வெறி ஆர் - வாசனையுடையதும். வெண்திரைகள் - வெள்ளிய அலைகளால் (செம்பவளம்) உந்து - வீசுகின்ற. கடல் வந்து - கடல் வந்து படியும். மொழி (ஆர்) - கீர்த்தியையுடையதும் ஆகிய. (வேதவனமே).

பண் :சாதாரி

பாடல் எண் : 3

காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பான்மகிழு நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழனன் மாதரிசை பாடலொலி வேதவனமே. 

பொழிப்புரை :

மேகத்தையொத்த மெல்லிய கூந்தலையுடைய, கங்காதேவியை நீண்ட சடைமுடியில் தாங்கி, மலைமகளைத் தன் திருமேனியின் பாதிப்பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, நீண்ட மாடங்களையுடைய வீதிகளில் தேர் ஓடும் திருவிழாக்களின் ஒலியும், திண்ணிய சங்குகளின் ஒலியும், ஒளி பொருந்திய பேரி அல்லது தம்பட்டம் என்னும் வாத்தியத்தின் ஒலியும், நாடோறும் ஒலிக்க, நறுமணம் கமழும் தொங்கும் கூந்தலையுடைய பெண்கள் இசைக்கருவிகளோடு பாடுகின்ற பாட்டினிசையும் ஒலிக்கின்ற திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

கார் இயல் - மேகத்தையொத்த. மெல் ஓதி - மெல்லிய கூந்தலையுடைய. நதிமாதை - கங்காதேவியை. முடி - தலையில். வார்சடையில் - நீண்ட சடையின் மேல் ( வைத்து) மலையார் நாரி - இமயமலையிலுள்ளார் மகளாகிய அம்பிகையை. ஒருபால் - ஒரு பாதியுடம்பில் (வைத்து). மகிழும் - மகிழ்கின்ற. நம்பர் - சிவ பெருமான். உறைவு - தங்கும் இடம். என்பர். நெடும் மாடம் - நெடிய மாடங்களையுடைய. மறுகில் - வீதிகளில். தேர் இயல் விழாவின் ஒலி - தேர் ஓடும் திருவிழாக்களில் ஒலிக்கும். திண்பணிலம் - திண்ணிய சங்கு. ஒண்படகம் - சிறந்த படகம் என்னும் வாத்தியம் முதலியவற்றின் ஒலியோடு. நாளும் - நாடோறும். வேரிமலி - மணம் மிக்க. வார் குழல் - தொங்கும் கூந்தலையுடைய. நல்மாதர் - உத்தமிகளாகிய பெண்கள். இசையால் - இசைக் கருவிகளோடு. இசை பாடல் ஒலி - இசைபாட்டுப் பாடுவதாலுண்டாகிய ஒலியும் (உடைய வேதவனம்). திருமறைக் காட்டை (நம்பன் உறைவு என்பர்).

பண் :சாதாரி

பாடல் எண் : 4

நீறுதிரு மேனியின் மிசைத்தொளிபெ றத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கடொறும் பிச்சைநுக ரிச்சைய ரிருந்தபதியாம்
ஊறுபொரு ளின்றமி ழியற்கிளவி தேருமட மாதருடனார்
வேறுதிசை யாடவர்கள் கூறவிசை தேருமெழில் வேதவனமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தம் திருமேனியிலே திருநீற்றை ஒளி பொருந்தப் பூசியவர். இடபவாகனத்தில் ஏறியவர். ஊர்கள்தொறும் சென்று பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, இனிய தமிழ்மொழியில் இயற் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் இளம்பெண்களுடன், வாணிகத்தின் பொருட்டு வேற்றுத் திசைகளிலிருந்து கப்பலில் வந்த ஆண்கள் பேசுவதற்குச் சொற்களைத் தெரிந்து கொள்ளும் அழகிய திருவேதவனம் ஆகும்.

குறிப்புரை :

நீறு - திருநீற்றை. திருமேனியின் மிசைத்து - திருஉடம்பின் மேலதாய். ஒளிபெறத்தடவி - ஒளிபொருந்தப் பூசி. (இடபமே ஏறி), உலகங்கள் தொறும் வந்து - ஊர்கள்தோறும் சென்று. (உலகம் - முதல் ஆகுபெயர்). பிச்சை நுகர் இச்சையர் - பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவராகிய சிவபெருமான். இருந்த பதி - இருக்கும் தலம். ஊறுபொருள் - பல கருத்துக்களைத் தருகின்ற. இன்தமிழ் - (இனிய தமிழ்) மொழியில். இயல்கிளவி - இயற் சொற்களை. தேரும் - இப்பொருட்கு இச்சொல் எனத் தேர்ந்து பேசும். மடமாதருடன் - (இலை,காய், கறி, சிறுதின்பண்டம், சிற்றுண்டி முதலியன விற்கும்) இளம் பெண்களுடனே. ஆர் - அங்கே. (வாணிகம் முதலிய வினை மேற்கொண்டு கப்பலில் வந்த). வேறு திசை ஆடவர்கள் - வேறு திசைகளினின்றும் வந்த ஆண்கள். கூற - பேசுவதற்கு. இசை தேரும் - சொற்களைத் தெரிந்துகொள்ளும். எழில் ஆர் - அழகு மிக்க. வேதவனமே - இயற்கிளவி - இயற்சொல். இசை - சொல்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனை யுலப்பில்கரு வித்திர ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண் மிடைந்துகளும் வேதவனமே. 

பொழிப்புரை :

கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை , படகம் என்னும் இசைக்கருவிகள் ஒலிக்க, தேவர்கள் துதிக்க, தாளத்திற்கேற்பத் திருத்தாளையூன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்து வல்லவர்களும் நெருங்கி மகிழ்ச்சி மீதூரத் துள்ளிக் குதிக்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

கத்திரிகை துத்திரி இவ்வாத்தியங்களுடனே. கறங்கு துடி - ஒலிக்கும் உடுக்கையும். தக்கை - தக்கை என்னும் வாத்தியத்தோடு. இடக்கை படகம் என்னும் இவற்றோடு. உலப்பு இல் - அளவற்ற. எத்தனை கருவித்திரள் - எவ்வகைப்பட்ட இசைக் கருவிகளின் கூட்டங்கள். அலம்ப - ஆரவாரிக்க. இமையோர்கள் - தேவர்கள். பரச - துதிக்க. ஒத்து - தாள ஒத்துக்கிணங்க. அற - நன்றாக. மிதித்து - தாளையூன்றி. நடம் இட்ட - நடனமாடிய. ஒருவர்க்கு - சிவபெருமானுக்கு (இடம் அது என்பர்). மெய்த்தகைய - உண்மைத் தன்மையையுடைய. பத்தர்கள் - பக்தர்களும். சித்தர்கள் - சித்து வல்லவர்களும். மிடைந்து - நெருங்கி. உகளும் - மகிழ்ச்சி மீக்கூரும். (வேதவனமே;) உகளுதல் - துள்ளிக் குதித்தல்;- அது மகிழ்ச்சிமீக்கூர நிகழ்வதாற் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது.

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகை மடங்கவன லாடுமரனூர்
சோலையின் மரங்கடொறு மிண்டியின வண்டுமது வுண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே. 

பொழிப்புரை :

மாலையில் தோன்றும் சந்திரனும், ஒளிபொருந்திய பாம்பும், கொன்றை மலரும் நெருங்கிய சடையில் தங்கிச் சுழன்று புரள, காலையில் தோன்றிய கதிரவன் ஒளியும் விண்மீன்களின் ஒளியும், திருமேனியின் ஒளியும், திருநீற்றுப் பூச்சின் ஒளியும் கண்டு அடங்குமாறு, நெருப்பேந்தி நடனமாடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சோலைகளிலுள்ள மரங்களில் வண்டினங்கள் தேனைக்குடித்து ஒலி செய்ய, கடலினின்றும் ஒலிக்கும் சங்குகளையும், கப்பல்களையுடைக்கும் சுறாமீன்களையும் அலைகள் கரைக்குக் கொணரும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

மாலைமதி - மாலைக்காலத்தில் உதிக்கும் சந்திரனும். வாள் அரவு - ஒளி பொருந்திய பாம்பும். (கொன்றை மலர்) துன்று - நெருங்கிய (சடை). நின்று - தங்கி. சுழல - சுழன்று புரள. காலையில் எழுந்த கதிர் - உதய சூரியனும். தாரகை - விண் மீன்களும். மடங்க - திருமேனிக்கும், திருநீற்றுப்பூச்சிற்கும் முறையே நிகராகாமல் தோற்க, அனல் ஆடும் - தீயில் நின்று நடம் புரியும், (அரனது ஊர்). சோலையில் - மரங்கள் தொறும். மிண்டி - நெருங்கி. இனவண்டு - வண்டின் கூட்டங்கள். மது உண்டு - தேனைக் குடித்து. இசை செ(ய்)ய - இராகம் பாட. வேலை - கடலினின்றும், ஒலிசங்கு - ஒலிக்கும் சங்குகளையும், வங்க சுறவம் - கப்பல்களையுடைக்கும் சுறாமீன்களையும், திரை - அலைகள் (கொணரும் வேதவனமே) மாலைமதி, வங்கசுறவம் இவை உருபும் பயனும் தொக்க தொகைகள்.

பண் :சாதாரி

பாடல் எண் : 7

வஞ்சகம னத்தவுணர் வல்லரண மன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தவம ரர்க்கமர னாதிபெரு மானதிடமாம்
கிஞ்சுக விதழ்க்கனிக ளூறியசெவ் வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக வியக்கர்முனி வக்கண நிறைந்துமிடை வேதவனமே.

பொழிப்புரை :

வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய அசுரர்களின் மூன்று மதில்களையும் பெரிய மேருமலையை வில்லாக வளைத்து அழகிய உலகில் ஒழித்த தேவதேவனாம், முழுமுதற் கடவுளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, முள் முருக்கம் பூவையொத்த உதடுகளால், கனிபோன்று இனிய மொழிகளைப் பேசும் சிவந்த வாயையுடைய பெண்கள் பாட, வியக்கும் மனத்தையுடைய இயக்கர்களும், முனிவர் கூட்டங்களும் நிறைந்து போற்ற விளங்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

வஞ்சக மனத்து - வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய. அவுணர் - அசுரர்களின். வல் அரணம் - வலிய (மூன்று) மதில்களையும். அம் சகம் - அழகிய உலகில். அவித்த - ஒழித்த, அமரர்க்கு அமரன் - தேவதேவனாகிய. ஆதி பெருமானது - முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது. இடம் ஆம். கிஞ்சுக இதழ் - முள் முருக்கம் பூவையொத்த உதடுகளில். கனிகள் ஊறிய - இனிமையின் ஊற்றென்னும் படியான (சொற்களைப் பேசும்). செவ்வாயவர் - சிவந்த வாயையுடைய பெண்கள். பாடல் பயில - பாட. விஞ்சு சுகம் - (வியப்பு) மிக்க மனத்தையுடைய. இயக்கர் - இயக்ஷர்களும். முனிவக் கணம் (துறந்த) முனிவர்கூட்டமும். (அப்பாடலைக் கேட்க) நிறைந்து மிடை - நிறைந்து நெருங்குகின்ற. (வேதவனமே) முனிவர்+கணம் - முனிவக்கணம் என்றாயிற்று. வாணியத்தெரு. என்ற தொடரிற்போல, \\\"சிலவிகாரமாம் உயர்திணை\\\" என்ற நன்னூல் விதிப்படி.

பண் :சாதாரி

பாடல் எண் : 8

முடித்தலைகள் பத்துடை முருட்டுரு வரக்கனை நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற மியற்றுதல் கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே. 

பொழிப்புரை :

கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையுடையனாய், முரட்டுத் தன்மையுடைய அரக்கனான இராவணனைத் தன் காற் பெருவிரலை ஊன்றி மலையின்கீழ் நெருக்கிப் பின் அவனுக்குக் கருணைபுரிந்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், பலவிதத் துன்பங்களும் கெடும்படி அறம் இயற்றும் முயற்சியுடையவர்களாய், புலவர்களின் வறுமையை நீக்கக் கருதித் திரவியங்களைக் கொடுக்கும் கொடையாளிகள் நிறைந்த திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

முடி - கிரீடம். (தலைகள் பத்து உடைய) முருடு உரு - முரட்டுத் தன்மைகாட்டும் உருவையுடைய. (அரக்கனை விரலால், நெருக்கி அடித்து). முன் - அக்காலத்தில். அடித்தலம் - பாதாளத்தில். வைத்து - இருத்தி. அலமர - கலங்கும்படி. கருணை வைத்தவன் - மறக்கருணை புரிந்தருளிய சிவபெருமானது. இடம் - வாழும் இடம் (யாதெனில்) பல துயர் - (அதனால் விளையும் பலவித துன்பங்களையும். கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதலில்) கிளர்ந்து - முயற்சியுடையவர்களாய். புலவாணர் - புலமையால் வாழ்பவர்களாகிய புலவர்களினின்றும். வறுமை - வறுமையை. விடுத்தலை மதித்து - நீக்குதலை அழுத்தமாகக் கருதி. நிதி - திரவியங்களை. நல்குமவர் - கொடுக்கும் கொடையாளிகள். மல்குபதி - நிறைந்த தலமாம்.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வாசமலர் மேவியுறை வானுநெடு மாலுமறி யாதநெறியைக்
கூசுதல்செ யாதவம ணாதரொடு தேரர்குறு காதவரனூர்
காசுமணி வார்கனக நீடுகட லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே. 

பொழிப்புரை :

நறுமணம் கமழும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத சிவன் பெருமையைப் பழிப்பதற்குக் கூசாத பயனிலிகளாகிய சமணர்களுடன், பௌத்தர்களும் அடையாத சிவபெருமான் வீற்றிருக்கும் தலமாவது செம்படவர்கள் பெரிய கடலலைகள் ஓடிவரும்போது வலையை வீசி, அவை கொணர்கின்ற இரத்தினங்களையும் ,மணிகளையும் சிறந்த பொன்னையும் வாரி விலைபேசும் அழகிய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

மலர் மேவி உறைவானும் - தாமரை மலரில் தங்கி வசிப்பவனாகிய பிரமனும். நெடுமாலும் - திருமாலும். அறியாத - அறியாததாகிய. நெறி - சிவன் பெருமையை. கூசுதல் செயாத - பழிப்பதற்குக் கூசாத, அமண் ஆதரோடு - பயனிலிகளாகிய சமணர்களுடன். தேரர் - பௌத்தர்களும். குறுகாத - அடையாத. அரன் - அச்சிவபெருமானது. (ஊர்) நீடு - நெடிய. கடல் - கடலில். ஓடு - ஓடிவருகின்ற. திரை - அலைகள். வார் - சொரிகின்ற. துவலைமேல் - திவலைகளின்மேல், (வலையைவீசுகின்ற) வலைவாணர் - செம் படவர்கள். காசு - இரத்தினங்களையும். மணி - முத்துக்களையும். வார்கனகம் - மிக்க பொன்னினையும். (வாரி விலை பேசும்) எழில் - அழகிய (வேதவனம்).

பண் : சாதாரி

பாடல் எண் : 10

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 11

மந்தமுர வங்கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன மேவுசிவ னின்னருளினால்
சந்தமிவை தண்டமிழி னின்னிசை யெனப்பரவு பாடலுலகில்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில் வார்களுயர் வானுலகமே. 

பொழிப்புரை :

மந்தமான ஓசையுடைய கடல்வளமிக்க சீகாழிப் பதியில் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த ஞான சம்பந்தன், திருவேதவனத்தில் வீற்றிருந்தருளும் திருவெண்ணீறு அணிந்த சிவபெருமானின் இன்னருளால் அவனைப் போற்றிச் சந்தம் விளங்கும் இன்னிசையால் அருளிய இத்திருப்பதிகத்தைப் பாடுபவர்கள் உயர்ந்த சிவலோகத்தில் வாழ்வர்.

குறிப்புரை :

மந்தம் முரவம் - மந்தமான ஓசையையுடைய. கடல் வளம் கெழுவு - கடலினால் பெறத்தகும் வளங்கள் பொருந்திய. காழிபதி - சீகாழி யென்னும் தலத்தில். மன்னு - நிலைபெற்ற, கவுணி - கவுணிய கோத்திரத்தினர். (`கவுணிபந்தன் என இயைக்க\\\' இருபெயரொட்டுப் பண்புத் தொகை.) (வெந்த) பொடி நீறு - பொடியாகிய நீறு (நீறணியும் சிவன் என்க). சந்தம் இவை - சந்த இசையோடு கூடிய இப் பாடல்கள். தண்தமிழின் இன்னிசை - குளிர்ந்த தமிழ் மொழியின் இனிய இசைப்பாடல்கள். என - என்று. பரவு பாடல் - துதித்துப் பாடிய பாடல். உயர் வான் உலகம் - சிவலோகத்தில். பயில்வர் - வாழ்வார்கள்.

பண் :சாதாரி

பாடல் எண் : 1

பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புன றங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடம்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபட ரள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , வரப்பின்மேல் இள வள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில் , இள வாளை மீன்கள் துள்ளிப்பாய , இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும் , நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும் .

குறிப்புரை :

பொன் இயல் - பொன்மயமான . பொருப்பு அரையன் - இமயமலைஅரசனது . மங்கை ஒரு பங்கர் - புதல்வியாராகிய அம்பிகையை ஒரு பாகமாக உடையவர் . புனல் தங்கு சடைமேல் - கங்கை நீர் தங்கும் சடையின்மேல் . வன்னியொடு - வன்னிப் பத்திரத்துடன் , மத்தம் மலர் - பொன்னூமத்தைப்பூவை . வைத்த - அணிந்த . விறல் வித்தகர் - வலிய சமர்த்தராகிய சிவபெருமான் . ( மகிழ்ந்து ) உறைவு இடம் - தங்கும் இடமாவது . இளவள்ளை படர் அள்ளல் வயல்வாய் - இளம் வள்ளைக் கொடிகள் ( வரப்பின்மேல் ) படர்ந்த சேற்றையுடைய வயலில் . கன்னி இளவாளை - மிக்க இளமை பொருந்திய வாளைமீன்கள் . குதிகொள்ள - குதித்துத் தாவும்படி . இளமேதிகள் - இள எருமைகள் . மன்னி - தங்கி . படிந்து - மூழ்கி . மனைசேர் - வீட்டிற்குச் சேரும் உதவி மாணிகுழி - திருமாணி குழியென்னும் பதியேயாம் . இத்தலம் ` உதவி ` என்னும் அடைமொழியோடு இணைத்தே கூறப்படுகிறதன் காரணம் விசாரித்து அறியத்தக்கது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறுமிசை பாடிவசி பேசுமர னார்மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ வண்டுமுர றண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகி னீடுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

ஒளிமிகுந்த திருவெண்ணீற்றினைத் திருமேனியில் உத்தூளணமாகப் பூசி , தோலை ஆடையாக அணிந்து , தெருக்களில் பெண்கள் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று இசைப்பாடல்களைப் பாடி வயப்படுத்தும் பேச்சுக்களைப் பேசும் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலம் மகரந்தப்பொடிகள் மிக்க தாமரை மலர்கள் மணம் வீசுவதும் , வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடையதும் , கடலலைகளின் ஓசை மிகுந்ததும் ஆகி விளங்குகின்ற திருமாணிகுழி என்பதாம் .

குறிப்புரை :

சோதி மிகு - ஒளி மிகுந்த . நீறு அது - திருநீற்றை . மெய்பூசி - திருமேனியில் உத்தூளித்து . ஒரு தோல் உடை புனைந்து - தோலை ஆடையாக அணிந்து , தெருவே - தெருக்களில் . மாதர் மனைதோறும் - பெண்டிர் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் . இசைபாடி - இசைப் பாடல்களைப் பாடி . வசி - வயப்படுத்தும் பேச்சுக்களை பேசும் . ( அரனார் மகிழ்வு இடமாவது ) தாது மலி - மகரந்தப் பொடிகள் மிக்க , ( தாமரை ). மணம் கமழ - மணம் வீச . வண்டு முரல் - வண்டுகள் ஒலிக்கும் . பழனம் மிக்கு - வயல்கள் மிக்கு . ஓதம் மலி - ஓசை மிகுந்த . வேலை புடை சூழ் - கடல் சூழ்ந்த , உலகில் - இவ்வுலகில் , உதவி மாணிகுழியே - திருமாணிகுழியேயாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

அம்பனைய கண்ணுமை மடந்தையவ ளஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தவர னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடி யழகார்
உம்பரவர் கோனகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி அஞ்ச , கோபமுடைய , தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , நறுமணமிக்க சோலை களையுடையதும் , இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள் நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும் .

குறிப்புரை :

அம்பு அனைய - அம்புபோன்ற . கண் உமை மடந்தை அவள் , கண்களையுடைய உமாதேவியார் . அஞ்சி வெருவ - மிகவும் அஞ்ச . சினம் உடை - கோபத்தையுடைய . கம்பம் - தூணிலே கட்டக் கூடிய . யானை உரி செய்த - யானையை உரித்தருளிய . அரனார் - சிவபெருமான் . கருதி - எண்ணி . மேய - மேவிய ; இடமாம் . வம்புமலி - வாசனைமிக்க . ( சோலை ) புடைசூழ - சுற்ற . மணி - இரத்தினங்கள பதித்த . மாடம் - வீடுகளின் வரிசை . நீடி - உயர்ந்து . அழகு ஆர் - அழகு பொருந்திய . உம்பரவர் கோன் - தேவர்க்கு அரசனாகிய இந்திரனது . நகரம் என்ன - நகரமாகிய அமராவதி என்னும்படி . மிக மன்னு - நன்கு நிலைபெற்ற . ( உதவிமாணி குழியே ).

பண் :சாதாரி

பாடல் எண் : 4

நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம்
கொத்தலர் மலர்ப்பொழிலி னீடுகுல மஞ்ஞைநட மாடலதுகண்
டொத்தவரி வண்டுக ளுலாவியிசை பாடுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம் பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , கொத்தாக மலர்ந்துள்ள பூக்களையுடைய சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட அதைப்பார்த்த வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு இசைபாடுகின்ற திருமாணிகுழி ஆகும் .

குறிப்புரை :

நித்தம் - நாடோறும் . நியமத் தொழிலனாகி - அநுட்டானம் முதலிய நியமமாய்ப் பூண்டவனாய் . நெடுமால் - திருமால் . குறளன் ஆகி - வாமன வடிவங்கொண்டு . மிகவும் சித்தம் ( அது ) ஒருக்கி - மனத்தை நன்கு ஒரு முகப்படுத்தி . ( வழிபாடு செய்ய ) நின்ற - இருந்த . சிவலோகன் - சிவலோக நாயகனாகிய சிவபெருமான் ( இடமாம் .) கொத்து அலர் - கொத்துக்களிலே மலர்ந்த . மலர்ப் பொழிலில் - மலர்களையுடைய சோலையில் . நீடுகுல மஞ்ஞை - சிறந்த மயில்கள் . நடமாடல் அது - நடித்தலை . கண்டு - பார்த்து , வரி வண்டுகள் - கீற்றுகளையுடைய வண்டுகள் உலாவி - சுற்றி . ஒத்த இசைபாடு - ஒத்த இசைகளைப் பாடுகின்ற ( உதவிமாணிகுழி ).

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மாசின்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழன் மடந்தையர்கண் மாளிகையின் மன்னியழகார்
ஊசன்மிசை யேறியினி தாகவிசை பாடுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில் சூடியவர் . வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை அழித்து நற்குண நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் தலம் , நறுமணமிக்க மெல்லிய கூந்தலையுடைய பெண்கள் , மாளிகைகளில் தங்கி அழகிய ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற திருமாணி குழி ஆகும் .

குறிப்புரை :

மாசுஇல்மதி - குற்றமில்லாத சந்திரனை . சூடு - அணிந்த சடைமுடியர் - பெரிய சடாமுடியையுடையவர் . வல் அசுரர் - வலிய அசுரர்களின் . தொல்நகரம் - பழைய திரிபுரங்களை . முன் - அக்காலத்தில் . நாசம் ( அது ) செய்து - அழித்து . ( நல்வானவர்களுக்கு அருள் செய் ). நம்பன் இடமாம் - சிவபெருமானின் இடமாம் . வாசமலி - மணம் மிகுந்த . மென்குழல் மடந்தையர்கள் - மெல்லிய கூந்தலையுடைய மாதர்கள் , மாளிகையின் மன்னி - மாளிகைகளில் தங்கி , அழகுஆர் - அழகு பொருந்திய . ஊசல்மிசை ஏறி - ஊசலின்மேல் ( ஏறி உகைத்து ). இனிதாக இசைபாடு - இனிமையுடையதாக ஊசற் பாட்டைப் பாடி ( ஆடுகின்ற உதவிமாணி குழியே ).

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும் மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , சந்தன மரங்கள் , கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து , குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும் கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி ஆகும் .

குறிப்புரை :

மந்தமலர்கொண்டு - நன்கு மலராத மலர்களைக் கொண்டு . வழிபாடுசெய்யும் - பூசனைபுரிந்த . மாணி - மார்க்கண்டேயரின் . உயிர்வவ்வ மனமாய் - உயிரைக் கவரும் கருத்தோடு ( வந்த ஒரு காலன் உயிர் மாள ) உதைசெய்த - உதைத்த . மணிகண்டன் - நீலகண்டனாகிய சிவ பெருமானின் ( இடம் ஆம் ). சந்தினோடு - சந்தனமரங்களோடு . கார் அகில் - கரிய அகிற் கட்டைகளையும் ( சுமந்து மலையினின்றும் இறங்கி ) தடம் மாமலர்கள் கொண்டு - தடாகங்களிற் பூத்த சிறந்த மலர்களையும் கொணர்ந்து . கெடிலம் உந்துபுனல் - திருக்கெடில நதியின் மோதும் தண்ணீர் வயல்பாயும் - வயலிற் பாய்வதனால் எய்திய . மணம்ஆர் - வாசனை பரவுகின்ற ( உதவிமாணிகுழி ).

பண் :சாதாரி

பாடல் எண் : 7

எண் பெரிய வானவர்க ணின்றுதுதி செய்யவிறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சுதனை யுண்டுலக முய்யவரு ளுத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது வுண்டுநிறை பைம் பொழிலின்வாய்
ஒண்பலவி னின்கனி சொரிந்துமண நாறுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதிசெய்யப் பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம் உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , பண்ணிசை பாடுகின்ற வண்டுகள் , பல மலர்களையும் கிளறி , தேனருந்த , வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம் கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும் .

குறிப்புரை :

எண் பெரிய - மிக்க செருக்கையுடைய . வானவர்கள் - தேவர்கள் ( நின்று துதிசெய்ய .) இறையே - சற்று . கருணை ஆய் - கிருபை உடையவராகி . உண்பு அரிய - எவரும் உண்ணுதற்கு அரிய . ( நஞ்சுதனை உண்டு ). உலகு உய்ய அருள் உத்தமனிடம் - உலகம் உய்யும்படி அருள் புரிந்த உத்தமனாகிய சிவபெருமானது இடமாவது . பண்பயிலும் - இசையைப் பாடிக்கொண்டிருக்கும் ( வண்டு ). பல - பல மலர்களையும் . கெண்டி - கிளறி . மது உண்டு - தேனைக் குடிக்க . நிறை - வளம் நிறைந்த . பைம் பொழிலின் வாய் - பசிய சோலையினிடத்து . ஒண்பலவின் - சிறந்த பலா மரங்களின் . இன்கனி - இனிய கனிகள் . சொரிந்து - தேனைச் சொரிந்து . மணம் நாறு - மணங்கமழ்கின்ற ( உதவி மாணிகுழியே .)

பண் :சாதாரி

பாடல் எண் : 8

எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய வரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம்
பண்ணமரு மென்மொழியி னார்பணை முலைப்பவள வாயழகதார்
ஒண்ணுதன் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

கயிலைமலையின் பெருமையையும் , சிவ பெருமானின் அளவற்ற ஆற்றலையும் சிந்தியாது , கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனான இராவணனை அம்மலையின்கீழ் நெரித்து , பின் அவன் சாமகானம் பாட அருள்புரிந்த சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , பண்போன்று மென்மொழி பேசுபவர்களாய்ப் பருத்த கொங்கைகளையும் , பவளம் போன்ற வாயையும் , அழகிய ஒளிபொருந்திய நெற்றியையுமுடைய பெண்கள் கையாற் குடைந்து நீராடும் திருமாணி குழி ஆகும் .

குறிப்புரை :

எண்ணம் அது இன்றி - முன் யோசனை சிறிதும் இல்லாமல் ( துணிந்து ) எழில்ஆர் - அழகு பொருந்திய . கயிலை மா மலை - சிறந்த கயிலாயமலையை . எடுத்த - எடுக்கத் தொடங்கிய . திண்ணிய - ( இலேசில் அழிக்கமுடியாத ) வலிமை வாய்ந்த . திறல் ஆர் - திறமையுடைய . அரக்கனை - இராவணனை . நெரித்து - அடர்த்து ( பின் அருள்புரிந்த .) சிவலோகன் - சிவலோகநாயகனாகிய சிவபெருமானது .( இடம் ஆம் .) பண் அமரும் - இசை பொருந்திய . மென்மொழியின் - மெல்லெனப் பேசும் சொற்களையும் . ஆர் - ( அணிகலன்கள் ) நிறைந்த . பணை - பருத்த . முலை - தன பாரங்களையும் . பவளவாய் - பவளம் போன்ற வாயையும் . அழகு ( அது ) ஆர் - அழகு பொருந்திய . ஒள் - ஒளிவாய்ந்த . நுதல் - நெற்றியையுமுடைய ( மடந்தையர் ). குடைந்து புனல் ஆடு - ( கையால் ) குடைந்து நீராடும் , ( உதவிமாணிகுழி ).

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நேடுமய னோடுதிரு மாலுமுண ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கண்மத மத்தமித ழிச்சடையெம் மீசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவி
னூடுலவு புன்னைவிரை தாதுமலி சேருதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப்பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . அவர் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும் , ஊமத்தை , கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குபவர் . எம் இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , மகரந்தப்பொடி நிறைந்த மல்லிகை , குருந்து , மாதவி , செருந்தி , குரவம் , புன்னை என்ற மணம் கமழும் மலர்கள் நிறைந்த திருமாணிகுழி என்பதாம் .

குறிப்புரை :

நேடும் - தேடும் . அயனோடு - பிரமனுடன் . ( திருமாலும் ) உணரா ( த ) வகை - உணராதவிதம் . நிமிர்ந்து - (` பாதாளம் ஏழினும் கீழ் ... ... ... பாதமலர் , போதார்புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே ` என்ன ஓங்கிய .) முடிமேல் - தலையில் . ஏடு உலவு திங்கள் - ( வெண்தாமரை ) இதழ்போல் தவழ்கின்ற பிறைச்சந்திரனையும் . மதம் - மணம் வீசுகின்ற , மத்தம் - பொன்னூமத்தையையும் . இதழி - கொன்றை மாலையையும் . சடை - சடையையும் உடைய , ( எம் ஈசன் இடம் ஆம் .) மாடு - பக்கங்களிலே . உலவு - படர்கின்ற .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

மொட்டையம ணாதர்முது தேரர்மதி யில்லிகண் முயன்றனபடும்
முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தவதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

மொட்டைத் தலையுடைய சமணர்களும் , பேதைமை முதிர்ந்த புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள் . முயன்று செய்த வினைகளே பயன்தரும் . அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்பவர்கள் அவர்கள் . உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத , அவர்கள் சொன்ன சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும் , பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி ஆகும் .

குறிப்புரை :

மொட்டை - மொட்டைத் தலையையுடைய . அமண் ஆதர் - சமணர்களாகிய அறிவிலிகளும் . முது தேரர் - பேதைமையின் முதிர்ந்த புத்தர்களுமாகிய , மதி இல்லிகள் - புத்தியற்றவர்களும் , முயன்றன படும் - முயன்று செய்த வினைகளே பயன்தரும் ( அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்லும் ) முட்டைகள் - உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத அவர்கள் மொழிந்த மொழி கொண்டு - சொன்ன சொற்களால் , அருள் செய்யாத - அருள் புரியாத ( முதல்வன்றனிடமாம் ,) மட்டை மலி தாழை - மட்டைகளையுடைய தென்னைகளின் . இளநீர் - இளநீர்கள் . முதிய வாழையில் - முதிர்ந்த வாழையில் . விழுந்த அதரில் - விழுந்த வழியே . ஒட்டமலி - வரிசையாக உள்ள : பூகநிரை - கமுகின் சோலைகளின் . தாறு உதிர - குலைகளில் உள்ள காய்கள் உதிரும் படியாக , ஏறு - எற்றித்தாக்கும் ( உதவிமாணிகுழியே .)

பண் :சாதாரி

பாடல் எண் : 11

உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியவெம் மானையடி சேருமணி காழிநகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கணெடு வானநிலனே.

பொழிப்புரை :

பலபொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும் கெடிலநதி சூழ்ந்த உதவி மாணிகுழியின் மீது , மாலைக்காலப் பிறைச்சந்திரனைச் சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திரு வடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர் .

குறிப்புரை :

உந்திவரு - பல பொருள்களை அடித்துக்கொண்டு வருகின்ற . தண் - குளிர்ச்சி பொருந்திய . கெடிலம் - கெடில நதியின் . ஓடுபுனல் - ஓடும் தண்ணீர் . சூழ் - சூழ்ந்த . ( உதவிமாணி குழிமேல் .) அந்திமதி சூடிய எம்மானை - அந்திக்காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனை அணிந்த எம் தலைவனாகிய சிவபெருமானது . அடி - திருவடிகளை . சேரும் - இடைவிடாது தியானிக்கும் . அணி - அழகிய . காழிநகரான் - சீகாழியில் அவதரித்தருளியவரும் . சந்தம் நிறை - சந்தம் நிறைந்த . தண் தமிழ் - இனிய தமிழை . தெரிந்து உணரும் - அறிந்து உணர்ந்த ( ஞானசம்பந்தனது .) சொல் - சொற்களாகிய இப்பதிகத்தை . முந்தி - முற்பட . இசை செய்து - இசையைத் தொடங்கி . மொழிவார்கள் - பாடுவோர் . நெடுவான நிலன் - எவற்றினும் உயர்ந்ததாகிய முத்தியுலகத்தை , உடையார் - உடைமையாகப் பெறுவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.

பொழிப்புரை :

திருநீற்றினையும் , வரிகளையுடைய ஆடும் பாம்பையும் , ஆமையோட்டையும் , அக்குமணியையும் , எலும்பு மாலையையும் சிவபெருமான் அணிந்துள்ளார் . அவர் இடப வாகனத்தில் ஏறுவார் . யாவரும் வணங்கத்தக்க முதல்வராகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பாளைகள் விரிந்த பாக்குமரங்கள் நிறைந்த சோலைகளிலும் , பழங்கள் கனிந்த வாழைத் தோட்டங்களிலும் நறுமணம் வீச , மடுக்களில் ஆணும் , பெண்ணுமான வாளை மீன்கள் வேறு பிரியாமல் விளையாடும் , வயல்வளமிக்க திருவேதிகுடி ஆகும் .

குறிப்புரை :

நீறு - திருநீற்றையும் . வரி - நெடிய . ஆடு அரவொடு - ஆடும் பாம்புடனே . ஆமை - ஆமையோட்டையும் . மனவு - அக்குப் பாசியையும் . என்புநிரை - எலும்பு மாலையையும் . பூண்பர் - அணிவார் . இடபம் ஏறுவர் - காளையை ஏறிநடத்துவார் . யாவரும் - எவரும் . இறைஞ்சு - வணங்கத்தக்க . கழல் - திருவடிகளையுடைய , ஆதியர் - முதல்வர் ஆகிய சிவபெருமான் ( இருந்த இடம் ஆம் .) தாறு விரி - பாளைகள் விரிந்த . பூகம் - கமுகஞ்சோலைகளிலும் , ( பழங்கள் கனிந்த ) மலிவாழை - அடர்ந்த வாழைத் தோட்டங்களிலும் , விரை நாற - வாசனை வீசவும் . மடுவில் - மடுக்களில் . இணைவாளை - ஆணும் பெண்ணுமான வாளைமீன் இணைகள் . வேறு பிரியாது விளையாட - வேறாகப் பிரியாமல் விளையாடவும் . வயல் வளம் ஆரும் - வயல்களில் வளங்கள் மிகுந்தும் உள்ள . வேதிகுடி - திருவேதி குடியே . ஆமை என்ற சொல் , ஆமை யோட்டைக் குறிப்பது ; முதலாகு பெயர் . மனவு - அக்குப்பாசி , வேட்டுவக் கோலம் தாங்கிய பொழுது அணிந்தது . நிறை - வரிசை ; இங்கு மாலையைக் குறித்தது . அயன் அரி முதலிய தேவர்கள் செருக்குறா வண்ணம் பலவூழிகளிலும் இறந்த அவர்தம் எலும்பை மாலையாக அணிந்தவர் . ( கந்தபுராணம் ததீசியுத்தரப் படலம் - 12) காண்க . ஏறுவர் + யாவரும் = ஏறுவரி யாவரும் . விரைநாற என்பதற்கேற்பப் ` பழங்கள் கனிந்த ` என அடை வருவித்துரைக்கப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

சொற்பிரிவி லாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமு னயின்றவ ரியன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் இசையும் , சொல்லின் மெய்ப்பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப்பாடி நடனம் ஆடுவார் . முதிர்ந்த யானையின் தோலை உரித்து மல்யுத்தம் புரிய வல்ல தோளில் இனிதாக அணிவார் . நாள்தோறும் தேவர்கள் வணங்க , உண்ணுதற்கரிய நஞ்சை அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர் . பலவாற்றானும் புகழ்மிக்க மலையரையன் மகளாகிய உமாதேவியாரை ஒருபாகமாகக் கொண்டருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி என்பதாம் .

குறிப்புரை :

சொல் பிரிவு இலாத - இசையோடு சொற்பிரியாத . மறை - வேத கானத்தை . பாடி - பாடிக்கொண்டு . நடம்ஆடுவர் - நடனம் ஆடுவர் . தொல் - முதிர்ந்த . ஆனை - யானையின் . உரிவை - தோலை . மல் புரி புயத்து - மல் யுத்தம் புரியவல்ல தோளில் . ( எந்நாளும் ) இனிது மேவுவர் - இனியதாக அணிவார் . வளர் வானவர் தொழ - அச்சம் மிகுந்த தேவர்கள் துதிக்க . துற்பு அரிய - உண்ணுதற்கரிய , நஞ்சு அமுதமாக முன் அயின்றவர் - விடத்தை அமுதமாக முற் காலத்தில் உண்டருளியவர் . தொகுசீர் இயன்ற - பலவாற்றானும் தொக்க புகழ் பொருந்திய . வெற்பு அரையன் மங்கை - மலை அரையன் மகளாகிய உமாதேவியாரை . ஒரு பங்கர் - ஒரு பாகமாகக் கொண்டு அருளியவராகிய சிவபெருமானது , ( நகர் திருவேதிகுடியே ) வேத புருடனுக்குச் சந்தஸ் ( இசை ) பாதமாகக் கூறப்படுவதால் பாதமின்றி நடைபெறாமை குறித்தற்குச் சொற்பிரியாத என்பதற்குச் செயப்படு பொருள் வருவித்துரைக்கப்பட்டது . மற்போர் அருச்சுனனுடன் நடந்தது . தங்களுக்கு உயிர் அளித்தமை கருதி வானவர் எந்நாளும் தொழ நஞ்சு அயின்றனரென வரலால் தொழ என்பது காரியப் பொருட்டு . துற்று - உண்டி . துற்பு - உண்ணல் . துன் ( னுதல் ) பு துற்பு என்றுகொண்டு . அண்டுதற்கரிய எனினும் ஆம் . அயிலல் - உண்ணல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச்சந்திரனை அணிந்தவர் . பாம்பு , கொன்றைமலர் இவற்றைச் சடையிலணிந்து , அதில் தங்கிய கங்காநதியைப் பகீரதன் முயற்சிக்கு வெற்றி உண்டாக உலகிற் பாயச்செய்த அருளாளர் . விடம் உண்டதால் கருநிறம் வாய்ந்த கண்டத்தையுடையவர் . தேவலோகத்திலுள்ள மகளிரும் , ஆடவரும் தங்கள் குறைகளைக் கூறி அவை தீர அருளை வேண்டுபவர் . அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர் . புலித் தோலாடை அணிந்தவர் . அதன் மேல் யானைத்தோலைப் போர்த்தவர் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி ஆகும் .

குறிப்புரை :

போழும் மதி - வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச் சந்திரன் . பூண் - சுற்றிய . அரவு - பாம்பு . ( கொன்றை மலர் ஆகிய இவைகள் ) துன்றுசடை - நெருங்கிய சடா மகுடத்தினின்றும் . வென்றி புக - ( பகீரதன் முயற்சிக்கு ) வெற்றி உண்டாக . மேல் வாழு நதி - அதன் மேல் தங்கிய கங்காநதியை . தாழும் - உலகிற் பாயச்செய்த ( அருளாளர் ) இருளார் மிடறர் - கருமை பொருந்திய கண்டத்தை யுடையவர் . மாதர் இமையோர் - மாதர்களோடு கூடிய தேவர்கள் . சூழும் இரவாளர் - சுற்றி நின்று தங்கள் குறைகளை வேண்டி இரக்கப்படுபவர் . ( திருமார்பில் ) விரி நூலர் - ஒளி பரவிய பூணூலை யுடையவர் . வரி தோலர் - புலித்தோலுடையையுடையவர் . மேல் - உடம்பின்மீது . வேழ உரி போர்வையினர் - யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டருளியவர் ( ஆகிய சிவபெருமான் ) மேவு பதி - தங்கும் தலம் . வேதிகுடி என்பர் - திருவேதிகுடி என்பர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

காடர்கரி காலர்கனல் கையரனன் மெய்யருடல் செய்யர்செவியில்
தோடர்தெரி கீளர்சரி கோவணவ ராவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கண்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பவர் . யானையின் தோலை உரித்து அதற்குக் காலனாக ஆனவர் . நெருப்பைக் கையில் ஏந்தியவர் . நெருப்புப் போன்ற சிவந்த மேனி உடையவர் . தூய உடம்பினர் . காதில் தோட்டை அணிந்தவர் . கிழிந்த ஆடை அணிந்தவர் . சரிந்த கோவணத்தை அணிந்தவர் . பசுவேறி வரும் கோலத்தை யுடையவர் . அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமையான நகரானது , தோத்திரம் பாடும் அடியார்கள் புனிதநீரால் அபிடேகம் செய்து , மலரால் அர்ச்சித்து வணங்கி , சிவவேடத்தை நினைப்பூட்டும் திருவெண்ணீற்றினைப் பூசிக் கீர்த்தியுடன் விளங்குகின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

காடர் - மயானத்திலிருப்பவர் ` கோயில் சுடுகாடு ` என்பது திருவாசகம் . கரிகாலர் - யானைக்கு யமன் ஆனவர் . கனல் கையர் - நெருப்பைக் கையில் ஏந்தியவர் . அனல் மெய்யர் - நெருப்பே உடம்பாக உடையவர் . உடல் செய்யர் - அதனால் மேனி செந்நிறம் உடையவர் . செவியில் தோடர் - காதில் தோட்டையணிந்தவர் . தெரிகீளர் - தெரிந்தெடுத்த கீளையுடையவர் . சரிகோவணர் - சரிந்த கௌபீனத்தை அணிந்தவர் . ஆவணவர் - பசுவேறிவரும் கோலத்தை யுடையவர் ( ஆ - பசு ; வண்ணம் - கோலம் ) தொல்லைநகர்தான் - சிவபெருமானின் பழமையான தலம் ஆகிய . பாடல் உடையார்கள் அடியார்கள் - தோத்திரம் பாடுதலை உடையவர்களாகிய அடியார்கள் . மலரோடு புனல் கொண்டு - மலரையும் தண்ணீரையும் கொண்டு . பணிவார் - வணங்குபவர்களாய் . வேடம் - வேடத்திற்குரியதாகிய . ஒளியான - பிரகாசம் பொருந்திய . பொடிபூசி - திருநீற்றை உத்தூளித்து . இசைமேவு - கீர்த்தியடைகின்ற ( திருவேதிகுடியே )

பண் :சாதாரி

பாடல் எண் : 5

சொக்கர்துணை மிக்கவெயி லுக்கற முனிந்துதொழு மூவர்மகிழத்
தக்கவருள் பக்கமுற வைத்தவர னாரினிது தங்குநகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலாம்
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் மிக்க அழகுடையவன் . கோபத்தால் சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது , அங்கிருந்த மூவர் தன்னை வணங்கிப் போற்ற அவர்கள் மகிழும்படியாகத் தன் பக்கத்திலே இருக்கும்படி அருள்புரிந்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது , மாமரச் சோலைகளில் மகளிர் விளையாடும் ஆரவாரமும் , மகளிரின் மேனி ஒளியானது மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும் ஒலியும் , தேவர்கள் போற்றும் ஒலியும் கொண்டு , தன்னையடைந்து வழிபடுபவர்களின் அச்சமும் , துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

சொக்கர் - பேரழகு உடையவரும் . துணைமிக்க - தங்களுக்குத் தாங்கள் உதவி செய்துகொள்வதில் மிக்க . எயில் - மதிலிலிருந்த அசுரர் . உக்கு - பொடியாகி . அற - ஒழிய . முனிந்து - கோபித்து . தொழும்மூவர் - அவர்களுக்குள் தன்னை வணங்கிய மூவர் . மகிழ - மகிழும்படியாக , பக்கம் உற - தன் பக்கத்திலே யிருக்கும்படி . தக்க அருள்வைத்த - சிறந்த கருணைசெய்த ( அரனார் ) இனிது - நன்கு , ( தங்கும் ) நகர்தான் - தலமாவது . அரவம் உற்ற - விளையாடும் மகளிரின் ஆரவாரம் பொருந்திய . கொக்கு பொழில் - மாமரச்சோலைகளில் . நிழல் - மகளிரின்மேனியின் ஒளியானது . வெற்றிபற்றி - மாந்தளிர்களை வென்ற வெற்றியைப் பற்றி . வரிவண்டு - கீற்றுக்களையுடைய வண்டுகள் . இசைகுலாம் - பாராட்டி இசைபாடிக் கொண்டாடும் ( திருவேதிகுடி .) மிக்க அமரர் - உடலின் ஒளியால் மிக்க தேவர்கள் . மெச்சி - அம்மகளிர்க்கு மெச்சிப் ( பாராட்டும் திரு வேதிகுடி ) அச்சம் இடர்போக ( தன்னையடைந்தவர்களுக்கு ) அச்சமும் துன்பமும் நீங்க . இனிது - நன்மையை . நல்கு - அளிக்கும் . ( திருவேதிகுடி ) பாராட்டும் என ஒருசொல் வருவித்துரைக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியு மண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழி விலாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரைசெ யாதவவர் வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர் . கரிய யானையின் தோலைப் போர்த்தவர் . ` பிச்சையிடுங்கள் ` என்று இளமைவாய்ந்த உமாதேவி யாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர் , நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும் , மிகுந்த புகழும் , குறையாத பண்பாடும் உடையவர்களும் , இனிய புலவர்கட்குக் கொடையளிக்கும்போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

செய்ய திருமேனிமிசை - சிவந்த திருமேனியில் . வெண்பொடி அணிந்து - வெண்மையான திருநீற்றையணிந்து . கருமான் உரிவையைப் போர்த்து - கரிய மிருகமாகிய யானையின் தோலைப் போர்த்து . ஐயம் இடும் என்று - பிச்சை இடுங்கள் என்று . மடமங்கையொடு - இளமை பொருந்திய உமாதேவியாரோடு . அகம் திரியும் - வீடுவீடாகத் திரிகின்ற , அண்ணல் - தலைவனது ( இடமாம் ). வையம் - பூமி . விலை மாறிடினும் - பஞ்சத்தினால் பண்டங்களின் விலை மாறினாலும் . ஏறுபுகழ் - முன்பே மிகுந்த கீர்த்தி . மிக்கு - மேலும் மிகுந்து . இழிவிலாத - குறையாத . வகையார் - பண்பாடு உடையவர்களும் . தண்புலவருக்கு - இனிய புலவர்களுக்குக் ( கொடை தரும்போது ). வெய்ய மொழி - வன்சொற்களை . உரைசெய்யாத - சொல்லாத . அவர் - அத்தகையார்களுமாகிய மாந்தர் ( வாழும் ). வேதிகுடி - திருவேதிகுடியாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

உன்னியிரு போதுமடி பேணுமடி யார்தமிட ரொல்கவருளித்
துன்னியொரு நால்வருட னானிழ லிருந்ததுணை வன்றனிடமாம்
கன்னியரொ டாடவர்கண் மாமணம் விரும்பியரு மங்கலமிக
மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய ரியற்றுபதி வேதிகுடியே.

பொழிப்புரை :

காலை , மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான் . தன்னை யடைந்த சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன் . அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன் . அவன் உறைவிடம் கன்னியர்களும் , ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இருபோதும் - பகல் இரவு என்ற இருவேளைகளிலும் . உன்னி - தியானித்து . அடிபேணும் - தமது திருவடியைப் போற்றும் . அடியார் தம் இடர் - அடியார்களுடைய துன்பங்கள் . ஒல்க - ஒழிய . அருளி - அருள் செய்து . துன்னிய - அடைந்த . ஒரு நால்வருடன் - சனகர் முதலிய நால்வரோடு . ஆல் நிழல் இருந்த - கல்லாலின் நிழலில் இருந்து உபதேசித்த . துணைவன்தன் - அனைத்துலகத்திற்கும் பற்றுக்கோடாய் உள்ள சிவபெருமானது ( இடமாம் ), கன்னியரோடு ஆடவர்கள் - கன்னிகைகளுடன் ஆண்கள் , ( புரியும் ) மாமணம் - சிறந்த மணத்தை , விரும்பி - நடத்துவதை விரும்பி , அரும் - வேறெங்கும் காணற்கு அரிய . மங்கலம் - திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை . மிக - மிக்க சிறப்புற , ( மங்கையர் இயற்றுபதி ) மின் இயலும் - மின்னலைப்போன்ற , நுண்ணிடை - சிறிய இடையையுடைய . நல் மங்கையர் - சடங்கியற்றும் தகுதிவாய்ந்த பெண்டிர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

உரக்கரநெ ருப்பெழநெ ருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவனி சைக்கினிது நல்கியரு ளங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரு மாடவரு மொய்த்த கலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற அரக்கனான இராவணனின் தலைகளையும் , தோள்களையும் , நெஞ்சிலும் , கரத்திலும் நெருப்புப்போல் வருத்துமாறு மலையின்கீழ் அடர்த்து , பின் அவன் சாமகானம் இசைக்க அவனுக்கு ஒளி பொருந்திய வெற்றிவாளையும் , நீண்ட வாழ்நாளையும் அருளிய பெருங்கருணையாளனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , கல்யாண முருங்கைப்பூப் போன்ற உதடுகளையுடைய , இளங்கொடி போன்ற பெண்களும் , ஆடவர்களும் , நறுமணம் கமழும் கலவையைக் கூந்தலில் தடவ , அதன் மணமானது விண்ணுலகிலும் பரவ விளங்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வரை - கயிலை மலையை . பற்றிய - பேர்த்தெடுக்கத் தொடங்கிய . ஒருத்தன் அரக்கனை - ஒரு அரக்கனாகிய இராவணனது . முடிதோள் - தலையையும் தோளையும் , உரம் கரம் - நெஞ்சிலும் கைகளிலும் . நெருப்பு எழ - நெருப்புக்கக்கும்படி . நெருக்கி அடர்த்து - அழுந்த மிதித்து , பின் அவன் ) இசைக்கு - இசைப்பாடலுக்கு . இனிது நல்கியருள் - ( வாளும் - வாழ்நாளும் ) மகிழக்கொடுத்தருளிய . அங்கணன் - சிவபெருமானின் ( இடம் ,) முருக்குஇதழ் - கல்யாண முருங்கைப்பூவையொத்த அதரத்தையுடைய . மடக்கொடி - இளங்கொடிபோன்ற . மடந்தையரும் - பெண்களும் . ஆடவரும் - ஆண்களும் . மொய்த்த - நிறையப் பூசிய , கலவை - கலவைச் சந்தனத்தின் . விரை - வாசனையும் . குழல் - மாதர் கூந்தலின் . விரை - வாசனையும் . மிகக் கமழ - மிகவும் மணம் வீச , ( அது ) விண் - தேவருலகில் . இசை உலாவு - புகழ்பெறச் சுற்றிலும் கமழும் திருவேதிகுடியே .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பூவின்மிசை யந்தணனொ டாழிபொலி யங்கையனு நேடவெரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்க ளோசையியல் கேள்விய தறாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே.

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனுடன் , சக்கராயுதத்தை ஏந்திய அழகிய கையையுடைய திருமாலும் தேட , தீப்பிழம்பாகி , இப்பெருமானை அன்றி வேறு கடவுள் இல்லை என ஏத்தப்பெறும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , புலவர்கள் ஓசையினிமையுடைய இயற்றமிழ் நூற்பொருளை உரைக்க , கேள்விச் செல்வத்தினை நீங்காத கொடை வள்ளல்கள் செவிமடுக்குமாறு , செல்வம் மிகுந்த நெடிய மாடமாளிகைகளும் , வீதிகளும் திகழ்கின்ற திருவேதிகுடி என்பதாகும் .

குறிப்புரை :

பூவின்மிசை - தாமரை மலரில் வசிக்கும் . அந்தணனொடு - பிரமனுடன் . ஆழி பொலி - சச்கராயுதம் விளங்கும் . அங்கையனும் - அகங்கையை யுடையவனாகிய திருமாலும் . நேட - தேட . எரியாய் - தீப்பிழம்பாகி , ( அவ்விருவரையும் பார்த்தவர்கள் ) இவர் - இப் பிரமவிட்டுணுக்கள் . தேவர் அல்லர் - கடவுளர் ஆகார் . ( என்றால் ,) இனி , யாவர் ? - கடவுளாவார் யாவர் ? ( சிவபெருமானேதான் .) என - என்று கூறும்படி . ( நின்று ,) திகழ்கின்றவர் - விளங்குகின்றவராகிய சிவபெருமானது ( இடம் .) பாவலர்கள் - புலவர்களின் . ஓசை இயல் - ஓசையினிமையுடைய இயற்றமிழ் நூற்பொருளை . கேள்வி ( அது ), கேட்டறிதல் . அறாத - நீங்காத ( கொடையாளர் ) பயில்வு ஆம் - வாழ்வதாகிய ( வேதிகுடி ). மேவு அரிய - வேறெங்கும் தங்குதல் இல்லாத . செல்வம் - செல்வத்தையுடைய . நெடுமாடம் வளர் - நெடிய மாடங்கள் பெருகும் . வீதிநிகழ் - வீதிகள் பொருந்திய , ( வேதிகுடியே .)

பண் :சாதாரி

பாடல் எண் : 10

வஞ்சமணர் தேரர்மதி கேடர்த மனத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென வென்றுமுண ராதவடி யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொரு டெரிந்தெழு விசைக்கிளவியால்
வெஞ்சின மொழித்தவர்கண் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே.

பொழிப்புரை :

வஞ்சனையுடைய சமணர்களும் , புத்தர்களும் கெட்ட மதியுடையவர்கள் . இறைவனை உணரும் அறிவில்லாத அவர்கள் கூறும் மொழிகள் பற்றுக்கோடாகத் தக்கன என்று எந்நாளும் நினையாத அடியார்கள் தியானிக்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது ஐம்புலன்களை வென்று , அறுவகைச் சமய நூற் பொருள்களை ஆராய்ந்து , ஏழுவகைச் சுரங்களால் இசைப்பாடல்களைப் பாடி , கோபத்தை ஒழித்த அருளாளர்கள் மேவி விளங்குகின்ற திருவேதிகுடி ஆகும் .

குறிப்புரை :

வஞ்ச அமணர் - வஞ்சனையையுடைய அமணர்களும் . தேரர் - புத்தர்களுமாகிய . மதிகேடர் - கெட்ட மதியை யுடையவர்கள் , ( தம் மனத்து அறிவிலாதவர் ) மொழி - சொற்களை . தஞ்சம் என - பற்றுக்கோடாகத் தக்கது என்று . என்றும் - எந்நாளிலும் . உணராத - நினையாத ( அடியார் .) கருது - தியானிக்கின்ற . சைவன் - சிவபெருமானின் ( இடம் ஆம் .) அஞ்சுபுலன் வென்று - பஞ்சேந்திரங்களையும் வென்று . அறுவகைப் பொருள் தெரிந்து - அறுவகைச் சமய நூற்பொருள்களை ஆராய்ந்து . ஏழு இசைக் கிளவியால் - சப்த சுரங்களையுடைய இசைப் பாடல்களால் ( வெம்சினம் ஒழித்தவர்கள் .) மேவி நிகழ்கின்ற - விரும்பி வாழநின்ற ( வேதிகுடி .)

பண் :சாதாரி

பாடல் எண் : 11

கந்தமலி தண்பொழினன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதி கழலே
சிந்தைசெய வல்லவர்க ணல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரத மாணைநமதே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளும் , அழகிய மாடங்களும் நெருங்கிய சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலை கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவ பெருமானின் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர் . மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர் . இது நமது ஆணை .

குறிப்புரை :

கந்தம் மலி - வாசனைமிகுந்த . தண்பொழில் - குளிர்ச்சி பொருந்திய சோலைகளும் . நல் மாடம் - அழகிய மாடங்களும் . மிடை - நெருங்கிய ( காழி ,) மலி - பொருட்செறிவையுடைய ( செந் தமிழ் .) ஆதி - முதல்வன் . சரதம் - நிச்சயம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

என்றுமரி யானயல வர்க்கிய லிசைப்பொருள்க ளாகியெனதுள்
நன்றுமொளி யானொளிசி றந்தபொன் முடிக்கடவு ணண்ணுமிடமாம்
ஒன்றியம னத்தடியர் கூடியிமை யோர்பரவு நீடரவமார்
குன்றுகணெ ருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே.

பொழிப்புரை :

சிவபெருமான் அடியார் அல்லாதவர்க்கு எப் பொழுதும் காண்டற்கு அரியவன் . இயற்றமிழும் , இசைத்தமிழும் ஆகி எனது உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவன் . பொன்போன்று ஒளிரும் சடைமுடியுடைய அக்கடவுள் வீற்றிருந்தருளும் இடமாவது , ஒன்றிய மனமுடைய அடியவர்களுடன் தேவர்களும் கூடியிருந்து பரவுகின்ற குன்றுகளும் , சோலைகளும் விளங்கும் திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அயலவர்க்கு - அடியார் அல்லாதவர்க்கு . என்றும் அரியான் - எப்பொழுதும் காண்டற்கு அரியவன் . ( என்றும் ) - என் உள்ளத்தில் . இயல் இசைப்பொருள்களாகி - இயற்றமிழ் இசைத்தமிழ் நூல்களின் பயனாகி . நன்றும் ஒளியான் - சிறிதும் ஒளியாமல் நன்கு விளங்குகின்றவன் . ஒளிதந்த பொன்முடிக் கடவுள் - ஒளிபொருந்திய பொன்மயமான சடாமுடியையுடைய சிவபெருமான் , நண்ணும் இடமாம் . ஒன்றியமனத்து அடியர் - ஒருமுகப்பட்ட ( கலையாத ) மனத்தையுடைய அடியார்களோடு . இமையோர் பரவும் - தேவர்கள் துதிக்கின்ற . நீடு அரவமார் - பெரிய ஓசைமிக்க . குன்றுகள் நெருங்கி . தண்டலை - சோலைகள் . வளர் - வளர்கின்ற கோகரணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடு மாடவர்கள் வந்தடி யிறைஞ்சிநிறை மாமலர்கடூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே.

பொழிப்புரை :

பேதைமைக் குணத்தையுடைய இளம்பெண்ணாகிய உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டு , இடப வாகனத்தின் மேலேறி , தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு சிவபெருமான் காத்தருளினார் . அப்பெருமான் வீற்றிருந்தருள்கின்ற இடமாவது பெண்களோடு ஆடவர்களும் வந்து இறைவனின் திருவடிகளை வணங்கி , சிறந்த மலர்களைத் தூவிப் போற்ற , சாத்திய மாலைகளில் வரி வண்டுகள் மொய்த்து இன்னிசை எழுப்பும் கீர்த்தி மிகுந்த திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பேதை மடமங்கையொரு பங்கு இடம் - பேதைமைக் குணத்தையுடைய இளம் பெண்ணாகிய உமாதேவியாரை ஒரு பாகமாகிய இடப்புறத்தில் . மிகுத்து - தங்கி மகிழ்ச்சி மிகச் செய்து . இடபமேறி - இடபத்தின் மேல் ஏறி . அமரர் வாதைபட - தேவர்கள் வருத்தம் நீங்க . வண்கடல் - வளம்பொருந்திய கடலில் , எழுந்தவிடம் உண்டசிவன் வாழும் இடமாம் . மாதரொடும் - பெண்களோடும் ஆடவர்கள் வந்து . அடியிறைஞ்சி - பாதங்களை வணங்கி . மாமலர்களைத் தூய் - சிறந்த மலர்களைத்தூவி . ( சாத்திய ) கோதை திருமாலைகளில் . வரிவண்டு - கீற்றுக்களையுடைய வண்டுகள் . இசைகொள் கீதம் - இசையோடு பொருந்திய பாடல்களை . முரல்கின்ற - பாடுகின்ற . வளர்கோகரணம் - கீர்த்திமிகுந்த கோகரணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

முறைத்திறமு றப்பொருடெரிந்துமுனி வர்க்கருளி யாலநிழல்வாய்
மறைத்திற மறத்தொகுதி கண்டுசம யங்களைவ குத்தவனிடம்
துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்துவரை யுந்திமதகைக்
குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு சாரன்மலி கோகரணமே.

பொழிப்புரை :

கல்லால நிழலின் கீழ்ச் சனகாதி முனிவர்கட்கு அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நான்கு பொருள்களையும் சிவ பெருமான் முறையோடு உபதேசித்தார் . வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப் பொருட்களையும் கண்டு அறுவகைச் சமயங்களை வகுத்தவர் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துறைகள்தோறும் அருவிநீர் தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு , மூங்கில்களைத் தள்ளி , மதகுகளைச் சிதைத்து , யானை பிளிற மோதும் சாரலையுடைய திருக்கோகரணம் என்னும் தலமாகும் .

குறிப்புரை :

ஆலம் நிழல்வாய் - கல்லாலின் நிழலில் . முறைத்திறம் - உபதேசிக்கும் முறையின் வகைப்படி . பொருள் தெரிந்து - பக்குவ நிலையை அறிந்து . முனிவர்க்கு - முனிவர்களுக்கு . அருளி - அருள் கூர்ந்து . மறைத்திறம் அறத்தொகுதி - வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப்பொருள்களையும் . கண்டு உபதேசித்துச் சமயங்களை வகுத்தவன் இடம் - உண்டாக்கியவரான சிவபெருமானது இடமாம் . துறைத்துறை - ஒவ்வொரு துறைகளிலும் . அருவிநீர் . தூமலர் - தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு . வரையுந்தி - மூங்கில்களைத் தள்ளி . மதகைக் குறைத்து - மதகுகளைச் சிதைத்து . கரி அறையிட - யானை பிளிற . புரிந்து - செய்து . இடறு - மோதும் படியான . சாரல் - சாரலையுடைய கோகரணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

இலைத்தலை மிகுத்தபடை யெண்கரம் விளங்கவெரி வீசிமுடிமேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில் வைத்தவழ கன்றனிடமாம்
மலைத்தலை வகுத்தமுழை தோறுமுழை வாளரிகள் கேழல்களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை யாடிநிகழ் கோகரணமே.

பொழிப்புரை :

சிவபெருமான் இலைபோன்ற நுனியுடைய சூலப் படையை உடையவன் . எட்டுக்கரங்களை உடையவன் . நெருப்பைக் கையிலேந்தி எண்தோள் வீசி நடனம் ஆடுபவன் . தலையிலுள்ள செஞ்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கியவன் . அத்தகைய அழகான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மலைகளிலுள்ள குகைகளில் மான்களும் , சிங்கங்களும் , பன்றிகளும் , யானைகளும் , கொம்பாற் கொல்லுதலையுடைய இளம் பெண்யானைகளும் கூடி விளையாடுகின்ற திருக்கோகரணம் என்னும் தலமாகும் .

குறிப்புரை :

இலைதலை மிகுத்தபடை - இலைபோன்ற நுனியையுடைய சூலம் முதலிய பல ஆயுதங்களையேந்தி . எண்கரம் எட்டுக்கைகளிலும் ( விளங்க ) எரி வீசி - நெருப்பை ஒளிவீச ஏந்தி . முடிமேல் - தலையில் . அலைத்து அலை தொகுத்த - மிகுந்த அலைவீசுதலைக்கொண்ட . புனல் - கங்கைநீரை , செஞ்சடையில் வைத்த அழகன்தன் இடமாம் . மலைத்தலை வகுத்த - மலையின் இடங்களில் அமைந்த . முழைதோறும் - குகைகள்தோறும் . உழை - மான்களும் . வாள் அரிகள் - ஒளிபொருந்திய சிங்கங்களும் . கேழல் - பன்றிகளும் . களிறு - யானைகளும் . கொலைத்தலை - கொம்பாற் கொல்லுதலையுடைய . மடப்பிடி - இளம் பெண்யானைகளும் . கூடி விளையாடி . நிகழ் - வசிக்கின்ற கோகரணம்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே.

பொழிப்புரை :

சிவபெருமான் தலைமாலை அணிந்தவர் . சடையில் கொன்றை , எருக்கு , அலரி , வன்னிப்பத்திரங்களையும் அணிந்தவர் . எம் முதல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி அலைகளையுடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்க அப்பெருமான் அவர்களின் பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் திருக்கோகரணமாகும் .

குறிப்புரை :

தொடைத்தலை மலைத்து - தலைமாலையை அணிந்து . முடியின் சடைத்தலை . இதழி - கொன்றைமலரையும் . எருக்கு - எருக்க மலரையும் . அலரி - அலரிமலரையும் . வன்னி - வன்னிப் பத்திரங்களையும் . மிலைச்சிய - அணிந்த , எம்ஆதி - எமது முதல்வராகிய சிவபெருமான் . பயில்கின்ற இடமாம் - வாழ்கின்ற இடமாம் . படைத்தலைபிடித்து - ஆயுதங்களின் அடிப்பாகங்களைப்பற்றி . மறம் - வெற்றி பொருந்திய . வாளர்களொடு - வாளாயுதத்தையேந்திய வீரர்களுடனே . வேடர்கள் பயின்று . குழுமி - வேடர்கள் நண்பு கொண்டு கூடி . அலைநதி - அலைகளையுடைய நதியில் . குடைத்து - குடைந்து . பாடிய - முழுகி ( வணங்க ). நின்று - ( அவர்க்கு எதிரில் தோன்றி ) நின்று . பழி - பழிபாவம் முதலியவை . தீர - நீங்குமாறு . நல்கு - அருள்புரியும் கோகரணம் . குடைந்து எதுகை நோக்கி வலித்துக் குடைத்து ஆயிற்று.

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நீறுதிரு மேனிமிசை யாடிநிறை வார்கழல் சிலம்பொலிசெய
ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரு மீசனிடமாம்
ஆறுசம யங்களும்வி ரும்பியடி பேணியர னாகமமிகக்
கூறுமனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில் பூசியவர் . திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி இசைபாடிப் பலி ஏற்று வருவார் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமானது சிவாகம விதிப்படி இறைவனின் திருவடிகளை விரும்பி வழிபடுகின்ற ஆறு சமயத்தவர்களும் , மனத்தில் சிவானந்தம் மேலிட உடலில் நடுக்கம் வருகின்ற அடியவர்களாய் வாழ்கின்ற திருக்கோகரணமாகும் .

குறிப்புரை :

திருமேனிமிசை , நீறு ஆடி - விபூதி பூசி . வார் கழல் சிலம்பு நிறை ஒலி செய - கச்சிறுக்கிய கழலும் சிலம்பும் நிறைந்த ஒலி செய்ய . ஏறு - இடபமானது . விளையாட விசைகொண்டு - விளையாடுவதைப் போற் செல்ல விசையாகச் செலுத்தி . இடுபலிக்கு வரும் - மாதர் இடும் பிச்சைக்கு வருகின்ற , ஈசன் இடமாம் . ஆறு சமயங்களும் - ஆறுசமயத்தவர்களும் , விரும்பி , அடிபேணி - திருவடியைக்கருதி . அரன் ஆகமம் மிகக்கூறு - சிவபெருமானது ஆகம நெறிகளைப் பயன் மிகும்படி சொல்லுகின்ற கோகரணம் . ( மனம் ) வேறு இரதி வந்து - உலக இன்பத்தின் வேறான சிவானந்தம் விளைய . அடியர் - அடியார்கள் . கம்பம் வரு - அவ்வானந்தம் மேலீட்டால் உடல் நடுக்கம் வரப்பெறுகின்ற கோகரணம் - திருக்கோகரணமே . ` ஆகம் விண்டு கம்பம் வந்து ` ( தி .8 திருச்சதகம் . 72)

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கல்லவட மொந்தைகுழ றாளமலி கொக்கரைய ரக்கரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவ ராளுநக ரென்பரயலே
நல்லமட மாதரர னாமமு நவிற்றிய திருத்தமுழுகக்
கொல்லவிட நோயகல் தரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே.

பொழிப்புரை :

ஓசைமிகுந்த கல்லவடம் , மொந்தை , குழல் , தாளம் , வலம்புரிச்சங்கு ஆகிய வாத்தியங்களுக்கு ஏற்ப சிவபெருமான் நடன மாடுவார் . அக்குப்பாசி அணிந்த இடுப்பில் , நச்சுப்பற்களும் , படமும் உடைய பாம்பை அணிந்து கோவணஆடை உடுத்தவர் . அத்தகைய சிவபெருமான் ஆளும் நகர் நற்குண , நற்செய்கை யுடையவர்களாகிய பெண்கள் சிவபெருமானது திருப்பெயரைச் சொல்லித் தீர்த்தத்தில் முழுக , கொல்லும் விடநோய் போன்ற வினைகளைத் தீர்த்து , காரியம் யாவினும் வெற்றி கொடுத்தருளும் திருக்கோகரணமாகும் .

குறிப்புரை :

மலி - ஓசை மிகுந்த . கல்லவடம் மொந்தை குழல் தாளம் கொக்கரையர் - கல்லவடம் முதலாகவுள்ள இவ்வாத்தியங்களுக்கேற்ப நடிப்பவர் . அக்கு அரைமிசை - அக்குப்பாசி அணிந்த இடுப்பில் , பல்லபட நாகம் - விடப்பல்லையும் படத்தையும் உடைய பாம்பை . விரி கோவணவர் - விரித்துப் புனையும் கோவணமாக உடையவர் ஆகிய சிவபெருமான் ஆளும் நகர் என்பர் . அயலே - அருகில் . நல்ல மடமாதர் - நற்குண நற்செய்கையுடையவர்களாகிய பெண்கள் . அரன் நாமம் - சிவபெருமானது திருப்பெயரை . நவிற்றிய - சொல்லும் . திருத்தமும் முழுக - தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்ய . தீர்த்தத்தின் பெயர் கூறியவாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வரைத்தல நெருக்கிய முருட்டிரு ணிறத்தவன வாய்களலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு மானினிது மேவுமிடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி வாகிவினை தீரவதன்மேல்
குரைத்தலை கழற்பணிய வோமம்வில கும்புகைசெய் கோகரணமே.

பொழிப்புரை :

முரட்டுத்தனமும் , இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி , தன் காற்பெருவிரலை ஊன்றி அவனைக் கயிலைமலையின்கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , முனிவர்களும் , வேத வல்லுநர்களும் வினைதீர , ஒலிக்கின்ற கழலணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து , அரநாமத்தினை ஓதி வேள்வி புரிய அப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும் .

குறிப்புரை :

வரைத்தலம் - கயிலை மலையில் . முருடு - கடின இயல்பையுடைய . இருள் நிறத்தவன் - இருண்ட நிறத்தையுடைய இராவணனின் . வாய்கள் - பத்து வாய்களும் . அலற - அலறும்படி . நெருக்கிய - ( அவனை ) அடர்க்கும் பொருட்டு . விரல்தலை - விரலின் நுனியின் . உகிர் - நகத்தை . சிறிது வைத்த - சிறிதே வைத்த , பெருமான் இனிதுமேவும் இடமாம் . புரைத்தலை கெடுத்த - குற்றப்படும் இடத்தை ஒழித்த . முனிவாணர் பொலிவாகி - முனிவர்கள் விளங்கி . வினைதீர - கன்மங்கள் ஒழிய . அதன்மேல் - அதன்பயனாக . குரைத்து அலை - ஒலித்து அசையும் - கழல் . பணிய - வணங்க . ஓமம் - வேள்வி . விலகும் - மேலே கிளம்பும் . புகைசெய் - புகைபரவுகின்ற கோகரணமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வில்லிமையி னால்விற லரக்கனுயிர் செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுள தென்றிகலி நேடவெரி யாகியுயர் கின்றபரனூர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமு மிறைஞ்சிநிறை வாசமுருவக்
கொல்லையி லிளங்குறவர் தம்மயிர் புலர்த்திவளர் கோகரணமே.

பொழிப்புரை :

வில்லாற்றலால் வலிமையுடைய அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய திருமாலும் , வேதத்தை ஓதும் பிரமனும் , தம்முள் மாறுபட்டு இல்லையென்றும் , உள்ளது என்றும் அறியமுடியாதவாறு தேட , நெருப்புவடிவாகி ஓங்கி நின்ற சிவ பெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , எல்லையாக அளவுபடுத்திய கடலால் சூழப்பட்ட பூவுலகத்தோரும் , தேவலோகத்தவரும் வணங்க , தினைப்புனங்களில் இளங்குறவர்கள் நறுமணம் கமழும் கூந்தலை உலர்த்தும் எழில்மிகுந்த திருக்கோகரணம் ஆகும் .

குறிப்புரை :

வில்லிமையினால் - வில்தொழிலால் , விறல் அரக்கன் . உயிர் செற்றவனும் - வெற்றியையுடைய இராவணனது உயிரை அழித்த திருமாலும் . வேத முதலோன் ( உம் ) - பிரமனும் . இகலி இல்லையுளது என்று நேட - தம்முள் மாறுபட்டு இல்லை என்றும் உள்ளது என்றும் அறிய முடியாதவாறு தேட . எரியாகி - நெருப்பு வடிவமாகி . உயர்கின்ற - ஓங்கிய . பரன் - மேலான கடவுளின் . ஊர் - ஊராகும் . எல்லையில் வரைத்த கடல் வட்டமும் - எல்லையாக அளவு படுத்திய கடலாற் சூழப்பட்ட பூமியும் , ( தேவலோகமும் ) இறைஞ்சி - வணங்கி . நிறை - நிறைகின்ற ( கோகரணம் ) வாசம்உருவ - வாசனை ( கூந்தலில் இருந்து ) திக்குகளிற் சென்று பாய்ந்து உருவ . கொல்லையில் - தினைப்புனங்களில் . இளம்குறவர் . தம் மயிர் புலர்த்தி - தமது கூந்தலைக் காயவைத்து . வளர் - பெருகுகின்ற கோகரணமே . குறவர் என்பது மயிர் புலர்த்தல் என்னுந் தொழிலினால் ஆண்பாலை யொழித்தது . இது , தொழிலிற் பிரிந்த ஆண் ஒழிமிகுசொல் . இவர் வாழ்க்கைப்பட்டாரென்பது போல . ` பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம் மயங்கல்கூடா வழக்கு வழிப்பட்டன `. ( தொல் . சொல் . 50.)

பண் :சாதாரி

பாடல் எண் : 10

நேசமின் மனச்சமணர் தேரர்க ணிரந்தமொழி பொய்களகல்வித்
தாசைகொண் மனத்தையடி யாரவர் தமக்கருளு மங்கணனிடம்
பாசம தறுத்தவனி யிற்பெயர்கள் பத்துடைய மன்னனவனைக்
கூசவகை கண்டுபி னவற்கருள்க ணல்கவல கோகரணமே.

பொழிப்புரை :

உள்ளன்பில்லாத சமணர்களும் , புத்தர்களும் கூறும் சொற்களைப் பொய்யென நீக்கி , தன்னிடத்து ஆசைகொள்ளும் படியான மனத்தையுடைய அடியவர்களுக்கு அருளும் அழகிய கருணையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இவ்வரிய பூவுலகில் பத்துப்பெயர்களையுடைய அர்ச்சுனனின் பாசத்தைப் போக்கி , அவன் நாணும்படி போர்செய்து பின் அருள் புரிந்த திருக்கோகரணம் ஆகும் .

குறிப்புரை :

நேசம் இல் - உள்ளன்பில்லாத . மனத்து அமணர் - மனத்தையுடைய சமணர்களும் . தேரர்கள் - புத்தர்களும் . நிரந்த மொழி - ஒழுங்குடையதுபோற்கூறும் சொற்கள் . பொய்ச்சொற்களாம் . அகல்வித்து - நீக்கி . ஆசைகொள் மனத்து - தன்னிடத்தில் ஆசை கொள்ளும்படியான மனத்தையுடைய , அடியாரவர் தமக்கு அருளும் , அங்கணன் சிவபெருமானது இடம் . அவனியில் - பூமியில் . பெயர்கள் பத்துடைய அரசனான அர்ச்சுனனைப் பாசமது அறுத்து , கூச - நாண வகைகண்டுபின் . அவற்கு . அருள்கள் நல்க வல - அவருக்கு வரங்கள் கொடுக்க வல்லதாகிய கோகரணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

கோடலர வீனும்விரி சாரன்மு னெருங்கிவளர் கோகரணமே
ஈடமினி தாகவுறை வானடிகள் பேணியணி காழிநகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய் ஞானசம் பந்தன்மொழிகள்
பாடவல பத்தரவ ரெத்திசையு மாள்வர்பர லோகமெளிதே.

பொழிப்புரை :

காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற அகன்ற மலைச்சாரலையுடைய வளம்பெருகும் திருக்கோகரணத்தை இடமாகக் கொண்டு இனிது வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி , ஆராய்ந்த தமிழ்ச்சொற்களால் சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் அருளிய இனிய இசைப்பாடல்களைப் பாடவல்ல பக்தர்கள் அரசராகி எல்லாத் திசையும் ஆள்வர் . பின் சிவலோகமும் எளிதில் அடைவர் .

குறிப்புரை :

கோடல் அரவீனும் - காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற . விரி - அகன்ற . சாரல் - மலைச்சாரல் . முன் நெருங்கி - முன் அணித்தாய் ( தோன்ற ) வளர் - வளம் பெருகும் கோகரணமே , ஈடம் ஆக - இடமாக இனிது தங்குவான் . அடிகள் பேணி - திருவடிகளைக் கருதி . நாடிய தமிழ்க் கிளவியின் இசை செய் - ஆராய்ந்த தமிழ்ச் சொற்களால் இனிய இசைப்பாடல்களாகப்பாடிய . ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்ல பத்தர்கள் , அதன் பயனாக எத்திசையும் ஆள்வர் - ( அரசராகி ) எல்லாத் திசையும் ஆளுபவராவர் . ( பின் ) பரலோகம் ( உம் ) - மேலான முத்தியுலகமும் . எளிதில் அடையத் தகுவது ஆகும் . ஈடம் - நீட்டல் விகாரம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வமறை யோர்கள்பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையி னானமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயமு யர்ந்தவயல் சூழ்பழன நீடவருகே
கார்மருவு வெண்கனக மாளிகை கவின்பெருகு வீழிநகரே.

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய சிவஒளியோடு , தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற செல்வன் கழலேத்தும் செல்வத்தை உடைய அந்தணர்கள் வணங்குகின்ற தாழ்ந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வெற்றிமிகும் பதியாவது , பூமியில் பொருந்திய தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களும் , மேகம் சூழ்ந்த வெண்மையான , செல்வ வளமிக்க மாளிகைகளும் அழகுபெற விளங்குகின்ற திருவீழிமிழலையாகும் .

குறிப்புரை :

சீர்மருவு - சிறப்புப் பொருந்திய . தேசினொடு - சைவ ஒளியோடு . தேசம்மலி - தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற . செல்வ மறையோர் - ( செல்வன் கழல் ஏத்தும் ) செல்வத்தையுடைய அந்தணர்கள் , பணிய . தாழ்சடையினான் - தொங்கும் சடையை யுடையவனாகிய சிவபெருமான் . அமர் - தங்கும் . சயம்கொள் - வெற்றி கொண்ட . பதி - தலம் . பார்மருவு - பூமியிற் பொருந்திய . பங்கயம் - தாமரைமலர்கள் . உயர்ந்த - உயர்வுற்ற . வயல்சூழ் பழனம் - மருதம் . நீட - வளம்மிக . கார்மருவு - மேகம் அளாவிய . வெண் - வெண்மையான நிறத்தையும் . கனகம் ஐசுவரியங்களையும் உடைய , மாளிகைகள் . கவின்பெருகு - அழகுபெருகுகின்ற வீழிநகர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பட்டமுழ விட்டபணி லத்தினொடு பன்மறைக ளோதுபணிநல்
சிட்டர்கள்ச யத்துதிகள் செய்யவருள் செய்தழல்கொண் மேனியவனூர்
மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே.

பொழிப்புரை :

கொட்டும் முழவின் ஓசையும் , ஊதும் சங்கின் ஒலியும் , பல வேதங்களை ஓதுகின்ற பணியை மேற்கொள்ளும் , சீலமுடைய அந்தணர்கள் வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட அருள்செய்பவர் அழல் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான் . அவர் வீற்றிருந்தருளும் ஊரானது நறுமணம் கமழும் செந்தாமரை மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்குவதும் , செந்நெல் பெருகும் வயல்வளமிக்கதும் , வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்ததும் , தென்றலின் நறுமணம் கமழ்வதும் அந்தணர்கள் வசிக்கின்றதுமான திருவீழிநகர் என்னும் பதியாகும் .

குறிப்புரை :

பட்ட - கொட்டிய . முழவு - முழவின் ஓசையையும் , இட்ட - ஊதிய , பணிலத்தினொடு - சங்கவாத்தியத்தின் ஓசையுடனே , பல் மறைகள் - பல சாகைகளையுடைய வேதங்களை , ஓது - ஓதுகின்ற , பணி - பணியை மேற்கொண்ட , நல் - நல்ல , சிட்டர்கள் - சீல முடையவர்களாகிய . அந்தணர்கள் , சயத்துதிகள் செய்ய - வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட , அருள்செய்து , தழல் கொள் மேனியவன் - அக்கினிமயமான திருமேனியுடைய சிவபெருமானது , ஊர் . மட்டு உலவு - வாசனை வீசும் . செங்கமல வேலி - செந்தாமரை வேலியைப்போல் சூழ்ந்த . வயல் - வயல்களில் . ( செந்நெல்வளர் - வீழிநகர் ) மன்னு - நிலைபெற்ற . பொழில்வாய் - சோலையினிடத்தில் . விட்டு உலவு - வீசி வீசி அடிக்கின்ற தென்றல் - தென்றல் காற்று , விரைநாறு . வாசம் வீசுகின்ற . பதி - தலமாகிய ( வேதியர்கள் - அந்தணர்கள் வசிக்கும் ) வீழிநகரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

மண்ணிழிசு ரர்க்குவள மிக்கபதி மற்றுமுள மன்னுயிர்களுக்
கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்தவெழி லார்பொழி லிலங்கறுபதம்
பண்ணிழிவி லாதவகை பாடமட மஞ்ஞைநட மாடவழகார்
விண்ணிழிவி மானமுடை விண்ணவர்பி ரான்மருவு வீழிநகரே.

பொழிப்புரை :

தேவலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த தேவர்கட்கு வளமிக்க பதி , மற்றுமுள்ள மன்னுயிர்கட்கு எண்ணற்ற இன்பங்களைத் தரும் பதி , அழகிய சோலைகளில் வண்டுகள் பாட , இள மயில்கள் நடனமாட , அழகிய தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு வழிபடப்படும் விமானமுடைய கோயிலில் தேவர்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் சிறப்புடைய திருவீழிமிழலை என்னும் தலமாகும் .

குறிப்புரை :

மண்இழி - ( வானுலகினின்று ) பூ உலகிற்கு வந்த . சுரர்க்கு - தேவர்களுக்கும் . வளம்மிக்கபதி - வளமிகுந்து அளிக்கும் தலமாகும் . மற்றுமுள மன்னுயிர்களுக்கு . எண் ( இல் ) இழிவு இல் - அளவற்ற சிறந்த . இன்பம் நிகழ்வு எய்த - இன்பம் உண்டாக . எழில் ஆர் பொழில் - அழகுபொருந்திய சோலையில் . இலங்கு - விளங்குகின்ற . அறுபதம் - வண்டுகள் , இழிவு இலாத வகை பண்பாட - குறைவு இல்லாதபடி இசைப்பாடலைப் பாட . மடமஞ்ஞை நடமாட - இளம் மயில்கள் நடனம் ஆட . அழகார் - அழகுபொருந்திய . விண்ணிழி விமானம் உடை - தேவர் உலகினின்றும் இறங்கிய கோயிலையுடைய , விண்ணவர்பிரான் - தேவநாயகராகிய சிவபெருமான் . மருவு - தங்கியுள்ள வீழிநகரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலைதெ ரிந்தவவரோ
டந்தமில்கு ணத்தவர்க ளர்ச்சனைகள் செய்யவமர் கின்றவரனூர்
கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர் தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி ரும்புபதி வீழிநகரே.

பொழிப்புரை :

பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும் , தெய்வத் தன்மையுடைய வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும் , சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அறிஞர்களும் , நற்குண , நற்செய்கையுடைய ஞானிகளும் அர்ச்சனைகள் செய்ய , சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது , கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும் , வேலி சூழ்ந்த வயல்களும் , குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க , வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும் .

குறிப்புரை :

செந்தமிழர் - செந்தமிழ் மொழி பேசுவோர் . தெய்வமறை நாவர் - தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களை ஓதும் நாவையுடையவர் , செழுநற்கலை தெரிந்தவர் அவரோடு - சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்தவர்களாகிய அவர்களுடன் , அந்தமில் குணத்தவர்கள் - அளவற்ற குணத்தையுடையவர்களான ஞானிகளும் ( அர்ச்சனைகள் செய்ய ) அமர்கின்ற - விரும்பித் தங்குகின்ற . அரன் அமர்கின்ற ஊர் - சிவபெருமான் எழுந்தருளிய ஊராகும் . கொந்து அலர் பொழில் - கொத்துக்களில் மலர்கின்ற சோலைகளும் , வேலி - சூழ்ந்த . பழனம் - வயல்களில் , குளிர் - குளிர்கின்ற . தண் புனல்வளம் பெருக - தண்ணீரின் வளம்பெருக . வெம் - விரும்பத்தக்க . திறல் விளங்கி - வலிமையால் விளங்கி . வளர் - மிகுகின்ற . வேதியர் விரும்பு பதி - அந்தணர் விரும்பும் தலம் ஆகிய வீழி நகரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பூதபதி யாகியபு ராணமுனி புண்ணியநன் மாதைமருவிப்
பேதமதி லாதவகை பாகமிக வைத்தபெரு மானதிடமாம்
மாதவர்க ளன்னமறை யாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதி லாதவகை யின்பமமர் கின்றவெழில் வீழிநகரே.

பொழிப்புரை :

நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என விளங்குகின்ற ஐம்பூதங்கட்கும் பதியாகிய சிவபெருமான் பழமையான தவக் கோலம் பூண்டவர் . அவர் புண்ணிய தேவியாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மாதவர்களும் , அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும் வேள்வியினால் பசி , பிணி , வறுமை , மழையின்மை முதலிய தீங்கு நேராமலும் , உண்டி , நோயின்மை , செல்வம் , பருவ மழை முதலிய நன்மை நிகழவும் , மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை ஆகும் .

குறிப்புரை :

பூதபதி ஆகிய - பூதங்களுக்குத் தலைவராகிய . புராண முனி - பழமையாகிய தவக்கோலம் பூண்டவர் . புண்ணியம் நல்மாதை - அருளேயுருவமாகிய சிற்சத்தியை . பேதம் ( அது ) இலாதவகை - வேறுபாடு இல்லாத விதம் . மருவி - கலந்தும் . மிக - வேறுபாடு நன்குதோன்ற . பாகம் - இடப்பாகத்தில் , வைத்த - வைத்தருளிய , பெருமானது இடமாம் . இல்லத்திலிருந்து அழலோம்பும் அந்தணர்கள் . தகைமையால் - வனத்திற்சென்று தவம்புரியும் மாதவர்களைப் போன்றவர்கள் , அவர்கள் அழல் ஓம்புகின்றனர் . அதனால் பசி , பிணி , வறுமை , மழையின்மை முதலிய தீங்கு நேராமலும் , உண்டி , நோயின்மை , செல்வம் , பருவமழை முதலிய நன்மை நிகழவும் மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை என்பது பின் இரண்டடியின் கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மண்ணின்மறை யோர்மருவு வைதிகமு மாதவமு மற்றுமுலகத்
தெண்ணில்பொரு ளாயவை படைத்தவிமை யோர்கள்பெரு மானதிடமாம்
நண்ணிவரு நாவலர்க ணாடொறும் வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே.

பொழிப்புரை :

இப்பூவுலகில் அந்தணர்கள் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களையும் , மகா முனிவர் ஒழுகிவருகின்ற தவநெறிகளையும் , மற்றும் உலகியல் நெறி பற்றிய பல்வகை அறங்களையும் படைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நாடிவருகின்ற புலவர்கள் நாள்தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும் , வானளாவிய மாளிகைகள் நிறைந்து செல்வம் வளர்வதும் , ஓங்கிய மதிலையுடையதுமான திருவீழிமிழலை ஆகும் .

குறிப்புரை :

வைதிகமும் - வேதநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும் . மாதவம் - சிறந்த தவநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும் , மற்றும் உலகியல் நெறிபற்றி யொழுகற்பால பல்வகையறங்களையும் படைத்தருளிய சிவபெருமானது இடமாவது என்பது முதலிரண்டடியின் கருத்து . நாடி வருகின்ற புலவர்கள் நாள் தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும் , வான் அளாவிய மாளிகைகள் செறிந்து செல்வம் வளர்வதும் , ஓங்கிய மதிலை யுடையதுமாகிய திருவீழிமிழலையென்பது பின்னிரண்டடியின் கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தரவி சும்பணவி யற்புத மெனப்படரு மாழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டவொளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே.

பொழிப்புரை :

வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது மேலே சென்று ஆகாயத்தில் கலந்து அற்புதம் போன்று பகற்காலத்தே இருள் சூழக் கடலைக் கடைந்த மந்திர மலையைப் போன்ற அழகிய மாளிகைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியானது நெடுந்தூரம் பாய்ந்து புகையால் விளைந்த இருளைப் போக்கி ஒளிரும் . அவ்வொளி வெவ்விய தழலில் ஏற்றிய விளக்கொளிபோல் விளங்கும் இயல்பினதாய் விருப்பமுடையவர்களாய் , மனநிறைவோடு மக்கள் வாழ்கின்ற தலம் திருவீழிமிழலை யாகும் .

குறிப்புரை :

மந்திரம்நல் மாமறையினோடு - நல்ல சிறந்த வேதத்தின் மந்திரங்களுடன் . வளர் - வளர்ந்த . வேள்வி மிசை - யாகத்தில் . மிக்க புகை போய் - மிக்கு எழும்பிய புகைசென்று . அந்தரம் - மேலே . விசும்பு அணவி - ஆகாயத்திற் கலந்து . அற்புதம் என - பகற்காலத்தே இருள்சூழ்ந்தது . அற்புதம் என்று வியக்க . படரும் - படர்ந்ததனால் உண்டாகிய . ஆழி - ஆழ்ந்த - இருள்வாய் . மந்தரம் - மந்தர மலைபோன்ற . நல் - அழகிய . மாளிகை - மாளிகையில் . நிலவும் - ( பதித்து ) விளங்குகின்ற . மணி - இரத்தினங்களின் . நீடு - நெடுந்தூரம் பாயும் . கதிர் - கிரணங்கள் . விட்ட - வீசிய . ஒளி - பிரகாசம் . போய் - சென்று . வெம்தழல் - வெவ்விய தழலில் ஏற்றிய . விளக்கு என - விளக்கொளிபோல் . ( ஒளிபரப்பி ) அவ்விருளைப்போக்க . அதனால் விருப்பமுடையவர்களாய் . திருந்து - திருப்திகரமாய் வாழ்கின்ற . பதி - தலமாகிய வீழிமிழலையே .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஆனவலி யிற்றசமு கன்றலைய ரங்கவணி யாழிவிரலால்
ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில் வீழ்தரவு ணர்ந்தபரனூர்
தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்தமதிளோ
டானதிரு வுற்றுவள ரந்தணர் நிறைந்தவணி வீழிநகரே.

பொழிப்புரை :

தசமுகன் எனப்படும் இராவணன் தன் வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , அவனது தலைகள் அரைபடும்படி அழகிய திருக்காற்பெருவிரலை ஊன்றி , அவனுடைய உடலிலிருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது தேன்மணம் கமழும் சோலைகளும் , செம்பொன் மாளிகைகளும் , உயர்ந்த மதில்களும் உடையதாய்ச் செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய திருவீழிநகராகும் .

குறிப்புரை :

ஆன - தனக்குள்ள . வலியின் - வலிமையைக்கருதி மலையெடுத்ததனால் . தசமுகன் - இராவணனது . தலை - தலைகள் . அரங்க - அரைபட . அணி ஆழி விரலால் - மோதிரம் அணிந்த விரலால் . ஊன் அமர் - உடம்பில் உள்ள . உயர்ந்த - மிகுந்த . குருதிப்புனலில் - இரத்த வெள்ளத்தில் . வீழ்தர - வீழ்ந்துபுரள . உணர்ந்த - நினைத்து மிதித்த . பரன் - சிவபெருமானது . ஊர் - தலமாவது . தேன் அமர் - வண்டுகள் தங்கும் . திருந்து - திருத்தமான . பொழில்கள் - சோலைகளும் , செங்கனக மாளிகைகளும் . திகழ்ந்த - விளங்குகின்ற . மதிலோடு - மதிலுடனே . ஆன - ( நிறைவு ) ஆகிய . திரு உற்று - செல்வம் பொருந்தி . வளர் - மேன்மேலும் பெருகுகின்ற ( வீழிநகர் ) அந்தணர் நிறைந்த . அணி - அழகிய வீழிநகர் . மதிள் - ல , ள வொற்றுமை .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

ஏனவுரு வாகிமணி டந்தவிமை யோனுமெழி லன்னவுருவம்
ஆனவனு மாதியினோ டந்தமறி யாதவழன் மேனியவனூர்
வானணவு மாமதிண் மருங்கலர் நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்
வேனலமர் வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே.

பொழிப்புரை :

பன்றி வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிய திருமாலும் , அழகிய அன்னப்பறவை உருவெடுத்த பிரமனும் தேடத் தன் முடியையும் , அடியையும் அறியப்படாத வண்ணம் நெருப்பு வடிவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது , வானளாவிய பெரிய மதில்களினருகில் மலர்கள் அடர்ந்த , வளமிக்க சோலையில் மாந்தர் வெயிற்காலத்தில் தங்க , விளங்குகின்ற தெய்வத்தன்மை மிக்க புகழுடைய திருவீழிமிழலையாகும் .

குறிப்புரை :

ஏன உருவு ஆகி - பன்றி வடிவம்கொண்டு . மண் இடந்த - பூமியைத்தோண்டிய . இமையோனும் - தேவனாகிய திருமாலும் . எழில் - அழகிய , அன்ன உருவம் ஆனவனும் . ஆதியினோடு - அடியையும் . அந்தம் - முடியையும் . அறியாத - ( முறையே ) அறியப்படாத . அழல் மேனியவன் - நெருப்பு வடிவாய் நின்ற சிவபெருமானது ஊர் . வான் அணவு - ஆகாயத்தை அளாவிய . மாமதில் மருங்கு - பெரிய மதிலினருகிலே . அலர் நெருங்கிய - மலர்கள் அடர்ந்த . வளம்கொள் பொழில்வாய் - சோலையில் . வேனல் அமர்வு எய்திட - மாந்தர் வெயிற் காலத்திற்குத் தங்க . விளங்குகின்ற . ஒளியின் மிக்க - தெய்வத்தன்மையால் மிக்க . புகழ் - புகழையுடைய . வீழிநகர் - திருவீழிமிழலையாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

குண்டமண ராகியொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்
தெண்டிசையு மில்லதொரு தெய்வமுள தென்பரது வென்னபொருளாம்
பண்டையய னன்னவர்கள் பாவனை விரும்புபரன் மேவுபதிசீர்
வெண்டரள வாணகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே.

