திருஆலவாய்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவ னென்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

மான்போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே ! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே ! கேள் . ` பால்வடியும் நல்ல வாயையுடைய பாலன் ` என்று நீ இரக்கமடைய வேண்டா . திருஆலவாயரன் துணைநிற்பதால் ஆனை மலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும் , பல துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த இச்சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன் .

குறிப்புரை :

மானின் நேர்விழி - மருண்டு பார்க்குந்தன்மையால் மாதர்விழிக்கு மானின் விழி உவமை . மாதராய் - மாதராள் என்பதன் விளி . பானல்வாய் - ( பால் + நல் + வாய் - ) பால்வடியும் நல்ல வாயையுடைய . ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ . பரிவு - இரக்கம் . எய்திடேல் - அடையாதே . பல அல்லல் சேர் - பல துன்பங்களையும் பிறர்க்கு விளைவிக்கின்ற . பிற வினைதொக்கது . திருவாலவாய் அரன் துணை நிற்கையினால் எளியேன் அலேன் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

வேத ஆகமங்களையும் , மந்திரங்களையும் , நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய யானைபோல் திரிந்து நின்றுண்ணும் அழுக்கு மேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன் , திருஆலவாய் அரன்துணை நிற்பதால் .

குறிப்புரை :

பங்கமா ( க ) ( பக்கமாக ) புரிந்து எனக் கூட்டுக . சங்கதம் - சமஸ்கிருதம் என்பதன் திரிபு . பாகதம் - ப்ராகிருதம் என்பதன் சிதைவு . ( வடமொழி ) வடமொழியின் திரிபு ஆகியமொழி இரண்டாம் . எப்பொழுது வந்தாய் என்ற தொடரை எப்போவந்தே என்று பேசுவது போன்றது . பாகதத்தொடு இரைத்துரைத்த - பிராகிருத மொழியினால் ஆரவாரித்துச் சொல்லிய . சனங்கள் - வைதீகமாந்தர் . வெட்குறு - வெட்கமடையத்தக்க . பங்கம் ஆ - பங்கப்படவும் . வெட்குறுபக்கமாப் புரிந்து - பாகதத்தோடு இரைத்துரைத்தல் முதலிய செயல்களைச் செய்து . மா - பெரிய . கதம் - கோபத்தை உடைய . கரிபோல் , திரிந்து - செருக்குற்று . மாசு சேர் ஆகதர் - ஆர்கதர் என்பதன் திரிபு . நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்தலால் மாசு சேர் என்றார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

அத்தகுபொரு ளுண்டுமில்லையு மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி லழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது , இல்லை என்றும் சொல்ல முடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும் , ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று , எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர் . பார்ப்பவர் வெட்கப் படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திரவார்த்தை பேசுபவர்கட்கு , நான் ஆலவாயரன் துணைநிற்றலால் எளியேன் அல்லேன் .

குறிப்புரை :

அத்தகு பொருள் - கடவுள் என்ற பொருள் உண்டும் ஆம் இல்லையும் ஆம் . உண்டென்றும் சொல்லமுடியாது . இல்லையென்றும் சொல்லமுடியாது என்னும் அத்திநாத்தி , என்பது அவர்கள் மதக்கொள்கை . ஏத்தும் முன்பின் முரண்படச் சொல்லி , வாதில் அழிந்து தோற்றுக் கவிப்பெயரெச்சத்தின் மடிந்து . ஒடிந்து நக்கம் - நக்நம் என்ற வடசொல்லின் திரிபு . சித்திரர்க்கு - அழகென்று கொள்பவர்களுக்கு ( எளியேன் ஆகேன் .)

பண் :கொல்லி

பாடல் எண் : 4

சந்துசேனனு மிந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனு முதலதாகிய பெயர்கொளா
மந்திபோற்றிரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பய னறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

சந்துசேனன் , இந்து சேனன் , தருமசேனன் , மாசுடைய கந்தசேனன் , கனகசேனன் முதலான பெயர்களைக் கொண்டு மந்திபோல் திரிந்து , வடமொழி , தென்மொழிகளைக் கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள் , சைவமே சீரிய சமயநெறி என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன் . திருவாலவாயரன் என்னுள்ளிருந்து அருள்புரிவார் .

