திருப்புகலி


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

இயலிசை எனும்பொரு ளின்திறமாம்
புயல்அன மிடறுடைப் புண்ணியனே
கயல்அன வரிநெடுங் கண்ணியொடும்
அயல்உல கடிதொழ அமர்ந்தவனே

கலன்ஆவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலன்நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே.

பொழிப்புரை :

இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் இவற்றில் கூறப்படும் பொருளின் பயனாக விளங்குகின்ற , கார்மேகம் போன்ற கருநிறக் கண்டத்தையுடைய புண்ணிய மூர்த்தியே ! கயல்மீன் போன்ற நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு எல்லா உலகங்களும் தொழும்படி வீற்றிருப்பவனே ! உனக்கு அணிகலனாக அல்லது உண் கலனாக விளங்குவது மண்டையோடே ஆகும் . நல்ல மணமுடைய பூஞ்சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வீற்றிருந்து இந்நில வுலகத்தோர் நாடோறும் இன்புறும்படி நிறைந்த அபர ஞான , பர ஞானங்களை அடியேனுக்கு நீ அருளிச் செய்தாய் .

குறிப்புரை :

இயல் இசை எனும் பொருளின் திறமாம் புண்ணியனே - இயற்றமிழ் இசைத்தமிழ் ( நாடகத்தமிழ் ) என்னும் இவற்றில் கூறும் பொருளின் பயனாகிய புண்ணிய மூர்த்தியே . புயல் அனமிடறு உடைப் புண்ணியனே - முகில்போன்ற கரிய கழுத்தை உடைய புண்ணிய மூர்த்தியே . கலன் ஆவது வெண்டலை - உமக்கு அணிகலமாவது நகு வெள்தலையாம் . அத்தகைய அடிகளீரே ! நிலன் நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே - நில உலகத்தில் உள்ளார் நாடோறும் இன்பமடையும்படி நிறைந்த அபரஞான பரஞானங்களை அடியே னுக்கு அருளிச் செய்தவராவீர் . இயல் இசை எனவே உபலக்கணத்தால் நாடகத் தமிழும் கொள்ளப் படும் . ` கற்றல் கேட்டல் உடையார் ` என்புழிப்போல முத்தமிழ் நூல்களை யறிவதின் பயன் - சிவனே பதியென்றுணர்ந்து வீடுபேறு எய்தலாம் . அல்லாத வழி அந்நூல்களை யறிவதாற் பயன் இல்லை யென்பது கருத்து . இதனை ` மந்திபோல் திரிந்து ஆரியத் தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர் ` எனப் பிறிதோரிடத்து அருளிச் செய்தலையும் காண்க . கலனாவது வெள்தலை யென்பதற்கு உண் கலமாவது பிரமகபாலம் என உரைக்கினும் அமையும் . ` அமர்ந்தவனே ` விளி . அமர்ந்தவனே நிறைமதியருளினனே - அமர்ந்தவராகிய நீரே எனக்கு நிறைமதி யருளினீராவீர் . இடவழுவமைதி ; இவ்வாறு கூறுவதே பின்வரும் பாசுரங்களுக்கு ஒப்பக் கூறுவதாகும் . திருஞானசம்பந்தர் பெற்ற ஞானம் உலகம் இன்புறற் பயனை விளைத்தது . மதி - இங்கு அறிவின்மேல் நின்றது . இனி , அமர்ந்தவனே , நிறைமதி யருளினவனே என்பதற்கு அமர்ந்தவன் எவனோ அவனே எனக்கு நிறைமதி யருளினவனுமாவான் என்றுரைத்தலுமொன்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்றோல்
அலைவரு மதகரி யுரித்தவனே

இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.

பொழிப்புரை :

ஆரவாரித்துவரும் மதயானையின் வலிய தோலினை மலைமகளான உமாதேவி அஞ்சும்படி உரித்தவனே ! அழகிய சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வானவர்களும் வந்து உன்திருவடிகளைத் தொழும் பொருட்டு உமாதேவியோடு நிலையாக வீற்றிருக்கின்றாய் . எங்களால் நீக்குவதற்கரிய நிலைத்த துன்பங்களை நீ நீக்கும் வண்ணம் இலைகளையும் , மலர்களையும் கொண்டு உன் திருவடிகளை அர்ச்சித்து நாங்கள் வழிபடுவோம் .