பொழிப்புரை :

சமணர்கள் முரட்டுத்தன்மை உடையவராய் , அழகிய மயிற்பீலியும் , குண்டிகையும் ஏந்தி , எட்டுத் திக்கிலும் மிகுந்த ஆற்றலுடைய தெய்வம் ஒன்று உள்ளது என்பதால் என்ன பயன் உள்ளது ? வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பிப் போற்றும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , வெண்ணிற முத்துப்போன்ற ஒளிபொருந்திய பற்களையுடைய கற்புடைப் பெண்கள் விளங்கும் அழகிய திருவீழிமிழலையாகும் .

குறிப்புரை :

குண்டு - முருட்டுந்தன்மையையுடைய . அமணர் ஆகி - கோலம் மிகு - அழகு மிக்க . பீலியொடு - மயிற்பீலியொடு . குண்டிகை பிடித்து , எண்டிசையும் - எட்டுத்திக்கிலும் , இல்லை ஒரு தெய்வம் உளது என்பர் , அது என்ன பொருள் ஆம் - அவ்வாறு அவர்கள் கூறுவது என்ன பயன் தருவதாகும் , பண்டை - வேதத்தைக் கேட்ட அக்காலத்து . அயன் - பிரமனை . அன்னவர்கள் - ஒத்த அந்தணர்களின் . பாவனை - பாவிக்கும் திறனை . விரும்பு - விரும்பு கின்ற . பரமன் - சிவபெருமான் . மேவுபதி - தங்கும் தலம் . சீர் - சிறப்புற்ற . வெண்தரளவாள்நகை - வெள்ளிய முத்து போன்ற . ஒளிபொருந்திய பற்களையுடைய . நல்மாதர்கள் - கற்புடைய பெண்கள் . எழில் விளங்கும் - அழகால் விளங்கும் வீழிநகர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானமமர் செல்வமலி கின்றசிவ லோகமருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு போகமொடி யோகமவரதே.

பொழிப்புரை :

பொன்னூமத்தை மலரும் , கொன்றைமலரும் , நீண்ட சடையிலே அணிந்த பெருமானும் , திருவீழிமிழலைநகரில் வீற்றிருந்தருளும் சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி , வெங்குரு என்னும் பெயரையுடைய சீகாழியில் அவதரித்த வேத வல்லுநனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலைகளை ஓத வல்லவர்கள் , அழகிய கோயிலையுடைய செல்வம் மலிகின்ற சிவலோகத்தை அடைந்து , சத்துவ குணம் உடையவர்களாகி இறைவனோடு பேரின்பம் துய்ப்பதற்குரிய சிவயோகத்தைப் பெறுவர் .

குறிப்புரை :

மத்தம் - பொன்னூமத்தை மலரும் . மலி - வாசனை மிகுந்த , கொன்றை - கொன்றைமாலையும் , வளர்வார் சடையில் வைத்த - வளரும் நெடிய சடையிலேயணிந்த , பரன் - மேம் பட்டவனும் , வீழி நகர் சேர் வித்தகனை - திருவீழிமிழலை ஆகிய தலத்தில் உள்ள சதுரனும் ஆகிய சிவபெருமானை . வெங்குருவில் வேதியன் , விரும்பு தமிழ் மாலைகள் வ ( ல் ) லார் . சித்திர விமானம் அமர் - அழகிய கோயிலையுடைய . செல்வம் மலிகின்ற . சிவலோகம் மருவி - சிவலோகத்தையடைந்து . அத்தகு - அவ்வளவு சிறந்ததாகிய . குணத்தவர்களாகி - சத்துவகுண முடையவர்களாகி . அனுபோக மொடு - இறைவனோடு பேரின்பம் உறும் . யோகம் அவரதே - சிவ யோகம் தம்முடையதாகவே கைவரப் பெறுவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி
அங்கமுடன் மேலுறவ ணிந்துபிணி தீரவருள் செய்யும்
எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந்
துங்கமணி யிப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே.

பொழிப்புரை :

முன்கையில் சங்குவளையல் அணிந்த உமா தேவியைத் தன்னுடைய உடம்பின் ஒரு பாகமாக விருப்பத்துடன் அமர்த்தி , எலும்பைத் தன் உடம்பில் நன்கு பொருந்தும்படி அணிந்து , தன்னைத் தியானிப்பவரது மும்மலப் பிணிப்பு நீங்கும்படி அருள் புரிகின்ற எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அலை வீசுகின்ற கடலினின்றும் முத்துக்களும் , இரத்தினங்களும் , சங்குப்பூச்சிகளும் கரைக்கு வந்து சேருகின்ற திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

சங்கு அமரும் - சங்கு வளையல் பொருந்திய . ( முன்கை ) மடமாதை - இளமைமாறாத உமாதேவியாரை . உடன் ஒருபால் - தன்னோடு உடம்பின் ஒருபாகமாக . விரும்பி - விரும்பி அமர்த்தி . அங்கம் - எலும்பை . உடல்மேல் - உடம்பின்மீது . உற - பொருந்தும்படி , அணிந்து . பிணிதீர - மும்மலப் பிணிப்பு நீங்கும்படி . அருள்செய்யும் எங்கள் பெருமான் இடம் . முனைக்கடலின் - அலை முனைந்து வீசுதலையுடைய கடலினின்றும் . முத்தம் - முத்துக்களும் . துங்கம் - உயர்ச்சி பொருந்திய . மணி - இரத்தினங்களும் . இப்பிகள் - சங்குப் பூச்சிகளும் . கரைக்கு வருகின்ற தோணிபுரம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

சல்லரியி யாழ்முழவ மொந்தைகுழ றாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை யண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே.

பொழிப்புரை :

சல்லரி , யாழ் , முழவம் , மொந்தை , குழல் , தாளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , பெரிய மலையாகிய இமயமலையரசரின் அரிய மகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகப் பிரியாமல் கொண்டு , கையில் அனலை ஏந்தி இரவில் நடனமாடுகின்ற , சடைமுடியையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் , சொல்லுதற்கரிய பெருமையுடைய தொண்டர்கள் போற்ற நாளும் புகழ் வளரும் திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

சல்லரி - யாழ் , முழவம் , மொந்தை , குழல் , தாளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க என்பது முதலடியின் கருத்து . மா - பெரிய . கல்மலையர் அரிய பாவை - இமயமலையினர் தம் அரிய புதல்வியாகிய உமாதேவியாரை . ஒரு பாகம் நிலைசெய்து - ஒரு பாகமாக நீங்காமற் கொண்டு . கை எரி ஏந்தி - கையில் அனலையேந்தி . அல் - இரவில் . நடம் ஆடு - கூத்தாடுகின்ற . ( சடை அண்ணல் இடம் என்பர் ) வளர் - ஊழிதோறூழியுயர்கின்ற தோணிபுரத்தை . ஆம் - அசை ` மேயவிவ்வுரைகொண்டு விரும்பும் ஆம் - ஆயசீர் அநபாயன் அரசவை ` என்புழிப்போல ( தி .12 பெரிய புராணம் ) தோணிபுரம் இடம் ஆம் என்பர் எனினும் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

வண்டரவுகொன்றைவளர் புன்சடையின் மேன்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்
கண்டரவ வொண்கடலி னஞ்சமமு துண்டகட வுள்ளூர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்த்து ஊதுகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்த வளர்ந்த சிவந்த சடையில் பிறைச்சந்திரனையும் தரித்து , பண்டைக்காலத்தில் இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய மேலான இடத்திலுள்ள சிவபெருமான் , திருமால் முதலியோர் தனது அருளின்றி அமுதம் கடையச் சென்ற தோடம் அவரைவிட்டு நீங்குமாறு , திருவருள் செய்து , அலைகளின் ஆரவாரத்தையுடைய சிறந்த பாற்கடலினின்றும் எழுந்த நஞ்சினை அமுதமென உண்ட கடவுளாய் வீற்றிருந்தருளும் ஊர் , திருத்தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செய்கின்ற வழிபாடுகள் மிகுந்த திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

வண்டு - வண்டினம் . அரவு - மோதி ஊதுகின்ற . கொன்றை ( மாலையோடு ) வளர் - வளர்கின்ற ( புன் ) சடையின் மேல் - சடையின்மேல் . மதியம் - பிறைச்சந்திரனை , வைத்து . அரவு - பாம்பை . பண்டு - அக்காலந்தொட்டு . தன் அரையில் , ஆர்த்த - அரைஞாணாகக்கட்டிய . பரமேட்டி - மேலான இடத்திலிருப்பவனும் . பழிதீர - ( திருமால் முதலியோர் இறைவனாணையின்றிக் கடல் கடையச் சென்ற ) தோடம் அவரைவிட்டு நீங்குமாறு . கண்டு - தெரிந்து . அரவம் - ஆரவாரத்தையுடைய . ஒண் கடலின் - சிறந்த பாற்கடலில் எழுந்த . நஞ்சம் அமுது உண்ட கடவுள் . ஊர் - ஊராவது . தொண்டர் அவர் - அத்தகைய பேரன்பு படைத்த அடியார்கள் . மிண்டி - ஒருவர் ஒருவரின் நெருங்கி . வழிபாடுமல்கு - வழிபடும் வழிபாடுகள் மிகுந்த . தோணிபுரம் ஆமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கொல்லைவிடை யேறுடைய கோவணவ னாவணவு மாலை
ஒல்லையுடை யானடைய லாரரண மொள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகவிடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் முல்லைநிலத்ததாகிய இடப வாகனத்தை யுடையவன் . கோவண ஆடை அணிந்தவன் . அடியவர்கள் பாடிப் போற்றித் தொழும் பாமாலைகளை உடையவன் . தொண்டர்கள் பக்தியுடன் ஒலிக்கும் அரநாமமும் , சிவநாமமும் ஓதப் படும் பண்பினன் . பகைவரது மதில்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த மேருவை வில்லாக உடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்டு மேன் மேலும் பக்தி செய்கின்ற தொண்டர்களின் வேண்டுகோள்களை ஏற்று , அவர்களின் துன்பங்களைத் தீர்த்து அருள்செய்கின்ற திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

கொல்லை - முல்லை நிலத்திலுள்ள , விடையேறு - இடபவாகனத்தை . உடைய , கோவணவன் - கோவணமாகிய ஆடை உடைய துறவிக்கோலத்தினன் . நா அணவும் மாலை - ( அடியார்கள் ) நாவினாற் பாடும் பாமாலைகளின் ( அணவுதல் - பொருந்துதல் பூமாலையின் வேறு பிரிக்க இங்ஙனம் கூறப்பட்டது ) ஒல்லை உடையான் - ஓசையையுடையவன் . ஒல் - ஒலிக்குறிப்பு ; அநு கரணஓசை என்பர் . மேவி - தன்னையே பற்றுக்கோடாக அடைந்து . வளர் - அன்புமிகப்பெறுகின்ற . ( தொண்டரது ) சொல்லை - வேண்டிக்கொள்ளும் சொற்களை . அடைவு ஆக - ( வியாஜமாக ) வழியாகக்கொண்டு - இடர் - துன்பங்களை . தீர்த்து அருள்செய் தோணிபுரம் ( தலம் ) ஆம் . அடையலார் - பகைவரது . அரணம் - புரங்களை . ஒள் அழல் விளைத்த - ஒளியையுடைய நெருப்பால் எரித்த - விளைத்த என்ற சொல் சார்புபற்றி எரித்த என்னும் பொருளில் வந்தது . வில்லையுடையான் - விற்போரையுடையவன் . வில் - எரித்தற்குக் கருவியாக இன்மையால் விற்போர் எனப்பட்டது . வில் - இலக்கணை . ஏறு - ஏறப்படுவது . செயப்படுபொருள் உணர்த்தும் விகுதி புணர்ந்து கெட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

தேயுமதி யஞ்சடையி லங்கிடவி லங்கன்மலி கானிற்
காயுமடு திண்கரியி னீருரிவை போர்த்தவனி னைப்பார்
தாயென நிறைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே.

பொழிப்புரை :

கலைகள் தேய்ந்து அழியும் நிலையிலிருந்த சந்திரனைச் சடைமுடியில் தரித்து மீண்டும் விளங்கி ஒளிருமாறு செய்தவர் சிவபெருமான் . மலைகள் மிக்க காட்டில் திரிகின்ற சினமுடைய , கொல்லும் தன்மையுடைய வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர் . தம்மையே சிந்தித்திருப்பவர்கட்குத் தாயைப் போலக் கருணை காட்டிப் பாதுகாப்பவர் . எங்கும் நிறைந்த தன்மையர் . அடியவர்கட்கு நன்மை புரிதலையே தம் கடனாகக் கொண்ட அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்ற இடம் , தூய்மையுடைய வேதியர்கள் வேதங்களை ஓதி நிறைகின்ற திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

தேயும் - கலை தேய்ந்து வரும் . மதியம் - பிறைச் சந்திரன் . ( அம் சாரியை .) இலங்கிட - தன்னைச்சரண்புக்கதால் விளங்க ( இலங்கு + இடு + அ = இலங்கிட ) இடு துணை வினை என்ப . விலங்கல் - மலைகள் . மலி - மிக்க . கானில் - வனத்தில் . காயும் - கோபிக்கின்ற . அடு - கொல்லவல்ல . திண் - வலிய . கரியின் - யானையின் . ஈர் உரிவை - உரித்ததோலைப் போர்த்தவன் . ஈர் உரிவை - ` அடியளந்தான் தாயது ` எனல் போல்வது . நினைப்பார் - நினைப்பவருக்குத் தாயைப்போல உதவ எங்கும் நிறைந்த ஒரு தன்மையினர் . நன்மையொடு வாழ்வு - நன்மைபுரிவதே தொழிலாக வாழும் இடம் . ( முறையாக ) ஓதி - வேதங்களையோதி , நிறைகின்ற திருத்தோணிபுரம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பற்றலர்த முப்புரமெ ரித்தடிப ணிந்தவர்கண் மேலைக்
குற்றமதொ ழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்
பற்றவனி சைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந்
துற்றசடை யத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பகைவர்களின் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் . தம் திருவடிகளைப் பணிந்து வணங்குபவர்களின் குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும் கொள்கையினையுடையவர் . பாடைகள் மலிந்த சுடுகாட்டில் பற்றுடையவர் . பூதகணங்கள் இசைப்பாடல்களைத் துதித்துப்பாட நடனமாடுபவர் . அடர்ந்து வளர்ந்த சடையையுடைய , அனைத்துயிர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்ற தலம் திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

பற்றலர் - பகைவர் ( மனம் பற்றுதல் இல்லாதவர் காரணப்பெயர் .) மேலைக்குற்றம் - முற்பிறவிகளிற்செய்து நுகர்ந்து எஞ்சிய வினைகள் . அடிபணிந்த அன்பர்கள் தன்னையோவாதே யுள்குவாராயின் , அவை காட்டுத்தீமுன் பஞ்சுத்துய்போற்கெடுதலின் ஒழித்தருளுகொள்கையினன் என்றார் . அருளு என்பதில் உகரம் சாரியை . வெள்ளில் - பாடை . முதுகானில் - மயானத்தில் . பற்றவன் - விருப்புடையவன் . இசைக்கிளவி - இசைப்பாடல்களை ( கிளவி - வெளிக்கிளம்பும் ஓசை ) பாரிடம் ( அது ) - பூதம் . ஏத்த - துதித்துப்பாட . நடமாடும் - அத்தன் . துற்ற - நெருங்கிய சடை , ( அத்தன் ) உறைகின்ற பதி தோணிபுரம் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

பண்ணமரு நான்மறையர் நூன்முறை பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசுமடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைக டீரவருள் செய்தலுடை யானூர்
துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பண்ணிசையோடு கூடிய நான்கு வேதங்களை அருளியவர் . வேதாகம சாத்திரங்களின் முடிவான கருத்தை , மோனநிலையில் சின்முத்திரையால் தெரிவித்தருளிய திருமார்பையுடையவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . தமது பெருமை பேசும் அடியவர்களின் தீர்ப்பதற்கரிய வல்வினைகளைத் தீர்த்து அருளியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது சரியையாதி தொழில்களை விரைவுடன் பணிசெய்தலில் விருப்புடைய மெய்த்தொண்டர் வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நூல்முறை பயின்ற திருமார்பின் - ஆகம சாத்திரங்களின் கருத்தைப் . பயின்ற ( பயிற்றிய ) மோன முத்திரையால் சனகர் முதலியோர்க்குத் தெரிவித்தருளிய , திருமார்பினையும் - ( பயின்ற என்பதில் பிறவினை விகுதி தொக்கு நின்றது ). பெண் அமரும் - தங்கிய . மேனியர் - திருவுடம்பையும் உடையவர் . தம் பெருமை - தமது பெருமையை . பேசும் - பேசிப்புகழும் அடியார் . மெய் - உள் பொருளாகிய . திண் அமரும் - வலிமைபொருந்திய வல்வினைகள் - பிறரால் எளிதில் நீக்கமுடியாத வினைகள் ( அல்லது வலிய வினைகளுக்குள் வலிமைபொருந்திய - மிக வலிய எனினும் ஆம் .) சரியைத் தொழிலர் - சரியையாதி பணிபுரிவோர் . சரியை உபலக்கணம் . ` இருவரும் உணரா அண்ணல் ... உரத்தில் சீர்கொள் கரதலம் ஒன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி .` ( கந்தபுராணம் மேருப் படலம் . பா . 12) துண் என விரும்பு - ( எங்குக் குற்றம் நேர்ந்து விடுகிறதோ என்று ) அச்சத்தோடு விரும்பும் , தொழிலர் - பணியை மேற்கொண்டவர்கள் தங்கும் திருத்தோணிபுரம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

தென்றிசையி லங்கையரை யன்றிசைகள் வீரம்விளை வித்து
வென்றிசை புயங்களை யடர்த்தருளும் வித்தகனி டஞ்சீர்
ஒன்றிசையி யற்கிளவி பாடமயி லாடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுர றோணிபுர மாமே.

பொழிப்புரை :

தென்திசையில் விளங்கிய இலங்கை மன்னனான இராவணன் எல்லாத் திசைகளிலும் திக்விஜயம் செய்து தனது வீரத்தை நிலைநாட்டி , வெற்றி கொண்ட தோள்களை நெருக்கிப் பின் அருளும் புரிந்த வித்தகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இசையுடன் குயில்கள் பாட , மயில்கள் ஆட , வளம் பொருந்திய சோலைகளின் மலர்களிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு , வண்டுகளும் , மிகுந்த தும்பிகளும் சுருதிகூட்டுவது போல் முரல்கின்ற திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

இலங்கையரையன் . திசைகள் - எட்டுத் திசைகளிலும் . வீரம் விளைவித்து - தனது வீரத்தை நிலைநாட்டி ( திக்கு விசயம் செய்து ) வென்று - வெற்றிகொண்டு . இசை - இசைந்த ( ஒன்றை யொன்று ஒத்த ) புயங்களை அடர்த்து . அருளும் - அருள்புரிந்த வித்தகன் இடம் . சீர் ஒன்று - தாளவொத்துக்கு இசைந்த . இசை இயல் கிளவி - இசை பொருந்திய பாடல்களை . பாட - குயில்கள் பாட . மயில் ஆட . வளர்சோலை . துன்றுசெய - அவ்வாடலைக் காணும் சபையினர் போல நெருங்க . வண்டு - வண்டுகளும் . மலி - மிகுந்த , தும்பி வண்டுகளும் . முரல் - சுருதி கூட்டுவதைப்போல ஒலிக்கின்ற தோணிபுரம் . பாட என்பதற்கு எழுவாய் வருவித்துரைக்கப்பட்டது ; தோன்றா எழுவாய் . அன்றி இசையியற் கிளவி - என்பதை அன்மொழித் தொகையாகக் கொண்டு குயிலெனினும் ஆம் . பன்மொழித்தொடர் : இசையியன்ற குரலோசையுடையது என்று பொருள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நாற்றமிகு மாமலரின் மேலயனு நாரணனு நாடி
ஆற்றலத னான்மிகவ ளப்பரிய வண்ணமெரி யாகி
ஊற்றமிகு கீழுலகு மேலுலகு மோங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளுமரி யானுறைவு தோணிபுர மாமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் தேட முயலத் தங்களது ஆற்றலால் அளந்தறிதற்கு அரிதாகும் வண்ணம் , நெருப்புப் பிழம்பாகி , கீழுலகு மேலுலகு ஆகியவற்றை வியாபித்து ஒங்கியெழுந்த தன்மையுடைய தோற்றத்தை உடையவனாய் ஒருநாளும் அவர்கள் அறிதற்கரியனாகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

நாடி - தேடத்தொடங்கி , ஆற்றல் அதனால் - தங்கள் வலிமையினால் . அளப்பு மிக அரிய வண்ணம் - சிறிதும் அளத்தலரிய தாகும்படி . எரி ஆகி - அக்கினிப் பிழம்பு ஆகி . ஊற்றம் - உற்ற இடத்தையும் . எழு - எழுந்த . தோற்றம் - தமது தோற்றத்தையும் . நாளும் - இன்றும் . அரியான் - அறிதல் அரியவனாகிய கடவுள் . உறைவு - வாழும் இடம் தோணிபுரம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டுமம ணாதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெ டுத்தடைவி னானக்
காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதிற்
றோடுகுழை பெய்தவர்த மக்குறைவு தோணிபுர மாமே.

பொழிப்புரை :

உடலை மூடி மறைக்கின்ற துவராடையணிந்த புத்தர்களும் , தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையினைப் போல தமது அறிவும் உளது எனக் காட்டும் அறிவிலிகளாகிய சமணர்களும் தீமை விளைவிக்கக் கூடிய பல சொற்களைக் கூறுவர் . அத்தீய மொழிகளை நீக்கி , சுடுகாட்டைத் தமது இருப்பிடமாகக் கொண்டு , நடனமாடி , உமாதேவியோடு கூடி , இருகாதுகளிலும் முறையே தோடும் , குழையும் அணிந்தவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

மூடு துவராடையர் - துவர் ஆடை போர்ப்பவர்களாகிய புத்தர் . வேட நிலைகாட்டும் அமண் ஆதர் - தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையைப்போலவே தமது ஞானநிலையும் எனக்காட்டும் சமணர்களாகிய அறிவிலிகள் . அம்மொழி - அவர் மொழியை . கெடுத்து - நீக்கி . அக்காடு - அத்தகைய மயானம் . பதியாக - இருப்பிடமாகக்கொண்டு , நடம் ஆடி . மடமாதோடு ( கூடி ) - அர்த்தநாரீசுர வடிவமாய் . இருகாதில் - இருகாதுகளிலும் . முறையே , தோடும் , குழையும் பெய்தவர் - அணிந்தவராகிய சிவபெருமானுக்கு . உறைவு - வசிக்கும் இடம் , தோணிபுரமாம் . அடைவினால் - முறைப்படி . அதைச் சேர்வீர்களாக என்பது அவாய் நிலை . ஆடையர் ஆதர் கேடுபல சொல்லிடுவர் அம்மொழி கெடுத்து அடைவினால் அதனைச் சேர்வீர்களாக என்க . அல்லது கெடுத்த அடைவினான் எனப் பிரித்து அடைவினான் - சிவபெருமான் எனலும் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

துஞ்சிருளி னின்றுநட மாடிமிகு தோணிபுர மேய
மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம் பந்தனசொல் மாலை
தஞ்சமென நின்றிசைமொ ழிந்தவடி யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளு நீங்கியருள் பெற்றுவளர் வாரே.

பொழிப்புரை :

அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும் பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப் , புகழ்மிகுந்த திருத்தோணி புரத்தை விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை வணங்கித் திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே தமக்குப் பற்றுக் கோடாகும் என்ற கருத்தில் நிலைத்துநின்று , அதனை இசையுடன் ஓதும் அடியவர்கள் நெறிதவறுதலும் அதற்குக் காரணமான வஞ்சனையும் இல்லாதவர்கள் . அவர்கள் நெஞ்சிலுள்ள அறியாமை என்னும் இருள் நீங்கப்பெற்று , இறைவனது அருள்பெற்றுச் சீலத்துடன் வளர்வர் .

குறிப்புரை :

துஞ்சு - உலகெலாம் ஒடுங்கிய . இருளில் பிரளயகால இருளில் . ( நின்று ) நடம் ஆடி - நடம் ஆடிய பெருமானும் . மிகு - புகழால் மிகுந்த , தோணிபுரம் மே ( வி ) ய . மஞ்சனை - சிவபெருமானை . மாலையே நமது பற்றுக்கோடாகும் என்று , நின்று இசைமொழிந்த அடியார்கள் . தடுமாற்றம் , வஞ்சம் , இலர் - நெறி தவறுதலும் , அதற்குக் காரணமாகிய மாயையும் இலராவார் . இருளாவது தன்னைக் காட்டிப் பிறபொருளைக் காட்டாமலிருக்கும் ; இது தன்னையும் , தான்மறைத்த ஆன்மாவையும் காட்டாமையால் வஞ்சம் எனப்பட்டது . இருளும் - ஆணவமலமும் , மாயையும் இலர் எனவே . ஏனைய கன்மமும் தொலையப்பெற்று , அருள் பெற்று , வளர்வார் என்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடுகு லாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர் . முப்புரிநூல் அணிந்த திருமார்பினர் . திருவெண்ணீறு பூசியவர் . இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர் . ஆகாயத்தில் திரிந்த பொன் , வெள்ளி , இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை , மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்து எரித்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருஅவளிவணல்லூர் ஆகும் .

குறிப்புரை :

கொம்பு - பூங்கொம்பு . இரிய - தம்மைப் பிரியும்படி . ( தாமும் பிரிந்து வந்து வண்டு ) உலவு - திரிகின்ற . கொன்றை - கொன்றைமாலை . புரிநூலொடு - பூணூலொடு . குலாவி - மார்பின்கண் பூண்டு . தம் பரிசினோடு - தம் பரிசுடையாரென்னும் தன்மையோடு . நீறு தட வந்து - திருநீறு பூசி . இடபம் ஏறி , கல் - மேருமலை . வரை - தாம் வரைந்து கொண்டவில் ஆக , ( மதில் எய்த பெருமான் ) கம் - ஆகாயத்தின்கண் . பருத்த . செம்பொன் , ( வெள்ளி , இரும்பு இவற்றால் ) ஆகிய . நெடும்மாடம் - நெடிய மாடங்களையுடைய . மதில் - திரிபுரங்கள் , எரிய அம்பு எய்த பெருமான் உறைவது அவளிவணல்லூரே . செம்பொன் - எனவே . வெண்பொன் , கரும்பொன்னும் உபலக் கணத்தாற் பெற்றாம் , தேனுக்காகக் கொன்றை மரம் சென்று , பூக்கள் பறிக்கப்பட்டு மாலையாகச் சிவபெருமான் மார்பிற் கிடத்தலால் , வறுங் கொம்பைப் பிரிந்த வண்டு , அம்மாலையிற் சுற்றித் திரிகின்ற மார்பினன் என்பது ` கொம்பு ..... கொன்றை ` என்றதன் கருத்து . அது கொண்டு கருதின் ` தமக்கு இன்பம் கிடைக்குமென்று உலகப் பொருளிற் சென்ற மனம் , திரும்பிச் சிவபெருமானை யடையின் பல்வகை இன்பங்களும் பெறலாமென்று உலாவும் ` - எனவும் ஓர் பொருள்தொனிக்கின்றது . பல்வகை இன்பமும் சிவன் அருளுவன் என்பதை , ` அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே யன்பொடு தன்னையஞ் செழுத்தின் சொற்பதத் துள்வைத்துள்ளமள் ளூறுந் தொண்டருக் கெண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும் பவளவா யவர்பணை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே .` என்னும் திருவிசைப்பா ( தி .9) வால் அறிக . தம் பரிசுடையார் என்பது தலத்து இறைவன் திருப்பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை
ஈமமெரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித்
தூய்மையுடை யக்கொடர வம்விரவி மிக்கொளிது லங்க
ஆமையொடு பூணுமடி கள்ளுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

ஓமை , கள்ளி , வாகை முதலிய மரங்கள் நிறைந்ததும் , கோட்டான்கள் கத்தும் ஓசையும் உடையதும் ஆன கொள்ளி நெருப்புச் சூழ்ந்த சுடலை வாசமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர் சிவபெருமான் . தூய்மையான எலும்பும் , பாம்பும் கலந்து ஒளி துலங்க , ஆமையோட்டினை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஓமை கள்ளி , வாகை இம்மரங்களையுடையவனாகிய இடங்களும் , கூகை முரல் ஓசை - கோட்டான்கள் கத்தும் ஓசையும் . ஈமம் - கொள்ளிகளும் . எரி - நெருப்பும் . சூழ் - சூழ்ந்த - சுடலையாகிய , ( வாசம் - தாம் வாசஞ்செய்யும் ). முதுகாட்டில் நடம் ஆடி . தூய்மையுடைய அக்கொடு - அக்குப்பாசியோடு அரவம் - பாம்பும் . ( விரவி ) கலந்து ஒளிமிக்கு . துளங்க - விளங்க . ஆமை யோட்டோடு பூணும் , அடிகள் உறைவது அவளிவள்நல்லூரே . துளங்க - துலங்க . லள ஒற்றுமை - அசைய எனினுமாம் . சுடலையாகிய முதுகாடு இருபெயரெட்டுப் பண்புத்தொகை . வாசம் - இடைப்பிறவரல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

நீறுடைய மார்பிலிம வான்மகளொர் பாகநிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம்
ஏறுடைய ரேனுமிடு காடிரவி னின்றுநட மாடும்
ஆறுடைய வார்சடையி னானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநீறணிந்த தம் திருமார்பில் இமவான் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு அர்த்தநாரி என்னும் அழகிய கோலத்தில் இடபவாகனத்தில் வீற்றிருப்பவர் . சுடுகாட்டில் இரவில் நடனம் ஆடுபவர் . கங்கையை நீண்ட சடையில் தாங்கியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இமவான் மகள் - உமாதேவியாரை . ஓர்பாகம் , நிலைசெய்து - பிரியாமற்கொண்டு , கூறுடைய வேடமொடுகூடி அழகாயதொரு கோலம் - ஒருபாதி ஆணாகிய தோற்றத்தோடு கூடி அழகாகியகோலம் . ஏறு - எவற்றினும் சிறக்க உடைய ( வ ) ரேனும் . இடுகாடு - இடுகாட்டில் , ( இரவில் நின்று நடம் ஆடும் . ஆறு உடைய ) வார் - நெடிய . சடையினான் . உறைவது - தங்குவது , அவளிவள் நல்லூரே . இக்கோலம் ஏற உடைமை , இடுகாட்டில் இரவில் நின்று நடமாடுதற்கு ஏற்றதன்றாயினும் , ` இன்ன தன்மையனென்று அறியொண்ணா இறைவன் ` ஆகலின் , ஆயிற்றென்க . ஏற உடையர் - ஏறுடையர் என்றாயது . ` தொட்டனைத்தூறும் ` என்ற திருக்குறளிற் போல , ஏறுடையர் . வார்சடையினான் - என வந்தது ஒருமை பன்மை மயக்கம் ; பன்மை - உயர்வுபற்றியது .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமில ரென்றுலகு பேணிப்
பணியுமடி யார்களன பாவமற வின்னருள்ப யந்து
துணியுடைய தோலுமுடை கோவணமு நாகமுட றொங்க
அணியுமழ காகவுடை யானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

பிணியும் , இறப்பும் , பிறப்பும் இல்லாதவர் என்று உலகத்தவரால் போற்றப் படும் சிவபெருமான் தம்மை வணங்கும் அடியவர்களின் பாவம் யாவும் நீங்குமாறு செய்து , இன்னருள் புரிபவர் . கிழிந்த தோலையும் , கோவணத்தையும் ஆடையாக உடுத்ததுடன் , பாம்பை அழகிய ஆபரணமாக அணிந்து விளங்கும் அவர் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பிணியும் , இறப்பும் பிறப்பும் உடைய நமக்கு , இவையில்லாதவனாகிய சிவபெருமான் தஞ்சமாவரென்று உலகத்தில் பாராட்டி வணங்கும் அடியார்களின் ( அவற்றிற்குக் காரணமான ) பாவம் நீங்க உடையவன் இனிய அருள்தந்து உறைவது ( அவளிவணல்லூர் ) ` எல்லார் பிறப்பும் இறப்புமியற் பாவலர்தஞ் சொல்லால் அறிந்தோநம் சோமேசர் - இல்லிற் பிறந்தகதை யுங்கேளேம் பேருலகி லேவாழ்ந் திறந்தகதை யுங்கேட் டிலேம் ` - சோமேசர் முதுமொழி வெண்பா . எனவும் , ` ... மற்றத்தெய்வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்கும்மேல் வினையும் செய்யும் ` ( சித்தியார் சுபக்கம் . சூத் . 2.25) எனவும் வரும் பாடல்கள் இங்கு அறியத்தகும் . இவற்றையுடைய பிறதேவர்களைப்பற்றிக் கரையேறுவோ மென்பது ` குருடும் குருடும் குருட்டாட்டமாடிக் , குருடும் குருடும் குழிவீழ்ந்தவாறே ` என்றபடியேயாம் என்க . பயந்து - பயன் பெறத்தந்து , துணியும் - கிழித்தலையுடைய . தோலும் , கோவணமும் , உடையும் , பாம்பு உடலில் தொங்க அணியும் ஆபரணமும் ஆக ( அவை தனக்கு அழகு செய்வனவாக உடையவன் ) அடியார்கள் பாவம் அற இன்னருள் பயந்து , தோல் முதலியவை தனக்கு அழகு செய்வனவாக உடையவன் என வினை முடிபு செய்க . இப்பாடலுக்குப் பொழிப்பு உரைக்கப்பட்டது . துணி - துணித்தல் . முதனிலைத் தொழிற்பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

குழலின்வரி வண்டுமுரன் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடித்
தொழலும்வழி பாடுமுடை யார்துயரு நோயுமிலராவர்
அழலுமழு வேந்துகையி னானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

குழலின் ஓசைபோல் வண்டுகள் ஒலி எழுப்பி மொய்க்கும் மெல்லிய அழகிய மலர்களைக் கொண்டு இண்டைமாலை கட்டி , சிவபெருமான் திருவடிகளில் சார்த்தித் தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ` இவரே முழுமுதற் கடவுள் ` என்று தொழுது போற்றுவர் . அத்தகைய வழிபாட்டைச் செய்பவர்கட்கு , உள்ளத்தால் வரும் துயரும் , உடலால் வரும் நோயும் இல்லை . அவ்வாறு அடியவர்கட்கு அருள்புரியும் இறைவன் , நெருப்புப்போல் ஒளிவீசும் மழுவேந்திய கையுடையவனாய் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அமரர்கூடி , குழலின் - புல்லாங்குழலின் ஓசைபோல , வண்டு முரல் - வண்டுகள் ஒலிக்கின்ற , மெல்லியன - மெல்லியன ஆகிய ( பூவுலக ) மலர்களும் . பொன்மலர்கள் - ( வானுலக மலர்கள் ஆகிய ) பொன் மலர்களும் கொண்டு ( கட்டிய ) இண்டை - இண்டைமாலையை . கடவுள் என்று - ( இவரே ) கடவுள் என்று , கழலின்மிசை - திருவடியில் , புனைவார் - சாத்துவார்கள் ,. தொழுதலும் வழிபாடும் உடையார் - இவற்றின் பயனாக . இவர்கள் உள்ளம்பற்றி வரும் துன்பமும் , உடலம்பற்றிவரும் நோயும் இலராவர்கள் . ( அங்ஙனமாக அருள்புரிந்து ) கொதிக்கும் மழுவை ஏந்திய கையையுடைவன் உறைவது அவளிவள் நல்லூரே . இது பின்னீரடிக்கும் பொழிப்பு உரை . தேவர்கள் பொன்னுலகத்தவர்கள் . அவர்களுக்குக் கற்பகவிருட்சம் தருவது பொன்மலர் ஆதலால் அம்மலர்களையும் இங்கு நந்தவனங்களில் வண்டு மொய்க்கும் மலர்களையும் கலந்து இண்டைகட்டிப் புனைகின்றனர் . பொன் மலர்களில் வண்டு மொய்க்காதாகலின் இங்ஙனம் கொள்க . அமரர்கூடி வண்டு முரல் மெல்லியன ( மலர்களும் ) பொன்மலர்கள் கொண்டு இண்டைகட்டி ` இவரே ( சிவ பெருமான் ) கடவுளென்று ( உணர்ந்த உள்ளத்தினராய் ) கழலின் மிசை புனைவார் ` என்பது முன்னிரண்டடியின் பொருள் . இண்டை - மாலை விசேடம் . வழிபாடு - நூல் வழி , ஆசிரியன் கற்பித்தவழி ( ஆசரணை ) முறையே நியமமாகச் செய்யும் சரியை கிரியை முதலியன . அசுரர்களால் வரும் துன்பமும் , அவர்கள்பேரால் வரும் நோயும் அமரர்க்கும் உண்டு . ஆகலின் அவை இலராவர் எனத் தேவர்கள் இங்கு வந்து வழிபட்டுப் பேறுபெறுமாறு கூறியபடி . குழலின் - ஐந்தனுருபு ஒப்புப் பொருள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

துஞ்சலில ராயமரர் நின்றுதொழு தேத்தவருள் செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயவெளி தாகியொரு நம்பன்
மஞ்சுறநி மிர்ந்துமைந டுங்கவக லத்தொடுவ ளாவி
அஞ்சமத வேழவுரி யானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

உறக்கமின்றித் தேவர்கள் இடையறாது தம்மைத் தொழுது போற்ற , நஞ்சினையுண்டு அவர்களைக் காத்து அருள்செய்து , கண்டம் கரியதாகவும் ஏனைய உருவம் படிகம் போல் வெண்மை யாகவும் விளங்குபவர் சிவபெருமான் . மதம் பிடித்த யானை அஞ்சும்படி , வானளாவ நிமிர்ந்து அதன் தோலை உரித்து , உமை நடுங்கத் தம் மார்பில் போர்த்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அமரர் - துஞ்சல் இலராய் - சோம்பலின்றி . நின்று தொழுது ஏத்த அருள்செய்து . நஞ்சம் உண்டு , ( அதனால் ) மிடறு - கழுத்து . கரிது ஆய - கரியது ஆகிய . வெளிது ஆகி - ஏனைய திருவுருவம் படிகம்போல வெண்மையுடையது ஆகப்பெற்று ( உடைய ) ஒப்பற்ற . நம்பன் - சிவபெருமான் . சதாசிவ மூர்த்தியின் திருவுருவம் படிகம் போன்றது ஆதலின் , வெளியது ஆய ஒரு நம்பன் என்றார் . மஞ்சு - மேகம் ; இங்கு வானத்தைக் குறித்தது , உற - பொருந்த . நிமிர்ந்தமை - யானையுரிக்கும் அவசரம் . மதவேழம் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்து ( அதன்தோலை உரித்து ) உமைநடுங்க . அகலத்தோடு - மார்பில் . அளாவி - சேர்த்துப் ( போர்த்த ). உரியான் - தோலையுடையவன் . அஞ்ச ( உரித்த ) மதவேழ உரியான் என்க . போர்த்த . உரித்த , என ஒருசொல் வருவித்துரைக்கப்பட்டது . அன்றி வினை முடிபு கொள்ளுமாறு இல்லை .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடுமிசை செய்யப்
பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடும்
காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி
ஆடரவ மார்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

மொந்தை , குழல் , யாழ் , முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , எண்தோள்வீசி ஆடும்போது சடையிலுள்ள கங்கைநீர் அம்பு போலப் பாய , பெரிய இடப வாகனத்தோடு , சுடுகாட்டில் ஓசையுடன் எரியும் நெருப்பையேந்தி இரவில் நடனமாடி , படமெடுத்தாடும் பாம்பைக் கச்சாகக் கட்டிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

மொந்தை , குழல் , யாழ் முதலிய வாத்தியங்கள் முழவினோடும் . கூடு அரவம் - ஒத்துவரும் ஓசைகளாக . இசைசெய்ய - ஒலிக்க . பீடு அரவம் ஆகு - பெரிய ஓசைதரும் . படர் - பரவுகின்ற . அம்பு செய்து - தோள்வீசி யாடும்போது சடையில் உள்ள கங்கைநீர் ததும்பும் . ஆதலால் அதனை அம்புசெய்து - என்பதனால் தெரிவித்தார் . அம்புசெய்து - தண்ணீர் விசிறச்செய்து எனக் கொள்ளல் வேண்டும் . பேர் இடபமோடும் - பெரிய இடபவாகனத்தோடும் . காடு - சுடுகாட்டில் . அரவம் ஆகு - சட சட ஒலிக்கும் ஓசையையுடைய . கனல் கொண்டு - நெருப்பையேந்தி , இரவில் நின்று நடம் ஆடி . அரவம் ஆர்த்த - பாம்பைக் கச்சாகக் கட்டிய பெருமான் . இதன் கருத்து ; மொந்தை முதலிய வாத்தியங்கள் ஒலிக்கச் சடையிற் கங்கைநீர் ததும்பக் கனலேந்தி , இரவில் , இடபமோடும் நின்று நடம் ஆடிப் பாம்பைக் கட்டிய பெருமான் உறைவது அவளிவள்நல்லூர் என்பதாம் . அறக்கடவுளே இடபமாகலான் மகா சங்கார காலத்தும் அழியாது நிற்க , அதனோடும் நின்று நடம் ஆடி என்றார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஒருவரையு மேல்வலிகொ டேனெனவெ ழுந்தவிற லோனிப்
பெருவரையின் மேலொர்பெரு மானுமுளனோ வெனவெ குண்ட
கருவரையு மாழ்கடலு மன்னதிறல் கைகளுடை யோனை
அருவரையி லூன்றியடர்த் தானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

எனக்கு மேல் ஒருவரையும் வலிமையுடைய வராகக் காணப்பொறேன் என வீரத்துடன் எழுந்து , இக்கயிலை மலையின் மேல் ஒரு பெருமான் உளனோ என வெகுண்டு , மலையைப் பெயர்த்த பெரியமலை போன்றும் , ஆழமான கடல்போன்றும் வலிமையுடைய அரக்கனான இராவணனைத் தன்காற் பெருவிரலை ஊன்றி , அம்மலையின்கீழ் நெரியும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மேல் - எனக்குமேல் , ஒருவரையும் , வலிகொடேன் - வலிமையுடையவராகக் காணப்பொறேன் என எழுந்த . விறலோன் - வலியோனாகிய ( இராவணன் ) ` இப்பெருவரையின் மேல்ஓர் பெருமானும் உளனோ ` எனக் கோபித்த . கருவரையும் - கரியமலையும் . ஆழ்கடலும் , அன்ன - போன்ற . மலைபோன்ற ( திறல் ) வலிமை . கடல் போன்ற கைகள் என்க . உடையானை - உடையவனாகிய இராவணனை . அரு , வரையில் - ( கயிலை ) மலையின் கீழ் . ஊன்றி - விரல் ஊன்றி . அடர்த்தான் உறைவது அவளிவள்நல்லூரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பொறிவரிய நாகமுயர் பொங்கணைய ணைந்தபுக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல்விழுமி யோனும்
செறிவரிய தோற்றமொடு வாற்றன்மிக நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

புள்ளிகளையுடைய நெடிய பாம்பை உயர்ந்த படுக்கையாகக் கொண்டு விளங்குகின்ற புகழ்மிக்க திருமாலும் , வாசனையறிகின்ற கீற்றுகளையுடைய வண்டு ஒலித்து ஊத , அதனால் விரிந்த தாமரைமேல் வசிக்கின்ற பிரமனும் , பிறர்க்கு அரிய வலிமையுடைய தோற்றத்தோடு தமது ஆற்றல் முழுவதையும் செலுத்தித் தேடியும் , சிறிதளவும் அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பொறி - புள்ளிகளையுடைய . வரி - நெடிய . நாகம் - பாம்பாகிய . உயர் - உயர்ந்த . பொங்கு - உடல் பெருக்கும் . அணை - மெத்தையை . அணைந்த - சேர்ந்த . புகழோன் - திருமால் . வெறி - வாசனையறிகின்ற . வரிய - கீற்றுக்களையுடைய . ( வண்டு ) அறைய - ஒலித்து ஊத . விண்ட ( அதனால் ) விரிந்த , தாமரை மலர்மேல் வசிக்கின்ற . விழுமியோன் - பிரமன் . அரிய செறிவு - பிறர்க்கு அரியதாகிய வலிமையையுடைய . தோற்றம் ஒடு - தோற்றத்தோடு . ஆற்றல் மிக நின்று , வினைமுடிக்கும் திறன் மிக . நின்று - ( தேடும் தொழிலில் ) நின்றும் சிறிதேயும் ( அவர்களால் ) அறிவு அரியன் ஆய - அறிய முடியாதவனாகிய . பெருமான் உறைவது அவளிவள் நல்லூரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கழியருகு பள்ளியிட மாகவடு மீன்கள்கவர் வாரும்
வழியருகு சாரவெயி னின்றடிசி லுள்கிவரு வாரும்
பழியருகி னாரொழிக பான்மையொடு நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ தவளிவண லூரே.

பொழிப்புரை :

ஆற்றங்கழி அருகிலிருக்கும் சமணப் பள்ளி இடமாக நின்று , சமைத்து உண்பதற்குரிய மீன்களைக் கவரும் போலிச் சமணர்களும் தெருக்களில் உச்சிவேளையில் நின்று உணவு ஏற்க வரும் புத்தர்களும் கூறும் பழிக்கு அடுத்துச் சொல்வதாகிய பாவத்தை உடையவர்கள். இவர்கள் ஒழியுமாறு, பக்தியால் தொழுதேத்தும் அடியவர்கள் கண்களில் இருந்து தோன்றும் அருவி போன்ற நீரில் தோய்ந்து விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கழியருகு - ஆற்றங்கழி யருகிலிருக்கும் . பள்ளி - சமணப்பள்ளி இடமாகநின்று . அடும் - சமைத்து உண்பதற்குரிய ( மீன்கள் ) கவர்வார் - கொள்பவர்களாகிய அமணரும் , வீதி யோரங்களில் உச்சிவேளையில் நின்று உணவின் பொருட்டாக வருபவர்களாகிய , புத்தரும் . உச்சிப் பொழுதில் பிச்சை பெற்று உண்பது , புத்த சந்நியாசியின் முறை . ` அங்கையிற்கொண்ட பாத்திரம் உடையோன் கதிர்சுடும் அமையத்துப் பனிமதிமுகத்தோன் .` ( மணிமேகலா தெய்வம் ... தோன்றிய காதை . 59 - 60.) என்பது அறிக . தொழுது ஏத்தும் அழி அருவி தோய்ந்தபெருமான் - தொழுதேத்தும் அன்பர்கள் தம் கண்களின்றும் அழிந்து வருகின்ற அருவி போன்ற கண்ணீரில் நீராடிய பெருமான் . உறைவது அவளிவணல்லூர் . ` பாந்தள் பூணாம் பரிகலம் கபாலம் , பட்டவர்த்தனம் எரு தன்பர் வார்ந்த கண்ணருவி மஞ்சனசாலை மலைமகள் மகிழ் பெருந்தேவி ...` என்னும் திருவிசைப்பா ( தி .9) வால் தோய்தல் அறிக . பழியருகினார் - பழிக்கு அடுத்துச் சொல்வதாகிய பாவத்தை யுடையவர்கள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

ஆனமொழி யானதிற லோர்பரவு மவளிவண லூர்மேல்
போனமொழி நன்மொழி களாயபுகழ் தோணிபுர வூரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்க டீயதிலர் தாமே.

பொழிப்புரை :

பொருளுடைய புகழ்மொழிகளால் மெய்ஞ்ஞானிகள் துதிக்கின்ற அவளிவணல்லூர் என்னும் திருத்தலத்தைத் திசைகள் தோறும் பரவிய நன்மொழியால் புகழ்போற்றும் தோணி புரத்தில் அவதரித்த சிவஞானங் கமழ்கின்ற திருப்பதிகங்களால் நல்ல நாடுகளெல்லாம் புகழ்கின்ற ஞானசம்பந்தன் அருளிய தேன் போன்ற இனிமையான மொழிகளால் ஆன இப்பாமாலையால் புகழ்ந்து போற்றுபவர் துயரற்றவர் ஆவர் . அவர்களைத் தீமை அணுகாது .

குறிப்புரை :

ஆன - பொருளுடையதாகிய . மொழியான - புகழையுடைய . திறலோர் - மெய்ஞ்ஞானிகள் . பரவு - துதிக்கின்ற . அவளிவள்நல்லூர் மேல் . தோணிபுரவூரன் , ஞானசம்பந்தன் . தேனமொழிமாலை புகழ்வார்கள் துயர்கள் தீயது இலர்தாம் ஏ - என்பது வினை முடிபு . போன மொழி - திசைகள் தோறும் பரவிய வார்த்தை . நன்மொழிகளாய - நல்ல வார்த்தைகளாகிய , புகழ் . என்பது :- ` இசையாற்றிசை போயதுண்டே ` என்னும் சிந்தாமணி போன்றது . புகழ்த் தோணிபுரம் - புகழையுடைய தோணிபுரம் சந்தம் நோக்கித் திரியாதாயிற்று . ஞானம் மொழிமாலை நலநாடு புகழ் - சிவஞானங் கமழ்கின்ற திருப்பதிகங்களால் நல்ல நாடுகளெல்லாம் புகழ்கின்ற ஞானசம்பந்தன் . மொழியை மலராகவும் , பதிகங்களை மாலையாகவும் உணர்த்தினமையால் ( சிவ ) ஞானம் - மணம் ஆகிறது . ஏகதேச உருவகம் . தேன் - இனிமையையுடைய . துயர்கள் தீயது இலர் - துன்பங்களும் , அவற்றின் காரணமான வினையும் இலர் ஆவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

வண்டிரிய விண்டமலர் மல்குசடை தாழவிடை யேறிப்
பண்டெரிகை கொண்டபர மன்பதிய தென்பரத னயலே
நண்டிரிய நாரையிரை தேரவரை மேலருவி முத்தம்
தெண்டிரைகண் மோதவிரி போதுகம ழுந்திருந லூரே.

பொழிப்புரை :

வண்டு அமர விரிந்த மலர்கள் நிறைந்த சடை தொங்கச் சிவபெருமான் இடபவாகனத்திலேறி , பண்டைக்காலந் தொட்டே கையில் நெருப்பேந்தியவனாய் விளங்கும் பதியாவது , பக்கத்தில் நண்டு ஓட , நாரை தேட மலையிலிருந்து விழும் அருவி முத்துக்களை அடித்துக் கொண்டு வந்து சேர்க்க , காவிரியின் தெள்ளிய அலைகள் மோதுவதால் அரும்புகள் மலர நறுமணம் கமழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

( வண்டு இரிய ) விண்ட - விரிந்த . ( மலர் ) மல்கு - நிறைந்த சடை . தாழ - தொங்க . பண்டு - ஆதிகாலந் தொட்டே , எரியைக் கைக்கொண்ட பரமன் பதி அது என்பர் . அதன் - அப் பதியின் . அயலே - பக்கத்தில் . ( நண்டு ) இரிய - ஓட . ( நாரை இரை தேட ). வரைமேல் அருவி முத்தம் - சைய மலைமேல் அருவி அடித்து வரும் முத்தங்களை , காவிரிநதி தெள்ளிய திரைகளால் வீச , அவை மோதுவதால் விரிந்த அரும்புகள் கமழுந் திருநல்லூர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம்
மல்வளர்பு யத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாம்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கண்முறை யேத்தவள ருந்திருந லூரே.

பொழிப்புரை :

நச்சுப்பல்லுடைய நாகத்தை இடுப்பிலே கச்சாகக் கட்டி , மலைமங்கையாகிய உமாதேவியைத் தன் வலிமையான தோளின் இடப்பாகத்தில் அணைத்து மகிழும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மகளிர் பொருட்செறிவுடைய பாடல்களைப் பாடி , அவற்றிற்கேற்ப நடனமாடுவதும் , வேதம் ஓதவல்ல அந்தணர்கள் நியதிப்படி போற்றி வழிபடுவதும் ஆகிய புகழ்வளரும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வளர் இசை - இசைவளரும் . சொல் .... கிளவி - சொற்களாலாகிய சாகித்தியங்களை ( இதனை ` உரு ` என்பர் இசை நூலார் , இப்பொழுது ` உருப்படி ` எனக் குழுஉக் குறியாய் வழங்கி வருகிறது .) வளரும் - புகழ் வளரும் திருநல்லூர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

நீடுவரை மேருவில தாகநிகழ் நாகமழ லம்பால்
கூடலர்கண் மூவெயிலெ ரித்தகுழ கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுன னின்றுதிக ழுந்நிமல னிடமாம்
சேடுலவு தாமரைக ணீடுவய லார்திருந லூரே.

பொழிப்புரை :

பெரிய மேருமலையை வில்லாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , அக்கினியை அம்பாகவும் கொண்டு , பகைவர்களின் மும்மதில்களை எரித்த அழகனான சிவபெருமானின் சடைமேல் இதழ்களையுடைய கொன்றையும் , கங்கையும் விளங்குகின் றன . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பெருமைமிக்க தாமரை மலர்கள் விளங்கும் வயல்வளமுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நீடுவரைமேரு - நெடிய மலையாகிய மேரு , ( வில் அது ஆக ) நிகழ் - பொருந்திய ( நாகம் ). நாண் ஆக - ( என்பது இசையெச்சம் ). அழல் அம்பால் - ( திரிபுரம் எரித்த அம்பின் நுனி நெருப்பு ஆயினபடியால் அழல் அம்பு எனப்பட்டது .) கூடலர் - பகைவர் ( காரணப்பெயர் ) ஏடுஉலவு - இதழ்களையுடைய . சேடு உலவு தாமரை - உயர்வு பொருந்திய தாமரை . ` பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை ` என்றபடி .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கருகுபுரி மிடறர்கரி காடரெரி கையதனி லேந்தி
அருகுவரு கரியினுரி யதளர்பட வரவரிடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மண நாறமயி லாலமர மேறித்
திருகுசின மந்திகனி சிந்தமது வார்திருந லூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கருகிய கண்டத்தை உடையவர் , சுடுகாட்டில் கையில் எரியும் நெருப்பேந்தி நடனமாடுபவர் . தம்மைத் தாக்க வந்த மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , சோலைகளிலுள்ள நறுமணத்தை நுகர்ந்த இன்பத்தால் மயில்களாட , அவ்வாடலுக்குப் பொழில் பரிசில் வழங்கிலதே என்று சினந்தவை போல் குரங்குகள் மரத்திலேறி , மயிலாடுதல் கண்ட இன்பத்திற்கு ஈடாகப் பரிசு கொடுப்பனபோல் கனிகளை உதிர்க்கக் கனிச்சாறு பெருகும் திருநல்லூர் எனும் திருத்தலமாம் .

குறிப்புரை :

கருகுபுரி - கருகுதலையுடைய . ( கறுத்த ) மிடறர் - கண்டத்தையுடையவர் . காடு - காட்டில் , கை அதனில் எரி ஏந்தி . அருகு - சமீபத்தில் . உரி அதளர் - உரித்த தோலையுடையவர் . பட அரவர் . முருகு - வாசனை , ( மயில் ) ஆல - ஆட . திருகுசினம் - மாறுபட்ட கோபம் . இவ்வாடலுக்குப் பரிசில் வழங்கிலவேயென்று , மரங்களின் மேற் சினந்த மந்திகள் , அம் மரங்களினின்று கனிகளை யுதிர்க்கும் திருநல்லூர் எனச் சோலைவளம் கூறியவாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பொடிகொடிரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம்
இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமன மினியவர்கள் சேர்திருந லூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநீறணிந்த அழகிய மார்பை உடையவர் . முப்புரிநூல் அணிந்தவர் . கங்கையையும் , பாம்பையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியுடையவர் . இடப வாகனத்தில் வீற்றிருந்தருளும் முதற்பொருளானவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இடி போன்ற முழவோசை ஒலிக்க , தொழிலாளர்களின் கைத்திறத்தால் அழகுடன் விழாக்கள் சிறந்து விளங்க , அவ்விழாக்களைச் சேவித்தலால் துன்பம்தரும் வினைகள் அகல , இனிய மன முடையோர் வசிக்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பொடிகொள் - திருநீறு பூசிய , திருமார்பர் . புனல் - கங்கை . முதல் ஆளர் - முதன்மையுடையவர் . இடிகொள் - இடியோசையைக் கொண்ட , முழவு ஓசையுடன் . எழில் ஆர் செய்தொழிலாளர் - விழாவிற்குரிய சிறப்புக்களை அழகுபொருந்தச் செய்கின்ற தொழிலாளர்களால் . விழா - திருவிழா . மல்க - சிறக்க . செடிகொள் வினை அகல - அத்திருவிழாத் தரிசன பலத்தால் துன்பத்தைத் தருகின்ற வினை அகலக் ` கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல் ` ஆதலினால் தரிசித்தோர் பெறும் பலனைக் கூறியருளினர் . மனம் இனியவர்கள் . ( தநுகரண புவன போகங்கள் வினைக்கேற்ப அமைதலால் ) மனம் முதலியன நல்லனவாகப் பெற்ற புண்ணியம் உடையவர்கள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

புற்றரவர் நெற்றியொர்க ணொற்றைவிடை யூர்வரடை யாளம்
சுற்றமிருள் பற்றியபல் பூதமிசை பாடநசை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கண் முற்றுமெயின் மாளச்
செற்றவ ரிருப்பிட நெருக்குபுன லார்திருந லூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பை அணிந்தவர் . நெற்றியில் ஒரு கண் உடையவர் . இடப வாகனத்தில் அமர்ந்தவர் . இவையே அவரது அடையாளமாகும் . அத்தகையவர் அடையாளம் காணமுடியாத இருட்டில் பல பூதங்கள் இசைபாட நடனம் புரிபவர் . விருப்பத்தோடு வேதங்களைக் கற்ற அந்தணர்களால் உணர்ந்து போற்றப்படுபவர் . பகையசுரர்களின் முப்புரங்கள் எரியும்படி சினந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நீர்வளம் நிறைந்த திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

புற்றில் வாழும் பாம்பை அணிபவர் , நெற்றிக் கண்ணோடு ஒரு விடையை ஏறிச் செலுத்துபவர் . அடையாளம் - ( இவை அடையாளமாக .) சுற்றம் - சுற்றமாக . இருள்பற்றிய - இருளில் விளக்கு ஏந்திய . பல்பூதம் - பலபூதம் இசைபாட ( உடையவர் ). நசையால் - விருப்பத்தோடு . முனிவர்கள் . மறைகற்று உணரப் படுபவர் . பற்றலர்கள் - பகைவர்களின் . எயில்முற்றும் மாள - மதில் முழுதும் ஒழியும்படி . செற்றவர் - கோபித்தவர் . நெருக்கு புனல் ஆர் - மிகுந்த நீர்வளத்தையுடைய . சந்தம்நோக்கி . நெருங்கு என்பது வலித்தல் விகாரம் பெற்றது . ` பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்ற ` என்ற திருத்தாண்டகத்தின்படி இருள்பற்றிய என்பதற்குப் பொருள் கொள்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

பொங்கரவ ரங்கமுடன் மேலணிவர் ஞாலமிடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்து லங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவில்
செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே.

பொழிப்புரை :

இறைவன் சினம் பொங்கப் படமெடுத்தாடும் பாம்பை அணிந்துள்ளவர் . எலும்பையும் திருமேனியில் அணிந்தவர் . பிரமகபாலமேந்திப் பூமியிலுள்ளோர் இடும் பிச்சையேற்க ஆரவாரித்துத் திரிபவர் . தம் திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர் . கங்கையையும் , பாம்பையும் , சந்திரனையும் சடை முடியிலணிந்துள்ளவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது செங்கயல் மீன்கள் சேற்றில் குதிக்கும் நீர்வளமிக்க திருநல்லூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

அங்கம் - எலும்பை . ( உடல்மேல் அணிவர் ) ஞாலம் - பூமியிலுள்ளார் . இடு ( ம் ) பிச்சைக்கு . தங்கு - பொருந்திய . அரவம் ஆக - ஆரவாரத்தோடு . உழிதந்து - சுற்றித்திரிந்து . கங்கை . அரவம் ( விரவு -) திங்கள் - அணிந்த சடையையுடைய அடிகள் . வதி - சேற்றில் , செங்கயல் குதிகொள்ளும் . புனல்வளம் மிக்க திருநல்லூர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஏறுபுகழ் பெற்றதெனி லங்கையவர் கோனையரு வரையில்
சீறியவ னுக்கருளு மெங்கள்சிவ லோகனிட மாகும
கூறுமடி யார்களிசை பாடிவலம் வந்தயரு மருவிச்
சேறுகமரானவழி யத்திகழ்த ருந்திருந லூரே.

பொழிப்புரை :

மிக்க புகழ் பெற்ற தென் இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கி அடர்த்துப் பின்னர் அவனுக்கு நீண்ட வாழ்நாளும் , வெற்றிதரும் வீரவாளும் அளித்து அருள்செய்தவர் சிவலோக நாதரான சிவபெருமான் ஆவார் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , அடியார்கள் இசைபாடி வலம் வரும்பொழுது , பக்தியால் அவர்கள் கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர் அருவியெனப் பாய்ந்து அருகிலுள்ள நிலவெடிப்புக்களில் விழ , வெடிப்புக்கள் நீங்கி நிலம் சேறாகத் திகழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஏறுபுகழ் - மிக்க புகழ்பெற்ற . தென் இலங்கையர் . கோனை - அரசனை , சீறி - முதற்கண்கோபித்து , ( பிழைக்கிரங்கி அவன் வேண்ட ) அவனுக்கு அருளும் . அடியார்கள் இசைபாடி வலம் வருகையில் , அயரும் - ( அவர்கள் கண்களினின்றும் ) சோரும் . அருவி - ஆனந்தக் கண்ணீரருவியானது ( அருகிலுள்ள ) நில வெடிப்புக்கள் எல்லாம் அழியத் திகழ்தரும் - விளங்கும் திருநல்லூர் . மிகையுயர்வு நவிற்சியணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

மாலுமலர் மேலயனு நேடியறி யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்பும்
சீலமுடை யார்கணெடு மாடம்வள ருந்திருந லூரே.

பொழிப்புரை :

திருமாலும் , தாமரை மலர்மேல் வீற்றிருக்கின்ற பிரமனும் தேடியும் அறியமுடியா வண்ணம் பெருஞ்சோதிவடிவாய் விளங்கியவனும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கி முற்றுணர்வும் , இயற்கையுணர்வும் உடையவனும் , குற்றமற்ற புகழையுடையவனும் ஆன சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நான்கு வேதங்களும் , ஆறு அங்கங்களும் , மூன்று அழலும் ஓம்புகின்ற சீலமுடைய தூய அந்தணர்கள் வாழ்கின்ற நீண்ட மாடமாளிகைகளையுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மாலும் - திருமாலும் , மலர்மேல் ( வாழும் ) அயனும் . நேடி - தேடி . அறியாமை - அறியாவாறு ( எரி ஆய கோலம் உடையான் ) கோதில் உணர்வு - இயல்பாகவே பாசங்களினீங்கிய , முற்றும் உணர்தலாகிய வியாபக அறிவும் . கோது இல் - குற்றமற்ற . புகழான் - புகழுமுடையவன் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கீறுமுடை கோவணமி லாமையிலொ லோவியதவத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிடமென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே.

பொழிப்புரை :

கிழித்த துணியும் , கோவணமும் இல்லாமையால் ஆடை துவைக்கும் தொழில் நீங்கிய தவத்தவர்களாகிய சமணத் துறவிகளும் , அழியக்கூடிய உடலைத் துவராடையில் போர்த்திக் கொள்ளும் புத்தத்துறவிகளும் கொண்ட வேடத்தை ஒரு பொருட்டாக ஏற்க வேண்டா . சிவபெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு இடபத்தின் மீது இனிதேறி , தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இடமாவது , சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்ற தெளிந்த உள்ளமும் , அன்பும் உடையவர்களான சிவனடியார்கள் வாழ்கின்ற திருநல்லூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கீறும் - கிழிக்கப்படுகின்ற , உடை ( அறுவை , துணி என்னும் காரணப் பெயர் குறிப்பதையும் அறிக ) உடையும் , கோவணமும் இல்லாமையினால் , ஒல் - ஆடையொலித்தல் . ஓவிய - நீங்கிய , தவத்தாராகிய சமணத் துறவிகளும் . பாறும் உடல் - அழியக்கூடிய உடலை , மூடு துவராடையர்கள் - உடற்பற்று நீங்காதவராய்த் துவராடையால் போர்த்துக்கொள்ளும் புத்தத் துறவிகளும் , கொண்ட வேடத்தைக் கருதற்க . மடவாளொடு இனிது எருது ஏறித் தொன்றுதொட்டிருந்த இடம் , தேறும் - சிவனே முழுமுதற் கடவுள் எனத்தெளிந்த , வாரம் - அன்பு .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியைந லந்திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம்பந்தனிசை மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே.

பொழிப்புரை :

காவிரியின் இருகரைகளிலும் அலைகள் மோதுவதால் செழிப்புடன் விளங்கும் திருநல்லூர் என்னும் திருத் தலத்திலுள்ள மழுவேந்திய கரமுடைய சிவபெருமானை , வயல் வளமிக்க , தோணிபுர நாதனான தமிழ் ஞானசம்பந்தன் போற்றிசைத்த இப்பாமாலையை ஓதுபவர்கள் , பிரமனால் நறுமணமிக்க சிறந்த மலர்கள்தூவி வழிபடப்படும் சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள் .

குறிப்புரை :

திரைகள் - அலைகள் , இருகரையும் வரு , பொன்னி - காவிரி , நிலவும் - செழிப்பிக்கும் , திருநல்லூர் , என்றது , மேல் ( முதற் பாடலில் ) வரைமேலருவி ..... கமழும் என்றதனாற் குறிஞ்சி நிலமாகக் கருதற்க , மருத நிலமே என்பதற்கு . பரசுதருபாணியை - மழுவேந்திய கரதலம் உடைய சிவபெருமானை , நலம் நிகழ் - வளத்தால் விளங்குகின்ற . செய் - வயலை உடைய , தோணிபுரம் , நாதன் - தலைவராகிய . மொழிவார் - பாடுவோர் , விதி - பிரமனும் , விரை - வாசனை .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழறொழு மடியவர்
நண்ணிய பிணிகெட வருள்புரி பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுக ழொலிமலி புறவமே.

பொழிப்புரை :

சிவபெருமான் உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்ட வடிவமுடையவர் . பெருக்கெடுக்கும் கங்கை நீரோடு , பிறைச்சந்திரனையும் தலை மாலையாக அணிந்தவர் . விரைந்த நடையுடைய எருதினை வாகனமாகக் கொண்டவர் . தம் திருவடிகளைத் தொழுது போற்றும் அடியவர்களின் நோயைத் தீர்த்து அருள்புரிபவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற உயர்ந்த பதியாவது , புண்ணியம் தரும் மறைகளை ஓதும் அந்தணர்கள் நிறைந்து இறைவனைப் புகழ்கின்ற ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இயல் - பொருந்திய . உருவினர் - வடிவம் உடையர் , பெருகிய புனல் - கங்கை . விரவிய - கலந்த , பிறைக்கண்ணியர் - பிறையாகிய அடையாளமாலையையுடையவர் . கண்ணி - இப்பொருளாதலைக் ` கண்ணிகார்நறுங்கொன்றை ` என்பதாலும் அறிக . ( புறம் .1) - கடுநடை விரைந்த நடையையுடைய ( விடை ) கடி - விரைவு ` கடியென்கிளவி ...... விரைவே விளக்கம் ....... ஆகும்மே ` ( தொல் . சொல் . உரி 7) என்பதால் அறிக . அது கடு எனத் திரிந்து நின்றது . ( கழல் தொழும் அடியவரது ) நண்ணிய - அடைந்த . பிணி கெட அருள் புரிபவர் , நணுகு - சேரும் . உயர்பதி - ( புகழ் ஒலி ) மலி - மிகுந்த புறவமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கொக்குடை யிறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமுமொ ரரவமு மலரரை மிசையினில்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே.

பொழிப்புரை :

கொக்கின் இறகோடும் , பிறைச்சந்திரனோடும் கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான் . எலும்பு மாலை அணிந்தவர் . பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர் . திசைகளையே ஆடையாகக் கொண்ட உருவினர் . அவர் மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கொக்கு உடை இறகு - கொக்குருவோடுவந்த அசுரனைக் கொன்று அதற்கறிகுறியாய் அவ்விறகைத் தலையில் அணிந்தனர் . ` கொக்கினிற கதணிந்து நின்றாடி தென்கூடல் ` என்னும் திருக்கோவையாரிலும் வருவதறிக . இறகோடும் . பிறையோடும் குளிர்கின்ற சடைமுடியினர் . அக்குஉடைவடமும் - அக்குப்பாசியால் ஆகிய மாலையும் . ஒரு அரவமும் , மலர் - விளங்கும் . அரைமிசை - இடுப்பில் . திக்கு உடை மருவிய உருவினர் - திகம்பரர் ( நிர்வாண வடிவினர் ; பிட்சாடன அவதாரம் .) மலை மகளொடும் உறைவது புறவமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை யுமையொரு
பங்கிய றிருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர் விடையவ ருறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.

பொழிப்புரை :

வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும் , வரிகளையுடைய வளையல்களையும் , இளமை வாய்ந்த முலைகளையும் உடைய உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்டு அர்த்த நாரீசுவர வடிவில் விளங்குபவர் சிவபெருமான் . அவர் மழுவோடு , மானையும் கரத்தில் ஏந்தியவர் , இடப வாகனமுடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது ஊழிக்காலத்தில் கடல் பொங்கிக் கரையில் மோதி உலகத்தை அழிக்க , அதில் மூழ்காது அக்கடலின்மீது உயர்ந்து மிதந்த சிறப்புடைய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கொங்கு இயல் - வாசனை பொருந்திய , சுரிகுழல் - சுரிந்த கூந்தல் . வரிவளை - வரிகளையுடைய வளையல் ( உமை ). ஒரு பங்கு இயல் - ஒருபாகம் பொருந்திய , திருஉரு உடையவர் ; அர்த்தநாரீசர் ( பரசுவொடு - மழுவுடன் . பரசு + ஒடு = பரசொடு என்று ஆகற்பாலது , உடம்படு மெய்பெற்றது . ` உக்குறள் கெடும் ` என்னாது ` ஓடும் ` என்ற இலேசினால் .) இரலை - மான் , கரதலம் தங்கிய மெய்யுடையவர் எனக் கூட்டுக . பொரு - கரையைமோதும் . பொங்கிய - கடல் என்க . கடல் உலகைக் கொள்ள , அக்கடலின்மேல் உயர்ந்து தோன்றிய புறவம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்
சாதக வுருவியல் கானிடை யுமைவெரு வுறவரு
போதக வுரியதண் மருவின ருறைபதி புறவமே.

பொழிப்புரை :

பெரிய தவம் செய்த மறையவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைத் தம் பெருமை பொருந்திய திருவடி சற்றே பொருந்திய மாத்திரத்தில் அவனது உயிர் விலகும்படி செய்தவரும் , பூதகணங்கள் உலவும் காட்டில் உமாதேவி அஞ்சும்படி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மறையவன் - மார்க்கண்டேயர் . மேதகு - சிறந்த , ( திருவடி ) இறையுற - சற்றே பொருந்திய மாத்திரத்தில் ( உயிர் விலகுவித்தார் ) விலகினார் - பிறவினை விகுதி குன்றியது . கான் இடை - காட்டில் . ( உமை ) வெருவுஉற - அஞ்ச . சாதகஉரு - பூதாகிருதியோடு , உரு இயல் - மூன்றாம் வேற்றுமைத் தொகை . போதகம் - யானை . அதள் - தோல் . மருவினர் - போர்த்தவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியவிறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு
பூமக னலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர் . பகையசுரர்களது காவலுடைய மும்மதில்களும் புகையெழும்படி வலிய நெருப்புப் பற்றும்படி செய்தவர் . அவர் வீற்றிருந்தருளும் தலமாவது , வேள்வி வளர்த்து , வேத மந்திரங்கள் ஓதி , பிற வாத்தியங்கள் ஒலிக்க , தீபமேற்றிப் பிரமன் , மலரும் , நீரும் கொண்டு வழிபட்ட திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

காமனை , விழிசெய்து - பார்த்து . கடி - காவல் . தூமம் உற - புகையெழுமாறு . விறல்சுடர் கொளுவிய - வலிய நெருப்புப் பற்றச்செய்த . இறை - இறைவன் . தொகுபதி - தங்கியிருக்கும் தலம் . பூமகன் - பிரமன் . ( அவன் வழிபாடு பின்னிரண்டடிகளிலும் கூறப் படுகிறது . ஓமம் , மந்திரம் இய ( ம் ) வகை - வாத்திய வர்க்கங்கள் . ஒளி - தீபம் , அலர் , புனல் , பிற - ஏனையவும் . கொடு - கொண்டு .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறவரு ளினருறை முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே.

பொழிப்புரை :

இனிய சொற்களாலமைந்த பொருள் நயமிக்க தோத்திரங்களைச் சொல்பவர்களும் , வேதங்கள் கடைப்பிடிக்கும்படிக் கூறிய கர்மாக்களைச் செய்பவர்களும் , வேதத்தின் பிற்பகுதியான உபநிடதங்கள் என்னும் ஞானகாண்டத்தைக் கடைப்பிடிப்பவர்களும் , வேதத்தின் நடுவில் அதன் உள்ளீடாக விளங்கும் பொருள் சிவனே என்பதை உணர்ந்த பெருமையுடையவர்களும் , தம் திருவடிகளைப் போற்றி வழிபட , அவர்களைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் ஆணவம் , கன்மம் இவை அறும்படி செய்பவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது , பொன் முடிப்புப் போன்ற புன்னை யரும்பு , பொதியவிழ்வது போல மலர , அதிலிருந்து பொன் போன்ற மகரந்தம் சிந்தும் சோலைவளமுடைய அழகிய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

முன்னிரண்டடிகளிலும் வழிபடும் அடியார் திறன் கூறப்படுகிறது . சொல்நயம் உடையவர் . நயம் - இனிய பொருள் களடங்கிய . சொல் - தோத்திர மொழிகளையுடையவர் . சுருதிகள் - வேதம் முதலிய நூல்கள் . கருதிய - கருதிச் சொல்லப்பட்ட . தொழிலினர் - பணிபுரிபவர் . பின்னையர் - பெரியோர்க்குப் பின் நின்று பணிபுரிவோர் . இதனை ` பூவொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் ` என்ற அப்பர் திருவாக்காலும் , ` பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ` என்ற புற நானூற்றாலும் அறிக . நடு உணர் பெருமையர் - தூல பஞ்சாட்சரத்தில் நடு ஆகிய பதியின் தன்மையை உணரும் பெருமையர் , வேதத்தின் நடுவில் பிரதிபாதிக்கப்படும் பொருள் சிவனேயென்ற தன்மையை யுணரும் பெருமையர் எனினும் ஆம் . முன்னைய - தொன்றுதொட்டன ஆகிய மாயை , கன்மங்களும் . முதல் - ஆணவமும் ( ஆகிய ) வினை - மலங்கள் . ஈற்றடியில் , புன்னை யரும்பு பொன்முடிப்பாகவும் . அதின் மகரந்தம் பொன் ஆகவும் , அது மலர்வது பொதியவிழ்வதாகவும் உருவகித்துச் சோலைவளம் கூறியவாறு , சீகாழி கடலை யடுத்திருப்பதால் நெய்தல் வருணனையும் வயல் சூழ்ந்திருப்பதால் மருதவருணனையும் , இவ்விரு வருணனைகளும் பயில ஆங்காங்கு வருவது அறிந்து மகிழத்தக்கது . இரண்டாம் அடியில் முரண்தொடை , நடு - சிவம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரு முருவின ரிமையவர் தொழுவதொ ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே.

பொழிப்புரை :

சிவபெருமான் வரிகளையுடைய புலியின்தோலை ஆடையாக உடுத்தவர் . பகைவர்மேல் வீசும் மழுப்படையையுடையவர் . யாகத்திலிருந்து பிரிந்து வந்த நகுதலையைத் திருமுடியின் மீது மாலைபோல் அணிந்து கொண்ட பெருமையுடையவர் . எரிபோல் மிளிர்கின்ற சிவந்த மேனியுடையவர் . தேவர்களால் தொழப்படும் தன்மையுடையவர் . இத்தகைய சிவபெருமான் பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடு இனிதே வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வரிதரு - வரிகளையுடையபுலி . அதள் - தோல் . உடையினர் . எறி - பகைவர்மேல் ( வீசும் மழுப்படையினர் ,) பிரிதரு - யாகத்திலிருந்தும் பிரிந்து வந்த , நகுதலை - நகுவெண்டலையை . வடம் - மாலையாக . முடிமிசை - தலையில் அணிபெருமையர் . இதிற் பெருமையாவது :- கொல்ல வந்த அதன் வலி கெடுத்து அணியெனக் கொண்டமை . ஆன்மாக்களை வினைவழி அழுத்தும் ஆணவ மலத்தின் வலி கெடுத்து . பேரின்பத்திலழுந்துமாறு செய்யவல்லான் தானே என்பதுணர்த்தி நின்றமை . இக்கருத்தை , முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள் , சுத்த அநுபோகத்தைத் துய்த்தலணு ..... ` இன்பங் கொடுத்தலிறை இத்தை விளைவித்தல் மலம் . அன்புடனே கண்டு கொளப்பா ` ( உண்மை விளக்கம் . 51.) எரிதரும் உருவினர் , தரும் :- உவமவாசகம் ; போன்ற என்னும் பொருளில் வருவதால் . புரிதரு - சடைபின்னிய . குழல் ( உமை ) - ஐம்பால் ஆகிய குழலில் . புரிதருகுழல் என்றது , உமையொடும் இனிது உறைபதி புறவம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
ஒசிதர வொருவிர னிறுவின ரொளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவ ருறைபதி புறவமே.

பொழிப்புரை :

வாளேந்திய கோலத்தோடு இடமகன்ற இவ்வுலகத்தைத் தன் வலிமையால் துன்புறுத்திய அரக்கனான இராவணனின் உடலோடு நெடிய தலைகள் பத்தும் நொறுங்கித் துவளும்படி தம் காற்பெருவிரலை ஊன்றியவரும் , ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற வெண்ணிறத் திருவெண்ணீற்றைப் பூசிய திருவுருவமுடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வசிதரும் உருவொடு - வாளேந்திய கோலத்தோடு , ( வசி - வாள் ) மலர்தலையுலகினை - இடம் அகன்ற இவ்வுலகத்தை . வலிசெயும் - தன் வலியால் . துன்புறுத்திய . நிசிசரன் - அரக்கனாகிய இராவணனது ( நிசிசரன் - இரவிற் சஞ்சரிப்போன் ) உடலொடும் , நெடும்முடி ஒருபதும் - பத்துத் தலைகளும் , நெரிவு உற - அரைவுற்று . ஒசிதர - கசங்க . ( ஒருவிரல் ) நிறுவினர் - ஊன்றியருளியவர் . வெளிபொடி - வெண்மையை யுடையதாகிய திருநீறு . ( வெள் + இ = வெளி - வெண்மையையுடையது ` வெள்ளிப் பொடிப் பவளப் புறம்பூசிய வித்தகனே ` என்பதும் காண்க . ( அப்பர் திருவிருத்தம் ) சந்தம் நோக்கி வெளியென நின்றது விகாரம் . பொசிதரு - பூசப்பெற்ற , திரு உரு உடையவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே.

பொழிப்புரை :

உள்ளிடத்தில் தேன் பொருந்திய , இதழ்கள் பல செறிந்த தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்து , சிவபெருமானின் ஆணையினால் மன்னுயிர்கட்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைக்கும் பிரமனும் , ஏழுவகையாக அமைந்த வானகம் , மலை , கடல் , நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும் அறிதற் கரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அகம் - உள்ளிடத்தில் . தேன் மருவிய - தேன் பொருந்திய . செறிதரு - இதழ்நெருங்கிய , தவிசு செய்முளரியினில் எனமாறிக்கூட்டி ஆசனமாகக்கொண்ட தாமரைப்பூவிலிருந்து சிவபெருமான் திருவருளாணை மேற்கொண்டு உயிர்வர்க்கங்கட்குத் தநுகரண புவனபோகங்களைப் படைப்பிக்கின்ற பிரமன் என்பது இரண்டாம் அடியின் கருத்து :- ஊன் - உடம்பு ; தநு . அகம் - மனம் முதலிய கரணம் ( உபலட்சணம் ). மருவிய ( நுகர்பொருள்கள் ) பொருந்திய , புலன் - புலம் : இடம் ; புவனம் , நுகர்வு - போகமுமாகிய இவற்றைப் படைக்கும் . உணர்வு உடை - அறிவையுடைய , ஒருவனும் ( பிரமனும் ,) ஆகாயம் பூமியாகிய ஏழு உலகங்களையும் உணவாக உடைய திருமாலும் . வரை அகம் - மலைநிலம் . பூமி - மறிகடல் நிலன் எனப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி
பூசுரர் மறைபயி னிறைபுக ழொலிமலி புறவமே.

பொழிப்புரை :

நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக் கொள்பவர்களும் , துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும் பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்றமுடையவர்கள் . பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழிகளையுடையவர்கள் சமணர்கள் , இவ்விருவகை நீசர்களை விட்டு , சிவபெருமானைத் தியானியுங்கள் . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , இப்பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் வேதங்களைப் பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கோசரம் - நீரிற் சஞ்சரிக்கும் மீன்களை . நுகர்பவர் - உண்பவர்களாகிய சமணர்களும் . கோ - நீர் . துவர் கொழுகியன - மருதந்துவரால் தோய்த்தனவாகிய . ( கொழுகிய கு , சாரியை ) துகிலினர் - ஆடையை உடையவர்கள் . பாசுர வினைதரு - ( ஆரியத் தொடு செந்தமிழ்ப் ) பயனறிகிலாது வெறும்பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய . பளகர்கள் - பாவிகள் . பழிதரு மொழியர் - பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழியை உடையவர்களுமாகிய . நீசரைவிடும் - விடுங்கள் இனி . நினைவுறும் - தியானியுங்கள் . நின்மலப் பொருளாகிய சிவபெருமானது உறையும்பதி - புறவமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.

பொழிப்புரை :

மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புறவம் என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய உடம்பினனான சிவபெருமானைப் போற்றி , அந்தணர்களின் தலைவனும் , மிக்க முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய திருஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் உரிய இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள் இப்பெரிய நிலவுலகில் இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர் .

குறிப்புரை :

போது இயல் - மலர்களையுடைய பொழில் . அணி - சோலை சூழ்ந்த ( புறவநன்னகர் உறை .) புனிதனை - தூயவுடம்பினனாகிய சிவபெருமானை . தலைதமிழ்கெழு - மேகம்போற் பொழிகின்ற தமிழையுடைய . விரகினன் - சமர்த்தன் . அதற்குரியதாகிய இசை பொருந்தும்படி உரை செயும் நீதியர் - பாடும் முறைமை தவறாதோர் . தலையல் - மழைபெய்தல் . இதனை ` தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து ` என்னும் திருமுருகாற்றுப்படை ( அடி .9) யால் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழன் மடவரல்
பட்டொளி மணியல்கு லுமையமை யுருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை
விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

மலர் விரிய நறுமணம் கமழும் , நெளிந்த கூந்தலை யுடையளாய் , மடமைப் பண்புடைய பெண்ணானவளாய் , பட்டாடையில் ஒளிமிக்க மேகலா பரணத்தை அணிந்தவளான உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான் , சடைமுடியின்கண் கட்டப்பட்டு விளங்கும் பிரகாசிக்கின்ற கங்கைநீரோடு , கடிக்கும் பாம்புசேர வசிக்கின்ற சடைமுடியில் விட்டுவிட்டுப் பிரகாசிக்கும் , தேய்ந்த கலைகளையுடைய சந்திரனையும் அணிந்து வீற்றிருந்தருளும் பதி திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மட்டு - வாசனையோடு . ஒளிவிரிதரு - ஒளிபரவும் ( மலர்நிறை ) சுரிகுழல் - நெளிந்த கூந்தலையுடைய . மடவரல் - பெண் . பட்டு ஒளி - பட்டு ஆடையில் ஒளியையுடைய . மணி - மேகலா பரணத்தையணிந்த , உமை . ( மணி - சினையாகுபெயர் ) ஒரு பாகம் ஆ ( க ). அமை - அமைந்த . உரு - வடிவோடு . கட்டு - சடையின்கண் ( கட்டப்படுவது என்னும் பொருளில் ஐகார விகுதி புணர்ந்து கெட்டது .) ஒளிர் - பிரகாசிக்கின்ற , புனலொடு - கங்கை நீரோடு . கடி அரவு - கடிக்கும் பாம்பு , உடன் உறை - சேர வசிக்கின்ற . முடிமிசை - தலையில் . விட்டு ஒளி - விட்டு விட்டுப் பிரகாசிக்கும் கிரணங்கள் உதிர் . உதிர்வதுபோற் சொரியும் . பிதிர் - கலையையுடைய . மதியவர் - சந்திரனையுடையவராகிய சிவபெருமான் . வீழிமிழலை :- சந்தம் நோக்கி நெடில் முதல் குறுகியது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

எண்ணிற வரிவளை நெறிகுழ லெழின்மொழி யிளமுலைப்
பெண்ணுறு முடலினர் பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர் கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , எண்ணற்ற வரிகளையுடைய வளையல்களையும் , சுருண்ட கூந்தலையும் அழகிய மொழியையும் , இளமுலைகளையும் உடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் . பெருகித் தோன்றிய கடல் விடமுண்ட கண்டத்தினர் . நெற்றிக் கண்ணையுடையவர் . விரைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடையவர் . நெருப்பேந்திய கையினர் . விண்ணில் திகழும் பிறைச்சந்திரனை அணிந்த சடையினர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி , திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பண் - பாராட்டற்குரிய , நிறம் - நிறம்பொருந்திய , வரி - கீற்றுக்களையுடைய . வளை - வளையல்களையும் , நெறி - தழைத்த , குழல் - கூந்தலையும் , எழில்மொழி - அழகிய மொழியையும் உடைய . பெண் - உமாதேவியார் . உறும் - பொருந்திய உடலினர் . கடல் விடம் - கடலில் எழுந்த விடம் பொருந்திய , மிடறினர் - கண்டத்தையுடையவர் . கண் உறும் நுதலினர் - நெற்றிவிழியை யுடையவர் . கடியது - விரைந்து நடப்பதாகிய ஓர் விடையினர் . கனலினர் - ( கையிலேந்திய ) நெருப்பையுடையவர் . விண்உறு ( ம் ) பிறை அணி சடையினர் பதி வீழிமிழலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

மைத்தகு மதர்விழி மலைமக ளுருவொரு பாகமா
வைத்தவர் மதகரி யுரிவைசெய் தவர்தமை மருவினார்
தெத்தென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மரவினர்
வித்தக நகுதலை யுடையவ ரிடம்விழி மிழலையே.

பொழிப்புரை :

மை பூசிய அழகிய விழிகளையுடைய உமா தேவியை , சிவபெருமான் தம் உடம்பின் இடப்பாகமாக வைத்தவர் . மதம் பிடித்த யானையின் தோலை உரித்தவர் . தம்மை அடைந்தவர் தாளத்துடன் இசைபாடுகின்ற புகழையுடையவர் . பாம்பை அணிந்தவர் . அதிசயமான மண்டையோட்டைக் கொண்டவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மைதரு - மையணிந்த . மதர் - மதர்த்த விழியையுடைய ( உமை உரு ) ஒருபாகமா ( க ) வைத்தவர் . உரிவை செய்தவர் - உரித்தவர் . உரிவை - வை தொழிற் பெயர் விகுதி . தமை மருவினார் - தம்மை அடைந்த அன்பர்கள் . தெத்தென - தாளவொத்துக்களோடு . இசை முரல் - இசைபாடுகின்ற . சரிதையர் - புகழை யுடையவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதரு
கவ்வழ லரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
முவ்வழ னிசிசரர் விறலவை யழிதர முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் செந்நிறமான அழல்போன்ற மேனியுடையவர் . நெருப்புப் போன்று விடமுடைய , கவ்வும் தன்மையுடைய பாம்பை அரையில் கச்சாக இறுக்கமாகக் கட்டியவர் . சுடர் விடும் மழுப்படை உடையவர் . தம்மைத் தொழாத , பகைமையுடைய , சினம் மிகுந்த மூன்று அசுரர்களின் வலிமை அழியுமாறு அவர்களின் மதில்களை எரியுண்ணும்படி மிகவும் கோபித்தவர் . அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

செவ் அழல் - செந்நெருப்பு . என - என்னும்படி . நனி பெருகிய - மிகவும் பெருகிய , உருவினர் . செறி - அரையில் கட்டிய . கவ்வு - கவ்விக்கடிக்கும் . அழல் - விடத்தையுடைய ( அரவினர் ) கதிர் முதிர் - ஒளிமிக்க ( மழுவினர் ). அழல் நிசிசரர் - கோபத்தையுடைய அசுரர் . அழல் - கோபம் , சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி ` என வள்ளுவரும் உருவகித்தார் . ( குறள் . 306) ( மூன்று + அழல் = முவ்வழல் ) விறல் சுவை - வலிமைகள் , அழிதர - அழியவும் . மும் மதில் - திரிபுரம் ( வெம்மை + அழல்கொள ) பற்றி யெரியவும் . நனி முனிபவர் - மிகவும் கோபிப்பவர் . பதி வீழிமிழலை . தொழுவு இலா - தொழுதல் இல்லாத ( நிசிசரர் .)

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பைங்கண தொருபெரு மழலைவெ ளேற்றினர் பலியெனா
எங்கணு முழிதர்வ ரிமையவர் தொழுதெழு மியல்பினர்
அங்கண ரமரர்க ளடியிணை தொழுதெழ வாரமா
வெங்கண வரவின ருறைதரு பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

பசிய கண்களையும் , சிறு முழக்கத்தையுமுடைய பெரிய வெண்ணிற இடபத்தைச் சிவபெருமான் வாகனமாகக் கொண்டவர் . எல்லா இடங்களிலும் பிச்சை ஏற்றுத் திரிபவர் . தேவர்களால் தொழப்படும் தன்மையர் . தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய அடியவர்களாலும் தொழுது போற்றப்படுபவர் . கொடிய கண்ணையுடைய பாம்பை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பைங்கண்ணது - பசிய கண்ணை யுடையதாகிய . மழலை - சிறுமுழக்கத்தைச் செய்கின்ற . பெரு வெள் ஏற்றினர் . வெள்ளிய பெரிய இடபத்தையுடையவர் . தருமம் - எவற்றினும் பெரியதாகலின் பெரு ஏறு எனப்பட்டது . ` பெரிய விடைமேல் வருவார் அவரெம்பெருமா னடிகளே ` என வந்தமையும் காண்க . பலி எனா - பிச்சை ( இடுமின் ) என்று , எங்கணும் - எல்லா இடங்களிலும் , எக்கண்ணும் என்றதன் மெலித்தல் விகாரம் . உழிதர்வர் - திரிபவர் . தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய தொண்டர்களும் , அந்தத் தேவர்களும் தொழுது எழ ( உறைபதி ) - ` தொழப்படுந் தேவர்தம்மாற் றொழுவிக்கும் தன் தொண்டரையே ` ( தி .4. ப .112. பா .5.) என்ற திருவிருத்தக்கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய வொருவனார்
தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதொ ரரவினர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

இறைவன் பொன்போன்று ஒளிரும் முறுக்கேறிய சடைமுடி உடையவர் . திருவெண்ணீறு அணிந்த திருமேனியர் . தம்மை நினைந்து போற்றும் அடியவர்களின் வினைகளை வேரோடு களைந்து அருள்புரியும் ஒப்பற்றவர் . இனிய இசையுடன் போற்றப்படும் புகழையுடையவர் . அழகிய திருமார்பில் மின்னலைப் போல் ஒளிரும் பாம்பணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதி , திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பொன் அ ( ன் ) ன - பொன்போன்ற . புரிதரும் - முறுக்கு ஏறிய ( சடையினர் ). உன்னினர் - தன்னை நினைப்பவர்களுடைய . வினை அவை - மலங்களை , களைதலை - நீக்குவதை - மருவிய ( தொழிலாகப் ) பொருந்திய , ஒருவனார் . களைதல் - வேரோடு பிடுங்குதல் , வினை - கன்மமலம் , அவையென்றதனால் ஏனை மாயை ஆணவ மலமும் கொள்ளப்படும் . ஒருவனார் - வேதங்களில் ஒன்று என்று எடுத்து ஒதப்பட்டவர் : ` ஒருவனென்னும் ஒருவன் காண்க .` ( தி .8 திருவண்டப்பகுதி . அடி - 43.) ` ஒன்றென்றது ஒன்றே காண் ஒன்றே பதி ` என்பது சிவஞானபோத வெண்பா . தென் என இசை முரல் சரிதையர் - தென் என்னும் இசைக்குறிப்போடு சங்கீதங்களைப் பாடும் இயல்பினர் . மிளிர்வது - பிரகாசிப்பதாகிய , ஓர் அரவினர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

அக்கினொ டரவரை யணிதிக ழொளியதொ ராமைபூண்
டிக்குக மலிதலை கலனென விடுபலி யேகுவர்
கொக்கரை குழன்முழ விழவொடு மிசைவதொர் சரிதையர்
மிக்கவ ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , அக்குப்பாசியோடு பாம்பையும் அரையில் அணிந்தவர் . ஒளிரும் ஆமையோட்டை மார்பில் பூண்டவர் . கரும்பின் சுவை போன்று இனிய மொழிகளைப் பேசி , தம் கையில் நீங்காது பொருந்திய மண்டையோடாகிய பாத்திரத்தில் இடப்படுகின்ற பிச்சையை ஏற்பவர் . கொக்கரை , குழல் , முழவு முதலான வாத்தியங்கள் இசைக்க , நிகழும் விழாக்களில் அடியார் செய்யும் சிறப்புக்களை ஏற்று மகிழும் பண்பினர் . தம்மினும் மிக்கவரில்லையாக மேம்பட்ட அப்பெருமான் வீற்றிருந்தருளுவது நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அக்கினோடு - அக்குப்பாசியோடு . அரவு - பாம்பு . அரை - இடுப்பில் ( பூண்டும் ). அணிதிகழ் ஒளியது ஓர் ஆமை - அழகால் விளங்குகின்ற , ஒளியையுடையதாகிய ஆமையோட்டை ( மார்பில் ) பூண்டும் , பூண்டு என்பதை முன்னும் கூட்டி எண்ணும் மையை விரிக்க . அக்குக்கு அரை என்றதனால் ஆமைக்கு மார்பு கொள்க . இக்கு உக - கரும்பின் சுவை சொட்ட என்றது இன்சொற்கள் பேசி என்ற கருத்து . கரும்பின் சுவை - சொல்லினிமை குறிப்பதால் உவம ஆகுபெயர் , உக என்றதனால் கரும்பின் சுவை கொள்க . மலிதலை - கையில் நீங்காது பொருந்திய மண்டையோடு . கலன் என - பாத்திரமாக , பலி ஏகுவர் - பலிக்குச் செல்வார் . கொக்கரை முதலிய வாத்தியங்கள் ஆரவாரிக்க நடக்கும் உற்சவங்களில் அடியார் செய்யும் சிறப்புக்களை ஏற்றுக்கொண்டு காட்சியளிக்கும் இயல்பையுடையவர் . கண்ணினாலவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல் , மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் ஆகையால் அவர்கட்கு எழுந்தருளி அருள் செய்யும் திறன் மூன்றாம் அடியிற் குறித்த பொருள் . மிக்கவர் - தன்னின் மிக்கவரில்லையாக மேம்பட்டவர் . ` யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் ` என்றபடி ( தி .8 திருவாசகம் ).

பண் :சாதாரி

பாடல் எண் : 8

பாதமொர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமொ டடியவர் புனைகழ றொழுதெழு புகழினர்
ஓதமொ டொலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமொ டுறுதொழின் மதியவர் பதிவிழி மிழலையே.

