பண் :கொல்லி

பாடல் எண் : 11

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :கொல்லி

பாடல் எண் : 1

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பொழிப்புரை :

கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம்.

குறிப்புரை :

திருக்கெடிலம் என்னும் ஆற்றிற்கு வடபால் விளங்கும் திருவதிகையில் உள்ள திருவீரட்டானம் எனப் பெயரிய மாநகராகிய திருக்கோயிலுள் எழுந்தருளிய சிவபெருமானே, அடியேனுக்கு மருளும் பிணி மாயை ஒரு கூற்று ஆயினவாறு வந்து வருத்தும் சூலை நோயை விலக்கமாட்டீர். (இந்நோயை அடைதற்கு அடியாகக்) கொடுமை பல செய்தன (உளவோ எனின், அவற்றை) நான் அறியேன். விடையானே. இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாமல் (நின்) அடி (மலர்)க்கே வணங்குவன். இந்நோய் என் வயிற்றின் உள்ளே அடியில் பற்றித் தன்னைத் தோற்றாமல் குடரொடு துடக்குண்டு என்னை முடக்கியிடலால், அடியேன் ஆற்றாமல் வருந்துகின்றேன். இவ்வருத்தம் அகற்றி அடியேனை ஆட்கொண்டருள்வாய்./n திருவதிகை மாநகர்க் கடவுளை மருணீக்கியார் (திருநாவுக்கரசு சுவாமிகள்) முதன் முதலில் நோக்கியபொழுதில் தம்மை அறியாதே திருவாயினின்றும் போந்த மொழியாவது, தம் உள்ளத்திற் பொருளாக இருந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்பது. அஃது அல்லாமல் வேறொன்றாயிருத்தல் பொருந்தாது. அதனால் தொடக்கத்திலே `கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்` என்று வெளியாயிற்று./n அது கேட்ட முழுமுதற் பொருள், `இக்கூற்று ஆகி வந்த நோயினை அடைந்து வருந்துமாறு பல கொடுமைகளைச் செய்தனை. அக்கொடுமைகளை அடியாகக் கொண்டே இவ்வருத்தம் உண்டாயிற்று` என்று குறித்தது./n அதுகேட்ட சுவாமிகள், `அவற்றை நான் அறியச் செய்திலேன். என்னை அறியாமல் செய்த கொடுமைகள் பல இருக்கலாம். இருப்பினும் நான் அக்கொடுமைக்கோ அவற்றின் பயனுக்கோ கொள்கலம் ஆகும் பெற்றியேன் அல்லேன். இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் (இடை விடாமல்) விடையேறி திருவடிக்கே வணங்கும் பணிசெய்து கிடப்பேன். திருவடிக்கு அடிமை பூண்ட என்னையும் அவ்வினை வருத்துதல் முறையோ? ஏற்றாய்க்கு இஃது ஏலாது (அறத்தின் வடிவமே ஊர்தியாம் ஏறு)` என்றார்./n `அச்சோ! கெடிலத்தின் வடபால் விளங்கும் திருவதிகையில் வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே! சூலை நோய் தன்னைப் புலப்படுத்தாமல் என் வயிற்றின் உள்ளே அடியிலே குடலொடு துடக்குற்று, முடக்கியிடுதலால் உண்டாக்கும் வருத்தத்தினைப் பொறுக்கும் வலியில்லேன். அறிந்து செய்த வினையின் பயனாயினும் அறியாது செய்த வினையின் பயனாயினும், இத் துயரம் தீர்த்து அடியேனைக் காத்தருள்வாய்` என்றார் சுவாமிகள்./n விளக்கம்/n/n வேற்றுச் (சமண்) சமயத்தில் இருந்த காலம் முழுதும் பரம சிவனைத் தொழாதாராகியும், இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், கூறுதும்./n இது திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு மட்டும் அன்று. புது நெறியிற் புக்க யாவர்க்கும் தொன்னெறியிற் பற்று நீங்காது; புது நெறியில் ஒரு துணிவுண்டாகாது; பழநெறியிலிருந்தால் இப்பிறவியிலேயே வீடு பெறலாம் என்ற எண்ணம் அகலாது. இஃது உள்ளத்தியற்கை. சைவ சித்தாந்தச் செந்நெறிப்படியும் பரசிவனை மறவாமை வாய்மையாகின்றது. எவ்வாறு?/n `யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம்/n மாதேவன் அல்லால் தேவர்மற்று இல்லையே`/n என்று (தி.5 ப.100 பா.9) அவர் திருவாய் மலர்ந்தருளியதாலும் `யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` என்று அருணந்தி தேவநாயனார் அருளிய திருவாக்காலும், இராப் பகல் எல்லாம் சிவபிரானை மறவாத சீர்த்தி சுவாமிளுக்கு உண்டு என்பது உறுதியாயிற்று./n `வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்/n தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்/n சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே/n வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.`/n (தி.5 ப.90 பா.7)/n என்று அருளினார் பின்னர். சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அருளினார் முன்னர். இது முரணுவதே? இதுவும் பலர் வினாவுவதே. `பூக் கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் ... கழிவரே`,`நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் ... புண்ணியன், பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே` என்றவற்றையும் `பல் மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்` என்பது முதலியவற்றையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்குச் செவ்வன் இறை (நேர்விடை) தோன்றும்./n திருவதிகை வீரட்டானத் திறைவர் வினா:- ஏன் இங்கு வந்தாய்? என்பால் தீர்தற்கு உன்பால் உள்ள குறை என்ன?/n மருணீக்கியார்:- அதிகைக் கெடில வீரட்டானத் திறைவரே, இச்சூலை நோய் எனக்குக் கூற்று ஆன வகையை விலக்கமாட்டீர்?/n இறைவர்:- `அவர் அவர் வினைவழி அவர் அவர் அநுபவம்` உன்னை இச்சூலை நோய் பற்றி வருத்த, நீ செய்த வினைகள்தாம் காரணம். வினைப்பயனை வினை செய்தவர் அநுபவித்துத்தான் ஆதல் வேண்டும். பயன் அநுபவிக்காமல் இருக்கும் நெறியில் இறைபணி நின்று வினைசெய்திருப்பாயாயின், உன்னை அவ்வினை வருத்தாது. நீ செய்த பல கொடுமைகள் யாவை? அறிவையோ?/n மருணீக்கியார்:- கொடுஞ்செயல்களாகச் செய்தன பலவற்றை அறியேன் நான். (அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றவாறு)/n இறைவர்:- அபுத்தி பூர்வ புண்ணிய கன்மங்களைச் செய்துவரின், அத்தகைய பாவ கன்மம் விலகும். அது செய்து வருகின்றாயோ?/n மருணீக்கியார்:- ஏற்றாய்! (எருதின்மேல் ஏறிவரும்) பெருமானே! பசுபதீ! இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் அடிக்கே வணங்குவன். வணங்கி வந்தும் அபுத்தி பூர்வ பாவகன்மம் விலகி யொழியாமல் வருத்துகின்றதே!./n இறைவர்:- விலகும் வரையில் வலியைப் பொறுத்துக் கொண்டு தான் இருத்தல் வேண்டும். எவ்வாறு எங்கே உன்னை அது வருத்துகின்றது?/n மருணீக்கியார்:- எனக்கும் தோற்றாமல் என் வயிற்றின் உள்ளடியில் குடலொடு துடக்குற்று என்னை முடக்கி யிடுகின்றது. அதனால் அடியேன் வலியைப் பொறுக்கமாட்டாமல் வருந்துகின்றேன்./n இறைவர்:- நீ வருந்தினால், நான் யாது செய்வது?/n மருணீக்கியார்:- கெடில நதிக்கரையில் திருவதிகையின் மாநகரில் (பெருங்கோயிலில்) எழுந்தருளிய அம்மானே! ஆண்டீர் நீயிர். அடியேன் யான். அதனால் அடியேனைக் காத்தல் ஆண்டீர்க்குக் கடனாகும்./n எச்சம்/n/n கூற்று என்பது உடம்பும் உயிரும் வெவ்வேறு கூறாகச் செய்யுங்காரணம் பற்றிய பெயர். சூலை நோய் உடம்பினின்று உயிரை நீக்கும் அளவு வருத்துவதால் கூற்றெனப்பட்டது. சூலை கூற்று அன்று. கூற்றாயிற்று. அதனால் `ஆயினவாறு` என்றார்./n கயிலையை எடுத்தபோது நெருக்குண்ட இராவணன் அத்துன்பத்தின் நீங்கத் தக்க வழியைக் (கடவுள் இன்னிசையில் சாமகானத்தில் விருப்பன் என்று சொல்லிக்) காட்டிய பழம் பிறவி நிகழ்ச்சியே இச் சூலைக்கு ஏது என்பதை உணர்த்தக் `கூற்று ஆயினவாறு` எனறருளினார் என்பது சிலர் கருத்து. கோவை சிவக்கவிமணி சைவத் திரு. சி. கே.சுப்பிரமணிய முதலியார் பி.ஏ., அவர்களும் அதைக் குறித்திருக்கின்றார்கள். கோதாவரிக் கரையில் சமணமே உயர்ந்தது என்று சொற்போர் புரிந்த வரலாறும் அவர்களால் குறிக்கப்பட்டுளது. (தி.12. அப்பர் புராணம் 70 சி.கே.எஸ் உரை. பதிகக் குறிப்பு நோக்குக.)/n கொடுமை பல செய்தன - கொடுஞ் செயல்களாகச் செய்தன பல. நான் அறியேன் - அறிந்து செய்தேன் அல்லேன். அறியாமற் செய்தனவாயிருக்கும். அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றபடி./n கொடுமை - கொடுஞ்செயல். பண்பாகு பெயர். செய்தன - வினையாலணையும் பெயர்./n ஏற்றாய் - (ஏறு- விடை) விடையை யுடையாய்; விளியேற்ற வினைப்பெயராயும் முன்னிலை வினைப்பெயராயும் கொண்டுரைத்தாருமுளர். இராப் பகல் இடைவிடாது செய்யும் வணக்கமே பிறவிப் பிணிக்கு மருந்து. `மனத் தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும் நினைத்தெழுவார் இடர் களைவாய் நெடுங்களம் மேயவனே!` தி.1 ப.52 பா.2); `இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப் பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்` (தி.3 ப.3 பா.8) `எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக; ஏத்தும்` (தி.4 ப.41 பா.3) என வருதல் உணர்க./n அடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன். அடிக்கே - என்பதில் உள்ளவாறு, அப்பர் அருளிய மூன்று திருமுறையுள்ளும் பற்பல இடத்திற் காணலாம். `சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே` என்பது பல திருப்பாக்களின் முடிவாயுள்ளது. `விசயமங்கை ஆண்டவன் அடியே காண்டலே கருத்தாகியிருப்பன்` `நல்லுருவிற் சிவனடியே அடைவேன்` `சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றேன்` `திருவாரூர் மணவாளா நின்னடியே மறவேன்` உன்னை அல்லால் யாதும் நினைவிலேன்` என்று அண்ணாமலையாகிய தீச்சான்றாகச் சொல்லியருளினார். `எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழலடியே கை தொழுது காணின் அல்லால் ... உணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே` என்பவற்றால் திருவடிக்கேயன்றி மற்று எதற்கும் தம் வணக்கத்தை உரித்தாக்காத உறுதியுடையவர் வாகீசப் பெருந்தகையார். நான்காவது திருமுறையின் இம்முதல் திருப்பாட்டில் `அடிக்கே` என்றருளினார். தி.6இன் ஈற்றுப் பதிகத்தின் ஈற்றடியில் எல்லாம் `அடிக்கே` என்பது அமைந்தவாறு அறிக. `ஒற்றை யேறுடையான் அடியே அலால் பற்று ஒன்று இல்லிகள் மேற்படை போகலே` என்பதில் `சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்` உடையவர்க்கு இறப்பு இன்மை உணர்த்தியவாறும் உணர்க. இதனை உணர்வார் அனைவரும் தம் தம் முப்பொறிகளையும் சிவபிரான் திருவடிக்கே உரியனவாம் வகையிற் செலுத்தும் அருள் வாழ்வு நடத்துவதே வையகத்துள் வாழ்ந்தும் அருள் வானத்தில் வாழ்ந்து பெறும் பேரின்பத்தை அடைவிக்கும்./n `ஏயிலானை என் இச்சை அகம்படிக் கோயிலானை` (தி.5 ப.91 பா.1) ஈற்றுத் திருக்குறுந்தொகையுள் 4,8,9 ஆம் திருப் பாடல்களை நோக்கின், திருநாவுக்கரசர் திருவுள்ளக் கிடக்கை இனிது புலனாகும். சிவபத்தர்க்குளதாகும் பேரின்பம் விண்டு பத்தர்க்கு உண்டாகாது என்று அறுதியிட்டுக் கூறியதுணர்க./n அகம்படியே:- அகம்புxபுறம்பு. அகம், புறம் என்பன வற்றின் ஈற்றில், புகாரம் இயைந்து வழங்குதல் இன்றும் அறியலாம். புகாரத்தோடு சேர்ந்தவை அகன், புறன் என்றலும் ஆம். அகம்பு + அடிமை + தொழில் = அகம்படிமைத்தொழில். திருக்கோயிலின் உட்டுறை வினைஞர் அகம்படியர் ஆவர். திருநாளைப் போவாரை `நாளைப் போவாராம் செயலுடைப் புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்` `திருவாயிற்புறம் நின்று ஆடுதலும் பாடுதலும் ஆய் நிகழ்வார்.` `தம் பெருமான் இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்தெழுந்து` `மதிற்புறத்தின் ஆராத பெருங்காதல் ... வளர்ந்தோங்க உள்ளுருகிக் கைதொழுதே ... திருவெல்லை வலங்கொண்டு செல்கின்றார்`. `மதிற்புறத்துப் பிறை யுரிஞ்சுந் திருவாயில் முன்னாகப் ... நெருப்பமைத்தகுழி` என்பவற்றால், புறம்படிமை விளங்கும். `நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார் ... எரியின் கண் ... மாய ... உரு ஒழித்துப் புண்ணிய மாமுனிவடிவாய் ... வெண்ணூல் விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்`, `வானவர்கள் மலர்மாரிகள் பொழிந்தார்`. `தில்லைவாழந்தணர்கள் கைதொழுதார்`. `தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்`. திருநாளைப் போவாராம் மறைமுனிவர் தில்லை வாழந்தணரும் உடன் செல்லச் சென்று ... கோபுரத்தைத் தொழுது உள்புகுந்தார் ... `உலகு உய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்` என்பவற்றால் அகம்படிமை விளங்கும். ஒருவர் திறத்திலேயே அகம்படிமை புறம்படிமை இரண்டும் விளங்குதலைத் திருத்தொண்டர் புராண(தி.12)த்தில் காண்க.

பண் :கொல்லி

பாடல் எண் : 2

நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பொழிப்புரை :

அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக.

குறிப்புரை :

திருக்கெடில நதிக்கரையிலே திருவதிகையிலே திருவீரட்டானத்திலே எழுந்தருளியிருக்கும் ஆண்டவரே. அடியேனது நெஞ்சம் தேவரீர்க்கே உறைவிடம் ஆகப் பண்படுத்தி வைத்துள்ளேன். ஒரு பொழுதிலும் உம்மை நினையாமல் இருந்தறியேன். இச் சூலை நோய் போல்வதொரு கொடுநோயை அடியேன் அநுபவித்தறியேன். அஃது அடியேனது வயிற்றினொடு துடக்குண்டு முடக்கியிடும்படி நஞ்சாய் வந்து அடியேனை வருத்துகின்றது. அச்சூலை நோயை இனியும் என்னைக் குறுகாதவாறு துரத்துவதும் மறைப்பதும் தேவரீர் செய்திடீர். அஞ்சேலும் (பயம் கொள்ளாமல் இரும்) என்று அபயமேனும் அளித்திலீர்.
வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் என்பது:- சூலை நோயைக் குறித்ததாகக் கொள்ளாமல் இறைவனுக்கே நெஞ்சத்தையும் அதன் நினைவையும் உரிமையாக்கியதைக் குறித்ததாகக் கொண்டு உரைத்தலும் பொருந்தும்.
அப்பொருளில் வஞ்சம் என்பதற்குப் பொய் என்றல் பொருந்தும். நெஞ்சம் இடமாக நினைக்கும் செயல் என் அநுபவத்தில் பொய் போல்வதன்று. மெய்யே என்றவாறாம். வல் + து + அம் = வஞ்சம். மரூஉ. அது(தண் + து + அம் =) தஞ்சம் என்ற மரூஉப் போல்வது. நஞ்சு ஆகி - நஞ்சினியல்புடையதாகி. ஆகி - போன்று எனலும் ஆம்; `ஆள்வாரிலி மாடு ஆவேனோ` `என்புழிப்போல. `அஞ்சேலும்`:- அஞ்சேல்` என்னும் முன்னிலை யொருமை ஏவல் வினையின் ஈற்றில் முன்னிலைப் பன்மையேவற்கு உரிய `உம்` விகுதி சேர்த்து அஞ்சேலும் என்றதுணர்க. அஞ்சேல்மின், செய்யல்மின் என்பனவும் அன்ன. வாரும் தாரும் செய்யும் உண்ணும் என்பன உடம்பாடு. வாரேலும், தாரேலும், செய்யேலும், உண்ணேலும் என்பன எதிர்மறை. இவ்வாறு ஆட்சியில் இல்லை. `கொள்ளெலும்` (தி.1 ப. 55 பா.10) கொள்ளேலும் (தி.2 ப.119 பா. 10) எனத் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருவாக்கில் வந்தமை கண்டுகொள்க. இஃது அரியதோர் ஆட்சி. என்னீர் - என்று சொல்லீர். வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன் (பா-5) என்பது போல்வதே, வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் என்பது.

பண் :கொல்லி

பாடல் எண் : 3

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! வெண்தலைமாலை அணிகின்றவரே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லீரே! இறந்துபட்டவருடைய மண்டை யோட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுதலின், துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

குறிப்புரை :

பிணி முதலியவற்றால் இறந்தவருடைய உடற் சாம்பலாகிய பொடியைக் கொண்டு திருமேனியிலே பூசவல்லீரே, விடையேறி ஊர்தலை விரும்பினீரே, தலையைச் சுற்றிலும் வெண்டலைமாலை கொண்டு அணிந்தீரே, அடிகளே, திருவதிகைக் கெடிலநதி வடபால் விளங்கும் திருவீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரிய கடவுளே, தேவரீர் நும்மைப் பணிந்தவருடைய தீவினைகளைக் கெடுக்க வல்லீர் ஆயினும், இறந்துபட்டவரது வெண்டலையிலே பிச்சையேற்றுத் திரிவீர். நும் வலிமையை நோக்கி ஆளாகலாம் என்று விருப்பம் எழுகின்றது. நீர் பலிகொண்டுழல்வதை நோக்கி இவர்க்கோ ஆளாவது? இவர்க்கு ஆளாவதில் நமக்குப் பயன் உண்டாமோ? ஆகாதோ? என்று ஐயம் தோன்றுகிறது.
`பணிந்தாருடைய பாவங்களைப் பாற்ற வல்லவராதலின் இவர்க்கு ஆளானால் நம் சூலையைத் தொலைத்தருள்வார்` என்று துணிந்து உமக்கே ஆட்செய்து வாழலுற்றேன். அத்துணிவுடன் ஆட்செய்து வாழ்வேனாம்பட்சத்திலும் என்னைச் சுடுகின்றதாகிய சூலை நோயைத் தவிர்த்தருள்வீர்.
பணிந்தார் + அன் + அ = பணிந்தாரன. வினையாலணையும் பெயர். அன் சாரியையும் ஆறன் வேற்றுமைப் பன்மையுருபும் ஏற்று அவருடைமையாகிய பாவங்கள் என்னும் பன்மைப் பெயர் கொண்டு நின்றது. படுவெண்தலை = பட்டதலை; வெள்தலை. படுதல் - அழிதல்; தலையின் இயல்பிலிருந்து கெடுதல். துணிவு - தெளிவு. `ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்` (குறள்.353) `உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்` (பாடல் 7). பொடி - இறந்தவரது வெந்த உடம்பின் சாம்பற்பொடி. `சடையும் பிறையும் சாம்பற்பூச்சும் கீளுடையும் கொண்ட உருவம்`. (தி.1 ப.23 பா.1) பெற்றம் - விடை.
ஏற்று:- பேச்சு, பாட்டு, கீற்று, கூற்று முதலியன போன்ற பெயர். பின்னீரடியிலும் கொண்டவாறு முதலடியிலும் விளியாகக் கொள்ளல் கூடும். சுற்றும் - தலையைச் சுற்றிலும். `தலைமாலை தலைக் கணிந்து` (தி. 4 ப.9 பா.1) `தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே` (தி.7 ப.4 பா.1). அடிகள் என்பது விளியில் அடிகேள் என்று ஆயிற்று. அருமகன்:- அருமான், அர்மான், அம்மான் என மருவிற்று. பெருமகன்:- பெருமான், பெர்மான், பெம்மான் என மருவியவாறும் உணர்க.

பண் :கொல்லி

பாடல் எண் : 4

முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை ... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன் உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப் போக்குவது அன்றோ!

குறிப்புரை :

முன்னம் அடியேன் என்பது ஒரு தனி வாக்கியம். அறியாமை:- சமண் சமயம் புக்க செயலுக்குப் பண்பாகு பெயர். முனிதல் - ஆண்டவன் வினை. நலிதலும் முடக்கியிடலும் சூலையின் வினை. பின்னையும் என்று உம்மை விரித்துரைக்க. சமண் சார்தற்கு முன்னமும் அடியேன். அதை ஒதுக்கிய பின்னையும் அடியேன். இடையில் நேர்ந்தவை அறியாமையின் விளைவும் அவ்விளைவின் பயனும் ஆம். அவை முறையே சூலையும் அதன் நலிவும் முடக்கிடலும் ஆகும். மூன்றாவதடியில் தன்னை என்றும், தலையாயவர் என்றும் உள்ளது ஒருமை பன்மை மயக்கம் ஆயினும், எதுகை நோக்கியதாகும். என்னை இச் சூலைநோய் பற்றியதன் முன்னும், எனது அறியாமையால் என்னை வெறுத்து இந்நோயால் வருத்தி முடக்கியிடுதலால் பின்னும், அடியேன் குற்றம் அகன்றதும் அன்றி உமக்கு ஆளும் பட்டேன். சமண் சமயம் புகுமுன்னும் அடியேன்; அதை அகன்ற பின்னும் அடியேன்; இடையில் அறியாமையின் விளைவாய் இந் நோயாகிய பயனை எய்தினேன் என்றதுணர்க.
அன்ன நடையுடைய மகளிர் மல்கும் திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே (நான்) உமக்கு இப்போது தான் அடிமையானேன் அல்லேன். சமண் சமயம் சார்தற்கு முன்னேயே அடியேனாயிருந்தேன். அறியாமையின் விளைவாக அமண் சமயம் புக்கதால் என்னை வெறுத்து, எனக்கு இச்சூலை நோயைக் கொடுத்தாய். அது வருத்தி முடக்கியிடுகின்றது. அதனால் அச்சமயத்தை விட்ட பின்னேயும் உமக்கு ஆளும் பட்டேன். ஆட்பட்டேனையும் சூலை சுடுகின்றது. அதனைத் தீர்த்தருள்வீர். தலைவரானவர் கடன் தம்மை அடைந்தவர் வினையைப் போக்குவது அன்றோ? நான் நின் அடியேன். நீ என்னை ஆண்டாய் என்றால் உன்னை அடைந்த என் வினையைத் தீர்ப்பது அன்றோ தலைவனான உன் கடனாவது?

பண் :கொல்லி

பாடல் எண் : 5

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

ஆரவாரித்துப் பெருகும் கெடிலக் கரையிலமைந்த அதிகை வீரட்டானப் பெருமானே! குளத்தில் பிறர் இறங்காமல் பாதுகாத்துச் செயற்படுபவர் தம் காவலில் சோர்வு பட்டமையால், கரையில் நின்றவர்கள் இக்குளத்தின் ஆழத்தைக் கண்டு அனுபவிப்பாயாக என்று ஆழமான குளத்தில் விழுமாறு தள்ளிவிட, அக்குளத்தில் ஆழத்தில் நிலையாக நீந்திக் கொண்டிருக்கும் வழிமுறை ஒன்றும் அறியாதேனாகிய அடியேன், சூலைநோய் வயிற்றோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டி என்னைச் செயற்படமுடியேனாகச் செய்ய, பெருமானாகிய நீயே எல்லாவினைகளையும் போக்கி அருளுவாய் என்றவார்த்தையை இதற்குமுன் கேட்டு அறியாதேனாய் நாளை வீணாக்கினேன்.

குறிப்புரை :

புனல் ஆர் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே:- நீர்நிறைந்த திருவதிகைக் கெடில வீரட்டானத்தில் உறையும் அம்மானே!
கயத்தைக் காத்து ஆளுவோரது காவலைப் பொருட் படுத்தாமையால், அதன் கரையில் நின்றவர் இக் கயத்தின் நீராழத்தளவு அறிய வினாவிய என்னை நோக்கி `நீயே இறங்கிக் கண்டு கொள்` என்று சொல்லி (நிலைக்க முடியாதவாறு), இறங்கு துறையில் நீத்துக்கு உரியதாகும் நீர்நிலையில் புகுமாறு நூக்கியிட்டதால், (நீந்த மாட்டாதவனாகி) நிலைக்கொள்ளும் ஒரு வழித்துறையை அறியேனானேன். இதைப் போல்வதொரு வார்த்தை கேட்டறிந்திலேன்.
காத்தல் - குளத்து நீரைக் கெடுப்பாரைத் தடுத்தல். ஆள்பவர் - காவற்காரர். தம்மைப் பேணுவாரும் ஆவர். இகழ்தல் - பொருட் படுத்தாமை. நீத்து - நீந்து என்னும் முதனிலை திரிந்த தொழிற் பெயர். அடங்கு - அடக்கு, இறங்கு - இறக்கு என்பனவும் அன்ன. முடக்கியிட ஆர்த்தார் (பொருத்தினார்) என்று இயைக்க. ஆர்த்தவரது அதிகை வீரட்டானம் என்க. கயம் - நீர்நிலை. இயற்கைப் பள்ளம்; ஒருவர், இருவர், பலர் வெட்டுவித்ததன்று. நூக்கியிட-
`கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் .`
(தி.5 ப.72 பா.7)
என்பது நூக்குமாற்றை நன்கு புலப்படுத்தும்.
சைவ சமயம் விட்டுச் சமண் சமயம் புக்கதனை உளங் கொண்டு பாடியது. இது பிறிது மொழிதலாகும். காத்தாள்பவர் திலகவதியார் முதலோர், காவல் அவரது அறிவுறூஉ. இகழ்தல் - அவற்றைப் பொருட்படுத்தாது வேற்றுச் சமய நூல்களை ஆராய்ந்தறிதல். கரை நின்றவர் பிற சமயத்தார். கண்டுகொள் என்று சொல்லல் சமண் சமயத் துண்மைகளை உணர்ந்துகொள் என்று மயக்குதல். நீத்தாய கயம்புக நூக்கல் சமண் சமயம் புகச்செய்தல். நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்று அறியாமை வெளிப்படை. அறிந்தால் மீண்டும் சைவத்திற் புகார் அல்லரோ? `வார்த்தை இது ஒப்பது கண்டு அறியேன்` என்பது சைவத்தின் உயர்வு குறித்ததாகக் கோடலும் பொருந்தும்.

பண் :கொல்லி

பாடல் எண் : 6

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! இறந்தவர் மண்டை யோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும் துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம்.

குறிப்புரை :

திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! நீரும் மலரும் புகையும் (பிறவும்) கொண்டு நின்னை வழிபடுவதை மறந்தறியேன். தமிழ் மொழியில் அமைந்த நின்புகழோடு இசை பாடுதலை மறந்தறியேன். நன்கிலும் தீங்கிலும் உன்னை மறந்தறியேன். உன் திருப்பெயரை என் (புல்லிய) நாவில் வைத்துச் சொல்லுதலை மறந்தறியேன். இறந்த நான்முகனார் தலையிலே பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! (அடியேன்) உடலின் உள்ளே மிக்கு வருத்தும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய். அடியேன் வருந்துகின்றேன்.
சலம் - ஜலம். `பூவொடுதூபம்` `தமிழோடிசை` என்பன முறையே அருச்சனையிலும் தோத்திரத்திலும் உள்ளனவாய் உடனிகழ்வன ஆதலின், முதலடிக்கண் வந்த மூன்றனுருபு உடனிகழ்ச்சிப் பொருளவாயின. இருவினையும் பற்றி விளையும் இன்பத் துன்பங்களை நலம் (நன்கு) தீங்கு என்றருளினார். `உன்`, `என்` என்பவற்றின்கண் முறையே இறைமையாகிய மேலுக்கும் அடிமையாகிய கீழுக்கும் உள்ள வரம்பு ஒலித்தல் காண்க.
`மேலுக்கு நீவரம்பாயினை ... ... கீழுக்கு நான் வரம்பாயினேன்`. (சிவஞான பாலைய - கலம்பகம் 90) உலந்தார் - இறந்தவர்; வாழ்நாள் கடந்தவர். `உக்கார் தலைபிடித்து உண்பலிக்கு ஊர்தொறும் புக்கார்`(தி.4 ப.16. பா.4). `மாண்டார் தம் என்பும்` (தி.4 ப.16 பா.9) என்றதில் உள்ள வரலாறு வேறு.
உடல் வயிற்றைக் குறித்ததுமாம். அலந்தேன் - ஈண்டு நிகழ்வு உணர்த்திற்று. மறந்திருந்த குற்றமும் அதற்குக் காரணமும் பழம் பிறவிகளின் நிகழ்ச்சி. அதனை
`ஏழை மாரிடம் நின்று இரு கைக்கொடுஉண்
கோழை மாரொடும் கூடிய குற்றமாம்
கூழைபாய் வயற் கோழம் பத்தானடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே` (தி.5 ப.65 பா.8)
என்னும் திருக்குறுந்தொகையால் அறியலாம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 7

உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! அடியேனுக்குத் தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மை யல்லாது இல்லாத காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் ஈட்டப்படும் பொருள் தேடும் செயலிலும் நீங்கினேன். என் வயிற்றினுள்ளே யான் அஞ்சுமாறு குடலைப் பறித்தெடுத்துப் புரட்டி அறுத்துச் சூலை நோய் உள் உறுப்புக்களை இழுக்க, அடியேன் தாங்க முடியாதவனாகி விட்டேன். இனி, உமக்குத் தொண்டனாகி நான் வாழக்கருதினால், அதற்கு ஏற்ப என்னைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

குறிப்புரை :

என்னைத் தலைமையராய்க் காவல்புரிவார் நும்மையல்லாது வேறு ஒருவரும் இல்லாமையால், மனையிலிருந்து வாழும் வாழ்க்கையினும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் வாழும் பொருளினும் நீங்கினேன்; முற்செய் தவச் சிறப்பால் விளங்கினேனாகி நுமக்கே ஆளாகித் தொண்டு செய்து வாழ்தல் உற்றேன். உற்ற என்னைத் துன்புறுத்துகின்றதாகிய சூலை நோயைத் தீர்த்தருளா திருக்கின்றீர். என் வயிற்றின் உள்ளடியில் குடலைப் பறித்துப் புரட்டி அறுத்து இழுத்திடலால் அடியேன் அஞ்சி அயர்ந்தேன். உயர்தல் - ஈண்டு நீக்கத்தைக் குறித்து நின்றது. `உக்கத்து மேலும் நடுவுயர்ந்து` `தலைக்கு மேலும் நடு இல்லையாய்` (கலித்தொகை 94) `நடுவுயர்ந்து என்றது நோன்புயர்ந்தது என்றாற்போல நின்றது`. `உயருமன் பழி` - `தாம் செய்த பழி மிகவும் போம்` `உயர்தல் - நோன்புயர்தல் போல நீக்கத்தின் கண் நின்றது`. (கலித்தொகை 129) என்புழி ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரையை ஈண்டு நோக்குக. பிங்கலந்தை 1760 பார்க்க. வயந்து - வளர்ந்து; வயமாக்கி. விளங்கி எனின் வயங்கி எனல் வேண்டும். வயக்கம் - விளக்கம். `வெண்ணிற வயக்கம் மாண்டது`. (தணிகைப். நாட்டுப்.15) பழக்கமும் ஆம்.
இலாமையினால் உயர்ந்தேன் என்க. வயந்து என்றதோ டியைத்தும் பொருள் கொள்ளலாம். ஆயினும் அடுத்த திருப் பாடலை நோக்கின், அது பொருந்தாமை காண்க.
தலை என்பது சினையாகு பெயராய்த்தலைவர் என்னும் பொருட்டாய் ஒரு தலைவர் என நின்று, தலைவர் ஒருவர் காவல் இல்லாமையினால் உயர்ந்தேன் என்று இயைத்துக் கொள்ளலாயிற்று. ஆசிரியர்க்கு மனைவாழ்க்கையும் பொருளும் இல்லாமையும், `புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறுபாடிலா நிலைமை துணிந்திருந்த நல்லோர்` ஆய் உள்ளமையும்; பொன்னும் மணியும் உழவாரத்தினில் ஏந்தி எறிந்தமையும், அரம்பையர்கள் புரிந்தவற்றால் நிலை திரியாத சித்தத்தினை அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா அன்புருகு மெய்த் தன்மை யுணர்வொடு நிறுத்திச் செய்பணியின் தலை நின்றமையும் அறிவார்க்கு உயர்ந்தமை (நீங்கினமை) உடன்பாடாம். தி.4 ப.26 பா.4, 7; ப.52.பா.3,5,8; ப.54 பா.6; ப.67 பா.6, 9; ப.69 பா.9; ப.78 பா.9ஆகிய பாக்களின் உள்ளவாறு உண்டு என்பார்க்கு உடன்பாடன்று. `கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன்` (தி.4 ப.96 பா.5) `கருவுற்ற நாள் முதலாக வுன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் திருவொற்றியூரா! திருவாலவாயா! திருவாரூரா ஒருபற்று இலாமையுங் கண்டிரங்காய் கச்சியேகம்பனே.` (தி.4 ப.99 பா.6); `கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்` (தி.4 ப.94 பா.6); கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர்` (தி.6 ப.8 பா.99) என்ற ஈசர் வாக்கால் அவ் வாகீசர்க்கு மனை அறம் இல்லை என்னாது உண்டென்பார்க்கு நரகம் இல்லாது போமோ? `அப் பற்றல்லது மற்றடிநாயினேன் எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே` (தி.5 ப.96 பா.9) என்ற அப்பர்க்கு மனை வாழ்க்கைப்பற்று இருந்ததாகக் கோடல் பொருந்துமோ?
அவர்க்குப் பற்று இருந்ததாகக் கொள்ளினும், நம்மனோர்க்குள்ள அளவினது அன்று அது. ஏகனாகி இறைபணிநிற்கும் உண்மை நிலையினரிடத்தும் அஞ்ஞான கன்மப்பிரவேசம் உண்டு என்று அருள் நூல்கள் உணர்த்துகின்றன. அக்கன்மப் பிரவேசம் உளதாகாவாறு தடுக்கும் வழி அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமை. அஃதாவது (ஏகனாகி) இறைபணி வழுவாது நிற்றலாகும். அத்தகையோர்க்கும் அஞ்ஞான கன்மப் பிரவேசம் உண்டாகலாம் எனின், அதனை நம்மனோர்க்கு உள்ள பற்றினளவை நிகர்த்ததாகக் கொள்ளலாமோ? ஏகனாதலும் இறைபணி நிற்றலும் எங்கே? நாம் எங்கே? அத்தகைய சிற்றளவு பற்றுக்கே அப்பர் வருந்துகின்றார் எனக் கொண்டுரைத்தல் தக்கது. அப்பொழுது `உயர்ந்தேன்` என்பது மிகுதிப்பொருட்டாகும்.
சிவனது இச்சையே தனது இச்சை; சிவனது அறிவே தனது அறிவு; சிவனது செயலே தனது செயல். தனக்கென இச்சையும் ஞானமும் கிரியையும் உரியனவாய் இல்லை என்று சிவனுடைய இச்சாஞானக்கிரியை நிகழ்ச்சிகட்குத் தான் ஒரு கருவியாக நின்று ஒழுகுவதே இறைபணி நிற்றலாகும். பசுகரணம் சிவகரணமாதல் இன்னதே.
திருக்களிற்றுப்படியார்க்குள்ள பழைய உரைகளுள் ஒன்று (சிதம்பரம், சைவத்திரு. முத்து. வைத்தியலிங்கச் செட்டியார் அவர்கள் பதிப்பு. பக்கம்.64).
`சிவன்முதலே அன்றி முதல் இல்லை என்றும்
சிவனுடையது என்அறிவது என்றும் - சிவனவனது
என்செயலது ஆகின்றது என்றும் இவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்.` (திருக்களிறு - 64)
என்னும் திருவெண்பாவிற்கு உரிய உரையின் முதற்கண், `முதல் என்பது இச்சை ஞானம் கிரியை மூன்றில் முதலிற் கூறியது இச்சையின் மேற்று` `சிவனுடைய இச்சையே அன்றி நமக்கு இச்சையில்லை` என்று உணர்த்துகின்றது. ஆங்கு, அறிவும் செயலும் கூறப்படுதலின், `முதல்` என்றது இச்சை என்னும் பொருளதேயாகும். இதனை அறியாதார் வேறு கூறுவது பொருந்தாது.
அதனால், `முதல்` என்றது இச்சையையே. அடுத்த இரண்டும் சிவனது ஞானம் சிவனது கிரியை என ஆறனுருபிற் கூறியதால், `சிவன் முதல்` என்றதும் ஆறன்றொகையாகும். எழுவாய்த் தொடராகாது. பசுகரணங்கள் சிவகரணமாகத் துன்னிய சாக்கிரமதனில் துரியாதீதம் தோன்ற முயன்று சுவாநுபூதிகமான சிவாநுபவம் உடையவர்க்கு அம்மூன்றும் சிவனுடையனவாக நிகழ்வனவே ஆகும். ஆகாவேல், சிவகரணம் அல்ல; பசுகரணமே அவை. அவரும் சிவாநுபவத்தரல்லர்.
திருக்களிற்றுப்படியாரில் 63 - ஆவது திருவெண்பாவில், கூட்டில் வாட்சார்த்தி நில்லாதார் வீட்டிலே சென்று வினையொழிந்து நின்றாலும் நாட்டிலே நின்று நல்வினைகள் செய்தாலும் பயனொன்றும் இல்லை என்று கூறி, அடுத்த திருப்பாட்டிலே கூட்டிலே வாட்சார்த்தி நிற்குமாறு விளக்கப்பட்டது. அஃது இறைபணி நிற்றலாகும்.
`ஆன்மாவினது இச்சா ஞானக் கிரியை ஆகிய பசுகரணங்கள் சிவனது கரணமாகிய இச்சா ஞானக் கிரியை முழுதும் ஆவதே ஆன்ம தரிசனம்` (தருமையாதீனத்து வெளியீடாகிய சிவாநந்த போத சாரத்தின் உரை) ஆன்ம தரிசனமும் சிவரூபமும் ஒருங்கு நிகழ்வன. `சடசித்துக்கள் முழுவதும் சுகப்பிரபையே தனக்கு வடிவாக உடைய சிவம் கலத்தலால் சிவமயம் எனப் பிரபஞ்சத்தைக் காண்பது சிவரூபம் ஆம்.` (சிவாநந்த போத சாரம் உரை) இவற்றால், `முதல்` என்றது இச்சையே ஆதல் இனிது விளங்கும்.
`நாயகன் எல்லா ஞானத் தொழில் முதல் நண்ணலாலே காயமோ மாயை அன்று காண்பது சத்திதன்னால்` (சித்தியார். சுபக்கம். சூ. 1 - 41) எனவும், `இறைவனாவான் ஞானம் எல்லாம் எல்லா முதன்மை அநுக்கிரகம் எல்லாம் இயல்புடையான், (சித்தியார். சூ. 8:- 17) எனவும் வரும் இடங்களிலும் முதல் என இச்சையைக் குறித்தது காண்க.
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையன் ஆகிய நின்மலன் நினைந்த மேனி நிறுத்தும் முதன்மையன் என்பதில் ஐயம் ஏது? பராசத்தியின் முதல் வேறுபாடு இச்சையாதலினாலும் ஞானம் கிரியைகட்கு (இச்சையாதி) முன்னது ஆதலினாலும் `முதல்` எனப்பட்டது.

பண் :கொல்லி

பாடல் எண் : 8

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க.

குறிப்புரை :

அடியேன் மனை வாழ்க்கையை மகிழ்ந்து வலித்தேன். காரணம் யாது? மனவஞ்சம் ஒரு சிறிதும் இல்லாமையினால். துணை யாருமில்லை - துணையாவார் யாருமில்லை. என் வயிற்றின் உள்ளடியிலே செருக்கி வளர்ந்து துன்புறுத்திப் பிறழச் செய்து (சிந்தா. 1067 - 1613) பறித்துத் தின்ன அடியேன் சோர்ந்தேன். ஒருவர் என்பது ஒருவா என்றிருந்ததோ?

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

அதிகை ... அம்மானே! பொன்னார் மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும் செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும் பெருமானாராகத் தெளியமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து எங்களை அமைவுறச்செய்யும்.

குறிப்புரை :

பொன்னைப் போல ஒளி செய்வதொரு திருமேனியுடையீர்! முறுக்குண்ட பொற்சடையீர்! கலையிற் குறையும் பிறையுடையீர்! துன்பமும் கவலையும் பிணியும் நணுகாமல் துரந்தும் இடீர். கரந்தும் இடீர். என்னைப்போல்வார்கள் இனி உம்மைத் தெளிய உணரமாட்டார்கள். அடியார் படுவது இதுவே ஆகிலும் அன்பே அமையும். வீரஸ்தாநம் - வீரட்டானம். மூலஸ்தாநம் - மூலட்டானம் என்பது போல்வது.
மிளிர்தல் - விளங்குதல், புன்சடை - பொன்போலும் செஞ்சடை. புன்மை (அற்பம்) எனல் சிவாபராதம். மெலிதல் - கலையிற் குறைதல். பிறை - பிறத்தலாகிய ஏதுப்பற்றிய பெயர். பிணித்தல் - கட்டுதல். கட்டில் - பிணிப்பினையுடைய இல்வாழ்கை (சிந்தாமணி 8.63). `துன்பத்தால் தொடக்கினேன்` (சிந்தாமணி 3.86) என்ற இடத்து, துன்பமும் அதனாலுறும் பிணிப்பும் வேறாதல் நன்கு விளங்கும். யாது செய்வல் என்ற கவலை (சிந்தாமணி 1.302). அமைதி - நிறைவு (சிந்தா. 1.78). என்போலிகள் - போல்பவன், போல்பவள், போல்வது மூன்றும் போலிகள் எனப்படும். போல்வார் எனல் பொருந்தாது. கள் ஈறு சேர்ந்து பலர்பாலைக் குறிக்கலாயிற்று. ஆகவே தெளியார் என்னும் பயனிலை கொண்டது.

பண் :கொல்லி

பாடல் எண் : 10

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொழிப்புரை :

ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக் கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர் யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை - ஒலித்து நிறையும் நீர் சூழ்ந்த திருவதிகை. அங்குத் (தக்கயாகத்தில்) துன்பம் விளைப்பதில் ஒப்பிலாத யானையின் ஈர்மை பொருந்திய உரித்த தோலைப் போர்த்தாய்! புறங்காடே அரங்கமாகத் திருக்கூத்து ஆடவல்லாய். வீரமுழக்கத்தொடு கயிலைமால்வரையைத் தூக்க முயன்ற அரக்கனான இராவணனை அம்மலையின் கீழ் அகப்பட்டு நசுக்குறச் செய்து, அவனது சாமகானத்தைக் கேட்டுத் திருவுளம் இரங்கித் திருவருள் அளித்த அதனை ஈண்டு எண்ணுகிலாய். (எண்ணுவையேல்) வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் மற்று யாது நிகழ்ந்தாலும் என் துன்பங்களானவற்றை விலக்கிடுவாய். எண்ணாமையால் விலக்கியிடுகிலாய் எழுந்தாலும் என்க. உம்மை தொக்கது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

பொடியாக அமைந்த திருநீறாகிய வெள்ளிய சந்தனச் சேறும் முடிமணியாகிய ஒளி வீசும் பிறையும் , அழகிய புலித்தோல் ஆடையும் , வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறமும் , தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த , பகைவரோடு மாறுபடும் காளையும் , மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும் , திண்ணிய கரையைக் கொண்ட பெரிய நீர்ப்பரப்பினதாகிய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியேம் யாம் . ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப்போவதும் இல்லை .

குறிப்புரை :

சுண்ணம் - பொடி . சுடர் - வெண்சுடர் . சூளாமணி - சூடாமணி ; உச்சியில் அணிசெய்யும் அரதனம் . வண்ணம் - அழகு ; நிறம் . உரிவை - தோல் . அண்ணல் - தலைமை ; பெருமை . அரண் - காவல் . அறம்போலக் காவல் பிறிதொன்றில்லை . அறவிடை ( தரும இடபம் ) என்னும் பெயர் இங்கு நினைக்கற்பாலது . ஏறு - விடை . அகலம் - மார்பு . அரவு - பாம்பு . திண் + நல் + கெடிலம் . திண்மையும் நன்மையும் கெடிலயாற்றுக்குரியன . தமர் - அடியவர் . யாது என்பது வகையுணர்த்தலின் ஒன்றும் என்பது ஒரு சிறிதும் என்னும் பொருட்டு ஆயிற்று . ` நற்பைங்கண் மிளிர் அரவாரமும் பூண்பிர் ` ( தி .4 ப .17 பா .2)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

பூண்டதொர் கேழ லெயிறும் பொன்றிக ழாமை புரள
நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

அணிகலனாக அணிந்த மகாவராகத்தின் கொம்பும் , நீண்ட திண்ணிய இடத்தோள் மீது வலப்புறமாகச் சுற்றி , பொன்போல் விளங்கும் , ஆமை ஓட்டின் மீது புரண்டவாறு , நிலாப் போல் ஒளிவீசும் வெள்ளிய பூணூலும் , காண்டற்கினிய கொக்கின் இறகும் , தம்மோடு பொருந்திய மழுவின் வடிவம் எழுதப் பெற்ற கொடியும் , பெருகிவரும் கெடிலயாற்றுத் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம்யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச வருவதும் இல்லை

குறிப்புரை :

கேழல் - பன்றி . எயிறு - பல் . கொம்பு . ` ஏனமுளைக் கொம்பு ` ( தி .1 ப .1 பா .2) பொன் திகழ் ஆமை - பொன்போல விளங்கும் ஆமை . ` முற்றல் ஆமை ` ( தி .1 ப .1 பா .2). நீட்சியும் திண்மையும் தோளின் அடை . வெண்ணூல் வலம் சூழ்தல் . வெண்மைக்கு நிலாவொளி ஒப்பு . புள்ளின் சிறகு - கொக்கிறகு . ` கொக்கின் இறகர் ` ( தி .1 ப .71 பா .7) போல் அ - போலும் அந்த ( நூல் ). கட்டங்கம் - மழு . மழுக்கொடியும் உண்டு போலும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

ஒத்த வடத்திள நாக முருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையு முளைத்தெழு மூவிலை வேலும்
சித்த வடமு மதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

தோளில் மாலையாக அணிந்த இளைய பாம்பும் , இரண்டாகிய தோள் பட்டிகையும் , பலவடங்களாக அமைந்த முத்து மாலையினை இணைந்த உருத்திராக்கக் கண்டிகையும் , மூன்று இலைவடிவாக அமைந்த முத்தலைச் சூலமும் , சித்தவடம் என்ற பெயரிய சைவமடம் ஒன்றுடைய திருத்தலமும் , மதில்கள் உயரமாக உடைய அதிகை நகரை ஒருபுறம் சூழ்ந்து இயங்கும் விரைந்து செல்லும் கெடில நதித் தீர்த்தமும் உடைய பெருமானுடைய அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச வருவதுமில்லை .

குறிப்புரை :

நாகம் - பாம்பு . முத்துவடம் என்றதால் அக்காலத்துள்ள கண்டிகையியல்பு விளங்கும் . முத்துவடக் கண்டிகை :- ` கவர்தலை அரவொடு கண்டியும் பூண்பர் `. ( தி .1 ப .78 பா .7) ` கண்டியிற்பட்ட கழுத்துடையீர் ` ( தி .4 ப .95 பா .6) ` மேல் இலங்கு கண்டிகை பூண்டு ` ( தி .4 ப .111. பா .9). இலைக்குரிய அடை முளைத்தெழு என்பது . சித்த வடம் - அதிகைக்கு அருகில் ஒரு சைவ மடம் உள்ள ஊர் . சேண் உயர் வீரட்டம் - திருவதிகைவீரட்டத்தின் விண்ணளவும் ஓங்கிய மாநகர்ச் சிறப்புணர்த்திற்று . வீரஸ்தாநம் - வீரட்டானம் , வீரட்டம் . உருத்திர பட்டம் - ( தி .12 மானக் கஞ்சாற . 23 . பார்க்க ) தோட்பட்டிகை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மடமான் மறிபொற் கலையு மழுப்பாம் பொருகையில் வீணை
குடமால் வரையதிண் டோளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாக மிருநில னேற்ற சுவடும்
தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

ஒருகையில் மான்குட்டி , ஒருகையில் மான் தோல் ஆடை , ஒருகையில் மழுப்படை , மற்றொரு கையில் பாம்பு , மற்றொருகையில் வீணை இவற்றை உடையவராய் , மேற்றிசைப் பெருமலையை ஒத்த திண்ணிய தோள்களும் , வில்போல் வளைந்து ஆடுகின்ற கூத்தின் பயிற்சியும் , பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடுடைய திருமால் தழுவிப் பொருந்தியிருக்கும் , இடப்பாகமும் , நீர்த்துறைகள் அமைந்த கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

குறிப்புரை :

மடமான் - இளமான் . மறி - கன்று . கலை - ஆண் . கலைமான் கன்று ஒரு கையில் உண்டு . மடமான் மறியும் பொற்கலையும் மழுவும் பாம்பும் வீணையும் என்றதாகக் கொள்ளின் பொற்கலை அழகிய ஆடையாம் . மான்றோலுடையைச் சிவபிரானுடையன் . ஒரு கையில் வீணை . ` வேயுறு தோளிபங்கன் ........ மிக நல்ல வீணை தடவி ..... திங்கள் கங்கை ..... அணிந்து உளமே புகுந்த ` இறைவர் ( தி .2 ப .85 பா .1) குடமால் வரை - மேற்றிசைப் பெருமலை . வரைய தோள் - மலையை ஒத்த தோள் . குனிசிலை - வளைந்த வில் . சிலைக்கூத்து - வில்போல் வளைந்து குதிக்குங்கூத்து . குதித்து என்பதன் மரூவே ` கூத்து என்பது . தவளைப்பாய்த்து என்பது போலக் குதித்து என்பதும் துவ்விகுதி பெற்ற தொழிற் பெயர் . பயில்வு - பயிற்சி . ` பயில்விக் கயிலைப் பரம்பரனே ` ( தி .8 திருவாச 6.34) என்றதும் ஈண்டு நோக்கத்தக்கது . இடம் - இடப்பால் . மால் - திருமால் . இருநிலம் - பெரிய மண்ணுலகு . ஏற்ற - தாங்கிய . சுவடு - அடையாளத் தழும்பு . உலகேந்திய திருமால் வரலாறு உணர்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும் , இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும் , மேம்பட்ட கயிலை மலையையும் , நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

குறிப்புரை :

பலபல காமத்தர் - ` ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல ` ` எண்பது கோடி நினைந்து எண்ணுவன ` எனத் திருக்குறளிலும் , மூதுரையிலும் உரைத்தவாறு காண்க . எண்ணியவாறே எண்ணங்களை இடையூறு நீக்கி ஈடேற்றும் கணபதியை வழிபட்டுக் கேட்கும் வரங்களைப் பலபல காமம் என்றருளினார் . கலமலக்கிடுதல் - கலந்து பிறழச் செய்தல் . நினைத்த வரங்களை எல்லாம் நல்க , அவை ஒன்றொடு ஒன்று கலந்து , பெற்ற முறையில் அன்றிப் பிறழ்ந்து பயன் கொடுக்கின்றமை பற்றிக் கலந்து பிறழ்தலாம் . மலக்கிடுதல் - மலங்கச் செய்தல் . மலங்க - கெட ; சுழல ; பிறழ . ( சிந்தாமணி ) கல என்னும் முதனிலை ஈண்டு எச்சப் பொருட்டாய் நின்றது . ( இலக்கணக் கொத்துரை ) கலக்கி மலக்கிட்டு , தி .4 ப .1 பா .8 பார்க்க . கணபதி யென்னும் களிறும் உடையார் - ` தனது அடி வழிபடு மவர்இடர் கடி கணபதிவர அருளினன் ` ( தி .1 ப .123 பா .5). வலம் ஏந்து இரண்டு சுடர் - இருளை ஒழிக்கும் வலிமை தாங்கிய செய்யதும் வெளியதுமான இருகதிர் . ஞாயிறும் திங்களும் கண்ணாக உடையார் . வான் கயிலாய மலை - சிவலோகம் . தூய்மை வெண்மை குறித்தது . நலம் - முழுகுவார் தம் கழுவாயில்லாத தீவினைகளையும் தீர்க்கும் நன்மை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

உயிர்கள் அறியாதவாறு மறைந்து நின்று அடியார்களுக்கு ஒளி வீசும் திருவருளாகிய விளக்கின் ஒளியும் , சுழலுகின்ற துடி என்ற இசைக் கருவியின் ஓசையும் , எங்கும் பரவிய தேவ கணத்தர் பதினெண்மரும் வேற்றிடங்களில் பழகி அறியாதனவாகிய பாட்டின் ஒலியும் , கூத்துவல்லார் கூத்தாடும் அரங்கங்களில் கண்டு அறியப்படாததாகிய கூத்து நிகழ்ச்சியும் , முறையாக ஓடிவரும் கெடில நதித் தீர்த்தத்தின் புனிதமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.

குறிப்புரை :

காரண கேவலத்திலும் காரிய கேவலத்திலும் உயிர்க்கு உயிராய் நின்று முதல்வன் செய்யும் அருளுதவி குறித்தது இது . திருவருள் விளக்கம் உயிரறியாவாறு மறைந்து நின்று ( சிவ போதத்தார்க்கு ) ஒளிர்கின்றது பற்றிக் ` கரந்தன கொள்ளி விளக்கு என்றருளினார் `. அத் திருவருளைக் கொள்ளி எனலை ` உற்கை தரும் பொற்கை யுடையவர் போல் உண்மைப் பின் நிற்கை அருளார் நிலை ` ( திருவருட்பயன் 68 ) என்பதாலும் அறியலாம் . ` இருள் அடராது உள்ளுயிர்க்கு உயிராய்த்தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது `. ( கொடிக் கவி 1 ) என்பதும் காண்க . ` கண்ணொளி விளக்களித்து ..... கருத்தொன்றன்றே ` ( சிவப் பிரகாசம் 59 ) ` குன்றா விளக்காய்நிறைந்த விரிசுடரான் ` ( நெஞ்சு விடு தூது 3 5) ` அச்சம் அறச் சென்று விளக்கை எழத்தூண்டிச் செஞ்சுடரில் ஒன்றி ஒரு விளக்கின் உள்ளொளியாய்ப் ` ` பெருவிளக்கின் பேரொளியின் உள்ளே பிரசம் மருவும் மலர்போல் கதித்து அங்கு அருவின் உருக்கொள்ளா அருள் ` ( நெஞ்சுவிடு தூது 94-7 ) என்பவற்றால் திருவருளை விளக்கெனல் அறியப்படும் . பதினெண் கணம் - ` அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே ` - புறம் :- கடவுள் வாழ்த்துரை பார்க்க . பாட்டு - சாமகீதம் . வேதப் பாடல் எனலுமாம் . ` தொடுக்குங் கடவுட் பழம் பாடற்றொடை ` ` காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்துப் பழம் பாடல் ` ( மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ). பயின்று அறியாத - இராவணன் முதலிய சிலர் பயின்றறிந்த மட்டும் பயின்றன , பலர் பயிலாத அரிய பாட்டு . ` பாடல் பயின்ற பல்பூதம் ` ( தி .4 ப .2 பா .8) என்றதுமாம் . அரங்கு - கூத்தாடும் இடம் . சகளம் , அகளம் , சகளாகளம் என்னும் மூவேறு நிலைக்கும் உரிய மூவிடமும் அரங்காகும் . அவ்வரங்கும் அங்கு ஆடும் கூத்தும் மதி நுட்பமுடன் குருவின் உபதேசமும் பெற்றவர்க்கே விளங்கும் . எத்துணை நூலறிவுடையார் ஆயினும் , ஏனையோர்க்கு எள்ளளவும் விளங்கா . நூலறிவு மட்டும் கொண்டு திருக்கூத்தை உணர முயல்வதும் அவ்வறிவு பெறாமல் அதற்கு விளக்கம் செய்வதும் இக்காலத்தில் மிக்குள்ளன . மதிநுட்பம் நூலோடுடையாரும் குருவின் உபதேசம் பெறாரயின் , அவரால் அக்கூத்தும் அது நிகழும் அரங்கும் அறியப்படாமையை உணர்த்தினார் ஆசிரியர் . ( தி .4 ப .2 பா .8) நாடற்கு அரியதோர் கூத்து என்றதும் உணர்க . நிரந்த - நிரல்பட்ட . ` நிறைகிரி முழுவதும் நிரந்த நீள்முகில் ` ( சேதுபுராணம் . கந்தமா .22) பரத்தலுமாம் ( சிந்தாமணி ).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கொலைவரி வேங்கை யதளுங் குவவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

தம்மால் கொல்லப்பட்ட கோடுகளை உடைய புலித்தோலும் , திரட்சியோடு விளங்கும் பொலிவுடைய தோடும் , பெருவிலையுடைய சங்கினாலாகிய காதணியும் , விலையே இல்லாத மண்டையோடாகிய உண்கலனும் , பார்வதி தங்குமிடமாகக்கொண்ட மார்பும் , நீலமணியின் நிறங்கொண்டு விளங்கும் கழுத்தும் , ஒழுகுகின்ற கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.

குறிப்புரை :

அதள் - தோல் . குவவு - திரட்சி . தோளுக்கு ஆகு பெயர் . குலவு என்று பிழை பட்டது . ` குன்றென வுயரிய குவவுத் தோளினான் ` ( கம்பர் - பாலகாண் . எழுச்சிப் .6 ) காதில் அசையும் தோடு தோளிற்படுவது நூல்களிற் பயின்றது . பொற்றோடு - ( பொன் + தோடு ) ` தோடுடைய செவியன் `. சங்கக் குழை - சங்கினால் ஆக்கப்பட்ட குழை . அதற்கு விலைமதிப்பு உண்டு . அவர் ஏந்திய பிரம கபாலப் பாத்திரத்துக்கு விலை மதிப்பு இல்லை . மலைமகள் கைக்கொண்ட மார்பு. `கொழும் பவளச் செங்கனிவாய்க் காமக்கோட்டி கொங்கையிணை யமர் பொருது கோலங் கொண்ட தழும்புளவே வரைமார்பில் வெண்ணூலுண்டே` (தி.6 ப.4 பா.10) மணி.....மிடறு - `மணிகொள் கண்டர்` (தி.1 ப.28 பா.4). காரணி மணி திகழ் மிடறு (தி.1 ப.41 பா.1). `கருமணி நிகர் களம்`(தி.1 ப.123 பா.3).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும்
பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

கூத்தாடுதலை விரும்பிச் செய்த நிலையும் , இடுப்பில் இறுக்கிக் கட்டிய பாம்பும் , இசைக் கருவிகளைக் கைகளில் கொண்டு , பல ஆயிரக்கணக்கில் சூழ்ந்த பாடல்களில் பழகிய பூதங்கள் பலவும் , ஆராய்ந்து , அறியமுடியாத கூத்தும் , மிக உயர்ந்த வீரட்டக் கோயிலை ஒரு பக்கத்தில் சுற்றி ஓடும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலில் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

குறிப்புரை :

ஆடல் புரிந்த நிலை - திருக்கூத்தாடிய நிலை . அரை - ( நடு ) இடை . அரவு - பாம்பு . பாடல் - பாட்டு . ` நாடற்கு அரியது ஓர் கூத்தும் ` ` அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாத தொர் கூத்தும் ` ( தி .4 ப .2. பா .6) அக்கூத்தினை நாடற்குப் பல்லாயிரங் கருவி இருப்பினும் அக்கூத்து நாடற்கரியதே . கோயிலைக் கண்டோர் வீரட்டத்தின் நன்குயர்வை அறிவர் . ஓடும் கெடிலப் புனல் - வீரட்டத்தைச் சூழ்ந்து ஓடும் புனல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையும் , துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட அரைஞாணோடு கூடிய கோவணமும் , யாழ் ஒலி போன்ற இனிய குரலை உடைய பார்வதி அஞ்சுமாறு அச்சமின்றிப் பெரிய மலை போன்று வந்த வேழத்தின் தோலை உரித்த காட்சியும் , சோலைகள் மிகுந்த வீரட்டத்தை ஒருபுறம் சுற்றிப் பள்ளத்தில் பாயும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப் போவதும் இல்லை .

குறிப்புரை :

அரவத்துகில் - ஒலியல் . துகில்கிழி - கோவணக்கீள் ; கிழிப்பது கிழி . கீழ் - கீள் , மரூஉ . குபினம் - அழுக்கு . குபின சம்பந்தம் கௌபீனம் ; கோவணம் மரூஉ . யாழின் மொழியவள் - யாழொலி போலும் இனிய மொழியையுடைய உமையம்மையார் . வேழம் உரித்தவர் அஞ்சிலர் . உரிக்கும் கால் அங்கு இருந்தவர் அஞ்சினார் . அஞ்சாமைச் சிறப்புணர்த்த அருவரை போன்ற வேழம் . ` கைம்மலை ` ` கைவரை ` ` நடைமலை ` ` நடைக்குன்றம் ` ` வருங்குன்றம் `. வீரட்டம் சூழ்ந்து தாழும் புனல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தா னொன்பது மொன்று மலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை :

பார்வதி நடுங்கும்படியாக நரம்புகளால் செயற்படும் கைகளைக் கோத்து தன் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்துக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் கதறும்படியாக முதலில் அழுத்திப் பின் அவன் பாடிய சாமகானம் கேட்டு அவனுக்கு வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமானாய் , வளருகின்ற சோலைகளை உடைய வீரட்டக் கோயிலை ஒரு புறம் சுற்றி நீர் நிரம்பியுள்ள கெடில நதித் தீர்த்தத்தை உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

குறிப்புரை :

நரம்பு எழு கைகள்:- `என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்` (தி.11 திருமுருகு.130) `நரம்பு எழுந்துலறிய நிரம்பா மென்றோள்` ( புறம் . 278) என்புழிப் போலக் கொண்டு நரம்புகள் எழுந்து தோன்றும் கைகள். இது சிவனுக்குப் பொருந்துமேற் கொள்க. `பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவன்`, `இடங்கை வீணை ஏந்தி`, `பண்ணமர் வீணையினான்`, `மிக நல்ல வீணை தடவி`, `நுண்ணூற் சிந்தை விரட்டும் விரலன்` ( பதிற்றுப் பத்து, கடவுள் வாழ்த்து ) `கைய தோர் சிரந்தையன்` (தி.1 ப.61 பா.3) என்பவற்றை உட்கொண்டு, இசை நரம்பு எனலும் பொருந்தும். பிடித்தது அச்சத்தால். `மலையான் மகள் அஞ்சவ்வரை எடுத்தவ் வலியரக்கன்` (தி.1 ப.9 பா.8) நங்கை - உமா தேவியார். என்கை (எங்கை) தன்கை (தங்கை) நுன்கை (நுங்கை) என்பன போல நன்கை என்பது நங்கையென்றாயிற்று. மண்கை (மங்கை) போல நண்கை (நங்கை)யும் ஆம். உரம் - வலிமை. உரங்கள் எனப் பன்மையாகக் கூறுதலால் மார்பு எனல் பொருந்தாது. வாய்களும் அலறின. வரங்கள்:- பெயர், வாழ்நாள், கோலவாள் முதலியன.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர் பின் சென்ற அடியேன் . கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு , கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில் , விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு , அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் , சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன் .

குறிப்புரை :

மாதர்ப்பிறை - அழகுடைய பிறை . பிறைக்கு அழகு முழுமுதற் பொருளின் தலைமேல் வாழ்தலும் , வளராத் தேயாச் சிறப்பும் , பாம்பினை அஞ்சாமையுமாம் . ` அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே ` ( புறநானூறு கடவுள் வாழ்த்து ). என்னும் அதன் சிறப்புணர்க . பிறைக்கண்ணி - பிறையாகிய கண்ணி . தலை மாலை . கண்ணி - தலையில் அணிவது ; ஒரு பக்கம் காம்பு மட்டும் சேர்க்கும் பூந்தொடை . போதொடு நீர் - வழிபாட்டிற்குரிய பூவும் புனலும் . புகுவார் - அடியவர் . யாதும் என்பது ஆதும் என்றாதலுண்டு ` சென்று ஆதுவேண்டிற்று ஒன்று ஈவான் ` ( தி .6 ப .20 பா .9) ` நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதியான் ` ( தி .2 ப .84 பா .8) என அரசும் கன்றும் அருளிய வற்றாலும் அறிக . நம்மாழ்வார் திருவாய் மொழியிலும் ` ஆதும் இல்லை ` ` ஆதும் ஓர் பற்றிலாத பாவனை ` எனல் காண்க . ` யாதே செய்தும் யாம் அலோம் நீஎன்னில் ` ஆதே ` ` ஏயும் அளவில் பெருமையான் ` ( திருக்குறுந்தொகை ) என்பதில் அதுவே என்னும் பொருட்டு ஆதலின் அதுவேறு . சுவடுபடாமை :- ` பங்கயம் புரைதாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் கைகளும் மணிபந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தருகவும் ` ` மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும் ` ` உடம்பு அடங்கவும் ஊன் கெடவும் `, சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும் ` ( தி .12. அப்பர் . 357-360) உறுப்பழியவும் நின்ற சுவடு தோன்றாமல் , தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வாராய்ச் செல்லும் தூய்மை தோன்றல் . பிடி - பெண் யானை . களிறு - ஆண் யானை ; களிப்புடையது என்னும் காரணப்பொருட்டு . பிடியும் களிறும் சத்தியும் சிவமும் ஆகக் கண்டதால் திருப்பாதம் சிவாநந்தம் ஆகிய முன் கண்டறியாதன வற்றைக் கண்டேன் என்று தம் பேரின்ப நுகர்ச்சியைப் புலப்படுத்தினார் . பின் உள்ள எல்லாவற்றினும் பிறையும் பெருமாட்டியும் முதலடியிற் கூறப்பெற்றிருத்தல் அறிக . காட்சியருளிய பிறை சூடி ( சந்திரசேகரர் ) கோயில் , அகச்சுற்றின்கண் தென்மேற்கு மூலையில் உளது .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

சந்திரனுடைய பிளப்பாகிய பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானை , பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த பார்வதியோடு இணைத்துப்பாடி , ` அவர்கள் திருவடி வாழ்க ` எனவும் , ` அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம் ` எனவும் சுழன்று ஆடிக்கொண்டு வரும் அடியேன் சக்கரப்படையை வலக்கையில் ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது ஆண்கோழி பெண்கோழியுடன் கூட இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

போழ் இளங் கண்ணியினானை - இளம் பிறையாகிய தலை மாலையினை அணிந்தவனை . பூந்துகிலாள் - இடப்பால் உள்ள நாய்ச்சியார் . வாழி போற்றி என்று ஏத்தியும் வட்டம் இட்டு ஆடியும் வருவேன் . ஆழிவலவன் - திருமால் . ஆழி - சக்கரம் . வலவன் - வலக்கையில் ஏந்தியவன் . பெடை என்றதால் கோழி சேவலைக்குறித்தது . கொழிப்பது கோழி . இதே பா .4 காண்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும் , இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முக மலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில் காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க . இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

எரி - நிலவு . ஏந்து இழையாள் - அம்பிகை . இலயம் - கூத்துக்கு ஒத்த தாளலயம் முகமலர்ச்சி . அகத்துவகையைக் குறித்தது . அருவி - ஆற்றிற்கு அடை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப்பாடி நீர்த்துறையை அடுத்துவளர்ந்த செடி கொடிகளின் பல மலர்களையும் அடியேன் தோள்கள் மகிழுமாறு அருச்சித்து நான் தொழுவேனாய்ப் பாடும் இளங் குயில்கள் ஒலிக்கும் ஐயாறு அடைகின்றபோது , இளைய பேடையோடு கலந்து வெண் சிறகுகளை உடைய சேவல் அன்னம் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

பெய்வளையாள் - முற்பாக்களிற் போலக் கூறிக் கொள்க . பெய்வளை - செயப்படுபொருளில் வந்த வினைத்தொகை . துறை - ` மதுத்திவலை சிந்து பூந்துறை ` ( தி .3 ப .92 பா .8) தோளைத் தொழுவேன் , குளிரத் தொழுவேன் . அறை குயில் - பாடும் குயில் . ஆலும் - ஒலிக்கும் . ஆலல் என்பது அகலல் என்பதன் மரூஉ . மயிலுக்குத் தோகையும் குயிலுக்கு வாயும் அகலுதல் கொள்க . தி .3 ப .52 பா .1 இல் யாம் எழுதிய உரையைக் காண்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

இளைத்த பிறையைச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடிக் காடுகளையும் நாடுகளையும் மலைகளையும் கையால் தொழுதுகொண்டு ஆடி மகிழ்ந்து வரும் அடியேன் எம்பெருமான் கூத்தாடுதலை விரும்பித் தங்கியிருக்கும் ஐயாற்றை அடையும்போது ஆண் மயில் பெடைமயிலொடும் கலக்க இரண்டும் இணையாய் ஒன்றொடொன்று கூடி வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

ஏடு - இளைது . ( சிந்தாமணி 446, 1552 பார்க்க ). இளைது - இளது - ஈள்து - எள்து - ஏடு என மருவிற்று . இன்றேல் , நச்சினார்க்கினியர் ` ஏட்டைப்பட்டு ` என்பதற்கு ` இளைத்து ` என்றுரையார் . காடு , நாடு , மலை எல்லாம் சிவமயம் . ` மண்ணாகி விண்ணாகி மலையுமாகி ` ( தி .6 ப .94 பா .2). ` ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு ` ` பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே ஆடுமாறு வல்லானும் ஐயாருடைய ஐயனே ` ( தி .2 ப .6 பா .1) எனக் காழிவேந்தர் அருளியதும் உணர்க . ஐந்தொழிற் கூத்து எங்கும் நிறைந்த சிவமூர்த்திக்கே உரியது . தில்லை முதலிய இடங்களிலே தான்திருக்கூத்துண்டு என்பது சாத்திரம் உணரார் கூற்று . மயில் - ஆண் . பிணைந்து - இணைந்து ; பின்னி .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

குளிர்ந்த பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடி உள்ளம் குழைந்த திருவடி நினைவினேன் ஆகி உணர்ந்து உருகி வரும் அடியேன் தலைமையை உடைய எம்பெருமான் உகந்தருளியிருக்கின்ற ஐயாற்றை அடையும்போது நல்ல நிறமுடைய ஆண் பகன்றில் பெண் பகன்றிலோடு இணைந்து இரண்டுமாய் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

தண்மை - குளிர்மை . மதி - பிறை . நிறைமதி அன்று . தையல் நல்லாள் - நாய்ச்சியார் . உள்மெலி சிந்தையன் - உள்ளம் குழைந்த திருவடி நினைவினன் . உணரா - உணர்ந்து ; உருகா - உருகி ; செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் . அண்ணல் - தலைவன் . அமர்ந்து - விரும்பி . உறைகின்ற - எழுந்தருளியிருக்கின்ற . வண்ணம் - அழகு ; நிறமும் ஆம் . நீருறை மகன்றில் ( குறுந்தொகை 57 ) துணைபிரி மகன்றில் ( சிந்தாமணி 302 ) என்றதோ வேறோ தெரியவில்லை . ` பகரத்தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்தேத்தத் தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே ` எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் ( தி .1 ப .66 பா .3) அருளியதிலும் ` பகன்றில் ` என்றே காணப்படுகின்றது . இதில் அதன் பெருமை புலனாகின்றது . பக + அன்றில் . மக + அன்றில் இரண்டும் துணை பிரியா மகன்றில் . மகன்று - மகனை ( ஆணை ) யுடையது . துணைபிரியா மகன்றில் என்றதை நோக்கி , பகு + அன்றில் எனப் பிரித்து , துணை பிரி அன்றில் எனலாம் . பகன்றில் என்பது மகன்றில் என மருவியுமிருக்கலாம் . பிரியாத இயல்பு நோக்கி , பகா அன்றில் என்றிருந்தது பகன்றில் என மருவியதெனலும் கூடும் . யாது பகன்றிலொடு ஆடி வைகி வருவது ?

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

விளக்கம் பொருந்திய பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி, வைகறை யில் துயிலெழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப் படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன், சிறந்த அணிகலன் களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது, பெரிய ஆண் மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவன வற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாத வற்றைக் கண்டேன்.

குறிப்புரை :

கடி - விளக்கம் . காரிகையாள் - நாய்ச்சியர் . வடிவு - கண்ணுக்குத்தோன்றுவது . உருவுதோன்றாது ; அதுகருத்துக்குத் தோன்றுவது . ( தொல்காப்பியம் பொருள் . 244. ) வண்ணம் :- முற்பாட்டின்குறிப்பில் அறிக . வேண்டுவ வாய்சொல்லி - வேண்டுவனவற்றை வாயாற் சொல்லி . வேண்டுவது உள்ளம் . சொல்வது வாய் ( நா ). ` மெய் வாய் கண் மூக்குச் செவி ` என்புழி வரும் வாய் சுவையுணர்ச்சிக்குரியது . சொல்வதற்குரியது நாவே . இரண்டும் வாய் என வழங்கப்படும் . அடியிணையில் கழலை ஆர்த்தல் . வீரக் கழலை வலக்காலில் மட்டும் கட்டுதல் தொன்மையது . இடிகுரல் அன்னது - இடியோசை போலும் ஓசையது . இடிகுரல் - ஆறன்றொகை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

விரும்பும் பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி, வைகறையில் துயில் எழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன், சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரை யில் அமைந்த ஐயாற்றை அடையும்போது, பெரிய ஆண்மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.

குறிப்புரை :

பெரும்புலர்காலை :- ( தி .4 ப .31. பா .4) கொய்யா - கொய்து . செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் . அருங்கலம் - பண்புத்தொகை . ( யாப்பருங்கலம் ). அரிய பூண் . விலை மதிப்பருமை , பெறலருமை முதலியன கொள்க . கலமும் பொன்னும் மணியும் உந்தும் ஆறு . கலை - ஆண் முசு . கருங்குரங்கு .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

அமாவாசையை அடுத்து ஒருகலையினதாய் முற்பட்டுத்தோன்றும் பிறை சூடிய பெருமானைச் செறிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் இணைத்துப்பாடி , அவன் திருவடிகளைப் பற்றி உலகினோடு உள்ள பாசத்தைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன் , பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து எம்பெருமானுக்கே அற்றுத் தீர்ந்து அவன் அருள் பெற்று நிலவும் அடியார்கள் உடன் ஐயாற்றை அடையும்போது , சிறந்த துணையாகிய பெடையோடு ஆண் நாரைகள் கூட இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

முற்பிறை - தலைநாட் பிறை . மொய் - அடர்ந்த . பற்றிக் கயிறறுக்கில்லேன் . கயிறு - பாசம் . உன் திருவடியைப்பற்றி உலகினோடுள்ள பாசத்தை அறுக்கமாட்டேன் . ` பற்றுக பற்றற்றான் பற்றினை ` என்றதற்கமையப் பற்றி என்றார் . ` அப்பற்றைப் பற்றுக ( இப் ) பற்று விடற்கு ` என்றதற்கிணங்க கயிறு அறுக்கில்லேன் என்றார் . பாசம் என்னும் வடசொற் பொருள் குறித்துக் கயிறு எனப்பட்டது . ( திருக்குறள் 350 ) ` சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றி இப்பாசத்தைப் பற்றற நாம் பற்றுவான் பற்றிபே ரானந்தம் பாடுதும் காண் அம்மானாய் ` ( தி .8 திருவா . 194). அற்று - ஒரு பற்று மில்லா தொழிந்து . ` அற்றவர்க்கு அற்ற சிவன் ` ( தி .3 ப .120 பா .2). அற்று என்பற்கு விளங்கி எனலும் உண்டு . பொருள் புலப்படவில்லை என்புழி அறவில்லை என்று உலகிற் பலர் வழங்குகின்றனர் . நற்றுணையாகிய பேடை . நாரைக்குப் பேடை துணை . துணைக்கு நன்மை அடை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

பிறை சூடிய பெருமானைத் தேன் போன்ற சொற்களை உடைய பார்வதியோடு இணைத்துப் பாடி எம்பெருமான் இப்பொழுது அடியேனுக்கு எங்கு அருள் செய்வானோ என்று திருத்தலங்களை வழிபட்டுவரும் அடியேன் இளமங்கையர்கள் கூத்து நிகழ்த்தும் ஐயாற்றை அடையும்போது பச்சைக் கிளி தன் பெடையோடு மகிழ , இரண்டுமாக இணைந்து பறந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

திங்கள் மதி - ஒரு பொருட் பல பெயர் . திங்கள் சாந்திர மானம் பற்றிய திங்களை விளைவிப்பது . காரணப் பெயர் . மதி பிறை என்னும் பொருட்டு . சந்திரனுக்கு வடமொழியில் மதி என்னும் பெயரில்லை . இரண்டும் தமிழ்ச் சொல்லே . தேன்மொழி - தேமொழி . இனி எனக்கு எந்தை எங்கு அருள் நல்கும் கொல் என்று கொள்க . அங்கு - அக்கோயிலின் வழியில் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன்
அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

வளர்தற்குரிய பிறை சூடிய பெருமானை நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு இணைத்துப்பாடி , வீணாகக் கழிக்கப்படாத தொரு காலத்தைக் காணும் பொருட்டுக் கடைவாயிலின்கண் நிற்கும் அடியேன் , எல்லையற்ற அன்போடு ஐயாற்றை அடையும் பொழுது இளமையை உடையதாய்க் கலத்தலுக்கு ஏற்றதாய பசுவினை , ஏறு தழுவ , இரண்டுமாய் இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

குறிப்புரை :

வளர்மதி - வளர்பிறை . ` நிறைநீர நீரவர் கேண்மை பிறை மதிப் பின்னீர பேதையார் நட்பு ` ( திருக்குறள் 782 ). வார்தல் நீளமாய் வளர்தல் . களவு படாததோர் காலம் காண்பான் - களவை அடையாததொரு காலத்தைக் காணும் பொருட்டு . காண்பான் - வினையெச்சம் ( நன்னூல் . 343 ). காட்சி - தரிசநம் என்பர் வடநூலார் . கடைக்கண் - (- கடைவாயிலின்கண் ) நிற்கின்றேன் . கடைக்கணிக்கின்றேன் என்றது எழுதினோரால் பிழைபட்ட பாடம் . முற்பாடல் பலவற்றில் வருவேன் என்றார் . இதில் வந்து நிற்கின்றேன் என்றார் . ` ஞாலமே விசும்பே இவை வந்து போம்காலம் ` களவு படுங்காலம் . ` பரம்பரனைப் பணியாதே பாழுக் கிறைத்த எத்தனையோ காலம் ` களவுபட்டன . ` கால வரையறையைக் கடந்து காலத்தினையும் தோற்றித் தொழிற்படுத்தும் கால காலனாகிய முதல்வனாற் செய்யப்படும் காரியத்திற்குக் காலம் வேண்டா ` ( சிவஞானபாடியம் . சூ . 2. காலதத்துவம் ). அதனால் அவனது அழியாத இன்ப நிலையைப் பெற்றவர்க்குரியது களவு படாததோர் காலம் என்று உபசரிக்கப்பட்டது . அதைக் காண்பதற்காக இறைவன் கோயிற் கடை வாயிலின் கண் நிற்கின்றேன் என்றார் . இடையறவுபடாது நெடுங்காலம் காண எனலுமாம் . அளவு படாததோரன்புக்கும் அவ்வாறு உரைத்துக்கொள்க. திருவடிக்கன்பு அளவுபடாதது. ஏனையனைத்தும் அளவுபடுவனவேயாகும். நாகு - பெடை. ஏறு - ஆண் (எருது).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்
கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

ஆரூரில் உகந்தருளியிருக்கும் பெருமான், பாடுகின்ற இளைய பூதங்களை உடையவனும், சிவந்த வாயினை உடையவனும், பவளம் போன்ற உடல் நிறத்தினாலும், தன் உடம்பின் பாதியாக இணைந்த பார்வதியைக் கூடியதால் ஏற்பட்ட விசேட அழகினனும், வானில் உலவக்கூடிய வெண்பிறையைச் சூடியவனும், ஒளிவிளங்கும், சூலப்படையை உடையவனும் ஆடுகின்ற இளைய பாம்பினைக் கட்டிக் கொண்டவனும் ஆவான்.

குறிப்புரை :

பவளச்செவ்வாய் - பவளம்போலும் செய்ய வாய் (அழகுடையவன்). கூடு - கூடிய. `இடையீர் போகா இளமுலையாள்` (தி.4 ப.54 பா.2), `கூடிய` என்பது இடப்பால் வைத்திருத்தலைக் குறித்து நின்ற முதல்வினை. கூடிய கோலம் - காரணப் பெயரெச்சம்; உண்ட இளைப்பு என்பது போல. ஓடு பிறை - வானில் ஓடும் பிறை. இளம் பிறை, பாலேந்து வெண்பிறை, தவளேந்து. ஆடு பாம்பு; இளம் பாம்பு. `முற்றலாமை இளநாகம்` (தி.1 ப.1 பா.2.). அசைத்தான் - கட்டியவன். அமர்ந்த - விரும்பி எழுந்தருளிய. அம்மான் - அருமைக் கடவுள். அருமகன், பெருமகன். அருமான், பெருமான். அர்மான், பெர்மான். அம்மான் - பெம்மான். மரூஉ. மகன் - தேவன். மகள் - தேவி. திருமகள், நாமகள், மலைமகள், கலைமகள். அம்மானே பூதத்தினான், வண்ணத்தான், கோலத்தினான், பிறையான், சூலத்தினான், அடைந்தான் என்க. ஆறு உம்மைகளையும் இயைத்து அம்மானே என முடித்தலும் ஏற்றதே. பிறை - பிறத்தலுடையது. பாம்பு:- பாண்பு என்பதன் மரூஉ. கால்பு, வீண்பு, நோன்பு, பொதுள்பு முதலியவற்றின் மரூஉப்போல்வது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

நரியைக் குதிரையாக மாற்றும் அகடித கடநா சாமர்த்தியம் உடையவனும், நரகர்களையும் தேவர்களாக்க வல்லவனும், அவரவர் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானுக்கு உரிய முரசம் தன் மீது அமர்த்தி முழங்கப்பட அதனைத் தாங்கிய ஆண் யானை முன்னே ஓட, தன் முன்னர் நின்று வணங்கி அன்பர்கள் துதிக்கப் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆரூரை உகந்தருளியிருக்கும் எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை :

(நரியைக் குதிரை) செய்வான் முதலிய ஐந்து வினைப் பெயரும் இயைந்து அம்மானே எனப் பயனிலைக்கொண்டு முடிந்தன. நரியைக் குதிரையாக்கிய வரலாறு மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்தது. மூவர்க்கும் முந்தியவர் மாணிக்கவாசகர் என்பதற்கு இஃது ஒரு சான்று. `நரியைக் குதிரைப் பரியாக்கி` (தி.8 திருவா. 647). தேவர், மானுடர், நரகர் என்னும் முத்திறத்தவருள் இடையராய மானுடர் தத்தம் வினைக்குத்தகத் தலையராய தேவராயும் கடையராய நரகராயும் பிறப்பர். தேவர் நரகராதல் அற்புதம் அன்று. நரகர் நேரே தேவராதலே அற்புதமாகும். விரதம் - நியமம்; தவம். இறைவன் கொண்டாட வல்லன். அல்லனேல் நியமம் தவம் முதலிய விரதங்களை எவரும் மேற்கொள்ளார். அவற்றைக் கொண்டாடுவது எவர்க்கும் எளிது. அவற்றின் அளவிற்குத் தக்க பயனைக் கொடுத்தல் அரிதினும் அரிது. அவ்வருஞ் செயல் செய்ய வல்லான் எங்கும் நிறைந்த திருவாரூரன். மனு வேந்தனது சத்திய விரதமும், அதைக் கொண்டாடி அருளிய வன்மையும், அவை முதலிய பலவும் இங்கு நினைக்கத்தக்கன. `விச்சின்றி நாறு செய்வான்` விச்சதின்றியே விளைவு செய்குவாய்` (தி.8 திருவா.) (விச்சு, விச்சது - வித்து). `பிரபஞ்சம் அநாதியாகலின்` அம் முதற் கோடி நம்மனோரான் அறிய வாராமையினானும் ஒடுங்கியின் மீள உளதாமாறே ஈண்டு அவாய் நிலையான் உணர்த்த நின்றது ஆகலானும் அதுவே (புனருற்பவமே) கூறினார்` (சிவ. போ. சூ.2.) இதையே `விச்சதின்றியே விளைவு செய்குவாய்` (தி.8 திருவா. திருச் சதகம். 96) என்றது. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"வித்தின்றி விளைவாய்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" எனப் பொருள்பட்டுத் திருமேனி கொள்ளும் முறைமை உணர்த்தியதூஉம் ஆம். `விச்சின்றி நாறு செய்வானும்` என்பதற்கும் இவ்வாறு உரைத்துக் கொள்க\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\". (சிவ. போ. மாபாடியம்). முரசு - தியாக முரசு. ஆனை - தியாகராசர்க்குரியதும் முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை. அரவு - பாம்பு. சாத்தி - சார்த்தி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நீறுமெய் பூசவல் லானு நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
ஏறுகந் தேறவல் லானும் எரிபுரை மேனியி னானும்
நாறு கரந்தையி னானு நான்மறைக் கண்டத்தி னானும்
ஆறு சடைக்கரந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

திருமேனியில் திருநீற்றைப் பூசுதலில் மேம்பட்டவனும், தன்னை விருப்புற்று நினைக்கும் அடியவர் உள்ளத்து இருப்பவனும், காளையை விரும்பி இவர வல்லவனும், தீயின் நிறத்தை ஒத்த திருமேனி நிறத்தினனும், நறுமணம் கமழும் கரந்தைப் பூச்சூடியவனும், வேதம் ஓதும் குரல்வளையை உடையவனும் கங்கையைச் சடையில் மறைத்தவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.

குறிப்புரை :

திருநீறு ஆக்களால் உயிர்கட்குக் கிடைக்கின்றது. முழுமுதல்வன் பூசும் திருநீறு, சருவசங்கார காலத்துச் சருவலோக சுடலைப்பொடி, அதனை ஆற்றி அணிந்துகொள்ளும்வன்மை அவனுக்கே உளது. அதனால், `நீறுமெய் பூச வல்லான்` என்றருளினார். மெய் - திருமேனி சத்தியமும் ஆம். நினைப்பவர் நெஞ்சத்துளான் - `நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்` (தி.5 ப.2 பா.1). `காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் அறநெறி யார்க்கே` (தி.4 ப.17 பா.8) எனப் பின்வருதலை நோக்குக. ஏறு உகந்து ஏறவல்லான் - விடை ஏறுதல் பற்றிய சாத்திரக் கருத்தும் அத்திறத்து உள்ள விடையின் மேல் வரும் வன்மையும் சிவபத்தர்க்கே விளங்குவன. எரி புரை மேனி - தீவண்ண மேனி. நாறு கரந்தை - மணம் வீசும் சிவகரந்தை. `கரந்தையான்` அதனை அணிதலுடைமையால் `கரந்தையினான்` என்றது. நால்மறைக் கண்டன்:- `சாமகண்டா` என்பது முதலிய தனிப் பெயர்களையும் அவற்றின் பொருளையும் உணர்க. ஆறு - சடையில் கரந்த கங்கை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானும்
செம்புநல் கொண்டெயின் மூன்றுந் தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும் வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர வீருரி யானு மாரூ ரமர்ந்தவம் மானே.

பொழிப்புரை :

குயிலை ஊதுகொம்பாக உடைய சிறந்த இளவேனிற்காலத்திற்கு உரிய மன்மதன் தன் ஆற்றல் அழியுமாறு அவனைக் கண் சிவந்து அழித்தவனும், நல்ல செம்பு முதலியவற்றால் செய்யப்பட்ட திரிபுரம் தீயால் அழியுமாறு புன்முறுவல் செய்தவனும், நறுமணம் கமழும் பெரிய கொன்றை மலரை அணிந்தவனும், வாள் போன்ற கண்களை உடைய பார்வதி மனத்தில் சோர்வு கொள்ளுமாறு யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை ஆடையாக மேலே போர்த்தவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான். இது மொழி மாற்றுப் பொருள்கோள்.

குறிப்புரை :

வேனிலவன் - மன்மதன். அவனுக்கு வேனிற்காலம் உகந்தது. குழைய - எரிந்து சாம்ப. முறுவல் - புன்னகை. திரிபுரத்தை விழித்தெரித்ததும் மன்மதனை நகைத்தெரித்ததும் கற்ப விகற்பம் பற்றியவை ஆதலின், விரோதம் இன்று. வம்பு - மணம். அம்பரம் - ஆடை. திகம்பரம். ஈர் உரி - ஈரிய (ஈரம் உடைய) தோல். (உரியம் பரம் - தோலாடை).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஊழி யளக்கவல் லானு முகப்பவ ருச்சியுள் ளானும்
தாழிளஞ் செஞ்சடை யானுந் தண்ணமர் திண்கொடி யானும்
தோழியர் தூதிடை யாடத் தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

ஊழிக்காலங்களைத் தான் அளக்கவல்ல, காலங்களுக்கு அப்பாற்பட்டவனும், தன்னை விரும்பும் அடியவர்கள் தலையின்மேல் உள்ளவனும், தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினனும், குளிர்ச்சிபொருந்திய வலிய கொடியை உடையவனும், தோழிமார்கள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல, அடியார்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க, சக்கரத்தையும் சங்கையும் தாங்குகிற திருமாலின் கையிற் காட்சியளிப்பவனும் திருவாரூர் அமர்ந்த அம்மானாவான். தண்ணம்ஆர் என்று பாடம் ஓதி மழுப்படையின் வடிவம் எழுதிய என்றும் பொருள் கொள்க. தண்ணம் - மழு. (கழ. த. அக. பக். 512)

குறிப்புரை :

ஊழிமுதற் சிந்தாத நன்மணியாகிய அரனைப் பல்லூழி காலம் பயின்று அர்ச்சிப்பது அடியார்க்கே உண்டாயின், அருச்சனையை ஏற்று அருளும் ஆண்டவனுக்கு ஊழியெல்லை ஏது? எல்லா வூழியும் அவனால் அளக்கப்படுவன. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" (தி.8 திருவாசகம் 8.8.) \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே`. `ஊழி வண்ணமும் ஆவர்`. `ஊழியார் ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர்` என்று பிறாண்டும் இவ்வாசிரியர் அருளியதுணர்க. `உகப்பவர் உச்சி உள்ளான்`:- `கருதிக் கசிவார் உச்சியன்` (தி.7 ப.98 பா.3) `உரைப்பார் உரையுகந்துள்க வல்லார் தங்கள் உச்சியாய்` (தி.7 ப.92 பா.4) தாழ்சடை, இளஞ்சடை, செஞ்சடை என, மூவடையும் சடை யென்னும் ஒரு பெயரைத் தழுவின. தண் - குளிர்ச்சி. கொடி - விடைக் கொடி. `செங்கண் விடைக்கொடி (தி.4 ப.4 பா.5). தோழியர் தூது சொல்வது குறித்தது. ஆழி வளைக்கையினான்:- தியாகேசரை விடாத கையைக் குறித்ததும் ஆம். திருமாலாகி, அம்மாலுக்குரிய புவனத்தில் உலகுயிர்களைக் காப்பவன். இது சக்கரமும், சங்குந் தாங்கும் திருமாலின் கையிடத்தவன் தியாகேசன் என்ற விளக்கந் தரும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

ஊர்திரை வேலையுள் ளானு முலகிறந் தொண்பொரு ளானும்
சீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும்
ஆர்திரை நாளுகந் தானு மாரூ ரமர்ந்தஅம் மானே. 

பொழிப்புரை :

பரவும் அலைகளை உடைய பாற்கடலில் உள்ளவனும், உலகுக்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பொருளாவானும், சிறந்த பாடல்களில் உள்ளவனும், சிவந்த கண்களை உடைய திருமாலாகிய காளையின் வடிவம் எழுதிய கொடியை உடையவனும், நீண்ட பொலிவு பொருந்திய கூந்தலை உடைய பார்வதியைத் தழுவி ஒருபாகமாக வைத்தவனும், திரு ஆதிரை நாளை விரும்பி ஏற்றவனும் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான்.

குறிப்புரை :

ஊர்திரை வேலையுள்ளான் - பரவும் அலைகளையுடைய (பாற்)கடலில் துயிலும் திருமாலாயிருப்பவன். `ஆழிவளைக் கையினான்` (தி.4 ப.4 பா.5). உலகு இறந்த ஒண்பொருளான்:- `அப்பாலைக் கப்பாலைக் கப்பாலானை` (தி.6 ப.26 பா.4.) `அப்பால்` மூன்றும் முறையே சுத்தாவத்தைச் சுழுத்தி முதலிய மூன்றும் ஆம். `எல்லா வுலகிற்கும் அப்புறத்தார்` (திருக்களிறு.1.). அண்டத்துக்கு அப்புறத்தார் (தி.6 ப.26 பா.5.) `அப்பாலைக்கு அப்பால்` (தி.8 திருவாசகம். 8-11) `உலகினுக்கு அப்புறம்` (தி.8 திருவாசகம். 10-14). `ஒண்பொருள் - சிவமே பெறுந்திரு`. `ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்` (குறள்-760) என்புழிப்படும் பொருள் அழிவது, `சென்றடையாததிரு` ஆதலின், இதுவே ஒண்பொருளாகும்.
இறந்த:- பெயரெச்சத்து அகரம் தொகுத்தல். இறந்து என்று வினையெச்சமாகவே கொள்ளின், பொருளான் என்னும் குறிப்பு வினைப்பெயரின் விரியும் வினைமுதனிலையொடு இயைக்க. சீர்தரு பாடல் உள்ளான் - சாமகானம் பாடுதலுள்ளவன். வேதப்பாடல்களில் உள்ளவன். `தொடுக்குங் கடவுட் பழம் பாடல்` `காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்துப் பழம் பாடல்` விடைக்குச் செங்கண் விசேட லட்சணம். ஆர்திரை என்பதன் மரூஉவே ஆதிரை. `ஆர்திரையான் ஆர்திரையான் என்றென் றயர்வுறுமீ யூர்திரைநீர் வேலி யுலகு` என்னும் (முத்தொள்ளாயிரச் செய்யுட்களின் கடவுள் வாழ்த்து) இடத்தில் எதுகையமைப்பினை நோக்கியுணர்க. இங்கு `ஆர்திரை` என்றே ஆசிரியர் அருளினார் என்பதற்குச் சான்று வேறு வேண்டா. `முத்து விதானம்` எனத் தொடங்கும் திருப்பதிகம் (தி.4 ப.21 பா.1-10) திருவாதிரைச் சிறப்புணர்த்தற்கே எழுந்தது. `திருவாதிரைத் திருப்பதிகம்` என்றே அதனைக் குறிப்ப.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் தோன்றி யருளவல் லானும்
கழற்கங்கை பன்மலர் கொண்டு காதல் கனற்றநின் றானும்
குழற்கங்கை யாளையுள் வைத்துக் கோலச் சடைக்கரந் தானும்
அழற்கங்கை யேந்தவல் லானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

தொழுவதற்கு உள்ளங்கைகளைச் சேர்த்துக் கொண்டு நிற்கும் அடியவர்கள் மனக்கண்முன் தோன்றி அருள் செய்ய வல்லவனும், தன் திருவடிகளில் சேர்ப்பதற்கு உள்ளங்கைகளிற் பல பூக்களையும் கொண்ட அடியார்களுக்கு அன்புமிகுமாறு நிற்பவனும், கூந்தலை உடைய கங்கையை அழகிய சடையில் வைத்து மறைத்தவனும், தீயினைத் தாங்கத் தன் உள்ளங்கையை நீட்டி ஏற்று ஏந்தும் ஆற்றல் உடையவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.

குறிப்புரை :

தொழற்கு - தொழுதலுக்கு. அங்கை - அழகியகை, உள்ளங்கை. துன்னி - பொருந்தி. துன்னி என்னும் செய்தெனெச்சம் சினைவினை. அது `நின்றார்` என்னும் முதல்வினையுடன் முடிந்தது. இலக்கியத்தில் இவ்வாறு பயின்றுவருதலையுணர்ந்தும், இலக்கண விதியின்றென்று கொண்டு, செயவெனெச்சமாகத்திரித்துப் பொருளுரைத்தல் உரையாசிரியர் வழக்கு. அருகிய வழக்கன்மையின் அது பொருந்தாது. சில இடத்தில் வேண்டு மேற்கொள்ளலாம். `தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான்` (தி.12 பெரியபுராணம் 1981) என்பதனோடிதனிடை வேறுபாடு தேற்றேகாரம் ஒன்றே. அங்கையில் பல மலர் (சிவபிரான்) கழற்குக்கொண்டு காதல் கனன்று சுடர்விட்டு விளங்க நின்றான். குழல் - கூந்தல், கங்கையான். உள் - உள்ளம். சடையுளுமாம். கரந்தான் - மறைத்தான். பிறவினை. `அங்கை அழற்கு ஏந்தவல்லான்`. அழற்கு - அழலை; தீயை. உருபு மயக்கம். அழலும் கம்மும் எனலும் ஆம். கம் - பிரம கபாலம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

ஆயிரம் தாமரை மலர்கள் போன்ற ஆயிரம் திருவடிகளை உடையவனும், ஆயிரம் மேருமலைகளைப் போன்ற ஆயிரம் தோள்களை உடையவனும், ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஆயிரம் நீண்ட முடிகளை உடையவனும், ஆயிரம் பெயர்களை விரும்பிக் கொள்பவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.

குறிப்புரை :

தாமரை போலும் சேவடி. பொன்வரை போலும் தோள். ஞாயிறு போலும் நீள்முடி. ஆயிரம்:- பன்மை குறித்து நின்றது. `பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்` என்றாங்கு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வீடரங் காநிறுப் பானும் விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும் ஓங்கியொ ரூழியுள் ளானும்
காடரங் காமகிழ்ந் தானுங் காரிகை யார்கண் மனத்துள்
ஆடரங் கத்திடை யானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

முத்தி உலகை ஞான ஆனந்தக் கூத்து நிகழ்த்தும் இடமாக நிலை நிறுத்தியவனும், தன் முடியைக் காண்பதற்குப் பிரமன் வானத்தில் தொடர்ந்து உயரத் தேடி ஓடுகின்ற வெளியிடத்தைத் தான் ஆடும் அரங்கமாகக் கொள்பவனும், பல ஊழிக் காலங்களிலும் உயர்ந்து உள்ளவனும், சுடுகாட்டை ஆடும் அரங்கமாக மகிழ்ந்து ஏற்பவனும் தன்னை வழிபடும் மகளிருடைய கண்களையும் மனத்தையும் தான் ஆடும் அரங்கமாகக் கொண்டு அவற்றிடை உறைபவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.

குறிப்புரை :

வீடு அரங்கு ஆ நிறுப்பான் - முத்தியை ஞானானந்தக் கூத்து ஆடும் அரங்கமாக நிறுத்துபவன். விசும்பு - விண். வானம். வேதி - வேதம் ஓதும் நான்முகன். தொடர - அன்னப் புள்ளுருவாக முடி தேட. ஓடு அரங்கு - தேடி ஓடுகின்ற வெளியிடம். வேதி விசிம்பினைத் தொடராமையைக் கையிலுள்ள பிரமகபாலம் வெளிப்படுத்துகின்றது என்றலுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள்வா னுள்ளத் தானும்
கையஞ்சு நான்குடை யானைக் கால்விர லாலடர்த் தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சி னப்புறத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. 

பொழிப்புரை :

படமெடுக்கும் அழகிய ஒளியை வெளிப்படுத்துகின்ற பாம்பில் பள்ளி கொள்ளும் திருமாலுடைய உள்ளத்தில் இருப்பவனும், இருபது கைகளை உடைய இராவணனைத் தன் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனும், பொய் பேசுதற்கு அஞ்சி உண்மையையே பேசிப் புகழை விரும்பும் அடியவர்களுக்கு அருள் செய்வானும், இருபத்தைந்து தத்துவங்களைக் கடந்து நிற்பவனும் ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான்.

குறிப்புரை :

பை - நச்சுப்பை. அம் சுடர் - அழகிய மாணிக்கச் சுடர். நாகப்பள்ளி கொள்வான் - பாம்பணையான் (திருமால்). திருமால் தன் உள்ளத்தில் வீதி விடங்கப் பெருமானை உடைமை திருவாரூர்ப் புராணத்தாலும் தியாகேசத் திருமேனியாலும் அறியப்படும். `பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத்தான்` என்ற உண்மையை உணர்த்தும் ஓவியம் அது. கை அஞ்சு நான்கு - இருபது கை. உடையான் - இராவணன். `கால் விரலால்` என்றது, இருபதுகையனை ஒரு கால்விரல் முனையால் அடர்த்தல் சிவபிரானுக்கு மிக எளிதென்ற தாம். திருவருள் பெற விரும்பி முயல்வார்க்குப் பொய்யை அஞ்சுதலும், வாய்மைகளே பேசுதலும், இறைவன் பொருள் சேர் புகழே புரிதலும் இன்றியமையாதன. ஐயஞ்சின் அப்புறத்தானானாலும், பொய்யஞ்சிவாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கருள் செய்ய இப்புறத்தானாகி அருள் செய்வான் என்றபடி. ஐயைஞ்சு - (5x5=25) நிலமுதல் 25 தத்துவம். சிவதருமோத்தரம். 10. சிவஞானயோகவியல் 32. உரை. பார்க்க. சங்கற்பநிராகரணம் சங்கிராந்தவாதி. (அடி. 40) `அரணம் ஐயைந்தின் அப்புறத்து` திருக்களிற்றுப்படியார் 1. பார்க்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலு மாரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேனே. 

பொழிப்புரை :

உடம்பெல்லாம் வெண்ணீறு பூசிய பெருமானுடைய திருவடிகளை வழிபடாமல், கடைத்தேறலாம் என்று நினைத்துச் சமணசமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்து மனத்தை அச்சமயத்தில் பறி கொடுத்து, கொய்தற்காக அடியவர்கள் உலவும் பூக்களை உடைய சோலைகளில் குயில்கள் கூவவும் மயில்கள் ஆடவும் அமைந்திருக்கும் திருவாரூரில் உகந்தருளியிருக்கும் பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கிச் சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பிய கள்வனாகி விட்டேனே.

குறிப்புரை :

சண்ணித்தல் - பூசுதல், பொருந்தல், உழிதந்து:- திரிந்து (உழிதரல்) `உழிதருகாலும்` (தி.8 திருவா. 12) உள்ளம் விட்டு - மனத்தைப் பறிகொடுத்து. மயில் ஆலும் - மூன்றாவது திருமுறைக் குறிப்புரையில் `வீடலால வாயிலாய்` என்பதன் விரிவுரையாக யாம் எழுதியுள்ளதைக் காண்க. (தருமை ஆதீன வெளியீடு). `ஆமாத்தூர் சண்ணிப்பானை`. `மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே என் உள்ளம் விட்டு`, `ஆரூரரைக் கையினால் தொழா தொழிந்து` என்னும் பகுதியால் கனியைக் கவராமை போல்வது உணர்த்தப்பட்டது. `உய்யலாமென்றெண்ணி உறிதூக்கி உழிதந்து` என்பதால் காய்கவர்தல் போல்வது குறிக்கப்பட்டது. விட்டு ஒழிந்து (கள்வனேன்) ஆனேன் என்று ஆக்கம் வருவித்து இயைக்க.
உடையான் இசையக் காய்கவர்தல் இயலாமையின், அவன் அறியாவாறு கவர்ந்தமையால், `கள்வன்` என்றார். சமண் சமயம் புக்கது காய்போல்வது. அது சிவசம்மதம் பெற்ற புகல் அன்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோ ருருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட் டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண் டருள்செய்த வாரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே. 

பொழிப்புரை :

எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, இன்பங்களை நுகர் பொருளாக வைத்து, முன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கி அடியேனுடைய உள்ளத்தைத் தம் இருப்பிடமாகச் செய்து அடியேன் உள்ளத்தில் அன்பினை நிலைநிறுத்தி, அடியேனை ஆளுதலைக் கடமை (கூழைமை)யாகக் கொண்ட ஆரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழவிட்டு, கைப்பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக்கொண்டாலும் உணற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே!

குறிப்புரை :

என்பு:- (எல் + பு) வல் + பு, வன்பு. மெல் + பு = மென்பு. எலும்பை இருத்தி, நரம்புகளைத் தோலினுட்புகப் பெய்திட்டு, என்னை ஓர் உருவம் ஆக்கி, இன்பம் இருத்தி, முன் இருந்த வினை (களைத்) தீர்த்திட்டு என் உள்ளம் கோயிலாக்கி, அன்பு இருத்தி, `சிந்தைப் பாழறை பள்ளியறையாக்கி` (கழுமல மும்மணிக்கோவை. 4.) அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த ஆரூரருடைய திருமுன் இருக்கும் விதியிலேன். முன்பு இருக்கும் விதியில்லை என்றதால் பின்பு இருக்கும் விதியுளது எனல் பெறப்பட்டது. எதன் பின்பு? சமண் சமயக் கொள்கையின் நீங்கிவந்ததன் பின்பு. கூழ் - உணவு. (பைங்கூழ்). உணவுக்கு ஆட்படுதல் கூழாட்படுதல். ஆட்கொள்ளல்; கூழாட் கொள்ளல். அதன் தன்மைக்குக் `கூழைமை` என்று பெயர். `தில்லை அம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ நம் தம் கூழைமையே` (தி.4 ப.81 பா.5). ஈண்டுக் கூழ் அருளுணவின் மேலது. குழையும் இயல்பும் ஆம். `குழை` முதல் நீட்சி `கூழை`.
குழைந்து நடக்கை (திவ். பெரியாழ்வார். 3.2.5.) முயலின் பின் போதல் எளிது. காக்கையின் பின் போதல் பறத்தல் ஆகிய இயல்பில்லாத உயிர்க்கு அரிது; இல்லை என்றவாறு முயல். சைவ சமயத்துக்கு உவமை. காக்கை - சமண் சமயத்துக்கொப்பு. அருள் வழிச் செல்லாது மருள் வழிச் செலவுக்கு உவமையுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங் குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் னுள்ளத்தி னுள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி யாட்கொண்டு பிணிதீர்த்த வாரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே. 

பொழிப்புரை :

முன்பெல்லாம் உடல்பருத்த சமணத்துறவியரின் சொற்களையே செவிமடுத்து அடியேனுடைய தீவினைகளையே பெருகச் செய்து, உளம் உருகி உள்ளத்தில் தேங்கியிருந்த கள்ள உணர்வை அடியோடு நீக்கி, பிணியை உண்டாக்கித் தம் அருகு வரச் செய்து, அடியவனாகக் கொண்டு அடியேனுடைய பிணியைப் போக்கிய ஆரூர்ப் பெருமானுடைய அருகிலே இருத்தற்குரிய நல்வினையில்லாமல் பல்லாண்டுக் காலம், விலைகொடுத்தாகிலும் பெறத்தக்க அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, விலையின்றிக் கிட்டிலும் வெறுக்கத்தக்க பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவனாக ஆகிவிட்டேனே.

குறிப்புரை :

(என் பாவத்தைப்) பெருகுவித்து - பெருகச் செய்து, (வளர்த்தல்). பண்டு - மீண்டு சைவநெறி புக்கதற்கு முற்காலம். குண்டர்கள் தம் சொல் - சமணர் அறவுரைப் போலி. உருகுவித்து - உருக்கி. உள்ளம் - உயிர். உள் இருந்த கள்ளம்:- சிவபிரானது நிலைமை குறித்தது. தள்ளிப்போக்கி அருகுவித்து:- சிவநெறிக்கு அணுகி வரச் செய்தமை குறித்தது. பிணி - சூலைநோய். பிணி - மும்மலப் பிணி. ஆரூரது அருகிருத்தலுக்கு ஒப்பு அறம் கொள்ளல். அருகனது அருகிருந்ததற்கு ஒப்பு மறம் கொள்ளல். விலைக்குக் கொள்ளத்தக்க அறத்தை வறிதே விட்டு, விலையின்றிக் கிடைப்பினும் வெறுத்தற்குரிய மறத்தை விலைக்குக் கொண்ட பேதைமையை ஏற்றிக் கொண்டுரைத்தவாறுணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார்  நகைநாணா துழிதர் வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பாறலையிற் றெளித்துத்தன் பாதங் காட்டித்
தொண்டெலா மிசைபாடத் தூமுறுவ லருள்செய்யு மாரூ ரரைப்
பண்டெலா மறியாதே பனிநீராற் பாவைசெயப் பாவித் தேனே.

பொழிப்புரை :

உடல் பருத்தவனாய்த் தலை மயிரை வலியப் பறித்துத் தலையை மொட்டையாக்கிக்கொண்டு, இள மகளிருடைய ஏளனச் சிரிப்பிற்கும் வெட்கப்படாமல் திரிந்த அடியேனை ஒரு பொருளாக ஏற்றுக் கொண்டு, பால் முதலிய பஞ்சகவ்வியத்தால் தூய்மை பெறச் செய்து தன் திருவடிகளைத் தரிசிப்பதற்குத் தொண்டர்கள் எல்லோரும் தம்புகழைப் பாட அதனைச் செவிமடுத்துப் புன்முறுவலோடு அருள் செய்யும் அப்பெருமானை என் வாழ்க்கையின் முற்பகுதியில் அறியாமல் திரவவடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப் பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போல, உண்மையறிவுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டேன் ஆனேனே.

குறிப்புரை :

குண்டன்:- உடலின் தோற்றம் பற்றிய பெயர். தலை பறித்தல்:- தலை மயிரைப் பிடுங்கியெறிதல். இடவாகுபெயர். குவி - குவிந்த. நகை - எள்ளி நகைத்தல். உழிதர் வேற்கு திரிதர்வேனை - (தி.4 ப.5 பா.6) `செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை` (தி.8 திருவா. 5.1-9). பண்டம் - (என்னையும்) ஒரு `பொன்னாகத்து அடியேனைப் புகப்பெய்து பொருட்படுத்த ஆரூரர்` (தி.4 ப.5. பா.5) `ஒரு பொருட்படுத்த`. பால் தலையில் தெளித்தல்:- பஞ்ச கவ்வியத்தால் தூய்மையாக்கல்;- அபிடேகம் முதலியவற்றொடு கூடிய சிவதீக்கையுமாம். தன் பாதம் காட்டல்:- சிவஞானோபதேசம். தொண்டு -தொண்டர்கள். எலாம் - எல்லாரும். இசை - இசைப்பாக்கள் (தோத்திரங்கள்) (தி.4 ப.56 பா.4). தூமுறுவல்` - தூய புன்னகை. `கொம்புநல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்` (தி.4 ப.4 பா.4) தது வேறு, இது வேறு எனத் `தூமுறுவல்` என்று அருளினார். பனி நீராற் பாவை செயப் பாவித்தல்:- பனி நீராற் பொம்மை செய்யக் கருதுவது போற் சிவநெறியல்லாத (சமண் முதலிய) பிற நெறிகளால் வீடு பெறக் கருதுதல். `பரவை` என்றுள்ள பாடம் பொருந்துமேற்கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்தீங் கிருகையேற் றிடவுண்ட ஏழை யேனான்
பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து பொருட்படுத்த வாரூ ரரை
என்னாகத் திருத்தாதே யேதன்போர்க் காதனா யகப்பட் டேனே. 

பொழிப்புரை :

கொடிய பாம்பினை ஒத்தேனாகித் தீயவர் சொற்களைக் கேட்டு, கடுக்காயை உண்பதால் அதன் கறை படிந்த பற்களை உடையேனாய், என்விருப்பம்போலத் திரிந்து இரு கைகளையும் இணைத்து அவற்றில் பிச்சை ஏற்ற உணவினை உண்ட அறிவிலியாகிய அடியேன், பொன்போன்ற செவ்விய உடலிலே அடியேனை இருத்திக் குறிப்பிடத்தக்க பொருளாக அடியேனை ஆக்கிய ஆரூர்ப் பெருமானை என் உள்ளத்தில் நிலையாக இருக்கச் செய்யாமல், ஒருவன், விளைத்த சண்டையில் அதனோடு யாதும் தொடர்பில்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவதுபோலப் நவீனரான சமணர்கள் செய்த செயல்களில் பரம்பரைச் சைவனாகிய அடியேன் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றேனே.

குறிப்புரை :

துன்நாகத்தேன் - (துர் + மதி = துன்மதி. துர் + நாகம் = துன்னாகம்) கொடிய பாம்பை ஒத்தேன். துர்ச்சனவர் - (துர் + ஜனம்) தீயோர். துட்ட சனங்கள். துவர் வாய்க்கொள்ளல் - துவரேறிய பல்லினராயிருந்தனர் அக்காலச் சமண தருமத்தர். அதற்குக் காரணம் துவர்ப்புடைய கடுக்காயை வாய்க்கொள்ளல். `பாசிப்பல் மாசு மெய்யர்` (தி.4 ப.39 பா.4) என் ஆக - என்பாட்டுக்கு. `குறிக்கோளிலாது கெட்டேன்` (தி.4 ப.67 பா.9) `தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவாறு ஒன்றும் இன்றி விலக்குவாரிலாமையாலே விளக்கத்திற் கோழி போன்றேன்`. (தி.4 ப.31 பா.5) என்பவற்றிற் போல ஈங்கும் கொள்க. திரிதந்து:- `திரிதரு` என்னும் துணை வினையுடன் கூடிய முதனிலையிற் பிறந்த வினையெச்சம். திரிதரல்:- தொழிற்பெயர். இரு கையிலும் ஏற்று உண்ட. இட உண்ட, ஏழையேன் - அறிவிலேன். `நுண்ணுணர்வின்மை வறுமை` (நாலடியார்.) பொன் ஆகத்து - பொன் போலும் ஒளியுடைய செவ்வுடலினுள். அடியேனைப் பெய்து, புகப்பெய்து. பொருட்படுத்த:- `பண்டமாப் படுத்து` (தி.4 ப.5 பா.4). என் ஆகத்து இருத்தாதே - என் உடலினுள் வீற்றிருந்தருளச் செய்யாமலே, `வினை படும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே` (தி.9 திருவிசை. 117) எனல் காண்க. ஏதன் போர்க்கு ஆதன் அகப்பட்டது போலானேன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் னுள்ளத்தி னுள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போது மடியவர்கட் காரமுதா மாரூ ரரை
எப்போதும் நினையாதே யிருட்டறையின் மலடுகறந் தெய்த்த வாறே. 

பொழிப்புரை :

உலகில் பிறக்கும் பிறவிகளையே நல்கும் நூல்களை ஓதிச் சமணனாய் வலிய மயிர் நீக்கப்பட்ட மொட்டைத் தலையோடு திரியும் அடியேனை நிகரில்லாத வகையில் உவமையிலாக் கலை ஞானத்தை உபதேசித்து என் உள்ளத்தினுள்ளே தங்கி உயிருக்கு உறுதியானவற்றைத் தெரிவித்து ஒவ்வொரு கணமும் அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமாக உள்ள ஆரூர்ப் பெருமானை எப்பொழுதும் நினையாமல், கறப்பவனொருவன், பயனின்மை மட்டிலன்றிக் காலுதையும் பட்டினைப்பவனாய் இருட்டறையில் மலட்டுப் பசுவை பால் வேண்டிக் கறந்து இளைப்பது போலப் பயனின்றித் துன்புறுதலோடு வாழ்நாளின் முற்பகுதியைக் கழித்தேனே.

குறிப்புரை :

பப்பு ஓதி - பிரவிருத்தியை வளர்க்கும் நூல்களைச் சொல்லி. `பப்பற வீட்டிருந்துணரும் நின் அடியார் (தி.8 திருவா, திருப்பள்ளி, 6) பம்பு - பப்பு பரப்பு, விரிதல். குவிதல் (நிவிர்த்திக்கு இடம்) இல்லாமை. பவணன் - பவணந்தி. `நாகலோக வாசி` அல்லர். `கனகநந்தியும் புட்பநந்தியுந் பவணநந்தியும் குமணமாசுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா அநகநந்தியர்` (தி.3 ப.39 பா.6). சைனன் என்றதாம். (தி.4 ப.5 பா. 4) ஒப்பு - நிகர். ஓடல் ஈண்டு இன்மை குறித்து நின்றது. ஓடல் - நின்ற இடம் வறிதாக விரைந்து ஏகல். ஒப்போடவோதுவித்தல்:- `உவமையிலாக் கலைஞானம்` உபதேசித்தல். ஓதுவித்தற்கு ஒப்பு ஓடல் உரித்தேனும் ஓதப்பட்ட ஞானத்திற்கும் கொள்ளப்படும். உள்ளத்தின் உள் இருந்து:- `உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே` (தி.6 ப.47 பா.1) எனல் காண்க.
உறுதிகாட்டல்:- சிவகதியை உணர்த்துதல். `உழைத்தால் உறுதி உண்டோ தான்` (தி.8 திருவாசகம் 496). `ஊடுவது உன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி` (தி.8 திருவாசகம் 50) பெறுதி, அறுதி, புகுதி, தகுதி என்பன போலும் பெயர்ச்சொல் இது.
அப்போதைக்கு அப்போதும் - நினையும் அவ்வப் பொழுதும். பொழுது - போழ்து - போது. பொழுதை - போதை. மரூஉ. `அப்போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரன்` (திருக்குறுந். 1) `அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்` (திவ். பிர.)
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" நின்னையெப்போதும் நினையவொட்டாய் நீ நினையப் புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு வாழி இறையவனே. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" (தி.4 ப.112 பா.4)
ஒருபோது, இருபோது. முப்போது. நாற்போது என்று வழிபடுகாலம் சிவாகம விதிப்படி நான்கு. எப்போதும் (சதாகாலமும்) வழிபாடு செய்யும் ஞானியர் அல்லார்க்கு இவ் விதி. அதனால் இவ்வாறு கூறினார். எப்போதும் நினையாதே என ஞானியர் செயல் வாயாமைக்கு வருந்தியவாறு. கைப்போது மலர்..... ... வைத்தேனே (தி.4 ப.7 பா.3) எனல் காண்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கதியொன்று மறியாதே கண்ணழலத் தலைபறித்துக் கையி லுண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த வாரூரில் வார்தேனை வாய்மடுத்துப் பருகி யுய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே. 

பொழிப்புரை :

இனிச்சென்று சேரும் வழியை அறியாமல், கண் எரியுமாறு தலைமயிரை வலியப்பறித்து, கைகளிலேயே உணவை வாங்கியவாறே உண்டு ஊர்களிலுள்ள பெருந்தெருக்களில் பலரும் காண அவருடைய ஏளனச் சிரிப்புக்கு வெட்காமல் திரியும் அடியேனுக்கு நல்லறிவை வழங்கி ஆரூரில் நிறைந்த தேனாகிய பெருமானை நுகர்ந்து கடைத்தேறும் வாய்ப்பினைப் பெறாத நல்லறிவு இல்லாத அடியேன், விளக்கு இருக்கவும் மின்மினியினுடைய தீயைக் குளிர்காயக் கொள்வாரைப் போலப் பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தேனே.

குறிப்புரை :

கதி - ஊர்த்துவ கதி. செல்கதி எனலுமாம். ஒன்றும் - யாதும். அழல - எரிய, வெம்மை எழ. பதி - ஊர், ஊரில் உள்ள பெருந்தெரு. மதி - சிவஞானம். திருவாரூரிற் புற்றிடங் கொண்டாராகிய தேனை வாயில் மடுத்துக் குடித்துப் பிறவித் துயரினின்றும் உய்தி பெறுதற்கு நல்லூழ் இன்றி, அறிவிலியாகிய யான், விளக்கு இருக்கவும் அது கொண்டு தீ வளர்த்துக் குளிர்காயும் அறிவின்றி, மின்மினியில் தீக்காய்தற்கு முயன்றவாற்றை ஒத்த வினையை மேற்கொண்டேன். உழிதர்வேற்கு மதி தந்த ஆரூர்த் தேன் என்க.
உய்யும் விதி என்பதில் `உய்யும்` காரியப்பொருளில் வந்த பெயரெச்சம். மதியிலியேன் காய்ந்தவாறு என்றியையுமாயின், மதியிலியேன் செயல் காய்ந்தவாறாகும் என்க. மதியிலேன் காய்ந்தவாறு என்றியையுமாயின், மதியிலியேன் செயல் என்றதும் மதியிலியேன் என்றதும் ஒன்றாகா. `மதியிலி` என்பது படர்க்கை. அதனொடு தன்மையுணர்த்தும் ஈற்று நிலை (விகுதி) சேர்ந்து `மதியிலியேன்` என்றாயிற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோடிக் கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை யாட்கொண்ட வாரூ ரரைப்
பாவியே னறியாதே பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே.

பொழிப்புரை :

தலைமயிரை வலியப் பறித்து, நல்வினையில்லாத கீழோராகிய சமணத் துறவியரின் உபதேசத்தைச் செவிமடுத்துச், சொல்வதைக் கேட்டுக் கேட்டு அச்சொற்றொடர்களை அப்படியே திருப்பிச் சொல்லும் திறமை உடைய நாகணவாய்ப் பறவை போன்று அவற்றையே சொல்வேன் ஆகிக், குவளை மலர் போன்ற கண்களை உடைய பெண்களைக் காண்டலே தீவினை என்று அவர்களை ஒரோவழிக் கண்டவழி ஓடிச் சென்று இருப்பிடத்தின் கதவினை மூடிக்கொள்ளும் கள்ளத்தன்மை உடைய அடியேனுடைய உயிர் சூலைநோயால் நீங்காதபடி காத்து, என்னை அடிமை கொண்ட ஆரூர்ப் பெருமானை அடியேன் உள்ளவாறு அறியாதே மக்கள் குடிபோகிய ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்தவர் போல் ஆகிவிட்டேனே.

குறிப்புரை :

பொறி - அறிவு. ஐம்பொறிவாயிலாக வரும் புலன்களுள் ஒழுங்குடையதே பொறி என்பர். சமண் + நீசர் = சமணீசர். சமணராகிய நீசர். காவி கண்ணுக்கு உவமம். மடவார்க்கண்டு:- மடவாரைக் கண்டு. உயர்திணைக்கண் தொக்கு நின்றது இரண்டனுருபு. வல்லொற்று மிகாதேல் எழுவாய்த் தொடராய்விடும். மடவாரைக் கண்டு ஓடிக் கதவை அடைக்கும் கள்வன் என்றதால், சமண் சமயத் துறவிகள், மகளிரைக் காணார். கண்டால் ஓடிக் கதவை அடைத்துக்கொள்வர். புறத்தே மகளிரைக் கண்டு ஓடிக் கதவை அடைத்துக்கொண்டு, கருத்தை அடைக்காது அகத்தே அவரால் எய்தும் சிற்றின்பத்தை விழைவோர், `கள்வர்`. அம்முறைமையால், தம்மைக் `கள்வனேன்` என்றருளினார். ஆவி:- ஆவித்தலால் வந்த காரணப்பெயர்; உயிர்த்தலால் உயிரென்றாயது போல்வது. பாழாய்ப்போன ஊரில் பிச்சை புகுந்து இளைத்தால்தான், `பிச்சை` எடுக்கத் துணியும் எண்ணம் மிகக் கொடியது எனல் விளங்கும். பயிக்கம் - பிச்சை. `பிச்சை புகுதல்` என்னும் வழக்குணர்க. `பலியும் படிகமும் பாகமும் பயிக்கமும் பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை (பிங்கலந்தை. 2123). `போற்றிய பயிக்கம் பாகம் பொருந்திய பலியே பிண்டம் சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின் பேர்`(சூடாமணி நிகண்டு. 9:-11).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

ஒட்டாத வாளவுணர் புரமூன்று மோரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை யாரூரி லம்மானை யார்வச்செற் றக்கு ரோதம்
தட்டானைச் சாராதே தவமிருக்க அவஞ்செய்து தருக்கி னேனே.

பொழிப்புரை :

தன்னோடு நட்புறாத கொடிய அசுரர்களின் மும்மதில்களும் ஓரம்பினால் உருக்குலையுமாறு அழித்தவனாய், காமன் தன் கண்ணினாலும், காலன் தன் காலினாலும், அழியுமாறு அவர்களைத் துன்புறுத்தியவனாய், ஆரூரின் தலைவனாய், பற்று, பகைமை, கோபம், என்ற தீப்பண்புகள் தன்மாட்டு அணுகப் பெறானாய் உள்ள பெருமானை அணுகாமல், தவம், செய்தற்குரிய செயலாய் இருக்கவும், அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டு திரிந்தேனே.

குறிப்புரை :

ஒட்டாத - வேறுபட்ட `ஒட்டாத பாவித் தொழும்பர்` (தி.8 திருவாசம் 221) நண்பால் ஒட்டுதல். வாள் - கொடுமை. (முப்புரத்தியல்பு. 1037). `அம்பின் வாயின்` என்றதில் உள்ள இன் இரண்டும் முறையே சாரியையும் ஏழனுருபும் ஆகும். அம்பினது வாய் என்றுரைக்க. கட்டான் - களைந்தான். காமனைக் கண்ணின் வீழவும், காலனைக் காலின் வீழவும் அட்டான். அடுதல் - கொல்லல். `ஆர்வம்` என்றதால் காமம், மோகம், உலோபம் மூன்றும் கொள்ளப்பட்டன. `செற்றம்` என்றதால் மதமும் மாற்சரியமும் அடங்கும். அடங்கவே ஆறும் கூறப்பட்டன. தட்டான் - தட்டுப்படாதவன். ஆறு குற்றங் கட்கும் அப்பாற்பட்டவன். குற்றமிலி என்றவாறு. தட்டாதவன் - தவறாதவன். அக்குற்றங்களைச் சார்ந்து தவறுவன உயிர்கள். அத்தவறு சாராதவன் இறைவன் எனலுமாம். அவனைச் சாராமலே கழிந்தமைக்கு இரங்கியவாறு. தவம் என்பதன் மறுதலை அவம் ஆதல் பல நூலினும் காணப்படும். `தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன்` (தி.8 திருவாசகம். 9) `வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே, ஊன்பாவிய உடலைச்சுமந்து அடவிமரம் ஆனேன்` (தி.8 திருவாசகம் 515). `தவப் பெருவாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன` (தி.8 திருவாசகம் 3-81-2). தருக்குதல். இஃது உடல் பற்றியதாதல் `முன்கைத் தருக்கைக் கரும்பின் கட்டிக் கடிகையினால் எறி உழவர்` (தி.1 ப.5 பா. 7) என்னும் திருஞான சம்பந்த சுவாமிகள் திருவாக்கால் அறியப்படும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

மறுத்தானொர் வல்லரக்க னீரைந்து முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானை யெழின்முளரித் தவிசின்மிசை யிருந்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை யாரூரி லம்மானை யாலால முண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே. 

பொழிப்புரை :

தேர்ப்பாகன் கூற்றை மறுத்துக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட வலிமை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் தோள்களும் அடிகளும் செயலறும்படி நசுக்கியவனாய், அழகிய தாமரை மலரிலிருந்த பிரமன் தலையில் ஒன்றை அறுத்தவ னாய், விடமுண்ட நீலகண்டனாய் உள்ள ஆரூர்ப் பெருமானை மனத்து நினையாமல் மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்து அடியேன் வாழ்வின் முற்பகுதியில் இளைத்தேனே.

குறிப்புரை :

மறுத்தான் - திருக்கயிலையை எடுக்க எண்ணுவதே தீவினை என்றதை மறுத்து எடுப்பேன் எனச் சொல்லிச் செய்தும் அடங்கியவன். அறுத்த அறத்தின் நீங்கி, மறுத்த (பிறன் மனையை நாடிய) மறத்தைச் செய்தவன் எனலுமாம். இறுத்தல் - முரித்தல். எழில் - எழுச்சி. முளரி - (முள் + அரி) தாமரை மலர். தவிசு - (தவிர் + து) தங்குதலுடையது, இருக்கை. காரணப்பெயர். தவிர்து என்றதன் மருஉ. இருந்தான் - ஐந்தலையனாயிருந்தவன்(படைப்பவன்). கண்டம் - கழுத்து. கறுத்தல் - கருநிறம் அடைதல். கருமை:- பண்பு. கறுத்தல்:- தொழில். வெகுளியால் கண் கறுப்பும் சிவப்பும் அடைதலின், `கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள` என்று கூறிய தொல்காப்பியர், `நிறத்துரு வுணர்த்தற்கும் உரிய வாகும்` என்றமை உணர்க. இஃதறியாதார் கருத்தான் என்றெழுதுகின்றனர். சிவத்யாநம் அல்லாதன எல்லாம் அவத்யாநமே என்பார், `கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே` என்றருளினார். எய்த்தல் - இளைத்தல்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே யென்கின் றாளாற்
சினபவளத் திண்டோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்ற னென்கின் றாளால்
அனபவள மேகலையொ டப்பாலைக் கப்பாலா னென்கின் றாளால்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து தேவர்களுக்கும் அருள் வழங்குகின்றவனே என்கின்றாள் . சிவந்த பவளம் போன்ற திண்ணிய தோள்களின்மேல் சேர்ந்து விளங்கும் வெள்ளிய திருநீறு அணிந்தவனே என்கின்றாள் . அன்னம் போன்ற நடையினளாய்ப் பவளத்தாலாகிய மேகலையை அணிந்த பார்வதியோடு சுத்தாவத்தைகளுள் துரியத்துக்கு அப்பாற்பட்ட துரியாதீதத்தில் உள்ளவன் என்கின்றாள் . பெரிய பவளங்களைக் கடல் கரையில் சேர்க்கும் திருக்கழிப்பாலையில் உள்ள எம்பெருமானை என்மகள் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

இது செவிலி கூறுவதாகக் கொள்ளற்பாலது . கன பவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் வாய்திறந்து , தானவனே வெண்ணீற்றன் , அப்பாலான் என்கின்றாள் என்று முடிக்க . மேலும் இவ்வாறே கொள்க . கழிப்பாலையிற் சேர்வான் என்று ஏழனுருபு விரிக்க ; சேர்தற்கு இடம் ஆதலின் . இரண்டன் றொகையாயின் வலி மிகாது . வனபவள வாய் - அழகிய பவளம் போன்ற செவ்வாய் . வானவர்க்கும் தானவன் - தேவர்களுக்கும் அருள்பவன் . ஏகாரம் அசை . ` தானம் ` என்னும் வடசொல்லடியாகப் பிறந்த வினை ( க்குறிப்பு ) ப்பெயர் . தேவர்களுள் ஒருவனாகக் கருதப்பெறாது தானாக ( த்தனித்து ) ப் போற்றப் பெறுவோன் எனலுமாம் . ` நம்மவரவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண்ஆண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரித ( ர் ) வரே ` ( தி .8 திருவா .). வானவர்க்குப் பகைவராகிய தானவரை ஈண்டுக் கருதற்க . சின பவளத் திண் தோள்மேல் சேர்ந்து இலங்கு வெள்நீற்றன் - கோபச் செம்மையுடைய பவளம் போன்ற திண்ணியனவாகிய தோள்களின் மேற் பொருந்தி விளங்கும் திருவெண்ணீற்றையுடையன் . ` சிவனவன் திரள் தோள்மேல் நீறுநின்றது கண்டனை ` ( தி .8 திருவாசகம் ). சினம் கோபத்தால் ஆகும் செம்மைக்கு ஆகு பெயர் . ` சிவப்பு நிறத்துருவு முணர்த்தும் ` என்றார் தொல்காப்பியர் . திருநீற்றுச் சின்னமெனலுமாம் . அனபவள மேகலை - அன்னம் போன்றவள் ; பவள நிறமுடைய மேகலையுடுத்தவள் ; பாதியுறுமாது ; உவமத்தொகை நிலைக் களத்துப் பிறந்த அன்மொழி . அப்பாலைக்கு - சுத்தாவத்தைகளுள் துரியத்துக்கு . அப்பாலான் - துரியாதீதத்தில் உள்ளவன் . கனபவளம் :- பவளத்தின் சீர் ( கனம் ) உணர்த்திற்று . கழிப்பாலையிற் பவளம் சிந்தும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

வண்டுலவு கொன்றை வளர்புன் சடையானே யென்கின் றாளால்
விண்டலர்ந்து நாறுவதொர் வெள்ளெருக்க நாண்மலருண் டென்கின் றாளால்
உண்டயலே தோன்றுவதொ ருத்தரியப் பட்டுடைய னென்கின் றாளால்
கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

வண்டுகள் உலவும் கொன்றைப் பூக்கள் தங்கிய செந்நிறச் சடையனே ! இதழ் விரிந்து நறுமணம் கமழும் புதிய வெள்ளெருக்க மலரும் அச்சடையில் உள்ளது . பக்கத்தில் காட்சி வழங்கும் மேலாடையாகப் பட்டினை அவன் அணிந்திருத்தலும் உண்டு என்று கூறுகின்ற என் பெண் கழிமுள்ளி கடற்கரையருகே வளருகின்ற கழிப்பாலைப் பெருமானைக் கண்டாளோ ?

குறிப்புரை :

` வண்டு உலவு கொன்றை வளர்புன் சடையானே ` என்றது , மரத்திலுள்ளபோது கொன்றையில் வண்டு மொய்க்கும் . சடையில் ஏறிய பின்னரோ அணுகவும் அஞ்சி அகலவும் மாட்டாமல் உலவுகின்றமை தோற்ற . புன்சடை - பொன்னார் சடை . புன்மை பொன்மையைக் குறித்தல் உண்டு . கங்கையைத் தடுத்த சடை வன்மைக்குப் புன்மை கூறலாமோ ? ` புல்லிய சடை ` என்பாருமுளர் . விண்டு - விள்ளுதல் உற்று . அலர்ந்து - விரிந்து . நாறுவது - மணப்பது . ஓர் வெள் எருக்க மலர் :- என்னப் பெறும் ஒப்பில்லாத வெளிய எருக்கம்பூ . ` வெள்ளெருக்கஞ் சடைமுடியான் ` ( கம்பரா . ) நாள் மலர் - காலையிற் பூத்த பூ . உண்டு - உளது ஆகி என ஆக்கம் விரித்துத் தோன்றுவது என்பதனொடு இயைக்க . உத்தரியம் - மேற்புனையும் ஆடை . கீழ் உடுப்பது வேறு . பட்டுடுக்கும் பழக்கம் நெடுங்காலத்தது . கண்டலயலே என்னும் பாடத்தில் ஒரு லகாரம் தொக்கதாயிற்று . ` களிவண்டார் கரும் பொழில்சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை ` ( தி .6 பா .12 ப .3) கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக் கழிப்பாலை ` ( தி .6 பா .12 ப .5) ( திருத்தாண்டகம் . 3,8). ` கைதல் மடல் புல்கு கழிப்பாலை ` ( தி .4 ப .106 பா .1) கண்டல் - கழிமுள்ளி ; நீர்முள்ளி ; கண்டு என்னும் பாடமும் கண்டல் என்னும் பொருள் பயக்கும் . ( தி .7 சுந்தரர் . 234)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

பிறந்திளைய திங்களெம் பெம்மான் முடிமேல தென்கின் றாளால்
நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி யவனிறமே யென்கின் றாளால்
மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர் மிடற்றவனே யென்கின் றாளால்
கறங்கோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

இளையபிறைச்சந்திரன் எம்பெருமான் முடிமேல் உள்ளது . அவன் திருமேனியின் நிறம் ஒளிவீசும் குங்குமத்தின் நிறமே . வீரத்தை வெளிப்படுத்தும் வேல் போன்ற கண்களையுடைய பார்வதிதேவியின் கண்மணிபோன்ற நீலகண்டன் என்று கூறுகின்ற என் பெண் ஒலிக்கின்ற கடல் வெள்ளம் மிகுகின்ற கழிப்பாலையை உகந்தருளியிருக்கும் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

பிறந்து இளைய திங்கள் :- ` பிறை ` என்னும் காரணப் பெயரைப் புலப்படுத்துகின்றது . இளைய :- பண்படியாகத் தோன்றிய பெயரெச்சம் . பிறந்து என்னும் எச்சம் ` இளைய ` என்பதன்கண் விரியும் வினைக் குறிப்பைக்கொண்டது . இளந்திங்கள் என்புழி இளையதாகிய திங்கள் என்று விரியும் ; ஐம்பாலறியும் பண்பு தொகுமொழியாதலின் . அப்பொருட்டே ` இளைய திங்கள் ` என்பதூஉம் . எனவே , அங்கு விரியும் வினையே பிறந்து என்பதற்கு முடிபாயிற்று . பிறந்த எனக் கொண்டு பெயரெச்சத்து அகரம் தொக்கதெனலும் கூடும் . எம் பெம்மான் முடிமேலது திங்கள் ; அவன் நிறமே நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி ; மறம் கிளர் வேற்கண்ணாள் கண்டாள் என்றியைக்க . அன்றி , அன்னையைக் குறித்ததாகக் கொண்டு , அவளது கண்மணியை ஒத்த திருநீலகண்டனே என்கின்றதும் பொருந்தும் . கறங்கு ஓதம் - சுழலும் அலையொலி . ஓதும் காரணம் பற்றியது ஓதம் . (` ஓரோதம் ` தி .4 ப .6 பா .8.) மல்குதல் - மலிதல் . காதல்பற்றிய சொல் ஆதலின் , முறையும் காரணமும் அமைந்தில .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

இரும்பார்ந்த சூலத்த னேந்தியொர் வெண்மழுவ னென்கின் றாளால்
சுரும்பார் மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றவனே யென்கின் றாளால்
பெரும்பால னாகியொர் பிஞ்ஞக வேடத்த னென்கின் றாளால்
கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

இரும்பினாலாய சூலமும் மழுப்படையும் ஏந்தியவன் , வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடித் திருநீற்றை அணிந்தவன் . பெரிய இடப்பகுதியைப் பார்வதி பாகமாகக் கொண்டு அப்பகுதியில் விளங்கும் தலைக்கோலத்தை உடையவன் என்று கூறுகின்ற என்பெண் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

இரும்புருவச் சூலம் . ஏந்திய ஓர் வெண்மழு . சுரும்பு - வண்டு . சுருள்பு என்பதன் மரூஉ . விரியுங்காறும் மலரைச் சுற்றிக் கொண்டிருத்தலாகிய காரணம் பற்றிய பெயர் . இருள்பு - இரும்பு . இருள்போல்வது . அருள்பு - அரும்பு . அருள்தோற்றுவது . அருள் பெறத் துணைப்பொருளாயிருப்பது . ` அருப்போடு மலர் பறித்து , இட்டு உண்ணா ஊர் ஊர் அல்ல அடவிகாடே ` என்று பின்னர் ஆசிரியர் அருளியதுணர்க . கருள்பு - கரும்பு . கருமை பற்றியது . ` செங்கரும்பு ` என்றதால் உணர்க . சுண்ணம் - பொடி ( தி .4 ப .6 பா .10). வெண்ணீற்றுச் சுண்ணம் . ` சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ` ( தி .4 ப .2 பா .1) பெரும் பாலன் ஆகித் தாருகவனத்து மகளிர் முன்நின்ற கோலம் . விருத்த குமார பாலரான திருக்கோலமுமாம் . ஆகி என்பது வேடத்தன் என்பதில் விரியும் வினைக்குறிப்புக் கொண்டது . பிஞ்ஞகவேடத்தன் - தலை முடியணி வேடத்தையுடையவன் . கரும்பானல் - கருங்குவளை . சூலத்தன் , மழுவன் , கொன்றை ( யன் ), நீற்றன் , வேடத்தன் என்கின்றாள் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பழியிலான் புகழுடையன் பானீற்ற னானேற்ற னென்கின் றாளால்
விழியுலாம் பெருந்தடங்கண் ணிரண்டல்ல மூன்றுளவே யென்கின் றாளால்
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த சடையவனே யென்கின் றாளால்
கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

எம்பெருமான் பழியில்லாதவன் , புகழுடையவன் , பால்போன்ற நீறு அணிந்தவன் , காளை வாகனத்தை உடையவன் , அவனுக்கு விழிகளாக அமைந்தவை இரண்டல்ல , மூன்று . அவன் நீர்ச் சுழிகளோடு பரவும் கங்கை வந்து தங்கிய சடைமுடியை உடையவன் என்று கூறுகின்ற என்பெண் , எங்கும் பரவி ஓடுகின்ற உப்பங்கழிகளால் சூழப்பட்ட திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

பழியின்மையும் புகழுண்மையும் ஓரிடத்திலிருப்பன . பழியும் புகழும் வெவ்வேறிடத்தன . மெய்ப்புகழ் பழியிலானிடத்தில் தான் இருக்கும் . புகழிலானிடத்தில் பழி உண்மையும் கூடும் ; இன்மையும் கூடும் . உலகில் இரண்டும் இன்றிப் பலர் இருத்தல் கண்கூடு . பால்நீற்றன் :- ` பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறு `( தி .4 ப .81 பா .4) ஆன் ஏற்றன் - ` ஏறூர்தி ` விழி - ( விழித்தல் உடையது ). கருவிழி . உலாம் - உலாவும் . பெருந்தடங்கண் - பெரியனவும் அகன்றனவும் ஆன கண்கள் . முச்சுடரும் , பெருமையும் , அகற்சியும் உடையன ஆதலின் ` பெருந்தடங்கண் ` எனப்பட்டன . ` இரண்டு அல்ல ` என்றலின் , இரண்டிறந்த பன்மையாம் . ஆயினும் இரண்டனை இறந்து பலவாதல் தொடராமை தோன்ற , ` மூன்றுளவே ` என்றாள் . ` இரண்டல்ல ` ` மூன்றுள ` என்பவற்றுள் ஒன்று சொல்ல மற்றது தோன்றும் . இரண்டுங் கூறியது மிகைபடக் கூறல் அன்றோ எனின் . ` கண்ணிரண்டே யாவர்க்கும் ` ஆதலின் , என்றும் எவர்க்கும் முக்கண் உண்டெனக் கேட்டிராதவற்றை உணர்த்தி வியந்ததாம் . சுழியுலாம் கங்கை . வரு கங்கை . கங்கை தோய்ந்த சடை என்க . ` கழிப்பாலை ` என்னும் பெயரது காரணத்தைத் தோற்றிற்று அடை . உலாம் சூழ்ந்த என்னும் எச்சங்களைத் தனித்தனி சேர்த்துக் கொள்க . ` உலாம் ` என்பது இயக்கம் என்னும் பொருளதாகிய பெயருமாம் போலும் . ( பா .60. ` கழியுலாம் `).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே யென்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த வெந்தை பெருமானே யென்கின் றாளால்
பண்ணார் முழவதிரப் பாடலொ டாடலனே யென்கின் றாளால்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

பண்கள் நிறைந்து ஒலித்தற்கு இடமான கருவியாகிய வீணையை ஒலியெழுப்பும் விரல்களை உடையவனே ! பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய எம் தந்தையாகிய பெருமானே ! பண்களுக்கு ஏற்ப முழவு என்ற தோற்கருவி ஒலிக்கப் பாடிக் கொண்டு கூத்து நிகழ்த்துபவனே ! என்று கூறுகின்ற என் பெண் கண்ணுக்கு நிறைவைத் தரும் பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருக்கழிப்பாலை இறைவனைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

பண் ஆர்ந்த வீணை :- பண்( ணும் திறமும் ) நிறைந்து ஒலித்தற்கு இடமான கருவியாய் ` வீணை ` என்னும் பெயருடையது . ` பண்ணும் முழவு ` என்புழியும் இவ்வாறுணர்க . பயின்ற - பல்காற் பழகிய . எண்ணார் - நினையாதார் ( பகைவர் ). எந்தை பெருமான் - எம்மைத் தந்தவனைத் தந்த பெருமகன் . பாட்டன் என்றபடி . பாடலொடு ஆடலன் - பாடலும் ஆடலும் உடையவன் . கண்ணுக்கு ஆர்ந்த பூஞ்சோலைகளையுடைய கழிப்பாலை . விரலவனே , பெருமானே , ஆடலனே என்கின்றாள் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

முதிருஞ் சடைமுடிமேன் மூழ்கு மிளநாக மென்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்று மிளமதிய மென்கின் றாளால்
சதுர்வெண் பளிக்குக் குழைகாதின் மின்னிடுமே யென்கின் றாளால்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

நன்கு செறிந்து நிறைந்த சடைமுடிமேல் இளநாகம் மறைந்து கிடக்கிறது . அதனைக் கண்டு அஃது ஊறுதாராது என்ற கருத்தோடு அதன் அருகிலே பிறை காட்சி வழங்குகின்றது . வேலைப்பாடு அமைந்த வெண்ணிறத்ததாகிய பளிங்கினாலாகிய காதணி காதில் இருந்து கொண்டு ஒளி வீசுகின்றது என்று கூறுகின்ற என்பெண் ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கடல் அலை கரைக்கண் செலுத்தும் திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

முதிர் சடை இளநாகம் :- முரண் . அது - அப்பாம்பு . முதுநாகம் அன்மையின் அருகே தோன்றிற்று . முற்றாமுளைமதியம் ஆதலின் நாகத்தருகே தோன்றிற்று எனலுமாம் . வெண்குழை . பளிக்குக்குழை . காதிற்குழை மின்னிடும் . சதுர் - மேம்பாடு . பளிங்கு + குழை = பளிக்குக் குழை . கதிர் முத்தம் ( கடலலைகள் ) ` சிந்தும் கழிப்பாலை `. முழுகுதல் பல்சடையுளேனும் மேலுள்ள கங்கையுளேனும் கூடும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஓரோத மோதி யுலகம் பலிதிரிவா னென்கின் றாளால்
நீரோத மேற நிமிர்புன் சடையானே யென்கின் றாளால்
பாரோத மேனிப் பவள மவனிறமே யென்கின் றாளால்
காரோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

பொழிப்புரை :

ஓர்ந்து கொள்ளத்தக்க வேதங்களை ஓதிக்கொண்டு உலகம் முழுதும் பிச்சை ஏற்றுத் திரிகின்றவனே ! கங்கை நீர்வெள்ளம் உயர அதற்கேற்ப உயர்ந்து தோன்றும் செந்நிறச் சடையவனே உலகைச் சூழ்ந்த கடலில் உள்ள செந்நிறப் பவளம் எம்பெருமானுடைய திருமேனியின் நிறமே என்று கூறுகின்ற என்பெண் , கரிய கடல்வெள்ளம் மிகும் திருக்கழிப்பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

ஓர் ஓதம் - ஓர்ந்து கொள்ளத்தகும் மறைகள் . வினைத்தொகை . ஓதுவது ஓத்து ; ஓதம் . ( பா .54. பார்க்க .) ஓது - பாடு ; ஓத்து - பாட்டு ; ஓதம் - பாடம் . எனவருஞ்சொல்லமைதி உணர்க . பாடம் என்னும் வடசொல்வேறு இதுவேறு . ` பாடம் ( பாடு + அம் ) கருத்தே சொல்வகை சொற்பொருள் ` என்புழி வருவது தமிழ்ச் சொல்லுமாம் . ` பாடம் படித்தான் ` என்புழி நிற்பது வடசொல் . நீர் ஓதம் - கங்கை . கங்கை நீரோதமுமாம் . பார் ஓதம் - உலகு சூழ் கடல் . ஓதப் பவளம் - கடலிலுள்ள பவளம் . மேனிப் பவளம் - நிறமுடைய பவளம் . அவன் நிறமே பவள மேனி எனலுமாம் . கார் ஓதம் - கருங் கடல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வானுலாந் திங்கள் வளர்புன் சடையானே யென்கின் றாளால்
ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர் பலிதிரிவா னென்கின் றாளால்
தேனுலாங் கொன்றை திளைக்குந் திருமார்ப னென்கின் றாளால்
கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

பொழிப்புரை :

வானத்தில் உலவ வேண்டிய பிறைதங்கிய செஞ் சடையனே ! புலால் நாற்றம் கமழும் வெண்ணிற மண்டையோட்டைக் கையில் கொண்டு ஊர்ஊராகப் பிச்சைக்குத் திரிகின்றவனே ! தேன் என்ற வண்டினங்கள் சுற்றும் கொன்றைப் பூக்கள் சிறந்து விளங்கும் திருமார்பினனே ! என்று எம்பெருமானைப் பற்றிக்கூறும் என்மகள் , எங்கும் பரவுகின்ற நறுமணம் சூழ்ந்த திருக்கழிப்பாலையிலுள்ள பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

வான் உலாம் திங்கள் :- ` வான் ஊர் மதியம் ` ( நாலடி ) ` உலாவும் `.- செய்யும் என்னும் எச்சத்தில் உயிர்மெய் ஏகிற்று . ( ப .6 பா .5. பார்க்க ). ஊன் உலாம் வெள்தலை - பிரமகபாலம் . மார்பில் திளைக் கும்வண்ணம் அணிந்த கொன்றை மாலை பெறல் தலைவியின் குறிப்பு . ` கான் உலாம் ` ( ப .6 பா .9), ` கழியுலாம் ` ( ப .6 பா .5) இரண்டும் நோக்கின் , உலாம் என்பதைப் பெயராகக் கொள்ளல் பொருந்துமாறு உணர்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

அடர்ப்பரிய விராவணனை யருவரைக்கீ ழடர்த்தவனே யென்கின் றாளால்
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண் ணீற்றவனே யென்கின் றாளால்
மடற்பெரிய வாலின்கீ ழறநால்வர்க் கன்றுரைத்தா னென்கின் றாளால்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

பொழிப்புரை :

துன்புறுத்தி வெல்லுவதற்கரிய இராவணனைக் கயிலைமலையின்கீழ் வருத்தியவனே ! ஒளிவீசும் பெருமையை உடைய திருமேனியில் நீறு பூசியவனே ! பெரிய இலைகளை உடைய கல்லால மரத்தின் கீழிருந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு ஒரு காலத்தில் அறத்தை உபதேசித்தவனே என்று கூறுகின்ற என்பெண் கடலின் தொகுதிகளாகிய உப்பங்கழிகள் சூழ்ந்த திருக்கழிப் பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ ?

குறிப்புரை :

அடர்ப்பு அரிய - கொன்று வெல்லுதற்கு எவராலும் மாட்டாத . இராவணனது திறல் உணர்த்தியவாறு . அருவரை - எடுத்தற்கு எளிதல்லாத கயிலாயம் . சுடர்த்திருமேனி , பெரிய திருமேனி - ` பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்அற நிறைகின்ற பரிபூரணானந்த ` மய ரூபம் . பவளம் போலும் அம்மேனியிற் பால் போலும் வெண்ணீற்றை அணிந்தவனே . மடல் - இலை . பெரிய ஆல் - சுத்த மாயையாகிய கல்லால் . அறம் - ` சிவதன்மம் ` ` அறங்கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் ` ( தி .2 ப .43 பா .6). இருவர் , நால்வர் :- அகத்தியர் முதலியவரும் , சநகர் முதலியோரும் என்றிருதிறத்தர் . இருவர் :- திருமால் , நான்முகன் . ` அணிபெறு வடமர நிழலின் அமர் வொடும் அடியிணை இருவர்கள் , பணிதர அறநெறி மறையொடும் அருளிய பரன் ` ( தி .1 ப .20 பா .5). ஒருவர் :- திருநந்திதேவர்க்குரைத்த தும் உணர்த்துவர் . ` ஆல்வருக்கந் தனிலுயர்ந்த வயநிழற்கே தென் முகங்கொண்டறவோர் ஆய , நால்வருக்குள் இருவருக்கும் ஒருவருக் கும் நவின்றருளி நவிலொணாத , நூல்வருக்கம் ஒருவருக்கு நுவலாமல் நுவன்றான் `. ( திருக்குற்றாலப் புராணம் கடவுள் வாழ்த்து . 7 )

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி
இரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

பெருமானை மறைத்தலும் மறத்தலும் செய்து உலகப் பொருள்களில் திளைக்கும் வலிய நெஞ்சினை உடையவர்கள் உணர்தற்கு அரியவனாய் , வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் கலந்து கூத்து நிகழ்த்தும் பெருமானாய் , காளையை இவரும் திறனுடையவனாய் , பாம்புகள் படமெடுத்து ஆடவும் சடை தொங்கவும் , உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

கரவு ஆடும் வல்நெஞ்சர்க்கு அரியானை - ( தனக்குச் ) சிறிதும் இடம் இல்லாதவாறு மறைத்தலும் மறத்தலும் செய்து உலகப் பொருளில் ஓடி ஆடும் வலிய நெஞ்சுடையவர்க்கு , உணர , உரைக்க , உள்ள தொண்டுசெய்து பணிய எளியனல்லாத திருவேகம்பனை . ` கரவிலா மனத்தராகிக் கைதொழுவார்கட்கு ... ஆடி இன்னருள் செய்யும் எந்தை ` ( தி .4 ப .58 பா .3). வலிய நெஞ்சிற் கரவு ஆடுகின்றது என்றாராயினும் , நெஞ்சியல்புணர இவ்வாறுரைக்கலாம் . ஏகம்பன் ஆடத்தக்க நெஞ்சினுள் ஆடத்தகாத கரவு ஆடுகின்றது எனலுமாம் . ( கருளன் - கள்ளன் .) கருள் - கரவு . உழுதல் - உழவு . வருதல் - வரவு , தருதல் - தரவு . உறுதல் - உறவு . அறுதல் - அறவு . நடுதல் - நடவு . ` கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கி நக்கு , வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே ` என்னும் அருண் மொழியில் ( தி .4 ப .75 பா .9) கள்ளர் , வெள்ளர் என்பவற்றின் கருளர் , வெருளர் என்பவற்றின் மரூஉவேயாம் ). கரவார் - சதா சிவசிந்தனையாளர் . விரவு - கலப்பு . விரவாடல் - கலப்பை ஆளுதல் . வித்தகன் - ஞானசொரூபன் . சதுர்ப்பாட்டினனுமாம் . அரவு - பாம்பு . அங்கை - உள்ளங்கை . இரவு - கேவலாவத்தையில் . ` நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே ` ( தி .8 திருவாசகம் . 1).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன் செழும்பவளம்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

தேனை ஒத்து இனிமையதாய்க் கிளி மழலை போன்ற மழலையை உடைய உமாதேவியின் கணவனாய் , செழும் பவளம் போன்ற செந்நிறமேனியனாய்த் தழல் உருவனாய் , எல்லோருக்கும் நன்மை செய்பவனாய் , சிவந்த வானத்தை ஒத்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய்த் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக்கொண்டேன் .

குறிப்புரை :

தேன் நோக்கும் கிளிமழலையுமை - இத்தகைய இனிமை வாய்க்குமாறு யாதென்று தேன் நோக்கும் பெருமை வாய்ந்த ` குதலைமொழி மழலைக்கிளி ` போலும் உமையம்மையார் . கேள்வன் - கணவன் . இன்ப துன்பங்களைக் கேட்டற்குரியவன் என்னும் காரணம்பற்றிக் , கேள் , கேள்வன் , கேளிர் என்றனர் . ` ஏந்தெழில் மிக்கான் இளையான் இசை வல்லான் , காந்தையர் கண்கவர் நோக்கத்தான் வாய்ந்த நயனுடை இன்சொல்லான் கேள் எனினும் மாதர்க்கு அயலார்மேல் ஆகும் மனம் ` ( நீதிநெறிவிளக்கம் . 81 ). ` தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் ` ( தி .8 திருவாசகம் . 207). ` தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றுந்தூண் ` ( குறள் . 615 ). செழும் பவளம் திருமேனியை நோக்குமாம் ; தனக்கு அதன் நிறத்தின் நலம் வாய்ப்பது என்றென்று . அத்திருமேனி தழலின் உருவாம் வண்ணம் உடைய சங்கரன் . தழலின் உருவென்றது கொண்டுவெம்மை கருதாதிருக்கச் ` சங்கரன் ` ( இன்பம் செய்பவன் ) என்றருளினார் . வானோர் - திருவடி நிழலடைந்தவர் . ஏனோர் - அடைய முயல்பவர் . விண்ணேர் மண்ணோர் முதலியோர் எனல் சிறவாது . பெருமான் - பெருமகன் . கோமகன் - கோமான் . சேரன்மகன் - சேரமான் . மலையன்மகன் - மலையமான் . ( ஒருமை ). குருக்கள் மகார் - குருக்கள்மார் . செட்டி மகார் - செட்டிமார் . மகவர் - மகாஅர் . கிழவர் - கிழாஅர் . சிறுவர் - சிறாஅர் . ` கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன் ` ( புறம் .336;325,334,382 ). ஆவூர் மூலங்கிழார் ( பன்மை ) என்பவற்றை நோக்குக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி யைம்புலனு மகத்தடக்கி
எப்போது மினியானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

கைகளால் , அலரும் பருவத்து மொட்டுக்களையும் பூக்களையும் அர்ப்பணித்து விருப்போடு தேவர்கள் காலை நண்பகல் மாலை என்ற மூன்று வேளைகளிலும் தலையால் வணங்கித் தொழுமாறு நிலைபெற்ற முழுமுதற் கடவுளாய் எனக்கு எப்பொழுதும் இனியனாக உள்ள பெருமானை ஐம்புலன்களையும் உள்ளத்தால் அடக்கி , அபிடேக நீரையும் மலர்களையும் அர்ப்பணித்து என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

கைப்போது மலர் தூவி - கையால் ( அரும்பும் ) போதும் மலரும் தூயிட்டு ,` அருப்போடு மலர்பறித்து இட்டு உண்ணாவூரும் .... காடே ` ( தி .6 ப .95 பா .5.) காதலித்து :- கருதல் என்பது காதல் என மருவிற்று . அப்பெயரடியாகப் பிறிதொரு தொழிற்பெயர் காதலித்தல் என்றுண்டாயிற்று . அதினின்று இவ்வினையெச்சம் அமைந்தது . ` முயற்சித்து ` என்றதுபோலும் குற்றமுடையதன்று . காதல் பெயராதலின் அது பெயரடியாலாம் வினை முதனிலையாதற்கு ` இ ` சேர்ந்து காதலி என்றாதற்கிடனுண்டு . அங்ஙனமாகாது முதல் தானே வினை முதனிலையாதலின் அதற்குச் ` சி ` அநாவசியம் ஆம் . ` கருதியது முடித்தல் ` ( சிறுபாண் . நச்சர் .) முப்போதும் :- காலை மாலை பகல் . நள்ளிரவொடு நாற்போது ஞானியர் சந்தி செய் காலம் . ` எப்போதும் ` என்றது சீவன் முத்தர்க்கு . முடி :- தலையும் தலையிலணிந்த மணிமுடியும் . வானோர்கள் :- நிலமிசை நீடுவாழ்வாரும் துறக்கத்தில் வாழ்வாரும் . எப்போதும் இனியானை ( ச் சிவாகமங்களில் விதித்த காலங்களாகிய ) அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி என்மனத்தே வைத்தேன் . அப்போது மலர் - அவ்வேளையிற் பூத்த பூவுமாம் . பழம்பூ வாகாமை சிவாகம விதியிற் காண்க . முதலடியிற் குறித்த அப்போதும் மலரும் எனலுமாம் . அடக்கியது அகத்து . வைத்தது மனத்து . அகம் - உள் என்னும் துணையாம் . மனம் அந்தக்கரணத்தொன்று . அதனாற் கூறியது கூறலன்று . புலனடக்காத பூசையாற் பயனின்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

அண்டமா யாதியா யருமறையொ டைம்பூதப்
பிண்டமா யுலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தா மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

உலகங்களாய் , உலகங்களுக்குக் காரணனாய் அரிய வேதங்களாய் , ஐம்பெரும் பூதங்களின் பிண்டமாகவும் உலகத்தார்க்குக் கருத்துப் பொருளாகவும் உள்ளவனும் , தலைக் கோலத்தை உடையவனாய் , அடியவர்கள் மலர்களை அர்ப்பணித்துச் சொல்லால் ஆகிய பாமாலை புனைந்து அணிவிக்கின்ற , தலைமாலை அணிந்த சடையை உடைய பெருமானுமாயவனை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

அண்டமாயும் அவற்றின் ஆதியாயும் அருமறையாயும் ஐம்பெரும்பூதப் பிண்டமாயும் உலகுக்கு ஒரு பெய்பொருளாயும் உள்ளவன் . பிஞ்ஞகன் - தலைக்கோலத்தான் . துவண்டு அடிமை செய்பவர் தொண்டர் . துவளாதார் தொண்டர் என்னும் பெயர்ப் பொருளுக்கு ஏலார் . மலரும் ஆம் . அலரும் ஆம் . ` சொன்மாலை `:- ` கீர்த்தனாவளி ` என்பர் வடநூலார் . ` சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் ` ( தி . ப .12 பா .1) ` உரைமாலை எல்லாம் உடைய அடி ` ( தி .6 ப .6 பா .7) ` நாயேன் குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி ` ( தி .8 திருவா . 4) புனைகின்ற சடை . சேர்சடை . தூவிச் சொல்லும் மாலையுமாம் . புனைவதுசடை . சேர்வது இண்டை . இண்டை :- இணையடை ` என்பதன் மரூஉ . சுமையடு என்பது சும்மாடு என மருவியதறிக . இண்டைசேர் சடையிற் புனைகின்றமையாற் சொன்மாலை யுயர்ச்சி விளங்கும் . பூத்தூவுதலும் போற்றுரைத்தலும் இன்றியமையாதன .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஆறேறு சடையானை யாயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

கங்கை தங்கிய சடையினனாய் , ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனாய் , பருந்துகள் படிகின்ற இறந்து பட்ட மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் மேம்பட்ட இறைவனாய் , திருநீறு அணிந்த திருமேனியை உடைய தூயோனாய் நீண்ட வாலினை உடைய காளையை இவரும் பெருமானை என்மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

ஆறு - கங்கையாறு ` எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ` ` ஆயிரம் பேருகந்தானும் ஆரூரமர்ந்த அம்மான் ` ` பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான் `. பேர் :- பெயர் என்பதன் மரூஉ . பாறு - உலர்தல் , வற்றுதல் . தலை - பிரம கபாலம் . பலி - பிச்சை . பரம்பரன் - விண்ஆளும் தேவர்க்கும் மேலாயவேதியன் . நீறு - வினைவளம் நீறுசெய்வது ( தி .8 திருக்கோவை . 117). தூவி - வால் . ` வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பிலேனே ` ( தி . 4 ப .63 பா .9). ஏறு - விடை . ` ஏறேறும் பெருமான் ` என்றதால் . ஏறும் காரணம் பற்றியும் ஏறெனப் பெயர் ஆயிற்று எனலும் கூடும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலால்
பூசனைப் பூசனைக ளுகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலம்நீர் தீவளியா காசமாம்
ஈசனை யெம்மானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

ஒளிவடிவினனாய் , உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால் வழிபடப்படுபவனாய் , அடியார்கள் செய்யும் வழிபாட்டை உகப்பவனாய் , பூவின்கண் நறுமணம் போல எங்கும் பரந்திருப்பவனாய் , மலைகளாகவும் ஐம் பூதங்களாகவும் விளங்குகின்றவனாய் , எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் , எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

தேசன் - ஒளியுருவானவன் . ` மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் ` ( தி .8 திருவாசகம் . நீத்தல் . 15). ` அருக்கனிற் சோதியமைத்தோன் ` ( தி ,8 திருவாசகம் . திருவண்டப்பகுதி ). தேசங்கள் - திருமால் ஆட்சிக்குட்பட்ட புவனங்கள் . பூசனை :- பூசிக்கப் பெறுவோனை . வினைக்குறிப்பாலணையும் பெயர் ; செயப்பாட்டுப் பொருளில் நின்றது . பூசனைகள் - வழிபாடுகள் . உகப்பான் - விரும்புவோன் . பூவின்கண் வாசனை - ` பூவினில் வாசம் புனலிற் பொற்புப்புதுவிரைச் சாந்தினினாற்றத்தோடு , நாவினி பாடல் நள்ளாறுடைய நம்பெருமான் ` ( தி .1 ப .7 பா .4). ` பூவாகிப் பூவுக்கோர் நாற்றம் ஆகி ` ( தி .6 ப .94 பா .8). ` பூவில் வாசத்தை ( தி .7 ப .68 பா .3). மலை நிலத்திலடங்குமேனும் . தனியே சொல்லும் வழக்குப் பயிற்சி நோக்கி அதன் சிறப்புணர்க . ` ஏழுலகுமாயினான்காண் ` ` ஏழ்கடலும் சூழ்மலையும் ஆயினான்காண் ` ( தி .6 ப .8 பா .10) ` மலையானை மாமேரு மன்னினானை ` ( தி .6 ப .19 பா .10). ` மலையானை வரிமலையன்றுரித்தான் ` ( தி .6 ப .88 பா .7). ` மண்ணாகி விண்ணாகி மலையும் ஆகி ` ( தி .6 ப .94 பா .2). ஐம்பெரும் பூதங்களும் கூறப்பட்டன . இனம்பற்றி ஏனைய மூன்றும் ( இருசுடரும் இய மானனும் ) கொள்க . ` இருநிலனாய்த் ... அட்டமூர்த்தி ` ( தி .6 ப .9 பா .1).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கண் மனத்துறையு மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
இல்லானை யெம்மானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

பெரியவனாய் , மேம்பட்ட நான்மறைகளும் ஆறு அங்கங்களும் வல்லவனாய் , தன்னை உள்ளவாறு உணரவல்லார்களுடைய உள்ளத்தில் தங்கும் வலியவனாய் , வேத வடிவினனாய் , வேதத்தில் நிறைந்திருக்கும் பரம்பொருளாய் , இயல்பாகவே களங்கம் ஏதும் இல்லாதவனாய் , எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .

குறிப்புரை :

நல்லானை - சிவனை . மங்களம் . நலம் . ` குறைவிலா மங்கலகுணத்தன் ` ( காஞ்சிப்புராணம் ) நல்லான - நலத்தனஆகிய , ஈண்டு நல் என்னும் முதனிலை நன்மையன என்னும் பொருட்டு . நான்மறை :- எழுத்ததிகாரத்துப் பாயிரத்தின் உரைக்கண் நச்சினார்க்கினியர் எழுதியவற்றைக் காண்க . வல்லானை - அறிவிற்கறிவாய் நின்றுணர்த்த வல்லவனை . வல்லார்கள் - அங்ஙனம் உணர வல்லவர்களுடைய . மைந்தனை - வலிமையுடையவனை . சொல்லானை - சொல்லுருவாகிய தனது ஆற்றலாய்த் தோன்றுவானை . பொருளானை - பொருளுருவாகிய தன்னை . துகள் ஏதும் இல்லானை - இயல்பாகவே துகளின் நீங்கிய உணர் வினனை . ` துகள் அறுபோதம் ` பசுத்துவம் நீங்கிய ஆன்மாக்களுக்கு உளதாவது ( ஆகந்துகம் ). துகளின்மை பதியின் இயல்பு ( சகசம் , சுவபாவிகம் ). எம் மகனை - எம் இறைவனை . ` எம்மான் ` மரூஉ .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனை
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேன் மதின்மூன்றும்
எரித்தானை யெம்மானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

சனகர் முதலிய நால்வருக்கு வேதப் பொருள்களை வெவ்வேறு விதங்களில் விரித்து உரைத்தவனாய் , வேதங்களால் பரம் பொருளாக விரும்பப்பட்டவனாய் , சொற்களும் , சந்தியால் ஆகிய தொடர்களும் அவற்றின் பொருளுமாக உள்ள நல்வினை வடிவினனாய் , தாழ்ந்த சடைமுடி மீது கங்கை நீரை ஏற்றவனாய் , மும்மதில்களையும் எரித்தவனாய் உள்ள எம் பெருமானை என் மனத்தே வைத்தேனே .

குறிப்புரை :

நால்வர் ( அகத்தியர் முதலோர் சநகாதியர் ) க்கு வெவ்வேறு வேதங்கள் விரித்தவனை . ` வெவ்வேறு ` என்பது வேதங்கட்கும் , விரித்தற்கும் பொது . புரித்தல் - விரும்பச் செய்தல் . பிரிதல் என்பதன் மரூஉவாயின் பதங்களைப் பிரித்தல் என்றாகும் . சந்தி - புணர்ச்சி . பதப்பொருளும் , தொடர்ப்பொருளும் கொள்க . சொல்லுருவாதலும் பொருளுருவாதலும் மேல் உள்ள திருப்பாடலிலும் உணர்த்தப்பட்டன . புண்ணியன் :- ` புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே ` ( சித்தியார் .) ` புண்ணியம் (- சிவபூசை ) செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு ` ( தி .10 திருமந்திரம் ). தாழ் (- தொங்கிய ) சடைமேல் கங்கைநீர் தரித்தானை (- தாங்கியவனை ). திரிபுரம் எரித்தவனை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

ஆகம்பத் தரவணையா னயனறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோது மிறையானை மதிற்கச்சி
யேகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

பத்து அவதாரங்கள் எடுத்த , பாம்புப் படுக்கை உடைய திருமாலால் அறிய இயலாதவனாய் , ஒருபாகம் பெண்பாகமாகவும் மறுபாகம் ஆண்பாகமாகவும் , நிலைபெற்ற ஆன்மாக்கள் தலைவனாய் , பெரிய தூண்போல அசைக்கமுடியாத , ( என்றும் நிலைபெற்ற ) வேதங்களை ஓதும் தலைவனாய் , மதில்களை உடைய காஞ்சி நகரில் ஒற்றை மாமர நிழலில் உறையும் பெருமானை என் மனத்து வைத்தேனே .

குறிப்புரை :

ஆகம் - உடம்பு . பத்து ஆகம் - பத்துடம்பு . தசாவதாரம் . அரவணையான் - பாம்பணை மேல் அறிதுயில் புரிபவன் . அயன் - திருமால் . அறிதற்கு அரியான் - மண் அகழ்ந்தும் விண் பறந்தும் காண்டற்கு எளியனாகாதவன் . பெண் பாகமும் ஆண் பாகமும் ஆகி , பசுக்களுக்கு அம்மையப்பனாய் நின்ற முழுமுதல்வன் . மா - பெரிய . கம்பம் - நடுக்கத்தை விளைக்கும் . மறை ஓதும் இறையானை - வேதங்களை உயிர்கள் உய்யும் பொருளாய் ஓதியருளிய கடவுளை . கச்சித் திருமதில் உயரியது . ஏகம்பம் - ஒரு மா நிழல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

அடுத்தானை யுரித்தானை யருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை யென்மனத்தே வைத்தேனே.

பொழிப்புரை :

தன்னை எதிர்க்க நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவனும் , அருச்சுனனுக்குப் பாசுபதப் படை நல்கியவனும் , மேருமலையையே வில்லாகக் கொண்டு கூரிய அம்பினை மும்மதில்களும் எரியுமாறு செலுத்தியவனாய் , சுனைகள் நிறைந்த கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை நசுக்கி செயற்பட முடியாதவாறு தடுத்தவனுமான பெருமானை என் மனத்தே வைத்தேனே .

குறிப்புரை :

அடுத்த ஆனை உரித்தானை - யாகத்தில் தோன்றித்தன்னை அடுத்த யானையை உரித்துப் போர்த்த தோலாடையனை . ஆனையை அடுத்து உரித்தான் என மாற்றினும் பொருந்தும் . அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் அருளிய வரலாறு பிரசித்தம் . குலவரை - மேருமலை . சிலை - சிலை என்னும் மரத்தாற் செய்யப் பெற்ற வில்லுக்குப் பெயராயிற்று . அதுவே மேருவாலானதற்கும் ஆயிற்று . கூர் அம்பு :- பண்புத்தொகை . கூர்த்த அம்பெனின் வினைத் தொகையாம் . புரம் எரிய அம்பு தொடுத்தான் . கயிலாய மலைக்குச் சுனை சாதியடை . வடகயிலையில் அதற்கேற்ற சுனையிருத்தலின் உரியதும் ஆகும் . எடுத்தானை - எடுத்த இராவணனை . தடுத்தானை - தடுத்து அறிவுறுத்தி ஆட்கொண்ட சிவபிரானை .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 1

சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே
அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம்
கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.

பொழிப்புரை :

உலகிலே சிவன் என்னும் ஓசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செஞ்சொல் வேறு இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன் . எம்பெருமான் பிச்சை எடுத்து உண்பவன் . தோலையே ஆடையாக உடையவன் . அத்தோல்மேல் ஆடும்பாம்பை இறுகக்கட்டியவன் . கவண் கல் அளவு சிறிதே உண்பவன் . சுடுகாடே இருப்பிடம் . அவனுடைய உண்கலன் மண்டையோடு . ஆராய்ந்து பார்த்தால் அவன் உடைமைகளைக் கண்டும் அவன் தன்மையைக் கண்டும் தேவர்கள் தம் உள்ளத்தை அப்பெருமானுக்கு அர்ப்பணம் செய்வர் .

குறிப்புரை :

உலகில் சிவன் எனும் ஓசை அல்லது திருநின்ற செம்மை உளதோ ? அறையோ . ` நேர்பட நின்று அறை கூவும் திருப்பதிகம் ` என்று சேக்கிழார்பெருமான் அருளியதால் , ` வஞ்சினம் கூறவோ ` ( சிந்தாமணி .12.137 ) எனல் பொருத்தம் . சித்தியார் சூ .8:- 14 ` உத்தரம் `. அது ஈண்டுப் பொருந்தாது . ( தி .10 திருமந் . 884. 2988) கையறைதலும் வரையறையும்பற்றி ` அறையோ ` என்று ஆணைக்கு வழங்கலாயிற்று . சிவநாமமே முழக்கத்திற்கு உரியது . செம்மையானது . ஏனைய அன்ன அல்ல . ஓசை , அறை முதலியன ஒலிப்பொருளாம் . ஒலிசெய் என்பது ஓசை என மருவிற்று . நன்செய் - நஞ்சை . புன்செய் - புஞ்சை . தண்செய் - தஞ்சை . ` ஓசை யொலியெலாம் ஆனாய் நீயே ` என்பது ஐயாற்றிற் சென்றுணரற்பாற்று . உலகில் திருநின்ற செம்மை உளதே - சிவமேபெறும் திருவானது நிலைபெறக் காரணமான செம்மை ( வேறு ) உளதோ ? ` உலகில் `:- எல்லாவுலகிலும் . உளதே என்பது தேற்றம் உணர்த்தியதுமாம் . அவனும் - அச்சிவனும் , ஓர் ஐயம் உண்ணி - பிச்சைபுக்குண்ணும் ஒருவன் . ஆடை ஆவது , அதள் (- தோல் ). அதன்மேல் - அத்தோலாடை மேல் . ஓர் ஆடல் அரவம் - ஆடுதலை ஒழியாத ஒரு பாம்பு . கவண் அளவு உள்ள ( உண்கு ) - கவணதுகல் முதலியவற்றினளவுடைய உட்கொள்ளும் உணவு . சிறிதளவு என்றவாறு . கவளம் கவண் என மருவிற்று எனின் , அது சிறிதன்று . ` குன்றாமுது குன்றுடையான் இலாத வெண் கோவணத்தான் நன்றாக இத்தனை பிச்சையுண்டோ சொல் நறுநுதலாய் என்றான் ` ( பிட்சாடன நவமணிமாலை .2 .) என்பதில் உணர்த்திய பிச்சையுணவினளவு சிறிதாதல் அறிக . பழிப்பதுபோலப் புகழ்தலாய்ப் பிச்சையுணவைக் குறிக்கின்ற ஈண்டுச் சிறுமையே கொள்ளற்பாலது . கோயில் கரி ( ந்த ) காடு . ( உண் ) கலன் ஆவது ஓடு ; ( பிரமகபாலம் ). கருதில் அவனும் ஓர் ஐயம் உண்ணி ...... ஓடு என்றியைக்க . பெற்றி - பெற்றிருக்கும் பேறு . நீர்மை எனப்பின்வருதலின் , பெற்றியைத் தன்மை எனல் பொருந்தாது . தேவர் கண்டும் தம் அகத்தில் அச் சிவனைத் தேர்வர் என்றவாறு .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 2

விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனும்
திரிதரு வாயு வல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணி யாளை யொருபாக மாக வருள்கார ணத்தில் வருவார்
எரியர வார மார்ப ரிமையாரு மல்ல ரிமைப்பாரு மல்ல ரிவரே.

பொழிப்புரை :

இப்பெருமானார் ஒளிக்கதிர்கள் விரியும் சூரியனும் அல்லர் . சந்திரனும் அல்லர் . பிரமனும் அல்லர் . வேதத்தில் விதித்தனவும் விலக்கியனவும் அல்லர் . விண்ணும் நிலனும் அலையும் காற்றும் துன்புறுத்தும் தீயும் தெளிந்த நீரும் அல்லர் . செவ்வரி கருவரி பரந்த கண்களை உடைய பார்வதி பாகராக அருள் காரணத்தால் காட்சி வழங்கும் இவர் கோபிக்கின்ற பாம்பினை மார்பில் மாலையாக உடையவர் . இவர் கண் இமைக்காத தேவரும் கண் இமைக்கும் மக்களும் அல்லர் . இவரே எல்லாமாகி அல்லராய் உடனும் ஆவர் .

குறிப்புரை :

அரிதரு கண்ணியாளை - செவ்வரிபடர்தரும் கண் உடையவளை . கண்ணி - கண்ணள் . இகரவிகுதிக்கு மேலும் ` ஆள் ` விகுதி சேர்ந்து ` கண்ணியாள் ` என்று நின்றமை அறிக . கண்ணியாள் என்று இறந்தகால வினையாலணையும் பெயராகக் கொள்ளல் பொருந்தாது ; ` அரிதரு ` என்னும் அடைக்குக் கண்ணுறுப்பு உரியதாதலின் . ஒரு பாகம் - இடப்பால் . அருள் காரணம் - உயிர்கட்கு இம்மை மறுமை வீடு பேறு எய்த அருளுங்காரணம் . எரி அரவு ஆரம் மார்பர் - எரி ( தீப் ) போலும் நச்சுப் பாம்பினை ( மாலை ) ஆக அணிந்த மார்பினை உடையவர் . ஞாயிறும் மதியும் ( திங்களும் ) வேதவிதியும் ( பிரமனும் வேதத்தில் விதித்தவையும் விலக்கியவையும் ) விண்ணும் நிலமும் , வாயுவும் ( காற்றும் ) தீயும் , இமையாரும் , இமைப்பாரும் அல்லர் . சிவபெருமான் ஞாயிறு முதலியவாகித் தோன்றியும் அவற்றின் வேறாயும் இருத்தல் உணர்த்தப்பட்டது . எல்லாமாய் அல்லதுமாய் உடனுமாய் இருக்கும்நிலை . ` ஒருவனே எல்லாம் ஆகி அல்லனாய் உடனும் ஆவன் ` ( சித்தியார் . 1-27. )

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 3

தேய்பொடி வெள்ளை பூசி யதன்மேலொர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலை நீல வொளிமா மிடற்றர் கரிகாடர் காலொர் கழலர்
வேயுட னாடு தோளி யவள்விம்ம வெய்ய மழுவீசி வேழ வுரிபோர்த்
தேயிவ ராடு மாறு மிவள்காணு மாறு மிதுதா னிவர்க்கொ ரியல்பே.

பொழிப்புரை :

நுண்ணிய வெண்ணீறு பூசித் திங்கள் போன்ற வடிவுடைய திலகத்தை இட்ட நெற்றியை உடையவர் . சூரியன் தோன்றும் கீழ்க்கடலின் நீல ஒளி பொருந்திய கழுத்தினர் . சுடுகாட்டில் உறைபவர் . காலில் ஒற்றைக் கழல் அணிபவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி நடுங்குமாறு கொடிய மழுப்படையை வீசி யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து இவர் கூத்தினை நிகழ்த்துவதும் , அதனைப் பார்வதி காணுமாறு செய்வதும் இவருக்கு இயல்பு போலும் .

குறிப்புரை :

தேய்பொடி - ` நுண்டுகள் `. பொடி வெள்ளை - வெள்ளைப்பொடி , ` வெண்ணீறு ` பொடிபூசி என்க . அதன் மேல் , பூசியதன்மேல் எனலும் ஆம் . திங்கள் திலகம் பதித்த நுதலர் :- ` பிறை நுதல் வண்ணம் ஆகின்று ` ( புறநானூறு கடவுள் வாழ்த்து ). நுதல் - சென்னி . திங்கள் போலும் வடிவு உடைய திலகம் பதித்த நெற்றியர் எனக்கொண்டு , பொடிபூசியதன்மேல் என்பதற்கு இயையப் , பொருளுரைத்தலும் ஆம் . காய் கதிர் வேலை - வெஞ்சுடர் ( ஞாயிறு ) தோன்றும் கீழ்கடல் . வேலை ( கடல் ) நீலவொளி போலும் ஒளியையுடைய மிடறு ( கழுத்து ). மாமிடற்றர் - திருநீலகண்டர் . கரி காடர் - கரிந்த ( சுடு ) காட்டில் ஆடுபவர் . கால் ஒர் கழலர் - ஒரு கழலணிந்த வலக்காலினார் . வேய் - மூங்கிலின் இரு கணுக்கிடை . தோட்கு ஒப்பு அஃதே . தோளியவள் விம்ம ( வேழவுரி ) போர்த்து என்க . வெய்ய மழு :- மழுவின் வெண்மை . ` ஏ ` இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஓர் இயல்பே ? போர்த்தே எனலுமாம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 4

வளர்பொறி யாமை புல்கி வளர்கோதை வைகி வடிதோலு நூலும் வளரக்
கிளர்பொறி நாக மொன்று மிளிர்கின்ற மார்பர் கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞை யன்ன தளிர்போன்று சாய லவடோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டு பாடு குழலா ளொருத்தி யுளள்போல் குலாவி யுடனே.

பொழிப்புரை :

பெருமானார் வளர்ந்த , பொறிகளை உடைய ஆமை ஓட்டை அணிந்து , நீண்ட கூந்தலை உடைய பார்வதி தங்கியதும் , மான்தோலும் பூணூலும் ஓளிவீசுவதும் , மிக்க பொறிகளை உடைய நாகம் விளங்குவதுமான மார்பினராய் , காட்டிலும் நாட்டிலும் மகிழ்ந்து ஆடுபவராய் உள்ளார் . செறிந்த பொறிகளை உடைய மயில் போன்று கட்புலனாகும் மென்மையும் தளிர் போன்று ஊற்றுக்கினிய மென்மையும் உடையவள் என்று சொல்லப்படும் உண்மை தன்னிடம் நிலைபெறப் புள்ளிகளை உடைய குளிர்ந்த வண்டுகள் பாடும் கூந்தலை உடைய கங்கையாளும் அப்பெருமானோடு கூடி அவருடன் உள்ளாள் போலும் .

குறிப்புரை :

வளர் பொறி - வளர்ந்த பொறிகளை . ( புள்ளி )களை யுடைய ஆமை உறுப்புகளை உட் சுருக்கி வெளி நீட்டல் பற்றி ` வளர்பொறி ` என்றலுமாம் . புல்கி - பொருந்தி ; ` முற்றல் ஆமை இளநாகமொடு ஏனமுளைக் கொம்பவை பூண்டு ` ( தி .1 ப .1 பா .2) வளர்கோதை வைகி மிளிர்கின்ற மார்பர் :- ` மலைமகள் கைக்கொண்ட மார்பும் ` ( தி .4 ப .2 பா .7). ` மார்பிற் பெண்மகிழ்ந்த பிரமாபுர மேவிய பெம்மான் ` ( தி .1 ப .1 பா .4). தோலும் நூலும் வளர மிளிர்கின்ற மார்பர் :- ` தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் ` ( தி .1 ப .6 பா .3). தோல் - புலி , யானை , மான் , சிங்கத்துரியுள்யாதுங் கொள்ளலாம் . இங்கு நூலொடு கூடிய மான்றோல் மிக்க பொருத்தம் உடைத்து . புலியுரித் தோலுடையன் . ` வேழத்துரிபோர்த்தான் ` ( தி .4 ப .19 பா .7) ` கலைமல்கு தோல் உடுத்து ` ( தி .1 ப .6 பா .10) ` சிறுமான் உரியாடை ` ( தி .4 ப .19 பா .6) ` மானைத் தோல் ஒன்றையுடுத்துப் புலித்தோல் பியற்கும் இட்டு , யானைத் தோல் போர்ப்பது ` ( தி .7 ப .18 பா .4). ` சிங்கமும் நீள் புலியும் செழுமால் கரியோடு அலறப் பொங்கிய போர்புரிந்து பிளந்து ஈருரி போர்த்தது ` ( தி .7 ப .99 பா .6). நூல் - புரிநூல் . ` மின்னு பொன்புரி நூலினார் ` ( தி .2 ப .78 பா .5). ` பொடி புல்குமார்பினில் புரிபுல்குநூல் ` (1-111-7) ` ஒன்பதுபோல் அவர் மார்பினில் நூலிழை ` ( தி .4 ப .18 பா .9). நாகம் மிளிர்கின்ற மார்பர் :- ` மண் மகிழ்ந்த அரவம் .... மலிந்த .... மார்பு ` ( தி .1 ப .1 பா .4) ` பொறி யரவம் மார்பாரப் பூண்டான் ` ( தி .6 ப .22 பா .9). காடும் நாடும் மகிழ்வர் :- காட்டிலும் நாட்டிலும் மகிழ்வர் ( ஆடுவர் ). நளிர் - செறிவு . பொறி :- முதுகிற் பொறி . மஞ்ஞை - மயில் . மஞ்ஞையன்ன சாயல் . தளிர் போன்று சாயல் . ` சாயலவள் ` குழலின் அடை பொது . சாயலவள் குழலாள் ஒருத்தி என்க . வாய்மை - வாயின் தன்மை , வண்டுகட்கு ( இசை ) தோன்றலும் பெருகலும் பாடுதலும் வாயின் தன்மையாக உள்ளமை உணர்க . ` தோன்று வாய்மை பெருகி ` என்றது அம்மையப்பராகி என்றும் உள்ளதை உணர்த்திற்று எனலும் ஆம் . குழலாள் கங்கையும் ஆம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 5

உறைவது காடு போலு முரிதோ லுடுப்பர் விடையூர்வ தோடு கலனா
இறையிவர் வாழும் வண்ண மிதுவேலு மீச ரொருபா லிசைந்த தொருபால்
பிறைநுதல் பேதை மாத ருமையென்னு நங்கை பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டு பாடு மடிநீழ லாணை கடவா தமர ருலகே.

பொழிப்புரை :

இவர் தங்குமிடம் காடு , உரித்தெடுக்கப்பட்ட புலி முதலியவற்றின் தோலை உடுப்பர் . இவர் காளையை ஊர்வர் . மண்டையோடு உண்கலம் . தலைவராகிய இவர் வாழும் வகை இது . இவர் எல்லோரையும் அடக்கி ஆள்பவர் . இவருக்கு உரியது இவர் உடம்பின் வலப்பகுதியே . மற்றொரு பகுதியாகப் பிறைபோன்ற நெற்றியளாய் மடம் என்ற பண்புள்ளவளாய்த் திகழும் விரும்பத்தக்க உமை என்னும் நங்கை உள்ளாள் . இடம் பெயர்ந்து ஆடுவதற்காகப் பார்வதியோடும் கூடியிருப்பார் . வீரக்கழல் ஒலிக்க வண்டுகள் பாடும் திருவடியின் நிழலாகிய அப்பெருமானாருடைய ஆணையைத் தேவர் உலகம் மீறிச் செயற்படமாட்டாது .

குறிப்புரை :

உறைவது காடு . உடுப்பது தோல் . ஊர்வது விடை . உண்கலன் ஓடு . இவ்விறைவர் வாழும் வண்ணம் இது எனில் , ஒருபால் ஈசர் . ஒருபால் உமை நங்கை . பிறழ்பு - பிறழ்ந்து . ஆடநின்று . ` அறைகழல் ஒலி ` வண்டு பாடும் ஒலிக்கு ஒப்பு என்பாரும் உளர் , அடிநிழல் ஆணையை அமரர் உலகு கடவாது . பிறழ் - சொல் . ஆடற்கேற்ற சொல்லை உமை பாட நின்று பிணைவான் என்றும் உரைக்கலாம் . ` தளிரிளவளர் என உமை பாடத் தாளம் இட ..... ஆடும் அடிகள் ` ( தி .2 ப .111 பா .1). ` வாருறு மென்முலை மங்கை பாட நடம் ஆடி ` ( தி .3 ப .11 பா .6) ` தேவி பாட நடம் ஆடி ` ( தி .3 ப .11 பா .7). பிறழ் - ( ஆடற்குப் பாடல் ) விளக்கம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 6

கணிவளர் வேங்கை யோடு கடிதிங்கள் கண்ணி கழல்கால் சிலம்ப வழகார்
அணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ண வியலா ரொருவ ரிருவர்
மணிகிளர் மஞ்ஞை யால மழையாடு சோலை மலையான் மகட்கு மிறைவர்
அணிகிள ரன்ன வண்ண மவள்வண்ண வண்ண மவர்வண்ண வண்ண மழலே.

பொழிப்புரை :

சோதிடனின் இயல்பை உடையதாய் வளருகின்ற வேங்கைப் பூக்களையும் புதிய பிறையையும் முடிமாலையாகச் சூடி , காலில் கழல் ஒலிப்ப இவற்றால் ஏற்படும் அழகினை உடையவர் . அழகு விளங்குகின்ற மாலையையும் , வெண்ணீற்றையும் அணிந்து செந்நிறமுடைய இயல்பினர் ஆகிய பெருமான் அம்மையப்பராய் இருவராய் உள்ளார் . அழகு விளங்குகின்ற மயில்கள் ஆட மேகங்கள் உலாவும் சோலைகளை உடைய இமயத்து மன்னன் மகளாகிய பார்வதிக்குத் தலைவர் . பார்வதியினுடைய நிறத்தின் வண்ணம் அழகு வெளிப்படுகின்ற அன்ன நிறத்தின் வண்ணமாகும் . ( காரன்னம் ) அவருடைய நிறம் நெருப்பின் நிறமாகும் .

குறிப்புரை :

கணிவளர் வேங்கை :- வளர்கின்ற கணிவேங்கை மரம் . கணி - சோதிடன் . கணியைப்போல வேங்கையும் மணம்புரி காலத்தைக் கருதுவிப்பதால் ` கணிவளர் வேங்கை ` என்று அருளினார் . கணி என்பது வேங்கைக்குரிய பெயராதலின் , கணியாகிய வளர் வேங்கை - வளர்கின்ற கணிவேங்கை எனலுமாம் . ` ஒள்ளிணர்க் கணியின் கொம்பர் ` ( கந்தபுராணம் வள்ளி . 12 ) ` வண்ணவண்ணத் தெம் பெருமான் வர்த்த மானீச்சரத்தாரே ` ( தி .2 ப . 92 பா .4). சிவபிரான் முடிமேல் ` எருக்கு அலர்ந்தவன்னி கொன்றை மத்தமும் ` ( தி .2 ப .102 பா .2). ` வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் ` ( தி .2 ப .7 பா .1) அன்றி வேங்கையும் உண்டு என்று இதனால் அறியலாம் . வேங்கையோடு திங்கள் கண்ணி அழகார் என்றும் கழல் காலிற்சிலம்ப அழகார் என்றும் இயைத்துணர்க . அணி - அழகு . ஆரம் - சந்தனம் . ஆரச்சுண்ணம் - சந்தனக்குழம்பு . வெள்ளை தவழ்சுண்ண வண்ணம் . ஆரத்தை மாலை எனக்கொண்டு ஆரவண்ணவியல் :- வெள்ளைதவழ் சுண்ணவண்ணவியல் எனலுமாம் . ` விலையிலா ஆரம்சேர் மார்பர் ` ( தி .6 ப .28 பா .8) ஆதலின் ` அணிகிளர் ஆரவண்ண வியலார் ` என்றார் . வெள்ளைதவழ் சுண்ணம் - திருவெண்ணீறு எனில் ` நீறணி ... வண்ணர் ` ( பா .8) என்பதொடு வேறுபடும் . அதன் வண்ண வியலுடையார் ( தி .5.28. பதிகம் பார்க்க ). ஒருவர் - ( பா . 8 பார்க்க ). அநேகமாய உலகங்கட்கும் அநேகராய ஆன்மாக்களுக்கும் பதியாகிய ஏகர் . ` ஒன்றே பதி ` ( சிவஞானபோதம் சூ .2 வெண்பா ). ` ஒருத்தனார் உலகங்கட்கு ` ( தி .5 ப .1 பா .7) ` கருவனே கருவாய்த் தெளிவார்க்கெலாம் ஒருவனே ` ( தி .5 ப .13 பா .5). ` ஒருவனாகி நின்றான் இவ்வுலகெலாம் ` ( தி .5 ப . 97 பா .11). இருவர் - அம்மையப்பராகிய இருவர் . ` ஒருவராய் இரு மூவருமாயவன் ` ( தி .5 ப .20 பா .1). மணி - நீலமணி ( போலக் கிளர்ந்த ) மஞ்ஞை - மயில் . ஆல - தோகையை அகல விரித்து ஆட . மழை - மேகம் . மழை ஆடும் சோலையை உடைய ( இமய ) மலை . மலையான் - இமவான் . மகள் - பார்வதி தேவியார் . உம்மை - எச்சப்பொருட்டு ; வீடு பெறலில் இறந்ததும் எதிரதும் ஆகிய உயிர்களைக் குறித்து நிற்றலின் . அவள் வண்ணவண்ணம் அணிகிளர் அன்னவண்ணம் என்றும் அவர் வண்ணவண்ணம் அழல் ( வண்ணம் ) என்றும் வகுத்துக்கொள்க . பார்வதி தேவியாரது வண்ணம் அன்னத்தின் வண்ணம் . அவர் ` தீவண்ணர் ` ` தீவண்ணர்திறம் ` ( தி .6 ப .95 பா .6). வண்ணம் - நிறத்தியல் . ` இயற்கையழகு ` என்றலும் உண்டு . ( பரிபாடல் .) வண்ணத்தின் வகை எனலும் ஆம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 7

நகைவளர் கொன்றை துன்று நகுவெண் டலையர் நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேத கீத முறையோடும் வல்ல கறைகொண் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதை மாதர் முனிபாடு மாறு மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம் வீசி மதியங்கு மாறு மிதுபோலு மீச ரியல்பே.

பொழிப்புரை :

விளக்கம் மிகுகின்ற கொன்றை மலர் நெருங்கிய தலைமாலையும் குளிர்ந்த கங்கையும் தங்கிய சடைமுடியை உடையவர் . உலகில் மேம்பட்டு விளங்குகின்ற வேதப் பாடல்களை ஒலிக்கும் முறையோடு பாடுதலில் வல்ல , விடக்கறை பொருந்திய நீலகண்டர் . மொட்டுக்களால் ஆகிய மாலையை அணிந்த பார்வதி , பெருமானுடைய கூத்தாடலுக்கு ஏற்பப்பாடும் முறையும் பெருமான் தீயிடை ஆடும் முறையும் , இவர் கையில் ஏந்திய பகைத்தன்மை வளர்கின்ற நாகத்தை அகற்றிப் பிறை அசையுமாறு இவர் இவ்வாறு செய்வதும் போலும் இவர் தன்மையாகும் .

குறிப்புரை :

நகை - விளக்கம் . கொன்றை மிகப் பூத்தலாலும் இயல்பான நிறத்தாலும் தொலைவிலுள்ளார்க்கும் நன்கு விளங்கும் . துன்று வெண்டலை என்க . கொன்றையும் வெண்டலையும் சடைமேல் உள்ளமையால் ஒன்றனை ஒன்று துன்றும் . நகுதலை . வெள் + தலை . தலையார் - தலைமாலையர் . கைத்தலை கொன்றை துன்றுமாறில்லை . தலையர் முடியர் என்பவற்றுள் முன்னது அணி . பின்னது சினை . ` அரவும் அலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவுஞ்சடை ` . ` பைங்கட்டலைக்குச் சுடலைக்களரி ` ( தி .4 ப .86 பா .10). வேதகாரணர் ஆதலின் , வேதகீதம் வல்ல மிடறர் . மிகை - சிறப்பு . மிடறு - திருக்கழுத்து . கறை - நஞ்சின் கறுப்பு . மணி - நீலமணி . நிறத்திற்கு ஆகுபெயர் . செய்மிடறு - வினைத்தொகை . முகைவளர் கோதை - மொட்டுக்கள் வளரும் மாலையை ( அணிந்த ). மாதர் - உமை . ( தி .2 ப .111 பா .1). முனி - மநநசீலம் ; சங்காரகால முனிவு ` அரி அயன்தலை வெட்டி வட்டாடினார் ` ( தி .5 ப .85 பா .2) க்கு முனிவில்லையாமோ ? ` சண்ட தாண்டவம் ` முதலிய சிலவற்றில் முனிவுண்டு . கைவளர் நாகம் . பகைவளர் நாகம் . ` பகை ` நாகத்தியல்புணர்த்திற்று . தலைமதியொடு பகை எனலுமாம் . வீசுமது என்றிருந்தது போலும் . ` வீசி ` எதைத் தழுவுவது ? பாடுமாறும் ஆடுமாறும் இயங்குமாறும் ஆகிய இது (- இவ்வாறு ) போலும் ஈசரியல்பு என்க . வீசி மதி அங்கு மாறும் எனின் முன்னிரண்டொடும் ஒட்டாமை உணர்க . ` முனிபாடு - கோபம் . மாறும் - தணியும் ` எனில் எரி ஆடு மாறும் மதி அங்கு மாறும் என்பன தழுவா . ` வழிபாடு .... ஒழிபாடு ` ( தி .2 ப .84 பா .3) போல ` முனிபாடு ` என்னும் சொல்லமைதி உண்டேனும் ஈண்டுப் பொருந்தாது . ப 8. பா .3 இல் ஆடுமாறும் காணுமாறும் என்றதுபோற்கொள்ளலே ஏற்றது . மதி அல்குமாறோ ?

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 8

ஒளிவளர் கங்கை தங்கு மொளிமா லயன்ற னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ரார வெள்ளை தவழ்சுண்ண வண்ணர் தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேட முண்டொர் கடமா வுரித்த வுடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்ன தொல்லை யவள்பாக மாக வெழில்வேத மோது மவரே.

பொழிப்புரை :

எம்பெருமான் ஒளிவளர்கின்ற கங்கை தங்கும் சடையின் செந்நிற ஒளியை உடையர் . திருமால் பிரமன் இவர்கள் உடைய உடல்கள் சாம்பலாக அவர்களுடைய ஒளி வீசுகின்ற வெள்ளை நீற்றினை , ஒளி வீசும் மாலையின் வெண்ணிறத்தோடு பூசிய வெண்பொடி நிறத்தவர் . தனியராயிருந்த ஒருவர் . அழகு விளங்குகின்ற அன்னம் போன்ற அநாதி சக்தி ஒருபாகமாக , அதனால் மகிழ்ச்சி மிகும் இருவர் வேடமும் அவருக்கு உண்டு . ஒரு மத யானையை உரித்த தோலை மேலுடையாகப் போர்த்த , மண்டையோட்டை உடைய அப்பெருமானார் அழகிய வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர் ஆவர் .

குறிப்புரை :

ஒளிவளர் கங்கை தங்கும் ஒளி :- கங்கையொளியும் , அது ( சடையில் ) தங்கும் ( ஒளியும் ) சடையொளியும் , தங்குமொளி மாலயனைச் சாராது . வீயச் சுடர்நீறு அணி என்று வினையெச்சித்தின் முன் வலிமிகல் வேண்டும் . இது சந்தம் நோக்கிய இயல்பு . வீயஅணி . சுடர்நீறு :- ` காண இனியது நீறு ` ` கண் திகைப்பிப்பது நீறு ` ` கவினைத் தருவது நீறு ` ` பராவணமாவது நீறு ` ` உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து ` ( தி .2 ப .85 பா .3). பரையே ` மெய்ச்சுடருக்கெல்லாம் ஒளி வந்த பூங்கழல் ` ( தி .8 திருவாசகம் 119). ஆரவெள்ளைதவழ் சுண்ண வண்ணர் - சந்தனச் சுண்ணம் பூசிய வண்ணத்தவர் . ` வெண்சாந்து ` என்னும் வழக்குண்டு . ஆரச்சுண்ணம் . வெள்ளை ஆரச் சுண்ணம் . வெள்ளைதவழ் ஆரச்சுண்ணம் . சுண்ணவண்ணம் . வண்ணர் . நீறணிவண்ணர் . தமியார் - தனி முதல்வர் . அம்மையப்பராகுங்கால் ` எமியேம் ` எனற்குரியார் . ஒருவர் - ஒப்பற்றவர் , முக்கியர் , வேறா ( க வீற்றிருப்ப ) வர் . ` ஏகபெருந்தகையாய பெம்மான் ` ( தி .1 ப .4 பா .4). இருவர் - அம்மையப்பர் . திருமாலும் பிரமனுமாயும் இருப்பவர் . ` இருவர் அறியாத ஒருவன் ` அவ்விருவராயும் உயிர்கட்கு உலகைப் படைத்தும் காத்தும் அருள்கின்றான் . ` ஒருவராய் இருமூவரும் ஆனவன் ` ( தி .5 ப .20 பா .1). ` ஓருடம்பினை யீருருவாகவே உன் பொருட்டிற மீருருவாகவே ` ( தி .3 ப .114 பா .10). ` களி - மகிழ்ச்சி . வேடம் - வீரபத்திர ரூபம் . உண்டு - உளதாகிக் கொண்டு . கடமா - மதயானை . தோலுடை என மாறுக . தொல்லையவள் - அநாதி சத்தி .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 9

மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாக வுண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ள முற்று மலறக் கடைந்த வழனஞ்ச முண்ட வவரே.

பொழிப்புரை :

பார்வதியோடு , வடக்கில் உற்பத்தியாகும் கங்கை என்ற பெண்ணுக்கும் கணவராகி மகிழ்பவர் . மண்டையோட்டையே பிச்சை எடுத்து உண்ணும் பாத்திரமாகக் கொண்டு தனியே திரிந்து , அடியார் செய்யும் தவத்தில் வாழ்பவராகி அவர்களுக்கு அருளும் முயற்சியை உடையார் . விலையில்லாது கிட்டும் சந்தனமாக மணங் கமழும் திருநீற்றைப் பூசி விளையாடும் வேடத்தை உடையர் , உலகியலிலிருந்து வேறுபட்ட இயல்பை உடைய பெருமான் , அலைகளை உடைய கடலின் வெள்ளம் முழுவதும் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட கொடிய விடத்தை உண்ட அப்பெருமான் ஆவார் .

குறிப்புரை :

மலைமட மங்கைக்கும் வடகங்கை நங்கைக்கும் மணவாளர் . ` மடமாதர் இருவர் ஆதரிப்பார் ...... அடையாளம் ` ( தி .2 ப . 106 பா .6). கலன் - உண்கலம் . தலை - பிரமகபாலம் . வெண்டலை . தனியே திரிந்து தவவாணராகி முயல்வர் :- ` தான் தனியன் ` ஆயினும் , அடியார் முதலோர் செய்யும் தவத்தில் வாழ்பவராகி , அவர்க்கு அருளும் முயற்சியுடையர் . விலையிலி சாந்தம் என்று நீறுபூசுதல் :- ` சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு ` ( தி .1 ப .52 பா .7). ` சாந்தம் வெண்ணீறெனப்பூசி வெள்ளம் சடைவைத்தவர் ` ( தி .2 ப .120 பா .1). விலையிலியாகிய சாந்தம் என்க . வெறி - மணம் . வெறிவேர் ( வெற்றிவேர் , வெட்டிவேர் ). விளையாடல் - இன்பம் விளைக்கும் ஆட்டம் . வேடவிகிர்தர் :- ` பலபல வேடமாகும் பரன் `. பாற்கடல் கடைந்த வரலாறு . நஞ்சுண்ட சீர்த்தி .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 10

புதுவிரி பொன்செ யோலை யொருகா தொர்காது சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேத கீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண மெழில்வண்ண வண்ண மியல்பே.

பொழிப்புரை :

புதிதாகச் சுருள் பொன்னால் செய்யப்பட்ட ஓலை ஒருகாதிலும் வளைந்த சங்கு ஒரு காதிலும் காதணிகளாக அமைந்து தோள்கள் மீது புரள , முறைப்படி வேதப்பாடலை ஒருபக்கம் ஓத , இடப்பக்கமாகிய பார்வதி பாகம் மெதுவாக முறுவல் செய்யும் . சடைப்பகுதியில் தேன் விரியும் கொன்றைப் பூப்பொருந்த , பெண் பகுதி , கூந்தலைப் பின்னியிருக்கும் பாகமாக வருகின்ற பெருமானுடைய நிறமும் , இயல்பும் இவை , தேவியினுடைய நிறமும் இயல்பும் இவை . அழகு வண்ணங்கள் இரண்டன் இயல்புகள் இவையே .

குறிப்புரை :

புதுவிரிஓலை - புதுமை யொளியைப் பரப்பும் தோடு . குழைக்காதர் . மாதியலும் பாதியற்கு ஒருபால் தோடும் ஒரு பால் குழையும் உள்ளமை உணர்த்திற்று . ` தோடுடைய செவியன் ` ( தி .1 ப .1 பா .1). ` காதிலங் குழையன் ` ( தி .1 ப .2 பா .2). ` தோடுடையான் குழையுடையான் ` ( தி .1 ப .61 பா .8). ` சங்கோடு இலங்கத் தோடு பெய்து காதில் ஓர் தாழ்குழையன் ` ( தி .1 ப .63 பா .4) என்புழி விழிப்பொடு பொருள்கொள்ளல் வேண்டும் . ` வெண்பளிங்கின் குழைக்காதர் ` ( தி .2 ப .38 பா .7). ` சதுர் வெண்பளிங்குக் குழை ` ( தி .4 ப .6 பா .7) ` காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும் ` ( தி .6 ப .18 பா .1). மது - தேன் . துன்றுசடை . மாதர் பாகம் ஆக ( குழல் பாகம் ஆக ) என்க . மாதர் - கங்கை . குழல் - உமைநங்கை . ஆகுபெயர் . குழல் பாகம் திருமேனிப்பகுதி . மாதர் பாகம் சடை . ` செப்பிளமுலை நன்மங்கை யொருபாகமாக விடையேறு செல்வன் ` ( தி .2 ப .85 பா .7). இவர் - சிவபெருமானார் . இவள் - சிவாநந்தவல்லி . எழில் - எழுச்சி . விதி - பிரமன் ; செய்வன தவிர்வன . விதிக்கு விதித்த வேதம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 1

தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

பொழிப்புரை :

தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.

குறிப்புரை :

தலையே நீ வணங்கு; தலைக்குத் தலைமாலையை அணிந்து தலையிலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்கு. வணக்கம் தலைவனுக்கே உரியது. மகாநாராயணோபநிடதம் சிவபிரானுக்கே எவ்வுயிர்களின் வணக்கமும் உரியது என்கின்றது. பலிதேர்வோன் எனினும் தலைவனே. ஏனையோர் தேரும்பலி தத்தம் வறுமையைக் குறித்து. (தாம் உய்யும் பொருட்டு). இறைவன் பலிதேர்வது உயிர்கள் உய்யும் பொருட்டு. பிறர் பலி தேர உதவுங் கருவி, அவர் வறுமை நிலைக்கேற்ற (பிச்சைப்) பாத்திரம். சிவபிரானுக்கோ பிரமகபாலம் பிச்சைப் பாத்திரம் ஆதலின், அவனது தலைமை புலனாகும். அது மட்டுமோ? தலையில் அணிந்த மாலை, நூறு கோடி பிரமர்களும் ஆறு கோடி நாராயணரும் ஏறு கங்கை மணலெண்ணின் அளவுடைய இந்திரரும் ஆகிய முத்திறத்தர் தலைகளைக் கோத்தவை. `தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே` (தி.7 ப.4 பா.1). இத் தலைமை சிவனடியார்க்கன்றி, `செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்திசெய் மனப் பாறைகட்கு ஏறுமோ?` ஏறின், அவர்க்கு மாதேவன் அலால் தேவர் மற்று இல்லையே. அத்தலைவனுக்கே வணக்கம் உரியது. அதனால், தலையே நீ வணங்கு. அவனை நேரே வணங்காமல், வேறு எங்கு வணங்கினும், அங்குத் தாபரமோ சங்கமமோ அவனது உருவாய் நிற்கும். அத் தாபர சங்கமங்கள் என்ற இரண்டு உருவில் நின்று நீ செய்யும் வணக்கத்தை (பூசையை)க் கொண்டு அருளை வைப்பவன் மாபரனே. `யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூரம்மான் அத்தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே` (தி.2 ப.44 பா.6). `கானப்பேர் தலையினால் வணங்குவார் நாளும் நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே` (தி.3 ப.26 பா.8). `தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே` (தி.3 ப.26 பா.9). இத் திருமுறைக் கருத்தே கொண்டு, `எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கோளில் பொறியிற் குணம் இலவே` என்றார் பொய்யாமொழியார். ஆசிரியரது திருத்தலை, ஏனையோர் தலையும் பெருவிரல் இறை ஊன்றலும் பொறாது பற்கழல அங்காந்து அலறி வீழ்ந்த வரைபொரு தோளரக்கன் தலையும் போலாது இருவரும் ஒருவனாய அவ்வள்ளல் திருவடி சுமந்து கொண்டு திரியும் (தி.4 ப.75 பா.10) பெருமையதாதலின், `தலையே` என்று அதன் பயிற்சி தோன்ற விளித்தார். ஏனைக் கண், செவி முதலியவற்றிற்கும் இவ்வாறு பொருந்துவன கொள்க. இருமுறை கூறியதன் கருத்து:- வணங்கிப் பயின்ற தலை முதலிய உறுப்புகளை யுடையாராயினும், தமக்குத் தாமே தூண்டிக்கொள்ளும் வகையில் ஒருமுறைக்கு இருமுறை தம் வாயால் ஏவிக்கொண்டு, தம் உடலின் பயனைத் தம் தலைவன் வழிபாட்டுத் திறத்தில் நிலைபெறுவித்துக்கொள்வாரானார் தாண்டகச் சதுரர். `தலைசுமந்து இருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி நிலையிலா` (தி.4 ப.69 பா.2)ப் பொய்வாழ்வு வேண்டா. மெய் வாழ்வு வேண்டின், `தலையே நீ வணங்காய்` என்று ஏவுகின்றார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ. 

பொழிப்புரை :

கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.

குறிப்புரை :

காட்சியின் பயன், காணும் வினைமுதல்வனுக்குத் தீர்த்தற்கு அரியதொரு துயரின் நீக்கம். உயிர்கள் அடிமைகள். அவை உடையவனைக் காண்டலின் பயன் தம் பிறவி நீக்கம். அப்பெருந் துன்பம் போக்கவல்லான் பிறவியில்லாதவனாதல் வேண்டும். `பிறவா யாக்கைப் பெரியோன்` இறவாமை திண்ணம். அது நஞ்சுண்டும் சாவாமையால் உறுதியாயிற்று. ஆகவே,`கண்காள் கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னைக் காண்மின்கள்` என்றருளினார். ஆட்டம் எனப்படுவன பற்பல உள. அவையெல்லாம் பிறப்பு, நிலைப்பு, இறப்பு, ஒளிப்பு, அளிப்பு என்னும் ஐந்தனுள் அடங்கும். `ஐந்து நலமிகு தொழில்களோடும் நாடகம் நடிப்பன் நாதன்` (சித்தியார்.5:-7) `பஞ்சகிருத்திய தாண்டவம்` என்றலும் உணர்க. உயிர்களுடைய பிறப்பிறப் பாட்டம் ஒழிய உடையவனது அருளாட்டத்தை என்றும் மறவாது காண்டல் வேண்டுதலின், `எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்கள்` என்றருளினார். `குனித்த புருவம் முதலிய ஐந்தும் திருவாய் பவளத் திருமேனி இரண்டும் ஆகிய ஏழும் காணப்பெற்றவர்க்குப் பிறப்பில்லை என்பதுறுதியாதலின், மன்றாடற் காட்சி அன்றாடம் பெற்று உவக்க, நீங்கும் பிறவியும் நீங்காதிருக்க வேண்டும் என்று வெளியிட்டருளினார். `சிற்றம்பலத் தரன் ஆடல் கண்டாற் பீழையுடைக் கண்களால் பின்னைப்பேய்த் தொண்டர் காண்பதென்னே` (தி.4 ப.80 பா.1) ஆடல் அன்றிக் கண்கொண்டு காண்பது யாதும் இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.

பொழிப்புரை :

செவிகளே! சிவபெருமானாகிய எங்கள் தலைவனாய், செம்பவளமும் தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள்.

குறிப்புரை :

செவிகாள்! சிவனும், எம் இறையும், செம்பவளமும் எரியும் போன்ற மேனிப் பிரானும் ஆகிய முழுமுதல்வன் திறத்தை எப்போதும் கேண்மின்கள். குறைவிலா மங்கல குணத்தன் திறம் கேட்டலே முழுப்பயன் ஆகிய துன்ப நீக்கமும் இன்பப் பேறும் விளைக்கும் என்பார் சிவன் என்றும் இவ்வடிமையின் செவிகள் ஆண்டவன் திறமே கேட்கற்பாலன என்பார் `எம் இறை` என்றும், கண்ணுக்குப் பிடிக்காதவர் திறத்தைக் காது கேளாது; கண் களிக்கக் காணத்திகழ்வார் திறத்தையே காதுகள் கேட்க விரும்பும் ஆதலின், `செம்பவளம்போல், எரிபோல் மேனி` என்றும், உயிர்க்குயிராய் நின்று என்றும் பிரியாதவனது திறத்தைக்கேட்டலே உயிர்க்கு உய்தி தருமென்பார், `பிரான்` என்றும், சிவாகமத்திறம், சைவத்திறம், முப்பொருட்டிறம், ஈசன் திறம் முதலிய எல்லாம் அடங்கத் `திறம்` என்றும், பாசிபடுகுட்டத்திற் கல்லினை விட்டெறியப்படும் பொழுதின் நீங்கி அது விடும்பொழுதிற் பரக்கும்; ஆசுபடும் மலம் மாயை அருங்கன்மம் அனைத்தும் அரனடியை உணரும்போது அகலும்; (உணர்தலைவிட்ட) பின் அணுகும்`; அதனால், `நேசமொடும் திருவடிக் கீழ் நீங்காதே தூங்கும் நினைவுடையோர் நிலை அதுவேயாகி நின்றிடுவர்; ஆசையொடு அங்கும் இங்கும் ஆகி அலமருவோர் (அறுத்தற்கு) அரும் பாசம் அறுக்கும் வகை` இடை விடாதும் இரண்டாட்டாதும் ஈசன் திறமே பேணுதல் என்பார் `எப்போதும்` என்றும், கற்றலிற் கேட்டலே நன்று என்பார் (முன்னும், பின்னும்) கேண்மின்கள்! என்றும் பணித்தருளினார். ஆளாகாதும், ஆளானாரை அடைந்துய்யாதும், மீளா ஆட்செய்து மெய்மையுள் நில்லாதும் வாளா மாய்ந்து மண்ணாகிக் கழியும் தொழும்பர் செவி தோளாத சுரை (தி.5 ப.90 பா.3). `இளையகாலம் எல்லாம் எம்மானை அடைகிலாத் துளையிலாச் செவி(த் தொண்டர்)` (தி.5 ப.66 பா.3) எனப் பழிக்கப்படாமை வேண்டி, செவிகாள் பிரான் திறம் எப்போதும் கேண்மின்கள் என்றருளினார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை
மூக்கே நீமுரலாய். 

பொழிப்புரை :

மூக்கே! சுடுகாட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல் வடிவமாய் இருக்கும் பார்வதி கேள்வனை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.

குறிப்புரை :

முரலாய் - முரல்வாய். (மூக்கால் ஒலிப்பாய்) `சூழ்த்து மதுகரம் முரலும் தாரோய்` தி.8 திருவாசகம். முதுகாடு:- பழங்காடு. சுடுகாடு. அதற்கு முதுமை, தன்கண்வரும் பிணங்களின் முதுகைத் தான் பார்த்துத் தன் முதுகைப் பிறிதொன்று பாராதவாறு நெடுங்காலம்நிற்றல். (புறம்.356).
வாக்கே நோக்கிய மங்கை - வாக்கு (வாசகம்) மங்கை. வாச்சியம் - மங்கைமணாளன். சொல்:- மங்கையுமை. பொருள்:- மணாளசிவம் முரலுதல் - மூக்கின்றொழில். உயிர்ப்புக்கால் (பிராணவாயு) மூக்கின் வழி வெளிப்படுவது. அதனியக்கம் இன்றேல், உடலின் நீங்கும் உயிர். உடல் முதுகாட்டிற் கிடத்தியெரிக்கப்படும். அங்கு உறையும் முக்கண்ணனை உடலோடிருக்கும்போதே முரன்று கொண்டிருப்பின், அவனருளால், இறவாது வீடு பெற்று இன்புறலாம் என்பார் `முதுகாடுறை முக்கண்ணனை மூக்கே நீ முரலாய்` என்றார்.
மூக்குவழி யியங்கும் மூச்சு, உலகில் இரவியும் திங்களும் எரியும் இன்றேல் நின்றொழியும். அம் மூன்றனையும் இயக்கியும் உருவெனவும் கண்ணெனவும் கொண்டும் உயிர்கட்கருளும் இறைவனை முரல்வாய் என்பார் `முக்கணனை` என்றார். இறைவனைக் குறித்த தாகலின், வாக்கால் உரைத்தபடி விளங்கிக் கொள்ளும் நிலைமை மூக்கால் முரன்றாலும் அவனுக்கு இனிது விளங்குவது இயல்பும் எளிமையும் ஆம் என்பார், `வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்` என்றார்.
சொல்லும் பொருளும் ஆனான் அம்மை யப்பனே எனலும் அதனால் விளக்கலாயிற்று. `சிவ சிவ` என்னும் வாக்கே அவன் ஆன்மாக்களிடத்திலிருந்து நோக்கியிருக்கின்றான். அவன் அத்திருவைந்தெழுத்து நினைவோடு, வாயால் உரையாது மூக்கால் முரல்கினும், அவனது நோக்கம் அதுவாதலின், மங்கை மணாளனாம் தனது மங்கலகுண நிறைவாகிய சிவாநந்தாநுபவத்தை வழங்குவதில் ஒருபோதும் தவறான் என்பார், `மங்கைமணாளனை முரலாய்` என்றார். மணாளன் நோக்குவது வாக்கின் பொருளையுடைய மூக்கின் முரற்சி. மங்கை நோக்குவது அம்முரற்சியாயமைந்த வாக்கு என்பாராய் `மூக்குவாய் செவிகண்ணுடலாகி.....காக்கும் நாயகன் கச்சியேகம்பனே` என்புழி மூக்கினை முற்கூறினார். அதன் கருத்துணர்க.
வாக்கே நோக்கிய மங்கைமணாளன், உயிர்ப்பாய்ப் புறம் போந்தும் அகம்புக்கும் உயிரினுள்ளே நிற்பான். அவ்வீசனுக்கு அவ்வுயிர்ப்பியங்கும் வாசலாதல் தோன்ற `மூக்கே` என்றார். `மூக்கினால் முரன்றோதி அக்குண்டிகை தூக்கினார் குலம்` (தி.5 ப.58 பா.2). `ஞமணஞாஞண ஞாண ஞோணமென் றோதி` (தி.7 ப.33 பா.9) வீண்காலம் போக்குமவர் போலாது முக்கணனை முரல்வாய் என்றார். நோக்கம் பிறிதொன்றன்கண் இன்றி வாக்கின்கண்ணதேயாதலின், மூக்கின் முரற்சியும் வாக்கின் வரும் விளக்கத்தை விளைவிக்கும் என்பார் மூக்கே நீ முரலாய் என்றார் எனலுமாம்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய். 

பொழிப்புரை :

வாயே! மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக.

குறிப்புரை :

`வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த` அத் தலைவனையே (தி.5 ப.90 பா.7). `வாழ்த்த வாயினை வைத்தார்` (தி.4 ப.30 பா.3) என்றுணர்ந்து வாழ்த்திப் பயின்ற தமது பெருமை தோன்ற `வாயே` என விளித்தார். இருந்தமிழே படித்தும் இறைவனுக்கு ஆளாகும் பேற்றினை உறாத ஆயிரம் சமணர் வாய் அவர்களை அழித்தற்குப் பயன்பட்டன. (தி.5 ப.58 பா.9) அவ்வெவ்வாய் போல்வது அன்று தம் செவ்வாய் என்பது தோன்ற விளித்ததுமாம். வாழ்த்துவதன் பயன் தமக்கு வாழ்ச்சி யெய்துதல். வாழ்த்தப் பெறுவோனால் வாழ்த்துவோற்கு வாழ்ச்சியுறாதேல் அவ் வாழ்த்துப் பயனிலாததாம். `வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம்நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டிச் சூழ்த்து மதுகரமுரலும் தாரோயை நாயடியேன் பாழ்த்த பிறப்பறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே` என்பதால், மணிவாசகரும், சிற்றின்ப வாழ்வுறுதலும் பிறப்பறுத்துப் பேரின்ப வாழ்வுறுதலும் ஆகிய இரண்டும் வாழ்த்துப் பயன் என்று அருளியவாறு உணர்க. அப்பயன்களுள் யாது வேண்டினும் அது கொடுக்கவல்லான் சிவபிரானே யாவன். பிறரெல்லாரும் அழிவுறாத மெய்யினரல்லர். தான் ஒருவனே அழியாத மெய்ப்பொருள் என்று தன்னை அறியாத உயிரெல்லாம் உணர்ந்து தன்னையே வாழ்த்தி வாழ, ( சிந்தாமணி 2787. `வேள்வி` உரை.) மதயானையுரி போர்த்தும் மாளாதும் (நஞ்சுண்டும் சாவாதும்) நிலையாக விளங்குகின்றவன் என்பார் `மதயானையுரி போர்த்து` என்றார். வாழ்த்தி வாழாதவர் உடலுக்கு இடமான காட்டிலே வாழும் பேய் அஞ்ச ஆடும் பிரானை வாழ்த்துவதே அக்காடு போகாதவாறு வீடுபேறு நல்கும் என்பார். `பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்` என்றார். வாழ்:- தன்வினை. வாழ்த்து:- பிறவினை. வாழ்த்து வோர்க்கே வாழ்வுண்டு என்னும் உண்மையை உணர்ந்த மக்கள், தம்முள் இருக்கும் இறைவனை வாழ்த்தும் வழக்கம் உடைமை அநாதியாக நிலவுகின்றது. நாத்திகரும் இதை அறியாது செய்து வருகின்றனர். அமண்கையர் எனைக் கல்லினோடு பூட்டி நீர்புக ஒல்லை நூக்க, நெல்லு நீள்வயல் நீலக்குடியரன் நல்ல நாமம் என் வாக்கினால் நவிற்றி உய்ந்தேன் நன்றே. `நாள்தொறும் நல்குவான் நலன்` என்புழிப் போல் இங்குப் பிரிக்க. நன்றே ஆகிய அனுபவம் காட்டித் தெளிவிப்பாராய், `வாயே வாழ்த்து` என்று விளித்து ஏவியருளினார். `நாக்கொண்டு பரவும் அடியார்வினைபோக்கவல்ல புரிசடைப்புண்ணியன்` `நாக்கைக்கொண்டு அரன்நாமம் நவில்கிலார் காக்கைக்கே இரையாகிக் கழிவர்` என்பார் வாயே வாழ்த்து என்றார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நெஞ்சே நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய். 

பொழிப்புரை :

நெஞ்சே! மேல் நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள் அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக.

குறிப்புரை :

பிஞ்ஞகன் பேர் மறப்பன்கொலோ என்று கிடந்து மறுகிடும் உள்ளம் என்பார் `நெஞ்சே?` என்று விளித்து `நீ நினையாய்` என வினாக்குறிப்புணரக் கூறினும், `விச்சையும் வேட்கையும் நிச்சல் நீறணிவாரை நினைப்பதே` (தி.5 ப.92 பா.8) `வந்தவரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார்` (தி.6 ப.16 பா.9) அவரை நினையாது ஒருபோதும் இருந்தறியேன்` `கவலைக்கடல் வெள்ளத் தேனுக்கு விளைந்த தெள்ளத்தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத் தேறல்` (தி.5 ப.91 பா.9) `உள்ளமே தகழி` (தி.4 ப.75 பா.4) `நெஞ்சத்துள் விளக்கு` (தி.4 ப.29 பா.2) `சிந்தையுட் சிவம் ` (தி.4 ப.29 பா.4) (தி.5 ப.48 பா.5) `நினைப்பவர் மனம் கேயிலாக் கொண்டவர்` (தி.5 ப.2 பா.1) `என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த சிறையான்` (தி.6 ப.66 பா.7) கை தொழுவார் மனம் ஆலயம் (தி.4 ப.17 பா.8) நெஞ்சினால் நினைந்தேன் நினைவெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின (தி.5 ப.44 பா.4) `துன்பமெலாம் அறநீங்கிச் சுபத்தராய்....ஏத்திநின்று இன்பராய் நினைந்து என்றும் இடையறா அன்பர் ஆம் அவர்க்கு அன்பர்` என்ற அநுபவஞான சொரூபராதலின், தம் நெஞ்சம் செய்த மாதவத்தைத் தாமே வியந்து `நெஞ்சமே எந்த மாதவம் செய்தனை` (தி.5 ப.7 பா.2) `என்னை மாதவம் செய்தனை` (தி.5 ப.77 பா.2) எனப் போற்றும் பெருமை தோன்றவும் `நெஞசே?` என்று விளித்தார். `நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதி` யாகிய, உடையான் ஏவல் வழி ஒழுகுவதே நின்கடன். நினைப்பார் தம் மனத்துக்கோர் வித்து (தி.6 ப.95 பா.7) முளைத்தோற்றமான நீ பின்னை மறத்தல் பிழை. உன்னைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே கழித்தானாயினும், (தி.4 ப.14 பா.9) நினைவாயேல் அவ்வஞ்சக் கள்வன் நின்னுள் மன்னுவான் (தி.6 ப.62 பா.4) என்பார், `நீ நினையாய்` என்றார். பற்றுள்ளவரை நினைந்தாற் பற்றறாது; பிறவிப் பெருங்கடலில் விழுந்து கரையேறாக் கழிபேரிடர் கழியாது; பற்றற்றான் தாளிணையைப் பற்றறப் பற்றுவதே நினைப்பின் முடிந்த பயன் என்பார் `நின்மலனை` என்றார்.
அவன் நின்மலனாதலைப் புறக்குறியாய் விளக்குவது ஈதென்பார் `சடை` என்றும், அதனை உடையார்க்கும் அவனை அடைவார்க்கும் என்றும் உள்ளது உயர்ச்சியே என்பார் `நிமிர்சடை` என்றும், அது நிறத்தாலும் விளங்கும் என்பார் `புன்சடை` என்றும் அருளினார். `பொன்சடை` என்பது `புன்சடை` என மருவிற்று. ஈண்டுப் புன்மை கொள்வார் புல்லரே. நினைந்து, நினைப்பு நிறைவெய்தப்பெற்ற ஆட்சி (அநுபவம்) உடைய சாட்சி வேண்டு மேல், பனிமலையில் தனி மகளாய்த் தவம் புரிந்து, தவனை உமாதவனாக்கிய மங்கையைக் கண்டுணர்க என்பார் `மலைமங்கை மணாளனை` என்றார்.
வேறு எப்பொருளை நினைப்பினும் வெப்பமே மேவும்; தட்பம் சாராது; அம்மையப்பனையே நினைத்தாற்றான் பிறவிக் கோடையையும் தீர்க்கும்; பேரின்பக் குளிர்ச்சியையு முண்டாக்கும் என்பார் `மஞ்சாடும் மலைமங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்` என்றார். மலைமங்கை தன் நினைப்பால் தனது தாட்சாயணி என்ற பெயர் நீங்கினாற்போல், நின் நினைப்பால் நினது சீவன் என்ற பெயர் நீங்குவாய்; அவள் அவனை அடைந்தவாறு அடைந்தும் இடையறா தின்புறுவாய் என்பார் `(மலைமங்கை மணாளனை) நீ நினையாய்` என்றருளினார். நினைக்க முயலும் முன்னரே பத்திவெள்ளம் பரந்தது (தி.5 ப.44 பா.6) என்பார் `நினையாய்` என விரைவித்தார். `சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி உயக்கொளும் காண்` (தி.5 ப.71 பா.9) என்பார், விரைவுக் குறிப்புணர, `நெஞ்சே நீ நினையாய்` என்று அருளினார். செல்வப்பாவைக்கு வேந்தனார் வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார் ( என்னைப் போலும்) நைஞ்ச நெஞ்சர்க்கு அருளுவார் (தி.5 ப.68 பா.7) `நாறுசாந்தணி நன்முலை மென்மொழி மாறிலா மலைமங்கையொர் பாகமாகக் கூறனாரை நினைந்து ஊறுவார்க்கு ஊனம் ஒன்றும் இல்லை` (தி.5 ப.70 பா.8) பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நாணி நக்கு நிற்பானாயினும், நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்குநிற்பன் பொன்னார் சடைப் புண்ணியன் என்பார், `மலைமங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்` என்றார். நின்னை நினைய வொட்டான்; நீ நினைத்தால் மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவிப்பான்; அவனை மறந்து அவனுக்கு இனியனாய் உள்ள உனக்கு நிகர் ஒருவரும் இலர் என்பார் `நீ` என்றார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர். 

பொழிப்புரை :

கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக.

குறிப்புரை :

`தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரைக் கீழ்க்கணக்கில் எழுதும் (தி.5 ப.21 பா.8) மெய்மையை அறிந்து, சலம் பூவொடு தூபம் மறந்தறியாராய் வழிபட்டு வந்து, நகமெலாம்தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி, முகமெலாம் கண்ணீர்வார முன்பணிந்து ஏத்தும் தொண்டர் அகமலாற் கோயில் இல்லை (தி.4 ப.40 பா.8) அம்போது எனக்கொள்ளும் (தி.4 ப.12 பா.10) எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் என்று உணர்ந்து தெளிந்த நம் கைகளுக்குத் தாம் கூப்புவித்தல் வேண்டாதே அவையே கூம்பும் என்பார் அப் பயிற்சி மிகுதி தோன்றக், `கைகாள்` என்றார். குவிதலும் தொழுகையும் தம் கைகளுக்குச் சிவபிரான்கண்ணவேயன்றிப் பிறாண்டில்லை என்பார் `கூப்பித் தொழீர்` என்றார். புள்போல `யோசனைபோய்ப் பூக்கொணர்ந்து ஒரு நாளும் ஒழியாமே பூசனை செய்தினிதிருந்த` பேரன்பின் வழிபாட்டை மேற்கொண்டு பயின்ற நுமக்குப் பிறிதொரு செயலும் வேண்டா. எங்கேனும் போய், ஏற்றமலர் ஏற்றுவந்துதூவுக என்பார் `கடிமலர் தூவி நின்று` என்றார். சிவாகம விதியிற் கடிந்த மலர்களைக் கடிந்து விதித்த மணமலர்களை எடுத்துவருதல் வேண்டும் என்பார், `கடிமா மலர்` என்றார். மலர் தூவிப் பரவினும் மனம் புறம்போய்ப் பாசப் படுகுழியில் வீழ்ந்து பாழாகாதவாறு, அதன் இயக்கத்திற்கு வாயிலான ஐம்பொறிகளையும் அவற்றின் வழிவரும் புலன்களையும் அடக்கி வழிபடல் வேண்டும்; அவ்வடக்கத்தை எய்தற்பொருட்டு, அவை அடங்காரையும் அடக்க வல்லரல்லாரையும் வணங்கிற் பயனில்லை; அவற்றை அடக்கும் ஆற்றலை இயல்பாக உடைய சிவபிரானையே தொழு என்பார், `பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைத் தொழீர்` என்றார். ஐம்பொறிகளையும் அடக்காதவனாதலின், பாம்பணை மேல் தூங்கும வனானான் மாலோன்; அவற்றை அடக்கும் ஆற்றலை, உடலிற் பாம்பினை அணிந்தும் தலைமேல் ஐந்தலைப் பாம்பு ஏந்தியும் தோற்றினான் நீற்றினை நிறையப்பூசிய நின்மல சிவன்; நீர் கைகூப்பித் தொழலால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை; அவன் `கரைந்து கைதொழுவாரையும் காதலன் வரைந்து வைதெழுவாரையும் வாடலன்` நும்குவித்தலும் தொழலும் நுமக்கே பயன் விளைவிப்பன என்பார் `கைகாள் கூப்பித்தொழீர்` என்று மீண்டும் தூண்டினார். ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை மனத்தே வைத்து `நாண்மலர் தூவி யழுதிரேல் வஞ்சம் தீர்த்திடும்` (தி.5 ப.82 பா.6) `புரமூன்றெய்த செருவனைத் தொழத் தீவினை தீரும்` `ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை` (தி.5:- ப.82 பா.5, ப.83 பா.9). `பூக்கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் காக்கைக்கே இரையாகிக் கழிவர்` என்பார் `தூவிநின்று கூப்பித் தொழீர்` என்றார். `கழலடியே கைதொழுது காணினல்லால் மற்றோர் களைகண் இல்லீர்` என்பார் `தொழீர்` என்றார்.

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென். 

பொழிப்புரை :

எம் பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்?

குறிப்புரை :

தில்லையம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ நம்தமக்கு வாய்த்த உடம்பின் பயன்? `கொடுமாநுடமேனும் இறைவன் கழலேத்தியிருக்கில் ஒரு குறைவும் இல்லோம்` (தி.5 ப.39 பா. 5) குனித்தபுருவம் முதலியவற்றைக் காணப்பெறாத மனித்தவுடல் அநித்தவுடலே, உடையானிடத்தில் நிலாவாத நெஞ்சத்தை யுடைய புலாலுடம்பு நிற்பது ஒத்து நிலையிலாதது. இந் நிலையிலா ஆக்கை நிற்கும்போதே இதனால் ஆகும் பயனை விரைந்து பெற்றுக் கொள்வதே அறிவுடைமைக்கு உகந்தது. அங்ஙனம் பெறாதார்க்கு ஒரு பயனும் இல்லை என்பார், `ஆக்கையால் பயன் என்` என்றார். ஊனாலும் உயிராலும் உள்ள பயன்கொளநினைந்து வானாறு பொதி சடையார் மலரடி வணங்குந் தமக்குத் துணையாய் நின்றமை தோன்ற `ஆக்கை` என்றருளினார். ஆக்கை பெற்றது மீண்டும் அதனை ஆக்கை ஒழித்தற்கே. அது நிகழ, உயிரைச் சாரும் கட்டினை ஒழித்து வீடுநல்குவது முழுமுதற் பொருளே என்பார் `அரன்` என்றார். கோயில் (கோ+இல்). வருமொழி முதலிகரவுயிர் யகரமெய்யை அடுத்தது. உடம்படுமெய்க்குப் பண்டு வரையறை இன்மை அறிக. இ+அன்=இவன். ஐ+அர்=ஐவர். நீவிர், ஆயா,(ஆயன் விளி ஆயா) மியாயிக. `ஆயிரண்டும்` என்புழி ஆயஇரண்டும் என்றலும் உண்டு. `ஆயிருமுதலின்` என்பதற்கு `இளம்பூரணர் ஆகிய இரண்டு காரணத்தால்` என்று எழுதியதுணர்க. (அதனை உடம்படுமெய் எனல் நியதம் அன்று) அரனே கோ ஏனையோர் அடிமையே அன்றிக் கோவாகார் என்பார் `அரன் கோயில்` என்றிணைத்தார். ஆக்கை அற நோக்குற்றார்க்கு ஆக்கை முதலிய ஐந்தொழிலுட்படாதும் ஐம் மலத்துள் அழுந்தாதும் அகலவேண்டுதலின், ஐந்து முதலிய சுற்றுஉறச் சிவாகம விதிப்படி அமைந்த திருக்கோயில்களை வலம் புரிந்து சிவதரிசனம் செய்தல் வேண்டுமென்பார். `கோயில் வலம் வந்து` என்றார். `திருக்கோயிலில்லாத திருவிலூர்` `பாங்கினொடு பலதளிகள் இல்லாவூர்` களில் எடுத்த உடலாய், `ஒருகாலும் திருக்கோயில் சூழா`தேல், அவ்யாக்கை பெயர்த்தும் போக்குவரவு புரியும் உயிர்க்குச் சுமை என்பார் `வலம் வந்து போற்றி என்னாத இவ்வாக்கை` என்றார். `பூக் கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்` `உண்பதன்முன் அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணார்` `நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்` நெஞ்சம் தன்னுள் (- அடைந்தார்க்கு இன்பங்கள் தரும் தன்னுள்) நிலாவாததும் நிற்பது ஒத்து நிலையிலாததுமாகிய புலாலுடம்பிலும் புகுந்து நின்ற அக்கற்பகத்தைத் தலையாரக் கையாரக் கும்பிட்டு வாயார நாவாரப்பாடிச் சித்தமாரநினைந்து போற்றி அலறாநிற்றலைச் செய்யாதார் யாவர்க்கும், அவ்வுடம்பால் ஒரு பயனும் இல்லை என்பார் `பூக் கையாலட்டிப் போற்றியென்னாத இவ்வாக்கையாற் பயன் என்` என்றார். வழிபாடில்லையேற் பயனிலாத யாக்கை யென்பது கண்கூடாம் என்பார். `இவ்வாக்கை` எனச் சுட்டிக் கூறினார். இரை தேடி அலமந்து கழியச் செய்து காக்கைக்கே இரையாகும் ஆக்கை என்பார் `பயன் என்` என்றார்.ஆக்கைக்கே இரைதேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவதில் எவ்வாற்றானும் அதனுள் வாழும் உயிர்க்குப் பயனின்று என்பார் `ஆக்கையாற் பயன் என்` என வினவினார். ஆயிரம் ஆரணம் ஓதினும் பொறியிலார்க்குக் கோயில் முதலியவற்றின் உண்மையை அறிய மனம் புகாது; பொறியுடையார்க்குப் புகுமாயினும். பூக் கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிக் கருத்திற் கழலடி நாட்டி,நாண்மலர்துவி வலஞ்செயில் வாட்டம் தீர்த்திடும் என்பார்` அரன் கோயில் வலம் வந்து பூக் கையால் அட்டிப் போற்றி யென்னாத இவ்வாக்கையாற் பயன் என்` என்றார். `கடலின் நஞ்சமுண்டவர் கைவிட்டால் உடலினார் கிடந்து ஊர்முனி பிண்டம்` ஆவார். அப்பண்டம் கடலை சேர்வது சேய்த்தன்று. மிக நணித்து. போகும் எனச் சொல்லுமுன் செல்லும் சொற்பிரமாணமே. வாயும் நெஞ்சும் சென்னியும் முறையே வாழ்த்த நினைக்கத் தாழ்த்தத் தந்த அத்தலைவனை நன்றி மறவாது, சூழ்ந்த மாமலர் தூவித் துதியாதே நெடுங்காலம் வீழ்த்தல் தீவீனைப் பயனாகும்;ஆதலின், `இவ்வாழ்க்கையாற் பயன் என்` என்று வெறுத்தமை தோற்றினார். இங்குவெவ்வேறு பயன் கருதி முன் உரைத்த பகுதி பின்னுங் கொள்ளப்பட்டமை கூறியது கூறல் அன்று.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

கால்க ளாற்பயனென் - கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென்.

பொழிப்புரை :

நீலகண்டனான எம்பெருமான் தங்கியிருக்கும் கோயிலாகிய, அழகான கோபுரத்தை உடைய கோகரணம் என்ற தலத்தை வலம் வாராத கால்களால் யாது பயன்?

குறிப்புரை :

பல கால்களாகி விரிந்து செல்லும் காவிரி முதலியனவும் திருக்கோயில்களைச் சூழ்ந்து செல்லும் சிவநல்வினையை எய்து கின்றன. இவ்வுடம்பின் கால்கள், திருக்கோயில் சூழாக் கால்களாய் அவ்வாய்க்கால்களிலும் இழிந்தன என்பார்` கால்களாற் பயன் என்` என்றார். ஒரு காலும் தீவண்ணர் திருக்கோயில் சூழாவாகில் அளியற்றவராய்ப் பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கும்கால் என்பார் `கறைக்கண்டன் உறைகோயில் கோலக் கோகரணம் சூழாக் கால்களாற் பயன் என்` என்று வினவினார். திருக்கோயில் வலம் வரும் மெய்யன்பரை நஞ்சு தீண்டாப் பேறு தோன்றக், `கறைக் கண்டன் கோயில்` என்றார். `ஓட்டை மாடத்தின் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம், கழலடி நாட்டி நாண்மலர்தூவி வலஞ்செயில் வாட்டம் தீர்த்திடும்` என்பார் அங்ஙனம் கூறினார் எனினும் பொருந்தும். ஆக்கையின் பிரிவாய தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை எல்லாம் முற்கூறிவிட்டமையால் எஞ்சிய கால்களை ஈண்டுக் கூறினார். பிற்கூறற்பாலதாய ஆக்கையை முற்கூறியதென்னை எனின், கால்கள் ஆக்கையின் ஒரு பிரிவேயாயினும், அவ்வுறுப்பால் ஏனைய உறுப்புக்கள் (ஆக்கை) தாங்கப்படுதலின், முற்கூறினார். அக் கால்களிலிருந்தும் கூற்றால் உயிர் நீங்கும் போது உய்ந்து போக்கில்லை, என்பார் `கால்களாற் பயன் என்` என்று அடுத்துள்ளதன் தொடர்பு தோற்றினார். கோபுரம் - தலைவன் ஊர். கோலம் - அழகு. கோகரணம் வடநாட்டுத் தலம். கோ - பசு. கர்ணம் - காது. மாலைக் கடன் முடிக்க, தரையில் வைத்தலை வெறுத்து, என்செய்வது என்று ஆழ்ந்த இராவணனது கையிலிருந்த சிவலிங்கத்தைச் சிறான்போல் எதிர்வந்த பிள்ளையார் ஏற்று, குறித்தவாறு அவன் விரைந்து மீளாமையால், நிலத்தில் வைத்திட்டார். வந்து எடுக்க முயன்றான் இராவணன். அவன் வலியெல்லாம் அங்குப் பலியாயின. மகாபலி லிங்கம் கீழழுந்திற்று. மேலே ஆவின் காதளவே தெரிந்தது. அதனால், `கோகரணம்` என்று பெயர் ஆயிற்று என்பர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

உற்றா ராருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றா ராருளரோ.

பொழிப்புரை :

கூற்றுவன் நம் உயிரைக் கைப்பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?

குறிப்புரை :

உறுதல் - நன்றும் தீதும் எய்துதல். அதன் முதனிலை நீண்டு `ஊறு` என்றாகி, தீயதனைக் குறித்தல் வழக்கு. `இடையூறு` எனல் வெளிப்படை. உற்றார் என்பதோ (தீயோரை உணர்த்தாது) நல்லோரையே உணர்த்தும். உயிர்க்கு நற்றுணை ஆவாரே உற்றார். உயிர்த்துணையின் பயன் உடம்பின் நீங்கும் பொழுது உறாதேல், அவ்வுற்றாரால் உயிர்க்கு நன்று ஒன்றும் இன்று. அத்தகையோர் யாரையும் இல்லாதவராய், எல்லாத் தொடர்பும் அற்று, தாமும் பிறிதொன்றும் பற்றிடல் இன்றி, தன்னையே துணையாகக் கொண்டவர்க்கு உற்ற நற்றுணையாவான் சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி யெம்மான் அன்றி வேறு இல்லை என்பார் `உற்றார் ஆர் உளரோ? என்று வினாவினார். உடல், பொருள், இடம், ஏவல் முதலியவற்றை உடையதாயிருக்கும்பொழுதும் துணைவேண்டும் உயிர்க்கு, அவற்றைவிட்டு நீங்கும் வண்ணம், உடலையும் தன்னையும் கூறுபடுத்தித் தன்னைக் கொண்டேகும் காலனை அக்காலத்தில் தடுத்துக் காக்கும் துணை இன்றியமையாதது என்பார் `உயிர்கொண்டு போம்பொழுது உற்றார்ஆர்` என்றார். `வைத்த மாடும் மடந்தை நல்லார்களும் ஒத்தொவ்வாத உற்றார்களும் என் செய்வார்` உடலின் நீங்கினாலும் தன்னுள்ளே நீங்காதிருக்கும் மெய்த்துணை ஐந்தொழில் புரிந்து ஆட்டி ஆடும் முழுமுதல் என்பார் `கூத்தன் அல்லால் உற்றார் ஆர் உளரோ?` என்றார். எங்கும் நிறைந்த பொருள் உடற்குள் இருக்கும் உயிர்க்குள்ளும் அகலாதுஇருந்து, அதனை அவ்வப்பொழுது துன்பத்தினின்றும் தடுத்தாட்கொண்டு வருகின்றது. முடிவான துன்பமாகிய இரப்பினின்றும் காத்து அருள்வது. நெட்டாலத்து நிழற்கீழிருந்து அறம் புகன்றது பேருணர்வினார்க்கு. சிற்றுணர் வினார்க்குக் குற்றாலத்துறைகின்றது என்பார் `குற்றாலத்துறை கூத்தன்` என்றார். கூத்தனே என்றுஅறுதியிட்டுணர்த்துவார், `கூத்தன் அல்லால் ஆர் உளரோ` என்றார். பதிபசுபாசம் என்னும் முப்பொருளுள் பதியின் துணை பசுக்கட்கே என்பார் `நமக்கு` என்றார். ஏனைய சமயத்தார், சிவன் முதலே அன்றி முதல் இல்லை` என்பதுணராமையின், அம்முதலே முதல் எனக்கொள்ளும் சைவர்க்கு அவன் சரணங்களே, மரணம் பிறப்பென்றிவையிரண்டின் மயக்கறுக்க வல்லன என்பது தெள்ளிது என்பார் `நமக்கு உற்றார் ஆர் உளரோ` என்றார் எனலும் பொருந்தும். `கடலினஞ்சமுதுண்டவர் கைவிட்டால் உடலினார் கிடந்து ஊர் முனிபண்டமே` ஆதலால் `உயிர் கொண்டுபோம்பொழுது உற்றார் ஆர் உளரோ` என்றாரேனும் `எண்ணிநாளும் எரியயிற் கூற்றுவன் துண்ணென் தோன்றில் துரக்கும் வழிகண்டேன், திண்ணந் சேறைச் திருச்செந்நெறியுறை அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே` மண்ணின்மேல் பிறக்குமாறும், இறக்குமாறும் காட்டினும், தன்னை மறக்குமாறிலாது உறுதுணையாதல் அறிந்து போற்றும் உயிர்கட்கு அவனே துறக்குமாறும் சொல்லப்படாத உற்றான் ஆவான். பிறர் எவரும் உற்றார் அல்லர் என்பார் `ஆர்` என்று ஒரு பொருளெனக் கருதாமை தோன்ற வினாவினார். `என்றும் வாழ்வுகந்தே இறுமாக்கும் நீர் பொன்றும்போது நுமக்கு அறிவொண்ணுமே` என்பார் `உயிர் கொண்டுபோம்பொழுது` என்றார். அப்பொழுது `சங்கரா` என வரல் அரிது. இப்பொழுதே சொல்லிச் சொல்லிப் பழகு. சொல்லத்தக்க வலிமைதரவேண்டும். (யான்) `சாம் அன்று, நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சழுத்தும் சாமன்று உரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே` (தி.4 ப.103 பா.3) `உன்னை நினைந்தே கழியும் என் ஆவி` (தி.4 ப.112 பா.3) என்னைத் தென்திசைக்கே உந்திடும்போது மறக்கினும் என்னைக் குறிக்கொள்மின்` (தி.4 ப.95 பா.1-10) பார்க்க. `நின்றன் நாமம் உரையா உயிர்போகப் பெறுவேனாகில் உறு நோய்........உற்றால் என்னே` (தி.6 ப.47 பா.3) `உறவனாய் நிறைந் துள்ளம் குளிர்ப்பவன் இறைவனாகி நின்று எண்ணில் நிறைந்தான்.
`அவன்` அன்றி உற்றார் இலர் என்பார் `உளரோ` எனத் தேற்றப் பொருட்டாய ஓகாரம் கொடுத்துரைத்தாரும் ஆவர். `உறவாவார் உருத்திர பல்கணத் தோர்கள்` அப்பன், அம்மை, ஐயன், மாமன், மாமி முதலியவராக` `உற்றவன் காண்` `உறவெல்லாம் ஆவான் தான்காண்` `உற்றாராய் உறவாகி உயிர்க்கெலாம் பெற்றாராய்ப் பிரானார்` `உற்றார் இலாதார்க்கு உறுதுணையாவன` (தி.4 ப.92 பா.13) `உற்றானை உடல் தனக்கோர் உயிரானானை` `உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே` `குற்றாலத் தெங்கூத்தனை` உறவு கோல்நட்டு...... முறுக வாங்கிக் கடைய முன்நிற்கும்.

பண் :சாதாரி

பாடல் எண் : 11

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு
இறுமாந் திருப்பன்கொலோ.

பொழிப்புரை :

எல்லோரையும் அடக்கி ஆளும் எம்பெருமானுடைய பலவாகிய சிவகணத்தவருள் ஒருவனாகிச் சிறிய மானை ஏந்திய அப்பெருமானுடைய சிவந்த திருவடிகளின் கீழ்ச் சென்று அங்கு இன்பச் செருக்கோடு இருப்பேனோ?

குறிப்புரை :

இறுதல் - ஒடிதல். உயிர் உடலின் நீங்குதலையும் இறுதல் என்பர். நீங்கும்பொழுது உயிர் பேரொலி செய்தலும் உண்டு. போர் முதலியவற்றில் இறப்போர் செய்யும் ஆர்ப்பு `இறும்ஆர்ப்பு` எனப்படும். அதன் மரூஉவே `இறுமாப்பு`. அது கருத்திற்குரியதாயிற்று. இங்கு இன்பச் செருக்குணர்த்தி நின்றது. சிற்றின்பத்தினும் செருக்கு மிகுமாயின், பேரின்பத்திற் செருக்குறல் பொருந்துமன்றோ? பொன்றும் வாழ்வுகந்தே என்றும் இறுமாக்கும் (தி.5 ப.72 பா.6) உயிர், என்றும் பொன்றாப் பேரின்ப வாழ்வுற்றால் இறுமாப்புறாதிரா தென்பார். `இறுமாந்திருப்பன் கொலோ` என்றார். `உறவாவார் உருத்திர பல்கணத்தினோர்கள்` என்பார். `ஈசன் பல்கணத்து எண்ணப் பட்டு இருப்பன்` என்றார். `என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம். எமக்கு எதிரா ஆரும் இல்லை. சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம். முப்பத்து மூவர் தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம். ஒன்றினாற் குறையுடையோம் அல்லோம். எண்குணத்துளோம். ஆதலின் ஏமாப்போம்`. `நாம் ஆர்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்` என்பார். `சிறுமா னேந்திதன் சேவடிக்கீழ்ச் சென்று அங்கு இறுமாந் திருப்பன் கொலோ` என்றார். `கொல்` இரண்டும் அசைநிலை. `அங்கு` சில பதிப்பில் இல்லை.

பண் :சாதாரி

பாடல் எண் : 12

தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி அவன் என் நெஞ்சத்துள்ளேயே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.

குறிப்புரை :

அண்ணாமலையான் திருந்தடி ஏத்தத் தேடிச் சென்று காணாதார்போல்வேன் அல்லேன் என்பார் `தேடிக் கண்டுகொண்டேன்` என்றார். தேடுவார் பிரமன் திருமால். அவரும் அவன் ஆடு பாதம் அறிகிலார்; யான் அறிந்தேன் என்பார் `கண்டு கொண்டேன்` என்றார். மாலும் அயனும் தேடியும் தேட ஒன்றாத தேவன், யான்தேட ஒன்றினான் என்பார். `திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத்தேவன்` என்றார். அவர் தத்தம் உள்ளே தேடாமல் வெளியே தேடிக் காணாராயினர், யான் `என் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன்` என்னும்படி அத் தேவாதிதேவன் `என் உள்ளத்துள்ளே விள்ளாதிருந்தான்` என்பார் `தேவனை என் உள்ளே தேடிக் கண்டுகொண்டேன்` என்றார். `பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத் தேடிக் கண்டுகொண்டேன்` (தி.4 ப.20 பா.10) என்று தேடிய இடமும் கண்டுகொண்ட இடமும் தெளிக. கண்டு விட்டார் பலர். விடாது கொண்டார் சிலர். அச்சிலருள் யானும் அடங்குவேன் என்பார் `கொண்டேன்` என்றார். `வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம் வித்தும் அதன் அங்குரமும் மெய்யுணரில் வித்ததனிற் காணாமையால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள் பேணாமையால் அற்றார் பேறு.` (திருக்களிற்றுப் படியார். 57) `பிறையுடை வார்சடையானைப் பேணவல்லார் பெரியாரே` (தி.2 ப.63 பா.4) தேடிக் காணாமைக்கு ஏது விளங்க `மால்` என்றும் ஒருமுகமன்றிப் பல முகத்தால் பலதலை யுணர்வாய் ஒருதலை யுணர்புறாதொழிந்தது என்பதும் தோன்ற `நான்முகன்` என்றும் இடத்திற்கேற்ற பெயர் குறித்ததறிக. `மன்னுவது என் நெஞ்சில் மால் அயன்காண்கிலார்` (தி.8 திருவா. 343) `ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித் தேட்டற்று நின்ற இடம் சிவமாம் நாட்டற்று நாடும் பொருள் அனைத்தும் நானாவிதமாகத் தேடும் இடம் அன்று சிவம்` (திருக்களிறு 29) பேசாதே `எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள்பால் உள்நின்றும் போகான் உளன். (தி.8 திருவாசகம் - 28.)` `தேடிக் காணொணாத் தேவன்` என்று இருந்ததோ?

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

முளைக்கதி ரிளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மறிக் கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே.

பொழிப்புரை :

மண்ணைத் தோண்டிய அளவிலே சிவந்த பொன் வெளிப்படும் கெடில நதிக்கரையில் உகந்தருளியிருக்கும் பெருமான் கிரணங்களை உடைய பிறை முழுகுமாறு கங்கை வெள்ளத்தைத் தேக்கிய நிமிர்ந்த சடையினராய் , இனிய வீணையை ஒலிப்பவராய் , மான்குட்டி மகிழ்ந்திருக்கும் கையினை உடையவராய் , அடியவர் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

கெடிலவாணர் - கெடில ஆற்றங்கரைக்கண் உள்ள திருவதிகை வீரட்டானத்துறைபவர் ; சிவபிரானார் . முளைக்கதிர் இளம்பிறை - முளைபிறை . கதிர்ப்பிறை . இளம்பிறை . பிறத்தலுடையது பிறை . முளைத்தலுடையது முளை . பிறத்தல் மறைந்தமை நோக்கியது . முளைத்தல் வெளிப்பட்டுத் தோன்றும் இடம் நோக்கியது . ` வெள்ளி முளைத்தது ` என்னும் வழக்கு நோக்குக . கதிர் - நிலா . இளமை :- ஒரு கலையுடைமை தோன்றியது . பிறை மூழ்க நீர்வெள்ளம் வளைத்து எழும் சடை . மான்மறி திளைத்ததொருகை . கிளைத்தல் - மண்ணைத் தோண்டுதல் . உழி - இடம் . செய்யபொன் - செம்பொன் . வாணர் சடையினர் , வீணையர் , கையர் என்று இயைக்க . மழலை வீணை :- ` மிக நல்ல வீணை `. ( தி .2. ப .85. பா .1) நல்வீணை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

ஏறின ரேறினை யேழை தன்னொரு
கூறினர் கூறினர் வேத மங்கமும்
ஆறின ராறிடு சடையர் பக்கமும்
கீறின வுடையினர் கெடில வாணரே.

பொழிப்புரை :

கெடிலவாணர் காளைவாகனம் உடையவர் . பார்வதி பாகர் . நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் அடியார்களுக்கு உபதேசித்தவர் . கங்கை தங்கும் சடையினர் . பக்கத்திலும் கிழிந்த உடையைக் கொண்டவர் .

குறிப்புரை :

ஏறினை - விடையை . ஏழை - பேதை ; உமாதேவி . ` ஏழை பங்காளன் ` ` எருதேறி ஏழையுடனே ... என் உளமே புகுந்த அதனால் நல்ல `. கூறினர் - பங்கினார் . வேதமும் அங்கமும் கூறினார் . கூறினர் - வகுத்தார் . ` அங்கமும் ஆறினர் ` என ஆறங்கமும் கூறியதால் ` நால் வேதமும் ` என்றுரைத்துக்கொள்க . ஆறு இடுசடையர் - கங்கையை அடக்கியிட்ட சடையினார் . பக்கமும் கீறின உடையினர் - பக்கத்திலும் கிழிந்த உடை கொண்டவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்
படர்ந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே.