குறிப்புரை :

இப்பாட்டிற்கு , மதகரியுரித்தவனே ... புகலி மன்னினை நிலையுறும் இடர் நிலையாதவண்ணம் இலையுறுமலர்கள் கொண்டு ( நின் ) உயர் திருவடியிணையை ஏத்துதும் யாம் - எனப் பொருள் கோள் கொள்க . நிலையுறும் இடர் - ( நீக்க முடியாமையால் ) நிலைத் துள்ள துன்பங்கள் . நிலையாத வண்ணம் - நிலையாதபடி . இலையுறும் மலர்கள்கொண்டு - பத்திர புட்பங்களால் . ஏத்துதும் - ( துதித்து ) வழி படுவோம் . மலையினில் அரிவையை வெருவ - இமயமலையில் ( அவ தரித்த ) உமாதேவியாரை அஞ்சுவிக்க . வல்தோல் - வலியதோலை யுடைய . மதகரி - மதங்கொண்ட யானை . வெருவ என்ற சொல்லில் பிறவினை விகுதி தொக்கது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே

நினையேஅடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருள்எமக்கே.

பொழிப்புரை :

ஒளி விளங்குகின்ற வளரும் தன்மையுடைய வெண்பிறையைச் சடைமுடியில் சூடிய நின்மலனே ! அரிய வேதங் களை இசையிலக்கண முறைப்படி , பாடியருளினாய் ! முனிவரும் அவர்களின் பத்தினிகளும் காணும்படி அரிய தாருகாவனத்தில் திருநடனம் ஆடினாய் ! மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தாய் ! முழுமுதற்கடவுளான உன்னை அடியார்கள் தொழும்படி நீண்டமதில்கள் சூழ்ந்த திருப்புகலிநகரில் வீற்றிருந்து அருளினாய் ! எங்கட்குத் தவநெறியினை அருள்வாயாக ! சுந்தரர் இறைவனிடம் ` தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே ` என்று வேண்டியது இங்கு நினைவு கூரத்தக்கது .

குறிப்புரை :

வரன்முறையால் - இசையிலக்கண முறைப்படி ; பாடினை அருமறை - அரிய வேதங்களைப் பாடியருளினீர் . அருவனத் தில் - அரியதாருகா வனத்தில் . காண - ( முனிவர் மகளிர் ) காணும்படி , ஆடினை - ஆடியருளினீர் . பெருமான் தானே வலியச்சென்று அருள்புரிந்த இடமாதலின் அதன் அருமைப்பாடு தோன்ற அருவனம் என்றார் . காண என்ற வினைக்கு வினை முதல் வருவித்து உரைக்கப் பட்டது . தக்கன் சாபத்தினால் உடல் குறைந்து அருகி இருந்த பிறை . இறைவனைச் சரணம் புகுந்து வளருந்தன்மை பெற்று அழியா திருந்ததனால் நீடு வெண்பிறை யெனப்பட்டது . நின்மலன் - இயல் பாகவே பாசங்களின் நீங்கியவன் - தன்னைச்சார்ந்த ஆன்மாக்களின் மலத்தை யொழிப்பவனென்றுமாம் . புகலிந்நகர் ; இசையினிமைப் பொருட்டு நகரம் மிக்கது . இடம்மேவினை - இடமாக விரும்பி யருளினீர் , நின் மலனே பாடினை , ஆடினை , சாடினை , மேவினை எமக்கு அருள் எனக் கூட்டுக . ஆடினை முதல் நான்கும் முன்னிலை வினையாலணையும் பெயர் ; அண்மை விளியாய் நின்றன . நினையே அடியார் தொழ என்ற தொடரில் , ஏகாரம் பிரிநிலை ` மற்றத் தெய்வங்கள் வேதனைப்படும் , இறக்கும் , பிறக்கும் , வினையும் செய்யும் , ஆதலால் இவை இலாதான் அறிந்தருள் செய்வனன்றே ` என்ற பிரமாணத்தால் . முன்னிலை வினைஎனலே நன்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே

முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே.