குறிப்புரை :

மந்தி - பெண் குரங்கு . ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் யாதெனின் , சிவனே முழுமுதற்கடவுள் எனவும் , சைவநெறியே சீரிய நெறியெனவும் ஆற்றல் அறியாததால் அகக் கண் இழந்தவர் . அந்தகர் - குருடர் . நெறி தெரியாது தியங்குதல் அவ்வழிச்சென்று இடர்ப்படல் உடைமை , குருடர் செயல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கூட்டினார்கிளி யின்விருத்த முரைத்ததோரொலி யின்றொழிற்
பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவரு மாடெலாங்கவர் கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு ஏற்ப , கிளிவிருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை மெய்யென்று சொல்லி ஏமாற்றுகிறவர்கட்கும் , பல தருமங்களைச் செய்தவர்களாக வெளியில் காட்டி அவற்றால் வரும் செல்வங்களைக்கவரும் கீழோர் கட்கும் இரக்கமில்லாத குறும்பர்கட்கும் யான் எளியேனல்லேன் . திருவாலவாயரன் என்றும் நின்று அருள்புரிவார் .

குறிப்புரை :

கிளிவிருத்தம் , எலி விருத்தம் முதலிய சுவடிகளை . மெய் சொலி - மெய்யென்று சொல்லி . பக்கம் - ஓரமான வழியே செல்லுகின்ற எக்கர் பல அறம் காட்டி வரும் மாடு எலாம் கவர்கையர் - பல தருமங்களும் செய்தவர்களாக வெளிக்குக்காட்டி அதனால் வரும்நிரைப் பொருள்களை எல்லாம் கவர்கின்றவர் . கசிவு - மன இரக்கம் . ஒன்று இலா சிறிதும் இல்லாத . சேட்டை - மூதேவி , குறும்பு . எக்கர் தங்களை . கையரை என்பதில் உள்ள இரண்டனுருபுகள் நான்கன் பொருளில் வந்ததனால் வேற்றுமை மயக்கம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந் திவணநந்தியு மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ மேதவம்புரி வோமெனும்
சினகருக்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

கனகநந்தி , புட்பநந்தி , பவணநந்தி , குமண மாசுனகநந்தி , குனகநந்தி , திவணநந்தி என எண்ணற்ற பலவகை நந்திகள் என்னும் பெயர் கொண்டவர்களாய் மது உண்பதை ஒழித்து , அவமாகிய நிலையைத் தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன் , திருவாலவாயரன் என்னுள் நிற்பதால் .

குறிப்புரை :

மொழி - நமது உபதேச மொழிகளைக் கொள்ளாத . சினகர் - ஜினனே கடவுளென்னும் கொள்கையுடைய .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பந்தணம்மவை யொன்றிலம்பரி வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயரனிற்கவே.

பொழிப்புரை :

சுற்றமும் , பற்றும் இல்லை என்று கூறியும் , இரகசியமான வாசகங்களைப் பேசியும் , குற்றமற்ற ஒழுங்கு நெறியின்றியும் , நியாயமற்ற நெறிநின்று , ஆருகதசமயத்தின்கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் சமணர்கட்கும் , புத்த சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் புத்தர்கட்கும் , அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும் ஆலவாயரன் என்றும் துணை நிற்றலால் , யான் எளியவன் அல்லேன் .

குறிப்புரை :

பந்தணம் - பந்தணைகள் . ஒன்று இலம் - சிறிதும் இல்லோம் , பரிவு - ஆசை - வாசகமந்தணம் . இரகசியமான வாசகங்களை . சீர்மை - ஒழுங்கு . ( அநாயமே . அந்தணம் ). அருகந்தணம் அது - ஆருகத சமயத்தின் கொள்கை அத்தகையது . புத்தனம் அது - பௌத்த சமயத்தின் கொள்கை அத்தகையது . சித்தனம் - சித்தர் தன்மை . ` அருக்கரிலிருத்தி பெற்றோர் ` என்பது சூடாமணி நிகண்டு .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மேலெனக்கெதி ரில்லையென்ற வரக்கனார் மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி நடுக்கியேபிறர் பின்செலும்
சீலிகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