பொழிப்புரை :

தம் பாதத்திலுள்ள ஒரு விரலை ஊன்றி , கயிலை மலையின்கீழ் இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படிச் செய்தவர் . பூதகணங்களும் அடியவர்களும் தம்முடைய அழகிய திருவடிகளைத் தொழுது போற்றத்தக்க புகழையுடையவர் . ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர் . அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , வேதம் ஓதுதலுடன் , தமக்குரிய ஆறு தொழில்களையும் செய்கின்ற அறிஞர்களாகிய அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பாதம் ஓர் விரல் உற - பாதத்தில் உள்ள ஓர் விரல் பொருந்த அதனால் , மலை அடர் - பலதலைநெரிபட மலையால் அடர்க்கப்பட்ட பத்துத் தலைகளும் ( அரைபடச் செய்து ) என ஒரு சொல் வருவித்துரைக்க . புனைகழல் - புனைந்த கழலையுடைய . திருவடி - வினைத் தொகைப் புறத்து அன்மொழி . ஓதமொடு ஒலி - ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற , திரைபடு - அலைகளையுடைய . கடல் விடம் உடை ( ய ), மிடறினர் - கழுத்தையுடையவர் . வேதமொடு - வேதம் ஓதுதலுடன் . உறுதொழில் - தமக்குற்றதாகிய ஆறு தொழில்களையும் உடைய . மதியவர் - அறிஞர்களாகிய அந்தணர் . வாழும் பதி - திருவீழிமிழலை . ஒன்று அல்லாதன பல என்பது தமிழ் வழக்காதலால் பத்தென்னாது பல என்றார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நீரணி மலர்மிசை யுறைபவ னிறைகட லுறுதுயில்
நாரண னெனவிவ ரிருவரு நறுமல ரடிமுடி
ஓருணர் வினர்செல லுறலரு முருவினொ டொளிதிகழ்
வீரண ருறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.

பொழிப்புரை :

நீரில் விளங்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் , நிறைந்த நீருடைய கடலில் துயிலும் திருமாலும் ஆகிய இவர்கள் இருவரும் இறைவனின் நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடியையும் , மலரணிந்த திருமுடியையும் காண வேண்டும் என்ற ஒரே உணர்வினராய்ச் சென்றும் , காணற்கு அரியவராய்ப் பேரொளியாய் ஓங்கி நின்ற வீரம் பொருந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நீர் அணி - குளத்திற்கு அணியாகிய , மலர்மிசை - தாமரை மலரில் ( உறைபவன் ). ` குளத்துக் கணியென்ப தாமரை ` என்பதனால் நீரணி மலர் என்னப்பட்டது . நீர் - தானி யாகுபெயராய்க் குளத்தைக் குறித்தது . நறுமலர் அடிமுடி - நறுமணமுள்ள மலர்போன்ற அடியையும் , மலரையணிந்த முடியையும் , ( நறுமலர் அடிமுடி என்னும் தொடரில் அடையை அடியோடும் முடியோடும் கூட்டுமாறு அமைந்திருத்தலின் அவ்வாறே கொள்க .) ஓர் - ஆராயும் . ( தேடிக் காண வேண்டும் என்னும் ) உணர்வினர் - அறிவுடையவர்களாய் . மலர் உறைபவன் - நாரணன் . அடிமுடி ஓர் உணர்வினர் என்றிது எதிர் நிரனிறை . செலல் உறல் அரும் - ( காண்பது நிற்க ) அருகே செல்லத் தொடங்குவதற்கும் அரியதான , உருவினோடு ஒளிதிகழ் - ஒளியாய் விளங்கிய . வீர அணர் - வீரம் பொருந்தியவர் . அணவுதல் - பொருந்துதல் . வீரணர் - மரூஉ . இது இறைவனின் முடிவிலாற்றலுடைமை கூறியவாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென வுணர்விலர்
மொச்சைய வமணரு முடைபடு துகிலரு மழிவதோர்
விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

பொழிப்புரை :

பிரமனின் மண்டையோட்டில் இடப்படுகின்ற பிச்சையை இனிதென ஏற்கும் விருப்பமுடைய சிவபெருமானின் பெருமையைச் சிறிதும் அறியும் உணர்வில்லாதவர்கள் சமணர்களும் , புத்தர்களும் ஆவர் . நீராடாமையால் துர்நாற்றத்தை உடைய சமணர்களும் , துவைத்து உடுத்தாமையால் முடைநாற்றமுடைய ஆடையைப் போர்ப்பவர்களாகிய புத்தர்களும் அழிவதற்குக் காரணமான வித்தை செய்பவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நறுமணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இடுபலி இனிது என இச்சையினராய் , மகிழ்வது ( ஓர் ) பிச்சையர் - மகிழ்ந்தேற்கும் பிச்சையுணவுடையவர் . ஓர் அசைநிலை ` மார்கழி நீர் ஆடேலோ ரெம்பாவாய் ` ( தி .8 திருவெம்பாவை . பா .20.) ` அஞ்சுவ தோரும் அறனே ` என்புழி ( குறள் 366 ) வந்தமைபோல . அத்தகைய பிச்சையினரெனினும் , ( அவர் ) பெருமையை . இறை - ஒரு சிறிதும் . பொழுது - எப்பொழுதும் . அறிவு என - ( நம்மால் ) அறிதல் ( முடியும் ) என்று . உணர்வு இலர் - ( எவராலும் ) உணரப்படாதவர் . மொச்சைய - ( நீராடாமையால் ): துர்நாற்றத்தையுடைய , அமணரும் , முடைபடுதுகிலினர் ( ஒலித்துடுத் தாமையால் ) முடை நாற்றத்தையுடைய ஆடையைப் போர்ப்பவராகிய புத்தரும் . அழிவது ஓர் விச்சையர் - அழிவதற்குக் காரணமான வித்தைசெய்பவர் . விச்சையர் என்பதற்குக் ` குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன் என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்தாங்கு ( திருமுருகாற்றுப் படை ) உரைக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

உன்னிய வருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை யவருறை யெழிறிகழ் பொழில்விழி மிழலையை
மன்னிய புகலியுண் ஞானசம் பந்தன வண்டமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெறுவரே.

பொழிப்புரை :

இறைவன் அருளிச்செய்ததாகக் கருதப்படும் அருமறையின் ஒலியினை முறையாக இசையோடு பாடிப் போற்றும் அந்தணர்கள் வசிக்கின்றதும் , அழகிய சோலைகள் விளங்குவதுமான திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தைப் போற்றி , நிலைபெற்ற புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் வண்தமிழால் அருளிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள் இம்மையில் துயரற்றவராவர் . மறுமையில் வீடுபேறடைவர் .

குறிப்புரை :

உன்னிய - ( இறைவன் மொழியென்று ) கருதப்பட்ட அருமறை யொலியினை , உதாத்தம் , அநுதாத்தம் , சுவரிதம் என்னும் ஒலியை முறைமைமிக்க பாடல்களாகப்பாடுகின்ற , இனிய இசையையுடைய அந்தணர் வாழும் என்பது . முறை ...... உறை - என்பதன் பொருள் . இம்மையில் வரும் துயர் எதுவும் இல்லாதவராய் , மறுமையில் முத்தியுலகெய்துவரென்பது இறுதிப்பகுதியின் பொருள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
நறியுறு மிதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , தளிர் போன்ற நிறமும் , அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு , மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர் . நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு , கங்கை நதியையும் , பிறைச்சந்திரனையும் , மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

முறியுறு - தளிர்போன்ற ( உறு உவமவாசகம் ) நிறம் மல்கு - நிறம் பொருந்திய . முகிழ் - அரும்புபோன்ற , ( கோங்கு , தாமரை இவற்றின் அரும்புகள் ) முலை , மலைமகள் , வெருவ - அஞ்ச . மதவெறி உறுகரி - எனக்கூட்டுக . அதள் - தோல் . பட - உடை யாகும்படி . விறல் - வலிமை . நறி - நறுமணமுடையது ( ஆகி ). உறும் - பொருந்திய . இதழியின் மலரொடு - கொன்றைப்பூவோடு . ( நறு + இ = நறி என்றாயது ). வெண்மையுடையது வெள்ளி யென்றாயவாறு ` வெள்ளிப் பொடிப் பவளப் புறம்பூசிய ` என்புழிப்போல . ( தி .4. ப .112. பா .1.) நதி , ( கங்கை ) மதி , நகுதலை , செறியுறு - நெருங்கிய ( சடைமுடியடிகள் தம் வளநகர் சேறையே .)

பண் :சாதாரி

பாடல் எண் : 2

புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்
மனமுடை யடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொ டரசிலை யொளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

வனங்களிலுள்ள பல நறுமலர்களைப் பறித்துத் தூவித் தொழுகின்ற அடியவர்கட்கும் , மன உறுதிப்பாட்டுடன் அன்பால் உருகித் தியானம் செய்யும் அடியவர்கட்கும் துயர் களைந்து அருள்புரியும் நியமமுடைய சிவபெருமான் கழுத்தில் கட்டப்படும் மணியும் , அரசிலை போன்ற அணியும் ஒளிர , மிக்க கோபமுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவராய் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

புனம் உடை - வனங்களிலுள்ள . ( பல நறுமலர் கொடு ) தொழுவது ஓர் புரிவினர் - வணங்கும் விருப்பம் உடையவர்கள் . மனம் உடை - உறுதிப்பாட்டையுடைய ( அடியவர் படு ( ம் ) துயர் ) களைபவர் - ஒழிப்பவர் , ` உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் ` ( குறள் . 592) என்பதில் உள்ளம் - ஊக்கத்தைக் குறித்ததுபோல . இங்கு மனம் - உறுதிப்பாட்டைக் குறித்தது . ` வானம் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் ... ஊனமொன் றில்லா வொருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே ` ( தி .4. ப .112. பா .8.) என்றதுங் காண்க . வாய்மையர் - நியமத்தையுடையவர் . இனம் உடை - கூட்டமான . மணி - கழுத்திற்கட்டும்மணி . அரசு இலை - அரசிலை போன்ற ஓர் அணி . இதுவும் விடையின் கழுத்திற் கட்டுவது . ஒளிபெற - ஒளியையயுடையதாக . மிளிர்வது ( ஓர் ) - பிரகாசிப்பதாகிய . சினம் முதிர் - கோபம் மிக்க . ( விடை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 3

புரிதரு சடையினர் புலியத ளரையினர் பொடிபுல்கும்
எரிதரு முருவின ரிடபம தேறுவ ரீடுலா
வரிதரு வளையின ரவரவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதைய ருறைதரு வளநகர் சேறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் முறுக்குண்ட சடைமுடி உடையவர் . புலியின் தோலை அரையில் கட்டியவர் . நீறுபூத்த நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றினைப் பூசி விளங்கும் உருவினர் . இடப வாகனத்தில் ஏறுபவர் . சரிந்த வரிகளையுடைய வளையல்களை அணிந்த , பெருமையுடைய மகளிர் மகிழும்படி வீடுகள்தோறும் திரிந்து பிச்சையேற்கும் இயல்புடையவர் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

புரிதரு - முறுக்குண்ட . சடையினர் . பொடிபுல்கும் எரிதரும் உருவினர் - நீறுபூத்த நெருப்புப்போலும் வடிவையுடையவர் . திருமேனிக்கு - நெருப்பு உவமை . இடபம் ( அது ) ஏறுவர் . ஈடு உலாம் - இடப்பட்டதாகிச் சரிகின்ற . வரிதரு - கீற்றுக்களையுடைய . வளையினர் அவரவர் - வளையலை அணிந்தவர்களாகிய அவ்வம் மாதர்கள் . ( மகிழ்தர மனைதொறும் ) திரிதரு சரிதையர் - திரியும் இயல்பு உடையவர் . உலாம்வளை - ` தொடியுலாம் மென்கை மடமாதர் `. ( நால்வர் நான்மணி மாலை . பா .3.)

பண் :சாதாரி

பாடல் எண் : 4

துடிபடு மிடையுடை மடவர லுடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர்
செடிபடு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமாதேவியைச் , சிவபெருமான் தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . இடிமுழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவர் . படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர் . திருவெண்ணீறு அணிந்த உருவினர் . இடையில் புலித்தோலாடை அணிந்தவர் . செடிபோன்று அடர்த்தியான சடைமுடி உடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

துடிபடும் இடை உடை - உடுக்கைபோலும் இடையையுடைய ( படும் - உவமவாசகம் ) மடவரல் உமை - பெண்ணாகிய உமாதேவியார் . இடிபடு - இடிபோலும் . ( குரல் உடை விடையினர் .) பொடி - திருநீறு . பொலிதரு - விளங்குகின்ற . செடிபடு - செடிகளைப் போல் அடர்த்தியான , சடைமுடி அடிகள் ..

பண் :சாதாரி

பாடல் எண் : 5

அந்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழ னிறமுடை யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரிபுரங்களை ஒரு நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும் , அதனிடை வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் பூட்டி , திருமால் , வாயு , அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந்தழியுமாறு செய்த வீரமிக்க வாலிபர் . தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தர் . செந்தழல் போன்ற மேனியுடைய அவர் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அந்தரம் - ஆகாயத்தில் . உழிதரு - சுற்றித்திரிந்த . ( திரிபுரம் ) மந்தரம் - மலை ( சிறப்புப்பெயர் , பொதுப் பெயரைக் குறித்தது ) வரிசிலை - கட்டமைந்த வில் . அதன் இடை - அதில் ( இடை ஏழனுருபு ) பூட்டும்நாண் . அரவு - பாம்பு ஆக . அரி வாளியால் - திருமாலாகிய அம்பால் . அரி - காற்றையும் , நெருப்பையும் குறிப்பதால் - சுருங்கச் சொல்லல் என்னும் அழகுபற்றி அவ்விரு பொருளும் கொண்டு , அம்பின் அடிப்பாகம் காற்று , நுனிப்பாகம் நெருப்பு , இடைப்பாகம் திருமால் என விளங்க வைத்தமை காண்க . வெந்து , அழிதர - அழிய . ( எய்த ) விடலையர் - வாலிபர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மத்தர முறுதிறன் மறவர்தம் வடிவுகொ டுருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை யசைவுசெய் பரிசினால்
அத்திர மருளுந மடிகள தணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழி றழுவிய சேறையே.

பொழிப்புரை :

மந்தர மலை போன்ற வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கி வந்து , பத்துப் பெயர்களைச் சிறப்பாகக் கொண்ட விசயனைப் பொருது தளரச்செய்து , அவன் கௌரவர்களைத் தோல்வியடையச் செய்யும் வண்ணம் பாசுபதம் என்னும் அம்பைக் கொடுத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வளநகராய் , அடர்ந்த சோலைகள் சூழப்பெற்ற திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மத்தரம் உறுதிறல் - மந்தர மலைபோன்ற வலிமையையுடைய . மறவர் - வேடர் . ( மந்தரம் - மத்தரம் என வலித்தல் விகாரம்பெற்றது . உறு - உவமவாசகம் ) உரு உடை - அழகையுடைய . பத்து ஒரு பெயருடை - ஒருபத்துப் பெயரையுடைய . விசயனை - அருச்சுனனை . அசைவு செய் பரிசினால் - தோற்பிக்கும் தன்மையினால் . அத்திரம் - பாசுபதம் என்னும் அம்பை . அருளும் - கொடுத்தருளிய . நம் அடிகள் - நமது பெருமான் . மணி அணி - இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட . சித்திரம் - அழகிய ( வளநகர் ), செறி பொழில் தழுவிய - அடர்ந்த சோலைகளாற் சூழப்பட்ட சேறை . அணிகிளர் - அழகு மிகுந்த . ( அத்திரம் அருளும் நம் அடிகளது ) வளநகர் திருச்சேறையென்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

பாடின ரருமறை முறைமுறை பொருளென வருநடம்
ஆடின ருலகிடை யலர்கொடு மடியவர் துதிசெய
வாடினர் படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழி றழுவிய சேறையே.

பொழிப்புரை :

இறைவன் முறைப்படி வரிசையாக அரிய வேதங்களைப் பாடியருளியவர் . ஐந்தொழில்களை ஆற்றும் திருநடனம் செய்பவர் . உலகில் அடியவர்கள் மலரும் , பூசைக்குரிய பிற பொருள்களும் கொண்டு போற்றித் துதிக்க அருள்செய்பவர் . வாட்டமுற்ற பிரமனின் வறண்ட மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்பவர் . அப்பெருமான் பெருமையுடன் வீற்றிருந்தருளும் வளநகர் , அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

முறைமுறை அருமறை பாடினர் - முறைமைப்படி வரிசையாக அரியவேதம் பாடினர் . ( முதல் முறை - பாடும் கிரமம் . அடுத்தமுறை - இதன்பின் இது பாடுக என்னும் வரிசை ) பொருள் என அருநடம் ஆடினர் - ( ஐந்தொழில் இயற்றும் கடவுள் தாமே என்னும் ) தன்மையை யுணர்த்துபவராய் அரிய திருக்கூத்தாடியவர் . பொருள் - கடவுள் , திருக்கூத்தில் ஐந்தொழிலும் காட்டும் குறி :- ` தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பிற் - சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா , ஊன்று மலர்ப்பதத்தே யுற்றதிரோதம் முத்தி , நான்றமலர்ப்பதத்தே நாடு `. ( உண்மை விளக்கம் - 36.) உலகிடை - உலகில் . ( மலரும் , பூசைக்குரிய பிற பொருளும் கொண்டு ) அடியவர் ( பூசித்துத் ) துதி செய்ய . மலர்கொடும் - மலரும் கொடு எனப் பிரித்துக் கூட்டுக . மலரும் - எச்சவும்மை . வாடினர் - வாட்டமுற்றவனாகிய பிரமனின் . படுதலை - வறண்ட மண்டையோட்டில் . தலை கொய்யப்பட்டதனால் வாட்டம் உற்றனன் என்க . வாடினர் - என்றது இழிப்புப்பற்றி .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

கட்டுர மதுகொடு கயிலைநன் மலைமலி கரமுடை
நிட்டுர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிசெய்தார்
மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ வருள்செயும்
சிட்டர்தம் வளநகர் செறிபொழி றழுவிய சேறையே.

பொழிப்புரை :

தனது உறுதியான உடல்வலிமை கொண்டு கயிலைமலையைத் தன் மிகுதியான கரங்களால் பெயர்த்தெடுக்க முயன்ற கொடியவனான இராவணனின் உடலும் , பெரிய தலைகள் பத்தும் நெரித்தவர் சிவபெருமான் . அவருடைய நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை அடியவர்கள் தொழுது போற்ற அருள் செய்யும் நல்லியல்புடையவர் . அவர் வீற்றிருந்தருளும் வளநகர் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கட்டு உரம் ( அது ) கொடு - தனது உறுதியான உடல் வலிமை கொண்டு . கயிலைநல்மலை நிட்டுரன் - நல்ல கயிலை மலைக்குத் தீங்கு இழைத்தோனாகிய இராவணனது ( நல்மலை யென்றார் . தீங்கு செய்தோனுக்கும் நன்மைசெய்த கருணை நினைந்து ) மலிகரம் உடை உடலோடு அதிகமான ( இருபது ) கைகளையுடைய உடம்போடு . நெடும் - பெரிய . முடியொருபத்தும் நெரிசெய்தார் - தலை பத்தையும் அரைபடும்படிச் செய்தருளினார் . மட்டு - வாசனையையுடைய . உரம் - வளம் மிக்க . மலர் அடி - மலர்போலும் திருவடிகளை . ( அடியவர் தொழுது எழ அருள் செய்யும் ) சிட்டர் - நல்லியல்புடையவர் . சிட்டன் - சிவபெருமானைக் குறிப்பது . ` சிட்டனே சிவலோகனே சிறு நாயினுங் கடையாயவெங் கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே ` ( திருவாசகம் . திருக்கழுக்குன்றப் பதிகம் - 2. ).

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய வவரவ ரடியொடு முடியவை யறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயொர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட வருளிய வவர்நகர் சேறையே.

பொழிப்புரை :

திருமால் பன்றி உருவெடுத்தும் , பிரமன் அன்னப்பறவை உருவெடுத்தும் இறைவனைக் காணமுயல , அவ்விருவரும் தன் அடியையும் , முடியையும் அறியாவண்ணம் அவர்கள் நடுவே நெடிய நெருப்புப் பிழம்பாய்த் தோன்றுமாறு , ஓங்கி , தன் மேலாந்தன்மை வெளிப்பட அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பரிசு உடை - தமக்கு ஏற்ற தன்மையையுடைய . வடிவோடு - வடிவங்களுடனே , பன்றியர் - பன்றியானவனும் . பறவையானவனும் ஆகிய திருமாலும் பிரமனும் . ( பன்றியன் , பறவையன் என ஒருமையாற் கூறற்பாலது .) பன்மையாற்கூறியது ; இழிப்புப்பற்றி . அவர் அவர் என்பதும் அது . ( படர்தர - காணச் செல்ல ). அன்றிய - மாறுபட்ட . அவர் - அத்திருமாலும் . அவர் - அப்பிரமனும் ( அன்றிய - இப்பொருட்டாதலை ` அன்றினார் புரமெரித்தார்க் காலயமெடுக்க எண்ணி ` என்னும் ( தி .12 பூசலார் . புரா . 1.) ணத்தாலும் , சிவஞான சித்தியார் சூ 1. 42 உரையாலும் அறிக . அடியொடும் . முடி அவை - அடியும் முடியுமாகிய அவற்றை . அறிகிலார் - அறிய முடியாதவராகி . நின்று இரு புடைபட - இருபுடை பட்டு நிற்க என எச்சவிகுதி பிரித்துக் கூட்டுக . இருபக்கமும் பொருந்தி நிற்க என்றபடி - நடுவே - நடுவே . நெடு - நெடிய . எரி - நெருப்புப் பிழம்பாய் . நிகழ்தரச்சென்று - தோன்றுமாறு ஓங்கி . உயர் - ( யார் ) மேலானவர் என்பது . வெளிபட அருளிய - வெளியாகும் வண்ணம் திருவுளங்கொண்ட . அவர் - அந்தச் சிவபெருமான் , நகர் சேறையே என்க . உயர்வு என்பதின் பண்புப்பெயர் விகுதி கெட்டது . உயர்வு - உயர்ந்தவரெனப் பொருள்தரலாற் பண்பாகு பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

துகடுறு விரிதுகி லுடையவ ரமணெனும் வடிவினர்
விகடம துறுசிறு மொழியவை நலமில வினவிடல்
முகிடரு மிளமதி யரவொடு மழகுற முதுநதி
திகடரு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே.

பொழிப்புரை :

அழுக்கு மிகுந்த ஆடையை உடுத்திக் கொள்ளும் புத்தர்களும் , தோற்றத்தாலேயே இவர்கள் அமணர்கள் என்று கண்டு கொள்ளத்தக்க வடிவுடைய சமணர்களும் , குறும்புத்தனமாகக் கூறும் அற்ப மொழிகள் நன்மை பயக்காதவை . எனவே அவற்றைக் கேளற்க . அரும்பையொத்த இளம்பிறைச் சந்திரனையும் , பாம்பையும் , கங்கையையும் அழகுற அணிந்த சடைமுடியுடைய அடிகளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

துகள்துறு - அழுக்கு மிகுந்த . விரிந்த ஆடையை உடையாக உடுத்துக் கொள்வோராகிய புத்தரும் , அமண் என்னும் வடிவினர் - தோற்றத்தாலேயே இவர்கள் அமணரென்று கண்டு கொள்ளத்தக்க வடிவம் உடையவர் - ( சமணர் ) விகடம் ( அது ) உறு - குறும்புத்தனமான . சிறு மொழியவை - அற்ப வார்த்தைகள் . நலம் இல . நற்பயன் இல்லாதவை ( ஆதலால் ) வினவிடல் - கேளற்க . முகிழ்தரும் இளம்மதி - அரும்பையொத்த பிறைச் சந்திரனை . அரவு ஒடும் , அழகு உற , முதுநதி - பழமையான - கங்காநதி . திகழ்தரு - விளங்குகின்ற . சடைமுடி அடிகள் தம் வள ( ம் ) நகர் - சேறையே - முகிழ் + தரு = முகிடரு . திகழ் + தரு = திகடரு . இவ்வாறு புணர்வதற்கு விதி வீரசோழியத்துக் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

கற்றநன் மறைபயி லடியவ ரடிதொழு கவினுறு
சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதொர் சேறைமேல்
குற்றமில் புகலியு ளிகலறு ஞானசம் பந்தன
சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர் தீருமே

பொழிப்புரை :

நன்மை தரும் வேதங்களை ஐயந்திரிபறக் கற்று ஓதும் அடியவர்கள் , தன்னுடைய திருவடிகளைத் தொழ , அழகிய குறுகிய இடையுடைய உமாதேவியோடு , சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருச்சேறை என்னும் திருத்தலத்தைப் போற்றிக் , குற்றமற்ற புகலியில் அவதரித்த , எவரோடும் பகைமையில்லாத ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை முறையோடு ஓதுபவர்கள் அழிவற் றவர்கள் . அவர்களின் துன்பங்கள் யாவும் தீரும் .

குறிப்புரை :

கவின் - அழகு . உறு - பொருந்திய . சிறு இடையவள் - உமாதேவியார் , புகலியுள் . இகல் அறு - எவரொடும் பகைமை யில்லாத , ஞானசம்பந்தன் . சொல் - பாடல்களை . சொல் - சினை ஆகுபெயர் . தகவு உற - முறையோடு , மொழிபவர் , அழிவு இலர் எனவே அவரைப்பற்றிய துயரும் அழிவின்றி நிற்கும் என்னற்க . அவை பற்றற நீங்கும் என்பதாம் . ` தீர்தல் - விடற்பொருட்டாகும் `. ( தொல் , சொல் , உரியியல் . 22)

பண் :சாதாரி

பாடல் எண் : 1

தளிரிள வளரொளி தனதெழி றருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

இளந்தளிர் நாளுக்கு நாள் வளர்ந்து பசுமை அடைதல் போல , வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியின் , குளிர்ந்த , வளரும் இள ஒளிவீசும் அழகிய முலையை மகிழ்ந்து தழுவப் பெறுதலால் . குளிர்ந்த வளரொளி போன்று நள்ளாறர்தம் புகழ்கூறும் , ` போகமார்த்த பூண் முலையாள் ` என்று தொடங்கும் ( தி .1. ப .49. பா .1) திருப்பதிகம் எழுதப்பெற்ற ஓலையை , அவர் திருமேனிபோல் பிரகாசிக்கின்ற நெருப்பிலிட்டால் அவை பழுது இல்லாதனவாம் என்பது சத்தியமே .

குறிப்புரை :

வளர் - வளரக்கூடிய . தளிர் - தளிரின் . இள ஒளி - இளம் பிரகாசத்தின் . எழில் தரு - அழகைத் தருகின்ற . திகழ் - விளங்குகின்ற . மலைமகள் - உமாதேவியார் . ( குளிர் வளர் இள ஒளி .) வனம் - அழகை உடைய முலை . இணை அவை - இரண்டும் . குலவலின் - மகிழ்ந்து தழுவப்பெறுதலால் . நளிர் - குளிர்ந்த , ( வளர் , இள ஒளி ). மருவு - பொருந்திய ( நள்ளாறர்தம் ) நாமமே - புகழ்களேயாகும் இவை . ஆதலின் , மிளிர் - அவர் திருமேனிபோற் பிரகாசிக்கின்ற ( வளர் இளம் ). எரி இடில் - நெருப்பில் இட்டால் . இவை - ` போகமார்த்த ` எனத் தொடங்கும் இத் திருப்பதிகம் எழுதிய இவ்வேடும் இவைபோல்வனவும் . பழுது இலை - பழுது இல்லாதன ஆம் . மெய்ம்மை - ( இது ) சத்தியம் . ஐம்பான் மூவிடத்திற்கும் பொது ஆனதால் இல்லை என்னும் குறிப்பு முற்று இவை என்ற எழுவாய்க்குப் பயனிலையாயிற்று . முதிய , வலிய நெருப்பின் ( சிவபெருமான் ) திறனை - இளநெருப்பு எரிக்குமா ? என்ற குறிப்பு .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

போதமர் தருபுரி குழலெழின் மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்ப்பட்ட கூந்தலை உடைய அழகிய மலைமகளான உமாதேவியின் ஆபரணம் அணிந்து , குளிர்ச்சிதரும் சந்தனத்தை அணிந்த , அரும்பொத்த இளைய அழகிய முலைகளைத் தழுவுகின்றவரும் , நாத தத்துவம் அழகிய உருவாகக் கொண்டவருமான திருநள்ளாற்று இறைவரின் புகழ் கூறும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேலான அவருருவான நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே .

குறிப்புரை :

போது அமர்தரு - மலர்கள் தங்கிய . புரி - பின்னிய ( குழல் ). பூண் அணி - ஆபரணத்தையணிந்த . சீதம் ( அது ) அணிதரு - ( இயல்பான குளிர்ச்சியோடு ) சந்தனக் குழம்பையும் அணிந்த . சீதம் - பண்பாகுபெயர் . முகிழ் - அரும்பை ஒத்த , இள , வனம் , முலை , செறிதலின் அழுந்தத் தழுவப்படுதலால் . நாதம் ( அது ) நாத தத்துவம் . எழில் உரு - அழகிய உருவாகக்கொண்ட . அனைய - அத்தகைய நள்ளாறர்தம் . நாமம் - புகழாகிய இவை . மீ - மேலான . தமது - தம்முடையதான . எரியிடில் - நெருப்பிலே இட்டால் . பழுது இலை . மெய்ம்மையே . நெருப்பு , சிவபெருமானுக்கு உரியதென்பது , ` தீத்தான் உன் கண்ணிலே , தீத்தான் உன்கையிலே , தீத்தான் உன்றன் புன்சிரிப்பிலே , தீத்தான் உன் , மெய்யெல்லாம் புள்ளிருக்கு வேளூரா ` என்ற காளமேகப் புலவர் தனிப்பாடலாலும் , எரியுள் நின்று ஆடுவர் என்பதாலும் , அட்டமூர்த்தங்களுள் நெருப்பு ஒன்று ஆதலாலும் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி யெழில்வடம்
கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயன் மருவுநள் ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்களைப் போன்று , இரத்தினங்கள் வரிசையாகக் கோக்கப்பட்ட மாலையணிந்த உமாதேவியின் , ஒளி வீசும் இளைய அழகிய முலைகளைத் தழுவும் , கதிர்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள வயல்வளமிக்க திருநள்ளாற்று இறைவனின் புகழ் உரைக்கும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அனல் வாதத்திற்கென வளர்க்கப்பட்ட நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே .

குறிப்புரை :

இட்டு - பதிக்கப்பட்டு . உறும் - பொருந்திய , மணி அணி இரத்தினங்களின் வரிசைகள் . இணர் - பூங்கொத்துக்களைப் போல . புணர் - பொருந்திய . ( வளர் , ஒளி , எழில் ). வடம் - மாலை . கட்டு உறு - அணியப்பெற்ற . கதிர் - ஒளியையுடைய . ( இரு தனங்களுடன் ). கலவலின் - கலத்தலால் . நட்டு - ( பயிர்கள் ) நடப்பட்டு . உறு - பொருந்திய . ( நள்ளாறு ). நாமம் - புகழ் . இட்டு உறும் - சிறியதாகியுள்ள . இந்த எரியில் இடில் , பெரிய நெருப்பின் திறம் அமைந்த இவை எங்ஙனம் பழுதுறும் ? பழுது இலவேயாம் என்க . மணிகளின் வரிசைக்குப் பூங்கொத்து உவமை . ஈற்றடியில் இட்டு - இட்டிது என்பதன் மரூஉ . ` ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை ` ( குறள் . 478.) இனி இட்டு உறும் எரி - உண்டாக்கிய செயற்கை நெருப்பு , இயற்கை நெருப்பின் திறனை என்செயும் ? எனினும் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மைச்சணி வரியரி நயனிதொன் மலைமகள் பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகணள் ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

மை பூசப்பெற்ற ஒழுங்கான செவ்வரி படர்ந்த அழகிய கண்களையுடைய தொன்மையாய் விளங்கும் உமா தேவியாரின் பரஞானம் , அபரஞானம் ஆகிய பயன்தரும் கச்சணிந்த ஒளிரும் இளைய அழகிய முலையைத் தழுவும் நஞ்சணி கண்டத்தினனான திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அழகிய நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே .

குறிப்புரை :

மைச்சு - மை அணியப்பெற்றதாய் . மைத்து , என்பது மைச்சு என்றாயது எழுத்துப் போலி . அணி - அழகிய . வரி - ரேகையின் . அரி - ஒழுங்கு பொருந்திய . நயனி - கண்களையுடையவராகிய . தொல்மகள் - பழமையான உமாதேவியார் . பயன் உறு - அபரஞான , பரஞானங்களாகப் பயன் தருதலை உடைய கச்சு அணி . வனம் - அழகிய . ( முலையோடு கலவலின் ). நஞ்சு அணி - விடத்தை அணிந்த . மிடறு உடை - கண்டத்தையுடைய . அடிகளாகிய நள்ளாறர்தம் புகழ்களாகிய இவைகள் . எரியினில் இடில் பழுதிலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பண்ணியன் மலைமகள் கதிர்விடு பருமணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

பண்பாடமைந்த மலைமகளின் ஒளிவீசுகின்ற இரத்தினங்கள் பதித்த ஆபரணத்தை அணிந்த , அழகான கலசம் போன்ற இருமுலைகளையும் கூடும் , குளிர்ச்சி பொருந்திய நீர் பாயும் திருநள்ளாற்று இறைவனின் நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை ஆகாயமளாவிய இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

பண் இயல் - ( உலகிற்கு ) பண்பாட்டை அமைவித்த . மலைமகள் . பண் - கடைக்குறை . இயல் மலைமகள் - வினைத்தொகை . இயல் என்ற சொல்லின் பிறவினை விகுதி குன்றியது . மலைமகள் - உமாதேவியாரின் . கதிர் விடு - ஒளி வீசுகின்ற . பரு - பருத்த . மணி - இரத்தினங்கள் பதித்த . அணி - ஆபரணத்தையணிந்த . நிறம் - மார்பிலே உள்ள . கண் இயல் - அழகு பொருந்திய . நண்ணிய குளிர் - குளிர்ச்சியையுடைய . புனல் புகுதும் - நீர்பாயும் , நள்ளாறர் . விண் இயல் - ஆகாயம் வரைதாவும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

போதுறு புரிகுழன் மலைமக ளிளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகணள் ளாறர்தந் நாமமே
மீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

மலர்களணிந்த பின்னிய கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியாரின் பொன்னாபரணம் அணிந்த , சூதாடும் வட்டை ஒத்த , தளிர்போன்ற நிறமுடைய அழகிய முலைகளோடு நெருங்கியிருத்தலால் , பொன்போலும் நிறம் பெற்ற அடிகளாகிய நள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இயல்புடைய இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது , சத்தியமே .

குறிப்புரை :

போது உறு - மலர்கள் பொருந்திய . புரிகுழல் - பின்னிய சடையையுடைய . மலைமகள் - உமாதேவியாரின் . இள ( ம் ) வளர் - இளமை மிகுந்த . பொன் அணி - பொன்னாபரணம் அணிந்த . சூது உறு - சொக்கட்டான்காயை ஒத்த . ( உறு - உவமவாசகம் ). தளிர் நிறம் - தளிர் போன்ற நிறத்தையுடைய . வனம் - அழகிய , முலையோடு . துதைலின் - நெருங்கியிருத்தலால் . தாது உறும் நிறம் உடை - பொன்போலும் நிறம் உடைய அடிகள் . ` பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து ` ( தி .4. ப .81. பா .9.) அடிகளாகிய நள்ளாறர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கார்மலி நெறிபுரி சுரிகுழன் மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

அடர்த்தியான , பின்னப்பட்ட , சுருண்ட கார்மேகம் போன்ற கருநிறமான கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியின் அழகிய , சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணம் அணிந்த முலைகளோடு நெருங்கியிருக்கும் , மண்டையோட்டை மாலையாக அணிந்துள்ள திருநள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை எழுச்சியுடன் எரியும் இந்நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

கார்மலி - மேகம் போன்ற . மலி - உவமவாசகம் , நெறி , செழிப்புடைய . புரி - கட்டப்பட்ட . சுரி - சுரிந்த ( குழல் மலைமகளின் ) நகு வெண்டலையைச் சிறந்த மாலையாகவுடைய நள்ளாறர்தம் நாமமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு
பொன்னியன் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுக னெரியநள் ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

நிலைபெற்று வளரும் ஞானவொளி பிரகாசிக்கும் மலைமகளான உமாதேவியின் தளிர்நிறத்தனவாய் மான்மதமாகிய கத்தூரியை அணியப்பெற்றனவாய் , இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன்னாலான ஆபரணத்தை அணிந்துள்ளனவாய் , கலசத்தை ஒத்தனவாய் விளங்கும் இருமுலைகளைப் புணர்கின்றவரும் , ஆணவமே இயல்பாக உடைய இராவணனைக் கயிலையின் கீழ் நெரியும்படி செய்தவருமான திருநள்ளாற்று இறைவரின் திரு நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை , மின்னலைப் போன்ற எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

மதம் மிகு - மான்மதமாகிய கத்தூரியை மிக அணியப்பெற்ற . மதமென நின்றது முதற்குறை . பொன்னியல் - பொன்னாலியன்ற . புணர்தலின் - தழுவுதலால் . தன் இயல் - தீமை செய்வதில் தன்னைத்தானே யொத்த . தசமுகன் - இராவணன் நெரிய அடர்த்த நள்ளாறர் . அடர்த்த என்ற சொல் , வருவித்துரைக்கப்பட்டது . மின் இயல் - ஒளியையுடைய .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

கான்முக மயிலியன் மலைமகள் கதிர்விடு கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின்
நான்முக னரியறி வரியநள் ளாறர் தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

காட்டில் விளங்கும் மயில் போன்ற சாயலையுடைய உமாதேவியின் , ஒளிவிடுகின்ற கனத்த பால்சுரக்கும் பருத்த இருமுலைகளைக் கூடுகின்றவரும் , பிரமனும் , திருமாலும் அறிவதற்கு அரியவராக விளங்குகின்றவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

கான்முகம் - காட்டிடத்துள்ள . மயில் இயல் - மயில் போன்ற சாயல் . பால் முகம் இயல் ( பால் சுரக்கும் இடமாகப் பொருந்திய , தமக்கு ஞானப்பாலை ஊட்டியருளிய செயலை நினைப்பித்தவாறு ) பணை - பருத்த , இணைமுலை - உபயதனங்கள் . மேல்முக ( ம் ) எரி - மேல் நோக்கிய நெருப்பு .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

அத்திர நயனிதொன் மலைமகள் பயனுறு மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

பொழிப்புரை :

அம்பு போன்று கூர்மையான கண்களையுடைய தொன்மையான மலைமகளான உமாதேவியின் பயன்தரும் அதிசயம் விளைவிக்கும் , பலவகையான இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் அணியப் பெற்றுள்ள இருமுலைகளோடு நெருங்கி யிருப்பவரும் , புத்தர்களாலும் , சமணர்களாலும் உணரப்படாதவரும் பொய்யினின்று நீங்கியவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை , திரண்டு எரியும் இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதன வாகும் என்பது சத்தியமே .

குறிப்புரை :

அத்திரம் நயனி - அம்பு போன்ற கண்களை உடையவள் . அதிசயம் - அதிசயம் விளைக்கும் . சித்திரம் - பல வகையான . பொய் பெயரும் - பொய்யினின்றும் நீங்கிய நள்ளாறர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

சிற்றிடை யரிவைதன் வனமுலை யிணையொடு செறிதரும்
நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய
சொற்றெரி யொருபது மறிபவர் துயரிலர் தூயரே.

பொழிப்புரை :

சிறிய இடையினையுடைய உமாதேவியின் அழகிய முலைகளோடு நெருங்கியிருக்கும் திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதிய ஏடுகளை , நன்மைதரும் கழுமலநகரில் அவதரித்த திருஞானசம்பந்தன் , பாண்டிய மன்னனின் எதிரில் , நெருப்பின் நடுவில் இடுகின்றபோது கூறிய , இத்திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள் துயரற்றவர்கள் ஆவர் . மும்மலங்களினின்றும் நீங்கித் தூயராய் விளங்குவர் .

குறிப்புரை :

ஞானசம்பந்தன் கொற்றவன் எதிர் - நின்ற சீர் நெடுமாற நாயனாராகிய அரசர் எதிரில் . இடை எரியினில் - நெருப்பு நடுவில் . துயர் தூயர் - ஓர் சொல் நயம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவின ரொளிகிளர்
அத்தக வடிதொழ வருள்பெறு கண்ணொடு முமையவள்
வித்தக ருறைவது விரிபொழில் வளநகர் விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் , தலையில் அழகுற விளங்கும் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியுடையவர் . கரத்தில் விளங்கும் நகங்களைப் போலத் தலையிலுள்ள இரத்தினங்கள் பிரகாசிக்கும் ஐந்தலைப் பாம்பைக் கங்கணமாகக் கட்டியவர் . இத்தகைய சிவ பெருமானின் திருவடிகளைத் தொழுதுயாம் உய்யும்பொருட்டு , அருள்பெருகும் கண்களையுடைய உமாதேவியோடு வித்தகராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளுவது விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமை வாய்ந்த திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மத்தகம் - தலையின்கண் , அணிபெற - அழகுற , மலர்வது ஓர்மதி - விளங்கிக்கொண்டிருக்கும் பிறையை . புரை - ஒத்த . நுதல் - நெற்றி . இறைவர் நெற்றிக்கு வேறு பிறை ஒப்பாகாது அவர் அணிந்த பிறையே உவமையாயிற்று . சேக்கிழார் பெருமான் விரைந்து மலையேறும் கண்ணப்ப நாயனார் செலவுக்கு உவமமாக வேறு கூறாது அந்நாயனார் மனவேகத்தையே உவமை கூறியதும் காண்க : ` பூத நாயகன் பால் வைத்த , மனத்தினுங் கடிது வந்து மருந்துகள் பிழிந்து வார்த்தார் `. ( தி .12 கண்ணப் . புரா . 176) கரம் - திருக்கரத்தில் . ஒத்து - ஏற்ற தாகி . அகம் ( கண்டவர் ) மனம் . நக - மகிழ . மணிமிளிர்வதோர் அரவினர் - இரத்தினம் பிரகாசிக்கின்ற பாம்பைக் கங்கணமாக உடையவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பட்டில கியமுலை யரிவைய ருலகினி லிடுபலி
ஒட்டில கிணைமர வடியின ருமையுறு வடிவினர்
சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்
விட்டில கழகொளி பெயரவ ருறைவது விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் , உலகில் பட்டாடையால் மூடப்பட்ட முலைகளையுடைய பெண்கள் இடுகின்ற பலிகளை ஏற்க , இசைத்துச் செல்கின்ற மரப்பாதுகைகளை அணிந்த திருவடிகளை உடையவர் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தர் . தூய்மையையும் , ஞானத்தையும் உணர்த்தும் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர் . இடபவாகனத்தில் வீற்றிருப்பவர் . சொல்லொணாப் பேரழகிய தோற்றப் பொலிவுடன் நடக்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

உலகினில் - உலகத்தில் . பட்டு இலகிய - பட்டாடையால் விளங்குகின்ற . அரிவையர் - பெண்கள் . இடுபலி ஒட்டு - போடும் பிச்சைக்கு இசைத்துச் செல்கின்ற . இலகு இணை மரவடியினர் - விளங்கும் இரண்டாகிய பாதுகையை உடையவர் :- பிட்சாடன கோலத்தில் . உமை உறு - உமையம்மையார் ( ஒருபாற் ) பொருந்திய , வடிவினர் - திருவுருவுடையவர் . சிட்டு இலகு அழகிய பொடியினர் - வசிட்டு முதலிய இறுதிகளையுடைய மந்திரோச்சாரணத்தோடு அணியக்கூடிய விளங்குகின்ற அழகிய திருநீற்றையுடையவர் . இனி விசிட்டம் என்பதன் திரிபு , சிட்டு என்று கொண்டு சிறந்த ( திருநீறு ) எனினும் ஆம் . மிசை சேர்வது ஓர் - விடையின்மேல் ஏறிச் செல்வதாகிய . விட்டு இலகு - விட்டு விட்டுப் பிரகாசிக்கும் . அழகு ஒளி - அழகின் தோற்றப் பொலிவோடு . பெயர் அவர் - பெயர்தலை ( நடத்தலை ) யுடையவர் . உறைவது விளமரே . சேர்வதோர் பெயர் அவர் என்க . மரவடி - மரத்தால் ஆகிய பாதுகை , பிட்சாடன மூர்த்தியின் கோலத்தில் இதனைத் தரித்திருப்பதை யறிக . ` அடியிற்றொடுத்த பாதுகையும் அசைந்த நடையும் இசைமிடறும் வடியிற் சிறப்ப நடந்தருளி மூழையேந்தி மருங்கணைந்த தொடியிற் பொலிதோள் முனிமகளிர் , சுரமங்கையரை மயல்பூட்டிப் படியிட்டெழுதாப் பேரழகாற் பலிதேர் பகவன் திருவுருவம் ` என்னும் காஞ்சிப் புராண த்தாலும் அறிக . ` விட்டில கழகொளி பெயரவர் ` என்பதற்குப் ` படியிட்டெழுதாப் பேரழகு ` என்பது வியாக்கியானம் போற் காணப்படுவதை யறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

அங்கதி ரொளியின ரரையிடை மிளிர்வதொ ரரவொடு
செங்கதி ரெனநிற மனையதொர் செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழன் முழவினொ டிசைதரு சரிதையர்
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் அழகிய ஒளிவீசும் தோற்றப் பொலிவுடையவர் . இடையிலே பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . செந்நிற கதிர் போன்ற நிறமுடையவர் . அக்கதிர்போல் ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்துள்ள மார்பினர் . சங்குகள் ஒலிக்க , பறை , குழல் , முழவு போன்ற வாத்தியங்கள் இசைக்கத் திருக்கூத்து ஆடுபவர் . வெண்ணிற ஒளிவீசும் மழுப் படையை உடையவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அம்கதிர் ஒளியினர் - அழகிய ஒளிவீசும் பொலிவை யுடையவர் . மிளிர்வது - ஒளிர்வது . செங்கதிர் என நிறம் - சூரியன் நிறத்தையொத்த நிறமும் . அனையது ஓர் செழுமணி மார்பினர் - அச்சூரியனை ஒத்த ஒப்பற்ற செழிய பதுமராகம் முதலிய இரத்தினங்களால் இழைத்த ஆபரணங்களை அணிந்த மார்பும் உடையவர் . சங்கு - சங்கும் . அதிர் - ஒலிக்கும் . பறை , குழல் , முழவினோடு - இவ்வாத்தியங்களோடு , இசைவதோர் சரிதையர் - இசைவதாகிய திருக்கூத்தையுடையவர் . ( சரிதை - இங்கு நடனத்தைக் குறித்து நின்றது .) வெம் - கொடிய . கதிர் - ஒளியை உடைய . மழு உடையவர் இடமெனில் - அது விளமர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள்
பாடல ராடிய சுடலையி லிடமுற நடநவில்
வேடம துடையவர் வியனக ரதுசொலில் விளமரே.

பொழிப்புரை :

மாடம் போன்று உயர்ந்து விளங்கிய , தேவர்கட்குத் தீமை செய்த பகையசுரர்களின் மும்மதில்களைச் சிவபெருமான் எரித்தவர் . தமது புகழ் பாடுவதையே பொருளாகக் கொண்ட வேதங்களை அருளிச்செய்தவர் . தமது வரலாறுகள் அடியவர்களால் பாடலாகப் பாடப்படும் பெருமையுடையவர் . சுடுகாட்டை அரங்க மாகக் கொண்டு திருநடனம் செய்யும் கோலத்தர் . இத்தகைய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் பெருமை மிக்க நகரானது திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மாடம் ( அது ) என - அது மாடம் என்னும்படி . வளர் - உயர்ந்த . மதில் அவை - திரிபுரங்களை எரிசெய்வர் . மாடம் அது என ஒருமையும் . மதில் அவை எனப் பன்மையும் வந்தமை , ஒவ்வொன் றையும் தனித்தனிக் குறிக்கும்போதும் , ஒருங்கு குறிக்கும்போதும் முறையே கொள்க . விரவு சீர்ப் பீடு என - பொருந்திய தமது புகழின் பெருமையே பொருளாக ( அருமறை ) உரைசெய்வர் - சொல்லி யருள்வர் என்பது , வேதங்களிற் கூறப்படுவன சிவபிரானது புகழ்களே என்ற கருத்து . ` எவன் நினைத்த மாத்திரையில் சர்வாண்டங்களையும் ஆக்கி அழிக்கவல்லனோ , எவனுடைய ஆணையால் இரு சுடரியங் குவதும் , வளியுளர்வதும் வான்பெய்வதும் ஆதியன நிகழ்கின்றவோ . அவனே கடவுள் . அவனே தலைவன் . அவனே சரண்புகத் தக்கவன் ` என்பன போன்றவை . சரிதைகள் - தமது வரலாறுகள் . பாடலர் - அடியார்களாற் பாடலாகப் பாடப்படுதலையுடையவர் . ஆடிய - நெருப்புப் பற்றியெரிந்த . ( சுடலையில் ) இடம் உற - அரங்கு ஆக ( நின்று ) நடம் நவில் - நடம் ஆடும் . வேடம் ( அது ) உடையவர் - கோலமுடையவர் . வியல் - ( வளத்தால் ) பெரிய ; ` வியல் என் கிளவி அகலப் பொருட்டே ` ( தொல் . சொல் - 364.). நகர் - தலம் , திரு விளமர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பண்டலை மழலைசெ யாழென மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய வருள்புரி விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.

பொழிப்புரை :

பண்ணின் இசையை ஒலிக்கும் யாழ்போன்ற இனியமொழி பேசும் உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான் . அவருடைய , அசைகின்ற ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்துள்ள திருவடிகளைத் தொழும் அடியவர்களை வினை சாராது . விண்ணுலகிலுள்ள தேவர்கள் தொழுது போற்ற அருள்செய்யும் பெருங்கருணையாளர் . பிரமனு டைய மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவரும் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவருமான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளம் மிகுந்த நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பண்தலை - பண்ணினிடத்ததாகிய . ( பண்ணோடு கூடிய ) மழலை செய்யாழ் என - இனிமையைச் செய்கின்ற யாழ்போல . மொழி - பேசுகின்ற . ( உமையைப் பாகமாகக்கொண்டு ) அலை - அசை கின்ற . குரைகழல் - ஒலிக்கும் வீரகண்டை யணிந்த . ( அடிதொழும் அவர் வினை குறுகிலர் ) விண்டலை - விண்ணின் இடத்துள்ள . ( அமரர்கள் துதிசெய அருள்புரி .) விறலினர் - அருட்பெருக்கை யுடையவர் . மழலை இனிமைக்கு ஆகியது , காரியவாகுபெயர் . விறல் - வலிமை ; அருளின் வலிமை ; அருட்பெருக்கு .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மனைகடொ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்
கனைகட லடுவிட மமுதுசெய் கறையணி மிடறினர்
முனைகெட வருமதி ளெரிசெய்த வவர்கழல் பரவுவார்
வினைகெட வருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் தாருகவனத்தில் மனைகள்தொறும் சென்று பிச்சை ஏற்றவர். சந்திரனைத் தரித்த சடையுடையவர். ஒலிக்கின்ற கடலில் தோன்றி உயிர்களைக் கொல்ல வந்த விடத்தை அமுதமாக உண்டு கறை படிந்த அழகிய கண்டத்தர். போர் முனைப்பு உடன் எழுந்த பகையசுரர்களின் மும்மதில்களை எரித்தவர். தம் திருவடிகளை வணங்குபவர்களின் வினைகெடும்படி அருள்புரியும் தொழிலுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் செழிப்பான நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

: மனைகள்தோறும், இடு, பலி (அது) கொள்வர், மதி. பொதி - தங்கிய. கனைகடல் - ஒலிக்கின்ற, கடலில் தோன்றி. அடு - உயிர்களைக் கொல்ல வந்தவிடம். அமுதுசெய் - உண்டதனால் எய்திய. (கறை அணி) மிடறினர் - கழுத்தையுடையவர். மிடற்றினர் - எனற்பாலது. மிடறினர் என நின்றது சந்தம் நோக்கி. முனை - போரில். கெட வரும் - அழிய. வந்தமதிள் - புரங்களை. மதில், மதிள் என வந்தது. ல, ள வொற்றுமை. தமது திருவடியை வணங்குபவரின் வினை கெட அருள் புரிதலைத் தவிர, பிறதொழில் இல்லாதவர் என்பது, பிற்பகுதியின் கருத்து.

பண் :சாதாரி

பாடல் எண் : 7

நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்
செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட வரவினர் விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமல ரடைபவ ரிடமெனில் விளமரே.

பொழிப்புரை :

சிவபெருமான் சரியை முதலிய நான்கு நெறிகளாலும் , ஆகமங்களாலும் மன்னுயிர்கட்கு மெய்யுணர்வு நல்கியவர் . தம்மின் வேறாகாத ஞானமே வடிவான உமாதேவியை இடப் பாகமாகப் பொருந்தி விளங்கும் உருவுடையவர் . திருக்கரங்களில் படைகள் பல ஏந்தியவர் . புள்ளிகளையுடைய படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர் . கங்கை , பிறைச்சந்திரன் , பாம்பு இவை கலந்த சடைமுடியின் மீது அடியவர்கள் புனையும் நறுமணமலர்கள் அடையப் பெற்றவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நெறி - சரியை முதலிய நான்கு மார்க்கங்களும் . கமழ் தரும் - விளங்குகின்ற . உரை - ஆகமங்களால் . உணர்வினர் - உலகிற்கு உணர்வுகொளுத்தியவர் . என்றது மயர்வறநந்தி முனிகணத் தளித்தமையை நெறி கமழ் தரும் உரை - உணர்வினர் - சைவ நன்னெறியிற் படரும் ( அடியார்களின் ) உரையிலும் , உணர்விலும் இருப்பவர் எனலும் ஆம் . இங்கு , கமழ்தரும் உரை என்பதை ` திருவாய்ப் பொலியச் சிவாயநமவென்று ` ( தி .4. ப .94. பா .6) போற்கொள்க . புணர்வு உறும் மடவரல் - ( ஞானத்தில் ) சிவமாகிய தம்மின் வேறாகாது ஒன்றிய சத்தியாகிய அம்பிகை . ( உருவத்தும் ) செறிகமழ்தரும் - ( இடப்பாகத்தில் ) பொருந்தி விளங்கும் உரு உடையவர் , வடிவையுடையவர் . படை பல பயில்பவர் - பல ஆயுதங்களையும் பயில்பவர்போற் கொள்பவர் . பொறி - புள்ளிகள் . கமழ்தரு - பொருந்திய பட அரவினர் . விரவிய - கலந்த . வெறி - வாசனை . கமழ் தரு - வீசும் . மலர் - அடியர் புனைந்த மலர் . அடைபவர் - அடையப் பெற்றவர் . முதல் இரண்டாம் அடிகளில் கமழ் தரும் என்பது - விளங்கும் என்ற பொருளிலும் , மூன்றாம் அடியில் பொருந்திய என்ற பொருளிலும் வந்தது .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

தெண்கடல் புடையணி நெடுமதி லிலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனி லடர்செய்த பைங்கழல் வடிவினர்
திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதொர் சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.

பொழிப்புரை :

தெளிவான நீரையுடைய கடல்சூழ்ந்த , அழகிய நீண்ட மதில்களையுடைய இலங்கை அரசனான இராவணன் பண் படையும்படி , கயிலைமலையின் கீழ் அடர்த்த கழலணிந்த திருவடிகளையுடையவர் சிவபெருமான் . கடலையடையும் கங்கையை , சடையில் தாங்கியவர் . விண்ணுலகிலுள்ள பரந்த பாற்கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர் . இத்தகைய தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளமை பொருந்திய நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தெண் கடல் - தெளிவான நீரையுடைய கடல் . புடை அணி - சுற்றிய , இலங்கையர் தலைவனை . பண்பட அடர் செய்த - நன்றாக அடர்த்த . கழல் வடிவினர் - கழலோடு கூடிய வடிவையுடையவர் . கடல் அடைபுனல் - கடலையடையும் ( கங்கை ) நீர் . திகழ்சடை புகுவது ஓர்சேர்வினார் - விளங்கும் சடையிற் புகுவதாகிய சேர்க்கையையுடையவர் . விண் - விண்ணை அளாவிப் பரவிய ( விடம் ) கடல் . விடம் - விடக்கறை . மலி - ( கண்டத்தின்கண் ) பொருந்திய அடிகள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற வாரழ லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனி லளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.

பொழிப்புரை :

சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலை அழியும்படி , மார்க்கண்டேயருக்குத் துன்பம் செய்ய வந்த காலனை மாளும்படி செய்து , பின்னர்த்தம் ஆணையின்படி ஒழுகுமாறு செய்தவர் சிவபெருமான் . பிரமன் , திருமால் என்னும் இருவரையும் அஞ்சுவிக்கக் காண்டற்கரிய அழல் வடிவானவர் . மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வண்டினங்கள் விரிந்த மலர்களைக் கிண்டி நல்ல தேனை ஒலியுடன் பருகும் சோலைகளை உடைய திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தொண்டு - சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலையே . அசையுற = அசைவு உற - அழிய . வரு - மார்க்கண்டேயர் மேல் வந்த . துயர் உறு - துன்பம் உறுத்தவரும் ( காலனை ). தொண்டு அசைவு உற என்ற கருத்து . சிவனடியார்க்கு ஒருவர் தீங்கிழைப்பரேல் அது அடிமைத் திறத்தையே அழிப்பதாகும் என்பதாம் . அது :- ` என் போலிகளும்மையினித் தெளியார் அடியார் படுவதிதுவேயாகில் , அன்பேயமையும் ` என்பதாற் கொள்க . ( தி .4. ப .1. பா .9.) காலனை மாள்வுறச் ( செய்து ) பின் , அண்டல் செய்து - தன்னையண்டித் தன் ஆணைவழி நிற்றலையும் செய்து , இங்குச் செய்து என்பதனைப் பின்னும் கூட்டுக . அண்டல் , அண்டுதல் , அண்டி வாழ்தல் எச்ச உம்மை வருவித்துரைக்க . துயர் உறு என்பதில் பிறவினை விகுதி தொக்கு நின்றது . மேல்வெருவுற என்பதும் அது . இருவரை - பிரம விட்டுணுக்களாகிய இருவரையும் . வெருவுற - அஞ்சுவிக்க . ஆர்அழல் ஆயினான் - காண்டற்கரிய அழல் வடிவு ஆயினவன் . இருவர் என்பது தொகைக் குறிப்பு . கொண்டல் செய்தரு - மேகம்போலும் கரிய . திருமிடற்றினர் - அழகிய கண்டத்தையுடையவர் . அளியினம் - வண்டின் கூட்டங்கள் . விண்டு இசை உறு - ஒலியை வெளிப்படுத்திப் பாடுதலையுடைய . ( மலர் ) நறு மது விரி - நல்ல தேனைப் பெருகச் சொரிகின்ற பொழில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

ஒள்ளியர் தொழுதெழ வுலகினி லுரைசெயு மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவ மறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.

பொழிப்புரை :

உலகத்து அறிவுடையார்களால் வணங்கி ஏத்துதற்குரிய மதங்கள் பல உண்டு . வடமொழி , தமிழ் முதலிய பல மொழிகளிலுமுள்ள உயர்ந்த பொருள்களைக் களவுசெய்து தம்மதாகக் காட்டும் திருட்டுத்தனமிக்கவரும் , தவம் அறிகிலாதவருமான சமண , புத்தர்தம் பள்ளியினர் கூறும் நெறிகளை மெய்யென்று கருதற்க . வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய , வளம் மிகுந்த நகரான திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை அன்போடு போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

உலகத்து அறிவுடையார்களால் வணங்கியேத்துதற்குரிய மதங்கள் பல உண்டு . ( ஒள்ளியர் - அறிவுடையவர் ). அவற்றுள் களவினரும் , தவம் அறிகிலாதாரும் ஆகிய சமண புத்தர் தம் பள்ளியினர் கூறும் சமய நெறிகளை மெய்யென்று கருதீர்களாய் , வெள்ளிய பிறையணி சடையினர் விளமரைப் பரிவோடு பேணுவீர்கள் ஆக . ( பரிவு - அன்பு ) என்பது இப்பாடலின் திரண்டபொருள் . கொள்ளிய - கொள்ளியனைய . ( களவினர் ) நீறுபூத்த கொள்ளி - தவ வேடம் பூண்ட வஞ்சகருக்கு உவமை . குண்டிகையர் சமணரும் தவம் அறிகிலார் - புத்தரும் ( குண்டிகையர் எனப்பிரித்துக் கூறினமையின் ) பள்ளி என்பது இடவாகு பெயராய் அங்கு உறைவோரையும் , அது இலக்கணையால் அவர் கூறும் உபதேசங்களையும் உணர்த்திற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியு ளழகம ரருமறை ஞானசம்
பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை பறையுமே.

பொழிப்புரை :

பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண் நீற்றினை அணிந்த தலைவரை , திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை ( விகிர்தர் ), சிந்தையுள் இடை யறாது இருத்தும்படி , அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதுவோர் வினை அழியும் .

குறிப்புரை :

விகிர்தர் - ( பிறரின் ) வேறுபட்டவர் . சிந்தையுள் இடை பெறு ( இடை - இடம் ) என்றது :- ` உளம் பெருங்களன் செய்ததும் இலை நெஞ்? u2970?` என்ற திருவாசகத்தின் ( தி .8) கருத்து . செழுவிய - செழுமை பொருந்திய ( புகலி ). அருவினை . பறையும் - நீங்கும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! அழகான இளயானைத் தந்தங்களோடு , திரட்சியான இரத்தினங்களையும் , சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டு , குருந்து , மா , குரவம் , குடசம் முதலிய மரவகைகளையும் , மயிலின் தோகைகளையும் சுமந்து கொண்டு பரவி , பெரிய வயல்களில் பாய்கின்ற நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி வாழ்வாயாக ! அத்திருவடியே நமக்குச் சரண்புகும் இடமாகும் .

குறிப்புரை :

திருந்தும் - திருத்தமான , அழகான என்றபடி . இளம் மருப்பு - இளந்தந்தம் . திரள் - திரட்சியான . மணி - இரத்தினங்களையும் . சந்தம் - சந்தன மரங்களையும் . உந்தி - அடித்துக்கொண்டு . குருந்து , குரவம் குடசம் - மலை மல்லிகை முதலிய மரவகைகளையும் . பீலியும் - மயில் தோகைகளையும் . நிரந்து - பரவி . நீடுகோட்டு ஆறு சூழ் - நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் . ( கொச்சைவயம் ) மேவிப் பொருந்தினார் - விரும்பித் தங்கியருளிய பெருமானின் , ( திருந்து அடிகளை நெஞ்சமே போற்றி வாழ்வாயாக ). அது புகல் ஆம் - அத்திருவடி நமக்குச் சரண்புகும் இடமாம் . கோட்டாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

ஏலமா ரிலவமோ டினமலர்த் தொகுதியா யெங்குநுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே யஞ்சனீயே.

பொழிப்புரை :

மடநெஞ்சமே ! மணம் கமழும் ஏலம் , இலவங்கம் இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு , அழகிய மிளகுக் கொடிகளோடு , நன்கு பழுத்த கனிகள் கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற அழகிய திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் நீலகண்டரான சிவபெருமானை நினைப்பாயாக ! நீ அஞ்சாதே .

குறிப்புரை :

நுந்தி - தள்ளிக்கொண்டு . கோலம் ஆம் - அழகாகிய . ஆலியா - ஆலித்து , ஆரவாரித்து . ( கோட்டாறு வயல்புகும் கொச்சையே ) நச்சி - விரும்பி . நீலம் ஆர் கண்டனை நினை , அஞ்சிய தேவர்களைக் காத்தமை காட்டும் கண்டம் அது . ஆகையால் நெஞ்சமே நீ அஞ்சுதல் ஒழிவாயாக .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பொன்னுமா மணிகொழித்தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக்
கன்னிமார் முலைநலங் கவரவந் தேறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவினாளும்
முன்னைநோய் தொடருமா றில்லைகா ணெஞ்சமே யஞ்சனீயே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பொன்னையும் , பெரிய மணிகளையும் ஒதுக்கிக் கரையில் எறிகின்ற ஆற்றுநீர் நுரைகளைத் தள்ளிக் கொண்டு , கன்னிப்பெண்களின் மார்பில் பூசியிருந்த சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களை அகற்றிக் கரைசேர்க்கின்ற காவிரி சூழ்ந்திருக்க , உமாதேவியாரோடு நிலைபெற்று இருப்பவராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கொச்சைவயம் என்னும் இத் திருத்தலத்தையே எக்காலத்தும் பொருந்தி வாழ்வாயாக ! அவ்வாறு வாழ்ந்தால் தொன்றுதொட்டு வரும் மலநோயானது இனி உன்னைத் தொடராது . நீ அஞ்சல் வேண்டா .

குறிப்புரை :

மகளிர் மார்பிற்பூசிய சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களைக் கவரும் பொருட்டு வந்து பாயும் என்றது தற்குறிப்பேற்ற அணி . முன்னைநோய் - தொன்றுதொட்ட மலநோய் ( தொடரு மாறு இல்லை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேய
எந்தையா ரடிநினைந் துய்யலாம் நெஞ்சமே யஞ்சனீயே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! மணம் பொருந்திய தாழை , சந்தனக் காடு என்பவற்றைச் சூழ்ந்து , வாழைத் தோட்டங்களின் பக்கமாக வந்து , மா மரத்தையும் , வள்ளிக் கொடியின் திரளையும் , மொய்க்கும் வண்டுகளையும் குவளையையும் மோதி ஓட , பூங்கொத்துக்கள் அணிந்த நீண்ட கூந்தலையுடைய பெண்கள் குதித்துக் கொண்டு நீராடும் காவிரிநதி சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளிய எந்தையாரான சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து நாம் உய்தி பெறலாம் . நீ அஞ்சவேண்டா .

குறிப்புரை :

கேதகை - தாழை . கதலி மாடு - வாழையின் பக்கம் . வள்ளையின்பவர் - வள்ளைக் கொடியின் திரளையும் , அளிக்குவளையை - ( மொய்க்கும் ) வண்டுகளையுடைய குவளையையும் . சாடி - மோதி . கொந்து - பூங்கொத்து . வார் - நெடிய .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மறைகொளும் திறலினா ராகுதிப் புகைகள்வா னண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணிசெழும்பதி திகழ்மதிற் கொச்சை தன்பால்
உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்த
இறைவன தடியிணை யிறைஞ்சிவாழ் நெஞ்சமே யஞ்சனீயே

பொழிப்புரை :

நெஞ்சமே ! வேதங்களை அவற்றின் பொருள் உணர்ந்து ஓதும் வன்மை படைத்த அந்தணர்கள் இயற்றுகின்ற வேள்விப் புகை ஆகாயத்தை அளாவி நெருங்குதலால் மழை பொழிய , அந்நீர் தங்கிய கரைகளையுடைய நீர்நிலைகளால் அழகுடன் விளங்கும் செழும்பதியாகிய , மதில்கள் விளங்குகின்ற திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தை , தாம் எழுந்தருளும் இடமாகக் கொண்ட மனமுடையவரும் , பிரமனின் சிரமறுத்தவருமான சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் வணங்கி வாழ்வாயாக ! நீ அஞ்சவேண்டா .

குறிப்புரை :

மறை கொ ( ள் ) ளும் திறலினார் - வேதம் ஓதலாற் பெற்ற வலிமை உடையவர்கள் . ஆகுதிப்புகைகள் . வான் அண்டமிண்டி - ஆகாயத்தை அளாவ நெருங்கலால் . மிண்டி வினையெச்சத்திரிபு . வேள்வி யோம்பலால் கால மழை வழாது பெய்து , வயல் பாத்திகளில் தங்கும் நீர் வளப்பத்தால் அழகுடைத்தாகிய செழும்பதி என்பது முற்பகுதியின் கருத்து . கொச்சை தன்பால் - திருக்கொச்சை வயமாகிய தலத்தினிடம் . உறைவு இடம் என . மனம் அது கொள்ளும் இறைவன் - பிரமனார் சிரம் அறுத்த இறைவன் எனக் கொள்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

சுற்றமு மக்களுந் தொக்கவத் தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா வுள்கினானோர்
குற்றமில்லடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவ மருள்புரி நம்பனை நம்பிடாய் நாளுநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! சிவனை நினையாது செய்த தக்கன் வேள்வியைத் தகர்த்து , அதற்குத் துணையாக நின்ற சுற்றத்தார்களையும் , மற்றவர்களையும் தண்டித்து , தன் மனைவி தாட்சாயனி தக்கன் மகளான தோடம் நீங்க இமயமலை அரையன் மகளாதற்கும் , தன் திருமேனியில் ஒரு பாகமாதற்கும் நினைத்தருளியவனும் , ஒரு குற்றமுமில்லாத அடியவர்கள் குழுமிய வீதிகள் சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து , திரிகரணங்களும் ஒன்றிச் சிவவழிபாடு செய்பவர்கட்கு அதன் பயனை அளித்து அருள்புரிகின்றவனுமாகிய சிவபெருமானை எந்நாளும் நீ விரும்பி வாழ்வாயாக !

குறிப்புரை :

தக்கன் மகளான தோடம் நீங்க , இமய மலையரையன் மகளாதற்கும் , தன் உடம்பில் ஒரு பங்கில் வைத்தற்கும் நினைத்தருளியவன் என்பது இரண்டாம் அடியின் கருத்து . மால்வரையுமை ( ஆக ) நங்கையைப்பங்கம் ( ஆக ) எனக் கூட்டுக . ஓர் குற்றம் இல் - ஒரு குற்றமும் இல்லாத . அடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சை மேவி . நல்தவம் - நல்லதவத்தின் பயன்களை . அருள்புரி நம்பனை நம்புவாயாக .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமா முகிறனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களு மமரரு முனிவரும் பணியவாலம்
உண்டமா கண்டனார் தம்மையே யுள்குநீ யஞ்சனெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! மேகங்கள் வந்தவுடன் , அழகிய நீண்ட சோலைகளிலுள்ள குரங்குகள் கூடி , தங்கட்கு முன்னே காணப்படுகின்ற மூங்கில்களைப் பற்றி ஏறி , அந்தக் கரிய மேகங்களைக் கையால் பிடிக்கின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , அண்ட வானவர்களும் , தேவர்களும் , முனிவர்களும் வந்து பணிய , ஆலகால விடத்தினை உண்டு அவர்களைக் காத்த பெருமையுடைய கழுத்தினையுடைய சிவபெருமானையே எப்பொழுதும் நீ நினைத்துத் தியானிப்பாயாக ! நீ அஞ்சல் வேண்டா .

குறிப்புரை :

கோலம் - அழகை உடைய . வார் - நெடிய . பொழில்களில் - சோலைகளில் . கொண்டலார் - மேகங்கள் . வந்திட - வந்து படிய . ( குரங்குகள் கூடிக்கொண்டு தங்களுக்கு முன்னே காணப்படுகின்ற ) கழைபிடித்து ஏறி - மூங்கில்களைப்பற்றி ஏறி . மாமுகிறனை - கரிய அம்மேகத்தை . கதுவு - கையாற் பிடிக்கின்ற ( கொச்சை ). கொண்டல் , கொண்டலார் என்று உயர்த்தற்கண் வந்தது , அதன் சிறப்புநோக்கி . ` ஒருவரைக்கூறும் பன்மைக் கிளவியும் , ஒன்றனைக்கூறும் பன்மைக் கிளவியும் ... சொல்லாறல்ல ` ( தொல் . சொல் . கிளவியாக்கம் . சூத்திரம் . 27). ` தென்றலார் புகுந்துலவும் திருத்தோணிபுரத்துறையும் கொன்றை வார்சடையார் ` ( தி .1. ப .60. பா .7.) என வந்தமையும் காண்க . அமரரும் - தேவர்களும் , அண்ட வானவர்களும் - அவரொழிந்த , ஏனைய அண்டங்களிலுள்ள , அயன் அரி முதலிய தேவர்களும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிர லூன்றினா ருறைவிட மொளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமு முத்தமுந் தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! வலிமை வாய்ந்த பற்களையுடைய அரக்கனான இராவணன் பெரிய திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , ஆரவாரித்த அவனது வாய்களுடன் உடலும் நெரியும்படித் தன் காற்பெருவிரலை ஊன்றினவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற , ஒளிபொருந்திய வெள்ளியைப் போன்ற இதழ்களை யுடைய பூக்களின் இடையிடையே பவளம் போன்ற செந்நிறப் பூக்களும் , முத்துக்களைப் போன்ற அரும்புகளும் , அமைந்த பூங்கொத்துக்களையுடைய செழித்த புன்னைமரங்களின் பக்கத்தில் பறவை இனங்கள் தங்கள் பெடைகளோடு வளர்தலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை நீ போற்றி வழிபடுவாயாக !

குறிப்புரை :

அடல் எயிற்று - வலிய பற்களையுடைய . அரக்கனார் - இராவணன் . ( இகழ்ச்சிக் குறிப்பு ) வாய்கள் . உடல் கெட - உடலோடு நொறுங்க திருவிரல் ஊன்றினான் . வெள்ளி மடல் இடை - வெள்ளியைப் போன்ற மடல்களையுடைய விரிந்த பூக்களின் இடையிடையே . பவளமும் - பவளம் போன்ற பழம் பூக்களும் . முத்தமும் - முத்துப்போன்ற அரும்புகளும் உடைய . கொத்து - பூங்கொத்துக்களையுடைய . புன்னைமாடு - புன்னை மரங்களில் . குருகு இனம் - பறவையினம் , பெடையோடும் . பெருகும் - மகிழ்ச்சி மிகும் ( கொச்சை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 9

அரவினிற் றுயிறரு மரியுநற் பிரமனு மன்றயர்ந்து
குரைகழ றிருமுடி யளவிட வரியவர் கொங்குசெம்பொன்
விரிபொழி லிடைமிகு மலைமகண் மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பாம்புப் படுக்கையில் துயிலும் திருமாலும் , நல்ல பிரமதேவனும் சோர்வடையும்படி , ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும் , திருமுடியையும் அளவிடுதற்கு அரியவராய் , பூக்களிலுள்ள மகரந்தமானது செம்பொன் துகளைப்போல உதிர்கின்ற சோலைகளுக்கு இடையில் , மலை மகளான உமாதேவியார் மகிழும்படி , கரிய , அழகிய கழுத்தினை யுடையவராய்ச் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை நீ எப்பொழுதும் தியானிப்பாயாக !

குறிப்புரை :

அரவினில் துயில்தரும் - பாம்பு அணையில் தூங்கும் . அரியும் , நல் பிரமனும் . அயர்ந்து - சோர்வுற்று , குரைகழல் - ஒலிக்கின்ற வீரகண்டையையணிந்த திருவடியையும் , ( திருமுடி அளவிட அரியவர் ). கொங்கு - மகரந்தம் , செம்பொன் - செவ்விய பொன்னைப் போல . விரி - மலர்களில் விரியப்பெற்ற . பொழில் - சோலை . இடைமிகு - இடையிடையே மிக்குள்ள . மலைமகள் மகிழும்படி கடவுளார் வீற்றிருக்கின்ற கொச்சையையே கருதுங்கள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கடுமலி யுடலுடை யமணருங் கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற வுரைதனை யிகழ்பவர் கருதுநம் மீசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணிந் தேத்தஞாலம்
உடையவன் கொச்சையே யுள்கிவாழ் நெஞ்சமே யஞ்சனீயே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! கடுக்காய்களைத் தின்னும் சமணர்களும் , கஞ்சி உணவை உண்கின்ற புத்தர்களும் , சொல்லுகின்ற சமயபோதனைகளை இகழ்பவர்களாகிய அடியவர்கள் நினைந்து போற்றும் நம் இறைவனும் , தேவர்கள் தன்னைச் சுற்றி நின்று தொழ அவர்கள் நடுவுள் வீற்றிருந்தருளும் நண்பனும் , நான்கு வேதங்களையும் நன்கு கற்ற அந்தணர்கள் பணிந்து போற்ற இந்த உலகம் முழுவதையும் தனக்கு உடைமைப் பொருளாக உடையவனுமாகிய சிவபெருமானது திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தைத் தியானித்து நல்வாழ்வு வாழ்வாயாக ! நீ அஞ்ச வேண்டா .

குறிப்புரை :

கடு மலி உடல் - வெறுக்கத்தக்க துர்நாற்றம் மிக்க உடலையுடைய . சமணரும் சாக்கியரும் ( புத்தரும் ). இடும் - சொல்லும் . அறவுரைதனை - சமயபோதனைகளை . இகழ்பவர்களாகிய அடியார்கள் . கருதும் - நினைந்து ஏத்தும் ( நம் ஈசர் ). வானோர் நடு உறைநம்பனை - தேவர்கள் தன்னைச் சுற்றித் தொழ அவர் நடுவுள் நாயகராக வீற்றிருந்தருளும் சிவன் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண் டிடமென விருந்தநல் லடிகளை யாதரித்தே
ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழின்மறை ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தவிம் மாலைகள் வல்லவர் நல்லர்வா னுலகின்மேலே.

பொழிப்புரை :

தம் அடியவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் கோபித்துக் காலால் உதைத்து மாய்த்தவரும் , காவலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தினைத் தாம் வீற்றிருந்தருளுதற்கு ஏற்ற இடமென ஆராய்ந்து எழுந்தருளியுள்ள நம் தலைவருமான சிவபெருமானிடம் பக்தி கொண்டு , பொருந்திய தொன்மையான புகழ்மிகுந்த , அழகிய , மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய சிறப்புடைய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள் நன்மைதரும் வானுலகில் மேன்மையுடன் வீற்றிருப்பர் .

குறிப்புரை :

காலனைக் காய்ந்து காலினால் செற்றவர் . ஆய்ந்து - இதுவே எவற்றினும் சிறந்ததென ஆராய்ந்து . கொண்டு - தேர்ந்து . கடிகொள் - காவலையுடைய . கொச்சை இடம் என இருந்த அடிகளை ஞானசம்பந்தன் சொன்ன ( மாலை ). ஆய்ந்த - ஆராயந்துணர்த்திய ( இம்மாலைகள் வல்லவர் . வான் உலகில் மேன்மையுடையவராவர் ) மேல் - மேன்மையுடையவர் ; ஆகுபெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் , மேன்மேலும் ஒங்கி எழுந்து ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு சடையில் தாங்கியவர் . இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர் . முறைப்படி , பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும் , நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை உடையவர் . அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

மேலும் மேலும் ஓங்கிப் பரவிவந்த ஓசையையுடைய கங்கை நீரை ஒரு சடைமேல் தாங்கினவர் , உலகையே அழிப்பது போல் பெருக்கெடுத்த நீரை , ஒரு சடையில் தாங்கினான் என ஓர் நயம் . இடுபலி - இடும் பிச்சையைத் தலைகலனாக ஏற்கும் , தம் பெருமான் , தம்பிரான் , தம்மடிகள் - என்பன ஒரு பொருளன ; தாமே தமக்குத் தலைவர் என்பது . பாங்கினால் - முறைப்படி , பகற் காலத்துத் தங்கும் இடம் நீர்வளம் மிக்க துருத்தியாக உடையவர் , இரவுக் காலத்துத் தங்குவது திருவேள்விக்குடியாம் . பாங்கினால் - என்றது , பகற் காலத்துத் திருத்துருத்தியிலும் , இரவுக்காலத்துத் திருவேள்விக்குடியிலும் , தங்கும் முறை பகல் இடம் இரவு இடம் - இடம் என்ற சொற்கள் காலத்தைக் குறித்தன . நீர் - நீரினாலாகும் வளத்துக்கானது காரண ஆகுபெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் பிறைபுல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் , புதர்ச்செடிகள் நிறைந்த சுடு காட்டில் ஒளிவிடும் நெருப்பேந்தி ஆடுபவர் . விளங்கும் ஒளி யுடைய திருநீற்றினைக் கலவைச் சந்தனம் போல மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்பவர் . வெண்மையான பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடையவர் . மணம் கமழும் சந்தனக்குழம்பை அணிந்த இளமையான கொங்கைகளையுடைய உமாதேவியோடு பொருள்வளமிக்க திருத்துருத்தியில் பகற்காலத்தில் தங்கியிருப்பவர் . இரவில் திருவேள்விக் குடியில் வீற்றிருந்தருள்பவர் .

குறிப்புரை :

தூறு - புதர்ச்செடிகள் , துளங்கு ஒளிசேர் - விளங்கும் ஒளியையுடைய திருநீற்றைச் சந்தனமாகக் கொண்டு பூசுவர் , நாறு - கமழும் . சாந்து - சந்தனக் குழம்பையணிந்த , அரிவையோடு - அம்பிகையுடனே . வீறு - செல்வ மிகுதி , துருத்தியாராய் அரிவையொடு ஒருபகல் அமர்ந்த பிரான் இரவிடத்து வேள்விக்குடியில் உறைவர் என வினை முடிவு செய்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

மழைவள ரிளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

குளிர்ச்சியான இளம்பிறையும் , கொன்றை , ஊமத்தை போன்ற மலர்களோடு ஒரு வெண்தலையும் பொருந்திய நீண்ட சடையின் மீது , கரும்பு முதலிய பயிர்களை வளர்க்கும் கங்கை நதியினைத் தங்கச் செய்த எம் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் பிரம கபாலம் ஏந்தியவர் . அவர் இழைகளால் நெய்யப்பட்ட ஆடை யணிந்த அல்குலையுடைய உமாதேவியோடு பகலில் , மேன்மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியில் வீற்றிருந்தருளுவார் . அவரே இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

மேகத்திலுள்ள பிறையும் , மலரும் , நகுவெண்டலையும் பொருந்திய நெடிய சடைமேல் , கங்கைநீர் தங்கச்செய்த எமது சிவபெருமான் , கழைவளர் புனல் - கரும்பு முதலிய பயிர்களைச் செழிப்பிக்கும் புனல் ` கண்ட - செய்த என்னும் பொருளில் வருவதைத் ` திருநகரம் கண்ட படலம் ` என வருதலாலும் அறிக . கண்ணுதலாகிய கபாலியார் என்க . கபாலியர் - தலையோட்டையேந்தியவர் , விழை ( வு ) வளர்துருத்தியார் - மேலும் மேலும் தரிசிக்க ஆசைதரும் திருத்துருத்தியார் . அம்பிகையோடும் துருத்தியாராய்ப் பகலில் அமர்ந்தபிரான் இரவிடத்து உறைவது திருவேள்விக்குடியே என இப்பதிகத்து மேல் வரும் பாடல்கள் தோறும் கொள்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை யரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே

பொழிப்புரை :

இறைவன் கரும்பு வில்லையுடைய பெருந்தகை யாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர் . வண்டுகள் மொய்க்கும் , தேன் மணம் கமழும் தூய கொன்றை மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர் . அவர் தாமரை மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தல மாகும் . அவரே இரவில் வீற்றிருந்தருளுவது திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அ ( ன் ) ன கரும்பு வரிசிலைக்காமன் - கரும்பாகிய கட்டமைந்த அத்தகைய வில்லையுடைய மன்மதன் , பெருந்தகைக் காமன் , கவின் அழித்த - அழகிய உடலை அழித்த , உடலைக்கவின் என்றது தானியாகு பெயர் , அரும்பு - தாமரையரும்பு , கோங்கின் அரும்புமாம் . தனக்கு இறுதி நேர்வதோர்ந்தும் , தேவர்கள் துயர் தீர்தலைக் கருதி யிறைவன் மேற்சென்றமையிற் பெருந்தகைக் காமன் என்றார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தாம்
துளங்குநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

அழகு மிளிரும் சந்திரனும் , பொன் போன்ற கொன்றைமலரும் , வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச் சடைமுடியில் வைத்தருளிய , நெற்றிக்கண்ணையுடைய எங்கள் சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர் . அசைகின்ற முப்புரி நூலணிந்த மார்பினர் . அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

மதியமும் , கொன்றையும் , பாம்பும் தமக்கு இடமாகக் கொள்ளச்சடையில் வைத்த கபாலியார் , துளங்கும் நூல் - அசையும் பூணூல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பொறியுலா மடுபுலி யுரிவையர் வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளு நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்
மறியுலாங் கையினர் மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
வெறியுலாந் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர் . நெடிய பாம்பை ஆபரணமாகப் பூண்டவர் . பிச்சை எடுப்பதை நெறியாகக் கொண்ட தன்மையர் . இத்தகைய எளிமை உடையவர் ஆயினும் , எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர் . மான்கன்று ஏந்திய கையினர் . அத்தகைய பெருமான் உமாதேவியாரோடு பகலில் , நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

கீற்றுக்களையுடைய , கொல்லும் , புலித்தோலுடையவராய் , நெடிய பாம்பை அணியாக அணிந்து வீதியில் திரிந்து , ஏற்பதாகிய பிச்சைத் தன்மையுடையவர் . அத்தகு எளியவராயினும் , தமது பெருமையினை நினைப்பினும் அறியமுடியாதவர் , மறி - மான்கன்று . வெறி - வாசனை .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து
திரிதரு மியல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவர் . புலியின் தோலை அரையில் உடுத்தவர் . திருவெண் நீற்றை அணிந்து கொண்டு திரியும் இயல்பினர் . திரியும் புரங்கள் மூன்றையும் தீயால் வளைவித்து எரித்தவர் . சந்தனக் கீற்றுக்கள் எழுதப் பெற்ற அழகிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு பகலில் திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும் , இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

புரிதரும் - முறுக்குண்ட சடையினர் , தீவளைத்தார் - தீயால் வளைவித்து எரித்தவர் , வரிதரு - சந்தனக்கீற்றெழுதிய . வனமுலை ; வனம் - அழகு .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கனிந் நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்டநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பெரிய கிரீடத்தை அணிந்துள்ள இராவணன் ` இப்பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்து அப் பாலிடுவேன் ` என்று ஆணவத்துடன் எழுந்த அவனது முயற்சியை அழித்தருளியவர் சிவபெருமான் . அவர் பூணூல் அணிந்த திருமார்பினர் . அவர் உமா தேவியோடு பகலில் , விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

பதித்த இரத்தினங்களால் நெடுந்தூரம் விளங்கிப் பிரகாசிக்கும் ஒளியுடைய பெரிய முடியையுடைய , அரக்கன் - என்பது முற்பகுதியின் பொழிப்பு . இந்நெடிய மலையைத் தோண்டியெடுத்து அப்பால் இடுவேன் என்றெழுந்தவன் , ஆள்வினை - முயற்சி , கீழ்ப் படுத்தார் - மேல்எழாதவாறு அழித்தருளியவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

கரைகட லரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனும்
குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற கடலில் பாம்புப் படுக்கையில் துயில்கொள்ளும் திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்த தம் திருவடிகளை , செருக்கழிந்து தொழுமாறு ஓங்கிய நெருப்பு வடிவாய் நின்றவர் சிவபெருமான் . அவர் மலைமகளான உமாதேவியோடு பகலில் வீற்றிருந்தருளும் இடம் வளமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும் திருத்தலமாகும் . இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

கரைகடல் அரவு அணைக்கடவுளும் - ஒலிக்கின்ற கடலில் பாம்பை அணையாகவுடைய திருமாலும் , நிறம் - இங்கு வடிவு என்னும் பொருளில் வந்தது இலக்கணை . கூர் எரி - மிக்கநெருப்பு . குரைகழல் அடி - ஒலிக்கும் வீர தண்டையையுடைய . அடி தொழ - ( தமது செருக்கு ஒழிந்து தாழ்வுற்றுத் ) தொழுமாறு , ( நிறங் கொண்டபிரான் ) தொழ - காரியப்பொருட்டு வினையெச்சம் , வரைகெழுமகள் - இமவானிற் பிறந்த மகள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

அயமுக வெயினிலை யமணருங் குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங் கண்ணியொ டொருபக லமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.

பொழிப்புரை :

பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும் வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும் , குண்டர்களாகிய புத்தர்களும் , இன்முகத்தோடு நயமாகப் பேசி , நகைச்சுவை ததும்பும் செயல்களைச் செய்து திரிபவர்கள் . ஆதலால் அவர் உரைகளைக் கொள்ளாதீர் . கயல்மீன் போன்ற , அழகிய , வரிகளையுடைய நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத்துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக்குடியில் வீற்றிருந்தருளுகின்றார் . அவரை வழிபட்டு உய்வீர்களாக .

குறிப்புரை :

அயம் முகம் வெயில் - பழுக்கக்காய்ச்சிய இரும்பு போற்சுடும் வெயிலில் . நிலை ( தவமென்று நிற்றலையுடைய ) துறவிகளாகிய அமணரும் , குண்டரும் , அவருள் இல்லறத்தாராகிய கொடியோரும் . சாக்கியரும் - புத்தரும் , நயமுக உரையினர் - விரும்பத்தக்க முகத்தோடு பேசுதலையுடையவர் . நகைக்கத்தக்க கதைகளைக் கட்டித் திரிபவர் ஆதலால் அவர் உரையையும் , சரிதையையும் கொள்ளாது . துருத்தியார் வேள்விக்குடியிலிருப்பவர் , அவர் அடி சார்ந்து உய்வீர்களாக என்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

விண்ணுலாம் விரிபொழில் விரைமணற் றுருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் மொலிகழ லாடுவா ரரிவையொ டுறைபதியை
நண்ணுலாம் புகலியு ளருமறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணுலா மருந்தமிழ் பாடுவா ராடுவார் பழியிலரே.

பொழிப்புரை :

ஒளிவிடும் , ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம் செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந் தருளுகின்ற , ஆகாயம்வரை உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த , மணம் பொருந்திய மணற் பரப்பையுடைய திருத்துருத்தி , திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப் போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப் பாடுபவர்களும் , பரவசமடைந்து ஆடுபவர்களும் எவ்விதமான பழியும் , பாவமும் இல்லாதவர்களாவர் .

குறிப்புரை :

துருத்தி :- ஆற்றிடைக் குறையாதலால் விரைமணல் துருத்தி என்றார் . ஒண் ( மை ) கடைக்குறை , கழல் ஆடுவார் - திருவடியைத் தூக்கி நின்றாடுவார் . நண் - அனைவரும் புகலிடமாக அடைவதாகிய - ( புகலி ) பாடுவார் , ஆடுவார் பழி பாவங்கள் இல்லாதவராவர் . பாவம் , உபலட்சணத்திற் கொள்ளப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா ரிடமென விரும்பினாரே.

பொழிப்புரை :

கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர்.

குறிப்புரை :

கோங்கமே, குரவமே - கோங்கமும், குரவமும் எனப் பொருள் தரலால் ஏகாரம் எண்ணுப்பொருள். கொகுடி முல்லை - முல்லைவகை. விம்மு - பருத்த, பாதிரியாகிய இம்மரங்களை அடித்துக்கொண்டு பெருகும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறையைச் சடைமுடி அடிகளார் இடமென விரும்பினார் என்க.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பினல்ல
சந்தமா ரகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
எந்தையா ரிணையடி யிமையவர் தொழுதெழு மியல்பினாரே. 

பொழிப்புரை :

சிறு அளவில் மதம் சொரியும் யானைக் கன்றுகளின் தந்தங்களையும், நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் ஆகிய பயன் தரக்கூடிய மரங்களையும் விழும்படி மோதி, அலைகளால் அடித்து வரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைத் தேவர்கள் தொழுது எழும் தன்மையர்.

குறிப்புரை :

மந்தமாய் - சிறு அளவினதாக, இழி - சொரியும்; மதம் என்றதனாலும், இள மருப்பு என்றதனாலும், யானைக் கன்றுகளின் தந்தங்கள் என்க. தந்தங்களை உந்தும் எனவே யானைக் கன்றுகளையும் உந்தும் என்பது அருத்தாபத்தியாற் கொள்ளப்படும். (சந்தனம், அகில், சாதி) யாகிய, பலன்கள் - பயன் தரக் கூடிய இம் மரங்களையும். தகைய - தன்னிடத்து விழ. மோதி - சாடி. உந்தும் - அடித்துவரும் காவிரி. எந்தையார் தமது இணையடியை இமையவர் தொழுது எழும் தன்மையினர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

முத்துமா மணியொடு முழைவள ராரமு முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகடம்மேல்
சித்தமா மடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே.

பொழிப்புரை :

முத்து, மணி, குகைகளின் அருகில் வளரும் சந்தனமரம் இவற்றை வாரி, தள்ளி மோதும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பெருமை மிகுந்த பொன்னூமத்த மலரோடு, சந்திரனையும் அணிந்து உள்ள சடைமுடி உடைய தலைவரான சிவபெருமானைச் சித்தத்தால் வழிபடும் அடியவர்கள் சிவகதி பெறுவது உறுதி.

குறிப்புரை :

முழைவளர் - குகைகளின் அருகிலே வளர்ந்த. ஆரமும் - சந்தன மரங்களையும். முகந்து - வாரி. நுந்தி எத்தும் - தள்ளி மோதும் காவிரி.
மாமத்த மலர் - பெருமை பொருந்திய பொன்னூமத்த மலரோடு. அடிகள் தம்மேல் - அடிகளிடத்து. சித்தமாம் அடியவர் - சித்தம் வைக்கும் அடியவர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே. 

பொழிப்புரை :

உறைக்கும் மிளகுச் செடிகளோடு, வாழையும் கலந்து தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும் குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் மான்கன்றை ஏந்திய கையையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது, உள்ளம் உருகப் போற்றுபவர்கள் வானுலகடைந்து மேன்மையுடன் மகிழ்ந்திருப்பர்.

குறிப்புரை :

கறியும் - உறைக்கும். மாமிளகு ஒடு - மிக்க மிளகுச் செடிகளோடு. கறி - கறிப்பு எனவும் வழங்கும்.
அவரது மலரடிகளைத் தொழுது எழ எண்ணும் உள்ளக் குறிக்கோளையுடையவர் என்பது, மலரடி ... ... குறியினார் என்பதன் பொருள். மிகக் கூடுவார் - என்றும் கூடிவாழ்வார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே. 

பொழிப்புரை :

மரக்கிளைகளில் சொரிந்த தேனோடு, மேகம் பெய்த முன்னீரும் கலக்கக் காட்டில் வசிக்கும் மயிலின் பீலியும், மலைச்சாரலில் விளையும் பண்டங்களும் உந்தித் தள்ளி ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தை, பெருமையுடைய சடைமுடியுடைய தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக் கொண்டுள்ளார்.

குறிப்புரை :

கோடு இடை - மரக் கிளைகளில், சொரிந்த தேன். கோட்டிடை எனற்பாலது கோடிடை என்றாகியது புறனடையாற் கொள்க. கொண்டல் - மேகம். வாய்விண்ட - பெய்த. முன்நீர் - முதற்பெய்த நீர். \\\\\\\"தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து.\\\\\\\" (தி.11 திருமுருகாற்றுப்படை. 9) காடு - சோலை. கடறு - வனம். ஓடு உடை - ஓடிவருதலையுடைய காவிரி.

பண் :சாதாரி

பாடல் எண் : 6

கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.

பொழிப்புரை :

அழகிய நறுமலர்களுடன், தூபமும், சந்தனமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட்டதும், இனிய மாங்கனிகளை அடித்து அசைந்துவரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானை நினைந்து போற்ற வல்லவர்களின் வலிய தீவினைகள் யாவும் தீரும்.

குறிப்புரை :

வாலியார் வழிபடப் பொருந்தினார்:- தலப்பெயர்க் காரணங் கூறியவாறு. அடுத்த பாட்டிலும் இக்குறிப்பு விளக்கப்படுகிறது. ஆலும் - அசைந்து வருகிற, காவிரி. வல்வினைகள் - எளிதில் நீங்காத கன்மங்கள். வீடு - விடுதலையாம். வீடு - முதனிலை திரிந்த தொழிற் பெயர்.

பண் : சாதாரி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 8

நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே. 

பொழிப்புரை :

நீலமணிபோன்ற கருநிற அரக்கனான இராவணனை, இருபது கரத்தொடும் வாலினாற் இறுகக் கட்டிய வாலியார் வழிபடப் பெருமைபெற்ற கோயில், ஏலம், பச்சிலை, இலவங்கம், இஞ்சி, மஞ்சள் இவற்றை உந்தி, ஒலித்து, ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

ஒல்க - குழைய, \\\\\\\"ஒல்கு தீம்பண்டம்\\\\\\\" (சீவக சிந்தா மணி - 62) இராவணனை வாலினாற் கட்டிய வாலியார். இலை - பச்சிலை மரம். குறிப்பு:- எட்டாவது பாடல் மண்ணின் மிசை வாழ்வார்கள், பிழைத்தாலும் வந்தடையிற் கண்ணுதலோன் தன் கருணைக் கைக்கொள்ளும் எனக் காட்டவருவது. இப்பதிகத்து வாலியின் பெருமையோடு படுத்தி இராவணனைக் கூறியமை பாராட்டத்தக்கது. வாலியார்:- ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவி. (தொல். சொல். சூ - 27).

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பொருந்திறற் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தநங்கனை யநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண் டோங்கிய வடிகளாரே. 

பொழிப்புரை :

போர்செய்யும் தன்மையுடைய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை, உமாதேவி அஞ்சுமாறு உரித்து வியப்படையும்படி செய்தவர் சிவபெருமான். அவர் பெருந்திறமை மிக்க மன்மதனின் உடல் அழியுமாறு நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்த பெருமையுடையவர். பலவிதப் பொருட்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான், பிரமனும், திருமாலும் தம்மைத் தேடித் துன்புறச்செய்து நெருப்பு மலையாய் ஓங்கி ஒளிர்ந்த தலைவராவார்.