பொழிப்புரை :

ஒளிவிளங்கும் மழுப்படையை ஏந்தியவனே ! யானையின் தோலை நெருப்புப்போல் விளங்குகின்ற உனது சிவந்த திருமேனியில் அணிந்தவனே ! திருவடியில் விளங்கும் வீரக் கழல் களும் , சிலம்பும் ஒலிக்க , நல்ல முழவு முழங்கத் திருநடனம் புரிபவனே ! சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவனே ! அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புகலியில் அடியார்கள் உன்னைப் புகழ்ந்து வணங்கும் படி வீற்றிருந்தருளினாய் .

குறிப்புரை :

நிழல் திகழ் மழுவினை - ஒளிவிளங்குகின்ற மழுப் படை உடையீர் ! அழல் திகழ்மேனி - அக்கினியாய் விளங்குகின்ற உடம்பு . கழல்திகழ் , சிலம்பு ஒலி அலம்ப ... அரும் நடம் முயற் றினனே - வீரகண்டையின் ஒலியும் , விளங்குகின்ற சிலம்பின் ஒலியும் ( கலந்து ) ஆரவாரிக்க அரிய நடனம் புரிந்தருளிய பெருமானே . முருகு அமர்பொழில் - வாசனை பொருந்திய சோலை . அடியார் அவர் ஏத்துற - ` அவர் ` பகுதிப்பொருள் விகுதி . வணங்க உறு துணையாய் இருந்தவள் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

கருமையின் ஒளிர்கடல் நஞ்சம்உண்ட
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பரி தாயவனே

அரவேரிடை யாளொடும் அலைகடன் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே.

பொழிப்புரை :

பாற்கடலில் தோன்றிய கருநிற நஞ்சை உண்டு , உன் முழுமுதற் பண்பினை விளங்குமாறு செய்து உலகுயிர்களைப் பாதுகாத்தருளிய உன்னுடைய பெருமையை மண்ணுலகத்தோர் போற்றலாமே தவிர , மற்ற எவ்வித அளவைகளாலும் ஆராய்வதற்கு அரியவனாய் உள்ளவனே ! அரவம் அன்ன இடையுடைய உமாதேவி யோடு , அலைகளையுடைய கடல்வளம் பொருந்திய திருப்புகலி யிலே , இப்பூவுலகில் நாள்தோறும் அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி நீ வீற்றிருந் தருளுகின்றாய் .

குறிப்புரை :

கருமையின் ஒளிர் கடல் நஞ்சும் - கருமையினால் ஒளிர்கின்ற நஞ்சும் , கடலில் உண்டாகியநஞ்சும் . நஞ்சம் உண்ட உரிமையின் உலகுக்கு உயிர் அளித்து நின்றனன் . பெருமை ... ஆயவனே - நிலத்தவர் , பூமியிலுள்ளவர்கள் உன் பெருமையைப் பருப்பொருட்டாக ஒருவாறு பேசினாற் பேசலாமே தவிர , அருமை யான எவ்வித ஆராய்ச்சித் திறத்தினாலும் அளந்தறியப்படாதவனே . அருமையில் - சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது . அரவு ஏர் இடையாள் - பாம்புபோன்ற இடையையுடைய உமாதேவியார் . கடல்மலிபுகலி - கடல்வளம் நாடோறும் மிகுந்த திருப்புகலியின் கண் . புவிமிசைப் பொருள் சேர்தரப் பொலிந்தவனே - இப் பூமியின் கண் நாள்தோறும் அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி பொலிந்தவனே .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

அடையரி மாவொடு வேங்கையின்றோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே

விகிர்தாபரமா நின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.

பொழிப்புரை :

சிங்கத்தின் தோலைப் போர்த்து , புலியின் தோலையும் உடம்பில் பொருந்துமாறு இடையில் அணிந்துள்ளவனே ! படைக்கருவிகளைக் கொண்ட நீண்ட மதில்களையுடைய திரிபுரத்தின் வலிமையை அழித்தவனே ! இடபக் கொடியுடைய வேத நாயகனே ! விகிர்தனே ! எப்பொருட்கும் மேலானவனே ! விண்ணோர்களும் தொழத் திருப்புகலியிலே உமாதேவியோடு வீற்றிருந்து உன் திரு வடிகளை வணங்கும் அனைவர்க்கும் அருள்புரிகின்றாய் .