பொழிப்புரை :

முழுவதும் பிறையின் வெள்ளிய ஒளி பரவி , அழகாக நிமிர்ந்த சடையில் பாய்ந்த கங்கைப் புனல் தங்கி அழகுறுத்தும் கெடிலவாணர் , விடக்கறை தங்கி விளங்கும் நீலகண்டர் . வெண்ணீற்றை உடம்பில் அழகாக அணிந்தவர் .

குறிப்புரை :

விடம் - பாற்கடலின் எழுந்த நஞ்சு . ( விஷம் ). திகழ் மிடறு . கெழுதருமிடறு . கெழுதரல் - விளக்கம் செய்தல் . மிடற்றர் - திருநீலகண்டர் . வெள்ளை நீறு உடம்பு அழகு எழுதுவர் :- திருவெண்ணீற்றால் திருமேனியைச் சிவப்பொலிவு எழ எழுதுவர் . வெள்நிலாப் படர்ந்து அழகு எழுதருசடை - வெள்ளை நிலாவொளிப் பிறையணிந்து படர்ந்து , அழகு இத்தன்மையது என்று எழுதுதற்கு அரிய சடை . சடையினழகு எழுத அரியது . வெண்ணிலாச் சடை . படர்ந்து எழுதருசடை . நிலாப்படர்ந்து எனினும் பொருந்தும் . புனல் கங்கை . அழகு எய்திய கெடிலவாணர் . வாழ்நர் என்பதன் மரூஉ ` வாணர் `. வீழ்நர் ( வீணர் ).

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

விழுமணி யயிலெயிற் றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்ய வெய்யதோர்
கெழுமணி யரவினர் கெடில வாணரே.

பொழிப்புரை :

கெடிலவாணர் விரும்பத்தக்க சிறந்த இரத்தினங்களை உடைய மேருமலையை , நாகரத்தினங்களையுடைய பாம்பினை நாணாக இணைத்துக் கூரிய பற்களை உடைய அம்புகளைச் செலுத்துவதற்காக வளைத்தார் . அவர் நீலகண்டர் . நிறத்தால் சிவந்த இரத்தினத்தை உடைய கொடிய நாகபாம்பை அணிகலனாக உடையவர் .

குறிப்புரை :

மணி - நாகரத்நம் . அயில் - கூர்மை . எயிறு - பல் . கொளுவி - கொளுத்தி ; கொள்ளச்செய்து . கோட்டினார் - செழுமணி . மிடற்றினார் - செழித்த நீலமணி போலும் திருக்கழுத்துடையார் . செய்ய அரவு . வெய்யதோர் அரவு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

குழுவினர் தொழுதெழு மடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே.

பொழிப்புரை :

கெடில வாணர் கூட்டமாய்த் தம்பக்கல் வந்து தம்மைத் தொழுது எழும் அடியவர்களுக்கு மேல்வரக்கடவ வினைகளைப் போக்குபவர் . பவளம் போன்ற செந்நிற மேனியை உடையவர் . மழுவையும் மான்குட்டியையும் ஏந்திய கையினர் . பார்வதி பாகராய் இருந்தே யோகத்தில் இருப்பவர் .

குறிப்புரை :

குழுவினர் - கூட்டத்தினர் . அடியர் மேல் தழுவின ( பழ ) வினைகளைக் கழுவித் தூய்மையாக்குவர் . பவளம் போலும் திருமேனியர் . ` பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும் `. மேல்வினை ஆகாமியம் ஆம் . மழுவும் மானும் ஏந்திய மழுவினர் . மான்மறி - மான்கன்று . மங்கையைக் கெழுவின யோகினர் - யோகத்திற்கும் மங்கையைக் கெழுவியதற்கும் நெடுவாசி உண்டேனும் , யோகியாயிருந்து உயிர்க்கு யோகமுத்தியை உதவுதலும் , போகியாயிருந்து போகத்தைப் புரிதலும் வல்ல முழுமுதல்வர் என்றது இது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

அங்கையி லனலெரி யேந்தி யாறெனும்
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையைப் பாகமும் நயப்பர் தென்றிசைக்
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே.

பொழிப்புரை :

தென் திசையின் கங்கை என்று போற்றப்படும் கெடிலநதிக் கரையின் வீரட்டத்தில் உறையும் பெருமானார் உள்ளங்கையில் நெருப்பினை ஏந்தி , கங்கை என்னும் மங்கையைச் சடையில் சேர்த்தியவர் . பார்வதியைத் தம் திருமேனியின் ஒருபாகமாக விரும்புபவர் .

குறிப்புரை :

அங்கை - அழகிய கை . உள்ளங்கை எனல் பொருந்தாது . அனல் எரி - வெம்மை வீசுந் தீ . கையில் அனல் தலையிற் புனல் . கங்கை தலைமேல் மணக்கும் . மால்வரை நங்கை - பெரிய பனிமலையிற்றோன்றிய உமை . பாகம் - இடப்பால் . ` தென்திசைக் கெங்கையது எனப்படும் கெடிலம் ` என்றதால் , கெடில நதியின் சிறப்புணர்க . கங்கை , கெங்கை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததே னுகர்தருங் கெடில வாணரே.

பொழிப்புரை :

தேன் கூடு கிழிந்ததால் வழிந்த தேனோடு கீழே இறங்கும் வண்டுகள் ஒலிக்க ஒழுகும் தேனைப் பெண் குரங்குகள் நுகரும் கெடிலவாணர் இறந்தவர்களின் மண்டை ஓட்டினை உண்கலனாக ஏந்திச் சுடுகாட்டில் தங்கிக் கீழ் நிலையில் உள்ளவர் என்று அறிவிலிகள் பரிகசிக்குமாறு வாழ்பவர் .

குறிப்புரை :

கழிந்தவர் தலை கலன் - மாய்ந்த மலரவர் தலையாகிய பிச்சைப் பாத்திரம் ; பிரமகபாலம் . நூறுகோடி பிரமர்களும் ஆறுகோடி நாராயணர்களும் ஏறுகங்கை மணலினும் எண்ணில்லாத இந்திரர்களும் ஆகிய முத்திறத்தரும் அழிவோர் . யானே ஈறிலாதவன் எனத் தோற்றும் பொருட்டு , பிரம விட்டுணு தலைகளைக் கோத்த மாலைக்கலனும் ஆம் . காடு - சுடுகாடு . உறைந்து - தங்கி . ` இழிந்தவர் ஒருவர் ` என்று இகழ்ந்து பேச வாழ்பவர் . மது வழிந்து இழியும் . அம்மதுவைச் செய்வது பற்றி வண்டுகட்கு ` மதுகரம் ` என்று பெயர் ஆயிற்று . வண்டுகள் மிழற்ற (- பாட ). மந்தி (- பெண் குரங்கு ) கள் . கிழிந்த தேன் :- கூட்டின் கிழிவு தேனுக்காயிற்று . கூடுகிழிந்து ஒழுகுந்தேன் என்றவாறு . நுகர்தல் மந்திவினை . வழிந்திழிதேன் என்றும் இயைக்கலாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.

பொழிப்புரை :

பெருமான் திருமார்பில் கிடந்த பாம்பினைத் தன் அருகில் கண்டு பார்வதி மயங்க , அப்பாம்பு அவளை மயிலோ என்று ஐயப்பட , கங்கை தங்கிய சடைமேல் உள்ள பிறையும் பாம்பினைக் கண்டு மனம் வருந்த , இவற்றை எல்லாம் கண்டு சிரிக்கும் மண்டை ஓட்டினைக் கையில் கொண்டவர் கெடில வாணராவர் .

குறிப்புரை :

சிவபிரான் திருமேனியிலே பாதி கொண்டுள்ள அரிவை ( உமையம்மை ) யார் அத்திருமேனியிற்கிடந்த பாம்பைத் தம் அருகே கண்டு பேதுற்றார் . தலைமேற் கிடந்த பாம்பு அம்மையாரை ஒரு மயில் என்று கருதி ஐயுற்றது . அப்பாம்பைக் கண்டு பிறையும் ஏங்கிற்று . அரிவை பேதுறச் சடைமிசைக் கிடந்த பாம்பு அவளை மயில் என்று ஐயுறச் சடைமிசைக் கிடந்த பிறை . பிறை ஏங்கக் கிடந்து நகு ( கின்ற ) தலை . தலையையுடைய கெடிலவாணர் . இவ்வாறு கொள்ளாக்கால் முடிபு விளங்காது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி யரைய தாகவும்
நெறியுறு குழலுமை பாக மாகவும்
கிறிபட வுழிதர்வர் கெடில வாணரே.

பொழிப்புரை :

கெடில வாணர் நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை புரளுமாறு தலையை அசைத்து , புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் அணிந்து , சுருண்ட கூந்தலை உடைய உமாதேவி தம்திருமேனியில் ஒருபாகமாக இருக்கத் தந்திரமாக மாயக் கூத்தாடுவர் .

குறிப்புரை :

வெறி - மணம் . சடை புரள வீசி உழிதர்வர் என்று இயைக்க . உழிதரல் - ஆடல் . ` உழிதருகால் அத்த ` ( திருவாசகம் ). பொறி - புள்ளி . உரி - தோல் . அரையது - இடுப்பிலுள்ளது . கிறி :- பொய் . ( எள்ளும்நிலை ). ( படிறு - பொய் ). ` கிறிபேசிப்படிறாடித் திரிவீர் ` நெறி - குழலின் நெறிப்பு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

பூண்டதே ரரக்கனைப் பொருவின் மால்வரைத்
தூண்டுதோ ளவைபட வடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.

பொழிப்புரை :

பெருக்கெடுத்தோடும் நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூவின் பக்கம் எருமை பாய்தலால் தாமரை இதழ் கிழியத் தேன் வெளிப்படுகின்ற கெடிலவாணர் புட்பக விமானத்தைச் செலுத்தி வந்த இராவணனை ஒப்பற்ற மேம்பட்ட கயிலைமலையைப் பெயர்க்கமுற்பட்ட தோள்கள் நசுங்குமாறு வருத்திய திருவடியை உடையவர் .

குறிப்புரை :

பூண்ட - பூண்களையுடைய . பொருஇல் மால்வரை - ஒப்புயர்வில்லாத பெரிய திருக்கயிலை . தூண்டு - எடுத்த . ஈண்டு - கூடிமிக்க . மேதிபாய்தர நீர்க் கமலவாய் கீண்டு தேன் சொரிதரும் கெடிலம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பொழிப்புரை :

வேதமான வாசகத்திற்கு நிகரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய , பொலிவுடைய , தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும் .

குறிப்புரை :

சொல் துணை வேதியன் - சொல்லளவான வேத முதல்வன் . வேதம் ( வாசகம் ) சொல்வடிவாகத்தான் அச்சொல்லின் ( வாச்சியப் ) பொருள் வடிவானவன் என்க . சோதி - பரஞ்சோதி . வானவன் - அழியாத வீட்டுலகினன் . பொன் துணை திருந்து அடி - பொன்னடி , துணையடி , திருந்தடி எனப் பொலிவும் இணையும் செம்மையும் கொள்க . அடி பொருந்தக் கைதொழலாவது உள்ளத்தை அடியும் அடியை உள்ளமும் பற்றக் கொண்டு , கை குவித்து வணங்குதல் . கையொன்று செய்யக் கருத்தொன்று எண்ணலாகாது . கல்துணைப் பூட்டி - கல்லைத் துணையாகப் பூணச்செய்து . கல்லொடு கட்டி என்றபடி . கடலிற் பாய்ச்சினும் கை அடிதொழ நற்றுணையாவது திருவைந்தெழுத்து . கடலிற் பாய்ச்சிய மெய்ம்மை , ` கல்லினோ டெனைப் பூட்டி அமண்கையர் , ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால் , நெல்லு நீள்வயல் நீலக்குடியரன் , நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே ` என்றுள்ள வாய்மையால் உண்மையாதல் உணர்க . இருவினையாகிய பாசத்தால் , மூன்று மலமாகிய கல்லொடு கட்டியிருத்தலின் , மாறி மாறி வருகின்ற பிறவிப் பெருங்கடலில் வீழ்கின்ற அறிவிலுயிர்களும் பேரின்பக் கரை ஏறிட அருளும் அத்தகைய பேராற்றல் உடைய திருவைந்தெழுத்து , உணர்வுருவான நாவுக்கரசரை மிகச் சிறிய இவ்வுவர்க் கடலில் ஒரு கல்லின்மேல் ஏந்திக் கரையேற்றிடலை உரைத்தல் வேண்டுமோ ? ` இருவினைப் பாசம் மும்மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய்யஞ்செழுத்து அரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ ` ( தி .12 பெரியபுராணம் . 1394). திருவைந்தெழுத்து இருவினைக் கயிற்றால் மலங்களாகிய மூன்று கல்லொடு கட்டி வீழ்த்தப் பெற்ற அஞ்ஞானியரைப் பவசாகரத்தினின்று முத்திக் கரையிலேற்றும் ஆற்றல் வாய்ந்தது . அப் பிறவிப் பெருங்கடலிலே மூன்று கல்மேல் ஏறிய அஞ்ஞானத்தரையும் முத்திக் கரை ஏற்ற வல்ல மெய்யெழுத்து , மெய்ஞ்ஞானத்தரசை இச்சிறு கடலிலே ஒரு கல்லின் மேல் ஏற்றி யிடலைச் சொல்லாதே அறியலாம் . ஒரு கல் முக்கல் என்னும் நயம் அறியாமல் , ` இருவினைப் பாசமும் ` எனப் பிரித்துப் பொருந்தா உரை யெழுதியிருத்தல் சேக்கிழார் திருவுள்ளத்துக்கு ஏலாது . ` நற்றுணை ` என்பதற்கு ` நற்றாள் ` என்றதற்குப் பரிமேலழகர் உரைத்ததுரைத்துக் கொள்க . ( தி .7 ப .35 பா .8.) ( பேரூர்ப் . நிருத்தப்படலம் - 74).

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.

பொழிப்புரை :

பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம் இதழ்கள் மிக்க தாமரையாகும் . பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல் . அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம் . நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

அருங்கலம் ( தி .4 ப .11 பா .5) விலைமதிப்பரிய ஆபரணம் , பூக்களுக்குத் தாமரையும் , ஆக்களுக்கு அரன் ஆடும் ஐந்தும் , ( பஞ்சகவ்வியமும் ) கோக்களுக்குக் கோட்டமில்லாமையாகிய செப்பமும் , நாக்களுக்குத் திருவைந்தெழுத்தும் பெறற்கரிய பூணாகும் . ஆகவே , பூக்களுள் தாமரையும் , ஆக்களுள் அரன் ஆடும் அஞ்சினையும் அளிக்கும் ஆவும் , கோக்களுள் கோட்டமில்லாத செங்கோல் வேந்தும் போல நாக்களுள் நமச்சிவாய என்னும் நாவே நன்னா என்றவாறாம் . தாமரை பிற மலர்கட்கும் , அரன் ஆடும் ஐந்தும் ஆவிற்கும் , வளைவிலியாம் பெருமை மன்னற்கும் அருங்கலமாதல் போல , நாக்கிற்கு நமச்சிவாய மந்திரமே அருங்கலம் என்றலும் பொருந்தும் . கோட்டம் - வளைவு , சலம் ` வளைவிலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை ... திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே ` ( திருத்தாண்டகம் .) பின்னர்ச் ` சலமிலன் ` என்றலும் உணர்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

பொழிப்புரை :

வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும் . இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

` விண் உற அடுக்கிய விறகு ` என்றதால் , அடுக்கிய அவ்விறகின் மிகுதியையும் , ` வெவ்வழல் உண்ணிய ( விறகு அடுக்கிற் ) புகில் அவை (- அவ்விறகுகள் ) ஒன்றும் இல்லையாம் என்றதால் , தீச்சிறிதாயினும் எல்லா விறகுகளையும் எரித்தொழிக்கும் பெருவன்மையுடைமையையும் உணர்த்தி உவமம் ஆக்கினார் . பலவுலகிற் பலபிறவியிற் பண்ணிப்பண்ணிப் பயின்ற பாவங்களை யெல்லாம் பொருந்தி நின்று அவை அற்றொழிய ஒழிக்கவல்லது திருவைந்தெழுத்து . இது பொருள் ( உவமேயம் ). விண்ணுற அடுக்கிய விறகு போல்வது பண்ணிய உலகினிற் பயின்ற பாவம் . அவ்விறகின் வெவ்வழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாதல் போல்வது திருவைந்தெழுத்து அப் பாவத்தை நண்ணி நின்று அறுக்கப் பாவம் முற்றும் அற்றொழிதல் . விறகு x பாவம் . அழல் x அஞ்செழுத்து . உண்ணிய புகில் :- சிவஞானபோதக் காப்புரையில் \\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\' அருளிய என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் . ` உண்ணிய புகில் ` என்றாற்போல \\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\' என்றுள்ளதுணர்க . பண்ணியவுலகு - செய் வினைக்குத்தக அமைத்த புவனம் . ` பண்ணிய சாத்திரப் பேய்கள் ` என்புழிப் போல மாயாகாரியம் என்றதாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.

பொழிப்புரை :

எவ்வளவு வறுமைத் துன்பத்தால் நலிவுறினும் எம்பெருமானை விடுத்து வேறுயாரையும் இரந்து ` என் துன்பத்தைப் போக்கினால் நீ எம்பிரானே ` என்று கூறித் துயரத்தைப் போக்கு எனக் கேட்போம் அல்லோம் . மலையின் அடியில் அகப்பட்டுக் கிடந்தாலும் அருளினால் நமக்கு ஏற்படும் நடுக்கத்தை நீக்குவது திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

அடுக்கல் - மலை . இராவணனைப்போல ஒரு மலைக் கீழ் அகப்பட்டுத் துன்புற்றுக் கிடந்தாலும் , நாம் அடைந்த இறப்பச் சத்தாலான மெய்ந்நடுக்கத்தைக் கெடுத்துக் காப்பது திருவஞ்செழுத்து . ` அந் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் ` அதனால் , ` அஞ்சுவது யாதொன்றும் இல்லை ` ` இடுக்கண் பட்டு இருக்கினும் . சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சுடைமையின் நீங்கி யாரையும் இரந்து என் துன்பத்தை விடுக்கின் நீ பிரானே என்று கூறி நீக்கு எனக் கேட்போம் அல்லோம் . அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றும் இலோம் . நாம் உற்ற நடுக்கத்தை அருளின் கெடுப்பது . திருவைந்தெழுத்து .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.

பொழிப்புரை :

விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும் . நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும் . பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும் . எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

விரதிகள் - விரதத்தை மேற்கொண்டவர்கள் . ` விரதங்களாவன இன்ன அறம் செய்வல் எனவும் இன்ன மறம் ( பாவம் ) ஒழிவல் எனவும் தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன .` ( திருக்குறள் , துறவறவியலின் தொடக்கம் , பரிமேலழகருரை ) அவ்விரதங்கள் , வினைமாசு தீர்ந்து அகக் கருவிகள் தூயன ஆதற்பொருளனவாய்க் காக்கப்படுவன , விரதங்களால் உள்ளம் முதலிய உட்கருவிகள் தூயன ஆயவழி உணர்வு தோன்றும் . அவ்வுணர்வு மெய்யுணர்வு . அவ்வுணர்வால் உணரப்பெற்றது மெய்ப்பொருள் . அப்பொருளை மறவாது நினைப்பூட்டுவது திருவெண்ணீறு . அதனால் , விரதிகட்கெல்லாம் திருவெண்ணீறு அருங்கலம் ஆயிற்று . திருநீறணிந்த விரதிகளைக் கண்ட நல்வினை , யாவர்க்கும் மெய்ப்பொருளை நினைப்பிக்கும் அருட்பொருள் ஆதலின் , அதனினும் அருங்கலம் பிறிதில்லை . ` பராவணம் ஆவது நீறு ` ஆதலின் , அதுவே வண்ணம் நிறைந்த அருங்கலம் . அந்தணர்க்கு அருமறைகளும் ஆறங்கங்களும் அருங்கலம் . பிறைக்கு இறைவன் திருமுடி அருங்கலம் . முடிக்குப் பிறை கலம் என்னாமை அறிக . சைவர் எல்லோரையும் உளப்படுத்தி நங்களுக்கு நமச்சிவாய மந்திரம் அருங்கலம் என்றருளியது உளங்கொளத் தக்கது . ` சைவ பூடணம் ` எனப்படும் திருநீறும் கண்டிகையும் புறத்தருங்கலம் . திருவைத்தெழுத்து நாவினுக்கும் அகத்தினுக்கும் உயிர்க்கும் உணர்விற்கும் உரிய அகத்தருங்கலம் . ( தி .4. ப .11. பா .2)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.

பொழிப்புரை :

மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான் , தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான் . அவர்களுக்கு நாடோறும் விரும்பியதனை நல்காது வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான் . உயர்ந்த குடும்பத்தில் அடியவர்கள் பிறந்தவர் அல்லராயினும் நற்குலத்துக்குரிய நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும் .

குறிப்புரை :

சலம் - கோட்டம் . ` சலங்கெடுத்து நலங் கொடுக்கும் நம்பி ` ( தி .6 ப .20 பா .6) சலத்தாற்பொருள் செய்தே ( குறள் 660) என்புழித் ` தீயவினைகள் ` என்றும் சலம் பற்றிச் சால்பில செய்யார் ( குறள் 956) என்புழி வஞ்சனை என்றும் உரைத்தார் பரிமேலழகர் . முன்னதன் விளக்கத்தில் , முன் ஆக்கம்போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால் அவை ( அத் தீயவினைகளில் ) சலம் எனப்பட்டன என்றும் உரைத்தார் . வெளியே காணப்படுவதற்கு வேறாக உள்ளே இருப்பது சலம் என்பர் வடமொழிப் புலவர் . சிவஞானபாடியத்தில் , ` சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதல் ` என்னும் திருவெண்பா உரைக்கண் , தம்பால் அடைக்கலம் எனச் சார்ந்தாரைக் காப்பது உத்தமராயினார்க்குக் கடன்மையாகலான் , முதல்வன் தன்னைச் சார்ந்தவரையே பாதுகாப்போன் ஆகியும் அதுபற்றிக் கோட்டம் உடையன் அல்லனாய்த் தன்னைச் சார்ந்து தன்னடிப் பணியின் நிற்கவல்ல அடியார் தானேயாய் நிற்குமாறு நிறுவி , அவர்க்கு வரும் ஆகாமிய வினையைக் கெடுத்து , அது செய்யவல்லரல்லாத பிறர்க்கு வரும் ஆகாமிய வினையை அவர்க்குக் கொடுப்பன் என்றும் , ` சாராதாரை ஒழித்துச் சார்ந்தாரையே பாதுகாப்பது நடுவுநிலை அன்று என்பாரை நோக்கி அவ்வாறு கொள்ளினும் அஃது ஆண்டைக்குத் தலைமைக் குணம் ஆவது அன்றி இழுக்கு அன்மையான் அமையும் என்பார் , சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் எனப் பழமொழி எடுத்துக் காட்டி , உண்மையான் நோக்கவல்லார்க்கு அது நடுவு நிலைமையே கோட்டம் அன்று என அறிவுறுத்துவார் , சார்ந்தடியார் தாம் தானாகச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் என வேறுபடுத்துக் காட்டினார் . சார்ந்தடியார் தாம் தானாகச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் உண்டு என்பதூஉம் , அது நடுவுநிலைமையே கோட்டம் அன்று என்பதூஉம் , ஏனைச்சமயத் தார்க்கும் உடன்பாடாகலின் , அஃது ஈண்டைக்கு உழமை ஆயிற்று ` என்றும் உரைத்தருளினமை உணர்க . ` சலமிலனாய் ` எனத்தொடங்கும் சிவஞானசித்தியையும் அதனுரையையும் ஈண்டு உணர்க . சங்கரன் - ` சுகத்தைப் பண்ணுகின்றவன் ` ( சிலப்பதிகாரம் . நாடுகாண்காதை :- 186. அடியார்க்கு நல்லாருரை ) சம் - சுகம் , இன்பம் . கரன் - செய்பவன் . சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன் - ஞானத்தால் தனை அடைந்தவர்க்கே அவர்தம் இருவினையும் நீக்கிப் பேரின்ப நலம் அருள்வோன் . சலம் என்பதன் விளக்கத்தில் ஈதும் அடங்கும் . ` தயாமூல தன்மம் என்னும் தத்துவத்தின்வழி நின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் கொடுக்கும் நலம் ` ( தி .6 ப .20 பா .6) சார்ந்தோர்க்கே உண்டு . நாள்தொறும் நல்குவான் நலன் :- ` இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ` ` என்றும் இன்பம் பெருகும் இயல்பு .` ( தி .12 பெரிய . புரா .12). ` நெல்லு நீள்வயல் நீலக்குடி யரன்நல்லநாமம் நவிற்றியுய்ந்தேன் நன்றே ` என்புழியும் ஈண்டுப் பிரிப்பதுபோற் பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும் . குலம் இலர் ஆகிலும் :- ` ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும் ` என்றபடி குலத்துக்கு தொண்டர் குழாஅத்துக்கு ` குலங்கள் என்செய்வ குற்றங்கள் என்செய்வ ` ( தி .5. ப .77 பா .8) ` ஏகம்பம் மேவினாரைத் தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குத் தலைவர் ` ` புனிதனைப் போற்றுவார் மனிதரிற் றலையான மனிதரே ` ` தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொலோ ` ` குலவராக குலம் இலரும் ஆக குணம் புகழுங்கால் உலகினல்லகதி பெறுவரேனும் ... ... அடிகள் பாதம் நினைவார்களே ` ( தி .2 ப .115 பா .6) ` பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே ` ( தி .7 ப .72 ப .11) என்ற குலமே சைவ குலம் ; சிவத் தொண்டக்குலம் . ` நலம் இலராக , நலமது உண்டாக , நாடவர் நாடறிகின்ற குலம் இலராக , குலமது உண்டாக ` அவற்றைப் பொருட்படுத்தாமல் அவரது தவத்தையே பொருட்படுத்தி அத் தவம் பணி குலச்சிறை குணமே அடியார் திறத்தில் அனைவர்க்கும் வேண்டும் . அதற்கு ஏற்பதோர் நலம் ` சங்கரன் ` என்னும் பெயர்க்கண் முதற்சொல்லின் பொருளாம் . சங்கரன் தரும் நலனெல்லாம் அவனது திருவைந்தெழுத்து நல்கும் . ` கொல்வாரேனும் ` ( தி .3 ப .49 பா .5) ` நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் ` ( தி .3 ப .49 பா .7) என்று அருளிய ஆளுடையபிள்ளையார் திருப் பாடல்களையும் இங்குக் கருதுக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.

பொழிப்புரை :

மேம்பட்ட தொண்டர்கள் உலகப்பற்றுக்களை நீக்கிவிட்டனர் . அவர்கள் மேம்பட்ட வீட்டு நெறியையே அடைந்தனர் . அடியவர்கள் கூட அடியேனும் ஓடிச் சென்று எம்பெருமான் திருவுருவத்தை அகக்கண்ணால் கண்டேன் . அங்ஙனம் கண்டவுடன் திருவைந்தெழுத்தை நாடினேன் . நாடிய என்னை அத்திருவைந்தெழுத்தும் நாடியது .

குறிப்புரை :

வீடினார் உலகினில் - உலகப்பற்றினை விடுதலுற்றார் . உலகு - கட்டு . வீடினார் - விடுதலைச் செய்தார் . உலகினில் விடுதலே வீடுபெறும் நெறி . விட்டவர் விழுமியோர் . விட்டது உலகினை . பெற்றது பேரின்பத்தை . விள்ளற்பாலதனை விண்டு அதனால் வருந்துன்பத்தினீங்குதல் வீடு . கொள்ளற்பாலதனைக் கொண்டு அதனால் வரும் இன்பத்தைப் பெறுதல் பேறு . ( சிவஞானபாடியம் . சூ . 9) அது பெற உலகப் பற்றை விட்டுச் சென்ற நெறியே ` அந்நெறி ` எனச் சுட்டப்பட்டது . சிவநெறி சருவலோக பிரசித்தமாதலின் அதனை ` அந்நெறி ` எனல் வழக்கம் ( பதி . பா .9.) ` முழுமுதலை அந்நெறியை அமரர் தொழும் நாயகனை `. அதைக் கூடினார் விழுமிய தொண்டர்கள் . கூடிச் சென்றவுடனே , யானும் ஓடினேன் . ஓடிச்சென்று உருவம் கண்டேன் . கண்டவுடன் நாடினேன் நமச்சிவாய மந்திரத்தை . நாடிய என்னை அதுவும் நாடிற்று . உருவம் காண்டல் :- திருவைந்தெழுத்துள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறித்தலின் , அதனதன் உருவம் தெரிந்து கணித்தல் வேண்டும் . ` உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் ` ( தி .4 ப .94 பா .6) பயின்ற நாமம் ` சிவாயநம என்று நீறணிந்தேன் ` என்பதிற் காண்க . நாடிற்று :- சிவகதி தரக் கருதிற்று . ( தி .4 ப .11 பா .7) முன்னெறி ( சிவன் ) அம்முக்கண்ணன்றன்நெறி , அந்நெறியே சரணாதல் திண்ணம் . அடைந்தவர் எல்லார்க்கும் நன்னெறி என்று பின் உள்ளதும் ( ப .11. பா . 9) உணர்க . ` வீடினார் உலகினில் ` என்றதற்கு உலகில் இறந்தார் என்றுரைத்து , ` செத்தாரே கெட்டார் கரணங்கள் ` ( திருக்களிற்றுப்படியார் . 47) என்னுங் கருத்துணர்த்தியதாகக் கொள்ளலும் பொருந்தும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பொழிப்புரை :

வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம் . சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய் , ஒளியுடைய தாய் , பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே .

குறிப்புரை :

இல் - வீடு . உயிர்க்குத் துச்சில் உடல் ஆதலின் ` இல் ` என்றார் . அக விளக்கு - உள்ளே விளங்கி விளக்கும் விளக்கு . அகமாகிய இல்லின் விளக்குமாம் . புறத்திருளைப் போக்கும் விளக்கேபோல் அகத்திருளை அழிப்பது . சொல்லின் அகத்தும் நின்று விளக்குவது . சோதி உள்ளது . ஏனைய சோதிகளுக்கு அச்சோதி முன் இல்லாது பின் வந்ததாம் . திருவைந்தெழுத்தின் சோதி முக்காலத்தும் உள்ளது . உயிர்கள் எண்ணில்லாதன . அவற்றின் அகமெல்லாம் விளக்கும் ஒளியாதலின் ` பல்லக விளக்கு ` ஆயிற்று . பலரும் - எல்லாச் சமயத்தாரும் . காண்பது - தம்மையறியாமலே காண நிற்பது . அழியாதது . யகாரம் , நகாரம் , மகாரம் மூன்றில் மற்றெல்லாச் சமயங்களும் அடங்கி விடுகின்றன . வகாரம் சிகாரம் இரண்டும் சைவத்திற்கே உரிய தனிச் சிறப்புடையன . நல்லக விளக்கு :- ஞானரூபத்தினுள்ளே விளங்கும் விளக்கு . ஞானம் நிறைந்த அகமே நல்லகம் . ` ஆன்மாப் பாசம் ஒருவி ஞானக் கண்ணினிற் பதியைச்சிந்தை நாடுக ` என விதித்த விதியின்படியே ஓதும் திறத்திற்குரியது முத்தி பஞ்சாக்கரம் . அஞ்செழுத்து ஓதும் முறையால் ஒரு குறியின் வைத்து அன்றி முதல்வனைக் காண்டல் செல்லாது .` ( சிவஞானபோதம் . சூ .9. அதி .3. பேருரை பார்க்க ). சுட்டறிவு இறந்து ஞானத்தான் ஞேயத்தைக் கண்டு எங்கும் தானாக நிட்டை கூடிய வழியும் , தொன்றுதொட்டுவரும் ஏகதேசப் பழக்கம் பற்றிப் புறத்தே விடயத்திற் சென்று பற்றுவதாகிய தன் அறிவை அங்ஙனம் செல்லாது மடக்கி , அகத்தே ஒரு குறியின் கண் நிறுத்தி , நிட்டைகூடிநிற்கும் முறைமையை அஞ்செழுத்து ஓதும் முறைமையில் வைத்துக் கண்டு சிந்திக்கச் சிந்திக்கச் சிவதரிசனத்தை விளக்குவதால் ` விளக்கு ` எனப்பட்டது . வாதனைவயத்தால் , புறத்திற் சென்று பற்றும் ஏகதேச அறிவைப் பற்றறத் துடைத்துப் பூரண நிலையிற் கொண்டு செல்வதால் , அது வாசனையை நீக்குவதற்குரிய சிறந்த சாதனமாம் . ( சிவஞானபோதம் சூ . 9. அதி . 3. பேருரை ). உணர்விற்கு விடயமாகக் காணப்படும் பசுபாசங்களோடு ஒப்ப வேறு காணப்படாத பதிப்பொருளாகிய முதல்வனைத் தன் அகத்தின்கண் அஞ்செழுத்து ஓதும் முறையால் காணும் ஆயின் , கோலை நட்டுக் கயிற்றினாற் சுற்றிக் கடையவே விறகினின்றும் தோன்றும் தீயைப்போல அம் முதல்வன் அங்குத் தோன்றி , அறிவிற்கு அறிவாய் விளங்கிநிற்கும் ஆதலின் , ` நல்லக விளக்கு ` எனப்பட்டது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.

பொழிப்புரை :

முந்துறமுன்னம் வீடுபேற்றிற்கு வழிகாட்டிய முதல்வன் முக்கட்பிரானாவான் . அவன் அருளிய வழியே உறுதியாகப் பற்றுக் கோடாவது . அந்த வழியிலே சென்று அப்பெருமானுடைய திருவடிகளை அடைபவருக்கு எல்லாம் , சிறந்த வழியாக உதவுவது திருவைந்தெழுத்து மந்திரமே .

குறிப்புரை :

முன்னெறியாகிய முதல்வன் என்றும் முன்னெறியாகிய முக்கண்ணன்நெறி என்றும் இயைக்கலாம் . முதல்வனை ` முன்னிலை ` ` முன்னெறி ` என்றும் முன்னோர் குறித்தனர் . ` நெறியே நின்மலனே ` ( தி .7 ப .24 பா .9) என்று அழைக்கப்பெறும் முதல்வனை ` முன்னெறி ` என்றலில் வியப்பென்னை ? முக்கணன்றன் நெறியே சரணாம் . அது சரணாதல் திண்ணம் . உயிர்கட்கு வீடுபேறு உண்டாக வேண்டின் , முன்னெறி யாகிய முதல்வன்றன் நெறியே சரணாதல் திண்ணம் . அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர் எல்லார்க்கும் நமச்சிவாயவே நன்னெறியாவது . ` நன்மையெனப்படுவன எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை எனப்படுவது வீடுபேறு என்ப . அதனைத் தலைப்படுதற்கு ஏதுவாய்ச் சிறந்த நெறியாகலின் , ஞானம் ` நன்னெறி ` எனப்பட்டது . ( மாபாடியம் . சூ .8 ) ஞானம் வேறு நமச்சிவாயம் வேறு ஆயினும் , ஞானம் விளங்கி ஞேயம் காட்சிப்பட்ட இடத்தும் பயிற்சி வயத்தான் முன்னர்த் தான் நோக்கிய பாசத்தை நோக்கும் நோக்கமாகிய வாசனையை நீக்குதற்குரிய சாதகம் ஆகிய திருவைந்தெழுத்தும் ஞானத்திற்கு ஒப்பாதலின் ` நன்னெறி ` யாயிற்று ( மாபாடியம் . சூ .9 ). ` காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது ` ஆதலின் , அதுவே ` நன்னெறி ` யாவது என்றாரெனலுமாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

பொழிப்புரை :

மான்குட்டியைக் கையிலேந்திய , பார்வதி பாகனுடைய பூமாலைகள் சார்த்தப்பெற்ற திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுவதற்கு நாவை இணைந்து தழுவிய திருவைந்தெழுத்தைப் பற்றிய இப்பத்துப்பாடல்களை வழிபட வல்ல அடியவர்களுக்கு எத்தகைய துயரங்களும் ஏற்படமாட்டா .

குறிப்புரை :

மாதியலும் பாதி - முதல்வனுடைய இடப்பாகம் , அப்பாகத்துக் கையில் உள்ளது மான்பிணை . மாதொரு பாகமே மானேந்திய பாகம் ஆதலின் , ` தழுவிய ` என்னும் எச்சம் ` மாதொர் பாகத்தான் ` என்ற பெயர் கொண்டது . ` மான்பிணை தழுவிய மாது ` எனக் கருதி உவமம் ஆக்கலும் கூடும் . பூப்பிணை - மலர்மாலை . நாப்பிணை தழுவிய நமச்சிவாயப்பத்து - நாவைப் பிணைந்து தழுவிய நமச்சிவாயப் பதிகம் . பத்தும் ஏத்த வல்லார்க்கு இடுக்கண் இல்லை . மேல் ( தி .4 ப .11 பா .10) முன்னீரடியும் , பின்னீரடியும் வெவ்வேறெதுகை யானவாறு , இதன் ஈற்றடி வேற்றெதுகைத்தாயினும் , இரண்டனுள்ளும் இனவெதுகை அமைந்திருத்தல் காண்க . ( தி .4 ப .8 பா .8 இல் உள்ள எதுகையை உணர்க ). இடுக்கண் - ( இடுங்கு கண் ) துன்புற்ற போது கண் இடுங்குதல் துன்பக் குறி . ` இடுங்கு கண் ` என்பதன் மரூஉவே இடுக்கண் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கண் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ.

பொழிப்புரை :

சொல் வரிசையைத் தவறாமல்கூவுகின்ற குயில் இனங்களே! பல வரிசையாக உள்ள கோடுகள் பொருந்திய வண்டுகள் பண்பாடும் திருப்பழனத்தை உகந்தருளியிருப்பவனாய், மாலையின் முற்பகுதியில் ஒளிவீசும் பிறை விளங்கும் சடைமுடியைத் தலையில் உடையவனாய்ப் பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் அணிந்த எம்பெருமான் என்னுடைய கன்னிஇள நலத்தை நுகர்ந்து பின் என்னை இகழ்ந்து புறக்கணிப்பானோ? தூது சென்று எம் பெருமானிடம் என் நிலையைச் சொல்லுங்கள்.

குறிப்புரை :

தலைவி தன் கலவி நலனுகர்தலை வெறான் தலைவன் எனல். குயிலைத் தூதுவிடுதல். சொல்மாலை - சொல் வரிசை. சொல்லிய வரிசையில் தவறாது கூவுதல் குயிலுக்கு இயல்பு. அத் தவறாமைக்கு ஏது பயிற்சி. பயிற்சி ஈண்டு உளத்திற்கும் உடற்கும் உரியதன்று. உரை (நா)ப் பயிற்சியாகிய நவிற்சியின் மேற்று. `மறை நவில் அந்தணர்` (புறம். கடவுள் வாழ்த்து) என்பதன் குறிப்புணர்க. வரி வண்டுகளின் பல வரிசையை மாலை என்றார். வண்டு மிழற்றும் பழனம்; இடப் பெயர் கொண்ட எச்சம். மாலை நகு திங்கள். முகிழ் - முதன்முதலிற் பிறை, மேற்கில் மாலையிலேதான் காணப்படும். முடி - கங்கைச் சடைமுடி. சென்னி அம் முடியுடையது. சென்னி - தலை. பொன் மாலை மார்பன்; பழனத்திறைவன். புது நலம்:- கன்னிமை கழியும் பொழுதையது. ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு. தூது செல்வார்க்கு அழகு இன்றியமையாததன்று. சொல்லினிமையே வேண்டுவது. அதனால், நிறம் பற்றிய அழகு இன்மை கருதாது, சொன்மாலை பயில்கின்ற குயிலினங்களைச் சொல்லுமாறு வேண்டினாள். குரு அருளும் மெய்யுணர்வில் நோக்கம் வைத்துச் சீடன் வணங்குதல் போன்று, குயின்மொழியில் உளங்கொண்டாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் றளிர் வண்ணம்
கொண்டநா டானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ. 

பொழிப்புரை :

நீர் முள்ளிகளே! கடல் முள்ளிகளே! தாழைகளே! நெய்தல்களே! பண்டரங்கத் கூத்திற்கு உரிய வேடத்தானாய். பாட்டுக்கள் நீங்காத திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான், வண்டுகள் உலாவுகின்ற குளத்தில் யான் மூழ்க என்னைக் காப்பதற்காகத் தானும் குளத்தில் குதித்து என்னைக் கரைசேர்த்தபோழ்து அவன் என் தளிர்போன்ற வண்ணத்தை அனுபவித்த அந்நாளை, தான் நினைவில் வைத்திருப்பவள் ஆதலின் என்னைத் தன் அடியவளாக ஏற்றுக்கொள்ளாது என்னைத் தனித்து வருந்துமாறு விடுபவனல்லன்.

குறிப்புரை :

கண்டகம் - நீர்முள்ளி. முண்டகம் - கடல்முள்ளி. `முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்` (புறம். 24). கடுஞ்சூல் முண்டகம் - முதற்சூலையுடைய கழிமுள்ளி (சிறுபாண் 148). `மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்` (மதுரைக். 96.7.) `அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை` (நற்றிணை. 125) `முண்டகக் கோதை நனைய....நின்றோள்.` (ஐங்குறுநூறு. 121) கைதை - தாழை. பண்டரங்க வேடத்தான்:- பண்டரங்கம் என்னும் கூத்துக்குத் தக்க கோலத்தைக் கொண்டவன். (கலித்தொகை கடவுள் வாழ்த்து.) பாட்டு ஓவாப் பழனத்தான்:- பழனத்தின் சிறப்பு. அடியார் பலர் பாட்டும் புள்ளொலி முதலிய பாட்டும் ஓவாமையும் பழனத்தான் சிறப்பாயின், சாமகானமும் ஆம். தடம் - நீர் நிலை. வண்டுலாவலால் மலர்த் தடம் என்றாயிற்று. தளிர் வண்ணம் போலும் வண்ணத்தைக் கொண்ட நாள் கொண்டான் அறிவான். அதைக் குறிக்கொள்ளா திரான். கேளாதவற்றைக் கேட்பன போலக் கொண்டு கூறியது இது. `ஒட்டிய உறுப்புடையதுபோல் உணர்வுடையது போல்...சொல்லாமரபினவற்றொடு கெழீஇச் செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கி` (தொல். பொருளியல்.2) என வருதலின்பாற்பட்டது. `வாராமரபின.....என்னா மரபின` என்னும் எச்சவியற் சூத்திரம் ஈண்டுப் பொருந்தாது. புனல் விளையாட்டின் நிகழ்ச்சி நினைந்து கூறியது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

மனைக்காஞ்சி யிளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைம்மா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லா முரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ. 

பொழிப்புரை :

வீட்டுக்கொல்லையில் வளர்க்கப்பட்ட காஞ்சி மரத்தில் தங்கியிருக்கும் இளைய நாரையே! மறந்தாயோ! பிரகாசிக்கின்ற வண்டே! மதம் பொழியும் முகத்தை உடையதாய்ப் பனை போலும் திரண்டு உருண்ட பருத்த துதிக்கையை உடைய யானைத் தோலை மேலே போர்த்தவனாய்ப் பலரும் பாடும் திருப்பழனத்து எம்பெருமான் நினைக்கின்ற நினைவை எல்லாம் அறிந்து வந்து என்னிடம் கூற மாட்டாயா? என் தூதாகச் சென்ற என் தோழி அவன்பால் தான் கொண்ட காதலால் தூது சொல்லவேண்டிய செய்தியை நெகிழவிட்டுவிட்டாளோ?

குறிப்புரை :

மனைக் காஞ்சி - தோட்டத்தில் வளர்த்த காஞ்சி மரம். `காஞ்சி` (நகர்) என்பது இம்மரத்தாற் பெற்ற பெயரே. குருகே மறந்தாயோ? வண்டே உரையாயோ? ஆற்றாமை அடுக்கிய தூது விடுக்கிய தூண்டிற்று. மதமுகத்த - மதம் பொழியும் முகத்தையுடைய. பனைக்கை - பனைபோலும் திரண்டுருண்ட பருங்கை. மா - யானை. உரி - தோல். பலர் - அடியர் பலர் பாடும் பழனத்தான்:- முற்பாட்டின் குறிப்பு உணர்க. நினைக்கின்ற நினைப்பெல்லாம்:- தலைவி நினைக்கின்ற எல்லா நினைப்பும் நிகழ் - விளக்கம். சுனைக்குவளை மலர்க்கண் - சுனையிற் பூத்த குவளை மலர் போலுங் கண். `சுனை` அடையால், கண்ணின் குளிர்ச்சி புலப்படும். தனக்குத் தூதாய்ச் சென்றவள் அவன்பாற் கொண்ட காதலாற் சோர்வாளோ என்று ஐயுற்றவாறும் சொற்சோர்வுபடுவாளோ என்றவாறும் ஆம். `குருகு` - நெய்தல் நிலத்துப் புள். (கலி.121.இ. வை. அ. ஐயர் பதிப்பு. பக்கம். 763.4 பார்க்க) `கருங்கால் வெண்குருகு` வண்டிருந்த குவளையைக் குவளைக்கண்ணி என்றதாகக்கொண்டு பொருள் கூறலும் பொருந்தும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

புதியையா யினியையாம் பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாள னென்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ. 

பொழிப்புரை :

புதிய இனிய பூமணம் கமழும் தென்றல் காற்றே! சுடுகாட்டைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பலரும் புகழும் பழனத் தானாய், தன்னை மதியாத தக்கனும் மற்றவரும் செய்தவேள்வியை ஒரு பொருளாகக் கொண்டு அழித்த, விதியைத் தன் இட்டவழக்காக ஆள்கின்ற பெருமான், என் உயிருடன் விளையாடுகின்றானோ?

குறிப்புரை :

புதியைஆய் இனியைஆம் பூந்தென்றால்:- தென்றல் ஆண்டுதொறும் போதரினும், வியர்த்தலால் ஆகும் வருத்தம் போக்கும் பொழுதெல்லாம், வருந்தும் உள்ளத்திற்கு புதுமையாய்த் தோன்றும். மென்காற்றாதலின் இன்காற்று என்பதில் ஐயம் இன்று. பூந்தென்றலாதலின், மணம் வீசுதலாலும் இனிமை உண்டாக்கும். `கோயில் சுடுகாடு`. `கள்ளி முதுகாட்டில் ஆடிகண்டாய்`. மதியாதார் - தக்கனும் அவன் வேள்வியில் உதவியாய் இருந்தவரும். மதித்திட்ட - ஒரு பொருளாகக் கொண்டு வீரபத்திரத் திருக்கோலம் கொண்டு அழித்த. மதிகங்கை - மதியையும் கங்கையையும். விதியாளன் - தலைமேற் சூடி ஆள்பவன். `விதி` ஈண்டுத் தலைக்கு ஆகு பெயர். `தலைவிதி` என்னும் வழக்குணர்க. விதி (ஊழ்வினை) எனக் கொண்டு நியம நெறியாளன் எனப் பொருந்தக் கூறலுமாம். திருமுறையில் இறைவனை `விதி` எனக் கூறுதல் பயின்ற ஆட்சி. `விதியொப்பான்` (தி.5 ப.3 பா.6) `நல்வினையும் தீவினையும் ஆயினான்` (தி.6 ப.11 பா.2) `விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி` (தி.1 ப.30 பா.1) `விதியானை` (தி.2 ப.16 பா.2) `விதியுமாம் விளைவாம்` (தி.3 ப.48 பா.2) உயிர்மேல் விளையாடல்:- காதலின்ப விளையாடலும் உயிர்க்கே உரியது. அந்தக்கரண முதலியவற்றின் நுகர்ச்சியளவினதன்று. பேரின்ப விளையாடல் கருவி கரணங் கடந்த நிலையில் உயிர்க்குத் தனியாட்சியாயுரியது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ. 

பொழிப்புரை :

இம்மண்ணுலகில் பொருந்தி இம்மை இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும் மேம்பட்ட தூய்மையை உடைய வேதியர்க்கும் வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும் துன்ப வீடும் இன்பப் பேறுமாய் நிற்பவனாய், சான்றோர்கள் பண்ணொடு பொருந்த இசைபாடும் திருப்பழனத்தில் உறையும் என் தலைவனை யான் உயிர்போய்க் கண் மூடும் நேரத்திலும் கைவிடக் கூடியவனோ?

குறிப்புரை :

மண்ணவர்க்கும், மிக்க தூய்மையுடைய மறையவர்க்கும், விண்ணவர்க்கும் துன்பவீடும் இன்பப்பேறுமாகி நிலவும் முதல்வனை; பண்ணொடு பொருந்த இசை பாடும் திருப்பழனத்தில் எழுந்தருளிய அப்பனை, யான் இறக்கும் பொழுதிலும் கைவிடக் கடவேனல்லேன். கண்பொருந்தல்:- இறப்பினை உணர்த்தி நின்ற மங்கல வழக்கு. `போதத்து` என்பது, பாவலர் சிலராட்சியில், இரண்டு நிகழ்ச்சி ஒரு பொழுதில் ஒருங்கு நிகழ்தலைக் குறிக்கின்றுழி நிற்கின்றது. ஈண்டும் கண்பொருந்தலும் (உயிர் நீக்கமும்) வழி பாட்டைக் கைவிடலும் ஒருசேர நிகழ்வன. அத்தகைய நிலையிலும் அப்பனைக்கைவிடாத அப்பர் நம் அப்பர் என்றுணர்க. \\\\\\\\\\\\\\\"வேயுயர் கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்\\\\\\\\\\\\\\\" என்ற கம்பர் கருத்தை (அயோத். தைலமாட். 60) ஒட்டி அச்சொற் பொருளை நோக்குக. பொழுதடுத்து என்பதன் மரூஉவே போழ்தத்து, போதத்து என்பன. `மண் பொருந்தி` எனத் தொடங்கும் திருப்பாடலைச் சிவபூசை முடிவிற் சொல்லிவருதல் சைவரது வழக்கம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போ யிரைதேரும்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேனான்
அங்கோல வளைகவர்ந்தா னணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ. 

பொழிப்புரை :

மிக்க வெள்ளத்தை உடைய பெரிய கடலில் அலைகளின் பின்னே பின்னே சென்று இரையாகிய மீன்களை ஆராயும் சிவந்த கால்களையும் வெண்ணிறத்தையும் உடைய இளைய நாரையே! அடியேன் இனிச் செய்யும் திறன் அறியேன். என்னுடைய அழகிய திரண்ட வளையல்களைக் கவர்ந்தவனாகிய, அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னுடைய அழகிய நறிய கொன்றைப் பூமாலையை அருளாது அடியேனைக் கைவிடுவானோ?

குறிப்புரை :

பொங்குகின்ற ஓசையை உடைய பெரிய கடலில், பின்னே சென்று இரையைத் தேர்கின்ற செய்ய காலுடைய வெள்ளிள நாரையே, இனிச் செயற்படுவது யாது என்று நான் அறியமாட்டாதேன் ஆனேன். அழகிய சோலை சூழ்ந்த திருப்பழனத்து முதல்வன் என் அழகிய திரண்ட வளைகளைக் கவர்ந்தான். தன் அழகிய நறிய கொன்றை மாலையை அருளாமலிருப்பானோ? (அருள்வான்). புறம் புறம் (தி.6 ப.26 பா.7) `புறம் புறந்திரிந்த செல்வமே` (தி.8 திருவா.) `பின்பினே திரிந்து` (தி.4. ப.62 பா.2) எனப் பிறாண்டும் வருதல் அறிக. `தங்கோல ....கொன்றைத்தார்` என்பதில், `தன்` என்னும் ஒருமை எதுகை நோக்கித் திரிந்தது. `நாமார்க்குங் குடியல்லோம்` என்பதில், `தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன்` என்றுழிச் சங்கரன் என்னும் ஒருமையும் தாம் என்னும் பன்மையும் மயக்கமல்ல. `தான்` என்பதே ஆண்டு எதுகை நோக்கித் திரிந்த தென்க. ஒழிவானோ - நிற்பானோ? `ஒழிதல்` - நிற்றல். `ஆறன் மருங்கிற் குற்றியலுகரம் ஈறு மெய் ஒழியக் கெடுதல் வேண்டும்` (தொல். 469).

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான் பாட்டோவாப் பழனத்தான்
கணையார விருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பனென் னெழினலமுண் டிகழ்வானோ. 

பொழிப்புரை :

துணையானபேட்டினைத் தழுவிச் சென்று நீர்த் துறையை அடையும் இளைய நாரையே! முரசங்களின் ஆரவாரமும் பாடல்களின் ஒலியும் நீங்காத திருப்பழனத்தில் உறைபவனாய், அம்பினால் வானத்தில் இயங்கிய காவலை உடைய மும்மதில் களையும் அடியோடு பொடியாக்கியவனும், முடிக்கப்படாமல் இரு பக்கமும் தொங்கவிடப்படும் மாலையை அணிந்த மார்பினை உடையவனுமான எம்பெருமான், என் அழகையும் இனிமையையும் நுகர்ந்து பின் என்னை அலட்சியம் செய்வானோ?

குறிப்புரை :

நாராய். இணையாரமார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ? இகழான் என்றவாறு. துணைப் பறவையை உள்ளம் நிறைவுறக் கூடிச் சென்று துறையை அடையும் இளநாரையே, பெரிய ஆரவாரத்தொடு பாட்டு ஓவாமல் இசைக்கும் திருப்பழனத்திறைவன்; பெருவானிற் காவற் கோட்டையாகிய மூன்றூரைக் கணைகளுக்கு ஒழிவு நிரம்ப அவற்றைத் தொழிற்படுத்தாது (சிரித்தோ விழித்தோ) பொடியாக்கியவன். இணைந்த ஆரம் `இணைந்த மலராற் செய்த கோதையுமாம்`. (கலித்.) ஆரம் (மாலை) பூண்ட மார்பன். (நீர்த்துறை) சேர்தல் இரை தேர்தற் பொருட்டு. பணை - பருமை. ஈண்டு மிகுதிப் பொருட்டு. வயலுமாம். ஆரவாரத்தான் - `ஆன்` ஒடுவுருபின் பொருட்டு; ஆரவாரத்தினன் என்றும் பொருத்தலாம். கணையை ஆளாமையால், ஆர்தல் (தொழிற்படாது) பொருந்துதல் என்னும் பொருளதாயிற்று. இணை ஆரம்; கணை உண்ண எனலுமாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.

பொழிப்புரை :

திரளாக உள்ள மணிகளை வாரிக் கரையிலே சேர்த்துப் பெருகி ஓடிக்கொண்டிருக்கும் காவிரிப் பாவையின்கண் முத்துக்கள் விளங்குமாறு மகளிர் பாய்ந்து நீராடும் திருப்பழனத்தை உடையவனாய், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை உடைய பார்வதியின் கேள்வனாய், உள்ள எம்பெருமானுடைய காளை எழுதிய கொடியாடை மேலே உள்ள மழலைபோல் இனிமையாகப் பேசும் பூவைகளே! எம்பெருமானுடைய பிரிவாற்றாமல் அடியேனுக்குப் பொழுது ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாய் நீண்டு, கழியாது துன்புறுத்துகின்றது.

குறிப்புரை :

கூவை - திரள். மணி - முத்து முதலிய பலவும் ஆம். வரன்றி - வாரி. காவிரியாகிய பூம்பாவை. வாய் முத்து என்றது இருபொருளது. திருப்பழனம் காவிரிப்பாய்ச்சலுடையது. கோவைவாய்:- உவமத்தொகை. `கொவ்வைச் செவ்வாய் இக் கொடியிடை` (தி.8 திருக்கோவையார். 9) மலைமகள் - பார்வதி தேவியார். கொல்லேறு; சாதியடை. ஏற்றின் கொடி (இடபத்துவசம்). கொடியாடை மேலிருக்கும் பூவை. `மழலை` ஆகுபெயராய்ப் பூவையையே குறித்தது. போகாதபொழுது உளது:- பிரிவாற்றாமையாற் பொழுது நீட்டித்தற்குறிப்பு. பொழுதுபோதல் என்னும் உலக வழக்கிற்கு மாறாகப் போகாதபொழுதும் உளதோ என்றாளுமாம். `போதுபோய்ப் புலர்ந்ததன்றே` (தி.4 ப.76 பா.1) பூவை - நாகணவாய். மழலை ஆகுபெயர். கூவை:- புறம். 29. 275. மதுரைக். 142. மலைபடு. 137. 422. சிலப். காட்சிக். 42 தமிழ்ச்சொல்லகராதி. 920.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் றொழுதேத்த விருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கு மென்றுரைப்ப ருலகெல்லாம்
கள்ளியே னானிவர்க்கென் கனவளையுங் கடவேனோ. 

பொழிப்புரை :

புள்ளிகளை உடைய மானே! படப்புள்ளிகளை உடைய பாம்பே! அன்னப் பறவையின் உருவத்தை எழுதிய கொடியை உயர்த்திய பிரமனும், படங்களை உடைய திருஅனந்தாழ்வானைப் படுக்கையாக உடைய திருமாலும், தொழுது துதிக்குமாறு பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னைத் தியானிப்பவருடைய வினைகளைப் போக்கி இன்பம் அருளுவான் என்று உலகோர் கூறுகின்றனர். உள்ளத்தில் கள்ளத் தன்மையை உடைய அடியேன் வினை தீரப் பெறாமையே அன்றி இத்தலைவனுக்கு என் கனமான வளையல்களையும் இழக்கும் நிலையேன் ஆவேனோ?

குறிப்புரை :

பழனத்தான் உள்குவார் உள்கிற்றெல்லாம் உடன் இருந்து அறிந்து, அவர் வினைகளைத் தீர்த்து இன்பம் விளைப்பான் என்று உலகோரனைவரும் சொல்கின்றனர். கள்ளியேனான நான் வினை தீரப் பெறாமையே அன்றி, இத் தலைவனுக்கு என் கனத்த வளையும் (இழக்கக்) கடவேனோ? புள்உயர்த்தான் - அன்னப் பறவையை எழுதிய கொடியெடுத்த நான்முகன். மணிநாகப் பள்ளி யான் - மாணிக்கத்தையுடைய பாம்பணைமேல் துயிலும் திருமால். அந் நால்வரும் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்? புள்ளிமானையும் பொறியரவத்தையும் தொழுது ஏத்த? பொறி - படப்புள்ளி. அரவம் - பாம்பு. புள்ளிமானும் பொறியரவமும் இருக்கின்ற பழனமோ? மான் விடுதூதோ? மானும் அரவும் (கொண்டு) இருக்கின்றவனென்றும் கொள்ளலாம். பிரிவாற்றாமையால் வளையும் சுமையாயிற்று. `வளை கவர்ந்தான்` என்று முன்னும் (தி.4 ப.12 பா.6) பின்னும் (தி.4 ப.12 பா.10) கூறியதால், இழக்கக்கடவேனோ என்றதாகக் கொள்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.

பொழிப்புரை :

அஞ்சிப்போய்க் கலியின் துயரம் நீங்குமாறு முத்தீயை ஓம்பும் அப்பூதியின் குடுமிக்குத் தாமரைப் பூவாக இருக்கும் சிவந்த அடிகளை உடைய கூடல் தெய்வமே! என் வளைகளை வஞ்சித்துக் கவர்ந்த, செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண் சிறகுகளையும் உடைய அன்னப் பறவைகள் பரவி ஆரவாரிக்கும் பழனத்து எம் பெருமான் அடியேனுக்கு அருள் செய்ய வாரானே என்றாலும், கூடல் சுழியின் இரண்டு முனைகளும் இணைந்து ஒன்று சேருமாறு செய்வாயாக.

குறிப்புரை :

என்வளைகளை வஞ்சித்துக் கவர்ந்த பழனத்தான் வாராமல் என்னை இடர்ப்படுத்துவானே ஆனாலும், சேவடியாய்! கோடு இயை என்று இயைக்க. சேவடியாய் என்றது கூடற்றெய்வத்தை, எல்லாத் தெய்வங்களும் சிவனடி வணங்குவனவே ஆதலின், அதனை அவ்வாறு விளித்தாள். அப்பர்க்குக் கூடல் தெய்வமாவதும் பழனத் தரனே என்க. பஞ்சின் மெல்லடியும் சிறகும் உடைய அன்னப்புள் பரந்து ஒலி செய்யும் பழனம். திருப்பழனத் திறைவன் சேவடி. அப்பூதி யடிகளது குஞ்சி (தலைமுடி)ப் பூவாய் நின்ற சேவடி. கலி அஞ்சிப் போய் மெலிய அழல் ஓம்பும் அப்பூதி:- சிவபூசையின் ஓர் அங்கமான சிவாக்கினி காரியத்தை நாடோறும் வழாது புரிந்து, நாட்டில் வறுமை இல்லாதவாறு செய்த செம்மையர் என்பது குறித்தது. அகத்திணைத் துறைகளுள், கூடலிழைத்தல் என்று ஒன்றுண்டு. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"கூடலிழைத்தல் என்பது தலைமகள், இம்மணற்குன்றின்கண் நீத்து அகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தர வல்லையோ எனக் கூடற் றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தாநிற்றல்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" (தி.8 திருக் கோவையார் உரை. 186) `ஆழிதிருத்தும் புலியூர் உடையான் அருளின்அளித்து ஆழிதிருத்தும் மணற்குன்றின் நீத்துஅகன்றார் வருகஎன்று ஆழிதிருத்திச் சுழிக்கணக்கு ஓதிநையாமல் ஐய ஆழிதிருத்தித் தரக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே`, `ஐய என்றது கூடற்றெய்வத்தை` (தி.8திருக்கோவையார் 186). கூடலிழைத்தல்:- பெரியதொரு வட்டமாகக் கோடு கீறி, அதன் உள்ளே சிறு சுழிகளை அளவிடாது சுழித்து, அவற்றை இரட்டைப்பட எண்ணி, ஒற்றைப்படாதுளதோ என்று நோக்கல்; மிஞ்சாதேல், தலைவன் விரைவில் வந்தணைவான் என்பது மரபு. பிரிந்து வருந்தும் தலைவிக் குரியது இப் பண்டைய வழக்கு. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"கூடலாவது வட்டமாகக் கோட்டைக் கீறி அதற்குள்ளே சுழி சுழியாகச் சுற்றுஞ் சுழித்து இவ்விரண்டு சுழி யாகக் கூட்டினால் இரட்டைப்பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று சங்கேதம்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" (நாச்சியார் திருமொழி. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்து அரும்பதம்). இவ்வாறு அன்றிக் கண்ணை மூடிக்கொண்டு கீறிய கோடு, எழுவாய் இறுவாயிரண்டும் கூடியிருப் பின் வந்து கூடுவன், விலகின் வாரான் என்பதுமுண்டு. இத்துறைக்கு எடுத்துக்காட்டுக்கள் பற்பல உள. அவற்றுள் இங்கு உணரத்தக்கவை:- `பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள் கூட லாக்கிடும் குன்றின் மணற்கொடு கோடல் பூத்தலர் கோழம்பத் துள்மகிழ்ந் தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே`.(தி.5 ப.64 பா.4) `நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும் ஓடு மாலினோ டொண்கொடி மாதரா மாட நீள்மரு கற்பெரு மான்வரில் கூடு நீஎன்று கூட லிழைக்குமே `. (தி.5 ப.88 பா.8) `இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக் காட்டுமேற் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடுங் கூட்டுமேற் கூடலே கூடு. (தி.11 கைலைபாதி. காளத்திபாதி. 90). கூடற்சுழியில் வழுநேரின் வாரான் என்று தோன்றிற்று. தோன்றவே, `வாரானே ஆயிடினும் கோடு இயை சேவடியாய்` எனக் கூடற்றெய்வத்தை வேண்டினாள். (நான்முகன் திருவந்தாதி 39. திருவிருத்தம் 34; கம்பர். உண்டாட். 33; விபீடணப் 28; அகநா. 351; கலி. நெய்தல். 25 உரை; ஐந்திணை ஐம்பது. 43; சீவக. 1037-38; கலிங்கத்.51; நைடதம். கைக். 6; சீகாழிக்கோவை. 308; அம்பிகாபதி. 322; குலோத்துங்க. 258; மாறந். 286 என்னும் இடங்களிலும் இத்துறைக் கருத்துண்டு) `சேவடியாய் கோடு இயை` என்பதற்கு, `சேவடியை அடைந்த அநுபவம் உடையவனே, மலையை அடைவாய்` என்றுரைத்து, இருள்வரின் தலைவன் வருவான்; பிறை விரைவில் மேற்கு மலைக்கண் இயைந்து மறையின், இருள் பரவும் எனக் கருதியும், பிறையே மறையாயேல், மீண்டும் சிவனடிக்கீழே தேய்ப்புறுவாய் என்று அச்சுறுத்தியும் நின்றதாகக்கொள்ளலும் ஆகும். `தக்கன்றன் வேள்வியினில் சந்திரனைத் தேய்த்தருளி` யதால், அவனைச் சேவடியாய்` என்று விளித்தாள். அடியார்க்கு முடிப்பூ. அல்லார்க்குத் தேய்ப்பு. முடிமேற் கிடக்கற்பாலை நீ. அடிக்கீழ்த் தேய்ப்புண்டாய். இனி, இனிதே உற எண்ணுவையேல், மலைக்கோடு இயைவாய் என்றாளுமாம். `மணிநிற மையிருள் அகல நிலாவிரிபு கோடு கூடுமதியம் இயலுற்றாங்கு` என்புழி (பதிற். 31:- 11-2)க் கொள்ளும் பொருள் வேறு. அதற்குள்ள பழைய குறிப்புரையை யுணர்ந்துரைத்தல் பொருந்தும். மதி கோட்டின்கண் நிலவும், பிறை கோடுகூடின் இருளும் பரவும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

விடகிலே னடிநாயேன் வேண்டியக்கா லியாதொன்றும்
இடகிலே னமணர்கள்த மறவுரைகேட் டலமந்தேன்
தொடர்கின்றே னுன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றே னையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

கீழான நாய் போன்ற யான் பொருட்பற்றை விடுவேன் அல்லேன் . வறியவராய் என்னிடம் இரந்து வந்தவர்களுக்கு யாதொன்றும் பிச்சையாக இடுவேன் அல்லேன் . சமணத்துறவியரின் அறவுரைகளைக்கேட்டு மனம் சுழன்றேன் . உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைத் தரிசித்து வழிபடத் தொடர்ந்து அடைகின்றேன் . ஐயாறனாகிய உனக்கு அடிமைப்பட்டேனாய் அடியேன் கடைத்தேறினேன் . இனி உன் திருவடிகளை விடமாட்டேன் .

குறிப்புரை :

ஐயாறர்க்கு - திருவையாற்றப்பனார் திருவடிக்கு . அடி நாயேன் , விடகிலேன் - விடமாட்டேன் . பொருட்பற்றை விடகிலேன் . பிறர் யாதேனும் வேண்டியபோது யாதும் ஒரு சிறிதும் இடமாட்டேன் . அமணரது ( தருமோபதேசம் ) அறவுரையைக் கேட்டுத் தெளிவில்லாத கருத்தினனாய்க் கலங்கினேன் . உன்னுடைய தூய தாமரை மலர் போன்ற செய்ய திருவடியைக் கண்டு வழிபடத் தொடர்ந்து அடை கின்றேன் . இம்மீளா அடிமையாகின்ற நான் உமக்கே ஆளாய் ( விட்டதால் ) இனிப் பிறவிப் பெருந்துன்பத்தினின்றும் உய்தி பெற்றேன் . ` ஐயாறர் ` என்பதிலே உள்ள ரஃகான் ஒற்று , பலரறி சொல்லிற்குரியதன்று . ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி ( உயர் சொல் ) ஆதலின் , ஐயாறனாகிய நினக்கு ஆளாய் உய்ந்தேன் என்று முன்னிலைக் கேற்பவுரைக்கலுமாம் . ஈற்றுப் பாடலிரண்டும் , ` ஐயாறர் ` என்பது சிவபிரானையே குறித்தலின் , முன்னைய எட்டுப் பாடலிலும் ` ஐயாறர் ` என்பது அடியார் முதலியோரைக் குறித்தலும் கூடும் என்பது பொருந்தாது .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்குற் கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழு மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

செம்பவளம் போன்ற அழகிய வடிவினராய் , ஒளி வீசும் குழைகளை அணிந்தகாதினராய் , கொம்பினை விரும்பிப்படரும் கொடி போன்ற இடையையும் திரண்டவளையல்களையும் உடைய பார்வதியின் பாகராய் , புதிதாக மலரும் கொன்றைப்பூவை வளரும் சடைமேல் வைத்து உகப்பவராகிய அழகிய பவளம் போன்ற நிறத்தையுடைய ஐயாற்றெம்பெருமானுக்கு அடியேன் அடிமையாகிக் கடைத்தேறினேன் .

குறிப்புரை :

செம்பவளம் இயைபின்மை நீக்கிய அடை . ` செம் பவளத்திரள் போல்வான் ` ( தி .6 ப .24 பா .4). ` பவளம் போல் மேனியிற் பால்வெண்ணீறு .` ` எரிபவள வண்ணன்காண் ` திகழ் சோதி - விண்மீன் போல விட்டு விட்டோளிரும் ஒளியை உடைய ( குழை ). ` குழைக் காதர் ` - ` குழைத்திகழ் காதினன் ` ( தி .4 ப .107 பா .5)` குழையார் திருத்தோடு காதிற் கண்டேன் ` ( தி .6 ப .77 பா .7) ` குழைகொள் காதினர் ` ( தி .5. ப .38 பா .1) ( கொம்பமருங் ) கொடி மருங்குலுக்கு (- இடைக்கு ) ஒப்பு . கோல் வளையாள் - அழகிய வளையலை அணிந்த அம்மையார் . வம்பு - மணம் . அம் - அழகிய . பவள ஐயாறர் :- ஆற்றிற்குப் பவளம் அடையாதலும் ஐயாறர்க்கு ஒப்பாதலும் பொருந்தும் . ` சோதிக்குழை ` எனலும் பாடம் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

அருகிலும் சேய்மையிலும் உள்ளவனே ! பொன்மயமான ஆடையை உடையவனே ! தோலாடையையும் உடையவனே ! பொடியாகிய வெண்ணீறு அணிந்தவனே ! சிந்தாமணி போல்பவனே ! தேவர்களுக்கும் பிணியைத்தீர்க்கும் மருந்தாகி நெருங்கியிருப்பவனே ! ஐயாறனாகிய உனக்கு அடிமையாய் அடியேன் கடைத்தேறினேன் .

குறிப்புரை :

நணியானே - அருகிலிருப்பவன் . சேயன் - சேய்மையில் ( தொலைவில் ) இருப்பவன் . அணியன் சேயன் . நண்ணற் கெளியவன் அரியவன் என்னும் இருதிறமும் உடையவன் என்றவாறு . ` காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் ` ( தி .6 ப .23 பா .1) ` நணுகாதார் ` ` நண்ணார் ` முதலியவற்றின் முதனிலையை உணர்ந்து , நணியான் ` என்பதற்கு உரைத்துக்கொள்க . ` அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன்கான் சேயவன்காண் ` ( தி .6 ப .48 பா .8) ` வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை `( தி .6 ப .50 பா .4) ` மெய்த்தவன்காண் மெய்த் தவத்தின் நிற்பார்க்கெல்லாம் .` ( தி .6 ப .52 பா .8) ` விருப்பிலா இருப்புமன வினையர்க்கு என்றும் பொய்த்தவன்காண் ` ( தி .6 ப .48 பா .4) ` மெய்யர் மெய்நின்றவர்க்கு , அல்லாதவர்க்கு என்றும் பொய்யர் `, ` அஞ்சடக்கும் அடியவர்கட்கு அணியார் `, ` அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி ` ( தி .6 ப .56 பா .2) ` சேயவன்காண் நினையார்க்கு ; சித்தம் ஆரத் திருவடியே உள்கி நினைந்தெழுவார் உள்ளம் ஏயவன்காண் .` ( தி .6 ப .64 பா .4) ` பழித்தவன்காண் அடையாரை , அடைவார் தங்கள் பற்றவன்காண் .` ( தி .6 ப .64 பா .6) ` மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு , விரும்பாத அரும்பாவியவர்க்கு என்றும் பொய்யானை ` ( தி .6 ப .66 பா .5) ` துரிசறத் தொண்டு பட்டார்க்கு எரியானை , யாவர்க்கும் அரியான் தன்னை ` ( தி .6 ப .66 பா .9) ` பத்தர் பத்திக்குளைவானை அல்லாதார்க்குளையாதானை ` ( தி .6 ப .67 பா .3) என்பவற்றால் , ஈண்டுப் பொருள்கொள்ளும் ஆறு நன்கு விளங்கும் . செம்பொன்னின் துணியானே - பீதாம்பரத்தவனே . ( துணி , கிழி , ஆடை , அறுவை , வேட்டி முதலிய பலவும் ஒரு பொருட்பெயர்கள் .) பிணி தீர்க்கும் அணியானே :- ஆணவப் பிணி அகற்றி ஆட்கொள்ள உயிர்கட்கு உள்ளுயிராய்ப் பொருந்தியவனே . ` உள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது .... திரிமலத்தே குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினனே .` ( கொடிக் கவி .1) ` ஆரேனும் அடியவர்கட்கு அணியான்றன்னை ` சுண்ணம் - பொடி . வானவர் - வீட்டுலகை நாடியவர் . மருந்து - சிவஞானம் சிவாநந்த அமிர்தமுமாம் . பிணி - மும்மல நோய்ப் பிணி . நோதலால் நோய் . பிணித்தலாற் பிணி . ` அணியான ` எனலும் பாடம் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

ஊழித்தீ யாய்நின்றா யுள்குவா ருள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

உலகத்தை அழிக்கும் ஊழித்தீயாய் நின்றவனே ! விரும்பித்தியானிப்பவர் உள்ளத்தில் உள்ளவனே ! உடம்பகத்து இருந்து உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத முத்தீயாய் இருப்பவனே ! வாழ்த்தும் அடியவர் வாயில் உள்ளவனே ! பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி பெரிய தீத்தம்பமாக நின்றவனே ! பரவிய சடையின் மேல் , உலகத்தாருக்குக் குளிர்ச்சி தரும் சந்திரனாய் , தலைவனைப் பிரிந்த தலைவிக்குக் கடலின் உள்ளிருக்கும் குதிரை முகத்தீப்போல வருத்தும் பிறையைச் சூடியவனே ! ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

குறிப்புரை :

ஊழித் தீயாய் நின்றாய் :- பிரளய காலாக்கினியாய் இருந்து உலகங்களை அழிக்கும் அத்துணைப் பரியாய் ஆயினும் , உள்கிநினைந்து எழுவார் உள்ளத்தில் உறையும் அத்துணை நுண்ணியனும் ஆனாய் . ` பெரியதிற் பெருமையும் சிறியதிற் சிறுமை யும் உரியது நினக்கே உண்மை பெரியோய் எனக்கு இன்று ` ( இருபா இருபஃது 6 ) ` பரியர் நுண்ணியர் ` ( தி .5 ப .27 பா .5) ` அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனை .... பெரியானை ` ( தி .6. ப .1 பா .1) ` சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ `, ` அணுத்தரும் தன்மையில் ஐயோன் ( நுண்ணியன் ) காண்க . இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க ` ` அண்டப் பகுதியின் ........ விரிந்தன ........ அணுப்புரையைச் சிறிய ஆகப் பெரியோன் `. ( தி .8 திருவாசகம் .3). ` அண்டமோரணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் உண்ட ஊண் உனக்கு ஆம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதீ !` ( தி .9 திருவிசைப்பா .138) தீயாய் நின்றாய் எனினும் வாழ்த்துவார் வாயானாகிக் குளிர்விக்கின்றாய் . தீவண்ணனாயினும் செஞ் சடைமேல் வெண்மதியம் சூடினை . மகாசங்கார காலத்திலே ` ஊழிமுதல்வனாய் ` நின்ற ஒருவன் அன்றி , ஏனைய கடவுளர் எல்லோரும் அவ்வொருவனிடத்தில்தான் ஒடுங்குதல் வேண்டும் . அப்பொழுது , எல்லா வுலகங்களையும் அழிப்பது ( ப்ரளயாக்நி ) ஊழித்தீ . அத்தீயாய்ப் புறத்தே நின்றாலும் உள்குவார் உள்ளத்திலே ( அகத்தே ) யும் நிற்கும் ஈரியல்பும் வல்லான் . இது புறத்தீ . வாழித்தீ என்பது உடம்பகத்துள் இருந்து உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத முத்தீ . உடலில் என்றும் முத்தீ உள்ளன . பிரச்நோபநிஷத் . 4:- 3. அபாநன் காருகபத்தியம் . பிராணன் ஆகவனீயம் . வியாநன் தாக்கிணாக்கினி . அவற்றால்தான் உடல் வாழ்க்கை உயிர்க்குள்ளதாகின்றது . உடம்பில் உயிர் இனிது வாழ்வதாயின் , வாழவைத்தருளுங் கடவுளை வாழ்த்தும் . அவ் வாழ்த்தும் வாயிலே அக்கடவுள் சொல்லுருவாய் நின்று வாழ்த்து வித்து வாழ்த்துவான் . ` வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை `. உடம்பில் ஆகவநீயம் , காருக பத்தியம் , தாக்கி ணாக்கினி என்னும் முத்தீ இருந்து உயிர்க்கு வாழ்வளிப்பதால் ` வாழித்தீ ` என்றார் . அழிப்பது ஊழித்தீ . காப்பது வாழித்தீ . படைப்பது பாழித்தீ . பாழி - பெருமை . மாலும் அயனும் அஞ்சப் பெருகியதீ . ` நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பு ` ( தி .8 திருவாசகம் . 440) ஆழியினி ( கடலினி ) ன்றெழும் நெருப்புருண்டை போல்வ தாலும் , ஒளியுடைமையாலும் , காதலர் பிரிவாற்றாமைத் துன்பத்தை வளர்க்குந்தீ எனலாலும் பிறை மதியம் ` ஆழித்தீ ` எனப்பட்டது . மதியமாகிய ஆழித்தீயைப் படர்சடைமேல் ( உடைய ) ஐயாறர் என்க . மதியமும் ( செங்கதிராகிய ) ஆழித்தீயும் என்றுமாம் . எட்டுருவ ( அட்டமூர்த்த ) த்தில் இருசுடரும் அடங்குதல் காண்க .` திங்களாய் ஞாயிறாகி ` ` ஞாயிறும் தண்மதியும் ஆகி ` ` பால் மதியோடாதியாய் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

சடையை உடையவனே ! சடையில் தவழும் பிறையைச் சூடியவனே ! காளைவாகனனே ! காளை மீது இவர்ந்து முப்புரங்களையும் எரியச்செய்த திறமை உடையவனே ! எல்லோரையும் அடிமையாக உடையவனே ! மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் பிச்சை உணவுக்கு அலைபவனாய் எல்லோரும் அடையத்தக்க சரணியனே ! ஐயாறனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேனே .

குறிப்புரை :

சடையான் ; சடைமேல் தவழும் குளிர்வெண்டிங்களான் ; விடை ( யின் மேல் வருவது ) உடையான் . விடையேறித் திரிபுரம் எரித்த ஞான சொரூபன் . ` முப்புரமாவது மும்மல காரியம் ` என்பது தமிழ்ச் சிவாகமம் ஆகிய திருமந்திரம் . உடையானே - சுவாமீ ! ஊர் ஊர் - ஊர்தொறும் . உண்பலிக்கு ஊர் ஊர் ( ஊர்தொறும் ) உழலும் . அடையான் - எவ்வுயிர்க்கும் தானே சரணியன் . உழலும் பொருட்டு அடையத் தக்கவனல்லன் எனலும் ஆம் . ` அடை ` முதனிலைத் தொழிற்பெயர் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே யுலகானே யுடலானே யுயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

` நீரும் நெருப்பும் செல்வமும் செல்லும் வழியும் ஊரும் உலகமும் உடலும் உயிருமாகி இருப்பவனே ! பலதிரு நாமங்களை உடையவனே ! பிறை சூடியே ! பிணிகளைப் போக்கும் பெருமானே !` என்று பலகால் அழைத்தும் ஆர்வம் அடங்கப் பெறாது மேன்மேல் வளர்ந்து வரும் நிலையில் அடியேனை ஆட்கொண்டு அருளும் ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேன் .

குறிப்புரை :

நீரும் , நெருப்பும் , நிதியும் , செலவும் , ஊரும் , உலகும் . உடலும் , உயிரும் ஆயிருப்பவன் . ` பிறைசூடீ ` என நெடிலாகக் கொள்க . ` பித்தாபிறைசூடீ எனப் பெரிதாந் திருப்பதிகம் ` ( தி .12 பெரிய ). பிணி - மும்மலப்பிணி , ஊனுடற்பிணியுமாம் . ஆராத ஐயாறர் - ஆர்வம் அடங்கப் பெறாது மேல்மேல் வளர்த்துவரும் நிலையில் என்னை ஆட்கொண்டருளும் ஐயாறப்பர் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

கண்ணானாய் மணியானாய் கருத்தானா யருத்தானாய்
எண்ணானா யெழுத்தானா யெழுத்தினுக்கோ ரியல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் , அக நோக்கத்திற்கு உரிய கருத்தாகவும் , நுகர்ச்சியாகவும் , எண்ணாகவும் , எழுத்தாகவும் , எழுத்தின் இயல்பாகவும் , பரவெளியாகவும் , வானத்தில் இயங்கிய மும்மதில்களை அழித்த வேதியனாகவும் , அடியேனுக்கு நெருங்கியவனாகவும் உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

குறிப்புரை :

கண்ணும் மணியும் புறப்பார்வைக்குரியன . கருத்தும் அருத்தும் அகநோக்கத்திற்குரியன . அருத்து - நுகர்ச்சி . அருந்து - அருத்து . பொருந்து - பொருத்து . திருந்து - திருத்து . இவை அம் ஈறு உற்று அருத்தம் , பொருத்தம் , திருத்தம் என்றாகும் . ` அருத்தம் ` என்ற வடசொல் வேறு . எண்ணும் எழுத்தும் எழுத்தியல்பும் ஆனாய் என்பன , நாதம் , விந்து , விந்து காரியங்களின் இயல்பு உணர்த்தியன . ` எண்ணென்ப ஏனை எழுத்தென்ப ` என்ற குறட்பொருளும் ஆம் . விண் - வெளி . முப்புரம் எரித்த மறையவன் சிவபிரான் . அண்ணான் அவ்வையாறர்க்கு . யாவர்க்கும் அண்ணாதவன் . ` அண்ணலாகா அண்ணல் நீழல் ஆரழல் போலுருவம் ` ( தி .1 ப .49 பா .9) ` உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளம்தான் பாயாதால் ` ( தி .8 திருவாசகம் .) அண் ஆன - அண்ணுதல் ஆகிய எனலும் அப்பரை நோக்கிற் பொருந்தும் . அண் - அண்மை . அணிமையிலுள்ள ஐயாறர்க்கு .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

மின்னானா யுருமானாய் வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானா ரிருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

மின்னாகவும் இடியாகவும் வேதத்தின் பொருளாகவும் , பொன்னாகவும் மணியாகவும் அலைகள் மோதும் கடலில் உள்ள முத்தாகவும் உள்ளவனே ! நின்னைப் போலத் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய பிரமனும் திருமாலும் காணமுடியாத உயர்ந்த தீப்பிழம்பாய் நின்ற அத்தன்மையனே ! இவ்வாறு உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

குறிப்புரை :

மின்னும் அம்மின்னுருமும் ஆனாய் . ` மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் ` ( திருத்தாண்டகம் ). ` மின்னானை மின்னிடைச்சேர் உருமினானை வெண்முகிலாயெழுந்து மழை பொழிவான்றன்னை ` ` அளவில் சோதி மின்னவன்காண் உருமவன் காண் ` கடிய உருமொடு மின்னே போற்றி ` என்ற தாண்டகப் பகுதிகளை நோக்கின் , ` உருவானாய் ` என்றது பிழை எனல் புலப்படும் . வேதப்பொருள் :- வாசகம் வேதம் . வாச்சியம் சிவபிரான் . பொன் மணி முத்து ஆனாய் :- ` இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே .` ` பொன்னானாய் மணியானாய் நின்னானார் :- ` யான் கடவுள் ` எனத் தனித்தனி நீயானார் . காண்பு - காண்டல் . அரிய சோதி . நிமிர் சோதி . ` காண்பினிய செழுஞ்சுடர் ` ` நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய் ` சோதி அன்னான் - அனலுருவாகிய அவ்வளப்பரிய தன்மையன் . ஒத்தவனுமாம் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்க ளெம்பெருமா னெனவிறைஞ்சும்
அத்திசையா மையாறார்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

முத்துக்களோடு கூடிவரும் காவிரியின் வெள்ளம் , செறிந்த பவளங்களை அரித்துக் கரைசேர்க்க , பத்தர்பலர் காவிரி நீரில் மூழ்கிப் பலகாலும் வணங்கித்துதிக்க எல்லாத் திசைகளிலும் தேவர்கள் ` எம்பெருமான் !` என்று கூப்பிட்டவாறே வழிபடும் அத்திசைகளில் எல்லாம் அவர்கள் வழிபாட்டை ஏற்கும் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

குறிப்புரை :

முத்து இசையும் புனல் பொன்னி மொய்பவளம் கொழித்து :- காவிரி முத்துக்களையும் பவளங்களையும் கொழித்து வருஞ் சிறப்புணர்த்திற்று . பத்தர் :- ` பத்துடையடியவர் ` என்றதால் , திருவடிப்பற்று ( பத்து . மரூஉ ) உடையவர் . பத்தர் எனலுமாம் . பலகால் :- காலை , மாலை , நடுப்பகல் , நள்ளிரவு , ஒருபோது , இரு போது , முப்போதும் , நாற்போதும் , எப்போதும் எனத் திருமுறைகளிற் பயின்றவாறறிக . எத்திசையும் எம்பெருமான் என்று போற்றி வழிபடும் வானவர்கட்கு அத்திசையில் நின்று அருளும் ஐயாறர்க்கு ஆளாய் உய்ந்தேன் . அத்திசையே யாகும் ஐயாறர் எனலும் ஆகும் .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலா லுதைகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி யென்றேத்தும்
அருவரைசூ ழையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

பொழிப்புரை :

கடலிடையே பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகர் மன்னனாகிய இராவணனை அவன் எண்ணம் அழியுமாறு திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்த சிவமூர்த்தியாய் , பெரிய கடலால் சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும் , பெரிய மூங்கிற் காடுகள் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானுக்கு , அடியேன் அடிமையாகிக் கடைத்தேறினேன் .

குறிப்புரை :

கருவரை - பெரியமலை . கோமான் - கோமகன் . கருத்து ` யானே எல்லாம் செய்ய வல்லேன் ` என்னும் செருக்கு . திருவிரல் - திருக்காற் பெருவிரல் . உதைகரணம் - உதைத்தலாகிய செயல் . உகந்த - உயர்ந்த . சிவமூர்த்தி :- ` சிவனாய மூர்த்தி `. பெருவரைசூழ் வையகத்தார் :- பனிமலை முதலிய பெரிய மலைகள் சூழ இடைப்பட்டு நிலவும் மண்ணகமாகிய பரதகண்டத்துச் சிவனடியார்கள் நந்தி என்று பேரிட்டு ஏத்தும் ஐயாறர் . அருவரை :- அளவிடற்கு அரிய மூங்கிற் காடு முதலியவை . ஐயாற்றைச் சூழ்ந்து மலைகள் உளவோ ?

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

பருவரை யொன்றுசுற்றி யரவங்கைவிட்ட விமையோரிரிந்து பயமாய்த்
திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை யருளாய்பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட வவனண்டரண்ட ரரசே.

பொழிப்புரை :

பெரிய மலையைச் சுற்றிக் கடைகயிறாகக் கொண்ட பாம்பினை விடுத்து நீங்கிய தேவர் ஓடி அஞ்சும்படியாகத் திருமால் திருமேனியை ஒழித்தற்பொருட்டும் , விண்ணைச்சுடும் பொருட்டும் எழுந்து விசையொடு சென்று அந்நஞ்சு எங்கும் பரவ , ` பெருமானே ! இவ் விடத்துன்பம் நீங்குதற்கு ஒரு கழுவாய் அருளிச்செய்வாயாக ` என்று எல்லோரும் வேண்டவும் அருளினால் , அப்பெரிய விடத்தை , மற்றவர்களைத் தாக்காதவாறு உண்ட பெருமானே எல்லா அண்டங்களுக்கும் அரசனாவான் .

குறிப்புரை :

பருவரை - மந்தரமலை , மேரு எனலுமுண்டு . அரவம் - ` வாசுகி ` என்னும் பாம்பு . கைவிட்ட இமையோர் :- நஞ்சு எழுதல் கண்டு அஞ்சிக் கடைதலைக் கைவிட்டு இரிந்தோடிய விண்ணவர் . பிரானே இதற்கு ஒரு பிரதிகாரம் ( பிதிகாரம் , கழுவாய் ) அருள் செய்வாய் என்று வேண்டினர் . அவர் வேண்டியவாறு நல்கியருள இறைவன் திருவுள்ளத்திற் பேரிரக்கம் கொண்டான் . கொண்டு , ` கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டால் என்ன ஆகும் என்று கருதாமல் அதனை உண்டும் நின்றான் . உண்ணற்கரிய நஞ்சை உண்டதால் , ஒருதோழம் தேவர் எரியாமை விண்ணிற் பொலியலாயினர் ( தி .1 ப .74 பா .7). திருநெடுமால் திருமேனியை ஒழித்தற் பொருட்டும் , விண்ணைச் சுடும் பொருட்டும் , எழுந்து விசையொடு சென்று பெருகிய அந்நஞ்சு , தன்னைக் கண்டு அஞ்சி ஓடிய இமையோர் முதலோரை எரிக்குமேயன்றித் திருநீலகண்டனை எரிக்குமோ ? பிறரை எரியாமல் அந்நஞ்சினை உண்ட அவனே தேவதேவேசன் . அண்டர் - தேவர் . அண்டரண்டர் - தேவதேவர் . அண்டரண்டரரசு - தேவதேவேசன் . சுற்றிக் கைவிட்ட இமையோர் இரிந்து ஆய் , அடுவான் சுடுவான் எழுந்துபோய்ப் பெருகிட அருளாய் எனலும் , கொடு , உண்ட அவனே அரசு என்க . ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது . சரண் - புகல் . வெலற்கரிய செயலாற்றி வென்ற திறம் தோன்ற வெற்றிக்கொடி தூக்கினன் என்ன ; ` உண்ணற்கரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் விண்ணிற் பொலிய அமுதம் அளித்த விடைசேர் கொடியண்ணல் ` என்று அருளினார் ஆளுடைய பிள்ளையார் . ( தி .8 திருவாசகம் . 34, 219.)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்டமூட நிலநின்றுதம்ப மதுவப்
பரமொரு தெய்வமெய்த விதுவொப்பதில்லை யிருபாலுநின்று பணியப்
பிரமனு மாலுமேலை முடியோடுபாத மறியாமைநின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

பரவிய ஓசையை உடைய வெள்ளப்பெருக்கு மேற் சென்று நீண்ட கண்டங்களை மூழ்க்க , நிலத்திலே நின்ற தீத்தம்பத்தில் பரம்பொருளாகிய ஒப்பற்ற தெய்வம் அடைய , பிரமனும் திருமாலும் இதனை ஒத்த தீப்பிழம்பு முன்னும் இல்லை என்று கருதி அந்நாளில் இரு பக்கங்களிலும் நின்று பணியுமாறு அவர்கள் அதன் முடியையும் அடியையும் அறிய முடியாமல் நின்ற பெரியோனாய் மேம்பட்ட முற்பட்ட தேவனாம் சிவமூர்த்தியாகிய பெருமானே நமக்குப் பாதுகாவல் நல்கும் சரணியன் ஆவான் .

குறிப்புரை :

பெரியோன் சிவனாய பரமுதலாய மூர்த்தி . தேவர் சிவன் . மூர்த்தி என்க . நிரவொலி - நிரந்த (- பரவிய ) ஓசை . ஓங்காரநாதம் . ` நிரந்த பாய்மா - மாப்பரந்தன ` ( சிந்தாமணி . 1859 ). வெள்ளம் - பெருக்கு . மண்டி - மேற்சென்று . நெடு அண்டம் மூட - நீண்ட அண்டங்களை உட்படுத்த . தம்பமது நிலம் நின்று அப் பரம் ஒரு தெய்வம் எய்த - தூண் நிலத்தே நின்று அதிலே அப் பரம்பொருளாகிய ஒப்பற்ற தெய்வம் அடைய ; பிரமனும் மாலும் இது ஒப்பது இல்லை ( என்று ) இருபாலும் நின்று பணிய , அவ்விருவரும் முறையே மேலை முடியொடு பாதம் அறியாமை ( அழற்றூணாக ) நின்ற பெரியோன் பரமுதலாய தேவன் . சிவனா ( கி ) ய மூர்த்தி . ` தேவர் `:- ஐயாறர் ( தி .4 ப .13. பா .1) க்கு உரைத்தாங்கு உரைத்துக்கொள்க . நமக்கு ஒருபுகலாம் அவன் ஆ ( கு ) ம் . ஒரு கற்பத்திலே , பாற்கடலிற்றுயின்ற திருமாலுக்கும் அவனை மகனே என்றெழுப்பிய நான்முகனுக்கும் அதனாற் சொற்போர் விளைந்தது . அங்குச் சிவதாணு தோன்றிற்று . அதன் அடி முடி தேடியறியவல்லேன் என்றிருவரும் செருக்குற்று , மாற்பன்றி அடியையும் பிரமக்கழுகு முடியையும் தேடலாயின ; திகைத்தன . ஐந்து திருமுகத்துடன் ஓங்காரநாத வெள்ளம் அண்டமெல்லாம் பரவ , மூவர்கோனாய் நின்ற முதல்வன் , அத்தாணுலிங்கத்திலே காட்சி தந்து , அவர்க்குத் , தானே பரம் என்று காட்ட , அவர் இது ஒப்பது இல்லை என்று தெளிந்து வழிபட்டனர் . ( வாமன புராணம் ; சிவ மகாபுராணம் முதலத்தியாயம் பார்க்க ). ` பூவார் பொற்றவிசின் மிசையிருந்தவனும் பூந்துழாய் புனைந்த மாலும் ` கழுகுருக் கொண்ட உண்மை விளங்கும் ( தி .2 ப .32 பா .9. இரண்டாவது திருமுறையின் எம் குறிப்பை நோக்குக ). ` ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உறநாடி உண்மைகாணாத்தேவாரும் திருவுருவன் ` ( தி .1 ப .131 பா .9) ` ஏனம் கழுகானவர் உன்னை முன் என்கொல் வானம் தலம் மண்டியும் கண்டிலாவாறே ` ( தி .2 ப .37 பா .9) ` பருத்துருவதாகி விண் அடைந்தவன் ஓர் பன்றிப் பெருத்துருவதாய் உலகிடந்தவன் ` ( தி .2 ப .32 பா .9) ` புண்டரிகத்துள் இருந்த புத்தேள் கழுகுருவாய் , அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் பண்டொருநாள் , காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறிபோற்றி ` ( 11, நக்கீரர் , போற்றித் திருக்கலி வெண்பா . ) என்பவற்றால் , அயன் ` பிரமனரி என்றிருவரும் தம்பேதைமையால் பரமம் யாம்பரம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகிநின்றவா தோணோக்கம் ஆடாமோ .` ( தி .8 திருவா . 326) மகாவிட்டுணுவும் பிரமதேவனும் சிவஞான உண்மையாகிய திருவடியே எல்லாத் தேவர்கட்கும் உயிர்ப் பிரேரக மகாதேவன் எனத் தெரியாது ... ... தாமே பரப்பிரமம் என வாதம் கூறி அமரிட்டனர் . ( தாண்டவராய சுவாமி உரை ).

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

காலமு நாள்களூழி படையாமுனேக வுருவாகிமூவ ருருவில்
சாலவு மாகிமிக்க சமயங்களாறி னுருவாகிநின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழுமுண்டு குறளாயொராலி னிலைமேல்
பாலனு மாயவற்கொர் பரமாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

நாண்மீன்கள் முதல் ஊழி முடியப் பாகுபட்ட காலத்தையும் படைத்தற்கு முன்பு ஒன்றாய் நின்றவனாய் , மும் மூர்த்திகள் உருவிலும் அவர்கள் உயிருக்கு உயிராய் அமைந்தவனாய் , அறுவகைச் சமயத்தோருக்கும் அவ்வவர் பொருளாய் விளங்கி நிற்பவனாய் , உள்ள சோதி வடிவான பெருமான் வாமனனாகி மண்ணும் மேலை விண்ணுலகும் அடங்கிய ஏழுலகமும் உண்டு , ஓர் ஆலிலை மேல் சிறு குழந்தையாய்ப் பள்ளி கொண்ட திருமாலுக்கும் மேம்பட்ட மூர்த்தியாய் உள்ளவன் . அவன் தான் நமக்கு ஒப்பற்ற சரணியன் .

குறிப்புரை :

நாள் ( அசுவினி முதலியவை ) முதல் ஊழி முடியப் பாகுபட்ட காலத்தையும் படைத்தற்கு முன்பு ஒன்றாய் நின்றவன் ; மூவர் உருவிலும் அவர் உயிர்க்குயிராய் அமைந்தவன் ; ` அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் ` விளங்கி நிற்பவன் . ` ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ` வடிவானவன் ; மண்ணும் மேலை விண்ணும் அடங்கிய ஏழு உலகும் உண்டு குறளனாய் ஓர் ஆலிலைமேலே பாலனாய்ப் பள்ளிகொண்ட திருமாலுக்குப் பரமாயதொருமூர்த்தி . அவன் நமக்குப் புகல் ஆவான் . தழலோன் பரமாய மூர்த்தி என்க . ` காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே ` ` காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய் ` ` கூறும் நாளாம் கொள்ளும் கிழமையாம் கோளேதானாம் ` ` கொண்ட சமயத்தோர் தேவனாகி ` ` வானோர் தங்கட்கு எல்லாம் காலனாம் ` ` ஆனாய் என்பது அனைத்தும் அவ்வவை தானாகாமையைச் சாற்றிடும் என்க ` ( சங்கற்பநிராகரணம் நிமித்தகா . பரி . நிரா . 80-81 ) என்றவாறு ஆகாத முன்னைய நிலைமை ஒன்று உண்டு . அவ்வொன்றே ` ஏக வுரு ` எனப்பெற்றது ` முன்னம் இருமூன்று சமயங்களவை ஆகிப் பின்னை அருள் செய்த பிறையாளன் ` ( தி .2 ப .29 பா .5) ` ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் ` ( தி .1 ப .131 பா .1) ` அறிவினான் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து ` ( தி .7 ப .55 பா .9). ` அவசங்கரா சலம்கொண்டு ` ( திருப்புகலூரந்தாதி . 95. )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

நீடுயர் விண்ணுமண்ணு நெடுவேலைகுன்றொ டுலகேழுமெங்கு நலியச்
சூடிய கையராகி யிமையோர்கணங்கள் துதியோதிநின்று தொழலும்
ஓடிய தாரகன்ற னுடலம்பிளந்தும் ஒழியாதகோப மொழிய
ஆடிய மாநடத்தெ மனலாடிபாத மவையாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

நெடிது உயர்ந்த விண்ணும் மண்ணும் நெடிய கடல் மலைகளொடு ஏழுலகமும் முழுதும் வருந்த வருத்திய தாரகனுடைய கொடுமைகளுக்கு ஆற்றாமல் தேவர் கூட்டத்தார் குவித்த கையராகிப் பெருமானுடைய புகழ்களைக் கூறியவாறு தொழுத அளவில் , தன் இறுதியை நினைத்து உயிர்தப்பி ஓடிய தாரகனுடைய உடலைப் பிளந்தும் நீங்காத கோபம் நீங்குதற்பொருட்டு மகாதாண்டவத்தை ஆடிய தீயாடியப்பருடைய திருவடிகளே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குவன .

குறிப்புரை :

நெடிதுயர்ந்த விண்ணும் மண்ணும் நெடிய கடல் மலைகளொடு , ஏழுலகு முழுதும் வருந்த வருத்திய தாரகன் கொடுமைகளுக்கு ஆற்றாமல் , தேவர் கூட்டத்தினர் , தலைமேற் குவித்து வணங்கித் தூவும்பொருட்டு மலர்களைக் கொண்டு சிவனடி சூடிய கைகளை உடையவராகிப் புகழ் பாடி நின்று தொழுதனர் . தொழுததும் , இனி நமக்கு முடிவுண்டாவது உறுதி (` தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் ` தி .12 பெரிய . 1981) எனத் தெரிந்து ஓடிய தாரகாசுரனது உடலைப் பிளந்தும் ஒழியாத சீற்றம் ஒழிதற்கு ஏதுவாகிய மகாதாண்டவத்தை ஆடிய தீயாடியின் திருவடிகளே நமக்கு ஒரு புகலாகும் . சிவபிரானுக்குரிய இது மற்ச புராணத்திலுள்ளது . கந்த புராணத்தினது முருகப்பிரானுக்குரியது . சூடுகழல் . 139. சித்தாந்தம் தொ .8 ப . 6 பக்கம் 121-2.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

நிலைவலி யின்றியெங்கு நிலனோடுவிண்ணு நிதனஞ்செய்தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி யரியோடுதேவ ரரணம்புகத்த னருளால்
கொலைநலி வாளிமூள வரவங்கைநாணு மனல்பாயநீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்தவள்ள லவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

எதிர்த்து நிலைத்து நிற்பதற்குரிய வலிமை இல்லாமையால் , மண்ணையும் , விண்ணையும் எங்கும் அழித்துக் கொண்டு சஞ்சரிக்கும் திரிபுரங்கள் துன்புறுத்தும் துயரத்துக்கு அஞ்சி ஓடித் திருமாலோடு தேவர்கள் அடைக்கலம் என்று அடையத் தன் அருளால் கொலைத் தொழிலால் வருத்தும் திருமாலாகிய அம்பில் தீக்கடவுள் இணையவும் , கையிலுள்ள வாசுகி என்ற பாம்பாகிய நாணில் தீப்பாயவும் மேருமலையாகிய வில் கையில் தளரவும் முப்புரங்களும் சாம்பலாகிவிடுமாறு வில்லை வளைவித்துச் செயற்படுத்திய அருட் கொடையாளனாம் அப்பெருமானே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .

குறிப்புரை :

நிலைக்கும் வலிமை இல்லாமல் , மண்ணோடு விண்ணெங்கும் அழிவு செய்தோடும் முப்புரம் அலைக்கும் வருத்தத்தை அஞ்சித் திருமால் முதலிய தேவர் யாவரும் காவலானதோரிடத்திற் புக்கொளிய , தன் இரக்கத்தால் , கொலைத் தொழிலால் வருத்தும் மால்கணை கூரெரிகொள்ளவும் கையில் உள்ள வாசுகி நாணின் அனல் பாயவும் மேரு மலை ( யாகிய ) வில் கையில் தளரவும் வளையச் செய்த அருட்கொடையாளனாகிய அவன் நமக்கு ஒரு புகலாவான் ; இது முப்புரம் எரித்த மாண்புணர்த்திற்று . ` அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் , முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் , முப்புரமாவது மும்மல காரியம் , அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே .` ( தி .10 திருமந்திரம் . 343) நிதநம் - அழிவு . நிதனம் - திரிபு . ( அமரம் - க்ஷத் - சு .116) ( கீதை - 3 35)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

நீலநன் மேனிசெங்கண் வளைவெள்ளெயிற்ற னெரிகேச னேடிவருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடுசெய்யு மளவின்கண்வந்து குறுகிப்
பாலனை யோடவோடப் பயமெய்துவித்த வுயிர்வவ்வுபாசம் விடுமக்
காலனை வீடுசெய்த கழல்போலுமண்டர் தொழுதோதுசூடு கழலே.

பொழிப்புரை :

கருநீல மேனியனும் சிவந்த கண்ணினனும் வளைந்த வெள்ளைக் கோரப் பற்களை உடையவனும் நெருப்புப் போன்ற சிவந்த மயிர் முடியை உடையவனும் ஆகிய காலன் , மார்க்கண்டேயனைத் தேடிவந்த அன்று , அம்முனிவன் காலையிலே நல்ல மலர் மாலைகளைக் கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்த நேரத்தில் அவனிடத்து வந்து அணுகி அவனை மிகவும் அச்சுறுத்தி அவன் உயிரைக் கவரக்கயிற்றை வீசினானாக , அக்காலனை உதைத்து அழித்த சிவபெருமான் திருவடிகளே தேவர்கள் தொழுது வாழ்த்தித் தலைமேல் சூடும் திருவடிகளாகும் .

குறிப்புரை :

காலன் கரியமேனியன் . செங்கண்ணன் . வளைந்த வெள்ளைக் கோரப் பல்லினன் . தீயைப்போலும் குஞ்சியன் . ( தி .2 ப .18 பா .9) மார்க்கண்டேய முனிவரைத் தேடி வருகின்றான் . அந் நாளிலேயும் , வழக்கம்போல் , காலையில் நல்ல ( மணமலர் ) மாலை ( முதலிய பூசைக்குரிய பொருள்களைக் ) கொண்டு வழிபாடு ஒழிபாடு இன்றிச் செய்து கொண்டிருக்கின்றார் அம்முனிவர் . அவ்வளவில் அக்காலன் வந்தணுகினான் . காலனார் அப்பாலனாரை அச்சுறுத்தி , அவ்விடத்தின் நீக்கி ஓட்ட , உயிரைக் கவரும் கயிறு வீசினான் . அவனைக் காலால் வீசினான் கடவுள் . அக்கடவுளின் கழற்காலே வானோர் வாழ்த்தி வணங்கித் தலைமேற் சூடும் மலர்க்கழல் . காலக் கடவுள் வாழ்த்தாகப் பதிற்றுப்பத்தின் காப்பெனப்படுவது ஒன்றுண்டு . அஃது ஈண்டு நோக்கற்பாலது . 1. ` எரியெள்ளுவன்ன நிறத்தன் ; 2. விரியிணர்க் கொன்றையம் பைந்தார் அகலத்தன் ; 3. பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் ; 4. பயில் இருட்காடு அமர்ந்து ஆடிய ஆடலன் ; 5. நீடிப்புறம்புதை தாழ்ந்த சடையன் ; 6. குறங்கு அறைந்து வெண்மணி ஆர்க்கும் விழவினன் ; 7. நுண்ணூற் சிரந்தை இரட்டும் விரலன் ; 8. இரண்டு உருவாய் ஈர் அணிபெற்ற எழில் தகையன் ; 9. ஏரும் இளம் பிறை சேர்ந்த நுதலன் ; 10. களங்கனிமாறு ஏற்கும் பண்பின் மறுமிடற்றன் ; 11. தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக்கடவுட்கு உயர்கமா வலனே .` இது சாவா நலம்பெற விரும்புவார்க்கு உள்ளற்பாடல் ( தியாந சுலோகம் ) ஆகும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

உயர்தவ மிக்கதக்க னுயர்வேள்விதன்னி லவியுண்ணவந்த விமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனுமுற்ற படிகண்டுநின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமையாதி கமியென்றிறைஞ்சி யகலச்
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணனெந்தை கழல்கண்டுகொள்கை கடனே.

பொழிப்புரை :

தவத்தில் மேம்பட்ட தக்கன் நிகழ்த்திய மிகச் சிறப்பான வேள்வியில் அவியைப் பெற்று உண்ண வந்த தேவர்களும் அச்சம் மிக்குற்ற வேள்வித் தலைவனும் அக்கினியும் சந்திரனும் ஒறுக்கப்பட்டு அடைந்த நிலைமையை நோக்கி அச்சத்தோடு நின்று பிரமனும் , திருமாலும் , ` எங்கள் அறியாமை முதலிய குற்றங்களைப் பொறுத்தருள்வாய் `, என்று வணங்கி அப்பாற் செல்ல , வெற்றியுற்ற தன்மையைக் கண்ட , தீயைப் போன்ற செந்நிறத்தன் ஆகிய எங்கள் தந்தையின் திருவடிகளைக் கண்டு வழிபடுவதே பிறவாதிருக்க விரும்பும் உயிர்களின் கடமையாகும் .

குறிப்புரை :

உயர்ந்த தவத்தில் மிக்க தக்கனது வேள்வியில் அவியுணவுகொள்ளவந்த வானவரும் அச்சம் மிக்குற்ற வேள்விக் கோவும் அக்கினியும் சந்திரனும் அடைந்த நிலை நோக்கி அஞ்சி நின்று பிரமனும் விண்டுவும் ` எங்கள் அறியாமை முதலிய குற்றங்களைப் பொறுத்தருள்வாய் ` என்று வணங்கி நீங்க , வெற்றியுற்ற தன்மையைக் கண்ட தீ வண்ணன் ஆகிய என் அப்பனுடைய திருவடியைக் கண்டு கொள்வதே ( பிறவாதிருக்க விரும்பும் உயிர்களின் ) கடனாகும் . அங்கி - தீ ; ( அக்நீ ). கமி - க்ஷமி , பொறு . சயம் - ஜயம் . கண்டுகொள்ளல் . ` உடையாய் என்னைக் கண்டுகொள்ளே ` ( திருவாசகம் . 5). ` கண்டுகொள் என்று காட்டிய ... ... சேவடி ` ( தி .8 திருவாசகம் . 583) ` கண்டுகொள் என்று உன் மெய்க்கழலடி காட்டிப் பிரியேன் என்றென்றருளிய அருள் ` ( தி .8 திருவாசகம் . 600). ` வண்டார் குழலியைக் கண்டுகொள் என்றது ( தி .8 திருக்கோவைக்கொளு 212) இது தக்கன் வேள்வி யழித்ததுணர்த்திற்று . இதனைத் தி .8 திருவாசகம் :- 189, 212, 259, 278, 289 ஆம் பாடல்களிலும் திருவுந்தியாரிலும் காண்க . 6. 53. 4; 6. 88. 2.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

நலமலி மங்கைநங்கை விளையாடியோடி நயனத்தலங்கள் கரமா
உலகினை யேழுமுற்று மிருண்மூடமூட விருளோடநெற்றி யொருகண்
அலர்தர வஞ்சிமற்றை நயனங்கைவிட்டு மடவாளிறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல வலர்வித்தமுக்க ணவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

அழகும் பண்பும் மிக்க பார்வதி எம்பெருமானோடு ஓடி விளையாடிய பொழுது அவனுடைய கண்களைக் கைகளால் பொத்த , ஏழு உலகங்களையும் முழுதுமாக இருட்டுக் கவர்ந்து கொள்ளவே , எம்பெருமானுடைய ஒற்றை நெற்றிக்கண் அந்த இருள் அகலுமாறு திறக்க , அதுகண்டு அஞ்சிப் பார்வதி கண்களை மூடிய கைகளை எடுத்துவிட்டு எம்பெருமானை வணங்க , சந்திரனைப் போலவும் , சூரியனைப் போலவும் ஏனைய இருகண்களையும் ஒளிவிடச் செய்த அம்முக்கண் மூர்த்தியே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .

குறிப்புரை :

நலம் - சிவம் . அழகுமாம் . மங்கை - சிவமணாட்டி . நங்கை - தெய்வநாயகி . நயனம் - கண் . தலம் - இடம் . அலர் தரல் - விரிதல் . மடவாள் - மடப்பம் உடையவள் . மதி - பூரண சந்திரன் . அலர்தரு சோதி - உதயசூரியன் . அலர்வித்த - ஒளிரச்செய்த . முக்கண் அவன் ஏ நமக்கு ஓர் சரண் ஆம் - முச்சுடரையும் முக்கணாக உடைய அம்முழு முதல்வனே அடிமைகளாகிய நமக்குத் தனிப்புகலாவான் . இருள் உலகினை மூடக் கரம் நயனத்தை மூட என்க . திருக்கண் புதைத்ததன் பயன் :- புவனமூன்றும் தவப்பயன் முற்ற , மண்ணைப் புகழ் மணக்க , தென்பால் முன்பால் வெல்ல , தமிழ்நாடு அமிழ்தாக , தொண்டைநாடு செழிக்க , காஞ்சியே கவின் வளம்சால , ஆறு சமயமும் வீறுபெற , உலகெங்கும் வைதிக சைவமே உயர்ந்தோங்கி நிற்க , எங்கணும் சிவ வழிபாடே ஒப்புயர்வில்லதென்று உலகம் உணர்ந்து தெளிந்துய்ய , அறமோங்க , மறம் நீங்க . உயிர் வளர , முப்பாலுள் முதலிருபாலும் எப்பாலும் தழைப்ப எப்பால் உலகத்தொளி யாவையும் , அப்பாலைக்கு அப்பாலானது தப்பா வழியின் ஒளிச் சால்பே என யாவரும் காண , அப்பார்சடையார் அடித்தொண்டர் அகம் களிப்ப , காதல் கைம்மிக்க குறிப்பின் விம்மிப் பணைந்து வீங்கிஎழுந்த கொம்மைப் பொம்மற் பிராட்டி , செம்மற்பிறை வேணியனார் வெரிந்புறத்து எய்தி , வல்லே திருக்கண் புதைத்தாள் . நாயகன்கண் நாயகி நயப்பால் புதைப்ப , எங்கும் பாய் இருளாகி மூடப்பெற்றது . நெற்றிக்கண் சுடரொளி கொடுத்தது . அஞ்சிய நாயகி அகற்றினள் கைம்மலர் . அல்கின ஒளிகள் , அஃகியது இருள் . மறைத்து நீக்கிய சிறு பொழுது உலகுக்கெல்லாம் சென்றன எண்ணில் ஊழி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

கழைபடு காடுதென்றல் குயில்கூவவஞ்சு கணையோனணைந்து புகலும்
மழைவடி வண்ணனெண்ணி மகவோனைவிட்ட மலரானதொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ விமையோர்கணங்க ளெரியென்றிறைஞ்சி யகலத்
தழல்படு நெற்றியொற்றை நயனஞ்சிவந்த தழல்வண்ணனெந்தை சரணே.

பொழிப்புரை :

கரும்புகள் காடுபோல வளர்ந்துள்ள கருப்பங் கொல்லையில் தென்றல் உலவ , குயில்கூவ , ஐந்துமலரம்புகளை உடையவனாய் நெருங்கி வந்து , தனக்குப் பக்க பலமாக இருப்பதாகக் கூறிய கார்மேக வண்ணனாகிய திருமாலையும் இந்திரனையும் விட்டு நீங்கிய , மலர் அம்புகளை விடுத்த மன்மதனுடைய அழகிய உடல் சாம்பலாகித் தரையில் விழ அதனைக் கண்ட தேவர் கூட்டங்கள் நெருப்பு என்று சொல்லி அஞ்சி நீங்குமாறு நெருப்பை வெளிப் படுத்தும் நெற்றியின் ஒற்றைக்கண் சிவந்த தீ நிறத்தவனாகிய எங்கள் தந்தையே நமக்குச் சரணியன் ஆவான் .

குறிப்புரை :

இதிற்கூறும் மன்மதனை எரித்த வரலாறாவது :- கங்கைச் சடையன் மலைமங்கையின் கொங்கையுற நின் செங்கை மலர்க்கணை எய்துக ! ஏக ! என்று மதனை ஏவினன் மலரவன் . உடனே அக்கூற்றழல் காதுவழிப்போய் அகத்தை எரித்தது . செவி பொத்திச் சிவ சிவ என்றோதி உய்ந்தான் . பல பிறவித் தீமையும் ஒருங்குற்ற அக்கடுஞ்சொல் கேட்டு , வாட்டிய மலர் போல் அழகழிந்து , ` இவ்வாழ்க்கையெல்லாம் சிவ சத்தியால் வந்த ஆக்கம் ; என் செயலாவது யாதொன்றும் இல்லை ; அதனால் என் வீறு ஏறேறியிடம் ஏறாது என்றான் . ` உலகைத் தோற்ற உமையைத் தோற்றி ஒருபால் , தானாக இருத்திய தற்பரனை நானா மயல் செய்வது ? நன்று நன்று ; புங்கவனுக்கு மாறு கொண்டு பொரேன் ` என்றான் . வெகுண்ட வேதன் வெஞ்சூளிடுவேன் என்றான் . நின் சூளின் துன்பத்தினும் காளகண்டன் முன்பு கணைகள் ஏவி மாள்வதே சிறந்தது ; அது பின் வாழ்விக்கும் என்றான் வேள் . விதியின் செய்கையை யார் கடக்கவல்லார் ? கயிலையை அணுகினான் . நறுமலர்வாளி ஐந்தும் நாதன் மேற் செல்ல விட்டான் . வேளைப் பார்த்தான் விமலன் . சுட்டது புறத்தையும் தூய நெற்றிக்கண் . இரதி இரங்கி இரப்ப வேளை அருளினான் . கழை - கரும்பு மழைவடி வண்ணன் - திருமால் . மகவோனை - இந்திரன் . மதனன் - மன்மதன் . ` எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித்து இமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்து உயிர்க்குப் பேரின்பம் அளித்தது ` இது . ( சித்தியார் 73 )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

தடமல ராயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்றுதன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலையெந்தை பெருமானுகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித்தரக்க னிதயம்பிளந்த கொடுமை
அடல்வலி யாழியாழி யவனுக்களித்த வவனாநமக்கொர் சரணே.

பொழிப்புரை :

பெரிய தாமரைப் பூக்கள் ஆயிரத்தில் ஒன்று குறைய , வழிபாடு நிறைவதற்காகத் தன் செந்தாமரைக் கண் ஒன்றை இடந்து அதனால் அருச்சித்து வழிபாட்டை நிறைவு செய்த திருமாலை எம் தந்தையாகிய பெருமான் மகிழ்ந்து , தன் ஒளிமிக்க சேவடியால் வட்டமாகச் சக்கரத்தை உண்டாக்கி அதனைச் சுழலச் செய்து , சலந்தரனுடைய மார்பைப் பிளந்த கொடுமை மிக்க வலிமை உடைய சக்கரத்தைப் பாற்கடலையுடைய திருமாலுக்கு அளித்தான் . அவனே எமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .

குறிப்புரை :

திருமால் சக்கிரம் பெற்ற வரலாறு :- ஆழிபெற ஆயிரம் பூவால் அருச்சனை புரிந்தான் அன்புடைமையால் ஆழியான் . பத்தியின் விளைவு காண்பான் பரம்பொருள் ஆயிரத்துள் ஒரு தாமரை மலரை மறைத்தான் நினைப்பால் . பவன் எனும் நாமம் முதலான ஆயிரமும் எடுத்தேத்தி அருச்சிக்கின்றபோது , ஒருபோது ஒரு பெயர்க்குப் பற்றாமை உணர்ந்து , கழிவிரக்கம் உற்று , ஓர்ந்து , உணர்ந்து , தன் கண்ணை இடந்து , பவளக் குன்றர் சுவணபாதத்திற் சார்த்திக் களிகூர்ந்தான் . மெய்யைக் கொடுத்தேனும் விரதத்தை மெய்ப்படுத்தும் மெய்யர் கொள்கைக்குப் பொய்யாத சான்றானான் . இறையவன் காட்சி அருளப்பெற்றான் . வணக்கம் பலவும் முறைமை வழாது புரிந்தான் . திருமாற்பேறு என ஊரை நிகழ்த்திச் சுதரிசனம் என்னும் ஆழியை அருளி வாழி என்று தீண்டச் சிவந்து வாட்டம் தவிர்த்த விரூபாக்கன் பதுமாக்கனை விடுத்தருளினான் . தடம் - குளம் . உகந்து - விரும்பி . முயன்று சுழல்வித்துப் பிளந்த கொடுமை ஆழி என்க . அது சுதரிசனம் என்னும் பெயருடைய சக்கிரம் . சுடர் அடியால் - சிவபிரானுடய ஒளிமிக்க சேவடியால் . அடியால் சக்கிரமாகச் சுழல்வித்து . அடல்வலி - கொல்லும் வன்மை ; வினைத்தொகை . ஆழியவன் - பாற்கடலான் . அரக்கன் - சலந்தரன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கடுகிய தேர்செலாது கயிலாயமீது கருதேலுன்வீர மொழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்றுபாகன் மொழிவானைநன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற்றரக்கன் வரையுற்றெடுக்க முடிதோள்
நெடுநெடு விற்றுவீழ விரலுற்றபாத நினைவுற்றதென்றன் மனனே.

பொழிப்புரை :

`விரைந்து செல்லும் தேராயினும் அது கயிலை மலை மீது செல்லாது ; உன் வீரத்தைப் பெரிதாகக் கருதாது விட்டு ஒழி . என்னிடத்தில் கோபிப்பது அறம் அன்று ` என்று நிறுத்திய தேரில் நின்று கூறிய பாகனை வெகுண்டு , வேகமாகச் சென்று விரைவாக இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட , அவனுடைய தலைகளும் தோள்களும் நெடுநெடு என்னும் ஓசையோடு இற்றுவிழுமாறு அழுத்தியது சிவபெருமானுடைய திருவடியின் விரல் ஒன்று . அத்தகைய திருவடிகளை என் உள்ளம் எண்ணலுற்றது .

குறிப்புரை :

இலங்கைக் கோமான் பாகனைப் பார்த்துத் திருக் கயிலையை நோக்கித் தேரோட்டு என்று ஏவினான் . அவன் ` கடுந்தேராயினும் கயிலாயமீது விடுந்தேர் அன்று , விட்டாலும் செல்லாது . உன் வீரம் வீரபத்திரனிடத்தில் வேண்டா . வீரத்தை விட்டொழி . என்னை முடுகுவது அறன் அன்று ` என்று மொழிந்தான் . அவனை மிகச் சினந்து ` விடுவிடு ` என்று முடுகினான் . அவனும் முடுக்கினான் தேரை . சென்றான் இராவணன் . விரைவுற்றான் வரையுற்றான் ; எடுக்க முயன்றான் . முடியும் தோளும் நெடுநெடு என இற்று விழுந்தன . அவ்வாறு நிகழ ஊன்றி , பெருவிரலைக் கொண்ட திருவடிகளை என் உள்ளம் எண்ணலுற்றது . ` மூர்த்திதன்மலை ` ( தி .4 ப .32 பா .10) எனத் தொடங்கும் திருநேரிசையை ஈண்டுணர்தல் வேண்டும் . ` தர்மம் ` தன்மம் என்றாதலும் தமிழ்மரபே . ` நல்ல சிவதன்மத்தால் நல்ல சிவயோகத்தால் நல்ல சிவஞானத்தால் நான் அழியும் ` ( திருக்களிற்றுப்படியார் . 15 ) முனியா - முனிந்து . செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் விரலின் ஆற்றல் தோன்றக் கூறினார் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெ முத்தமனை யுள்ளத் துள்ளேவைத்தேனே.

பொழிப்புரை :

உலகப் பற்றற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன் , பாசூரில் உறையும் பவளம் , சிற்றம்பலத்தில் உள்ள கனி , தீண்டுதலுக்கு அரிய திருஉருவம் , வெற்றியூரில் விரிந்த ஒளி , தூயவர்கள் தலைவன் , கடல் ஒருபுறம் சூழ்ந்த ஒற்றியூர் உத்தமன் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தில் நிலையாக இருத்தினேன் .

குறிப்புரை :

பற்றற்றார் சேர் ழம் பதியை - பாசப்பற்று நீங்கிச் சிவப்பற்று உடையவர் அடைந்து வழிபடும் பழையவாகிய தலங்களாகித் திகழும் சிவபெருமானை . திருப்புன வாயிலுக்குப் ` பழம்பதி ` என்றும் அத்தலத்து மூர்த்திக்குப் ` பழம்பதிநாதர் ` என்றும் பெயர் வழங்குதலின் அதனைக் கொள்ளல் பொருந்தும் . பாசூர் :- பசுபதியூர் என்றதன் மரூஉ . அம்பிகை பசுபதி நாயகி . பாசூரில் எழுந்தருளிய சிவமூர்த்தி தீண்டாத் திருமேனி யாதலின் , தீவண்ணத்தைக் குறிக்கப் பவளத்தை என்றார் . ` திருச்சிற்றம்பலத்துக்கனி ` ( ப .15 பா .1) என்பது தொல்வழக்கு ` ஈசன் எனுங் கனி சாலவும் இனிது ` ( தி .5 ப .91 பா .7) ` நமச்சிவாயப் பழம் ` ` நமச்சிவாயக்கனி ` ( தி .10 திருமந்திரம் ). தீண்டாத் திருமேனி உள்ள திருக்கூவம் திருவூறல் முதலிய தலங்களைக் குறித்தும் தீண்டற் கரிய திருவுருவை ` எனலாம் . வெற்றியூர் என்றது கஞ்சனூர் , காட்டுப்பள்ளி , புகலூர் , வன்னியூர்ப் பக்கத்தது ஒன்று போலும் . ` உஞ்சேனை மாகாளம் ... ... வெற்றியூரும் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாய நாதனையே காணலாமே ` ( தி .6 ப .70 பா .8) என்று பிறாண்டும் உள்ளது உணர்க . விமலர் - மலம் நீங்கியவர் . கோன் - ( கோமகன் ) தலைவன் . திரை - கடல் ( ஆகு பெயர் ). திருவொற்றியூர் கடற்கரைக்கண் உள்ளது . உத்தமன் :- ( படம் பக்கநாதர் ) எழுத்தறியும் பெருமாள் . ` படம்பக்கம் கொட்டும் கட லொற்றியூர் ` ( தி .2 ப .39 பா .7) ` திருக்கடவூர் உறை உத்தமன் ` என்றதிற் போல , உத்தமன் என்பது அத்தலத்து மூர்த்தியின் திருப்பெயராம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

ஆனைக் காவி லணங்கினை யாரூர் நிலாய வம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.

பொழிப்புரை :

ஆனைக்காவில் உள்ள தெய்வம் , ஆரூரில் உறையும் தலைவன் , கானப் பேரூரில் உள்ள கரும்பின் கட்டி , கானூரில் முளைத்த கரும்பு , வானத்தினின்றும் நீங்காதவராகிய தேவர் வந்து வழிபடும் திருவாய்மூரில் உறையும் வலம்புரிச் சங்குபோல்வான் . பெருமைமிக்க கயிலைமலையில் உறையும் இளைய களிறு , சந்திரனும் , சூரியனும் ஆகியவன் என்னும் பெருமானை அடியேன் மறக்க மாட்டேன் .

குறிப்புரை :

திருவானைக்காவில் எழுந்தருளிய அகிலாண்ட நாயகியாயிருப்பவனை , அன்புடையார்க்கெல்லாம் ஒரு நெறியாய் இருந்து அன்னமிட்டுக் காக்கத் திருவாரூரில் புகழ்பெற்ற அம்மகனை . திருக்கானப்பேரூரிலே கருப்பங்கட்டி போல இனிமை செய்பவனை . திருக்கானூரில் தான்றோன்றியான ( முக்கட் ) கரும்பினை ` கரும்பினிற் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே ` வானப் பேரார் - வானத்தினின்றும் பேராதவராகிய தேவர்கள் . பேர்ந்து வந்து ஏத்தும் திருவாய்மூர் வாழும் வலம்புரிச் சங்குபோல் உயர்வும் தூய்மையும் உடையவனை . அங்குச் சங்கு ஒலிக்கும் வழக்கம் பற்றிய குறிப்பு இது . மற்றைய விடங்கத் தலம் எல்லாவற்றிலும் சங்கொலிச் சிறப்பு உண்டேனும் , திருவாய்மூரில் அதன் தனிப் பெருமையைக் கண்டு கூறியதாகத் தோன்றுகிறது . அங்கு அக்காலத்தில் ஊதியவர் திறம் ஆசிரியர் திருவுள்ளத்தைக் குழைவித்திருக்கலாம் . மானக்கயிலை - பெருமையையுடைய கயிலைமலை . மலையிற் களிறு வாழ்கின்ற பொருத்தம் . மதி - திங்கள் , சுடர் - ஞாயிறு , தீ இரண்டற்கும் உண்மையால் அம்மூன்றுமாகக் கொள்ளப்பெற்றான் சிவபிரான் ( ப .15 பா .3). முற்பாடலில் ` உள்ளத்துள் வைத்தேன் ` என்றும் , இதில் ` மறவேன் ` என்றும் மேல் உள்ளம் நிறைந்தது முதலியவாகக் குறித்தும் நின்ற பேரின்பத் தாக்கம் உணரற்பாலது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கு மருந்தினை
அதிகை மூதூ ரரசினை யையா றமர்ந்த வையனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ள நிறைந்ததே.

பொழிப்புரை :

பிறையைக் குறுங்கண்ணியாக உடைய சூரியன் , உலகமயக்கத்தைப் போக்கும் மருந்து , திருவதிகையாகிய பழைய ஊரில் உறையும் அரசு , திருவையாற்றில் விரும்பி உறையும் தலைவன் , வேதவிதியாக உள்ளவன் , எல்லாப் புகழும் தன்பால் வந்து சேரும் மெய்ப்பொருள் , தேவர்கள் விரும்பித்தேடும் ஞானஒளி , பெருஞ்செல்வம் , ஞானக் கொழுந்து , ஆகிய பெருமானை விருப்புற்று நினைத்த அளவில் அடியேனுடைய உள்ளம் மகிழ்ச்சியில் நிறைவுற்றது .

குறிப்புரை :

மதியம் கண்ணி - ( தி .6 ப .59 பா . 2,5) திங்களைத் தலை மாலையாகவுடைய . ` பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுங் கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள் ` ( இறை . களவியல் . சூ . 1 உரை ). ஞாயிற்றை - செங்கதிரவனை . பிறவிக்கு அடியான மும்மலக்கலக்கத்தைப் போக்கும் சிவஞானமான மருந்தாய் உள்ளவனை . ` மருளியலும் சிந்தையார்க்கு மருந்து ` ( தி .6. ப .33 பா .7) திருவதிகையான தொல்லூரில் உள்ள மாநகரை ஆளும் சிவபிரானை ; திருவையாற்றில் எழுந்தருளிய முதல்வனை ; விதியை - ஊழாக , வேத விதியாக உள்ளவனை ; புகழை - எல்லாப் புகழும் தன்பால் வந்து சேரும் மெய்ப்பொருளை , ` பொருள்சேர் புகழ் `. அழியும் இன்பத்தில் அதற்கு உரிய வினையுலக்கும் வரையில் திளைக்கும் விண்ணோர்க்கு , அழியா இன்ப நாட்டமுற்றால் அதைப் பெற விரும்பித் தேடும் மெய்ஞ்ஞான தீபத்தை . மெய்ஞ்ஞான விளக்கானை ` ( தி .6. ப .33 பா .3) ` ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே ` ( தி .6. ப .38 பா .7) வான் - பேரின்ப வீடு . ` தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈயவல் லான் காண் ` ( தி .2 ப .62 பா .1) என்றதால் மெய்யுணரும் சிவயோகிகள் உள்ளே விரும்பித் தேடும் பிராசாத மார்க்கத்தை ; விளக்கும் தீபத்தை எனலும் சிறக்கும் . ` ஒளிசேர் நெறி `. ` ஒளிநெறி காட்டினை `. ` நிதி ` - ` நெதி ` என மருவிற்று ` ஞானக் கொழுந்து ( தி .10 திருமந்திரக் காப்பு ) சிவக்கொழுந்து என்ற தொடர் இரண்டும் முறையே துரியம் , துரியாதீதம் , ஆகிய நிலைகளின் தொடக்கத்தில் நிகழும் அநுபவத்தைக் குறித்துத் தோன்றியவை . உள்ளம் நிறைந்தது :- ` நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் `. நிறையாதேல் இறைவர்க்கே இடமாகாது ஏனைய வற்றிற்கும் இடமாகும் . ` சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே ` ` புவிக் கெழிலாம் சிவக்கொழுந்தை ` ( தி .6. ப .37 பா .4). ` விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கு ` ( தி .5 ப .57 பா .2)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூ ரிலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி யுலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூ ழதிகை வீரட்டத் தரிமா னேற்றை யடைந்தேனே.

பொழிப்புரை :

புறம்பயத்தில் உறையும் எங்கள் முத்து , புகலூரில் விளங்கும் பொன் , உறையூரில் ஓங்கிக் காணப்படும் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள உலகுக்கு ஒளிதரும் சூரியன் , அருவிகள் ஒலிக்கும் கழுக்குன்றத்தில் தரிசிக்க வருபவர்களுக்குப் பற்றுக்கோடு , அறச்செயல்கள் யாண்டும் செய்யப்படுகின்ற அதிகை வீரட்டத்தில் உள்ள ஆண் சிங்கம் ஆகிய பெருமானை அடியேன் அடைந்தேன் .

குறிப்புரை :

திருப்புறம்பயத்திலே முத்தும் ; திருப்புகலூரிலே பொன்னும் ( தி .12 பெரிய - 1681 - 82); ஊரெனப்படும் உறையூரிலே உலகாண்ட சோழர்குல முதலாய் விளங்கி உலகை விளக்கிடும் ஞாயிற்றை உடம்பாகக் கொண்டுலவும் உயிரும் ; திருக்கழுக்குன்றத்திலே காண்பவர் காண்கின்ற கண்ணுக்குள் கண்ணாயிருந்து தன்னைக் காட்டும் அருளும் ; திருவதிகையிலே வீரத்தைக் காட்டிய சிங்கத்தின் திறனும் ஆசிரியர் அனுபவமாகக்கண்டு உணர்ந்தவர் போலும் ! ` அருக்கனாவான் அரனுரு அல்லனோ ` ` தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாயனாரென நம்வினை நாசமே `. ஞாயிறு :- சூரியகுலத்தாட்சி உறந்தையில் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை யமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.

பொழிப்புரை :

கோலக்காவில் உள்ள நல்ல நிறமுடைய மாணிக்கம் , குடமூக்கில் உறையும் விடமுண்டபெருமான் , ஆலங்காட்டில் உறையும் அழகிய தேன் , தேவர்கள் தலைகளுக்குச் சூட்டப்படும் அழகிய மலர் , பால்போல் இனிக்கும் புதுமை மாறாத பழம் , பராய்த்துறையில் உள்ள பசிய பொன் , சூலம் ஏந்தியவன் , ஒப்பற்றவன் ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பி வணங்கினேன் .

குறிப்புரை :

திருக்கோலக்காவிலே சடையும் , பிறையும் , சாம்பற் பூச்சும் கீளுடையும் கொண்ட குருமணி உருவத்தைக் குறித்தது காண்க . திருக்குடமூக்கிலே நஞ்சுண்ட கண்டனென்றது போலத் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும் ` கடல் நஞ்சம் உண்டிருண்ட கண்டர் போலும் ` என்றருளினார் . காட்டிலே தேன் உண்மை இயல்பு . தேவர் தலைமேல் அழகிய பூவாய் விளங்குவது திருவடி . ` வாசமலரெலாம் ஆனாய் நீயே ` என்றதால் அம்மலரென்றே சொல்லலாம் . ` பால் வெண்ணீறு ` பூசிய பவளம் போலும் மேனியனாதலின் பாலில் திகழும் பசிய பழத்தை என்றார் . பால்போலும் இனிய சுவையுடைய பழத்தை எனலுமாம் . ` பாற்றிரளைப் பயின்றாட வல்லான் ` ( தி .6. ப .19 பா .3) சிற்றம்பலத்தெம் திகழ் கனியை ( ப .15 பா .1) திருப்பராய்த்துறைப் பசும் பொன் ; செல்வமல்கிய செல்வர் ; பராய்த்துறைச் செல்வர் ; என்று கன்றும் ; திருப்பராய்த்துறை மேவிய செல்வர் ` பராய்த் துறைச் சோதி யான் ` என்று பதிகமுழுதும் அரசும் பாடியவற்றால் , ` பொன் ` என்றதன் பொருத்தம் உணர்க . சூலத்தானாதலின் அவனுக்குத் துணைவேண்டா . சூலத்தானுக்கு ஒப்பு ( ம் உயர்வும் ) இல்லை . தோளைத் தொழுதல் ; குளிரத் தொழுதல் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

மருக லுறைமா ணிக்கத்தை வலஞ்சு ழி( ய் )யின் மாலையைக்
கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்
பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.

பொழிப்புரை :

மருகலில் தங்கும் மாணிக்கம் , வலஞ்சுழியில் உள்ள தமிழ்ப்பாமாலை , கருகாவூரில் உள்ள கற்பகம் , காண்பதற்கு எளிதில் இயலாத கதிரவன் ஒளி , பெருவேளூரில் உள்ள பிறவாயாக்கைப் பெரியோன் , விரும்பித் தொழுபவர்கள் பின் பிரிந்து செல்ல மனம் கொள்ளாதவகையில் உள்ள திருவாஞ்சியத்தில் உறையும் எம் செல்வன் ஆகிய பெருமானை அடியேன் மனத்தில் நிலையாக இருத்தினேன் .

குறிப்புரை :

திருமருகற் பெருமான் திருப்பெயர் மாணிக்கவண்ணர் . திருமருகல் நகரின்கண் ... ... மாணிக்கவண்ணர் கழல் வணங்கிப் போற்றி ... ... இருந்தார் பெரும்புகலிப் பிள்ளையார் . ( தி .12 பெரிய . திருஞான . 472). ` மருகல்வாய்ச் சோதி மணிகண்டன் ` ( தி .6. ப .22 பா .5) திருவலஞ்சுழியில் ( மாலை ) என்றது ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை ; ` வாய் நவிற்றிய தமிழ்மாலை ` பூண்டமையாற் போலும் ! கருகாவூரில் கற்பகத்தை :- நிற்பதொத்து நிலையிலாப் புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகம் ஆதலின் , வான் தருவின் மேலாய தென்க . காண்டற்கரிய கதிரொளி :- தீண்டற்கரிய திருவுருவே யன்றிக் காண்டற்கரிய கதிரொளியும் ஆயின் , அதனால் வரும் பயன் யாதுமில்லை என்னாவாறு , ` பெருவேளூர் எம் பிறப்பிலியை ` என்று குறித்துப் பிறப்பிலி உயிராய் இருந்து எமக்கும் எம்போல்வார்க்கும் பிறவியறுக்கும் பிரிவரிய செல்வன் என்றார் . ` வாஞ்சியம் ` என்றதன் பொருள் தோன்றப் பேணுவார்கள் என்றார் . சிந்தையுள்ளே வைத்தல் :- இடையறாப் பேரன்புடன் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சினாராதல் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

எழிலா ரிராச சிங்கத்தை யிராமேச் சுரத்தெ மெழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத் தம்மானை யன்பி லணைத்து வைத்தேனே.

பொழிப்புரை :

அழகுமிக்க அரச சிங்கம் , இராமேச்சுரத்தில் உறையும் அழகிய காளை , குழல்வாய் மொழியம்மையைத் தன் மலை போன்ற மார்பில் கொண்ட குற்றாலத்தில் உறையும் எங்கள் கூத்தன் . நிழல் மிகுந்த சோலைகளையுடைய நெடுங்களத்தில் உறையும் நித்தியகலியாணன் , தீ நிறத்தலைவன் ஆகிய பெருமானை அடியேன் அன்பினால் அடியேனோடு இணைத்து வைத்துக்கொண்டேன் .

குறிப்புரை :

எழில் - அழகு , எழுச்சி , இராசசிங்கம் :- அரிமானேறு . இராமேச்சுரத்து ஏறு :- இராவணனை வென்ற இராமனுக்கு விளைத்தருளிய விறல் குறித்தது . குழலார் கோதை :- ` குழல்வாய் மொழியம்மை ` அம்பிகை திருப்பெயர் . கூத்தன் :- சித்திரசபைத் திருக்கூத்தன் . ( தி .4 ப .9 பா .10) நிலாய :- நிலாவிய , என்றும் பிரசித்தியுற்ற . மணாளன் - சிவமணாளன் . நித்திய மணாளன் . ` அழல் வண்ணன் ` - தீ வண்ணன் . அன்பு இல் - அன்பே கோயிலாக உள்ள தலம் . அன்பால் - விருப்பால் எனலுமாம் . ( தி .6:- ப .44 பா .6, ப .81 பா .4)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையு மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை யண்ணா மலையெம் மண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.

பொழிப்புரை :

மாலையில் தோன்றும் ஒளி வளரும் சந்திரன் , மறைக்காட்டுள் உறையும் தலைவன் , ஆலையில் பிழியப்படும் கரும்பின் இனிய சாறு , அண்ணாமலையிலுள்ள எம் தலைவன் , சோலைகளை உடைய துருத்திநகர்க் கோயிலில் விரும்பி உறையும் சூரியனைப் போல ஒளிவீசும் அசைவற நின்ற பேராற்றலன் , மேலே உள்ள தேவர்கள் தலைவன் ஆகிய பெருமானை அடியேன் விருப்பத்தோடு விழுங்கி விட்டேன் .

குறிப்புரை :

` மாலை மதியம் ` மறைக்காட்டுறையும் மணாளன் :- தூண்டு சுடர் ... மணாளன் தானே ` ( திருத்தாண்டகம் ). ஆலைக் கரும்பின் சாற்றை :- ` கரும்பினிற் கட்டி போல்வார் `. அண்ணாமலை எம் அண்ணல் :- அண்ணாமலை என்றதன் காரணம் யாது ? துருத்தியில் இன்றும் சோலைவளம் பெரிது . சுடரின் :- சுடரினும் ( ஞாயிற்றினும் ) அசைவற நின்ற பேராற்றலனை . துளக்கு - அசைவு . வானோர் பெருமானை விருப்பினால் விழுங்கியிட்டேன் . சிவபிரானை விழுங்கியிடுதல் :- தி .10 திருமந்திரம் . 2592.

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழனத் தம்மானை யால வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ணெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலையட லேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.

பொழிப்புரை :

சோற்றுத்துறையில் உறையும் ஞானஒளி , துருத்தியில் விரும்பி உறையும் தூயமணி , ஆற்றின்வளம் மிக்க திருப்பழனத் தலைவன் . ஆலவாயிலுள்ள சிந்தாமணி , திருநீற்றால் விளங்கும் திண்ணிய தோள்களை உடைய , நெய்த்தானத்தில் உறையும் எம் நிலவொளி , பிறவிக்கடலை அழிக்கும் ஆற்றல் மிக்க காளை ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பித் தொழுதேன் .

குறிப்புரை :

சோற்றுத் துறைச் சோதி :- பெருமானது முடி மேலுள்ள பிறை , ( தி .4 ப . 85) மிகப் பாராட்டப்படுதலின் . துருத்தி மேயதூமணி :- முற்கூறிய துருத்தி திருத்துருத்தி . இது திருப்பூந்துருத்தி . ` யார்க்கும் அறிவரிய செந்தீயை வாட்டும் செம்பொன் ` ( தி .4 ப .88. பா .9). பழனத்தம்மான் :- அது சாலப் பொருத்தமுடையதேனும் , ஆற்றிற் பழனத்து என்றது காவிரிப் பாய்ச்சலுடைய வயல் வளம் குறித்து நின்ற பெயர்க்கு காரணமாம் . வாயில் புகுவார் என்றதும் ஆலவாய் தமிழ் ஆதல் காட்டும் . ஆலவாய் ... அருமணி :- திருவாலவாய் என்பது ஆலமரம் பற்றிய காரணப் பெயர் . ` கடுவாயர் தமைநீக்கி ` எனத் தொடங்குந் திருத்தாண்டகத்தில் அண்ணல் வாயில் , நெடுவாயில் , நெய்தல் வாயில் , முல்லைவாயில் , ஞாயில் வாயில் , மடுவார் தென்மதுரைநகர் ஆலவாயில் , புனவாயில் , குடவாயில் , குணவாயில் என்பனவற்றை நோக்கின் அது வடமொழிப் பெயரன்மை புலனாகும் . மணியை :- மாணிக்கம் விற்ற மாணிக்கத்தை . திருநீற்றினால் விளங்கிய தோள் . நிலாச் சுடர் . நெய்யொளி அதனொளி போன்றது . தோற்றக் கடலை கடல்போலும் தோற்றத்தையுடைய சிவாநந்தனை . பிறவிப் பெருங்கடலை . அடல் - அழிக்கும் . தோளைக் குளிரவைத்து இறைஞ்சுதல் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தே னென்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.

பொழிப்புரை :

புத்தூரில் உறையும் தூயோன் , பூவணத்தில் உள்ள எம் போரிடும் காளை , மிழலையில் விதையாகி முளைத்தவன் , வேள்விக்குடியில் உறையும் எம் வேதியன் , நெறிதவறிய அசுரர்களின் மும்மதில்களையும் எரித்தவன் , பொதிய மலையில் விரும்பி உறையும் பழையோன் , மாத்தூரில் விரும்பி உறையும் அமுதம் ஆகிய பெருமானை அடியேன் மனத்துள்ளே நிலையாக இருத்தினேன் .

குறிப்புரை :

புத்தூர்ப் புனிதன் :- ` அறிவரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ` என்று பின்வருவதுணர்க . திருப்பூவணத்தெம் போரேற்றை :- பற்றார் தம்மேல் சேணாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் பூவணத்தெம் புனிதனார்க்கே மிழலை முளைத்த வித்து :- ` வித்தினின் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே ` ( தி .4 ப .64. பா .9) இளமைத் திருமணக் கோலத்தர் :- கலியாணசுந்தரர் . மணி மிழலை மணாளர் . வேள்விக்கு வேதமுதலாதல் ` வேத வேள்வி ` என்றதனால் விளங்கும் . பொய்த்தார் - பொய்ந்நெறி ஒழுகியவர் . புராணர் - தொல்லோர் ; மாத்தூர் மருந்து :- ` உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஓவாது , மன்னு பாவம் தீர்க்கும் மருந்து ` ( திரு வருட்பயன் . 1.10 ) மாத்தூர் :- ஆமாத்தூர் என்பதன் முதற்குறையாம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை யரக்க னாற்ற லழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி
எந்தை பெம்மா னென்னெம்மா னென்பார் பாவநாசமே.

பொழிப்புரை :

ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டுத் தோன்றியவன் , மூத்த வெண்ணிறக் காளையை இவர்ந்தவன் . மாலைநேரச் செவ்வானின் நிறத்தினன் . இராவணன் ஆற்றலை அழித்தவன் ஆகிய பெருமானை உள்ளத்தில் தோன்றும் அன்பு என்னும் தீர்த்தத்தால் அபிடேகித்து , இனிய சொற்களாலாகிய பாமாலைகளை அவன் திருவடிகளில் சேர்ப்பித்து எந்தையே , இறைவனே , என் தலைவனே என்று பலகாலும் அவனை அழைத்து மகிழ்பவருடைய தீவினைகள் அழிந்துவிடும் .

குறிப்புரை :

`முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி ` மூரி - முதிரி என்பதன் மரூஉ . படி - ஒப்பு . பிரதிமை அரக்கன் - இராவணன் . ஆற்றல் திருக்கைலையைத் தூக்குமளவு பெருகிய வலிமை . சிந்தை வெள்ளப் புனலாட்டில் ` நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி ` ( தி .6 ப .76. பா .4), ` தம் அன்பாம் மஞ்சனநீர் தாம் ஆட்டி ` ( திருக்களிற்றுப் படியார் 44 ), ` இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி ` ( தி .12. பெரிய புரா . வாயிலார் . 8) என்பாரது பாவம் நாசமே . அடிச்சேர்த்தி - திருவடியிற் சேரச் சூட்டி , பெம்மான் , எம்மான் என்பன மரூஉ . பாவம் நாசம் - தீவினை தீரும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளும்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூரிலுள்ள முறுக்கேறிய சடையினராகிய பெருமானார் நிறத்தில் செய்யராய் , வெண்ணீறு அணிந்தவராய் , கரிய மான் குட்டி துள்ளும் கையினராய் , ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய காலினராய் , உண்மையான நெறியில் ஒழுகும் அடியவர்களுக்கு மெய்யராய் , அத்தகுதியில்லாதவர்க்குப் பொய்யராய் உள்ளார் .

குறிப்புரை :

திருப்புகலூர்ச்சடையனார் செவ்வண்ணர் ; வெள்ளை நிறத்துப் பூணூலணிந்த மார்பர் ; திருக்கையிலே துள்ளுகின்ற கரிய மான் கன்றினை ஏந்தியவர் ; ஒலிக்கின்ற வீரக் கழலைக் கட்டிய திருவடியுடையவர் . மெய்ந்நெறி நின்று ஒழுகும் அடியவர்க்கு மெய்யர் ; அத்தகைமையரல்லாதவர்க்கு என்றும் பொய்யர் . ` மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு ; விரும்பாத அரும்பாவியவர்கட்கு என்றும் பொய்யானை ..... ச் சேராதார் நன்னெறிக்கட் சேராதாரே ` ( தி .6 ப .66 பா .5) ` அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை ஐயாறமர்ந்தானைப் பாடுதுங் காண் அம்மானாய் ` ( தி .8 திருவா . 8.13) ` சேயவன்காண் நினையார்க்கு ; சித்தம் ஆரத் திருவடியே உள்கி நினைந்தெழுவாருள்ளம் ஏயவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சியேகம்பன்காண் அவன்எண் எண்ணத்தானே ` ( தி .6. ப .64 பா .4)

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மேகந லூர்தியர் மின்போன் மிளிர்சடைப்
பாக மதிநுத லாளையொர் பாகத்தர்
நாக வளையினர் நாக வுடையினர்
போகர் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் மேக நிறத்தினனான திருமாலாகிய காளையைப் பெரிய வாகனமாக உடையவர் . மின்னலைப் போல ஒளிவீசும் சடையோடு , பாம்பினைக் கங்கணமாக அணிந்து , யானைத்தோலை மேலுடையாகப் போர்த்திப் பிறை நுதலாளாகிய பார்வதி பாகராய்ப் போகியாயிருந்து உயிர்களுக்குப் போகத்தை அருளுபவராவார் .

குறிப்புரை :

திருப்புகலூர்ச் சடைமுடியார் ` புயல்வணற்கு அருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேகநாயகன் ` ( தி .9 திருவிசை . 46). மேகவண்ணனை விடையாகக்கொண்டு ஊர்தல் உடையவர் ( தி .8 திருவாச .269). மின்னலைப் போலத் திகழும் சடைக்கண் உள்ள மதியின் பாகம் ஆகிய பிறையைப் போலும் நெற்றியையுடைய மங்கையை ஒரு பாகத்திலுடையவர் . நாகம் - பாம்பு , யானை . சர்ப்பகங்கணம் யானைத்தோலுடை இரண்டும் சிவபிரானுக்கு உள . பாம்பினைக் கங்கணமும் கச்சும் ஆக உடையவருமாம் . போகர் - ` போகியாயிருந் துயிர்க்குப் போகத்தைப் புரிதல் ` உடையவர் . மேகம் என்றதால் மால்விடையே கொள்ளப்படும் . அறவிடையும் மழ ( உயிர் ) விடையும் ஈண்டுப் பொருந்தா . வளை - கங்கணம் . உடை :- கச்சுடை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரி சடையார் பெரிய தாழ்ந்த சடைமுடி மேலே பிறையைச் சூடிக் கரியதாய் நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு தாமும் கலந்து , திருந்தாத மனமுடையவர் பக்கல்தாம் என்றும் பொருந்தாராக உள்ளார் .

குறிப்புரை :

திருப்புகலூர்க்கடவுள் , நாலுகின்ற பெரிய சடையின் முடிமேல் பிறையை அணிந்து , தொங்கிய கருங் கூந்தலாளாகிய அம்பிகையும் தாமும் கூடித் ( திருந்தியமனம் உடையவர் திறத்தில் இடைவிடாது பொருந்தியிருப்பாராய்த் ) திருந்தாத மனமுடையவர் திறத்தில் எப்பொழுதும் பொருந்துவரல்லர் . புகலூர் அம்பிகை ` கருந்தாழ்குழலி `, ` திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டுத் திகைத்து , முத்திதரும் தாளிணைக்கே சரணம் புகுந்தேன் . வரையெடுத்த பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் ` என்று ( தி .4 ப .94 பா .10) பின் வருவதும் , திருந்தாமை பொருந்தாமைகட்கு ஒரு விளக்கம் ஆகும் . ` சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா ` ( தி .8 திருவாசகம் - 32.9) ` திருந்து தொண்டர்கள் ` .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

அக்கா ரணிவட மாகத்தர் நாகத்தர்
நக்கா ரிளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துண்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரி சடையார் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினராய் , பாம்பினை உடையவராய் , ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவராய் , நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர் .

குறிப்புரை :

திருப்புகலூர்ச்சடைப்பெருமான் , அக்கு (- உருத்தி ராக்கம் ) நிறைந்த அழகிய மாலையைப் பூண்ட மார்பர் . பாம்பு அணிந்தவர் . விளக்கம் உடைய இளம் பிறையைத் தலையிற் கண்ணியாகச் சூடியவர் . ` மாதர்ப் பிறைக் கண்ணியான் ` ( தி .4 ப .3 பா .1) நாள் தொறும் பிரம கபாலத்தினைக் கைப்பிடித்து , உண்ணும் பலி வேண்டி , ஊர்தொறும் புகுந்தவர் . ` உலந்தார் தலைகலன் ஒன்று ஏந்தி வானோர் உலகம் பலிதிரிவாய் ` ( தி .6 ப .47 பா .8) ` பல்லார்ந்த வெண்டலை கையில் ஏந்திப் பசுவேறி ஊரூரன் பலி கொள்வானே ` ( தி .6 ப .47 பா .9) ` உலந் தார் வெண்டலை உண்கலனாகவே வலந்தான் ` ( தி .5 ப .54 பா .12)

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஆர்த்தா ருயிரடு மந்தகன் றன்னுடல்
பேர்த்தார் பிறைநுதற் பெண்ணினல் லாளுட்கக்
கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் ஆரவாரித்துக் கொண்டு உயிர்களைக் கொல்லும் கூற்றுவனுடைய உடலை அழித்தார் . பிறைபோன்ற நெற்றியை உடைய பார்வதி அஞ்சுமாறு கூரிய தந்தங்களை உடைய கொலைத் தொழில் புரியும் யானையைக்கொன்று அதனுடைய உதிரப் பசுமை கெடாத தோலினை உடம்பில் போர்த்தி உள்ளார் .

குறிப்புரை :

திருப்புகலூரில் எழுந்தருளிய சடையுடையவர் , பெருமுழக்கம் இட்டு உடல்களின் அரிய உயிர்களை நீக்கும் அந்தகனது உடலையும் உயிரையும் கூறாக்கினார் . பிறைநுதலையுடைய பெண்ணினல்லாள் அச்சம் உறும்படி , யானையை உரித்துப் போர்வையாகக் கொண்டார் . கூர்த்து ஆர் மருப்பு - கூர்மையுடையதாய்ப் பொருந்திய கொம்பு , கொலை செய்யும் களிறு (- ஆண் யானை ). ஈர் உரி - ஈர்ந்து உரித்த தோல் , உரி :- முதனிலைத் தொழில் ஆகு பெயர் ` பெண்ணினல்லாளொடும் பெருந்தகை இருந்ததே ` ஈர் - ஈரிய , குளிர்ந்த எனலுமாம் . ஆருயிரை ஆர்த்து அடும் அந்தகனும் ஆம் . ஆர்த்தல் சடையாரதுமாம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்
சேம நெறியினர் சீரை யுடையவர்
பூமன் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய சுறாக்கொடியை உடைய மன்மதன் விடுத்த அம்புகளின் வலிமையைக் கோபித்த மூன்றாம் கண்ணையுடையவர் . அடியவர்களுக்குப் பாதுகாவலை உடைய வழியை அருளுபவர் . மரவுரியை உடுப்பவர் . அவர் முருகனார் தொடுத்தளித்த பூக்களை எப்போதும் அணிந்தவராகிய , புகலூரில் உகந்தருளியிருக்கும் முறுக்கேறிய சடையினை உடையவர் .

குறிப்புரை :

தூ - வலி , மன் - பொருந்திய , சுறவம் - சுறாமீன் , சுறாக் கொடி - மீனக்கொடி . அதையுடைய காமன் கருவேள் ( மன்மதன் ). அவன் எய்த அம்பின் வன்மையைக் காய்ந்த நெற்றிக்கண்ணொடு இரு சுடரையும் இரு கண்ணாக உடையவர் . ` சுறவக் கொடி கொண்டவன் நீறதுவாய் உற நெற்றி விழித்த எம் உத்தமனே ` ( தி .2 ப .23 பா .4) சேமம் - நன்மை . சேமநெறி - நன்னெறி . ` எம்பிரான் அன்பர் என்றே நன்னெறி காத்த சேதி நாதனார் ` ( தி .12 பெரியபுரா . 24) என்றதால் , ` காத்தற்குரிய நெறி ` எனலுமாம் . சீரையுடை - மரவுரியாடை . ` சீரை உடையவர் ` என்பதற்குச் சீர் கொண்டவர் எனலுமாம் . ` சீருடையார் ..... பெரும்புலியூர் பிரியார் ` ( தி .2 ப .67 பா .9) 1. ` முருகன் முப்போதும்செய் முடிமேல் வாசமாமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே ` ( தி .2 ப .92 பா .5) என்று பிள்ளையார் போற்றிய முருக நாயனார் பூமாலை கட்டி வழிபட்ட திருத்தலம் ஆதலின் பூ ( மாலை ) மன் ( னிய ) சடையார் ஆனார் . 2. பூமன்புகலூர் - பூக்கள் மன்னிய திருப்புகலூர் . ( சோலை பொய்கை நிலம் முதலிய வளம் எல்லாம் குறித்தவாறு ). 3. பூ - பூமி . மன் - நிலைபெற்ற . பூலோகத்துக்குத் துன்பம் நேர்ந்துழிப் புகலாம் ஊர் . 4. பூமன் - மலரவன் என்று கொண்டு அவன் காணாத சடையொடு பொருந்தக் கூறலும் கூடும் . ` தூமென் மலர்க்கணை ` ( தி .4 ப .103 பா .3)

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

உதைத்தார் மறலி யுருளவொர் காலால்
சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் கூற்றுவன் உருளுமாறு அவனை ஒரு திருவடியால் உதைத்தவர் . சிறப்பாக விளங்கிய தக்கன் செய்த பெரிய வேள்வியைச் சிதைத்தவர் . அவ்வேள்வியில் பங்கு கொண்ட தம் தவறு கருதி நடுங்கிய தேவர்களின் தலைகளையும் கைகளையும் போக்கிச் சூரியனுடைய கண்ணை அவித்தவர் .

குறிப்புரை :

திருப்புகலூர்ச் சடைப்பிரானார் , காலன் உருள ஒரு காலால் உதைத்தார் ; தக்கன் செய்த நல்ல வேள்வியை (- யாகத்தை ) அழித்தார் ; பதை பதைத்து ஓட முயன்ற மலரவன் தலையையும் வெய்யதீயின் கையையும் கொண்டார் ; வெய்யோன் கண்ணையும் அவித்தார் . ` எச்சன் .... பகன் கண் கொண்டார் ; ....... வியாத்திரன் தலையும் வேறாக் கொண்டார் ; விறல் அங்கிகரம் கொண்டார் ; ..... தக்கன்றன் வேள்வியெல்லாம் ..... அழித்துக்கொண்டு அருளும் செய்தார் ` ( தி .6 ப .96 பா .9) ( தி .8 திருவா . திருவுந்தியார் . 7.12.13.16.) சில பதிப்பில் இதுவும் அடுத்ததும் முன்பின்னாயுள்ளன .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கரிந்தார் தலையர் கடிமதின் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் இறந்தவருடைய தலை மாலையை அணிந்தவர் . காவல் பொருந்திய மும்மதில்களையும் சிவந்த நெருப்பு உண்ணுமாறு அம்புகளைத் தேர்ந்து எடுத்தவர் . விரிந்து பரந்த சடையின்மேல் நீர்மிக்க கங்கையை விரும்பி ஏற்றவர் .

குறிப்புரை :

சடையார் கரிந்தவர் தலையை உடையர் ; மூன்றுகடி மதிலும் செழுந்தழல் உண்ணக் கணைகள் தெரிந்தார் . ` சடைமேல் விரிபுனற் கங்கை விரிந்தார் `. ` புனற்கங்கை ` ` செழு நீர்ப் புனற் கங்கை ` என்றது எஞ்ஞான்றும் நீருடைமை குறித்து . விரிந்தது கங்கையாயினும் , விரிவித்தார் செயலாதலின் விரிந்தார் என்றார் . இது பிற வினைப்பொருளில் வந்த தன்வினை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

ஈண்டா ரழலி னிருவருங் கைதொழ
நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
மாண்டார்த மென்பு மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் செறிந்த தீப்பிழம்பாய்ப் பிரமனும் திருமாலும் கைகளால் தொழுமாறு நீண்டவர் . தம்முடைய நீண்டகாலத் தடுமாற்ற வாழ்வை நினைந்து அஞ்சுமாறு வாழ்ந்து இறந்தவர்களின் எலும்பையும் கொன்றைமலர் மாலையையும் அணிந்தவர் .

குறிப்புரை :

ஈண்டு ஆர் அழலின் நீண்டார் ; ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியாய் எங்கும் நிறைந்தார் . கைதொழ நீண்டார் . நெடுந்தடுமாற்ற நிலையை ( யாவரும் ) அஞ்ச நீண்டார் . கண்டபோதெல்லாம் நெடுங்காலத்துக்கு முன் நிகழ்ந்த தடுமாற்ற நிலையை எண்ணி அஞ்சும்படி , மாண்டார் எலும்பையும் பூண்டார் . மாலையையும் பூண்டார் . ` இருவர்களுடல் பொறையொடு திரி எழிலுருவுடையவன் ` ( தி .1 ப .22 பா .7) ` பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய் இருங்கடன் மூடி இறக்கும் ; இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் வருங்கடன் மீளநின்றெம் இறை நல்வீணை வாசிக்குமே ` ( தி .4 ப .112 பா .7) ` சிரமாலை சூடி நின்றுவந்தான் இருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே `, ` தலைமாலை தலைக்கணிந்து .... தேரும் தலைவன் `.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தா ரிலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்து மாயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.

பொழிப்புரை :

புகலூர்ப் புரிசடையார் இரத்தினம் போன்ற செந்நிறமான கழுத்துக் கறுத்து நீலகண்டராயினார் . கால் விரலை ஊன்றி இராவணனுடைய பத்துத் தலைகளையும் செயலற்றவை ஆக்கினார் . ஐம்புல நுகர்ச்சியையும் துறந்தவர் . பார்வதியைப் பாகமாகக் கொண்டவர் .

குறிப்புரை :

மணி - நீலமணி ( போலும் ). கண்டம் - ` திருநீல கண்டம் `. கறுத்தார் - நஞ்சு உண்டமையால் கறுத்தார் . கறுப்பு நிறத்துரு உணர்த்திற்று . ( தொல் . உரி . 77.) இலங்கையர் கோன் ( இராவணன் ) பத்து முடியும் ஒரு கால் விரலை ஊன்றி இறச்செய்தார் . புலனைந்தும் அறுத்தார் :- யோக முத்தி உதவும் யோகியானார் . ஆயிழை பாகம் பொறுத்தார் :- உயிர்க்குப் போகத்தைப் புரியப் போகியானார் . அறுத்தார் .... பொறுத்தார் :- பொருள் முரண் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

எத்தீ புகினு மெமக்கொரு தீதிலை
தெத்தே எனமுரன் றெம்மு ளுழிதர்வர்
முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித்
தத்தீ நிறத்தா ரரநெறி யாரே.

பொழிப்புரை :

உலகம் அறிந்த தீயின் நிறத்தவராகிய அரநெறிப் பெருமானார் முத்தீக்களைப் போன்று , மூன்று இலைவடிவாக அமைந்த வேலினை ஏந்தித் தெத்தே என்ற பண் ஒன்றினை நுணுகிப் பாடிக் கொண்டு எம் உள்ளத்தில் கூத்து நிகழ்த்துகின்றார் . ஆதலின் எமக்கு எந்தத் தீயினிடைப் புக நேரினும் , அத்தீயினால் தீங்கு யாதும் நிகழாது .

குறிப்புரை :

`அரநெறி ` என்றிருப்பதால் , ` அறநெறி ` என்றோ ` அரனெறி ` என்றோ இருந்து பிழைத்ததாதல் வேண்டும் . இது பொருத்தம் இல்லாதது . அரனெறியார் அத் தீநிறத்தார் . அவர் முத்தீப் போல்வதொரு மூவிலை வேலைப் பிடித்து , எம் உள்ளே தெத்தே என்ன முரன்று திருக்கூத்தாடுகின்றார் . அதனால் , எமக்கு எத் தீ புகினும் தீது இல்லை . ( தி .4 ப .94 பா .2) ` விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு அவலம் அடையா ; அருவினை சாரா ; நமனை அஞ்சோம் ` ( தி .4 ப .94 பா .3) தெத்தே எனல் அநுகரண வோசை . ` எத்திசை` என்றல் பொருந்தாது . ` முத்தீ மூவிலை வேல் ` ` அத்தீ நிறத்தார் அற நெறியார் ` ஆதலின் எத் தீ புகினும் எமக்கு ஒரு தீதும் இல்லை என்பதே பொருந்தும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

வீரமும் பூண்பர் விசயனொ டாயதொர்
தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
வாரமும் பூண்ப ரரநெறி யாரே.

பொழிப்புரை :

அரநெறிப் பெருமான் நல்ல பசிய கண்கள் ஒளிவீசும் பாம்பினை மாலையாக அணிபவர் . தம்மிடம் அன்புடையவருடைய பொறுப்புக்களைத் தாமே ஏற்று அருளுபவர் . பார்வதியையும் உடன் அழைத்துச் சென்று அருச்சுனனோடு நிகழ்த்தப்பட்ட போரில் வீரச் செயல்களை நிகழ்த்துவர் .

குறிப்புரை :

அரநெறியார் நல்ல பசிய கண் மிளிரும் பாம்பு மாலையைப் பூண்பர் . விசய ( அருச்சுன ) னொடு போர் செய்ய வேண்டி அம்மையுடன் சென்றாராதலின் தாரமும் பூண்பர் . ( தி .7 ப .66 பா .4) தாரம் - கிழத்தி ; உமையம்மையார் . தமக்கு அன்பு பட்டவர் - திருவடிப் பற்றுள்ளவர் . பற்று :- ( அன்பு ) பத்து என மருவி வழங்கும் . அரவு ஆரம் - பாம்பு மாலை . ` சர்ப்பாபரணம் `.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமுமொர்
வஞ்ச வண்ணத்தர் வண்டார்குழ லாளொடும்
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாதகண் ணார்தொழும்
அஞ்ச வண்ணத்த ரரநெறி யாரே.

பொழிப்புரை :

அரநெறிப் பெருமானார் தம்மைத் தஞ்சம் என்று அடைந்தவருக்குத் தாம் அடைக்கலம் நல்கும் இயல்பினர் . சடை முடியை உடையவர் . அடியவர் அல்லாதாருக்கு வஞ்சனையான இயல்பினர் . வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய பார்வதியோடும் பொருந்தும் இயல்பினர் . இமையாக் கண்களை உடைய மேலோர் தொழும் அம்சமந்திர ஜபயோகம் புரிபவர் .

குறிப்புரை :

தஞ்சவண்ணத்தர் - ( தம்மைச் சரண் என்று அடைந்தவர்க்குத் ) தஞ்சமாகும் இயல்பினர் . ( தண் + து + அம் ) தஞ்சம் . எளிமையராயிருப்பவர் . ` தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே ` ( தொல் . இடை . 18). வஞ்சம் ( வல் + து + அம் ). தஞ்சமும் வஞ்சமும் மறுதலைச் சொற்கள் . ` தஞ்சமும் தருமமும் தகவு மேஅவர் நெஞ்சமும் கருமமும் உரையு மேல்நெடு வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்லநாம் உய்ஞ்சுமோ அதற்கொரு குறைஉண் டாகுமோ ?` - கம்பர் . யுத்த . கும்ப . 85. இதில் தஞ்சம் x வஞ்சம் ; தருமம் x பாவம் ; தகவு x பொய் ஆகிய மூவேறு வகையும் முறையே இராமராதி இராவணாதிகட்கு நெஞ்சமும் கருமமும் உரையுமாதலைக் குறித்தல் காண்க . வண்டு ஆர் குழல் . குழலாள் - புவனேசுவரி . துஞ்ச - துயில . துஞ்சாத கண்ணர் - துயிலாத கண்ணையுடையர் . ` விழித்தகண் குருடாய்த் திரிவீரர் ` ( திருவிளையாடல் ) ` விழித்துறங்கும் தொண்டர் ` ` மெய்யுணர்ச்சி ` க்கண் விழிப்பத் தூங்குவார் ` ( குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் . 75. நீதிநெறிவிளக்கம் . 102 ) ` துஞ்சாக்கண்ணவடபுலத்தரசு ` ( புறம் .31 ) அஞ்சவண்ணத்தர் - அம்சமந்திர ஜபயோகம் புரியும் வண்ணத்தர் அஜபாயோகம் . திருவாரூரில் நிகழ்த்தும் இறைவன் திருக்கூத்து . ` அஜபாநடனம் ` எனப்படும் . ( தி .5 ப .28 பா . 1 - 10) பார்க்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவம்
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
அழித்தன ராரூ ரரநெறி யாரே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறிப் பெருமானார் காமன் பொடியாய் விழுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவர் . வானத்திலிருந்து கங்கையைத் தம் சடையில் இறங்கச் செய்தவர் . தம்மை வழிபடுபவருடைய தீவினைகளைப் போக்குபவர் . கற்களால் சூழப்பட்ட காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவர் .

குறிப்புரை :

காமனை - மன்மதனை . வீழ்தர - வீழ . உயிர்கள் விரும்ப ; போகம் உற . விழித்தனர் - நெற்றி விழி திறந்தார் . யோகத்தில் இருந்து விழித்தார் . கங்கையை வானிலிருந்து கீழ் இழியச் செய்தனர் . ஏத்தி வழிபட்டவரது தீவினைகளைக் கழியச் செய்தார் . திரிபுரம் எரித்து அழித்தார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணம்
தற்றவர் தம்வினை யானவெ லாமற
அற்றவ ராரூ ரரநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.

பொழிப்புரை :

மண்டையோட்டில் பிச்சைவாங்கி உண்பவரும் , சுருண்ட கோவணத்தை இறுக்கிக் கட்டியவரும் , இயல்பாகவே வினையின் நீங்கியவருமாய் உள்ள எம்பெருமானாருடைய ஆரூர் அரநெறிக் கோயிலைத் தம் வினைகளாயின எல்லாம் நீங்குமாறு கையால் தொழும் வாய்ப்புப் பெற்றவர் , ஞான ஒளி பெற்றவராவர் .

குறிப்புரை :

வெண்டலையில் - பிரமகபாலத்திலே , துற்றவர் - பிச்சை வாங்கி உண்டவர் . சுருள் கோவணம் :- வினைத்தொகை . தற்றவர் - இறுக்கிக் கட்டியவர் . தற்றல் - இறுகவுடுத்தல் . ` குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் ` ( குறள் . 1023 ). தம் வினையான எல்லாம் அற அற்றவர் :- இயல்பாகவே வினையின் நீங்கி விளங்கிய துறவாளர் . ` அற்றவர்க்கு அற்ற சிவன் ` ` அற்றவர்க்கு அற்றவன் ` ( இருபா இருபஃது 20 .) கைதொழவுற்ற அடியவர்தம் வினை எனக் கொண்டுரைத்தல் நன்று . தொழ உற்றவரே சிவப்பிரகாசம் பெற்றவராவார் . உறார் பெறார் என்க . ( ப .17 பா .7. பார்க்க ) உற்றவர் வினை எல்லாம் அற அற்றவர் (- அறுவித்தவர் ) என்க . ஒளி - ` உள்ளொளி ` உரைமாண்ட உள்ளொளி ( தி .8 திருவாசகம் . 326).

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
நீடர வத்தர்முன் மாலை யிடை யிருள்
பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித்
தாடர வத்த ரரநெறி யாரே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறிப் பெருமானார் திருவடிகளிலே அரிபெய்சிலம்பினராய் ஒலிக்கும் , கிண்கிணியால் ஏற்படும் நீண்ட ஒலியினை உடையவராய் , மாலையின் முற்பட்ட பகுதியில் இருளிலே பாடும் ஒலியினராய் , படம் விரித்து ஆடும் பாம்பை அணிந்தவராய் உள்ளார் .

குறிப்புரை :

அரநெறியார் எழுவாய் . ` அரவத்தர் ` என்னும் நான்கும் பயனிலைகள் . கூடும் சிலம்பினர் . திருவடியிலே குரலை ( ஒலியை ) யுடைய கிண்கிணியால் நீடும் பேரொலியினர் . முன் மாலையிடை யிருளிலேபாடும் பேரொலியினர் . பை - படம் . அஞ்சுபணம் - ஐந்தலை ; பணம் - பாம்பின் படம் . ஈண்டுத் தலையின் மேற்று ; பை என வேறுள்ளதால் . அரவத்தர் - பாம்பினையுடையவர் . பணம் உடையது பணி . குணம் உடையது குணி . கரம் உடையது கரி (- யானை ). இவ்வாறு தமிழில் அமையா . பிணம் - பிணி , மணம் - மணி எனல் இல்லை . பண்பு பண்பி உறுப்பு உறுப்பி என்னும் முறைமை வேறு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு வாரூ ரரநெறி
நாடவல் லார்வினை வீட வல்லாரே.

பொழிப்புரை :

உமாதேவியின் குறிப்பறிந்து அவளோடு இணைந்திருத்தலில் வல்லவராய் , நண்பகல் அந்தியிலும் காலை மாலைச் சந்திகளிலும் பலகாலும் பாடவல்லவராய் , கூத்து நிகழ்த்துதலில் வல்லவராய் உள்ள பெருமானார் உறையும் திருவாரூர் அரநெறியை விரும்பித் தொழவல்லவர்கள் வினைகளைப் போக்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராவர் .

குறிப்புரை :

உமையாளொடும் குறிப்பிற் கூடவல்லார் . குறித்தல் - இடைவிடாது நினைத்தல் . ( நினைந்தவர் உள்ளத்தில் ) உமையாளொடும் கூடவல்லார் - அம்மையப்பராயெழுந்தருளிப் பேரின்பம் நல்கவல்லார் எனலும் பொருந்தும் . அந்தியும் சந்தியும் பாடவல்லார் :- அந்தி சந்தி ஆதல் ` ( தி .6 ப .5 பா .9; ப .78 பா .5) ` அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி முந்தியெழும் பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்றிருவாரூர் புக்கெந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே .` ( தி .7 ப .83 பா .1) என்பதில் , அந்தி நண்பகல் சந்தி என்பன கொள்க . இரவும் பகலும் சேர்வதும் பகலும் இரவும் சந்திப்பதும் அந்தி சந்தி . இரவு பகல் அந்தத்தில் விளங்குவது அந்தி . காலையந்தி மாலையந்தி முச்சந்தி என்று வழங்குவதாற் சந்தியின் திரிபென்றே கொள்க . ` அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகந்தொறும் சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே ` ( தி .7 ப .43 பா .8) ` முட்டாத முச்சந்தி மூவாயிரர்க்கு மூர்த்தி என்னப்பட்டான் ` ( தி .7 ப .90 பா .7) அரநெறி கைதொழ உற்றவரே ஒளி பெற்றனர் என்றவாறே ஈண்டும் அரநெறி நாட வல்லாரே வினை வீடவல்லார் என்றதுணர்க . தில்லையில் நள்ளிராக் காட்சியும் திருவாரூரில் திருவந்திக் காப்புக் காட்சியும் மிக்க சிறப்புடையன . ( திருவாரூருலா . 203-4.368-377 )

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையுங் கண்ணியு மாவன சேவடி
காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
ஆலைய மாரூ ரரநெறி யார்க்கே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறிப் பெருமானாருக்குப் பாலை ஒத்த வெண்ணிறமுடைய குளிர்ந்த பிறையும் பசிய கொன்றை மாலையும் முடிமாலைகள் ஆகும் . அவர் திருவடிகளைக் காலையும் மாலையும் கைதொழவல்ல அடியவர் உள்ளங்களே அவருக்கு உறைவிடமாகும் .

குறிப்புரை :

அரநெறியார்க்கு , பாலைச் சிரிக்கும் வெண் பிறை கண்ணியாகும் . பைங்கொன்றை மாலையாகும் . அவர்தம் சேவடியைக் காலையும் மாலையும் கைதொழுவாரது மனம் ஆலயமாகும் . ` நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் ` ( தி .5 ப .2 பா .1) ` கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி ` அடியவர் திருமேனி , திருவுள்ளம் எல்லாம் கோயிலாகக் குறித்தல் உண்டு . ` காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக , வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப் , பூசனை ஈசனார்க்குப் போற்றுஅவிக்காட்டினோமே ` ( தி .4 ப .76 பா .4) ` உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் ` என்ற தி .10 திருமந்திரம் உடலையும் உள்ளத்தையும் முறையே கோயிலும் மூலட்டானமுமாகக் குறித்தலை உணர்க . ` ஓங்குடலம் திருக்கோயில் உள்ளிடம் உள்ளிடமாம் ` ( ஞானபூசாவிதி ) என்றதும் அதுவே . ` மறவாமையாலமைத்த மனக் கோயில் ` ( தி .12 சேக்கிழார் ), ` நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும் துன்று மலரிட்டுச் சூழும் வலம் செய்து தென்றல் மணம் கமழும் தென்திருவாரூர் புக்கு என்றன் மனம் குளிர என்று கொல் எய்துவதே .` ( தி .7 ப .83 பா .2) என்றருளியதும் காண்க . ` ஆலையம் ` எதுகை நோக்கிய போலி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின்
பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ண மாரூ ரரநெறி யார்க்கே.

பொழிப்புரை :

திருவாரூர் அரநெறியார்க்கு முடியின் நிறம் மேகத்தின் மின்னலின் நிறமாகும் . அவர் மார்பில் அணிந்த திருநீற்றின் நிறம் அவர் வாகனமான காளையின் நிறமாகும் . அவருடைய திரு மேனியின் நிறம் பாற்கடல் நிறமாகும் . அவர் திருவடியின் நிறம் சிவந்த காலை ஞாயிற்றின் நிறமாகும் .

குறிப்புரை :

திருவாரூர் அரநெறியார்க்குத் திருமுடிவண்ணம் மேகத்தின் மின்னல்வண்ணம் . அவர்தம் திருவெண்ணீற்று வண்ணம் அவர்தம் புகழும் ` நரைவெள்ளேறு ` ( வெள்விடையூர்தியு ) ம் உற்ற வண்ணம் . அவரது திருமேனிவண்ணம் பாற்கடல் வண்ணம் . அவரது திருவடிவண்ணம் செஞ்ஞாயிற்று வண்ணம் , புகழூர்தி :- உம்மைத் தொகை . இரண்டனுருபும் பயனும் உடன்றொக்க தொடருமாம் . ( தி .12 பெரியபுராண . திருமலைச் சிறப்பு . 2. 12. பார்க்க ) காஞ்சிப் . நாட்டுப் . 10. வன்மீக . 3. தணிகைப் . 24. 126. 689. 2892. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் . 30. 82. என்றவற்றிலும் செந்தலை வரலாற்றிலும் புகழ் வெண்மை நிறத்தது என்றதைக் காண்க . ` படி எழுதலாகாத மங்கையோடுமேவன் ` என்பதில் , மங்கை வடிவைப் படி எழுதலரி தென்றலுணர்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
அன்னவ ராரூ ரரநெறி யாரே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறியார் பொன்போன்ற சிவந்த முறுக்கேறிய சடையை உடையவர் . அவர் அவருடைய திருவடி நிழலிலே இனிய அருளைச் சூடி வழிபடுதலை வெறுக்காது இரவும் பகலும் அரசர்களும் கின்னரர் என்ற தேவகணத்தாரும் வானவர்களும் தொழும் அத்தன்மையை உடையவர் .

குறிப்புரை :

அன்னவர் (- அத்தன்மையர் .) அரநெறியார் ` அவன் ` ` அன்னவன் ` இரண்டும் ஒரு பொருளன அல்ல . ` அவன் என்பது ஆடூஉவை மட்டும் சுட்டும் . ` அன்னவன் ` என்பது அத் தன்மையன் எனல் குறிக்கும் . பொன் நவில் புன்சடையான் :- பொன்போலும் சடை . மென்மையுடைய சடை . புன்மை (- அற்பம் ) எனலாகாது என்று மேலும் குறித்தாம் . ஈண்டுப் ` பொன் ` என்று வேறுள்ளமையால் , புன்மை மென்மை குறித்து நின்றது . திருவாரூரில் பூவேந்தரும் கின்னரரும் தேவேந்திரன் முதலியோரும் இரவும் பகலும் வந்து வழிபடுதலை வெறாது , சிவனடி நிழலாம் இனிய அருளைச் சூடித் தொழுகின்றனர் . அத்தகு பெருமையுடையவர் அரநெறியார் . அருள் சூடல் :- திருவருட்சூழலுள் இருத்தல் . சூழ் + து + அல் = சுற்றல் . சூழ் + து + அல் = சூடல் . சூழ்த்தல் பிறவினை . முழ் + து = முற்று . மூழ் + து + இ = மூடி . ( தமிழ்ச்சொல்லமைப்பு . பக் . 25,48. ) எள்காது - இகழாமல் . இரவும் பகலும் இடையீடின்று அரசரும் கின்னரரும் தேவரும் தொழும் பெற்றியினையுடையவர் திருவாரூர் அரநெறியார் என்ற சிறப்பு உணர்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

பொருண்மன் னனைப்பற்றிப் புட்பகங்கொண்ட
மருண்மன் னனையெற்றி வாளுட னீந்து
கருண்மன்னு கண்டங் கறுக்கநஞ் சுண்ட
அருண்மன்ன ராரூ ரரநெறி யாரே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறியார் , குபேரனைப் பிடித்து அவனிடமிருந்து புட்பக விமானத்தைக் கைப்பற்றிக்கொண்ட , உள்ள மயக்கம் கொண்ட அரசனாகிய இராவணனை முதலில் வருத்திப்பின் அவனுக்கு வாளும் உடனே அளித்து , கழுத்துக் கறுக்குமாறு கருமை பொருந்திய விடத்தை உண்ட அருள் வடிவான தலைவராவார் .

குறிப்புரை :

பொருள் மன்னன் - குபேரன் . புட்பகம் - புட்பக விமானம் ; இராவணன் திக்குவிசயம் புரிந்து குபேரனிடத்தில் இருந்து பறித்தது . மருள்மன்னன் - காமத்தால் தனது திறனும் புகழும் அறிவும் ஆற்றலும் கெட மயங்கிய வேந்தன் ; இராவணன் . எற்றி - திருவடிப் பெருவிரலால் ஊன்றி இறுத்து . வாள் , நாள் , பெயர் கொடுத்து . கருள் - கருமை . கருணையின் கடைக்குறை எனின் பொருந்துமோ ? ` அருள் மன்னர் ` என்று மேல்வருதலாலும் பொருந்தாது . கண்டம் (- கழுத்து ). கறுக்க உண்ட நஞ்சு , ஆரூரது அருட் பெருக்கை உணர்த்துங் குறி . ` வானவரும் இந்திரனும் மாலொடயனும் செத்துப்போன விடம் புல்முளைத்துப் போகாதோ ? தான் அமுதாய் , அத்தர் அருணேசர் அன்பாக நஞ்சுதனைப் புத்தியுடன் உண்ணாத போது ` என்பது , குகை நமச்சிவாயர் அருளிய பாடல் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே.

பொழிப்புரை :

எம்பெருமானுடைய உள்ளத்தைப்போல உயர்ந்த கயிலை மலையும் , அவர் சூடும் உயர்ந்த பிறையும் அவர் பிச்சை எடுக்குமாறு கையில் ஏந்திய மண்டையோடும் , அவர் இவரும் காளையும் எண்ணிக்கையில் ஒன்று ஒன்றே போலும் .

குறிப்புரை :

அவர் - சிவபிரானார் . சிந்தை உயர்வரை - உள்ளம் உயர்கின்ற எல்லையில் உள்ள திருக்கயிலை மலை . சிந்தையுயர்வரை ( ஒல்லை ) ஒன்று என்பது சுத்தாத்துவிதத்தை உணர்த்துவதாகக் கொள்ளல் நன்று . பிறத்தலும் இறத்தலும் தேய்தலும் வளர்தலும் இன்றி , சென்னியில் வாழ்கின்ற பேற்றால் உயரும் பிறை அணிவர் . எல்லாரும் தற்போதத்தைப் பலியாக இடுதற்குரிய பிச்சைப் பாத்திரமாகப் பிரம கபாலம் திருக்கையின்கண் உளது . ஊர்வது - ஊர்ந்து செல்லும் விடை . ஒன்று வரை . ஒன்று சூடுவர் . ஒன்று கையது . ஒன்று ஊர்வது என்க . ` ஒன்று போலும் உகந்தவர் ஏறிற்று ` ( தி .5. ப .24 பா .8) ` ஒன்று வெண் பிறைக் கண்ணியோர் கோவணம் ` ( தி .5. ப .89 பா . 1-10) என்பன முதலிய திருக்குறுந்தொகைகளை இப் பதிகத்தொடு ஒருங்கு நோக்குக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவ ரெய்தின தாமே.

பொழிப்புரை :

தேவர்களும் தொழும் எம்பெருமானுடைய பாதங்களும் , விளங்கும் அவருடைய காதணிகளும் பெண்ணும் ஆணுமாகிய அவர் உருவமும் . அவர் ஏந்திய மான்குட்டியும் மழு வாயுதமும் இரண்டு என்ற எண்ணிக்கையுடையனபோலும் . ஏந்தின தாமே - பாடம் .

குறிப்புரை :

இமையோர் - துவாதசாந்தப் பெருவெளியில் கண்ணிமைத்துக் காணாராய் விழித்துறங்குந் தொண்டர் . அவரே வானோர் . ` கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்னகண்ணே ` ( சிலப்பதிகாரம் ). குழை எனவே தோடும் கொள்ளப்படும் . பெண்ணும் ஆணும் ஆகிய உருவம் இரண்டும் ` சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலகம் எல்லாம் ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும் உணர் குணகுணியுமாகி வைத்தனன் ` ( சித்தியார் . 89) அம்மையப்பர் திருக்கோலம் . ` இருபெண் ஆண் ` ( தி .1 ப .11 பா .2), ` இரண்டினர் உருவம் ` ( தி .1 ப .79 பா .3) ` மாதியலும் பாதியன் `. உருவம் :- 1. சொரூபம் . 2. தடத்தம் எனக் கொண்டுரைத்தலுமாம் . 1. அருவம் . 2. உருவம் . 3. அருவுருவம் . 4. அருளுருவம் ஆகிய நான்கனுள்ளே முதல் மூன்றும் தடத்தம் . நான்காவது சொரூபம் . ` பதிபரமே அதுதான் ... ... அருவுரு இன்றி ... ... உயிர்க்குணர்வாகி ... ... ஆனந்தவுருவாய் அன்றிச் செலவரிதாய் ... ... திகழ்வது . தற்சிவம் ( சிவப் . 13 ) ` சிவன் அருவுருவும் அல்லன் .` ` கரசரணாதி சாங்கம் ... ... உபாங்கம் எல்லாம் ... ... அருள் ` ` காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால் ` ( சித்தியார் ) ` அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம் உருவும் உடையான் உளன் ` ( திருவருட்பயன் . 5 ). மான் மழு இரண்டும் எய்தின . இரண்டு பாதம் . இரண்டு குழை . இரண்டு உருவம் . மான் , மழு இரண்டு எய்தின .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வின்னாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.

பொழிப்புரை :

எம்பெருமானுடைய நெற்றிக்கண்ணோடு சேர்த்துக் கண்கள் மூன்று . அவர் ஏந்திய சூலத்தில் இலை வடிவான பகுதி மூன்று . அவர் கையிலுள்ள வில் , நாண் , கணை என்பன மூன்று . அவர் அம்பு எய்து அழித்த பகைவர்களின் மதில் மூன்று போலும் .

குறிப்புரை :

கண்ணுதல் :- ( நுதற்கண் ) நெற்றிக்கண் ` திரிசூலம் ` என்னும் பெயர்கொண்டே மூன்று என்பது புலனாம் . கையின்கண் உள்ள வில் , நாண் , அம்பு மூன்றும் கொள்க . அக்கணையை எய்தது முப்புரம் . ` திரிபுரம் `. கணையின் முக்கூறு ஈர்க்கு ( காற்று ), உடல் ( திருமால் ), கூர் ( தீ ) எனலும் உண்டு . சொல்லமைதிக்கேற்றதன்று அது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவ ரூர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடினதாமே.

பொழிப்புரை :

எம்பெருமானுடைய திருமுகங்கள் நான்கு . அவரால் படைக்கப்பட்ட படைப்பு - நிலம் , கருப்பை , முட்டை , வியர்வை , இவற்றிலிருந்து தோன்றும் நால்வகையது . அவர் வாகனமாகிய காளையின் பாதங்கள் சரியை , கிரியை , யோகம் , ஞானம் என்பன . அவர் பாடிய வேதங்கள் இருக்கு , யசுர் , சாமம் , அதர்வம் என்ற நான்கு போலும் .

குறிப்புரை :

நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன :- ` ஆதி நான்முகத் தண்டவாண ... நின்மூவிலை நெடுவேல் பாடுதும் ( சிவபெருமான் திருமும்மணிக்கோவை . 28 ). திருப்பெருந்துறைப் புராணம் ( சதாசிவமூர்த்தம் . பா .7 ) பார்க்க . கர்த்திரு சாதாக்கியத்திற்கு நான்முகம் ; ` கர்த்திரு சாதாக்கியப் பெயர் ஞானம் என்றதன் எழிற்பெயர் ஆதலினாலும் , ஞானசத்தி இலகுதலாலும் , ஊனம் இல் மறைகள் உரைத்திடும் அதுதான் , சுத்தம் ஆதலின் தூய் பளிங் கொளியாய் , இத் தகு திவ்வியலிங்கமும் ஆய் அதன் , மத்தியில் நாலு முகத்தொடு மன்னி , நலமிகு பன்னிரு நயனம் உடைத்தாய் , வலதுகை சூலம் மழுவாள் அபயம் , இடதுகை நாகம் இலங்கிய பாசம் , படுமணி வரதம் எனும் படை ஏந்தி , ஒடியில் இலக்கணம் உடன் இருப்பதுவே .` ( சதாசிவரூபம் . 12:- 20 - 31 ). ` கர்த்திருசாதாக்கியம் இலிங்க வடிவாய் , நாலுமுகம் பன்னிரு கண் படிகவொளி எட்டு கைகளில் வலம் இடங்களில் , சூலம் , மழு , வாள் , அபயம் , நாகம் , பாசம் , மணி , வரதம் ஆக இருக்கும் ` ( திருவாசக வியாக்கியானம் . பக்கம் 218 ). ` தற்புருட மந்திரத்தின் நான்கு கலைகளும் நான்கு முகம் . அகோரத்தின் எட்டுக் கலைகளும் தோள்கள் .` ( சிவார்ச்சனாசந்திரிகை . பக்கம் 101 ) சனனம் - பிறப்பு . 1. அண்டசம் . 2. சுவேதசம் . 3. உற்பிசம் . 4. சராயுசம் . ஊர்தி - விடை . ` உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி ` ( அப்பர் ) ` இருள்கெட அருளிய இன்பவூர்தி ( தி .8 திருவாச .) என்பதன் நாலு பாதம் சரியை , கிரியை , யோகம் , ஞானம் , என்பன . நாலு அவர்தம் உகம் (` ஒரு உகம்போல் ஏழ் உகமாய் நின்ற நாளோ `) எனப் பிரிக்கலாமேனும் , காலாதீதனுக்கு உகம் இன்மையாலும் , ஏழுகமாய் நின்றது உயிர்கட்கு ஆதலாலும் , ` சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி ` என்று பிறாண்டும் சாதாக்கியத்தைக் குறித்தலாலும் அது கொள்ளற்பாற்றன்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

அஞ்சுகொ லாமவ ராடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவ ராடின தாமே.

பொழிப்புரை :

எம்பெருமான் ஆட்டுகின்ற பாம்பின் படங்கள் ஐந்து , அவர் வென்ற புலன்களும் ஐந்து . அவரால் வெகுளப்பட்ட மன்மதனுடைய பூ அம்புகளும் ஐந்து . அவர் அபிடேகம் செய்வன பசுவினிடத்திலிருந்து தோன்றும் பஞ்சகவ்வியம் என்ற ஐந்து போலும் .

குறிப்புரை :

அவர் ஆடு அரவின் படம் அஞ்சு :- ஆடரவு - ஆடும் பாம்பு . அவர் அரவு - அவர் பூண்ட பாம்பு அவர் ஆடும் அரவு எனல் சைவத்திற்கேலாது . அவர் பிடித்தாடும் அரவு எனலாம் . ` கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் பிடித்து ஆடி புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமான் ` அவர் வெல் புலன் ஐந்து :- ` பொறிவாயிலைந் தவித்தான் .` இறைவற்குப் புலன் இருந்து நீங்கியதன்று . இயல்பில் இன்மை என்க . அவரால் அடியவர் வெல்லும் புலன் ஐந்து எனலும் நன்று . ` வஞ்சக் கள்வர் ஐவரையும் என்மேல் தர அறுத்தாய் ` ( தி .6 ப .99 பா .3) என்று ஆசிரியர் அருளியதுணர்க . ` விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் ; வேண்டின் ஐம்புலன் என்வசம் அல்ல ` ( தி .7 ப .60 பா .7) என்ற சுந்தரர் திருவுள்ளப்படி , என்வசம் அல்லாத புலன்களை நின்வசப் படுத்தி வெல்லும் ஆற்றல் நின் அருட்கே உண்டு என்றவாறாம் . அவர் காய மன்மதன் பட்டான் . பட்டவன் மலர்க்கணை அஞ்சு . காய்தல் - தீவிழியால் எரித்தல் . ஆடின - அபிடேகம் செய்யப்பட்டன . அஞ்சு - ஆனைந்து ; பால் , தயிர் , நெய் . ` ஆடினாய் நறுநெய் யொடு பால்தயிர் .` ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல் ( தி .4 ப .11 பா .2) திருவண்ணாமலைக் கல்வெட்டில் ஆனீரும் அதன் சாணமும் முறையே உழக்களவும் ஆழாக்களவும் கொண்ட வழக்கு உளது . அது பஞ்சகௌவியத்துக்கென்பர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

ஆறுகொ லாமவ ரங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.

பொழிப்புரை :

அவர் வேதத்துக்கு அங்கங்களாகப் படைத்தன ஆறு . அவருடைய மகனாகிய முருகனுடைய முகங்கள் ஆறு . அவர் மாலைமிசை அமர்ந்துள்ள வண்டின் கால்களும் ஆறு . அவர் உணவுச் சுவையாக அமைத்தனவும் ஆறுபோலும் .

குறிப்புரை :

அங்கம் :- ` நன்றாய்ந்த ... ... ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல் ` ( புறம் . 166 ). 1. சிக்கை . 2. கற்பசூத்திரம் . 3. வியாகரணம் . 4. நிருத்தம் . 5. சந்தோவிசிதி . 6. சோதிடம் என்ற ஆறும் வேதாங்கம் . அவற்றுள் 1. வேதங்களை எடுத்தல் படுத்தல் முதலிய இசை வேறுபாட்டால் உச்சரிக்குமாறு உணர்த்துவது சிக்கை . 2. வேதங்களிற் கூறும் கருமங்களை அநுட்டிக்கும் முறைமை உணர்த்துவது கற்பசூத்திரம் . 3. வேதங்களின் எழுத்துச் சொற்பொருளியல்பு உணர்த்துவது வியாகரணம் . 4. வேதங்களின் சொற்பொருள் உணர்விப்பது நிருத்தம் . 5. வேத மந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும் அவற்றிற்கு எழுத்து இனைத்து என்றலும் உணர்த்துவது சந்தோவிசிதி . 6. வேதத்திற் சொல்லப்படும் கருமங்கள் செய்தற்குரிய கால விசேடங்களை உணர்த்துவது சோதிடம் . இங்ஙனம் ஆதலின் , இவை ஆறும் வேதத்திற்கு அங்கம் எனப்பட்டன . புராணம் , நியாயம் நூல் . மீமாஞ்சை , மிருதி என்னும் நான்கும் வேதத்திற்கு உபாங்கம் . 1. பரமசிவன் உலகத்தைப் படைக்குமாறு முதலாயின கூறும் வேதவாக்கியப் பொருள்களை வலியுறுத்தி விரித்துணர்த்துவது புராணம் . இதிகாசமும் ஈண்டு அடங்கும் . 2. வேதப்பொருளை நிச்சயித்தற்கு அநுகூலமான பிரமாணம் முதலியவற்றை உணர்த்துவது நியாயநூல் . 3. வேதப்பொருளின் தாற்பரியம் உணர்தற்கு அநுகூலமான நியாயங்களை ஆராய்ச்சிசெய்து உணர்த்துவது மீமாஞ்சை . அது பூருவ மீமாஞ்சை உத்தர மீமாஞ்சை என்று இருவகைப்படும் . அவற்றுள் முன்னையது மீமாஞ்சை எனவும் வேதம் எனவும் , பின்னையது வேதாந்தம் எனவும் வழங்கப்படும் . 4. அவ்வவ் வருணங் ( குடி ) கட்கும் ஆசிரமங்களு ( நிலை ) க்கும் உரிய தருமங்களை உணர்த்துவது மிருதிநூல் . உபவேதம் நான்கு உள . 1. எல்லாம் அநுட்டித்தற்குச் சாதனமான யாக்கையை நோயின்றி நிலைபெறச் செய்யுமாறுணர்த்துவது ஆயுள்வேதம் . 2. பகைவரால் நலிவின்றி உலகம் காத்தற்கு வேண்டப்படும் படைக்கலம் பயிலும் வகையை உணர்த்துவது வில்வேதம் . 3. எல்லாக் கடவுளர்க்கும் உவகை வரச் செய்யும் இசை முதலியவற்றை உணர்விப்பது காந்தருவ வேதம் . 4. இம்மைக்கும் மறுமைக்கும் ஏதுவாகிய பொருள்களை ஈட்டும் உபாயம் உணர்விப்பது அருத்த நூல் . அங்கங்களை அறிவார் இவற்றையும் அறிதல் நன்று என்று இங்குணர்த்தலாயிற்று . ` அறுமுகப் பெருமான் ` ` அறுகால் வண்டு ` ` அறுசுவை ` இவை மூன்றும் அவ்வாறு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஏழுகொ லாமவ ரூழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட விருங்கடல்
ஏழுகொ லாமவ ராளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.

பொழிப்புரை :

அவர் படைத்த படைப்புக்கள் எழுவகையன . அவர் படைத்த கடல்கள் ஏழாகும் . அவர் ஆளும் உலகங்களும் மேல் உலகம் ஏழும் கீழ் உலகம் ஏழும் . அவர் படைத்த இசைகளும் ஏழு போலும் .

குறிப்புரை :

ஊழி :- ஊழியும் மடங்கலும் உகமுடி வாகும் ` ( பிங்கலத்தை . 307 ). ஊழி படைத்தன ஏழு - ஊழிதொறும் படைத்தவை ஏழு பிறப்பு . ` மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி ` ( தி .8 திருவாசகம் ) என்பதற்கேற்பப் பொருள் கொள்ளலும் ஆம் . ` அளவிலாப் பல்லூழிகண்டு நின்ற தீர்த்தன் ` ( தி .6 ப .19 பா .11) ` ஊழிமுதல்வனாய் நின்றாய் நீயே ` ( தி .6 ப .38 பா .5) பார்க்க . அவர் கண்ட கடல் ஏழு :- 1. உப்பு . 2. தேன் . 3. கருப்பஞ்சாறு . 4. தயிர் . 5. நெய் . 6. பால் . 7. நீர் . ` உப்புத் தேன் இக்கு வெண்டயிர் நெய்பால் அப்புக் கடல் ஏழ்ஆகும் என்ப ` ( பிங்கலந்தை . 585 ). ஏழுலகங்கள் :- மேலேழுலகம் :- 1. பூ . 2. புவம் . 3. சுவர்க்கம் . 4. மா . 5. தவம் . 6. பிரமம் . 7. சிவலோகம் . கீழேழுலகம் :- 1. அதலம் . 2. விதலம் 3. சுதலம் . 4. நிதலம் . 5. தராதலம் . 6. ரசாதலம் . 7. பாதலம் . ஏழிசை :- ` குரலே துத்தம் கைக்கிளை உழையே , இளியே விளரி தாரம் என்றிவை , ஏழும் யாழின் இசைகெழு நரம்பே ` ( பிங்கலந்தை . 1402 ) ` ஆறொன்றுமானார் . ( தி .6 ப .16 பா .6).

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

எட்டுக்கொ லாமவ ரீறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.

பொழிப்புரை :

அவருடைய அழிவில்லாத பெருங்குணங்களும் எட்டு . அவர் சூடும் மலர்களில் இனங்களும் எட்டு . அவருடைய ஒன்றற்கொன்று இணையான தோள்களும் எட்டு . அவர் படைத்த திசைகளும் எட்டுப் போலும் .

குறிப்புரை :

எட்டுக் குணம் :- ( குறள் . 9. உரை பார்க்க ) 1. பிறவின்மை . 2. இறவின்மை . 3. பற்றின்மை . 4. பெயரின்மை . 5. உவமைஇன்மை . 6. ஒருவினையின்மை . 7. குறைவிலறிவுடைமை . 8. குடிநுதல் ( கோத்திரம் ) இன்மை என்பது பழந்தமிழர் ` நன்றாய்ந்த நீள் நிமிர்சடை முதுமுதல்வன் ` ( புறம் . 166 ) உடைய பண்பெட்டும் வழங்கினர் . 1. முற்றறிவு ( சருவஞ்ஞத்துவம் ). 2. வரம்பிலின்பம் ( திருப்தி , பூர்த்தி ). 3. இயற்கையுணர்வு ( அநாதிபோதம் , நிராம யான்மா ). 4. தன்வயம் ( சுதந்திரம் , சுவதந்திரதை ). 5. குறைவிலாற்றல் ( அலுப்தசக்தி , பேரருளுடைமை ). 6. வரம்பிலாற்றல் ( அநந்தசக்தி , அளவிலாற்றல் ). 7. தூய உடம்பு ( விசுத்ததேகம் ). 8. இயல்பாகவே பாசங்களில்லாமை ( அநாதி முத்தத் தன்மை ) என்றலும் உண்டு . எட்டு மலர் :- ( அட்டபுட்பம் 5-54. 1-10 முழுதும் பார்க்க ) ` எட்டுக் கொண்டார்தமைத் தொட்டுக் கொண்டே நின்றார் , விட்டார் உலகம் என்று உந்தீபற . வீடே வீடாகுமென்றுந்தீபற .` (24) கிரியைக்குரிய எண் மலர் வேறு . ஞானத்திற்குரிய எண்மலர் வேறு . ஞானபூசைக்குரியன :- 1. கொல்லாமை . 2. ஐம்பொறியடக்கல் , 3. பொறுமை , 4. இரக்கம் , 5. அறிவு , 6. மெய் , 7. தவம் , 8. அன்பு என்பன . ( சிவஞானபாடியம் . சூ . 9. அதி . 3 ) ` நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்களெட்டும் ` ( புகையெட்டும் ). காலை , உச்சி , மாலை நள்ளிரவு , புலரி முதலிய எல்லாக் காலங்கட்கும் வகுத்த எண் மலர் வகையைப் புட்பவிதி தி .4 ப .2 பா .6,7,8,9 இல் அறிக . எட்டுத் தோளிணை :- ` எண்டோளினன் முக் கண்ணினன் ` ( தி .7 ப .71 பா .9) ` எண்டோள் வீசிநின்றாடும் பிரான் ` ` படையிலங்கு கரம் எட்டுடையான் ` ` அட்டமாம் புயம் ஆரூரரே ` என்றது வேற்றுருவம் குறித்து . எட்டுத் திசை :- ` ஈறாய் ... எட்டுத் திசைதானாய் ... வீழிம்மிழலையே `

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினி னூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தானே.

பொழிப்புரை :

இவ்வுடம்பில் அவர் வகுத்த துவாரங்கள் ஒன்பது . அவர் மார்பில் அணிந்த பூணூலின் இழைகள் ஒன்பது . அவருடைய அழகிய சுருண்ட சடை ஒன்பதாக வகுக்கப்பட்டது . அவர் படைத்த நிலவுலகம் ஒன்பது கண்டங்களை உடையது போலும் .

குறிப்புரை :

ஒன்பது வாசல் :- நவத்வாரம் . ` என்பினாற் கழிநிரைத் திறைச்சி மண்சுவ ரெறிந்திது நம்மில்லம் , புன்புலால் நாறுதோல் போர்த்துப் பொல்லாமையான் முகடுகொண்டு . முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே , அன்பனாரூர் தொழுதுய்ய லாம் மையல்கொண் டஞ்சல்நெஞ்சே` ( தி .2 ப .79 பா .8) ` புழுப் பெய்த பண்டிதன்னைப் புறமொரு தோலான்மூடி , ஒழுக்கறா வொன்பதுவா யொற்றுமை யொன்றுமில்லை , சழக்குடை யிதனுளைவர் சங்கடம் பலவுஞ்செய்ய , அழிப்பானாய் வாழமாட்டேன் ஆரூர்மூ லட்டனீரே ` ( தி .4 ப .52 பா .2). ` ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன் ` ( தி .6 ப .99 பா .1) ` வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதல் தானே புதுமை ?` ( நன்னெறி .12 ) ஒன்பது மார்பினில் நூல் இழை :- ` ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் ` ( தி .11 திருமுருகாற்று . 183) கோலம் - அழகு . குழற்சடை :- ` குழற் சடை யெங்கோன் ` ( தி .6 ப .31 பா .5) ` குழற்சிகை `. முடி , கொண்டை , குழல் , பனிச்சை , சுருள் என்னும் ஐம்பாலுள் ஒன்றேனும் , ஈண்டுப் பொதுவாய்ச் சடைமேல் நின்றது . குழல் ஆண் பெண் தலைமயிர்க்குப் பொது . ( பிங்கலந்தை . 1066 ) கொண்டை நீக்கித் தொங்கல் கொள்ளலும் உண்டு . ( பிங்கலந்தை . 1070 ) பாரிடம் - பார் இடம் , பூமி . ஒன்பது பாரிடம் - நவகண்டம் ` நவகண்ட பூமிப் பரப்பை வலமாக வந்தும் ` ( தாயுமானவர் ; ` பத்திநெறி நிலைநின்றும் ` ). ` பல்சடைப் பனிகால்கதிர் வெண்டிங்கள் சூடினாய் ` ` பத்து நூறவன் பல்சடை ` ( தி .5 ப .89 பா .10) என்பவற்றாற் சடைப் பன்மையை அறியலாம் . ` அலையுடையார் சடை யெட்டுஞ்சுழல அருநடஞ்செய் நிலையுடையார் ` ( தி .7 ப .19 பா .7) என்றது கொண்டு , வானைச் சேர்த்து , ஒன்பான் திசை நோக்கிய சடை ஒன்பது எனத் துணிவில்லை . நிலனை நோக்கியதெனலாகாது . ` ஒன்பது வாயிற் குடில் ` ( தி .8 திருவாசகம் .1.)

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.

பொழிப்புரை :

அவர் அணிந்த ஐந்தலைப் பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து . அவரால் கோபிக்கப்பட்ட இராவணனுடைய தலைகளும் பத்து . அவர் அழுத்தியதால் நொறுங்கிய அவன் பற்களும் பத்து . அப்பெருமானுடைய அடியார்களுடைய தசகாரியம் என்னும் செயல்களும் பத்துப் போலும் .

குறிப்புரை :

` விடந் தீர்த்த திருப்பதிகம் ` என்னும் வாய்மை இதனால் விளங்குகின்றது . ` அவர் பாம்பு ` என்றதால் அவர் அணியும் பாம்பு ஐந்தலையுடையது என்பதும் , தலைக்கு இரண்டாகப் பத்துக் கண் உடையதென்பதும் , தட்டம் அதட்டம் என்னும் இரண்டும் அவ்வைந்தலைக்கண்ணும் உள்ளமையால் பத்துப்பல் உடையது என்பதும் புலப்படும் . ` எயிறுகளுக்கு மேலாம் தட்டம் அதட்டம் என்கின்ற எயிறுகள் ` என்றதால் இவ்வுண்மை அறியலாயிற்று . ` அவர் அரவின் படம் அஞ்சு ` (181) ` தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீரே ` ( தி .1 ப .54 பா .4) ` கடுவொடுங் கெயிற்றுத் துத்திக் கட்செவிப் பகுவாய் பாந்தள் ` ( தசகாரியம் . 12 ). ` கடுவொடொடுங்கிய தூம்புடை வாலெயிற்றழலென வுயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்பு ` ( தி .11 திருமுருகு . 148-50) என்றதனுரையும் , ` துளையெயிற்றுரகக் கச்சு ` ( சிலப் . வேட்டுவ . 59 ) என்றதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும் காண்க . பாம்பின் பல்லில் நஞ்சொழுகுந்துளையுடைமை உணரப்படும் . ` பொழிந்துநஞ் சுகுத்தல் அச்சம் இரைபெரு வெகுளிபோகம் கழிந்துமீ தாடல் காலம் பிழைப்பென எட்டின் ஆகும் பிழிந்துயிர் உண்ணும் தட்டம் அதட்டமாம் பிளிற்றின் உம்பர் ஒழிந்தெயி றூனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான் ` - சிந்தாமணி . பதுமையார் . 121 என்பதன் உரையில் , நச்சினார்க் கினியர் , ` எயிறுகளுக்கு மேலாம் தட்டம் அதட்டம் என்கின்ற எயிறுகளில் உண்டான நஞ்சைக் கடித்த வாயிலே காலும் ஆயின் , பிழிந்து உயிர் உண்ணும் . அவற்றை ஒழிந்த எயிறுகளில் உண்டான நஞ்சைக் கடித்த வாயிலே காலும் ஆயின் , வருத்தம் செய்யும் ` என்றுரைத்தார் . அவ்வீரெயிறும் ஐந்தலைக்கும் தனித்தனி இருத்தலால் , பத்துப்பல் என்க . ஏனைய பற்கள் எண்ணத்தக்கன அல்ல . பாம்பிற்குரிய நால்வேறு பற்களின் பெயர் , காளி , காளாத்திரி , யமன் , யமதூதி எனப்படும் . ` கடுவமரும் நால் எயிற்றுக்கும் பெயர் சொல்வேன் காளி காளாத்திரி யமன் யமதூதனாம் ` ( சித்தராரூடச் சிந்து ). இது புகழுடல் எய்திய உ . வே . சாமிதையர் பதிப்பிலுள்ளது . தக்க யாகப் பரணி . 155. உரை . வைத்திய சார சங்கிரகம் . பக்கம் . 530-31. பார்க்க . நெரிந்து உக்க பத்து எயிறும் இராவணனுடையன . அக்கயிலாயபதி காயப் பட்டவனாகிய இலங்காதிபதியின் தலை பத்து , ` காயப்பட்டான் ` ( தி .4 ப .1 பா .5). அடியார் செய்கை பத்து :- தசகாரியம் . தத்துவரூபம் , தத்துவதரிசனம் . தத்துவசுத்தி , ஆன்மரூபம் , ஆன்ம தரிசனம் , சிவரூபம் , சிவதரிசனம் , சிவயோகம் , சிவபோகம் ( ஆன்ம லாபம் ). இவற்றினியல்பு , சிவஞானபோதம் . சிவஞானசித்தியார் . சிவப்பிரகாசம் , உண்மைநெறிவிளக்கம் , பண்டாரசாத்திரம் முதலியவற்றால் அறியலாம் . அநுபவஞானம் குரூபதேசத்தால்தான் எய்தும் . ` திருவருள் வினவல் திருந்திடும் ` ( சங்கற்பநிராகரணத்தின் முடிவில் என்றாரே அன்றி நிட்டை எய்தலாம் என்றாரல்லர் .) வினவல் - கேள்வி ; சிரவணம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.

பொழிப்புரை :

சூலப்படை உடையவனாய், குங்குமம் பூசிய அழகிய தோள்களாகிய, அருவிகள் விழும் எட்டு மலைகளை உடையவனாய், பால்போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய், தனக்குத் துணையான ஆலமரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்த பெருமானை நான் ஆரூரில் கண்டேன்.

குறிப்புரை :

சூலப்படையும் தோளெட்டும் பாலொத்த மொழியுமை பாகமும் ஆலின்கீழிருக்கையும் உடைய சிவபெருமானை நான் கண்டது திருவாரூரிலே என்க. ஏழனுருபு ஈற்றிற்றொக்கது. தோட்குன்று:- உருவகம். தோள்களாகிய மலைகள். கோலம் - அழகு. வடிவம். தோள்களிற் சூழ்ந்து ஒழுகும் குங்குமமும் குன்றிற் சூழ்ந்து வீழும் அருவியும் கோலத்தால் ஒத்துள்ளன. `பால்போலும் இன்சொல்` மென்மொழி - `மிருதுவசநம்` ஆலத்தின் கீழானை - ஆலமரத்தின் கீழிருந்து அறம் உரைத்த குருமணியை. பாங்கு:- பால் + கு. பக்கம். (நால் + கு = நான்கு) `கல்லாலின் கீழறங்கள் சொல்லினான்காண்`.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்
புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கிறகின் றூவல் கொடியெடுத்த கோவணத்தோ
டக்கணிந்த வம்மானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

இருபுறமும் பூதங்கள் சூழத்தாம் சென்ற ஊர்களில் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்டு, நல்ல விளக்கம் பொருந்து வனவாகக் கொக்கிறகின் தொகுதி, ஒழுங்காக அமைக்கப்பட்ட கோவணம், சங்குமணி இவற்றை அணிந்த தலைவனை அடியேன் கண்டவிடம் ஆரூராகும்.

குறிப்புரை :

பாரிடங்கள் - பூதங்கள். படுதலை -பிரமகபாலம். `கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும் மிக்க வெண்டலை மாலை விரிசடை நக்கன்` (தி.5 ப.55 பா.4) `கொக்கிறகு சென்னியுடையான் கண்டாய்` `கொக்கிறகர் குளிர்மதிச் சென்னியர். `ஆர்ப்பர் போலும் ஆவடுதுறைய னாரே` (தி.4 ப.56 பா.6) `அக்கு ஓட்டினைச்சேய் அரைகரம் கொண்டார்` (காஞ்சிப். 6). அக்கு:- பாசிமணி, சங்குமணி என்பர். `துன்னஞ்சேர் கோவணத்தாய்`.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

சேய வுலகமுஞ் செல்சார்வு மானானை
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பானை
வேயொத்த தோளியர்த மென்முலைமேற் றண்சாந்தின்
ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

சேய்மையதாகிய வீட்டுலகமாகியபேறும் அதனை அடைவதற்குரிய வழியாகிய ஆறும் ஆகின்றவனாய், அழிக்கின்ற போரில் வல்லவனாய், மாலை தொங்கும் மார்பினனாய், தம் மென்முலைமேல் குளிர்ந்த சந்தனம் பூசிய, மூங்கிலை ஒத்த தோள்களை உடைய, தன்னை வழிபடும் மகளிர் கூட்டத்திடையே இருக்கும் பெருமானை நான் கண்ட இடம் ஆரூர் ஆகும்.

குறிப்புரை :

சேயவுலகம் - எல்லாவுலகிற்கும் அப்பாலான வீட்டுலகம்; பேரின்பவுலகு. தி.4 ப.4 பா.6 குறிப்புரை காண்க. `எல்லா வுலகமும் ஆனாய்நீயே` என்றதன் கருத்துமாம். செல்சார்வும் ஆனான்; `தாயாகித் தந்தையாய்ச் சார்வும் ஆகி` (தி.6 ப.94 பா.5) செல்சார்வுடையார்க்கு (-`தமக்குச் செல்சார்வாகிய கொழுநரை யுடையார்க்கு`) இனிய ... மாலை (ஐந்திணையைம்பது. 6) கற்புறு மகளிர்க்குக் கணவனே செல்சார்வானாற் போல உயிர்க்குக் கடவுளே செல்சார்வாதலைக் `கற்புறு சிந்தைமாதர்` எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலாலும் அறிக. `அரன் கழல் செலுமே` `செம்மலர் நோன்றாள் சேரல்` (சிவ.போ.சூ. 11.12.) என்பவற்றால், உயிர்ச்செலவிற்கும் உயிர்ச்சார்விற்கும் பரமேசுரனன்றி வேறின்மையால், \\\\\\\\\\\\\\\"ஆனந்தவுருவாய் அன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய் ... ... திகழ்வது தற்சிவம்\\\\\\\\\\\\\\\" என்றது சிவப்பிரகாசம். மாயப்போர் - மும்மல காரியமாகிய திரிபுரப்போர்; `திரிபுரம் அழித்தல் மும்மலந்தீர்த்தல்` `திரிபுர மும்மலதகனம்` `போரார்புரம் பாடி - திரிபுரத்தைப் பொடியாகச் செய்ததைத் துதித்து` (தி.8 திருவாசகம்; தாண்டவராய சுவாமிகள் வியாக்கியானம். பக்கம். 672 - 84). மாலை:- கொன்றை மாலை முதலியன. `காமர் வண்ணமார்பிற்றாரும் கொன்றை` (புறம்) `விலையிலா ஆரம்சேர் மார்பர் (தி.6 ப.82 பா.8). வேய் - மூங்கில், `வேயுறுதோளி` `வேய்த்தோளி` (சம்பந்தர்) சாந்தின் ஆயம் - சந்தனத்திரட்சி. `சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி` `அருமணித்தடம் பூண்முலை யரம்பையர்` தொகை ஆரூரில் வழிபடுவோர் தொகையுள் ஒன்று. (தி.4 ப.20 பா.3; ப.21 பா.8 பார்க்க.) `நறப்படு பூமலர் தூபம் தீபம் நல்ல நறுஞ் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவாரூர்` (தாண்டகம்). தியாகராசரைக் கண்டது ஆரூரில். ஆரூர்க்கு எழுந்தருளுமுன் அவர் வீற்றிருந்தருளிய இடம் விண்; தேவேந்திரன் வழிபட்ட திருக்கோயில். விண்ணில் அவனால் வழிபடப்பெற்று, அப்போகிக்குப் போகியாயிருந்து போகத்தைப் புரிந்தருளினார். அதனால் அவரும் அவன் திறத்திலே போகமூர்த்தியாய்த் திகழ்ந்தார். அவனது போகத்துள் ஒன்று தோளியர் முலைச்சாந்தின் ஆயத்திடை யானாதல். அவன் வழிபடு கடவுளாகி அவனுள் இருந்து போகம் காட்டியும் அவனாயிருந்து கண்டும் நின்ற காரணத்தால், இவ்வாறு கூறலாயிற்று. `பெற்ற சிற்றின்பமே பேரின்பம் ஆக` (திருவுந்தியார். 33) (சிவ. போ. சூ. 5. 11. சிவ. சித்தி. 5. 11. 9. விடயத்தின்கண்ணும் உயிரின்கண்ணும் படும் இரு வேறு நிகழ்ச்சியிலும் அரனடியை அகலாத உண்மை). பரமுத்தியிலும் உயிர்கள் சிவாநந்தாநுபூதியை விடயிக்கச் செய்தும் உடனின்றறிந்தும் வருதலால் முதல்வனை, `நசையுநர்க்கு ஆர்த்து மிசை பேராளன்` (தி.11 திருமுருகு. 270) என்றார். நற்கீரதேவ நாயனார். ஆர்த்தல் - ஆரச்செய்தல். மிசைதல் - நுகர்தல், ஈண்டு உணர்தலின் மேற்று. ஆர்த்து மிசைதல். ஆர்த்தல் - காட்டும் உப காரம் (சிவ. போ.சூ.5). மிசைதல் - காணுமுபகாரம் (௸ சூ. 11) இதற்கு நச்சினார்க்கினியர் முதலோர் வேறுரைத்தனர். இந்திரன் வழிபட விண்ணிலிருந்த தியாகராசரை மண்ணில் ஆரூரில் கண்டு போற்றிய அப்பர், அவரது விண்ணிலையையும் அரசபோகத்தையும் குறித்தருளினார்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

ஏறேற்ற மாவேறி யெண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தில்
நீறேற்ற மேனியனாய் நீள்சடைமே னீர்ததும்ப
ஆறேற்ற வந்தணனை நான்கண்டதாரூரே. 

பொழிப்புரை :

வாகனமாக ஏறுதற்குரியவற்றில் மேம்பட்டதான காளையை இவர்ந்து எண்வகை அடியவர் கூட்டங்களும் தன்னைப் பின் தொடர வருவானாய், பகைவராய் எதிர்த்தாருடைய வலிய மதில்களைக் கோபித்தவனாய், சுடுகாட்டுச் சாம்பல் பூசிய மேனியனாய், நீண்ட சடைமுடியின் மீது நீர் நிறைந்து அலை எறியுமாறு கங்கையை ஏற்ற சடையனாய் உள்ள பெருமானை நான் தரிசித்த இடம் ஆரூராகும்.

குறிப்புரை :

ஏறு - விடை, ஏற்றம் - உயர்வு. ஏற்றமாக ஏறு ஏறி. ஏற்றம் ஆதல் ஏற்றிற்கே. பசுபதிக்கு ஏற்றம் இயல்பு. பசுக்கட்கு ஏற்றம் ஆக்கம். எண்கணம்:- (தி.4. ப.20 பா.3) காண்க. `அமரர்கணம் புடை சூழ இருந்த நாளோ` 1. அருளிப்பாடியவர். 2. உரிமையிற்றொழுவார். 3. உருத்திரபல்கணத்தார். 4. விரிசடை விரதிகள். 5. அந்தணர். 6. சைவர். 7. பாசுபதர். 8. கபாலிகள். ஆகிய எண்திறத்தார் தொகை. முற்பாட்டிலே அரம்பையர் தொகை குறிக்கப்பட்டதால், அருளிப் பாடியர் முதலிய எண்கணத்தார் இதிற் குறிக்கப்பெற்றனர். `எண்கணம் இறைஞ்சும் கோளிலிப்பெருங் கோயிலுளானைக் கோலக்காவினிற் கண்டுகொண்டேன்` (தி.7 ப.62 பா.8). `எண்கணத்தேவர்கள்` (தி.10 திருமந்திரம். 1881). 1. நந்தி. 2. மகாகாளர். 3. விநாயகர். 4. இடப தேவர். 5. பிருங்கி. 6. சுப்பிரமணியர். 7. உமாதேவி. 8. சண்டேசுவரர். சுத்த வித்தியாதத்துவத்தில் வாழும் நந்தி முதலிய கணநாதர் எண்மர் (சிவப். 21. திருவிளங்கம் உரை. சதாசிவரூபம். 131). \\\\\\\\\\\\\\\"திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார் பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்\\\\\\\\\\\\\\\" (தி.12 பெரியபுராண.) அத்தலத்தில் எல்லாரும் எண்கணத்துள் ஒரு கணத்தாராவர். திரிபுரத்து அசுரர்; வித்தியுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன். மாறு ஏலாது அருள் பெற்றோர்:- விரத்தன், பரமயோகன், குணபரன். (உபதேசகாண்டம். விசயச். 2.269.70) சுதர்மன், சுநீதி, சுபுத்தி எனலும் உண்டு. `மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்` (தி.1 ப.69 பா.1, தி.3 ப.78 பா.5, தி.7 ப.55 பா.8) பார்க்க. ஆறு - கங்கை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் மேறேறிப்
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயி லுண்மகிழ்ந்து போகா திருந்தாரே. 

பொழிப்புரை :

அழகாக வெண்ணிற எலும்புகளைச் சூடித் தம் காளை மீது இவர்ந்து, பக்கலிலுள்ள ஊர்களுக்கெல்லாம் செல்லும் மேம்பட்டவராய் இனிய குவளைமலர்கள் மணம்வீசும் திருவாரூர் ஆகிய பழைய ஊரில் உள்ள பூங்கோயில் என்ற பெயரை உடைய கோயிலை உகந்து கொண்டு அதனை ஒரு பொழுதும் நீங்காமல் எம்பெருமான் இருந்துள்ளார்.

குறிப்புரை :

கோலம் - அழகு, வடிவு. ஏறு - விடை. பாங்கு - பக்கம். தேம் காவி - தேனுள்ள கருங்குவளை. `கோலம் ஆர் பானல் காவி குவலயம் மணத்தை மொண்டு காலத்தேன் உலவுகின்ற கருங் குவளைக்கு நாமம்` (சூடாமணி நிகண்டு) `அரத்தம் உற்பலம், எருமணம், கல்லாரம், செங்கழுநீர் செங்குவளை` (பிங்கலந்தை). திருவாரூர்க்கோயிலைப் `பூங்கோயில்` என்பர். `பூதம் யாவை யினுள்ளலர் போதென வேத மூலம் வெளிப்படுமே தினிக் காதல் மங்கை யிதய கமலமா மாதொர் பாகன் ஆரூர் மலர்ந்தது` (தி.12 பெரிய. திருமலைச். 33) `மலர் மகட்கு வண்டாமரைபோல் மலர்ந்து அலகில் சீர்த்திருவாரூர் விளங்கும்` (தி.12 பெரிய.மநுநீதி. 12.) `பொன்றயங்கு மதில் ஆரூர்ப் பூங்கோயில் அமர்ந்த பிரான்` (தி.12 பெரிய. மநுநீதி. 49). `புற்றிடங்கொண்டவர் ஆதிதேவர் அமர்ந்த பூங்கோயில்` (தி.12 திருக் கூட்டச். 1) `பூவெனப்படுவது பொறிவாழ்பூவே` ஆதலின், தாமரைப் பூப்போலும் வடிவுடையமையாற் `பூங்கோயில்` என்பது பெயர் ஆயிற்று. அதனை வழக்கத்தின்வழாது கமலாலயம் என்றனர். வன்னியூரை அக்னிபுரம் என்றதுபோற் பூங்கோயிலைப் பிருதிவ்யாலயம் என்னாதது தமிழ்த்தாயின் நல்வினைப்பயனே.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை யந்திவாய்ச்
செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை
அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

எமது பட்டத்தைத் தனது பட்டமாகக் கொண்டு இருப்பவனாய், அழகான பிறையாகிய குறுகலான பட்டம் சேர்ந்த நெற்றியனாய், மாலை நேர வானம் போன்ற சிவந்த பட்டினை உடுத்து, சிறிய மான் தோல் ஆடையாகிய அழகிய பட்டினையும் கட்டிய பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.

குறிப்புரை :

எம் பட்டம் பட்டம் உடையானை:- சித்து அசித்து சிதசித்து என்பன பட்டம். புருடதத்துவத்திற்குரிய சிதசித்து என்பதில் உள்ள சித்து ஆண்டவனுக்குரியது. சித்தியார். சூ. 2:- 69. கொண்டுடையவனை: பட்டம் - ஆளும் உரிமை. பட்டம் ௸ சூ.2:- திரு. 69. எமது பட்டத்தைத் தனது பட்டமாகக்கொண்டுடையவனை. `பட்டம் - எண்மரும் பார்தொழ எய்தினார்` (சிந்தா. இலக்கணை. 197). யாம் இவ்வுடற்கண் இருந்து ஆளும் உரிமையொடு விளங்கினேம். தியாகேசன் எம் உரிமையைத் தன்னுரிமையாகப் பற்றிக்கொண்டான். பெத்தத்தில் உடலாட்சி உயிரினது முத்தியில் அது கடவுளது. ஏகனாகி இறைபணிநிற்கின்ற அநுபவம் உற்றார்க்கே இவ்வுண்மையுணர்தல் கூடும். `கனல்சேர் இரும்பென்ன ஆள்தானாம் - தானும் கனலைச் சேர்ந்த இரும்பு போலத் தன் சுதந்திரத்தை விட்டு அம் முதல்வனுக்கு அடிமையாம்` `நான் என ஒன்று இல் என்று தானே எனும் அவரைத் தன் அடிவைத்து இல் என்றுதானாம் இறை - யான் என்று ஒரு முதல் காணப்படுமாறு இல்லை என்று அறிந்து தானே முழுவதும் எனக் காண்பவரை அவ்வாறே வேறு காணப்படுமாறு இல்லை என்று தனது திருவடி வியாபகத்துள் அடங்கிநிற்கச்செய்து தானே முழுவதுமாய்க் காணப்பட்டும் நிற்பன்` (சிவஞானபாடியம். சூ. 9. 10.) தன் இச்சா ஞானக்கிரியைகளின் தொழிற்பாட்டுக்கு முதல்வனது இச்சா ஞானக் கிரியைகளை இன்றி அமையாத ஆன்மா, அவ்வியைபுபற்றி நிகழ்வன எல்லாம் முதல்வனது இச்சா ஞானக் கிரியைகளது நிகழ்ச்சியே எனக் கண்டு அவனது வியாபகத்துக்குள்ளாக அடங்கிநிற்கும் நிலை இது. `நாமும் அரனுடைமை`. (போதம் சூ. 10. வெண்பா.) இந் நாயனார் திருவாரூரில் இவ்வநுபவத்தைத் தன்மையில் வைத்து இவ்வாறு உணர்த்தியதேயன்றிப் படர்க்கையில் வைத்தும், `உயிராவணம் இருந்து உற்றுநோக்கி உள்ளக்கிழியின் உருவெழுதி உயிர் ஆவணம் செய்திட்டு உன்கைத் தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி ... நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே` `முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், மூர்த்தியவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்,பின்னைஅவனுடைய ஆரூர் கேட்டாள். பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்` என்ற அளவில் நின்றிலள்; `அன்றே அன்னையையும் அத்தனையும் நீத்தாள்; அகல் இடத்தார் ஆசாரத்தை அகன்றாள்; தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைவன் தாளே தலைப்பட்டாள்.` அவ்வுண்மை நிலையை அவள் போல் அம்மையப்பர்தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத் தலைப்படுதலை உணர்ந்து தம்மில் நிலைப்படலாம்; பேதம் நீக்கி, நிலை ஆக்கி அத்தலை தலைப்படலாம். (திருக்களிறு. 2. பார்க்க) ஏர் - அழகு, எழுச்சி. `நும்` சாரியையோ? (நன்னூல். 244. தொல். எழுத்து. நச்சினார்க்கினியம்.) `நும்பட்டம்` ஆறன் றொகையாகக் கொள்ளல் பொருந்தாது. நுண்பட்டம் என்பதன் திரிபோ? பட்டம் - நெற்றிப் பட்டம் (தி.3 ப.112 பா.2; தி.5:- ப.30 பா.3, ப.87 பா.1) மதிபோலும் பட்டம். இன் உவமவுருபு. செம்பட்டும் சிறிய மானுரியாடையாகிய அழகிய பட்டும் அசைத்தான். அசைத்தல் - கட்டுதல், உடுத்தல், `எம்` என்றதால் `தன்` என்பதும் `ஆக` என்பதும் வருவித்துரைக்கற்பாலன. பட்டு:- (தி.6 ப.2 பா.11, ப.59 பா.7)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு
வேழத் துரிபோர்த்தான் வெள்வளையா டான்வெருவ
ஊழித்தீ யன்னானை யோங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

மதியத்தின் பிளவாக இரு முனைகளும் ஒத்த வெண்பிறையைச் சூடி, வெள்ளிய வளையல்களை அணிந்த பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்தவனாய், அடியவர்களின் பகைவருக்கு ஊழித்தீ போன்ற கொடியவனாய், கடலாற் சூழப்பட்ட உலகையே ஒலிமிக்க வேதகங்களாகிய குதிரைகள் பூண்ட தேராகக் கொண்ட சாதுரியனான பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும். ஆழித்தேர் - திருவாரூர்த் தேரின் பெயர்.

குறிப்புரை :

போழ் - பிளவு. `பிறைப்பிளவு`. `போழுமதியம் புனக்கொன்றை புனல்சேர் சென்னிப் புண்ணியா` (தி.7 ப.77 பா.8) போழ் ஒத்த - பிளந்தாற்போன்ற என்னும் பொருட்டு. வேழத்துரி - யானைத்தோல். ஊழித் தீ அன்னானை - ஊழிக்காலத்துத் தீயைப் போன்றவனை. `அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற தீர்த்தனை` `ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே` `ஊழித்தீயாய் நின்றாய்` `ஊழி தோறு முலகினுக் கொருவர்` `ஊழியளக்கவல்லான்` `ஊழிவண்ணமுமாவர்` `ஊழியுமாய் உலகேழாகி` என முன்னும் பின்னும் உள்ளதுணர்க. ஓங்கு மா - உயரிய குதிரைகள். ஆழித்தேர்:- தியாகராசரது திருத்தேரைக்குறிப்பது. (திருவாரூருலா. 96-98) ஓரூரும் ஒழியாது உலகெங்கும் எடுத்தேத்தும் ஆரூர்த்தேர் மிக்க பெருமையுடையது. `தேரூரும் நெடுவீதி பற்றிநின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்`. (தி.6. ப.25 பா.9)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத்
துஞ்சிருளி லாட லுகந்தானைத் தன்றொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்
தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

வஞ்சனையுடையவர் யார் மாட்டும் அணுகாத திறமையுடையவனாய், எல்லோரும் உறங்கும் இருள் நேரத்தில் கூத்தாடுதலை விரும்பியவனாய், தன் அடியவர்களுடைய உள்ளத்தில் துயரமாகிய இருள் மிகும்போது ஞானமாகிய ஒளியைப் பரப்பி அழகிய ஞானப் பிரகாசனாய் நின்ற பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.

குறிப்புரை :

ஆர் பாடும் - எவர் திறத்தும், `பார்பாடும் பாதாளர் பாடும் விண்ணோர் தம்பாடும் ஆர்பாடும் சாராவகை அருளி ஆண்டுகொண்ட நேர் பாடல்பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ` (தி.8 திருவாசகம். 247). மைந்தன்:- மழ - மழ் + து = மழ்ந்து - மய்ந்து மைந்து, என்றதன் திரிபு. (தமிழ்ச்சொல்லமைப்பு. பக்கம். 55). வீரசோழியம் பார்க்க. `துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி` `நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்` கூரிருட் கூத்தொடு குனிப்போன் காண்க`. தந் தொண்டர் நெஞ்சு இருள் கூரும் பொழுது நிலாப்பாரித்து அம் சுடராய் நின்றான்:- `சொற்றெரியாப் பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் மற்று அறியா அடியார்கள்தம் சிந்தையுள் மன்னுமே`. (தி.3 ப.9 பா.10) `இடர்கெடுத்து ... ... என் உள் இருட்பிழம்பு அற, எறிந்து எழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும் தூயநற் சோதியுட்சோதீ` (தி.9 திருவிசைப்பா.2) `இருள்கெட அருளும் இறைவ போற்றி` `திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே`. (தி.8 திருவாசகம். 389) `இருள் திணிந்து எழுந்திட்டதோர் வல்வினைச் சிறு குடில் இது` (௸435) \\\\\\\\\\\\\\\"இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி இடர்பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற் சிவலோக நெறியறியச் சிந்தைதந்த அருளான்\\\\\\\\\\\\\\\" (தி.6 ப.54 பா.4) என்ற அநுபவவாக்கியம் இப் பாடற்பகுதி. (தி.4 ப.92 பா.4) பார்க்க. `ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம் என்றும் அகலா திருள்` (திருவருட்பயன்.29) நமிநந்தியடிகளுடைய வரலாற்று நினைவுமாம். (தி.4 ப.102 பா.9)

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோ டாடிய நீண்மார்பன்
பேரமுத முண்டார்க ளுய்யப் பெருங்கடனஞ்
சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

நன்கு முதிர்ந்த கொன்றை மரத்தில் பூக்கும் பூவின் நறுமணம் கமழும் குளிர்ந்த நீர் மயமான கங்கையைப் பார்வதியோடு மகிழ்ந்த, நீண்ட மார்பினனாய், பெரிய அமுதத்தை உண்டார்களாய்த் தேவர்கள் உயிர்பிழைப்பதற்காகப் பெரிய கடலின் விடத்தை அமுதமாக உண்ட பெருமானை அடியேன் தரிசித்த இடம் ஆரூராகும்.

குறிப்புரை :

கார் அமுது கொன்றை:- `கண்ணிகார் நறுங்கொன்றை` (புறம்) `கார்விரி கொன்றை` (அகம்) என்றவற்றால், கொன்றை கார்காலத்து மலர்வது எனல் விளங்கும். அதன் மலர்ச்சிக்குக் காரே அமுது. நீரமுத கோதை - கங்கா தேவி. பேரமுதம் - பாற்கடலினின்று கடைந்து எடுத்த அமுதம். பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டான்:- `விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணா நஞ்சம் உண்டு இருந்து அருள்செய்குவாய்` என்று இளங்கோவடிகள் வெற்றித் திருவின் மேலேற்றிக் கூறியதுணர்க. ஆர்தற்குரியதல்லாத நஞ்சு ஆரமுதாயிற்று. வினைத்தொகை. பண்புத் தொகையுமாம். அமுதம் உண்டது உய்தியின் பின்னர்த்து. நஞ்சினால் மாய்ந்தனரேல் அமுதுண்ணுவாரோ?

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

தாடழுவு கையன் றாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கா லன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

முழந்தாள் அளவும் நீண்ட கைகளை உடையவனாய், தாமரைப் பூப்போன்ற சிவந்த திருவடிகளை உடையவனாய், பிறரால் கொள்ள முடியாத வேடத்தினனாய், வீணையைக் கையில் கொண்டவனாய், அசைகின்றவாய் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய அத்தகைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.

குறிப்புரை :

தாடழுவுகையன் (தாள் தழுவு கையன்) என்றது தாடவுடுக்கையன் என்று பிழைபட்ட பாடம் ஆயிற்று. தாள்தோய் தடக்கை (- ஆஜாநுபாஹு) புறம். 14. 59. 90. 4. வெ. 205. தாட என்றுகொண்டு அடிக்க என்றுரைப்பர். அவ்வாறொரு வினையெச்சம் தமிழில் இல்லை. தாடநம் என்னும் வடசொல்லின் சிதைவெனலும் செவ்விதன்று. `கவிழமலை தரளக்கடகக்கை` (தி.1 ப.45 பா.9) என்றதில் தளர எனக் கடகம் தளரலானது பிழை. திருமுறையில் எழுதினோர் முதலோரால் பிழைகள் பலஉள. கோடல்ஆ - கொள்ளலாகா, ஆகா `ஆ` எனத் தொக்கது. அரவேடம் - சிவவேடம், சிவ. போ. சூ. 12. ஆடரவமும் கிண்கிணியும், கிண்கிணிக்காலழகர் (திருவாரூருலா. 59-60. 151. 217-9). `ஆறுசடைக்கணிவர் ... ... கோடால வேடத்தர் - `இடைமருது மேவி இடங்கொண்டாரே` என்றதிலும் `கோடலர` கோடலா என்றிருந்து பிழைபட்டிருக்கலாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலால்
துஞ்சாப்போர் வாளரக்கன் றோணெரியக் கண்குருதிச்
செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பிற் பால்வெண்ணீற்
றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே. 

பொழிப்புரை :

மேகங்கள் அசைந்து செல்லும் கயிலை மலையை இராவணன் பெயர்க்க முற்பட அழகிய கால் விரலால் அழுத்தி, உறங்காது, போர் செய்யும் திறமையை உடைய கொடிய அவ்வரக்கனுடைய தோள்கள் நெரிய அவன் கண்களிலிருந்து புறப்பட்ட இரத்தமாகிய சிவந்த கலவையை அவனை அணியுமாறு செய்து, தன் மார்பிலே பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினை அணிந்த பெருமானை அடியேன் தரிசித்த திருத்தலம் திருவாரூரேயாம்.

குறிப்புரை :

மஞ்சு - கருமுகில் (மைது, மய்து, மய்ந்து, மய்ஞ்சு, மஞ்சு), குன்று - திருக்கயிலை. துஞ்சாப்போர் - துயிலாது செய்யும் போர். மாளாப்போர் எனலுமாம். `துஞ்சாமுழவு` (சிலப்) துஞ்சாக்கம்பலை (பெரும்பாண் 260) குருதிச்செஞ்சாந்து இராவணன் அணியச் செய்து தான் அஞ்சாந்து அணிந்தான். செம்மை x வெண்மை, மார்பினீறு:- `நீறுசேர் செழுமார்பினாய்` (தி.4 ப.20 பா.5).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்க ழலடி
பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயினா லறையோ
ஈண்டுமாடங்க ணீண்டமா ளிகை மேலெழுகொடி வானி ளம்மதி
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

நெருங்கிய மாடங்கள் நீண்ட மாளிகைகள் இவற்றின் மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் வானத்திலுள்ள பிறையைத் தீண்டியவாறு வானத்தில் உலவும் திருவாரூரிலுள்ள பெருமானே ! உன்னைக் காண்பதனையே எண்ணமாகக் கொண்டு உன்னை விருப்புற்று நினைத்தவாறு இருந்த அடியேனுடைய உள்ளத்தில் நீ புகுந்தாயாக , உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளை என் மனத்திற்கு அணிகலனாக அணிந்து கொண்டிருக்கின்ற என்னை விடுத்துப் புறத்தே போக விடேன் . உன்மேல் ஆணை .

குறிப்புரை :

நெருங்கிய மாடங்களின் நீண்ட மாளிகைமேல் எழுந்தோங்கிய கொடிகள் வானில் ஊரும் இளம் பிறையைத் தீண்டிவந்து உலவும் உயர்வுடைய திருவாரூரில் எழுந்தருளிப் புற்றிடங்கொண்ட கடவுளே உன்னைக் காணவேண்டும் என்னும் ஒன்றே குறிக்கோளாய்க் கருதியிருந்தேன் , அது நிறைவேறியது என்பது திண்ணமாக என் , உள்ளத்திற் புகுந்து நின்றாய் . உன் கழலடியை என் அகத்திற்கு அருங்கலமாக்கிக்கொண்டு நின்றேன் . இனிப் புறத்திற் போகலொட்டேன் ( ப .20 பா . 7, 8) யானும் போகலாகாது ; நீயும் போயினால் நின்மேல் ஆணை . காண்டல் - காட்சி , ஏகாரம் பிரிநிலை . கருத்து - குறிக்கோள் . ` ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் காண்டலே கருத்தாகியிருப்பனே ` ( தி .5 ப .71 பா .8) மனம் புகுந்தாய் :- ` நுனையே நினைந்திருந்தேன் . வந்தாய் , போய் அறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் ` ( தி .1 ப .21 பா .1) ` என்மனமே ஒன்றிப் புக்கனன் போந்த சுவடு இல்லையே ` (782) ` சிந்தை புக்கிருந்து போகாத புனிதன் ` ( தி .6 ப .69 பா .2) ` பொய்யாது என் உயிருட்புக்கு இருந்தாய் இன்னம் போந்தறியாய் ` ( தி .7 ப .28 பா .5) ` போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி ` ( தி .6 ப .55 பா .26) ` சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே `, ` சிவம் அல்லது இல்லை அறையோ சிவமாம் தவம் அல்லது இல்லை தலைப் படுவார்க்கு ` ( தி .10 திருமந்திரம் 1534.) நோக்குக . ` செம்மையுள் நிற்பராகிற் சிவகதி விளையும் அன்றே ` ( தி .4 ப .75 பா .2) ` நிவஞ்சகத்து அகன்ற செம்மை ஈசன் ` (760) செய்ய மலர்கள் இடமிகு செம்மையுள் நிற்பரே ` ( தி .5 ப .86 பா .17) ` திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன் `. ( திருத்தொண்டத் தொகை )

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

கடம்படந்நட மாடினாய்களை கண்ணினக்கொரு காதல் செய்தடி
ஒடுங்கி வந்தடைந்தே னொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறான்முது நீர்மலங்கிள வாளைசெங்கயல் சேல்வ ரால்களி
றடைந்த தண்கழனி யணியாரூ ரம்மானே.

பொழிப்புரை :

வளைந்த இறால் மீன் , பழைய நீர்ப்பள்ளத்தில் உறையும் மலங்கு , இளைய வாளைமீன் , சிவந்த கயல்மீன்கள் , சேல்மீன்கள் , வரால் மீன்கள் , களிறு என்ற மீன்கள் வந்து சேரும் குளிர்ந்த வயல்களை உடைய அழகிய ஆரூர்த் தலைவனே ! பஞ்சமுக வாத்தியம் ஒலிக்கக் கூத்தாடுபவனே ! அடைக்கலம் நல்குபவனாயுள்ள நின்பால் தனியன்பு கொண்டு உன் திருவடிகளில் உலகப் பற்றுக்கள் ஒடுங்க , வந்து அடைந்தேன் . அடியேன் செய்த பிழைகளை எல்லாம் போக்குவாயாக .

குறிப்புரை :

இறால் , மலங்கு , வாளை , செங்கயல் ( X கருங்கயல் ) சேல் , வரால் , களிறு ( சுறா ) என்னும் பெயரிய மீனினம் சேர்ந்த தண் செய்கள் அணிசெய்யும் திருவாரூர்ப்பெருமானே , முழா ஒலிக்கத் திருக்கூத்தாடினாய் , எனக்கும் ஏனைய அடியார்க்கும் துன்பங்களைக் களைகணாய்நின்று தவிர்க்கும் நினக்குத் தனியன்பு செய்து , பொற்கழலுள் ஒடுங்கிவந்து அடைந்தேன் . யான் பிழையாகச்செய்த எல்லாவற்றையும் பொறுத்தொழிப்பாய் . ` ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவதில்லை நமனும் அங்கு இல்லை ` ( தி .10 திருமந்திரம் . 1624) கடம் படம் - பிண்டத்தும் அண்டத்தும் . கடம் ( பஞ்சமுக வாத்தியம் ) ஒலிக்க ; பிறவி தீர எனலும் ஆம் . களைகண் - களையும் இடமானவன் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

அருமணித்தடம் பூண்முலை யரம்பையரொ டருளிப் பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசு பதர்க பாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

விலை உயர்ந்த மணிகளாலாகிய பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வாரோடு , கோயில் பணி செய்பவர்கள் . ஆதி சைவர்கள் , சிவகணத்தார் , விரிந்த சடையை உடைய , விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள் , அந்தணர் , சைவர் , பாசுபதர் , கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே !

குறிப்புரை :

அருமை :- விலைமதித்தற்கருமை . 1. அருளிப் பாடியர் ( தி .12 பெரிய . சேரமான் . 134, வெள்ளானைச் . 33) ( கோயிற்புரா இரணியவன்மச் -51 -2) 2. உரிமையிற்றொழுவார் :- ஆதிசைவர் ; சிவனுக்கே உரிமையான உருத்திர கணிகையருமாம் . ( கோயிற்புரா திருவிழாச் 27 - உரை ) 3. உருத்திர பல்கணத்தார் :- ( சிவகணத்தார் . அபிதானசிந்தாமணி . பக் . 652) ` உறவாவார் உருத்திர பல்கணத்தினோர்கள் `. இக்கணத்தைக் காளாமுகர் எனல் அறியார் கூற்று . 4. விரிசடை விரதிகள் :- துறவிகள் ; மாவிரதிகள் . ( சித்தாந்தப்பிரகாசிகை , சிவஞானபாடியம் ) வித்தகக் கோலவெண்டலைமாலை விரதிகள் ( தி .4 ப .21 பா .1) பாசுபதர் கூறிய இயல்புடைய ஆன்மாக்கள் சாத்திர முறைத் தீக்கைபெற்று எலும்புமாலை அணிதல் முதலிய சரியைகளின் வழவாதொழுகி முத்திபெறும் என்னும் அகப்புறச் சமயத்தார் முத்தர்க்கு எல்லாக் குணங்களும் உற்பத்தியாம் என்பர் . உற்பத்தி சமவாதி . ( ஞானாவரண விளக்க மாபாடியம் . பக் . 189-9 ). 5. அந்தணர் :- ஆதிசைவர் முதலோர் 6. சைவர் :- ஞானா . வி . மா . பக் . 224. 7. பாசுபதம் :- மாயை , கன்மம் என்னும் இரண்டும் இசைந்து ஆணவம் இல்லை என மறுத்து , இறைவன் தன் குணங்களைச் சாத்திர முறைப்படி பெற்ற தீக்கையால் ஞானம் பற்றியவனிடத்தில் , பற்றுவித்துத் தன் அதிகாரத்தின் ஒழிவு பெற்றிருப்பன் என்னும் அகப்புறச் சமயத்தார் . சங்கிராந்த சமவாதி . ( ஞானா . வி . மா . பக் . 189-224 ). 8. கபாலிகள் :- மாவிரதர் போலவே ஆன்ம வியல்பு கொண்டவர் . பச்சைக்கொடி ஒன்று கைக்கொண்டு நாடோறும் மனிதத் தலையோட்டில் பிச்சையேற்றுண்பவர் . முத்தராய்ச் சிவன் ஆவே சித்தலால் எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமம் ஆவர் என்னும் கொள்கையர் ; அகப்புறச் சமயத்தவர் . ஆவேச சமவாதி ( ஞானா . வி . மா . பக் . 184-6 ). தெருவினிற் பொலிதல் :- வழிபடற் பொருட்டுத் தலத்தில் வாழ்ந்து திருக்கோயிலுக்குச் செல்லுதலும் மீளுதலும் நிகழ்த்துவதால் ஆன காட்சியும் பெருமான் திருவுலாக் கண்டு மகிழ்ந்து வரும் தோற்றமும் ஆம் . இதில் விளித்து நின்றதன்றி வேண்டியது யாதும் இன்று . முன்னதிற் பிழைத்தவை பொறுக்க வேண்டியதுணர்க . பா .6 பார்க்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

பூங்கழறொழு தும்பரவியும் புண்ணியாபுனி தாவுன் பொற்கழல்
ஈங்கிருக் கப்பெற்றேன் என்ன குறையுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிள வாழைமாவொடு மாது ளம்பல
தீங்கனி சிதறுந் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

உயர்ந்த தென்னை மட்டைகளைத் தொடும் அளவு உயர்ந்த பாக்கு மரம் , இளவாழை , மா , மாதுளம் , பலா என்பன இனிய பழங்களை உதிர்க்கும் திருவாரூர்த் தலைவனே ! உன்னுடைய பொலிவை உடைய திருவடிகளைத் தொழுதும் முன் நின்று துதித்தும் , புண்ணியனாய்ப் புனிதனாயுள்ள உன்னுடைய அழகிய திருவடிகள் என்னிடத்துத் தங்கப் பெற்றதனால் அடியேன் இனிவேறு யாது தேவையை உடையேன் ? ஈங்கு - என்னிடம் .

குறிப்புரை :

மேலோங்கி வளர்ந்த தெங்குகளும் இலை நிறைந்த கமுகங்களும் இளவாழைகளும் மாக்களும் மாதுளங்களும் பலாக்களும் தத்தம் இனிய கனிகளைச் சிதறுகின்ற ( வளம் மிக்க ) திருவாரூர் . ` தெங்கம் பழம்போல் திரண்டுருண்ட ` என்றதால் , தென்னையினுடையதையும் கனி எனல் கூடும் ; கமுகம் பழம் என்னும் வழக்கம் இன்று ; கனி என்றது எவ்வாறு பொருந்தும் எனில் கூறுதும் . கனிந்தது கனி . பழுத்தது பழம் . முற்றியது முற்றல் . இம் மூன்றும் ஒன்றல்ல . முற்றிய பாக்கு , பிஞ்சுப் பாக்கு எனல் உண்டு . முற்றுதல் கனிதல் எல்லாம் பொது . வாழை முதலியவற்றொடு சேர்த்துக் கூறலால் , அப் பொதுச் சொல்லால் உணர்த்தலாயிற்று . பல - பலா . ` தீங்கனி ` என்றது எல்லாம் இனிமையுடைமை குறித்து , தொழுதும் பரவியும் ( வழிபட்டமையால் ) உன் கழல் ஈங்கு (- என் உள்ளத்தில் ) இருக்கப்பெற்றேன் . என்ன குறை உடையேன் . ஒரு குறையும் இல்லேன் . தொழல் மெய்யின் தொழில் . பரவல் வாயின் வினை . இருக்கப்பெறல் - உள்ளத்தின் நிகழ்ச்சி . தொழுது பரவிய பூங்கழலே , புண்ணியத்தாலும் புனிதத்தாலும் உள்ளேயும் பொன்னென ஒளிரும் கழல் என்க . வழிபடுவோர்க்கு இன்றியமையாத புண்ணியமும் புனிதமும் அவர்க்கு அவ்வேளையில் அருளும் இறைவன் வடிவமும் ஆகும் . ஓங்கு தெங்கு :- வினைத்தொகை . நிகழ்வுபற்றியது . பலகனி எனல் சிறவாது . ` தெங்கு .... பல ` எழுவாய் , ` சிதறும் ` பயனிலை . ` கனி ` செயப்படுபொருள் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

நீறுசேர்செழு மார்பினாய்நிரம் பாமதியொடு நீள்ச டையிடை
ஆறுபாய வைத்தாய் அடியே யடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற கூன்றவிண்ட மலரி தழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

வண்டுகள் தும்பிகளோடு ஏறி மலர்களில் அமர்ந்து , அழகிய சிறகுகளை அவற்றில் அழுத்தி வைப்பதனால் , மலர்களின் இதழ்கள் வழியாகத் தேன் பாய்ந்து ஒழுகும் திருவாரூர்த் தலைவனே ! நீ திருநீறணிந்த வளமான மார்பினை உடையாய் , பிறை மதியோடு உன் நீண்ட சடையிலே கங்கை பரவுமாறு அவற்றைச் சடையில் வைத்துள்ளாய் . அடியேன் உன்னை அடைந்து தீவினைகளிலிருந்து நீங்கினேன் .

குறிப்புரை :

வண்டும் தும்பியும் ஏறிச் சிறகுகளை ஊன்றலால் மலர்ந்த பூக்களின் இதழ்வழியாக வழியும் தேன் பாய்ந்து ஒழுகு ( ஓடு ) கின்ற திருவாரூர் , நீறு ..... மார்பு :- ` மார்பிற்பால் வெண்ணீற்று அஞ்சாந்து அணிந்தான் ` ( தி .4 ப .19 பா .11). மார்பின் செழுமைக்கு நீறு சேர்தல் ஓர் ஏது , நிரம்பாமதி :- ( குறைமதி ` ` ஆம் குறைமதியே தாங்கி என்று உலகம் அறைகுறை அற நிறைமதியும் தாங்கிய முடியோடு ஓங்கிய சோணசைலனே கைலை நாயகனே ` ( சோணசைலமாலை 3 .) ஆறு சடையிடைப் பாய வைத்தாய் :- விரைந்து பாய்ந்த ஆற்றின் மிகையை அச்சடைமுனையில் அடக்கிய ஆற்றல் குறித்தது . ( நன்னெறி .21 ) ` அடியே அடைந்தொழிந்தேன் ` - திருவடியே சேர்ந்து நின்றேன் . வண்டு , தும்பி , சுரும்பு , தேன் என வண்டினம் நான்கு உள . ` அடியே ` என்றதில் ஏகாரம் பிரிநிலை , தேற்றப் பொருட்டுமாம் . ( தி .4 ப .1 பா .1).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

அளித்துவந்தடி கைதொழுமவர் மேல்வினைகெடும் என்றி வையகம்
களித்துவந் துடனே கலந்தாடக் காதலராய்க்
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந் தாடுகோதையர் குஞ்சி யுட்புகத்
தெளிக்குந் தீர்த்தமறாத் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

உலகிலுள்ள அடியார்கள் உன்னுடைய தியானத்திலே களிப்புக் கொண்டு வந்து ஒரு சேரக்கூடி ஆட , அதனைக் கண்டு தாமும் விருப்பமுற்றவராய்கக் கழுத்துவரை குளித்தும் தலை நனைய மூழ்கியும் தீர்த்தத்தை ஒருவர்மேல் மற்றவர் வாரி இறைத்தும் , நீரில் உட்புக்கு நீராடும் மகளிர் மயிர் முடிமீது அபிடேக நீர் தெளிக்கப்படும் திருவாரூர்த் தலைவனே ! அன்பு முதிரப் பெற்றுத் திருக்கோயிலுக்கு வந்து உன் திருவடிகளைக் கைகளால் தொழுகின்ற அடியார்களுடைய வரக்கடவ வினைகளும் அழிந்து விடும் என்று நீ தெரிவிக்கின்றாய் ஆதலின் அடியவர் உன்னடிகளைத் தவறாது வணங்குகின்றனர் .

குறிப்புரை :

அளித்து - அன்பின் முதிரப்பெற்று . அன்பு அளிந்தது அளி . ` தலையளி `. உவந்து ; தொழுமவர் மேல்வினை :- ` ஆரூரரைத் தூரத்தே தொழுவார்வினை தூளியே ` தொழும் அடியாரது மேலை ( சஞ்சிதம் , ஆகாமியம் என்னும் இரண்டு ) வினைகள் . பிராரத்தம் உடலூழாய்க் கழியும் . ( சிவ . போதம் . சூ . அதி . மாபாடியம் ) காலத்தின் முன் பின் இரண்டும் மேல் எனப்படும் . இவ்வையகம் , வினைகெடும் என்று வந்து , வையகம்வந்து , ஆடுவது வினை கெடுமென்று . காதலராய்க் கோதையராடுவது அவ்வையகம் கலந்து ஆடக்கண்டு . கலந்து ஆடக் காதல் உற்றவராகிக் குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடும் கோதையர் எனலும் ஆம் . ஆயின் , வையகம் களித்துவர என்று செயவெனெச்சமாக்கி முடிக்க . குளித்தல் முதலியவற்றின் வேறுபாடுணர்க . ` குஞ்சி ` இருபாலார் தலைமயிர்க்கும் பொதுப் பெயர் . ` குஞ்சி அழகும் .... கல்வி அழகே அழகு ` ( நாலடியார் . ) புகத் தெளிக்கும் தீர்த்தம் அறாத சிறப்புடையது திருவாரூர் . தீர்த்தம் - தூய ( சிவபுண்ணிய ) நீர் . ` தொழுமவர் ` என்பதுபோலும் தொடரின் மரூஉவே செல்லுமார் ( செல்லுமவர் ) முதலியன . செல்லுமோர் என்பதும் அதன் மரூஉவே . குருக்கண்மார் , செட்டிமார் என்பவற்றின் கண் உள்ளது மகார் மார் என்று மருவியது . மருவியக்கால் இரண்டும் ஒன்று போலாம் . விழுதல் விழைதல் இரண்டும் மருவியபின் ` வீழ்தல் ` என்று ஒன்றாதல்போல்வது அது . என்ற இவை அகம் களித்து என்று கொண்டு பொருந்தக் கூறலும் ஆம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

திரியுமூவெயில் தீயெழச்சிலை வாங்கிநின்றவ னேயென் சிந்தையுள்
பிரியுமா றெங்ஙனே பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரிய செந்நெற்பி ரம்புரிகெந்த சாலிதிப்பிய மென்றி வையகத்
தரியுந் தண்கழனி அணியாரூ ரம்மானே.