குறிப்புரை :

பெருந்திறத்து அநங்கன்; உடல் இன்றியே பெரிதும் வருத்தும் தன்மை பெருந்திறம் என்னப்பட்டது. அநங்கனை - மன்மதனை. அந் அங்கமா - உடம்பு இல்லாதவாறு. அநங்கன் - வாளாபெயராய் நின்றது. அருந் திறத்து - அரிய வலியையுடைய. இருவரை - பிரம விட்டுணுக்களை. அல்லல் கண்டு - துன்புறச் செய்து. ஓங்கிய - அழலாய் ஓங்கிய. வடகுரங்காடுதுறையடிகளார் அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் என்க.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

கட்டமண் டேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் மறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே. 

பொழிப்புரை :

கடுக்காய்களைத் தின்கின்ற கழுக்களான கட்டுப் பாட்டையுடைய சமணர்களும், புத்தர்களும், மன இரக்கமின்றிக் கூறும் அறவுரைகளை கொள்ளாதீர். பெரிய மலையிலுள்ள பொருள்களைத் தள்ளிப் பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சீலமிக்க சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும்.

குறிப்புரை :

கட்டு - கட்டுப்பாட்டையுடைய. அமண் (உம்) தேரரும் - அமணரும், புத்தரும். அமண்:- தூது, அரசு என்பன போல விகுதி தொக்குநின்றது. கடுக்கள் தின் - கடுக்காய்களைத் தின்கின்ற. கழுக்கள் - கழுந்து போல்பவர். கசிவு - மன விரக்கம். பிட்டர் - விலக்கத்தக்கவரும். மயிர் பறித்த தலையினராதலின் அமணரைக் கழுக்கள் என்றார். பிட்டர் - பிரஷ்டர் என்ற வடசொல்லின் திரிபு. அறவுரை - தர்மோபதேசங்கள். கொள்ளலும் - கொள்ளன்மின் (கொள்ளும் உடம்பாடு) எதிர்மறைப் பன்மை ஏவல் வினைமுற்று. கொள்+அல்+உம்; அல் - எதிர்மறை இடைநிலை. உம் - ஏவற் பன்மை விகுதி. வரைப் பண்டம் - மலையில் உள்ள பொருள்கள். அவை:- முதல் ஐந்து பாடல்களிலும் கூறியவை. உந்தி எட்டும் - தள்ளிப் பாயும். மா காவிரி \\\\\\\"இடையுரி வடசொலின்\\\\\\\" (நன்னூல் சூத். 239) என்னும் விதிப்படி இயல்பாயிற்று. சிட்டன் - சீலத்தை விரும்புவோன், சிவபிரான். \\\\\\\"சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை\\\\\\\". (தி.5. ப.81. பா.1)

பண் :சாதாரி

பாடல் எண் : 11

தாழிளங் காவிரி வடகரை யடைகுரங்காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியா னருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்
கோழையா வழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே. 

பொழிப்புரை :

பள்ளம் நோக்கி ஓடிப்பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பிறைச்சந்திரனை அணிந்த முறுக்குண்ட சடைமுடியுடைய புண்ணிய மூர்த்தியான சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர்.

குறிப்புரை :

தாழ் - ஓடிப் பாய்கின்ற. \\\\\\\"பள்ளந்தாழுறு புனலில்\\\\\\\" (தி.8 திருவாசகம் 25.) இளம் காவிரி (மென்புனலையுடைய காவிரி), இளந்தென்றல் என்பதுபோல. கருது - தியானித்துப் பயனெய்தத்தக்க பாடல்.
கோழையா அழைப்பினும் - கோழைமிடறோடு பாடினாலும். கோழைமிடறு பாடற் கேலாதது \\\\\\\"கோழைமிடறாக கவிகோளும் இலவாக இசைகூடும் வகையால்\\\\\\\" எனவரும் திருவைகாவூர்ப் பதிகத்தாலும் அறிக. (தி.3 ப.71. பா.1.)
அழைத்தல் - பாடுதல். அழைத்தல் என்பதற்கு மறு சொல் விளித்தல் என்பது. அதன் பிறிதொரு பொருள் பாடுதல் என்பது. இதனை \\\\\\\"கொம்பர் இருங்குயில் விளிப்பன காணாய்\\\\\\\" (மணிமேகலை - பளிக்கறை புக்க காதை. 13.) நீடு - என்றும் அழியாத. வானுலகு - முத்தியுலகம்.

பண் :சாதாரி

பாடல் எண் : 1

மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

பொழிப்புரை :

நல்ல நெஞ்சமே ! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக . அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும் . மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும் . மறுமையில் நற்கதி தரும் . மற்றும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும் . போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும் . அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்க , நெருங்கியுள்ள , பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருள்கிற அருட்செல்வர் ஆவார் .

குறிப்புரை :

முல்லை நிலத்தில்கொன்றை மரங்கள் பூத்தமலர்களையுதிர்க்க அருகிலேயுள்ள செருந்தி மரங்கள் பொன் போன்று மலர்கள் விரிக்கும் திருநெல்வேலி என்றது , ` செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் ` மாந்தருறைவது எனக்குறித்தவாறு . திருநெல்வேலி யுறைவர் செல்வர் , அவர் நாமமாகிய திரு ஐந்தெழுத்துக்கள் , மருந்து , மந்திரம் , மறுமைக்கண் நன்மை விளைக்கும் நெறிகள் , மற்றும் எல்லா நன்மைகளும் ஆகும் . அன்றியும் தீர்த்தற்கரிய துயரங்களும் கெடும் . பொருந்துதண் - குறிப்பு ( பா .8.) காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளு மியல்பதுவே
துன்றுதண் பொழினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

பொழிப்புரை :

நெருங்கிய குளிர்ந்த சோலையில் நுழைந்து , செழித்து வளர்ந்துள்ள தாழம்பூவில் படிந்து தென்றல் காற்று வந்து வீசுகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் எப்போதும் ஒரே தன்மையுடையவர் என்று நினைப்பதற்கு முடியாதவர் ஆவர் . அவர் இடபவாகனத்திலேறிச் செடிச்சியர் போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் சென்று பிச்சை ஏற்கும் இயல்பும் உடையவர் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

நெருங்கிய குளிர்ந்த சோலைகளிற் புகுந்து , தழைத்து எழுந்த தாழம்பூமடல் பொடிகளைத் திமிர்ந்து கொண்டு தென்றல் வந்துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாம் , என்றும் ஓரியல்பினரென நினைக்க முடியாதவர் . ( சில சமயம் ) காளையில் ஏறிச்சென்று செடிச்சியர் ( வேடர் ) போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் பிச்சையேற்கும் தன்மையும் அவருக்கு உண்டு .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பொறிகிள ரரவமும் போழிள மதியமுங்கங் கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலும்
செறிபொழி றழுவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

பொழிப்புரை :

புள்ளிகளையுடைய பாம்பையும் , ஒரு கூறாகிய இளம்பிறைச் சந்திரனையும் கங்கை என்ற சுருண்ட கூந்தலை யுடையவளையும் சடைமீது சுற்றி அணிந்து , வெண்மையான திருநீற்றைப் பூசி , பிறர் மயங்கும் வண்ணம் நடந்து , நல்ல கிளி போலும் இனிமையான சொற்களைப் பேசும் தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளின் மனத்தை வசப்படுத்தும் சிவபெருமான் , நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட் செல்வர் ஆவார் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

நெறிபடு - தழைத்த . குழலியையும் , என உம்மையை விரிக்க . சுலவி - கலந்தணிந்து ; ( சுலவி ) இகரம் வினையெச்சவிகுதி , கிறி - விளையாட்டு , பட - பொருந்த , நடந்து - பிச்சைக்குச் சென்று , கிளிமொழியவர் - தாருகாவனத்து முனிபத்தினியர் முதலியோர் , மனம் கவர்வர் போலும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை மீதெழு கொடிமதியம்
தீண்டிவந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.

பொழிப்புரை :

நெருங்கிய பெரிய மாடங்களிலும் , மாளிகைகளிலும் , மேலே கட்டப்பட்ட கொடிகள் சந்திரமண்டலத்தைத் தொட்டு அசைகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வரான சிவபெருமான் , தரிசிப்பதற்கு இனிய மலை மகளான உமாதேவி ஒளிவிடும் பற்களால் புன்முறுவல் செய்து அருகிலிருந்தருளவும் , பாம்பை ஆபரணமாக அணிந்து ஊருக்குப் புறம்பேயுள்ள சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு நடனமாடுதலை விரும்புபவர் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

அழகுபொருந்திய உமாதேவியார் ஒளியையுடைய வரிசையான பற்களால் சிரிப்புடையவராய் அருகிலிருந்தருளவும் , அதற்கேற்ற வண்ணம் நடந்து கொள்ளாமல் பாம்பை அணிந்த . ஊருக்குப் புறம்பே உள்ளதாகிய சுடுகாடு , நாடகமேடையாகக் கூத்து ஆடுதலைப் பேணியவராய் இருப்பர் , திருநெல்வேலியுறை செல்வர் . மாடங்களிலும் , மாளிகைகளிலும் கட்டியுள்ள கொடி , சந்திரமண்டலம் வரை உயர்ந்து சந்திரனைமோதி உலாவும் திருநெல்வேலி உறை செல்வன் இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா இயல்பினன் என்பது முதலிரண்டடிகளின் கருத்து . பேணி - குறிப்பு வினைமுற்று முற்றெச்சமாயிற்று . ` புறங்காடரங்கா நடம் ஆட வல்லாய் ` என ( தி .4. ப .1. பா .10.) இத்தொடர் வாகீசர் வாய்மையிலும் வழங்கியுள்ளது .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

ஏனவெண் கொம்பொடு மெழில்திகழ் மத்தமு மிளவரவும்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனினல் ஐந்துகந் தாடுவர் பாடுவ ரருமறைகள்
தேனில்வண் டமர்பொழிற் றிருநெல்வேலி யுறைசெல்வர் தாமே.

பொழிப்புரை :

தேன்பருக வண்டுகள் அமர்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான் பன்றியின் கொம்புடன் , அழகிய ஊமத்த மலரையும் , இளம் பாம்பையும் , வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் , அணிந்த சடைமுடி உடையவர் . கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர் . பசுவிலிருந்து பெறப்படும் பால் , தயிர் , நெய் , கோசலம் , கோமயம் , ஆகிய பஞ்சகவ்வியத்தால் திருமுழுக்காட்டப்படுபவர் . அரிய வேதங்களை அருளியவர் .

குறிப்புரை :

ஏனம் - பன்றி , எழில் திகழ் - அழகு விளங்குகின்ற , மத்தம் - பொன்னூமத்தை , கூன் , நல் , வெண்பிறை , ஆனின் - பசுவிற் கிடைப்பதாகிய . நல் - நல்ல . ஐந்து - பஞ்சகவ்வியத்தை , உகந்து ஆடுவார் , அரு மறைகள் பாடுவார் , திருநெல்வேலியுறை செல்வர்தாம் , நல் - தூயன ஆகிய , ` ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர் ` ( ப .1. பா .1.) என்புழியும் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியத ளாடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

புதர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான் , மண்டையோட்டை மாலையாக உடையவர் . சினமிகு வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர் . விரிந்த சடையுடையவர் . திருவெண்ணீறு அணிந்த மார்பினர் . புலித்தோலாடை அணிந்தவர் . கோபம் பொங்கும் பாம்பை அணிந்தவர் , அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர் . தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளை மயங்கும்படி செய்தவர் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

வெடிதரு - வெடித்த . தலை - மண்டையோடு . ( பிரம கபாலத்தை ) தீயில் வெடித்த தலைபோன்றது என்க . வேனல் - வெப்பம் . இங்குச் சினத்தைக் குறித்தது . வெள் ஏற்றினர் - வெண்மையையுடைய ஏற்றினர் . வெடிதருதலை என்பதை , ` குணந்தான் வெளிப்பட்ட ... கொடியிடை ` என்னும் திருக்கோவையார் போலக் கொள்க . செடி - புதர்கள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

அக்குலா மரையினர் திரையுலா முடியின ரடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசைக்கின்ற சோலைகளையுடைய , எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வராகிய சிவபெருமான் , சங்குமணிகளைக் கட்டிவிளங்கும் இடையினையுடையவர் . அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய தலைவர் . அவரை மதியாது தக்கன் செய்த யாகத்தை அழித்த திறமையையுடையவர் . செவ்வொளி படரும் சடையினர் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

அக்கு - அக்குப்பாசி . உலாம் - அசைகின்ற . அரையினர் - இடுப்பையுடையவர் . திரை - ( கங்கை ) அலைகள் . உலாம் - உலாவும் . முடியினராகிய அடிகள் . தக்கனார் - உயர் சொற்றானே குறிப்பு நிலையால் இழிபு விளக்கிற்று என்பர் சேனா வரையர் . ( தொல் , சொல் 27 சூ . உரை .) சாடிய - அழித்த . சதுரனார் - திறமையையுடையவர் . கதிர்கொள் செம்மை புக்கது . ஓர் புரிவினர் - செவ்வொளி பொருந்திய சடையை யுடையவர் , புரிவு - முறுக்குதலை உடைய சடைக்கு ஆயினமையின் தொழிலாகுபெயர் , புரிசடை என வருதலுங் காண்க . வரிதரு - கீற்றுக்களையுடைய வண்டு , முரலுதல் - மூக்கால் ஒலித்தல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகடோ ணெரிதரவே
உந்திமா மலரடி யொருவிர லுகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழின் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற , பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான் , பெருமை மிகுந்த கயிலை மலையை அந்நாளில் பெயர்த்தெடுத்த இராவணனின் தலைகளும் , தோள்களும் நெரியும் வண்ணம் , சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நக நுனியை ஊன்றி வருத்தினார் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மாவிலங்கல் - பெருமையையுடைய , கயிலை மலையை , அன்று - முந்தி . எடுத்தவன் முடிகளோடு தோள்நெரிய . உந்தி - அமிழ்த்தி . ஒரு விரலின் நகத்தின் நுனியால் அடர்த்தார் . கந்தம் ஆர்தரு - வாசனை நிறைந்த சோலைகளில் குரங்குகள் பாய்வதால் மலர்களிலுள்ள தேன்துளிகள் சிந்து பூந்துறையின்கண் மணக்கின்ற திருநெல்வேலி . குறிப்பு : இங்குச் சிந்துபூந்துறையைக் குறித்ததுபோலவே இப்பதிகம் முதற்பாடலில் பொருந்துதண் - என்பது கண்ணுதல் என்பதுபோல முன் பின்னாகத் தொக்க தொகையெனக் கொண்டு தண் பொருந்தம் எனத் தாமிரபரணி நதியைக் குறிப்பித்தனர் எனலும் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பைங்கண்வா ளரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
தங்கணா வருளென வவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர வரிவைய ராடல்பேணத்
திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

பசுமையான , வாள்போன்ற ஒளிபொருந்திய கூரிய கண்களையுடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலுடன் , குளிர்ந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பிரமனும் முழுமுதற்பொருளான இறைவனைக் காணமுடியாமல் , அழகிய கண்களையுடைய பெருமானே அருள்புரிக என்று அவரவர் தாம்தாம் அறிந்த முறையில் வணங்கும் வண்ணம் விளங்கும் சிவ பெருமானே , அந்தணர்கள் ஒன்றுகூடி நால் வேதங்களைப் பாடவும் , பெண்கள் நடனமாடவும் , மாத விழாக்களும் , நாள் விழாக்களும் நிறைந்துள்ள திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராவார் . அவரை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

பைங்கண்வாள் அரவு - பசிய கண்களையும் ஒளியையும் உடைய அரவு ; அணையான் காணா - ( அடியையும் முடியையும் ) காணாமல் . அங்கணா - சிவபெருமானே . அங்கணன் - சிவபெரு மானுக்கு ஒருபெயர் . திங்கள் விழா - நாள் விழா . மல்கு - மாதோற்சவங்களும் , நித்தியோற்சவங்களும் பொருந்திய திருநெல்வேலி . கூட்டம் ஆகிய அந்தணர் வேதங்கள் பாடிவரவும் , பெண்கள் நாட்டியம் ஆடவும் நடக்கும் திருவிழாக்கள் நான்மறையவர் - நால்வேதங்களையும் பாடி வருபவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

துவருறு விரிதுகி லாடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் மண்ணலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே.

பொழிப்புரை :

மருதந்துவரில் தோய்த்த மஞ்சட் காவிஆடை அணியும் புத்தர்களும் , வேடநெறி நில்லாத சமணர்களும் கூறுகின்ற புன்மொழிகளைப் பயனற்றன என்று நினையுங்கள் . எம் தலைவராகிய சிவபெருமான் , கண்டார் மனங்களைக் கவர்கின்ற , கொடி விளங்கும் மாளிகையின் நிலா முற்றத்தில் மயில்கள் நடமாட , அதனைக் காணத் தேவர்களும் வருகின்ற , சந்திரன் தவழ்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வர் ஆவார் . அவரை வழிபடுங்கள் .

குறிப்புரை :

துவர் உறு - மருதந்துவரில் தோய்த்த , துகில் ஆடை - துகிலாகிய ஆடை . ( இருபெயரொட்டுப்பண்புத்தொகை ) ஆடையர் - புத்தர் . வேடம் இல் - வேடநெறி நிற்றல் இல்லாத ; சமணம் . சிறு சொ ( ல் ) லை - புன்மொழிகளை , அவம் - பயனற்றது , நினையும் - ( நினையுங்கள் ) ஏவற்பன்மை , எம் அண்ணலார் தாம் திருநெல்வேலியுறை செல்வராவார் . அவரையடைந்து உய்யுங்கள் என்பது குறிப்பெச்சத்தாற் பெறவைத்தார் . கவர்உறு - கண்டார் மனங்களைக் கவர்கின்ற மாளிகை சூளிகை , மேல் வீட்டில் ஓர் உறுப்பு , மயில்கள் ஆட - அதனைக் காண்பதற்கு , திவர் - தேவர்கள் , ( திவ் - தேவலோகம் ) உறு - அடையும் ( திருநெல்வேலி ) மாளிகைகளில் மதி தவழும் ( திருநெல்வேலி ).

பண் :சாதாரி

பாடல் எண் : 11

பெருந்தண்மா மலர்மிசை யயனவ னனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி யுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடு மருவினையே.

பொழிப்புரை :

பெரிய , குளிர்ந்த , சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனைப் போன்றவர்களான தாம் விரும்பும் கல்வியினால் மனம் பண்பட்ட , சிறந்த வேதங்களை உணர்ந்த அந்தணர்களை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமானைப் போற்றி , பொருந்திய நீர்நிலைகள் நிரம்பிய சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாமாலைகளைப் பாடிப் பரவசத்துடன் ஆட , போக்க முடியாத வினைகளெல்லாம் அழிந்து போகும் .

குறிப்புரை :

பேணு - பாராட்டத்தக்க , கல்வித்திருந்தும் - கல்வியால் நிரம்பிய மறையவர் , அதனால் அயனையனையவர் பாடி , ஆட திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் முத்தமிழ்விரகர் ஆகையால் அவர் தமிழ்ப் பாடல்கள் இயற்றமிழ்ப் பாடல்களேயன்றிப் பாடுதற்குரிய இசைப் பாடல்களாகவும் ஆடுதற்குரிய பாடல்களாகவும் உள்ளன என்பது இங்குக் குறித்தவாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொண்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
கடிகொண்மா மலரிடு மடியினர் பிடிநடை மங்கையோடும்
அடிகளா ரருள்புரிந் திருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் உலகில் பொருந்திய இடப வாகனம் உடையவர் . பாய்கின்ற புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளவர் . மன்னுயிர்களின் பாவத்தைப் போக்குபவர் . திருவெண்ணீறணிந்த திருமேனியர் . பூதங்களாகிய படைகளை உடையவர் . முப்புரி நூலணிந்த மார்பினர் . பூசிக்கும் அடியவர்களால் நறுமணம் கமழும் மலர்கள் இடப்படுகின்ற திருவடிகளையுடையவர் . அத்தகைய பெருமான் பெண்யானை போன்ற நடையுடைய உமாதேவியோடும் அன்பர்களுக்கு அருள்புரிந்து வீற்றிருந்தருளும் இடமாவது திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

படியுள் ஆர் - பூமியிற் பொருந்திய , ( விடை ). பூதம் ஆர் படையினர் - பூதங்களாகிய நிறைந்த சேனைகளையுடையவர் . பூண் அம் நூலர் - பூணநூலர் . கடிகொள் - வாசனையையுடைய . மலர் இடும் அடியினர் - ( பூசிக்கும் அடியவர் ) மலர்களை இடுகின்ற அடியையுடையவர் . பிடி - பெண்யானை . மங்கையோடும் அன்பர்களுக்கு அருள்புரிந்து இருக்கும் இடமாவது அம்பர்மாகாளம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கையின்மா மழுவினர் கடுவிட முண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனிய ரூனம ருடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினின் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் கையில் பெருமையான மழுப் படையை உடையவர் . கொடிய விடமுண்டதால் கரிய கண்டத்தை உடையவர் . சிவந்த திருமேனியர் . ஊன்பொருந்திய உடைந்த மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவர் . உலகனைத்திற்கும் உரியதான சிற்சபையில் அந்தணர்கள் தொழுது போற்ற நடனமாடும் தலைவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கொடிய விடத்தையுண்டதனால் எய்திய கறுப்பு அமைந்த கழுத்தை உடையவர் . ஊன் அமர் - ஊன் பொருந்திய . உடைதலை - உடைந்த மண்டையோட்டில் . பலிதிரிவார் - பிச்சையேற்பதற்குத் திரிபவர் . வையம் ஆர் பொதுவினில் - உலகமனைத்தினுக்கும் உரியதான சிற்சபையில் ; நடம் அது ஆடும் ஐயன் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பரவின வடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
அரவின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

இறைவர் தம்மை வணங்கிப் போற்றும் அடியவர்கள் படும் துயரத்தைத் தீர்ப்பவர் . தம்மிடத்து அன்பில்லாதவர்கள்பால் தோன்றாத நிலையில் மறைந்திருப்பவர் . நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமுடையவர் . பிரமகபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர் . நண்பகல் போல் சுடுகின்ற முதுகாட்டில் இரவில் நெருப்பேந்தி ஆடும் வேடத்தை உடையவர் . பாம்பை அணிந்துள்ளவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும் .

குறிப்புரை :

தம்மைத் துதிக்கும் அடியவர் படும் துயரத்தை அழிப்பவர் . அன்பில்லாரிடத்தே ஒளித்துக்கொள்பவர் , கனல் அன்ன உருவினர் . படுதலை - இறந்தாரது தலையில் . பலி கொடு - பிச்சை யேற்றலை மேற்கொண்டு , ஏகும் - ஊர்தோறும் செல்கின்ற . இரவினர் - இரத்தலையுடையவர் . பகல் எரி - நண்பகலைப்போலச் சுடுகின்ற . முதுகாட்டில் , திருக்கூத்தாடிய திருக்கோலத்தையுடையவர் . அரவத்தைப் பூண்டவர் , அவர் அரிவையோடு இருக்கும் இடம் . அம்பர் மாகாளம் . இரவினர் - பகலெரிகான் - சொன் முரண் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றின ரெரிபுரி கரத்தினர் புரத்துளா ருயிரைவவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை
ஆற்றின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவெண்ணீறணிந்த மேனியர் . நீண்டு தொங்கும் சடையினர் . கரங்களில் பலவகை ஆயுதங்களை ஏந்தியுள்ளவர் . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர் . வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர் . நெருப்பேந்திய கரத்தினர் . திரிபுர அசுரர்களின் உயிரைக் கவரும் எமனாக விளங்கியவர் . கொடிபோன்ற இடையுடைய உமாதேவி கோபம் கொள்ளும்படி கங்கையாகிய நங்கையை மகிழ்வுடன் சடையில் தாங்கியவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வார் - தொங்கும் . ( சடையினர் .) படையினர் - ஆயுதங்களை யேந்தியவர் . நிமலர் - அடைந்தவரது மலம் இல்லையாகச் செய்பவர் . எரிபுரிகரத்தினர் - நெருப்பை விரும்பியேந்தும் கையையுடையவர் , திரிபுரத்து அசுரர்களுக்கு உயிரைக் கவரும் யமனாக இருப்பவர் . கொடி இடை - பூங்கொடிபோலும் இடையையுடைய உமாதேவியார் , முனிவு உற - பிணங்க . நனிவரும் குலவு கங்கை - மிகப் பொருந்திய மகிழ்ச்சியை உடைய கங்கை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

புறத்தின ரகத்துளர் போற்றிநின் றழுதெழு மன்பர்சிந்தைத்
திறத்தின ரறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீ ழருள்புரிந்த
அறத்தின ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

இறைவர் உள்ளும் , புறமும் நிறைந்தவர் . உள்ளம் உருகிப் போற்றிக் கண்ணீர் மல்கும் அன்பர்களின் சிந்தையில் விளங்குபவர் . அறிவில்லாத , அழிதற்கேதுவாகிய புத்தி படைத்த தக்கனின் வேள்வியை அழித்தவர் . சனகர் , சனந்தரர் , சனாதரர் , சனற்குமாரர் என்ற நான்கு முனிவர்கட்குக் கல்லாலின் கீழிருந்து அறமுரைத்து அருள்புரிந்தவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

புறத்தினர் அகத்துளர் - உள்ளும் புறமும் நிறைந்தவர் . ( அன்பர் சிந்தையின் வண்ணம் வருபவர் .) செதுமதி - அழிதற்கேதுவாகிய புத்தி . செற்ற - அழித்த .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பழகமா மலர்பறித் திண்டைகொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்
அழகனா ரரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

இறைவர் , தினம்தோறும் மலர் பறித்து மாலை கட்டி வழிபாடு செய்யும் அடியவர்களைவிட்டு நீங்காத இளையர் . தம் குணங்களைப் புகழ்ந்து போற்றும் அன்பர்கள் கூட்டத்திலிருக்கும் அழகர் . யானைத் தோலை உரித்துப் போர்த்தி ஆடுபவர் . எலும்பு மாலை அணிந்துள்ளவர் . காளியால் வணங்கப்பட்ட அழகர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பழக - ஒரு நாளும் இடைவிடாமல் ; எந்நாளும் ( மலர் பறித்து இறைஞ்சுவார் ) ` முட்டாதே தொட்டால் முடிக்க சிவபூசை ; விட்டான் நரகில் விழும் ` என்ற கருத்து . இனிப் பழக என்பதற்கு உண்மைச் சரியை உபாயச்சரியை என வருவனவற்றுள் உபாயங் கூறியதாகக் கூறலும் ஒன்று . அதை ` சரியையோரிரண்டும் தவிராதவர் , கிரியையோரிரண்டுங் கெழுமுற்றவர் ... மரிய தூய மடங்கள் அநந்தமே ` ( பேரூர்ப் புராணம் . திருநகரப்படலம் - 83.) செறிந்த - நீங்காத . தமது குணங்களைப் புகழ்ந்து துதிப்பவர் பலர் கூடும் கழகத்தில் இருப்பவர் என்பது இரண்டாமடியின் கருத்து . கரி உரித்து ஆடு - யானையை யுரித்து அம்மகிழ்ச்சியால் ஆடிய . ( கங்காளர் ) கங்காளம் - முழு எலும்புக் கூடு . திருவிக்கிராமாவதாரத் திருமாலின் செருக் கடக்கிய அறிகுறி . அம்பன் , அம்பாசூரன் என்ற அரக்கரைக் கொன்ற பழிதீரக் காளி பூசித்தமை குறித்து , காளியேத்தும் அழகனார் என்றார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவ ரருந்தவ முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவா ரிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

இறைவர் சங்கினாலாகிய குழையைக் காதிலணிந்துள்ளவர் . நெருப்புப் போன்ற செந்நிற மேனியர் . தமது அருளால் எங்கும் வியாபித்துள்ளவர் . அரிய தவம் செய்யும் முனிவர்களுக்குத் தம்மையே அளித்து மகிழ்பவர் . அவர் அங்கு , பொங்கும் நீர் பரந்த அரிசிலாற்றினைத் தீர்த்தமாகக் கொண்டு , வேதத்தின் ஆறு அங்கங்களை ஓதுபவராய் வீற்றிருந்தருளும் இடம் ஆற்றின் வடகரையில் உள்ள திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தமது அருளே எங்குமாய் இருந்தவர் :- ` யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய்முக்கண் , ஆதியை யடையும் அம்மா அங்கதுபோலத் தொல்லை , வேதமதுரைக்க நின்ற வியன்புகழனைத்தும் மேலாம் , நாதனையணுகும் எல்லா நதிகளும் கடல் சென்றென்ன `. ( கந்தபுராணம் உபதேசப்படலம் 17 ) பரந்தரிசிலின் - பரந்த அரிசிலாற்றை , ( திருத்தம் - தீர்த்தம் ) அரிசில் ஆற்றைத் தீர்த்தமாகக் கொண்டு , அதன் வடகரை இருப்பு இடம் அம்பர்மாகாளம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற வடர்த்தவர் கோயில்கூறில்
பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்
அரிசிலின் வடகரை யழகம ரம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் , போர்புரியும் வில்லுடைய மன்மதனை எரித்துச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்தவர் . சோலைகளையுடைய இலங்கை மன்னனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்த அப்பெருமான் வீற்றிருந்தருளும் கோயில் , பெரிய மலையினின்றும் நவமணிகளையும் , மயிற்பீலி , ஏலம் முதலியவற்றையும் மிகுதியாக அடித்துக் கொண்டு வரும் அரிசிலாற்றின் வட கரையில் அமைந்துள்ள அழகிய திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும் .

குறிப்புரை :

பொருசிலை - போர்புரியும் வில் , மதனன் - மன்மதன் , இலங்கைக் குரிசில் - இராவணன் ( குரிசில் இங்கு அரசனென்னும் பொருள் மாத்திரை குறித்தது ) குலவரை - சிறந்தமலை , ( கயிலை ) குலம் - சிறந்த . ` குன்றை நகர்க்குலக் கவியே வல்லான் ` என்ற காஞ்சிப்புராணச் செய்யுளாலும் அறிக . பெரியமலையினின்றும் , நவமணி முதலியவற்றை மிகுதியும் அடித்துக்கொண்டுவரும் அரிசில் ஆறு என்பது மூன்றாம் அடியின் கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வரியரா வதன்மிசைத் துயின்றவன் றானுமா மலருளானும்
எரியரா வணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியரா மடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்
அரியரா யரிவையோ டிருப்பிட மம்பர்மா காளந்தானே.

பொழிப்புரை :

வரிகளையுடைய பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் உணர்ந்து போற்ற முடியாவண்ணம் எரியுருவாய்ச் சிவபெருமான் உயர்ந்து நின்றவர் . தம்மிடத்து அன்புசெலுத்தும் அடியவர்கட்கு அணியராகியும் , பணிவில்லாதவர்கட்கு அரியராயும் விளங்குபவர் . அவர் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

எரியர் ஆ ( க ) - நெருப்பு உருவம் உடையராகி , ( துயின்றவனும் மலருள்ளானும் ; ஏத்த வொண்ணாவகை ) உயர்ந்தும் அன்றிப் பிரியராம் அடியவர்க்கு - தம்மிடத்துப் பிரியமுடையவர்கள் ஆகிய அடியவர்களுக்கு , அணியர் ஆகியும் , பணிதல் இல்லாதவருக்கு அரியர் ஆகியும் , ( அரிவையோடு ) இருப்பது அம்பர்மாகாளம் என்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினானூல்
ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்
வீக்கிய வரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய வரனுறை யம்பர்மா காளமே யடை மினீரே.

பொழிப்புரை :

புத்தர்களாகிய கீழ்மக்களும் , தலைமயிர் பறிக்கும் இயல்புடைய வஞ்சகர்களாகிய சமணர்களும் , இறைவனை உணராது , பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள உபதேசங்கள் குற்றமுடையவை . அவற்றைக் கேட்கவேண்டா . பாம்பைக் கச்சாக அணிந்தவனும் , தன்னிடத்துப் பக்தி செலுத்தும் அடியவர்கட்கு அருள் புரிபவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக !.

குறிப்புரை :

சாக்கியக்கயவர்கள் - புத்தர்களாகிய கீழ்மக்களும் , ( தலைமயிர் பறித்தலையுடைய ) கையர் - வஞ்சகர்களும் , ( பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள ) மொழியவை - உபதேசங்கள் . பிழையவை - குற்றமுடையவை , ( ஆதலால் அவற்றை மெய்யென வழி படுவீர்களாகிய நீங்கள் அவ்வழிபடுதலினின்று விலகி , அம்பர் மாகாளமேயடைமின் ). வீக்கிய அரவுடைக்கச்சையான் - பாம்பைக் கச்சாகக் கட்டியவன் , இச்சையானவர்கட்கு எல்லாம் - தன்னிடத்து விருப்பமுடையவர்களுக்கு எல்லாம் . ஆக்கிய - அருளை வைத்த ( அரன் ,) தலை ( பறி ) - முதலிற் கூறும் சினையறி கிளவி . மொழியவை - அவை பகுதிப்பொருள் விகுதி , பிழைய - பலவின்பால் வினைமுற்று . வை - விகுதி மேல்விகுதி வருவித்துரைக்கப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுன லரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா வணங்கினோ டிருந்தகோனைக்
கம்பினார் நெடுமதிற் காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாண் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.

பொழிப்புரை :

செம்பொன்னையும் , இரத்தினங்களையும் அடித்துக் கொண்டு அலை வரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள , உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி , சங்கு , சுட்ட சுண்ணாம்பு இவற்றால் சுதை பூசப்பட்ட நெடிய மதில்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி , நாள்தோறும் பாடுபவர்களுக்கு வினை இல்லை . அவர்கள் எல்லா நலன்களும் பெறுவர் . இது உறுதி .

குறிப்புரை :

( செம்பொன்னையும் இரத்தினங்களையும் கொழித்துக் கிளம்பி அலைவரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த அம்பர் மாகாளமே கோயிலாக அணங்கினோடு இருந்த ,) கோனை - தலைவனை , கம்பின் ஆர் நெடுமதில் - சங்கு , சுட்ட சுண்ணாம்பினால் சுதை பூசப்பட்ட நெடிய மதில் . கம்பு - சுண்ணாம்புக்கு ஆனது கருவியாகுபெயர் , சொன்ன - சொன்னவற்றை , ( வினையாலணையும் பெயர் ,) நம்பி - விரும்பி , நம்பு என்பது உரிச்சொல் , நாள்மொழிபவர் - நாள்தோறும் பாடுபவர்களுக்கு , வினை இல்லையாம் , நலம் பெறுவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே.

பொழிப்புரை :

தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் , சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே ! சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம் தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள் ஆவர் .

குறிப்புரை :

தொழுது எழும் - தொழாநின்று துயில் எழும் , சுண்ண வெண் பொடி - சுண்ணம் போன்றதாகிய வெள்ளிய திருநீறு . வெங்குரு மேவிய பொடியணிவீரேயென்க . ` நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும் எழிலுடைமையான் , அக்கோலம் தொழுது எழுவார் உள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறு ஆம் ` என்னும் பேராசிரியர் உரை இங்குக் கருதத்தக்கது . தொழுகழல் - தொழத்தகும் திருவடி , எண்ணுதல் - தியானித்தல் , ஆறுகோடி மாயாசத்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கித் தடுத்தலின் எண்ணுதலும் அரிதென்பர் எண்ணவல்லார் , உம - உம்முடைய ( கழல்கள் ).

பண் :சாதாரி

பாடல் எண் : 2

வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய வருமறை யீரே
ஆதிய வருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே.

பொழிப்புரை :

நால்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்ற அந்தணர்கள் வழிபடுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் , முதன்மையான வேதத்தின் பொருளானவரே ! முதன்மையான வேதத்தின் பொருளானவரான உம்மை மலர்கள் கொண்டு பூசித்துத் , தோத்திரம் செய்பவர்கள் சிவஞானம் உடையவர்கள் ஆவர் .

குறிப்புரை :

ஆதிய அருமறையீர் - முதன்மையான வேதத்தின் பொருளாய் உள்ளீர் , வேதம் பிரபல சுருதி எனப்படுதலின் முதன்மையானது என்னப் பட்டது . இனி ஆதியென்பதற்குப் பழமையான எனலும் ஆம் . அலர் கொடு - மலர்கள் கொண்டு ( பூசித்து ) ஓதியர் - தோத்திரம் செய்பவர்கள் , உணர்வு உடையோர் - சிவஞானம் உடையவராவார் . இனி ஓதி என்பதற்கு அறிவு எனவும் பொருள் உண்மையால் பூசித்து உணர்பவர் தாம் உணர்வுடையோர் , அல்லாதார் உணர்விலிகளே எனலுமாம் . அது ` உடையரெனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடைய ரோமற்று ` ( குறள் . 591) என்புழிப் போல .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

விளங்குதண் பொழிலணி வெங்குருமேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள வுறுபிணி யிலரே.

பொழிப்புரை :

பெருமையுடன் விளங்குகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் , இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையினையுடைய சிவபெருமானே ! இளம்பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்துள்ள உம்முடைய இரண்டு திருவடிகளையும் மனத்தால் நினைத்துத் தியானிப்பவர்கள் உற்றபிணிகள் இல்லாதவராவர் .

குறிப்புரை :

விளங்கு - மூவுலகிலும் விளங்கும் பெருமைவாய்ந்த , வெங்குரு என்க . விளங்கும் பொழில் எனக்கொள்ளின் , செழிப்புடைய சோலை என்க . என்றும் ஓர் பெற்றியாய்க் கலைவளரப் பெறாமையால் , இளம்பிறையென்னப்பட்டது , ` முற்றாத பான் மதியஞ் சூடினானே ` என்றார் அப்பர் மூர்த்திகளும் . சடையீராகிய உமது இரண்டு திருவடிகளையும் நினைக்க உற்ற பிணி நீங்கப்பெறுவார்கள் . ` மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல அடி ` ( தி .6. ப .6. பா .9.) என்ற கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்க டுயர்பிணி யிலரே.

பொழிப்புரை :

முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் , வண்டுகள் விரும்பும் நீண்ட சடையுடைய சிவபெருமானே ! வண்டுகள் விரும்பும் சடையினை யுடைய பெருமானாகிய உம்மை வாழ்த்தும் சிறப்புடைய தொண்டர்கள் துயரும் , பிணியும் அற்றவர்கள் ஆவர் .

குறிப்புரை :

விண்டு அலர் - முறுக்குடைந்து மலர்கின்ற ( பொழில் ), வண்டு அமர்சடை - வண்டு விரும்பும் சடை , எனவே மலர்மாலை யணிந்த சடையென்பது பெறப் பட்டது . அமர்தல் - விரும்புதல் , ( துயர்பிணி , இலர் ) துயர் - உள்ளம் பற்றியது , பிணி - உடலம் பற்றியது ) இலர் - இல்லாதவர் ஆவார் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொ டரவசைத் தீரே
அக்கினொ டரவசைத் தீரும தடியிணை
தக்கவ ருறுவது தவமே.

பொழிப்புரை :

அன்பின் மிக்கார் தொழுது எழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானே ! அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள பெருமானாகிய உம் இணையடிகளைத் துதிக்கும் தகுதிபெற்ற அடியவர்கள் பெறுவது சிறந்த தவத்தின் பயனாகும் .

குறிப்புரை :

மிக்கவர் - அன்பின் மிக்கோர் , அக்கினொடு - அக்குப் பாசியோடு , அரவு - பாம்பு . அசைத்தீரே - இடுப்பிற் கட்டியுள்ளீர் , தக்கவர் - வழிபடும் அடியவர் , ( உமது ) அடியிணை உறுவது தவமே - திருவடிகளைப் போற்றுவதே சிறந்த தவத்தின் பயனாம் , தவம் என்பது அதன்பயனைக் குறித்தது . தவத்தின் பயன் அது என்பதனை ` எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே , பந்தம் வீடு அவை ஆயபராபரன் , அந்தமில் புகழ் ஆரூர் அரனெறி , சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே .` என்னும் திருக்குறுந்தொகை யானும் உணர்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.

பொழிப்புரை :

சுடப்பட்ட வெண்ணிறத் திருவெண்ணீற்றினை அணிந்து , திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அழிவில்லாத புகழுடைய சிவபெருமானே ! அழிதல் இல்லாத புகழுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபட்டுத் தியானிப்பவர்களின் வினைகள் சிதைந்து போகும் .

குறிப்புரை :

வெந்த - சுடப்பட்ட , வெண்பொடி - வெண்மையான திருநீறு , அந்தம் - முடிவு , அழிவு . நீறு அணி அந்தம் இல் பெருமையினீர் - திரு நீற்றையணிந்து , அதனால்தாம் அழிவில்லாதவன் எனக்காட்டும் பெருமையையுடையீர் , ` சிவனவன் திரடோண்மேல் , நீறு நின்றது கண்டனை ` என்னும் திருவாசகமும் இக்கருத்தாதல் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழன்மல்கு மங்கையி னீரே
அழன்மல்கு மங்கையி னீருமை யலர்கொடு
தொழவல்லல் கெடுவது துணிவே.

பொழிப்புரை :

திருவிழாக்கள் நிறைந்ததும் , சோலைகள் அழகு செய்வதுமான திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நெருப்பேந்திய அழகிய திருக்கரத்தையுடைய சிவபெருமானே ! நெருப்பேந்திய அழகிய திருக்கரமுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபடுபவர்களின் துன்பங்கள் கெடுவது நிச்சயம் .

குறிப்புரை :

விழ - விழா ( விழவு ) மல்கும் - தங்கிய , உம்மை அலர் கொடு தொழ அல்லல் கெடுவது துணிவு - நிச்சயம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே.

பொழிப்புரை :

சாமர்த்தியமுடைய , நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் நிறைந்த திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , ஊமத்த நன்மலரினைச் சூடியுள்ள , சிவ பெருமானே ! ஊமத்தம் மலர் சூடிய உம் திருவடிகளைத் தொழும் சித்தமுடையவர்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றவர் ஆவார் .

குறிப்புரை :

வித்தகம் - சதுரப்பாடு ( சாமர்த்தியம் ) மறையவர்க்குச் சதுரப் பாடாவது - பல கடவுளர்க்குத் தலைமை கூறும் அதன் பொருளை நடு நிலைமையொடு உணர்ந்து , உண்மையிது உபசாரம் இது என உணரும் வன்மை . மத்த மலர் - பொன்னூமத்த மலர் . சித்தம் உடையவர் திரு - என்றது மோட்ச சாம்ராச்சியத்தை ` செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே ` என்றவாறு. இப்பாசுரத்தில் ஏனைய பதிகங்களிற் கூறு முறை இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே.

பொழிப்புரை :

மேலான பக்தர்கள் தொழுதெழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , விடம் தங்கிய அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானே ! விடம் தங்கிய அழகிய கண்டத்தையுடையவராகிய உம் திருவடிகளைத் தொழுகின்ற நல்லொழுக்கம் உடையவர்களே பேரின்பம் பெறுவர் .

குறிப்புரை :

ஆலம் நன்மணிமிடறு - விடம் தங்கிய நல்ல காள கண்டம் , சீலம் வழிபாட்டு முறை . அது ` பெரும்புலர்காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி ` ( தி .4. ப .31. பா .4.) எனும் திருநேரிசையிற் கூறியது முதலியன. இப்பாசுரத்தில் ஏனைய பதிகங்களிற் கூறு முறை இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவ ருயர்வே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே ! அரையில் கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம் இணையடிகளை நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு அடைவர் .

குறிப்புரை :

அரைமல்கு புலியதளீரே - அரையிற் கட்டிய புலித்தோலை உடையீரே . மல்கு - பொருந்திய , இங்குக் கட்டிய என்னும் பொருளில் வந்தது . உரைமல்கு புகழவர் - வார்த்தையால் உம்மை நிரம்பப் புகழ்தலையுடையவர் . அவர் உயர்வே உண்மையான உயர்வாகும் . இப்பாசுரத்தில் ஏனைய பதிகங்களிற் கூறு முறை இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 11

பாடல் கிடைக்கவில்லை

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :சாதாரி

பாடல் எண் : 1

எண்டிசைக் கும்புகழி ன்னம்பர் மேவிய
வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளிலும் புகழ்பரப்பும் திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , வண்டு இசைக்கும் மலர்மாலை அணிந்த சடையுடைய சிவபெருமானே ! வண்டிசைக்கும் மலர்மாலை அணிந்துள்ள சடையுடைய உம்மை வாழ்த்தும் அடியவர்கள் தொண்டு நெறியில் சிறப்புடன் நின்று மேம்படுவரே .

குறிப்புரை :

எண்டிசைக்கும் - எட்டுத் திக்குக்களிலும் . புகழ் இன்னம்பர் - புகழைப் பரப்பிய திரு இன்னம்பர் , திசைக்கும் உருபு மயக்கம் . ( வண்டு ) இசைக்கும் - இசைபாடும் , இசைக்கும் பெயர் அடியாகப் பிறந்த பெயரெச்சம் , நூல் செய்யலுற்றேன் என்ற பொருளில் ` நூற்கலுற்றேன் ` ( கம்ப . அவையடக்கம் . 2) என்று கம்பர் கூறியதுபோல் . வண்டிசைக்கும் சடையீர் என்றது மலர் மாலையணிந்த சடையீர் என்ற படி . உ ( ம் ) மை வாழ்த்துவார் , ( அரிபிரமனாதியருக்குத் ) தொண்டு இசைக்கும் - இன்னது செய்க என ஏவல் இடும் . தொழிலோர் - பதவியை உடையவராவர் . தொண்டு - அடிமை . தொழில் - பதவியென்னும் பொருளில் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது ` தொழப்படும் தேவர் தம்மாற் றொழுவிக்கும் தன் தொண்டரையே ` என்ற திருவிருத்தத் ( தி .4. ப .112. பா .5.) தின் கருத்தும் இங்கே ஒப்பிடத் தக்கது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

யாழ்நரம் பின்னிசை யின்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துய ரருவினை யிலரே.

பொழிப்புரை :

யாழின் இனிய இசையை உடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீண்ட தாழ்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே ! நீண்டு தாழ்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து பக்தியுடன் வழிபடுபவர்கள் பெருந்துன்பத்திலிருந்தும் , அதற்குக் காரணமான அரிய வினையிலிருந்தும் நீங்கியவராவர் .

குறிப்புரை :

யாழின் நரம்பிசை முதலிய பலவாத்திய ஓசைகளை யுடைய திருவின்னம்பர் என்பது முதலடியின் கருத்து . காண்க : ` குழலொலி யாழொலிகூத்தொலியேத்தொலி யெங்கும் குழாம் பெருகி .` ( தி .9 திருப்பல்லாண்டு . 11) சார்பவர் - சார்புணர்ந்து சார்புகெடச் சார்பவர் , பெருந்துயர் நேரினும் அதினின்றும் நீங்கப்பெறுதலோடு அதற்குக் காரணமாகிய அரிய வினையும் இல்லாதவர் ஆவார்கள் . ஆழ்துயர் - பெருந்துயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

இளமதி நுதலியொ டின்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார்
உளமதி மிகவுடை யோரே.

பொழிப்புரை :

பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய உமாதேவியோடு திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , குளிர்ச்சிபொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய சிவபெருமானே ! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய உம்மை வாயால் வாழ்த்தி வழிபடுவோர் பேரறிவுடையவராவர் .

குறிப்புரை :

இளமதி - பிறைச்சந்திரன் போன்ற . நுதலி - நெற்றியை உடைய அம்பிகை . வளம் மதி - தன்னொளி , அமுத கிரணமாயிருத்தல் , பயிர் பச்சைகளை வளர்த்தல் , கடல் கொந்தளிப்பித்தல் முதலிய வளங்களையுடைய மதி . வளர் - தங்குகின்ற என்னும் பொருள் தரும் . உளம் - மனம் . மதிமிக உடையோர் - பேரறிவுடையவராவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

இடிகுர லிசைமுர லின்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழறொழும்
அடியவ ரருவினை யிலரே.

பொழிப்புரை :

இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு , முழவு போன்ற வாத்தியங்கள் ஒலிக்க , திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நறுமணம் கமழும் சடைமுடி உடைய சிவபெருமானே ! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழும் அடியவர்கள் வினைநீக்கம் பெற்றவராவர் .

குறிப்புரை :

இடிகுரல் இசைமுரல் - இடியின் குரல்போலும் முழவம் முதலிய வாத்திய ஓசை ஒலிக்கும் . ` முழவதிர மழையென்றஞ்சிச் சில மந்தியலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே ` ( தி .1. ப .130. பா .1.) என முன்னும் வந்தமை காண்க . கடி கமழ் - வாசனை வீசும் ; சடைமுடி .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

இமையவர் தொழுதெழு மின்னம்பர் மேவிய
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீருமை யுள்குவார்
அமைகில ராகில ரன்பே.

பொழிப்புரை :

உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற் கொண்டவரே , தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில் எழுந்தருள்பவரே , உமை பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து ஏத்துபவர் அன்பு அமையப் பெறாதவர் ஆகார் .

குறிப்புரை :

இமையவர் - தேவர் , கண்ணிமையாதவர் , இன்னம்பர் மேவிய உடையீர் என்க . உ ( ம் ) மை நினைப்போர் , பேரன்பு படைத்தவர் ஆவர் . அன்பு அமைகிலர் - அன்பு அமையமாட்டாதவர் . ஆகார் எனவே அன்பு அமையப்பெற்றவர் ஆவர் என்றதாம் . இரண்டு எதிர் மறை ஓர் உடம்பாட்டை வலியுறுத்திற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

எண்ணரும் புகழுடை யின்னம்பர் மேவிய
தண்ணருஞ் சடைமுடி யீரே
தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்
விண்ணவ ரடைவுடை யோரே.

பொழிப்புரை :

நினைத்தற்கரிய அளவில்லாத பெரும்புகழை யுடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , குளிர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே ! குளிர்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைவர் .

குறிப்புரை :

எண் அரும் புகழ் உடை - நினைத்தற்கரிய அளவிலாத பெரும் புகழை உடைய இன்னம்பர் , தண் அரு - அரிய குளிர்ச்சியை உடைய , சடைமுடியீரே , கங்கைநீரும் , சந்திரனும் தங்குதலால் அரிய குளிர்ச்சியுடையதாயிற்று . உம்மைச் சார்வர் . விண்ணவர் அடைவு உடையோர் - ஏனைத் தேவர்க்குத் தாம் சார்பாகும் தன்மையுடைய வராவார் . அடைவு - ( சார்பாக ) அடைதல் , சார்பு - பற்றுக்கோடு .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

எழிறிக ழும்பொழி லின்னம்பர் மேவிய
நிழறிகழ் மேனியி னீரே
நிழறிகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே.

பொழிப்புரை :

அழகுடன் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , ஒளி விளங்கும் திருமேனியுடைய சிவபெருமானே ! ஒளி விளங்கும் திருமேனியுடைய உம்மை நினைப்பவர்களுடைய , வாட்டும் குழம்பிய கொடுவினை கெட்டழியும் .

குறிப்புரை :

எழில் திகழ் பொழில் - அழகால் விளங்கும் சோலை . பசுமை நிறத்தாலும் , பல நிற அரும்பு பூ , காய்கனி இவற்றின் தோற்றத்தாலும் எய்தும் அழகு . நிழல்திகழ் - ஒளியால் விளங்கும் மேனியினீர் , உமை நினைபவர் குழறிய இப்பொருட்டு ஆதலை , ` கடுஅடுத்த நீர்கொடுவா காடிதாவென்று நடுநடுத்து நாநடுங்கா முன்னம் - பொடியடுத்த பாழ்க்கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக் கீழ்க்கோட்டம் செப்பிக் கிட ` எனும் பதினொன்றாந் திருமுறையாலறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஏத்தரும் புகழணி யின்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே.

பொழிப்புரை :

போற்றுதற்கு அரிய புகழுடைய அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , தூர்த்தனான இராவணனை அடர்த்தவருமான சிவபெருமானே ! தூர்த்தனான இராவணனை அடர்த்த உம்மைத் தொழுபவர் பேரறிவும் , நற்குணமும் உடையவராவர் .

குறிப்புரை :

ஏத்த அரும் - துதித்தற்கரிய , புகழ் . துர்த்தன் - பரதார விருப்பினனாகிய இராவணன் , தொலைவு செய்தீர் - வலிமையழியச் செய்தீர் , கூர்த்த - மிகுத்த , நற்குணம் - சத்துவகுணம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

இயலுளோர் தொழுதெழு மின்னம்பர் மேவிய
அயனுமா லறிவரி யீரே
அயனுமா லறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே.

பொழிப்புரை :

நல்லியல்புடையோர் தொழுது எழுகின்ற திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! பிரமனும் , திருமாலும் அறிவதற்கரிய உம் திருவடிகளைத் தொழும் இயல்பு உடையவர்கட்கு மறுபிறப்பு இல்லை .

குறிப்புரை :

இயல்உளர் - சமய விசேடாதி தீக்கை பெற்ற தகுதி யுடைய அடியார் , மறுபிறப்பு இலர் ஆவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

ஏரமர் பொழிலணி யின்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவர்
ஆர்துய ரருவினை யிலரே.

பொழிப்புரை :

ஏர் எனப்படும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள சோலைகள் சூழ்ந்த அழகிய திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவராய் , சமண , புத்த நெறிகளிலுள்ள குறைகளைக் காட்டித் தாழ்ச்சியுறச் செய்த சிவபெருமானே ! சமண , புத்த நெறிகள் தாழ்வடையும்படி செய்த உம் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கட்குத் துன்பமும் , அதற்குக் காரணமான தீவினையும் இல்லை .

குறிப்புரை :

ஏர் அமர் - அழகு பொருந்திய என்பதினும் ஏர் என்னும் தலத்துக்கு அணியதாய்ப் பொருந்திய என்பது சிறக்கும் , ஏர் - இன்னம்பருக்கு அருகிலுள்ள ஒரு வைப்புத்தலம் , அது ` ஏரார் இன்னம்பரார் ,` என்னும் திருத்தாண்டகத்தால் அறியத்தகும் . அத்தலம் ஏரகரம் என இப்போது வழங்கும் , திருஏரகம் என்னும் சாமிமலையும் இதற்கு அணித்து , ஆர்தரு - கட்டிய . வினை - அரியவினை , துயர்விக்கும் வினை என இயையும் , தேரர் அமணர் என்பது தேரமண் எனமரீயது .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

ஏடமர் பொழிலணி யின்னம்பர் ரீசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே.

பொழிப்புரை :

இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி , தேசமெல்லாம் விரும்புகின்ற ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழாலான இத்திருப் பதிகத்தை ஓதவல்லவர்கள் பழியற்றவர் ஆவர் .

குறிப்புரை :

ஏடு - இதழ் , மலருக்கானமையின் சினையாகுபெயர் , தேசமெல்லாம் விரும்பும் ஞானசம்பந்தன் , நல்தமிழ்பாடவல்லார் பழியிலர் ஆவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
சொல்வண மிடுவது சொல்லே.

பொழிப்புரை :

நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து செய்யப்பட்ட திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர் . திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத் தினந்தோறும் துதித்துச் சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும் சொற்களாகும் .

குறிப்புரை :

நல்வெ ( ண் ) ணெய் விழுது - நல்ல வெண்ணெயை உருக்கிய நெய்யை . பெய்து - ஏனைய பால் , தயிர் , கோமயம் , கோசலம் என்பவற்றோடு நாள்தோறும் பஞ்சகவ்யமாகக் கூட்டி ` நாள்தோறும் ஆடுதிர் - திருமஞ்சனம் கொண்டருள்வீர் , உம்மை நாள்தோறும் துதிக்கும் சொற்களே , பயன்தரும் சொல்லெனப்படுவன . வண்ணம் - அழகு , சொல்லுக்கு அழகாவது , சுருங்கச் சொல்லல் முதலிய பத்தும் . சொல் இடுவது - துதிப்பது , புகழ்வது , வாழ்த்துவது முதலியன . ` தீவண்ணர் திறம்ஒருகாற் பேசா ராகில் ` ` பெரும் பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே .` ` வணங்கத் தலைவைத்து , வார்கழல் வாய் வாழ்த்தவைத்து ` என்பன இங்குக் கொள்ளத்தக்கன .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

நிச்சலு மடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள வரவசைத் தீரே
கச்சிள வரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே.

பொழிப்புரை :

நாள்தோறும் அடியவர்கள் தொழுது எழுகின்ற , நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இளமையான பாம்பைக் கச்சாக இடையில் அணிந்துள்ள சிவ பெருமானே ! அவ்வாறு கச்சாக இளம் பாம்பை அணிந்துள்ள உம்மைத் தரிசிப்பவரே துன்பங்களைக் கண்டு அச்சப்படாதவர் , கொடிய வினைகளும் இல்லாதவர் .

குறிப்புரை :

நிச்சல் - நித்தல் ; நித்தம் நித்தல் என்பதன் போலி , இளஅரவு - இளம்பாம்பைக் கச்சு ( ஆக ). அசைத்தீரே - கட்டியருளினீரே . என்றும் இளமையுடையவன் ஆகையால் அவனைச்சார்ந்தனவும் இளமையுடையனவே ஆயின , ` இளநாகமோடு ` என முன்னும் வந்தமை காண்க . ( தி .1. ப .1. பா .2.) காண்பவர் - தரிசிப்பவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே.

பொழிப்புரை :

வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான புகழினையுடைய திருநெல்வெண்ணெயில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இடையில் விரித்துக் கட்டிய கோவணத்தையுடைய சிவ பெருமானே ! அவ்வாறு கோவணத்தை விரித்துக் கட்டிய உம்மை மலர்களைக் கொண்டு பூசித்து , உமது புகழைப் போற்றிப் பாடுபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர் .

குறிப்புரை :

நிரை - வரிசை வரிசையாக , விரி - உலகமெங்கும் விரிந்த , ( தொல் - புகழ் ) அரையின் விரித்துக் கட்டிய கோவணத்தையுடையீரே . உம்மை அலர்கொடு - மலர் முதலியவற்றால் ( பூசித்து ) உமது புகழை விரிவாகத்துதித்துப்பாடுவோர் உயர்ந்தோர் ஆவர் . பூசித்து என ஒரு சொல் வருவிக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி யுறையவல் லீரே
ஊர்மல்கி யுறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே.

பொழிப்புரை :

நீர்வளம்மிக்க தொன்மையான புகழ் பொருந்திய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தை விரும்பி அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! அவ்வாறு அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற உம்மை எப்போதும் இடையறாது தியானித்தலே உலகின் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள் இயல்பாகும் .

குறிப்புரை :

நீர்மல்கு - நீர்வளம்பொருந்திய , நெல்வெண்ணெய் மேவிய ஊர் - நெல்வெண்ணெயென்னும் பெயர் பொருந்திய ஊரில் . மல்கி - நிலைபெற்று , உறையவல்லீர் - வாழ்தலையுடையீர் , உம்மை எப்பொழுதும் ஒழியாது நினைத்திருத்தல் உலகில் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகளின் இயல்பாம் . ` இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு ` ( குறள் - 23 ) என்புழியும் இவ்வாறு வருதல் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீருமை யன்பொடு
பாடுள முடையவர் பண்பே.

பொழிப்புரை :

நீண்ட இளமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , ஆடுகின்ற இளம்பாம்பினைக் கச்சாகக் கட்டியுள்ள சிவபெருமானே ! அவ்வாறு ஆடுகின்ற இளம்பாம்பைக் கச்சாக அணிந்த உம்மை அன்போடு பாடுகின்ற உள்ளம் உடையவர்களின் பண்பே சிறந்ததாகும் .

குறிப்புரை :

நீடு - நெடிய , இளம்பொழில் - இளமரச்சோலை , பாப்பசைத்தீர் - ( பாம்பு ) அசைத்தீர் , கச்சையாகக் கட்டியருளினீர் , உம்மைப் பாடும் விருப்பமுடையவர் பண்பே , சிறந்த பண்பாவது , உளம் - இங்கே விருப்பம் . இரண்டாம் அடி ` ஆடிளம்பாம்பசைத் தானும் ` ( தி .4. ப .4. பா .1.) என அப்பர் வாக்கிலும் , வருவது .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே.

பொழிப்புரை :

நெற்றிக்கண்ணை உடையவரும் , திருநெல் வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும் , அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடையவருமாகிய சிவபெருமானே ! அவ்வாறு பிறை போன்ற நெற்றியுடைய உமாதேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும் .

குறிப்புரை :

பெற்றி கொள் - அடியவர்க்கருள்வதையே தன்மையாகக் கொண்ட . பிறைநுதலீர் - பிறைபோன்ற நெற்றியையுடைய உமையம்மையாரை . உரையீர் , பிறைநுதல் - அன்மொழித்தொகை . பேணுதல் - பாராட்டி நிட்டை கூடுதல் , கற்றறிவோர்கள் தம் கடன் - ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்கள் கடமையாகும் . கல்வியறிவிற்குப் பயன் கூறியவாறு .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்அடிக் கீழே.

பொழிப்புரை :

நிறையுடையவர்கள் தொழுது எழுகின்ற திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானே ! அவ்வாறு விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய உம்மைத் தரிசிப்பவர்கள் உம் திருவடிக்கீழ் என்றும் வீற்றிருப்பர் .

குறிப்புரை :

நிறையவர் - ` காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் ` உடையவர் . ( களவியலுரை ) ` உம்மைக் காண்பவர் ...... கீழே ` என்றது , ` அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே , அறிவுதனை யருளினால் அறியாதே அறிந்து ...... குழைந்திருப்பையாயின் ...... ஆயே ` ( சிவஞானசித்தி சுபக்கம் . சூத் . 8.30) என்ற சாத்திரக் கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீரே
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே.

பொழிப்புரை :

நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர் .

குறிப்புரை :

நெருக்கிய - நெருங்கிய என்பதன் வலித்தல் விகாரம் . அசைவு செய்தீர் - வலிதளரச் செய்தீர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
றிருவரை யிடர்கள் செய்தீரே
இருவரை யிடர்கள் செய்தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே.

பொழிப்புரை :

வரிசையாக விரிந்த சடைமுடியினை உடையவராய் , திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவராய் , அன்று திருமாலும் , பிரமனும் உம் அடிமுடி காணாமல் துன்பம் அடையச் செய்த சிவபெருமானே ! அவ்வாறு திருமால் , பிரமன் என்னும் இருவரைத் துன்பம் அடையச் செய்தவராகிய உம்மை உள்ளும் , புறமும் ஒத்து வணங்கிப் போற்று பவர்கள் பழியில்லாதவர் ஆவர் .

குறிப்புரை :

இருவரை - பிரம விட்டுணுக்களிருவரையும் , இடர்கள் செய்தீரே - ஆழ்ந்தும் உயர்ந்தும் காணமாட்டாமை , அதனால் என்செய்தும் என அலமருதல் ( தம் செருக்கு நிலைகுலைதல் , நாணி நிற்றல் , ஆகம்பல ஆதலின் இடர்கள் எனப்பன்மையாற் கூறினார் . ) ` ஆழ்ந்து காணார் உயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர் , தாழ்ந்து தந்தம் முடிசாய நின்றார்க்கிடம் என்பரால் ` ( தி .2. ப .114. பா .9.) என்னும் திருக்கேதாரப்பதிகத்தால் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கிய முடையவர் பண்பே.

பொழிப்புரை :

வறுமை , பிணி முதலியவற்றை நீக்கியவரும் , திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும் , புத்தமும் , சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே ! அவ்வாறு புத்தமும் , சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது புண்ணியம் செய்தவர்களின் பண்பாகும் .

குறிப்புரை :

நீக்கிய - வறுமை , பிணி முதலியவற்றை நீக்கிய , புனல் அணி - நீர் வளம் உடைய . நெல் வெண்ணெய் சாக்கியச்சமண் - சாக்கியரோடு கூடிய சமண் . உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது , பாக்கியம் உடையவர் பண்பு - ` தவமும் தவ முடையார்க்காகும் ,` ( குறள் . 262) ` சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது ` ( சித்தியார் . சுபக்கம் சூ . 2.91) என்ற கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெ யீசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே.

பொழிப்புரை :

நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி , நன்மைகளைத் தருகின்ற ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுவதில் மகிழ்ச்சி மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர் .

குறிப்புரை :

ஞானசம்பந்தன செந்தமிழ் , சொல மல்குவார் - சொல்வதில் மகிழ்ச்சி மிக்கவர் :- மகிழ்ச்சிமிக்குச் சொல்வோர் . ( துயர் இலர் ஆவர் ).

பண் :சாதாரி

பாடல் எண் : 1

திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே.

பொழிப்புரை :

வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே ! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர் .

குறிப்புரை :

திடம் மலி - வலிமைமிக்க . மதிள் - மதில் . ல , ள ஒற்றுமை . படம் மலி - படத்தையுடைய , உம்மைப் பணிபவர் அடைவது , அமர் உலகு அது - வானவர் உலகிற்கு அப்பாலதாகிய சிவலோகமாம் . உரையிலடங்காப் பெருமையது ஆகலின் அது என்று சுட்டளவோடு நிறுத்தப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவ ருறுபிணி யிலரே.

பொழிப்புரை :

குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய சிவபெருமானே ! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழுது வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை .

குறிப்புரை :

சிறு இடை - சிற்றிடையையுடைய உமாதேவியாரோடு மகிழ்ந்து சிறுகுடியில் இருக்கும் சடைமுடியீரே . கழல் உற்றவர் - திருவடியைப் பற்றுக்கோடாகக் கொண்டவர் . உறு - தம்மைப் பற்றியுற்ற . பிணி - பாசபந்தம் , இலர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
உள்ளுதல் செயநல முறுமே.

பொழிப்புரை :

தெளிந்த நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , துள்ளிக் குதிக்கும் மானைக் கரத்தில் ஏந்தியுள்ள சிவபெருமானே ! துள்ளிக் குதிக்கும் மானை உடைய உம்முடைய திருவடிகளை நினைத்துத் தியானிக்கும் அடியவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் .

குறிப்புரை :

தெள்ளிய - தெளிவான . துள்ளிய - துள்ளிக் குதிக்கும் . மான் உடையீர் - மானை உடையீர் , ஏந்தியுள்ளீர் . இனி உடை என்பதற்கு ஆடையென்றும் பொருள் உண்மையால் , மான் தோலை அணிந்தருளினீர் எனலுமாம் . ` புள்ளியுழை மானின் தோலான் கண்டாய் ` ( தி .6. ப .23. பா .4.) என்ற திருத்தாண்டகத்தாலும் அறிக . உள்ளுதல் செய - நினைக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னல முடையவர் தொண்டே.

பொழிப்புரை :

செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நம்மோடு சேராது பகைமை கொண்ட அசுரர்கள் வாழும் திரிபுரங்களை எரித்த சிவபெருமானே ! திரிபுரம் எரித்த உம்மை நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே திருத்தொண்டர்கள் ஆவர் . ( உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு உபதேசிக்கும் தக்கோர் ஆவர் என்பர் ).

குறிப்புரை :

செந்நெல் - செந்நெல் விளைகின்றனவாகிய . வயல் அணி - வயல் சூழ்ந்த . ஒன்னலர் - ஒன்றலர் என்பதன் மரூஉ . ஒன்றலர் - நம்மோடு சேராதவர் . தொண்டு - உமது வழிபாட்டைப் பற்றிப் பிறர்க்கு உபதேசிக்கும் தக்கோர் ஆவர் . சொல் நலம் - சொல்லும் நலம் . நலம் - தகுதி .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

செற்றினின் மலிபுனற் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவ ரருவினை யிலரே.

பொழிப்புரை :

பாத்திகளில் குன்றாது பாயும் நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , முடியில் தங்கும் பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமானே ! பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியுடைய உம்மை மனம் குழைந்து வழிபடுபவர்கள் உலகப் பற்றற்றவர்கள் . அதன் காரணமாக மேல்வரும் அருவினையும் இல்லாதவராவர் .

குறிப்புரை :

செற்றினில் - பாத்திகளில் . மலிபுனல் - குன்றாது பாயும் நீர் வளமுடைய சிறுகுடி . செறுத்தல் - நீரைத் தேக்குதல் , ` செறுத் தோறுடைப்பினும் செம்புனலோடூடார் , மறுத்துஞ்சிறை செய்வர் நீர் நசைஇ வாழ்நர் ` ( நாலடியார் - 222). செறு - இ - செற்றி . இகரம் வினைமுதற் பொருள் விகுதி . அதனால் பாத்தியைச் செறுவென்பது காரணப்பெயராம் . பெற்றிகொள்பிறை - இறைவன் முடியில் தங்கும் பேற்றைக் கொண்ட பிறை . நஞ்சு - நைந்து , மனம் குழைந்து . நைதல் - உருகுதலுக்குமுன் உறும் நிகழ்ச்சி . இதனை ` என்புநைந்து உருகி நெக்குநெக்குருகி `. நஞ்சு - போலி , நைந்து என்பதற்கு வினை முதல் வருவித்துரைக்க , அற்றவரென்பதற்கும் இவ்விதியால் பற்று அற்றவர் என்க . அதன் காரணமாக மேல்வருவினையும் இலராவர் . நெஞ்சு என்பது பிழைபட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை யிடமுடை யீரே
மங்கையை யிடமுடை யீருமை வாழ்த்துவார்
சங்கைய திலர்நலர் தவமே.

பொழிப்புரை :

செங்கயல்மீன் விளங்கும் நீர்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானே ! உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் உம்மை வாழ்த்தும் அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர் . நலமிக்கவரும் , தவப்பேறு உடையவரும் ஆவர் .

குறிப்புரை :

செங்கயல் - ஒருவகைமீன் . கயலையுடைய புனல் சூழ்ந்த சிறுகுடி . நலர்தவம் - நல்தவர் என விகுதி பிரித்துக் கூறுக . நல்ல தவத்தையுடையவர் ஆவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

செறிபொழி றழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோருயர்ந் தோரே.

பொழிப்புரை :

அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம் கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே ! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம்மை விரும்பி , அடைவதற்குரிய நெறிகளில் சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர் .

குறிப்புரை :

செறி - அடர்ந்த பொழில் . வெறி - வாசனை . மெய்ந்நெறி - உண்மையான மார்க்கம் . சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம் தாசமார்க்கம் என்று சங்கரனையடையும் நன்மார்க்கம் நான்கு எனச் சித்தியாரிற் குறித்தவை . உயர்ந்தோர் அவற்றில் உயர்ந்த சன்மார்க்க நெறியில் நிற்போர் ஆவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுக னுரநெரித் தீரே
தசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறு மதுவழி பாடே.

பொழிப்புரை :

எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும் , இராவணனின் வலிமை அடங்கும்படி கயிலைமலையின் கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும் . அது உம்மை வழிபட்டதன் பலனாகும் .

குறிப்புரை :

தசம் - பத்து . உரம் - வலிமை . சார்பவர் - பற்றுக் கோடாக அடைபவர் . வசையறும் அது - குற்றம் அற்றதாகிய வழிபாடே வழிபாடெனப் படுவதாம் . என் போல்பவர் பறித்திட்ட முகையும் அரும்பும் எல்லாம் அம்போதெனக் கொள்ளும் ஐயன் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுந் தன்மையால் வழிபாடு வசையற்றதாயிற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை யசைவுசெய் தீரே
இருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவினை யொடுதுய ரிலரே.

பொழிப்புரை :

வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , மாறுபாடு கொண்ட திருமால் , பிரமன் இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே ! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும் , அதன் விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர் .

குறிப்புரை :

இருவரை - பிரம விட்டுணுக்களை . இருவர் தொகைக் குறிப்பு . அசைவு - வருத்தம் . அருவினை என்பது ஆகாமிய சஞ்சித கன்மங்களை . துயர் என்றது பிராரத்த வினையை . அதனையிலர் என்றது , ` சிவனும் இவன் செய்தியெலாம் என் செய்தியென்றும் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் ` கொள்வன் ஆகையினால் . ( சித்தியார் சூ . 10.1 ).

பண் :சாதாரி

பாடல் எண் : 10

செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரோ டமண்புறத் தீரே
புத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.

பொழிப்புரை :

வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப் , புத்தர் , சமணர்கட்குப் புறம்பாக இருக்கும் சிவபெருமானே ! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப் போற்றி வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர் .

குறிப்புரை :

செய்த்தலை - வயல்களினிடத்து . புனல் - நீர் . அணி - அழகு செய்கின்ற . சிறுகுடி புறத்தீர் - அப்பாற் பட்டீர் . உம்மைப் போற்றுதலே பத்தர்கள் தம்முடைய பேறு ஆகக்கொள்வர் . பரிசு - பேறு . ` கூடும் அன்பினிற் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் ` ( தி .12 திருக்கூட்டச்சிறப்பு . 8) என்றதும் நோக்குக .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.

பொழிப்புரை :

வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , மான் ஏந்திய கரமுடைய சிவபெருமானே ! மான் ஏந்திய கரமுடைய உம்மை வாழ்த்திப் போற்றிய ஞானசம்பந்தனின் இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் இம்மை , மறுமைப் பலன்களைப் பெறுவர் .

குறிப்புரை :

தேன் அமர் - வண்டுகள் விரும்பும் , பொழில் . மான் அமர் - மான் தங்கிய , உம்மைப் பரவிய ஞானசம்பந்தன் தமிழே ( தனைப்பாடவல்லவர்க்கு அனைத்தும் நல்கும் ) என்பது குறிப்பெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

வெண்மதி தவழ்மதிள் மிழலையு ளீர்சடை
ஒண்மதி யணியுடை யீரே
ஒண்மதி யணியுடை யீருமை யுணர்பவர்
கண்மதி மிகுவது கடனே.

பொழிப்புரை :

விண்ணிலுள்ள வெண்ணிறச் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்துள்ள மதில்களையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , சடையில் ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ளவருமான சிவபெருமானே ! ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ள உம்மை முதற்பொருளாக உணர்ந்து வழிபடுபவர்கள் சிவஞானம் பெறுவர் .

குறிப்புரை :

வெண் மதி - வானில் ஊரும் மதி . சடை மதி - சடையில் தங்கும் மதி . மதிள் - மதில் . ளகரலகர ஒற்றுமை : போலி என்னலாகாது ; சாம்பர் என்பதில் ஈற்றெழுத்து உரியதன்று ; லகரமே உரியது ஆகலின் ரகரம் போலி . ஒற்றுமை அங்ஙனமன்றி மஞ்சள் , மஞ்சல் , மங்களம் மங்கலம் என ஈரெழுத்தும் உரியவாய் வருவது . மதியைச் சடையில் அணியாக உடையார் . அணி - ஆபரணம் . கண் - ( உமது திருவடிப் பேற்றையே குறிக்கோளாகக் ) கருதும் . மதி - புத்தி . மிகுவது - அதிகரிப்பதும் . அவர்க்கு இயல்பாய் எய்திடக் கூடிய தன்மையாம் . கண்மதி - வினைத்தொகை . கண்ணுதல் இப்பொருளாதலை ` விண்ணினார்கள் விரும்பப்படுபவன் , கண்ணினார் கடம்பூர்க்கரக்கோயிலே ` என்னுந் திருக்குறுந்தொகையால் அறிக . உணர்பவர் - உம்மையே பதிப்பொருளாக உணர்பவர் . கடன் - இயல்பு ` மாலறியாக் கடனாம் உருவத்தரன் ` என்ற திருக்கோவையாரால் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிருடை யீருமை
அதிகுணர் புகழ்வது மழகே.

பொழிப்புரை :

வேதங்களில் விதிக்கப்பட்ட ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழும் அந்தணர்கள் நிறைந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்றவரும் , தாளத்துக்கு ஏற்ப அழகாகத் திருநடனம் புரிபவருமான சிவபெருமானே ! தாளத்திற்கு ஏற்பத் திருநடனம் புரியும் பெருமையுடைய உம்மைச் சத்துவ குணமுடைய ஞானிகள் போற்றிப் புகழ்வது சிறப்பானது .

குறிப்புரை :

விதிவழி மறையவர் - விதிவழியில் ஒழுகும் மறையவர் . சதிவழி - தாள ஓத்தின்படி . நடம் வருவது - நடித்து ஆவர்த்தம் வருவதும் . ஓர் சதிரே - ஒரு அழகே . அதிகுணர் - சத்துவகுணம் உடையோராகிய ஞானிகள் . புகழ்வதும் ஒரு அழகே . சதிர் - இங்கு அழகென்னும் பொருளில் , அச்சொற்குப் பொருள் அனைத்தும் இங்கு ஏற்பதறிக . அதி என்பது மிகுதிப்பொருளது ஆயினும் இங்குச் சிறப்பு என்னும் பொருளில் வருவதால் சத்துவ குணம் எனப்பட்டது . குணர் :- மரூஉ .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
வரைமிசை யுறைவதும் வலதே
வரைமிசை யுறைவதொர் வலதுடை யீருமை
உரைசெயு மவைமறை யொலியே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் பெருமையுடைய கயிலைமலையில் வாழ்வதும் சாமர்த்தியமே . கயிலைமலையில் வாழும் பெருமையுடைய உம்மைப் போற்றிப் புகழ்வன வேதங்கள் .

குறிப்புரை :

விரை - வாசனை . ஒரு வரை என்றது கயிலைமலையை . வலது - திறப்பாடுடையது . வன்மை என்னும் பகுதியடியாகப் பிறந்த குறிப்பு வினை முற்று . ஈற்றடியின் பொருளாவது :- நீரே பொருளாந் தன்மையை உலகிற்கு எடுத்து உரைப்பவை வேதங்களே . அவை வாசகம் . அவற்றின் வாச்சியம் அடிகளீர் என்பது குறிப்பெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
இட்டெழில் பெறுகிற தெரியே
இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
அட்டது வரைசிலை யாலே.

பொழிப்புரை :

மிகுந்த அழகும் , புகழுமுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் கையில் ஏந்தப்பட்டதால் அழகுபெற்ற நெருப்பை உடையவருமான சிவ பெருமானே ! அழகிய நெருப்பேந்திய நீர் திரிபுரத்தை எரித்தது மேரு மலையை வில்லாக வளைத்தும் ( அக்கினியைக் கணையாக எய்தும் ) அல்லவா ?

குறிப்புரை :

விட்டு எழில் - அழகு தங்கி , அதனாற் புகழ்பெறுகின்ற மிழலை . விட்டு - இப்பொருட்டாதலைப் புறப்பொருள் வெண் பாமாலை வஞ்சிப்படலம் 18 ஆம் பாட்டு உரையான் அறிக . கையில் இட்டு - இடப்பெற்று . அதனால் அழகுடையதாகியதும் நெருப்பே . அழகனைச் சேர்ந்தமையால் அழகில் பொருளும் அழகியதாயிற்று . அது ` நாறுபூம் பொழில் நாரையூர் நம்பனுக் காறுசூடினும் அம்ம அழகிதே ` என்பதாலும் உணர்க . கையது கனல் , எரித்ததும் கனல் ஆயின் , வரைசிலை எற்றுக்கு ? உமது தன்மை அறிவாரார் என்ற குறிப்பு .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

வேனிகர் கண்ணியர் மிழலையு ளீர்நல
பானிக ருருவுடை யீரே
பானிக ருருவுடை யீரும துடனுமை
தான்மிக வுறைவது தவமே.

பொழிப்புரை :

வேல் போன்று கூர்மையும் , ஒளியுமுடைய கண்களையுடைய பெண்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற , நல்ல பால் போன்ற நிறமுடைய சிவபெருமானே ! பால் போன்ற நிறமுடைய உம்முடன் உமாதேவி வீற்றிருந்தருளுவது தவச்சிறப்புடையதாகும் .

குறிப்புரை :

வேல் நிகர் கண்ணியர் - வேலையொத்த கண்களை யுடைய பெண்கள் வாழும் மிழலை . ந ( ல் ) ல பால் நிகர் - பாலையொத்த . உரு - நிறம் . சதாசிவமூர்த்தியின் நிறம் வெண்மை என்பதால் பால் நிகர் உருவுடையீர் என்னப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

விரைமலி பொழிலணி மிழலையு ளீர்செனி
நிரையுற வணிவது நெறியே
நிரையுற வணிவதொர் நெறியுடை யீரும
தரையுற வணிவன வரவே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளியுள்ளவரும் , மண்டையோட்டால் ஆகிய மாலையை அணிந்துள்ள வருமான ஆளுகையையுடைய சிவபெருமானே ! அவ்வாறு தலை மாலை அணிந்து ஆளுகை உடைய நீவிர் உமது அரையில் கச்சாகக் கட்டியது அரவமே .

குறிப்புரை :

செ ( ன் ) னி நிரை - தலைமாலை . நிரை - வரிசை . வரிசையாகக் கோத்த மாலையையுணர்த்தலால் பண்பாகுபெயர் , மண்டையோட்டைக் கோத்தணிந்தது . நெறியே - முறையேபோலும் , நெறியென்றது அமுது உண்டும் வானவர் சாவ , விடமுண்டும் சாவான் தான் ஒருவனே எனத் தெரிவித்தற்கு , உமது அரை உற : அணிவதும் அரவே . அரை நாண் ஆகவும் கச்சையாகவும் , கோவணமாகவும் அணிந்தமையால் , அணிவன எனப் பன்மையாற் கூறினர் . அரவு :- ( அரவுகள் ) பால் பகா அஃறிணைப்பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

விசையுறு புனல்வயன் மிழலையு ளீரர
வசையுற வணிவுடை யீரே
அசையுற வணிவுடை யீருமை யறிபவர்
நசையுறு நாவினர் தாமே.

பொழிப்புரை :

வேகமாக ஓடிப் புனல் வற்றாத நீர்வளம் மிக்க வயல்களை உடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , அரவம் அசையும்படி ஆபரணமாக அணிந்துள்ளவருமான சிவபெருமானே ! அவ்வாறு அசையும் அரவத்தை ஆபரணமாக அணிந்துள்ள உம்மை அறிபவர்களே , தாம் கூறுவனவற்றை அனைவரும் விரும்பிக் கேட்கும்வண்ணம் உண்மைப் பொருளை உபதேசிக்கும் வல்லுநர் ஆவர் .

குறிப்புரை :

அரவு அசைஉற அணிவு உடையீர் - பாம்பை அசையும்படி அணிதலையுடையீர் . உம்மை அறிபவரே உண்மைப் பொருளை உபதேசிக்க வல்லுநர் ஆவர் . அவர் கூறுவனவற்றை அனைவரும் விரும்பிக் கேட்பவர் என்பது ஈற்றடியின் கருத்து . நசை உறும் - ( கேட்போர் ) விரும்பும் . நாவினர் - பேச்சையுடையவர் . நா - கருவியாகுபெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

விலங்கலொண் மதிளணி மிழலையு ளீரன்றவ்
இலங்கைமன் னிடர்கெடுத் தீரே
இலங்கைமன் னிடர்கெடுத் தீருமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.

பொழிப்புரை :

மலைபோன்ற உறுதியான மதிலையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , அன்று இலங்கை மன்னனான இராவணனைக் கயிலையின் கீழ் அடர்த்தபோது , அவன் உம்மைப் போற்றிச் சாமகானம் பாட அவன் துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய சிவபெருமானே ! அவ்வாறு இலங்கை மன்னனின் துன்பத்தைப் போக்கிய உம்மைப் போற்றி வணங்குபவர்களே புலன்களை அடக்கி ஆளும் வல்லமையுடையவர் .

குறிப்புரை :

விலங்கல் - மலைபோன்ற . ஒள் மதில் - அழகிய மதில் . இடர் கெடுத்தீரே - செருக்கால் அவன் உற்ற துன்பத்தைப் போக்குதற்கு இரங்கி இடரை அகற்றியருளினீர் . வாசனாமலம் தம்மறிவினும் மிக்குப் புலன்களையீர்த்துச் செல்லுமாகலின் , திருவைந்தெழுத்தால் உம்மைத் துதிப்போர் , புலன்களைக் கோபித்து மடக்குவதும் உறுதி . ஏனை யோர்க்கு ஆகாது என்பதாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமை
அற்புத னயனறி யானே
அற்புத னயனறி யாவகை நின்றவ
நற்பத மறிவது நயமே.

பொழிப்புரை :

மலைபோன்ற மாளிகைகளும் , சோலைகளுமுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , திருமாலும் , பிரமனும் அறியாவண்ணம் நின்றவருமான சிவபெருமானே ! அவ்வாறு திருமாலும் , பிரமனும் அறியாவண்ணம் நின்ற உம் நல்ல திருவடிகளை இடையறாது நினைப்பதே மானிடப் பிறவி எய்தினோர் அடையும் பயனாகும் .

குறிப்புரை :

வெற்பு - மலைபோன்ற மாளிகைகள் . வெற்பு - உவமை ஆகுபெயர் . அது ` குன்றொன்றோடொன்று ` ( தி .2. ப .88. பா .4) என்னும் தென்திருமுல்லைவாயிற் பதிகத்தால் அறிக . அமர் - பொருந்திய , சோலை சூழ்ந்த , மிழலை , ( அற்புதன் ) அல் - ஐந்து இராத்திரியில் . புதன் - ஞானங்களை வெளிப்படுத்தின திருமால் , புதன் - வடசொல் . அந்த மதத்துக்குப் பாஞ்சராத்திரம் ` அஞ்சலினவர்புகழ் அண்ணல் ` என்பது . மகாஸ்காந்தம் என்னும் பெயர் வழங்கும் . இனி அற்புதன் என்பதற்கு , கண்ணிடந்து பூசித்த அரிய செயலையுடையவன் எனலும் ஆம் . அற்புதனோடு அயனும் அறியாதவனானான் . ஒருவினையொடுச் சொல் நின்றது . நின்றவரே ! உமது நல்ல திருவடியை அறிவது - உணர்ந்து ஆர்வம் தழைப்பதுவே . நயம் மானிடப் பிறவி யெய்தினோர் அடையும் பயனாம் . நின்ற அந் நற்பதம் என்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

வித்தக மறையவர் மிழலையு ளீரன்று
புத்தரொ டமணழித் தீரே
புத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே.

பொழிப்புரை :

நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் வாழும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , புத்தமும் , சமணமும் வீழுமாறு செய்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு புத்தமும் , சமணமும் வீழ்ச்சியடையும்படி செய்த உம்மைப் போற்றுபவர்களே பத்தியுடைய நன்மனம் உடையவர்கள் .

குறிப்புரை :

பத்திசெய் மனம் உடையோரே உம்மைப் போற்றத் தக்கவர் என்றது ஈற்றடியின் கருத்து . ஏனையோர் உம்மால் நக்கு நிற்கப் படுவோர் ஆவர் என்பது குறிப்பு . ` பொக்கமிக்கவர் பூவு நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே ` ( தி .5. ப .90. பா .9.)

பண் :சாதாரி

பாடல் எண் : 11

விண்பயில் பொழிலணி மிழலையு ளீசனைச்
சண்பையுண் ஞானசம் பந்தன
சண்பையுண் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொரு ளுணர்வது முணர்வே.

பொழிப்புரை :

ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்தோங்கிய சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானை , திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளினான் . அவ்வாறு , திருச்சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தின் சீரிய கருத்தை உணர்ந்து ஓதுதல் நல்லுணர்வு ஆகும் .

குறிப்புரை :

இவை - இவற்றின் . ஒண்பொருள் - சீரிய கருத்தை . உணர்வதும் உணர்வு - உணர்வதுவே உணர்வெனப்படுவது . தேற்றேகாரம் பிரித்துக் கூட்டுக . உம்மை உயர்வு சிறப்பு .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்க ளுலகிலா வாரே. 

பொழிப்புரை :

பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு அதிர்ந்து பேரோசை எழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய சிவபெருமானே! மழுப்படையையுடைய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில் அரசர்கள் ஆவர்.

குறிப்புரை :

பூசை - விழாக்காலங்களில் முரசு அதிர்ந்து ஓசை எழுப்பும் முதுகுன்றம் மேவிய பரசு படை - மழுவாகிய ஆயுதம் பெயரொட்டு. அமர் - பொருந்திய. உலகில் அரசர்கள் ஆவர். இடைப் பிறவரல். பல நாடுகளுக்கு அரசர் ஆவதால் பன்மையாற் கூறினர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறு நலமே. 

பொழிப்புரை :

அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, பாம்பைக் கச்சாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானே! பாம்பைக் கச்சாகக் கட்டியுள்ள உம்மைப் பாடுவார் எவ்விதக் குறையும் இல்லாதவர். நாள்தோறும் நன்மைகளையே மிகப்பெறுவர்.

குறிப்புரை :

மொய்குழலாள் - அடர்ந்த கூந்தலையுடைய அம்பிகையோடு முதுகுன்றில் மேவிய அசைத்தருளினீர் என்க. அசைத்தல் - கட்டுதல். பை - பாம்பு. உம்மைப்பாடுவார் நாடோறும் நன்மைகள் குறைவின்றி மிகப்பெறுவர். நைவு - குறைதல்.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே. 

பொழிப்புரை :

முழவுகள் ஒலிக்கின்றதும், சோலைகளால் அழகு பெற்றதுமான திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாகவும் கொடியாகவும் உடைய சிவபெருமானே! இளமைவாய்ந்த இடபத்தை வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட உம்மை வாழ்த்துபவர்கள் பழியும், பாவமும் இல்லாதவர்கள் ஆவர்.

குறிப்புரை :

முழவு அமர் முதுகுன்றம். பொழில் அணி முதுகுன்றம் என இயைக்க. மழவிடை - இளங்காளை. பகை - இங்குப் பாவம் என்னும் பொருளில் வந்தது. பழிக்கு இனம் ஆகலின். \\\\\\\"எண்ணுங் காலும் அதுவதன் மரபே\\\\\\\" (தொல். சொல். கிளவியாக்கம். 47.)

பண் :சாதாரி

பாடல் எண் : 4

முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
திருவொடு தேசினர் தாமே.

பொழிப்புரை :

வாசனை பொருந்திய சோலைகள் அழகு செய்கின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அழகு பொருந்திய சடைமுடியினை யுடையவரே! அழகு பொருந்திய சடைமுடியினை உடையவராகிய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் செல்வமும், புகழும் உடையவர்.

குறிப்புரை :

முருகு - வாசனை. உரு அமர் - அழகு பொருந்திய. திரு - ஐசுவரியம். தேசு - தேஜஸ், புகழ்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 6

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 8

முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே. 

பொழிப்புரை :

முத்தியைத் தருகின்ற உயர்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்தவருமான சிவபெருமானே! இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்த உம்மைப் பாடுவார் அழகிய சித்தமுள்ள அடியவர்களாவார்கள்.

குறிப்புரை :

முடிபத்தும் என்க. சித்தம் நல் - நல்ல சித்தமுடைய அடியவர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

முயன்றவ ரருள்பெறு முதுகுன்ற மேவியன்
றியன்றவ ரறிவரி யீரே
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
பயன்றலை நிற்பவர் தாமே. 

பொழிப்புரை :

தவநெறியில் முயல்பவர்கள் அருள்பெறுகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அன்று தம் செருக்கால் காணத் தொடங்கிய பிரமன், திருமால் இவர்களால் காண்பதற்கு அரியவராக விளங்கிய சிவபெருமானே! பிரமனும், திருமாலும் அறியவொண்ணாதவராகிய உம்மைப் போற்றி வழிபடுவர்கள் சிறந்த பயனாகிய முத்தியைத் தலைக்கூடுவர்.

குறிப்புரை :

முயன்றவர் - தவம் புரிந்தோர் \\\\\\\"தவம் முயல்வார்` என வந்தமை (திருமுறைப் பதிகம்) அறிக. இயன்றவர் - தம் செருக்காற் காணத்தொடங்கிய பிரம விட்டுணுக்களால் அறிவரியீர். பயன்தலை நிற்பவர் - பயன்பெறுபவர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் டேரைக்காய்ந் தீரே
கட்டமண் டேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே. 

பொழிப்புரை :

மொட்டுக்கள் மலர்கின்ற சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கட்டுப் பாட்டினையுடைய சமணர்களையும், புத்தர்களையும் கோபித்தவரான சிவபெருமானே! சமணர்களையும், புத்தர்களையும் கோபித்த உம்மைத் தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள் பெறுதற்குரிய முத்திப் பேற்றினைப் பெறுவர்.

குறிப்புரை :

கட்டு அமண் - கட்டுப்பாட்டையுடைய அமணரோடு. தேர் - தேரரை. கடைக்குறை. காய்ந்தீர் - கோபித்தருளினீர். உம்மைக் கருதுவோரே அன்பர்கள் பெறும் சிறப்பைப் பெறுதற்குரியராவர். \\\"செம்பொற் பாத மலர்காணாப் பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன்\\\" என்பதன் எதிர்மறை.

பண் :சாதாரி

பாடல் எண் : 11

மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே. 

பொழிப்புரை :

அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானைத் திருஞானசம்பந்தர் போற்றி அருளினார். அவ்வாறு திருஞானசம்பந்தர் போற்றியருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுபவர்கள் பழியிலர் ஆவர்.

குறிப்புரை :

மூடிய சோலைசூழ் - மூடுவதுபோல் அடர்ந்த சோலை. பாடிய அவர் பழியிலர் ஆவர் என்க.

பண் :சாதாரி

பாடல் எண் : 1

கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற் காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கை யோர்பான் மகிழ்ந்த வற்புதஞ் செப்பரிதால்
பெரும்பக லேவந்தென் பெண்மை கொண்டு பேர்த்தவர் சேர்ந்தவிடஞ்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரந்தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் கரும்பினை வில்லாகக் கொண்ட மன்மதனைக் கோபித்து நெருப்புக் கண்ணால் எரித்து, பின்னர் அவனது அன்பிற்குரிய மனையாளாகிய இரதி வேண்ட அவள் கண்ணுக்கு மட்டும் உருவம் தோன்றுமாறு செய்து, கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய உமாதேவியை ஒரு பகுதியாகக் கொண்டு மகிழ்ந்த அற்புதம் செப்புதற்கரியதாகும். நண்பகலிலே வந்து எனது பெண்மை நலத்தைக் கவர்ந்து கொண்டு திரும்பவும் அவர் சென்று சேர்ந்த இடம் வண்டுகள் விரும்பி உறைகின்ற சோலைகள் சூழப்பெற்ற நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் ஆகும்.

குறிப்புரை :

கரும்பு அமர்வில்லி - மன்மதன். காய்ந்து - கோபித்து, உருவத்தை அழித்து. காதற்காரிகை மாட்டு - அவனது காதலுக்குரிய மனைவியாகிய இரதி தேவிக்கு. அருளி - (அவள் கண்ணுக்கு மட்டும் உருவம் தோன்றுமாறு) அருள் புரிந்து. அரும்பு - தாமரையரும்பு. கோங்கு அரும்புமாம். அமர் - போன்ற உவமவாசகம். கொங்கை - சினையாகு பெயராய் அம்பிகையை யுணர்த்திற்று. இங்கு அற்புதமாவது - மன்மதனால் தாம் அம்பிகையை மணந்ததாகப் பிறர் கருதுமாறு செய்வித்தமையன்றி \\\\\\\"முதலுருப்பாதி மாதராவது முணரார்\\\\\\\" \\\\\\\"ஒன்றோடொன்றொவ்வாவேடம் ஒருவனே தரித்துக் கொண்டு நின்றலாலுலகு நீங்கி நின்றனனென்று மோரார்` என்ற சாத்திரக் கருத்துமாம். (சிவஞானசித்தியார் சுபக்கம் சூத். 1.49,51) கள்வர் கொள்வது இராக்காலமும் பெயர்பொருளுமாயிருக்க, இவர் கொண்டது பெரும்பகலில், பெயராப்பொருளை. இது வியப்பு என்னும் குறிப்புத் தோன்றப் பெரும்பகலே வந்தென் பெண்மை கொண்டு என்றார். பேர்த்துக்கொண்டார் என்றார். கொண்டு பேர்த்தார் விகுதி பிரித்து மாறிக் கூட்டுக; கொண்டார் - கைக் கொண்டார். இது தலைவி கூற்று. செம்மை - அறம்மிக்க (தோணிபுரம்), சிறிது புண்ணியம் செய்யினும் பெரும்பயம் தரும் தல விசேடம். \\\\\\\"எண்மைத் தாய தொழில்சற் றியற்றினும் வண்மைத்தாக வரும்பய னுய்ப்பது\\\\\\\" (பேரூர்ப்புராணம் - மருதவரைப்படலம். 6.) செம்மை - செம்பொருள் ஆகுபெயர். இது இப்பொருள்தரலைச் \\\\\\\"செம்பொருள் கண்டார்` (குறள். 91) என்ற பரிமேலழகர் உரைத்த உரையாலறிக.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கொங்கியல் பூங்குழற் கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனி யெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோர வந்தென் சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணி புரந்தானே. 