குறிப்புரை :

அரிமாவோடு - சிங்கத்தின் தோலோடு , வேங்கையின் தோல் புடைபட - பக்கம்பொருந்தும்படி , அரைமிசைப் புனைந்த வனே - இடுப்பில் அணிந்தருளியவரே . படையுடை நெடுமதில் - சேனைகளையுடைய நெடிய திரிபுரம் . பரிசு அழித்த - திறன்களைத் தொலைத்த . விகிர்தா - வேறுபட்டவனே . பரமா - மேலானவனே . நின்னை ... தாள் பணிந்தவர் தமக்கே - நும்மை விண்ணவர்தொழத் தாள் பணிந்தவர்களாகிய அவர்களுக்குப் புகலியின்கண் அம்பிகை சமேதராய்க் காட்சி கொடுக்கத்தக்கவராகி யிருப்பீர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகல்அல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே

புண்ணியா புனிதா புகர்ஏற்றினை புகலிந்நகர்
நண்ணினாய் கழல்ஏத்திட நண்ணகி லாவினையே.

பொழிப்புரை :

அடியவர்கள் தொழுதெழ , தேவர்கள் புகழ்ந்து வணங்க , அவர்களின் துன்பம்தரும் கொடியவினைகளைத் தீர்த் தருளும் எம் இறைவனே ! உடுக்கை போன்ற இடையையும் , அகன்ற அல்குலையும் , தூய மொழிகளையுமுடைய உமாதேவியைத் திருநீறு அணிந்த தன் திருமார்பில் தழுவியவனே ! புண்ணிய மூர்த்தியே ! புனிதனே ! இடபவாகனனே ! திருப்புகலிநகரில் வீற்றிருக்கும் பெரு மானே ! உன் திருவடிகளை வணங்கிப் போற்றுபவர்களை வினைகள் வந்தடையா .

குறிப்புரை :

செடிய - துன்பம் தருவனவாகிய ; வல்வினை - உயிர்க்கொலை . செய்ந்நன்றி மறத்தல் , சைவநிந்தனை முதலிய பெரும் பாவங்கள் . துடியிடை ... தூமொழி அன்மொழித்தொகை ; பன்மொழித் தொடர் . தூய்மையான மொழியையுடைய அம்பிகை . வினை நண்ணகிலா - கன்மங்கள் அடையமாட்டா . ஆகவே இருவினை யொப்பது , மலபரிபாகம் , சத்திநிபாதம் முறையே எய்திச் சிவப்பேறு அடைவர் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

இரவொடு பகலதாம் எம்மான்உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே

அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.

பொழிப்புரை :

இரவு , பகல் போன்ற கால தத்துவத்தை இயக்கும் எம்பெருமானே ! வழி வழி அடிமையாக வந்த நான் உன்னை நினைந்து வணங்கிப் போற்றுதலில் தவறேன் . குராமலர்களையும் , விரிந்த நறுமணமுடைய கொன்றை மலர்களையும் , பாம்பையும் சடைமுடியில் அணிந்து , எம்மை ஆண்டருளும் பெருமானே ! ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களையும் அடர்த்த நீ அன்னம் போன்ற மென்னடையுடைய உமாதேவியோடு திருப்புகலியில் எழுந்தருளியுள்ளாய் .

குறிப்புரை :

இரவொடுபகல் அது ஆம் எம்மான் . குரா - குராமலரும் , விரிநறும் கொன்றை - விரிந்த நறுமணமுடைய கொன்றை மலரும் . இனம் ஆர்தருதோள் - கூட்டமாகிய இருபது தோள்களையும் . குரா - குர என நின்றது . நடையில் அ ( ன் ) னம் மெல் நடையாளொடும் புகலியுள் இருந்தனையே என முடிக்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

உருகிட உவகைதந் துடலினுள்ளால்
பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனும் பூவுளானும்
பெருகிடும் அருள்எனப் பிறங்கெரியாய்

உயர்ந்தாய்இனி நீஎனை ஒண்மலரடி யிணைக்கீழ்
வயந்தாங் குறநல் கிடுமதிற் புகலிமனே.