பொழிப்புரை :

உயர்வாகக் கூறப்படும் செந்நெல் , பிரம்புரி , கெந்தசாலி , திப்பியம் என்ற பெயருடைய நெல்வகைகள் தம்மகத்து அறுவடை செய்யப்படும் குளிர்ந்த வயல்வளமுடைய அழகிய ஆரூர்த் தலைவனே ! வானத்தில் உலவும் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு வில்லை வளைத்து நின்றவனே ! என் உள்ளத்திலிருந்து நீ யாங்ஙனம் பிரிவாய் ? மறந்தும் கூட நீ என்னை விடுத்து நீங்க உன்னை விடமாட்டேன் .

குறிப்புரை :

திரியும் மூவெயில் :- ` திரியும் மூன்றுபுறமும் ` ( தி .2 ப .22 பா .4) ` திரியுமூவெயில் ` ( தி .5 ப .25 பா .11) ` திரியும் மும்மதில் ` (5.36.10) ` திரியுமுப்புரம் ` ( தி :-7 ப .61 பா .3; ப .67 பா .9.) ` திரியும்புரம் ` ( தி .7 ப .79 பா .8) ` திரிவன மும்மதில் ` ( தி .7 ப .23 பா .8) ` திரிதருபுரம் ` ( தி .3 ப .23 பா .9) சிலை - மேருவை வில்லாக , வாங்கி - வளைத்து . சிந்தையுள் பிரியுமாறு இயலாமைக்கு . மூவெயில் எரித்தவாற்றால் மும்மலந்தீர்த்துச் சிவஞானங்காட்டிச் சிவங்காட்டிய உண்மையே ஏதுவாயிற்று . பிழைத்தேயும் - தப்பியும்கூட . செந்நெல் , பிரம்புரி , கெந்தசாலி , திப்பியம் என்ற இவை தன்னகத்து அரியும் தண் கழனியை அணிந்த திருவாரூர் அம்மானே . ` போகலொட்டேன் `, பா .9

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட வாய்ந்தசைந் துட லம்பு குந்துநின்
றிறக்குமா றுளதே யிழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையேபுரிந் தமனத்தனா யார்வச்செற்றக் குரோத நீக்கியுன்
திறத்தனா யொழிந்தேன் றிருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

திருவாரூர் அம்மானே ! இறந்தால் பிறத்தலும் பிறந்தால் உடலில் புகுந்து நின்று பிணிகள் தோன்ற நுணுகி வருந்தி இறக்குமாறும் உள்ளவே . அதனால் பிறப்பை இழிவாகக் கருதி வெறுத்தேனாய் , அறத்தையே விரும்பிய மனத்தினேனாய் , ஆசை , பகை , வெகுளி இவற்றை நீக்கி உன் அடிமைத் திறத்தில் ஈடுபட்டேனாய் உலகியற் செயல்களிலிருந்து நீங்கினேன் .

குறிப்புரை :

திருவாரூர் அம்மானே , இறந்தால் பிறத்தலும் பிறந்தால் இறத்தலும் உண்டு . பிறந்தால் உடலிற் புகுந்து நின்று , பிணிகள் தோன்ற நுணுகித் தளர்ந்து இறக்குமாறு உளதே ! பிறப்பை இழித்து வெறுத்தேன் . நான் அறத்தையே விரும்பிய உள்ளத்தனாகி , காமக்குரோத லோபமோக மதமாற்சரியம் என்னும் அறுபகையும் போக்கி , உன் அடிமைத்திறம் உடையேனாய் நின்றேன் . ஆதலின் , என்னைப் பிறக்கவொட்டாது சிவலோகத்திருத்துவது ஆண்ட நின் கடன் . ` பிறந்தால் இறக்குமாறுளது ` என்றதால் , ( இறந்தால் ) பிறத்தலும் எனக் கொண்டுரைத்தல் ஆயிற்று . ஆய்தல் - நுணுகுதல் . ` ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் . ( தொல் . உரி 34. ) ஏகாரம் தேற்றம் . ஆர்வம் ( காமம் ) செற்றம் - ( மாற்சரியம் ) குரோதம் ( சினம் ) ` பொங்கு மதமானமே ஆர்வச்செற்றக் குரோதமே யுலோபமே ` ( தி .6 ப .27 பா .6) திறம் :- ஈண்டு அடிமைத்திறம் . ` செய்வன எல்லாம் அவன் அருளின் வழி நின்று செய்யும் செயலாய்க் கண்டு கொண்டிருப்பர் ..... அவ்விறைபணியாகிய அடிமைத்திறம் உடையார் ` ( சிவஞானபோத மாபாடியம் சூ .10. அதி .2 )

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

முளைத்தவெண்பிறை மொய்சடையுடை யாயெப்போதுமென் னெஞ்சிடங் கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன் வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்தவ லவன்போய்ப்புகு தந்தகாலமுங் கண்டு தன்பெடை
திளைக்குந் தண்கழனித் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

வளையிலிருந்து பிரிந்து சென்ற நண்டு மீண்டும் போய் வளையில் புகுந்த காலத்தை நோக்கிப் பெடை நண்டு அதனைக் கண்டு இன்பத்தில் திளைக்கும் குளிர்ந்த வயல்களை உடைய திருவாரூர் அம்மானே ! பிறையை அணிந்த செறிந்த சடையனே ! எப்பொழுதும் என் நெஞ்சினையே நீ இடமாகக் கொள்ளுமாறு உன்னைப் பலகாலும் சுற்றிக்கொண்டிருந்த அடியேன் இனிப் பிடிவாதம் செய்து அதனை விடுத்துப்போக ஒருப்படேன் .

குறிப்புரை :

அளை - சேற்றில் உள்ள நண்டுவளை . அலவன் - ஈண்டு நண்டின் ஆண் . நள் + து = நண்டு , நள்ளி என்றதால் விளங்கும் . பெடை - நண்டின் பெண் . ` முளைத்த வெண்பிறை ` என்றது சிவபிரான் சடையை அடைந்தது முதல் முளையாமையும் அழியாமையும் தோற்றிற்று . மொய்சடை :- ` பல்சடைப் பனிகால் கதிர் வெண்டிங்கள் சூடினாய் ; மொய் பெருமையுமாம் . எப்போதும் கொள்ள . நெஞ்சிடம் உன்னைக் கொள்ள . நீ நெஞ்சிடத்தைக்கொள்ள . வளைத்துக் கொண்டிருந்தேன் :- ` வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை ` ( தி .4 ப .79 பா .6). வலி செய்தல் :- வன்மையோடு தடுத்தல் , பற்றி ஈர்த்துக் கொண்டிருத்தல் . ` போகலொட்டேன் ` : பா .7.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

நாடினார்கம லம்மலரய னோடிரணிய னாகங் கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை கூறுபத்தர்கள் சித்தத் துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன் திருவாரூ ரம்மானே.

பொழிப்புரை :

திருவாரூர் அம்மானே ! தாமரை மலரில் உள்ள பிரமனோடு , இரணியன் மார்பினைப் பிளந்த திருமாலும் தேடினராயும் காண மாட்டாத தீப்பிழம்பு வடிவினனாய் , நம்மால் விரும்பப்படும் உன்னைப் பாடுபவராய்ப் பணிபவராய் வாழ்த்துபவராய் உள்ள பக்தர்களின் உள்ளத்தினுள்ளே புகுந்து தேடி அவ்விடத்தில் உன்னைக் கண்டு கொண்டேன் .

குறிப்புரை :

கமலம்மலர் (- தாமரைப்பூ ) சந்தம் நோக்கி மிக்கது . இரணியாசுரன் மார்பைக் கிழித்தவன் திருமால் . அயனும் மாலும் நாடினார் . நாடிக்காண வல்லரல்லராம்படி . தீப்பிழம் புருவாய் நின்ற நம்பானாகிய நின்னைத் தேடிக்கண்டுகொண்டேன் . காணமாட்டா அருமை மாலயனிருவர்க்கும் , கண்டுகொண்ட எளிமை தமக்கும் உற்றவாறு தோற்றிய நயம் உணர்க . புறத்தே பேரொளிப் பிழம்பாய் வெளிப்பட்டுக் காட்சி தந்தும் காண மாட்டாராயினர் . பத்தர்களது ( அகத்தே ) சித்தத்துள் ஒளிந்துகொண்டிருந்தும் கண்டுகொண்டேன் நான் என்றருளினார் . ` என் சித்தத்துள் ` எனல் ஈண்டுப் பொருந்தாது . தி .4 ப .9. பா .12 பார்க்க . ` எவரேனும் .... ஈசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே `. ( தி .6 ப .61 பா .1,3, 9). தி .4 ப .21 பா .2. இல் குறித்தவாறு நம்பானைப் பாடுவாரும் பணிவாரும் ஆகிய பத்தர்கள் முத்திறத்தாருமாவர் . வாழ்த்திசை பாடும் மெய்யன்பர்கள் . வாய்த்து இசைப்பது வாழ்த் திசை . பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று இசைப்பது பல்லாண்டு இசைத்தல் : பல்லாண்டிசை கூறுதல் ; பல்லாண்டு கூறுதல் . பல்லாண்டு கூறுதும் ` .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தனாரூ ராதிரைநாளா லதுவண்ணம்.

பொழிப்புரை :

எம்பெருமானுக்குவிழாக்காலத்திற் கொண்டு செல்லப்படும் நிவேதனப் பொருள்களின் பின்னே முறைப்படி பத்தி மிக்க ஆடவரும் மகளிரும் மாவிரதியரும் சூழ்ந்துவர, வெள்ளிய தலை மாலையை அணிந்த திருவாரூர்த் தலைவன் முத்துக்களால் அமைக்கப்பட்ட மேற்கட்டியின் நிழலிலே அழகிய பொற்காம்பினை உடைய கவரி வீசப்பெறச் சிறப்பான செயற்கையழகோடு திருஆதிரைத் திருநாளில் வழங்கும் காட்சி அது. அது என்று எப்பொழுதும் அடியவர் மனக்கண் முன் நிற்பதாகும்.

குறிப்புரை :

முத்துவிதானம் - (பா.3) முத்துக்களின் கோவையாலான மேற்கட்டி. அதுவும் மணிப்பொற்கவரியும் திருவாரூரிற் சிறப்புற்றவை. பத்தர்கள் - பத்திமிக்க ஆடவர். சிவ சிந்தனை சிறிதும் இல்லாத மாக்களை விலக்கிப் பத்தர்கள் என்றதுணர்க. பாவையர் - அத்தகைய பத்திமிக்க பெண்டிர் அவருள் முதியர் திருவீதி வலம்வர வலியற்றவராதலின் பாவையர் என்றார். (பா.7) `விரிசடைவிரதிகள்` (தி.4 ப.20 பா.3). மார்கழித் திருவாதிரைநாள் பங்குனி உத்தரத் திருநாள் இரண்டுமே தியாகராசப்பெருமானுடைய திருவடிக்காட்சி எய்தும் நாள். `கனகத்யாகேசன் பருதிவெருவுருவம் பார்த்தாள் (பேதை), அருகுபோய் வேதச்சிரத்திருந்து விண்டுவும் கண்டறியாப் பாதத்தழகு எனவும் பாராதே, மாதவர்க்கும் தேவர்க்கும் ஆட்டைக்கு (-ஆண்டொன்றற்கு) இருதினம் சேவிப்போர் யாவர்க்கும் நாட்டம் அதில் என்னாதே, பூவைமீர்! பந்தித்த ஆடரவக் கிண்கிணி என்பாவைக்கு ஆம் வந்தித்து வாங்க வருக என்றாள்`. (திருவாரூருலா. 210-2). இத்திருப்பதிகம் முழுதும் வினைமுடிபு விளங்காதவாறுள்ளது. வினைமுடிபு விளங்காமை உயிர்க்கியல்பன்றோ? கோலத்தினால் - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண். நாளால் - நாளின்கண். (குறள் 102). வேற்றுமை மயக்கம். ஆதிரை நாள் வண்ணம் அதுவோ? அது ஆதிரைநாள் வண்ணமோ? ஆதிரைநாளின் மகிழ் செல்வம் அத் தன்மைத்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் றீரு மென்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா வென்பார்கட்
கணியா னாரூ ராதிரை நாளா லதுவண்ணம்.

பொழிப்புரை :

திருவாரூருக்கு அண்மையில் உள்ளவர், தூரத்தில் உள்ளவர், நல்லவர்கள், தீக்குணம் மிக்கவர்கள், நாடோறும் தங்கள் பிணிகள் தீரவேண்டும் என்று மிகுதியாக வந்து வழிபடுபவர்கள் ஆகிய யாவரும் `மணியே பொன்னே வலியவனே தலைவனே` என்று வாய்விட்டு அழைப்ப, அவர்கள் கருத்துக்கு அணியனாய் இருக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திரு ஆதிரை நாள் திருக்கோலம் அது. அது என்று அடியவர் மனக்கண்முன் எப்பொழுதும் நிற்பதாகும்.

குறிப்புரை :

திருவாரூர்க்கு அருகிலுள்ளார் நணியார். தொலைவினார் சேயார். திருவாரூரிலும் அணிமையிலும் சேய்மையிலும் உள்ளவராய் வந்து வழிபடுவோர் நல்லார். வழிபடாதார் தீயார். வணங்காதார் நணியாராயும் சேயார் என்றும் நல்லாராயும் தீயார் என்றும் உரைத்தாரும் உளர். `பிணி.....தீரும் என்று.....கிடப்பார்`:- தி.4 ப.20 பா.6, பிறங்கி - பெருகி, புற்றிடங்கொண்டதால் `மணியே` என்றார். `ஆருர் மணிப்புற்றில் அமர்ந்து வாழும் நீண்ட சுடர்மாமணி` (தி.12 பெரிய. திருநாவுக். 232). அடிக்கு ஆயிரம் பொன் அளிப்பவர் ஆதலின், `பொன்னே` என்றார். `கனகத்தியாகேசர்` `செம்பொற்றியாகர்` `செம்பொற் சிங்காசனாதிபதி` `பொன்பரப்பிய திருவீதி` முதலிய திருப்பெயர்களையும், `கனகம் ஓர் அடிக்கு ஆயிரம் நல்கும் எம் கடவுள் அனக நாயகன்` (திருவாரூர்ப் புராணம் திருநகரச். 47.) `அடி ஒன்றுக்கு உய்யும்படி பசும்பொன் ஓர் ஆயிரம் முகந்து பெய்யும் தியாகப் பெருமானே` (திருவாரூருலா. 173-4) என்பவற்றையும். `பொன்னின் மேனிச்சிவன்` `பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றை` பொன்னேபோல் திருமேனியுடை யான்றன்னை` `செம் பொனே மரகதமே மணியே போற்றி` `செம்பொனை நன்மணியைத் தென்றிருவாரூர்புக்கு, என்பொனை என்மணியை என்று கொல்எய்து வதே` `திருவாரூர்ச் செம்பொனே` என்று அப்பர், சுந்தரர் அருளியவற்றையும் எண்ணுக. கிண்கிணிக் காலழகுடையன் இளைஞனாதலின், மைந்தா என்றார். (மழ+து, மழ்து) (மழ்ந்து, மய்ந்து, மைந்து+ அன்=மைந்தன்) `மணவாளராகி மகிழ்வர்` `கலியாணபுரம்` `கலியாண சுந்தரர்` `திருவாரூர் மணவாளர்` என்னும் சிறப்புடைமையால் `மணாளா` என்றார், இம்மூன்று பெயரும் சொல்லி அழைத்தால் வரும் மணியும் பொன்னும் போக வாழ்வும் ஆகிய இம்மைப்பயன் குறித்து, அணியான் என்றார். நணியாரும் சேயாரும் நல்லாரும் தீயாரும் நாள்தோறும் பிணிதீரும் என்று பிறங்கிக் கிடப்பார். மணியே... என்பார். கிடப்பாரும் என்பாருமாகிய அவர்கட்கு அணியான். அது ஆதிரைநாள் வண்ணம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

வீதிகடோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிக ளொளிதோன்றச்
சாதிகளாய பவளமுமுத்துத் தாமங்கள்
ஆதியாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

வீதிகள் தோறும் வெண் கொடிகளும் மேற் கட்டிகளும் சிறந்த பவளங்களாலும் முத்துக்களாலும் புனையப்பட்ட மாலைகளும் தம்மிடையே பதிக்கப்பட்ட மணிகளால் பேரொளியை வெளிப்படுத்த, எல்லாப் பொருள்களுக்கும் முதல்வனாகிய ஆரூரனுடைய திருவாதிரைத் திருநாளின் பெருவனப்பு எப்பொழுதும் அது அது என்று அடியவர்கள் நினைக்குமாறு உள்ளது.

குறிப்புரை :

வெண்கொடியோடு விதானங்களும் சோதிகள் விட்டுச் சுடர்கின்ற மாமணிகளும் ஆகிய அவற்றின், ஒளி தோன்றவும் சாதிப்பவளத்தாலும் சாதிமுத்துக்களாலும் ஆகிய மாலைகள் (நாலவும்) ஆதியாரூர்த் திருவாதிரைத் திருநாள் (விளங்கிற்று). விதானங்கள், பதிக முதற்பாடல். சோதிகளை விட்டுச் சுடர்தல் மாமணிகளின் வினை. தாமம் - மாலை, ஆதி - சிவபிரான்; முதல், விதானங்கள்; மணிகள்; தாமங்கள் என்று தனித்தனியாக முடித்து, ஆதிரைநாளில் அது வண்ணம் எனலாம். `விதானமும் வெண் கொடியும் இல்லாவூர் ஊரல்ல.......காடே` (தி.6 ப.95 பா.5).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்
வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்
அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம்.

பொழிப்புரை :

நாள்தோறும் தேவர்கள் வந்து வணங்கி நிற்க, தெய்வத் தலைவனாகிய எம்பெருமானுடைய பல பண்புகளையும் பேசிக்கொண்டு ஒன்று சேர்ந்து அவனைப்பற்றிப் பாடி அடியார்கள் அவனுக்குத் தொண்டு செய்வதில் ஒருவருக்கு ஒருவர் முற்பட்டுப் பித்தரைப்போல அடைவு கெடப் பலவாறு பேசும் ஆரூர் ஆதிரைத் திருநாள் அழகு என்றும் அவர்கள் உள்ளத்தில் நிலை நிற்பதாகும்.

குறிப்புரை :

தொண்டர்கள் (சிவபிரானுடைய) குணங்களைப் பேசியும் கூடிப்பாடியும் தம்மிலே பிணக்கம் உற்றுப் பித்தர்களைப் போலப் பிதற்றுதலும் செய்வர், வானவர் வைகலும் வந்து வணங்கி நின்று (வரம் பெறுவர்). அணங்கன் - தெய்வத்தன்மையுடையவன். மாதியலும் பாதியனுமாம். `அணங்கு புத்தேள் ஏற்றசூர் கடவுள் தேவே`. `காரிகை அணங்கு` (சூடாமணி நிகண்டு) அணங்கு+அன். பிணங்கி - கருத்து வேறுபாடுடையவராய். `பிணங்கிடுவர் விடுநீ` (சித்தியார்).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

நிலவெண்சங்கும் பறையும்மார்ப்ப நிற்கில்லாப்
பலருமிட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை காரென்றெண்ணிக் களித்துவந்
தலமராரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

நிலாப் போன்று வெள்ளிய சங்குகளும் பறைகளும் ஒலிப்பவும் நின்ற இடத்தில் மீண்டும் நில்லாமல் கூத்தாடும் பலரும் காலில் கட்டிக் கொண்ட சதங்கை முதலியவற்றின் ஒலி பரவவும் அவற்றின் ஒலிகளை மேகத்தின் ஒலி என்று கருதித் தோகைகளை உடைய ஆண் மயில்கள் மகிழ்வோடு வந்து ஆடிச்சுழலும்படியாக ஆரூர்த் திருவாதிரைத் திருவிழாவின் அழகு என்றும் உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.

குறிப்புரை :

நில - நிலாப்போலும், பறை - வாத்தியப்பொது, ஆர்ப்ப - ஒலிக்க. நிற்கில்லா - விட்டு நிற்றலாற்றாத, கல்லவடங்கள்:- காலிற் சதங்கை முதலிய வடம் கட்டிக்கொண்டு நில்லாமல் தொடர்ந்து தாளவொற்றுக்குப் பொருந்தமிதித்துச் செய்யும் இன்னோசை; அடியர் பலர் கூடி நிகழ்த்துவது என்று கருதப்பெறுகின்றது. `பலரும் இட்ட கல்லவடங்கள்` என்றதாலும், `கங்கும் பறையும் ஆர்ப்ப இட்ட` (வை) என்றதாலும், அவ்வொலி எங்கும் பரந்து, கலாபமயில்கள் கார் (- மேகம்) என்று (தி.1 ப.130 பா.1) எண்ணிக் களித்துவந்து அலமருகின்ற ஆரூர் என்றதாலும் அது பொருந்தும். `அடியார் கல்ல வடப்பரிசு` (தி.7 ப.84 பா.5) (திருப்பெருந்துறை (யடைந்த படலம் 17)ப் புராணம். 17. ஒருவகை வாத்தியம். ௸ குறிப்புரை) அலமரு + ஆரூர் = அலமராரூர். மெய்த்தனு + என்று = மெய்த்தனென்று. (தி.5 ப.76 பா.5) மஞ்ஞை - மயில். கலவம் - தோகை. கார் - மேகம். அலமரல் - சுழலல். அலம் வரல் என்பதன் மரூஉ. `விருப்போடு வெண்சங்கம் ஊதாவூரும்... ... ஊரல்ல....காடே`(தி.6 ப.95 பா.5) `ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்` (தி.8 திருவாசகம்).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

விம்மாவெருவா விழியாத்தெழியா வெருட்டுவார்
தம்மாண்பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மானீச னெந்தையெ னப்ப னென்பார்கட்
கம்மானாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

பொருமி, வாய்வெருவி விழித்து உரத்துக்கூறி மற்றவர்களை அஞ்சி ஒதுங்கச் செய்பவராய்த் தமக்கு என்று எந்த நற்செயல்களையும் பண்பையும் கொள்ளாமல் எல்லாம் ஈசன் செயல் என்று மகிழ்ச்சியால் தலையை மோதிக்கொண்டு `எம்மான் எம்மை அடக்கி ஆள்பவன்; எம் தலைவன்` என்று பெருமான் புகழ் ஓதும் அடியவர் தலைவனாகிய ஆரூர்ப் பெருமானின் திருவாதிரைத் திருநாளின் அழகு என்றும் உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.

குறிப்புரை :

விம்மா - விம்மி, பொருமி. வெருவா - வெருவி. விழியா - விழித்து. தெழியா - தெழித்து. வெருட்டுவார் - வெருளச் செய்வார். மாண்பு - (மாண்+பு) மாட்சி. நற்பண்பும் நற்செயலும் மாண்பு எனப்படும். தரியார் தங்கார். பொறார் என்றபடி. எம்மான் - எம் கடவுள். மகன் என்பதன் திரிபு மான் என்பது. `மக்கள்` பன்மை. `எம் பெருமக்கள்` தந்தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்` (தி.12 மூர்த்தி நாயனார் புராணம். 15). ஈசன் - உடையான். எந்தை - எம்வழி முதல். என் அப்பன் - என்னைப் பெற்றவன். `வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பன்` (சுந்தரர்) என்றதில், அஞ்சலும் வெருவலும் ஒன்றன்மை உணர்க. தெழித்தல் - அதட்டுதல்; வெகுளுதல். அஞ்சுதலின் காரியம் வெருவுதல். அச்சம் உள்ள நிகழ்ச்சி. வெருவுதல் உடற்செயல். இது மெய்யன்பர் நிலையை உணர்த்திற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

செந்துவர்வாயார் செல்வனசேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர்சித்த ரெடுத்தேத்தும்
அந்திரனாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

இந்திரன் முதலிய தேவர்களும் சித்தர்களும் பலவாறு துதிக்கும் தனியனாகிய ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருவிழாவில் செம்பவளம் போன்ற வாயை உடைய ஆடவரோடு மகளிரும் கூடி அவன் திருவடிகளைச் சிந்தித்து ஈடுபடுபவருடைய அழகிய காட்சி என்றும் உள்ளத்தில் நிலை பெறுவதாகும்.

குறிப்புரை :

செந்துவர் - செம்பவளம். துவர் வாய் - உவமத்தொகை. செல்வன சேவடி:- ஆறனுருபு, பன்மை; `பன்மை (சுட்டிய சினை நிலை)க் கிளவி\\\\\\\\\\\\\\\' (தொல். கிளவி.62). மைந்தர் - இளைஞர். மங்கையர் - மணமகளிர். மயங்குதல் பருவத்தினியல்பு. இந்திரன் ஆதி வானவர்:- தேவர்கோன் முதலிய விண்ணோர். சித்தர் - சித்துக்களில் வல்லோர். எடுத்தல் என்பதன் மரூஉ ஏத்தல். ஆயினும் எடுத்தேத்தல் என்னும் வழக்குளது. பொருந்தவுரைத்துக்கொள்க. கையெடுத்துக் கும்பிட்டு வாயாற் பொருள்சேர் புகழ் பாடல் எடுத்தேத்தல். அந்திரன் - `தனியன்\\\\\\\\\\\\\\\' `தான் தனியன்\\\\\\\\\\\\\\\' (தி.8 திருவாசகம்).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

முடிகள்வணங்கி மூவாதார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகளாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

தலையால் வணங்கித் தேவர்கள் முன்னே செல்லவும் செப்பமான மூங்கில்போன்ற தோள்களை உடைய தேவருலகப் பெண்கள் பின்னே செல்லவும் திருநீற்றைப் பூசிய அடியவர்கள் நாற்புறமும் சூழ்ந்து நிற்கவும் எம்பெருமான் ஆரூரில் திருவாதிரைத் திருவிழாவில் காணப்படும் அழகு என்றும் உள்ளத்து நிலை பெறுவதாகும்.

குறிப்புரை :

முடிகள் - தலைகள். மூவாதார்கள் - மூத்துச் சாவாதவர்கள் (அமரர்கள்). வடி - அழகு; வடிவு. வேய்த்தோள் வானர மங்கையர்:- தி.4 ப.19பா.3; ப.20 பா.3. குறிப்பு. பொடிகள் - திருநீறுகள். பன்மை மிகுதிக் குறிப்பு. `சிவாய நம என்று நீறணிந்தேன்` சிவத்யாநம் நீறணியாது செய்தலாகாது. மூவாதார் (அமரர்) முன்செல்ல, வானர மங்கையர் பின் செல்ல, தொண்டர் புடை சூழ, அடிகள் ஆதிரை நாளின் வண்ணம் அது. மூவான் இளகான் முழுவுலகோடு மண்விண்ணு மற்றும் ஆவான்` (தி.4 ப.84 பா.2).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

துன்பநும்மைத் தொழாதநாள்க ளென்பாரும்
இன்பநும்மை யேத்துநாள்க ளென்பாரும்
நும்பினெம்மை நுழையப்பணியே யென்பாரும்
அன்பனாரூ ராதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

எல்லோருக்கும் அன்பனாகிய ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருவிழாவில் அடியார்கள் பெருமானாரே! உம்மை அடியேங்கள் வழிபடாத நாள்கள் துன்பம் தரும் நாள்கள், உம்மை வழிபடும் நாள்கள் அடியேங்களுக்கு இன்பம் தரும் நாள்கள்; ஆதலின் நும் திருவடித் தொண்டில் ஈடுபட்டு அடியேங்கள் நும்பின் எப்பொழுதும் வருமாறு எங்களைச் செயற்படுத்துவீர் என்று வேண்டும் காட்சி என்றும் உள்ளத்து நிலை பெறுவதாகும்.

குறிப்புரை :

`அன்பே சிவம்` அன்புருவான சிவபிரானது ஆரூர் ஆதிரைநாளில், நும்மைத் தொழாத நாள்கள் எல்லாம் துன்ப நாள்கள் என்பார் பலர். நும்மை ஏத்தும் நாள்கள் இன்பநாள்கள் என்பார் பலர். எம்மை நும்பின் நுழையப் பணித்தருள்வாய் என்று, (திரண்டமக்களிடையே, உலாக்கொண்டருளும் பெருமான் திருவருளின் பின்னர்ச், சென்று இன்புறும் பேற்றை விரும்பி) வேண்டுவார் பலர். அது அத் திருநாள் வண்ணம். (தி.4 ப.92. பா.6) ஒப்பு நோக்குக. (தி.5:- ப.42 பா.5, ப.31 பா.3, ப.7 பா.4.)

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாட லாடலறாத செம்மாப்பார்ந்
தோரூரொழியா துலகமெங்கு மெடுத்தேத்தும்
ஆரூரன்ற னாதிரைநாளா லதுவண்ணம். 

பொழிப்புரை :

உலகைச் சூழ்ந்து நிற்கும் கடல்போல எல்லை காண ஒண்ணாத பெருமானை அடியார்கள் வணங்கித் துதித்தலால் சிறப்பு மிகுந்த பாடல்கள் ஒலித்தல் நீங்காத பெருமிதத்தை நுகர்ந்தவாறு அப்பகுதியிலுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் யாவரும் எஞ்சாது எங்கும் எம்பெருமான் புகழை எடுத்துக் கூறித் துதிக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருநாளின் வனப்பு என்றும் அது அது என்று நினைக்குமாறு உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.

குறிப்புரை :

பார் - நிலம். ஊர் பௌவம் - ஊருங் கடல். பௌவத் தான்:- `கனைகடலைக் குலவரையைக் கலந்துநின்ற பெரியானை..... பேசாத நாளெல்லாம் பிறவா நாளே` `பாரவன் காண் விசும்பவன் காண் பவ்வந்தான் காண்` `பாராகிப் பௌவம் ஏழ் ஆனான் கண்டாய்` (திருத்தாண்டகம்.) பத்தர்:- (பா.1). சீர் - சிவபிரானுடையன. `பொருள்சேர் புகழ்`. பாடல் ஆடல் அறாத செம்மாப்பு. (செம்மை + யாப்பு) ஆர்ந்து - நிறைந்து. `ஓருரும் ஒழியாமல் உலகம் எங்கும் எடுத்தேத்தும் ஆரூரன்றன் ஆதிரை` என்று அதன் சிறப்பு முற்றும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த அருட்டிறம் போற்றற்பாலது.

பண் :கொல்லி

பாடல் எண் : 1

செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்குஞ் சென்னி
நஞ்சடை கண்ட னாரைக் காணலா நறவ நாறு
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை யிருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

சிவந்த சடைக்கற்றையாகிய முன்னிடத்தில் பிறை ஒளிவீசும் திருமுடியை உடைய, விடம் பொருந்திய கழுத்தினராகிய சிவபெருமானை, மேக மண்டலம் வரை வளர்ந்த தேன் மணம் கமழும் சோலைகளை உடைய தில்லைப் பதியிலே விளங்குகின்ற சிற்றம் பலத்திலே, செறிந்து பரவியுள்ள இருள் நீங்குமாறு கையில் அசைகின்ற தீயோடு கூத்து நிகழ்த்தும் நிலையில் காணலாம்.

குறிப்புரை :

தில்லைச்சிற்றம்பலத்தே நஞ்சடைகண்டனாரை எரியாடுமாறு காணலாம். செஞ்சடைக் கற்றையே இளநிலா வீசும் முற்றம். அக் கற்றைக்கு இடம் சென்னி. அதை உடையவர் கண்டனார். அக்கண்டம் நஞ்சு அடைந்தது. நறவம் - தேன். நாறுதல் - நறுமணம் வீசுதல். மஞ்சு - (மை + து = மைத்து. மைந்து, மைஞ்சு, மஞ்சு.) கரு முகிலாகிய மஞ்சடைதலால் சோலையின் உயர்ச்சி விளங்கும். தில்லை வளம் குறிக்கப்பட்டது. சிறுமை அம்பலம் = சிற்றம்பலம். (சித் + அம்பரம்). துஞ்சு + அடை + இருள் = துஞ்சுதல் உற்ற இருள். இருள் துஞ்சுதல்:- `துஞ்சிருள் காலைமாலை தொடர்ச்சியை மறந்திராதே அஞ்செழுத்தோது` (தி.4 ப.70 பா.5). கிழிதல்:- பிளந்து மறைதல். இருள் - ஆணவம். துளங்கு எரி - விளங்கிய தீ; ஈண்டு ஞானாக்கினி. `இடம்படு ஞானத்தீ` (தி.4 ப.75 பா.4). சிற்றம்பலத்தில் நெருப்பு உளதோ? மேலுள்ள ஐந்திலும் காணலாம் என்பதைக் கொண்டு கூட்டுக.

பண் :கொல்லி

பாடல் எண் : 2

ஏறனா ரேறு தம்பா லிளநிலா வெறிக்குஞ் சென்னி
ஆறனா ராறு சூடி யாயிழை யாளோர் பாக
நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று நீண்டெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

காளையை வாகனமாகவுடையவராய், பிறை ஒளிவீசும் தலையிலே கங்கையாற்றை உடையவராய், கங்கையைச் சூடிக்கொண்டு, பார்வதி ஒருபாகமாக, நறுமணம் கமழும் சோலைகளை உடைய தில்லை நகரிலே தாம் பலகாலும் பழகிய சிற்றம்பலத்திலே உடலில் திருநீறு பூசிக்கொண்டு பலகாலம் ஞானத்தீயிடைக் கூத்தாடுமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

ஏறு ஏறனார் - விடையேறுதலுடையவர். ஆறனார் - கங்கையாற்றினார். ஆறு சூடி நீறு பூசி நின்று ஆடுமாறு (காணலாம்) என்க. காணலாம் என்பது முன்னையதினின்றும் கொள்ளப்பட்டது. ஆயிழையாள் ஓர் பாகம் (உடையவராய்) என்றிசைத்துக் கொள்க. நவின்ற - புகழப்பெற்ற. நீண்ட எரி. நீண்டு ஆடுமாறு எனலுமாம். நில் + து, நீல் + து = நீறு. செல் + து, சேல் + து = சேறு. வெல் + து, வேல் + து = வேறு முதலியன போல்வது. நிற்றலுடையது; அழியாதது எனல் பொருள். மெய் - திருமேனி. இங்கு இதுமட்டும் மெய்யேயாயுளது. ஏனையோர் மெய்யெல்லாம் பொய்யே.

பண் :கொல்லி

பாடல் எண் : 3

சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா வெறிக்குஞ் சென்னி
யுடையனா ருடை தலை(ய்)யி லுண்பதும் பிச்சை யேற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
அடிகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

சடையை உடையவராய்த் திருநீற்றையே சந்தனமாகப் பூசியவராய், ஒரேபிறை ஒளிவீசும் தலையை உடையவராய், மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்பதனை உடையவராய், நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த தில்லை நகரில் சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்திலே, திருவடிகளிலே வீரக்கழல் ஆரவாரம் செய்ய நின்று, ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

சாந்த நீற்றர்; `சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே`. (தி.1 ப.52 பா.7) உடையன்: வினைக் குறிப்புப் பெயர். ஆர்:- `இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி` காரணப் பெயர்க்கும் உரித்தாயிற்று. தலை - பிரமகபாலம் உண்பது பிச்சை ஏற்று. ஏட்டில் உம்மை இல்லை. கடி - மணம். கழல் அடிக்கண் ஆர் (-ஒலி)க்க.

பண் :கொல்லி

பாடல் எண் : 4

பையர வசைத்த வல்குற் பனிநிலா வெறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாக மாகிச்
செய்யரி தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று கனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

குளிர்ந்த பிறை ஒளி வீசும் தலையிலே படம் எடுக்கும் பாம்பை வருத்தும் வனப்புடைய அல்குலை உடைய, செவ்வரி கருவரி பரந்த மை தீட்டிய கண்களை உடைய கங்கையோடு, திருமால் ஒருபாகமாக அமைய, வயலிலே தானியங்கள் அறுவடை செய்யப்படுகின்ற தில்லையம்பதியிலே விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் கையில் ஏந்திய நெருப்பினை வீசிக்கொண்டு நின்றவராய், ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

பை - படம். அரவு அல்குற்கு ஒப்பு. அல்குல் - கங்கை. பெயரெச்சத் தொடரீற்று நின்ற அன்மொழித்தொகை அசைத்த அல்குலாள் என விரியும். அசைத்த அல்குலையுடையாள் எனப் பொருள்படும். `பாயினமேகலை` (தி.8 திருக்கோவை. 282) என்பதும் அது. அதனை ஆகுபெயர் என்றார் அதனுரையாசிரியர். தமிழிலக்கணக் கடலாய்ப் புகழுருவெய்திய அரசஞ்சண்முகனார் அன்மொழித்தொகையென நிறுவினார். செந்தமிழ். தொகுதி. 1. பக்கம். 404, 404, 466 பார்க்க. மையரிக்கண்ணியாள்:- பாதிகொண்ட மாதுமையார். மாலும் ஓர் பாகம் ஆகி:- `இடமால் தழுவிய பாகம்` (தி.2 ப.2 பா.4) `அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே`. செய்யரிதில்லை:- வயல் வளம் உணர்த்திற்று. செய் - தண்செய். நன்செய். அரி - நெல்லரிகின்ற. கையெரி வீசிக் கனலெரியாடல் வண்ணம் காணலாம் தில்லைச்சிற்றம்பலத்தே என்க. இடப்பாற் கையில் ஏந்திய தீ `கையெரி` எனப்பட்டது. `அரிதில்லை` வினைத்தொகை.

பண் :கொல்லி

பாடல் எண் : 5

ஓதினார் வேதம் வாயா லொளிநிலா வெறிக்குஞ் சென்னி
பூதனார் பூதஞ் சூழப் புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னு ணவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக் கனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

ஐம்பூதங்களாக இருக்கும் பெருமான், தம் வாயால் வேதம் ஓதினராய்ப் பிறை ஒளிவீசும் சென்னியராய்ப் புலித்தோலை அணிந்தவராய்த் தாம் எல்லோருக்கும் தலைவராய்ப் பூதங்கள் சூழத் தில்லையம்பதியில் பலகாலும் பழகிய சிற்றம்பலத்திலே காதிலணிந்த வெண்குழைகள் தொங்குமாறு ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

வாயால் வேதம் ஓதினார்:- `மறையுங் கொப்பளித்த நாவர்` (தி.4 ப.24 பா.4) `வேதங்கள் நான்கும் அங்கம் (ஆறும்) பண்ணினார்` (தி.4 ப.35 பா.4). சென்னியையுடைய பூதனார். பூதன் - பூத கணம் சூழ ஆடுமாறு காணலாம். அதள் - தோல். வெண் குழைகள் - சங்க குண்டலம். குழை காதில். தாழ்தல் அக்காதின்கீழ். காதில் உள்ள குழை தாழ எனலுமாம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 6

ஓருடம் பிருவ ராகி யொளிநிலா வெறிக்குஞ் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப் பயின்றவெம் பரம மூர்த்தி
காரிடந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று பிறங்கெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

ஒரே உடம்பில்தாமும் பார்வதியுமாக இருவராகி, ஒளிவீசும் பிறையின் ஒளி பரவிய சென்னியராய், பூதக்கூட்டங்கள் தாளம் போட, கூத்தாடுதலில் பழகிய எம் மேம்பட்ட பெருமான், மேகங்கள் தங்கும் தில்லையிலே சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்திலே அகண்டமாய் வளருமாறு நின்று, விளங்குகின்ற ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

ஓருடம்பு:- அர்த்தநாரீச்சுர வடிவம். இருவர்:- மாதும் தாமும் (மகிழ்வர்மாற்பேறரே). பாரிடம் - பூதகணம், பாணி - தாளம். பயின்ற - திருக்கூத்தாடிய. கார் இடம் தில்லை - கரிய முகிலுக்குத் தங்கும் இடமாகிய தில்லை (வனம்) பேர் இடம் பெருக:- அகண்டமாய் வளர.

பண் :கொல்லி

பாடல் எண் : 7

முதற்றனிச் சடையை மூழ்க முகிழ்நிலா வெறிக்குஞ் சென்னி
மதக்களிற் றுரிவை போர்த்த மைந்தரைக் காண லாகு
மதர்த்துவண் டறையுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே
கதத்ததோ ரரவ மாடக் கனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

முதன்மையும் ஒப்பற்ற தன்மையும் உடைய சடைமுழுதும் பிறை தன் ஒளியைப் பரப்பும் சென்னியை உடையவராய், மதம் பொருந்திய யானையை கொன்று அதன் தோலைப் போர்த்திய வலிமை உடையவராய், தேன் உண்டு களித்து வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் நிறைந்த சிற்றம்பலத்தில் கோபம் கொண்ட பாம்பு படமெடுத்து ஆடச் சிவபெருமான் ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

முதன்மையும் தனிமையும் சடைக்குச் சிறப்பு. சென்னியையுடைய மைந்தர். சடையை மூழ்க நிலா எறிக்கும் இடம் சென்னி. மதர்த்த ஆண் யானையின் தோலைப் போர்த்த மைந்தரை எரியாடுமாறு காணலாகும். வண்டுமதர்த்து அறையும் சோலை. சோலைமல்கு சிற்றம்பலம். கதம் - கோபம். கதத்தது ஆகிய ஓர் அரவம் (-பாம்பு) ஆடக் கனன்ற ஞான எரியில் ஆடுமாறு காணலாகும். `மதத்து` எனின் மதத்தையுடைய என்க.

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மறையனார் மழுவொன் றேந்தி மணிநிலா வெறிக்குஞ் சென்னி
இறைவனா ரெம்பி ரானா ரேத்துவா ரிடர்க டீர்ப்பார்
சிறைகொணீர்த் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

வேதம் ஓதுபவராய், மழுப்படை ஒன்றை ஏந்தியவராய், அழகிய பிறை நிலவொளி வீசும் சென்னியராய், எல்லோர் உள்ளத்தும் தங்கியிருப்பவராய், எங்கள் தலைவராய், தம்மைத் துதிப்பவர்களுடைய துயரங்களை நீக்குபவராய், நீர்ப் பாசனத்துக்காகத் தேக்கி வைக்கப்பட்டுள்ள தில்லையம்பதியிலே விளங்குகின்ற சிற்றம்பலத்திலே, சிவபெருமான் தம் கழல் ஒலி செய்ய நின்று ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

குறிப்புரை :

மறையனாரும், ஒரு மழுவேந்தியும், இறைவனாரும் ஏத்துவார்களின் இடர்களைத் தீர்ப்பாரும் ஆகிய சிவபிரானார், தில்லைச் சிற்றம்பலத்திலே கழல் ஆர் (-ஒலி)க்க நின்று அனலுகின்ற எரியில் ஆடுமாறு (காணலாகும்). சிறை - நீரைத் தடுத்துள்ள மடை. தில்லையின் நீர்வளம் குறித்தது. அறைகழல்:- வினைத்தொகை; ஆர்க்குங் கழல். சேரமான்பெருமாள் நாயனார் கேட்ட கழலார்ப்பு.

பண் :கொல்லி

பாடல் எண் : 9

விருத்தனாய்ப் பால னாகி விரிநிலா வெறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய நீண்டபுன் சடைக டாழக்
கருத்தனார் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ டனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

ஆண்டில் மூத்தவராகவும், மிக இளையராகவும் காட்சி வழங்குபவராய், பிறை விரிந்த ஒளியைப் பரப்பும் சென்னியராய்க் கூத்து நிகழ்த்துபவராய், நீண்ட சிவந்த சடைகள் தொங்கக் கூத்தாடுதலால் அடியவர் உள்ளத்தில் என்றும் தங்கியிருப்பவராய், தில்லையம்பதியிலே சிறப்பாகக் கருதப்படுகின்ற சிற்றம் பலத்திலே பார்வதிபாகமான திருமேனியோடு ஒளிவீசும் ஞானத்தீயிடைச் சிவபெருமான் கூத்தாடும் காட்சியைக் காணலாம்.

குறிப்புரை :

விருத்தன் (-முதியன்.) பாலன் (-இளையன்). இரண்டற்கும் இடையிற் குமாரன் (-காளை யௌவநம்) குறிக்காமலே புலப்படும். `விருத்தனார் இளையார்` (தி.5 ப.1 பா.1) பாலன் விருத்தனாதற்கு முன் உள்ளது அது. விருத்த குமார பாலரான திருவிளையாடலைக் கருதுக. விருத்தனாகிப் பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து` உயிர்கள் பாலகுமார விருத்தராகும். கடவுளோ விருத்த குமாரபாலராகிக் காட்டினார். எறிக்கும் - வீசும். நிருத்தனார் - கூத்தர். நிருத்தம் - கூத்து. கருத்தனார் - வினை முதல்வர்; கருத்திலிருப்பவர். அருத்தமாமேனி - சிவகாமி அம்மையார். அருத்தம் - பாதி. அனல் எரி - அனலும் எரி; வினைத்தொகை.

பண் :கொல்லி

பாடல் எண் : 10

பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா வெறிக்குஞ் சென்னிக்
காலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடையொன் றேறி
ஞாலமாந் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தே
நீலஞ்சேர் கண்ட னார்தா நீண்டெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

பாலனாகவும் மூத்தோனாகவும் காட்சி வழங்கிக் குளிர்ந்த பிறை ஒளிவீசும் சென்னியராய்க் காலனை காலால் வெகுண்ட பெருமானார் காளையை இவர்ந்து உலகவர் கூடி வணங்கும் தில்லையம்பதியில் சிறப்பாகப் போற்றப்படும் சிற்றம்பலத்திலே நீலகண்டராய் விரிவாக ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.

குறிப்புரை :

பாலனாய் விருத்தனாகி:- பா.9 குறிப்புரையை நோக்குக. நீண்டஎரி என்பதிற் பெயரெச்சத்தகரம் தொகுத்தல். காலனைக் காலால் உதைத்தான். காய்தல் காரணம். உதைத்தல் காரியம். காரணவாகுபெயர். ஞாலம் ஆம் தில்லை:- `பாரோரும் விண்ணோரும் பணியநட்டம் பயில்கின்ற பரஞ்சுடரைப் ... ... பெரும்பற்றப் புலியூரானை`. நீலம் - நீலவிடம். ஆகுபெயர்.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

மதியிலா வரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோ ணெரிய வூன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே. 

பொழிப்புரை :

அறிவற்ற அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று பெரிய கயிலை மலையைப் பெயர்க்க, அதனை மனத்தால் நோக்கிச் செல்வனான அவனுடைய தோள்கள் நெரியுமாறு கால்விரல் ஒன்றனை ஊன்றி, நீண்ட பொழில்கள் சூழ்ந்த தில்லையுள் விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் எல்லோரும் வியக்குமாறு குறுகிய இடத்தில் நின்று ஒளிவீசும் ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.

குறிப்புரை :

மதி - அறிவு. மலையெடுக்கலுற்றதே மதியில்லாமை காட்டிற்று. நெதியன் - செல்வன். மதியம் தோய்தில்லை:- சந்திர மண்டலத்தினை அளாவிய தில்லைவனம். `செல்வநெடுமாடம் சென்று சேண் ஓங்கிச் செல்வமதி தோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலமேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே` (தி.1 ப.80 பா.5) என்றதில், தில்லைமாடங்களின் உயர்ச்சி கூறிற்று. `அதிசயம் போலநின்று அனல்எரி ஆடும் ஆறு`:- `சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி ஏவரும் காண ஆடுதி.` ஆயினும், காண்பதற்கு அரிய நின் கழலும் கண்டிலாத நின் கதிர் நெடுமுடியும் கொண்டு ஆடுவது அதிசயம் விளைக்கும். (கோயில் நான்மணிமாலை. 12).

பண் :கொல்லி

பாடல் எண் : 1

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கே னென்னைநீ யிகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே.

பொழிப்புரை :

அநாதியான வினையின் நீங்கியவனே ! எல்லாருக்கும் முற்பட்டவனே ! தில்லை அம்பலத்தே ஆடுகின்ற தலைவனே ! மேம்பட்டவனே ! மேம்பட்ட யோகியே ! அடியேன் பத்தனாய்ப் பாடும் ஆற்றல் இல்லேன் . யாதனால் அடியேன் பத்தி செய்வேன் ? அடியேனை நீ இகழவேண்டா . அடியேன் உன் ஆடலைக் காணத் தில்லை வந்துள்ளேன் .

குறிப்புரை :

பத்தன் ஆய் - பத்தி உடையவனாகி . பரமன் - முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள் . பரமயோகம் - சிவாநந்தப் பேறு . ஆன்மயோகம் , ஞானயோகம் , சிவயோகம் ( சிவப்பேறு ) என்னும் மூவகையோகத்துள் , தன்னுயிர்தானறப் பெறல் ஆன்மயோகம் . அவனருளே கண்ணாகப் பெற்று அருளாதல் ஞான யோகம் . அச்சிவஞானத்தால் சிவனைப் பெறுதல் சிவயோகம் . ( யோகம் மூன்றும் :- சிவ . போதம் . சூ . 3, 7, 8. சிவயோகம் சூ . 10. சிவாநந்தப்பேறு . சூ . 11. ஆன்மயோகம் சூ . 3, 7 ). எஃது - எத்து . அஃது முதலிய சுட்டுப் பெயரும் பஃது என்பதும் இவ்வாறு மருவி வழங்குகின்றன . செய் + கு + ஏன் . முத்தன் - அநாதி முக்தன் . முதல்வன் - பரத்துவக் கடவுள் . அத்தன் - மலத்துன்பினின்றும் நீக்கி உயிர்க் குழவிகளையாள ஆடல் முயற்சியுடைய அப்பன் . காண்பான் வந்தவாறு ( ஆகும் ) என்று ஆக்கம் வருவித்து முடிக்க . அடியனேன் வந்தவாறு ஆடல் காண்பான் என்றும் ஆம் . ஆய் - போன்று எனலுமாம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணாத் திருவுரு வுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தநான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.

பொழிப்புரை :

மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகனே ! ஒருவராலும் அறியமுடியாத அழகிய ஒளிவடிவு உடையவனே ! பரிசுத்தமாயுள்ள தில்லையிலே விளங்குகின்ற சிற்றம்பலத்தில் உன் திருக்கூத்தைக் காணவேண்டி உன்னை உள்ளத்தில் இருத்தி கருத்தொன்றிப் பாடமாட்டாதேனாகிய அடியேன் வந்துள்ளேன் .

குறிப்புரை :

கருத்தன் ஆய் - கருத்துடையேனாகி . ( பாடுங்கால் , அப்பாட்டின் பொருளிற் கருத்து ஊன்றி நிற்க , உரையும் செயலும் ஒத்த பாவனையுள்ளேனாகி ). ` கையொன்று செய்ய நாவொன்று பாடக் கருத்து ஒன்று எண்ண ` நிகழும் வழிபாட்டாற் பயனில்லை என்றவாறு . காம்பு - மூங்கில் . அன - ஒத்த . தோளி - சிவகாமவல்லி . பங்கா - பங்குடையாய் . ஒருத்தராலும் அறிய ஒன்றாத . திருவுரு - ஞானரூபம் . பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனுக்கு அப் பதிஞானமே ரூபம் . ஒருத்தராலும் அறிய ஒண்ணாத திருவுருவம் அதுவே . தேகமான அதுவே தன்னையும் தேகியான சிவனையும் காட்டும் . ` அருளுரு உயிருக்கு என்றே ஆக்கினன் அசிந்தன் ` ( சித்தியார் ). திருத்தம் - தூய்மைமிக்கது . நிருத்தம் - திருக்கூத்து . நேர்பட - நேர்பட்டதால் ; நேர்படற்பொருட்டு எனின் , காணவேண்டி என்றது மிகையாகும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கேட்டிலேன் கிளைபி ரியேன் கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினே னின்றன் பாதம் நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாங் குவிமு லையாள் கூடநீ யாடு மாறே.

பொழிப்புரை :

அடியேன் இதற்குமுன் உன் பெருமையை உள்ளவாறு கேட்டறியேன் . இப்பொழுது உன் அடியார்குழாத்தைப் பிரியாமல் உன் பெருமையைக் கேட்குமாறு கேட்பித்தருளி உதவுவாயானால் , நீர் நிலைகளில் வாளை மீன்கள் பாயும் வளம் மிகுஞ் சிற்றம்பலத்திலே உன்னோடு கூடியிருக்கும் குவிந்த தனங்களை உடைய பார்வதியோடு கூட நீ ஆடுமாற்றால் ( ஆடுதலின் பேறாக ) உன் திருவடிகளை நெஞ்சின் நடுவிலே உறுதியாக நிலை நிறுத்தினேன் ஆவேன் .

குறிப்புரை :

மாடு - பொன் . மாட்டின் - பொன்னைப்போல . நீரில் வாளை பாய்கின்ற தோற்றம் பொன்னொளித் தோற்றமும் ஒக்கும் என்றபடி . மாடு - பக்கம் ; இடம் . நீர்மாட்டின் - நீர்ப்பக்கத்தில் , நீரிடங்களில் எனலுமாம் . உருபு முன்னும் உருபேற்ற பெயர் பின்னும் நிற்றல் உண்டு . மட்டில்லாத ( மட்டு இல் ) என்று கொண்டு முதல் நீட்சி எனல் தக்கதன்று . கூட்டம் ஆம் - கூடிக் களிப்பதற்குரியவள் ஆகும் . முன்னம் கேட்டில்லேன் . ( அடியார் ) கிளையைப் பிரியேன் . ( நினைக்குமாறு நினைப்பித்தும் பாடுமாறு பாடுவித்தும் ) கேட்குமாறு கேட்பித்தருளியும் உதவுவாய் ஆகில் ( என் ) நெஞ்சின் உள்ளே நடுப்பட நின்றன் பாத மலர்களை நாட்டினேன் ஆவேன் . ( கேட்பித்தருளாயாகில் நாட்டவல்லேனல்லேன் என்றபடி ) ` நினைக்குமா நினைப்பியாதே ` ( பா .9) என்புழிப்போலக் கேட்குமா கேட்டல் . அது மறை . இது விதி . ( சிவஞானபோதச் சிற்றுரை . சூ . 11. முதல்வன் உடன் நின்றறிதல் பற்றிய விளக்கம் ) ` தொண்டனேன் நினையுமா நினையே ` ` விரும்புமா விரும்பே ` ` தொடருமா தொடரே ` ` நுகருமா நுகரே ` என்பன காண்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை யடிமை செய்ய
எந்தைநீ யருளிச் செய்யா யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி யோவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலு மாட அடியிணை யலசுங் கொல்லோ.

பொழிப்புரை :

சிவந்த தீயை ஓம்பும் அந்தணர்களுடைய வேள்விச் செயல்கள் நீங்காத தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் நீ கூத்து நிகழ்த்துதலால் உன் திருவடிகள் சோர்வு அடையும்போலும் . அடியேன் உள்ளத்தை உலகப் பொருள் நுகர்ச்சியிலிருந்து மாறுபடும் படியாகச் செய்யாமலும் உன்னை அணுகிச் செய்யும் அடிமைத் திறத்தை அடியேனுக்கு அருள் செய்யாமலும் உள்ளாய் . இனி அடியேன் செயற்பாலது யாது உள்ளது ?.

குறிப்புரை :

எந்தை ! சிந்தையைத் திகைப்பித்தல் செய்யாதே அடிமை செய்ய யாதும் நீ அருளிச் செய்யாய் . என்னே நான் செய்வது ? செந்தீயார் - செய்ய வேள்வித் தீ வளர்க்கும் அந்தணர் . அவர் செய்யும் வேள்வி ஓவாது நடக்கும் இடம் தில்லைச்சிற்றம்பலம் . ஓவாமை பண்டு . அந்தி :- காலையந்தி ( மாலைச்சந்தி ). பகல் - உச்சிப்பகல் . இடைவிடாது ஆடலால் திருவடியிணை சோர்வுறுமோ ? அலசல் - சோம்பல் . ஈண்டுச் சோர்தலின் மேற்று . செறிவுடையடிமை :- ஆண்டானோடு செறிவிலா அடிமையும் உண்டு . செறிவு - அன்பு நிறைவாலான உள்ளத்தியைபு . ` சீலம் நோன்பு செறிவு அறிவு ` ( தி .8 திருவாசகம் ) என்பவற்றுள் ஒன்றான செறிவு யோகமும் ஆம் . தீயார் :- தியார் . முதற்குறுக்கம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கண்டவா திரிந்து நாளுங் கருத்தினா னின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரு மேத்த விறைவநீ யாடு மாறே.

பொழிப்புரை :

அடியேன் அனுபவத்தில் கண்டவாறு ஞான நிலைக்குப் பொருந்தியவண்ணம் உலகியலுக்கு மாறுபட்டு உள்ளத்தில் நின் திருவடிகளை நிலையாகக் கொண்டு ஆடிப்பாடி உன் திருவருட் குறிப்பினாலேயே , வண்டுகள் பண்களைப்பாடும் சோலைகள் மிகுந்த சிற்றம்பலத்திலே எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் துதிக்குமாறு இறைவனாகிய நீ ஆடும் கூத்தினைக் காண்பதற்கு வந்து சேருவேன் .

குறிப்புரை :

வண்டுகள் பண்களைப்பாடும் சோலை மல்கிய திருச்சிற்றம்பலத்தே , எட்டுத் திசையிலுள்ள யாவரும் ஏத்த , இறைவ நீ ஆடும் வண்ணத்தைக் கூடுவன் . கண்டவாறு திரிந்து நாள்தோறும் கருத்தொடு நின் திருவடியை உளங்கொண்டு ஆடிப்பாடிக் கூடுவன் . நின் திருவருட் குறிப்பினாற் கூடுவன் . ` அண்ணல் பாதம் கொண்டு அவன் குறிப்பினாலே தாபரத்தைக் கூப்பினான் . அவன் தாதை கண்டு பாய்வான் கால் அறஎறியக் கண்டு சண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே ` ( தி .4 ப .49 பா .4). கண்டவா - அநுபவத்திற் கண்டவாறு . கருத்தில் நான் எனலுமாம் . திரிந்தது ஞானநிலைக்குப் பொருந்தியவண்ணம் . நீ ஆடுமாறு எண்டிசையோரும் ஏத்த எனலும் கூடும் . பா .8 இல் உள்ளவாறு , ` கருத்தினான் ` என்பது , கருத்தையே உயர்திணை ஆண்பாலாகக் கூறினார் ஆகக்கொண்டு , கருத்தினான் கண்டவாறு திரிந்து கொண்டு இருந்து ஆடிப்பாடிக் கூடுவன் எனலும் பொருந்தும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பார்த்திருந் தடிய னேனான் பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே யென்ப னுன்னை மூவரின் முதல்வ னென்பன்
ஏத்துவா ரிடர்க டீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.

பொழிப்புரை :

வழிபடும் அடியவர்களுடைய துயரங்களைத் தீர்ப்பவனே ! தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள கூத்தனே ! உன் கூத்தினைப் பார்த்து இருந்து உன்னை முன்னின்று துதிப்பேன் . ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் உன்னை மூவரினும் முதல்வனாகிய மூர்த்தியே என்று அழைப்பேன் . உன் கூத்தினைக் காண்பதற்கு அடியவருடன் நான் வந்தவாறு இதுவாம் .

குறிப்புரை :

தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தா உன் திருக்கூத்தைக் காண்பான் கூட நான் வந்தவாறு . அடியனேன் நான் பார்த்திருந்து பரவுவன் . பாடி ஆடி மூர்த்தியே என்று அழைப்பேன் . ` உன்னை ` இடை நிலை விளக்கு . மூவருள் அன்று . மூவரினும் முதல்வன் . ( தி .8 திருவாசகம் . 8) ` மூவர் உருத் தனதா மூலமுதற் கரு ` ( தி .7 ப .84 பா .7) ` மூவர் கோனாய் நின்ற முதல்வன் ` ( தி .8 திருவாசகம் . 5.30) ` மூவர் அறியாச் சிந்தூரச் சேவடி யான் ` ( தி .8 திருவாசகம் 8.5) ` முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார் ` ( தி .8 திருவாசகம் 20.8) ` ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் :- தி .1 ப .23 பா .4,9. ` ஏத்துதல் ஈண்டு அருள்வழி நிற்றல் மேற்று `. ( சிவஞான போதமாபாடியம் . சூ . 11. அதி . 2 ) என்பதும் ஈண்டுச் சிவாநந்தாநு பூதியாரைக் குறித்துக் கொள்ளற்பாலதாகும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய
ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ
வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே.

பொழிப்புரை :

அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்குமாறு விடுத்து அகத்தடிமையாகிய மெய்யடிமையைச் செய்ய , என் தலைவனே ! எல்லோர்க்கும் ஆதியாய முதல் தெய்வமே ! நீ அருள் செய்வாயாக . இவ்வுலகிலே மேம்பட்ட மிகுஞ் சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்தவாறு இதுவாம் .

குறிப்புரை :

வையகம் தன்னில் மிக்க - உலகிலே மேன்மையுற்ற . ` ஞாலமாந்தில்லை ` ( தி .4 ப .22. பா .10) கோயில் எல்லாவற்றிற்கும் கோயில் ஆதலின் , மிக்கதாயிற்று . பைய - மெல்ல . ` நுன் ` நின் என்றதன் திரிபு . ( நீன் , நின் - நுன் - உன் எனத் திரிந்தது . ` நீன் ` என்னும் வழக்கு இன்றும் உளது . யான் , நீன் , தான் , யாம் , நீம் , தாம் என்பவை பண்டைய ஆட்சி . பொய் - அநித்தியம் . தவிர - ( நீங்க ; ஆண்டாண்டுத் ) தங்க . விட்டு - விண்டொழியப்பண்ணி . புறம் அல்லா அடிமை :- அகத்தடிமை . மெய்யடிமை . ` பசு பாசங்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்து , செய்வன எல்லாம் அவன் அருளின்வழி நின்று செய்யும் செயலாகக் கண்டு கொண்டிருக்கும் ` இறைபணியாகிய அடிமைத் திறம் ( மாபாடியம் ) புறம் அலா அடிமைத்திறம் ஆகும் . செய்யாய் - செய்வாய் . ஆதியே - முதல்வனே . ஆதி மூர்த்தி - ஆதி சத்தியாகிய மூர்த்தி ( யையுடையவனே ; மூர்த்தி ) மானே .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மனத்தினார் திகைத்து நாளு மாண்பலா நெறிகண் மேலே
கனைப்பரா லென்செய் கேனோ கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பா னடியனேன் வந்த வாறே.

பொழிப்புரை :

விடக்கறையை அணிந்த நீலகண்டனே ! அடியேனுடைய மனம் நிலைகொள்ளாமல் தடுமாறி நாள்தோறும் பெருமை தாராத வழிகளிலே செருக்கித் திரிகின்றது . அடியேன் யாது செய்வேன் . வேதங்களை ஓதுந்திறஞ் சிறிதளவுங் குறைவுபடாத தில்லைச் சிற்றம்பலத்தில் உன் இருப்பிடத்தைத் தரிசிப்பதற்கு அடியேன் வந்தவாறு இதுவாம் .

குறிப்புரை :

மனத்தையே ` மனத்தினார் ` என்றார் . மனத்தினார் கனைப்பர் - நெருங்குவர் . மாண்பு அல்லா நெறிகள் :- பிறவிதரும் வழிகள் . கறை - நஞ்சின் கறுப்பு . தினைத்தனை - தினையளவும் . தனை - அளவு . தினை சிறுமைக்குக் காட்டும் ஓர் அளவை ( குறள் . 104. பரிமே . உரை ) வேதம் குன்றாமை :- செந்தீயார் வேள்வி ஓவாமை . பா . 4. ` நரியனார் ` ` தென்றலார் என்பனபோல்வது , ` மனத்தினார் `. அனைத்தும் - எல்லாம் . நின் நிலயம் - உனது திருவருளகம் . எல்லாம் நினது நிலயம் ; உறையுள் . நின் இலயம் எனப் பிரித்து நின்கண் ஒடுக்கம் ; கூத்து எனலும் பொருந்தும் . ` அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனைத் தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ `. ( தி .5 ப .2 பா .1)

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று வழகநீ யாடு மாறே.

பொழிப்புரை :

தேவர்கள் தலைவனே ! அடியேனுடைய நெஞ்சினைத் தூய்மை செய்து உன்னை எப்பொழுதும் அடியேன் நினைக்குமாறு திருவுள்ளம் பற்றாமல் வஞ்சனை செய்கின்றாயே . மேகங்கள் தங்குதற்கு வந்து சேரும் உடயரமான சோலைகளையுடைய தில்லையம்பதியிற் சிதம்பரத்திலே அழகிய சொற்களையுடைய பார்வதி காண, நீ ஆடுந்திறம் இருந்தவாறு என்னே !

குறிப்புரை :

நெஞ்சினைத் தூய்மை செய்தல் :- துகளறுபோதம் உறுதற்குத் துணையாக்கல் . ` நினைக்குமா நினைப்பியாதே `: தி .4 ப .23 பா .3. வஞ்சம் - ( வல் + து = அம் ) வன்பு . வானவர் - பேரின்ப வீடுற்றோர் ; வானவர் தலைவனாகிய இந்திரனல்லன் ; ஆயின் , தேவர் ஆவர் . மஞ்சு - கார்மேகம் . அஞ்சொலாள் :- திருக்கூத்திற்கு ஏற்பத் தளிரிள வளரொளி பாடிய சிவகாமவல்லி . அஞ்சொலாள் காண நின்றாடுமாறு :- அண்டத்தும் உணர்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

மண்ணுண்ட மால வனு மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே.

பொழிப்புரை :

பூமியை உண்ட திருமாலும் , மலர்மேலுறையும் பிரமனும் விண்ணளவும் ஒளிநிறைந்த உன் திருவுருவைக் காணும் வேட்கையராயிருந்துமே , தானாக நிலைத்துத் திணிந்திருக்கும் சிவத்திரு மேம்பட்ட தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே பண்ணுக்கு அமைந்த பாடல் ஒலிகளின் இடையே பரம்பொருளாகிய நீ வெளிப்படையாக ஆடுமாற்றை - அதன் மாண்பை ( இன்னும் ) காணமாட்டாராகின்றனர் . ( அவர் விதி இருந்தவாறென்னே !)

குறிப்புரை :

மண் - நிலவுலகு . மாலவன் - மாயன் . மலர் - தாமரை . ` பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை ` ( தி .4 ப .12 பா .2) விண் உண்ட திருவுருவம் :- ` பாரும் திசையும் படரொளியாலே நிறைந்த ` பேருருவம் . ( போற்றிப் பஃறொடை :- 1.5. ) காண விரும்பினார் காணமாட்டாராயினார் . அவ்வாறாக விண்ணுண்ட திருவுருவம் தோன்றிற்று . திண் உண்ட திரு :- ` சென்றடையாத திரு ` ` சென்றடையாச் செல்வம் `. பண் உண்ட பாடல் :- நாடொறும் வீடுதோறும் பண் பாடல் உளது .

பண் :

பாடல் எண் : 1

இரும்புகொப் பளித்த யானை யீருரி போர்த்த வீசன்
கரும்புகொப் பளித்த வின்சொற் காரிகை பாக மாகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத் துவலைநீர் சடையி லேற்ற
அரும்புகொப் பளித்த சென்னி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கரும்பின் இனிமை மிகும் சொற்களை உடைய பார்வதியின் பாகராய் , வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு கொப்பளிக்கும் பூவினை அணிந்த கங்கையாளாகிய நீர் வடிவைச் சடையில் ஏற்றவராய் , அரும்புகள் தேனை மிகுதியாக வெளிப்படுத்தும் சென்னியை உடைய அதிகை வீரட்டனார் , இரும்பின் நிறத்தை கொப்பளித்து விட்டாற்போன்ற செறிவான கருமையுள்ள யானையின் ஈரப்பசுமை கெடாத தோலைப் போர்த்த ஈசனாவார் .

குறிப்புரை :

இரும்பு ( இருள் + பு என்பதன் மரூஉ ) கொப்பளித்தாற் போன்ற மிகக் கரிய யானை ( ஆணவம் ). கரும்பு சொற்குஉவமை . சுரும்பு - ( சுருள் + பு என்பதன் மரூஉ ) வண்டு இனத்துள் ஒன்று . துவலை - துளி . ` கொப்பளித்தல் `. இத்திருப்பதிகத்திற் பல பாடலிலும் சொற்பொருட்பின் வருநிலையுற்றுளது . பொருத்தமாகப் பொருள் கூறிக் கொள்க . ( காஞ்சிப்புராணம் இரண்டாவது காண்டம் . இருபத்தெண்டளிப் . 89. பார்க்க ).

பண் :

பாடல் எண் : 2

கொம்புகொப் பளித்த திங்கட் கோணல்வெண் பிறையுஞ் சூடி
வம்புகொப் பளித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச்
செம்புகொப் பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்புகொப் பளிக்க வெய்தா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கொம்பின் கூர்மை அதிகரித்த கூரிய வளைந்த வெண் பிறையைச் சூடி , அதன்மேலும் நறுமணம் அதிகரித்த கொன்றை மலரை வளரும் சடையில் அணிந்து , செம்பு மயமான உறுதியான மும்மதில்களும் அழியுமாறு வில்லை வளைத்து அம்பின் விறல் அதிகரிக்குமாறு புரங்களை எய்தவர் அதிகை வீரட்டனாரே .

குறிப்புரை :

கொம்பு - ஊதும் கொம்பு . வாத்தியம் . வெண்டிங்கட் பிறைக் கோணலுக்குக் கொம்பின் கோணல் ஒப்பு . வம்பு - மணம் . வள் + பு = வம்பு . செம்பு மதில் மூன்றும் :- முப்புரம் . அம்பு - திருமாலான கணை .

பண் :

பாடல் எண் : 3

விடையுங்கொப் பளித்த பாதம் விண்ணவர் பரவி யேத்தச்
சடையுங்கொப் பளித்த திங்கட் சாந்தம் வெண் ணீறுபூசி
உடையுங்கொப் பளித்த நாக முள்குவா ருள்ளத் தென்றும்
அடையுங்கொப் பளித்த சீரா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

இடபத்தில் தழும்பேற்றும் தம் திருவடிகளைத் தேவர்கள் பாடித் துதிக்க சடைக்கு ஒளித் ததும்ப வைக்கும் சந்திரனின் நிலவு போன்ற வெண்ணீற்றைச் சாந்தமாகப் பூசி உடைமேல் பல்கித் தோன்றும் நாகங்களின கட்டியிருக்கும் திருவடிவை தியானிப்பவரது உள்ளத்தில் நீங்காது சேர்ந்திருந்திருப்பவர் அதிகை வீரட்டனாரே .

குறிப்புரை :

சிவபிரான் திருப்பாதம் விடைமேல் அடைதல் குறித்தது . ` ஏறுகொப்பளித்த பாதம் .` பா . 5. சடைமேல் திங்கள் . திருவெண்ணீற்றைச் சாந்தமாகப் பூசி , ` சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த நீறு ` ( சம்பந்தர் ) உடை ... ... நாகம் :- அரவக் கச்சு . உள்குவார் - நினைப்பவர் . உள்ளத்து என்றும் அடைவார் :- ` நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் `. அடையும் - சேரும் ; முழுதும் . அடைதலையும் எனலுமாம் . அடை :- முதனிலைத் தொழிற் பெயர் .

பண் :

பாடல் எண் : 4

கறையுங்கொப் பளித்த கண்டர் காமவே ளுருவ மங்க
இறையுங்கொப் பளித்த கண்ணா ரேத்துவா ரிடர்க டீர்ப்பார்
மறையுங்கொப் பளித்த நாவர் வண்டுண்டு பாடுங் கொன்றை
அறையுங்கொப் பளித்த சென்னி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

விடக்கறை துலக்கமாக விளங்கும் கழுத்தினராய் , மன்மதன் வடிவம் அழியுமாறு தீயைச் சிறிது வீசிய நெற்றிக் கண்ணினை உடையவராய் , தம்மைத் துதிக்கும் அடியவர் துயர்களைத் தீர்ப்பவராய் , வேதம் மிக்குத் தொனிக்கும் நாவினராய் , வண்டுகள் தேன் உண்டு பாடப்படுவதும் , எல்லோராலும் புகழப்படுவதுமான கொன்றை மலரைச் சூடிய சென்னியராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

கறை - நஞ்சின் கறுப்பு . கண்டர் - ` திருநீலகண்டர் `. காம வேள் - காமனாகிய வேள் . வேள் - விரும்பப் பெறுவோன் . கருவேள் ( மன்மதன் ). மங்க - அழிய . செவ்வேள் ( முருகன் ). வேள் உருவம் மங்கத் தீயைச் சிறிது கொப்பளித்த நெற்றிக்கண்ணார் . இறை - சிறிது . ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் ; தி .1:- ப .21 பா .6, ப .23 பா .9. மறை - வேதம் . நாவர் - நாவினையுடையவர் . கொன்றையில் தேனை உண்டு வண்டு பாடும் ஒலியைத் தோற்றும் இடமாகிய சென்னி (- தலை ).

பண் :

பாடல் எண் : 5

நீறுகொப் பளித்த மார்பர் நிழறிகழ் மழுவொன் றேந்திக்
கூறுகொப் பளித்த கோதைக் கோல்வளை மாதோர் பாகம்
ஏறுகொப் பளித்த பாத மிமையவர் பரவி யேத்த
ஆறுகொப் பளித்த சென்னி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

திருநீறு பரந்து விளங்கும் மார்பினராய் , ஒளி விளங்கும் மழுப்படையைக் கையில் ஏந்தி , எல்லோரும் புகழும் மாலையும் திரண்டவளைகளும் அணிந்து ஒரு பாகத்தை விளக்கும் பார்வதி சமேதராய் , காளையைத் தழும்பேற வைத்த தம் திருவடிகளைத் தேவர்கள் துதிக்குமாறு கங்கை நதி பெருகித்தங்கியிருக்கும் செஞ்சடையை உடையவராய் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

நீறு பூசிய திருமார்பு , அதனைக் கொப்பளித்தது போலத் திகழ்கின்றது . நிழல் - ஒளி . மழு - தீய்க்கும் படை . கூறு - கூந்தலின் ஐம்பால் . கோதை - கூந்தல் . கோல்வளை - அழகிய வளையல் . மாது - உமாதேவியார் . பா .10 ` விடையும் கொப்பளித்த பாதம் ` பா . 3. ` இமையவர் பரவி ஏத்த ` பதி . பா . 5. ஆறு - கங்கை . பா . 9.

பண் :

பாடல் எண் : 6

வணங்குகொப் பளித்த பாதம் வானவர் பரவி யேத்தப்
பிணங்குகொப் பளித்த சென்னிச் சடையுடைப் பெருமை யண்ணல்
சுணங்குகொப் பளித்த கொங்கைச் சுரிகுழல் பாக மாக
அணங்குகொப் பளித்த மேனி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

வேத மந்திரங்களைச் சொல்லி வணங்குதலை மிகவும் பொருந்திய திருவடிகளைத் தேவர்கள் முன் நின்று போற்றிப் புகழ , ஒன்றோடொன்றுணங்காதவை அதிகம் விளங்கும் சடையினை உடைய பெருமை மிக்க தலைமையாளராய் , தேமல் மிகவும் பரவிய கொங்கைகளை உடையவளாய்ச் சுருண்ட கூந்தலை உடைய பார்வதியின் பாகராய் , தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் திருமேனியை உடையவராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

எல்லாவுயிர்களும் , ( எல்லாமக்களும் , எல்லாத் தேவர்களும் ) செய்யும் வணக்கமெல்லாம் சிவபெருமான் திருவடிக்கே உரியன என்று வணக்கஞ் சொல்லும் மந்திரங்களான அதர்வசிரசு , உருத்திராத்தியாயம் , தேவவிரதம் முதலியன உணர்த்துகின்றன . ` ஸ்தோமம்வோ அத்யருத்ராய ` ` யஸ்மை நமஸ்தஸ்மை த்வாஜுஷ்டந் நியுநஜ்மி ` என்பன முதலிய மந்திரங்களால் , வணக்கங்களெல்லாம் சிவபிரானையே சாரும் என்பது பெறப்படும் . ` மொழிந்திடும் எல்லா வணக்கமும் எல்லா மொழிகளும் உன்னையே சாரும் ` ( சிவதத்துவ விவேகம் . 33 ). சடை ஒன்றோடொன்று இணங்குதல் இன்மையே பிணங்குதல் உடைமை . சுணங்கு - தேமல் . அணங்கு - அழகு . சுரி குழல் - சுரிகுழலாள் . வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை .

பண் :

பாடல் எண் : 7

சூலங்கொப் பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசி
நூலுங்கொப் பளித்த மார்பி னுண்பொறி யரவஞ் சேர்த்தி
மாலுங்கொப் பளித்த பாகர் வண்டுபண் பாடுங் கொன்றை
ஆலங்கொப் பளித்த கண்டத் ததிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

சூலம் ஒளிமிகுந்து வீசும் கையினராய் , ஒளிவீசும் மழுப்படையை சுழற்றிக் கொண்டு , முப்புரிநூல் ஒளிவீசும் மார்பில் நுண்ணிய புள்ளிகளை உடைய பாம்பினை அணிந்து வண்டுகள் பண்பாடும் கொன்றை மலர்களைச் சூடித் திருமால் மகிழ்ந்திருக்கும் பாகத்தை உடையவராய் , விடத்தின் சுவட்டினை வெளிப்படுத்தும் நீலகண்டராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

சூலம் ஏந்திய கையினார் . சுடரினை விடுகின்ற மழுவாள் . நூல் - முப்புரி நூல் . நுண்பொறி - சிறியப் படப் புள்ளிகள் . மால் ... ... பாகர் :- ` இடம் மால் தழுவிய பாகம் ` ( தி .4 ப .2 பா .4). ` மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகி ` ( தி .4 ப .22 பா .4). ` வண்டு பண் பாடுங்கொன்றை ` ( ? 5). ஆலம் - நஞ்சு .

பண் :

பாடல் எண் : 8

நாகங்கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடி
மேகங்கொப் பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப்
பாகங்கொப் பளித்த மாதர் பண்ணுடன் பாடி யாட
ஆகங்கொப் பளித்த தோளா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

பாம்பு மகிழ்வோடு விளங்கும் கையினராய் , நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு , மேகம் மிக்குச் செறிந்த வானில் மிளிரும் பிறையை விரிந்த சடைமேலே சூடி , ஒருபாகமாக விளங்கும் உமாதேவி பண்ணோடு பாடக் கூத்தாடுவதற்குத் திருமேனிக்கண் பூரிப்படைந்து விம்முந் தோள்களை உடையவர் அதிகை வீரட்டனார் ஆவர் .

குறிப்புரை :

நாககங்கணர் ஆதலின் , நாகங்கொப்பளித்தகையர் எனலாயிற்று . ` அரவு கொப்பளித்த கையர் `. நான் மறை ஆய - நான்கு வேதங்களானவற்றை . பாடி ஆடக் கொப்பளித்த தோளார் என்று முடிக்க . திங்கள் மேகத்தின் மறைந்து வெளிப்படல் கருதி , மேகங்கொப்பளித்த திங்கள் என்றருளினார் . திங்களை விரி சடைமேல் வைத்து . அம்பிகை பண்ணுடன் பாடி ஆட . பாகம் - இடப்பால் . ஆகம் - மார்பு . உடலுமாம் . ` மாதர் பண்ணுடன் பாடி ஆட ` என்பது அம்பிகை பண்ணொடு பாடுதலும் அன்றி ஆடுதலும் செய்தார் என்று குறித்தாலும் , ஆடுதல் காளியம்மைக்கே உரியதாக்கிக் கூறுதலாலும் , சிவகாம வல்லிக்கு ஆட்டம் உண்டு என்னல் மரபன்றாதலாலும் , பாடி என்றதைப் பாட என்று செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்ளல் நன்று .

பண் :

பாடல் எண் : 9

பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்த ரேத்த
விரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்ட ரேத்துவா ரிடர்க டீர்ப்பார்
அரவுகொப் பளித்த கைய ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

துதித்தற்கு ஏற்ற வாழ்த்துக்களைத் துலங்க வெளிப்படுத்தும் பாடல்களைப் பண்ணுடன் பாடி அடியவர்கள் போற்ற , சடைமுடியில் கலந்து தங்குதற்கு மகிழும் கங்கையைத் தம் விரிந்த சடையில் மகிழுமாறு வைத்து , இருள் கம்மிக் கறுத்த நீலகண்டராய் , தம்மை வழிபட்டுப் புகழ்பவர்களின் துயரங்களைத் தீர்ப்பவராய் , பாம்பு மகிழ்ந்து ஆடும் கையினராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

பரவு - வாழ்த்து . ` பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் ` ` பாழ்த்த பிறப்பறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே ` ( தி .8 திருவா . 5.16) பத்தர் - தொண்டர் . பண்ணுடன் ஏத்தக் கங்கையைச் சடைமேல் வைத்து , தீர்ப்பார் என்று முடிக்க . நஞ்சுண்ட கறுப்பு , இரவைக் கொப்பளித்தது போலிருந்தது . இரவு கொப்பளித்தது போன்ற இருட் கண்டமும் ஆம் . ` ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் `. தி .4 ப .23 பா .6. அரவு கொப்பளித்த கையர் :- ` நாகங் கொப்பளித்த கையர் `. ? .9 பரவு ... ... பாடப் பண்ணுடன் ஏத்த என்றதால் , ` வேதத்தின் கீதம்பாடும் பண்ணவனைப் பண்ணில்வருபயனானை ` ப் பண்ணொடு கூட்டிப் பாடுதலே திருவருட் பரிசளிக்க வல்லது எனல் விளங்கும் .

பண் :

பாடல் எண் : 10

தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற்
கொண்டைகொப் பளித்த கோதைக் கோல்வளை பாக மாக
வண்டுகொப் பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் கெடிலவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

தொண்டைக்கனி அழகுவீசும் சிவந்தவாய் , துடி போன்ற இடை , கடல்போன்ற பரந்த அல்குல் , மயிர் முடிக்கும் விதங்களில் ஒன்றான கொண்டை பிராகாசிக்கும் கூந்தல் , திரண்ட வளையல்கள் எனும் இவற்றை உடைய பார்வதிபாகராய் , வண்டுகள் உண்டு மிகுதி என்று வெளிப்படுத்திய தேனைக் கோடுகளை உடைய கயல் மீன்கள் பருகத் தாம் பருகுவற்குக் கெண்டை மீன்கள் தாவிவரும் தெளிந்த நீரை உடைய கெடில ஆற்றின் கரையிலுள்ள அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் பெருமானாகக் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

தொண்டை - தொண்டையங்கனி. செவ்வாய்க்கு உவமை. துடியிடை - உடுக்கை நடுப்போலும் இடை. பரவை - கடல். தி.4 ப.25 பா.6 பார்க்க. கொண்டை:- ஐம்பாலுள் ஒன்று. கோதை - கூந்தல். கூறு கொப்பளித்த கோதை (தி.4 ப.24 பா.5) என்றதும் ஐம்பாற் கூந்தலை உணர்த்தியதாகும். கோல்வளைபாகம்:- `கோல்வளை மாதோர் பாகம்`( ?5). வண்டு ... ... கெடிலம்:- கெடில வளம் உணர்த்திற்று. கயல் தேனைப் பருகி மாந்த நீர் கெண்டையைக் கொப்பளித்தது. தேனை வண்டு கொப்பளித்தது.

பண் :

பாடல் எண் : 1

வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரார் வேண்டுவார் வேண்டி லார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

தேவருலகிலும் இருப்பதோடு , நிலவுலகில் மீயச்சூர் முதலிய திருத்தலங்களில் உறைபவராய் , தம்மை விரும்புபவருக்கு அண்மையில் உள்ளவராய் , வேண்டாதவருக்குப் பெரிதும் தொலைவில் உள்ளவராய் விளங்கும் பெருமானார் , வெள்ளிய ஒளிவீசும் பிறையை அது விரும்புமாறு விரிசடையிற் சூடி , அடியேன் உள்ளத்திலே ஞானஒளி நிலவப்புகுந்து நின்று , அவ் விடத்தில் உணர்விற்குப் பொருந்துமாறு உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி , அதிகை வீரட்டத்தில் உள்ளார் .

குறிப்புரை :

வெள் நிலா மதியம் - வெள்ளொளி வீசும் பிறை . உள் நிலாப் புகுந்து - உள்ளத்தே நிலாவ நுழைந்து . ` நெஞ்சந் தன்னுள் நிலாவாத ` ` நிற்பதொத்து நிலையிலா புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே `. ( தி .6. ப .95. பா .4) உணர்வினுக்கு - சித்தாகிய ஆன்மாவிற்கு . ஆன்மஞானத்துக்கும் ஆம் . உணர்தல் :- ஒருங்கியுணர்தல் . ஒன்றியிருந்து நினைந்துணர்தல் தாம் திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர் ( தி .6 ப .91 பா .1) கூறல் - உணர்வித்துணர்தல் ` காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டல் ` ( சிவ . போ . சூ . 10 ) விண்ணில் ஆர் மீயச்சூர் - வேண்டுவார்க்கு அண்ணியார் . வேண்டிலார்க்கே பெரிதும் சேயார் . வேண்டுவார்க்கே பெரிதுஞ் சேயார் எனல் பொருந்தாது . வேண்டுவார்க்கே அணியர் எனின் , வேண்டுவார்க்குப் பெரிதும் சேயார் என்றல் அமையாது .

பண் :

பாடல் எண் : 2

பாடினார் மறைக ணான்கும் பாயிருள் புகுந்தென் னுள்ளம்
கூடினார் கூட லால வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடன் மேவிச் சூழ்சுடர் சுடலை வெண்ணீ
றாடினா ராடன் மேவி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கூடல் நகர ஆலவாய்க் கோயிலிலுள்ள பெருமான் நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு நறிய கொன்றை மாலையை விரும்பிச் சூடி , சுடுகாட்டின் ஒளிவீசும் சாம்பல் பூசி , திரிபுரத்தை அழிக்குந் திருவிளையாடலை விரும்பி அதிகை வீரட்டத்தில் தங்கியவராய் , பரந்த ஆன்மிக இருளிலே நுழைந்து வந்து , அடியேனுடைய உள்ளத்தை அடைந்தார் .

குறிப்புரை :

மறைகள் நான்கும் பாடினார் :- ` மறையும் கொப்பளித்த நாவர் `. பாய் இருள் - பரவிய இருள் . என் உள்ளத்தில் இருக்கும் இவர் அவ்வுள்ளம் இருக்கும் இருளிற் புகுந்தவராவர் . ` இருள் அடராது உள்ளுயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துள தேனும் , திரிமலத்தே குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினனே ` ( கொடிக்கவி . 1 ) கூடல் :- நான்மாடக்கூடல் . நான்மாடக் கூடங்கள் :- கன்னி , கரிய மால் , காளி , ஆலவாய் . ஆலவாயில் :- ஆலமரத்தினிடம் . ` கடுவாயர்தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல்வாயில் , நெடுவாயில் நிறைவயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல்வாயில் மடுவார் தென்மதுரைநகர் ஆலவாயில் மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு , குடவாயில் குறைவாயில் ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே ` ( தி .6 ப .71 பா .7) என்னுந் திருத்தாண்டகத்தால் , ஆலவாயிலையும் ஏனைய வாயில்களையும் ஒருங்குற்று நோக்குமவர்க்கு , ஆலவாய்க் கதை ஓர் ஆராய்ச்சியிலாக் கட்டு என்று நன்குவிளங்கும் . நல்ல கொன்றை :- ` வம்பறாவரி வண்டு மணம் நாற மலரும் மதுமலர் நற்கொன்றை `. ( தி .7 ப .39 பா .5) ` கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டுக் கூறிநின்று பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் ` ( தி .6 ப .99 பா .8) சூடல் - அணிதல் . ஆடினார் - முழுகினார் . மேவி வீரட்டத்து உள்ளார் . புகுந்து என் உள்ளம் கூடினார் .

பண் :

பாடல் எண் : 3

ஊனையே கழிக்க வேண்டி லுணர்மின்க ளுள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி யிமையவ ரேத்த நின்று
ஆனையி னுரிவை போர்த்தா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

உடம்பு எடுத்தலாகிய பிறவித்துயரை அடியோடு போக்க விரும்பினால் , உள்ளத்துள்ளே நினைக்கும் எல்லா எண்ணங்களிலும் உறைபவராய் , வண்டுகள் வருந்துமாறு மலர்களைக் கைகளில் கொண்டு தேவர்கள் துதிக்குமாறு , யானைத் தோலைப் போர்த்தி நின்று , அதிகை வீரட்டத்தில் காட்சி வழங்கும் பெருமானாரை உள்ளத்துள்ளே தியானித்து உணருங்கள்.

குறிப்புரை :

ஊனை - உடம்பெடுத்தலாகிய பிறவித் துன்பத்தை . ` ஊன் ` உடம்பு , பிறவி , துன்பம் மூன்றற்கும் முறையே ஆகிய மும்மடியாகுபெயர் . ` வேண்டில் உள்ளத்துள்ளே உணர்மின்கள் ` என்றது சுவாநுபவ வாக்கியம் ஆகிய ஞானோபதேசம் . ` என்னுளே தேடிக் கண்டு கொண்டேன் ` ( தி .4 ப .20 பா .10) ` பத்தர்கள் சித்தத்துள் புக்குத் தேடிக் கண்டு கொண்டேன் ` ( ? ) உள்ளத் திருக்குறுந்தொகை ( தி .5. ப .98. முழுதும் ) காண்க . தேன் - வண்டுகள் . நைய - வருந்த . ` தேன ` - என்னா மையால் தேனையுடைய என்று உரைத்தல் பொருந்தாது . சிந்திக்கின்ற எல்லாமாய் அல்லனுமாய் இருந்திடுவோன் . உரிவு - தோல் , புரிவு , எரிவு , விரிவு , பரிவு , செறிவு , அறிவு , முறிவு , என இகரவீற்று முதனிலைகள் வுகரம் பெற்று நிற்றல் காண்க . உரி + ஐ = உரியை . உரிவு + ஐ = உரிவை . இஃது இரண்டனுருபன்று .

பண் :

பாடல் எண் : 4

துருத்தியாங் குரம்பை தன்னிற் றொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் றருக வென்று வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

தோல்துருத்தி போன்ற உடம்பிலே தொண்ணுற்றாறு தத்துவங்களும் தாத்துவிகங்களும் உறைவிடங்கொண்டு தங்கள் வாழ்வுக்கு உரிய பொருள்களை அளிக்க வேண்டுமென்று பல துயரம் செய்யுமாறு உயிரினங்களை வருத்துவதனாலே , தம்மால் இயன்றளவு பெருமானாகிய தம்மை நாடி வந்து அடைந்த விருப்பினை உடைய அடியவர்பால் அதிகை வீரட்டனார் தாமும் அன்பராய் உதவுகிறார் .

குறிப்புரை :

துருத்தி - இடைகலை பிங்கலை நாடி இரண்டாலும் மூச்சுவிடுதல்பற்றி ஊதுலைத் துருத்தி போல்வது இத் தோற்றுருத்தி . ` பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலாற்றுருத்தி போக்கலாமே ` ( தி .6 ப .93 பா .1) ` சோற்றுத் துறுத்தி ` ( கோயிற்றிரு வகவல் . 2:- 17 ) ` காற்றுத் துறுத்தி `. ` சோறிடுந்தோற்பை ` என்றதால் துருத்தி எனல் மரூஉ . ` தங்கள் துருத்திக்கு அறுசுவை போடுகின்றார் . ` ஊன் பொதிந்த பீற்றற்றுருத்தி ` ( திருவேகம்பமாலை . 16.27 ) தாயுமானவர் சச்சிதாநந்த சிவம் 2. குரம்பை குடில் . ` இருகாற் குரம்பை இது நானுடையது ` ( தி .4 ப .113 பா .2) தொண்ணூற்றறுவர் - தொண்ணூற்றாறு தத்துவங்கள் . விருத்தி - வாழ்வு . வேதனை - துன்பம் . வருத்தி - வரச்செய்தி . வருத்தி - வருத்துவாய் . அருத்தி - அன்பு . அருத்தியார் - அன்பர் .

பண் :

பாடல் எண் : 5

பத்தியா லேத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்தியைந் தலைய நாகஞ் சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை யுமையவ ணடுங்க வன்று
அத்தியி னுரிவை போர்த்தா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

பத்தியோடு வணங்கும் மெய்யன்பர் சித்தத்தில் நிலையாக உள்ளவரும் , படப்பொறிகளை உடைய ஐந்தலை நாகத்தைப் பரந்த சடைமுடியின்மேல் சூடி , வடக்கிலுள்ள இமய மலையரசன் மகளான உமாதேவி நடுங்குமாறு யானைத் தோலைப் போர்த்தியவரும் அதிகை வீரட்டனாரே .

குறிப்புரை :

பத்தி - தொண்டு . அன்பு என்னும் பொருட்டாயிற்று . பணிபவர் - பணிதலைப் புரிபவர் . துத்தி - படப்பொறி . தலைய - தலைகளையுடைய . சூழ்சடை - தலையைச் சூழ்ந்த சடை . சடையின் முடிமேல் நாகத்தை வைத்து . உத்தரம் - வடக்கு . இமாசல குமாரி உமாதேவி . அத்தி - யானை . ஆணவத்தைப் போக்கிய தத்துவத்தை விளக்குவது யானையுரித்த வரலாறு .

பண் :

பாடல் எண் : 6

வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்தும் நெஞ்சே
கரியுரி மூட வல்ல கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழ ( ல் ) லா டுடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

நெஞ்சே ! சுருண்ட கடைகுழன்ற விரிந்த கூந்தலினளாய்த் துடிபோன்ற இடையினளாய்க் கடல்போன்ற அல்குலை உடைய பார்வதி பாகராய் அதிகை வீரட்டராய் யானைத் தோலைப் போர்த்திய கடவுளாய் விளங்குகிறார் அதிகை வீரட்டனார் . அவரை என்றும் வரிப்பாடல்களையும் முரிப்பாடல்களையும் பாடிக் கொண்டு நம்மால் இயன்றவாறு அடையக் கடவோம் .

குறிப்புரை :

` வரிப்பாடலாவது :- பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட வார்தல் , வடித்தல் , உந்தல் , உறழ்தல் , உருட்டல் , தெருட்டல் , அள்ளல் , பட்டடை என இசையோர் வகுத்த எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமும் ஆக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும் . அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும் `. ( சிலப் . கானல்வரி . 1:- 12-20. அரும்பதவுரை ) ( தொல் . செய் . 153. பேராசிரியர் ). முரி :- ` எடுத்த இயலும் இசையும் தம்மில் முரித்துப் பாடுதல் முரியெனப்படுமே ` கானல் வரி :- முரிவரி . (14-16) அரும்பதவுரை . ` இசைநூலாரும் இத் தரவு முதலாயினவற்றை , முகம் நிலை கொச்சகம் முரி என வேண்டுப . கூத்தநூலார் கொச்சகம் உள்வழி அதனை நிலையென அடக்கி முகம் நிலை முரி என மூன்றாக வேண்டுப . அவரும் இக்கருத்திற்கு ஏற்ப முகத்திற்படும் தரவினை முகம் எனவும் இடைநிற்பனவற்றை இடை நிலை எனவும் இறுதிக்கண் முரிந்து மாறுஞ் சுரிதகத்தினை முரி எனவும் கூறினார் என்பது ` ( தொல் . செய் . 132. பேராசிரியர் உரை ) சிலப் . கடலாடு . 35. அடியார் ... உரை . வரி முரி பாடி என்றும் வல்லவாறு அடைந்தும் (- அடைந்தோம் ) என்று கொள்க . இதனால் , அப்பர் மூர்த்திகளது பாவன்மையும் புலமையும் ஒப்புயர்வில்லாத உயர்ச்சி ஆதல் புலப்படும் . கரியுரி மூடவல்ல கடவுள் :- ` யானையின் பசுந்தோல் பிறர் உடம்பிற் பட்டாற் கொல்லும் என்றுணர்க ` ... வாரணத்துரி போலே தப்பாமற் கொல்லும் வலை என்றும் ஆம் ` ( சிந்தாமணி . 2787. உரை ) யானைத் தோலைத் தன்மேல் மூடவல்லவன் சிவபெருமான் ஒருவனே ஆதலின் ` கரியுரி மூடவல்ல கடவுள் ` என்றார் . கரத்தையுடையது கரி . பணத்தையுடையது பணி என்பது போல்வது . சுரி - சுரிந்த . புரி - முறுக்குண்ட . ( தி .4 ப .40 பா .3) ` துடியிடைப் பரவை யல்குல் ` ( தி .4 ப .24 பா .10) இடையையும் அல்குலையும் உடைய அரிவை ( உமாதேவி ) யார் ` அன்மொழித்தொகை ; அல்குலாள் என விரியும் .

பண் :

பாடல் எண் : 7

நீதியா னினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப்
பாதியா முமைதன் னோடும் பாகமாய் நின்ற வெந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் சுண்ணவெண் ணீறதாடி
ஆதியு மீறு மானா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

நெஞ்சே ! பார்வதி பாகராய்ச் சோதியாய் , ஒளி விடும் ஞானதீபமாய் நின்ற எம் பிதாவும் , திருநீறு பூசி உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமுமாக உள்ளவரும் அதிகை வீரட்டனாவார் . அத்தூயோரை நாடோறும் முறைப்படி தியானம் செய்வாயாக .

குறிப்புரை :

நிமலனை - இயல்பாகவே தளையில்லாத சிவனை . நித்தம் - நித்தியம் . எப்போதும் . நீதியால் - ( சிவாகம ) விதிப்படி . நினைசெய் - நினைத்தலைச் செய் . நெஞ்சறிவுறூஉ இது . பாதி - திருமேனியின் செம்பாதி உமையம்மைக்குரியது . பாதியாம் உமையோடும் பாகமாய் நின்ற எந்தை :- உமைபாதியாவார் . எந்தை பாகமாவார் . பாதியானது உமையும் பாகமாய் நின்றது எந்தையும் என்றுணர்த்தியதுணர்க . சோதி - பேரொளி . சுடர் விளக்கு :- வினைத் தொகை . எக்காலத்துக்கும் உரியது . சுண்ண வெண்ணீறு - திருவெண்ணீற்றுச் சுண்ணம் . ஆதி - முதல் . ஈறு - முடிவு ஆனார் என்றதால் , ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியே அவர் இயல்பு .

பண் :

பாடல் எண் : 8

எல்லியும் பகலு மெல்லாந் துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காம னென்னும்
வில்லியங் கணையி னானை வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

வில்லையும் அம்புகளையும் உடைய மன்மதன் வெந்து விழும்படி நோக்கியவர் , அல்லிச் செடிகள் களையாக நிறைந்த வயல்களை உடைய அதிகை வீரட்டனார் . ஒப்பற்றவரான அப்பெருமான் செயற்பாடு ஏதும் இன்றி இரவும் பகலும் கழிக்கும் அடியேன் பக்கல்வந்து அடியேனுடைய அற்பமான மனமாகிய கோயிலிலே புகுந்து விட்டார் .

குறிப்புரை :

எல்லி - இரவு . துஞ்சுவேற்கு - ( துயிலும் எனக்கு ) துயில்வேனுக்கு . புல்லிய - புன்மையதாகிய . மனத்துக் கோயில் - மனக்கோயிலுள் . சாரியை பிரித்துக்கூட்டி மனக்கோயிலகத்து என்க . ` விண்ணத்து ` என்பதுபோற்கொள்க . ஒருவர் மனக்கோயிலுள் வந்துபுக்கனர் . வில்லி - ( கரும்பு ) வில்லுடையன் , ஐங்கணையினான் - ஐந்து மலரம்புகளைக் கொண்டவன் . காமன் என்னும் பெயரினன் . வெந்துஉக - தீய்ந்து சிந்த . நோக்கியிட்டார் - தீவிழியாற் பார்த்திட்டார் . அல்லி - செவ்வல்லியும் . வெள்ளல்லியும் . பழனம் - வயல் .

பண் :

பாடல் எண் : 9

ஒன்றவே யுணர்தி ராகி லோங்காரத் தொருவ னாகும்
வென்றவைம் புலன்க டம்மை விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவ னார ண ( ன் ) னு நான்முக னாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

பெரியோனாகிய திருமாலும் , பிரமனும் தேடிக் காண முயன்ற அன்று அவர்களுக்குக் காண்டற்கு அரியவரான அதிகை வீரட்டனார் , ஐம்புலன்களையும் வென்று விலக்குதற்குரிய நீங்கள் எல்லீரும் மனம் பொருந்தித் தியானிப்பீராயின் ஓங்காரத்தில் உள்ளே உள்ள மெய்ப்பொருளாக உங்களுக்குக் காட்சி வழங்குவார் .

குறிப்புரை :

ஐம்புலன்களையும் வென்று அவற்றை விலக்கி , அவற்றால் வரும் துன்பங்களின் நீங்குதற்கு உரியீர் எல்லீரும் ஓங்காரத் தியானம் புரிந்து , ஒன்றியிருந்து நினைந்துணர்திர் ( தி .4 ப .81 பா .2) ஆகில் , அவ்வோங்காரத்துள் ஒருவன் உமக்கு நேர்படுவான் . வென்ற ஐம்புலன்கள் தம்மை விலக்குதற்குரியீர் :- ஐம்புலன்களை வென்றதொடு நில்லாது விலக்குதலும் வேண்டும் என்றபடி . ` வென்ற வைம்புலன் ` என்றுள்ளதால் , அவ்வைம்புலனை வென்று விலக்குதற்குரியீர் எனலும் கூடும் . ` வென்றவைம்புலனால் மிக்கீர் ` ( தி .12 பெரிய . திரு . கண்ட . பா . 42). நன்றவன் - சிவன் . நாரணன் - நாராயணன் என்பதன் திரிபு . காண்கு - காண்டல் . உற்ற அன்று :- பெயரெச்சத்து அகரம் தொகுத்தல் .

பண் :

பாடல் எண் : 10

தடக்கையா லெடுத்து வைத்துத் தடவரை குலுங்க வார்த்துக்
கிடக்கையா லிடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான் முருகமர் கோதை பாகத்
தடக்கினா ரென்னையாளு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார் , பெரிய கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமானமண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார் . அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் ஆவார் .

குறிப்புரை :

தடக்கை - அகலமுடைய கை ; வளைந்த கை . தட வரை - அகன்ற மலை . தட - வளைவு . அகலம் உரிச்சொல் . ஆர்த்து - இரைந்து . கிடக்கை - கிடத்தல் . ஓங்க - மிக . கிளர்மணி - விளங்கும் அரதனம் . முருகு - மணம் . அலர் - கோதை :- அன்மொழித் தொகை . கோதையாளைப் பாகத்தில் அடக்கினார் . தம்மை ஆள்வதற்குக் கருணைவடிவான கோதையை அடக்குதல் ஏதுவாதலை யுணர்த்தினார் .

பண் :

பாடல் எண் : 1

நம்பனே யெங்கள் கோவே நாதனே யாதி மூர்த்தி
பங்கனே பரம யோகீ யென்றென்றே பரவி நாளும்
செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

`திருவதிகை வீரத்தானத்தில் உகந்தருளியிருக்கும் பெருமானீரே ! எல்லாராலும் விரும்பப்படுகிறவரே ! எங்கள் அரசரே ! ஆதிமூர்த்தியாகிய பார்வதிபாகரே ! மேம்பட்டயோகீசுவரே ! பொன்னையும் பவளமலையையும் ஒத்தவரே ! அன்பரே !` என்று உம்மைப் பலகாலும் வாய்விட்டழைத்து உமது தாமரை மலர் போன்ற பாதங்களைத் காணத் துயருற்று அடியேன் வருந்துகின்றேன் .

குறிப்புரை :

நம்பனே - விருப்பத்திற்குரியவனே . எவ்வுயிர்களாலும் விரும்பத்தக்கவனே . கோவே - தலைவனே . நாதனே - இயவுளே . ஆதி மூர்த்தி பங்கனே - ` முதலுருப்பாதி மாதராவது முணரார் ` ( சித்தியார் சூ . 1:- 49 ). ஆதிமூர்த்தியாகிய மாதினை இடப்பங்கில் உடையவனே . ` ஆதிக்கண்ணான் ` என்று ( தி .6. ப .20 பா .1) பின் குறிப்பதால் , ஆதி மூர்த்தி பிரமன் என்று கொண்டு , அவனைப் பங்கஞ் செய்தவன் எனலாம் ஆயினும் ` ஆதிமாலயன் அவர்காண் பரியார் ` ஆதியான் அயன் என்று அரியவொண்ணா அமரர் தொழுங்கழலான் ` ( தி .6 ப .88 பா .2) என்றவற்றை நோக்கின் அது பொருந்தாது . பரமயோகீ :- தி .4 ப .22 பா .2 குறிப்பு நோக்குக . என்று என்று :- பன்மை குறித்த அடுக்கு . ஏகாரம் பிறவாறு பரவாமை குறித்த பிரிநிலை . நாளும் பரவி (- வாழ்த்தி ). செம்பொன்னும் பவளக்குன்றும் திருமேனிப் பொலிவு குறித்தன . அன்பனே :- ` அன்பே சிவம் `. அலத்தல் - துயருறல் . வறுமைப் படல் . ` அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வான் ` ( தி .6 ப .1 பா .2) திருப்பதிகத்தில் வீரட்டனீரே என்றும் வீரட்டனாரே என்றும் உள்ளன .

பண் :

பாடல் எண் : 2

பொய்யினான் மிடைந்த போர்வை புரைபுரை யழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன் வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைக ளன்ன சேவடி யிரண்டுங் காண்பான்
ஐயநா னலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அழியக்கூடிய பொய்ப்பொருள்களால் இணைத்துச் செய்யப்பட்ட உடம்பில் ஒவ்வொரு துவாரமும் செயற்பாடின்றி அழுகிக்கெட , உண்மையான வாழ்வு வாழ இயலாதேனாய் , யான் விரும்பிய ஒப்பற்ற பரஞானத்தை என் ஐம்பொறிகளும் தாமும் விரும்பாமல் இடர்ப்படுதலால் , அதிகை வீரட்டனாராகிய உமது சிவந்த தாமரையை ஒத்த திருவடிகள் இரண்டையும் காண்பதற்கு இயலாமல்அடியேன் வருந்தி நிற்கின்றேன் .

குறிப்புரை :

பொய்யினால் மிடைந்த போர்வை :- மிடைதல் - நெருங்குதல் . ( அது முடைதல் எனத் திரிந்து வழங்குகின்றது . இகரம் உகரமாதல் இயல்பு . பிள்ளை - புள்ளை . பிட்டு - புட்டு , முதலிய பலவுள ). உடலின் இழிவு இதனால் உணர்த்தப்பட்டது . ` பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசும் என்று பசியினால் மீதூரப் பட்டே ஈட்டிப் பலர்க்கு உதவலது ஒழிந்து பவளவாயார் வசியினாலகப்பட்டு வீழா முன்னம் வானவர் கோன் திருநாமம் அஞ்சும் சொல்லிக் கசிவினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே ` ( தி .6 ப .61 பா .6) ` பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி மெய்விரா மனத்தனல்லேன் `. புரைபுரை :- ` ஆவியோடாக்கை புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே ` ( தி .8 திருவாசகம் . 22.3). வேண்டிற்று ஒன்று - ( யான் ) விரும்பியதொன்றனை . ஐவர் . தி .4 ப .77 பா .5 பதிகம் 52-67 ஐம்பொறிகள் . கோயில் நான்மணி மாலை . 12:- 28-34 . ஓரவொட்டார் ஒன்றை உன்ன வொட்டார் மலர் இட்டு உனதாள் சேரவொட்டார் ஐவர் . செய்வது என் யான் சென்று ? ( கந்தரலங்காரம் ) ` பொய் மாயப் பெருங்கடலில் `. திருத்தாண்டகம் . ( தி .6 ப .27 பா .1) பார்க்க . செந்தாமரை ஒத்த சேவடி . பொய் :- ` முக் காலத்தும் புலனாகாமை ; நிகழ்காலத்து விளங்கி ஏனைக் காலத்து விளங்காமை ` இவ்வாறன்றி அழிபொருள் பொய்ப்பொருள் என வேறில்லை . ( சிவஞானபாடியம் . சூ 2. அதி . 2 .)

பண் :

பாடல் எண் : 3

நீதியால் வாழ மாட்டே னித்தலுந் தூயே னல்லேன்
ஓதியு முணர மாட்டே னுன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே யுன்றன் றூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

ஒளியே ! ஞானவிளக்கே ! அதிகைப்பெருமானே ! தூயேன் அல்லேனாகிய அடியேன் நாடோறும் நெறிப்படி வாழமாட்டாமல் , கற்றும் கற்றவாறு உணர இயலாதேனாய் , உன்னை உள்ளத்துள் நிலையாக வைத்துத் தியானிக்க இயலாதேனாய் முதற்கடவுளாகிய உன்னுடைய தூயமலர்களைப் போன்ற திருவடிகளைக் காண இயலாதேனாய் வருந்தி நிற்கிறேன் .

குறிப்புரை :

நீதியால் - செய்வன செய்து தவிர்வன தவிர்ந்து வாழ்க என அறநூல் அறுத்தவாற்றால் . ` செய்வதும் தவிர்வதும் பெறுவதும் உறுவதும் உய்வதும் அறியேன் ` ( சங்கர நமச்சிவாயப் புலவர் தனிப்பாடல் நன்னூலுரை ) நித்தலும் - நாள்தொறும் . தூயேன் - சிவபூசை முதலியவற்றால் சிவமானேன் . ஓதியும் - ஓதுவிக்க ஓதியும் . உள் - உள்ளத்தே . தூ - தூய்மையுடைய . பற்றுக்கோடாகிய . ` சோதியே சுடரே ` என்பது முதலிய பற்பல தொடர்கள் பொருள்கள் திருவாசகத்தை நினைப்பூட்டும் வண்ணம் திருநாவுக்கரசர் அருளியவற்றுள் திகழ்கின்றன . மாணிக்கவாசகர் இவர்க்குமுன் விளங்கியவர் என்பதற்கு ஈதும் ஒரு சான்றாகும் .

பண் :

பாடல் எண் : 4

தெருளுமா தெருள மாட்டேன் றீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே யழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின் னிணையடி யிரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டு மதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

இருண்ட நீலமணி போன்ற கழுத்தை உடைய அதிகைப் பெருமானே ! தெளிவடையும் வழியை அடைந்து மனந் தெளிவடைதலை இல்லேனாய் , தீயவினைகளுக்கு உதவும் தேக பந்துக்கள் என்னும் பொருள்களோடு இயைந்து நாளும் செல்லத்தக்க மேம்பட்ட வழியை அறியேனாய் உள்ள அடியேன் உன் ஒன்றற்கு ஒன்று ஒப்பான உன் திருவடிகள் இரண்டனையும் தரிசிக்குமாறு அருளும் வகையால் அருளவேண்டும் .

குறிப்புரை :

தெருளல் x மருளல் ; தெருட்டி x மருட்டி ; தியக்கம் x மயக்கம் ; ( தி .4 ப .48 பா .8) தெருள்வு x மருள்வு . தெருளல் - தெளிதல் . தெருளும் ஆ - தெளியும் ஆறு . மாட்டேன் - வலிமையில்லேன் . தீவினைச் சுற்றம் - தீவினையின் பயனாகச் சூழ்வன . ` இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் ` ( பா .7) போவது ஓர் நெறி - உயிர் செல்லும் மெய்ந்நெறி . ` ஞானகதி ` ` ஞானமலது கதி கூடுமோ ?` ( தாயுமானவர் ) ` ஞானநெறி அடைந்து அடைவர் சிவனை ` ( சித்தியார் . சூ .8:- 25 ). இருளும் மாமணி கண்டா - நஞ்சினாற் கறுத்த நீலமணிபோலும் திருக்கழுத்து உடையவனே . இணையடி :- ` ஞானசத்தி கிரியாசத்தி என்னும் இரண்டு திருவடித் தாமரைகள் ` ( சி . போ . சிற்றுரை மங்கல வாழ்த்து ) ` திரோதானசத்தியும் கிரியாசத்தியும் இரண்டு திருவடிகள் ` ( ஞானபூசாவிதி ) ` வீடுபேறு ` ` பாச வீடும் சிவப்பேறும் `, ` முதல்வனது திருவடியாகிய சிவாநந்தத்தை அநுபவித்தல் ` ` முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதி ` ( சிவ ஞானபாடியம் . சூ . 10:- அதி .1. சூ . 11 ). அருளும் ஆறு :- தீக்கை , சிவாகமபடனம் , சரியை முதலியன உணர்த்தும் நூல்களின் நானெறியாராய்ச்சிக் கேள்வி , அவ்வொழுக்கம் உள்ளத்தூய்மை , நிலைநிலையாப் பொருளுணர்ச்சி , பிறப்பச்சம் , வீடுபேற்று அவாப்பெருக்கம் என்னும் எட்டும் உடையோர்க்கு நூலானும் , அவருட் பக்குவமிக்கார்க்கு உபதேசத்தானும் , அவருள்ளும் சகலர்க்குப் படர்க்கையிலும் பிரளயாகலர்க்கு முன்னிலையிலும் , விஞ்ஞானாகலர்க்குத் ( உள்நின்று ) தன்மையிலும் அருளும் வண்ணம் .

பண் :

பாடல் எண் : 5

அஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

பஞ்சகவ்வியத்தால் அபிடேகிக்கப்படுதலால் விளங்குகின்ற சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானே ! ஐம்பூதங்களால் இயற்றப்பட்ட இவ்வுடலைப் பெற்று அதன்கண் வாழும் ஐம்பொறிகளால் வருத்தப்பட்டு இவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக , அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன் .

குறிப்புரை :

அஞ்சு - ஐம்பெரும் பூதம் . ` ஐம்பெரும் பூதத்தான் ஆய தூலவுடம்பு ` ` சூக்கும தேகத்தின் காரியம் ஆதல் பற்றியே தூலதேகம் ஐம்பெரும் பூதமயம் எனப்பட்டது ` ( சிவஞானபாடியம் . சூ . 2. அதி . 3 ). ஆக்கை :- இஃது யாக்கை என்பதன் மருஉ . ` யாப்பு ` ஆப்பென மருவிற்றிலது எழுவகைத் தாதுக்களாற் கட்டப்பட்டது என்னும் பொருட்டு , ` பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் ` ( நன்னூல் . 268 ) ` சிதலது நீர்வாய்ச் சிறுதுகளாற் பெரும்புற்றுருவமைந்த பெற்றியதென்ன ஐம்புலப் பேருருவைந்தும் ஐந்தணுவால் இம்பரிற் சமைவது யாவரும் அறிதலின் ` ( ? . சங்கர நமச்சிவாயருரை .58 ). ` பா . தாழிசை , துறை . விருத்தங்களால் யாக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அவற்றின் மெய்மையறிந்து , விழுப்பம் எய்தி , இம்மை மறுமை வழுவாமல் நிகழ்வார் ஆதலின் , இருமைக்கும் உறுதிபயப்பது யாப்பு எனக் கொள்க ` ( யாப்பருங்கலக்காரிகை . 1. உரை ). ` ஆக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு ` என்று பதிப்பித்திருப்பது பிழை . ` யாக்கப்படுவது யாப்பு ` என்னும் உண்மை அதனாற் பெறப்படாது . அஞ்சு :- ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்து ` ( சிவஞானபோதம் . சூ . 8 ). ` உன்னுருவிற் சுவையொளியூ றோசைநாற்றத் துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள் மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க்கு ... யானேல் ... சிவக்கொழுந்தை ... த் தலைப்படுவேன் துலைப்படுவான் தருக்கேன்மின்னே ` ( தி .6 ப .27 பா .4). ` பஞ்சேந்திரிய முகரிகாள் ..... நும்மால் ஆட்டுணேன் ஓட்டந் தீங்கலையேன்மின்னே ` ( தி .6 ப .27 பா .9.) என்றலுமாம் . அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய் :- ` அஞ்செழுத்துமே அம்மையப்பர் தமைக் காட்டுதலால் ....... கேள் ` ( திருக்களிறு .25 ). ` நாடரிய அஞ்செழுத்தின் உள்ளீடு அறிவித்தான் அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி நேயமயலாக்கி அஞ்செழுத்தை உச்சரிக்கும் கேண்மை உணர்த்தி அதில் உச்சரிப்பு வைச்சிருக்கும் அந்த வழிகாட்டி ` ( நெஞ்சுவிடுதூது . 93 -5 ). உய்க்கும் :- ` சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை உய்த்த சதசத்தாம் உயிர் ` ( திருவருட்பயன் . 17 ) அஞ்சினாற் பொலிந்த சென்னி :- ` ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல் ` (105). ` அஞ்சுகொலாம் அவர் ஆடினதாமே ` ( தி .4 ப .18 பா .5). ` தெளிஆன் அஞ்சு ஆடும் முடியானும் ஐயாறுடை ஐயனே ` ( தி .2 ப .6 பா .5).

பண் :

பாடல் எண் : 6

உறுகயி றூசல் போல வொன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கயிறாகிய ஊஞ்சல் போலப் பிறைச் சந்திரன் அசைந்துகொண்டு தங்கியிருக்கும் சடையினைஉடைய அதிகைப் பெருமானே ! தன் நிலையை விட்டுச் சென்று பிறிதோர் இடத்தைப் பற்றி மீண்டும் தொங்கிய நிலைப்பக்கம் வந்துசேரும் ஊசற்கயிறு போல ஓர் இடத்தை விடுத்து அலைந்து மீண்டும் அவ்விடத்திற்கே வரும் நெஞ்சம் , கயிறற்ற ஊஞ்சலுக்குத் தாய் தரையேயாதல் போல , இப்பொழுது நின் பாதமே இடமாக தங்கி நிற்கும் இயல்பைப்பெற்றுள்ளேன் ஆயினேன் .

குறிப்புரை :

நெஞ்சம் ஒன்று விட்டு ஒன்று பற்றும் . பற்றியதை விட்டு வரும் . சென்று பற்றுதலும் பற்றியதை விட்டு மீண்டு வருதலும் நெஞ்சிற்கியல்பு . ஒன்று விட்டு ஒன்று பற்றி வந்து வந்துலவும் நெஞ்சத்திற்குக் கயிறூசல் ஒப்பு . கயிற்றைமட்டும் ஊசலாகக் கொண்டு ஆடுதல் இன்றும் உண்டு . அதன் வளர்ச்சியான பல்வேறூசலை இங்குக் கொள்ளல் பொருந்தாது . தொங்கிய நிலையின் நில்லாது , அசைந்து , நின்ற இடத்தை விட்டு முன்னும் பின்னும் ஒவ்வோரிடத்தைப் பற்றுகின்ற செயல் எல்லாவூசற்கும் பொதுவாயினும் , இதிற் கயிறூசலைக் குறிப்பதால் , அதற்குரியதாகக் கொள்க . முதன் முறையாக , தன்னிலையை விட்டுச் சென்று பிறிதோரிடத்தைப் பற்றுவது ` உறுகயிறூசல் `. பற்றிய அவ்விடத்தை விட்டு மீண்டு தொங்கிய நிலைப் பக்கம் வருவது மறு கயிறூசல் . அந்நிலையை விட்டு மற்றொரு பக்கம் சென்று பற்றுவதும் அதை விட்டு மீள்வதும் அவ்விரண்டூசலாகவே கொள்ளல்தகும் . தகவே சென்று பற்றல் , விட்டு மீண்டு வரல் , இவ்விரண்டற்கும் இடையில் உலவல் ஆகிய முத்தொழில்கள் ஊசற்குள்ளன . நெஞ்சம் பெறு சடையாய் . கயிறூசல் போலப் பிறைபுல்கு சடையாய் , நெஞ்சம் ஆகிய ஊசல் ஆடிய அடியேன் , அவ்வூசல் அற்று , நின்பாதம் ஆகிய நிலத்தை அடைந்தேன் . கயிறூசல் அற்றவனானேன் என்று கொள்க . ` ஊசல் கயிறு அற்றால் தாய் தரையே ஆம் ` என்னும் சிவஞானபோத வாக்கியத்திற் குறித்தது :- ஊசலைக் கட்டிய கயிறு அற்றால் , ஊசல் விழும் . விழுந்த ஊசற்குத் தரை நிலைக்களம் ஆகும் . கயிறு போல்வது பாசம் . கயிற்றாற் கட்டப்பட்ட ஊசல் போல்வது பாசபந்தமுடைய பசு . கயிறற்ற ஊசல் போல்வது பாசம் அற்ற ஆன்மா . கயிறற்ற ஊசற்கு நிலைக்களமான தரைபோல்வது , பாசம் அற்ற ஆன்மாவிற்கு நிலைக்களமான திருவடி . அதனால் , சிவஞானபோதத்திற் குறித்தது கயிற்றூசல் . ( கயிற்றாற் கட்டப்பட்ட ஊசல் ). இத் திருமுறையிற் குறித்தது கயிறூசல் ( கயிறாகிய ஊசல் ; தாம்பு . ` ஒருவன் ஏறியிருந்து ஆடா நின்ற ஊசல் கயிறு அற்றதாயின் , அவனுக்கு உற்றுழி உதவும் தாய்போல் ஆண்டுத் தாரகம் ஆவது நிலனே அன்றிப் பிறிது இல்லை `. ( சிவஞா . உரை ) என்றதால் கயிறு வேறு அற்ற ஊசல் வேறு ஆதல் விளங்கும் . ` தாப்பிசை ( தாம்பு + இசை ) - ஊசல் ( தாம்பு ) போல் இடை நின்று இருமருங்குஞ் செல்லும் சொல் ` ( நன்னூல் . சூ . 411 ) என்றதில் , இடைநிற்றலும் இருமருங்குஞ் செல்லுதலும் வருதலும் ஊசலுடைமை புலப்படுத்தியதுணர்க . ` தழைக்கயிற்றூசல் ` ` தாழை நெடு வீழூசல் ` ` தாழை வீழூசல் ` ` தாழை வீழ் கயிற்றூசல் ` ( பெருங்கதை ; கலித்தொகை . 131; அகம் . 20) ` மணிக் கயிற்றூசல் ` ` பொன்னூசல் ` ( பெருங்கதை .; தி .8 திருவாசகம் . 327 ) என்பன வேறு ` வல்லவாறு வந்து வந்து அடைய நின்ற அருத்தியார் ` ( தி .4 ப .25 பா .4) என்புழிப்போல்வது ` வந்து வந்துலவும் நெஞ்சம் ` என்க . ` அறு கயிறூசலானேன் .` என்பது ` ஆன முதலில் அதிகம் செலவானான் ` என்பது போல்வது . உறு , மறு , அறு என்னும் அடைமொழிகளை நோக்கிப் பொருள் கொள்ளல் இன்றியமையாதது . அவை பொருளற்ற அடையல்ல . ` ஆசைவன்பாசம் எய்தி அங்குற்றேன் இங்குற்றேனாய் ஊசலாட்டுண்டுவாளா உழந்துநான் உழிதராமே .... ஈசனே உன்றன்பாதம் ஏத்துமாறு அருள் எம்மானே ` ( தி .4 ப .76 பா .8) ` உமையாளொரு பாகனை அருத்தியாற் சென்று கண்டிட வேண்டுமென்று ஒருத்தியார் உளம் ஊசலது ஆடுமே ` ( தி .5 ப .40 பா .5) ` பாசங் கழன்றாற் பசுவுக்கிடம் பதியாம் ஊசல் வடம் கழன்றது ஒவ்வாதே - நேசித்த பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் பாட்டுமக்கோ மற்றைச் சமயமெங்குமாம் .` ( ஒழிவிலோடுக்கம் . விரத்தி விளக்கம் . 4 ) நெஞ்சத்திற்குப் பொருட்சார்பிற் சென்று பற்றலும் , அதை விட்டு மீண்டு உயிர்ச்சார்பில் வந்துலவலும் உண்டு ( தி .4 ப .76 பா .1). ` ஊசல் ஒத்த உளம் ` ( பிரபுலிங்கலீலை ஆரோ கணகதி . 10 ) ` ஊசல் செய் மனம் ` ( ? . இட்டலிங்ககதி .23 ) ` மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன் ` ( கந்தரநுபூதி ). ` எம்முடைய வலைப்பட்டோர் இவ்வாறே அலைவர் என மம்மர் உலகினைத் தெளிக்கும் மாண்பு ` ( கச்சியப்ப முனிவர் அருளிய காஞ்சிப் புராணம் நகரேற்றுப் - 127 ) மடவாராட்டும் மணித் தொட்டிற்குக் கூறினும் , அவராடும் ஊசற்கும் அது பொருந்தும் . கயிறூசல் பலவற்றில் மாறி மாறி ஆடியதாகக் கொண்டுரைத்தலே , ` உறுகயிறூசல் ` ` மறுகயிறூசல் ` என்றதற்குத் தகும் . இன்றேல் , ` மறுகயிறூசல் ` என்றது புலப்படாது . ` ஊசலாட்டும் இவ்வுடலுயிர் ` ( தி .8 திருவா . 41-8.)

பண் :

பாடல் எண் : 7

கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை யென்னும் பாசம்
ஒழித்திலே னூன்க ணோக்கி யுணர்வெனு மிமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
அழித்திலே னயர்த்துப் போனே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அதிகைப் பெருமானே ! என்னிடத்துள்ள ஆசாபாசம் , காமம் என்ற கொடியநோய் நீங்கப்பெற்றிலேனாய் ஆசை என்னும் பற்றினை விடுத்திலேனாய் , உடலுயிர் வாழ்கையையே நோக்குபவனாய் இருத்தலால் , அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலக , விழிக்கும் மெய்யுணர்வாகிய விழி விழிக்கும் நிலையைப் பெற்றிலேன் . அதற்குத் தடையாகிய வினை என்னும் பண்டத்தையும் நிரம்பக் கொண்டுள்ளேன் . அதே வேளை , இவற்றின் விருத்திக்கு ஊக்கும் இழிதகவுடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன் . நான் என்ன செய்வேன் என்பது குறிப்பு .

குறிப்புரை :

காமம் ஆகிய கொடிய நோயைக் கழித்தேனில்லை . அதற்கு அடியாகிய ஆசாபாசத்தை ஒழித்தேனில்லை . பொருட் பற்றுளதேல் . அதனால் எய்தும் நோயும் உடனுறும் அன்றோ ? நோயை ஒழிக்க , அதற்கு அடியான பற்றை ஒழித்தல்வேண்டும் . ` பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் ; பிறவார் உறுவது பெரும் பேரின்பம் ; பற்றின் வருவது முன்னது ; பின்னது அற்றோர் உறுவது ` ( மணி மேகலை ). தணிகைப்புராணம் நந்தியுபதேசப் . 110 பார்க்க . காமவெந்நோய் கழிந்திடாமைக்கும் காதன்மை என்னும் பாசம் ஒழித்திடாமைக்கும் காரணம் ஊன் கண்ணோக்கமும் உணர்வு எனும் இமை திறந்து விழித்திடாமையும் . ` ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தைநாடி உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவ ` ( சி . போ . சூ . 9 ) முயலாது , வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்கும் அஞ்ஞானம் தோன்றக் கன்மச் சரக்கை இவ்உடற்கலத்தில் ( ஏற்றுக் ) கொண்டேன் . சிவஞானபோதம் 74 ஆவது வெண்பாவுரைக்கண் மாபாடியம் உணர்த்துவதை ஈண்டுணர்க . ஆசிரியர் தகுதிக்குத் தக்கநிலையில் அப்பாசம் தாக்குதலை அறியாது , தகாதன கூறுவர் . ` தழித்திலேன் ..... நோக்கி ` என்றது மாயாமல வாசனையும் , ` உணர்வெனும் ....... விழித்திலேன் ` என்று ஆணவமல வாசனையும் , ` வினை ..... கொண்டேன் என்றது கன்மமலவாசனையும் நீங்காமை குறித்தன . அழித்திலேன் என்றது அம்மூன்றும் மெய்ஞ் ஞானிக்கு ஆகாமை குறித்தது . ` அயர்த்துப் போனேன் ` என்றது ` மறப்பித்து மலங்களின் வீழ்க்கும் சிறப்பிலார் ( அமணர் ) திறத்துச் சேர்வை ` க் குறித்தது . ( தணிகைக் . களவு . 156.)

பண் :

பாடல் எண் : 8

மன்றத்துப் புன்னை போல மரம்படு துயர மெய்தி
ஒன்றினா லுணர மாட்டே னுன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினா னலமந் திட்டே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

ஊர்ப் பொதுமன்றத்தில் நிற்கும் புன்னை பலராலும் கல்லெறியப்பட்டும் ஏறி அலைக்கப்பட்டும் சதா வருந்துவதுபோல ஐம்பொறிகளால் சதா அலைக்கப்பட்டும் வருந்துவதன்றி ஒருவகையிலும் உண்மையை உணரமாட்டேன் . அதை உணர்விக்கவல்ல உன்னையும் உளத்தில் நிலையாக வைக்கமாட்டேன் . இந்நிலையில் , சினம்மிக்க எமன் வந்து என்னை மீளவும் பிறப்பில் தள்ளுதற்கு அணுகிக் கொண்டுள்ளான் . அது கண்டு நான் சுழன்று போனேன் அதிகை வீரட்டத்துப் பெருமானே .

குறிப்புரை :

மன்றத்துப்புன்னை - ஊர்ப் பொதுவில் வளர்ந்த புன்னை மரத்தை . மரம்படுதுயரம் - அப்புன்னையும் பிறவும் ஆகிய மரங்கள் அடைகின்ற துயரம் . சிலப்பதிகாரம் . ` குற்றம் நீங்கிய யாழ் ` ( கானல்வரி . 1:- 4 ) ` ஆகவ வாத பய சாயை என்பன `; என்னை ? சிந்தாமணி (720) யிலும் ` நோய் நான்கு நீங்கி ` என்றார் . ` நான்காவன வெயிலும் காற்றும் நீரும் நிழலும் மிகுதல் ` ( நச் . உரை ). துன்பம் :- காரணம் ; பிராரத்தவினை . துயரம் - காரியம் ; வினைப்பயன் . ` துயரமே ஏற்றமாகத் துன்பக்கோலதனைப்பற்றி , ( தி .4 ப .52 பா .7; ப .25 பா .5,6) பாட்டுக் குறிப்புடன் உணர்க . ஒன்றினால் - ` ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத் தொருவன் ஆகும் ` ( தி .4 ப .25 பா .9). ஓர் உபாயத்தாலும் . ஒன்றியிருந்து நினைத்தலால் , ` ஒன்றுங்குறி ` ( திருக்களிறு . 10 ). யால் . ஓர் உபாயத்தாலும் என்புழி உம்மை தொக்கதாகக் கொள்க . உன்னை உள்வைக்கமாட்டேன் :- ` அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்க ` மாட்டேன் . கன்றிய - சினந்த . கருக்குழி - கரு ( ப்பை ) ஆகிய குழி . விழுப்பது - விழச்செய்வது . ` வெம்மை நமன்தமர் மிக்குவிரவி விழுப்பதன்முன் இம்மை உன்தாள் என் நெஞ்சத்து எழுதிவை ` ( தி .4 ப .96 பா .6). காலன் வந்து அன்றினான் (- பகைத்தான் ).

பண் :

பாடல் எண் : 9

பிணிவிடா வாக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானே
பணிவிடா விடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் றூய னல்னேன் றூமலர்ப் பாதங் காண்பான்
அணியனா யறிய மாட்டே னதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

காளையை ஊர்பவனே ! அதிகைப்பெருமானே ! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன் , செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு , அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மனஉறுதியும் இல்லாதேனாய் , அத்தூய்மை துணிவு என்பனவற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன் .

குறிப்புரை :

பிணிவிடா ஆக்கை - பிணியானவை விடாத உடலை . பெற்றம் - விடை . பணி - கருமம் . இடும்பை - இருள்சேர் இருவினையாலும் எய்தும் துன்பம் . ( தணிகைப்புராணம் . நந்தியுபதேசம் . 110 -116 ). ` வந்த இருவினைக்கும் மாமருந்து ` ( திருவள்ளுவமாலை ). பாசனம் - சுற்றம் . ` தீவினைச் சுற்றம் என்னும் பொருளுளே அழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன் ` ( தி .4 ப .26 பா .4). பண்ணிவிடாத இடும்பை எனலுமாம் . ` வினைப்பற்று `. உழவாரத்திருப்பணி ( செய்தலு ) க்கு விடாத இடும்பை எனலும் பொருந்தும் . பாம்பைப் போற் பற்றிவிடாத எனலுமாம் . துணிவு - தெளிவு . தூயன் - கட்டு நீங்கினேன் . ` தூமலர்ப் பாதங்காண்பான் ` ( ? 1). அணியன் ஆய் - அணிமையில் உள்ளேன் ஆகி . அறியமாட்டேன் - ` உணரமாட்டேன் ` ( ? 8).

பண் :

பாடல் எண் : 10

திருவினாள் கொழுந னாருந் திசைமுக முடைய கோவும்
இருவரு மெழுந்தும் வீழ்ந்து மிணையடி காண மாட்டா
ஒருவனே யெம்பி ரானே யுன்றிருப் பாதங் காண்பான்
அருவனே யருள வேண்டு மதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டனே ! வடிவம் புலப்படாது இருப்பவனே ! திருமகள் கேள்வனாய திருமாலும் , நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் ஆகிய இருவரும் கீழ் நோக்கித் தோண்டியும் மேல்நோக்கிப் பறந்தும் , திருவடிகளையோ உன் உச்சியையோ காண இயலாத ஒப்பற்ற பெருமானாகிய உன் திருப்பாதங்களை அடியேன் காணுமாறு அருள் செய்யவேண்டும் .

குறிப்புரை :

திரு - செல்வம் . திருவினாள் - செல்வி . கொழுநன் - கொளுநன் , ` கொண்டவன் ` ` கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி ` ( திரிகடுகம் . 96 ). திசை - நான்கு என்னும் குறிப்பு . திசைக் கொன்றாக முகம் நான்குடைய கோ . எழுந்தும் - அன்னப் புள்ளுரு வாய் வானோக்கி எழுந்து பறந்தும் . வீழ்ந்தும் - பன்றியுருவாய் நிலத்தை அகழ்ந்துகொண்டே சென்று விழுந்தும் . இணை - இரண்டு . மாட்டாமை இருவரது . ஒருவன் - ` தான்தனியன் ` ( தி .8 திருவாசகம் . 257). ` ஒப்பில் ஒருத்தனே ` ( ? .65). ` ஒருவனே ` ( ? .72 ). ` அருவனே ` ( சித்தியார் . 58.75 ).

பண் :

பாடல் எண் : 1

மடக்கினார் புலியின் றோலை மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல்
அடக்கினார் கெடில வேலி யதிகை வீரட்ட னாரே.

பொழிப்புரை :

கெடில நதியை ஒருபுறம் எல்லையாக உடைய அதிகை வீரட்டனார் புலியின்தோலை உடையாக உடம்பைச்சுற்றி இடையில் உடுத்துப் பெரிய முடிமணியை உடைய பாம்பினை அதன் மீது கச்சாக இறுக்கிக் கட்டிப் பிறையைச் செறிந்த சடைமீது செருகித் தொண்டைக்கனி போன்ற சிவந்த வாயையும் துடி போன்ற இடையையும் கடல் போன்ற அல்குலையும் உடைய பார்வதியைத் தம் உடம்பின் ஒருபாகமாக அடக்கியவர் ஆவர் .

குறிப்புரை :

புலித்தோலை உடுத்தார் :- ` புலியதளே யுடையாடை போற்றினானை ` ( தி .6 ப .50 பா .1). ` துணி புலித்தோலினையாடையுடையாக் கொண்டார் ` ( தி .6 ப .96 பா .7). மாமணிநாகம் கச்சா முடக்கினார் :- சடைமேல் திங்கள் தொடக்குண்ணச் செய்தார் . தொண்டை - கொவ்வைப் பழம் . ஆதொண்டங்கனி என்றலும் உண்டு . தொண்டைச் ..... அடக்கினார் :- உவமைத்தொகை மூன்றும் ஒரு சொல் நீர்மையுற்று நின்ற நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை . ` பெருந்தோட் சிறுநுசுப்பிற் பேரமர்க்கட் பேதை ` ` பெருந்தோட்பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ` என்பன காட்டி மூவகையாகக் கொள்ளலாம் என்ற சேனாவரையருரையை நோக்குக . ( தொல் . சொல் . 26) துடியிடைப் பரவையல்குல் :-( தி .4 ப .24 பா .10; ப .25 பா .6). அடக்குதல் :- இடப்பாற்கொண்டிருத்தல் . கெடில நதியே வேலி .

பண் :

பாடல் எண் : 2

சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்
கூடினா ணங்கை யாளு மூடலை யொழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே

பொழிப்புரை :

கங்கையாளை எம் பெருமான் சடையில் சூடினாராக அவ்வோசை கேட்டுப் பார்வதி ஊடினாளாக அவ்வூடலைப் போக்க வேண்டிக் கெடிலவேலி அதிகை வீரட்டனாராகிய பெருமானார் சாமவேதம் பாடியவராய் அப்பாடலின் தாளத்திற்கு ஏற்ப ஆடியவராவர் .

குறிப்புரை :

திருவதிகை வீரட்டானேசுவரர் தம் தலைமேற் கங்கையைச் சூடினார் . சூடிய ஆரவாரம் கேட்டதோ இல்லையோ இடப்பங்கின் நாயகி ஊடினாள் . அவ்வூடலைத் தீர்க்கலுற்றுச் சாம வேத கீதம்பாடினார் . பாடிய பாணிக்குத் தக ஆடினார் . ( அப்பாடல் ஆடல்களால் திரிபுரசுந்தரியார் திருவுள்ளம் அவ்வூடலின் திரிபுற்றதோ உற்றிலதோ யாரறிவார் ?) உலகுயிர்கள் கூடியுவத்தல் கொண்டு ஊடிய தகன்றதாகத் துணியலாம் . போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதலும் இமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்து உயிர்க்குப் பேரின்பம் அளித்தலும் உடையன் அம்முதல்வன் . இவ்வுலக மெல்லாம் சக்தியும் சிவமும் ஆயதன்மை . இவ்வாழ்க்கையெல்லாம் அவளால் வந்த ஆக்கம் ( சித்தியார் ). ` எம்பெருமான் ஒருவாது உமை மாதொடு இருத்தலினால் உறுகாதலின் ஆணொடு பெண்கள் பிணைந்து இருநீர்ப்புவியாதிய எவ்வுலகும் இன்புற்று உயிர் ஈண்டியது . ( தணிகைப் . நாரதனருள்பெறு . 70 ).

பண் :

பாடல் எண் : 3

கொம்பினார் குழைத்த வேனற் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காண லாகா வகையதோர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கண் மூன்றும் வில்லிடை யெரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

மரக்கிளைகள் தளிர்த்த வேனிற் காலத்திற்கு உரிய அரசனாகிய மன்மதனை விடுத்த மால் , அயன் , இந்திரன் முதலோர் அவன் உருவினை மீண்டும் காண முடியாத வகையில் அவன் உடலைத் தீவிழித்து எரித்து வருத்தினார் . அச்செயல் செய்த கெடில வேலி அதிகை வீரட்டனார் பகைவர்களுடைய மும்மதில்களையும் வில்லிடைக்கோத்து எரித்து அழித்த அம்பினை உடையவராவர் .

குறிப்புரை :

வெம்பினார் - சினவெப்பம் உற்ற திரிபுரத்தசுரர் . வில் - மேருவில் . வீழ்த்த - விழச்செய்த . அம்பினார் :- ` கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த அம்பனே ` ( தி .6 ப .44 பா .5) ` மாருதமால் எரி மூன்றும் வாய் அம்பீர்க்காம் சரத்தான் ` ( தி .6 ப .50 பா .9). அதிகை வீரட்டனார் நடலை செய்தார் என்று ( முன்பின்னாக ) இயைத்துப் பொருள்கொள்க . ` கொம்பினார் ` ` நம்பினார் ` இரண்டும் இரதியைக் குறித்தன என்று கொள்வாரும் உளர் . கொம்பு :- ஊதும் இசைக் கருவியுமாம் . கொம்பு கொம்பினார் எனப்பட்டது ; தென்றல் தென்றலார் என்பதுபோல . கொம்புகள் தளிர்த்த வேனிற்காலம் . குழைத்தல் - தளிர்த்தல் . சூடாமணி நிகண்டு 4:- 47. கொம்பினார் - பூங்கொம்பு போன்ற மகளிர் . கொம்பினார் குழை (- இளகு ) தலைச் செய்த கோமகன் . வேனற்கோ - வேனிற்றலைவன் . கோமகன் - கோவாகிய மகன் , கொம்பினாற் குழைத்தான் - கொம்பு நல்வேனிலவனைக் குழைய முறுவல் செய்தான் சிவன் . ` வேனில் வேள் `. கோலம் - அழகு . நீர்மை - இயல்பு , தன்மை . நம்பினார் - விரும்பு விடுத்த மாலயன் முதலோர் . ( மன்மதனைக் ) காணலாகாத வகையதோர் நடலை செய்தது - தீவிழியால் எரித்தது . நடலை - துன்பம் . ` நரகத்தில் இடர்ப் படோம் நடலையில்லோம் ` ( தி .6 ப .98 பா .1). காமத்தார்க்கு எட்டாதவர் முதல்வர் . பற்று அறாதவராற் காணலாகாதவர் முதல்வர் என்றும் பொருத்தலாம் . ` வானவர்க்கும் காண்பரிதாகி நின்றதுள்ளல் ` ( தி .4 ப .42 பா .6) ` காண்டற்கரிய கடவுள் ` ` கருதுவார்க்கு ஆற்ற எளியான் `.

பண் :

பாடல் எண் : 4

மறிபடக் கிடந்த கையர் வளரிள மங்கை பாகம்
செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடிப்
பொறிபடக் கிடந்த நாகம் புகையுமிழ்ந் தழல வீக்கிக்
கிறிபட நடப்பர் போலுங் கெடிலவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கெடில வீரட்டனார் கையில் மான் குட்டியை ஏந்தி , அழகு வளரும் இளையளாகிய பார்வதி பாகராய்ச் செறிந்த செஞ்சடையில் பிறையைச் சூடி , புள்ளிகளை உடைய பாம்பு புகையைக் கக்கி வெகுளுமாறு அதனை இடையில் இறுகக்கட்டி , அடியார்களுடைய உள்ளத்திலே பொய் உணர்வு அழியும்படியாக உலவி வருகிறார் .

குறிப்புரை :

மறி - மான்கன்று . அம்பிகையின் இளமை என்றும் குன்றாது வளர்வது . ` எழுபெரும் புவனம் முழுதொருங்குதவும் இறைவி என்று மறை கையெடுத்தார்க்கவும் இடைநுடங்குமட நடையிளங் குமரி என இருந்த கனகள்வி ` ( முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் . 4 ) ` அலைப்பாய் புனற்றெண் கடல் வைப்பும் அகிலாண்டமும்பன் முறையீன்றும் அழகுமுதிர முதிராஎன் அம்மை அமுதுசூற் கொண்ட முலைப்பால் நாறுஞ் செங்கனிவாய் முத்தம் தருக முத்தமே ` ( ? .45 ). ` உலகமோரேழும் பல முறை பயந்தும் முதிரா இள முலை முற்றிழை மடந்தை ` ( காசிக் கலம்பகம் . 38 ). ` விருத்தாம்பிகை ` என்றது ஒரு வரலாறு பற்றியது . செறி - செறிவு . செக்கர் - செவ்வானம் . மதிக்கொழுந்து - பிறை . பொறி - புள்ளி . கிறி - பொய் . தடத்தம் சொரூபத்தை நோக்கப் பொய்யாகும் .

பண் :

பாடல் எண் : 5

நரிவரால் கவ்வச் சென்று நற்றசை யிழந்த தொத்த
தெரிவரான் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரா லுகளுந் தெண்ணீர்க் கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த வதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கோடுகளை உடைய வரால் மீன்கள் தாவும் தெளிந்த நீரை உடைய வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை நாற்புறமும் எல்லையாகக் கொண்டு நெல்லரியும் உழவரால் சூழப்பட்ட வயல்களை உடைத்தாய அதிகையின் வீரட்டனார் , நரி வரால் மீனைக் கவரச் சென்று தன் வாயில் முன்பு பற்றி இருந்த தசைத் துண்டத்தையும் இழந்தது போல் , கிட்டாத ஒன்றை நினைத்துக் கிட்டியதனையும் இழக்கும் இயல்பினதாகிய மனித வாழ்க்கையை ஆராயும் சான்றோர்களுடைய உள்ளத்தில் ஏற்படும் மயக்கத்தை நீக்கும் உபாயத்தைத் திருவுளம் கொண்டு அருளுவார் .

குறிப்புரை :

நரி நீரைக்கடப்புழிக்கண்ட வராலைக் கவ்வச்சென்று , தன் வாயிலிருந்த நல்ல தசையை ( ஊனை ) இழந்ததைப் போன்றவற்றைத் தெரிவர் (- ஆராய்ந்துணர்வோர் ). தெரிவாருடைய சிந்தை . மால் கொள் சிந்தை தீர்ப்பது - மயக்கம் கொண்ட சிந்தனையைப் போக்குவதொரு சிந்தை செய்வார் வீரட்டனார் . சிவபெருமான் உயிர்க்குள் இருந்து அருள்கின்றதை உணர்த்திற்று . ` அகத்துறு நோய்க்கு உள்ளினர் அன்றி அதனைச் சகத்தவரும் காண்பரோதான் ` ( திருவருட்பயன் ) ` குருவான் ஞானநிட்டை அடைந்து நாதன்தாள் அடைவர் `, ` ஆரியனாம் ஆசான் வந்து அருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் ; தோன்றத் தூரியனாம் சிவன் தோன்றும் .` ` எரி பெருக்குவர் அவ்வெரி யீசன துருவருக்கம தாவ துணர்கிலார் அரியயற் கரியானை அயர்த்துப் போய் நரிவிருத்தமதாகுவர் நாடரே .` ( தி .5 ப . 100 பா . 7) ஒத்த றெரிவர் - ( ஒத்தல்தெரிவர் ) என்றிருந்து . எழுதினோராலே லகரம் நகரலுற்றதாகக் கொண்டுரைத்தல் பொருந்தும் . வரால் கவ்வல் :- பாசப்பற்று . நற்றசை :- உள்ளுயிர்க் குயிராய்த் திகழும் சிவம் . இழந்தது ஒத்தலைத் தெரிவாரது சிந்தை , மால் கொள் சிந்தை . அதைத் தீர்ப்பதோர் சிந்தை செய்வார் வீரட்டனார் . அரிவரால் - அரிபவரால் . அரிபவர்களோடு என்க . ஆல் உருபு உடனிகழ்ச்சிப் பொருட்டு . அது ` தூங்குகையா னோங்கு நடைய ` என்புழிப்போல்வது .

பண் :

பாடல் எண் : 6

புள்ளலைத் துண்ட வோட்டி லுண்டுபோய்ப் பலாசங் கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண்ணீ றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்
துள்ளலைப் பாகன் றன்னைத் தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
அள்ளலைக் கடப்பித் தாளு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

புலால் நாற்றத்தால் நெருங்கிவரும் பருந்துகளை விரட்டி மண்டையோட்டிற் பிச்சை எடுத்து உண்டு சென்று , வெப்பத்தாற் பலாசமரங்களின் சிறுகிளைகள் பட்டுப் போகும் சுடுகாட்டின் வெள்ளிய சாம்பலைப் பூசியவராய் , அழகிய வெள்ளிய காளைமீது துள்ளி ஏறி அதனைச் செலுத்துபவராய தம்மை , இவ் வுலகிலே பல காலமாகத் தொடர்ந்து பற்றிக் கிடக்கும் அடியேனைப் பிறவிப் பிணியாகிய சேற்றைத் தாண்டச்செய்து அடிமை கொள்பவராய் உள்ளவர் அதிகை வீரட்டனாரே .

குறிப்புரை :

கழுகு முதலிய புட்கள் அலைத்து உண்ட ஓடு . பிரமகபாலம் . தன் பசியை நீக்கிக்கொள்ள அன்னப் பறவையை அலைத்து அதன்மேல் ஏறிச் செலுத்தி உண்ட வாய் கொண்ட தலைப் பகுதியாகிய கபாலம் என வலிந்துரைத்தாருமுளர் . ஓட்டில் உண்டவர் வீரட்டனார் . பலாசம் - முள் முருக்கமரம் . சுள்ளல் - சுள்ளி . மணி ஏறு . வெள்ளேறு . ஏற்றுத்துள்ளல் . மணி , அழகும் ஏற்றின் கழுத்திற் கட்டிய மணியும் ஆம் . ` நரை வெள்ளே றொன்றுடையான் ` ஏற்றின்மேல் துள்ளி ஏறும் பெருமானைத் துள்ளல் என்றார் . ` உட்புண்டரிகத்திருந்த வள்ளலை வானவர்க்கும் காண்பரிதாகி நின்ற துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே ` ( தி .4 ப .42 பா .6) என்று பின்னரும் இறைவனைத் ` துள்ளல் ` என்றதுணர்க . துள்ளி ஏறுவது பற்றித் துள்ளல் . செலுத்துதல் பற்றிப் பாகன் . பாகன்றன்னை :- ` வீரட்டனார் ` ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி நோக்கிய ஒருமை . அள்ளல் :- அளறு . ( நரகம் .) ` அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள் ` ( ? 6) ` அள்ளற் பரப்பின் இனைவோரும் ..... இமையாரும் .... மானிடாதி ..... உயிரும் ` ` அள்ளல் அழுந்தும் பாதகத்தோர் ` ( தணிகை . அகத்தியனருள் . 296. 334 ) ` ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு ` ( குறள் ).

பண் :

பாடல் எண் : 7

நீறிட்ட நுதலர் வேலை நீலஞ்சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்ய ராகிக் கூறினா ராறு நான்கும்
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையி னுள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலு மதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டனார் நெற்றியில் நீறுபூசி , நீல கண்டராய் , பார்வதிபாகராய் , நான்குவேதங்களும் ஆறு சாத்திரங்களும் உரைப்பவராய் , பிறையைச்சூடி , மேல்நோக்கி உயரும் சடையிலே கங்கையை அடக்கிச் சடையை முடிப்பவர் ஆவார் .

குறிப்புரை :

திருநீறு இட்ட நெற்றியர் . பாற்கடலினது நீலநிற நஞ்சடைந்த கண்டத்தர் . மாதியலும் பாதியராகி . அங்கம் ஆறும் அருமறை நான்கும் கூறியவர் . கீறியிட்ட பிளவு போன்ற பிறையைச் சூடிக் கிளரும் சடைக்குள்ளே கங்கையாற்றையிட்டு ( அச்சடையை ) முடிப்பர் அதிகை வீரட்டனார் .

பண் :

பாடல் எண் : 8

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்த லாகார்
ஏணிலா ரிறப்பு மில்லார் பிறப்பிலார் துறக்க லாகார்
நாணிலா ரைவ ரோடு மிட்டெனை விரவி வைத்தார்
ஆணலார் பெண்ணு மல்லா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

ஆணும் பெண்ணும் அல்லாதாராகிய அதிகை வீரட்டனார் பிறர் காட்சிக்கு அரியராய் , கருத்திற்கும் எட்டாதவராய் ; திருத்துவதற்கு இயலாதவராய் , தம்மோடு பொருந்தச் செய்வதற்கும் இயலாதவராய் , இந்நிலை என்று குறிப்பிடத்தக்க எந்த நிலையும் இல்லாதவராய் , இறப்பும் பிறப்பும் அற்றவராய் , இவர் நமக்கு உற்றவர் அல்லர் என்று துறக்க முடியாதவராய் , உலகியலுக்கு மாறுபட்ட தம் நிலைகளைக் குறித்துச் சிறிதும் நாணுதல் இல்லாதவராய் , ஐம்பொறிகளோடு கலந்து தடுமாறுமாறு அடியேனை இவ்வுலகில் தங்க வைத்துள்ளார் .

குறிப்புரை :

காணிலார் - காண்டல் இல்லாதவர் . காட்சிக்கு அரியர் . ` நோக்கரிய நோக்கு ` கருத்தில் வாரார் - கருத்திற்கு எட்டாதவர் . ` மாற்றம் மனம்கழிய நின்ற மறையோன் ` ( தி .8 திருவாசகம் ). ` சுருதியே .... யார் காண்பார் ` ( தாயுமானவர் , ஆசையெனும் . 18 ). திருத்தலார் - திருத்துவதற்கு இயலாதவர் . பொருத்தல் ஆகார் - பொருந்தச் செய்தற்கும் ஒல்லாதவர் . ஏண் இலார் - இந்நிலை என எந்நிலையும் இல்லாதவர் . ` இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக்காட்டொணாதே ` ` இங்ஙன் இருந்தது என்று எவ்வண்ணம் சொல்லுகேன் ` ( திருவுந்தியார் . 3 ) ஏண் - நிலை . ` உற்ற ஆக்கையின் உறு பொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் `. திருவாசகம் ( கந்த . மார்க்கண்டேயப் . 65 ). இறப்பும் பிறப்பும் இலார் :- என்றும் ( இழவார் ) உள்ளார் . ` போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியன் ` ( தி .8 திருவாசகம் ). துறக்கல் ஆகார் - உயிர்க்குயிராயிருத்தலால் விட்டு ஒழிக்கப்படார் . ` ஆணல்லை ` ( தி .6 ப .45 பா .9). நாண் - நாணம் . ஐவர் - ( தி .4 ப .26 பா 2; ப .69 பா .4 ப .77 பா .5)

பண் :

பாடல் எண் : 9

தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி யரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை யஞ்சப் பெருவிர லதனை யூன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்துஞ் சிதறுவித் தவனை யன்று
ஆர்த்தவா யலற வைத்தா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டனார் , தூயதான கயிலைமலையை நோக்கி வந்து போரிடும் வலிமையை உடைய இராவணன் அதனைப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்சத் தம் கால்விரலை அழுத்தி ஊன்றிச் சிறப்புடைய அவனுடைய தலைகள் பத்தும் சிதறச் செய்து , ஒரு கணத்தில் , மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்த அவன் வாய்கள் துயரத்தால் கதறுமாறு செய்தவராவர் .

குறிப்புரை :

தீர்த்தம் - திருவருள் உருவமுடைய தூய நீர் . மலை - கயிலை . செரு - போர் . பேதை - உமாதேவியார் . சீர்த்த - கனத்த . சிதறுவித்தல் - சிதறச்செய்தல் . ஆர்த்த - கதறிய . ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொன்றாகப் பொருத்திய . அலற - கதற , அழ ஆராவாரஞ்செய்ய .

பண் :

பாடல் எண் : 1

முன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றே னுள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அதிகைப் பெருமானாரே , உள்ளத்திலே உமக்கு அன்பனாய் வாழமாட்டேனாய் , அடியேனுடைய இளமைக்காலமான அம்முற்பட்ட காலமெல்லாம் உம் திருவடிவைத் தியானம் செய்யாமல் அலைந்து , மூப்பு நிலையில் கணீர் என்ற ஓசை உண்டாகுமாறு இருமிக் கருதற்பாலதாகிய சிவ சிந்தனையே இல்லாது , பயனுடைய செயல்கள் செய்யாமல் , உணவு வேளைக்கு உதவுமாறு முற்பகலில் சோறு வடிக்காமல் காலம் கடத்தி அகாலமான பிற்பகலில் உண்டற்கிதமில்லாதவற்றை உலையிலிட்டு சமைக்கவும் இல்லக் கிளத்தியர் போலாகின்றேன் . உளமார்ந்த மெய்யன்பினால் வாழ இயலாதவனாகின்றேன் .

குறிப்புரை :

முன்பு - இளமையில் . இளைய காலமாகிய முன்பெலாம் . இது முதுமையிற்பாடியது . எண்பத்தொன்றாண்டிருந்த உண்மைக்கு ஈதொரு சான்று . ` விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் ` ( தி .4 ப .78 பா .8) எனப் பின்னுள்ளதும் உணர்க . அப்பர் திருவுருவத்தை அருளநுபவம் மிக்க முதுமையைத் தோற்றும் வண்ணம் அமைப்பதே பொருத்தம் . மூர்த்தி :- திரிமூர்த்திக்கும் மேலான சிவமூர்த்தி . ஓடி - பெண்மயலில் விரைந்து . கண்கண - கணீல் கணீல் என்று . இருமி - இருமல் செய்து . நாளும் - அவ்விளமை கழியும் அளவும் . கருத்து அழிந்து - கருதற்பாலதாய சிவசிந்தனையே இல்லாது . அருத்தம் - பொருளே . முன் பகலிற் சமைக்காத குற்றத்தொடு . உணங்கல் (- வற்றல் ) அட்டுங் குற்றத்தையும் செய்யும் அறிவிலாப் பெண்டிரை ஒத்தேன் . கருத்தழிந்து மூர்த்தியை நினையாத குற்றத்தொடு , இளமைக் குறும்புகளைச் செய்யும் குற்றத்தையும் புரிந்தேன் . அன்புருவான உள்ளத்தேனாகி வாழும் ஆற்றல் இல்லேன் .

பண் :

பாடல் எண் : 2

கறைப்பெருங் கண்டத் தானே காய்கதிர் நமனை யஞ்சி
நிறைப்பெருங் கடலுங் கண்டே னீள்வரை யுச்சி கண்டேன்
பிறைப்பெருஞ் சென்னி யானே பிஞ்ஞகா விவை யனைத்தும்
அறுப்பதோ ருபாயங் காணேன் அதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அதிகைப் பெருமானாரே ! பெரிய நீலகண்டரே ! பிறைசூடீ , தலைக்கோலம் அணிந்தவரே ! உயிர்களைக் கோபித்துக் கவரும் காலனுக்குப் பயந்து கடல்நீரில் தீர்த்தமாடியும் நீண்ட மலை உச்சியை அடைந்து அங்குத் தவம் செய்தும் பிறப்பு , பிறப்பச்சம் என்ற இவற்றை நீக்கிக் கொள்வதற்குரிய வழியினை அறிந்தேன் அல்லேன் .

குறிப்புரை :

கறை - நஞ்சின் கறுப்பு . ` நாளென ஒன்று போற்காட்டி உயிரீரும் வாள் `. காய்தல் கதிர்த்த நமன் ; சினம் மிக்கவன் என்றுமாம் . ` பரவையிடை மூழ்கியும் ...... மலைநுழைவு புக்கியும் .... வீறு சித்தி செய்தும் ஞானம் அலது கதி கூடுமோ ` ( தாயுமானவர் . 36 ) என்றதாகக் கொண்டு , இறவாது பேரின்ப வீட்டில் அழியாத வாழ்வுறக் கடலாட்டும் மலைக்குகைத் தவமும் மேற்கொண்டேன் . இறப்பினை அஞ்சி விருத்திராசுரனைப் போலக் கடற்குள் ஒளிந்திடினும் மலை உச்சியிலேறிடினும் இறவாமை பிறவாது என்றலும் கூடும் . பிறையைச் சூடிய பெருந்தலையன் . பிஞ்ஞகா - கோலக் குழற்சடையாய் . இவை அனைத்தும் அறுப்பதோர் உபாயம் :- பிறப்பு இறப்பச்சம் முதலிய துன்பம் எல்லாம் போக்கும் வழி .

பண் :

பாடல் எண் : 3

நாதனா ரென்ன நாளு நடுங்கின ராகித் தங்கள்
ஏதங்க ளறிய மாட்டா ரிணையடி தொழுதோ மென்பார்
ஆதனா னவனென் றெள்கி யதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும் பழவினைப் பரிசி லேனே.

பொழிப்புரை :

சான்றோர்கள் யாரேனும் தம்மைத் தலைவர் என்று குறிப்பிட்டால் அதைக் கேட்டு எம்பெருமானாருடைய அடியவராகிய தமக்கு அடியார் என்ற பெயரைத் தவிரத் தலைவர் என்ற பெயர் ஏலாது என்று நடுங்கித் தம்மைத் தலைவராகக் கருதும் தவறுகளைச் செய்ய அறியாதவராய் யாங்கள் அடியவர்க்கு அடியராய் உங்கள் திருவடிகளை வழிபடுகிறோம் என்று பதில் கூறுவர் . ஆனால் அறிவிலியான யானோ என்னைத் தலைவன் என்று நினைத்து உம்மை இகழ்ந்து அதிகை வீரட்டராகிய உம்முடைய திருவடிகளை வழிபடாது உலகியல் தீமைகளிலேயே அடியேனைக் செலுத்தும் பழந் தீவினையாகிய பரிசிலை உடையேன் .

குறிப்புரை :

திருவதிகை வீரட்டானேசுவரரே , கற்றல் கேட்டலுடைய பெரியோர்களை நோக்கி , ` நீங்கள் எங்கள் நாதனார் ` என்று சொல்லக் கேட்டலும் எப்பொழுதும் நடுங்குவர் அவர்கள் . தம்மைத் தலைவர் என்று எண்ணுதல் முதலிய குற்றங்களைச் செய்து அறிந்தவரே அல்லர் . தாம் அடிமையர் என்பதை மறவாமல் இணையடி தொழுதோம் என்றே சொல்லுவர் . அவர் நிலை அது . என் நிலையோ இது :- ஆதன் ( அறிவிலி ) நான் அவன் என்று எள்கித் தேவரீர் பாதங்களைப் பரவாது காலம்போக்கும் பண்டைத் தீவினைப் பரிசிலையுடையேன் . ஏதங்கள் - ஈண்டுப் பழவினையும் எதிர்வினையும் . ` தங்கள் மேலை ஏதங்கள் தீரநின்றார் ` ( தி .4 ப .35 பா .5) தங்களைத் தலைவரென்னக் கேட்டலும் நடுங்கும் பெற்றியராய் யானெனதென்னும் செருக்கற்று , வினையேறா வகை ஏகனாகி இறைபணி நின்று , இடைவிடாது திருவடி இணையை மறவாது தொழுதோம் என்பார் தலைவராகுந் தகுதியுடையோர் அனைவரும் . ஆதனான நான் (- அறிவிலி ). நானே நாதன் என்று எண்ணி இகழ்ந்து . நாதனாகிய நின் இணையடியை வாழ்த்தி வணங்காது கெடுகின்றேன் . இவ்வாறு செலுத்துகின்றது என் பழவினைப் பரிசு . நான் அப்பழவினைப் பரிசிலை யுடையேனாதலின் உன் இணை யடியைப் பரவுகிலேன் . பழவினைப் பரிசிலை ( ஏதங்களை ) அறியா ( இல்லா ) தவராய் எல்லாம் சிவன் என்ன நின்று உன் இணையடி களையே தொழும் சிவ புண்ணிய சீலர் ஆதலின் , பிறர் ( அடியர் ) எல்லாரும் அப்பெறலரும் பேற்றினராயுளர் .

பண் :

பாடல் எண் : 4

சுடலைசேர் சுண்ண மெய்யர் சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசே ரலங்கன் மார்பர் பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி யதனிடை மணிகள் சிந்தும்
கெடிலவீ ரட்ட மேய கிளர்சடை முடிய னாரே.

பொழிப்புரை :

மருத நிலத்தைச் சார்ந்த வயல்களுக்கு அருகே வளர்ந்த தென்னை மட்டைகள் பிளக்குமாறு மோதிப் பரவி அவற்றின் மேல் இரத்தினங்களைச் சிதறுகின்ற கெடில நதிக் கரையிலமைந்த அதிகை வீரட்டத்தில் விரும்பி உறையும் உயர் சடைமுடிப்பெருமான் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய உடம்பினராய் , வண்டுகள் மொய்க்குமாறு இதழ்கள் விரிந்த கொன்றைப்பூ மாலை சேர்ந்த மார்பினராய் உள்ளார் .

குறிப்புரை :

சுடலைசேர் சுண்ணம் - சுடலைப்பொடி . மெய்யர் - திரு மேனியுடையவர் . சுரும்பு - வண்டு . படலை - கொத்து . அலங்கல் - அசைதல் . பழனம் - நன்செய் . கழனி - விளைவு உடைய பகுதி . தெங்கின் மடலைக் கெடிலநதி நீர் ஓடிக் கிழிக்க அதனிடையிருந்த மணிகள் சிந்தும் வளம் உடைய திருவீரட்டானம் . மேய - மேவிய ; விரும்பித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள . கிளர்தல் - விளங்குதல் .

பண் :

பாடல் எண் : 5

மந்திர முள்ள தாக மறிகட லெழு நெய்யாக
இந்திரன் வேள்வித் தீயி லெழுந்ததோர் கொழுந்தின் வண்ணம்
சிந்திர மாகநோக்கித் தெருட்டுவார் தெருட்டவந்து
கந்திர முரலுஞ்சோலைக் கானலங் கெடிலத்தாரே.

பொழிப்புரை :

மந்தர மலையாகிய மந்திரத்தை உள்ளமைத்துக் கொண்டு கடலையே நெய்யாகக்கொண்டு இந்திரன் செய்த பாற்கடல் கடையும் வேள்வித் தீயின் கொழுந்தாக வெளிப்பட்ட விடத்தின் நீலநிறத்தைத் தம்மை நீலகண்டர் ஆக்கும் சித்திரத்திற்கு உரிய பொருளாகக் கருதித் தம்மால் அறிவுறுத்தப்படும் அடியவர்களுக்கு அறிவிப்பதற்காகப் பெருமான் இந்நிலவுலகிற்கு வந்து மேகங்கள் ஒலிக்கும் சோலைகளை உடைய நறுமணங் கமழும் கெடில நதிக்கரையினதாக அதிகை வீரட்டத்து உள்ளார் .

குறிப்புரை :

இந்திரன் வேள்வியாகப் , பாற்கடலைக் கடைந்ததைக் குறித்தருளினார் . அவன் மகபதி அல்லனோ ? அவன் செய்யும் அனைத்தும் மகமே போலும் . அம் மகத்துக்கு மந்திரமும் கடலும் பிறவும் உபகரணங்கள் . அவ்வேள்வித் தீயில் எழுந்த கொழுந்து நஞ்சு . அதன் வண்ணம் வெண்மை . சிந்திரம் - சிந்தூரம் ; செய்யது . சித்திரம் என்பது எதுகை நோக்கி மெலித்ததுமாம் . தெருட்டுவார் - அறிவுறுத்துவார் . தெருட்ட - அறிவுறுத்த . தெருட்டுவார் தெருட்ட - இரண்டாம் வேற்றுமைத் தொகை . ` த் ` மிகாது நின்றது . தெருட்ட வந்து கெடிலத்தார் என்க . வந்து என்பது வினைக்குறிப்புக் கொண்டது . தம் பரத்துவத்தை உணர்த்துவதே தெருட்டல் எனப்பட்டது . ( தி .7 ப .64 பா .10). தணிகை . களவு . ( தி ,4 ப .31 பா .1) பார்க்க . கந்தரம் - மேகம் . எதுகை நோக்கித் திரிந்தது . முரல - ஒலிக்க . ( மழையொலி , இடியொலி ). வேள்விக்குரிய மந்திரம் அக்கடலில் இட்டுள்ளதாகிய மந்தரமலையே ஆக நெய் அதில் எழுவதேயாக இந்திரன் செய்த ( கடல் கடைதலாகிய ) வேள்வியின் தீயில் எழுந்ததொரு கொழுந்து நஞ்சு எனலும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 6

மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலா லினிது சொன்ன
கிஞ்ஞரங் கேட் டுகந்தார் கெடிலவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டனார் மைக்கு அழகு தரும் , தமக்குத் தாமே நிகரான கண்களை உடைய பார்வதிபாகராகிய தமது கயிலைமலையை நோக்கி ஓடி அதனைப் பெயர்க்க முற்பட்டு உடம்பிலுள்ள நரம்புகளும் குருதியும் சிந்த , விழுந்து நசுங்கி வேகம் தணிந்து இராவணன் கை நரம்புகளையே வீணையின் நரம்புகளாக அமைத்து அவற்றை ஒலித்துக்கொண்டு அன்பூர இனிமையாகப் பாடிய பாடலைக் கேட்டு உகந்து அவனுக்கு அருளியவர் ஆவார் .

குறிப்புரை :

மைஞ்ஞீலம் , மெய்ஞ்ஞரம்பு , கைஞ்ஞரம்பு என்பன மைந்நீலம் , மெய்ந்நரம்பு , கைந்நரம்பு என்பவற்றின் போலி . தி .4 ப .60 பா .4; ப .80 பா .5 பார்க்க . இதிலும் ஈற்றடியிற் ` கிஞ்ஞரம் ` என்றிருந்ததேயாகும் . தி .4 ப .76 பா 4 போல் ஈற்றடி எதுகை வேறுபட்டிருத்தலும் இசைதற்குரித்தே ஆயினும் , ` மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப் பைஞ்ஞலம் பருகிய பரும வல்குலார் மெய்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாங் கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே `. ( சூளாமணி . துறவு . 60 ). என்று பாடியவாறு பாடியிருத்தலும் மறுக்கப்படாதது . மெய்ந் நரம்பு - உடலின் நரம்புகள் . உதிரம் - குருதி . பில்க - சிந்த . விசை - எடுத்த வேகம் . கைநரம்பு - யாழ் . எழுவி - இசையெழுப்பி . காதல் - பத்தி . கின்னரம் :- ` விஞ்சையர் கிந்நரம் பயில் பாடல் ` ( கந்த . திருக்கயிலாயப் . 9). கின்னர யாழ் என்றலும் உண்டு .

பண் :

பாடல் எண் : 1

ஊனினுள் ளுயிரை வாட்டி உணர்வினார்க் கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனுமின் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளி எம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித் தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய் , உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும் அறியமுடியாத கள்ளத்தை உடையவராய் , சிவபோதத்தினராய் இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும் , சிவனடியார்களின் நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார் .

குறிப்புரை :

ஊன் - உடம்பு . வாட்டி - வாடச்செய்து . தவம் விரதம் முதலியவற்றால் வாட்டுதல் . மனம் முதலிய அந்தக் கரணங்கள் ஐம்பொறிவழி போகாது நின்று வினை மாசு தீர்ந்து தூயவாதற் பொருட்டுக் காக்கப்படும் விரதங்களால் உண்டி சுருக்கலும் கோடைக் கண் வெயினிலை நிற்றலும் மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய தவச் செயல்கள் ஊனின் உள்ளுயிரை வாட்டுவன . வாட்டினாற்றான் ஒன்றியிருந்து உணரும் நிலை எய்தும் . அவ்வுணர் வினார்க்கே திருச்செம்பொன் பள்ளியார் எளியர் . வானிலேயுள்ள வானவர்க்கும் பேதமாக வைத்துணரலாகாத அன்புடையவர் . சீவபோதம் முளைத்தால் சிவபோதம் வேறு முதலாயிருக்கும் என்றுணர்ந்து சிவபோதத்தினராயிருக்கும் சிவஞானத்தார் , சிவபத்தர் உள்ளத்துள் இனிய தேனும் இனிய அமுதும் போல் இனிப்பவர் . எளிதிலுறும் தேன் அரிதிற் கடைந்தெடுக்கும் அமுது என்று கொண்டு அவ்விருவர்க்கும் நிரல் நிறையாக்கிக் கூறுதலும் ஏற்கும் .

பண் :

பாடல் எண் : 2

நொய்யவர் விழுமி யாரு நூலினுண் ணெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனு மிடிஞ்சி றன்னில்
நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

நீலகண்டராய திருச்செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய் , சீர்மை உடையவராய் , வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய் , பொய்யிலியாய் , உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள செந்நிறத்தவராவர் .

குறிப்புரை :

நொய்மையுடையவர் . நொய்மை x திண்மை . விழுமியார் - சீர்மை ( நன்மை ) உடையவர் . ` விழுமியார்கள் நின் கழல் பாடலால வாயிலாய் ` ( தி .3) நூல் - வேதாகமங்கள் . நுண்ணெறி - நுண்பொருள் வழி . பொருளின் நுட்பம் நூலின்மேல் ஏற்றப்பட்டது . மெய்யர் - குருவாகுந் திருமேனி கொண்டருள்பவர் . நூலின் நுண்ணெறியைக் காட்டும் மெய் குருவின் திருமேனியேயாகும் . ` ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவுகொண்டு காரணன் அருளான் ஆகில் கதிப்பவர் இல்லை ` ( சித்தியார் ) பொய் :- பசுஞானம் , பாசஞானம் , பாசம் . பொய்யும் இல்லார் :- ` மெய்ப்பொருள் .` இடிஞ்சில் - விளக்குத்தகளி . ` நெய்விட்டிலாத இடிஞ்சில் ` ( தி .10 திருமந்திரம் 503) உடல் எனும் இடிஞ்சிலில் நெய் அமர் திரியாயும் மதிப்பவர் மனமண விளக்காயும் ஒளிர்கின்ற செவ்வண்ணத்தர் . இடிந்த + இல் = இடிந்தவில் . அதன் மரூஉ ` இடிஞ்சில் ` என்பது . குற்றிற்சுவர் என்றது ` குட்டிச்சுவர் ` என மருவிற்று . குறு + இல் = குற்றில் . ` இடுஞ்சில் ` ( நெய் இடும் ஓட்டாஞ்சில்லி ) ` இடிஞ்சில் ` என மருவிற்று . இரண்டும் வெவ்வேறு .

பண் :

பாடல் எண் : 3

வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளிய ரூழி யூழி யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார் பஞ்சமம் பாடி யாடும்
தெள்ளியார் கள்ளந் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன் பள்ளியார் வெண்மை , செம்மை , கருமை என்ற நிறத்தவராய் , தேவர்கள் உள்ளத்திலே ஒளி தருபவராய் , ஊழிதோறும் உலகங்கள் துதிக்கும் படியான பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுடைய நெஞ்சத்தில் உள்ளவராய் , பஞ்சமம் என்ற பண்ணினைப் பாடி ஆடும் ஞானிகளுடைய உள்ளிருளைப் போக்குபவராய் உள்ளார் .

குறிப்புரை :

வெள்ளியர் - வெண்ணிறத்தர் . கரியர் - கருநிறத்தர் . செய்யர் - செந்நிறத்தர் . ( கற்குடி .2 ) விண்ணவர்கள் நெஞ்சில் ஒளிர்பவர் . ஒண்மை - ஒளி . ஊழி ஊழி உலகமது ஏத்தநின்ற பள்ளியர் :- ஊழிதொறும் உலகம் தொழநின்ற பாற்கடற் பள்ளியில் அறிதுயில் புரியும் திருமாலினுடைய ( நெஞ்சில் உள்ளவர் . பஞ்சமம் - பண்சமம் . பஞ்சம சுருதி பற்றியது ) ஒரு பண் , தெள்ளியார் - ஞானிகளது . கள்ளம் - உள்ளிருள் . ( கருவுளம் - கர்புளம் - கருளம் - கர்ளம் - கள்ளம் ) வெள்உளம் வெள்ளம் . ` கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்து தான் நோக்கிநக்கு வெள்ளரோம் என்று நக்கார் விளங்கிளம் பிறையனாரே ` ( தி .4 ப .75 பா .9).

பண் :

பாடல் எண் : 4

தந்தையுந் தாயு மாகித் தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளியார் தந்தையாராய்த் தாயாராய் , எல்லோருக்கும் கொடைவழங்குபவராய் , ஞானவடிவினராய் , முற்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து முறைப்படி வேதங்களை ஓதி ` எங்கள் தந்தையே ! நீயே அடியேங்களுக்கு அடைக்கலம் நல்குவை ` என்று முன்நின்று வழிபட்டுத் துதிக்க , அவர்கள் உள்ளத்துள்ளே மங்கலமூர்த்தியாக இருப்பவராவர் .

குறிப்புரை :

தந்தையும் தாயும் தானவன் - தானம் புரிபவன் . குறிப்பு ( தி .7 ப .46 பா .7) நோக்குக . ஞானமூர்த்தி :- ` நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி ` என்றதால் , பதமுத்திகளின் மேலாய பரமுத்தியில் விளங்கும் பரசொரூபம் ஞானமயம் ; துரியம் . அஃது அருணிலை . அதுவே ஆனந்த மூர்த்தியாய்த் துரியாதீதமாகும் . இருக்கு - நான் மறையுள் ஒன்று ; பொதுவாய் வேதமெனலுமுண்டு . எந்தை ! நீயே சரணம் என்று பரவி ஏத்தும் இமையவர் சிந்தையுள்ளே சிவமானவர் .

பண் :

பாடல் எண் : 5

ஆறுடைச் சடையர் போலும் அன்பருக் கன்பர் போலும்
கூறுடை மெய்யர் போலும் கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும் நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

நெய்தல் பூக்கள் மணம் கமழும் நீர்வளம் உடையதாய்ச் சேற்றிலே தாமரை பூக்கும் வயல்களை நாற்புறமும் எல்லையாக உடைய திருச்செம்பொன்பள்ளியார் கங்கை சூடிய சடையராய்த் தம் அன்பர்களிடத்துத் தாமும் அன்பு செய்பவராய் , பார்வதிபாகராய் , கொடிய பாம்பினை இறுகக் கட்டிய இடையினராய்த் திரு நீறணிந்த அழகருமாவார் .

குறிப்புரை :

கங்கைச்சடையினார் . கசிந்த தொண்டர்க்கு அன்பே சிவமாய் அருள்பவர் . மாதியலும் பாதியர் . வலிய அரவக் கச்சுடையவர் . திருவெண்ணீற்றழகர் . நெய்தற் பூக்கள் மணம் கமழும் தன்மையை உற்ற சேறுடைய தாமரை வேலியைக் கொண்ட திருச்செம்பொன்பள்ளி .

பண் :

பாடல் எண் : 6

ஞாலமு மறிய வேண்டில் நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான கள்ளத்தை யொழிய கில்லீர்
கோலமும் வேண்டா வார்வச் செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமுந் நோன்பு மாவார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

மேம்பட்டது என்று சொல்லி உலகியலில் திளைத்து வாழும் உலகத்தவராகிய நீங்கள் வீணாகக் கழிகின்ற உங்கள் வஞ்சக வாழ்க்கையை விடாது மேற்கொண்டுள்ளீர் . நீங்கள் திருச்செம்பொன் பள்ளியாரை அறிய விரும்புவீராயின் , உங்கள் போலி அடியவர் வேடத்தையும் காமக் குரோத கோபாதிகளையும் நீங்கள் போக்கி விட்டால் அவர் உங்களுக்கு ஒழுக்கமும் தவ விரதமுமாக இருந்து உதவுவார் .

குறிப்புரை :

உலகத்தார்க்கு ஈது ஓர் உபதேசம் . ஞாலம் - உலகம் . நாலம் ( தொங்குவது ) என்பதன் மரூஉ . ஈர்ப்பாற்றலால் ஒவ்வோருலகும் வானில் உலவுதலை உணர்வோர்க்கு இப்பெயர்ப் பொருத்தம் விளங்கும் . நன்று - நல்லது . பெரிது என்றும் ஆம் . காலமும் கழியலான கள்ளத்தை ஒழியகில்லீர் :- ` களவு படாததோர் காலம் காண்பான் கறைக்கணிக்கின்றேன் ` ( தி .4 ப .3 பா .11). ` பிறைக்கணிச்சடை யெம்பெருமான் என்று கறைக்கணித்தவர் கண்ட வணக்கத்தாய் உறக்கணித்துருகாமனத் தார்களைப் புறக்கணித்திடும் புத்தூர்ப் புனிதரே ` ( தி .5 ப .61 பா .2). கறை - குற்றம் . கணித்தல் - கணக்கிடுதல் . ` பிழை கணித்தல் ` ` பேழ் கணித்து ` ( தி .12 பெரிய . அப்பர் .) ` பிற்பால் நின்று பேழ்கணித்தால் ` ( தி .8 திருவாசகம் ) ` பேழ்கணிக்க ` ( சுந்தரர் ). ` திசை நோக்கிப் பேழ்கணித்து ` ( தி .9 திருவிசைப்பா ). ` பேகணியா நின்றேன் ` ( திருவாய் மொழியுரை . 9.4.4 ) பேகணிப்பு . ( ? .9. 6.6 ) ` பேகணித்து நின்ற நிலை ` ( திருவிருத்தம் 99. உரை ) ` பேழ்கணித்து இரங்குகின்ற ` ( கம்பர் . கிட்கந்தா . அநுமப் .12 ) அப்பர் பேழ்கணித்ததைச் சேக்கிழார் அறிவித்தருளினார் , அதனைக் ` கறைக்கணித்தவர் ` ( தி .5 ப .61 பா .2) என்பது மெய்ப்பிக்கின்றது . பிழை கணிப்பார்க்கே காலம் களவுபடாது . வீண்காலப் போக்கே களவுபடல் . பிழைகணியார்க்குத் தம்மையறியாதே களவுபடும் . இத் திருமுறையில் தி .4 ப .3 பா 11 இல் ` கடைக்கணிக்கின்றேன் ` என்றது ` கறைக்கணிக்கின்றேன் ` என்றிருந்து பிழைபட்டதென்றும் தோன்றுகின்றது . ஆண்டவனைக் கடைக் கணிக்கின்றேன் என்று அடியார் சொல்லுவரோ ? ` நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கசிந்துணர்ந்திருந்தேயும் உளகறுத்துனை நினைந்துளம் பெருங்களம் செய்ததும் இலை நெஞ்சே` ( தி .8 திருவாசகம் .5.35) என்றதால் , களவறுதல் வேண்டு மென்பது விளங்கும் . அக்களவு பலவற்றுள் காலக்களவும் ஒன்று . வீண் பொழுதுபோக்கு ஒழித்துச் சிவவழிபாடாற்றிப் பிறவி தீர்ந்து பேரின் புறுதல் வேண்டுமென்பது இரண்டாவதடியின் கருத்து . ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில் , திருச்செம்பொன்பள்ளியர் சீலமும் ஆவார் நோன்பும் ஆவார் . அவற்றை நீக்கவே அமையும் . நீக்கற் பொருட்டு ( எக் ) கோலமும் வேண்டா . சீலம் - ஒழுக்கம் . நோன்பு - தவவிரதங்கள் . தி .4 ப .39 பா 7 பார்க்க .

பண் :

பாடல் எண் : 7

புரிகாலே நேசஞ் செய்ய விருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி யிமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட வெந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளியார் விருப்பம் முற்பட்ட பொழுதே தம்மிடத்தே அன்பு செய்யும் அடியவர் இதயத் தாமரையில் இடம் கொண்டிருப்பவராய் , தீ , காற்று , நிலம் , நீர் , ஆகாயம் என்ற ஐம்பூதங்களுமாகித் தேவர்கள் தொழுமாறு இருப்பவராய் , காலை நண்பகல் அந்தி என்ற மூன்று வேளைகளிலும் ஆராயப்படும் திருவடிகளை நினைந்து அடியவர் யாவரும் வணங்க , முக்காலங்களிலும் நிலையாக இருப்பவர் ஆவர் .

குறிப்புரை :

புரிகாலே - விரும்புகின்ற காலத்தே . நேசம் - அன்பு . புண்டரீகத்தார் - உள்ளத் தாமரையிலுள்ளவர் . (1) எரி ( தீ ) (2) காலே ( காற்று ), (3) விண் (4) மண் (5) நீர் என்னும் ஐந்தும் ஆகி . ` இரு நிலனாய்த் தீயாகி நீரும் ஆகி இயமானனாய் எறியுங்காற்றும் ஆகி ......... ஆகாசமாய் ...... நின்றவாறே ` ( தி .6 ப .94 பா .1) தெரிகாலே தியானித்து - ஆராய்கின்ற திருவடிகளையே நினைந்து வணங்கி , ஆயுங்கால் எனல் சிறவாது . ` நுண்ணறிவால் வழிபாடுசெய்யுங் காலுடையான் ` ( தி .1 ப .5 பா .4). முச்சந்தி :- ` முட்டாத முச்சந்தி மூவாயிரவர் ` ( தி .7 ப .90 பா .7) ` முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வன் ` (64) சந்தி ) மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளிசெய்து இறைஞ்சு அகத்தியர் ` ( தி .7 ப .65 பா .5). திரிகாலம் - இறப்பு நிகழ்வு எதிர்வு .

பண் :

பாடல் எண் : 8

காருடைக் கொன்றை மாலை கதிர்மதி யரவி னோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணு மண்ணும் பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளியார் கார்காலத்தைத் தனக்குப் பூக்கும் காலமாக உடைய கொன்றைப்பூ மாலையை ஒளிவீசும் பிறை , பாம்பு எனும் இவற்றோடு கங்கை தங்கும் சடையில் வைத்தவராய் , நீதியே வடிவானவராய்த் தாமும் அந்நீதியையே நடத்துபவராய் , பாதலம் , தேவருலகம் , மண்ணுலகம் என்ற மூன்று உலகங்களும் பதினெட்டுத் தேவகணங்களும் தம்மைத் துதிக்க , சீரோடு கூடிய பாடல் வடிவாய் உள்ளவர் .

குறிப்புரை :

கார் உடைக் கொன்றை :- ` கண்ணிகார் நறுங்கொன்றை ` ( புறம் ). நீர் ( கங்கையை ) உடைய சடையுள் திங்களைப் பாம்பொடு வைத்த நீதியார் . திங்களை பாம்பு விழுங்குமென்று அறிந்தும் உடன் வைத்தது நீதியன்று என்பது கவி மரபு பற்றிய கருத்து . ஓரணி குறித்துநின்றது . நீதியுள்ளவர் . மண் விண் பாதலம் மூன்றும் பதினெண் கணங்களும் ஏத்தச் சீரொடு கூடிய பாடலானார் . ( கலித்தொகை : கடவுள் வாழ்த்து ) ` ஏழிசையாய் இசைப்பயனாய் `.

பண் :

பாடல் எண் : 9

ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும் முனிகளா னார்க ளேத்தும்
பூவான மூன்று முந்நூற் றறுபது மாகு மெந்தை
தேவாதி தேவ ரென்றுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

திருச்செம்பொன்பள்ளியார் என்றும் அழிதல் இல்லாத வேதத்தை ஓதிக் கொண்டிருக்கும் பிரமனும் , கடல் நிறத்தவனாகிய திருமாலும் காணமுடியாதவராய் , மூத்தலோ பிறத்தலோ இல்லாதவராய் 1080 மலர்களைக் கொண்டு முனிவர்கள் வழிபடும் எங்கள் தந்தையாராய் , என்றும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாய் உள்ளார் .

குறிப்புரை :

ஓவாத - நீங்காத ( அழியாத ). ஓதம் - கடற்றிரை . மூவாத பிறப்பிலார் :- மூத்திறத்தலும் பிறத்தலும் இல்லாதவர் . முனிகள் ஏத்தும் எந்தையாகிய தேவாதிதேவர் எக்காலத்தும் திருச்செம்பொன்பள்ளியிலுள்ளார் . முனிகள் திருச்செம்பொன்பள்ளியில் தேவாதி தேவரை ஆயிரத்தெண்பது மலர்கள் கொண்டு தூவி வழிபட்டனர் . எந்தையும் அவ் ` வாசமலரெலாம் ஆனா ` ன் . மூன்று முந்நூற்றறுபதும் பூ ஆனமையும் அம்மலர் ஆயிரத்தெண்பதும் தேவாதிதேவர் ஆனமையும் இதில் உணர்த்தப்பட்டன . (360 x 3 = 1080); 108 x 10 = 1080) முந்நூற்றறுபதுநாளும் மூன்று வேளையும் பூவானமையெல்லாம் ஆகும் எந்தை எனல் சிறவாது .

பண் :

பாடல் எண் : 10

அங்கங்க ளாறும் நான்கும் அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட வாடுஞ் சங்கரன் மலையெ டுத்தான்
அங்கங்க ளுதிர்ந்து சோர வலறிட வடர்த்து நின்றும்
செங்கண்வெள் ளேற தேறுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.

பொழிப்புரை :

சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை இவரும் திருச்செம்பொன் பள்ளியார் , கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் உறுப்புகள் உதிர்ந்து தளர அவன் வாய்விட்டு அலறுமாறு வருத்தி நின்றும் ( நின்றவராயினும் ) நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் முனிவர்க்கு உபதேசித்துப் பூதகணங்கள் பாடக் கூத்தாடும் ஆனந்த வடிவினராவர் .

குறிப்புரை :

அங்கங்கள் என்றது கொண்டு அங்கியாகிய வேதங்களைக் கருதவைத்தார் நம் அப்பர் . அங்கம் ஆறு . அங்கி நான்கு . அவற்றை அந்தணர்க்கு அருளிச் செய்தார் . இறைவர் சங்கங்கள் (- பூதகணங்கள் முதலிய பலவும் ) பாடச் சங்கரன் ஆடுவான் . திருக்கயிலையை எடுத்த இராவணன் , பெருமான் அடர்த்ததால் உறுப்புக்கள் உதிர்ந்து சோர அலறினான் . செங்கண் வெள்ளேறு :- ` செங்கண் மால்விடை `.

பண் :

பாடல் எண் : 1

நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையி லனலும் வைத்தார் ஆனையி னுரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலையிற் கடற்கரைத் தலைவராக ( சேர்ப்பன் ) உள்ள பெருமான் பார்வதிபாகராய் , சிவஞானத்தை வழங்குமாறு உபதேசிப்பவராய் , உள்ளங்கையில் தீயை ஏந்தியவராய் , யானைத் தோலைப் போர்த்தவராய் , ஒருகையில் யாழை ஏந்தியவராய் , அந்தணர் கோலத்திற்கேற்பத் தாமரைப்பூ அணிந்தவராய் , கங்கையைச் சடையில் வைத்தவராய் உள்ளார் .

குறிப்புரை :

நங்கை - உமாதேவியார் . பாகம் - இடப்பால் . ஞானத்தை - சிவஞானத்தை . நவில - நாவாற் சொல்லியடிப்பட்டுப் பயில ; உபதேசிக்க . தி .4 ப .30 பா .7. அங்கை - அகங்கை . அழகிய கையுமாம் . அனல் - தீ . உரி - தோல் . தம் கையின் யாழும் வைத்தார் ` பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி ` . ( தி .6 ப .57 பா .7; ப .35 பா .2; தி .4 ப .33 பா .6; ப .112 பா .7.) தாமரை மலரும் வைத்தார் என்பது ` அந்தணனாகி ஆண்டு கொண்டருளி இந்திர ஞாலங்காட்டிய இயல்பு ` ( தி .8 திருவாசகம் . 2:- 42-3). ` அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார் கழலே ` ( ? .175) அந்தணன் ( ? 182) ` மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே ` ( ? 228) ` உருநாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ` ( ? 235) ` அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி ` ( ? 357) ` அந்தணனாவதும் காட்டி வந் தாண்டாய் ` ( ? 373) என்றவாறு அந்தணனாதல் உண்மையின் , அவர்க்குரிய அடையாளப் பூவாகிய தாமரையைக் கொண்டிருத்தல் உணர்த்திற்று . ( பிங்கலந்தை . 730 ). ` அல்லியந் தாமரைத்தார் ஆரூரன் ` ( தி .7 ப .22 பா .10).

பண் :

பாடல் எண் : 2

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக் கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் அடியவர்கள் வீடு பேற்றை விரும்புமாறும் , வேள்விகளை நிகழ்த்துமாறும் , பண்களைப் பாடுமாறும் , திருவடி வழிபாட்டில் பயிற்சி உறுமாறும் செய்தவர் . நெற்றியில் கண்ணுடைய அப்பெருமான் உலகங்களை அளக்குமாறு நீண்ட வடிவெடுத்த திருமாலுக்கும் அருள்பாலித்தவர் .

குறிப்புரை :

விண் - வீடு . துறக்கமும் பதமுத்திகளுக்கு இடமானயாவும் ஆம் . ஒவ்வொன்றையும் விரும்பும் இயல்பு வெவ்வேறு பக்குவமுடைய உயிர்கட்குண்டு . வேள்வி - ஐவேள்வி . ` அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி ` ( தி .2 ப .42 பா .4) ஆறங்கம் ஐவேள்வி . தி .3 ப .12 பா .6. ` ஐவேள்வி ஆறங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே ` (2620.) 1. கன்மம் . 2. தபம் . 3. செபம் 4. தியாநம் . 5. ஞானம் . சித்தியார் . சூ .8:- 23 . சிவதரு மோத்தரம் . ` தெய்வ , பிரம , பூத , மானிட , தென்புலத்தார் என்றைவகை வேள்வி ` ( பிங்கலந்தை . 395 ) எனல் பொருந்துமேற்கொள்க . தம்மைப் பாடப் பண் வைத்தார் . வேட்க - வழிபட . பத்தர் - தொண்டர் . பயிலல் - திருவடி வழிபாட்டிற் பயிற்சியுறல் . மண் ...... நீண்டமால் :- மாவலியிடத்தில் மூவடி மண் இரந்து மூவுலகும் அளந்த வரலாறு . மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி ` ( சிலப்பதிகாரம் ). அருள் :- மூவுலகும் அளக்கும் ஆற்றல் . நெற்றியிற் கண்ணினை வைத்தார் என்க .

பண் :

பாடல் எண் : 3

வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுட் சோதி வைத்தார்
ஆமனெய் யாட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் தம் சத்தியாகிய பெருமாட்டியை எல்லோரும் வணங்குமாறு செய்தவர் . எல்லோர்க்கும் வாழ்த்துவதற்காம் வாயை அருளியவர் . பிறையைச் சடையில் சூடி அடியார்களுடைய ஆன்மசொரூபமான ஒளியில் தம் ஞான ஒளியை வைத்து , பசு நெய்யால் தம்மை அபிடேகம் செய்யும் வாய்ப்பினை அடியர்க்கு நல்கி , அன்பென்னும் தொடர்பு சாதனத்தையும் ஆக்கி வைத்தார் . அத்துடன் மன்மதனை வெகுண்டு சாம்பலாக்கிய நெற்றிக் கண்ணராய் உள்ளார் .

குறிப்புரை :

வாமனை - தம் சத்தியாகிய வகாரத்தை . ` சிவ ` என்னும் இரண்டனுள் , சிகாரம் மணாளன் . வகாரம் மணாட்டி . யகாரம் ( ஆன்மா ) சிகாரத்தை அடைய வகாரமே அருள்வதால் , அதனை வணங்கினால் அன்றிச் சிவத்தை அடைதல் இயலாது . ` அவனருளே கண்ணாகக் காண் .` ` அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதார் `. ` வாசி அருளியவை வாழ்விக்கும் ` ( திருவருட்பயன் . 88 ). ` நெய்த்தானம் என்னும் செறிபொழிற் கோயில்மேய வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்தவாறே .` ( தி .4 ப .37 பா .2) என்றதால் , வாமதேவராகிய தம்மை வணங்க நம்மை ( ஆன்மாக்களை ) வைத்தார் எனலும் பொருந்தும் . சோமன் - சந்திரன் . சோதியுட் சோதி :- ` சுடர்ச் சோதியுட் தூயநற் சோதியுட்சோதி ` ( தி .5 ப .93 பா .7) ` சுடர்மணி விளக்கினுள்ளொளி விளங்குந் தூயநற்சோதியுட்சோதி ` ( தி .9 திருவிசைப்பா .2); ` உள்ளொளி பெருக்கி `( தி .8 திருவாசகம் ). ஆ - பசு . மன் - மன்னும் . நெய் :- பால் , தயிர் , நெய் , மன்னெய் :- வினைத்தொகை ` பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடுவானே ` தி .4 ப .63 பா .9 ` அன்பு என்னும் தொடர் ` ( திருவிளையாடல் ). பாசம் - தொடர் . காமன் - மன்மதன் . வாமனன் என்பதன் திரிபாகக் கொண்டு திருமால் என்றாரும் உளர் . ` அரியலால் தேவியில்லை `. யாம் கொண்ட பொருளில் அஃதும் அடங்கும் .

பண் :

பாடல் எண் : 4

அரியன வங்கம் வேத மந்தணர்க் கருளும் வைத்தார்
பெரியன புரங்கண் மூன்றும் பேரழ லுண்ண வைத்தார்
பரியதீ வண்ண ராகிப் பவளம்போ னிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

அந்தணர்களுக்கு வேத வேதாங்கக் கல்வியும் சீவ காருணியமும் வழங்கிய கழிப்பாலைச் சேர்ப்பனார் பெரிய மும்மதில்களும் நெருப்பு உண்ணச் செய்து , பெரிய தீயைப்போல ஞானஒளி வீசுபவராய் , பவளம் போன்ற செந்நிறத்தினராய் நீலகண்டராய் உள்ளார் .

குறிப்புரை :

அரியன - உணர்ந்தோதற்கு எளியன அல்லாதனவாகிய ( வேதமும் அங்கமும் ). அந்தணர்க்கு வேதாங்கங்களுடன் அருளும் வைத்தார் . பெரும்புர மூன்றும் பேரழல் உண்ண வைத்தார் . பருமையுடைய தீயின்வண்ணர் . பவளம் போலும் மேனியர் திருநீலகண்டர் .

பண் :

பாடல் எண் : 5

கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையில் வைத்தார்
ஆரிரு ளண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் இருட்டை விரட்டும் கொடிய மழுவினைக் கையில் கொண்டு , பெரிய இருள் நீங்க ஒளி வீசும் பிறையையும் கங்கையையும் சடையில் வைத்து , எல்லா உலகங்களையும் தம் மாயையாகிய இருளுக்குள் வைத்து அறுவகைச் சமயங்களைப் படைத்து , நீலகண்டராய் விளங்குகிறார் .

குறிப்புரை :

மழுவொளியால் இருள் நீங்கும் . தீயுடைய மழு . பிறையால் பேரிருள் கழியும் . கூர் - மிக்க . கூரிருள் - அகத்திருள் . பேரிருள் - புறத்திருள் . கார் இருள் :- நஞ்சினால் ஆகிய கருமை நிறம் . மாயைக்குள் எல்லா அண்டங்களும் இருத்தலின் , அதனை ஆரிருள் ( நிறைந்த இருள் ) என்றார் . அறுவகைச் சமயம் : தி .4 ப .14 பா .3; ப .33 பா .6; ப .45 பா .6; ப .100 பா .4,7; தி .5 ப .89 பா .6, தி : 6 ப .50 பா .7, ப .65 பா .7, ப .68 பா .5.

பண் :

பாடல் எண் : 6

உட்டங்கு சிந்தை வைத்தா ருள்குவார்க் குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமு நாவில் வைத்தார்
கட்டங்கந் தோண்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் தம்மையே தியானிப்பவருக்கு அதற்கு ஏற்ற அலைவில்லாத மனத்தை அருளி அதனைத் தாம் உள்ளே தங்கும் இருப்பிடமாக வைத்தவர் . தேவர்கள் விரும்பித் தங்கி அவி நுகரும் வேள்விகளையும் அவற்றால் நாட்டில் கொடிய துயர் நீங்குதலையும் அமைத்தவர் . நள்ளிருளில் கூத்தாடும் பெருமான் ஞானத்துக்கு உரிய நூல்களைப் பயிலும் ஆற்றலை நாவில் அமைத்துக் கொடுத்தவர் . தம் தோள்மேல் கட்டங்கப் படையைக் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

உள் தங்கு சிந்தை :- உள்ளத்திற் பொருந்திய சிந்தனை . உள்குவார் - இடைவிடாது நினைப்பவர் . விண் + தங்கு = விட்டங்கு . ` ணகார விறுதி வல்லெழுத்தியையின் டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே ` ( தொல்காப்பியம் . எழுத்து . 302 ) விண்ணில் தங்குதற்கு ஏதுவான வேள்வி . மழை பெயுங்கிரமம் தங்குதற்கிடமான வேள்வி . வெந்துயர் - பிறவித் துயரம் முதலிய . நள் தங்கு நடம் - ` நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் `. ஞாலமும் - ஞாலத் துயிர்களும் . நவில - பயில ; புகழ் பேச . கட்டங்கம் - மழு .

பண் :

பாடல் எண் : 7

ஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே யுணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார்
வானப்பே ராறு வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் புலால் மயமான இவ்வுடல் தொடர்பான பெயர்கள் நீங்கத் தம் அடியவர் என்ற பெயரை வழங்கி , ஞானநூல்களை ஓதியே ஞானம் பெறும் வழியை வைத்து , ஞான தேகத்திற்குரிய கடவுளை நினைப்பூட்டும் ஞானப்பெயரையே சொல்லி அழைக்குமாறும் செய்து திருவடி ஞானத்தையும் அந்த ஞானம் தங்குதற்குரிய இதயத்தையும் நல்கி , கங்கையைச் சடையில் வைத்து , திருமாலுக்குச் சக்கரம் நல்கித் திருக்கானப்பேர் என்ற திருத்தலத்தைத் தாம் விரும்பிஉறையும் இடமாகக் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

ஊனப்பேர் - ஊனுடற் சார்பான பெயர் . ஓதியே உணர :- இறைவனை உணர ஓதல் அடிப்படையானது . ஓதல் ஓது வித்தல் , கேட்பித்தல் , கேட்டல் , நினைத்தல் , தெளிதல் , நிற்றல் என்பவற்றுள் முதலாவது ஓதல் . ` ஞானநூல் தனை ஓதல் ஓதுவித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான் கேட்டல் நன்றா ஈனம் இலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞானபூசை\\\\\\\\\\\\\\\' ( சித்தியார் . சுபக்கம் . 275 ) என்றதால் , ஞான பூசைக்கு ஓதலே தொடக்கமாகும் . உணரல் - ஞானம் . ` கேட்டல் முதலிய நான்கும் ஞானம் . ` கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கில் ஞானம் ` ( ? .276 ) என்றதால் ஞானத்திற்குக் கேட்டல் தொடக்கம் ஆதல் அறியப்படும் . ஞானப் பேர் நவில - ஞான ( தேக ) த்துக்குரிய பெயர் பயில . கடவுள் நினைப்பூட்டும் பேர் ஞானப் பேர் . உலகப் பொருட் பேர் ஊனப் பேர் என்று கொண்டு அவற்றை முறையே நவிலவும் ஒழியவும் வைத்தார் எனலுமாம் . ஞானமும் நடுவும் வைத்தார் : ` நடுவுணர் பெருமையர் ` ( தி .3 ப .84 பா .6) ஞானம் - திருவடி . நடு - நெஞ்சு நடு . ` திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன் ` ( தி .7 திருத்தொண்டத் தொகை ) ` திருநின்ற செம்மை ` ( தி .4 ப .8 பா .1) என்றவற்றால் ` நடு ` செம்மையுமாம் . இவற்றால் , ஆளுடைய நம்பிகள் ` சொல்லியவே சொல்லி ஏத்து ` ம் பெற்றியுடையவர்கள் ஆதல் புலனாகும் . வானப் பேராறு - கங்கை . வைகுந்தற்கு - திருமாலுக்கு . ஆழி - சக்கிராயுதம் . கானப்பேர் :- ` காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேர் ` ( தி .6 ப .99 பா .7) என்று ஈற்றுத் திருப்பதிகத்துள் . கழுக்குன்றத்து உச்சி நினைவுடன் வைத்துத் தம் காதல் மிகுதி காட்டுவாரானார்.

பண் :

பாடல் எண் : 8

கொங்கினு மரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுண் முத்தம் வைத்தார் சாம்பரும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமு முண்டுவைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் அரும்பில் மகரந்தத்தை வைத்தவர் . தீயவார்த்தைகள் பேசுதலைப் போக்க திருமுறை ஓதுதலான நல்ல வழியை வைத்தவர் . சங்கினுள் முத்துக்களை வைத்தவர் . தாம் பூசத் திருநீற்றைப் பொருளாகக் கொண்டவர் . உலகம் உய்ய நால்வேதமும் அங்கமும் பரவச் செய்தவர் . உலகம் உய்ய விடம் உண்டவர் . மகிழ்வாக உறங்க இரவையும் , செயற்பட்டு உழைக்கப் பகற்பொழுதையும் அமைத்தவர் .

குறிப்புரை :

கொங்கு - மகரந்தம் . மணம் . கெடுக்கக் கூற்றங்களை வைத்தார் . சாம்பல் - திருநீறு . ` சாம்பற்பூச்சு ` ( தி .1 ப .23 பா .1). வேதமும் அங்கமும் . ஆலம் - நஞ்சு . உம்மை கொடுமை மிகுதியுணர நின்றது . உண்ணத் தகாத நஞ்சினையும் உண்டு . தம்மை அது கொல்ல வல்லாதபடி , உள்ளும் இறங்காமல் , வெளியிலும் ஏறாமல் கழுத்துள் நிறுத்தி வைத்தார் . இரவும் பகலும் படைத்தார் .

பண் :

பாடல் எண் : 9

சதுர்முகன் றானுமாலுந் தம்மிலே யிகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற வெரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன்றன்னைக் காறனிற் பிதிரவைத்தார்
கதிர்முகஞ் சடையில்வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

பொழிப்புரை :

கழிப்பாலைச் சேர்ப்பனார் பிரமனும் திருமாலும் தம் இருவருள் பரம்பொருள் யாவர் என்று மாறுபடுதலைக் கண்டு , கண்கூடாக ஆதியும் அந்தமும் காணமுடியாத தீத்தம்பத்தைப் படைத்தார் . கடுமையான முகத்தை உடைய கூற்றுவனைக் காலினால் சிதறவைத்தார் . பிறையைச் சடையில் வைத்தவருமானார் .

குறிப்புரை :

சதுர்முகன் - நான்முகன் . தம்மிலே - தாம் இருவருள்ளே . இகல - மாறுபட . எதிர்முகம் - கண்கூடு . எரிஉரு - ` ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ` வடிவம் . பிதிர்முகன் - பிதிர்ந்த முகத்தினன் . காலன் - எமனை . கால் - திருவடி . கதிர்முகம் - பிறை . தி .6 ப .56 பா .10. பார்க்க .

பண் :

பாடல் எண் : 10

மாலினா ணங்கை யஞ்ச மதிலிலங் கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டெ டுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினா னோக்கி நக்கு நொடிப்பதோ ரளவில் வீழக்
காலினா லூன்றி யிட்டார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

பொழிப்புரை :

மதில்களை உடைய இலங்கைக்கு மன்னனாகிய இராவணன் என்ற , வேல் ஏந்திய வீரன் கோபங்கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க , அதுகண்டு தம்மிடம் பெருவிருப்புடைய பார்வதி அஞ்ச , அதனைக்கண்ட அளவில் வேதங்களை ஓதுபவனும் பூணூல் அணிந்தவனுமாகிய அவ்விராவணனை மனத்தால் நோக்கி , அவன் ஒரு நொடியில் ஆற்றலிழந்து மலையடியில் விழுமாறு , கால் விரலால் அவனை அழுத்தி நசுக்கிவிட்டவர் கழிப்பாலைச் சேர்ப்பனாரே .

குறிப்புரை :

மாலினாள் - வேட்கை யுடைய உமை . ` மால் கொடுத்து ஆவிவைத்தார் ` ( தி .4 ப .33 பா .4) என்புழிப்படும் பொருளுமாம் . ` மாலினை மால் உறநின்றான் ` ( தி .4 ப .88 பா .1). மன்னனாகிய வேலினான் . வெகுண்டு - சினந்து . வேதநாவன் :- மறையுங் கொப்பளித்த நாவர் ` ( தி ,4 ப .24 பா .4). நூலினான் - வேதாகம முதலியவற்றைஅருளினவன் . அவற்றால் அறிவிக்கலானவன் . நக்கு - நகைத்து . நொடிப்பது - கைந்நொடிக்குமளவு . கால் :- காலின் பெருவிரற்கு ஆகுபெயர் . ` வேதநாவன் ` ` நூலினான் ` என்பன இரண்டும் இராவணனைக் குறித்தன எனக்கொண்டு , ` சாமவேத கானம் பாடியவன் , நூல்களையுணர்ந்தவன் , பூணுநூலணிந்தவன் என்று உரைத்தல் பொருத்தம் உடைத்து .

பண் :

பாடல் எண் : 1

பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி யுணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

துவாரங்கள் பல உடைய உடம்பெனும் மாயப் பண்டங்களாயப் போகந் தரும் சாதனங்களான மாதர் தொகுதியில் ஏற்படும் பற்றை அறவொழிக்க வேண்டில் சிவபெருமானுக்குத் தீபம் ஏற்றித் தூபம் இட்டு வழிபடும் திருத்தொண்டுகளை விரும்பி மேற்கொள்ளுங்கள் . உள்ளமாகிய தகழியிலே உயிராகிய திரியை முறுக்கியிட்டு ஞானமாகிய தீபமேற்றிக் கொண்டிருந்து உணரு மாற்றால் உணரவல்லவர்களின் கொடுமைகள் அனைத்தையும் போக்குவர் திருக்கடவூர்ப் பெருமான் .

குறிப்புரை :

பொள்ளத்த - துளைகளையுடைய . ` பொள்ளல் ` என்பதன் அடியாக ` பொள்ளத்த ` என்ற பெயரெச்சம் அமையாது . பொள்ளம் - துளை . காயம் - உடல் . மாயப் பொருள் - பொய்ப் பொருள் . போகமாதர் - போகத்திற்குத் துணையாகிய மகளிர் . வெள்ளம் - மிகுதி . ` போக ` என்று வினையெச்சமாகக் கொண்டு , ` புலன்களைப் போகநீக்கி ` ( தி .4 ப .32 பா .9) ` பங்கத்தைப் போகமாற்றி ` ( தி .4 ப .75 பா .8) ` மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப் போகமாற்றி ` ( தி .6 ப .5 பா .1) என்புழிப்போல உரைத்தலுமாம் . விளக்குத் தூபம் :- உம்மைத் தொகை . ` தூப தீபம் `. உள்ளத்த திரி - உள்ளமாகிய தகளியின்கண் உள்ள உயிராகிய திரி . உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிர் எனும் திரி மயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் , கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே ` (தி .6 ப .5 பா .4) என்பதில் ஞான விளக்கிற்குரியன அனைத்தும் உணருமாறுணர்த்தலும் காண்க . கள்ளம் :- (தி .6 ப .45 பா .1 கொடுமை . (தி .6 ப .31 பா .3. ` நறப்படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறுஞ்சாந்தம் கொண்டேத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவாரூர் ` ( தி .6 ப .30 பா .5).

பண் :

பாடல் எண் : 2

மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி யாடிடும் பத்தர்க் கென்றும்
கண்ணிடை மணியர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

இந்நிலவுலகிலே உமக்குக் கிட்டியுள்ள மனித உடம்பாகிய கூட்டினைப் பெருமையாகக் கருதி நீங்கள் மயக்கந்தரும் இவ்வுலக வாழ்வில் ஈடுபடுவீராயின் , யமலோகத்திலுள்ள தருமராசர் உம் உடம்பிலிருந்து உயிரைப் பிரிக்க விரும்பினால் அதனை அப்பொழுது தடுக்க வல்லவர் யாவர் உளார் ? பண்களோடு சுவையாக எம்பெருமான் புகழைப் பாடிக் கூத்தாடும் அடியவர்களுக்கெல்லாம் கண்மணியைப் போன்றிருந்து அவர்கள் உய்ய வழிகாட்டுகிறார் கடவூர் வீரட்டனார் .

குறிப்புரை :

மண்ணிடை - ( இந் ) நிலவுலகில் , குரம்பை - கூடு ; இங்கு உடற்கூடு . ` பிணிமேய்ந்திருந்த இருகாற் குரம்பை இது நான் உடையது ` ( தி .4 ப .113 பா .2). ` மண்ணாய மாயக்குரம்பை ` ( தி .6 ப .12 பா .5). மதித்து - பொருளாகக் கருதியுணர்ந்து . மையல் - மயக்கம் ; செருக்கு . தரும ராசன் :- ` எமதருமன் ` ( தி .1 ப .49 பா .2). விலக்குவார் ஆர் - உடலையும் உயிரையும் கூறுபடுத்தல் வேண்டா என்று தடுத்துக் காப்பவர் எவர் ? திருக்கடவூர் வீரட்டானர் அன்றி வேறு ஒருவரும் இலர் . பத்தர்க்குப் பாட்டும் ஆட்டும் பண்ணின்பமும் உரிமையாதலை உணர்க . ` கண்மணி போலும் :-` அண்மையும் எளிமையும் இன்றியமை யாமையும் ஒப்புயர்வில்லாத வண்மையும் பிறவும் குறித்த உவமம் . ` கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் காவாய் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் `. ` அணியாய்த் திருநீறணிவார்கள் கண்ணின் மணியே ... ... பணியத் தொடும் போது மூர்ச்சை துயர் அகல நீற்றை இடும்போதகல்வாய் இதென் `? ( சன்மார்க்க சித்தியார் .6 ) ` முகத்தே இருகண் ... ... சிவாய அருட்குருவே ` ( நிட்டை விளக்கம் . 23 ) ` உலகவுயிர்க்கெல்லாம் ஒரு கண்ணே ` ( இருபா இருபஃது . 20 ).

பண் :

பாடல் எண் : 3

பொருத்திய குரம்பை தன்னுட் பொய்ந்நடை செலுத்து கின்றீர்
ஒருத்தனை யுணர மாட்டீ ருள்ளத்திற் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினி லிருப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

உயிரைத் தன்னுள் பொருந்தச் செய்த மனித உடம்பில் இருந்து பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர் . உணர வேண்டிய ஒப்பற்ற கடவூர் வீரட்டராகிய அவரை உணர்ந்து , பெருமானாரை உணராதீராய் மனத்தில் ஏற்பட்டுள்ள தீங்கான எண்ணங்களை நீக்காதீராய் உள்ளீர் . தம்மைத் துன்புறுத்தும் ஐம்பொறிகளாகிய களிறுகளைச் செயற்படாதொழியச் செய்யும் வழியிலே முயன்று அவற்றை அடக்கிய ஞானியருடைய கருத்தில் எப்போதும் உள்ளார் கடவூர் வீரட்டனார் .

குறிப்புரை :

பொருத்திய - உயிரைத் தன்னுட் பொருந்தச் செய்த . குரம்பை (- குடில் ) தி .4 ப .25 பா .6; ப .31 பா .2; ப .42 பா .1; ` முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடுகுரம்பை ` ( தி .4 ப .54 பா .3). பொய்ந்நடை :- மலநடை . அருள் நடை செலுத்தல் வேண்டும் என்றவாறு . ஒருத்தன் - ` ஏகன் ` ` ஒன்றலா வொன்று ` ` ஈறலாவொன்று `. வருத்தின களிறு :- ஐம்புலக்களிறு . ` தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி ... ... வழிபாடு செய்யும் இடம் `. வருத்தும் ஆ - வருத்தஞ்செய்யும் ஆறு . அக்களிற்றை வருத்தும் வன்மை சிவனடியார்க்குள்ளது . வல்லார் - பொறிவாயிலைந்தவித்த ஞானநெறியார் . ` புலன் அடக்கித் தம்முதற்கட் புக்குறுவர் போதார் தலனடக்கும் ஆமைதக ` ( திருவருட்பயன் . 94 )

பண் :

பாடல் எண் : 4

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

வைகறையாமத்தில் நீராடிப் பெருமானிடத்தில் பத்தர்களாகி அரும்புகளையும் மலர்களையும் முறைப்படி பறித்துக் கொண்டு உள்ளத்தில் அன்பை ஆக்கி விருப்பத்தோடு நல்ல விளக்குகளையும் தூபங்களையும் முறைப்படி இட்டு வழிபடவல்ல அடியவர்களுக்குக் கருப்பங்கட்டி போல இனிப்பவராவார் கடவூர் வீரட்டனார் .

குறிப்புரை :

பெரும்புலர்காலை :- தி .4 ப .3 பா .8. இரவின் நான்காவது கூறு . பித்தன் - தம் திருவடிக்கே பித்துண்டாக்குமவன் . ` பித்துப் பத்த ரினத்தாய் ` விளைப்பவரும் ஆம் . பத்தர் - தொண்டர் . பித்தரென்பதும் பாடம் . அரும்பொடு ... கொண்டு :- ` அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணாவூரும் ... ஊரல்ல அடவிகாடே ` ( தி .6 ப .95 பா .5). ஆர்வம் - பெறக்கருதிய பொருள்மேற் செய்யும் பற்று . ` விரும்பிநல் விளக்குத் தூபம் ` :- பா .1 ( காஞ்சிப் . சிவ புண்ணியப் . 65 ). விதி - வேதாகமவிதி . இடவல்லார் - இடுதற்குப் பொருள் வலிமை , துணை வலிமை , மன வலிமை முதலிய பலவும் உடையவர் . கரும்பினிற் கட்டி :- கருப்பங் கட்டி . கரும்பினது இனிய கட்டி . ` திருப்புத்தூரனைச் சிந்தை செயச் செயக் கருப்புச் சாற்றினும் அண்ணிக்கும் காண்மினே ` ( தி .5 ப .61 பா .5). தி .6 ப . 66 பா . 9, தி .5 ப .93 பா .7 பார்க்க .

பண் :

பாடல் எண் : 5

தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே விளக்கத்திற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கடவூர் வீரட்டனீரே ! நாணத்தக்க செயல்களையே செய்து வாழ்நாளைக் கடத்தி , ஏற்ற செயல் எதுவும் செய்யாமல் , தவறு செய்வதைத் தடுத்து நல்வழிப்படுத்துவாரும் ஒருவரும் இல்லாமையால் , செஞ்சுடர் விளக்கத்தில் தானே கூவித் தானே அடங்கும் கோழியைப் போல உள்ளேன் . என் மனத்தினுள்ளே ஐம்பொறிகளும் கலக்கத்தைத் தருகின்றன . யமனுடைய ஏவலர்கள் வந்து கலக்குதலால் யான் யம பயத்தாற் கலங்குகின்றேன் .

குறிப்புரை :

தலக்கம் - இலச்சை ; நாணம் ; வெட்கம் . ` தலக் கற்றுச் சொல்லும்படியான ஆற்றாமை ` ( திருவாய்மொழி . ஈடு . 10. 10 ). தலக்கமே - வெட்கப்படத்தக்க இழி செயல்களையே ; ஆகுபெயர் . ` தக்கவாறு ஒன்றும் இன்றி ` என்றமையாற் செய்து வாழ்ந்தவாறு தகாதவாறு என்பது புலனாயிற்று . அது ` தலக்கமே செய்து வாழ்ந்தது ` ஆகும் . தகாததாதலின் விலக்குதல் வேண்டிற்று . விலக்குவாரிலர் . ` விளக்கத்திற் கோழி போன்றேன் ` என்று இறந்தகாலத்தாற் குறித்தார் . ` செய்து வாழ்ந்து என்றதும் அக்காலத்தே . தக்கவாறு ஒன்றும் இன்று என்று தீர்த்துரைத்தார் . தகாதவாறு செய்தலை விலக்குவாரிலர் என்று தெளிவித்தார் . இவற்றை நோக்கின் , கோழியை விட்டிலாகக் கொண்டுரைத்தல் பொருந்தாதெனல் புலப்படும் . கோழிக்கு விட்டில் என்ற பொருளில்லை . செஞ்சுடர் விளக்கத்திற் கூவுங் கோழியை விலக்குவார் உளரோ ` கோழி தானே கூவித் தானே அடங்கும் . அவ்வாறே தாம் தகாதவாறு செய்தலை விலக்குவாரின்மையால் தாமே செய்து தாமே தவிரற்பாலராயிருந்ததை அறிவித்து , கலக்க வந்த காலனார் தமர்களை விலக்கி மார்க்கண்டேயரைக் காத்ததுபோல , அத்தகாத செயலின் விலக்கித் தம்மையும் காத்தருள வேண்டினார் . மலங்கல் , மலக்கல் , மலக்கம் . ` ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய ` ( தி .8 திருவாசகம் . 1). ` மலக்கிட்டு ( தி .4 ப .1 பா .8). மலக்குவார் - கலக்குவார் . ( திருவிருத்தம் . 57; திருவாய்மொழி . 6.4.9 ). ` கலக்குகின்றேன் ` எனல் பொருந்தாது . ` வீரட்டனீரே ` என்று முன்னிலையாக தி .4 26 ஆவது திருப்பதிகத்திற் கூறியதுபோல இது முதலிய நான்கனீற்றிலும் உளது .

பண் :

பாடல் எண் : 6

பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரி றைத்து
வழியிடை வாழ மாட்டேன் மாயமுந் தெளிய கில்லேன்
அழிவுடைத் தாய வாழ்க்கை யைவரா லலைக்கப் பட்டுக்
கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கடவூர் வீரட்டனீரே ! குறைபாடுகள் யாவும் உள்ள இந்த உடம்பாகிய பயன் அற்ற பாழ் நிலத்தில் , பயன்படும் நீரை வீணாகப் பாய்ச்சி , நேரிய வழியில் வாழ மாட்டாதேனாய் , இவ்வுலக வஞ்சனையை உள்ளவாறு தெளிந்து உணரமாட்டேனாய் , பாழாகும் வாழ்க்கையை உடைய ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போல உள்ளேன் .

குறிப்புரை :

பழியுடையாக்கை :- பொய்யுடல் , புலாலுடல் , அழியுடல் , சோற்றுத் துருத்தி , புழுக்கூடு , வீறிலிநடைக்கூடம் என்பன முதலியவாகப் பழிக்கப்படும் உடம்பு . பட்டினத்தார் அருளிய அகவற்பாக்களை இங்கு நோக்குக . பாழுக்கே - பாழான நிலத்துக்கே . விளை பயனில்லாதது பாழ் எனப்பட்டது . ` ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே ` ( தி .8 திருவாசகம் . 325). ` பாழுக்கே நீர் இறைத்தேன் ` ( தி .4 ப .33 பா .8; ப .52. பா .9). வழியிடை - வேதாகமங்களில் விதித்த வழியில் ; அருள் நெறியில் ; ` நிலை நிலையாப் பொருளுணர்ந்து பற்றிகந்து கரணம் ஒரு நெறியே செல்லப் புலனெறி நீத்து அருள் வழிபோய்ப் போதமாந் தன்வலியைப் பொத்தி நின்ற மலவலி விட்டு அகல அரா உமிழ்ந்த மதிபோல் விளங்கி மாறியாடுந் தலைவனடி நிழல் பிரியாப் பேரின்பக் கதி அடைந்தான் `. ( திருவிளையாடல் . 27-28 .) மாயம் - மயக்கம் . தெளிவுக்கு மறுதலை அது . வாழ்க்கை நிலையில்லாதது . அழிவு :- காரியத்துவம் நீங்கிக் காரணத்துவம் உறுதல் . ஐவர் :- ` காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றலொட்டார் மாயமே என்றஞ்சுகின்றேன் ` ( தி .1 ப .50 பா .7). ` அஞ்சினால் அடர்க்கப் பட்டிங்குழிதரும் ஆதனேன் ` ( தி .4 ப .26 பா .3). ` கழியிடைத் தோணி போன்றேன் `:- கரையேறாமலும் கடலிடை யாடாமலும் இருக்குந் தோணிபோல உடலிடை இனிது நில்லாமலும் உன் திருவருள் வெள்ளத்தில் முழுகாமலும் உள்ளேன் .

பண் :

பாடல் எண் : 7

மாயத்தை யறிய மாட்டேன் மையல்கொண் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தா னினைய மாட்டே னீதனேன் நீசனே னான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

தலைக்கோலம் அணிந்தவனே ! பிறப்பில்லாதவனே ! கடவூர் வீரட்டனே ! பொய்ப்பொருளைப் பொய்ப்பொருள் என்று அறியமாட்டாதேனாய் மயக்கம் பொருந்திய மனத்தேனாகிப் பேயை ஒத்து அலைந்து திரிந்து , கோட்டானைப் போலத் தெளிவின்றிக் கலங்குகிறேன் . அன்போடு உன்னைத் தியானிக்க ஆற்றல் இல்லாத , கீழாருள் கீழேனாகிய அடியேன் , இவ்வுடம்பை இழப்பதற்கும் மனம் இல்லாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

மாயத்தை அறியமாட்டேன் - பொய்ப் பொருளைப் பொய்ப் பொருள் என்று ( ம் மெய்ப்பொருளை மெய்ப் பொருள் என்றும் ) அறியவலியில்லேன் . மையல் - மயக்கம் . பேய் ஒத்தல் அலைந்து திரிதலால் . கூகையாதல் தெளிவின்றிக் கலங்குதலால் . கூகை :- கூவுதலுடையது என்னும் காரணப் பொருளது . கோட்டான் . பிஞ்ஞகன் :- தலைமுடியழகினன் . ` பிறவா யாக்கைப் பெரியோன் ` ( சிலப்பதிகாரம் ). நேயம் - அன்பு . ` நீதனேன் ` ( தி .4 ப .54 பா .6,8) என்று பாடம் இருந்ததோ ? நீதனே என்றல் பொருந்தாது . காயம் - உடல் .

பண் :

பாடல் எண் : 8

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.

பொழிப்புரை :

கடவூர் வீரட்டனீரே ! சிவனடிப் பற்றில்லா வாழ்க்கை வாழ்ந்து பயனற்ற பாழ் நிலத்துக்கு நீர் இறைப்பாரைப் போல அறிவு ஆற்றல்களை வீணாக்கிவிட்டேன் . அநுபவித்தால்தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதிந்த வார்த்தைக்கு இலக்கியமாக உள்ளேன் . யான் எதற்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ! யான் யாது செய்ய வல்லேன் ! ஐம்பொறிகள் வசப்பட்டு வருந்தும் துயரத்தாலே ஞான நூல்களை ஞானதேசிகர்பால் உபதேச முறையில் கற்கவில்லை . ஆதலின் அடியேனுக்குப் பற்றுக் கோடாக இருப்பார் ஒருவரையும் காணேன் .

குறிப்புரை :

பற்று - சிவனடிப் பற்று . பற்றிலா வாழ்க்கை - பாசப் பொருட்டொடர்பும் பசுத்துவமும் உடையதாய் இன்ப துன்பங்களை நுகர்ந்து செல்லும் உயிர் வாழ்க்கை . பாழுக்கே நீர் இறைத்தேன் :- பா . 1 குறிப்பு நோக்குக . உற்றலாற் கயவர் தேறார் - பட்டல்லாமல் கீழோர் தெளியார் . உற்ற போதல்லால் உறுதியை உணரேன் ` ( தி .7 ப .14 பா .3). பட்டறி , கெட்டறி , பத்தெட்டு இறுத்தறி என்பது பழமொழி . கட்டுரை - உறுதி பயக்குஞ் சொல் ; பழமொழி ; சொற்றொடராக அநுபவத்தினைக் கட்டியுரைப்பது . எற்று - எத்தன்மையது . இடும்பை - ` இடும்பைக்கு இடும்பை ` ` இடும்பைக்கு இடும்பை படுப்பர் ` ( குறள் ). ஞானம் - ஞானநூல்கள் . ஆகுபெயர் . ஏதும் - ஒன்றும் ( சிறிதும் ). பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கேநீர் இறைத்தேன் :- கடவுள் திருவடிப் பற்று இல்லாத பாசப் பற்றுடைய துன்ப வாழ்க்கையே கொண்டு , மீண்டும் மீண்டும் உடல் எடுக்கும் பாழ்த்த பிறவிக்கே வழிதேடினேன் . அதனால் ஒரு பயனும் இல்லை . நெல் முதலியவற்றிற்கு நீர் இறைத்துப் பயன் பெறாமல் , பாழ் நிலத்திற்குப் பாய்ச்சிப் பயனொன்றும் அடையாமையை ஒத்தது அது . குறிப்பு . பா .6. பார்க்க .

பண் :

பாடல் எண் : 9

சேலினே ரனையகண்ணார் திறம்விட்டுச் சிவனுக்கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய்யோடு பலபல வாட்டியென்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கடவூர் வீரட்டனார் , சேல்மீன் போன்ற கண்களை உடைய மகளிரிடம் ஈடுபடும் செயலை விடுத்துச் சிவபெருமானுக்கு அன்பனாய் எம்பெருமானை பஞ்சகவ்வியம் முதலியவற்றால் அபிடேகித்து உலகமயக்கத்தைப் போக்கிச் சிவ வழிபாட்டில் நிலை பெற்ற மார்க்கண்டேயனுக்காகக் கூற்றுவனை உதைத்தவர் .

குறிப்புரை :

சேலின் நேர் அனைய - சேல் மீனை நிகர் ஒத்த . கண்ணார் திறம் - கண்ணையுடைய மகளிர் காமத் திறம் சிவனுக்கு அன்பு - ` சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சு `. ` அன்பலாற் பொருளும் இல்லை `. பால் தயிர் நெய் :- ` நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்யலுற்றார் `. அவற்றொடு பல பல என்றது அபிடேகத்துக்குரிய பிற பொருள்களை . மால் - மயக்கம் . தவிர - நீங்க . நின்ற - சிவபூசையை விடாது செய்து நிலைபெற்ற . அன்று - மார்க்கண்டேயரது பதினாறாவதாண்டு நிறைவில் . ` கட்டிலங்கு பாசத்தால் வீசவந்த காலன்றன் காலம் அறுப்பார் ... ... வெண்ணி ... விகிர்தனாரே ` ( தி .6 ப .59 பா .7)

பண் :

பாடல் எண் : 10

முந்துரு விருவ ரோடு மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவ ரிருடிக ளின்பஞ் செய்ய
வந்திரு பதுக டோளா லெடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

ஐந்தொழிற் கருத்தாக்கள் நிரலில் முற்படக் கூறப்படும் அயன் , அரி எனும் இருவருடன் உருத்திரன் , மகேசன் , சதாசிவன் என்போரும் கூடி அமையும் ஐவராகவும் தாம் ஒருவரே இருந்து கொண்டு , இந்திரனும் தேவர்களும் முனிவர்களும் தம்மை வழிபட்டு இன்பத்தை விளைக்கவும் , கயிலையை நெருங்கி வந்து அதனை இருபது தோள்களாலும் பெயர்த்த இராவணனுடைய வலிமையை அழித்து அவன் வாயினால் இசைப் பாடல்களைக் கேட்டு அருளினார் கடவூர் வீரட்டனார் .

குறிப்புரை :

முந்து உரு இருவர்:- படைத்தல் காத்தல் செய்யும் உருவத்தையுடைய அயன் அரி. மூவர் - உருத்திரன், மகேசன், சதாசிவன், வீரட்டனாரே இருவரோடு மூவரும் ஆயினாரும் கந்திருவங்கள் கேட்டாருமாவார். ஆயினாரும் கேட்டாரும் வீரட்டனாரே என்றியைத்தலும் பொருந்தும். கேட்டார் என்பதொடும் உம்மை கூட்டுக. இந்திரனும் தேவர்களும் இருடிகளும் சிவபிரானை வழிபட்டு இன்பத்தை விளைக்க, இராவணன் வந்து மலையை எடுத்து அம்பிகை நடுங்குதலாகிய துன்பஞ் செய்தது அடாதது. அதனால், அவன் வலியை வாட்டினார். வாடியவன் வாட்டந் தீர்க்கப் பாடிய இசைகளைக் கேட்டு இரங்கி அருள் செய்தார். கந்திருவங்களைக் கந்திரம் என்றார் முன்னர். காந்தாரத்தைக் கந்தாரம் என்றதுபோலக் கந்திரம் என்றார் எனலும் கூடும். தி.4 ப.33 பா.1 பார்க்க. `இருபதுகள்தோள்` என்பதில் விகுதி பிரித்துக் கூட்டித் தோள்கள் என்க.

பண் :

பாடல் எண் : 1

உரித்திட்டா ரானை யின்றோ லுதிரவா றொழுகி யோட
விரித்திட்டா ருமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்க னோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டா ரெயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூர்ப் பெருமானார் குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்தார் . யானைத்தோலை உரித்ததனையும் போர்த்ததனையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சித்தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதனைக் கண்டு , சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்தும் ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித் தாமும் பற்கள்தோன்றச் சிரித்துவிட்டார் .

குறிப்புரை :

உதிரம் - இரத்தம் . ஆறாய் ஒழுகி ஓடும்படி ஆனையைத் தோலுரித்தார் . உரித்த தோலைத் தன் திருமேனிமேல் விரித்துப் போர்த்திட்டார் . அவ்வுரித்தலையும் போர்த்தலையும் கண்ட அம்பிகை அஞ்சி நடுங்கிய கலக்கத்தை நோக்கினார் சிவனார் . அத்தோலைச் சிறிதுநேரம் பொறுத்திட்டார் . பொறுக்கும் ஆற்றல் இல்லாதவராகத் தோற்றினார் . அதனால் அம்பிகைக்கு அலக்கல் ( அசைவு ) மிகுதலைத் தீர்க்க , தம் பற்கள் தோன்றத் தாமும் சிரித்திட்டார் . யானையை உரித்த கோலத்தினை நோக்கி ` எயிறு ` என்றார் . எயிறு யானையுரிக்க மேற்கொண்ட வைரவக் கோலத்துக்குரிய லகிரந்தமாகலாம் . பயறு , உளுந்து , வரகு , தினை முதலியவற்றாலும் ஊர்ப்பெயர்கள் உண்மை இப்பயற்றூர் , உளுந்தூர் , வரகூர் , திருத்தினைநகர் முதலியவற்றால் அறிக . ` அலக்கணோக்கி ` என்னும் பாடத்திற்கு விதிர்த்த அலக்கண் என்று பெயரெச்சத்தொடராகக் கொண்டுரைக்க .

பண் :

பாடல் எண் : 2

உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவ ரூழி யூழி
பவந்திட்ட பரம னார்தா மலைசிலை நாக மேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் பல ஊழிகளையும் படைத்த பெருமானாராய் , விரும்பிப் பார்வதிபாகராய் , மலையை வில்லாகக் கொண்டு , பாம்பை அதற்கு நாணாகக் கட்டி , உலகங்களில் பலரையும் சென்று பற்றி வருத்திய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு , வெகுண்டு சிவந்த கண்களையுடையவர் .

குறிப்புரை :

ஒரு பாகத்தில் உமையம்மையாரை வைத்து உவந்தவர் ; உவந்து வைத்திட்டவர் ; உவந்து இட்டு வைத்தவர் . ஊழி ஊழி - ஊழிதோறும் . பவம் என்னும் வடசொல்லடியாகப் பவந்து என்னும் ஒரு வினையெச்சத்தைத் தோற்றி , அதனொடு இட்ட என்னும் பெய ரெச்சத்தைச் சேர்த்துப் ` பவந்திட்ட ` என்றதாகக் கொண்டு ` தோன்றிய ` என்றுரைத்தனர் பிறர் . மலைச்சிலை - மேரு மலையாகிய வில் . நாகம் - வாசுகி என்னும் பாம்பாகிய கணை . அக் கணையில் மூன்றனுள் ஒரு கூறு வாசுகிக்குரியதேனும் , இவ்வாறுகுறித்தல் மரபு . கவர்ந்திடுதல் - தாம் சென்று பற்றுதல் ; முப்புரத்தின் வினை . கனல் எரி ( கனலும் எரி ):- வினைத்தொகை . சீறிச் சிவந்திட்ட கண்ணர் :- ` கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள ` ` நிறத்துரு வுணர்த்தற்கும் உரிய என்ப ` ( தொல்காப்பியம் . உரியியல் ). ` பவந்த நாதர் ` ( தி .6 ப .13 பா .4).

பண் :

பாடல் எண் : 3

நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளு மெங்க டத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செ யென்ன நின்றவ னாக மஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் நமக்கு அருள்கிட்டும் என்று நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே அருள் செய்யும் உண்மைப் பொருளாய்த் தீ நிறத்தவராய் எங்களுக்கு அருள் செய்வீராக என்று எல்லா உயிர்களும் வேண்டித் தொழுமாறு அழியாது நின்ற முதல்வராய்ப் பாம்பினை அஞ்சும் பிறைமதிக்கு அஞ்சவேண்டாதவாறு அருள் செய்துள்ளார் .

குறிப்புரை :

நமக்கு அருள் கிடைக்கும் என்னும் உறுதியுடன் நான்மறைகளை ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே அருள் புரியும் தத்துவன் ; தழல் ஆகுபெயர் . அதன் நிறத்துக்காயிற்று . ` எங்களுக்கு அருள்செய் ` என்று எல்லாவுயிர்களும் வேண்டித்தொழ அழியாது என்றும் நின்ற முழு முதல்வன் . நாகத்தை அஞ்சுகின்ற திங்கள் . இது கவி மரபு . நாகம் - சாயாகிரகம் ஆகிய இராகு கேது . நின்ற வல் நாகம் எனல் பொருந்தாது .

பண் :

பாடல் எண் : 4

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் அருச்சுனனுக்கு அருளி , பாம்பினை இடுப்பில் ஆடுமாறு இறுகக்கட்டி , சாத்தனை மகனாக ஏற்றுக் காளிக்காகச் சாமவேதம் பாடியவாறு கூத்து நிகழ்த்திக் கொடிய பாம்பு , பிறை , கங்கை ஆகிய இவற்றைச் சடையில் அணிந்தவராவார் .

குறிப்புரை :

பார்த்தன் - அருச்சுனன் . அரை - திருவரையில் ` அரக்கு அசைத்தார் `. ஆட - அசைய . ` உரகக்கச்சு ` ( சிலப்பதிகாரம் . வேட் . 59 ). சாத்தன் - ஐயனார் . சாமுண்டி - காளி . கூத்தொடும் சாமவேதம் பாடியது . காளியொடு திருக்கூத்தாடியபோது . கோள் - வலிமை . அரா - அரவு ; பாம்பு . மதியம் - திங்கள் . தீர்த்தம் - கங்கை .

பண் :

பாடல் எண் : 5

மூவகை மூவர் போலு முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலு நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலு மாதிரை நாளர் போலும்
தேவர்க டேவர் போலும் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் அருவம் அருவுருவம் உருவம் என்ற மூவகைப்பட்ட இலயசிவம் , போகசிவம் , அதிகாரசிவம் என்ற மூவராய் , நிறைந்த நெற்றிக்கண்ணராய் , முறையாக வைகரி முதலான நால்வகை ஒலிகளை வெளிப்படுத்தும் நாவினை உடையவராய் , நான்கு வேதங்கள் சிவாகமம் முதலிய ஞானநூல்கள் என்பவற்றின் வடிவினராய் , திருவாதிரை நாளை உகப்பவராய்த் தேவர்களுக்குத் தலைவராய் விளங்குபவராவார் .

குறிப்புரை :

அருவம் நாலு ; அருவுருவம் ஒன்று ; உருவம் நாலு என்னும் மூவகையாய் இலயபோக அதிகாரமாய் நின்ற மூவர் . மூவகை :- ஆண் பெண் அலி என்னும் மூன்று வகை . மூவர் - ஆணர் , பெண்ணர் , அலியர் . முற்றும் ஆம் நெற்றிக் கண்ணர் - முழுதும் ஆகும் நெற்றிக் கண்ணினார் . அது ஞானக் கண்ணாய் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியொடு நிறைந்த அருளாதலின் . முற்றுமாதல் ( பரைவியாபகம் ) ` முத்தி நன்னெறி முப்பதும் ` உணர்ந்தார்க்கே விளங்கும் . துகளறுபோதம் , சிவாநந்தபோதசாரம் ( தருமை ஆதீன வெளியீடு ஆகிய சாத்திரங்களும் , தோத்திரங்களும் என்றதில் விளக்கப்பட்டு உள்ளன ) காண்க . நாவகை :- ` மெய் வாய் கண் மூக்குச் செவி ` என்பவற்றுள் ` வாய் ` சுவையுணர் பொறியைக் குறிக்கும் . ` வாக்குப்பாதம் பாணிபாயுரு உபத்தம் ` என்பவற்றுள் ` வாக்கு ` வாயை உணர்த்தாது , அதனின் வேறாய நாவொலியைக் குறிக்கும் . அது சூக்குமை , பைசந்தி , மத்திமை , வைகரி என நான்கு வகைப்படும் . அவற்றை ` நாவகை ` என்றும் , அந் நாவகையைத் தோற்றியருளியது சிவபிரானது நாவேயாதலின் , அவரை ` நாவர் ` என்றும் அருளினார் . நான்மறைகளும் சிவஞானத்தையுணர்த்தும் சிவாகமங்களும் பிறவும் சிவபெருமான் திருவுருவாதலின் , ` நான்மறை ஞானம் எல்லாம் ஆ ( ம் ) வகை ஆவர் ` என்றருளினார் . ` திருவாதிரைநாள் ` சிவபிரானது என்பது வெளிப்படை . தேவதேவர் . ஆவகை - காரண மாயையினின்று மாயாகாரியங்களும் காரண ( ஆணவ ) மலத்தினின்று அதன் காரியங்களும் மூலகன்மத்தினின்று காரிய கன்மங்களும் ஆகும் வகையில் , அவ்வக் காரணத்தினின்று காரியப்பொருள்களைத் தனது சங்கற்ப சிருட்டிமாத்திரத்தில் தோற்ற லயபோகாதிகார அவத்தையாய் நான்மறைஞானமெல்லாமாவர் .

பண் :

பாடல் எண் : 6

ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும் பிஞ்ஞக னெந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் தீ நீங்காத கையினராய் , தீபங்கள் நீங்காத சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் , தலைக்கோலம் அணிந்தவராய் , நமக்குத் தந்தையாராய் , தலைவராய் , ஞாயிறு , சந்திரன்களாகவும் , யமன் , வருணன் , அக்கினி , நிருருதி , வாயு , மேம்பட்ட சாந்த வடிவினனாகிய ஈசானன் ஆகிய எண்திசை காப்போராகவும் உள்ளார் .

குறிப்புரை :

ஞாயிறு (- செங்கதிரோன் ). நமன் (- இயமன் ); வருணன் ; சோமன் (- வெண்கதிரோன் ). தீ ; நிருருதி ; வாயு ` சாந்தன் என்னும் எண்மருள் இருசுடரல்லாப் பிறர் திக்குப் பாலகர் . சாந்தன் குபேரனையும் குறிக்கும் ஈசானனையும் குறிக்கும் . திப்பியசாந்தன் என்றதால் இந்திரனையும் குறித்ததாக்கி எண்மரையும் கொள்ளலாம் . பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன் : தி .4 ப .9 பா .5 பார்க்க . தீ அறாக் கையர் -` செங்கையில் அனல் ஏந்தியவர் .

பண் :

பாடல் எண் : 7

ஆவியா யவியு மாகி யருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் வேள்வித் தீயின் புகையாய் , வேள்வியில் தேவருக்கு வழங்கப்படும் அவி உணவாய் , நுண் பொருளாய் , மிகப்பெரும் பொருளாய் , தீவினை செய்தவருடைய தீவினைகளை எல்லாம் போக்கும் பெருமானாய் , பிரமனாய் , கருங் குவளைபோன்ற கண்களை உடையளாகிக் கடல் போன்ற நீலநிறம் உடைய பார்வதிபாகராகயும் உள்ளார் .

குறிப்புரை :

ஆவி - ( வேள்வித் தீயின் ) புகை . அவி - வேள்வி வழியாக விண்ணோர்க்கு அளிக்கும் தூயவுணவு . அருக்கம் x பெருக்கம் . அருகுவது அருக்கம் . பெருகுவது பெருக்கம் ; முரண் . அணுவாய் மகத்தாய் நிற்கும் பொருளியல்பு . அருக்கம் பெருக்கம் எனப்பட்டது . ` சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ ` பாவியர் - பாவத்தைத் தேடிக்கொண்டவரது :- ` பாவியாய் ` என்றும் பாடம் உளது . அது பொருத்தமுடையதன்று . பரமன் - ` முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் ` பிரமன் ஆகி :- பிரமம் என்பதற்கு வேதம் தத்துவம் தவம் பிராமணன் நான்முகன் என்னும் ஐந்தும் பொருளாயினும் , ஈண்டு மெய்ப்பொருள் ( உண்மைதத்துவம் ) என்னும் பொருட்டு . ( அமரம் . நாநா ). ` காவியங்கண்ணள் `:- திருப்பயற்றூர்நாய்ச்சியார் திருப்பெயர் . ` கடல் வண்ணம் ஆகிநின்ற தேவி ` ஆகி தேவி என்க . பாகம் - திருமேனிப்பகுதி .

பண் :

பாடல் எண் : 8

தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்
கெந்தையு மென்ன நின்ற வேழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே யென்றென் றுள்குவா ருள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமு மாவார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் , தந்தையாராய்த் தாயாராய் உலகங்களாய் , உலகில் உள்ளார் அனைவருக்கும் தலைவராய் , ஏழு உலகங்களில் உள்ள உயிர்களின் செயற்பாட்டிற்கு உடனாய் நின்று இயக்குபவராய் , ` எந்தையே ! எம்பெருமானே!` என்று தியானிப்பவர்கள் உள்ளத்திலே சிந்தையும் சிந்திக்கப்பெறும் சிவமுமாகி உள்ளவராவார் .

குறிப்புரை :

` தாயாகித் தந்தையாய்ச் சார்வும் ஆகி ... ... நின்றவாறே `. தந்தையும் தாயும் ஆகி :- ` அம்மையப்பர் ` தரணியாய் :- ` மண்ணாகி விண்ணாகி மலையுமாகி ... ... எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்றவாறே ` ` இருநிலனாய்த் தீயாகி ... ... அடிகள் நின்றவாறே ` தரணியுள்ளோர்க்கு எந்தையும் என்ன நின்ற :- ` ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத் துகந்தான் ` ` எந்தையார் திருநாமம் நமச்சிவாய ` ஏழுலகுடனும் ஆகி :- ` எண்டிசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகித் தோன்றும் கண்ணவன் `. ` நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய் ` ` எல்லா வுலகமும் ஆனாய் நீயே ` ` ஏழ்கடலும் ஏழுலகுமாயினான் காண் `. உள்குவார் - நினைப்பவர் . சிந்தையும் சிவமும் ஆவார் :- சிந்தை சிந்திக்கப்பெறும் சிவம் இரண்டும் அபேதமாதல் , ஏகனாகி இறைபணி நிற்பார் அநுபவத்திற் கூடுவது .

பண் :

பாடல் எண் : 9

புலன்களைப் போக நீக்கிப் புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று விரண்டையு நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் , சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் என்ற ஐம்புல நுகர்ச்சிகளையும் அடியோடு போக்கி , உள்ளத்தை ஒருவழிப்பட நிலைநிறுத்தி , மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களையும் கடக்க நான் , தான் என்ற இரண்டையும் நீக்கி அவனேதானே ஆகிய அந்நெறியாளராய் , மாயை , கன்மம் என்ற மலங்களைச் செயற்படாதவாறு செய்ய வல்ல அடியவர் மனத்திலே இன்பவடிவினராய்ச் சினத்தை விளைக்கும் பிறவித் துன்பங்களை நீக்கி நிற்பவராவர் .

குறிப்புரை :

புலன்களை - சுவை . ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் ஆகிய புலன் ஐந்தினையும் . ` புலனைந்தும் பொறிகலங்கி `. போக நீக்கி - செல்லத் தொலைத்து . ` பங்கத்தைப் போகமாற்றி ` ( தி .4 ப .75 பா .8). ` மடவா ரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப் போகமாற்றி ` ( தி .6 ப .5 பா .1). புந்தி - அறிவு ; சிந்தை . ஒருங்க - ஒருவழிப்பட ; ( பற்றியவை கெட ). இலங்களை - மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களை . போக - கடக்க . இரண்டையும் - நான் என்பதும் தான் என்பதும் ஆகிய இரண்டனையும் . ஒன்றாய் - ` அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி `. மலங்களை - ` யான் எனது என்னும் செருக்கினையும் மாயை கன்மங்களையும் . வல்லார் மனம் :- ஆறன்றொகை . போகம் - சிவாநந்தாநுபவம் . சினங்கள் :- சினம் விளைக்கும் பிறவித் துன்ப விளைவுகள் .

பண் :

பாடல் எண் : 10

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா வென்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே.

பொழிப்புரை :

திருப்பயற்றூரனார் , சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக , அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டுநோக்கி , மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து விரைந்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்பவரானார் .

குறிப்புரை :

மூர்த்தி - ` சிவமூர்த்தி `. மலை - திருக்கயிலை . போகாதா - போகாதாக . முனிந்து - வெறுத்து . நோக்கி - உள்ளே எண்ணி . பார்த்து - வெளியே கண்டு . ஆர்த்தல் - ஆரவாரஞ்செய்தல் . அடர்த்தல் - நெருக்குதல் ; வருத்துதல் . நல்லரிவை :- உமாதேவியார் . ` தேத்தெத்தா ` இசை குறித்த அநுகரணம் .

பண் :

பாடல் எண் : 1

இந்திர னோடு தேவ ரிருடிக ளேத்து கின்ற
சுந்தர மானார் போலுந் துதிக்கலாஞ் சோதி போலும்
சந்திர னோடு கங்கை யரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலு மாமறைக் காட னாரே.

பொழிப்புரை :

மேம்பட்ட மறைக்காட்டுப் பெருமானார் இந்திரனோடு தேவர்களும் முனிவர்களும் புகழுகின்ற அழகராய், எல்லோரும் போற்றும் ஞானஒளியினராய்ச் சந்திரன் கங்கை பாம்பு என்பனவற்றைச் சடையில் வைத்தவராய், தம்மைத் தியானிப்பவரைக் காப்பவராய் உள்ளார்.

குறிப்புரை :

ந்திரனும் தேவரும் இருடிகளும் ஏத்துகின்ற. சுந்தரம். புகழ்தற்குரிய மெய்யொளி. திங்களையும் கங்கையாற்றையும் பாம்பினையும் சடையுள் வைத்து மந்திரம் ஆனவர். மந்திரம்:- நினைப்பவனைக் காப்பது. மாமறை - திருமறை. திருமறைக்காட்டில் எழுந்தருளிய சிவமூர்த்தியின் அழகு இந்திரன் முதலோர் ஏத்திய சிறப்பைக் குறிக்கும் வண்ணம் இருத்தலை இன்றும் உணரலாம். சென்று கண்டு. `மறைக்காடு\\\\\\\\\\\\\\\' ஆதலின், அம் மறையின் மந்திரம் ஆன உண்மை குறிக்கப் பட்டது.
துதிக்கல்:- (துதி + க் + கு + அல்). குகரச்சாரியையும் சந்தியாகிய ககரவொற்றும் தொழிற்பெயர் விகுதியாகிய அல்லும் துதி என்னும் வடசொற் பகுதியுடன் இயைந்து தொழிற்பெயர்ப் பகுபதம் ஆயிற்று. கதி, மதி, திதி, உதி முதலிய பிற வடசொற் பகுதிகளுடனும் இவ்வாறு இயைந்து ஆன சொற்கள் உள. பழந் தமிழில் இன்னோரன்னவை இல. நாதம்:- நாதித்து (திருவெங்கைக் கலம்பகம். 56) என்றாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 2

தேயன நாட ராகித் தேவர்க டேவர் போலும்
பாயன நாட றுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங் கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலு மாமறைக் காட னாரே.

பொழிப்புரை :

தெய்வத் தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழிபட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.

குறிப்புரை :

தேயனநாடர்:- கொடைக்குரிய நாடு (பேரின்பவீடு) டையவர்; தியாநிக்கப்படும் பொருளினுடைய உயரிய நாட்டில் உறைபவர். தேயன் - தியாநிக்கப்படும் பொருள். தே - திசை. தேயன - திசைகளிலுள்ளன (வாகிய நாடுகளையுடையவர்) எனலுமாம். ஆகி என்னும் எச்சம் தேவர் என்னும் வினைக்குறிப்பைத் தழுவிற்று. பாயன நாடு - பரப்பினாலொத்த நாடு; (உலகம்) அஃது `அறுக்கும்\\\\\\\' என்றதால், ஈண்டு நாட்டுப் பற்று என்னும் பொருட்டு, உலகப் பற்றுக்களை அறுக்கும் சிவத்தொண்டர்காள், மறைக்காடனாரைப் பணிய வம்மின்.
பாயனம் (பாசனம்):- நீர்பாய்த்துகின்ற நாடு எனலும் ஆம். பாயனம் வடசொல். (ஆப்தே அகராதி: பக்: 612 பார்க்க) பாசனம்:- தி.4 ப.26 பா.9 காயன நாடு கண்டம் கதனுளார்:- நாடுகளையும் கண்டங்களையும் காய்ந்தாலன்ன கோபம் உள்ளவர். நாடு கண்டம் - நாடும் கண்டமும். புரமெரித்த வரலாறு முதலியன. காள கண்டர் - நஞ்சுண்ட திருநீலகண்டர். காயனம் (-ஒலி இசைப்போர்) நாடுகின்ற கண்டம் எனல் பொருந்தாது; `கதனுளார்` `காளகண்டர்` எனப் பின் உள்ளமையால்.மாயன நாடர்:- கரியோனது நாடுதலை யுடையவர். மாயன் - கரியன் (திருமால்). `மாயோன் மேய காடுறை யுலகம்\\\\\\\' (தொல்காப்பியம்) என்றது கொண்டு, மாமறைக்காடனார் அம் மாயோன்றன் நாடாகிய காட்டிலுள்ளார் எனல் பொருந்துமேற் கொள்க.

பண் :

பாடல் எண் : 3

அறுமையிவ் வுலகு தன்னை யாமெனக் கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளா னலிவு ணாதே
சிறுமதி யரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையு மிம்மை யாவார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் அழியும் இயல்பினை உடைய இவ்வுலகை நிலைபெற்றது என்று நினைத்துக் கொண்டு உலக வாழ்க்கை வழி நின்று வீணாக இல்வாழ்க்கை நடத்தி இரு வினைகளால் துன்புறுத்தப்படாத வகையில், பிறை பாம்பு கொன்றை இவற்றைச் சடையுள் வைத்த பெருமானாய், தம் அடியவர்களுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் வழங்குபவராவார்.

குறிப்புரை :

அறுமை - அறும் இயல்பு; நிலையின்மை பண்பு. இவ்வுலகு நிலையில்லாதது (அழியுந்தன்மையது). இதனை அழியாது நிலைபெறும் இயல்புடையது என்று எண்ணி நின்று, வீணிலே இல்வாழ்க்கை நடாத்தி, வினைத் தொடர்புகளால் வருத்தமுறாதே. சிவனை வழிபடு. பிறையையும் பாம்பினையும் கொன்றை மாலையினையும் பூவையும் மின்னுகின்ற செஞ்சைடையுள் வைத்து, இம்மையும் ஆவார்; மறுமையும் ஆவார். `இம்மை மறுமைவீடு\\\\\\\' என்னும் மூன்றனுள், வீடொழிய மற்றிரண்டும் எழுமையைக் குறித்தவை. எழுமையுள் இம்மை ஒன்று கழிய நின்றவை அறுமையாகும். அவ் அறுமைக்குத் துணையாவது உலகு. அது குறித்து `அறுமையிவ்வுலகு\\\\\\\' என்றார் எனலுமாம். வெறுமை:- வறுமையின் முதலுயிர் அகரம் எகரமாயது. பயன் இலாததும் ஆம். `அறுமை ... ... இருமை\\\\\\\' (கல்லாடம். 11, 18).

பண் :

பாடல் எண் : 4

கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல்
ஏல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் கால்களைக் கொடுத்து கைகளை ஏற்றி எலும்புக் கழிகளை நிரைத்து மேலே புலாலை வேய்ந்து குருதிநீரைக் கலந்து தோலை தட்டிச் சுவரை வைத்து இரண்டு வாயில்களையும் ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.

குறிப்புரை :

1. கால்கொடுத்தல், 2. கையேற்றல், 3. கழிநிரைத்தல், 4. வேய்தல், 5. சுவர் எடுத்தல், 6. வாசல் அமைத்தல், 7. சாலேகம் பண்ணல் (தி.4 ப.44 பா.2) ஆகிய செயல்கள் வீடு கட்டுதற்கண் நிகழ்வன. அவ்வாறே இவ்யாக்கையாகிய வீடு கட்டுதற்கண்ணும் அச் செயல்கள் நிகழ்கின்றன. இருகால் கொடுத்தும் இருபாலும் இருகை ஏற்றியும் என்புகளாகிய கழிகளை நிரைத்தும், இறைச்சியாகிய கூரை வேய்ந்தும், உதிரமாகிய நீரால் தோல் படுத்துச் சுவர் எடுத்தும் பொருத்தம் உடையதாக இரண்டு வாசலை அமைத்தும், அச் சுவர்களில் ஏழு பலகணிகளை வைத்தும் ஒரு வீடு கட்டி, அதில் ஆவியை வாழவைத்து, அதற்கு வேண்டிய செல்வமாக மால் (மயக்கம், காற்று, வேட்கை) கொடுத்தார் மாமறைக்காடனார். உலகை நோக்கி மயக்கம்; உடலை நோக்கிக் காற்று; உயிரை நோக்கி வேட்கை; கொடுத்த மறைக்காடனார் அருளை நோக்கி (மால்-) அன்பு. `மாலும் காட்டி வழிகாட்டி வாராவுலக நெறி ஏறக் கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே\\\\\\\'. (தி.8 திருவாசகம். 643) சாலேகம்:- `கொய் தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன், வைகலும் ஏறும் வயக்களிறே - கைதொழுவல், `காலேக வண்ணனைக் கண்ணாரக் காண எம் சாலேகம் சார நட\\\\\\\' (முத்தொள்ளாயிரம். நன்னூல். 397. சங்கரநமச்சிவாயருரை).

பண் :

பாடல் எண் : 5

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப்
பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக்
கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற வெந்தை
மண்ணினார் வலங்கொண் டேத்து மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

நிலவுலக மக்கள் நகரையே வலம் வந்து போற்றும் மகிமையுள்ள திருமறைக்காட்டுப் பெருமான் விண்ணுலகில் உளரேனும் விண்ணினும் மேம்பட்டவர். உலகம் வேதத்தை விரும்பி ஓதப்பண்ணியவர். பத்தர்கள் இசைப்பாடல்களைப் பாடியாடத் திருவுளம் பற்றியவர். அகக்கண்ணினுள்ளே ஞானவொளியை எய்தி திகழும் எம் தலைவரும் அவராவார்.