பொழிப்புரை :

இயற்கைமணம் பொருந்திய அழகிய கூந்தலையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுமுடைய அழகிய உமா தேவியைத் தன் ஒரு பாகமாகப் பொருந்திய, திருமேனி முழுவதும் பால்போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்துள்ள சிவபெருமான் எனது உள்ளத்தில் புகுந்து என் வளையல் கழன்று விழுமாறு செய்து, எனது தோற்றப் பொலிவினைக் கெடுத்து வீற்றிருந்தருளும் ஊர் உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

கொங்கு இயல் - (இயற்கையாகவே) வாசனை பொருந்திய. பூகுழல் - பொலிவுபெற்ற கூந்தலையும். கொவ்வைச் செவ்வாய் - கொவ்வைக் கனிபோன்ற சிவந்த வாயையுமுடைய. கோமளம் மாது - மென்மைத் தன்மை பொருந்திய உமையாள். பங்கு இயலும் - ஒரு பாகம் பொருந்திய திருமேனி முழுவதும். பால்போன்ற வெள்ளிய திருநீற்றைப்பூசி. சாயல் - தோற்றப் பொலிவு. துங்கு - (துங்கம்) உயர்வு. ஞானம் - ஞான் என்று வந்ததுபோல (சித்தியார்) துங்கு எனக்கடைக்குறைந்து வந்தது.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

மத்தக் களிற்றுரி போர்க்கக் கண்டு மாதுமை பேதுறலுஞ்
சித்தந் தெளியநின் றாடி யேறூர் தீவண்ணர் சில்பலிக்கென்
றொத்தபடி வந்தென் னுள்ளங் கொண்ட வொருவர்க் கிடம்போலுந்
துத்தநல் லின்னிசை வண்டு பாடுந் தோணி புரந்தானே.

பொழிப்புரை :

மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டதைக் கண்ட உமாதேவி அஞ்சவும், அவள் பயம் நீங்கி மனம் தெளியச் சிவபெருமான் திருநடனம் செய்தார். அவர் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனியர். சிறுபிச்சை ஏற்க அதற்கேற்ற பிட்சாடனர் கோலத்தில் வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட ஒப்பற்றவராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துத்தம் என்னும் நல்ல இன்னிசையை, வண்டுகள் பாடுகின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

மத்தம் - மதத்தால் எய்திய மயக்கம். மாதுமை பேதுறலும் - அஞ்சின அளவில். சித்தம் தெளிய - அவரது மனம் தெளிய (பயம்நீங்கித்) தெளியும்படி. நின்று ஆடி - நின்று திரு விளையாடல் செய்தவர். சில் பலி - சிறிது அளவினதாக இடும் பிச்சை. `ஐயம் புகூஉம் தவசி கடிஞை போற், பைய நிறைத்து விடும்` (நாலடியார். 99) என்றதும் காண்க. ஒத்தபடி வந்து - பிச்சைக்கு வருவோர் கோலத்துக்கேற்ற விதமாக வந்து. துத்தம் - சப்த சுரத்தில் ஒன்று. உபலட்சணத்தால் ஏழிசைகளையும் கொள்க.

பண் :சாதாரி

பாடல் எண் : 4

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 5

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 6

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வள்ள லிருந்த மலையத னைவலஞ் செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெ ழுந்தன் றெடுத்தோ னுரநெரிய
மெள்ள விரல்வைத்தெ னுள்ளங் கொண்டார் மேவு மிடம்போலுந்
துள்ளொலி வெள்ளத்தின்மேன்மி தந்த தோணி புரந்தானே. 

பொழிப்புரை :

வேண்டுவோர் வேண்டுவதே வரையாது வழங்கும் வள்ளலான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற கயிலைமலையை வலஞ்செய்து செல்லலே உண்மைநெறி என்பதை உள்ளத்தில் கொள்ளாது, தனது திக்விஜயத்திற்கு இடையூறாக உள்ளது என்று கோபம் கொண்டு அன்று திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற இராவணனின் நெஞ்சு நெரியும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய, என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், பிரளய காலத்தில் அலைகள் துள்ளி வருவதால் உண்டாகிய ஒலியுடன் கூடிய வெள்ளத்தின்மேல் மிதந்து நிலைபெற்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

வள்ளல் - \\\\\\\"வேண்டுவார் வேண்டுவதே யீவான்` (தி.6 ப.23. பா.1.) \\\\\\\"ஆசைதீரக்கொடுப்பார்\\\\\\\" என்ற சுருதி வசனத்தாலும் அபுத்தி பூர்வமாக வில்வம் உதிர்த்தல், அவியும் விளக்கைத் தூண்டல் செய்த பிராணிகளுக்கும் வாயினூலாற் சித்திரப் பந்தரியற்றிய சிலந்திக்கும் பேரரசுரிமையளித்தல் ஆகிய புராண வரலாற்றாலும் சிவபெருமானொருவனுக்கே வள்ளல் என்னும் பெயர் அமையும் என்க. உரம் - நெஞ்சு. மெள்ள - மெல்ல லகர ளகர ஒற்றுமை. துள்ஒலி - அலைகள் துள்ளி வீசுவதால் உண்டாகிய ஓசை. மெள்ள விரல் வைத்தமையால் உரம் நெரிந்தது. சற்றே அழுத்தியிருப்பின் உடலும் உயிருமே நெரிந்திருக்கும் என்றபடி.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வெல்பற வைக்கொடி மாலு மற்றை விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்ப ணிந்துஞ்
செல்வறநீண்டெஞ் சிந்தை கொண்ட செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்கு செம்மைத் தோணி புரந்தானே.

பொழிப்புரை :

கருடக்கொடியுடைய திருமாலும், நறுமணமிக்க தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் முறையே பன்றியாய் உருக்கொண்டு கீழே அகழ்ந்து சென்றும், அன்னப் பறவையாய் உருவெடுத்தும், காணற்கரியராய் நெருப்புருவாய் நீண்டு எம் உள்ளத்தைக் கவர்ந்த செல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொன்மையான பறவைகள் சுமந்து ஓங்கியுள்ள நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

பறவைக்கொடி - கருடக்கொடி. பறவை - பொதுப் பெயர், சிறப்புப்பெயர்ப் பொருளில் வந்தது. பல்பறவைப்படியாய் - பலபறவைகளும் ஓருருவுகொண்டு பறந்தாற்போல. உயர்ந்தும் - உயரப் பறந்து சென்றும், உயர்ந்து பொதுவினை. சிறப்புவினைப் பொருளில் வந்தது. `உயர்ந்தும் பணிந்தும் உணரான்` என இத் தொடர் திருக்கோவை யாரினும் வருவது; இத்தொடர் இங்கு எதிர் நிரனிறைப் பொருளில் வந்தது. செல்வு - செல்லுதல். வு தொழிற்பெயர் விகுதி, துணிவு, பணிவு என்பவற்றிற்போல, \\\\\\\"தொல் பறவை சுமந்து ஓங்கு தோணிபுரம்\\\\\\\" \\\\\\\"நின்பாதம் எல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின வென்ப\\\\\\\" - அரசர் அருள்மொழி.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள் கஞ்சி யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெரு தேறிவந்தெ னெழில்கவர்ந் தாரிடமாம்
தொண்டிசை பாட லறாத தொன்மைத் தோணி புரந்தானே. 

பொழிப்புரை :

கமண்டலம், மயில்தோகை, தடுக்கு ஆகியவற்றுடன் மலைகளில் வசிக்கின்ற சமணர்களும், மண்டை என்னும் உண்கலத்தில் கஞ்சிபெற்றுப் பருகும் புத்தர்களும் பேசுகின்ற வார்த்தைகள் அடங்க, இண்டை மாலை புனைந்து, இடப வாகனத்திலேறி எனது அழகைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொண்டர்களின் இசைப்பாடல்கள் நீங்காத பழமைவாய்ந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

குண்டிகை; நினைத்த இடத்தில் நீர் பருகற்கு. பீலி; வழியில் சிற்றுயிர்க்கும் தீங்கு நேராவாறு கூட்டிக்கொண்டு நடப்பதற்கு. தட்டு - தடுக்கு. உட்காருவதற்கு உபயோகிப்பர். நின்று கோசரங் கொள்ளியர் சமணர். கோசரம் - கோ என்னும் பல பொருளொரு சொல். நீரைக் குறித்தது. சரம் - அந்நீரில் வாழ்வனவாகிய மீன்களைக் குறித்தது. மண்டை - ஒருவகை உண்கலம். மனம் கொள் - விருப்பமான கஞ்சி ஊணர் புத்தர். வாய்மடிய - பேச்சு அடங்க. வாய் - கருவியாகுபெயர். தொண்டு - தொண்டர்; சொல்லால் அஃறிணை. பொருளால் உயர்திணை. வாக்கு மனங்கட்கு அகோசரத்தை அறியார் என்பதே கருத்து.

பண் :சாதாரி

பாடல் எண் : 11

தூமரு மாளிகை மாட நீடு தோணி புரத்திறையை
மாமறை நான்கினொ டங்க மாறும் வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞான சம்பந் தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும் வல்லார் பார்முழு தாள்பவரே. 

பொழிப்புரை :

தூய்மையான வெண்ணிற மாளிகைகள், மாடங்கள் நிறைந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நான்கு வேதங்களும், அவற்றின் ஆறு அங்கங்களும் வல்லவனும், தானுண்ட ஞானப்பாலை நாவால் மறித்து உண்மையான உபதேச மொழிகளாக நமக்குக் கேள்வி ஞானத்தைப் புகட்டி நன்மையைச் செய்கின்றவனுமான திருஞானசம்பந்தன் அருளிய பாட்டிலக்கணங்கள் பொருந்திய இப்பாடல்கள் பத்தினையும் பத்தியுடன் ஓத வல்லவர்கள் இப்பூவுலகம் முழுவதையும் ஆளும் பேறு பெறுவர்.

குறிப்புரை :

தூமருவு - சுதை தீற்றியதால் வெண்மை நிறம் பொருந்திய, மாளிகை. நாமரு (வு) கேள்வி - நாவிற்பொருந்திய உபதேசங்களால் கேள்வி ஞானத்தைப் புகட்டவல்ல ஞானசம்பந்தன். நா என்பது உபதேசத்தை யுணர்த்தலால் ஆகுபெயர். பா (மருவு) - பாட்டின் இலக்கணம் அமைந்த. பா - காரிய ஆகுபெயர்.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக்க வெரியேந்தி யாடு நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்த மிலங்குகான லிராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

அரிய மாணிக்கங்களையுடைய நாகங்களைப் படமெடுத்து ஆடுமாறு தம் உடலில் அணிந்துள்ளவர் சிவபெருமான் . அவர் மகாசங்கார காலத்தில் நரிகள் ஊளையிடும் சுடுகாட்டில் நெருப்பேந்தி நடனம் செய்வார் . மிக்க ஒளியுடைய முத்துக்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , ஒளிக்கதிர் வீசும் வெண்மையான பிறைச்சந்திரனைச் சடைமுடியில் தரித்த , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவரான சிவபெருமானின் அச்செயல் , உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுச் செய்யப்படும் அருட்செயல் என்பதை உணர்ந்தவர்களே மெய்ஞ்ஞானிகள் ஆவர் .

குறிப்புரை :

திரிதரு - திரிகின்ற நாகம் . திளைத்து - அணிந்து . தீ அழல்வாய் - கொடிய நெருப்பில் நின்று . ( நரி ) கதிக்க - பாட . கதித்தல் - சொல்லல் , இங்குப் பாடுதல் என்னும் பொருளில் வந்தது . மயானம் ஆதலில் நரி கூவியது பாடல் போலத் தோன்றியது , எரி ஏந்தி ஆடும் நலம் ; உயிர்களின் இளைப்பொழித்தற்குச் செய்யும் நன்மை , மயானத்து ஆடல் மகா சங்காரத்தைக் குறிப்பது . எரி கதிர் முத்தம் ;- முத்துத் தண்மையுடையதாதலின் , எரி , ஒளிக்கு மட்டும் கொள்க . இராமேச்சுரம் மேய விமலர் செயும் செயலாகிய , நாகம் ஆடத் திளைத்து , நரி கதிக்க , எரியேந்தி , அழல்வாய் நின்று ஆடும் நலத்தைத் தெரிந்துணர்வாரே ` மெய்ஞ்ஞானிகளாவார் ` என்பது குறிப்பெச்சம் . இப்பொருளுக்கு நலமே என்பதின் ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுதல் பொருத்தமாகும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந் திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரு மிராமேச் சுரமேய
மறிகிளர் மான்மழுப் புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

வெண்ணிற அலைகள் துள்ளிவீசும் கடலுடைய இராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இள மான்கன்றையும் , மழுவையும் ஏந்தியுள்ள சிவபெருமான் புள்ளிகளையுடைய பாம்பை இடையிலே கட்டிக் கொண்டு , பக்கத்திலே சுருண்ட கூந்தலையுடைய உமாதேவி பாட , அதற்கேற்ப விரலால் தெறித்துப் பண்ணும் யாழ் முதலியவற்றின் இசை ஒலிக்க , நள்ளிரவில் நடனமாடும் செயலின் உண்மையைத் தெரிந்து உணர்பவர் மெய்ஞ்ஞானிகளாவர் .

குறிப்புரை :

பொறி - புள்ளிகள் , கிளர் - விளங்குகின்ற , பாம்பு , அரை ஆர்த்து - இடுப்பிற் ( கச்சையாகக் ) கட்டி , அயலே - பக்கத்திலே ( நின்று ) புரிவோடு உமைபாட அதற்கேற்ப , தெறி ( கிளர ) - விரலால் தெறித்துப் பண்ணும் யாழ் முதலியவற்றின் இசை , கிளர - ஒலிக்க , தெறி - தெறித்தல் என்னும் பொருள் தரலால் தொழிற்பெயர் , ( யாழ் ) ஓசைக்கு ஆயினமை ஆகுபெயர் . எல்லி - இரவு . எறி கிளர் - வீசுதல் . மிக்க வெண்திரை . கிளர் - துள்ளும் . மறிமான் - மான் கன்றும் மழு ( வும் ). புல்கும் - தங்கிய , கையையுடைய , உமை மணவாளராகிய பெருமான் - எல்லியாடும் திறம் தெரிந்துணர்வார் . இவை இராமேச்சுரம்மேய ( உமை ) மணவாளன் செய்யும் செயலே என்பர் என , ஒரு சொல்லெச்சம் வருவித்து வினை முடிவு கூறினும் அமையும் . சதி - ( மனைவி ) யென்ற பொதுச் சொல் வட மொழியில் , இறைவியைக் குறித்து வழங்கல் போலத் தமிழில் பிள்ளை ( யார் ) என்ற பொதுச் சொல் ( மூத்த பிள்ளை யார் ). முருகக் கடவுளையும் குறித்து வழங்கும் . அதுபோல மணாளன் ( பதி - வடசொல் ) என்ற சொல் இறைவனைக் குறித்தது . எமது ஆளுடைய பிள்ளையார் அருண் மொழியின் திறம் அரிதின் உணரற்பாலது . மணாளன் என்பது சிவபெருமானுக்கு ஒரு பெயர் . அது ` மஞ்சா போற்றி மணாளா போற்றி ` என்னும் போற்றித் திருவகவலாலும் , ` மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட் கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் ` என்னும் அப்பர் திருவாக்காலும் அறிக . ( தி .4. ப .21. பா .2.)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

அலைவளர் தண்புனல் வார்சடைமே லடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடவாடி மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியு மிராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந் தலைவர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

தழைகளை உடைய தாழை மரங்கள் மலர்களை விரிக்கும் திருஇராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற . அழகிய தலைமாலைகளைச் சூடிய , தலைவராகிய சிவபெருமான் தமது நீண்ட சடைமுடிமேல் அலைபெருகிவரும் கங்கைநீரை அடக்கி , ஒரு பாகமாக அமைந்த மலையிலே வளர்ந்த உமாதேவி பாட , நடனமாடித் தம் தன்மை இதுவென்று பிறர் அறியாதவாறு செய்து வரும் அருஞ்செயலின் மாட்சியை மெய்ஞ்ஞானிகளே உணர்வர் .

குறிப்புரை :

அலைவளர் தண்புனல் - அலை பெருகி வந்த கங்கை நீரை , வார் - தொங்கும் , சடைமேலடங்கச் செய்து . ஒரு பாகத்திலுள்ள ( தனது காதலி , பாட , ஆடி மயக்க - ( தன் தன்மை இதுவென்று ) அறியாவாறு செய்து வரும் மாட்சி . ஏனை மரங்களிற் போலக் கோடு , கவடு , வளார் இன்றித் தழையே யுண்மையால் இம் மரம் தாழையென்னப் பட்டதெனப் பகுதிப் பொருள் கூறுவார் போன்று எமது புகலியர் பெருமான் இலை வளர் தாழை யென்றது போற்றத் தக்கது . ` தலைவளர் சூடும் ` மிக்க தலைகளைக் கோத்த அழகிய நல்ல மாலையைச் சூடும் தலைவர் ; தலைமாலை தலைக் கணிந்த தலைவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்
தேதெரி யங்கையி லேந்தியாடுந் திறமே தெரிந்துணர்வார்
ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்து மிராமேச் சுரமேயார்
போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

குற்றமற்ற அடியவர்கள் தொழுது போற்றத் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அரும்பு போன்ற இள வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் , கொன்றை மலரையும் சூடியுள்ள புனிதரான சிவபெருமான் , பெரிய கொங்கை களையுடையவளாய் , ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்த , பெரிய கண்களையுடைய , மலையான்மகளான உமாதேவி பாட , ஒளிபொருந்திய நெருப்பை உள்ளங்கையிலேந்தி நடனமாடும் செயலின் திறத்தைத் தெரிந்துணர்வார் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

மாதனம் - பெரிய தனங்கள் , நேர் இழை - நேரிய ஆபரணங்கள் . தே ( ய ) து - ஒளியையுடையதாகிய , எரி - நெருப்பை . தேயு அது , தேயது : ( அது பகுதிப் பொருள் விகுதி ) தேது என மருவி வந்தது . போது - அரும்பு போன்ற வெண்திங்கள் ` முகிழ் வெண்டிங்கள் வளைத்தானை ` என்ற திருவாலவாய்த் திருத் தாண்டகத்தால் உணர்க . வினை முடிவு இரண்டாம் பாடலிற் போற்கொள்க . தேசெரியுமாம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

சூலமோ டொண்மழு நின்றிலங்கச் சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடவாடுங் குணமே குறித்துணர்வார்
ஏல நறும்பொழில் வண்டுபாடு மிராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

ஏலம் முதலிய செடிகளையுடைய நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீலகண்டமுடைய , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவரான எங்கள் சிவபெருமான் , சூலம் , ஒளி பொருந்திய மழு ஆகியவற்றை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய உமாதேவி அருகில் நின்று பாட , நடனம் செய்யும் குணத்தைக் குறித்துணர்பவர் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

நின்று - கையில் தங்கி , நல்மாது - உமா தேவியார் , பாட ஆடும் , குணம் - தன்மை , ஏல ( ம் ) நறும் பொழில் - ஏலம் முதலிய செடி களையுடைய நறும் மணம் கமழும் பொழில் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கிநல் லாளோடாடு மியல்பின ராகிநல்ல
இணைமலர் மேலன்னம் வைகுகான லிராமேச் சுரமேயார்
அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

சிறந்த தாமரை மலர்களில் அன்னங்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , சேர்த்துக் கட்டப்பெற்ற கரந்தைமாலை சூடிய சிவபெருமான் , ஐம்மலர்க்கணைகளைத் தொடுக்க வில்லைக் கையில் ஏந்திய மன்மதனை எரித்தவர் . அப்பெருமான் மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமாதேவியோடு நடனமாடும் இயல்புடையவர் .

குறிப்புரை :

கணைபிணை - ( மலர் ) அம்புகளைக் கோத்த கொடிய ( கரும்பு ) வில்லை யேந்தியவனாகிய காமனை . இணை - இரண்டாகிய ( நோக்கு ). பிணை - பெண்மானின் கண் போன்ற . நோக்கி - கண்களையுடைய அம்மையார் , இணை ( இதழ்கள் ) அடுக்கிய . மலர் - தாமரை மலர் . அணை - ஒன்றோடொன்று சேர்த்து . பிணை - கட்டப்பட்ட . புல்கு - பொருந்திய . கரந்தை - கரந்தை மாலை . அடிகள் செயும் செயல் எவரானும் அறிய வருவதொன்று அன்று என்பது குறிப்பெச்சம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்
ஏரினார் பைம்பொழில் வண்டுபாடு மிராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

வண்டுகள் பாடும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , கார்காலத்தில் மலரும் கொன்றையையும் , வெண்ணிறப் பிறைச் சந்திரனையும் சூடியவரான சிவபெருமான் , கங்கையைத் தாங்கிய புன்சடை பின்புறம் தொங்க , மிக்க வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சூடி , உலகமே உறங்கும் நள்ளிரவில் பாடி ஆடும் உவகையின் செயல் தன்மையை உணர்பவர் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

நீரின் - கங்கை நீரினால் . ஆர் - நிறைந்த . நெடுவெண் - மிக்க வெண்மையையுடைய . தூங்கும் இரவில் ஆடும் . உவகை - மகிழ்ச்சியை ஆராய்ந்து அறிபவர் . காரின் ஆர் - கார்காலத்தில் மலர்தலையுடைய . கொன்றை , முதல் அடியில் நெடுவெண்மதி சூடி என்று வந்தமையால் , ஈற்றடியில் வரும் வெண்டிங்கள்சூடும் கடவுள் என்பது சிவபெருமான் என வாளா பெயரளவாய் நின்றது , ` மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு ` ( குறள் . 610) என்றதில் வரும் ` அடி அளந்தான் ` என்பது போல . இருள் - இலக்கணையாய் இரவையுணர்த்திற்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப் புலித்தோ லுடையாக
மின்றிகழ் சோதியர் பாடலாடன் மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவியேத்து மிராமேச் சுரமேயார்
குன்றினா லன்றரக் கன்றடந்தோ ளடர்த்தார்கொளுங் கொள்கையே.

பொழிப்புரை :

என்றும் நல்லோர்கள் போற்றி வணங்கும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , கயிலைமலையால் அன்று இராவணனின் அகன்ற வலிமையான தோள்களை அடர்த்த சிவபெருமான் , நறுமணமிக்க அழகிய திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசி , புலித்தோலாடை அணிந்து , மின்னல் போன்று ஒளிரும் செவ்வண்ணத்தராய் , பாடி ஆடி வரும் செயலின் பெருமையை உணர்பவர் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

பொன் திகழ் - வெண் பொன்னாகிய வெள்ளியைப் போல் விளங்குகின்ற நீறு பூசி . மின்திகழ் சோதியர் - மின்னலைப் போல விளங்கும் ஒளியையுடையவராய் . சோதியர் - முற்றெச்சம் . மிக்காராய் வரும் மாட்சி ( அனைத்தும் ) அரக்கன் தோளடர்த்தாராகிய இராமேச்சுரம் மேயார் கொள்கைகளேயாகும் . பொன் திகழ் - பொன்னில் திகழ்வதுபோற் காணப் படுகின்ற எனினுமாம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

கோவல னான்முக னோக்கொணாத குழக னழகாய
மேவல னொள்ளெரி யேந்தியாடு மிமையோ ரிறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்து மிராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

அம்பு எய்தலில் வல்ல இராமபிரான் புகழ்ந்து ஏத்திவாழ்த்தும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் , விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்திய சிவபெருமான் , திருமால் , பிரமன் இவர்களால் அறியப்படாதவர் . இளமையும் , அழகும் அமைந்த திருவுருவினர் . ஒளி பொருந்திய நெருப்பைத் தம் கையிலேந்தி ஆடுகின்ற , தேவர்கட்கெல்லாம் இறைவனான அப்பெருமானின் அருட்செயலின் மெய்ம்மையை அறிவோர் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

நோக்கொ ( ண் ) ணாத - நோக்க ஒண்ணாத . குழகன் - இளமையையுடையவன் . மேவலன் - அனைவராலும் விரும்பப்படுபவன் . மேவுதல் - விரும்புதல் . ஏவலன் - அம்பு எய்தலில் வல்லவன் ஆகிய இராமன் ; இறைவனைப் புகழ்ந்து ஏத்தி வாழ்த்திய தன்மையால் , ஏவலனார் - உயர் சொற்கிளவியாற் குறித்தார் . சே - இடபமாகிய . வ ( ல் ) ல - வல்ல . வெல் கொடி - வெல்லும் கொடியை , ஏந்து கொள்கை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலு மிராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

முதுகிலும் , மார்பிலும் தடுக்கை அணிந்து , ஒதுக்கப்பட்ட இடங்களில் திரியும் சமணர்களும் , பொன் போன்ற சீவரம் என்னும் ஆடையைப் போர்த்த புத்தர்களும் கூறும் புறங்கூற்று மொழிகளைக் கேளாமல் , யாழிசை போல் வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளி , பல்லையுடைய பெரிய மண்டையோட்டில் பலியேற்றுத் திரியும் சிவபெருமான் செய்யும் செயல்களைக் கேட்டு உணர்ந்து , அவரை வழிபட்டு உய்திபெறுங்கள் .

குறிப்புரை :

முன் - மார்பிலும் . பின் - முதுகின் புறத்திலும் . இடு - தொங்க விடப்பட்ட . தட்டை - தடுக்கை . சாத்தி - அணிந்து . பிரட்டே - ஒதுக்கப்பட்ட இடங்களில் , திரிபவர்களாகிய சமணரும் சீவரம் என்னும் ஆடையைப் போர்த்தவர்களாகிய புத்தர்களும் . புறம் கூறல் - அல்லாத பொருள்களைக் கூறுதலைக் கேளாமல் , இனிய நெடிய சோலையில் வண்டுகள் யாழ் ஓசையைப்போல ஒலிக்கும் இராமேச்சுரமேய பரமர் செய்யும் செயலே கேட்டுணர்ந்து உய்தி கூடுமின் என்பதாம் . பல்நெடும் வெண்தலை கொண்டு உழலும் - பல்லையுடைய பெரிய வெள்ளிய கபாலம் கைக்கொண்டு ( பிச்சைக்குத் ) திரியும் ( பரமர் ).

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் றிறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணு மிராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தனல்ல மொழியா னவின்றேத்தும்
பாவியன் மாலைவல்லா ரவர்தம்வினை யாயின பற்றறுமே.

பொழிப்புரை :

சீதாதேவியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமையை அழித்து , அம்பு எய்யும் வில்லேந்திய இராமபிரான் வழிபட்ட திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் , விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை , நாவலராகிய ஞானசம்பந்தர் , நல்ல மொழியால் போற்றிப் பாடிய பாட்டின் இலக்கணம் வாய்ந்த இப்பாமாலையை , ஓதி வழிபட வல்லவர்களின் வினைகள் , முற்றிலும் அழியும் .

குறிப்புரை :

தேவி - சீதை . திறல் வாட்டி - வலிமையை யழித்து . ஏ இயல் - அம்பு எய்யும் . வெஞ்சிலை - கொடிய வில்லை யேந்திய . அண்ணல் - வீரனாகிய இராமன் . நண்ணும் - போற்றிய . வெஞ் சிலை - ` காய்சினவேல் ` திருக்கோவையாரிற் போலக் கொள்க . நல்ல மொழி - பயன் தரும் சொற்களாகிய . பா இயல் - பாட்டின் இலக்கணம் வாய்ந்த மாலை . வினை பற்று அறும் - வினை முற்றும் அழியும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

காம்பினை வென்றமென் றோளி பாகங் கலந்தா னலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடு விற்றிரு நாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்ச டையான் புலியின் னுரிதோன்மேல்
பாம்பினை வீக்கிய பண்ட ரங்கன் பாதம் பணிவோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் , மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . நலம் தரும் இனிய நீர் சூழ்ந்த சிறந்த நீர்நிலைகளையுடைய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . அழகிய கங்கையையும் , முறுக்குண்ட சிவந்த சடையையுமுடையவர் . புலித்தோலாடை அணிந்தவர் . பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . பண்டரங்கன் என்னும் திருப்பெயர் உடையவர் . அத்தகைய சிவபெருமானின் திருப்பாதங்களை நாம் பணிவோமாக .

குறிப்புரை :

காம்பினை வென்ற மென்தோளி - மூங்கிலை வென்ற மெல்லிய தோளையுடைய உமாதேவியார் . மென்மைத் தன்மையால் வென்றதென்பதற்கு ` மென்தோளி ` என்றார் ; தேம் புனல் - இனிய நீர் சூழ்ந்த சிறந்த பெரிய மடுக்களையுடைய திருநாரையூர் . பூம் புனல் - மெல்லிய கங்கை நீர் தங்கிய . புரி - முறுக்கிய . புன் சடையான் - சிறு சடைகளையுடையவன் . உரி தோல் - உரித்த தோலாகிய உடையின் , பாம்பைக் கச்சையாகக் கட்டிய . பண்டரங்கன் ஆடிய கூத்து பாண்டரங்கம் எனப்படும் . ` திருத் தோணிபுரத்துறையும் பண்டரங்கர் ` என முன்னும் வந்தமை ( தி .1. ப .60. பா .1.) காண்க . பண்டரங்கன் சிவபெருமானுக்கு ஒரு பெயர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

தீவினை யாயின தீர்க்க நின்றான் றிருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடி யான்புடை சூழப் பலபூதம்
ஆவினி லைந்துங்கொண் டாட்டு கந்தா னடங்கார் மதின்மூன்றும்
ஏவினை யெய் தழித்தான் கழலே பரவா வெழுவோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் தம்மை வழிபடுபவர்களின் தீவினைகளைத் தீர்த்தருள்பவர் . திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . பூமாலையணிந்த சடைமுடி உடையவர் . பூதகணங்கள் புடைசூழ விளங்குபவர் . பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் ( பஞ்சகவ்வியம் ) அபிடேகம் செய்து கொள்வதில் விருப்பமுடையவர் . அடங்காது திரிந்த பகையசுரர்களின் மும்மதில்களை ஓர் அம்பு எய்து அழித்தவர் . அப்பெருமானின் திருவடிகளை நாம் வழிபட்டு உயர்வடைவோமாக !.

குறிப்புரை :

( தீவினை ) ஆயின :- முதல் வேற்றுமையின் சொல்லுருபு , தீர்க்க - பற்றற ஒழிக்க . ` தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டாகும் `. ( தொல் சொல் சேனாவரைய உரியியல் சூத் . 22.) பல் பூதம் புடை சூழ என மாற்றுக . ஆட்டு உகந்தான் - அபிடேகங் கொள்ளுதலை விரும்பியவன் . ஆடு - ஆடுதல் : நீராடுதல் ; முதனிலை திரிந்ததொழிற்பெயர் . ஏவினை - அம்பை . எய்து - செலுத்தி . அழித்தான் . அம்பை எய்ய வில்லை ஆயினும் , அம்பின் கூறாகிய நெற்றி விழியின் தீயால் எரித்ததால் அவ்வாறு உபசரித்தார் . பரவா - பரவி . துதித்து . எழுவோம் - அடிமைத் திறத்தில் ஓங்குவோமாக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

மாயவன் சேயவன் வெள்ளி யவன் விடஞ்சேரு மைமிடற்றன்
ஆயவ னாகியொ ரந்தர மும்மவ னென்று வரையாகம்
தீயவ னீரவன் பூமி யவன்றிரு நாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர் மேல்வினை யாயின வீடுமே.

பொழிப்புரை :

கருநிறமுடைய திருமால் , செந்நிறமுடைய உருத்திரன் , வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமன் விடமுண்ட நீலகண்டமுடைய மகேசுவரன் ஆகிய மூர்த்தி பேதங்களும் , மற்றும் பல வேறுபாடான மூர்த்தி பேதங்களும் தாமேயாகியவர் . மலைபோன்ற திருமேனி உடையவர் . நெருப்பு , நீர் , பூமி ( உப லட்சணத்தால் காற்று , ஆகாயம் , சூரியன் , சந்திரன் , உயிர் ) இவற்றையும் உடம்பாக உடையவர் . திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . அப்பெருமானைத் தொழுவாருடைய வினைகள் முழுதும் அவர்களைவிட்டு நீங்கும் .

குறிப்புரை :

மாயவன் - கருநிறத்தான் . சேயவன் - செந்நிறத்தன் . வெள்ளியவன் - வெண்ணிறத்தவன் . இவை சதாதசிவமூர்த்தியின் ஐம் முகங்களில் முறையே அகோரம் , வாமதேவம் , சத்தியோசாத முகங்களைக் குறிக்கும் , உபலக்கணத்தால் பொன்மை , பளிங்கு நிறங்களையும் உடன் எண்ணித் தற்புருட ஈசான முகங்களையும் கொள்க . ஆயவன் - ஆகியவன் . ஓர் அந்தரமும் அவனென்று ஆகி - இவ்வாறே ஒவ்வொரு வேறுபாடும் தானேயென்று ஆகி . வரை ஆகம் - மலை போன்ற உடம்பு . தீயவன் - நெருப்பாயுள்ளவன் . நீரவன் , பூமியவன் , தண்ணீராயும் உள்ளவன் ; இன்னும் காற்று , வெளி , பரிதி , மதி , உயிர் இவையும் தன்னுடம்பாக உள்ளவன் எனவும் உபலக்கணத்தாற் கொள்க . அவன் திருநாரையூரில் இருப்பவன் . அவனைத் தொழுவார் முற்பிறப்பிற் செய்த வினை முழுதும் விட்டு ஒழியும் . தொழுதல் கரும மாதலால் இப்பிறப்பின் வினையும் , எடுக்கும் பிறப்பின் வினையும் ஒழிதல் கூறல் வேண்டாவாயிற்று என்க . திரிமூர்த்தி நிறமே கொள்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல் துளங்குமு டம்பினராய்
அஞ்சுட ராரெரி யாடு வரார்அழ லார்வி ழிக்கண்
நஞ்சுமிழ் நாக மரைக்கசைப் பர்நல னோங்கு நாரையூர்
எஞ்சிவ னார்க்கடி மைப்படு வார்க்கினி யில்லை யேதமே.

பொழிப்புரை :

சிவபெருமான் அனைத்தும் ஒடுங்குகின்ற ஊழிக் காலத்தில் திருநடனம் செய்பவர் . தூய புன்சிரிப்போடு விளங்கும் திருமேனியர் . அழகிய சுடரானது நன்கு எரியும்படி கைகளை வீசி ஆடுவார் . நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர் . நஞ்சைக் கக்கும் நாகத்தை அரையில் கச்சாகக் கட்டியவர் . நலம் பெருகச் செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற எம் சிவபெருமானுக்கு அடிமைத் தொண்டு செய்பவர்கட்கு இனி எந்நாளும் துன்பம் என்பதே இல்லை .

குறிப்புரை :

துஞ்சு - அனைத்தும் ஒடுங்கும் . இருள் - இராக்காலமாகிய மகாசங்காரகாலத்தில் ஆடுவாராம் , முறுவல் - புன்சிரிப்போடு , அசையும் உடம்பினராகி , அழகிய ஒளிபொருந்திய தீயின்கண் நின்று ஆடுவார் . ( நெற்றி ) விழியினிடத்து நெருப்பை யுடையவர் . எம் சிவனார்க்கு - எமது சிவபிரானார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி யெய்தக் கூடியதுன்பு இல்லை . ( ஏதம் - இங்கே துன்பைக் குறித்தது ) ` சிவனும் இவன் செய்தி யெல்லாம் என் செய்தி யென்றும் , செய்த தெனக் கிவனுக்குச் செய்ததென்றும் கொள்வன் ` ( சித்தியார் . சூத் . 10. 1. )

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

பொங்கி ளங்கொன் றையினார் கடலில் விடமுண் டிமையோர்கள்
தங்களை யாரிடர் தீர நின்ற தலைவர் சடைமேலோர்
திங்களை வைத்தன லாட லினார்திரு நாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீ றணிய வல்லா ரவரே விழுமியரே.

பொழிப்புரை :

சிவபெருமான் , செழித்து விளங்கும் இளங் கொன்றை மலரைச் சூடியவர் . பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களின் பெருந்துயரைத் தீர்த்த தலைவர் . சடைமேல் ஒரு சந்திரனை அணிந்து நெருப்பைக் கையிலேந்தி ஆடுபவர் . திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . வெங்கனலால் நீறாக்கப்பட்ட வெண்ணீற்றினை அணியவல்ல அப்பெருமானே யாவரினும் மேலானவர் ஆவர் .

குறிப்புரை :

பொங்கு - தழைத்த ( இளம் கொன்றையினார் ). கொன்றையினார் - கொன்றையின் நாண் மலரையணிந்தவர் . இளமை - இங்குப் புதுமையை யுணர்த்திற்று . பழம் பூ - முதிய பூவைக் குறிக்கும் . ஆர் இடர் - ஆர்த்த இடர் , பிணித்ததுயர் . ( வெம் ) கனல் வெண்ணீறு அணியவல்லவர் . அவரே விழுமியவர் - ` யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் . ( தி .8 திருவெண்பா . 8 )

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

பாரு றுவாய் மையினார் பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்
தாரு றுமார் புடையான் மலையின் றலைவன் மலைமகளைச்
சீரு றுமா மறுகிற் சிறைவண் டறையுந் திருநாரை
யூரு றையெம் மிறைவர்க் கிவையொன் றொடொன் றொவ்வாவே.

பொழிப்புரை :

சிவபெருமான் , இந்நிலவுலகம் முழுவதும் புகழ் பரவும் மெய்யுணர்வுடையவர்களால் வணங்கப்படும் மேலான பரம்பொருள் ஆவார் . பசுமைவாய்ந்த கொன்றை மாலையை அணிந்த மார்புடையவர் . கைலைமலையின் தலைவர் . மலைமகளைச் சிறப்புடன் ஒரு பாகமாகக் கொண்டவர் . வீதிகளில் சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற இறைவர் அணிந்துள்ள பொருள்கள் ஒன்றோடொன்று ஒவ்வாதனவாம் .

குறிப்புரை :

பார் - பூமி முற்றும் . உறு - ( புகழ் ) பரவுதலையுடைய . வாய்மையினார் - சைவ சீலத்தையுடையவர்கள் . பரவும் - துதிக்கும் . பரமேட்டி - மேலான இடத்தில் உள்ளவன் , மேலான யாக சொரூபியாய் உள்ளவன் எனினுமாம் . தார் உறும் மார்பு உடையான் - மாலைகள் அணிந்த மார்பை யுடையவன் . மலையின் தலைவன் - கைலை மலையின் தலைவன் . ` உயர்ந்ததன்மேற்றே யுள்ளுங்காலை ` என்றதனால் ( தொல் . பொருள் . 274) மலை என்ற அளவில் கைலையைக் குறிப்பதறிக . மலைமகளைச் சீர் உறும் - உமாதேவியாரைச் சிறப்போடு தழுவியிருக்கும் . சீர் உறும் - மூன்றன் உருபும் பயனும் தொக்க தொகை . திருநாரையூர் - மறுகில் சிறைவண்டு அறையும் , பூசி எஞ்சிய கலவைகளை வீதியிற் கவிழ்த்தலால் அவற்றில் வண்டுகள் ஒலிக்கும் , திருநாரையூர் என்க . இனிப் புலவியிலெறிந்த பூ மாலைகளில் வண்டுகள் மொய்த்து ஒலித்துலுங்கொள்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

கள்ளி யிடுதலை யேந்துகை யர்கரி காடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண வாடை தன்மேல் மிளிரா டரவார்த்து
நள்ளிரு ணட்டம தாடுவர் நன்னல னோங்கு நாரையூர்
உள்ளிய போழ்தி லெம்மேல் வருவல் வினையாயின வோடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் கள்ளிச் செடிகள் நிறைந்த சுடு காட்டில் இடப்பட்ட மண்டையோட்டை ஏந்திய கையையுடையவர் . சுடுகாட்டில் இருப்பவர் . நெற்றிக் கண்ணர் . வெண்ணிறக் கோவண ஆடையை அணிந்து , அதன்மேல் ஒளிரும் , ஆடுகின்ற பாம்பைக் கச்சாகக் கட்டி நள்ளிருளில் நடனமாடுபவர் . நல்ல நலன்களை எல்லாம் மேன்மேலும் பெருகத் தருகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை நினைத்த மாத்திரத்தில் எம்மேல் வருகின்ற வலிய வினைகள் யாவும் ஓடிவிடும் .

குறிப்புரை :

கள்ளி - கள்ளிகளையுடைய மயானத்தில் . ` கள்ளி முதுகாட்டிலாடி கண்டாய் ` ( தி .6. ப .23. பா .4.) இடு - இடப்பட்ட . தலையேந்துகையர் . கரிகாடர் - ` கோயில் சுடுகாடு ` ( தி .8 திருச் சாழல் - 3.) ஆகவுடையவர் . வெள்ளிய கோவண ஆடை ` தூவெளுத்த கோவணத்தை அரையிலார்த்த கீளானை ` ( தி .6. ப .67. பா .1.) நன்னலன் ( நல் + நலன் ) நல்ல நலங்கள் . உள்ளிய போழ்தில் - நினைத்த மாத்திரத்தில் . வல்வினை ஓடும் - ஒளியைக் கண்ட இடத்து இருள் போல ஓடும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

நாமமெ னைப்பல வும்முடை யான்நல னோங்கு நாரையூர்
தாமொம் மெனப்ப றையாழ் குழல் தாளார் கழல்பயில
ஈம விளக்கெரி சூழ்சு டலை யியம்பும் மிடுகாட்டில்
சாம முரைக்கநின் றாடு வானுந் தழலாய சங்கரனே.

பொழிப்புரை :

நலன்களைப் பெருகச் செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் பல திருப்பெயர்களை உடையவர் . பறை , யாழ் , குழல் முதலியன தாம் ஒம் என ஒலிக்க , அவற்றொடு ஒத்துத் தம் திருவடிகளில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்க , காட்டில் , கொள்ளி விளக்கு எரிய , சாமகானம் ஒலிக்க நின்றாடுகின்ற பெருமான் நெருப்புருவான சங்கரனே ஆவார் .

குறிப்புரை :

நாமம் எனை பலவும் :- ` ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ` ( தி . 8 தெள்ளேணம் . 1.) என்ற பொருளது . தாம் ஒம் எனப்பறை அறையும் - இம் முழவோசைகள் , யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில - யாழும் , குழலும் , கழலும் ஆகிய இவற்றோசையோடு ஒத்து ஒலிப்ப . ஈம விளக்கு - கொள்ளி . எரிதல் - நாடக அரங்கிற்கேற்றிய விளக்காக எரிதல் . சுடலை இயம்பும் - சுடலையில் உண்டாகும் ஓசை , ஒலிக்கும் . மயானத்தில் சாமம் உரைக்க - அச்சுடலையோசையே சாமவேதம் ஒலிப்பதாகக் கொண்டு ஆடுவானும் . தழல் ஆய - அக்கினியே சொரூபமான சங்கரனும் ஆம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

ஊனுடைவெண் டலைகொண் டுழல்வா னொளிர்புன் சடைமேலோர்
வானிடைவெண் மதிவைத் துகந்தான் வரிவண் டியாழ்முரலத்
தேனுடைமா மலரன்னம் வைகுந் திருநாரை யூர்மேய
ஆனிடையைந் துகந்தா னடியே பரவா வடைவோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஊனுடை மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு , பிச்சையேற்றுத் திரிபவர் . ஒளிர்கின்ற சடைமேல் , வானத்தில் தவழும் வெண்ணிறச் சந்திரனை அணிந்து , மகிழ்பவர் . வரிகளையுடைய வண்டுகள் யாழிசைபோல் ஒலிக்க , தேன் உடைய சிறந்த தாமரை மலரில் அன்னம் தங்க விளங்கும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . பசுவில் இருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப் படுதலை விரும்புபவர் . அப்பெருமானின் திருவடிகளை வணங்கி நற் கதி அடைவோமாக !

குறிப்புரை :

ஊன் உடை - ஊனையுடைய வெண்தலை . கொண்டு - பாத்திரமாகக் கொண்டு . உழல்வான் - பிச்சைக்குத் திரிபவன் . சடை மேல் . வான் இடை - ஆகாயத்தில் தவழும் . ( மதி ) வைத்து - அணிந்து (` மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் ` என்ற திருப்புகழிலும் இப்பொருள் ஆண்டமை அறிக .) உகந்தான் - மகிழ்ந்தவன் . மா - சிறந்த . மலர் - தாமரை மலரில் . ` பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ` ஆகையால் மாமலர் - தாமரை மலர் என்க . வரிவண்டு யாழ் போல் ஒலிக்க அவ்வோசையைக் கேட்டுத் தாமரை மலரில் அன்னம் வைகும் திருநாரையூர் . அடியையே பரவி அடைவோமாக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

தூசுபு னைதுவ ராடை மேவுந் தொழிலா ருடம்பினிலுள்
மாசுபு னைந்துடை நீத்தவர்கண் மயனீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின் திருநாரை யூர்தன்னில்
பூசுபொ டித்த லைவ ரடியா ரடியே பொருத்தமே.

பொழிப்புரை :

மஞ்சட் காவி உடை உடுத்தும் புத்தர்களும் , உடம்பிலும் , உள்ளத்திலும் , அழுக்கினைக் கொண்டு ஆடை உடுத்தலை ஒழித்தவர்களாகிய சமணர்களும் கூறும் மயக்கும் தன்மையுடைய மொழிகளைக் கேளாதீர்கள் . மெய்யறிவுடையவர்களே ! சிவபெருமானே மெய்ப்பொருள் என்பதைத் தெளிவாக உணர்ந்து , திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , திருவெண்ணீறு பூசிய தலைவராகிய சிவபெருமானின் திருவடிகளையும் , அவர் அடியார்களின் திருவடிகளையும் வணங்குவதே பொருந்தும் எனக்கொண்டு அவற்றைச் சரணாக அடையுங்கள் .

குறிப்புரை :

தூசு - ஆடையாக . புனை - உடுக்கும் . தொழிலார் - புத்தர் . உடம்பில் - உடம்பிலும் . உள் - மனத்திலும் . மாசு புனைந்து - அழுக்கையும் , அறியாமையையும் அணிந்து . உடை நீத்தவர்கள் - ஆடையை நீக்கியவராகிய சமணர் . ஒழிப்பவற்றைக் கொண்டும் கொள்வனவற்றை யொழித்தும் உள்ளவரென்ற குறிப்பு . மயல் நீர்மை - மயக்கும் உபதேசங்களைக் கேளாது . தேசு உடையீர்கள் - மெய்யறிவுடையீர்களே . தெளிந்து - சிவனே பொருளெனத் தெளிவாக உணர்ந்து . பூசு பொடித் தலைவர் - திருநீறு பூசிய தலைவர் . அடியே பொருத்தம் ஆம் - பொருந்துவது ஆகும் . அவ்வடியையே அடைமின் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

தண்மதி தாழ்பொழில் சூழ் புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யானுறையுந் திருநாரை யூர்தன்மேல்
பண்மதி யாற்சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர் வானோ ரெதிர்கொளவே.

பொழிப்புரை :

குளிர்ச்சி பொருந்திய சந்திரன் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் வல்ல ஞானசம்பந்தன் , ஒளி பொருந்திய சந்திரனை அணிந்த சடையையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தின் மேல் , பயில்வோருக்கு இசையறிவு உண்டாகும் வண்ணம் பாடியருளிய இப்பாடல்கள் பத்தையும் பயின்று ஓத வல்லவர்கள் மண்ணுலக வாழ்க்கை நிலையற்றதென உணர்ந்து அதனை மதியாது , தேவர்கள் எதிர் கொண்டழைக்க வானுலகை அடைவர் .

குறிப்புரை :

தண் மதி தாழ் பொழில் - சந்திரன் தங்கும் சோலை சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன் திருநாரையூர் தன்மேல் பண்மதியால் சொன்ன. (பயில்வோர்க்கு) இசையறிவு உண்டாகும் வகையாற் பாடிய பாடல் பத்தும் பயின்றார். வினை போகி - வினை நீங்கப் பெற்று. மண் - மண்ணுலக இன்பை மதியாது போய் வானோர் எதிர் கொள்ள வான் புகுவர்.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி
இடிபட வெய்த வமரர்பிரா னடியா ரிசைந்தேத்தத்
துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

கொடிகளையுடைய மூன்று மதில்களையும் ஊடுருவிச் செல்லுமாறு மேருமலையை வில்லாக வளைத்துத் தாங்கி , பேரொலியுடன் அம்மதில்கள் அழியும்படி அம்பெய்த தேவர்களின் தலைவரான சிவபெருமான் , அடியார்களெல்லாம் மனமொன்றிக் கூடிப்போற்ற உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா தேவியைப் பிரிவில்லாமல் தம் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்ற இடமாவது அழகிய எருமைகள் வயலிலே படியும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .

குறிப்புரை :

கொடி - துவசம் . இடிபட - பேரொலி கிளம்ப ( எய்த பிரான் ). துடி - உடுக்கை . துதைந்தார் - பிரிவிலா ஓருடம்பாகக் கொண்டவர் . போலும் உரையசை , ` ஒப்பில்போலி ` என்பர் தொல்காப்பியனார் . வடிவுடை மேதி - அழகுடைய எருமைகள் . தலச் சிறப்பால் அவைகளும் அழகுடையனவாகத் தோன்றும் என்ற குறிப்பு . வலம்புர நன்னகர் துடியிடையாளை ஓர் பாகமாகத் துதைந்தார்க்கிடம் என்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

கோத்தகல் லாடையுங் கோவணமுங் கொடுகொட்டி கொண்டொருகைத்
தேய்த்தன் றநங்கனைத் தேசழித்துத் திசையார் தொழுதேத்தக்
காய்த்தகல் லாலதன் கீழிருந்த கடவுள் ளிடம்போலும்
வாய்த்தமுத் தீத்தொழி னான்மறையோர் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

சிவபெருமான் காவியுடையும் , கோவணமும் அணிந்தவர் . ஒரு கையில் கொடுகொட்டி என்னும் வாத்தியத்தை ஏந்தி வாசிப்பவர் . மன்மதனை அன்று உருவழியும்படி எரித்தவர் . எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது வணங்கும்படி , காய்கள் நிறைந்த கல்லால மரத்தின் கீழ்த் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் வீற்றிருந்தவர் . அக்கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , முத்தீ வளர்த்து , நான்கு வேதங்களையும் நன்கு பயின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .

குறிப்புரை :

கோத்த :- அணிந்த என்னும் பொருளில்வந்தது . காவி தோய்த்த உடையும் , கோவணமும் , ஒரு கையிற் கொடுகொட்டி என்னும் வாத்தியமும் கொண்டு . அநங்கனை - மன்மதனை . தேசு அழித்து - ஒளியுடலைப் போக்கி . தேய்த்து - அழித்து . தேசு - ஆகுபெயர் . மறையோர் ( வாழும் ) வலம்புரம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

நொய்யதொர் மான்மறி கைவிரலின் னுனைமே னிலையாக்கி
மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி விரிபுன் சடைதாழ
மையிருஞ் சோலை மணங்கமழ இருந்தா ரிடம்போலும்
வைகலு மாமுழ வம்மதிரும் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

இலேசான உடம்பையுடைய மான்கன்றைத் தன் கைவிரல் நுனிமேல் நிலையாக நிற்குமாறு செய்து , நெருப்புப் போன்ற சிவந்த மேனியில் திருவெண்ணீற்றினைப் பூசி , விரிந்த சிவந்தசடை தாழ விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நாள்தோறும் நித்திய பூசையே திருவிழாப்போல் முழவதிரச் சிறப்புடன் நடக்கும் , இருளடர்ந்த பெரிய சோலைகளின் நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .

குறிப்புரை :

நொய்யது - இலேசான உடம்பை யுடையதாகிய மான்கன்று . மானின் உடம்பு நொய்யதென்றும் அதனாலேயே அது ஏனையவற்றிலும் வேகமாக ஓடக்கூடியதென்றும் வாயு பகவானின் வாகனமாக அதனைக் கூறுவது அதனாலே யென்றும் கூறுப . நுனை - நுனி . நிலை ஆக்கி - நிலையாக நிற்கச் செய்து . மெய் எரி மேனி - உடம்பின் தீப்போன்ற மேனியில் வெண்ணீறுபூசி ( மேனி - உடம்பின் தோற்றப் பொலிவு ). தாழ - தொங்க . மை - இருளடர்ந்த . இரு - பெரிய சோலை ( மணம் ) கமழ - ( இருந்தார் ) காரண காரியப் பொருளின்றி வந்தது . அது ` வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்டக் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே ` ( தி .1. ப .129. பா .1.) வைகலும் - நாடோறும் மாமுழவம் அதிரும் என்றது , நித்திய பூசையே திருவிழாப்போற் சிறப்புற நடக்கும் என்ற குறிப்பு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

ஊனம ராக்கை யுடம்புதன்னை உணரிற் பொருளன்று
தேனமர் கொன்றையி னானடிக்கே சிறுகாலை யேத்துமினோ
ஆனம ரைந்துங்கொண் டாட்டுகந்த வடிக ளிடம்போலும்
வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இவ்வுடம்பு நிலையற்றது என்பதை உணர்ந்து , அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது , தேன்மணம் கமழும் கொன்றைமாலை அணிந்த சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி வழிபடுங்கள் . பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுவதால் மகிழும் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் தேவர்கள் நாள்தோறும் வந்து வழிபடுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .

குறிப்புரை :

ஊன் அமர் ஆக்கை உடம்பு - தசை முதலியவற்றை வைத்துக் கட்டப்பட்டதாகிய உடம்பு . அமர் - அமர்த்தியெனப் பகுதியே வினையெச்சப் பொருள் தந்தது , ` அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி ` ( தி .11 திருமுருகாற்றுப் படை . அடி . 58) என்பதுபோல , ` குடி பொன்றி ` ( குறள் . 171) போல , பிறவினை விகுதியும் தொக்கு நின்றது . சிறு காலை - இளவயதிலேயே உடம்பு தன்னை யுணரில் அது பொருள் அன்று எனலறியலாகும் . ஆதலின் அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது , அதனைக் கொன்றையினான் அடிக்கே செலுத்திச் சிறுகாலை ஏத்துமின் என்றவாறு . அவ்வாறு அவனை ஏத்துதற்கு உரியவிடம் அவன் இருந்த வலம்புர நன்னகராம் என்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

செற்றெறியுந் திரையார் கலுழிச் செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறியா தனலாடு நட்ட மணியார் தடங்கண்ணி
பெற்றறிவா ரெருதேற வல்ல பெருமா னிடம்போலும்
வற்றறியாப் புனல்வாய்ப் புடைய வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை நதியினை , ஒளி பொருந்திய சிவந்த சடையின்மீது நீங்காது தங்கவைத்த சிவபெருமான் நெருப்பைக் கையிலேந்தி நடனம் செய்பவர் . அழகு பொருந்திய அகன்ற கண்களையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . இடபத்தை வாகனமாக ஏற்றவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வற்றுதலை அறியாத நீர்பெருகும் வாய்ப்புடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

செற்று - மோதி . எறியும் - வீசும் . திரை ஆர் - அலைகளையுடைய . கலுழி - ( கங்கை ) நதியின் செழுநீர் சடைமேல் . அற்று அறியாது - நீங்காது தங்குவதாக . அனல் ஆடும் நட்டம் - அனலின்கண் நின்று ஆடும் திருக்கூத்தின் . பெற்று - ( பெற்றி ) தன்மையை . அணி ஆர் - அழகு பொருந்திய . தடம் கண்ணி - விசாலமான கண்களையுடைய உமாதேவியார் . அறிவார் - அறிவாராக . எருது வல்ல பெருமான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு உமையோ டுடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப்
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும்
வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு , கருநிறமும் ஒளியுமுடைய நஞ்சைத் தாம் உண்டவர் சிவபெருமான் . உமா தேவியை உடனாகக் கொண்டவர் . மணம் பொருந்திய திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர் . சுடர்விடும் சோதியாய் விளங்குபவர் . பல்வேறு பண்களில் சிவபூதங்கள் நடனம் செய்பவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பலவகைப் பட்ட பறை முதலிய வாத்தியங்களின் முழக்கு நீங்காத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

உண்ண - தேவர்கள் அமுது உண்ணும் பொருட்டு . அண்ணத்து வாசுகி யென்னும் பாம்பின்மேல் வாலில் . ஒளி - அடங்கியிருந்த . நஞ்சம் - விடம் ( வெளிப்படவே .) உண்டு - அதனை உண்டு . உண்ண என்பதற்கு வினை முதலும் செயப்படு பொருளும் வருவிக்க . சுடர் - கதிரையுடைய . சோதி - ஒளியானது . பண்ண - பண் களினுடைய . வண்ணத்தன - கூறுபாடுகளை யறிந்தனவாகிய பூதங்கள் . பாணி செய்ய - பாட . பயின்றார்க்கு - ஆடல் புரிந்தவராகிய சிவ பெருமானுக்கு வண்ண வண்ணம் பலவகையான . பறை - வாத்தியங்களின் ( சிறப்புப் பெயர் - பொதுப்பெயர்க்காயிற்று ) பாணி - ஓசை . அறா - நீங்காத வலம்புர நன்னகர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

புரிதரு புன்சடை பொன்றயங்கப் புரிநூல் புரண்டிலங்க
விரைதரு வேழத்தி னீருரிதோன் மேன்மூடி வேய்புரைதோள்
அரைதரு பூந்துகி லாரணங்கை அமர்ந்தா ரிடம்போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

முறுக்குண்ட மென்மையான சடை பொன்போல் ஒளிர , முப்புரிநூல் மார்பில் புரண்டு விளங்க , மிக வேகமாகச் செல்லக்கூடிய யானையின் இழுத்து உரிக்கப்பட்ட தோலை உடலின் மேல் போர்த்தி , மூங்கிலையொத்த தோளையுடையவளாய் , இடையில் அழகிய ஆடையை அணிந்துள்ள உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , புலவர்களால் போற்றப்படும் பழம் புகழுடைய , குடிமக்களின் செல்வ வாழ்க்கை என்றும் குறையாத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

புரிதரு - முறுக்குண்ட புன்சடை . பொன்தயங்க - பொன்னைப்போல் ஒளிர , புரிநூல் , புரண்டு இலங்க - மார்பில் புரண்டு விளங்க . விரைதரு - விரைந்து செல்ல வல்ல . வேழத்தின் - யானையின் . ஈர் உரித்தோல் - இழுத்து உரித்த தோலை . மேல் - உடம்பின் மேல் . மூடி - போர்த்து . வேய் புரைதோள் - மூங்கிலை யொத்த தோளையுடைய . அரை - இடுப்பில் . தரு - அணிந்த . பூந்துகில் - பொலிவுடைய ஆடை . ஆரணங்கு ( அருமை + அணங்கு ) அரிய தெய்வமாகிய உமாதேவியாரை . அமர்ந்தார் - விரும்பினவராகிய சிவபெருமான் . வரை தரு - புலவராற் கவியெழுதிப் புகழப்படும் . தொல் புகழ் - பழமையான புகழையுடைய . வாழ்க்கை - குடிமக்களின் செல்வம் . அறா - குறையாத . வலம்புர நன்னகர் . வரைதரு புகழ் ` உயர் குடியுட் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் பேராண்மை யில்லாக்கடை ` ( நாலடியார் . 199)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

தண்டணை தோளிரு பத்தினொடுந் தலைபத் துடையானை
ஒண்டணை மாதுமை தானடுங்க வொருகால் விரலூன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர்க் கிடம்போலும்
வண்டணை தன்னொடு வைகுபொழில் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

தண்டு முதலிய ஆயுதங்களையுடைய இருபது தோள்களும் , பத்துத் தலைகளுமுடைய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது , தம் உடம்போடு ஒன்றாக அணைந்துள்ள உமாதேவி நடுங்க , சிவபெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றி அவ்வரக்கனின் செருக்கை அடக்கி , பின் அவன் தன் தவறுணர்ந்து துதித்தபோது , அருளும் செய்த மாறுபட்ட தன்மையுடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் ஆண் வண்டுகள் தம் பெடை வண்டுகளைத் தழுவித் தங்கும் சோலைகளை உடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

தண்டு அணை - தண்டு முதலிய ஆயுதங்களைத் தாங்கிய ஒண்டணை ஒன்று . அணை - தம் உடம்போடு ஒன்றாக அணைந்த . மாது உமை - உமை அம்பிகை . ஒரு கால் விரல் - ( கால் ஒரு விரல் ) காலின் ஒரு விரலால் ஊன்றி . மிண்டு - செருக்கை . தீர்த்து - போக்கி . விகிர்தர் - வேறான தன்மையுடையவர் . ` பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் ஆழாதே யாழ்ந்தான் அகலாதகலியான் ஊழால் உயராதே யோங்கி னான் ` ( திருக்கயிலாய ஞான உலா . 3-5.) என்றதும் காண்க . ` வண்டு அணை தன்னொடு ` வண்டு - ஆண் வண்டுகள் . அணை தன்னொடு - தாங்கள் தழுவும் பெடைவண்டோடு . வைகு - தங்கும் பொழில் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

தாருறு தாமரை மேலயனுந் தரணி யளந்தானும்
தேர்வறி யாவகை யாலிகலித் திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வறி யாவகை யானிமிர்ந்த பெருமா னிடம்போலும்
வாருறு சோலை மணங்கமழும் வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

மாலையாக அமைதற்குரிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , உலகை இரண்டடிகளால் அளந்த திருமாலும் உண்மையை உணரமுடியாது , தம்முள் யார் பெரியவர் என்று மாறுபாடு கொண்டு , முழுமுதற் பொருளின் அடிமுடி காணமுடியாது திகைத்துத் திரிந்து , பின் தம் குற்றம் உணர்ந்து இறைவனைப் போற்றி வணங்க , அசைக்க முடியாத நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நீண்ட சோலைகளையுடைய நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

தார் உறு - தனக்கு மாலையாகப் பொருந்திய . தாமரை மேல் - தாமரை மலர்மேல் தங்கும் . அயனும் - பிரமனும் பிரமனுக்குத் தாமரை மலரே மாலை ; தாமரை மலரே இருக்கை . இகலி - தம்முள் மாறுபட்டு . தேர்வு - அடி முடி தெரிதலை . அறியா வகையால் - அறியாத தன்மையினால் திகைத்துத்திரிந்து . ஏத்த - துதிக்குமாறு , பேர்வு அறியாவகையால் நிமிர்ந்த , அசைக்க முடியாத தன்மையோடு ஓங்கிய பெருமான் . வார் உறு - நெடிய சோலை . வார் - நெடுமை என்னும் பொருளில் வந்த உரிச்சொல் . ` வார்தல் , போகல் , ஒழுகல் , நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள் ` ( தொல்காப்பியம் . சொல் . உரியியல் . 21.)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

காவிய நற்றுவ ராடையினார் கடுநோன்பு மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந்தொண்ட ருள்ளுருக
ஆவியு ணின்றருள் செய்யவல்ல வழக ரிடம்போலும்
வாவியி னீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே.

பொழிப்புரை :

காவி நிறத்தைத் தருவதாகிய துவர்நீரில் தோய்த்த ஆடையினையுடைய புத்தர்களும் , கடுமையான நோன்புகளை மேற்கொள்ளும் பாவிகளாகிய சமணர்களும் கூறும் சொற்களைச் சிறிதும் கேளாத , வழிவழியாகச் சிவனடிமை செய்யும் தொண்டர்கள் உள்ளம் உருகி ஏத்த , அவர்களின் உயிர்க்குள்ளுயிராயிருந்து அருள் செய்யவல்ல அழகர் சிவபெருமான் ஆவார் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , குளங்களிலிருந்து வயல்கட்குப் பாயும் நீர்வளமுடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .

குறிப்புரை :

காவிய கல்துவர் ஆடையினார் - காவியைத் தருவதாகிய நல்ல துவரில் தோய்த்த ஆடையையுடைய புத்தர்களும் , கடுநோன்பு மேல்கொள் பாவிகள் - இரண்டு உவாவும் அட்டமியும் பட்டினி நோன்பையே மேலாகக்கொண்ட பாவிகளாகிய சமணர்களும் ( சிந்தாமணி . 1547) சொல்லும் சொல்லைப் பயின்று அறியா - கேளாத . பழந் தொண்டர் - வழிவழித் தொண்டர்கள் . ஆவியுள் நின்று - அவர்கள் ஆன்மாவினுள் நின்று , அருள் செய்ய வல்ல அழகர் . வாவியில் - குளங்களிலும் . வயல் - வயல்களிலும் நீர் வாய்ப்பு உடைய வலம்புரம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

நல்லிய னான்மறை யோர்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடையினான் வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச் சிவலோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

நல்லொழுக்கமுடைய , நான்கு வேதங்களையும் நன்கு கற்று வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் , புலியின் தோலை ஆடையாக உடுத்திய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகரைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள் , தொல்வினை நீங்கிச் சிவலோகம் சென்றணுகி முத்திச் செல்வத்தைத் தருகின்ற சிவபெருமானின் சேவடிகளைச் சேர்ந்திருப்பர் .

குறிப்புரை :

நல் இயல் - நல்ல ஒழுக்கத்தையுடைய நால்மறையோர் . வல்லியம்தோல் - புலியின் தோலை . உடை ஆடையினான் - இடுப்பில் உடுக்க ஆடையாய்க் கொண்டருளியவன் . சிவலோகம் சென்று அணுகி முத்திச் செல்வத்தை யருள்வானாகிய சிவபெருமான் சேவடியைச் சேர்ந்திருப்பர் என ஈற்றடிக்குப் பொருள் கொள்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

ஆகாயத்தை இடமாகக் கொண்ட வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சூடிய நீண்ட விரிந்த சிவந்த சடைதாழ , உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு தம் திருமார்பில் திருவெண்ணீற்றினைப் பூசி , பெருமைக்கு ஒவ்வாமல் பிச்சை ஏற்று , கண்ணைக் கவரும் தோற்றப்பொலிவொடு வந்து என் அழகைக் கவர்ந்த கள்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

விண்கொண்ட - ஆகாயத்தை இடமாகக் கொண்ட . தூமதி - வெண் பிறையை . நீடு - நெடிய . விரி - விரிந்த , புன் சடை . தாழ - தொங்க . பேணார் - ` இரத்தலின் இன்னாததில்லை ` யெனலைப் பேணாதவராய் ( பேணார் - முற்றெச்சம் ). பலி தேர்ந்து - பிச்சைக்கு வருபவராய் . கண்கொண்ட - கண்ணைக் கவரும் . சாயலோடு - ( எனது ) தோற்றப் பொலிவோடு . ஏர் - அழகையும் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும் . முற் பதிகத்துக்கு உரைத்ததையேயுரைக்க . பண் கொண்ட - இசையையுடைய . வண்டு இனம் பாடி ஆடும் (- சுற்றித் திரியும் சோலைகளையுடைய ) பரிதி நியமம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

அரவொலி வில்லொலி யம்பினொலி யடங்கார் புரமூன்றும்
நிரவவல்லார் நிமிர்புன் சடைமே னிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தெ னெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

வாசுகி என்னும் பாம்பாகிய நாணின் ஓசையும் , மேருமலையாகிய வில்லின் ஓசையும் , காற்று , திருமால் , நெருப்பு ஆகிய அம்பின் ஓசையும் எழ , பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அழித்துத் தரையோடு தரையாக்கியவர் சிவபெருமான் . நிமிர்ந்த மெல்லிய சடைமேல் கலைநிரம்பாத சந்திரனைச் சூடி இரவில் வந்து என் எழிலைக் கவர்ந்த இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , தன்னை வணங்கிப் போற்றுவார்களின் வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அரவு ஒலி - வாசுகியென்னும் பாம்பாகிய நாணின் ஓசையும் , வில் ஒலி - மேரு மலையாகிய வில்லின் ஓசையும் . அம்பு ஒலி - காற்று திருமால் நெருப்பு ஆகிய அம்பின் ஓசையும் ஆம் . இவற்றால் , அடங்கார் - பகை யசுரர்களது . புரம் மூன்றும் கோட்டை களையும் . நிரவ வல்லார் - அழித்துத் தரையோடு தரையாக்க வல்லவர் . நிரம்பாமதி - கலை நிறையாத பிறை . புகுந்து - வந்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

வாண்முக வார்குழல் வாணெடுங்கண் வளைத்தோண் மாதஞ்ச
நீண்முக மாகிய பைங்களிற்றின் னுரிமே னிகழ்வித்து
நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

ஒளிபொருந்திய திருமுகத்தையும் , நீண்ட கூந்தலையும் , வாள்போன்று ஒளியும் கூர்மையும் மிக்க நீண்ட கண்களையும் மூங்கில் போன்ற மென்மை வாய்ந்த தோள்களையும் உடைய உமாதேவி அஞ்சும்படி , நீண்ட துதிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் சிவபெருமான் . அவர் நான் நாணம் கொண்டு விளங்குமாறு செய்தவர் . என் பெண்மை நலத்தை இழந்து அவரையே பற்றுமாறு செய்தவர் . அத் தலைவர் வீற்றிருந்தருளும் இடம் வண்டுகள் முரன்று பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வாள் முகம் - ஒளி பொருந்திய முகத்தையும் . வார் குழல் - தொங்கும் கூந்தலையும் . வாள் நெடும் கண் - வாள் போன்ற நெடிய கண்களையும் . வளைத்தோள் - மூங்கில் போன்ற தோளையும் உடைய . மாது - உமை அம்மையார் , அஞ்ச . பைங் களிறு - கரிய யானை ( பச்சை , நீலம் , கறுப்பு இந்நிறங்களுள் ஒன்றனை மற்றொன்றாகக் கூறுதல் மரபு ) மேல் நிகழ்வித்து - உடம்பின்மேற் போர்த்து . நாண் - பிறர்முன் நான் நாணுதலை . முகம் - என்னிடத்து . காட்டி - உண்டாகச்செய்து . நலம் - பெண்மை நலத்தை . பாண் முகம் - மூக்கால் ஒலித்துப் பாடுதலையுடைய வண்டு இனம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்
துஞ்சிருண் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

சிவபெருமான் கொடிய பாலைவனம் போன்ற சுடுகாட்டில் நடனம் செய்பவர் . விரிந்த சிவந்த சடை தொங்க அனைவரும் உறங்குகின்ற இரவிலும் , மாலையிலும் , நண்பகலிலும் , பூத கணங்கள் துணைவரப் பிச்சை ஏற்பவர் . அழகிய வண்டுகள் ஒலிக்கக் கூந்தல் சரிய என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வண்டுகள் யாழொலி போன்று பஞ்சுரம் முதலிய பண்ணிசைத்துப் பாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வெம் சுரம் - கொடிய பாலைவனம் போன்ற சுடு காட்டில் . சேர் - அடைவதாகிய . ஓர் ஆடல் - ஒரு திருவிளையாடலை . பேணி - மேற்கொண்டு . இருண் மாலை - பின்மாலையாகிய இரவிலும் நடுப்பகலிலும் . துணையார் - பூதங்கள் முதலிய துணையுடையவராய்ப் , பலி தேர்ந்து . அம் - அழகிய . சுரும்பு ஆர் - வண்டுகள் ஒலிக்கும் . குழல் சோர - கூந்தல் சரிய ; கூந்தல் சரிதல் , வளை நெகிழ்தல் முதலியன காதல் கொண்டவர் மெய்ப்பாடுகள் . உள்ளம் - என் உள்ளத்தை , வண்டுகள் பஞ்சுரம் முதலிய பண்களை வண்டுகள் யாழிசை போல முரன்று பாடும் . பாடி முரலும் என்பதன் விகுதி பிரித்து மாறிக் கூட்டுக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாய லெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும்
பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மென்மையான சடையில் கங்கை நதியைத் தாங்கியதோடு , இளம்பிறைச் சந்திரனையும் சூடியவர் . மலர்மாலை அணிந்த திருமார்பில் திருவெண்ணீறும் அணிந்தவர் . பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிபவர் . என் தோற்றப் பொலிவையும் , அழகையும் கவர்ந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , உலகம் முழுவதும் பரவிய பழம் புகழையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தார் - மாலை . புல்கு - பொருந்திய . தலை ஆர் - மண்டையோட்டில் நிறைவிக்கும் பலி தேர்வாராய் . ஏர் புல்கு - அழகோடு கூடிய . சாயல் எழில் - மிக்க தோற்றப் பொலிவை . எழில் - எழுச்சி , வளர்ச்சி . பார் புல்கு - உலகம் முழுவதும் பரவிய தொல் புகழால் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடிமேல் விளங்கத் திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாய லெழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மிகுந்த வெப்பமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர் . விரிந்த சிவந்த சடைதொங்கச் சந்திரனைத் திருமுடிமேல் சூடியவர் . எல்லாத் திசைகளிலும் சென்று பிச்சையேற்றுத் திரிபவர் . நான் அணிந்துள்ள சங்காலாகிய வளைகள் சோர , என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

திசை - திசைகளில் . ஆர் - பொருந்திய ( கிடைக்கக் கூடிய ) பலி தேர்வாராய் . சங்கு , சாயல் - எழில் . கவர்ந்த - உடம்பில் தங்காதவாறு செய்த என்பது பொருள் . புறவின் - முல்லை நிலத்தை யடுத்ததாகிய . சைவன் - சிவனுக்கு ஒரு பெயர் ` சைவா போற்றி தலைவா போற்றி ` என்பது திருவாசகம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

பிறைவளர் செஞ்சடை பின்றயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர வெழில்கவர்ந்த விறைவர்க் கிடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்தசடை பின்புறம் விளங்கித் தொங்க , பெரிய மழுப்படையைக் கையிலேந்தி , வேதங்களைப் பாடி , திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் பிச்சையேற்றுத் திரிவார் . அவர் , என் முன்கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்றுவிழ , என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த இறைவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பறை யொலியும் , சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பின் தயங்க - பின்புறம் விளங்கித் தொங்க . மனைகள் - வீடுகளில் . இறை - முன் கையில் அணிந்த . வளை - வளையல்கள் , சோர - நழுவ .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

ஆசடை வானவர் தானவரோ டடியா ரமர்ந்தேத்த
மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாக விளங்கும் சிவபெருமான் தேவர்களும் , வித்தியாதரர்களும் உடன் திகழ , அடியவர்கள் அமர்ந்து ஏத்தி வழிபடப்படுபவர் . அவர் , பாவத்தை அடைவியாது நீக்க வல்ல திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்றுத் திரிபவர் . அவர் மணிகள் பதிக்கப்பெற்ற மேகலை நழுவி விழுமாறு என்னை மெலியச்செய்து , என் உள்ளம் கவர்ந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பசுமையான இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஆசு - பற்றுக் கோடாக . அடை - அடையும் . வானவர் தானவரோடு அடியார் . மாசு அடையாத - பாவத்தை அடைவியாது நீக்க வல்ல என்பது ` பராவணமாவது நீறு பாவம் அறுப்பது நீறு ` என்னும் திருநீற்றுப் பதிகத்தாலும் அறிக . காசு - மணிகள் . அடை - பதிக்கப்பெற்ற . மேகலை ` பல் காசு நிறைத்த சில்காழல்குல் ` என்பது திருமுருகாற்றுப்படை . பாசடைத்தாமரை - பசிய இலைகளையுடைய தாமரை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமா னயந்தேத்தக்
கூடல ராடல ராகிநாளுங் குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர வெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பாடல ராடல ராய்வணங்கும் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

தேடிக் காணாதவர்களாகிய பிரமனும் , திருமாலும் பணிந்து ஏத்த அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி எம்மிடத்து விளையாடுதலை உடையவராய் நாடோறும் இளமையும் , அழகு முடையவராய்ப் பிச்சையேற்றுத் திரிபவர் , சிவபெருமான் . அவர் இதழ்களையுடைய தாமரை போன்ற என்முகம் சோர்வடைய என் அழகைக் கவர்ந்த கள்வர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடியவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி , ஆடி வணங்கும் திருப் பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தேடிக் காணாதவர்களாகிய நான்முகனும் திருமாலும் என உம்மை விரிக்க . கூடலர் - அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி எம்மிடத்து . ஆடலர் ஆகி - விளையாடுதலை யுடையவராய் . நாளும் நாடோறும் . குழகர் - அழகினையுடையவர் . ஏடு அலர் - ( கூந்தலி லணிந்த ) இதழ்களையுடைய மலர்கள் , பாடலர் ஆடலராய் அடியார் வணங்கும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

கல்வள ராடையர் கையிலுண்ணுங் கழுக்க ளிழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பரிதிந் நியமமே.

பொழிப்புரை :

காவிக்கல்லால் துவர்நிறம் பெற்ற ஆடையணிந்த புத்தர்களும் , கையில் உணவு வாங்கி உண்ணும் கழுக்களான சமணர்களும் கூறும் , குற்றமுடைய சொற்களைப் பொருளென நினைக்க வேண்டா . சுட்ட திருவெண்ணீறு அணிந்து , என் நல் வளையல்கள் கழல , என் பெண்மை நலத்தைக் கவர்ந்த தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பெண்களின் பற்களைப் போல அரும்பு அடர்ந்த முல்லைவனமே வேலியாக உடைய திருப் பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் . அப்பெருமானை வழிபட்டு உய்வீர்களாக என்பது குறிப்பு .

குறிப்புரை :

கல் - காவிக்கல்லால் . வளர் - நிறம் மிகுந்த . ஆடையர் - புத்தர் . கையில் உண்ணும் கழுக்கள் - ( சமணர் ) ` கழுக்கையர் ` எனப் பின்னர் வருவதறிக . இழுக்கு ஆன சொல் - குற்றமுடைய சொற்களை . சொல்வளமாக - பயனுடைய சொல்லாக . பல் வளர் - மாதர் பற்களைப்போல அரும்பு அடர்ந்த ( முல்லை ) கொல்லை - காடு வேலி - வேலியாகவுடைய .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

பையர வம்விரி காந்தள்விம்மு பரிதிந் நியமத்துத்
தையலொர் பாக மமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.

பொழிப்புரை :

படத்தையுடைய பாம்பு போல மலர் விரிந்த காந்தட்செடிகள் செழித்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத் தலத்தில் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் பொய்யிலியாகிய சிவபெருமானைப் போற்றி , தமிழ்வல்ல ஞான சம்பந்தன் உண்மையன்போடு அருளிய இப்பத்துப் பாட்டுக்களாலாகிய பாமாலையால் புகழ்ந்து வணங்குபவர்களின் பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை . அவர்கட்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை .

குறிப்புரை :

பை அரவம் விரிகாந்தள் - படத்தையுடைய பாம்பு போல மலர் விரிந்த காந்தட் செடிகள் . விம்மு - தழைத்த . படம் விரிந்த மலரையும் தண்டு பாம்பின் உடலையும் ஒக்கும் . காந்தள் - திணைமயக்கம் . பொய்யிலி - சிவனுக்கு ஒரு பெயர் . (` பொய் யிலியைப் பூந்துருத்திக் கண்டேனானே ` அப்பர் திருத்தாண்டகம் ). ஆன் - விகுதிமேல் விகுதி , பிறப்பு அறுக்கப்பட்டு அங்கு அவலம் அடையா என்பதற்குச் சற்றும் ஐயுற வில்லை என்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய வொருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும் மிறைவன் னருளாமே.

பொழிப்புரை :

பூ இதழ்களில் அளவற்ற தேன் பெருகுகின்ற சோலைகளும் , வயல்களும் சூழ , மலைபோன்று வரும் அலைகளில் கலந்து முத்துக்களைக் கடல் சொரிகின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனும் , உடல் எல்லையில் தங்கும் உயிர் வாழ்வதற்குக் காரணமான உயிராகிய ஒப்பற்றவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடரமாட்டா . அத்துன்பங்கட்குக் காரணமான , அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும் . இறைவனின் திருவருட்சக்தி பதியும் பேரின்பம் பெறுவர் .

குறிப்புரை :

மடல் - பூ இதழ்களில் . வரை இல் - அளவற்ற . மது - தேன் . விம்மு - மிகவும் ஊற்றெடுக்கும் , சோலையும் வயலும் சூழ்ந்து . வரை - மலை போன்ற . ஓதம் - அலைகளில் கலந்து வந்து . முத்தம் - முத்துக்கள் . சொரியும் - சொரியப் பெற்ற . உடல் வரையின் - உடலின் எல்லையுள் ( தங்கும் ). உயிர் - ஆன்மாவின் . வாழ்க்கை ஆய - வாழ்தற்குக் காரணம் ஆம் உயிர் ஆகிய என்றது உடல் உயிர்க்கு இருப்பிடம் ஆதல் போல உயிர் இறைவனுக்கு இருப்பிடம் . எவ் வுயிரும் ஈசன் சந்நிதியதாகும் என்னும் கருத்து . தொடர இருக்கும் வினைகள் தொடரமாட்டா ; எஞ்சிய வினைகளும் சிதறும் ; இறைவன் திருவருட் சத்தி பதியும் ; முடிவிலின்பப் பேறும் உறுவர் என்பது ஈற்றடியின் கருத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கும் மிகுக்குங் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்றன்னை விரும்ப வுடல்வாழும்
ஐவரை யாசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.

பொழிப்புரை :

மேகம் படியும் மலைபோன்ற அலைகளோடு கூடிவரும் கடல் , கரையின் கண்ணே பருத்த சங்குகளை எங்கும் மிகுதியாகக் குவிக்கும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , மலையரசன் மகளான உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டவரான சிவபெருமானை விரும்பி அடைய , அப்பெருமான் நமது உடலில் வாழும் ஐந்து இந்திரியங்களையும் குற்றமறுத்து நம்மை ஆட்கொள்வர் என்று அறிஞர்கள் கூறுவர் . அஃது உண்மையேயாம் .

குறிப்புரை :

ஓதம் - கடலானது . மைவரைபோல் - மேகம் படியும் மலை போன்ற , திரையோடும் கூடி , ( வந்த ) வளர் - பருத்த . சங்கம் - சங்குகளை . கை - கரையின் கண்ணே . மிகுக்கும் - மிகக் குவிக்கும் , ஓதமானது மலை போல் வரும் அலைகளோடு கலந்து வந்த சங்குகளைக் கரையின் மிகக் குவிக்கும் கலிக்காமூர் என்க . மெய் - உடம்பின்கண் . வரையான் மகள் - இமயமலையரையன் மகளாகிய உமையம்மையாரை . பாகன் - இடப்பாகத்தில் உடையவன் . உடல்வாழும் ஐவர் - பஞ்சேந்திரியங்கள் . ஆசு அறுத்து - பற்றுதலை ஒழித்து . ஆளும் - கொள்வான் . சரதம் - நிச்சயம் ஆம் . பாகன் தன்னை விரும்ப அவன் நமது உடலில் வாழும் ஐவரையறுத்து ஆளும் என்பர் என்பது வினைமுடிபு . ஐவர் இகழ்ச்சிக்குறிப்பு ` இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே ` ( தி .9 திருவிசைப்பா . 81.)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்க டொழுதேத்தக்
காவியி னேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்
மேவிய வீசனை யெம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கல னாதிமூர்த்தி யமரர் பெருமானே.

பொழிப்புரை :

அபிடேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும் , பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும் , நீலோற்பல மலர்போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப் போற்ற , என்றும் அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , எம் தலைவனான சிவபெருமானை விரும்பி வழிபட்டால் , ஆதிமூர்த்தியும் தேவர்கட்கெல்லாம் தலைவனுமான அப்பெருமான் உயிரினுள் நீங்கலாகாத தன்மையோடு விளங்குவான் .

குறிப்புரை :

தூவிய நீர்மலரை ஏந்திச் சொரிந்து அபிடேகிக்கும் பொருட்டு நீரையும் சொரிந்து . பூசிக்கும் பொருட்டு மலரையும் முறையே ஏந்தி வந்து வையத்தவர்கள் தொழுது ஏத்தவும் . காவியின் நேர்விழி மாதர் - நீலோற்பல மலரையொத்த விழிகளையுடைய மாதர்கள் , தொழுதேத்தவும் ( அதனால் என்றும் ). கவின் ஆர் - அழகு நிறைந்த , கலிக்காமூர் . தூவிய ( நீர் மலரேந்தி ) சுருங்கச் சொல்லல் என்னும் அழகு . அது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் . வையத்தவர் - பூமியிலுள்ளவர்களாகிய ( ஆடவரும் ) காவியின் நேர்விழி மாதரும் தொழுதேத்தக் கவினார் கலிக்காமூர் என்க . மாதர் என , பின்வருதலால் வையத்தவர் என்பது பெண்ணொழி மிகு சொல் . தொழுதேத்த இடை நிலைத் தீவகம் . ஆதி மூர்த்தியாகிய அவ் அமரர் பெருமான் உயிருள் நீங்கலனாம் தன்மை விளங்கத் தோன்றுவன் என்பது ஈற்றடியின் பொருள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

குன்றுகள் போற்றிரை யுந்தியந்தண் மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்
என்றுண ரூழியும் வாழுமெந்தை பெருமா னடியேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்றமரே.

பொழிப்புரை :

குன்றுகளைப் போன்ற உயர்ந்த கடலலைகள் அழகிய குளிர்ச்சி பொருந்திய முத்துக்களைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்த்தலும் , எருமைக் கூட்டங்கள் கன்றுகளோடு கூடித் தத்தம் மனைகளைச் சென்று சேர்தலுமுடைய அழகு பொருந்திய திருக்கலிக்காமூர் என்ற திருத்தலத்தில் ஊழிக்காலத்திலும் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி நின்று வழிபடுகின்ற அடியவர்களை நினையாதவர்கள் கீழ்மக்கள் ஆவர் . அவர்கள் இயமனது சுற்றத்தாரும் ஆவர் .

குறிப்புரை :

திரை உந்தி - அலைகளால் தள்ளப்பட்டு . அம் தண் - அழகிய குளிர்ச்சி பொருந்திய . மணி - முத்துக்கள் . மேதி ஆயம் - எருமைக் கூட்டங்கள் . கன்றுடன் - கன்றுகளோடு . புல்கி - சேர்ந்து . மனைசூழ் கவின் ஆர் - மருதத்திணையின் அழகுமிக்க கலிக்காமூர் . திணை மயக்கம் என்று உணர்க . ஊழியும் - சூரியனை முதன் முதலின் அறிந்த கற்பகாலத்திலும் வாழும் எந்தை பெருமான் . உலகம் படைக்கப்பட்ட நாள் தொட்டுள்ள தலம் அது என்பது கூறியவாறு . ஏத்தி நின்று உணர்வாரை நினையாதவர் நீசர் . இங்கே கொடியவரென்னும் பொருட்டு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை யைந்துகந் தாடினானை யமரர் தொழுதேத்த
நானடை வாம்வண மன்புதந்த நலமே நினைவோமே.

பொழிப்புரை :

வானத்தில் ஒளிரும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்த மாடங்களும் , பக்கங்களில் கடலலைகள் மோதச் சோலைகளில் நிழலில் செழித்து வளரும் தாழைகளும் கொண்டு உப்பங் கழிகள் சூழ்தலுமுடையது திருக்கலிக்காமூர் . இத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும் , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுகின்றவரும் ஆய சிவபெரு மானைத் தேவர்கள் தொழுது போற்ற அவர்கள் அடையாத நலன்களை அடியேன் அடையும் வண்ணம் அன்புடன் அவன் அருள்புரிந்த சிறப்பினை என்றும் நினைந்து போற்றுவோமாக !

குறிப்புரை :

வான் இடை - ஆகாயத்தில் . தீண்ட - அளாவ . மருங்கே - பக்கத்திலே . கடல் ஓதம் - கடல் திரைகள் ( மோத ). கான் - கடற்கரைச் சோலை . கண்டல் - தாழைகள் . வாழும் - செழிக்கும் . அன்பு தந்த நலம் - பேருதவி . அமரர் தொழுது ஏத்த , காரியப்பொருளில் வந்த வினையெச்சம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தா னினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.

பொழிப்புரை :

கடற்கரையில் வளர்ந்துள்ள தாழையின் பூவின் நறுமணத்தைக் கவர்ந்து வீசுகின்ற தென்றலோடு , மிக்க கருநிறமுடைய கடலலைகள் எக்காலத்தும் ஒலிக்கின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நால்வேதங்களின் உட் பொருளாக விளங்கும் சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும் . துன்பம் வந்து சேர நினையாது . அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும் நீங்கும் .

குறிப்புரை :

துறை - கடல் துறை . கேதகை - தாழை . வாசம் - மகரந்தத்தை ( வாசம் - காரிய ஆகு பெயர் ) சூழ்வான் - தன் உடல் முழுதும் பூசிக்கொள்வதன் பொருட்டு . மலி - மிக வீசுகின்ற தென்றற் காற்றோடு . கறை வளரும் - மிகக் கருமையையுடைய கடல் . ஓதம் - அலைகள் . கலிக்கும் - ஆரவாரிக்கும் . மறை வளரும் - வேதத்தில் எவரினும் எடுத்து வற்புறுத்தப்படும் பொருள் ஆயினானை நினைந்து ஏத்த . நிறை ( புகழ் ) வளரும் புகழ் எய்தும் . வாதை - வாதனாமலம் . நினையா - நம்மையடைய நினையமாட்டா . வினைகளும் போம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர்மங் கலியத்திற்
காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்
ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
ஓலமி டாதவ ரூழியென்று முணர்வைத் துறந்தாரே.

பொழிப்புரை :

அழகிய நல்ல மேனியுடைய மகளிரும் , ஆடவரும் , காலமழை பொய்த்தாலும் , பூசைக்குரிய மங்கலப் பொருள்களை வழுவாது கொண்டுவந்து சேர்த்துப் பூசை நடத்தும் சிறப்புடையது திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந்தருளுகின்ற நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாயம் , ஞாயிறு , திங்கள் ஆன்மா என்னும் அட்டமூர்த்தமாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி , உள்ளம் உருகி ஓலமிடாதவர்கள் ஊழிக்காலம் வரை வாழ்ந்தாலும் சிவஞானம் கைவரப் பெறாதவர் ஆவர் .

குறிப்புரை :

மாதரும் , மைந்தரும் . கொணர் - பூசித்தற்குக் கொணர்ந்த . மாங்கலியத்தில் வழிபடற் குரிய சிறந்த பொருள்களால் கால மழை முதலியன பொய்த்தாலும் தமது பூசை சிறிதும் குறையாதபடி பூசிக்கும் கலிக்காமூர் . சிவன் - மங்கலகரமானவன் . ஆகவே அவனைச் சேர்ந்த பொருள்களும் , அவனுக்கு உரிய பொருள்களும் மங்களகரமாம் . ஆதலால் மாங்கலியம் என்பதற்கு - சிவனைப் பூசித்தற்குரிய பொருள்கள் என்று பொருள் . காரணப்பெயர் . ஞாலம் - நிலம் . வளி - காற்று . ஞாயிறும் ஆய என உம்மையைப் பிரித்துக் கூட்டுக , அது எதிரது தழுவிய எச்ச உம்மையாதலால் அட்டமூர்த்தங்களுள் ஏனையவும் கொள்ளப்படும் . அவை :- வான் , நீர் மதி , உயிர் என்பன . ஓலமிடுதல் - ` ஆரூரா என்றென்றே யலறா நில்லே ` ( தி .6. ப .31. பா .3.) ` கற்றாமன மெனக் கதறிப் பதறியும் ` ( தி .8 போற்றித் திருவகவல் . அடி . 73.) ஓலமிடாதவர் ஊழி வாழினும் சிவஞானம் கைவரப் பெறா என்பது ஈற்றடியின் கருத்து . உணர்வு - சிவஞானம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

ஊரர வந்தலை நீண்முடியா னொலிநீ ருலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும் பதியாங் கலிக்காமூர்
தேரர வல்குலம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாத முடையா னிடமாமே.

பொழிப்புரை :

ஊருகின்ற பாம்பைத் தலையிலுள்ள நீண்ட முடியில் அணிந்து , ஒலிக்கின்ற நீரையுடைய இவ்வுலகம் முழுமையும் ஆண்டு , கறுத்த ஆரவாரமுடைய கடல்சூழச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்பதி திருக்கலிக்காமூர் என்பதாம் . அது தேர் போன்ற அகன்ற அல்குலையுடைய உமாதேவி அஞ்சும்படி திருக்கயிலை மலையைப் பெயர்த்த இராவணன் அதன்கீழ் நசுக்குண்டு அலறும்படி தம் திருப்பாத விரலை ஊன்றிய சிவபெருமானுடைய இருப்பிடமாகும் .

குறிப்புரை :

ஆள்பவருக்கு முடி இன்றியமையாது வேண்டப் படுதலின் ஊரும் பாம்பைத் தலையிற் சுற்றிய முடியால் உலகாண்டு என்றார் . ` உலகாண்டு ` என்பது ` மண்ணுலகம் விண்ணுலகம் உம்மதே ஆட்சி ` ( தி .7. ப .46. பா .9.) ஆர் அரவம்பட - மிகக் கதற வைத்த பாதம் உடையான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

அருவரை யேந்திய மாலுமற்றை யலர்மே லுறைவானும்
இருவரு மஞ்ச வெரியுருவா யெழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை யுணர்வாற் றொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைச்செம்மைத் தேசுண் டவர்பாலே.

பொழிப்புரை :

கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும் அஞ்சும்படி பெருஞ்சோதி வடிவாய் நின்றவரும் , திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும் , ஒப்பற்ற மலை அரசன் மகளை ஒரு பாகமாக உடையவருமான சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும் . அவர்கட்கு எவ்விதக் குறைவும் இல்லை . மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும் . அச்சிவஞானத்தால் முத்திபெறுவர் என்பது குறிப்பு .

குறிப்புரை :

வரை - கோவர்த்தன மலை . ஒரு - ஒப்பற்ற . செம்மை - முத்தி . தேசு - சிவஞானம் . உண்டு - உளதாகும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

மாசு பிறக்கிய மேனியாரு மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரு மறியா ரவர்தோற்றங்
காசினி நீர்த்திரண் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.

பொழிப்புரை :

நீராடாததால் அழுக்கு உடலையுடைய சமணர்களும் , மஞ்சட் காவியாடையைப் போர்த்திய உடலையுடைய புத்தர்களும் சிவபெருமானது பெருமையை அறியாதவர்கள் . எனவே அவர்களைப் பின்பற்றாது இந்நிலவுலகில் நீர்ப்பெருக்கு எங்கும் நிறைந்து நல்லவளம் பொருந்திய திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எம் தந்தையும் தலைவனுமான சிவபெருமானைப் போற்றித் தியானிப்பவர்களுடைய வினைகள் நில்லாது போம் .

குறிப்புரை :

மாசு - அழுக்கை . பிறக்கிய - மிகுவித்த . மேனியார் - சமணர் . மீசு ( மீது ) - மேல் . பிறக்கிய - விளங்குவித்த , போர்த்த மெய்யினார் - புத்தர் . பிறங்கிய - பிறக்கிய என ஈரிடத்தும் பிறவினை . மீசு , மீது என்பதன் மரூஉ . போலியெனினுமாம் . காசினி - பூமி . நீர்த்திரள் - நீர்ப்பெருக்கு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

ஆழியு ணஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ண
ஊழிதொறும்முள ராவளித்தா னுலகத் துயர்கின்ற
காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்
வாழி யெம்மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.

பொழிப்புரை :

பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாகத் தாம் உண்டு அன்று தேவர்கட்கு அமுதத்தை அளித்து ஊழிதோறும் நிலைத்திருக்குமாறு அருள்செய்தவர் சிவபெருமான் . இவ்வுலகில் உயர்ச்சியடைகின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையால் , திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வாழும் எம் தந்தையாகிய சிவபெருமானை வணங்கிப் போற்ற , அவ்வாறு வணங்குபவர்களை நோய்கள் வந்து அணுகா .

குறிப்புரை :

அமுதுண்ணவும் ( அதனால் ) ஊழிதோறும் உளரா ( க ) - பல ஊழிகள்தோறும் சாவாமலிருக்கவும் அமரர்க்கு அளித்தான் - ( நஞ்சு அமுது ஆர உண்டு ) தேவர்களுக்கு அருள் புரிந்தவன் . பிணி - உயிரைப்பற்றி நிற்பனவாகிய மலங்கள் மருவா .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

பள்ளம தாய படர்சடைமேற் பயிலுந் திரைக்கங்கை
வெள்ளம தார விரும்பிநின்ற விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்தி
உள்ள முருக வுணருமின்க ளுறுநோ யடையாவே.

பொழிப்புரை :

பள்ளம் போன்ற உட்குழிவுடைய படர்ந்த சடைமீது அலைகளையுடைய கங்கை நீர்ப் பெருக்கை விரும்பித் தாங்கி நின்ற வேறுபட்ட தன்மையுடையவர் சிவபெருமான் . அவர் இடபவாகனத்தில் ஏறும் வள்ளல் . திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர் . அப்பெருமானை நினைந்து போற்றி உள்ளம் உருக உணருமின்கள் . உறுநோய் உங்களை அணுகாது .