பொழிப்புரை :

உள்ளமும் , உடலும் உருக உன்னைப் போற்றும் அடியவர்கட்குச் சிவானந்தம் அளிக்கும் அமுதம் போன்ற இனிமை வாய்ந்தவனே ! கடல் போன்ற நீலநிறமுடைய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் அடிமுடி காணாதபடி நெருப்பு மலை யாய் , உன்னுடைய பெருகும் அருளென உயர்ந்து நின்றாய் . மதில் களையுடைய திருப்புகலியில் வீற்றிருக்கும் இறைவனே ! நீ என்னை உன் ஒளி பொருந்திய திருவடியிணைக்கீழ் விரும்பி வீற்றிருக்கும்படி அருள்புரிவாயாக .

குறிப்புரை :

உருகிட உவகை தந்து உடலின் உள்ளால் பருகிடும் அமுது அ ( ன் ) ன பண்பினனே - என்பதனை ` அனைத்து எலும்பு உள்நெக ஆநந்தத் தேன்சொரியும் குனிப்புடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ ` என்ற திருவாசகத்தோடு ஒப்பிடுக . கடைசி இரண்டு அடிக்கும் , திருமாலும் பிரமனும் ( தம்முட் கொண்ட ) பெருகிய செருக்கு எவ்வளவு பெரியதாய் உயர்ந்திருந்ததோ அவ்வளவு பெரியதாகிய ஒளிப்பிழம்பாய் உயர்ந்தருளியவரே ! வயந்து - விரும்பி . மலரடியிணைக்கீழ் ஆங்குற . நல்கிடு - அருள்புரிவீராக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கையினில் உண்பவர் கணிகைநோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள்எனாத
மெய்யவர் அடிதொழ விரும்பினனே

வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.

பொழிப்புரை :

கையில் உணவேற்று உண்ணும் சமணர்களும் , கணபங்கவாதம் செய்யும் புத்தர்களும் தவமல்லாததைச் செய்யும் அற்பமதியினர் . உண்மைப்பொருளாம் இறைவனை உணராமல் வெறும் உலகியலறங்களை மட்டுமே பேசுகின்ற அவர்களுடைய உரைகளைப் பொருளெனக் கொள்ளாது , மெய்ப்பொருளாம் சிவனையுணர்ந்த ஞானிகள் வந்து திருவடிகளைத் தொழ , விரும்பி அருள் புரிபவனே ! வெண்ணிற எருதினை வாகனமாகக் கொண்டாய் . விண்ணவர்களும் தொழ , திருப்புகலியில் உயர்ந்த அழகிய பெருங் கோயிலினுள் உமாதேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கின்றாய் .

குறிப்புரை :

கணிகை நோன்பர் - போலியான நோன்பு நோற்பவர் . செய்வன தவமலாச் செதுமதியர் - செய்வன அனைத்தும் தவம் அல்லாததாகப் பெற்ற அற்ப மதியையுடையவர்கள் ; பொருள் என்னாத - உண்மையென்று கொள்ளாத ; ` இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் ` என்ற திருக்குறளில் பொருள் - உண்மை யென்னும் பொருளில் வருதல் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவர் அடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்

நடலையவை இன்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.

பொழிப்புரை :

சிவபுண்ணியர்கள் வணங்குகின்ற திருப்புகலிப் பதியில் , விண்ணவர்களும் தன் திருவடிகளைத் தொழும்படி விளங்கும் சிவபெருமானை , மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்று படப் போற்றிய திருஞானசம்பந்தனின் அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள் எவ்வித இடர்களுமின்றித் தவநெறியில் நின்று , பிறவித் துன்பத்தினின்றும் நீங்கிச் சிவனுலகம் அடைவர் .

குறிப்புரை :

நடலையவை - பிறவித் துன்பங்கள் ( அவை - பகுதிப் பொருள் விகுதி ) மேல் வைப்பு ஆகிய இரண்டிற்கும் - அருந் தமிழ் பத்தும் வல்லார்பக்குவராயின் சிவனுலகம் நண்ணுவர் ; அபக்கு வராயின் தவநெறி யெய்துவர் . அதன் பயனாகச் சிவனுலகமும் நண்ணுவர் என அடிமாற்றியுரைப்பினுமாம் .
சிற்பி