குறிப்புரை :

விண்ணிலுள்ளார். விண்ணினும் மேற்பட்ட நிலையவர். வேதங்களை விரும்பி ஓதப் பண்ணியவர். பத்தர் (- தொண்டர்)கள் கின்னரங்களைப் பாடி ஆடப் பண்ணினவர். வேதங் களை விரும்பி ஓதக் கின்னரங்களைப் பண்ணினார் எனலுமாம். கின்னரங்கள்:- `கின்னரங் கேட்டுகந்தார்\\\\\\\' (தி.8 ப.28 பா.6). இசையின் குணம் அகுணம் இரண்டும் அறிவதொரு பறவை; கின்னரர்கள். ஆடக் கண்ணினார் எனின், ஆடத் திருவுளங் கொண்டார். கண்ணல் - கருதல். கண்ணினுள்ளே சோதியாய் நிற்றல்:- `கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் காவாய்\\\\\\\'. மண்ணினார் - மண்ணுலகில் வாழ்பவர். வலம் கொண்டு - வலமாகச் சுற்றி வழிபட்டு. (தி.4 ப.43 பா.4) `விண்ணினார் ...... கண்ணின்\\\\\\\':௸ ப.35 பா.4

பண் :

பாடல் எண் : 6

அங்கையு ளனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கை யோடு திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில், வீணையையும் வைத்தார். அறுவகைச் சமயங்களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் ஆவார்.

குறிப்புரை :

அங்கை - அழகியகை. அகங்கை. அனல் - தீ. அறுவகைச் சமயம்:- `ஒத்தாறு சமயங்கட்கு ஒரு தலைவன்\\\\\\\' (தி.1 ப.131 பா.1). `இருமூன்று சமயங்களவையாகிப் பின்னை அருள் செய்த பிறை யாளன்\\\\\\\'. (தி.2 ப.29 பா.5) `சமயமவை ஆறினுக்கும் தலைவன்\\\\\\\' (தி.6 ப.65 பா.7) `அறுவகைச் சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆரருள்புரிந்து\\\\\\\' (தி.7 ப.55 பா.9) தம் கையில் வீணை வைத்தார்:- தி.4 ப.30 பா.1 பார்க்க. தம் அடி பரவ - தம் திருவடி ஞானத்தை வாழ்த்த. திகழ்தரல் - விட்டுவிட் டொளிர்தல். திங்கள், கங்கை, மங்கை:- அங்கை:- தி.4 ப.38 பா.1 பார்க்க.

பண் :

பாடல் எண் : 7

கீதராய்க் கீதங் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார்
வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்ட மாடி யிட்டமாய்க் கங்கை யோடு
மாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் பார்வதி பாகராய், கங்கை யிடம் விருப்பம் உடையவராய், இசைவடிவினராய்ப் பாடலைக் கேட்டு மகிழும் இசை உணர்வை உலகுக்கு வழங்கியவராய், வேத வடிவினராய், வேதம் ஓதுதலால் ஏற்படும் ஞான ஒளியை வழங்குபவ ராய், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆதிகாரணராய்க் கூத்து நிகழ்த்துபவ ராய் உள்ளார்.

குறிப்புரை :

கீதர் - பாட்டுடையர்; பாடுமவர். கீதம் - பாட்டு. கின்னரம் - இசை; தி.4 ப.28 பா.6; ப.33 பா.5 ப.38 பா.9. வேதர் - வேதமுதல்வர். வேதம் ஓதி விளங்கிய சோதியாவது சிவஞானப்ரகாசம். ஏதர் - காரணர். ஏது - காரணம். நட்டம் - திருக்கூத்து. இட்டம் - விருப்பம் (இஷ்டம்). இட்டமாய் வைத்தார். இட்டமாய் ஆடி வைத்தார் என்றியைத்தல் சிறவாது. கீதரானது `ஏழிசையாய்\\\\\\\' நின்ற நிலை. கீதங்கேட்டது:- தும்புரு, நாரதர் அசுவதரர் கம்பளதரர் பாடிய இசை இராவணன் சாமகீதம், நால்வர் தமிழ் முதலியவற்றைக் கேட்டல். கின்னரம் வைத்தல்:- ஏழிசையமைதியையும் அதன் வளர்ச்சியையும் அதனால் எய்தும் இன்பத்தையும் தோற்றி நிலைபெறச் செய்தல். `வேதனைமிகு வீணையில் மேவிய கீதனை\\\\\\\' (தி.5 ப.61 பா.4).

பண் :

பாடல் எண் : 8

கனத்தினார் வலியு டைய கடிமதி லரண மூன்றும்
சினத்தினுட் சினமாய் நின்று தீயெழச் செற்றார் போலும்
தனத்தினைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவு வார்க்கு
மனத்தினுண் மாசு தீர்ப்பார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் செருக்குற்ற அசுரர்களுடைய மும்மதில்களையும் கோபத்தின் கோபமாய்க் காட்சி வழங்கித் தீக்கு இரையாகுமாறு அழித்தவர்! உலகச் செல்வத்தின் பற்றுக்களை விடுத்துத் தம் திருவடிகளை முன்நின்று போற்றும் அடியார்களின் மனத்திலுள்ள களங்கங்களை எல்லாம் போக்குபவர்.

குறிப்புரை :

கனத்தினார் - துன்பம் விளைப்பதிற் பெரியர். அரணம் - காவற்கோட்டை. (திரிபுரம்). `சினத்தின் உட்சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார்\\\\\\\' என்றதால், முப்புர தகனத்திற்கு ஏதுவின் இன்றியமையாமை புலப்படும். படவே மும்மலத்தையும் நீக்குவதில் எல்லாரும் அந்நிலையை எய்துதல் வேண்டும் என்பதாம். `தனம்\\\\\\\' ஈண்டுப் பொருட்பற்று. தவிர்ந்து - நீங்கி. தம் அடி:- மறைக் காடனார் திருவடி. பரவுவார் - வாழ்த்துவார். `பரவுவார் இமையோர்கள்\\\\\\\'. மனத்தின் உள் மாசு:- மனத்தின் அகத்துக் குற்றம். உள் ஏழனுருபுமாம். மனத்தின் அகத்துக் குற்றம் மனத்தின் புறத்துக் குற்றம் என்று இரண்டுமுண்டு, முன்னது அதன் உள் நிகழ்வது. பின்னது அதன் வெளியில் அம் மனத்தால் நிகழ்வது. `உள் மாசுகழுவது நீறு என்றே உபநிடதம் உரைக்கும்\\\\\\\' (திருவிளையாடல்). `திருக்குறும் அழுக்காறு அவாவொடு வெகுளி செற்றம் ஆகிய மன அழுக்கைத் தியான மென்புனலால்; பொய்புறங் கூறல் தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை அருட்கிளர் நினது துதி எனும் புனலால்; அவத்தொழில் என்னும் மெய் அழுக்கை அருச்சனை என்னும் புனலினால் கழுவா அசுத்தனேன் உய்யும் நாள் உளதோ? ... ... ஈசனே மாசிலாமணியே\\\\\\\' என்ற (சிவப்பிரகாசர் - நெடுங்கழிநெடில் 6) பாடலில் அவ் விரண்டும் அறிக. (மறு + து = மறுது, மறுசு, மாசு, மரூஉ.)

பண் :

பாடல் எண் : 9

தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை யென்றுங் கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலு மாமறைக் காட னாரே.

பொழிப்புரை :

மாமறைக் காடனார் ஒளி வடிவினராய், எல்லா உலகங்களையும் உடையவராய் உள்ளார். அவரை நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை அவர் அடியோடு போக்குபவராவார்.

குறிப்புரை :

தேசன் - ஒளிவடிவினன்; தேசு - ஒளி, திசையினன், தேஎம் - திசை, தே + அம் = தேயம், தேசம். காலதேச வர்த்தமானம் என்றாற்போல வடசொல்லுமாம். வாசனை செய்தல்:- நறும்புகை, நறுமலர், நறுநீர் முதலியன கொண்டுவழிபடல். வைகலும் - காலைமாலை இரண்டனிலும். வைகு - இரவு. `நெய்யுமிழ் சுடரிற் கால் பொரச் சில்கி வைகுறு மீனிற்றோன்றும்\\\\\\\' (அகம். 17) `வைகுறு மீனிற் பையத் தோன்றும்\\\\\\\' (பெரும்பாண். 318). வைகறை - இரவு அறும் வேளை. காசு - பொன். `தேனைப் பாலைத் திகழொளியை\\\\\\\' (தி.6 ப.1 பா.1). கருத்தினில் வைத்தல்:- `நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்\\\\\\\' என்றதிற் செயப்படுபொருள் நெஞ்சம். இதில் மறைக்காடனார் கருத்திற் போலக் காட்டில் மறைந்தவர். மாசு - மும்மலக்குற்றம்.

பண் :

பாடல் எண் : 10

பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத் துய்ய வேண்டில்
பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை யரக்க னோடி யெடுத்தலுந் தோகை யஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார் மாமறைக் காட னாரே.

பொழிப்புரை :

கயிலையைப் பெயர்த்து அப்புறப்படுத்தலாம் என்ற துணிவினை உடைய இராவணன் விரைந்து சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அவன் தலைகள் பத்தனையும் நசுக்கியவர் மாமறைக் காடனார், பலபற்றுக் களையும் உடைய இவ்வுடல் தொடர்புக்கேதுவான பிறவிப் பிணியைப் போக்கி ஒழிக்கக் கருதினால், தம் பணிவைப் புலப் படுத்தலுக்கு உரிய இறை தொண்டினை மேற்கொண்டு அடியவர்கள் விருப்பத்தோடு மாமறைக்காடனாரை வழிபடுங்கள்.

குறிப்புரை :

பிணியுடையாக்கை:- துன்பத்திற்கே கொள்கலம் என்னும் இவ்வுடல், துன்பம் விளைக்கும் பலவற்றுள் ஒன்றாய பிணையையுடையது என்று அறிவரேல், யாக்கையெடுத்தலாகிய பிறவியை அறுக்க முயல்வர். அதனை அறுத்து உய்ய வேண்டில், பக்தர்களுக்குப் பற்றுவைத்துச் செய்யும் அடிமைத் திறத்தால் அறுத் துய்யலாம் என்று வருவித்து வினை முடிவு செய்க. இத் திருப்பாடலில் விளங்காத சொல் ஒன்றுமின்றெனினும், முன்னீரடிக்குப் பொருட் பொருத்தமும் அதனொடு பின்னீரடிப் பொருட்டொடர்பும் புலப் பட்டில. பற்றினாலேதான் உய்யலாம் என்று முற்று வினை வருவித் துரைக்க. மணி முடிப்பத்தும். பத்து:- தலைகட்கு ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 1

தேரையு மேல்க டாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையு மேலு ணரா வாண்மையான் மிக்கான் றன்னைப்
பாரையும் விண்ணு மஞ்சப் பரந்ததோள் முடிய டர்த்துக்
காரிகை யஞ்ச லென்பார் கலிமறைக் காட னாரே.

பொழிப்புரை :

செழிப்பு மிக்கமறைக்காடனார் , யாரையும் தனக்கு மேம்பட்டவராக மதிக்காதவனும் ஆளுந்தன்மையால் மேம்பட்டவனுமான இராவணன் கயிலாய மலைக்கு மேலும் தேரைச் செலுத்துமாறு தேரோட்டியை ஏவி அவன் அஃது இயலாமையைக் குறிக்க அவனை அதட்டிக் கடுமையாக நோக்கிக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் மண்ணும் விண்ணும் அஞ்சுமாறு பரந்த அவனுடைய தோள்களையும் முடிகளையும் நசுக்கிப் பார்வதியை அஞ்சேல் என்று அமைதியுறுத்தினார் .

குறிப்புரை :

கடாவி - செலுத்தி , திண்ணமா - உறுதியாக , வலியாக . தெழித்து - அதட்டி , சினந்து . ` தெளித்து ` என்பது ஏட்டிற் கண்டது , யாரையும் - மண்ணோர் விண்ணோர் முனிவர் முதலிய எவரையும் மேல் உணராமை - தனக்கு மேலானவர் என்று மதியாமை . ஆண்மை - அம்மதியாமைகட்கு ஏதுவான வலிமை ; வீரம் , ஆண்மை ( ஆள் + மை ) ஆள் ( ஆண் ); + ஆள் + தூஉ = ஆடூஉ . பெள் + தூ உ = பெண்டூஉ . மகள் + தூஉ = மகடூஉ என்பவற்றை நோக்கி , ஆளின் தன்மை ஆண்மை . எனல் சிறந்தது . ஆளுந்தன்மை எனின் , ` ஆள் ` என்பது வினையாகும் . தமிழில் மை என்பது வடமொழியில் ` துவம் ` என்று போல்வது , பண்புணர்த்துவது . தத்துவம் - அதனியல்பு . பாரையும் - மண்ணையும் ; இடவாகு பெயரால் மண்ணில் வாழ்வோரைக் குறிக்கும் . ஐயுருபினை விண்ணுக்கும் ஏற்றியுரைக்க . தோள்முடி உம்மைத்தொகை . காரிகை - உமாதேவியார் . முற்பதிகத்துள் மாமறைக் காடனார் என்று ஓரடையும் இப்பதிகத்துள் ஏழு வேறடையும் கொடுத்தவாறறிக . அம் ` மா ` என்றதன் விளக்கம்போலும் .

பண் :

பாடல் எண் : 2

முக்கிமுன் வெகுண் டெடுத்த முடியுடை யரக்கர் கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த வெந்தை
அக்கர வாமை பூண்ட வழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகண் மோதுந் திருமறைக் காட னாரே.

பொழிப்புரை :

நீரைத் தம்மாட்டுக் கொள்கின்ற அலைகள் கரையை நோக்கி மோதும் திருமறைக்காடனார் , தன் முழுவலியையும் பயன்படுத்தி முந்திக் கொண்டு கோபத்தோடு கயிலையைப் பெயர்த்த , முடியை அணிந்த இராவணனைச் சிரித்தபடியே கால் விரலை ஊன்றி நசுக்கியவராய் , பிறைசூடிய எம் தலைவராய் , எலும்பு , பாம்பு ஆமையோடு இவற்றை அணிந்த அழகராய்த் தம் விருப்பினாலே மறைக்காட்டை இருப்பிடமாகக் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

முக்கி :- முற்கி என்பதன் மரூஉ . வெகுண்டு - சினந்து நக்கு - நகைத்து . ஊன்றி - ( கால் விரலால் ) ஊன்றி ( பா .7) ஊன்றிக் காடனார் என்க . ஊன்றிவைத்த எந்தை எனின் , ` சென்னி ` இராவணனது ; நாண்மதி வைத்தது :- பிறை போலுங் கீற்றைத் திருக்காற் பெருவிரலால் ஆக்கியது . அரக்கர்கோனை ஊன்றிச்சென்னியில் மதியைவைத்த எந்தை எனின் , நக்கிருந்து ஊன்றியதும் மதிவைத்ததும் முன் பின் நிகழ்ச்சி எனவும் இராவணன் தலையில் விரலும் தன்தலையில் மதியும் சிவன் வைத்தான் எனவும் வேண்டும் . அவ்வாறுரைத்தல் பொருந்தாது . அக்கு - எலும்பு உருத்திராக்கமும் ஆம் எனினும் அஃது அரவு ஆமையுடன் கூறற்பாற்றன்று . அழகனார் காடனார் என்றும் கருத்தினாலே காடனார் என்றும் இயைக்க .

பண் :

பாடல் எண் : 3

மிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவி
அகப்படுத் தென்று தானு மாண்மையான் மிக்க ரக்கன்
உகைத்தெடுத் தான்ம லையை யூன்றலு மவனை யாங்கே
நகைப்படுத் தருளி னானூர் நான்மறைக் காடு தானே.

பொழிப்புரை :

மிகப்பெரிய உருவினனாய் எங்கும் சஞ்சரிப்பவனாய் உள்ள இராவணன் நகைத்துத் தேரோட்டியை அதட்டி , மலையை மேவித் தேரைச் செலுத்தென்று நிர்ப்பந்திக்க , அஃது இயங்காமையால் தன் மிக்க வலிமையை முழுதும் கொண்டு செலுத்தி மலையைப் பெயர்க்கத் தன் உடம்பினைச் செயற்படுத்திய அளவில் அவனை அவ்விடத்திலேயே சிரிக்கப்படுதலுக்கு உரியனாய் நசுக்கியவருடைய ஊர் நான்கு வேதங்களும் வழிபட்ட மறைக்காடாகும் .

குறிப்புரை :

பெருத்து . மிகப் பெருத்து . உலாவமிக்கான் . நக்கு :- பா .2. கடாவி :- பா .1. அகப்படுத்து - உட்படச்செய் . பாகனை ஏவியது . அரக்கன் ( இராவணன் ) தானும் ஆண்மையான் மிக்கு மலையை உகைத்து எடுத்தான் . தன்தேர்ப்பாகனை அகப்படுத்து என்றதொடு தானும் எடுத்தான் என்க . அவனை ஆங்கே ( அவ்விடத்து அப்பொழுதே ) ஊன்றலும் நகைப்படுத்தருளினான் சிவபிரான் . அருளினவன் ஊர் திருமறைக்காடு . தான் ஏ :- ஆசை .

பண் :

பாடல் எண் : 4

அந்தரந் தேர்க டாவி யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை யூன்றலு மொள்ள ரக்கன்
பந்தமாந் தலைகள் பத்தும் வாய்கள்விட் டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார் திருமறைக் காட னாரே.

பொழிப்புரை :

வானத்திலே தேரைச் செலுத்தி அதன் செலவு தடைப்பட்ட அளவில் அதனைத் தடைப்படுத்தியவன் யாவன் என்று வினவிக் கோபத்தால் உந்தப்பட்டு இராவணன் அப்பெரிய கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் , அவன் உடம்பில் இணைந்த பத்துத்தலைகளும் வாய் திறந்து அலறித் தரையிலே சாயுமாறு திருமறைக்காடனார் திருவுள்ளத்தில் நினைத்துச் செயற்பட்டார் .

குறிப்புரை :

அந்தரம் - ஆகாயம் . ` ஆர் இவன் ?` என்பது இராவணன் மதியாது வினாவியது . ஒண்மை :- உறங்கும் ஆயினும் , கறங்கு வெண்டிரை வையகங் காக்கும் மன்னவனொளி எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது . பந்தம் - கட்டு ; பத்துத் தலைக்கட்டு , பத்து வாய்கள் , வாய்கள் விட்டு அலறிவீழச் சிந்தனை செய்து விட்டார் . விட்டவர் காடனார் என்க . ` பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமதத்துவன் ` ( தி .6 ப .78 பா .10) ` பத்து வாய் இரட்டிக் கைகள் உடையவன் ` ( தி .4 ப .35 பா .7)

பண் :

பாடல் எண் : 5

தடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலி யுடைய னாகிக்
கடுக்கவோர் தேர்க டாவிக் கையிரு பதுக ளாலும்
எடுப்பனா னென்ன பண்ட மென்றெடுத் தானை யேங்க
அடுக்கவே வல்ல னூரா மணிமறைக் காடு தானே.

பொழிப்புரை :

விரைவாகப் புட்பகவிமானத்தைச் செலுத்திச் சென்ற வழியில் அதன் செலவினைக் கயிலை மலை தடுக்க அதனைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தால் மிக்க வலிமையை உடையவனாகி , ` இதுவும் ஒரு பண்டமா ? இதோ கையால் பெயர்த்து எறிந்து விடுகிறேன் ` என்று கயிலையைப் பெயர்த்த இராவணனை வருந்துமாறு செய்யவல்ல சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலம் அழகிய மறைக்காடு ஆகும் .

குறிப்புரை :

தடுக்கவும் தாங்கவும் ஒன்றாத வலி இராவணனது . ஒண்ணா - ` ஒன்றா ` என்பதன் மரூஉ . கடுக்க - விரைய . கையிருபதுகள் :- ` இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டிக் கந்திருவங்கள் கேட்டார் கடவூர் வீரட்டானாரே .` ` நான் எடுப்பன் ` ` என்ன பண்டம் ?` என்பன இராவணன் கூற்று . ` என்ன பண்டம் ?. என்றது அவன் சிவனது திருக்கயிலைப் பெருமலையை ஒரு பொருளாக மதியாமை குறித்தது . என்று எடுத்தான் - என்று சொல்லி மதியாது தூக்கியவன் . ஏங்க - ஏக்கம் உற . அடுக்க - மாய்க்க . அணி மறைக்கும் உரித்து ; காட்டிற்கும் உரித்து .

பண் :

பாடல் எண் : 6

நாண்முடிக் கின்ற சீரா னடுங்கியே மீது போகான்
கோள்பிடித் தார்த்த கையான் கொடியன்மா வலிய னென்று
நீண்முடிச் சடையர் சேரு நீள்வரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காட னாரே.

பொழிப்புரை :

ஒவ்வொரு நாளையும் முடிக்குஞ் சிறப்புடைய சூரியன் ஒடுங்கிக் கொண்டு இலங்கையின்மேல் செல்லாதபடி ஏனைய கிரகங்களையும் தன் ஆணைக்கு உட்படுத்திய செயலினனாய்க் கொடியவனாகிய இராவணன் தான் பெருவலிமை உடையவன் என்று செருக்கி நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமானுடைய மலையைப் பெயர்க்கத் தொடங்கிய அளவில் பழைய மறைக்காட்டுப் பெருமான் அவனுடைய தோள்களும் தலைகளும் நசுங்குமாறு செய்துவிட்டார் .

குறிப்புரை :

நாள் முடிக்கின்ற சீரான் - செங்கதிரோன் . நாளிறு என்றதன் மரூஉவே ஞாயிறு . நாளன்று என்றது ஞான்று என மருவியதும் ஈண்டுக் கருதுக . ` மகரஞாயிற்று ரேவதி ஞான்று ` என்ற கல்வெட்டுத் தொடரால் அது விளங்கும் . ` நாளன்று போகிப் புள்ளிடை தட்ப ` என்னும் புறப்பாட்டின் அடியால் , நாளன்று என்பது தொல்வழக்காதல் புலப்படும் . அவ்வழக்கு ஞான்று என்றாதலில் வியப்பில்லை . செங்கதிர்த் தோற்றத்தை அடியாகக் கொண்டு கணக்கிடுவதே நாள் . நாள் இறுதற்கும் அதுவே அடியாகும் . அதனால் , அக் கதிரை நாளிறு என்றனர் செந்தமிழர் . அது ஞாயிறு என்று மருவிற்று . உறு - ஊறு . ( இடையூறு ) இறு - ஈறு . நாளீறு - நாளிறு - ஞாளிறு - ஞாயிறு . நடுக்கமும் போகாமையும் ஞாயிற்றின் தொழில்கள் . மீது - இலங்கையின் மேலிடம் . மேல் மிகல் என்பதன் மரூஉ . மிகு + து = மீது ( மரூஉ ). இருசுடர் மீது ஓடா இலங்கை என்று ( தி .6 ப .39 பா .10) ஆசிரியரே பின்னர்க் குறித்தருளியதால் , வெண் கதிரும் இலங்கைக்கு நேரே விண்ணிற் செல்லாதபடி தடுத்தவன் இராவணன் என்பது வெளி யாம் . மண் விண் பாதலம் ஆகிய திரிலோகத்துக்கும் ( இலங்கையி னளவு ) அதிபதி யாதலின் , இருசுடராட்சிக்கு இடங் கொடாது தன் இடத்தைப் பொதுவறப் புரிந்தான் . கோள்பிடித்து ஆர்த்த கையான் :- ` சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்து உடையான் ` ( தி .5 ப .21 பா .10). கொடியன் - கொடுமை செய்பவன் . மாவலியன் - பெருவலிமையுடையவன் . என்று (- என்று தன்னை வியந்து தருக்கி ) எடுக்கலுற்றான் நீள்வரையை , உற்றான் தோள்முடி - உற்றவன் தோள்களும் முடிகளும் . தோண்முடி :- உம்மைத் தொகை .

பண் :

பாடல் எண் : 7

பத்துவா யிரட்டிக் கைக ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செய்த பொருவலி யரக்கர் கோனைக்
கத்திவாய் கதற வன்று கால்விர லூன்றி யிட்டார்
முத்துவாய் திரைகண் மோது முதுமறைக் காட னாரே.

பொழிப்புரை :

முத்துக்களைத் தம்மிடையே கொண்டனவாய் அலைகள் மோதும் பழைய மறைக்காட்டுப்பெருமான் , பத்து வாய்களையும் இருபது கைகளையும் உடைய இராவணன் தான் மிக்கவலிமை உடையவன் என்ற செருக்கால் சத்தப்படாமல் தீவினைகள் செய்பவனாய்க் கயிலையைப் பெயர்த்தலாகிய தீவினையைச் செய்ய அவன் வாயினால் பெரிய குரலில் கதறுமாறு தம் கால்விரலால் அழுத்தி அவனை நசுக்கிவிட்டார் .

குறிப்புரை :

பத்துவாய் உடையான் . இரட்டிக் கைகள் :- அப்பத்து இரட்டி ( இருபது ஆகிய கைகளை உடையன் ). மாவலியன் :- பா .6, என்று வாய்பொத்தி :- மேற்பாட்டில் உரைத்தாங்கு உரைத்துக் கொள்க . வாய்பொத்தல் :- ஓசைபடாது தீவினையாற்றல் குறித்தது . பொருவலி :- ( ஏதுப் பெயர்கொண்ட ) வினைத்தொகை . பொத்திவாய் கத்திக்கதற ஊன்றியிட்டார் . முத்துவாய் திரைகள் :- முத்துக்கள் வாய்ந்த அலைகள் ; ( முத்துப் போலும் வெண்ணிறம் வாய்ந்த அலைகள் .) மோதும் - முழுத்தும் .

பண் :

பாடல் எண் : 8

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதிய னாகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமு மிழந்த வாறே
நக்கன பூத மெல்லா நான்மறைக் காட னாரே.

பொழிப்புரை :

ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன .

குறிப்புரை :

பக்கமே - பக்கத்தில் , ஏகாரம் ஏழனுருபின் பொருட்டு . ` பக்கமே பாரிடங்கள் சூழ ` ( தி .4 ப .19 பா .2) என்புழியும் இது பெறப்படும் . விட்ட - ( கிளைக்க ) விட்ட . பாங்கு இலாமதியன் - முறைமையில்லாத அறிவினன் . ( பால் + கு = பாங்கு . நால் + கு = நான்கு , நாங்கு ) போதும் ஆறு - பின்னர்ப் புகுதும் வண்ணம் ` , மேல்வரும் கதியை என்றபடி . ` மிக்கமா மதிகள் கெட்டு ` என்றதால் , அவனுடைய மதிகளின் மிக்க பெருக்கம் விளங்கும் . வீரமும் இழந்தவாறே பூதமெல்லாம் நக்கன . ஆறே - வண்ணத்திலே . ஈண்டும் ஏகாரம் அப்பொருட்டு . நகுதல் - சிரித்தல் .

பண் :

பாடல் எண் : 9

நாணஞ்சு கைய னாகி நன்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன் னிழந்து பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தா ( அ ) னுணரா நின்றெடுத் தானை யன்று
ஏணஞ்சு கைகள் செய்தா ரெழின்மறைக் காட னாரே.

பொழிப்புரை :

இருபது கையனாய்ப் பத்துத் தலைகளை உடைய இராவணன் , நைந்து சாமகீதம் பாடும் எண்ணத்தை விடுத்து . தனக்குத் துணையாக உதவாத அறிவினால் , பெரும்பயன் தரும் திருவைந்தெழுத்தைத் தியானம் செய்யாது , கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக , இனி இந்தக் கைகள் எழுச்சியோடு எந்தச் செயலையும் செய்ய முடியாது போய்விடுமோ என்று அவன் அஞ்சுமாறு அழகிய மறைக்காடனார் அவன் கைகளை நசுக்கினார் .

குறிப்புரை :

நாணஞ்சு ( நாலஞ்சு ) கையன் . நாண் - வில்லின் நாண் . நஞ்சு - நைந்த எனலும் ஆம் . அஞ்சுமுன் பாண் இழந்து - திருக்கயிலையை ஊன்ற வலிகெட்டு , உடல் கெட்டு , உயிர் போய்விடுமோ என்று அஞ்சுதல் முன்பு சாமகீதம் பாடுதலை இழந்து . அஃதாவது அஞ்சிய பின்னரே பாடினான் . பாடியெடுத்திருந்தாற் கேடுறான் என்றவாறு , அது செய்யும் பாங்கில்லாமதியன் என்க . நீணஞ்சு :- நீள் + நஞ்சு = நீண்ட நைந்து , நீடிய உருக்கம் . நீண் அஞ்சு - நீள நினைத்தற்குரியதாய திருவைந்தெழுத்தினை , நீளுதல் - ` நீணுதல் ` ஏண் - வலிமை . இத் திருப்பாடலின் எதுகைத் தொடர்கள் விளங்காப் பொருள . நாள் - அறும் நாளில் . நஞ்சு ( நந்து ) கையன் மீண்டும் வளருங்கையன் . நந்தல் - வளர்தல் . முடிகளையும் பாணங்களையும் இழந்த வரலாறு குறித்துமாம் . நாண் - நாணம் . அஞ்சு - அஞ்சி அகலுதற்கு ஏதுவான கையன் - தீயொழுக்கத்தினன் எனலும் ` நாலஞ்சுகை ` என்றதன் திரிபுமாம் . அஞ்சியபின் பாடிய பாண் ( சாமகானம் ), விரலூன்றப் பெற்ற அஞ்சு முன் பாடுதலை இழந்து . பாடி எடுத்திருப்பனேல் , நெருக்குண்ணான் . பாண் அஞ்சும் - ஐந்து நாதமும் ஆம் . ( சூடாமணி நிகண்டு , 12:-43 ) நீள் + நஞ்சு :- இறைவன் நஞ்சுண்டும் சாவாத ஒருவன் என்பதை உணராமல் , மலையெடுத்த கைகளைத் திண்மை நைந்த கைகளாக்கினார் . ஏண் - திண்மை . நஞ்சு - நந்து ( போலி ). நஞ்சுகை - வினைத் தொகை . விரலால் அழுத்தக் கைகள் நசுக்குண்ட வரலாறுணர்க .

பண் :

பாடல் எண் : 10

கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலு மங்கை யூடத்
தென்கையான் றேர்க டாவிச் சென்றெடுத் தான்ம லையை
முன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவா ளருளி னானூ ரணிமறைக் காடு தானே.

பொழிப்புரை :

கங்காதேவியைச் சிவபெருமான் சடையில் வைத்திருந்ததைக் கண்ட பார்வதி ஊடல் கொண்ட நேரத்தில் , தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக , பெருமான் கால்விரல் ஒன்றினால் அவனைக் கயிலை மலையின் கீழ் நசுக்க , அவன்தன் நரம்புகளை எடுத்து யாழ் அமைத்து யாழ் இசையோடு வேதத்தைப்பாட அதனால் உள்ளம் மகிழ்ந்து அவனுக்குத் தாம் கையில் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாளினை அருளினார் . அப்பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலம் அழகிய திருமறைக்காடாகும் .

குறிப்புரை :

கங்காதேவியைச் சடையுள் மறைத்து வைத்ததும் உமாதேவி கண்டுவிட்டாள் . கண்டவுடன் ஊடல் கொண்டாள் . தென் கையான் - தென்னிலங்கை மன்னன் , அழகிய கையால் எனலுமாம் . தேர்கடாவிச்சென்று மலையை எடுத்தான் . மாநரம்பு :- யாழ் . இருக்கு இசை :- ` சாமகானம் `. கைவாள் அருளினான் :- ` கொடுத்தனன் கொற்றவாளொடு நாமம் ` ( தி .5 ப .87 பா .10).

பண் :

பாடல் எண் : 1

காடுடைச் சுடலை நீற்றர் கையில்வெண்டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப் பரமனார் மருத வைப்பில்
தோடுடைக் கைதை யோடு சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி யிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து , கையில் வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தி , பக்கத்தில் தம்மைச் சார்ந்த பூதங்கள் சூழ மேம்பட்ட சிவபெருமான் , மருதநிலத்தில் , மடல்களை உடைய தாழைகளோடு சூழும் அகழியைச் சூழ்ந்து தாமரை வேலியாய் அமையும் திருவிடைமருதூரை இடமாகக் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

காடுடைச் சுடலை நீற்றர் :- ` காடுடைய சுடலைப் பொடி ` பூசியவர் . தையல் - உமாதேவியாரை . பாடு - பக்கத்தில் ( உடைப் பரமனார் ). மருதூர் :- மருதவைப்பு , தோடு - இதழ் , கைதை - தாழை , கிடங்கு - அகழி , ஏடு - இதழ் , கமலவேலி - தாமரை வேலி , மருதை இடமாகக் கொண்டார் .

பண் :

பாடல் எண் : 2

முந்தையார் முந்தி யுள்ளார் மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார் சிவநெறி யனைத்து மானார்
எந்தையா ரெம்பி ரானா ரிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

எம்தந்தையாராய் எம் தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய் , அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய் , அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய் , தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய் , மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய் , இடைமருதை இடங்கொண்டவராவர் .

குறிப்புரை :

முந்தையார் முந்தியுள்ளார் - ` முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் ` ஆகி என்றும் இருப்பவர் . மூவர்க்கும் முதல்வர் ஆனார் - அயன் , அரி , அரன் என்னும் மூவர்க்கும் முதற்பொருளானவர் . ` முன்னானை மூவர்க்கும் ` ( தி .8 திருவாசகம் 193) சந்தியார் சந்தியுள்ளார் - சந்தியாவந்தனம் புரிபவரது சந்தியா தியாநத்திலும் அச்சந்தியிலும் விளங்குந் திருவருளுருவினராய் இருப்பவர் . சந்தியார் :- சந்தியாதியாநத்தைச் செய்யும் வேளையாகிய சந்தியையுடையவர் என்று சரியையாளர் , கிரியையாளர் , யோகியர் , ஞானியர் ஆகிய நால்வகையரையும் குறித்தது . ` சந்தியானைச் சமாதி செய்வார் தங்கள் புந்தியானை ` ( தி .5 ப .44 பா .2) தவநெறியைத் தாங்கி நின்றவர் . சிந்தையார் சிந்தையுள்ளார் - ` சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப்பொழிய ` அவரது சிந்தையிலுள்ளவர் . சிவநெறி அனைத்தும் ஆனார் - சிவநெறி யெல்லாமாய் விளங்குகின்றவர் . ` மேல்நெறி யெலாம் புலம் ஆக்கிய எந்தை ` ( தி .8 திருவா .) எந்தையார் - என்னைத் தந்தவர் , பன்மை யாயும் உரைக்கலாம் . எம்பிரானார் - எம் பிரியத்துக்குரியர் . ` பிரியன் ` என்பதன் மரூஉ ` பிரான் ` என்பது ( சேந்தன் செந்தமிழ் பா . 348 ) இடங்கொண்டாரே உள்ளார் , ஆனார் , உள்ளார் , நின்றார் , உள்ளார் ஆனார் எந்தையார் பிரானார் என்று கொள்க .

பண் :

பாடல் எண் : 3

காருடைக் கொன்றை மாலை கதிர்மணி யரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றேற வல்லவர் பொன்னித் தென்பால்
ஏருடைக் கமல மோங்கு மிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

காவிரியின் தென்கரையில் அழகிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார்காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய் , அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார் .

குறிப்புரை :

கார் ... மாலை :- ` கண்ணி கார் நறுங்கொன்றை ` கதிர் மணி - மாணிக்கம் . மாலையைப் பாம்பினொடு சடையுள் வைத்த நீதியார் . கங்கை நீர் உடைச்சடை . நீதி ஆய விடை :- அற விடை , ( தருமரூப ரிடபம் ) போர் உடை விடை :- சாதியடை . ` விடையொன்று ஏறவல்லார் ` ( தி .4 ப .44 பா .4.) பொன்னி - காவிரியாறு . நீர் பொன்னிறத்தது . நீருட் பொன்னொடு மணல் உடையது . திருவிடை மருதூர் காவிரிக்குத் தென்பால் ஓங்குவது . ஏர் - அழகு எழுச்சி . கமலம் - தாமரை . ( தி .4:- ப .35 பா .1,10.)

பண் :

பாடல் எண் : 4

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கு மங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவந் தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமற் காய்ந்த
எண்ணினா ரெண்ணின் மிக்க விடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

அடியவருடைய எண்ணத்தில் மேம்பட்ட , இடைமருதை இடங்கொண்ட பெருமானார் தேவருலகை உடையவராய் , அதனினும் மேம்பட்டவராய் , நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் உலகறியச் செய்தவராய் , பண்ணில் மேம்பட்ட பாடல்களை உடையவராய் , அடியவர்களுடைய பாவங்களைப் போக்கும் கருத்து உடையவராய் , மேம்பட்ட நெற்றிக்கண்ணராய் மன்மதனை வெகுண்ட பெருமானாய் உள்ளார் .

குறிப்புரை :

விண்ணையுடையவர் . விண்ணினும் மேலிடத்தவர் . நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் படைத்தவர் . ( தி .4 ப .36 பா .1) பண்ணில் மிக்க பாடலை யுடையவர் ; சாமகீதர் , அடியர் பாவங்களைப் போக்கும் கருத்துடையவர் . கண் - கருத்து . சூரிய சந்திர நேத்திரங் களைக் குறித்துக் கண் எனலும் பொருந்தும் . கண் .... நுதலினார் :- நுதல் - நெற்றி , நெற்றித் தீவிழியர் . நுதலல் - கருதல் . நுதல்விழி - ஞான நாட்டம் , காமற்காய்ந்த எண்ணினார் - மன்மதனை எரித்த யோகியார் . எண்ணம் - யோகம் . ` உளன் எங்கும் இவன் இங்கும் உளன் என்பார்க்கும் விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல் மந்திரத்தில் வந்து உதித்து மிகும் ` ( சித்தியார் சூ .12. பா .4 ) எண்ணின் மிக்க - மதிப்பிற் சிறந்த ; அடியவர் எண்ணத்தில் மேம்பட்ட .

பண் :

பாடல் எண் : 5

வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப்
பூதங்கள் பாடி யாட லுடையவன் புனித னெந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்க டங்கண் மேலை
ஏதங்க டீர நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழப் பூதங்கள் பாடக் கூத்தாடுதலை உடைய தூயராகிய எம் தலைவர் , தம் திருவடிகளை முன் நின்று துதித்த அடியார்களுடைய பழைய வினைகளையும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதை இடங் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

விண்ணிலுள்ளவர்கள் ( இம் மண்ணில் வந்து ) நான்கு வேதங்களையுங்கொண்டு வாழ்த்தி வழிபடப் பூதங்கள் பாடி ஆடலை உடையவன் . புநிதன் - தூயன் . ` எண்ணான் சிவன் ` ( சிவஞான போதவெண்பா உரை ) - ` தூயதன்மையன் என்னும் பொருட்டாய் அசத்தை எண்ணாமைக்குரிய இயைபுணர நின்றது `. இதனாற் சிவசத்தத்திற்குப் புநிதமென்னும் பொருளுண்மை புலப்படும் . சோமசம்புபத்ததி , சிவதத்துவ விவேகம் இரண்டனுள்ளும் அப்பொருள் கூறப்பட்டமை சிவஞான போதவுரையுட் சிவஞான முனிவர் எழுதியதால் அறியலாம் . எந்தை , நுந்தை , தந்தை என முறையே முன்னிலை படர்க்கைகட்கு உள்ளவாறு தன்மைக்குள்ளது இது . என் + து + ஐ = எந்தை எனதுஐ - எனது முதல் என்னும் பொருட்டு , என்னப்பன் , என்பிரான் ` ( தி .4 ப .35 பா .2), நுன் + து + ஐ = நுந்தை , தன் + து + ஐ = தந்தை . மூன்றும் மரூஉச் சொல் . திருப்பாதங்களை வாழ்த்திப் பிறவியற்று நிலைத்த தொண்டர்களுடைய மேலை ஏதங்கள் தீர்ந்துவிடத் திருவிடைமருதூரிடத்தைக் கொண்டு நின்றார் . உடையவன் புனிதன் என்னும் ஒருமையை நோக்கின் , நின்றார் கொண்டார் என்பவற்றில் உள்ள ஆரீறு , ` ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி ` க்குரியதாதல் புலப்படும் . தி .4 ப .13 பா .3; ப .36 பா .4 முதலியவற்றிலும் இவ்வாறே கொள்க . ஆண்டு முன்னிலை படர்க்கை மயக்கமும் தோன்றும் . மேலைஏதங்கள் :- ( தி :-4 ப .10 பா .5, ப .90 பா .3, தி :-5 ப .5 பா .4, ப .5 பா .8, ப .14 பா .5, ப .7 பா .11, ப .64 பா .7, ப .59 பா .6, ப .97 பா .23.)

பண் :

பாடல் எண் : 6

பொறியர வரையி லார்த்துப் பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க வைத்தவ ரெத் திசையும்
எறிதரு புனல்கொள் வேலி யிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

புள்ளிகளை உடைய பாம்பினை இடையில் இறுகச் சுற்றிப் பூதங்கள் பலவும் தம்மைச் சூழ்ந்திருக்கத் தளிரை உடைய வன்னி , கொன்றை என்பனவற்றைச் செந்நிறம் மிக்க சடையில் கங்கை வெள்ளத்தில் முழுகுமாறு சூடிய பெருமான் நாற்றிசைகளிலும் அலைவீசும் நீரோடு கால்களை எல்லையாக உடைய இடைமருது இடங்கொண்டார் .

குறிப்புரை :

பொறி - படப்புள்ளிகள் . அரவு ( பாம்பு ) அரை ( இடை ) யில் ஆர்த்து (- கட்டி ). பல பூதங்களும் சூழ . முறி - தளிர் . வன்னியும் கொன்றையும் சடையுள் மூழ்க வைத்து . மறிதரல் - கீழ்மேலாதலைத் தருதல் . வீழ்தரல் . ஆர்த்துச் சூழ வைத்துத் தங்க வைத்தவர் என்று இயைக்க . எறிதருபுனல் :- ` அலைபுனல் ஆவடுதுறை `. இடை மருதிடத்தின் நீர்வளம் உணர்த்தியது . எறிதரல் - வீசுதல் . எற்றல் . புனல் எத்திசையும் எறிதல் ; புனல் கொள்வேலி எத்திசையும் உடைமையுமாம் .

பண் :

பாடல் எண் : 7

படரொளி சடையி னுள்ளாற் பாய்புன லரவி னோடு
சுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்று மெந்தை
அடரொளி விடையொன் றேற வல்லவ ரன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது இடங்கொண்ட பெருமான் ஒளி வீசும் சடையிலே பரவும் நீரை உடைய கங்கை , பாம்பு , ஒளி வீசும் பிறை எனும் இவற்றைச் சூடித் தூய செந்நிறத்தோடு காட்சி வழங்கும் எங்கள் தலைவராய் , பகைவர்களை அழிக்கும் பிரகாசமான காளையை ஏறி ஊர வல்லவராய் , அன்பர்களுடைய துயரங்களைப் போக்கவல்லவருமாய் உள்ளார் .

குறிப்புரை :

படர் சடை . ஒளி படர் சடை . பாய் புனல் :- கங்கையின் வேகம் குறித்து நின்றது . அரவு மதியத்தொடும் சடையினுள்ளால் அடங்கிய புனல் என்றதுணர்க . சுடர் ஒளி - சுடரும் ஒளி . ஒளிமதியம் - ஒளியையுடைய பிறை . தூவொளி - தூய ஞானப்பிரகாசம் ; சிவப் பிரகாசம் . ஒளியாகத் தோன்றும் எந்தை . அடர் ஒளி விடை - அடர்ந்த வெள்ளொளியையுடைய எருது ( ஊர்தி ). ( தி .4 ப .35 பா .3) ` சோதி யேற்றினார் ` ( தி .4 ப .36 பா .8.) அன்பர் தங்கள் இடரவை கெடவும் என்றதில் , உம்மை எதிரது தழீஇயதாய் , இன்பம் ஆகவும் என்னும் பொருள்கொள்ள நின்றது . இடரவை கெடவும் இன்பவை ஆகவும் நின்றார் ..... கொண்டார் .

பண் :

பாடல் எண் : 8

கமழ்தரு சடையி னுள்ளாற் கடும்புன லரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத் தன்னடி பலரு மேத்த
மழுவது வலங்கை யேந்தி மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த விடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை , பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் பார்வதிபாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் உள்ளார் .

குறிப்புரை :

கமழ்தரு சடை :- கொன்றைமலர் மணம் ( முதலியன ) வீசுகின்ற சடை . கடும்புனல் :- மேல் ( தி .4 ப .35 பா .7) உரைத்தாங்கு உரைத்துக் கொள்க . தவழ்தருமதியம் :- வான் தவழ் மதியம் `. தன் அடி - தன் திருவடி . மழுவது ( மழு + அது ). ஈண்டு அது சுட்டுப் பெயரன்று ; பகுதிப் பொருள் விகுதி . வலங்கை வலப் பக்கத்துக்கையில் . மாதொருபாகம் : ` அர்த்த நாரீசுவரன் `. எழில் - அழகு , எழுச்சி .

பண் :

பாடல் எண் : 9

பொன்றிகழ் கொன்றை மாலை புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து மேதகத் தோன்று கின்ற
அன்றவ ரளக்க லாகா வனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த விடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

பொன்போல ஒளிவீசும் கொன்றைப்பூமாலை , கங்கை , வன்னி இலை , ஊமத்தம் எனும்இவற்றை ஒளிவீசும் சடையிற் சூடி , ஏனைய தேவர்களின் மேம்பட்டுத் தோன்றுகின்ற பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் அடிமுடி காணமுடியாதபடி தீத்தம்பமாகக் காட்சி வழங்கிய பெருமான் இப்பொழுது நன்மக்கள் துதிக்குமாறு இடைமருதில் உறைகின்றார் .

குறிப்புரை :

பொன்திகழ் - பொன்னிறம் விளங்கும் . புதுப்புனல் :- கங்கை வெள்ளம் . வன்னிமத்தம் - வன்னியும் ஊமத்தமும் , ( தி .4 ப .35 பா .6) மின் - மின்னொளி , மேதக - மேன்மை தகும்படி , தோன்றுகின்ற என்னும் பெயரெச்சம் நீண்டார் என்னும் வினைப்பெயர் கொண்டு முடந்தது . ( தி .4 ப .37 பா .1) அவர் மாலும் அயனும் , அன்று - மேலை முடியோடு பாதம் அறியாமை நின்று நெடுந் தடுமாற்றம் அடைந்த காலத்தில் , அளக்கல் ஆகாஅனல் எரி - அளத்தற்கு ஆகாத அனன்ற தீ . இன்று - இந்நாளில் , உடன் - அவ்விருவருடன் . உலகம் - உலகத்தாரும் ( ஏத்தக் கொண்டார் ). ` அன்று அவர்க்கு அளப்பரிய பாழியார் ` ( தி .4 ப .36 பா .5). பாழியார் பாவந்தீர்க்கும் பராபரர் என்பதை நோக்கின் , திருப்பதிகம் . 32 இல் , ஏழாவது திருப்பாடலில் பாவியாய்ப் பாவந் தீர்ப்பார் என்ற பாடம் பிழையுடையது என்று தெளியலாம் . ` பாவியர் பாவம் தீர்க்கும் பரமன் ` என்பதே உண்மைப் பாடம் என்று சிறிதும் ஐயமின்றித் துணியலாம் . ( தி .4 ப .32 பா .7, தி . 4 ப .36 பா .5) இரண்டும் ஒருங்கு வைத்து நோக்கி உணர்க .

பண் :

பாடல் எண் : 10

மலையுடன் விரவி நின்று மதியிலா வரக்க னூக்கத்
தலையுட னடர்த்து மீண்டே தலைவனா வருள்க ணல்கிச்
சிலையுடை மலையை வாங்கித் திரிபுர மூன்று மெய்தார்
இலையுடைக் கமல வேலி யிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

கயிலைமலையை அடைந்து அறிவற்ற அரக்கனாகிய இராவணன் அம்மலையைப் பெயர்க்க முற்பட அவனைத் தலை உட்பட உடல்முழுதும் துன்புறுத்தி மீண்டும் அவன் வேண்ட அவனுக்குத் தலைவராய் இருந்து அவனுக்குப் அருட்பேறுகள் பலவற்றை விரும்பி அளித்து , மலையாகிய வில்லை வளைத்து வானில் திரிகின்ற மும்மதில்களையும் எய்து அழித்த பெருமான் இலைகளோடு கூடிய தாமரைமலர்கள் ஊர் எல்லையில் பூத்துக் குலுங்கும் திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவராவார் .

குறிப்புரை :

மலை - திருக்கயிலை . விரவி - கலந்து . மதியிலா அரக்கன் :- ` பாங்கிலாமதியன் ` ( தி .4 ப .34 பா .9.) தலையுடன் ( கைகளையும் ) அடர்த்து . மீண்டே - மீண்டும் , தலைவன் ஆ - தலைவன் ஆக , அருள்கள் :- வாள் , நாள் , பெயர் முதலியவை , நல்கி - கொடுத்து , நல்கல் கொடைக்கே , உரிய சொல் . நல்க ஊர்தல் என்பதன் மரூஉவாகிய நல்கூர்தல் என்றதாலும் அது புலப்படும் . சிலை உடை மலை - தான் சிலையாக உடைய மேரு மலையை , சிலை கல்லும் ஆம் . வாங்கி - வளைத்து , திரிபுரம் ( மூன்றும் ) - திரியும்புரம் , வினைத் தொகை . ` திரியும் மும்மதிள் ` ` திரியும் மூவெயில் ` ` திரியுமுப்புரம் செற்றதும் ` ( தி .4 ப .20 பா .7) குறிப்பு அறிக . ` இலையுடைக் கமலவேலி `:- ( தி .4 ப .35 பா .1.)

பண் :

பாடல் எண் : 1

ஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாளைக்
கூடினா ரொருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந் தூயநன் மறைக ணான்கும்
பாடினா ரொருவர் போலும் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

திருப்பழனத்து எம்பெருமான் திருக்கூத்தாடுபவரும் , மலர் நறுமணம் வீசும் கூந்தலாளாகிய பார்வதியின் பாகரும் , கங்கையும் பிறையும் சூடிய ஒப்பற்றவரும் தூயமறைகள் நான்கினையும் பாடுபவரும் ஆவார் .

குறிப்புரை :

திருப்பழனத்திலே திருக்கோயில் கொண்டெழுந்தருளிய எம்முதல்வனார் திருக்கூத்தாடியவரும் , அலர்கள் மணம் வீசும் கூந்தலையுடைய மங்கையைக் கூடியவரும் , தண் ( கங்கை வெண் ) ணீரையும் வளைந்த பிறையையும் சூடியவரும் , தூயனவும் நல்லனவும் ஆகிய நான்கு வேதங்களையும் பாடியவரும் ஆன ஒருவர் போலும் . தூய்மை - பொருட்குற்றம் இல்லாமை . நன்மை - சொற்குற்றம் ஓசைக்கேடு முதலிய தீமையில்லாமை . ` வேதங்கள் நான்கும் ... பண்ணினார் `. ( தி .4 ப .36 பா .1.)

பண் :

பாடல் எண் : 2

போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தா னவர்கள் கேளார் குணமிலா வைவர் செய்யும்
பாவமே தூர நின்றார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

பழனத்து எம்பெருமான் உயிர் செல்வதற்குரிய வழியாக ஆனவரும் , முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார் . அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்பதில்லை . ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன் . நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீய வினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் இருக்கின்றார் .

குறிப்புரை :

பரமனார் ஆனார் ; புநிதனார் ; நின்றார் . போவது :- உயிரின் கதி . நெறி :- அக் கதிக்கு உரிய வழி . புரி ( சடை ) - புரித்த ; முறுக்குண்ட . சடையையுடைய தூயனார் வேவது - உள்ளம் வெம்மையுறுவது . வினையிற் படுதல் - வினைத்துடக் குறுதல் . வெம்மை - வெய்ய துயரம் , கில்லேன் - மாட்டேன் . கூவல் - கூவுதல் . அவர்கள் :- ஐவர் . செய்யுளாதலின் சுட்டு முன் வந்தது , இயற்பெயர் வழியவாம் சுட்டுப் பெயரை ` முற்படக் கிளத்தல் செய்யுளில் உரித்தே ` ( தொல் . சொல் . 39 ). தி .4 திருப்பதிகம் 54 பார்க்க . ஐவரை அடக்கிச் செய்வது புண்ணியம் , அவர்க்கு அடங்கிச் செய்யும் யாவும் பாவமே . அவை தீர நின்றார் பரமனார் .

பண் :

பாடல் எண் : 3

கண்டராய் முண்ட ராகிக் கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித் தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைக டீர்ப்பார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

வீரராய் , மழித்த தலையினராய் அல்லது திரிபுண்டரமாய்த் திருநீறு அணிந்தவராய்க் கையில் ஒரு மண்டை யோட்டை ஏந்தி , அடியார்கள் பாடி ஆடித் தொழும் திருவடிகளை உடையவராய் , பகைவருடைய மும்மதில்களையும அம்பு எய்து அழித்த வேதியராய் , வேதம் ஓதும் நாவினராய் என்னுடைய பழைய வினைகளைத் தீர்ப்பவராய்த் திருப்பழனத்து எம்பெருமான் அமைந்து உள்ளார் .

குறிப்புரை :

கண்டர் - வீரர் . ` தெவ்வர்புரம் எரிகண்டர் ` ( கோயிற் புராணம் நடராசச் சருக்கம் 26 ) முண்டர் - மழித் தலையர் , மிண்டரென்பதன் மரூஉ அன்று . ஏந்தி என்னும் வினையெச்சம் ` கழற் பரமனார் ` என்னும் தொகைக்கண் விரியும் உடைய என்னும் வினைக்குறிப்பொடு முடியும் . தொண்டர்கள் பாடியும் ஆடியும் தொழுங் கழலையுடைய பரமனார் . பரமனார்தாம் வேதியர் . வேத நாவர் ; தீர்ப்பார் ; பழனத்தெம் பரமனார் என்று கொள்க . விண்டவர் - பகைவர் ; திரிபுரத்தசுரர் . பிறப்பால் வேதியர் பலரும் வேதநாவர் ஆகார் . வேதநாவர் பலரும் வேதியர் ஆகார் . வேதியரும் வேத நாவரும் ஆதல் அரிது . பரமனார் அறவாழியந்தணர் . ` மறையுங் கொப்பளித்தவராவர் ` ( தி .4 ப .24 பா .4). பண்டைவினை :- சஞ்சிதம் , பிராரத்தம் . தொழுகழல் :- தொழப்படுங் கழலடி . செயப்படு பொருளில் நின்ற வினைத்தொகை . ` அறு கயிறு ` செய்பொருள் வினைத்தொகை . மறைகள் நிறைநாவர் ( தி .1 ப .71 பா .5).

பண் :

பாடல் எண் : 4

நீரவன் றீயி னோடு நிழலவ னெழில தாய
பாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரம யோகி
ஆரவ னண்ட மிக்க திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமிழ்த மானார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

பழனத்து எம்பெருமான் நீராய்த் தீயாய் ஒளியாய் அழகிய நிலவுலகாய்த் தேவருலகிலும் மேம்பட்ட தெய்வமாய் மேலான சிவயோகியாராய் எங்கும் நிறைந்தவராய் அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களுமாகி மண்ணுலக உயிர்களுக்குக் கிட்டிய விண்ணுலக அமுதமாக உள்ளார் .

குறிப்புரை :

நீரும் நெருப்பும் ஒளியும் அழகியதான பாரும் ( மண்ணுலகும் ) விண்ணுலகின் மிகுந்த மேன்மையும் உடையவன் ; மேலான சிவயோகி ; ஆரவன் - எங்கும் நிறைந்தவன் . அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களும் ஆகி மண்ணுலகத்துயிர்களுக்குக் கிடைத்த விண்ணமுதமானார் . ஈண்டும் ஒருமை பன்மை மயக்கமன்று . தி .6 ப .15 பா .5. பார்க்க .

பண் :

பாடல் எண் : 5

ஊழியா ரூழி தோறு முலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும் பராபரர் பரம தாய
ஆழியா னன்னத் தானு மன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

எல்லோரும் முன்நின்று புகழ்ந்து வழிபடும் திருப்பழனத்து எம்பெருமான் , ஊழிகளாய் , ஊழிதோறும் உலகிற்கு ஒப்பற்ற தலைவராய்ப் பாழாதலை உற்ற மக்களுடைய பாவங்களைப் போக்கும் மேம்பட்டவர்களுக்கும் மேம்பட்டவராய்த் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய , சக்கரத்தை ஏந்திய திருமாலும் அன்ன வாகனனான பிரமனும் தாம் தீப்பிழம்பாகக் காட்சி வழங்கிய காலத்தில் அடிமுடி அளக்க முடியாத வலிமை உடையவராக விளங்கியவராவார் .

குறிப்புரை :

ஊழி முதல்வர் , ` ஊழிமுதல்வனாய் நின்றவொருவன் ` ( தி .8 திருவா . 162) உலகினுக்கு ஒருவர் :- ` எல்லா வுலகமும் ஆனாய் நீயே ` பாழியார் - பாழாதலையுற்றவர் . பாவம் - அப்பாழாக்கிய பாவங்களை . ( தி .4 ப .32 பா .7) பராபரர் - ` முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் ( தி .8 திருவா .163) பரம் அது - முதற் பொருளை ; பரத்துவத்தை , ஆய - ஆராய , ஆழியான் - சக்கிரத்தவன் ; பாற்கடலான் . ` ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ ?` ( தி .8 திருவா .162) திருமால் . அன்னத்தான் - அன்னப்புள்ளூர்தியான் ; நான்முகன் . ` அன்றவர்க்கு அளப்பரிய பாழியார் ` ( தி .8 திருவாச . 352) பாழி :- அகலம் . வலி , நகரம் , பெருமை , வீடு , பாழ் என்பவற்றுள் எதுவும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 6

ஆலின்கீ ழறங்க ளெல்லா மன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் காலன் றன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

பழனத்து எம்பெருமான் கல்லால மரத்தின் கீழிருந்து அறங்களை எல்லாம் ஒரு காலத்தில் நால்வருக்கு அருளிச்செய்து நூல்களை ஓதி வீடுபேற்றை விரும்பும் வைநயிகர்களுக்கு நுட்பமான பொருளாய் அமைந்து , காலனைத் தம் காலின் கீழ்க்கிடக்குமாறு விரைந்து பாய்ந்து உதைத்துப்பின் , பாலில் உள்ள நெய்போல எங்கும் பரவியிருப்பவராவார் .

குறிப்புரை :

ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அவர்க்கு அன்று அருளிச்செய்து . அவர் - சாமுசித்தர் ; சனகாதியர் ; அகத்தியர் ; புலத்தியர் ; திருநந்திதேவர் . ஆல் - கல்லால் , கீழ் என்றது கல்லால் நிழலை , நூலின் கீழவர்கள் - மார்க்கர்கண்ட நூலோதி வீடு காதலிப்பவர் ஆகிய வைநயிகர் . நுண்பொருள் . ` அருளால் உணர்வார்க்கு அகலாத செம்மைப் பொருள் `. ( வினா வெண்பா 13 ). ( தி .4 ப .36 பா .8) ` காலனைக் காலாற் காய்ந்த கடவுள் ` ( தி .4 ப .22 பா .10). கடுக - விரைய , ` பாலின்கீழ் நெய்யும் ` ( தி .4 ப .64 பா .5). பாலிற்படு நெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் ` ( தி .5 ப .90 பா .10.)

பண் :

பாடல் எண் : 7

ஆதித்த னங்கி சோம னயனொடு மால்பு த ( ன் ) னும்
போதித்து நின்று லகிற் போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழுல குஞ் சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

சூரியன் , அக்கினி , சந்திரன் , பிரமன் , திருமால் , புதன் ஆகியோர் உலகவருக்கு அறிவுறுத்தி நின்று தாமும் சிவபெருமானைப் போற்றி வாழ்பவர்கள் . இவர்கள் தம் முயற்சியால் சிவபெருமானைக் கண்ணால் காணலாம் என்று ஏழுலகும் தேடினார்கள் . பழனத்து எம் பெருமான் இவர்களுக்கு எட்டாத வண்ணம் சோதிகளுள் மேம்பட்ட சோதியாகிப் பார்வதி பாகராக உள்ளார் .

குறிப்புரை :

ஆதித்தன் - சூரியன் , அங்கி - அக்கினி , சோமன் - சந்திரன் , அயன் - பிரமன் , மால் - விட்டுணு . புதன் - பண்டிதன் , புலவன் , சூரியனை அடுத்துலவுமவன் புதன் . இவர்கள் உலகோர்க்குப் போதித்து நின்று சிவபிரானைப் போற்றிசைத்து வாழ்பவர்கள் . ஏழுலகும் தேடினார்கள் , இவர்களுக்கு எட்டாதவண்ணம் சோதியுட் சோதியாகி மாதியலும் பாதியரானார் பரமனார் .

பண் :

பாடல் எண் : 8

காற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த வீசர்
தோற்றனார் கடலு ணஞ்சைத் தோடுடைக் காதர் சோதி
ஏற்றினா ரிளவெண் டிங்க ளிரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

காலினாலே கூற்றுவனை உதைத்து , யானைத்தோலைப் போர்த்தியவராய் , அனைவரையும் அடக்கி ஆள்பவர் ஆகிய பழனத்து எம் பெருமான் , கடலில் தோன்றிய விடத்தைத் தம் மிடற்றுள் அடக்கி என்றும் உலகிற்குத் தோற்றமளிக்கும்படி செய்தவராய் , தோடு அணிந்த காதினராய் , வெண்ணிறமுடைய காளையினராய் , பெரிய உலகத்தை எல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளிய சந்திரனில் இளைய ஒளியை அமைத்து ஒளிவிடச் செய்தவராய் அடியார்களுடைய வினைகளை எல்லாம் போக்கியவர் ஆவார் .

குறிப்புரை :

கால்தனால் - காலால் . காலனைக் காய்ந்து காலனை என்னற்கியலாத இடத்து , செயப்படுபொருண்மைபடப் பாவலர் செய்துகொண்ட தொகை ` காலற்காய்ந்து ` என்பது போல்வன . கார் உரி - கரிய யானைத்தோல் . ஈசர் - உடையவர் . பாற்கடலுள் நஞ்சைத் தோற்றுதலும் , அதனை உண்டு சாவாது நின்று , அதன் வலி தொலை வித்தலும் உடையவர் . இது தோற்றினார் என்று இருந்தததோ ? தோற்று - தோற்றுதல் ; தோற்றல் , தோடு உடைக் காதர் :- ` தோடுடைய செவியன் `. ` குழையும் சுருள்தோடும் `. ` விண்ணென வரூஉம் காயப்பெயர் `. ( தொல்காப்பியம் . 305 ) என்றதில் , வெயிலும் நிலவும் காய்தல் பற்றி விண்ணைக் காயம் என்னும் தமிழ் வழக்குண்மை யுணர்க . ஆகாசம் என்னும் வடசொல் முதற் குறையாய்க் காசம் என வாராது . வரின் , அது காயம் என மருவலாம் . இளவெண்டிங்கள் சோதி ஏற்றினார் என்றும் இரும்பொழில் சூழ்ந்த காயம் இள வெண்டிங்கள் சோதி ஏற்றினார் என்றும் மாற்றி உரைக்கலாம் . பெரியவுலகமெல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் இளவெண்டிங்கட் சோதியை ஏற்றினார் . ` சோதி ஏற்றினார் `:- ` அடரொளி விடையொன்றேற வல்லவர் , ( தி .4 ப .75 பா .7). வினைகள் எல்லாவற்றையும் நீக்கினார் . பாற்றுதல் - நீக்குதல் , ஓட்டுதல் .

பண் :

பாடல் எண் : 9

கண்ணனும் பிரம னோடு காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த வெரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்க டூவி வாழ்த்துவார் வாழ்த்தி யேத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

பழனத்து எம் பெருமான் திருமாலும் பிரமனும் தம் முயற்சியால் காண இயலாதவராகி வந்து தியானித்தும் துதித்தும் புகழுமாறு தீப்பிழம்பின் உருவமாகக் காட்சியளித்து , தம்மை வாழ்த்தும் அடியவர்கள் நல்ல நிறத்தை உடைய மலர்களால் அருச்சித்து வாழ்த்தித் துதிக்க அவர்களுடைய பண்ணோடு கூடிய பாடல்களைக் கேட்டு மகிழ்பவராவார் .

குறிப்புரை :

கண்ணன் - ஈண்டுத் திருமால் , பிரமன் - மலரவன் . ( தி .4 ப .33 பா .3 பார்க்க .) காண்கிலர் - அடிமுடி தேடி அறிகிலர் . எண்ணியும் - மனத்தால் ( அகத்தே ) நினைந்தும் . துதித்தும் - வாயால் ( புறத்தே ) புகழ்ந்து பாடியும் . ஏத்த - எடுத்தோத . எரியுரு - ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதிவடிவம் . வண்ணம் - நிறம் ; அழகு . நன்மலர்கள் - மணமிக்க பூக்கள் . தூவி வாழ்த்துவார் - பூசனை புரிந்து போற்றுமவர் . பண்ணுலாவும் பாடல்களால் வாழ்த்தி ஏத்தக்கேட்டு அருள்கள் செய்தார் பரமனார் .

பண் :

பாடல் எண் : 10

குடையுடை யரக்கன் சென்று குளிர்கயி லாயவெற் பின்
இடைமட வரலை யஞ்ச வெடுத்தலு மிறைவ னோக்கி
விடையுடை விகிர்தன் றானும் விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை யடிகள் போலும் பழனத்தெம் பரம னாரே.

பொழிப்புரை :

அரசனுக்குரிய வெண் கொற்றக் குடையை உடைய இராவணன் சென்று குளிர்ந்த கயிலாய மலையை , அங்கிருந்த இளையளாகிய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் , காளையை வாகனமாக உடைய , உலகப் பொருள்களிலிருந்து வேறுபட்ட தலைவராகிய பழனத்து எம் பெருமான் , தம் விரலினால் அழுத்தி ஊன்றி அவனை நெரித்துப் பின் அவன் பாடலைக் கேட்டு வெகுளி நீங்கி அவனுக்கு வாட்படையை வழங்கியருளியவராவர் .

குறிப்புரை :

குடை அரசர்க்குரிய கொற்றக்குடை . குளிர் கயிலாய வெற்பு :- பேரின்பக் குளிர்ச்சி . மலைக்குக் குளிர்ச்சி சாதியடை . வெற்பினிடை .- மலை யிடையில் , எடுத்த வேளையில் மடவரலை - உமாதேவியாரை , மடவரலை நோக்கி , அரக்கனை நோக்கி எனின் , ` அஞ்ச` - அஞ்சுவித்து . பிறவினைப் பொருட்டாம் . விடை - எருது , விகிர்தன் - சிவன் ; பசுபாசங்களின் வேறுபட்டவன் . படை - வாள் . கொடை - நல்கலையுடைய . அடிகள் - கடவுள் .

பண் :

பாடல் எண் : 1

காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.

பொழிப்புரை :

கூற்றுவன் கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன் . ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே ! தற்போதம் அற்று நின்போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன் .

குறிப்புரை :

காலனை வீழச் செற்ற கழலடி :- காலின் கீழ்க் காலன்றன்னைக் கடுகத்தான் பாய்ந்து ` காற்றனார் காலற் காய்ந்து `. ( தி .4 ப .36 பா .6,8) காலனைச் செற்ற கழலடி யிரண்டும் என் மேலனவாகியிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்ற . ( தி .4 ப .35 பா .9) கோலம் - அழகு , குளிர் பொழிற் கோயில் - குளிர்ந்த சோலைக்குள் இருக்கும் திருக்கோயில் . மேய - மேவிய ; விரும்பி எழுந்தருளிய . நீலம் வைத்த அனைய கண்ட - நீல நிறத்தை வைத்தாற்போன்ற நஞ்சுண்டு உட்புகாது நிறுத்திக் காட்டுஞ் சீகண்டனே . நினைக்குமா - தற்போதம் அற்று நின் போதத் தால் நினைக்குமாறு .

பண் :

பாடல் எண் : 2

காமனை யன்றுகண் ணாற் கனலெரி யாக நோக்கித்
தூமமுந் தீபங் காட்டித் தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ் செறிபொழிற் கோயின் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.

பொழிப்புரை :

மன்மதனை ஒரு காலத்தில் நெற்றிக்கண்ணால் நெருப்பாகப் பார்த்து அழித்து , நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும் அடியவர்களுக்கு அருள்கள்செய்து , எல்லா உயிர்களுக்கும் பாதுகாவலைத் தரும் சோலைகளால் சூழப்பட்ட நெய்த்தானம் என்னும் இருப்பிடத்தில் பொருந்தியுள்ள சிவபெருமானைத் தியானிக்கும் அடியேனுடைய மனம் நல்வாழ்வுக்கு உரிய செய்தியைத் தியானித்த செயல் போற்றத்தக்கது .

குறிப்புரை :

காமனை - மன்மதனை . அன்று சிவபிரான் யோகிருந்த காலத்தில் , கண்ணுதல் நெற்றி (த்தீ)க் கண்ணால் , கனல் எரி - கனலும் எரி , தூமம் - புகை , தீபம் - திருவிளக்கு , காட்டி :- தூப தீபங்களை , பூசிக்கப் பெறும் பரமேசுவர சந்நிதியிற் சிவாகம விதிப்படி அசைத்துக் காணச்செய்து . தொழுமவர் :- வழிபடும் அடியார் . சேமம் - காவல் . வாமன் - சிவபிரான் .

பண் :

பாடல் எண் : 3

பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த வெங்க ளுத்தம னூழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்று
குறைதரு மடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.

பொழிப்புரை :

பிறைதங்கிய சடையின்மேலே கங்கைதங்குமாறு வைத்த எங்கள் மேம்பட்ட தலைவனாய் , பல ஊழிகளின் வடிவினனாய் , பலசோலைகளாலும் சூழப்பட்ட நெய்த்தானமாகிய அவன் உகந்தருளும் திருப்பதியைக் குறையிரந்து வேண்டிக் கொள்ளும் திருவடித்தொண்டர்களுக்கு இளையவனாகிய எம்பெருமான் அடைவதற்கு எளியவனாய் உள்ளான் .

குறிப்புரை :

பிற - பிறை ; பிறத்தலுடையது . பிறைதருசடை - பிறையைத் தரப்பெற்ற சடை . பிறை இடப்பொருள் ( தானி ). சடை இடம் ( தானம் ). உறைதரல் - தங்குதல் . உறு - உறை . நிறு - நிறை . குறு - குறை . என முதனிலை ஐஉறல் உணர்க . குறைதரும் அடியவர் - குறையிரந்து வேண்டிக்கொள்ளும் திருவடித் தொண்டர் . ` நாளும் மிகும் பணிசெய்து குறைந்தடையும் நன்னாளில் ` ( தி .12 பெரிய . அப்பர் 45) ` இல்வாழ்வு பெறத்தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத்தொழுதார் ` ( தி .12 பெரிய . அப்பர் 73) என்புழிப்படும் நன்றியுமாம் . சிவ . போ . மாபாடியம் . சூ . 12 வெண்பா (` தன்னை அறிவித்து `) உரையில் உள்ளதுணர்க .

பண் :

பாடல் எண் : 4

வடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மேவி
அடிதரு கழல்க ளார்ப்ப வாடுமெம் மண்ண லாரே.

பொழிப்புரை :

சிள்வீடு என்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ நிலைபெற்ற நெய்த்தானத்தில் விரும்பி உறைந்து திருவடிகளில் அணிந்த கழல்கள் ஒலிக்குமாறு கூத்து நிகழ்த்தும் எம் மேம்பட்ட தலைவர் காய்ச்சி வடிக்கப்பட்டுக் கூரிதாக்கப்பட்ட மழுவைக் கையிலேந்தி , நீண்ட சடையிலே பிறையை அணிந்து திருநீறு அணிந்த மார்பிலே பல நூல்களை முறுக்கி அமைக்கப்பட்ட பூணூலை அணிந்தவராவார் .

குறிப்புரை :

வடிதரு மழு - வடித்துக் கூரியதாக்கிய மழுப்படை . வார் ( சடை ) - வார்ந்த சடை ; நீள் சடையுமாம் . பொடி தருமேனி - பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறு `. புரிதரு நூலார் - ஒன்பான் கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் ` அணிந்தவர் . நெடி - சிள்வண்டு , பொழில்களின் அடை , அடிதரு கழல் - திருவடியிற் பூட்டிய வீரக் கழல் , ஆர்ப்ப - ஒலிக்க . அண்ணலார் - சிவனார்க்கு இடுகுறிப் பெயர் .` ஆடல் மேவிய அண்ணலார் ` ( தி .12 பெரிய . ஏயர்கோன் 98)

பண் :

பாடல் எண் : 5

காடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப் பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலர் சீரா ரந்தணெய்த் தான மென்றும்
கூடிய குழக னாரைக் கூடுமா றறிகி லேனே.

பொழிப்புரை :

கையில் ஒளிவீசும் நெருப்பை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பாடுகின்ற பூதங்கள் தம்மைச் சூழப் பண்ணோடு பல பாடல்கள் பாடி ஆடிய திருவடிகளை உடையவராய்ச் சிறப்புமிக்க அழகிய குளிர்ந்த நெய்த்தானத்தில் எப்பொழுதும் உறைகின்ற இளையவராகிய எம்பெருமானை அடையும் திறத்தை அறியாது இருக்கின்றேனே !

குறிப்புரை :

காடு இடம் ஆக நின்று ஆடிய கழலர் . கனல் எரி ஏந்தி ஆடிய ; பாடிய பூதம் சூழ ஆடிய ; பண்ணுடன் பலவும் சொல்லி ஆடிய ; சீரார் - சீருடையார் . சீர் ஆர் நெய்த்தானம் எனலும் பொருந்தும் . அம் - அழகு , தண் - குளிர்ச்சி , என்றும் கூடிய - எப்பொழுதும் வீற்றிருந்தருளும் . குழகனார் - அழகனார் , இளமையர் . ` குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர் ` ( பாரத . சூதுபோர் . 66 ) என்றலாற் காளையர் என்னும் பொருட்டுமாம் . கூடும் ஆறு - சிவயோக நெறி .

பண் :

பாடல் எண் : 6

வானவர் வணங்கி யேத்தி வைகலு மலர்க டூவத்
தானவர்க் கருள்கள் செய்யுஞ் சங்கரன் செங்க ணேற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தான மேய
கூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.

பொழிப்புரை :

தேவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க , அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை உடையவனாய் , வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற் புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற , வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது உள்ளேனே !

குறிப்புரை :

வானவர் - விண்ணோர் பேரின்ப வீட்டினர் . வைகலும் - நாள்தோறும் . வைகுறு :- விடியற்பொழுதில் வழிபடல் வேண்டு மென்பது குறித்து நின்றது , வழிபாட்டிற்குரிய சிறந்த பொழுது அதுவே யாகும் . சிவாகம விதியிற்காண்க . மலர்கள் தூவி வழிபட்டவர்க்குச் சங்கரன் செய்வன எல்லையுட்படாதன ஆதலின் ` அருள்கள் ` என்று பன்மையிற் கூறலாயிற்று . தான் - சங்கரனைக் குறித்து நின்ற படர்க்கை யொருமைப் பெயர் . அசையுமாம் ` தான் அலாது உலகம் இல்லை ` ( தி .4 ப .40 பா .1) ` தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் ` ( தி .6 ப .98) ` தங்கோல நறுங்கொன்றைத் தார் அருளாது ஒழிவானோ ` ( தி .4 ப .12 பா .6) என்னும் இடத்தில் ` தான் ` ` தன் ` இரண்டும் எதுகை நோக்கிய திரிபாதல் உணர்க . சங்கரன் - நலன் நல்குவான் . ` செங்கண் ஏற்றன் ` ` செங்கண் மால்விடை ` யினன் . தேன் அமர் - தேன் பொருந்திய ; வண்டுகள் விரும்புகின்ற . கூன் இளமதியம் . வளைந்த பிறை .

பண் :

பாடல் எண் : 7

காலதிர் கழல்க ளார்ப்பக் கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.

பொழிப்புரை :

திருமாலைத் தம் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்த நெய்த்தானப் பெருமானார் காலிலே அசைகின்ற கழல்கள் ஒலியெழுப்ப , ஒளிவீசுகின்ற தீயினைக் கையில் வைத்து வீசிக்கொண்டு தரையில் பள்ளம் தோன்றவும் , விரிந்த சடை வானத்தை அளாவ எட்டுத் திசைகளிலும் பரவவும் கூத்து நிகழ்த்தும் மேம் பட்டவராவார் .

குறிப்புரை :

கால் அது :- அது சுட்டுப் பெயர் அன்று . முதனிலைப் பொருளே தனக்கும் உரியதாக நிற்பது . ஞாலம் - மண்ணுலகம் . ஈண்டு ஆடநின்ற நிலம் குறித்தது . குழிய - குழியடைய , பள்ளமுற . நட்டம் - திருக்கூத்து . இது தமிழ்ப் பெயர் , வடசொற் சிதைவு அன்று . கொட்டம் ( கொள் + து + அம் ) வட்டம் ( வள் + து + அம் ) போல்வது . மேலவர் - விண்ணவர் மால் ஒரு பாகம் :- ` இடமால் தழுவிய பாகம் ` ( தி .4 ப .2 பா .4). ` மாலுங்கொப்பளித்த பாகர் ` ( தி .4 ப .24 பா .7) ` மறிகடல் வண்ணன் பாகா ` ( தி .4 ப .62 பா .8) ` பாகம் மாலுடையர் போலும் ` ( தி .4 ப .66 பா .8). ` திருமாலோர் பாகன் ` ( தி .4 ப .77 பா .5) அரியலாற்றேவி யில்லை ஐயன் ஐயாறனார்க்கே `.

பண் :

பாடல் எண் : 8

பந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி யடிகளை யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார் திருந்துநெய்த் தான னாரே.

பொழிப்புரை :

முடிக்கப்பட்ட சடையின்மேலே கங்கையைச் சூடி மாலை நேரத்தில் தீயில் கூத்தாடும் பெருமானார் திருவையாற்றை அடைந்தவராய்த் தம்மைக் கும்பிடுபவராய் வணங்கி வழிநின்று வாழ்த்துபவராகிய அடியவர்களின் நாவில் நின்று , தியானம் செய்பவர் மனத்தில் உறைந்து , சிறந்த நெய்த்தானத்தில் நிலையாகத் தங்கி விட்டார் .

குறிப்புரை :

பந்தித்த - கட்டிய . புனலது :- ` காலது ` ( தி .4 ப .37 பா .7) என்பதற்கு உரைத்ததுணர்க . அந்திப்போது - மாலைவேளை . அனலும் - தீயிலும் . அடிகள் - கடவுள் . வந்திப்பார் - வந்தனை புரிபவர் ( வாயின் உள்ளார் ). வணங்கி நின்று வாழ்த்துவாருடைய வாயின் உள்ளார் . சிந்திப்பாருடைய சிந்தையினுள்ளார் . சிந்தித்தல் நினைப்பு . வாழ்த்துதல் உரையொலி . வந்தித்தல் மெய்த்தொழில் என முப் பொறிக்கும் உரியன உணர்த்தப்பட்டன , மூன்றும் ஒருவழிப் படாதது வழிபாடன்று . ( சிவஞான சித்தியார் சூ . 1 ). ` திருந்து ` என்பது நெய்த் தானத்திற்கு அடை நெய்த்தானனார்க்கு அன்று . திருந்திய இடம் .

பண் :

பாடல் எண் : 9

சோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலக மேத்த வுகந்துதா மருள்கள் செய்வார்
ஆதியா யந்த மானார் யாவரு மிறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.

பொழிப்புரை :

ஆதியும் அந்தமும் ஆகியவராய் , எல்லோரும் விரும்பித் துதிக்க , நீதியாகவும் தவம் முதலிய வகுக்கப்பட்ட நெறிகளாகவும் , நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானப் பெருமான் ஒளியாகவும் , அவ்வொளியை வெளிப்படுத்தும் சூரியன் முதலிய சுடர்ப் பொருள்களாகவும் ஆயினவராய் , திருநீற்றைச் சந்தனமாகப் பூசி வேதம் ஓதி , நன்மக்கள் தம்மைத் துதித்தலால் தாம் அவர்களுக்கு அருள் செய்பவராவார் .

குறிப்புரை :

சோதி - ஒளி . சுடர் - முச்சுடர் , முச்சுடர்க்கண்ணும் நின்று ஒளிரும் முதற் பொருளே சோதி , அச்சோதிக்கும் இடம் முச்சுடர் . ` அருக்கனாவான் அரனுரு ` ( தி .5. ஈற்றுத் திருப்பதிகம் 8). ` நிலம் நீர் நெருப்புயிர் நீள்விசும்பு . நிலாப் பகலோன் புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் ` ( தி .8 திருவாசகம் ). என்பனவற்றால் , சுடருளும் புணர்ந்து நின்றவன் முதல்வன் . புணரும் இடம் சுடர் எனல் இனிது விளங்கும் . ` சுண்ணவெண் சாந்து ` ` சுண்ணவெண் சந்தனச்சாந்தும் ` ( தி .4 ப .2 பா .1) ` சுண்ண வெண்பொடி ` ( தி .5 ப .10 பா .9). ` சுண்ணத்தர் சுடு நீறுகந்தாடலர் ` ( தி .5 ப .87 பா .7). உலகம் - உயர்ந்தோர் , உலகம் வாய் ஓதி ஏத்த என்றும் தாம் உகந்து அருள்கள் செய்தார் என்றும் கொள்க . ஓதி - ஓதத்தை யுடையது ; கடல் . வாய் - இடம் ; ஓதிவாயுலகம் - கடலிடைப்பட்ட உலகம் எனலும் ஆம் . ஆதியும் ( முதலும் ) அந்தமும் ( முடிவும் ) ஆனார் . யாவரும் - எச் சமயத்தவரும் . நீதி - நன்னெறி ; நியாயம் ; முறைமை . நியமம் - நிச்சயம் . தவம் முதலிய பத்துமாம் . ( சைவ வினாவிடை 29 ) ` நீதியானை நியம நெறிகளை ஓதியானை ` ( தி .5 ப .94 பா .6) என்றதால் இது விளங்கும் .

பண் :

பாடல் எண் : 10

இலையுடைப் படைகை யேந்து மிலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுட னடர்த்து மீண்டே தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுர மெரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலு நின்றநெய்த் தான னாரே.

பொழிப்புரை :

இலைவடிவமாக அமைந்த வேலினைக் கையில் ஏந்திய இராவணனைத் தலை உட்பட உடல் முழுதையும் நசுக்கிப் பின் மீண்டும் அவனுக்குப் பல அருள்களைக் கொடுத்து , வில்லிலே அம்பினை இணைத்து மும்மதில்களையும் அழியுமாறு வெகுண்ட , என்றும் அழியாத நிலையை உடைய பெருமான் நிலைபெற்ற திருநெய்த்தானத் திருப்பதியை உகந்திருப்பவராவார் .

குறிப்புரை :

இலையுடைப்படை :- ` ஒளிறு இலை எஃகு ` - ` விளங்கிய இலையையுடைய வேல் `. ( புறம் . 26 ) ` திருந்திலை நெடுவேல் ` - ` திருந்தின இலையையுடைய நெடியவேல் ` ( புறம் . 180 ) ` நச்சிலைவேல் ` - ` நஞ்சு தோய்த்த அலகையுடைய வேல் ` ( சிந்தாமணி . 2209 ). அவற்கு - அ ( வ் விலங்கையர் தலை ) வனுக்கு . தான் ( அருள்கள் ) செய்து . சிலை - மேருவில் . கணை - மால்கணை . நிலை - அழியாத நிலைமை .

பண் :

பாடல் எண் : 1

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி யரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையு ளனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

நம் தலைவனாராகிய ஐயாறனார் , சடையில் கங்கையையும் ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு பார்வதி பாகராய் , மான்குட்டியையும் , மழுப்படையையும் , உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார் .

குறிப்புரை :

சடையுள் கங்கையும் பாம்பும் திங்களும் திகழ வைத்தார் . எல்லாத் திசையிலும் ( எல்லாவுயிர்களும் ) தொழ வைத்தார் . மங்கையை இடப்பால் வைத்தார் . மான் கன்றும் மழுப் படையும் தீயும் திருக்கையில் வைத்தார் . ` மான் மறியும் மாமழுவும் அனலும் ஏந்துங் கையானே ` ( தி .6 ப .62 பா .7.) ஐயன் ஐயாறனார் :- ஒருமையும் பன்மையும் மயங்கின அல்ல . இது வழக்கினாகிய உயர் சொற் கிளவி ; ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி .

பண் :

பாடல் எண் : 2

பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

ஒளி விளங்கும் பூணூலை அணிந்து , கொடிய நாகத்தைப் பூண்டு , கூற்றுவனை உயிர்கக்குமாறு உதைத்து , அழகிய பார்வதியை ஒரு பாகமாக மார்பில் வைத்து ஐயாற்றுத் தலைவராம் பெருமான் அடியவர்கள் திருநீற்றைப்பூசித்தம் திருவடிகளைத் தொழுமாறு வைத்தவராவார் .

குறிப்புரை :

திரு வெண்ணீற்றைப் பூசிப் பாசந்தீர வீடுபெற உயிர்களிடத்துக்கொண்ட பேரருளால் சிவாகமங்களில் விதி வகுத்தார் . பூசப் பொடியை வைத்தாருமாம் . பொங்குவெண்ணூல் - பொங்குகின்ற வெள்ளைப் பூணுநூல் . கடும்பாம்பு . காலனை ( உயிர் ) கக்க வைத்தார் . ` வடிவுடை மங்கை ` திருத்தலத்துநாயகி , மார்பில் ஓர் பாகம் வைத்தார் :- மலைமகள் கைக்கொண்ட மார்பு ` ( தி .4 ப .2 பா .7) முதலிய பிற இடத்தும் ` மார்பு ` என்றதுணர்க . அடியிணை - திருவடித்துணை ( இரண்டு ) ` பாதங்கள் ` பரவ வைத்தார் ` ( தி .4 ப .38 பா .9).

பண் :

பாடல் எண் : 3

உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர வருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

கீளொடு கோவணம் அணிந்து , உலகங்களை நிலை நிறுத்தி , மழுப்படை ஏந்தி , பாய்கின்ற புலியின் தோலை உடுத்து , காளை எழுதிய கொடியை உயர்த்தி , வெண்புரிநூல் அணிந்து அடியார்கள் தம்மை அடைய அருள்புரிபவர் ஐயாறராகிய நம் தலைவராவார் .

குறிப்புரை :

உடைதருகீள் :- கிழி - கீழ் - கீள் , மரூஉ . ` சடையும் பிறையும் சாம்பற்பூச்சும் கீளுடையுங் கொண்டவுருவம் ` ( திருக் கோலக்கா ). உலகங்கள் அனைத்தும் வைத்தார் :- ( தி .4 ப .34 பா .6) ` எல்லா வுலகமும் ஆனாய்நீயே ` ` இறையவன்காண் ஏழுலகும் ஆயினான் காண் `, படை தருமழு - எதிர்த்தோரைப் படுத்தலைத் தரும்மழு . தடுத்தல் - தடை ; கொடுத்தல் - கொடை ; படுத்தல் - படை . விடைதரு கொடி - எருதுரு எழுதிய கொடி . வெண்ணூல் , புரிநூல் , அடைதர - அடைய .

பண் :

பாடல் எண் : 4

தொண்டர்க டொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்க ளேத்து மையனை யாற னாரே.

பொழிப்புரை :

எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் வழிபடும் தலைவராகிய ஐயாறனார் , சடையில் தூய பிறையைச் சூடி , முடி மாலையை விளங்க வைத்து , வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய பார்வதி பாகராய் , அடியார்கள் தம்மைத் தொழவும் அடியவராகிய எங்களுக்கு என்றும் இன்பம் பெருகவும் வாய்ப்பு அளித்துள்ளார் .

குறிப்புரை :

பத்தர்கள் பணியவைத்தார் ( தி .4 ப .38 பா .9) தொழவும் என்ற உம்மையாற் பிறவழிபாடுகளும் கொள்ளப்படும் . தூமதி :- வெண்டிங்கள் . இண்டை :- சிவலிங்கத்திற்கு இன்றியமையாததொரு மாலை . இலையும் பூவும் இடையிட்டுத் தொடுக்கும் வகையது . ` இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம் ... கேதாரம் ( சம்பந்தர் ). ` முருகார் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் ` ( தி .4 ப .113 பா .2). ` இந்திரன் வனத்து மல்லிகை மலரின் இண்டை சார்த்தியதென நிறைந்த சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோணசைலனே கைலைநாயகனே `. ( தி .4 ப .6 பா .6) எமக்கு இன்பம் என்றும் வைத்தார் :- ` இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ` அண்ட வானவர்கள் - அண்டங்களில் வாழும் வானோர்கள் .

பண் :

பாடல் எண் : 5

வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை யைந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் வானவர் தம்மை வணங்கச் செய்தவராய் , அடியார்களுடைய கொடிய வினைகளை அழிய வைத்தவராய் , சுடுகாட்டிடைக் கூத்து நிகழ்த்துபவராய் , மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு செய்து , பசுவினிடைப் பஞ்ச கவ்வியத்தை அமைத்து அதனால் தம்மை அபிடேகிப்பவருக்கு அருள் செய்து , யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவராவார் .

குறிப்புரை :

வானவர்கள் :- தேவர் ; பேரின்பம் எய்தியவர் . வல்வினை :- ஆகாமியம் ; சஞ்சிதம் ; பிராரத்தம் . மாய - மறைய ; அழிய . கான் - சுடுகாடு . நடம் - திருக்கூத்து . காமன் - கருவேள் . கனல் ஆ - தீ ( ய்ந்து சாம்பர் ) ஆக . ஆனிடையைந்து :- ஆவினிடத்துக் கொள்ளப்படும் பால் , தயிர் , நெய் . ` ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர் `. ஆட்டுவார்க்கு - திருவபிடேகம் புரியும் அன்பர்க்கு . அருள் - வேண்டுவார் . வேண்டுவ - ஈவன . உரிவை - தோல் .

பண் :

பாடல் எண் : 6

சங்கணி குழையும் வைத்தார் சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதி ரெரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் சங்கினாலாகிய காதணியை அணிந்தவராய் , அடியவர்களும் திருநீறு அணிய வைத்தவராய் , சூரியனை வெயிலை வெளிப்படுத்துமாறு செய்தவராய் , எல்லா உலகங்களும் படைத்தவராய் , இரவையும் , பகலையும் தோற்றுவித்தவராய் , கொடிய வினைகளைப் போக்கும் வழிகளை உலகுக்கு அறிவித்தவராய் , வேதாங்கங்கள் ஆறினையும் ஓதி உணர வைத்தவராய் உள்ளார் .

குறிப்புரை :

சங்கு அணி குழை - சங்கறுத்துச்செய்த அழகிய குழை , சாம்பர் :- சாம்பற்பூச்சு . வெங்கதிர் - சூரியன் . எரிய - காய ; வெயில் செய்ய . விரிபொழில் அனைத்தும் வைத்தார் :- ( தி .4 ப .28 பா .6.) கங்குலும் பகலும் வைத்தார் :- ` வெங்கதிர் எரியவைத்தார் ` என்றது ஏது . இது பயன் . கடுவினை களையவைத்தது உயிர்கட்கு . அங்கமது :- வேதாங்கம் ஆறு ஆயினும் , அங்கம் என ஒன்றாதல் பற்றி அங்கமவை என்றிலர் . குரு முகத்துணரற்பாலன என்பார் . ` ஓதவைத்தார் ` என்றார் . இது மும்மலம் நீக்கும் அருள் வழியைத் தெளிவிக்கின்றது

பண் :

பாடல் எண் : 7

பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் பத்தர்களுக்கு அருள்பவராய் , காளையை ஏறியூர்பவராய் , அடியவர் மனத்தை ஒருவழிப்படுத்துபவராய் , அம்மனம் சிவனையே நினைக்குமாறு செய்பவராய் , அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவராய் , அந்நிலை எய்துதற்குரிய வழிகளை அமைத்தவராய் , யானைத்தோலைப் போர்வையாகக் கொண்டவராய் உள்ளார் .

குறிப்புரை :

பத்தர்கட்கு அருளும் வைத்தார் :- ` ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் `. ( தி .4 ப .38 பா .5), ` சித்தத்தை ஒன்றவைத்தார் `:- ` சிந்தையுள் ஒன்றிநின்று ` ( தி .4 ப .48 பா .8) ` ஒன்றியிருந்து நினை மின்கள் ` ` சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன் `. சிவமதே நினைய வைத்தார் :- ` சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சு ` ( காஞ்சிப் புராணம் ), நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் . முத்தி - பாசவீடும் சிவப் பேறும் . முற்ற - இன்ப நிறை வெய்த . விடுதலும் பெறுதலும் முற்ற . ` பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கே முற்றவரும் பரிசுந்தீபற முளையாது மாயை என்றுந்தீபற `. ( தி .4 ப .4 பா .2.) முறை முறை நெறிகள் வைத்தார் :- ` புறச்சமய நெறி நின்றலும் ... ... சிவனடியைச் சேர்வர் `. ( சித்தியார் 263 ) அத்தி - யானை . உரிவை ( தி .4 ப .38 பா .5). ` சித்தரை ` எனல் சிறந்தது .

பண் :

பாடல் எண் : 8

ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமு மரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் தாம் விரும்பி இவரக் காளை வாகனத்தை உடையவராய் , இருப்பிடமாக இடைமருதூரைக் கொண்டவராய் , நறுமணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவராய் , இடையில் பாம்பினை இறுகக்கட்டியவராய் , பார்வதிபாகராய் , கொல்லும் புலியின் தோலை ஆடையாக உடையவராய்க் கங்கையைச் சடையில் சூடியவராய் உள்ளார் .

குறிப்புரை :

ஏறு உகந்து ஏறவைத்தார் :- ( தி .4 ப .4 பா .3) இடை மருது - திருவிடைமருதூர் . இடம் - திருக்கோயில் . நாறு பூ - மணம் நாறும் பூ . நாகம் - பாம்பு , அரை - இடை , கூறு - இடப்பால் , உமை - உமா தேவியார் , ஆறும் - கங்கையையும் , நாகமும் என்றதால் அக்கும் , புலித் தோலும் என்றதால் யானைத்தோலும் , மான்றோலும் , ஆறும் என்றதால் இளம்பிறை முதலியனவும் கொள்ள வைத்தார் அப்பர் . ` மருதிடமும் ` என்றது வேறுள்ள சிவதலங்களையும் வைத்ததைக் குறித்த உம்மை , தலைமருதும் புடை மருதும் குறித்த உம்மையுமாம் . புடைமருது - திருப்புடை மருதூர் . தலைமருது - திருவிடைமருதூர் .

பண் :

பாடல் எண் : 9

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியு மந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் பல பூதகணங்களை உடையவராய் , ஒளிவீசும் வெண்ணீறு அணிந்தவராய் , இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய் , இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய் , தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய் , தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவ ராய் உள்ளார் .

குறிப்புரை :

பூதங்கள் பலவும் :- ` பூதப் படையான் `. பொங்கு வெண்ணீறு :- திருநீற்றின் வெண்மை பொங்குதல் குறித்தது . பொல் + கு = பொங்கு , ( மரூஉ ). பொலிவு , திருநீற்றுப் பொலிவு , மிகுதிப் பொருட்டாதற்கும் இதுவே காரணம் . கீதங்கள் - பாட்டுக்கள் . சாமகீதம் முதலியன . கின்னரம் - பாடல் , இசை . ( தி :-4 ப .38 பா .6, ப .35 பா .5,7, ப .38 பா .2,4.)

பண் :

பாடல் எண் : 10

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் , பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய் , அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய் , நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய் , பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய் , இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார் .

குறிப்புரை :

இரத்தல் புரத்தல் இரண்டும் மறுதலைப் பொருளன . ` இரவலர் புரவலை நீயும் அல்லை . ( தி .4 ப .16 பா .7) புரவலர்க்கு இரவலர் இல்லையும் அல்லர் . இரவலர் உண்மையும் காண் இனி . இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி `. ` நாளும் புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந்தகை `. ( புறநானூறு , 162, 329 ) ` புரவுக் கடன் ` ( ? . 149) போல இரவுக் கடன் என வேண்டாமையாலும் மறுதலை என்பது புலனாகும் . புரப்பவர் இரப்பவர்க்கு ஈயவைத்தல் , ஈயப் பல பொருள்களை வைத்தல் , ஈய இரக்கம் வைத்தல் முதலிய பலவும் ஈண்டுக் கருதுக . ஈபவர்க்கு - இரப்பவர்க்கு ஈந்து புரப்பவர்க்கு . அருள் :- ` வல்லா ராயினும் வல்லுநராயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி ` வழங்குதற்கு ஏதுவான அருள் . ( புறம் . 27 ). ` எத்துணை யாயினும் ஈத்தல் நன்று என மறுமை நோக்கின்றோ அன்றே பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே ` ( புறம் . 147 ) என்ற நோக்கு ( கருத்து ) டையார்க்கு எழுமையும் உதவும் அருள் . கரப்பவர் - ஈயாது மறைப்பவர் . கரப்பவர்க்குக் கடுநரகங்கள் வைத்தார் என்றது நோக்கின் , ஈபவர்க்கு வைத்த அருள் இறைவன் திருவருளே ஆகும் ; ஈவோர் நெஞ்சிரக்கம் அன்று எனல் இனிது விளங்கும் .

பண் :

பாடல் எண் : 1

குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற
அண்டனே யமர ரேறே திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் றொழுதுன் பாதஞ் சொல்லி நான்றிரிகின் றேனே.

பொழிப்புரை :

அறிவிலியாய் அடியேன் சமணரோடு கூடிப் பெற்ற மனமயக்கத்தை ஒழித்தவனே ! ஞானப் பிரகாசனே ! தூய வழியாக நின்ற உலகத்தலைவனே ! தேவர்கள் தலைவனே ! திருவையாற்றில் உகந்தருளியிருக்கும் தேன்போன்ற இனியவனே ! அடியேன் உன் திருவடிகளைத் தொழுது அவற்றின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டு நாட்டில் உலவுகின்றேன் .

குறிப்புரை :

குண்டன் - மூர்க்கன் . நான் சமணரோடே நான் குண்டனாய்க் கூடிக்கொண்ட மாலைத் துண்டனே என்க . மாலை - மயக்கத்தை , துண்டனே - துணித்தவனே . சுடர்கொள் சோதி - முச் சுடரும் கொண்ட ஒளியே . ` மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைக் கரசே` ( தி .8 திருவாசகம் . 119) ` அருக்க னாவான் அரனுரு அல்லனோ ` ` சோதியாய்ச் சுடருமானார் ` ` ஞாயிறாய் ... சோமனாகித் தீ ... ஆகி . ` திசையினோடு ஒளிகள் ஆகி `. தூநெறியாகிநின்ற அண்டன் :- ` முன்னெறியாகிய முதல்வன் ` ( தி .4 ப .11 பா .9). அண்டத்திற்குச் செல்லும் தூநெறியாகி நின்றவன் . ` அண்டவாணன் `. சிவனருள் வெளியே ஈண்டு அண்டம் எனப்பட்டது . அமரர் ஏறு :- தேவர்கோ அறியாத தேவ தேவே `, ` தேன் ` என்றதன் கருத்து திருவையாற்றில் ஒரு பெட்டகத்துள் எழுந்தருளிய சிவலிங்கப் பெருமானுக்குத் தேனாட்டு நிகழும்பொழுது கண்டு உணர்ந்து கொள்ளத் தக்கது .

பண் :

பாடல் எண் : 2

பீலிகை யிடுக்கி நாளும் பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி யேத்துந் திருவையா றமர்ந்த தேனோ
டாலியா வெழுந்த நெஞ்ச மழகிதா வெழுந்த வாறே.

பொழிப்புரை :

மயிற்பீலியைக் கையில்வைத்துக் கொண்டு அச் செயலையே பெரிய தவமாகக் கருதி , மேல்தோல் உரிக்கப்பட்டதனால் வெண்மையாக உள்ள தடிகள்போல ஆடையின்றி அறிவுகெட்ட சமணர்கள் என்ன பயனை அனுபவித்தார்கள் ? தூய அறிவினை உடையவர்கள் வணங்கித்துதிக்கின்ற திருவையாற்றை உகந்தருளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது .

குறிப்புரை :

பீலி - மயிற்பீலி , ` பெரியதொரு தவம் ` என்று எண்ணுவதும் மதியின்மையே . வாலிய தறிகள் - வெள்ளைத் தடிகள் . வாலியம் பாலப் பருவத்தைக் குறித்ததாகக் கொண்டு , முழுமக்கள் ( மதியிலார் ) என்றதற்கேற்ப உரைத்தலும்கூடும் . வாலியார் :- திரு வடகுரங்காடுதுறைத் திருப் பதிகத்திலே , ` கோலமாமலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி ஆலுமா காவிரி வடகரை அடை குரங்காடு துறை நீலமாமணிமிடற்றடிகளை நினைய வல்வினைகள் வீடே ` என்றும் ` நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தொடு ஒல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுங்கோயில் ` என்றும் திரு ஞானசம்பந்தர் அருளியதுணர்க . ஆலித்தல் - களித்தல் . ` ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலம் ` ( தி .9 திருப்பல்லாண்டு ) ஆலியா - ஆலித்து .

பண் :

பாடல் எண் : 3

தட்டிடு சமண ரோடே தருக்கிநான் றவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே யும்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடு முள்ளத் தீரே யும்மைநா னுகந்திட் டேனே.

பொழிப்புரை :

உணவுக்குரிய உண்கலன்களாகிய தட்டுக்களைக் கையில் இடுக்கிக் கொள்ளும் சமணரோடு செருக்குற்று அச் செயலையே தவம் என்று கருதி யான் அவர்களோடு இணைந்து வாழுமாறு செய்த மனமே ! உனக்கு நான் என்ன தண்டனை கொடுப்பேன் ? மொட்டோடு கூடிய தாமரைகள் காணப்படும் , மானிடர் ஆக்காத நீர்நிலைகளை உடைய திருவையாற்றில் விரும்பி உறையும் தேன்போன்ற எம்பெருமானோடு இப்பொழுது இணைந்து வாழும் நெஞ்சே ! உன் செயல் கண்டு உன்னை நான் இப்பொழுது மெச்சுகின்றேன் .

குறிப்புரை :

தட்டு இடு சமணர் :- ` தட்டை யிடுக்கத் தலையைப் பறிப்பார் ` ( தி .1 ப .69 பா .10) ` தாறிடு பெண்ணைத் தட்டுடையார் ` ( தி .1 ப .101 பா .10). ` தட்டிடுக்கி உறி தூக்கி ` ( தி .2 ப .119 பா .10). ` தடுக்கால் உடல் மறைப்பார் ` ( தி .1 ப .13 பா .10). ` தடுக்குடை கையர் ` ( தி .1 ப .7 பா .10) என்பவற்றால் , சமணர் பெண்ணை ( பனை ) த் தட்டு ; தடுக்கு உடையவர் என்பது வெளிப்படும் . தருக்கி - செருக்குற்று . இதில் ` மனத்தினீரே `-` உள்ளத்தீரே ` என்பன , முறையே சமணம் சைவம் இரண்டனுள்ளும் நாயனார் தாம் உற்ற நிலைமையைக் குறித்த விளியாகும் . நான் சமணரோடே தருக்கித் தவம் என்று எண்ணி ஒட்டினேன் . மனமும் அதை ஒட்டிற்று . திரு வையாறமர்ந்த தேனோடு ஒட்டினேன் . உள்ளமும் ஒட்டிற்று . ` ஒட்டிட்ட பண்பு ` உள்ளாத மனம் அது உள்ளிய உள்ளம் இது . அதனை உகந்திட்டிலர் . இதனை உகந்திட்டார் . பா .5 ஆவது திருப்பாடலிலும் இவ்வாறே மதியிலா நெஞ்சம் அருந்தவம் புரிந்த நெஞ்சம் என்று பகுத்துணர்த்துவதறிக . மொட்டு இடு கமலம் பொய்கை - அரும்புகளிடு செந்தாமரைக் குளம் .

பண் :

பாடல் எண் : 4

பாசிப்பன் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.

பொழிப்புரை :

பல்துலக்காததனால் பசிய நிறம்படிந்த பல்லினராய் அழுக்குப் படிந்த உடம்பினராய்ப் பயனற்ற வாழ்வினை வாழும் சமணரோடு அன்பினால் கூடிவாழ்ந்த மனத்தை அவரிடம் இருந்து பிரித்து நல்வழிப்படுத்தும் வழியை அறியமாட்டாதேனாய் முன்பு அடியேன் இருந்தேன் . உலகிலுள்ள நன்மக்கள் எல்லோரும் அன்பினால் முன்நின்று துதித்து வணங்குகின்ற திருவையாறு அமர்ந்த தேனை நறுமணம் கமழும் பூக்களோடு சென்று வணங்கும் ஆற்றல் உடையவர்களுடைய கொடிய வினைகள் அழிந்து ஒழியும் என்பதை இப்பொழுது அறிந்தேன் .

குறிப்புரை :

பாசிப்பல் - வெண்மை நீங்கிப் பசுமை உற்ற பற்கள் . மாசு மெய் - அழுக்குடல் . பலம் - வன்மை . விரதத்தால் இளைத்தல் . ` அநந்த விரதம் ` என்றும் ஒன்றுண்டு . நேசம் - பற்று நே - அன்பு . நே + அம் = நேயம் , நேசம் . தேசத்தார் - உலகோர் . வாசத்தால் வணங்க வல்லார் :- திருவையாற்றில் வாசம் புரிந்து வழிபட வல்லவர் ; வாசனை யுடைய மலர் , புகை முதலியவற்றால் வழிபட்டிறைஞ்ச வல்லவர் . சிவபுண்ணியமே பசுவினை இரண்டினையும் மாய்க்கும் .

பண் :

பாடல் எண் : 5

கடுப்பொடி யட்டி மெய்யிற் கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே மதியிலீ பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந் திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே யருந்தவஞ் செய்த வாறே.

பொழிப்புரை :

கடுக்காய்ப் பொடியை உடம்பில் தடவிக்கொள்ளும் அதனையே ஒரு தவ வாழ்க்கை என்று கருதும் குற்றங்களிலே பொருந்திய என் மனமாகிய அறிவுகெட்ட பொருளே ! நீ அந்தப் பயனற்ற செயல்களால் பெற்ற பயன்தான் யாது ? நீர்த்தேக்கங்களிலே வாளைமீன்கள் துள்ளித்திரியும் திருவையாறு அமர்ந்ததேனை அணுகி நிலையாக நின்று தியானிக்கும் மனமே ! நீ சிறந்த தவச் செயலை இப்பொழுதே செய்தனை ஆகின்றாய் .

குறிப்புரை :

கடுப்பொடியட்டி மெய்யில் :- ` மூசுகடுப் பொடியார் ` ( தி .1 ப .43 பா .10) ` கடுப்பொடி யுடற் கவசர் ` ( தி .3 ப .74 பா .10). மெய்யிற் கடுப்பொடி அட்டி என்று மாற்றிக்கொள்க . வடுக்கள் - குற்றங்கள் . மதியிலீ - அறிவிலீ . பட்டது - அடைந்தது . அருந்தவம் - திருவையாறமர்ந்த தேனை அடுத்து நின்று உன்னும் பயனை அளித்தது . ` உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஓவாது மன்னுபவந்தீர்க்கும் மருந்து ` ( திருவருட் பயன் 10 )

பண் :

பாடல் எண் : 6

துறவியென் றவம தோரேன் சொல்லிய செலவு செய்து
உறவினா லமண ரோடு முணர்விலே னுணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன் மதியுனக் கடைந்த வாறே.

பொழிப்புரை :

வீண் செயல் என்று ஆராய்ந்து உணராதேனாய்ச் சமணர்களோடு கொண்ட உறவினாலே அவர்கள் குறிப்பிட்ட வழியிலேயே காலம் போக்கி உண்மையான செயல்பற்றிய அறிவு இன்றி நல்லுணர்வு இல்லேனாய் வாழ்ந்தேன் . தேன் நிரம்பிய சோலைகள் சூழ்ந்த திருவையாறு அமர்ந்த தேனை மறவாமையால் வாழும் மனமே ! உனக்கு இந்த நன்மதி வாய்த்தவாறென்னே !

குறிப்புரை :

துறவி என்று அவம் அது ஓரேன் :- முற்றத் துறந்தோர் என்று நம்பி , சமணருடைய அவச் செயலை ஓராது தவச்செயலாகத் திரிபுபட ஓர்ந்தேன் . அது சுட்டன்று . அவம் என்னுஞ் சொல்லின் பொருளே தனக்குரித்தாக நின்றது . பகுதிப் பொருள் விகுதி என்பர் ; சுட்டுதலின்மையால் , இது உது இரண்டும் அங்ஙனம் நிற்றலில்லை . குருந்தமது ( தி .4 ப .39 பா .9.) சொல்லிய செலவு . ( தி .4 ப .39 பா .7) பலபல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன் . சமணர் சொல்லியவற்றிலே செல்லுதல் . சமணூல் சொல்லியவும் ஆம் . உணர்தல் ஒன்றும் இன்றி உணர்விலேன் ஆனேன் என ஆக்கம் வருவித்துரைக்க . நறவம் - தேன் . மறவு - மறத்தல் . நன்மதி - நல்லுணர்வு . சிவஞானம் . அடைந்தவாறு என்னே என்க .

பண் :

பாடல் எண் : 7

பல்லுரைச் சமண ரோடே பலபல கால மெல்லாம்
சொல்லிய செலவு செய்தேன் சோர்வனா னினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத் திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லா நினைந்தபோ தினிய வாறே.

பொழிப்புரை :

வினவிய ஐயங்களுக்குப் பல வழிகளைக் கொண்டு விடைகூறும் சமணர்களோடு பழகிப் பல ஆண்டுகள் அவர்கள் குறிப்பிட்ட வழியில் வாழ்ந்து , அவ்வாறு வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது அடியேன் வாழ்நாள் வீணானது குறித்து மனத்தளர்வு உறுகின்றேன் . மல்லிகைச் செடிகளில் பூக்கள் மலரும் சோலைகளையுடைய திருவையாறு அமர்ந்ததேனை இப்பொழுது இரவு பகல் ஆகிய எல்லாக் காலத்தும் தியானிக்கும் இனிமை இருந்தவாறென்னே !

குறிப்புரை :

பல்லுரைச் சமணர் :- ` அநேககாந்த வாதம் ` கூறும் ஆருகதர் . ` உடம்பு எடுத்தற்குமுன் சீவன் உண்டோ இல்லையோ என்று வினாய வழி , 1. உண்டாம் . 2. இல்லையாம் . 3. உண்டும் இல்லையும் ஆம் . 4. சொல்லொணாததாம் . 5. உண்டுமாம் சொல்லொணாததும் ஆம் . 6. இல்லையாம் சொல்லொணாததுமாம் . 7. உண்டும் இல்லையும் ஆம் சொல்லொணாததும் ஆம் என எழுவகையான் இறுத்தல் . வினாயவையெல்லாம் இவ்வாறே இறுக்கப்படும் . ஆம் என்பது ஈண்டுச் சற்று என்னும் பொருட்டாயதோர் இடைச்சொல் . சொல்லொணாதது என்பது உளதும் இலதும் அல்லாதது என்னும் பொருட்டு என்பது . எனவே 1. உள்ளதும் 2. இல்லதும் 3. உளதிலதும் 4. இரண்டும் அல்லதும் என நான்கு பக்கமாய் , இரண்டு அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது ( என்பதனொடு ) 5. உள்ளதும் 6. இல்லதும் 7. உளதிலதும் என்னும் மூன்றும் கூட்ட ஏழுபக்கம் ஆயின எனக் காண்க `. ( சிவஞான போதமாபாடியம் .) அவையடக்கம் :- புறப்புறச் சமயம் ; ஆருகதம் என்னும் மதத்தின் விளக்கம் . பல் ( ஏழு ) வகையாயுரைத்தலாற் பல்லுரைச் சமணர் ஆயினர் . பல பல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன் . ( தி .4 ப .39 பா .6) நினைந்த போது சோர்வன் நான் . ` களவுபடாததோர் காலம் காண்பான் கடைக்கணிற்கின்றேன் ` என்றது இது குறித்தே போலும் . எல்லி - இரவு , இராப்பகலா நினைத்தார் காலங்களவு படாதன்றோ ?

பண் :

பாடல் எண் : 8

மண்ணுளார் விண்ணு ளாரும் வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமண ரோடே யிசைந்தனை யேழை நெஞ்சே
தெண்ணிலா வெறிக்குஞ் சென்னித் திருவையா றமர்ந்த தேனைக்
கண்ணினாற் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்த வாறே.

பொழிப்புரை :

அறிவில்லாத மனமே ! மக்களும் தேவரும் தம் தீவினை நீங்கத் தெளிந்த பிறை ஒளிவீசும் சென்னியை உடையராய்த் திருவையாறு அமர்ந்த தேன் போன்ற எம்பெருமானை மண்ணவரும் விண்ணவரும் வணங்குவாராக , நீ ஒரு பொருளாக எண்ணத் தகாதவரான சமணரோடு இணைந்து காலத்தைப் போக்கினாயே . அப்பெருமானை நாம் கண்ணினால் காணப் பெற்றதனால் நாம் விரும்பிய வீடுபேற்றின்பம் கைகூடிவிட்ட காரியமாயிற்று .

குறிப்புரை :

ஏழை நெஞ்சே , தெண்ணிலா எறிக்கும் சென்னித் திருவையாறமர்ந்த தேனைக்கண்ணினாற் காணப்பெற்றுக் கருதிற்றே முடிந்தவாறே . மண்ணுளாரும் விண்ணுளாரும் ( தம்தம் ) பாவம்போக ` அத்தேனை ` வணங்குவார் . ( இந் நலத்தை அன்றே அடையாமல் ) எண்ணிலாச் சமணரோடே இசைந்தனை . இத்திருப்பதிக முழுவதும் திருவையாற்றிலே சிவாநந்தத்தேனை நுகரும் பேரின்பத்தை முன்னரே அடையவொட்டாது செய்த சமண சமயச்சார்வை நினைந்து , எற்றென்றிரங்கிக் கூறியவாறறிக . எண்ணியமை - அளவில்லாமை , ஆராய்ச்சி யின்மை எண்ணத்தின்படி செயலில் நில்லாமை . எறிக்கும் - வீசும் . சென்னியிற் பிறை வீசும் சிவாநந்தத்தேன் வாயாலுண்ணத்தக்கதன்று . கண் ( கருத்து ) காணத்தக்கது . கருதியது வீடுபேறு .

பண் :

பாடல் எண் : 9

குருந்தம தொசித்த மாலும் குலமலர் மேவி னானும்
திருந்துநற் றிருவ டியுந் திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந் திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே பொய்வினை மாயு மன்றே.

பொழிப்புரை :

இடைக்குலச் சிறுமியர் மரக்கிளைகளில் தொங்க விடப்பட்ட தம் ஆடைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு உடுத்துமாறு குருந்தமரத்தைக் கண்ணனாக அவதரித்த காலத்தில் வளைத்துக் கொடுத்த திருமாலும் , மேம்பட்ட தாமரையில் விரும்பித் தங்கிய பிரமனும் மேம்பட்ட பெரிய திருவடிகளையும் திருமுடியையும் காண இயலாதவர்களாக , மேம்பட்ட முனிவர்கள் உயர்த்திப் புகழும் திருவையாறு அமர்ந்த தேனை உன்னுள் பொருத்தித் தியானிக்கும் மனமே ! அச்செயலால் நம் பொய்யான உடலிலிருந்து நுகரும் வினைப்பயன்கள் யாவும் அழிந்து விடுதல் தெளிவு .

குறிப்புரை :

குருந்தமது - குருந்த மரத்தை , ` அவமது ` ( தி .4 ப .24 பா .6.) என்றதன் குறிப்புணர்க . ஒசித்த - ஒடித்த . இது மால் குருந்த மரம் ஒடித்த வரலாற்றுக் குறிப்பு . குலமலர் - தாமரை , ` பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை `, ` பூவிற்குத் தாமரையே ` ` பூவெனப்படுவது பொறி வாழ் பூவே ` எனப்படும் மேன்மைக் குலமாகும் . மேவினான் பிரமன் , திருந்து நற்றிருவடி :- ஆன்மாக்கள் தம்மைத் திருத்திக்கொண்டே சென்றெய்தும் இயல்பிற்கேற்பத் திருவடி திருந்த விளங்கும் . ` திருந்து தொண்டர்கள் செப்புமின் மிகச்செல்வன்றன்னது திறமெலாம் ` ( தி .3 ப . 38 பா .7). ` அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்டசிவலோகா ` ( தி .8 திருவாசகம் 491) என்னும் உண்மையால் திருந்திய அருளே திருந்தாச் சிந்தையைத் திருத்தவல்லதாதல் விளங்கும் . திருத்தல் - இச்சா ஞானக் கிரியை ஆகிய மூன்றனையும் தன் கரணமாக்கிப் பசுகரணமாகத் தொழிற்படாது செய்தல் , திருவடியும் திருமுடியும் அருளுருவத் திருமேனி குறித்தவை . அருவம் , அருவுருவம் , உருவம் மூன்றனையுங் கடந்த நிலையில் , ` பரை உயிரில் யான் எனது அற நின்றது அடியாம் . பார்ப்பிடம் எங்கும் சிவமாய்த் தோன்றலது முகமாம் . உரையிறந்த சுகமதுவே முடியாகும் ` ( உண்மைநெறி விளக்கம் 4 ) என்று தெளிக . நிரல் நிறையாகக் கொண்டு , மால் திருவடிகாணமாட்டான் . மலர் மேவினான் திருமுடி காணமாட்டான் என்றுரைக்க . அருந்தவ முனிவர் :- அப்ப மூர்த்திகள் திருக்கண்ணாற் காணப்பெற்ற அக் காலத்து மாதவர்கள் . ` ஏத்தும் ` என்று நிகழ்காலத்தாற் கூறியதுணர்க . பொருந்தி நின்றுன்னுதல் - ஒன்றியிருந்து நினைத்தல் . பொய்வினை :- மூலகன்மத்தின் காரியமாய்த் தோன்றியழியும் ஆகாமியம் சஞ்சிதம் பிராரத்தம் என்பன . வினை ஈட்டப்படுங்கால் மந்திரம் முதலிய அத்துவாக்களிடமாக முறையானே மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றான் ஈட்டப்பட்டுத் தூலகன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும் . பின்னர்ப் பக்குவம் ஆங்காறும் சூக்குமகன்மமாய்ப் புத்தி தத்துவத்தினிடமாக மாயையிற்கிடந்து , சாதி ஆயுப் போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி , முறையே சனகம் தாரகம் போக்கியம் என மூவகைத்தாய் , அபூர்வம் , சஞ்சிதம் , புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர்பெறும் . அது பின்னர்ப் பயன்படுங்கால் ஆதி தைவிகம் , ஆத்தியான்மிகம் , ஆதி பௌதிகம் என்னும் முத்திறத்தாற் பலதிறப்பட்டுப் பிராரத்தம் எனப்பெறும் என்றுணர்க . ( சிவ ஞானமாபாடியம் . சூ 2. அதி . 2 ). ` வேறாகப் பார்த்திருப்பதன்றியே பாழான கன்மத்தை நீத்திருக்கலாமோ நிலத்து ` ( தி .4 ப .9 பா .10.) ` முன்னை வினைக்கு ஈடா முதல்வன் அருள் நமைக் கொண்டு என்ன வினை செய்ய இயற்றுமோ ? இன்னவினை செய்வோம் தவிர்வோம் திரிவோம் இருப்போம் இங்கு உய்வோம் எனும் வகை ஏது ?` ( தி .4 ப .9 பா .6.) ` எடுத்த உடற்கேய்ந்த கன்மம் எப்போதும் ஊட்டும் ` ( தி .4 ப .8 பா .6) மனவாக்குக் காயம் மன்னியசைப்பானும் அனமாதிபோகம் அளிப்பானும் நனவாதி கூட்டிவிடுவானும் முத்தி கூட்டிடுவானும் பிறப்பில் ஆட்டி விடுவானும் அரன் ` ( தி .4 ப .9 பா .5.) என்று தருமைக் குருமுதல்வர் அருளிய சிவபோகசாரம் ஈண்டுணரத்தக்கது .

பண் :

பாடல் எண் : 10

அறிவிலா வரக்க னோடி யருவரை யெடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு மூதறி வாள னோக்கி
நிறுவினான் சிறு விரலா னெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினா லருள்கள் செய்தான் றிருவையா றமர்ந்த தேனே.

பொழிப்புரை :

இறைவனுடைய ஆற்றலைப் பற்றிய உண்மை அறிவு இல்லாத இராவணன் விரைந்து சென்று கயிலைமலையைப் பெயர்ப்பதற்கு முழுமையாக முயன்ற செயலைக்கண்டு , உண்மையான ஞான வடிவினனாகிய திருவையாறு அமர்ந்த தேன்போன்றவன் தன் மனத்தால் நோக்கித் தன் கால்விரல் ஒன்றனை அழுத்த அதனால் இராவணன் உடல் நொறுங்கித் தரையில் வீழப் பின் அவன் இறைவனைப் பற்றிய அறிவோடு சாமவேதகீதம் பாட , அவனுக்கு அப்பெருமான் அருள்களைச் செய்தான் .

குறிப்புரை :

அரக்கன் ஓடி எடுக்கல் உற்று முறுகினான் . முறுகக் கண்டு மூதறிவாளன் நோக்கிச் சிறுவிரலால் நிறுவினான் . நெரிந்து போய் நிலத்தில் வீழச் சிறு விரலால் நிறுவினான் . அறிவினால் அருள்கள் செய்தான் . அவன் யார் எனில் அவனே திருவையாறமர்ந்த தேன் ஆவான் என்க . மலையெடுத்தது அறிவின்மையால் . சாமகானம் பாடி அருள்கள் பெற்றது அறிவினால் . அறிவு என்பது இறைவனது கருணை என்னும் சத்தியைக் குறித்ததாகக் கொண்டு , இரக்கத்தால் எனலும் பொருந்தும் . மூதறிவாளன் , எழுவாய் , காண்டல் நோக்கல் நிறுவல் செய்தல் நான்கும் அவன் வினைகள் . அறிவின்மை , எடுக்கலுறுதல் , முறுகல் , நெரிதல் , போதல் , வீழ்தல் , அரக்கனுடையன . அறிவு இருவரதுமாம் . வீழ்ந்ததால் , பாடி உருக்கும் அறிவு தோன்றப் பெற்றான் . வீழக் கண்டதால் இறைவன் இரங்கி அருளினான் . ` அறிவிலி அரக்கன் ` என்றதால் , மூதறிவாளனை நோக்கி என இரண்டனுருபு விரித்தல் பொருந்தாது . தன் குற்றமும் அதற்குத் தீர்வும் அறிந்ததே ஆண்டு அறிவாம் .

பண் :

பாடல் எண் : 1

தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை வார்குழன் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

நம் தலைவராகிய ஐயாறனார் தொடர்பின்றி உலகங்களின் நிலைபேறு இல்லை . உலகங்களிலுள்ள ஆன்மாக்களைத் தவிர வேறு அடிமைகள் அவர்க்கு இல்லை . சுடுகாட்டினைத் தவிர வேறு கூத்தாடும் இடம் இல்லை . தம்மை உண்மையால் தியானிப்பவர்க்கு வீடு பேற்றைத் தவிர வேறு சிறு சிறப்புக்களை அவர் அருளுவதில்லை . நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடும் இவர்ந்து செல்வதற்குக் காளையைத் தவிர வேறு வாகனமும் அவர்க்கு இல்லை .

குறிப்புரை :

தான் அலாது உலகம் இல்லை :- (1) ` அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது . (2) எல்லாவுலகமும் ஆனாய் நீயே ` (3) ` நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீ அலாற் பிறிது மற்றின்மை `. (4) ` ஒன்றும் நீ அல்லை அன்று ஒன்று இல்லை `. சகம் - தோன்றி யழிவது ; உலகம் ; காரியம் . மாயை காரணம் ` சகன் என்றது நிலவுலகத்தை `. ` சகக் கடவுள் ` ` சகத்தின் கண் உளனாகிய குரவன் ` ( சிவ போ . சூ . 8. அதி . 2. வெண்பா . 2 ) அவை உடைமை ஆளாம் நாம் . `( சிவ . போ . சூ . 2. அதி . 4, வெ .1 )` பாய ஆருயிர் முழுவதும் பசுபதி அடிமை ; ஆய எவ்வகைப் பொருள்களும் அவனுடைப் பொருள்கள் ` ( தணிகைப் புராணம் ). ` உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும் . அவற்றுள் உயிர்வருக்கமெல்லாம் இறைவனுக்கு அடிமை யெனவும் மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க `. ( சிவ . போ . அவை யடக்கம் ), ` படிகம்போலச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் ஆன்மா மலமுழுவதும் நீங்கித் தன்னறிவு வியாபகமாய் விளங்கிய வழியும் தன்னாற் சாரப்பட்ட சிவத்தை மாத்திரம் அறிதலன்றி மற்றொன்றனை அறிதல் செல்லாதென்பதூஉம் , இது பற்றியன்றே சிவனுக்கு அடிமை எனப்பட்டது என்பதூஉம் , இன்னோரன்னவை பிறவும் அறிந்து கொள்க `. ( சிவ . போ . சூ . 6, அதி . 2. மாபாடியம் ) என்பவற்றால் , ` சகம் ` இடவாகுபெயராய் உயிர்களை உணர்த்திற்று என்றும் அவையே அடிமைகள் என்றும் உணர்க . தி .4 ப .40 பா .8. கான் அலாது ஆடல் இல்லை ; ? பா .3. ` கள்ளி முதுகாட்டில் ஆடிகண்டாய் `. வான் - சிவஞானமுத்திநிலை , வார்குழல் மங்கை :- ` அரியலாற்றேவியில்லை ` ? பா .5 ஆன் - ஆனேறு .

பண் :

பாடல் எண் : 2

ஆலலா லிருக்கை யில்லை யருந்தவ முனிவர்க் கன்று
நூலலா னொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலா லமுத மில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்குக் கல்லால மரத்தைத் தவிர வேற்றிடம் உபதேச பீடமாக அமைவதில்லை . பெருந்தவத்தையுடைய முனிவர்களுக்கு அப்பிரானார் நுண்பொருளாய்வு செய்து வேதாகமப் பொருள்களைத் தவிர வேற்றுப் பொருள்களை உபதேசிப்பதில்லை . திருமாலும் பிரமனும் கூடித் தம் மலர்போன்ற திருவடிகளை வணங்க அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கித் தாம் உட்கொண்ட கடல் விடத்தைத் தவிர அவருக்கு உணவு வேறு இல்லை .

குறிப்புரை :

ஆல் - கல்லால் நிழல் . நூல் - வேதகாமப் பொருள் . நொடிவது - உபதேசித்தருள்வது . நொடிமையினார் - உபதேசிக்குந் தன்மை யுடையார் ` உள்வேர் போல நொடிமையினார் ` திறம் கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் ( தி .1 ப .54 பா .3). சிவபெருமான் கல்லால் நிழலில் வீற்றிருந்து சின்முத்திரைக்கையாற் சொல்லாது சொன்ன கையின் நிலைமை நொடிமை எனப்பட்டது . நொடிமை என்பது கைந் நொடித்தர்க்குரிய விரலிரண்டும் உபதேசத்தின் கண்ணும்சேர்வது பற்றிய காரணப்பெயர் . நுண் பொருள் ஆய்ந்து கொண்டு நூல் அல்லால் நொடிவதில்லை , மாலும் நான்முகனும் வணங்க , வேலை ஆல் ( பாற்கடல் நஞ்சு ) அல்லால் அமுதம் இல்லை . வணங்க என்னும் எச்சத்தை முடிக்க , வணங்க உண்ட அமுதம் ஆல் அல்லால் இல்லை என்க . ஆல் - ஆலகாலவிடம் . ` ஆலானைந்தாடல் உகப்பார் போலும் ` ( தி .6 ப .21 பா .7) ஆலும் ஆனைந்தாடலும் .

பண் :

பாடல் எண் : 3

நரிபுரி சுடலை தன்னி னடமலா னவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந் துணையலா லிருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத் தெளிவலா லருளு மில்லை
அரிபுரி மலர்கொ டேத்து மையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

திருமால் விரும்பிய மலர்களைக் கொண்டு வழிபடும் ஐயன் ஐயாறனார் நரிகள் விரும்பி உலவும் சுடுகாட்டில் நடமாடல் தவிர மற்றொன்றுஞ் செய்வதில்லை . சுருண்ட முறுக்குண்ட கூந்தலை உடைய பார்வதியைத் தவிர வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரையும் கொண்டு வாழ்தல் இல்லை . தன்னுண்மையை ஆராய்ந்து சிந்தித்தலையுடைய அடியார்களுக்கு உள்ளத் தெளிவினை வழங்குவதைத் தவிர எம்பெருமான் அருளக் கூடியதும் வேறொன்றும் இல்லை .

குறிப்புரை :

நரிபுரி சுடலை - நரிகள் விரும்புகின்ற சுடுகாடு . ஈண்டுச் சுடலையில் நவிற்றல் நடம் அல்லால் இல்லை என்றும் , ஆண்டு ஆடல் ( செய்யும் இடம் ) கான் அல்லாது இல்லை என்றும் கூறிய வேறுபாடுணர்க . கானில் அல்லாது ஆடல் இல்லை என்று ஆண்டுரைத்தல் பொருந்தாமை பிறவற்றை நோக்கியுணர்க . நவிலல் நவிற்றல் என்னும் இரண்டற்கும் உள்ள வேறுபாடுணர்க . ` சம்பந்தன்வாய் நவிற்றிய தமிழ் மாலை ` ( தி .2 ப .106 பா .11). சுரிபுரி குழலி - சுரிந்து புரிந்த கூந்தலாள் . புரி - முறுக்குண்ட . துணை - வாழ்க்கைத்துணை . குழலியாகிய துணை யோடல்லால் இருக்கை இல்லை . தெரி - தெரிதல் ; ஆராய்ச்சி . முதனிலைத் தொழிற்பெயர் . புரி - புரி ( செய் ) கின்ற . சிந்தையார்க்கு - சிந்தித்தலுடையவர்க்கு , கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிற்றல் என்னும் அறிவுத்தொழில் நான்கனுள் , இரண்டாவதன் பயன் மூன்றாவதே ; ஆதலின் , தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவு அல்லால் அருளும் இல்லை எனலாயிற்று . சிந்தையுட்டேறல் ( தெளிவு ) ( தி .4 ப .41 பா .5.) அரி - அழகு , திருமால் .

பண் :

பாடல் எண் : 4

தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப் பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்க ளேத்து மையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

பழைய நான்மறைகளாலும் உள்ளவாறு உணர இயலாதவர் என்று தியானித்துத் தேவர்களும் துதிக்கும் ஐயன் ஐயாறனார்க்குத் தொண்டர்களைத் தவிரத் துணையாவார் பிறர் இல்லை . தோல்களைத் தவிர வேறு ஆடைகள் இல்லை . அடியார்களின் அநுபூதியிற் கண்டாலல்லாமல் அவர் அவர்களுக்கு அருளுவதில்லை . அடியார்களோடு கூடிய பின்னர் அவர்களை அப்பெருமான் பிரிவதில்லை .

குறிப்புரை :

1. தொண்டு அல்லால் துணையும் இல்லை . 2. சுரிபுரி குழலியோடுந் துணையல்லால் இருக்கையில்லை . 3. தான் அல்லால் துணையும் இல்லை . 4. அரவம் பைம்பூண் தோள் அலால் துணையும் இல்லை என்பவற்றால் ` துணை ` யின் பொருள்வேறுபாடு புலப்படும் . தோல் - புலித்தோல் , மான்றோல் , சிங்கத்தோல் , யானைத்தோல் ; ` சிங்கமும் நீள் புலியும் செழுமால் கரியோடு அலறப் பொங்கியபோர் புரிந்து பிளந்து ஈருரிபோர்த்த தென்னே ` ( தி .7 ப .99 பா .6) ` மானைத் தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்குமிட்டு யானைத்தோல் போர்ப்பது ` ( தி .7 ப .18 பா .4). கண்டு அல்லாது அருளும் இல்லை . அநுமான அளவையான்நாடி , அநுபூதியிற்கண்டு பெறற்பாலது அருள் . ( சிவஞானபோதப்பாயிரவுரை ) ` வாக்குமன விருத்திகளைக் கடந்து அதீதமாய் , வேறற நின்றுணரும் அநுபவ ஞானமாத்திரையின் விளங்கிக் கோசரிப்பது . ` காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழலடி பூண்டுகொண்டொழிந்தேன் ` ( தி .4 ப .20 பா .1). காண்டலே கருத்தாகியிருப்பனே ` ( தி .5 ப .71 பா .8). கலந்தபின் பிரிவதில்லை :- ` கலந்தார்மனங் கவருங்காதலானே ` ` உள்ளம் உள்கலந்து ஏத்த வல்லார்க்கலால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன் ` ( தி .5 ப .82 பா .4) அண்டவானவர்கள் , பண்டைமறைகள் நான்கும் காணாப்பரிசினன் என்று பன்முறை சொல்லி ஏத்தும் ஐயன் . அண்டங்களில் உள்ள வானவர்கள் . அண்டவானவர்கள் .

பண் :

பாடல் எண் : 5

எரியலா லுருவ மில்லை யேறலா லேற லில்லை
கரியலாற் போர்வை யில்லை காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா வமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்கு நெருப்புருவம் தவிர வேற்றுருவமில்லை . காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர் ஏறுவதில்லை . யானைத்தோலைத் தவிர வேறு போர்வை இல்லை . காணுவதற்கு ஏற்ற ஞானப் பிரகாசம் உடைய அப்பெருமானுக்கு , பிரியாது தேவர்கள் கூடி ` மேம்பட்ட சிறப்பினை உடைய பெருமான் ` என்று துதிக்கும் திருமாலைத் தவிர வேறு தேவி இல்லை .

குறிப்புரை :

எரி - தீ , ` தீ வண்ணன் `. ஏறு - விடை , ஏறல் என்றதாற் பெயர்க் காரணம் அதுவாதலும் பெறப்படும் . ` எருதலாலூர்வதில்லை ` ( தி .4 ப .40 பா .6.) ` ஆனலாதூர்வதில்லை ` ( தி .4 ப .40 பா .1.) கரி - யானைத்தோல் , கரத்தை யுடையது கரி , காண்தகு . சோதி - காணத்தக்க மெய்யொளி . பிரிவு இல்லா அமரர் - நீக்கம் இல்லாத் தேவர்கள் . பெருந்தகைப் பிரான் :- ` மகாதேவன் ` அமரர்க்குப் பெருந்தகைப் பிரான் அரி . ஐயாறனார்க்கு அவ்வரி தேவி . ஏத்தும் வினை அமரரது ; ஏத்தப் பெறுதல் அரியின் வினை . அப் பெருந்தகைப் பிரானாகிய அரியே ஐயாறனார்க்குத் தேவி . திருவையாற்றிலுள்ள அம்பிகையை நோக்கினார்க்கு அரியே தேவி எனல் இனிது விளங்கும் . அரிக்குரியன தேவியின் திருமேனியில் அமைந்துள்ளன . ` அறம் வளர்த்தாள் ` திருவுருவம் ஆக விளங்கு கின்றது . திருவிளநகர்த் தேவியும் அரியே .

பண் :

பாடல் எண் : 6

என்பலாற் கலனு மில்லை யெருதலா லூர்வ தில்லை
புன்புலா னாறு காட்டிற் பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்கு எலும்புகளைத் தவிர வேறு அணிகலன்கள் இல்லை . காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர் ஊர்வதில்லை . கீழான புலால் நாற்றம் வீசும் சுடுகாட்டுச் சாம்பலைத் தவிர வேற்றுப் பொருள்களைப் பூசுவதில்லை . உலகத் துன்பங்களில் அழுந்துதல் இல்லாத அடியவர்கள் ஒன்று கூடித் தொழுது , மனம் உருகிக் கண்ணீர் வடித்து ஆடிப்பாடும் அன்பினைத் தவிர அவர் வேறு எதனையும் குறிப்பிடத்தக்க பொருளாய்க் கருதுவதில்லை .

குறிப்புரை :

என்பு - எலும்பு , கலன் - பூண் . அணி , பணி , எருதலால் ஊர்வதில்லை :- ( தி .4 ப .40 பா .1,5.) புன் புலால் நூறு காட்டிற்பொடி அலால் சாந்தும் இல்லை :- காடுடைய சுடலைப் பொடி பூசி ` - ` சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு `. துன்பு இலாத் தொண்டர் :- ` இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ... சேவடியிணையே குறுகினோம் ` தொழுது அழுது ஆடிப் பாடும் அன்பல்லாற் பொருளும் இல்லை :- ` நாடி நம்தமராயின தொண்டர்காள் , ஆடுமின் , அழுமின் , தொழுமின் , அடிபாடுமின் , பரமன் பயிலும் இடம் கூடுமின் குரங்காடுதுறையே ` ( தி .5 ப .63 பா .8). ` மழுவலான் திருநாமம் மகிழ்ந் துரைத்து அழவலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் மாற்பேறு தொழவலார் தமக்கு இல்லைத் துயரமே ` ( தி .5 ப .59 பா .7). ` அன்பே அமையும் ` ( தி .4 ப .1 பா .9). ` அன்பு அளவில் உபகரணப் பூசைப்பரிசது ` ( ஞான பூசாவிதி ). ` அன்பன்றித் தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்வதெலாம் சார்த்தும் பழம் அன்றேதான் ` ( திருக்களிற்றுப்படியார் . 55 ).

பண் :

பாடல் எண் : 7

கீளலா லுடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

அரை நாண் பட்டிகையோடு கூடிய கோவணமாகிய கீள் உடையைத் தவிர ஐயன் ஐயாறனார்க்கு வேறு உடையும் இல்லை . ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்புகளை அழகிய அணிகலன்களாக அணியும் தம் தோள்களைத் தவிர வேறு துணையும் இல்லை . பூங்கொத்துக்கள் மலரும் இளவேனிற்காலத்திற்கு அரசனாகிய மன்மதனைத் தவிர அவரால் நெற்றிக்கண் பொறியால் எரிக்கப்பட்ட வீரன் வேறு ஒருவனும் இல்லை . அப்பெருமானுக்கு அவரை விடுத்து என்றும் நீங்குதல் இல்லாத அடிமைத் தொழில் செய்வதனைத் தவிரக் கைம்மாறாக அடியார்கள் செய்யத்தக்கது பிறிதொன்றுமில்லை .

குறிப்புரை :

கீள் - கிழி , ` கீளார் கோவணம் `. சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங் கீளுடையுங் கொண்டவுருவம் `. பொறி - படப்புள்ளி . அரவம் - பாம்பு . பூண் - பூண்கின்ற கலன் . தொத்து - பூங்கொத்து , ` வேனில்வேள் மலர்க்கணை ` ( தி .8 திருவாசகம் ). காயப்பட்ட வீரர் - தீவிழியாற் காய்தலுற்ற வலியர் , ` வீரம் ` எதிர்வந்து நின்ற வீரம் . மீளா ஆள் :- ` மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடியிணையே குறுகினோமே ` ` மீளா ஆட்செய்து மெய்மையுள் நிற்கிலார் ` ( தி .5 ப .90 பா .3). மீளா ஆளாதலே உயிர்கள் இறைவனுக்குச் செய்யுங் கைம்மாறு என்றதுணர்ந்து வழிபட்டுய்க .

பண் :

பாடல் எண் : 8

சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையா னாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்கு உலக உயிர்களைத் தவிர அடிமையாவார் வேறு இல்லை . தமக்குத் தாமே ஒப்பாவார் அன்றி ஒப்பாவார் வேறு இல்லை . நகங்களெல்லாம் தேயுமாறு கைகளால் புதுமலர்களைக் கொய்து வணங்கி அவற்றை அவருக்கு அர்ப்பணித்து முகமெல்லாம் கண்ணீர் வழிந்துபரவ , அவர் திருமுன்னர் வணங்கித் துதிக்கும் தொண்டர்களின் உள்ளத்தைத் தவிர அவருக்கு வேறு இருப்பிடம் இல்லை .

குறிப்புரை :

சகம் அலாது அடிமை யில்லை :- ( தி .4 ப .40 பா .1). தான் - சிவபிரான் , துணை - உயிர்த்துணை , தாள் அலால் துணையும் இல்லை என்னும் பாடத்திற்குத் திருவடித் துணை என்க . நகம் எல்லாம் தேயக் கையால் நாண்மலர் ( கொய்து ) தூவித் தொழுது , முகம் எல்லாம் கண் நீர் மல்க , முன்பணிந்து ஏத்துகின்ற தொண்டர் அகமே கோயில் , ` நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் ` ` உள்ளம் பெருங் கோயில் ` சிவபூசை புரிபவர்க்கு அகத்தும் புறத்தும் இன்றிமையாது வேண்டுவன குறித்ததுணர்க .

பண் :

பாடல் எண் : 9

உமையலா துருவ மில்லை யுலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர் நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக் கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா வருள்கொ டுப்பா ரையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்குப் பார்வதியொடு இணைந்த உருவமன்றி வேற்று உருவம் இல்லை . இவ்வுலகங்களைத் தவிர அவருக்கு வேறு உடைமைப் பொருள் இல்லை . அவர் அடியவராகிய நம்மை எல்லாம் தம் அடிமைகளாக உடையவர் . உயிர்களுக்கு அவரால் நன்மையே அன்றித் தீமை சற்றும் இல்லை . பகைவரையும் பொறுக்கும் பொறுமை உடையவராகித்தம் திருவடிகளை முன்நின்று துதிக்கும் அடியவர்களுக்குக் குறைவில்லாத அருள்களை அவர் நல்குபவராவார் .

குறிப்புரை :

சிவபெருமானுக்குச் சொரூபம் சிவஞானமே யாதலின் , ` உமையலாதுருவம் இல்லை ` என்றும் , உடைமை உலகம் , அடிமை உயிர்கள் , இரண்டும் உடைப்பொருள் . அவற்றுள் உடைமையை உலகலா துடையதில்லை என்றும் அடிமையை ` நமையெலாம் உடையர் ஆவர் ` என்றும் , அவனுடைமையான உலகம் , அவன் அருள் வழி நின்று ஒழுகும் அடிமைகளாகிய உயிர்கட்கு நன்மையே அன்றித் தீமை பயவாமையின் , ` நன்மையே தீமை யில்லை ` என்றும் , வினைப் பயனாக எய்தும் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு , மேலும் வினையேறாது திருவடித் தொண்டு பூண்டார்க்கு அளவிலாது அருள் கொடுப்பது ஆண்டானது கடமையாதலின் , ` கமை ( பொறுமை ) யெலாம் உடையராகிக் கழலடி பரவுந் தொண்டர்க்கு அமைவு இலா அருள் கொடுப்பார் ` என்றும் அருளினார் மொழி வேந்தர் . ` நாம் ஆர்க்குங் குடியல்லோம் ... இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை `. ` நன்றருளித் தீதகற்றும் நம்பிரான் ` ( தி .6 ப .30 பா .7) ` நன்றுடை யானைத் தீயதில்லானை `.

பண் :

பாடல் எண் : 10

மலையலா லிருக்கை யில்லை மதித்திடா வரக்கன் றன்னைத்
தலையலா னெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னு மையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

அலைகளை உடைய காவிரி நிலையாக ஓடும் ஐயாற்றில் வாழ் பெருமானுக்குக் கயிலை மலையைத் தவிர வேறு சிறப்பான இருப்பிடம் இல்லை . தம்மை மதியாது கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலையைத் தவிர வேற்றவருடைய தலையை அவர் மலைக்கீழ் வருத்தி நெரித்தலை அறியாதவர் அவர் . நிலைபேறில்லாத அசுரர்களின் மும்மதில்களும் அழிய நெருப்பைப் பரப்பியதனைத் தவிர அவர் வேற்றுச் செயல் எதுவும் செய்யவில்லை .

குறிப்புரை :

திருக்கயிலாயமலையே சிவபிரானது இருக்கையாதலின் , ` மலையலா திருக்கையில்லை `, அம்மலையை ஒரு பொருளாகக் கருதாத அரக்கனது ( மதிக்கும் மதிக்கு இடமான ) தலையை நெரித்தார் . தடவரை - கயிலை . நிலையிலார் - திரியும் அசுரர் , விரித்தது நெருப்பே . அலையின் ஆர் பொன்னி - அலைகள் நிறைந்த காவிரியாறு .

பண் :

பாடல் எண் : 1

பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா
ஐவரா லலைக்கப் பட்ட வாக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரா லுகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

வயல்களிலே வரால் மீன்கள் துள்ளித் திரியும் திருச்சோற்றுத்துறைப் பெருமானே ! வேதங்களால் பரம் பொருளாக உணரப்பட்டவரே ! வேதங்களை ஓதும் நாவினரே ! பொய்ப்பொருள்களே கலந்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பை நிலையான பொருளாகக் கருதி இதனைப் பேணுவதிலேயே காலத்தை வீணாக்கி மெய்ப் பொருளிலே பொருந்தும் சார்பு அற்றேனாய் ஐம்பொறிகளால் வருத்தப்பட்ட இவ்வுடம்பைக் கொண்டு மயங்கிக் காலத்தைக் கழித்துவிட்டேன் .

குறிப்புரை :

பொய்விராமேனி :- பொய்விராவும் மேனி , ` விராவும் ` என்பது செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் , ` செய்யும் என் எச்சவீற்றுயிர் மெய் சேறல் ` உற்றது . ` பொய் மறித்தியற்றி வைத்துப் புலால் கமழ் பண்டம் பெய்து பைம்மறித் தியற்றியன்ன பாங்கிலாக் குரம்பை ` ( தி .4 ப .67 பா .8). பொய்யுடலை மெய்யெனக்கருதி மெய்ப் பொருளை வழிபடாது பொழுதுபோக்கி , மெய்விராவும் மனத்தனா காமல் கெட்டேன் என்றவாறு . வீண்பொழுது போக்காது போற்றற் பொருட்டுப் பிழைகணிக்கும் பழக்கமுடையவர் இப்பெருமான் . ( தி .4 ப .41 பா .2,5,7) ` பொழுது போக்கிப் புறக்கணிப்பார் ` ` இனத்திற் சேர நல்லோர் விழையார் `. வேதியன் - வேதங்களை உணர்ந்தவன் . வேத நாவன் - வேதங்களை அருளிய திருநாவினன் . ஐவர் - ஐம்பொறிகள் . தி .4 திருப்பதிகம் 52, 54 பார்க்க . ஆக்கை - உடம்பு ( உடல் + பு ). செய் - வயல் . வரால் மீன்கள் . உகளும் - துள்ளும் . செம்மை ( செய்மை ) - நிலவளம் .

பண் :

பாடல் எண் : 2

கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி யெல்லிநின் றாடு வானை
அட்டகா மலர்கள் கொண்டே யானஞ்சு மாட்ட வாடிச்
சிட்டரா யருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

மலபந்தம் உடையோராய் உடற் கட்டினைப் பேணுவதில் நீங்கள் காலத்தைக் கழித்தல் கூடாது . தம் எண் கைகளையும் வீசியவராய் இரவில் ஆடுபவராய் உள்ளார் சோற்றுத் துறையரனார் . சோலைகளிலிருந்து கிட்டும் எட்டுப்பூக்களையும் நீங்கள் அர்ப்பணித்துப் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகிக்க அவ்வபிடேகத்தை ஏற்று சிட்டராய் உள்ள அப்பெருமான் உங்களுக்கு அருள்கள் செய்வார் .

குறிப்புரை :

கட்டர் - உடற்கட்டும் உயிர்க்கட்டும் உடையவர் . திரிமலபந்தரே தமிழிற் கட்டர் எனப்பட்டார் . கட்டு - பந்தம் , கட்டராய் நின்று காலத்தைக் கழிக்கவேண்டா எனவே வீடராய் நிலவிக் காலாதீதராய்ப் பேரின்பம் எய்துக என்பது பெற்றாம் , எட்ட ஆம் கைகள் :- ` எண்டோள் முக்கண் எம்மானே ( எண்டோள் வீசி நின்றாடும் பிரான் எட்டுக் கொலாமவர் தோளிணை )` ` யாவன `. ` மணிமிடற் றெண்கையாய் கேள் ` ( கலித்தொகை , கடவுள் வாழ்த்து ) எட்ட ஆம் - எட்டன ஆகும் , எல்லி - இரவு . அட்ட மலர் - எட்டுப்பூக்கள் , ` அட்டபுட்பம் ` கா - சோலை ` ஆன் அஞ்சும் - ( ஆனைந்து ,) பால் தயிர் நெய் முதலியன . ஆட்டுவோர் அன்பர் . ஆடுவோன் திருச்சோற்றுத் துறை முதல்வன் . சிட்டர் - வேதாசாரமுடையவர் , சிவாகமாசார முடையவர் . ஈண்டுச் சிவபிரானைக் குறித்தலால் , ` இறுதியாங் காலந்தன்னில் ஒருவனே ` என்ற பொருட்டாம் . ` சிட்டர்கள் வாழுந் தென்றில்லை ` ( தி .8 திருவாசகம் 213). ` சிட்டன் சிவன் ` ( தி .9 திருப்பல்லாண்டு 3).

பண் :

பாடல் எண் : 3

கல்லினாற் புரமூன் றெய்த கடவுளைக் காத லாலே
எல்லியும் பகலு முள்ளே யேகாந்த மாக வேத்தும்
பல்லில்வெண் டலைகை யேந்திப் பல்லிலந் திரியுஞ் செல்வர்
சொல்லுநன் பொருளு மாவார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் அழித்த பெருமானை அன்போடு தனித்திருந்து இரவும் பகலும் உள்ளத்தில் தியானியுங்கள் . பல்லில்லாத வெள்ளிய மண்டையோட்டை உண்கலமாக ஏந்திப் பல வீடுகளிலும் பிச்சைக்காகத் திரியும் செல்வராய் , வேதமாயும் வேதத்தின் விழுப்பொருளாயும் உள்ள அவர் உங்களால் தியானிக்கத்தக்க திருச்சோற்றுத்துறையனாரே .

குறிப்புரை :

கல்லினால் - மேருமலையாகிய வில்லால் . காதல் - சிவபக்தி , எல்லியும் பகலும் :- இராப்பகலாக ; உள்ளே - உணர்வினுள் , ஏக + அந்தம் = ஏகாந்தம் ; தனிமை ; ஒரு முடிபு . ` மாதேவற்கேகாந்தர் ` என்புழிக் காந்தர் என்னாது ஏகாந்தர் எனப் பிரித்துரைத்தலுமுண்டு . பின் ` அன்பர் ` என்றதால் காந்தர் என்பதே நேரிது . ஏத்தும் - ஏத்துங்கள் . முன்னிலை . பல் இல் ( லாத ) வெள்தலை ;- பிரம கபாலம் , பல் இலம் - பல வீடுகள் . ` மனைதொறும் பலிகொளும் இயல்பு ` ( தி .3 ப .92 பா .2). ` இல்லங்கள் தோறும் எழுந்தருளி ` பல் இலந் திரிவாரேனும் . சென்றடையாத திருவுடையார் என்பார் , ` செல்வர் ` என்றார் , ` சென்று அடையாத செல்வன் ` சொல்லும் பொருளும் ஆவார் :- ` சொல்லும் பொருளெலாம் ஆனார் ... தோத்திரமும் சாத்திரமும் ஆனார் ` ( தி .6 ப .78 பா .5). ` சொல்லானைப் பொருளானை ` ( தி .6 ப .74 பா .1).

பண் :

பாடல் எண் : 4

கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையரா யினிய ராகித் தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தென் னுள்ளச் சோர்வுகண் டருளி னாரே.

பொழிப்புரை :

நீலகண்டராய் , நெற்றிக்கண்ணராய்ப் பார்வதிபாகத் தலைவராய் , இனியராய் , ஒப்பற்றவராய் இருப்பாராய் , குளிர்ந்த வெண் பிறையைச் சூடியவராய் , பெருஞ்செயல்களையே செய்பவராய் உள்ள , என்றும் அழிதல் இல்லாத திருச்சோற்றுத்துறை இறைவர் அடியேனுடைய உள்ளத்திலே புகுந்து அதனுடைய தளர்ச்சியைக் கண்டு , அது நீங்க அருள் செய்தவராவார் .

குறிப்புரை :

கண்டம் கறையர் - திருக்கழுத்தில் நஞ்சின் கறுப்புடையர் கண்ட கண்ணர் எனல் சிறவாது . இறையர் - தங்குதலுடையவர் . ` வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை ` ( மதுரைக் காஞ்சி 253 ). ` இம்மலையிறை கொண்டீண்டி ` ( சிந்தாமணி 538 .) ` ஈட்டிய வளநிதி யிறைகொள் மாநகர் ` ( சிந்தாமணி 1445 ). இனியர் பேரின்பத்துக்குக் காரணன் என்னும் பொருளும் பயக்கும் . சிவனார் , தனியர் - கேவலப் பொருள் . ` தான் தனியன் ` ( தி .8 திருவாசகம் ). ` ஏகமூர்த்தி ` (4.41.5) பனி வெண்டிங்கட்பிறையர் - ` சந்திரசேகரர் `, ` பிறைசூடி `. பீடர் - பெருமை யனவாக உடையவர் , உள்ளச் சோர்வு - மனத் தளர்ச்சி , உயிரிளைப்பு .

பண் :

பாடல் எண் : 5

பொந்தையைப் பொருளா வெண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே யேக மூர்த்தி யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகிப் பரம்பர மாகி நின்று
சிந்தையுட் டேறல் போலுந் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

பல ஓட்டைகளை உடைய இவ்வுடலைப் பேணத் தக்க பொருளாகக் கருதி விரைவாகக் காலத்தை , ` பற்றினையும் வீட்டின்பத்தையும் தருபவராய் மேலாருள் மேலாராய் நின்று உள்ளத்தில் தேன் போன்று இனிக்கும் திருச்சோற்றுத் துறைப் பெருமானே ! எம் தலைவரே ! தனிப் பெருந் தெய்வமே ` என்று துதியாதேனாய் , விரைந்தகலக் காலங் கழித்தேன் .

குறிப்புரை :

பொந்தை - பொள்ளத்த காயம் `, ( பொள் + து + ஐ = பொந்தை ) ` ஆநந்தப் பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ ` என்னுந் திருவாசகத்தில் இச்சொல்லின் பொருள் இனிது விளங்கும் . ஆண்டுச் சிவம் . ஈண்டுப் பவம் பற்றிய உடல் . பொருக்கெனல் - காலம் போன விரைவு குறித்தது . எந்தை - என் அப்பன் . ` ஏக மூர்த்தி ` - ` தனியர் ` ( தி .4 ப .41 பா .4). என்று நின்று :- ` சொல்லிய வண்ணம் செயல் `, பந்தமாய்வீடும் ஆகி :- ` பந்தமும் வீடும் படைப்போன் காண்க ` ( தி .8 திருவாசகம் திருவண்டப்பகுதி 52) ` பந்தமும்ஆய் வீடும் ஆயினார் ( தி .8 திருவாசகம் திருப்பொற்சுண்ணம் 20). பரம்பரம் - பராபரம் ; மேல வரின் மேலவன் , ` மேலையார் மேலையார் மேலாரே ` ( தி .7 ப .96 பா .7,10). சிந்தையுள் தேறல் :- தேறல் - தெளிவு . ( தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவலாலருளுமில்லை ` ( தி .4 ப .40 பா .3).

பண் :

பாடல் எண் : 6

பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுப தன்றி றமே
ஆர்த்துவந் திழிவ தொத்த வலைபுனற் கங்கை யேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

பார்வதிபாகராய் , அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பாசுபத வேடத்தினராய் ஆரவாரித்துக் கொண்டு வானிலிருந்து இறங்கிய அலையோடு கூடிய நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்று உலகவருக்கு நீராடுதற்குரிய தீர்த்தமாகப் பெருகவிட்ட திருச்சோற்றுத் துறையனார் செய்திகளை , இனி மீண்டும் பிறவி எடுக்காத பேறு பெறுவதற்காகப் பலகாலும் அடைவுகேடாகக் கூறுங்கள் . ( அடைவு கெட - வாயில் வந்தவந்த படி .)

குறிப்புரை :

பேதை பங்கன் - ` ஏழை பங்காளன் `, ` மங்கை பங்கன் `. பார்த்தன் - அருச்சுனன் , பாசுபதன் - பாசுபதாத்திரத்துக்குரியவன் , அருள் செய்தவன் பாசுபதன் அது பெற்றவன் பார்த்தன் . இனிப் பேர்த்துப் பிறவாவண்ணம் பேதைபங்கனும் பாசுபதனும் ஆகிய திருச்சோற்றுத்துறையனார் திறமே பிதற்றுமின் ( தி .4 ப .41 பா .10). ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே ` ( தி .7 ப .45 பா .10). ` ஆட்டான் பட்டமையா லடியார்க்குத் தொண்டுபட்டுக் கேட்டேன் கெட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந் தேன் ` ( தி .7 ப .21 பா .2). ` பிழைத் தொருகால் இனிப்போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன் ` ( தி .7 ப .58 பா .4) ( தி .8 திருவாசகம் 375). மற்று ... நின் திருப்பாதமே மனம் பாவித்தேன் , ... இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன் ( தி .7 ப .48 பா .1) ஆர்த்து - இரைத்து , இழிவது - இறங்குவது . தீர்த்தம் - தூய ( புண்ணிய ) நீர் . போத - புகுத .

பண் :

பாடல் எண் : 7

கொந்தார்பூங் குழலி னாரைக் கூறியே காலம் போன
எந்தையெம் பிரானாய் நின்ற விறைவனை யேத்தா தந்தோ
முந்தரா வல்கு லாளை யுடன்வைத்த வாதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

விரைந்து ஊரும் பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய பார்வதியின் பாகரான , எங்கள் தந்தையாராய் , எங்கள் தலைவராய் உள்ள சிவந்த மகரந்தங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் திருச்சோற்றுத்துறைவனாரே ஆதிமூர்த்தியாவர் . அவரைத் துதிக்காமல் கொத்துக்களாக மலர்ந்த பூக்களைக் கூந்தலில் அணிந்த மகளிரைப் புகழ்ந்தவாறே எம் காலங்கள் வீணாகி விட்டனவே !

குறிப்புரை :

கொந்து - கொத்து , ஆர் - ஆர் ( நிறைந்த ) பொருந்திய , குழலினார் - கூந்தலார் . ஆகுபெயர் . மகளிர் திறத்தைக் குறித்தது . வீண் காலம் போக்கியதற் கிரங்கியவாறு , அந்தோ இறைவனை ஏத்தாது குழலினாரைக் கூறியே காலம்போன என்று இயைக்க . போன .- படர்க்கைப் பன்மை யிறந்த காலத் தெரிநிலை வினை முற்று . போ + ன் + அ = போன ; னகர மெய் இறந்த காலங் காட்டிற்று ; இது போயின என்பதன் சிதைவு . முந்து என்பது அராவுக்கும் அல்லற்கும் அடை யன்று . அல்குலாட்குரிய அடை . ` முன்னியவன் `, முன் + து = முன்று ; முந்து . ` முந்து நடுவு முடிவுமாகிய மூவரறியாச் சிந்துரச் சேவடியான் ` ( தி .8 திருவாசகம் 350). ` முந்திய முதல் நடு இறுதியுமானாய் ` ( தி .8 திருவாசகம் 373) அன்பர்க்கு முன்னியவள் ` ( தி .8 திருவாசகம் 170) ` முந்தனுடைச் செயல் என்று முடித்தொழுக வினைகள் மூளா அங்காளாகி மீளான் ` ( சித்தியார் ) என்பதில் இறைவனை ` முந்தன் ` என்றதால் இறைவிக்கும் அவ்வினையடியிற் தோன்றிய பெயர் பொருந்துமாறுணர்க . ஆதி மூர்த்தி - ` முதலுருப்பாதி மாதர் ஆவதும் உணரார் ` ( தி .4 ப .25 பா .9). செந்தாது - சிவந்த மகரந்தங்கள் ( சோலைகளைக் குறித்தன ).

பண் :

பாடல் எண் : 8

அங்கதி ரோன வனை யண்ணலாக் கருத வேண்டா
வெங்கதி ரோன்வ ழியே போவதற் கமைந்து கொண்மின்
அங்கதி ரோன வனை யுடன்வைத்த வாதி மூர்த்தி
செங்கதி ரோன்வ ணங்குந் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

அழகிய கிரணங்களை உடைய பிறையைக் கங்கை பாம்பு முதலியவற்றுடன் சடையில் வைத்த முதற்கடவுள் சூரியனால் வணங்கப்படுகின்ற திருச்சோற்றுத்துறையனாரே ஆதலின் அழகிய கிரணங்களை உடைய சூரியனைத் தலைமைக் கடவுளாகக் கருதாமல் அந்தச் சூரிய மண்டலத்தின் வழியாக அர்ச்சிராதி மார்க்கமாய் வீட்டுலகத்தை அடைவதற்கு உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள் .

குறிப்புரை :

அம் கதிரோனவனை - அழகிய சூரியனை , அண்ணல் - தலைவன் , ` அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ ?` ( தி .5 ப .100 பா .8). ` செஞ்சுடர்க்கோர் சோதிதானாம் ` ( தி .6 ப .15 பா .6). ` வெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்மின் `:- ` தூமாதி மார்க்கம் நற்சுத்த பஞ்சாக்கினி அக்காமாதி நீக்கக் கருது அர்ச்சிராதிமார்க்கம் மீளாக் கதியாகும் மெய்சிவத்தின் நல்லருட்கே ஆளாகக் காட்டும் இவை ` ( தருமை ஆதீனத்துச் சம்பிரதாய தீபம் 220 ). பிதிருயானம் முதலிய எல்லா வற்றினும் மேலானது சிவகதி . இவை யெல்லாம் அச்சிவகதிக்கு வழியாகும் . சிவகதியே மீளாக்கதி , ` அங்கதிரோனவனையுடன் வைத்த ஆதி மூர்த்தி `. இங்குச்சூரியன் வழிபடுவதை ஈற்றடி தோற்றுகின்றது .

பண் :

பாடல் எண் : 9

ஓதியே கழிக்கின் றீர்க ளுலகத்தீ ரொருவன் றன்னை
நீதியா னினைய மாட்டீர் நின்மல னென்று சொல்லீர்
சாதியா நான்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்
சோதியாய்ச் சுடர தானார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

` அவன் அருளாலே அவனைக் காணவேண்டும் ` என்பதனைச் செயற்படுத்தாமல் தம்முயற்சியால் எம் பெருமானைக் காணலாம் என்று முயன்ற பிரமனும் , திருமாலும் காணமுடியாத ஞான ஒளியினையுடையராய்த் தீத்தம்பமான திருச்சோற்றுத் துறையனார் ஆகிய ஒப்பற்ற பெருமானை நெறிமுறைப்படி தியானம் செய்ய மாட்டீராய் , அவரைத் தூயவர் என்று போற்றாதீராய் உலகமக்களாகிய நீங்கள் பயனற்ற நூல்களைப் பயின்றே காலத்தைக் கழிக்காதீர்கள் .

குறிப்புரை :

ஒருவனை ( சிவபிரானை ) ஓதி அறிதல் அரிது , உள்ளே தேடியுணர்தல் எளிது , உலகத்தீர் ஓதியே போழ்து கழிக்கின்றீர்கள் , அவனை வேதாகம நீதியால் உள்ளே நினைமின் , நினையமாட்டீர் . அந்நினைவுடன் வாயாலும் நின்மலா என்று சொல்லி நின்மலத்தீர் ஆகுமின் . தேடிக்காண்பேன் என்பதை கடைப்பிடிக்காத அயனும் சக்கிரம் ஏந்திய அரியும் காணாத பேரொளிப் பிழம்பாய்ச் சுடராய் விளங்கினார் .

பண் :

பாடல் எண் : 10

மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றதோ ருபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலையெ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

மறுமையில் பிறப்பு ஏற்படாத வகையில் மறுமை என்பதனையே அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் , மற்றைப் பொருள்களிடத்தில் மனத்தை நிலையாக வைக்காமல் , பல நூல் களையும் கற்ற செருக்கோடு அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை ஒறுத்துப் பின் அவனுக்கு அருள்கள் செய்த திருச்சோற்றுத் துறையனை , அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டுப் பெற்ற முத்தி உபாயங்களால் பலகாலும் அடைவுகெடத் துதித்துப் பேசுங்கள் .

குறிப்புரை :

மறுமை உளதாகாதவாறு கழிக்க விரும்பினால் , நீவிர் மற்றொன்றை மனத்தில் வைக்காமல் , குரூபதேசத்தாற்பெற்ற முத்தி யுபாயங்களால் , சிவபிரானையே பிதற்றுங்கள் ( தி .4 ப .41 பா .6) அரக்கன் கற்று , அக்கல்வியின் பயனாகச் சிவனடி வணங்கிப் பிறவியறுக்காது , கயிலைமலை யருகு வந்து எடுத்தான் , எடுக்கவே துறையனார் அவனைச் செற்றார் . அவன் பாடிய சாமகானத்தை உகந்தார் , நாளும் வாளும் பேரும் பிறவும் அருளினார் . நீர் வையாதே பிதற்றுமின்கள் . ` வந்தவணம் ஏத்துமவர் வானம் அடைவாரே `.

பண் :

பாடல் எண் : 1

பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் பொழுதும் நெஞ்சு ளிறைவனை யேத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையுள் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

எம்பெருமான் இவ்வுயிருக்குச் செயற்பாட்டுச் சாதனமாம்படி தாதுக்களால் இணைத்துள்ள இவ்வுடலே காப்பாற்றத் தக்க உயர்ந்த பொருளாகக் கருதுதல் வேண்டா . எம் பெருமானை எப்பொழுதும் நெஞ்சத்துள் இருக்கச் செய்து அவனைத் துதியுங்கள் . பார்வதிபாகனாய்க் கங்கா சடாதரனாய் உள்ள திருத்துருத்தியின் ஞானச் சுடரை அடியேன் கண்டு உய்ந்தவாறு என்னே !

குறிப்புரை :

பொருத்திய குரம்பை :- ( தி .4 ப .31 பா .3) உயிர் பொருந்தும் இடமாக எழுவகைத் தாதுக்களாற் பொருத்திய குடில் , ` இருகாற் குரம்பை ` ( தி .4 ப .113 பா .2). ` சீவார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் ` ( தி .8 திருவாசகம் 418). இவ்வுடம்பை ஒரு பொருளாகக் கருதி , உடம்பின் பயனை இழத்தல் வேண்டா , திருத்துருத்தி இறைவனை நெஞ்சுள் எப்பொழுதும் இருக்க வைத்து வழிபட்டுய்மின்கள் . அவ்வாறேதான் , அடியேனும் , மலைமங்கையை இடத்திலும் அலை மங்கையைத் தலையிலும் அப்பெருமானைக் கண்டுய்ந்தேன் . துருத்தி - ஆற்றிடைக்குறை . இத்திருப்பதிகத்துள் யாண்டும் , கண்டவாறு என்னே என்று வியந்தபடியும் ஆம் . நான் கண்டவாறு கண்டு வழிபட்டுய்மின் என்று எச்சம் வருவித்துரைத்தலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 2

சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல விறைவனை யேத்து மின்னோ
அவைபுர மூன்று மெய்து மடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலுக்கான வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல என்றறிந்து எம் பெருமானையே துதியுங்கள் . மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே !

குறிப்புரை :

சவை - கூட்டம் , ஈண்டு மக்களைப் பெற்றுக் குடும்பத்தைப் பெருக்குதலைக் குறித்தது , சலம் - கலக்கம் ( துன்பம் ) பெண்ணை மணந்து பிள்ளைகளைப் பெற்றுவரும் வழியிற் கூட்டத்தைப் பெருக்கி உள்ளக் கலக்கத்தை வளர்த்து , அதில் அழுந்தி வருந்தும் இவ்வுலகப் பற்றுக்களை ஒரு பொருளாகா , இவற்றால் உயிர்க்குச் சிறிதும் நலம் இல்லை . முப்புரம் எரித்து , அடியவர்க்கு அருளிய இன்ப வடிவினனாகிய திருத்துருத்தி யாண்டவனை அடியேன் கண்டவாறு இறைவனை ஏத்துமின்கள் . அவைபுரம் :- ` புரமவை ` என்பது மொழிமாறி நின்ற தொடர் ` வைசாகி ` எழுத்து மாறியது போல் .

பண் :

பாடல் எண் : 3

உன்னியெப் போதும் நெஞ்சு ளொருவனை யேத்து மின்னோ
கன்னியை யொருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியி னடுவு தன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

பார்வதிபாகனாய்த் கங்கா சடாதரனாய்க் காவிரியின் இனிய நீரின் நடுவிலே விளங்கித்தோன்றும் திருத் துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் கண்ட மகிழ்வு இருந்தவாறு என்னே ! ஆதலின் என்னை ஒத்த மகிழ்வினை அடைய எப்பொழுதும் ஒப்பற்ற அப் பெருமானை உள்ளத்தில் இருத்திப் போற்றுங்கள் .

குறிப்புரை :

எல்லா வுலகுயிர்களையும் பெற்றும் கன்னியாயே திகழும் அம்பிகையை இடப்பக்கத்திலும் கங்கையைச் செஞ்சடையிலும் வைத்து , காவிரியாற்றின் இடையே பூம்புனல் வளம் பொலிந்து செறிந்த திருத்துருத்தி நகரிறைவனைத் தொண்டனேன் கண்டவாறே நீவிரும் அத்தனி முதல்வனை எப்போதும் நெஞ்சுள் உன்னி ஏத்துமின் . ` யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ` ( தி .10 திருமந்திரம் ). ` உலகுயிர் எல்லாம் ஈன்றும் பவன் பிரமசாரியாகும் பான்மொழி கன்னியாகும் ` ( சித்தியார் 2. 77 ).

பண் :

பாடல் எண் : 4

ஊன்றலை வலிய னாகி யுலகத்து ளுயிர்கட் கெல்லாம்
தான்றலைப் பட்டு நின்று சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி வானவர்க் கிறைவா வென்னும்
தோன்றலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் அவற்றின் புலால் உடம்பிலும் கலந்து வலிமை தருபவனாகி , உயிர்களுக்குள்ளும் தான் உயிராய் நின்று , அவ்வுயிர்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்பத் தீயைப் போன்ற துன்பங்களில் அகப்பட அத்துயரம் தாங்காமல் வருந்தும் தேவர்கூட ` எங்கள் தலைவனே ` என்று தம் துயர்களைப் போக்குமாறு வேண்டும் மேம்பட்டவனான திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் உய்ந்த சீர் இருந்தவாறு என்னே !

குறிப்புரை :

உலகத்துள் எல்லா உயிர்களுக்கும் ஊனுடம்பில் வலியுடையவனாகி , ( அவ் வுயிரோடு தலைப்பட்டு உயிர்க்குயிராய் நின்று ) அவ்வுயிர்அவ்வுடலிற்சாரும் தீயில் வீழ , அவ்வீழ்ச்சி தாங்கமாட்டாது வருந்தும் உயிர்த் தொகுதியுள் அடங்கும் வானோர் கூட்டம் தேவாதி தேவா மகாதேவா என்று அழைத்துக் குறையிரக்கும் போது அருள்செய்யத் தோன்றுகின்ற வள்ளலை , துருத்தி யிறைவனைத் தொண்டனேன் கண்டவாறு என்ன வியப்பு ? ஊன்தலை - ஊனின்கண் , ` தலை ` ஏழனுருபின் பொருட்டு , வன்மை உயிர்க் குயிராயிருந்து ஆட்டுவித்து ஆடுதல் . ` உன்னுடம்பிற் கீடம் ` ( திருக்களிறு ) காண்க .

பண் :

பாடல் எண் : 5

உடறனைத் கழிக்க லுற்ற வுலகத்து ளுயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிய வேண்டி லிறைவனை யேத்து மின்னோ
கடறனி னஞ்ச முண்டு காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய விடத்தை உண்டு மற்றவர்கள் தம்முயற்சியால் காண்பதற்கு அரியனாக இருக்கும் ஞானவடிவினனாகிய துருத்திப்பெருமானை அடியேன் தரிசித்து உய்ந்த பேறு இருந்தவாறென்னே !. உடல் தொடர்பை அடியோடு போக்கக் கருதும் உயிர்களாகிய உங்களுக்குள்ள துயர்களைப் போக்க நீர் விரும்பினால் அப்பெருமானைத் துதித்துப் போற்றுங்கள் .

குறிப்புரை :

பிறவியைத் தீர்க்க உற்ற உலகத்துளுயிர் எல்லா வற்றிற்கும் ஓர் உறுதிமொழி அறிவிக்கின்றேன் . இடர் தீர்க்க நினை வீரேல் , இறைவனை ஏத்துமின் . பாற்கடலில் எழுந்த நஞ்சையுண்டு , தேவாசுரர்களைச் சாவாது காத்தவனாயும் , எவரும் காண்டற்கரிய கடவுட் சுடராய திருத்துருத்தி யிறைவனைத் தொண்டனேன் கண்டவாறு ( கண்டு ஏத்துமின் ). சுடர் என்றதால் கசிந்துருகுவோர்க்குக் காண்பெளிதாய் நிற்பன் என்பது தோன்றும் . ` காண்டற்கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் `.

பண் :

பாடல் எண் : 6

அள்ளலைக் கடக்க வேண்டி லரனையே நினைமி னீர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட் புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங் காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

பலதுவாரங்களை உடைய இவ்வுடலிலே , இதயமாகிய தாமரையில் இருக்கும் வள்ளலாய் , தேவர்களுக்கும் தம் முயற்சியால் காண்பதற்கு அரியவனாக இருக்கும் , காளையை ஏறி ஊரும் பெருமானை , அடியேன் கண்டு உய்ந்த சீர் இருந்தவாறென்னே ! ஆதலின் இப்பிறவியாகிய சேற்றினை நீங்கள் தாண்டிச் செல்ல விரும்பினால் சிவபெருமானையே தியானம் செய்யுங்கள் .

குறிப்புரை :

ஒன்பது வாயில்களை உடைய இவ்வுடம்பினுள் அகத்தாமரை மலரில் வீற்றிருந்தருளும் வள்ளலும் , தேவர்கட்கும் காட்சிக்கு எளியனல்லாத வெள்ளேற்றுத் துள்ளலும் ஆகிய பிரானைத் தொண்டனேன் கண்டவாறு வழிபட்டு , நீங்கள் அரனையே நினைந்து இப்பிறவிச் சேற்றினின்றும் கடந்து பேரின்ப வரம்பில் இருந்து இன்புறுமின் . அள்ளல் - சேறு , ` அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகை வீரட்டனார் ` ( தி .4 ப .27 பா .6). பொள்ளல் - துளை , ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போதுணர மாட்டேன் ` ( திருத்தாண்டகம் ) ` ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளையுடைத்து ` ( தி .4 ப .44 பா .2). தி .4 ப .18 பா .9, குறிப்பு நோக்குக . காயம் - உடல் , தாமரை . உட்புண்டரீகம் - அகத் தாமரை . காண்பு - காண்டல் , துள்ளல் , ` வெள்ளேற்றுத் துள்ளல் ` ( தி .4 ப .27 பா .6).

பண் :

பாடல் எண் : 7

பாதியி லுமையா டன்னைப் பாகமா வைத்த பண்பன்
வேதிய னென்று சொல்லி விண்ணவர் விரும்பி யேத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

பார்வதிபாகன் , வேதியன் என்று தேவர்கள் விரும்பித் துதித்தவாறிருக்க , பிறப்பெடுத்த பிரமனும் திருமாலும் காணாத சோதியாகிய திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவாறென்னே !

குறிப்புரை :

தன் திருமேனிப் பாதியில் உமாதேவியாரை வாமபாகத்தில் வைத்த கலியாண குணத்தன் ; வேத முதல்வன் ; இவ்வாறு சொல்லி விண்ணோர்கள் விரும்பி வழிபட்டு நிற்க ஒளிரும் முதல்வன் . பிறப்புடையவராகும் நான்முகனும் ஆழியானும் செருக்குற்று முறையே அன்னமும் பன்றியுமாகிய முடியும் அடியும் தேடிக் காணாத அளவிலாப் பேரொளிப் பிழம்பினன் . திருத்துருத்தி யிறைவன் . அவனைத் தொண்டனேன் கண்டவாறு ( கண்டு வழி பட்டுய்மின் ). சாதி - பிறப்பு . அடை இருவர்க்கும் பொது .

பண் :

பாடல் எண் : 8

சாமனை வாழ்க்கை யான சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித் தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத் தொன்னெறி பலவுங் காட்டும்
தூமனத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

பிறையைச் சடையில் சூடி அடியார்கள் உய்வதற்குப் பழைய நல்ல வழிகளைக் காட்டும் தூய திருவுளங்கொண்ட திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவா றென்னே! ஆதலின் தொண்டர்களாகிய நீங்கள் அழிந்து போகக் கூடிய மனைவாழ்க்கை என்ற வஞ்சனையுள் அழுந்தாது எம்பெருமானுக்கு நறிய அகிற்புகையை அர்ப்பணித்துத் தலையால் தொழுது அவன் திருவடிகளை உடலால் வணங்குங்கள் .

குறிப்புரை :

சாம் மனை வாழ்க்கை - அழியும் இல்வாழ்க்கை . சலம் - அடைவு , கலக்கம் ( தி .4 ப .42 பா .2). உலக வாழ்க்கையை விரும்பித் துன்பத்தில் அழுந்திப் பிறவி நெறியில் திரிந்து வருந்துதல் வேண்டா . நல்ல அகிற்புகைக் காட்டி அடிதொழுது வணங்கி யுய்மின் . திங்களைப் பொங்கு சடையுள் வைத்துப் பண்டைய ( அருள் ) நெறிகள் அனைத்தும் உணர்த்தும் தூய திருவுள்ளத்தில் உறையும் திருத்துருத்தி நகரிறைவனைத் தொண்டனேன் கண்டவாறு கண்டு திருவடி தொழுது வணங்குமின் .

பண் :

பாடல் எண் : 9

குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள் கருத்தெண்ணா தொழிமி னீர்கள்
விண்டவர் புரங்க ளெய்து விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்க டுணையி னானைத் துருத்திநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

பகைவர்களுடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருள்களை வழங்கி அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத் துருத்தியுள் தரிசித்து உய்ந்த சீர் இருந்தவாறென்னே ! உடல் பருத்த சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர் . ஆதலின் அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள் .

குறிப்புரை :

குண்டராகிய சமணரும் புத்தரும் . குறி - ` சிவலிங்கம் ` ( தி .4 ப .67 பா .9) குறிக்கோள் ` உண்மைநின்ற பெருகுநிலைக் குறியாளர் அறிவு ` ( தி .6 ப .84 பா .3) ` குறிகளும் ` ( தி .5 ப .90 பா .6) நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங் குறியே ( தி .7 ப .24 பா .9) ` குறியிலாக் கொடியேன் ` ( தி .6 ப .66 பா .8). அந்தக் கரணங்கள் அடக்கிக் குருவின் அருளினால் அறிவதொரு குறி `( சித்தியார் )` அருள் ஞானக்குறி ` ( ? ) இதயத்தே அரனைக்கூடுங் கொள்கைக்கு வாயிலான குறி ( ? ) சிவமேயாய் நின்றிடுவார் . அந்நெறியில் தம்மோடு அழியும் குறி ( ? ). அதைச் சைவத் திறத்தில் நின்றோழுகி அறியாமல் , கண்ணாற்கண்டதே கருதுவார்கள் புறப் பொருளாராய்ச்சி மட்டும் உடையர் ; அகப்பொருளாராய்ச்சியில்லாதார் . அவர் கருத்துக்களை ஒரு பொருளாகக் கொள்ளாதொழிமின் . பகைவர் மும்மதிலும் எரித்து வானவர்க்கு அருள்புரிந்த தொண்டர் துணைவனைத் தொண்டனேன் துருத்தியிற் கண்டவாறு ( கண்டு வழிபட்டுய்மின் ).

பண் :

பாடல் எண் : 10

பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட வடலரக் கன்ற னாண்மை
கண்டொத்துக் கால்வி ரலா லூன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

உலகங்களைக் கடந்த நீண்ட புகழை உடைய வலிய அரக்கன் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட ஆள்வினையை நினைத்து அவனைக் கால் விரலால் ஊன்றி நெரித்துச் செருக்கு அழித்து மீண்டும் அவனுக்கு அருள்கள் செய்தவரும் , மதியின் கூறாகிய பிறையை அணிந்தவருமான துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த சிறப்பு இருந்தவாறென்னே ! நீங்களும் இவ்வுடல் தொடர்பாகிய பிறவியை அடியோடு போக்க விரும்பினீர்கள் ஆயின் அப்பெருமான் பண்பு செயல்களையே அடைவு கேடாகப் பேசுங்கள் .

குறிப்புரை :

பிதற்றுமின் : ( தி :-4 ப .41 பா .6, 10, ப .42 பா .10.) பிண்டம் - உடல் . ` பிரானையே பிதற்றுமின் ` அண்டம் - உலகம் . கழித்தல் - பிறவி தீர்த்தல் . அண்டத்தைக் கழிய நீண்ட அடல் - அண்டங்களைக் கடந்து வென்ற பெருவலி . ஆண்மை - ஆளுந்தன்மை ; வீரம் . கண்டு - மலை யெடுத்தமையாற் கண்டு . அவனையும் ஒரு பொருளாகக்கொண்டு அடக்கவேண்டி நேர்ந்ததால் இசைந்து என்றார் . இசைந்தாலும் யுத்த சாதனம் வேண்டாமை தோன்றக் கால்விரலால் ஊன்றி என்றார் . சாமகானம் கேட்டு , அடக்கும் பெற்றியின் நீங்கி அருளும் பெற்றி உற்றதால் மீண்டு என்றார் . துண்டத்து - நிலாத்திங்கட்டுண்டத்தை யுடைய ; அரங்கம் .

பண் :

பாடல் எண் : 1

மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமு டிமேற் பெய்வளை யாள்த னோடும்
கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாட லிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

காஞ்சிமா நகரிலே தலைவராய்ப் பாடல் ஆடல் விளங்கும் மேற்புறக் கோயிலில் உறையும் பெருமான் வேதங்களைப் பாடிக்கொண்டு பிச்சை எடுப்பதற்காக வீடுதோறும் திரிந்து வாழ்பவராய் , பிறையை அணிந்த சடையிலே கங்கையைச் சூடியவராய்க் கழுத்தில் விடத்தின் கருஞ்சுவடு கொண்டவராய் உள்ளார் .

குறிப்புரை :

வாழ்வாரும் கொண்டாரும் ஆகிய இறையவர் காஞ்சி மாநகர் தன் உள்ளால் இலங்கும் மேற்றளியனார் என்று இயைத்துரைத்துக் கொள்க . பிச்சையேற்றலுக்கென்று அகம் ( தொறும் ) மறை பாடித் திரிந்து வாழ்வார் . சடைமுடிமேற் பிறை சூடி . பெய்வளை ( கங்கை ) யாளொடும் பிறைசூடி , கண்டத்திற் கறைகொண்டார் . அது என்ற மூன்றும் முதனிலைப் பொருளன . சுட்டுவன அல்ல . கறை - நஞ்சின் கறுப்பு . கண்டம் - ( திருநீல ) கண்டம் . பெய்வளையாள் :- வளைகளைப் பெய்த கைகளையுடைய கங்கை . ` தன் ` சாரியைகள் . பாடல் ஆடல்கள் இலங்கும் தளி , மேற்றளி , தளியனார் . நகரில் இறையவர் ( தங்கியவர் ) என்றுமாம் . பாடலும் ஆடலும் இலங்கும் இடம் மேற்றளி . தளி - கோயில் , நகரின் மேற் கெல்லையில் உள்ளது பற்றித் திருக்கச்சிமேற்றளி என்பர் . காஞ்சி :- காஞ்சி என்னும் மரம் பற்றிய காரணப் பெயர் . இதனை வடசொல்லாகக் கொண்டு பல பொருள்கூறுங் கற்பனை வேறு இவ்வுண்மை வேறு . ` ஆலவாயில் ` ` வன்னியூர் ` ` குற்றாலம் ` முதலிய தமிழ்ப் பெயர்களையும் வடமொழி யறிவிற்கேற்ப மொழிபெயர்த்த திறத்தை அறிக . வாயாற் சொல்லாது உளத்தி லெண்ணியவற்றை வாயாற் சொன்னவாறு அறிவார் என்னும் பொருளதாய்ச் ` சொன்னவாறறிவார் ` என்றதை ` உக்தவேதி ` என்றால் , சொன்னதை அறிதலில் வியப்பென்னை? மொழி பெயர்ப்பின் குறைகட்கு ஈதும் ஒரு சான்றாகும் .

பண் :

பாடல் எண் : 2

மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் றந்தை யிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

முருகனுடைய தந்தையாராய்க் காஞ்சி நகரத்து விளங்கும் மேற்புறக் கோயிலிலுள்ள பெருமான் மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலைத் தம் திருமேனியில் மகிழ்ந்து ஏற்றவராய் , எவர்க்கும் மூத்தவராகவும் இளைய சிறுவராகவும் வடிவு கொள்பவராய் , ஆன்மாக்களுக்குத் தலைவராய் , பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசுபவராய்க் கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய் உள்ளார் .

குறிப்புரை :

மால் - மேகம் . அன ( அன்ன ) - ஒத்த மாயன் - திருமால் . மகிழ்ந்தனர் :- ` அரியலால் தேவியில்லை `. ` காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் ` ( தி .4 ப .32 பா .7). ` மாலினைமாலுற நின்றான் ` ( தி .4 ப .28 பா .1). விருத்தர் ஆகும் பாலனார் :- ` விருத்தனாய்ப் பாலனாகி ` ( தி .4 ப .22 பா .9. பசுபதியார் - பசுக்களுக்கெல்லாம் தலைவர் . ` பசு , பாசவேதனை யொண்டளை யாயின தவிரவ்வருள் தலைவன் `. ( தி .1 ப .12 பா .3) ` பசுபதியதன் மிசைவரு பசுபதி ` ( தி .1 ப .22 பா .5)- நோக்குக :- ( தி .4 ப .110 பா .1, 10.) பசுபதியைப் பாசுபத வேடத்தானை ( தி .6 ப .91 பா .2). பசுவேறும் எங்கள் பரமன் , விடையேறி வருவான் என்பனவும் பசுபதி என்னும் பொருளனவேயாகும் . சித்தாகிய சிவன் சித்தாகிய ஆன்மாக்கள் இடத்திலேதான் நீங்காதிருப்பவன் . ` ஆவியுள்நீங்கலன் , ` ஆன்மாவின் இடமதாகி உசிர்ப்பெனும் உணர்வும் உள்ளார் ` ` ஊனாகி , உயிராகி , ..... உணர்வாகி ` பால் வெள்ளைநீறு பூசிக் காலனைக் காலாற் செற்றார் ` என்றதால் , திருநீறு இறவாமை அருளும் என்பது விளங்கிற்று . ` பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு `. ஏலம் - வாசனைப் பொருள் . ` ஏலவார் குழலாள் உமைநங்கை ` நற்கடம்பன் - ` நன்கடம் பனைப் பெற்றவள் பங்கினன் `. கடம்பன்தந்தை - கடப்ப மலர் மாலையைச் சூடிய முருகனைத் தந்தவன் .

பண் :

பாடல் எண் : 3

விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண்ணிடை மணியி னொப்பார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணிடை யெழுத்து மானா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

எண்ணும் எழுத்துமாய் விளங்கும் காஞ்சி மேற்றளியனார் வானத்திலுள்ள தேவர்கள் விருப்பத்துடன் வந்து வணங்கி வாழ்த்தப் பண் இன்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைக் கேட்பவராய்க் கண்மணிபோல அடியவர்களுக்கு ஞானஒளி வழங்குபவராய் உள்ளார் .

குறிப்புரை :

விண்ணில் வாழும் தேவர்கள் விரும்பி ( மண்ணில் ) வந்து இறைஞ்சுவார்கள் , வாழ்த்துவார்கள் , பண்ணின்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைப் பாடுவார்கள் . அவ்வாழ்த்தும் பாட்டும் கேட்பார் மேற்றளியனார் . கண்மணி போல்பவர் , எண்ணும் எழுத்தும் ஆயவர் . ` எண் ஆனாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல் பானாய் ` ( தி .4 ப .13 பா .1). ` எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் ` ( தி .4 ப .90 பா .6). ` எண்ணானாய் எழுத்தானாய் ` ( தி .6 ப .12 பா .5). என்றதன் கருத்து ; நாதம் விந்து தத்துவங்களாய் விளங்கும் இறைவனது நிலை உணர்த்தியதாகும் .

பண் :

பாடல் எண் : 4

சோமனை யரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும்
வாமனை வான வர்கள் வலங்கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏமநின் றாடு மெந்தை யிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

மன்மதனை வெகுண்ட நெற்றிக் கண்ணராய் , இரவில் யாமத்தில் கூத்து நிகழ்த்தும் எந்தையாராய் , பிறையைப் பாம்பினோடும் கங்கையோடும் சூடும் அழகராய்த் தேவர்கள் வலப்புறமாகச் சுற்றி வந்து துதிக்குமாறு காஞ்சி மேற்றளியனார் அமர்ந்துள்ளார் .

குறிப்புரை :

சோமன் - சந்திரன் , பிறையும் அரவும் புனலும் சூடும் வாமன் , ( சத்திமான் . சத்திக்குத் தலைவன் , வாமதேவன் ) தேவர்கள் வலங்கொண்டு வந்து போற்றியது , முருகனை அருளி அசுரரை அழித்தற்பொருட்டு , அவ்வாரே நிகழ்தற்கண் மன்மத தகனம் இடைப் பட்டது . ஏமம் - யாமம் , இன்பம் , இன்பக் கூத்து , ` ஆநந்த தாண்டவம் `, ஏமம் - காவல் எனக்கொண்டு , உயிர்க்காவலாய் அதனுள் நின்றாடுவோன் என்பதும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 5

ஊனவ ருயிரி னோடு முலகங்க ளூழி யாகித்
தானவர் தனமு மாகித் தனஞ்சய னோடெ திர்ந்த
கானவர் காள கண்டர் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏனமக் கோடு பூண்டா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

நீலகண்டராய் , எலும்போடு பன்றிக் கொம்பினை அணிந்தவராய் , அருச்சுனனோடு எதிர்த்துப் போரிட்ட வேடராய் , உலகங்களிலும் , ஊழிகளிலும் , உடம்பினுள்ளும் , உயிரினுள்ளும் உடனாய்க் கலந்து இருப்பவராய்த் தானம் செய்பவராய்ச் செல்வ வடிவினராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

ஊனவர் :- ` ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான் எனது என்று அவரவரைக் ` கூத்தாட்டுவானாகி நின்றாய் ` ( தி .8 திருவாசகம் ) ` ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி ` ( தி .6 ப .62 பா .2). ஊனும் உயிரும் உலகமும் ஊழியும் ஆனவர் என்க . தானவர் - தானஞ்செய்பவர் ; கொடையர் . ` சிவோதாதா `. ( தி .6 ப .44 பா .7) கொடையரும் கொடுக்கப்படும் பொருளுமானவர் , தனஞ்சயன் - அருச்சுனன் ; வெற்றித்திருவினன் . கானவர் - ( வனசரர் ) வேடர் ; காட்டுள் வாழ்வினர் . ` ஏனம் ஒன்றின் காரணமாகிவந்து வேடடைந்த வேடனாகி விசயனோடு எதிர்ந்த தென்னே `, ( தி .1 ப .48 பா .6, தி .6 ப .34 பா .3, தி :-7 ப .57 பா .6, ப .66 பா .4, ப .98 பா .9) பார்க்க . காளகண்டர் :- திருநீலகண்டர் . ஏனம் - பன்றி ( முளை ) க் கொம்பு . ` ஏன முளைக் கொம்பு `. அக்கு - எலும்பு . ஓடு - தலையோடு : வற்றலோடு .

பண் :

பாடல் எண் : 6

மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த்
தேயமாய்த் திசையெட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
காயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் றோளி பாக ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

தமக்குப் பொருந்திய மென்மையான தோள்களை உடைய பார்வதியின் பாகராய் , திருமாலாகவும் , இந்திரனாகவும் , பிரமனாகவும் , நிலமாகவும் , நாடாகவும் எண் திசைகளாகவும் புனித நீர்களாகவும் இயங்குதிணைகளுக்கு உரிய உடல்களாகவும் , அவ்வுடல்களின் உள் இருப்பவராகவும் காஞ்சிமேற்றளியனார் கரந்து எங்கும் பரந்து உள்ளார் .

குறிப்புரை :

மாயன் - கரியன் . மாலன் - இந்திரன் . மலரவன் - பிரமன் . மண் - நிலம் . தேயம் - நாடு , எண்டிசை . தீர்த்தம் :- ` மூர்த்தி தலம் தீர்த்தம் ` திரிதருகின்ற காயம் : - இயங்குதிணைக்குரிய உடல் . காயத்துள்ளார் - ஜீவர் . ஏய - மேனோக்கிய , ` கார்நினைந்து ஏத்தரு மயிற்குழாம் இருந்த `. ( சிந்தாமணி , நாமகள் , 58 ) மென்றோளி - காமாட்சியம்மையார் . பாகர்தளியனார் என்க .

பண் :

பாடல் எண் : 7

மண்ணினை யுண்ட மாயன் றன்னையோர் பாகங் கொண்டார்
பண்ணினைப் பாடி யாடும் பத்தர்கள் சித்தங் கொண்டார்
கண்ணினை மூன்றுங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணினை யெண்ண வைத்தா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

உலகை விழுங்கிய திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவராய் , இன்னிசைகளைப் பாடிக் கூத்தாடும் அடியார்கள் உடைய உள்ளங்களைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டவராய் , முக் கண்ணராய் , அடியார்களுடைய எண்ணத்திலே தம்மையே தியானிக்குமாறு வைத்தவராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

` மண்ணினைஉண்ட மாயன் ` - ` உலகமுண்ட திருமால் `. மாயனைப் பாகங்கொண்டது :- ` இடமால் தழுவிய பாகம் ` ( தி .4 ப .2 பா .4; ப .32 பா .7; ப .88 பா .1) பண்பாடி ஆடும் தொண்டர் உள்ளங்கவர் கள்வர் . பக்தர்கள் சித்தங்கொண்ட பரமன் விரும்பியது பண்பாடியாடும் பரிசு . அதனைச் சமயகுரவர் நால்வரும் வற்புறுத்தியருளுகின்றனர் . ` ஆடுகின்றிலை கூத்து : உடையான் கழற்கு அன்பிலை ; என்புருகிப் பாடுகின்றிலை ` ( தி .8 திருவாசகம் ). ` ஆடிப்பாடி அண்ணாமலைகைதொழ ஓடிப்போம் நமது உள்ளவினைகளே ` ( திருக்குறுந்தொகை ). முக்கண்ணர் . எண் - எண்ணம் . அவரளவை எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 8

செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

பார்வதிபாகராய் , முருகனை மகனாகக் கொண் டவராய் மல்லிகை கொன்றை இவற்றாலாய முடி மாலையைச் சூடிக் கல்வியைக் கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சிநகரிலே , சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்குகின்றார் .

குறிப்புரை :

செல்வி :- ` உடையாள் ` ` உடையாள் உன்றன் நடுவிருக்கும் ` உமாதேவியே உடையாள் , அவளது ஓர் அம்சமே திருமகள் . ` மகாலட்சுமி ` என்று பார்வதியைத்தான் நம் முன்னோர் வழிபட்டனர் . சிவபூசையில் , அதற்குரிய திரவியங்களை அருளும் வண்ணம் அம்பிகையின் அம்சமான மகாலட்சுமியையே வழிபடச் சிவாகமங்கள் விதித்துள்ளன . ` பாதியில் உமையாள் தன்னைப் பாகமாவைத்த பண்பன் ` . சேந்தன் - முருகக்கடவுள் . மல்லிகைக் கண்ணி - மல்லிகைப் பூமாலை , சிவபிரான் மல்லிகை மாலை அணிதல் உணர்த்தப்பட்டது , ஆசிரியர் காலத்திலே காஞ்சியிற் கரையிலாக் கல்வியுடையவர் பலர் இருந்தனர் என்றோ கலை பல விளங்கின என்றோ கருதலாம் . எல்லி - சூரியன் ; ` அருக்கனாவான் அரனுரு ` ஆதலின் , அவன் விளங்க அவனுள்ளே சிவன் நின்றான் என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 9

வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக்
கூறியல் பாகம் வைத்தார் கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை யிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

தனக்கு இணையில்லாதபடி ஒளிவீசும் குறுகிய இடையை உடைய பார்வதியின் பாகராய்க் கொடிய பாம்பு பிறை கங்கை என்ற இவற்றைச் சடையுள் வைத்துக் காளையை ஏறி ஊரும் எம் தந்தையாராய்க் கச்சிமேற்றளியனார் விளங்குகிறார் .

குறிப்புரை :

இணைவேறு இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாள் - ஒப்புரைக்க வேறு எப்பொருளும் இல்லாமல் , எக்காலத்தும் விளங்குகின்ற ஒளியையுடைய இடையினாள் . கூறு இயல்பாகம் - திருமேனியின் ஒரு கூறாக இயன்ற ( இடப் ) பக்கம் , கோள் - வலிமை . அரா - பாம்பு , மதியம் - பிறை , ஆறு - கங்கை , அணி - அழகு , ஏறு - விடை .

பண் :

பாடல் எண் : 10

தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தா ரிலங்குமேற் றளிய னாரே.

பொழிப்புரை :

காஞ்சியில் இலங்கும் மேற்றளியனார் தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு , என்றும் நிலையாயிருக்கும் அவர் தம் விரலால் அழுத்த , அதனால் இராவணனுடைய அழகிய தலைகள் நெரியப் பின் அவன் வாயினால் கரும்பைப் போன்ற இனிய பாடல்கள் பாட , அவற்றைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு இன்னருள் செய்தவராவர் .

குறிப்புரை :

தென்னவன் - தென்னிலங்கை மன்னவனாகிய இராவணன் , சேயிழை - செய்ய ( கல் ) இழை ( த்துச் செய்யப்பட்ட அணிகளைப் ) பூண்டவள் . இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும் , ` ஆயிழை ` ` சேயிழை ` ` விளங்கிழை ` முதலியன தொல் வழக்கே , சேயிழையாள் எனப் பொருள்பட்டு , அன்மொழித் தொகையாயிற்று . மன்னவன் - என்றும் நிலையாயிருப்பவன் . நெரிய - நொறுங்க , கன்னலின் - கரும்பினைப் போலும் இனிமை பயக்கும் , கீதம் - சாமகானம் , இன் - இனிமை ( வாளும் , நாளும் , பேரும் , பிறவும் ). அவற்கு - அவ்விராவணனுக்கு , இத்தன்மையனுக்கு என்னும் அண்மைச் சுட்டு ஏலாது .

பண் :

பாடல் எண் : 1

நம்பனை நகர மூன்று மெரியுண வெருவ நோக்கும்
அம்பனை யமுதை யாற்றை யணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் டிங்கட் செஞ்சடைக் கடவு டன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா வெழுகின் றேனே.

பொழிப்புரை :

நம்மால் விரும்பப்படுபவனாய் , மும்மதில்களும் தீக்கு இரையாகி வெறுவும் தன்னால் நோக்கும் நோக்காகிய அம்பினை உடையவனாய் , அமுதனாய் பேரின்ப பெருக்காறாய் , அழகிய சோலையை உடைய காஞ்சிமாநகரில் ஒற்றை மாமரத்தடியில் உறைபவனாய் , ஒளி வீசும் கிரணங்களை உடைய பிறையைச் சிவந்த சடையில் அணிந்த கடவுளாய்ச் செம்பொன்னும் பவளத்தூணும் போன்றுள்ள சிவபெருமானைத் தியானிப்பதனால் யான் உள்ளக் கிளர்ச்சி உடையேன் ஆகின்றேன் . ( ஆறு - நெறி எனலுமாம் .)

குறிப்புரை :

கம்பனும் அம்பனும் அமுதும் ஆறும் ஏகம்பனும் கடவுளும் பொன்னும் பவளத் தூணும் ஆகிய சிவபிரானைச் சிந்தித்து எழுகின்றேன் . நம்பன் - எல்லாவுயிர்களாலும் விரும்பப்படுவோன் . நகரமூன்றும் - முப்புரங்களும் . வெருவ - அஞ்சி வாய்வெருவ . ` அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கம்பன் `. நோக்கும் அம்பன் :- விழித்தெரித்தமை குறித்தது . அம்பு - திருமாலாகிய கணை . அம்புடையவன் அம்பன் . அமுது - இறவாதுகாப்பவன் ` இன்பமரும் அமுதை ` ( தி .6 ப .91 பா .4) ` அமுத வொளிவெளி ` ( தி .5 ப .91 பா .9). ஆறு - நல்லாறு நன்னெறி . ` நன்னெறியாவது நமச்சிவாயவே `. ` நெறியே ; நின்மலனே நெடுமாலயன் போற்றிசெயும் குறியே நீர்மையனே ` ( தி .7 ப .24 பா .9). கச்சியுள் ஏகம்பன் ; கச்சியுள்ளே கம்பன் . வெண்டிங்கட் செஞ்சடை :- முரண்டொடை .

பண் :

பாடல் எண் : 2

ஒருமுழ முள்ள குட்ட மொன்பது துளையு டைத்தாய்
அரைமுழ மதன கல மதனில்வாழ் முதலை யைந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழு மாடக் கச்சியே கம்ப னீரே.

பொழிப்புரை :

கார்மேகங்கள் தவழும் கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே ! ஒரு முழ நீளமும் அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் தன்கண் வாழும் முதலைகள் ஐந்தும் உடைய சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து அடியேன் அடைவு கேடாகப் பலகாலும் பேசுகின்றேன் .

குறிப்புரை :

குட்டம் - குளம் . ` நெடுநீர்க்குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து `. ( புறம் . 243 ) ஒரு குட்டை . அதில் ஒன்பது தூம்பு . அதன் அகலம் அரைமுழம் ; நீளம் ஒருமுழம் ; அதில் வாழும் முதலையோ ஐந்து . பெரிய முழை - ( குகை ) போலும் வாசலைப் பற்றிக் கிடந்து பிதற்றுகின்றேன் நான் . கரிய மேகம் தவழும் மணிமாடங்களையுடைய திருக்கச்சியேகம்பவாணரே !

பண் :

பாடல் எண் : 3

மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினான் மதில்கண் மூன்றுந் தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூல மேந்தி யேகம்ப மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.

பொழிப்புரை :

பார்வதி பாகரான இளையராய் , ஒற்றை மழுப் படையை ஏந்தியவராய் , வில்லினால் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு அவற்றை அழித்த செல்வராய் , இலைவடிவமான சூலத்தைக் கையில் ஏந்தி ஏகம்பத்தை விரும்பி உறையும் பெருமானைத் தம் தலையால் வணங்க வல்ல அடியவர்கள் பெரிய தலைவர்களுக்கும் தலைவராகும் உயர் நிலையினராவர் .

குறிப்புரை :

மலையினார் மகள் - இமாசல குமாரி . மைந்தனார் - வலிமையுடையவர் . ( மணாளர் ). மழுப்படை தாங்கியவர் . சிலை - மேருமாலையாகிய வில் . சிலை - மலை , சிலை என்னும் மரத்தாற் செய்யப்படுதலால் வில்லுக்குச் சிலை என்ற பெயராயிற்று ஈண்டுச் சிலை ( மலை ) யே சிலையாயிற்று . மும்மதில் - முப்புரம் . செல்வர் - மும்மலமும் இல்லாத தூய ஞானச் செல்வமுடையவர் . ` சிலையுடை மலையை வாங்கித் திரிபுரம் மூன்றும் எய்தார் ` ( தி .4 ப .35 பா .10). ` இலையுடைப் படை ` ? ப .37 பா .10. பார்க்க . தலையினால் ..... தலைவர் . ` தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே ` ( தி .2 ப .77 பா .2).

பண் :

பாடல் எண் : 4

பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து
ஏத்துவா ரேத்த நின்ற வேகம்ப மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.

பொழிப்புரை :

பொன்போன்று பூத்த கொன்றைமாலையை முறுக்குண்ட சடைக்கண் அணிந்த செல்வராய் , பரிசுத்தமான கங்கையைத் தம் அழகிய முடியிலே விளங்குமாறு வைத்து , தம்மை வழிபடும் அடியார்கள் ஏத்துதற்குப் பொருளாய் நின்ற ஏகம்பத்தை விரும்பி நிலையாக உறையும் பெருமானை வழிபடும் முறையை அறிய இயலாதேனாய் , இப்பொழுது அவனிடம் பற்றுக்கொண்ட யான் வீணாகக் கழிந்த காலத்தை நினைத்து மயங்கினேன் .

குறிப்புரை :

மலர்ந்த பொன் போலும் செந்நிறமுடைய கொன்றை மலர் மாலையைச் சடையிற் சூடிய செல்வர் . தூய்மையும் திருவருட் பெருமையும் பொருந்திய கங்கையாளைத் திருமுடி திகழ்ந்து விளங்க வைத்தவர் . ஏத்தும் அன்பர் ஏத்தும் வண்ணம் நின்ற திரு வேகம்பத்தில் எழுந்தருளியவர் , அவர் திருவடியை வாழ்த்தும் வகை அறிய வல்லேன் அல்லேன் . பற்றுக்கொண்டு மயங்கினேன் . கழிந்த காலத்தைக் கருதி யிரங்கியது , வைத்து நின்ற ஏகம்பர் , ஏத்த நின்ற ஏகம்பர் .

பண் :

பாடல் எண் : 5

மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபால மேந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோ ரேன மோட்டி யேகம்ப மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.

பொழிப்புரை :

மை பூசிய குவளைமலர் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதிபாகராய் , கையில் மண்டை ஓட்டைப் பிச்சை பெறும் பாத்திரமாக ஏந்தி வீட்டு முகப்புத்தோறும் பிச்சை பெறுவாராய் , தம்மால் அம்பு எய்யப்படும் பன்றியை விரட்டி , ஏகம்பம் மேவிய பெருமானைக் கைகளால் தொழவல்ல அடியவர்களுக்குக் கொடிய தீவினைகளைப் போக்கிக்கொள்ளுதல் இயலும் .

குறிப்புரை :

மை அணிந்த பூப் போலும் நெடிய கண்களையுடைய மங்கையை ஒரு பங்கில் உடையவர் , கையில் ஒரு கபாலம் ஏந்தி வீட்டுக் கடைதோறும் சென்று பலி கொள்பவர் . அம்பால் எய்து துரத்துவதொரு பன்றியை ஓட்டித் திருக்கச்சியேகம்பத்தில் எழுந்தருளியவர் . அவரைக் கை குவித்துத் தலைமேல் ஏற்றிப் போற்றி வாழ்த்தி நினைந்து தொழவல்லவர்க்குக் களையலாகாத கடிய தீவினைகளைக் களைதல் எளிதாகும் . ஏனம் ஓட்டியதை அருச்சுனனுக்குப் பாசுபதங் கொடுத்த வரலாற்றில் அறிக . ஓட்டிமேவினார் என்றியையினும் , ஓட்டுதலுக்கும் மேவுதலுக்கும் தொடர்பில்லை . ` ஓட்டி ` பெயருமாம் .

பண் :

பாடல் எண் : 6

தருவினை மருவுங் கங்கை தங்கிய சடைய னெங்கள்
அருவினை யகல நல்கு மண்ணலை யமரர் போற்றும்
திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட வுறைய வல்ல
உருவினை யுருகி யாங்கே யுள்ளத்தா லுகக்கின் றேனே.

பொழிப்புரை :

சிவபுண்ணியப் பேற்றை அளிக்கவல்ல கங்கை தங்கிய சடையனாய் , எங்கள் அரிய வினைப்பயன்கள் எம்மை விடுத்து நீங்குமாறு அருள் வழங்கும் தலைவனாய் , தேவர்கள் போற்றும் செல்வமாய் , திருவேகம்பத்தில் அடியவர் தன் புகழைப் பாடத் தங்கியிருத்தலில் வல்லனாய் , உள்ள சிவபெருமான் உருவினை நினைத்து உருகி உளமார மகிழ்கின்றேன் .

குறிப்புரை :

தருவினை - கொடுக்குஞ் செயல் ; வினைத்தொகை மரங்களை எனலும் ஆம் , தரு - மரம் , தரு + இன் + ஐ = தருவினை . கங்கையாறு தன்கண் முழுகுவார் தீவினைகளைக் கெடுத்து , நல்வினைப்பயனைக் கொடுக்கும் வினையுடையது . அது தோன்றிய இடந்தொட்டு முடியும் இடங்காறும் ஆங்காங்கு மரங்களை மருவுதல் உடையது . அருவினை - நீங்குதற்கரிய வினை . அகல - அகன்றொழிய . நல்கும் - அருள் கொடுக்கும் . அண்ணல் - சிவபெருமான் . அமரர் - தேவர் ; மும்மலத்தொடு செய்யும் போருடைய ஞானவீரர் . திரு :- ` திருவே என் செல்வமே தேனே ... அமரரேறே ` ` கருவெந்து வீழக் கடைக்கணிந் தென்னுளம் புகுந்த திரு ` ` செப்பரிய அயனொடு மால் சிந்தித்தும் தெரிவரிய அப்பெரிய திரு ` ` திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகன் ` ` சென்றடையாத திருவுடையான் ` ` திருநெறி ` ` சிவமே பெறுந்திரு எய்திற்றிலேன் ` ` அடியோம் திருவைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ` என்பனவற்றால் , எல்லாம் வல்ல முழு முதற்பொருளையும் அவனருளையும் அவனையடையும் நெறியையும் அந்நெறியிற் சென்று பெறும் பேரின்பத்தையும் ` திரு ` எனல் விளங்கும் . செப்பிட - சொல்ல , உறைய - வாழ . செப்புவார் உள்ளத்தில் உறையவல்ல வுரு சிவனுரு .

பண் :

பாடல் எண் : 7

கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகி யுலகெலா முய்ய வுண்டான்
எண்டிசை யோரு மேத்த நின்றவே கம்பன் றன்னைக்
கண்டுநா னடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.

பொழிப்புரை :

தான் விரும்பிக் கொண்ட வடிவுடையவனாய்த் திருக்கோலக்கா என்ற திருத்தலத்தை உடைய கூத்தனாய் , உலகங்கள் எல்லாம் உயிர் பிழைக்குமாறு விடத்தை உண்டவனாய் எட்டுத் திசையிலுள்ளாரும் போற்றுமாறு நிலைபெற்ற ஏகம்பனைத் தரிசித்து அவனுக்கு அடிமைத் தொண்டு செய்வதற்கு அடியேன் தலந்தொறும் அலைகின்றேன் .

குறிப்புரை :

கோலம் - வேடம் . ` பல பல வேடம் ஆகும் பரன் ` திருக் கோலக்காவை உறைவிடம் ஆக உடைய திருக்கூத்தன் . எல்லாத் தலங்களிலும் திருக்கோயில் கொண்டிருக்கும் முழு முதல்வன் ஒருவனே . அவனே ஞானானந்த நடனம் புரிபவன் ; ஐந்தொழிற் கூத்தன் . இவ்வுண்மை யறியாதார் , திருமுறையில் திருக்கூத்தன் என்றுள்ள இடந்தொறும் மகேசுரமூர்த்தியாகிய நடராசர் என்பர் . உண்டது நஞ்சம் , அதனை உண்டதன் காரணம் உலகெலாம் உய்தல் வேண்டுமென்று கொண்ட திருவுள்ளம் . திருவேகம்பனைக் கண்டு அடிமை செய்தற் பொருட்டாக அவன் திருவடியே கருதித் தலந்தோறும் திரிகின்றேன் நான் . எண் + திசை ; எட்டுத் திக்கு . இதில் உலகுய்ய நஞ்சுண்டமை உணர்த்திய துணர்க .

பண் :

பாடல் எண் : 8

படமுடை யரவி னோடு பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக் கண்டவ ரஞ்ச வம்ம
இடமுடைக் கச்சி தன்னு ளேகம்ப மேவி னான்றன்
நடமுடை யாடல் காண ஞாலந்தா னுய்ந்த வாறே.

பொழிப்புரை :

படத்தை உடைய பாம்பினோடு குளிர்ந்த பிறையைச் சூடி , மதம் பெருக்கும் யானைத் தோலைப் போர்த்துப் பார்ப்பவர்கள் அஞ்சுமாறு , செல்வத்தை உடைய காஞ்சிநகரில் ஏகம்பத்தை உறைவிடமாக விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய சிறப்பான ஆடலைக் காண்பதனால் உலகம் தீவினை யிலிருந்து பிழைத்தது . இது வியக்கத்தக்கது .

குறிப்புரை :

பாம்பும் திங்களும் சூடி , யானைத்தோல் போர்த்து , கண்டவர் அஞ்சி நடுங்க , பரந்த இடத்தையுடைய ; பெருமையுடைய , திருக்கச்சியுள் திருவேகம்பத்தில் எழுந்தருளிய சிவபெருமானது திருக் கூத்தாடும் திருவிளையாடலைக் காண உலகம் உய்தி பெற்றது . உய்யும் ஆறு திருக்கூத்துக் காட்சியே . இதில் உலகுய்யக் கூத்தாடல் குறித்த துணர்க . கடம் - மத நீர் , கடம் உடை உரிவை - யானைத்தோல் . நடம் உடை ஆடல் :- ஆடல் பொது , நடம் சிறப்பு உடலாடல் , கண்ணாடல் , கையாடல் , காலாடல் , நடமாடல் எனப் பொதுவினையாதல் அறிக . நடம் , முதலியன குறித்தவற்றிற்கே உரியவாதலும் ஆநந்த நடம் , பஞ்சாக்கர நடம் , பஞ்சகிருத்திய நடம் எனப் பொதுவாதலும் உண்டு .

பண் :

பாடல் எண் : 9

பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ள மெள்ளவே நவில நின்று
குன்றியி லடுத்த மேனிக் குவளையங் கண்ட ரெம்மை
இன்றுயில் போது கண்டா ரினியரே கம்ப னாரே.

பொழிப்புரை :

குன்றிமணி போலச் சிவந்த திருமேனியில் கருங்குவளை போல அமைந்த நீலகண்டராய்ப் பொன் நிறக் கொன்றை மாலை பொருந்திய நெடிய குளிர்ந்த மார்பினராய் என் உள்ளத்தில் நன்மை தரும் வகையில் புகுந்து என்மனம் மெதுவாக வணக்கம் சொல்லுமாறு நின்று யான் இனிமையாகத் துயின்றபோது காணப் பெற்றார் . அதனால் ஏகம்பனார் எனக்கு இனியராகின்றார் .

குறிப்புரை :

பொன்திகழ் கொன்றைமாலை (:- ` பூத்த பொற் கொன்றை மாலை ` தி .4 ப .44 பா .4) பொருந்திய நீண்ட குளிர்ந்த மார்பு உடையவர் . திருமார்பிற் கொன்றைமாலை சூடியவர் என்பது ஈண்டு உணரப்படும் . நன்றி - நன்மை ; சிவம் . சிவநெறி . நவில - போற்றி உரைக்கப் பயில . குன்றியில் அடுத்த மேனி :- ` திகழொளிக்குன்றி யேய்க்கும் உடுக்கை ` ( குறுந்தொகை , கடவுள் வாழ்த்து ) என்றது போல் , செம்மேனிக்குக் குன்றிமணி நிறம் ஒப்பாயிற்று . குவளையங் கண்டர் :- ` குவளைக்களத் தம்பலவன் ` ` காவிநின்றுஏர்தருகண்டர் ` ` தென்றில்லை நின்றோன் மிடற்றின் வண்ணக்குவளை மலர்கின்றன ` ( தி .8 திருக் கோவையார் . 33, 41, 162) ` பைங்குவளைக்கார் மலரால் ... எங்கோனும் போன்றிசைந்த பொங்குமடு . ( தி .8 திருவாசகம் 167). இன்துயில் போது - இனிமையூரத் துயில்கின்ற வேளை . துயில்போது :- வினைத்தொகை , அதன்அடை இனிமைப்பண்பு . இன்றுயில் போது :- பண்புத்தொகை . இனியர் ஏகம்பனார் மெள்ளவே நவிலல் பிறர் செவி கேளாவாறு மெல்லொலியுறச் சொல்லுதல் . கொன்றை மாலை நெடுந்தண்மார்பும் , நன்றியிற் புகலும் , குன்றி மேனியும் , குவளைக்கண்டமும் , இன்றுயில் போது கண்டதும் ஏகம்பனார் இனியரென்றதற்கு ஏதுக்கள் .

பண் :

பாடல் எண் : 10

துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரு மேத்த
அருத்தியா லன்பு செய்வா ரவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை யிசைய வேறி யேகம்ப மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார் வல்வினை மாயு மன்றே.

பொழிப்புரை :

அடியவர் பலரும் போற்றிப் புகழுமாறு திருத் துருத்தி , திருப்பழனம் என்ற தலங்களில் உறைபவராய் , விருப்பத்தோடு தம்மிடம் அன்பு காட்டுபவர்களுக்கு அருள்கள் செய்து காளையைப் பொருந்துமாறு இவர்ந்து ஏகம்பத்தை விரும்பி உறையும் எம்பெருமானுக்கு , உடம்பை முயற்சியில் ஈடுபடுத்தி அடிமை செய்யும் அடியவர்களுடைய கொடிய தீவினைகள் அழிந்து ஒழியும் .

குறிப்புரை :

துருத்தியும் பழனமும் சிவதலம் , அருத்தி - விருப்பம் . அன்புசெய்வார் :- ` மெய்யன்பர் ` எருத்து - விடை . வருத்தி - உடலை வருந்தச்செய்து , உடலில் உயிரை வருத்தி , அடிமை செய்தலே வினைத் தீர்வுக்கு ஏதுவாகும் . அவ்வடிமையும் ஏகம்பமேவினார்க்கே விரும்பிச் செய்தல் உயிர்களது கடன் .

பண் :

பாடல் எண் : 1

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம் பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால் , மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான் .

குறிப்புரை :

கங்கை நீர்ப்பெருக்கை , அதன் வேகத்தை அடக்கிச் சடைமிசை வைத்தவனாகிய தொடுக்குங்கடவுட் பழம் பாடலான் திருவடியை விரையாது வழுவின்றிப் பெற விரும்பினால் ; அது பெறத்தக்க உபாயத்தைக் கேண்மின் . ஒற்றியூருடைய கோவாகிய மெய்ப்பொருளை அளிக்கும் உணர்வாகிய தீயால் ( தி .4 ப .75 பா .4) கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டை எரித்தொழித்துச் செப்பஞ் செய்து நின்றவரது ஊன் உடலாகிய திருக்கோயிலுள்ளே விளங்கும் உள்ளமாகிய பெருங் கோயிலில் ( மூலட்டானத்தில் ) எழுந்தருளிக் கலந்து நின்று சிவப்பிரகாசம் புரிவார் அத்திருவொற்றியூருடையார் . இது திருவடி யடையும் வழி . கலந்து நிற்றல் - அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்றல் என்க .

பண் :

பாடல் எண் : 2

வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா வானவ ரிறைவ னின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனு மருந்த வத்தா லான்மாவி னிடம தாகி
உசிர்ப்பெனு முணர்வு முள்ளா ரொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

ஒரு குறுகிய காலத்து உயிர் வாழ்வதாகிய வாழ்க்கையை வாழ விரும்பாது , உணவு உண்பதனாலேயே செயற்படும் ஒன்பது துளைகளை உடைய இவ்வுடம்பில் , தேவர்தலைவனாகிய எம் பெருமான் கூடி நிற்றலை விரும்புவீராயின் , நீர் உடம்பு இளைக்க நோற்கும் அரிய தவத்தின் பயனாய் உம் ஆன்மாவில் இடம் பெற்று , உம் மூச்சுக்காற்றிலும் உணர்விலும் கலந்து உறைவான் திருவொற்றியூரை இடமாகக் கொண்ட எம்பெருமான் .

குறிப்புரை :

வசிப்பெனும் வாழ்க்கை :- ` வசித்திட வரும் வியாபியெனும் வழக்குடையனாகி ` ( சித்தியார் சுபக்கம் சூ . 4; 20). வாழும் வாழ்க்கை . கட்டு நெறியில் ( பெத்தத்தில் ) உடலில் உலகில் காலதேச வரையறைக்குட்பட்டு வசித்தல் என்னும் குறை வாழ்க்கை வேண்டா . புசித்தலின்றேல் அழியத் தக்க பொத்தலுடம்பொடும் தேவாதி தேவன் நின்று பொருந்தவேண்டினால் , உள்ளுருகிச் செய்வதாகிய , செய்தற்கரிய தவத்தால் , ஆன்மாவினிடத்ததாய் உயிர்ப்புடன் கூடிய தெனப்படும் உணர்வும் உடையவர் திருவொற்றியூருடையார் . அசிர்ப்பு - கண்ணீர்ப் பெருக்கம் . அயர்ப்பு என்பதன் மரூஉவாகக்கொளின் , இளைப்பு ஆம் . தவம் மெய் இளைத்தற் பொருட்டுச் செய்யப்படுவது . ஆன்மாவினிடம் ... உசிர்ப்பு ... உள்ளார் :- ` என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கென்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே ` ( தி .5 ப .21 பா .1). ` ஆவியுள் நீங்கலன் ` ` உள்ளத்தின் உள்ளே நின்ற கரு ` ` ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி ` என்புழி , ஊன் ( பாசம் ) உயிர் ( பசு ) உணர்வு ( பதி ) என்னும் முப்பொருளும் உணர்த்தப்பட்டன . வசிப்பு - அதுவதுவாய வசிப்பு . ( தணிகைப் . 816). ` உண்டவூண் உனக்கு ஆம் வகை ` ( தி .9 திருவிசைப்பா ).

பண் :

பாடல் எண் : 3

தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்றீர்
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள் வல்லீ ராகில்
ஞானத்தை விளக்கை யேற்றி நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை யொழிப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

பல கொடைகளைத் தக்கவருக்கு வழங்கி வாழும் பொருட்டுப் பலவித சஞ்சலங்களிலே அழுந்தி மன அலைதலைவுற்று நிற்கின்ற நீங்கள் , சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள் . சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான் .

குறிப்புரை :

தானம் - கொடை , சலம் - சஞ்சலம் ; அசைவு ; வருத்தம் விளைக்கும் உலக வாழ்க்கை . வானத்தை - அருள் வெளியை ; இன்ப வெளியை , வல்லீராகில் வம்மின்கள் . ஞானத்தை - சிவ ஞானத்தை , விளக்கை - சிவஞான தீபத்தை , நாடி - ஆகம வளவையாலும் அநுமான அளவையாலும் ஆராய்ந்து , ` நாடி ` எனவே அநுமான அளவையான் என்பதூஉம் ` கண்டு ` எனவே அநுபூதியில் என்பதூஉம் தாமே போதரும் , ( சிவ . போ . பாயிரம் ). உள்விரவ வல்லார் - அநுபூதியிற் கண்டு கலந்து சிவாநந்தம் நுகர வல்லவர் , ஊனத்தை - பிறவியை ; உடலெடுத்தலை ; ஊனுடம்பினை ; குறையை . ( தி .4 ப .80 பா .6.)

பண் :

பாடல் எண் : 4

காமத்து ளழுந்தி நின்று கண்டரா லொறுப்புண் ணாதே
சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்து மிடையி ராவு மேகாந்த மியம்பு வார்க்கு
ஓமத்து ளொளிய தாகு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான் .

குறிப்புரை :

காமத்துள் - ஆசையுள் ; பெண்ணாசை , மண்ணாசை , பொன்னாசையுள் . அழுந்திநிற்றல் - அநுபவித்தல் . கண்டர் - காலன் , அவன் தூதர் முதலியோர் . ஒறுப்பு - தண்டனை . சாமத்து வேதம் - சாம வேதம் . சயம்பு - தான் தோன்றி , ( சுயம்பு ). ஏமத்தும் - பகற்பொழுதின் நான்கு யாமங்களிலும் இராப்பொழுதின் நள்ளிரவொழிந்த யாமங்களிலும் . ஏகாந்தம் - ஒரு முடிவு . ` வெருவந்த செய்தொழுகும் வெங்கோலனாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் ` ( தி .4 ப .58 பா .6) ` ஒருவந்தம் ஒருதலை ஏகாந்தம் என்பன ஒரு பொருட்கிளவி `. ( பரிமேலழகருரை ). ` ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத் துடையார் ` ஒருவந்தம் ஊக்கம் - ஒருவந்தமாய வூக்கம் . நிலைபெற்ற ஊக்கம் . ( பரிமேலழகருரை ) ஏகம் - ஒன்று . அந்தம் - முடிபு . ஏகாந்தம் - ஒருதலை . அநேகம் + அந்தம் = அநேகாந்தம் - பலதலை . பரிமேலழகருரையின் வாய்மையை உணரமாட்டாமல் , பொருத்தம் இன்றி எழுதியதோர் உரையைப் பொருளாகக்கொண்டு ` செல்வம் ` என்றுரைப்பது பொருந்தாது . இறைவனை இயம்புவார்க்கு ஏகாந்தம் அன்றி அநேகாந்தம் ஒவ்வாது . ஓமம் - தீயோம்பும் புறவேள்வி , சுகவேள்வியில் ஞானத்தீ . ஈரிடத்தும் ஒளி வடிவாயிருந்தருள்பவன் திருவொற்றியூருடையான் . ` ஒன்றாகக் காண்பதே காட்சி `.

பண் :

பாடல் எண் : 5

சமையமே லாறு மாகித் தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த வினிதினங் கிருந்த வீசன்
கமையினை யுடைய ராகிக் கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

அறுவகை வைதிகச் சமயங்களாகித் தான்தோன்றி நாதராய்த் தேவர்கள் முன்நின்று புகழ்ந்து துதிக்க , அவர்களிடையே மகிழ்வுடன் இருக்கும் , எல்லோரையும் அடக்கியாளும் பெருமானாய் , பகைவர் செய்யும் தீங்குகளையும் பொறுக்கும் பொறுமை உடையவர் ஆகித் தம் திருவடிகளை முன் நின்று வழிபடுபவர்களுக்கு பார்வதி பாகராய்க் காட்சி வழங்குவார் ஒற்றியூர்ப்பெருமான் .

குறிப்புரை :

( தி .4 ப .100 பா .4) ` புறப்புறம் புறம் அகப்புறம் அகம் என்னும் நான்கனுள் அகச் சமயம் ஒழித்து ஒழிந்த முக்கூற்றுப் புறங்களில் தனித்தனி அறுவகைப்பட்ட சமயங்களில் நின்று கொண்டு அவற்றுள்ளும் பலவேறு வகைப்பட ஓர்த்து உணர்கின்ற அவரவர் கொண்ட முதற்பொருளாய் , அவரின் வேறாகிய பாடாணவாதம் முதலிய அகச் சமயத்தார்க்கு இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தையின் முறையே சத்தியும் உத்தியோகமும் பிரவிருத்தியும் என்னும் தொழில் வேறுபாடுபற்றிச் சிவன் சதாசிவன் மகேசன் என்னும் பெயருடைய அருவம் அருவுருவம் உருவம் என்னும் தடத்தக் குறியே குறியாக உடைத்தாய்ச் , சித்தாந்த சைவர்க்கு அத் தடத்தக்குறியே அன்றி வேதாகமங்களின் கருத்திற்கு அதீதமாய் உயிர்க்குயிராய் , உயிர்கட்கெல்லாம் அறிவைப் பிறப்பிக்கும் அம்மை யப்பனுமாகி , எங்கணும் எக்காலமும் செறிந்து வியாபகமாய் ` ( சிவ ஞான சித்தியார் . சுபக்கம் . 1. உரை ) நிற்பவன் சிவன் என்னும் உண்மையால் , சமய மேலாறுமாதல் விளங்கும் . சயம்பு ( தி .4 ப .45 பா .4). இமையவர் - கண்ணிமை யாது கடவுளையுணர்பவர் . கமை - பொறுமை . க்ஷமா என்னும் வட சொல்லின் தற்பவம் .

பண் :

பாடல் எண் : 6

ஒருத்திதன் றலைச்சென் றாளைக் கரந்திட்டா னுலக மேத்த
ஒருத்திக்கு நல்ல னாகி மறுப்படுத் தொளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தா னுணர்வினா லைய முண்ணி
ஒருத்திக்கு நல்ல னல்ல னொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

ஒற்றியூர்ப்பெருமான் . தன் தலையை அடைந்த கங்கையைச் சடையில் மறைத்து அக்கங்கைக்கு இனியவன் போன்று அவளைச் சிறை செய்து மறைத்து , மீண்டும் பார்வதியாகிய ஒருத்தியை உடம்பின் ஒருபாகமாகக்கொண்டு , தன் விருப்பத்தோடு பிச்சை எடுத்து உண்ணும் அப்பெருமான் கங்கை உமை என்ற இருவருள் ஒருவருக்கும் நல்லவன் அல்லன் .

குறிப்புரை :

சென்ற ஒருத்தியைத் தலையிற் கரந்திட்டான் . கங்கையைச் சடையுள் மறைத்தான் என்றதாம் . ஒருத்திக்கு - அக் கங்கைக்கு . நல்லன் - இனியன் . ஆகி - போன்று . ` ஆள்வாரிலி மாடாவேனோ ` மறுப்படுத்து - மாசுண்டாக்கி . ஒளித்து - உமைநங்கை அறியாது அப்புனற்கங்கையைச் சடையுள்ளே மறைத்து . சுட்டு வருவித்துறைக்க . ஒழுக்கம் விழுப்பம் தரலான் உயிரினும் ஓம்பப்படும் என்றலே அமைவதாயிருக்க , மற்றும் ஒழுக்கம் என்றது மிகை என்பார்க்கு விடையாகப் பரிமேலழகர் ` அவ்வொழுக்கம் ` எனச் சுட்டு வருவித்துரைத்து நூலின் குற்றமின்மை ஓம்பினார் . வருவித்த சுட்டால் ` அங்ஙனம் விழுப்பந்தருவதாயவொழுக்கம் ` எனப் பெறலுணர்த்தினார் . அவ்வாறே ஈண்டும் பொருத்தமுற உரைத்துக்கொள்க . ஒருத்தியை - உமைநங்கையாரை . பாகம் - இடப்பால் . ஐயம் - பிச்சை . உண்ணி - உண்பவன் . உணர்வினால் உண்ணி என்றதால் வாயால் உண்ணும் மற்றைப் பிச்சை போல்வது அன்று . ஒருத்திக்கும் - கங்கை உமைநங்கையென்னும் இருவருள் ஒருத்திக்கும் . ` கங்கை சடையுட் கரந்தாய் அக்கள்ளத்தை மெள்ள வுமைநங்கை அறியின் , பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே ` ( தி .4 ப .103 பா .8).

பண் :

பாடல் எண் : 7

பிணமுடை யுடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளா னினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

பிணமாதலும் முடை நாற்றமும் உடைய இவ்வுடம்பைப் பேணிப் பாதுகாப்பதற்காக அதனிடத்து விருப்பினிராய்த் திரிந்து சிற்றின்ப வேட்கையை நீவிர்கொள்ளற்க . போக்குவதற்கு உரியதாகும் பொய்யான இப்பிறவிப்பிணியைப் போக்க , கொழுப்பினை உடைய இவ்வுடலின் நெஞ்சினுள் கரந்து உறையும் இறைவரைத் தியானிக்கும் முறையாலே தியானிக்கும் அடியவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வாய்த்த சிவஞானத்தோடு குணியாய் இருந்து விளங்குவார் .

குறிப்புரை :

பிணம் முடை உடல் என்றும் பிணம் உடை உடல் என்றும் பிரிக்கலாம் . பிணமாதலும் முடைநாற்றமும் உடைய உடல் . பிணமாதலை உடைய உடல் . உடலுக்காகப் பித்தாய்த் திரிதல் :- உடற்பற்றுடையவராய் , அதைப் போற்றிக்காக்க , உணவுக்கும் , பொருளுக்கும் , மழை குளிர் வெயில் தாக்காது தடுத்துக் காத்தற்கும் , சிற்றின்பம் விளைக்கும் உடற் சேர்க்கைக்கும் அலைதல் . புணர்வு எனும் போகம் வேண்டா என்றது சிற்றின்ப வேட்கையைக் கொள்ளற்க என்றதாம் . போக்கலாம் பொய்யை - போக்குதற்கு உரியதாகும் பொய்ப்பிறவியை . நீங்க - பிறவிக்கு ஏதுவான வினையின் நீங்க . நிணம் - கொழுப்பு , நெஞ்சினுள்ளிடத்து . நினைக்குமா நினைக்கின்றார்க்கு - உள்ளிருக்கும் இறைவனை நினைக்கும் ஆறு நினைக்கின்ற அடியவர்க்கு . உணர்வினோடு - அவர்க்கு வாய்த்த குணமான சிவ ஞானத்தொடு ( பசுஞானத் தோடிரான் ). இருப்பர் - குணியாய் இருந்து விளங்குவார் . நினைக்குமா நினைக்கின்றார் :- ` நிறைதரு கருணா நிலயமே உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே ` ( தி .9 திரு விசைப்பா . 11) ` நினைப்பறநினைந்தேன் ` ` நினையாமல் நினைந்து ` என்ற கருத்தும் பொருந்தும் . சீவபோதமாக நினையாது சிவபோதமாக நினைதலே எல்லாவற்றிற்கும் உரிய உண்மையாகும் .

பண் :

பாடல் எண் : 8

பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

முறுக்கேறிய நீண்ட சடையை உடைய ஒற்றியூர்ப் பெருமானுடைய திருநாமங்களை அடைவு கேடாகப் பலகாலும் வாய்விட்டு உரைக்காத அறிவிலிகளே ! நீர் இனி அடையப்போகும் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய பழைய வினைகள் நீங்கவேண்டும் என்று நீர் கருதினால் நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி மனத்தினுள்ளே ஞானச் சுடர்விளக்கை ஏற்றித் தியானிப்பவர் உள்ளத்தில் அவர் உள்ளார் என்பதனை உணர்ந்து செயற்படுவீராக .

குறிப்புரை :

பின்னுசடை , வார்சடை , பின்னியவார்ந்த சடை . பின்னுதல் - முறுக்குண்ணல் . வார்தல் - நீண்டொழுகுதல் . ` பின்னிய தாழ் சடையார் ` ( தி .1 ப .8 பா .10). பிதற்று - முதனிலைத் தொழிற் பெயர் , பிதற்றுதல் , இல்லாப் பேதைமார்கள் . மகன் மகள் ஒருமை , மகவர் பன்மை , அதன் மரூஉவே 1, மகார் 2, மார் . ` மகார்கள் ` - ` மார்கள் ` என மருவிற்று . இது பெயர்ச் சொல்லின் மரூஉவாதலின் வினை கொள்ளலாயிற்று . இதனை இலக்கண நூலார் விகுதி எனக் கொண்டனர் . கோமகன் - கோமான் , சேரன்மகன் - சேரமான் , மலையன் மகன் - மலையமான் , வேள்மகன் - வேண்மான் , இருங்கோ வேண்மாள் என்பவற்றில் மான் , மாள் ( ஒருமை ) 1 மகார் - மார் ( பன்மை ) என்று மருவியவாறறிக . ` சடையவனே விடையவனே உடையவனே கடையவனேனைத் தாங்கிக்கொள் என்று பிதற்றாத பேதை மகார்கள் நரகத்துள் துன்னித் துன்புறுவார்கள் . அத்துன்பத்திற்கு ஏதுவான தொல்லைவல்வினைத் தொந்தம் தீரவேண்டினால் , நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி உள்ளத்துள் விளக்கு ஒன்று ஏற்றி உன்னுகின்றவர் உள்ளத்தில் உள்ளவர் ஒற்றியூருடையார் . ( தி .4 ப .75 பா .4) மன்னுதல் - அழியாது நிலைத்தல் . வான் - பெருமை , வால் தூய்மை , மனவிளக்கு :- ` மனமணிவிளக்கு ` உன்னுதல் - கருதுதல் , உள்ளத் துள்ளார் - மனத்துள் உயிர்க்குயிராயிருப்பவர் .

பண் :

பாடல் எண் : 9

முள்குவார் போகம் வேண்டின் முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவா ரெள்கி நின்றங் கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப் பாடியு மாடி நின்றும்
உள்குவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! உன்னால் தழுவப்படும் மகளிருடைய இன்பத்தை நீ விரும்பினால் அதனை அடையப்பலகாலும் முயல்கின்றாய் , அவர்கள் உனக்கு ஒரு துயரம் வந்தால் அதனைத் தீர்க்க முற்படாமல் உன்னைப் பரிகசிப்பர் . உன்னுடைய இந்த நிலை புதுமையாய் இருக்கிறது என்று இகழ்வார்கள் . அம்மகளிர் மோகத்தை அச்சத்தால் விடுத்தவராய் ஒற்றியூர்ப் பெருமானுக்கு அடியவராய்ப் பாடியும் ஆடியும் நின்று தியானிப்பவர் உள்ளத்தில் அவர் நிலை பெற்றிருப்பவராய்த் துன்பம் வரும்போது அதனைத் துடைப்பவர் ஆவார் என்பதனை உணர்ந்து வாழ் .

குறிப்புரை :

நெஞ்சறிவுறூஉ :- முள்குவார் - முயங்கும் மகளிர் , ` இளமுலை முகிழ்செய முள்கிய , ( கலித் . 125). ` அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது ` ( நற்றிணை 105). ` ஆய்கதிர் முடி நிழல் முனிவர் சரணம் முள்குமே ` ( சூளாமணி . 55). ` நெடுங்கணார்தம் குவிமுலைத் தடத்து முள்கி ` ( சூளாமணி 69). முள்கு என்பது நீண்டு ( மூள்கு ) மூழ்கு என்றாதலுமுண்டு , ` சுற்றுவார் குழலார்தம் துகிற்றடம் முற்று மூழ்கும் பொழுது ` ( சூளாமணி 616), முள்கு + ஆர்ந்து + இருப்பர் = முள்கார்ந்திருப்பர் , இது மருவி உட்கார்ந்திருப்பர் என்றாயிற்று , முழங்காலைக் கையால் தழுவிக் கட்டிக்கொண்டு , ஈரடியும் நிலந்தோய முழங்கால் இரண்டும் நெட்டங்காலிட்டிருத்தலை முள்காந்திருத்தல் என்பர் . ` பசுப்போல்வர் முற்பட்டாற் பாற்பட்ட சான்றோர் முசுப்போல முள்காந்திருப்பர் ` ( நன்னூல் . 96. சங்கர நமச்சிவாயருரை ). சிந்தாமணி முதலியவற்றில் ` முள்குதல் ` என்னுஞ் சொல்லாட்சி பயின்றுளது . முயற்றி - முயல்கின்றாய் , முன்னிலை வினை , வேண்டி முயற்றி என்றதால் , வேண்டில் என்பது பிழையெனல் புலப்புடும் . எள்குவார் - இகழ்வார் . மாயம் - புதுமை , எள்கல் முதலிய மூன்றும் முள்குவார் ( மகளிர் ) வினை . பள்குவார் - அச்சத்தில் ஆழ்பவர் , பதுங்கி என்றாருமுளர் , ( சூளாமணி 1585). உள்குவார் - நினைப்பவர் .

பண் :

பாடல் எண் : 10

வெறுத்துகப் புலன்க ளைந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக வார்வச் செற்றக் குரோதங்க ளான மாயப்
பொறுத்துகப் புட்ப கத்தே ருடையானை யடர வூன்றி
ஒறுத்துகந் தருள்கள் செய்தா ரொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

நெஞ்சே ! புலன்கள் ஐந்தனையும் நுகரச் செய்யும் பொறிகள் ஐந்தும் நீ வெறுத்து அழியுமாறு தாம் முன்பு வேண்டியவற்றையே பலகாலும் வேண்டி நிற்கும் . பொறிகளுக்கு இரை வழங்குதலை மறுத்து ஆர்வம் பகை கோபம் எனும் இவை அழியுமாறு மற்றவரால் வரக்கூடிய துன்பங்களைப் பொறுத்து மகிழ்வோடிருப்பாயாக . புட்பகவிமானத்தை உடைய இராவணனை முதலில் ஒறுத்துப் பின் உகந்து அருள் செய்தவர் ஒற்றியூர்ப் பெருமான் .

குறிப்புரை :

நெஞ்சே , ஐந்து புலன்களும் நீ வெறுத்து அழியுமாறு முன் வேண்டியதையே பின்னும் வேண்டி நிற்கும் ; அப்புலன்களின் வழியே நீ செல்லின் , ` காமக் குரோத லோப மோக மத மாற் சரியங்களானவை மாயா . அவை மாய்ந்தொழியவேண்டி அப்புலன்களின் வழியிற் செல்லுஞ் செலவை வெறுத்து , அவற்றை ( க் காமாதிகளை , புலனெறி வேட்கைகளை ) அழிப்பாயாக . காமாதி மாய மறுத்து உகப்பாயாக எனலுமாம் , நெஞ்சே என்று விளித்து உக என்று ஏவியதாகக் கொள்க . ` உக ` வியங்கோளுமாம் . ` ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்கும் ஆதலின் , அது நீக்குதற்கு ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி யுச்சரிக்க ` ( சிவ . போதம் . சூ . 9. அதி . 3 ).

பண் :

பாடல் எண் : 1

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பான வளைவான செய்திகளைத் தேக்கி வைத்துக் கொண்டு இவ்வுடம்பினைப் பயனற்ற வகையில் பாதுகாத்துக்கொண்டு , காம்பு இல்லாத அகப்பை முகக்கக் கருதியதனை முகக்க இயலாதவாறுபோல , உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதேனாய்ப் பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை விரைவில் தான் அழியப் போவதனை நினையாது வேறு என்னென்னவோ எல்லாம் நினைப்பதுபோல எண்ணாத பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை ஓம்பி அடியேன் உய்யும் வண்ணம் ஒற்றியூர்ப் பெருமானாகிய நீ அருளவேண்டும் .

குறிப்புரை :

கூட்டை :- உடம்பைக் கூடு என்பதும் தொல் வழக்கு , ` கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே காட்டுப் பள்ளியுளான் கழல் சேர்மினே ` ( தி .5 ப .84 பா .2). வருமுறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாதழுந்தி , உருவெனுந் துயரக்கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் , திருமணத்துடன் சேவித்து முன்செலுஞ் சிறப்பினாலே மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுட்புக்கார் ` ( தி .12 திருஞானசம்பந்தர் புராணம் 1249) என்னுஞ் சேக்கிழார் திருவாக்கால் , துயரங்கட்குக் கூடு உடல் என்பது விளங்கும் . ` தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே காக்கை கவரில் ... ... என் ?` ( தி .10 திருமந்திரம் 167). வாளா - வீணில் . காம்பு இலா மூழை .- பிடித்தற் குரிய காம்பு இல்லாத அகப்பை . முகத்தலில்லாதது காம்பிலாத அகப்பை . எழுத்தறியும் பெருமானே , எண்ணாத பலபல எண்ண மெல்லாம் எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற என்னை ஓம்பி , யான் உய்யும் வண்ணம் நீ ஆண்டு கொள்வாய் .

பண் :

பாடல் எண் : 2

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

ஒற்றியூர் உடைய கோவே ! மனம் என்னும் தோணியைப் பொருந்தி , அறிவு என்று சொல்லப்படும் சவள் தண்டை ஊன்றிச் சினம் எனும் சரக்கை அத்தோணியில் ஏற்றிப் பாசக்கடலாகிய பரப்பில் அத்தோணியைச் செலுத்தும்போது மன்மதன் என்ற பாறை தாக்க அத்தோணி கீழ்மேலாகக் கவிழும்போது உன்னை அறிய இயலாதேனாய் வருந்துவேன் . அப்போது அடியேன் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக .

குறிப்புரை :

மனம் தோணி ; மதிகோல் ; சினம் சரக்கு ; ( பாசம் ) கடல் ; மனன் ( மன்மதன் ) பாறை ; மறியும்போது - கீழ்மேலாகும் பொழுது . ஒண்ணாது - ஒன்றாது ; பொருந்தாது . மனத்தோணி பற்றி மதிக்கோலை ஊன்றி , சினச் சரக்கை யேற்றி ( ப் பாச ) க் கடற் பரப்பில் ஓடும் வேளையில் , காமப்பாறை தாக்கிக் கவிழ்ந்து கீழ்மேலாகும் பொழுது , ஒற்றியூருடைய கோவே , உன்னை அறிய ஒன்றாது வருந்துவேன் , அப்போது என்னை மறந்து உன்னை உன்னும் உணர்வை நல்குவாய் . மனன் ( மநஸ் ) என்பது பழமையான பாடம் . மனன் - மன்மதன் . இத்திருப்பாடலை மறவாது எஞ்ஞான்றும் ஓதிவருதல் வீடுபேறு விழைவாரது கடனாகும் . ` மதன் ` என்பது பிழைபட்டபாடம் .

பண் :

பாடல் எண் : 1

கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

பொன்னும் வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஓடிவந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவ மில்லாதவனாய் நிலைபெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான் . எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது .

குறிப்புரை :

உன் + அகன் = உனகன் - உன்னுகின்ற அகத்தை யுடையவன் . ` உனகன் - இழிந்தவன் ` ( லெக்ஸிகன் ) அரக்கன் - இராவணன் , அனகன் - கடவுள் ; இயல்பாகவே தூயன் , அகன் - பாவி . அநகன் - பாவமில்லாதவன் . மன் அகனாய் - நிலைபெற்ற உள்ளத்தனாகி . இரக்கம் உறாது , அழித்தல் வேண்டும் என்பது நிலையான அகத்தினனாகி . மறித்தும் - மீண்டும் .

பண் :

பாடல் எண் : 2

கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவ னெடுத்தி டல்லு மரிவைதா னஞ்ச வீசன்
நெதித்தவ னூன்றி யிட்ட நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில் , பார்வதி அஞ்ச , எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான் . பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது .

குறிப்புரை :

கதித்தவன் - மலையை எடுத்தற்பொருட்டு உற்ற எழுச்சியை உடையவன் . கண் சிவந்து என்புழியெல்லாம் ( தி .4 ப .47 பா .2, 9) சினத்தின் காரியமாகிய செந்நிறத்தை அடைந்து என்றுரைத்துக் கொள்க . கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருளவாதலும் நிறத்துரு வுணர்த்தலும் உண்மை தொல்காப்பியத்தில் அறிக . அரிவை - உமை யம்மையார் , நெதித்தவன் - தபோநிதி . நிதி - நெதி , தவன் - தவத்தோன் . ` விழுநெதி ` ( நற்றிணை . 16) மதித்து - கருதி . இறை - இறைவன் ; சிறிது .

பண் :

பாடல் எண் : 3

கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலு மங்கை யஞ்ச வானவ ரிறைவ னக்கு
நெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான் . மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது .

குறிப்புரை :

கறுத்தவன் - கறுத்தநிறத்திராவணன் ; சினந்தவன் , மறித்தலும் - கீழ்மேலாக்க முயலுதலும் . வானவர் இறைவன் - தேவாதி தேவன் . நக்கு - நகைத்து . நெறித்து - நெறியச் செய்து , ` நெடுவரை ( மலை ) போல வீழ்ந்தான் ` என்றது அவனது உடல்நீட்சி குறித்தது . மறித்து - மீண்டும் . இறை . ( தி 4 ப .47 பா .2, 7, 10.)

பண் :

பாடல் எண் : 4

கடுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
எடுத்தலு மங்கை யஞ்ச விறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான் . கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

கடுத்தவன் - சினந்தவன் . இறையே - சிறிதே . நக்கு - நகைத்து . நொடிப்பளவில் - கைந்நொடிப்பொழுதில் . மடித்து : காலை , கால்விரலை மடியவைத்து .

பண் :

பாடல் எண் : 5

கன்றித்தன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தா னக்கு நாத னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

வெகுண்டு கண் சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடி இராவணன் பல வெற்றிகளைப் பெற்ற தன் கைகளால் எடுத்தலும் பார்வதி அஞ்ச எம் பெருமான் நன்கு சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் அவன் துன்புற்று வீழ்ந்தான் . அவனைத் தண்டிக்கக்கருதி விரலைப் பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

கன்றி - சினந்து . நன்று - பெரிதும் மேல் ` இறையே நக்கு ` என்றதற்கேற்ப உரைக்கவேண்டி . நன்று - சிவம் எனலும் நன்று , எதுகை நோக்கி மிக்கது . நகழ்தல் - துன்புறல் . ` நகழ மால்வரைக் கீழிட்டு அரக்கர் கோனை நலனழித்து ` ( தி .6 ப .11 பா .10) ` நகழ்வொழிந்தார் அவர் நாதனையுள்கி நிகழ்வொழிந்தார் எம்பிரானொடுங்கூடி ` ( தி .10 திருமந்திரம் 2669) ` நகழ்வன சில ` ( கம்பர் , அதிகாய . 136) என்னும் பொருட்டுமாம் . நகழ்வாதனம் ( தத்துவப்பிரகாசம் , 107 உரை ) போலவீழ்ந்தான் எனலுமாம் . மன்றி - தண்டித்து ` மன்றி விடல் ` ( பழமொழி . 288)

பண் :

பாடல் எண் : 6

களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டல்லு நேரிழை யஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நெளித்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச , அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த , இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான் . விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

களித்தவன் :- மனக்களிப்பினன் . நெளித்தவன் :- காயத்துவளைவினன் . வெளித்தவன் :- அன்பர்க்கு மறையாது வெளிப்படுதலையுடையவன் . வெற்பு - கயிலைமலை . மளித்து - மடித்து . மீண்டும் எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 7

கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனா யெடுத்த வாறே யேந்திழை யஞ்ச வீசன்
திருத்தனாய் நின்ற தேவன் றிருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திரு விரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான் . இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றி யிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

கருத்தன் - இலங்கைக்குத் தலைவன் ; மலையை யெடுக்கக் கருதிய கருத்தினன் . எருத்தன் - காளைபோன்றவனாகி . கழுத்தையுடையவனுமாம் . ஏந்திழை - உமாதேவியார் . திருத்தன் - தீர்த்தன் ; திருத்தலையுடையவன் . ` சிந்தனையைத் திருத்தியாண்ட சிவலோகா `. வருத்துவான் - வருத்தும் பொருட்டு .

பண் :

பாடல் எண் : 8

கடியவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை யஞ்ச வெடுத்தலு மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரல்லா லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான் . விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

` வடிவுடைமங்கை ` :- அழகுடையவற்றிற்கெல்லாம் அழகுதந்த அழகிய உமையம்மையார் . மருவ - பொருந்த . செடி - தீங்கு . வடிவு - அடையாளத்துரு .

பண் :

பாடல் எண் : 9

கரியத்தான் கண்சி வந்து கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தா னெடுத்தி டல்லு மேந்திழை யஞ்ச வீசன்
நெரியத்தா னூன்றா முன்ன நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

உள்ளம் கரியக் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பற்றி அது உறுதிகெட்டுத் தளர இராவணன் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , ஈசன் இராவணன் உடல் நெரியுமாறு தன் கால்விரலைச் சிறிது ஊன்றாத முன்னரே கனத்தைத் தாங்கமுடியாத அவன் அலறியவாறு விழுந்தான் . அவன் இறக்குமாறு எம் பெருமான் விரலை ஊன்றியிருப்பின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

கரிய - கரிந்திட ; கருமையுற . இரிய - ஓட . நெரிய - முறிய . மரிய - இறக்க .

பண் :

பாடல் எண் : 10

கற்றனன் கயிலை தன்னைக் காண்டலு மரக்க னோடிச்
செற்றவ னெடுத்த வாறே சேயிழை யஞ்ச வீசன்
உற்றிறை யூன்றா முன்ன முணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

சிவபெருமானுடய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான் . சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும் .

குறிப்புரை :

கற்றனன் - சிவபிரான் . செற்றவன் - நெருங்கியவன் . சேயிழை - செம்மை நிறத்தையுடைய இழைகளையணிந்த உமா தேவியார் . இறை - சிறிது ; இறைவன் .

பண் :

பாடல் எண் : 1

கடலக மேழி னோடும் பவனமுங் கலந்த விண்ணும்
உடலகத் துயிரும் பாரு மொள்ளழ லாகி நின்று
தடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி மன்னுமாப் பாடி யாரே.

பொழிப்புரை :

ஏழு கடலும் காற்றும் விண்ணும் , உடல்களில் உள்ள உயிர்களும் , உலகமும் , தீயும் ஆகிநின்று , பெரிய மலர்கள் மணம் வீசும் மாலைக்காலமும் , குளிர்ந்த சந்திரன் ஒளிவிடும் இரவும் , சூரியன் ஒளிவிடும் பகற்காலமும் ஆகி , நிலைபெற்று நின்ற ஆப்பாடியார் இதழ் விரிகின்ற கொன்றைப் பூமாலையைச் சூடியவராவார் .

குறிப்புரை :

கடல் அகம் ஏழ் - நீரும் ( ஏழுகடலும் ). பவனமும் - காற்றும் . விண்ணும் - ஆகாயமும் . உடலகத்து உயிரும் . பாரும் - மண்ணும் . ஒள் அழல் - ஒளியையுடைய தீ . இறைவனுடைய எட்டுருவான பாரும் , நீரும் ( கடலேழும் ), காற்றும் ( பவனமும் ) விண்ணும் , இயமானனும் , நெருப்பும் , மதியும் பகலும் கூறினார் ஆதலின் , ` பவனம் என்ற பாடமே உண்மையானது . இரண்டாவதடியிற் பாரும் என்றதாலும் புவனம் என்றது பொருந்தாது . மாலை தண்மதி :- ` மாதர்ப் பிறைக்கண்ணியான் `.

பண் :

பாடல் எண் : 2

ஆதியு மறிவு மாகி யறிவினுட் செறிவு மாகிச்
சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகிப்
பாதியிற் பெண்ணு மாகிப் பரவுவார் பாங்க ராகி
வேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்புமாப் பாடி யாரே.

பொழிப்புரை :

ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிந் திருப்பவராய் , ஒளியை உட்கொண்ட ஞானச்சுடராய் , தூய வழிக்குச் செலுத்தும் ஒப்பற்றவராய்ப் பாதி பெண் உருவினராய் , வழிபடுபவர்களுக்குத் துணைவராய் வேதியர்கள் வாழும் சேய்ஞலூரை அடுத்த ஆப்பாடியில் உறையும் பெருமான் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

ஆதியும் , அறிவும் , அறிவினுள் செறிவும் , சோதியுள் சுடரும் , தூநெறிக்கு ஒருவனும் . பாதியிற் பெண்ணும் , பரவுவார் பாங்கரும் ஆகி , ஆப்பாடியிலுள்ளார் என்று கொள்க . ` ஆகி ` ஆறும் ஆப்பாடியார் என்னும் வினைக்குறிப்பொடு முடியும் . முற்பாட்டில் ஆகி மன்னும் ஆப்பாடியார் என்றதுபோல ஆகிவிரும்பும் ஆப்பாடியார் எனலுமாம் . ஆதி - முதல் . அறிவு - சிவஞானம் . அறிவினுட் செறிவு - சிவஞான யோகம் . செறிவு - யோகம் ` சீலம் இன்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றி ` ( தி .8 திருவாசகம் ) எனச் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கும் உணர்த்துகின்றுழி யோகத்தைச் ` செறிவு ` என்றது காண்க . சோதி - அபரஞானம் . உட்சுடர் - பரஞானம் . முறையே ஞானப்ரகாசமும் சிவப்ரகாசமும் ஆம் . சோதியுட் சோதி - அறிவுக்கறிவு எனலுமாம் . தூநெறி - சைவ சித்தாந்தச் செந்நெறி . அந்நெறிக்கு ஒருவன் பரமசிவன் .112. பாதியிற் பெண் - அர்த்தநாரீ . பரவுவார் பாங்கர் :- ( தி .4 ப .48 பா .3.) ( பால் + கு + அர் ) பக்கத்தார் . ` வாழ்த்துவார் வாய் உளான் `. வேதியர் - மறையோர் . சேய்நல்லூர் , சேய்நலூர் , சேய்ஞலூர் , சேய் - சண்டேசுரர் . ஆப்பாடி - அவர் மேய்த்த ஆக்களின் பாடி .

பண் :

பாடல் எண் : 3

எண்ணுடை யிருக்கு மாகி யிருக்கினுட் பொருளு மாகிப்
பண்ணொடு பாட றன்னைப் பரவுவார் பாங்க ராகிக்
கண்ணொரு நெற்றி யாகிக் கருதுவார் கருத லாகாப்
பெண்ணொரு பாக மாகிப் பேணுமாப் பாடி யாரே.