குறிப்புரை :

பள்ளம் போன்ற சடைமீது கங்கைப் பெருக்கு தங்க விரும்பி நின்ற , விகிர்தன் - வேறுபட்ட தன்மையையுடையவன் ; தண்ணீர் தேங்கி நிற்குமிடம் பள்ளம் ஆகையினால் , சடையைப் பள்ளம் என்றார் . வள்ளல் வலஞ்சுழியில் ( வாழ்நன் என்பதன் மரூஉ வாணன் ) வாழுபவன் என்று அங்கேபோய்ச் சேர்ந்து , நினைந்து , ஏத்தி உள்ளம் உருக உணருமின்கள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

காரணி வெள்ளை மதியஞ்சூடிக் கமழ்புன் சடைதன்மேல்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் தழைய நுழைவித்து
வாரணி கொங்கைநல் லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த வுவகை யறியோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் , கருமேகத்திற்கு அழகு செய்கின்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடி , இயற்கை மணம் கமழும் சிவந்த சடைமேல் அழகிய கொன்றைமாலையையும் , குளிர்ச்சி பொருந்திய எருக்கம் பூ மாலையையும் நிரம்ப அணிந்துள்ளவர் . கச்சணிந்த அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர் . ஊர்கள்தோறும் சென்று அவர் பிச்சையேற்று மகிழ்ந்த பெருமையைச் சிற்றறிவுடைய யாம் எங்ஙனம் அறிவோம் ? அறிய இயலவில்லை .

குறிப்புரை :

கார் அணி - மேகத்துக்கு அழகுசெய்கின்ற . வெள்ளை வெண்மையான . கமழ் - இயற்கையாக மணம் வீசுகின்ற , புன்சடை தழைய - மகாதேவனாகிய சிவன் அணியப்பெறுதலால் என்றும் வாடாத தன்மையுற . நுழைவித்து - செருகி , ந ( ல் ) லாள் தன்னோடும் வலஞ்சுழி மேவியவர் . ஊர் அணி - வரிசையான ஊர்கள் . ` இன்னாமை வேண்டின் இரவு எழுக ` என்பவும் , துன்புறுதற்குரிய பலிகொண்டே மகிழ்ச்சியுறுவரானால் , அவர் செய்கை சிற்றறிவோம் எங்ஙனம் அறிவோம் என்பார் , பெய்பலி கொண்டுகந்த உவகையறியோமே என்றார் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

பொன்னிய லுந்திரு மேனிதன்மேற் புரிநூல் பொலிவித்து
மின்னிய லுஞ்சடை தாழவேழ வுரிபோர்த் தரவாட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும் வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையி னீங்ககில்லார்க் குயர்வாம் பிணிபோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பொன்போன்ற அழகிய திருமேனி மீது முப்புரிநூல் அழகுற விளங்குமாறு அணிந்துள்ளவர் . மின்னலைப் போல ஒளிவீசும் சடைதாழ , யானையின் தோலை உரித்துப் போர்த்தவர் . ஆடும் பாம்பை அணிந்தவர் . நிலைபெற்ற , பெருமையுடைய வேதங்களில் வல்ல அந்தணர்கள் போற்றும் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை இடையறாது சிந்தித்து வழிபடும் அடியவர்கட்கு எல்லா நலன்களும் உண்டாகும் . நோய் நீங்கும் .

குறிப்புரை :

மின் இயலும் - ஒளி பொருந்திய , சடை , தாழ - தொங்க . அரவு ஆட வலஞ்சுழிவாணராயிருப்பவர் என்க . உயர்வு ஆம் - முத்தி எய்தும் . உயர்வு ஆகுபெயர் . உன்னிய சிந்தையின் நீங்ககில்லார் என்றது ` ஓயாதே உள்குவார் ` என்ற கருத்து ( தி .8 திருவாசகம் ).

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

விடையொரு பாலொரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பாலொரு பால்சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்
அடையொரு பாலடை யாதசெய்யுஞ் செய்கை யறியோமே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு இடபவாகனம் ஒரு பக்கம் , விரும்பிச் சேர்ந்த மெல்லியல்புடைய கங்காதேவி ஒரு பக்கம் . விரிந்து பரந்த சடை ஒரு பக்கம் . தாழ்ந்த கூந்தலையுடைய உமாதேவி ஒரு பக்கம் . ஏறுபோல் பீடுநடை பயிலும் திருவடி ஒருபக்கம் . சிலம்பு அணிந்த திருவடி ஒருபக்கம் . திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நாளும் வழிபடுக . முற்கூறியவை வேறெங்கும் சென்றடையாது சிவனையே அடையும் சிறப்பைச் சிற்றறிவுடைய நாம் அறியோம் .

குறிப்புரை :

விடை ஒருபால் - இடபம் ஒருபுறம் , ஒருபால் ...... மெல்லியல் - ஒருபுறம் அம்பிகை . மெல்லியல் புல்கியதோர் சடை - கங்காதேவி தங்கியதாகிய சடை . ஒருபால் ( மெல்லியல் என்ற தொடரை மீளவும் கூட்டிப் பொருள் கொள்க . ` பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை ` என்னும் திருவாசகத்திற்போல இடம் ஒருபால் கொள் குழல் என்று கூட்டி இடப்பக்கமாகிய ஒருபால் பொருந்திய குழல் என்க . நடை ஒருபால் - ஏறுபோற் பீடுநடை நடக்கும் திருவடி ஒருபால் . நடை - காரிய ஆகுபெயர் . சிலம்பு ஒருபால் - சிலம்பு அணிந்த திருவடி ஒருபால் . சிலம்பு - தானியாகு பெயர் . ஒரு பால் - வேறு ஓரிடத்தும் . அடையாத - இல்லாததாகிய . அடை ( வு ) - முறைமையையும் . ( அடை - விகுதிபுணர்ந்து கெட்ட பண்புப் பெயராக ). செய்யும் செய்கை - பொருந்தாதன செய்யும் செய்கையும் . சிற்றறிவுடையேம் எங்ஙனம் அறிவோம் என்பது ஈற்றடியின் கருத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்
பையம ரும்மர வாடவாடும் படர்சடை யார்க்கிடமாம்
மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே.

பொழிப்புரை :

இறைவன் கையில் மழு , பாம்பு , வீணை , கலை மான்கன்று என்பனவற்றை ஏந்தியுள்ளவர் . திருமேனியில் திரு வெண்ணீற்றைப் பூசியுள்ளவர் . ஒளியை வீசிஅசைகின்ற குழையும் தோடும் காதில் அணிந்துள்ளவர் . படமாடும் பாம்பை அணிந்து நடனமாடுபவர் . படர்ந்த சடையையுடைய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நாற்புறமும் வேலிபோன்று , இருளடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழி என்னும் மாநகரமாகும் .

குறிப்புரை :

கையின்கண் விரும்பத்தக்க , நாகம் , வீணை , கலைமான் கன்று , இவற்றையேந்தி , மெய் - உடம்பில் . அமர்தல் - விரும்புதல் . வீசும் - ஒளியை வீசுகின்ற ( எனச் செயப்படுபொருள் வருவிக்க ) குழையும் . ஆர் தரு - பொருந்திய , தோடும் , அரவும் ஆடும்படி , திருக்கூத்தாடும் சடையார்க்கிடம் . மை - கருமை . பொழில் வேலியாகச் சூழும் வலஞ்சுழி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

தண்டொடு சூலந் தழையவேந்தித் தையலொருபாகம்
கண்டிடு பெய்பலி பேணிநாணார் கரியி னுரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற தொடர்பைத் தொடர்வோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் தண்டு , சூலம் இவற்றை ஒளிமிக ஏந்தியுள்ளவர் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர் . இடப்படுகின்ற பிச்சையை விரும்பி ஏற்பதில் வெட்கப்படாதவர் . யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . வண்டுகள் மொய்க்கின்ற சோலைகள் சூழ்ந்த மாடங்களையுடைய திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . அப்பெருமான் திருத்தொண்டர்களோடு கூடி நெருங்கி நின்று அருள்வதை உணர்ந்து , நாமும் அவருடைய தொடர்பைத் தொடர்வோமாக !

குறிப்புரை :

தழைய - ஒளிமிக . ஒருபாகம் கண்டு - ஒருபால் குடிகொண்டு . இடுதல் - போடுதல் . பெய்தல் - வார்த்தல் ; எனவே இட்டும் , வார்த்தும் ஈயும் பிச்சை என்பது இடுபெய்பலி என்பதன் பொருளாகக் கொள்க . தொண்டு - தொண்டர் . தொடர்பைத் தொடர்வோம் - பின்பற்றுவோம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

கல்லிய லும்மலை யங்கைநீங்க வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதின் மூன்றுஞ்செற்ற சுடரா னிடர்நீங்க
மல்லிய லுந்திர டோளெம்மாதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி யிருப்பவர் புண்ணியரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கல்லின் தன்மை பொருந்திய மேருமலையை அதன் கடினத்தன்மை நீங்க வளைத்து , செருக்குற்ற திரிபுர அசுரர்களின் , பழிச்சொல்லுக்கு இடமாகிய மும்மதில்களையும் அழித்தவர் . ஒளிவடிவானவர் . அடியவர்களின் இடர் நீங்க , மற்போர் பயின்ற திரண்ட தோளையுடைய எம் முதல்வராய்த் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . மன்னுயிர்களை ஆளும் அரசரான அச்சிவபெருமானைச் சார்ந்து போற்றி வழிபடுபவர்கள் புண்ணியர்கள் ஆவர் .

குறிப்புரை :

கல் இயலும் மலை - கல்லின் தன்மை பொருந்திய மலை , மேரு . நீங்க - ( கல்லின் தன்மை ) வளையாமை நீங்க . அம்கை - அழகிய கையால் , வளைத்து . வளையாதார் - செருக்குற்ற திரிபுரத் தசுரர் . சொல் இயலும் - பழிச்சொல்லுக்கு இடமாகிய , மதில் . செற்ற - அழித்த . சுடரான் - ஒளிவடிவானவன் . இடர் நீங்க - அடியாருக்கு இடர் நீங்கும் பொருட்டு . மல் இயலும் - மற்போர் பயின்ற . திரள் தோள் - திரண்ட தோளையுடைய . எம் ஆதி - எமது முதல்வனும் , திருவலஞ் சுழியாகிய பெரிய தலத்தையே . புல்கிய - இடமாகக் கொண்டருளிய . வேந்தனை - அரசனுமாகிய சிவபெருமானை . ஆன்மாக்கள் குடிகளாக அவற்றை ஆளுந்தன்மையால் இறைவனை ` வேந்தன் ` என்றார் . ` வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகி ` ( தி .1. ப .130. பா .6.) என்றார் முன்னும் . ` அரைசே போற்றி ` என்றார் திருவாசகத்திலும் ( தி .8 போற் . திருவக . அடி 104).

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

வெஞ்சின வாளரக்கன் வரையை விறலா லெடுத்தான்றோள்
அஞ்சுமொ ராறிரு நான்குமொன்று மடர்த்தா ரழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதரென்று நணுகு மிடம்போலும்
மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் வலஞ்சுழி மாநகரே.

பொழிப்புரை :

கடுஞ்சினமுடைய கொடிய அசுரனான இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க , அவன் இருபது தோள்களையும் அடர்த்தவர் சிவபெருமான் . அவர் நஞ்சுண்டு இருண்ட அழகிய கண்டத்தையுடைய தலைவர் . அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகளிலுள்ள மலர்களை வண்டுகள் காலால் கிண்டும் திரு வலஞ்சுழி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அரக்கன் தோள் ; அஞ்சு , ஓர் ஆறு , இருநான்கும் , ஒன்றும் அடர்த்தவர் - (5 + 6 + 8 + 1) இருபதையும் நெருக்கியவர் . பொழில் வண்டு கெண்டும் - சோலையில் உள்ள மலர்களில் வண்டுகள் கால் விரலால் ஊரும் வலஞ்சுழி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

ஏடிய னான்முகன் சீர்நெடுமா லெனநின் றவர்காணார்
கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த குழக ருலகேத்த
வாடிய வெண்டலை கையிலேந்தி வலஞ்சுழி மேயவெம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் சரிதை பலபலவே.

பொழிப்புரை :

இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் காணமுடியாத வண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . அவர் உலகோர் போற்றி வணங்குமாறு , வற்றிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . எம் தலைவரான அவரை நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்லவர்கள் பாடிப் போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவளையாடல்கள் பலபல வாகும் .

குறிப்புரை :

ஏடு இயல் நான்முகன் - இதழ்களை உடைய தாமரை மலரில் தங்கும் பிரமன் . ஏடு - பூவிதழ் . அது மலருக்கு ஆனது சினை ஆகு பெயர் . பொதுப்பெயர் , சிறப்புப்பெயர்க்கு வரும் முறையால் தாமரை மலருக்காயிற்று . காணார் - காணாதவர்களாக , எரியாய் நிமிர்ந்த குழகர் . வாடிய வெண் தலை - உலர்ந்த தலையோடு , பிச்சைப் பாத்திரம் . சரிதை - திருவிளையாடல்கள் . காணார் - முற்றெச்சம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

குண்டரும் புத்தருங் கூறையின்றிக் குழுவா ருரைநீத்துத்
தொண்டருந் தன்றொழில் பேணநின்ற கழலா னழலாடி
வண்டம ரும்பொழின் மல்குபொன்னி வலஞ்சுழி வாணனெம்மான்
பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற பரிசே பகர்வோமே.

பொழிப்புரை :

தீவினைக்கஞ்சாத சமணர்கள் , ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர்கள் . அவர்களும் புத்தர்களும் இறைவனை உணராது கூறும் மொழிகளைத் தள்ளிவிடுங்கள் . தொண்டர்கள் சரியைத் தொழிலில் விரும்பி வழிபட்டு நிற்க . கழலணிந்த திருவடிகளையுடைய சிவபெருமான் அழல் ஏந்தி ஆடுபவன் . வண்டுகள் விரும்புகின்ற சோலைகளையுடையதும் , காவிரியாறு வலஞ்சுழித்துப் பாய்கின்றதுமான திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் முன்னொரு காலத்தில் அவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் கோபித்து அழித்த தன்மையைப் பகர்வோமாக . ( நீவிர் அவனை நினைந்து வழிபட்டு உய்மின் என்பது குறிப்பு ).

குறிப்புரை :

குண்டர் - தீவினைக்கஞ்சாதவர் ; ஆததாயிகள் என்பர் வடநூலார் . கூறை இன்றிக் குழுவார் குண்டர் எனக் கூட்டுக . ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர் என்பது பொருள் . தொண்டு அருந்தன் தொழில் பேண - தொண்டர்கள் பிறர் செய்தற்கரிய தனது பணி விடைகளைப் போற்றிச் செய்ய . தொண்டு - தொண்டர் ; பண்பாகு பெயர் . வலஞ்சுழிவாணர் - வலஞ்சுழியில் வாழ்பவர் . பண்டு - முற்காலத்தில் . ஒரு வேள்வி - தக்கனுடைய வேள்வியை . முனிந்து - கோபித்து . செற்ற - அழித்த . பரிசே - தன்மையையே . பகர்வோம் - புகழ்ந்து பேசுவோமாக . திருவாசகத் ( தி .8) திருவுந்தியார் இருபது பாடல்களுள் பதின்மூன்று பாடல்கள் தக்கன் வேள்வி தகர்த்தமையைக் கூறுவது காண்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

வாழியெம் மானெனக் கெந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்
காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன கருத்தின் றமிழ்மாலை
ஆழியிவ் வையகத் தேத்தவல்லா ரவர்க்குந் தமருக்கும்
ஊழி யொருபெரு மின்பமோக்கும் உருவும் முயர்வாமே.

பொழிப்புரை :

எம் தலைவனும் , தந்தையுமான , சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலஞ்சுழி என்னும் மாநகரை வாழ்த்தி , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறந்த பயனைத்தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்களும் , அவர்களுடைய சுற்றத்தார்களும் கடல் சூழ்ந்த இவ்வையகத்திலேயே பேரின்பம் துய்ப்பர் . ஊழிக்காலத்திலும் நனி விளங்கும் உயர்ந்த புகழடைவர் .

குறிப்புரை :

கருத்து இன்தமிழ் மாலை - சிறந்த பயனைத் தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலை . தமிழ்மாலை ஏத்தவல்லார்க்கும் அவர் சுற்றத்தாருக்கும் உருவும் உயர்வாம் . ( புகழுடம்பும் உயர் வடையும் .) உயர்ந்த புகழ் அடைவர் என்பது கருத்து . ஏத்த வல்லாரன்றி அவர் தமரும் உயர்வடைவரென்றது - ` மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி ` ( தி .8 போற்றித் திருவகவல் . அடி . 118 - 119.) என்ற திருவாசகத்தாலும் அறிக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லா னுமையோ டொருபாகன்
அடலிடை யிற்சிலை தாங்கியெய்த வம்மா னடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துகந்தானிட நாரை யூர்தானே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய வெப்பம் மிகுந்த கடுமையான நஞ்சையுண்ட கடவுள் இடபவாகனத்தில் ஏறி , திருமேனியில் திரு வெண்ணீற்றினைப் பூசி , உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . முப்புர அசுரர்களுடன் போரிடும் சமயத்தில் மேரு மலையாகிய வில்லைத் தாங்கிக் கணைஎய்த பெருமான் , தம்முடைய அடியார்கள் மேல் வரும் துன்பம்தரும் வினைத் தொகுதிகளைத் தொலைத்து மகிழ்பவர் . இத்தகைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருநாரையூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கடலிடை நஞ்சம் - கடலில் தோன்றிய நஞ்சம் . உடலிடையில் - உடம்பில் , பொடிபூசவல்லான் . ` நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும் எழிலுடைமையான் , அக்கோலம் தொழுவார் உள்ளத்து நீங்காது நிற்றலான் , ஆண்டுள்ளவினை நீறு ஆம் ` என்னும் திருக்கோவையா ( தி .8) ருரை (118) இங்குக் கொள்ளத்தக்கது . நடலை வினைத்தொகுதி - துன்பம் தரும் கன்மங்களின் கூட்டம் . நடலை இப் பொருட்டாதலை . ` நடலை வாழ்வு கொண்டு என்செய்தீர் நாணிலீர் ` என்னும் அப்பர் பெருமான் திருவாக்காலும் ( தி .5. ப .90. பா .4.) அறிக . பலதிறத்தான் வந்து தொகுதலின் கன்மம் வினைத் தொகுதி எனப் பட்டது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமா னெரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்
றெண்ணுமி னும்வினை போகும்வண்ண மிறைஞ்சுந் நிறைவாமே.

பொழிப்புரை :

ஆகாயத்தில் விளங்கும் , மின்னல் போன்ற ஒளியுடைய சந்திரனையும் , படப்புள்ளிகளையுடைய பாம்பினையும் , விரிந்த கொன்றைமலரையும் , கங்காதேவிக்கு முன்னே சடையிலணிந்து மிகவும் மகிழ்ந்த பெருமான் , நெருப்பேந்தி ஆடுபவர் . திரு நாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அச்சிவ பெருமானை மனம் , வாக்கு , காயத்தால் வழிபடுகின்ற அடியார்கள் கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்து தியானம் செய்யுங்கள் . உங்கள் வினைகள் தொலைந்துபோகும் வண்ணம் வணங்குங்கள் . எல்லா நலன்களும் நிறையக் குறைவிலா இன்பம் உண்டாகும் .

குறிப்புரை :

மதி - பிறையையும் , துத்திநாகம் - படப்புள்ளிகளை உடைய பாம்பையும் . விரிபூமலர்க் கொன்றை - விரிந்த பொலிவை உடைய கொன்றை மலரையும் . பெண்ணின் முன்னே - கங்காதேவிக்கு முன் . ( சடையில் ) வைத்து - அணிந்து . மிக உகந்த - மிகவும் மகிழ்ந்த பெருமான் . இறைஞ்சும் நிறைவாமே - வணங்குங்கள் இன்பம் குறையாது வரும் . இறைஞ்சும் - பன்மை ஏவல் வினைமுற்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையா னிழைதோன்றும்
பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதி
நாடொரு காலமுஞ் சேரநின்றதிரு நாரை யூரானைப்
பாடுமி னீர்பழி போகும்வண்ணம் பயிலு முயர்வாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் இடக் காதில் தோடும் , வலக் காதில் குழையும் அணிந்துள்ளவர் . மார்பில் பூணூல் அணிந்துள்ளவர் . ஒரு காலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நிற்பவர் . பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர் . வேதங்களை ஓதுபவர் . ஒவ்வொரு காலத்திலும் நாட்டிலுள்ள அடியார்கள் வணங்குதற்கு வந்து சேரும்படி வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக . உங்கள் பழிகள் நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள் . உங்கட்கு உயர்வு உண்டாகும் .

குறிப்புரை :

தோடு ஒருகாது ஒருகாது சேர்ந்த குழையான் - இடக்காதில் தோடும் , வலக்காதில் குழையும் அணிந்தவன் . பீடு ஒருகால் பிரியாது நின்ற - ஒருகாலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நின்ற , பிறையான் . பழிபோகும் வண்ணம் பயிலும் - பழி முதலிய தீமைகள் நீங்குமாறு இடைவிடாது போற்றுங்கள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்
பெண்ணி லமர்ந்தொரு கூறதாய பெருமா னருளார்ந்த
அண்ணன் மன்னியுறை கோயிலாகு மணிநாரை யூர்தன்னை
நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே.

பொழிப்புரை :

வெண்ணிறப் பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்து , விளங்குகின்ற பிரமகபாலத்தைக் கையிலேந்தி , உமா தேவியைத் தன்னுடம்பில் ஒரு கூறாகக் கொண்ட பெருமானும் , அருள் நிறைந்த தலைவனுமாகிய சிவபெருமான் நிலையாக வீற்றிருந் தருளும் கோயிலுள்ள அழகிய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் சேர்ந்து இறைவனிடம் அன்பு செலுத்துங்கள் . உங்கள் துன்பங்கள் நீங்கும் .

குறிப்புரை :

நிலவம் - நிலவு , அம்சாரியை . சேர - பொருந்த . திருநாரையூர் தன்னை , நண்ணல் அமர்ந்து - விரும்பி அடைந்து . ( அமர்தல் - விரும்பல் ) உறவு ஆக்குமின்கள் - அன்பைச் செலுத்துங்கள் . உறவு - அன்பு ` உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுகவாங்கிக் கடைய முன்னிற்குமே ` என்ற ( தி .5. ப .90. பா .10) அப்பர்பெருமான் திருவாக்காலறிக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊனம ரின்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான் றிருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே.

பொழிப்புரை :

ஆகாயம் , நெருப்பு , காற்று , நீர் , நிலம் , ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற , பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது . அக்குற்றங்களிலிருந்து உய்தி பெறப் பிறிதொரு வழியின்றி , அடியேன் விரும்பிச் சார்தற்குப் பற்றுக் கோடாக விளங்கும் பெருமான் திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற என் தந்தையும் , தலைவனுமாவான் . அப்பெருமானைச் சரணடையக் கொடிய வல்வினைகள் நம்மை வந்து சாரா .

குறிப்புரை :

வான் ஆகாயமும் . அமர் - அதன்கண் அடங்கும் , தீ வளி முதலியவையுமாகிய பஞ்சபூத சம்பந்தமாய்த் திரிகின்ற . பழியாகும் ஊன் - பழிக்கு இடமாகிய உடம்பில் . அமர் - தங்குகிற . இன் உயிர் - இனிய உயிர் . தீங்கு - தீமைதருவதாகிய . குற்றம் உறைவு ஆல் - பாவத்திற்கு இடமாயிருத்தலினால் . பிறிது இன்றி - ( அதின் நீங்கி , நன்மைபெறும் வழி ) வேறொன்றும் இன்மையால் . நான் - அடியேன் . அமரும் - விரும்பி அடையும் . பொருள் ஆகி நின்றான் - பற்றுக்கோடாகிய பொருளாகி நின்றவன் . ( திருநாரையூரெந்தை ). கோன் - அவனே தலைவன் . அவனைக் குறுக - அவனைச் சரணம் அடைந்தால் . வல்வினை - முற்கூறிய தீமைகளும் , அவற்றின் காரணமாகிய பாவமும் , அவற்றிற்கு ஏதுவாகிய வலிய கன்மமலங்களும் . குறுகா - நம்மைவந்தடையமாட்டா .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த வழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன்றிரு நாரை யூர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கடம்மைப் புணரும் புகறானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தலையில் கொக்கின் இறகையும் , குளிர்ந்த பொன்னூமத்தையின் செழித்த மலரையும் சூடியவர் . எலும்பைப் பாம்போடு சேர்த்து இடுப்பில் கட்டி மகிழும் அழகர் . இளமையாய்த் திகம்பரராய்த் திகழும் திருமேனியுடையவர் . அப் பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தை அடைந்து , அவரை விரும்பி வழிபடும் மனத்தையுடையவர் களிடத்துத் திருவருட்சத்தி பதியும் .

குறிப்புரை :

சென்னி - தலையின்கண் . கொக்கு இறகு - கொக்கின் இறகும் . குளிர் மத்தம் - குளர்கின்ற பொன் ஊமத்தையின் . குலாய - செழித்த . மலர் - மலரும் . ( உம்மையை மேலுங் கூட்டுக ). சிவ பெருமான் கொக்கின் இறகு அணிவர் என்பதைத் திருக்கோவையா ( தி .8) ரில் காண்க . அரை ஆர்த்து - இடுப்பில் கட்டி . உகந்த - விரும்பிய . குழகு ஆக - இளமையோடு . நக்கு அமரும் திருமேனி ஆளன் - ஆடை இல்லாமையை விரும்பிய திருவுடம்பை உடையவன் . நக்கு - இது நக்கம் என்பதன் கடைக்குறை . நக்நம் வடசொல் . மேவிப்புக்கு - போய்ச்சேர்ந்து . புகல் - திருவருட்சத்தி பதிதல் . புணரும் - கூடும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

ஊழியு மின்பமுங் காலமாகி யுயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகிநளிர் நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஊழிக்காலமும் , இன்பமும் , காலங்களும் ஆகியவர் . உயர்ந்த தவம் ஆகியவர் . ஏழிசையின் பயனாக விளங்குபவர் . வாழ்கின்ற வாழ்க்கையில் உயிர்கள் செய்கின்ற வினையின் பயன்களை உயிர்கட்குச் சேர்ப்பிப்பவர் . நாழிகை முதலிய சிறு காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும் ஆகியவர் . இவைகளெல்லாம் குளிர்ச்சி பொருந்திய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின் அருள் விளையாடல்களின் விளைவுகளேயாகும் .

குறிப்புரை :

ஊழியும் - பெருங்கால எல்லையாகிய பிரளய காலமும் . காலம் - கார் முதலிய பருவகாலமும் . ஏழு இசையின் பொருளாகி - ஏழிசையின் பயனாகியும் . வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி - உலக வாழ்க்கையில் நிகழும் வினைகளின் சேர்க்கையாகி . நாழிகையும் - சிறு கால எல்லையாகிய நாழிகையும் . பல ஞாயிறு ஆகி - பல தினங்களும் ஆகி . ( இவைகளெல்லாம் ). நளிர் - குளிர்ச்சி பொருந்திய . மைந்தர் செய்யும் - சிவபெருமான் செய்யும் . வகையின் விளைவாம் - திருவிளையாடல்களின் வகைகளினால் விளைந்த விளைவேயாகும் . இங்கே ஞாயிறு நாள் என்னப்பட்டது இலக்கணை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

கூசமிலா தரக்கன் வரையைக் குலுங்க வெடுத்தான்றோள்
நாசம தாகி யிறவடர்த்த விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோ னிடம்போலும்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே.

பொழிப்புரை :

கூசுதல் இல்லாது திருக்கயிலாய மலையைக் குலுங்க எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும்படி அடர்த்த திருப்பாத விரலையுடையவர் சிவபெருமான் . நெஞ்சில் வஞ்ச மில்லாத உண்மையடியார்கள் மிகவும் வியப்போடு பேசும்படியும் , இடைவிடாது தியானிக்கும்படியும் நின்ற பெருமையுடையவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , தேசம் முழுவதும் புகழுகின்ற சிறப்புடைய திருநாரையூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கூசம் - கூசுதல் ( அம் - தொழிற்பெயர் விகுதி ). இற - ஒழிய . கரவாதார் - வஞ்சமற்ற அடியார்கள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்
ஆமள வுந்திரிந் தேத்திக்காண்ட லறிதற் கரியானூர்
பாமரு வுங்குணத் தோர்களீண்டிப் பலவும் பணிசெய்யும்
தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே.

பொழிப்புரை :

தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் பிரமனும் , அவனைப் பெற்ற மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும் , தங்களால் இயன்ற அளவு திரிந்து தேடியும் , ஏத்தியும் காண்பதற்கு அரியவனாக விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , நீதி நூல்களில் சொல்லிய நற்குண , நற்செய்கை உடையவர்கள் கூடி , திருத்தொண்டுகள் பலவும் செய்யும் , தேன்மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருநாரையூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பூமகனும் - பிரமனும் . அவனைப் பயந்த - அவனைப் பெற்ற . புயலார் நிறத்தான் - மேகம் போன்ற நிறத்தை உடைய திருமால் . நாசமதாகி இற - அழிந்து ஒழிய . அடர்த்த - நெருக்கிய . ஆம் அளவும் - தம்மால் இயன்றவரை முற்றிலும் . பாமருவும் குணத்தோர் - நீதி நூல்களில் சொல்லிய நற்குண நற்செய்கை உடையவர்கள் . ஈண்டி - கூடி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை
உற்றரை யோர்க ளுரைக்குஞ்சொல்லை யுணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் றொழிலாரப்
பெற்றர வாட்டிவரும் பெருமான்றிரு நாரை யூர்சேர்வே.

பொழிப்புரை :

ஆடையற்ற கோலத்துடன் திரியும் சமணர்களும் , மஞ்சட் காவியாடை போர்த்துத் திரியும் புத்தர்களும் உரைக்கின்ற சொற்களை ஏற்க வேண்டா . குற்றமில்லாத கொள்கை உடைய எம் தலைவரும் , இளமையானவரும் , அடியவர்கட்கு அருள்புரியும் தொழிலையுடையவரும் , அரவம் அணிந்துள்ளவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து , வழிபட்டு உய்வீர்களாக .

குறிப்புரை :

வெற்றரையாகிய வேடம் - நிர்வாணக்கோலம் . காட்டித் திரிபவர் சமணர் . துவர் ஆடை உற்ற அரையோர்கள் - புத்தர்கள் . உற்றரை - உற்ற + அரை , பெயரெச்ச விகுதி அகரம் தொக்கது . ( தொழில் ஆரப்பெற்று ) அரவு ஆட்டிவரும் பெருமான் என்பது ` பச்சைத்தாள் அரவாட்டீ ` என்ற திருவாசகத்திலும் ( தி .8) வருவது . சிவபெருமான் பாம்பை ஆட்டிவரும் தன்மை தன் அடியார் அஞ்சத் தக்க வினைகளைப்போக்கும் தொழிலையுடையவன் தானேயென்பது அறிவித்தற்கு . அக்கருத்தே தொழில் ஆரப்பெற்றும் என்பதாற் குறித்த பொருளாம் . தொழில் - தான் அடியார்க்குச் செய்யும் அருள் . ஆரப் பெற்று - அதை நிறைவேற்றி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை யூரான்மேல்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கு மவலக் கடல்தானே.

பொழிப்புரை :

அலைஓசையுடைய கடல்சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் , பெருமை பொருந்தியதும் ஓங்கும் புகழ் உடையதும் , சிவத்தன்மை உடையதுமான திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது பாடிய பத்துப் பாடல்களாலாகிய இத்தண்டமிழ் மாலையாகிய பதிகத்தைப் பாடித் துதிக்கும் சிந்தையுடைய அடியார்களின் கடல் போன்ற பெருந்துன்பம் நீங்கும் .

குறிப்புரை :

பாடு இயலும் - ஓசை உடைய . திரைசூழ் - கடல் சூழ்ந்த . சேடு இயலும் - பெருமை பொருந்திய .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே

பொழிப்புரை :

உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாதியாக வைத்துள்ள பரமனே ! தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! வேதத்தையும் , வேள்வியையும் , பழித்துத் திரியும் பயனற்றவர்களாகிய சமணர்களையும் , புத்தர்களையும் வாதில் வென்றழிக்க உம்மை வேண்டுகின்றேன் . உமது திருவுள்ளம் யாது ? உலகனைத்தும் உமது புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

வேதவேள்வி - வேதத்தையும் வேள்வியையும் . நிந்தனைசெய்து உழல் - பழித்துத் திரிகின்ற . ஆதம் இல்லி - பயன்பெறாதவர்களாகிய . அமணொடு - சமணர்களோடு . ஆதம் இல்லி ஒருமைச்சொல் அமணொடு தேரரை என்ற பன்மையோடு சேர்வது வழு அமைதியால் கொள்க . ` ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப ` என்பதுபோல . எல்லாச் சமயங்களிலும் சொல்லப்படும் கடவுள் சிவன் ஒருவனே ஆகவும் , ஒரு சமயத்தை அழிக்கப்புகுவது அவன் திருவுள்ளத்திற்கு ஏற்குமா ? என்பதை உணர்த்த ` வாதில் வென்றழிக்தத் திருவுள்ளமே ` என்று வினவுகிறார் . ஆயினும் சைவ நன்னெறி பரவுதல் இன்றியமையாமையின் ஞால நின்புகழே மிக வேண்டும் என வற்புறுத்தியும் வேண்டுகிறார் . ஆதி - சிவபெருமானுக் குரிய பெயர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

கருநீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானே ! வேதநெறிகளைப் பின்பற்றி ஒழுகாத வஞ்சனையையுடைய கரிய சமணர்களையும் , புத்தர்களையும் கூட்டி வாது செய்து வெல்ல விரும்புகின்றேன் . உமது திருவுள்ளம் யாது ? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

வைதிகம் - வேதத்திற் சொல்லும் நெறி . கைதவம் - வஞ்சனை . காரமண் - நெற்றியில் நீறு பூசாமையாலும் , நீராடாமை யாலும் , ஒளி குன்றிய தன்மையாலும் காரமண் எனப்பட்டனர் . எய்தி - நின்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையின் மாமழு வாளனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

மான்கன்றையும் , மழுவையும் கைகளில் ஏந்தியுள்ள சிவபெருமானே ! வேத நெறிப்படி ஒழுகாத கொடிய பாவிகளாகிய , கையினால் முடி பறிக்கப்பட்ட தலையோடு பாயை உடுத்தித் திரியும் சமணர்கள் தோல்வியுறும்படி அவர்களோடு வாது செய்ய உமது திருவுளம் யாது ? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் முதல்வரே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

மறை வழக்கம் - மறையின்படி ஒழுகுதல் . வழக்கம் , தொழிற் பெயர் ; நடத்தல் என்பது பொருள் . பறிதலை - பறிக்கப்பட்ட தலை . கையர் - வஞ்சகர் . முறிய - தோற்க . மறி - மான் கன்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

ஒளிபொருந்திய பிறைச்சந்திரனை அணிந்த முதல்வனே ! வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும் கொள்கைகளை வெறுக்கும் சமணர்களாகிய கீழோர்களைத் தடுத்து அவர்களோடு அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிகவேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

அறுத்த - வரையறுத்துக்கூறிய . அங்கம் ஆறு ஆயின நீர்மையை - வேதத்தின் அங்கங்கள் ஆறு ஆயின தன்மையை . கறுத்த - கோபித்த . ` கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள ` ( தொல்காப்பியம் உரி இயல் . 76.) வாழ் அமண் கையர்கள் - வாழ்க்கையையுடைய அமணர்களாகிய கீழோர் . வாழ் என்பது பகுதியே நின்று தொழிற் பெயர் உணர்த்திற்று . செறுத்து - தடுத்து . ` செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார் ` ( நாலடியார் . 222) முறித்த - வளைத்த . கண்ணி - தலைமாலை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

அந்த ணாளர் புரியு மருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

நெருப்பில் வெந்த திருவெண்ணீற்றினை அணியும் வேறுபட்ட இயல்புகளையுடைய சிவபெருமானே ! அந்தணர்கள் செய்யும் அரிய வேதக்கிரியைகளை நினைத்துப் பார்க்காத சமணர்களின் வலிமைகள் சிதறும்படி அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ? அழகிய திருஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள் புரிவீராக !

குறிப்புரை :

அந்தணாளர் - அந்தணர் , ` அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத `. ( தி .7. ப .55. பா .1.) என்றதும் காண்க . புரியும் - செய்கின்ற . அருமறை - அரிய வேதக்கிரியைகளை , காரண ஆகுபெயர் . சிந்தை செய்யா - நினைத்துப் பார்க்காத . திறங்களை - வலிமைகளை . சிந்த - சிதற .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை யுரித்தவெங் கள்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் யானையின் தோலை உரித்துப் போர்த்த என் உள்ளங் கவர்ந்த கள்வரே ! அந்தணர்கள் விரும்பிச் செய்கின்ற வேள்விச் செயல்களை இகழ்ந்து பேசும் வன்னெஞ்சினராகிய அமண்குண்டர்களை அடியேன் வாது செய்து விரட்ட உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதி மூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள் புரிவீராக !

குறிப்புரை :

வேட்டு - விரும்பி . பொருளை - காரியத்தை . விளி மூட்டு - இகழ்ச்சி செய்கின்ற . விளி இப்பொருளாதலை ` கூற்றத்தைக் கையால் விளித்தற்று ` என்ற திருக்குறளிற் காண்க . முருடு அமண் - வன்னெஞ்சை உடைய அமணர் . முருடு - இலேசில் பிளக்க முடியாத கட்டை . ` வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை ` என்பது திருவாசகம் . முருடு இங்குப் பண்பாகுபெயர் . ஓட்டி வாது செய - வாது செய்து ஓட்ட என வினையெச்ச விகுதி மாறிக் கூட்டுக . காட்டிலானை - காட்டில் வாழும் யானை . வனசரம் . ஏனைய கிரிசரம் , நதிசரம் என்பன .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

அழல தோம்பு மருமறை யோர்திறம்
விழல தென்னு மருகர் திறத்திறம்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழலி லங்கு திருவுருச் சைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

நெருப்புப் போன்று விளங்கும் சிவந்த திரு மேனியுடைய சிவபெருமானே ! அழலோம்பி அருமறையாளர்கள் செய்யும் காரியங்களைப் பயனற்றவை என்று கூறும் சமணர்களின் பலவகைத் திறமைகளும் விலக வாது செய்ய எண்ணுகின்றேன் . உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டுகின்றேன் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

அழல் ( அது ) ஓம்பும் - அக்நி காரியங்களைச் செய்துவரும் . திறம் - தன்மை , விழலது - விழலின் தன்மையது ; பயனற்றது . விழல் - பயனற்ற ஒரு வகைப்புல் . திறத்திறம் - பலவகைப் பட்ட திறமைகள் . திறம் - வகை . தன்மை ` எத்திறத்து ஆசான் உவக்கும் ` என்பது நன்னூல் . கழல - தங்கள் சமயத்தினின்றும் விலக . சைவன் - சிவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய்
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

சிறந்த வாள்வீரனான இராவணனுக்கு மிக்க அருள் புரிந்தவரே ! திருநீறு பூசியவர் மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும் நில்லாத வன்கண்மை பொருந்திய உள்ளமுடைய சமணர்களின் பிழையைத் தெளிவித்து வாது செய்ய , உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

திருநீறு பூசியவர்மேல் பட்டு வீசும் காற்றடிக்கும் இடத்திலும் நில்லாத சமணர் என்பது முன் இரண்டடியின் கருத்து . தேற்றி - அவர்கள் பிழையைத் தெளிவித்து . அரக்கர்க்கும் - இழிவு சிறப்பும்மை . ஆற்ற - மிகவும் . அருளினாய் - அருள் புரிந்தவனே என்ற குறிப்பு தீமை செய்தவர்களுக்கும் பேரருள் புரியும் பெருங்கருணைக் கடல் . ஆகையினால் தீயவர்களாகிய அமணர் திறத்தும் அக்கருணை காட்டின் சைவம் குன்றுமே என்னும் கருத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

நீல மேனி யமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலு நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் காணுதற்கரியவராய் , அழகிய திருமேனியோடு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற சிவ பெருமானே ! கரிய உடலையுடைய சமணர்களோடு உமது உயர்வினை வெளிப்படுத்தும் வண்ணம் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள்புரிவீராக !

குறிப்புரை :

நீலமேனி அமணர் - மேல் 2 ஆம் பாட்டில் காரமண் என்பதற்கு உரைத்தது உரைக்க . நீலம் , பச்சை , கருமை இவற்றுள் ஒன்றை மற்றொன்றாகக் கூறுவது மரபு . திறத்து - எதிரில் . நின் சீலம் - உமது சமயக் கொள்கையை . குன்றம் - நெருப்பு மலை ( அண்ணா மலை ) யாய் நின்றமையைக் குறிக்கிறது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

அன்று முப்புரஞ் செற்ற வழகநின்
துன்று பொற்கழல் பேணா வருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

பொழிப்புரை :

சினந்து பேசும் இயல்புடைய சமண , புத்தர்களால் காணஇயலாத தலைவரே ! முன்னொரு காலத்தில் முப்புரங்களை எரித்த அழகரே ! உம்முடைய பொன்போன்ற திருவடிகளைப் போற்றாத சமணர்கள் தோற்றோட வாதம் செய்ய , உமது திருவுள்ளம் யாது ? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே ! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும் . திருவருள் புரிவீராக !

குறிப்புரை :

தென்ற . கன்ற - கோபிக்கின்ற .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு
வாடன் மேனி யமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.

பொழிப்புரை :

நான்கு மாடங்கள் கூடும் திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரை வணங்கி , உண்ணாநோன்புகளால் வாடிய உடலைஉடைய சமணர்களோடு வாது செய்து அவர்களைத் தோல்வியுறும்படி செய்ய இறைவரது இசைவும் , அருளும் பெற்ற , மாடங்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கள் பாக்கியவான்களாவர் .

குறிப்புரை :

கூடல் ஆலவாய் - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை . நான்கு மாடங்கள் கூடுதலையுடைய ஆலவாய் எனினும் ஆம் . விடை கொண்டு - வாதில் வென்றழிக்க உத்தரவு பெற்றுக் கொண்டு . வாடல் மேனி அமணர் - பட்டினி நோன்பிகள் ` உண்ணா நோன்பிதன்னொடும் சூளுற்று ` என்பது மணிமேகலை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரரும்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணலா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

மண்ணுண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் காணமுடியாதபடி, திருமயேந்திர மலையில் எழுந்தருளி யிருப்பவரும், காட்சிமிக்க திருக்கயிலையில் எழுந்தருளி இருப்பவரும், திருவாரூரில் வீற்றிருப்பவரும், வெண்ணாவல் மரத்தின்கீழ் எழுந்தருள விரும்புபவரும் ஆகிய தலைவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவானைக்காவேயாகும்.

குறிப்புரை :

மண் அது உண்ட அரி - பூமியை உண்ட திருமால். உண்டரி - பெயரெச்சத்து விகுதி அகரம் தொகுத்தல் விகாரம். பிரம விட்டுணுக்கள் காணமுடியாத மயேந்திரமலையில் எழுந்தருளி இருப்பவரும், காட்சி மிக்க கயிலையில் எழுந்தருளியிருப்பவரும், தலைமையமைந்த திருவாரூர் முதல்வரும் ஆகிய சிவபெருமான் வெண்ணாவல் மரத்தின்கீழ்த் தங்க விரும்பிய தலம் திரு வானைக்காவே ஆகும் என்பது பொழிப்புரை. கண் என்பது கருவி ஆகுபெயர். அண்ணல் - தலைமை.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரரும்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தணா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

சிவபெருமான், திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவர். அவர் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்தவராய்த் திருமயேந்திரத்திலும், நறுமணம் கமழும் சடையுடையவராய்த் திருக்கயிலையிலும், அழகிய, குளிர்ச்சிமிக்க திருவாரூரிலும், பழமை வாய்ந்த திருவானைக்காவிலும் விளங்குபவர்.

குறிப்புரை :

கந்தவார் சடை - வாசனை பொருந்திய நெடிய சடை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

மாலயன் றேடிய மயேந்திரரும்
காலனை யுயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலையா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே மார்க்கண்டேயருக்காகக் காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக விளங்கும் திருஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை உடைய திருவாரூரில் வீற்றிருந்தருளுபவரும் அவரே.

குறிப்புரை :

வேலை (அது) ஓங்கும் வெண்ணாவல் - கடல்போல் நீர் பொங்கப் பெற்ற வெண்ணாவல். பஞ்சபூதத் தலங்களில் அப்புத்தலம் ஆதலாலும், \\\\\\\"செழுநீர்த் திரளைச்சென்று ஆடினேனே\\\\\\\" (தி.6. ப.63. பா.1) என அப்பர் அடிகள் கூறியவாறு, இறைவனே நீர்வடிவாய் இருத்தலாலும், வேலையது ஓங்கும் என்று கூறப்பட்டது. ஆலை ஆரூர் - கருப்பங் கழனிகளையுடைய திருவாரூர். ஆலை என்பது தானியாகு பெயர்.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

கருடனை யேறரி யயனோர்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரரும்
கருடரு கண்டத்தெங் கயிலையாரும்
அருளனா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும் காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற திருமயேந்திரர், கருநிறக் கண்டத்தையுடைய திருக்கயிலைநாதர். அருளே திருமேனியாகக் கொண்ட திருஆரூரர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுபவர்.

குறிப்புரை :

அரி அயனோர் காணார் - திருமால், பிரமன் முதலியோரால் காணப்படாதவராகிய. காணார் - செயப்படு பொருள் விகுதி குன்றிய முற்றெச்சம். வெருள் விடை - பகைவர் அஞ்சத்தக்க விடை, கருள்தரு கண்டத்து - கருமை பொருந்திய கழுத்தை உடைய. அருளன் - அருளையே திருமேனியாக உடையவன். \\\\\\\"உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவிறந்த, அருமேனியதுவுங் கண்டோம், அருவுரு ஆனபோது, திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்று நந்தம், கருமேனி கழிக்கவந்த கருணையின் வடிவு காணே.\\\\\\\" (சித்தியார் . சூத். 1.55 .)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

மதுசூதன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியனா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய திருமாலும், பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர் சிவபெருமான். ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர மலையில் வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய கொங்கைகளையுடைய உமாதேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர். எவர்க்கும் மேம்பட்டவர். திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

மது சூதனன் - மது என்னும் அசுரனைக் கொன்றவனாகிய திருமால் வணங்கரியார். (வணங்க + அரியார்). மதியது சொல்லிய மயேந்திரரும் - ஆகமங்களை உபதேசித்தருளிய மகேந்திர மலையில் எழுந்தருளியிருப்பவரும். அது \\\\\\\"மன்னுமாமலை மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்\\\\\\\" (திருவாசகம் கீர்த்தித் திருவககல். அடி. 9 - 10.) கதிர் முலை புல்கிய - ஒளிபொருந்திய தனபாரங்களை உடைய உமாதேவியார் தழுவிய.
அதியன் - எவர்க்கும் மேம்பட்டவனாகிய சிவபெருமான். \\\\\\\"யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்\\\\\\\" என்பது திருவாசகம். அதியன், வடசொல் அடியாகப் பிறந்த பெயர்ப்பகுபதம்.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூ ரானைக்காவே. 

பொழிப்புரை :

சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும், பிரமனும் காணாத வண்ணம் விளங்கிய, யாவரினும் மேம்பட்டவரான சிவபெருமான், திருக்கயிலைமலையிலும், திருமயேந்திரத்திலும் வீற்றிருந்தருளுகின்றார். அவர் தக்கனின் தலையை அரிந்தவர். நெருப்புருவானவர். உருத்திராக்கமாலை அணிந்தவர். திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுபவர்.

குறிப்புரை :

சக்கரம் வேண்டும் மால் - சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும். காணா - காணப்படாத. மிக்கவர் - யாவரினும் மேம்பட்டவராகிய. அக்கு அணியவர் - உருத்திராக்கங்களை அணியாகக் கொண்டவர்.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

கண்ணனு நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணலா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவரான சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவர் கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலைநாதர். எங்கள் தலைவரான திருவாரூரர். அவர் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருக்க விரும்பும் திருவானைக்காவிலுள்ள ஆதிமூர்த்தி ஆவார்.

குறிப்புரை :

கண்ணன் - கரிய நிறத்தையுடைய திருமால். கிருட்டிணன் என்பதன் சிதைவு.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை யரக்கனைத் தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடையா ரூராதி யானைக்காவே. 

பொழிப்புரை :

கடல்போலும் கருநிறமுடைய திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய சிவபெருமான், பெரிய கயிலைமலையின் கீழ் இராவணனின் தலையை நெரித்த கயிலைநாதர். விடமுண்ட திருமயேந்திரர். வலிய இடபத்தில் ஏறும் திருவாரூரர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தி ஆவார்.

குறிப்புரை :

கடல் வண்ணன் - கடல்போலும் கரிய நிறத்தை உடைய திருமால். தடவரையரக்கனைத் தலைநெரித்தார் - பெரிய கயிலை மலையின் கீழ் இராவணனைத் தலையை நெரித்தவர். அடல் விடை ஆரூர் - வலிய விடையை ஏறிய திருவாரூரரும். ஆரூர் என்பது ஆரூரர் என்னும் பொருளில் வந்துள்ளது.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

ஆதிமா லயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயு மயேந்திரரும்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதியா ரூரெந்தை யானைக்காவே. 

பொழிப்புரை :

தொன்றுதொட்டுத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால் துதிக்கப்பெறும் மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலைநாதரும், ஆதியாகிய திருவாரூர் எந்தையும் ஆவர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

ஆதிமால் அயன் அவர் - தொன்றுதொட்டுத் திருமால் அயன் முதலியோர், காண்பரியார். ஆதி - (நான்காம் அடியில் வரும் ஆதி). முதன்மையானவர் என்னும் பொருளது.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

அறிவி லமண்புத்த ரறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
மறிகட லோனயன் றேடத்தானும்
அறிவரு கயிலையோ னானைக்காவே. 

பொழிப்புரை :

இறைவனைப் பற்றி எதுவுமே கூறாத அறிவிலிகளாகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ள வேண்டா. மடங்கிவீசும் அலைகளையுடைய பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் அறிவதற்கரியவரான கயிலை மலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே, மருண்ட பார்வையுடைய மான்கன்றைக் கையிலேந்தித் திருவாரூரிலும், திருமயேந்திரத்திலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

வெறிய மான் கரத்து ஆரூரர் - மருண்டு நோக்குதலையுடைய மானை ஏந்திய கையையுடைய ஆரூரர். வெறிய - குறிப்புப் பெயரெச்சம். ஆரூர் - என்பதற்குமேல் எட்டாவது பாட்டுக் குறிப்புக் காண்க. மறி - மடக்கி வீசும் அலைகளையுடைய. கடலோன் - பாற் கடலில் துயில்வோனாகிய திருமால் - அறிவு அரு - அறிவதற்கரிய.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனவா ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன் றமிழ்சொல்லுமே. 

பொழிப்புரை :

பன்றி உருவமெடுத்த திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருக்கயிலையிலும், நல்ல திரு மயேந்திரத்திலும், திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார். அத்தகைய சிவ பெருமானைப் போற்றி ஞானசம்பந்தர் அருளிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் பெறலரும் பிறவிப் பயனைப் பெறுவார்கள்.

குறிப்புரை :

ஏனம் மால் - பன்றி உருவமெடுத்த திருமால். கானம் ஆர் கயிலை - சோலைகள் சூழ்ந்த கயிலை. தமிழ் சொல்லுமே - தமிழைப் பாடுவீர்களாக. பாடின் பெறலரும் பயன் பெறுவீர் என்பது குறிப்பெச்சம்.
பதிகக்குறிப்பு:- ஒவ்வொரு பாடலிலும் நான்கு தலங்கள் குறிக்கப்பட்டதாதலால் கூடற் சதுக்கம் என்னப்பட்டது. சதுஷ்கம் என்பது வடசொல். ஒவ்வொரு பாடலிலும் திருமாலும் பிரமனும் காணமுடியாதவர் என்று குறிக்கப்படுகிறது. திருமாலின் பல தன்மைகள் பதிகத்தில் குறிக்கப்படுகின்றன. நான்கு தலங்களையும் சொன்னபோதிலும், ஒவ்வொரு பாசுரமும் \\\\\\\"ஆனைக்காவே\\\\\\\" என்று முடிகின்றது. முதல் எட்டுப் பாடல்கள், ஆரூர் ஆதி (ஆனைக்கா) என்றே முடிகின்றன. ஒன்பதாவது பாடல் \\\\\\\"ஆரூர் எந்தை\\\\\\\" என்று முடிகின்றது. பத்தாவது பாடல் \\\\\\\"கயிலையோன் ஆனைக்கா\\\\\\\" என்று முடிகிறது. பதினோராவது பாடல் இந்நான்கு தலங்களிலும் எழுந் தருளியிருப்பவனது திருவானைக்காவை ஞானசம்பந்தன் பாடிய தமிழ் என்று வருகிறது.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

வரமதேகொளா வுரமதேசெயும் புரமெரித்தவன் பிரமநற்புரத்
தரனனாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே.

பொழிப்புரை :

தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது , தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான் . திருப்பிரமபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்றபூமி முழுவதும் பரவும் .

குறிப்புரை :

வரம் அதே கொளா - வரம் பெற்ற பயனை அடையாமல் , உரம் அதே செயும் - தங்கள் வலிமைக்குரிய தீங்கையே செய்த , திரிபுரங்களை எரித்தவனாகிய பிரமபுரத்திலுள்ள சிவ பெருமானின் புகழையே துதித்துப் போற்றும் அடியார்களின் பெருமை இவ்வகன்ற பூமிமுழுதும் பரவும் என்பது இப் பாட்டின் பொழிப்பு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

சேணுலாமதில் வேணுமண்ணுளோர் காணமன்றலார் வேணுநற்புரத்
தாணுவின்கழல் பேணுகின்றவ ராணியொத் தவரே.

பொழிப்புரை :

ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர் காணும்படி அமைந்த , நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று சிறந்தவர்கள் ஆவர் .

குறிப்புரை :

சேண் உலாம் மதில் - ஆகாயத்தை அளாவிய மதில் . வேணு - விண்ணுளோர் இறங்குவதற்கு வைத்த மூங்கிலால் செய்த ஏணியைப் போல் . மண்ணுளோர் காண - பூவுலகில் உள்ளோர் காணும்படி ( பொருந்திய ). மன்றல் ஆர் - வாசனை மிகுந்த . வேணுபுரத்தில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடிகளைப் பாராட்டிப் போற்றுபவர் யாவரும் சிறந்தவராவர் என்பது பிற்பகுதியின் பொழிப்பு . பொருந்திய என ஒரு சொல் வருவிக்க . தாணு - சிவபெருமான் . ஆணி - உரையாணிப்பொன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

அகலமார்தரைப் புகலுநான் மறைக் கிகலியோர்கள்வாழ் புகலிமாநகர்ப்
பகல்செய்வோனெதிர்ச் சகலசேகர னகிலநா யகனே.

பொழிப்புரை :

விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும் , சூரியனுக்கு எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில் அணிந்தவருமான சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர் ஆவார் .

குறிப்புரை :

அகலம் ஆர் - இடம் அகன்ற . தரை - பூமியிலுள்ளாரால் . புகலும் - சிறப்பித்துச் சொல்லப் பெறுகின்ற . நான்மறைக்கு இகலியோர் - நான்கு வேதங்களிலும் வாதிட்டு வென்றவர் . பகல் செய்வோன் - சூரியனுக்கு . எதிர் - எதிராகிய . சகலன் - கலையோடு கூடியவனாகிய சந்திரனை . சேகரன் - முடியில் அணிந்த சிவ பெருமான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

துங்கமாகரி பங்கமாவடுஞ் செங்கையானிகழ் வெங்குருத்திகழ்
அங்கணானடி தங்கையாற்றொழத் தங்குமோ வினையே.

பொழிப்புரை :

உயர்ந்ததும் , பெரியதுமான யானை துன்புறும்படி கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும் , புகழுடன் விளங்கும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம் வினைகள் தங்கா .

குறிப்புரை :

துங்கம் - உயர்வு . பங்கம் ஆ - துன்புறும்படி . அடும் - கொன்று தோலை உரித்த . நிகழ் - பொருந்திய . வெங்குருத்திகழ் அங்கணான் - வெங்குரு என்னும் தலத்தில் விளங்குகின்ற சிவபெருமானது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

காணியொண்பொருட் கற்றவர்க்கீகை யுடைமையோரவர் காதல்செய்யுநற்
றோணிவண்புரத் தாணியென்பவர் தூமதி யினரே.

பொழிப்புரை :

நிலங்களையும் , அறவழியில் ஈட்டிய பொருள்களையும் கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க நகரில் வீற்றிருந்தருளுகின்ற ஆணிப்பொன் போன்று அரிய பொருளாய் விளங்கும் சிவபெருமானைத் துதிப்பவர்கள் தூய சிவஞானம் பெறுவர் .

குறிப்புரை :

காணி - நிலங்களையும் . ஒண்பொருள் - நல் வழியால் ஈட்டிய பொருள்களையும் , புலவர்களுக்குக் கொடை கொடுக்கும் தன்மையுடையோர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணி புரத்தின்கண் அரிய பொருளாய் இருப்பவனே என்று துதிப்போர் தூய சிவஞானம் படைப்பர் என்பது ஈற்றுப் பகுதியின் பொழிப்பு . ஆணி என்பதற்கு இரண்டாம் பாட்டில் உரைத்தது உரைக்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

ஏந்தராவெதிர் வாய்ந்தநுண்ணிடைப் பூந்தணோதியாள் சேர்ந்தபங்கினன்
பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேற் சேர்ந்திரா வினையே.

பொழிப்புரை :

படம் விரிக்கும் பாம்பிற்கு ஒப்பான நுண்ணிய இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைத் தொழும் மக்கள்மேல் பிணி முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும் .

குறிப்புரை :

ஏந்து - படம் விரிக்கும் . அரா எதிர் - பாம்பிற்கு ஒப்பு . வாய்ந்த - பொருந்திய . நுண்ணிடை - சிற்றிடையையும் . பூ - பூவையணிந்த . தண் - குளிர்ந்த . ஓதியாள் - கூந்தலையும் உடைய அம்பிகை . வினை - பிணி முதலிய துன்பங்கள் . மேனிமேல் சேர்ந்திரா - உடம்பைப்பற்றி நில்லா , விலகிவிடும் என்பது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

சுரபுரத்தினைத் துயர்செய்தாரகன் துஞ்சவெஞ்சினக் காளியைத்தருஞ்
சிரபுரத்துளா னென்னவல்லவர் சித்திபெற் றவரே.

பொழிப்புரை :

தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக் கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர் .

குறிப்புரை :

சுரபுரத்தினை - தேவருலகை . துயர்செய் - துன்புறுத்திய ( தாரகன் ) அசுரர்களுக்குப் பற்றுக் கோடாயிருந்த மகிடாசுரன் ஒழியத் துர்க்கையை அம்பிகையின் அம்சத்தினின்றும் தோற்றுவித்தருளிய , சிரபுரத்திலுள்ள சிவன் என்ன அட்டமா சித்திகளும் கைகூடும் . புரம் - இங்கு உலகு என்னும் பொருளில் வந்தது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

உறவுமாகியற் றவர்களுக்குமா நெதிகொடுத்துநீள் புவியிலங்குசீர்ப்
புறவமாநகர்க் கிறைவனேயெனத் தெறகிலா வினையே.

பொழிப்புரை :

வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற , இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா .

குறிப்புரை :

அற்றவர்க்கு - வறியோர்க்கு . உறவும் ஆகி - ( தம் செல்வப் பெருக்கைக் கருதாது ) உறவினர்போல ஆகியும் . மாநெதி கொடுத்து - மிக்க செல்வத்தைக் கொடுத்து . நீள்புவி இலங்குசீர் - ( இவ்வாறு உதவி புரிந்துவரும் தன்மையால் .) நெடிய பூமி முழுதும் புகழ் விளங்கும் , புறவமாநகர் . தெறகிலா வினை - அழிக்க வந்த வினை ( தாம் , அழிந்துவிடும் ).

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

பண்புசேரிலங் கைக்குநாதனன் முடிகள்பத்தையுங் கெடநெரித்தவன்
சண்பையாதியைத் தொழுமவர்களைச் சாதியா வினையே.

பொழிப்புரை :

பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த , திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத் தொழுபவர்களை வினைகள் துன்புறுத்தா . வலியிழந்துபோம் .

குறிப்புரை :

பண்புசேர் இலங்கைக்கு நாதன் என்றது - ` எழில் செய் கூகை ` ( சிந்தாமணி . 102) போலக் கொள்க . சாதியா - துன்புறுத்தா .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

ஆழியங்கையிற் கொண்டமாலய னறிவொணாததோர் வடிவுகொண்டவன்
காழிமாநகர்க் கடவுணாமமே கற்றல்நற் றவமே.

பொழிப்புரை :

சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட திருமாலும் , பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு வடிவாய் நின்றவனும் , சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும் .

குறிப்புரை :

கடவுள் நாமமே கற்றல் நல்தவம் - கடவுளின் புகழைக் கற்றலே நல்ல தவமாகும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

விச்சையொன்றிலாச் சமணர்சாக்கியப் பிச்சர்தங்களைக் கரிசறுத்தவன்
கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர் குணங்கள் கூறுமினே.

பொழிப்புரை :

மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர் , புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள் .

குறிப்புரை :

விச்சை யொன்று இலா - மெய்யுணர்வு வரும் கல்வியறிவு ஒரு சிறிதுமில்லாத . பிச்சர் பித்தர் என்பதன் போலி . கரிசு அறுத்தவன் - தீமையாகிய வேரையறுத்தவன் , அன்பு செய்பவர் குணங்கள் கூறுமின் ! ` நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே ` ( மூதுரை . 8.)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 12

கழுமலத்தினுட் கடவுள்பாதமே கருதுஞானசம் பந்தனின்தமிழ்
முழுதும்வல்லவர்க் கின்பமேதரு முக்கணெம் மிறையே.

பொழிப்புரை :

திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும் தந்தருள்வான் .

குறிப்புரை :

திருக்கழுமலத்துள் கடவுள் பாதத்தைக் கருதிய ஞானசம்பந்தனின் தமிழ் வல்லவர்க்கு முக்கண் எம்மிறை இன்பமே தரும் என்பது இப்பாட்டின் பொருள்கோள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

வேலினேர்தரு கண்ணினாளுமை பங்கனங்கணன் மிழலைமாநகர்
ஆலநீழலின் மேவினானடிக் கன்பர்துன் பிலரே.

பொழிப்புரை :

வேல் போன்று கூர்மையும் , ஒளியுமுடைய கண்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் அழகிய கண்களையுடைய சிவபெருமான் . அவர் திருவீழிமிழலை என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார் . ஆலமரநிழல் கீழிருந்து அறம்உரைத்தவர் . அப்பெருமானின் திருவடிகளை அன்புடன் வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

வேலின் நேர்தரு - வேலை ஒத்த .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

விளங்குநான்மறை வல்லவேதியர் மல்குசீர்வளர் மிழலையானடி
உளங்கொள்வார்தமை யுளங்கொள்வார்வினை யொல்லை யாசறுமே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள் வசிக்கின்ற , புகழ்மிக்க திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உள்ளத்தால் தியானிப்பவர்கள் சிவனடியார்கள் , அவ்வடியார்களை வழிபடும் அன்பர்களின் வினையான குற்றம் விரைவில் நீங்கும் .

குறிப்புரை :

நான் மறை வல்ல வேதியர் மல்குசீர் வளர்மிழலை என்பது தில்லை மூவாயிரம் ; திருவீழிமிழலை ஐந்நூறு ; என்னும் பழ மொழிப்படி அந்தணர்கள் மிகுதியைக் குறித்ததாம் . ` ஐந்நூற்று அந்தணர் ஏத்தும் எண்ணில் பல்கோடி குணத்தர் ஏர்வீழி , இவர் நம்மை ஆளுடையாரே ` ( தி .9 திருவிசைப்பா . 54) என்று சேந்தனார் கூறுவதுங் கொள்க . வினை ஆசு அறும் - வினை பற்று அற நீங்கும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

விசையினோடெழு பசையுநஞ்சினை யசைவுசெய்தவன் மிழலைமாநகர்
இசையுமீசனை நசையின்மேவினான் மிசைசெயா வினையே.

பொழிப்புரை :

வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது .

குறிப்புரை :

விசையினோடு எழு - வேகமாகப் பரவிய . பசையும் நஞ்சினை - பற்றிக் கொல்லும் விடத்தை . அசைவு செய்தவன் - உண்டவன் . நசையின் மேவினால் - விருப்பத்தோடு அடைந்தால் . மிசை - மிகை ; தீங்கு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

வென்றிசேர்கொடி மூடுமாமதிண் மிழலைமாநகர் மேவிநாடொறும்
நின்றவாதிதன் னடிநினைப்பவர் துன்பமொன் றிலரே.

பொழிப்புரை :

சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை மூடும்படி விளங்கும் , உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழலை என்னும் மாநகர் . அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும் நினைத்து வழிபடுபவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

வென்றிசேர் கொடி - வெற்றியினால் எடுத்த கொடிகள் . மூடும் - வானை மூடுகின்ற . மாமதில் - உயர்ந்த மதிலையுடைய . நாடொறும் நின்ற - என்றும் நிலைபெற்று நின்ற . ஒன்று - ஒரு சிறிதும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

போதகந்தனை யுரிசெய்தோன்புய னேர்வரும்பொழின் மிழலைமாநகர்
ஆதரஞ்செய்த வடிகள்பாதம் அலாலொர்பற் றிலமே.

பொழிப்புரை :

செருக்குடன் முனிவர்களால் கொடுவேள்வி யினின்றும் அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின் தோலை உரித்த சிவபெருமான் , மேகம்படியும் சோலைகளையுடைய திருவீழி மிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருவடிகளைத்தவிர வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை .

குறிப்புரை :

போதகம் - யானை . புயல் நேர் வரும் - மேகங்கள் படியும் . ஆதரம் செய்த அடிகள் - விரும்பித் தங்கிய சிவபெருமான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

தக்கன்வேள்வியைச் சாடினார்மணி தொக்கமாளிகை மிழலைமேவிய
நக்கனாரடி தொழுவர் மேல்வினை நாடொறுங் கெடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் , தக்கன் வேள்வியைத் தகர்த்தவர் . இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு மேல்வினை உண்டாகாது .

குறிப்புரை :

சாடினார் - மோதி அழித்தார் . மணி தொக்க மாளிகை - இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாளிகை . நக்கனார் - ஆடையில்லாதவர் , தொழுவார்மேல் - தொழுவார்கள் இடத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

போரணாவுமுப் புரமெரித்தவன் பொழில்கள்சூழ்தரு மிழலைமாநகர்ச்
சேருமீசனைச் சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே.

பொழிப்புரை :

போர்க்குணத்தை விரும்பி அதனை மேற்கொண்ட அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான் , சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும் அடியவர்களின் தீவினை அழிந்துவிடும் .

குறிப்புரை :

போர் அணாவு - போரை மேற்கொண்ட .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

இரக்கமிஃறொழி லரக்கனாருட னெருக்கினான்மிகு மிழலையானடி
சிரக்கொள்பூவென வொருக்கினார்புகழ் பரக்குநீள் புவியே.

பொழிப்புரை :

இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் . அப்பெருமானின் திருவடிக் கமலங்களை சிரசின்மேல் வைத்த மலர்போலக் கொண்டு , சிந்தையை ஒருமுகப்படுத்தி வழி படுபவர்கள் , உலகில் புகழுடன் விளங்குவர் .

குறிப்புரை :

இரக்கமிஃறொழில் ( இரக்கம் இல் தொழில் ) - ` குறில் வழி லளத்தவ் அணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம் அல்வழி யானே ` ( நன்னூல் . 228) என்பது விதி . சிரக்கொள் பூவென ( சிரம் கொள் பூவென ) - தலையில் அணியும் பூவைப்போல . எதுகை நோக்கி சிரக்கொள் என வலித்தது . ஒருக்கினார் - சிந்தையை ஒருமைப் படுத்தினவர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

துன்றுபூமகன் பன்றியானவ னொன்றுமோர்கிலா மிழலையானடி
சென்றுபூம்புன னின்றுதூவினார் நன்றுசேர் பவரே.

பொழிப்புரை :

இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமனும் , பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவபெருமான் , திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றான் . அப்பெருமானின் திருவடிகளை , பூவும் , நீரும் கொண்டு பூசிப்பவர்கள் , முத்தி பெறுவர் .

குறிப்புரை :

துன்று பூமகன் - ( பூ துன்று மகன் ) பூவில் வாழும் பிரமன் . சென்று - திருவீழிமிழலைக்குச் சென்று . மிழலையானடி - அக் கடவுளின் திருவடிகளில் . பூம் புனல் தூவினார் - பூவையும் நீரையும் தூவினவர்கள் . பூம் புனல் - பூவும் நீரும் . பூவோடு நீர் கூறுவதை ` பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு ` ( தி .5. ப .90. பா .9) எனவும் , ` போதொடு நீர் சுமந்தேத்தி ` ( தி .4. ப .3. பா .1) எனவும் வருவன கண்டு அறிக . நன்று சேர்பவர் - முத்தி அடைபவர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

புத்தர்கைச்சமண் பித்தர்பொய்க்குவை வைத்தவித்தகன் மிழலைமாநகர்
சித்தம்வைத்தவ ரித்தலத்தினுண் மெய்த்தவத் தவரே.

பொழிப்புரை :

புத்தர்களும் , சமணர்களும் கூறும் பொய்க் குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான சிவபெருமான் , திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் . அப்பெருமான் மீது சித்தம் வைத்து வழிபடுபவர்கள் இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர் .

குறிப்புரை :

கை - அற்பத்தனத்தை உடைய . சமண் பித்தர் - பித்தர் ஆகிய சமணர் . ` ஏதம் கொண்டு ஊதியம் போக விடுதலின் ` பித்தர் என்பார் . பொய்க்குவை வைத்த வித்தகன் - பொய்க் குவியலாகிய உப தேசங்களைத் தோற்க வைத்த சாமர்த்தியசாலி . வித்தகன் - ஞான சொரூபர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

சந்தமார்பொழின் மிழலையீசனைச் சண்பைஞானசம் பந்தன்வாய்நவில்
பந்தமார் தமிழ் பத்தும் வல்லவர் பத்தரா குவரே.

பொழிப்புரை :

சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானைப் போற்றி , சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய திருவருளால் பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கள் பத்தர்கள் ஆவர் .

குறிப்புரை :

சந்தம் ஆர் பொழில் - சந்தன மரங்கள் நிறைந்த சோலை. பந்தம் ஆர் தமிழ் - கேட்டார்ப் பிணிக்கும் தகையவாயின தமிழ்.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

பரசுபாணியர் பாடல்வீணையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர் . வீணையில் பாட்டிசைப்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர் . இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார் ? ஒருவரும் அறியார் .

குறிப்புரை :

பரசு பாணியர் - பரசு என்னும் ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர் . பாடல் வீணையர் - பாடுதலுக்குரிய கருவியாகிய வீணையை உடையவர் என்றது ஒன்றோடொன்று மாறுபட்ட தன்மையை உடையவர் . ஆகையினால் இவர் தன்மை அறிவார் யார் என்றார் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

பட்டநெற்றியர் நட்டமாடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திட்டமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர் . திருநடனம் செய்பவர் . காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார் ?

குறிப்புரை :

பட்டம் வீரர் நெற்றியில் அணியும் ஓர் அணிகலன் . அது இராமாயணத்தில் ` நுதலணி ஓடையில் பிறங்கும் வீரபட்டிகை ` என வருவதால் அறிக . நட்டம் - திருக்கூத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

பவளமேனியர் திகழுநீற்றினர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர் , ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர் . இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார் ?

குறிப்புரை :

பவளமேனியர் - செந்நிறம் பொருந்திய உடம்பை உடையவர் . ` வெள்ளிப் பொடி பவளப் புறம் பூசிய வேதியனே ` ( தி .4. ப .112. பா .1.); ` பவளமே மகுடம் , பவளமே திருவாய் , பவளமே திருவுடம்பு ` ( தி .9 திருவிசைப்பா . 95.); ` பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறு ` ( தி .4. ப .81. பா .4.) என்பன காண்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

பண்ணில்யாழினர் பயிலுமொந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர் . மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர் . இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார் ?

குறிப்புரை :

பண்ணில் யாழினர் - பண்ணோடு கூடிய யாழை உடையவர் . ஏழன் உருபு , மூன்றின் பொருளில் வந்ததால் வேற்றுமை மயக்கம் . மொந்தை - ஒருவகை வாத்தியம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெல்லியாட் டுகந்தார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

சிவபெருமான் பற்களே இல்லாத மண்டை யோட்டில் பிச்சையேற்று உண்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . இரவில் நடனம் ஆடுதலை விரும்புபவர் . இவர் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

பல்லில் ஓட்டினர் - பல் இல்லாத மண்டை ஓட்டைப் பிச்சைப் பாத்திரமாக உடையவர் . எல்லி ஆட்டு உகந்தார் - இரவில் ஆடுதலில் விருப்பம் உடையவர் . ஆட்டு - முதனிலை திரிந்த தொழிற் பெயர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

பச்சைமேனியர் பிச்சைகொள்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திச்சையா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

சிவபெருமான் பச்சைநிறம் கொண்ட திருமேனி உடையவர் . பிச்சையேற்று உண்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . இவர் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

பச்சைமேனியர் - சிவபெருமானுக்குப் பச்சை நிறம் உண்டென்பது ` பச்சை நிறம் உடையர் பாலர் , சாலப் பழையர் , பிழையெலாம் நீக்கி ஆள்வர் ` ( தி .6. ப .17. பா .7.) எனவரும் தாண்டகத்தால் அறிக . சதாசிவமூர்த்தியின் ஐம்முகங்களில் ஒன்றாகிய சத்தியோ ஜாதம் பச்சை நிறம் உடையது என்றும் , அது அத்திருத்தாண்டகத்துப் பாலர் என அடுத்துக் குறித்தமையால் அறியப்படும் எனவும் கூறுப .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

பைங்கணேற்றினர் திங்கள்சூடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர் . பிறைச்சந்திரனை சூடியுள்ளவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும் , எங்கும் வியாபித்துள்ளவர் . இவர் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

எங்குமாய்ப் பல்லவனீச்சரத்து இருப்பார் என்றது :- அகண்டிதன் ஆகி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அடியாரை ஆட்கொள்வான் வேண்டி , குருலிங்கசங்கமங்களில் கண்டனாய்த் தோன்றும் தன்மை விளக்கியவாறு . கண்டன் சிறு அளவில் காணப்படுபவன் . ` கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே ` என்ற திருநேரிசையால் அறிக .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

பாதங்கைதொழ வேதமோதுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவ பெருமான் அருளிச்செய்தார் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர் . இவரது தன்மையை யார் அறிவார் ?

குறிப்புரை :

பாதம் கை தொழ - தமது திருவடிகளைக் கையால் தொழுது உய்தி கூடும் பொருட்டு . வேதம் ஓதுவார் - வேதம் முதலிய நீதிகளை உபதேசித்தருள்பவர் . வேதம் , என்பது உபலட்சணம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

படிகொண்மேனியர் கடிகொள்கொன்றையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

இறைவன் உலகம் முழுவதையும் தம் திருமேனியாகக் கொண்டவர் . நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . இவன் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

படிகொள் - பல்வேறு வடிவங்களில் திருவுடம்பு கொள்பவர் . கடி - வாசனை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

பறைகொள்பாணியர் பிறைகொள்சென்னியர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திறைவரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.

பொழிப்புரை :

இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன் . பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . இவர் தன்மை யார் அறிவார் ?

குறிப்புரை :

பறை - வாத்தியம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

வானமாள்வதற் கூனமொன்றிலை மாதர்பல்லவ னீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்லவல்லவர் நல்லவரே.

பொழிப்புரை :

அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி , ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர் . அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை .

குறிப்புரை :

ஊனம் - தடை . மாதர் - அழகிய .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருண் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே
அற்ற மறைப்பது முன்பணியே அமரர்கள் செய்வது முன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.

பொழிப்புரை :

இறைவரே ! உமாதேவியார் பிரியாது பொருந்தி இருப்பது உம் திருமேனியையே . சிவஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது பேரருளையே . கற்றுணர்ந்த துறவிகள் வெறுப்பது மனைவி முதலிய குடும்பத்தையே . நெற்றிக்கண் எரித்தது மன்மதனையே . உமது திருமேனியை மறைப்பது பாம்பே . தேவர்கள் செய்வது உமது பணிவிடையே . நீர் பெற்றெடுத்து விரும்பி அணைத்தது முருகப் பெருமானையே . நீர் திருப்பிரமபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றீர் .

குறிப்புரை :

பிரமபுரத்தை உகந்தனையே - திருப்பிரமபுரத்தை விரும்பியருளிய பெருமானே ! உமை - உமாதேவியார் . உற்று - பிரியாது பொருந்தி . மெய்யினை - உமது திருவுடம்பை . உணர்வதும் - சிவஞானிகள் அறிவதும் . நின் அருள் மெய்யினையே - உமது உண்மையான அருளையே . கற்றவர் - ஞானநூலைக் கற்ற துறவிகள் . காய்வது - வெறுப்பது . கா - காத்திருந்த . மனையே - மனைவி முதலியவவற்றையே ; என்றது மனைவி முதலிய மூவகை ஏடணையையும் . கனல்விழி - நெற்றிக்கண் . காய்வது - எரித்தது . காமனையே - மன்மதனையே . முன்பக்கத்தில் படம் விரித்துக் கோவணமாகத் தங்கி . அற்றம் மறைப்பது - உனது மானத்தைக் காப்பது . பணியே - பாம்பே . அமரர்கள் செய்வதும் உன் பணியே - உனது பணிவிடையேயாம் . பெற்று முகந்தது கந்தனையே - பெற்று வாரி எடுத்து அணைத்தது முருகக் கடவுளையே . காமன் - உடற் பற்றுக்கு ஆகுபெயர் . காவடி போல உடம்பைக் குறித்தது , சுமக்கும் மனை என்பதால் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையா லமர்ந்தன ரும்பர்து திப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்டவி ரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.

பொழிப்புரை :

வஞ்சனை செய்து வந்தவன் சலந்தரன் என்னும் அசுரனே . அவன் தலையை வெட்டியவன் கங்கையைத் தாங்கிய அரன் . கண்டவர்கள் நடுங்கத்தக்க ஒளிபொருந்திய சக்கராயுதத்தால் சலந்தரனைக் கொல்லத் தேவர்கள் துதித்து மகிழ்ந்தனர் . சந்திர மண்டலத்தை அளாவிய மேருமலை , கையிலேந்திய வில்லாம் . பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர் . விதிக்கப்பட்ட அறவழியில் உலகவர் ஒழுகுவதில் விருப்பத்தையுடைய பெரிய மேலான கடவுளே . வேணுபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அரனே !

குறிப்புரை :

சதி - வஞ்சனை . சலந்தரன் - சலந்தரனை . தடிசிரம் - தலையைவெட்டுவதற்குரிய . சலந்தரனே - வஞ்சகத்தையுடையவனே . வஞ்சகமாவது காலால் சக்கரம்போல் கோடுகிழித்து அதை எடுக்கச் சொல்லியது . அதிர் - கண்டார் நடுங்கத் தக்க . திகிரிப் படையால் - அச்சலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தால் . உம்பர் - தேவர்கள் . துதிப்பு - துதித்தல் . அமர்ந்தனர் - மகிழ்ச்சியுற்றனர் . அடை - முதல் நிலைத் தொழிற்பெயர் . மதிதவழ் வெற்பது கைச்சிலையே - சந்திர மண்டலத்தை அளாவிய மேரு மலை , கையிலேந்திய வில்லாம் . மரு ( வு ) விடம் ஏற்பது கைச்சிலையே - பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர் . விதியினில் - விதித்த முறையில் உலகர் ஒழுகுவதில் . இட்ட ( ம் ) - விருப்பத்தை உடைய . இரும் - பெரிய . பரனே - மேலான கடவுளே ! இட்டம் + இரும்பரன் - மவ்வீறொற்றொழிந்து உயிரீறு ஒத்தது . ( நன்னூல் . 219.) இட்டு அவிரும் எனலே தகும் . வேணுபுரத்தை விரும்பு அரனே - வேணு புரத்தை விரும்புகின்ற சிவபெருமானே .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்த னுடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.

பொழிப்புரை :

இறைவர் காதில் தோட்டை அணிந்தவர் . வேடுவனாகி மிக விரைந்து சென்றவர் . யமனைக் காலால் உதைத்தவர் . அர்ச்சுனனது உடலைக் கவசம் போல் மூடினவர் . மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றையை அணிந்தவர் . அன்பர்களின் வினைகளை அழித்தவர் . சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவர் . அவரே திருப்புகலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் பரம்பொருள் .

குறிப்புரை :

புகலியை அமர்ந்த - விரும்பி யுறைகின்ற பரம் பொருளே - கடவுளே . காது அமரத்திகழ்தோடினனே - காதில் பொருந்த விளங்குகின்ற தோட்டையணிந்தவர் . கானவன் ஆய் - வேடுவனாகி . கடிது ஓடினனே - மிக விரைந்து சென்றவர் . ( பாதம் அதால் ) கூற்று - யமனை உதைத்தனனே . பார்த்தன் - அருச்சுனனது . உடல் - உடம்பை . அம்பு தைத்தனனே - அம்பு தொடுத்து அதனால் கவசம்போல் மூடினவர் . தாது அவிழ் - மகரந்தத் தோடு மலர்ந்த . தன் அன்பர்களுக்கு சார்ந்த - பொருந்திய . வினை ( அது ) அரித்தனனே - கொன்று அருளியவர் . போதம் அமரும் உரைப்பொருளே - சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதே
வித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே.

பொழிப்புரை :

கருநிறமுடைய நஞ்சைக் கக்கும் பாம்பை மகிழ்ந்து இடுப்பில் அணிந்துள்ளவர் . திருநீற்றினையே சந்தனம் போல் உடம்பில் பூசியவர் . அவர் தலைமேல் விளங்குவது சந்திரனே . அவர் வேதம் அருளியது உயிர்கட்கு மேலான ஞானம் அருளவே . மண்டையோடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர் . முறுக்குண்ட சடையில் அவர் அணிந்துள்ளது ஊமத்த மலரே . வித்தகராகிய அப் பெருமான் எம் குரு ஆவார் . அவர் விரும்பி வீற்றிருந்தருளுவதும் திருவெங்குரு என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மைத்திகழ் நஞ்சு உமிழ்மாசுணமே - கரிய நிறம் விளங்கும் நஞ்சைக் கக்கும் பாம்பே . மகிழ்ந்து அரை - இடுப்பில் சேர்வது அரை ஞாணாகவும் கோவணமாகவும் சேர்வது . மாசு ( ண் ) ணமே மெய்த்து உடல் பூசுவர் - சிறந்த திரு நீற்றையே உடம்பின்மேற் பூசுவதாகிய சந்தனமாகத் திருமேனியிற் பூசுவர் . சுண்ணம் , பொடி , திருநீறு . மெய்த்து - உடம்பிற் பூசுவதாகிய சந்தனத்தைக் குறித்தது , ` சாந்தமும் வெண்ணீறு ` என்ற திரு விசைப்பாவின் கருத்து . மேல் மதியே - ( தலை ) மேல் ( இருப்பதும் ) சந்திரனே . மேல் மதியே வேதமது ஓதுவர் - மேலான புத்தியைத் தரும் கருத்துக்களை வேதம் முதலிய நூல்களால் ஓதியருளியவர் ( அவ்வாறு ஓதியருளும் ) வித்தகர் ஆகிய எம் குருவே . சமர்த்தராகிய எம் குருநாதன் விரும்பி அமர்ந்தனர் . வெங்குருவே - வெங்குருவென்னும் தலத்தில் விரும்பி அமர்ந்தனர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

உடன்பயில் கின்றனன் மாதவனே உறுபொறி காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனே
படங்கொ ளரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே.

பொழிப்புரை :

இறைவனே ! திருமாலைத் தம்முடன் இடப் பாகத்தில் இருக்கும்படி செய்கின்றவர் . தம்வழிச் செல்லும் இயல்புடைய இந்திரியங்களை அடக்கும் பெரிய தவம் செய்தவர் . உறுதி பயக்கும் சிறந்த வேதங்களை அருளியவர் . முக்குண வயப்பட்டுச் செய்த புறச்சமயக் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர் . பட மெடுக்கும் பாம்பை இடுப்பில் அணிந்தவர் . யானையின் தோலை உரித்து அதைக் கொன்றவர் . தொடர்ந்த துன்பங்களை அழிப்பதில் இவர் விடம் போன்றவர் . இவரே திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நம் சிவபெருமான் ஆவார் .

குறிப்புரை :

உடன் பயில்கின்றனன் மாதவன் - தம்மோடு கூடவேயிருக்கும் பேறுடையவன் திருமால் . ஏனெனில் , உறு - தம் வழியிற் செல்லுகின்ற . பொறி - இந்திரியங்களை . காய்ந்து இசை - கோபித்து மடக்கிச் செலுத்திய . மாதவன் - பெருந் தவஞ்செய்தோனாதலினால் பொறிகளை யடக்குதல் அவற்கு ஆகும் என்க . ` சென்ற விடத்தாற் செலவிடா தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு ` என்னும் திருக்குறள் கொண்டு அறிக . திடம்பட - உறுதிப்பாடு அமைய . மாமறை - சிறந்த வேதங்களை . கண்டனன் - செய்தருளியவர் . வேதத்தை யருளியவரும் சிவபெருமானேயென்பது . இதனை ` உம்பரின் நாயகன் திருவாக்கிற் பிரணவம் உதித்தது , அதனிடை வேதம் பிறந்தன ` என்னும் திருவிளையாடற் புராணத்தால் அறிக . ( வேதத்துக்கு 804 ). திரிகுணம் மேவிய - முக்குண வயப்பட்டுச் செய்தனவாகிய புறச்சமயக் கொள்கைகளை . கண்டனன் - கண்டனம் செய்வோன் . படங்கொள் அரவு , அரை செய்தனனே - அரையிலணிந்தவன் . பகடு - யானையின் . உரிகொண்டு - தோலையுரித்து . அரை செய்தனன் - அதை அழித்தவன் . ( தொடர்ந்த ) துயர்க்கு - துன்பங்களுக்கு ஒரு நஞ்சு இவனே - ஒருவிடம்போல் நின்று அழிப்பவன் இவனே . பிற தெய்வங்கள் வேதனைப்படும் , இறக்கும் , பிறக்கும் , மேல் வினையும் செய்யும் ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வன் எனப் பிரிநிலை ஏகாரம் வைத்தார் . சிவன் வெங்குருமேவிய நம் சிவனே என்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழின் மானிடமே
மிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையே
தகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்க தராயுறை சுந்தரரே.

பொழிப்புரை :

இறைவன் அழகிய கையில் ஏந்தியுள்ளது புகைகொண்டு எழும் நெருப்பே . தேவர்கள் போற்றுவது அவருடைய திருக்கழல்களையே . தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை இடக்கரத்தில் ஏந்தியுள்ளார் . பக்குவான்மாக்கட்கு ஞானோபதேசம் செய்ய அவர் காட்சி தந்தது மானிட உடம்பில் . பெருக்கெடுக்கும் கங்கையைத் தாங்கியது அழகிய சடையிலே . மின்னலைப் போன்று ஒளிரும் அழகிய சடையை உடையவர் . தகுந்த விரதம் கொள்ளும் சுந்தர வடிவினர் . அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருந்தருளும் அழகர் .

குறிப்புரை :

திகழ் - விளங்குகின்ற , கையதுவும் புகை தங்கு , அழலே , நெருப்பே , தேவர்தேவர் ( கள் ) தொழுவதும் , தம் கழலே - தமது திருவடியையேயாம் . இகழ்பவர் - தம்மை அலட்சியம் செய்தவர்களாகிய . தாம் - தாருகவனத்துமுனிவர் ( ஏவிய ) ஒருமான் , இடம் - இடக்கரத்தில் உள்ளது . இருந்தனுவோடு - பக்குவ ஆன்மாக்களுக்கு ( உபதேசிக்கும் பொருட்டு ) அவர்தம் பெருமைபொருந்திய உடம்பிற்கு . எழில் - அழகிய . மானிடவடிவமே என்றது ` மானிடரை ஆட்கொள்ள மானிட வடிவங்கொண்டு வருவன் ` என்ற கருத்து . அது ` அருபரத் தொருவன் அவனியில் வந்து , குருபரனாகியருளிய கொள்கை ` எனவும் , ` இம்மண் புகுந்து மனித்தரை யாட்கொள்ளும் வள்ளல் ` எனவும் வரும் திருவாசகத்தால் ( தி .8) அறிக . மிகவரும் , நீர் கொளும் - தண்ணீரைத் தன்னகத்து அடக்கிய , மஞ்சு - மேகங்கள் . அடைவு - தம்மிடம் சேர்தலையுடையது . என்றது சிவபெருமான் சடாபாரத்தில் மேகங்கள் இருப்பதைக் குறித்தது . இதனைத் திரு விளையாடல் நான்மாடக்கூடலான படலத்தால் அறிக . மின் - மின்னலை . நிகர்கின்றதும் - ஒப்பதுவும் . அம்சடையே - அழகிய சடையே . தக - தகுமாறு . விரதம் - மனத்தையடக்கல் முதலிய விரதங் காத்தலை . கொள்வர் - பாராட்டியேற்றுக் கொள்பவராகிய சுந்தரர் . கொள்வர் - இவ்வுலகிற்குத் தலைவர் . ` விரதமெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் ` எனவும் , ` விரதங் கொண்டாட வல்லானும் ` எனவும் வரும் அப்பர் திருவாக்கிலும் ஒலிக்கிறது . வசுந்தரர் எனற்பாலது சுந்தரர் என நின்றது முதற்குறை . உலகத்தை உடையவர் என்று பொருள் . தக்க தராய் - பூந்தராய் . உறை - வீற்றிருக்கும் , சுந்தரர் அழகர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

ஓர்வரு கண்க ளிணைக்கயலே யுமையவள் கண்க ளிணைக்கயலே
ஏர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொளு தாசன னாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோக தியம்பகனே சிரபுர மேய தியம்பகனே.

பொழிப்புரை :

இறைவனையும் , அடியாரையும் காணாத கண்கள் புறம்பானவை . உமாதேவியின் கண்கள் இரு கயல்மீன்கட்கு ஒப்பானவை . அழகிய திருவடிகளில் கட்டியிருப்பது நாகத்தையே . அவருடைய திருமேனியானது நெருப்பு வண்ணம் உடையது நீர்மயமான கொத்தான கூந்தல் ஒழுங்காய் உள்ளது . நெடுஞ்சடையில் தங்கியுள்ளது , கங்கையே . சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய மூன்று கண்களையுடையவரே . நெருப்பாகிய அம்பைக் கையின் இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார் .

குறிப்புரை :

ஓர்வு அரு கண்கள் - மாலற நேயம் மலிந்தவர் வேடத்தை அரனென நினைக்காத கண்கள் . இணைக்க - அன்பரொடு மருவுதற்கு . அயல் - புறம்பானவை . வேடத்தைக் கண்டு நினைப்பிக்கும் கருவியாகலான் கண்கள்மேல் வைத்து ஓதினாரேனும் , மாந்தர்மேல் வைத்துக் கூறியதாகக் கொள்க . எனவே வேடத்தை மதியாதவர் திருக்கூட்டத்திற்குப் புறம்பு என்ற கருத்தாம் . உமையவள் கண்கள் , இணைக்கயல் - இரு மீன்களுக்கு ஒப்பாகும் . ஏர் மருவும் - அழகு பொருந்திய . கழல் - வீரக்கண்டையாக இருப்பது . நாகம் அது - பாம்பாம் . எழில் கொள் - அழகிய . உதாசனன் - அக்கினி . ஆகம் அது - திருவுடம்பாக இருப்பது . நீர்வரு - நீர்மயமான . கொந்து அளகம் - கொத்தான கூந்தல் . கையது - ஒழுங்காய் உள்ளது . கங்கையது - கங்கையாகிய மங்கைக்கு உரியது . ஒரு மங்கையே நீர்மயமாக இருப்பாளேயானால் அவளது சாங்கமும் நீர்மயமானதே என்று கொள்வதற்கு நீர்வரு கொந்தளகம் என்று கூறினார் . சேர்வரு - சேர்தற்கரிய . யோகம் - யோகநிலையைக் காட்டிய . தியம்பகன் - மூன்று கண்களை உடையவன் . தியம்பகன் - திரியம்பகன் என்பதன் மரூஉ . சிரபுரம் , மேய - எழுந்தருளிய . தீ - நெருப்பாகிய . அம்பு - அம்பைக்கொண்ட . அகன் - கையினிடத்தை உடையவன் . தீ - குறுக்கல் விகாரமாய் தி என நின்றது . அகம் - இடம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்க ணிடந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடு நகைத்தலையே
பூண்டனர் சேர லுமாபதியே புறவ மமர்ந்த வுமாபதியே

பொழிப்புரை :

பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால் , தமது பெரிய கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சித்தனர் . தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில் ஒளியுடையதாய் விளங்குவது சக்கரமே . தாருகாவனத்து முனிவர்கள் விரும்பி யாகம் செய்து சிரமப்படச் சிவனைக் கொல்ல வந்தது நகுவெண்டலை . அம்முனிவர்களைப் பரிகசிப்பது போல வெண்டலை களை மாலையாக அணிந்து கொண்டனர் . அவர் சேர்வது எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம் . புறவம் என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே ஆவார் .

குறிப்புரை :

ஈண்டு - இங்கே ( திருவீழிமிழலையில் ). துயில் அமர் அப்பினன் - கடலில் தூங்கும் திருமால் . அப்பு - தண்ணீர் , கடலைக் குறித்தது தானியாகுபெயர் . இரு - பெரிய . கண் - கண்ணை . இடந்து - தோண்டி . அடி - திருவடியின்கண் . அப்பினன் - சேர்த்தான் . தீண்டல் அரு - தீண்டுவதற்கு அரிய . பரிசு - தன்மையுடன் . அக்கரம் - அந்தக்கரத்தில் . திகழ்ந்து - விளங்கி . ஒளிசேர்வது - ஒளி உடையதாய் இருப்பது . சக்கரம் - சக்கர ஆயுதமாம் . வேண்டி - ( தாருகாவனத்து முனிவர் ) விரும்பி . வருந்த - யாகம் செய்து சிரமப்பட ( தோன்றிய ). நகைத்தலை - நகுவெண்டலையானது . அவரோடு - அம்முனிவ ரோடு . மிகைத்து - மிக்க மாறுகொண்டு . நகைத்தலையே பூண்டனர் - நகைத்தலை உடையதாக . பூண்டனர் - தலைக்கண் அணிந்தனர் . சிவனைக் கொல்லவந்த நகுவெண்டலை சிரிப்பது , அம் முனிவரைப் பரிகசிப்பதைப் போலக் காணும்படி அதனை அணிந்தனர் என்பது கருத்து . புறவு அமர்ந்த உமாபதி , சேரலும் - சேர்வதும் . மா - எவற்றிலும் சிறந்த ( அடியார் உள்ளமாகிய ). பதி - இடமாம் . ` மலர்மிசை ஏகினான் ` ( குறள் .3) என்ற திருக்குறளு க்குப் பரிமேலழகர் உரைத்தது இங்குக் கொள்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்டக ருங்களனே
மன்னிவ ரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே.

பொழிப்புரை :

சிவபெருமானே ! மணிகட்டிய உன் கோயில் வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய அடியவர்களிடமிருந்து நீங்கமாட்டாய் . அவர்களின் அடிச்சுவட்டை எண்ணி . மனத்தில் தொழுகின்ற அடியவர்கள் விளங்குகின்ற இடமே அடியவர் திருக்கூட்டம் எனத்தகும் . அவர் தாருகாவனத்தில் வாழும் மகளிர் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர் . கடலில் எழுந்த விடத்தை உண்ட கரிய கண்டத்தர் . அப்பெருமான் நிலையாக விரும்பி வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி சண்பைப்புல்லாலே அழகாகச் சூழப் பட்டதாகிய . கடல்வளமும் , வயல் வளமும் உடைய சண்பை நகராகும் .