தனக்கு மேலானவரும் , எதிரானவரும் இல்லை என்று கருதிய இராவணனது செருக்கை அழித்த , தீயைப்போன்று செந்நிற மேனியுடைய சிவபெருமானைப் பணிந்து , ஏத்தாது , பொய்த்தவம் பூண்டு , குண்டிகை , மயிற்பீலி ஆகியவற்றைக் கொண்டு , பாயை அக்குளில் இடுக்கி நடந்து செல்லுங்கால் சிற்றுயிர்க்கு ஊறுநேருமோ என அஞ்சி நடுக்கத்துடன் ஒருவர்பின் ஒருவராய்ச் செல்வதைச் சீலம் எனக்கொள்ளும் சமணர்கட்கு , யான் , திருவாலவாயரன் என்னுள்துணை நிற்றலால் எளியவனல்லேன் .

குறிப்புரை :

அரக்கனார் , இகழ்ச்சிக் குறிப்பு . தீப்போலி - தீப் போன்றவன் . அழலுருவன் . நிறத்தில் அழல்போலினும் அருளில் நீர் போல்பவன் என்பார் தீ என்னாது தீப்போலி என்றார் . பணியக்கிலாது . ககரம் விரித்தல் விகாரம் . குண்டிகை ...... சீலிகள் - சமணர் இயல்பைக் குறித்தது . சீலம் - ஒழுக்கம் ; சீலி - ஒழுக்க முடையோன் . வழியில் எறும்பு முதலிய சிற்றுயிர்கட்கும் ஊறுபடாது நடப்பார் போன்று மயில் ( பீலி ) தோகையால் நிலம் கூட்டி மிதித்துச் செல்வர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பூமகற்கு மரிக்குமோர்வரு புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போறலை யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் அறியவொண்ணாத புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது , இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக் களைந்து , பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி , பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன் , திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால் .

குறிப்புரை :

பூமகன் - பிரமன் . ஓர்வு அரு - நினைத்தற்கும் அரிய. சாம் அவத்தையினார் - இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்யும் நிலையுடையோர் . அவத்தை - நிலைமை . வேம் - வருத்துகின்ற , பிறவினை விகுதி குன்றி நின்றது . மெய் - உடம்பில் . பொடி அட்டி - நீராடாமையால் புழுதி படிந்து வாய் சகதிக்கு நிகர் ஆவார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

தங்களுக்குமச் சாக்கியர்க்குந் தரிப்பொணாதநற் சேவடி
எங்கணாயக னேத்தொழிந்திடுக் கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.

பொழிப்புரை :

சமணர்கட்கும் , புத்தர்கட்கும் அரியவராகிய , நல்ல சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய சிவ பெருமானை வழிபடுதலைவிட்டு , பொய்த்தவம் பூண்டு , நல்ல நூல்கள் கூறும் வழியும் நில்லாது அறிஞர்களைப் பொல்லாப் பழிச்சொல் பேசுபவர்கட்கு , யான் திருவாலவாயரன் என்னுள் நிற்பதால் எளியேன் அல்லேன் .

குறிப்புரை :

ஏத்து ஒழிந்து - ஏத்துதலை நீங்கி . ஏத்தாமல் , இடுக்கு மடுத்துத் துன்புறுத்துதலையே பொருந்தி . வாய்த்தவம் .... பழிக்கும் - நூல் வழியில்லாமலே ஒரு பொய்த்தவம் நாட்டி அறிஞரைப் பழிக்கின்ற . புலம் - அறிவு . புலவோர் - அறிஞர் , அங்கதர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

எக்கராமமண் கையருக்கெளி யேனலேன்றிரு வாலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங் கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ் நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்து முரைப்பவர்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில் இருத்தலால் , செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று பாண்டிய மன்னன் முன்னிலையில் திருப்புகலியில் அவதரித்த தமிழ்நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

சொக்கன் - கண்டார் மயங்கி விழும்படியான பேரழகுடையவன் .
சிற்பி