பொழிப்புரை :

மிக மேம்பட்டதாக எண்ணப்படும் இருக்கு வேதமாய் , அவ்வேதம் குறிப்பிடும் பரம்பொருளாய் , பண்ணோடு பாடல் பாடுபவர் துணைவராய் , நெற்றிக்கண்ணராய் , உண்மை ஞானிகள் அல்லாதாருக்கு அறிதலும் எண்ணுதலும் இயலாத பார்வதி பாகராய்த் திருவாப்பாடியை விரும்பி உறையும் சிவபெருமான் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

எண் - கணக்கு , எண்ணம் , இருக்கு - முதல் மறை . திருஞான சம்பந்தரை முதன் மறைப் பிள்ளையார் எனச் சேக்கிழார் பெருமான் கூறியருளியதுணர்க . இருக்கின் உட்பொருள் - அம் முதன் மறையின் மறைபொருள் ( இரகசியார்த்தம் ). பண்ணொடு பாடல் தன்னை - பண்ணும் பாடலுமாயிருப்பவனை , ` வேதத்தின் கீதம் பாடும் பண்ணவனைப் பண்ணில் வருபயன் ஆனானை ` ( தி .6 ப .60 பா .6). ` பண்ணின் இசையாக நின்றாய் போற்றி ` ( தி .6 ப .55 பா .7). ` கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற பண்ணவன் காண் பண்ணவற்றின் றிறலானான் காண் ` ( தி .6 ப .52 பா .1). ` பழுத்த பண்களாகிச் சோதியார் இருளாகிச் சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் ஆதியாய் அந்தமாய் நின்றான் ` ( தி .6 ப .26 பா .6). பரவுவார் பாங்கர் :- ( தி .4 ப .42 பா .7). நெற்றியில் ஒரு கண்ணாகி , கருதுவார் கருதலாகாப் பெண்ணொரு பாகமாதல் :- அம்மையப்பர் என்பதன் உண்மையை ஞானிகள் அல்லாதார்க்கு அறிதலும் எண்ணுதலும் இயலாமை உணர்த்திற்று . ஆகிப் பேணும் ஆப்பாடியார் என்க .

பண் :

பாடல் எண் : 4

அண்டமா ரமரர் கோமா னாதியெம் மண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் றாப ரத்தைக்
கண்டவன் றாதை பாய்வான் காலற வெறியக் கண்டு
சண்டியார்க் கருள்கள் செய்த தலைவராப் பாடி யாரே.

பொழிப்புரை :

எல்லா உலகங்களுமாய் , தேவர் தலைவராய் , எல்லோருக்கும் ஆதியாய் உள்ள அண்ணலாரின் திருவடிகளை மனத்துள்கொண்டு , அப்பெருமான் குறிப்பினாலே மணலிலே மணலால் விசாரசருமன் இலிங்க வடிவத்தை அமைக்க அதனைக் கண்ட அவன் தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசையை அழிக்க ஓடிவர , விசாரசருமன் அவன் கால்களை வெட்டியதனைக் கண்டு அவனுக்குச் சண்டீசன் என்ற பதவியை அருளிச் செய்தவர் திருவாப்பாடிப் பெருமானாவார் .

குறிப்புரை :

பல்வேறு அண்டங்கள் . ஆர் - ஆர்கின்ற , பொருந்துகின்ற . அமரர் - தேவர்கள் . கோமான் ( கோமகன் ) கோவாகிய மகன் , மகன் - தேவன் , கோ - தலைவன் , கோமகன் - தேவாதி தேவன் , மலை மகள் , திருமகள் , கலைமகள் என்று தேவி என்ற பொருளில் வழங்குதலுணர்க . ஆதி - முதல்வன் , எம் அண்ணல் - எம் பெருமான் . பாதம் கொண்டவன் - திருவடி பெற்றவர் ; சண்டேசுவர நாயனார் . குறிப்பி னாலே - சிவலிங்க பாவனையாலே . தாபரத்தைக் கூப்பினான் - தாபரத்துள் ஒன்றான மணலைச் சிவலிங்காகாரமாகக் குவித்து வழிபட்டார் . கண்ட அவன் தாதை என்றோ அவன் தாதை கண்டு என்றோ கொள்ளலாம் . தாதையாகிய பாய்வான் , பாய்வான் கால் ( சீறிப் ) பாய்வானது கால் . அற - அற்று வீழும்படி . எறிய - ` பெருங் கொடு மழுவால்வீச ( தி .4 ப .49 பா .3). கண்டு - சிவபெருமான் சண்டேசுரரின் திருவருளுறைப்பைத் திருவுளத்திற் கொண்டு . சண்டியார்க்கு - சண்டேசுர நாயனார்க்கு . அருள்கள் :- ` அடுத்த தாதை இனி உனக்கு நாம் ` எனப் பெற்றமை ; சிவமயமாய்ப் பொங்கி யெழுந்த திருவருளில் முழுகப் பெற்றமை ; யாவரும் துதிக்கச் சிவப்பிரகாசத்தில் தோன்றப் பெற்றமை ; தொண்டர் தலைமை ; சிவன் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் ஆகிய அனைத்துக்கும் உரிமையுற்றமை சண்டீசனும் ஆம் பதப்பேறு என்பன . அற எறியக் கண்டு செய்த தலைவர் ஆப்பாடியார் என்க .

பண் :

பாடல் எண் : 5

சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகி
வந்தநற் பயனு மாகி வாணுதல் பாக மாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரைமேன் மன்னி
அந்தமோ டளவி லாத வடிகளாப் பாடி யாரே.

பொழிப்புரை :

சிந்தித்தல் , தெளிதல் , தெளிவினுள் விளங்கும் தூய நிலையாகிய நிட்டை , இவற்றால் பயனாகிய வீடுபேறு ஆகியவைகளாகிப் பார்வதி பாகராய் , முடிவும் அளவும் இல்லாதவராய்த் தென்றல் வீசப்பெறுவதாய் மண்ணியாற்றின் அழகிய கரையில் நிலை பெற்றிருக்கும் ஆப்பாடியை உறைவிடமாகக் கொண்ட பெருமான் அமைந்துள்ளார் .

குறிப்புரை :

சிந்தை - ( கேட்டற்குப்பின் ) சிந்தித்தல் . தெளிவு - ( சிந்தித்தற்குப் பின்னதாகிய ) தெளிதல் . ( தி :- 4 ப .40 பா .2, ப .41 பா .5) தெளிவினுள் சிவமாதல் :- தெளிவினுள் விளங்கும் தூய நிலை ; நிட்டை . கேட்டல் :- ஞானத்திற் சரியை . சிந்தித்தல் :- ஞானத்திற் கிரியை . தெளிதல் :- ஞானத்தில் யோகம் . நிட்டை கூடல் :- ஞானத்தில் ஞானம் உபாயச் சரியையிற் சரியை முதல் உபாய ஞானத்தில் ஞானம் ஈறாகிய பதினாறு வகையும் அவற்றினின்று விரியும் பல வேறு வகையும் , உண்மைச் சரியையிற் சரியை முதல் உண்மை யோகத்தின் ஞானம் ஈறாகிய பன்னிரு வகையும் அவற்றினின்றும் விரியும் பல வேறு வகையும் , உண்மை ஞானத்திற் சரியை முதலிய ( இக் கேட்டல் சிந்தித்தல் , தெளிதல் ஆகிய ) மூவகையும் இவற்றினின்று விரியும் பல வேறு வகையும் , ஞானத்தின் ஞானங்களின் பல வேறு வகையும் கடந்து அவற்றுள் முடிவாகிய ஞானமே பரமுத்தியைத் தருவது . அம் முடிவான ஞானமே தெளிவினுட் சிவம் . அது தரும் பரமுத்தியே வந்த நற்பயன் ஆம் . வாள் நுதல் - ஒளியுடைய நெற்றியாள் ; உமையம்மையார் . மந்தம் - தென்றல் . மண்ணியாறு . அந்தம் - முடிவு . அளவு - பிரமாணம் ; எண் . அடிகள் - கடவுள் . மன்னி அந்தமும் அளவும் இல்லாத ஆப்பாடியார் என்க .

பண் :

பாடல் எண் : 6

வன்னிவா ளரவு மத்த மதியமு மாறுஞ் சூடி
மின்னிய வுருவாஞ் சோதி மெய்ப்பொருட் பயனு மாகிக்
கன்னியோர் பாக மாகிக் கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட விருந்தவாப் பாடி யாரே.

பொழிப்புரை :

வன்னி , ஒளிபொருந்திய பாம்பு , ஊமத்தை , பிறை , கங்கை இவற்றைச் சூடி மின்னல்போல ஒளிவீசும் வடிவினை உடைய ஒளிமயமாய் , ஞானத்தின் பயனாகிய பரமுத்தியாய்ப் பார்வதி பாகராய் , தியானிப்பவர் தியானத்தில் இருப்பவராய் , இனிய இசைகளை அடியார்கள் பாடுமாறு ஆப்பாடியார் இருக்கின்றார் .

குறிப்புரை :

வன்னி - வன்னியிலை . வாள் அரவு - கடும் பாம்பு . மத்தம் - ஊமத்தம்பூ . மதியம் - பிறை . ஆறு - கங்கை . மின்னுருவொளி , மெய்ப்பொருட் பயன் :- மெய்ப்பொருள் - மேற்குறித்த முடிவான ஞானம் . பயன் - பரமுத்தி . கன்னியோர் பாகம் - ` அர்த்தநாரீசுவரன் `. ` பான்மொழிகன்னி ` ( சித்தியார் ) கருதுவார் கருத்துமாதல் :- ` வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான்றன்னை ` ` அடியேன் மனத்துள் அமர்கருத்தனை ... ... புத்தூர்ச் சென்று கண்டுய்ந்தேனே `. தொண்டர் இன்னிசை பாட இருந்த ஆப்பாடியார் . சூடி ஆகி ... ... இருந்த ஆப்பாடியார் என்க .

பண் :

பாடல் எண் : 7

உள்ளுமாய்ப் புறமு மாகி யுருவுமா யருவு மாகி
வெள்ளமாய்க் கரையு மாகி விரிகதிர் ஞாயி றாகிக்
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் கருத்துமா யருத்த மாகி
அள்ளுவார்க் கள்ளல் செய்திட் டிருந்தவாப் பாடி யாரே.

பொழிப்புரை :

உள்ளும் புறமுமாய் , அருவும் உருவுமாய் , வெள்ளமும் கரையுமாய்க் கிரணங்கள் விரிகின்ற சூரியனாய் , கள்ளமும் கள்ளத்து உள்ளாருமாய்க் கருத்துள் இருப்பவராய்ச் செல்வ வடிவினராய் , தம்மைப் பலவகையாலும் அனுபவிக்கும் அடியவர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு கொள்ளத் தம்மை வழங்கிக் கொண்டு இருப்பவர் ஆப்பாடிப் பெருமான் ஆவார் .

குறிப்புரை :

உள்ளும் புறமும் , உருவும் ( அருவுருவம் ) அருவும் , வெள்ளமும் கரையும் , விரிகதிர் ( த் திங்களும் ) ஞாயிறும் , கள்ளமும் கள்ளத்துள்ளாரும் , கருத்தும் அருத்தமும் ஆகி , அருளுகின்றவர்க்கு அள்ளல் செய்து இட்டு இருந்த ஆப்பாடியார் . அள்ளுவார் - அள்ளிக் கொள்வார் . அள்ளல் செய்து - அள்ளி . இட்டு - கொடுத்து . ` இட்டார்க்கு இட்ட பயன் ` உருவும் அருவும் கூறியதால் , அரு வுருவமும் ஞாயிறு கூறவே திங்களும் கொள்ளப்பட்டன .

பண் :

பாடல் எண் : 8

மயக்கமாய்த் தெளிவு மாகி மால்வரை வளியு மாகித்
தியக்கமா யொருக்க மாகிச் சிந்தையு ளொன்றி நின்று
இயக்கமா யிறுதி யாகி யெண்டிசைக் கிறைவ ராகி
அயக்கமா யடக்க மாய வைவராப் பாடி யாரே.

பொழிப்புரை :

மயக்கமும் தெளிவுமாகிப் பெரிய மலைகளும் காற்றுமாகி , அசைவும் அசைவின்மையுமாகி , அடியவர் சிந்தையுள் பொருந்திநின்று , அதனை இயக்குபவராய் , உலகுக்கெல்லாம் இறுதியாய் , எண் திசைகளுக்கும் தலைவராய் , நோயற்றவராய்ப் பொறிவாயில் ஐந்தும் அவித்தவராய் , உள்ளவர் திருவாப்பாடிப் பெருமான் ஆவார் .

குறிப்புரை :

மயக்கம் - கலக்கம் . தெளிவு - விளக்கம் . வரை - மலை . வளி - காற்று . தியக்கம் - அசைவு . சோர்வு :- புறத்துச் சென்று அசைந்து அலைந்து சோரும் நிலையை . ஒருக்கம் - ஒருங்குறல் , ஒற்றுமை செய்தல் . ` உருத்திரசன்மர் எனவுரைத்து வானில் ஒருக்கவோ என்றதோர் சொல் ` ( திருவள்ளுவமாலை . பாயிரம் . 1). அகத்துள் ஒருங்குறும் நிலைமை . இயக்கம் - இயங்குதல் . செலவு . இறுதி - முடிவு . எண் திசைக்கு இறைவர் - ` அட்டதிக்குப் பாலகர் `. அயக்கம் - ` நோயின்மை . நிராமயம் `. ( தமிழ்ச் சொல்லகராதி . மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு . பக்கம் . 225. பார்க்க ). ` குன்றுகள் அயக்கலின் ` ( கம்ப . சேது . ப . 10) என்றதாலும் அடக்கத்திற்கு முரணாவது அசைவு ஆதலாலும் அசைத்தல் என்றல் சிறந்தது . அசைத்தல் , அசைக்கல் , அசக்கல் , அசக்கம் , அயக்கம் என முறையே மருவிற்று . மயக்கமும் தெளிவும் , மால்வரையும் வளியும் , தியக்கமும் , ஒருக்கமும் , இயக்கமும் , இறுதியும் , அயக்கமும் , அடக்கமும் முரணாவன . மலையும் வளியும் பொருத வரலாறுண்டு . மயங்குவது மயக்கம் . தியங்குவது தியக்கம் . ஒருங்குவது ஒருக்கம் . இயங்குவது இயக்கம் . அடங்குவது அடக்கம் . அயங்குவது அயக்கம் . தெளிதல் - தெளிவு . இறுதல் - இறுதி . சிந்தையுள் ஒன்றி நிற்றல் - தோற்றம் . இயக்கம் - நிலை இறுதி - முடிவு ; முத்தொழில்கட்கும் முதலாதல் உணர்த்திற்று . சிந்தை ஈண்டு ஆன்மா . இறைவன் ஒன்றிநிற்கும் இடம் அதுவன்றி வேறில்லை .

பண் :

பாடல் எண் : 9

ஆரழ லுருவ மாகி யண்டமேழ் கடந்த வெந்தை
பேரொளி யுருவி னானைப் பிரமனு மாலுங் காணாச்
சீரவை பரவி யேத்திச் சென்றடி வணங்கு வார்க்குப்
பேரரு ளருளிச் செய்வார் பேணுமாப் பாடி யாரே.

பொழிப்புரை :

பெரிய தீத்தம்பத்தின் உருவினராய் ஏழுலகமும் கடந்த எம் தந்தையாராகிய பேரொளிப் பெருமானைப் பிரமனும் திருமாலும் முடி அடி காணமுடியாதிருந்த சிறப்பினை முன்நின்று துதித்துப் புகழ்ந்து , திருவடிகளை வணங்குபவருக்கு , ஆப்பாடியை விரும்பி உறையும் அப்பெருமான் பெருமளவில் அருள் செய்பவராவார் .

குறிப்புரை :

ஆர் அழல் :- பெருந்தீ என்றபடி . எங்கும் நிறைந்த தீயும் ஆம் . ` ஏழண்டத்தப்பாலான் ` ( தி .6 ப .8 பா .5). பேர் ஒளி உருவினான் :- ` ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ` சீரவை - கனங்கள் ; சீர்மைகள் . பரவுதலும் ஏத்துதலும் சென்று அடிவணங்குதலும் சிவபெருமானுடைய பேரருள் பெறும் வழிகள் ஆகும் . பேரருள் - ` பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் ஆகிய உணர்வரிய மெய்ஞ்ஞானம் `.

பண் :

பாடல் எண் : 10

திண்டிற லரக்க னோடிச் சீகயி லாயந் தன்னை
எண்டிற லிலனு மாகி யெடுத்தலு மேழை யஞ்ச
விண்டிறல் நெரிய வூன்றி மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட் டுகந்த பரமராப் பாடி யாரே.

பொழிப்புரை :

மிக்க உடல் வலிமையை உடைய இராவணன் எம் பெருமானைப் பற்றி எண்ணியறியும் அறிவு வலிமை இல்லாதவனாய்ப் பெருமைமிக்க கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி பயப்பட , அவன் உடல் வலிமை நீங்குமளவுக்கு அவன் உடல் நெரியுமாறு மிகவும் வெகுண்டு விரலை ஊன்ற அவன் அலறிவிழப் பின் அவன் பாடிய பண்களையும் அவற்றின் திறங்களையும் கேட்டுகந்த பெருமான் திருஆப்பாடியார் ஆவார் .

குறிப்புரை :

திண்மை - உறுதி . திறல் - வலிமை . சீகயிலாயம் :- ஸ்ரீ என்பதைச் சீ எனல் தமிழ் வழக்கு . சீபாதம் , சீபஞ்சாக்கரம் , சீராமன் , சீதரன் , சீராகம் , சீமான் , சீமாட்டி ( சீமதி ). சீகாழி , சீகாளத்தி . சீபருப்பதம் . திரு எனல் . இதனின் வேறு . எண் திறல் இலன் - எண்ணத் தக்க வலிமை இல்லாதவன் . ஏழை - உமாதேவியார் . விண்டு - நீங்கி . இற - ஒடிய . கடுத்து - சினந்து . பண் திறல் - பண்ணுந்திறனும் . பண்ணின் திறனுமாம் . ` பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கர் ` ( தி .4 ப .48 பா .3.) என்றும் ` பண்திறல் கேட்டு உகந்த பரமர் ` என்று ( ஈண்டு ) ம் உள்ளவாறு நோக்கின் , இத் தலத்தில் இறைவர் திருப்பெயர் ` பாடலுகந்தார் ` ( தி .4 ப .49 பா .6.) என்று தெளிவுறும் . பாலுகந்தநாதர் என்பது ஆப்பாடி என்றது நோக்கியாக்கியதுபோலும் .

பண் :

பாடல் எண் : 1

ஆதியிற் பிரம னார்தா மர்ச்சித்தா ரடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவ ருணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ்சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

ஆதிப்பிரமர் வண்டுகள் மலர்களைக் கோதி ஒலிக்கும் சோலைகளால் சூழப்பட்ட குறுக்கைவீரட்டனார் திருவடிக்கீழ் அர்ச்சனை செய்தார் . வேதம் ஓதிய நாவினை உடைய பிரமனார் தம்மை வழிபாட்டால் உணருந்தன்மையைச் சிவபெருமான் உணர்ந்தவராவர் . அப்பெருமான் சூரியன் முதலிய ஒளிப்பொருள்களுக்கு ஒளிதருபவராய் ஆரேனும் அமர்ந்திருந்து சொல்லும் நிலையைக் கடந்த பெருமையுடையவர் .

குறிப்புரை :

ஆதியில் முதற்கற்பத்தில் , முதற்படைப்பில் , படைப்பின் தொடக்கத்தில் , நூறுகோடி பிரமர்களுள் ஆதியிற்றோன்றிய பிரமனார் அடியிணைக்கீழ் அர்ச்சித்தார் . மேல் திருமால் அருச்சனை புரிந்தது கூறப்படும் . ( தி .4 ப .49 பா .5) அடியிணைக்கீழ் அர்ச்சிக்கப் பெற்றவர் வீரட்டனார் . வேதநாவர் பிரமனார் . வேதநாவர் - உணரும் ஆறு வீரட்டனார் உணரலுற்றார் . சோதி - ஞானசோதி . சுடர் - இன்பச் சுடர் . ` சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற்பணை முலை மடந்தை பாதியே `. சொல்லினை இறந்து நின்றார் :- ` நால்வேதத்து அப்பால்நின்ற சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை ` ( தி .6 ப .95 பா .4). பல மலர்களைக் கொழுதி வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த திருக்குறுக்கை வீரட்டனார் . பிரமனாரும் வேதநாவரும் அர்ச்சித்தாரும் ஆகியவர் உணருமாறு வீரட்டனார் உணரலுற்றார் . உணருமாறுணரல் :- ` விளம்புமா விளம்பு , பணியுமாபணி , கருதுமாகருது , உரைக்குமாவுரை , நணுகுமாநணுகு , ( நுன கழலிணை என் நெஞ்சினுள் இனிதாய்த் தொண்டனேன் ) ` நுகருமாநுகர் , புணருமாபுணர் , தொடருமாதொடர் , விரும்புமா விரும்பு , நினையுமாநினை ` என்று திருவிசைப்பாவில் முதற்றிருப் பதிகத்துள்ளவாறுள்ளது . அர்ச்சித்தாராய் , அடியிணைக் கீழ் ஓதிய வேதநாவர் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 2

நீற்றினை நிறையப் பூசி நித்தலு நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டு மந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

திருநீற்றை உடல்நிறையப் பூசி நாடோறும் செய் கடன்களைச்செய்து , காவிரி நீரை நிறைத்து அபிடேகம் செய்யும் மார்க்கண்டேயருக்குப் பிரமனால் குறிப்பிடப்பட்ட வாழ்நாள் முடிந்து விட்டது என்று அவரைக் கொல்வதற்காகத் தருமராசருடைய ஆணைப்படி வந்த கூற்றுவனைக் குறுக்கை வீரட்டனார் தண்டித்தார் .

குறிப்புரை :

நித்தலும் - நாடொறும் . நியமம் - செய்கடன் , நிச்சயம் ; நியதி . நீற்றினை நிறையப் பூசிச் செய்து . ஆற்று நீர் காவிரி நீர் . பூரித்து - நிறைத்து . ஆட்டும் - அபிடேகஞ்செய்யும் . அந்தணனார் - மார்க்கண்டேய முனிவர் . கொல்வான் - உடல் வேறும் உயிர் வேறும் ஆகக் கூறுசெய்ய . சாற்றும் நாள் - சிவபிரான் மிருகண்ட முனிவர்க்குச் சொல்லிய பதினாறாண்டு . வரையறுத்தல் பிறவினை . வரையறுதல் தன்வினை . அற்றது காலம் . பதினாறென்றுவரையறுத்தது திருவருள் . தருமராசன் - நடுவன் . சமன் :- ( ஞமன்போல ). ` விரிசீர்த் தெரிகோர் சமன் போல ஒரு திறம் பற்றல் இலியரோ ` என்றதன் ( புறநானூறு . 6 ) உரையை நோக்குக . கூற்று - தருமராசன் ஏவலாளருள் ஒருவன் . குமைப்பர் - அழிப்பர் . இது திருநீற்றினை நிறையப் பூசுதலும் , நியமம் தவறாமையும் , அபிடேகம் முதலியனவும் இறவாத இன்ப அன்பு வாழ்வைக் கொடுத்த உண்மையை ( மார்க்கண்டேயர் திவ்விய சரிதத்தை ) உணர்த்திற்று .

பண் :

பாடல் எண் : 3

தழைத்ததோ ராத்தி யின்கீழ் தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே யாவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

தழைகள் நிரம்பிய ஆத்தி மரத்தின் கீழே மணலால் இலிங்கம் அமைத்து எம்பெருமானை அவன் திருநாமங்களைக் கூறி அழைத்து விசாரசருமன் பசுவின் பாலைக் கறந்து கொண்டு அபிடேகம் செய்ததனைக் கண்டு தவறு செய்த தன்னுடைய தந்தையின் கால்களைப் பெரிய வளைந்த மழுவாயுதத்தால் வெட்ட அவ்விசார சருமனுக்குக் குறுக்கை வீரட்டனார் சிவானந்தமாகிய அமுதத்தைக் குழைத்துக் கொடுத்துள்ளார் .

குறிப்புரை :

இது தி .12 சண்டேசுர நாயனார் புராணம் உணர்த்திற்று . தழைத்தல் - தழைமிகுதல் . ஆத்தி - சிவபூசைக்குரிய மலர்களைத் தரும் சிறந்த சில மரங்களுள் ஒன்று . ` ஆத்தி சூடி ` ` கொன்றை வேய்ந்தோன் ` என்னும் சிறப்பு , எல்லா மரங்களுக்கும் இல்லை . தாபரம் - மாபரனாகிய பரசிவத்துக்கு ஆதாரமாய்ப் புறத்தே நிற்கும் திருமேனி திருவேடம் ஆகிய இரண்டனுள் ஒன்றான சிவலிங்கத் திருமேனியை . மணலால் - மண்ணியாற்று மணலால் . கூப்பி - சிவலிங்காகாரமாகக் குவித்துச் செய்து . அழைத்து - துவாதசாந்தத்தினின்று புட்பாஞ்சலியுடன் சிவாகம விதிப்படி எழுந்தருளப்பண்ணி , ( சித்தியார் . சூ 8:- 19) அங்கே - எங்கும் உள்ளவன் இங்கும் உளன் என்னுந் தெளிவினார்க்குச் சிவன் மந்திரத்தால் உருக்கொண்டு உறையும் அத்தாபரத்திலே . ( சித்தி . 12:- 4). ஆவினதுபால் , ஆவினது இனியபால் . ` கறந்து கொண்டு ` என்றது சிவபூஜார்த்தம் என்பதைக் குறித்தது . ` கொண்டு ` என்றதில் விருப்பும் ` கண்டு ` என்றதில் வெறுப்பும் புலப்படல் உணர்க . பிழைத்த - சிவாபராதம் செய்த . தன் தாதை - தன்னைத் தந்தவன் . தாதா ( - கொடையாளன் ) என்பதன் தற்பவம் . ` தந்தை ` தமிழ்ச்சொல் . ` தாதை ` வட சொல் . தாள் - கால் . பெரிய கொடிய மழு . ` குழைத்தது ஓர் அமுதம் ` :- ` சிவாநந்தாமிர்தம் .` ` பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் ` என்பதில் , ` சோறு ` என்றதும் அது .

பண் :

பாடல் எண் : 4

சிலந்தியு மானைக் காவிற் றிருநிழற் பந்தர் செய்து
உலந்தவ ணிறந்த போதே கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

திருவானைக்காவிற் பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில் , சுவாமியுடன் கலந்து பயின்ற நீரைஉடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

இது கோச்செங்கட்சோழ நாயனார் புராணம் உணர்த்திற்று . சிலந்தியும் :- திருநிழற்பந்தர் செய்யற்பாலதல்லாத இழிந்த சிற்றுயிரும் பேரறிவுடைய மக்கள் செய்யுஞ் சிவ புண்ணியத்தை மேற்கொண்ட உயர்வு குறித்து நின்றது . உலந்து - யானையால் அழிக்கப்பெற்றுக் குறைந்து . அவண் - திருவானைக்காவில் . கோச்செங்கணான் ஆகிய சிலந்தி . இறந்தபோதே என்றது துறக்க நிரயங்களிற் செல்லாமல் மீண்டும் நிலத்திற் போந்து கருப்பாசயத்தைத் தலைப்பட்டமை குறித்தது . இறந்த போதே அப்பிறவி நினைவுடன் பிறப்பித்திட்டார் என்க . ` கலந்த நீர்க் காவிரி ` என்றது திருவானைக்காவில் இறைவனைத் தன்பால் கலந்துகொண்டு அவனுக்குச் செழுநீர்த் திரள் என்று பெயர் வழங்கச் செய்த பெருமை காவிரிக்கு உண்மை குறித்தது . சோணாட்டுச் சோழர் :- சோலைவளநாடு என்பதன் மரூஉ சோணாடு . சோலைவளநாட்டரசர் என்பதன் மரூஉ ` சோழர் `. ` வளவன் ` என்னும் பெயர்ப் பொருளும் ஈண்டுணர்க . கோச்செங்கணார் தோற்றத்தால் அக்குலத்தின் அவர் முன்னோரும் பின்னோரும் பெருஞ்சிறப்புற்றது குறிக்கச் ` சோழர் தங்கள் குலம் ` என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 5

ஏறுட னேழ டர்த்தா னெண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை யர்ச்சித்தா னடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை யீண்டக்
கூறுமோ ராழி யீந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

ஏழு இடபங்களையும் ஒரு சேர அழித்த கண்ணனாக அவதரித்த திருமால் கங்கா சடாதரனை அவன் திருவடிகளின்கீழ் ஆயிரம் தாமரைப்பூக்கள் கொண்டு அருச்சித்தானாக அப்பூக்களில் ஒரு பூக்குறைய அக்குறைவை நீக்கத் தாமரை போன்ற தன் கண் ஒன்றனைப் பெயர்த்து அருச்சிக்க , அத்திருமாலுக்கு எல்லோராலும் புகழப்படும் சக்கராயுதத்தை வழங்கினார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

ஏறு உடன் ஏழ் அடர்த்தான் :- நப்பின்னை முதலிய மகளிர் மணங்குறித்துக் கண்ணன் எழுவிடை அடர்த்த வரலாறு பாகவதத்திற் கூறப்படுகின்றது . ஈண்டுத் திருமாலைக் குறித்து நின்றது . அவன் ஆயிரம் பூக்களை எண்ணிக் கைக்கொண்டு , கங்கைச்சடைப் பெருமானை , திருவடியிணைக்கீழ் அருச்சனை புரிந்தான் . ஆயிரத்துள் ஒன்று குறைய , வேறும் ஒரு பூ வேண்டி , தன் மெய்யிலுள்ள செந் தாமரை மலர் போலும் கண்ணைப் பறித்து அருச்சித்தான் . அவன் மெய்யன்புக்கு இரங்கி , அவன் வேண்டிய ஆழிப்படையை அருளினார் குறுக்கை வீரட்டனார் . ( தி .4 ப .65 பா .9) ` பொய்விடை யேழடர்த்தோன் ` ( பாரதம் . 18 போர்ச் . 146 ).

பண் :

பாடல் எண் : 6

கல்லினா லெறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகையேந்தி யெழிறிகழ் நட்டமாடிக்
கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் மீது நாடோறும் ஒரு கல்லினை எறிந்த பின்னரே தாம் உண்ணும் நியமத்தைக் கொண்ட சாக்கிய நாயனார் இவ்வுலகிலிருந்து அரிசிச் சோறு உண்ணாமல் மேம்பட்ட வீட்டுலகை ஆளுமாறு செய்தவர் , இரவிலே உள்ளங்கையில் தீயை ஏந்தி அழகிய கூத்து நிகழ்த்திக் கொல்லிப்பண்ணை விரும்பிப் பாடும் குறுக்கை வீரட்டனாராவர் .

குறிப்புரை :

கஞ்சி உண்ணும் சாக்கியனார் , வார்கொண்ட வன முலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்து அன்பு மலரால் வழிபட்டார் . நன்ஞானம் அடைவதற்கு நாடிய பல வழியும் மெய் வழியாகத் தோன்றவில்லை . மன்னாத பிறப்பறுக்குந் தத்துவத்தின் வழி உணர்வாராய் , சாக்கியமும் , பிறவும் பொருளல்ல எனத் தெளிந்து , திருவருள்கூட ` ஈறில்லாத சிவ நன்னெறியே பொருள் ; சைவ நெறியே மெய்ந்நெறி ; சிவமே பொருள் ; பிற சமயப் பொருள் எல்லாம் அவமே ` என்று உய்வகை யுணர்ந்தார் . கஞ்சியுண்ணும் அவர்க்கு நெற் சோற்றுணவும் வேண்டாதவாறு பிறவி தீர்த்து , சிவலோகம் ( நீள் விசும்பு ) ஆளவைத்துப் பழவடிமைப் பாங்கு அருளினார் குறுக்கை வீரட்டனார் . எல்லி - இரவில் . ` ஆங்கு ` ஏழனுருபின் பொருட்டு . கையில் எரியேந்தி , எழில் திகழ் நட்டம் - அழகு பொலியும் ஆட்டம் . கொல்லிப் பண்ணு கந்தநாதர் ( தி .4 ப .48 பா .10.).

பண் :

பாடல் எண் : 7

காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் ஒரு கையிலும் , நிவேதனத்திற்குரிய இறைச்சிச் சுமை மற்றொரு கையிலும் பொருந்த , காலில் தோலாலாகிய பெரிய செருப்பினை அணிந்து , தூயவாயினில் நீரைக்கொணடு கலசநீரால் அபிடேகிப்பது போல எம் பெருமானை அபிடேகித்து , அப்பெருமானுடைய ஒளிவீசும் பெரிய கண்களில் இரத்தம் பெருகி ஒழுகத் தன் கண் ஒன்றனைப் பெயர்த்து முதலில் ஒரு கண்ணில் அப்பிப்பின் மற்றொரு கண்ணைப் பெயர்க்க அதன்கண் அம்பினைச் செலுத்திய அளவில் அத்திண்ணனுடைய கையைப் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

இது கண்ணப்பநாயனார் புராணம் உணர்த்திற்று . கைக்கொண்டு காவல் செய்தற்குரியன கருவியாகிய வில்லும் அம்பும் . கையின் கண்ணதாயது . ஊன்பொறை . தோலாற்றைக்கப்பட்ட பெரிய செருப்பும் தொட்டு . தூயவாயினின்றும் வெளிப்படும் நீர் , வாயாகிய கலசத்திலிருந்து நன்னீர் அபிடேகம்புரிந்து . தீப்பெருங் கண்கள் .... பெரிய நெற்றித் தீக்கண்ணும் சூரிய நேத்திரமும் சிவந்த குருதி (- ரத்தம் ) நீர் ஒழுக்கக் கண்டு வருந்தித் தன் கண்ணை இடந்து அப்புகின்ற அரும்பெருந்தொண்டினையும் ஏற்றுக்கொண்டார் திருக்குறுக்கை வீரட்டனார் . ` கண்கள் ` என்பது எவற்றை ?

பண் :

பாடல் எண் : 8

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக் காட்டில் நீண்டு எரியும் திறத்ததாகிய விளக்கினைக் கறுத்த நிறத்தை உடைய எலி தன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம் , தேவர் உலகம் , நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

நிறைமறை :- ` நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி `. குறைவிலா நிறைவினனாகிய பரமசிவனாற் செய்யப்பட்டமையானும் இறுதிக் காலத்துப் பரமசிவனிடத் தொடுங்கிப் படைப்புக் காலத்து முன்போலவே தோற்றுதலானும் உபசாரமாக நித்தம் என்று கூறப்படுவதாலும் , எல்லாச் சமயநூற் பொருளியல்பு களெல்லாம் முற்றுணர்வுடைய அம் முதல்வனாற் செய்யப்பட்ட வேதம் கூறும் பொருளியல்பின் ஏகதேசமாய்க் காணப்பட்டு அதனுள் அடங்குதலானும் , வேதத்தினடங்காதபொருள் வேறின்மையானும் ` நிறைமறை ` என்றருளினார் . நிறைகாடு எனின் தாவரங்கள் நிறைந்த காடென்றதாம் . திருமறைக்காட்டிலே எலியாயிருந்து , திருவிளக்கு நெய்யுண்ணப் புகுந்து , சுடர் சுட மூக்கால் தூண்டிய அபுத்திபூருவ புண்ணியத்தின் பயனாக மறுமையில் மூவுலகாளும் மாவலி வேந்தான வரலாறு இதிற் குறிக்கப்பட்டது . விண் - துறக்கம் . நீண்ட வானுலகு - பேரின்ப வெளி . குறைவு அற - நிறைவு உற .

பண் :

பாடல் எண் : 9

அணங்குமை பாக மாக வடக்கிய வாதி மூர்த்தி
வணங்குவா ரிடர்க டீர்க்கு மருந்துநல் லருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலா மடியார்க் கென்றும்
குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

பார்வதியைப்பாகமாகத் தம் திருமேனியில் அடக்கிக் கொண்ட வடிவினராய் , தம்மை வணங்குபவர்களுடைய துயரம் போக்கும் மருந்தாகியவராய் , நல்ல மேம்பட்ட தவத்தை உடைய கணம்புல்ல நாயனாருக்கு அருள்கள் செய்து , தம்மிடம் அன்பு பூணும் அடியவர்களுக்கு , நல்ல பண்புகளை அருளுவார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

அணங்கு - தெய்வம் . உமை - ` உமா ` வடசொல் திரிபு . பாகம் - இடப்பால் . ஆதிமூர்த்தி - முதலுரு . வணங்குவார்கள் - அடியார்கள் . இடர்கள் - பிறவி முதலிய துன்பங்கள் . மருந்து - அமிர்து . நல் அருந்தவத்த கணம்புல்லர் - பிறவிப் பிணி தீர்க்கும் அரிய தவத்தை உடைய கணம்புல்ல நாயனார் . ` கையணிமான் மழுவுடையார் கழல்பணி சிந்தனையுடைய செய்தவத்துக் கணம்புல்லர் திருத்தொண்டு விரித்துரைப்பாம் ` ( தி .12 பெரிய . ஐயடிகள் . 8). அருள்கள் :- ` பெருஞ்செல்வம் , அதன் பயன் , நல்குரவு , விளக்கெரித்தல் , புல் விலைப்பொருள் , அதுவிலைபோகாமை , புல்விளக்கு , முடிவிளக்கு , வினைத்தொடக்கெரித்தமை , மங்கலமாம் பெருங்கருணை , சிவலோக வாழ்க்கை , மெய்ப்பொருளாவன ஈசர்கழலென்னும் விருப்பு ` ( தி .12 பெரியபுராணம் ) காதல் - சிவபத்தி . குணங்கள் :- எண்குணங்கள் . ` எண் குணத்துளோம் ` ( தி .6 ப .98 பா .10) ` எட்டுக்கொலாம் அவர் ஈறில் பெருங்குணம் ` ( தி .4 ப .18 பா .8). ` காதலாம் அடியார் ` என்றதில் உள்ள காதல் எத்தகையது ? ` காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது ....... நச்சிவாயவே ` என்றருளிய திருஞான சம்பந்தர் திருவாய் மலர்ந்த காதல் இது . மாதர் காதல் வேறு , ஞான போதர் காதல் வேறு . கருதல் என்பதன் மரூஉவே காதல் . கட்டு நெறியும் வீட்டு நெறியும் கருதாமல் எய்துவன அல்ல . ` கருதியது முடித்தலும் காமுறப்படுதலும் ` ( சிறுபாண் . 213) ` தன்னெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்கவல்ல தன்மையையும் , ( நுகர் தற்குரிய மகளிரை நுகர்ந்து பற்று அறாக்கால் பிறப்பு அறாமையின் கருதியது முடிக்க வேண்டும் என்றார் .) அங்ஙனம் தானே இன்பம் உறாதே அம் மகளிரும் தம்மாலே மிக்க இன்பத்தைப் பெறும் தன்னை விரும்பப்பட்டிருத்தலையும் ` ( நச்சினார்க்கினியர் உரை ).

பண் :

பாடல் எண் : 10

எடுத்தன னெழிற் கயிலை யிலங்கையர் மன்னன் றன்னை
அடுத்தொரு விரலா லூன்ற வலறிப்போ யவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந்ந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இலங்கையின் மன்னனாகிய இராவணனைப் பொருந்திய கால் விரலால் அழுத்திய அளவில் அலறிப் போய் அவன் செயலற்று விழுந்து , செருக்கினை விடுத்துக் கை நரம்புகளை வீணை நரம்புகள் ஆக்கி ஒலித்து வேத கீதங்களைப் பாட , அவனுக்கு வெற்றியைத் தரும் வாளினையும் நீண்ட ஆயுளையும் நல்கினார் குறுக்கை வீரட்டனார் .

குறிப்புரை :

இலங்கையர் மன்னன் எழிற் கயிலை எடுத்தனன் . எடுத்தனனாகிய அம்மன்னன்றனை அடுத்து , ஒரு விரலால் ஊன்ற அவனும் அலறிப்போய் வீழ்ந்து , எடுத்த கயிலையை விடுத்தனன் . எடுக்கும் முயற்சியை விடுத்தனனுமாம் . கையில் உள்ள யாழ்நரம்பால் வேத கீதங்களைப் பாடக் கொற்றவாளும் நாளும் குறுக்கை வீரட்டனார் கொடுத்தனர் . போயவனும் எனலும் ஆம் . போயவன் - போனவன் . யகரமெய் இறந்தகாலங் காட்டும் இடைநிலை , ( போ + ய் + அவன் = போயவன் ). வீரட்டனார் கொடுத்தனர் என , ` ஆர் ` ஈற்றிற்கேற்ப ` அர் ` ஈறு கொள்ளப் பட்டது . பலர்பாலுணர்த்தியதன்று .

பண் :

பாடல் எண் : 1

நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணா ரருச்சுனற் கம்பும் வில்லும்
துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில் , சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற , பிரமனும் , நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர் . அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார் .

குறிப்புரை :

நீர் எனும் பிலயம் ஜலப்ரளயம் ( பாதலம் ?). பிரமன் முடிகாணான் . மால் அடிகாணான் . பிலயம் கொள்ள - ஜலப்ரளயம் ( பாதலம் ) வரையில் . அருச்சுனற்கு - அருச்சுனனுக்கு . அம்பும் வில்லும் கொடுத்தார் . வேடராகிக் கொடுத்தார் . மந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார் . துடி - துடிப்பு . உடுக்கை பொருந்து மேற்கொள்க . தூய மந்திரங்கள் :- பாசுபதாத்திர பிரயோகத்துக்குரிய மந்திரங்கள் . கொடித்தேர் , நெடுந்தேர் . பிலயம் என்பது பிரளயம் என்னும் பொருளது என்று லெக்ஸிகனிற் குறித்திருக்கின்றனர் . ` பெம்மானிடம் பிலயம் தாங்கி மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்திக் குன்றத் தருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே ` ( திருஞானசம்பந்தர் ) என்றதிற் ` பிலயம் ` என்றது பிரளயத்தைக் குறித்த தென்றனர் . ` அடிமுடி ` - ` பாதாளம் ஏழினும் கீழ் சொற் கழிவு பாத மலர் போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே ` ( தி .8 திருவாசகம் .).

பண் :

பாடல் எண் : 2

ஆத்தமா மயனு மாலு மன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமா னென்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமா மட்ட மீமுன் சீருடை யேழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

குருவிற்குத் தொண்டு செய்யும் பிரமனும் திருமாலும் ஏனைய தேவர்களும் ` எம்பெருமானே உனக்கு அஞ்சலி செய்கிறோம் ` என்று தொழுது தோத்திரங்களை மொழியக் குறுக்கை வீரட்டனார் பிரமோற்சவ வேள்வி நிகழும் அட்டமிக்கு முற்பட்ட ஏழு நாள்களும் கூத்தாடுபவராய்த் திருவீதி உலாவை நிகழ்த்தியவராவர் .

குறிப்புரை :

ஆத்தம் - குருசேவை , ( இலக்கியச் சொல்லகராதி . பக்கம் 21) அயனுக்கும் மாலுக்கும் சிவ ( குரு ) சேவையே நோக்கம் ஆதலின் , ஆத்தமாம் அயனும் மாலும் எனலாயிற்று . அவ்விருவரும் அல்லாத தேவர் பிறர் , சோத்தம் - அஞ்சலி , ` சோத்துன்னடியம் என்றார் ` ( தி .8 திருக்கோவையார் 173) ` சோத்தம் உன்னடியம் என்று ஒருகாற் சொன்னார் ` சோத்தம் - இழிந்தார் செய்யும் அஞ்சலி `. ( தி .8 திருக்கோவையார் ). ` மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக்கூறல் வீறிலி நடைக் கூடம் தொடர்ந்தெனை நலியத்துயருறுகின்றேன் சோத்தம் எம்பெரு மானே ` ( தி .8 திருவாசகம் 419) சோத்தம் என்று தொழுதல் :- காயத்தின் வினை . எம்பெருமான் என்று பாவித்தல் :- மனத்தின் வினை . தோத்திரங்கள் சொல்லல் :- வாக்கின் வினை , தீர்த்தம் - ( பிரமோற்சவ ) யாகம் . அட்டமீ திதிக்கு முன் ஏழுநாளும் என்க . திருவீதியுலாப் போதரல் பிரதமை முதல் அட்டமி முடிய எட்டுநாள் .

பண் :

பாடல் எண் : 1

நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கண் மூன்றுஞ் செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடைய பெருமான் நெற்றிக்கண்ணனாய் , நீற்றைத் திருமேனியிற் பூசியவனாய் , முறுகிக் கற்றையான சிவந்த சடையினனாய் , கடலில் தோன்றிய நஞ்சினைப்பருகியவனாய் , பகைவருடைய முப்புரங்களிலும் தீயைச் செலுத்தியவனாய் , குற்றமற்ற நற்பண்பினாய் உள்ளவனாவான் .

குறிப்புரை :

நெற்றியிற் கண்ணுடையவனே ; திருமேனியில் திரு நீற்றைப் பூசியவனே ; பொன்போலும் கற்றைச் சடையுடையவனே ; பாற்கடலில் எழுந்த நஞ்சுண்டவனே ; பகைவர் முப்புரமும் செந் தீயுண்ணத் தீயைச் செலுத்தியவனே ; குற்றம் இல்லாத எண் குணங்களை யுடையவனே ; திருக்கோடிகாவை உறைவிடமாகக் கொண்ட தலைவனே . ( தி .4 ப .51 பா .6) ஆவது திருநேரிசையை நோக்கின் எல்லாம் விளி எனல் புலப்படும் . புன்மை - பொன்மை ; மென்மை . செற்றவர் - சினந்தவர் ; பகைவர் . செவ்வழல் - செந்தீ . அழல் செலுத்தல் - எரி கொளச்செய்தல் .

பண் :

பாடல் எண் : 2

கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத் தானே
அடியிணை பரவ நாளு மடியவர்க் கருள் செய்வானே
கொடியணி விழவ தோவாக் கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கொடிகள் ஏற்றப்பட்டுத் திருவிழாக்கள் நடத்தப் பெறுதல் நீங்காத கோடிகாப் பெருமான் நறுமணம் கமழும் கொன்றைப் பூவினனாய் , கையில் ஏந்திய மண்டையோட்டை உடையவனாய் , அழகிய பார்வதியைப் பாகமாக மார்பில் கொண்டவனாய்த் தன் திருவடிகளை வழிபடுமாறு நாள்தோறும் அடியவர்களுக்கு அருள் செய்பவனாவான் .

குறிப்புரை :

கடி - மணம் , கபாலம் - பிரமகபாலம் . வடிவுடை மங்கை :- திருக்கோடிகாவில் உள்ள அம்பிகையின் திருப்பெயர் . மார்பில் ஓர் பாகத்தான் :- ` மலைமகளை மார்பத்து அணைத்தார் ` ( தி .6 ப .21 பா .6) ` மார்பிற் பெண் மகிழ்ந்த பிரமாபுர மேவிய பெம்மான் ` ( தி .1 ப .1 பா .4.) ` வடிவுடைமங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார் `. அடிஇணை - திருவடித்துணை . பரவ - வாழ்த்தி வணங்குதலால் , அடியவர்க்கு நாளும் அருள் செய்பவனே . கொடி அணி விழவு திருக்கோடிகாவில் இடைவிடாது நிகழும் காலம் பதிகம் பாடப்பட்ட காலம் .

பண் :

பாடல் எண் : 3

நீறுமெய் பூசி னானே நிழறிகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே யிருங்கட லமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேத மறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகாப் பெருமான் நீற்றைத் திருமேனியில் பூசியவனாய் , ஒளிவீசும் மழுப்படையினனாய் , காளையை விரும்பி ஏறிஊர்ந்தவனாய் , பெரிய கடலில் தோன்றிய அமுதத்தை ஒப்பவனாய் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகிய அறத்தை உபதேசித்தவனாய் , பார்வதி பாகனாய் உள்ளான் .

குறிப்புரை :

நீறு மெய்பூசினானே :- ( தி .4 ப .51 பா .1) நிழல் - ஒளி , மழு - ஒருபடை . ` கனல்மழு ` ஏறுகந் தேறினான் :- ? ப .4 பா .3, இருங்கடல் அமுது :- பாற்கடல் கடைந்தெடுத்த அமிர்தம் . அமுதினை ஒப்பவனே . வேதம் நான்கும் அங்கம் ஆறும் ஆகிய அறத்தை உரைத்தருளியவனே . ஓர் கூற்றிற் பெண்ணுடையவனே . ஓர் பெண் கூறுடையவன் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 4

காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானே
நீலமார் கண்டத் தானே நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே நளிரிளந் திங்கள் சூடும்
கோலமார் சடையினானே கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடைய பெருமான் காலனைக் காலால் ஒறுத்து மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த கருணையாளனாய் , நீல கண்டனாய் , நீண்டமுடிகளை உடைய தேவர்களுக்குத் தலைவனாய் உலகம் முழுதும் பரவிய பெருமானாய் , குளிர்ந்த பிறைசூடும் அழகிய சடையினை உடையவனாய் உள்ளான் .

குறிப்புரை :

காலன் - இயமன் . காலால் - திருவடியால் . செற்று - உதைத்து , அருள் - இரங்கிச் செய்த வண்மை . திருநீலகண்டன் நீள்முடி - நீண்ட மணிமுடி . அமரர்கோ - தேவர்கோ அறியாத தேவதேவன் . ஞாலம் ஆம் பெருமையான் :- ` ஞாலமாம்தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே நீலஞ் சேர்கண்டனார் ` ( ? ப .22 பா .10) ஞாலம் உலகம் என்னும் பொதுப் பெயர்ப் பொருளதாகக்கொண்டு ` எல்லா உலகமும் ஆனாய் நீயே ` என்னுங் கருத்ததாக்கி , ` அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்த ` சருவ வியாபகம் உணர்த்திய தென்க . நளிர் - குளிர்ச்சி , கோலம் - அழகு .

பண் :

பாடல் எண் : 5

பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடைய தலைவன் பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து , கையில் மண்டையோட்டை ஏந்தி , பிச்சை ஏற்ற உணவையே உண்பவனாய்ப் பார்வதிபாகனாய் வளைந்த வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான் .

குறிப்புரை :

பூண் அரவு ஆரத்தான் - பூண்ட பாம்பணியுடையவன் . புலியுரி அரையினான் - புலித்தோலை உடுத்த இடையுடையவன் . காணில் - கண்டால் . வெண் கோவணமும் ( உடுத்து ), கையில் ஒரு ( பிரம ) கபாலமும் ஏந்தி , ஊணும் உணவும் . ஓர் பிச்சையான் - சிறு பிச்சையன் . ஒருமை சிறுமைப்பொருட்டு , தனிமையுமாம் . கோணல் - வளைவு .

பண் :

பாடல் எண் : 6

கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பி னானே
ஏழையே னேழை யேனா னென்செய்கே னெந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள் வலைதனின் மயங்கு கின்றேன்
கூழையே றுடைய செல்வா கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடைய பெருமானே ! பன்றியின் வெண்ணிறக் கொம்பினை அணிந்த ஒளிவீசும் மார்பினனாய் , குட்டையான காளையை உடைய செல்வனே ! எம் தந்தையாகிய தலைவனே ! அழகிய ஒளி பொருந்திய கண்களை உடைய மகளிரின் பார்வையாகிய வலையில் அகப்பட்டு மயங்குகின்றேன் . அறிவிலியாகிய அடியேன் யாது செய்குவென் ?

குறிப்புரை :

கேழல் - பன்றி , வெண்கொம்பு - வெள்ளைக் கொம்பு கிளர் - விளங்குகின்ற , ஏழையேன் ஏழையேன் நான் :- ` என்னானாய் என்னானாய் என்னினல்லால் ஏழையேன் என் சொல்லியேத்து கேனே ` செய் + கு + ஏன் = செய்கேன் . பிற்காலத்தார் ககரவொற்று எதிர் காலங்காட்டிற்று என்றனர் . செய்கு + யான் என்பதன் மரூஉ என்பர் சொல்லாராய்ச்சியாளர் . மாழை - அழகு . மாழைமைப் பாவிய கண்ணியர் . ( தி .8 திருவாசகம் 411) ஒண்கண் - ஒளிவிழி , வலை - மயக்கவலை .

பண் :

பாடல் எண் : 7

அழலுமி ழங்கை யானே யரிவையோர் பாகத் தானே
தழலுமி ழரவ மார்த்துத் தலைதனில் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங் கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

நெருப்பை ஏந்திய உள்ளங்கையை உடையவனே ! பார்வதிபாகனே ! நெருப்பைக் கக்குகின்ற பாம்பினைக் கட்டிக் கொண்டு மண்டையோட்டில் பிச்சை பெறுபவனே ! நிழலை வெளிப்படுத்துகின்ற சோலைகள் சூழ்ந்திருக்க அவற்றில் நீண்டகோடுகளை உடைய வண்டினங்கள் வேய்ங்குழல் ஒலிபோன்ற பாடல்களைப் பாடும் கோடிகாவை உடைய பெருமானே !

குறிப்புரை :

அழல் உமிழ் அம்கையான் - தீயை ஏந்திய அகங்கை யுடையவன் , அரிவை - உமாதேவியார் . தழல் - வெய்யநஞ்சு . நஞ்சாகிய தீ , ` நச்சுத்தீ `, அரவம் - பாம்பு . ஆர்த்து - கட்டி , தலை - பிரமகபாலம் . பலி - பிச்சை . நிழல் - தண்ணிழல் . குழல் - வேய்ங்குழல் . கீதம் - இசைப்பாட்டு . வேய்ங்குழலிசையை வண்டினங்கள் பாடுஞ் சோலை சூழ்ந்த கோடிகா .

பண் :

பாடல் எண் : 8

ஏவடு சிலையி னானே புரமவை யெரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாண் மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே யைவரா லாட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய் கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

அம்பை இணைத்த வில்லைக் கொண்டு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவனே ! மாவடுவின் பிளப்பைப் போன்ற கண்களை உடைய பார்வதிபாகனே ! ஆவடுதுறையில் உறைபவனே ! கோடிகா உடைய தலைவனே ! ஐம்பொறிகளாலும் யான் அவை விரும்பியவாறு செயற்படுத்தப்பட்டுள்ளேன் . பசுக்கொலைக்கு ஒப்பாகிய என் குற்றங்களைப் போக்குவாயாக .

குறிப்புரை :

ஏ - அம்பு , அடு - அடுத்த , கொல்லும் சிலை - வில் , சிலையினாலே எரிசெய்தான் எனலுமாம் . புரமவை - முப்புரம் ; மும்மதில் . மாவடுவகிர்கொள் கண்ணாள் :- ` வடுவகிர்க் கண்ணி யம்மை ` என்பது திருவலம்புரத்து நாய்ச்சியார் திருப்பெயர் . மாவடு வகிரன்ன கண்ணிபங்கா ` ( தி .8 திருவா .413) என்பது பாத்தளைக் கேட தாயினும் நம் பிறவித்தளை கெடுப்பதே . மலைமகள் - இமாசலகுமாரி `. திருக்கோடிகாவின் தென்பால் அணுகியது திருவாவடுதுறை . ஐவர் - ஐம்புலன் ; ஐம்பொறி . கோவடுகுற்றம் :- கோவை அட்ட குற்றம் , பசுக்கொலைக் கொப்பாகிய பாவம் . தீராய் - தீர்ப்பாய் .

பண் :

பாடல் எண் : 9

ஏற்றநீர்க் கங்கை யானே யிருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மே லேறு நான்முக னிவர்கள் கூடி
ஆற்றலா லளக்க லுற்றார்க் கழலுரு வாயி னானே
கூற்றுக்குங் கூற்ற தானாய் கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகாவில் உள்ள பெருமானே ! கங்கையைச் சடையில் ஏற்றவனே ! பெரிய உலகங்களை ஈரடியால் அளந்த திருமாலும் நறுமணம் கமழும் தாமரை மலர்மேல் தங்கும் பிரமனும் ஆகிய இருவரும் கூடித் தம் ஆற்றலால் அளக்க முயன்றவர்களுக்குத் தீத்தம்ப வடிவாயினவனே ! யமனுக்கும் யமனாயினாய் நீ .

குறிப்புரை :

ஏற்றம் - உயர்ச்சி , ஏறு + அம் = ஏற்றம் . உயர்ச்சியை யுடைய கங்கை நீரைச் சடைமிசை யுடையவனே . ஏற்ற கங்கை நீருமாம் . இருநிலம் - பெரும்பூமி , தாவினான் - தாண்டியவன் . நாற்றம் - மணம் , நாறு + அம் = நாற்றம் . ஏற்றம் போல்வது , மாமலர் - தாமரை , ` பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை `. தன் அன்னை யான திருமகட்கிடமாய மலருமாம் . ஆற்றல் - வலிமை ; சீவபோதம் . அழல் உரு - தீவண்ணம் . கூற்றுக்குங்கூற்று - காலகாலன் .

பண் :

பாடல் எண் : 10

பழகநா னடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா
மழகளி யானையின் றோன் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே யரக்கன் றிண்டோ ளருவரை நெரிய வூன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடையகோவே ! ஆன்மாக்களின் தலைவனே ! பாவங்களைப்போக்குபவனே ! இளைய மதமயக்கமுடைய யானையின் தோலைப் பார்வதி அஞ்சுமாறு போர்த்த அழகனே ! அரக்கனாகிய இராவணனுடைய வலிய தோள்கள் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரியுமாறு கால்விரலை அழுத்திய அழகனே ! நின் தொண்டிற் பழகுமாறு நான் அடித்தொண்டு செய்வேன் .

குறிப்புரை :

பழக - பழக்கம் உற , நான் செய்து செய்து பழக வேண்டி அடிமைத் தொண்டு செய்வேன் . பசுபதீ - உயிர்க்கு இறைவா . பாவ நாசா - தீவினையை அழிப்பவனே , வினைக்கேடா . மழ களி யானை - இளமதகளிறு . மலைமகள் அஞ்சி வெருவ மழகளியானைத்தோல் போர்த்த அழகனே . அரக்கன் - இராவணன் . திண்தோள் - திண்ணிய தோள்கள் ( ஆகியவரை ). அருவரை - அளப்பரியமலை . குழகன் - இளைஞன் ; அழகன் . கோலம் - அழகு . பன்றிக் கொம்புமாம் . ` கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர்ஒளி மார்பினானே ` ( தி .4 ப .51 பா .6.).

பண் :

பாடல் எண் : 1

படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே லிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

பெரிய பள்ளமான கடல்போன்ற வயிற்றை நிரப்புவதற்குரிய செயல்களில் ஈடுபடும் வகையால் இந்த மனிதவாழ்வு பாழாகிறது . ஆதலால் இவ்வாழ்க்கையை நினைக்குந்தோறும் இதை விலக்க உதவுபவரை அழைக்கின்றேன் . இவ்வுடம்பினுள் அறிவற்ற முரடாகிய ஐம்பொறிகள் இருந்து என்னைத் தம் விருப்பப்படி செயற்படுமாறு தூண்டுகின்றன . ஆரூர் மூலட்டானத்துள்ள பெருமானே ! அடியேன் இவைகளோடு சேர்ந்து வாழும் ஆற்றல் உடையேன் அல்லேன் .

குறிப்புரை :

படுகுழிப் பவ்வத்து அன்ன பண்டி - பெரும்பள்ளமான கடல் போன்ற வயிறு . ` நிலத்திடைப் பொறை ` என்னுந் தொடக்கத்துப் பாடலில் , ` உடலிருங்கடல் ` அமைப்பை ( தி .11 ப .30 பா .8) நோக்குக . ஆற்றால் - விதத்தால் . கேதுகின்றேன் :- அழைக்கின்றேன் . கேதல் - அழைத்தல் . ` கேதல் உளைத்தல் இகுத்தல் விளித்தல் மாவெனல் கூவுதல் வாவெனல் மத்தல் கரைதல் ஆகருடணை இவையே அன்றி அகவல் என்பதும் அழைத்தல் ஆகும் ` ( பிங்கலநிகண்டு . 1996). உள் இருந்து ஐவர் முடுகுவர் . மூர்க்கர் . ஏல் - எனில் ; மரூஉ . அடியனேன் இவர்களோடும் இப் பண்டியில் வாழ மாட்டேன் . மூலட்டனீர் - மூலத்தானத்தீர் . மூலஸ்தாநம் - மூலத்தானம் - மூலட்டானம் . வடசொற்றிரிபு .

பண் :

பாடல் எண் : 2

புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலான் மூடி
ஒழுக்கறா வொன்ப துவா யொற்றுமை யொன்றுமில்லை
சழக்குடை இதனு ளைவர் சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

ஆரூர் மூலட்டனீரே ! புழுக்களை உள்ளே அடக்கி வைத்த வண்டியை வெளியே ஒரு தோலினாலே மறைத்து , திரவம் ஒழுகுதல் நீங்காத ஒன்பது வழிகள் ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத வகையில் அதன்கண் அமைய , இவ்வண்டிக்குள் குற்றமுடைய ஐம்பொறிகளும் பல துயரங்களை விளைக்க , அவற்றால் கலக்கமுற்று வாழ இயலாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

புழு பெய்த பண்டி - புழுக்கள் இட்டுவைத்த வயிறு . ` உன்னுதரத்தே கிடந்த கீடம் உறுவதெல்லாம் உன்னுடைய தென்னாய் ` ( திருக்களிறு . 87). ஒரு தோலால் மூடி . புறம் மூடி . பண்டியைத் தோலாற் புறத்தே மூடி . ஒழுக்கு அறாவாய் - ஒழுகுதல் நீங்காத வழி . ஒன்பது வாய் :- ( தி .4 ப .44 பா .2) ஒற்றுமை சிறிதும் இல்லை . சழக்கு - குற்றம் ; பொய் . சங்கடம் - துக்கம் . அழிப்பன் - கலக்கத்தை யுடையேன் . அழிப்பு - கலக்கம் .

பண் :

பாடல் எண் : 3

பஞ்சின்மெல் லடியி னார்கள் பாங்கரா யவர்க ணின்று
நெஞ்சினோய் பலவுஞ் செய்து நினையினும் நினைய வொட்டார்
நஞ்சணி மிடற்றி னானே நாதனே நம்பனே நான்
அஞ்சினேற் கஞ்ச லென்னீ ராரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

விடத்தை அணிந்த கண்டரே ! தலைவரே ! அடியவ ரால் விரும்பப்படுகின்றவரே ! பஞ்சினைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய பெண்கள்பக்கம் சேர்ந்துகொண்டு என் நெஞ்சில் நோய்கள் பலவற்றை உண்டாக்கி உம்மை விருப்புற்று நினைப்பதற்கும் இசையாது செய்யுங் கலக்கத்தைக் கண்டு அஞ்சுகின்ற எனக்கு , ஆரூர்ப் பெருமானாகிய நீர் அஞ்சேல் என்று அடைக்கலம் தருகின்றீர் அல்லீர் .

குறிப்புரை :

பஞ்சினும் மெல்லிய அடியையுடைய பெண்டிர் பக்கத்தராய் நின்று அவர்கள் (- அவ் வைவர் ) நெஞ்சில் நின்று நோய் பலவும் செய்து எனலுமாம் . பாங்கராய் நின்று செய்து நினைய வொட்டார் . நெஞ்சு நினைந்தாலும் ஐவர் ( அவர்கள் ) நினையவொட்டார் . திருநீலகண்டனே , உடையானே , நம்பனே , நான் அஞ்சினேன் . அஞ்சின எனக்கு அஞ்சல் என்று சொல்லி அபயம் அளித்தருளீர் . அஞ்சினேன் + கு . பஞ்சின் - பஞ்சு போல ` நெஞ்சின் ` நெஞ்சினது எனலுமாம் . நினையுங் கருவி நெஞ்சு , நோய் பலசெய்து , நெஞ்சு நினையினும் நினையவொட்டார் .

பண் :

பாடல் எண் : 4

கெண்டையந் தடங்க ணல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரிதந் தைவர் குலைத்திடர்க் குழியி னூக்கக்
கண்டுநான் றரிக்க கில்லேன் காத்துக்கொள்கறை சேர் கண்டா
அண்டவா னவர் போற்று மாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

நீலகண்டரே ! எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் போற்றும் ஆரூர்ப் பெருமானே ! கெண்டைமீன்போன்ற அழகிய பெரிய கண்களை உடைய மகளிரைத் தழுவுவிக்க விரும்பி மூர்க்கராய்த் திரியும் என் ஐம்பொறிகளும் என்னை நிலை குலையச் செய்து துன்பக் குழியிலே தள்ளுகையினாலே அவற்றின் செயல்களைப் பொறுக்கும் ஆற்றல் இலேனாகிய என்னைப் பாதுகாத்து உம் அடிமையாகக் கொள்வீராக .

குறிப்புரை :

கெண்டையங்கண் தடங்கண் - விசாலாட்சம் . நல்லார் - மகளிர் . கெழும - புல்ல . பொருந்த . குண்டர் - மூர்க்கர் ; குண்டுபோல உடற்கட்டுடையர் . திரிதந்து - திரிதரல் செய்து . ஐவர் - பஞ்சேந்திரியம் . குலைத்து - நிலைகுலையச் செய்து . இடர்க்குழி - துன்பப்படுபள்ளம் . நூக்க - தள்ள . ` ஒல்லை நீர்புக நூக்க ` ( தி .5 ப .72 பா .7). தரிக்க கில்லேன் - தாங்கமாட்டேன் . கறை - நஞ்சின் கறுப்பு . கண்டா - ( திருநீல ) கண்டனே . அண்டவானவர்கள் - அண்டங்களாகிய வானில் வாழ்கின்ற தேவர்கள் .

பண் :

பாடல் எண் : 5

தாழ்குழ லின்சொ னல்லார் தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளு மென்செய்கே னெந்தை பெம்மான்
வாழ்வதே லரிது போலும் வைகலு மைவர் வந்து
ஆழ்குழிப் படுக்க வாற்றே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

என் தந்தையாகிய பெருமானே ! ஆரூர் மூலத் தானத்தில் உறைபவரே ! தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும் உடைய மகளிரையே பற்றுக்கோடாகக்கொண்டு அறிவற்றவனாகி நாடோறும் யான் யாது செயற்பாலேன் ? நாள்தோறும் என் ஐம்பொறிகள் ஆழ்ந்த குழியில் என்னைத் தள்ள முயல்வதால் பொறுக்க முடியாத துயரினேனாய் உள்ளேன் . இவ்வுலகில் ஒருவர் தம் குறிக்கோளுக்கு நேர்மையாக வாழ்வதே அரிய செயல்போலும் .

குறிப்புரை :

தொங்குங் கூந்தலும் இனிய சொல்லும் உடைய அழகிய மகளிரையே புகலிடம் என்றுகொண்டு , அறிவிலேனாகி , நாள்தோறும் ( அலைந்து மயங்கித் துன்புறுகின்ற நான் ) என்ன செய்யவல்லேன் ? எந்தை பெருமானே , இனி , அம்மாயவலையின் நீங்கி நின் திருவருள் நெறியில் ஒழுகி வாழ்வது எளிதன்று போலும் . நாள்தொறும் ஐம்பொறிகளாரும் அணுகி நின்று ஆழ்ந்தகுழியிற் படுத்துகின்றனர் . அதில் அகப்படுத்தப் பொறுக்கும் வலியுடையேன் அல்லேன் , திருவாரூர்த் திருமூலட்டானாரே , அடியேனைக் காத்தருள்க . குழலைக் கண்டும் குழலின் மொழியைக் கேட்டும் மயங்கும் இயல்பு குறித்து , அவ்விரண்டும் கூறப்பட்டன . ` நாளும் என் செய்கேன் ` என்றதால் , பெண்ணாசைக் குரியன அன்றிப் பெண்ணாளும் பாகனடிமைக்குரியன செய்யவல்லேனல்லேன் என்றதாயிற்று . நாளும் நல்லாரைத் தஞ்சமென்று ஏழையாதற்குத் துணை யாகவந்து வைகலும் ஆழ்குழிப் படுத்துகின்ற ஐவர் , அருள் வாழ்விற்குத் துணையாகார் . அவர் செய்யுந் துன்பத்திற்கு ` ஆற்றேன் அடியேன் `.

பண் :

பாடல் எண் : 6

மாற்றமொன் றருள கில்லீர் மதியிலேன் விதியி லாமை
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர் சிக்கன வுடைய ராகிக்
கூற்றம்போ லைவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவுங் கில்லே னாயே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

ஆரூர் மூலத்தானத்துப் பெருமானே ! அடியேன் நல்லறிவின்மை காரணமாக நேரிய வழியில் செல்ல இயலாமை குறித்துத் தேவரீர் திருவுள்ளத்தில் எழுந்த கோபத்தைத் தணித்துக் கொள்ளுதலும் செய்யீராயினீர் . தம் விருப்பப்படி செயல் புரிவிப்பதில் உறுதியுடைய என் ஐம்பொறிகள் கூற்றுவனைப் போலவந்து என்னைச் சிதற அடித்துத் தோள்தட்டி ஆர்த்து நிற்க நாயேன் அவைகள் தரும் துயரைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் . யான் உய்வதற்கு உரிய ஒரு உபாயத்தையும் நீர் அருளுகின்றீரில்லை .

குறிப்புரை :

திருவாரூர்த் திருமூலட்டனீரே . மாற்றம் ஒன்று அருள்கிலீர் . அடியேனுக்கு மதியின்மை ஏதுவாக வேதாகம விதி வழி யொழுகுதல் இல்லையாயிற்று . அதனால் , தேவரீர்க்குச் சீற்றம் விளைந்தது . அதனைத் தீர்த்தருளீர் . ஐவர் உறுதியுடையவராய்க் கூற்றத்தைப் போலக் குறுகி , என்னைக் குலைத்திட்டு கோகு (- குறுகுதலை , சிறுமையை ) செய்கின்றனர் . நாயேன் அதனைப் பொறுக்ககில்லேன் . கோகு என்பது குறுகு என்பதன் மரூஉ . பொழுது - போது . துருசு - தூசு . முகடு - மோடு . தவறு - தாறு என்பவற்றிற்போல முதலிருகுறில் ஒரு நெடிதலாதல் உண்டு . அவற்றுள் இது முகடு - மோடு என்றாதல் போன்றது . கோகு என்பதற்குக் குடுமி , தோள் , கழுதை என்ற பொருளுரைப்பினும் அவை ஈண்டுப் பொருந்தாமை அறிக . போர்க்குத்தோள்தட்ட எனின் ஆம் . மாற்றம் - பரிகாரம் . மாறுவது மாற்றம் . சீறுவது சீற்றம் . கூறுபடுப்பது கூற்றம் . ஆற்ற - பொறுக்க . கில்லேன் - மாட்டேன் . ` எனைக் கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்தென்னக் கோகு செய்தாய் `. ( தி .4 ப .99 பா .2.)

பண் :

பாடல் எண் : 7

உயிர்நிலை யுடம்பே காலா வுள்ளமே தாழி யாகத்
துயரமே யேற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீ ரிறைத்து மிக்க
அயர்வினா லைவர்க் காற்றே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

ஆரூர்ப் பெருமானே ! உயிர் நிற்றற்குரிய இவ் வுடலைக் காலாக நிறுவித் துயரத்தையே ஏற்றமரமாக அமைத்து , உள்ளத்தையே ஏற்றச் சாலாகக் கொண்டு துன்பமாகிய , ஏற்றத்தோடு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் கழியைப்பற்றிப் பயிர்கள் சுருண்டு போகுமாறு அவற்றை விடுத்துப் பாழான வீண்தரைக்கே நீரை இறைத்து மிக்க தளர்ச்சியோடு என்னைத் தீய வழியிலேயே செலுத்தும் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தைத் தாங்க இயலாதேனாய் உள்ளேன் ;

குறிப்புரை :

உயிர் நிற்றற்கு இடம் உடல் . அதுவே உயிர்நிலை . அன்பின் வழியது உயிர்நிலை ` ` அன்பு முதலாக அதன்வழி நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பாவது ` ( குறள் 80. பரிமேலழகருரை ). என்புழிக் குறித்த பொருளே இது . ` நீர்நிலை ` போல்வது ` உயிர்நிலை `. ` நிலை ` முதனிலைத் தொழிலாகு பெயராய் ஆண்டுக் குளத்தைக் குறிக்கும் . உடம்பு எனப் பின் உள்ளதால் ஈண்டு , உயிர்நிலையதாகிய உடம்பு என்று பொருள்கொள்ளப்பட்டு , நிலை என்னும் அடி நிலையது என்னும் முதலுக்காகிய பெயராம் . அன்றி நிலைத்த உடம்பென வினைத் தொகையுமாம் . உடம்பே கால் . உள்ளமே தாழி . துயரமே ஏற்றம் . துன்பமே கோல் . பாழுக்கே நீர் இறைத்தல் . பயிர்க்கோ பாய்வ தில்லை . அயர்ச்சி முயற்சியின் பயன் . இப் பயனில் செயல் ஐவரால் விளைவது . உடம்பின் பயன் , தன்னுள் ஒளிரும் உத்தமனைக் கண்டுற்று மீண்டும் தன்னொடு சாராது உயிர் வீடு பெறுதல் . அது நிகழாமையே பயிர்சுழியவிடல் . கால் :- நட்டிருக்கும் கால் . ஏற்றம் அக் கால்மேல் முன்பின் விட்டுப் பொருத்தியிருக்கும் நீண்டதொருமரம் . அது கருவி . கோல் :- அவ்வேற்றத்தொடு கட்டித் தொங்கவிட்டிருக்கும் ஒரு கழி . தாழி :- அதன் கீழ்முனையிற் கட்டி நீர்முகக்குஞ் சால் . பாழ்க்கு நீர் இறைத்தல் :- 309, 311 குறிப்பிலும் காண்க .

பண் :

பாடல் எண் : 8

கற்றதே லொன்று மில்லை காரிகை யாரோ டாடிப்
பெற்றதேற் பெரிதுந் துன்பம் பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினா லைவர் வந்து முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநா னலந்து போனே னாரூர்மூ லட்ட னாரே.

பொழிப்புரை :

ஆரூர்ப் பெருமானே ! அடியேன் அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கற்றுக்கொண்டது ஏதுமில்லை . மகளிர் பின்னே அலைந்து அறிவற்ற நான் பெருந்துயரம் உற்றேன் . என் தவற்றினாலே ஐம்பொறிகளும் தம் ஆற்றலிலே நிறைவுற்றதனால் அவை தாம் விரும்பியவற்றைப் பெற்றுத்தருமாறு என்னை வருத்த அவற்றை எதிர்க்கும் ஆற்றலற்று அடியேன் துயருற்றவனானேன் .

குறிப்புரை :

திருவாரூர்த் திருவீரட்டனாரே , கற்றது யாதெனின் ஒன்றும் இல்லை . காரிகையாரொடு ஆடல் அன்றி மற்றொன்றும் இல்லை என்றவாறு . அது கற்றதாற் பெற்ற பயன் யாதெனில் , பெருந் துன்பமே பெற்ற பயன் . ` நெடுங்காமம் முற்பயக்குஞ்சின்னீர இன்பத்தின் ... பிற்பயக்கும் பீழைபெரிது ` ( நீதிநெறி விளக்கம் ). பேதையேன் - அறியாமையுடையேன் . பிழைப்பினால் - தவற்றால் . வாய்ப்புக்கு மறுதலையும் ஆம் . ` பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி ` ( தி .8 திருவாசகம் . 4:- 219 - 220) ` பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியேன் பித்து ஏறினாற்போல் அழைப்பதே கண்டாய் அடியேன் ` ( நக்கீரதேவ நாயனார் அருளிய கைலைபாதி காளத்திபாதி யந்தாதி . 98) என்பவற்றால் , பிழைப்பு வாய்ப்பு ஒன்றற்கொன்று மறுதலையாதலை உணரலாம் . முற்றுதல் - முதிர்தல் ; முழுதாதல் , முறைமுறை :- ஐவர்க்குத் தனித்தனி உரிய முறைமை . அற்று - எதிர்க்கும் ஆற்றல் ஒழிந்து .

பண் :

பாடல் எண் : 9

பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே யமரர் கோவே யாரூர்மூ லட்ட னாரே.

பொழிப்புரை :

தலைவரே ! தேவருக்கு அரசரே ! ஆரூர் மூலத்தானத்தாரே ! தீவினை செய்த அடியேன் பத்தனாக வாழ இயலாதேனாக , என் உள்ளம் முழுதும் பரவி ஐம்பொறிகள் தீய செயல்கள் பலவற்றையும் செய்ய அவை என்னை வருத்துவதனால் மத்தினால் கடையப்பட்ட தயிரைப் போல என் உள்ளம் நிலை சுழல்கிறது .

குறிப்புரை :

பத்தன் - தொண்டன் . பாவியேன் - பாவத்தைச் செய்துள்ள யான் . பரவிவந்து வாழமாட்டேன் என்க . மாட்டாமை ஐவரை வெல்லாமையின் பயன் . தீயவினை ; செய்வினை . ` செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா ` ` தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா ` ` மத்துறுதயிர் ` உள்ளம் மறுகுதற்கு உவமை . ` மத்தார் தயிர்போல மறுகுமென் சிந்தை மயக்கொழிவி ` ( தி .4 ப .96 பா .3.) உள்ளம் மறுகும் . அத்தன் அத்தை ; அப்பன் அம்மாள் ; ஆத்தன் ஆத்தாள் என்பன தமிழகத்து வழக்கு . ` ஆத்தானை அடியேன்றனக்கு ` ( தி .7 ப .20 பா .4) என்று ஆளுடைய நம்பிகளும் , ` பூத்தே யுலகம் புரப்பாளை ... ... மறைக்கு முதலாய் முளைத்தாளை ஆத்தே ஆத்தே எனுங் குமரா அடியேம் சிற்றில் அழியேலே அரசே விரிஞ்சைப்பகுதி வாழ்வே அடியேம் சிற்றில் அழியேலே ` என்று ( திருவிரிஞ்சைப்பிள்ளைத்தமிழ் ) வரகவி மார்க்க சகாயதேவரும் , ` ஆத்தாளை எங்களபிராமவல்லியை ` ( அபிராமி யந்தாதி ) என்று அபிராமிபட்டரும் ஆண்டமை அறிக .

பண் :

பாடல் எண் : 10

தடக்கைநா லைந்துங் கொண்டு தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க வோடி யிரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை பத்துந் தோளு முறிதர விறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே யாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

ஆரூர்ப் மூலட்டானத்தாரே ! நீண்ட இருபது கைகளைக்கொண்டு பெரிய கயிலைமலையைப் பிடித்துப் பெயர்த்து எடுக்கமுயன்ற இராவணன் செயலால் பூதங்கள் எல்லாம் அஞ்சி ஓட , அவனுடைய முடிகள் அணிந்த தலைகளும் இருபது கைகளும் முறியுமாறு சிறிதளவு கால் விரல் ஒன்றனை ஊன்றி வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்த நும் செயல் இருந்தவாறென்னே !

குறிப்புரை :

தடக்கை - பெருங்கைகள் . நாலைந்தும் - இருபதும் . தடவரை - பெருங்கயிலைமலை . பேர்க்க - பெயர்க்க . பூதமெல்லாம் ஓடியிரிந்தன . பத்துத் தலையும் இருபது தோளும் முறியச் சிறிதூன்றி . அடர்த்து ( ப்பின் ) நாளும் வாளும் பேரும் பிறவும் அருள் செய்தது .

பண் :

பாடல் எண் : 1

குழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டுநீங்காக் கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையா னருட்கதி ரெறிக்கு மாரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான் றோன்றினார் தோன்றி னாரே.

பொழிப்புரை :

வேய்ங்குழல் ஓசையை வென்ற இனியசொல்லை யுடையவளாய் அழகிய வேல்போன்ற கண்களையுடைய பார்வதியின் திருவடிகளை வலம் வந்து நீங்காத அடியவர்களுடைய கண்கள் நிறைவுறும்படியாகத் தீயினை வலக்கையில் கொண்ட பெருமான் அருளாகிய ஒளியைவீசும் திருவாரூரைத் தொழுவதற்கும் வலம் வருவதற்கும் வாய்ப்புடையவராகப் பிறப்பெடுத்தவரே பயனுடைய பிறப்பினைப் பெற்றவராவார் .

குறிப்புரை :

குழல்வலங்கொண்ட சொல்லாள் - வேய்ங்குழலின் இன்னிசையை வெற்றிகொண்ட இனிய சொல்லினார் . கோலம் - அழகு . வேல்போலுங்கண் . கோலம் வேற்கும் ஏற்கும் . கழல் - திருவடி . வலங்கொண்டு நீங்காக் கணங்கள் : தி .4 ப .20 பா .3 திருப்பாடலிற் குறித்த கூட்டத்தினர் . ? ப .19 பா .3, 4 குறிப்பும் உணர்க . ` திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தால் பெருக்கிய சீர்த்திருவாரூர்ப் பிறந்தார்கள் ` ( தி .12 திருவா . பி . புரா .4164) ` ஆரூரிற் பிறந்தாரெல்லாம் நங்கணங்களான பரிசு காண்பாய் ` ( தி .12 பெரிய . 1897). அழல் வலங்கொண்ட கையான் :- ` வாய்மை மறைநூற் சீலத்தால் வளர்க்குஞ் செந்தீயெனத் தகுவார் ` ` கையில் விளங்கு கனலுடையார் ` ( தி ,12 பெரிய .1875; 1880). அருட்கதிர் :- ` சென்னிமிசை நீர்தரித்த பிரான் அருளே சிந்தை செய்து திரிமேல் நீர்வார்த்து நாடறிய எரித்த திருவிளக்கின் விட்டெழுந்த சுடர் ` ( சேக்கிழார் பெருமான் திருவாக்கு ). ` ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் , பாரூர் பரிப்பத்தம் பங்குனியுத்தரம் பாற்படுத்தான் , நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி , நீரால் திருவிளக்கிட்டமை நீள்நாடு அறியும் அன்றே ` ( தி .4 ப .102 பா .2.) ` அந்தவளப்பொடி கொண்டணி வார்க்கிருளொக்கும் நந்தி புறப்படிலே ` ` நந்திபணி கொண்டருளும் நம்பன்றன்னை ... ... ஆரூர் மூலட்டானம் இடங்கொண்ட பெருமானை ... ... அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே ` ( தி .6 ப .34 பா .4). தொழல் வலங்கொண்டல் - தொழுதலும் வலங் கொள்ளுதலும் . செய்வான் - செய்தற்பொருட்டு . தோன்றினார் - பிறந்தவர் . ஏனையோர் பிறந்தும் இருந்தும் செத்தவரே என்றவாறு .

பண் :

பாடல் எண் : 2

நாகத்தை நங்கை யஞ்ச நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தி னுரிவை போர்த்து
பாகத்தி னிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாக மடங்குமா ரூர னார்க்கே.

பொழிப்புரை :

ஆரூரனிடத்தில் பாம்பைப் பார்த்துப் பார்வதி அஞ்ச , அப்பார்வதியை மயில் என்று கருதிப் பாம்பு தான் சீறிச் செயற்படும் உற்சாகத்தை நீக்கிச் சோர்வடைய , அப்பாம்பு தன்னை விழுங்கும் என்று அஞ்சிப்பிறை யானைத்தோலுள் மறைய ஒரு பகுதியும் நிமிர்ந்து பார்த்தலைச் செய்யாத சந்திரனை மின்னல் என்று கருதி அஞ்சி மார்பில் கிடந்த நாகம் சோர்ந்து கிடக்கிறது .

குறிப்புரை :

பாம்பு , நங்கை , திங்கள் மூன்றும் சிவபிரான் அணிந்திருத்தலைக் கருதிய கற்பனை இது . திருமுடிமேற் கிடந்த பாம்பினை அஞ்சினாள் கங்கை நங்கை . அந் நங்கையை மயில் என்று கருதி அஞ்சிற்று அப்பாம்பு . அப்பாம்பினைக் கண்டு தன்னை விழுங்கு மென்று திங்கள் அஞ்சி , யானைத்தோற் போர்வைக்குள் ஒளித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தலும் செய்யாதிருந்தது . அத்திங்களொளியை மின்னலென்று கருதி அஞ்சி அடங்கிற்று , சிவபிரான் திரு மார்பிற் கிடந்த பாம்பு . பாம்பினைக் கண்ட மெல்லியல் அஞ்சுதலும் மயிலைக் கண்ட பாம்பு அஞ்சுதலும் இயல்பு . திங்களை மின் என்று கருதி அஞ்சி அடங்குதலும் பாம்பின் செயல் . திங்கள் வேழத்துரியில் மறைந்து எட்டி எட்டிப் பார்ப்பது போல இடையிடையே தோன்றுதலால் மின்னெனும் எண்ணம் உண்டாயிற்று . ` மின் ` ஈண்டு இடிக்கு ஆகுபெயர் . ` விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேண் நின்றும் உட்கும் .` ( நாலடியார் )

பண் :

பாடல் எண் : 3

தொழுதகங் குழைய மேவித் தொட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றா ரவரவர் போலு மாரூர்
எழிலக நடுவெண் முத்த மன்றியு மேர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட் புதுமுகிழ் சூடி னாரே.

பொழிப்புரை :

தம்முள் ஒத்த தன்மை உடைய தொண்டர்கள் தொழுது மனம் உருகுமாறு விரும்பி அழுதனராக , ஆரூரிலே பல வேலிப்பரப்புடைய சோலையின் நடுவே விளங்கும் பூங்கோயிலின் மூலத்தானத்திலே உறைந்து முத்துக்களையும் பிறையையும் சூடிய பெருமான் அவ்வடியவருடைய உள்ளத்திலே புகுந்து நிற்குமாற்றால் , தாமும் அவ்வவ்வடியவர் போல்வாராநின்றார் .

குறிப்புரை :

திருவாரூர்த் திருமூலட்டானர் , புகுந்து நின்றார் . அதனால் அவரவர்போலும் என்க . திங்கட் புதுமுகிழ் சூடினார் - இளம் பிறை சூடிய திருமூலட்டானர் . தொண்டரகம் புகுந்து நின்றார் . நின்றதால் அவரவர்போலும் . தொழுதல் , அகம் குழைதல் , மேவுதல் தொட்டிமையுடைமை அழுதல் எல்லாம் தொண்டர் இயல்பு . அழுத + அகம் = அழுதகம் . அகரம் தொக்கது . தொண்டரது அகம் புகுந்து நிற்றலும் அவரவர் போறலும் திங்கட் புதுமுகிழ் சூடினார் தொழில் . முத்தம் அன்றியும் திங்கட் புதுமுகிழ் சூடினார் . ஆரூர் எழிலகம் நடுவெண் முத்தம் :- பூங்கோயில் ஆதலின் அப்பூவின் முத்தம் : ` சுரிவளை சொரிந்த முத்தின் சுடப்பெரும் பொருப்பு ` ( தி .12 பெரிய புராணம் . 73). ஆரூரின் அழகிய இடத்தின் நடுவானது பூங்கோயில் . அந்நடுவில் உள்ள முதல்வர் முத்தமும் சூடினவர் . திங்கட்புது முகிழும் சூடினவர் . அவர் சூடிய வெண் முத்தம் ஆரூர் எழிலக நடுவணது . வெண்டிங்கட் புதுமுகிழ் ஏர்கொள் பொழிலக நடுவண் விளங்குவது . எழில் , ஏர் - அழகு : எழுச்சி பொழில் - சோலை . வேலி . திருவாரூர்க் கோயில் , குளம் , செங்கழுநீர் ஓடை மூன்றும் அவ்வஞ்சுவேலியாகும் . ` அஞ்சணை வேலியாரூர் ` ( தி .4 ப .53 பா .7.) ` தொட்டிமை ` என்பதன் விளக்கம் சித்தாந்தம் மலர் 22, இதழ் 10 ( விரோதி - ஐப்பசி . 1949 அக்டோபர் ) இல் யாம் எழுதிய ` தமிழ்ச் சொல் ` என்னுங் கட்டுரையால் அறியப் பெறலாம் . சீவகசிந்தாமணி (1255, 2085, 2047) யில் , ` தொட்டிமையுருவம் ` ` காமன் தந்த தொட்டிமையுடைய வீணைச் செவிச்சுவை யமிர்தம் ` என்புழி , உருவத் தொற்றுமை , குரலொலி வீணையொலியின் ஒற்றுமை குறித்துநிற்றலறிக . விட்டிசைத்தலை விட்டிசை என்றும் , பக்கிசைத் தலைப் பக்கிசை என்றும் கூறுமாறு , தொட்டிமைத்தலைத் தொட்டிமை என்றனர் . கண்ணிமையிரண்டும் ஒன்றைனையொன்று தொட்டு ஒற்றுமையுற்றிமைத்தல் பற்றிய இத்தொடர் உவமையாய் நின்று , ஒற்றுமையுடைய உவமேயத்தைக் குறித்து வழங்கும் பண்டைய தொரு வழக்கு . இந்நாயனார் காலத்தும் இது வழக்கிலிருந்ததுபோலும் . அடியவர்க்கே சிறந்துரிய ஒற்றுமையைக் குறிக்க இதனை ஆண்டருளினார் . அடியவர் தம் இனத்தொடும் இறைவனொடும் உறும் ஒற்றுமையே பொய்யாது நிலைப்பது . ` உன் அடியவர் தொகை நடுவே ஓர் உருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக் கொண்டருள் ` ` இணங்கத் தன் அடியார் கூட்டமும் வைத்து , என்பன ` தொட்டிமையுடைய தொண்டர் ` களுக்கே உரிய ஒற்றுமை குறித்தன . ` கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர் ` ( கம்பரா . ) என்றதில் , ஒற்றுமையும் உணர்த்தப்பட்டது . ` தோட்டிமை ` என்றது பிழைபட்ட பாடம் .

பண் :

பாடல் எண் : 4

நஞ்சிருண் மணிகொள் கண்டர் நகையிரு ளீமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி விளங்கினார் போலு மூவா
வெஞ்சுடர் முகடுதீண்டி வெள்ளிநா ராசமன்ன
அஞ்சுட ரணிவெண்டிங்க ளணியுமா ரூரனாரே.

பொழிப்புரை :

அழியாத சூரியமண்டலத்தின் உச்சியைத் தொட்டுக் கொண்டுள்ள சடைமுடியில் வெள்ளிக் கம்பி இருந்தாற்போன்ற அழகிய ஒளி வீசும் பிறையை அணிந்த ஆரூர்ப் பெருமான் நஞ்சினால் இருண்ட நீலகண்டராய் , இருள்மிக்க சுடுகாட்டில் இரவிலே வெளிப் படுகின்ற சுடுகாட்டுத் தீயாகிய விளக்கு வெளிச்சத்திலே கூத்தாடி விளங்குபவராவார் .

குறிப்புரை :

நஞ்சு கொள் கண்டர் ; இருள் கொள் கண்டர் ; மணி கொள் கண்டர் ; நஞ்சுண்டு கறுத்து இருள்போலவும் நீல மணி போலவும் விளங்குங் கண்டத்தர் . நகையிருள் - விளக்கமுடைய இருள் ; ` இருள் உருவம் காட்டும் .` ஈமம் - சுடுகாடு . கங்குல் - இரவு . வெஞ்சுடர் விளக்கத்து ஆடி - வெவ்விய சுடுகாட்டுத் தீச்சுடர் விளக்கத்தில் நட்டம் ஆடி ( விளங்கினார் போலும் ). மூவா வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன திங்கள் - அழியாத வெவ்விய சூரிய மண்டலத்தைத் தொட்டு வெள்ளிக் கம்பியிருந்தாற்போன்ற பிறை . அம் சுடர் அணி திங்கள் - அழகிய நிலாச் சுடரும் அழகும் உடைய திங்களை . சிவபிரான் சடை வெஞ்சுடர் முகடு . அதிலுள்ள பிறை வெள்ளி நாராசம் . நிலாவின் தண்மை அஞ்சுடர் . வெயிலின் வெம்மை வெஞ்சுடர் .

பண் :

பாடல் எண் : 5

எந்தளிர் நீர்மை கோல மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந் தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளி ராகம் போலும் வடிவரா ரூர னாரே.

பொழிப்புரை :

எம்முடைய கற்பக மரத் தளிரின் தன்மையான அழகிய மேனியை உடைய ஆரூரன் என்று தேவர்கள் போற்றுமாறு , பசிய தளிரை உடைய காமவல்லி போன்று , தம் மேனிமீது படரும் கொடிபோன்ற பார்வதியால் தழுவப்பட்டு , தம்முடைய சடைத் தொகுதியினாலும் தம்முடைய தனிப்பண்பினாலும் அழகிய தளிரினது வடிவம் போன்றவர் ஆவார் ஆரூரனார் .

குறிப்புரை :

ஆரூரனார் இமையோர் ஏத்தக் கொடி பயிலப்பட்டு , தொத்தினாலும் நீர்மையாலும் அந்தளிராகம் போலும் வடிவர் . இமையோர் ஏத்துவது எம் தளிர் நீர்மையும் கோலமும் உடைய திருமேனி என்று ; அதற்கு ஏது கொடிபயிலப்படுதல் ; தம் சடைத் தொகுதியாலும் தம் நீர்மையாலும் ` எம் தளிர் ` என்று இமையோர் ஆறனுருபின் உடைமைக் கிழமையிற் கூறிக் கொண்டது , கற்பக மரமும் அதிற்படரும் காமவல்லி என்னுங் கொடியும் தமக்கே உரியன ஆதலின் . பைந்தளிர்க் கொம்பர் - பசிய தளிர்களையுடைய கற்பகப்பூங்கொம்பு ; அன்ன - அத்தகைய ; படர்கொடி - காமவல்லி என்னும் படருங்கொடி ; பயிலப்பட்டு . ( தன்கண் ) பயிலப்பெற்று ; தம் சடைத் தொத்தினாலும் - தமது சடைக்கற்றையாலும் ; தம்மதோர் நீர்மையாலும் - தம்முடையதொரு தன்மையாலும் ; அம் - அழகிய ; தளிர் - தளிரினது ; ஆகம் போலும் வடிவர் - வடிவுபோல்கின்ற வடிவினார் . பைந்தளிர்க் கொம்பர்களையுடைய அத்தகு சிறப்புடைய படர்கொடி என்று கொடியின் சினையாக்கியுங் கூறலாம் . சிவபிரான் பைந்தளிர்க் கொம்பர் . அம் முதல்வனைத் தழுவியுள்ள நாய்ச்சியார் படர் கொடி . கொடிப்பயிற்சியும் சடைத்திரளின் நிறம் முதலியனவும் அவ்விருவரது இயல்பும் ஒப்புக்குரியன . ` வெள்ளிவெற்பின் மேல் மரகதக்கொடியுடன் விளங்கும் தெள்ளு பேரொளிப்பவள வெற்பு ` என்றருளினார் சேக்கிழார் பெருமானார் . ` பொன்மலைக்கொடி ` ` மலைவல்லி ` என்றலும் நினைக .

பண் :

பாடல் எண் : 6

வானகம் விளங்க மல்கும் வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டி லுண்பது மொளிகொ ணஞ்சம்
ஆனகத் தஞ்சு மாடு மடிகளா ரூர னாரே.

பொழிப்புரை :

புலாலின் சுவடு நீங்கப்பெற்ற மண்டையோட்டில் பிச்சை எடுத்து , ஒளி பொருந்திய விடத்தை உண்டு , பஞ்சகவ்வியத்தில் நீராடும் ஆரூர்ப்பெருமான் வான்வெளி எங்கும் ஒளிபடருமாறு வளரும் பிறையைச் சூடி , பிச்சை இட வரும் இளைய மகளிருடைய மனம் பெண்மைக்குரிய பண்புகள் அழியுமாறு வந்து பிச்சை எடுத்துத் திரிவார் போலும் .

குறிப்புரை :

வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் என்றது சிவபிரானது சடைமேலுள்ள பிறை எல்லாத் தத்துவங்களுக்குள்ளும் தத்துவாதீதத்திலும் உள்ள வெளிகலெல்லாவற்றையும் விளக்கும் வளமுடைமை குறித்து . தான் :- அசை , அகம் - பாவம் ஈவோர் பாவம் அழிதல் ஏற்றலின் பயன்களுள் ஒன்று . ` புண்ணியம் ஆம் , பாவம்போம் , தீது ஒழிய , நன்மை செயல் ` என்னும் வாக்கியம் ( நல்வழி ) நான்கும் ஈண்டுணரத்தக்கன . ஊன் அகம் கழிந்த ஓட்டில் :- பிரமகபாலத்தில் , தேர்வதும் பலி ; உண்பதும் நஞ்சு . ` அருந்தும்விடம் அணியாம் மணிகண்டன் ` என்புழி 1. ` அருந்துமென்பது காலமயக்கம் `; 2. அருந்துதற்றொழில் முடிவதன்முன் நஞ்சம் கண்டத்து நிறுத்தப்பட்டு அணியாயிற்று ஆகலின் . நிகழ்காலத்தாற் கூறப்பட்டது எனினும் அமையும் ` ( தி .8 திருக்கோவையார் 272 உரை ) ஆனகம் அஞ்சும் - ` ஆனிடத்தைந்தும் `. ஆடும் - அபிடேகம் புரியப் பெறும் . அடுத்துவரும் திருப்பாடலில் ` அஞ்சணையஞ்சுமாடி ` என்றதும் உணர்க . அடிகள் - கடவுள் . இதுமுன் திருவடி ஞானம் பெற்றவர்களைக் குறிக்கும் பெயராயிருந்து , பின் இறைவனைக் குறித்தும் ஆளப் படுகின்றது .

பண் :

பாடல் எண் : 7

அஞ்சணை கணையி னானை யழலுற வன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை யமுதமா வணைந்து நக்கு
அஞ்சணை யஞ்சு மாடி யாடர வாட்டுவார் தாம்
அஞ்சணை வேலி யாரூ ராதரித் திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

ஐந்து வேலிப் பரப்புடைய திருவாரூர்க்கோயிலை விரும்பி உறையும் பெருமான் ஐங்கணைகளை உடைய மன்மதனைச் சாம்பலாகுமாறு ஒருகாலத்தில் நெற்றிக் கண்ணால் நோக்கி , ஐந்து விதமாக முடிக்கப்படும் ( ஐம்பால் ) கூந்தலையுடைய பார்வதியை அமுதமாகக் கருதி அவளோடு பொருந்தி , சிரித்து , பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் கொண்டு , ஐந்து தலைகளை உடையதாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பினை ஆட்டுபவராக உள்ளார் .

குறிப்புரை :

அஞ்சு அணைகணையினானை - அஞ்சு மலராக அணைந்த அம்புடைய மன்மதனை . அழல் உற - தீயை அடைய ; தீய ; எரிய . அழுதலையடைய எனல் இரதிக்குத் தகும் . அன்று - யோகிருந்த அக் காலத்தில் ; விண்ணோர் கருவேளை ஏவிய வேளையுமாம் . நோக்கி - நெற்றிக் கண்ணாற் பார்த்து ; யோகத்தையும் நம்மையும் மதியாது வந்தவாற்றைக் கருதி . அஞ்சு அணைகுழலினாளை - சுருள் , குழை , பனிச்சை , கொண்டை , முடி என்னும் ஐந்தும் பொருந்தும் கூந்தலாராகிய உமை ; கமலாம்பிகை ; அல்லியங்கோதை . அமுதம் ஆ - அமுதத்தினிமை போலும் இனிமை விளைய . நக்கு - சிரித்து . யோகி போகியாதல் பற்றி விளைந்த நகை . அஞ்சு அணை அஞ்சும் ஆடி :- ` ஆனகம் அஞ்சும் ஆடி `. அஞ்சு இரண்டனுள் முன்னது பஞ்ச கவ்வியம் . பின்னது ` ஆனைந்து ` எனப்படும் ` நறு நெய்யொடு பால் தயிர் `. ஆடரவு - ஆடுகின்ற பாம்பு . கொல்லும் பாம்புமாம் . அடுதல் - கொல்லல் . அஞ்சு அணை வேலி :- திருவாரூர்க் கோயில் , குளம் , நீரோடை மூன்றும் அவ்வஞ்சு வேலியளவின . ( தி .4 ப .53 பா .3)

பண் :

பாடல் எண் : 8

வணங்கிமுன் னமர ரேத்த வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர் மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி யாரூரெம் மடிக ளாரே.

பொழிப்புரை :

சந்திர மண்டலம் வரையில் உயர்ந்து அந்த வட்டமான பகுதியில் அடைந்து சந்திரனை அணுகுகின்ற அழகிய கொடிகள் உயர்த்தப்பட்ட மாடங்களை உடைய வீதிகளைக் கொண்ட ஆரூரில் உள்ள எம்பெருமான் தேவர்கள் தம்முடைய வலிய வினைப் பயன்கள் தீருமாறு முன் நின்று வணங்கித் துதிக்க ஒன்றோடொன்று கலந்து பின்னி முறுகிய சடைகளிடையே பிறையைச் சூடிய பெருமையை உடைய தலைவராவார் .

குறிப்புரை :

அடிகளார் அண்ணல் ; பாகர் . அல்லது அண்ணலும் பாகரும் அடிகளார் என்க . ஏத்தவும் தீரவும் வைத்தபிறை அமரர் முன் வணங்கி ஏத்த வைத்த பிறை , வல்வினையாயின தீர வைத்தபிறை , பிறையையுடைய பெருமையாவது வணங்காதாரையும் பிழைத் தாரையும் ஒதுக்காமற் சிறப்பித்துக் காத்தருளியது . ஆன :- வினையாலணையும் பெயர் . மணம் கமழ்ஓதி - நறுமணம் வீசும் கூந்தலாள் ; அன்மொழித்தொகை . பாகர் - இடப்பாகத்திலுடையவர் . மதிநிலா வட்டத்து - சந்திரமண்டிலத்தில் . ஆடி அண் அம் கொடி - அசைந்து அண்ணுகின்ற அழகிய கொடி . கொடியையுடைய மாடம் . மாடங்கள் உள்ள வீதிகள் . வீதியை ஆளுதலுடைய ஆரூரர் . ` வீதிவிடங்கர் ` என்பது கொண்டு வீதிச் சிறப்புணர்க . அணங்கு + கொடி (- அணங்கொடி ) என்று கொண்டுரைப்பின் , ஆடி என்பதன் முடிவிடம் இன்றாய்க் கெடும் . வினையான :- பலவின்பால் வினை ஈண்டும் பெயராய்த் தீர என்னும் வினைக்கு முதலாய் நின்றது .

பண் :

பாடல் எண் : 9

நகலிடம் பிறர்கட் காக நான்மறை யோர்க டங்கள்
புகலிட மாகி வாழும் புகலிலி யிருவர் கூடி
இகலிட மாக நீண்டங் கீண்டெழி லழல தாகி
அகலிடம் பரவி யேத்த வடிகளா ரூர னாரே.

பொழிப்புரை :

வீண் பேச்சிற் பொழுதுபோக்கி நல்லோர் இகழ்ச்சிக்கிடமாகும் நிலை ( அடியாரல்லாத ) பிறர்க்காக நான்கு வேதங்களையும் ஓதும் பக்தர்களுக்கு அடைக்கலமாகி வாழ்பவராய் , தமக்கு அடைக்கலம் தருபவர் பிறர் யாரும் இல்லாதவகையில் அனைவருக்கும் தாமே அடைக்கலமாகும் பெருமானாய் , திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து தமக்குள் மாறுபட்டு அடியும் முடியும் தேடும் தீப்பிழம்பாக நீண்டு , உலகத்தார் முன் நின்று துதித்துப் புகழுமாறு ஆரூர்த் தலைவர் விளங்குகிறார் .

குறிப்புரை :

பிறர்கட்கு நகலிடமாக நான்மறையோர் தம் புகலிடமாகி வாழும் புகலிலி ஆரூரனார் . கூடி இகல் இடம் ஆக நீண்டு ஈண்டெழிலாகி , அகலிடம் பரவி ஏத்த ஆரூரனார் . நகல் இடம் - நகைத்தற்குரிய இடம் . புகல் - அடைக்கலம் . புகல் இலி - தனக்குமேல் ஒரு புகலாக யாரையும் வேண்டாத தனி முதலாய் , எவ்வுயிர்க்கும் தான் புகலிடமான மெய்ப்பொருள் . இருவர் - மாலும் அயனும் . இகல் - மாறுபாடு . இகலும் இடம் . நீண்டு - வியாபித்து , ஈண்டு - செறிந்த , செறிந்து எனலுமாம் , எழில் - எழுச்சி , அழலது - அழலுதலுடையதீ , அகல் இடம் - உலகம் , பரவி - வாழ்த்தி , ஏத்த ஆரூரில் எழுந்தருளியுள்ளார் . ` நகலிடம் ` ` புகலிடம் `:- வேற்றுமைத்தொகை . ` இகலிடம் ` ` அகலிடம் ` வினைத்தொகை . ` பிறர் ` என்றது நான்மறையோர் அல்லாதவரை . நான்கு மறையும் கேட்டு நினைந்து தெளிந்தோர் அம் மறை நெறியில் நின்று இறைவன் திருவடியே புகலெனக் கொண்டு திருவருள் நெறியின் வழாது பேரின்பம் துய்ப்பர் . அவர் அல்லாதவர் ( பிறர் ) உலக நெறியில் உழன்று யாவரும் நகுதற்குரியராவர் .

பண் :

பாடல் எண் : 10

ஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி
ஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ
ஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர
ஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.

பொழிப்புரை :

நதிகள் பலவாக வந்து கலக்கும் அலைகளை யுடைய கடலில் தோன்றிய அமுதினைத் தேவர் நுகருமாறு வழங்கி , அசுரர் பலர் வாழும் அழகிய மதில்கள் மூன்றையும் வேவச் செய்து ஆயிரம் தோள்களையும் சுழற்றி ஆடிய களைப்புத் தீருமாறு தமக்குத் தொண்டு புரிய அடியவர் பலரைக் கொண்டுள்ளவர் ஆரூரனாகிய பெருமான் .

குறிப்புரை :

ஆயிர நதிகள் மொய்த்த கடல் என்றருளிய உண்மையை உணராது , நகரத்தை ஒற்றாகவும் திகர ககரங்கட் கிடையிலே ஙகரமெய் இருந்து மறைந்ததாகவும் , ( திங்கள் என ) எண்ணிக்கொண்ட பிழைபட்ட பாடமே எல்லாப் பதிப்பிலும் உளது , ஆயிரந்திங்கள் மொய்த்தாற் போன்ற வெண்ணிறமுடைய பாற்கடல் என்று கொண்டனர் போலும் . ஆயிரம் - பலப்பல , அசுரர் :- முப்புரத்தனர் . வேவ - தீவிழியால் வெம்மையுற்றழிய , மட்டித்து - மடித்து . ` மடித்தாடும் அடி ` அசைவு தீர - இளைப்பாற . ` ஆயிரமடியும் வைத்த ` து யாது எனப் புலப்படவில்லை . கங்கையைக் குறிப்பதோ . அடி - திருவடி வியாபகமோ ? அடி - அடியார் .

பண் :

பாடல் எண் : 1

பகைத்திட்டார் புரங்கண் மூன்றும் பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே பொறியிலே னுடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளு மைவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர் பெருமானே! பகையாயின அசுரர்களுடைய முப்புரங்களும் சிதறிச் சாம்பலாய் விழுமாறு தீக்கு இரையாக்கிய தேவர் தலைவரே! நல்வினை இல்லேனுடைய உடலிலே கிளைத்து அதனை நாடோறும் ஐம்பொறிகளும் செயற்படுத்ததனால் வருந்தி மயங்கி விட்டேன். யான் யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

பகைத்திட்டார் - பகைவருடைய, பாறி - அழிந்து, நீறு - சாம்பல். புகைத்திட்ட - எரித்த. பொறி - அறிவு. அகைத்தல் - அறுத்தல், எழுப்புதல், ஓட்டுதல், செலுத்தல், கிளைத்தல், முறித்தல், வருத்தல் ஆகிய எல்லாப் பொருளும் ஈண்டுப் பொருந்தும். `நீங்கருந் துயர் செய்வளி முதல் மூன்றன் நிலையுளேன் அவை துரந்திடு முன் வாங்கி நின் தன் வீட்டுறைகுவான் விரும்பி வந்தனன் நின் குறிப்பு அறியேன்` என்று வளி முதலியவற்றைக் குறித்துக் கூறிய துரத்தல் ஐம்பொறிக்கும் ஏற்கும். (தி:-4 ப.67 பா.1, 3, 5, 7, ப.69 பா.2, 4, 6.) ஐவர் - ஐம்பொறி, கொண்டு ஆட்ட ஆடி. `ஆட்டுவார்க்கு ஆற்றகிலேன்` (தி.4 ப.67 பா.4). திகைத்தல் - மயங்குதல். `திரு இங்கு வருவாள் கொல்லோ என்று அகம் திகைத்து நின்றான்` (கம்பரா. சூர்ப்ப. 59)

பண் :

பாடல் எண் : 2

மையரி மதர்த்த வொண்கண் மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே யடைக்கும்போ தாவி யார்தாம்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! மை தீட்டப்பட்டுச் செவ்வரி பரந்து செழித்த ஒளிபொருந்திய பெண்களின் பார்வையாகிய வலையில் அகப்பட்டுக் கையிலே நெருப்பையும் சூலத்தையும் ஏந்தும் கடவுளாகிய உம்மைத் தியானிக்க இயலாதேனான் கோழை திரண்டு சாய்ந்து கழுத்தின் உட்புறத்தை அடைக்கும்போது என் உயிர் என்ன பாடுபடுமோ அறியேன்.

குறிப்புரை :

மை - கண்ணிற்பூசும்மை, மணியின் கருமையையும் கோட்டின் செம்மையும் குறித்து மையரி என்றாருமாம். மையும் அரியும் மதர்த்தலும் ஒண்மையும் கண்ணிடத்துக்கொண்டு ஆடவரைத் தம் மயக்க வலையிற் படுத்துவர். அவர் வழிப்பாடு கடவுள் வழிபாட்டாலன்றித் தீராது. கடவுள் வழிப்பக்கமும் செலுத்தாது. கையில் ஏந்திய விர்த்த பல்கதிர் கொள்சூலம். எரிகின்ற சூலத்தை ஏந்துகின்ற கடவுள். ஐ - கோழை, சிலேட்டுமம். நெரிந்து - சாய்ந்து அகமிடற்றே - (மிடற்றகத்தே) கழுத்தினுள்ளே. அடைக்கும்போது ஆவியார்:- `ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போவதுமே` `ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும் போதுணரமாட்டேன்.

பண் :

பாடல் எண் : 3

முப்பது முப்பத் தாறு முப்பது மிடுகு ரம்பை
அப்பர்போ லைவர் வந்து வதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றா லுய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித் திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

செந்நிற மேனியை உடைய திருப்புகலூர்ப் பெருமானே! தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களால் அமைக்கப் பட்ட இவ்வுடம்பாகிய குடிலிலே தலைவர்களைப்போல ஆட்சிப் புரியும் ஐம்பொறிகளும் அவ்வப்போது தோன்றி அதனைக்கொடு, இதனை விடு என்று ஒருசேரத் துன்புறுத்தத் தொடங்கினால் அவற்றில் இருந்து தப்பிக் கடைத்தேறும் வழியை அடியேன் அறியமாட்டேன்.

குறிப்புரை :

முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடுகுரம்பை - முப்பத்தாறு தத்துவங்களும் அறுபது தாத்துவிகங்களும் அண்டத் திலுள்ளவாறே அமைந்த பிண்டமாகிய குடில். `இருகாற் குரம்பை இது` (தி.4 ப.113 பா.2). `ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டோட்டி அதில் இரண்டு கை வைத்த வீடு` (கந்தரலங்காரம்) குரம்பையப்பர் - குடிலின் தலைவர், `இல்ல முடையார்` `கள்ளரோடில்லம் உடையார்` ஐவர் - ஐம்பொறி, அது தருக. இது விடு(க). ஒப்பவே - ஒரு சேரவே; நலியல் - வருத்துதல், உய்யும் ஆறு - தப்பும் வழி, செப்பமே - செம்மை, `பவளம்போல் மேனி` `அந்தவண்ணன்` செந்நெறியிலேயே விளங்கும் சிவ ஞானமூர்த்தியுமாம்.

பண் :

பாடல் எண் : 4

பொறியிலா வழுக்கை யோம்பிப் பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றே னீதனே னீதி யேதும்
அறிவிலே னமரர் கோவே யமுதினை மனனில் வைக்கும்
செறிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! பொலிவில்லாத அழுக்கு உருவமான இவ்வுடம்பைப் பாதுகாத்துப் பொய்யான வழியையே மெய்வழியாகக் கருதிக் கீழ்மகனாகிய அடியேன் வழியல்லா வழியிலே வாழ்ந்தேன்! நெறிமுறையான செய்திகளை அறியும் ஆற்றல் இல்லேன். தேவர்கள் தலைவனே! அமுதமாகிய உன்னை மனத்தில் நிலையாகவைத்தற்குரிய யோகமுயற்சி உடையேன் அல்லேன். யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

பொறி - பொலிவு. அழுக்கு - மலம். ஈண்டு உடம்பிற்கு ஆகுபெயர். `அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்` (நம்பியாரூரர்) பொய் - நிலையில்லாதது. மெய் - நிலையானது. நெறியலா நெறிகள் - சைவ நெறியல்லாத வேற்றுச் சமய நெறிகள். அமுதினை மனனில் வைக்கும் செறிவு - விண்ணுலகத்து அமிர்தினை மனத்தில் வைத்தற்கு ஏதுவான யோகம். `மண்ணில்` என்றது பிழைபட்ட பாடம். ஏடுகளிலும் `மனனில்` என்றே உளது. எம் ஏட்டில் மண்ணில் என்று எழுதி மனனில் என்று திருத்தியிருக்கின்றனர். (தி.4 ப.54 பா.6) ஆவது திருப்பாடலில் `நீதனேன்` என்றுள்ளதுணர்க. (தி.6 ப.47 பா. 4) பார்க்க. நீதன் (-நீதிமான்) எனின், நீதியேதும் கல்லேன், நெறியலா நெறிகள் சென்றேன் எனல் ஒல்லுமோ?

பண் :

பாடல் எண் : 5

அளியினார் குழலி னார்க ளவர்களுக்கு கன்ப தாகிக்
களியினார் பாட லோவாக் கடவூர் வீ ரட்ட மென்னும்
தளியினார் பாத நாளுந் நினைவிலாத் தகவி னெஞ்சம்
தெளிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! வண்டுகளால் மொய்க்கப் பெறும் கூந்தலை உடைய பெண்கள்பால் அன்பு செலுத்தி, சிவானந்தக் களிப்பினார்கள் பாடும் பாடல்கள் நீங்காத கடவூர் வீரட்டம் என்னும் கோயிலிலுள்ள அமுதகடேசராம் பெருமானை நாள் தோறும் விருப்புற்று நினைக்காததும், தகுதியற்றதுமான நெஞ்சம் தெளிவு பெறாத அடியேன் யாது செய்வேன்?

குறிப்புரை :

அளி - வண்டுகள். அளியின் ஆர்குழலினார்கள் - வண்டுகளின் நிறைந்த கூந்தலார். குழலினார்க்கு அன்பு - மாது நேசம். களியினார் பாடல் - சிற்றின்பக் களிப்புடையார் பாடும் பாடல்கள். ஓவா - நீங்காத. கடவூர் வீரட்டம்; திருக்கடவூர்க் கால சங்காரம் புரிந்த வீரட்டானம். தளி - திருக்கோயில். தளியினார்:- `அமுதகடேசர்` நாளும் - நாள்தோறும். நினைவு - மறவாதுன்னுதல், நினைவு இல்லாமையால் நெஞ்சம் தகவும் உயிர் தெளிவும் இல்லாதன ஆயின.

பண் :

பாடல் எண் : 6

இலவினார் மாதர் பாலே இசைந்துநா னிருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி நீதனே னாதி யுன்னை
உலவிநா னுள்க மாட்டே னுன்னடி பரவு ஞானம்
செலவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! இலவம் பூப்போன்ற வாயும் பாதங்களும் உள்ள பெண்கள் பால் இசைந்திருந்து இன்னும் அவர்களோடு பல நாள்கள் கூடி இருக்கப் போகிறோம் என்று கருதிக் கீழ்மகனாகிய அடியேன் அப்பெண்டிர் பக்கமே உலாவிக் கொண்டு உன்னை விருப்புடன் நினையாதேனாய் உன் திருவடிகளை முன்நின்று வழிபடும் சிவஞானம் என் உள்ளத்தில் பொருந்தும் நிலையினேன் அல்லேனாய் வாழும் யான் யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

இலவினார் - இலவம் பூப்போலும் வாயும் அடியும் உள்ளார். சிந்தாமணி 482, 1588. மாதர்பாலே:- ஏகாரம் - அடியார் முதலிய நன்னெறியினரிடத்தில் இசை இன்மை குறித்து நின்றது. பிரிநிலை. பின்னும் நிலவு நாள் - மேலும். உடம்பொடு கூடி வாழுங் காலம். `ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுபகோடியும் அல்ல பல` (திருக்குறள்) ஆதி - முதல்வர், உலவி - உள்ளத்தில் உலவச் செய்ய. உலவியுள்க எனல் பொருந்தாது. செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. உன் அடி பரவும் ஞானம்:- நின் அடி பரவ நான் நீயாகி நிற்கும் மெய்யுணர்வு. `நீயான ஞான விநோதந்தனை என்று நீ யருள்வாய்?` (கந்தரலங்காரம்). செலவு - ஒழுக்கம். செல்லுதலுமாம். `அறிவு செல்லவில்லை` என்ற வழக்குணர்க. `நீதனேன்` (தி.4 ப.54 பா.4.) உன் திருவடியைப் பரவும் சிவஞானம் செலவு இல்லேன். செல்ல இல்லேன். சிவஞானத்திற் செல்லுதல் இல்லேன். சிவஞானம் செல்ல (- என் உள்ளே செல்ல, புக) இல்லேன். `செலவு` தன்மைக்கண் வழுவமைதி. உன்னடி பரவும் ஞானத்திற் செல்லுதல் இல்லேன் என்றுமாம்.

பண் :

பாடல் எண் : 7

காத்திலே னிரண்டு மூன்றுங் கல்வியே லில்லை யென்பால்
வாய்த்திலே னடிமை தன்னுள் வாய்மையாற் றூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புக லூர னீரே.

பொழிப்புரை :

பொய்கைகள் விளங்கும் திருப்புகலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளையும் அடக்கினேன் அல்லேன். ஞான தேசிகராற் பெற்ற அனுபவ ஞானம் அடியேன்பால் இல்லை. உம் தொண்டில் அடியேன் வாய்ப்புப் பெற்றேன் அல்லேன். வாய்மையோடு தூய்மை உடையேன் அல்லேன். அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பெருமானே! வழிபடுவோர்களுடைய தீவினைகளுக்குக் கழுவாயாகி உள்ளவரே! யான் யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

காத்திலேன் இரண்டும் மூன்றும் - ஐம்பொறிகளையும் அடக்கினேனல்லேன். `இரண்டும் மூன்றும்` என்றாற்போலக் குறிக்கும் வழக்கம் ஆசிரியர்பால் மிகுதியாயிருக்கின்றது. `மூன்று முந்நூற்றறுபதும் (-1080 மலர்`தி.4 ப.29 பா.9). `ஐயிரண்டும் ஆறொன்றும் ஆனார் போலும் அறுமூன்றும் நான்மூன்றும் ஆனார் போலும்` (தி.6 ப.16 பா.6) பத்துத் திசையும் ஏழுலகும் பதினெண் கணமும் பன்னிரு சுடரும் ஆனார் என்பன காண்க. `ஐயிரண்டும் ஆறொன்றும்` என்பது சோடசகலாப் பிரசாதத்தை யுணர்த்துவதென்பர். அப்பொருட்கு, ஐந்து இரண்டு ஆறு ஒன்று என்று கொண்டு பதினாறு கலை எனல் வேண்டும். ஆறும் ஒன்றும் ஏழு என்று உம்மைத் தொகையாகக் கொண்டுரைத்தது முன்னது. கல்வியேல் என்பால் இல்லை. அடிமை தன்னுள் வாய்த்திலேன். தன்னுள் - சிவபிரானிடத்தில், அடிமை வாய்த்திலேன். வாய்மையால் - வாயுரையால். முப் பொறி (திரிகரணம்) ஆகிய உள், வாய், மெய் என்னும் மூன்றனியல்பும் (சத்தியமும்) முறையே உண்மை, வாய்மை, மெய்ம்மை எனப்படும். தூய்மை - யாதொன்றும் தீமையிலாத சொல்லல். பரவுவார்கள் - வாழ்த்தி வழிபடுவோர். தீர்த்தம் - தீவினைக்குக் கழுவாய் ஆகிய தூநீர்.

பண் :

பாடல் எண் : 8

நீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி யிமையவ ரிறைஞ்ச 1நின்றார்
2ஆய்வதற் கரிய ராகி யங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவர் திருப்புக லூர னாரே. 

பொழிப்புரை :

நீராய்த், தீயாய், நிலனாய், வானமாய், அழகிய ஒளிப்பொருள்களாய்த் தேவர்கள் வழிபட நிற்பவராய், ஆராய்ந்தறிவதற்கு அரியராய்ப் பலப்பல இடங்களில் கூத்து நிகழ்த்தும் தேவதேவர் திருப்புகலூர்ப் பெருமானாவார்.

குறிப்புரை :

இமையவர் இறைஞ்ச நிலனும் நீரும் தீயும் (வளியும்) விசும்பும், தண்கதிரும் செங்கதிரும் ஆகி நின்று, ஆய்ந்துணர்வதற்கு எளியரல்லராகி, அவ்வத் தத்துவ புவனங்களில் முத்தொழில் புரியுந் தேவர்க்கும் அதிட்டான மூர்த்தியாய் எழுந்தருளி இயக்குவிக்கும் தனி முதற் பொருளாவார் திருப்புகலூரனார். சிவ பரஞ்சுடர். இமையவர் முதலிய இயமானர் நீர், நிலம், தீ, கார், விண், இருசுடர் ஆகிய எட்டுருவாய் நின்றுணர்த்தியும், சித்துப் பொருளாகிய இயமானர்க்கு அசித்துப் பொருளாகிய மற்றையேழன்கண்ணும் வைத்தும் தன்கண் வைத்தும் ஆய்வதற்கருமையும், அவ்வத் தத்துவாதிபதிகளை ஆட்டுவித்தலும் அறிவித்தவாறுணர்க. `விசும்பு` என்றதால், அதில் உலவும் வளியும் பெற வைத்தருளினார். இது படர்க்கைப் பரவல். `நின்றார்` `ஆவது` என்றும் பாடம் உண்டு.

பண் :

பாடல் எண் : 9

மெய்யுளே விளக்கை யேற்றி வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோ ருபாயம் பற்றி யுகக்கின்றே னுகவா வண்ணம்
ஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! இவ்வுடம்பினுள்ளே சோடசகலாப் பிராசாத ஞான விளக்கை ஏற்றி, மும்மலங்களையும் கடத்தற்கு வேண்டிய அளவில் அதனைத் தூண்டிவிட்டுப் பிறவித் துன்பத்தினின்றும் தப்பிக்கொள்வதற்கு உரிய உபாயத்தை உறுதியாகப் பிடித்து மேலுயர்ந்து கொண்டிருக்கும் அடியேன் உயர முடியாதபடி ஐம்பொறிகளை அடியேன் உடலில் சால வலிமை உடையனவாக வைத்திருக்கின்றீர். ஆதலின், அடியேன் செய்வதறியேன்.

குறிப்புரை :

மெய் - உடம்பு. விளக்கு - ஒளிநெறிக்குரிய பிராசாத மந்திர ஞானதீபம். வேண்டு அளவு - மும்மலங்களையும் கடக்க வேண்டிய எல்லை வரையில். உயர - துவாதசாந்தத்தை எய்த. தூண்டி - பிராசாத யோகத்தால் உந்தி. உய்துவது ஓர் உபாயம் - பிறவித் துன்பத்தினின்று உய்ந்து வீடு பெறற்கேற்ற தோருபாய நிட்டை. அதை உறுதியாகப் பிடித்து, உகக்கின்றேன். உயர்த்துகின்றேன். உகவா வண்ணம் - உயர்த்தாத வகையில், அகத்தே ஐவரை வைத்தீர். அவரொடு யான்செய்யும் போரில் அவர்களே சாலவலியர். செய்யத்தக்கது ஒன்றும் அறியவல்லேனல்லேன்.

பண் :

பாடல் எண் : 10

அருவரை தாங்கி னானு மருமறை யாதி யானும்
இருவரு மறிய மாட்டா வீசனா ரிலங்கை வேந்தன்
கருவரை யெடுத்த ஞான்று கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப்புக லூர னாரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமான் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து உயர்த்திய திருமாலும், அரிய வேதங்களை ஓதும் பிரமனும் ஆகிய இருவரும் அறியமாட்டாத ஈசனாய் இலங்கை மன்னனான இராவணன் கயிலையைப் பெயர்த்தபோது அவன் கண்வழியே இரத்தம் பெருகுமாறு கால்விரல் ஒன்றைச் சிறிது வைத்தவராவார்.

குறிப்புரை :

இத் திருப்பதிகத்தில் எட்டும் பத்துமாம் இரண்டும் சிவபிரானைப் படர்க்கையிற் பரவுவன. அருவரை - பிறரால் எடுத்துக் குடையாகக் கவித்துப் பிடித்தற்கரிய கோவர்த்தனகிரி. தாங்கினான் - ஆக்களைக் காக்கத் தாங்கிய கண்ணனாகிய திருமால். அருமறை - கற்றும் கேட்டும் உணர்தற்கரிய வேதம். ஆதி - படைத்தற்றொழிற்கு முதல்வன். முதற்றொழிலனுமாம். இலங்கை வேந்தன் கரிய (பெரிய) மலையை எடுத்தநாளன்று, அவன் இருபது கண்களின் வாயிலாகவும் செந்நீர் ஒழுகச் சிறிது திருக் காற்பெருவிரலை ஊன்றினார் திருப்புகலூரனார். ஈசனார் - உடையார்: தமிழில் இறைவனை உடையான் என்பது தொல்வழக்கு. அப்பொருட்டாய ஈசன் என்பது வட மொழிக் கலப்புற்ற பின் வழங்கும் பெயராம். `உடையாள்` அம்பிகை. `இடையறா அன்பு உனக்கு என்னூடகத்தே நின்றுருகத் தந்தருள் எம் உடையானே` `உடையாள் உன்றன் நடுவிருக்கும்` (தி.8 திருவாசகம்) உடைமை உயிர்களும் உயிரில் பொருள்களும். அவற்றுள் உயிர்கள் அடிமையாதலும் உடையன. `நாளன்று` என்பதன் மரூஉவே `ஞான்று` என்பது. கல்வெட்டுக்களுள் `மகர ஞாயிற்று இரேவதி ஞான்று` என்பது முதலிய தொடர்களால் அதன் தொன்மை புலப்படும்.

பண் :

பாடல் எண் : 1

தெண்டிரை தேங்கியோ தஞ் சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகண் மதுக்கண் மாந்தும் வலம்புரத் தடிக டம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக் குழகர்தா மிருந்த வாறே.

பொழிப்புரை :

எங்கும் வண்டுகள் தேனை வயிறாரப் பருகும் வலம்புரத்திலுள்ள பெருமான் கடலிலுள்ள தெளிந்த அலைகள் செறிந்து தம் திருவடிகளில் விழுந்து அலசும்போது , தொண்டர்கள் தம்மை அழைத்தவண்ணம் தொழுது அடியின் கண் வணங்கித் தம்மை உள்ளத்திலும் , தம் சிறப்பை உரையிலும் கொண்டு பாடும் வண்ணம் இருந்தாவாறென்னே !

குறிப்புரை :

ஓதம் சென்று அடிவீழுங்காலை , தொண்டு இரைத்துத் தொழுது வணங்கிக் கொண்டு பாட இருந்தவாறு என்னே ! என்க . தெள் + திரை - தெளிந்த அலை . ஓதம் - நீர் . அடி - திருக்கோயிலாண்டவன் திருவடி . கடலலை திருவலம்புரத்திற் குழகர் திருவடியில் வந்து அலசும் போது , எங்கும் தொண்டர்கள் அத் தேவாதி தேவனைத் தொழுது திருவடி வணங்கி , அவனை உள்ளத்திலும் அவர் சீரை உரையிலும் கொண்டு , நல்லிசை பாடிப் போற்றுவார்கள் . அவர்கள் பாடக் குழகர் வீற்றிருந்தருள்கின்றார் . அடிகளது திருவலம்புரம் எங்கும் வண்டுகள் மதுக்களை மாந்தியுறங்கும் வளமுடையது . எங்கும் பலவகை மலர் களிற் பல்வேறு சுவையுடையவாய்க் கிடைக்கும் மதுக்களை மாந்தித் தம்மை மறந்துறங்கும் வண்டுகள் , எங்கும் அடிகளைத் தொழுது பாடி வணங்கிப் பேரின்பக் கள்ளுண்டு சீவபோத மற்றுச் சிவபோதத் திலுறங்கும் தொண்டர்களுக்கு நிகராயின . வலம்புரத்தடிகளாகிய குழகர் தம்மைத் தொண்டர் பாட இருந்தார் . தொண்டு - தொண்டர் . இரைத்து - சீர் பாடி .

பண் :

பாடல் எண் : 2

மடுக்களில் வாளை பாய வண்டின மிரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை யேந்தித் தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே.

பொழிப்புரை :

மாவடு போன்ற பெரிய கண்களை உடைய பார்வதிபாகர் , மடுக்களிலே வாளை மீன்கள் பாயவும் வண்டினங்கள் அஞ்சி ஓடிய பொய்கைகைளில் பிடியும் களிறும் போல வரால் மீன்கள் இரட்டையாகக் கலந்து கொண்டு அணையவும் வளம் சான்ற திருவலம் புரத்திலே , தொடுக்கப்பட்ட மாலைகளை ஏந்தியவர்களாய் அடியார்கள் முன்நின்று துதித்துப்போற்றும் வண்ணம் இருந்தவாறென்னே !

குறிப்புரை :

வாளை மீன்கள் மடுக்களிற் பாய்ந்தன . பாயவே அம் மடுக்களிலிருந்த வண்டுகள் அஞ்சி ஓடின . ஓடிப் பொய்கையை அடைந்தன . அடையவே , அப் பொய்கையிலிருந்த வரால்கள் , பிடியும் களிறும் போலத் தம்மிலே பிணைந்துகொண்டன . பிணைதல் - இரட்டையாகக் கலந்து கொள்ளல் . பிடி - பெண் யானை . களிறு - ஆண் யானை . மீன்களிலும் களிறு என்னும் வகையொன்றுண்டு . ` முடங்கி னால் ..... மலங்கு , இளவாளை , செங்கயல் , சேல் , வரால் , களிறு அடைந்த தண் கழனி யணியாரூரம்மானே ` ( தி .4 ப .20 பா .2). பயின்றன வரால்கள் என்று பாடம் இருந்ததோ ? பயின்று அணைகின்ற வரால் களையுடைய வலம்புரம் என்று இயைக்க . தொண்டர்கள் தொடுத்த நன்மாலை ஏந்திப் பரவி ஏத்த இருந்தவாறு என்க . ` வடித்தடங்கண்ணி ` என்பது . தலத் தேவியாரது திருப்பெயர் . ` வடுவகிர்க்கண்ணியம்மை ` என்று இன்றும் வழங்குகின்றது .

பண் :

பாடல் எண் : 3

தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை யஞ்சுங் கொண்டே யன்பினா லமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிக டம்மை
நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே.

பொழிப்புரை :

தேனுள்ள பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து தம் அழகிய திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்துப் பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அந்த அபிடேகத்தை உவந்து ஏற்று வானில் உலவவேண்டிய பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவனானேன் .

குறிப்புரை :

திருவலம்புரத்து அடிகளை நான் அடைந்து , மலர்கள் கொண்டு அடிபொருந்தச் சேர்த்து , ஆனஞ்சும் கொண்டு அமர ஆட்டி , ஏத்தப்பெற்று ( முற் பிறவிகளிற் செய்த ) நல்வினைகளின் பயனை ( இப் பிறவியிற் ) பெற்றேன் என்க . தேன் உடை மலர்கள் :- முறுக்கு அவிழ வண்டுகள் உடைத்தமையால் மலர்ந்த பூக்கள் ; தேனையுடைய பூக்கள் . திருந்து அடி :- அநுபவ ஞானம் முதிர முதிரச் சிந்தையிற்றிருந்தும் , திருத்துவது சிவனருள் . திருந்துவது ஆன்மா . சிவனடியில் ஆன் மாக்கள் திருந்துகின்ற உண்மையை அநுபவித்துணர்தல் வேண்டும் . திருத்தத்திற்கு இடம் சிவனடியே அன்றி வேறில்லை . பதி சம்பந்தத்தால் அன்றிப் பாச சம்பந்தத்தாற் பசுக்கள் திருந்துமோ ? அவ்விரண்டு சம்பந்தமும் அன்றி வேறுண்டோ ? அடி பொருந்தச் சேர்த்தல் - வாச்சியப் பொருளிற் சேரப் பாவித்துத் தூவுதல் . ` ஆனிடையஞ்சும் ` ( தி .4 ப .53 பா .6, 7.) அன்பினால் அமர ஆட்டி :- ` தம் அன்பாம் மஞ்சனநீர் தாம் ஆட்டி `; ` இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி `. வானிடை மதியம் :- ` வானூர் மதியம் `, நான் அடைந்து :- நான் கெட்டு என்றலும் பொருந்தும் . தற்போதம் அற்றுச் சொல்லுகின்ற அருளாளர்கள் ` நான் ` எனல் குற்றமாகாது . திருமுறையாசிரியர்கள் ` நான் ` என்ற இடங்களையெல்லாம் நோக்குக . நான் அடிகளை அடைந்து ஏத்தப் பெற்று நல்வினைப் பயன் உற்றேன் என்றதில் , ஏத்தப் பெறல் பயன்உறல் இரண்டும் ஆசிரியர்க்கே உரியன . ஏத்தப் பெறல் ஏத்தல் என்னும் பொருட்டு .

பண் :

பாடல் எண் : 4

முளையெயிற் றிளநல் லேனம் பூண்டுமொய் சடைக டாழ
வளையெயிற் றிளைய நாகம் வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகயப் போர்வை போர்த்துப் புனலொடு மதியஞ் சூடி
வளைபயி லிளைய ரேத்தும் வலம்புரத் தடிக டாமே.

பொழிப்புரை :

வலம்புரப்பெருமான் இளைய பெரிய பன்றியின் மூங்கில் முளைபோன்ற பற்களை அணிகலனாக மார்பில் பூண்டு , செறிந்த சடைகள் தாழ , வளைந்த பற்களை உடைய பாம்பினை இடைக்குப் பொருந்த இறுக்கிக்கட்டி , துதிக்கையை உடைய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து , கங்கையையும் பிறையையும் சடையிற் சூடி வளையல்களை அணிந்த மகளிர் தோத்திரிக்குமாறு அமைந்துள்ளார் .

குறிப்புரை :

இளைய அழகிய பன்றியின் முளையெயிற்றை அணிந்து , மொய்த்த சடைகள் தாழ வளைந்த பற்களையுடைய இளைய பாம்பினை வலித்து அரையில் பொருந்தக்கட்டி , துளையுடைய கையினதான யானைத் தோலைப் போர்த்துக் கங்கையுந் திங்களுஞ் சூடி , வளைகள் பயின்ற இளையர்கள் தொழுதேத்தும் திருவலம்புரத்து அடிகளானார் ( எங்கும் நிறைந்த சிவபிரான் ). யானைத் தோற் போர்வையைப் புளைகயப் போர்வை என்றார் . புழைக்கைய போர்வை என்றது அவ்வாறு எதுகை நோக்கி நின்றதுபோலும் . ஓர்க . புழை - துளை . ` புழைகை ` எதுகை நோக்கியியல்பாயிற்று . அஃது அடையடுத்த சினையாகு பெயராய் முதலை யுணர்த்தி . அகர விறுதி பெற்று எச்சப்பொருட்டாய்ப் போர்வை என்னும் பெயர்கொண்டது . ` வளைபயிலிளையரேத்தும் ` என்றதாற் பண்டைய மகளிரது சிவ பத்தியும் திருக்கோயிலில் மகளிர் திரளாகச் சென்று வழிபடும் வழக்கமும் புலப்பட்டன . பூண்டு , தாழ வலித்து , இசைய வீக்கிப் போர்த்துச்சூடி வலம் புரத்து அடிகளானார் என்று ஆக்கம் வருவித்து முடிக்க . ` பிறை சூடி ` ` கரந்தும் விளையாடி ` என்புழிப்போல , ` சூடி ` என்றதைப் பெயராகக் கொண்டு அதனொடு முடித்து எழுவாயாக்கி அடிகள் தாம் என்று பயனிலை யாக்கலும் ஏத்தும் என்பதற்கு ஏத்தப் பெறும் எனச் செயற்பாட்டுப் பொருளுரைத்து , பூண்டு முதலிய எச்சங்களைப் பெறும் என்பதனோடு இயைத்தலும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 5

சுருளுறு வரையின் மேலாற் றுலங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த விளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறு மடிய ரெல்லா மங்கையின் மலர்க ளேந்த
மருளுறு கீதங் கேட்டார் வலம்புரத் தடிக ளாரே.

பொழிப்புரை :

இரா வேளையில் நெற்பயிர்க்குள் விரவி அதற்கு வளர்ச்சிதரும் சந்திரன் , மலைச்சிகரம் போல முடியப்பெற்ற தமது சுருண்ட சடையிலே நுழைந்து பளிங்கு போன்ற ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருக்க , தம் அருளை அடைய விரும்பிய அடியார் எல்லோரும் அழகிய கைகளில் மலர்களை ஏந்தி நிற்க , அவர் பாடுகிற குறிஞ்சி யாழ்த்திறமான மருள் எனும் பண்ணிசை பொருந்திய பாடல்களைத் திருச்செவி சாத்தியவராய் உள்ளார் .

குறிப்புரை :

சுருள் - வளைவு , பளிங்கு - படிகம் , இருள் உறு கதிர் - இருளினையுடைய இரவில் உறுகின்ற நெற்கதிரில் , நுழைந்த - புகுந்த , இளங்கதிர்ப்பசலைத்திங்கள் - இளநிலாவையுடைய பசிய வெண்பிறை , திங்களை அணிந்த அடிகளார் . அருளை விரும்பும் அடியவரெல்லாரும் அகங்கையிற் பூக்களை யேந்தித் தூவிவழிபட மகிழ்ந்தும் , குறிஞ்சியாழ்த்திறமான மருள் என்னும் இன்னிசை பொருந்திய பாடலைப் பாடப்போற்றக் கேட்டும் வீற்றிருந்தார் வலம் புரத்து அடிகளார் . பயிர் வளர்ச்சிக்கு நிலாத் துணையாதலை , ` தூமதி வாக்கிய கிரணந்துளித் தென்னக் கதிர்ச்சாலி காமர்மணித் தரளங்கள் கான்று செறுத்திடராக்கி ` ( காஞ்சிப் . 125) ` செழுஞ்சுவைத் தெள்ளமிழ்த கிரணங்கள் தம்மாற் செறிகருப்பக் கனம் உறுத்து வளரா நிற்கும் ` ( தணிகைப் . 131) ` சகல புவனத்திலும் உயிர்ப்பயிர் தழைப்ப நற்றண்ணளி சுரந்திடுதல் ` ( முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் . அம்புலிப் 171) ` சசியாதிபன் ` என்பவற்றாலறிக . சசியம் - தாநியம் , விளைவு .

பண் :

பாடல் எண் : 6

நினைக்கின்றே னெஞ்சு தன்னா னீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங் கன்பினா லமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே யினிவலம் புரவ னீரே.

பொழிப்புரை :

நீண்ட சிவந்த சடையை உடைய வலம்புரத்துப் பெருமானே ! அபிடேகத்துக்குரிய எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்து உம்மை அன்போடு முறையாக அபிடேகித்து நற்கதியைச் சேர வல்லேன் அல்லேனாய்ப் பொய்மையைப் பெருக்கி வாழும் அடியேன் , அச்செயல்களை மனத்தினால் நினைத்துப் பார்க்கின்றேனன்றி மெய்ம்மையைப் பொருந்த வல்லேனல்லேன் . இனி , யான் எனக்குச் செய்து கொள்ளக் கூடியது யாதோ அறியேன் .

குறிப்புரை :

வலம்புரவனீரே , நீண்ட புன்சடையினனே ! உம்மை நெஞ்சு தன்னால் நினைக்கின்றேன் . ( அபிடேகத்திற்குச் சிவாகமத்தில் விதிக்கப்பட்ட பொருள்கள் ) அனைத்தும் ஒருசேரக் கொண்டு வந்து , அத்திருக்கோயிலுள் , மெய்யன்பால் , பொருந்த அபிடேகம் புரிந்து , மெய்ம்மையைச் சேர வல்லேன் அல்லேன் . பொய்மையைப் பெருக்கு கின்றேன் . இனி நான் எனக்குச் செய்வது யாது ? நெஞ்சினினைவும் உடலின் செயலும் உரையின் வாய்மையும் ஒன்றுபட நின்று மெய்மையை யுணர்ந்தும் புணர்ந்தும் பிறவி நீக்கமும் பேரின்பாக்கமும் அடையாமல் வாளா நாள் கழிக்கும் பெற்றியேன் நான் , இனி எனக்கு யான் செய்வது என்னே ! செய்வதொன்றறியமாட்டேன் .

பண் :

பாடல் எண் : 7

செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து தடம்பொய்கை யடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக் கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிக ளாரே.

பொழிப்புரை :

செங்கயல்களும் , சேல்களும் தீங்கனியைப் பெற நாடித் தமது நீர்நிலைகளிலிருந்து பாய்ந்து போய் , பெரும் பொய்கையை அடைந்து நின்று கொங்கையழகியரான மகளிர் முழுகும் போதில் அவர் கொங்கைகளைக் கனியென்று கருதிப் பற்றுதலால் வருந்தும் அம்மங்கையரின் மனைமாட்சி நிலவும் மனைகளால் மிக்க நிறையும் வலம்புரத்தார் ( எம் ) அடிகள் ! ( மிக்கு + ஆர் - மிக்கு நிறையும் .)

குறிப்புரை :

செங்கயல் மீன்களும் சேல் மீன்களும் பாய்ந்து , இனியனவாகத் தேம் பழங்களை விரும்பி , தம் நீர் நிலையைத் துறந்து சென்று பெரிய பொய்கையை அடைந்து நின்று , ( கொங்கைகளையுடைய ) மகளிர் நீராடுங்காலையில் , கொழுங்கனிக்கு அழுங்கினாராம் அடிகளார் . மங்கலமனை . மனையில்மிக்கு ஆர்ந்த வலம்புரம் , அழுங்குதல் - இரங்குதல் , பாய்ந்து நாடித் துறந்து போந்து அடைந்து நின்று குடையுங்காலை அடிகளார் அழுங்கினாராம் என்க . நின்று என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகத் திரித்து நிற்ப வெனல் வேண்டும் என்பர் . சான்றோர் செய்யுட்களிற் பயின்று வரும் எல்லாவிடத்தும் அவ்வாறு திரித்தல் வேண்டுமெனின் , பிழை , பாடியதோ ? திரிப்பதோ ? அருகிவருவதேல் திரித்தல் சிறக்கும் . நின்று என்னும் மீன்களின் வினை குடையும் என்னும் கொங்கையர் வினையைத் தழுவிற்றெனின் வரும் பிழை என்னையோ ? ` வினை யெஞ்சுகிளவியும் வேறு பல் குறிய ` என்பதன் உரைக்கண் , சேனா வரையர் எழுதியதுணர்க . ` மங்கலமென்ப மனைமாட்சி `. நின்று , அழுங்கினார் எனும் இரண்டும் கொங்கையர் வினையாகக் கொள்ளல் நேர் . வலம்புரத்து அடிகளார் அழுங்கினார் எனும் முடிபு பொருத்தமற்றதாம் .

பண் :

பாடல் எண் : 8

அருகெலாங் குவளை செந்நெல் அகலிலை யாம்ப னெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும் பழம்விழும் படப்பை யெல்லாம்
குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும் வலம்புரத் தடிக ளாரே.

பொழிப்புரை :

ஊரின் அருகில் எல்லாம் செந்நெற்பயிர்களும் அப் பயிர்களின் இடையே பூத்த குவளை ஆம்பல் நெய்தல் என்ற பூக்களும் உள்ளன . தெருக்களிலெல்லாம் தென்னையும் மாமரங்களும் உள்ளன . மனைக்கொல்லைகளிலெல்லாம் பழங்கள் விழுகின்றன . அவ்வூரில் பறவை இனங்கள் கூடி ஒலித்து இறகுகளை உலர்த்தித் தங்கும் இடங்கள் பல உள்ளன . இத்தகைய வளங்கள் சான்ற வலம்புரத்திலே எம்பெருமான் உகந்தருளி உறைகின்றார் .

குறிப்புரை :

ஊரின் அருகிடமெல்லாம் குவளை மலர்களும் செந்நெற்பயிர்களும் , அப்பயிரிடத்திற் பூத்த இலைகளையுடைய ஆம்பல்களும் நெய்தல்களும் மிக்குள்ளன . தெருக்களிலெல்லாம் தென்னையும் மாமரங்களும் ஓங்கி வளர்ந்துள்ளன . தோட்டங்களிலெல்லாம் பழங்கள் விழும் . ஆங்கே பறவைக் கூட்டங்கள் சேர்ந்து குழுமி ஒலித்து , இறகுகளை உலர்த்தி மருவுதலாகும் இடங்களைக் காட்டும் வளம் பொருந்திய திருவலம் புரத்து அடிகளார் . இதிலும் வினை முடிபு ( தி .2 ப .4 பா .5.) போல இடர்ப்பட்டுக் கொள்ளற்பாலதாயுளது . குழுமல் , குழ்மல் , கும்மல் , கும்பல் , குழுமியொலித்து - கும்மலித்து ( மரூஉ ), ` விளையாடி ` என்பது சொற்பொருளாகாது .

பண் :

பாடல் எண் : 9

கருவரை யனைய மேனிக் கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேற் றிசைமுக னவனுங் காணான்
ஒருவரை யுச்சி யேறி யோங்கினா ரோங்கி வந்து
அருமையி லெளிமை யானா ரவர்வலம் புரவ னாரே.

பொழிப்புரை :

கரிய மலை போன்ற திருமேனியை உடைய கடல் நிறத்தவனாகிய திருமாலும் , திருமகள் தங்குவதற்கு என்று வரையறுக்கப்பட்ட தாமரைப்பூ மேல் உறையும் பிரமனும் காண முடியாதவராய் , ஒப்பற்ற கயிலைமலையின் உச்சியில் மேம்பட்டு உறையும் பெருமான் தம் அருமையை எளிமையாக்கிக் கொண்டு வந்து திருவலம்புரத்திறைவனாக உள்ளார் .

குறிப்புரை :

கருவரை - கரியமலை , அனைய - போன்ற . வரையனைய மேனி என்ற பின் கடல் வண்ணன் என்றது சிறப்புடைத் தாகாது . கருவரையுங்கடலும் போன்ற வண்ணன் ` கார்வண்ணன் `. ` கடல் வண்ணன் ` எனல் வழக்கு . ` பச்சை மாமலைபோல் மேனி ` என்றது மேனியின் பசுமைக் கொப்புரைத்தது . ` கருவரை ` என்றது பேருருவத்திற் கொப்பாயின் மேனி யெனலாகாது . கருமை - பெருமை , மலைமார்பிற்குவமஞ் செய்தல் உண்டு . ` திருவரை அனைய பூ என்றதும் சீரிதன்று . காணான் காணான் என்று தனித்தனி கூறி முடித்துப் பின் , ஒரு மலையுச்சியிலேறி ஓங்கினார் . ஓங்கி வந்து அருமையில் எளிமையானார் என்று சிவபிரானைக் குறித்ததும் பொருந்தாது . பெரியபுராணத்தில் இவ்வலம்புரம் குறிக்கப்படாதது என்னையோ ? இப்பதிகம் பிறர் பாடிச் சேர்த்ததோ ?

பண் :

பாடல் எண் : 10

வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற வரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந் தொலைந்துட னழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பா ரவர்வலம் புரவ னாரே.

பொழிப்புரை :

தன் ஆற்றலைப் பெரிதாக மதித்து கயிலாயத்தைப் பெயர்க்கச் சென்ற இராவணன் தன் தோள்களிருபதும் வாய்கள் ( தலைகள் ) பத்தும் அம்மலைக்கீழ் நசுங்கித் தொலையுமாறு , சிரித்துக் கொண்டே , தம் திருவடிகளால் அழுத்தமாக ஊன்றி அவ்வகையால் அவனது ஊக்கத்தையும் வலிமையையும் போக்கிய அத்தகையர் வலம்புரவனார் ஆவர் .

குறிப்புரை :

வாள் - ஒளி , எயிறு - கோரப்பல் , இலங்க - வெளிர , நக்கு - சிரித்து , ஆள்வலி ` - ` ஆண்மையும் வலியும் ` வரை - அக் கயிலாயம் . கயிலாயந்தன்னைச் சென்ற அரக்கனை வரைக்கீழ் அழுந்த வூன்றித் தீர்ப்பார் வலம் புரவனார் என்று முடித்துக்கொள்க .

பண் :

பாடல் எண் : 1

மாயிரு ஞால மெல்லா மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

ஆவடுதுறையனாருடைய மலர் போன்ற திருவடிகளைப் பெரிய உலகத்தவர் யாவரும் வணங்குவர் . அப்பெருமான் பரவிய பெரிய கங்கா தேவியைப் பரந்த சடையில் வைப்பவர் . மரங்கள் தோறும் காய்கள் மலியும் பெரிய சோலைகளால் சூழப்பட்ட சீகாழி ஊரினராகிய ஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிறந்த ஆயிரம் பொன்களை அளித்தவர் ஆவர் .

குறிப்புரை :

மாய்ஞாலம் வினைத்தொகை . ` மாயிருஞாலம் மறுவின்றி விளங்கப் பல் கதிர் விரிந்தன்றொருமுகம் ` ( தி .11 திருமுருகா .) இத் தொடரிலே யகரமெய் இடை நின்றதன் அமைதியை நன்னூலி லே ( தி .4 ப .16 பா .7) சங்கரநமச்சிவாயப் புலவர் உரையாலறிக . ` ஆயிருதிணை ` ` இவன் ` என்பனவும் இதுபோல்வன . பொருள் கொடுப்பவரை இருளுலகம் எல்லாம் போற்றுமென்பார் , ` மாயிரு ஞாலமெல்லாம் வணங்கும் ` என்றார் . பொருட்காகச் செய்யாதன வெல்லாம் உலகம் செய்யுமென்பார் . ` அடி வணங்கும் ` என்றார் . வாங்கும் வலியரை மெலியராக்கவும் , மெலியரை வலியராக்கவும் வன்மையரேனும் கொடுப்பாராயின் , அவரை மென்மையாராக்கிப் பிறராற் போற்றப் படப் பண்ணவும் வல்லது பொருளாதலின் அது கொடுப்பாரடி வாங்கு வார்க்கு ` மலரடி ` யாகும் என்றார் . இவ்வுலகியலை அருளியலிலும் பொருந்துமா றுணர்த்தினார் . பாய்கங்கை ; இருங்கங்கை . படர்ந்த சடையில் வைப்பர் . காய்பொழில் இரும்பொழில் கழுமலவூரர்க்கு - திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு , ஆயிரம் பொன் கொடுப்பர் .

பண் :

பாடல் எண் : 2

மடந்தைபா கத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங் கொல்புலித் தோலர் போலும்
கடைந்தநஞ் சுண்பர் போலுங் காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

பார்வதி பாகராய் , மான்குட்டியை ஏந்திய கையினராய் , கும்பகோணப்பதியில் இளையவராய் , தம்மால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்தவராய் , கடல் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்டவராய் , கூற்றுவனை வெகுண்டவராய்த் தம்மை அடைந்த அடியவருக்கு அன்பராய் அமைந்துள்ளார் ஆவடுதுறையனார் .

குறிப்புரை :

மடந்தை - உமாதேவியார் , மான்மறி - மான் கன்று , திருக்குடந்தைக் குழகர் , ` கொன்மலிந்த மூவிலை வேற்குழகர் போலும் குடந்தைக் கீழ்க் கோட்டத் தெங்கூத்தனாரே ` ( தி .6 ப .75 பா .1) கொல் புலியினது தோலையுடைவர் என்று விரிக்க . ` கொல்புலி ` என்னும் வினைத்தொகை , ` செய்யும் செய்த என்னுங் கிளவியின் மெய்யொருங்கியலும் தொழில் தொகுமொழியும் மருவின் பாத்திய ; புணரியல் நிலையிடையுணரத் தோன்றா .` ( தொல் . எழுத்து . 482) என்றவாறு நின்றது . பிரிந்து , தோலுக்கும் தோலர்க்கும் அடையாகாமை அறிக . கடைந்த - பாற்கடலில் அமரரும் அசுரரும் நின்று கடைந்த . அடைந்தவர் - புகலடைந்தவர் , போலும் எல்லாம் ஒப்பில்போலி .

பண் :

பாடல் எண் : 3

உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை யாவர் போலும்
செற்றவர் புரங்கண் மூன்றுந் தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி யேத்திக் கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

அடியார்கள் உற்ற துயரைத் தீர்ப்பவராய் அவர் களுக்கு மேம்பாடான துணைவராய் , பகைத்த அசுரரின் மும்மதில்களையும் தீக்கிரையாக்கியவராய் , ஞானதேசிகர்பால் உபதேசம் பெற்ற கல்வியாளராம் அடியவர்களாய்க் கூடிவந்து அலந்து பாடுவோராய்த் தம்மிடமே அற்றுத் தீர்ந்த பற்றினராய் அன்பர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறையனார் .

குறிப்புரை :

உற்ற நோய் :- சகசமாயும் ஆகந்துகமாயும் பொருந்திய மும்மல நோய் , பிறவி நோய் முதலிய பலவும் கொள்க . உறுதுணை :- திருவருளன்றி ஏனைய ( எல்லாம் இடையில் வந்துகழியும் உறாத் துணையே அன்றி , அநாதியாக என்றும் உற்றதுணை ஆகா .) உயிர்த் துணையே உறுதுணை . ( வேறு யாரும் துணையாக உறுவாரை இல்லா தார்க்குத் திருவடியே துணையாக வுறுவன ) ` உற்றாரிலாதார்க் குறுதுணையாவன ` ( தி .4 ப .92 பா .13). செற்றவர் - பகைவர் ; திரிபுரத்தசுரர் . செறுவர் - அழிப்பர் . கற்றவர் - கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிற்கக் கற்ற சிவஞானச்செல்வர் . ( கற்றவர் விழுங்குங் கற்பகக்கனி , கற்றல் கேட்டல் முதலிய ஐந்தும் உடையார் என்றலும் , கற்றல் கேட்டலுடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்த .....` மேவிய பெம்மான் இவன் ` கலத்தல் , உலத்தல் , அலத்தல் , பாடுதல் , அறுதல் ஐந்தும் உடையார்க்கு அன்பர் , கலத்தல் - உள்ளமும் , உயிரும் உணர்வும் கலத்தல் , உலத்தல் - பற்றுவற்றுதல் , அலத்தல் - பாசப்பற்றால் துயருறல் , அறுதல் - பற்றுமுற்றும் அற்றொழிதல் , ` அற்றவர்க்கற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ` இரண்டாவது திருமுறையில் , யாம் எழுதியுள்ளவற்றை உணர்க . ( தி .2 ப .11 பா .4.). திருவடியிற் கலந்து , நாக்கு வற்றி , இதுகாறும் வீண் போக்கிய காலங்குறித்துத் துயர்ந்து படும் பற்றற்ற பரமஞானிகளுக்கு அன்பர் .

பண் :

பாடல் எண் : 4

மழுவமர் கையர் போலும் மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும் என்புகொண் டணிவர் போலும்
தொழுதெழுந் தாடிப் பாடித் தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

கையில் மழுப்படையை ஏந்தியவராய் , பார்வதி பாகராய் , கூரிய நுனியை உடைய சூலத்தை ஏந்தியவராய் , எலும்பினை மாலையாக அணிபவராய் , தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரங்கள் பலவும் சொல்லி அழும் அடியவர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான் .

குறிப்புரை :

மழுப்படை அமர்ந்த கையர் . மாதுமைபாகர் . கூரிதா யெழுந்த துணையுடைய முத்தலைவேலர் . எலும்பையும் அணி யெனக்கொண்டு அணிவர் . மூலாதாரத்தினின்று தொழுது கொண்டு சுழுமுனை நாடி வழியாக மேலெழும் உயிர்ப்பொடும் எழுந்து , உடலை எழுப்பித் தானும் எழுந்து ஆடியும் பாடியும் தோத்திரம் அனைத்தும் சொல்லியும் உருகியழும் அன்புருவானார்க்கு அன்பர் . ` கழலடி தொழுது கைகளால் தூமலர் தூவி நின்று அழுமவர்க் கன்பன் ஆனைக்கா அண்ணலே ` ( தி .5 ப .31 பா .7) ` திருநாமம் மகிழ்ந்துரைத்து அழவல்லார்களுக்கு அன்பு செய்து இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் ` ( தி .5 ப .59 பா .7) ` தொழுதழு தாடிப்பாடும் அன்பலாற் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே ` ( தி .4 ப .40 பா .6). ` அடிகளை நினைந்திட்டு அழுமலர்க் கண்ணிணையடியவர்க்கல்லால் அறிவரிது அவன் திருவடியிணை யிரண்டும் ` ( தி .7 ப .58 பா .10).

பண் :

பாடல் எண் : 5

பொடியணி மெய்யர் போலும் பொங்குவெண் ணூலர் போலும்
கடியதோர் விடையர் போலுங் காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும் வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை 1 ஆள்வர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

நீறணிந்த மேனியராய் , ஒளி வீசும் வெள்ளிய பூணூலை அணிந்தவராய் , விரைந்து செல்லும் காளை வாகனத்தவராய் , மன்மதனை வெகுண்டவராய் , சூட்டினால் வெடித்த தலை மாலையை உடையவராய் , விருப்பத்தோடு முன்நின்று துதிக்கும் அடியவர்களுடைய அடிமையை விரும்புபவராய் உள்ளார் ஆவடு துறைப் பெருமான் .

குறிப்புரை :

திருவெண்ணீற்றுப் பொடி பூசிய திருமேனியர் ; பவளம் போலும் செம் மேனியர் ; பால்போலும் வெண்ணீறு பூசியவர் ; வெண்மை பொங்கும் பூணு நூலணிந்த வேத முதல்வர் ; ( தி .4 ப .56 பா .7) விரைந்து செல்லும் ஒப்பற்ற விடையூர்பவர் ; கருவேளை எரியுண்ணச் செய்தவர் ; வெடித்தலைப்பட்ட தலைகளை மாலையாகப் பூண்டவர் ; பிரம கபாலமுமாம் . தலை மாலை தலைக்கணிந்தவர் சிவபிரான் . வேட்கை - சிவபக்தி , அடிமையை அளத்தல் :- அவரவர் அன்பிற்குத் தக அருளல் .

பண் :

பாடல் எண் : 6

வக்கர னுயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந் தானவர் தலைவர் போலும்
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

வக்கரன் உயிரைப் போக்குவதற்குத் திருமால் தன் கண்ணாகிய மலரை அர்ச்சித்து வழிபட அவருக்குச் சக்கரம் வழங்கியவராய் , தானம் புரிபவர்களுக்குத் தலைவராய் , அறிவற்றவர்களைத் துக்கம் தரும் பிறவித்துயரிலே வீழ்த்துபவராய் , அக்கு மணியை இடையிலே அணிபவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான் .

குறிப்புரை :

வக்கரன் :- ஓர் அசுரன் . அவனைக் கொல்ல வேண்டி , சக்கிராயுதம் பெற அர்ச்சித்த ஆயிர மலருள் , குறைந்த ஒன்றற்கீடாகக் கண் மலர் கொண்டு திருமால் போற்றி வழிபட்டமையால் அப் படையைக் கொடுத்தருளினார் திருவேகம்பனார் . தானவர் - தானம் புரிவோர் . சீவ போதம் அற்றுத் தானான சிவ போதத்தர் . ( தி .4 ப .37 பா .6; தி . 4 ப .38 பா .1) காண்க . அசுரர் தலைவர் எனல் சிறப்பினதன்று . வானவர் தலைவர் என்றது போலத் தானவர் தலைவர் என்றதாக கொள்வார் கொள்க . துக்கத்தையே அடையும் மகாமூடர்களை அத் துக்கம் விளைக்கும் பிறவித் துயரிலே விழுத்துவர் . ( மோட்ச சுகத்தையே நாடிப் பெற முயலும் மகா ஞானிகளை அச் சுகத்தை வளர்க்கும் வீட்டின்பத்திலே அழுத்துவர் ). அக்கு மணியை அரையிற் கட்டுவர் . ` அக்கு ஓட்டினைச் சேய் அரை கரங் கொண்டார்க்கு முலைச் சுவடு நல்குந் திருக்காமக் கோட்டியம்மை ` ( காஞ்சிப் புராணம் ).

பண் :

பாடல் எண் : 7

விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும் உலகமு மாவர் போலும்
அடைபவ ரிடர்க டீர்க்கும் ஆவடு துறையனாரே.

பொழிப்புரை :

காளை வடிவம் எழுதிய கொடியை உடையவராய் , வெள்ளிய பூணூலை அணிந்தவராய் , மழுப்படையை ஏந்தியவராய் , பாயும் இயல்புள்ள புலியின் தோலை உடுத்தவராய் , கீள் உடையை அணிபவராய் , உலகங்களை ஆள்பவராய் , தம்மை அடையும் அடியார்களின் துயரங்களைத் தீர்ப்பவராயுள்ளார் ஆவடுதுறைப் பெருமான் .

குறிப்புரை :

விடையுரு எழுதிய கொடி எடுத்தவர் . வெண்புரி நூல் பூண்டவர் . ` பொங்கு வெண் ணூலர் ` மழுப் படையேந்தியவர் ` மழுவமர் கையர் ` ( தி .4 ப .56 பா .5.) பாய் புலித் தோலுடுத்தவர் . ` கொல்புலித் தோலர் ` க்கு உரைத்தாங்கு உரைத்துக்கொள்க . ` சடையும் பிறையும் சாம்பற் பூச்சும் கீளுடையும் கொண்ட உருவம் `. ` எல்லா வுலகமும் ஆனாய்நீயே `. புகலடைந்தவரை இடர் தீர்த்தாட்கொள்ளும் அருளுருவினர் .( தி .4 ப .38 பா .3) காண்க .

பண் :

பாடல் எண் : 8

முந்திவா னோர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார் நடுவுடை யார்க ணிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார் திரிபுர மெரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

மாலையில் வானத்தில் தோன்றும் பிறையைச் சூடிய ஆவடுதுறைப் பெருமான் , முற்பட்டுத்தேவர்கள் வந்து முறைப்படி வணங்கித் துதிக்க , சிவபாதங்களைத் தம் நெஞ்சில் நடுதலாகிய செம்மையுள்ள நந்தி மாகாளர் என்பவர்களைத் தவிரத் தம்மை வழிபடாது வீணானவரான அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவராவர் .

குறிப்புரை :

வானவர்கள் முந்தி வந்து முறைமையுடன் வணங்கி யேத்தத் திரிபுரம் எரித்தார் . நந்திமாகாளர் என்பவர் நிற்ப எரித்தார் . சிந்தியாதே ஒழிந்தவர்களுடைய திரிபுரத்தை எரித்தார் . வானோர் ஏத்த , நந்திமாகாளர் நிற்ப எரிப்பர் என்க . சிந்தியாதே யொழிந்தது திரிபுரத்தசுரர்வினை . நடுவுடைமை - செம்மையுடைமை . ` செப்ப முடைமை ` ` திருநின்ற செம்மை ` சிவபாதங்களை நெஞ்சின் நடுவுடையவர் எனலும் பொருந்தும் . ` நாட்டினேன் நின்றன்பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே ` என ( தி .4 ப .23 பா .3) முன்னுரைத்தருளியதுணர்க . நந்தி , மகாகாளர் என்பார் சிவகணங்கள் . சிவ ( கிரியா ) பூசை புரிவார் அவரையும் வழிபடுவர் .

பண் :

பாடல் எண் : 9

பானம ரேன மாகிப் பாரிடந் திட்ட மாலும்
தேனமர்ந் தேறு மல்லித் திசைமுக முடைய கோவும்
தீனரைத் தியக் கறுத்த திருவுரு வுடையர் போலும்
ஆனரை யேற்றர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

தம் பத்து அவதாரங்களுள் ஒன்றான பன்றி அவதாரத்திற் பூமியை அண்டவெளியிலிருந்து பெருவெள்ளத்தில் பெயர்த்தெடுத்த திருமாலும் , தேன் மிக்க தாமரையின் அகவிதழிலிருக்கும் பிரமனும் தாம் தீத்தம்பத்தின் அடியையோ முடியையோ காணமாட்டாத துயரத்தினராக அவர்கள் மயக்கத்தைப் போக்கிய அழகிய வடிவினை உடையராய் , வெண்ணிறக் காளை வாகனமுடை யவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான் .

குறிப்புரை :

பான் - பத்துத் தோற்றம் ( தசாவதாரம் ). ஆகுபெயர் . அவற்றுள் ஒன்றாக அமர்ந்த ஏனம் . பான் அமர் ஏனம் வராகாவதாரம் , ஒருபான் , ஒன்பான் என்பவற்றுள் , ` பஃது ` பான் எனத் திரிந்தவாறறிக . பால் - பிரிவு , உயர்திணைப்பால் , அஃறிணைப்பால் , ஆண்பால் பெண்பால் முதலியன . வகை . நமர் - நம்மினத்தவர் . திருமாலும் நான்முகனும் நம்மைப்போலச் சகலர் , ` நம்மவர் அவரே மூவரென்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல் தேவரென்றே , இறுமாந்தென்ன பாவம் திரித ( ர் ) வரே ( தி .8 திருவாசகம் ) வகையால் நம்மவர் எனலுமாம் , பானமர் என்றதற்கு வேறு பொருளுமுளவேற் கொள்க . பால்நமர் - வகையால் நமருள் , ஏனம் - பன்றி , பார் - நிலம் , இடந்திட்ட - போர்த்திட்ட , தேன் - வண்டு , அமர்ந்து - விரும்பி , அல்லி - அகவிதழ்களைக் குறித்துத் தாமரைக்கு ஆகிய பெயர் . நாற்றிசைக் கொன்றாய முகத்தன் . கோன்மை அவனது தத்துவ புவனத்தெல்லை யளவுடையது . தீனர் - முழுமுதல்வனைக் காணுஞ் செல்வத்தை அடையாத வறியர் ; துயராளர் . காணமாட்டாத் துயரத்தினர் . தியக்கு - கலக்கம் . ஆன் + நரை + ஏற்றனர் - ஆன் வெள்ளேறூர்பவர் . ` நரை வெள்ளேறு `, ஏற்றர் - ஏறுடையவர் .

பண் :

பாடல் எண் : 10

பார்த்தனுக் கருள்வர் போலும் படர்சடை முடியர் போலும்
ஏத்துவா ரிடர்கள் தீர வின்பங்கள் கொடுப்பர் போலும்
கூத்தராய்ப் பாடி யாடிக் கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவா யலறு விப்பார் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

ஆவடுதுறைப் பெருமானார் அருச்சுனனுக்கு அருள் புரிந்தவராய் , விரிந்து பரவிய சடைமுடியை உடையவராய் , தம்மை வழிபடுபவர்களுடைய துயரங்கள் தீர அவர்களுக்கு இன்பம் நல்குபவராய் , கூத்தாடுபவராய்ப் பாடியும் ஆடியும் விளங்குபவராய் உள்ளார் . அவர் , கொடிய வலிமையை உடைய இராவணனை , அவன் ஆரவாரித்துக் கொண்டு கயிலைமலையைப் பெயர்க்க வந்த அளவில் , அவனுடைய வாய்கள் துயரம் தாங்காமல் அலறுமாறு செய்தவராவர் .

குறிப்புரை :

பார்த்தன் - அருச்சுனன் , படர்ந்த சடைமுடியுடையவர் , ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் :- தி .4 ப .22 பா .8; ப .23 பா .6 ப .24 பா .4,9. வேண்டுவார் வேண்டுவதே ஈதலில் அவரவர் இடர் தீர்த்தலும் அடங்கும் , கூத்தரானார் . பாடினார் , ஆடினார் , கொடியவலியுடைய இராவணனை அலறச் செய்தார் . ஆர்த்தல் - ஒலித்தல் , ஆரவாரஞ் செய்தல் , ஆர்த்தவாய் பத்தும் அலறுவித்தார் . அலறல் - அழுதல் .

பண் :

பாடல் எண் : 1

மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

ஆவடுதுறைப் பெருமானே ! வலிமை உடையவனே! மணியே ! மரகத மணிக் குவியலே! அடியேனுடைய உள்ளத்திற் புகுந்து உன்னை நினைக்கும் நிலையை இன்று தந்துள்ளவனே! யான் உயிர் நீக்கும் போது வந்து அடியேனுக்குத் துணையாக நின்று அஞ்சாதே என்று நீ அருள் செய்யவேண்டும் .

குறிப்புரை :

மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ . போலி எனலும் ஆம் , ஆனாய் என்ற இரண்டும் விளி , மணி - மாணிக்கம் . மரகதத்திரள் - மரகதக்கொத்து ; ஆகுபெயராய் ஒளித் திரளுமாம் . நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே :- நெஞ்சு நினைத்தற்கருவி அதனுள்ளே புகுந்து நிற்றல் நினைப்பித்தற்கு . நினைவைத் தருதல் . அது நினைப்பிப்போன் நிகழ்ச்சி . அந்நிகழ்ச்சியை யுடையோனை நிகழ்வினான் என்றருளினார் . நெஞ்சினைத் தூய்மை செய்து நினையுமா நினைப்பியாதே வஞ்சமே செய்தி ` ( தி .4 ப .23 பா .9) ` துஞ்சும்போதும் துயிலின்றி யேத்துவார் ` ( தி .4 ப .112 பா .9.) க்குத் , ` துஞ்சும்போதும் சுடர் விடுசோதியை நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை ` என்றருளியதுணர்க . அதனை உணர்ந்த அநுபவத்தால் , அந்நிலை , இடையீடுபடாதவாறு . துஞ்சும் போதாக எனக்குத் துணையாகி வந்து நின்று அஞ்சல் என்று அருளவேண்டும் என்று வேண்டினார் . பிறர்க்குத் துணையாகிய வரலாறு பல அறிவேன் . அதனை நான் அனுபவத்தில் அறியக்காட்டு என்பார் ` எனக்கு ` என்றார் .

பண் :

பாடல் எண் : 2

நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பு நாயே னுள்ளுற வைவர் நின்றார்
தானுகந் தேயு கந்த தகவிலாத் தொண்டனே னான்
ஆனுகந் தேறு வானே ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

காளையை விரும்பி ஏறிஊர்பவனே ! ஆவடு துறைப் பெருமானே ! நான் விரும்பி உன்னை அணுகி வரக் கருதிய போதும் , உடம்பையே விரும்பிப் பாதுகாக்கும் அடியேனுடைய உட்புறத்தில் நிலையாக நிற்கும் ஐம்பொறிகளும் விரும்புவனவற்றையே யானும் விரும்பிச் செயற்பட்டு உன் தொண்டன் என்று கூறும் தகுதி யற்றவனாய் உள்ளேன் .

குறிப்புரை :

உகந்து - விரும்பி , உயர்ந்து , நான் நாளும் உன்னை உகந்து நணுகுமாறு கருதியுங்கூட , நாயேன் ( மல நடைப்பயிற்சி மிகுதியால் ) ஊனுடம்பை உகந்து ஓம்புகின்றேன் . ஓம்பும் நாயேனது உள்ளே உற ஐவர் நின்றார் . அதுவே ஏது . உன்னை உகத்தலின் நீங்கி ஊனை உகத்தற்குப் பிறவிதோறும் ஐவர் உகந்ததையே உகந்து பயின்று வந்து , உன்னை உகந்து நணுகுந்தக வில்லாதேன் நான் . உகந்ததே என்றது ` உகந்தே ` என நின்றது . ` தான் ` என்பது அசை . நின்றார்தாம் எனல் வேண்டுவது எதுகை நோக்கி . நின்றார்தான் எனலாயிற்று எனலுமாம் . ( தி .4 ப .27 பா .6) குறிப்பு நோக்குக . ` தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான ` என்புழித் ` தாம் ` என்றது போல்வது இது . அது ` தாம் `. இது ` தான் `. தான் :- அவர் என்னும் சுட்டுப் பொருட்டு . உகந்ததே உகத்தல் தகவிலாதது . கான்றசோறென அருவருத்தல் செய்யாமையே அது . ` காலாக்கினி புவனமுதல் அநாசிருத புவனம் ஈறாயுள்ள எவ்வகைப் பட்ட புவனமும் இதற்குமுன் அனுபவித்துக் கழித்தமையிற் கான்றசோறெனக் கண்டு அருவருத்துவிட்டு , அறுவகை அத்துவா வுட்பட்ட மூவகைப் பிரபஞ்சமும் காரண ரூபத்திற் சிறிதும் காணப் படாமையாற் பித்திகை வடிவம் காண்பார்க்குக் காணப்படாதாய் அதன்கண் மறைந்த சித்திர வடிவம்போல முழுப்பொய் எனக் கண்டு , அவ்வாறு கண்ட காட்சி சலியாதிருத்தல் வேண்டும் ( சித்தியார் . சூ . 9:- 6 உரை ) அச் சலித்தலுக்கு அடிப்படை ஐவர் குறும்பேயாகி அவர் உகந்ததே உயிர் உகத்தலாகிய தகவன்மை . ஆண் - எருது . உகந்து - உயர்ந்து ; விரும்பி என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி யாளாய்
ஒட்டவே யொட்டி நாளு முன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் றலைகை யேந்திப் பலிதிரிந் தூர்க டோறும்
அட்டமா வுருவி னானே யாவடு துறையு ளானே.

பொழிப்புரை :

தன் பரிசழிந்த பெரிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை எடுத்து ஊர்கள்தோறும் திரிந்தவனாய் உள்ள அட்ட மூர்த்தியாம் ஆவடுதுறைப் பெருமானே! அடியேன் துன்பம் மேவுதற்குக் காரணமான வினைகள் சாராதவாறு தடுத்து , உனக்கு அடியவனாய் , நீ அருட் கண்ணால் நோக்கி அடியேன் உயிரோடு ஒட்டும்படியே , அடியேனும் உன்னோடு ஒட்டி நாளும் உன்னைத் தியானித்தலைச் செய்ய இயலாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

கட்டமே ஆன வினைகள் இவை காத்து நோக்கி ஆளாய் என்க . கட்டம் :- வடசொற்றிரிபு ( தி .4 ப .57 பா .4.) வினைகளான இவை எனலுமாம் . கட்டம் மே - துன்பம் மேவுதற்குக் காரணமான ( வினைகள் ). காத்து - சாராதவாறு தடுத்து . நோக்கி - அருட்கண்ணாற் பார்த்து . ஒட்டவே - உயிரோடு நீ ஒட்டும் படியே . ஒட்டி - நான் உன்னொடு ஒட்டி , ` உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி ` ` ஒட்டியாட் கொண்டு போயொளித்திட்டவுச்சிப் போதன் ` ( தி .7 ப .59 பா .10) நாளும் என்னுள்ளே உன்னை வைக்க மாட்டேன் . பட்டதலை ; வான்தலை . ` வெடி படு தலையர் ` ( தி .4 ப .56 பா .5) குறிப்பு நோக்குக . பிரமகபாலம் . பலிக்காகத் திரிந்து . ஊர்கள் தோறும் திரிந்து . கள்ளீறு தோறு என்ற இரண்டுள் ஒன்று பன்மை குறிக்கப்போதும் . ஆயினும் பின்னது ஒவ்வொரூரையும் குறிக்க நின்றது . அட்டமாவுரு - அட்டமூர்த்தம் . ` அட்டமாமலர்கள் ` ( தி .4 ப .41 பா .2) ` அட்டமாநாகம் ` ( பா .5) என்று பாடம் போல்வது . மாவுரு - பெருவடிவம் . மே :- முதனிலைத்தொழிற்பெயர் .

பண் :

பாடல் எண் : 4

பெருமைநன் றுடைய தில்லை யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையா லுன்னை யுள்கி யுகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக் கட்டமே கழிக்கின் றேனான்
அருமையா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

பெருமைகளை மிகுதியாக உள்ள தில்லைத் திருத்தலத்தைப் பற்றிப் பேசி நல்வினையைத் தேடிக் கொள்ளமாட்டேன் . ஒருமைப்பட்ட உள்ளத்தாலே உன்னை நினைத்து உகந்து பேசி வீட்டுலகை அடையமாட்டேன் . ஆணவச் சார்பால் எய்திய உடம்பைத் துயரத்திலேயே கழிக்கின்றேன் . நுகர்தற்கு அரிய விடத்தை உண்டு அருளிய ஆவடுதுறைப் பெருமானே ! அடியேற்கு அருளுக .

குறிப்புரை :

பெருமை நன்று (- பெரிதும் ) உள்ள தில்லை என்று ( ஒருமுறையேனும் ) உன் திருத்தலம் என்று பேசிச் சிவநல்வினை தேடிக்கொள்ளமாட்டேன் . உடையது இல்லை எனல் சிறவாது . ஒருமை நெஞ்சொருமையுடன் , உன்னை நினைத்து , உயர்ந்து , வீட்டுவகை அடையமாட்டேன் . கருமை - ` காரிட்ட ஆணவக் கருவறை ` ( தாயு மானவர் ) கருமை இட்டு ஆயஊன் - ஆணவச் சார்பால் எய்திய ஊனுடம்பு . கட்டமே - கட்டத்திலே . நான் கழிக்கின்றேன் . உண்ணுதற்கு அருமையாம் நஞ்சத்தை ( எளிதாய் ) உண்ட .

பண் :

பாடல் எண் : 5

துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை யகப்பட் டேனைக்
கட்டனா வைவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை மகிழ்வோடு ஒரு பாகமாக்கொண்டு எட்டுப் பெரிய பாம்புகளை ஆட்டுகின்ற ஆவடுதுறைப் பெருமானே ! கொடியவனாய் வினை என்று சுழியில் அகப்பட்ட என்னைப் பாசத்தை உடையேனாக ஐம்பொறிகள் கலக்க முடியாதபடி பாதுகாத்து உன் அடியவனாகக் கொள்வாயாக .

குறிப்புரை :

துட்டன் - கொடியன் . ` வினை ` என்னும் சுழியுள் அகப்பட்ட என்னை ` பிறவிச் சுழி ` ( தி .4 ப .96 பா .3) கட்டனாக உள்ள என்னை ஐவர் வந்து கலக்காதவாறு காத்து . ஆளாக்கிக் கொள்வாய் . கட்டன் - பாசத்தை உடையவன் ( பசு ) ` கட்டனேன் பிறந்தேன் உனக்காளாய் ` ( தி .7 ப .54 பா .2) கட்டு - பொய் . கட்டன் - பொய்யன் எனலும் ஆம் . கட்டனல்லன் எனில் , ஐவர் கலக்கமாட்டார் . மட்டு - தேன் . கோதை - கூந்தல் ; மாலை ; மாது ; மாலையைச் சூடிய கூந்தலையுடைய மாது என முப்பொருட்கும் பொதுவாய் நின்றதொரு பெயர் . ஒரு பாகம் மகிழ்ந்து வைத்து , அட்டநாகம் , மாநாகம் , எட்டுப் பாம்பு ஆட்டும் இறைவன் ` புற்றிலாடர வாட்டும் புனிதனார் ` ( தி .5 ப .87 பா .3) ` அட்டபுயங்கப் பிரான் ` புயங்கம் - பாம்பு . ` கரிய பாம்பும் பிடித்தாடி `.

பண் :

பாடல் எண் : 6

காரழல் கண்ட மேயாய் கடிமதிற் புரங்கண் மூன்றும்
ஓரழ லம்பி னாலே யுகைத்துத்தீ யெரிய மூட்டி
நீரழற் சடையு ளானே நினைப்பவர் வினைக டீர்ப்பாய்
ஆரழ லேந்தி யாடும் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

கரிய நெருப்பைப் போன்ற விடத்தை கழுத்தில் இருத்தி , பெரிய மதில்களை உடைய முப்புரங்களையும் ஒரு தீ அம்பைச் செலுத்தித் தீயினால் எரியுமாறு செய்து , கங்கையைத் தீப்போன்ற சடையில் வைத்துத் தன்னை விரும்பும் அடியவர்களுடைய வினைகளைத் தீர்ப்பவனாய் அரிய நெருப்பை உள்ளங்கையில் ஏந்திக் கூத்து நிகழ்த்தும் ஆவடுதுறைப் பெருமானே !

குறிப்புரை :

கார் அழல் - கரிய தீப்போலும் வெய்ய நஞ்சம் . அழல்போலும் நஞ்சு , உவமவாகுபெயர் , கண்டம் - திருக்கழுத்து , மேயாய் - பொருந்தியவனே ; விரும்பி ( யருந்தி ) யவனே , கடி - காவல் , ஓர் அம்பு , ஈரம்புகண்டிலம் ஏகம்பர் தம்கையில் ஓர் அம்பே முப்புரம் உந்தீபற ; ஒன்றும் பெருமிகையுந்தீபற ` ( தி .8 திருவா .) அழல் அம்பு - தீக்கணை ( தி .1 ப .11 பா .6, தி .2 ப .50 பா .1, தி . 6 ப .86 பா .10, தி .7 ப .16 பா .5). உகைத்து - செலுத்தி . நீர் - கங்கையைச்சூடிய , அழற் சடை :- உவமத்தொகை . அழல்போலும் ஒளிர் செஞ்சடை . நினைப்பர் - இடைவிடாது தியாநம் புரிபவர் . ஆர் அழல் - பொறுத்தற்கரிய தீ , பண்புத்தொகை . ஆர்ந்த அழல் என வினைத்தொகையுமாம் . அழலை ஏந்தி ஆடும் :- ` தீத்திரள் அங்கையேந்தி நின்றார் ` ( தி .5 ப .26 பா .2).

பண் :

பாடல் எண் : 7

செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லே னினையுமா நினைய மாட்டேன்
அறிவிலே னயர்த்துப் போனே னாவடு துறையு ளானே.

பொழிப்புரை :

ஆவடுதுறைப் பெருமானே ! மனத்திலே அலைதல் இன்றி செறிவு இல்லாதேனாய்ச் சிவன் அடிகளை அறிய மாட்டேனாய்க் குறிக்கோள் இன்றி நற்பண்பின்றிப் பெரியோர்கள் கூறும் வழியிலே உன் புகழைச் சொல்ல மாட்டாதேனாய் நல்வழியில் செல்லும் அறிவில்லேனாய் நினைக்க வேண்டிய வழியிலே நினைக்க மாட்டேனாய் இவ்வாறு உண்மை அறிவு இன்மையால் புல்லறிவினால் மயங்கிப் போயினேன் .

குறிப்புரை :

சிந்தையுள்ளே செறிவிலேன் :- ` நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிகப்பொல்லேன் ` ( தி .7 ப .73 பா .4) சீலம் இன்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றி ` ` செறிவுண்டேன் மனத்தாற் றெளிவுண்டேற்றேற்றத்தால் ` ( தி .7 ப .59 பா .5) யோகம் அந்தக்கரண சம்பந்தம் உடையது . ஞானாவத்தை யெல்லாம் உணர்வின்கண் நிகழ்வன . இருவேறவத்தையும் ஒன்றென்றுணர்ந்து மயங்கியிடர்ப் படுவோர் பலர் . யோகிற்றருவதோர் சமாதிதானும் தாழ்ந்து பின் சனனஞ்சாரும் சித்தியார் ( சூ 4:- 34) என்றதன் உரையில் , ` இந்த யோகாவத்தையைத் தானே மீட்சியில்லாததாகிய ஞானாவத்தை போலும் எனக் கொண்டு ) மயங்குவார்க்கு அங்ஙனம் மயங்காமைப் பொருட்டு இதனை அதனோடு ஒப்பவைத்து ஈண்டுக் கூறினார் . ` சகலத்திற் சுத்தம் ` ( சிவஞா . மா - முனிவர் உரை ). சிவனடி - திருவருள் . குறி - உயிர்க்குச் செல்வழி முடிவாகிய இலக்கு . இது மெய்ந் நெறிக்குறி . பொய்ந்நெறிக்குறிபோல இதுவும் பல்வேறாகும் . ஆயினும் சைவ சித்தாந்தமார்க்க லட்சியமே ஈண்டுக் குறி எனப்பட்டது . ` குறிக் கோளிலாது கெட்டேன் ` ( தி .4 ப .67 பா .9) குணம் ஒன்று - அருளை யடைதற்குரிய பண்புகளுள் ஒன்று . கூறும் ஆ ( று ) - வேத சிவாகமங்களிற் சொல்லும் வண்ணம் . கூற - உன் புகழ் சொல்ல , நெறிபடுமதி - திருவருணெறியிற் பொருந்தும் அறிவு , மதிநுட்பமுமாம் . நினையுமா ( று ) - சிவாகம விதிப்படி தியானம் புரியும் முறைமை . அறி விலேன் - நூலறிவு இல்லேன் . அயர்ந்து - இளைத்து . ` மதிநுட்பம் நூலோடுடையார்க்கு அதி நுட்பம் யாவுள முன் நிற்பவை ` ( குறள் ) என்புழிப் போல , மதிநுட்பத்தை ` நெறிப்படுமதி ` என்றும் நூலை ` அறிவு ` என்றும் குறித்ததாகக் கொள்ளலாம் . ` போனேன் ` :- போதல் ஈண்டு மெய் வினையன்று , அறிவின் நிலைமை .

பண் :

பாடல் எண் : 8

கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய
சீலமே யறிய மாட்டேன் செய்வினை மூடி நின்று
ஞாலமா மிதனு ளென்னை நைவியா வண்ண நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட வாவடு துறையு ளானே.

பொழிப்புரை :

ஆலகால விடத்தை உண்ட ஆவடுதுறைப் பெருமானே ! அழகிய பார்வதி பாகனான அழகினை உடைய உன் தன்மையை அறிய மாட்டேனாய் யான் செய்யும் இருவினையும் என்னைப் பிணித்து இவ்வுலகப் பாசத்துள் என்னை வருத்தாத வகையில் அடியேனை விரும்பிப் பாதுகாப்பாயாக .

குறிப்புரை :

கோலம் - அழகு . மாமங்கை - பெரியநாயகி ; ஒப்பிலா முலையம்மை , ஒருகோலம் - ஒப்பற்ற அம்மையப்பர் திருக்கோலம் , சீலம் - தன்மை , ` சீலமோ உலகம் போலத் தெரிப்பரிது `. ( சித்தியார் ), செய்வினை மூடி நின்று ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் - யான் செய்த இருவினையும் பந்தித்து நின்று பிரபஞ்சமாகிய இப்பாசத்துள் என்னை அழுத்தி வருத்தப் படுத்தாதவாறு காத்தருள்வாய் . ஆலமாம் நஞ்சு - ஆலகாலவிடம் , நஞ்சு பலவற்றுள் ஆலகால மென்பது இஃது என்று பிரித்துணர்த்திய அடைமொழி .

பண் :

பாடல் எண் : 9

நெடியவன் மலரி னானுந் நேர்ந்திரு பாலு நேடக்
கடியதோ ருருவ மாகிக் கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே யென்றுதாம் பேச லாகார்
அடியனே னெஞ்சி னுள்ளார் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தம்முள் உடன்பட்டு அடியும் முடியும் தேடுமாறு விரைவில் தீத்தம்பமாய் நின்ற தன் வடிவமும் தன் நிறமும் இன்ன என்று தம்மால் பேச இயலாதாராக அவ்விருவரும் இருக்க ஆவடுதுறைப் பெருமான் அடியேன் உள்ளத்துள்ளே நிலையாக வீற்றிருக்கிறான் .

குறிப்புரை :

நெடியவனும் மலரினானும் . நேர்ந்து - உடன்பட்டு , பால் - ( மலரோன் மேலும் மாயோன் கீழும் ஆகச் சென்ற ) பக்கம் . நேட ( தேட ) நீட என்பதன் மரூஉ . கடியதோருருவம் :- ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதியால் எய்தும் கடுமையுடையதோருட் குடைமை கனலும் எரிவடிவம் உருவும் வடிவும் வேறுபட்டன . ` பல் வகை வடிவு ..... பொருட்குணம் ` ( நன்னூல் . 454) ` உருவுட்காகும் ` ( தொல்காப்பியம் , சொல் , உரி . 4) ` ஒப்பும் உருவும் வெறுப்பும் கற்பும் ஏரும் எழிலும் சாயலும் நாணும் மடனும் நோயும் வேட்கையும் நுகர்வும் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள ` என்றார் ( தொல் . பொருளியல் இறுதி ). வண்ணம் வடிவு அளவு சுவை என்னும் பண்பின் வகையுள் ஒன்றாய்க்கட்புலனாவது வடிவு , கட்புலனாகாது நெஞ்சு கொளற்பாலது உருவு எழுத்தின் ஒலி உருவரி வடிவு இரண்டும் பாயிரத்தினுரையில் நச்சினார்க்கினியரால் விளக்கப்பட்டமை உணர்க . வண்ணம் வடிவை இடமாகக்கொண்டு கட்புலனாவது . உருவை நிலைக்களமாகக்கொண்டு நெஞ்சு கொளற்பாலதாம் வண்ணமும் உண்டு . ` இன்னவுருவென்றறிவொணாதான்றான் காண் ` ( தி .6 ப .49 பா .8) ` அவன் இவன் என்று யாவர்க்கும் அறியவொண்ணாச் செம் பொன் காண் ` ( தி .6 ப .85 பா .3) ` இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே ` ( தி .6 ப .97 பா .10) என்று அருளியவை வடிவு வண்ணங்களைப் பேச லாகாமையுணர்த்தும் . என்றே என்று என்றது ` ஒன்றே என்று ` என்று இருந்ததோ ? பேசலாகாதவராயினும் , அடிமைத் திறமுடையார் நெஞ்சினின்றகலான் என்பார் , அடியனேன் நெஞ்சினுள்ளார் ` என்ற அநுபவத்தை யுணர்த்தினார் . ` பேசலாகார் ` என்பது பேசுதலுக்கு அகப்படாதவர் ; சிந்தையும் மொழியுஞ்செல்லாத நிலைமையர் என்னும் பொருட்டாம் . பேசலாகாது என்ற வழக்கின் பொருளதுமாகும் .

பண் :

பாடல் எண் : 10

மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கை யஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே தாங்கினான் வலியை மாள
வுலப்பிலா விரலா லூன்றி யொறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

கயிலைமலைக்கு நேராக இராவணன் சென்று சேரப் பார்வதி அஞ்சத் தன் தலைக்கு மேலே கைகளாலே அம் மலையைப் பெயர்க்கத் தாங்கிய அவன் வலிமை அழியுமாறு என்றும் அழிவில்லாத தன் கால்விரலால் ஊன்றி அவனைத் தண்டித்து , அலைகளை உடைய சடையில் கங்கையைச் சூடும் ஆவடுதுறைப் பெருமான் பின் அவனுக்கு அருள் செய்தான் .

குறிப்புரை :

மலைக்கு - திருக்கைலையங் குன்றத்துக்கு . சென்றுற - போய் நிற்க . மங்கை - உமாதேவியார் . தலைக்குமேற் கைகளாலே தாங்குதல் :- மலையைக் கைகளால் எடுத்துத் தலைக்குமேலே தூக்கிப் பிடித்துத் தாங்குதல் . தாங்கினானது வலியை , மாளஊன்றி ஒறுத்து , செய்து சூடும் ஆவடு துறையுளான் என்க . உலப்பு இலாவிரல் :- அழிவிலாத திருக்காற்பெருவிரல் . உலப்பிலாவொன்றே உணர்வு சூழ் கடந்ததோருணர்வே `, அலைத்த கங்கை . வான் ( ஆகாச ) கங்கை .

பண் :

பாடல் எண் : 1

கன்றினார் புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னா னீர்மையு நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமு மூர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து , தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும் அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார் . அப்பெருமான் திருப்பருப் பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் .

குறிப்புரை :

கன்றினார் - சினந்தபகைவர் . கனலும் எரி , சீறி நின்றதோர் உருவம் . நீர்மை - குளிர்ந்த இயல்பு , நீர்மை ஒளியுமாம் . நிறை - அருளால் நிறுத்தும் ஆற்றல் ,` நிறை - ஐம்பொறிகளையும் அடக்குதல் . ( தி .8 திருக்கோவை . 31) என்பது ஈண்டுப் பொருந்தாது . ஆங்கு உமையும் தாமும் ஒன்றி , ஊர் ( தொறும் ) பலி தேர்ந்து . அருச்சுனன் பொருட்டுப் பன்றிப் பின்வேடரான வரலாறு முன்னும் பின்னும் உண்மை அறிக . பன்றியது பின் ` பன்றிப் பின் `:- ` இகரவீற்றுப் பெயர் திருபிடனுடைத்தே ` ( தொல் . தொகைமரபு 12) ` இகரவிறுதிப் பெயர் நிலை முன்னர் வேற்றுமையாயின் வல்லெழுத்துமிகுமே ` ( தொல் . உயிர் மயங்கு , 33) உருபியலில் இகரவீறு கூறப்பட்டிலது . ( தொல் . இயல் 39.40.42.45.46 உருபிற்குச் சாரியை கூறுவன ) இப் பருப்பதம் அருச்சுனம் ( தலைமருது ) ஆதலின் , அருச்சுனனை நினைந்து , ஆண்டவனைப் பாடியதாயிற்று .

பண் :

பாடல் எண் : 2

கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையி னீரை யேற்றமுக் கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

முனிவர்களுக்குக் கற்பித்தல் வகையால் தாம் கற்ற வேதங்களைப் பாடி , வீட்டுவாயில்தோறும் பிச்சை எடுப்பவராய் , மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி , தேவர்கள் வணங்கி வாழ்த்துமாறு கங்கை முழுவதையும் தம் சடையில் ஏற்ற முக்கட்பெருமான் தம்மைப் பற்றிய அடியவர்கள்மாட்டு அன்பு செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் . ( காட்டிக் காண்டல் என்ற நயம்பற்றிக் கற்பித்துக் கற்ற எனப்பட்டது .)

குறிப்புரை :

கற்றமாமறைகள் :- முதல்வன் ` கல்லாதன எல்லாம் கற்பித்தான் ` ` கலைஞானங் கல்லாமே ` கற்பித்தான் ஆதலின் அவன் ஒன்றும் கற்றலின்று எனினும் , தான் கற்பிக்கத் தன்னைத் தம்முட் கொண்டு உயிர்கள் கற்குந் தொழிலைத் தனதாக்கிக் கோடலால் கற்றானுமாவன் . ` கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னை ` ` அடைவார் தம் பாவம் போக்கக் கற்றவன் ` ஆதலால் தனக்குங் கற்றற்றொழில் உண்டெனலுமாம் . கடை - வாயிற் கடை . வற்றல் தலை . ஒர் வற்றற்றலை , ` வற்றலோடு கலனாப்பலி தேர்ந்து எனதுள்ளம் கவர்கள்வன் `; ஓர் சடையிற் கங்கை நீரை முற்ற ஏற்ற முக்கண்ணர் . வணங்கி வாழ்த்த ஏற்ற முக்கண்ணர் . வாழ்த்த முற்ற ஏற்ற கண்ணர் . பற்றினார் - பற்று விடற்குப் பற்றற்றான் பற்றினைப் பற்றியவர் .

பண் :

பாடல் எண் : 3

கரவிலா மனத்த ராகிக் கைதொழு வார்கட் கென்றும்
இரவுநின் றெரிய தாடி யின்னருள் செய்யு மெந்தை
மருவலார் புரங்கண் மூன்று மாட்டிய வகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

இரவிலே தீயில் நின்று ஆடுபவராய் , பகைவருடைய மும்மதில்களையும் அழித்த செயலினராய் , வஞ்சனை யில்லாத மனத்தவராகிக் கையால் தொழும் அடியவர்களுக்கு என்றும் இனிய அருள்கள் செய்யும் எம் தந்தையாராகிய பெருமான் தம்மை முன்நின்று துதிப்பவர்களுக்குப் பல அருள்செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் .

குறிப்புரை :

கரவு - கரத்தல் ; குறை காட்டல் ; உள்ளதை மறைத்தல் , கரத்தல் ஒருவற்கு வேண்டுவதொன்று அன்மையின் நோய் ( இடும்பை ) ஆகும் என்பது ( திருக்குறள் 1056 உரை ) உணர்க . ` கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை ` ( தி .4 ப .7 பா .1). ` கைதொழுவார்க்கு என்றும் இரவு நின்று எரியது ஆடி இன்னருள் செய்யும் எந்தை ` என்றதில் உள்ள உண்மையைக் கூர்ந்துணர்வர்க்கு ` இருள் அடராது உள் உயிர்க் குயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது ` ( கொடிக்கவி ) என்னும் சைவ சித்தாந்தச் செம்பொருட்டுணிவுகளுள் ஒன்று தெளிவுறும் . மருவலார் - பகைவர் . மாட்டிய - எரிகொளுத்திய ; மாளச் செய்த , ` மாள் ` தன்வினை முதனிலை , ` மாட்டு ` பிறவினை முதனிலை , ` கொள் ` ` கொட்டு ; ` விள் ` விட்டு ` பூண் ` ` பூட்டு `. பரவுவார் - வாழ்த்துவார் .

பண் :

பாடல் எண் : 4

கட்டிட்ட தலைகை யேந்திக் கனலெரி யாடிச் சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிக் சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு வேறிருந் தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

பண்டு உடலோடு பொருந்தியிருந்து பின் நீங்கிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்தி , சாம்பலைப்பூசி , சுடுகாட்டில் தங்குபவராகி , உலகப்பற்றினை நீக்கிய அடியவர்களுக்குச் சிறப்பாக அருள்கள் செய்து பட்டுடையை அணிந்த பெருமான் பருப்பதம் நோக்கினாரே .

குறிப்புரை :

கட்டிட்ட - கட்டிய . எரியில் ஆடி , சுட்டிட்ட - சுட்ட . சுடுகாடு எனினும் காட்டைச் சுடுவதில்லை , பிணத்தையே சுடுப . ` சுடுபிணக்காடு ` என்றலே சிறந்தது . அக்கருத்தில் வழங்குவது ` சுடுகாடு `. காட்டிலாடுவாரைக் ` காடர் ` என்றார் . விட்டிட்ட - விட்ட ; நீங்கிய , வேட்கை விட்டவர்க்குத் தனிச் சிறப்பாக அருள்கள் செய்து . பட்டுஇட்ட :- இட்டபட்டுமாம் . ` ஊனுயிர்வேறு செய்தான் ` என்புழிப் போல , ஈண்டும் (` வேறு ` என்பதற்குப் ) பொருள்கொள்க .

பண் :

பாடல் எண் : 5

கையராய்க் கபால மேந்திக் காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல் விளங்கு வெண் ணீறுபூசி
உய்வரா யுள்கு வார்கட் குவகைகள் பலவுஞ் செய்து
பையரா வரையி லார்த்துப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

மண்டையோட்டை ஏந்திய கையினராய் , மன்மதனை நெற்றிக் கண்ணால் வெகுண்டு சாம்பலாக்கி , வடிவை எடுத்துக் கொண்டவராய் , உடம்பிலே விளங்கும் வெண்ணீற்றைப்பூசி , தாம் கடைத்தேறுபவர்களாய்ப் பெருமானாகிய தம்மைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்து , படம்எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிப் பெருமான் பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

கபாலத்தையேந்திய கையராகிக் காமவேளைத் தீக் கண்ணால் தீய்த்து , மெய்யராகவே திருமேனியராதலை நிறுவி , மேனியின்மேல் ( தி .4 ப .58 பா .10) விளங்குகின்ற திருவெண்ணீற்றைப் பூசி , பிறவிப்பகுதியில் விழுந்தழுந்தாது பேரின்பக்கரையேறியுய்யும் பேற்றினராய் , இடைவிடாது திருவடி நினைவார்க்கு இன்பங்கள் பலவும் செய்து . படத்தையுடைய பாம்பினை இடையிற் கட்டித் , திருப்பருப்பதத்தை நோக்கி வீற்றிருந்தருள்கின்றார் . பை - படம் , மெய்யுணர்வுடையார்க்கே காமத்தைக் கடிதலொல்லும் .

பண் :

பாடல் எண் : 6

வேடராய் வெய்ய ராகி வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா முழிதர்வ ருமையுந் தாமும்
காடராய்க் கனல்கை யேந்திக் கடியதோர் விடைமேல் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

பெருமான் , அருச்சுனன் பொருட்டு வேடன் வடிவம் எடுத்தவராய் , கொடியவராகி யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்து , மண்டையோட்டை ஏந்தி உலகமெல்லாம் சுற்றித் திரிபவராய் , உமையம்மையும் தாமுமாய்ச் சுடுகாட்டில் உறைந்து , கையில் தீயை ஏந்தி , விரைந்து செல்லும் காளையை ஏறி ஊர்ந்து பாடிக்கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ திருப்பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

வேடர் - பலபலவேடமாகும் பரன் , அருச்சுனன் முதலோர்க்காக வேடனானவர் . வெய்யர் - கடியர் . வேழம் - யானை , உரிவை - தோல் , ( தி .4 ப .58 பா .7) ஓடர் - ஓட்டம் உடையவர் ; உலகமெல்லாம் ஓடராய் உழிதர்வர் , ( திரிதருவர் ), ` இழிதருகால் ` ` திரித ( ர் ) வரே ` ( தி .8 திருவாசகம் ) உமையம்மையாரும் தாமும் காட்டினைச் சார்ந்தவராய் வேடராய் உழிதர்வர் , கனல் ( தீ ) கையில் ஏந்திக் கடியதொரு விடையை ஊர்ந்து பூதகணத்தர் தமது பக்கத்தவராய்ச் சூழத் திருப்பருப்பதத்தை நோக்கினார் .

பண் :

பாடல் எண் : 7

மேகம்போன் மிடற்ற ராகி வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்ப மேவி னார்தா மிமையவர் பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக் கடியதோர் விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

கார்மேகம் போன்ற நீலகண்டராய் , யானையின் தோலைப் போர்த்து , ஏகம்பத்தில் விரும்பி உறையும் பெருமானாய் , தேவர்கள் முன்நின்று துதித்துப் புகழ , அவர்களைக் காப்பாற்றும் ஏகாம்பரநாதர் காலில் வீரக்கழலைப் பூண்டு பார்வதி பாகராய்க் காளையை ஏறி ஊர்ந்து பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

மேகம்போல் மிடற்றர் - நீலமுகில் போலும் ( நஞ்சுண்ட தால் ஆன ) திருநீலகண்டர் , ` கொண்டலும் நீலமும் புரை திருமிடறர் கொடுமுடியுறைபவர் ` ( தி .1 ப .79 பா .2) ` மிடற்றர் ` (564) ` வேழத்தி னுரிவை போர்த்து `. ( தி .4 ப .58 பா .6.) ஏகம்பம் - திருவேகம்பம் . ஏகாம்ரம் ( ஒருமா ) என்பதன் திரிபு . மேவினார் - விரும்பியுறைபவர் . இமையவர் பரவியேத்தக் காக்கின்ற கம்பர் , காகம்பர் :- வினைத்தொகை . கம்பம் - ` தாணு ` கேநோபநிடதம் பார்க்க . ` காவடி ` ` காவயிறு ` என்ற ( வினைத்தொகை ) வழக்கும் இது வினைத்தொகையாதலை நாட்டும் . கழல் + த் + அர் = கழறர் ; கழலையுடையவர் ; காலிற் கழலுடையவர் , கழல் அணிந்து விடையேறுவார் . கம்பர் - கம்பேந்தியவருமாம் .

பண் :

பாடல் எண் : 8

பேரிடர்ப் பிணிக டீர்க்கும் பிஞ்ஞக னெந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

பெரிய துயர்களைத் தரும் பிணிகளைப் போக்குபவரும் , தலைக்கோலத்தை அணிந்தவரும் எமக்குத் தந்தையாருமாகிய பெருமான் , நீலகண்டராய் , ஒரு கையில் மண்டையோட்டை ஏந்திச் சிறப்புப்பொருந்திய சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை ஏறி ஊர்ந்த செல்வராய்ப் பெரிய பூதங்கள் தாளம்போடப் பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

பேரிடர்ப் பிணிகள் - பெரிய இடர் விளைப்பனவாய்ப் பிணித்துவருத்துவனவற்றை . பிஞ்ஞகன் - தலைக்கோலத்தன் . காருடைக் கண்டர் :- மேகம்போல் மிடற்றார் ( தி .4 ப .58 பா .7.) ஓர் கையில் கபாலம் ஏந்தி , சீருடைய ஏறு , செங்கண் ஏறு , வெள்ளேறு ஏறு ஏறிய செல்வர் . ` ஏறுகந்தேறினானே `. ( தி .4 ப .51 பா .3) பாரிடம் - பூதம் . பாணி - பாட்டு , பூதங்கள் பாட ஆடுதல் :- ` பாடல் பயின்றபல்பூதம் பல்லாயிரங்கொள் கருவிநாடற்கரியதொர் கூத்து ` ( தி .4 ப .2 பா .8).

பண் :

பாடல் எண் : 9

அங்கண்மா லுடைய ராய வைவரா லாட்டு ணாதே
உங்கண்மால் தீர வேண்டி லுள்ளத்தா லுள்கி யேத்தும்
செங்கண்மால் பரவி யேத்திச் சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

சிவந்த கண்களை உடைய திருமால் முன்நின்று துதித்துப் புகழ்ந்து சிவனாதல் உணருமாறு நிலைபெற்ற செல்வத்தை உடைய பெருமானார் பசிய கண்களை உடைய வெண்ணிற இடபத்தை இவர்ந்து பருப்பதத்தை அடைந்து அங்கு உறைகிறார் . உடம்பாகிய அவ்விடத்திலே மயக்கத்தை உடைய ஐம்பொ களால் அவை விரும்பியபடி செயற்படுதலொழிந்து உங்களுடைய மயக்கம் நீங்கு தலை விரும்பினால் அப்பெருமானாரை மனத்தால் தியானித்துத் துதியுங்கள் .

குறிப்புரை :

பின்னீரடியை முன்னும் முன்னிரடியைப் பின்னும் கொண்டு பொருளறிதற்குரியது இது . செங்கண்மால் பரவியேத்திச் சிவன் என நின்ற செல்வர் :- ஏத்த நின்ற செல்வர் எனச் செயவெ னெச்சமாகத் திரித்துரைத்துக் கொள்க . சிவன் என நிற்றல் - குறைவிலா மங்கல குணத்தன் ; தூய தன்மையன் , முற்றுணர்வினனென விளங்குதல் . பைங்கண் வெள்ளேறது ஏறி ( ப் பருப்பதம் ) நோக்கினார் :- ` செங்கண் வெள்ளேறிய செல்வர் ` ( தி .4 ப .58 பா .8). ` ஏத்திச் சிவனே என ` எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

அடல்விடை யூர்தி யாகி யரக்கன்றோ ளடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட கறையணி கண்ட னார்தாம்
சுடர்விடு மேனி தன்மேற் சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

வலிய காளையை வாகனமாகக் கொண்டு , இராவணன் தோள்கள் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றி , கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டர் ஒளி வீசும் தம் திரு மேனியின் மீது திருநீற்றை அணிந்து , பரவிய சடையிலே பிறையைச் சூடிப் பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

அடல்விடை - கொல்லேறு . ஊர்தி - ஊரப்படுவது . விடையூர்தியாதல் - இடபவாகனரூடராதல் . கடல் - பாற்கடல் . நஞ்சம் உண்டகறை - நஞ்சுண்டதால் ஆகிய கறுப்பு . அணி :- ` கறை மிடறணியலும் அணிந்தன்று , மேனிதன்மேல் ... பூசி `:- ( தி .4 ப .58 பா .5.) சுண்ண வெண்ணீறு :- ` சுண்ண வெண்சந்தனச்சாந்து ` ` சுண்ணநீறணி மார்பு ` ( தி .2 ப .111 பா .4), படர்சடை - படர்ந்த சடையில் . மதியம் - பிறை .

பண் :

பாடல் எண் : 1

தோற்றினா னெயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை யழிக்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

தீத்தொழிலை உடைய இராவணன் கோபத்தால் தன் பற்கள் உதட்டைக் கவ்வ வெகுட்சியடைந்த போது அவன் கோபத்தைத் தணிக்க வேண்டித் தேரோட்டி உறுதியாகக் கோபத்தை விடுக்குமாறு சொல்ல , தற்பெருமை உடையவனாகிக் கயிலையைப் பெயர்க்க விரைந்து எழுந்த அவனுடைய ஆற்றலை அழித்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

எயிறு - பல் . எயிறுகவ்வித் தோற்றினான் ஆகிய அரக்கன் தொழிலுடைய அரக்கன் , ஈண்டுத் தொழில் என்பது பொதுமை குறிப்பினும் தீத்தொழிலே கொள்க . தேற்றும் பொருட்டுச் சென்று சிக்கெனத் தவிரும் என்று சொல்ல ( வும் கேளானாகி ), வீற்றினை - தற்பெருமையை ; வெடு வெடுத்து எழுந்தவன் - விடு விடு என்று சொல்லி வெருண்டும் விரைந்தும் புடை பெயர்ந்தவன் , எழுந்தவன்றன் ஆற்றலை - எழுந்த இராவணனது வலியை , அவளிவணல்லூரார் :- ஊர்ப்பெயரின் உண்மைக் காரணம் புலப்பட்டிலது .

பண் :

பாடல் எண் : 2

வெம்பினா ரரக்க ரெல்லா மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினா லழிய வெய்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்த செயல் பெரிய குற்றமாயிற்று . ஆதலால் அச் செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நன்மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்டினாராக , ` நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் ` என்று விரும்பி நோக்கி , இராமபிரான் அம்பினால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமானாவார் .

குறிப்புரை :

மிகச் சழக்காயிற்று என்று அரக்கர் எல்லா ( ரு ) ம் வெம்பினார் . சழக்கு - குற்றம் ; அபராதம் , ` செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும் ` என்ன - செம்பாலாக்கிய கோயிலைச் சிதைக்கவுறுதி கொண்டு , கொண்ட அவ்வுறுதியின் நீங்காது சிதைத் தொழித்துவிடும் என்று வேண்டிக்கொள்ள . சழக்காயிற்றென்றதும் சிதையும் என்றதும் அரக்கர் தொழிலே . அதுகேட்ட சிவபிரான் , நம்பினார் (- நசையுற்றார் ) என்று திருவாய்மலர்ந்து , இராவணனால் துன்புறுவார்க்கு இன்புறும் நன்மையால் , பெருங்கண்ணோட்டஞ் செய்தருளி , ஓர் அம்பினால் அழிய எய்தார் அவளிவள் நல்லூரார் . இராமன் வாயிலாக அவனுயிர்த்துணையாய் நின்று அம்பை விடுத்தருளினார் என்னும் இராமாயண வரலாற்றின் உண்மைக்கு ஈதொரு சான்று . பொன் , வெள்ளி , இரும்பு என்பவற்றின் ஆய மும்மதில் திரிபுரத்தன . செம்புமதில் யாண்டுங் கூறப்பட்டிலது . ` செம்பினால் எடுத்த கோயில் ` என்றதன்றி மதில் என்றிலது . அரக்கர் ` வெம்பினார் ` என்றும் ` கோயிலைச் சிதையும் ` என்றும் ` நோக்கி அம்பினால் அழிய எய்தார் ` என்றும் உள்ளவாற்றால் இதில் முப்புர தகனம் கூறப் பட்டிலது . இப் பதிகம் முழுவதும் இராவணன் வரலாறே கூறப்படுதலின் , இதிலும் அதுவே கொள்ளப்பட்டது .

பண் :

பாடல் எண் : 3

கீழ்ப்படக் கருத லாமோ கீர்த்திமை யுள்ள தாகில்
தோட்பெரு வலியி னாலே தொலைப்பனான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

புகழாந் தன்மை என்மாட்டு இருக்குமாயின் எந்நிலையிலும் அப்புகழ் கீழ்ப்பட நினைக்கலாமோ ? ` என் தோள் வலிமையாலே இம்மலையை இடம் பெயர வைக்கிறேன் ` என்று தன் விருப்பம் நிறைவேற இராவணன் செயற்பட்ட அளவிலே அவன் நடுநடுங்கி விழுந்து அடியவனாகுமாறு கருதி விரலால் அழுத்திய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

கீழ்மையுற நினைக்கலாமோ ? புகழாந்தன்மை இருப்பதாகில் , ( புஜபல பராக்கிரமம் என்னும் ) தோளினது பெரிய வலிமையாலே , ` நான் , கயிலையைத் தொலைப்பன் ` என்று அதை எடுக்கக் கையை வைத்த அளவில் , அரக்கன் ( இராவணன் ) நடு நடுங்கி விழுந்து ஆளாம்படி திருவுளங்கொண்டு , அவனைத் திருக் காற்பெரு விரலால் ஊன்றத் தொடங்கி யருளியவர் அவளிவள்நல்லூரார் . வேட்படவைத்தவாறே :- வேள் - மண் , மன்மதன் . மண்பட ; மன்மதன் படவைத்தவழி .

பண் :

பாடல் எண் : 4

நிலைவலம் வல்ல னல்ல னேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத் தாக்கினான் றன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

நிலைத்த வெற்றியை அடையவல்லவன் அல்லனாய் , நேர்மையை நினைக்காமல் , வில்லின் வெற்றியைக் கொண்ட செல்வராய தம்முடைய கயிலைமலையைத் தலைகளின் வலிமையை நினைத்துப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அன்று உடல் வருந்திக் குலையச் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

நிலைத்த வெற்றியை அடைய வல்லவன் அல்லன் ; நேர்மை ( ஒழுங்கு ) என்பதே நினைக்கமாட்டேன் ; ( வெற்றிக்கு நேர்மை ஒரு காரணம் ) வில்வலிமையுற்ற செல்வன் . தன் பத்துத்தலை வலிமையொன்றையே எண்ணி , கனத்த கயிலாய மலையை எடுக்க நினைந்து புகுந்து தாக்கினான் . அவனை அக்காலத்தில் , அலையவும் குலையவும் செய்தருளினார் அவளிவள் நல்லூரார் , தலைவலம் :- தலையாயவலிமை என்றலுமாம் . எவர்க்கும் இல்லாத பத்துத் தலையுடைய தன் வலிமை என்றதே முற்குறித்த பொருள் , மேல் ( சிரம் பத்தால் எடுக்குற்றானை அவ்வலிதீர்க்கவல்லார் என்றலும் ` வன்மையே கருதி ` என்றும் வருதல் காண்க ).

பண் :

பாடல் எண் : 5

தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழி ( ய் ) யாற் சிரம்பத்தா லெடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும் , செருக்கினாலே தன்னை உண்மையான வலிமை உடையவன் என்று கருதி மிகப் பெரிய தேரை ஊர்ந்து சென்று சிவந்த கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை நோக்கித் தன் பத்துத் தலைகளாலும் அதனைத் தூக்க முற்பட்ட இராவணனுடைய வலிமையைப் போக்கிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

தவ்வுதல் - ஒடுங்குதல் , குறைதல் . தவ்வலி - ஒடுங்கும் வலி ; குறைந்த வன்மை . ஒன்றன் - ஒன்றனையே துணையாக உடையவன் , தன் வலியையே தனக்குத் துணையாக உடையவன் , தன் குறை வலியை நிறை வலியாக எண்ணிக் கொண்டு , அதனையே துணையாகக்கொண்டு ` இராவணேசுவரன் ` ` திரிலோகாதிபதி ` எனுந் தனது பெருமையொன்றாலே , அப்பொய்வலியை மெய்வலியாகவும் அவ்வலிமைத்துணை தனக்கு உள்ளதாகவும் கொண்டு மிகப் பெரிய தேரைக்கடாவி ; செய்ய கடிய கொடிய கண்களால் நோக்கிப் பத்துத் தலைகளாலும் எடுக்கலுற்றவனை , அவ்வலியை ஒழிக்க வல்லவர் அவளிவள் நல்லூரார் . அடுத்ததில் , ` வன்மையே கருதிச் சென்று ` என்றது காண்க .

பண் :

பாடல் எண் : 6

நன்மைதா னறிய மாட்டா னடுவிலா வரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக் கருதித்தா னெடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

நியாய உணர்வில்லாத இராவணன் தனக்கு நன்மையாவது இன்னது என்று அறிய இயலாதவனாய் , தன் உடல் வலிமையையே பெரியதாகக் கருதித் தன் வலிமையைச் செயற்படுத்த முற்பட்டு , கல்லாந் தன்மையுடைய மலையை ஓடிச்சென்று தூக்கமுற்பட்டு வருந்தி , வாயினால் அம்மையோ என்று அலற வைத்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகிறார் .

குறிப்புரை :

நன்மையே அறிகிலாதவன் , நியாயம் இல்லாதவன் , அரக்கர் கோமகன் தனது வலிமையையே துணையாக நினைந்து போய் , அவ்வலிமைதன்னைக் கடாவலுற்று ஓடிக் கல்லாந் தன்மையதாகக் கருதி மலையை எடுத்தான் . கடவுள் அவனது வலியை ஒழித்தார் . அம்மா என்று அலறினான் . அவ்வாறு நிகழச்செய்தவர் அவளிவணல்லூரார் .

பண் :

பாடல் எண் : 7

கதம்படப் போது வார்கள் போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

` சிவபெருமான் வெகுளும் வகையில் அவனை எதிர்த்துச் செயற்படுபவர்கள் அழிந்து விடுவார்கள் என்ற எண்ணத்தால் இதற்கு முன் எல்லாச் செயல்களிலும் வெற்றியையே அடைந்த தாங்கள் தோல்வி தரக்கூடிய இச்செயலைத் தவிர்த்து விடுங்கள் ` என்ற தேரோட்டி சொல்லை மதியாது செருக்குக் கொண்ட மனத்தினனாய்த் தன் உடல் வன்மையால் கயிலையைப் பெயர்க்க மிகவும் முயல , அவ்விராவணன் உடம்பை அத்திப்பழம் போலச் சிவந்தும் குழைந்தும் நசிந்தும் போகுமாறு செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

கதம் - கோபம் . பட - தோன்ற . போதுவார்கள் - புகு தருவார்கள் . மரூஉ . போதும் - புகுதும் . சிதம் - வெற்றி ; அறிவு ; வெண்மையுமாம் . நீர்கள் :- ` நீன் ` ஒருமை . நீ + இர் = ` நீயிர் ` பன்மை . ` நீயிர் ` என்பதன் மரூஉ ` நீர் ` அதனொடு அஃறிணைக்கே உரிய ` கள் ` சேர்ந்து ` நீர்கள் ` என்று வழங்கிப் , பின் ` நீங்கள் ` என்று மருவிற்று . நீ + இர் = நீயிர் , நீவிர் என யகரம் வகரம் ஆம் மெய்யிரண்டும் இடை யுடம்பாக அடுத்தலும் இவன் ( இ + அன் ) என வகரம் உடம்படு மெய்யாதலும் அறியின் வரையறையின்றி வருதல் புலப்படும் . ` சிக்கென ` ( தி .4 ப .59 பா .2.) மதம் - செருக்கு . அதம்பழம் - அத்திப் பழம் ; அளிந்த பழம் , ` ஆற்றயலெழுந்த வெண்கோட் டதவத்தெழு களிறு மிதித்தவொரு பழம்போலக் குழையக் கொடியோர்நாவே காதலர் அகலக் கல்லென்றவ்வே `, ( குறுந்தொகை , 24 உரை ) என்புழி ` அதம்பழத்துருவு செய்தார் அவளிவணல்லூராரே ` என்றதை எடுத்துக் காட்டியுள்ளார்கள் புகழுடலெய்திய , உ . வே . சாமிநாத ஐயர் அவர்கள் . ( அருங்கலச் செப்பு ) அதம்பழத் துருவு செய்தல் அத்திப்பழம் போலச் சிவந்தும் குழைந்தும் நலிந்தும் போகப் பண்ணுதல் .

பண் :

பாடல் எண் : 8

நாடுமிக் குழிதர் கின்ற நடுவிலா வரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி யூன்றினா னுகிரி னாலே
பாடிமிக் குய்வ னென்று பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

பல நாடுகளிலும் சுற்றித் திரிந்த நியாய உணர்வில்லாத இராவணனை இவ்விடத்தை விட்டு விரைந்தோடு என்று அதட்டிக் கால்விரல் நகத்தினாலே அவனை ஊன்ற , நசுங்கிய அவன் மிகுதியாகப் பாடி உயிர் பிழைப்பேன் என்று எண்ணி , பாடிப் பணிய அவனுக்குப் பலநன்மைகளைச் செய்தவராய்ப் படமெடுத்து ஆடும் பாம்புகளை மிகுதியாக அணிந்தவராகிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

நாடுகளிலே மிகத்திரிகின்ற நியாயமில்லாத அரக்கர் கோமகனை விரைந்தோடு என்று அதட்டித் திருக்காற் பெருவிரலாலே சிறிதே ஊன்றினார் . அது பொறுக்கமாட்டாமல் , நான் கயிலைமலை யாண்டவனைப் பாடியுய்வேன் என்று பணிந்தான் . பணியவே , நாளும் வாளும் தேரும் பேரும் ஆகிய நல்ல திறங்களைக் காட்டினார் . ஆடுகின்ற அரவம் மிகப் பூண்டவராகிய அவளிவணல்லூரார் .

பண் :

பாடல் எண் : 9

ஏனமா யிடந்த மாலு மெழிறரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி நன்மையை யறிய மாட்டார்
சேனந்தா னிலாவ ரக்கன் செழுவரை யெடுக்க வூன்றி
ஆனந்த வருள்கள் செய்தா ரவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

பன்றி வடிவெடுத்துப் பூமியைத் தோண்டிச் சென்ற திருமாலும் , அழகிய தாமரையில் உறையும் பிரமனும் ஞானம் உடையவராய்த் தமக்கு நன்மை எது என்று அறியமாட்டாதவராய் இருந்தனர் . பருந்துபோலப் பல இடங்களிலும் உலாவும் தன்மையை உள்ள இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க அவனை அழுத்திப் பின் அவனுக்கு மகிழ்ச்சி தரும் அருள்களைச் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார் .

குறிப்புரை :

பன்றியுருக்கொண்டு , நிலம் அகழ்ந்த திருமாலும் அழகுதரும் தாமரைப் பூவில் வாழும் நான்முகனும் முழுமுதல்வனைக் காணவேண்டும் என்னும் அறிவுடையராகியும் சிவத்தை அறிய வல்லரல்லராயினர் . சேனம் - பருந்து . நிலா - நில்லாத . பருந்து போல நாடுமிக்குழிதர்கின்ற . ( தி .4 ப .59 பா .8) அரக்கன் . ` சேனை ` சேனம் என்றாகும் . சேனை + தான் = சேனந்தான் ( பனை + தாள் = பனந்தாள் ), சேனை இல்லாத அரக்கன் எனலும் பொருந்தும் . செழுவரை - செழிப் புடையதாய கயிலைமலையை , எடுக்க - எடுத்தலால் . ஊன்றி - திருக்காற்பெருவிரலால் அழுத்தி , ஆனந்த அருள்கள் :- ` நற்றிறங்கள் ` ( தி .4 ப .59 பா .8.)

பண் :

பாடல் எண் : 10

ஊக்கினான் மலையை யோடி யுணர்விலா வரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினா னஞ்சத் தன்னை நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினா ரமுத மாக வவளிவ ணல்லூ ராரே.

பொழிப்புரை :

ஓடிச் சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அறிவில்லாத இராவணனைக் கால்விரலால் அழுத்திப் பத்துத் தலைகளும் நொறுங்கச் செய்து அவன் அஞ்சுமாறு அவனுடைய நோன்பின் பயன்களுங் கெட நோக்கிய பெருமான் பின் அவனை அழுத்தியதால் ஏற்பட்ட துயரைப் போக்கி அமுதம் போல் உதவி அவனை அழியாமற் காத்தார் அவளிவணல்லூரார் .

குறிப்புரை :

அரக்கன் ஓடி மலையை ஊக்கினான் , தன்னை - அவனை . இது தவறு என்னும் உணர்ச்சி சிறிதும் இல்லாத இராவணனை . அவனை விரலினாலே தாக்கினார் ( சிவபிரான் ). இதிலும் ( தி .4 ப .59 பா .8) நல்லூரார் என்றதற்கேற்ப ` ஆர் ` ஈறின்மை அறிக . பத்துத் தலையும் தகர்ந்தொழிய நோக்கி ஊன்றினார் . தன்னை - அவனை , அஞ்ச ஊன்றி நோக்கினார் என்க . நோன்பு - தவம் , விரதம் , இற - கெட , ஊன்று - ஊன்றியதால் உண்டான வருத்தத்தை , சொல்லி - நீக்கி , ஊன்றுதலை நீக்கி எனலுமாம் . சொல்லி - சாமகானம் பாடி என்று பொருத்தலும் கூடும் . ` துணைவனுக்குற்ற துன்பம் சொல்லிய தொடங்கினானே ` ( சிந்தாமணி , 1146) என்புழி , சொல்லிய - தீர்த்தற்கு என்றெழுதிய நச்சினார்க்கினியர் உரையை உணர்க . அமுதம் ஆக ஆக்கல் :- இறப்பில்லையாகச் செய்தல் .

பண் :

பாடல் எண் : 1

மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக் கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்கு வேனே.

பொழிப்புரை :

வேதம் ஓதும் நாவினராய் , தம்மை மறவாதார் மனத்தில் உள்ளவராய் , நீலகண்டராய் , ஒளிவீசும் நெருப்பில் கூத்து நிகழ்த்துபவராய் , பிறையை அணிந்த சடையினராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை நறுமண மலர்களைத் தூவி நாள்தோறும் வணங்குவேன் நான் .

குறிப்புரை :

மறை - வேதத்தை , அணிநா - அணியாகப் பூண்ட நா . அழகிய நா , ` அருங்கலம் அருமறை ஆறங்கம் ` ( தி .4 ப .11 பா .5) வேதத்தைப் படைத்ததாதலின் மறையை அணிந்த நாவாயிற்று . மறப்பு - மறத்தல் . ` பிறப்பில் பெருமானைப் பின் தாழ்சடையானை மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே ` ( காழி வேந்தர் ) ` மறவாதே தன் திறமே வாழ்த்துந் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னிநின்ற திறலான் ` ( தி .6 ப .68 பா .8). கறை - நஞ்சின் கறுப்பு . பேணினான் - விரும்பிக் கோயில் கொண்டவன் . நறை - தேன் , மணம் , நாள்தோறும் மலர்கள் தூவி வணங்குதலைச் சைவர் மறவாராயின் அவர் மனத்துளான் ஏழண்டத் தப்பாலான் .

பண் :

பாடல் எண் : 2

நாதனா யுலக மெல்லா நம்பிரா னெனவு நின்ற
பாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி யுரைக்குமா றுரைக்குற் றேனே.

பொழிப்புரை :

தலைவனாய் , உலகிலுள்ளார் எல்லாம் நம்முடைய பெருமான் என்று கூறுமாறு நிலைபெற்ற திருவடிகளை உடைய மேம்பட்ட யோகியாய் , பலவகையாலும் ஒன்றோடொன்று ஒவ்வாப் பலவேடமும் தரித்துக் கொண்டு தோன்றுபவனாய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைத் தோத்திரிக்கும் நாவினை உடையேனாகிச் சான்றோர் உரைக்கும் வகையிலே உரைத்தலை உடையேன் நான் .

குறிப்புரை :

நாதனாய் - தலைவனாய் , உடையவனாய் , உலகம் எல்லாம் நம்பிரான் என்று போற்றவும் நின்ற பாதன் , நாதனாய் நின்ற பாதன் , பரமயோகி - யோகியர் தலைவன் . பலபல திறத்தினான் - ` பலபல வேடமாகும் பரன் ` ` அனைத்து வேடமாம் அம்பலக்கூத்தன் ` ` நவந்தருபேதம் ஏக நாதனே நடிப்பன் ` ( சித்தியார் ) பேதனாய்த் தோன்றினான் :- ` ஒன்றோடொன்றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு நின்றல் ` ( சித்தியார் ) ஓத நாவுடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்க உற்றேன் :- திருநாவுக்கரசர் என்னுந் திருப்பெயரின் காரணம் புலப்படுதல் உணர்க . ` ஓத நாவுடையன் `:- நாவுடைமைக்குத் தக்க செயல் சிவ கீர்த்தனம் ஓதுதலே என்க `. ` நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே ` ` நமச்சிவாயவே நா நவின்றேத்தும் ` ` நாக்கொண்டு பரவும் அடியார் வினை போக்க வல்ல புரிசடைப் புண்ணியன் ` ` கூத்தா நின் குரையார் கழலே அலது ஏத்தா நா எனக்கு `.

பண் :

பாடல் எண் : 3

குறவிதோண் மணந்த செல்வக் குமரவே டாதை யென்றும்
நறவிள நறுமென் கூந்த னங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி யுணருமா றுணர்த்து வேனே.

பொழிப்புரை :

குறத்தியாகிய வள்ளியின் தோள்களை மணந்த செல்வனாகிய குமரவேளுடைய தந்தையாராய் , என்றும் மணமுள்ள கூவிளம் பூவை அணிந்த நறிய மெல்லிய கூந்தலை உடைய இளைய நங்கையாகிய பார்வதி பாகராய்ப் பிறவிப் பிணியைப் போக்குபவராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை அவரிடத்து அடியேன் கொண்ட உறவினால் உணர்ந்த வண்ணம் உணர்த்துவேன் நான் .

குறிப்புரை :

குறவி - குறவர் மகளாராய்த் தோன்றிய வள்ளி நாய்ச்சியார் . தோளைப்புணர்ந்த செல்வக் குமரவேள் :- சிவ பிரானுடைய புதல்வருள் , முருகப்பிரானே தாய் தந்தை நடுவில் உள்ளவர் . சோமாஸ்கந்த ரூபத்திற் காண்க , ` கடவுட் பிராட்டி யுடங்கிருப்பக் கதிர் வேற்காளை நள்ளிருப்ப , நடலைப் பிறவிமருந்தாகி வைகும் நாதன்றிருவுருவம் ` ( காஞ்சிப் . சிவபுண்ணிய . 7) தாதை - ` தாதா ` என்னும் வடசொற்றிரிபு ; ஆவீறு ஐயீறாதல் விதி . சபா - சபை . சிவா - சிவை . நறவிளம் - மணமுடைய கூவிளம் . கூவிளம் என்பதன் முதற்குறை . விள - விளா எனின் , விளாவை அணியும் வழக்குளதாதல் வேண்டும் . நறவு இளநங்கை எனக்கூட்டி அனிச்சம்போலும் மென்மையையுடைய இளம்பெண் , என்றலுமாம் . நறுமை (- நன்மை ) யும் மென்மையும் கூந்தலுக்கு , நறவும் இளமையும் கூந்தலாட்கு , பிறவியைப் போக்குவான் , உறவினால் - இடைவிடா துற்றுற்று நோக்கியடைதலால் , உணரும் ஆறு உணர்த்துவேன் :- சிவபிரானைத் தாம் உணரும் வண்ணம் தம்மை உணரச் செய்வேன் , ` தொண்டனேன் புணருமாபுணர் ` என வேண்டிப் புணர்த்துக்கொள்ளல் போன்று , உணருமாறுணர் என்று வேண்டி உணர்த்திக் கொள்ளல் . இது ( யான் ) உணருமாறு உணர்த்துவேன் , முற்றவுணர்ந்தவர்களைப்போல உணர்ந்து என்னால் உணர்த்தல் இயலாது என்றதாம் .

பண் :

பாடல் எண் : 4

மைஞ்ஞவில் கண்டன் றன்னை வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவின் மானி னோடுங் கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை யந்தண் பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா வறிவி லேனே.

பொழிப்புரை :

நஞ்சுண்ட கருமை படர்ந்த நீல கண்டனாய் , வலக்கையில் ஒரு மழுவை ஏந்தி , இடக்கையிற் பொருந்திய மானோடு ஒளி வீசும் தீயிடை ஆடுபவனாய் , தலைக்கோலம் அணிந்தவனாய் , அழகிய பெருவேளூரில் விரும்பி உறையும் பெருமானைப் பொய்ம்மை நீங்க நினைக்க இயலேனாய் நினைதற்காம் நல்வினையும் அறிவும் இல்லாதவன் நான் .

குறிப்புரை :

மை + நவில் = மைஞ்ஞவில் , மை - நஞ்சுண்ட கறுப்பு , நவில் - பயின்ற , கண்டன் ( திருநீலகண்டர் ) வலங்கையின் (- வலக்கையில் ) மழுப்படையொன்றுதாங்கி , கை - கையில் . நவில் - பழகிய . மான் - மான்கன்று , பிஞ்ஞகனை ; அழகும் குளிர்ச்சியும் பொருந்திய பெரிய வேளூர் பேணினானைப் பொய் நெக மெய்நிக நினைந்து வழிபட மாட்டாதேன் ; பொறியிலேன் ; அறிவிலேன் , ` பொறியிலா வழுக்கை ( இலச்சினையில்லாத உடலை ) யோம்பிப் பொய்யினை மெய்யென்றெண்ணி நெறியிலா நெறிகள் சென்றேன் ` ( தி .4 ப .54 பா .4.) பொறியிலா (- ஒளியில்லாத ) என்னும் எதிர்மறை ` அறிவின்மை ` என்னும் பெயர் கொண்டது . பொறி - இலச்சினை , ஒளி .

பண் :

பாடல் எண் : 5

ஓடைசேர் நெற்றி யானை யுரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப் பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங் குறுகுமா றறிகி லேனே.

பொழிப்புரை :

நெற்றிப்பட்டம் அணிந்த யானைத் தோலைப் போர்த்தவராய் , அடியார்களுக்கு வீடுபேறு வழங்குபவராய் , நான்கு வேத வடிவினராய் , பேடையொடு கூடிய புறாக்கள் நீங்காது உறையும் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைக் கூடவல்ல , உலகியலுக்கு மாறுபட்ட வழியாகிய இறை நெறியிலே சென்று அவனை நெருங்கும் முறையை அறியேன் .

குறிப்புரை :

ஓடை - நெற்றிப்பட்டம் . உரிவை - தோல் . மூடினான் - போர்த்தான் . வீடதே - முத்தியையே . நான்கு வேதம் ஆயினான் . பேடை - பெண்புறா . பேணிய கடவுளைக் கூடவல்லமாற்றம் குறுகும் வண்ணம் நான் அறிகிலேன் . வீடதே :- அது பகுதிப் பொருள் விகுதி . யானையுரிவையை மூடினானும் வீடேகாட்டுவானும் நால் வேதம் ஆயினானும் பெருவேளூர் பேணினானும் ஆகிய கடவுளைக் கூடுமாறும் அதற்கு வல்லதாய் ஒரு மாற்றம் குறுகுமாறும் நான் அறிகிலேன் .

பண் :

பாடல் எண் : 6

கச்சைசேர் நாகத் தானைக் கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக் கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப் பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானு மிறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.

பொழிப்புரை :

நாகத்தைக் கச்சாக அணிந்து , கடல் விடத்தைக் கழுத்தில் இருத்தி , காஞ்சியில் ஏகம்பத்தில் உறைபவராய் , ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்துபவராய் , பிச்சை எடுப்பதற்கு அலைபவராய் , பெருவேளூரை விரும்பித் தங்கும் பெருமானை என் இச்சை நிறைவுற வழிபடும் வழியாலே வழிபடுவேன் நான் .

குறிப்புரை :

கச்சை - இடையிற்கட்டும் பட்டை , நாகக்கச்சை , ` அரவக்கச்சு ` ` கச்சைசேர் அரவர் ` ( தி .4 ப .66 பா .1) கடல் - பாற்கடல் . விடம் - நஞ்சு . கண்டத்தான் - திருநீலகண்டர் . திருக்கச்சியேகாம்பர நாதர் . உழல்வினான் - திரிதலையுடையவர் . உழல்வு - சுழல்வு . திரிவு . இச்சை - பக்தி . ` இச்சை சேர்ந்தமர - துரிய நிலையும் துரியாதீதநிலையும் ( சிவஞானபோத மாபாடியம் . சூ . 11) உணர்ந்தார்க்கு . ஏற்ற பொருளும் கொள்ளலாம் . ஆண்டுச் சிவஞானமாமுனிவர் விளக்கி இருக்கும் ` முத்தி நிலை ` யை உணர்க . ` இறைஞ்சுமாறு இறைஞ்சுவேன் ` என்பதும் ` உணருமாறு உணர்த்துவேன் ` என்பதும் ஒரு நிகரனவல்ல .

பண் :

பாடல் எண் : 7

சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப் பெருவேளூர் பேணி னானை
மெத்தநே யவனை நாளும் விரும்புமா றறிகி லேனே.

பொழிப்புரை :

ஞானிகளாய் வந்து தம் திருவடிகளை வணங்குபவர்களுக்கு முத்தியை வழங்குபவராய் , ஞானமூர்த்தியாகிய முதல்வராய் , எல்லா உலகமும் தாமேயாகிய பித்தராய் , மற்றவர் யாவரும் தம்மைத் துதிக்குமாறு பெருவேளூரை விரும்பிய மிக்க அன்புடைய பெருமானை நாளும் விரும்பும் திறத்தை அறியாதேன் நான் .

குறிப்புரை :

சித்தர் - ஞானிகள் ; சித்திகளில் வல்லவர்கள் . தன்னை வணங்குவார்கள் . தந் திருவடியை வணங்குவார்கள் . வணங்குவார்களுக்கு முத்தியைத் தந்தவனை . ஞானமூர்த்தி . முழுதும் ஆயபித்தன் - முழுப்பித்துள்ளவன் . பிறரும் - வணங்கப் பழக்கமில்லாதவரும் . அண்டம் - ( பல்கோடி ) அண்டங்கள் . மெத்த - மிகுத்த . மரூஉ . நே - அன்பு . நேயவன் - அன்பினன் . நே + அம் = நேயம் + அன் = நேயவன் . விரும்பும் ஆறு - திருவுள்ளம் உவக்கும் வண்ணத்தை . விரும்பும் ஆற்றில் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 8

முண்டமே தாங்கி னானை முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே யாயி னானைப் பெருவேளூர் பேணி னானை
அண்டமா மாதி யானை யறியுமா றறிகி லேனே.

பொழிப்புரை :

தலைமாலையைப் பூண்டவராய் , பூரண ஞான முடையவராய் , வண்டுகள் உலவும் கொன்றை மாலையையும் பிறையையும் முடிமாலையாக உடையவராய் , என் உடலாகவும் உள்ளவராய்ப் பெருவேளூர்ப் பெருமானாய் எல்லா உலகங்களுமான முதற் கடவுளாய் உள்ள பெருமானை அறியும் வழியால் அறிய இயலாதேனாய் உள்ளேன் நான் .

குறிப்புரை :

முண்டம் - தலை , தலைமாலை பூண்டவன் , அயன் தலையைக் கையிற் பிச்சைப் பாத்திரமாகத் தாங்கியவன் . முற்றிய ஞானத்தான் - பரிபூரணஞான சொரூபன் , வண்டு உலாம் கொன்றை மாலை :- சாதியடை , ` வண்டு உண்டிடுங்கொன்றையணி அண்டர் நாயககயிலையுறைகின்ற பரதெய்வமே ` ( தக்ஷிணாமூர்த்தி திரு வருட்பா 10) என்று பிற்காலத்தும் அவ்வாறு அடை கொடுத்தல் அறிக . மதிக்கண்ணியான் - மாதர்ப் பிறைக்கண்ணியான் ` வளர்மதி - பிறை . பிண்டமே ஆயினான் - ` என் ஊனே ஊனின் உள்ளமே ` ` ஊனாகி உயிராகி ` ` பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை ` ` பிண்டத்தைக் காக்கும் பிரானார் ` ` பிண்டத்தைக் கழிக்கவேண்டிற் பிரானையே பிதற்றுமின்கள் ` என்று பிறாண்டுரைத்த ஆசிரியர் ஈண்டு அவனையே ` பிண்டமாயினான் ` என்றதன் உண்மையை உணர்க . ` வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே ` ( தி .9 திருவிசைப்பா . 117) என்னும் கருத்துப்பற்றியதுமாம் . ` எல்லா வுலகமும் ஆனாய் நீயே ` ஆதலின் , ` அண்டபிண்டம் அவை சமம் ` என்னும் உண்மைக்குத் தக்கவாறு பிண்டமாகிய உலகமும் நீயே ஆனாய் என்ற கருத்தும் உணர்க .

பண் :

பாடல் எண் : 9

விரிவிலா வறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே.

பொழிப்புரை :

விரிவடையாத சிற்றறிவுடையவர்கள் புதியதொரு சமயத்தை உண்டாக்கி வயிற்றெரிச்சலால் அச்சமயத்துக்குப் பிரசாரம் செய்தாராகிலும் அதுவும் பெருமானுக்கு ஏற்புடைய செயலேயாகும் . பெரியோர்கள் அன்போடு துதிக்கும் பெருவேளூர்ப் பெருமானைப் பொருந்தி அடியேன் வாழ்த்திப் பிறவிப் பிணியிலிருந்து விடுபடும் வழியை விருப்புற்று நினைக்கின்றேன் நான் .

குறிப்புரை :

விரிவிலா அறிவினார்கள் - மெய்ப்பொருளிருக்கும் எல்லையளவும் ( தத்துவ ) ஆராய்ச்சி புரியத் தக்க விரிவுறாத சிற்றறிவுவுடைய புறச்சமயத்தவர்கள் , வேறு - ` சைவ சமயமே சமயம் ` என்னும் உண்மைச் சமயத்திற்கு வேறாக . ஒரு சமயம் செய்து - உலகாயதம் முதலியவற்றுள் ஒன்றனைப்போலப் புதியதொரு சமயம்செய்து , எரிவினால் - வயிற்றெரிச்சலால் ; நெருப்பையொத்த சினத்தால் . செய்து சொன்னாரேனும் ஏற்றதாகும் எம் பிரானுக்கு . பரிவு - அன்பு , பெரியோர் :- ` கற்றல் கேட்டலுடையார் பெரியார் ` மருவி - கூடி , உய்யும் வகையது நினைக்கின்றேன் - ` உய்வினை நாடுகின்றேன் `.

பண் :

பாடல் எண் : 10

பொருகட லிலங்கை மன்ன னுடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக் கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை
உருகிய வடிய ரேத்து முள்ளத்தா லுள்கு வேனே.

பொழிப்புரை :

அலைகள் மோதும் கடலிடை அமைந்த இலங்கை மன்னனாகிய இராவணனுடைய உடல் நசுங்குமாறு தம் கால்விரலை அழுத்தியவராய் , நல்ல நீலகண்டராய் , ஒளிவீசும் பிறையைச் சூடும் பரந்த சடையினராய்ப் பெரு வேளூரில் உள்ள பெருமானாரை மனம் உருகிய அடியவர்கள் போற்றும் உள்ளத்தை அடியேனும் பக்குவத்தால் பெற்று அப்பெருமானை விருப்புற்று நினைப்பேன் நான் .

குறிப்புரை :

பொருகடல் - கரையை அலைதாக்கும் கடல் , பொருதற் கிடமான கடலுமாம் . கடலிற்போர் ; கடற்போர் ; கப்பற்போர் பொரு மன்னனுமாம் . உடல் கெடப் பொருத்தி :- நல்ல - அழகிய . கருகிய - நீலநிறமார்ந்த . கதிர் இளங்கொழுந்து - பிறைக் கொழுந்து . பெருகிய சடை - ` வளர் சடை ` ` கற்றைச் செஞ்சடை ` உருகிய அடியார் - நெஞ்சின் உருக்கம் உற்ற சிவஞானிகள் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேன் . உள்குதல் நினைத்தல் .

பண் :

பாடல் எண் : 1

பாசமுங் கழிக்க கில்லா வரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே நினைமினீர் நின்று நாளும்
தேசமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரம்மே.

பொழிப்புரை :

நீக்க வேண்டிய பாசத்தை நீக்கும் ஆற்றல் இல்லாத அரக்கர்களை அழித்து மேம்பட்ட சிவஞானத்தால் இராமனாய் அவதரித்த திருமால் அமைத்த கோயிலிலே ஒளிமிக்க சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திரு இராமேச்சுரத்தை வாசனை மிக்க பூக்களை அர்ப்பணித்து நாள்தோறும் நிலையாகப்பற்றுமிகுந்த அன்போடு எல்லீரும் விருப்புற்று நினையுங்கள் .

குறிப்புரை :

பாசமும் கழிக்ககில்லா அரக்கர் - கழிதற்குரிய பாசத்தையும் கழிக்கும் வன்மையில்லாத இராக்கதர் ( தி .4 ப .61 பா .5, 11) என்னும் எண்ணுடைய பாடலில் அன்றி மற்றை யொன்பதிலும் ` அரக்கர் ` என்பது பன்மை குறித்தலுணர்க . படுத்து - அழித்து . தக்க மலர்கள் ; வாச ( மண ) மலர்கள் ; மிக்க அலர்கள் மதியினான் - சிவ ஞானத்தால் , வினைதீர்க்கவல்ல வழியுணர்ந்த அறிவால் எனலுமாம் , மால் - திருமாலின் அவதாரங்களுள் ஒன்றான இராமமூர்த்தி , நேசம்மிக்க அன்பினால் , ( உலகீர் ) நீர் நாளும் நன்று நினைமின் . தேசம் மிக்கான் - ஒளிமிக்கவன் . ` தேசத்தார் பரவியேத்தும் ` ( தி .4 ப .39 பா .4). அலர்கள் கொண்டு செய் கோயில் இராமபிரான் , இலங்கையினின்று மீண்டு போந்து , இப்போதுள்ளது போன்ற பெரிய திருக்கோயிலை அப்போதே கட்டி வழிபட்டதாகக் கொள்ளல் பொருந்தாது . முதன் முதலிற் பூங்கோயில் கட்டிப் போற்றியதாகக் கொள்வதே பொருத்தம் . சொல்வேந்தர் அங்குற்ற காலத்தில் இருந்த நிலையிலேயே இராமபிரான் வழிபடத் தொடங்கிய நாளில் இருந்ததெனல் அசம்பவம் .

பண் :

பாடல் எண் : 2

முற்றின நாள்க ளென்று முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே யுணர்விலா வரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை யீசன் பாலே.

பொழிப்புரை :

நெஞ்சே ! அரக்கர்கள் உயிர்வாழ்வதற்கு வகுத்த நாள்கள் முடிந்து விட்டதனால் அவர்களை அழிப்பதனையே காரணமாகக் கொண்டு ஏற்பட்ட வலியபோரினால் மெய்யுணர்வு இல்லாத அரக்கர்களை அழித்த இராமன் ஆகிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை உகந்தருளியிருக்கும் , பரவிய சடையை உடைய சிவபெருமானிடத்துப் பற்றினைக் கொண்டு நீ முன் நின்று போற்றுவாயாக .

குறிப்புரை :

நெஞ்சே நீ பரவு . நாள்கள் முற்றின என்று முடிப்பதே காரணமாய், (கார ண(ம்)மாய் என்றும் வரும்), உற்றவன் போர்களாலே உணர்விலா அரக்கர் தம்மைச் செற்றமால் - அரைகோடியாண்டுகள் வாழ வரத்திற்பெற்ற ஆயுள் கடந்துவிட்டான் என்று , அவனையும் ஏனைய அரக்கரையும் மாய்ப்பதே காரணமாய் உற்ற வலிய போர்களாலே , தம் உயிருக்கும் கேடுண்டாக்கிக்கொள்ளும் அவ்வுணர்விலிகளை மாய்த்த இராமபிரான் ; அவன் செய்த திருக்கோயில் ஆகிய திருவிராமேச்சுரத்தைப் பற்றிப் , படர்ந்த சடையையுடைய ஈசன்பால் பரவு . நெஞ்சே நீ உலகிற் பரவிப் பிறப்பிறப்பிற்கென்னை யாளாக்காது , இராமேச்சுரத்தைப் பற்றிப் படர்சடை யீசன்பாலே பரவு . ஈசன்பாலே பரவு என்றதால் , அது வேற்றிடத்திற் பரவுதல் பெறப்பட்டது . நெஞ்சின் நினைவிற்குப் பற்றுக் கோடாவது இராமேச்சுரம் , நினைதலே பற்றுதல் . கோயில் திருவிராமேச்சுரம் , ஊர் பின்னர்த்தோன்றியது . இராமபிரான் காலத்தில் அங்கு ஊர் இல்லை . பரவுதல் - இறைவன் தங்கும் இடமாக விரிந்து நிற்றல் , ` நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் `. நீர்மிக்குப் பரவிய ஏதுவாலே பரவை என்று கடற்கொரு பெயர் உண்டாயிற்று . மனவெளி பூதவெளியினும் பெரியது . அதனால் , ஈசன்பாலே பரவு என்றார் . சிவ வியாபகத்தின் அளவு பரவும் ஆற்றலை யெய்துக என்று ஏவியவாறு .

பண் :

பாடல் எண் : 3

கடலிடை மலைக டம்மா லடைத்துமால் கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயிற் றிருவிரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டு நானே.

பொழிப்புரை :

கடலிடத்தை மலைகளால் அடைத்துத் திருமால் தம் செயலை முடித்துப் பின் கடலை அடுத்த மேட்டில் செய்த இராமேச்சுரத்தை , இவ்வுடம்பினின்றும் நீங்காத ஐம்பொறிகளால் தம் விருப்பப்படி செயற்படுத்தப்பட்டு தூய்மையின்றி , நாவிடை வைத்துப் போற்றுதலைச் செய்து தடுமாறுகின்றேன் . ( நாவில் தொடல் இடை - வாக்கு .)

குறிப்புரை :

மலைகள் தம்மால் கடலிடை அடைத்துத்திடலிடைச் செய்த கோயில் :- மலைகளைக் கடலில் அடைத்து , நீரகற்றி நில மாக்கிய அத்திடலிற் செய்த திருக்கோயில் ( ஆகிய திருவிராமேச்சுரம் ) மால் - இராமபிரான் . கருமம் - இராவணன் ஆதிக்கத்தை அழித்துச் சீதையை மீட்டுவரச் செய்த வினை . முற்றி - முடிந்து . அடைத்ததும் திடல் செய்ததும் கரும முற்றியதும் முன்னும் அத்திடலிடைக் கோயில் செய்தது பின்னும் ஆகும் . உடல் - திருநாவுக்கரசர் திருமேனி , உடலிடை நின்றும் பேரா ஐவர் :- ஐம்பொறிகள் . ஆட்டுண்ணல் - பொறிவழிப் போய் வருந்துதல் . பொறிவழிச் செல்லும் எவையும் உயிர்க்குத் தூய்மை விளைப்பன ஆகா . நாவில் தொடல் ஆம் வாக்கில் வைத்து . இடை - வாக்கு . ஐவர் ஆட்டுண்டு சுழல்கின்றேன் , தூய்மையின்றி வைத்து எனலும் தூய்மையின்றிச் சுழல்கின்றேன் எனலும் பொருந்தும் . தூய தன்மையன் என்னும் பொருளது சிவன் ` என்னும் பெயர் . அம் முழுமுதற் பொருளின் தூய்மையையும் தமது நாவின் தூய்மையின்மையையும் எண்ணித் தூய்மையின்றிவைத்துச் சுழல்கின்றேன் என்றார் . ` வாக்குத் தூய்மையிலாமையினாலே மாதவாவுனை வாய்க்கொள மாட்டேன் . நாக்குத்தான் என் சொல்வழி கேளா நான் அது ஒட்டேன் ` என்ற வைணவப் பெரியா ( ழ்வா ) ர் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது . அகத்தூய்மையின்றிப் புறத்தே பாடிக்கொண்டிருக்கின்றேன் என்றாராயிற்று . நெஞ்சம் ஐவரால் ஆட்டுண்டும் இராமேச்சுரத்தை நாவில் வைத்துச் சுழல்கின்றேன் எனலுமாம் ` இடை ` மூன்றும் ஏழனுருபின் பொருளன .

பண் :

பாடல் எண் : 4

குன்றுபோற் றோளு டைய குணமிலா வரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோ னெஞ்ச மேநீ நன்மையை யறிதி யாயில்
சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருவிரா மேச்சு ரம்மே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! நீ நன்மையை அறிவாயானால் மலைகளைப் போன்ற தோள்களையுடைய நற்பண்பு இல்லாத அரக்கர்களைக் கொன்று போரிடும் சக்கராயுதத்தை உடைய திருமால் விருப்பத்தோடு அமைத்த இராமேச்சுரக் கோயிலை , சென்று தொழுது கடைத்தேறுவாயாக . அறியாயாயின் நின் நிலை நன்றல்ல . ( நன்று போல் ).

குறிப்புரை :

குன்றுபோல் தோள் உடைய அரக்கர் , குணம் இலா அரக்கர் . குணத்தால் அன்றித் தோளின் வலிய தோற்றத்தால் மட்டும் அரக்கரைக்கொன்று . தம் சாரியை . போர் ஆழி - போர் வெற்றியைத் தரும் சக்கிரப் படையையுடைய ( மால் ). அம்மால் - அந்தமால் ; அழகியமால் , இராமன் - அழகன் ; இனியன் , வேட்கை - கொலைத் தீவினையைத் தீர்த்துக்கொள்ளும் பெருவிருப்பம் ; சிவபத்தியுமாம் . நெஞ்சமே , நீ நன்மையை அறிதி ஆயில் , திருவிராமேச்சுரமே சென்று தொழுது நீ உய் . நன்றுபோல் நெஞ்சமே - நன்று போலும் என்றது நன்று அன்று . தீதே என்றதாம் . தீதாதலின் , நன்மையை அறிதி ஆயின் , சென்று தொழுது உய் எனலாயிற்று . நீ என்பது இருமுறை நின்றது நெஞ்சொடுற்ற பேச்சு நடையாதலின் , நன்மை - சிவம் , சிவப்பேறு , ` அறிதல் ` ` ஈண்டு `, உயிர் அறிதற்குத் தான் கருவியாய் நின்று நினைதலையுணர்த்திற்று . அறிதற்றொழில் உயிர்கே உரித்து . ஏனைத் தத்துவங்களுக்கில்லை .

பண் :

பாடல் எண் : 5

வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற்ப டுத்துத்
தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.

பொழிப்புரை :

கடலைச் சேது கட்டித்தடுத்து , வீரம் மேம்பட்டுக் கோரைப் பற்களை வெளியே காட்டிக் கொண்டு வானளாவ உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குச் சென்று அங்கே கொன்று , மீண்டு பேராற்றலுடைய திருமால் கோயில் செய்து வழிபட்டிருந்த இராமேச்சுரத்தை , அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைவார் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர் .

குறிப்புரை :

வீரம் மிக்கு எயிறு (- கோரைப்பல் ) காட்டி , விண் உற நீண்ட ( ஓங்கி வளர்ந்த ) அரக்கன் என்க . கூரம் - கொடுமை . க்ரூரம் என்னும் வடசொல்லின் திரிபு ஆகும் . கூரமிக்கவன் - மிக்க கொடியன் . கூரமும் உளர் கொடுபடையினும் உயிர் உணவல கொடியார் , ( சிவதரு மோத்தரம் . 7:- 45) சென்று கொன்று உடன் கடற்படுத்துத் தீரம் மிக்கான் ( இராமபிரான் ). இருந்த - கோயில் செய்து வழிபட்டு இருந்த . நீண்ட அரக்கன் :- கல்லாது நீண்டவொருவன் ` உலகத்து நல்லறிவாளரிடைப்பட்டு மெல்ல இருப்பினும் நாய் இருந்தற்றே ` ( நாலடியார் ) என்புழி நீட்சி காலத்திற்கும் அவன் உடலின் நெடிய வளர்ச்சிக்கும் பொதுவாதல் போல்வது . நீண்டு கூர எனினும் பொருந்தும் . உடன் :- விரைவுப் பொருட்டு , ஏனைய அரக்கருடன் எனலுமாம் . கடற்படுத்தல் - கடலில் வீழ்த்தல் , மூன்றுலகிற்கும் அதிபதியாகிய பெரிய வீரனைக் கடற்படுத்தியது மிக்க தீரமாகும் . கோரம் மிக்கார் - அகோர மந்திர செபத்தின் மிகுதியாற் கொடுவினைகளைத் தவிர்த்துக்கொண்ட சிவ நல்வினையாளர் ` ஆனைந்துந்தான் பருகிக் கோரம் இருநூறு ` ( தணிகைப் , அகத் , 391). கோரம் - பூவரும்பு . ( சூடாமணி நிகண்டு 11. ரகரவெதுகை 6 ) அச்சம் எனக்கொண்டு , பிறப்பச்சம் மிக்கு அரிய தவத்தால் எனலும் ஆம் . கூடுவார் குறிப்புள்ளார் . குறிப்பு - சிவத்தையே பெறுதல் வேண்டும் என்னும் குறிக்கோள் . மால்செய்கோயிலை யார் சென்று வழிபடினும் தத்தம் குறிப்பு ( நினைப்பு ) நிறைவேறப் பெறுவர் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

ஆர்வல நம்மின் மிக்கா ரென்றவவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய் திருவிரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை யெந்தை பாலே.

பொழிப்புரை :

மட நெஞ்சமே ! ` நம்மை விட வலிமை மிக்கவர் யாவர் ` என்று செருக்குற்ற அவ்வரக்கர்கள் ஒன்று கூடிப் போரிலே வெற்றியைக் கருதி வலிமைமிக்குப் போரிட்டாராக , அவர்களை அழித்து அவர்களுடைய தேர்ப்படையின் வலிமையையும் போக்கிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை அணுகிச் செஞ்சடைப் பெருமான் பால் அடைவாயாக .

குறிப்புரை :

நம்மினும் வலம் மிக்கார் ஆர் ? ஆர் நம்மின் வலம் மிக்கார் ? என்ற அவ்வரக்கர் கூடிப் பொருதனர் . பொருத அவர் தம்மை வீட்டித் தேர்வலம் செற்ற மால் . மால் செய் ஈச்சுரத்தை நெஞ்சமே சேர் . எந்தைபால் சேர் . அரக்கராகிய பொருதவர் எனலும் பொருந்தும் . போர்வலம் - போர் வலிமை ; வன்போர் . மிக்கு - மேற்சென்று ; மண்டி . பொருதல் - தாக்குதல் ; போர்புரிதல் . வீட்டி - அழித்து . தேர்வலம் :- தேர்ப்படை வலிமையுமாம் . சென்ற - அழித்த . ஆர்வலம் - அன்பு . ( தி .4 ப .69 பா .5.)