குறிப்புரை :

நின்மணிவாயது - உமது ஆராய்ச்சி மணிகட்டிய , கோயிலின் திருவாயிலினுடைய . நீழலையே - நிழலையே . நேசமது ஆனவர் - விருப்பமாகக் கொண்டவர் ; என்றது திருக்கோயிலில் வழிபாடுசெய்து வாயிலில் காத்திருக்கும் அடியர் என்றபடி . ` மூவாவுருவத்து முக்கண் முதல்வ ...... காவாய் எனக் கடைதூங்கும் மணி ` என்ற அப்பர் வாக்கின்படி மணிவாய் என்பதற்குப் பொருள் கொள்ளப்பட்டது . வாய் - வாயில் . நீளலை ( அவ்வடியவரினின்றும் ) நீங்கமாட்டாய் . உன்னி மனத்து - மனத்தில் உம்மை நினைத்து . எழு - எழுகின்ற . சங்க ( ம ) ம் - அடியார் . ஒளியதனோடு - சைவ தேஜஸோடு . உறு - வருகின்ற . சங்கமது - கூட்டமாகும் . சங்கம் ; சங்கமம் என்பதன் மரூஉ . கடவுள் வெளிப்படும் நிலைகளாகிய குரு , லிங்க , சங்கமங் களில் ஒன்று . கன்னியரை - முனிபத்தினியரை . கவரும் - மனம் கவர்ந்த . களன் - கள்ளன் . கடல் விடமுண்ட , கருங்களன் - கரிய கழுத்தை உடையவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரு மிராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.

பொழிப்புரை :

இலங்கை அரக்கர்கட்கு அரசனான இராவணன் கயிலையைப் பெயர்த்து எடுக்க , இறைவன் திருப்பாத விரலை ஊன்றக் கயிலையின் கீழ் நடுக்குண்டு , இந்திரியங்கள் மயங்கச் சோர்ந்து தான் பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே பாடினன் . பழைய செருக்கு நீங்கி , பொறிகள் பக்தி நிலையில் செல்ல அவனுடைய பாடலுக்கு இறைவன் உடன்பட்டு அருளினன் . இரவு போன்ற கரிய நிறத்தை உடைய அவன் கயிலைமலையின் கீழ் நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே இராவணன் என்பதாம் . இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது சிறந்த வாளாயுதம் . சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடி சிறந்த வசீகரத்தை உடையதாகும் .

குறிப்புரை :

இலங்கை அரக்கர் தமக்கு , இறை - அரசனாகிய இராவணன் . கயிலை ( யை ) இடந்து எடுக்க இறையே சிறிதளவில் . புலன்கள் கெட - இந்திரியங்கள் எல்லாம் மயங்கச் ( சோர்ந்து ). உடன் பாடினனே - ( தான் பிழைக்கும் வண்ணம் ) உடனே பாடினன் . பொறிகள் - ஐம்பொறி முதலிய கரணங்கள் . கெட - பழைய செருக்கு நிலைகெட்டு ( பத்தி நிலையில் செல்ல ). உடன்பாடினனே - அவனுடைய பாடலுக்கு இறைவர் உடன்பட்டவராகி . இலங்கியமேனி இராவணன் - விளங்கின உடம்பையுடைய இராவணனுக்கு . எய்தும் பெயரும் இராவணனே - அதனால் உண்டான பெயரும் அழுதவன் என்பதாம் . கலந்து அருள்பெற்றதும் மாவசியே - அருளிற் கலந்து அவன் பெற்றதும் சிறந்த வாளாயுதமாம் . ( வசி - வாள் ) ` வசி கூர்மை வசியம் வாளே ` என்பது நிகண்டு . காழி அரன் அடி , மாவசி - சிறந்த வசீகரத்தை உடையதாகும் . வசி - முத்திபக்ஷாரம் என செந்திநாதையர் உரைப்பர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையி லெய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே.

பொழிப்புரை :

தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும் , அவனோடு சேர்ந்து திரிந்த உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் , பூமியைத் தோண்டும் பன்றியாகவும் , வானத்தில் பறக்கும் பருந்தாகவும் அடி , முடி தேட முயன்று அடையாதவர் ஆயினர் . குளிர்ச்சி மிக்க சோலைகளில் உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப் பயன்படத் திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் , உயிர்கட்கெல்லாம் தலைவரான பசுபதி எனப்படும் சிவபெருமான் . அவர் ஆனேற்றில் ஏறுவதால் பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவார் .

குறிப்புரை :

கண் நிகழ் புண்டரிகத்தினனே - கண்ணானது பொருந்திய தாமரையாக உள்ளவன் ; தாமரைக் கண்ணனாகிய திருமாலும் . கலந்து - அவனோடு சேர்ந்து . இரி - திரிந்த . புண்டரீகத் தினன் - ( உந்திக்கமலத்தில் தோன்றியவனாகிய ) பிரமனும் . மண் நிகழும் பரிசு - பூமியைத் தோண்டும் தன்மையை உடைய . ஏனம் அதே - பன்றியாகவும் . வானகம் ஏய் - ஆகாயத்தில் பறக்கின்ற . சேனம் அது - கழுகாகவும் . பிரமன் வானிற் பறக்க எடுத்த வடிவம் அன்னமாகவும் எமது ஆளுடையபிள்ளையார் வானிற் பறக்கும் கழுகாகவே அதனைக் கூறினர் . நண்ணி அடிமுடி எய்தலரே - சேர்ந்து அடி முடியையும் அடையாதவர் ஆயினர் . நளிர்மலி சோலையில் எய்து அலர் - குளிர்ச்சிமிக்க சோலையில் உள்ள மலர்கள் . பண் இயல் - சிவபூசை பண்ணுதற்குப் பொருந்திய . கொச்சை - கொச்சைவயம் என்னும் தலத்திலுள்ள . பசுபதியே - ஆன்மவர்க்கங்களுக்குத் தலைவராய் , அதனால் பசுபதி என்னும் பெயர் படைத்தவர் . பசு - ஆனேற்றை . மிக - என்றும் . ஊர்வர் - ஏறுவார் ; அதனால் பசு பதியே - பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவர் . பசுபதி - என்ற சொல் பசுக்களுக்கு ( ஆன்மாக்களுக்கு ) ப் பதியாம் தன்மையாலும் , பசு ஏறுதலாலும் , எய்திய பெயர் என்பது இங்குத் தெளிவிக்கப்பட்டது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 12

பருமதில் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே
கருதலி லிசைமுர றருமருளே கழுமல மமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.

பொழிப்புரை :

பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவைமுன்னர்த் , திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வைகை நதியின் மீது செலுத்த அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர் சிவபெருமான் . அவர் சைவர்கட்கு வந்த பழியும் , பழிதூற்றலும் கெடுமாறு சமணர்களை அழித்தவர் . நினைக்கவும் முடியாதபடி சைவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த வியப்பான செயல் . திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனின் அருளே . அவ்வருளைப் பெற்ற முத்தமிழ் விரகரது பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல் நிச்சயம் .

குறிப்புரை :

பருமதில் மதுரை மன் அவை எதிரே - பருத்த மதில்களை உடைய மதுரை அரசன் சபையின் முன் . பதிகம் அது எழுது இலை அவை - பனை ஏடும் அதில் எழுதிய பாடலும் ஆகியவைகள் . ( அவை - என்று பன்மையால் கூறினமையால் இங்ஙனம் கூறப் பட்டது .) வருநதி இடை - வரும் வைகையாற்றில் . மிசை - மேலே எதிரே வரு - எதிரேவரச் செய்த . கரன் - செய்கையை உடையவன் . வரு - என்பதில் பிற வினை விகுதி தொக்கு நின்றது . வசையொடும் அலர்கெட - சைவர்களுக்குவந்த பழியும் , பழிதூற்றலும் கெடுமாறு . அருகு அரன் சமணர்களை அழித்தவன் . அருகு - அருகர் . அரன் - ஹரன் ; அழித்தவன் . கருதலில் - நினைக்கவும் முடியாதபடி . இசை - சைவர் அடைந்த புகழ் . முரல்தரும் - உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த . மருள் - வியப்பு . கழுமலம் அமர் இறைதரும் அருளே - கமுமலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் செய்த திருவருட் பெருக்கே யாகும் . மருவிய - அவ்வருளைப் பெற்ற . தமிழ் விரகன - முத்தமிழ் விரகரது . மொழி - இப்பாடல்களை . வல்லவர் - வல்லவர்களது . இடர் திடம் ஒழி - இடர் ஒழிதல் நிச்சயம் . ஒழி - முதனிலைத் தொழிற் பெயர் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

பாயுமால்விடை மேலொரு பாகனே பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொரு ணுண்பொரு ளாதியே யாலநீழ லரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.

பொழிப்புரை :

இறைவர் பாய்ந்து செல்லும் பெருமையுடைய இடபத்தைச் செலுத்துபவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனியானவர் . சுடர்விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித்தீ ஆனவர் . ஆராயத்தக்க நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும் நுட்பமான கருத்தாக விளங்குபவர் . ஆலநிழலின் கீழ்த் தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்கட்கு அரும்பொருள் உரைத்த முதல்வர் . போர்புரிய வந்த வில்லையுடைய மன்மதன் முதற்கண் அடைந்தது நடுக்கமேயாம் . நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளும் இடம் திருக்சச்சியேகம்பமே .

குறிப்புரை :

பாயும் மால் விடைமேல் , ஒரு பாகன் - செலுத்துபவன் . பாவை - பெண்ணை . தன் உருமேல் - தன் உடம்பின்மேல் . ஒருபாகன் - ஒருபாகத்தில் உடையவன் . வேதத்துவனி - வேதத்தின் முழக்கம் . மால் - பெரிய . எரி - எரிகின்ற . வேதத்து - வெம்மையையுடைய . வனியே - நெருப்பே . எரிவன்னி - வினைத் தொகை . வேது - வெம்மை . அத்து - சாரியை ஆயும் - ஆராயத்தக்க . நன் பொருள் - நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும் , நுண்பொருள் - நுட்பமான கருத்தாக . ஆதி - ஆவாய் . அரும் பொருள் ஆதியே - கிடைத்தற்கு அரிய பொருளாயுள்ள முதல்வனே . காய - போர் புரிய ( வந்த ). வில்மதன் - வில்லையுடைய மன்மதன் . பட்டது - முதற்கண் அடைந்தது . கம்பம் - நடுக்கமேயாம் . காய - காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது . காமன் பட்டது கம்பம் என்பதை ` நந்தி தேவர் காப்பும் ஆணையும் உற்று நோக்கி நெடிதுயிர்த்து உளம் துளங்கி விம்மினான் ` எனவரும் காம தகனப் படலத்தான் அறிக . கம்பம் :- ஏகம்பம் என்பது கம்பம் என முதற் குறைந்து நின்றது . ஏக + ஆம்பரம் = ஏகாம்பரம் - ( ஒற்றை மாமரம் ) ஏகம்பம் என மருவிற்று . வேதத்து + வனி = வேத விதிப்படி வளர்க்கப்பெறும் வேள்வித் தீ எனலே பொருந்துவது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

சடையணிந்ததும் வெண்டலை மாலையே தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூதக ணங்களே போற்றிசைப்பன பூதக ணங்களே
கடைகடோறு மிரப்பது மிச்சையே கம்பமேவி யிருப்பது மிச்சையே.

பொழிப்புரை :

சிவபெருமான் சடையில் அணிந்திருப்பது வெண்டலை மாலை ஆகும் . உடம்பிலும் தலைமாலை அணிந்துள்ளார் . அழகிய கையில் சூலப்படை ஏந்தி உள்ளவர் . பரந்து விளங்கும் கையைப் படை போன்று கொண்டு தோண்டிய அழகு செய்வதாகிய அணிகலன் திருமாலின் கண் ஆகும் . பக்கத்தில் சூழ்ந்து விளங்குவனவும் , போற்றிசைப்பனவும் பூதகணங்களே . அப் பெருமான் வாயில்கள் தோறும் சென்று இரப்பது உணவே . அவர் திருக்கச்சியேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

சடையணிந்தது வெண்டலையாகிய மாலை - ( நகு வெண்தலை ) தம் உடம்பிலும் வெள்ளிய தலையைக் கோத்த மாலை . படையில் - ஆயுதத்தைப் போல் அழகிய கை விரலால் . சூல் - தோண்டிய . அம் - அழகு செய்வதாகிய அணிகலன் . அது - அத் திருமாலின் கண் . என்பது - என்க . சூலம் - சூல் + அம் எனப்பிரிக்க . சூலுதல் - தோண்டுதல் . ` நுங்கு சூன்றிட்டன்ன ` என்னும் நாலடியாரிற் காண்க . அம் - அழகு . அது அணிகலனுக்கு ஆனது - காரிய ஆகு பெயர் . அப்பொதுப்பெயர் சிறப்புப் பெயராகிய மோதிரத்துக்கு ஆயிற்று . மச்சாவதாரத்தின் செருக்கையடக்க உருத்திர பகவான் திருமாலின் கண்ணைக் கை விரலால் தோண்ட அது விரலுக்கு அணிகலமாகிய கணையாழியாயிற்று என்ற வரலாறு . இதனை ` வெருவாழி கொள்பவனோ விரலாழி கொடுப்பவனோ , மரு வாழி யென்றுரைக்கும் மடைப்பள்ளி காப்பவனோ ` என்னும் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய வாட்போக்கிக் கலம்பகத்தால் அறிக . அங்கை - விரலைக் குறித்தது . முதலாகுபெயர் என்பது வியங்கோள் . பரந்து - ஒளி பரந்து . இலங்கு - விளங்குகின்ற . சூலம் ( அது ) என்பதே - சூலம் என்பதாம் . அயில் - ஆயுதமாவது . அயில் - இங்குப் பொதுப் பெயராய் ஆயுதம் என்னும் பொருள் தந்து நின்றது . புடை பரப்பன பூதகணங்களே - பக்கத்தில் பரந்து வருவன பூத கணங்களே . போற்றிசைப்பன - துதி சொல்வன . கடை - வீட்டுவாயில் . மிச்சையே - உணவு மிசை ( தல் ). முதனிலை திரிந்த தொழிற் பெயர் . இச்சை - விருப்பம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியே
அள்ளிநீறது பூசுவ தாகமே யானமாசுண மூசுவ தாகமே
புள்ளியாடை யுடுப்ப துகத்துமே போனவூழி யுடுப்ப துகத்துமே
கள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

பொழிப்புரை :

சிவபெருமான் வெள்ளெருக்கமும் , தும்பையும் சூடியுள்ளவர் . தும்புக் கயிற்றைக் கொண்டு இடபத்தைக் கட்டியுள்ளவர் . திருநீற்றினை உடம்பிலே பூசியுள்ளவர் . உடம்பைப் பாம்புகளால் மூடியுள்ளவர் . புள்ளிகளையுடைய புலித்தோல் , மான்தோல் ஆடைகளை விரும்பி அணிபவர் . ஊழிக்காலத்தில் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுத் தம்முள் ஒடுக்கிக் கொள்வார் , ஒவ்வொரு யுகத்திலும் , தேன் பொருந்திய மலர்களை அணிந்துள்ள , உலகைத் தாங்கும் தூண் போன்ற சிவபெருமான் காஞ்சி மாநகரிலுள்ள திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து அருளு கின்றார் .

குறிப்புரை :

மிலைச்சி - சூடி . வேறு - வேறாகி முன் செல்ல . தும்பை - தும்புக் கயிற்றை இடபத்துக்குக் கட்டியவனே . தாகம் - விருப்பம் . மாசுணம் - பாம்புகள் . மூசுவது - மூடுவது . ஆகமே - உடம்பையே . புள்ளி ஆடை உடுப்பதும் கத்து - புள்ளியையுடைய ஆடையாக உடுப்பது கத்துமே . ஊழி - பிரளய காலத்தில் . போன - தனுகரண புவன போகங்கள் அழியப்பெற்ற உயிர்களை . உடுப்பது - தன்னுள் ஒடுக்கிக் கொள்வது . உகத்தும் - ஒவ்வோர் உகத்திலும் . உடுப்பது - ஒடுக்கிக் கொள்வதென்னும் பொருளில் வந்தது . கள் உலாம் - தேன் பொருந்திய . மலர் - மலரையணிந்த . கம்பம் - ( உலகைத் தாங்கும் ) தூண் . சிவபெருமான் . இலக்கண நூலார் இதனை வெளிப்படையென்ப . நடக்கும் மலை யென்பபோல . இருப்பு முதலிற் பெயர்ச் சொல்லாயும் , பின் தொழிற் பெயராயும் பொருளுணர்த்திற்று . கள் ...... கம்பம் - கரும்பு . ` ஆனந்தத் தேன் காட்டும் முக்கட்கரும்பு ` ( சிதம்பரமும்மணிக்கோவை . 15 ) நகர்வளம் குறித்தது இது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

முற்றலாமை யணிந்த முதல்வரே மூரியாமை யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஆமையோட்டை அணிந்த முதல்வர் . வலிய ஆனேற்றை அழகு செய்து ஏறிய முதல்வர் . ஒளி பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் தன்மையர் . பாலாலும் , நெய்யாலும் திருமுழுக்காட்டப்படும் பெருமையுடையவர் . வற்றிய மண்டையோட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்றுத் திரிபவர் . தேவர்களாலும் , ஏனைய உலகிலுள்ள அடியவர்களாலும் போற்றிப் பூசை செய்யப்படுபவர் . அவரைப் போற்றாதவர்கள் மனம் இரும்புத்தூண் போன்றது . அப்பெருமான் திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

முற்றல் ஆமை அணிந்த முதல்வர் - ஆமை ஓட்டை அணிந்த முதல்வர் . முதல்வர் - தலைவர் . மூரி - வலிய . ஆமை - ஆனேற்றை . அணிந்த - அழகு செய்து ஏறிய . முதல்வர் - முதலில் தோன்றியவர் . பரிசர் - தன்மை உடையவர் . வாள் அரவு - ஒளி பொருந்திய பாம்பை . பற்றி - பிடித்து . ஆட்டும் - ஆட்டுகின்ற . பரிசர் - தன்மையுடையவர் . ஆட்டும் - அபிடேகம் செய்யப்பெறும் . பரிசர் - பெருமையையுடையவர் . இனி வாளரவு ஆட்டும் பரிசர் என்பதற்கு , போர்வீரர் கையிற் பற்றும் பரிசையைப் போலப் பாம்பைப்பற்றி ஆட்டி வருபவர் என்ற கருத்தாகவும் கொள்ளலாம் . வற்றல் ஓடு - வற்றிய மண்டையோடாகிய . கலம் - பாத்திரத்தில் பலிதேர்வது ( அவர் ) பிச்சை யெடுப்பது . வானினோடு - தேவர் உலகிலுள்ளவர்களுடன் . கலம் ( ஏனையுலகிலுமுள்ள ) கலம் - சற்பாத்திரங்களாகிய அடியார்கள் . தேர்வது - ஆராய்வதும் . பலி - ( அவருக்குச் செய்யும் ) பூசை முறைகளையேயாம் ( பலி - பூசை ). கற்றிலா - ( அவரைக் ) கல்லாத . மனம் - மனம் . கம்பம் இருப்பு ( அது ) - இருப்புத் தூண்போன்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

வேடனாகி விசையற் கருளியே வேலைநஞ்ச மிசையற் கருளியே
ஆடுபாம்பரை யார்த்த துடையதே யஞ்சுபூதமு மார்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி யழகிதே குற்றமின்மதிக் கண்ணி யழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே கம்பமாவதி யாவது மும்மதே.

பொழிப்புரை :

சிவபெருமான் வேட்டுவ வடிவம் தாங்கி அர்ச்சுனனுக்கு அருள்புரிந்தவர் . கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கண்டம் கறுத்தவர் . ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டி அதன்மேல் ஆடை அணிந்தவர் , பிரளயகாலத்தில் ஐம்பூதங்களால் ஆகிய உலகம் அவரால் அழிக்கப்பட்டது . வளைந்த ஆகாயத்தில் விளங்கும் பிறையைத் தலைமாலையாக அழகுற அணிந்தவர் . களங்கமில்லாத மெய்யடியார்களின் பக்தியாகிய வலை உணர்தற்கு இனிமையானது . சுடுகாடே அவர் வாழும் இருப்பிடம் , திருக்கச்சியேகம்பத்தையும் தாம் விரும்பும் திருத்தலமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

விசயற்கு - அருச்சுனனுக்கு . அருளி - அருள் செய்தோன் . நஞ்சு , மிசையால் - உண்டலால் . கருளி - ( கண்டம் ) கறுப்பு அடைந்தவர் . கருள் - கருமை . ஆடும் பாம்பு அரை ஆர்த்தது உடையது - ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டிய உடையின் மேலது . அஞ்சு பூதமும் - ஐம்பூத முதலிய தத்துவங்களாலும் . ஆர்த்தது - பிணைக்கப்பட்டதாகிய இவ்வுலகம் . துடையது - அவரால் அழிக்கப் பட்டது என்றது உலகிற்குச் சங்கார கருத்தா சிவன் என்பது . கோடு வான்மதி - வளைந்த ஆகாயத்தில் வருகின்ற பிறையாகிய . கண்ணி - தலைமாலை . அழகிது - அழகியதாக உள்ளது . குற்றம் இல் - களங்கமில்லாத . மதி - மெய்யடியார்களின் . மதி - அன்போடு கூடிய அறிவால் வீசும் . கண்ணி - வலையானது . அழகிது - உணர்தற்கு இனிமையானது என்றது . ` பத்தி வலையிற் படுவோன் ` என்ற கருத்து . காடுவாழ் பதியாவதும் உம்மதே - சுடு காட்டில் வாழ்வது உமது இருப்பிடமானால் . கம்பமாபதி ஆவது உம்மதே - காஞ்சிபுரமாகிய சிறந்த நகரமும் உம்முடையது என்று சொல்லலாகுமா ? என்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

இரும்புகைக்கொடி தங்கழல் கையதே யிமயமாமக டங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே யாழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகனட மாடுதல் செய்துமே பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

பொழிப்புரை :

இறைவர் கொடிபோன்று பெரிய புகையுடன் எழும் நெருப்பைக் கையிலேந்தியவர் . இமயமலையரசனின் மகளான உமாதேவியின் கைகளால் அவருடைய திருவடிகள் வருடப்படுவன . அடியவர்களால் பூசிக்கப்படும் அரும்புகளையும் , மலர்களையும் பாரமாகத் தாங்குபவர் . சக்கரப் படையுடைய திருமாலின் பெரிய உடலெலும்பாகிய கங்காளத்தைச் சுமப்பவர் . பகலில் திருநடனம் செய்பவர் . தாருகாவனத்து முனிபத்தினிகளின் மனம் வாடச் செய்பவர் . கருப்பங்கழிகள் நிறைந்து கம்பம் போலப் பருத்துக் காணப்படும் திருக் கச்சியேகம்பம் என்ற திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் .

குறிப்புரை :

இரும் - பெரிய ( புகைக்கொடி தங்கு ). அழல் - நெருப்பு . கையது - கையின் கண்ணது . தம்கழல் - தமது திருவடி . இமய மாமகள் - உமாதேவியாரின் . கையது - கையால் வருடப்படுவது . ` மாலைதாழ் குழல் மாமலையாள் செங்கை சீலமாக வருடச் சிவந்தன ` என்னும் தடுத்தாட் கொண்ட புராணக் (192) கருத்து . அரும்பும் - அரும்புகளும் . மொய்த்த - வண்டுகள் மொய்க்கப் பெற்ற . மலர் - மலர்களும் . பொறை - பாரமாக . தாங்கி - தாங்கினவன் . அன்பரிட்டமையாகலின் பொறையாயினுந்தாங்கினான் ` எம் போலிகள் பறித்திட்ட அரும்பும் முகையும் ` என்னும் அப்பர் வாக்கால் , மலரேயன்றி அரும்பும் பூசைக்காதல் அறிக . ஆழியான் தன் - திருமாலின் மலர் . பரந்த - பெரிய . பொறை - உடலெலும்பாகிய கங்காளத்தை . தாங்கி - சுமப்பவன் . ( உடல் எலும்புக் கூட்டுக்குக் கங்காளம் என்று பெயர் .) ` கங்காளம் தோள்மீது காதலித்தான் காணேடி ` என்பது திருவாசகம் ( தி .8). திருமாலின் திருவிக்கிர மாவதாரத்திற் செருக்கையடக்கி அதற்கறிகுறியாக அவன் உடலெலும்பைச் சிவபெருமான் தாங்குவர் . ஏனையரெவரும் அழிவர் எனலை விளக்குதற்குக் , ` கண்டவிடம் நித்தியத்தைக் காட்டவும் கங்காளம் முதல் , அண்டவிடந்தர வைத்தாய் அம்புயம் செய்குற்றம் எவன் ` என்னும் வாட்போக்கிக் கலம்பகத்தால் அறிக . பெரும் பகல் , நடம் ஆடுதல் செய்தும் , பேதையர் மனம் - தாருகவனத்து முனிபத்தினிமார் மனம் . வாடுதல் செய்தும் - வாடச் செய்தீர் என்றது திருக்கூத்து . எவருக்கும் மகிழச் செய்விப்பதாகவும் , பேதையரை மட்டும் வாட்டியது என்பது புதுமை என்ற கருத்து . செய்தும் - செய்தீர் . தன்மை முன்னிலைக்கண் வந்தது . அது ` நாமரையாமத்தென்னோ வந்து வைகி நயந்ததுவே ` என்ற திருக்கோவையாரிலும் ( தி .8) ` நடந்தவரோ நாம் ` என்னக் கம்பராமாயணத்தும் வருதல் காண்க . செறிந்து ஓங்கிய தூண்கள் போலக் கரும்புகள் இருக்கும் காஞ்சியில் ஏகாம்பரம் உன் இருப்பிடம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

முதிரமங்கை தவஞ்செய்த காலமே முன்புமங்கை தவஞ்செய்த காலமே
வெதிர்களோடகில் சந்தமு ருட்டியே வேழமோடகில் சந்த முருட்டியே
அதிரவாறு வரத்தழு வத்தொடே யானையாடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

பொழிப்புரை :

மேகம் போலும் நிறத்தையுடைய அம்பிகை முற்காலத்தில் இமயமலையில் சிவபெருமானைக் கணவராக அடையத் தவம் செய்தாள் . பின் அம்பிகை கம்பையாற்றில் தவம் செய்யும் இக்காலத்திலும் மூங்கில் , அகில் , சந்தனம் , மற்றும் ஏனைய முருட்டு மரங்களையும் , யானை முதலிய மிருகங்களையும் ஓட முடியாதவாறு ஆரவாரத்தோடு கம்பையாறு அடித்துக் கொண்டு வர , பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படும் சிவபெருமானைத் தழுவுவதால் முலைத்தழும்பு தம்பம்போல் உறுதியான அவர் மார்பில் விளங்குகின்றது . அப்பெருமான் காஞ்சிமாநகரிலுள்ள திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

முதிரம் மங்கை - மேகம் போலும் நிறத்தையுடைய அம்பிகை . தவம் செய்த - இமயமலையில் இளமைப்பருவத்தே சிவபிரானைக் கணவராகப் பெறத் தவம் செய்த . காலம் முன்பும் - முற்காலத்திலும் . ( அம்பிகையைக் கிழவடிவம் கொண்டு பரிசோதித்தற்கு வந்ததுபோலவே ) மங்கை தவம் செய்தகாலம் - அம்பிகை கம்பையாற்றில் தவம் புரிந்த இக்காலத்திலும் , ( ஆற்றைப் பெருக்கிப் பரிசோதித்தலாகிய ) அம் கைதவம் செய்தகாலம் - அழகிய வஞ்சனை செய்ய வந்த சமயத்தில் . கைதவம் - நன்மையை விளைக்க வந்தமையின் , அழகிய என்று விசேடிக்கப்பட்டது . வெதிர்களோடு அகில் சந்தம் , முருட்டி - மூங்கில் மரங்களோடு , அகில் , சந்தன மரங்களையும் , ( ஏனைய ) முருட்டு மரங்களையும் . வேழம் - யானை முதலிய மிருகங்களை . ஓடகில் சந்தம் - ஓடமுடியாதபடி . உருட்டி - உருட்டிக் கொண்டு . அதிர - ஒலிக்கும்படியாக . ஆறு - கம்பையாறு . அழுவத்தொடே - பரப்போடு . வரத்து - வருதலால் . ( வரத்து - தொழில்பெயர் மூன்றனுருபுத் தொகை ). ஆன் ஐ ஆடுவர - பஞ்ச கவ்வியம் அபிடேகம் கொள்வோராகிய சிவபெருமானை . ( இரண்டனுருபாகிய ` ஐ ` செய்யுளாதலின் அகரமாகத் திரிந்து நின்றது ). தழுவத்தொடே - தழுவத்தொடுதலால் ( தொடு - முதனிலைத் தொழிற் பெயர் ). முலை - முலைத் தழும்பு . ( காரண ஆகுபெயர் ). கம்பம் - தம்பம்போல் உறுதியான அவர்மார்பில் இருப்பது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

பண்டரக்க னெடுத்த பலத்தையே பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டத் தலையிலே யுடுபதிக்கிட முண்டத் தலையிலே
கண்டநஞ்ச மடக்கினை கம்பமே கடவுணீயிடங் கொண்டது கம்பமே.

பொழிப்புரை :

சிவபெருமான் , இராவணன் கைலைமலையை எடுத்த வலிமையை , மேற்சென்று சிதறுவித்தலால் , அவன் வலிமையற்றவன் என்பதை உணர்த்தும் வகையில் தம் திருப்பாத விரலை ஊன்றியவர் . தாருகவனத்து முனிவரேவலால் கொலை செய்ய வந்த மானை ஏந்தியுள்ளவர் . அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது தலை மண்டையோட்டிலே . சந்திரனுக்கு இடம் கொடுத்தது அவர் தலையிலே . நஞ்சைக் கண்டத்தில் அடக்கிய , உலகைத் தாங்கும் தூண் போன்றவன் சிவபெருமானே . கடவுளாகிய அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே .

குறிப்புரை :

பண்டு , அரக்கன் - இராவணன் . எடுத்த - கயிலையையெடுத்த பலத்த வலிமையை . பாய்ந்து - மேற்சென்று . அரக்கல் - சிதறு வித்தலால் . நெடுத்த - மிக்க . அபலத்தையே - வலியின்மையையே . கொண்டு - கொள்வித்து ( பிறவினை விகுதி குன்றியது ) அரக்கியதும் - கால்விரலை அழுத்தியதும் . கோள் - முனிவரேவலால் கொலை செய்யும்பொருட்டு . அரக்கியது - அடர்த்துவந்தமையை . கால்வும் - கக்கியதும் - ( நீக்கியதும் ) இரலையே - மான்கன்றே என்றது முனிவர் வேள்வியினின்று கொல்ல வந்த மான்கன்றைக் கையிலேந்திய வரலாறு . உம்கால் என்பதைக் கால் + உம் என்று மாற்றிக் கால்வும் என்க . ` தொட்டனைத் தூறும் ` என்ற திருக்குறளிற்போல உம்மை பிரித்துக் கூறப்பட்டது . உண்டு - பிச்சை யெடுத்துண்டு . உழன்றதும் - திரிந்ததும் . தலைமுண்டத்திலே - தலைமண்டையோட்டிலே . உடுபதி - சந்திரன் . அத்தலையில் - அந்தத்தலையில் . இடம் உண்டு - தங்குவதற்கு இடம் உண்டு . ஒரு கம்பமே - உலகைத் தாங்கும் தூண் போன்ற சிவபெருமானே . கண்டம் - கழுத்து .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

தூணியான சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே சித்தமோடு கீழூழி திரிந்துமே
காணநின்றன ருற்றது கம்பமே கடவுணீயிட முற்றது கம்பமே.

பொழிப்புரை :

அம்பறாத் தூணியாகிய நெற்றிக்கண்ணிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பொறிகளை உடையவரே . அவற்றிலிருந்து தோன்றியவரே இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சுடர்விடு ஞானமயமான முருகக் கடவுளாவார் . தம் வலிமையைப் பாராட்டி முடி காண்பான் சென்ற பிரமன் அன்னப்பறவை வடிவு தாங்கி ஆகாயத்திலும் , திருமால் பன்றி உருவில் பாதாளத்திலும் செருக்கோடும் , கீழ்மைத்தன்மையோடும் இறைவனைக் காண முயன்று ஊழிக்காலம் வரை திரிந்தும் அவர்கள் கண்டது அக்கினித் தம்பமாகிய உமது வடிவத்தையே . பரம்பொருளாகிய நீ விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே ஆகும் .

குறிப்புரை :

தூணி - அம்பறாத் தூணியாகிய நெற்றி விழியினின்றும் . ஆன - தோன்றிய . சுடர்விடு - ஒளிவீசும் . சோதி - அக்கினிப் பொறிகள் . சுத்தமான - இயல்பாகவே பாசங்களின் நீங்கிய . சுடர்விடு - ஞானமயமாகிய . சோதி - முருகக்கடவுளாம் . நெற்றிவிழிப்பொறி அம்பாகநின்று காமனை எரித்தலால் நெற்றிவிழி தூணியாயிற்று . பேணி - தன்வலிமையைப் பாராட்டி . ஓடு - முடிகாண்பான் சென்ற . பிரமம் - பெரிய . பறவை - பறத்தலை உடைய , பித்தனான , பிரமப் பறவை - பிரமனாகிய அன்னப்பறவை . சேணினோடு - ஆகாயத்திலும் . ( திருமாலாகிய பன்றி ) கீழ் - பாதாளத்திலும் . ஊழி திரிந்து - ஊழிக்காலம் திரிந்து . சித்தமோடு - தங்கள் மனச்செருக்கோடு . கீழ் - தங்கள் கீழ்மைத் தன்மையும் . ஊழி - முறையே . திரிந்து - மாறுபட்டு . காண நின்றனர் - உம்மைக் காண நின்ற அவர்கள் . உற்றது - கண்டது . கம்பமே - அக்கினி ஸ்தம்பமாகிய உமது வடிவத்தையே . ஊழ் - முறை . ஊழ் + இ = ஊழி , முறையையுடையது . வினைமுதற் பொருள் விகுதி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

ஓருடம்பினை யீருரு வாகவே யுன்பொருட்டிற மீருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே யாற்றவெய்தற் கரிது பெரிதுமே
தேரரும்மறி யாது திகைப்பரே சித்தமும்மறி யாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே கடவுணீயிடங் கொண்டது கம்பமே.

பொழிப்புரை :

இறைவரே ! யானையின் உடம்பினை உரித்ததாகிய தோலை உடம்பில் போர்வையாக அணிந்துள்ளீர் . உம்முடைய உண்மைத்தன்மை சக்தி , சிவம் என இரண்டு திறத்தது . உமது பாகத்திலுள்ள அம்பிகையின் கரிய நிறம் ஒளிவாய்ந்தது . உயிர்கள் ஆன்ம முயற்சியினால் உம் திருவடிகளை அடைதல் அரிது . புத்தர்களும் உம்மை அறியாது திகைப்பர் . அவர்கள் அறிவும் தம் நிலைமை மாறமாட்டாதாதலால் உம்மைத் துதிப்பதை வெறுப்பர் . கருநிறமுடைய சமணர்கள் உம்மைக் கண்டு நடுங்குவர் . பரம்பொருளாகிய நீர் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே .

குறிப்புரை :

ஓர் உடம்பினை - யானையின் ஓர் உடம்பை . ஈர் - உரித்ததாகிய தோல் . உரு ஆக - உடம்பில் ( போர்வை ) ஆகவும் . ஈர் - ஈர்தல் , முதனிலைத் தொழிற்பெயர் இங்கு ஆகுபெயர் . உன் பொருள் திறம் - உம்முடைய உண்மைத் தன்மை . ஈர் உரு ஆக - சத்தி சிவம் என்னும் இரண்டு திறத்தது ஆகவும் . ஆரும் - உமது உடம்பில் கலந்த . மெய்தன் - அம்பிகையின் திருவுடம்பின் . கரிது - கரிய நிறம் . பெரிது - மிகவும் ஒளிவாய்ந்தது . ஆற்றல் - ஆன்ம முயற்சியினால் , எய்தற்குப் பெரிதும் அரிது - உம்முடைய திருவடி முற்றிலும் அடைய முடியாதது . தேரரும் - புத்தரும் . சித்தமும் - அவர் அறிவுகளும் . மறியா - தம் நிலைமை மாறமாட்டா . துதி கைப்பர் - ஆதலால் உம்மைத் துதித்தலை வெறுப்பர் . ஒரு கம்பமே - உம்மை நினைத்தாலே ஒரு பெரிய நடுக்கம் . மழைத்துளி போல வந்தீண்டலால் அறிவுகள் எனப்பட்டது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்வது விரும்பிப் புகலியே பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே யண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின்னியல் பாடிய பத்துமே பாடவல்லவ ராயின பத்துமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்து விளங்குவது திருவேகம்பம் என்னும் திருத்தலம் . அதனை விரும்பி வழிபடுபவர்கள் பழவினையால் வரும் துன்பங்கட்கு வருந்திச் சொரியும் துன்பக் கண்ணீரைத் தீர்த்திடும் . எல்லாம் சிவன் செயல் என்பதை நிச்சயித்து , புகலியில் அவதரித்த பூசுரனான திருஞான சம்பந்தன் , அந்தமில் பொருளாந்தன்மையை உட்கொண்டு , சிவபெருமானின் புகழையே பொருளாகக் கொண்டு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பக்தியில் மேம்பட்டு எல்லாம் கைகூடப்பெறுவர் .

குறிப்புரை :

கம்பமே - திரு ஏகம்பத்தையே . காதல் செய்பவர் - விரும்புபவர்கள் . தீர்ந்திடு ( தல் ) உகு அம்பம் - ( வருந்திச் ) சொரிகின்ற துக்கக் கண்ணீர் , தீர்த்திடுதல் முதனிலைத் தொழிற்பெயர் . அம்பம் - அம் சாரியை , அம்பு - தண்ணீர் . புந்தி செய்து - எல்லாம் சிவன் செயலாகப் பாவித்து . விரும்பி - விருப்பங்கொண்டு . புகலியே - சீகாழியையே இருப்பிடமாகக் கொண்ட . பூசுரன்தன் - சம்பந்தப் பெருமானின் , விரும்பிப் புகலியே - விரும்பிச் சரண்புக்க , இடமானவன் . அந்தமில் பொருள் ஆயின கொண்டு - அழிவிலாப் பொருளாந்தன்மையை உட்கொண்டு . அண்ணலின் - சிவபெருமானின் , பொருளாயின கொண்டு - புகழை விஷயமாகக் கொண்டு பாடிய பத்தும் வல்லவர்க்கு . ஆயின - உரியஆயின . பத்தும் - பத்தியின் வகைகளும் - ஆயின என்ற பண்பைப் பயனிலையாற் பத்தியின் வகைகள் என எழுவாய் கூறப்பட்டது . பத்தியின் வகைகள் பத்திசெலுத்தும் வகைகள் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட லுகந்த திருக்கையே
பாலினேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மன மேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே யாலவாயுறை யண்டர் களத்தனே.

பொழிப்புரை :

சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவர் . அவருக்கு விருப்பமான பாடல் இருக்கு வேதமாகும் . அவர் பால் போன்று இனிய மொழி பேசும் உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . தம் திருவடிகளைப் போற்றாத அசுரர்களின் முப்புரங்களை அழித்தவர் . அழகிய திருநீற்றைப் பூசிய சிறந்த பூதகணங்களைப் படையாக உடையவர் . குற்றமற்றவர்களின் உள்ளத்தில் தங்கிய உயிர்க்கு உயிரானவர் . ஆலகால விடமுண்ட கண்டத்தையுடையவர் . தேவர்கட்கெல்லாம் தலைவரான அவர் திருவாலவாய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

ஆலம் நீழல் - கல்லாலின் நீழலில் . உகந்தது - விரும்பியது . இருக்கை - இருப்பிடம் . இருக்கை - வேதத்தை . ஓர் பங்கன் - ஒரு பங்கில் , இடப்பாகத்தில் உடையவன் . பாதம் ஓதலர் சேர் புரபங்கன் - தமது திருவடியைத் துதியாதவராகிய அசுரர் இருந்த திரிபுரத்தை அழித்தவன் . கோலம் நீறு அணி - அழகிய திருநீற்றைப் பூசிய . மேதகுபூதனே - சிறந்த பூதகணங்களை உடையவனே . கோது இலார் - குற்றமற்ற அடியாரது . மனம் மேவிய - மனத்தின் கண் தங்கிய . பூதன் - உயிர்க்கு உயிராய் இருப்பவனே . பூதம் - உயிர் . ` பூதம் யாவையின் உள் அலர் போதென ` எனவரும் சேக்கிழார் திருவாக்கால் அறிக . ( தி .12 திருமலைச் சிறப்பு பா .33) களத்தன் - கண்டத்தை உடையவன் . அண்டர்கள் அத்தன் - தேவர்களுக்குத் தந்தை . மேவி அபூதனெனலே பொருந்துவது - பொருந்திக் காணப்படாதவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

பாதியாவுடன் கொண்டது மாலையே பாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையே
கோதினீறது பூசிடு மாகனே கொண்டநற்கையின் மானிட மாகனே
நாதனாடொறு மாடுவ தானையே நாடியன்றுரி செய்தது மானையே
வேதநூல்பயில் கின்றது வாயிலே விகிர்தனூர்திரு வாலநல் வாயிலே.

பொழிப்புரை :

சிவபெருமான் தம் உடம்பில் பாதியாகக் கொண்டது திருமாலை . பாம்பும் , கொன்றை மலரும் அவருக்கு நன்மாலைகளாகும் . குற்றமற்ற திருநீறு பூசிய மார்பை உடையவர் . இடத் திருக்கரத்தில் மானை ஏந்தியுள்ளவர் . அவர் நாள்தோறும் அபிடேகம் கொள்வது பஞ்ச கவ்வியத்தால் . அவர் உரித்தது யானையை . வேத நூல்களை அருளுவது அவரது திருவாய் . விகிர்தரான அவர் விரும்பி வீற்றிருந்தருளுவது திரு ஆலவாய் .

குறிப்புரை :

பாதியா - உடம்பில் பாதியாக . மாலை - திருமாலை . ( சங்கர நாராயண வடிவம் ) ஆகன் - மார்பை உடையவன் கையில் மான்இடம் , ஆகன் - ஆகியவன் . ஆகு + அன் = இரண்டு உறுப்பால் முடிந்த பகுபதம் . ஆடுவது ஆன் ஐ - அபிடேகம் கொள்வது பஞ்சகவ்யம் . உரிசெய்ததும் - உரித்ததும் . வேதநூல் பயில்கின்றது - வேதநூலைப் படிப்பது . வாயிலே - தமது திருவாயினால் . விகிர்தன் ஊர் நல் திருவாலவாயில் - ஊராக இருப்பது நல்ல திருவாலவாயில் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

காடுநீட துறப்பல கத்தனே காதலால்நினை வார்தம கத்தனே
பாடுபேயொடு பூதம சிக்கவே பல்பிணத்தசை நாடிய சிக்கவே
நீடுமாநட மாடவி ருப்பனே நின்னடித்தொழ நாளுமி ருப்பனே
ஆடனீள்சடை மேவிய வப்பனே யாலவாயினின் மேவிய வப்பனே.

பொழிப்புரை :

இறைவர் , பெரிய சுடுகாட்டில் எல்லாவற்றிற்கும் கர்த்தாவாயிருப்பவர் . தம்மைப் பத்தியால் நினைவார்தம் உள்ளத்தில் இருப்பவர் . பாடுகின்ற பேய் , மற்றும் பூதகணங்களுடன் குழைந்திருப்பவர் . அக்கணங்கள் பிணத்தசைகளை விரும்பியுண்ண நடனம் ஆடுபவர் . திருவடிகளைத் தொழுபவர்கட்கு நாளும் அருள்புரிபவர் . அசைகின்ற சடைமீது கங்கையைத் தாங்கியுள்ளவர் . திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தந்தை அவரே .

குறிப்புரை :

நீடது - பரவியதாகிய . காடு - சுடுகாடு . பலகத்தனே - எல்லாவற்றிற்கும் கர்த்தாவாய் இருப்பவனே . அகத்தனே - மனத்தில் இருப்பவனே . பூதம் - பூதகணங்கள் . மசிக்க - குழைவித்து . பல பிணத் தசை நாடி அசிக்கவே - பலபிணத்தினுடைய சதைகளை விரும்பி உண்ண . நடமாடவிருப்பன் - திருக்கூத்தாடுதலில் விருப்பமுடையவன் . இருப்பான் - இருப்போன் . ஆடல் - அசைதலையுடைய . சடை மேவிய அப்பன் - சடையில் பொருந்திய தண்ணீரை உடையவன் . அப்பன் - சர்வலோகத் தந்தை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

பண்டயன்றலை யொன்று மறுத்தியே பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே தூயவெள்ளெரு தேறியி ருத்தியே
கண்டுகாமனை வேவ விழித்தியே காதலில்லவர் தம்மை யிழித்தியே
அண்டநாயக னேமிகு கண்டனே யாலவாயினின் மேவிய கண்டனே.

பொழிப்புரை :

முற்காலத்தில் நீர் பிரமனின் தலை ஒன்றை அறுத்தீர் . உம் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் பாவங்களை அறுப்பீர் . பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்துள்ளீர் . தூய வெண்ணிற இடபத்தின் மீது ஏறி இருப்பீர் . மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தீர் . அன்பில்லாதவரை இகழ்வீர் . தேவர்கட்குத் தலைவரே ! குற்றங்களை நீக்குபவரே . திருஆலவாயின்கண் வீற்றிருந்தருளும் அளவிடமுடியாத பரம்பொருளே .

குறிப்புரை :

அறுத்தி - அறுத்தாய் . பாதம் ஓதினர் பாவம்மறுத்தி - பாதத்தைத் துதிப்பவர்களுக்கு பாவம் உண்டு என்பாரை மறுத்து இல்லை என்று கூறுவாய் . இருத்தி - இருக்கச்செய்தவன் . ஏறிஇருத்தி - ஏறிஇருப்பாய் . இருத்தி - முதலது வினையால் அணையும் பெயர் . மற்றது வினைமுற்று . விழித்தி - விழித்துப்பார்த்தாய் . காதல் இல்லவர் தம்மை - அன்புஇல்லாதவர்கள் . இழித்தி - கீழ்ப்படச்செய்வாய் . அண்டநாயகனே - தேவர்களுக்குத் தலைவனே . அண்டர் நாயகன் ` சிலவிகாரமாம் உயர்திணை ` என்பது விதி . மிகுகண்டனே - குற்றங்களை நீக்குபவன் என்பதில் பண்புப்பெயர் விகுதியாகிய ஐகாரம் கெட்டது . (` பிழையெல்லாம் தவிரப்பணிப்பானை ` என்றதன் கருத்து .) மேவிய + அகண்டன் - எழுந்தருளியுள்ள அளவிட முடியாதவன் . மேவிய என்னும் பெயரெச்சத்து விகுதி விகாரத்தால் தொக்கது . ` தொட்டனைத்தூறும் மணற்கேணி ` - என்ற திருக்குறளிற் போல .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால் நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே யாலவாயர னாகத் தடவியே.

பொழிப்புரை :

தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்குரிய பாலைக் கவிழ்த்துவிட , புதல்வராகிய விசாரசருமர் சினந்து அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச அது மழுவாக மாறித் தந்தையின் முன்காலை வெட்டிற்று . ஆங்குச் சிவபூசை ஆற்றிய பிரமசாரியான அவ்விசார சருமருக்குக் கங்கை முதலானவற்றை அணிந்த திருக்கோலத்தோடு தோன்றிக் காட்சி நல்கியவர் சிவபெருமான் . அப்பெருமான் , தந்தையாகிய எச்சதத்தனை வீழ்த்திய அடியவரின் பாவத்தைப் போக்கித் தம் திருக்கையால் வருடிச் சிவசாரூபம் பெறத்தடவிச் சண்டீச பதம் தந்து அருளினர் . அப்பெருமான் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரன் ஆவார் .

குறிப்புரை :

முன்காலை - முற்காலத்தில் . நன்பாலை - அபிடேகத்திற்கு வைத்த நல்லபாலை . தாதை - தந்தையாகிய எச்சத்தன் , சென்று - போய் . சீறி - சினந்து . உகுத்தனன் - கவிழ்த்து . அன்பு - அன்போடு செய்யும் பூசையை . செகுத்தனன்பால் ( ஐ ) - அழித்த அவனிடத்தில் . மழுக்கொண்டு - கிடந்த கோலை மழுவாகக் கொண்டு . முன்காலை - முன்கால்களை . வீட - துண்டித்துவிழ . வெட்டிட - வெட்ட . நின்றமாணியை - அங்கேயிருந்த பிரமசாரியாகிய அவ்விசாரசருமரை . கண்டு - பார்த்து . ஓடினகங்கையால் - பரந்த கங்கைநதி முதலியவற்றை அணிந்தகோலத்தோடு . உதித்து - இடப வாகனத்தின்மேல் வெளிப்பட்டருளி . அனகம் - அவர்செய்த பாதகம் புண்ணியமான தன்மையினாலே . அன்று - அன்றைக்கு . நின்னுருவாகத் தடவி - மானிட உருவம்மாறி நினது வடிவமாகக் கையால் தடவினவனே ! ஆலவாய் அரன் - ஆலவாயில் எழுந்தருளிய சிவபெருமானே . அகத்தது - உமது உடம்பில் அணிவதாகிய ஆடை , மாலை முதலியவற்றையும் . அடு - உமக்கென்று சமைத்த . அவி - உணவையும் அல்லவா ? அன்று நீர் அருளியது . உகுத்தனிடன் - முற்றெச்சம் . அன்பு - பூசைக்கு , ஆகு பெயர் . ஓடின கங்கையால் - ஆல் , ஒடுப்பொருளில் வந்தது . சிவபெருமான் வந்த கோலம் ` செறிந்தசடை நீண்முடியாரும் தேவியோடும் விடையேறி ` எனவும் , தடவினமை ` மடுத்த கருணையால் உச்சிமோந்து மகிழ்ந்தருள ` எனவும் , ( நின்னுருவாக ) உரு மாறினமை ` செங்கண்விடையார் திரு மலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனார் , அங்கண்மாயை யாக்கையின் மேலளவின்றுயர்ந்த சிவமயமாய் ` எனவும் , ஆகத்தது அடு அவியும் அருளியது - ` நாம் உண்டகலமும் , உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக ` எனவும் , சேக்கிழார் பெருமான் அருளிச்செய்கின்றார் . ஆகத்தது - ஆகத்து என விகாரமுற்றது . அருளியது என்பது அவாய் நிலையான் வந்தது . ` எல்லாம் மழை ` என்ற திருக்குறளிற்போல .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

நக்கமேகுவர் நாடுமோ ரூருமே நாதன்மேனியின் மாசுண மூருமே
தக்கபூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற் கருளொடே
மிக்கதென்னவன் றேவிக் கணியையே மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கல னோடுமே யாலவாயர னாருமை யோடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நாடுகளிலும் , ஊர்தோறும் ஆடையில்லாக் கோலத்தோடு பிச்சைக்குச் செல்வார் . அவர் திரு மேனியில் பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கும் . திருநீலகண்ட யாழ்ப் பாணரை அழைத்து வரும்படி அடியார்களுக்குக் கனவில் ஏவ , அவ்வாறே வந்து அப்பாணர் பாடும்போது பொற்பலகை அருளி அமரச் செய்தார் . தென்னவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருக்கு மங்கலியம் முதலான மங்களகரமான அணிகளை அருளியவர் . திருத் தொண்டர்க்கு அண்மையாய் விளங்குபவர் . எலும்புமாலை அணிந்துள்ளவர் . மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டவர் . அப்பெருமான் திருஆலவாயில் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

நாடும் - நாடுகளிலும் . ஓர் ஊரும் - ஓவ்வொரு ஊர்தோறும் . நக்கம் ஏகுவர் - ஆடையில்லாத கோலத்தோடு பிச்சைக்குச் செல்வர் . மேனியில் - திருமேனியில் . மாசுணம் - பாம்பு . ஊரும் - ஊர்ந்துகொண்டிருக்கும் . ` தக்க பூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற்கருளொடே ` என்றது திருவாலவாயில் தரிசிக்க வந்த திருநீலகண்டயாழ்ப்பாணரைக் கோயிலுக்கு அழைத்துவரும்படி அடியார்களுக்குச் சிவபெருமான் கனவில் ஏவ , அவ்வாறே வந்து அவர்பாடும்பொழுது அவர்க்குப் பொற்பலகை தந்த திரு விளையாடலைச் சம்பந்தப்பெருமான் அருளிச்செய்தது . தக்க - சிறந்த . பூ - பொலிவுற்ற . மனை - திருநீலகண்ட யாழ்ப்பாணர் தங்கியிருந்த மனையில் . சுற்ற - அடியார் சுற்றிக்கொண்டு அழைக்க . அருளொடு - இரவில் கனவில் அவர்களுக்கு அருளியபடி . பாணற்கு - அவ்வாறு வந்து கோயிலில் பாடிய திரு நீலகண்ட யாழ்ப்பாணர்க்கு , அருளோடு உய்த்தது - அருளோடு செலுத்தியது . தாரம் - உயர்ந்த பொருளாகிய பொற்பலகை . கருள் - கருமைநிறம் . மும்மடியாகுபெயராய் வந்தது . கருமை இருட்டுக்கானது பண்பாகு பெயர் . இரவுக்கானது தானியாகு பெயர் . இரவு , கனவிற்கானது காலவாகுபெயர் . இவ்வரலாறு பெரிய புராணத்தில் ` தொண்டர்க்கெல்லாம் மற்றை நாட் கனவில் ஏவ , அருட்பெரும் பாணனாரை தெற்றினார் புரங்கள் செற்றார் திருமுன்பு கொண்டு புக்கார் ` ` மாமறை பாடவல்லார் முன்பிருந்து யாழிற்கூடல் முதல்வரைப் பாடுகின்றார் ` ` பாணர் பாடும் சந்தயாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கு அழியுமென்று சுந்தரப் பலகை முன் நீரிடுமெனத் தொண்டர் இட்டார் ` எனக் கூறப்படுகிறது . ( தி .12 திருநீலகண்ட யாழ்ப் பாண நாயனார் புராணம் பா . 3,4,6.) சேக்கிழார் பெருமான் இப் பதிகத்து ஆறாம்பாடலில் திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருநீல கண்ட யாழ்ப்பாணரைக் குறித்தனர் என்பதை ` திருவியமகத்தினுள்ளும் திரு நீலகண்டப்பாணர்க்கு அருளிய திறமும் போற்றி ` என அருளிச் செய்கின்றார் . ( தி .12 திருஞானசம்பந்தர் புராணம் பா .870 ) பாணற்கு - திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு . அருளொடு - கிருபையோடு . தென்னவன் தேவி - மங்கையர்க்கரசியார்க்கு . அணியை - மங்கிலியம் முதலிய ஆபரணங்களை , மெல்ல நல்கிய - மெல்லக்கொடுத்தருளிய என்றது ` பாண்டி மாதேவியார் தமது பொற்பின் பயிலும் நெடுமங்கல நாண் பாதுகாத்தும் பையவே செல்க ` என்று இக்கருத்தைச் சேக்கிழார் சுவாமிகள் விளக்குகிறார் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே வெங்கண்மாசுணங் கையது குட்டியே
ஐயனேயன லாடிய மெய்யனே யன்பினால்நினை வார்க்கருண் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே வள்ளல்கையது மேவுகங் காளமே
ஐயமேற்ப துரைப்பது வீணையே யாலவாயரன் கையது வீணையே

பொழிப்புரை :

சிவபெருமான் சூரியனுடைய பல்லை உதிர்த்தது கையால் குட்டி . அவர் கையிலிருப்பது கொடிய கண்களையுடைய பாம்புக்குட்டி . அவரே தலைவர் . அனலில் ஆடும் திருமேனி யுடையவர் . அன்பால் நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அருள் வழங்கும் மெய்யர் . உலகமுய்ய அன்று அவர் உண்டது விடமே . வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலான அவர் கையில் விளங்குவது எலும்புக்கூடே . அவர் பிச்சை ஏற்பதாக உலகோர் உரைப்பது வீண் ஆகும் . திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனார் கையிலுள்ளது வீணையே .

குறிப்புரை :

வெய்யவன் - சூரியன் . பல் உகுத்தது குட்டி - பல்லை உதிர்த்தது கையால் குட்டி . கையது - கையில் . வெங்கண் - கொடிய . மாசுணங்குட்டி - பாம்புக்குட்டி . கையது - கையில் இருப்பது . அனலாடிய மெய்யனே - நெருப்பில் ஆடிய உடம்பை உடையவன் . அருள் மெய்யன் - நிச்சயமாக அருள்பவன் . காளம் - விடத்தை . வள்ளல் - கடவுளது . கையது - கையில் இருப்பது . மேவு கங்காளம் - பொருந்திய எலும்புக் கூடு . ஐயம் ஏற்பது - பிச்சை எடுப்பதும் . வீண் - பயனற்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்க னிலத்துக் களித்துமே வந்தமால்வரை கண்டு களித்துமே
நீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே நின்விரற்றலை யான்மத மத்தனே
ஆளுமாதி முறித்தது மெய்கொலோ வாலவாயர னுய்த்தது மெய்கொலோ.

பொழிப்புரை :

வாளைக் கையிலேந்திய இராவணன் தன் இருபது தோள்களின் வலிமையையும் சேர்த்துக் கொண்டு திக்குவிசயம் செய்து , தன்னை எதிர்க்க வந்த தேவர்களின் வலிமையை மயங்கச் செய்து , இப்பூவுலகில் களித்து நிற்க , தன் தேரைத் தடுத்த கயிலை மலையைக் கண்டு வெகுண்டு பாய்ந்து சென்று அதனைப் பெயர்த்து எடுத்து உன்மத்தன் ஆயினன் . அந்நிலையில் இறைவர் தம் திருப்பாத விரலை ஊன்ற , இராவணனின் தலை நெரிய , அவன் செருக்கு அழிந்தவன் ஆயினான் . உலகனைத்தும் ஆளுகின்ற முதல்வராகிய தாம் அவ்வரக்கனின் உடலை முறியச் செய்தது மெய்கொல் ? திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனே ! பின்னர் அவனது பாடலைக் கேட்டு அருள்செய்ததும் உண்மையான வரலாறு தானோ ?

குறிப்புரை :

தோள்கள் பத்தொடு பத்து மயக்கி - இருபது தோள் வலிமையையும் சேர்த்து . தேவர் செருக்கை , மயக்கி - மயங்கச்செய்து ( அழித்து ) இது திக்குவிசயம்பண்ணின காலத்தின் நிகழ்ச்சி . வந்த - தன்னைத் தடுக்க வந்த ( வந்த - நின்ற என்னும் பொருட்டு ) உகளித்து - துள்ளி ( உகள் - பகுதி ) உன்மத்தன் - ஒன்றும் தெரியாதவன் ஆகி . நின்விரல் தலையால் - உமது விரல் நுனியால் . மதம் - தனது மதம் . அத்தன் - அழிந்தவனாகி . ஆளும் - அனைத்து உலகையும் ஆளுகின்ற . ஆதி - முதல்வராகியதாம் . முறித்தது - முறியச்செய்தது . மெய்கொலோ - அவனது உடம்பைத் தானோ ? ஆலவாய் , அரன் - அரனே ! உய்த்ததும் - வரங்கொடுத்து அவனை மீளச் செலுத்தியதும் . மெய்கொலோ - உண்மையான வரலாறு தானோ ?

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

பங்கயத்துள நான்முகன் மாலொடே பாதநீண்முடி நேடிட மாலொடே
துங்கநற்றழ லின்னுரு வாயுமே தூயபாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கணி னாரிடு பிச்சையே சென்றுகொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத்திகழ் விப்ப திடக்கையே யாலவாயர னார திடக்கையே.

பொழிப்புரை :

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் திருமாலோடு இறைவனின் அடியையும் , முடியையும் தேட , அவர்கள் மயங்க , உயர்ந்த நல்ல அக்கினி உருவாய் நின்றான் . பின்னர்த் தங்கள் பிழைகளை மன்னித்து அருளுமாறு தூய பாடல்களைப் பாடின , அவர்கள் வாய் . சிவந்த கயல்மீன்கள் போன்ற கண்களையுடைய முனிபத்தினிகள் இறைவருக்கு இட்டது பிச்சையே . அதனை ஏற்று அவர் உரைசெய்தது அவர்கட்குப் பித்து உண்டாகும் வண்ணமே . அவர் நெருப்பேந்தியுள்ளது இடத் திருக்கரத்திலே . திருஆலவாய் சிவபெருமான் திடமாக வீற்றிருந்தருளும் இடம் ஆகும் .

குறிப்புரை :

மாலொடு - திருமாலொடு . நேடிட - தேட . மாலொடு - மயக்கத்தோடு . துங்கம் நல் தழலின் உரு ஆயும் - உயர்ந்த நல்ல அக்கினி வடிவமாயும் . தூயபாடல் பயின்றது வாயுமே - அவருடைய வாயும் . தங்கள் பிழையை மன்னித்து அருள்புரியும்படி தூய பாடல்களைப் பாடியது . செங்கயல் க ( ண் ) ணினார் - முனிவர் பத்தினிகள் . இடு - இட்ட . பிச்சை - பிச்சையை . சென்று - போய் . கொண்டு - ஏற்று . உரை செய்வது - பேசுவது . பிச்சை - அவர்களுக்குப் பித்து உண்டாக்கும் விதத்தையே .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

தேரரோடம ணர்க்குநல் கானையே தேவர்நாடொறுஞ் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே கொண்டநீள்கழல் புண்டரி கத்தையே
நேரிலூர்க ளழித்தது நாகமே நீள்சடைத்திகழ் கின்றது நாகமே
ஆரமாக வுகந்தது மென்பதே யாலவாயர னாரிட மென்பதே.

பொழிப்புரை :

சிவபெருமான் தம்மைப் போற்றாத புத்தர்கட்கும் , சமணர்கட்கும் அருள்புரியாதவர் . தேவர்கள் நாள்தோறும் சென்று வணங்குவது அவர் எழுந்தருளியிருக்கும் கடம்பவனத்தை . அவர் வெற்றிகொண்டு வீழ்த்தியது புலியையே . திருமால் இறைவனைப் பூசித்துத் திருவடியில் சேர்த்தது தாமரை மலர் போன்ற கண்ணையே . பகைமை கொண்ட மூன்று புரங்களை அழித்தது மேருமலை வில்லே . பெருமானின் நீண்ட சடைமுடியில் விளங்குவது நாகமே . இறைவன் மாலையாக விரும்பி அணிவது எலும்பே . அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருஆலவாய் என்பதே .

குறிப்புரை :

நல்கானை - அருள் செய்யாதவனை . கானை - ( கடம்ப ) வனத்தை . கோரம் அட்ட புண்டரிகத்தை - கொடும் தன்மையைக் கொன்று ஒழித்தது புலியை . கொண்ட நீள்கழல் புண்டரிகத்தையே - திருமால் இட்ட கண்ணாகிய தாமரைப்பூவை கொண்டன திருவடிகளே . நேரில் ஊர்கள் அழித்தது நாகமே - தமக்கு விரோதமாகிய திரிபுரத்து அசுரர் ஊர்களை அழித்த ( மகாமேரு ) மலையாம் . என்புஅது - எலும்பு . ஆரமாக உகந்தது - மாலையாக விரும்பியது . அரனார் இடம் என்பது ஆலவாய் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

ஈனஞானிக டம்மொடு விரகனே யேறுபல்பொருண் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுண் ஞானசம்பந்தனே யாலவாயினின் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினு ளத்தனே யன்பரானவர் வாயினு ளத்தனே
நானுரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.

பொழிப்புரை :

தேவர்களால் துதிக்கப்படும் தலைவரே . அடியவர்களின் இனிய உள்ளத்தில் இருப்பவரே ! நல்லறிவு அற்றவர்கள்பால் பொருந்தாத கொள்கையுடையவரே . பல பொருள்களை அடக்கிய , முத்தமிழ் விரகரான சீகாழியுள் அவதரித்த ஞான சம்பந்தர் , திருஆலவாய் இறைவரிடம் உரிமையுடையவராய் அவரைப் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் ஓதவல்லவர்கட்கு எல்லா நன்மைகளும் உண்டாகும் .

குறிப்புரை :

ஈனஞானிகள் தம்மொடு விரகனே - அறிவிலிகளுடன் சேராத சூழ்ச்சியை உடையவன் . விரகு - சூழ்ச்சி . ஏறுபல்பொருள் - பல பொருள்களை அடக்கிய . முத்தமிழ்விரகன் . சம்பந்தன் - உரிமையுடையவன் . ஆன - பொருந்திய . வானவர் , வாயினுள் - வாயினுள் துதிக்கப்படுகின்ற . அத்தன் - சர்வலோகநாயகன் . அன்பரானவர் - அடியார்களுக்கு . வாய் - வாய்த்த . இன் - இனிய . உளத்தன் - உள்ளத்தில் இருப்பவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

துன்றுகொன்றைநஞ் சடையதே தூய கண்டநஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே கல்லின் மானிடக் கையதே
என்று மேறுவ திடவமே யென்னி டைப்பலி யிடவமே
நின்ற தும்மிழலை யுள்ளுமே நீரெனைச் சிறிது முள்ளுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நெருங்கிய கொன்றைமலரைச் சூடியுள்ளது சடையில் . அவருடைய தூயகழுத்து நஞ்சை அடக்கியுள்ளது . மான்கன்றை ஏந்தி உள்ளது இடக்கை . இமயமலையரசன் மகளான மான் போன்ற உமாதேவியைக் கொண்டுள்ளது இடப்பக்கம் . அவர் என்றும் ஏறும் வாகனம் இடபமே . பிச்சாடனரான நீர் நான் பிச்சையிட என்னிடத்து வருவீராக . நீர் வீற்றிருந்தருளுவது திருவீழி மிழலை என்னும் திருத்தலத்தில் , அதுபோல அடியேன் உள்ளத்திலும் எழுந்தருள நினைப்பீராக !

குறிப்புரை :

நம் - உமது . இடவழு அமைதி . ( காண்க : தி .3 ப .114. பா .6.) நஞ்சு அடையது - நஞ்சு அடைதலை உடையது . அடை - முதல் நிலைத் தொழிற்பெயர் . கன்றின் மான் - மான் கன்று , இடக்கையது . கல்லின் - இமயமலையின் மான் - மகளாகிய மான் போன்ற உமாதேவியார் . இடம்கைஅது - இடப்பக்கத்தில் இருப்பது . மான் என்பதற்கு ஏற்ப கையது என ஒன்றன் பாலால் முடித்தார் . கை - பக்கம் . பலியிட - நான் பிச்சைஇட . என் இடை - என்னிடத்திற்கு . வம் - வருவீராக . வம்மின் என்பது வம் என நின்றது . ` கதுமெனக் கரைந்து வம்மெனக்கூஉய் ` என்பது மதுரைக் காஞ்சி . ` செய்யாய் என்னும் முன்னிலை வினைச் சொல் செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே ` ( தொல்காப்பியம் . சொல்லதிகாரம் - 450.) நின்றது மிழலையுள்ளும் - நின்றதும் என்பதின் உம்மை அசை . வம் என்பது ஏவற்பகுதி ; பன்மை ` மனிதர்காள் இங்கே வம் `

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

ஓதி வாயதும் மறைகளே யுரைப்ப தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா.

பொழிப்புரை :

சிவபெருமான் ஓதுவன வேதங்களே . உரைப்பது பிறர் எவர்க்கும் தெரிவதற்கரிய பொருள்களே . திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டது உமாதேவியை . வழிபடுகின்றேன் அவ்வழகிய கோலத்தை . காதிலே அணிந்திருப்பது கனவிய குழை . அவர் தம்மிடத்து அன்பு செலுத்துபவர்களிடத்துக் குழைந்து நிற்பர் . வீதியிலே மிகுவது வேதஒலி . வேதங்களை அருளிச் செய்த அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் .

குறிப்புரை :

மறைகளே - வேதங்களே . மறைகளே - பிறர் எவர்க்கும் தெரிய அரிய பொருள்கள் . மறை - இரகசியம் . மாதை - பெண்ணை மிகும்மாதை - மிகும் அழகை . குழையர் - குண்டலத்தை உடையவர் . காதலார் - காதல் செய்யும் பெண்களின் . கனம் - மனத்திண்மையை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

பாடு கின்றபண் டாரமே பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே தொழுத வென்னையுன் மத்தமே
நீடு செய்வதுந் தக்கதே நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே நாக நஞ்சழலை யூருமே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஊழி இறுதியில் பாடுகின்ற பண் தாரம் என்னும் இசை ஈறாகிய எழுவகை இசையுமே . பக்தர்கட்கு ஞானக்கருவூலமாய் விளங்குபவர் . அவர் சூடுவது ஊமத்த மலர் . அவரை வணங்கும் என்னைப் பித்தனாக்கினார் . அவரையே நீளத் தியானித்துப் போற்றுமாறு செய்தார் . இது தகுமோ ? அவருடைய இடுப்பில் விளங்குவது அக்குப்பாசியே . அப்பெருமான் மிழலை நாட்டிலுள்ள திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுகின்றார் . அவருடைய திருமேனியில் நாகமும் , கண்டத்தில் நஞ்சும் , கரத்தில் நெருப்பும் விளங்குகின்றன .

குறிப்புரை :

( பாடுகின்ற ) பண்டாரம் - சைவ அடியார் . பண்டாரம் - நிதிநிலை . மத்தம் - பொன்னூமத்தை , ( தொழுத என்னை உன் மத்தம் நீடு செய்வது ) தக்கதே - தகுமா ? அரை - இடுப்பில் . திகழ்ந்தது - விளங்குவது . அக்கு அதே - அக்குப்பாசியே . திகழ்ந்தது - திகழ்ந்தென மருவி நின்றது . நாடு சேர் - மிழலை நாட்டைச் சேர்ந்த , மிழலை ஊரும் - உமது ஊராவதும் , மிழலை வெண்ணிநாட்டிலொன்றுளதாகலின் , இங்குக் குறித்தது மிழலை நாட்டினதென்பார் ` நாடுசேர் ` என எங்கள் சம்பந்தப் பெருமான் அருளினார் . இதனை , ` மிழலை நாட்டு மிழலை , வெண்ணி நாட்டு மிழலையே ` என்ற வன்றொண்டப் பெருந்தகையார் வாக்காலறிக . ( தி .7. ப .12. பா .5.) நஞ்ச - நைந்த . அழல் - விடம் . ஐகாரம் சாரியை , நாகம் , ஊரும் - உமது உடம்பில் ஊரும் ` நாதன் மேனியில் மாசுணம் ஊருமே ` என மேல் முற்பதிகம் ஆறாம் பாடலில் வந்ததூஉம் காண்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

கட்டு கின்றகழ னாகமே காய்ந்ததும் மதன னாகமே
இட்ட மாவதிசை பாடலே யிசைந்த நூலினமர் பாடலே
கொட்டுவான் முழவம் வாணனே குலாயசீர் மிழலை வாணனே
நட்ட மாடுவது சந்தியே நானுய்தற் கிரவு சந்தியே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவடிகளில் வீரக்கழலாக அணிந்துள்ளது நாகத்தையே . அவர் எரித்தது மன்மதனது உடம்பையே . அவர் விரும்புவது அடியவர்கள் பாடும் இசைப் பாடலே . பொருந்திய நூலின் அமைதிக்கு ஏற்றதாயிருப்பது அவர் ஆடலே . அவ்வாடலுக்கு முழவங் கொட்டுபவன் வாணனே . இவை திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் சிறப்புக்கள் . அவர் நடனமாடுவது சந்தி என்னும் நாடக உறுப்பின்படி . நான் காம வாதையினின்றும் பிழைப்பதற்கு இராக்காலம் தக்க சமயமாகும் .

குறிப்புரை :

கழல் - வீரகண்டை . நாகமே - பாம்பே . ( மதனன் ) ஆகம் - உடம்பு . காய்ந்ததும் - எரித்ததும் , இட்டமாவது - விருப்பம் ஆவது , இசை பாடல் - அடியார் இசைபாடக் கேட்டலில் , அதனை ` கோழைமிடறாக கவிகோளுமிலவாக இசைகூடும் வகையால் ஏழையடியாரவர்கள் யாவை சொன , சொன்மகிழும் ஈசன் ` எனவும் ` அளப்பில கீதம் சொன்னார்க் கடிகடாம் அருளுமாறே ` எனவும் வரும் திருப்பதிகங்களால் உணர்க . இசைந்த - பொருந்திய , நூலின் - நூலின் அமைதிக்கு . அமர்பு - ஏற்றதாயிருப்பது . ஆடலே - அவர் திருக்கூத்தே . பரத சாத்திர முறையே ஆடுகின்றனர் என்ற கருத்து . அவ்வாடலுக்கு வாணன் முழவங் கொட்டுபவன் . மிழலை வாணன் - அவர் மிழலையில் வாழ்பவர் . நட்டம் ஆடுவது - திருக்கூத்தாடுவது , சந்தி என்னும் நாடக உறுப்பின்படியேயாம் . சந்தியாவது நாடக நூலின் ஒரு சிறந்த பகுதி . அது , நெற்பயிர் வளர்ந்து நிமிர்ந்து , கருக்கொண்டு , காய்த்து , வளைந்து முடிசாய்வது போன்றது . இது நூலின் இலக்கணமாயினும் ஆடுதலிலும் நுதலிய பொருளை அங்ஙனம் அமைத்துக் காட்டுக என்னும் வழியை இங்கே நமது சம்பந்தப் பெருமான் விளக்கியருளுகிறார் . ` சந்தியிற்றொடர்ந்து ` என்பது தண்டியலங்காரம் ` சந்தியின் வளர்ந்து ` என்பர் திருவாவடுதுறை ஆதீனம் கச்சியப்ப முனிவர் . ( பேரூர்ப்புராணம் நாட்டுப்படலம் ) நான் , உய்தற்கு - காமன் வாதையினின்றும் பிழைப்பதற்கு . இரவு - இராக் காலம் . சந்தி - சந்து செய்விப்பதாகும் . தலைவிகூற்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

ஓவி லாதிடுங் கரணமே யுன்னு மென்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே யருளி னின்னபொற் றாணையே
பாவி யாதுரை மெய்யிலே பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே மிழலை மேயமுக் கண்ணனே.

பொழிப்புரை :

மிழலையை உகந்தருளியிருக்கும் முக்கண் இறைவரே படைப்புக் காலமுதல் மகாசங்கார காலம் வரை ஓய்வின்றித் தொழிலாற்றும் கரணபூதர் . மனம் முதலிய அகக்கருவிகள் உம்மையே நினைக்கும் . மன்மதபாணம் என்மேல் தைப்பதும் உம் ஆணையால் , உம் பொன்போன்ற திருவடிகளை நீர் அருளினால் துன்பம் எனக்கு நேருமோ ? உம்மைக் கருதாது உரைப்பன மெய்ம்மையாகாது . வலியோனாகிய திருமால் உம்முடைய திருவடியை உண்மையாகவே பொருந்தப் பெற்றான் .

குறிப்புரை :

ஓவிலாது - ( மகாசங்கார காலம் வரையும் ) ஓயாமல் , இடும் ( சக்தியைச் செலுத்தி ஐந்தொழிலையும் ) நடத்தும் . கரணம் - சிறந்த கரண பூதராய் இருப்பவரே ` யாது சிறந்த காரணம் அது கரணம் ` என்பது தருக்க நூல் . கரணம் - ( என்னுடைய ) மனமுதலிய அகக்கருவிகள் . உன்னும் - உம்மையே நினைக்கும் . ஏவு - மன்மத பாணம் . சேர்வும் - என்மேல் தைப்பதும் , நின்ஆணையே - உமது ஆணையின்படிதானோ ? நின்ன - உம்முடைய . பொற்றாள் - பொன்போன்ற திருவடிகளை . அருளின் - அருளினால் . நை ( தல் ) ஏ - துன்புறுதல் எனக்கு நேருமா ? நை - நைதல் . ஏ - வினாப் பொருட்டு . இதுவும் தலைவி கூற்று . பாவியது - ( உம்மை மனத்துக் ) கருதாது . உரை - உரைப்பன . மெய்இல் - உண்மையில்லாதனவே . இல் - பகுதியே நின்று வினைமுற்றுப் பொருளையுணர்த்திற்று , ` பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் ` ( குறள் . 814) என்றதிற் போல . விறல் - வலியோனாகிய , கண்ணன் - திருமால் . உன்அடி - உமது திருவடியை . மெய்யிலே - உண்மையாகவே . மேவினான் - பொருந்தப் பெற்றான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

வாய்ந்த மேனியெரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடுநடஞ் செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே யும்மிடைக் கள்வ மிரவிலே
வேய்ந்ததும் மிழலை யென்பதே விரும்பியே யணிவ தென்பதே.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருமேனி நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையது . அவர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணப் பாடல்களையே . அவரால் உதைக்கப்பட்டு வீழ்ந்தவன் காலன் . அவர் அழகிய திருநடனம் செய்யும் கால்களை உடையவர் . அவர் எங்கள் வீட்டிற்குப் பிச்சையேற்க வந்தது இரவில் . எம் உள்ளம் புகுந்து கவர்ந்தது இரவில் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அவர் விரும்பி அணிவது எலும்பு மாலையே .

குறிப்புரை :

மேனி , எரிவண்ணம் - தீயின் வண்ணம் . பாடுவது - தேவரீர் பாடுவதும் . வண்ணம் - பலவண்ணப் பாடல்களையே ,. வண்ணம் சந்தம் இவை தாளத்தோடு பாடற்குரிய இயலிசைப் பாடல்கள் . காலன் - யமன் , கால்களையுடையவன் . எம்மிடைப் போந்தது - எங்கள் வீட்டிற்கு வந்தது இரவில் - பிச்சை யேற்றலை முன்னிட்டு , உம்மிடை - உம்மோடு . இரவில் - இராக்காலத்தில் . கள்வம் - கள்ளத்தனமாகப்புணர்வோம் . இடை - உருபு மயக்கம் . ( அணிவது ) என்பு . ( அது ) எலும்பு - தலைவிகூற்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

அப்பி யன்றகண் ணயனுமே யமரர் கோமகனு மயனுமே
ஒப்பி லின்றமரர் தருவதே யொண்கையா லமரர் தருவதே
மெய்ப்ப யின்றவ ரிருக்கையே மிழலை யூரும திருக்கையே
செப்புமின் னெருது மேயுமே சேர்வுமக் கெருது மேயுமே.

பொழிப்புரை :

பாற்கடலில் , துயிலும் கண்ணுடைய திருமாலும் , தேவேந்திரனும் , பிரமனும் கேட்டவற்றை ஒப்பின்றி உமது திருக்கரம் வழங்கி வருதலால் அது கற்பக விருட்சம் ஆகும் . மெய்த்தவம் செய்பவர்களின் உள்ளக்கோயில் உமது இருப்பிடமாகும் . திருவீழிமிழலை என்னும் திருத்தலமும் நீர் வீற்றிருந்தருளும் இடமாகும் . உமக்கென்றுள்ள விளைநிலமாகிய என் மனநிலத்தில் எருது புகுந்து கேடு விளைவித்தல் தகுமோ ? அதை ஓட்டி என்னை ஆட்கொள்ள அங்கு வருவதற்கு உமக்கு எருதும் இருக்குமே .

குறிப்புரை :

அப்பு - கடலில் . இயன்ற - தூங்குகின்ற , கண் - கண்ணையுடைய . ஐயனும் - திருமாலும் . அயனும் - பிரமனும் . ஐயன் - அயன் என வந்தது போலி . அப்பு - ஆகுபெயர் . ஒப்பு இல் - ஒப்பு இல்லாதது . ஒண் - சிறந்த . கையால் - கையினால் , அமரர்தரு அதே - தேவர்களின் கற்பக விருட்சமே ஆயினீர் . திருமால் முதலிய தேவர்கட் கெல்லாம் கேட்டவற்றை ஒப்பின்றி வழங்கி வருவதால் உமது திருக்கரம் கற்பகவிருட்சத்துக்குச் சமமாகும் என்பது முன்னிரண்டடி களின் கருத்து . மெய் - மெய்யுணர்தலோடு . பயின்றவர் - தவம் புரிவோர்களின் உள்ளமே . இருக்கை - உமது இருப்பிடமாம் . செப்பு மின் - சொல்வீராக . எருது மேயுமே - உமக்கென்றுள்ள விளைபுல மாகிய என் பெண்மை நலத்தில் மன்மதன் அம்பாகிய எருது மேயல் ஆகுமா ? தலைவிகூற்று . குறிப்புருவகம் . சேர்வு - அதை ஓட்ட அங்கு வருவதற்கு நான்கனுருபுத் தொகை . உமக்கு எருது ஏயும் - உமக்கு எருதும் இருக்குமே .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

தான வக்குலம் விளக்கியே தாரகைச் செல விளக்கியே
வான டர்த்த கயிலாயமே வந்து மேவு கயிலாயமே
தானெ டுத்தவல் லரக்கனே தடமுடித் திரள ரக்கனே
மேன டைச்செல விருப்பனே மிழலை நற்பதி விருப்பனே.

பொழிப்புரை :

சிவபெருமான் , பகைத்து நிற்கும் அசுரர் அழிவர் என்பதை விளக்கியவர் . தாரகை முதலான ஒளிதரும் பொருள்களின் ஒளியைத் தம் பேரொளியால் குன்றச் செய்தவர் . வானை முட்டும் உயர்ந்த கயிலைமலையைத் தம் வல்லமையால் எடுத்த அரக்கனான இராவணனின் பெரிய முடிகளைநெரித்தவர் . மனைகள் தோறும் சென்று பிச்சை எடுத்தலில் விருப்பமுடையவர் . திருவீழிமிழலை என்னும் நற்பதியில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் .

குறிப்புரை :

தானவர்குலம் - அசுர குலத்தை . விளக்கி - ( சிவனைப் பகைத்த எவ்வலியினோரும் அழிவரென்பதை ) விளக்கினீர் . தாரகை - தாரகை முதலாக ஒளிதரும் பொருளெல்லாவற்றின் . செலவு - ஒளி வீசுவதை . இளக்கி - உமது பேரொளியாற் குன்றச் செய்தீர் . தாரகை - உபலட்சணம் . இளகுதல் - திண்மை குலைதல் . வான் - தேவர்களை . அடர்த்த - மோதிய . கையில் ஆயம் - கையின் வலிமை மிகுதியினால் . ஆயம் - கூட்டம் . இங்கே வலிமையின் மிகுதியைக் குறித்தது . கயிலாயம் எடுத்த அரக்கன் . தடமுடித்திரள் அரக்கனே - பெரிய தலையின் கூட்டங்கள் நொறுங்கப் பட்டவன் ஆனான் . மேல் நடைச்செல - ( விமானத்திலின்றி ) நடையாகச் செல்ல . இருப்பன் - இருப்பீர் . இடவழுமைதி .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

காய மிக்கதொரு பன்றியே கலந்த நின்னவுரு பன்றியே
ஏய விப்புவி மயங்கவே யிருவர் தாமன மயங்கவே
தூய மெய்த்திர ளகண்டனே தோன்றி நின்றமணி கண்டனே
மேய வித்துயில் விலக்கணா மிழலை மேவிய விலக்கணா.

பொழிப்புரை :

பன்றி உருவெடுத்த திருமால் , பிரமன் ஆகிய இருவரும் சேர்ந்து தேடவும் , உம் உருவத் திருமேனியைக் காண்பதற்கு இயலாதவராய் , இப்புவியில் மயங்கி நின்று , மனம் கலங்கிய நிலையில் , தூய சோதித் திரளாய் அகண்ட திருமேனியராய்த் தோன்றி நின்ற நீலகண்டத்தை உடையவரே . எம் தலைவரே ! அடியேனின் தூக்கம் பிடிக்கா நிலையை விலக்குவீராக ! திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அழகரே .

குறிப்புரை :

காயம் மிக்கது ஒரு பன்றி - பெரிய உடம்பையுடைய திருமாலாகிய பன்றியும் . இருவர் - பிரமனுமாகிய இருவரும் . இப்புவி - இப்பூமியில் . மயங்க - சேர . நின்ன உருபு அன்றி - உமது அடிமுடிகளின் உருவம் தங்களாற் காணப்படுவ தொன்று அல்லாமையினால் , மனம் மயங்க - மனம் கலங்க . மெய்த்திரள் - உடம்பாகிய அக்கினிப் பிழம்பு . அகண்டனே - அளவிடப்படாதவனாகி . தோன்றி நின்ற மணிகண்டனே - அவர்கட்கு முன் வெளிப்படுகின்ற நீல கண்டத்தையுடையவரே . மேய - நான் இப்போது உற்ற , இத்துயில் - இப்பொய்த் தூக்கத்தை . தூக்கம்பிடியாத . அண்ணா - தலைவனே . விலக்கு - நீக்குவீராக . இலக்கணா - அழகனே , லட்சணம் என்பது வடசொல் . அண்ணா - தலைவனே என்ற பொருளில் ` அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே ` ( தி .7. ப .24. பா .5.) எனப் பயின்று வருவது காண்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

கஞ்சியைக் குலவு கையரே கலக்கமா ரமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ யணைந்திடும் பரிசு செய்யநீ
வஞ்சனே வரவும் வல்லையே மதித்தெ னைச்சிறிதும் வல்லையே
வெஞ்ச லின்றிவரு வித்தகா மிழலைசே ரும்விறல் வித்தகா.

பொழிப்புரை :

சிவபெருமானே ! கஞ்சி உண்ணும் கையையுடைய பௌத்தர்களும் , சமணர்களும் அஞ்சுமாறு , அடியேன் வாதில் வெற்றி கொள்ள அருள்செய்தீர் நீவிர் . பிறர் செய்யும் சூழ்ச்சியை அறிய வல்லீரும் நீவிர் . அடியவரின் துயர் நீக்கிட வருவதற்கு வல்லீர் . நீவிர் என் உரையைச் சிறிதளவேனும் மதித்து விரைவில் வரவும் இல்லையே . குறைதலில்லாமல் மேன்மேலும் வருகின்ற இத்துயரங்கள் எனக்குத் தகா . திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வலிமை மிக்க வித்தகரே .

குறிப்புரை :

கஞ்சியை - கஞ்சியை . குலாவு - கொண்டாடிப் பற்றிய . கையர் - கையையுடையவர்களாகிய புத்தர் . கஞ்சி தானியாகு பெயர் . கையர் - வஞ்சகர் . வாதில் அஞ்ச அருள் - வாதில் தோற்று அஞ்ச அருளிய . செய்ய - செய்யோனாகிய நீ . அணைந்திடும் பரிசு செய்யத் தழுவும் சூழ்ச்சி , செய்வதை நீ வஞ்சனே - நீக்கும் வஞ்சகனே . ( வினைத்தொகை ). எனைச் சிறிதும் - சிறிதளவேனும் , மதித்து வல்லையே - விரைவில் வரவும் வல்லையே . வருவீரா , அடியருக்கு பகைவர் அஞ்ச - அடியருக்கு அருளும் செவ்வியோனாகிய நீ காமன் அஞ்சுமாறு எனக்கும் அருளுவை என்பாள் ( செய்ய -) நடு நிலைமையோன் ஆகிய நீ என்றாள் . எஞ்சல் இன்றி - குறைதல் இல்லாமல் . வரு - மேன்மேலும் வருகின்ற . இவ் - இத்துயரங்கள் , தகா - எனக்குத் தகா . ( இவ் + தகா = இத்தகா என்றாயிற்று . புறனடைச் சூத்திர விதியால் உ - ம் ` பூசனை ஈசனார்க்குப் போற்ற இக் காட்டினோம் ` ( இவ் + காட்டினோமே என்னும் திருநேரிசை ) வித்தகா - சதுரப் பாட்டை உடையவனே ! அவிஎனல் ஆகாதோ ?

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

மேய செஞ்சடையி னப்பனே மிழலைமே வியவெ னப்பனே
ஏயு மாசெய விருப்பனே யிசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே காழி ஞானசம் பந்தனே
வாயுரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கு மிவை பத்துமே.

பொழிப்புரை :

சிவபெருமான் சிவந்த சடையில் கங்கையை அணிந்தவர் . திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் என் அப்பர் . முத்தொழிலையும் அவருடைய சந்நிதியில் அவரவர் செய்ய வாளா இருப்பவர் . தம்மைப் போற்றி வழிபடும் பக்தர்கட்கு விருப்பமானவர் . பஞ்ச பூதங்களோடும் தோய்ந்தும் தோயாமல் இருப்பவர் . அப்பெருமானைப் போற்றி , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு , இவை ஞானத்தின் படிநிலைகள் பத்தாய் அமையும் . ( இறுதியில் சிவபோகம் பெறுவர் என்பது குறிப்பு ).

குறிப்புரை :

சடையின் அப்பன் - சடையில் தரித்த நீரையுடையவன் . என் அப்பனே - எந்தையே . ஏயும் ஆ ( று ) - பொருந்திய விதமாக . செய - முத்தொழிலையும் உன் சந்நிதியில் அவரவர் செய்ய . இருப்பனே - வாளா இருப்பவனே ! என்பது ` மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்ய வாளா மேவண்ணல் ` என்னும் திருவிளையாடற் புராணத்தில் வருங் கருத்து . காயவர்க்கம் - ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களோடு - அசம்பந்தனே ( தோய்ந்தும் ) தோய்வில்லாமல் இருப்பவனே . வர்க்க + அசம் பந்தன் - வர்க்க சம்பந்தன் என மருவி வந்தது . காயம் - முதற்குறை . ( காயவர்க்கம் - உடற்கூட்டம் . பிறப்பிலான் ).

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

பொழிப்புரை :

ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.

குறிப்புரை :

யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால். ஆமா - அதுபொருந்துமா? நீ - நீயே கடவுளென்றால். ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும். (ஏகான்மாவாதிகளை மறுத்தது.) மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே. (\\\\\\\"எம்மிறை நல்வீணை வாசிக்குமே\\\\\\\" என்பது அப்பர் திருவிருத்தம்) காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே. காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச் சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட. நாகா - பாம்புகளை யுடையவனே. காணாகாமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. (காமனை யுருவழித்தவனே.) சினைவினை முதன்மேல் நின்றது. காழீயா - சீகாழிப்பதியில் எழுந்தருளியிருப்பவனே. மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க னுருபும்பயனும் தொக்க தொகை) \\\\\\\"நாரணன்காண் நான்முகன்காண்\\\\\\\" என்பது திருத்தாண்டகம். மா - கரியதாகிய. மாயா - மாயைமுதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக. மலம்கரியதென்பதை \\\\\\\"ஒருபொருளுங் காட்டாது இருளுருவம் காட்டும், இரு பொருளும் காட்டாதிது\\\\\\\" என்னும் திருவருட்பயனாலறிக. (இருண்மலநிலை. 3) மாயா - வடசொல், உபலட்சணம்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

பொழிப்புரை :

வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.

குறிப்புரை :

யாகா - யாகசொரூபியே. யாழீ - யாழ்வாசிப்பவனே. காயா - அடியாருக்கு அருள வருகையில் உருவத்திருமேனி கொள்பவனே. காதா - சங்காரகருத்தாவே. காதுதல் - கொல்லுதல். வடசொல். யார் ஆர் - எவரெவருக்கும். ஆ - (பெற்றவள்) ஆகும். தாய் ஆயாய் - தாயானவனே. (ஆ + தாய் = வினைத்தொகை) ஆயா - ஆராய முடியாத. தார் - மாலை. ஆர் ஆயா - ஆத்திப்பூவாகக் கொண்டவனே. (சிவனுக்குரிய மாலைகளில் திருவாத்தியும் ஒன்று) தாக ஆயா - காதல் கொண்ட முனிபத்தினிகளாகிய மகளிர்கூட்டத்தை யுடையவனே (தாக ஆயன் குளாம்பல், மராடி என்பது போற்கொள்க) காழீயா ! யா - துன்பங்கள் எவற்றினின்றும் கா - எம்மைக் காப்பாயாக.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

பொழிப்புரை :

அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!

குறிப்புரை :

தாவா - அழியாத. மூவா - மூப்பில்லாத (என்றும் இளமையாய் உள்ள) தாசா - தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. காழீநாதா - சீகாழிக்குத்தலைவனே! நீ - எவரும் சஞ்சரிப்பதற்கு அஞ்சி நீக்குகின்ற, யாமா - நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனே. மா - பெருமை வாய்ந்தவனே! (பண்பாகு பெயர்) மா - ஐராவணமாகிய யானையின்மேல், யா நீ - ஏறி வருபவனே! தானாழி - (தான + ஆழி) = கொடையில் கடல் போன்றவனே. சா - சாவதினின்றும். கா - காப்பாற்றுவாயாக. காசா - இரத்தினம் போன்ற ஒளியை உடையனே! தா - கேட்டவரங்களை எல்லாம் தருவாயாக. வா - என் முன் எழுந்தருள்வாயாக. மூ - எவற்றினும் முன்னே தோன்றிய. வாதா - காற்று முதலாக உள்ள ஐம்பூத வடிவாய் உள்ள. தாவா மூவா இத்தொடர்க் கருத்து. \\\\\\\"சாவா மூவாச் சிங்கமே\\\\\\\" எனச் சிறிது மாறி அப்பர் வாக்கில் வருவது காண்க. தசகாரியமாவது:- தத்துவரூபம்; தத்துவதரிசனம்; தத்துவ நீக்கம்; ஆன்மரூபம்; ஆன்மதரிசனம்; ஆன்மநீக்கம்; சிவரூபம்; சிவதரிசனம்; சிவயோகம்; சிவபோகம் என்பன. (சுத்திக்கு நீக்கம் என்று கொண்டார் இக்குறிப்புரை எழுதினவர்.) யாநம் - வடசொல். மா - இங்கு இரண்டாயிரம் கொம்புகளை உடைய ஐராவணத்தைக் குறித்தது. தான + ஆழி - தீர்க்கசந்தி. கருணைக்கடல் என்றது போல் கொடைக்கடல் என்றார். காசா:- `மழபாடியுள் மாணிக்கமே\\\\\\\' என்ற சுந்தரமூர்த்திகள் வாக்கால் அறிக. வாதம் - காற்று. உப இலக்கணத்தால் ஏனைய பூதங்களையும் தழுவிற்று. இலக்கணக்குறிப்பு : மூவாத்தாசா என்று மிக வேண்டியது இயல் பாயிற்று. காரணம் வருமொழித் தகரம் வடமொழியின் மெல்லோசை உடைத்து ஆதலின். தாசன் - தத்திதாந்த பதம்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

பொழிப்புரை :

என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.

குறிப்புரை :

நீவா - என்றும் மாறாத. வாயா - உண்மைப் பொருளானவனே. கா - தாங்கிய. யாழீ - வீணையினையுடையவனே. வான்நோவாராமே - கொடிய பிறவித் துயரம் எம்மை எய்தாமல், காவா - (காகா) வந்து காத்தருள்வாயாக, வான் - தேவர்கள். நோவாவா - துன்பமடையாவாறு. மேரா - மேரு மலையை ஏந்தியவனே. காழீயா - சீகாழிப் பதியுள் எழுந்தருளியுள்ளவனே. காயா - ஆகாய சொரூபியே. வாவா நீ - நீ விரைந்து வருவாயாக. வாய் - உண்மை. காயாழி - வினைத்தொகை. வான் நோ நல்ல பாம்பு என்பதைப்போல. வான் - கொடுமையின் மிகுதி என்னும் பொருளில் வந்தது. காயா - முதற்குறை. வாவா - அடுக்கு; விரைவுப் பொருட்டு.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

பொழிப்புரை :

யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.

குறிப்புரை :

யா - எவையும் வணங்கத்தக்க. யா - எவற்றிற்கும். காலா - கால வடிவமாக உள்ளவனே. மேயா - எவற்றினுள்ளும் எள்ளில் எண்ணெய் போல் வியாபித்து இருப்பவனே. மேதாவீ - அறிவில் மேம்பட்டவனே. தாய் ஆவி - எவ்வுயிருக்கும் தாயாகவும் உயிராகவும் உள்ளவனே. வீயாதா - என்றும் அழிவில்லாதவனே. வீ - கின்னரம் முதலிய பறவைகள் (தாம் - அசை) மே - தன்னருகில் வந்து விழும்படியாக. யாழீ - வீணைவாசிப்பவனே. யாம் - நாங்கள் மேல் - மேற்கொண்டு. ஆகு - ஆவனவற்றிற்கு. ஆயா - ஆயாதவாறு. கா - எம்மைக் காப்பாயாக (இலக்கணக்குறிப்பு) காலதத்துவமாக உள்ளவன் சிவபெருமானே என்பது \\\\\\\"காலமே உனை என்று கொல் காண்பதே\\\\\\\" (திருவாசகம்) ஆயா - ஈறு கெட்ட எதிர் மறைவினை எச்சம். ஈற்றுத் தொடரில் ஆய்தலாவது. \\\\\\\"மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கேபுகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ\\\\\\\" என்பது (திருவாசகக்(தி.8) கருத்து) வீதாமேயாழி - யாழிசையிற் பறவைகள் வந்து வீழ்வதைக் காந்தருவதத்தையார் இலம்பகத்தாலும் அறிக. யாழீ - என்பதற்கு \\\\\\\"குழலன்கோட்டன்\\\\\\\" என்ற திருமுருகாற்றுப் படை(தி.11)க்கு நச்சினார்க்கினியர் உரைத்தது உரைக்க.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.