பண் :

பாடல் எண் : 7

வாக்கினா லின்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மாறான்
தேக்குநீர் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க ணோய்வினை நுணுகு மன்றே.

பொழிப்புரை :

இனிமையாகப் பேசுதற்கு அமைந்த வாயாலே இனிய சொற்களைப் பேசி வாழாத அரக்கர்களை அழிக்கத்தக்க படைகளால் தாக்கி அவர்கள் உயிரை உண்டு திருமால் கடல் நீரைத் தேக்கிய அணையின் கரையில் அமைத்த கோயிலாகிய இராமேச்சுரத்தை அகநோக்கிலும் புறநோக்கிலும் கண்டு தரிசித்துத் தலையால் வணங்குபவருடைய நோய்களும் வினைகளும் அழிந்து விடும் .

குறிப்புரை :

வாக்கினால் - இனியனவும் நல்லனவும் கூறிப் பழகத் தக்க வாயால் . இன்பு - இன்பம் விளைப்பனவாய சொற்களை . உரைத்து - சொல்லி . வாழ்கிலார் - வாழாத அரக்கர் . வாழ்கிலார் தம்மை யெல்லாம் - வாழமாட்டாத எல்லா அரக்கரையும் . போக்கினால் - போக்கத்தக்க படையால் . புடைத்து - தாக்கி , அவர்கள் உயிரை உண்டு செய்த கோவில் . மால் தான் செய்த கோயில் . தேக்கு நீர் - தேங்குதலுடைய கடல் நீரில் ; கட்டிய அணைக்கரையில் . ` தேக்கு ` தேங்கு என்னும் அடியாகப் பிறந்த பெயர் . ` போகு ` ` போக்கு `, தேக்கம் , ஒடுக்கம் , அடக்கம் என்பவற்றின் அடியும் உணர்க . நோக்கு - அக நோக்கம் , புறக்காட்சி இரண்டும் பொருளாகும் . நோய்வினை - நோயும் அதற்கேதுவான வினையும் . நுணுகும் - குறையும் . ` உள்ளதன் நுணுக்கம் `. நோய் - இன்ப துன்பம் ( பிராரத்தம் ). வினை - ஆகா மியம் , சஞ்சிதம் . மூலகன்மம் வேறு . இவை அதன் காரியம் .

பண் :

பாடல் எண் : 8

பலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.

பொழிப்புரை :

பலகாலமாக இவ்வுலகில் கூட்டமாகத் தோன்றித் தீமைகளையே செய்து கொல்லும் வில்லை ஏந்திய கொடியவர்களான அரக்கர்களைக் கொன்று வீழ்த்திய வில்லை ஏந்திய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தலையினால் வணங்கும் அடியவர்கள் பின் உடம்பாலும் முழுமையாக விழுந்து வணங்குவார்கள் . அச் செயல் தவப் பயனால் நிகழ்வதாகும் .

குறிப்புரை :

பலவும் நாள் - பலநாளும் ; நாள் பலவும் . பார் - மண்ணுலகு . குழுமி - கூடி ; கொலைவில் ; கொலைவில்லார் ; கொலை விலார் . கொல்வார் செயல் கொல்லுங் கருவிக் கடையாயிற்று . வில்லாரும் கொடியரும் ஆய அரக்கர் . ` கொன்று விழுத்த சிலையினான் `:- கொலையும் விழுத்தலும் சிலையினான் வினை . அவனது கருவி சிலை . ` சிலை ` என்னும் மரத்தாற் செய்தலாற் பெற்ற பெயர் . ` தலையே நீ வணங்காய் ` தாழ்வர் - ` தாழ்வெனுந் தன்மை ` யுடையவர் ( தி .4 ப .60 பா .2). ஆம் தவம் - ஆதற்கு ஏதுவான தவம் . ` ஏகம்பம் மேவினாரைத் தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குத் தலைவர் தாமே ` ( தி .4 ப .44 பா .3). ` தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே ` ( தி .2 ப .77 பா .2).

பண் :

பாடல் எண் : 9

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே.

பொழிப்புரை :

நெஞ்சே ! பல ஆண்டுகள் சிறந்த தவத்தைச் செய்து , ஒழுக்கக் கேடு உள்ள அரக்கர்களை எல்லாம் அவர்கள் அழியுமாறு சக்கரம் முதலிய படைகளால் அழித்துப் பின்தக்க இடத்தைத் தேடித் திருமால் அமைத்த இராமேச்சுரத்தை நீ விரும்பிச் சென்று வாழ்தி . அதுவே உனக்கு நன்னெறியாம் .

குறிப்புரை :

மாதவங்கள் கோடிசெய்து எறிந்துகொண்டு தேடிச் செய்த கோயில் . குன்றினார் - நல்லொழுக்கம் முதலியவற்றிற் குறைந்தவர் . ( அரக்கர் ). வீட - அழிய . சக்கரம் - மரூஉ . சக்கிரம் ` ` யரலக் கிகரம் `. ஈண்டுச் சக்கிரம் என்பது படை என்னும் பொருட்டாம் . எறிந்து - வீசிக்கொன்று . மால் என்றது - ஈண்டு இராமபிரானை . நெஞ்சமே நீ நாடிவாழ் . நல்நெறி ஆகும் . ` நன்னெறி `:- ` நன்னெறியாகிய ஞானம் ` ( சிவஞானபோதம் . சூ . 8. அதி . 1. ஏது ) ` நன்னெறியாகிய ` என ஞானத்தை விசேடித்தார் . நன்மையெனப்படுவன எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மையெனப் படுவது வீடுபேறு என்ப . அதனைத் தலைப்படுதற்கு ஏதுவாச் சிறந்த நெறியாகலின் , ஞானம் நன்னெறி யெனப்பட்டது . ( சிவஞான மாபாடியம் ). ( கோடி ) தனுக்கோடியில் எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 10

வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தங்கணா லெய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே.

பொழிப்புரை :

அகத்தில் உள்ள வன்மையைப் புறத்தில் காட்டும் கண்களை உடைய கொடிய அரக்கர்கள் வாழும் செயலை அறியாராய்த் துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்களைச் செய்ய , அவரை அழித்துச் சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தம் கண்ணால் தரிசிக்கும் நற்பேறு உடையவர்கள் சிவபெருமான் பக்கலிலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர் .

குறிப்புரை :

வன்கண்ணர் - அகத்தின் வன்மையைப் புறத்திற் காட்டுங் ( கொடுங் ) கண்ணுடையர் , தறுகண் , கடுங்கண் , இடுக்கண் , மென்கண் , புன்கண் , செங்கண் , கருங்கண் , வெங்கண் முதலிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்புணர்த்தி வருவன . வாள் - கொடுமை . வாளுமாம் . வாழ்வினை :- வாழ்வினை :- வினைத்தொகை . வாழ்வதற்கு உரியவினை , ஒன்று - சிறிது . புன்கண்ணர் - நோய் செய்வார் . துன்பம் விளைப்போர் . புன் கண் - துன்பம் , நோய் , மாட்டி - மாள் வித்து . ( மாள் + த் + இ முதனிலை யீறும் இடைநிலையும் டகரமாய்த் திரிந்தன ). கண்ணால் எய்தல் :- கண்டுபோற்றிவழிபடல் . தலைவன் பால் தாழ் ( தங்கு ) வர் என்றவாறு . ` ஆம் ` என்பது செய்யும் என்னும் முற்றன்று . அது பலர்பாற்படர்க்கைக்கு எய்தாது .

பண் :

பாடல் எண் : 11

வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி யரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந் திருவிரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பா ருள்குவா ரன்பி னாலே.

பொழிப்புரை :

மலைகளை ஒத்து உயர்ந்த , மணிகள் வைத்து இழைக்கப்பட்ட கிரீடங்களை உடைய அரக்கர் தலைவனான இராவணனை விரைவாக அடியோடு அழித்துத் தமிழகம் திரும்பித் திருமால் செய்த கோயிலாய் அலைகள் முத்துக்களைச் சமர்ப்பித்து வணங்கும் திரு இராமேச்சுரத்தை முன்னைய இப்பத்துப் பாடல்களாலும் போற்றுபவர்கள் அன்பினாலே தியானித்து நற்பேறு பெறுபவராவர் .

குறிப்புரை :

வரைகள் ஒத்தே உயர்ந்த - மலைகளைப் போன்று ஓங்கிய . விரைய ஒடுக்கி ; முற்றும் ஒடுக்கி ; அற ஒடுக்கி . மீண்டு செய்த கோயில் . திரைகள் முத்துக்களைக் கரைக்கண் வீசி வணங்குந் திருவிராமேச்சுரம் . அடியார்கள் மலர் தூவி வணங்குதல் போன்று அலைகள் முத்துக்களைத் தூவி வணங்குந் தோற்றம் கண்கூடு . உரைகள் பத்தால் - முன்னைய பத்துப் பாடல்களால் . உள்குவார் - நினைப்பார் . அன்பினாலே உள்குவார் உரைப்பார் என்க .

பண் :

பாடல் எண் : 1

வேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென்
றோதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

மறைமுதல்வனே ! மறைகளைப் பாடுகின்றவனே ! தேவர்கள் தலைவனே ! பார்வதிபாகனே ! பரவிய சடையிற் பிறையைச் சூடும் ஆதிப்பெருமானே ! திருஆலவாயிலுள்ள அப்பனே ! உன்திரு நாமங்களைப் பலகாலும் ஓதி மலர்கள் தூவி ஒருவழிப்பட்ட மனத்தோடு உன்திருவடிகளை அடியேன் காணுமாறு அருள் செய்வாயாக .

குறிப்புரை :

வேதியா - மறைமுதல்வா ; வேதகீதா - வேதத்தைப் பாடுதலுடையவா ; வேதப்பாடலாய் , விண்ணவர் அண்ணா - தேவாதி தேவா , என்று என்று :- பன்மைக்குறிப்பு . என்று ஓதியே மலர்களைத் தூவுதல் வேண்டும் . தூவுதல் தந்திரம் . ஓதுதல் மந்திரம் . அம்மந்திரத்தின் வாச்சியப் பொருளாக நினைத்தல் பாவனை . மந்திரம் தந்திரம் பாவனை ஆகிய மூன்றும் ஒருங்கு நிகழாதது நிறை வழிபாடன்று . ஏகாரம் ஓதாமையைப் பிரித்து நிற்றலின் பிரிநிலை . ` ஓதி மாமலர்கள் தூவி ` ( தி .4 ப .63 பா .1.) தேற்றமும் ஆகும் . ஓருங்கி - ` ஒன்றியிருந்து . படர்ந்த சடைமிசைப் பிறையைச் சூடும் முதல்வா , ஆலவாயில் - ஆலமரத்தின் கீழ் . இச்சுவாமிகள் அருளிய அடைவு திருத்தாண்டகத்தில் ( தி .6 ப .71 பா . 7) நெய்தல் வாயில் , முல்லைவாயில் , ஞாழல் வாயில் , மதுரை நகர் ஆலவாயில் , புனவாயில் , குடவாயில் , குணவாயில் என்றவற்றை நோக்கின் , திருவிளையாடற் புராணத்திலே திருவாலவாய் ஆன படலத்திற் (19 - 26 பா .) கூறிய பெயர்க்காரணம் எத்தகையது என்றும் உணரலாம் . வாயும் வாயிலும் ஒன்றோ ? முல்லைவாயில் , ஞாழல் வாயில் முதலியவற்றிலுள்ள ` வாயில் ` என்பது வாயாகிய உறுப்பினைக் குறிக்குமோ ? ஆலவாயிலும் ஞாழல் வாயிலும் மரத்தைக் குறித்து வந்த பெயராதலை இந்நாயனார் திருவாக்கைக்கொண்டு நன்குணர லாகாதோ ? ` வாயில் புகுவார் ` என்று அத்திருத்தாண்டகம் உணர்த்தும் ஒன்றே , ஆலம் (- நஞ்சு . அது ) பாம்பிற்கு ஆகுபெயராய் , வாலை வாயில் வைத்து எல்லை காட்டிற்று என்றதைக் கட்டு என்று காட்டும் . இத்திருப்பாடலிலும் ` ஆலவாயில் அப்பனே ` என்றதன்றி , ஆலவாய் என்னாமை அறிக . ` அப்பன் `:- ` அம்மையப்பன் ` எல்லா வுயிர்க்கும் இவன் ஒருவனே அப்பன் , ` அம்மையே அப்பா `.

பண் :

பாடல் எண் : 2

நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே யீசா வென்றென் றேத்திநா னேசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பப்படுபவனே ! நான்கு முகங்களை உடையவனே ! தலைவனே ! ஞான வடிவினனே ! என் பொன் போன்றவனே ! எல்லோரையும் ஆள்பவனே ! அன்பனே ! ஆலவாயில் அப்பனே ! உன்னைப் பலகாலும் துதித்து அடியேன் மனத்திரிபுகளை நீக்கி , பொறிபுலன்களின் வழியே சென்று பிறவாத வண்ணம் நாயேனுக்கு அருள் செய்வாயாக .

குறிப்புரை :

நம்பனே - எல்லாவுயிர்களும் உறும் நசைக்குரியனே . ` நம்பும் மேவும் நசையாகும்மே ` ( தொல் . உரி ) ` நான்முகத்தாய் ` - நான்கு முகங்களை யுடையவனே . ` நாலு கொலாம் அவர்தம் முகம் ஆவன ` ( தி .4 ப .18 பா .4.) குறிப்பிற் காண்க . மலரவனே எனல் ஈண்டுப் பொருந்தாது . நான்முகத்திற்குத்தக ` எண்டோள் ` உண்மை பயின்ற வழக்கு . ` எண்டோள் வீசிநின்றாடும் பிரான் ` ` எட்டுக் கொலாமவர் தோளிணை யாவன ` ` எண்டோள் முக்கண் எம்மானே `. நாதன் - இயவுள் . ஞானமூர்த்தீ - அருளுருவினனே ; துரியநிலை . இன்புருவம் துரியாதீய நிலை . என் பொனே - எனக்குப் பொன்னாயிருந்து நிலைத்த பயனைச் செய்பவனே . ஏனைய பொன் தானும் நிலையாது . தன்னால் எய்தும் பயனும் நிலையாது . அஃது அனைவர்க்கும் உரிய பொன் . இது பெற்றோர்க்கே உரித்து . ஆதலின் ` என்பொன் ` என்றார் . ஈசா - உடையாய் . ` என்று என்று `:- ( தி .4 ப .62 பா .1.) குறிப்பு . ` ஏசற்று - மனமுதலிய விகாரங்களை அகற்றல் . ` பூசித்துப் பரமசிவன் பூசனையைப் போல் உளத்துள் ஏசற்று வலஞ்செய்து பணிந்து குவிந்து இருகரமும் தேசுற்ற தேசிகனே சிவஞானதானவினை ஆசற்று நிறைவேற அநுமதம் செய்க ` ( சிவதருமோத்தரம் . சிவஞான தானவியல் . 27 உரை ). இதற்குரிய பிற பொருள் ஈண்டுப் பொருந்தா , என்றும் பின்பினே திரிந்து :- ` தோள்மேல் நீறுகொண்டு .... இட்ட ...... நெற்றி நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று ` ( தி .5 ப .13 பா .7). ` பண்மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல ...... வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே ` ( தி .6 ப .58 பா .1) ` குழகனா .... ரைக் கண்டு அடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத் தம்முடைய பூதம் சூழ வா வா என உரைத்து மாயம் பேசி வலம்புரமேபுக்கு அங்கே மன்னினாரே ` ( தி .6 ப .58 பா .4) என்று பிறாண்டும் ஆண்டான் பின்னே அடிமை போதலை யுணர்த்தியதறிக . ` உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே `. குழந்தை ( அடிமை ) யான உயிரின் பின் , ஆண்டு அருளிய தாயுமானார் போதலையும் ,` புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம் புறமே திரியாதே போது நெஞ்சே` ( தி .6 ப .31 பா .10) என்று பொறிபுலன் பின்னே நெஞ்சம் போதலையும் குறித்தல் அறிந்து , பிறவாமைக்குத தக்க போக்கைக் கடைப்பிடிக்க பேர்த்துப் ( பெயர்த்து ) மீண்டு . இனிப் பேர்த்து என்க . பேர்த்துப் பிறத்தலின் எதிர் மறையாதலின் , பேர்த்து என்னும் வினையெச்சம் பிறத்தல் என்னும் தொழிற்பெயரின் முதனிலை கொண்டது . பிறவாவண்ணம் அருள் செய்யாய் . அன்பனே :- ` அன்பே சிவம் `. ` எந்தை ; யாய் ; எம் பிரான் மற்றும் யாவர்க்கும் தந்தை ; தாய் ; தம்பிரான் . தனக்கு அஃது இலான் ` ( தி .8 திருவாசகம் ).

பண் :

பாடல் எண் : 3

ஒருமருந் தாகி யுள்ளா யும்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளா யாளும்வல் வினைக டீர்க்கும்
அருமருந் தால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தேவாமிருதமாய் உள்ளவனே ! தேவர் களுக்கும் மக்களுக்கும் தலையான மருந்தாக உள்ளவனே ! சிறந்த அமுதின் சுவையாய்ப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகி உள்ளவனே ! எங்கள் வலிய வினைகளைப் போக்கி எங்களை அடிமை கொள்ளும் அருமருந்தாய் ஆலவாயில் உறையும் தலைவனே ! அருள் செய்வாயாக .

குறிப்புரை :

ஒரு மருந்து - தனி மருந்து . ஒப்பொன்றும் இல்லாதது . பெருமருந்து - ஏனைய மருந்துகட்குத் தலையான மருந்து . கருமருந்து - பிறவிப்பிணிதீர்க்கும் மருந்து . ` சிவஞானாமிர்தம் ` ` ஞானாமிர்தம் ` ` சிவானந்தாமிர்தம் ` ` ஆனந்தாமிர்தம் ` ` ஞானமயமாய்ப் பிரிப்பின்றி நின்று அநாதியே தொடர்ந்து வரும் பிறவிப்பிணியினை அறுத்தற்கு ஓர் மருந்தாந்தன்மையினையுடையவன் அக்கடவுள் . அதற்கு ஐயம் இல்லை . அதனை எஞ்ஞான்றும் இடைவிடாது அன்புடன் நினைப்பீராக ` ( நிரம்ப வழகிய தேசிகர் உரை ) ` உன்னும் .... மன்னுபவந்தீர்க்கும் மருந்து ` ( திருவருட்பயன் . 1-10). ` மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை உன்னுவார் வினையாயின ஓயுமே ` ( தி .5 ப .87 பா .2). ஒன்றே பிறவிநோய் தீர்க்கவல்ல பெறலரும் பெருமருந்தாதலின் , ஒருமருந்து , பெருமருந்து , கருமருந்து , அரு மருந்து என்றார் . உம்பருலகு - இம்பருலகு எல்லாவற்றிற்கும் பெரியதொரு மருந்து பிறிதில்லை . பேரமுதின் சுவை ( - பேரின்பச் சுவை ) யாதலின் ` கரு மருந்து ` ம் வல்லினைகள் தீர்க்கும் அருமையால் ` அருமருந்து ` ம் ஆயிற்று . தி .8 திருவாசகம் 618. 620. 624. 632.

பண் :

பாடல் எண் : 4

செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

தேவர்தேவனே ! நீலகண்டனே ! மான்மறியையும் மழுப்படையையும் ஏந்தியுள்ளவனாய சைவ சமயக்கடவுளே ! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே ! ஆலவாயில் உறையும் அப்பனே ! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக .

குறிப்புரை :

செய்ய - சிவந்த ; ` செம்மை ` யதாகிய . கமல பாதம் - தாமரைப்பூப்போலுந் திருவடி . சேரும் ஆ - இடை விடாது நினையும் ஆறு . சேருமா அருள் செயாய் என்க . தேவர்தேவே - தேவர்க்கெல்லாம் தலைமைத் தேவாயுள்ளவனே . மை - நீலவிடம் , பண்பாகு பெயர் . ` நீலவிட அரவணிந்த நிமலா `; ` நீலகண்டன் `, மான் மறி - மான் கன்று , மழு - மழுப்படை , சைவனே - ( சிவசம்பந்தனே ) சைவ சமயத்தின் கடவுளே . சாலக்கற்றறிவு . ஞானம் கற்றறிவு , ஞானம் சாலக் கற்றறிவிலாத நாயேன் . நாயேனுடைய ஐயனே . ( என்னையனே ), திருவாலவாயில் அப்பனே நின் கமலபாதம் சேருமாறு அருள் செயாய் .

பண் :

பாடல் எண் : 5

வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலி கொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லி லுண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப் பளகனே னுளம தார
அண்டனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

உலகத் தலைவனே ! ஆலவாய் அப்பனே ! வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி மிகவும் ஊர்களில் பிச்சையெடுத்தும் அப்பிச்சை உணவை உண்ணாது விடம் ஒன்றையே உண்டவன் என்று சொல்லப்படும் உன்னை அடியேன் வாழ்வின் முற்பகுதியில் விருப்புற்று நினைக்காத குற்றத்தினேன் . அத்தகைய அடியேனுடைய உள்ளம் நிறையும்படி அருள்செய்வாயாக .

குறிப்புரை :

வெள்தலை - பிரமகபாலம் , மிகவும் கொண்டு , மிகவும் உண்டதும் இல்லை எனல் சிறவாது , பலிகொண்டு உண்டதும் இல்லை . பலியைக் கொண்டே அன்றி உண்டதே இல்லை . நஞ்சினைத்தான் உண்டது . பண்டு - பலபிறவியாக . உன்னை நினையமாட்டாப் பளகன் . பளகு - குற்றம் . ` நெஞ்சே பளகறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே ` ( தி .8 திருவாசகம் 39) ` பளகறும் இட்டியாதி பசு தருமங்கள் காலத்தளவையிற் கழியும் ` ( காஞ்சிப் புராணம் , சத்ததானப் 7) பளகனேன் - குற்றத்தினேன் , ` குற்றமே பெரிதுடையேன் ` உளம் ஆர , அது பகுதிப் பொருட்டு . அண்டன் - தேவன் , எல்லாவுயிர்களுக்கும் அண்டற்குரியவன் . அண்டதேவன் - எல்லா உயிர்களும் அண்டற்குரியவன் . ஆர அருள்செயாய் . ஆர - நிறைய .

பண் :

பாடல் எண் : 6

எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநா னேசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

விடத்தைக் கழுத்தில் அடக்கிய , சிவம் என்ற சொற் பொருளானவனே ! ஆலவாயில் அப்பனே ! என்றும் அழிவில்லாத அடைக்கலமாகும் இடம் என்று புகழ்ந்து நான் மகிழ்ந்து என்றும் வஞ்சனையின்றி உன் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் வண்ணம் நாயேனுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வாயாக .

குறிப்புரை :

எஞ்சல் - குறைதல் , இல் - இல்லாத , புகல் - புகும் இடம் ; அடைக்கலம் புகுதற்குரிய மெய்ப்பொருள் , இது - இத்திருவால வாயப்பன் மலரடி என்று ஏத்தி நான் ஏசற்று வஞ்சகம் ஒன்றும் ( சிறிதும் ) இன்றி மலரடி என்றும் காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட்பதமே , நாயேற்கு அஞ்சல் என்று அருள் செய்யாய் . நற்பொருள் = சிவம் . அச்சிவம் என்னும் பொருளைக் குறிக்கும் சிவமெனும் நாம பதம் நற்பொருட் பதம் . பதம் ( சொல் ) வேறு பதார்த்தம் ( சொற் பொருள் ) வேறு . ` நற்பதத்தார் நற்பதமே ... ... ... ... நால் வேதத்து அப்பால் நின்ற சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை ` என்றும் வஞ்சகம் இன்றி எனலுமாம் . என்றும் காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட்பதம் எனல் சிறந்தது . ( தி .12 பெரிய . திருநீல . 4).

பண் :

பாடல் எண் : 7

வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேனுன்
செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

தெள்ளிய அலையில் தோன்றிய விடத்தை உண்ட இளையோனே ! அழகிய வில்லை ஏந்தியவனே ! கூத்தனே ! மாற்றுயர்ந்த தங்கம் போன்றுள்ள அழகனே ! ஆலவாயில் பெருமானே! குறைபாடில்லாமல் உன்னைவாழ்த்தி வழிபடும் அடியவனாகிய யான் உன்னுடைய செழித்த மலர்போன்ற திருவடிகளைத் தரிசிக்குமாறு அருள்செய்வாயாக .

குறிப்புரை :

` வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்டனேன் ` என்றது கொண்டு நாயனார்க்குச் சொக்கலிங்கமே ஆன்மார்த்த பூசா மூர்த்தி என்பர் . வழு - கேடு ; தவறு ; பாதகம் . கடவுளை வாழ்த்துவதிற் கேடும் தவறும் பாதகமும் உறலாகாது . வாழ்த்துதல் - வழுத்துதல் ; வாழ்க என நினைந்து சொல்லிக் கையாற் குறித்தல் . ` வழு ` ` வாழ் ` என்னும் இரண்டிற்கும் உரியது அம்முதனிலை , அது ` விழு ` ` விழை ` இரண்டிற்கும் ` வீழ் ` என்னும் முதனிலை யுரித்தாதல் போல்வது . வழிபாடு - அருள்வழி யொழுக்கம் . ` தொண்டன் ` என்னும் படர்க்கைப் பெயரைத் தன்மையாக்கித் தொண்டனேன் எனல் தொல் வழக்கு . ` பளகனேன் ` ( தி .4 ப .62 பா .5) என்றதும் அது உன்பாதம் . செழுமலர் - தாமரைப்பூ . மலர்ப்பாதம் - ` கமல பாதம் ` ( தி .4 ப .62 பா .4.) காண அருள் செயாய் , நஞ்சம் உண்டும் பொலிவு குன்றாமையாற் ` குழகன் ` ( அழகன் , இளமையன் ) என்றார் . கோலவில்லீ - அழகிய மேரு வில்லாளனே , கூத்தனே - கான்மாறியாடியவனே . மாத்து - பத்தரை மாற்றுத் தங்கம் , இது ` சொக்கன் ` என்னும் பெயர்ப் பொருளின் விளக்கம் . சொக்கு - அழகு , பொன் , மயக்கு . மாத்தாயுள்ள அழகன் என்றதும் அம் முப்பொருளும் பயத்தல் அறிக . ` ஆனாய் ` ( சங்கற்ப நிராகரணம் . 12;- 80-81) ` மாற்றிலாச் செம்பொனாவர் மாற்பேறரே `.

பண் :

பாடல் எண் : 8

நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும்
அறிவனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

கடல் நிறத்தவனான திருமாலை உடலின் ஒரு பாகமாக உடையவனே ! மேம்பட்ட வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அறிபவனே ! ஆலவாயில் அப்பனே ! நறியமலர்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாள்தோறும் புகழ்ந்து வாழ்த்தித் திருவடிகளைச் செறிதற்குரிய வழிகளை உள்ளத்துக் கொண்டு உன் திருவடிகளை அடியேன் சேரும் வண்ணம் அருள் செய்வாயாக .

குறிப்புரை :

நறுமலரும் நீரும் கொண்டு நாள்தோறும் ( நீர் ) ஆட்டியும் ( மலர் ) தூவியும் ஏத்தியும் வாழ்த்தியும் சித்தம் வைத்தும் திருவடி சேரும் வண்ணம் அருள் செய்யாய் . செறிவன - திருவடியிற் செறிதற்குரிய நெறிகள் பலவற்றால் ; யோகமார்க்கங்களால் . யோகம் - செறிவு . சீலம் (- சரியை ) நோன்பு (- கிரியை ) செறிவு ( யோகம் ). அறிவு ( ஞானம் ), ( தி .8 திருவாசகம் . 645) மறிகடல் வண்ணன் பாகா :- ` இடமால் தழுவிய பாகம் ` `( தி .4 ப .2 பா .4)` மையரிக் கண்ணியாளும்மாலும் ஓர் பாகம் ஆகிச் செய்அரிதில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே கையெரிவீசி நின்று கனலெரியாடுமாறு ,` ( தி .4 ப .22 பா .4). நால் வேதமும் ஆறங்கமும் அறிதலுடையவனே .

பண் :

பாடல் எண் : 9

நலந்திகழ் வாயி னூலாற் சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை யரச தாள வருளினா யென்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாக
அலந்தன னால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

நன்மைகள் விளங்குதற்குக் காரணமான தன் வாயினால் நூற்கப்பட்ட நூலினாலே சருகான இலைகள் விழுந்து தங்கி நிழல் தரும் பந்தலாக அமைத்த சிலந்தியை மறுபிறப்பில் அரசாளும் மன்னனாகப் பிறக்குமாறு அருள்செய்தாய் என்று உள்ளத்திலே உட்கொண்டு வந்து உன் திருவடிகளைக் காணவருந்தும் அடியேன் காணுமாறு ஆலவாயில் அப்பனாகிய நீ அருள்செய்வாயாக .

குறிப்புரை :

சிலந்தி வாயில் திகழும் நலம் , முழுமுதல்வனுக்கு உரியதான பந்தர் . சிலந்தி வாய்நூலாற் செய்த நிழல் , பந்தர் நிழல் போல்வதொரு நலம் விளைத்தது . ` சருகிலைப்பந்தர் `:- ` ஞானமுடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொற்றிருமுடிமேற்கானல் விரவுஞ் சருகுதிரா வண்ணம் கலந்த வாய்நூலான் மேனற்றிரு மேற்கட்டியென விரிந்து செறியப் புரிந்துளது , ` எம்பிரான்றன் மேனியின்மேற் சருகு விழாமை வருந்தி உம்பர் இழைத்த நூல்வலயம் ` ( தி .12 பெரியபுராணம் கோச்செங்கட் சோழ நாயனார் . 3,5) என்றதால் , சருகிலை விழாதவாறு செய்த பந்தர் ( சருகு இல்லையாகச் செய்த பந்தர் ) என்க .

பண் :

பாடல் எண் : 10

பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலு மிருபது தோள்
அடர்த்தனே யால வாயி லப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

திருநீற்றைப் பூசி அழகில்லாத இந்த உடலிலே மனம் ஒரு வழிப்பட்டு உன் திருவடிகளைப் பற்றி என்றும் அவற்றின் பெருமையை அடைவுகேடாகப் பேசிய வண்ணம் காலம் போக்க இயலாதேனாய் உள்ளேன் . கயிலையைப் பெயர்ப்பேன் என்று கருதி இராவணன் வந்து அம்மலையை எடுக்க முயன்ற அளவில் அவனுடைய இருபது தோள்களையும் வருத்திய ஆலவாயில் பெருமானே ! அடியேனுக்கு அருள்செய்வாயாக .

குறிப்புரை :

இலங்கைக் கோன் ( திருக்கைலையை ) ` எடுப்பன் ` என்று வந்து எடுத்தலும் ( அவன் ) இருபது தோள் ( களையும் ) அடர்த்தலைச் செய்தவனே ! ஆலவாயில் அப்பனே நான் பொல்லாக் குரம்பையில் பொடிக் கொடுபூசிப் புந்தி ஒன்றி நின்தாள்கள் பிடித்து என்றும் பிதற்றியிருக்கமாட்டேன் . அவ்வாறு இராமல் நின் தாள்களைப் பிடித்துப் பிதற்றி என்றும் இருக்க அருள் செய்யாய் . திருநீறு இன்றிச் சிவவழிபாடு செய்தலாகாது . ` நீற்றினை நிறையப்பூசி நித்தலும் நியமஞ்செய்து ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனார் ` ` மந்திரம் நமச்சிவாய ஆக நீறணியப் பெற்றால் வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே ` ( தி .4 ப .77 பா .4.) ` திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன் ` ( தி .4 ப .94 பா .6).

பண் :

பாடல் எண் : 1

ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.

பொழிப்புரை :

பார்வதிபாகனே ! மேம்பட்ட சோதியே ! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே ! மழுப் படையை ஏந்தியவனே ! ஆதியே ! தேவர்கட்குத்தலைவனே ! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே ! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றி நினையேன் .

குறிப்புரை :

மாமலர்கள் - சிவார்ச்சனைக்கு விதித்த சிறந்த பூக்களை . ஓதித் தூவி - சிவநாமங்களை ஓதி அருச்சித்து . மலர் தூவி நினையுமாறு - நின்னை அல்லால் நினையுமாறு ஒரு நினைவு இல்லேன் . ஓதிய நாமங்களுள் ` உமையவள் பங்கா , மிக்க சோதியே , துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே , ஆதியே , அமரர்கோவே , அணி யணாமலையுளானே ` என்பனவும் அடங்கும் . நீதி - சிவாகமமுறை , நினையல்லாமல் ஓதித் தூவி நினையுமாறு மற்றெவரையும் நினைவு இல்லேன் , ` அண்ணாமலையனை மறந்துய்வனோ ` ( திருக்குறுந்தொகை ) என்று தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்த வுண்மைக்குச் சேக்கிழார் திருவாக்கே சான்றாதலறிக . ` உண்ணாமலை யுமையாளொடு முடனாகிய வொருவன் ` ஆதலின் ` உமையவள் பங்கா என்றும் , பேரழலுருவனாதலின் ,` மிக்க சோதியே என்றும் , அழலாய் நின்றவாறே நில்லாது , அவ்வரியயனிருவரும் ஏனைய எல்லாவுயிரும் உய்யும் பொருட்டு அங்கம் பிரத்தியங்கம் சாங்கம் உபாங்கம் உடைய திருவுருக் கொண்டருளினான் ஆதலின் , ` துளங்கும் எண்டோட் சுடர் மழுப்படையினான் ` என்றும் அவனே மூவர்க்கும் முதல்வன் ( சதுரன் ) ஆதலின் ` ஆதியே ` என்றும் , எல்லாத் தேவர்க்கும் மகாதேவனாதலின் , ` அமரர் கோவே ` என்றும் , அத்தகைய பெறுதற்கு அரியன் ஆயினும் காட்சிக்கு எளியன் அணியன் ஆகி நினைக்க முத்திதருதலால் , ` அணி அணாமலையுளானே ` என்றும் , நெஞ்சம் அவனுக்கே இடமாக வைத்து இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்கும் அன்பே அமைந்தவராதலின் ` தொண்டனேன் ` ( தி .4 ப .63 பா .2.) என முன்னும் பின்னும் குறித்தற்குத்தக்க ஏதுவாய்ச் சிவாகம நீதிப்படி தமக்கையாரால் ஆட்கொள்வித்தமையை மறவாதவர் ஆதலின் , ` நீதியான் ` என்றும் , அவனுக்கே இடமாக்கிய நெஞ்சத்திற் பிறனுக்கு இடமின்மையால் , ` நின்னையல்லால் நினையுமா நினைவிலேன் ` என்றும் பாடியருளினார் பாவேந்தர் . நினைதல் (- மனம் ) ஓதல் ( வாக்கு ) தூவுதல் ( காயம் ) என்னும் முப்பொறிக்குமுரிய வழிபாடுணர்த்திற்று .

பண் :

பாடல் எண் : 2

பண்டனை வென்ற வின்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே யமரர் கோவே யணியணா மலை யுளானே
தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.

பொழிப்புரை :

பண்ணை வென்ற இனிய சொல்லையுடைய பார்வதிபாகனே ! நீலகண்டனே ! கார்காலத்தில் மலரும் கொன்றைப் பூவை அணிந்த கடவுளே ! தாமரை போன்ற திருவடிகளை உடையவனே ! தேவனே ! தேவர்கள் தலைவனே ! அழகிய அண்ணா மலையில் உள்ளவனே ! அடியவனாகிய யான் உன்னைத் தவிரப் பிறரை உயர்த்திச் சொல்லும் சொற்களைச் சொல்லுவேன் அல்லேன் .

குறிப்புரை :

பண்தனை - பண்ணிசையினிமையை . ஆகுபெயர் . வென்ற - வெற்றி கொண்ட . இன்சொல் - இனியவாய சொற்களையுடைய . பாவை :- உவமவாகுபெயர் . கார்கொள் கொன்றை :- ` கண்ணி கார் நறுங்கொன்றை `. கடவுள் :- பாசஞான பசு ஞானங்களைக் கடந்த பதிஞானமூர்த்தி . அண்டர் - தேவன் . தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமாறு ஒரு சொல்லும் இல்லேன் .

பண் :

பாடல் எண் : 3

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.

பொழிப்புரை :

சடமாகிய மாயையாகவும் , சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய் , குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூல கருமமும் பிறப்பும் பிறப்பிலிருந்து விடுதலையுமாய் நின்ற எம் பெருமானே ! நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர் தலைவனே ! உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றைத் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன் .

குறிப்புரை :

உருவம் ஆகி ஓதிய உலகு - காரியமாம் அசேதன ப்ரபஞ்சம் ; ( சடம் ) காரணம் மாயை . உயிரும் ஆகி ஓதிய வுலகு - சேதன ப்ரபஞ்சம் ; ( சித்து ). பெருவினை :- மூலகன்மம் நுண்வினை . ஏனைய மூன்றும் பருவினை . பிறப்பாய் நின்ற எம்பெருமான் . வீடாய் நின்ற எம் பெருமான் . ` ஊனநாடகம் ` ` ஞானநாடகம் ` ` பந்தமும் ஆய் வீடும் ஆயினார் ` ( தி .8 திருவாசகம் . 214) ` மருவி அல்லால் மற்றொரு மாடிலேன் `. மாடு - செல்வம் . ` செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே `. ` மலையுளான் ` ` மலையுளாய் ` என்றது அருளுரை . அஃது என்றும் பொய்யாகாது .

பண் :

பாடல் எண் : 4

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீறா
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழு மணியணா மலையு ளானே
என்பொனே யுன்னை யல்லா லேதுநா னினைவி லேனே.

பொழிப்புரை :

பசிய பொன்னே ! பவளமலையே ! மேம்பட்டவனே! பால் போன்ற வெண்ணிய நீற்றை அணிந்தவனே ! செம்பொன்னே ! மலர் போன்ற திருவடிகளை உடையவனே ! சிறப்பு மிக்க மாணிக்கமும் மேம்பட்ட அழகிய பொன்னும் அருவிகளால் கொழித்து ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் உள்ள அடியேனுடைய பொன் போன்ற அரியவனே ! உன்னைத் தவிர அடியேன் உள்ளத்தில் வேற்றுப்பொருள் யாதனையும் நினைக்கின்றேன் அல்லேன் .

குறிப்புரை :

பைம்பொன் - தங்கம் . தணிகைப்புராணம் (341) - களவு . செம்பொன் - பொன் . செம்பு , வெண்பொன் - வெள்ளி , இரும்பொன் - இரும்பு . பவளக் குன்று - ` பவளம்போல் மேனி `. பரமன் - எல்லாத் தேவர்கட்கும் மேலான பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறு . சீர் - கனம் . மணி - மாணிக்கம் . அம் - அழகு . பொன்னே கொழித்து வீழும் மலை . என் பொனே - என்னுடைய பொன் போலும் சாலச் சிறந்த சிவஞானப் பொலிவுடைய ஆனந்த வெள்ளமே . ஏதும் - எப்பொருளையும் . நினைவு - நினைதல் . மலர்செய் பாதா - அன்பர்களது அகத் தாமரை மலர்தலைச் செய்யும் திருப்பாதனே . ` மலர் ` முதனிலைத் தொழிற்பெயர் . ` செய்பாதா ` வினைத்தொகை . ` மலர்செய் ` இரண்டனுருபு விரித்துரைத்துக்கொள்க . செம்பாதமும் செய்பாதமும் ஒன்றாகா .

பண் :

பாடல் எண் : 5

பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா விறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே
இறைவனே யுன்னை யல்லால் யாதுநா னினைவி லேனே.

பொழிப்புரை :

பிறையைச் சூடிய சடைமுடியை உடையவனே ! தலைக்கோலம் அணிந்தவனே ! பார்வதிபாகனே ! வேதங்களில் வல்லவனே ! தலைவனே ! வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடியவனே ! வாமதேவனே ! ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைத் தேவர்கள் போற்றும் அழகிய அண்ணாமலையில் உறைபவனே ! அடியேன் உளத்தில் தங்கியிருப்பவனே ! உன்னைத் தவிர அடியேன் வேறு எந்தப் பொருளையும் விருப்புற்று உறுதியாக நினைப்பேன் அல்லேன் .

குறிப்புரை :

பிறை அணி முடியினானே - பிறை சூடிய சடைமுடிக் கடவுளே ; பிஞ்ஞகா - தலைக்கோலத்தானே ; பெண் ஓர் பாகா :- மாதியலும் பாதியனே ; மறைவலா - நான்மறைகளையும் தோற்றிய வன்மையனே ; மறைப்பொருள் உணர்ச்சியில் வல்லவனே ; இறைவா - எப்பொருட்கண்ணும் இருப்பவனே ; வண்டார் கொன்றையாய் - ` வண்டார் கொன்றையுன்மத்தம் வளர்சடைக் கொண்டான் ` ( தி .5 ப .53 பா .6). வாமதேவா ` கங்கை சூடும் வாமன் ` ( தி .4 ப .43 பா .4.) அறை கழல் - ஒலிக்கும் வீரகண்டை . ` இறைவா ` ` இறைவனே ` என்று ஈரிடத்து வந்தமையால் முன்னதற்குத் ` தங்குவோன் ` என்றும் , பின்னதற்குத் ` தலைவன் ` என்றும் பொருள்கொள்க . இறை என்பது தங்குகை ; தலைமை ; கடவுள் ; தலைவன் என்பன முதலிய பல பொருள் பயக்கும் .

பண் :

பாடல் எண் : 6

புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுல மலிந்தவண்ணா மலையுளா யலரின்மிக்க
வரிமிகு வண்டுபண்செய் பாதநான் மறப்பிலேனே.

பொழிப்புரை :

முறுக்குண்ட சடையின் மீது அலைகள் மோதும் நீரை உடைய கங்கையை வைத்து , யானைத் தோலை மேற்போர்வையாகக் கொண்டவனாய்க் காலனுக்கும் காலனானவனே ! குரங்குக் கூட்டங்கள் மிக்க அண்ணாமலையில் உறைவோனே ! மலரினும் மேம்பட்ட , கோடுகளை உடைய வண்டுகள் பண்பாடும் உன் திருவடிகளை அடியேன் மறத்தலைச் செய்யேன் .

குறிப்புரை :

புரிசடை முடியின் மேல் ( - முறுக்குண்ட சடை முடியின் மிசையில் ). ஓர் கங்கை என்னும் பொருபுனல் நங்கையை வைத்து , யானைத் தோலைப் போர்வையாக நினைந்து மேற்கொண்ட காலகாலா . ` யானையின் பசுந்தோல் பிறருடம்பிற் பட்டால் கொல்லும் ` ( சிந்தாமணி . 2787 நச்சினார்க்கினியர் உரை ) ஆயினும் நஞ்சுண்டே சுரன் அது போர்த்தும் இறவாதிருந்தமையால் ` காலகாலா ` என விளித்தருளினார் . ` ஆளும் நாயகன் அஃதறிந்துயிர்த்தொகை அனைத்தும் , வாளிலாது கண்ணயர்வது மாற்றுதல் மதித்து , நீளிருங் கரியுரித்திடும் அதளினை நிமலன் , றோளின் மேற்கொடு போர்த்தனன் அருள்புரி தொடர்பால் ` ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீரறாத , மையல் யானைவன்றோலை மேற்கொணடனன் மறைத்தான் ` ( கந்தபுராணம் . ததீசியுத்தரப் படலம் . 148, 149). அப் படலத்திற் புலித் தோல் , மழுப்படை , மான் , பாம்பு , தலை , துடி , பூதப்படை , முயலகன் முதலியவற்றின் வரலாறுகளைக் காரணத்தொடும் உணர்க . அதனால் , திருமுறைகளுள் அவற்றைப் பலமுறையும் கூறுதல் சிவப்ரபாவம் சிந்தையிடையறாதிருத்தற் பொருட்டு என்றுணரலாம் . அரிகுலம் - சிங்கத்திரள் . அரியென்றதன் பற்பல பொருள்களுள்ளே மலைக் கேற்புடையன யாவும் கொள்க . அலர் - பூ . முதனிலைத் தொழிலாகு பெயர் . வரி - கீற்று . பாட்டுமாம் . பண் - இசை .

பண் :

பாடல் எண் : 7

இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவன மெட்டுந் திசையொளி யுருவ மானாய்
அரவுமிழ் மணிகொள்சோதி யணியணா மலையுளானே
பரவுநின் பாதமல்லாற் பரமநான் பற்றிலேனே.

பொழிப்புரை :

பரமனே ! சூரியன் , சந்திரன் , வானம் , பூமி , நீர் , காற்று , பாம்புகள் தங்கும் பாதலம் , எண் திசைகள் இவற்றிலே ஓளி உருவமாக இருப்பவனே ! பாம்புகள் உமிழ்கின்ற இரத்தினங்களால் ஒளிவீசும் அழகிய அண்ணாமலைப் பெருமானே ! அடியேன் முன் நின்று போற்றும் உன் திருவடிகளைத் தவிர அடியேன் வேறு பற்றுக் கோடு உடையேன் அல்லேன் .

குறிப்புரை :

இரவி - சூரியன் . மதி - சந்திரன் . விண் - ஆகாயம் . இரு நிலம் - பெரும்பூமி . புனல் - நீர் . காற்று ( கால் + து ) = காலுதலுடையது , வாயு . உரகம் - பாம்பு . உரம் - மார்பால் , கம் - நகர்வது . ஆர் - ஆர்தல் - உண்ணல் . பவனம் - காற்று . ` காலே மிகவுண்டு காலேயிலாத கணபணத்தின் மேலே துயில் கொள்ளும் மாலோன் ` ( கந்தரலங்காரம் ) ` வாயுவான் பஞ்சடைத்துத் திருமால் துயிலும் மலரணையே ` ( செவ்வந்திப் புராணம் ) ` பவனாசனம் `. ` பவனம் எட்டும் ` :- ` பூதலங்கள் அவை யெட்டும் ` ( தி .6 ப .34 பா .9) என்று பின்னும் கூறியதுணர்க . பவனம் பூமி என்னும் பொருட்டாய் நின்று மக்கட்கு இடவாகு பெயராய் , எட்டுருவில் ஒன்றாம் புலனாயமைந்ததனைக் குறித்ததாகக் கொள்ளல் பொருந்தாது . ` ஒளியுருவம் ` - தீ . உரகம் :- ஈண்டு ஆதிசேடனைக் குறித்தது . ஆர்வனம் - ( சுமையாகப் ) பொருந்திய பூமி . பரவுதல் - வாழ்த்தல் . ` திசை யொளியுருவம் `:- அண்ணாமலையின் வரலாற்றுக்குறிப்பு .

பண் :

பாடல் எண் : 8

பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே.

பொழிப்புரை :

அருச்சுனனுக்கு அக்காலத்தில் விரும்பிப் பாசுபதப் படையை நல்கியவனே ! நீர் ததும்புதல் மிகுங் கங்கையை நீண்ட சடையில் தங்குமாறு வைத்தவனே ! ஆரவாரித்துக் கொண்டு ஒன்று சேரும் மேகங்கள் தங்கும் அழகிய அண்ணாமலைப் பெருமானே ! தூயோனே ! உன்பாதங்களின் தொடர்பன்றி அடியேன் வேறு தொடர்பு இல்லேன் .

குறிப்புரை :

பார்த்தன் - அருச்சுனன் . நல்கி - அருளி , ` பாசு பதத்தை யீந்தாய் .` ( தி .4 ப .7 பா .10.) நீர் ததும்பு உலாவுகங்கை - நீர் ததும்பும் கங்கை . உலாவும் கங்கை . ததும்பியுலாவுங்கங்கை எனல் சிறவாது . நெடுமுடியில் நிலாவக் கங்கையை வைத்தாய் . நெடுமுடி நிலாத் தோன்ற வைத்ததுமாம் . கொண்டல் - கீழ்காற்றாலடிக்கப்பட்டு வரும் மேகம் ஏனைய , கோடை தென்றல் வாடை மூன்றும் முறையே மேற்கு , தெற்கு . வடக்குத் திசைகளின் காற்றைக் குறிப்பன . ஆர்த்து - இடித்து முழங்கி . ஈண்டு - செறிகின்ற , தீர்த்தன் - தூயன் . ` அடிமைத் திறம் ` ` சைவத்திறம் `.

பண் :

பாடல் எண் : 9

பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.

பொழிப்புரை :

பசுவின் பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே ! திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காண இயலாத வகையில் தீத்தம்பமாய் நின்றவனே ! நீரை ஏந்திய மேகங்கள் வரையில் அசைகின்ற உச்சியை உடைய பாக்குமரங்கள் அழகு செய்யும் அண்ணா மலையில் உள்ளவனே ! வெண்மையை உடைய காளைவாகனனே ! உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடியேன் மறவேன் .

குறிப்புரை :

பாலும் நெய்யும் முதலாக ஐந்து . மிக்க - மேம்பட்ட , பசுவில் ஐந்து - ` ஆனகம் அஞ்சும் `. ( தி .4 ப .31 பா .7.) ` ஆனிடை ஐந்தும் ` ` ஆவாகி ஆவினில் ஐந்தும் ஆகி ` ( தி .6 ப .94 பா .8) மாலும் நான்முகனும் கூடிக் காணமாட்டாத வகையுள் நின்றது திருவண்ணா மலைச்சிறப்பு . கொண்டல் - மேகம் . பூகம் - கமுகு , திரட்சி எனக் கொண்டு மேகக் கூட்டம் எனலுமாம் . ஆலும் நீரும் கொண்டலும் பூகமும் உடைய ( அண்ணா ) மலை . ஆலும் - முழங்கும் . வால் - வெண்மை . வாலுடை விடை - வெள்விடை . விடையாய் - விடை உடையாய் . ( தி .6 ப .98 பா .9).

பண் :

பாடல் எண் : 10

இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்
உரத்தினால் வரையை யூக்க வொருவிர னுதியி னாலே
அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே.

பொழிப்புரை :

இரக்கம் என்பது சிறிதும் இல்லாத கூற்றுவனைத் தண்டித்த பெருமானே ! இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க , ஒரு விரல் நுனியினாலே அவனை நெரித்த அண்ணாமலைத் தேவர் தலைவனே ! உன்னை அடியேன் தலையால் வணங்கி வாயால் துதித்து மனத்தால் உன் திருவடிகளை மறவாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

இரக்கம் ( இரங்கு - அம் ) - மனம் இரங்கும் தன்மை , ஒன்று யாதும் - யாதொன்றும் . இல்லாக் காலன் - இல்லாத காலன் . ` நடுவன் ` ஆதலின் . தன் நடு நெறியிற் பிறழாமை காக்க இரக்கம் யாதொன்றும் இல்லாது காலம் ஒன்றே கருதுபவனானான் என்பர் ` இரக்கம் ஒன்றியாதும் இல்லாக் காலன் ` என்றருளினார் . கடிந்த - கோபம் கொண்டு உதைத்து நீக்கிய . எம்மான் - எம் ஆண்டவன் . உரத்தினால் - வலிமையால் . வரை - கயிலை . ஊக்க - ஊக்கங் கொண்டு எடுக்க . நுதி - முனை . அரக்கனை - இராவணனை . அமரர் ஏறே - தேவர்கோ அறியாத தேவதேவே . சிரத்தினால் - ` தலையால் தாளை வணங்காத் தலை கோளில் பொறியிற் குணமிலவே ` ( குறள் ) வணங்குதல் ( மெய் ). ஏத்தல் ( வாய் ), மறப்பின்மை , ( உள்ளம் ).

பண் :

பாடல் எண் : 1

பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட் கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த வோசைக் கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

பூதத்தின் படையினராய் , பாம்பாகிய அணிகளை உடையவராய் , பூணூலை அணிந்தவராய் , குளிர்ச்சி , மிகுந்த பிறையைச் சூடியவராய் , விடம் பொருந்திய கழுத்தினராய் , பாடலோடு பொருந்திய ஓசைச் சிறப்பை உடைய வேதம் ஓதுபவராய் , வேள்வியை ஆள்பவராய் வேதத்தின் பொருளராய் வீழிமிழலையில் விகிர்தராம் இயல்புள்ள சிவபெருமான் விளங்குகிறார் .

குறிப்புரை :

பூதப்படையுடையவர் . பாம்பாகிய பூணணிந்தவர் . பூணநூல் - பூணூல் . ` நூலது வேதம் நுண்சிகை ஞானமாம் ` ( தி .10 திருமந்திரம் ) பூணம் + நூல் . இருபெயரொட்டு . பூணனூல் என்றதன் மாற்றம் எனலும் , ` பூண் + அ + நூல் எனலும் ஆம் . ( கொள் + அம் + பூதூர் = கொள்ளம் பூதூர் .) சீதம் - குளிர்ச்சி . ` திங்கட்கொழுந்து .` ` பிறைக்கொழுந்து .` நஞ்சு அழுந்துகண்டர் :- வெளியேயும் வாராது வயிற்றுள்ளும் செல்லாது திருக்கழுத்தில் நின்றது பற்றி நஞ்சு அழுந்து கண்டர் என்று அருளினார் . கீதம் - இசைப்பாட்டு . கீதத்திற் பொலிந்த வோசைக் கேள்வியர் வேள்வியாளர் வேதம் என்றுகொண்டு கேள்வியரும் வேள்வியாளருமாகிய அந்தணரது மறை என்றுரைக்க . பா .10. பார்க்க . கீதத்திற்பொலிந்த ஓசை என்பது பழமறைப் பாட்டொலி , கற்றலின்றிக் கேட்டல் கடனாதலின் மறையைக் கேள்வி என்றே வழங்குவர் . ` சுருதி ` என்றதும் அப்பொருட்டாதல் ` இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படூஉம் கடன் மூன்றனுள் முனிவர்கடன் கேள்வி யானும் தேவர் கடன் வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படா `. ( திருக்குறள் . அதிகாரம் . 7. பரிமேலழகர் ( தலைப்பின் விளக்கமாகிய ) உரைத் தொடக்கம் . ) பதிற்றுப் பத்து பா . 70 - ` தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற வேள்வியிற் கடவுளருத்தினை , கேள்வி உயர்நிலையுலகத்தை யரின்புறுத்தினை , வணங்கியசாயல் வணங்கா வாண்மையிளந் துணைப்புதல்வரின் முதியர்ப்பேணித் தொல்கடன் இறுத்த வெல்போ ரண்ணல் ` என்றதே பரிமேலழகர் உரைக்கு ஆதாரம் . ஓசையையுடைய மறைக்கேள்வி யுடையவர் . வேள்வியை ஆள்பவர் ; அவரது வேதம் ; அவ்வேதத்தின் பொருளாயிருப்பவர் திருவீழிமிழலை விகிர்தனார் . ` விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை ` வேதியா , வேத கீதா ` ( தி .4 ப .62 பா .1.) என்றவாறும் கொள்ளலாம் . விண்ணில் இருந்து மண்ணிலுற்றமையை விகிர்தனார் ` என்று குறித்தருளினார் வாகீசராகிய சுகிர்தனார் .

பண் :

பாடல் எண் : 2

காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையில் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல வண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையி னமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

காலை ஞாயிற்றின் ஒளியை உடைய திருமேனியராய் , இரவு இருள் போலக் கறுத்த கழுத்தினராய் , மாலையில் தோன்றும் பிறையணிந்த சடை முடியினராய் , தேனும் பாலும் கரும்பின் பாகும் கடலில் தோன்றும் அமுதமும் போல அடியவர்களுக்கு இனிப்பை நல்குபவராய் வீழிமிழலையில் உள்ள விகிர்தனார் விளங்குகிறார் .

குறிப்புரை :

காலையிற் கதிர் - காலையில் உதயம் புரியும் செங்கதிரோன்போலக் கதிரைச் செய்கின்ற மேனி சிவபிரானது திருமேனி . அக் கதிர்போலும் மேனியுமாம் , கங்குலின் - இரவு போல . கறுத்த கண்டர் - திருநீலகண்டர் . மாலையின் மதியம் - ` மாசில் வீணையும் மாலைமதியமும் ` ` காலைக்கதிர் செய் மதியம் கண்டேன் ` என்றதும் உண்டு . ( தி .6 ப .77 பா .2) மகுடம் - சடைமுடி அடியார்க்கு மதுவும் பாலும் ஆலைக்கரும்பின் பாகும் பாற்கடலமுதமும் போல என்றும் அண்ணித்திட்டு இருப்பவர் . ` நல்லிட்டமாய்த் திருப்புத்தூரனைச் சிந்தை செயச் செயக் கருப்புச்சாற்றிலும் அண்ணிக்குங்காண்மினே ` ( தி .5 ப .61 பா .5) ` ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் ` ( தி .8 திருவாசகம் .) மது - தேன் . ` ஆலைக்கரும்பின் இன் சாற்றை `. ( தி .4 ப .15 பா .8.) அமுது - ( அமிர்தம் ) - இறவாமைக் காப்பது . வேலை ` ஈண்டுப் பாற் கடலின் மேலது . கண்டமும் மகுடமும் அகத்தும் புறத்தும் இனியர் என்ற குறிப்பு உணர்த்தும் . ` இன் ` மூன்றும் உவமம் .

பண் :

பாடல் எண் : 3

வருந்தின நெருந லின்றாய் வழங்கின நாள ராற்கீழ்
இருந்துநன் பொருள்க ணால்வர்க் கியம்பின ரிருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பாற் பொய்யரா மவர்கட் கென்றும்
விருந்தினர் திருந்து வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

நாளை , நேற்று , இன்று என்னும் முக்காலத்தும் இருப்பவராய் , ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மேம்பட்ட செய்திகளை முனிவர் நால்வருக்கு இயம்பியவராய் , திருமாலோடும் பிரமனோடும் பொருந்தியவராய் , தம்மை மறந்து தம்மிடம் பொய்யாக நடந்து கொள்பவருக்குத் தம்மை உள்ளவாறு அறிய இயலாத புதியவராய் வீழிமிழலை விகிர்தர் விளங்குகிறார் .

குறிப்புரை :

வருந் தினம் - வருகின்ற நாள் ; நாளை . நெருநல் + து = நெருநற்று . நேற்று மரூஉ . வழங்கினநாள் - நிகழ்ந்த நாள் . நாளையாய் நேற்றாய் இன்றாய் வழங்கிய நாளினர் . ` நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன்சடையடிகள் நின்றவாறு ` ( தி .6 ப .94 பா .1). ` இன்றுளார் நாளைஇல்லையெனும் பொருளொன்றும் ஓராது உழிதரும் ஊமர் ` ( தி .5 ப .84 பா .9) களுக்கு உணர்வரிது . நாளை - வர இருக்கும் நாள் . இன்று ( இல் + து ) வந்து இல்லா தொழியும் நாள் . நெருநல் ( நெரு + ந் + அல் ) - இறக்கும் பொழுதை நெருங்கி ஒழிதல் உற்ற நாள் . நெறுநற்று , நேற்று - நெருங்கிற்று என்றவாறு . வருந்தினமாயும் நெருநலாயும் இன்றாயும் வழங்கின நாளர் என்றதன் கருத்து :- காலாதீதனாயினும் , ( தி .4 ப .14 பா .2) கால தத்துவமாயிருந்து . ஆன்மாக்களைக் காலகாலராக்குங் காலகாலன் என்றவாறு . ` வானோர் தங்கட்கெல்லாம் காலனாம் காலனைக் காய்ந் தானாகும் ` ( தி .6 ப .15 பா .6). ( சிவஞான பாடியம் . காலதத்துவ விளக்கத்தை நோக்குக ). ஆல் - ` கல்லால்நிழல் `. ` ஆற்கீழ் இருந்து .... இயம்பினர் `:- ` ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச் செய்து ` ( தி .4 ப .36 பா .6). நன் பொருள்கள் - அறமுதற் பொருள்கள் ; நான்மறை , ஆறங்கம் . ` ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறங்கம் வேதம் தெரித்தானைத் திருநாகேச்சுரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேராதாரே ` ( தி .6 ப .66 பா .2). நால்வர்க்கு இயம்பினர் - சனகாதியர்க்குபதேசித்தார் . இருவர் - அயன் அரி . ` ஆதிமூர்த்தி பங்கனே பரமயோகீ `. ( தி .4 ப .26 பா .1.) ` இடமால் தழுவிய பாகம் `. தம்பாற் பொய்யராம் அவர்கட்குப் பிரிந்து . மெய்யராம் அவர்கட்குப் பிரியாது என்றும் விருந்தாய் இருப்பவர் . பிரிவிடம் கூறவே சேர்விடம் பெற்றாம் .

பண் :

பாடல் எண் : 4

நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள்
தலையினாற் றரித்த வென்புந் தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

எங்கும் இயங்கிக் கொண்டிருந்த மும்மதில்களை அக்கினி , திருமால் , வாயு இவர்களை உறுப்பாகக் கொண்ட அம்பு , மலையாகிய வில் , பாம்பாகிய நாண் இவற்றைக் கொண்டு அழித்தவராய்த் தேவர்களின் தலைமாலையும் , தலைமயிராலாகிய பஞ்சவடி என்னும் பூணூலும் அணிந்தவராய் , யாரும் விலை மதித்தற்கில்லாத வேடத்தை உடையவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார் .

குறிப்புரை :

நிலையிலாவூர் திரிபுரம் . ( திரிகின்ற ஊர் ). ஊர் மூன்று - முப்புரம் ; திரிபுரம் , ஒன்ற - ஒரு சேர ; பொருந்த . நெருப்பு - தீக்கடவுள் . அரி - திருமால் . காற்று - வாயுதேவன் . இம்மூவரும் அம்பின் உறுப்பு ஆகியவர் . ( தி .6 ப .86 பா .9.) ` கையினார் அம்பு எரிகால் ஈர்க்குக் கோலா ` ( தி .6 ப .86 பா .9) ` அரிவாள் கூர்எரி ` ( தி .2 ப .50 பா .1) ` எரி காற்றீர்க்கரிகோல் வாசுகி நாண் கல்வில் ` ( தி .1 ப .11 பா .6). சிலையும் நாகம் (- மலை ) நாணும் நாகம் ( - பாம்பு ), சிலையும் நாணதுவும் நாகம் ( - மலை ; பாம்பு ). நாகம் இருபொருளதாய் நின்றது . தேவர்களின் தலையினால் தரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்ட விலையில்லா வேடத்தர் . ` பஞ்சவடிமார்பினான் ` ( தி .6 ப .90 பா .5 தி .7 ப .53 பா .6) ` நரைவிரவியமயிர் தன்னோடு பஞ்சவ்வடிமார்பன் ` ( தி .7 ப .71 பா .4).

பண் :

பாடல் எண் : 5

மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனர்
கறவிடைப் பாலி னெய்யர் கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையு ணீரர்
விறகிடைத் தீயர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

வேதத்தின் விழுமிய பொருளாக உள்ளவராய் , அரும்பு பூக்கும்போது வெளிப்படும் மணமுடைய தேனாகியவராய் , கறக்கும் பசுவின் பாலில் கரந்து எங்கும் பரந்திருக்கும் நெய் போன்றவராய் , கரும்புச்சாற்றின் கட்டி போன்று இனியராய் , பிறை , பாம்பு , கொன்றைமாலை இவற்றைத் தரித்த சடையில் கங்கை நீரை ஏற்றவராய் , விறகிடை மறைந்து பரந்திருக்கும் தீப்போலக் கரந்து எங்கும் பரந்தவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார் .

குறிப்புரை :

மறையிடைப் பொருளார் . ` வேதத்தின் பொருளர் ` ( பா .1). மொட்டு - அரும்பு . மலர்வழி - பூக்கும் வழி . வினைத்தொகை . மொட்டினது மலரும் வழி என்க . வாசம் - மணம் . தேனர் - தேனாய் இனிப்பவர் . அரும்பினிற் பெரும்போது கொண்டாய் மலர் விரும்பும் ஈசன் ` ( தி .5 ப .93 பா .7) என்புழி அரும்பு போது மலர் மூன்றும் குறள் 1227 இற் போல நின்றதுணர்க . கறவு - கறக்கும் ஆ , ` கற்றா `. பாலின் நெய்யர் . பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதி யான் ` கரும்பினிற்கட்டியாளர் , ` கரும்பினிற் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே .` ( தி .4 ப .31 பா .4.) இன் கரும்பின்றன்னுள்ளால் இருந்த தேறற்றெளியானை ` ( தி .6 ப .66 பா .9) ` கரும்பொப்பானைக் கரும்பினிற் கட்டியை ` ( தி .5 ப .3 பா .2) ` கட்டியொக்குங் கரும்பினிடைத் துணி ` ( தி .5 ப .5 பா .6) ` கரும்பினைக் கட்டியைக் கந்தமாமலர்ச் சுரும் பினை ` ( தி .5 ப .93 பா .7) சடையுள் பிறை , பாம்பு , கொன்றைப் பிணையல் , ( கங்கை ) நீர் உடையவர் . விறகிடைத் தீயர் :- ` விறகிற்றீயினன் `.

பண் :

பாடல் எண் : 6

எண்ணகத் தில்லை யல்ல ருளரல்ல ரிமவான் பெற்ற
பெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரி னால்வர்தீ யதனில் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

எண்ணும் எண்ணத்திலே இல்லாதவரும் அல்லராய் , உள்ளவரும் அல்லராய் , பார்வதி பாகராய் , விண்ணில் ஒலிப் பண்பினராய்க் காற்றில் ஒலி ஊறு என்ற இரு பண்பினராய் , தீயிடை ஒலி ஊறு ஒளி என்ற மூன்று பண்பினராய் , நீரிடை ஒலி ஊறு ஒளி சுவை என்ற நாற்பண்பினராய் , மண்ணில் ஒலி ஊறு ஒளி சுவை நாற்றம் என்ற ஐந்து பண்பினராய் வீழிமிழலை விகிர்தனார் உள்ளார் .

குறிப்புரை :

எண் அகத்து - எண்ணும் உள்ளத்தில் ; எண்ணத்தில் . அகம் பெயரும் உருபுமாம் . இல்லையல்லர் உள்ளர் அல்லர் . இல்லாத வரும் அல்லர் . உள்ளவரும் அல்லர் . ` மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார் ` ` உண்மையுமாயின்மையுமாய்க் கோனாகி ` ( தி .8 திருவா .). புறத்தே காண்பவர்க்கு அகத்தே உள்ளவரல்லர் . அகத்தே நினைவார்க்குப் புறத்தே இல்லாதவரும் அல்லர் எனலுமாம் . இமவான் - பனியுடையான் . பனியுடைய மலை வேறு மலையான் வேறு அல்ல . ` குணவான் , பலவான் ` என்புழிப்போல் வடமொழி மத்தும் வத்தும் உடைமைப் பொருட்டாய் நிற்கும் . பெண் - மலையரையன் மடப் பாவை . பெண்ணகத்தரையர் ( பெண் அகத்து அரையர் ) - ` மாதியலும் பாதியர் ` (1) விண்ணகத்தொருவர் , (2) காற்றிற் பெருவலியிருவர் . (3) தீயதனில் மூவர் . (4) நீரில் நால்வர் . (5) மண்ணகத்தைவர் . ` மண்ணதனிலைந்தை மாநீரினான்கை வயங்கெரியின் மூன்றை மாருதத்திரண்டை விண்ணதனிலொன்றை ` ( தி .6 ப .60 பா .3) ` பாரிடையைந் தாய்ப் பரந்தாய் போற்றி , நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி , தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி , வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி , வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி , ( தி .8 திருவாசகம் . 4:- 136 - 141). சிவஞானமாபாடியம் சூ . 8, அதி . 2, தன்மாத்திரை விளக்கத்தை ஈண்டு நோக்குக .

பண் :

பாடல் எண் : 7

சந்தணி கொங்கை யாளோர் பங்கினார் சாம வேதர்
எந்தையு மெந்தை தந்தை தந்தையு மாய வீசர்
அந்தியோ டுதய மந்த ணாளரா னெய்யால் வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

சந்தனத்தை அணிந்த தனங்களை உடைய பார்வதிபாகர் , சாமவேதர் , அடியேனுக்குத் தந்தையாராகவும் பாட்டனாராகவும் முப்பாட்டனாராகவும் உள்ளவர் . காலை சந்தியிலும் மாலை அந்தியிலும் அந்தணாளர்கள் நெய்யால் வேள்வி செய்யும் விரும்பத் தக்க தீயின் உருவர் என இவ்வாறு வீழிமிழலை விகிர்தனார் உள்ளார் .

குறிப்புரை :

சந்து - சந்தனம் . பங்கு - இடப்பால் . சாமவேத கானம் பாடுபவர் . எந்தை - என்னப்பன் . எந்தை தந்தை - பாட்டன் . தந்தை தந்தை - பூட்டன் . அவனுக்குத் தந்தை - ஓட்டன் . பாட்டி பூட்டி ஓட்டி . ` ஓட்டிக்கு மேல் உறவில்லை ` என்பது பழமொழி . இது நான்கு நேரிப் பக்கத்தில் வழங்குகின்றது . ஆய ஈசர் - ஆகிய உடையார் . அந்தி - மாலையந்தி . உதயம் - காலைச்சந்தி . காலை மாலை என்றவாறு . அந்தணாளர் - அழகும் தண்மையும் ஆள்பவர் . ` அந்தத்தை அணவு வார் ` என்றது ஈண்டுப் பொருந்தாது . வேட்கும் - வேள்வி செய்யும் . வெந்தழல் - வெய்ய தீ ; விரும்புதற்குரிய தீ . தழலுருவர் - தீவடிவினார் . தீவண்ணர் வேறு . வேள்வித் தீவடிவர் வேறு . சிவாக்கினிரூபமாய் இருந்து வழிபடுவோரை உய்யக்கொள்பவர் . சிவபூசையின் அங்கத்துள் ஒன்று சிவாக்கினி பூசை . ` அக்கினி காரியம் ` எனப் பத்ததிகளிற் கூறப்படுவது உணர்க .

பண் :

பாடல் எண் : 8

நீற்றினை நிறையப் பூசி நித்தலா யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் ணிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில் தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவிய கோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார் .

குறிப்புரை :

திருவீழிமிழலையுள் , விண்ணிலிருந்து கோயில் வந்ததன் வரலாறு இதிற் குறிக்கப்பட்டுளது . திருமால் சக்கிராயுதம் பெறச்சிவனை வழிபடுங்கால் ஆயிரம் பூக்களுள் ஒன்று குறையவே அது நிறையக்கண்ணைப் பறித்து இட்டார் . இட்ட அவ்வலிமைக்கு ஆழி ( - சக்கிராயுதம் ) நல்கினார் விகிர்தனார் . அத்திருமால் தம் ஆன்மார்த்த மூர்த்தியை விண்ணிலிருந்து கொணர்ந்து மண்ணில் திரு வீழிமிழலையுள் வைத்து எல்லாவுயிர்களும் கண்டு போற்றி உய்யச்செய்தார் . இத்திருமுறையிலும் ` தேசனைத் தேசங்கள் தொழ நின்ற திருமாலால் பூசனை ` எனவும் , ` குறிக்கொண்டிருந்து செந்தாமரை ஆயிரம் வைகல் வைகல் , நெறிப்பட இண்டைபுனைகின்ற மாலை நிறையழிப்பான் கறைக்கண்ட நீ ஒரு பூக்குறைவித்துக் கண் சூல்விப்பதே , பிறைத்துண்ட வார்சடையாய் பெருங்காஞ்சியெம் பிஞ்ஞகனே ` எனவும் பெரிய காஞ்சியில் நடந்ததாகவும் இவ்வரலாறு குறிக்கப்படுவதுணர்க . திருநீற்றினை நிறையப் பூசலும் , நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி நித்தலும் பூசிக்க ஆயிரக் கணக்கிற் பூக்கொள்ளலும் , ஒன்று குறையினும் நிறைவிக்கும் விடா முயற்சியும் , அதனால் இறப்பச்சம் எய்தாது சிவசிந்தனையில் ஒழியாது நிற்றலும் பிறவும் இவ்வரலாறு குறித்தலறிக .

பண் :

பாடல் எண் : 9

சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடஞ் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம் பறிப்பவ ரிறப்பி லாளர்
முத்திசெய் பவள மேனி முதிரொளி நீல கண்டர்
வித்தினின் முளையர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

சித்தியை விரும்புவார் தாம்தாம் சேர்விடஞ் சென்றுகூட வைத்தும் பத்தி செய்பவர்களின் பாவத்தை விலக்கியும் பக்குவர்க்கு முத்தி வழங்கியும் அருள்பவர் பவளம்போல் மேனியும் ஒளியின் முதிர்ந்த நீலகண்டரும் வித்தின் முளைபோல்வாருமாய் உள்ள திருவீழிமிழலை விகிர்தனாரே .

குறிப்புரை :

சித்திசெய்பவர்கட்கு எல்லாம் - சித்திகளை விரும்பி அவற்றிற்குரியவற்றைச் செய்யும் எல்லார்க்கும் , அவ்வச் சித்தித் தானங்களைச் சென்று அடையச் செய்பவர் . பத்தி ( தொண்டு ) செய்பவர் எல்லாருடைய பாவங்களையும் பறித்தகற்றுபவர் . மூவாச் சாவாமூர்த்தி . முத்தி ( வீடு ) செய்பவர் . பவளம் போலும் திருமேனியர் . முதிர்ந்த ஒளியுடைய திருநீலகண்டர் . வித்தின் முளையர் :- ` வித்தாம் முளையாகும் வேரேதானாம் வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற பத்தாம் அடியார்க்கு ஓர் பாங்கனுமாம் ...... கருகாவூர் எந்தை .` ( தி .6 ப .15 பா .2) சித்தி , பத்தி . முத்தி மூன்றும் அறிவித்தவாறறிக .

பண் :

பாடல் எண் : 10

தருக்கின வரக்கன் றேரூர் சாரதி தடை நிலாது
பொருப்பினை யெடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

செருக்குற்ற இராவணன் தன் தேரைச் செலுத்திய சாரதி தடுத்ததனை மனங்கொள்ளாது கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட தோள்களும் அழகிய பத்துத் தலைகளும் புண்ணாகுமாறு சிவபெருமானால் நெரிக்கப்பட்டு , அலறி , மறுபடி அவன் அன்போடு நினைந்து சிவபெருமான் திருவடிகளைத் துதிக்க , அவனுக்கு வீழிமிழலை விகிர்தனராகிய அப்பெருமான் தம்முடைய வாளினை விருப்பத்தோடு வழங்கினார் .

குறிப்புரை :

தருக்கின அரக்கன் - எடுத்தற்கரிய கயிலையை எடுக்க வல்லேன் என்று தலை நிமிர்ந்து செருக்குற்றுப் பேசிய இராவணன் . தேர் ஊர் சாரதி - தேரினை ஊர்ந்து செல்லும் வலவன் . ` வலவன் ஏவா ` வானவூர்தி . தடை - கயிலைக் காவலர் தடுத்த தடையின் வண்ணம் . நிலாது - புகாது நில்லாமல் , பொருப்பு - கயிலைமலை . இருபது தோளும் பத்து முடியும் புண்ணாகி , நெரிப்பு - நெரித்தல் . நினைந்து - குற்றத்தை எண்ணி ; திருவடிகளைத் தியானம் புரிந்து , பரவ - வாழ்த்த , சாம கானம் பாட . விருப்பொடும் வாள் கொடுப்பர் .

பண் :

பாடல் எண் : 1

தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலு மஞ்சிப் பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

இதழ்களை உடைய பூக்களால் அர்ச்சித்துத் தொழுது எழுந்த மார்க்கண்டேயன் இறக்கும் நேரம் அணுகிவிட்டது என்று அவன் பொய்யான உடலிலிருந்து மெய்யான உயிரைப் பிரித்து எடுத்துச் செல்ல வந்த கூற்றுவன் அவன் பக்கம் அணுக , அவன் பயந்து சிவபெருமானுடைய திருவடிகளே தனக்குச் சரணம் என்று சொன்ன அளவில் சாய்க்காட்டில் விரும்பி உறையும் பெருமானார் கூற்றுவன் மாயுமாறு உதைத்தார் .

குறிப்புரை :

தோடு - இதழ் . தூவி - அருச்சித்து . வீடும் - இறக்கும் . மெய்கொள்வான் - உடலிலிருந்து உயிரைவேறாக்கிக் கொள்ள . பாடு - பக்கம் . செலலும் - சென்றபோதே . சரணம் - கதி . சாடினார் - அழித்தார் . இது காலனை யுதைத்துச் சிவபூசைச் சீலனை வாழ்வித்த வரலாறு உணர்த்திற்று . தோடு உலாம் மலர்கள் என்றது புதிய பூக்களைக் குறித்தது . தொழுதெழுதல் :- ` சித்தம் ஆரத் திருவடியே நினைந்து உள்கி எழுவார் உள்ளம் ஏயவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி யேகம்பன்காண் அவன் என் எண்ணத்தானே ` என்றதிற் குறித்த வாறு எழுதல் . ` கொழு நற்றொழுதெழுவாள் ` என்புழிப் பரிமேலழகர் உரைத்தது ஈண்டுப் பொருந்தாது .

பண் :

பாடல் எண் : 2

வடங்கெழு மலைமத் தாக வானவ ரசுர ரோடு
கடைந்திட வெழுந்த நஞ்சங் கண்டு பஃறேவ ரஞ்சி
அடைந்துநுஞ் சரண மென்ன வருள்பெரி துடைய ராகித்
தடங்கட னஞ்ச முண்டார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

பாம்பாகிய கடை கயிறு கோக்கப்பட்ட மந்தர மலையை மத்தாகக்கொண்டு தேவர்கள் அசுரரோடு பாற்கடலைக் கடைய , எழுந்த விடத்தைக் கண்டு பல தேவர்களும் அஞ்சிச் சிவ பெருமானை அடைந்து ` நும்மையே அடைக்கலம் அருளுபவராகக் கொண்டுள்ளோம் ` என்று வேண்டப் பேரருள் உடையவராய் கடல் நஞ்சினை உண்ட பிரான் திருச்சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளார் .

குறிப்புரை :

பாற்கடலிலே மந்தர மலையை மத்தாகக்கொண்டு வாசுகி என்னும் பாம்பினை வடமாகச் சுற்றி அமரரும் ( வானவரும் ) அசுரரும் ஒவ்வொருபால் உற்றுக் கடையும்பொழுது தோன்றிய நஞ்சத்தினைக் கண்டு அமரர் பலர் அஞ்சி , திருச்சாய்க்காட்டெம்பிரான் திருவடியே துணை என்று கருதி அடைந்து போற்றி , நஞ்சினால் அஞ்சிவந்தோம் யாம் துஞ்சிடாவாறு நெஞ்சிரங்கிக் காத்தருள்க என்று வேண்டினர் . அம் முழுமுதல்வரும் பேரருளுடையராகி , பிறர் எவராலும் உண்ணற்கு அரிய அந் நஞ்சினை உண்டு , அவ்வொரு தோழந் தேவர் விண்ணிற் பொலியும் வாழ்வளித்தருளினார் . ` நுஞ் சரணம் ` என்றது தேவர் கூற்று . ` பஃறேவர் ` என்றது , தகரம் வரும் வழி ஆய்தமாகத் திரிந்த லகரவீற்றுப் புணர்ச்சி . ` தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் புகரின்றென்மனார் புலமையோரே ` ( தொல்காப்பியம் ). தடங்கடல் - பெருங்கடல் ; பாற்கடல் . ` தடவும் கயவும் நளியும் பெருமை ` ( தொல்காப்பியம் ). இது நஞ்சுண்ட வரலாற்றைக் குறித்தது .

பண் :

பாடல் எண் : 3

அரணிலா வெளிய நாவ லருநிழ லாக வீசன்
வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன னாக்கித்
தரணிதா னாள வைத்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

காவல் அற்ற வெட்ட வெளியில் வளர்ந்த வெண்ணாவல் மரத்தின் குறுகிய நிழலில் சிவபெருமான் இருந்தானாக , தான் இறைவனுடைய அடிமை என்ற கருத்தில் மாறுபாடில்லாத சிலந்தி அம்மரத்தைச் சூழ்ந்து தன் வாய் நூலினால் வெயிலைத் தடுத்து நிழலைச் செய்யும் பந்தரை அமைக்க அச்சிலந்தியை அடுத்த பிறப்பில் முடிசூடும் மன்னனாக்கி உலகை ஆளுமாறு செய்தார் சாய்க்காடு மேவிய சிவபெருமான் .

குறிப்புரை :

அரண் இலா வெளியநாவல் - காவல் ( மதில் ) அற்ற வெள்ளிடையில் வளர்ந்த மரமாகிய நாவல் . அரு நிழல் - அதன் நிழல் கோடையில் வாய்த்தல் இல்லை . வரணியல் ஆகி - சூழ்கின்ற இயலதாகி . வரணம் - சூழ்தல் . சிலந்திப்பூச்சி தன் வாயின் நூலினால் , பந்தர் செய்ய . பந்தல் - பந்தர் . முரண் இலாச் சிலந்தி . நீங்கற் பொருட்டுப் பாசத்தொடு முரணுண்மையும் பதியாதற் பொருட்டு முரணின்மையும் உடைய சிலந்தி . முடியுடை மன்னனாக்கி - முன் கோச்செங்கட் சோழமன்னரும் பின் நாயனாருமாக்கி ( தி .4 ப .49 பா .4). தரணி - மண்ணுலகு ( சோழவளநாடு ) ( தி .4 ப .49 பா .4). சிலந்தி தன் வாய் நூலினாற் பந்தர் செய்வதற்குரிய ஏதுவை ` அரண் இலா வெளிய நாவலரு நிழலாக ` என்று குறித்தது உளங்கொளத்தக்கது . பந்தர் செய்ய முரணில்லாததுமாம் . ` அருநிழல் ` ` அருங்கேடன் ` ( திருக்குறள் . 210) என்பது போல்வது . ` நலந்திகழ் வாயினூலாற் சருகிலைப் பந்தர் செய்த சிலந்தியை அரசதாள அருளினாய் `. ( தி .4 ப .62 பா .9.) வரம் - வாள் முதலியன என்றலும் இசைவர் .

பண் :

பாடல் எண் : 4

அரும்பெருஞ் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி யொள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி யீந்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

பெரிய வில்லைக் கையில் ஏந்திய வேட உருவினராய் , ஆற்றல் மிக்க அருச்சுனனுக்கு அவன் தவம் செய்துகொண்டு இருந்த காலத்தில் தம்முடைய பேராற்றலை வெளிப்படுத்தி அவனொடு போர்செய்து , பின்னர்ச் சாய்க்காடு மேவிய பெருமான் அவனைப் பெருமை மிகவும் உடையவனாக்கிப் போர் முகத்தில் நிலைபெற அம்புகள் பொலிகின்ற அம்புப் புட்டிலை அவனுக்கு வழங்கினார் .

குறிப்புரை :

வேடன் ஆனவன் சிவபிரான் . அருஞ்சிலை ; பெருஞ் சிலை , சிலை - வில் , ` பிநாகம் ` ` காண்டீபம் `, ` காண்டீபன் ` என்பது விற்சிறப்பாற் பெற்ற பெயர் . அஃது அருச்சுனனது . அதுவும் ` பிநாகம் ` என்றது போல்வதொரு சிறப்புப் பெயர் . ` காண்டபிருட்டன் ` என்று கன்ணனைக் குறிப்பதும் அன்னதே . விறல் - வலிமை ; வெற்றி . பார்த்தன் - பிரதைக்குப் புத்திரன் . உரம் - வலிமை . ஒள் அமர் - வீரம் ஒளிரும்போர் . வரம் :- பாசுபதம் அருளப்பெற்றது . வாள் - ஒளி . சரம் அம்பு முதலிய கணைகள் . தூணி - அம்பறாத் தூணி .

பண் :

பாடல் எண் : 5

இந்திரன் பிரம னங்கி யெண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

இந்திரன் , பிரமன் , அக்கினி , எட்டு வசுக்கள் இவர்களோடு வேதமந்திரங்களை ஓதித் தேவர்கள் வணங்கி வாழ்த்த , எது செயற்பாலது என்பதனை அறியாத தக்கனுடைய வேள்வியை அழித்தபோது சந்திரனுக்கு அருள் வழங்கினவர் சாய்க்காட்டுப் பெருமான் .

குறிப்புரை :

அங்கி - தீ . எண்வகைவசுக்கள் - 1. அநலன் . 2. அநிலன் . 3. ஆபன் . 4. சோமன் . 5. தரன் . 6. துருவன் . 7. பிரத்தியூடன் . 8. பிரவாசன் . தேவ வகுப்புள் ஒரு சாரார் . எண் வகை என்றது எட்டு என்னும் பொருட்டாய் நின்றது . ( பாரதம் , குருகுலம் . 63) மந்திரங்களையுடைய மறையை ஓதி , தந்திரம் - செயற்பாலது ; செய்வகை . வேள்வி - யாகம் . தகர்த்த ஞான்று - தகரச் செய்த நாளன்று . சந்திரற்கு - சந்திரனுக்கு .

பண் :

பாடல் எண் : 6

ஆமலி பாலு நெய்யு மாட்டியர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் றாதை தாளைக்
கூர்மழு வொன்றா லோச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

பசுவிலிருந்து வெளிப்படும் வெண்ணெய்ப் பிடிப்புடைய பாலை அபிடேகம் செய்து அர்ச்சனைகள் சொல்லிப் பூக்களில் மேம்பட்ட கொன்றை மலர்களைத் தான் வழிபட்ட இலிங்கத்திற்கு விசாரசருமனார் சூட்ட , அவற்றைப் பொறாது பூசனையை அழிக்க முற்பட்ட தன் தந்தையின் காலை அவன் கூரிய மழுவினால் வெட்டவே , அவரை சண்டீசன் ஆக்கித் தாம்சூடிய கொன்றை மாலையை அணியும் உரிமையை அவருக்கு வழங்கினார் சாய்க்காடு மேவிய பெருமான் .

குறிப்புரை :

ஆ - பதி . ஆட்டி - ஆடப்பண்ணி . அர்ச்சனைகள் - மலர் தூவிப் பணிதல் முதலியவை . பூக்கள் மலிந்த கொன்றை மலர் மாலையை . பொறாத - உள்ளத்தே பொறுமையில்லாத . தாதை - அப்பன் . தாளை - காலை . கூர்மழு ஒன்றால் - ஒரு கூரிய மழுவால் . ஓச்ச - உயர்த்து வெட்ட . குளிர் சடைக் கொன்றைமாலைத் தாமம் - கங்கையுடைமையாற் குளிர்ந்த சடையிற் சூடும் கொன்றையங்கண்ணி ` திருமாலை ` யை . காமர் வண்ணமார்பிற் சார்த்தும் தாரினை . ` திருப்பள்ளித்தாமம் ` என்னும் மரபுணர்க . கொன்றையால் தாமம் புனைதல் எளிதன்று சிலர்க்கே எளிது . நல்சண்டிக்கு - பிறவிப்பிணிக்கு மருந்து ஆகிய திருவடி வழிபாட்டினை மறவாத சண்டேசுர நாயனார்க்கு ( அளித்தருளினார் ). ஆட்டி , செய்து , சூட்டப் பொறாத தாதை ஓச்சச் சண்டிக்கு ஈந்தார் மேவினார் என்க . முன்மூன்றும் சண்டீசர் தொழில் . பொறாமையும் ஓச்சலும் தாதை தொழில் . ஈதல் ஈசனது . ` பாதகம் என்றும் பழியென்றும் பாராதே , தாதையை வேதியனைத் தாளிரண்டும் சேதிப்பக் கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே தண்டீசர் , தஞ்செயலால்தான் ` - திருக்களிறு . 19.

பண் :

பாடல் எண் : 7

மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமி லமர ரேத்த வாயிர முகம தாகி
வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந்
தையலைச் சடையி லேற்றார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

குற்றமற்ற மனத்தை உடைய பகீரதன் வரங்களால் வேண்டிய அளவில் , சிவபெருமானுடைய பேராற்றலில் ஐயம் ஏதும் இல்லாத தேவர்கள் போற்ற , ஆயிரம் கிளைகளை உடையதாகி இவ் வுலகமே நெளியுமாறு பாய்வதற்காக வானத்திலிருந்து இறங்கிய கங்கை என்ற பெண்ணை தம் சடையில் ஏற்றுள்ளவர் சாய்க்காடு மேவிய பெருமான் .

குறிப்புரை :

மை - குற்றம் . அறு - அற்ற , பகீரதன் தன்குலத்தோரைத் துறக்கம் அடைவிக்கத் தவம் புரிந்தவனாதலின் , மையறுமனத்தனானான் . பகீரதன் வரங்களை வேண்டியதாலும் அமரர் ஏத்தியதாலும் தையலைச் சடையிலேற்றார் . ` வேண்ட ` ` ஏத்த ` இரண்டும் ஏதுப் பொருளவாய வினையெச்சம் , கங்கை இழியுங்கால் எண்டிசையிலும் அளவிலாத முகத்ததாய் இழியும் இயல்புடையமையால் ` ஆயிர முகமதாகி இழி கங்கை ` எனப்பட்டது . நீர் மலைமேலிருந்து பள்ள மடையாய்க் கீழ் வீழுங்காலும் நிலத்தே ஒழுகுங்காலும் பலமுக மாதலை உணர்க . அது பாய்தலின் விரைவு வையகத்தை நெளியச் செய்யும் . பாய்வான் - பாய . பாய வந்து இழியும் கங்கை . தையல் - மெல்லியல் . வையகம் நெளியவந்திழியும் வன்மை சடைக்கெதிர் நில்லாது அகன்றமை தோன்றத் ` தையல் ` என்றார் . ` எழுத்தறிவார் - ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயும் சுரநீர் மிகை `. ( நன்னெறி ). வையகம் நெளியக் கங்கை வந்தது ; கங்கை நெளியச் சடையேற்றது . ஐயம் இல் அமரர் - இறைவன் இருக்கும் போது நமக்கு இடர் இல்லை என்னும் தெளிவுடையவானோர் .

பண் :

பாடல் எண் : 8

குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப் பாரம்
துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித் தூயவாய்க் கலச மாட்ட
உவப்பெருங் குருதி சோர வொருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

திரண்ட பெரிய தோளினை உடைய திண்ணனார் , ஒரு கையில் வளைந்த வில்லும் , மறு கையில் இறைச்சிப் பாரமுந் தாங்கியிருந்தமையால் காளத்திப் பெருமானுக்கு முன்பு சூட்டப் பட்டிருந்த பூக்களைச் செந்நிறம் பொருந்திய தம் காற் செருப்பினால் நீக்கித் தன் தூய வாயாகிய கலசத்தில் மொண்டு வந்த நீரினால் அப் பெருமானுக்கு அபிடேகம் செய்து பூசிக்க , அதனை உவந்த பெருமான் தம் கண்ணில் உதிரம் ஒழுகச் செய்ய , ஓரம்பினால் தம் கண்ணைப் பெயர்த்துக் குருதி சோரும் கண்ணில் அப்பவே , திண்ணனாரை மிகப் பெரிய தெய்வமாகச் செய்துவிட்டார் சாய்க்காடு மேவிய பெருமான் .

குறிப்புரை :

குவ - குவவு ; திரட்சி . தட - பெருமை . வேடருக்கு இன்றியமையாதது குவப்பெருந் தடக்கை . கொடுஞ்சிலை - வளைந்த வில் . இறைச்சிப்பாரம் - ஊன் ஆகிய பொறை . துவர் - செந்நிறம் . சேக்கிழார் ` பொற்செருப்பு ` என்றதும் இது நோக்கிப்போலும் , துவர் - விறகு எனக்கொண்டு ஏற்ப உரைத்தலுமாம் . குருதிக்கறை உற்ற செருப்பு . பெருஞ்செருப்பு :- தன்மை நவிற்சி . காட்டு நடைக்குரியது . கையில் வில்லும் ஊனும் இருந்தமையால் , காற்செருப்பால் நீக்கலாயிற்று . நீக்கப்பட்டது நிருமாலியம் . அகத்தன்பினிறைவால் வாயே அபிடேக கலசமும் அதிற் கொண்ட நீரே கங்கையினும் தூயதும் , அவரே ஆசாரியாபிடேகம் பெற்ற அருச்சகரினும் பெரியராய ஆட்டு பவரும் ஆய உண்மை தோன்றத் ` தூயவாய்க் கலசம் ஆட்ட ` என்றார் . ` அன்புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார் `. உவ - உவந்து . ` வரிப்புனை பந்து ` என்புழிப்போலக் கொள்க . உவந்து சோர . சோர - ஒழுக்க என்று பிறவினைப் பொருட்டாக்குக . சோரலால் இடந்து ( கண்ணை ) அப்ப . கணையால் இடந்து (- பேர்த்து ). கண்ணை இடந்து . கணையாலிடந்து என்றிருபொருள் படுமாறறிக . ( தி .4 ப .65 பா .9) தேவு - ` சிவமாந்தன்மைப் பெருவாழ்வு `. தவச் சிறுவேடரைத் தவப் பெருந்தேவராகச் செய்தருளினார் . தவ - மிகற்பொருட்டு . ` அயன் திருமால் செல்வமும் ஒன்றோ என்னச் செய்யும் தேவே ` ( சிவஞான சித்தியார் காப்பு ) என்புழிப்படும் பொருளே ( சிவத்துவமே ) ஈண்டுக் கொள்ளற் பாலதுணர்க . ` நரகரைத்தேவு செய்வான் ` என்புழிப்படும் பொருள் தேவர் என்பது . நரகர்க்குத் தேவர் மறுதலையாவர் . ஆண்டு அமரத்துவம் . ஈண்டுச் சிவத்துவம் . ( தி .4 ப .49 பா .7) நோக்குக .

பண் :

பாடல் எண் : 9

நக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான் மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்க ணென்றங் கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

விரிந்து மணம் வீசும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு சிவபெருமானைப் பரம் பொருள் என்ற அறிவினோடு மேம்பட்ட பூசனை புரியும்போது மென்மையான பூ ஒன்று குறையத் தம்கண் தாமரைப் பூவினை ஒக்கும் என்று திருமால் தம் கண் ஒன்றை அம்பினால் பெயர்த்து மலராகக் கொண்டு அர்ச்சிக்க அதனால் மகிழ்ந்த அவர் வேண்டிய சக்கிராயுதத்தை அத்திருமாலுக்கு வழங்கினார் சாய்க்காட்டில் உறையும் சிவபெருமான் .

குறிப்புரை :

நக்கு உலாம் மலர் - மலர்ந்து மணம் உலாவும் தாமரைப் பூக்கள் . ` நகை மலர் ` என்னும் ஆட்சியைக் கருதுக . பல் + நூறு = பன்னூறு . ` பூவான மூன்று முந்நூற்றறுபதுமாகும் எந்தை ` ( தி .4 ப .29 பா .9). மலர்கொண்டு செய்யும் பூசனைகளின் மிகையாற் பயனெய்த வேண்டுவார் நன்ஞானத்தோடு செய்யற்பாலர் . ` கிரியை என மருவும் அவை யாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம் எனக் கிளக்கும் ` ( சிவப்பிரகாசம் ). ` நன் ஞானம் , நற்காட்சி , நல்லொழுக்கம் ` என்னும் அமணர் வழக்குள் ஒன்றாகாது . ` சிவஞானம் ` என்னும் பொருட்டாதல் , நன்மைக்குச் சிவம் என்னும் பொருளுண்மையால் அறிக . திருமால் செய்த மிக்க பூசைகள் நன்ஞானத்தொடு நிகழ்ந்தமையால்தான் , கண்மலர்க்குக் கண்ணைப் பறித்திட உவந்து சக்கிரங்கொடுக்கப் பெற்றார் . மலர் குறையின் கண் இடல் பொருந்துமோ என்பார்க்கு விடையாக , மலர்க்கண் மலர்க்கும் ஒக்கும் என்று தேர்ந்து ஒரு கண்ணை இடந்து அப்பினார் என்றார் . மலர் - தாமரை . திருமாலின் உறுப்புட் சிற்சில மலர் போன்றவை . அங்கு - வழிபட்ட அப்போதே ; அவ்விடத்தேயே . ஒரு மலர் குறையக் கண்ட போதுமாம் . அங்கு - காலம் இடம் ஆகிய இருபொருட்டுமாம் .

பண் :

பாடல் எண் : 10

புயங்கமைஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச்
சிவன்றிரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற வெய்தி வீழ விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

இருபது புயங்களும் பத்துத் தலைகளும் கொண்ட இராவணன் ஓடிச் சென்று சிவபெருமானுடைய கயிலைமலையைப் பெயர்க்க , அதனால் அழகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதி அஞ்ச , அப்போது அவன் வலிமை நிலை வேறுபாடெய்தி அவன் விழுமாறு சிவன் தம் விரலைச் சிறிது ஊன்றி , அவன் உளம் திருந்தி வழிபட்ட அளவில் அவன் வெற்றி பெறுமாறு அவனுக்குச் இராவணன் என்ற பெயரை வழங்கினார் சாய்க்காட்டுப் பெருமான் ஆகிய சிவனார் . புயங்கம் ஐந்நான்கும் - பாடம் .

குறிப்புரை :

புயங்கள் - தோள்களும் , தலைகளும் . ஐஞ்ஞான்கும் இருபதும் . ` தடக்கை நாலைந்தும் ` ( தி .4 ப .34 பா .9). இங்கு நாணஞ் சுகையன் ( தி .4 ப .52 பா .10.) என்புழிக்கொண்ட பொருளைக் காண்க . சிவன்மலை . திருமலை . திருமலைச் சருக்கம் ` என்பது முதலியவற்றை நோக்கிக் கயிலைக்கே ` திருமலை ` என்பது காரணச் சிறப்புப் பெயராதல் அறிக . பேர்க்க - பெயர்க்க . ` திருமலர்க் குழலி :- திருவை மலர்க்கும் குழற்கும் சார்த்துவதினும் குழலிக்குச் சார்த்துதல் சிறந்தது . ` குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் `. ( தி .7 ப .16 பா .1.) வியன் - வேறுபாடு ; மிகுதியுமாம் . ` வியன் கலவிருக்கை ` ( சிலப் . 5:- 7) வியன் பெற - திரு மலையை எடுக்கலாம் என்று துணிந்த நிலை வேறுபாடு அடைய ; எய்தி - நெருக்கலை உற்று . சிறிதூன்றியதன் விளைவே இத்துணைப் பெரியதாயின் , பெரிது மூன்றின் என்னாம் ? மீண்டு :- அவனது சாமகானத்துக்கு இரங்கியதன் குறிப்பு , சயம்பெற :- தோற்றவன் ஆயினும் , கொற்றவனாதலும் பெற்றநாளும் உற்ற பேரும் வெற்றிக் குறியாயின என்னும் குறிப்பு .

பண் :

பாடல் எண் : 1

கச்சைசே ரரவர் போலுங் கறையணி மிடறர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும்
இச்சையான் மலர்கள் தூவி யிரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே.

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான், பாம்புக் கச்சை உடையவராய், நீலகண்டராய், பிச்சை எடுத்து உண்பவராய், பேரருளாளராய், விருப்போடு பூக்களைத் தூவி இரவும் பகலும் தம்மை விரும்பி வழிபடுபவர்களுக்கு இனியராய் உள்ளார்.

குறிப்புரை :

கச்சை சேர் அரவர் - அரவக்கச்சை யுடுத்தவர். கறை - நஞ்சின் கறுப்பு. அணிமிடறர் - `திருநீலகண்டர்` பிச்சை கொண்டு உண்பர்:- தாருகவனத்து வரலாறு; விடையேறி மாதொடும் சென்று ஊர் தொறும் ஆன்மாக்களின் சீவபோதமாகிய பிச்சை ஏற்றுச் சிவபோத மாகிய சிவபுண்ணியம் அருளும் உண்மை. பேரருளாளர்:- பெருங் கருணையுடையவர். பிச்சை கொண்டு உண்பது உயிர்களைக் காக்கும் பேரருளாண்மையாலன்றிப் பசியாலன்று. இச்சை - உள்ளன்பு. தம்மை இரவொடு பகலும் நச்சுவார்:- `ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்` (1). நச்சுவார் (நத்துவார்) - விரும்புவார். `நச்சினார்க்கினியர்` என்பது இறந்தகாலத்தது. இது முக்காலத்திற்கும் உரித்து. நாகவீச்சரவனார் = சாளரந்தோறும் தோன்றுஞ் சந்திரவுதயம் போலும்` என்புழிப்போலப் பெற்ற தமிழ்ப் புணர்ச்சி.

பண் :

பாடல் எண் : 2

வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலும்
காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில் அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க வல்லவராய், அதனால் உலகறிந்த புகழை உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

வேடு ளு வேந்து. இரண்டும் மறுதலை. `இழிகுலமாகிய எயினர் பாவை நான் முழுதுலகருள் புரிமுதல்வர் நீர் எனைத்தழுவுதல் ... பழி` (கந்த. வள்ளியம்மை 90) `ஆறலைக்கும் வேடலன் வேந்தும் அலன்` (நீதி நெறி விளக்கம் 30) `வெண்குடை நிழற்றிய வொருமை யோற்கும், கடுமாப்பார்க்கும் கல்லா வொருவற்கும், உண்பது நாழி உடுப்பவை யிரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே` (புறநானூறு. 189). `மன்னவன்றன் மகன் வேடரிடத்தே தங்கி வளர்ந்தவனையறி யாது மயங்கி நிற்ப` (சித்தியார்) சிவஞானபோதம். சூ. 8. உரை காண்க. முதல்வன் மன்னவன். ஆன்மா; மன்னன் மகன். ஐம்பொறிகள் வேடர். திருவலிவல மும்மணிக் கோவையின் முதற்பேரகவலிற் பார்க்க. வேள் + து = வேடு. (ஆள் + தூஉ = ஆடூஉ, மகள் + தூஉ = மகடூஉ. அலிதூஉ) விருப்பினது. மெய்வேடர். மெய்வேடரல்லர் வேடராக விரும்பிக் கொண்ட வேட்டுவவடிவத்தர். வேடு - வேடுவ மரபு. வேடர். வேடருறும் வேடம் பூண்டவர் எனலுமாம். காடு உறுபதியர் - காடாகவுற்ற பதியினார். `கோயில் சுடுகாடு`. பதியாகவுற்ற காட்டினார் எனலுமாம். `கடிபுனற் கங்கை நங்கை. சேடு (- பெருமை) எரிசடையர்`:- (தி.4 ப.65 பா.7.) சிவபெருமானே பிறவிக் கடல் கடத்தும் பெரும்புணையாகிய திருவடியினன் என்று நூலெ (உலகெ)லாம் போற்றுதலின், தீவினைதீர்க்கவல்ல நாடறி புகழர்` என்றார். `நாடறி புகழர்` என்னும் செந்தமிழ்த் தொடர் இனியதோ ராட்சி. `இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் (திருக்குறள். 1-10) திருவொற்றியூரொருபாவொருபஃது. 8. காண்க.

பண் :

பாடல் எண் : 3

கற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும் புலியத ளுடையர் போலும்
சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் மலையையே தமக்குத் துணையான வில்லாகக் கொண்டு காவல் அமைந்த முப்புரங்களை அம்பு எய்து அழித்தவராய், பொன்னுக்கு ஒப்பான திருவடிகளை உடையவராய், புலித்தோல் ஆடையராய், வேதத்துக்குச் சமமான பாமாலைகளைக் கொண்டு தொழுது வழிபடுபவர்க் கெல்லாம் மேம்பட்ட துணைவராவார்.

குறிப்புரை :

கல் + துணை + வில் - மேருமலையாகிய (போர்க்குத்) துணைக்கருவியானவில். துணை அளவுமாம். `கற்றுணைப்பூட்டி` கடியரண் - காவல் மும்மதில்; திரிபுரம். பொற்றுணைப்பாதர் - பொன்னையொத்த திருவடித்துணை. அதள் - தோல். சொற்றுணை மாலை - பாமாலை. தொழுது எழுவார்கட்கெல்லாம் நற்றுணை ஆவர். பூமாலை கொண்டு போற்றுவார்க்கேயன்றிப் பாமாலை கொண்டு, பணிவார்க்கும் நற்றுணையாவர். `சொற்றுணை வேதியன்` `நற்றுணை யாவது நமச்சிவாயவே`. பிறவி தீர்க்கும் நலமே எல்லாவற்றினும் பெரிதாதலின், நற்றுணை என்றார் (தி.4 ப.66 பா.3).

பண் :

பாடல் எண் : 4

கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலும்
செம்பொனா ருருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரா னெம்மை யாளு மிறைவனே யென்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும் நாகவீச் சரவ னாரே.

பொழிப்புரை :

பார்வதி பாகராய், காளை எழுதிய கொடியினராய், செம்பொன்போன்ற நிறத்தினராய், விளங்கும் திருநீற்றினராய், எம் பெருமானே! எம்மை அடிமை கொள்ளும் இறைவனே! என்று தம்மை விரும்பும் அடியார்களுக்கு அன்பராய் உள்ளார்.

குறிப்புரை :

கொம்பு - பூங்கொம்பு. அன்னாள் - நிகர்த்தவள். கொடியுடைவிடையர் - விடையெழுதிய கொடியுயர்த்தவர். `ஊர்தி வால்வெள்ளேறே சிறந்த சீர் கெழுகொடியும் அவ்வேறென்ப` (புறம்) விடைக்கொடியுயர்த்தியதன் குறிப்பு:- மும்மலத்தின் இழிந்த பசுக்களைத் தன் திருவடிக்கே உயர்த்தும் பேரருட்டிறம் உணர்த்துங் குறிப்பு. செம்பொன்போலும் திருவுருவர். `ஆர்` உவமவுருபு. `பொன்னார் மேனியன்` `காச்சிலாத பொன்னொக்கும் கனவயிரத்திரள் ஆச்சிலாத பளிங்கினன்` (தி.2 ப.9 பா.2) `செம்பொன் மேனி` எனத் திருமுறையிற் பயின்றதறிக`. எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று நாகேச்சுரவனாரை நம்புவார்க்கு அன்பர்.

பண் :

பாடல் எண் : 5

கடகரி யுரியர் போலுங் கனன்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவ மார்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவி லடிகள் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

யானைத்தோலைப் போர்த்தவராய், கனல் வீசும் மழுப்படையை ஏந்தியவராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் கட்டியவராய், பூதங்கள் பலவும் கூடிக் குடமுழாவை ஒலிப்பப் பேய்கள் பாட நாடோறும் கூத்து நிகழ்த்தும் தலைவராய் உள்ளார் திருநாகேச்சுரப் பெருமான் .

குறிப்புரை :

கடகரியுரியார் - மதயானைத் தோலுடுத்தவர். கரத்தையுடையது கரி. ஆளர் - ஆள்பவர். படவரவு - படத்தையுடைய பாம்பு. அரவு அரையர் - அரவைக் கட்டிய அரையினர். பாரிடம் - பூதங்கள். குடமுடை முழவம் - `குடமுழா` இது சிற்சில திருக்கோயில்களில் இன்றும் காணப்படும். `கூடுமே குடமுழவம் வீணைதாளம் குறுநடைய சிறு பூதம் முழக்க. மாக்கூத்து ஆடுமே`. (தி.6 ப.4 பா.5). `மாக்கூத்து` - `மகாதாண்டவம்`, `மாநடம்`. கூளிகள் - பேய்கள். பூதங்களும் பாடுவன எனினும், ஈண்டுப் பாரிடம் ஆர்ப்பக் கூளிகள் பாட என்றதால், பேய்களே கொள்ளப்படுவன. பேய்கள் பாடப் பல் பூதங்கள் துதிசெய ... ... மாநடம் ஆடும் வித்தகனார்`. (தி.2 ப. 102 பா. 7). `பூதகணம் ஆட ஆடும் சொக்கன் காண்` (தி.6 ப. 87 பா. 2) `பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்` (தி.5 ப.29 பா.10)`பயின்ற பல்பூதம் பல்லாயிரங்கொள் கருவி நாடற்கரியதொர் கூத்தும்` (தி.4 ப.2 பா.8) என்பவற்றில், பூதங்கள் பாடலும் ஆடலும் இறைவன் ஆடுங்கால் அன்றிப் பலி கொள்ளுங்காலும் உள்ளமை உணர்க.

பண் :

பாடல் எண் : 6

பிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும் நான்மறை யவன்ற னோடும்
முறைமுறை யமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரப் பெருமான் பிறைதங்கும் சடையினராய்ப் பார்வதிபாகராய், வேதங்களை ஓதுபவராய், திருமாலோடும் பிரமனோடும் தேவர்கள் முறையாகக் கூடித் தம் தலைகளால் வணங்கும் தேனைப்போல விரும்பத்தக்க திருவடிகளை உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

இளம்பிறை சூடியார் (சந்திரசேகரனார்), மங்கை பங்கினர். வேதவாக்கினார். திருமாலும் மறையவனும் தேவர்களும் முறை முறையாகக்கூடித் தம் முடிதாழ்த்து அடி வணங்க அருள் புரிந்து நின்ற நறைமலர்க் கழலடியிணையர் திருநாகேச்சுரத்திறைவர். இறைவன் சடையிற் பிறையுற்றது. ஒருபாகத்திற் பெண்ணினல்லாள் உற்றாள். திருவாயின் மொழிந்தனவே மறைகளெல்லாம். மொழியிலுற்ற மறைகள். மறைகள் உற்ற மொழி. மால் + மறையவன் - அரியும் அயனும். `முறை முறை` என்ற அடுக்கு (தி.4 ப.29 பா.4). வணங்க வரும் திரளின் இடையீடின்மையும், அந்நிலையுள் ஒரு வரிசை அவரவர் தகைமைக்குத்தக முன்பின் புகலும் பிறவும் குறித்து நின்றது. `நறவு அமர்கழல்`:- `கழல்` ஆகுபெயராய்த் தனக்கு இடமாய திருவடியையும், அத்திருவடியிற் சேர்க்கும் மலர்கள் நறவு அமர்ந்தன வாதலையும் குறித்தல் அறிக.

பண் :

பாடல் எண் : 7

வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலும்
குஞ்சரத் துரியர் போலுங் கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சைய ரிரிய வன்று வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் வஞ்சகர்களுக்கு அரியராய், தம்மை விரும்பிய அடியவர்களுக்கு எளியராய், யானைத்தோலைப் போர்த்தவராய், கூற்றுவனை ஒறுத்தவராய், தேவர்கள் அஞ்சி ஓடுமாறு கடலில் தோன்றிப் பரவிய விடம் அணி கண்டராய் உள்ளார்.

குறிப்புரை :

வஞ்சகர்க்கு அரியர்:- `கரவாடும் வன்னெஞ்சர்க் கரியான்`. `வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயான்`. `வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார், நஞ்ச நெஞ்சர்க் கருளும் நள்ளாறரே` (நஞ்ச நெஞ்சு = நைந்த நெஞ்சு). `வஞ்சம் கொண்டார் மனம் சேரகிலார்` `வஞ்சமனத்திறையும் நெஞ்சணு காதவன்` `வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பலி` என்றனவும் பிறவும் திருமுறையிற் காண்பன. `மருவினோர்க்கு எளியர்`:- `சார்ந்தவர்களால் நலம் இலன்` (தி.4 ப.11 பா.6). குஞ்சரத்து உரியர் - யானைத் தோலினார். குஞ்சரம் - குஞ்சத்தையுடையது. புதரிற் சஞ்சரிப்பது எனல் பொய்யுரை. கு - புதர், சரம் - சஞ்சலிப்பது என்பார். `குஞ்சரம்` `சரம்` என்பனவற்றிலுள்ள சகாரம் இரண்டும் வெவ்வேறாதலை உணரார். கூற்று - உடலையும் உயிரையும் கூறுசெய்யும் தெய்வம். குமைப்பர் - அழிப்பர். `கோடுவெளிற்றறி விரண்டும் குமைப்ப` (தணிகைப்புராணம் காப்பு) `விஞ்சையர்` என்றது அவர் முதலிய தேவர்களை. இரிய - ஓட. வேலை - கடல். `வாய்` ஏழன் உருபின் பொருட்டாயதோரிடைச்சொல். நஞ்சோ அமுதோ வந்தது வாய் தானே! அதனால் வேலையது வாய் என ஆறன்தொகையுமாம்.

பண் :

பாடல் எண் : 8

போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும் நாகவீச்ச சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் இன்பம் நிறைந்த காளியின் கொங்கைகளைத் தழுவும் புனிதராய், விரைந்து செல்லும் காளையை உடையவராய், வெண்ணீறணிந்த திருமேனியின் ஒருபாகமாகத் திருமாலை உடையவராய், மேருமலையாகிய வில்லையும், பாம்பாகிய நாணையும் உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

போகம் - இன்பம். புணர்வுமாம். மோடி - (காடு கிழாள்). துர்க்கை. புணர்ந்தாலும் புனிதம் உடையவர். வேகம் - விரைவு. திருவெண்ணீற்றை வெண்பொடி எனல் `வெண்பொடி மேனியினான் கருநீல மணிமிடற்றான் பெண்படி செஞ்சடையான்` என்று சொல்லுஞ் சுந்தரம் ஈண்டுணரத்தக்கது. திருமால் ஒரு பாகம் இருப்பது முன்னரும் கூறப்பட்டது. (தி.4 ப.32 பா.7) `மற்றையொரு பாலும் அரியுருவம் திகழ்ந்த செல்வர்` (தி.6 ப.58 பா.3). பருப்பதம் - மேருபருவதம். வில்லர் - (மேருவை) வில்லாக உடையவர். பருப்பத வில் - மேருவில். வில்லர் - வில்லுடையார். நாகநாண் உடையர்:- அம் மேருவில்லிற் பூட்டிய நாண் பாம்பாதலைக் குறித்தது. `எரிகாற்றீர்க்கு அரிகோல் வாசுகி நாண் கல்வில்லால் எயில் எய்தான்` (தி.1 ப.11 பா.6) `குன்றவார்சிலை நாண் அரா` (தி.2 ப.50 பா.1).

பண் :

பாடல் எண் : 9

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளையராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.

குறிப்புரை :

கொக்கரை, தாளம். வீணை பாணிசெய் குழகர். திருக்கூத்தாடுங்கால் இயம்பும் கருவியும், கொட்டும், தட்டும், இசைக்கும் பிறவும் திருமுறையுட் பயின்றுள. அக்கு அரை அணிவர்:- `அக்கரவம் அரைக்கசைத்த அம்மான்` தண்ணார் `அக்குலாம் அரையினர்` `அக்கு` `அக்கு ஓட்டினைச் சேய் அரைகரம் கொண்டார்` (காஞ்சிப்புராணம்). ஐந்தலை அரவர்:- `அஞ்சு கொலாம் அவர் ஆடரவின்படம்` `பத்துக்கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின் பல்`. (தி.4 ப.18 பா.5, 9), வக்கரை திருவக்கரை என்னுஞ் சிவதலத்தில் எழுந்தருளி இருக்கும் நினைவு வல் + கரை - வற்கரை. மரூஉ. மாதர் - தாருக வனத்து முனிபத்தினியர். மையல் - மோகம். நக்கர் - `நக்நன்` `சொக்கலிங்கம் உண்டே துணை` (இரட்டையர் பாடல்).

பண் :

பாடல் எண் : 10

வின்மையாற் புரங்கண் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையா லமரர் தங்க டலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான் வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையா லளிப்பர் போலும் நாகவீச் சரவ னாரே. 

பொழிப்புரை :

திருநாகேச்சுரத்துப் பெருமான் தம் வில்லாற்றலால் மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவராய், தம் பண்பினாலே தேவர்களுடைய தலைவர்களுக்கும் தலைவராய், தன் உடல் வலிமையாலே கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனது வலிமையைப் போக்கி அவ்விடத்திலேயே அவனுக்கு நன்மை ஏற்படும் வகையில் அருள் செய்தவராவார்.

குறிப்புரை :

வின்மை - (மேரு) வில்லின் வன்மை. வில்லின் தன்மை வின்மை. அத்தன்மை ஈண்டு வன்மையாகும். வாளா இருந்தே மூளாத் தீ, புரம் உறச் செய்ததே வன்மை. தன்மை - தானாம் இயல்பு. எல்லாத் தேவருள்ளும் (மாந்தருள்ளும்) மற்று எவ்வுயிருள்ளும் இருந்து தானாதலின், தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் என்றார். உம்மை இறந்தது தழீஇயிற்று. வன்மை - ஆற்றல்; வலி. தொலைவித்து - தோற்கப்பண்ணி. ஆங்கே - அப்பொழுதே, அவ் விடத்தே, (தி.4 ப.65 பா.9.) இல் `அங்கு` என்றதன் குறிப்புரையை நோக்குக. நன்மை - சாமகானங் கேட்ட இன்ப நலம். அளிப்பர் - அன்பின் முதிர்ச்சியான அளியால் அருள்கள் செய்வார்.

பண் :

பாடல் எண் : 1

வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே யடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத் தண்ணலே யஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

அலைகள் உலாவுகின்ற வயல்களால் சூழப்பட்ட திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே ! ஐம்புல வேட்கையை நீக்கும் ஆற்றல் இல்லேனாய் , நீக்குதற்கு அரிய பிறவியாகிய வஞ்சனைப் படுகுழியிலே விழுந்து அதனினின்றும் கரையேறும் வழியைக் காணேனாய் உள்ள அடியேனுக்கு அஞ்சேல் என்று அருள் செய்வாயாக !.

குறிப்புரை :

` கடைக் கண்ணான் மங்கையையும் நோக்கா என்மேல் ஊனமது எல்லாம் ஒழித்தான் ` ( தி .6. ப .19 பா .4) என்றதனை உளங்கொண்டு , இத்திருப்பதிகத்தை உணர்வாராக . வரைகிலேன் - நீக்கிடும் ஆற்ற - லில்லேன் . புலன்கள் ஐந்தும் - ஐம்புலன்களையும் . ` அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு ` ( குறள் . 343). ` செவி முதலிய ஐம்பொறிகட்கும் உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வீடு எய்துவார்க்கு வேண்டும் . புலம் என்றது அவற்றை நுகர்தலை . துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள்மேல் அல்லது , வீட்டு நெறியாகிய யோக ஞானங்களில் மனத்தைச் செலுத்தாமையின் , அதனை அடல் வேண்டும் ` என்றும் , அஃது அப்பொருள்கள் மேற் செல்லின் , அந்நுகர்ச்சி விறகு பெற்ற தழல்போல முறுகுவதல்லது அடப் படாமையின் , வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல்வேண்டும் ` என்றும் கூறினார் ( திருவள்ளுவர் ) என்றார் பரிமேலழகர் . வரைகிலாப் பிறவிமாயப் புரையிலே அடங்கிநின்று புறப்படும் வழியும் காணேன் - நீக்குதற்கரிய பிறப்பிற்கு ஏதுவான வஞ்சக் கூறுபாடுகளிலே அகப்பட்டு ( ஒடுங்கி ) நின்று , அதனின் நீங்கிப் புறப்படும் வழியையும் அறிகிலேன் . ` பிறவிக்கு ஏதுவான மாயப்புரை ` புரை - கூறுபாடு ( சிந்தாமணி 1732). அடங்கி நிற்றல் - ஆசையால் அறிவு சென்று பொருந்துதல் . புறப்படும் வழி வேண்டவே அடங்கி நிற்றல் அகப்படுதலாயிற்று . அரை - இடை . நாகம் - அரவக்கச்சு . அஞ்சல் - அஞ்சாதே . என்னாய் - என்றருள்வாய் . திரை - அலைகள் . உலாம் - உலாவும் ; வந்து வந்து செல்லுதல் . பழனம் - வயல் . ஐந்தலைப் பாம்பினை அடக்கி அரையிற் கட்டிய அண்ணல் நீ . எனக்கு ஐம்புலனடக்கம் விளைத்தருளவல்லாய் என்றவாறு . புரையடக்கம் பனிமலர் கோதைமார் தம் மேலனாய்க் கிடத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 2

தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே யண்ட வாணா வறிவனே யஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

தேவனே ! உலகங்களில் பரந்து எங்கும் கலந்து வாழ்பவனே ! முக்காலமும் அறிபவனே ! தெளிந்த அலைகளை உடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரத்துப் பெருமானே ! உன் அடியேன் பிறவி எடுத்தபின் வீணாகப் பழைய வினைப் பயனாகிய குழியில் விழுந்து இந்த உடம்பைச் சுமந்து வருந்தி இத்துயரிலிருந்து தப்பிப் பிறவாமையை அடைவதற்குரிய வழியைக் காணேனாய் அஞ்சுகின்றேன் . அடியேனுக்கு அஞ்சேல் என்று அருளுவாயாக .

குறிப்புரை :

தெளிந்த நீர் அலைகளையுடைய வயல் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்தில் எழுந்தருளிய கடவுளே , தேவனே , அண்டங்களுள்ளும் புறம்பும் வாழ்பவனே . ஞான சொரூபனே , கொண்டனேன் பிறந்து வீணே , பிரவாகாநாதியாகத் தொடரும் வினையான குழியில் விழுந்து , அவ்வினைக்குத் தக்க ஊனாலான பிண்டத்தைப் பொறுத்துத் தேய்ந்து ( இதனினின்றும் ) பெயர்ந்துய்வதொரு வழியும் அறியேன் . அஞ்சாதே என்று சொல்லி என்னை ஆளாக்கிக்கொண்டு நின் திருவடி நிழலில் வைத்தருள்வாய் . ` தொண்டன் ` என்னும் படர்க்கைப் பெயர் , தன்மை யொருமையீறுஞ் சேர நின்று , அப்படர்க்கையின் நீங்கித் தன்மைக் குரியதாதலறிக . ` அடியனேன் ` ` பத்தனேன் ` என்று பயிறலும் நினைக . பிண்டம் - உடல் . அண்டம் - உலகம் ` அண்ட பிண்டம் அவை சமம் ` ( கோயிற்புராணம் ). வினைக்குழி `- வினைத்துடக்கிற்பட்டு மீளாத்துன்புறும் நிலையின் நீங்கிச் , சிவபெருமானுக்கு மீளா ஆளாகிப் பேரின்பம் உறுதல் பெரிதும் அரிதாம்படி , தன் கண் வீழ்த்தி அடக்கி யுயிர்களைச் சிறுமைப்படுத்துதலின் ` வினைக்குழி ` என்றார் . ஆன்மா வியாபகப் பொருள் . அது குழியில் வீழ்ந்து அவ்வியாபகமுறுதலின் , ` பிண்டமே சுமந்து ` என்றார் . ` உயிர் ஈரும் வாள் நாள் ` ஆதலின் ` நைந்து ` என்றார் ` அண்டவாணன் என்பது அண்ட வாழ்நன் என்றதன் மரூஉ . ` அஞ்சல் ` ( மகன் ) எனல் போல்வது , அஞ்சேல் என்றருள் என்றதன் தாற்பர்யம் .

பண் :

பாடல் எண் : 3

கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி யொளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

சேல் மீன்களை உடைய வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரப் பெருமானே ! இரண்டு கால்களைக் கொடுத்து எலும்புகளைப் பொருத்தி , விளங்கும் நரம்புகளை உடம்பினுள் இணைத்துத் தோலை மேலே போர்த்திக் குருதியை உள்ளே நிரப்பித் தொக்க மயிர்களால் வேய்ந்து அமைக்கப்பட்ட கூரையாகிய இவ்வுடம்பு நிலையாமையை அடையும்போது பக்கத்திலுள்ள உற்றார் உறவினர் ஒன்று கூடி இதன் பிரிவிற்கு வாய் விட்டுக் கதறிச் சுடுகாட்டில் குழி தோண்டிப் புதைப்பதற்கு அஞ்சுகின்றேன் .

குறிப்புரை :

சேல்களைக்கொண்ட வயல்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்தில் எழுந்தருளிய பெருமானே , இருகால் கொடுத்தும் எலும்புகளைப் பொருத்தியும் , விளங்கும் நரம்புகளை யாக்கையுள் ஆரச் செய்தும் , தோலை உடுத்தும் , குருதியை அட்டியும் ( சேர்த்தும் ) தொக்க மயிர்களால் வேய்ந்தும் அமைத்த இப் பொய்யுடம்பாகிய கூரையைப் பக்கத்துள்ள சுற்றங் கிளை கேள் எல்லாம் ஒன்று கூடி , ஓலம் எடுத்துக் கதறியழுதுவிட்டு , சுடுகாட்டில் குழிதோண்டிப் புதைத்தொளிக்கும் நிலைமை ... ... க்கு அஞ்சுகின்றேன் . மீண்டும் அது வாராத வழியை அருள்வாய் என்றது . கதிர்த்தல் - விளங்குதல் . யாக்கை ஆர்த்து - யாக்கையாகக் கட்டி எனலுமாம் . ` ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி ` என்றாற்போலுதிரமட்டி என்புழிக்கொள்க . ` மடம்படு முணர் நெய்யட்டி `. ( தி .4 ப .75 பா .4)

பண் :

பாடல் எண் : 4

கூட்டமா யைவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லே னாடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக வாடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

ஆடுகின்ற பாம்பை இடையில் இறுகக் கட்டிய தலைவனே ! சுடுகாட்டைக் கூத்தாடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் கடவுளே ! பெருமை பொருந்திய பரப்புடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரப் பெருமானே ! ஐம்பொறிகளும் கூடிவந்து கொடிய தொழில்கள் செய்வதனையே தம் பண்பாகக் கொண்டு என்னைத் தம் விருப்பப்படி செயற்படுத்த அவற்றின் தொல்லையைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

ஐவரும் ஒருங்கு கூடி வந்து , கொடிய தொழிலே தம் இயல்பாம் வண்ணத்தராகி , என்னைப் பலபட ஆட்டுகின்றனர் . அவர் ஆட்டும் அச்செயலைப் பொறுக்கமாட்டேன் . ஆடரவை அரையிற் கச்சையாகக் கட்டிய அண்ணலே , கள்ளிமுதுகாட்டில் அதனை நாடகசாலையாகக் கொண்டு ஆடிய கடவுளேயோ ? நன்மையும் பெருமையும் உற்ற கழனிகள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்துள்ள முதல்வனே . சேடு - நன்மை . இருமை - பெருமை . உள்ளானே , ஆற்றகில்லேன் என்றியைக்க . கொடுந்தொழிலும் கொடுங்குணமும் உடையர் . கொடுந்தொழிலே தம் குணமாக உடையர் எனலுமாம் . தொழிற் பண்புமாம் .

பண் :

பாடல் எண் : 5

பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொ ளாக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழு மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

செம்மேனி அம்மானாகிய கொண்டீச்சரப் பெருமானே ! நிலைபேறின்றிப் பொய்யாக அமைந்த அழகற்ற புழுக்கள் மிகக் கலந்த தீ நாற்றமுடைய இவ்வுடலிலே இணைந்து இருக்கின்ற ஐம்பொறிகளும் , 96 தத்துவ தாத்துவிகங்களும் அடியேன் சோர்வு எய்துமாறு செய்யும் கொடுஞ்செயல்களைத் தாங்க இயலாமல் துன்புற்றிருக்கின்றேன் .

குறிப்புரை :

பொக்கம் - பொய் . ` பொக்கம் பேசிப் பொழுது கழியாதே ` ` பொக்கமிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்குநிற்பன் அவர் தம்மை நாணியே ` ( தி .5 ப .90 பா .9). மிடை - கலந்த . முடை - புலால் நாற்றம் . ( தி .4 ப .67 பா .8.) ` முடை கமழ்ந்துதிரமுமிழும் ` ( கூர்ம புராணம் ) என்றதும் ஈண்டுக் கருதற்பாலது . தொக்கு - கூடி . துயக்கம் - சோர்வு , அறிவின் திரிபுமாம் . வேதனை - வாதை , துன்பம் . அலந்து - அலைந்து . துன்புற்று ( தி .4 ப .52 பா .8). செக்கர் - செவ்வான் . ` செவ்வானன்னமேனி ` ( அகம் . கடவுள் வாழ்த்து ) செய்யமேனி திருக்கொண்டீச்சரத்தானே , பொய்யான பொல்லாத புழுப்பொதிந்த புன்புலால் நாற்றத்தையுடைய இவ் வுடலிலே கூடிநின்ற ஐவரும் ( ஐம்புலக் கள்வரும் ) தொண்ணூற்று அறுவரும் ( தத்துவம் முப்பத்தாறு , தாத்துவிகம் அறுபது ) ஆகிய இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன் . யான் துயக்கம் எய்தச்செய்யும் வேதனை . மிக்கு நின்று செய்யும் வேதனை . துயக்கம் எய்துதல் அலந்துபோனார் வினை . தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த ஐவராய இவர்கள் செய்யும் வேதனை எனலுமாம் . ஆயின் , இகரச்சுட்டுக்கு அணியராவார் ஐவர் - தொண்ணூற்றறுவரல்லர் என்றாகும் . ( தி .4 ப .67 பா .7) ஆயினும் , ( தி .4 ப .67 பா .7.) இல் அங்ஙனம் கொள்ளல் பொருந்தாது .

பண் :

பாடல் எண் : 6

ஊனுலா முடைகொ ளாக்கை யுடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால நண்ணிலே னெண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

வண்டுகள் உலாவும் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! புலாலால் அமைக்கப்பட்ட நாற்றம் வீசும் உடம்புப் பாறையில் மோதி உடையும் மரக்கலம் போல்வது என்னும் எண்ணம் இல்லாதேனாய் , மான் கண்கள் போன்று மருளும் குளிர்ந்த கண்களையுடைய மகளிரோடு வாழும் வாழ்க்கையை உண்மையான வாழ்வு என்று எண்ணினேனாய் , அடியேன் இதுகாறும் உன்னை அணுகாது வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன் .

குறிப்புரை :

தசையுலாவும் புலால் நாற்றங்கொண்ட உடல் நடுக் கடலில் உடையும் மரக்கலம் போல்வதென்று எண்ணாது மான்போலும் குளிர்விழியவர்தம் வாழ்க்கையை அழியா வாழ்வென்று எண்ணி , நான் இவ்வளவு காலமும் திருக்கொண்டீச்சரத்துள்ளானை நண்ணலும் எண்ணலும் இல்லேன் . இனைய - இத்தன்மைய . நண்ணிலேன் - கிட்டிலேன் ; பொருந்திலேன் . நண்ணுதல் - கிரியை . எண்ணம் - தியானம் . யோகத்திற்குரியதுமாம் . தேன் - வண்டுகள் . நீருலாம் என்பது போலத் தேனுலாம் எனலுமாம் . யாக்கை என்றதன் மரூஉவே ஆக்கை . உடைகலம் - உடைகின்ற மரக்கலம் ; உடையும் மட்கலம் போல விரைந்தழிவதும் ஆம் . ` நண்ணிலேன் ` நின்னை என்க . மழைக் கண் - மழை போலுங் குளிர்ச்சி செய்யும் கண் .

பண் :

பாடல் எண் : 7

சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிக ரைவர் தொண்ணூற் றறுவரு மயக்கஞ் செய்து
பேணிய பதியி னின்று பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

வானளாவிய மாடங்கள் பலவாக உள்ள திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! ஒரு முழம் நீளம் உடைய பொய்யான உடம்பாகிய ஊருக்கு ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கும் வாணிக நோக்கமுடைய ஐம்பொறிகளாகிய வாணிகரும் , தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களும் கலக்கத்தை உண்டாக்க அடியேன் விரும்பித் தங்கிய அவ்வூரிலிருந்து பிரிந்து போகக் கூடிய நாள் இன்னது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

சாண் அளவில் இருமடங்கு நீண்ட பதி சழக் குடையபதி . சழக்கு - பொய் . ` தக்க சொற்றிறம் உரைத்திலை சழக்கினன் எனப் பெயரிடும் இக்கருத்தை யினி விட்டுவிடு விட்டு விடெனக் கழறினான் `. ( அரிச்சந்திர புராணம் . நகர் நீங்கு . 124) ` இச் சழக்கின்று நான் இசைந்தாற் றருமந்தான் சலியாதோ ` ( சேக்கிழார் ) என்றவாறுரைத்தால் , நீதிக்கு விரோதம் என்ற பொருட்டாம் . ஐவரும் இப்பதியான உடலில் நாதராயிருந்து , உயிரை அடிமைப்படுத்தி , பொருளீட்டும் வணிகர்போல வினையீட்டுவராய் நீதிவிரோதமே புரிவர் . பொய்யே வளர்ப்பர் . ஐவரும் தொண்ணூற்றறுவரும் மயக்கஞ் செய்து பேணியபதி . பதிக்கு நாதர் பேணிய பதி . பதியினின்றும் பெயரும் போது - பொழுது . பொழுதை அறியமாட்டேன் . பொழுதில் நின்னை உணரமாட்டேன் . ` உன்னை நினைந்தே கழியும் என்னாவி ` ( தி .4 ப .112 பா .6.) ` நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் . சாம் அன்று உரைக்கத் தருதிகண்டாய் ` ( தி .4 ப .98 பா .2.). பெயர்தல் - உடலிற் புகுந்துறைந்து மீளல் . சேண் உயர்மாடம் நீடு திருக் கொண்டீச்சரம் என்றது திருக்கோயிற் சிறப்புணர்த்திற்று . அவ்வூரில் இருக்கும் மாடங்களினினுயர்ச்சி எனலாகாது . அக்காலத்தில் , திருக்கோயிலினும் உயர்த்தி வீடு கட்டும் எண்ணமே சைவர்க்கு உறுதலில்லை .

பண் :

பாடல் எண் : 8

பொய்ம்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து
பைம்மறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்று
கைம்மறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன்
செந்நெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

திருக்கொண்டீச்சரத்துப்பெருமானே ! பொய்களை வெளியே செல்லாதபடி தடுத்துத் திருப்பி அவற்றிற்கு வடிவுதந்து புலால் நாற்றம் வீசும் பொருள்களை அவற்றிற் பொருத்திப் பையை அழுக்குப் புலப்படாதபடி திருப்பி வைத்தாற்போன்று , எனக்குத் துணையாக உதவாத இந்த உடம்பிலிருந்து இது தகாது என்று கைகளால் குறிப்பிட்டுச் செல்வது போன்ற உயிர் நீங்கும் காலம் இது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேன் . உயிருக்கு உறுதி தேடி நேரிய வழியில் செல்லும் ஞான சாரத்தையும் உணரேன் .

குறிப்புரை :

பொய் யெல்லாவற்றையும் புறம் போகலொட்டாது தடுத்துத் திருப்பி , அவற்றாற் செய்துவைத்துப் புலால்கமழும் பண்டங்களை இட்டுப் பையை மறித்துச் செய்தாற் போன்ற அழகில்லாத உடற் குடிலினின்று , இனி இவ்வுடல் எனக்கு வேண்டா எனக் கைகவித்து விலக்கினாற்போன்ற ஆவி கழியும்பொழுது அறியகில்லேன் . திருநிறை செம்மை நெறியிற் செல்லும் செலவு ( ஞானசாரம் ) உணரேன் . பைம்மறியாப் பார்த்தல் :- தருமை ஆதீன வெளியீடு ` சாத்திரங்களும் தோத்திரங்களும் ` பக்கம் . 29, 30 பார்க்க . ` தொல்லுலகைப் பைம்மறியாப் பார்க்கிற் பரையாகும் . அப்பரையைப் பைம்மறியாப் பார்க்கிற் பரம் `. ( சிற்றம்பல நாடிகள் வெண்பா . 55). கைம்மறித்தல் - ` தக்காற்போற் கைம்மறித்த காந்தள் - காந்தள் நன்மக்களைப் போலே அந்தோ இதுதகாது என்று கைகவித்து விலக்கின ; ` தம் கைம்மறித்து ` - ( சிந்தாமணி . 1227. 1809) ` நளினக்கைம்மறித்து ` ( கம்பராமாயணம் . கடல்தாவு படலம் . 93).

பண் :

பாடல் எண் : 9

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.

பொழிப்புரை :

சேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே ! சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும் , குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும் , மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன் .

குறிப்புரை :

இளஞ்சேயாய் இருக்கக் கழிந்த நாளிலும் , ( காளையாய்க் ) குளிர்ந்த பூங்கோதைமகார் தம்மிடத்தனாகியிருக்கக் கழிந்த நாளிலும் , மெலிவும் மூப்பும் உற்றுக் கைக்கோல் ஊன்றிக் கொண்டு முக்காலுக்குத் தக்கானாகியிருக்கக் கழிந்த நாளிலும் , உயிர்த்துணையாகிய உன்னைக் குறியாகக் கொள்ளுதல் இல்லாமற் கெட்டேன் . சேல்மீன் உலாவும் வயல்களை வேலியாகவுடைய திருக்கொண்டீச்சரத்துள்ள முதல்வனே . இதில் குறிக்கோள் இல்லாது கழிந்த காலமும் , குறிக்கோளினின்றியமையாமையும்குறியாவதும் உணர்த்தியவாறுணர்க . குறிக்கோளிலாது கெட்டவாறுணர்தற்குச் சென்ற காலத்தின் நீட்சியை நோக்கின் , 81 ஆண்டிருந்தவர்க்கு அதுதகும் . சில்வாழ்நாளர்க்குத்தகாது . ` அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு போமாறமைமின் ` ( தி .8 யாத்திரைப் . 3) ` உன்றன் திருக்குறிப்புக் கூடுவார் ` ( தி .8 திருச்சதகம் . 55) ` என் குறிப்பே செய்து நின்குறிப்பில் விதுவிதுப்பேன் ` ( தி .8 திருவா . 6-34) ` திருக்குறிப் பருளுந் தில்லைச் செல்வன் ` ( தி .9 ப .4 பா .7) ` குறியிலேன் ` ( தி .7 ப .4 பா .57.) ` என்று வந்தாயென்னும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே ` என்றவாற்றால் , இறைவனதாய திருக்குறிப்பும் அடியாரதாய குறிக்கோளும் விளங்குதலறிக . ` குறியிலாக் கொடியேனை அடியேனாகச் செய்தானைத் திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே ` ( தி .6 ப .66 பா .8).

பண் :

பாடல் எண் : 10

விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர விலங்கைக் கோமான் விலங்கலை யெடுத்த ஞான்று
பருவரை யனைய தோளு முடிகளும் பாறி வீழத்
திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

திருக்கொண்டீச்சரத்துப் பெருமான் நறுமணம் கமழும் கரிய மெல்லிய கூந்தலையும் விளங்குகின்ற அணிகலன்களையும் வேல்போன்ற ஒளிபொருந்திய கண்களையும் உடைய பார்வதி அஞ்சுமாறு இராவணன் மலையை எடுத்த போது அவனுடைய பருத்த மலைபோன்ற தோள்களும் முடிகளும் சிதறி விழுமாறு அழகிய கால் விரலை ஊன்றினார் .

குறிப்புரை :

விரை - மணம் . கருமையும் மென்மையும் கூந்தலுக் குரியன . கூந்தலும் இழையும் கண்ணும் உடைய அம்பிகை . வெருவர - அஞ்சுதல் உண்டாக . கோமான் - கோமகன் . மகன் என்பதன் மரூஉவே மான் . இலக்கண நூலார்க்கு அது விதி ஆயினும் சொல்லாராய்ச்சிக்கு அஃது ஒவ்வாது . மகள் - மாள் . மகவர் - மகார் - மார் என மருவியவையும் உணர்க . செட்டிமார் , குருக்கண்மார் , ஆசிரியன்மார் என்பவற்றில் அம் மகார் என்னும் பொருள் அன்றிப் பிறிதில்லை . மகார் என்பது மருவி மார் என்றாதல் ஒன்று . செய்மவர் , கொள்ளுமவர் முதலியன மருவி , செய்மார் கொண்மார் முதலியனவாதல் ஒன்று . ` மகார் ` ` அவர் ` இரண்டும் பெயர்ச்சொல்லாதலின் அவற்றின் மரூஉவும் வினை கொண்டு முடிகின்றன . மார்வினையொடும் முடிதற்கு ஏது யாது என்று ஆய்வார்க்கு இது விளங்காதிராது . ` பாடன்மார் எமர் ` என்புழிப்படும் இடர்ப்பாட்டிற்கு , மருவிய பின்னர் விகுதியெனக்கொண்டுரைத்ததே ஏது . பருவரை - பரியமலை . பாறி - சிதறி . ஞான்று நாளன்று என்பதன் மரூஉ .

பண் :

பாடல் எண் : 1

வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும்
கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய வாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

வயல்களில் சேறு நிரம்பிய பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய் , விரும்புபவர்களுக்கு எளியவராய் , உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய் , நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார் .

குறிப்புரை :

வெள்ளநீர் - கங்கை நீர்ப்பெருக்கம் . நீரை அடக்கிய சடையினார் . விரும்புவார்க்கு எளியர் - நச்சுவார்க்கு அரியரல்லாராய் மிக எளியராயருள்வார் . உள்ளுளே - உள்ளத்துள்ளே . உருகிநின்று அங்கு உகப்பவர்க்கு . கசிந்து நின்று , பாசத்தின் நீங்கியுயர்ந்து நினையுமவர்க்குத் தம்பால் அவர் வைத்த அன்பாயிருப்பவர் . உயிர்கள் செய்யும் எல்லா வினைகளையும் அவை நுகர்ந்து தீர்க்கற் பாலன . தீர்க்கும்போதும் வினை செய்தலால் முற்றுந்தீரா . செய்யாமை செய்து செயலறுப்பார்க்கு எதிர்வினையும் இல்லை . நுகர்வினையும் தீரும் . தீருங்காற் செய்யும் புதுவினை இல்லாமையால் , வினைமுற்றுந் தீர்ந்துவிடும் . செய்யாச் செயல் செய்து கரிசறத் தீர்த்தல் எல்லார்க்கும் விளங்காது . அதனால் அது வெள்ளம் அன்று . கள்ளமே . அள்ளல் - சேறு . பழனை திருவாலங்காட்டருகிலுள்ளதோரூர் பழையனூர் எனப்படுவது . அதன் மரூஉவே பழனை என்பது . மேய ( மே + ய் + அ ) எழுந்தருளிய . இது போய , ஆய முதலியவை போலும் பெயரெச்சம் .

பண் :

பாடல் எண் : 2

செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற்ப ழனை மல்கிய வள்ளல் போலும்
அந்தமி லடிகள் போலு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

ஆலங்காட்டு அடிகளார் செந்தழல் நிறத்தவராய் , கோபம் உடைய காளையை உடையவராய் , வெண்ணீற்றைத் திருமேனியில் அணிபவராய் , தென்றல் வீசும் சோலைகளை உடைய பழையனூரில் உறையும் வள்ளலாராய்த் தமக்கு ஒரு காலத்தும் இறுதி யில்லாத பெருமானாய் உள்ளார் .

குறிப்புரை :

செந்தழல் உருவர் - செந்தீ வண்ணர் . சினவிடையுடையர் - செங்கண் விடையினையூர்தியாக உடையவர் . சுட்ட திருவெண்ணீற்றினைக் கொண்டு திருமேனிக்கு அணிசெய்திடுவார் . மந்தம் ஆம் பொழில் - தென்றல் உலாவும் சோலை . பொழிலையுடைய பழனை . மல்கிய - மிக்க . வள்ளல் . கொடையாளர் . அந்தம் - ஈறு ; முடிவு . இல் - இல்லாத . அடிகள் - உடையவர் ; காட்டிலுள்ள துறவியார் .

பண் :

பாடல் எண் : 3

கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கண் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேய
அண்ணலா ரெம்மை யாளு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

நம்மை அடிமை கொள்ளும் ஆலங்காட்டுப் பெருமான் நெற்றிக்கண்ணால் கருவேள் ஆகிய மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு விழித்தவரும் , பகைவருடைய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு சிரித்தவரும் , பண்ணுக்கு ஏற்ப ஒலிக்கும் முழாவின் ஒலி நீங்காததும் , சோலைகளை உடையதுமான பழையனூரில் விரும்பித்தங்கிய தலைவரும் ஆவார் .

குறிப்புரை :

காமவேளை - மன்மதனை . கண்ணினால் - நெற்றிக் கண்ணினால் கனல் . எழ - தீப்பறக்க . விழிப்பர் - விழித்தெரிப்பர் எண் இலார் - எண்ணுதலில்லாதவர் ; பகைவர் . எரி உண - தீய . சிரிப்பர் - நகைப்பர் . ( தி .4 ப .4 பா .4) அதற்கு இது முரண்படும் . பண்ணின் ஆர் முழவம் - பண்ணிசைக்குத் தகப்பொருந்திக் கொட்டப்படும் முழவு . இசைக்கு ஆகுபெயர் . ஓவா - நீங்காத . பைம்பொழில் - பைஞ்சோலை . அண்ணலார் - பெருமையார் . எம்மை - எங்களை . நம்மை ஆள்வார் . ( தி .4 ப .68 பா .10.)

பண் :

பாடல் எண் : 4

காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோளர் போலும்
தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலும்
கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த , கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார் .

குறிப்புரை :

காறிடு விடத்தை - கொல்கின்ற நஞ்சினை . உண்டவர் உயிரைப் போக்கும் விடமுமாம் . உண்டகண்டர் - ( நஞ்சு ) அருந்திய திருநீலகண்டர் . தூறு :- ` பற்றை ` என்பர் ; சுடலையில் கரிசாம்பல் முதலியன தூறாகும் . சுண்ணம் - பொடி . திரு வெண்ணீற்றர் . கூறு - பாகம் . உருவர் திருமேனியர் . அர்த்த நாரீசுவரர் , குளிர் பொழில் , நிகழ் கால வினைத்தொகை . ஆறு - கங்கை . கங்கையை அடக்கியிட்ட சடை யுடையவர் .

பண் :

பாடல் எண் : 5

பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலும்
கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை யறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி யம்பொடுங் கொடுப்பர் போலும்
தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே.

பொழிப்புரை :

பழையனூரையடுத்த , பாவத்தைப் போக்கும் தூய்மையை உடைய ஆலங்காட்டுப் பெருமான் பார்த்தனோடு போரிட்டு அவனுடைய பக்தியைக் கண்டவராய் , கூர்மையான நுனியை உடைய அம்புகளைக் கோத்து அவன் குணங்களை அறிந்தவராய்ப் பின்னும் ஒரு அம்புப் புட்டிலை அத்திரத்தோடு அவனுக்கு வழங்கியவராய் உள்ளார் .

குறிப்புரை :

பார்த்தன் - அருச்சுனன் . அமர் - போர் . பொருது - தாக்கி . பத்திமை - ` தொண்டராங்குணம் ` காண்பர் - அறிவர் . கூர்த்த - கூரியதாகிய . வாய் - முனை . அம்பு - மால்கணை . கோத்து - வில்லிடைச் சேர்த்துத் தொடுத்து . குணங்களை - தவத்திற்கேற்ற இயல்புகளை . அறிவர் - உணர்வர் . பேர்த்தும் - பெயர்த்தும் ; மீண்டும் . ஓர் - ஒப்பற்ற . ஆவம் நாழி - அம்பறாத்தூணியை . அம்புகளொடும் கொடுப்பர் . தீர்த்தம் - பரிச்சுத்தமுடையது ; பாவம் போக்குவது .

பண் :

பாடல் எண் : 6

வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலும்
காட்டினின் றாடல் பேணுங் கருத்தினை யுடையர் போலுங்
பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினா ரரவந் தன்னை யாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

ஆலங்காட்டுப் பெருமான் இறந்தவர்களைக் கொளுத்திய சாம்பலை உடலில் பூசியவராய்ச் சுடுகாட்டிலிருந்து கூத்தாடுதலை விரும்பும் கருத்தினை உடையவராய்ப் பாம்பினை ஆட்டுபவராய்ப் பாடுதலை உடையவராய் , முழாவின் ஒலி நீங்காததும் , பசுமையான சோலைகளை உடையதுமான பழையனூரை விரும்பி உறைகின்றார் .

குறிப்புரை :

வீட்டினார் - இறந்தவர் . சுடுநீறு - வெண்ணீறு . ` மெய்க்கு அணிந்திடுவர் ` ( தி .4 ப .68 பா .2). காட்டில் - சுடுகாட்டில் . நின்று ஆடுதலைப் பேணும் கருத்தினை உடையவர் . பேணுதல் - விரும்புதல் . ` பாட்டினார் முழவம் ஓவாப் பைம்பொழிற் பழனை ` - ` பண்ணினார் முழவம் ஓவாப் பைம்பொழிற் பழனை ` ( தி .4 ப .68 பா .3). மேயார் - மேவியவர் ( தி .4 ப .68 பா .1). அரவம் - பாம்பு . அரவத்தை ஆட்டினார் . பாம்பாட்டிய பரமன் . ` பாம்பாட்டிச் சித்தர் பாடல் ` என்னும் வழக்குணர்க . ஆலங்காட்டடிகள் பாம்பாட்டடிகள் .

பண் :

பாடல் எண் : 7

தாளுடைச் செங் கமலத் தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ வுதைசெய்த நம்பர் போலும்
கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரை அடுத்த ஆலங்காட்டுப் பெருமான் தண்டினை உடைய செங் கமலப்பூப் போன்ற பெருமை பொருந்திய திருவடிகளை உடையவராய் , தனக்கு உயிர்வாழ வேண்டிய நாள்கள் இன்னும் பலவாக உடைய இயமன் அழியுமாறு உதைத்த , நம்மால் விரும்பப்படும் தலைவராய் , யாம் வினைவயத்தாற் கொள்ளுதற்குரிய பிறவிகளைப் போக்குபவராய் நம்மை அடிமையாகக்கொள்ளும் தலைவராக உள்ளார் .

குறிப்புரை :

தாள் - தண்டு . செங்கமலச் சேவடி . தடம்கொள் சேவடி . தட - பெருமை . நாள் உடைக் காலன் - அவ்வவ்வுயிர்க்கு உடலொடு நிற்கவைத்த நாள்களைக் கருத்தில் உடைய காலன் . தொடர்ந்த உடலையும் உயிரையும் பிரிக்கும் நாளையுடையனுமாம் . உதை செய்த - உதைத்தலைச் செய்த . ` உதை கரணம் செய்துகந்த சிவமூர்த்தி ` ( தி .4 ப .13 பா .10). நம்பர் - விரும்பப் படுபவர் . பெறுபவர் எனின் , விரும்புதலை விரும்புவராவர் . கோள் - துன்பம் . ` பிறவித் துன்பம் ` என்னும் வழக்குணர்க . ஆள் உடை அண்ணல் - ஆளுதலை உடைய தலைவர் . என்னையாளுடைய வள்ளல் .

பண் :

பாடல் எண் : 8

கூடினா ருமை தனோடே குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண வாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

பசுமையாகிய சோலைகளை உடைய பழையனூரை விரும்புபவராகிய ஆலங்காட்டுப் பெருமான் காதற் குறிப்புடைய வேடத்தைக் கொண்டு பார்வதி பாகராகிக் கங்கையைச் சூடி அதன் பெருக்கைக் குறைத்த சடையினராய்ச் சாமவேதம் பாடினவராய்க் காளிதேவி காண ஆடிய பெருமானாராவார் .

குறிப்புரை :

குறிப்பு - காதற்குறிப்பு . வேடங்கொண்டு உமையோடு கூடினார் . கங்கையாளைச் சூடினார் . சுவறிடு சடையர் :- கங்கை மிகப் பெரிதாயினும் , சடையின் நுனிக்கும் அஃது ஆற்றாது சுவறிட்டது ( வற்றியது ) என்றதாம் . கங்கையைச் சடைசுவறிற்று ( உறிஞ்சிற்று ) எனலுமாம் . சாமவேதம் பாடினார் . ` மேயார் ` ( தி .4 ப .68 பா .6). காளிகாண ( ஆலங்காட்டில் ) ஆடினார் அடிகள் .

பண் :

பாடல் எண் : 9

வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை யுகப்பர் போலும்
பெற்றமே யுகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும்
அற்றங்க ளறிவர் போலு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

ஆலங்காட்டு அடிகளார் ஆடையற்ற சமணர்களோடு விலைமதிப்புடைய ஆடைகளைப் போர்க்கும் புத்தர்கள் பேசும் ஒன்றும் பாதியுமாகிய சொற்களை ஏற்றுக் கொள்ளாத சிவனடியார்களுடைய குணங்களை விரும்பியவராய் , விரும்பிக் காளையை வாகனமாகக் கொள்ளும் பெருமையை உடையவராய்ப் பிறர் அறியாதவாறு மறைத்துச் செய்யும் பாவங்களை அறியும் ஞான முடையவராய் உள்ளார் .

குறிப்புரை :

வெற்றரைச் சமணர் - திகம்பர சைனர் . விலையுடைக் கூறை போர்க்கும் ஒற்று - தேரர் ; சுவேதாம்பரசைனருமாவர் . ஒன்றும் அரையும் ஆம் சொற்கள் ஒற்றரைச் சொற்கள் . ` ஒண்ணும் பாதியுமாஞ் சொல் ` என்பது உலக வழக்கு . அரைச்சொல் - பொருள் நிரம்பாப் பொய்யுரை . பொருளில் வறுஞ்சொல்லுமாம் . புறச்சமயத்தார் சொற்களைக் கொள்ளாதவர் குணங்களை உகப்பர் (- விரும்புவர் ). பெற்றம் - எருது . உகந்து - உயர்ந்து . ஏறும் பெருமை . அற்றங்கள் அறிவர் - பந்த நிவிர்த்திகளை அறிபவர் . எல்லாப்பற்றும் ` அற்றவர்க்கு அற்ற சிவன் `. அற்றங்கள் - பிறர் அறியாவாறு மறைத்துச் செய்யும் பாவங்கள் . பூதங்கள் அஞ்சும் அறிந்து அகத்தே நகும் . ` அற்றம் மறைக்கும் பெருமை ` ( குறள் 980) ` அற்றம் மறைத்தலோ ` ( குறள் 846)

பண் :

பாடல் எண் : 10

மத்தனாய் மலையெ டுத்த வரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலா லூன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வா ராலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

ஆலங்காட்டுப் பெருமான் செருக்குற்றவனாய்க் கயிலையைப் பெயர்த்த இராவணனைக் கைகளோடு தளருமாறு விரலை ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்தவராய் , பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராய் , பசுமையான சோலைகளை உடைய பழையனூரை விரும்பி உறையும் தலைவராய் நம்மை அடிமை கொள்பவராய் உள்ளார் .

குறிப்புரை :

மத்தன் - உன்மத்தன் . திருக்கயிலையையெடுக்க நினைந்ததே உன்மத்தம் அன்றோ ?. ஒல்க - தளர . ஒத்தினார் - ஒற்றினார் . திருவிரலால் ஒற்றி ஊன்றியிட்டருள்வர் . பத்தர் - தொண்டர் . அத்தனார் - தலைவர் . நம்மை ஆள்வார் :- ` எம்மை ஆளும் - அடிகளார் ` ( தி .4 ப .68 பா .3).

பண் :

பாடல் எண் : 1

செத்தையேன் சிதம்பன் நாயேன் செடியனே னழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிட மறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கே னிருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே கோவல் வீரட்ட னீரே.

பொழிப்புரை :

திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே ! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய் , பண்பிலேனாய் , நாய் போன்றேனாய் , குற்றமுடையேனாய் , முடைநாற்றம் உடையேனாய் , அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய் , இருள்தீர மனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன் ? யாது செயற்பாலேன் ?

குறிப்புரை :

சிதம்பன் - பண்பிலேன் . நாயேன் - நாயினேன் . நாய்போல்வேன் . நாய் வேறு நாயன் வேறு ; பொன் வேறு பொன்னன் வேறானாற்போல . செடியனேன் - குற்றத்தினேன் ; முடைநாற்றத்தேன் . அழுக்குப் பாயும் பொத்தையே போற்றி :- ` பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன் ` ( தி .4 ப .41 பா .5). ` பொள்ளல் இக்காயம் ` ( தி .4 ப .42 பா .6). புகலிடம் அறியமாட்டேன் . நாளும் பொத்தையே போற்றியிருப்பதாற் புகலிடம் அறிய வாய்ப்பில்லை . நான் எத்தைப் பற்றிநின்றேன் ? அஃது , இஃது ; எஃது என்பன இரண்டன் உருபேற்று அஃதை , இஃதை , எஃதை என வழங்கி , அத்தை , இத்தை , எத்தை என மருவின . ` அத்தைத் தின்று ` ` இத்தை ஆயும் அறிவுடையன் ` ` இத்தில் வரும் நீர் ` ` எத்தைக் கொண்டு எத்தகை ஏழையமணொடிசைவித்து எனைக் கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்தென்னக்கோகு செய்தாய் ` ( தி .4 ப .99 பா .2). ` எத்தை ` என்று மருவியதற்கு வேறு இடம் ஏன் ? இருள் - அறியாமை . அற - நீங்க . நோக்கமாட்டா - கருதவலியில்லா . கொத்தை யேன் - குருடனேன் ; அறிவில்லேன் ( திருவருட்பயன் . 71 ). ` கை விளக்கின் பின்னே போய்க் காண்பார்போல் மெய்ஞான மெய் விளக்கின் பின்னே போய் மெய்காண்ப தெந்நாளோ ` ( தாயுமானவர் ).

பண் :

பாடல் எண் : 2

தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னு ணித்தலு மைவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி யெய்த்தேன்
குலைகள்மாங் கனிகள் சிந்துங் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக் கோவலூர்ப் பெருமானே ! தலையைச் சுமந்து கொண்டு , இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன் .

குறிப்புரை :

தலையைச் சுமந்து இரு கையைத் தொங்கச்செய்து , நிலத்துக்கே சுமையாகி , நிலையில்லாத நெஞ்சினுள்ளே , நாள்தொறும் ஐம்புலக் கள்வர் வேண்டும் விலைப்பொருள் தந்து அவர் தொடர் பறுக்க வலியில்லேன் . அவர் வேண்டியதே யானும்வேண்டியிளைத் தேன் . குலைகளைக்கொண்ட மாம்பழங்கள் சிந்துகின்ற கோவல் . நான் சுமந்தது தலையை . நிலம் சுமந்தது என்னுடலை . ` ஆரா இயற்கை - ஒரு காலும் நிரம்பாத இயல்பினையுடைய ( அவா )`. ` நிரம்பாமையாவது தாமேயன்றித் தம் பயனும் நிலையாமையின் , வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன்மேல் வளர்த்தல் ` ( குறள் 370. பரிமேலழகர் உரை ) ` அவாவினை ஆற்ற அறுப்பின் ` ( குறள் . 367) ` அவாவற்றார் ` ( ? 365) ` அவாவறுத்தல் ` என்னும் தொல்வழக்கு வழாது , ` அறுக்க மாட்டேன் ` என்றருளியதால் , விலைதீர்த்து நீக்க நிற்பது ` அவா ` எனல் விளங்கும் . ` ஐவர் ` ( தி .4 ப .67 பா .1). ` ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் ` ( தி .4 ப .99 பா .9.) ` நிலையிலா நெஞ்சந் தன்னுள் ` ( தி .6 ப .95 பா .4.)

பண் :

பாடல் எண் : 3

வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப் பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை யென்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தெளிந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே ! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய் , நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய் , இப் பிறப்பை இழிவாகக் கருதேனாய் , யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன் .

குறிப்புரை :

வழி + தலைப்படவும் + மாட்டேன் :- ` திருநெறி ` ` நன்னெறி ` ` முன்னெறி ` ( தி .4 ப .11 பா .9) எனச் சிறப்பித்துச் சொல்லப்படும் சிவநெறியைத் தலைப்படவும் வலியுடையேனல்லேன் . ` தம்மிற்றலைப் பட்டார்பாலே தலைப்பட்டுத் தம்மிற்றலைப்படுதல் தாம் உணரின் ..... தலைப்படுவர் தாம் அத்தலை .` ( திருக்களிற்றுப் படியார் . 2) ` தலைப் படல் .` ` தலைக்கூடல் .` வைகலும் தூய்மை செய்தல் :- மும்மலமும் அற்றுச்சுத்தாவத்தையிலே நின்று துரியா தீதத்தை எய்தி நாடோறும் பழகுதல் . கேவலாவத்தையும் சகலாவத்தையும் மிக்க அசுத்தம் ஆக்குவன . சுத்தாவத்தை தூய்மை செய்வது . ஆன்மாத் தன்னைச் சார்ந்த மூன்றழுக்கும் ( மலத்திரையம் ) நீங்கச் சகல தரிசனமும் கேவலா தீதமும் எய்தி ஞான தரிசனம் பெற்று , பரையதீதமும் சிவப்பேறும் எய்திப் பரமானந்த அவசம் உறுதலே தூய்மை செய்தல் , வைகலுந் தூய்மை செய்தல் ஞானாப்பியாசத்தால் அதற்கு யோகாப்பியாசமும் , அதற்குக் கிரியாகிரமங்களும் சரியை ஒழுக்கமும் வேண்டும் . பழித்திலேன் - தூடணம் பண்ணினேனல்லேன் . ` பூதப்பழிப்பு ` ` கலாதி ஞானநிராகரணம் ` ` சுத்த தத்துவதூடணம் ` என்பனவும் அவற்றிடைப் படும் ஞானாப்பியாசத்தின் அவசரங்களும் செய்திலேன் என்றவாறு . ` துகளறு போதம் ` பார்த்துணர்க . தாயுமானவர் துகளறு போதப் பொருளின் விளக்கம் எனப் பாடியருளிய ( எந்நாட் ) கண்ணியுள் யாக்கையைப் பழித்தல் , மாதர் மயக்கறுத்தல்கட்கு மேல் , ` தத்துவ முறைமை , தன்னுண்மை , அருளியல்பு , பொருளியல்பு , ஆனந்த வியல்பு அன்பு நிலைமை , அன்பர்நெறி ` என்னும் பகுதிகளையுணர்ந்த தொழுகுதல் , வேண்டும் . அஃது அத் தூய்மை செய்தலாம் . பிறவியை இழிந்ததாகக் கருதிலேன் எனில் . என்னதான் நினைத்திருக்க மாட்டேன் ? தெண்ணீர் - தெளிந்தநீர் . கொழித்து - பலவகைப் பொருள்களையும் கொழித்து .

பண் :

பாடல் எண் : 4

சாற்றுவ ரைவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவ ரலந்து போனே னாதியை யறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப்பெருமானே ! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண் , செவி , மூக்கு , வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன் .

குறிப்புரை :

ஐவர் - ` ஐம்புலக்கள்வர் ;` ` ஐம்பொறி வேடர் ` ` துன்னிய ஐம்புலவேடர் சுழலிற்பட்டுத் துணைவனையும் அறியாது துயருறுந் தொல்லுயிர் ` ( சித்தியார் ). சந்தித்த குடிமை - துச்சிலிருக்கும் தன்மை . உயிர் , பொறிகளும் வளியும் பித்தும் ஐயும் உறையும் உடலினுள் துச்சிலிருந்து துயருறுகின்றது . ` புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு ` ( குறள் ). சந்தித்த குடிமை - நேர்ந்த நுகர்ச்சி என்றாருமுளர் . சாற்றுவர் - சொல்லுவர் . காற்றுவர் - போக்குவர் . கனல - சுட . கனலப்பேசிக்காற்றுவர் - சுடச்சொல்லித் தொலைப்பர் . ` அடர்மல ஆற்றல் காற்றுஞ் செயல்தலை நின்ற இன்பத் திருவுருமுதன்மை போற்றி ` ( தணிகைப் . நந்தி . 129). ஐவர் வந்து சாற்றுவர் , சந்தித்த குடிமை வேண்டிக் காற்றுவர் ; கனலப்பேசிக் கண் செவி மூக்கு வாயுள் ஆற்றுவர் ; அலந்துபோனேன் . சாற்றுவர் - உயிர் அதோகதி அடையத் தக்கவற்றை நிறைப்பர் . ` குளங் கொளச்சாற்றி ` ( மதுரைக்காஞ்சி 246) காற்றுவர் - ( ஐவரும் சேர்ந்த குடிவாழ்க்கையை விரும்பி , உயிரைப் போக்குவர் . கனலப்பேசிக் கண்ணுள் , செவியுள் , மூக்குள் , வாயுள் ஆற்றுவர் ( - போம் ஆறு செய்வர் .) ` ஆற்றுதல் ,:- ஈட்டுதல் , செய்தல் , நடத்துதல் , நீக்கல் , வலியார்தல் முதலிய பல பொருள் பயக்கும் ஆதலின் , பழிபாவங்களை ஈட்டும் வழியாக கண் செவி முதலியன நிகழ்தலைக் குறித்ததுமாம் . ` அலந்தேன் ` - துன்புற்றேன் ; அலைந்தேன் . ( தி .4 ப .52 பா .8.) ` அலந்தேன் அடியேன் ` ( தி .4 ப .1 பா .6) ஆதியை அறிவு - நின் முதன்மையை உணர்தல் . ஒன்று - ஒரு செயல் ; சிறிதும் . கூற்றுவர் :- அந்த ஐவர் ; யமதூதர் .

பண் :

பாடல் எண் : 5

தடுத்திலே னைவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார வார்வலித் தன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் , எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு , அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துக் தொகுக்காதேனாய் , மனம் நிறைய அன்புகொண்டு அவ் வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே !

குறிப்புரை :

என் அகத்தைத் தம் வயப்படுத்தாவாறு ஐவரைத் தடுத்திலேன் . தத்துவம் - மெய்ப்பொருளாகிய சிவம் . தத்துவத்துயர்வு - சிவ வியாபகத்தினளவு . ஆன்மா வியாப்பியமாகும் நீர்மைபடும்படி செய்திலேன் . பரப்பு - பரை வியாபகம் . பல்மலர் - பல பூக்களை . பாதம் - திருவடிகளில் . முற்ற - முற்றும்படி . அடுத்திலேன் - அடுக்கும் படி தூவி வழிபட்டிலேன் . பூசிப்பவர்க்குத் திருவடி நிறைவு தெரிதல் இன்றியமையாதது . ` பரை உயிரில் யான் எனது என்று அறநின்றது அடி ` ( உண்மைநெறி விளக்கம் ) சிந்தை ஆர - சித்தம் ஆர , நிறைய . ஆர்வலித்து - ஆர்வலராகி , ஆர்வலம் செய்து . ஆர்வலம் - அன்பு . ஆர்வலித்து - அன்புற்று . ஆர்வலம் நம்மின் மிக்கார் ` ( தி .4 ப .61 பா .6) என்புழியும் பொருந்துமேல் இப்பொருளே கொள்க . அங்கு வேறுரைத்தாம் ; அஃது ஆண்டுப் பொருந்துவதால் . திண்ணம் - உறுதி . தடுத்தலின்மை முதலிய நான்கும் கொடியவாம் . இவற்றிற்குக் காரணம் ` நான் ` என்னும் அகந்தையே என்றவாறு . ஆ ! கொடிய நான் கொடுத்திலேன் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்த நாலு மைந்து நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னு ணித்தலு மைவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக , ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

மாச்செய்த குரம்பை - ஐம்பெரும் பூதங்களாற் செய்த குடில்செய் ( குடிசை ). நன்செய் - ( நஞ்சை ) புன்செய் - ( புஞ்செய் ) என்பனபோலும் மரூஉ . மண் - உலகப் பொருள் . எய்தும் நா - அடைவிக்கும் நாச்சுவை . ( ஆகுபெயர் ). நாலும் ஐந்தும் - ஒன்பது . ` ஒன்பது துளை ` ( தி .4 ப .44 பா .2) ` ஒன்பது வாயிற் குடில் ` ` ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் `. கா - சுமத்தல் . உயிரை உடல் சுமத்தல் . உயிரைச் சுமத்தலைச் செய்த காயம் ( - உடல் ). உடலுள் நித்தலும் ( - நாள் தொறும் ). கோ - தலைமை . குமைக்க - அழிக்க .

பண் :

பாடல் எண் : 7

படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்க னின்றும்
விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலே னென்செய் கேனா னிரப்பவர் தங்கட் கென்றும்
கொடையிலேன் கொள்வதே நான் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால் , என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன் , பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .

குறிப்புரை :

வினைகள் நால்வகைப் படையும்போலத் தொடர்ந்து வந்து பற்றி என் பக்கத்தில் நின்றும் விடமாட்டா . ஆதலால் , கோவல் - வீரட்டத்து விகிர்தனீரை விரும்பியேத்தும் இடையிலேன் . நான் என்செய்வேன் ? இரப்பவர்க்கு என்றும் ஒன்றும் கொடுத்தல் இல்லேன் . நான் கொள்வதே ( அன்றிக் கொடேன் ). இடை - பொழுது . ` இரப்பதே ஈயமாட்டேன் `.

பண் :

பாடல் எண் : 8

பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னும்
துச்சுளே யழுந்தி வீழ்ந்து துயரமே யிடும்பை தன்னுள்
அச்சனா யாதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன் . உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது ?

குறிப்புரை :

பேதையேன் பிறவியைப் பிச்சிலேன் - பேதைமை காரணமாக வரும் பிறப்பைப் பேதைமையுடையேன் ஆதலின் , பிய்த்துப் போக்கிலேன் . பிணக்கம் - மாறுபாடு . துச்சு ;- ` துற்று ` என்பதன் மரூஉ . துன்று + இல் = துன்றில் , துற்றில் , துச்சில் . ` உள் ` ஈறுபெற்றுத் ` துச்சுள் ` என்றாகும் . துய்த்துள் என்றதன் மரூஉவுமாம் . ` துய்ப்பு ` ` துப்பு ` என மருவியதுணர்க . ` துய்ப்பார்க்குத் துப்பாய துய்ப்பாக்கி ` என்பது மருவித் ` துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி ` என்று ஆயிற்று ( குறள் ). துய்ச்சுள் அழுந்தி வீழ்ந்து அதுவே தான் என்று துயரம் எய்த இடும்பையுள் ( அச்சனாய் - ) உயிராய் . அச்சு - உயிர் . தலைவன் எனலுமாம் . ` இச்சை ஞானம் தொழில் இவை மூன்றனொடு அச்சன் நின்று அனைத்தும் விளைத்தால் என ` ( தணிகைப் பிரமன் சிருட் . 23) அச்சன் - கடவுள் . அச்சனாய ஆதி மூர்த்திக்கு அன்பனாய் ( இடும்பைதன்னுள் ) வாழமாட்டாக் கொச்சையேன் . கொத்தை - குருடு . ` எனைக் கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்தென்னக் கோகுசெய்தாய் ` ( தி .4 ப .99 பா .2).

பண் :

பாடல் எண் : 9

நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை யாட்டம் பேசி மக்களே சுற்ற மென்னும்
கணத்திடை யாட்டப் பட்டுக் காதலா லுன்னைப் பேணும்
குணத்திடை வாழ மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய் , திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற்படுத்தப் பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன் .

குறிப்புரை :

நிணம் - கொழுப்பு . நிணத்திடைக்கட்டிய வுடல் , நிணத் திடையாக்கை . பேணி - விரும்பி . நியமம் - சிவாகம விதிப்படி நாள் தொறும் செய்யும் ஒழுக்கம் முதலிய நித்திய நியமங்கள் . ` மணம் ` ` ஆட்டம் ` என்பன கலியாணம் மகிழ்ச்சி விளையாட்டுக்களைக் குறிப்பன . மக்கள் சுற்றம் என்னும் கணம் ( - கூட்டம் ) ஆட்டப் படுதல் - ஆட்டியலைக்கப்படுதல் . உன்னைக் காதலாற் பேணும் குணம் . நியமஞ் செய்யாதவாறு உடற்பற்றுத் ( தேகாபிமானம் ) தடையாயிற்று . சிவபக்தி செய்யாதவாறு மக்கட் சுற்றம் தடையாயிற்று .

பண் :

பாடல் எண் : 10

விரிகட லிலங்கைக் கோனை விரிகயி லாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களு நெரிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்ட னாரே.

பொழிப்புரை :

குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான் , விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர் .

குறிப்புரை :

விரிகடல் - ` இந்து மகாசமுத்திரம் ` என்ற பெயர்ப் பொருளது . வியல் - அகலம் . பெருமை . இருபது தோளும் பத்துத் தலையும் நெரிய ஊன்றி . பரவிய - வாழ்த்திய . பாடல் - சாமகானம் . படை - வாள் . குரவும்கோங்கும் மரம் .

பண் :

பாடல் எண் : 1

முற்றுணை யாயி னானை மூவர்க்கும் முதல்வன் றன்னைச்
சொற்றுணை யாயி னானைச் சோதியை யாத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி யுள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலு நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

நனிபள்ளிப் பெருமான் முதல் துணைவராய் , மூவர்க்கும் தலைவராய் , வேதத்துக்கு இணையானவராய்ச் சோதி வடிவமான தம்மை விரும்பி நன்கு உணர்ந்து உள்ளம் நெகிழ்ந்து உள்ளத்தில் பக்தி ஊறுதலால் நீராய் உருகிக் கண்ணீர் பெருக்கும் அடியவர்களுக்குப் பெரிய துணையாபவராய் உள்ளார் .

குறிப்புரை :

முற்றுணை - முன்துணை ; முன்னைத்துணை ` முன்னெறியாகிய முதல்வன் ` ( தி .4 ப .11 பா .9) முன்னானை மூவர்க்கும் ( தி .8 திரு வாசகம் . 193) அந்நெறியிற் செல்லும் உயிர்க்குத் துணையாதலிலும் முன்னவனே யாவன் . தோன்றுந் துணையான தாய்க்கும் தந்தைக்கும் முன்னதாய்க் கருவாய்க் கிடக்கத் தொடங்கும் முன்னரே உடனின்று காத்து வருந்தோன்றாத் துணை . மூவர்க்கும் முதல்வன் - ` மூவர் கோனாய் நின்ற முதல்வன் .` இவ்வுண்மையை ஆதாரயோகம் புரிவோரே அறிவர் . சொற்றுணை யாயினான் ( தி .4 ப .66 பா .3) - ` சொற்றுணை வேதி யன் .` ( தி . 4 ப .11 பா .1). ` மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள் `. ஆகமப் பிரமாணத்தாலறியப் பெறுபவன் எனலுமாம் . சொல் - ஆகமம் . துணை - அளவை . சோதி - உணர்வொளி , அருளொளி , சிவப்ரகாசம் . ஆதரித்து - விரும்பி உற்றுணர்தல் , உருகுதல் , ஊறி உள் கசிதல் எல்லாம் உடையவர்க்கு நற்றுணையாவர் . ( தி .4 ப .66 பா .3) ஒருமை யீறும் பன்மை யீறும் கலந்தமையால் ஒருமை பன்மை மயக்கம் என்பர் . இஃது ஒருவரைக்கூறும் பன்மையாய உயர் சொற்கிளவி . செய்யுட்கும் இவ்வழக்கு முன்னோராற் கொள்ளப்பட்டது . இரு வேறு முடிபு ஆதலாலும் குற்றமின்றாம் .

பண் :

பாடல் எண் : 2

புலர்ந்தகால் பூவு நீருங் கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயி னூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை யரைய னாக்கிச் சீர்மைக ளருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

அழகு விளங்கும் சோலைகளால் சூழப்பட்ட நனிபள்ளிப்பெருமான் , பொழுது விடிந்த அளவில் பூவும் அபிடேக தீர்த்தமும் கொண்டு திருவடியை வணங்க இயலாத பிறப்பினதாகையாலே , பெருமானைச் சுற்றி வலமாக வந்து தன் வாயிலிருந்து சுரக்கும் நூலினாலே வட்டமாகப் பந்தலை அமைத்து வழிபட்ட சிலந்தியை அரசனாக்கி , எல்லா நலன்களையும் அருளிய ஆற்றலுடையவராவர் .

குறிப்புரை :

புலர்ந்தகால் - பொழுது புலர்ந்த வேளையில் . காலில் என ஏழனுருபு விரிக்க . அத்துச்சாரியை குறைந்து நின்றது எனின் , காலம் என்றதன் அம் ஈறு குறைந்ததெனலும் வேண்டும் . அக்கால் இக்கால் , ஒருகால் எனக் கால் என்ற சொல்லே காலம் என்னும் பொருட்டாதல் அறிக . பூவும் நீரும் புலர்ந்தகால் கொண்டு எனினும் . புலர்ந்தகால் போற்ற எனினும் பொருந்தும் . மாட்டா - மாட்டாமல் . சிலந்தி வலஞ்செய்து , வாயின் நூலால் , வட்ட அணைப்பந்தர் செய்தது . செய்த சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாக்கிச் சீர்மைகள் அருள வல்லவர் அடிகளார் . வட்டம் + அணை = வட்டவணை , வட்டணை , வட்டமாக அணைந்து செய்த பந்தர் வட்டணைப்பந்தர் . வட்டணை - வட்டம் என்பது ( பிங்கலந்தை 2286). சீர்மை - புகழ் . ` குலத்திற்கும் மாசில் குடிமைக்கும் சீர்மைக்கும் ` ( தஞ்சை வாணன் கோவை . 241). நலம் திகழ் சோலை சூழ்ந்தது திருநனிபள்ளி . மாட்டாத சிலந்தி எனல் தூராந்வயம் .

பண் :

பாடல் எண் : 3

எண்பதும் பத்து மாறு மென்னுளே யிருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக் கலக்கநா னலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

செண்பகம் , விளங்கும் புன்னை , செழித்து ஓங்கி வளர்ந்த குரவம் வேங்கை இவை கலந்து காணப்படும் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளிப் பெருமானே ! 96 தத்துவ தாத்துவிகங்களும் என் உடம்பினுள்ளே நிலையாக இருந்து சிறிதும் கண்ணோட்டமின்றி என்னைக் கலக்கவே அடியேன் துன்பத்தாற் சீர்குலைந்தேன் .

குறிப்புரை :

எண்பதும் பத்தும் ஆறும் - தொண்ணூற்றாறும் ( தத்துவம் முப்பத்தாறும் தாத்துவிகம் அறுபதும் ). என்உளே - என் கண்ணே . உயிர்ச் சார்பாதலின் என்னுளே என்றார் . மன்னி - நிலை பெற்று . கண்பழக்கு - கண்ஓடிப்பழகிய பழக்கம் . கண்ணோட்டம் . ஒன்றும் - சிறிதும் . கலக்கக் கலங்கி அலைந்து வருந்தினேன் . அலைக்க அழிதல் , அழித்தல் - அலைக்கழித்தல் . அலக்கழிதல் மரூஉ . செண்பகம் , புன்னை , குரவம் , வேங்கைகள் நண்பு செய்யும் சோலை சூழ்ந்த நனிபள்ளி . நள் + பு = நண்பு - செறிவு .

பண் :

பாடல் எண் : 4

பண்ணினார் பாட லாகிப் பழத்தினி லிரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக் கருத்தொடு கற்ப மாகி
எண்ணினா ரெண்ண மாகி யேழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைக டீர்ப்பார் நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

நனிபள்ளிப்பெருமான் பண் அமைந்த பாடலாகவும் , பழத்தின் சுவையாகவும் , கண்ணிற் பொருந்திய பார்வையாகவும் , கருத்தில் அமைந்த காதல் நினைவாகவும் , எண்ணுகின்றவருடைய எண்ணமாகவும் ஏழுலகங்களாகவும் தம்மைச் சரணமாக அடைந்த அடியவர்களுடைய வினைகளைப் போக்குபவராகவும் உள்ளார் .

குறிப்புரை :

பண்ணின் ஆர் பாடல் - பண்களோடு பொருந்திய பாடல்கள் . பண்ணில் ( இன்னிசைப் ) பாடல் . பழத்தினிற் சுவை இரதம் - சுவை . கண்ணின் ஆர் பார்வை - கண்ணிற் பொருந்திய பார்வை ( புறநோக்கம் ). கருத்தொடு கற்பம் - கருத்திற் கற்பனை ; ` வாயானை மனத்தானை மனத்தில் நின்ற கருத்தானை ` என்றதிற்போல மனமும் நினைவும் கொள்க . கற்பம் - சங்கற்பம் . எண்ணின் ஆர் எண்ணமும் கருத்தொடு கற்பமும் வெவ்வேறாதல் அறிக . எண்ணம் - அறிவு . எண்ணங்கொள்வான் - அறிவைக் கொள்ளவேண்டி ( சிந்தாமணி 636). எண்ணினார் எண்ணம் - எண்ணியவரதெண்ணம் , எண்ணிற் பொருந்திய கணக்கும் ஆம் . ` கருதியது முடித்தலும் காமுறப் படுத்தலும் ` ( சிறுபாணாற்றுப் 213) என்புழி நச்சினார்க்கினியர் எழுதிய உரையை நோக்கின் , ` கருதல் ` என்றதே ` காதல் ` என்று மருவிற்று எனல் விளங்கும் . கருத்தொடு கற்பம் என்றற்குச் சவிகற்பம் நிருவிகற்பம் ; காதல் நினைவு என்றும் கூறலாம் . ஏழுலகு என்றபின் ` அனைத்தும் ` என்றது முழுமைப் பொருட்டு . ஆகி ஆறும் தீர்ப்பார் என்னும் முற்றைக் கொண்டன . நண்ணினார்தம் வினைகளைத் தீர்த்தற் பொருட்டுப் பாடல் முதலியன ஆனார் எனவே அவ்வடிகளாரைப் பாடிச் சுவைத்துப் பார்த்துக் கருதிக் கற்பித்து எண்ணி உலகைப் பாராது பரமே தரிசித்து வினைகளைப் போக்குதல் உயிர்களது கடனாயிற்று . ` உலகேழும் ஆயான் ` ( தி .8 திருவாசகம் . 181)

பண் :

பாடல் எண் : 5

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதி னாளு மரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

இருள் நீங்கும் காலையிலும் மாலையிலும் பெருமானுக்கும் தமக்கும் உள்ள உறவை மறக்காமல் திருவைந்தெழுத்தை ஓதினால், நாடோறும் சிவனடிக்கண் அன்பு பெருகி வளரும். அத்தகைய அன்பு வளருவதன் பேறாக, செய்யும் வஞ்சனையால் பாற்சோற்றை நஞ்சுடன் கலந்து சமைத்து, நல்ல வழக்கம் இல்லாத சமணர்கள் கொடுத்த அந்த நஞ்சை, அமுதமாக்கி அருளினார் திருநனிபள்ளியடிகள்.

குறிப்புரை :

இருள் துஞ்சு காலையும் மாலையும் `என்று நீ அன்று நான்` என்றபடி தோன்றாத் துணையாய் இடைவிடாது உயிர்க்குயிராய் உள்ளொளியாய்த் தொடர்ந்து புறம் புறம் திரிந்து காத்தருளும் செல்வத்தை மறந்திராமல், பின்பினே திரிந்து பிடித்துக்கொண்டு பேரா இன்பம் தீரா தெய்தத் திருவைந்தெழுத்தை விதிப்படி ஓதிவரின், நாளும் சிவனடிக்கு அன்பு பெருகி வளரும். அரனடிக்கன்பு விளைக்கும் பயனுக்கு அளவில்லை, தாலீபுலாக நியாயம் பற்றி ஓர் எடுத்துக்காட்டு:- நல்வழக்கம் இல்லாத தீய அமணர் வஞ்சனையால் பாற்சோறாக்கி அதிற் கலந்து கொடுத்த நஞ்சினை அமுதம் ஆக்கி நாயேனையும் காத்தருளினார் நனிபள்ளி யடிகளார். சிவபத்தியால் நலம் அனைத்தும் நண்ணலாம். தொடர்ச்சி என்னும் தலைப்பில் இத்திருப்பாடலின் விளக்கமாக எழுதிய எமது கட்டுரையைச் சைவ சித்தாந்த மகா சமாஜத்துப் பொன் விழா மலருட் காண்க.( தி.12 பெரிய. திருநா. 105.) பார்க்க.

பண் :

பாடல் எண் : 6

செம்மலர்க் கமலத் தோனுந் திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பா னாழியா னகழ்ந்துங் காணான்
நின்மல னென்றங் கேத்து நினைப்பினை யருளி நாளும்
நம்மல மறுப்பர் போலு நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

செந்தாமரைப் பூவிலுள்ள பிரமன் திருமுடியைக் காணவும் , சக்கரத்தை ஏந்திய திருமால் அகழ்ந்தும் , தாமரை போன்ற பாதங்களைக் காணவும் , இயலாதாராய்த் தம்மைக் களங்கமற்றவர் என்று போற்றும் எண்ணத்தை அவர்களுக்கு வழங்கி நம்முடைய களங்கங்களையும் போக்குபவர் நனிபள்ளி அடிகளார் .

குறிப்புரை :

செம்மலர் - செந்தாமரை . ஆழியான் - சக்கிராயுதத்தன் , பாற்கடலான் . சிவபக்தியிலாழ்தலை யுடையவன் . அகழ்ந்தும் - மண் இடந்தும் . நின்மலன் - மலமில்லான் . விமலன் . நினைப்பு - தியானம் . நம் மலம் - நமக்குள்ள மும்லங்களையும் . அறுப்பர் - அறச்செய்வர் . மும்மை மலம் அறுவித்து , ` காண்பான் அகழ்ந்தும் காணான் ` என்க . ஏத்தும் நினைப்பை அருளி நாளும் மலம் அறுப்பர் . போலும் , அசை . அவ்விருவர்மலமும் அறுக்காதார் , நம்மலம் அறுப்பர் என்றவாறு ( தி .8 திருவாசம் 404,367,399, 403,175,176,178,186,192,235 முதலியன ).

பண் :

பாடல் எண் : 7

அரவத்தால் வரையைச் சுற்றி யமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்று மாலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் மடிய ராகி வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார் நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

மந்தரம் என்ற மத்திலே வாசுகி என்ற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றித் தேவரும் அசுரரும் பேரொலி செய்து கடைந்த போது தோன்றிய நஞ்சத்தை அமுதாக உண்டவராய் , தம் அடியவருடன் கலந்து என்றும் தம் அடிமையில் நீங்குதல் இல்லாத அவர்களை நரகத்தில் வீழாமல் காப்பவராய் உள்ளார் நனிபள்ளி அடிகளார் .

குறிப்புரை :

அரவத்தால் - வாசுகி என்னும் பாம்பால் . வரையை - மந்தரமலையாகிய மத்தை . சுற்றி - சூழவளைத்து . அமரரோடு அசுரர் - தேவாசுரர் - இருதிறத்தரும் , அரவித்து - அரவம் ( பேரொலி ) செய்து . அரவம் என்னும் பெயரடியாகத் தோற்றிய தொருவினையெச்சம் . அரவித்துக்கடைய ஆலநஞ்சு தோன்றிற்று . அதனை அமுதாக உண்டு அழியா முதல்வன் என்றதனை விளக்கினார் . தம் அடியாராகி , விரவி ஆகி வீடு ( அழிவு ) இல்லாத் தொண்டர் வீழ ஒட்டார் . நரகத்தில் வீழ ஒட்டார் (- இசையார் ) சிவனடியாரெவர்க்கும் நரகம் புகல் இல்லை என்பது திண்ணம் :

பண் :

பாடல் எண் : 8

மண்ணுளே திரியும் போது வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன் புழுப்பொதி பொள்ள லாக்கை
* * * * * * * * *

பொழிப்புரை :

இவ்வுலகினில் சுற்றித் திரியும் போது பல குற்றங்கள் ஏற்படுகின்றன . புண்ணினுள்ளே பல துவாரங்களை உடையதாய்ப் புழுக்கள் உள்ளே மறைந்திருக்கும் பலதுளைகளை உடைய உடம்பு ...

குறிப்புரை :

மண்ணுலகில் திரியுங்காலமெல்லாம் குற்றங்களே உயிர்க்குப் பெருகிவரும் . புண்ணுளே புரைபுரை :- ` ஆக்கை புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கி ` ( தி .8 திருவாசகம் .) புழுப்பொதி பொள்ளல் ஆக்கை - புழுக்கள் பொதிந்த துளைகளையுடைய உடல் ; ` பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொ ளாக்கை , ` ( தி .4 ப .67 பா .5.) பொள்ளல் - துளைகள் . ` பொள்ளலுடலி னலந் தீது புந்தி செய்யார் ` ( ஞான வாசிட்டம் ).

பண் :

பாடல் எண் : 9

பத்துமோ ரிரட்டி தோளான் பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோ ரிரட்டி தோள்கள் படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற் கருள் கொடுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்து நனிபள்ளிப் பரம னாரே.

பொழிப்புரை :

பக்தர்கள் முன் நின்று துதித்துப் புகழும் நனிபள்ளிப் பெருமான் இருபது தோள்களை உடைய இராவணன் தன் பெருமையைப் பரக்கச் சொல்லிக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட , இருபது தோள்களை உடைய அவன் உடல் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றிப் பின் அவன் தன் பத்து வாய்களாலும் இசைப் பாடல்களைப் பாட அவனுக்கு அருள் செய்தவர் ஆவர் .

குறிப்புரை :

பத்தும் ஓர் இரட்டி - இருபது . பாரித்து - பரக்கச் சொல்லி , ( சிந்தாமணி ) அடியிட்டு ( தி .8 திருக்கோவையார் . 132) அடர - தாக்க . பத்துவாய்களாலும் சாம கீதம் பாடினான் . பரிந்து - இரங்கி பத்தர் - தொண்டர் .

பண் :

பாடல் எண் : 1

மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகி லுய்யலா நெஞ்சி னீரே.

பொழிப்புரை :

மனமே ! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம் .

குறிப்புரை :

நெஞ்சினீரே , வினைப்பயனாக , எடுத்த உடலின் சார்பாக எய்தும் தாய் , தந்தை , மனைவி , மக்கள் மற்றுள்ள சுற்றம் என்னும் பாசக்கடற்குள் விழுந்தழுந்தித் துன்பத்துக்கு இடமாகாமல் , நினையுமாறு நினையவல்லீர் ஆகில் உய்யலாம் . முழங்கும் பெரிய கடல் சூழும் திருநாகையில் மன்னும் காரோணத்திறைவனை நினைய வல்லீராகில் உய்யலாம் . நினையும் ஆறு - நினையும் வண்ணம் . காயாரோகணம் என்பது காரோணம் என்று மருவிற்று என்பர் .

பண் :

பாடல் எண் : 2

வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற் றிசைமுகன் சிரமொன் றேந்தும்
கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.

பொழிப்புரை :

எருதை ஊர்பவனாய் , ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய் , செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே ! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும் .

குறிப்புரை :

வையனை - எருதூர்பவனை . வையம் - எருது . வையம் - மண்ணுலகம் . மால் - திருமால் . அங்கம் தோள்மேல் கொண்ட செய்யன் :- அம் மாலைத் தண்டத்தால் அடித்துத் தோலை யுதிர்த்து முதுகெலும்பைப் பிடுங்கித் தண்டமாகக் கையிற் கொண்ட கங்காள மூர்த்தம் . கங்காளம் - தசைகிழிந்த உடலின் எலும்பின் கூட்டம் . முழுவெலும்பு . ` கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடி `. ( தி .8 திருவாசகம் 265) செய்யபோது - செந்தாமரைப் பூ . திசை - நான்கு . ` திசைமுகன் ` எண்ணையுணர்த்தும் வடமொழியாட்சி முறை . சிரமேந்துங்கை - கபாலக்கை . ஐயன் - முதல்வன் . நினைந்த நெஞ்சு என்னும் பெயரெச்சம் , உய்திக்கு ஏதுக்குறிப்பு .

பண் :

பாடல் எண் : 3

நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை விளைபொருண் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை யுணர்த லானா முய்ந்தவா நெஞ்சி னீரே.

பொழிப்புரை :

மனமே ! கூத்தனாய் , தூயனாய் , நீண்ட இவ்வுலகம் , தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய் , வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய் , தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே .

குறிப்புரை :

நிருத்தன் - கூத்தன் . நிமலன் - இயல்பாகவே தூய தன்மையன் . நீள் நிலம் - நீண்டவுலகு . ( மண்ணுலகு ). விண்ணின் மிக்க விருத்தன் - விண்ணோர் பலர்க்கும் மேலானவன் . விண் இடவாகு பெயர் . வேதவித்து - ( தி .6 ப .79 பா .3) வேதங்களைப்படைத்தவன் . விளை பொருள் மூலம் - விளைகின்ற எப்பொருட்கும் நிமித்த காரணமானவன் . மாயை முதற்காரணம் . தநுகரண முதலிய விளை பொருள் காரியம் . சிவசத்தி துணைக் காரணம் . பதி நிமித்த காரணம் . காரிய ` காரணங்கள் ... ஆக்குவன் அகிலம் எல்லாம் ` ( சிவஞான சித்தியார் . சூ . 1. 18) கருத்தன் - வினைமுதல்வன் . ` ஒருத்தன் ` ` ஒன்றேபதி ` சிவ ஞானபோதம் . ` பதிதான் ஒன்று என்று அறையும் ` ( சித்தியார் சூ . 1. 2.) உணர்தலான் நாம் உய்ந்தவாறு . ( தி .4 ப .69 பா .5) இல் நான் கொடியனாமாறு எனக் கொள்ளலாகாமை அறிக . நெஞ்சினீரே நாம் உய்ந்தவாறு ஒருத்தனை உணர்தலால் என்க .

பண் :

பாடல் எண் : 4

மண்டனை யிரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.

பொழிப்புரை :

உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தெளிந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே ! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும் .

குறிப்புரை :

மண்தனை - மண்ணுலகை இரந்துகொண்ட மாயவன் இது மாவலி மன்னனிடத்திலே மூவடி மண்ணிரந்த வரலாறு குறித்தது . வாமனனாகிச் சென்று சிறிது இரப்பான்போற்காட்டி மூவுலகும் பெற்றமையால் மாயன் என்றார் . அசுரர் x சுரர் . தெள் + திரை = தெண்டிரை , ஈண்டுப் பாற்கடல் . கடைய வந்த ஏதுப்பொருட்டாய வினையெச்சத் தொடர் . வந்த தீவிடம் பெயரெச்சத்தொடர் . தீவிடம் - பண்புத்தொகை . உண்ட கண்டன் , பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது . அண்டன் தேவன் ; அண்டவாணன் ; அண்டமுதல்வன் .

பண் :

பாடல் எண் : 5

நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ் சூடி
மறையொலி பாடி யாடன் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த விடும்பைபோ யின்ப மாமே.

பொழிப்புரை :

கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி , வேதங்களைப் பாடிக்கொண்டு , சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய் , கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும் .

குறிப்புரை :

நிறைபுனல் - கங்கைநீரினை . அணிந்த - அழகுறுத்திய . சென்னி :- சடைமுடிக்கு ஆகுபெயர் . நீள் நிலா - நீண்டபிறை நிலாவும் . அரவம் - பாம்பும் . மறை யொலி - வேதமுழக்கம் . ` மயானத்து மறையொலிபாடி யாடல் மகிழ்ந்த மைந்தன் ` என்று மாற்றிக்கொள்க . கறை - ( நீல ) நிறம் . ` கருங்கடல் ` ` கருமலி கடல் ` ( தி .4 ப .71 பா .9) என்னும் வழக்குணர்க . இடும்பை - துன்பம் . இன்பம் - சிவப்பேறுமாம் . இடும்பை போதல் பாசவீடுமாம் .

பண் :

பாடல் எண் : 6

வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும்
உம்பனை யும்பர் கோனை நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணநா முய்ந்த வாறே.

பொழிப்புரை :

கொடிய , பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய் , கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய் , உலகங்கள் துதிக்கும் தேவனாய் , தேவர்கள் தலைவனாய் , நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த நெஞ்சே ! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று .

குறிப்புரை :

வெம்மை - கொடுமை . பனைக்கை - பனைமரம் போலப் பருத்த கை . கருங்கை . ` பனைக்கை மும்மதவேழம் ` வெருவ - அஞ்ச . அன்று - கயாசுரன் முன்வந்து நின்ற அந்நாளில் . உரிவை - தோல் . கம்பன் - கச்சித்திருவேகம்பநாதன் . காலற் காய்ந்தகாலனை - காலனைச் சினந்துதைத்தகாலனை . ` காலகாலன் `. ஞாலம் - உலகம் . உம்பன் - தேவன் . உம்பர்கோன் - தேவாதி தேவன் . செம்பொன் - ` செம்பொற்றியாகேசன் ` நாம் உய்ந்தவாறு திண்ணம் .

பண் :

பாடல் எண் : 7

வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசர மருளி னானை
மங்கைமா ராட லோவா மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே.

பொழிப்புரை :

வெப்பம் மிக்ககொடிய காட்டிலே , பார்வதியோடு வேடன் வடிவில் சென்று , அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய் , பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே !.

குறிப்புரை :

வெங்கானம் , கடுங்கானம் ; காட்டின் வெம்மையும் கடுமையும் அறிய நின்றன . கானத்து - காட்டில் . ஏழை - உமா தேவியார் . ` ஏழைபங்காளன் ` எருதேறி ஏழையுடனே ..... வந்து என் உளமே புகுந்த ; அங்கு - அக்காட்டில் . அருச்சுனன் தவம்புரிந்த இடத்தில் . அமர் - போர் . மலைந்து - மாறுபட்டு , போராடி . பார்த்தற்கு - அருச்சுனனுக்கு . அடுசரம் - கொல்லும் பாணம் ( பாசுபதம் ). ஆடல் - ஆடுதல் . ஓவா - ஒழியாத . கங்குலும் பகலும் காணப் பெற்றுக் களித்தல் - இரவும் பகலும் இறைவனைக் கண்டு வணங்கி யின்பம் அடைதல் . ` நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும் . துன்றுமலர் இட்டுச் சூழும் வலஞ்செய்து , தென்றல் மணம் கமழும் தென் திருவாரூர் புக்கு , என்றன் மனம் குளிர என்று கொல் எய்துவதே ` ( தி .7 ப .83 பா .2)

பண் :

பாடல் எண் : 8

தெற்றினர் புரங்கண் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.

பொழிப்புரை :

மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய் , வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர் . மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார் .

குறிப்புரை :

தெற்றினர் - மாறுபட்டவர் ( பகைவர் ). செற்ற - அழித்த . வெஞ்சிலையர் - வெய்ய ( மேருமலை ) வில்லியார் . வஞ்சர் சிந்தையுள் - வலியரது மாய மனத்தில் . கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியான் . சேர்வு - அடைதல் . கற்றவர் - திருவடியை வணங்கக் கற்றவர் . ` கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன் ` ( சம்பந்தர் ) காரோணத்தைக் கருதி ஏத்தப் பெற்றவர் பிறந்தவராய்ப் பிறவியின் பயனை அடைந்தவராவர் . அவ்வாறு ஏத்தாத வகையிலே பிறந்தவர் இருந்தும் பிறவாதவரே . இறந்தவரே யாவர் . ` புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே ` ( தி .6 ப .1 பா .1) ` பிறந்தேன் நின் திருவருளே பேசின் அல்லாற் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே ` ( தி .6 ப .47 பா .10) மற்று வினைமாற்றின்கண் வந்தது .

பண் :

பாடல் எண் : 9

கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர்க மல பாதத்
தொருவிர னுதிக்கு நில்லா தொண்டிற லரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகம்
திருவடி தரித்து நிற்கத் திண்ணநா முய்ந்த வாறே.

பொழிப்புரை :

மனமே ! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான் . கங்கை , பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று .

குறிப்புரை :

கருமலிகடல் :- கறைமலிகடல் ` ( தி .4 ப .71 பா .5) கமலபாதம் - தாமரை மலர்போலுஞ் சேவடி . பாதத்து ஒருவிரல் நுதி - திருவடியின் ஒருவிரலது நுனி . ஒண்திறல் - ஒளியும் வலியும் . உக்கான் - அழிந்தான் . திருவடியின் ஒருவிரல் நுனியைத் தாங்கும் ஆற்றல் இன்றி அழிந்தான் அப்பெருவலியிராவணன் . தலைமேற் கங்கை , இடப்பால் உமை நங்கை , எம்பிரான் செம்பொற்றிருமேனி என்னும் மூவர் சுமையும் உடைய திருவடி முழுவதும் தாங்கி நிற்கின்றோம் வலியே இல்லாத நாம் ; ` நெஞ்சினீரே ` என்பது மேற்போந்தமையின் , ` நாம் ` என்று கூறினார் . நாம் உய்ந்தவாறு திண்ணம் . இதற்குத் திருவடி தரித்து நிற்றல் ஏது என்றவாறு .

பண் :

பாடல் எண் : 1

விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும் பேடலி யாணர் போலும்
வண்ணமா லயனுங் காணா மால்வரை யெரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பரில் உறைந்து எல்லோரையும் ஆளும் தலைவர் , தேவர்களுடைய பல மகுடங்களும் நெருங்கிக் கலந்த திருவடிகளை உடையவர் . பார்வதி பாகர் . ஆண் பெண் அலி ஆனவர் . நல்ல அழகுடைய திருமாலும் , பிரமனும் அடிமுடி காணாத வகையில் பெரிய தீ மலையாகக் காட்சி வழங்கியவர் . அட்டமூர்த்தியாயும் அவற்றினும் பல வடிவத்தராயும் உள்ளவர் .

குறிப்புரை :

விண்ணவர் - தேவர் . மகுடகோடி - முடித்தொகை நிரல் . மிடைந்த - கலந்த . சேவடியர் - செய்ய தாளர் . திருவடியை முடியிற்பட வணங்கும் அமரர் தொகைக்கு அளவில்லை என்றதாம் . பெண்ணொருபாகர் - மாதியலும் பாதியர் , பேடு , அலி , ஆணர் - ஆணும் ( பெண்ணும் ) அலியும் பேடும் ஆகியவர் . வண்ணம் - அழகு . கார்வண்ணமுமாம் . மால் - திருமாலும் . அயனும் - பிரமனும் . மால் வரை எரியர் - பெரிய மலைவடிவான பேரொளியினார் . தீயுருவான மலை :- திருவண்ணாமலை . எண்ணுரு அநேகர் - எட்டுருவிற் பல வானவர் . எண்ணுகின்ற உருவத்திலளவிலாதவர் . எட்டுரு ( அட்ட மூர்த்தம் ) எனினும் ஒவ்வொன்றிலும் பல உள்ளன . திருவின்னம்பரில் எழுந்தருளிய உடையார் . ஈசனார் - உடையார் .

பண் :

பாடல் எண் : 2

பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலும்
துன்னிய சடையர் போலுந் தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும் மாதிட மகிழ்வர் போலும்
என்னையு முடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசர் வேதத்தை ஒலித்து , இடையில் ஆடைமேல் பாம்பைஇறுகக் கட்டி , செறிந்த சடையில் பிறையும் ஊமத்தம் பூவும் அணிந்து , மழுப்படை தாங்கிய கையராய் , பார்வதி பாகராய் , அடியேனையும் அடியவனாக உடையவர் .

குறிப்புரை :

பன்னிய - சொல்லிய , ஆராய்ந்த . மறையர் - வேத ( முதல்வ ) ர் . பாம்பு அரைஉடையர் - அரையிற்பாம்பினைக் கச்சாகக் கொண்டணிந்தவர் . துன்னிய - நெருங்கிய ; கற்றையான . தூமதி - வெண்பிறை . மத்தர் - சென்னியர் . ( மத்தகர் என்பதன் மரூஉ ). மன்னிய - பொருந்திய , மழுவர் - மழுப்படையுடையவர் . மாது இடம் மகிழ்வர் - உமாதேவியாரை இடப்பாற் கொண்டு மகிழ்பவர் . மாதிடத்தால் மகிழ்வர் . இடத்திலிருந்து மாது மகிழப் பெறுபவர் . என்னையும் ( ஆளாக ) உடையவர் , ` உடையார் ` என்றதால் அடிமை ( ஆள் ) என்பது பெறவைத்தார் .

பண் :

பாடல் எண் : 3

மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும்
செறிவுடை யங்க மாலை சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் பார்வதி பாகராய் , தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும்சமணத் தோற்றத்தை நீக்கி , அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய் , செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய் , அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன் .

குறிப்புரை :

மறி - மான் கன்று . ஒருகையர் - ஒருகையில் ஏந்தியவர் , மான்கன்றேந்திய ஒரு கையினார் எனலுமாம் . மாது உமை உடையார் - உமை மாதினை ( இடப்பால் ) கொண்டிருப்பவர் . பறிதலைப் பிறவி :- தலைமயிரைப் பறித்தலை வழக்கமாக உடைய சமண் தோற்றத்தை நீக்கிச் சூலைநோய் தந்து தடுத்தாண்டு . பணிகொள - பாமாலை பாடப் பயில்வித்துப் பணி கொள்ள . ( தி .12 அப்பர்புராணம் . 73) பணி செய்ய வல்லரல்லாரையும் ஈசனார் பணிகொள்ள வல்லர் . அங்கமாலை - தலைமாலை . கங்காளரூபம் வேறு . எறிபுனல் - கங்கை .

பண் :

பாடல் எண் : 4

விடமலி கண்டர் போலும் வேள்வியை யழிப்பர் போலும்
கடவுநல் விடையர் போலுங் காலனைக் காய்வர் போலும்
படமலி யரவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , நஞ்சு பொருந்திய கழுத்தினராய் , தக்கன் வேள்வியை அழித்தவராய் , பெரிய காளையைச் செலுத்துபவராய் , கூற்றுவனைக் கோபித்தவராய் , படம் எடுக்கும் பாம்பினை உடையவராய் , பரவிய புலித்தோலை உடுத்தவராய் , அடியார்களுடைய துன்பங்களைப் போக்கி அருள் செய்பவர் ஆவர் .

குறிப்புரை :

விடம் மலிகண்டர் - பாற்கடலின் எழுந்த நஞ்சு நின்று நிறத்தினை மிகக் காட்டிய திருக்கழுத்துடையவர் . வேள்வியை அழிப்பர் :- தக்கயாகசங்காரத்தைக் குறித்தது . கடவும் - செலுத்தும் . நல் விடையர் - அழகிய எருதுடையவர் . காலனைக் காய்வர் - மார்க் கண்டேயர்க்காக யமனை உதைத்த வரலாறு குறித்தது . படம் மலி அரவர் - ஐந்தலைநாகம் பூண்டவர் . பாய்புலி - இறந்த காலவினைத் தொகை . புலித்தோலுடுத்தவர் . இடர்களைந்து அருள்வர் :- இடர் - பாச பந்தம் . களைதல் - பாசவீடு . அருளல் பேரின்பந் தரல் . ( சிவப் பேறு ). ` நிறை யுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே `. ( தி 1 ப .52 பா .1)

பண் :

பாடல் எண் : 5

அளிமலர்க் கொன்றை துன்று மவிர்சடை யுடையர் போலும்
களிமயிற் சாய லோடுங் காமனை விழிப்பர் போலும்
வெளிவள ருருவர் போலும் வெண்பொடி யணிவர் போலும்
எளியவ ரடியர்க் கென்றும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் வண்டுகள் மொய்க்கும் கொன்றைப்பூமாலை பொருந்திய , ஒளிவீசும் சடையை உடையவராய் , மகிழ்ச்சியுறும் மயில் போன்ற மென்மையை உடைய பார்வதி பாகராய் , மன்மதனைச் சாம்பலாகுமாறு விழித்தவராய் , எல்லா அண்டங்களும் நிறைந்த விசுவரூபம் எடுத்தவராய் , திருநீற்றை அணிபவராய் , அடியவர்கள் எப்பொழுதும் வணங்கி வேண்டுவதற்கு எளியவராய் உள்ளார் .

குறிப்புரை :

அளி - வண்டுகள் . சாதியடை . அவிர்சடை :- செஞ் சடையொளி . களிமயிற்சாயல் - களிப்புடைய மயில் போலுஞ் சாயலை யுடைய உமாதேவியார் . காமனைவிழிப்பர் - மன்மதனைத் தீவிழியால் எரிப்பர் . பெண்ணின்பால் ஆசை நீத்தவரே காமத்தைக் கடந்தவர் ஆவர் . சிவபிரான் மாதொருபாகராயிருந்தே மன்மத தகனம் செய்தது பெருவியப்பென்றபடி . வெளிவளர் உருவர் :- அண்டபகிரண்டம் முழுவதும் நிறைந்த விசுவரூபி . ` உலகினுக்கு உயிரும் ஆகி உலகுமாய் நின்றது ` ( சித்தியார் .) வெண்பொடி - திருநீறு . அடியர்க்கு என்றும் எளியவர் . அடியரல்லாதார்க்கு என்றும் அரியர் என்பது அதனாற் பெறப்பட்டது . இப்பாட்டில் உள்ள பொருள் முரண் அறிதற்பாலது .

பண் :

பாடல் எண் : 6

கணையமர் சிலையர் போலுங் கரியுரி யுடையர் போலும்
துணையமர் பெண்ணர் போலுந் தூமணிக் குன்றர் போலும்
அணையுடை யடியர் கூடி யன்பொடு மலர்கள் தூவும்
இணையடி யுடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , அம்பு பொருந்திய வில்லினராய் , யானைத்தோற் போர்வையினராய் , பார்வதி பாகராய் , தூய மாணிக்கக் குன்றம் போல்பவராய் , உள்ளத்தில் தியானம் செய்யும் அடியார்கள் கூடி அன்பொடு மலர்களைத் தூவும் திருவடி இணையை உடையவருமாவார் .

குறிப்புரை :

கணை - திருமால் ஆகிய பாணம் . சிலை - மேரு மலையாகிய வில் . கரி - யானை . உரி - தோல் . கரியுரிஉடையார் - யானைத் தோலுடையார் . துணை அமர் பெண்ணர் - துணைவியாக இடப்பாலிற் பொருந்திய உமாதேவியையுடையவர் . தூமணிக் குன்றர் - தூய அரதனக்கிரியவர் . தூய மணிக்குன்று திருக்கயிலையுமாம் . அணையுடை அடியர் - தம் திருவடி நிழலை அணைதலையுடைய தொண்டர் . கூடி - பலர்கூடி . அன்பொடு பத்தியுடன் , மலர்கள் தூவும் - பூக்களைத் தூவிப் பூசனைபுரியும் . இணையடியுடையார் - திருவடித்துணைகளை யுடையவர் : இணையடிகளை அடைய மலர்கள் தூவும் அன்பர்கள் அடியார்கள் .

பண் :

பாடல் எண் : 7

பொருப்பமர் புயத்தர் போலும் புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும் உணர்விலார் புரங்கண் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் மலையை ஒத்த தோள்களை உடையவராய் , கங்கையை அணிந்த சடையினராய் , பன்றியின் கொம்பு , இளைய ஆமைஓடு எனும் இவற்றை அணிந்த மார்பில் வெண்ணூலைப் பூண்டவராய் , உருத்திர மூர்த்தியாய் , நல் உணர்வு இல்லாத அசுரர்களுடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய மேருமலையாகிய வில்லை உடையவருமாவார் .

குறிப்புரை :

பொருப்பு அமர் புயத்தர் - மலைபோலும் தோளினர் . மேருமலையாகிய வில் அமர்ந்த தோளார் . புனல் - கங்கைக்கு . அணி - அழகு செய்யும் . புனலை அணிந்த எனல் எளிது . இள ஆமை மருப்பு தாங்கும் மார்பில் - ` முற்றலாமை யிளநாகம் ` மருப்பு - கோடு , உருத்திர மூர்த்தி . மகாசங்காரகாரணனாகிய பரமசிவன் . அயன்மாலொடுங் குணதத்துவத்தின் வைகிப் பிரகிருதிபுவனாந்தம் சங்கரிக்கும் குணி ருத்திரனை அன்று . ( சிவஞானபாடியம் சூ . 1) மகாருத்திரனைக் குணி ருத்திரனாக வைத்து எண்ணுதல் கூடாது . ` நம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்னபாவம் திரிதவரே ` ( தி .8 திருவாசகம் திருச்சதகம் 4)

பண் :

பாடல் எண் : 8

காடிட முடையர் போலுங் கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலும்
கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , சுடுகாட்டைத் தங்கும் இடமாகக் கொண்டவராய் , கடுமையான குரலால் ஒலி உண்டாக்குபவராய் , அருச்சுனனுக்காக வேடர் வடிவு எடுத்தவராய் , பிறை சூடியவராய் , கிளைகளில் மலர்கின்ற கொன்றைப் பூவின் இதழ்கள் , தும்பை , வன்னி , கொக்கின் இறகு இவை அணியப்பட்ட சடையை உடையவராய் உள்ளார் .

குறிப்புரை :

காடு - சுடுகாடு . சுடுகாட்டை ஆடுதற்குரிய இடமாகக் கொண்டவர் . கடிகுரல் விளியர் - உலகையழித்து ஆடுங்கால் செய்யும் ஆரவாரத்தினர் . கடுமையான குரலால் ஒலியுண்டாக்குபவர் . அருச்சுனன் தவத்தில் இடையூறு நீக்கச் சென்ற வேட்டுவ வுருவத்தை யுடையவர் . மதிக்கொழுந்து - பிறைத்திங்கள் . கோடு அலர் - கொம்பில் மலர்கின்ற எருக்கு முதலிய பூக்கள் . வன்னி இலை , தும்பைப் பூ , கொக்கின் இறகு , அலர்ந்த கொன்றையின் இதழ் . இவைகள் பொருந்திய சடையை யுடையவர் ஈசனார் என்க . ஏடு - இதழ் .

பண் :

பாடல் எண் : 9

காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோளர் போலும்
நீறுடை யுருவர் போலும் நினைப்பினை யரியர் போலும்
பாறுடைத் தலைகை யேந்திப் பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , கைப்புச்சுவையை உடைய நஞ்சினை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோள்களை உடையவராய் , திருநீறு அணிந்த வடிவினராய் , நினைப்பதற்கும் எட்டாதவராய் , பருந்துகள் நெருங்கும் மண்டை ஓட்டைக் கையில் ஏந்திப் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்று உண்பவராய் , காளை வடிவம் எழுதிய கொடியினராய் உள்ளார் .

குறிப்புரை :

காறிடுவிடம் - கைக்கின்ற நஞ்சு ( தி .4 ப .68 பா .4.) எட்டுத் தோளையுடையவர் . திருநீற்றுமேனியர் . நினைப்பினுக்கு அரியர் . ` நினைப்பினை யரியர் ` என்பது உருபுமயக்கம் . வாக்கு மனாதீதன் . பாறுடைத் தலை - சிதறுதலுடைய பிரமன் தலை . பலி - பிச்சை . ஏறுடைக் கொடியர் - ஆனேற்றுக் கொடியையுடையவர் .

பண் :

பாடல் எண் : 10

ஆர்த்தெழு மிலங்கைக் கோனை யருவரை யடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலும்
தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தவே ழுலகும் வைத்தார் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை , மலையின் கீழ் நசுக்கியவர் . அருச்சுனனோடு போரிட்டு , அவனுக்குத் தெய்வப் படைகளைக் கொடுத்து அருளியவர் . தூய்மையை நல்கும் கங்கையைச் சடையில் வைத்தவர் . தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் சீவான்மாக்களை வாழ வைத்தவராவார் .

குறிப்புரை :

ஆர்த்து - ஆரவாரம் செய்து . அருவரை - அரிய கயிலாய மலை . வரையால் அடர்ப்பர் என மூன்றாவது விரிக்க . அடர்த்த லாவது மலைமேல் விரலூன்றி நெருக்கி வருத்துதல் . பார்த்தன் - அருச்சுனன் . படை - பாசுபதம் . தீர்த்தம் - தூய்மை . ` தன்னை ஏத்த ` என ஒரு சொல் வருவிக்க . வைத்தல் - படைத்தல் . ` உலகு ` என்றது உயிர்களை ஏத்துதல் . அவற்றிற் கன்றி ஏலாமை யறிக .

பண் :

பாடல் எண் : 1

பெருந்திரு விமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் றவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பா லங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு , மிக்க செல்வத்தை உடைய , இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய , பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு , தன் உடம்பில் ஒருபாகமாகக் கொண்டார் .

குறிப்புரை :

பெருந்திருவையுடைய இமவான் :- ` பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலம் `. திரு - செல்வம் . இமவான் - மலை யரசன் . பெண்கொடி - பார்வதி . தம்மைப் பிரிந்த பின்னை என ஒரு சொல் வருவிக்க . பெண்கொடி தவங்கள் செய்ய மணம் புணர்ந்து பாகமாக வைத்தார் சேறைச் செல்வனார் . துன்பம் சுடச்சுட நோற்க வேண்டி யிருத்தலின் `. வருந்துவான் தவங்கள் என்றார் . புனல்காலே யுண்டியாய் வற்றி வருந்திச் செய்தற்குரிய பெரிய தவங்களைச் செய்ய என்க . காமத்தால் மணம் புணரவில்லை . தவத்திற்கிரங்கி அவள் வேண்டுகோளின்படி மாமணம் புரிந்தாரென்க . வேண்ட முழுதும் தரும் இறைவன் பார்வதி தவஞ்செய்து வேண்டிய மணத்தை மறுத்தல் கூடாமை அறிக . மன்னும் - நிலைபேறுடைய . மக்களது நில்லாத ஊன் மேனி போன்றதன்மையால் மன்னும் அருந்திருமேனி என்றார் . பாகமாக - இடப்பக்கமாக . திருந்திட - ஈருருவாக இருந்தவர்கள் ஓருரு வாகத் திருந்தி அமைய . செந்நெறிச் செல்வனார் - செம்மையான ஞான நெறியால் காண்பதற்குரிய சிவபிரான் .

பண் :

பாடல் எண் : 2

ஓர்த்துள வாறு நோக்கி யுண்மையை யுணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை யாளாக் கொண்டு பிறவிவான் பிணிக ளெல்லாம்
தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆராய்ந்து உள்ளவாறு உண்மையை உணராத , உடல் பருத்த சமணரின் சொற்களை உண்மையென்று எண்ணி , மயக்கம் தரும் அவர்கள் , சமயத்தில் விழுந்து அழுந்திய நிலையில் இருந்த என்னை , வயிற்று வலியால் , அழுந்திய நிலையிலிருந்து எடுத்து , என்னை அடியவனாகக் கொண்டு , பிறவியைத் தருகின்ற பெரிய பிணிப்புக்களை எல்லாம் போக்கி , அடியேனுக்கு அருள் செய்தவராவர் .

குறிப்புரை :

உண்மையை யுள்ளவாறு நோக்கி ஒர்த்துணராக் குண்டர் . உண்மையை - சைவசித்தாந்தத் தத்துவங்களை ; சிவமாகிய செம்பொருளை . சைவசித்தாந்தம் அல்லாதன எல்லாம் பூருவ பட்சம் ஆதலின் , உண்மை எனப்பட்டது . பொருளல்லவற்றைப் பொருளாக உணரலாகாது என்பார் உளவாறு நோக்கி என்றார் . இப்பியை வெள்ளி யெனவும் , பழுதையைப் பாம்பு எனவும் நோக்குவது திரிபுணர்ச்சி . ஓர்த்தல் - ஆராய்தல் , நோக்குதல் - உள்ளத்தால் நோக்குதல் . நோக்கல் - நோக்கம் . உணராக் குண்டர் என்றது , மெய்யுணர்ச்சி யின்றித் திரிபுணர்ச்சியால் தம் நெறியே மெய்நெறியென மருளுகின்ற சமணரை . ` ஓர்த்துள்ள முள்ளதுணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு ` ( குறள் - 356) பொய்யை மெய்யெனக் காட்டித் தம்மை வஞ்சித்த கொடுமையாற் சமணரைக் ` குண்டர் ` என்றார் . குண்டர் - இழிந்தவர் . உண்மையறியாப் பருவத்தில் நிகழ்ந்ததை நினைத்து மயக்கில் வீழ்ந்தழுந்துவேனைப் பேர்த்தெனை ஆளாக் கொண்டு அருள் செய்தார் என்றார் . பொய்யை மெய்யாகக் காட்டும் நெறியை மெய்யென நம்பி அச் சமணத்து வீழ்ந்தேன் என்பார் , ` மயக்கில் வீழ்ந்தழுந்துவேனை ` என்றார் . பேர்த்து - மீட்டு . வயிற்று நோயோடு பிறவிப் பிணியும் தீர்த்தருள் செய்தமை யுணர்த்தியவாறு . வான் பிணிகள் - பெரிய நோய்கள் . பிறவிக்கு ஏதுவாய கட்டுக்களைத் தீர்த்தார் எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

ஒன்றிய தவத்து மன்னி யுடையனா யுலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்து நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , மனம் அலையாமல் ஒருமையுற்ற தவத்தில் நிலைபெற்று , தபோதனனாய்ப் பல காலம் நின்று தம் கழல்களைத் தியானித்த நீண்ட வில்லை உடைய அருச்சுனனிருந்த காட்டிற்கு வெற்றியைப் பெறும் வேடனாக விரும்பிச் சென்று , அவனுக்கு அருள்கள் பல செய்தார் .

குறிப்புரை :

ஒன்றிய தவத்து - பலவழியில் செல்லாது மனம் ஒருமையுற்ற தவத்தில் ; மன்னி - நிலைபெற்று . உடையவனாய் - சுவாமியாகி . உலப்பில் காலம் - முடிவில்லாத காலம் . தவஞ் செய்த காலத்தின் மிகுதி குறித்தது . விசயன் - அருச்சுனன் . விசயனிடம் சென்ற சிவன் , அவன் தோற்க வெற்றிகொண்டான் ஆதலின் , வென்றிகொள் வேடன் என்றார் . தவத்திற்கிடையூறாக வந்த பன்றியைக் கொன்ற வெற்றி . தெய்வ வடிவு நீங்கி மனிதருள் தாழ்ந்த வேடனானதும் தண்மை மிக்க கயிலாயத்தை விடுத்து வெம்மை மிக்க கானகத்து விரும்பிச் சென்றதும் தன்னடியார்க்கு எளியனாம் ஆண்டவனது தன்மையை விளக்கின . தவம் செய்யும் காலத்தும் நீண்ட வில்லையுடையனாதலின் ` நீள்சிலை விசயன் ` என்றார் . தங்கழல்கள் ஏத்தும் விசயனாதலின் , வேடனாகிக் கானகத்து விரும்பிச் சென்று அருள் செய்தார் .

பண் :

பாடல் எண் : 4

அஞ்சையு மடக்கி யாற்ற லுடையனா யநேக காலம்
வஞ்சமி றவத்து ணின்று மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்யும் ஆற்றல் உடையவனாய் , பல்லாண்டுகள் வஞ்சனையற்ற தவத்தில் நிலைபெற்ற பகீரதனுக்காக , மிகுந்த கோபத்தை உடைய பல முகங்களாகப் பிரிந்து வேகத்தோடு பூமியை நோக்கிப் பாய்ந்த கங்கையைத் தமது சிறந்த சடையில் ஏற்றருளினார் .

குறிப்புரை :

அஞ்சையும் - ஐம்பொறிகளையும் . புறப்பகையை வென்றார்க்கும் வெல்லுதற்கரிய அகப்பகையை , ஐம்பொறிகளையும் வென்ற சிறப்புத்தோன்ற ` ஆற்றலுடையனாய் ` என்றார் . ஆற்றல் - மனவலிமை . தவமறைந்து அல்லவை செய்வோர் உலகத்துப் பலராதலின் அவர்களை விலக்க வஞ்சமில் தவத்துள் நின்று என்றார் . மன்னிய - நிலைபெற்ற . பகீரதற்கு - பகீரதனுக்காக , பகீரதன் பொருட்டுக் கங்கையை ஏற்றார் என்க . வெஞ்சின முகங்களாகி - கொடிய கோபமுற்ற பல முகங்களாகி , விசை - வேகம் . தாங்கற் கரியளாகப் பாய்ந்த கங்கையை எளிமையாகச் சடையில் ஏற்றுத் தம் ஆற்றலைக் காட்டினார் என்க .

பண் :

பாடல் எண் : 5

நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் றாதை தாளை
எறிந்த மா ணிக்கப் போதே யெழில்கொள்சண் டீச னென்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , மண்ணியாற்றின் நிறைந்த , சிறந்த மணலைச் சிவலிங்க வடிவாகக் குவித்து அந்த இலிங்கத்திற்குப் பசுவின் பாலைக் கறந்து அபிடேகம் செய்ய . அதனைக் கோபித்த தன் தந்தையின் கால்களை மழுவினால் வீழ்த்திய பிரமசாரியான விசாரசருமனுக்கு அப்பொழுதே சண்டீசன் என்று சொல்லப்படும் சிறந்த பதவியை வழங்கினார் .

குறிப்புரை :

கூப்பி - குவித்து . நேசம் - அன்பு . ஆ - பசு . ஆட்ட - திருமஞ்சனம் ஆட்ட . நிறைந்த மாமணல் என்றது சிவலிங்கரூபமான சிறப்பு நோக்கி . கறுத்த - சினந்த . தாதை - ( தாதா ) தந்தை ஆகிய எச்ச தத்தன் . தாள் - கால் . மாணி - பிரமசாரி . ` அப்போதே ` என்றது தாதை தாளை எறிந்ததற்கும் சண்டீசனாம் பதம் பெற்றதற்கும் கால இடையீடு இன்மையுணர்த்திநின்றது . எழில் - அழகு . இறைவன் சூடிய எழில் மிக்க மாலைகளை யேற்றுக் கொள்ளுதற்குரிய பதவி ஆதலின் எழில் கொள் சண்டீசன் என்றார் . பிதாவைக் கொலைபுரிந்தானைக் குற்றங் கடிந்தானாக்கி ` அரனடிக்கன்பர் செய்யும் பாவமும் அறமதாகும் ` என்பதைக் காட்டியவாறு .

பண் :

பாடல் எண் : 6

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் பலவாறு விரிந்த ஒளியை உடைய சூலத்தையும் , உடுக்கையையும் கையில் ஏந்திய அழகினை உடைய கால பைரவ மூர்த்தியாகி , யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச , ஒளி பொருந்திய அழகிய பவளம்போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார் .

குறிப்புரை :

கதிர் - ஒளிக்கதிர் . வெடிபடுதமருகம் - வெடி போன்ற ஒலியை யுண்டாக்கும் உடுக்கை . சூலமும் தமருகமும் கையின்கண் தரித்ததோர் கோலம் என்க . காலபயிரவன் - உலகிற்கு இறுதிக் காலத்தையுண்டாக்கும் வயிரவன் . வேழம் - தாருகவனத்து முனிவர்கள் அனுப்பிய யானை . அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக்கொண்ட கோலம் உமாதேவியார் அஞ்சத்தக்க சிரிப்பு . இறந்த யானையின் தோலைக்கண்டு அஞ்சுதல் பேதைமை என எள்ளிய குறிப்பு . மணியாய் விள்ளச் சிரித்தருள் செய்தது பெருஞ் சிரிப்பு . விள்ளுதல் - மலர்தல் , அகலமாதல் . திரிசூலத்தின் ஒளிப் பெருக்கம் உணர ` விரித்த பல் கதிர் கொள் சூலம் ` எனப்பட்டது . கையிற் சூலமும் உடுக்கையும் தரித்ததொருகோலம் ( அழகு ) கால பயிரவனாரது . இத் திருப்பாடலை நாடோறும் மறவாது போற்று வோர்க்கு வறுமை முதலிய துன்பம் நீங்கும் . செல்வம் முதலிய பெருகி இன்பம் ஓங்கும் .

பண் :

பாடல் எண் : 7

சுற்றுமுன் னிமையோர் நின்று தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை யுயக்கொ ளென்ன மன்னுவான் புரங்கண் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்ன மொள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , தம்மைச் சுற்றி ஒரு காலத்தில் தேவர்கள் எல்லோரும் நின்று கொண்டு வணங்கி , தூய மலர்களைத் தூவி , ` எம்மைக் காப்பாற்றுவாயாக ` என்று வேண்ட , வானத்திலே உலவிக் கொண்டிருந்த மும்மதில்களையும் ஒரே நொடியில் தீக்கு இரையாகுமாறு அழித்து , தேவர்களுக்கு அருள் செய்தார் .

குறிப்புரை :

சுற்றும் - சூழும் , முன் - திருமுன்னர் . இமையோர் - தேவர் ; துவாதசாந்தத்தில் உள்ளம் வைத்துச் சுழுமுனை நாடியில் மட்டும் வாயுவை மேலேற்றி நிறுத்தி , விழித்தகண் இமைத்தலின்றித் தியானம் புரிவோர் . தூ - தூய்மை . ` எம்மை உய்யக்கொள் ` என்று தனித்தனி வேண்டினர் இமையோர் . திரிபுரத் தசுரர் கொடுமை தாங்காமல் , எம்மை உய்யக்கொள் என்றனர் இமையோர் . உற்றுச் சென்றார் . ஒரு நொடியின் முன்னம் சென்றார் . அழல் வாயின் வீழச் சென்றார் . செற்றது புரத்தை . அருள் செய்தது இமையோர்க்கு .

பண் :

பாடல் எண் : 8

முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை யடிமுடி யறியா வண்ணம்
செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , முற்பட்டு இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பிரமன் , திருமாலோடு , ` எங்கள் ஒப்பற்ற தலைவனே !` என்று வணங்கித் துதிக்க , முன்னர் எல்லை யில்லாத தம்முடைய ஒளியை அடிமுடி அறியாத வண்ணம் தீப் பிழம்பாக அவர்களுக்குக் காட்சி வழங்கினார் .

குறிப்புரை :

முந்தி - முன் . படைத்தவன் - பிரமன் , மால் - விண்டு . இருவரும் ` யாமே கடவுள் ` எனச் செருக்குற்றுத் தேடியலைந்து உண்மை கண்டு , எம் தனிநாதனே சிவன் என்று நெஞ்சாரநினைந்து உணர்ந்து போற்றி நின்று ஏத்தினர் . இறைஞ்சி நிற்றல் :- காயத்தின் செயல் . ஏத்தல் - வாக்கின் வினை ` எம்தனிநாதன் ` என்று அறிந்து நினைந்தது மனத்தின் வினை . அந்தம் - முடிவு . இல் - இல்லாத . சோதி - ஞானப் பேரொளி . அடி முடி - ஆதியும் அந்தமும் . செந்தழல் - செய்ய தீயுருவம் .

பண் :

பாடல் எண் : 9

ஒருவரு நிகரி லாத வொண்டிற லரக்க னோடிப்
பெருவரை யெடுத்த திண்டோள் பிறங்கிய முடிக ளிற்று
மருவியெம் பெருமா னென்ன மலரடி மெல்ல வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

பொழிப்புரை :

சேறைச் செந்நெறிச் செல்வனார் , தனக்கு நிகரில்லாத மேம்பட்ட ஆற்றலை உடைய இராவணன் , விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட தன்னுடைய தோள்களும் , தலைகளும் சிதறப் பின் அன்பொடு பொருந்தி எம் பெருமானே ! என்று வழிபட , தம்முடைய திருவடியை அழுத்துதலைத் தவிர்த்து , அவனுக்குச் சிறந்த அருள் செய்தார் .

குறிப்புரை :

ஒருவரும் நிகர் ( ஒப்பு ) இல்லாத ஒள்திறல் அரக்கன் - எவரும் இணையாதல் அல்லாத ஒளியும் வலியும் உடைய இராவணன் . பெருவரை - திருக்கயிலைமலை . திண்மை - உறுதியுடைமை . பிறங்கிய - ஒளியுடன் விளங்கிய . இற்று - ஈண்டுச் சிந்தி என்னும் பொருட்டு . என்ன - என்று போற்றி வணங்க . மலரடியை வலி செய்யாதவாறு எடுத்து .

பண் :

பாடல் எண் : 1

முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்கும்
கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை யமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

முத்து , மணி , பொன் , சிறந்த பவளக்கொத்து , வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய் , தேவர்கள் வழிபடும் வித்து , வேதவேள்வி , வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை , நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே !

குறிப்புரை :

மாயையைக் கடந்த முழுமுதல்வனுக்குவமையும் உருவகமும் அமைய மாயாகாரியப் பொருள்களைக் கூறுதல் உலகர் மரபு . அவருட்சிலர் , தம் அன்பும் அறிவும் ஆண்டவனது தூய நிலையும் தன்னொப்பின்மையும் அறிந்து , அம்மாயாகாரியப் பொருள் களையும் அடைமொழியால் வேறுபடுத்து , ஈயறியாப் ` பூந்தேனே ` என்பது போலக் கூறுந் திறம் மிக்கவர் . முத்து , மணி , பொன் , பவளம் , வயிரம் எல்லாம் சடம் . அவை சித்துப் பொருட்கு நிகாராகா . ` மன்னும் இருமாயையும் கடந்து வயங்கும் இறைவர்க்கு அம்மாயைத் துன்னும் மணி பொன் அமிழ்தாதி தொடுத்திட்டுவமை வழங்கி யாங்கென்னும் நிகராப் பொருள்களேயிதன்மாட்டுவமம் எடுத்த , எனக் கொன்னும் மதியிற் கூர்த்தவர்கள் குறிப்பர் இதற்கோர் நிகர் இன்றே ` ( தணிகைப் புராணம் 326). முழுமுதற் பவளக்கொத்து . வயிரக் கொழுந்து . அமரர் சூடும் வித்து :- தேவர்கள் தங்கள் முடிமிசையணியும் திருவடியை யுடைய ஞானசொரூபர் . ` உலகுக்கெல்லாம் வித்தவன்காண் ` வேள்வி - வழிபாடு . வேதக்கேள்வி - மறைச்சுருதி . அத்தன் - பொருளன் ; தலைவன் . நெஞ்சு நினைத்தது மட்டும் வியப்பன்று . அழகிதாக நினைந்ததும் வியப்பே .

பண் :

பாடல் எண் : 2

முன்பனை யுலகுக் கெல்லா மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை யிலங்கு சோதி யிறைவனை யரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த வெங்கள்
அன்பனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

வலியனாய் , உலகுக்கெல்லாம் தலைவனாய் , முனிவர்கள் துதிக்கும் இன்பனாய் , ஞான ஒளி வீசும் தலைவனாய் உள்ள , பார்வதி அஞ்சுமாறு தாருகவன முனிவர் யாகத்தில் புறப்பட்ட வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத்தோலை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

முன் x பின் ; முன்று x பின்று ; முன்பு x பின்பு ; முன்னர் x பின்னர் ; முன்றை x பின்றை ; முற்றை x பிற்றை ; முந்தை x பிந்தை ; முன்னை x பின்னை , முன்னது x பின்னது என்பனவும் பிறவும் ஆகமறுதலைச் சொற்கள் உள்ளன . அவற்றுட் பல ( பொருள் ) வேறுபாடுணர்த்துகின்றன . சிலவற்றின் வேறுபாடு புலப்பட்டிலது . ஈண்டு முன்பன் என்பது முன்னோன் என்னும் பொருள் பயக்கின்றது . உலகுக்கெல்லாம் முன்பன் :- ` முன்பாகி நின்ற முதலே போற்றி ` ` முன் பின் முதல்வன் ` ( தி .4 ப .90 பா .3.) ` முன்னவன் உலகுக்கு ` ` முன்னவன் காண் பின்னவன்காண் மூவாமேனி முதல்வன்காண் முடிவவன்காண் ` ` முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே ` முனிகள் - மனனசீலர்கள் . இன்பம் - பேரின்பவுருவினன் . இலங்கு சோதி யிறைவன் - புறத்தே செங்கதிர் வெண்கதிர் தீயாகத் திகழும் ஒளி முதல்வன் . அகத்தே உணர்வொளி யாயும் இன்பவொளியாயும் உணருமாறு விளங்கத் தங்கும் தலைவன் . அரிவை உமாதேவியார் . வல் + பனை + தட + கை = வலிய பனைபோலும் பெரிய துதிக்கையையுடைய ( களிறு ). வேள்வி தட்சயாகம் . எங்கள் அன்பன் :- ` அன்பே சிவம் `. ( தி .5 ப .17 பா .1)

பண் :

பாடல் எண் : 3

கரும்பினு மினியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை யிறப்பொடு பிறப்பி லானைப்
பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய் , சூரியன் போன்ற ஒளி உடையவனாய் , கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய் , பிறப்பு , இறப்பு இல்லாதவனாய் , மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள , பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

கரும்பினும் இனியான் :- ` ஆலையிற் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும் வேலையின் அமுதர் ` ( தி .4 ப .64 பா .2) ` கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மின் ( தி .5 ப .61 பா .5). ஆலைக்கரும்பின் இன்சாற்றை ` ( தி .4 ப .15 பா .7.) ` நினைவார்க் கெலாம் ஊற்றுத் தண்டொப்பர் ` (5.24.3). காய் கதிர்ச்சோதியான் - ` சிவசூரியன் ` காலையிற் கதிர் செய்மேனி ` ` அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ ?` இருங்கடல் அமுதம் - பெரிய பாற்கடலில் எழுந்த அமிர்தம் . ஆனவனை . ` கட லமுதே கரும்பே ` ( தி .8 திருவாசகம் 20.9) ` பேரா ஒழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலாமாளா இன்ப மாகடலே ` ( தி .8 திருவா . 480). ` அருளா ரமுதப் பெருங் கடல் வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த ` ( தி .8 திருவா . 487). இறப்பொடு பிறப்பிலான் - பிறப்பிலார் இறப்பிலார் ( தி .6 ப .10 பா .8) ` பிறவாதும் இறவாதும் பெருகினான் ` ( தி .6 ப .74 பா .6) பெரும் பொருட் கிளவியான் - மகா வாக்கியப் பொருளாயிருப்பவன் . பெயருக்கும் பொருளுக்கும் வேறுபாடில்லை என்னும்படி பொருளைப் பெயர் என்றும் பெயரைப் பொருளென்றும் ஆண்டனர் முன்னோர் . ` பெரும் பெயர்க்கடவுள் ` என ஞேயம் ஒன்றேபெரும் பெயருக்குப் பொருள் ஆகக் கூறினார் . ஏனையவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றலிற்றலைமை பற்றி என்று உணர்க . பெரும் பெயரெனினும் , மகா வாக்கியம் எனினும் , ஒரு வார்த்தையெனினும் ஒக்கும் . பெரும் பெயர்ப்பொருளே அஞ்செழுத்திற்கும் ஆதலின் , பெரும் பெயரோடு அஞ்செழுத்திடை வேற்றுமையின்மையுணர்க . ஈண்டிய பெரும் பெயர் - எல்லா நூற் பொருளும் திரண்டு கூடிய பெரும் பெயர் என்க . ` அருள் நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின் பொருள் நூல் தெரியப்புகின் ` என்பதனானும் உணர்க . ( இது சிவஞானபோதமாபாடிய வசனம் சிறப்புப்பாயிரத்துட் காண்க ). ` பெரும்பேச்சு உடையான் ` ( தி .4 ப .86 பா .6) என்று பின்னரும் வருதல் உணர்க . ` மகாவாக்கியம் ` ` பெரும் பேச்சு ` இரண்டும் ஒன்றாயிருத்தலை நோக்குக . ` பெரும் பெயர்க்கிளவி ` ` பெரும் பொருட்கிளவி ` என்னும் இரண்டும் வேறல்ல . ( தி .4 ப .74 பா .9) இல் விண்ணிலே மின்னல் மெய்யிலே பெரும் பொருள் கண்ணிலே மணி , இருளிலே சுடர் ஒப்பான் என்றதும் ஈண்டு உணரத்தக்கது . மெய்ம்மையே வழிபடா நிற்றலால் அம் மெய்ம்மையிற் பெரும்பொருள் ( சிவம் ) தோன்றப் பெறலாம் . அப்பெரும் பொருளைக் குறிப்பது பெரும் பெயர் . ஈண்டு ஒப்பான் என்றதால் மயக்கம் உளதாகலாம் . அப் பொருள் சொல்ல ஒன்றாதும் கருத வொன்றாதும் நிற்பதாதலின் பெரும் பொருள் ஒப்பான் என்றார் . மெய்க்கு ` அரும்பொன் `. வாய்க்குக் ` கரும்பினும் இனியான் `. கண்ணுக்குக் ` காய்கதிர்ச் சோதியான் `. மூக்கிற்கு ` இருங்கடலமுதம் `. செவிக்குப் ` பெரும் பொருட் கிளவியான் `. உயிர்க்கு ` இறப்பொடு பிறப்பிலான் `. நெஞ்சிற்கு அழகிதாக நினைதல் .

பண் :

பாடல் எண் : 4

செருத்தனை யருத்தி செய்து செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக் கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியு மருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.

பொழிப்புரை :

போரிடுவதில் விருப்பம் கொண்டு , நேராக அம்பைச் செலுத்தி முப்புரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அழித்தவனாய் , பொன்மேனி அம்மானாய் , தன்னைத் தியானிக்கும் தேவர்களுக்கு ஒப்பற்ற தலைவனாய் , பார்வதிபாகமாகியும் அவளிடத்து ஆசை நீங்காத கூத்தனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேரிதாகவே நினைந்தவாறு என்னே !

குறிப்புரை :

செரு + தனை = செருவை ; போரை , அருத்தி - விருப்பம் . செஞ்சரம் - செவ்விதிற் சென்றெய்துங்கணை ; தவறாது குருதியிற் படிந்து செந்நிறத்ததாகத்தக்க கணையுமாம் . ஊர் - மூன்றூர் ; திரிபுரம் . நிலையிலாவூர் மூன்று , ( தி .4 ப .64 பா .4.) ஊர் மேல் செலுத்தி என மாறுக . ஊர் மேல் கருத்தனை - முப்புரத்தின்மேல் குறிக்கோள் உடையவனை . கனக மேனி - செம்பொன் மேனி , ` பொன்னார் மேனியனே `. மேனியை யுடைய கடவுள் . கருதும் - தியானம் புரியும் . ஒருத்தன் - ஏகநாயகன் . ஒருத்தி - தனி முதல்வி . ` ஒருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா ( நிருத்தனை )` என்பது முற்றெதுகை நயம் பொருந்தியது . பொருத்தியும் - இடப்பாலில் திருமேனியில் ஒரு கூறாகப் பொருந்த வைத்திருந்தும் . அருத்தி - காதல் . நிருத்தன் - கூத்தன் .

பண் :

பாடல் எண் : 5

கூற்றினை யுதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளே
றேற்றனை யிமையோ ரேத்த விருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை யடிய ரேத்து மமுதனை யமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.

பொழிப்புரை :

கூற்றுவனை உதைத்த பாதங்களை உடைய இளையவனாய் , இளைய வெண்ணிறக் காளையை ஊர்பவனாய் , தேவர்கள் போற்றப் பெரிய சடைக் கற்றையில் கங்கையைச் சூடியவனாய் , அடியார்கள் போற்றும் அமுதமாய் , சிவாமுதம் நல்கும் திருநீற்று மேனியனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே .

குறிப்புரை :

கூற்று - காலன் . குழகன் - இளைஞன் . மழலை வெள்ளேறு ` மழவிடை ` ஏற்றன் - ஏறுதலையுடையவன் ; ஏற்றத்தனுமாம் . ஆற்றன் - கங்காதரன் என்னும் வடசொல்லுக்குத் தக்க தமிழ்ப் பழஞ்சொல் . அடியர் வழிபடும் அமுதமயமான இறவாத அமுதயோக நீற்றன் - சிவாமிர்தம் . நல்கும் திருநீற்று மேனியன் .

பண் :

பாடல் எண் : 6

கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை பங்கனை யங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.

பொழிப்புரை :

கரிய , பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனாய் , நீலகண்டனாய் , எல்லா ஆன்மாக்களையும் விரும்புபவனாய் , சோதி வடிவினனாய் , கயிலை மலையினனாய் , பார்வதி பாகனாய் , உள்ளங்கையில் நெருப்பை ஏற்பவனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே .

குறிப்புரை :

கருங்கை ; பனைக்கை ; தடக்கை வெம்பனைக் கருங்கை யானை ( தி .4 ப .61 பா .7) வேழக்களிறு - வேழமாகிய களிறு . இரு பெயரொட்டு , கண்டன் - வீரன் . தெவ்வர் புரம் எரிகண்டர் . ( கோயிற் புராணம் நடராசச் . 26) விருப்பன் - அடியார் விருப்பினை யுடையவன் . யாவரும் விரும்புதலை யுடையவன் . ` விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் பொருப்பன் தூய மால்வரைச் சோதி ` ( தி .12 பெரிய புராணம் . 7). பொருப்பன் - மலையரையன் , இமாசலராசன் . பொருப்பன் மங்கை - பார்வதி , மங்கைபங்கன் - மாதியலும் பாதியன் . அங்கை ஏற்ற நெருப்பன் - அழகிய கையிலே அழலேந்தியவன் , அன லேந்தி .

பண் :

பாடல் எண் : 7

நீதியா னினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்கவெண் ணீற் றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா விளக்கினை யளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

விதிப்படி தியானிக்கப்படுபவனாய் , சாதி மாணிக்கமாய் , சங்கைப்போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய் , வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய் , தூண்டா விளக்காய் உள்ள , ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

நீதியால் நினைப்பு உளானை - சிவாகம விதிப்படி புரியும் ( தியாதாவினது ) தியானத்துக்குத்தியேயமாக உள்ளவனை . தியாதா - நினைப்பவன் . தியாநம் - நினைப்பு . தியேயம் - நினைக்கப் படுகின்ற பொருள் . ஆதியாவான் , உயர்வினன் . சாதியரதனம் ச + ஆதி = சாதியுமாம் . சங்க வெண்ணீறு . சங்கத்தைப் போலும் வெளியநீறு . திருநீற்றுப் பொலிவுடைய அண்ணல் . விண்ணில் வானோர்க்கெல்லாம் ஒளியாயவன் . துளக்கம் - அசைவு . தூண்டலுமாம் . தூண்டா விளக்கு , தூண்டாமணி விளக்கே ` நுந்தா வெண்சுடரே ` அளக்கல் ஆகா ஆதியை - காட்சி முதலிய அளவைகளால் அளந்தறிய முடியாத முதல்வனை .

பண் :

பாடல் எண் : 8

பழகனை யுலகுக் கெல்லாம் பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானையின் றோன் மலைமக ணடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

உலகத்தாருக்கெல்லாம் பழகுதற்கு இனியவனாய் , பெருவடிவுடையவனாய் , மலையை ஒத்த இளைய மதயானையின் தோலைப் பார்வதி நடுங்குமாறு போர்த்த இளையனாய் , பிறையைக் குளிர்ந்த சடையிலே சூடிய அழகனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

பழகன் - பழக்கமுடையவன் , பழகு + அம் = பழக்கம் ஒழுகு + அம் = ஒழுக்கம் உலகம் . உணராமையாற்பொய்யனுமாம் . இன்னோரன்ன பலவுள . பருப்பனை - பருத்த பனைமரம் . பொருப்பு - மலை . ` பனைக்கை ` ` கைம்மலை ` ` வருங்குன்றம் ` மழகளிறு . களியானை - களிறு . மலைமகள் - பார்வதி . நடுங்கத்தோல்போர்த்த குழகன் . ( தி .4 ப .74 பா .5) குழவித்திங்கள் :- திங்கட்குழவி ` ` பிறைக் கொழுந்து ` ` திங்கட்பிஞ்சு ` திங்களைச் சூடுதலின் முன்னரே குளிர் சடை , குளிர்சடையில் , குழவித் திங்களை மருவ வைத்த அழகன் .

பண் :

பாடல் எண் : 9

விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக் கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா விருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

வானில் தோன்றும் மின்னலை ஒப்பவனாய் , தனக்குத் தானே ஒப்பாகும் பெரிய மெய்ப்பொருளாய் , கண்ணில் மணி போலவும் , செறிந்த இருளில் சுடர்போலவும் ஒளிதருபவனாய் , திருமாலும் , பிரமனும் தம் மனத்தில் எண்ணமுடியாத வகையில் அவர்கள் அஞ்சுமாறு நீண்ட தீத்தம்பமாகிய தலைமையுடைய பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

விண் - மேகம் ; வானுமாம் . மின்ஒப்பான் - மின்னலைப் போல்வான் . மின்னுக்கு இடம் காரும் வானுமாம் . மெய்ப்பொருள் . பெரும்பொருள் . மெய்ப்பெரும் பொருள் ஒப்பான் - தானே மெய்ப்பெரும் பொருளாயிருத்தலின் தானே தனக்கொத்த தலைமைத் தன்மையன் என்றவாறு . மெய் - சத்தியம் ( குணம் ). பெரும் பொருள் - சத்தியார்த்தம் ( குணி ) சத்தியவத்து வேறு . அதன் சத்தியம் வேறு . மெய்ம்மை - குணம் பெரும்பொருள் - குணி . கண்ணிடைமணி - ` கண்ணிற் கருமணியே பாவாய் காவாய் ` கடுவிருள் - செறியிருள் . சுடர் - ஒளி . விண்ணும் மின்னும் ; மெய்யும் பொருளும் ; கண்ணும் மணியும் ; இருளும் ஒளியும் . உணர்ந்தார்க்கும் உணர்வரியனாதலின் விண்ணில் மின்னாம் . பொய்யர்க்குப் பொய்யனும் மெய்யர்க்கு மெய்யனுமாம் . இயல்பினனாயினும் உண்மை வழிபாடுடையவர்க்கு மெய்ம்மையிற் புலனாகும் பெரும் பொருளாம் . எல்லாம் உடைய ராயினும் , சிவவழிபாடு இல்லாதார் கண்ணிருந்தும் மணியில்லாதார் போல வாழ்வை இழப்பர் ஆதலின் கண்ணுள் மணியாம் . சிவனை வழிபட அவன் உள்ள தூய நிலைக்கு ஏகல் வேண்டா ; அவன் உள்ளத்தே என்றும் திருக்கூத்தாடுகின்றான் ; அதனாலும் , அவன் ` உள்ளொளி ` யாதலாலும் , கடுவிருட்சுடர் என்றார் . எண்ணிடை - எண்ணத்திலே . எண்ணல் - கருதல் . கணக்கிடப்படுதல் . எண்ணல் ஆகா - நினைத்தற் கியலாத . இருவர் - அரியும் அயனும் . வெருவ - வாய்வெருவி அஞ்ச , நீண்ட அண்ணல் - ` சோதியாய்த்தோன்றும் உருவமே ` நீண்ட அண்ணல் - எங்கும் வியாபித்த தலைவன் .

பண் :

பாடல் எண் : 10

உரவனைத் திரண்ட திண்டோ ளரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கட் சடையிடைப் பொதியுமை வாய்
அரவனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

ஞான வடிவினனாய் , திரண்ட வலிய தோள்களை உடைய இராவணனை நசுக்கியவனாய் , மும்மதில்களையும் அழித்தவனாய் , மிக்க ஒளியும் , நீண்ட கிரீடமும் உடைய தேவர்களுக்குக் குருவாய் , குளிர்ந்த பிறையைச் சடையில் கொண்டவனாய் உள்ள , ஐந்தலைப் பாம்பை ஆட்டும் பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

உரவன் - ஞானசொரூபன் . ` உரனுறு திருக்கூத்து ` ( சேக்கிழார் ) திரண்டதோள் ; திரண்டதிண்டோள் . மூன்றூர் நிரவன் - திரிபுரத்தைத் தரையொடு தரையாய் நிரவல் செய்தவன் . நிமிர்ந்த சோதியமரர் . நீள்முடியமரருடைய குரவன் ; தலைவன் . எல்லா வுயிர்க்கும் உள்நின்று உணர்த்தும் இயல்பும் வேண்டின் வெளியிற் குருவாய் வந்துபதேசிக்கும் நிலையும் உடையன் சிவபிரான் ஆதலின் , குரவன் என்பது ஆசிரியன் என்னும் பொருளைத் தருதல் அமரர் திறத்திலும் அமையும் . ஐவாய் அரவன் - ஐந்தலைப் பாம்பினை யுடையவன் .

பண் :

பாடல் எண் : 1

தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.

பொழிப்புரை :

தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி , தலையில் மாலையை அணிவித்து , நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல் , காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டவாறு வருந்தத்தக்கது .

குறிப்புரை :

மறையோதி , நீர் முதலியன ஆட்டித் , தார் முதலியன சூட்டி , வழிபட்டுக் கண்டு கண்டு கண்குளிரவும் உள்ளங்குளிரவும் பெறாது காலத்தைக் கழித்தமை கருதித் தொண்டனேன் பட்டது என்னே என்று இரங்கினார் . சிவ வழிபாட்டிலே காலங்கழித்தல் இன்றிப் பாவவழிப்போக்கிலே காலங்கழித்துப் பட்டது ஒன்றும் இல்லை என்பார் . ` பட்டது ( அடைந்தது ) என்னே ` என்றார் . நன்னீர் என்றதால் , தூய்மை காவிரிக்கு அடையாகும் . தூய நன்னீர் எனலுமாம் . கண்தனை - கண்ணை . ` உலகவுயிர்க்கெல்லாம் ஒரு கண்ணே ` ( இருபாவிருபஃது 20) ` கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் காவாய் ` உள்ளத்தின் கண்ணாய கள்வன் ` ( சிவஞானபோதம் சூ . 9). கண்டு இராதே காலத்தைக் கழித்தவாற்றிலே தொண்டனேன் பட்டது என்னே என்க .

பண் :

பாடல் எண் : 2

பின்னிலேன் முன்னிலே னான் பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலே னாயி னேனா னிளங்கதிர்ப் பயலைத் திங்கள்
சின்னிலா வெறிக்குஞ் சென்னிச் சிவபுரத் தமர ரேறே
நின்னலாற் களைக ணாரே நீறுசே ரகலத் தானே.

பொழிப்புரை :

முதலும் முடிவும் இல்லாத அடியேனுடைய பிறவித் துயரைப் போக்கி அருள் செய்பவனே ! இளைய கதிர்களை உடைய பிறை தலையிலே சிறிதளவு ஒளிவீசும் , தேவர்கள் தலைவனாய்ச் சிவபுரத்து இருப்பவனே ! திருநீறணிந்த மார்பினனே ! அடியேனுக்கு என்று ஒரு பொருளும் இல்லாதேன் நான் . எனக்கு உன்னைத் தவிர பற்றுக்கோடு ஆவார் எவர் ?

குறிப்புரை :

பின்னிலேன் - முடிவில்லேன் . முன்னிலேன் . முதலில்லேன் . பதி பசு பாசம் ஆகிய முப்பொருளும் அநாதி நித்தியம் . ஆதலின் , நான் முன்னும் பின்னும் இல்லேன் என்றார் . நான் திருமுன் நின்று போற்றிலேன் , பின் நின்று வழிபட்டிலேன் எனலுமாம் உடலெடுத்தல் முன்னாகும் . அதை விடுத்தல் பின்னாகும் . ஆதலின் நான் பிறப்பும் இறப்பும் இல்லேன் . வினைத்திறத்தால் வருதலும் ஒழிதலும் உடற்கே உண்டு . அப்பிறப்பையும் ( இறப்பையும் ) அறுத்து அருள் செய்பவனே என்றலும் கூடும் . நாயினேன் நான் என் இல்லேன் ? நான் என் இல்லேன் ஆயினேன் . இளங்கதிர் - இளநிலா . பயலைத்திங்கள் - இளம்பிறை . பயல் , பயலை , பசலை , பையல் , பைதல் எல்லாம் இளமைப் பொருளவாதலும் ஆட்சியிலறியப்படும் . சில்நிலா - சிறிது நிலா . சென்னியிலே இளம்பிறை சில்நிலா எரிக்கும் . சிவபுரத்து ஏறு . அமரர் ஏறு , தேவர்கோ ( இந்திரனல்லன் ); விரும்பி வழிபடுவார்க்கிறைவன் எனலுமாம் . அமர்தல் - விரும்புதல் . திருநீறு பொருந்திய திருமார்புடையவனே நின்னை அல்லால் ஆர்களைகண் ( அடியேனுக்கு )? ` ஆர் ` மரூஉ . யாண்டு , யாமை , யானை , யாறு , யாடு , யாப்பு , யாக்கை , யாய் முதலியவை ஆண்டு , ஆமை , ஆனை , ஆறு , ஆடு , ஆப்பு , ஆக்கை , ஆய் முதலியனவாக மருவி வழங்குதலை உணர்க . யாவர் , யார் , ஆர் என்னும் முறையில் வைத்தறிதற்பாலது . யா + அர் = யாவர் . யா + அது = யாவது . இவற்றுள் யாவர் என்பது யார் என்றும் யாது என்பது யாவது என்றும் மருவின என்றார் தொல் காப்பியர் . யாது என்றதோ யாவது என மருவும் ? ( தொகைமரபு 30)

பண் :

பாடல் எண் : 3

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே.

பொழிப்புரை :

வஞ்சனை உடைய யான் , போலித் தொண்டனாய் , காலத்தைப் பல ஆண்டுகள் வீணாக்கி , பின் மனத்தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன் . நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவருடனேயே உள்ளத்தில் இருந்து கொண்டு , நீ அறிகின்றாய் என்பதை அறிந்து நான் வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன் .

குறிப்புரை :

யானும் கள்ளனேன் . எனது தொண்டும் கள்ளத் தொண்டு . இவ்வாறு வினைமுதலும் வினையும் கள்ளத்தன்மை நீங்காமல் நிகழக் காலம் வீணே கழிகின்றது . ஞானத் தெளிவு சிறிதும் இல்லேன் , உள்ளேனாகி நின்று , ( நின்னைத்தேடினேன் . நினைப்பவர் நினைந்தவெல்லாம் நினைப்பவர் நினைப்புடன் இருந்துணர்கின்றாய் என்னும் உண்மையை நாடிக் கண்டேன் .) ` உள்குவார் உள்ளத்தானை உணர்வெனும் பெருமையானை ` ( தி .4 ப .75 பா .6) கண்டு நாணினேன் . நாணி நானும் என் விலாவெலும்பு இற்றொழியும் வண்ணம் சிரித்திட்டேன் . ` வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்களஞ்சுமகத்தே நகும் ` சடமாய பூதங்கள் நகும் எனினும் , அவற்றின் வழியாகச் சித்தாகிய முதலே உயிர்க்குயிராய் நின்றறிந்து சிரிக்கும் என்று கொள்க . இஃது உணர்விலதனை உணர்வுடையது போல வைத்தும் செய்யா மரபினதைச் செய்வது போலத் தொழிற்படுத்தும் கூறுதற்கண் அடங்கும் . ( தொல் பொருளியல் 2.) ` கள்ளரோ டில்லமுடையார் கலந்திடில் வெள்ள வெளியாம் என்றுந்தீபற ` ( திருவுந்தியார் ) உள்ளத்தின் கண்ணாய கள்வன் ( சிவஞானபோதம் சூ . 9. அதி .1 வெ . 2 ). ` ஏகமாய் உள்ளத்தின் கண்ணானான் உள்குவார் உள்கிற்றை உள்ளத்தாற் காணானோ உற்று `. ( ? சூ .9. அதி 11. வெ . 2. )

பண் :

பாடல் எண் : 4

உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

பொழிப்புரை :

உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக , பசு ஞானமான உணர்வே நெய்யாக , உயிரே திரியாக , சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி , அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும் , முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம் .

குறிப்புரை :

உடம்பு எனும் மனையகத்து :- ` மெய்யுணர்த்திய அப்போதமே நம் தஞ்சவுடல் , இந்தவுடல் எடுத்த வீடு தான் அழியும் அளவும் அதில் தங்குவார் போல் வஞ்சமுடன் அமர்தும் ` ( ஞான பூசாவிதி ) முதலியவற்றால் , உடலை வீடுபோலக் கூறுதலுண்மை உணர்க , உடம்பே வீடு . உள்ளமே தகளி ( அகல் ), உணர்வே நெய் . உயிரே திரி . ஞானமே தீ . உடலான வீட்டில் , சிவமானபொருள் இருப்பது , மடமான இருளால் தெரிந்திலது . விளக்கேற்றிப் பார்த்துணர்தல் வேண்டும் . உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து , உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக் கொள்ள , அச் சிவஞானப்பிரகாசத்திலிருந்து நோக்கினால் , சிவமான பொருளைக்காணலாம் . நோக்கல் - அத்துவித பாவனை . மடம்படும் உணர் ( வு ) பசுஞானம் . மடம் படா உணர்வு சிவஞானம் . உணர் ` முதனிலைத் தொழிலாகு பெயராய் ஞானத்தை உணர்த்திற்று . மடம்படும் உணர்வு அவ்வியாபகம் ; சிவஞானம் ஆகிய பரை பரிபூரண ( வியாபக ) ம் என்பதைக் குறிக்க இடம்படு ஞானம் ` எனப்பட்டது . மடம்படு முணர் - சீவபோதம் . இடம்படு ஞானம் சிவபோதம் எனலுமாம் . ` அவனருளே கண்ணாகக்காணினல்லால் ... காட்டொணாதே ` ` அவனருளாலே அவன்தாள் வணங்கு ` அட்டி :- உதிரம் அட்டி ` ( தி .4 ப .67 பா .3) கடம்பு அமர் காளை - கடம்ப மலர் மாலையை விரும்பும் முருகப் பிரான் . தாதை - தந்தை . கழலடி - திருவடி . காண்டல் :- சிவாநந்தாநுபவத்தின்மேற்று .

பண் :

பாடல் எண் : 5

வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் ணிருந்த சூழல் வான்றவழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனே னென்செய் கேனே.

பொழிப்புரை :

வஞ்சனை உடைய பெண்ணாகிய கங்கை தங்கு மிடம் சடைமுடி . அந்தச் சடைமுடியிலே ஒளிபொருந்திய பற்களை உடைய பாம்புகள் உறங்காவாய் உள்ளன . அந்தச் செஞ்சடைச் சூழலிலே பிறை கங்கையில் தோய்ந்தவாறு உள்ளது . அந்தக் கங்கை யினுடைய வாழ்க்கையை ஆள்பவன் சிவபெருமான் . அவனைப் போன்ற வாழ்வை வாழத் தொடங்கி , வஞ்சனை உடைய அடியேன் , வஞ்சனை உடைய பெண்ணின் உறக்கத்தைப் போலப் பொய் வாழ்க்கை வாழ்ந்து யாது செய்ய வல்லேன் ?

குறிப்புரை :

வஞ்சப் பெண் - கங்காதேவி . அவள் இருக்கும் அரங்கையே கோயிலாகக் கொண்டு வாழ்வது பாம்பு . அவ்வாளெ யிற்றரவமும் வான்தவழ் மதியமும் வாழும் இடம் அச்செஞ்சடைச் சூழல் . வஞ்சப்பெண் வாழ்க்கையாளன் - செஞ்சடையோன் . வாழ்க்கை ஆளன் - வாழ்க்கையை ஆள்பவன் . அவ் வாழ்க்கை வஞ்சப்பெண் வாழ்க்கை . ( அவ் ) வாழ்வினை வாழலுறுதல் - ( அவ் ) வாழ்வை நடாத்த விழைதல் . வஞ்சப் பெண்ணுறக்கம் - ` கள்ளக் காதலனிடத் தன்புகலந்து வைத்தெழுகும் உள்ளக் காரிகை மடந்தை ` ( திருவிளையாடல் . வாதவூரடிகளுக்குபதேசித்தது . 17). பொய்யுறக்கம் போலும் உறக்கம் . கைப்பிடி நாயகன் தூங்கும்போது அவனை ஏய்த்துத் , தன்மேற்படும் அவன் கையெடுத்து அப்புறந்தள்ளிப் புறம் போக நினைக்குங் கள்ளக் காரிகையாகிய குடிச்செற்றியின் வஞ்சத் துயில் . உள்ளக்கிழவனை விட்டுக் கள்ளக் குழகனைத் தொட்டுக் காதலால் நட்டுவாழும் ஒருத்தி , இரவில் அவன் வரவு நோக்கித் தூங்காது கண்மூடியிருக்கும் பொய்நிலை . ஏழுலகும் பெற்றாலும் இளமை கழியாத எம்பெருமாட்டியைச் செம்பாதியில் உடைய நம்பான் , வம்பாகத் தலைமேலும் , மெய்ப்பாதியாள் அறியாதவாறு துய்ப்பாதியாளான வஞ்சப் பெண்ணை வைத்து உள்ளான் . அதனால் அவன் வஞ்சப்பெண் வாழ்க்கையாளன் ஆனான் . செஞ்சடை யாளியிடம் நெஞ்சகம் வைத்து , செம்பாதியாள் கண் மூடுங்காலத்தை நோக்கிக் கொண்டு உறக்கம் சிறிதும் இன்றி இருக்கின்றான் . சிவபிரான் உமையை ஏய்த்துக் கங்கையைக் கலக்க உறங்காதுள்ளான் . அவன் சென்னியில் மன்னிய பாம்பும் திங்களை விழுங்கக் கருதி உறங்காதிருக்கின்றது . அவ்வஞ்சப்பெண் வாழ்க்கையாளன் வாழ்வுபோலும் வாழ்வினை வாழலுற்றார் திருநாவுக்கரசு சுவாமிகள் . அதுவே ` உயிர்த் துணையாந் தோன்றாத் துணைக்கு ஓர்துணையாகித் துவாதசாந்தப் பெருவெளியில் துரியங்கடந்த பரநாத மூலத்தலத்து ` வாழ்வு . அக் குரவர் இருவரும் உற்றிடும் துவாதசாந்தத்து ஒரு பெருவெளிக்கே விழித்துறங்கும் வாழ்வு . இத் திருப்பாடலில் அறிவிப்பன :- (1) வஞ்சப் பெண்ணாகிய அலைமகள் அப் பெண் வாழ்க்கையாளனைத் தழுவ விழைந்து , மலைமகள் காணாவாறு வந்து தழுவத் தக்க தலைமகன் வரவினைநோக்கித் தூங்காது தூங்கியலைகின்றாள் . (2) செஞ்சடை முடியான் செம்பாதியாள் அறியாவாறு தலைமகளைத் ( ஏழன்றொகை யுமாம் ) தழுவத்துயிலாது துயில்கின்றான் . (3) வாள் எயிற்றுப் பாம்பு மதியை விழுங்கக் கருதிக் கண்வளராது வளர்கின்றது . (4) இடையில் அவ்வஞ்சப் பெண்ணை மதியம் தோய்கின்றது . (5) அப்பரும் வேணி யப்பரை அடைய விரும்பி , வஞ்சப் பெண்போல் உறங்காது உறங்கு கின்றார் . இந்நிலை துவாதசாந்தப் பெருவெளியில் விழித்துறங்கும் சிவயோகநிலை . சிவோகம் பாவனை நிலையும் ஆம் . முன்னது யோகம் . பின்னது ஞானம் . ` ஆங்காரம் அற்று உன் அறிவான அன்பருக்கே தூங்காத தூக்கமது தூங்கும் பராபரமே `; ` தூங்கிவிழித் தென்னபலன் `; ` தூங்காமல் தூங்கிநிற்கும் பாங்கு கண்டால் அன்றோ பலன் காண்பேன் பைங்கிளியே `; ` தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின் நிறைவில் நீங்காமல் நிற்கும் நிலைபெறவும் காண்பேனோ ?`; ` நீங்கா துயிருக்குயிராகி நின்ற நினை அறிந்தே தூங்காமல் தூங்கின் அல்லாதே எனக்குச் சுகமும் உண்டோ ?`; ` அரைசே பொன்னம்பலத் தாடும் அமுதே என்று உன் அருள் நோக்கி இரைதேர் கொக்கு ஒத்து இரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் ` ` இடைவிடாதுன்னைச் சிக் கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே `; ` ஒன்றிற் பற்றும் இன்றிச் சொல்லும் பொருளும் இழந்து சுகாநந்தத் தூக்கத்திலே அல்லும் பகலும் இருப்பது என்றோ கயிலாயத்தனே `; ` சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று , நினைந்ததும் அற்று , நினையாமையும் அற்று நிர்ச்சிந்தனாய்த் தன்னந்தனியே இருந்து ஆனந்தநித்திரை தங்குகின்ற அனந்தலில் என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே ?` ` பொற்புறுங் கருத்தே அகமாய் அதிற்பொருந்தக் கற்பின்மங்கையர் என விழி கதவுபோற் கவினச் சொற்பனத்திலும் சோர்வின்றி இருந்த நான் சோர்ந்து நிற்பதற்கு இந்த வினை வந்தவாறு என் கொல் நிமலா ` ` இரைதேர் கொக்கு ` ( திருச்செந்தூரகவல் ) ` ஞான சம்பந்தம் ` மலர் 7, இதழ் 3, (10-2-1948 ) இல் , இத் திருப்பாடலின் விளக்கமாக எழுதிய எம் கட்டுரையைக் காண்க .

பண் :

பாடல் எண் : 6

உள்குவா ருள்ளத் தானை யுணர்வெனும் பெருமை யானை
உள்கினே னானுங் காண்பா னுருகினே னூறி யூறி
எள்கினே னெந்தை பெம்மா னிருதலை மின்னு கின்ற
கொள்ளிமே லெறும்பெ னுள்ள மெங்ஙனங் கூடு மாறே.

பொழிப்புரை :

நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள பெருமானை நானும் காண்பதற்கு நினைத்து , உருகி அன்பு ஊறி , உள்ளம் உருகினேன் . எந்தையாகிய பெருமானே ! உன்னை இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும் ?

குறிப்புரை :

உள்குவார் உள்ளத்தான் ` நினைப்பவர் மனம் கோயிலாக்கொண்டவன் ( தி .5 ப .2 பா .1)` ` நினைக்கும் நெஞ்சின் உள்ளார் `. ` நினைப்பார்கள் மனத்துக்கோர்வித்துமானாய் ` ( தி .6 ப .95 பா .7.) பெருமைக்குள் தலைசிறந்தது உணர்வே . அது பண்பு . அதன் பண்பு அவ் வுணர்வாகி நின்ற பேரின்பம் . துரியம் உணர்வு நிலை . துரியாதீதம் பேரின்ப நிலை . அருள் குணம் , ஆனந்தம் குணி என்றல் சைவ சித்தாந்த மரபு . ` உணர்வின்கண் ஒன்றானான் ` ( தி .6 ப .86 பா .3) என்புழி உணர்வும் அதன்கண் ஒன்றாவதும் என்று வேறாக வைத்துரைத்தல் அறிக . இவ்வுணர்வு பசுஞானம் அன்று . சிவஞானமே . பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பொருளைப் பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப்பாதநீழற்கீழ் நீங்காதே நில் ` ( சித்தி யார் ) ` உண்மை நின்ற பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னை ` ( தி .6 ப .84 பா .3) பரமசிவன் அத்தலை சிறந்த பெருமையாகிய அருளை யுடையவன் என்பார் , ` உணர்வு எனும் பெருமையான் ` என்றார் . ` பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா `. அவனைக் காண்பான் (- காண ) நினையா என் நெஞ்சை நினைவித்தான் ஆதலால் நானும் உள்கினேன் ஊறிஊறி உருகினேன் . ஊறுவது அன்பு . உருகுவது உள்ளம் . ` உருகுமனத்து அடியவர்கட்கு ஊறுந்தேன் ` ` அமுத னென்றள்ளூறித்தித்திக்கப்பேசுவாய் `. ` உருகுவது உள்ளங்கொண்டு ஓர் உருச்செய்தாங்கு அள்ளூறாக்கை அமைத்தனன் ` ( தி .8 திருவா .). எள்கினேன் - அரியனாகக் கருதாது எளியனென்று கொண்டிட்டேன் `. மழக்கையிலங்கு பொற்கிண்ணம் என்று அலால் அரியை என்று உனைக்கருதுகின்றிலேன் ` ( தி .8 திருவா . 5.92). எந்தைபெம்மான் :- என்னப்பனுக்கும் பெரியமகனை உள்ளத்தானை , பெருமையானை - பெம்மானை உள்ளம் கூடும் ஆறு எவ்வாறு ? இருதலை மின்னுகின்ற கொள்ளிமேல் எறும்பு என் உள்ளம் - இருபாலும் மின்னுகின்ற தீக்கொள்ளியின் நடுப்பட்ட எறும்பு போலும் ( எனது ) உள்ளம் , மின்னுதல் அன்றி எரிதல் கொள்ளிக்கில்லை . ` மேல் ` என்பது ஒரு தலையை நோக்கிக் காலப்பின்னாம் , ஒருதலையை நோக்கி இட முன்னாம் . ஆதலின் , நடு என்னும் பொருட்டெனல் புலனாம் . எறும்பு என் உள்ளம் - எறும்பு என்னும் உள்ளம் . என்ற - என்கின்ற - என்னும் என முக்காலத்திலும் விரியும் . என் - உவமவுருபுமாம் . ` தழல்போல் மேனி ` என்புழிப்போல . என்னுள்ளம் என்பதை ஆறன்றொகையாகக் கொள்ளின் . எறும்பு போன்ற உள்ளம் , எறும்பாகிய உள்ளம் என்றுரைத்துக் கொள்க . ` இருதலைக் கொள்ளியினுள்ளெறும்பு ஒத்து ` ( தி .8 திருவாசகம் 6 - 9).

பண் :

பாடல் எண் : 7

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தீ.

பொழிப்புரை :

பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல , அடியேனுடைய தீய வினைகள் அடியேனைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க , அடியேன் மயங்குகின்றேன் . உலகத்துக்குத் தலைவனே ! வெறுக்கத்தக்கதாய் , பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய் , நோய்க்கு இருப்பிடமாய் அழகிய வடிவில்லாத இந்த உடலை அடியோடு போக்கும்வண்ணம் அடியேனுக்குச் சிவ ஞானத்தை அருளுவாயாக .

குறிப்புரை :

காக்கைகள் மொய்த்தல் பிணத்தை . வினைகள் மொய்த்தல் உயிரை . பிணத்தைக் கண்ட காக்கை அதனை விடாது மொய்க்கும் . தன்னைச் செய்த உயிரைக் கண்ட வினையும் அதனை விடாது மொய்க்கும் . மோத்தை ஆடு என்பது பொருந்தாது . மாட்டு வாலினும் ஆட்டுவால் குட்டையாதலின் , அஞ்சாது அதன்மேல் நிற்றல் காக்கைக்கியல்பாயினும் , உயிருள்ள ஆட்டைப்பல காக்கை மொய்த்தலில்லை . உயிரை மொய்க்கும் வினைக்குப் பிணத்தை மொய்க்கும் காக்கை ஒரு புடையொப்பு . வினைப்பன்மைக்குக் காக்கைப் பன்மை ஒப்பாகக் குறிக்கப்பட்டது . உன் வார்த்தை - உனது புகழ் . ` வாக்கு உன் மணி வார்த்தைக்கு ஆக்கி ` ` வார்த்தைகள் பேசி ` ` தித்திக்கப் பேசுவாய் ` ( தி .8 திருவா .) ` பேசாத நாளெல்லாம் பிறவா நாளே `. பேசப் பெரிதும் இனியாய் போற்றி `. பேசவொட்டாதனவாய் மயக்க . ஒட்டாது என்றதன் திரிபும் ஆம் . ` காக்கை கரவா கரைந்துண்ணும் ` ( குறள் ). வினைகளும் அன்ன . தமக்குத் திருவருளிரை தேடிப் பெற்று நீடு வாழாது காக்கைக்கே யிரையாகும் ஆக்கைக்கே இரைதேடி அலமந்து , நாக்கைக்கொண்டும் பூக்கைக் கொண்டும் அரன்நாமம் நவிலாதும் பொன்னடி போற்றாதும் கழிவர் `. மயக்க மயங்குகின்றேன் . சீத்தை - சீத்தலுறுவது ; சீ என்று வெறுத்தற்குரியது . ` பீழை ` யுமாம் . ` சிதம்பு `. செடி - நாற்றம் . ஊத்தை - ஊற்றை . ஊறுதலுடையது . ஊத்தை வாய்ச் சமணர் ` ( தி .6 ப .40 பா .4) ஈங்குத் திருநெய்த்தானத் திருத்தாண்டக முழுதும் நினைக . உடல் உயிர்க்கு உரித்தன்று . உணர்வே உரியது எனவுபதேசித்து , ஒட்டா :- வினைகள் ஒட்டி நின்று சிவகீர்த்தனம் செய்யத் துணைசெய்யாமல் எட்டி நின்று இடர்ப்படுத்தும் என்றபடி . பந்த மார்க்கத்தில் ஒட்டி நின்று துணைசெய்வன . ` போதால் ` என்றும் பாடம் .

பண் :

பாடல் எண் : 8

அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே.

பொழிப்புரை :

மேம்பட்டவனே ! சங்கை ஒத்த வெண்மையான மேனியை உடைய செல்வனே ! இந்த உடம்பு மண்ணிற்பொருந்துமாறு நெடிது வீழ்ந்து விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்துப் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி , உன்னையே ஞான பாவனையால் மனத்திற் கொண்டுள்ளேன் . என் உயிர் போகின்ற அன்று நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை , எங்கிருக்கின்றாய் என்று வினவினால் , இங்கிருக்கிறேன் என்று அருள் செய்வாயாக .

குறிப்புரை :

அங்கம் - உடம்பு ; ஊத்தை . மண்ணுக்கு ஆக்கி :- மண்ணிற் பொருந்த நெடிது வீழ்ந்து . புதைக்கப்பட்டோ எரிக்கப் பட்டோ மண்ணொடு மண்ணாய்ப் போமாறு உடலின் நீங்கி எனலுமாம் . விழுந்து தொழும்போது , உடம்பு மண்ணிற் கழிக்கப் பட்டதாயும் உயிர் அவ்வுடம்பின் நீங்கிச் சிவத்திற்கலந்ததாயும் எண்ணுதல் சைவ மரபு . ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்ந்து கழித்து . ` ஊனைக்காவி உழிதர்வர் ஊமரே `. காவி - சுமந்து . போக மாற்றத் தக்கது ஊன் . பாச நீக்கத்தைக் குறித்ததாதலின் , அத் தொழுதலைப் பலிபீடத்து அருகிற் செய்தல் வேண்டுமெனச் சிவாகமங்கள் விதித்துள்ளன . பாசம் அற்ற ஆன்மாவைக் குறிப்பதே அப் பலி பீடத்தை அடுத்துள்ள நந்தி . அது பதியையே நோக்கியிருத்தல் கருதத் தக்கது . விழுந்தது பாசம் . எழுந்தது பசுவாயிருந்த ஆன்மா . கலந்தது சிவத்தில் . நிலைத்தது பேரின்ப நுகர்ச்சியில் . ` ஆயபதிதான் அருட்சிவ லிங்கமாம் ; ஆய பசுவும் அடல்ஏறு என நிற்கும் ; ஆய பலிபீடம் ஆகும் நற்பாசமாம் ; ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே ` ( தி .10 திரு மந்திரம் . 2412). ` பசுத்தன்மை நீக்கி அப் பாசம் அறுத்தாற் பசுக்கள் தலைவனைப் பற்றிவிடாவே ` ( தி .10 திருமந் . 2406) என்னும் உண்மை ` ஆர்வத்தை உனக்கே தந்து ` என்றதால் அறியப்படும் . தலைவனைப் பற்றி விடாமையே ஆர்வத்தின் குறியாகும் . பங்கத்தை - பாசச்சார்பான இழிந்த எண்ணத்தை ; சேற்றை . ` பிறவியளறு `. பிறவிச் சேற்றினை . ` பன்றிபோல் அளற்றிற் பட்டுத்தேறி ` ( தி .4 ப .77 பா .7). ` பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா ` ( கந்தரலங்காரம் ). போக - ஒழிய . மாற்றி - ஓரிடத்தின் நீங்கிப் பிறிதோரிடத்திற் சேரத்தள்ளி . ` மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி ` என்புழிப்போலக் கொள்க . நின்னைப் பாவித்தேன் - என்னை மறந்து நின்னை நினைந்தேன் . ` நான் என ஒன்று இல் என்று தானே எனும் அவரைத் தன் அடி வைத்து இல் என்று தான் ஆம் இறை ` ( சிவ ஞானபோதம் . 63). இதிற் குறித்ததே ` ஊன் செய்யா ஞானம் `. ஏனைச் சமயத்தார் ஞானமெல்லாம் ஊன் செய்யும் ஞானம் . ஈண்டுப் பாவித்தது ஊன் செய்யா ஞானபாவனை . சங்கு ஒத்த மேனிச் செல்வர் :- பவளம்போல் மேனி , பால்வெண்ணீற்றுச் செல்வத்தாற் சங்கு போன்றதாயிற்று . நாயேன் :- படர்க்கைப் பெயர் தன்மையீறுற்றுத் தன்மைப் பெயராயிற்று . அப்பர் தம்மை நாயென்று குறித்தல் அறிந்து செருக்கறுதல் தலைக் கடனாகும் . சாதல் நாள் - சாங்காலம் . ` சாம் அன்று ` ( தி .4 ப .103 பா .3.). ` வீடும் நாள் ` . ` துஞ்சும் போழ்து ` சாம் போதில் , உன்னை நாயேன் எங்கு உற்றாய் என்று வினாவுவேன் . என்ற போது ஆ . என்ற போதா ( என்ற + போது + ஆ ) ஆ - ஆக ; ஆதல் . இங்கு உற்றேன் என் . என் (- என்றுணர்த்து ). ஏவல் . இத்திருப் பாடலைச் சைவர் , சிவபூசாந்தத்தில் விழுந்திறைஞ்சும் பொழுது சொல்லிவருதல் மரபு . ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதர வேண்டிப் பெற்றுணர்ந்து , கழித்துப் பரமனைப் பாவித்து , அவன் இங்குற்றேன் என்றுணர்த்துவதற்குத் தக்கபொழுது இஃது என்றார் .

பண் :

பாடல் எண் : 9

வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்
னுள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கிநக்கு
வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.

பொழிப்புரை :

விளங்குகின்ற இளம்பிறையைச் சூடிக் கங்கையைச் சடையில் ஏற்ற பெருமான் , ஏதோ என்னை வினவுபவர் போல வந்து என் உள்ளத்துக்குள்ளே புகுந்து நின்றாராக , உறங்கின நான் விழித்தெழுந்து இங்கு புகுந்த நீர் கள்ளரோ என்று வினவ , என் உள்ளத்தில் கலந்திருந்து , தாம் என்னைப் பார்த்துச் சிரித்து கங்கை ஆகிய வெள்ளத்தை உடையோம் என்று நின்றார் .

குறிப்புரை :

விளங்கு பிறை இளம் பிறை . இளம் பிறையனார் - பிறை சூடி , ` சந்திரசேகரர் ` என்றதில் இச்சிறப்பில்லை . வெள்ளநீர்சடையனார் ( கங்காதரர் ), உள்ளமே :- ஏகாரம் ஏழனுருபின் பொருட்டு . கள்ளர் x வெள்ளர் ( கருளர் - கர்ளர் - கள்ளர் . வெருளர் - வெர்ளர் - வெள்ளர் ) ` ஆமையரவோடேன வெண்கொம்பக்குமாலை பூண்டாமோர்கள்ளர் வெள்ளர் போலவுள் வெந்நோய் செய்தார் ` ( தி .1 ப .73 பா .10) ` கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு ` ( தி .10 திருமந்தி .2900) வினவுவார் போல வந்து உள்ளமே புகுந்து நின்றார்க்கு :- உள்ளம் புகுவதன் முன்னர் , நான் உள்ளே புகலாமோ , என இசைவு பெற வினாவுவார் போல ஒரு குறிப்புத் தோற்றிப் பின்னர் , புகுந்தது எனக்குத் தெரியாதவாறு நான் உறங்கும்போது புகுந்து நின்றது கள்ளம் . நான் விழித்துப் பார்த்து , அவர்க்குப் புடை பெயர்ந்து , கள்ளரோ புக்கீர் என்றேன் . அவரும் என்னொடு கலந்து நோக்கிச் சிரித்து நாம் கள்ளரேம் அல்லேம் . வெள்ளரேம் என்று நின்றார் . உள்ளமே புகுந்து கள்ளராய் நின்றவர் ( தலைமேற்பிறை போல ) வெள்ளரோம் என்று சொல்லி நின்றார் . கள்ளர் உள்ளமே புகுந்து நின்றார் . அவ்வுள்ளம் நம் அப்பரது இல்லம் . இல்லம் உடையாரான அப்பர் தாம் அறியாவாறு தம் உறக்கத்திற் புகுந்த கள்ளரான சிவனாரைப் , புடைபெயர்ந்து விழித்துப்பார்த்து ` புகுந்தீர் கள்ளரோ ` என்றார் . புகுந்த கள்ளரும் இல்லம் உடையாரான அப்பரும் கலந்துகொண்டனர் . கலந்து நோக்கி நக்கு வெள்ளரோம் ( கள்ளர் அல்லோம் ) என்று ( சொல்லி ) நின்றார் . புகுந்து நின்ற கள்ளர் இல்லம் உடையாரால் அறியப்பட்டதும் புறப்பட்டோடற்பாலர் , ஓடாது நின்றார் . வெள்ளரோம் என்று சொல்லியும் நின்றார் . அதுவே கலப்பன்றோ ? நோக்குதலும் நகுதலும் , தம் கள்ளத்தை இல்லம் உடை யார் அறிந்து வினாவியதன் விளைவு . ` உறங்கும் நான் ` என்றதால் விழித்தலும் , ` நின்றார் ` என்றதால் ஓடாமையும் பெறப்பட்டன . ` கள்ளரோடில்லம் உடையார் கலந்திடில் வெள்ள வெளியாம் என்று உந்தீபற , வீடும் எளிதாம் என்று உந்தீபற `. ( திருவுந்தியார் . 23) ` கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம் காப்பிடு கள்ளர் கலந்து நின்றார் உளர் ; காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிட மீண்டதோர் கூறை கொண்டாரே `. ( தி .10 திருமந் .2900) ` உள்ளத்தின் கண்ணாய கள்வன் ` ( சிவஞானபோதம் . 56) ` உள்ளங்கவர் கள்வன் `.

பண் :

பாடல் எண் : 10

பெருவிர லிறைதா னூன்றப் பிறையெயி றிலங்க வங்காந்
தருவரை யனைய தோளா னரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரு மொருவ னாய வுருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்கநான் றிரியு மாறே.

பொழிப்புரை :

பார்வதி பாகனாய் உள்ள உருவத்தை யுடைய வள்ளலாகிய சிவபெருமான் , தம் காற் பெருவிரலைச் சிறிது ஊன்றிய அளவில் மலையைப் போன்ற தோள்களை உடைய இராவணன் பிறையைப் போன்ற பற்கள் வெளித்தோன்ற வாயைப் பிளந்து கொண்டு அலறிக் கீழே சாய்ந்தான் . சிறிதும் வலிமையில்லாத அடியேன் அம்மையப்பனாகிய அப்பெருமானுடைய திருவடிகளைத் தலையில் சுமந்து கொண்டு எங்கும் திரிகின்றவாற்றைக் காண்க .

குறிப்புரை :

திருக்காற் பெருவிரலைச் சிறிதேதான் ஊன்றினான் இருவரும் ஒருவன் ஆன உருவம் உடைய வள்ளல் . அச் சிற்றூற்றம் பொறாது எயிற்றுப்பல் கழல வாய் திறந்து அலறி விழுந்தான் மலை போலும் தோளான் ஆன இராவணன் . நான் சுமந்துகொண்டு திரியும் ஆறு காண்க . எதைச்சுமந்து ? பெருவிரல் மட்டுமோ ? அதனோடுகூடி இரண்டாயுள்ள திருவடிகளை . திருவடிகளைமாத்திரமோ ? அவற்றை அடியாகக்கொண்ட திருவுருவத்தை . அத்திருவுருவம் ஒன்றைத் தானோ ? அவ்வுருவில் இருவர் உளர் . அவ்வளவும் என் தலையில் சுமந்து நான் திரிகின்றேன் . அன்று - திருக்கைலையை எடுத்த நாளில் . அங்கு - அம் மலைமேல் . ` கமல பாதத்து ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண்டிறல் அரக்கன் உக்கான் . இருதிற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் திருவடிதரித்து நிற்கத் திண்ணம் நாம் உய்ந்தவாறே ` ( தி .4 ப .71 பா .9) வீழ்ந்தான் காண்க எனலுமாம் . வள்ளலது திருவடி . வள்ளல் திருவடி . திரியுமாற்றைக் காண்க . ` அருவரையனைய தோளான் அரக்கன் ` என்றதால் நான் அத்தகைய வலியேனல்லேன் என்பது தோன்றிற்று . நிற்றலும் ஆற்றாது அவன் வீழ்ந்தான் ; நான் சுமந்து திரியுமாறு காண்க என்றார் .

பண் :

பாடல் எண் : 1

மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா வறுக்கு மெந்தை யிணையடி நீழலெ ன்னும்
அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே.

பொழிப்புரை :

அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும் விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.

குறிப்புரை :

நான் மருளும் அவாவும் உடைய மனத்தினேன் ஆகி, அம் மருளால் விளைவதும் அவ் வவாவை விளைப்பதுமான மயக்கத்தை உற்றேன். மருளும் மயக்கமும் அவாவும் முறையே ஒன்றற்கொன்று ஏதுவும் பயனுமாகும். மயக்கத்திற்கு ஏது மருள். அவாவிற்கு ஏது மயக்கம். மருளின் பயன் மயக்கம். அதன் பயன் அவா. அவா, மயக்கம், மருள் மூன்றும் மதியிலார் பால் நீங்கா திருப்பன. மதியுடையார்பால் ஒழிதற்பாலன. மருள் x தெருள்; இறுள் x ஒளி, தெருள் - தெளிவு. அருள், அறிவு, உணர்வு என்பன ஒரு பொருளன. சிவப்பிரகாசம் 70.75 பார்க்க. மருள் இருள் மயக்கம் என்பன வெவ்வேறு பொருளனவாயிருந்தும், ஒரு பொருளனவாக ஆளப்படுகின்றன. மருள வாமனம் அருளவாவுயிர். மனத்திற்கு மருள் இயல்பு. சார்ந்ததன் வண்ண மாதற்கண் உயிர்க்கு எய்தும் பேரா வியற்கையே அருள். அருளவாப்பேறு. மருளவா வியல்பு. எந்தை யிணையடி நீழல் வேறு அருள் வேறு அன்று. `அடிநீழல் என்னும் அருள்` என்னும் தொடரை நன்குணர்வார்க்குத் திருவடி நிழல் என்பது விளங்காதிராது. அத்திருவடி இருளவாவை அறுக்கும். இருளவா - பாசப்பற்றும் பசுப்பற்றும். அறுக்கும். அடி:- `பற்றை அறுப்பதோர் பற்று`; அறுக்கும் அடி. அறுக்கும் அருள். அருளை அவாவுதல் அருளவா. அவாவைப் பெறுதல் - அவாப் பெறுதல். பெறுதல் இன்றி - பெறாது. நான் அருளவாப் பெறுதல் இன்றி அஞ்சி அலமந்தேன். அலமந்தேற்கு = அலமந்தேனுக்கு. அலமந்த எற்கு என்றதன் மரூஉவு மாம். பொருள் அவா - பொருட்பற்று. தந்தவாறே - கொடுத்த வண்ணமே. போது - பொழுது; மரூஉ. போய்ப் புலர்ந்தது - சென்று விடிந்தது. அஞ்சி அலமந்தேன். அலமந்தேனுக்குப் பொருளவாத் தந்த வாறே போழ்து போய்ப் புலர்ந்தது. `இணையடி நீழலென்னும் அருள்` என்றதால் அடியும் அருளும் ஒன்றாமாறு புலனாகும்.

பண் :

பாடல் எண் : 2

மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்
தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே. 

பொழிப்புரை :

சரியை முதலிய உண்மை வழிகளாகிய உழுதலைச் செய்து, விருப்பம் என்னும் விதையை விதைத்து, பொய்ம்மை ஆகிய களைகளை நீக்கிப் பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சிச் சிவரூபத்தால் ஆன்மதரிசனமும் சிவ தரிசனத்தால் ஆன்மசித்தியும் பெற்று, திருநீறு சிவவேடங்கள் முதலிய தகுதிகளாகிய வேலியை அமைத்துச் சிவத் தியானமாகிய செந்நெறியில் நிற்பார்களானால் சிவகதி என்ற பயிர் விளையும்.

குறிப்புரை :

1. மெய்மையாம் உழவைச் செய்தல். 2. விருப்பெனும் வித்தை வித்தல். 3. பொய்மையாங்களையை வாங்கல். 4. பொறையெனும் நீரைப் பாய்ச்சல். 5. தம்மையும் நோக்கிக் காண்டல் 6. தகவெனும் வேலியிடல். 7. செம்மையுள் நிற்றல். 8. சிவகதி விளைதல். இவ்வெட்டும் விளங்கவுணர்தல் இங்கு நல்லோர்க்குற்ற கடனாகும். இது குறிப்புரையாதலின், விளக்குதல் ஈண்டியலாது.
1. மெய்ம்மை யாம் உழவு:- சரியை கிரியை யோகம் ஞானம் ஆன மெய்ந்நெறி நான்கும் சிவகதியாகும். \\\\\\\"சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோக்ஷத்தைக் கொடா ஆகலான் ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய்தவத்தான் ஞானம் நிகழும் என்றது \\\\\\\" (சிவஞானபோதம். சூ 8. ஆதி. 1) `சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்.` (சித்தியார். சூ. 8:- 11) `ஞானநெறி யடைந்தடைவர் சிவனை` (௸) `ஞான மெய்ந்நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொலாம்` (தி.8 பெரியபுராணம் 7,8) `மெய்ஞ்ஞெறி ஞான மாகும்`
2. விருப்பு எனும் வித்து:- இச்சை மீதூர்தல் (சிவஞான போத மாபாடியம். சூ. 11. அதி. 2. பக்கம். 549) என்னும் சிவபக்தி. `அன்பு, காதல், பக்தி என்பன இச்சை மீதூர்தற் பொருள ஆகலின் அது பரமுத்தியினும் உண்டு. அதனை உணராதார், பத்தியாவது சீவன்முத்தி நிலைக்கே செய்யப்படும் ஒரு சாதகம் போலும் என மயங்கிக்கொண்டு தமக்கு வேண்டியவாறே உரைப்பர். பரமுத்தி நிலைக்கண் இச்சை நிகழாதவழிச் சிவபோகம் அநுபவம் ஆதல் செல்லாமையானும் சீவன் முத்தி நிலைக்கே கூறுவதொன்றாயின், `செம்மலர் நோன்றாள்` என்னும் சூத்திரத்து ஒருங்கு வைத்து ஓதலே அமையும் ஆதலின், சூத்திரம் வேறு செய்யவேண்டாமையின், அஃது ஆசிரியர் கருத்து அன்மையானும் அது பொருந்தாமை அறிக.` (௸. சூ. 11. அதி. 2) `கண்ணுக்குஏயும் உயிர் காட்டிக் கண்டிடுமா போல ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன். இத்தை ஆயும் அறிவுடையனாய் அன்பு செய்ய`லே விருப்பெனும் வித்தை வித்த லாகும். `மறவாது கடைப்பிடித்துச் செய்யும் அன்பானே அம்முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதியைத் தலைப்படும்` என்னும் பொருட்டாய, `அயரா அன்பின் அரன்கழல் செலும்` இயல்பே விருப்பெனும் வித்தை வித்தலாகும்.
3. பொய்ம்மையாங்களையை வாங்கல்:- மெய்மையுழவிற் பொய்மைக்களையன்றி மற்றில்லை. பொய்ம்மை - அசத்தியம். அதனை வாங்குதலாவது சத்தியத்தைக் கடைப்பிடித்து ஒழுகுதல். வாய்மை; உண்மை; மெய்மை மூன்றுமே சத்தியம். அவற்றுள் ஒன்று இன்றேனும் அசத்தியமாகும்.
4. பொறை யெனும் நீரைப்பாய்த்தல்:- பொறை - பொறுமை. அஹிம்ஸை. பொறாமை - ஹிம்ஸை, பொறுமையான நீரால், பொய்யான களையைப் பிடுங்கி, விருப்பான வித்து வளரச் செய்வதே மெய்யான ஞானவுழவு.
5. தம்மையும் நோக்கிக் காண்டல்:- `தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்` (சிவஞானபோதம்) `தன்னறிவறியுந் தன்மை தன்னாலே தனையறிந்தால் தன்னையும் தானே காணும் தான் அதுவாகி நின்றே` (சிவப்பிரகாசம். 72). சிவரூபத்தால் ஆன்ம தரிசனம். சிவதரிசனத்தால் ஆன்மசுத்தி. `நோக்குதல்` ஆன்ம தரிசனம், `காண்டல்` `சிவதரிசனம்` `அரன் தன்னாலே தன்னை யுங்கண்டு தமைக் காணார்` (சிவஞானபோதம். சூ. 9. வெ. 1) 1. கொல்லாமை (தகவு எனும் வேலியிடல்) 2, ஐம்பொறி யடக்கல் (பொய்மையாங்களையை வாங்கல்) 3. பொறுமை (பொறையெனும் நீரைப்பாய்ச்சல்) 4. இரக்கம் (செம்மையுள் நிற்றல்) 5. அறிவு (சிவகதி விளைதல்) 6. மெய் (மெய்மையாம் உழவைச் செய்தல்) 7. தவம் (தம்மையும் நோக்கிக் காண்டல்) 8. அன்பு (விருப்பெனும் வித்தை வித்தல்) என்று பொருத்தி ஞானபூசைக்குரிய எண்மலர் (அட்டபுட்பங்) களை உணர்த்தியவாறும் உரைக்கப்படும்.
6. தகவெனும் வேலியிடல்:- வேம்புதின்ற புழுப் போல நோக்கிற்றை நோக்கி நிற்கும் நிலையின் நீங்கிநிற்கும் சாதகங்களும் சிவ சாதனங்களும் சைவ பூடணங்களும் ஆகிய திருவைந் தெழுத்து, திருவடையாளமாலை (உருத்திராக்கம், கண்டிகை) திருநீறு, சிவ வேடங்கள் எல்லாம் சிவகதிக்குரிய தகவு என்னும் வேலியாகும். அவ் வேலியைப் போற்றாதார் சிவ கதியை எய்தாமை மட்டுமோ? அவகதி (அதோகதி)யும் எய்துவர்.
7. செம்மையுள் நிற்றல்:- `திரு நின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன்றனடி யார்க்குமடியேன்` (தி.7 ப.39 பா.4) `சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பவர்` `செம்மையாய சிவகதி சேரலாம்` `சிந்தையுட் சிவமாய் நின்ற செம்மை` `நிவஞ்சகத்தகன்ற செம்மையீசன்` சிவ முத்தியே செம்மையாகும். அதில் நிற்றலாவது ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்கத் தூங்குதல்.
8. சிவகதி:- `செம்மையாய சிவகதி` `பாறினாய் பாவி நெஞ்சே பன்றிபோல் அளற்றிற்பட்டுத் தேறி நீ நினைதியாயிற் சிவகதி திண்ணம் ஆகும்` . உழவுக்குரிய வேலியும் பார்வையும் நீரும் களை கட்டுதலும், வித்தும் ஞானவுழவுக்குரிய நெறியில் முறையே தகவும் சிவக்காட்சியும் பொறையும், பொய்யொழிவும், பத்தியாம் மெய்ந்நெறியும் கூறப்பட்டன. அதன் விளைவு போல் இவ்வுழவின் விளைவு சிவகதி. சிவகதி:- சிவாநுபவம் சுவாநுபூதிகமாதல்.

பண் :

பாடல் எண் : 3

எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே. 

பொழிப்புரை :

எம்பெருமான்! என்று அடியேன் அழைத்த ஒன்றனையே அடியேனுடைய தகுதியாகக் கொண்டு என் உள்ளத்தில் புகுந்து நின்று எம் பெருமான் செயற்படுத்தச் செயற்பட்டு, என்னைச் செயற்படுத்தும் தலைவனை எனக்குள்ளேயே தேடித் திரிகின்ற, அடியேன் தன்னை இன்னான் என்று கண்டு கொண்ட பிறகு எம் பெருமான் என்னைத் தன்னுள்ளே மறையச் செய்வான் என்றால் எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றலேயன்றி அறிவற்ற அடியேன் வேறு யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

`எம்பிரான்` என்றதையே கருத்துட்கொண்டு, என் உள்ளே புகுந்து நின்று, எம்பிரான் என்னை இவ்வுலகில் உடம்பில் ஆட்டுகின்றான். யான் ஆடுகின்றேன். என்னுள்ளே உழிதருகின்றேன். என்னுள்ளே புகுந்து நிற்கும் எம்பிரான் பின்னை என்னைத் தன்னுள்ளே கரத்தல் செய்வான். செய்வான் எனில், எம்பிரான் என்று சொல்லின் அல்லால் ஏழையேன் என்செய்வேன்? எம்பிரான் என்றேன்; என்ற அவ்வொன்றனையே உளங்கொண்டு என் உள்ளே புக்குநின்றான். இங்கு என்னை ஆட்டுகின்றான், யான் ஆடுகின்றேன். ஆடி என்னுளே ஆட்டுவானைத்தேடி உழிதருகின்றேன். பின்னை என்னைத் தன்னுளே கரக்கும் என்றால், ஏழையேன் எம்பிரான் என்னின் அல்லால் மற்று என் செய்கேன்? முன்னீரடியிலே சீவபோத நிலையும் பின்னீரடியிலே சிவபோத நிலையும் உணர்த்தப்பட்டன. முன்னது உள்ளே தேடிய நிலை. பின்னது தேடிக்கண்டு கொண்ட நிலை. உழிதரல் - நான் ஆட என்னை ஆட்டுவான் யாவன் என்று உள்ளே தேடி யலைதல். பின்னை - தன்னை இன்னான் என்று கண்டுகொண்ட பின்னர். தன்னுளேகரத்தல் - `நான் என ஒன்று இல் என்று தானே எனும் அவரைத் தன் அடிவைத்து இல் என்று தானாம் இறை` (சிவஞான போதம். சூ. 9. அதி. 1. வெ. 1) நிலை. எம்பிரான் எனல் - அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாது எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றல். தன்னில் தன்னை ......அரியனே` (தி.5 ப.97 பா.29) `என்னை ஏதும் அறிந்திலன் எம் பிரான்....அறிந்தெனே` (தி.5 ப.91 பா.8) என்பவற்றை ஈண்டுக்கருதுக.

பண் :

பாடல் எண் : 4

காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப்
பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. 

பொழிப்புரை :

இந்த உடம்பையே கோயிலாகவும், உலகியலை நீக்கிய மனம் அடிமையாகவும், தூய்மை உடைய மனமே பரம்பொருள் தங்கும் கருவறையாகவும் எம்பெருமான் அருட்சத்தியான மனோன் மணியே அவன் இலிங்க உருவமாகவும் அமைய, அடியேனுடைய அன்பே நெய்யும் பாலுமாக அவ்விலிங்கமூர்த்தியை மனம் நிறைவு பெற அபிடேகித்துப் பூசிக்கும் அப்பெருமானுக்கு எங்கள் வணக்கங்களையே நிவேதனப் பொருள்களாகப் படைத்தோம்.

குறிப்புரை :

காயமே கோயில் ஆதல்:- `படமாடக் கோயில் பகவற் கொன்றீயின் நடமாடக் கோயில் நம்பற்கங்காகா.` `உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காளாமணி விளக்கே.` (தி.10 திருமந்.) புன்புலால் யாக்கை.... பொன் னெடுங் கோயில்` (தி.8 திருவா.) `ஓங்குடலம் திருக்கோயில் உள்ளிடம் உள்ளிடம்` (ஞானபூசாவிதி) கடிமனம் அடிமையாதல்:- சங்கற்ப விகற்பங்களைக் கடிந்த மனம் திருவடியை மறவாது நினைக்குந் தன்மையை அடைதல். வாய்மையே தூய்மையாதல்:- `தூஉய்மை என்பதவா இன்மை மற்றது வாஅய்மை வேண்டவரும்` (திருக்குறள் 364). `ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை. அவ்வவா இல்லாமைதான் மெய்மையை வேண்டத்தானே உண்டாம்.` `வீடாவது உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் (இது பாச வீடாகிய பாதிமுத்தியே சிவப்பேறாகிய மற்றைப் பாதிமுத்தியும் சேர்ந்தாற்றான் வீடு முற்றுப் பெறும்) ஆகலின், அதனைத் தூய்மை என்றும் காரணத்தைக் காரியமாக உபசரித்துத். தூய்மை என்பது அவாவின்மை என்றும் மெய்மையுடைய பரத்தை ஆகுபெயரான் மெய்மை என்றும் கூறினார். வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல் வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது! (பரிமேலழகர் உரை). மனமணியிலிங்கமாதல்:- `மனோன்மனி` என்பது மனமனி என்று குறிக்கப்பட்டிருந்து, அதை மனமணி எனப் பிழைபட எழுதியிருக்கலாம் போலும். என்னை? முன்னர் மனத்தை அடிமையாகக் குறித்ததால், மீண்டும் அம்மனத்தையே இலிங்கமாகக் குறித்தல் செய்யார். சிவபிரானுக்கு மனம் இலிங்கமாகாது. மணிலிங்கம், அணிலிங்கம், மணியிலிங்கம் என்று எவ்வாறு கொளினும் மனத்தொடு பொருந்தாது. சிவனுக்குச் சத்திமூர்த்தியாதலின் மனோன்மனியை மனமனி என்று குறித்தருளினார்போலும். சத்திமூர்த்தியாதலைச் சிவஞான சித்தி யா(300)ரில் `நாடுமிதயந்தானும்` எனத் தொடங்கும் திருவிருத்தத் தினுரையால் உணர்க. அதிற் சத்தி சிவலிங்க மூர்த்தியாதல் உணர்த்தப் பட்டது. நே + அம் = நேயம். நே - அன்பு. நெய்யும் பாலும் அகவழி பாட்டில் அன்பேயாகும். `விளைத்த அன்புமிழ்வார்போல விமலனார் முடிமேல் விட்டார்` எதனை? `வாயின் மஞ்சன நீர் தன்னை` எவர்? `சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார்` (தி.12 பெரிய புராணம். 123-4) `அன்பாம் மஞ்சன நீர்` (திருக்களிறு. 44) `அன்பு அன்றித் தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்வதெல்லாம் சார்த்தும் பழம் அன்றேதான்` (திருக்களிறு. 55) என்றதால், `நேயமே` என்று பிரி நிலையும் தேற்றமும் உணர்த்தும் ஓகாரத்தால் உணர்த்தினார். நிறைய ஆட்டி என்றதைச் சிவபூசை புரிவார் எல்லாரும் சிந்தித்தல்வேண்டும், போற்று அவி காட்டினோம், அவி - நிவேதனப் பொருள், இருக்கு ஆட்டினோம் என்றாருமுளர். போற்றாகிய அவி என்று உருவக மாக்கலும் பொருந்தும்.

பண் :

பாடல் எண் : 5

வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டா யதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டே னின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா வென்னென நன்மை தானே.

பொழிப்புரை :

நீலகண்டனே! வஞ்சனையான செயல்களில் ஈடு பட்ட கீழ்மகனாகிய அடியேனைத் தீநெறி கெட நன்னெறியில் ஈடு படுத்தி அஞ்சேல் என்று அடிமை கொண்டாய். அதுவும் உன் பெருமையை வெளிப்படுத்தும் செயலாகும். அடியேனோ உள்ளம் உருகி உன்னை என் உள்ளத்தில் நிலையாக வைக்கமாட்டாதேனாய் உள்ளேன். எனது நன்மை அதாவது நான் பெற்ற நன்மைதான் யாதோ?

குறிப்புரை :

நஞ்சிடம் கொண்ட கண்டா, வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டிற் பூட்டி, அஞ்சல் என்று (சொல்லி அபயம் அருளி) ஆண்டுகொண்டாய், அதுவும் நின்பெருமை அன்றே! நெஞ்சகம் கனியவும் வல்லேனல்லேன். நின்னை உள்(ளத்தில்) வைக்கவும் வல்லேன் அல்லேன். என்னுடைய நன்மைதான் (உனக்கு) என்ன உள்ளன? வஞ்சகம் - வலியவுள்ளம். வலிது + அகம் = வல்+து = என்பதன் மரூஉவே வஞ்சு. அகம் - உள்ளம். வன்னெஞ்சு. அதனை யுடைய புலையனேன். வழி - வேத சிவாகம நெறி; சரியாதி மார்க்கம். அற - இல்லையாக. பூட்டி - பூணுமாறு செய்து. அஞ்சல்:- `அபயம்` நெஞ்சகம் - உள்ளிடம். கனிய - பழுக்க. உள் - உள்ளுந்தொழிற் கருவி யாகிய மனத்தில். என் என நன்மைதான் - என்னையோ என நன்மை தான்? என நன்மை ஆறன்றொகை. என் - `எவன்` (வினா வினைக் குறிப்பு) என்பதன் மரூஉ. என்னால் உனக்கு நன்மைதான் ஒன்றும் இன்றியொழிந்தும் என்னைத் தொண்டிற் பூட்டி அஞ்சல் என்று ஆண்டு கொண்டாய். நெஞ்சகம் கனிதல் நின்னை உள்வைத்தல் ஆகிய இரண்டும் செய்யமாட்டாத என்னால் யாது நன்மை உனக்கு உண்டு? ஒன்றும் இல்லையே!

பண் :

பாடல் எண் : 6

நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி யாண்டாய்
ஆயிர மரவ மார்த்த வமுதனே யமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகி னோக்கிநீ யருள்செய் வாயே. 

பொழிப்புரை :

பல பாம்புகளை அணிகலன்களாக அணிந்த, அடியேனுக்கு அமுதம் போன்றவனே! நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கி விட்டாய். நீ அப்படித் தங்கியிருக்கவும் அடியேனுக்குத் துயரங்கள் ஏற்படுமாயின் அடியேனுடைய துயர நிலையை நோக்கி, அது நீங்குமாறு அருள் செய்வாயாக.

குறிப்புரை :

நாயினும் கடைப்பட்ட என்னை நன்னெறியைக் காட்டி ஆளாக்கொண்டருளினை. ஆயிரம் பாம்பினை ஆர்த்த அமுத மயமானவனே. என் நெஞ்சினுள்ளே நீயும் அமுதம் ஒத்து நிலாவினை. (அங்ஙனம்) நீ நிலாவி நிற்கவும் என்னை நோயவை சாரும் ஆயின், அவை சாராதவாறு கடைக்கண்ணோக்கம் வைத்துக் காத்தருள் செய்வாய்.` `நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே`.(தி.6 ப.95 பா.4)

பண் :

பாடல் எண் : 7

விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனு முயிர்ப்புளே வருதி யேனும்
கள்ளத்தே நிற்றி யம்மா வெங்ஙனங் காணு மாறே.

பொழிப்புரை :

விருப்பம் என்னும் பற்றுள்ளத்தாலே பாத்திரத்தில் இருக்கும் தேனைப் பருகுவதுபோல உன்னை வாயிற்புகுத்தி உண்ண இயலாதபடி நீ என் உள்ளத்தினுள்ளே இருக்கின்றாய் என்றாலும் என் மூச்சுக் காற்றினுள்ளே கலந்திருக்கின்றாய் என்றாலும் கண்களுக்குப் புலனாகாதபடி மறைந்திருக்கின்றாய். ஆதலின் உன்னைக்காணும் வழி இன்னது என்று வாய்விட்டுச் சொல்லச் சிறிதும் வல்லேன் அல்லேன்.

குறிப்புரை :

வாய்விட்டுச் சொல்லத்தான் சிறிதும் வல்லேன் அல்லேன். காணும் ஆறு எவ்வாறு? விருப்பு என்னும் வேட்கை என்றதால், இரண்டும் வேறல்லாமை பெறப்பட்டது. விருப்பால் வாய் மடுத்துண்டிடாமே கள்ளத்தே நிற்றி; உள்ளத்தே நிற்றி; உயிர்ப்புள்ளே வருதி. அவ்வாறு நின்றும் வந்தும் யான் காணும் ஆறு வெள்ளத்தே நில்லாமல், கள்ளத்தே நிற்கின்றாய். அங்ஙனம் கள்ளத்தே நின்றால் யான் எங்ஙனம் காணும் ஆறு? வள்ளம் - கிண்ணம். வள்ளத்தேன் போல வாய்மடுத்துண்டிடாமல்:- `மழக்கையிலங்கு பொற்கிண்ணம் என்று அலால் அரியை என்று உனைக்கருதுகின்றிலேன்` (தி.8 திரு வாசகம்) என்புழிப் பொற்கிண்ணத்தின் பெறலரும் பெற்றியும் விலையும் மழவறியாது என்பதும் அஃது அதன் கையிற் பொருந்தியவாறு இறைவன், மணிவாசகர் உணர்விற் பொருந்தி நின்றதும் அதனால், அரிதின் முயன்று பெறாத எளிமையும் புலனாகும். நம் அப்பர்க்கு, தம் உள்ளத்தே நின்றும் உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கு வந்தும், வள்ளத்தேன் போல வாய்மடுத்துண்ணும் வண்ணம் எளிதெய்த வெள்ளத்தே நில்லாது, அரிதின் எய்தவும் இயலாதவாறு கள்ளத்தே நிற்கின்றான் இறைவன். `என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே.` `கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்து தான் நோக்கி நக்குவெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே` என்னுந் திருவாக்குக்களிலும், உள்ளத்து நிற்றல், உயிர்ப்புள் வருதல், கள்ளத்தே நிற்றல், கூறப்பட்டமை உணர்க.

பண் :

பாடல் எண் : 8

ஆசைவன் பாச மெய்தி யங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா வுழந்துநா னுழி தராமே
தேசனே தேச மூர்த்தீ திருமறைக் காடு மேய
ஈசனே யுன்றன் பாத மேத்துமா றருளெம் மானே. 

பொழிப்புரை :

ஆசை என்ற கயிற்றால் கட்டப்பட்டு இயக்கப் படுதலின் மேல் உலக ஆசையால் ஒரு பக்கமும், இவ்வுலக இன்ப நுகர்ச்சி விருப்பினால் வேறொரு புறமுமாகச் சலனப்பட்டு ஒன்றும் உறுதியாகச் செய்ய இயலாதேனாய் வருந்தி நான் சுழலாதபடி, பேரொளி உடையவனும், எல்லா உலகிற்கும் தலைவனும் திருமறைக் காட்டில் விரும்பி உறைந்து உயிர்களை ஆள்பவனும் ஆகிய உன் திருவடிகளைப் போற்றும் செயலிலேயே அடியேன் ஈடுபடுமாறு அருள் செய்வாயாக.

குறிப்புரை :

ஆசையாகிய வலிய பாசம். `ஆசாபாசம்` எனினும் வழக்குண்மை ஓர்க. ஆசை - பற்று. பாசம் - கட்டு. `ஆசையெனும் பாசத்தால் ஆடவராம் சிங்கத்தை வீசு மனையாந்தறியில் வீக்கியே - நேசமிகும், மாயா மனைவியொடு மக்கள் எனும் வெறிய நாயாற் கடிப்பித்தல் நாடு.` (நீதி வெண்பா) அங்கு - அவ்வுலகம். இங்கு - இவ்வுலகம். உயிர்கள் செல்லத்தக்கவிண், நரகு முதலியவற்றைச் சேய்மையிடத்துச் சுட்டாலும் அவை தாம் இருக்கும் மண்ணுலகை அண்மையிடத்துச் சுட்டாலும் குறித்தார். எங்கும் எவரும் உறுதல் ஊசலாட்டுண்ணலாயிற்று. மண்விண் நரகுறலாற் பயனொன்று மில்லை யென்றுணர்ந்தாரே வாளாவுழத்தலை உணர்ந்துரைப்பர். உழிதரல் - திரிதல். அலைதல். உழிதராமே - திரியாதே, அலையாதே. தேசனே - தேயுரூபியே. தேசமூர்த்தி:- `உலகு அவனுரு` (சித்தியார்). திருமறைக்காடு மேய ஈசனே எம்மானே, உன் திருவடியைப் புகழும் வண்ணம் அருள். ஊசலாட்டு:- `உமையாளொருபாகனை அருத்தியாற் சென்று கண்டிட வேண்டுமென்று ஒருத்தியார் உளம் ஊசலதாடுமே` (தி.5 ப.40 பா.5) `பாசங் கழன்றார் பசுவுக்கிடம் பதியாம் ஊசல் வடம் கழன்ற தொவ்வாதோ நேசித்த பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் பாட்டுமக்கோ மற்றைச் சமயமெங்குமாம்` (ஒழிவிலொடுக்கம்).

பண் :

பாடல் எண் : 9

நிறைவிலே னேச மில்லே னினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும் வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய் கொன்றைசேர் சடையி னானே. 

பொழிப்புரை :

கொன்றைப்பூவினைத் தரித்த சடையை உடையவனே! எதிலும் மனநிறைவு இல்லாதேனாய், யாரிடத்தும் உண்மையான அன்பு இல்லேனாய், உன்னை விருப்புற்று நினைத்தல் இல்லேனாய், இருவினையால் கட்டப்பட்ட சூழலிலே அகப்பட்டுத் தடுமாறும் அடியேன் அதனை விடுத்துப் புறப்பட்டு வெளியேறும் நிலையை என் தலைவனாகிய நீ எனக்கு அருளுவாயாக. இவ்வுடலாகிய இருப்பிடத்தில் இருக்கும் அடியேன் யாது செயற்பாலேன்? உன் திருவடிகளை முன் நின்று போற்றி வழிபடும் திறத்தில் குறைபாடு ஏதும் இல்லேனாம் வகையில் என் குற்றங்களை எல்லாம் போக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

நேசம் - அன்பு. நினைவு - (தியாநம்). இடைவிடாது சேர்தல். வினையின் பாசம் - (கருமபந்தம்). இருவினைத்தளை. மறைவு - சூழல். வினை மறைவின் அகப்பட்டு இழியும், யான் அதனினின்றும் புறப்பட்டு ஏறும் வகையை அருள்வாய். என் எம்மானே! சிறையில்லேன் - சிறையாகிய (உடல்) இல்லத்தில் இருக்கின்ற யான். செய்வது யாது? திருவடிகளை வாழ்த்திப்புகழ ஒன்றும் குறை பாடில்லேன். கொன்றைச் செஞ்சடையினானே! அடியேன் குற்றம் போக்கியருள்வாய்.

பண் :

பாடல் எண் : 10

நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன வஞ்சு பூத மவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ கிளரொளிச் சடையி னீரே. 

பொழிப்புரை :

செந்நிற ஒளி வீசும் சடையை உடைய பெருமானே! நீதி உணர்வு இல்லாத கூற்றுவன் வந்து நெருங்கும்போது உம்மை அறிவதற்கு உடன்படாது என்னைவருத்தும் ஐம்பொறிகளும் என்னை வருத்துவதனைப் பொறுக்க இயலாதேனாய் உயிருக்குத் துணையாக உதவாத இந்த மனித வாழ்விலே பல குற்றங்களும் நிகழ் கின்றமையின் இதனை இகழ்ந்து இப்பிறவிப் பிணியை அடியோடு அழித்தொழிக்க வேண்டி உம் அருளை வேண்டுகின்றேன்.

குறிப்புரை :

கிளர் சடை, ஒளிச்சடை. சடையினீரே. நடுவு இல்லாக் காலன் - உள்ளத்தாமரையில் இல்லாத காலன். காலனை எவ்வுயிரும் எண்ணாமையின் இங்ஙனம் கூறினார். நணுகுதல் - குறுகுதல். அடியேன் ஆண்டவனாகிய - நின்னை அறிய அஞ்சு பூதங்களும் ஒன்றா. ஒன்றாமை - ஒண்ணாமை. மரூஉ. ஒன்றார் ஒன்னார் என்றலும் உண்டு. ஒன்று(ளே) ஒண்ணு(ளே) என்றலும் உண்டு. கன்று கண்ணு, பன்றி - பண்ணி. தின்று - திண்ணு. முதலிய மரூஉக்களிலும் அத்திரி புண்மை உணர்க. அடுதல் பூதகாரியம். அவை - அப்பூதங்கள். ஆற்றல் - பொறுத்தல். எதிர்ப்புத்தள்ளல். பாங்கிலாமனிதர் வாழ்வு குற்றம் பலவும் படுவன. இப்பிறவி கெடுவது.

பண் :

பாடல் எண் : 1

கடும்பக னட்ட மாடிக் கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக் கில்லந் தோறு முழிதரு மிறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங் கோவண மரைய தேயோ.

பொழிப்புரை :

நடுப்பகலிலே கூத்தாடிக்கொண்டு கையில் ஒரு மண்டையோட்டினை ஏந்தி வழங்கப்படும் பிச்சைக்காக வீடுகள் தோறும் உலாவித்திரிகின்ற பெருமானே ! இமவான் மகளாகிய சிறந்த அணிகலன்களையும் சுருண்ட மெல்லிய கூந்தலையும் , வளைந்த காதணியையும் உடைய பார்வதி உமக்கு மனைவியாக வந்தபோதும் , இடுப்பில் கோவணத்துடன்தான் இருந்தீரோ ?

குறிப்புரை :

` கடும்பகல் நட்டம் ` ` நள்ளிருளில் நட்டம் ` எனும் இரண்டும் புரிந்தருள்பிரான் நம் முழுமுதல்வன் . ` மானார் ... பகல் நட்டம் ஊனார் தருமுயிரான் ` ( தி .1 ப .13 பா .7) என்றும் எங்கும் எவ் வுயிருள்ளும் எப்பொருளிலும் அத்திருக்கூத்து நிகழ்தலின் , கடும் பகலும் நள்ளிரவு மட்டும் சிறப்பாக எடுத்துரைத்தல் என்னை யெனின் , இறைவன் ஆட்டுவிப்பவன் உயிர்கள் ஆடுவன . ஆட்டுவிப்பானுக்கு ஆட்டம் ஒழிவிலது . ஆடுவனவற்றிற்கும் அஃதே . ஆடுதல் உயிர்க்கு நல்வாழ்வு . ஆட்டுதல் பேரிரக்கத்தின் விளைவு . அவனது பேரிரக்கம் கடும் பகலிலும் உளது . நள்ளிரவிலும் உளது . எத்தொழில் புரிவாரும் கடும் பகலிலும் நள்ளிரவிலும் ஓய்வுறுவர் . கடவுளோ கடும் பகலிலும் ஆடுகின்றார் . துஞ்சிருளிலும் ஆடுகின்றார் . ஆட்டத்தின் பயனோ அவர்க்கில்லை , எல்லாப் பயனும் உயிர்கட்கேயாம் . ஆதலின் , ஓய்வுறும்போதிலும் ஓயாது கூத்தாடும் சிறப்பால் அவ்விரண்டும் விதந்தோதப்பட்டன . இடும்பலிக்கு இல்லந்தோறும் உழிதருதல் :- ` இல்லங்கள் தோறும் எழுந்தருளியபரனே .` ( தி .8 திருவாசகம் ) நெடும் பொறைமலையர் - இமாசலராசனார் . நெடுமலை . பொறைமலை . நெடும் பொறையுமாம் . அறை , பொறை , குன்று , மலை , பிறங்கல் , விலங்கல் முதலியவை தம்முள் வேறுபாடுடையன . அவற்றின் காரணத்தை உணரின் அவ்வேறுபாடு விளங்கும் . மலையர் பாவை - இமாசலகுமாரி . நேரிழை - நேரிய இழையினாள் , இழை - பணி , பூண் பாவை . இழை , கூந்தல் , குழை எல்லாம் உமாதேவியைக் குறித்தவை . பாவையும் , இழையும் , கூந்தலும் குழையும் என்னற்க . பாவை போல்வாளும் நேரிழையாளும் , நெறிமென் கூந்தலாளும் , கொடுங் குழையாளும் ஆகிய ஒருத்தி ( தனி முதல்வி ) புகுந்த அன்றும் அரையிற் கோவணம் இருந்ததோ ? போகியான பின்னரும் யோகியின் கோலம் பொருந்துமோ ?

பண் :

பாடல் எண் : 2

கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறும்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு விருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப் புலியுரி யரைய னாரை
ஏவணச் சிலையி னாரை யாவரே யெழுது வாரே.

பொழிப்புரை :

கோவணத்தை உடுத்து , கொடிய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி , தீப்போன்ற செந்நிற உடம்பில் சாம்பலைப் பூசி , அழகிய வடிவினராய் , செந்தாமரைக் காடு அனைய நிறத்தை உடையவராய் , புலித்தோலை இடையில் அணிந்தவராய் , அம்புக்கு ஏற்ற அழகிய வில்லை உடையவருமான பெருமானின் வடிவழகினை ஓவியத்தில் எழுதவல்ல ஆற்றல் உடையவர் யாவர் ?

குறிப்புரை :

அரையிற்கோவணம் உடுத்த சிவயோகரூபத்தையும் , கச்சாகப் பாம்பணிந்த வடிவத்தையும் , பவளம் போலும் செம் மேனியில் வெண்ணீறு சண்ணித்த திருவுருவத்தையும் , செந்தாமரைக் காடனைய அழகிய வண்ணத்தையும் , புலித்தோலை அரையில் உடைய தோற்றத்தையும் , மேருவில்லேந்திய மெய்யையும் எழுதிக் காட்டவல்லார் யாவர் ? கோவணவுடையும் புனித நீறும் பிறவும் உடைய வேடம்பூண்டு வந்த முதல்வனை நாவலூரர் தொடரலுற்றார் , மாலயன்தொடர அரிய ` ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்டவல்லார் ? ` ( தி .12 பெரிய . தடுத்தாட் . 44) தொடர்ந்தெட்ட வல்லமை யில்லாவிடினும் , பார்த்த வடிவைப் பார்த்தவண்ணம் எழுதுதலும் அரிதோ ? ` இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக்காட்டொணாதே !` ` அப்படியும் ` ` அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக்காணின் ` அகலாது காணலாம் . கண்டவாறு காட்டலாம் . எழுதியும் காட்டலாம் . அக் கண்ணில்லாமையால் , ஏவணச்சிலையினாரை யாவரே எழுத வல்லார் ! கண்டால்தானே எழுதலாம் ? ஏ - அம்பு . சிலை - வில் , மேருவில் . ` யாவரே எழுதுவார் ` என்றது எழுதவல்லார் ஒருவரும் இலர் என்றதாம் .

பண் :

பாடல் எண் : 3

விளக்கினார் பெற்ற வின்ப மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கினன் மலர்தொ டுத்தாற் றூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே.

பொழிப்புரை :

திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும் . ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால் , தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும் . கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர் . எல்லையில்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன .

குறிப்புரை :

விளக்கினார் - திருக்கோயிலைத் தூய்மையுறத் திருவலகினால் , துகள் முதலியவற்றை ஒரு சேரக் கூட்டியவர் , அவர் பெற்ற இன்பத்தினளவிற் பத்து மடங்கு மெழுகினார்க்கு வாய்க்கும் . மெழுகு :- முதனிலை , மெழுக்கு தொழிற்பெயர் . மெழுக்கினால் - மெழுகுதலால் . இதனை நோக்கி ` விளக்கினால் ` என்பாருமுளர் . அது ` விளக்கினாற் பெற்ற வின்பம் ` என்று பாடம் இருப்பின் அமையும் . அவ்வாறின்மையால் அப் பொருள் கூறல் பொருந்தாது . பதிற்றி - பத்து மடங்கு . துளக்கு - ஒளி . துளக்கின் நல்மலர் - ஒளியுடைய இனிய நல்ல பூக்கள் . துளக்கினன் என்று ஆண்பாற்பொருள் கோடல் பொருந்தாமை , ` விளக்கினார் ` ` இட்டார் `, ` சொன்னார் ` என்பவற்றை நோக்கி யுணர்க . தொடுத்தால் , அத் தொடையின் பயனாகத் தூயவிண் ( சிவலோகம் ) ஏறல் ( ஊர்த்துவகதியிற் சென்று அடைதல் ) ஆகும் . ` தூயவிண் ` என்றதால் ஏனையவிண் விலக்கப்பட்டன . விளக்கு - திருவிளக்குக்கள் . திருவிளக்கீடு . இட்டவர் எய்தும் பேறு . பெறுவது - பேறு ( இலாபம் ). சொல்லின் - ஆய்ந்துரைத்தால் . சொல் இல்லாத மெய்ஞ்ஞெறி - உண்மைவழி , பொய்வழிகளை நீக்கிற்று . சரியை , கிரியை , யோகம் ஆகிய சைவத்தவங்களின் நெறியே மெய்ந்நெறி . அவையே ` இறப்பில் தவம் .` ஏனைய இறப்புள் தவம் . அத்தவநெறி பொய்ந்நெறி , இறப்பில் தவத்தின் எய்துவதே ஞானம் . ` மேற்சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோக்ஷத்தைக் கொடாவாகலான் ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய் தவத்தான் ஞானம் நிகழும் என்றது ` ( சிவஞான போதம் சூ .8. அதி .1 .) இதனால் , தவநெறியும் , தவங்களும் , நன்னெறியும் , அது ஞானமாவதும் , ஞானமாகிய நன்னெறியின் வேறாவன வீடு பயவாமையும் குறிக்கப்பட்டன . ` தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே ` ( தி .7 ப .13 பா .1-9) ` ஞானமெய்நெறி தான் யார்க்கும் நமச்சிவாயச் சொலாம் ` ( தி .12 பெரிய . திருஞான . 1248) ` நன்னெறிக்குய்ப்பது ` ( சம்பந்தர் ). கீதம் - பாட்டு ; தோத்திரம் . ` தொடுக்குங் கடவுட் பழம்பாடல் ` சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறு அளப்பு இல . அருளும் வகை அளவிலாதன . ` ஆட் பாலவர்க்கு அருளும் வண்ணமும் ..... அளவில்லை .`( தி .3 ப .54 பா .4). இத்திருப்பாடல் , திருக்கோயிலிலே திருவலகிடுதல் , திருமெழுக்கிடுதல் , திருப்பள்ளித்தாமம் தொடுத்தல் , திருவிளக்கிடுதல் , சிவகீதம் பாடுதல் என்பன செய்தல் வேண்டும் என்பதும் , அதனதன் பயன் ஒன்றினொன்று பல்கும் என்பதும் உணர்த்திற்று . இதனைச் சரியா மார்க்கத்தது என்று எள்ளாது மேற்கொண்டு பயனெய்தற்பாலர் ஏனையமார்க்கத்தில் ஒழுகும் பலரும் . ஈண்டுத் திலகவதியார் , சங்கிலி நாய்ச்சியார் , சுந்தரமூர்த்தி சுவாமிகள் , நமி நந்தியடிகள் நாயனார் புராணங்களை உணர்க .

பண் :

பாடல் எண் : 4

சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மா னானல்வெள் ளூர்தி யான்றன்
மந்திர நமச்சி வாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையு நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே.

பொழிப்புரை :

பிறையைச் சடையில் சூடி , எல்லோருக்கும் நன்மை செய்யும் பெருமானாய் , சாம வேதம் ஓதுபவனாய் வானத்திலுள்ள தேவர்களுக்கும் தலைவனாய் , பெரிய வெண்ணிறக் காளை வாகனனாய் உள்ள பெருமானுடைய திருவைந்தெழுத்தை ஓதி , திருநீற்றை அணிந்தால் கொடிய நெருப்பில் இடப்பட்ட விறகு போல நம்முடைய நோய்களும் , வினைகளும் வெந்து சாம்பலாகும் .

குறிப்புரை :

சந்திரற் சடையில் வைத்த சங்கரன் - சந்திரனைச் சடையில் வைத்து , அவனுக்கு என்றும் வளராத தேயாத வாழ்வுண்டாக்கி யின்பஞ் செய்தவன் . சங்கரன் - இன்பஞ்செய்பவன் . சாம வேதி - சாமவேதப் பாடலன் . அந்தரம் - விண் . அமரர் பெம்மான் - தேவாதி தேவர்க்கும் பெருமகன் . ` தலையாய தேவாதி தேவர்க்கு என்றும் சேயான் `, ஆன்நல்வெள் ஊர்தியான் ; நல்வெள் ஆன் ஊர்தியான் . ` நரை வெள்ளேறு ஒன்றுடையான் `. மந்திரம் நமச்சிவாய ஆக . நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்து மந்திரம் ஆகத் திருநீறு அணியப் பெற்றால் இரு வினையும் அவ்வினையால் வரும் இன்ப துன்பங்களும் வெந்தீயிலே விறகிட்டால் வெந்தொழிதல்போல வெந்தொழியும் . அணிய - அழகுறப்பூச . மாயாவாதி முதலோர் பூச்சு அணிதலாகாது . சிவாகம விதிப்படி பூசுதலே அணிதலாகும் . இடத் தோள் முதலாக வலத்தோள் வரை வலக்கையாலொரே யீர்ப்பாகப் பூசும் வன்மையினர் இன்றும் உளர் . வெவ்வழல் விறகிட்டு :- உவமை . இட்டு - இட்டாற்போல . அன்றே - அப்பொழுதே . ` சிவாயநம ` என்று நீறணிந்த அப்பொழுதே தருவாய் சிவகதி என்று வேண்டிப் பெறலாம் . காலம் இடையீடுபடாமை , அன்றே வெந்தறும் வினையும் நோயும் என்றவாற்றால் உணர்க . ` விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே .` ( தி .4 ப .11 பா .3) என்பது ஈண்டுக் கருதற்பாலது . பண்ணியவுலகினில் - மாயா காரியவுலகில் . பயின்ற பாவம் - வினையும் நோயும் . இரண்டிலும் திருவஞ்செழுத்து வேறாகாமையும் ஏனையவும் ஒன்றுபடுதலுணர்க . ` சந்திரற் சடையில் ` என்றது இரண்டனுருபு உயர்திணையில் தொகுதல் , பொருள் வேறுபாட்டைத் தருதலின் , அதனைத் தவிர்க்க . சந்திரன் சடையில் வைத்த எனின் . வைத்தவன் சந்திரனாவான் . சடையில் வைக்கப்பட்டவன் சந்திரன் எனவேண்டி , னவ்வொற்றை றவ்வொற் றாக்குவது பாவலர் மரபாஞ் செய்யுள் வழக்கு நோக்கியதோரிலக்கண விதி . இதனை யுணரமாட்டாதார் இக்காலத்தில் , இத்தகைய தொடர்களைப் பிரித்தெழுதிப் பொருள் வேறுபாட்டிற்கு இடமுண்டாக்குகின்றனர் . வேதி :- ` வேதி தொடர .` ( தி .4 ப .4 பா .9) ஊர்தி - ஊருங் காரணத்தின் எய்திய பெயர் . அமரர் - விருப்பர் ; இறப்பிலார் .

பண் :

பாடல் எண் : 5

புள்ளுவ ரைவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்க டம்மை முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே.

பொழிப்புரை :

வேடர்களும் , திருடர்களும் போன்ற ஐம்பொறிகளும் என் உள்ளத்தில் புகுந்து நின்று மகிழ்வோடு துள்ளிக் கொண்டு , அடியேன் தூய வழியிலே செயற்பட ஒட்டாமல் என்னைக் கொள்ளையடிக்கின்றன . தீமை புரிவதில் நுண்மை உடைய அவற்றைச் சிவபெருமானுடைய திருவடி நிழலிலே , அவை காணாதபடி மறைந்து நின்று சிவஞானம் என்னும் அம்பினால் எய்து அழித்து விடலாம் .

குறிப்புரை :

புள்ளுவர் ஐவர் கள்வர் :- வேடரும் கள்வரும் ஆகிய ஐவர் . ` ஐம்புலவேடர் ` ( சிவஞான போதம் . சிவஞான சித்தியார் ). புனத்திடை என்பது ஈண்டுப் புந்தியில் என்க . அவரைவரும் புந்தியிற் புகுந்து நின்று துள்ளுவர் ; சூறை கொள்வர் ; தூநெறி விளைய வொட்டார் . சூறை - ஆறலைத்தல் , கொள்ளை . ` மானிலத் துயிர் சூறையிட்டருந்துற ` ( உபதேச காண்டம் . அயமுகி . 12) ` ஈறில் துன்பம் எனுங் கொடுங் கானகம் சூறை யாடுஞ்சுடரென ` ( வேதாரணிய புராணம் . தலவிசேட . 7. ) தூநெறி - திருவருள்வழி . முள்ளுடை யவர்கள் தம்மை - தீமை புரிவதில் நுண்மை ( கூர்மை ) யுடைவர் களாகிய அவ்வைம்புல வேடரை . முக்கணான் பாத நீழலுள்ளிடை மறைந்து நின்று அங்குணர்வினால் எய்யலாம் :- அவர் ஐவர் . அவர் செய்யுந் தீமையோ அளவிலாதது . அவற்றை அழித்துத் துன்ப நீக்கம் பெற நம்மையாளும் நாயகனான முக்கண்ணனே அமையும் . அவர் நம்மைச் சாராதிருக்குமாறு மறைந்து நிற்க அவன் திருவடி நீழல் உண்டு . நாம் காணாமல் மறைந்து நின்று நம்மை அவர் அம்பால் எய்யுமாறு போல , நாமும் முக்கணான் பாத நீழலுள்ளிடை மறைந்து நின்று , அவரைச் சிவஞானத்தால் எய்து வெல்லலாம் . உணர்வு - சிவஞானம் . ஒருவிழி தீயால் துள்ளலை யடக்கலாம் . ஒரு விழி நிலாவால் இருளை நீக்கிச் சூறைகொள்ளலை விலக்கலாம் . ஒருவிழி சுடரால் இருளை நீக்கி ( அருள் ) நெறியைக் காட்டலாம் . நம் மும்மலமும் போக்க முக்கண்ணுடையான் எனலுமாம் . மலமகன்றால் , புள்ளுவர் துள்ளல் எது ? பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி . 65.

பண் :

பாடல் எண் : 6

தொண்ட னேன்பிறந்து வாளாத் தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும் பெரியதோ ரவாவிற் பட்டேன்
அண்டனே யமரர் கோவே யறிவனே யஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடுந் திகழ்தரு சடையி னானே.

பொழிப்புரை :

தேவனே ! தேவர்தலைவனே ! முக்காலமும் அறிபவனே ! தெளிந்த அலைகளை உடைய கங்கையைச் சூடிய செவ்வொளி விளங்கும் சடையனே ! உன் அடியவனாகிய யான் , மனிதனாகப் பிறந்து வீணாகப் பழைய வினைகளாகிய குழியிலே விழுந்து இந்த உடம்பைச் சுமந்து கொண்டு நாள்தோறும் பெரிய ஆசையில் அகப்பட்டுத் தடுமாறுகின்றேன் . அடியேனை அஞ்சேல் ! என்று அருளுவாயாக .

குறிப்புரை :

இத் திருமுறையில் , சிற்சில திருப்பதிகங்களுள் சிலபல திருப்பாடல்கள் கிடைத்தில . சில ஒன்று போலமைந்து சிறிது வேறுபடுகின்றன . பற்பல இடங்களிற் சொல்லும் தொடரும் . குறைதல் , மிகுதல் , வழுவுதல் உற்றுள்ளன . தி .4 ப .67 பா .2 திருப்பாடற்கும் இதற்கும் சிறிதே வேறுபாடாகும் . இவ்வாறே ( தி .4 ப .113 பா .4) எண்ணுடையவற்றின் முதலடியில் உள்ள ஐயாறு என்பதில் ` ஐ ` இல்லை . முதலடியீற்றில் உள்ள ஆறெழுத்தும் இல்லை . ` செஞ்சடையான் ` என வேறு ஆறெழுத்துள்ளன . தொண்டனேன் எனத் தொடரும் இதனுள் , ` வாளா ` என்புழி வல்லெழுத்துமிகையே . ( ? ப .67 பா .2) நைந்து பேர்வதோர்வழி காணாமையும் இதில் நாளும் பெரியதோரவாவிற் பட்டமையும் உணர்த்தியவாறுணர்க . அங்குள்ள அண்டவாணனே இங்குள்ள அமரர்கோவாவான் . பழனஞ்சூழ்ந்த திருக்கொண்டீச் சுரத்தானே என்ற தொடரளவாய்க் கங்கை சூடுந் திகழ்தரு சடையினானே எனல் நின்றது . அருளாளர் , ` இது முன்வந்தது , மீண்டும் அதுவே வருகின்றது ` என்னும் ஏகதேச ஞானத்தை நீங்கியவராதலின் இன்னோரன்னவை அவர் திருவாக்கில் வருதல் இயல்பு . பாவலருட் பலர் மறதியாற் பாடுதல் போல்வதன்று இது . ` தொல் வினைக் குழி .` ( தி .4 ப .79 பா .6).

பண் :

பாடல் எண் : 7

பாறினாய் பாவி நெஞ்சே பன்றிபோ லளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயிற் சிவகதி திண்ண மாகும்
ஊறலே யுவர்ப்பு நாறி யுதிரமே யொழுகும் வாசல்
கூறையான் மூடக் கண்டு கோலமாக் கருதி னாயே.

பொழிப்புரை :

தீவினையை உடைய நெஞ்சமே ! பன்றியைப் போல இந்த உலகவாழ்வாகிய சேற்றில் அகப்பட்டு , பல திசைகளிலும் ஓடுகின்றாய் . உப்பு நீர் ஊறி நாற்றமெடுத்துக் குருதி ஒழுகும் துவாரங்கள் மேற்கூரையாகிய தோலாலே மூடப்பட்டு உள்ள உடம்பின் நிலையை நீ அழகாகக் கருதுகிறாய் . இதன் புன்மையைத் தெளிந்து நீ இறைவனை விருப்புற்று நினைப்பாயானால் உனக்கு நிச்சயமாகச் சிவகதி கிட்டும் .

குறிப்புரை :

பாறினாய் - ஓடினை நீங்கினை ; ` பயிலுறு பாவங்கள் பாறப்பெற்றுளாய் ` ( சிவரகசியம் - சிவனடியார் . 23) ` பட்டிமை யுருக்கள்கொடு பாறலரிது `. ( கந்த புராணம் . சத முகன் . 7) அடிப் பறிந்தனை என்னும் வழக்கும் ஈண்டுப் பொருந்தும் . ` பது முகனைக் கொடுபோகும் பத்து முகன்போற் பாறுதலும் ` ( சேது புராணம் . வேதாள . 14) என்புழிப் போலக்கொண்டு , சிவனடிக்கீழ் நீங்காது நின்று நினைந்து சிவகதியைத் திண்ணமாக நண்ணல் இன்றி ஓடினை எனலே சிறந்தது . பாவமே பயின்ற நெஞ்சம் பரனடியைத் தேறலும் நினைதலும் செய்யமாட்டாது என்பார் ` பாவி நெஞ்சே` என்றார் . அளறு - சேறு . அளற்றிற் பட்டுத்தேறுதல் பன்றிக்கில்லை , நெஞ்சிற்குள தாகலாம் . படுதற்கு மட்டும் பன்றி ஒப்பாயிற்று . தேறுதற்கன்று . மேலோர் நெஞ்சம் கல்வி கேள்விகளால் தேறும் . கயவர் நெஞ்சிற்குப் பட்டுத் தேறலும் அரிது . ` உற்றலாற் கயவர் தேறார் என்னுங் கட்டுரையோ டொத்தேன் ` ( தி .4 ப .31 பா .8). பட்டுத் தேறி :- ` பட்டறி , கெட்டறி , பத்தெட்டிறுத்தறி ` ( வழக்கு ). நினைதி - நினைவாய் . நினைவாயானாற் சிவகதி ( தி .5 ப .43 பா .8) திண்ணம் ஆகும் எனவே , நினையாயாயின் . பவகதி பாறா தென்றாராயிற்று . ஊறல் - வாய் முதலியவற்றில் ஊறும் நீர் . உவர்ப்பு - உப்புறைப்பு . வெறுப்பு . உவர்ப்ப ( - வெறுக்க ) என்று பாடம் இருந்ததோ ? உதிரம் - குருதி . வாசல் :- தி .4 ப .18 பா .9; ப .69 பா .6 ` ஊற்றுத் துறை ஒன்பதுள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போதுணர மாட்டீர் ` ( தி .6 ப .93 பா .5) கூறை - தோற்கூறை . நூற்கூறை . கோலம் - அழகு .

பண் :

பாடல் எண் : 8

உய்த்தகா லுதயத் தும்ப ருமையவ ணடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன் வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கண் மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று வாடிநா னொடுங்கி னேனே.

பொழிப்புரை :

இராவணன் , கயிலை மலையை எடுக்கத் தொடங்கிய காலத்தில் , பார்வதிக்கு ஏற்பட்ட அச்சம் தீர , பெருமான் தன்னுடைய கால் விரலை வைத்து அழுத்த அதற்கு இலக்காக இராவணன் , தன் பெரிய தலைகளைக் கொடுத்தான் . பிறை சூடிய மூர்த்தியாகிய பெருமானுடைய , வண்டுகள் மொய்க்கும் நறுமணம் உடைய மலர் போன்ற திருவடிகளை அப்பெருமான் கரடுமுரடான என் தலைமீது வைத்தால் அத்திருவடிகள் வருந்துமென்று அவை என் தலையைச் சாராதவாறு நான் தாழ்ந்து ஒடுங்கினேன் .

குறிப்புரை :

` பாவகஞ் செய்து தீட்டிப் பட்டிமை யோலையுய்ப்பான் ` ( திருவிளையாடல் மெய்நா . 13) உய்த்தகால் - ( இராவணன் திருக்கயிலையை எடுத்தலாகிய தொழிலைச் ) செய்த காலம் . உய்த்தல் - செய்தல் ` உய்த்திடு செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை ` ( சிவஞானசித்தியார் . சூ . 2:- 18) உதயம் - தோற்றம் . காலுதயத்து - காலோதயம் , காலத்தோற்றம் . காலத்தோற்றத்தில் , கயிலையை எடுத்த காலத்தில் என்றபடி . உம்பர் - அம்மலைமேல் . உய்த்தகால் உதயத்து என்பதற்கு எண்ணிலாவுயிர்களை வீடுறுத்திய திருவடியால் உதைத்த போது என்றுரைத்தலும் பொருந்தும் . உதையம் என்பது உதயம் என்றாதல் பயின்றதே ; அருகியதன்று . ` அ ஐ முதலிடையொக்குஞ் சஞயமுன் ` ( நன்னூல் ). ஐகாரம் அகர மாதலைப் பல சொற்களிற் காணலாம் . ` திருவிரலால் உதைகரணம் செய்துகந்த சிவமூர்த்தி ` ( தி .4 ப .13 பா .10) என்று இராவணனை உதைத்த வரலாறு குறித்தே முன்னுள்ளது காண்க . உய்த்தல் - வீடு பெறுத்தல் . ` உய்த்த வியோம ரூபர் ` ( சதாசிவ ரூபம் . 29) வைத்தகால் - ஊன்றிய திருவடி . தி .4 ப .49 பா .10; ப .69 பா .10 ; ப .70 பா .9.. முதலியவற்றிற் காண்க . நேர்ந்தான் - உடன்பட்டான் . மொய்த்தகால் முகிழ் வெண்டிங்கள் மூர்த்தி :- தேய்த்த திருவடியிற் பொடியாகிப் பின் வழிபட்டு வணங்கிய திங்கட் பிறையைத் திருமுடியிற் கொண்டு திகழும் சிவமூர்த்தி ` தக்கன்றன் வேள்வியினிற் சந்திரனைத் தேய்த்தருளி ` மொய்த்தகால் - வண்டுகள் மொய்த்த பூ . மிக்க நிலா என்றாருமுளர் . முகிழ் - அரும்பு . கான் - மணம் . ஆகுபெயராய்ப் பூவையுணர்த்தும் . ` கான்முகம் பொதிந்த தெண்ணீர் கவர்ந்து ` ( சிந்தாமணி . இலக்கணை . 38). கான் காடு . மொய்த்த காட்டில் முகிழ்திங்கள் . காட்டிலே காய்ந்த நிலா ` ( வழக்கு ), முகிழ்தல் - அரும்புதல் , ` முகிழ்மென் முலையாளுமைபங்கா `. குவிதல் . ` முகிழ்த்தகையினர் `, திங்களுக்கு அவ்விரண்டு முண்டு . அதனால் அப்பிறையைச் சூடி அவற்றை நீக்கி ஆண்டனன் . நேர்தல் - உடன்படல் , இசைதல் , ` மகிழ்வுடன் ஆங்கவை நேரா `, ( கூர்ம புராணம் அரியய . 8) இராவணன் தன் வன்றலையிற் சேவடிபட உடன்பட்டான் . தனது தலையின் வன்மைக்குக் கடவுளது தாளின் மென்மை தாங்காது என்று கருதி வருந்தித் தன்தலையைத் தாழ்த்தி ஒடுங்கிக் கொள்ளாமல் , தாங்கிக்கொள்ள நேர்ந்தான் . அடியேனோ என் உச்சியின்மேல் வைத்த மெல்லடி என்னுச்சி வன்மையால் வருந்தும் என்று கருதி வாடி , அத்திருவடியை வைத்தபோது , அஃது என தலையைச் சாராதவாறு , தாழ்ந்து ஒடுங்கினேன் . ` கருமலிகடல்சூழ்நாகைக்காரோணர்கமலபாதத் தொருவிர னுதிக்குநில்லா தொண்டிற லரக்கனுக்கான் இருதிற மங்கைமாரோ டெம்பிரான் செம்பொனாகம் திருவடி தரித்துநிற்கத் திண்ணநா முய்ந்தவாறே .` - தி .4 ப .71 பா .9 ` பெருவிர லிறைதானூன்றப் பிறையெயி றிலங்கவங்காந் தருவரை யனையதோளா னரக்கனன் றலறிவீழ்ந்தான் இருவரு மொருவனாய வுருவமங் குடையவள்ளல் திருவடி சுமந்துகொண்டு காண்கநான் றிரியுமாறே .` - தி .4 ப .75 பா .10

பண் :

பாடல் எண் : 1

வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றே னீசனே னீச னேயோ
இன்றுளே னாளை யில்லே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

எல்லோரையும் ஆளும் பெருமானே ! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன் . வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலுஞ் சென்றேன் அல்லேன் . ஆதலால் நேர்மையான வழிக்கு அப்பாற்பட்டவனாய் , உள்ளூர வருந்துகின்றேன் . இன்று உயிருடன் இருக்கும் நான் நாளை உயிருடன் இருப்பேன் என்ற உறுதி இல்லை . அங்ஙனம் ஒருபயனும் எய்தாமையின் எதற்காகத் தோன்றினேன் நான் ?

குறிப்புரை :

வென்றிலேன் புலன்கள் ஐந்தும் - ஐந்து புலன்களையும் வென்றும் இல்லேன் . வென்றவர் வளாகம் தன்னுள் சென்றிலேன் - ஐம்புலனை வெல்லேனாயினும் , அவற்றை வென்ற பெரியோர் வாழும் இடத்திலேனும் சென்று வெல்லுமாறு உணரும் பேறுற்றேனோ ? அதுவும் செய்திலேன் . அடுத்த திருப்பாட்டில் , கலைகள் ஞானம் கற்றிலேன் ; கற்றவர் தங்களோடும் உற்றிலேன் ` என்றவாறு , இதிலும் வென்றவர் வளாகத்துள்ளும் சென்றிலேன் என்று உம்மை கூட்டியுரைத்துக்கொள்க . புலனடக்கமும் அடங்கினோ ரிணக்கமும் இல்லாமை காரணம் . செந்நெறிக்குச் சேயனாயது காரியம் `. செந்நெறி . ` சேறைச் செந்நெறிச் செல்வனார் `. செந்நெறிக் குஞ்சேயேனென்றதால் அந்நெறியிலொழுகியடையும் பேற்றுக் குஞ்சேயேனென்பது தானே விளங்கும் . இறந்ததுதழீஇய உம்மை . நீசனேன் நின்று உள்ளே துளும்புகின்றேன் - இழிந்தயான் செந் நெறிக்குஞ் சேயேனாகி நின்று , எனக்குள்ளே வருந்துகின்றேன் . அவ் வருத்தம் என்னுள் இருக்கும் நீயன்றிப் பிறர் அறியார் . துளும்பல் - வருந்தல் . அலைதல் அசைதல் முதலிய பிற பொருள் பொருந்துமேற் கொள்க . ` மைக்கண்ணீர் துளும்ப ` ( திருவிளையாடல் ) என்புழிப் போற்கொள்ளல் ஈண்டுப் பொருந்தாது . ` இன்றைக் கிருப்பாரை நாளைக்கிருப்பரென்றெண்ணவோ திடமில்லையே ` ( தாயுமானவர் ) என்செய்வான் - யாது செய்ய ? ஒரு பயனும் எய்தாதது என் தோற்றம் என்றது . ` நீசனேன் ஈசனேயோ ` ( தி :- 6 ப .47 பா .4, ப .11 பா .1-10.)

பண் :

பாடல் எண் : 2

கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே யுணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கட் பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளே னிறைவ னேநா னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

ஞானக் கலைகளைக் கல்லாத நான் அவற்றைக் கற்ற ஞானிகளோடு தொடர்பு கொள்ளாததனால் நல்லுணர்வுக்கு அப்பாற்பட்டு விட்டேன் . அத்தகைய நல்லறிவு இல்லாத நான் பெரிய நீண்ட கண்களை உடைய மகளிருக்கும் பொலிவு இல்லாதவனாய் உள்ளேன் . இறைவனே ! நான் எதற்காக இருக்கிறேன் ? இம்மை மறுமை வீடுகளுள் எதனையும் தேட இயலாதவனாயினேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

கலைகள் கற்றிலேன் - கலைகளைக் கற்றுக் கொண்டிலேன் . ஞானம் கற்றவர் தங்களோடும் உற்றிலேன் - கலைஞானத்தைக் கற்ற சான்றவர்களோடும் உறவாடல் கொண்டிலேன் . கலைகள் ஞானம் கற்றிலேன் , கற்றவரோடும் உற்றிலேன் எனலும் ஆம் . பொது சிறப்பென்னும் இருவகைக் கலைஞானத்துள் , உவமையிலாக் கலைஞானம் சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் ஆகிய சிறப்பு . ஏனைப் பொதுக்கலை ஞானத்துக்கு உவமையுண்டு . அவற்றைக் கற்றிலேன் என்னார் நம் அப்பர் . கற்றவர் என்பதும் பொதுக்கலை கற்ற புலவரைக் குறித்ததன்று . சிவஞானத்தை யுடையவரைக் குறித்தது . ` ஆதலாலே உணர்வுக்குஞ்சேயன் ஆனேன் ` என்றதை நோக்கின் அவ்வாய்மை விளங்கும் . உணர்வு - சிவஞானம் . ஆண்டுச் ` செந்நெறிக்குஞ் சேயேன் ` என்றார் . ஈண்டு ` உணர்வுக் குஞ்சேயன் ` என்றார் . செந்நெறியும் அந்நெறியுணர்வும் திருவருளின ஆதலின் உவமையுடைய பொதுக்கலையைக் குறித்ததன்று இது . உவமையிலாக் கலைஞானமாகிய சிறப்புடைய சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானத்தையே ஆகும் . பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் ஆகிய மெய்ஞ்ஞானம் உணர்வரியது . அதை உணர்ந்து சிவாநந்தத்தில் திளைப்பவர் நம் அப்பர் . ` கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் ` என்றதும் . அடுத்துக் ` கற்றார்கள் உற்று ஓருங் காதலான் `( தி .6 ப .84 பா .8) என்றதும் உணர்க . ` கலைபயில்வோர் ஞானக் கண்ணானான் கண்டாய் .` ( தி .6 ப .73 பா .2) ` திருவானைக் காவிலுறை சிவனே ஞானம் ஆனாய் `(6.62.2) ` கலைஞானம் கல்லாமே கற்பித்தான் ` ( தி .6 ப .11 பா .4) ` கலை பயிலுங்கருத்தன் ` ` கலையாரும் நூல் அங்கம் ஆயினான் ` ( தி .6 ப .87 பா .10) ` கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி ` ( தி .6 ப .32 பா .1) ` கற்றார் பயில் வகடனாகைக் காரோணத் தெங்கண்ணுதலே ` ( தி .4 ப .103 பா .2) என்பவற்றை நோக்கின் சிவசம்பந்தம் உற்ற கலையே உணரப்படும் . ` கல்லார் நெஞ்சினில்லான் ஈசன் ` என்றதும் உணர்க . ` கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோ டாடிப் பெற்றதேற் பெரிதுந் துன்பம் பேதையேன் பிழையினாலே ` ( தி .4 ப .52 பா .8) என்புழி , அப்பர்க்குக் கல்வி யில்லை என்பதோ பொருள் ? பெற்றிலேன் - அடைந்திலேன் . சிவஞானம் இன்றிச் சிவனைப் பெறலரிது . ` அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் .......... காட்டொணாதே ` ` காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே .` பெருந்தடங்கட் பேதை மார்க்கும் பொல்லேன் ; அவர்கண் பெருந்தடங்கண்ணாயினும் அவற்றிற்கு யான் பொலிவில்லேன் . பொல்லேன் - பொலிவில்லேன் . ` இமயப்பொருப் பகஞ் சேர்ந்த பொல்லாக் கருங்காக்கையும் பொன்னிறமாயிருக்கும் ` ( யாப்பருங்கலக் காரிகை ) என்பதில் , கருங்காக்கை பொலிவில்லாதது ( பொலம் போலொளி தராது ) அது பொலமேயான மலையைச் சார்ந்து பொன்னிற முற்றது என்பதே அதன் பொருள் . பொல்லாத ( தீய ) காக்கை எனல் ஆண்டுப் பொருந்தாது . எற்று - என்னது ; எத்தன்மையது . எற்றுளேன் - ஒன்றுமில்லேன் ; இம்மை மறுமை வீடுகளுள் எத்தன்மையதும் இல்லேன் என்றவாறு .

பண் :

பாடல் எண் : 3

மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை யுணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே முதல்வனே வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

என் மனத்தை இம்மையில் செலுத்தி , மறுமையை உணராது , வாழ்வின் தொடக்கத்திலேயே இறைவனை வணங்காது , பெருமை இல்லாத நாய் போல நின்று , உலகப் பற்றாகிய பாவத்தைத் தேடி , அதனை நீக்காதவனாய் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

மனத்தை மாட்டினேன் . என் மனத்தினை இம்மையிற் செலுத்தினேன் . ` வள்ளல்தான் வல்ல வெல்லா மாட்டினன் `. ( சிந்தா மணி . 1274 ) ` உலோக பாலன் தான்வல்ல விஞ்சைகளெல்லாவற்றையும் செலுத்தினான் ` என்பது நச்சினார்க்கினியர் உரை . முன்னே இம்மையிற் செலுத்துதன் முன்னரே . மறுமைப் பயன்களை மூட்டி . பொருத்தி , ஏவிவிட்டு . பற்றுச்செய்து . முன்னை நாளே - இளமையிலேயே . ` முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்றொரு பொருளைத் தப்பாமற்றன்னுட் பெறானாயிற் - செப்புங் , கலையள வேயாகுமாங் காரிகையார் தங்கண் முலையளவே யாகுமாம் மூப்பு ` என்னுங் கருத்து , மூட்டிநான் , முன்னைநாளே முதல்வனை வணங்கமாட்டேன் என்றதாலும் விளங்கும் . பாட்டினாய் என்பதற்குப் பெருமையில்லாதநாய் என்றனர் சிலர் . தி . 12 திருநாவுக்கரசு நாயனார் புராண உரை பக்கம் 708. சிவக்கவிமணி கோ . க . சு . அவர்கள் அப்பர் தேவாரப் பதிப்பு பக்கம் 456. பட்டிநாய் என்பது முதல் நீண்டதுமாம் . ` பாட்டரும் பகடு ` சிந்தாமணி (436) என்புழி நச்சினார்க்கினியர் பட்டு என்பது பாட்டென முதல் நீண்டது எனக் கொண்டு , பட்டு விகாரம் என்றார் . பட்டிநாய் - திருட்டுநாய் . பட்டி என்பது களவு நாய் முதலிய பல பொருள் உடையது . பாட்டிநாய் என்று தந்நகரம் உள்ளதாகக் கொண்டு பெண்ணாய் எனலாம் . ` பிடி பிணை பெட்டை மந்தி பிணாவோடானாகுபாட்டி ` சூடாமணி நிகண்டு 3:- 34, ` பாட்டு வித்தாலாரொருவர் பாடாதாரே ` ` ஆட்டினான் முன் அமணரொ டென்றனைப் பாட்டினான்றன பொன்னடிக் கின்னிசை வீட்டி னான்வினை மெய்யடி யாரொடும் கூட்டி னான்குரங் காடு துறையனே ` என்று பின்னர் இப்பெருமானது திருவாக்கில் வந்திருத்தலின் , ஈண்டும் அவ்வாறே பொருள் கொள்ளல் தக்கது , பாட்டினாய் போல நிற்றலாவது பாடச் செய்த சிவனாகிய நீயாய் நின்று எல்லா முன்செயலெனச் செய்து நிற்றல் . இதனை இறைபணி நிற்றல் என்பர் . பாசம் சாராதவாறு இறைபணி நின்று திருவடியைப் பெறாது , என் செயலாக எல்லாம் செய்துவரும் பற்றதாம் பாவத்தையே ஈட்டினேன் என்பது கருத்து . பருகினவாறு என்பதைப் பருக்கினவாறு என்றதும் அறிக . ஈட்டல் - ஈண்டுதல் என்றதன் பிறவினை ; திரட்டுதல்

பண் :

பாடல் எண் : 4

கரைக்கடந் தோத மேறுங் கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாக மசைப்பனே யின்ப வாழ்க்கைக்
கிரைக்கடைந் துருகு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

கரையைக் கடந்து வெள்ளம் பெருகும் கடலில் தோன்றிய விடத்தை உண்ட கழுத்தை உடைய சிவபெருமான் சொல்லையும் கடந்த பெருமையை உடையவன் . ஆதலின் அவனைப் பற்றிப்பேசும் தன்மை உணராதேன் . ஆதலின் இடையில் பாம்பினை இறுகக் கட்டிய அப் பெருமானை நோக்கி , சிற்றின்பம் விளைக்கும் உலக வாழ்விற்கும் , பசியைப் போக்கும் உணவிற்கும் அடையத் தகாதாரை அடைந்து நெஞ்சு உருகிப் பொழுது போக்கும் நான் எதற்காகப் பிறப்பெடுத்தேன் என்று கூறி அவன் அருளை வேண்டுகின்றேன் .

குறிப்புரை :

கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் :- கரையைத் தாண்டி அலை ( யீரம் ) ஏறுகின்ற கடலில் எழுந்த நஞ்சு . ஓதம் - அலை , ஈரம் , வெள்ளம் . ` எங்கோன் புரிதரு கருணையென்னும் ஓதத்தினொழுக்கு ` ( கந்த புராணம் . இந்திரனருச்சனைப் . 3) கடல் :- ஈண்டும் பாற்கடல் . கண்டன் - கழுத்தினன் . உரைகடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலன் :- ` வாக்குமனாதீதன் .` ` சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் .` ` உரையுணர்வு இறந்து நின்றுணர்வ தோருணர்வு ` ஆதலின் , அவற்றைக் கடந்து நின்று பரநாதத்தில் ஓதும் நீர்மையை உணர்ந்து ஓதல் வேண்டும் . ` ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி ` ( சிவஞானபோதம் . சூ . 9) ` ஈண்டு அம் முதலை ஞானக்கண்ணினாலே காண்க என்றது ; அவன் வாக்கு மனாதீதகோசரமாய் நிற்றலான் `. ( ? . பொழிப்பு ). அரை - இடை . அரையிற் கிடந்து அசையும் நாகம் - அசைகின்ற பாம்பு . ` ஆடு பாம்பு ` என்பதில் அடுதல் - கொல்லல் . அசைப்பனே - ( அப்பாம்பினைக் கச்சாகக் ) கட்டுதலுடையவனே . இன்ப வாழ்க்கைக்கு இரைக்கு - சிற்றின்பம் விளைக்கும் உலக வாழ்விற்கும் பசிதீர்க்க இன்றியமையாத இரைக்கும் . அடைந்து - அடையத் தகாதாரை அடைந்து . ( உருகுகின்றேன் ).

பண் :

பாடல் எண் : 5

செம்மைவெண் ணீறு பூசுஞ் சிவனவன் றேவ தேவன்
வெம்மைநோய் வினைக டீர்க்கும் விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

செம்மையான மேனியில் , திருநீற்றைப் பூசும் சிவபெருமானாகிய , கொடிய வினைகளைப் போக்கும் தேவ தேவன் ஆகிய அந்த விகிர்தன்பால் விருப்புற்று முற்பிறப்பில் அடிமை செய்யாத பயனற்ற வாழ்க்கைச் செயலை நினைத்து , இப்பிறப்பில் உருகுகின்றேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

செம்மை வெண்ணீறு பூசும் சிவனவன் - ` செம்மை ` எனப்பெறும் சிவாநந்த முத்திப்பேற்றை நல்கும் திருவெண்ணீற்றினை மெய்யெலாஞ் சண்ணிக்குஞ் சிவபிரான் . ` அவன் ` என்பது சுட்டுப் பெயராய் நில்லாது , ` சிவன் ` என்பதொடு சேர்ந்து அதன் பொருளாய் நின்றது . தேவதேவன் . ` தேவர்கோ அறியாத தேவதேவன் .` ` தலையாய தேவாதி தேவர்க்கு என்றும் சேயான் `. வெம்மை - பிறவிக்கோடை ; வெப்பம் . நோய் - இன்பதுன்பம் . ( பிராரத்தம் ) வினைகள் - ஆகாமியசஞ்சிதங்கள் . விகிர்தன் . இயல்பினன் . பசுபாசங்களின் வேறுபட்டவன் . வி + கிர்தன் - செயற்பாடில்லான் , விகிர்தம் - வேறுபாடு . ஆர்வம் - அன்பு . அம்மை - முற்பிறப்பில் . செய்யா - செய்யாமலே கழித்து . அம்மையிற் செய்யாது கழித்து இம்மையில் உருகுகின்றேன் . வடிவு இலா வாழ்க்கை ; முடிவு இல் வாழ்க்கை . பேரின்ப வாழ்க்கையல்லாதவற்றிற்கு வடிவும் உண்டு . அவ்விரண்டும் இல்லாத பேரின்ப வாழ்க்கையை ஆன்மா எய்தும் வரையில் உடலாகிய வடிவும் அவ்வடிவிற்கு முடிவும் உண்டு என்றுமாம் . (1) பசுக்கள் கேவலாவத்தையில் ஆணவமயம் (2) சகலாவத்தையில் மாயாமயம் . (3) ஆன்மாக்கள் சுத்தாவத்தையிலே சிவமயம் ஆதலின் , முதலாவதிலும் மூன்றாவதிலும் வடிவில்லை . இரண்டாவதில் வடிவும் அதற்கு முடிவும் உள . முன் இரண்டவத்தைக்கும் முடிவுண்டு . சுத்தாவத்தையில் ஆன்மாவிற்கு ஞானமே வடிவம் . அதற்கு முடிவில்லை . ஆனால் அந்த ஞானவாழ்வை வடிவிலா முடிவில் வாழ்க்கை என்றார் . சுத்தாவத்தையின்கண் எய்தும் சாக்கிராதியைந்தும் அத்தகையன . அவ்வுண்மையை நெஞ்சுவிடு தூது ` மேனியிலா வஞ்சவத்தையுங் கடந்தாயபெரும்பேரோளிக்கே தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சம் அறத் தானந்தமில்லாத தண்ணளியால் ஓங்கிவரும் ஆனந்தம் என்பதோர் ஆறுடையான் ` ( தி .4 ப .6 பா .4,6) என்றதால் உணர்க .

பண் :

பாடல் எண் : 6

பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளு மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே யென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலை நீங்காதேனாய் , கொடுமையை நீக்குமாறு அறியேனாய் , சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டேனாய் , இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன் . யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான் ?

குறிப்புரை :

பேச்சொடு பேச்சுக்கெல்லாம் :- தொடங்கியது முதல் முடியுமளவும் ஒவ்வொரு பேச்சுக்கும் . பிறர் தமை - பிறரை . புறம் பேசல் - புறங்கூறல் . கூச்சிலேன் - கூசுதல் இல்லேன் . கொடுமை :- சாதலினும் கொடியது . ` புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் ` ( குறள் ). விடும் ஆறு ஓரேன் - விட்டொழிக்கும் வழியைச் சிறிதும் ஆராய்ந்திலேன் ,` ஆராய்வதில்லேன் . உணரேன் என்பதன் மரூஉவே ஓரேன் என்பது . ஓர்ந்துணர்தல் ; ஓர்த்துணர்த்தல் ; ஓர்த்துள்ளம் உள்ளதுணர்தல் எனல் அம் மரூஉ வழக்கின் பிற்பட்டதே . எடுத்தல் என்பது ஏத்தல் எனமருவிய பின்னர் . ` எடுத்தேத்தல் ` எனலும் அன்னதே . மூர்த்தி - சிவமூர்த்தி . சிவமூர்த்தியாகிய நின்னால் ஆன்மாக்களுக்கு ( ம் அடியேனுக்கும் ) எய்தும் நன்மையை நாளும் நாவிற் சொல்லி ( உள்ளத்தால் உள்ளி ) உணர்வால் உணரமாட்டேன் . நாளும் உணரமாட்டேன் . சொல்லி உணரமாட்டேன் . ஏச்சுஉள் - இகழ்ச்சிக் கிடமான இவ்வுடம்பினுள் , இவ்வுலகினுள் . நின்று என்செய்வான் தோன்றினேன் . மெய்யே - மெய்யாக ., ` ஓரூர் பேச்சு ஓரூர்க்கேச்சு ` ( வழக்கு ). இழித்து என்பது இழிச்சு - ஈழ்ச்சு - ஏழ்ச்சு - ஏச்சு எனமருவியது . ` எம்பிரான் இழித்திட்டேனே ` ( தி .8 திருவாசகம் . 5.66) இழிச்சுதல் - இழிவுபடுத்தல் . இறக்குதல் . ` அட்டகறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி ` ( தி .12 பெரிய புராணம் , சிறுத்தொண்டர் . 66). இறக்கிப் பேசுதல் என்பது வழக்கு .

பண் :

பாடல் எண் : 7

தேசனைத் தேச மாகுந் திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப் புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை யறிய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

ஒளிஉடையவனாய் , உலகங்கள் புகழும் திருமாலை ஒரு பாகமாக உடையவனாய் , எல்லாராலும் வணங்கப்படுபவனாய் , தூயவனாய் , அடியாருடைய உள்ளத் தாமரையில் இருப்பவனாய் , அன்பனாய் , தீயை ஏந்தியவனாய் , செம்பொருளாய் உள்ள பெருமானை அறிய முடியாதவனாகின்றேன் . எதற்காகப் பிறந்தேன் நான் ?

குறிப்புரை :

தேசன் - ஒளியுருவினன் , ` தேசமிக்கான் ` ( தி .4 ப .61 பா .1) உலகாயிருப்பவனை . ` தேசனைத் தேசன்றன்னை ` ( தி .4 ப .33 பா .9), ` தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலின் பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண் வாசனை மலை நிலம் நீர் தீவளி ஆகாசமாம் ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே ` ( தி .4 ப .7 பா .6). ` தேசனைத் திருமால் பிரமன் செயும் பூசனைப் புணரிற் புணர்வாயதோர் நேசனை நெஞ்சினுள் நிறைவாய்நின்ற ஈசனைக் கண்டு கொண்டதென் னுள்ளமே ` ( தி .5 ப .98 பா .9). திருமாலோர் பங்கன் :- ` இடமால் தழுவிய பாகம் ` ( தி .4 ப .2 பா .14) மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகி ` ( தி .4 ப .22 பா .4) மாலுங் கொப்பளித்த பாகர் : ( தி .4 ப .24 பா .7) காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் ( தி .4 ப .32 பா .7) ` அரியலால் தேவியில்லை ` ( தி .4 ப .40 பா .5). பூசன் - பூச்சியன் ; அன்பன் , பூசல் , அன்பு , பூசலார் , ` புன்கணீர் பூசல் தரும் ` ( குறள் ). புனிதன் - தூயன் . புண்டரிகம் - தாமரை . ` அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் ` ( திருஞான சம்பந்தர் ). நேசன் - அன்பன் . நெருப்பன் - தீயாயிலங்குமவன் . நிவஞ்சகம் ( நிபஞ்சகம் ) - ஐந்தும் நீங்கிய நிலை . அவிச்சை , அகங்காரம் அவா , விழைவு , வெறுப்பு ( குறள் 38. பரி ) என்னும் ஐந்து குற்றமும் நீங்கிய நிலை , பஞ்சகம் - ஐந்தின் கூட்டம் . அதன் திரிபு வஞ்சகம் , இது ` வஞ்சகம் பேசேல் ` என்புழிக் கொள்வதன் வேறு காலம் , நியதி , கலை வித்தை , அராகம் என்னும் பஞ்சகஞ்சுகம் ( ஐந்துபோர்வையும் ) நீங்கிய நிலை எனலுமாம் . ` அராக முதலிய மூன்றும் ஆன்மாவின் இச்சா ஞானக் கிரியைகளை விளக்கிப் போகம் நுகர்தற் பொருட்டுப் புத்தி தத்துவத்திற் செலுத்தியும் , நியதி தத்துவம் இதனையே நுகர்க எனப்போகத்தின் கண்ணே ஆன்மாவை நியமித்து நிறுத்தியும் , காலதத்துவம் இதனை இத்துணைப் பொழுது மாத்திரையின் நுகர்க எனப் போகத்தின்கண் வரையறுத்து நிறுத்தியும் இவ்வாறு இவ்வைந்தும் ஆன்மாவுக்கு உபகாரமாய் ஏனைக் கருவிகள் போல அவத்தைப் படுதற்கு ஏதுவாய் இடையிடையே கூடுதலும் நீங்குதலும் இன்றி எக்காலத்தும் ஆன்மாவினுடனாய்க் கஞ்சுகம் போலப் பந்தித்து நிற்றலின் . இவை பஞ்சகஞ்சுகம் என்று உபசரித்துக் கூறப்படும் . ( சிவ ஞானபாடியம் சூ 2. அராகதத்துவ விளக்கம் ) அவை முதலிய தத்துவ மெல்லாம் சிவபிரானை அடைதற்குத் தடையாதலின் , அவை நீங்கிய நிலையிலே வியாபகமாக ஆன்மாவிற்கு விளங்கும் நிட்பிரபஞ்சப் பொருளை ` அகன்ற செம்மை யீசன் ` என்றருளினார் . ` நித்த நிர்மல சுத்த நிட்ப்ரபஞ்சப் பொருளை ` ` நிஷ்பஞ்சகம் ` வடமொழி . நிவஞ்சகத்து - வஞ்சகம் நீங்கிய விடத்து எனலும் கூடும் . செம்மை :- ( தி .4 ப .76 பா .2) பார்க்க . ` திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன் ` ஈசன் - உடையவன் .

பண் :

பாடல் எண் : 8

விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலே னியல வெள்ளம்
திளைக்கின்ற முடியி னான் தன்றிருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி யென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

இன்ப துன்பப் பயன்களை நல்கும் வினையை நினைத்து மயிர் வெளுத்த பிறகும் முளைத்து வளருகின்ற வினையைப் போக்குதற்கு முயலாது , கங்கை தங்கிய சடையை உடைய சிவபெருமானுடைய திருவடிகளை முன்நின்று வழிபட மாட்டாமல் , வீணாக இருமிக்கொண்டு , தடியை ஊன்றி இளைக்கும் நிலையினன் ஆகின்றேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

இன்ப துன்பப் பயன்களைத் துய்த்து இளைத்துத் தளர்ந்து மூத்தும் வினையொழிக்கும் வழியில் ஈடுபட்டிலேன் , விளைக்கின்ற வினையை - தன் பயனையும் புதிய வினையையும் தோற்றுகின்ற பிராரத்த கருமத்தை ( சித்தியார் . 102) நோக்கி - எண்ணி ; குறித்து ; வெண்மயிர் - நரைமயிர் . விரவி - கலந்து . இது , வயதாகியும் என்னும் பொருள் குறித்து நின்றது . உம்மை தொக்கது . மேலும் முளைக்கின்ற வினையை - ஆகாமியகருமத்தை . போக - அழிய . முயல்கிலேன் - முயலமாட்டேன் . இது முதுமையுணர்த்திற்று , அடுத்த திருப்பாடலை நோக்குக . மூத்து நரை முதிர்ந்தும் வினைதீர்க்க நினையேன் எனல் குறித்தது . இயல - ஒழுகுதலையுடைய . இயலல் - ஒழுகல் . நடத்தல் . ` மயில் கண்டன்ன மடநடை மகளிர் ` ( தி .11 திரு முருகாற்றுப்படை ), ` நடைமயிலே ` ( பிரயோக விவேகம் ). இயல வெள்ளம் - ஒழுகுதலையுடைய கங்கை . ` ஆறொழுகும் `. அது திளைக்கின்ற முடி . முடி - கங்கைச் சடைமுடி . முடியினான்றன் திருவடி - சிவனது சீபாதம் . பரவமாட்டாது - வாழ்த்த வலியின்றி . இருமி ஊன்றி இளைக்கின்றேன் . இருமலும் அஃதுற்றக்கால் பொறாதூன்றலும் இளைத்தலும் முதுமையின் விளைவுகள் . அவற்றால் நித்தியத்திற் புரியும் சிவபூஜை தடைப்படுதலுண்டு . அவ்வுண்மையைக் கூறியது அநுபவம் . ` முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக் கண்கண இருமி நாளும் கருத்தழிந்து அருத்தம் இன்றிப் பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் ` ( தி .4 ப .28 பா .1) ` இரக்கமாய் என் உடலுறு நோய்களைத் துரக்கனை ` ( தி .5 ப .4 பா .10) ` கேளுமின் இளமைய்யது கேடுவந்து ஈளையோடு இருமல்லது எய்தன்முன் கோளரவு அணி கொண்டீச்சுரவனை நாளும் ஏத்தித் தொழுமின் நன்காகுமே ` ( தி .5 ப .70 பா .5) விளைக்கின்ற வினையை நோக்கி மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் . வெண் மயிர் விரவி மேலும் முளைக்கின்ற வினை , வெண்மயிர் விரவல் - மூத்தற் குறிப்பு . ` பன்னருந் தவம்புரி பருவம் ஈதெனக் கன்னமூலத் தினிற்கழற வந்தென மின்னருங் கருமை போய் வெளுத்ததோர் மயிர் ` ( கம்பரா . அயோத் . தொடக்கம் )

பண் :

பாடல் எண் : 9

விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லே னெந்தாய் காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லே னெந்தா யென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

எந்தாய் ! பின் விளையும் பயனை அறியாமையால் வேதனையாகிய குழியிலே விழுந்து , ஆழ்ந்து பற்றுக்கோடு இல்லாது இருக்கின்றேன் . உன்னை வசீகரிக்கும் இசையைக் கற்றேனும் அல்லேன் . மாலையை அணிந்த பெண்களோடு இன்பமாக வாழ இளையேனும் அல்லேன் . அடியேன் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

விளைவு - பின்விளையும் பயனை . அறிவு - அறிதல் . இலாமையாலே - இல்லாத காரணத்தாலே . வேதனைக்குழி துன்பக் குழி . ` வினைக்குழி ` ( தி .4 ப .67 பா .2; ப .77 பா .6; ப .79 பா .3) குழியில் ஆழ்ந்து . அதினின்றும் ஏற்றித் துன்பம்களையும் துணையும் இல்லேன் . களைகண் - களையுமிடம் . வினைத்தொகை . எந்தாய் எந்தையே ! காமரங்கற்றும் இல்லேன் - இசைப்பாட்டுக்களைக் கற்று ( ணர்ந்து ) மில்லேன் . சீகாமரம் என்னும் பண்ணும் எனலுமாம் . ஆயினும் . கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்றுமில்லேன் ` ( தி .4 ப .79 பா .5) எனப் பின்னுள்ளதைக் காணின் , அது பொருந்தாமை புலப்படும் . ` தும்பி காமரம் இசைப்ப ...... வேனிற் கோமகன் மகுடஞ்சூடியிருப்பது அக்குளிர் பூஞ்சோலை .` ( திருவிளையாடல் தருமிக்குப் . 20). தளை அவிழ் கோதை நல்லார் - கட்டு அவிழ்ந்து விரிந்து பூங்கோதையைச் சூடிய கூந்தலையுடைய அழகிய மகளிர் . நல்லார் தங்களோடு - நல்லாரோடு . இன்பம் எய்த இளையனும் அல்லேன் . எந்தாய் - எம் தாயே எனலுமாம் . ` அம்மையே அப்பா ` ` ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய் உடன் தோன்றினராய் ` ( தி .4 ப .94 பா .1). ` செவ்வாய்க் கருங்கட்பைந் தோகைக்கும் வெண்மதிச் சென்னியற்கும் ஒவ்வாத் திருவுரு வொன்றே யுள தவ் வுருவினை மற்றெவ் வாச்சியம் என்று எடுத்திசைப்பேம் இன்னருட் புலியூர்ப்பைவாய்ப் பொறியரவல்குல் எந்தாய் என்று பாடுதுமே `. ( சிதம்பரச் செய்யுட் கோவை . 73)

பண் :

பாடல் எண் : 10

வெட்டன வுடைய னாகி வீரத்தான் மலையெ டுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய வாதியை யோதி நாளும்
எட்டனை யெட்ட மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

கடும் போக்கு உடையனாகி , தன் வீரத்தைக் காட்டக் கயிலை மலையைப் பெயர்க்கத் தொடங்கிய தீயவனாகிய இராவணனின் செருக்கை அடக்கி அவன் வாயினின்றும் சுவையாகச் சாம வேதகீதம் கேட்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானுடைய பெருமையைச் சொல்லி அவனை எள்ளளவும் அணுகமாட்டேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

வெட்டனவு - கடுமைக்குறிப்பு . ` வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் ` ( நல்வழி 33) உடையனாகி எடுத்த துட்டன் . வீரத்தால் எடுத்ததுட்டன் . துட்டு - அடங்காமை துட்டத்தனம் . வழக்கு . சுவை - செவிச்சுவை ; இன்பம் கீதம் - சாமகீதம் ; பாட்டு . அட்டமா மூர்த்தி - எட்டுருவுடைய சிவபிரான் கேட்ட ஆதி . ஆய ஆதி . ஆதியைநாளும் ஓதி எட்ட மாட்டேன் எள் + தனை = எட்டனை - எள்ளளவும் . உம்மை விரிக்க . ` இறையேயும் ஏத்தமாட்டேன் ` ( தி .4 ப .79 பா .5) எனப் பின்வருதலும் உணர்க . உள்ளே உயிர்க்குயிராய் எட்டி யிருப்பவனை , அக நோக்கம் எய்தி எட்ட வலியில்லேன் எனலுமாம் . எட்டனை எனப் பொதுவில் எண்மட்டுங் கூறியதால் எட்டுருவினனை என்பர் . எண்குணத்தனை எண்டிசையனை எனலும் இன்னும் எட்டாகச் சொல்லப்படுவனவும் பொருந்துமேற் கூறிக்கொள்க . இத்திருப்பதிகம் சிவவழிபாடில்லாத பிறவியின் பயினின்மையை உணர்த்திற்று . அடுத்த திருப்பதிகமும் இதனொடு சேர்ந்து ஒன்றெனக் கொள்ளலும் உண்டு . ` ஐயாறனடித்தலமே ` என முடியும் இருபதும் ஒரே தொகையவாகக் கொண்டு அதற்கு 19 ஆவதில் அடிமுடி தேடியதும் 20 ஆவதில் இராவணன் செய்தியும் அமைந்தவாறு காரணம் என்பர் . அதுபோல . ஈண்டு இல்லை . 10 ஆவது இராவணன் செய்தியைக் கூறுகின்றது .

பண் :

பாடல் எண் : 1

தம்மானங் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை யமுதன் றன்னை யாதியை யந்த மாய
செம்மான வொளிகொண் மேனிச் சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

மகளிருக்கு அவமானம் உண்டாகாதவாறு காக்கும் முயற்சியில் ஈடுபட்டு , அவர்களுடைய கண்வலையிற்பட்டு , அதனால் , தலைவனாய் அமுதம் போன்று இனியனாய் , எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானாக உள்ளவனாய் , செம்மேனி அம்மானாய் , அடியேனுடைய உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் எம்முடைய தலைவனை விருப்புற்று நினையமாட்டேன் . யாது செய்வதற்காக இவ்வுலகிற் பிறப்பெடுத்துள்ளேன் நான் ?

குறிப்புரை :

மாதர் மயக்கிலழுந்திச் சிவசிந்தனையைச் சிறிதும் எய்தாமைக்கு வருந்துவது . தம்மானம் ; தையலார்தம்மானம் - தையலாருடைய மானம் . மானம் காப்பது - வெளிப்படை . மானங் காத்தல் - அவமானம் உளதாகாவாறு தடுத்தல் . ஆடை அணி முதலிய வற்றால் அது காக்க முயன்று ஆண்டவனை மறப்பது உலகியல் . குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தலரிது ( குறள் . 29). மானம் - வலி . இப்பொருட்கு ஆடவர் வலியை வெல்ல வொட்டாது மகளிர் வலியே தடுத்துத் தோல்வியுறுத்தி அவரை அவர்தம் வயப்படச் செய்கின்றதென்க . தையலார்தம் மானம் காப்பதாகி அவர் மாயவலையுள் வீழ்ந்து அம்மானும் அமுதனும் ஆதியும் எம்மானுமாகிய சிவபிரானை நினைய வலியில்லேன் ஆனேன் . என்செய்யும் பொருட்டுத் தோன்றினேன் ? அந்தம் - அழகு . எல்லாப் பொருட்கும் முடிவிடம் எனலுமாம் . ஆய - ஆன . செவ்வொளி மானவொளி . மானம் - பெருமை . செவ்வானம் என்பதன் மரூஉவாகிய செம்மானமும் ஆம் . ஒளி கொண்ட திருமேனியையுடைய எம்மான் . சிந்தையுள் ஒன்றி நின்ற எம்மான் . ஒன்றி நின்றவனை ஒன்றியிருந்து நினைய வலியில்லேன் . அதற்கு ஏது , ஒன்றாவாறு தடுக்கும் தையலார் மையல் வலையுள் ஆழ்ந்ததே ஆகும் என்று இரங்கியவாறு உணர்க .

பண் :

பாடல் எண் : 2

மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

மனைவி , மக்கள் , அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில் ஈடுபடாது , தவம் என்பதனை உணராது , நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப் பாதுகாப்பதற்கே முயல்கின்றேன் . யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

மனைவியையும் மக்களையும் அம்மக்கட்கு மக்களையும் அவரவர் மனைவியர் வயிற்றிற் பிறந்தவரையும் காக்கும் வாழ்க்கைச் சிக்கலுள் அழுந்திச் சைவத்திறம் பொருந்திலேன் . அத்திறத்துத்தவத்தை உணரேன் . நீர்க்குமிழி போலத் தோன்றியது இக்களேபரம் (- உடம்பு ). நீரிலே தோன்றி நீரிலே மறைவது குமிழி . அதுபோல மண்முதலிய பூதகாரியமாகித் தோன்றி அப்பூதங்களிலே மறைவது உடம்பு . தோன்றிய கணத்தினுள் மறைவது . வானவில் போலவும் மின் போலவும் தோன்றி மறையும் உடல் என்பதும் நினைக . ` வாங்கு சிலை புரையும் உடல் ` ( நால்வர் நான்மணிமாலை ) எனலும் உண்டு . ` படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றிக் கெடும் இதோர் யாக்கை ` ( நாலடியார் . 27) சிந்தாமணி 2754 - 2760 பார்க்க . ` மின்னும் மொக்குளும் என நனிவீயினும் வீயும் ` ( ? . 2754). ஓம்பல் :- ` குடிபுறங் காத்தோம்பிக் குற்றங்கடிதல் ` ( குறள் . 549) ` அகன்றிடா தோம்பிற் றன்றே ` ( கந்தபுராணம் . சூரபன் . மூன்றாம் . 167) ` குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர் ` ( நீதிநெறிவிளக்கம் . 29) என்று போற்றல் காத்தல் என்னும் பொருட்டாதலறிக . அதன் உள்ளே - தோன்றிய அக்கணத்துக்குள்ளே . அது - அக்கணம் . அப்பர் பாட்டனாரும் பூட்டனாருமாக இருந்தமை அறிக .

பண் :

பாடல் எண் : 3

கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலு மிறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணி னல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு மென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய் , ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய் , இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன் . என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

கூழையேனாகமாட்டேன் :- சிவபிரான் திருவடிக்கே ஆம் அன்பினாற் குழையும் இயல்புடையேனாக வலியில்லேன் . குழைமை - கூழைமை . கூழை - பின்பு . கூழைமை - பின் நிற்கும் வழிபாடு . ஆண்டானடிமைத்திறத்திற்குரியது . ` தில்லையம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ நந்தம் கூழைமையே ` ( தி .4 ப .84 பா .5). ` என்பு இருத்தி நரம்பு தோல் புகப்பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி இன்பு இருத்தி முன்பு இருந்த வினைதீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி அன்பு இருத்தி அடியேனைக் கூழ் ஆட்கொண்டு அருள் செய்த ஆரூரர்தம் முன்பு இருக்கும் விதியன்றி , முயல்விட்டுக் காக்கைப் பின்போனவாறே ` ( தி .4 ப .5 பா .2) ` பீழைமை பலவும் செய்து பிணிப்படை பரப்பி வந்து , வாழுயிர்ப் பொழித்து வவ்வி வலிந்துயிர் வாங்கி யுண்ணுங் கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்குஞ் சூழ்ச்சி பாழியந்தடக்கை வேந்தே பயின்றிலம் யாங்களென்றார் `. ( சூளாமணி . துறவுச் . 18) ` கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே ` ( நாலாயிர . பெரியாழ்வார் . மூன்றா . அஞ்சந .5) என்பவற்றில் உண்ணுங் கூழைமை . வாய்கொடுத்துக் கூழைமை செய்யாமே என்றதால் விளங்கும் கருத்து ஈண்டும் பொருந்தும் . கொடுவினைக் குழியில் வீழ்ந்து :- தி :-4 ப .78 பா .9, ப .77 பா .6 ஏழிசை . இன்னிசை . ஏழின் இசை . ஏழின் இன்னிசை . நம் அப்பர் காலத்திற்கு முன்னரே தமிழிசையால் இறைவனை வழிபடும் வழக்குண்மை யுணர்க . நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பியது புதிதன்று . இராவணன் இசையால் இறைவனை வழிபட்டதற்கு முன்பிருந்தே ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவனை அதனால் வழிபட்டனர் தமிழர் முதலோர் . மாழை - இளமை . ` மைபூத்தலர்ந்த மழைக்கண் மாழைமானேர் நோக்கு ` ( சிந்தாமணி . 2198) ` மாழைவாள் முகங்கள் ` - ` இளைய முகங்கள் ` ( சிந்தாமணி . 2536 உரை ). ` மாழை யொண்கண் பரவையைத் தந்தாண்டான் ` ( தி .1 ப .51 பா .10) மாழையை மான் என்றலும் உண்டு . கண்ணின் - கண்களையுடைய . நல்ல - அழகிய . மடந்தை - மடம் உடைமை . ` நாண் மடம் அச்சம் பயிர்ப்பு `. மடந்தை மகவர் என்பதன் மரூஉ மடந்தைமார் . ` மகார் ` பெயர் ஆதலின் வினைகொள்ளும் , நூல்களில் மார் ஈற்று வினையாகக் கொண்டது , சொல்லாராய்ச்சி முடிபின் வேறாகும் , பொல்லேன் , ( தி .4 ப .78 பா .2.) ஏழையேன் - அறிவில்லேன் . ` நுண்ணுணர்வின்மை வறுமை ` ( நாலடியார் ) ` பிணியன் ஏழை ` ( நன்னூல் ). ` பார்ப்பானை யேழை என்றலும் பசுவைச் சாது என்றலும் கூடா `. ( பழமொழி ).

பண் :

பாடல் எண் : 4

முன்னையென் வினையி னாலே மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப் பிதற்றுவன் பேதை யேனான்
என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

முற்பிறப்பில் செய்த என் வினைப்பயனாலே பெருமானை நினைக்க இயலாத அடியேன் உலகியலிலே ஈடுபட்டு இவ்வுலக இன்பங்களையே மேம்பட்டனவாகப் பிதற்றிக் கொண்டிருப்பேனானேன் . அறிவில்லாத அடியேன் என் உள்ளத்தினுள்ளே நிலை பெற்றிருத்தலை தமது சிறப்பியல்பாக உள்ள பெருமானை என்னுள் வைத்துத் தியானிக்க மாட்டாதேனாகின்றேன் . வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் தோன்றினேன் நான் ?

குறிப்புரை :

என் முன்னை வினையினாலே - யான் முன்பு செய்த தீவினையின் பயனை அநுபவித்தலாலே , மூர்த்தியை - சிவ மூர்த்தியை . நினைய - விடாது நினைந்து போற்ற . மாட்டேன் - வலியில்லேன் . பின்னை - கடவுளை வழிபடாதது பெருங்குற்றம் என்றும் பெரியதோரிழப்பு என்றும் இப்பிறவிக்கு அதுவன்றி வேறு பயனில்லை என்றும் அறிந்த பின்னர் , நான் பித்தனாகிப் பிதற்றுவன் . பித்து - சிவபெருமான் திருவடிக்கே பற்றுவைத்து அதையே எண்ணிக்கொண்டு பெற நாடும் உயரிய நோக்கம் . ` பித்துப் பத்தரினத்தாய்ப் பரன் உணர்வினால் உணரும் மெய்த்தவரை மேவா வினை ` ( சிவஞானபோத வெண்பா ) பிதற்றுவன் :- ` மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில் , பெற்றதோ ருபாயந்தன்னால் பிரானையே பிதற்றுமின்கள் ` ( தி .4 ப .41 பா .10) ` பிண்டத்தைக் கழிக்கவேண்டில் பிரானையே பிதற்றுமின்கள் ` ( தி .4 ப .42 பா .10) ` பேர்த்தினிப் பிறவாவண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன் ... றிறமே ` ( தி .4 ப .41 பா .6). நான் பிதற்றுவன் . நான் நினையமாட்டேன் . ( நான் ) என்செய்வான் தோன்றினேன் . என்னுளே மன்னிநின்ற சீர்மையதாயினான் :- ` உயிர்க்குயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது ! ( கொடிப்பாட்டு ) என்னுளே நினையமாட்டேன் :- திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொணொத் தேவனை என்னுளே தேடாமல் , உலகமெலாம் தேடியுழல்வேன் . ` உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் கள்ளத்தே நிற்றி ` ( தி .4 ப .76 பா .7.) அக்கள்ளனைத் தேடல் போல உள்ளத்தே உன்னைத் தேடிப் பிடித்துக் கொள்ளேனானேன் . ` என்னுள்ளே நிற்கும் இன்னம்பரீசன் `. ` எம்பிரான் என்றதே கொண்டு என்னுள்ளே புகுந்து நின்று ` ( தி .4 ப .76 பா .3) தன்னிற் றன்னை அறியுந் தலைமகன் , தன்னிற் றன்னை அறியிற்றலைப்படும் , தன்னிற் றன்னை அறிவிலன் ஆயிடில் , தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே `.

பண் :

பாடல் எண் : 5

கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர் பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவி னாவி னானை மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

நீலகண்டனை வசப்படுத்த இசைத்துறைகளைக் கற்றேனும் அல்லேன் . பிறைபோன்ற நெற்றியை உடைய வளையலை அணிந்த பேதைமைக் குணத்தை உடைய மகளிரை வசப்படுத்தும் திறத்தேனும் அல்லேன் . வேதங்களை ஓதும் நாவினை உடைய எம் பெருமானை நிலையாக நின்று ஒருநாளும் சிறிதளவும் போற்ற மாட்டாதேனாகிறேன் . வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

கறை - நஞ்சின் கறுப்பு . கண்டன் - ` திருநீலகண்டன் ` காமரம் கற்றும் இல்லேன் :- ( தி .4 ப .78 பா .9). பஞ்சமம் பாடியாடுந் தெள்ளியார் கள்ளந்தீர்ப்பார் ` ( தி .4 ப .29 பா .4). பிறைநுதல் - பிறைபோலும் நுதல் (- நெற்றி ). உமைத்தொகை . நுதலும் பேதைமையும் உடைய மாதர் . பெய்வளை - வினைத்தொகை . மாதரும் வளையாரும் ஆகியவர்க்கும் அல்லேன் . அல்லேன் - பொருத்தமுடையேனல்லேன் . தளையவிழ் கோதை நல்லார் தங்களோடின்பம் எய்த இளையனும் அல்லேன் ` ( தி .4 ப .78 பா .9). மறை நவில் நாவினான் :- மறையுங் கொப்பளித்த நாவர் ` ( தி .4 ப .76 பா .7) ` நாலுகொலாமறை பாடினதாமே ` ( தி .4 ப .18 பா .4) ` மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களும் எல்லாம் துறையும் தோத்திரத் திறையும் தொன்மையும் நன்மையும் ஆய ... ஆதி ` ( தி .7 ப .75 பா .1). ` விழையாருள்ளம் நன்கெழு நாவில் வினைகெட வேதம் ஆறங்கம் பிழையா வண்ணம் பண்ணியவற்றால் பெரியோரேத்தும் பெருமான் ` ( தி .1 ப .42 பா .7) ` வேத நாவினர் ` ( தி .2 ப .38 பா .7) மன்னி நிற்றல் - பற்றுட்படாது நீங்கி நிலைத்திருத்தல் . இறைஞ்சுதல் - வணங்குதல் . நாளும் - என்றும் . நாள்தோறும் . இறையேயும் - சிறிதேயும் .

பண் :

பாடல் எண் : 6

வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால் , எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க , அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன் . வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

கள்வர் ஐவரும் வந்து என்னை வளைத்து நின்று ( எனக்கு ) நடுக்கம் செய்ய இளைத்து நின்று ஆடுகின்றேன் . காரணம் தெளிவின்மையே . எதுபோன்றது அத்தெளியாமை ? தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழலுமெரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமைக்குத் தெளிவில்லாமை போன்றது எனக்குத் தெளிவில்லாமை . சூடு மிகுமுன் உலை நீரில் ஆமையை இடின் , அது மிக்க இன்புற்றுத் திளைக்கும் . சூடு ஏறஏற அதற்கு அழிவு அணுகும் . புலன்வழி யொழுகும் மாக்களும் அதனால் விளையும் பெருந் துன்பங்களை அறியமாட்டார் . புலனெறிநீத்து அருள்வழி போய்ப் பேரின்பம் நுகர்வதே மக்கட் பிறப்பின் பயன் . துன்பத்தில் வீழ்தலை இன்பத்துள் வாழ்தலாக நினைந்து . பிறந்திறந்து துயருறுந் தொல்லையின் நீங்கி எல்லையிலின்பத்துள் அழுந்தி நிற்கும் அழிவிலா வாழ்வை அடைய விரும்புவோர்க்கு இதன்கண் அமைந்த உவமை ஞானத் தெளிவுறுத்தும் . மாக்கள் உலகவலைப்பட்டு வருந்துவர் . மக்கள் அதனுட்படாவாறு அருள்வழியொழுகுவர் . பேதைமையால் தெளிவுண்டாகாது . நாலடியா (331) ரில் ` பேதைமை ` என்றதன் கீழ் அமைந்த ` கொலைஞர் உலை ஏற்றித் தீமடுப்ப ஆமை நிலை அறியாது அந்நீர் படிந்து ஆடி அற்றே , கொலைவல்பெருங் கூற்றம் கோட்பார்ப்ப ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார்மாண்பு `. என்னும் வெண்பாவின் முன்னீரடியில் ஆமையினியற்கை யொன்றனை உவமமாக்கிப் பின்னீரடியில் மாக்களினியற்கையைப் பொருளாக்கியதுணர்க . பிறவற்றைக் கொன்று , அவற்றின் ஊனைத் தின்று தம் ஊனைப் பெருக்கும் கொலைஞரே அவற்றைக் கொல்லும் முறைமையை உணர்வர் . ஆமையைக் கொல்வதரிது . நெருப்பு மூட்டி உலை நீரை அடுப்பில் ஏற்றி அதில் ஆமையை இடுவர் அதைக் கொல்லுமாறுணர்ந்தோர் . தீயும் சுடர்விட்டெரியும் . நீரும் சூடுற்றுக் கொதிக்கும் . ஆமையும் நீரில் இன்புற்றுத் திளைக்கும் . நீர் காயக்காய மாய்ந்துகொண்டே வரும் ஆமை . தான் அழிந்து வரும் நிலையை அறியாது அது . அதுவே முன்னீரடியிற் குறித்தது . ஆமைக்கும் மாக்களுக்கும் வாழ்க்கையின்பமும் அழியும் நிலையினை அறியாமையும் பொது . பின் அழிதலை முன் அறியாமை மாணாதது . அதனை மாண்பு என்றது இவ்வெண்பா . அஃது எதிர்மறை இலக்கணை . நம் அப்பர் சைன மதத்திற் சேர்ந்தொழுகி மீண்டுய்ந்த வராதலின் , அச் சைனர் குறித்ததோருவமையைத் தமது திறத்திற் கேற்றி , நமது திறத்தை நாடச் செய்தருளினார் . தொலைவிலிராது சூழ்ந்து ( வளைத்துக் ) கொண்ட கள்வர்க்கு நடுங்காதார் எவர் ? ஒருவர் அல்லர் ஐவர் . உயிர் உடலின் நீங்குவதிற் சிறிதும் வெறுப்பிலராயினும் , அஃது அதில் உள்ளபோதே உய்யப் பார்க்கும் விரைவினையுடைய உத்தமர்க்கு , அவ்வுய்தி எய்துமுன் உடற்குக் கேடுவருவதாயின் , அஞ்சாதிருத்தல் ஒல்லாது . ஐவரும் சூழ்ந்து நடுக்கம் விளைக்கினும் அவர் சூழ்ச்சிக்காளாகி , அவர் ஆட்டுமாறாடியும் ஓட்டுமாறோடியும் காட்டுமாறு கண்டும் ஊட்டுமாறுண்டும் , இளைப்புறினும் அவர் திறத்தில் ஓர் இன்பம் உண்டுபோலத் தோன்றும் . அவ்வின்பத்தையே நாடி , அவர் வலையிலே சிக்கி வருந்துவதற்கே மீண்டும் அவாவுறுதல் பேதைமையன்றி வேறில்லை . ஆமைக்குத் தெளிவிருப்பின் , வெந்நீரில் திளைக்குமோ ? அவ்வெப்பம் அதன் உடற்கினிதாயிருந்து , அதைத் தெளியாமை அக் களியாமைக்கு அழிவாக்கிற்று . மெய் வாய் கண் மூக்குச் செவி ஆய ஐந்தனாலும் முறையே உறும் ஊறு , சுவை , ஒளி , நாற்றம் , ஓசை ஐந்தும் பிறப் பிறப்பாகிய துன்பத்தை விளைக்கும் என்று தெளியாமையே பேரின்ப வாழ்வு பெறவொட்டாது தடையா யிருப்பது . பிறந்திறந்துழலும் பெருந்துன்பத்தைச் செய்கின்றது . தெளிந்து திருவருள் பெற்றுச் சிவமாதற்கே பிறந்தேன் . தெளியாமல் ஐம்புலத்தாசை வலையுட்பட்டுப் பிறவிப்பெருங் கடலில் விழுந்து துன்புறுதற்கும் பிறந்தேனல்லேன் என்று இத்திருப்பாடல் உணர்த்து கின்றது . பானுகோபன் வீரவாகுதேவர் திருமுன் போந்து போர்செய்த களிப்பில் முழுகித் திளைத்திருந்து , தான் தன்குலத்தொடு வேரறச் சாய்ந்தொழிய இருக்கும் பின் விளைவைச் சிறிதும் தெளிந்திலன் அதனால் , அவனை ` உலைபடும் இளவெந்நீரின் உளம்மகிழ் கமடம் ஒத்தான் ` எனத் தணிகைப் புராணத்திற் குறித்தருளினார் கச்சியப்ப முனிவர் . இதனொடு நாலாந் திருமுறையிலே திருநேரிசைப் பகுதி முற்றும் .

பண் :

பாடல் எண் : 1

பாளை யுடைக்கமு கோங்கிப்பன் மாடம் நெருங்கியெங்கும்
வாளை யுடைப்புனல் வந்தெறி வாழ்வயற் றில்லைதன்னுள்
ஆள வுடைக்கழற் சிற்றம் பலத்தரன் ஆடல்கண்டாற்
பீளை யுடைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே.

பொழிப்புரை :

பாளையை உடைய பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்த மாடவீடுகள் நெருக்கமாக அமைய , வாளை மீன் குதிக்கும் தண்ணீர் அலை எறியும் வயல்களையுடைய தில்லை நகரிலே , நம்மை ஆட்கொள்ளுதலுக்காக அமைந்த திருவடிகளை உடைய சிற்றம்பலத்துப் பெருமானுடைய ஆடலைக் காணும் வாய்ப்பினைப் பெற்றால் , அதன்பின் பீளை ஒழுகும் கண்களால் , பிடித்ததனை விடாத பேய்போன்ற இயல்பை உடைய அடியார்கள் , தம் கண்களால் காணத்தக்க மேம்பட்ட பொருள் யாதுள்ளதோ !

குறிப்புரை :

இத்திருப்பதிகத்திலே பாதாதிகேசாந்தம் பாடி மீண்டும் பாதத்தைப் போற்றிய மரபுணர்ந்து கொள்ளலாம் . இது சிவதரிசன விதி . திருவடியிற்றொடங்கித் திருவடியின் முடிவதே சிவதரிசன கிரமம் . 1. ஆடற் காட்சி . 2. திருவடிக்காட்சி . 3. துகிற் காட்சி . 4. கச்சுக் காட்சி . 5. கவித்தகைக் காட்சி . 6. ஏனத்தெயிற்றுக் காட்சி . 7. சிரித்த திருமுகக் காட்சி . 8. நெற்றிக்கண் காட்சி . 9. தூமத்தமலர்க் காட்சி . 10. திருவடிப் பெருவிரற் காட்சி ஆகிய பத்தும் முறையே குறிக்கப்பட்டன . பாளையை உடைய கமுக ( பாக்கு ) மரம் . வாளைமீன் . எறி வயல் . புனல் எறியும் வயல் . வயலையுடைய தில்லை . இது தலப்பெயர் . வழிபடும் அன்பரை ஆளக் கழலுடையது திருவடி . கழல் திருவடிக்கு இடப்பொருளாகு பெயர் . சிற்றம்பலம் - தகராகாசம் . இத்திருக் கோயிலின் பொன்மன்றின் பெயர் . திருக்கூத்தனைக் கண்ட கண்கள் மற்றெவையுங்காணா . மெய்த்தொண்டர் திருக்கூத்தினைக் கண்ட கண்களால் மற்றெவற்றையுங் காணார் . திருக்கூத்தல்லாதவற்றைக் காண்போர் பேய்த்தொண்டர் . காணுங் கண்கள் பீளையுடைய கண்கள் . திருவிசைப்பாவிலே நாலாவது திருப்பதிகம் கண்ணும் வாயும் முறையே காணவும் பேசவும் தகாத பேயரைக் கூறிற்று . ` மூவாயிரவர் தங்களோடு முன்னரங்கேறி நின்ற கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவதென்று கொலோ ` ( தி .9 திருவிசைப்பா . 196) ` தென்றில்லை யம்பலத்துள் அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று கொலோ ( தி .9 திருவிசைப்பா . 197) ` தேவே தென்றிருத்தில்லைக் கூத்தாடீ நாயடியேன் சாவாயும் நினைக்காண்டல் இனி உனக்குத் தடுப்பரிதே `. ( தி .9 திருவிசைப்பா . 214) ` ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள ... ... இந்து வாழ்சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார் `. ( தி .12 பெரிய புராணம் ).

பண் :

பாடல் எண் : 2

பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கை மணாள னுலகுக்கெல்லாம்
திருவுடை யந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
றிருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய் , புலித்தோல் ஆடையனாய் , அழகிய பார்வதி மணாளனாய் , அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால் , காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ !

குறிப்புரை :

பொருவிடை - போரேறு . ஒன்று உடை புண்ணிய மூர்த்தி - தனித்ததொன்றனையுடைய அறவடிவினன் . புலி அதளன் - புலித்தோலாடையன் . உரு உடைய மலை மங்கை - அழகுடைய பார்வதி . அம் மலைமங்கை எனக் கொண்டு அழகிய பார்வதி எனின் , உருவை மேனியாகக் கொள்க . மணாளன் :- மணவாளன் என்பதன் மரூஉ . உலகுக்கு எல்லாம் - எல்லாவுலகங்கட்கும் . திரு :- பேரின்பச் செல்வ முதலிய யாவும் திரு எனப்படும் . தில்லைவாழந்தணர் ` பொங்கிய திருவினீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி மங்கலத் தொழில்கள் செய்து மறைகளாற்றுதித்து ... ... அங்கணர் கோயிலுள்ளா அகம்படித் தொண்டு செய்வார் ` ( தி .12 பெரியபுரா தில்லைவாழ் . 4) ` திருநடம் புரிவார்க் காளாந் திருவினாற் சிறந்த சீரார் ` ( ? 5). ` உலகெலாம் புகழ்ந்து போற்றும் மானமும் பொறையும் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார் ` ( ? 7). ` அகலிடத் துயர்ந்ததில்லை யந்தணர் அகிலமெல்லாம் புகழ்தரு மறையோர் ` ( ? 10) என்றருளிய சேக்கிழார் திருவாக்கால் அறியக் கிடக்கும் திருவை ஈண்டு நினைக . திருவடியைக் கண்ட கண்களால் மற்றவற்றைக் காண்டல் சிவபத்தர்க்கு வேண்டாதது .

பண் :

பாடல் எண் : 3

தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கு மயனொடு மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

மாலையாகத் தொடுக்கப்பட்ட மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளிற் கொண்டு , எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தம் முயற்சியினாற் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்பவனாகித் திருநீறணிந்து பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் பெருமான் அணிந்த புலித்தோலாடையைக் கண்ட கண் கொண்டு காண்பதற்குப் பிறிது பொருள் யாதுள்ளதோ !

குறிப்புரை :

தொடுத்தமலர் - பூந்தொடையல் . மாலையும் தூபமும் ( தீபமும் ) சாந்தும் பிறவும் கொண்டு புரியும் பூசை சிவதரிசனத்திற்கு இன்றியமையாத சாதனம் . எப்பொழுதும் வணங்குதல் . அடுத்து வணங்குதல் . அயனும் மாலும் அம்பலவனைக் காணாமைக்கு அகந்தையே அன்றி , அவர் செய்த பூசை ஏதுவன்று . பொடி - திரு வெண்ணீற்றுப் பொடி . அணிந்தது வெண்ணீறு . அம்பலவன் . உடுத்த துகில் - திருக்கூத்திற்குரியதாக அசைத்த எழிலுடை .

பண் :

பாடல் எண் : 4

வைச்ச பொருணமக் காகுமென் றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தே னணிதில்லை யம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி யுந்தியின் மேலசைத்த
கச்சி னழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

பொழிப்புரை :

நமக்குச் சேமவைப்பாக இருக்கின்ற பொருள் திருவைந்தெழுத்தே என்று விருப்புற்று நினைத்துப் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன் . அழகான தில்லை நகரிலே உள்ள சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்றவனாய் , அடியவர் திறத்துப் பித்தனாய் , பிறப்பு அற்றவனாய் நந்தி என்ற பெயரினனாய் உள்ள பெருமானுடைய கொப்பூழின் மேல் இடுப்பைச் சுற்றிக்கட்டப்பட்ட உதரபந்தமாகிய கச்சின் அழகைக் காணப் பெற்றால் பின்னைக் காணவேண்டிய உயர்ந்த பொருள் யாதுள்ளதோ !

குறிப்புரை :

வைச்ச ( பொருள் ) - வைத்த ( பொருள் ) என்பதன் மரூஉ . பிற்பயக்கச் சேர்த்து வைத்த பழம்பொருள் . பின்னர் நமக்குப் பயன்படுவதாகும் என்று எண்ணி முன்னர் வைச்ச பொருள் நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்து . அப் பொருளே , வைப்புச் செல்வம் . அச் செல்வம் இருத்தலால் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன் . அழகிய தில்லையம் பலத்தில் ஆடுகின்ற பித்தன் , பிறப்பில்லான் ; ( இறப்புமில்லான் ); திருப்பெயர் , நந்தியெனப் பெற்றான் . அவன் திருவரையிற் கட்டிய கச்சினழகைக் கண்டால் , கண்ட அக்கண்ணைக் கொண்டு காணத் தக்கது பின்னை என்னுளதோ !

பண் :

பாடல் எண் : 5

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

பொழிப்புரை :

வயலிலே காண்கின்ற பூங்கொடியில் நீலோற்பல மலர்கள் மலரும் வளமுள்ள தில்லைப்பதியில் உறையுஞ் சிற்றம்பலவனாய் நெய்யில் நின்றெரியும் தீபச்சுடர் போன்று ஒளிவிடும் நீலமணி மிடற்றனுமாய பெருமான் , கருமை நிலைபெற்ற ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமியம்மையார் கண்டு மகிழ்ந்து நிற்க வைத்துச் செய்வதும் என்று வந்தாய் எனும் திருக்குறிப்புப் புலப்பட நின்று இயற்றுவதுமான ஆடலைக் கண்டபின் காணத்தகும் பொருள் வேறு யாதுளதோ !

குறிப்புரை :

நாலடியிலும் ` நின்ற ` என்பது ஞின்ற என்று ஆயிற்று . நகர ஞகரப் போலி . இத் திருவிருத்தத்தை ` ஐகான்யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகான் உறழும் என்மரும் உளரே ` ( நன்னூல் 124) என்பதன் உரையிற் காட்டினார் சங்கர நமச்சிவாயப் புலவர் . தி .4 ப .28 பா .6 குறிப்பிற் காண்க . செய் - வயல் . நீலம் - நீலோற்பலம் . கருங்குவளை . கரு நெய்தல் . மை - கண்ணிற்கிடும் மை . மலைமகள் - சிவகாமியம்மை . விளக்கொத்தமிடறு . மணிமிடறு . நீலமணிமிடறு . ` திருநீலகண்டன் `. கை நின்ற ஆடல் :- என்று வந்தாய் என்னும் திருக்குறிப்புணர்த்தும் திருக்கை நின்ற திருக்கூத்து .

பண் :

பாடல் எண் : 6

ஊனத்தை நீக்கி யுலகறி யவென்னை யாட்கொண்டவன்
றேனொத் தெனக்கினி யான்றில்லைச் சிற்றம் பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண் டத்திலங்கும்
ஏனத் தெயிறுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

பொழிப்புரை :

அவைதிக சமயத்தைச் சார்ந்தவனாயினேன் என்ற என் குறையைப் போக்கி , அடியேனைச் சூலைநோய் அருளி ஆட் கொண்டு , அடியேனுக்குத் தேனை ஒத்து இனியனாய்த் தில்லைச் சிற்றம்பலவனாய் உள்ள எம் தலைவன் , தேவர்கள் உயிர் பிழைக்குமாறு கொடிய விடத்தை உண்டு இருத்திய கழுத்தில் அணிந்திருக்கும் மகாவராகத்தின் கொம்பின் வனப்பைக் கண்டால் பின் , காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ !

குறிப்புரை :

ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட் கொண்டவன் :- பரசமயஞ் சென்றனன் என்னும் நீங்காத குறையை நீக்கி உலகோர் அறியுமாறு அடியேனைச் சூலைநோய் கொடுத்து ஆளாகக்கொண்ட குருநாதன் . எனக்குத் தேனை ஒத்து இனியவன் . எம் கோன் . வானத்தவர் உய்ந்துபோக , வலிய நஞ்சினை உண்டவன் . உண்ட நஞ்சு அடங்கிய இடம் கண்டம் . அவன் உட்கொண்டானல்லன் . ` பரவைக்கடல் நஞ்சம் உண்டதும் இல்லை ` ( தி .4 ப .82 பா .9.) வெளியேகான்றதும் இல்லை . திருக்கழுத்தளவில் நிறுத்தவல்ல திறத்தைக் காட்டினான் . ஆதலின் உண்ட கண்டம் என்றார் . அத்தகு மேன்மை உற்ற அக்கண்டத்திற்குப் பரிசில் ஏனத்தெயிறு . பன்றிக் கோடு . ` ஏனமுளைக் கொம்பு ` அது கழுத்திலணிந்துள்ளதொன்று . தளைகெடாதவாறு என்னே என்புழி விட்டிசைத்துக் கொள்க .

பண் :

பாடல் எண் : 7

தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
எரித்த விறைவ னிமையவர் கோமா னிணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

ஆராய்ந்து எடுத்த அம்பாலே வானத்தில் உலவிய மதில்கள் மூன்றும் நெருப்பில் மூழ்குமாறு தீக்கு இரையாக்கிய தலைவனாய் , தேவர்கள் மன்னனாய் உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம்முள் கொண்டு தாங்கும் மனத்தை உடைய அடியவர்கள் வாழ்கின்ற தில்லை நகரிலே சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுடைய சிரித்த முகத்தைக் கண்ட கண்களால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ !

குறிப்புரை :

தெரித்தகணை - ஆராய்ந்தெடுத்த அம்பு . ` திரிபுரம் மூன்றும் ` என்றதால் , திரிந்தபுரம் என்றிறந்தகாலப் பொருட்டாய வினைத்தொகையாகும் . செந்தீயில் மூழ்கியதால் முக்காலத்தது அன்று . மூழ்க எரித்த இறைவன் . ( தி .3 ப .64 பா .7, ப .65 பா .6.) பார்க்கின் முப்புரமெரித்தது மும்மலநீக்கமெனல் விளங்கும் . இமையவர் எல்லார்க்கும் கோமகன் . ` மகன் ` என்றது ` மான் ` என மருவிற்று . இதனையும் ` மகள் ` என்றதன் மரூஉவாகிய ` மாள் ` என்றதையும் நூலோர் இறுதிநிலையாக் கொண்டனர் . சேரன் மகன் - சேரமான் . மலையன் மகன் - மலைய மான் . மருமகன் - மருமான் . ` ஆன் என் இறுதி இயற்கையாகும் ` ( தொல் . சொல் . விளி . 15) என்பதற்கு உதாரணமாகச் சேரமான் மலையமான் , என்பன காட்டுதல் , சொல் ஆராய்ச்சியாளர்க்கு ஒவ்வாது . இணையடிகள் - ஒத்த தாள்களை . தரித்த மனத்தவர் - உள்ளத்திற் பொறுத்த அந்தணர் , அடியவர் முதலோர் . வாழ்கின்ற - சிவாநந்த வாழ்வு நடத்துகின்ற . தில்லை :- ஊர்ப் பெயர் . சிற்றம்பலம் , பேரம்பலம் , திருமூலட்டானம் முதலிய பல ( திருக்கோயிற் ) பிரிவுகளுள் ஒன்றான பொன்மன்றைக் குறிப்பது சிற்றம்பலம் . திருக்கோயிலின் எல்லாப் பிரிவுகளையும் ஒரு சேரக் குறித்து வழங்குந் திருப்பெயர் ` சிதம்பரம் ` என்பது . ` பெரும்பற்றப்புலியூர் ` என்பதும் தமிழ்ப்பழம் பெயர் . சிரித்த முகம் - புன்னகை முகிழ்த்த நன்னர் வாண்முகம் . அது கண்ட கண்ணாற் காணத் தக்கது வேறெது ?

பண் :

பாடல் எண் : 8

சுற்று மமரர் சுரபதி நின்றிருப் பாதமல்லாற்
பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங் கநங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

சுற்றிச் சூழும் தேவர்களும் , இந்திரனும் ` உன் திருவடிகளைத் தவிர எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை ` என்று கூறி ஆலகால விடத்தை அடக்குமாறு சிவபெருமானை வேண்டிய போது அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிக் கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாகி தில்லை நகரில் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமான் , மன்மதனை வெகுண்டு சாம்பலாகுமாறு விழித்த நெற்றிக்கண்ணைக் கண்ட கண்ணால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாது உளதோ !

குறிப்புரை :

பரவை - பாற்கடல் . சுற்றும் அமரர் - சூழ்ந்து தொழும் தேவர் . சுரபதி - சுரர்க்குப்பதி (- இந்திரன் ). அமரரும் சுரபதியும் அழைப்ப நஞ்சை உண்டான் . அமரர் சுரபதி என்னுந் தொடர் உம்மைத் தொகையாகா . ` தொகை ` ` ஒட்டு ` ` பெயரினாகிய தொகை ` ` இருபெயரொட்டு ` என்பவற்றை உணர்ந்தோர் ஒட்டாதவற்றைத் தொகை என்னார் . ` எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய ` ( தொல் . சொல் . எச்சவியல் . 24). ` உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர்சொல் நடைத்து என மொழிமனார் புலவர் ` ( ? 25). அதனால் , ` அமரர் சுரபதி ` என்னுந் தொடர் பலசொல் நடைத்தே அன்றி ஒரு சொல் நடைத்தன்று . தேவரும் இந்திரனும் தில்லையம்பலவனை நோக்கி , அழைத்துக் குறையிரந்தது :- ` நின் திருப்பாதம் அல்லால் பற்று ஒன்று இல்லோம் ` என்றுரைத்ததாம் . பரவை :- காரணப் பெயர் . அங்கன் - உருவுளி . அநங்கன் - உருவிலி . ந + அங்கன் = அநங்கன் . அங்கு - அக்கயிலையில் யோகியாயிருந்த இடத்தில் ; காலத்தில் . அநங்கனைச் செற்று - ( உருவிலியாகக் ) கருவேளை அழித்து . தீ விழித்துச் செற்றான் என்று இறுதி பிரித்துக் கூட்டியுரைக்க . தீ விழித்தது நெற்றிக் கண் . அது காமங்கடிந்த செயற்கருஞ் செயலைப் புரிந்த பெருமைக்குரியது . அதனைக்கண்ட கண் கொண்டு , காமங்கொடுக்கும் பிறவற்றைக் கண்டு பிறவிப் பெருங்கடலில் அழுந்தாவாறு , பேரின்பக்கடலில் அழுந்தி நிற்க , அதனையே கண்டுகொண்டு இருக்க .

பண் :

பாடல் எண் : 9

சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமு மாணிக்கம் தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

உள்ளத்திலே முளைத்துச் செழித்து மலர்ந்த செழுந்தாமரை மலர்களை ஒத்த திருவடிகளை நிலையாக மனத்தில் இறுத்திய சான்றோர்கள் வாழும் தில்லையம்பதியில் உள்ள சிற்றம்பலத்தானுடைய முத்தும் வயிரமும் மாணிக்கமும் தூய மலர்களும் அணிந்த திருச்சென்னியின் மலரழகைக் கண்ட கண்களால் இனி மேம்பட்டதாகக் காண்பதற்குரிய பொருள் பிறிது யாதுள்ளதோ !

குறிப்புரை :

சித்தத்து எழுந்த செழுங்கமலத்து அன்ன சேவடிகள் :- புறத்துள்ள கமலம் சேற்றிற் பிறந்தொளிருந்தாமரை . அகத்தாமரை , உள்ளப்புண்டரிகம் , இதயகமலம் , ஆறாதாரகமலம் எல்லாம் பங்கயம் அல்ல . ` கருதுவாரிதயத்துக் கமலத்து ஊறுந் தேனவன்காண் ` ` என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றியெழுஞ்சுடர் ` ( தி .9 திரு விசைப்பா 49) என்று சிவபூசையுள் அகப்பூசை புரிவார் , உந்திக்கமலம் இதயகமலம் புருவநடுக்கமலம் மூன்றினும் தோன்றியெழுஞ் சுடர் என்க . சிவஞானபோதம் சூ . 9. மாபாடியம் பார்க்க . சித்தத்து எழுந்த செழுங்கமலத்து வைத்த மனத்தவர் . கமலத்தில் அக் கமலத்தை அன்ன சேவடிகள் . கமலத்துச் சேவடிகளை வைத்த மனத்தவர் . தில்லை வாழந்தணர் முதலோர் . ` நீலத்தார் கரியமிடற்றார் ` எனத் தொடங்குந் திருப்பாடலை நினைக . ( தி .3 ப .1 பா .3). முத்து , வயிரம் , மாணிக்கம் விளங்கிய தூய ( முடியணிந்த ) சென்னி . மத்தகம் (- சென்னி ) என்பது மருவி மத்தம் என்றாயிற்று . ` பாலொளியாமத்தனே மதுராபுரி யுமையாளத்தனே ஆலவாயா ` ( சிவபோகசாரம் ). மத்தம் - ஊமத்தை . ` மத்தமலர் ` சென்னியிலுள்ள ஊமத்தை மலர் எனலுமாம் . ஆயினும் , பாதாதிகேசமாதலின் சென்னியை இதிற்கொள்ளல் இன்றியமை யாதது . விளங்கிய என்னும் பெயரெச்சம் ( சென்னியென்னும் பொருட்டாயின் அம் ) மத்தத்தைக் கொள்ளும் .

பண் :

பாடல் எண் : 10

தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையை
வரைக்கைக ளாலெடுத் தார்ப்ப மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்து மணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே.

பொழிப்புரை :

இராவணன் செருக்கு மிகுந்துத் தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு பார்வதி கொழுநனாகிய தில்லைச் சிற்றம்பலவன் சிரித்து இராவணனுடைய கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ !

குறிப்புரை :

தருக்கு - உடற்றிமிர் . ( தி .1 ப .5 பா .7) மிக்கது தருக்கு . மிகுத்தவன் அரக்கன் . தோள்வலி ` புஜபலம் `. உன்னி - நோக்கி . தடவரை - பெருங்கயிலை . வரைக்கைகள் - மலைபோலுங் கைகள் வரையை எடுத்து ஆர்ப்ப - ஆரவாரஞ் செய்ய . கோ - கோமகன் ; கோமான் ; கோன் . அரக்கன் - இராவணன் . பத்து மணி முடியையும் நெருக்கி மிதித்த விரலைக் கண்ட கண் .

பண் :

பாடல் எண் : 1

கருநட்ட கண்டனை யண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.

பொழிப்புரை :

கருமை நிலைபெற்ற நீலகண்டனாய் , உலகங்களுக்குத் தலைவனாய் , கற்பகம் போல அடியவர் வேண்டியன வழங்குபவனாய் , போரில் ஈடுபட்ட மும்மதில்களையும் அழிக்க வல்லவனாய் , அங்கையில் வைத்த செந்தீ ஒலிக்க அழகிய கூத்தாடுபவனாய் , தில்லை நகர்த்தலைவனாய்ச் சிற்றம்பலத்து மகாதாண்டவம் ஆடிய பெருமானைத் ` தேவர்கள் தலைவன் ` என்று வாழ்த்துவேன் .

குறிப்புரை :

கரு - கருநிறமுடைய நஞ்சினை . ` கருவார்கச்சி ` ` கருவமைந்தமாநகர் ` என்புழிக்கொள்ளும் பொருள்கொண்டு . தேவாசுரர் வாழ்விற்குரிய கருவை நட்ட கண்டன் எனலுமாம் . நட்ட - நிலைக்கப்பண்ணின . கண்டனை - திருநீலகண்டனை . அண்டத் தலைவனை - அண்டர் நாயகனை . கற்பகத்தை ;- ` புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே `. செருநட்ட மும்மதில் எய்ய வல்லான் :- ` மறப்பிலா அடிமைக் கண் மனம் வைப்பார் தமக்கெல்லாம் சிறப்பிலார் மதில் எய்த சிலை வல்லார் ` ( தி .3 ப .64 பா .7) என்றதில் , ஆளுடைய பிள்ளையார் மலநீக்கம் உறத்தக்கார் இன்னார் என்றருளியதுணர்க . திருநட்டம் - திருக்கூத்து . செந்தீயி லாடியது அது . ஆடி :- பெயர் . ` காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி ` என்புழியும் பெயராய் நின்ற ` வார்த்தை ` யைத் தழுவி ஆறனுருபேற்பதறிக . இறை - இறைவன் . அம்பலம் சிறிது . ஆட்டம் பெரிது . பெரு நட்டம் ` மகாதாண்டவம் `. வானவர்கோன் :- ` வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமான் `.( தி .4 ப .7 பா .2). வாழ்த்துவன் - பரவுவேன் , ` வாழ்த்துவதும் ... ... பரவுவனே ( தி .8 திருவாசகம் ). திருத்தில்லையம்பலத்தானை வாழ்த்தித் தங்கள் வாழ்வும் வைப்பும் ஆக அவனைக் கொண்டு பேரின்புறுவது பிரியாத அந்தணர் நெறி . ( கோயில் நான்மணி மாலை 34)

பண் :

பாடல் எண் : 2

ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.

பொழிப்புரை :

வெகுண்டு வந்த கூற்றுவனை அடியவன் பொருட்டுக் காலால் ஒறுத்தவனாய்த் தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்தில் என்று வந்தாய் என்னும் குறிப்புத் தோன்றும்படி கவித்த திருக்கையுடன் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைச் சென்று தொழுமின்கள் . அக்கூத்தினையே மனம் பொருந்தி நினைமின்கள் . உங்களுக்குப் பிறப்பு இறப்பு அகலாமையாகிய குறைபாடு இனி இராது .

குறிப்புரை :

ஒன்றியிருந்து நினைதல் - சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சா யிடை விடாது நினைத்தல் ; அத்துவிதமாதல் , ஊனம் - குறை . பிறப்பிறப் பகலாமையே உயிர்க்குக் குறை . அதற்குத் தடை மும்மலச் சேர்க்கை . அஃது அற்றால் , சிவஞானப் பேறுண்டாம் . அஃதுண்டாமளவுக்கு மும்மலம் அறும் . கன்றிய - சினந்த . காலனை - இயமனை . காலால் - திருவடியால் . அடியவற்கு ஆய் - அடியவனாகிய மார்க்கண்டேய முனிவனுக்கு இரங்கியருள்வானாகி . கடிந்தான் - சினந்துதைத்த காலன் , தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் - தில்லை நகரில் , சிற்றம்பலத்திலாடுந் திருக்கூத்தினை . சென்று - அத்தில்லையுள் போய் , தொழுமின்கள் - தொழு ( துய் ) மின்கள் . ` உந்தமக்கு ` ` நினைமின்கள் ` ` தொழுமின்கள் ` என்னும் பன்மை உலகோரைக் குறித்தவை . நீயிர் சென்று தொழுது ஒன்றியிருந்து நினைமின் , எய்தும் பயனைப் பெறுவதுறுதி என முன்னரே நன்றுணருமாறு . எம்பெருமான் திருக்குறிப்பு ` என்று வந்தாய் ` என்னும்படி அவனது கவித்த திருக்கை காட்டுகின்றது , ` நாயேனைத் தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்று ` ( தி .8 திருவாசகம் 41) ` கோனே உன்றன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட ... புழுக்கூடு காத்து ... ... இருப்பதானேன் ` ( ? . 59) ` அவன்றன் திருக்குறிப்பே குறிக்கொண்டுபோமாறு அமைமின் ` ( ? . 605) ` கடிசேரடியே வந்தடைந்து கடைக்கொண்டிருமின் திருக்குறிப்பை ` ( ? .606)

பண் :

பாடல் எண் : 3

கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவி றில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே.

பொழிப்புரை :

கல்போன்ற திண்ணிய மனமுடைய உலகமக்களே ! உங்கள் மனத்திடை அவ்வப்போது தோன்றும் விருப்பங்களை வெளியிட்டு அவற்றை நிறைவேற்றித் தரல் வேண்டும் என்று வேண்டி நல்ல உள்ளம் படைத்த சான்றோர்கள் வாழும் தில்லை நகர்ச் சிற்றம்பலத்தில் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைத் தரிசிப்பதனால் , ஆன்ம லாபத்தை விடுத்து இம்மையிற் கிட்டும் அற்பசாரங்களால் யாது பயன் ? தில்லைச் சிற்றம்பலத்திலே பொன்மலைமீது வெள்ளிமலை இருப்பது போல கூத்தப்பிரான் காட்சி வழங்கித் தான்புகுந்த சுவடு புலப்படாமல் அடியேனுடைய மனத்திலே உறுதியாக நிலைபெற்றவனாக வந்து சேர்ந்து விட்டான் .

குறிப்புரை :

கல்மனவீர் - கல்லைப் போலுந்திண்ணிய மனத்தீர் ; உருகாத நெஞ்சுடையீர் , கழியும் கருத்தே - நிலையாத கருத்தையே . சொல்லிக் காண்பது - சொல்லிக் கண்டு கொள்வது . கருத்தைச் சொல்லல் - விருப்பங்களை அறிவித்துக் கொடுத்தருள் என வேண்டுதல் . நட்டம் காண்பதென்னே ? காண்டல் :- கேட்டவரங்கள் கைகூடப் பெறுதலுமாம் என்னே - என்ன பயன் ? அவை பற்று வளர்த்து மீண்டும் பிறப்பிறப்புட்படுத்துவன ஆதலின் பயன் ( ஆன்மலாபம் ) இன்றென்றவாறு . ` நன்மனவர் நவில் ` என்றே பழம் பதிப்புக்களிலும் ஏடுகளிலும் உளது . நன்மனவர் - கன்மனமின்றி உருகும் நெஞ்சுடைய தில்லை வாழந்தணர் முதலோர் . நவில் - துதிக்கும் . பொன்மலையில் வெள்ளிக் குன்றதுபோலப் பொலிந்து இலங்கி ஒன்றிப் புக்கனன் . புகுந்த சுவடு இல்லை . புகுந்த என்பதன் மரூஉவே போந்து என்பது . ` சென்று அடைந்தேனுடைய புந்தியைப் புக்க அறிவு ` ( தி .4 ப .88 பா .9.) ` குழைவார் சிந்தை புக்கிருந்து போகாத புனிதன் ` ( தி .6 ப .79 பா .2) வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் ( தி .7 ப .21 பா .7) போந்த சுவடு - வெளியிற் போய சுவடு என்றலுமுண்டு . ஈண்டு அது பொருந்தாது . பொன்மலை - பொன்மன்று . வெள்ளிக் குன்று - வெண் ணீறு சண்ணித்த மேனியுடைய நடராசப்பிரான் . வெள்ளி வெற்பு - விடை . பவள வெற்பு - வள்ளலார் . மரகதக் கொடி - மாமலையாள் என்றதை நினைக . ( தி .12 பெரிய புராணம் . அப்பர் . 379.)

பண் :

பாடல் எண் : 4

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.

பொழிப்புரை :

வளைந்த புருவங்களையும் , கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும் , கங்கையால் ஈரமான சடைமுடியையும் , பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும் , பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும் .

குறிப்புரை :

குனித்த - வளைத்த . கொவ்வைச் செவ்வாய் - கோவைப் பழம் போலுஞ் செய்ய திருவாய் . குமிழ் சிரிப்பு - புன்னகை . ` வளர்குமிழ் மலரும் ` ( கோயிற் புராணம் நடராசச் . 14) என்றதால் , மலரது முன்னிலையான அரும்பைக் குமிழ் எனல் புலப்படும் . படவே , அரும்பும் நகையைக் குமிழ் சிரிப்பு என்பர் . ` குமிண் சிரிப்பு ` என்றதிற் குமிண் என்றது முதனிலையாதல் வேண்டும் . அவ்வாறொன்று தமிழில் வேறெங்கும் காணப்படவில்லை . ` முறுவலிப்பு ` ( தி .4 ப .81 பா .7). பனித்த சடை - கங்கை நீராற் குளிர்ந்த சடை . ` பவளம் போல் மேனி : ( தி .4 ப .112 பா .1) ` பேரொளிப்பவள வெற்பென ... ... வீற்றிருந்த வள்ளலார் ( தி .12 பெரிய . அப்பர் . 379) பால்வெள் நீறு - பால் போலுந்திரு வெண்ணீறு :- ` செய்ய திருமேனி வெண்ணீறாடி ` ( தி .6 ப .9 பா .7) இனித்தம் - இனிதாந்தன்மை . இனிது அம் . பேரின்பம் தரும் தூக்கிய திருவடி , ` வ + தனம் ` . வகாரமாகிய சென்றடையாத திரு ( துறைசையமகவந்தாதி 100). காணப்பெற்றால் :- பெற லரி தென்றது . மனித்தப்பிறவி . ` மனித்தனாகிய பூழியன் ` ( தடாதகை . திருவவ . 64) ` மனித்தருக்கரசு ` ( ? திருமணப் , 199) எனப் பரஞ்சோதி முனிவர் வாக்கிற் பயின்றுளது இச்சொல் . ` பொல்லா மனித்தர் ` என்றாருமுளர் . மன்றாடுந் திருக்காட்சி கிடைக்கப்பெறின் , வேண்டா என வெறுத் திழிக்கும் பிறவியும் வேண்டும் எனும் உயர்வுடையதாகும் . ` மருவாகி நின்னடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு காற் பிறப்பு உண்டேல் , மறவாவண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங்கூராய் செம் பொனேகம்பனே திகைத்திட்டேனே `. ` மேலும் இப்பூமிசை இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே ` ` வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின் ` ` திருநாவுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் ` ( தி .12 பெரிய புராணம் அப்பர் 312) ` மண்ணில் இருவினைக்குடலாய் வான் நிரயத் துயர்க்குடலாய் எண்ணிலுடல் ஒழிய முயல் அருந்தவத்தால் எழிற்றில்லைப் புண்ணிய மன்றினில் ஆடும்போது செய்யா நடம் காண நண்ணும் உடல் இது அன்றோ நமக்குடலாய் நயந்த உடல் ` ` மறந்தாலும் இனி இங்கு வாரோம் என்று அகல்பவர் போல் , சிறந்தார நடம் ஆடும் திருவாளன் திருவடிகண்டு இறந்தார்கள் பிறவாத இதில் என்ன பயன் ? வந்து பிறந்தாலும் இறவாத பேரின்பம் பெறலாம் ஆல் `. ` ஓதல் உறு மருந்தில்லை யொழியவொரு மருந்தில்லை `. ( கோயிற் புராணம் ) ` எவ்வுடல் எடுத்தேன் மேல்நாள் எண்ணிலாப் பிறவி தோறும் அவ்வுடல் எல்லாம் பாவம் அறம் பொருட்டாகும் அன்றோ தெவ்வுடல் பொடித்தாய் உன்றன் சேவடிக்கு அடிமை பூண்ட இவ்வுடல் ஒன்றே அன்றோ எனக்கு உடலானது ஐயா !` ( திருவிளையாடல் விடையிலச்சினை . 16). ` ஆலவாயுடையார் புகழ் பாடப்பெறுவேமேல் வேண்டுவதிம் மனித யாக்கை ( ? . திருவால வாயானபடலம் . 1) ` விரைவிடை யிவரும் நினைப்பிறவாமை வேண்டுநர் வேண்டுக மதுரம் பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும் பிறவியே வேண்டுவன் தமியேன் ` ( சோணசைலமாலை ). ` இந்த மாநிலத்தே ` ( தி .4 ப .106 பா . 2 - 3.).

பண் :

பாடல் எண் : 5

வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள் செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத் தான்றில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன் றோநந்தங் கூழைமையே.

பொழிப்புரை :

சிவபெருமானுடைய அடியார்களே ! நமக்கு நல்வினை காரணமாக இந்த ஒப்பற்ற மனிதப் பிறவி நமக்குக் கிட்டியுள்ளது . இந்த மனிதப் பிறவியை மதித்துச் செயற்படுவீராக . அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் அருளிச் செய்தவனாய் , முப்புரங்களை அம்பு எய்து தீக்கு இரையாக்கியவனாய் , தில்லை அம்பலத்துள் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுக்கு அடியவராக இருப்பதன்றோ நம் அடிமைப் பண்பாகும் ?

குறிப்புரை :

நம் தமக்கு ஈது ஓர் பிறவி வாய்த்தது . இப் பிறவியை மதித்திடுமின் . அவமதியாதீர் . இப்பிறவியின் பயன் ? தில்லையம் பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ ? அதுவே நம் கூழைமை . நம் கூழைமை கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பது அன்றோ ? ஆம் ஆம் . ஆயின் , வாய்த்த இப்பிறவியை மிகப் பெரிதாக மதித்து அவனுக்கு ஆட்பட்டிருப்பதே இப்பிறவியின் பயனாகிய கூழைமை . பார்த்தற்கு - அருச்சுனனுக்கு , பிரதைக்குப் புதல்வன் என்ற காரணத்தால் வந்த பெயர் பார்த்தன் என்பது . பாசுபதம் அருள் செய்தவன் . ` அருச்சு னற்குப் பாசுபதங் கொடுத்தான் ` ( தி .4 ப .7 பா .10). பத்தருள்ளீர் - தொண்டருள்ளீர் . அவருள் ஒருவராயடங்கிய பெருமையீர் . ` சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் ` ( தி .9 திருப்பல்லாண்டு . 4) அன்று - ` மூவார் புரங்கள் எரித்த அன்று . கோத்து மேருவில்லிலே எரி காற்றீர்க்கரிகோலை ` வாசுகிநாணிலே கோத்து . தீவளைத்தான் - தீவளைந்து எரிக்கச் செய்தான் . செய்தவனும் வளைத்தவனுமாகிய கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பது அன்றோ நம் கூழைமை என்க . கூழைமை - ( தி .4 ப .79 பா .3.) குறிப்பினைக் காண்க . ` அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க் கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே ` ( பெரியாழ்வார் : - 2:- 5)

பண் :

பாடல் எண் : 6

பூத்தன பொற்சடை பொன்போன் மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன பல்குறட் பூதகணந்
தேத்தென வென்றிசை வண்டுகள் பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள ரோவென்றன் கோல்வளைக்கே.

பொழிப்புரை :

பூத்துக் குலுங்குவது போன்ற பொலிவை உடைய செஞ்சடை கொன்றை மலரை அணிந்து பொன்போல ஒளிவீச , அடியார் கூட்டங்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்க , பூதக் கூட்டங்கள் வாத்தியங்களை ஒலிக்க , ` தெத்தே ` என்று வண்டுகள் ஒலிக்கும் தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்திற் கூத்தினை நிகழ்த்தும் சிவ பெருமானைப் போல , திரண்ட வளையல்களை அணிந்த என் மகளுடைய மனத்தைத் தம் நாட்டியத்தால் கவரவல்லவர் பிறர் உளரோ ? ( என்று முக்கணான் முயக்கம் வேட்ட பெற்றிகண்டு தாய் இரங்கிக் கூறியவாறு .)

குறிப்புரை :

பொற்சடை :- பொல் + சடை ; பொலிவுடைய சடை . பின்னர்ப் பொன்போல் மிளிர என்றலின் , இதனை உவமத் தொகையாகக் கொள்ளல் பொருந்தாது . பொல் என்பது ( பொல் + அம் =) பொலம் என அம்முப் பெறலும் , பொன் என ஈறு திரிதலும் உண்டு . ` பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ் செய்யுள் மருங்கிற்றொடரியலான ` ( தொல் . எழுத்து 356) என்றது சொல்லாராய்ச்சிக்கு ஒத்ததன்று . ஈறு கெடலாம் . லகாரம் மகாரம் தோன்றற்கு இயைபு யாது ? நிலம் என்பதில் அம்முப் பேறு நோக்கின் , இதன் பொருந்தாமை புலப்படும் . பொலிதல் - விளங்குதல் . விளக்கம் பல வகைத்து . பொன்னைப் போலும் விளக்கமே ஈண்டுக் கொள்ளற்பாலது . மிளிர்தல் - ஒளி செய்தல் ; பிறழ்தல் ; கீழ்மேலாதல் . மூன்றும் சடைக்கிருக்கின்றன . பூத்தல் - பொலிவுற்றன . பொற்சடை பொன்போற்பூத்தன , மிளிரப் பூத்தன . புரிதல் - விரும்புதல் . புரிகணம் - விரும்பும் கூட்டம் ; அன்பர் இனம் . அடியார் கூட்டம் . ஆர்த்தன :- குடவமுழவம் வீணை தாளம் குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்து ஆடுமே ` ( தி .6 ப .4 பா .5). ` மாக்கூத்து ` - மகாதாண்டவம் . அரித்தல் - சிறிது சிறிதாக எடுத்துச் சேறல் . ` அரித்தொழுகு வெள்ளருவி ` ( அப்பர் ). அஃது ஈண்டு எடுத்துச் செல்லற்பொருட்டு . பொன் தீமணி விளக்குப் பூதம்பற்றப் புலியூர்ச்சிற்றம்பலமே புக்கார்தாமே ` ( தி .6 ப .2 பா .9). கொட்டியரித்தன எனலுமாம் . பல்பூதம் குறட்பூதம் . பூதகணம் . குறள் ; சிந்து ; நெடில் ; கழிநெடில் என்பன உடலைக் குறித்த வேறுபாடு . குறளன் , சிந்தன் , நெடியன் , நீண்டோன் ( கழிநெடியன் ) என்னும் பெயர்களை நினைக . குறளர்க்கு ஆமை உவமம் . ( பெருங்கதை . க . 46:- 261 - 3 ) பார்க்க .

பண் :

பாடல் எண் : 7

முடிகொண்ட மத்தமு முக்கண்ணி னோக்கு முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே.

பொழிப்புரை :

தில்லை நகரில் சிற்றம்பலத்திற் கூத்து நிகழ்த்தும் எம் பெருமானுடைய ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திரு வடிகளோடு தலையில் அணிந்த ஊமத்தைப் பூவும் , மூன்று கண்களின் பார்வையும் , புன்சிரிப்பும் , உடுக்கையை ஒலிக்கும் திருக்கையும் , உடல் முழுதும் பூசிய திருநீறும் , பார்வதியை இடப்பாகமாகக் கொண்ட தனக்குரிய வலப்பாகமும் , இடுப்பு முழுதும் பரவி உடுக்கப்பட்ட புலித்தோலும் உலகப் பொருள்களிலே ஈடுபட்டுத் தீவினையை ஈட்டிய அடியேனுடைய பாவியான உள்ளத்தில் இப்பொழுது நிலையாக இடம் பெற்றுவிட்டன .

குறிப்புரை :

முடிகொண்ட மத்தம் - திருமுடியிற் சூடிக்கொண்ட ஊமத்தம்பூ . முக்கண்ணின் நோக்கு - செங்கதிர் , வெண்கதிர் , செந்தீயாகிய மூன்று கண்களின் பார்வை . இறைவன் விசுவரூபி யாதலின் , அவ் விசுவத்தில் ஒளிரும் அம் மூன்றும் அவனுடைய கண்களாயின . ` அருக்கனாவான் அரனுரு அல்லனோ ?` அவன் உருவமும் ஆண்டவன் அவ்வுருவில் உள்ள உயிருமாகக் கொள்க , ` அங்கதிரோனவனை அண்ணலாக் கருதவேண்டா வெங்கதிரோன் வழியே போவதற்கமைந்து கொண்மின் ` ( தி .4 ப .41 பா .8). முறுவலிப்பு :- முறுவல் (- பல் , சிரிப்பு ) என்பதனடியாக முறுவலித்தல் என்று தோன்றிய தொழிற்பெயர் . ` நகை என்பது சிரிப்பு ; அது முறுவலித்து நகுதலும் அளவே சிரித்தலும் பெருகச் சிரித்தலும் என மூன்றென்ப ` ( தொல் பொருள் . மெய்ப்பாடு 3 பேராசிரியம் ) ` நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க எண்ணாராத்துயர் விளைக்கும் இவையென்ன உலகியற்கை ` ( திருவாய்மொழி . 4. 2. 9 தி . பா . 1 ). முறுகல் என்பது கடுமையுறல் என்னும் பொருட்டு . அது முறுவல் என மருவிற்று . திருகல் திருவல் , கருகல் கருவல் , மறுகல் மறுவல் , சிறுகல் சிறுவல் முதலியன காண்க . பற்கள் கடியனவாதலை அவை தீயில் வெந்தழியாமையாற் காணலாம் . முறுவலிப்பு - சிரிப்பு . புன்முறுவல் . ` செவ்வாயிற்குமிழ் சிரிப்பு ` ( தி .4 ப .81 பா .4). துடி - உடுக்கை . கொண்ட கை - ஏந்திய திருக்கை . ` சேர்க்குந்துடி சிகரம் ` ` தோற்றம் துடியதனில் ` ( உண்மை விளக்கம் ) ` தமருகக் கரம் ` ( சிதம்பரச் செய்யுட்கோவை .1) ` துதைந்த வெண்ணீறு `:- ` தூவெண்ணீறு துதைந்த செம்மேனி ( தி .5 ப .65 பா .4) தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரும் ... ... உடையார் புகுந்தனர் வீதியுள்ளே ! ( அப்பர் புராணம் . 140) சுரி குழலாள் - சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியார் . சுரிகுழல் - வினைத்தொகை , சுரியல் :- ஆண் பெண்மயிர்ப் பொது . இது சுரிதல் என்னுந் தொழிற்பொருட்டு . படி - உருவம் . குழலாளதுருவம் . குழலாள்படி கொண்ட பாகம் . மங்கையுருவைக் கொண்ட இடப்பங்கு , பாய்புலித்தோல் :- ` பாய்புலி ` இறந்தகாலவினைத்தொகை . தோலுரிப்பதன் முன்னையது பாய்தல் . புலியினது தோல் . பாவி என் நெஞ்சில் எனமாற்றிப் பாவியாகிய என் நெஞ்சினுள் என்றுரைக்க . பாவி என நெஞ்சினைக் குணியாகக் கூறலும் பொருந்தும் . ` அழுக்காறென வொருபாவி ( குறள் . 168) ` இன்மை யெனவொருபாவி ` ( குறள் . 1042) என்புழிப் பரிமேலழகர் , பண்பிற்குப் பண்பில்லையேனும் தன்னை யாக்கினானை யிருமையுங் கெடுத்தற் கொடுமைபற்றி ... ... பாவியென்றார் ; கொடியானைப் பாவியென்னும் வழக்குண்மையின் ` என்றுரைத்ததுணர்க . குணத்திற்குக் குணமில்லை . குணிக்கே குணம் உண்டு . அழுக்காறும் இன்மையும் குணம் . அவற்றைப் பாவி எனக் குணியாக்கின் . அவற்றின் வேறாய்ப் பாவம் என்னுங் குணம் அவற்றிற்கு உண்டு என்றாகும் . ஆதலின் , பண்பிற்குப் பண்பில்லையேனும் ... ... கொடுமைபற்றிப் பாவி யென்றார் ` என்றுரைத்தார் . ஆண்டுப் பண்பியில்லை யேனும் என்றல்பிழை . குடிகொண்டவா - குடிகொண்டவாறு என்னே ! பெருவியப்பு . நெஞ்சில் அம்பலக் கூத்தன் குரைகழல் குடிகொண்டது .

பண் :

பாடல் எண் : 8

படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித் தூநீறணிந்துன்
அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.

பொழிப்புரை :

அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே ! என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன் . இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன் . எழுவகைப்பட்ட பிறப்புக்களில் எந்தப் பிறவி எடுத்தாலும் எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன் . அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பெயரேன் . எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் உள்ளேன் .

குறிப்புரை :

அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே உன் நாமத்து எழுத்து அஞ்சும் படைக்கலம் ஆக என் நாவில் கொண்டேன் ; இடைக்கலம் அல்லேன் ; உனக்கு எழு பிறப்பும் ஆள் செய்கின்றேன் ; துடைக்கினும் போகேன் ; தூநீறு அணிந்து தொழுது வணங்கி , உன் அடைக்கலம் கண்டாய் . என் நாவில் உன் நாமம் கொண்டேன் . உன் நாமத்து - உன் பெயர் பல்லாயிரங்களுள் , எழுத்தஞ்சு - திருவைந் தெழுத்துப் பெயர் . எழுத்தஞ்சும் கொண்டேன் என இனைத்தென அறிந்த கிளவிக்கு வினைப்படு தொகுதிக் கண் வேண்டும் உம்மை விரித்துரைத்துக் கொள்க . எழுத்தஞ்சும் படைக்கலம் ஆகக் கொண்டேன் . அப்படைக்கலம் ஆணவப் படையை அகற்றும் மாயைப் படையை வாராமே மாற்றும் . கருமப்படையைக் கழற்றும் . இம் மும் மலப்பகையும் போக்கும் படைக்கலம் திருவைந்தெழுத்து :- ` முதிரும் ஆணவப் பகையும் அம்முழுப்பகைதுமிப்பக் கதியும் மாயையும் கருமமும் , ( தணிகைப்புராணம் . 808) ` பகைசெய்யு முலகு ` ( ? . 708), இடைக்கலம் :- ` கலம் ` என்னும் சொல் அடைவேறு பாட்டாற் பொருள் வேறுபட நிற்கும் . அடைக்கலம் , அணி கலம் , அருங்கலம் , இடுங்கலம் , இலைக்கலம் , ஒற்றிக்கலம் , சேமக்கலம் , படிமக்கலம் , பரிகலம் , மரக்கலம் முதலியவற்றை நோக்குக . ` எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் ` என்றதால் , ` இடைக்கலம் அல்லேன் ` என்பது ஆட்செய்யாதொருகாலத்தும் இராமையைக் குறித்து நிற்றல் விளங்கும் . விளங்கவே , நாவிற்கொண்டது முதலாக எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் ; இடையில் ஒருபோதும் ஆட்செய்யா தொழிந்தேனல்லேன் ; திருவைந்தெழுத்தை நாவிற்கொள்ளா தொழிந்தேனுமல்லேன் . ` இடைநடுவே குறிக்கும் இச்செல்வம் ` என்றதுபோல , இடையில் வந்த பொருள் அல்லேன் என்ற பொருள தாகும் . உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் என்னளவே ! எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமன் உன்னளவே என்று பின்னரும் ( தி .4 ப .108 பா .4.) இடைக்கலத்தே எனக் காலம் இடப்பொருட்டாதல் , அறிக . ஆட்பட்டு இடைக்கலத்தே கிடத்தல் என்றதும் உணர்க . கலம் - மட்கலம் . அது மாயாகாரியமான மண்ணிலிருந்து தோன்றி அழியும் . மண்தோன்றியழிவதற்கு இடையில் மட்கலம் தோன்றியழியும் . அதுபோல் அல்லேன் . எழுபிறப்பும் ஆட் செய்கின்றேன் எனலும் பொருந்தும் . ` புல்லார் புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள் வில்லேற்றி இடைக்கலத் தெய்து விடல் ` ( பழமொழி நானூறு , 27) என்புழி ` மட்பாண்டம் ` என்று பொருள் கொண்டனர் ( லெக்ஸிகன் ). ` தோன்றா இடைக்கல மருதல் செய்யும் முலை ` ( கம்பர் . யுத்த . அணிவகுப்புப் . 16) என்புழிக் குற்றுகரப் புணர்ச்சியாகக் கொள்ளப் படும் . ஈண்டு அவ்வாறு பிரித்துக் கொள்ளல் பொருந்தாது . துடைக்கினும் - துடைத்தாலும் போதல் செய்யேன் . சிற்சிலவற்றைத் துடைத்துப் போக்குதல் பழக்கம் . அதுபோல , என்னை நீ என் அடியான் எனக்கொள்ளத்தக்காய் அல்லை என்று விலக்கினும் விலகேன் என்றவாறு . நீற்றைத் தொழுது வணங்கி அணிந்து எனலும் தூநீறணிந்து ( நின்னைத் ) தொழுது வணங்கி எனலும் பொருந்தும் . அணிந்து என்னும் வினையெச்சம் அடைக்கலம் என்பதன்கண் உள்ள முதனிலையொடு முடிந்தது . அணிதில்லை :- தில்லையின் அழகு , தில்லைச் சிற்றம்பலம் , தில்லைச் சிற்றம்பலத்தான் என்னும் இரண்டற்கும் ` அணி ` ஒட்டு உரித்தாகும் ,

பண் :

பாடல் எண் : 9

பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து புரிசடைகண்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கர்வேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்னத்த னாடல்கண் டின்புற்ற தாலிவ் விருநிலமே.

பொழிப்புரை :

பொன்னை ஒத்த செந்நிறமான உடம்பில் வெண்மையான திருநீற்றை அணிந்து , முறுக்குண்ட செஞ்சடைகள் மின்னலைப் போல ஒளிவீச , பிச்சை எடுத்துத் திரியும் , உளியால் செதுக்கப்படாது இயல்பான சிவ வேட அடையாளத்தை உடையவனாய் , வளம்மிக்க தில்லை நகரின் சிற்றம்பலத்தான் ஆகிய என் தலைவனாம் பெருமானுடைய திருக்கூத்தினைக் கண்டு இவ்வுலகம் இன்புறுகின்றது .

குறிப்புரை :

பொன் ஒத்த மேனிமேல் வெள்நீறு அணிந்து :- பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறு `( தி .4 ப .81 பா .4), ` வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே ` ( தி .4 ப .112 பா .1) ` சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி யெம்மான் `( தி .4 ப .112 பா .9) என்றதால் , ` சிவன் ` என்பதைச் செம் மேனியன் என்னும் பொருட்டாய தமிழ்ச்சொல்லாக்கியருளியதுணரப் படும் . தாங்கரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் ` ( தி .6 ப .39 பா .8) என்றதும் உணர்க . புரிசடைகள் மின் ஒத்து இலங்க :- முறுக்குண்ட சடைகளின் தோற்றம் மின்னலைப் போன்று விளங்க . பலிதேர்ந்து உழலும் விடங்கர் - பிச்சையெடுத்துத் திரியும் சிவபிரான் . விடங்கர் - உளியால் செய்யப்படாதவர் ; இயல்பாய வடிவினர் . சத்த விடங்கத் தலத்தும் அவ்விடங்கரை வழிபட்டுய்யலாம் . விடங்கரது நட்டமாகிய ஆடல்கண்டு இன்புற்றது இவ்விரு நிலம் . வேடச் சின்னத்தினான் . சிவவேடமாகிய சின்னம் (- அடையாளம் ) ` சிவசின்னம் ` என்னும் வழக்குண்மையறிக . சின்னத்தினால் மலிந்ததில்லை . தில்லையுள் சிற்றம்பலம் . சிற்றம்பலத்து நட்டம் என் அத்தன் ஆடல் . அந் நட்டமாகிய ஆடல் . விடங்கரது நட்டம் . என் அத்தனது ஆடல் . விடங்கராகிய என் அத்தனது நட்டமாகிய ஆடல் . ஆடலைக்கண்டு இருநிலம் இன்புற்றது . நட்டம் - வட சொற்சிதைவன்று . தமிழ்ச்சொல் ` ஓரில் நெய்தல் கறங்க ஓரில் , ஈர்ந்தண் முழவின் பாணிததும்பப் , புணர்ந்தோர் பூவணியணியப் பிரிந்தோர் , பைதல் உண்கண் பனிவார் புறைப்பப் , படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன் , இன்னாதம்ம இவ்வுலகம் . இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே ` ( புறநானூறு 194) என்றதும் அதனுரையில் ,` கொடிது இவ்வுலகினதியற்கை ; ஆதலான் , இவ்வுலகின் தன்மையறிந்தோர் வீட்டின்பத்தைத் தரும் நல்ல செய்கைகளை அறிந்து செய்துகொள்க `. என்றெழுதியுள்ளதும் ஈண்டு நினைத்தற்குரியன . ` உய்ந்து போமாறே வலிக்குமாம் மாண்டார் மனம் `. நாலடியார் . 23.

பண் :

பாடல் எண் : 10

சாட வெடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை
வீட வெடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட வெடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட வெடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே.

பொழிப்புரை :

தக்கன் நிகழ்த்திய வேள்வியில் தனக்கு உரிய அவியைப் பெறுவதற்காக வந்து கலந்து கொண்ட சந்திரனைத் தேய்ப்பதற்காகத் தூக்கப்பட்டதும் , கூற்றுவனை அழிப்பதற்கு உயர்த்தப்பட்டதும் , திருமாலும் பிரமனும் காணமுடியாது தேடுமாறு பாதலத்துக்குக் கீழும் வளர்ந்ததும் தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்காக உயர்த்தப்பட்டதும் ஆகிய சிவபெருமானுடைய இடது திருவடியன்றோ நம்மை அடிமையாகக் கொண்டதாகும் .

குறிப்புரை :

தக்கனது வேள்வியிலே சந்திரனைச் சாடித்தேய்க்க எடுத்ததும், காலனை அழிக்க எடுத்ததும், நாரணனும் நான்முகனும் தேட எடுத்ததும், தில்லைச் சிற்றம்பலத்துள் நட்டம் ஆட எடுத்திட்டதும் ஆகிய பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டது. சாடல் - கொல்லல்; சாட - கொல்ல. வேள்வி - யாகம். தக்கயாக சங்காரம் கந்தபுராணத்திலே தட்ச காண்டத்திலே விரித்துணர்த்தப் படுகின்றது. வீடல் - சாதல். வீட - சாவ. நட்டம் ஆடல் - `கூத்தாட்டு`. தூக்கிய திருவடி; குஞ்சிதபாதம்; `வளைதாள்` `முத்திதருந்தாள்` என்பர். `அருள்தான் எடுத்து நேயமிகும் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத்தான் அழுத்தல்தான் எந்தையார் பரதம்` `முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு` ( உண்மை விளக்கம் ) என்பவற்றால், ஆட் கொள்ளும் பாதம் ஆட எடுத்திட்ட பாதம் எனல் இனிது விளங்கும். `மலம் சாய அமுக்கிய` ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்` என்புழி. ஆட்கொள்ளாத பாதம் என்பது கருத்தன்று. அது பாசவீடு குறித்தது. இது சிவப்பேறு குறித்தது. இரண்டனுள் சிவப்பேறு சிறந்தது. அதனால், எடுத்த திருவடியை எடுத்தேத்துவர்.

பண் :

பாடல் எண் : 1

பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளின மேந்தின வென்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்று முண்டோ வந்தணாழி யகலிடமே.

பொழிப்புரை :

இவ்வுலகினை ஊழிவெள்ளம் மூடி முழுகச் செய்த காலத்தில் உன் பாதங்களை எல்லாம் இருபது பறவைகள் சுமந்தன என்று கூறுவர் . குளிர்ந்த பிறை தங்குதலைக் கொண்டதாய் , கங்கைக்குத் தங்குமிடம் வழங்கிய வள்ளன்மையை உடைய சடையை விரித்துக்கொண்டு ஆடும் திருக்கழுமலத்துப் பெருமானே ! அழகிய குளிர்ந்த கடலாற் சூழப்பட்ட உலகத்துயிர்கள் உனக்கு அடிமையாதல் அன்றி வேறாதலும் உண்டோ ?

குறிப்புரை :

பார் - நிலம் . ஞான்று - நாளன்று , மரூஉ . நாள் இருபத்தேழு ; அசுவினி முதலியன . ` திருவோண ஞான்று `, ` ரேவதி ஞான்று ` என்னும் வழக்குண்மை கல்வெட்டு முதலியவற்றின் அறிக . நின்பாதம் எல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் :- இவ்வுண்மை வரலாறு நெடுங்காலத்தின் முன்னையதாயினும் , உலகில் வழங்கி வருதலின் , ` என்பர் ` என்றார் . தேவர் புள்ளினமாகித் தாங்கியிருப்பதாகப் புராணம் புகலும் . அமரர் மொய்த்துச் சுற்றிக்கிடந்து தொழ முந்நீரில் , மிதந்தது . ` தொல்பறவை சுமந்தோங்கு செம்மைத் தோணி புரம்தானே ` ( தி .3 ப .100 பா .9) என்று காழிவேந்தர் திருவாக்கும் இவ்வுண்மையை வெளியிட்டதறிக . நளிர் மதியம் - குளிர்பிறை , நளிர் ` என்பது சந்நிபாத சுரத்திற்குத் தமிழில் வழங்கும் ஒரு பெயர் . இது வடசொல்லன்று . ` கால்கொண்ட ` வண்கை ` ` தாள்தோய் தடக்கையோ `? ` தாள்தடவு கையன் ` ( தி .4 ப .19 பா .10) கங்கை என்றிருந்ததோ ? ` வண்கை ` க்கும் சடைக்கும் இயைபுயாது ? கையாற் சடை விரித்து எனல் பொருந்துமேற் கொள்க . மதியமும் கங்கையும் அணிந்த சடையை விரித்தாடும் கழுமலவர் . கால் - வலிமை . பெருக்கெடுத்து விரைந்து வந்த சடை . வலிமை கொண்ட கங்கை . கழுமலம் + அர் = கழுமலவர் . புலம் + அர் = புலவர் . சீகாழிக்குரிய பன்னிரு பெயருள் ஒன்று கழுமலம் . ` ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இது ` ( தி .1 ப .1 பா .3) ` துயர் இலங்கும் உலகிற் பல வூழிகள் தோன்றும் பொழுதெல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் ` ( ? .7) ` கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஓர் காலம் இது ` ( ? . 5) ` ஊருறுபதிகள் உலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் ` ( தி .3 ப .118 பா .3). அம் தண் ஆழி அகல் இடம் - அழகும் தண்மையும் ஆழமும் உடைய கடலிடை அகன்ற இடம் . அந் நிலத்துறையும் உயிர்கள் எல்லாம் கழுமலவர்க்கு ஆள் ( அடிமை ) அன்றிப் பிறிதும் உண்டோ ? ` உயர் பசுபதியதன் மிசை வருபசுபதி ` ( தி .1 ப .22 பா .5). ` பாய ஆருயிர் முழுவதும் பசுபதியடிமை `. உலகெலாம் நீருள் அழுந்திய ஊழியில் ஒருவனே அழியாத் தோணி புரத்தில் விளங்கக் கண்டு , ஆண்டவன் இவனே என்றுணர்ந்து ஆளாயின உயிர்கள் . அப்போதும் ஆளாகாவேல் அவை சித்தெனப் படுமோ ?

பண் :

பாடல் எண் : 2

கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ் சூடி யுகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன் வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க நாடொறு மாடுவரே.

பொழிப்புரை :

முகப்பிலே கொடிகள் கட்டப்பட்ட பெரிய மாடவீடுகள் வீதிகள் முழுதும் நெருக்கமாக அமைந்து விளங்க , எல்லா ஆன்மாக்களையும் தனக்கு அடிமையாக உடைய வேதியன் ஆகிய சிவபெருமான் தலைமாலையைச் சூடிக்கொண்டு மகிழ்ந்து காளை வாகனனாய்க் காட்சி வழங்கும் திருக்கழுமலத்தை அடையும் அடியவர்கள் தங்கள் நல்வினை தீவினைகள் யாவும் அஞ்சி அகலப் பிறவிப்பிணி தீர்ந்தோம் என்று நாடோறும் மகிழ்ந்து கூத்தாடுவர் .

குறிப்புரை :

கடை - புறவாயிலில் . ஆர் - பொருந்திய . கொடி மாடங்கள் ; நெடுமாடங்கள் . ( தி .4 ப .83 பா .1) எங்கும் மாடங்கள் கலந்து இலங்க உடையான் . மாடங்களெங்கும் கொடி கலந்து இலங்க எனலுமாம் . உடையான் - சுவாமி . உடைதலை - உடைந்த தலை . தலைமாலையும் சூடி . உகந்து - விரும்பி . உகந்து சூடியருளி ; சூடி உகந்தருளி . விடை - ` உயர்பசுபதி ` ( தி .1 ப .22 பா .5) விடையுடைய அவ்வேதியன் :- சிவபிரான் . வாழும் - கோயில்கொண்டுறையும் . கழுமலத்துள்ளடைவாக ஆடுவர் . வினைகள் எள்க . (- அஞ்சி அகல ) நாள்தொறும் ஆடுவர் . (- பரமாநந்தத்தில் முழுகுவர் ). பேரின்பக் கூத்து ஆடுவர் . ` வினைகளவை ` என்பதில் அவை சுட்டன்று . நிலைமொழிப் பொருளது .

பண் :

பாடல் எண் : 3

திரைவாய்ப் பெருங்கடன் முத்தங் குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக் கழுமலத் துள்ளழுந்து
விரைவாய் நறுமலர் சூடிய விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

பெரிய கடல் தன் அலை வாயிலாக முத்துக்களைக் கரையில் சேர்க்க நுரையோடுகரை சேர்ந்த அம் முத்துக்களை நெய்தல் நிலமகளிர் முகந்து கொண்டு ஓட , அத்தகைய வளம் நிறைந்த கழுமலத்துள் நிலையாக இருக்கும் , நறுமணம் கமழும் பூக்களைச் சூடிய சிவபெருமானுடைய திருவடிகளைச் சூடி , விண்ணவனாகிய அவர் திருவடிக்கே இவை நீக்கலாகாத பரிசுகளென அர்ப்பணிப்பர் . அத்திருவடிகள் நாடொறும் நம்மை ஆள்வனவாம் . ( நுளைச்சியர் முகந்து கொண்டோடிச் சூடி அர்ப்பணிக்கும் பரிசினவான திருவடிகள் நம்மை ஆள்வன என முடிக்க .)

குறிப்புரை :

திரை - அலை . வாய் - வழி என்னும் பொருட்டு . திரைவழியாற் குவிப்ப . பெருங்கடல் திரை வழியால் முத்தம் குவிப்ப , நுரைவாய் நுளைச்சியர் முகந்துகொண்டு ஓடி வரையாப் பரிசு என்க . ` ஓடி ` என்னும் வினையெச்சம் வரையா ` என்பதன் முதனிலை கொண்டது . கழுமலத்துள் அழுந்து விண்ணவன் ; மலர் சூடிய விண்ணவன் . விரைவாய் நறுமலர் . விரை - மணம் . வாய் - வாய்ந்த . விண்ணவனடிக்கே வரையாத பரிசு . விண்ணவன் - வெள்ளத்தின் மேல் நில்லாது விண்ணில் ஓங்கிக் கழுமலத்துள் அழுந்தியிருந் தருள்பவன் . ஈண்டு விண் தோணிபுரம் நின்றவான் ( வெளி ). வரைதல் - நீக்கல் . வரையா - நீக்காத , ஓடிச்சூடிய என்றும் ஓடி அழுந்து மலர் சூடிய என்றும் கூட்டலாகாமை உணர்க . நம் தம்மை நாள்தொறும் ஆள்வன . இவை இத் திருவடிகள் . ` ஆள்வனவே ` என்று முடியும் திருப்பாடல் பலவும் ஒரு தனிப்பதிகமாயிருந்தனவோ ?

பண் :

பாடல் எண் : 4

விரிக்கு மரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல்
உரைக்கி லரும்பொரு ளுள்ளுவர் கேட்கி லுலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங் கழனம்மை யாள்வனவே.

பொழிப்புரை :

வேதங்களின் சொற்களால் விரித்துரைக்கப் படுபவனாய் , மேம்பட்ட நூல்களாற் சிறப்பித்து ஓதப்படுபவனாய் , சொற்களால் மக்கள் விளக்கிச் சொல்லமுடியாத அரும் பொருளாய் , தன் பெருமையைக் கேட்பவர் தியானிக்கத்தக்கவனாய் , உள்ள கழுமலப் பெருமான் தன் ஓசையால் பலரையும் அச்சுறுத்தும் பறையின் ஒலியோடு பூதங்கள் பாடத் தான் பண்டு ஆடும் அந்த வகையிலேயே ஆடுவதற்குப் பயன்படுத்தும் திருவடிகள் நம்மை அடிமையாக ஏற்பனவாகும் .

குறிப்புரை :

பதம் - வேதத்தின் ஒர் உறுப்பு . உலகம் முற்றும் இரிக்கும் பறை . உலகம் முழுதையும் அச்சுறுத்துகின்ற வாத்தியம் . இரித்தல் - அச்சுறுத்தல் . பறையொடுபாட , பூதங்கள் பாட ஆடுங்கழல் . நிருத்தம் ஆடுங்கழல் . பழம்படி ஆடுங் கழல் . பழம்படி - பண்டைய வண்ணம் . ஆடுங்கழலை வேதங்கள் அரும் பதங்களை விரிக்கும் . அக் கழலை நூல் ஓதும் . அரும் பொருளை உள்ளுவர் உரைக்கில் வேதங்கள் விரிக்கும் . கேட்கில் நூல் ஓதும் . உரைத்தலும் கேட்டலும் அரும்பொருளை யுள்ளுவரது தொழில் . விரித்தல் வேதத்தினது . ஓதல் நூலினது . ` அரும் பொருளுள்ளுவர் ` இடைநிலை விளக்கு . விரிக்கும் அரும்பதம் வேதங்கள் ஓதுங்கழல் . விழுமிய நூலை யுரைக்கிலும் அரும் பொருளை யுள்ளுவர் கேட்கிலும் உலக முற்றும் தனக்கு வடிவாகக் கொண்டதாகும் கழல் ; பழம் படி நிருத்தம் ஆடுங்கழல் எனக் கூறலுமாம் . ` விரிக்கும் ` ` ஓதும் ` ` முற்றும் `, என முற்றாக்கினும் ` கழுமலவன் ` என்னும் பெயரொடு இயைத்துரைப்பினும் பொருந்தும் . பொருந்தினும் நன்கு பொருள் விளங்காதது இப்பாடல் என்பது புலப்படும் . வேதங்களையும் நூல்களையும் உரைக்கிலும் கேட்கிலும் உலகமுற்றும் அரும் பொருள் உள்ளுவர் . அப் பொருள் நம்மை ஆள்வனவாகிய ஆடுங் கழலே எனலுமாம் . உலகேழும் விளங்க விழுமிய நூல் ஆய்ந்தான் அடிநிழற் கீழதன்றோ என்றன் ஆருயிரே ` ( தி .4 ப .84 பா .9.) பதம் முதலிய ஐந்தும் பாட எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 5

சிந்தித் தெழுமன மேநினை யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்கவல் லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென் றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழ னாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

மனமே ! கழுமலத்தைத் தியானித்த அளவிலேயே நம்மைக் கட்டியிருக்கும் கொடிய வினைகளைப் போக்கவல்லவனாய் , ஆன்மாக்களுக்குத் தலைவனாய் உள்ள பெருமானைத் தரிசித்த அந்த நேரத்திலேயே வினையை நீக்கிவிடுவோம் என்று உறுதியாக எண்ணிக்கொண்டிருக்கும் அடியவர்கள் முற்பட்டுத்தொழும் திருவடிகளே நம்மை நாடோறும் அடிமையாக ஏற்பனவாகும் .

குறிப்புரை :

மனமே , கழுமலத்தை நினையா முன் ( நம்மைப் ) பந்தித்த வல்வினை தீர்க்கவல்லானை ; பசுபதியைச் சிந்தித்தெழு ! பசுபதியைச் சந்தித்தகாலம் மறுத்தும் என்று எண்ணியிருந்தவர்க்கும் முந்தித் தொழு ! அப் பசுபதியின் கழல் நம் தம்மை ஆள்வன . தொழுகழல் எண்ணியிருந்தவர்க்கு முந்திநந்தமை யாள்வன எனல் பொருந்து மேற்கொள்க . சிந்தித்து எழுதல் :- சித்தம் ஆரத் திருவடியே நினைந்து உள்கி ( தி .6 ப .64 பா .4.) எழுதல் . கழுமலத்தை வழிபட அத் தலப் பெயரை நினைத்தற்கு முன்னரே , அவன் நம் வல்வினை தீர்க்கும் . அவ்வினைவலியை வாட்டுதலில் அவன் வலியன் . அன்ன மென்னடை யரிவையொ டினிதுறையமரர் தம் பெருமானார் என்று முதலாந் திருப்பதிகத்திற் காழிவேந்தர் வினை நீக்கமே குறித்தமை அறிக . பசு பதி :- பசுக்களைப் பந்தித்த பாசந் தீர்த்தாளும்பதி . சிந்தித்து எழு முந்தித்தொழு என்னும் ஈரேவலும் மனத்தைக் குறித்தன . மறுத்தும் - வினையை நீக்குதும் என்று எண்ணி இருந்தவர்க்கு முந்தி நந்தமை ஆள்வன தொழுகழல் என்று பிற்கூறியதற்கேற்பவுரைக்க . ` அறுத்தும் ` எனப் பிரித்தலுமாம் . பசுபதியைச் சந்தித்தகாலத்தில் , ( நம்மைப் ) பதிந்த வல்வினையை அறுத்தும் என்று எண்ணியிருந்தவர்க்கு முந்தித் தொழு என்றாதல் முந்தியாள்வன என்றாதல் கொள்க . அறுத்தும் - வினையை அறுப்போம் .

பண் :

பாடல் எண் : 6

நிலையும் பெருமையு நீதியுஞ் சால வழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையிற் றிரிபுர மூன்றெரித் தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

என்றும் நிலைத்திருக்கும் உறுதியும் , அந்த உறுதியைப் பெறுவதற்குரிய பெருமையும் , உறுதிக்கும் பெருமைக்கும் அடிப்படையான அங்கு வாழும் நன்மக்களுடைய நேர்மையும் , மிகவும் அழகுடையனவாக , எங்கும் திரியும் அலைகளை உடைய ஊழிப் பெருவெள்ளத்தில் மிதந்த இத்தோணிபுரத்தில் உகந்தருளியிருப்பவரும் , வில்லால் முப்புரங்களையும் தீயூட்டி எரித்த பெருமானுமாம் அவருடைய மலர்ந்த , கழல்களை அணிந்த திருவடிகள் நாள்தோறும் நம்மை அடிமையாக ஏற்பனவாகும் .

குறிப்புரை :

நிலையுடையது ; பெருமையுடையது ; நீதியுடையது ; சால அழகுடையது ; நிலையும் பெருமையும் நீதியும் சாலுமாறு அழகுடையதாகி , அலையும் பெருவெள்ளத்தில் அன்று மிதந்த இத் தோணிபுரம் எனலுமாம் . தோணிபுரத்தில் வீற்றிருந்தருளும் கழுமலவர் . சிலையின் மேருமலையாகிய வில்லால் , திரிபுரம் - திரியும் புரம் . திரிபுரம் மூன்று என்றதால் , ` திரி ` என்பது தமிழ்ச் சொல்லாகிய வினையடியாதல் விளங்கும் . எரித்தார்தம் கழலடி , கழுமலவர் கழலடி , அலரும் அடி , மலரும் திருவடி , அலருங் கழல் - பரவுங்கழல் . எரித்தார்தங் கழுமலவர் எனல் பொருந்தாது ; ` தம் ` சாரியையாயினும் . ` தோணிபுரம் நின்று வற்றுவது போற் கிடப்பினும் பொருத்தியுரைத்தலில் இடர்ப்பாடின்று , இப்பாடலும் ( தி .4 ப .82 பா .4) ஆவது பாடலும் விளக்கமில்லாதன . ` தன் ` என்பது சிவத்தைக் குறிப்பது . தம் என்பது அதன் உயர்வுப்பன்மையாகக் கொண்டுரைத்தலும் பொருந்தும் . ` தன்னானந்தக்கொடி ` ( சிவகாமவல்லி ) திருவிளையாடற் புராணப் பாயிரம் பார்க்க . தன் - சிவம் , ஆனந்தம் - காமம் , வல்லி - கொடி .

பண் :

பாடல் எண் : 7

முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் துன்றிவெண் டிங்கள் சூடும்
கற்றைச் சடைமுடி யார்க்கிட மாய கழுமலமே.

பொழிப்புரை :

எம் பெருமானுடைய திருமேனியைச் சுற்றிப் பாம்புகள் பின்னிக் கிடக்க , விரும்பத்தக்க கொன்றைமலர் பொருந்த , வெள்ளிய பிறையைச்சூடும் கற்றையான சடையை உடைய எம்பெருமானுக்கு உறைவிடமாகிய கழுமலத்திருத்தலம் எல்லா நலன்களும் நிரம்பப் பெற்றதாய் ஊழிப்பெருவெள்ளத்துள் கடலில் மிதந்து தேவர்கள் கூட்டமாக வந்து வணங்கித் தொழப்படும் சிறப்புடையது . கொன்றையும் துன்றி - பாடம் .

குறிப்புரை :

சூழ் அரவம் தெற்றிக் கிடந்து .... வண்டினங்கள் சூடும் கற்றைச் சடைமுடியார்க்கு இடம் ஆகிய கழுமலம் , முற்றிக் கிடந்து முந்நீரில் மிதந்து அமரர் உடன் மொய்த்துச் சுற்றிக்கிடந்து தொழப்படுகின்றது என்று கொள்க . அரவம் - பாம்பு . தெற்றி - பின்னி , ` வெங்கொன்றளந்துன்றி ` என்றது பொருள் புலப்பாடிலாதது . வெங்கோல் தளர்ந்து ஊன்றுகின்ற வெளிய திங்கள் எனப் பொருளுரைக்கலாம்படி வெங்கோன்றளர்ந் தூன்று என்னும் பாடம் இருந்தது போலும் . ` வெங்கோன்றளந் தூன்றி ` என்றும் சில பதிப்பில் உள்ளது . இஃது ஏட்டிலும் வெங்கொன்றளந்துன்றி என்றும் வெங்கோன்றளந்தூன்றி ` என்று முளது . வெண்கூதளந்துன்றி என்றிருந்து பிழைத்ததென்று தோன்றுகின்றது . ` வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் ` ( தி .11 தி .4 ப .89 பா .5) ( தி .11 திருமுருக - 192) ` வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர் ` ( பட்டினப் பாலை 85) என்புழி ` வெண்டாளி ` என்றனர் நச்சினார்க்கினியர் . மலை யகராதி , ` நீர்த்தாளி ` என்னும் . ` காந்தளம் போதுவிராய்த் தொடு கூதளங் கண்ணியன் ` ( தணிகைப்புராணம் களவுப் 482) ` மல்லிகை கொடிமுல்லை மாதவி கூதாளம் பல்லிணர் மந்தாரம் ` ( ? வீராட்டகாசம் . 74) ` கூதளம் ` என்றது பொருந்தாதேல் , ` கூவிளம் (857) எனலாம் . ` தேன்றிகழ் கொன்றையும் கூவிள மாலை திருமுடிமேல் ஆன்றிகழ் ஐந்துகந்தாடும் பிரான் ` ( தி .4 ப .107 பா .10) எனப் பின்னர் உள்ள தறிக . ` வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னியன்ற சடையிற் பொலிவித்த புராணனார் ` ( தி .2 ப .7 பா .1.) கூவிளம் - வில்வம் . ` தண்ணறு மத்தமும் கூவிளமும் ` ( தி .4 ப .7 பா .6) அரவம் பின்னிக்கிடந்த இடமும் கூதளமோ கூவிளமோ துன்றிய இடமும் திங்கள் சூடியதும் சடை . அது கற்றைச் சடை . அச் சடையின்முடி . அம் முடியுடையார்க்குக் கழுமலம் இடம் . அது தொழப்படுகின்றது . தொழுவோர் அமரர் .

பண் :

பாடல் எண் : 8

உடலு முயிரு மொருவழிச் செல்லு முலகத்துள்ளே
அடையு முனைவந் தடைந்தா ரமர ரடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறு மல்குங் கழுமலத்துள்
விடையன் றனிப்பத நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

உடலும் அவ்வுடலைச் செலுத்தும் உயிரும் உலகியல் பொருள்களிலேயே புறப்பற்றும் அகப்பற்றும் கொண்டு வாழ்க்கையை நடத்தும் இவ்வுலகிலே , கூத்தும் திருவிழாக்களும் நாள்தோறும் மிகுதியாக நிகழும் கழுமலத்துள் , தேவர்கள் சென்று அடையத்தக்க சரணியன் ஆன உன்னை அணுகி உன் திருவடிக்கீழ்ச் சரணாக மக்கள் அடைந்துள்ளனர் . அத்தகைய காளை வாகனனாகிய உன் ஒப்பற்ற திருவடிகளே நாள்தோறும் நம்மை ஆள்வன .

குறிப்புரை :

உலகத்துள்ளே உடலும் உயிரும் ஒருவழிச் செல்லுதல் :- சடமான உடலும் சித்தான உயிரும் ஒருவழிச் செல்லுதல் ஒவ்வாது . சடத்துக்குச் செலவே இல்லை . சித்தான உயிர் சடமான உடலைச் செலுத்தவல்லது . புற ( பாச ) ப் பற்றும் அகப்பற்றும் விளைக்கும் வழியே ஈண்டு ` ஒருவழி ` என்றதாம் . அவ்வழியில் உயிர் உடலைச் செலுத்திச் செல்கின்றது . பசுப் பற்று அகப்பற்று . பாசப்பற்றும் பசுப்பற்றும் நீங்கியவரே பதிப்பற்றுள்ளவர் . அது பற்றற்றான் பற்று . அது பற்றுதற்குரிய பற்று . மற்றவை விடற்குரிய பற்று . இப் ` பற்று விடற்கு அப்பற்றைப் பற்றுக ` என்றது குறள் . அத்தகைய உலகத்துள்ளே உனை அமரர் அடைந்தார் வந்து . அடையும் உனை அடைந்தார் . அடியிணைக் கீழ்வந்து அடைந்தார் . ` பற்றற்றார் பற்றும் பவளவடி ` ( அப்பர் ). நடை - கூத்து . விழவொடு நடையும் மல்கும் கழுமலம் . நாள்தொறும் விழவும் கூத்தும் மல்கும் . அக் கழுமலத்துள் விளங்கும் விடையன் . விடையன் - விடையேறி . ` ஏற்றான் `, தனிப் பதம் - இணையில்லாத் திருவடி . ஒப்பிலாத்தாள் . நாள்தொறும் நந்தம்மை ஆள்வன தனிப்பதம் . ` அடியிணை ` ` தனிப்பதம் ` என்பனவற்றை ஆராய்க . தனிப்பதம் - சிவாநந்த முத்தியாகிய பேறு .

பண் :

பாடல் எண் : 9

பரவைக் கடனஞ்ச முண்டது மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார் கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

பரந்த கடலில்தோன்றிய நஞ்சினை உண்ணாமல் கழுத்திலேயே இறுத்திவிட்டாய் . அந்நீலகண்டம் இவ்வுலகத்தார் எல்லோராலும் வரிசையாக வணங்கித் தொழப்படுகின்றது . தீத்தம்பமாக நீண்ட வடிவெடுத்தாயாக , அத்தகைய உன் திருவடிகளைக் காணத் தம் முயற்சியால் திருமாலும் பிரமனும் முயன்று , பின் வழிபாட்டால் காண்பதற்கு வந்து சேர்ந்துள்ளனர் . அத்தகைய கழல்கள் ஒலிக்கும் திருவடிகளே நாளும் நம்மை ஆள்வன .

குறிப்புரை :

பரவை - பரத்தலையுடைய ( கடல் ). கடல் நஞ்சம் - பாற்கடலிற் றோன்றிய நஞ்சு . நஞ்சம் உண்டதும் இல்லை :- அந்நஞ்சத்தை உட்கொண்டதும் இல்லை . வெளிப்படுத்தியதுமில்லை . தன்பால் நிறுத்தி விட்டது திருநீலகண்டம் . அத்திருநீலகண்டம் இப்பார் முழுதும் நிரந்து கிடந்து தொழப்படுகின்றது . அத் திருநீல கண்டனது கழலடி ( யையும் திருமுடியையும் ) காண்பதற்கே மாலும் அயனுமாகிய இருவரும் கீழும் மேலும் நீண்டு தேடிச் சிரமப்பட வந்து சார்ந்தனர் . அத்தகு பெருமையையுடைய கழலடி நம்தம்மை ஆள்வன . அரவக் கழல் :- ` அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணல் ` ஆடரவக் கிண்கிணிக்காலன்னான் ஓர்சேடனை ஆடுந்தீக் கூத்தனை நான் கண்டதாரூரே ( தி .4 ப .19 பா .10) சிரமம் - வருத்தம் , ` சிரமத்தினை யின்றியுஞற்று சிறப்பு ` ( சேதுபுராணம் . அமுத தீர்த்தம் 11.)

பண் :

பாடல் எண் : 10

கரையார் கடல்சூ ழிலங்கையர் கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி யூன்றலு முள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன் கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

கரையை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய முடிகள் நெரியுமாறு , ஒருகாலத்தும் அழிவில்லாத மலர் போன்ற திருவடி விரலை ஊன்றிய அளவில் அவன் உள்ளம் நடுநடுங்கித் தலை பத்தும் வீழ்ந்து வணங்கிக் கிடக்குமாறு கயிலைமலைக்கண் உயர்ந்து விளங்கிய பெருமானுடைய திருக்கழுமலத்தலத்தைத் தரிசிப்பதனால் , பிறவிப் பிணியில் வருந்தாத தன்மையை வழங்கும் அப்பெருமானுடைய திருவடிகளாகிய இவை நம்மை நாள்தோறும் அடிமையாக ஏற்பனவாகும் .

குறிப்புரை :

இலங்கையர்கோன் முடி சிதற அடி ஊன்றலும் விதிர் விதிர்த்துத் தலையாய்க் கிடக்க உயர்ந்த சிவன் ( தன் ) கழுமலம் காண்பதற்கே ( ஊன்றிய அடியான ) அலையாப் பரிசிவை நந்தம்மை நாள்தொறும் ஆள்வன . ` தொலையாமலரடி ` ` அலையாப்பரிசிவை ` இரண்டும் திருவடியைக் குறித்தவை . தன் - சிவன் . தம் - ஆன்மாக்கள் . ( கோயிற்புராணம் பதஞ்சலி 5 .) ( தி .4 ப .82 பா .10.) ` பரிசிவை ` என்றதில் இவை சுட்டுப் பெயரன்று . பரிசு என்னும் முன்மொழிப் பொருள் மாத்திரையாய் நிற்பது . அலையாத தன்மையுடைய இவை எனக் கழலடியைக் குறித்ததுமாம் . கரை ஆர் கடல் - ஓசைமிக்க கடல் . கடற் கரையுமாம் . தொலையா மலர் அடி - தோல்வியுறாத பூநிகர்தாள் . முடி சிதறுவித்ததே வெற்றி . உள்ளம் இராவணனது . விதிர் விதிர்த்து - நடுநடுங்கி , தலையாய்க் கிடத்தல் - பத்துத் தலைகளும் ஒருசேர வீழ்ந்து கிடத்தல் . கிடந்து - கிடக்க . உயர்ந்தான் - கயிலைக்கண் உயர்ந்து விளங்கிய சிவபிரான் . அவன்றன் கழுமலம் . அதைக் காண்பதற்கே . ஆள்வன எனக் கொண்டு , காட்சி ஒன்றே ஆட் கொள்ளப் பெறும் பெரும் பயன் அளித்ததாகக் கொண்டுரைக்கலாம் . அலையாப்பரிசு திருவடி ஒன்றால் தான் எய்தும் . மற்றெல்லாம் அலையும் பரிசே எய்துவிப்பன .

பண் :

பாடல் எண் : 1

படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவில்
கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே.

பொழிப்புரை :

படையாக ஒருமழு ஆயுதத்தைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தலம் யாது என்று வினாவினால் , நகர்ப்புற வாயிலில் கொடிகள் உயர்ந்து விளங்கும் நெடும் மாடங்களைக் கொண்டு விளங்கும் திருக்கழுமலமே அதுவாம் . அப்பதியானது நீர்மடைகளிற் பூம்பாளை விரியுந் தோறும் அவற்றிற் சொரியுந் தேனைப் பெண்வண்டுகள் முன்னதாக உண்ணவிட்டு அவற்றின் கடைவாயிற் சொட்டுந் தேனை ஆண் வண்கள் அருந்திக் கொண்டு பிரியாதிருக்கும் பெரும்பதியுமாம் .

குறிப்புரை :

படை ஆர் மழு - படை ஆர்ந்த மழு. படை - படுத்தல்; கொல்லல். தடுத்தல் தடை. கொடுத்தல் கொடை. விடுத்தல் - விடை என்பன போல்வது இது, மழு ஒன்று பற்றிய கையன் - மழுப்படை ஒன்று பிடித்த கையினன்: கையன்பதி - கையனது நகர். பதி வினவில் - நகரை வினாவினால், வினவில் கழுமலமாம் பெரும்பதியே. அம் மழுக்கையன் பதி. கையன் பதி வினவினால் கழுமலமாம் பெரும் பதியே. கழுமலம் கடையார் கொடிநெடுமாடங்கள் ஓங்கும் பெருமையது. அப்பெரும் பதியில் குருகினம் மடைவாய்ப் பேராதிருக்கும். வண்டினங்கள், பாளை விரிதொறும் பெடைவாய் மதுவுண்டு பேராதிருக்கும். இரைகிடைத்தலின் குருகினம் மடைவாய்ப் பெயராமல் இருக்கும். வண்டினங்கள் பாளை விரிதொறும் பெடைவாய் மதுவைப் பெறுதலின் பெயராமல் இருக்கும். பெடைவண்டின் வாயினின்று ஒழுகும் மதுவை உண்ணுவது காதல் உணர்த்தும். `பெடைவாய் மது` இடக்கருமாம். `பைந்துகின் மகளிர் தேன் சோர் பவளவாய் திகழ நாணிச் சிந்தித்து` ( சிந்தாமணி. 1819) என்பதில் `திகழ்` `இடக்கர்` என்று நச்சினார்க்கினியர் உரைத்ததறிக.

பண் :

பாடல் எண் : 1

எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை வாமுறையென்
றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட் டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுர மூன்றையு மோரம்பினால்
அட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

கிழக்கு தென்கிழக்கு முதலிய எட்டுத்திசைகளொடு மேல் கீழ் ஆக இருதிசைகள் ஆகப் பத்துத்திசைகளுக்கும் தலைவனே ! ` எங்களைத் திரிபுரத்து அசுரர்களிடமிருந்து காத்தல் நினக்கே உரிய செயலாகும் ` என்று தேவர்கள் வேண்டிய கூக்குரலைக் கேட்டுத் தீப்போல விழித்துத் தங்களோடு நட்புறவினால் பொருந்தாத கீழ்மக்களுடைய வானத்தில் உலவும் மும்மதில்களையும் ஓரம்பினால் அழித்த சிவபெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அல்லவோ என் அரிய உயிர் தங்கியுள்ளது .

குறிப்புரை :

எட்டாம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா - எட்டுத் திக்கிற்கும் மேல்கீழ் ஆகிய இரண்டு திக்கிற்கும் தலைவர் ; உலகநாதா முறையோ என்று அமரர் பூசல் இட்டார் . பூசல் - பேரொலி . தேவர்கள் அசுரர் செய்யும் கொடும் போரால் கடைவாயிலில் வந்து நின்று முறையிட்டனர் என்று கயிலைக் காவலர் சொல்லக்கேட்டு எனலும் ஆம் . வெம்பூசல் = வெய்ய பேரோலம் . பூசலை அசுரர்க்கு ஏற்றின் போர்த் தொழிலாகும் . ` பூசல் அவுணர்புள் விலங்கு பூத மனிதர் முதல் உலகு ` ( திருவிளையாடல் அட்டமாசித்தி 27). எரி விழியா - தீக்கண் விழித்து , விழியா என்றதால் எரி என்பது இடப்பொருளாகு பெயராய் நெற்றிக் கண்ணைக் குறித்தது . ஒட்டாக்கயவர் - ஒட்டாத கீழோராகிய அவுணர் . தி .4 ப .5 பா .9 பார்க்க . ` ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உருவறியோம் `. ( தி .8 திருவாசகம் ) ஒட்டாமை = அணுகாமை ; நண்ணாமை ; பகைமை . ` திரிபுர மூன்றையும் ` ( தி .4 ப .82 பா .6) குறிப்பைக் காண்க ஓர் அம்பினால் - ஒரு கணையால் . அட்டான் - எரித்த இறைவன் . வினையாலணையும் பெயர் . அடி நிழற் கீழது அன்றோ என்றன் ஆருயிர் :- ` சிற்றம்பலக் கூத்தா உருவள ரின்பச் சிலம்பொலி யலம்பும் உன்னடிக்கீழ தென்னுயிரே ` - ( தி .9 திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா 13.) என்றன் ஆருயிர் :- யான் வேறு உயிர் வேறென இரண்டல்ல . ` இராகுவினது தலை ` என்பது போலும் . இத்திருப்பதிகம் முழுவதும் திருவடி நிழற் கீழது என்றன் ஆருயிர் என முடிதலின் இதனை ஆருயிர்த் திரு விருத்தம் என்றனர் . இது சேக்கிழாருக்கு முன்னரே வழங்கிய பெயர் .

பண் :

பாடல் எண் : 2

பேழ்வா யரவி னரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்கு
தேய்வா யிளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான்
மூவா னிளகான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும்
ஆவா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

பிளந்த வாயை உடைய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி , ஒளிவீசும் உருத்தேய்ந்த இளம் பிறையைச் சிவந்த சடையின்மேல் வைத்த தேவர்பிரானாய் , மூப்பும் இளமையும் இலாது என்றும் ஒரே நிலையனாய் , இந்நிலவுலகும் தேவருலகும் மற்ற உலகங்களுமாகி உள்ள சிவபெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அல்லவோ அடியேனது அரிய உயிர் நிலைத்துள்ளது .

குறிப்புரை :

பேழ்வாய் அரவின் - பிறழ்வாயினையுடைய பாம்பினை , ` பிறழ் ` என்பது பேழ் என்று மருவிற்று . ` பிறழ்வாய் - மறிந்த வாய் ` ( பெரும்பாணாற்றுப்படை 215 உரை ) ` பிறழ்பற் பேழ்வாய் ` ( தி .11 திருமுருகாற்றுப்படை . 47) என்புழிப் ` பெருமையினை யுடையவாய் ` என்றுரைத்தார் நச்சினார்க்கினியர் . அரவினை அரைக்கு அமர்ந்து ; இடையில் விரும்பிக் கச்சாகக் கட்டி . ( சடைமேல் ) ஏறிப் பிறங்குவதும் இலங்குவதும் தேய்தல் வாய்ந்ததும் இனித் தேயாது வளராது என்றும் இளமையொடிருப்பதுமான பிறையை அச் செஞ்சடைமேல் வைத்த தேவாதி தேவன் . மூவான் இளகான் - மூத்தலில்லாதவன் ; இளகுதலில்லாதவன் ; ` மூவாது யாவர்க்கும் மூத்தான்றன்னை முடியாதே முதல் நடுவு முடிவானானை ` ( தி .6 ப .74 பா .3.) ` மூவாய் பிறவாய் இறவா போற்றி ` ( தி .6 ப .55 பா .9.) ` மூவாதமேனி முக்கண்ணா போற்றி ` ( தி .6 ப .56 பா .1) இளகுதல் தழைத்தல் ; தளர்தல் , அசைதல் . தளர்ச்சி முதலியன இளமைப் பண்பு . மூப்பிற்குமுரிய . இளகும் - தளிர்க்கும் ; மெல்கும் . ( சிந்தாமணி . 718. 1778) முழுவுல கோடும் - உலக முழுதுடனும் ; எல்லா வுலகங்களுடனும் . மண்ணுலகும் விண்ணுலகும் மற்றைய உலகங்களும் ஆவான் . ` விசுவரூபி ` ` எல்லா வுலகமும் ஆனாய் நீயே ` ஆவான் - ஆமவன் ; எல்லாமாய் அல்லனு மாவான் இறைவன் . ` எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி ` ` எல்லாமா யல்லதுமாயிருந்ததனை .` ` முழுவேழுலகும் ` ( நம்மாழ்வார் திருவாய்மொழி 2.6.7.)

பண் :

பாடல் எண் : 3

தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த
எரியா ரிலங்கிய சூலத்தி னானிமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை
அரியா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

தாங்குதற்கரிய சினம் கொண்டு தக்கன் செய்த வேள்வியினை அழித்து மகிழ்ந்தவனாய் , நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கிய சூலப்படையை உடையவனாய் , இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய பெரியவனாய் , மேம்பட்ட அடியார்களின் பிறவித்தொடர்பை அறுப்பவனாய் , தான் பிறவா யாக்கைப் பெரியோனாய் இருக்கும் சிவபெருமானுடைய அடி நிழல் கீழது எம் ஆருயிரே . ( பிறப்பை + அறியான் பிறத்தலை இல்லாதவன் . அருமை - இன்மை .)

குறிப்புரை :

தரியா வெகுளியன் - தாங்குதற்கரிய வெகுட்சி யுடையவன் . ` குணமென்னுங் குன்றேறி நின்றார் , வெகுளி கணமேயுங் காத்தலரிது . ( குறள் ). வெகுளியன் - வெகுளுதலை உடையோன் . வெகுளல் - சினத்தல் . ` உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே ` ( தொல் காப்பியம் , மெய்ப்பாடு 10) என்ற சுவைக்குரியது ஈண்டும் ஏற்கும் . ` தெரியா வெகுளி ` பிழை , வேள்வி - ஆபிசார யாகம் . ( திருவிளையாடல் . யானையெய்த . 10.) தகர்த்து - அழித்து . உகந்த - உயர்ந்த , எரி ஆர் இலங்கிய சூலத்தினான் - தீ ஆர்ந்த விளங்கிய சூலப்படையினன் ` எரியார் ` ` நரியார் ` என்பது போல் நின்றதுமாம் . ` தென்றலார்புகுந்துலவு திருத்தோணிபுரத் துறையும் கொன்றைவார் சடையார் ` ( தி .1 ப .60 பா .7.) எனக் காற்றைச் சொல்லுமாறு தீயைச் சொல்லலாம் . ` இமையாத முக்கட் பெரியான் `. ` இவன் முக்கண்ணனோ ` என்னும் வழக்கும் அப் பெருமை உணர்த்தும் . பெரியார் பிறப்பு அறுப்பான் :- கற்றல் கேட்டல் ( நினைத்தல் தெளிதல் நிற்றல் ) உடையார் பெரியார் ` இறைவன் கழல் ஏத்தப் பிறவியை வேரறுப்பவன் . ` பிறவியை வேரறுத்துப் பெரும் பிச்சுத்தரும் பெருமான் ` ` பிறவியை வேரறுப்பவனே ` ( தி .8 திருவாசகம் ). என்னும் தன் பிறப்பை அரியான் :- உயிர்க்காகப் படைப்பு முதலிய ஐந்தொழிலும் நிகழ்த்தத் தான் அருளுருக் கொள்ளுதலை அரியாதவன் . ஈண்டுப் பிறப்பு அவனது தடத்த ரூபங்கொள்ளுதலின் மேற்று . ஏனையோர்க்குள்ளவாறு ஊனுடலெடுக்கும் பிறவியின் மேலதன்று . அரியாதவனடிநிழல் . என்றும் அரியான் . அருமையை இன்மைப் பொருட்டாகக் கொண்டு , என்றும் பிறப்பையில்லான் எனலுமாம் . பிறப்பை அரிதலாது :- தொடர்ந்து வரும் பிறப்பை இடையீடுபடச் செய்யினும் , இடை யீடுபட்டதன் பின் எய்தும் பிறவிகள் தொடர் புடையன ஆகும் . அவ்வாறாகாமல் , வேரோடு அற்றொழியச் செய்தலே அரிதலாகும் . அறுத்தலும் அன்னதே .

பண் :

பாடல் எண் : 4

வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையொர் பான்மகிழ்ந்து
வெடிகொ ளரவொடு வேங்கை யதள்கொண்டு மேன்மருவிப்
பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங் கொன்றையந்தார்
அடிக ளடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

பேரழகுடைய , மாவடு போன்ற மையுண்ட கண்களை உடைய பார்வதியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று , பொந்துகளை இருப்பிடமாகக் கொண்ட பாம்பினை வேங்கையின் தோலாகிய ஆடைமேல் இறுகச் சுற்றி , மேலே பூசப்பட்ட நீற்றின்மீது பொன்னைச் சிதறவிட்டாற்போன்ற பசிய கொன்றைமாலையை அணிந்த சிவ பெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

வடிவு - அழகு . உடை - உடைய , வாள்நெடுங்கண் - வாட்படைபோலும் நெடிய கண்ணினையுடைய ( உமையாள் ). ஓர்பால் - இடப்பக்கம் . உமையாளை மகிழ்ந்துகொண்டு ; அரவொடு வேங்கையதள் கொண்டு . அரவு - பாம்பு . அதள் - தோல் , வெடி கொள் அரவு - விடர்களை உறைவிடமாகக் கொள்ளும் பாம்பு . ` விரி நிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேண்நின்றும் உட்கும் . ( நாலடியார் ), மேல்மருவி - மேற்கொண்டு . மேலே மருவப் போர்த்து என்றவாறு . ( தி .4 பா .84 பா .9) கொண்டு மருவி . பொடி - திரு வெண்ணீறு . கொள் அகலம் - பூசிக்கொள்ளும் மார்பு . அகலத்தையும் தாரையும் உடைய அடிகள் . பொன் பிதிர்ந்தாற் பொன்ற பசிய கொன்றைத்தார் (- மாலை ). அடிகள் :- ` யாமெலாம் வழுத்தும் துறவி ` ( காஞ்சிப்புராணம் ).

பண் :

பாடல் எண் : 5

பொறுத்தா னமரர்க் கமுதருளி நஞ்ச முண்டுகண்டம்
கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை செஞ்சடைமேல்
செறுத்தான் றனஞ்சயன் சேணா ரகலங் கணையொன்றினால்
அறுத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

தேவர்களுக்கு அமுதம் வழங்க விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருத்தி நீலகண்டனாய் அந்தக் கறுப்பினைத் தனக்கு அழகாகக் கொண்டவனாய் , கங்கையைச் சிவந்த சடைமீது அடக்கினவனாய் , அருச்சுனனுடைய பரந்த மார்பினை அம்பு ஒன்றினால் புண்படுத்திய சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

பொறுத்தா னமரர்க் கமுதம் அருளிநஞ் சுண்டு கண்டம் என்று இருந்தது போலும் . ` அமுத + ருளிநஞ்சம் ` என வகையுளி செய்து , புளிமா + ( நிரை நேர் நேர் ) புளிமாங்காய் என்றமைத்துக் கொள்ளினன்றி , இவ்வடி தளை கெடாததாகாது . நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தான் . ஏன் ! அமரருக்கு அமுது அருளியதால் . கறுப்பு அழகா உடையான் . கண்டத்திற்கு அந் நஞ்சாலுற்ற கறுப்பைத் திருவா யுடையவன் . திரு நீலகண்டன் . ` வானத்தவர் உய்ய வன்னஞ்சை யுண்டகண்டத் திலங்கும் ஏனத்தெயிறு ` ( தி .4 ப .80 பா .6.) செஞ்சடைமேலே கங்கையைச் செறுத்தவன் . செறுத்தல் - அடக்கல் . பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே ( தி .8 திருவாசகம் அடைக்கலப் 2.) தனஞ்சயன் ( அருச்சுனன் ) பகையரசரை வென்று பெற்ற பொருளினன் . வெற்றித் திருவினன் எனலுமாம் . தனம் சயமேயாகக் கொண்டவன் . சேண் ஆர் அகலம் - அகலம் பொருந்திய மார்பு . சேண் - அகலம் நீளம் . ` அகன் மார்பு ` ` நீண்மார்பு ` என்னும் வழக்குணர்க . அவனது மார்பை ஒரு கணையால் அறுத்தமை அறிதற் பாலது . ` அருச்சுனற்கு அம்பும் வில்லும் துடியுடைவேடராகித் தூய மந்திரங்கள் சொல்லிக் கொடி நெடுந்தேர் கொடுத்தார் ` ( தி .4 ப .50 பா .1) ` ருளிநஞ்சம் ` என்பதை விட்டிசைத்துக் கொள்ளலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக் காலொன்றினால்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னு மொள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல்
ஆய்ந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயன் எமனாற் பகைத்துயிர் கவரப்படுதற்குரியனல்லன் என்று அவனைக் கோபித்தவனாகிய கூற்றுவனைத் திருவடி ஒன்றினால் பாய்ந்துதைத்தான் . பெரிய மதில்கள் மூன்றனையும் அம்பு என்ற ஒள்ளிய தீயினில் மூழ்கிச் சாம்பலாகச் செய்து , இடமகன்ற ஏழுலங்களும் விளங்கும்படியாக மேம்பட்ட நூல்களை ஆய்ந்துள்ள சிவபெருமான் அடிநீழற் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

செறல் - அழித்தல் . ` பாவடியாற் செறல் ` ( புற நானூறு ), செறற்கு அரியான் - கொல்லற்கு அரியவன் ( என்று காலனைக் கால் ஒன்றினால் காய்ந்தான் . காய்ந்து பாய்ந்தான் . ( பணை - பருமை ) பருமதில் மூன்று - மூவெயில் . கணை என்னும் ஒள் அழல் :- பாணம் எனப் பெயர் பெறும் தீக்கணை . ` அம்பு எரி கால் ஈர்க்குக்கோல் ` ` குன்றவார் சிலை நாண் அரா அரிவாளி கூர் எரிக்காற்றின் மும்மதில் , வென்ற வாறெங்ஙனே `. மும்மதிலும் ஒள்ளழற்கணையால் மேய்ந்தான் . மேய்தல் - பருகுதல் , வியல் - அகலம் . வியல் + உலகு = வியலுலகு ; வியனுலகு . உலகேழும் விளங்க ஆய்ந்தான் விழுமிய நூலை . அந்நூல் நான்மறை ஆறங்கம் . ` விரிக்கும் அரும்பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் .` ( தி .4 ப .82 பா .4). ஆய்ந்த அவனது அடி நிழல் . அந்நீழற் கீழது என்றன் ஆருயிர் . ` விழையா ருள்ளம் நன்கெழுநாவில் வினைகெட வேதம் ஆறங்கம் பிழையா வண்ணம் பண்ணிய வாற்றாற் பெரியோரேத்தும் பெருமான் ` ( தி .1 ப .42 பா .7.)

பண் :

பாடல் எண் : 7

உளைந்தான் செறுதற் கரியான் றலையை யுகிரொன்றினால்
களைந்தா னதனை நிறைய நெடுமால் கணார்குருதி
வளைந்தா னொருவிர லின்னொடு வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ
றளைந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

பிரமனுடைய தவறான செயலைக் கண்டு வருந்தினனாய் , அச்செயலுக்கு உரிய ஒறுப்புக்காக வெல்லுதற்கு அரிய அவன் தலையை நகம் ஒன்றினால் நீக்கியவனாய் , அம்மண்டையோடு நிறையுமாறு திருமாலுடைய உடம்பிலுள்ள குருதியை நிரப்பினனாய் , இராவணனை ஒருவிரலை அழுத்திக் கயிலைமலையின் கீழ் விழச் செய்தவனாய் , சாம்பலாகிய நீற்றினை உடல் முழுதும் பூசியவனுமான சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

உளைந்தான் - வருந்தினான் . செறுதற்கு அரியான் - செறற்கரியான் . ( தி .4 ப .84 பா .6.) நான்முகன் . உகிர் - கைந்நகம் . அதனை - அப் பிரமகபாலத்தை . நிறைய - நிறைக்க என்னும் பொருட்டு . ` நிறைய நெடுமால் கண் ஆர் குருதி வளைந்தான் :- ` தாமரையோன் சிரம் அரிந்து கையிற் கொண்டார் தலையதனிற் பலிகொண்டார் நிறைவாம் தன்மை வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார் . ( தி .6 ப .96 பா .1) கண் ஆர் குருதி - கண்ணில் நிறைந்த செந்நீர் ` ஒரு விரலினொடு வீழ்வித்து . வீழ் வித்தது விரல் . வீழ்ந்தது குருதி . சாம்பர் வெண்ணீறு அளைந்தான் - சாம்பராகிய திருவெண் ணீற்றிற் புரண்டவன் . அளைதல் - ஈண்டுப் புரளுதல் என்னும் பொருளது . ` தாதளைந்து இனவண்டு ` ( நைடதம் . அன்னத்தை 2.)

பண் :

பாடல் எண் : 8

முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாமுடி வேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் னாருயிரே.

பொழிப்புரை :

என் இந்த வாழ்க்கையின் முற்பகுதியில் யான் செய்தனவற்றைஎல்லாம் உட்கொண்டு அரசர்களுடைய பரிசனங்களாகிய தொகுதியினரிடம் அகப்பட்டு அவர்களால் பலவகையாகத் துன்புறுத்தப்படுவதற்கு அஞ்சிப் போலும் நந்தியா வட்டப்பூவும் கொன்றைப் பூவும் ஒளிவீசும் சென்னியும் மாலை வானம் போன்ற செம்மேனியுமுள்ள அம்மானுடைய அடிநிழலைச் சேர்ந்தது என் ஆருயிர் .

குறிப்புரை :

முந்து இவ் வட்டத்திடைப்பட்டது எல்லாம் முடி வேந்தர் தங்கள் பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்பு உண்பதற்கு அஞ்சிக் கொல்லோ என் ஆருயிர் அந்திவட்டத்து ஒளியானடிச் சேர்ந்தது ? இவ்வட்டம் - இந்நிலவலயம் . வட்டத்திடைப்பட்ட தெல்லாம் அதனை ஆளும் வேந்தர் பந்திவட்டத்திடைப்பட்டு அலைப் புண்ணுகின்றன . சமண் சமயம் புக்கிருந்த காலத்தை ` முந்து ` என்றார் . முன் + து = முன்று , முந்து . மரூஉ . இவ்வட்டத்திடை :- சமணர் மலிந்த இம்மண்டலத்தில் . பட்டது எல்லாம் - பட்ட துன்பம் முழுவதும் சூலை நோய் உற்றமை ; நீற்றறையி லிட்டமை ; நஞ்சு கலந்தூட்டியமை ; மத களிறிடறு வித்தமை ; கல்லொடு கட்டிக் கடலி லிட்டமையெல்லாம் . அவற்றை அஞ்சியோ ஆருயிர் அடியைச் சேர்ந்தது ? இது வரலாற்றுக் குறிப்பு . யானைப்பந்தி குதிரைப்பந்திகளின் வட்டத்திடையே அகப்பட்டு அலைச்சல் அடைகின்றன . அடைதலை அஞ்சியோ ஆருயிர் அந்தி வண்ணன் திருவடியைச் சேர்ந்தது ? இங்கு ( தி .4 ப .113 பா .4, தி .5 ப .1 பா .9.) பார்க்க . நந்திவட்டம் நந்தியாவர்த்தம் என்னும் பூ . ` நந்தியாவட்டம் ` என்பது வழக்கு ` ` அந்தணனாறு மான்பால் அவியினை யலர்ந்தகாலை நந்தியாவட்டம் நாறும் நகைமுடி யரசனாயின் ` ( சிந்தாமணி 1287).

பண் :

பாடல் எண் : 9

மிகத்தான் பெரியதொர் வேங்கை யதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப் பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப் பானிசைந்த
அகத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

மிகப்பெரிய வேங்கையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திப் பார்வதியை உள்ளம் அஞ்சி நடுங்கச் செய்பவனாய்த் தன்னை நோக்கி வந்த பொன் போன்ற பொலிவை உடைய கங்கையைத் தன் சடையில் முகந்து கொண்டதால் சடை குளிர அதனால் மனத்தில் மகிழ்வெய்தியவனாய் , என்னை அடிமையாக ஏற்றுக் கொள்ள இசைந்த சிவபெருமானுடைய அடிநிழல் கீழது அல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

மிகப் பெரியதொரு புலித் தோலைக்கொண்டு திரு மேனிமேற் போர்த்து , நல்லவளான உலகநாயகி அகத்தில் வெருவ நடுக்கம் அடைவிப்பான் . பொன் முகம் - பொலிவுடைய முகம் . முகத்தால் குளிர்ந்திருந்து . அகத்தால் இன்புறுதல் :- ` முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் ` ( குறள் . 93) உள்ளத்தினான் உகப்பான் இசைந்த அகத்தான் :- உள்ளத் தாலே உகப்ப இசைந்த அகத்தினான் . அகத்தானது அடி . உகப்பு - உயர்வு . விருப்பம் என்னும் பொருள் பிற்காலத்தது . வரும் பொன் முகத்தால் - வளர்கின்ற பொன் முகத்தினால் . பொன் முகம் குளிர்விக்கும் உள்ளம் உகப்புறுத்தும் . அவற்றால் குளிர்ந்திருக்கவும் உகப்பவும் இசைந்த அகம் ; நடுக்குறுப்பானும் உகப்பானுமாய் இசைந்த அகத்தவன் . நடுக்குறுப்பவும் உகப்பவும் இசைந்த அகத் தான்றன் அடி . ` அகத்தான் வெருவ ` - உள்ளே வெருவ . உருபு மயக்கம் . அகத்தானடி :- ஆறனுருபு விரித்துரைக்க .