குறிப்புரை :

மேலேபோகாமே - மார்க்கண்டேயர் மீது எமன் போகாமல். தேழீ - கடுங்குரலால் உரப்பினவனாய். காலாலே - காலினாலே. கால் ஆனாயே - (அவ்வெமனுக்கு) காலன் ஆனவனே. ஏல் - பொருந்திய. நால் - சனகர் முதலிய நால்வருக்கும். ஆகி - குருவாகிய. ஆல் - கல்லால மரத்தில். ஏலா - ஏற்றவனே. காழீதே - சீகாழியிலுள்ள தெய்வமே. மேகா - (திருமால் மேகவடிவங்கொண்டு வாகனமாகி நிற்க) அந்த மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவனே. போலேமே - யாங்கள் உமது பல்கணத்தில் ஒருவராக எண்ணப்படுதற்கு அத்திருமாலை ஒத்திலோமோ?

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

பொழிப்புரை :

உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட் பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ?

குறிப்புரை :

நீயா - (உம்மை) நீங்குதல் அறியாத மாநீ (மானீ) - உமா தேவியை உடையவனே. ஏயா - ஒப்பற்ற. மாதா - தாயே. ஏழீ - ஏழிசை வடிவாய் உள்ளவனே. காநீதானே - நீயே வலியவந்து என்னைக் காப்பாயாக. நே - அன்பார்ந்த இடத்தை. தாநீ - இடமாக உடையவனே. காழிவேதா - சீகாழியில் எழுந்தருளியுள்ள வேத சொரூபியே. மாய் - எம்மைக்கொல்லும். ஆநீ - துன்பங்களை. நீ மாயாயே - நீ கொல்ல மாட்டாயா? மான் - மானைப்போன்றவர். மாநீ - மானை உடையவன். ஏழீ - ஏழ்தொகைக் குறிப்பாக இசையை உணர்த்தியது. \\\\\\\"ஏழிசையாய் இசைப்பயனாய்\\\\\\\" சுந்தரமூர்த்திகளின் வாக்கினாலும் அறிக. காநீதானே - `அழையாமே அருள் நல்குமே\\\\\\\' என்னும் திருவோத்தூர்த் திருப்பதிகத்தில் நம் அடிகளார் கூறினமை காண்க. தாநீ - தானத்தை (இடத்தை உடையவனே) எங்களைக் கொல்லும் துன்பத்தை நீ கொல்லமாட்டாயா? என்பது ஓர் நயம்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

பொழிப்புரை :

இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).

குறிப்புரை :

நேணவராவிழயாசைழியே, நே, அணவர், ஆ, விழ, யா, ஆசை, இழியே. நே அணவர் - (உமது திருவடியில்) நேயம் பொருந்தும் அடியவராம், ஆ - பசுக்கள். விழ - தன் வயமற்றுக் கிடக்க. யா - (யாத்த) கட்டிய, ஆசை - ஆசையாகிய கயிற்றை. இழியே - அவிழ்த்து விடுபவனே. அடியவரைப் பசுவென்று, ஆசையைக் கயிறென்னாமையால் ஏகதேச உருவகம். நேணவர் - நே + அணவர் எனவும், யாசைழியே - யா, அசை, இழியே எனவும் பதம் பிரித்துக் கொள்க. யா + ஆசை = வினைத்தொகை; நேணவர் - யாசைழியே இல்விரு தொடரும் மரூஉ முடிபின. வேகதளேரியளாயுழிகா - வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா. வேகம் - விலங்குகளில் வேகமாய் ஓடவல்ல மானின், அதள் தோலையணிந்த, ஏரி - அழகனே. (ஏர் - அழகு, இகர விகுதி.) அளாய உழி - துன்பங்கள் எம்மைச் சூழ்ந்தவிடத்து. கா - காப்பாற்றுவாயாக. அளாய என்பற்கு வினை முதல் வருவித்து உரைக்கப்பட்டது. காழியு(ள்)ளாய்! அரிளேதகவே. அரு, இளவு, ஏது, அகவே. ஏதம் - குற்றம். அது கடைக் குறைந்து ஏது என நின்றது. இளவு - சிறுமைத் தன்மை. இளப்பம், இளந்தலை, இளக்காரம், எனவும் வழங்கும். உகரம் - பண்புப்பெயர் விகுதி. அஃகவே என்பது அகவே என நின்றது. அருஏதம் - மன்னித்தற்கரிய குற்றங்கள். இளவு - (எமது) சிறுமைத் தன்மையால் செய்தனவாதலின், அஃகவே - அவை மன்னிக்கத்தக்கன ஆகுக. (அஃகுதல் - சுருங்குதல் இங்குக் குறைந்து மன்னிக்கற்பாலது என்னும் பொருளில் வந்தது). ஏழிசை இராவணனே - ஏழிசை பாடிய இராவணனுமல்லவா பெரும் பிழையும் மன்னிக்கப் பெற்றுத் திருவருளுக்குப் பாத்திரமாயினான். யா - முன்னிலையசை. செருக்கினால் செய்த பெரும் பிழையை மன்னித்த கருணை, சிறுமையாற் செய்த பிழைகளை மன்னிக்கவும் தகும் என மன்றாடியவாறு.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

பொழிப்புரை :

காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.

குறிப்புரை :

காலே - காற்றாகி யெங்கும் கலந்தவனே. மாலே - எவற்றிற்கும் மாயம் செய்பவனே. மால் - மயக்கம். மாயம் - மாயனென்னும் திருமாலுக்கும் மாயம்செய்பவனாகையினால் சிவ பெருமானுக்கு மாயனென்றொருபெயர் \\\\\\\"மறவனை யன்று பன்றிப் பின்சென்ற மாயனை\\\\\\\' என்னும் சுந்தர மூர்த்தி நாயனார் திரு நள்ளாற்றுப் பதிகத்தாலும் \\\\\\\"மாயனே மறிகடல் விடமுண்ட வானவா\\\\\\\" என்னும் திருவாசகம் செத்திலாப் பத்தானும் அறிக. மே - சிறந்த. பூ - மலர்ந்த. பூ மேல் ஏ(ய்) - பிரமனும். மாலே - மாலும். காலே - திருவடியையும். மேலே - திருமுடியையும். காண் - காணலை. நீ - ஒழித்த. காழீ - வைரத்தன்மையனே. காழீ! காண் - கடைக்கணி. கால் ஈ - திருவடியைத் தருக. கா:-

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

பொழிப்புரை :

நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே . புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.

குறிப்புரை :

வேரி - மணம். ஏண் - பெருமை. நவம் - புதுமை. காழியாயே:- ஏனை - துன்பத்தையும். நீள்நேம் - மிக்க அன்பையும். அடு - முறையே ஒழி(த்தலும்) அள் - அள்ளிக்கொள்ளுதலுமாகிய செய்கை. ஓகரது ஏ - யோகிகளுடைய செய்கையே. தேரகளோடு - தேரர்களின் உபதேசங்களோடு. அமணே - அமணர்களின் உபதேசங்களையும். நினை - நினைத்தலையும். ஏய் - அவரோடு பொருந்துதலையும். ஒழி - ஒழிப்பீராக. காவணமே - அந்நெறிகளிற் சேராமற்காக்கும் திறம். உரிவே - உமக்கு உரியவேயாகும். உரிவே - உரியவே என்பதன் மரூஉ.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

பொழிப்புரை :

நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய, பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

குறிப்புரை :

நேர் - நேர்மையை. அகழ் ஆம் - கல்லியெறிவதாகிய. இதய ஆசு - மனத்துக் கண் எழும் (காம வெகுளி மயக்கம் என்னும்) முக் குற்றங்களையும். அழி - அழிக்கவல்லவனே. அழீ என்பதன் குறுக்கல்விகாரம். தாய் ஏல் நன் நீயே - உலகுக்கெல்லாம் தாயாந் தன்மையை யேற்கத்தக்கவன் நீ ஒருவனே. \\\\\\\"மூவேழுலகுக்கும் தாயே\\\\\\\" என்ற திருவாசகத்தும் அறிக. (தி.8 புணர்ச்சிப்பத்து) வாழ் + ந் + அன் = வாணன் என்றாகியதுபோல ஏல் + ந + அன் = ஏனன் என்றாகியது. நல் - நன்மை புரிவதில். நீள் - மிக்கோனே. நீள் முதனிலைத் தொழிற்பெயராய் ஆகுபெயர்ப் பொருளில் நின்று குறுக்கல் விகார முற்ற விளிவேற்றுமை. ஆய் உழிகா - தளர்ந்த இடத்துக் காப்பாயாக. தமிழாகரன் - தமிழே உடம்பாக உடைய திருஞானசம்பந்தனே. காழியுளானின் - சீகாழிப் பதியானைப்பற்றிய. நையே - கேட்டோர் மனம் குழைப்பதாகிய இப்பாடல்களை. நினையே - நினைத்துப் பாடவே. தாழ்(வு). குறைவும் - இசையா - உண்டாகா.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

மடன்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியு மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகண் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொளி பரந்த வெண்டிரை முத்த மிப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோத மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

இதழ்கள் நிறைந்த கொன்றை மாலையும் , நெருங்கிய ஒளியுடைய வெள்ளெருக்க மாலையும் , ஊமத்தம் பூ மாலையும் அணிந்த சடையின்மேல் , ஒலி அடங்கிய அலை மோதும்படியான கங்கைக்குத் தலைவரான சிவபெருமான் வீற்றிருந் தருளும் இடம் எது என்றால் , ஒலி மிகுந்த வெள்ளிய அலைகள் முத்துக்களையும் , சிப்பிகளையும் அடித்துக் கொணர்ந்து ஒதுக்கும் கடலினொலி தன் வெள்ளப் பெருக்கைக் கரைமோதச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

மடல் இதழ் . படல் ஒலி - ( ஒலிபடல் ) ஒலி பொருந்துதலை உடைய . விடல் - வீசுவதால் . ஒலிபரவிய . வெண்திரை - வெண்மையாகிய அலைகள் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

மின்னிய வரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந் தங்கு
சென்னிய துடையான் றேவர்தம் பெருமான் சேயிழை யொடுமுறை விடமாம்
பொன்னியன் மணியு முரிகரி மருப்புஞ் சந்தமு முந்துவன் றிரைகள்
கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

மின்னும் பாம்பும் , நறுமணம் கமழும் மலர்களும் , இறைவனின் திருவடியைச் சரணடைந்த பிறைச்சந்திரனும் தங்கிய தலையுடையவர் சிவபெருமான் . அவர் தேவர்கட்கெல்லாம் தலைவர் . அப்பெருமான் செம்மையான ஆபரணமணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் , பொன் , மணி , யானையின் வளைந்த தந்தம் , சந்தனக்கட்டை இவற்றை உந்தித் தள்ளுகின்ற வலிய அலைகளையுடையதும் , கன்னிப்பெண்கள் கடற்கரையில் விளையாடுதலையுடையதும் , கடலொலி மிகுதலையுடையதுமான திருக்கழுமலநகர் எனலாம் .

குறிப்புரை :

முரி - வளைந்த .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடு தூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும்
ஊருறு பதிக ளுலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

பெருமை மிக்க சிவதொண்டர்கள் நறுமலரும் , நீரும் , தூபமுங் கொண்டு திருவடிகளைப் பூசிக்கும்படி , கொன்றை மாலையினைத் தமது திருமுடிமேல் வைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பலவூர்களைத் தம்பாற் கொண்டுள்ள பதிகளை உலகுடன் கொள்ளும்படி கடல் பொங்கி எழுந்தபோது திருவருளால் தோணிபோல் மிதந்து மழையினாற் பெறும் நன்மைகள் குறைவறச் சிறந்துள்ள திருக்கழுமலநகர் எனலாம் .

குறிப்புரை :

சைவனார் - சிவனுக்கு ஒரு பெயர் . ஊர் உறுபதிகள் - பல ஊர்களுக்குத் தலைமையாய் உற்ற நகரங்கள் . கார் உறு செம்மை - பருவ காலத்தில் பெய்யாதொழிதலும் மிகுமழையும் குறைமழையும் இல்லாமையுமாம் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

மண்ணினா ரேத்த வானுளார் பரச வந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கா ரியல்பினா னிறைந்தா ரேந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினா லின்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

மண்ணுலக மெய்யன்பர்கள் போற்றி வணங்கவும் , வானத்திலுள்ள தேவர்கள் துதிக்கவும் , பிரமன் , திருமால் முதலியோர்கள் போற்றவும் விளங்கி , எல்லாவற்றையும் ஆக்கியருளியவரும் , பலபல சிவமூர்த்தங்களாக விளங்குபவருமான சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இறைவனின் திருவடி மறவா நினைவால் சிறந்த உள்ளம் உடையவர்களும் , செவ்விய அணிகலன்கள் அணிந்துள்ள மகளிரும் அவரொடு நீங்காது ஒன்றித்து வாழும் ஆண்மை மிக்க ஆடவர்களும் , காணுந்தோறும் இன்பம் நுகரத் திருவருள் ஒளியைப் பரப்புகின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

பரச - துதிக்க . அமரர் - தேவர் . வானுளோர் அவர் ஒழிந்த பிரம விட்டுணுக்கள் முதலியோர் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

சுருதியான் றலையும் நாமகண் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு
பரிதியான் பல்லு மிறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான் மறையு மங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

பிரமனது தலையையும் , சரஸ்வதியின் மூக்கையும் , தீக்கடவுளின் கையையும் , காலம் காட்டி முன் செல்லும் சூரியனின் பல்லையும் இறுத்து , பின் உமாதேவி வேண்ட அவர்கட்கு அருளும் புரிந்த சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடமாவது , வழிவழிக் கேட்கும் தொழிலாகப் பயின்று வரும் புகழுடைய நான்கு வேதங்களையும் , ஆறு அங்கங்களையும் அறிந்து , அவற்றின்படி வேத வேள்விகளைச் செய்பவர்களும் , ஞான வேட்கை உடையவர்களும் , உலகில் பிறந்ததன் பெரும்பயனை அடைய விரும்பும் கருத்துடையவர்களும் வசிக்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

சுருதியான் - பிரமா . சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் :- கணவனுக்குத் தலையும் மனைவிக்கு மூக்கும் போயினது என்பது ஓர் நயம் . சுடரவன் - அக்கினி . கரம் - கையை ( வெட்டினமை ) ` வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தான் என்று உந்தீபற ` ( தி .8 திருவுந்தியார் - 7)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

புற்றில்வா ளரவு மாமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைக ளொன்றொடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

புற்றில் வாழுந் தன்மையுடைய ஒளிமிக்க பாம்பையும் , ஆமையோட்டையும் ஆபரணமாகப் பூண்ட புனிதரும் , குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலருடன் , வானத்திலுள்ள சந்திரனையும் சடையில் வைத்த எம் உள்ளம் கவர் கள்வருமான சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடம் , வலிய அலைகள் ஒன்றோடொன்று மோதிப் பொரும் கடலானது வளமையான சங்குகளோடு , கப்பல்களையும் கொண்டு வந்து மலைகள் போலக் கரை வந்து சாரச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

படிறனார் - வஞ்சகர் . காலில் தேய்த்த மதியையே தலையில் வைத்தமையின் படிறனார் என்றார் . ( படிறு - வேறு கருத்து உண்மை ).

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

அலைபுனற் கங்கை தங்கிய சடையா ரடனெடு மதிலொரு மூன்று
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயில தென்பர்
மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங்
கலைகளித் தேறிக் கானலில் வாழுங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

அலைகளோடு கூடிய கங்கையைத் தாங்கிய சடையை உடையவர் சிவபெருமான் . நீண்ட மூன்று மதில்களும் கொலை நிகழ்வதாகிய போரினிடையே செந்தீயினால் வெந்தழியும்படி செய்தவர் , இளமையும் , அழகுமுடைய சிவபெருமான் ஆவார் . அவர் வீற்றிருந்தருளும் கோயிலையுடைய திருத்தலமாவது , மலைகளை விட மிக்குயர்ந்த சரக்கு மரக்கலங்கள் கடற்கரையில் நிற்க , கடற்கரைச் சோலைகளில் மான்கள் மகிழ்ந்து ஓடி வாழ்தலுடைய திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

கண்ட - செய்த . சிறப்புவினை பொதுவினைக்காயிற்று .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

ஒருக்கமுன் னினையாத் தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார்
அரக்கனை வரையா லாற்றலன் றழித்த வழகனா ரமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபல வறங்களே பயிற்றிக்
கரக்குமா றறியா வண்மையார் வாழுங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

இறைவனை நினையாது முற்காலத்தில் தக்கன் செய்த யாகமாவது ஒருங்கே அழியும்படி கலக்கிய பூதப்படைகளை உடையவரும் , அரக்கனான இராவணனது ஆற்றலை மலையைச் சற்றே கால்விரலால் ஊன்றி நெருக்குதலால் அழித்த அழகருமான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலுள்ள திருத்தலமாவது பரவுதலையுடைய மெய்ம்மையான புகழையுடையவரும் , குற்றங்கள் வாராவண்ணம் நன்கு ஆராய்ந்து ஒல்லும் வகையான் ஓவாது அறம்புரியும் மிக்க பயிற்சியுடையாரும் , கனவிலும் கரக்கும் எண்ணம் இல்லாத வள்ளன்மையுடையாரும் ஆகிய செந்நெறிச் செல்வர்கள் வாழும் கழுமலநகரெனக் கூறலாம் .

குறிப்புரை :

உழறிய - உழற்றிய ; கலங்கச் செய்த . இசைநோக்கி உழறிய என்று ஆயிற்று . பயிற்றி - மிகச்செய்து .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

அருவரை பொறுத்த வாற்றலி னானு மணிகிளர் தாமரை யானும்
இருவரு மேத்த வெரியுரு வான விறைவனா ருறைவிடம் வினவில்
ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ண மொலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய ஆற்றலுடைய திருமாலும் , அழகிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஏத்தித் துதிக்கும்படியாகத் தீப்பிழம்பின் உருவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஒருவரும் இவ்வுலகில் வாழ இயலா வண்ணம் , பேரூழிக் காலத்தில் பெருவெள்ளம் பெருக்கெடுக்க , அப்பரப்பில் கருவரை போன்ற திருமால் கிடந்து அறிதுயில் கொள்ளும் கடலிடைத் திருத்தோணி போன்று மிதந்த சிறப்பு வாய்ந்த திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

அருவரை - கோவர்த்தனமலை . கருவரை - கரிய மலை போன்ற மலை - அன்மொழித் தொகை .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

உரிந்துய ருருவி லுடைதவிர்ந் தாரு மத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையா லுறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே.

பொழிப்புரை :

உயர்ந்த தமது உடலின்றும் உடையினை நீக்கிய சமணர்களும் , மிக்க ஆடையினை உடல் முழுவதும் போர்த்துத் திரியும் புத்தர்களும் ஆராய்ந்துணரும் அறிவிலாது ஏனைச் செந்நெறியாளர்களை இழிமொழிகளால் இகழ்ந்துரைப்பர் . அப்புன் மொழிகளைப் ` புறம் கேளோம் ` என்ற மறையின்படி ஒரு பொருளாகக் கொள்ளாத செம்மையாளர்கட்கு நன்மைபுரியும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , குருந்து , கோங்கு , முல்லை , மல்லிகை , சண்பகம் , வேங்கை ஆகிய மலர்களைக் கரிய அகன்ற கண்களையுடைய மங்கையர்கள் கொய்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .

குறிப்புரை :

உரிந்து - ஆடை உரிந்து . ( உடையை நீக்கி ). ஒரு கூட்டத்தார் ஆடையே இல்லாதவர் . மற்றொரு கூட்டத்தார் ஒன்றுக்கு ஐந்தாக ஆடை போர்த்தவர் என ஒரு நயம் . அத்துகில் - ஐந்து என்னும் குறிப்பில் வந்த பண்டறிசுட்டு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்த னற்றமிழ் மாலை நன்மையா லுரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி யுள்ளமு மொருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே.

பொழிப்புரை :

கடற்கரைச் சோலைகளை அடுத்த வயல்களில் கடல்நீர் வந்து பாய்தலையுடைய திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனைப் போற்றிப் பாடிய ஞான சம்பந்தனுடைய நல்ல தமிழ்மாலைகளைப் பத்தியோடு பொருள் உணர்ந்து பாடித் துதிப்பவர்கள் உடலுடன் தொடர்பு கொண்டதான பிறவிப் பிணி நீங்கி , உள்ளம் ஒருமைப்பாட்டினையுடைய சிவலோகத்தில் வாழ்வர் . மீண்டும் நிலவுலகில் வந்து பிறவார் . இதற்கு ஆணையும் நம்முடையதே ஆகும் .

குறிப்புரை :

கானல் - கடற்கரைச்சோலை . கானல் கழனி என வருவதால் கீழ்ப்பால் நெய்தல் நிலமும் , ஏனைப்பால் மருதநிலமும் உள்ளமை குறித்தவாறு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

புள்ளித்தோ லாடை பூண்பது நாகம் பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளித்தீ விளக்குக் கூளிகள் கூட்டங் காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்
அள்ளற்கா ராமை யகடுவான் மதிய மேய்க்கமுட் டாழைக ளானை
வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் புலித்தோல் ஆடை உடுத்தவர் . பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் திருநீற்றைப் பொடியாகப் பூசியவர் . சுடுகாட்டில் கொள்ளி நெருப்பை விளக்காகக் கொண்டு பூதகணங்கள் சூழக் காளியுடன் நடனம் புரிந்தவர் . சேற்றில் விளங்கும் ஆமையின் வயிறு போன்ற சந்திரனும் , யானையின் கொம்பு போன்ற தாழையும் விளங்கும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் கெடும் .

குறிப்புரை :

ஆமையின் வயிறு சந்திரனையும் , தாழம்பூ யானைக் கொம்பையும் ஒக்கும் எனக் கூறிய உவமை நயம் அறிந்து மகிழத் தக்கது .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோ ரிழுகுசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய் பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ டடுத்தரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

அடியவர்கள் பக்திப் பெருக்குடன் மலர்தூவிப் போற்றவும் , தேவர்கள் நறுமணம் கமழும் பொற்றாமரை மாலைகளைச் சாத்தவும் அவர்கட்கு அருள்வாய் . பக்தி செயாதவர்கட்கு ஒளிந் திருப்பாய் . ஊற்று நீர் பாயும் கழனிகளில் மலர்களும் , கயல்களும் திகழ , அரிந்த கதிர்களிலிருந்து தூற்றும் நெல்லானது வானத்திலிருந்து உதிர்வன போன்று வளமுடன் விளங்குவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திரு நாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

துவல் - ( தூவல் என்பதன் விகாரம் ) மலர் - அடியார் இடும் தூவல் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

நிருத்தன்ஆ றங்கன் நீற்றன்நான் மறையன் நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கு முயிரா யுளனிலன் கேடிலி யுமைகோன்
திருத்தமாய் நாளு மாடுநீர்ப் பொய்கை சிறியவ ரறிவினின் மிக்க
விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருநடனம் செய்பவர் . வேதத்தின் அங்கமாக விளங்குபவர் . திருநீறு பூசியுள்ளவர் . நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் பொருளாய் விளங்குபவர் . நீலகண்டத்தர் . நெற்றிக் கண்ணுடையவர் . ஒப்பற்றவர் . எல்லா உயிர்கட்கும் உயிராய் விளங்குபவர் . பதிஞானத்தால் உணர்பவர்க்கு உளராவார் . பசு ஞானத்தாலும் , பாச ஞானத்தாலும் அறிய முற்படுபவர்கட்கு இலராவார் . உயிர்களின் தீமையைப் போக்குபவர் . உமா தேவியின் கணவர் . புனித தீர்த்தத்தால் நாள்தோறும் அபிடேபிக்கப் படுபவர் . வயதில் சிறியோர் அறிவு சால் சான்றோரின் திருப்பாதத்தை அட்டாங்க நமஸ்காரமாக வணங்கிப் போற்றச் சீலம் மிக்கவர்கள் வாழும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுபவர் . அவருடைய திருநாமத்தை ஓத வினை நீங்கும் .

குறிப்புரை :

திருத்தம் - தீர்த்தம்

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

தாங்கருங் காலந் தவிரவந்திருவர் தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினாற் றரித்துப் பண்டுபோ லெல்லாம் பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச் செண்பகம் வண்பலா விலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயிற்புகா வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

மகாசங்கார காலத்தில் திருமால் , பிரமன் ஆகிய இருவரின் எலும்புகளை அழகுற அணிந்து , பின் முன்பு போல் மீண்டும் எல்லாம் படைத்துத் தொழிலாற்றும் நெற்றிக் கண்ணுடையவர் சிவபெருமான் . அவர் கமுகு , தென்னை , மா , செண்பகம் , பலா , இலுப்பை , வேங்கை , மகிழ் , ஆல் முதலியன சேர்ந்த வெயில்புகாத சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுவார் . அப்பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

வெயில் புகா - மரங்களின் அடர்த்தியால் வெயிலும் நுழையாத சோலை . ` வெயில் நுழைபு அறியாக்குயின் நுழை பொதும்பர் ` ( மணிமேகலை , பளிக்கறை புக்க காதை அடி . 5) தாங்க அரும் காலம் - மகா சங்காரகாலத்தில் . தவிர - தம் தொழிலும் நீங்க , இருவர் தம்மொடுங் கூடினார் . பிரமன் திருமால் இடத்தும் திருமால் உருத்திரபகவானிடத்திலுமாகக் கூடினார் . ஒடுங்கினவர்களாகிய அவ்விருவரின் , அங்கம் - எலும்புகளை .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

கூசுமா மயானங் கோயில்வா யிற்கட் குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழிற்றேன் றுவலைசேர் வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

எவரும் அடைவதற்குக் கூச்சப்படுகின்ற மயானத்தில் பெரிய வயிற்றையுடைய பூதங்கள் சூழ நறுமணம் கமழும் சாந்துபோலத்திருநீறு பூசிப் , பார்வதிபாகராய் , ஆடுகின்ற பாம்பை இடுப்பில் அணிந்து விளங்குபவர் , சிவபெருமான் . அவர் நறுமணம் கமழும் புன்னை , முல்லை , செங்கழுநீர் மலர் ஆகிய மணங்கமழும் மலர்களில் கலந்து தென்றல் வீசும் சோலைகளிலிருந்து தேன்துளிகள் சிதறும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுவார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

கூசும் - எவரும் அடைவதற்குக் கூசுகின்ற . குடவயிறு - குடம் போலும் வயிறு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவா யந்தமாய் நின்ற வடிகளா ரமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய் பூசுரர் பூமக னனைய
வேதியர் வேதத் தொலியறா வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

இறைவன் உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர் . திருமாலையும் , பிரமனையும் தம்பாகமாகக் கொண்டு ஏகபாத திரிமூர்த்தியாகத் திகழ்பவர் . அவர் உலகத் தோற்றத்திற்கும் , நிலைபெறுதலுக்கும் , ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் தலைவர் . தேவர்கட்குக் கடவுள் . மலரணிந்த தலையையுடைய புரூரவச் சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப் பெற்றுப் பிரமனையொத்த வேதியர்கள் ஓதுகின்ற வேத ஒலி இடையறாது ஒலிக்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

பாதியோர் மாதர் - உடம்பிற் பாதியில் ஒரு பெண்ணையுடையவர் . மாலுமோர் பாகர் பங்கயத்தனுமோர் பாகர் என்றது ஏகபாத திரிமூர்த்தி வடிவம் . புரூரவா : சந்திரகுலத்து அரசன் ; பாண்டவர் முன்னோன் . இங்கு அவன் திருப்பணி செய்த வரலாறு கூறுகிறது . இவ்வாறே கோச்செங்கட்சோழர் திருப்பணி முதலியவற்றைக் கூறுதல் மேற்காண்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் பிறையணி சடையன்
நின்றநாள் காலை யிருந்தநாண் மாலை கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவருளால் தோன்றிய சக்கரப்படை சலந்தராசுரனை அழித்ததைக் கண்ட திருமால் , அத்தகைய சக்கரப்படையைத் தனக்கு அருள வேண்டித் தேவ லோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து சிவனைப் பூசித்தார் . சிவபெருமான் சந்திரனை அணிந்த சடையையுடையவர் . அவர் வீற்றிருந்தருளும் இடமாவது எல்லாக் காலத்திலும் மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற அந்தணர்கள் வாழ்கின்ற , திருவிழாக்கள் நீங்காத திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனுடைய திருநாமத்தை ஓத , வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

ஆலயத்திற்கு விண்ணிழி விமானம் என்று பெயர் . அது திருமாலால் கொணர்ந்து தாபிக்கப்பெற்றது எனல் இரண்டாம் அடியில் குறித்த பொருள் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த கரமுரஞ் சிரநெரிந் தலற
அடுத்ததோர் விரலா லஞ்செழுத் துரைக்க வருளினன் றடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள் பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

கோபமுடைய , வாளேந்தியுள்ள அரக்கனான இராவணன் முன்பு கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , அவன் கரமும் , சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவர் சிவபெருமான் . பின் இராவணன் தன் தவறுணர்ந்து அஞ்செழுத்தை யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார் . அத்தியயனம் செய்த நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்கள் ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓத , அருகிருந்து கேட்ட பசுக் கூட்டங்களும் அவற்றைக் கேட்கத் தம் செவிகளைப் பழக்கும் , விரிந்த சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந் தருளும் இறைவனின் திருநாமத்தை ஓத , வினையாவும் கெடும் . விடைக்குலம் - வேதம் பயிலும் சிறுவர் குழாமுமாம் .

குறிப்புரை :

கடுத்த - சினத்த . இராவணன் திருவைந்தெழுத்தை ஓதி , சிவனுக்கு இழைத்த பிழையினின்றும் தப்பினன் என்பது இரண்டாமடியில் குறித்த பொருள் . இதனைப் ` பண்டை இராவணன் பாடி உய்ந்தனன் ` என மேல் வந்தமை காண்க . ( தி .3 ப .22. பா .8.)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

அளவிட லுற்ற வயனொடு மாலு மண்டமண் கெண்டியுங் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த முக்கணெம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மே லன்னந் தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவீற் றிருக்கு மிழலையா னெனவினை கெடுமே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் முடியையும் , அடியையும் தேட முற்பட்டு , அண்டங்கட்கு மேலெல்லாம் பறந்து சென்றும் , பூமி மண்ணை இடந்து கீழே பாதாளலோகம் முழுவதும் சென்றும் காண முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் விளங்கியவர் முக்கண் உடைய முதல்வரான சிவபெருமான் . முத்துத் தரும் இதழ் விரிந்த தாமரைச் சிம்மாசனத்தில் அன்னப்பறவையானது தனது பெடையுடன் இருக்க , நெற்கதிர்கள் கவரிவீசுவதைப் போன்று விளங்கும் வயல்களை உடைய திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை தீரும் .

குறிப்புரை :

கெண்டி - இடந்து . தாமரைப்பூ சிம்மாசனமாகவும் அதன்மேல் பெடையோடிருந்த அன்னம் அரசியோடு வீற்றிருக்கும் அரசனாகவும் , கழனிகளில் விளைந்த நெற்கதிர்கள் வெண்சாமரையாகவும் உருவகித்தமை அறிந்து மகிழத்தக்கது .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக் கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய வெழுந்தநஞ் சதனை யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின் குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி மிழலையா னெவினை கெடுமே.

பொழிப்புரை :

கஞ்சியைக் கையில் வாங்கி உண்பவர்களும் , ஆடையணியாத் துறவிகளுமான சமணர்கள் , உரைக்கும் மொழிகளை ஏற்க வேண்டா . தேவர்கள் அஞ்சும்படி எழுந்த நஞ்சைத் தாம் உண்டு அவர்கட்கு அமுதம் அருளியவர் சிவபெருமான் . உயர்ந்த கமுகின் பழக்குலை விழ , அதனால் வாழையின் கனிகள் மதில்மேல் உதிரும் . மிக உயர்ந்த தென்னை மரங்களின் உச்சியில் மேகம் படியும் . இத்தகைய வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமான் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

மிகஉயர்ந்த வாழைமரத்தின் கனிகள் , மதிலின்மேல் உதிருமாறு அவற்றின் உயர்ந்த கமுகின் பழக்குலை விழ அவற்றினும் உயர்ந்த தென்னைமரங்களின் உச்சியில் மேகம் படியும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்பது பின்னிரண்டடிகளின் கருத்து .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

வேந்தர்வந் திறைஞ்ச வேதியர் வீழி மிழலையுள் விண்ணிழி விமானத்
தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற வீசனை யெம்பெரு மானைத்
தோய்ந்தநீர்த் தோணி புரத்துறை மறையோன் றூமொழி ஞானசம் பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை வானவர் வழிபடு வாரே.

பொழிப்புரை :

இந்திரன் முதலான தேவர்கள் வந்து வழிபட , வேதங்களைக் கற்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விண்ணிழி விமானத்தில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இறைவனான எங்கள் சிவபெருமானை , நீர்வளம் மிகுந்த தோணிபுரத்தில் அவதரித்த மறைவல்ல தூயமொழி பேசும் ஞானசம்பந்தன் , போற்றி உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானவர்களால் வணங்கப்படுவார்கள் .

குறிப்புரை :

தேவியோடுறைகின்ற ஈசனை - இறைவன் இங்குத் திருமணக் கோலத்தோடு வீற்றிருந்தருளும் தன்மை கூறப்படுகின்றது .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

மங்கையர்க்கரசியார் சோழ மன்னரின் புதல்வி . கைகளில் வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர் . பெண்மைக்குரிய மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர் . தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர் . பாண்டிய மன்னனின் பட்டத்தரசி . சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபடும் தன்மையுடையவர் . அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடைய தூய உருவினர் . உயிர்கட்கெல்லாம் தலைவர் . நான்கு வேதங்களையும் , அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர் . அப்பெருமான் அங்கயற் கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும் .

குறிப்புரை :

வரிவளைக்கைமடமானி - வரிகளையுடைய வளையல்களை அணிந்த . இளமைவாய்ந்தமானி - மானாபரணரென்று சோழர்கள் சொல்லப்படுவதால் . மானி - சோழர் குடியிற் பிறந்தார் என்பதால் ` வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் ` ( தி .7. ப .39. பா .11) எனத் திருத்தொண்டத்தொகையில் வருகிறது .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

வெற்றவே யடியா ரடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவ னுலகினி லியற்கையை யொழித்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

பற்றற்ற உள்ளத்தோடு , சிவனடியார்களைக் காணும்போது கீழே விழுந்து அவர் திருவடிகளை வணங்கும் பக்தியுடையவரும் , திருவெண்ணீறு திருஞானசம்பந்தரால் பூசப்பெறும் புண்ணியப் பேறுடையவனாகிய பாண்டிய மன்னனுக்கு அமைச்சருமாகிய குலச்சிறை நாயனார் மகிழ்வோடு வணங்கித் துதிக்கும் சிவபெருமான் ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர் . தேவர்களின் தலைவர் . உலகியல்புகளை வெறுத்து அகப்பற்று , புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும் அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர் . அப்பெருமான் வீற்றிருந் தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும் .

குறிப்புரை :

வெள்ளை நீறணியும் கொற்றவன் தனக்கு மந்திரி :- இதனால் அரசன் சைவத்தினின்று சமணம் புக்கமை அறியலாகிறது . ஒற்றை - ஒப்பற்ற . அற்றவர்க்கு - அகப்பற்றும் புறப்பற்றும் விட்டுத் தன்னையே கருதும் அன்பர்க்கு . அற்ற - தானும் அத்தகைய அன்பு உடைய ( சிவன் ). அற்ற என்பது அன்புடைய என்னும் பொருளதோ ?

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்றிரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

மங்கையர்க்கரசியார் சிவந்த பவளம் போன்ற வாயையுடையவர் . சேல் மீன் போன்ற கண்களை உடையவர் . சிவபெருமானது திருநீற்றின் பெருமையை வளர்ப்பவர் . விரல்நுனி பந்து போன்று திரட்சியுடைய பாண்டிமா தேவியார் சிவத்தொண்டு செய்ய , உலகில் சிறந்த நகராக விளங்குவதும் , அழகிய முத்துக்கள் , பாம்பு , கங்கை , ஊமத்தை , குளிர்ச்சி பொருந்திய எருக்க மலர் , வன்னிமலர் , மாலைநேரத்தில் தோன்றும் பிறைச்சந்திரன் இவற்றை சடைமுடியில் அணிந்துள்ள தலைவரான சிவபெருமான் வீற்றிருந் தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும் .

குறிப்புரை :

பந்தணை விரலாள் - மகளிர் விரல் நுனியின் திரட்சிக்குப் பந்தினை உவமை கூறுதல் மரபு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

கணங்களாய் வரினுந் தமியராய் வரினு மடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

சிவனடியார்கள் கூட்டமாக வந்தாலும் , தனியராக வந்தாலும் , அவர்களைக் காணும்போது அவர்களின் குணச்சிறப்புக்களைக் கூறி , வழிபடும் தன்மையுடைய குலச்சிறையார் வழிபாடு செய்யும் , கோபுரங்கள் சூழ்ந்த அழகிய கோயிலைக் கொண்டதும் , மணம் கமழும் கொன்றை , பாம்பு , சந்திரன் , வன்னி , வில்வம் , கங்கை இவை விளங்கும் சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும் .

குறிப்புரை :

அணங்கு - தெய்வப் பெண் ( இங்கே கங்கை ).

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

செய்யதா மரைமே லன்னமே அனைய சேயிழை திருநுதற் செல்வி
பையரா வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசமங் குசமான் விரிகதிர் மழுவுடன் றரித்த
ஐயனா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

சிவந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் இலக்குமி போன்று அழகுடையவரும் , சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ள வரும் , அழகிய நெற்றியையும் , பாம்பின் படம் போன்ற அல்குலையும் உடையவருமான பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் நாள்தோறும் மனமகிழ்வோடு வழிபாடு செய்து போற்ற , வேல் , சூலம் , பாசம் , அங்குசம் , மான் , மழு ஆகியவற்றைத் தாங்கியுள்ள சிவ பெருமான் உமாதேவியோடு இன்புற்று வீற்றிருந்தருளுகின்ற திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

குறிப்புரை :

செய்யதாமரைமேல் அன்னம் - இலக்குமி . ( முதற் பாட்டில் பங்கயச் செல்வி என்பதுவும் காண்க .)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

நல்ல குணங்களை உடையவராயினும் , அவை இல்லாதவராயினும் , எந்த நாட்டவராயினும் , நாடறிந்த உயர்குடியிற் பிறந்தவராயினும் , பிறவாதாராயினும் அடியவர்களைக் காணும்போது அவர்களை வணங்கி வழிபடுதலையே தவமாகக் கொண்டவர் குலச்சிறையார் . அத்தகைய குலச்சிறையார் வழிபடுகின்ற , மான் ஏந்திய கையினரும் , மூவிலைச் சூலத்தவரும் , வேலரும் , யானைத் தோலைப் போர்த்த நீலகண்டரும் , கங்கையைத் தாங்கிய சடை முடியை உடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திரு ஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

குறிப்புரை :

தவம்பணி - தவமாகக் கொண்டு அடியாரைப் பணிகின்ற . ` எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி ... ஈசன் திறமே பேணி ` ( தி .6. ப .61. பா .3) என்ற திருத்தாண்டகக் கருத்து இப்பாடலின் முற்பகுதிக்குக்கொள்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

முத்துமாலையும் , சந்தனக் குழம்பும் , திருநீறும் தம் மார்பில் விளங்கப் பக்தியோடு பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியார் வழிபடுகின்ற , தூய பளிங்குமலை போன்ற சிவபெருமானும் , சுடர்விடு மரகதக் கொடி போன்ற உமாதேவியும் மகிழ்ந்து வீற்றிருந் தருளும் திரு ஆலவாய் இதுவே .

குறிப்புரை :

முத்தின் தாழ்வடம் பாண்டியர்க்கே சிறப்பாய் உரியது . பளிங்கின் பெருமலை - சதாசிவ மூர்த்தியின் திருமேனி பளிங்கு போன்றது என்ப . ( சைவர்களைக் கண்டாலும் தீட்டு , அவர்கள் கூறுவதைக் கேட்டாலும் தீட்டு என்று சமணர்கள் வாழ்ந்த காலத்திலே , சமணநெறி ஒழுகிய தம் கணவரான பாண்டிய மன்னர் மனம் புண்படாதிருக்க மங்கையர்க்கரசியார் திருநீற்றினைத் தம் மார்பில் பூசிக்கொண்டார் . இது அம்மையாரின் மாண்பை உணர்த்தும் .)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

நாவிற்கு அழகு செய்யும் இயல்பினதாகிய திருவைந்தெழுத்தை ஓதி , நல்லவராய் , நல்லியல்புகளை அளிக்கும் கோவணம் , விபூதி , உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவர் குலச்சிறை நாயனார் . அவர் வழிபாடு செய்கின்ற , பகைவரது அம்புகள் பணிந்து அப்பாற் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

குறிப்புரை :

நா - அணங்கு இயல்பாம் ஐந்தெழுத்து ஒதி :- அணங்கு - ` நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே ` ( தி .4. ப .11. பா .2.) என்ற கருத்து .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுளா ரிருவர் கீழொடு மேலு மளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

உலகம் முழுவதும் தனது செங்கோல் ஆட்சி நிகழ் மன்னனாய் விளங்கிய மணிமுடிச் சோழனின் மகளார் , மங்கையர்க்கரசியார் . பண்ணிசை போன்ற மொழியுடையவர் . பாண்டிய மன்னனின் பட்டத்தரசியார் . அத்தேவியார் அன்போடு வழிபாடு செய்து போற்றுகின்ற , விண்ணிலுள்ள திருமாலும் , பிரமனும் கீழும் மேலுமாய்ச் சென்று இறைவனின் அடிமுடி தேட முயன்று காண முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே .

குறிப்புரை :

மண்ணெலாம்நிகழ - உலகமுழுதும் ஒரு செங்கோல் ஆட்சியின் கீழ் நடைபெற

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோறு மின்புறு கின்ற குலச்சிறை கருதி நின்றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்க ணெறியிடை வாரா
அண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த வாலவா யாவது மிதுவே.

பொழிப்புரை :

சிவத்தொண்டர்கள் எல்லாத் திசைகளிலும் சிவபெருமானைத் தொழுது , அவர் அருட்குணத்தைப் போற்றி , அருட் செயல்களை மகிழ்ந்து கூறக்கேட்டு இன்புறும் தன்மையுடையவர் குலச்சிறையார் . அவர் பக்தியுடன் வழிபடுகின்ற , புத்த , சமணத்தைப் பின்பற்றுபவர் கொள்ளும் குறியின்கண் அடங்காத நெறியுடைய , இவ்வண்டத்துக்கெல்லாம் நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருத்தலம் இதுவேயாகும் .

குறிப்புரை :

தன் குணத்தினைக் குலாவக்கண்டு - ( தனது - சிவ பெருமானது ) குணங்களைப்பாராட்டும் அடியார்களைக்கண்டு மகிழ்கின்ற குலச்சிறை .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீ ராலவா யீசன் றிருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுண் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவ ரிமையோ ரேத்தவீற் றிருப்பவ ரினிதே.

பொழிப்புரை :

பலவகைச் செல்வ நலன்களும் வாய்க்கப் பெற்ற பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் , குலச்சிறையார் என்னும் மந்திரியாரும் வழிபட்டுப் போற்ற அவ்விருவர் பணிகளையும் ஏற்றருளும் சிறப்புடைய திருஆலவாய் இறைவன் திருவடிகளைப் போற்றி , கருப்பங் கழனிகளையுடைய பெருநகரான சீகாழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப் பதிகத்தை இன்னிசையோடு ஓதவல்லவர்கள் தேவர்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருப்பர் .

குறிப்புரை :

பல்நலம் - பலவிதமான செல்வ நலன்கள் . புணரும் - ஒருங்கே அமையப்பெற்ற . அந்நலம் - அத்தகைய வளம் . கன்னல் ( அம் ) கழனி - கருப்பங் கழனிகளை உடைய .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர் காதலித் துறைதரு கோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க் கோவணங் கொண்டுகூத் தாடும்
படிறனார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

பொழிப்புரை :

திருப்பந்தணைநல்லூர் என்ற திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியாராகிய சிவபெருமான் காலனை உதைத்து அழித்தவர், அசுரர்களின் முப்புரங்கள் பொடியாகும்படி எரித்தவர், என்பன போன்ற புகழ்மொழிகளாகிய இவற்றைச் சொல்லி உலகத் தவர் மிகவும் துதிக்கும்படியாகக் காட்டில் உள்ளவராவர். காற்றில் எங்கும் கலந்துள்ளார். உறுதிப்பாடுடையவர். எதனாலும் குறை வில்லாதவர். கோவணம் தரித்துக் கூத்தாடும் வஞ்சகரும் ஆவார்.

குறிப்புரை :

கடறு - காடு. கொடிறனார் - உறுதியானவர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங் காட்டுளார் நாட்டுளா ரெனவும்
வழியுளா ரெனவு மலையுளா ரெனவு மண்ணுளார் விண்ணுளா ரெனவும்
சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

பொழிப்புரை :

இறைவன் கடற்கழியில் உள்ளார். கடலிலே உள்ளார், காடுகளில் உள்ளார். நாடுகளில் உள்ளார். விண்ணுலகத்திலே உள்ளார். நீர்ச்சுழிகளில் உள்ளார். இவ்வாறு அவர் எல்லா இடத்திலும் இருப்பவர் என்று சொல்லப் பெற்றாலும், அவ்வாறு இருக்கும் அடையாளம் பிறர் எவராலும் அறியப்படாத தன்மையர் ஆவார். இவ்வாறு தொண்டர்களின் போற்றுதலுக்கும், வணக்கத்திற்குமுரிய சிவபெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.

குறிப்புரை :

தொண்டர் கூற்றுக்கள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமைக்குக் காரண பூதராய் இருத்தலின் `பழியுளார்\\\\\\\' என்றார்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

காட்டினா ரெனவு நாட்டினா ரெனவுங் கடுந்தொழிற் காலனைக் காலால்
வீட்டினா ரெனவுஞ் சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடைமேல்
சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லுநால் வேதப்
பாட்டினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

பொழிப்புரை :

இறைவர் காட்டில் வசிப்பவர். நாட்டில் உள்ளவர். கொடுந்தொழில் செய்யும் இயமனைக் காலால் உதைத்தவர். நறுமணம் கமழும் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். வெண்ணிறப் பிறைச் சந்திரனைச் சடைமேல் அணிந்துள்ளவர். இவ்வாறு எத்தனை புகழ்ச்சொற்கள் உண்டோ அத்தனையும் சொல்லப் பெற்ற நால் வேதங்களாகிய பாட்டின் பொருளானவர். அப்படித் தாம் எல்லாமாய் இருக்கின்ற அடையாளம் பிறரால் அறியப்படாத தன்மையர்.

குறிப்புரை :

சொல்லுள சொல்லும் - எத்தனை புகழ்கள் உளவோ அத்தனையும் சொல்லப்பெற்ற (பசுபதியார்). சொல் - என்பது சொல்லாகு பெயர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

முருகினார் பொழில்சூ ழுலகினா ரேத்த மொய்த்தபல் கணங்களின் துயர்கண்
டுருகினா ராகி யுறுதிபோந் துள்ள மொண்மையா லொளிதிகழ் மேனி
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக் கடலுணஞ் சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

பொழிப்புரை :

இறைவன் அழகிய சோலைகள் சூழ்ந்த உலகத்தார் போற்றி வணங்க, நெருங்கிய பலவகைக் கணங்களின் துயரினைக் கண்டு உருகி, உள்ள உறுதியோடு, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற தங்கள் உடல்கள் கருநிறம் அடையப் பெற்றாராகிய திருமால் முதலிய தேவர்களெல்லாம் கைதொழுது வணங்க, அவரது துன்பத்தினைப் போக்கக் கடலுள் எழுந்த நஞ்சினை அமுதம்போல் வாங்கிப் பருகினவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.

குறிப்புரை :

வாங்கிப் பருகினார் - எடுத்துண்டார்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினா ருருவின் மிளிர்வதோ ரரவ மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித் தொன்மையார் தோற்றமுங் கேடும்
பன்னினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

பொழிப்புரை :

இறைவர் பொன்போன்ற பெரிய கொன்றை மாலையை வண்டுகள் கிளர்ந்து ஒலிக்கும்படி மார்பில் அணிந்துள்ளவர். அத்துடன் முப்புரி நூலும் அணிந்துள்ளவர். மின்னல் போன்று ஒளியுடைய பாம்பை அணிந்துள்ளவர். திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர். தம்மை வந்தடைந்த சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறப்பொருள் உபதேசித்தவர். தொன்மைக்கோலம் உடையவர். மாறி மாறி உலகைப் படைத்தலும், அழித்தலும் செய்பவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.

குறிப்புரை :

வடம் - மாலை. அறம் - இங்கே சரியை கிரியை இரண்டையும் குறிக்கும். \\\\\\\\\\\\\\\"நல்ல சிவ தன்மத்தால்\\\\\\\\\\\\\\\" (திருக்களிற்றுப் படியார் - 15.) எனக் கூறுவது அறிக.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

ஒண்பொனா ரனைய வண்ணல்வாழ் கெனவு முமையவள் கணவன்வாழ் கெனவும்
அண்பினார் பிரியா ரல்லுநன் பகலு மடியவ ரடியிணை தொழவே
நண்பினா ரெல்லா நல்லரென் றேத்த அல்லவர் தீயரென் றேத்தும்
பண்பினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

பொழிப்புரை :

அன்பர்கள் இறைவனை, `ஒளிமிக்க பொன் போன்ற தலைவரே வாழ்க` எனவும், `உமையவள் கணவனே வாழ்க` எனவும் போற்றுவர். அவரை நெருங்கி அணுகப்பெற்று, இரவும், பகலும் பிரியாராகித் திருவடிகளைத் தொழுவர். பத்தர்களெல்லாரும் அவர் நன்மையைச் செய்பவர் என்று போற்ற, மற்றவர்கள் தீமையைச் செய்பவர் என்று சொல்லும் தன்மையினையுடையவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவர்.

குறிப்புரை :

அண்பினார் - அணுகப்பெற்றவர்களாகி. பிரியார் - பிரியாமல் (அடியினைத்தொழ). இரண்டும் முற்றெச்சம். வினை தீர்த்தற்கண் இறைவன் புரியும் அறக்கருணை மறக்கருணைகளில் மறக்கருணை பின்னர் இன்பம் தருவதாயினும் முதற்கண் துன்பமாகத் தோற்றலின் அஃதறியார் தீயர் என்று கூறி நன்மை அறிந்த பின்னர்த் துதிப்பர் என்னுங் கருத்தால் \\\\\\\"எல்லாம் நல்லவர் என்றேத்த ... ... ... தீயர் என்றேத்தும்\\\\\\\" என்று கூறினார். மறக்கருணைக்கும் அறக் கருணைக்கும் உதாரணமாக \\\\\\\"மண்ணுளே சில வியாதி மருத்துவ னருத்தியோடுந் திண்ணமாயறுத்துக் கீறித்தீர்த்திடுஞ் சில ... ... ... கொடுத்துத் தீர்ப்பன். அண்ணலு மின்பத் துன்பம் அருத்தியே வினை யறுப்பன்\\\\\\\" (சித்தியார் சூ. 2, பா. 35) என்பது அறிக.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

எற்றினா ரேது மிடைகொள்வா ரில்லை யிருநிலம் வானுல கெல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச் செருமலைந் தடியிணை சேர்வான்
முற்றினார் வாழு மும்மதில் வேவ மூவிலைச் சூலமு மழுவும்
பற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

பொழிப்புரை :

தமக்கு எத்தகைய துன்பமும் செய்யாத தேவர்களையும், மண்ணுலக மாந்தர்களையும் துன்புறுத்தி, மோதி அழித்தலைச் செய்த பகைவர்கள் காரணமாகப் போர் செய்து, தம் திருவடிகளைச் சேரும் பொருட்டுத் தவம் முற்றினார்களாகிய மூவர்கள் வாழ்கின்ற முப்புரங்களும், (அம்மூவர் தவிர) வேகும்படி செய்து மூவிலைச் சூலமும், மழுவாயுதமும் ஏந்தியவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் ஆவார்.

குறிப்புரை :

தங்களுக்கு எய்தும் நன்மை ஏதுமில்லாமலேயே வானுலகையும் மண்ணுலகையும் மோதித் துன்புறுத்தியவர். (திரிபுரத்தசுரர்) என்பது முதலடியின் பொருள். எற்றுதல் - மோதுதல். தெற்றல் - அழிப்பித்தல். எற்றினார் - முற்றெச்சம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையா லாடல றாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலு மரக்கன்
வலிகொள்வர் புலியி னுரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையில்
பலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

பொழிப்புரை :

குழலும், முழவும் ஒலிக்க அவற்றின் ஓசையோடு ஆடலும் நீங்காத மகிழ்ச்சியுடைய திருக்கயிலாய மலையைப் பெயர்க்க இராவணன் அதன் கீழ்க் கையைச் செலுத்த, அது கண்டு இறைவன் தம் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமையை அழியுமாறு செய்தார். அவர் புலியின் தோலை ஆடையாக உடுத்தவர். நல்ல வாழ்வு உடையவர் எனினும் பிரம கபாலத்தைக் கையிலேந்திப் பிச்சை ஏற்பவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.

குறிப்புரை :

கையினாலிட - பெயர்த்தெடுத்தற்குக் கையினைச் செலுத்த. (கையினால் உருபு மயக்கம்) இது அரக்கன் செயல். காலினாற் பாய்தல். இது இறைவன் செயல். \\\\\\\"ஏனை ... ... ... பலி கொள்வர்\\\\\\\" என்றது செல்வ வாழ்க்கையில் ஒரு குறைவுமில்லாதவர். ஆயினும், மண்டை ஓட்டில் பிச்சை எடுப்பர் என அசதியாடியவாறு.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார் துணைமையும் பெருமையுந் தம்மில்
சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச் சரண்கொடுத் தவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

பொழிப்புரை :

சேறு நிறைந்த பொய்கையில் மலரும் தாமரைமேல் வீற்றிருக்கும் பிரமனும், சிவந்த கண்களையுடைய திருமாலும் முறையே அன்ன உருவெடுத்து மேல்நோக்கி வானிலும், பன்றி உருவெடுத்துக் கீழ்நோக்கிப் பாதாளத்திலும் இறைவனின் முடியையும், அடியையும் தேடிச்செல்ல, அறியாது தோற்றனர். இறைவனின் தொன்மைத் தோற்றத்தை அறியாது துணையையும், பெருமையையும் தமக்குள் பேசித் தாமே பரம் எனப் பேசினர். பின் இறைவனிடம் யாம் வலியில்லோம் என்று முறையிட்டுத் தம் பிழையை மன்னிக்க வேண்ட, அவர் அவர்கட்குச் சரண் கொடுத்து அவர்களது பாவத்தை மாற்றியருளினார். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூரில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.

குறிப்புரை :

பாற்றினார் - நீக்கினார்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

கல்லிசை பூணக் கலையொலி யோவாக் கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி மேவிய பந்தணை நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல் தொல்வினை சூழகி லாவே. 

பொழிப்புரை :

கற்கும் ஓசைகள் நிறைந்து கலைகளின் ஒலி நீங்காத திருக்கழுமலம் என்னும் பழமையான நகரில் அவதரித்த நல்ல பெருமையினையுடையவனும், அற்பர்களான புறச்சமயிகளின் மொழியைக் கேளாதவனுமாகிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பற்களுடன் கூடிய பிளந்த வாயினையுடைய மண்டை ஓட்டை ஏந்தியவனான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற திருப் பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தைப் போற்றி அருளிய பாடல்கள் பத்தினையும் ஓதவல்லவர்களைத் தொல்வினை வந்து சூழாது.

குறிப்புரை :

கல்லிசை - கற்கும் ஓசை. பல்லிசை - பற்கள் பொருந்திய (மண்டையோடு).

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

பூங்கொடி மடவா ளுமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிரு ணட்ட மாடுமெம் விகிர்தர் விருப்பொடு முறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.

பொழிப்புரை :

இறைவன் பூங்கொடி போன்ற உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். முறுக்குண்ட சடைமுடியையுடைய அடிகள். உலகம் சங்கரிக்கப்பட்டு ஒடுங்கிய ஊழிக்காலத்தில் நடனமாடும் விகிர்தர். அப்பெருமான் விருப்பத்துடன் வீற்றிருந்தருள்கின்ற இடம் எது என வினவில், தேன்மணம் கமழும் சோலைகளிலுள்ள செழுமையான மலர்களைக் குடைந்து நெருங்கிக் கூட்டமாயமைந்த வண்டுகள் இசைபாடுகின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற ஓமமாம்புலியூரில் அப்பெருமானுக்குரிய உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

கோதுதல் - கிளறுதல்; உளர்தல். இவை ஒரு பொருட்கிளவி. \\\\\\\"வீங்கிருள் நட்டமாடும் எம் விகிர்தர்\\\\\\\' \\\\\\\"நள்ளிருள் நட்டம் பயின்றாடும் நாதனே\\\\\\\" என இக்கருத்துத் திருவாசகத்திலும் வருகிறது. தளி - கோயில்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானா ரிமையவ ரேத்த வினிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி யழலுமிழ் புகையி னாகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்து மோமமாம் புலியூ ருடையவர் வடதளியதுவே. 

பொழிப்புரை :

சம்பரன் என்னும் அசுரனுக்கு அருள்செய்தவரும், சலந்தரன் என்னும் அசுரன் அழியும்படி நெருப்பினை உமிழ்கின்ற சக்கரத்தைப் படைத்தவருமான எம் சிவபெருமானார் தேவர்களெல்லாம் வணங்கிப் போற்ற இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வேள்வி ஆற்ற அதன் புகைமண்டலமானது ஆகாயத்தினை அடைந்து மழைபொழிவதும், தேவர்களால் போற்றப்படுகின்றதுமான திரு ஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக் கோயிலாகும்.

குறிப்புரை :

பொழியும் - ஏத்தும் என்னும் பெயரெச்சங்கள் ஓமாம்புலியூர் என்னும் பெயர் கொண்டு முடிந்தது.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குத றவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவ னுறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த வங்கையா லாகுதி வேட்கும்
ஓங்கிய மறையோ ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

சிறந்த குணமுடைய பகீரதனுடைய தவத்திற்கு அருள்செய்து, தனது படர்ந்த சடையில் மறைத்தருளிய கங்கை நதியினைத் தாங்குதலைத் தவிர்த்துப் பூமியில் சிறிதளவு பாயும்படி செய்த தத்துவனாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற இடம், மூன்று எரி வளர்த்துத் தம் அழகிய கைகளால் நெய், சமித்து போன்றவைகளை வார்த்து வேள்விகள் செய்கின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

தத்துவன் - தத்துவ சொரூபியாய் இருப்பவன்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

புற்றர வணிந்து நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும் பிரானவ னுறைவிடம் வினவில்
கற்றநால் வேத மங்கமோ ராறுங் கருத்தினா ரருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.

பொழிப்புரை :

சிவபெருமான் புற்றில் வசிக்கும் இயல்புடைய பாம்பை அணிந்தவர். திருநீற்றினைத் தன்மேனி முழுவதும் பூசியவர். பூதகணங்கள் சூழ்ந்து வர, இடபத்தின் மேலேறி ஊரூராகச் சென்று பிச்சையேற்பவர். அப்பெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தாங்கள் கற்ற நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் இவற்றின் கருத்தை உணர்ந்தவர்களாய், அன்பும், புகழுமுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம்புலியூர் உடையவர் வடதளியே.

குறிப்புரை :

பெய்பலி கொள்ளும்பிரான்:- என்றது \\\\\\\"குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர்\\\\\\\" என்பது போலும் ஓர் நயம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

நிலத்தவர் வான மாள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுர ராசற வாழி யளித்தவ னுறைவிடம் வினவில்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க
உலப்பில்பல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

மண்ணுலகத்தவர்கள், வானுலகை ஆள்பவர்கள், பாதாள உலகத்தினர் ஆகியோரது துன்பம் கெடக் கொடிய அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறு, நெடிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த சிவபெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தீய செயல்களால் பொருள் சேர்த்தலைச் செய்யாத நல்லொழுக்க சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் செய்யும் சான்றோர்களும் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரிலுள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

\\\\\\\"சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யார்\\\\\\\" - \\\\\\\"சலத்தாற் பொருள் ... பெய்திரீஇ யற்று\\\\\\\" (குறள் . 660) சலம் - தருக்கபரிபாடை. இங்குத் தீயவினைகளைக் குறித்தது. ஆளுடைய பிள்ளையார், திருக்குறட்கருத்தை அமைத்துப் பாடினமைக்கு இது ஒரு சான்று.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு மலியுமா றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணரும்
குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற  மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

எட்டுத் திசைகளும் புகழ்மணங் கமழ்கின்றதும், ஏழிசைகள் மலிந்துள்ளதும், ஆறங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு வேதங்கள், மூன்று எரிகள், இரண்டு பிறப்புக்கள் என இவற்றை ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை உணர்ந்து தெளிந்தவர்களும் ஆன அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவரான சிவபெருமான் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

`திசைகள் எட்டு இசை ஏழு ... ஒருமை இவ்வாறு வருவதனை எண்ணலங்காரம் என்பர் மாதவச் சிவஞான யோகிகள். \\\\\\\"ஒரு கோட்டன் இரு செவியன்\\\\\\\" என்பது (சிவஞான சித்தி - காப்பு.) காண்க.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி தானுடை யரக்கனொண் கயிலை
அலைவது செய்த வவன்றிறல் கெடுத்த வாதியா ருறைவிடம் வினவில்
மலையென வோங்கு மாளிகை நிலவு மாமதின் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

பத்துத் தலைகளும், நீண்ட இருபது கைகளும் உடைய அரக்கனான இராவணன் ஒளிபொருந்திய திருக்கயிலை மலையினை அசைக்கத் தொடங்க, அவனது வலிமையைக் கெடுத்த ஆதியாராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் எதுவென வினவில், மலைபோல் ஓங்கியுயர்ந்த மாளிகையும், அதனுடன் விளங்கும் பெரிய மதிலும் கூடிய, செல்வநிலை என்றும் மாறாதவராய் விளங்குகின்ற பல்வகையான புகழ்களையுடைய அந்தணர்கள் வசிக்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

அலைவு (அது) செய்த:- அசைக்கத்தொடங்கிய மலையென ஓங்கும் மாளிகை. மாளிகைக்கு மலை உவமை. தென் திருமுல்லை வாயில் திருப்பதிகத்தில் \\\\\\\"குன்றொன் றொடொன்று குழுமி\\\\\\\" (தி.2. ப.88. பா.4.) என உருவகித்து இருத்தலையும் அறிக. செய்குன்று.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவ ருமையவ ளோடு முகந்தினி துறைவிடம் வினவில்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப் பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.

பொழிப்புரை :

தேனுடைய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், கருநிறமுடைய திருமாலும் இருவரும் காண்பதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமா தேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடம் , பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரோடு வாளை மீன்கள் பாயும் வயல்களும், குளிர்ச்சி பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த கரும்பு ஆலைகளும் உடைய, மிக்க புகழுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

பள்ளநீர் - பள்ளத்தில் தங்கியநீர். வாளைபாய் தரு - வாளை மீன்கள் பாய்கின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவர முடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளா ருறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

தெளிந்த அறிவில்லாத காவியாடை போர்த்திய புத்தர்களும், தடுக்கினை உடுக்கும் சமணர்களும் ஆகிய கள்ள உள்ளத்துடன் விளங்கும் கீழ் மக்கட்கு அருள்புரியாத கடவுளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , நள்ளிருள், யாமம் முதலிய அவ்வக் காலங்கட்கு ஏற்ப, நான்கு வேதங்களிலும் கூறியபடி தெய்வமந்திரங்களை ஓதி, நன்மை தரும் மூன்று அக்கினிகளை வளர்த்து வேள்வி செய்யும் மாசற்ற அறிவுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம் புலியூர் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

கலதிகள் - கொடியவர்கள். `கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே\\\'. (தி.8 திருவாசகம். 10.19.)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

விளைதரு வயலுள் வெயில்செறி பவள மேதிகண் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் காழியுண் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்க ளமரலோ கத்திருப் பாரே. 

பொழிப்புரை :

நல்ல விளைச்சலைத் தருகின்ற வயல்களில் ஒளிமிக்க பவளங்கள், எருமைகள் மேய்கின்ற இடங்களில் அவைகளால் இடறப்பட்டு மேலும் ஒளியைத் தருகின்ற திருஓமமாம் புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை, களிப்பை உண்டாக்கும் உயர்ந்த காணத்தக்க செல்வத்தையுடைய சீகாழிப்பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் போற்றிய, அருளை விளைவிக்கும் இத்திருப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.

குறிப்புரை :

களிதரு நிவப்பிற்காண்டகு செல்வம் - களிப்பை உண்டாக்கத் தக்க மிகுந்த காணத்தக்க செல்வம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. 

பொழிப்புரை :

சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திருமேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

கரைகெழுசந்து - கரையில் ஒதுக்கப்பட்ட சந்தன மரங்கள். கார் அகில் பிளவு - கரிய அகில் கட்டை. வரன்றி - வாரி. ஓதம் - அலை. ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை:- இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே. 

பொழிப்புரை :

விரைவாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனிமேல் போர்த்திக் கொண்டவர் சிவபெருமான். அவர் பெண் யானை போன்ற நடையை உடையவளாய், வளையல்களை அணிந்தவளாய்ப் பிறை போன்ற நெற்றியையுடைய உமா தேவியை ஒரு பாகமாக உடையவர். பிறர் கொடிது என்று அஞ்சத்தக்க அலைகளையுடைய ஒலிக்கின்ற கடல், முத்துக்களைச் சுமந்து மக்களுக்கு வழங்கும் வளமைமிக்க திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

கொடிது என - (கேட்டோர்) கொடிது என்று கூறும் படியாக.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. 

பொழிப்புரை :

சிவபெருமான் குளிர்ச்சியான இளமையான சந்திரனையும், பசுமையான தலையையுடைய பாம்பையும், படர்ந்த சடைமுடியில் அணிந்துள்ளார். கனிபோன்ற சிவந்த வாயையுடைய உமாதேவியைச் சிவபெருமான்ஒரு பாகமாக உடையவர். மேரு மலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த ஆற்றலுடையவர். அப்பெருமான் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக் கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

பனித்திளந்திங்கள் - குளிர்ந்த இளம்பிறை. பனித்த - பெயர்ச்சொல் அடியாகப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம்.
\\\\\\\\\\\\\\\"பனித்த சடையும்\\\\\\\\\\\\\\\" என அப்பர் வாக்கிலும் பயில்கிறது. பனித்த + இளம் = பனித்திளம். பெயரெச்ச விகுதி கெட்டது.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே. 

பொழிப்புரை :

இறைவர் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியின் வேகத்தைக் குறைத்து அதனைச் சடையில் தாங்கியவர். அழகிய மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தவர். பின் அவன் தேவி வேண்ட அவனை உயிர்ப்பித்து அவளுக்கு மட்டும் தெரியும்படி அருள்செய்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். தாமரை போன்ற திருவடிகளை உடையவர். ஆரவாரத்துடன், செழுமையான முத்துக்கள், செம்பொன், இப்பி இவற்றைத் திரளாக அலைகள் கரையிலே சேர்க்கத் திருக்கோணமலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

உலகத்தை அழிப்பது போலும் பெருக்கெடுத்துவந்த கங்கையை ஒரு சிறு திவலையாக்கி ஒரு சடையின் ஓர் உரோமத்தின் நுனியில் வைத்தது அதைப் பழிப்பதுபோல இருந்தது (பழித்து) என்பதனால் பெறப்படுகிறது. தெழித்து - உரப்பி (மிக்க ஒலியைச் செய்து).

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. 

பொழிப்புரை :

தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவர். அவர் அடியார்களின் வாயிலும், மனத்திலும் நீங்காத மாண்புடையவர். பல கோலங்களை உடையவர். தம்மை வழிபடும் தொழிலுடைய அடியவர்கள்பால் நோய், பிணி முதலியன தாக்காவண்ணம் காப்பவர். மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். இவ்வுலகில், திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும் திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோண மாமலை. இன்றும் இதனை நேரில் காணலாம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமா மலையமர்ந் தாரே. 

பொழிப்புரை :

பக்தி பெருகும் நல்ல மனத்தால் அன்பு பெருக வழிபடும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனை, இறை வழிபாடு வினைப்பலனைச் சாராமல் காக்கும் என்ற சைவக் கொள்கைக்கு முரண்படாவண்ணம் உதைத்துப் பாலனுக்கு அருள் புரிந்த செம்மையான திறமுடையவர் சிவபெருமான். ஆன்மாக்கள் ஆகிய நம்மை ஆட்கொள்பவர். அப்பெருமான் விரிந்துயர்ந்த மல்லிகை, மாதவி, புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், முல்லை ஆகியவை விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

மௌவல் - முல்லை.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே. 

பொழிப்புரை :

கயிலைமலையை எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவர் சிவபெருமான். பின் அவன் ஏத்திப் போற்ற விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவர். செல்வத்தோடு கூடிய பிறப்பும், இறப்பும் அறியாதவர். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவர். வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவர். உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னருட் பெருமையும், வாழ்வும் கொடுத்தவர். அத்தகைய பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

வேள்விதடுத்தவர் - தக்கன் வேள்வியைத் தடுத்தவர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே. 

பொழிப்புரை :

அருவருப்பு இல்லாமல் பிரமனின் வெண் தலையைக் கையிலேந்தி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்று உண்ணும் பெருமையுடையவர். சீர்மை பொருந்திய பெருங்கடலில் துயில்கொள்ளும் திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் அறியா வண்ணம் ஒளியுடைய பெரிய நெருப்புப் பிழம்பாய் உயர்ந்து நின்றவர். திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சிக்க, ஒரு பூக் குறைய, அதற்காகத் தாமரை போன்ற தம் கண்ணையே இடந்து அர்ச்சனை செய்யக் குருவாய் விளங்கியவர். அடியவர்கள், ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்த தம் திருவடிகளை வணங்கும் வண்ணம் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

குருவர் - குரு ஆனவர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே. 

பொழிப்புரை :

நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சிவபெருமானைப் பற்றி நெறியல்லாதவனவற்றைப் புறங்கூறுகின்றனர். சிவபெருமானோ நஞ்சுண்டு தேவர்களைக் காத்த பெருமையுடையவர். மெல்லியலான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். கடல் சூழ்ந்த அம்மலையில் மணம் வீசும் மல்லிகைச் சோலை விளங்கக் கடலலைகள் கரையில் மோதுகின்றன. கடற்சோலைகளின் மணம்வீசும் திருக்கோணமலையில் சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்றார்.

குறிப்புரை :

சமணர் நின்றுண்பவர். புத்தர் - இருந்துண்பவர். எம் பெருமான் நஞ்சுண்பவர் என்பது ஓர் நயம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே. 

பொழிப்புரை :

குற்றமில்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானை, கற்றுணர் ஞானமும், கேள்வி ஞானமும் உடைய சீகாழி வாழ் மக்களின் தலைவரான சிவஞானக் கருத்துடைய ஞானசம்பந்தர் செந்தமிழில் அருளிய இப்பதிகத்தை உரைப்பவர்களும் கேட்பவர்களும் உயர்ந்தோர் ஆவர். அவர்களுடைய சுற்றத்தாரும் எல்லா நலன்களும் பெற்றுத் தொல்வினையிலிருந்து நீங்கப் பெறுவர். சிவலோகத்தில் பொலிவுடன் விளங்குவர்.

குறிப்புரை :

உயர்ந்தோர் சுற்றமும் ஆக. சுற்றம் - சூழ இருப்பவர்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 1

சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்
தெண்ணரும் பல்கண மேத்தநின் றாடுவர்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் பொடியாகிய வெண்ணிறத் திருநீற்றினை அணிந்த மார்பில் யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு எண்ணுதற்கரிய பல கணங்களும் போற்ற நடனம் செய்வார் . அத்தகைய சிவபெருமான் தேவர்களும் விரும்பும் பசுமையான சோலைகள் சூழ்ந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் , உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளும் தலைக்கோலமுடையவர் .

குறிப்புரை :

பதினெண்கணம் , பூதகணம் , பேய்க்கணம் , முனிகணம் , உருத்திரபல்கணம் என இவையொவ்வொன்றிலும் பல ஆதலின் எண்ணரும் பல்கணம் என்றார் .

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 2

திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுட னாடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரைமல்கு வாளர வாட்டுகந் தீரே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பெருமானே ! இடுப்பில் விளங்கும் ஒளிமிக்க பாம்பை ஆட்டுதலை விரும்பி நின்றீர் . அலைகளையுடைய கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு ஆடுகின்றீர் .

குறிப்புரை :

அரவு ஆட்டு உகந்தீர் - பாம்பை ஆட்டுதலை விரும்பினீர் .

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 3

அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்ன
நடைமட மங்கையொர் பாக நயந்து
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.

பொழிப்புரை :

திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்துள்ள சங்கரராகிய நீர் பகைவருடைய தொன்மையான மூன்று நகரங்களையும் எரித்தீர் . அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்துள்ளீர் . எருதின்மீது விருப்பத்துடன் ஏறுகின்றீர் .

குறிப்புரை :

அடையலர் - பகைவர் ; நகர்மூன்று - திரிபுரம் .

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 4

வளங்கிளர் கங்கை மடவர லோடு
களம்பட ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.

பொழிப்புரை :

குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய எம் பெருமானே ! வளங்களைப் பெருக்குகின்ற கங்கையாளொடு சுடுகாட்டு அரங்கமே இடமாகக் கொண்டு ஆடுகின்றீர் .

குறிப்புரை :

வளம் கிளர் கங்கை - பாய்தலால் வளங்கள் அதிகரித்தற்குக் காரணமாகிய கங்கை . அரங்கு ஆக - காடு அரங்கு களம் ஆகப் பட ஆடுதிர் எனக்கூட்டிச் சுடுகாடு அரங்கினிடமாகக் கொண்டு ஆடுதிர் எனப் பொருள் கூறுக .

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 5

சுரிகுழ னல்ல துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை யெந்தை பிரானே.

பொழிப்புரை :

விரிந்த பசுமையான சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நெருப்பு , மழு , வாள் முதலிய படைகளை ஏந்தியுள்ள எம் தந்தையாகிய பெருமானே ! நீர் அழகிய சுரிந்த கூந்தலையும் , உடுக்கை போன்ற இடையினையுமுடைய உமாதேவியோடு , வெப்பத்தின் மிகுதியால் மரங்கள் முதலியவை பொரிகின்ற சுடுகாட்டில் , உலகுமீள உளதாக , ஆடுகின்றீர் .

குறிப்புரை :

( நல்ல ) சுரிகுழல் துடியிடை - சுரிந்த கூந்தலையும் உடுக்கை போன்ற இடையையும் உடைய அம்பிகை . அன்மொழித் தொகை . பன்மொழித்தொடர் . பொரிபுல்கு காட்டிடை - வெப்பத்தின் மிகுதியால் மரங்கள் முதலியவை பொரி பொருந்திய சுடுகாடு .

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 6

காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்
தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினி லைந்துகொண் டாட்டுகந் தீரே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த மலர்கள் பொருந்திய குளிர்ச்சிமிக்க திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுதலை விரும்பும் பெருமானே ! குவளை மலர் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியோடு சுடு காட்டில் கையில் தீ அகல் ஏந்தி நின்று ஆடுகின்றீர் .

குறிப்புரை :

தீயகல் ஏந்தி நின்று ஆடுதிர் என்பது ` கரதலத்தில் தமருகமும் எரியகலும் பிடித்து ஆடி ` எனச் சுந்தரமூர்த்திகள் திரு வாக்கில் வருவதும் காண்க .

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 1

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே. 

பொழிப்புரை :

அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார்.

குறிப்புரை :

திருமணத்தில் தமக்கு விருப்பமில்லை என்பதைக் குறித்தது. தொண்டர் - அடியார்கள் சூழ்ந்த. நல்லூர்ப்பெருமணம் - திரு நல்லூர்ப்பெருமணம் எனும் தலத்தில். மேய - மேவிய. நம்பானே - சிவபெருமானே. பெருமணம் - மிக்க மணமாகிய பொருள்கள். ஊர் - பொருந்திய. சொல் - பாடல்களாகிய மலர்களை. சூடலரே - சூடுதலை உடையீர்! கல் ஊர் - அம்மியின்மேல் மனைவியின் காலை வைத்தல் முதலிய சடங்குகளை உடையதாகிய, பெருமணம் - பெரிய திருமணம். வேண்டா - எனக்கு வேண்டா. கழுமலம் - திருக்கழுமலம் முதலாகிய. பல்லூர் - பலதலங்களிலும் (நான் - பாடிய), பாட்டு - தேவாரப் பதிகங்களும். மெய் ஆய்த்தில - மெய்யாக வில்லையா? எத்தலத்திலேனும் எனக்குத் திருமணம் வேண்டுமென்று கேட்டதுண்டா? ஆய்த்து - ஆயது. \\\"நரரிடைப் பாலன் செய்தபாதகம் நன்மையாய்த்தே\\\" என்ற சித்தியாரிற்போல. கல்லூர்ப் பெருமணம்:- கல்லூர் + பெருமணம் இரண்டனுருபும் பயனும் உடன் தொக்க தொகை. மெய்யாய்த்தில - இதில் வினா எழுத்து மறைந்து நின்றது. \\\"தெருளில்நீர் இது செப்புதற்காம்\\\' (தி.12 பெரிய புராணம் - 9) சொல்லூர் பெருமணம் ஏகதேச உருவகம். சொல் - பாடலுக்கானது ஆகுபெயர். நம்பன், நம்பான் என ஈற்றயல் நீண்டு விளித்தது. ஏகாரம் ஈற்றசை.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 2

தருமண லோதஞ்சேர் தண்கட னித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயு நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர் பாகங் கொண்டானே. 

பொழிப்புரை :

கடலலைகள் அழித்துவிடாமல் வைத்துள்ள இயற்கைக் கரையிலுள்ள மணலோடு, பதுமை போன்ற சிறுமியர் அலைகள் வீசிக்குவித்த, குளிர்ச்சி பொருந்திய கடலில் விளைந்த முத்துக்களையே, பருத்த மணலாகக் கொண்டு சிற்றில் இழைத்து, சிறுசோறிட்டு, நறுமணம் கமழும் மலர்களை வைத்துக் கொண்டு, பாவைகட்கு மணம் செய்து விளையாடுகின்ற சிறப்பினையுடையது நல்லூர்ப் பெருமணம். அப்பெருமணத் திருக்கோயிலின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமான் தன்னிற் பிரிவில்லா உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டருளினன்.

குறிப்புரை :

சிறுமியர் விளையாட்டு: பாவை நல்லார்கள் - பதுமைபோன்ற சிறுமியர்கள். தரு - பொருந்திய. மணல் - மணலோடு. ஓதம் - அலைகள். சேர் - வீசிக்குவித்த. தண்கடல் நித்திலம் - குளிர்ந்த கடலில் உண்டாகிய முத்துக்களையே. பருமணலாகக்கொண்டு - பருத்த மணலாகக்கொண்டு. வரும்மணம் - பொருந்திய மணத்தை உடைய மலர் முதலியவைகளை. கூட்டி - வைத்துக் கொண்டு. மணம் செயும் - மணம் செய்து விளையாடுகின்ற (நல்லூர்ப் பெருமணம்) பெண் ஓர் பாகம் கொண்டான் - பெண்ணை இடப்பாகத்தில் கொண்டவன். கடந்த ஞானிகளுக்கே இல்லறத்தார் நடத்தும் மனைவாழ்க்கை வீதியில் சிறுமியர்கள் மணம்செய்து விளையாடும் விளையாட்டைப் போன்று தோன்றும் என்பது இப்பாடலால் குறிக்கப்பெறுகிறது. பெண் ஓர்பாகம் கொண்டான் ஆதலின் என்னையும் இவ்வாறு அருளினான்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 3

அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்
றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே. 

பொழிப்புரை :

மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி காரணமாக, அனைத்துயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த சிந்தையராவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நற்றவத்தைச் செய்வர். அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அனைத்துயிர்கட்கும் இன்பம் தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத்தொண்டு செய்வர்.

குறிப்புரை :

அடியவர் பெருமை: நன்புஉறு - முத்தியை அடைகின்ற நன்பு - பு, பண்புப்பெயர் விகுதி. ஆகுபெயர். \\\\\\\"இணையடி ஏத்துவார் துன்புறுவாரல்லர் தொண்டு செய்வார்\\\\\\\" தாம் செய்வன சிவனுக்கு என்றும், வருவன அனைத்தும் அவன் அருள் என்றும் தொண்டு செய்வார் ஆகலின் இணையடி புத்திபண்ணி ஏத்துவார் துன்புறு வாரல்லர் என்று கூறினார்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 4

வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே. 

பொழிப்புரை :

சிவபெருமான் வலிமையான புலியின் தோலை ஆடையாக உடுத்துள்ளவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவர். விரிந்த கோவணத்தை அணிந்தவர். அப்பெருமான் சிவநெறி ஒழுகும் நற்பண்பாளர்களால் தொழப்படும் வண்ணம் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் வாழ்க்கையையுடையவர். இதுவே புண்ணியரான சிவபெருமானின் இயல்பாகும்.

குறிப்புரை :

இறைவன் கோலம்: வல்லியந் தோல் - புலித்தோல் வன்மைக்கு இனமாகத் திரிந்தது. செவிக் கினிமை கருதி. உடை ஆர்ப்பது - உடையாக இடுப்பில் உடுப்பது; வேழத்துரி போர்ப்பது - யானையின் தோல் போர்வையாகப் போர்ப்பது. விரி கோவணம் - படம் விரித்த பாம்பினைக் கோவணமாகக் கட்டுவது. விரி - முதனிலைத் தொழிற்பெயர். ஆகுபெயர். நல்லியலார் - நற்பண்புகளை உடைய மெய்யடியார். இவை நல்லூர்ப் பெருமண வாழ்க்கை எம் புண்ணியனார் கோலங்களாம்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 5

ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே. 

பொழிப்புரை :

இறைவனே! நீவிர் இடபத்தை விரும்பி வாகனமாகக் கொண்டுள்ளீர். நெருப்பேந்திச் சுடுகாட்டில் ஆடுகின்றீர். திருவெண்ணீற்றினை விரும்பிப் பூசியுள்ளீர். வரிசையாக அழகுடன் விளங்கும் தேன் துளித்து நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளீர். செல்வம் பெருகும் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்துள்ளீர்.

குறிப்புரை :

இறைவன் செயல்: ஏறு - இடபத்தை. உகந்தீர் - விரும்பி ஏறினீர். நிறை - வரிசையாக. ஆர் - பொருந்திய. விரி - மலர்ந்த. தேன் - தேனை உடைய. கொன்றை - கொன்றை மலரின். நாறு - மணம் வீசுதலை. உகந்தீர் - விரும்பினீர். நாறு - நாறுதல் (நல்லூர்ப் பெருமணத்து) வேறுகந்தீர் - வேறாக விரும்பினீர்!

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 6

சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது
நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தி ராலெம் பிரானிரே.

பொழிப்புரை :

சிவபெருமான் நியமம் தவறாது வழிபடுபவர்கட்கு எளியர். வேடுவக் கோலத்தில் நெற்றிப்பட்டம் கட்டிய தலையினை உடையவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது நாட்டியங்களின் கொட்டு வாத்திய ஓசையும், திருவிழா முதலிய கொண்டாட்டங்களின் ஓசையும் ஒழியாத, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலாகும். எம் தலைவராகிய நீர் ஏனைய தலங்களிலும் விரும்பி வீற்றிருக்கின்றீர்.

குறிப்புரை :

தலச்சிறப்பு: சிட்டப்பட்டார்க் கெளியன் - நியமம் தவறாது வழிபடுவர்களுக்கு எளியவன். வேட்டுவப் பட்டம் கட்டும் சென்னியான் - வேடுவக் கோலத்தில் நெற்றிப் பட்டம் கட்டிய தலையினை உடையவன். நட்டம் - நாட்டியங்களின். ஆட்டு - திரு விழா முதலான கொண்டாட்டங்களின் ஓசையும், கொட்டு வாத்திய ஓசையும். அறா - ஒழியாத. இட்டப்பட்டால் ஒத்திரால் ஏனைத் தலங்களிலும் மிகவிருப்பம் உடையவர் போல் காணப்படுகின்றீர். எம் பிரான் நீர் - எமது தலைவராகிய நீர். ஆல் - அசை

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 7

மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே. 

பொழிப்புரை :

இறைவன் மழைமேகம் போன்ற இருண்ட திருநீல கண்டத்தன். எட்டுத் திருத்தோள்களை உடையவன். வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டவன். பதுங்கியிருந்து பாயும் தன்மையுடைய புலியினை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தவன். அதன்மேல் பாம்பைக் கச்சாக இறுகக் கட்டியவன். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத் தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில், உயிர்கள் போகம் துய்க்கும் பொருட்டுப் போகவடிவில் விளங்குகின்றான். மேலும் மன்னுயிர்கள் நற்றவம் புரிந்து திருவடிப் பேறெய்தும் பொருட்டு யோகத்தையே புரிந்தருள்வன்.

குறிப்புரை :

அம்பிகையின் சிறப்பு: மேகத்தகண்டன் - காளமேகம் போலும் கரிய கண்டத்தை உடையவன். எண்தோளன் - எட்டுத் தோள்களையுடையவன். வெண்ணீற்றுமை பாகத்தன் - திருவெண்ணீற்றுமை யம்மையை இடப்பாகமாக உடையவர். பந்தித்த - கச்சாகக் கட்டிய. நாகத்தன் - பாம்பை உடையவன். (நல்லூர்ப் பெரு மணத்தான்). நல்ல போகத்தன் - உமையம்மையை இடப் பாகமாக உடையவனாகி மிக்க போகத்தை உடையவன்போல் காணப்படினும். யோகத்தைப் புரிந்தான் - உண்மையில் அவன் யோகத்தையே செய்தான்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 8

தக்கிருந் தீரன்று தாளா லரக்கனை
உக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே. 

பொழிப்புரை :

இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த முழுமுதல் தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில் இலங்கையை ஆண்ட அசுரனான இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்றபோது, உயர்ந்த அம்மலையின்கீழ் அவன் உடல் குழைந்து நொறுங்கும்படி சிரித்துக் கொண்டிருந்தீர். இந்நாளில் திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர். அடியார்களாகிய நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!.

குறிப்புரை :

வேண்டுகோள்: தக்கு இருந்தீர் - தக இருந்தீர். உக்கு இருந்து ஒல்க - உடல் நொறுங்கிக் குழைய. வரைக்கீழ் இட்டு - கயிலை மலையின் கீழ் அழுத்தி. நக்கு இருந்தீர் - சிரித்துக்கொண்டிருந்தீர். அன்று - இது அக்காலத்துச் செய்தது. இன்று - இன்றைக்கும் இராவணனைத் தன் வழியில் செல்ல அருளியதைப்போல. எமை - எங்களை. போக்கு - உமது திருவடியில் சேர்வதற்கு. அருளீர் - அருளுவீர்களாக.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 9

ஏலுந்தண் டாமரை யானு மியல்புடை
மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே. 

பொழிப்புரை :

குளிர்ச்சி பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய மாண்பை ஒரு சிறிதும் அறிந்திலர். இறைவனின் அடிமுடியைத் தேட முயன்றும் காண்கிலர். நால்வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானே அவ்வேதங்களின் உட்பொருளாய் விளங்குகின்றார் என நல்லோர் நுவல்வர். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் நிலையாக வீற்றிருந் தருளுகின்றார்.

குறிப்புரை :

இறைவன் பெருமை: தம்மாண்பு - தமது பெருமையை. (தாமரையானும் மாலும் அறிகின்றிலர்). தம்பாட்டு - தம்முடைய பாடல், மாமறை நாலும் என்பர். (அதுபோலவே) தம் கோயில் - தமது கோயில் நல்லூர்ப் பெருமணம் என்பர்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 10

ஆத ரமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமண மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே. 

பொழிப்புரை :

இறைவனை உணரும் அறிவில்லாத சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோர்கள் கூறும் புன்னெறியைக் கேட்டு, நன்னெறியாம் சித்தாந்தச் சிவநெறிக்கண் இணங்காது பிணங்கி நிற்கும் பெற்றியீர்! வாருங்கள். அனைத்துயிர்க்கும் தலைவன் சிவபெருமான். திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வேதங்களின் பொருளான சிவபெருமானின் திருவடிகளை வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் வீடுபேறு எளிதில் கிட்டும்.

குறிப்புரை :

அனைவரையும் அழைத்தல்: நாதனும் (நல்லூர் பெருமணம் மேவிய) வேதன் - வேதங்களின் பொருளாகியவனும் ஆகிய சிவபெருமானின், தாள்தொழ - திருவடிகளை வணங்க. வீடு - (அரியதாகிய) முத்திஉலகம், எளிதாம் - எளியதாகும். ஆதர் - அறிவிலிகள்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 11

நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே. 

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்திப்பேற்றை அருளும், திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம் வாய்க்கும்.

குறிப்புரை :

நறும்பொழில் - நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த. காழியுள் - சீகாழியுள் அவதரித்தருளியவராகிய. ஞானசம்பந்தன் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராகிய யான். பெறும் - பெறுதற்குரிய, பதம் - பதவியை. அருளும் நல்லூர்ப் பெருமணத்தானை - திருநல்லூர்ப் பெருமணத்தில் எழுந்தருளிய சிவலோகத் தியாகேச மூர்த்தியை, உறும் - திருவடியில் இரண்டறக் கலக்கும். பொருளால் - கருத்தோடு. சொன்ன - பாடிய. ஒண் தமிழ் - சிறந்த பயனைத் தரவல்ல, தமிழ் - இத்தமிழ்ப் பதிகத்தை. வல்லார் - பொருள் அமைதியோடு இன்னிசையால் மனங்கசிந்து பாடவல்லார்க்குப் பழிபாவம் அறும். (அதுவன்றியும்), அவலம் - பிறவித்துன்பம். இலர் - இலராவர். \\\\\\\"அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் எய்துவர்\\\\\\\" என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 1

மறியார் கரத்தெந்தை யம்மா துமையோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டு தன்பூம் பெடைபுல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.

பொழிப்புரை :

மானைக் கரத்தில் ஏந்திய எந்தையாகிய பெருமான் உமையம்மையோடு பிரியாதவராய் உறையும் இடம், புள்ளிகளை உடைய இசைவண்டு, தன் பெண் வண்டைக்கூடி, மணம் பொருந்திய மலரில் துயிலும், திருவிடைவாய் என்பர். `பிரியாத\\\' என்பது எதுகை நோக்கி வல்லெழுத்தாகத் திரிந்தது.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 2

ஒவ்வாத என்பே யிழையா வொளிமௌலிச்
செவ்வான் மதிவைத் தவர்சேர் விடமென்பர்
எவ்வா யிலுமே டலர்கோ டலம்போது
வெவ்வா யரவம் மலரும் விடைவாயே. 

பொழிப்புரை :

யாவரும் ஏலாத என்பையே மாலையாகப் பூண்டு இளம்பிறையைச் சிவந்த ஒளி பொருந்திய சடைமுடிமீது, செவ்வான் மீது பிறை தோன்றுமாறு போலச் சூடிய, சிவபிரானது இடம், எவ்விடத்தும் இதழ் விரிந்து விளங்கும் காந்தள் மலர்கள் கொடிய வாயினை உடைய பாம்புகளின் படங்கள் போல மலரும், திருவிடைவாய் என்பர்.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 3

கரையார் கடல்நஞ் சமுதுண் டவர்கங்கைத்
திரையார் சடைத்தீ வண்ணர்சேர் விடமென்பர்
குரையார் மணியுங் குளிர்சந் தமுங்கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே . 

பொழிப்புரை :

கரையின் கட்டுப்பாட்டிலடங்கிய கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவரும், கங்கையாற்றைச் சூடிய வரும், தீவண்ணருமாகிய சிவபெருமானது இடம், ஒலிக்கும் நவமணிகளையும் சந்தன மரங்களையும் கொண்டு விரைந்து வரும் ஆற்றின் நீர் நிறையும், திருவிடைவாய் என்பர்.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 4

கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
பாசத் தொடும்வீ ழவுதைத் தவர்பற்றாம்
வாசக் கதிர்ச்சா லிவெண்சா மரையேபோல்
வீசக் களியன் னமல்கும் விடைவாயே. 

பொழிப்புரை :

கண்டார் கண்கூசுமாறு தழல் போல் விழித்துவந்த கூற்றுவனை, பாசக் கயிற்றோடும் உதைத்த சிவபெருமானது இடம், மணம் பொருந்திய கதிர்களை உடைய நெற்பயிர் வெண்சாமரை போலவீச, அன்னம் மகிழ்வோடு உறையும் திருவிடைவாய் என்பர்.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 5

திரியும் புரமூன் றையுஞ்செந் தழலுண்ண
வெரியம் பெய்தகுன் றவில்லி யிடமென்பர்
கிரியுந் தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே. 

பொழிப்புரை :

வானகத்தே திரிந்த திரிபுரங்கள் செந்தழலுண்ணுமாறு அம்பெய்த, குன்றவில்லியாகிய சிவபெருமானது இடம், மலை போன்ற மாளிகைகளின் சூளிகைகளில் கட்டப்பெற்று விரிந்தசையும் கொடிகள் வானவரை அழைப்பது போலசையும் திருவிடைவாய் என்பர்.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 6

கிள்ளை மொழியா ளையிகழ்ந் தவன்முத்தீத்
தள்ளித் தலைதக் கனைக்கொண் டவர்சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே. 

பொழிப்புரை :

சிவபெருமானை விலக்கி, பார்வதிதேவியை இகழ்ந்த, தக்கனது தலையைக் கொய்து, பின் அருள் செய்த பெருமானது இடம், வள்ளிக் கொடி போன்ற இடையையும், நெருங்கிய தனபாரங்களையும், சிவந்த வாயையும், வெள்ளிய பற்களையும் உடைய, மகளிர் நடஞ்செய்யும், திருவிடைவாய் என்பர்.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 7

பாதத் தொலிபா ரிடம்பாட நடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே. 

பொழிப்புரை :

திருவடிப்புகழைப் பூதகணங்கள் பாட, தான் நடனம் செய்யும் ஒளிவடிவாய நாத தத்துவத்தினிடமாகத் திகழும் சிவபெருமானது இடம், இசைப்பாடல்களின் ஒலியும், முழவொலியும் வேதஒலியும் நிறைந்த, திருவிடைவாய் என்பர்.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 8

எண்ணா தஅரக் கனுரத் தைநெரித்துப்
பண்ணார் தருபா டலுகந் தவர்பற்றாங்
கண்ணார் விழவிற் கடிவீ திகள்தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே. 

பொழிப்புரை :

தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல் கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும் திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும் சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 9

புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தே டும்ஒரு வர்க்கிடமாந்
தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண் டுவண்டார் விடைவாயே. 

பொழிப்புரை :

திருமால் பிரமன் ஆகியோர், அடியையும் முடியையும் நிலத்திலும் வானத்திலும் சென்று தேடுமாறு, உயர்ந்து நின்ற ஒப்பற்ற சிவபெருமானுக்குரிய இடம், தெளிந்த நீரோடைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களில் உள்ள தேனை, வாய்திறந்து உண்டு வண்டுகள் பாடும் திருவிடைவாய் என்பர்.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 10

உடைஏ துமிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வே வமூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே. 

பொழிப்புரை :

ஆடையின்றியும் துவராடை உடுத்தும் திரியும் சமண புத்தர்களால் அறிய முடியாத, மேலான சைவநெறிக்குரிய அப்பெருமான் விரும்பி உறையும் இடம், வானில் இயங்கிய திரிபுரங்களை அழித்து அவற்றின் தலைவர்களாய மூன்று அசுரர்களுக்கு அருள் செய்த விடைக் கொடியுடையவனாகிய சிவபெருமானது அழகிய திருவிடைவாய் என்பர்.

குறிப்புரை :

*******

பண் :

பாடல் எண் : 11

ஆறும் மதியும் பொதிவே ணியானூரா
மாறில் பெருஞ்செல் வம்மலி விடைவாயை
நாறும் பொழிற்கா ழியர்ஞா னசம்பந்தன்
கூறுந் தமிழ்வல் லவர்குற் றமற்றோரே. 

பொழிப்புரை :

கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடிய சடை முடியை உடைய சிவபெருமானது ஊராகிய செல்வம் நிறைந்த திரு விடைவாயை, பொழில் சூழ்ந்த காழியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்தமிழ் மாலையை ஓதி வழிபட வல்லவர் குற்றமற்றவராவர்.
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் முற்றிற்று.

குறிப்புரை :

*******
சிற்பி