பண் :

பாடல் எண் : 10

பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுண்முக்கண்
எம்மா னிவனென் றிருவரு மேத்த வெரிநிமிர்ந்த
அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

படம் எடுக்கும் மேம்பட்ட பாம்பினை ஒத்த அல்குலை உடையவளாய்ச் சிறிய பாதங்களை உடையளான பார்வதி அஞ்சக் கையிலே மேம்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய மன்மதனை அழித்த தெய்வமாகிய முக்கண்ணனாம் எம்பெருமான் என்று பிரமனும் திருமாலும் புகழும்படி தீத்தம்பமாக ஓங்கி வளர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடைய அடி நிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

பை - படம் . மாண் அரவு - மாண்ட பாம்பு . மாள் ; மாண் இருமுதனிலையும் வினையாகுங்கால் இறந்த காலத்தில் ஒன்றுபடும் . பைம் ` மாண் ` இருபொருட்டு . மாளாநின்ற - மாணா நின்ற . மாளும் மாணும் எனப் பிறகாலங்களில் ஒன்றாமையுணர்க . அரவுபோலும் அல்குல் . ( கடிதடம் ) பங்கயம் . தாமரை . ` சேற்றிற் பிறந்திடுங் கமலம் ` ( குமரேச சதகம் ). சீறடி - சிறுமை + அடி . சிறிய காலடி , அடியாள் - உமைநங்கை . வெருவ :- கைச்சிலை , மாச்சிலை , வரிசிலை . கைம்மா - யானை . காமன் - மதன் . கைம்மாவையும் காமனையும் சீறடியாள் வெருவ அட்ட கடவுள் எனலுமாம் . முக்கண் எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரியாக நிமிர்ந்த அம்மான் . தீயாடிய கூத்தன் . ` இருவர் ` அயனும் மாயனும் . எரிநிமிர்தல் - தீப்பிழம்பாக எங்கணும் வியாபித்து நிற்றல் . ` இருவர்க்குங் காண்பரிய நிமிர் சோதி ` ( தி .4 ப .13 பா .8) ` இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலும் காற்றும் உரகம் ஆர்பவனம் எட்டும் திசை யொளி உருவம் ஆனாய் `. ( தி .4 ப .63 பா .7).

பண் :

பாடல் எண் : 11

பழகவொ ரூர்தியரன் பைங்கட் பாரிடம் பாணிசெய்யக்
குழலு முழவொடு மாநட மாடி யுயரிலங்கைக்
கிழவ னிருபது தோளு மொருவிர லாலிறுத்த
அழக னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

ஊர்ந்து செலுத்தக் காளையை வாகனமாக உடையவனாய் , தீயவர்களை அழிப்பவனாய் , பூதங்கள் தாளம் போடக் குழலும் முழவும் ஒலிக்க மேம்பட்ட கூத்து நிகழ்த்துபவனாய் , மேம்பட்ட இலங்கை அரசனாகிய இராவணனுடைய இருபது தோள்களையும் தன் திருவடியின் ஒருவிரலால் நெரித்த அழகனாகிய சிவபெருமானுடைய அடிநிழலின் கீழல்லவோ அடியேனுடைய அரிய உயிர் பாதுகாவலாக உள்ளது .

குறிப்புரை :

பழகு அவ்வூர் ஊர்தி அரன் - பழக ஓர் ஊர்தி அரன்; பழகிய அவ்வூர்தியை யுடைய அரன். பழக ஓர் ஊர்தியை யுடைய அரன். பழக என்னும் வினையெச்சம் உடைய எனவிரித்த பெயரெச்சங்கொண்டதாகும். ஊர்தி - விடை. ஊர்ந்து செல்லப்படுவது. பைங்கட் பாரிடம் - பசிய கண்களையுடை பூதம். பாணி செய்ய - தாளம் இட. `உமை பாடத் தாளம் இட` (தி.2 ப.111 பா.1) `குழலும் முழவொடும்` என்றதில் உள்ள மூன்றனுருபைக் கூட்டிக் குழலொடும் என்க குழலொடும் முழவொடும் மாநடமாடி. `குடமுழவம் வீணை தாளம் குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்தாடுமே` (தி.6 ப.4 பா.5). `நடமாடி` பெயர்; `காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி` என்புழிப்போல. ஆடி இறுத்த அழகன் எனல் சிறவாது; விரலால் இறுத்தபோழ்து மாநடமாடியதாகப் பொருள் படுதலின், உயர் இலங்கைக் கிழவன் - உயரிய இலங்கைக்குரியவன். கிழமை - உரிமை. ` கோவூர்கிழார்` . `இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த அழகன்`:- இனைத்தென அறிந்த சினைக்கிளவிக்கு வினைப்படு தொகுதியின் வேண்டும் உம்மை பெற்று, இறுத்தது ஒரு விரல்; இற்றன இருபது தோளும் என்னும் நயத்தின் அமைந்தவாறறிக. சிறு முயற்சியாற் பெரு வெற்றியெய்துங்கால் உண்டாகும் அழகு என்பது தோன்ற `அழகன்` என்றார்.

பண் :

பாடல் எண் : 1

காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம் , நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளை உடைய திருச்சோற்றுத்துறையாம் . அங்கு உகந்தருளியிருக்கும் சிவ பெருமானுடைய நீண்ட சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன்அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது .

குறிப்புரை :

விண்ணிலுறை வானவர்கள் காலையில் துயிலெழுந்து தூயனவாகிய மணமலர் பறித்துக்கொண்டு போந்து மிக்க விருப்புடன் வழிபடும் சிவனிடம் திருச்சோற்றுத்துறை . அது மணத்தால் மிக்க சோலைகள் சூழ்ந்தது . மணம் கமழும் சோற்றுத்துறை . ` சோறு மணக்கும் மடங்களெலாம் ` ( சேக்கிழார் பிள்ளைத்தமிழ் ). அத் துறையுள் திருக்கோயில் கொண்டுறைகின்ற சிவபிரானது திருச்சடை மேல் விளங்கும் மாலைப் பிறையன்றோ எம்பிரானுக்கு அழகியது ? ` மாலை மதியம் ` - மாலையில் விளங்கும் மதியம் மாலையாகிய மதியம் . ` மாதர்ப் பிறைக் கண்ணியான் ` ( தி .4 ப .3 பா .1). இத்திருப் பதிகத்தில் ஐந்து பாட்டிலே மதியைக் குறித்துள்ளது . உறைவார் என்பது ` உயர் சொற்கிளவி `. மேல் வருவனவும் இன்ன . சோற்றுத்துறையுறைவார் என்றது அத்தலத்துச் சிவபிரானது திருப்பெயர் . அது பன்மை யொருமை மயக்கமாகாது .

பண் :

பாடல் எண் : 2

வண்டணை கொன்றையும் வன்னியு மத்தமும் வாளரவும்
கொண்டணைந் தேறு முடியுடை யான்குரை சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

தொண்டர்கள் , வண்டுகள் தங்கும் கொன்றை , வன்னி , ஊமத்தை , ஒளிபொருந்திய பாம்பு இவைகள் வந்து பொருந்தித் தங்கும் சடையையுடைய பெருமான் திருவடிக்கண் தொண்டர்கள் வந்து பொருந்தி , பேரின்பக் கடலாடித் திளைக்கும் திருச்சோற்றுத்துறை எம்பெருமானுடைய சடையின்மேல் காட்சி வழங்கும் வெள்ளிய தலைமாலை அல்லவோ அவருக்கு அழகான அணிகலனாக வாய்த்திருக்கிறது .

குறிப்புரை :

வண்டுகள் சேரும் கொன்றைமலர் மாலையும் வன்னியிலையும் மத்தமும் கொடும் பாம்பும் கூடிக் கொண்டு ஏறும் திருமுடியுடையவன் . தொண்டர் எல்லாரும் அவ் வெம்பெருமானது ஒலிசேர் கழலடிக்கே தொண்டு பொருந்திப் பேரின்பக் கடலுள் ஆடுவது போலத் திருச்சோற்றுத்துறைக் காவிரியுள் ஆடிமகிழ்வர் . அத்தகு பெருமை பொருந்திய தலத்துள் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபிரானது திருச்சடைமேல் விளங்கும் வெளிய தலைமாலை யன்றோ அவ் வெம்பெருமானுக்கு அழகியது ?

பண் :

பாடல் எண் : 3

அளக்கு நெறியின னன்பர்க டம்மனத் தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்குங் குழையணி சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
திளைக்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

எல்லோருடைய உள்ளப் பண்பையும் அளந்தறியும் முறைமை உடையவராய் , அடியவர்களுடைய மனத்தை உள்ளவாறு ஆராய்ந்து அறிந்து அவர்களை அடிமை கொள்பவராய் , தம்முடைய திருவடிப் பெருமையை உலகம் அறியச் செயற்படும் அடியவர் களுடைய பழைய வினைகளையும் புதியவினைகளையும் தீர்த்தருளும் , தேவர்தலைவராய் , ஒளிவீசும் காதணியை அணிந்திருக்கும் திருச்சோற்றுத்துறை எம் பெருமானுடைய சடை மேல் இருந்து மகிழ்ச்சியில் திளைக்கின்ற பிறைச்சந்திரன் அல்லவோ அப் பெருமானுக்கு அழகிய அணிகலனாக வாய்த்துள்ளது .

குறிப்புரை :

அளக்கும் நெறியினன் ; ஆய்ந்துகொள்வான் ; விண்ணவர் கோன் ; துறையுறைவார் . அவர் சடைமேல் திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியது ? அன்பர்களுடைய மனத்தை ஆய்ந்துகொள்வான் . அவர்களது அன்பினை அளக்கும் நெறியினன் . ஆண்டவன் திருவடிப் பெருமையையும் தம்மையும் விளக்கும் அடியவருடைய பழைய ( சஞ்சித ) வினையையும் புதிய ( ஆகாமிய ) வினையையும் தீர்த்திட்டாளும் தேவாதிதேவன் . துளக்கும் - ஒளி செய்யும் . குழை - காதிற் குண்டலம் . ` தோடுங்குழையும் ` ( தி .8 திரு வாசகம் ). குழையணிவார் ; சோற்றுத்துறையுறைவார் . அவர் சடை மேல் திளைக்கும் மதியாம் .

பண் :

பாடல் எண் : 4

ஆய்ந்தகை வாளர வத்தொடு மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானிட மாடுவர் பின்னு சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

கையிலே ஒளிபொருந்திய பாம்பினை ஆராய்ந்து எடுத்துக்கொண்டு , திருமாலாகிய காளையின்மீது இவர்ந்து , எல்லா விடத்தும் மானை ஏந்திய கையினை வீசிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவராய் , ஒன்றோடொன்று பிணைந்த சடைகளிடையே அடியார்கள் தம் கைகளால் அர்ப்பணித்த பூக்கள் தங்கும் சடைமுடியை உடைய சிவ பெருமான் கையில் ஏந்திய சூலம் மழு என்ற படைக் கருவிகள் அவருக்கு அழகிய அணிகலன்கள் ஆக அமைந்துள்ளன .

குறிப்புரை :

கைவாள் அரவம் - கையிற் பூண்ட கொலைப்பாம்பு ஆய்ந்த - நுணுகிய ; ஆராய்ந்த . அரவத்தொடு ஏறி ஆடுவர் . எங்கும் பேர்ந்த கை - எங்கணும் பெயர்ந்த கை . கைமான் - கையில் ஏந்திய மான் . மானுடன் நடம் ஆடுவர் . மால் நடம் ஆடுவர் எனலும் ஆம் . பின்னு சடையிடையே சேர்ந்த கைமலர் . ` கால் கொண்ட வண்கைச் சடை ` ( தி .4 ப .92 பா .8) என்றதும் இப்பொருட்டேபோலும் . ஆண்டுக் கொண்ட ஐயம் ஈண்டு நீங்கிற்று . கால்கொண்ட வண்கையால் ( தாள்தோய் தடக்கையால் ) சடையை விரித்து ஆடும் கழுமலவர் என்று ஆண்டுரைத்துக் கொள்க . ஈண்டுச் சடையிடையே சேர்ந்தகை என்றும் கொள்க . கைம்மலர் :- அன்பர் பூசனையில் கையால் தூவியிடச் சடை யிடையே சேர்ந்த மலர் . அம்மலர் ( நிருமாலியம் ) துன்னிய துறை . திருச்சோற்றுத் துறையுறைவார் ஏந்திய திருக்கைச் சூலமும் மழுவும் எம்பிரானுக்கு அழகியன .

பண் :

பாடல் எண் : 5

கூற்றைக் கடந்ததுங் கோளர வார்த்ததுங் கோளுழுவை
நீற்றிற் றுதைந்து திரியும் பரிசதும் நாமறியோம்
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப வலைப்புண் டசைந்ததொக்கும்
சோற்றுத் துறையுறை வார்சடை மேலதொர் தூமதியே.

பொழிப்புரை :

திருச்சோற்றுத்துறையில் உகந்தருளும் பெருமானார் கூற்றுவனை அழித்த செயலும் கொடிய புலித்தோல் ஆடையின் மேல் பாம்பினை இறுகக்கட்டித் திருநீற்றை முழுமையாக அணிந்து , சோற்றுத்துறைப் பெருமானது நீண்ட சடைமேல் விளங்கும் ஒப்பற்ற சந்திரன் அங்குள்ள கங்கையாற்றின் கரையிலே கிடந்து அவ்வாற்றின் அலை அலைக்கும்தோறும் தானலைந்தவாறிருக்கும் அழகையே நாம் அறிவோம் .

குறிப்புரை :

கூற்றை - காலனை . கடந்ததும் - வென்றதையும் . கோள் அரவு ஆர்த்ததும் - கொலைப் பாம்பைப் பூண்டதையும் . கோள் - கொலை , வலிமை கோள் உழுவை - ` கொல்புலியை ` திருநீற்றிலே துதைந்து (- நெருங்கி ). பரிசதும் - பரிசினையும் . அது :- சுட்டுப் பெயர் அன்று . பரிசு எனும் முன்மொழிப் பொருட்டேயாய் நின்றது . பிறர் பகுதிப்பொருட்டென்பர் . அது பகுதியாகாது . கடந்ததையும் ஆர்த்த தையும் பரிசதையும் நாம் அறியோம் . அறியோம் என்றது பார்த்தறியோம் , அவற்றை வீரச் செயலென மதியேம் , அவை வியப்பல்ல என்பன முதலிய பொருள் தரும் . திருச்சோற்றுத் துறையுறைவார் திருச் சடை மேலதாகிய ஒரு தூய பிறை , அச் சடையில் அடங்கிய கங்கை யாற்றிற் கிடந்து , அவ் யாற்றினலை அலைப்ப அலைப்புண்டு அசைந்ததுபோலும் . மதி அசைந்தது ஒக்கும் .

பண் :

பாடல் எண் : 6

வல்லாடி நின்று வலிபேசு வார்கோளர் வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்திறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத் துறையுறைவார்
வில்லாடி நின்ற நிலையெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

தங்கள் வலிமையை மிகுத்துக் காட்டிக்கொண்டு நின்று கொல்லப் போவதாகப் பயமுறுத்தும் கொலைஞர்களாய அசுரர்கள் அங்ஙனம் துன்புறுத்தி வருத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது தேவர் வந்து வணங்க , அவர்களோடு உரையாடிப் பயில்கின்ற சோற்றுத்துறைப் பெருமான் தமது கைவில்லைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை அவர்க்கு அழகிதாகும் .

குறிப்புரை :

வல்லாடி - வன்பு செய்து . வலி - வன்பு . கோளர் - வலியர் ; கொலைஞர் . கொல்லாடி - கொலைசெய்து . குமைக்கிலும் - அழித்தாலும் . வல்லாடி நின்று வலிபேசுவாரும் கோளரும் ஆகிய வல்லசுரர் கொல்லாடி நின்று குமைத்தாலும் , வானவர் ( தேவர் ) கள் விண்ணினின்று மண்ணில் வந்து வழிபட்டு உய்வார்கள் . சோற்றுத் துறையுறைவார் தம்மை இறைஞ்சும் வானவர்களுடன் சொல்லாடி நின்று பழகுவார் . அவ்வெம்பிரானுக்கு வில்லாடி நின்றநிலை அழகியது .

பண் :

பாடல் எண் : 7

ஆய முடையது நாமறி யோம்அர ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியு மெய்துந் துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் மானுக் கழகியதே.

பொழிப்புரை :

எம் பெருமான் முப்புரங்களை அழிக்க முற்பட்ட காலத்தில் அவருக்குச் சேனைத்திரள் இல்லையோ உண்டோ என்பதனை நாம் அறியோம் . முப்புர அசுரர்களைக் கோபித்து வலிய வில்லை வளைத்தும் அம்பு எய்தும் அவர்களை அழித்துத் தேவர்களுடைய சோர்வைப் போக்கிய திருநீறு அணிந்த மேனியராகிய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமுடியின்மேற் பரவும் வெண்ணிற அலைகளை உடைய கங்கை எம்பெருமானுக்கு அழகிதாகும் .

குறிப்புரை :

ஆயம் - கூட்டம் ; ` வெற்பர் ஆயம் ஓடி ` ( தி .12 பெரியபுரா . கண்ணப்பர் 77). உடையது - உடையதை . நாம் அறியோம் - திரிபுரத்தை அழிக்கச் சென்ற சிவபிரானுக்குப் படைத்திரள் உண்டோ இல்லையோ நாம் அறியோம் . அரணத்தவர் - முப்புரக்கோட்டையை யுடைய அசுரர் . காய - வேவ . கணை சிலை வாங்கியும் - அம்பை வைத்து வில்லை வளைத்தும் . எய்தும் - தொடுத்தும் . துயக்கு - அறிவின் திரிபு ; தடை ; சோர்வு ; தளர்ச்சி . துயக்கறுத்தான் - அவுணரால் அமரர்க்குற்ற சோர்வை நீக்கினான் . தூய திருநீற்றை அணிந்தவன் . திருச்சோற்றுத் துறையுறைவார் - அவர் சடைமேல் கங்கை அழகியது . சடைமேல் பாயும் கங்கை . வெண்ணீர்க்கங்கை ; திரைக்கங்கை . திரை - அலை .

பண் :

பாடல் எண் : 8

அண்ட ரமரர் கடைந்தெழுந் தோடிய நஞ்சதனை
உண்டு மதனை யொடுக்கவல் லான்மிக்க வும்பர்கள்கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

பகைவரான அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்து பரவிய விடத்தை உண்டு அதனைக் கழுத்திலே இருத்தவல்ல தேவர் தலைவராய் , மேலான இந்திரனும் திருத் தொண்டில் ஈடுபட்டுப் பயில்கின்ற திருச்சோற்றுத்துறைப் பெருமா னுடைய முடிமாலை போல விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

குறிப்புரை :

அண்டர் - பகைவர் ( அசுரர் ). ( பிங்கலந்தை 3055) அமரர் - தேவர் . அண்டரும் அமரரும் கடைந்து எழுந்து ஓடுவதற்கு ஏதுவான நஞ்சினை உண்டும் அதனால் தான் ஒடுங்காது அதனை ஒடுக்க வல்லவன் . ` வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்றப் பண்ணினார் எல்லாம் ` ( தி .3 ப .118 பா .4) என்றதிற்போல வானுளாரும் அமரரும் எனலுமாம் . மிக்க உம்பர்கள் கோன் - எண்ணில்லாத தேவர்க்கெல்லாம் முதல்வன் (` விண்ணவர் கோன் ` தி .4 ப .85 பா .3.) இந்திரன் தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை யுறைவார் எனலும் ஆம் . சடை மேல் இண்டை மதியம் அன்றோ அழகியது ? இண்டை மதியம் இண்டை மாலையும் பிறையும் . ` இந்திரன் வனத்து மல்லிகை மலரினிண்டை சாத்தியதென நிறைந்த சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண சைலனே கைலை நாயகனே ` ( சோண சைலமாலை 57 ) என்றவாறு . இண்டை பிறைக்கு உவமை . இண்டையாய் நின்ற மதியம் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

கடன்மணி வண்ணன் கருதிய நான்முகன் றானறியா
விடமணி கண்ட முடையவன் றானெனை யாளுடையான்
சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
படமணி நாகமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத்தினனாகிய திருமாலும் பிரமனும் அறியாத நீலகண்டராய் , எம்மை அடிமைகளாகக் கொள்பவராய்ச் சூரியன் ஒளி தம் திருமேனியில் பரவுமாறு கூத்து நிகழ்த்தும் திருச்சோற்றுத்துறை பெருமானுடைய சடைமீது இரத்தினமுள்ள படமுடையதாய்த் தங்கியிருக்கும் , பாம்பு அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

குறிப்புரை :

கடல் மணி வண்ணன் - கடல் வண்ணன் ; மணி வண்ணன் - கடல் போலும் நிறமுடையவன் , நீலமணிபோலும் நிற முடையவன் . கருதிய - திருமுடியை எளிதிற் கண்டு கொள்ளலாமென்று எண்ணிய . நான்முகன் - திசைமுகன் . ஈண்டுத் ` திசை` நான்கு என்னும் எண்ணுப் பொருள் மேலது . அறியா என்னும் பெயரெச்சம் உடையவன் என்னும் பெயர் கொண்டது . விடம் - நஞ்சு , அணி - அணியும் . ( அழகு செய்யும் ) கண்டம் - திருநீலகண்டத்தை யுடையவன் . தான் எனை ஆள் உடையான் :- ` தானே வந்தென்னைத் தலையளித்தாட்கொண்டருளும் வான்வார்கழல் ` சுடர் - வெயிலை . அணிந்து ஆடிய - அழகுறக் கொண்டு முழுகிய . இத்தலத்தில் இந்திரன் , சூரியன் , கௌதமர் , அருளாளர் முதலியோர் வழிபட்டனர் . ` செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத்துறையனாரே `. ( தி .4 ப .41 பா ,8) இக்காலத்திலும் ஆண்டுதோறும் இத் திருக்கோயிலுள்ளே எழுந்தருளியுள்ள சிவலிங்கத் திருமேனியில் சூரியனொளி வீசும் வியத்தகு காட்சி உண்டு .

பண் :

பாடல் எண் : 10

இலங்கைக் கிறைவ னிருபது தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி யவனைக் கருத்தழித்த
துலங்கன் மழுவினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

இராவணனுடைய இருபது தோள்களும் தலைகளும் நெரியுமாறும் அவன் மனம் கலங்குமாறும் கால்விரலை ஊன்றி அவன் மனமதர்ப்பை அழித்த , ஒளி வீசும் மழுவை ஏந்திய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமேல் விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

குறிப்புரை :

இலங்கைத் தலைவனாகிய இராவணனுடைய இருபது தோள்களும் பத்து முடிகளும் நெரியவும் , நெஞ்சம் கலங்கவும் திருக்காற்பெரு விரலால் ஊன்றி அழித்த மழுவினன் :- அவனது கருத்தழித்த மழுவினன் . துலங்கல் - ஒளிர்தல் . இலங்குமதியம் :- ` இலங்ங்கு வெண் பிறைசூ டீசனடியார்க்குக் கலங்ங்கு நெஞ்சமிலை காண் `. ( நன்னூல் சங்கர நமச்சிவாயப் புலவருரை . 92). தோளும் முடியும் நெரியக் கலங்க ஊன்றிக் கருத்தழித்த மழுவினனாகிய சோற்றுத்துறை யுறைவார் சடை மேல் இலங்கும் மதியம் அன்றோ அவ்வெம்பிரானுக்கு அழகியது ?

பண் :

பாடல் எண் : 1

செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்றுசெருவெண் கொம்பொன்
றிற்றுக் கிடந்தது போலு மிளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்கு மாலொற்றி யூரனுக்கே.

பொழிப்புரை :

யானையைக் கொன்று அதன் தோலைப் போர்வைக்காகக் கொண்ட காலத்தில் போரிடுகின்ற அதனுடைய வெண்மையான தந்தம் ஒன்று ஒடிந்து கிடந்ததுபோல அமைகின்றது . அதனைச் சுற்றிப் பாம்பு கிடத்தல் தந்தத்துக்கிடுங் கிம்புரிப் பூண் போலாகிறது . திருநுதலில் உள்ள நெற்றிக்கண் அத்தந்தத்திலிருந்து தெறித்த முத்தினை யொப்பதாகின்றது திருவொற்றியூர்ப் பெருமானிடத்து .

குறிப்புரை :

திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானுக்குக் களிற்றைச் செற்று உரிகொள்கின்ற ஞான்று கொம்பு ஒன்று இற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை . அக்கொம்பினைச் சுற்றிக்கிடந்த கிம்புரி போலும் , அப்பிறையைச் சுற்றிக் கிடக்கும் பாம்பு . அக்கொம்பின் உளதாய் வெளிப்படும் முத்துப்போலும் சுடர் இமைக்கும் நெற்றிக்கண் . செற்று - அழித்து . களிறு - ஆண்யானை . உரி - தோல் . ஞான்று - நாளன்று என்பதன் மரூஉ . செரு - போர் . யானைப்போர்க்கு அதன் கொம்பே படையாதலின் , செருவெண் கொம்பு ஆம் . வெண்கொம்பு :- இயைபின்மை மாத்திரை நீக்கிய அடை . இற்று - இறுதலையுற்று . இறுதல் - ஒடிதல் . அதனை - அப்பிறையை . கிம்புரி - யானைக் கொம்பிற்கிடும் பூண் . ` வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள் கிம்புரிவயங்க ` ( கந்தபுராணக் காப்பு ). ` குழூஉக் களிற்றுக் குறும்புடைத்தலிற் பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே ` ( புறம் . 97) ` பொற்கோட்டியானையர் ` ( புறம் . 377), ` திரண்ட களிற்றையுடைய அரணை யழித்தலால் பரிய பிணித்தலையுடையவாகிய கிம்புரிகள் கழன்றன ` ( புறம் . 97. உரை . ` இரும்பு செய்தொடி ` ( அகம் . 26) எனலுமுண்டு . ஒற்றியூரன் திரு முடிமேற் பிறையானது களிற்று வெண்கொம்புக்கும் அப்பிறையைச் சுற்றிக் கிடக்கும் பாம்பானது அக்கொம்பைச் சுற்றிக்கிடக்கும் கிம்புரிக்கும் , அவரது சுடரிமைக்கும் நெற்றிக் கண்ணானது அக் கொம்பின்கண் உண்டாம் முத்துக்கும் உவமேயம் . சுடர் - தீ .

பண் :

பாடல் எண் : 2

சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற்றொண் டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி யலைகொண்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

கடலின் வளமான அலைகள் சங்குகளிலுள்ள முத்துக்களைக் கொண்டு மணம் வீசும் கரைகளிலே ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே ! நீ கேட்பதற்குத் திருச்செவி சார்த்துவாயாகில் அடியேன் கூற நினைக்கும் செய்தி ஒன்று உளது . அஃதாவது உனக்கு அடிமைகளாய் வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டே வாளா இருக்கும் நீ இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய் ?

குறிப்புரை :

அலையைக் கொண்ட கடலில் உள்ள வளத்தினையும் திரையினையும் உடைய சங்கங்களையும் முத்துக்களையும் கொண்டு நிலையின்மையையுடைய கரைக்கே விரைந்து கொணர்ந்து அலைகள் மோதுகின்ற திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் உத்தமரே . கேட்பீராகில் அடியேன் சொல்லக் கருதியது ஒன்றுண்டு ; தொண்டராய்த் தேவரீரைப் புகலடைந்தவர் அல்லற்படுகின்றனர் . அவர் அது படுதலைக் காண்கின்றீர் . இப்போது அதனைத் தீர்ப்பீரல்லீர் . பின்னர் என்ன கொடுத்தருள்வீர் ? நும் ஊரோ ஒற்றியூர் . நும் வாழ்வும் ஒற்றியூரில் . நும்மைத் தொண்டாயடைந்தார் படும் அல்லலை அகற்றாத நீர் பின் யாது கொடுப்பீர் ? வம்பு - நிலையின்மை . ` வம்பு நிலையின்மை மாதர் காதல் நம்பும் மேவும் நசையாகும்மே ` ( தொல் . சொல் . உரிச் . 18). ( தி .4 ப .86 பா .3.)

பண் :

பாடல் எண் : 3

பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை யிளந்திங்கள் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க மணிந்து குலாயசென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

பரந்து வருகின்ற அலைகளை உடைய கங்கை நீர் பாய்ந்து சிதறும்படிக்கான வன்மையதாயப் பலவாக உள்ள சடைத் தொகுதி மீது பாம்போடு பிறையையும் கொன்றை குரவம் கோங்கம் ஆகியவற்றின் நறுமலர்களையும் அணிந்து விளங்கும் திருமுடியினனாய்க் கடல் அலைகள் கடல்படு பொருள்களை மோதிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கின்ற திருஒற்றியூரில் வீற்றிருக்கும் உத்தமனே !

குறிப்புரை :

பரவை வருதிரைநீர்க் கங்கை - கடல் போலப் பெருக்கெடுத்து வருகின்ற அலைகளையுடைய கங்கை நீர் , பாய்ந்து -; உக்க - சிதறிய . உக்க சடை - கங்கை சிதறுதற்குத்தக்க வன்மைமிக்க சடை . பல்சடை :- ` பல் சடைப்பனிகால் கதிர்வெண்டிங்கள் `. ( சம்பந்தர் ), சடைமேல் அரவமும் கொன்றையும் திங்களும் குரவ மலரும் கோங்க மலரும் அணிந்து குலாய சென்னியையுடைய உத்தமன் . அரவம் - பாம்பு . அணிதரு கொன்றை - அழகைத் தருகின்ற கொன்றை மாலை . ` அணிந்து ` எனப் பின் வருதலின் , ஈண்டு வேறுபொருள் கொள்ளப்பட்டது . சூடியதொரு குரவமலர் ; நறுமலர் , மலர் என்பதைப் பிரித்துக் கோங்கத்தொடும் சேர்க்க . குலாய - குலவிய , சென்னி - தலையுச்சி . உரவு - கடல் . திரை - அலை , எற்று - மோதுகின்ற . தி .4 ப .86 பா .2 பார்க்க .

பண் :

பாடல் எண் : 4

தானகங் காடரங் காக வுடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி யூருறை வாரவர்தாம்
தானக மேவந்து போனகம் வேண்டி யுழிதர்வரே.

பொழிப்புரை :

உள்ளிடமெல்லாந் தேன்மணங் கமழுந் திருவொற்றியூரில் உறையும் பெருமான் தான் ஆடரங்காகக் கொள்வதும் காடு . தன்னை அடைந்தார் இடும் பலியை ஏற்பதும் உள்ளுரத் தசையின் முடை நாற்றம் வீசும் தலையோட்டில் . அவர் தானாகவே வீடு வீடாக வந்து உணவு வேண்டித் திரிபவரும் ஆவார் .

குறிப்புரை :

தேன் அகம் நாறும் திருவொற்றியூர் - பூத்தேன் மிக்குத் தன்னிட மெல்லாம் மணக்கும் வளமுடைய திருவொற்றியூரில் . உறைபவர் . தாமே வீடுதொறும் போந்து பிச்சையுண்டி வேண்டித் திரிவர் . ` தானே வந்தென்னைத்தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல் பாடிவந்தோர் `. ` இல்லங்கள் தோறும் எழுந்தருளி ` ` அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே ( தி .8 திருவா .). தான் அகமே வந்து என்பதில் உள்ள ஏகாரத்தைப் பிரித்துத் தானே அகம் வந்து என்றுரைக்க . உறைவார் தாம் தானே என்றதில் உள்ள பன்மை ஒருவரைக் குறித்த உயர்சொற்கிளவி . அரங்கு :- தான் அரங்காக உடையது காடகம் . தான் பலிகொள்வதும் தன்னை அடைந்தவரது ஊன் அகம் நாறும் உடைந்த தலையில் .

பண் :

பாடல் எண் : 5

வேலைக் கடனஞ்ச முண்டுவெள் ளேற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க் குறைவிட மாவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி யருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரையெப் போதுந் தொழுமின்களே.

பொழிப்புரை :

கடலிற் தோன்றிய நஞ்சை உண்டு இருண்ட கண்டத்துடன் வெள்ளை இடபத்தை ஊர்ந்தருளும் , அந்தி செவ்வானம் போன்ற சடையினரான சிவபெருமானுக்கு உறைவிடமாவது வருவாய் குறையாத ( ஆலைக் ) கரும்புகளோடு செந்நெல்லும் மிகும் வயல்களைச் சூழ்ந்து சோலைகள் விளங்கப்பெறுவதுமான திருவொற்றியூர் . அதனை எப்பொழுதுமே தொழுமின்கள் .

குறிப்புரை :

வேலைக் கடல் - கரையுடைய கடல் . வேலை - கடற்கரை . நஞ்சம் உண்டு வெள்விடையொடும் வீற்றிருந்தவர் . வெள்ளேறு - ` நரை வெள்ளேறு `. மாலைபோலும் செஞ்சடையார் . மாலை என்பது அப்பொழுது வானில் தோன்றும் நிறத்துக்கு ஆகுபெயர் . அது சிவபிரானது செஞ்சடைக்குவமையாயிற்று . அவர்க்கு இடம் ஆவது திருவொற்றியூர் . அது சோலையுடையது . அதன் அருகே கழனிகள் அணைந்துள்ளன . செந்நெல் விளையுங் கழனி . கரும்பும் விளையும் . ஆலையிற் புகவிட்டுச் சாறுவடிக்கும் இனிய கரும்பு . வாரி - வருவாய் , குன்றா - குறையாத , கரும்பொடு செந்நெல்லுடைய கழனி . நெற் கழனி .- இரண்டனுருபும் பயனுந் தொக்க தொகைநிலைத் தொடர் .

பண் :

பாடல் எண் : 6

புற்றினில் வாழு மரவுக்குந் திங்கட்குங் கங்கையென்னும்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு கண்ணிக்குஞ் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை யான்றன் விரிசடையே.

பொழிப்புரை :

இடப வாகனத்தை உடையவனாய் , தன்னைப் பற்றிச் சான்றோர்கள் பேசும் பொருள்சேர் புகழுரை தாங்குபவனாய் , என்னைத் தன் விருப்பப்படி விற்பதற்கும் உரிமை உடைய அடியவனாகக் கொண்டவனாய் ஒற்றியூரை உறைவிடமாக உடைய சிவ பெருமானுடைய விரிந்த சடை , புற்றில் வாழும் பாம்புக்கும் , பிறைச் சந்திரனுக்கும் , கங்கை என்ற பெயரை உடைய , சிறிய இடுப்பை உடைய நங்கைக்கும் , ஒற்றைப் பூந்தொடையாகிய முடிமாலைக்கும் இருப்பிடமாகும் .

குறிப்புரை :

அரவுக்கும் திங்கட்கும் சிற்றிடையாட்கும் கண்ணிக்கும் சேர்விடம் விரிசடையே ஆம் என்க . புற்றினில் வாழும் அரவு :- ` புற்றில் வாளரவன் - புற்றின் கண்ணவாகிய ஒளியையுடைய பாம்பை யுடையவன் ` ` வேள்வித்தீயிற் பிறந்து திருமேனிக்கண் வாழ்தலாற் புற்றையுடைய வல்லாத அரவு என்றுரைப்பினும் அமையும் ` ( தி .8 திருக்கோவையாருரை . 97). ` புற்றில் வாளரவும் அஞ்சேன் ` ( தி .8 திருவாசகம் 516) திங்கள் - பிறை . கங்கையைச் சிற்றிடையாள் என்றது வடமொழி வழக்கு . ` நதி பதி என்று கடலையும் ` சமுத்திர பத்தினி ` என்று யாற்றையும் வடநூலார் வழங்குவர் . செறிதருகண்ணி - தலைமேற் செறிக்கும் ஒற்றைப்பூத்தொடை . ` திங்கட் கண்ணி ` ` பிறைக்கண்ணி ` என்பன நினைக . சேர்வு - சேர்தல் ; சார்வு , தீர்வு , வேர்வு முதலியன நோக்குக . பெற்று :- பெற்றம் ; எருது . ` பெற்றேறும் பெருமானார் ` ( தி .3 ப .64 பா .10) ` பெற்றொன்றுயர்த்த பெருமான் பெருமானும் அன்றே ` ( தி .3 ப .54 பா .11). பெரும்பேச்சு - மகாவாக்கியம் . ` பெரும் பொருட் கிளவியான் ` ( தி .4 ப .74 பா .3) என்பதன் குறிப்பினைக் காண்க . எனைப் பிரியாதுடையான் ; எனை ஆளுடையான் . எனைவிற்றுடையான் ; ஆளாக்கிக்கொண்டு விற்றற்கும் உரிமையுடையான் . இத்தகு பெரியன் ஒற்றியூருடையான் . அவனது விரிசடையே அரவு முதலிய நான்குஞ் சேர்விடம் ஆம் .

பண் :

பாடல் எண் : 7

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை யிமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநா
ளன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

இவ்வுலகில் முழுக்கண் உடையவர்களே காணப்படுகின்றனரே யன்றி அரைக்கண் உடையவர் ஒருவரும் இரார் . ஆனால் , இமவான் என்று போற்றப்படும் மலைத் தலைவனுக்கு வளர்ப்பு மகளாகக் கிட்டிய நல்ல மேன்மையை உடைய பார்வதிக்கு உடம்பைச் செம்பாதியாகப் பங்கிட்டுக் கொடுத்த காலத்திலே தன் முக் கண்களில் செம்பாதியான ஒன்றரைக் கண்கள் அவளுக்காயினதால் மீதியுள்ள ஒன்றரைக் கண்ணனாகவேயுள்ளார் திருவொற்றியூரில் உறையும் உத்தமனாம் எம்பெருமான் .

குறிப்புரை :

அரைக்கண் உடையார் எங்கும் இன்று இல்லை . கூறிட்ட அன்று ஒன்றரைக்கண்ணன் ஒற்றியூர் உறை உத்தமன் ; கண்டீர் ! இமயம் என்னும் குன்றர் ஐக்கு அண் நல்குலமகள் பாவைக்கு - பனிமலை ( இமாசலம் ) எனச் சிறப்பித்து வழங்கப்படும் குன்றருடைய தலைவனுக்குத் தோன்றாமல் வந்து கிடைத்த நல்ல மேன்மையுடைய உமாதேவியார்க்கு . கூறு இட்ட நாள் - தன் திருமேனியைப் பகுத்து இட்ட நாள் . நாள் அன்று - நாளன்று ; இங்கு நாளன்று எனப் பிரிக்காம லிருப்பதே தக்கது ; ` நாளன்று ` என்றதே ` ஞான்று `. அரைக்கண்ணும் அளித்து , அவ்வுமையாளையும் செம்பாகத்தில் வைத்துக்கொண்ட ஒன்றரைக்கண்ணன் ஆனான் ஒற்றியூருறை உத்தமன் . ` கண்டீர் ` முன்னிலையசை எனல் மரபு . குன்றர் ஐ கண் எனப் பிரித்துக் கண் போலும் மகள் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 8

சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் துதைந்திலங்கு
பெற்றிகண் டான்மற்றி யாவருங் கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் கைவிட் டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம் வேதியனே.

பொழிப்புரை :

வேதத்தால் பரம் பொருள் என்று போற்றப்படும் ஒற்றியூர்ப் பெருமானே ! வண்டுகள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு யாழ் போல ஒலிக்கும் பூஞ்சோலைகளும் பெருமரச்சோலைகளும் செறிந்து விளங்கும் உன் ஒற்றியூரின் சிறப்பினை நோக்கினால் அதனை யாவரும் விலைகொடுத்து வாங்கிக் கொள்வர் . அது கருதி நீ ஒற்றியாகப் பெற்று அனுபவிக்கும் இவ்வொற்றியூரையும் பிறரிடம் விற்று அதனைக் கைவிட எண்ணுதியேல் அது ஏற்புடையதன்று . இதனை ஒத்த சிறப்பான இருப்பிடம் பிறிது யாதுமில்லை என்பதனைத் தெரிந்து கொள்வாயாக .

குறிப்புரை :

வண்டு சுற்றி யாழ் செய்யும் சோலை . சோலையும் காவும் என்ற இவ்வாசிரியர்க்கு அவ்விரண்டும் வெவ்வேறாதல் புலப்படும் . பிற நூல்களும் இரண்டும் ஒரு பொருளவா யாளப் பட்டுள்ளன . ` இளமரக்கா ` என்பது காவினியல் புணர்த்தும் . வயல் சூழ்ந்த இளமரங் களையுடையதே இளமரக்கா எனப்படும் . ( பிங்கலந்தை . 2845) ஊரொடு சேர்ந்த மரங்களின் கூட்டத்தைக் காடு ( ? . 2841) என்பர் . மலையொடு சேர்ந்ததைச் சோலை ( ஆராமம் ) என்பர் . ( ? 2842) கழிக்கரையிலுள்ளதைக் கானல் ( ? 2843) என்பர் . செய்குன்று சேரத் தொகுத்தவற்றைத் தோப்பு ( தொகுப்பு என்றதன் மரூஉ ) என்பர் . ( ? 2844) குறுங்காடு ` இறும்பு ` பெருங்காடு ` வல்லை ` ? ` கடிமரந் துளங்கிய கா ` ( புறம் 23). ` காடு கால்யாத்த நீடுமரச்சோலை ` ( அகம் 109) என்பவற்றால் வேறுபாடு ஒரு சிறிது புலப்படும் . மலையி லுள்ளதைச் சோலை என்றும் , மலர்க்காவைச் சோலை எனலாகா தென்றும் , பொழில் முதலியன வெவ்வேறென்றும் பண்டைய நூல்களால் அறியலாகும் . துதைந்து - நெருங்கி . இலங்கு பெற்றி (- விளங்கும் தன்மை ) யைக் கண்டால் யாவரும் கொள்வர் . வேதியனே , நீ பிறரிடை ஒற்றிக்கொண்டாய் , ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி விற்றிகண்டாய் . இது ஒப்பது இடம் மற்று இல் . ஒப்பற்ற இடத்தைப் பிறரிடத்திலிருந்து நீ ஒற்றிக்கொண்டு விற்றி என்றது .

பண் :

பாடல் எண் : 9

சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன செய்தி யுலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன செய்யுமித் தீவினையே.

பொழிப்புரை :

என் தீவினையே ! திருவொற்றியூர்ப் பெருமான் என்றும் பிரியாது என் உள்ளத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டுள்ளான் . அவ்வாறாக , நீ என்னை , அடியொற்றித் திரிந்து கொண்டிருப்பதால் நீ சாதிக்கப் போவதென்ன ? நான் செல்லிடமெல்லாம் அடியொற்றித் திரிந்து தனக்கு வேட்டை வாய்க்காமையால் ஆத்திரமுற்று பல்லையும் நாவையும் மென்று கொண்டு சோக மிகுதியாற் கண் குழிந்து கால் தெற்றித் தானே சோர்ந்திருப்பதைவிட இத்தீவினையால் எனக்கெதிர் எதுவும் நேர்தற்கிடமின்றாம் .

குறிப்புரை :

ஒற்றியூரன் சுற்றிக்கிடந்து என்சிந்தை பிரிவு அறியான் ; நீ உலகம் எல்லாம் ஒற்றித் திரிதந்து என்ன செய்தி ? உலகமெல்லாம் பற்றித்திரிந்து பல்லோடு நாமென்று கண் குழித்துத் தெற்றித்திருப்பது அல்லால் இத் தீவினை என்ன செய்யும் ? என் சிந்தையைப் பிரியாமல் ஒற்றியூரன் ( அச்சிந்தையைச் ) சுற்றிக் கிடக்கின்றான் . அதனால் இத் தீவினை என்னை யாதுஞ் செய்யவல்லதன்று என்றதாம் , இத் தீவினை உலகமெல்லாம் பற்றித்திரிதலும் , பல்லையும் நாவையும் மெல்லுதலும் , கண்ணைக் குழித்தலும் , தெற்றித்திருத்தலும் , அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லது ? தெற்றுதல் - மாறுபடல் ; பிணங்குதல் ; பின்னுதல் ; தடுத்தல் . திரிதல் உழிதரல் புகுதரல் என்பன முதலிய வற்றில் , தரல் துணைவினையாய் வந்தது என்பர் . ஒற்றி - ஒன்றாகி , ஒன்றுபட்டு . இனி வினை ஒற்றி இடர்ப்படுத்த வழியில்லை ; ஒற்றியூரன் ஒற்றிக்காப்பதால் .

பண் :

பாடல் எண் : 10

அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவ முறுவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை யரவுக்குப் புற்றுக் கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி யூரர் திருமுடியே.

பொழிப்புரை :

திருவொற்றியூர்ப் பெருமான் திருமுடியானது அழகிய தேனை உடைய கொன்றை மலருக்கு , முல்லை நிலக்காடு ஆகவும் ( உத்தமமான ஆடவர் உடலில் இயல்பாகவே முல்லைப் பூவின் மணம் கமழும் . குறுந்தொகை - 193) சிரிக்கும் தலைமாலையா யிருந்து சிரிக்குங் கபாலங்களுக்குச் சுடுகாடாகவும் , பருத்த இரத்தினக் கற்களை அலைத்து வரும் கங்கைக்கு அது சென்று சேரும் கடலாகவும் , பாம்புக்கு அதன் உறைவிடமான புற்றாகவும் , பிறைக்கு அஃது உலவும் வானமாகவும் உள்ளதாகும் .

குறிப்புரை :

திருவொற்றியூரர் திருமுடி ஒன்றே , கொன்றைக்கு முல்லைக் கொல்லையாயும் , ` பல்லாடு தலை ` க்குச் சுடுகாடாயும் கங்கையாற்றுக்குக் கடலாயும் , பாம்புக்குப் புற்றாயும் , பிறைக்கு விண்ணாயும் நின்று வெவ்வேறு ( பல ) இடமாயிற்று . அம் - அழகு . கள் - தேன் . கடுக்கை - கொன்றை . புறவம் - முல்லை நிலம் . முல்லைப் புறவம் - முல்லை மலரும் நிலம் . முறுவல் - சிரிப்பு . பை கண் - பசிய கண்கள் . ` தலை ` ஈண்டுத் தலைக்கணிந்த தலைமாலையைக் குறித்தது . பல்லாடு தலை சடைமேல் உடையான் ( தி .6 ப .92 பா . 2 - 10), சுடலை - சுடலுடையது ; சுடுகாடு . களரி - காடு . களர் நிலம் பற்றிய காரணப்பெயர் . பருமணி - பரிய மணி ( முத்து , பவளம் முதலியன ), வேலை - கடல் . கலை நிரம்பாத் திங்கள் - பிறை . வானம் - வெளி .

பண் :

பாடல் எண் : 11

தருக்கின வாளரக் கன்முடி பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப் பிறப்பறுத் தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கினவா றென்செய்கே னொற்றி யூருறை பண்டங்கனே.

பொழிப்புரை :

ஒற்றியூரிலே உறைகின்ற பண்டரங்கக் கூத்தனான பெருமான் செருக்குக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலால் நெரித்தொடுக்கினது போலவே அடியேனுடைய பிறப்பையும் போக்கி அடியேனை அடிமையாகக் கொள்ளவல்லவன் . நெருங்கி நின்ற தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அவனையே பருகுமாறு செய்த வினை இருந்தவாறென் ? ஆ ! என் செய்கேன் நான் !

குறிப்புரை :

திருவொற்றியூருறையும் பாண்டரங்கம் என்னும் திருக்கூத்துடையான் அடியேனைப் பிறப்பறுத்து ஆளவல்லான் . வானவரும் தானவரும் கூடிப் பாற்கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினைப் பருகச் செய்தவாறு என்செய்வேன் ? தருக்கின அரக்கன் - செருக்கிய இராவணன் . பத்து முடியும் இற . இறல் - இறுதல் , ஒடிதல் . இற ஒருக்கினவாறு . ஒருக்குதல் - அழித்தல் ; பத்து முடியையும் ஒருமையுறச் செய்தல் . ஒருங்கல் :- தன்வினை :- ஒருக்கல் :- பிறவினை . ` பாதம் ` ஈண்டுத் திருக் காற்பெருவிரலின் நுனியைக் குறித்தது . அவ் விராவணன்முடி பத்தும் இற ஒருக்கியதும் பாதம் , அடியேன் பிறப்பறுத் தாள்வதும் பாதம் . நெருக்கின - நெருங்கப்பண்ணிய . நஞ்சைப் பருகினவன் பண்டங்கன் . பருக்கினவர் வானவரும் தான வரும் . பருகல் :- தன்வினை . பருக்கல் :- பிறவினை . தானவர் - அசுரர் . பாடல் - பாட்டல் என்பதுபோல் . ` பாட்டினாய் ` ( தி .4 ப .78 பா .3), ` பாட்டு வித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே `. ` காட்டி வைத்தார் தம்மை யாம் கடிப்பூப் பெய்யக் காதல் வெள்ளம் ஈட்டிவைத்தார் தொழும் ஏகம்பர் , ஏதும் இலாத எம்மைப் பூட்டிவைத்தார் தமக்கு , அன்பது பெற்றுப் பதிற்றுப் பத்து பாட்டிவைத்தார் பரவித்தொழுதாம் அவர் பாதங்களே ` ( திரு வேகம்ப முடையார் திருவந்தாதி 99) என்புழிப் பாட்டுதல் பாட்டு வித்தல் இரண்டும் உள்ளமை உணர்க . ` பாண்டரங்கம் பண்ட ரங்கம் எனநின்றது ` கலித்தொகை - கடவுள் வாழ்த்து . நச்சினார்க்கினியர் உரை . அது பண்டங்கம் என மருவிற்று . ` திங்கள் தங்கும் முடிப் பண்டங்கனே ` ` பண்டங்கன் வந்து பலிதா என்றான் ` ( பொன் வண்ணத் தந்தாதி . 32 - 33) ` பலிதிரிந்துழல் பண்டங்கன் ` ( தி .2 ப .6 பா .12) ` நெடியானொடு நான்முகனும் நினைவொண்ணாப்படியாகிய பண்டங்கன் ` ( தி .2 ப .35 பா .9) ` பாம்பரைச் சாத்தியோர் பண்டங்கன் ` ( தி .2 ப .44 பா .3) ` தோணி புரத்துறையும் பண்டரங்கர் ` ( தி .1 ப .60 பா .1) ` பாசத்தைப் பற்றறுக்கலாகும் நெஞ்சே பரஞ்சோதி பண்டரங்கா பாவநாசா ` ( தி .6 ப .31 பா .9) ` பற்றார்புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதிபண்டரங்கா என்றேன் நானே ` ( தி .6 ப .37 பா .6).

பண் :

பாடல் எண் : 1

மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன வல்ல லவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே.

பொழிப்புரை :

திருப்பழனத்தில் உகந்தருளியிருக்கும் அரசே ! அடியேன் வாழ்க்கையில் தீவினையின் விளைவுகளாகிய துக்கங்கள் எல்லாம் கொடிய துயரத்தை அடையச் செய்து என்னை மேவி நிற்கின்றன . அவை தம் செயலில் சோர்ந்து கொட்டாவிவிட்டு அடியேனை விடுத்து நீங்கின அல்ல . அடியேன் அவற்றைப் போக்கச் சிவோகம் பாவனையில் இருக்கும் செய்தியை நீ அறிவாய் . அடியேனை உன் அடிமைத் தொழிலில் கூவுவித்துக் கொள்ளுவதை உன் குறிக்கோளாகக் கொள்வாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , துக்கம் எல்லாம் வெந்துயர் மேவித்து நின்று விளைந்தன ; அல்லல் ஆவித்து நின்று கழிந்தன . அவை அறுப்பான் பாவித்த பாவனை நீ அறிவாய் . ஆபற்சகாயர் ஆதலின் இப் பதிகம் இவ்வாறமைந்தது . கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வது . மேவுதல் ; மேவித்தல் , ஆவித்து - உயிர்த்து ; புகைத்து ; ஆவி விட்டு . ` ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம் நான் நிலாவியிருப்பன் என் நாதனை ` ( தி .5 ப .1 பா .5) கூவித்து - கூவச் செய்து . கூவல் ; கூவித்தல் . துக்கம் எல்லாம் வெந்துயரத்தை மேவச் செய்து நின்று முற்றின . வெந்துயரும் துக்கமும் ஆகிய எல்லாம் மேவித்து நின்று விளைந்தன எனலும் ஆம் . ` துயரமே ஏற்றம் ஆகத் துன்பக் கோலதனைப் பற்றி ` ( தி .4 ப .52 பா .7) என்புழித் துயரம் துன்பம் வெவ்வேறாதல் விளங்கிற்று . அத் துன்பமே ஈண்டு வடமொழியில் ` துக்கம் ` எனப்பட்டது . ` சுகதுக்கம் ` என்றதன் பொருளதே தமிழில் ` இன்பதுன்பம் ` என்பது . ` அல்லல் என்செய்யும் அருவினை என்செய்யும் .` ` அல்லல் தீர்க்கும் அருமருந்து `. அறுப்பான் - அறுக்க . பாவித்த பாவனை :- சிவோகம்பாவனை . சரியை முதலிய நாற்றிறத் தினருடையவும் ஆம் . கூவித்துக் கொள்ளல் :- ` அறைகூவி ஆட்கொண்டருளி ` ( தி .8 திருவாசகம் 3:- 148) ` இங்கே வா என்று அங்கேகூவும் அவ்வருளைப்பெறுவான் ஆசைப்பட்டேன் ` ( ? . 418) ` என்னை நீ கூவிக்கொண்டருளே ` ( ? . 449) ` நீயே அருள் செய்து கோனே கூவிக்கொள்ளும் நாள் என்றென் றுன்னைக் கூறுவதே `. ( ? . 499) ` உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமோ ` ( ? . 497) என்பவற்றான் ஆண்டவன் அடிமையைக் கூவுதல் உண்மையை உணர்க . ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் ` ( தி .8 திருவாசகம் . 49) ` பற்றியழைத்துப் பதறினர் ` ( ? . 4;- 49) அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்றருளாயே ` ( ? . 458) ` பிறைசேர் சடையாய் முறையோ என்று அழைத்தால் அருளாதொழிவதே அம்மானே உன் அடியேற்கே ` ( ? . 496) என்பவற்றால் அடிமை ஆண்டவனை அழைத்த லுண்மையை அறிக . அழைத்தல் அடிமையின் தொழில் ; கூவல் தலைவன் செயல் என்னும் வேறுபாடும் உணர்க . தனை - அளவு . கொள்ளும் தனை - கொள்ளும் அளவு . குறிக்கொள்வது குறிக் கொண்டருளுவது என்றமையால் இறைவன் செயலாயிற்று . குறிக் கொள்ளல் உயிர்க்கே உரித்தாதல் ` நின் குரைகழல் காட்டிக் குறிக் கொள்க என்று நின் தொண்டரிற் காட்டாய் ` ` பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு போம் ஆறு அமைமின் ` ( தி .8 திருவாசகம் . 405, 607) என்பவற்றால் அறியப்படும் . குறிக்கொள்வது :- வியங்கோள் . இதன் தி .4 ப .75 பா ,9 குறிப்பிற் காண்க .

பண் :

பாடல் எண் : 2

சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! எண் திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர் . நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர் . திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர் . இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ , அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு அருள் செய்வாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , புறம் சுற்றிக் காவல் நின்றார் ; மற்றும் கடைத்தலையில் ( பலர் ) நின்றார் ; திருமாலோடு நான்முகன் வந்து ( நின் ) அடிக்கீழ்ப்பற்றி நின்றார் ; உன்பணி அறிவான் உற்று நின்றார் . அடியேனைக் குறிக்கொண்டருளுவது . ( அருள்க ). அருளுவது :- வியங்கோள் . ` மறப்பது அறிவிலென் கூற்றுக்களே `. ` அறிவில்லாதேன் சொல்லிய சொற்களை ( அவற்றை ) மறப்பாயாக `. ` மறப்பது என்பது வியங்கோள் ` ( தி .8 திருக்கோவையார் . 87. உரை ). புறஞ்சுற்றிக் காவல் நின்றார் மற்றும் பலர் . வந்து அடிக்கீழ்ப்பற்றி நின்றார் திருமாலும் நான்முகனும் . அறிவான் - அறிய . உற்று - விரும்பி . ` மற்று ` என்றதை அசையாக்கி , ` நின்றார் ` என்ற நான்கனுள் முன்னிரண்டும் அமரர்க்கும் பின்னிரண்டும் மாலயற்கும் உரியவாக்கி யுரைத்தலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

ஆடிநின் றாயண்ட மேழுங் கடந்துபோய் மேலவையும்
கூடிநின் றாய்குவி மென்முலை யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர சேயங்கொர் பான்மதியம்
சூடிநின் றாயடி யேனையஞ் சாமைக் குறிக்கொள்வதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! நீ மேல் உலகங்கள் ஏழனையும் கடந்து அதற்கு மேலும் உயர்ந்து கூத்து நிகழ்த்தி நின்றாய் . எல்லா உயிரோடும் பொருந்தியிருக்கின்றாய் . குவிந்த மெல்லிய முலைகளை உடைய பார்வதியையும் உடன் கொண்டு பால் போன்ற வெண்பிறை சூடிப் பாடிக் கொண்டு நிற்கும் நீ அடியேனையும் பிறவித் துயர்கருதி அஞ்சாதபடி ஆட்கொள்ளவேண்டுவதனை உன் திருவுள்ளத்துக் கொள்வாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , அண்டம் ஏழும் கடந்துபோய் மேலவையும் ஆடிநின்றாய் ; கூடிநின்றாய் ; குவிமென்முலையாளையும் கொண்டுடனே பாடி நின்றாய் ; அங்கு ஓர்பால் மதியம் சூடி நின்றாய் . அடியேனை அஞ்சாமைக் குறிக்கொண்டருளுவது . பால் மதியம் - பால்போலும் வெண்பிறை ( தி .4 ப .88 பா .1), உலகெலாம் மலர் சிலம்படி ` ஆதலின் , ` ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொற் புனத்தகத்தான் ` ஆகி ஆடி நிற்றல் உரித்தே . ` ஆதியாய் நடுவுமாகி ` ` கற்பனை கடந்த சோதி ` என்று தொடங்கும் தி .12 பெரிய புராணத் திருப் பாடல்களை நினைக . 1. மாக்கூத்து ( தூல நடனம் ) 2. நுண்கூத்து ( சூக்கும நடனம் ) 3. கழிநுண்கூத்து ( அதிசூக்கும நடனம் , பர நடனம் ) என்ற மூவகையாம் . ` உலகமே உருவமாக .......... நாடகம் நடிப்பன் நாதன் ` ( சிவஞான சித்தியார் . சூ . 5:- 7 ) என்பது சூக்கும நடனத்தை உணர்த்திற்று . அஞ்சாமை :- பிறப்பும் இறப்பும் மேலும் எய்துங்கொல் என்று அஞ்சுதல் நீங்கி , வீடுபெறுவதுறுதியென்னுந் துணிவுடைமை . ஈண்டு ` அஞ்சாமை ` என்பது மறைவினை யெச்சப் பொருட்டாய் நின்று குறிக்கொண்டு அருளுவது என்பதைத் தழுவிற்று .

பண் :

பாடல் எண் : 4

எரித்துவிட் டாயம்பி னாற்புர மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாயுமை யாண்டுக் கெய்தவொர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழனத் தர சேகங்கை வார்சடைமேல்
தரித்துவிட் டாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! அம்பினால் மும்மதில்கள் முன்னொரு காலத்தில் அழியுமாறு எரியச் செய்து விட்டாய் . பார்வதி நடுங்குமாறு ஓர் யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்வையாக அணிந்து விட்டாய் . நீண்ட சடையின் மீது கங்கையைப் பொறுத்துத் தாங்கியுள்ளாய் . அடியேனை உள்ளத்துக்கொண்டு அருள் செய்வாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே ! முன்னே புரம் மூன்றும் அம்பினாற் பட எரித்துவிட்டாய் . உமையாள் நடுக்கமுற எய்த ஓர் குஞ்சரத்தை உரித்துவிட்டாய் . வார்சடைமேல் கங்கையைத் தாங்கி விட்டாய் ; தரித்து விட்டாய் . அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே . முன்னே :- திரிபுரம் எரித்த காலத்தைக் குறிப்பது . அஃது அநாதியாகும் , பரிபக்குவம் உடையவர்க்கு முப்புரதகனம் ( மும்மலமும் நீக்கும் அருட்செயல் ) நிகழ்வதாகும் . ` பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை `. ( திருவருட்பயன் . 11) புரத்தை எரித்ததும் , குஞ்சரத்தை உரித்ததும் , கங்கையைப் பரித்ததும் தரித்ததும் செய்த நீ அடியேனையும் குறிக்கொண்டருள்க . குஞ்சரம் - குஞ்சத்தையுடையது என்னும் காரணத்தாற் பெற்ற பெயர் . பரித்தலும் தரித்தலும் தாங்குதல் என்னும் ஒரு பொருளே குறிப்பனவாக உரைத்தல் கூடாது . பரிதல் - நீங்கல் . பரித்தல் - நீக்கல் . கங்கையின் விரைவு வன்மை முதலிய நீக்கிய குறிப்புணர்த்துவதென்று கொண்டு , நீக்கிவிட்டாய் என்றும் உரைக்க . தரித்தல் - தாங்குதல் .

பண் :

பாடல் எண் : 5

முன்னியு முன்னி முளைத்தன மூவெயி லும்முடனே
மன்னியு மங்கு மிருந்தனை மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி வாய்பழ னத்தரசே
முன்னியு முன்னடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! மும்மதிலிலுள்ள அரக்கர்களும் எதிர்ப்பட்டு உள்ளத்துக் கருதி உன்னொடு போராட நீ அங்கும் நிலை பெற்று இருந்து அவர்களை அழித்தாய் . வஞ்சமனத்தவராகிய புறச் சமயப் புறப்புறச் சமயத்தவர்கள் இயற்றிவைத்துள்ள நூல்களின் பொருளியல்பையும் நீ அறிவாய் . நீ பல செய்திகளை நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக் கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

முன்னியும் உன்னை முனைத்தன - எதிர்ப்பட்டும் பரந்து சென்றும் , உன்னை எதிர்த்தன , முன்னல் - எதிர்ப்படுதல் ; பரந்து செல்லல் , முனைத்தல் - எதிர்த்தல் ; போராடல் . மும்மதிலும் முனைத்தன . உடனே மன்னியும் அங்கும் இருந்தனை ? மாயமனத்தவர்கள் - வஞ்ச மனத்தினர் ; புறப்புறம் முதலிய சமயத்தவர்கள் . நூல் - அவ்வச் சமயநூல்கள் . பரிசு - அவ்வந்நூற் பொருளியல்பு . உன்னியும் - நினைத்தும் . முதலடியில் , ` முனைத்தன ` என்றும் ` முளைத்தன ` என்றும் பாடபேதம் உளது . ` முன்னி முளைத்தன ` என்றே பழம் பதிப்புக்களிற் காணப்படுகின்றது . முன்னியும் முன்னி முளைத்தன என்றுள்ளவாறே பொருள் கூறலும் பொருந்தும் . பொருந்தினும் , இதன் பொருள் செவ்விதின் விளங்கிற்றிலது . பழம் பதிப்பில் ஈற்றடியிலும் ` முன்னி ` என்றே உளது . அதுவே இப்பதிப்பிலும் உளது .

பண் :

பாடல் எண் : 6

ஏய்ந்தறுத் தாயின்ப னாயிருந் தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர சேயென் பழவினை நோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! நீ எல்லோருக்கும் இன்பத்தை நல்குபவனாய் இருந்தும் பிரமன் தலையை மனம் பொருந்தி நீக்கினாய் . மன்மதனைப் பார்வதியின் திருமணத்தின் முன்பு வெகுண்டு அழித்தாய் . கூற்றுவனையும் காலால் உதைத்து அழித்தாய் . அடியேனுடைய பழைய வினைகளின் பயனாகிய துன்பத்தை நுணுகுமாறு அழித்து அடியேனைக் குறிக்கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , படைத்தான் தலையை அறுத்தாய் . அறுத்தற்கேற்றவன் துன்பன் ; வன்பன் . அறுக்க நினைத்தலுஞ் செய்ய மாட்டாத இன்பனாயிருப்பவன் நீ ; அவ்வின்பனாயிருந்தே அப் பிரமன் தலையை அறுத்தனை . ஏய்ந்து :- இயைந்து என்றதன் மரூஉ . உடன்பட்டு என்றபடி . காமனைக் காய்ந்தறுத்தாய் ; கண்ணினாற் காய்ந்து . அன்று - யோகிருந்த அக்காலத்தில் , ` கண்ணுதல் யோகிருப்பக் காமன் நின்றிட வேட்கைக்கு விண்ணுறு தேவராதி மெலிந்தமை ஓரார் `. ( சித்தியார் . 72). கண்ணினாற் காய்தல் - நெற்றிக் கண்ணின் தீயாற் சுட்டெரித்தல் . காமன் - மன்மதன் . காலனையும் பாய்ந்தறுத்தாய் - இயமனையும் பாய்ந்து திருவடியால் உதைத்து மாய்த்தனை . ` காலன்றன் ஆருயிரதனை வவ்வினாய் ` ( சுந்தரப் பெருமாள் ). என் பழவினை நோய் ஆய்ந்து அறுத்தாய் - யான் செய்த சஞ்சித கருமத்தையும் பிராரத்த கருமத்தையும் நுணுகியறச் செய்தனை . பிராரத்த கருமாநுபவத்தின் நிகழும் ஆகாமிய கருமத்தையும் அறுத்தாய் .

பண் :

பாடல் எண் : 7

மற்றுவைத் தாயங்கொர் மாலொரு பாக மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாயுமை யாளொடுங் கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர சேயங்கொர் பாம்பொருகை
சுற்றிவைத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! ஒப்பற்ற திருமாலை மகிழ்வோடு உன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்து , பார்வதிக்குத் திருமேனியின் ஒரு பாகத்தைக் கொடுத்து அவளோடு கூடியிருப்பது போலவே திருமாலொடும் பொருந்தியுள்ளாய் . ஒரு பாம்பைப் பிடித்து அஃது ஒருகையைச் சுற்றிக் கொண்டிருக்குமாறு செய்துள்ளாய் . அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

பழனத்தரசே ! மற்று - மற்றும் அங்கு ஓர் திருமாலை வைத்தாய் . ஓரு பாகம் மகிழ்ந்து உடனே உற்றுவைத்தாய் . உமை யாளொடும் கூடும் பரிசென்னவே பற்றிவைத்தாய் . அங்கு ஒர் பாம்பு ஒரு கை சுற்றி வைத்தாய் . ` மற்று ` உம்மை செய்யுட்டிரிபு . பரிசு - தன்மை ; பெற்றி . எனவே - போலவே . கைசுற்றி - கையிற் சுற்றி .

பண் :

பாடல் எண் : 8

ஊரினின் றாயொன்றி நின்றுவிண் டாரையு மொள்ளழலால்
போரினின் றாய்பொறை யாயுயி ராவி சுமந்துகொண்டு
பாரினின் றாய்பழ னத்தர சேபணி செய்பவர்கட்
காரநின் றாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

கயிலைமலையில் உள்ளம் பொருந்தி உறைகின்றாய் . அத்தகைய பழனத்து அரசே ! கொடிய தீயினாலே பகைவர்களை அழிப்பதற்குப் போரில் ஈடுபட்டாய் . உயிர்களைப் பாரமாகச் சுமந்து கொண்டு உயிர்களுக்கு உயிராக இருக்கின்றாய் . உனக்குத் தொண்டு செய்யும் அடியவர்கள் மனநிறைவு அடையுமாறு திருக் கோயில்களில் நிலையாக இருக்கும் நீ அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே . ஒன்றி - பொருந்தி . விண்டார் - பகைவர் . ஒள் அழல் - ஒளியதாய தீ ; பண்புத்தொகை . போர் - மும்மதிற் போர் . திரிபுரம் எரித்த வரலாறு குறித்தது இது . பொறையாகி உயிர்க்கும் ஆவியைச் சுமந்துகொண்டு பாரில் நின்றாய் ; உயிர்க்குப் பொறை உடம்பு . உயிர்க்குயிராதலின் , கடவுட்குப் பொறை உயிர் ஆயிற்று . ஆதலின் , பொறையாய்ச் சுமந்துகொண்டு நின்றாய் என்றார் . பொறையாய் உயிர்க்கும் ஆவி . ` ஆய் ` என்னும் எச்சம் ` உயிர் ` என்னும் முதனிலைகொண்டது . ஆவியே பொறையாவதும் உயிர்ப்பதும் ஆகும் . பணி - திருப்பணி . ஆர - நிறைய ; நுகர . ஊரினின் தாய் ஒன்றி நின்று விண்டார் - ஓர் ஊரினின்றும் பிறிதோர் ஊர்க்குத் தாவி நின்று அழிக்கும் பகைவர் .

பண் :

பாடல் எண் : 9

போகம்வைத் தாய்புரி புன்சடை மேலொர் புனலதனை
யாகம்வைத் தாய்மலை யான்மட மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! முறுக்கேறிய சிவந்த சடையின் மீது கங்கையை உனக்குப் போகசக்தியாக வைத்துள்ளாய் . உன் மார்பில் வைத்திருந்த பார்வதியை மகிழ்ந்து உன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விட்டாய் . அருளினாலே , உனக்குத் தொண்டு செய்வதற்கே அடியேனுடைய உடம்பை அமைத்துள்ள நீ அடியேனைக் குறிக்கொண்டு ( இனிப் பிறவித் துயர் அடியேற்கு நேராதவாறு ) அருளுவாயாக .

குறிப்புரை :

பழனத்து அரசே , சடைமேல் ஓர் புனலதனைப் போகம் வைத்தாய் . மலையார் மடமங்கையை ஆகம் வைத்தாய் ; மகிழ்ந்து உடனே பாகம்வைத்தாய் . பணி - தொண்டு . ஆகம் - உடம்பு . அருளால் , உடற்றொண்டு புரியவைத்தாய் என்றதாம் . பணியர் உள்ளால் ஆகம் வைத்தாய் எனல் சிறவாது .

பண் :

பாடல் எண் : 10

அடுத்திருந் தாயரக் கன்முடி வாயொடு தோணெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.

பொழிப்புரை :

பழனத்து அரசே ! இராவணன் கயிலையைப் பெயர்க்கத் தொடங்கும் வரையில் அருகிலேயே இருந்து அவன் செயற்பட்ட அளவில் அவனுடைய முடிகள் வாய் கண் தோள்கள் என்பன நெரிந்து சிதறுமாறு கால்விரலால் அழுத்தி அவன் செருக்கைக் கெடுத்தாய் . செருக்குற்று எழுந்தவருடைய வலிமையை அவர்களைச் சேர்ந்தவர்களுடைய வலிமையோடும் கெடுத்தாய் . புலித்தோலை ஆடையாக உடுத்துள்ளாய் . அத்தகைய நீ அடியேனையும் குறித்து மனத்துக் கொண்டு அருளுவாயாக .

குறிப்புரை :

அடுத்து - நெருங்கி. அரக்கன் - இராவணன். முடி - தலைமுடி பத்தும். வாய் - பத்து வாயும். தோள் - இருபது தோளும். வாயொடு முடியும் தோளும் நெரியக் கெடுத்திருந்தாய். இருத்தல் - அரக்கன் அசைத்த மலைமேல் நடுக்குறாது வீற்றிருத்தல். கிளர்ந்தார் - வளர்ந்தார். வளர்ந்தது வலி. கிளை - கிளைத்தவர். `கிளை` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராயிற்று. அசுரர் கிளை அழித்தமை குறித்தது. படுத்தல் - அழித்தல். உரியாகிய தோல்; உரித்த தோல். தோலையுடுத்திருந்தாய்.

பண் :

பாடல் எண் : 1

மாலினை மாலுற நின்றான் மலைமக டன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேல்
போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திம்மகிழும்
ஆலனை யாதிபு ராணனை நாமடி போற்றுவதே.

பொழிப்புரை :

திருமாலுக்கு அடியைக் காணமுடியாத மயக்கம் ஏற்படும்படி தீத்தம்பமாக நின்றவனாய் , பார்வதி பாகனாய் , வெள்ளிய பிறை சூடியாய் , பிறருக்குத் தீங்கு செய்தல் கூடாது என்ற பண்பினை உணராத திரிபுர அசுரர்களின் மதில்களை வெற்றி கொண்டு அழித்தவனாய் , போரிடும் காளையை ஊர்பவனாய்ப் பூந்துருத்தியுள் உறைபவனாய் , கல்லாலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தொன் மூதாளனுடைய திருவடிகளை நாம் வணங்குகிறோம் .

குறிப்புரை :

மாலினை - மயக்கத்தை . மால் உற - திருமால் அடைய . நின்றான் - தாருக வனத்து முனிவர் செருக்கடக்கற் பொருட்டுக் கொண்ட பிட்சாடனருருவத்தோடு நின்றவன் . மலைமகளுடைய இடப் பாலன் . பால் மதி சூடி - வெண்பிறை சூடியவன் . பண்பு - சிவ பரத்துவம் . உணரார் - அறியாத திரிபுரத்தசுரர் . மதில்மேல் போலன் - ` மூவெயின் மிசைப் புகலன் ,` ( தி .4 ப .88 பா .5.) ` புகலன் ` என்பது போலன் என்றாயிற்று மொழி முதற் குறிலிணை ஒரு நெடிலாகுஞ் சொற்கள் பல உள . அவ்வுண்மை , துகள் - தூள் ; நிகளம் - நீளம் ; அகழம் - ஆழம் ; பொழுது - போழ்து - போது ; விழுதல் - வீழ்தல் - வீதல் ; விழைதல் - வீழ்தல் ; மிகல் - மேல் ; புகுந்தான் - போந்தான் ; பொருவிடை - போர்விடை என்பன முதலியவற்றால் அறியப்படும் . ஏறி :- பெயர் . ஆலன் - கல்லாலின் புடையமர்ந்தவன் . ` ஆலதன் கீழன் ` ( தி .4 ப .88 பா .3). ஆதி புராணன் - தொன்மூதாளன் . நாம் அடி போற்றுவது பூந்துருத்தியாதிபுராணனை என்க .

பண் :

பாடல் எண் : 2

மறியுடை யான்மழு வாளினன் மாமலை மங்கையொர்பால்
குறியுடை யான்குண மொன்றறிந் தாரில்லை கூறிலவன்
பொறியுடை வாளர வத்தவன் பூந்துருத் திய்யுறையும்
அறிவுடை யாதிபு ராணனை நாமடி போற்றுவதே.

பொழிப்புரை :

மான் கன்று , மழுப்படை எனும் இவற்றை ஏந்திப் பார்வதி பாகனாய் , தன் பண்புகளைப் பிறர் உள்ளவாறு அறிய இயலாதவனாய்ப் புள்ளிகளை உடைய ஒளிபொருந்திய பாம்பினை அணிபவன் என்று எல்லோராலும் கூறப்படுபவனாய்ப் பூந்துருத்தியுள் உகந்தருளியிருக்கும் ஞானவடிவினனாகிய தொன் மூதாளனை நாம் திருவடிக்கண் பணிந்து வணங்குகிறோம் .

குறிப்புரை :

மறி - மான்கன்று . மழு வாளினன் - மழு வாளை யேந்தியவன் . மாமலை மங்கை - இமாசல குமாரி . குறி :- அடையாளம் . ஓர் பால் மங்கைக் குறியுடையான் . சிவ பிரான் குணம் ஒன்றும் அறிந்தாரில்லை . கூறில் - சொல்லின் . அவன் - அச்சிவபிரான் . பொறி - படப் பொறி . வாள் அரவம் - கொலைப் பாம்பு . அரவத்தவன் - பாம்பணிந்தவன் . ` சர்ப்பாபரணன் `, உறையும் - திருக்கோயில் கொண்டெழுந்தருளும் . அறிவு - சிவஞானம் .

பண் :

பாடல் எண் : 3

மறுத்தவர் மும்மதின் மாயவொர் வெஞ்சிலை கோத்தொரம்பால்
அறுத்தனை யாலதன் கீழனை யால்விட முண்டதனைப்
பொறுத்தனைப் பூதப் படையனைப் பூந்துருத் திய்யுறையும்
நிறத்தனை நீல மிடற்றனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

தெய்வ நம்பிக்கை கொள்ள மறுத்த அசுரர்களின் மும்மதில்களும் அழியுமாறு ஒருகொடிய சிலையில் ஓர்அம்பினைக் கோத்து அழித்தவனாய் , கல்லால மரத்தடியில் அமர்ந்தவனாய் , ஆல காலவிடத்தை உண்டு , அதனைக் கழுத்தில் தங்க வைத்தவனாய் , பூதப்படை உடையவனாய் , பூந்துருத்தியில் உகந்தருளியிருக்கும் செந்நிறத்து நீலகண்டனாகிய பெருமானை அடியேன் திருவடிக்கண் பணிந்து வணங்குகின்றேன் .

குறிப்புரை :

மறுத்தவர் - பகைவர் . மும்மதில் - மூவெயில் ( திரிபுரம் ). மாய - அழிய . சிலை - வில் . ( தி .4 ப .88 பா .5). ஆலதன் கீழன் :- ` ஆலன் ` ( தி .4 ப .88 பா .1). ஆல்விடம் - ஆல காலம் என்னும் நஞ்சு ; உண்டு அதனைத் திருநீலகண்டம் எனப் பல்லுயிரும் போற்றி வாழ அத் திருக்கழுத்திற் பொறுத்தலுடையவனை . பொறுத்து ( பொறு + த் + து ) :- துவ்வீறு பெற்ற தொழிற் பெயர் . ` தவளைப் பாய்த்து , என்பது போல்வது . பொறுத்து + அன் = பொறுத்தன் . ஆடலன் என்பது போல்வது பொறுத்தலன் என்பது . பொறுத்தலன் , பொறுத்தன் இரண்டும் தொழிற் பெயர்க்குரிய ஈற்றால் வேறுபட்டன . ` படைத்தன் ` ` துரந்தன் ` ( தி .4 ப .88 பா .4). நிறம் - நினைவு , பண்பு - ஒளி .

பண் :

பாடல் எண் : 4

உருவினை யூழி முதல்வனை யோதி நிறைந்து நின்ற
திருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடைய
பொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் திய்யுறையும்
கருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

ஞானவடிவினனாய் , எல்லா ஊழிகளையும் படைத்த முதல்வனாய் , வேதங்களை ஓதி எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் செல்வனாய் , உலகங்களை எல்லாம் படைத்தவனாய் , தன்னைப் பற்றுக்கோடாய் வந்து அடைந்த அடியேனை மோதுகின்ற வினைகளை எல்லாம் விரட்டியவனாய் , பூந்துருத்தி நகரில் உறையும் உலக காரணனாய் , முக்கண்ணனாய் உள்ள பெருமானை அடியேன் அடிக்கண் பணிந்து வழிபடுகிறேன் .

குறிப்புரை :

உருவினை - ஞான சொரூபத்தை ; தடத்த ரூபத்தை . ஊழி முதல்வன் - ` ஊழி முதற் சிந்தாத நன்மணி ` ( தி .8 திருவா .). ஓதி - மறை முதலியவற்றை ஓதி . ஓதல் ஓதுவித்தல் . கற்றல் கற்பித்தல் , என்பவற்றின் வேறுபாடுணர்ந்துரைக்க . ஓதல் ஓதுவித்தல் இரண்டும் வைகரி வாக்கால் நிகழ்த்துவன . ஓதி நிறைந்து நின்ற திரு - பூரண ஞானம் . ` கல்லாதன எல்லாம் கற்பித்தான் ` ( தி .6 ப .43 பா .1). சென்று அடைந்தேன் - இப் பிரபஞ்ச வாழ்க்கை யல்லகண்ட மெல்லாம் கடந்து சென்று , சிவபெருமான் திருவடியே தஞ்சம் என்று அடைந்தேன் . அடைந்தேனுடைய வினையெல்லாம் துரந்தன் - அடைந்த அடியேனுடைய எல்லா வினைகளையுந் துரத்தியவன் . துர + த் + து = துரத்து . அது மெலிந்து நின்ற தெனலுமாம் . துரப்பு - நீக்கம் . பொருவினை - தாக்கும் வினைகள் . ` போத மேலாகப் பண்டே புல்லிய மல நோய் தீர்ந்தும் வாதனை தாக்கும் ` ( காஞ்சிப்புராணம் ). கரு :- மூலப்பொருள் . ` கருவனே கருவாய்த் தெளிவார்க்கெலாம் ஒருவனே ` ` கருவனைக் கடல் நாகைக் காரோணனை ` ( திருக்குறுந்தொகை ); ` கருவை என்றன் மனத்திருந்த கருத்தை ` ( திருத்தாண்டகம் ). கண் மூன்றுடையன் - முக்கண்ணுடையவன் .

பண் :

பாடல் எண் : 5

தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மதுவன்றுகோள்
மிக்கன மும்மதில் வீயவொர் வெஞ்சிலை கோத்தொரம்பால்
புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் பூந்துருத் திய்யுறையும்
நக்கனை நங்கள்பி ரான்றனை நானடி போற்றுவதே.

பொழிப்புரை :

தக்கனுடைய வேள்வியை எம் பெருமான் அழித்தான் என்பது அவன் பேராற்றலைக் காட்டுவதற்கு உரிய செயல் ஆகாது . பிறரைத் துன்புறுத்துதலில் மேம்பட்ட அசுரர்களின் மும் மதில்களும் அழியுமாறு கொடிய வில்லில் அம்பினைக் கோத்துச் செயற்பட்ட , பூந்துருத்தியுள் உறையும் பொன்னார் மேனியனும் திகம்பரனுமாய எங்கள் பெருமானை அடியேன் அடி போற்றுகிறேன் .

குறிப்புரை :

வேள்வி - யாகம் . தகர்த்தவன் - அழித்தவன் . சாரம் அது அன்று . கோள் - வலிமை . வீய - அழிய .( தி .4 ப .88 பா .3) அம்பால் மும்மதில் வீய ( அதன்மேல் ) புக்கனன் . பண்புணரார் மதில்மேல் போலன் என்புழிப் புகலன் என்று உரைத்தது வாய்மைப் பொருளாதலை ஈண்டும் உணர்க . ` புகலன் ` ` புக்கனன் ` இரண்டும் ` புகு ` என்னும் முதனிலையிற்றோன்றியனவே யாகும் . பொன் திகழ்ந்தாற் போன்றதொரு பூ . பூந்துருத்திக்கும் அவ்வடை உரித்தாகலாம் . நக்கன் - ( நகு + அன் ) விளக்கமுடையவன் . நக்நன் என்னும் வடசொல் திரிபுமாம் .

பண் :

பாடல் எண் : 6

அருகடை மாலையுந் தானுடை யானழ காலமைந்த
உருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான்
பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் திய்யுறையும்
திருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

அருகில் இடையிடையே பச்சிலைகளை வைத்துத் தொடுத்த மாலையை உடையவனாய் , அழகார்ந்த நாயகியாம் பார்வதி ஒருபாகம் பொருந்தப் பெற்றவனாய் , கலப்பினால் உலகெலாமாகி நிற்பவனாய் , போரிடும் படைக்கலன்களாகிய வில்லினையும் வேலினையும் உடையவனாய் , பூந்துருத்தியுள் உறையும் செல்வத்தை உடைய ஒளி வீசும் பிறைசூடியை அடியேன் அவனடிக்கண் பணிந்து வணங்குகிறேன் .

குறிப்புரை :

அருகு - அணிய இடம் . அடைமாலை - இடை யிடையே இலைவைத்துக் கட்டிய மாலை . இண்டையுமாம் . ` அழகால் அமைந்த உருவுடை மங்கை ` தலத்து அம்பிகையின் திருப்பெயர்க் குறிப்பு . ` அழகார்ந்த நாயகி `. ஒருபால் மங்கையாயும் மற்றொருபால் உலகாயும் நின்றான் . மங்கையாய் நிற்றல் சொரூபம் . உலகாய் நிற்றல் தடத்தம் . பொருபடை வேல் - சூலம் . பொருதல் - தாக்குதல் . வில் - பிநாகம் . திரு - அழகு . தேசமதி - ஒளியுடைய பிறை . தேசு - ஒளி . மதியன் - பிறைசூடி .

பண் :

பாடல் எண் : 7

மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்
பொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத் திய்யுறையும்
அன்றியும் செய்தபி ரான்றனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

தன்னால் ஒறுக்கப்பட்டும் மீண்டும் எதிர்த்துநின்ற முப்புர அசுரர்கள் அழியுமாறும் அவர்கள் இனமே ஒழியுமாறும் வெகுண்டு கொடிய வில்லை வளைத்துத் தீயைக்கக்கும் அக்கினியாகிய அம்பினால் அவர்கள் மதிலோடு அழிந்துபோகுமாறு செயற்பட்டுப் பூந்துருத்தியுள் உறைகின்ற , அழித்தற்றொழிலுக்கு மறுதலையாகிய ஆக்கச் செயல்களையும் செய்யும் பெருமானை அடியேன் அடிக்கண் பணிந்து வழிபடுகிறேன் .

குறிப்புரை :

நின்ற மதிலரை :- திரிபுரத்தசுரரை . மாயமன்றியும் - மாய்ந்தொழிய ஒறுத்தும் . மன்றுதல் - ஒறுத்தல் . ` அடிகெட மன்ற விடல் ` ( பழமொழி நானூறு . 288) ` முட்டில் ஐங்கழஞ்சு பொன் மன்ற வொட்டிக் கொடுத்தோம் `. மன்றிலிருந்து ஒறுத்தலும் தண்டம் விதித்தலும் செய்தலால் . அவற்றை ` மன்றல் ` என்றனர் . இது தூய தமிழ்ச்சொல் . அபராதம் என்போர் மன்றுதல் எனத் தமிழிற் சொல்லித் தம் மொழியையும் மறவாது பேணுவாராக . மாயவகை கெடுக்கக் கன்றியும் எனலும் ஆம் . மாயவகை - மாயங்களின் திறத்தை . கெடுக்க - தொலைக்க . கன்றியும் - சினந்தும் . கனல் அம்பு - தீக் கணை . பொன்றியும் - அழிந்தும் . அன்றியும் - அன்மையையும் ; நன்மை நன்றி ; அன்மை அன்றி . நன்மையும் நன்மை யன்மையும் . ` எல்லாமாய் அல்லதுமாய் இருந்தது ` ` ஒருவனே எல்லாம் ஆகி அல்லனாய் உடனும் ஆவான் `.

பண் :

பாடல் எண் : 8

மின்னிறம் மிக்க விடையுமை நங்கையொர் பான்மகிழ்ந்தான்
என்னிற மென்றம ரர்பெரியா ரின்னந் தாமறியார்
பொன்னிற மிக்க சடையவன் பூந்துருத் திய்யுறையும்
என்னிற வெந்தைபி ரான்றனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

மின்னல் போல ஒளி வீசும் இடையினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாக விரும்பிக் கொண்டவனாய் , தேவருள் மிக்கவரும் அவனுடைய உண்மையான நிறம் யாது என்று இன்றுவரை அறிய இயலாதவனாய்ப் பொன்போன்ற சடையை உடையவனாய்ப் பூந்துருத்தியில் உறைகின்ற சூரியன் போல ஒளிவீசும் எந்தை பெருமானை அடியேன் அடிபோற்றுகின்றேன் .

குறிப்புரை :

மின் நிறம் மிக்க இடை :- ` மின்னிடை ` உமை நங்கை . ஓர் பால் மகிழ்ந்தான் . அமரர் பெரியார் - அமரரும் பெரியாரும் . என் நிறம் - யாது நிறம் ?. என்று இன்னம் தாம் அறியார் . ` அப்படியும் அந் நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக்காணின் அல்லால் . இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே `, ( தி .6 ப .97 பா .10). பொன்னிறம் மிக்க சடை . பொன்னொத்த மேனியனாதலின் பொன்னிறமிக்க சடையன் எனலுமாம் . எல் நிற எந்தை - கதிரோன் ஒளியுடைய என் அப்பன் . ` பொன்னிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் - செந்நிறத்தள் எந்நிறத்தளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்தளாயிருப்பன் ஆங்கு ` ( திருக்களிற்றுப் படியார் . 7) ` யானாகி நின்றான் ` ( தி .8 திருவாசகம் ) என்ற கருத்துமாம் .

பண் :

பாடல் எண் : 9

அந்தியை நல்ல மதியினை யார்க்கு மறிவரிய
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினைச் சென்றடைந் தேனுடைய
புந்தியைப் புக்க வறிவினைப் பூந்துருத் திய்யுறையும்
நந்தியை நங்கள்பி ரான்றனை நானடி போற்றுவதே.

பொழிப்புரை :

மூன்று அந்திநேரத்திலும் வழிபடுதற்கு உரியவனாய் , எல்லோருக்கும் நல்லபுத்தியை வழங்குபவனாய் , ஒருவராலும் அறிய முடியாதபடி தீயில் சுட்டுத் தூயதாக்கப்பட்ட செம்பொன் நிறத்தினனாய் , தன்னைத் தலைவனாகப் பற்றிய அடியேனுடைய உள்ளமாயும் உள்ளொளிரும் ஞானமாயும் இருப்பவனாய் , பூந்துருத்தியில் உறைகின்ற நந்தி என்ற பெயருக்குரிய நம் தலைவனை அடியேன் அடிக்கண் பணிந்து போற்றுகின்றேன் .

குறிப்புரை :

அந்தியை : ` சந்தியானைச் சமாதி செய்வார் தங்கள் புந்தியானைப் புத்தேளிர் தொழப்படும் அந்தியானை ஆமாத்தூர் அழகனைச் சிந்தியாதவர் தீவினையாளரே `. நல்லமதியினை - அந்தியில் விளங்கும் அழகிய பிறையை ; மதியை ஆர்க்கும் அறிவு அரிய பொன் . செந்தீயை வாட்டுஞ் செம்பொன் . தீ - தி . குறுக்கல் . சென்று அடைந்தேனுடைய புந்தி அப்புந்தியிற் புகுந்த அறிவை . நந்தி - சிவபிரான் . ` நந்தி நாமம் நமச்சிவாயவே `.

பண் :

பாடல் எண் : 10

பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே
வைக்கையும் வானிழி கங்கையு மங்கை நடுக்குறவே
மொய்க்கை யரக்கனை யூன்றினன் பூந்துருத் திய்யுறையும்
மிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே.

பொழிப்புரை :

படம் எடுத்தலும் பதுங்கிப் பார்த்தலும் உடைய பாம்பினை , வானத்திலிருந்து இறங்கி வந்த கங்கையோடு சடையிலே வைத்து , கயிலைமலை அசைந்ததால் பார்வதி நடுங்க , அங்ஙனம் அசைத்த வலிய புயங்களை உடைய அரக்கனைத் திருவடி விரல் ஒன்றினால் அழுத்தி நெரித்துப் பூந்துருத்தியில் உகந்தருளி இருக்கும் மேம்பட்ட சிறந்த வேதங்களால் போற்றப்படுவோனும் , உலகியலில் இருந்து வேறுபட்ட இயல்பினனுமான பெருமானை , அடியேன் அடிக்கண் பணிந்து வணங்குகின்றேன் .

குறிப்புரை :

பைக்கை - (பைத்தல்) படத்தை விரித்தல். `பைத்த பாம்பின் துத்தியேய்ப்ப` ( பொருநராற்றுப்படை. 69) பைக் கையும் - படத்தை விரித்தலும். பாந்தி விழித்தலும், பாந்தி - பதுங்கி. ஆந்தை பாந்தியிருப்ப` ( கலிங்கத்துப் பரணி. 127). சடையிடையே பாம்பு பைக்கையும் பாந்தி விழிக்கையும், அச்சடையிடையே வான் இழி கங்கையை வைக்கையும் என்க. அக்கங்கையும் (இடப் பாலுள்ள) மங்கையும் நடுக்கம் அடைய அரக்கனை ஊன்றினன். மொய்க்கை அரக்கன் - மொய் - கூட்டம்; (வலி). இருபது கைகளின் கூட்டம். மிக்க நன்மை. நல்வேதம். விகிர்தன் - வேறுபாடுடையவன். பாந்தள் என்றதன் காரணமும் இங்குப் புலப்படும்.

பண் :

பாடல் எண் : 1

பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

காவிரியாற்றங்கரையில் அமைந்த நெய்த்தானத்தை உகந்தருளியிருக்கும் பெருமானே! பூமியில் ஆலகால விடத்தால் தாக்கப்பட்ட பல உயிர்களுக்கும் தேவருலகிலுள்ள தேவர்களுக்கும் அருள் செய்து, கரிய கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டருளிய நீ, பல ஊர்களையும் அடைந்து இவ்வுலகில் பிச்சை உணவை ஏற்பதை நாங்கள் அறியோம்.

குறிப்புரை :

பாரிடம் - மண்ணுலகு. சாடிய - அழித்த. பல் உயிர் - அரக்கர் கூட்டம். வான் அமரர் - வானில் உள்ள தேவர். கார் - மேகம். கடல் - பாற்கடல். காரடைந்த கடல்:- இரண்டாவது சீர் விட்டிசைத்துக் கொள்ளற்பாலது. கடல் வாய் உமிழ் நஞ்சு:- கடலில் பாம்பின் வாய் உமிழ்ந்த நஞ்சம். நஞ்சினை அமுதம் உண்பது போலுவந்துண்டு நின்றான். இவ்வுலகில் ஊர் அடைந்து பலிகொள்வதும் நாம் அறியோம். (தி.4 ப.85 பா.4.) நீர் - காவிரியாற்று நீர். அடைந்த கரை - மிகலுற்ற கரையில். நின்ற - நிலைத்த (நெய்த்தானம்). `நீரடைந்தகரை` என்னும் இரண்டனுள் இரண்டாவது சீரின் முதற் குறிலை, இரண்டாவ தடியிற் குறித்ததுபோல விட்டிசைத்துக் கொள்க. இன்றேல், கட்டளைக் கலித்துறையிலக்கணம் அமையாது. எல்லாம் திருவிருத்த மெனினும் கட்டளைக் கலித்துறையே.

பண் :

பாடல் எண் : 2

தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் றிருச்சடைமேல்
பாய்ந்த கங்கைப் புனல்பன் முகமாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையு நீயும்நெய்த் தானத் திருந்ததுவே. 

பொழிப்புரை :

தேய்ந்து விளங்கும் பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர் பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும், ஆராய்ந்து விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும் நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.

குறிப்புரை :

மதியாய், உடையாய், மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்தது நீ அடியேற்கு உரை. தேய்ந்ததும் இலங்குவதும் சிறியதும் வெளியதும் பிறை. அப் பிறைசூடிய பெருமானை மதியாய் என விளித்தார். நின் திருச்சடைமேல் பாய்ந்த கங்கைப் புனல் பலமுகமாகிப் பரந்து ஒலிக்கும். ஆய்ந்து - நுணுகி. இலங்கும் மழுவேல். மழுவேலை யுடையாய். இளமங்கை `ஏந்தெழில்` என்பது போலக்கொண்டு, இளமையை ஏந்து மங்கை என்றுரைக்க. ஏந்து மங்கை - இடப்பாலில் ஏந்தப் பெற்ற மங்கை. இத்தலத்து அம்பிகை திருப்பெயர் `இள மங்கை`, அதனைப் பாலாம்பிகா - (வாலாம்பிகை) என்றனர் வட மொழியாளர்.

பண் :

பாடல் எண் : 3

கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேல்
சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியும்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேல்
சென்றடைந் தார்வினை தீர்க்கும்நெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

குடகுமலையிலே தோன்றி எல்லோரும் அடைந்து நீராடுமாறு பெருகியோடும், குளிர்ந்த சோலைகளை இரு மருங்கிலும் கொண்ட, காவிரியின் கரைமேல் உன்னை வந்து அடைந்தவர்களுடைய தீ வினைகளைப் போக்கும் நெய்த்தானப் பெருமானே! நீ சென்று சேர்ந்து போரிட்டுக் கொன்று அழிக்கும் கூற்றுவனாய்ப் பகைவர் மதில்களை அடைந்து செயற்பட்டுப் போரிட்டு அவற்றை அழித்த செயலை உலகமெல்லாம் நன்றாக அறிந்துள்ளது.

குறிப்புரை :

கூற்றம் ஒன்னார் மதில்மேல் சென்று அடைந்து ஆடிப் பொருததும் தேசம் எல்லாம் அறியும் என்க. ஒன்னார் - பகைவர்; ஒன்றார் என்பதன் மரூஉ. திரிபுரத்தசுரர் மதில்மேல் சென்று அடைந்து ஆடிப் பொருது குமைத்துக் கொன்று ஆடியது கூற்றம். அது சிவபிரான் கணை யேவலால் நிகழ்ந்தது. திரிபுர தகனம் எல்லாத் தேசங்களாலும் அறியப்பட்டது. காவிரி குன்று அடைந்து ஆடுவது; குளிர்பொழிலுடையது. அக்கரை மேல் நெய்த்தானம் உளது. அதில் சென்று அடைந்தார் வினையை அங்கிருந்தருளும் முக்கண்ணன் தீர்த்தருள்வான்.

பண் :

பாடல் எண் : 4

கொட்டு முழவர வத்தொடு கோலம் பலவணிந்து
நட்டம் பலபயின் றாடுவர் நாக மரைக்கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற முழவின் ஓசையோடு பல வேடங்களைப் புனைந்து பல கூத்துக்களை அடிக்கடி ஆடுபவரும், பாம்பினை இடையில் இறுகக்கட்டியவரும், சிட்டர்க்காக மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு அழித்த வில்லை உடையவரும், ஆகிய சிவ பெருமான் நெய்த்தானத்தில் தமக்கு விருப்பமான பார்வதியோடு விரும்பி இருப்பவராவார்.

குறிப்புரை :

கொட்டு முழவு. முழவு கொட்டும் அரவம் (-ஓசை). அரவத்தொடு ஆடுவர். பலகோலம் அணிந்து ஆடுவர். நட்டம் ஆடுவர். பல நட்டம் பயின்று ஆடுவர். அரைக்கு நாகம் அசைத்து ஆடுவர். அரைக்கு - அரையின்கண். நாகம் - பாம்பு. அசைத்து - கட்டி. உடையான் இருந்தவன் ஆடுவர் என்று இயையும். `ஆடுவர்` என்றது ஒருவரைக் கூறும் பன்மையாம் உயர் சொற்கிளவி. சிட்டர்க்காகத் திரிபுரத்தைச் செற்றவன். தீ எழச் செற்றவன். சிலை - மேருவில். சிலை யுடையான் - மேருவில்லினன். செறுதல் - அழித்தல். சிட்டர் - நல்லறிவினர், பொறுமையுடையர். இட்டம்:- விருப்பம். இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே`. உமையொடும் இட்டம் ஆய்நின்ற நெய்த்தானத்து இருந்தவனை என்று ஆக்கம் வருவித்துரைக்க. உமை இட்டமொடு நின்ற என்று உருபு பிரித்துக் கூட்டலுமாம். நெய்த்தானத் திருந்தவனது தொழில் உமையொடு நிற்றல்; நெய்த்தானம் உமை இட்டமொடு நிற்றல்; நெய்த்தானத்திலிருந்தவனது இட்டம் உமையொடு நிற்றல் மூன்றனுள் பொருந்துவது கொள்க.

பண் :

பாடல் எண் : 5

கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர்  பான்மகிழ்ந்தான்
நின்மல னாட னிலயநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

கொய்யப்பட்ட கொன்றை மலர், திருத்துழாய், வன்னி, ஊமத்தம்பூ, வில்வம் ஏனைய சிறந்த மலர்கள் இவற்றை அணிந்த விரிந்த சடைத் தொகுதியையுடைய தேவர் தலைவனாய், கருமை பரவிய நீல நிறத்தை உடையவளாய்க் கருங்கண்களை உடைய பார்வதி பாகனாய் உள்ள களங்கம் அற்ற தூயோனாகிய சிவபெருமான், தன் ஆடல்களுக்கு அரங்கமாக அமைந்த நெய்த்தானத்தில் இருப்பவனாவான்.

குறிப்புரை :

ஆடல் நிலயம் ஆகிய நெய்த்தானம். நெய்த்தானத்து இருந்தவன் பெருமான்; மகிழ்ந்தான் என இயைக்க. கொய்த கொன்றை மலரும் துழாயும் வன்னியும் மத்தமும் கூவிளமும் வேய்ந்த சடை. மெய்ம்மலர்:- எட்டுப் பூவுள் ஒன்றாய சத்திய புட்பம். மெய்யாகிய மலர்வேய்ந்த சடை. மெய் - அறிவு; ஞானபுட்பமும் ஆம். முற்கூறியன வற்றையே மெய்மலர் என்றதாகக் கொள்ளலுமாம். விரிசடை - வினைத்தொகை. சடைக்கற்றையையுடைய பெருமான். விண்ணோர்க்கெல்லாம் பெருமகன். மைமலர்கண் - மைமலர்ந்த விழி. நீலம் - கருங் குவளை. நிறம் - ஒளி. கருங்கண். கண்ணி - கண்ணன். (உமாதேவி). ஓர் பால் - இடப்பாகம். மகிழ்ந்தான் - வைத்துக் கண்டு மகிழ்ந்தவன். `காணமகிழ்தல்` (திருவள்ளுவர்). மை நீலமலர் நிறம்போலுங் கருங்கண் எனலுமாம். `மைஞ்ஞின்ற வொண்கண்` (தி.4 ப.80 பா.5). நின்மலன் - மலரகிதன்; அமலன்; இது நிமலன் எனத் திரிந்து வழங்கும். நிர் + மலம் = நிர்மலம்; நின்மலம். நிமலம். ஆடல் - திருக்கூத்து. நிலயம் - உறையுள். `கொன்றைமாலையும் கூவிள மத்தமும் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்`.

பண் :

பாடல் எண் : 6

பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவு மாடவுங் கேட்டருளிச்
சேர்ந்தா ருமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

நெய்த்தானத்தில் இருக்கும் சிவபெருமான் பூக்களை வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையை வளைத்துச் சடைக்கண் அணிந்து, விரைவு மிக்குப் பொருந்திய காளையினை ஏறி ஊர்ந்து பூதப்படைகள் பலவற்றின் நடுவே செல்பவராய்ப் புறத்தே அடியார்கள் பாடும் பாடல்களைக் கேட்டு ஆடல்களைக் கண்டு பார்வதி யோடும் இணைந்து உறைகின்றார்.

குறிப்புரை :

நறுங்கொன்றைப் பூந்தார் மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து, கூர்ந்தார். விடையினை ஏறிப் பூதப்படை நடுவே போந்தார். பாடவும் ஆடவும் கேட்டருளிச் சேர்ந்தார் என்க. கூர்ந்து ஆர் விடை - விரைவுமிக்குப் பொருந்திய காளை; ஒன்றற்குப் பத்தாகப் பிறவி கூர்ந்த மால் ஆகிய விடை என விடைக்கு அடையாக்கியுரைத்தலுமாம். பல் பூதப்படை நடுவே விடையினை ஏறிப் போந்தார். சிவ பிரானுக்குப் பூதங்களும் உமாதேவியார்க்குக் காளிகளும் உரியர். பூத கணங்கள் பல்வகைப்படும். காளிக் கூட்டமும் அவ்வாறு பல்வகைத்து. அசுரர் யாகத்தில் இன்புற்ற பூதக்கூட்டமும் காளிக்கூட்டமும் சிவசம்பந்தம் உடையவற்றின் வேறாகும். புறவிசை பாடல் - புறத்தே சூழ்ந்து நின்று சாமகானம் முதலிய இசை பாடுதல். போந்தார் பாடவும் ஆடவும் சேர்ந்தார் (நெய்த்தானத்திருந்தவன்) கேட்டருளியதாகக் கொள்ளலும் கூடும். உமையவளோடும் இருந்தவன் கூர்ந்தார்; போந்தார்; சேர்ந்தார் என்க.

பண் :

பாடல் எண் : 7

பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

பாம்பினைப் பற்றியவனாய், புலித்தோலை உடையாக உடுத்தவனாய், எல்லா வலிமைகளும் நிறைந்த மூன்று மதில்களையும் தீ மூட்டி அழித்தவனாய்ப் பூதப்படையால் சூழப்பட்டவனாய்ச் சூலம், மழு, மான் எனும் இவற்றை ஏந்தியவனாய் நம் தீவினைகளை அழித்து ஒழிப்பவனாய்ச் சிவபெருமான் நெய்த்தான நகரில் உறைகின்றான்.

குறிப்புரை :

பற்றின பாம்பன் - பாம்பைப் பற்றியவன். `சர்ப்பா பரணன்`; `நாகாபரணன்`. படுத்த புலி - கொன்ற புலி. படுக்கப்பட்ட புலி எனச் செயப் பாட்டுப் பொருளில் நின்ற பெயரெச்சம். படுத்தல் வினைக்குப் புலி செயப்படு பொருள். சிவபிரான் வினைமுதல். உரித் தோல் - உரித்தலை யுற்றதோல். உரியாகிய தோல். தோல் உடை - தோலாகிய உடை. உடையன் - உடையினன். தோலுடையன் - தோலையுடையவன். முற்றின - முற்றுதல் செய்த; வாணாள் முற்றிய. மூன்றுமதில் - `மும்மதில்` - (திரிபுரம்) `மூவெயில்`, மூட்டி எரித்தறுத் தான் - எரி மூட்டி`; யறுத்தான். மூட்டி - மூள்வித்து, அறுத்தல் - அவை பறத்தற்குரிய உறுப்பை அறுத்தலுமாம். சுற்றிய - சூழ்ந்த. சூலம், மழு, மான் மூன்றும் ஏந்தியவன் என்று கூறக் கருதியவராயின், அவற்றை உடையவன் என்பதற்கேற்ற சொற்பெய்திருப்பார். இராமையால், சூலம் மழுவொருவான் என்று இருந்ததோ என எண்ணக் கிடக்கின்றது. சூலத்தையும் மழுவையும் ஒருவான் என்ற பொருள் பயப்பது. உள்ளவாறே கொள்ளின் நான்காவதடியிற் பெறப்படும் பெயர்ப் பொருளொடு கூட்டி, சூலத்தையும் மழுவையும் மானையும் உடைய சிவன் என்க. நம் தீவினை செற்றுத் தீர்க்கும். செற்று - அழித்து; கொன்று. தீர்க்கும் - தீரச்செய்யும்.

பண் :

பாடல் எண் : 8

விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன் னார்மதின் மூன்றுடனே
எரித்த சிலையின னீடழி யாதென்னை யாண்டுகொண்ட
தரித்த வுமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

விரித்த சடையினனாய், தேவர்கள் தலைவனாய், விடத்தை உண்டு அடக்கிய கழுத்தினனாய், தான் உரித்த யானைத் தோலைப் போர்த்தவனாய், பகைவரின் மதில்கள் மூன்றனையும் எரித்த வில்லினனாய், தன் பெருமைக்குக் குறைவு வாராத வகையில் அடியேனை அடிமையாகக் கொண்டவனாய் உள்ளவன், தன் உடம்பில் பாதியாகக் கொண்ட பார்வதியோடு நெய்த்தானத்தில் உறைகின்ற பெருமானாவான்.

குறிப்புரை :

விரித்த சடையினன் - சடையை விரித்து ஆடுகின்றவன். விண்ணவர்கோன் `தலையாய தேவாதி தேவர்க்கென்றும் சேயான்`. விடம் - நஞ்சு. `திருநீலகண்டன்`. உரித்த உரி. கரியுரி. கரி - கரத்தையுடையது; யானை. மூடி - போர்த்து. ஒன்னார் - பகைவர்; ஒன்றார் என்பதன் மரூஉ. மதில் மூன்று: எரித்த சிலையினன் - சிலையால் எரித்தவன். `படுத்த புலி` (தி.8 ப.58 பா.1) போல்வதன்று இது. இவ்வெச்சம் வினைமுதல் கொண்டது. சிலை எரித்ததன்று, சிலையில் வைத்து, எய்யப்பட்ட தீக்கணையே எரித்தது. சிலை கணைக்கு, இடவாகு பெயர். ஈடு - பெருமை. கொண்ட என்னும் எச்சம் உமையவள்` என்ற பெயர்கொள்ளும். `இருந்தவன்` என்பதையும் கொள்ளும். தரித்த உமையவள்:- எல்லாவுலகங்களையும் தாங்கிய அம்பிகை. `சகதம்பா` `உலகநாயகி`. தரித்தல் - பொறுத்தல். நெய்த்தானத்து உமையவளோடும் இருந்தவன்.

பண் :

பாடல் எண் : 9

தூங்கான் றுளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை  தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்து
நீங்கா னுமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.

பொழிப்புரை :

தாமதம் செய்யாமல் விரைவு உடையவனாய், திருத்துழாயும் கொன்றையும் பொருந்திய சிவந்த சடையின்மீது கைக்கொண்ட பாம்பு பிறை எனும் இவற்றைக் கங்கையோடு அணிந்தவனாய், பகைவருடைய முப்புரங்களையும் தீக்கு இரையாகுமாறு அம்பு செலுத்தி அசுரர்களால் மற்றவருக்கு ஏற்பட்ட சோர் வினைப் போக்கி என்றும் நீங்காதிருக்கும் பெருமான் பார்வதியோடு நெய்த்தானத்திருந்தவனே யாவன்.

குறிப்புரை :

தூங்கான் துளங்கான் - ஆடான் அசையான். தூங்கான் - நீட்டியான்; விரைவுடையான்; தாமதம் செய்யான். (குறள். 383, 672) துளங்கான் - சலியான் எனலும் ஆம் `சலியா நடம்` `என்றும் இவர் ஆடப் பதஞ்சலியார்` (சிதம்பர மும்மணிக்கோவை. 21) `துளங்காது தூக்கம் கடிந்து செயல்` (குறள். 668) என்புழி, `அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க`, எனப் பரிமேலழகர் உரைத்ததும் தூக்கம் துளக்கம் இரண்டும் ஆண்டுள்ளதும் உணர்க. `துளக்கு அற்ற காட்சியவர்`. (குறள். 699) - நிலைபெற்ற அறிவினையுடையார்` என்னும் பகுதியும் ஈண்டு உணரத்தக்கது. `வட்டவாய்க்கமலத் தண்ணல் மணிமுடி துளங்க ஓச்சிக்குட்டிய குமரப்புத்தேள்` (தணிகைப் புராணம்). துழாய் - துளசி. துன்னிய - நெருங்கிய. வாங்காமதியம் - நீளாப்பிறை; வளராப் பிறை. வாளரவுக்கு நடுங்கிப் பின்வாங்காததுமாம். சடைமேல் மதியும் அரவும் கங்கையும் புனைந்தான். தேங்கார் - `தியங்கார்` என்பதன் மரூஉ. சோரார்; மயங்கார். பகைவர் தீ எழ எய்து தியக்கு - அசுரரால் தேவர்க்கு உற்ற சோர்வு; மயக்கம். அறுத்து - போக்கி. உமையவளோடு நீங்கான்.

பண் :

பாடல் எண் : 10

ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதி றீயம்பினால்
மாட்டிநின் றானன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவொர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

செல்வம் நிலைபெற்ற நெய்த்தானப் பெருமான் வானில் நிலவிப் போரிட்ட மும்மதில்களையும் தீயாகிய அம்பினால் எரித்துப் பகைவர்கள் வெந்து போகும்படி தீயினால் அழித்து அக் காட்சியைத் தேவர்கள் காணச் செய்து விரைந்து வானினின்றும் இறங்கிய சினத்தை உடைய பெரிய கங்கை பாய்வதற்கு நீண்ட சடைக் கற்றைகளுள் ஒன்றனைக் காட்டி நின்ற பெருமான் திருநெய்த்தானத் திருந்தவனே யாவான்.

குறிப்புரை :

பொருவானில் அம்மும்மதில் தீ ஊட்டி நின்றான். முப்புரப் போர் வானில் நிகழ்ந்தது. நிலம் எனப்பிரிப்பின், பொருவான் - போர்செய்தற்பொருட்டு; பொருபவன். நிலம் - மண்ணுலகில் என்க. அம்பினால் அன்றினார் வெந்து வீழவும் மாட்டி நின்றான் - கணையால், பகைவர் எரிந்து கீழ்விழவும் மாள்வித்து நின்றான். தீயை அம்பினால் ஊட்டி எனவும், தீயை மாட்டி எனவும் கூறலும் ஆம். வீழவும் காட்டி நின்றான் வானவர்க்கு. கதம் - விரைவு. கங்கை பாயச் சடையை நீட்டி நின்றான். பாய்ந்த கங்கையின் பெருக்கத்தால், சுருக்கிய சடையை விரித்து நீட்டலாயிற்று. திரு நின்ற நெய்த்தானம் - திருமகள் நிலையாயிருக்கும் நெய்த்தானம்.

பண் :

பாடல் எண் : 1

கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினி னீல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

கைகளில் விடத்தைக் கக்கும் பாம்பினையும் தீயைப் போல வெம்மையைச் செய்யும் சூலப்படையையும் ஏந்தியவனும் , கடலில் தோன்றிய கொடிய விடத்தை உண்டவனும் , விரிந்த சடையினை உடைய தலைவனுமாய் , வயல்களிலே நீலப்பூக்கள் மணம் கமழும் திருவேதிகுடியில் உகந்தருளியிருக்கும் ஐயனுமான , நுகர்ந்தும் நிறைவு தாராத ஆரா அமுதை அடைந்து அதில் முழுகுவோம் நாம் .

குறிப்புரை :

விண்ணவர் கோன் ஆகிய ஐயன் , அவன் கையது நாகம் ; கனல் ; சூலம் . கால் எரிநாகம் ; எரிகால் நாகம் - நஞ்சு கக்கும் பாம்பு . கனல் - தீ . விடு சூலம் - விடுகின்ற சூலம் . கனல் விடு சூலம் என்னின் , கால் எரியைத் தனியாகக் கொள்ளலாம் . காலெரி நாகம் கனல்விடு சூலம் என்று இரண்டே கொள்ளலாம் . சூலமது என்றதில் ` அது ` என்பது சுட்டுச் சொல்லன்று . சூலம் என்னும் முன்மொழிப் பொருளதாயே நின்றது . வெய்யது - வெம்மையுடையது ` வேலை ` ஈண்டுப் பாற்கடல் . வெய்யதாய நஞ்சு என்க . நஞ்சு உண்டகோன் . விரி சடைக்கோன் . ` விண்ணவர் கோன் ` ( தி .4 ப .89 பா .8.) செய்யினில் - வயலில் . நீலம் - நீலோற்பலம் . ` மணம் கமழும் திருவேதிகுடி ` என்றதால் நீர் நில வளம் உணர்த்தப்பட்டது . ஆராவமுது ` அத் தலத்தின் இறைவன் திருப்பெயர் . இறைவி திருப்பெயர் ( தி .4 ப .90 பா .7) இல் ` மடமொழி மங்கை ` என்றதும் அறிக . ` மங்கையர்க்கரசி ` என்று இக்காலத்தில் வழங்குகின்றது . நாம் அடைந்து ஆடுதும் . ஆடுதும் - ஆடுவோம் . பேரின்ப வெள்ளத்தில் முழுகுவோம் ; இன்பக் கூத்தாடுவோம் ; பெரிதும் இனியாய் நீ எனப் பேசுவோம் .

பண் :

பாடல் எண் : 2

கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனன்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

கைகளில் மான்குட்டியையும் கொடிய மழுப் படையையும் ஏந்தி , மண்டையோட்டைத் தாங்கித் திருநீற்றை அணிந்து பொய்த் தலை கொண்டு பிச்சைக்காகத் திரிபவனும் , வயல்களிலே வாளை மீன்கள் தாவித் துள்ளும் திருவேதிகுடிப் பெருமானும் ஆகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் நாம் .

குறிப்புரை :

கைத்தலைமான்மறி - சிறிய தலையையுடைய மான் கன்று . ஏந்தியகையன் என்றமையால் , கையின் கண் என்றோ கையின் கண் தலை (- பிரம கபாலம் ) என்றோ உரைத்தல் பொருந்தாது . கை (- சிறுமை ) யுடைய ( பிரமன் ) தலை எனலாம் எனின் , ` பொய்த்தலை யேந்தி ` எனப் பின் வருதலால் அதுவும் பொருந்தாது . கனல் மழுவன் - எரிமழுவுடையவன் . ` எரியும் மழுவினன் ` ( தி .4 ப .90 பா .8). பொய்த் தலை - இறந்த மலரவன் தலை மெய்த்தலையாகாது தலைபோல வைக்கப் படுவதைப் பொய்த்தலை என்பது வழக்கு . நற்பூதி - அழகிய திருநீறு . பாசம் போக்கிப் பராவணமாக்கும் நலம் . அணிந்து - அழகுறப் பூசி . பலிதிரிவான் - பலிக்காகத் திரிபவன் . செய்த்தலை - வயலின் கண் . ` வயற்கணே கயற்கணம் பாயுந் திரிசிராமலை ` ( செவ்வந்திப் புராணம் ). உகளும் - துள்ளும் . ` வயலுகளுஞ் சேல் அன்ன நீள் விழியாய் ` ( தஞ்சை வாணன் கோவை ) அத்தன் - முதல்வன் .

பண் :

பாடல் எண் : 3

முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான்
அன்பி னிலையி லவுணர் புரம்பொடி யானசெய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

முன்னும் பின்னும் தானே உலக காரணனாய் , மனனசீலனாய் , நம் பழைய வினைகளைப் போக்குபவனாய் , அன்பு நிலையில் இல்லாத அசுரர்களின் மும்மதில்களையும் அழித்த செம்பொன் போல்பவனாய் , தாமரை மலர்மேல் உள்ள பிரமன் வழிபடுவதற்காக வந்து அடையும் திருவேதிகுடியில் விரும்பி உறைபவனாய் , நம்மை அடிமைகொள்ளும் பெருமானை நாம் அடைந்து அவன் அருளாரமுதக் கடலில் ஆடுவோம் .

குறிப்புரை :

` முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் ` ஆதலின் , ` முன் முதல்வன் `. ` பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியன் ` ஆதலின் ` பின்முதல்வன் ` முன்னும் முதல்வன் ; பின்னும் முதல்வன் . யாரினும் முன்ன எம்பிரான் ` ` முழுதும் யாவையும் இறுதியுற்றநாட்பின்ன எம்பிரான் ` ( தி .8 திருவாசகம் 103). ` முன்னவனே பின்னும் ஆனவனே ` ( ? 147) ` முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கும் முற்றும் இற்றால் பின்னும் ஒருவர் சிற்றம் பலத்தார் தரும் பேரருள் ` ( தி .8 திருக்கோவையார் . 160) முன்பு வலிமை . முன்பின் முதல்வன் - வலிமையுடைய முதலோன் . இப் பொருள் சிறப்புடையதன்று . முனிவன் - மனனசீலன் . பாசப் பொருளனைத்தும் முனிதலையுடையவன் . மேலைவினை - ஆகாமிய கருமம் ; சஞ்சித கருமமும் ஆம் . ` மேல் ` காலத்தால் இறந்ததையும் இடத்தால் எதிர்வதையும் குறிக்கும் . கீழ் , முன் , பின் எல்லாம் அன்ன . கழித்தான் - தீர்த்தான் . அன்பின் நிலையில் - மறக்கருணையில் . அன்பு இல்லாத நிலை எனலுமாம் . அவுணர்க்கு அன்பிருந்தால் அழிப்பரோ பிறவுயிர்களை ? முப்புரத்தை நீறாக்கின வரலாறு . திரிபுரத்தைப் பொடி செய்தான் என்பது பெருவழக்கு . நன்மலர் மேலவன் :- நான்முகன் இது தல வரலாறு ஏற்பட்ட பின்னர்ப்பாடியதாகும் . வேதி (- பிரமன் ). ` விசும் பினை வேதி தொடர ஓடரங்காக வைப்பான் ` ( தி .4 ப .4 பா .9) விழுதிகுடி , வீதி குடி , வேதிகுடி என மருவியதெனல் , குடி என முடியும் ஊர்ப் பெயர்களால் உணரப்படும் . கிள்ளுகுடி இலந்தங்குடி ஆலங்குடி எட்டிகுடி . அன்பன் :- ` அன்பே சிவம் ` உடையன் - ` சுவாமி ` பொன்னை - மேரு மலை வில்லாளனை . ஆகுபெயர் .

பண் :

பாடல் எண் : 4

பத்தர்க ணாளு மறவார் பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கண் முன்னம் பணிசெய்து பாரிட முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

பக்தர்களாய்த் தன்னை நாளும் மறவாத அடியார்களுக்குப் பொருந்திய பிறவிப் பிணியை அறுப்பவனாய் , பாசநீக்கம் உற்றவர்கள் இம்மண்ணுலகில் சிவப்பணி செய்து உயரச் செய்தவனாய் , கொத்தாகப் பூத்த கொன்றையின் மணம் பரவும் திருவேதி குடித் தலைவனாய் உள்ள ஆரா அமுதக் கடலை நாம் அடைந்து ஆடுவோம் .

குறிப்புரை :

பத்தர்கள் பிறவியை அறுப்பான் . நாளும் மறவார் பிறவியை அறுப்பான் . அவ்விருதிறத்தார் பிறவி ஒன்றையே அறுப்பான் . மற்றையோர் பிறவியை அறுக்கமாட்டான் . ` இறைவனடி சேராதார் ` ` பிறவிப் பெருங்கடல் நீந்தார் ( சேர்ந்தார் ) நீந்துவார் `. நாளும் மறவார் - இடைவிடாது நினைப்பவர் . ஒன்று அறுப்பான் :- ஒன்றாக ( ஒருசேர ) அறுப்பான் ; ஒன்றையே அறுப்பான் ; ஒன்றியிருந்து அறுப்பான் . ஒன்று - ஒருமையையுடையது ; பண்பி . ஒருமை - பண்பு . முத்தர்கள் - பாச நீக்கம் உற்றவர்கள் . பாரிடமுன் - மண்ணுலகில் . முன்னம் - முன்னர் . பணி செய்துயர்த்தான் - பணிசெய்துயரச் செய்தான் . பணி செய்துயர்தல் முத்தர் செயல் . உயர்த்தல் இறைவன் செயல் . கொத்தன கொன்றை - கொத்துக்களையுடையனவாகிய கொன்றை ; கொன்றைப் பூங்கொத்துக்கள் .

பண் :

பாடல் எண் : 5

ஆனணைந் தேறுங் குறிகுண மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும் புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு பயிறிரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

தேனிலே பொருந்தி உண்டு பறக்கும் வண்டுகள் மிகுதியாகக் காணப்படும் திருவேதிகுடியில் பஞ்சகவ்வியத்தில் அபிடேகம் கொள்ளும் , மழு ஏந்திய பெருமான் , பிறையும் கங்கையும் சடைமுடியில் சூடி , கையில் மானை வைத்துக் கொண்டு கூத்து நிகழ்த்துபவன் விரும்பி காளையை ஏறி ஊரும் அப்பெருமானுடைய பெயர்களையோ , அடையாளங்களையோ , பண்புகளையோ ஒருவரும் முழுமையாக அறிதல் இயலாது . அவனை அடைந்து அருளாரமுதக் கடலில் ஆடுவோம் நாம் .

குறிப்புரை :

ஆன் - விடை . அணைந்து - சார்ந்து . ஏறுங்குறியும் குணமும் அறிவார் ஆர் ? குறி - பெயர் ; அடையாளம் . குணம் - எண் குணமும் சத்துவம் முதலியனவும் , செம்மை , நன்மை முதலியனவும் . அவர் - அப்பரம சிவனாருடைய . கை - திருக்கையில் . மான் அணைந்து ஆடும் . மதியும் புனலும் சடைமுடியில் உடையன் என்று கொள்க . தேன் - பூக்களில் . ஆகு பெயர் . தேனுக்காகப் பூவில் அணைந்து ஆடிய வண்டு எனவும் தேனை அணைந்து ஆடிய வண்டு எனலும் ஆம் . தேன் - பெடைவண்டு ; வண்டினத்துள் ஒன்று . ஆன் - ` ஆனைந்து `; ( பஞ்சகௌவியம் ). மழுவன் - மழுப்படை யுடையவன் . ` ஆனிடையஞ்சுங்கொண்டு அன்பினால் அமர ஆட்டி ` ( தி .4 ப .55 பா .3) ` அஞ்சணையஞ்சுமாடி ` ( தி .4 ப .53 பா .7). ` பேரும் குணமும் பிணிப்புறும் இப்பிறவி ` ( தி .8 திருவாசகம் 561) இல்லாத கடவுள் . ` ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லான் ` ( ? 235) ` மைப் படிந்த கண்ணாளும் தானும் ` எனத் தொடங்கும் திருத்தாண்டகத்துள் , குறி , குணம் இன்மை கூறப்பட்டது . ` ஊரிலான் குணங்குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரிலான் ` ( கந்தபுராணம் ) ` எண்ணானாய் எழுத்தானாய் ` ( தி .6 ப . 12 பா . 5.)

பண் :

பாடல் எண் : 6

எண்ணு மெழுத்துங் குறியு மறிபவர் தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு வேதிகுடி
நண்ண வரிய வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடும் தேவர்கள் பணிந்து தெளிந்து கொள்ளுமாறு , அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திரு வேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவ பெருமானை நாம் அடைந்து அருட் கடலில் ஆடுவோம் .

குறிப்புரை :

எண்ணும் எழுத்தும் :- ` எண்ணிடை யெழுத்துமானார் ` ( தி .4 ப .43 பா .3), எண்ணையும் ` எழுத்தையும் குறியையும் அறிபவர்தாம் மொழிய வானவர் தாம் பணிவார் . பண்ணினிசை மொழிபாடிய வானவர் தாம் பணிவார் . ` குறிகளும் அடையாளமும் கோயிலும் நெறிகளும் , அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ` ( தி .5 ப .90 பா .6) அவர் வினைகளைத் தீர்க்கும் பிரான் . திண்ணென்னும் வினைகள் :- தீர்க்கத் தீராதவாறு உறுதியாகப் பற்றித் தொடரும் வினை , ` பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே ` ( பட்டினத்தார் பாடற்றிரட்டு ). நண்ண அரிய - பாற்கடல் கடைந்து அடைந்ததுபோல் எளிதில் அடைதற்கு அரிய சிவாமிர்தம் . அறிபவர் வானவர் பணிவார் எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 7

ஊர்ந்தவிடை யுகந் தேறிய செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு தையடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

உகந்து காளையை ஏறி ஊருஞ் செல்வனாகிய பெருமானை நாம் முழுமையாக அறியோம் . செவிக்கு இனியவான மடப்பம் பொருந்திய மொழிகளை உடைய பார்வதியை மகிழ்ந்து பாகமாக உடையவனாய் , சடையிற் கங்கையைச் சூடிய செல்வப் பிரானாய் வயல்கள் சூழ்ந்த திருவேதிகுடியைச் சார்ந்திருக்கும் பெருமானாகிய குளிர்ந்த அமுதை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம் .

குறிப்புரை :

ஊர்ந்த விடையுகந்து ஏறிய செல்வன் :- உகந்து விடை ஏறியூர்ந்த செல்வன் ; விடை உகந்து ஏறி ஊர்ந்த செல்வன் . ஊர்ந்த விடை ஏறிய செல்வன் என்று உள்ளவாறே கொள்ளின் , ஊர்தல் ஏறுதல் இரண்டும் வெவ்வேறு காலத்தன ஆகும் . ஆர்ந்த - நிறைந்த ; செவிக்கினிதாக அருந்திய ( மொழி ). மடமொழி - மடப்பம் பொருந்திய சொல் . ` மட மொழி மங்கை ` என்பதும் ` மங்கையர்க் கரசியம்மை ` என்று இத்தலத்தில் இறைவி திருப்பெயராக வழங்குவதும் நோக்கத்தக்கன . மகிழ்ந்து உடையவன் . புனல் சேர்ந்த சடை . சேர்ந்த சடையுமாம் , சேராதது சடையாகாது . சடைச் செல்வப்பிரான் :- சடையுடையார் எய்தும் அழியாத பேரின்பச் செல்வத்தைக் குறித்தது . வேதிகுடியைச் சார்ந்த வயல் . ` வயல் அணிதண்ணமுது ` என்றாலும் வயல் சார்ந்ததும் அச்சார்பு அணியாவதும் வேதிகுடிக்கே ஆயினும் , அச்சார்பும் அணியும் அங்குத் திருக்கோயில்கொண்ட பெருமானுக்கும் உரிய ஆதலின் , ` சார்ந்த வயல் அணிதண்ணமுது ` எனப்பட்டது .

பண் :

பாடல் எண் : 8

எரியு மழுவின னெண்ணியு மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் றேயமும் நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறுதிகழ்திரு வேதிகுடி
அரிய வமுதினை யன்பர்க ளோடடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

கொடிய மழுவை ஏந்தியவனாய் , பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை பெற விரும்பித் திரிபவனாய் , தேயங்களும் நாடுகளும் எல்லாம் உடையவனாய் , விரிந்த சோலைகளும் சேறு விளங்கும் வயல்களும் அழகு செய்யும் திருவேதிகுடியில் உறையும் பெருமானாகிய அரிய அமுதை அன்பர்களோடு அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் .

குறிப்புரை :

எரியும் மழுவினன் - ` கனல் மழுவன் ` ( தி .4 ப .90 பா .2). எண்ணியும் திரியும் பலியினன் ; மற்றொருவன் தலை - பிரம கபாலம் , பலி கொள்ளத்திரிதல் இழிவுண்டாக்குவது என்று எண்ணியும் பலிக்காகத் திரியுமவன் . தேயம் :- ` தேஎம் ` என்பது தேயம் எனத்திரிந்தது . ` செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப ` ( பொருநராற்றுப்படை 134) ` தேயமும் நாடும் ` முறையே பெரியனவும் சிறியனவுமான இடப் பிரிவுகளை உணர்த்தி நின்றன . தேயமெல்லாம் உடையான் . நாடெல்லாம் உடையான் . விரியும் பொழில் வேதிகுடி . சேறுதிகழ் வேதிகுடி . அதில் உள்ள அரிய அமுது . ( தி .4 ப .84 பா .8). அன்பர்கள் - அன்பு மிக்க தொண்டர்கள் . ` அன்பரொடு மரீஇ ` ( சிவஞானபோதம் . 12 ) ` இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்து `.

பண் :

பாடல் எண் : 9

மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை யாராவமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

நீலகண்டனாய் , வேதம் ஓதும் நாவினனாய் , பெருமையாகக் கருதி விரும்பிய திருநீற்றை மெய் முழுதும் அணிந்தவனாய் , மேம்பட்ட வெள்ளிய மழுப்படையினனாய் , சிறந்த தாமரைகள் மணம் வீசும் திருவேதிகுடித் தலைவனாய் உள்ள சிவ பெருமானாகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் .

குறிப்புரை :

மை அணி கண்டன் - மேகம் போலும் அழகிய கண்டன் . நஞ்சணிந்த கண்டன் . ` மைவானமிடற்றானை அவ்வான் மின் போல் வளர்சடைமேல் மதியானை மழையாயெங்கும் பெய்வானை ` ( தி .6 ப .50 பா .6) ` மேகம்போல் மிடற்றார் ` ( தி .4 ப .58 பா .7). மறைவிரிநாவன் - வேதங்களையும் ஆகமங்களையும் விரித்துரைத்த நாவினன் . ` மறையுங் கொப்பளித்த நாவர் ` ( தி .4 .24 பா .4). மதித்து - முத்திதரத்தக்கது இதுவே என மதித்து . உகந்த - விரும்பிக் கொண்ட நீற்றன் . மெய் - திருமேனி . அணி - அழகுறப் பூசிய . விழுமிய - சிறந்த . வெள்மழுவாட்படை :- வெண்மை குற்றம் இன்மையைக் குறித்த அடை . அநீதியாக அப் படையை ஆளாதவன் என்றவாறு . அவர் மகனாரும் அம்மழுவைப் பிழையாத தாதைதாளை வீசினாரல்லர் . ` பிழைத்த தன்தாதை தாளைப் பெருங்கொடுமழுவால் வீசக் குழைத்ததோ ரமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனார் ` ( தி .4 ப .49 பா .3). செய்ய கமலம் - செந்தாமரை .

பண் :

பாடல் எண் : 10

வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா வருளனைப் பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர்பி ரான்றிரு வேதி குடியுடைய
அருத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

பொழிப்புரை :

வாளை ஏந்திய அரக்கனுடைய தோள்களோடு தலைகள் பத்தினையும் நெரித்துத் துன்புறுத்தியவனாய் , பிறகு அவற்றைப் பொருத்தியவனாய் , தவறாத அருளுடையவனாய் , பூதப் படையை உடைய புனிதனாய் , தேவர்கள் தலைவனாய் , திருவேதி குடியில் உறையும் மெய்ப்பொருளான ஆரா அமுதினை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம் .

குறிப்புரை :

வருத்தனை - இராவணனைத் துன்புறுத்தியவனை. வாள் அரக்கன் முடி பத்தும் இருபது தோளொடும் இறுத்த பொருத்தனை. பொருத்தன் - பொருத்துதலைச் செய்தவன். பொய்யா அருளன் - பொய்க்காத கருணையுடையவன். இஃது இராவணனுக்கு இரங்கியவாறு குறித்தது. பூதப்படையுடைய திருத்தன் (-தீர்த்தன்). அருத்தன் - பொருளன். மெய்ப் பொருளானவன்; செல்வன். வருத்தன் முதலிய ஏழும் இறைவனையே குறித்தன.

பண் :

பாடல் எண் : 1

குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி
அறிவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
செறிவித்தவாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைய குற்றமாகிய வினைகள் இப்பிறப்பில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டி என்னைக்குறுகச் செய்தன . அங்ஙனம் வினைப்பயனாக வந்த நோய்கள் என்னால் பொறுக்கும் அளவினவாய் அல்லாதபடி மிகுவிக்கப்பட்டன . அந்நிலையில் யான் உற்ற நோயாகிய வினைப் பயனைப் போக்க ஐயாறன் திருவுள்ளம்பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டுகள் செய்யுமாறு அறிவித்துத் தன் பொன்போன்ற திருவடிக்கீழ் , பொருந்துமாறு தொண்டனாக செய்தச் செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றி வேறு யாதாக இருத்தல் கூடும் ?

குறிப்புரை :

இத்திருப்பதிகம் முழுதும் பொருள் விளங்காத தாயுளது . பாடப்பெற்ற காரணம் முதலியன தெரியாமையும் அதற்கொருகாரணம் ஆகும் . குறுவித்தவா என்பது முதலியவற்றைக் குறுவித்தவாறு என்பது முதலியனவாகக் கொள்க . விளியாதல் பொருந்துமேற்கொள்ளலாம் . அடியேனை , தொண்டனேனை , எனை என்று இரண்டனுருபு மும்முறை வருதலின் பொருத்தம் புலப்பட்டிலது . அடிமைக்கணே என்பது இவ்வாறு பிழைபட்டதோ ? நோய் வினையைக் காட்டிக் குற்றம் குறுவித்ததோ ? குற்றம் நோயைக் குறுவித்ததோ ? குறுவித்த நோய் என்று பின்னுள்ளது . அது வினை முதலா ? செயப்படுபொருளா ? குறுவித்தல் - குறுகச் செய்தல் ; குற்றச் செய்தல் ; குறுகுவித்தல் . உறுவித்தல் - மிகுவித்தல் . வினைகாட்டிக் குற்றம் நோயைக் குறுவித்தவாறு . குற்றத்தால் எய்தும் நோயை . குற்றங்கட்கிடமாக்கும் நோய் . குற்றமாம் நோய் . குற்றத்தால் எய்தும் நோயும் அந்நோய்க்கு ஏதுவான வினையும் குறுவித்த நோய் ; குற்ற நோய் . உறுவித்த நோய் ; உற்ற நோய் . ` அடிமைக்கள் ` என்றே கொண்டு , வலித்தல் ஆகிய திரிபு எய்தியதும் என்றலும் ஆகும் . உறுவித்த நோய் மிகச்செய்த நோய் . உற்ற நோய் - மிக்க நோய் . தீர்ப்பான் :- முற்றுவினையும் எச்ச வினையும் , வினையாலணையும் பெயருமாம் . நோய் ` சூலை ` ஆயின் , அறிவித்தல் ` கூற்றாயினவாறு விலக்ககிலீர் ` எனத் தொடங்கிப் பாட அறிவித்ததாகும் . தன்வினை பிறவினைகளைப் பற்றிய நுட்ப வேறுபாட்டைக் கேரளபாணினீயம் பக்கம் . 253 -4 பார்க்க . ஓட்டுதல் , ஓட்டுவித்தல் இரண்டும் ஓடுதல் என்னுந் தன் வினையை நோக்கப் பிறவினையே ஆகும் . ஆயினும் , ஆண்டவன் வினையை ஓட்டினான் என்புழி உடன் ஓடுவான் அவனோ ? ` ஓட்டுவித்தான் ` எனில் ஓட்டுவான் ஓடமாட்டான் . எனைக் குறுவித்தவா என்று விற்பூட்டாகக் கொள்ளலும் இதில் அமையும் . குற்ற நோயை வினை காட்டிக் குறுவித்தவா ! குறிவித்த நோயை உறுவித்தவா ! உற்ற நோய் வினையைத் தீர்ப்பான் உகந்தருளி அடியேனை ஐயாறன் அடிமைக்களே அறிவித்தவாறு . அடிமைக்கள் என்றதற்கு - அடிமையின்பம் எனலும் பொருந்தும் . அடுத்த பாடலிலும் , ` அடிமைக்களே ஆர்வித்தவாறு ` எனப் பொருந்துகின்றதுணர்க . முதல் இரண்டிலும் சூலை நோயும் , அடுத்த இரண்டில் நாயனார் கடலில் மிதந்ததுமாம் .

பண் :

பாடல் எண் : 2

கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைய குற்றமாகிய வினைகள் இம்மையில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டித் துயரை மிகுவித்தன . அங்ஙனம் வந்த நோய்கள் என்னைத் தவறான வழியில் செல்லச் செய்தன . அந்த நிலையில் அடியேன் உற்ற நோயைத் தீர்க்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டுகளில் பொருத்துவித்துத் தன் பொன்னடிக் கீழ்த் தொண்டனாகச் சேருமாறு ஐயாறன் செய்த செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றிப் பிறிதில்லை .

குறிப்புரை :

தன் பொன்னடிக் கீழ் எனைக்கூர்வித்தவா . குற்ற நோய் வினைகாட்டியும் கூர்வித்தவா . கூர்வித்த நோய் ஊர்வித்தவா . உற்றநோய் வினைதீர்ப்பான் ( தீர்ப்பவன் , தீர்க்க ) உகந்தருளி அடியேனை ஆர்வித்தவாறு ஐயாறன் அடிமைக்களே . தொண்டனேனைச் சேர்வித்தவா என்க . கூர்தல் , கூர்வித்தல் . ஊர்தல் , ஊர்வித்தல் . ஆர்தல் - ஆர்வித்தல் . சேர்தல் - சேர்வித்தல் . இவை முறையே தன் வினையும் பிறவினையுமாகும் . சூலை நோயையே யன்றிச் சமணர் செய்த நோயையும் குறித்ததாகக் கொள்ளலாம் . ஆர்வித்தல் : நுகர்வித்தல் ; ` மாசில் வீணை ` ` மாலை மதியம் ` ` வீசு தென்றல் ` ` வீங்கிளவேனில் ` ` மூசுவண்டு அறை பொய்கை ` ` ஈசன் எந்தையிணையடிநீழல் ` என ஆர்தலைச் செய்தல் . அடிமைக்களே கூர்வித்தன ; ஆர்வித்தன ; சேர்வித்தன எனலாம் .

பண் :

பாடல் எண் : 3

தாக்கின வாசல மேவினை காட்டியுந் தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைய வினை என்னைத் தண்டித்தற்கு உரிய சூலை நோயால் தாக்கியது . பின் சமணர்களின் வஞ்சனைச் செயல்களைக் காட்டி என் உயிரைப் போக்க முற்பட்டது . அந்நிலையில் ஐயாறன் என்னைக் கடலினின்றும் கரையேறச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத் தொண்டு செய்ய அடியேனை வழுக்களைந்து கொண்டு திருவடிக் கீழ்த் தொண்டனாகச் செய்த செயல் நிர்ஹேதுக கிருபையாலாகியதே .

குறிப்புரை :

அடிமைக்களே தன் பொன்னடிக்கீழ் எனைத் தாக்கினவா ; நீக்கினவா ; ஆக்கினவா ; நோக்கினவா என்க . சலமே - கடல் நீரே ; சலமதனால் நெருக்கினவா . ( மாறுபாடென்றார்கள் ; திரு . கோ . க . சுப்பிரமணிய முதலியார் அவர்கள் . தி .12 அப்பர் புராண உரையில் . பக்கம் 642). தண்டித்த நோய் - சூலை நீற்றறையிலிட்ட நோய் ; கல்லினோடு பூட்டி ஒல்லை நீர்புக நூக்கிய நோய் ; சூலை நோய் எல்லாம் . சமண் புக்கதற்குத் தண்டனையுமாம் . நெடுநீரின் நின்று ஏறல் :- அக் கடலில் ஆழாது கல்லே புணையாகக் கரையேறித் திருவைந்தெழுத்தின் சிறப்பைத் தெரிவித்தல் . ஆக்குதல் - மறுபிறப்பு என்னும்படி , சமண் செய்த கொடுமைக்கெல்லாம் மாய்தல் உறாமே உய்ந்து வாழச் செய்தல் . பெருக்குதல் - மிகுத்தல் .

பண் :

பாடல் எண் : 4

தருக்கின நான்றக வின்றியு மோடச் சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி
உருக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே
பெருக்கின வாதொண்டனேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

நான் வினைப் பயனைத் தாங்கும் ஆற்றலில்லேனாய்த் தடுமாறி ஓடுமாறு செருக்குற்ற என் முன்னைவினை வஞ்சனையாக என்னை நெருக்க அடியேனைத் துன்பக் கடலிலிருந்து கரையேறச் செய்யத் திருவுள்ளம் பற்றி ஐயாறன் தன் அடிமைத் தொண்டில் உருகச் செய்து அடியேனைத் தன் பொன்னடிக் கீழ் தொண்டனாக மேம்படுத்திய செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும்

குறிப்புரை :

அடிமைக்களே தன் தன்பொன்னடிக்கீழ் என்னைப் பெருக்கினவா ( இன்பம் ). ` நாம் ஆர்க்கும் குடியல்லோம் ` ` பணிவோம் அல்லோம் ` ` துகிலுடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொற்கேட்கக் கடவோமோ துரிசற்றோமே ` ` பகடேறி வருவார் சொல்லும் பணி கேட்கக் கடவோமோ ` பற்றற்றோமே ` ` என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம் இருநிலத்தில் எமக்கு எதிரா வாருமில்லை ` ` காவலரே ஏவிவிடுத்தாரேனும் கடவோம் அலோம் ` வந்து ` ஈரார் மன்னவன் ஆவான் தான் ஆரே ?` எனல் முதலிய பல சொல்லி இறுமாந்திருப்பவ ` ராதலின் , ` தருக்கின நான் ` என்றார் . நெடுநீர் - முந்நீர் , கடலேற விட்ட கருணைத்திறம் . உருக்குதல் - ` உள்ள முதலனைத்தும் ஒன்ற ஒருவல் `. ( திருக்களிறு ) பெருக்குதல் - பேரின்பத்துள் ஆராமை .

பண் :

பாடல் எண் : 5

இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி யிடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைவினை எனக்கு நோயைக் காட்டி என்னை நிலையிலிருந்து இறங்கச் செய்து துன்புறுத்தி உயிரைப் போக்க முற்பட்ட அளவில் , ஐயாறன் அடியேனுடைய துயரம் போக்கித் தன் திருவடிக்கண் தொண்டனாகத் தன்னைத் தொழுமாறு செய்த செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும் .

குறிப்புரை :

தன் பொன்னடிக் கீழ் எனைத் தொழுவித்தவாறு அடிமைக்களே தொழுவித்தவாறு . இட்டநோய் வினை காட்டி இழிவித்தவாறு . காட்டி இடர்ப்படுத்துக் கழிவித்தவாறு . கட்ட நோய்வினை தீர்ப்பான் ( தீர்ப்பவன் , தீர்க்கக் ) கலந்தருளி , ( அவை ) அழியச் செய்தவாறு . அடியேனைக் கலந்தருளி அழிவித்தவாறு அழிதல் - நோய்வினை அழிதல் . அழிவித்தல் இறைவனது . அழிவித்தற்பயன் நாயனார்க்குரியது . இட்டநோய் - ஊழின்படி இட்ட நோய் . கட்டநோய் - துன்பந்தரும் நோய் . கட்டம் (- கஷ்டம் ). தொழுதல் ; தொழுவித்தல் , தொழுவிப்போன் தொழமாட்டான் . கலந்தருளித் தீர்ப்பான் எனலுமாம் . இழிதல் இழிவித்தல் ; கழிதல் , கழிவித்தல் ; அழிதல் அழிவித்தல் ; தொழுதல் தொழுவித்தல் எனத் தன்வினையும் பிறவினையும் உறும் வேறுபாடுணர்க .

பண் :

பாடல் எண் : 6

இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி யிடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி
அடைவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைவினை எனக்கு நோயைத் தந்து வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தி உயிரைப் போக்கும் நிலையினதாக , ஐயாறன் அடியேனுக்குத் துயரம் தந்த வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி , அடியேனைத் தன் அடிமைத் தொண்டில் சேர்த்துத் தன் திருவடிக்கண் தொண்டனாகத் தொடர்ந்து பணி செய்யுமாறு செய்த செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவே யாகும் .

குறிப்புரை :

இட்ட நோய் வினைகாட்டி இடைவித்தவாறு . தன் பொன்னடிக்கீழ் எனை இடைவித்தவாறு . காட்டி இடர்ப்படுத்து உடைவித்தவாறு . உற்றநோய் வினைதீர்ப்பான் உகந்தருளித் தீர்ப்பான் எனலுமாம் . அடியேனை அடைவித்தவாறு , அடிமைக்களே தொடர்வித்தவாறு . இடைதல் - ஒதுங்குதல் . இடைவித்தல் - ஒதுங்கச் செய்தல் வன்மை குறைவித்தலும் வருந்தச் செய்தலுமாம் . உடைதல் , உடைவித்தல் . அடைதல் , அடைவித்தல் . தொடர்தல் , தொடர்வித்தல் .

பண் :

பாடல் எண் : 7

படக்கின வாபட நின்றுபன் னாளும் படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியுந் தீவினை பாவமெல்லா
மடக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே
தொடக்கினவா தொண்டனேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னை வினை பலநாளும் துயருறுமாறு என்னைத் தாழ்த்தி நோயினால் என்னைச் செயலற்றவன் ஆக்கிய நிலையில் ஐயாறன் அடியேனுடைய வினைப்பயனாகிய பாவங்களை எல்லாம் செயலற்றன ஆக்கித் தன் அடிமைத் தொண்டில் அடியேனைத் திருப்பித் தன் பொன்னடித் தொண்டனாகத் தொடக்கி , திருத்தொண்டு செய்யுமாறு செய்த செயல் அவன் கருணையின் விளைவேயாம் .

குறிப்புரை :

படநின்று படக்கின என்றதால் , படச்செய்தல் என்ற பொருளதாதல் அறிக . படக்கின - தாழ்த்திய எனலுமாம் . நோய் அடக்கினவாறு . அது அன்றியும் தீவினையெல்லாம் பாவம் எல்லாம் மடக்கினவாறு . அடக்கினவாறு என்று பிரித்தும் பதித்தனர் பின்னோர் . பழம் பதிப்பிலுள்ளவாறு ` மடக்கினவாறு ` என்றே இருப்பின் மகரமேனும் அகரமேனும் முதலாய் நிற்கப் பிரித்துக் கொள்ளலாம் . தொடக்கின - தொடக்குறச் செய்தன .

பண் :

பாடல் எண் : 8

மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி
இறப்பித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னை வினை எனக்கு நோயைக் காட்டி என் அறிவு நிறைவு ஓர்ப்பு கடைப்பிடி என்பனவற்றை மறக்கச்செய்ய , அங்ஙனம் மறக்கச் செய்த நோய் என் உயிர் உடலைத் துறக்கச்செய்ய முற்பட்ட நேரத்தில் ஐயாறன் அடியேனுடைய வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டில் ஈடுபட்டுப் பண்டைத் துயரங்களைக் கடக்கச் செய்து , தன் திருவடிக்கண் தொண்டனாகுமாறு சிறப்பித்த செயல் அவன் கருணையின் விளைவேயாகும் .

குறிப்புரை :

வல்லை - கடுப்பு , வலிமை . நோயின் கடுப்பும் வலிமையும் கொள்ளலாம் . விரைவு எனக் கொண்டு மறப்பித்தலின் காலவிரைவினையுங் கூறலாம் . மறப்பித்ததும் துறப்பித்ததும் நோயே . துறத்தல் நாயனாரது தொழில் . துறக்கப்பட்டது பற்று . நோய் துறப்பித்தல் அநுபவத்திற் பலர் கண்டதும் காணத் தக்கதுமாம் . இறுத்தல் - கடத்தல் . இறப்பித்தல் - கடக்கச் செய்தல் . சிறத்தல் - உள்ளது மிகுதல் . சிறப்பித்தல் - உள்ளது மிகுவித்தல் .

பண் :

பாடல் எண் : 9

துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பா னிசைந்தருளி
அயக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னை வினை எனக்கு நோயைத் தந்து சோர்வடையச் செய்ய , அந்நோய் தான் விரும்பியபடி அடியேன் உடலைச் செயற்படுத்த அந்நிலையில் ஐயாறன் அடியேனுடைய நோயையும் அதற்குக் காரணமான வினையையும் தீர்க்கத் திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத் தொண்டில் , அடியேனை நோயிலனாக ஈடுபடுத்தித் தன் பொன்னடித் தொண்டனாகத் தன் திருத்தொண்டில் கலக்குமாறு செய்த செயல் அவன் கருணையின் விளைவேயாகும் .

குறிப்புரை :

துயக்குதல் - சோர்வித்தல் , தளர்வித்தல் , தடுப்பித்தல் , இயங்குதல் , இயக்குதல் . இயங்குவித்தல் . அயக்குதல் :- ` அயக்கமாய் அடக்கமாய ஐவர் ஆப்பாடியாரே ` ( தி .4 ப .48 பா .8). அயக்கம் - நோயின்மை . அசைக்குதல் என்பதன் மரூஉவாகக் கொண்டு உரைத்தலுமாம் . மயக்கினவாறு - மயங்கச்செய்த வண்ணம் . மயங்குதல் - கலத்தல் .

பண் :

பாடல் எண் : 10

கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற் கரந்தருளி
இறுத்துமிட் டாரிலங் கைக்கிறை தன்னை யிருபதுதோள்
அறுத்துமிட் டாரடி யேனையை யாற னடிமைக்களே
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

ஐயாற்றெம் பெருமானார் நீலகண்டராய் , கங்காதரராய் , இராவணன் இருபது தோள்களையும் நெரித்தவராய் , அடியேனைத் தம் அடிமைத் தொண்டில் வேற்றுப் பணிகளை அறுத்து அதன் கண்ணேயே ஈடுபடுமாறு செய்தவராய்த் தம் பொன்னடிக்கீழ் அடியேன் தொண்டனாகுமாறு அடியேனுக்கு ஆதாரமாக அமைந்து விட்டார் . இதற்குக் காரணம் என்னை ? அப்பெருமானுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவே அடியேனை அப்பெருமானுடைய திருத்தொண்டில் ஈடுபடுத்தியது .

குறிப்புரை :

கறுத்தும் - சினந்தும் . கண்டம் :- திருநீலகண்டம் . கரத்தல் - மறைத்தல் . இறுதல் + இறுத்தல் ` வில்லிறுத்தான் ` ` இறுதி ` ` ஈறு ` இறுதல் இடைக்கண்ணதுமாம் . முடிதல் - இறாது முடிவுறல் . இறுதிவேறு . முடிவு வேறு . இறை - இறைவன் ( இராவணன் ). இருபது தோள்களையும் அறுத்துமிட்டார் என்று இனைத்தென அறிந்த சினைக்கிளவிக்கு வினைப்படு தொகுதிக் கண் வேண்டும் உம்மை விரித்துரைக்க . பொறுத்தல் - தாங்குதல் ; பார்த்தல் ; தரித்தல் , ( ஆதாரமாயருளல் ) என்னைப் பொறுத்துமிட்டார் .

பண் :

பாடல் எண் : 1

சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடுமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

பாம்பினைத் திருமேனியில் சுற்றி அணிந்து மாலையில் தோன்றும் வளர்பிறைப் பக்கத்துப் பிறைச் சந்திரனை அணிந்து கூத்து நிகழ்த்தும் ஐயாறனுடைய திருவடிகள் நம் உள்ளத்தால் உள்ளவாறு சிந்திப்பதற்கு அரியனவாய் , அவன் அருளாலே தியானிக்கும் மெய்ஞ்ஞானியருக்கு மேம்பட்டுச் சிறந்த தேன்போன்ற இனிமையை முன்னர்க்கொடுத்து , அவர்கள் உயிரைப் பிணித்து நின்ற பழவினைகளைப் போக்கி அவர்களுக்கு முத்திப் பேற்றினை வழங்குவனவாகும் .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் அரியன ; பொழிவன ; கொடுப்பன ; தீர்ப்பன . சிந்திப்பவர்க்குச் சிந்திப்பரியன . அவர்க்குச் சிந்திப்ப அரியன எனலுமாம் . சிந்திப்பவர்க்குச் சிந்திப்ப அரியன ஆயினும் ,` அருவினையென்பவுளவோ கருவியாற் காலம் அறிந்து செயின் ` ( குறள் . 483) ` பெருமையுடையவர் ஆற்றுவர் ஆற்றின் அருமையுடைய செயல் ` ( குறள் . 975) என்று கருதிச் சிந்திப்பவர்க்கு முந்தி ( வந்து ) செந்தேன் சிறந்து பொழிவன . அத்தேன் ` கருதுவார் இதயத்துக் கமலத்தூறுந்தேன் `. அது பேரின்பப் பேறு ; சிவப்பேறு , முத்தி கொடுப்பன - வீடுதருவன . இது பாச நீக்கம் மொய்த்தும் , இருண்டும் பந்தித்தும் நின்ற பழவினை ( சஞ்சிதங் ) களைத் தீர்ப்பன . மொய்த் திருண்டது ஆணவம் ; பந்தித்து நின்றது மாயை எனக்கொண்டு பழவினையொடு கூட்டி மும்மலமும் தீர்ப்பன எனலுமாம் . பாம்பு சுற்றியதும் அந்திப் பிறையணிந்ததும் ஆடுதலும் ஐயாறன் செயல் . முன்னவை திருவடியின் இயல்பு .

பண் :

பாடல் எண் : 2

இழித்தன வேழேழ் பிறப்பு மறுத்தன வென்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன வாறங்க மானவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

வேதங்களின் ஆறு அங்கங்களின் வடிவான ஐயாறன் அடித்தலங்கள் - ஒரு பிறப்பின் வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழுபிறப்புக்கள் மக்கள் , தேவர் , நரகர் , விலங்கு , ஊர்வன , நீர்வாழ்வன , தாவரம் என்ற ஏழுவகைப் பிறப்பினுள் எப்பிறப்பாயினும் அறுவறுக்கத்தக்க அப்பிறவிப் பிணியைப் போக்குவனவாய் , அடியேன் உள்ளத்தே இன்பத்தைப் பொழிவனவாய் , போரிடுவதில் வல்ல கூற்றுவனை உதைத்தனவாய் , தக்கனுடைய மேம்பட்ட வேள்வியை அழித்தனவாய் , தம்மை வழிபடும் அடியவர்களுக்குக் கீழான பிறவிகளை முற்பட்டு முயன்று அழித்தனவாய் உள்ளன .

குறிப்புரை :

ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலம் இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன ; என் மனத்தே பொழித்தன போர் எழிற் கூற்றை உதைத்தன ; போற்றவர்க்காய்த் தக்கன் வேள்வியைக் கிழித்தன ! கீழ முன் சென்று அழித்தன . இழித்தன - அறுவறுத்தன . இழிவு படுத்தின . தாழ்த்தியன . இழித்தனவாகிய பிறப்பு . ஏழேழ் பிறப்பு - ஏழேழாக மறித்தும் மறித்தும் எய்தும் இருபத்தொரு பிறவி . ` எழுபிறப்பும் தீயவை தீண்டா ` ( குறள் . 62) என்றதற்குப் பரிமேலழகர் உரைத்தவாறுணர்க . ` எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர் ` ( குறள் . 107) எழு பிறப்பும் எங்கள் நம்பி ( தி .7 ப .63 பா .1) ` இச்சையறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய் ` ( தி .7 ப .41 பா .2) ` மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி ( தி .8 திருவாசகம் ) ` எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ்படிகால் எமை ஆண்ட பெம்மான் ` ` ஈமப்புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே ` ( தி .7 ப .52 பா .9) ` ஏழாட்காலும் பழிப்பிலோம் ` ` எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி வந்து வழி வழியாட் செய்கின்றோம் ` ( பெரியாழ்வார் திருமொழி . 3. 6) ` எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடுற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் ( திருப்பாவை 29) ` இருபத்தொரு ஜந்மங்கள் ` ( திருப்பாவை வியாக்கியாநம் ).

பண் :

பாடல் எண் : 3

மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் மாணிக்தத்தைப் போலவும் பொன்னைப் போலவும் மின்னலைப் போலவும் அடியவர்கள் விரும்புகின்ற நிறத்தோடும் ஒளியோடும் விளங்குவனவாய் , கயிலைமலையில் உள்ளனவாய் , அன்பு செய்யத் தக்கனவாய் , நல்லொழுக்கத்துடன் இறைபணியைத் தொடர்ந்து செய்யும் அடியவர்களுக்கு அணியனவாய்த் தேவர்களுக்குத் தொலைவில் உள்ளனவாய் இருக்கின்றன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் மணி நிறத்தைப் போல்வன ; பொன்னிறத்தைப் பொருந்தின . மின்னும் இயல்வாய்ந்த கணி நிறம் போன்றன . கயிலைமலையை உடையன . காதல் செய்யத் தெளிவன . ( துணிவு பிறத்தற்குரியன ) சீலத்தினையுடையவராகித் தொடர்ந்து ( காலை நண்பகல் மாலை நள்ளிரவு எப்பொழுதும் ) விடாது தொழும் தொண்டர்க்கு அணியவாயிருப்பன . தேவர்க்குச் சேயவாயிருப்பன . கணி நிறம் - வேங்கைப்பூவின் நிறம் . அன்ன கயிலை என்னற்க . அன்னவை அடித்தலமே அன்றி வேறில்லை .

பண் :

பாடல் எண் : 4

இருடரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருடரு கண்ணிழந் துண்பொரு ணாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின்
றருடரு கைகொடுத் தேற்றுமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் இருளைத் தரும் துன்பத்திரை மறைக்க மெய்ஞ்ஞானம் என்னும் பார்வையை இழந்த , நுகர்தற்குரிய பொருள்களைத் தேடிப் பற்றுக்கோட்டினை இழந்த குருடர்களும் தம்மைப் போற்றுமாறு கொடிய நரகமாகிய குழியில் இருந்து அவர்களை அருளாகிய கைகளைக் கொடுத்து வெளியேற்றி முத்தி நிலத்தின் கரைக்கண் சேர்ப்பன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் , மறைப்ப இழந்து நாடி இழந்த குருடரும் பரவக் கொடுத்து ஏற்றும் என்க . மெய்ஞ்ஞானக் கண்ணை மறைக்கும் படலம் இருள் தருகின்ற துன்பம் . மெய்ஞ்ஞானம் என்னும் பொருளைத் தருகின்ற கண் மெய்ஞ்ஞானக் கண் . ` பொருள் தருகண் ` என்றதால் மெய்ஞ்ஞானமாகிய கண் எனல் ஈண்டுப் பொருந்தாது ; மெய்ஞ்ஞானம் என்றது நோக்கி ` இருள் ` என்பதற்கு அறியாமை ( அஞ்ஞானம் ) எனப் பொருளுரைக்க . அறியாமையே துன்பத்திற்கேது . உண்ணுதற்குத் தக்க பொருள் உண்பொருள் . ` உண்பொருள் ` செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை . பொருளை நாடிப் புகலை இழந்த குருடர் . குருடரும் வாழ்த்தக் குழியினின்றும் கரை யேற்றும் . அருளைத் தருகின்ற கையைக் கொடுத்துக் கரையில் குருடரையும் ஏற்றும் , நரக்குழியினின்றும் ஏற்றும் . ஏனைக் குருடர்க்கு மறைப்பது கண்ணிற்கு வரும் படலம் என்னும் நோய் . உண்பொருளை நாடித் தமக்குப் புகலாயிருக்கும் பரசிவனை இழந்த குருடர்க்கு மறைப்பது அப்படலம் அன்று ; இது வேறு என்பார் ` இருள்தரு துன்பப் படலம் ` என்றார் .

பண் :

பாடல் எண் : 5

எழுவா யிறுவா யிலாதன வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய்
விழுவா ரவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் - தமக்குத் தோற்றமும் முடிவும் இல்லனவாய் நம்முடைய நோய்களைப் போக்கத்தவறாத மருந்தின் தன்மையவாய் நரகக்குழியில் தம் வினைப்பயனால் விழும் உயிர்களை வினை நுகர்ச்சிக்காக விழச்செய்து பின் கருணையினால் கரையேற்றுவனவாய் , மேம்பட்ட அன்பினால் உள்ளம் உருகி அழுபவர்களுக்கு அமுதங்களாக உள்ளன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் எழுவாயும் இறுவாயும் இல்லாதன ; வெங்கண் பிணி தவிர்த்து வழுவாத மருத்துவம் ஆவன . மாநரகக் குழிக்கண் விழுவாரை விழுப்பன . விழுந்தவரையும் விழுமுன் கழுவாய் செய்து கொண்டவரையும் அந்நரகினின்று மீட்பன ; மிக்க அன்போடு அழுமவர்க்கு அமுதங்கள் ( ஆதலைக் ) காண்க . எழுவாய் - முதல் ; ஆதி . இறுவாய் - முடிவு ; அந்தம் . எழுவாய் இறுவாய் இல்லாமை - ஆதியும் அந்தமும் இன்மை ; முதலும் முடிவும் இல்லாமை . ` ஆதியும் அந்தமும் ஆனஐயாறனடித்தலம் ` ( பா .17) என்புழி , ஆன என்னும் எச்சம் ` ஐயாறன் ` ` அடித்தலம் ` என்னும் இரண்டிற்கும் உரித்து . ` போற்றியருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி யருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள் `. ( தி .8 திருவாசகம் 173 ) வெங்கண் - கொடுமை , வெங்கட்பிணி - கொடும்பிணி . எங்கள் பிணி அழுவார்க்கு அமுதங்கள் ; ` ஒழுகு மாடத்துள் ஒன்பது வாயில்களும் கழுகரிப்பதன் முன்னம் கழலடி தொழுது கைகளால் தூமலர் தூவி நின்று அழுமவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே ` ( தி .5 ப .31 பா .7) ` மழுவலான் திருநாம மகிழ்ந்துரைத்து அழவலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் மாற்பேறு தொழவலார் தமக்கு இல்லை துயரமே `. ( தி .5 ப .59 பா .7) ` அழுமவர்க்கு அன்பர் ` ( தி ,4 ப .56 பா .4).

பண் :

பாடல் எண் : 6

துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர் தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப் பொய் பொருந்தா
அன்பர்க் கணியன காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் அடியார்களைத் துன்பக் கடலைக் கடத்த உதவும் தோணியின் செயலைச் செய்வனவாய் இன்பமாகிய கரையிலே கொண்டு சேர்ப்பனவாய் மாற்று அறிய முடியாத வலியற்ற பொன்போல ஒளிவீசுவனவாய்ப் பொய்ப் பொருள்களிடத்துப் பற்றற்ற மெய்யடியார்களுக்கு அணியனவாய் உள்ளன .

குறிப்புரை :

துன்பம் கடல் போலும் பெரியது . அக்கடலில் தோணிபோலும் அலையும் தொழில் . உற்றவர் தொண்டர் . ` தொழில் ` ( தி .4 ப .110 பா .7). அத்தோணியைக் கடற்கரையில் ஏற்றுவன போலும் அத் தொண்டரை இன்பக்கரையில் ஏற்றும் அடித்தலம் . அடித்தலத்தின் ஒளியை நோக்கின் , பொன்னொளி மிகக் குறைந்தது என்க . பொன்மாற்று அயலே பட்டு ஒழுக - பொன்னின் மாற்று அயலே பட்டு ஒழுகி ஓட . பொருந்தொளி - வினைத்தொகை . பொருந்தும் ஒளி . ஒளியைச் செய்யும் . அப்பொய் - அப்பொன் ( மண் , பெண் ) போலும் பொய்ப் பொருள்களை . பொருந்தா அன்பர் - மெய்ப்பொருளென்று பற்றாத சிவநேசர் . அன்பர்க்கு அணியன - அன்பர் ( சிவநேசர் ) க்கு அணியன ; அணிமையிலுள்ளன . ` இடையறா அன்பராமவர்க்கு அன்பர் ஆரூரரே ` ( தி .5 ப .7 பா .4) ` அளவுபடாதது ஓர் அன்பு ` ( தி .4 ப .3 பா .11) ` அன்பலாற் பொருளும் இல்லை ` ( தி .4 ப .40 பா .6) ` வேட்கையாற் பரவுந் தொண்டர் அடிமையை அளப்பர் போலும் ` ( தி .4 ப .56 பா .5) ` அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை ` ( தி .5 ப .21 பா .6) ` நித்த மணாளனை ...... அம்மானை அன்பில் அணைத்து வைத்தேன் ` ( தி .4 ப .15.7). ` கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே ` ( தி .6 ப .95 பா .10)

பண் :

பாடல் எண் : 7

களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் னின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் அடியார்குழாத்தோடு மகிழ்ந்து அன்பால் ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியோடு காவிரியில் நீராடித் தொழுது தம் முன் நின்ற அடியார்களை மேம்பட்ட செந்தேனைத் தெளியச் செய்து அத்தேனை அமுதோடு உண்பித்துத் தேவர்கள் சூழ்ந்து வழிபடும் பெரிய செல்வத்தை அவர்களுக்கு வழங்கி எப்பொழுதும் செல்வன்கழல் ஏத்தும் செல்வத்தை இடையறாது நுகரும் வாய்ப்பினை நல்குவன .

குறிப்புரை :

அடித்தலம் பெருஞ்செல்வம் ஆக்கும் . அளித்து ஆக்கும் . சூழ் இருப்ப அளித்து ஆக்கும் . சூழிருப்பவர் அமரர் . அமரர்களது சூழ் எனலும் அமரர்கள் சூழ இருப்ப எனலும் ஆம் . அமரர்கள் தேன் தெளித்து அமுது ஊட்டிச்சூழ் இருப்ப . செந்தேன் . கோது இல் தேன் . கோது - குற்றம் ; வண்டெச்சில் , புளிப்பு , ஈ விழுதல் முதலியன குற்றம் . பத்தரைத் தெளித்து ., இப்பத்தர் , நின்ற பத்தர் . முன் நின்ற இப் பத்தர் :- நாயனார் சென்றிருந்த காலத்தில் இறைவன் திருமுன் நின்ற இப் பத்தர் . தொழுது நின்ற பத்தர் . குளித்துத் தொழுது . காவிரியிற் குளித்து . ` வாய் ` ஏழனுருபு . கசிவொடு தொழுது . காதற் கசிவு . கலந்ததொரு காதல் . களித்துக் கலந்ததொரு காதற் கசிவு களித்தல் உள்ளத்தது . கலத்தல் உடலது . காதற் கசிவு உணர்வினது . ` தேன் ` திருவருள் என்று கொண்டு உரைத்தலுமாம் . ` திருவையாறமர்ந்ததேன் ` என்றதுணர்க . தி .4 ப .39 பார்க்க . ` காதல் செய்யகிற்பார் தமக்குக் கிளரொளி வானகம் தான் கொடுக்கும் ` ( தி .4 ப .92 பா .13). பெருஞ்செல்வம் :- பேரின்பம் . அதுவே , ` நிலையுடைய பெருஞ் செல்வம் ` ` நீடுலகிற் பெறலாம் `. அழியும் உலகிற் பெறலாஞ்செல்வம் எல்லாம் நிலையில்லாதன . ` சென்றடையாததிரு ` ` சென்றடையாச் செல்வன் ` ` ஏரி நிறைந்தனைய செல்வன் ` ` செல்வன் கழலேத்துஞ் செல்வம் ` ` செல்வாய செல்வம் `

பண் :

பாடல் எண் : 8

திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத் தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்துமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

விரும்பிச் சிறந்த தவத்தினை உடையவர்கள் துதிக்கும் ஐயாறனுடைய திருவடிகள் உள்ளத்தைப் பிற பொருட்கண் செல்லாமல் திருத்தம் பெறச் செய்து அதனைச் சிவபெருமான் திருவடிகளிலேயே பதித்து , தொடர்ந்து , அதனை அடக்கி உடலை யோகத்தால் வருத்தி , நறுமணம் கமழும் ஒளி பொருந்திய மலர்களை எடுத்து உயர்த்தித் திருவடிகளில் தூவி எம்பெருமான் பக்கல் அடைந்து உடல் விருத்தி உயிர் விருத்தி ஆகிய இரண்டற்கும் முயலும் ஆற்றல் உடையவர்களுக்கு வீட்டுலகில் இடம் பெறுவதற்குப் பட்டிகையில் பெயர்ப்பதிவு செய்துவிடும் .

குறிப்புரை :

அடித்தலம் இடும் என்க . அருத்தித்து - அருத்தி என்னும் பெயரடியிற் பிறந்த வினையெச்சம் . அருத்தி - விருப்பம் . அருத்தித்தல் - வேண்டுதல் . ` உன்னை அருத்தித்து வந்தோம் ` ` அர்த்திக்கையாலே பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் ` ( திருப்பாவை 25. வியாக்கியானம் . ) அருந்தவர் - செய்தற்கு அரிய தவத்தைச் செய்யும் சிவஞானியர் . தவம் ` இறப்பு இல்தவம் ; சரியை கிரியை யோகம் - சரியையாளர் முதலோரும் தவத்தோரே ஆயினும் , அருந்தவர் என்றதால் . சிவஞானத்தவரே ஈண்டுக் கொள்ளற் பாலர் . ஏத்துதல் :- அத்துவிதமாய் நின்று வணங்குதல் . கருத்தினைத் திருத்திச் செவ்வே நிறுத்திச் செறித்து உடலை வருத்தி வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண்பட்டிகை இடும் . கருத்தினைத் திருத்துதல் :- ` சிந்தனை திருத்தும் திருமீயச்சூர் எந்தமையுடையாரிளங் கோயிலே ` ( தி .5 ப .11 பா .2) ` சீரார் அருளால் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே ` ( தி .8 திருவாசகம் ); கருத்து மற்றவற்றையே கருதிவரும் . கருதும் போதெல்லாம் தடுத்துத் திருத்திச் சிவத்தையே கருதப் பழக்குதல் . செவ்வே நிறுத்தல் - நெஞ்சத்தைச் சிவபெருமான் திருவடிக்கே பதித்தல் . ` நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் `. ` அணி அணாமலையுளானே நீதியா னின்னை அல்லால் நினையுமா நினைவிலேனே ` ( தி .4 ப .63 பா .1). செறுத்து - அடக்கி . கருத்தை அடக்குதல் :- அது சென்ற இடத்தாற் செலவிடாதீதொரீஇ நன்றின் பால் உய்ப்பது ஆகிய அறிவின் செயல் . செறிவு - அடக்கம் . ` செறிவறிந்து சீர்மை பயக்கும் ` ( குறள் . 123). உடலை வருத்தம் - உடம்பை யோகத்தால் வருந்தப் பண்ணல் . ` மெய்வருத்தக்கூலி ` - ` உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலி `. ( குறள் . 619. பரிமேலழகருரை ). கடிமலர்வாள் - மணமுடைய பூவாகிய வாளை , எடுத்து ஓச்சி - எடுத்து உயர்த்தித் ( திருவடியில் ) தூவி . மருங்கு சென்று - சாமீப்பியம் அடைந்து . சாலோக சாமீப சாரூப சாயுச்சிய முத்திகளுள் ஒன்று . கிரியாயோகப் பயன் ஆகிய பதமுத்தி சாமிப்பியமும் சாரூபமும் . ஞானப்பயனாகிய சாயுச்சியமே பரமுத்தி . கருத்தைத் திருத்திச் செவ்வே நிறுத்தி உடலை வருத்தி மருங்கு செல்லல் கிரியாயோக மிரண்டற்கும் உரித்தே . யோகத்திற்குச் சிறப்பாகும் . விருத்தி :- உடல் விருத்தியும் உயிர் விருத்தியும் . ` விருத்தி நான் உமை வேண்டத் துருத்தி புக்கங்கிருந்தீர் ( தி .7 ப .46 பா .2) உடல் விருத்தி தாரீரே யாகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் `. ( தி .7 ப .46 பா .9.) மேவிய காதல் தொண்டு விரவு மெய்விருத்தி பெற்றார் , ஆவியின் விருத்தியான அந்தணர் புலியூர் மன்றில் காவியங் கண்டர் கூத்துக் கண்டு கும்பிடுவது என்று வாவிசூழ் தில்லை மூதூர் வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார் ` ( தி .12 பெரிய புராணம் ஏயர்கோன் . 110) என்று சேக்கிழார் சுவாமிகள் இரண்டு விருத்தியையும் கூறியதுணர்க . ` குற்றேவல் ` - ` அந்தரங்கவிருத்தி ` உடைவாளும் அடுக்குரு வும் எடுத்தல் ; கலசப் பானை பிடித்தல் ; படிக்கம் வைத்தல் ; ` உமிழும் பொன் வட்டில் எடுத்தல் ; திருவடிகள் விளக்குதல் ; ஒலியன்பணி மாறுதல் ; சாமரம் இரட்டுதல் ; அடைக்காய் திருத்தல் ; அடிவருடுதல் ; முலைகளிடர் தீர அணைத்தல் இவை தொடக்கமானவை கோவிந்தற்குப் பண்ணுங் குற்றேவலாகிறது `. ( ஆறாயிரப்படி வியாக்யானம் ) என்பவற்றை நோக்கிக் குற்றேவலுக்கு உழக்க வல்லோர்கள் எனலும் யோகவிருத்தி எனலும் அமையும் . ` குற்றேவல் ` என்கிறதிலே இரண்டு வகையறிந்து சொல்லுங்கோள் , இற்றைப் பொழுதை உங்களோடே போக்குகிறோம் அங்ஙனே யாகிலென்றான் ; ( எற்றைக் கும் ஏழேழு பிறவிக்கும் ) இற்றையளவில் போகாதுகாண் - இப்பிறவி யளவில் போகாதுகாண் . ( எற்றைக்கும் ஏழேழுபிறவிக்கும் ) அகால கால்யமான நலமந்தமில்லதோர் நாட்டிலே யிருக்கவுமாம் ; ஆஸ்ரிதஸ ஜாதீயனாய்கொண்டு நில வரம்பில் பலபிறப்பாங் ஸம் ஸார மண்டலத்திலே அநேகாவதாரம் பண்ணவுமாம் ( ? ) செல்வம் , இலாபம் என்ற பொருளும் அதற்கு உண்டு . பட்டிகை :- ஏடு , தெப்பம் , யோகப்பட்டம் எனப் பலபொருளுடையது விண்பட்டிகையிடுதல் :- வல்லோர்கள் விண்புகத் தெப்பமிடுதல் . விண்ணோர்க்கு ஏடு எழுதியிடுதல் . ` பொற் சுரிகை மேலோர் பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும் ` ( தி .7 ப .46 பா .10) என்றருளிய நம்பியாரூரர் திருவுள்ளத்தின்படி பூங் கச்சுமாம் .

பண் :

பாடல் எண் : 9

பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வைய நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் , ஒலிக்கும் பறண்டை மொந்தை என்ற இசைக்கருவிகள் ஆரவாரம் செய்யப் பலபேய்களும் நாற்புறமும் பரவி முழவு முதலியவற்றின் குவிந்து கவிழ்ந்த மார்ச்சனை இடத்தில் ஒலியை எழுப்ப , குறுநரிகள் வேய்ங்குழல் போல ஒலிக்கப் பூமி அதிர்ச்சி தாங்காமல் நெளிய , கொழுப்பு உருகும் பிணங்களை உடைய சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துவனவாம் .

குறிப்புரை :

பறண்டை :- பகண்டை எனப்படும் சில்லையோ ? வேறோ ? ` பகன்றில் ` ( தி .4 ப .3 பா .6) என்பதுபோல விளங்காத தொன்று இது . ` பாடும் பறண்டை ` என்றதாற் பாடுவது என்று தெரிகின்றது . ஆந்தை முதலியவற்றொடு கூறப்பட்டதால் உயரியதன்று . பறண்டையும் ஆந்தையும் ஆர்ப்பப் பரந்து , கூடி , கொட்ட , செய்ய , நெளிய , ஆடும் திருவடி . ஆர்த்தல் - ஒலிசெய்தல் பல்பேய்பரந்து கூடி முழவத்தின் குவிந்து கவிழ்ந்த மண் ( மார்ச்சனை ) இடத்தில் கொட்ட , குறிய நரிகள் குழலொலி செய்ய , வையம் (- பூமி ) நெளிய , நிணங்களை உடைய பிணங்களைக் கொண்ட காட்டில் ஆடும் திருவடிகள் . அடித்தலம் திருவடி காண்க .

பண் :

பாடல் எண் : 10

நின்போ லமரர்க ணீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட விலையு முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளு மையனை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஆகமப்படி செய்யும் முறைகளை அறியாத அடியேனைப் போன்றவர்கள் பறித்துச் சமர்ப்பித்த இலைகளையும் மொட்டுக்களையும் எல்லாம் அழகிய பூக்களாக ஏற்கும் ஐயாறன் உடைய திருவடிகள் தேவர்கள் நீண்ட முடிகளைச் சாய்த்து வணங்கிச் சமர்ப்பித்த புதிய பூக்களைத் துகைத்து எம்பெருமானைப் போலப் பவள நிறத்தால் சிறந்து விளங்குவன .

குறிப்புரை :

ஐயாறன் ` என்னும் படர்க்கையும் ` நின் ` என்னும் முன்னிலையும் மயங்கலாமோ என்னலாம் . தி .4 ப .13 பா .1-8 பார்க்க . ஐயாறனையாகிய நின் அடித்தலம் நின்போல் பவளம் தழைப்பன . ` பவளம் போல் மேனி ( யிற்பால் வெண்ணீறுடை ) யன் நீ நின் அடித்தலமும் பவளம் தழைப்பன . அமரர்கள் - தேவர்கள் . ` அமரரால் அமரப்படுவான் ` ( சுந்தரர் ) என்புழிப்படும் பொருளும் கொள்ளலாம் . அன்பர் என்றதாம் . திருமுடியைச் சாய்த்து நிமிர்த்தியன திருவடி ( அடித்தலம் ). உகுத்தனவும் அவையே . உக்கன பைம்போது . அவை உழக்கிப் பவளநிறம் தழைக்கலாயின சிவபாதமலரில் . பாங்கு - சைவப்பாங்கு ; ஆகமப்படி செய்யும் முறைகள் சைவத்திறமும் ஆம் . அறியா - அறியாத , அறிந்து எனலுமாம் . அறிந்து இட்ட என்க . அறியா என் போலிகள் . இட்ட இலையும் முகையும் . பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் . அம்போது (- அழகிய போதுகள் ); மலர்கள் , என என்றுளங்கொண்டு கொள்ளும் - ஏற்று . வேண்டுவ நல்கும் .

பண் :

பாடல் எண் : 11

மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

தேவருலகத்தை வழங்கும் , அலையோடு கூடிய நீரை உடைய காவிரி தென்புறத்தில் சூழ்ந்துள்ள ஐயாறன் அடித்தலங்கள் பார்வதியின் மனத்தனவாய் , தேவர்களின் முடிகள் விளங்குவதனால் நிலையாகத் தம்மிடம் பொருந்தியிருப்பனவாய் , வழிபட்டு நிற்பவரால் மதிக்கப்படுவனவாய் , இவ்வுலகின் கீழ்மையில் ஈடுபடும் புல்லிய பிறவியைப் போக்குவன ஆகும் .

குறிப்புரை :

அடித்தலம் மனத்தன , மதிப்பன , தவிர்ப்பன . மலை - இமயமலை மலையார் - இமாசலராசனார் . மடந்தை - பார்வதி . மனத்தன - திருவுள்ளத்திலிருப்பன . வானோர் - தேவர் . மகுடம் - முடி . மன்னி - பொருந்தி . வானோர் மகுடத்தை மன்னி நிலையாயிருப்பன அடித்தலம் . அடித்தலத்தை இடையறாது வணங்கும் வானோர் முடியில் , அவை நிலையாயிருக்கின்றன . நின்றோர் - நிட்டையாளர் . மதிப்பன - உணர்வன . நீள்நிலம் - நீண்ட மண் உலகினது . புலை ஆடு புன்மை - புலாலுடல் எடுக்கும் புன் பிறவியை . ` புன்மை ` ஆகு பெயர் . தவிர்ப்பன - ஒழிப்பன , பொன்னுலகம் - துறக்கம் ; விண் ; வானுலகத்தின்பத்தை . அளிக்கும் - இரங்கி அருள் செய்யும் . அலை ஆர் புனல் பொன்னி - அலைமிக்க நீரையுடைய காவிரி . பொன்னி சூழ்ந்த ஐயாறு . ஐயாறனடித்தலம் அளிக்கும் என்றும் , அளிக்கும் புனல் என்றும் , அளிக்கும் ஐயாறன் என்றும் இயைக்கலாம் .

பண் :

பாடல் எண் : 12

பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன பொன்னனையாள்
சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் கிணித்திரளும்
அலம்புந் திருவடி காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் அப்பொழுது அலர்ந்த பொற்றாமரைமலர்கள் போல்வனவாய் , தம்மை வழிபடுபவர் தனித்து வருந்தும்போதும் வருத்தத்தைப் போக்கும் துணையாவனவாய் , பொன் போன்ற ஒளியையுடைய பார்வதியின் சிலம்பும் பாடகமும் கிண்கிணியும் தம்மிடையே ஒலிப்பனவாகும் .

குறிப்புரை :

அடித்தலம் புதுமலர் போல்வன , துணையாவன ; திருவடி , பொலம் - பொன் , புண்டரீகம் - வெண்டாமரை . ஈண்டுத் தாமரை என்னும் பொருட்டாய் நின்றது . கோகநதம் - செந்தாமரை . புண்டரிகம் வெண்டாமரை என்பது வடமொழி வழக்கு - ஞானம் புகலுடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் ` ( சம்பந்தர் ) புதுமலர் - நாண்மலர் . நாண்மலர் என்றது ஈண்டு அப்பொழுது அலர்ந்த மலரை , ` இராமன் திருமுகச்செவ்வி ஒப்பதே முன்பு பின்பு . அவ்வாசகம் உரைக்கக் கேட்ட அப்பொழுது , அலர்ந்த செந்தாமரையினை வென்றது .` ( கம்பராமாயணம் ) இங்கு முன்பும் பின்பும் தாமரையை ஒப்பது , வாசகம் கேட்ட அப்பொழுது மாத்திரம் அம்மலரை வென்றது இராமன் திருமுகம் என்ற வாய்மையை உணர்க . முன்பு , பின்பு அப்பொழுது என்ற முக்காலத்தையும் , ` சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை யொத்திருக்கும் முகம் ` அதனை வென்ற பொழுதைக் கூறும் அரியதோரிடத்தையும் உணராத பிறர் , ` கேட்ட அப்பொழுது ` என்னாது , அப்பொழுது அலர்ந்த செந்தாமரை என்றனர் . போற்றி என்பார் - துதி செய்து கதி என்றடைந்தோர் . புலம்பும் - தனித்து வருந்தும் காலத்திலும் . புணர் துணை - பொருந்து துணை . பொன்னனையாள் - அறம் வளர்த்த அன்னை , ` சிலம்பு `. ` பாடகம் `, ` கிண்கிணி ` காலணிகள் . அலம்பும் - ஒலிக்கும் .

பண் :

பாடல் எண் : 13

உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன வோதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் தமக்கு உதவுவார் இல்லாது தனித்து வருந்துபவர்களுக்கு மேம்பட்ட துணையாவனவாய் , சிவாகமங்களை ஒதி அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறிந்த சான்றோர்கள் முன்நின்று துதிக்கும் பெருமை உடையனவாய் , தம்மை விரும்பும் ஆற்றல் உடையவர்களுக்கு மேம்பட்ட ஞானஒளி வடிவமான வீட்டுலகை அளிப்பனவாய் ஏனைய பொருள்பற்று அற்றாருக்குக் கிட்டுதற்குச் சிறந்த பொருளாய் உள்ளனவாம் .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் உறுதுணை ஆவன ; பெருமையுடையன் ; கொடுக்கும் ; அரும்பொருள் காண்க . உற்றார் :- உற்றார் , பெற்றார் கிளைஞர் கேளிர் , சுற்றத்தார் முதலிய பலருள் ஒருவகையர் , கிளைத்தவர் . கேட்பவர் , சுற்றுபவர் , உற்றவர் ., பெற்றவர் எல்லாரும் ஒரு திறத்தராகார் . மகன் மகள் பேரன் பேத்தி எனக் கிளைத்தல் , நலம் பொலம் கேட்டல் . சுற்றியிருத்தல் . ` எண்பெருஞ்சுற்றம் ` பொருளிருக்கும் அளவும் உறுதல் ; கொடுத்தல் கொள்ளல் செய்துறுதல் , மக்களைப் பெறுதல் முதலிய எல்லாம் பல தொழிலாலும் தன்மையாலும் வேறுபடுதலறிக . ` கேளும் கிளையும் கெட்டோர்க்கில்லை ` ( வெற்றிவேற்கை ) ` உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் ` ` சுற்றமும் துணையும் ` ` உற்றார் பெற்றார் ` என்னும் வழக்கும் உணர்க . உற்றாரிலாதார் - அகதி . உறுதுணை - மிக்கதுணை . நன்னூல் ஓதிக் கற்றார் - சிவாகமங்களை ஓதிக் கற்றறிந்தவர் . பரவ - வழிபட வாழ்த்த பெருமை - வியாபகம் . காதல் செய்யகிற்பார் - கருதுதலைச் செய்ய வல்லவர் . கருதல் - காதல் ; மரூஉ . சிறுபாணாற்றுப்படையிற் (213) காண்க . செய்யகிற்பார் தமக்கு - செய்யவல்லார்க்கு . கிளர் ஒளி வான் அகம் - துறக்கம் . சிவலோகமுமாம் . அற்றார் :- ` பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார் அற்றார் மற்றாதலரிது ` ( திருக்குறள் ).

பண் :

பாடல் எண் : 14

வானைக் கடந்தண்டத் தப்பான் மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன வுத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் தேவருலகையும் தாண்டி அதற்கு அப்பாலும் மதிக்கப்படுவனவாய் , மந்திரங்களால் வழிபடு கின்றவர்களுடைய பிறவித்துயரைப் போக்கி உய்தி பெற அவர்களை அடிமையாகக் கொண்டு பேரின்பம் நல்குவனவாய் , மேம்பட்ட சான்றோர்களுக்கு ஞானஒளியாய் அவர்கள் உள்ளத்தே தோன்றுவனவாய் , பார்வதி அஞ்சுமாறு பெருமான் யானையைத் தோல் உரித்த காலை அந்த யானையின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள உதவியனவாய் உள்ளன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் மதிப்பன ; செய்வன ; உதிப்பன ; உரித்தன காண்க . வானை - உம்பருலகை . கடந்து அப்பால் மதிப்பன - தாண்டி அப்புறத்தே உணரப்படுவன . இது திருவடியின் வியாபகம் உணர்த்துவது , ஊனைக் கிழித்தல் பிறவி நீக்கம் , உய்யக் கொள்ளல் - உயிர்கள் உய்திபெற ஆட்கொள்ளுதல் . அருள் செய்தல் - பேரின்பம் நல்குதல் . ஊனைக் கழித்தலைத் துன்ப நீக்கமாகவும் உய்யக் கொண்டருள் செய்தலை இன்ப ஆக்கமாகவும் உணர்க . பாசவீடு சிவப்பேறு இரண்டும் இணைந்ததே வீடுபேறு . வீடுபேறு - விடுதலும் பெறுதலும் ; உம்மைத்தொகை . வீட்டைப் பெறுதல் என வேற்றுமைத் தொகையாதலும் சிலவிடத்துப் பொருந்தும் . உத்தமர் - சத்திநிபாதத்துத்தமர் . ( ஞானச்சுடர் - உணர்வொளி ; )` சிவஞானதீபம் ` சிவஞானசோதி `. நடுவே உதிப்பன - உள்ளத்தே தோன்றுவன . ` கண்டொல்லை காணு நெறிகண்ணுயிர் நாப்பணிலை யுண்டில்லை யல்லதொளி ` ( திருவருட்பயன் ) என்புழிப்படும் பொருளுமாம் . இடர்கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருட்பிழம்பற எறிந்தெழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும் தூய நற்சோதியுட் சோதி ( தி .9 திருவிசைப்பா ) நங்கை - உமாதேவி . யானை உரித்தது - ஆணவம் அகற்றியது . அச்சம் :- அறியாமைப் பெருக்கை யகற்றுங்கால் அறிவில் உண்டாகும் அச்சமும் வெருவலும் குறித்தது .

பண் :

பாடல் எண் : 15

மாதிர மானில மாவன வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் வானுலகும் மண் உலகும் ஆவனவாய்த் தேவர்களின் உச்சியின் மீது பொருந்துவன வாய் , மென்மையான கழலும் விரும்பத்தக்க கச்சும் கட்டப்பட்டனவாய் , கொடிய தருமராசரின் தூதர்களை ஒடச் செய்வனவாய் , உலகத் துன்பங்கள் தீரத்தொண்டராய் அடிமைப் பணி செய்பவருக்குத் தாங்கும் பொருளாய் உள்ளன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் ஆவன ; மீதன ; வீக்கின ; துரப்பன ; ஆவன காண்க . மாதிரம் : வான் , திசை , மலை முதலிய பல பொருளுள் யாதும் பொருந்தும் எனினும் , மால் நிலம் என்றதற்கேற்ப வானுலகம் என்பது சிறக்கும் . விண்ணும் மண்ணும் ஆவன என்க . வானவர் - தேவர் . மாமுகட்டின் மீதன - பெரிய உச்சி மேலன . ` வானோர் மகுடம் மன்னி நிலையாயிருப்பன ` ( தி .4 ப .91 பா .11). மென்கழல் வெங்கச்சு வீக்கின :- ` கச்சினன் கழலினன் ` ( தி .11 திருமுருகாற்றுப்படை ) வீக்கிய கழலின் மென்மையும் கச்சின் வன்மையும் குறித்தலால் , ஈண்டு வெம்மை வன்மைப் பொருட்டாம் . ` வெண்மைவேண்டல் ` எனலாம் . வீக்குதல் - கட்டுதல் . வெந் நமனார் - வெய்ய சமனார் . சமன் (- நடு ) ஞமன் , நமன் என மருவிற்று . ` நடுவன் ` என்பதும் அறிக . ` தெரிகோல் ஞமன் ` ( புறம் ) என்றதன் உரை காண்க . நமனார் தூதர் - எமதூதர் ; காலதூதர் . ஓடத் துரப்பன - ஓடும்படித் துரத்துவன . துரத்தல் - ஓடுவித்தல் , ` ஓட்டுதல் ` ஈண்டுப் பொருந்தாது . துன்பு பிறவித்துன்பம் முதலியன . அற - ஒழிய . தொண்டு பட்டார்க்கு - தொண்டு பூண்டவர்க்கு . ஆதரம் - அன்பு . ` அன்பே சிவம் ` ( தி .10 திருமந்திரம் ).

பண் :

பாடல் எண் : 16

பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்குமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் , விரும்பித் தொழும் அடியவர்கள் மேம்பட்ட வீட்டுலகத்தை ஆளுமாறு மிக்க அருளினாலே ஏணிப்படி போன்று ஏறிச் செல்லக் கூடிய வழியை அமைத்துக் கொடுத்து , தேவர்கள் முடிக்கு அணியத்தக்க மாணிக்கம் , மரகதம் , வைரம் , தூய பொன் இவற்றை ஒத்து இருப்பனவாம் .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் ஆள , இட்டுக் கொடுத்து , ஒத்து போன்று மன்னி ஒக்கும் என்க . பொன்னுலகாளப் பெறுமவர் அடித்தலத்தைப் பேணித் தொழுமவர் . அவர்க்கு அவ்வுலகைக் கொடுப்பன அடித்தலம் ஏணிப்படியை நெறியில் இட்டுக் கொடுப்பதே முறை . அருள் . பிறங்கும் அருள் . பிறக்கம் - விளக்கம் ஒளிசெய்தல் , உயர்ச்சி . அருளால் கொடுத்து . இமையோர் முடிமேல் இருக்கும் ஐயாறன் அடித்தலம் மாணிக்கத்தை ஒத்தன . மரகத்தைப் போன்றன . வயிரத்தை மன்னின . ஆணிப்பொன்னை ஒத்தன . ` ஆணிப் பொன் ` ( கம்பரா . ) மாணிக்கம் , மரகதம் , வயிரம் , ஆணிப் பொன் எல்லாம் அடித்தலத்துக்கு உவமமே அன்றி ஒப்பாவன அல்ல . உவமமும் ஒப்பும் ஒன்றாகா . ` ஒப்புடையனல்லன் ஓர் உவமன் இல்லி ` என்றருளிய இச் சுவாமிகள் கருத்தை நோக்குக . இரண்டும் ஒன்றன் மேல் , கூறியது கூறலாகும் , ` நெஞ்சொத்து நிற்றல் ` எண்ணிறைந்த நெய்யொத்து நின்றானை நீலமிடற்றானை என் கையொத்து வேர் கூப்புக ` என்னும் இடத்தில் ` ஒப்பு ` சென்றுணரலாம் . ` குருவிபோலக் கூப்பிட்டான் ` ` புலிபோலப் பாய்ந்தான் ` ` மதிமுகம் ` என்புழி உவமம் விளங்கும் .

பண் :

பாடல் எண் : 17

ஓதிய ஞானமும் ஞானப் பொருளு மொலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணும்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ
டாதியு மந்தமு மானவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஆதியும் , அந்தமும் ஆகிய ஐயாறன் அடித் தலங்கள் வேதஆகமங்களை ஓதியதனால் பெற்ற அபர ஞானமும் , ஞானப் பொருளாகிய பரஞானமும் , ஒலியால் மேம்பட்ட அந்தணர்கள் ஓதும் வேதமும் , வேதத்தை ஒட்டிச் செய்யப்படும் வேள்வியும் தேவருலகமும் இந்நிலவுலகமும் அக்கினியும் சிவந்த ஒளியை உடைய சூரியனும் தூயமதியும் ஒப்பனவாய ஒளிப்பொருளுமாக உள்ளன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் ஞானமும் ஞானப்பொருளும் வேதமும் வேள்வியும் ஆவன ; விண்ணும் மண்ணும் சோதியும் தூமதியோடு ஞாயிறும் ஒப்பன . ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் . ஓதிய ஞானம் - வேதாகமங்களை ஒதியதாற் பெற்ற மெய்யுணர்வு ; அபரஞானம் . ஞானப் பொருள் - பரஞானம் . ` வேத சாத்திர மிருதி புராண கலைஞானம் விரும்பசபை வைகரியாதித்திறங்கள் மேலாம் நாதமுடிவானவெல்லாம் பாச ஞானம் ` என்றது வேறு . ` ஓதிய ஞானம் ` என்னும் ஈது வேறு . ` நால்வகை வாக்கின் பகுதியவாகிய வேதம் முதலிய சொற்பிரபஞ்சமும் நிலமுதல் நாதம் ஈறாகிய பொருட் பிரபஞ்சமும் என்னும் இவைபற்றி நிகழும் ஏகதேச ஞானம் அனைத்தும் பாசஞானம் . ( சிவஞானசித்தியார் . 293) ` உயர் ஞானம் இரண்டாம் மாறா மலம் அகல அகலாது மன்னு போதத் திருவருள் ஒன்று . ஒன்று அதனைத் தெளியவோதும் சிவாகமம் என்று உலகு அறியச் செப்பும் நூலே ` ( சிவப்பிரகாசம் . 10) என்ற இரண்டும் முறையே ஞானப் பொருளும் ஞானமும் ஆக இதிற் குறிக்கப் பெற்றன . இவை சிவஞானப் பகுதி . ஒலி சிறந்த வேதியர் :- வேதியர் வேதம் ஒலிப்பதிற் சிறத்தலைக் குறித்தது . சிறவாதார் பலர் . ஒலி சிறந்த வேதம் எனலுமாம் . வேதோச்சாரணகிரமம் உணர்ந்தோர் உணர்வார் . விண்ணிலும் மண்ணிலும் ஞாயிறு , மதி அக்கினி ஆகிய சோதிகளிலும் ஐயாறனடித்தலம் ஒத்து விளங்குகின்றன . ` பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம் ` என்றதுணர்க . ` போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள் `. ( தி .8 திருவாசகம் . 887. பார்க்க .)

பண் :

பாடல் எண் : 18

சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கு மரவிந்த மொக்குமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் தேமல் படர்ந்த முன்பகுதியை உடைய இணையான தனங்களை உடைய பாவை போன்ற பார்வதி சுரும்பும் வண்டும் அழகுசெய்யும் கூந்தலை உடையவளாய் வளையல்களை அணிந்த கைகளைக் குவித்து நின்று வணங்கும் போதும் தடவிக்கொடுக்கும் போதும் காந்தட்பூவால் அழகுசெய்யப்பட்ட தாமரைப் பூக்களை ஒத்திருக்கின்றன . காந்தட்பூ - பார்வதிகைகள் , தாமரை - பெருமான் திருவடிகள் .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் பாவை குழலி வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் காந்தட்போது அணங்கும் ; அரவிந்தம் ஒக்கும் . சுணங்கு - தேமல் . முகம் - முலைமுகம் . துணைமுலை - இணைநகில் . பாவை - பொய்மை போல்வாள் ; உவம வாகுபெயர் . பாவையாகிய குழலி . சுரும்பும் வண்டும் அணங்கும் குழல் . அழகு செய்யும் கூந்தல் . இரண்டினமும் மொய்த்துச் சுமையாக்கிவருத்தும் எனலுமாம் . அணங்குதல் - அழகு செய்தல் , வருத்துதல் , குழலி - குழலாள் . அணி - அலங்காரம் ; அழகு . ஆர் - பொருந்திய நிறைந்த , கரங்கூப்பி , கை குவிபு என்பதன் மரூஉவே கூப்பு என்பது . ` குவிபிட்டான் ` கூப்பிட்டான் என்று மருவியதும் அறிக . கைகுவிதலும் வாய்குவிதலும் பற்றியுண்டான சொல் குவிபு - கூவ்பு - கூப்பு என்னும் முறையில் மருவிற்று . கூப்பு என்றதன் அடியாகக் கூப்பி என்னும் வினையெச்சம் தோன்றிற்று . வணங்கும்பொழுது காந்தட்போது வருந்தும் , வருடும்பொழுதும் அரவிந்தத்தை ஒக்கும் . செங்காந்தட் பூப்போல் ஒளிச்செய்து அழகுறுத்தும் எனலுமாம் . என்றும் அரவிந்தம் (- தாமரையை ) ஒக்கும் அடித்தலம் அவ்விரு பொழுதிலும் காந்தட் போது போலணங்கு (- அழகு ) செய்யும் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 19

சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்றும் நீங்காப் பிறவி  நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த
அழலா ரொளியன காண்கவை யாற னடித்தலமே. 

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் கலக்குகின்ற துயராகிய வெப்பம், தாக்கும் போது கைத்தொண்டு செய்யும் அடியவர்களுக்குப் பொருந்தும் நிழலானவையாய், ஒரு பொழுதும் நீங்காத பிறவி எடுக்கும் செயலைப் போக்கி, விடுத்து நீங்காத வினைகளை அப்புறப் படுத்துவனவாய்க் காலம் என்னும் காட்டினை எரித்து வென்ற தீயின் நிறைந்த ஒளியை உடையன.

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம், வெயில் சுட்டிடும்போது நிழல் ஆவன; பிறவிகெடுத்து வினைகள் கழற்றுவ; வனங்கடந்த அழலொளியன - காண்க. சுழல் - கலக்கம்; சுற்று; சோர்வு. ஆர் துயர் - நிறைந்த துயரம். துயர் வெயில் - துயராகிய வெயில். வெயில் சுடும் போது நிழலாயிருந்து தணிப்பன. அடித் தொண்டர்:- `அடித்தொண்டர்` `முடித்தொண்டர்` (தி.4 ப.102 பா.4) திருவடித் தொண்டு பூண்ட மெய்யன்பர். துன்னும் நிழல் - பொருந்தும் நிழல்; செறிந்த நிழல். தொண்டர் துன்னும் நிழல்; தொண்டர்க்குத் துன்னும் நிழல். என்றும் நீங்காப் பிறவி நிலை:- எக்காலத்தும் நீங்காது நிற்கும் பிறப்பினது நிலையை. நிலைகெடுத்து - நிலைகுலைத்து . நீணிலத்துப் புலையாடு புன்மை தவிர்ப்பன`. (தி.4 ப.92 பா.11) கழலாவினைகள் கழற்றுவ - கழன்றொழியாத வினைகளைக் கழன்றொழியச் செய்வன. காலவனம் கடந்த அழல் ஆர் ஒளியன:- காலம் என்னும் காட்டை எரித்து வென்ற தீயின் நிறைந்த ஒளியுடையன; காலாதீதப் பொருள். `என்றைக்கும் உள்ளது` (தாயுமானவர்) `அழலாரொளியன` அரியும் அயனும் அடிமுடி தேடியதை உணர்த்திய குறிப்பு. இதனாலும் அடுத்த திருவிருத்தத்தாலும் இவ்விருபதும் இருவேறு பதிகமாகக் கொள்ளலாகாதன எனல் விளங்கும். தருமை ஆதீனத்தின் இசைவு பெற்று மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை வெளியிட்ட அடங்கன்முறைப் பதிப்பிலும் இருவேறு பதிகமாக இல்லை. சிவக்கவிமணி சி.கே.சு. முதலியார் பி. ஏ., அவர்கள் முதலியோர், நல்லூர்ப்பெருமணத்தில் ஞானசம்பந்தர் திருவீதியுலாவில் வெயில் மிக்கு வருந்தியபோது, தேவார ஐயா அவர்கள் இதனை உருகிப்பாட ஐந்து கணத்துள் நிறைய மழை பெய்தது. சில ஆண்டு கழித்துத் திருப்புக் கொளியூரவி நாசியிலும் இவ்வாறு நிகழ்ந்தது. (தருமை ஆதீனப் பதிப்பு தி.12 அப்பர் புராணம் பக்கம் 641 பார்க்க.)

பண் :

பாடல் எண் : 20

வலியான் றலைபத்தும் வாய்விட்டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கண்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் பலரிகழ
அலியா நிலைநிற்கு மையனை யாற னடித்தலமே. 

பொழிப்புரை :

நம் தலைவனாகிய ஐயாறனுடைய திருவடிகள் வலிமையை உடைய இராவணனின் தலைகள் பத்தும் வாய்விட்டு அலறுமாறு மலையால் அவனை அழுத்தி, குறையாத வலிமையை உடைய கூற்றுவனை உதைத்து, தேவர்கள் காண அவர்கள் முன்னே பிச்சை வழங்கும் வீட்டுவாயில்களை நோக்கிப் பல நாளும் பலரும் இகழுமாறு ஆண்மை நிலைக்கு ஏலாத அலியாம் நிலைக்கு உரிய செயல்களைச் செய்யும் இயல்பின.

குறிப்புரை :

வலியான் - இராவணன்; வலியுடையவன். பத்துத் தலையும் வாய்விட்டு அலற அடர்த்து நிற்கும். கயிலை வரையால் அடர்த்து நிற்கும். கூற்றை உதைத்து நிற்கும். விண்ணோர்கள் முன்னே அலியா நிலை நிற்கும். பலிசேர் படுகடைப் பார்த்து நிற்கும். பன்னாளும் நிற்கும். பலர் இகழ நிற்கும். மெலியா வலிமை கூற்றுடையது. அத்தகு கூற்றும் மெலிய உதைத்தன அடித்தலம். கடைதொறும் சென்று பலியை நோக்கி நிற்றல் இகழ்ச்சியாக்கும். விண்ணோரெதிரில் பலிக்காகக் கடைதொறும் நிற்றல் ஆண்மை நிலை ஆகாது. அலியாம் நிலையே என்றார். ஒருநாள் அன்று, பலநாளும் பலர் இகழ நிற்கும்.

பண் :

பாடல் எண் : 1

வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே.

பொழிப்புரை :

தேவர்களும் தேவகணத்தவரான வித்தியாதரர்களும் நாள்தோறும் மலர்களைக் கொணர்ந்து சமர்ப்பித்து வணங்க வைகுந்தத்திலும் சத்தியலோகத்திலும் உள்ள திருமாலும் பிரமனும் உள்ளபடி அறிய முடியாத தன்மையுடைய வியாபகப்பொருளாகி யவனாய் , காளைவாகனனாய் , மூலப் பழம்பொருளாய் , அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கக் கருதிய அன்று காட்டில் ஓடிய பன்றியை அம்பு எய்த வேடனாய் உள்ள பெருமானுடைய கண்டியூர்த் திருத்தலத்தை உலகில் உள்ள மக்கள் தொழுகின்றார்கள் . கண்டியூரைத் தேவர்களும் தானவர்களும் மண்ணவர்களும் தொழுகின்றனர் என்றவாறு .

குறிப்புரை :

வானவர் - தேவர் . தானவர் :- கொடைநர் , மண்ணோர் . ` வானவர்க்குந் தானவனே ` ( தி .4 ப .6 பா .1) ` தந்தையும் தாயுமாகித் தானவன் ஞானமூர்த்தி ` ( தி .4 ப .29 பா .4) ` தானவர் தனமும் ஆகித் தனஞ்சயனோடெதிர்ந்த கானவர் ` ( தி .4 ப .43 பா .5) என்பவற்றால் விளங்கும் பொருள் ` அசுரர் ` என்பதன்று . வானவர் - தேவர் . தானவர் - கொடைநர் , மண்ணோர் ; அசுரர் . ( தி .6 ப .44 பா .7.) வைகல் - நாள்தோறும் . மலர் கொணர்ந்து - ` யோசனை போய்ப் பூக்கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே பூசனை செய்து இனிதிருந்தான் புள்ளிருக்குவேளூரே `. இட்டு - திருவடி முதலியவற்றிலே தூவியிட்டும் அணிந்திட்டும் . இறைஞ்சி - வணங்கி . தானவர் - வைகுந்தமும் சத்தியலோகமும் ஆகிய தானங்களில் உறைபவராகிய . மால்பிரமன் - அரியும் அயனும் . அறியாத - அடிமுடி தேடிக் காணாதபடி . தகைமையினான் - அப்பாலைக் கப்பாலாய் நின்ற ஞானத்திரளாயும் , எப்பாலும் நிறைந்த ஒளிப் பிழம்பாயும் விளங்கிய வியாபகப் பொருளானவன் . இறைஞ்சி அறியாத தகைமையினான் என்க . ` வானவர் தானவர் ` என்றுள்ளதை நோக்கி அசுரர் எனல் ஈண்டுப் பொருந்தும் . அடுத்து , ` தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான் ` என்றுள்ளது . தான் மால் பிரமன் ஆகிய அவர் அறியாத தகைமையினான் எனக் கொள்ளலாம் . ஆதி - முதல் . புராணன் - பழையோன் ; தொல்லோன் . அன்று - அருச்சுனனது தவத்திற்குப் பயன் அருளச் சென்ற அந்நாளில் . ஆனவன் - விடையான் . ` ஆனணைந் தேறுங் குறி ` ( தி .4 ப .90 பா .5) ஆன அநாதி புராணன் எனற்குமிடமுண்டு . கானவன் :- அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளிய வேட்டுருவினன் . வாணர் - வாழ்நர் . மரூஉ . வீழ்நர் - வீணர் என்றது போல்வது . வாணர்க்கு வீணர் மறுதலையாகும் .

பண் :

பாடல் எண் : 2

வான மதியமும் வாளர வும்புன லோடுசடைத்
தான மதுவென வைத்துழல் வான்றழல் போலுருவன்
கான மறியொன்று கையுடை யான்கண்டி யூரிருந்த
ஊனமில் வேத முடையனை நாமடி யுள்குவதே.

பொழிப்புரை :

வானத்தில் இயங்கவேண்டிய பிறை , ஒளி பொருந்திய பாம்பு கங்கை இவற்றிற்குத் தன் தலையைத் தங்குமிடமாக வழங்கித் திரிபவனாய் , தீ நிறத்தினனாய் , காட்டில் வாழும் மான்குட்டியைக் கையில் ஏந்தியவனாய்க் கண்டியூரில் இருக்கும் , குறைவு ஒன்றும் இல்லாத வேதத்தை உடைய பெருமானை அவன் திருவடிக்கண் நாம் தியானிப்போமாக .

குறிப்புரை :

வானமதியம் - ` வானூர்மதியம் `. வாள் அரவு கொடிய பாம்பு . புனல் - கங்கை நீர் . சடைத்தானம் அது எனவைத்து - மதி முதலியவற்றிற்குச் சடையே இடம் என்று உலகுபோற்ற வைத்து , உழல்வான் - திரிபவன் . தழல்போல் உருவன் - ` தீவண்ணன் `. கான மறி - காட்டில் திரியும் மான்கன்று . ஒன்று கை - ஒன்றியகை . மறியொன்றனைக் கையில் உடையவன் என்னற்க . ஊனம் இல் வேதம் - குறைவிலாத பொருள் நிறைவையுடைய மறை . ` பூம் சிரம் கண்டி ` என்பது பிரசித்தம் . பிரமன் அறிந்த வேதம் அவனுக்குத் தலைபோகும் ஊனம் விளைத்தது . அதுவே ஊனமின்றி விளங்கும் உயர்வுற்றது முழுமுதல்வன்பால் . குற்றம் இல்வேதம் ` ( தி .4 ப .93 பா .5).

பண் :

பாடல் எண் : 3

பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் தான்றலையை
உண்டங் கறுத்தது மூரொடு நாடவை தானறியும்
கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் தொழுகின்றதே.

பொழிப்புரை :

பிரமன் தலையைப் பண்டு நீக்கிய கையை உடையவனாய் , விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இறுத்திய அதனால் நீலகண்டனாய் உயிரினங்களின் அச்சத்தைப் போக்கிய செய்தியை ஊர்களும் நாடுகளும் அறியும் . அத்தகைய பெருமான் தொண்டர்கள் தலைவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்க அவனை அங்கே அண்டத்தில் வாழும் சான்றோர்கள் தொழுகின்றார்கள் .

குறிப்புரை :

பண்தங்கு அறுத்தது ஓர் கை உடையான் - ஓர் கையில் , இசைத்திறத்தில் இத்தனை எனவரையறுத்த பண்களுக்கெல்லாம் உறைவிடமான யாழை உடையவன் . ` மிக நல்ல வீணை தடவி ` யவனுமாம் . பண்டு அங்கு அறுத்ததோர் கை உடையான் என்று பட்டாங்குரைத்தலே தக்கதாயினும் , படைத்தான் தலையை அங்கு அறுத்ததும் உண்டு என்று அடுத்துக் கூறியதால் , இவ்வாறு பொருளுரைத்தாம் . பண்டே பிரமகபாலக் கையன் அவன் . பிரமன் சிரத்தைக் கண்டியூரில் அறுத்த வீரத்தை ஊரும் நாடும் அறியும் என்க . கறுத்த கண்டம் ஆகிய மிடறு கண்டமும் மிடறும் கழுத்தையே குறிக்கும் பெயர் . மிடல் - வலி , மிடல் + து - மிடறு . நஞ்சுட் கொண்டும் நஞ்சு போகாத மிடலுடையது . நஞ்ச நெஞ்சர்க்கருளும் நள்ளாறரே ` ( தி .5 ப .68 பா .7) தொண்டர் பிரான் - தொண்டர்க்குப்பிரியன் ; தொண்டரைப் பிரியான் .

பண் :

பாடல் எண் : 4

முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் றானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்ட ரில்லைகண் டீரண்ட வானவரே.

பொழிப்புரை :

அவன் செய்துமுடிக்க நினைத்தால் வெற்றிகரமாக முடியாத செயல் ஒன்றுமில்லை . எல்லாப் பொருள்களையும் அப் பெருமான் தன்பால் உடையான் . கொடியில் தன் உருவம் எழுதப்பட்ட வாகனமாக உடைய காளைமீது இவர்ந்து பார்வதி பாகனாய் , அடியார்களுடைய கொடியவினைகளை அடியோடு நீக்குபவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் அப்பெருமானுடைய திருவடிகளைத் தொண்டர்களே அடைந்தனர் . மேலுலகத்தேவர்கள் அடைய வில்லை .

குறிப்புரை :

முடியின் முற்றாதது ஒன்று இல்லை - முடித்தால் முற்றுறாதது யாதும் இல்லை . தான் எல்லாம் உடன் உடையான் - தானே எல்லாவற்றையும் தன்பால் உடையவன் . அஃதாவது எல்லாப்பொருளையும் எல்லாவுயிரையும் முறையே உடைமையும் அடிமையும் ஆக உடையவன் பரமசிவனே ஆதலின் , அவனே சருவ சங்கார காரணன் . அவன் முடித்தால் முடியாத தொன்றில்லை என்றதாம் . ஆக்கலும் அளித்தலும் ஆகிய தொழிற்கெல்லாம் முதல்வன் சிவபெருமானே . சிவஞானபோதம் முதற்சூத்திரம் பொருளை உணர்க . கொடியும் உற்ற விடை :- விடையெழுதிய கொடியும் உடையவன் இறைவன் , அவ்விடையை ஊர்தியாகக் கொண்டு ஏறுமவன் . ` கூற்று ` , ` பால் ` என்பன ஒரு பொருளன எனினும் . ஈண்டுக் கூற்று என்பது இடவாகு பெயராய் , அம்பிகையைக் குறிப்பதாகக் கொண்டு , அம்மையை ஒரு பக்கத்தே உடையவன் என்க . கடிய வினை நோய் முற்றக்களைவான் . கடிய முற்று அவ்வினை நோய் களைவான் எனலும் ஆம் . இருந்தானடி . தொண்டர் உற்றார் வானவர் இல்லை . அண்டங்களில் உள்ள வானவர் .

பண் :

பாடல் எண் : 5

பற்றியொ ரானை யுரித்தபி ரான்பவ ளத்திரள்போல்
முற்று மணிந்ததொர் நீறுடை யான்முன்ன மேகொடுத்த
கற்றங் குடையவன் றானறி யான்கண்டி யூரிருந்த
குற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே.

பொழிப்புரை :

ஓர் யானையைக் கீழ்ப்படுத்தி அதன் தோலினை உரித்த தலைவனாய் , பவளத்திரள் போன்ற மேனி முழுதும் திருநீறு அணிந்தவனாய் , கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த கண்ணனாக அவதரித்த திருமாலால் அறியப்படாதவனாய்க் கண்டியூரில் உறைபவனாய் , முன்னமே உலகுக்கு வழங்கிய குற்றமற்ற வேதங்களை உடையவனான அப்பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள் .

குறிப்புரை :

ஓர் ஆனைபற்றி உரித்தபிரான் - ஓர் யானையைப் பிடித்து அதன் தோலை உரித்துப் போர்த்து , அழிவின்றி நின்ற கடவுள் . யானைத் தோலைப் போர்த்துக் கொண்டவர் இறப்பர் . அது செய்தும் சாவாதான் நம் பெருமான் . அடுத்த திருவிருத்தத்திலே ` போர்ப்பனை யானை உரித்தபிரான் ` என்றதும் காண்க . ` பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும் ....... காணப் பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டுவதே ! ( தி .4 ப .81 பா .4) ` பவளத்திரள் போலும் திருமேனியில் முற்றும் அணிந்ததொரு நீறுடையான் . பவளத்திரள் மேல் ` என்று பாடம் இருந்து பிழைபட்டது போலும் , முன்னமே கொடுத்த கல் தங்கு உடையவன் தான் அறியான் :- காவியுடை அணிந்த அக் கடவுள் தனக்கு அது வந்த காலம் அறியான் என்ற கருத்தது போலும் , கல் - காவிக்கல் . குற்றம் இல் வேதம் :- ` ஊனம் இல் வேதம் ` ( தி .4 ப .93 பா .1). கூறுவது உடையானை ஆம் . யாமும் அண்டரும் கூறுவது உடை யானை எனலுமாம் . எல்லார்க்கும் அவனே உடையான் (- சுவாமி ).

பண் :

பாடல் எண் : 6

போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி வாயரவம்
சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல கம்மிதனைக்
காப்பது காரண மாகக் கொண் டான்கண்டி யூரிருந்த
கூர்ப்புடை யொள்வாண் மழுவனை யாமண்டர் கூறுவதே.

பொழிப்புரை :

யானையை உரித்த தோலைப் போர்க்கின்ற பிரானாய் , உடம்பில் புள்ளிகளைக் கொண்ட பாம்பினை உடலில் சேர்த்து அணிந்தவனாய் , வானளாவிய அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தைக் காப்பதற்காகக் கூர்மையை உடைய மழுப்படையைக் கொண்ட கண்டியூர்ப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள் .

குறிப்புரை :

போர்யானை பனையானை . பனைக்கை மும்மத வேழம் `. யானை யுரித்தபிரான் . பொறி - படப் புள்ளி , வாய் - வாய்ந்த அரவம் - பாம்பு . வானத்திரை - வானோக்கி எழும் அலை . அரவம் சேர்ப்பது உலகம் :- ஆதிசேடன் உலகத்தைத் தாங்குதலைக் குறித்தது . உலகம் இதனை - இவ்வுலகினை , அரவத்தைச் சேர்ப்பதன் கருத்தும் அவன் தலைமேல் உள்ள உலகத்தைக் காப்பதைக் காரணண் ஆக்கிக் கொண்டதாம் . காப்பது காரணமாகச் சேர்ப்பது கொண்டான் , உலகினைக் காப்பது அரவம் . அக் காப்பது காரணம் ஆக அரவம் சேர்ப்பது கொண்டான் . சேர்ப்பதைக் கொண்டான் . கூர்ப்பு - கூரிய தன்மை . அதனையுடைய வாள் . ஒள்ளியவாள் . வாளாகிய மழு , மழுவுடையவன் மழுவன் .

பண் :

பாடல் எண் : 7

அட்டது காலனை யாய்ந்தது வேதமா றங்கமன்று
சுட்டது காமனைக் கண்ணத னாலே தொடர்ந்தெரியக்
கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி யூரிருந்த
குட்டமுன் வேதப் படையனை யாமண்டர் கூறுவதே.

பொழிப்புரை :

கூற்றுவனை அழித்து , வேதங்கள் , ஆறு அங்கங்கள் என்ற இவற்றை ஆராய்ந்து , மன்மதனைக் கண்ணிலிருந்து தோன்றிய தீயினால் சுட்டு , தொடர்ந்து எரிந்து சாம்பலாகுமாறு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனாய்க் கண்டியூரில் உறையும் கடல்போன்ற வேதங்களைத் தனக்குப் படையாக உடைய பெருமானையே தேவர்கள் போற்றுகின்றார்கள் .

குறிப்புரை :

அட்டது காலனை ,. ஆய்ந்தது வேதங்களையும் ஆறு அங்கங்களையும் . அன்று தொடர்ந்து எரியக் கண்ணதனாலே சுட்டது காமனை . கட்டவை மூன்றும் - முப்புரங்களையும் . ` எரித்தபிரான் ` என்றதால் எரிய எரித்தபிரான் எனல் பொருந்தாது . எரியச்சுட்டது எனல் சிறந்தது . கட்டு - மதில் . ` அவை ` முன்மொழிப் பொருளது . குட்டம் - கடல் . வேதம் கடல் எனப்படும் . கடல்போலும் வேதப்படையுடையவன் எனலும் பொருந்தும் . கட்டு - பந்தம் . ` மும்மல காரியம் ` ` முப்புரமாவது மும்மல காரியம் ` ( தி .10 திருமந்திரம் )

பண் :

பாடல் எண் : 8

அட்டு மொலிநீ ரணிமதி யும்மல ரானவெல்லாம்
இட்டுப் பொதியுஞ் சடைமுடி யானிண்டை மாலையங்கைக்
கட்டு மரவது தானுடை யான்கண்டி யூரிருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே.

பொழிப்புரை :

உலகத்தை அழிக்கப் பேரொலியோடு வந்த கங்கையையும் பிறையையும் மலர்களையும் வைத்து உள்ளடக்கிய சடைமுடியை உடையவனாய் , இண்டைமாலையையும் , கையில் அணிகலனாக அணியும் பாம்பையும் உடையவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் , பறையை ஒத்த உடுக்கையை உடைய கூத்தப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள் .

குறிப்புரை :

அட்டும் ஒலிநீர் :- கங்கையின் பேரொலி செய்து வரும் வெள்ளம் . அட்டல் - அழித்தல் . அணிமதி - அழகிய பிறை . அலர் ஆன எல்லாம் - பூவாகிய யாவும் . நீரும் மதியும் மலரும் எல்லாம் இட்டுப் பொதியும் சடைமுடி இண்டைமாலையுடையான் . அங்கையில் கட்டும் அரவுடையான் . இண்டைமாலை போலக்கட்டும் அரவுடையான் எனலுமாம் . பறை - வாத்தியம் . கூத்துக்குத் தக இசைக்கும் பறை . ` பறையுடைக் கூத்தன் ` உடுக்கையே பறை எனலும் ஆம் ; கூத்தன் தன் கையில் உடையது அதுவே ஆதலின் .

பண் :

பாடல் எண் : 9

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே.

பொழிப்புரை :

மன்மதனை வெகுண்டு அழித்த பிரான் , கண்டியூரை உகந்தருளியிருக்கும் பிரான் , ஆறு அங்கங்களையும் ஆராய்ந்தபிரான் ஆகிய சிவபெருமான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டுள்ளான் . அதனால் தீவினைகள் மறைந்தன ; நோய்கள் செயலற்று ஒளிகுறைந்தன ; கலங்கி விழுமாறு பாவங்கள் தேய்ந்து விட்டன . தீவினை நோய்கள் பாவம் என்ற இவைகள் இனி நம்மை அழிக்க வலிமை அற்றனவாகிவிட்டன .

குறிப்புரை :

அடியேனை ஆட்கொண்டவன் பிரான் அல்லனோ ? ஆம் . ஆதலின் , மாய்ந்தன . மங்கின . தேய்ந்தன . செறுக்ககில்லா . அநங்கைக்காய்ந்தபிரான் ; செற்றுக்காய்ந்தபிரான் , அநங்க : என்பது மன்மதன் பெயர் . அஃது இரண்டனுருபு ஏற்று அநங்கை என்று திரிந்து நின்றது . சம்பந்தர் அருளிய திருப்பதிகம் தி .2 ப .45 பா .5 இல் , ` அநங்கைக் காய்ந்த பிரான் ` என்றதும் , ` பெருந்திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் ` ( தி .3 ப .91 பா .9) என்றதும் ஈண்டு நோக்குக . அங்கன் - உருவன் . அநங்கன் - உருவிலி . அங்கம் ஆறு :- ( தி . 4 ப .93 பா .7). ஆய்ந்த - ஆராய்ந்து வகுத்தருளிய தீவினையின் மாய்வும் நோய்களின் மங்கலும் , பாவத்தின் தேய்வும் ஆட்கொண்ட காரணத்தாலான காரியங்கள் . மறுகி - கலங்கி . விழத்தேய்ந்தன . அதனால் நம்மைச் செறுக்ககில்லா ( - அழிக்க வலியில்லாதன ).

பண் :

பாடல் எண் : 10

மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத்
தண்டி யமரர் கடைந்த கடல்விடங் கண்டருளி
உண்ட பிரானஞ் சொளித்த பிரானஞ்சி யோடிநண்ணக்
கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட வானவனே.

பொழிப்புரை :

தம் ஆற்றலால் மிக்குச்சென்று மந்தரமலையைப் பெயர்த்துச் சென்று அதனை மத்தாகக்கொண்டு வாசுகி என்ற பாம்பைக் கடைகயிறாகச் சுற்றித் தேவர்கள் கடைந்த கடலிலிருந்து புறப்பட்ட விடத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஒடிவந்து தன்னை அணுகுமாறு செய்தபிரானாய் , அவர்களிடம் அருள்செய்து விடத்தை உண்ட பிரானாய்ப்பின் அது உள்ளே செல்லாதபடி கழுத்தில் அதனை ஒளிவீசுமாறு செய்த பெருமான் கண்டியூரிலுள்ள தேவர்தலைவன் அல்லனோ ?

குறிப்புரை :

கண்டியூர் அண்ட வானவன் , உண்ட பிரானும் நஞ்சொளித்தபிரானும் கண்ட பிரானும் அல்லனோ ? மண்டி - நெருங்கி , மிக்குச் சென்று எனலுமாம் . மலை - மந்தரமலை , மத்து - கடைதற்குரிய கருவி . வாசுகி - பாம்பு . தண்டி - சுற்று . ( மத்தைச்சுற்றும் கடைவதற்குரிய ) கயிறாக வாசுகியைத் தண்டி . அமரர் - தேவர் . அசுரரும் கொள்ளப்படுவர் . ` வடங்கெழுமலை மத்தாக வானவர் அசுரரோடு கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிதுடையராகித் தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே ` ( தி .4 ப .65 பா .2) என்றதுணர்க . அமரர் கடைந்த கடல் , கடல் விடம் - கடலில் எழுந்த நஞ்சு . விடம் உண்ட பிரான் என்றபின் , நஞ்சு ஒளித்தபிரான் என்றது என்னை ? உண்டது வயிற்றுள்ளும் போகாமல் வெளியும் கான்றொழியாமல் , கழுத்தில் ஒளியப் பண்ணிய பெருந்திறல் விளக்கற் பொருட்டு . ` பரவைக் கடல் நஞ்சம் உண்டதும் இல்லை ` ( தி .4 ப .82 பா .9.). அஞ்சு ஒளித்த பிரான் அஞ்சியோடி நண்ணக் கண்ட பிரான் எனக் கொண்டு , புலனைந்தும் அடக்கிய மார்க்கண்டேயர் , கூற்றினை அஞ்சியோடி வந்தடையக் கண்டு , காலனைக் காலால் உதைத்து அவன் வலியடங்கக் கண்ட பிரான் எனலுமாம் . தேவர் + அசுரர் அஞ்சியோட என்றலின் இது சிறந்தது .

பண் :

பாடல் எண் : 1

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.

பொழிப்புரை :

திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான் , அடியேனுக்குத் தாயாய் தந்தையாய் உடன்பிறந்த , சகோதர சகோதரியாராய் அமைந்து , மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாய் , அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான் .

குறிப்புரை :

எனக்கு ஈன்றாளுமாய் எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் :( தி .4 ப .29 பா .4; ப .32 பா .8; தி .5 ப .47 பா .5.) ஈன்றாள் - மாதினியார் . எந்தை - புகழனார் . உடன்தோன்றினர் - திலகவதியார் . எனக்குப் படைத்த உலகம் மூன்று உலகம் - உலகப் பற்று . திலகவதியாரே திருவருணெறிக்கு மீட்டவராதலின் , ` உடன் தோன்றினர் ` என உயர்த்துக்கூறிப் பத்தியும் நன்றியறிதலும் உணர்த்தினார் , தோன்றாத்துணை மனத்துள் இருக்க ஏன்றான் . ( பா .3) விழித்த கண்குருடாய்த் திரிவீரர் ஆகிய இமையவர்க்கு ` அன்பே சிவம் ` எனத் திகழ்பவன் . இமையவட்கன்பன் ` என்றிருந்து பிழைபட்டதோ ? அடுத்ததில் உமையவட்கன்பன் எனல் அறிக . தன் அடியோங்களுக்குத் தோன்றாத் துணையாயிருந்தனன் . அடியோங்களுள் எனக்கு அம் மூன்று தோன்றுந் துணையாயிருந்தனன் . ` ஆய் ஆய் ஆய் ஆய்ப் படைத்து உகந்தான் ` என்று இறந்த காலத்தாற் குறித்ததும் ` எனக்கு ` என்றதும் ` ஏன்றான் ` இருந்தனன் ` என்றனவும் நோக்கின் , மாதினியார் முதலிய மூவரையுமே குறித்தது எனல் உறுதிப்படும் . ` அடியோங்கள் ` என்றது தம்மையும் அங்கிருந்த அடியாரையும் குறித்தாகக் கொள்ளல் சிறந்தது . எல்லார்க்கும் தோன்றாத் துணையிருந்தனன் என்று இறந்த காலத்தாற் கூறியதறிக . திருப்பாதிரிப்புலியூர்ப் பிரானுக்குத் ` தோன்றாத்துணை ` என்னும் திருப்பெயருண்மையும் உணர்க . மனத்துள்ளிருக்க ஏன்றவன் தோன்றாத் துணையாயிருந்தனன் . உலகம் படைத்துகந்தவன் தோன்றிய துணையாயிருந்தனன் . ஈன்றாள் , எந்தை , உடன் தோன்றின ராயதே தோன்றிய துணையாதல் . மூன்றாய்த் தோன்றிய துணை எனக்கு . தோன்றாத் துணை அடியோங்களுக்கு என்ற துணைமையுள் முன்னது தமக்கே உரித்தாதலும் , பின்னது தம்மொடு பலர்க்கும் உரித்தாதலும் உணர்த்தினார் . ஏன்றான் - ஏல் + த் + ஆன் : ` இமையவர்க்கு அன்பன் ` ` அடியேனுக்கு அன்பன் ( தி .6 ப .19 பா .11) றன்னை அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற தீர்த்தனைத் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே `. தோன்றாத் துணை - எதிர்மறைப் பெயரெச்சம் . தோன்றாமை - உணர்விலும் உளத்திலும் தோன்றிப்புறத்தே விழிக்குத் தோன்றாமை . தோன்றுதல் - ஆணும் பெண்ணுமாகி , அம்மை நீ அப்பன் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பித்த திலகவதியார் நீ என மூன்றாய்த் தோன்றியமை .

பண் :

பாடல் எண் : 2

பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றும்
சுற்றா யலைகடன் மூடினுங் கண்டேன் புகனமக்கு
உற்றா னுமையவட் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே.

பொழிப்புரை :

நெஞ்சே ! இவ்வுலகை முழுதும் சுற்றிக்கொண்டு அலையை உடைய கடல் மூடிக் கொண்டாலும் நமக்கு உறுதுணையாய் உமாதேவிக்கு அன்பனாய்த் திருப்பாதிரிப்புலியூரில் பிறையைக் கண்ணியாகச் சூடிய சிவபெருமானுடைய எல்லா நலன்களும் செறிந்த திருவடிகளே நமக்கு அடைக்கலம் நல்குவன என்பதனை அறிந்துவிட்டேன் . ஆதலின் , அவற்றையே நமக்குப் பற்றுக்கோடாக எப்பொழுதும் நினைப்பாயாக . நினைந்திடு எப்போதும் - பாடம் .

குறிப்புரை :

நெஞ்சே , கழலே பற்றாய் நினைந்திடப் போது . இந்தப் பாரை முற்றும் சுற்றாய் அலைகடல் மூடினும் நமக்குப் புகல் கண்டேன் . அப்புகல் , உற்றானும் அன்பனும் மதிக்கண்ணியினானும் ஆகிய திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணைவன் கழலே ஆகும் . ( தி .4 ப .94 பா .9) பற்று - திருவடிப்பற்று . ` பற்றுக பற்றற்றான் பற்று , அப்பற்றைப் பற்றுக ( இப் ) பற்றுவிடற்கு `. ( குறள் ). ` ஒற்றை யேறுடையானடியே யலால் பற்றொன்றில்லிகள் மேற்படை போகலே ` ( தி .5 ப .92 பா .10). நினைந்து இட என்று வெவ்வேறு வினையாகக் கொண்டு , தியானம் அருச்சனை இரண்டும் பொருளாகக் கூறலாம் . நெஞ்சே நினைந்து போது இடக் கழலே புகலாகக் கண்டேன் எனலும் , பாரை முற்றும் கடல் மூடினும் நமக்குப் புகல் கழலே எனக் கண்டேன் எனலும் ஆம் . புகல் ; அடைக்கலம் ; கதி ; சரணம் ; போக்கு , வீடு என்பன ஒரு பொருளன . சுற்றாய் - சூழ்ந்து , சுற்று ஆகி ; சூழ்வதாகி . அலைகடல் - அலைகின்ற கடல் ; வினைத்தொகை . மூடுதல் பிரளயகாலக் குறிப்பு . நமக்குப் புகல் ; நமக்குற்றான் என்றிருபாலும் ஒட்டும் இடைநிலை விளக்கு எனலுமாம் . உற்றான் - உறுதுணை . உற்றான் ஒருமை . உற்றார் பன்மை . ` உமையவட்கன்பன் ` என்றதால் , மேல் ( தி .4 ப .94 பா .1) ` இமையவட் கன்பன் ` என்றிருந்ததோ என்றையுறலாகின்றது . முற்றாமதி ; முளை மதி ; பிறை . மதிக்கண்ணி - பிறையாகிய கண்ணி . ` தாரன் மாலையன் தண்ணறுங் கண்ணியன் ` ` கங்கை காணக் கொடார் முடிக் கண்ணியை ` ( திருக்குறுந்தொகை ). ` மாதர்ப்பிறைக் கண்ணியான் ` ( தி .4 ப .3 பா .1,5,8-11).

பண் :

பாடல் எண் : 3

விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங்
கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையா னடிய ரடியடி யோங்கட் கரியதுண்டே.

பொழிப்புரை :

காளை வாகனனாகிய பெருமான் விரும்பி அடியேன் உள்ளத்தில் இருக்கின்றான் . இனி நம்பக்கம் துயரங்கள் அடையா . தீவினைகள் நெருங்கா . கூற்றுவனுக்கு யாங்கள் அஞ்ச மாட்டோம் . பிரமனைப் போன்ற அந்தணர்கள் வாழ்வதும் நாற்பக்கங்களும் தாமரைகள் மலர்ந்திருப்பதுமாகிய திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானுடைய அடியவர்களுக்கு அடித்தொண்டர்களாகிய எங்களுக்குச் செய்ய இயலாத அரிய செயல் என்பது ஒன்று உண்டோ ?

குறிப்புரை :

விடையான் - ` எருத்துவாகனன் ` என் உள்ளத்து விரும்பி இருந்தான் . நமக்கு இங்கு இனி அவலம் அடையா ; அரு வினை சாரா ; நமனை அஞ்சோம் . அடியோங்கட்கு அரியது உண்டே ? இல்லை என்றவாறு . என் உள்ளத்து இருந்தான் - ` மனத்துள் இருக்க ஏன்றான் ` ( தி .4 ப .93 பா .1). ` நமக்கு ` ( தி .4 ப .94 பா .2.). அவலம் - மனக்கவலை . ` நன்றறிவாரிற்கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர் ` ( குறள் . 1072). அபலம் என்னும் வடசொல்லின் திரிபாகக் கொண்டு பலம் இன்மை எனலும் அழுகை எனலும் ஈண்டுப் பொருந்தா . அருவினை - நீங்குதற்கரிய வினை . ` இருவினை `. பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே `. ` அல்லல் என்செயும் ? அருவினை என் செயும் ?` நமனை அஞ்சோம் :- ` நாமார்க்குங் குடி யல்லோம் நமனையஞ்சோம் ` ( தி .6 ப .98 பா .1). புடை ஆர் கமலம் - பக்கத்தில் நிறைந்த தாமரை . ஊர்ப் பக்கத்து நில நீர் வளம் குறித்தது . அக் கமலத்து அயன் என்றது இனம் பற்றியது . அயன் (- பிரமன் ; மலரவன் ) போல்பவர் மறையவர் . வேதியர் வாழும் பாதிரிப்புலியூர் . உடையான் - ` சுவாமி `. அடியர் அடி . அவ்வடிக்கு அடியோங்கள் . அடியோங்கட்கு அரியது உண்டோ ? இல்லை . ஏகாரம் எதிர்மறைப் பொருட்டாய வினா .

பண் :

பாடல் எண் : 4

மாயமெல் லாமுற்ற விட்டிரு ணீங்க மலைமகட்கே
நேயநிலாவ விருந்தா னவன்றன் றிருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பாதிரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையு ணின்றனவே.

பொழிப்புரை :

மலைமகளாகிய பார்வதியிடத்தில் அன்பு நிலைபெற்றிருக்க உள்ளவனாகிய பெருமானுடைய திருவடிக்கண் உலகமெல்லாம் வந்து வழிபடுமாறு திருப்பாதிரிப்புலியூரில் விரும்பித் தங்கியிருக்கும் அப்பெரியவனுடைய தாமரை போன்ற திருவடிகள் மாயை எல்லாம் முழுதும் அகன்று ஆணவம் அகலுமாறு அடியேன் உடைய சிந்தையில் நிலையாக உள்ளன .

குறிப்புரை :

மாயம் எல்லாம் முற்றவிட்டு - மாயையெல்லாம் முழுதும் அகன்று . இருள் நீங்க - ஆணவம் அகல . மாயை நீங்கின் வினையும் நீங்கும் . நீங்கவே மும்மலமும் நீங்கினவாம் . அவை நீங்க மலைமகட்கே நேயம் நிலாவும் . ந - மாயை ( கன்மம் ). ம - ஆணவம் . வா - மலைமகள் . சி - தோன்றாத் துணை . ய - அப்பர் . மாயமெல்லாம் முற்றவிட்டது நகாரநீக்கம் . இருள் நீங்கியது ஆணவ நீக்கம் . மலைமகட்கே நேயம் (- அன்பு ) நிலாவியது , வகாரம் பற்றாக யகாரம் உறுதல் . இருந்தான் ( நல்லான் ) சிகாரம் . நல்லான் மலர்ப் பாதம் அப்பர் சிந்தையுள் நின்றது யகாரம் ஈசனில் ஏகமானதென்க . ஆசு - ஆணவம் . அகலுமா - நீங்குமாறு , அருளுமா - அருளுமாறு . ` ஆசுறு திரோதமேவா தகலுமா சிவமுன்னாக , ஓசைகொள் அதனின் நம்மேல் ஒழித்து அருள் ஓங்கும் . மீள வா சியை அருளுமா ய மற்று அது பற்றா உற்று அங்கு ஈசனில் ஏகம் ஆகும் இது திருவெழுத்தின் ஈடே ` ( சிவப்பிரகாசம் . 92) இதில் ` நம்மேல் ` என்றது நகாரத்தையும் அதன் வழி நின்ற மகாரத்தையும் என்னும் பொருளதாம் . ந + மேல் - நம்மேல் ; உம்மைத் தொகை . இதற்குப் பிறர் உரைத்தவை பொருந்தாமை உணர்க . தேயம் - உலகம் . மேய - மேவிய . நல்லான் - தோன்றாத் துணையாயிருந்து கடலினின்று கரையேறச் செய்த நலம் புரிந்தவன் . சிந்தையுள் பாதம் நின்றன :- ( தி .4 ப .94 பா .7).

பண் :

பாடல் எண் : 5

வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே.

பொழிப்புரை :

மெய்யுணர்தல் இல்லாத அறியாமையை உடைய மனமே ! நமக்கு என்று சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி அவனை மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது , செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ?

குறிப்புரை :

அறிவு இல்லாப் ` பேதை நெஞ்சே , நமக்கு வைத்த பொருள் ஆம் என்று சொல்லி , மனத்து அடைத்து , சித்தம் ஒருக்கி ` சிவாய நம ` என்று சொல்லிக் கொண்டிரு . அப்படி இருக்கின் அல்லால் அத்தன் அருள் பெறலாகுமோ ? ஆகாது . சிவாயநம என்று இரு . ` சிவனே என்று இரு ` என்று ஏவுதல் இயற்றுதல் இரண்டும் இன்றும் உலக வழக்கில் உள . நமச்சிவாயத் திருப்பதிகம் முதலியவற்றுள்ளே தூலவைந்தெழுத்தும் , ஈண்டும் ` சிவாய நம என்று நல்லம் மேவிய நாதன் ` என்பது முதலிய பிற இடத்தும் சூக்கும வைந்தெழுத்தும் , ` விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும் மண்ணினார் மறவாது சிவாய என்று எண்ணினார்க்கு இடம் எழில் வானகம் பண்ணினாரவர் பாலைத் துறையரே ` என்னும் திருக்குறுந்தொகையுள் , அதிசூக்கும வைந்தெழுத்தும் உபதேசித்தருளியவாறு காண்க . ` பேரெழுத் தொன்றுடையான் ` என்று திருவெறும்பியூர்த் திருத்தாண்டகத்தில் உபதேசித்தருளியதும் உணர்தற்பாலது . ` மொய்த்த கதிர் மதிபோல் வார் ` அந்தணர் . அறிவு , கடன்மை தவறாமை , காலந்தவறாமை முதலியவற்றால் இரு சுடரையும் போல்வார் அ ( க்காலத்து ) ந்தணர் . அவர் எனல் சுட்டன்று ; போல்வார் என்னும் முன்மொழிப் பொருளதாய் நின்றதாகும் . ` எழில் வானகம் பண்ணினாரவர் ` என் புழியும் அதுவே ஆகும் . இருக்கின் அருள் பெறலாம் . அல்லால் பெறல் ஆமோ ? ஆகாது . அறிவில்லாமையே பேதைமைக்கு ஏது . பேதைமை மயக்கம் ; சிவாய நம என்று இருந்து அருள் பெறல் வேண்டும் எனும் அறிவு இல்லாமை .

பண் :

பாடல் எண் : 6

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

பொழிப்புரை :

திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே ! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன் . கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன் . வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக .

குறிப்புரை :

கருவாய்க் கிடந்து - கருவிற் கிடந்து . கழலே நினையும் கருத்து - திருவடியையே நினைக்கின்ற காதல் . ` கருதல் என்றதன் மரூஉவே காதல் என்பது . ` கருதியது முடித்தலும் காமுறப் படுதலும் ` என்ற ( பெரும்பாணாற்றுப்படை த் ) தொடரின்கண் உள்ள முற்பகுதிக்கு தன்னெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்க வல்ல தன்மையையும் ` என்று உரைத்ததும் ` ` நுகர்தற்குரிய மகளிரை நுகர்ந்து பற்று அறாக்கால் பிறப்பு அறாமையின் கருதியது முடிக்கவேண்டும் என்றார் ` என்று விளக்கியதும் நோக்கின் , இச்சொற்பொருளும் ` காதல் ` என்றதன் தொல்லுருவும் இனிது விளங்கும் . ` காதல் ` என்றதன் முதனிலை யாது ? இறுதிநிலை யாது ? காது + அல் எனல் பொருந்துமோ ? இங்குத் திருவடிக் காதல் உணர்த்தப்பட்டது . ` காதல் வழிபாடு ` ( தி .12 கழறிற்றறிவார் . 14). உருவாகித் தெரிந்து - கருவின் நீங்கி வெளிப்படற்குரிய உருவாய்த் தெரிந்து . தெரிதல் - ஆராய்தல் ; தேர்தல் . நாமம் ஆகிய திருவைந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றனுருவெனத் தெரிந்து . ` சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும் அவனெழுத்தஞ்சின் அடைவு ஆம் `. ( உண்மை விளக்கம் . 42). உருவாய்த் தெரிதல் செபித்துணர்தலுமாம் . செபித்தலை உருவேற்றுதல் என்று வழங்குப . ` உருவங் காண்டலும் நாடினேன் ` ( தி .4 ப .11 பா .7). நாமம் - திருநாமம் ; திருவைந்தெழுத்து . ` நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் ; சாம் அன்று உரைக்கத் தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே ` ( தி .4 ப .103 பா .3) ` விக்கி அஞ்செழுத்தும் ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே ` ( தி .4 ப .95 பா .4) ` துஞ்சும்போதும் நின்நாமத் திருவெழுத்தஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே ` ( தி .5 ப .27 பா .3). ` திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில் ... ... இறக்கின்றாரே ` ( தி .6 ப .95 பா .6). ` திருநாமம் அஞ்செழுத்தும் சோராமல் எப்பொழுதும் சொல் ` ( தி .11 கைலைபாதி , காளத்திபாதி . 100). பயின்றேன் - நாவாற் சொல்லிச் சொல்லிப் பயிலப் பெற்றேன் . நாவினுக்கு அருங்கலம் ஆக்கிக்கொண்டேன் . திருநீறு திருவாகிப் பொலியும் வண்ணம் சிவாய நம என்று சொல்லி அதனை அழகுறப் பூசினேன் . இவ்வாறு உள்ளம் கருத உரை பயில உடல் அணிய முப்பொறியாலும் தப்பொன்றாவாறு வழிபட்ட அடியேனுக்கு நீ சிவகதி தருவாய் . என் கடன் முடித்தேன் . நின் கடன் சிவகதி தருவது என்றவாறு . பாதிரிப் புலியூர் அரனே நீ சிவகதி தருவாய் . ` கருவாய் `:- ஏழனுருபேற்ற பெயர் . ` உருவாய் ` திருவாய் ` இரண்டனுள்ளும் ` ஆய் ` என்றது இறந்தகால வினையெச்சம் . திருவாய் பொலிய என்னும் பாடத்திற்கு அழகிய வாய் பொலியச் சிவாயநம என்று சொல்லி நீறு அணிந்தேன் எனல் வேண்டும் . ` பொலிய ` என்பது என்று என்பதனது சொல்லெனெச்சத்தொடு முடியும் . பொலியச் சொல்லி . ` தருவாய் ` என்றது ` தருசொல் வருசொல் ஆயிருகிளவியும் தன்மை முன்னிலை ஆயீரிடத்த ` என்றதற்குத் தக நின்றதாயினும் , தா என் கிளவி ஒப்போன் கூற்றே ` என்றதற்குத் தகுமோ எனின் , அதனாலும் தகும் என்க . தக்கவாறு யாதோ எனின் கூறுதும் . ` அறிவினுள்ளே என்றும் நின்றிடுதலாலே இவன் அவன் என்னலாமே ! ` சிவன் சீவன் என்ற இரண்டும் சித்து ஒன்றாம் `. ` அநந்நியமாய் இருக்கும் `. அநந்நியமாகக் காண்பன் ` என்னும் தமிழ்ச் சிவாகமம் ஆகிய சிவஞானசித்தி வசனத்தால் அதுவும் தக்கதாதல் அறிக . ` கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர் ` ( தி .6 ப .89 பா .9). ` கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன் ` ( தி .4 ப .96 பா .5.) ` கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் ; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் ` ( தி .4 ப .99 பா .6).

பண் :

பாடல் எண் : 7

எண்ணா தமர ரிரக்கப் பரவையு ணஞ்சையுண்டாய்
திண்ணா ரசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழனங் கருத்தி லுடையனவே.

பொழிப்புரை :

முதலில் உன்னைத் தியானிக்காமல் , கடலில் விடம் தோன்றிய பின் அமரர்கள் உன்னை வேண்டக்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டாய் . வலிமை நிறைந்த அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவனே ! பண்ணின் பயனாம் நல்லிசைப் பாடல்கள் ஒலிக்கின்ற பாதிரிப் புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனே ! உன் திருவடிகள் எங்கள் உள்ளத்தில் உள்ளன .

குறிப்புரை :

உண்டாய் செற்றவனே , நுதலாய் என அழைத்து , ( நின் ) கழல் ( கள் ) நம் கருத்தில் உடையன என்றார் . எண்ணாதுண்டாய் என்றும் எண்ணாதிரக்க என்றும் இயைத்து எண்ணாமையை அமரர்க்கும் உண்டவனுக்கும் ஏற்றலாம் . தாம் அமரராயிருக்க எண்ணி , நஞ்சு உண்டானும் அமரனாயிருக்க எண்ணாமையும் இரந்தால் வரும் விளைவு யாது என எண்ணாமையும் பிறவும் அமரர் கண் முடியும் . திருநீலகண்டப் பெருமானார்க்கு நஞ்சுண்ணல் அருஞ்செயலன்று எண்ணாமையாவது மதியாமை . பரவை - பரந்தகடல் ; காரணப் பெயர் . திண்ணார் - வலியர் . திண்ணராகிய அசுரர் . திண் ஆர் எனப் பிரித்து வலிமை பொருந்திய என்றலுமாம் . செற்றவனே - அழித்தவனே . பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் :- ` வேதப் பயனாம் சைவம் `. அவ்வேதம் ` பண்ணின் பயனாம் நல்லிசை` நிறைந்து அமைந்த பொருள்களையுடைமையால் , அவற்றைப் பயில்கின்ற சிறப்பு அப்புலியூர்க் குறித்து . சாமகானம் பயில்கின்ற புலியூரான் எனலுமாம் கண்ணார் நுதலாய் - நுதலிற் பொருந்திய கண்ணுடையாய் . கழல் - திருவடி . இடப் பொருளாகு பெயர் நம் கருத்தில் உடையனவே :- கருத்தில் இருந்து நம்மை ஆளாக உடையன . நாம் உடைமை . அவை உடையன .

பண் :

பாடல் எண் : 8

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

பொழிப்புரை :

இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற , திருப்பாதிரிப் புலியூரில் உறையும் , செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் .

குறிப்புரை :

இவ் வையகத்தே தொழுவார்க்கு இரங்கியிருந்தருள் செய் ( கின்ற ) பாதிரிப் புலியூர்த் தீவண்ணனே , ( அடியேன் மறுமையில் ) புழுவாய்ப் பிறக்கினும் , புண்ணியா என் மனத்தே உன்னடி வழுவாதிருக்க வரம் தரவேண்டும் என்று இயைத்துணர்க . யான் புழுவாய்ப் பிறக்கினும் என் மனத்தே உன்னடி வழுவாதிருக்க வரந்தரவேண்டும் என்றதால் , எப்பிறப்பிலும் ஆண்டவனை அடிமை மறத்தலாகாது . ` தனக்குன்றமா வையம் சங்கரன் றன் அருள் அன்றிப் பெற்றால் மனக்கு என்றும் நஞ்சிற் கடையா நினைவன் ; மதுவிரியும் புனக்கொன்றையான் அருளால் , புழுவாகிப் பிறந்திடினும் , எனக்கு என்றும் வானவர் பொன்னுலகோடு ஒக்க எண்ணுவனே !` ( தி .11 பொன் வண்ணத்தந் .43) ` பொய்யா நரகம் புகினும் துறக்கினும் போந்து புக்கு இங்கு உய்யா உடம்பினொடு ஊர்வ நடப்ப பறப்ப என்று நையா விளியினும் நால்நிலம் ஆளினும் நான்மறை சேர் மையார் மிடற்றான் அடி மறவா வரம் வேண்டுவனே ` ( தி .11 பொன் வண்ணத்தந்தாதி . 98) ` படைபடு கண்ணி தன் பங்க , தென்றில்லைப் பரம்பர , வல்விடைபடு கேதுக . விண்ணப்பம் கேள் . என் விதிவசத்தால் , கடைபடு சாதி பிறக்கினும் நீ வைத்தருளு கண்டாய் , புடைபடு கிங்கிணித்தாட் செய்ய பாதம் என்னுள் புகவே ` ( கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் 17) அருள் தரு சீர்த்தில்லை யம்பலத்தான்றன் அருளின் அன்றிப் பொருள் தரு வானத்தரசு ஆதலின் , புழுவாதல் நன்றாம் . ` சுருள்தரு செஞ்சடையோன் அருளேல் துறவிக்கு நன்றாம் இருள் தரு கீழ் ஏழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே `. ( கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் . 23) ` புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே புழுவுக்கு இங்கு எனக்குள்ள பொல்லாங்கு இலை . புழுவினும் கடையேன் ` புனிதன் தமர் குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே `. ( தி .5 ப .91 பா .4). புண்ணியா என அழைத்தது ; தாம் செய்த புண்ணியத்தின் பயனாக உள்ளவனும் வழுவாதிருக்கும் வரமான பயனைக் கொடுப்பவனும் சிவபிரானே என்று குறித்தற்கு . ` புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே நண்ணிய ஞானத்தினால் இரண்டினையும் அறுத்து ` ( சித்தியார் . 283). ` செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் ` ( தி .12 பெரிய . 3644) என்றதில் , கொடுப்பான் சிவன் என்றது அறிக . புனற் கங்கையைச் செஞ்சடைமேல் வைத்த தீவண்ணன் . ` செய் ` வினை முதனிலை பாதிரிப்புலியூரன் என்னும் பெயரொடு கூடி வினைத் தொகை நிலையாயிற்று . ஏவலாகாது .

பண் :

பாடல் எண் : 9

மண்பாத லம்புக்கு மால்கடன் மூடிமற் றேழுலகும்
விண்பா றிசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சனெஞ்சே
திண்பா னமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.

பொழிப்புரை :

நெஞ்சே ! இவ்வுலகம் பாதல உலகுக்குப் போய் அழியுமாறு நிலநடுக்கம் உற்று உலகைக் கடல் வெள்ளம் மூட மற்ற ஏழுலகங்களும் வானத்திலே இருப்புக் குலைந்து சிதறச் சூரிய சந்திரர் தம் நிலையான இருப்பிடத்தைவிட்டுக் கீழே விழுந்தாலும் எதனைப் பற்றியும் அச்சம் கொள்ளாதே . திருப்பாதிரிப்புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனாய் ஞான ஒளியை உடைய பெருமானுடைய திருவடிகளாகிய திண்ணிய பகுதி நமக்குப் பாதுகாவலுக்கு உளது என்பதை நாம் அறிவோம் .

குறிப்புரை :

நெஞ்சே , அஞ்சல் . வீழினும் அஞ்சல் . நமக்குத் திண்பால் ஒன்று கண்டோம் . அத் திண்பால் கழலிணையே மண்ணுலகம் பாதலம் புக்கு அழிய நிலநடுக்கம் ( பூகம்பம் ) உற்றுப் பெருங்கடல் வெள்ளம் பெருக்கெடுத்து வந்து சூழ்ந்து , மற்றும் ஏழுலகும் வீழினும் விண்ணில் திசை தடுமாறி இருசுடரும் வீழினும் நமக்கு அச்சம் இல்லை . நீ அஞ்சாதே நெஞ்சே , அவ்வாறு உலகம் அழியினும் நமக்கு அழியாத இடம் உளது . திண்பால் - அழியாத இடம் ; உறுதியான இடம் ; திண்ணியதாயபால் . திண்பால் ஒன்று கண்டோம் . அவ்வொன்று எது ? கழலிணையே . திருப்பாதிரிப் புலியூரிற்றிருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள கடவுள் . கண்பரவிய நெற்றியையுடைய கடவுள் . நெற்றிக்கண்ணுடையவராகிய கடவுள் . கடவுட் சுடர் - சிவப்பிரகாசம் . கடவுட் சுடரான் - சிவப் பிரகாசன் , சுடரானது கழலிணை . ` வானம் துளங்கில் என் ? மண் கம்பம் ஆகில் என் ? மால்வரையும் தானம் துளங்கித் தலைதடுமாறில் என் ? தண் கடலும் மீனம்படில் என் ? விரிசுடர் வீழில் என் ? வேலை நஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே ! ( தி .4 ப .112 பா .8.) என்றதில் வான்துளக்கம் மண்கம்பம் மலைத் துளக்கம் மலையிடத்தின் தலைதடுமாற்றம் கடல் வறட்சி , விரிசுடர் வீழ்ச்சி முதலிய உலகழி காலத்தும் அழியாத சிவனுக்கு அடியர் ஆனார்க்கு அச்சம் சிறிதும் இன்றென்றவாறு அறிக . மண்பாதலம் புகுதல் - நிலம் நிலையின் இழிந்து ஆழ்தல் ; நிலம் நடுங்குதல் ; பிளத்தல் முதலியன . மால் கடல் மூடுதல் - ` பெருங் கடல் மூடி ` ` இருங் கடல் மூடி ` ( தி .4 ப .112 பா .7); நீர் பெருகுதல் , மண் பாதலம் புகின் நீர் மூடும் . விண்பால் திசை கெடுதல் - நாள் கோள் முதலிய விண் பொருள் வீழத் திசை கெடும் . எட்டுத் திசையிலும் உள்ள எல்லாம் கெடும் . ( தி .4 ப .112 பா .7, 8).

பண் :

பாடல் எண் : 10

திருந்தா வமணர் தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா வரக்க னுடனெரித் தாய்பா திரிப்புலியூர்
இருந்தா யடியே னினிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே.

பொழிப்புரை :

மலையைப் பெயர்க்க முற்பட்ட , நல்லறிவு பொருந்தாத இராவணனுடைய உடலை நெரித்தவனே ! திருப்பாதிரிப் புலியூரில் உறைபவனே ! மனம் திருந்துதல் இல்லாத சமணருடைய தீயவழியிலே ஈடுபட்டு மனம் மயங்கி , இப்பொழுது முத்தியைத் தரும் திருவடிகளில் சரணமாகப் புகுந்து விட்டேன் . இனி , அடியேன் பிறவி எடுக்காத வகையில் அடியேனை ஏற்றுக் கொள்வாயாக .

குறிப்புரை :

வரை எடுத்த பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் , பாதிரிப் புலியூர் இருந்தாய் என்று அழைத்து , ` முத்திதரும் தாளிணைக்கே சரணம் ( அடைக்கலம் ) புகுந்தேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்று கொள் என வேண்டுகின்றார் . அமணர் திருந்தாதவர் ; பகைவர் . அவர்நெறி தீ நெறி . அந்நெறியிற் படுதல் தீநெறிப் படுதல் . அது பட்டுத் திகைத்தேன் . அத் திகைப்பு ஒழிந்து தெளிந்தேன் . தெளிந்து முத்திதரும் தாளிணைக்கே சரணம் புகுந்தேன் . புகுந்தமையால் , யான் இனிப் பிறவாமல் நீ வந்து ஏன்று ( தாங்கிக் ) கொள் . ` கடையவனேனை ... ... சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே ` ( தி .8 திருவாசகம் ). வரை - கயிலை மலை , எடுத்த அரக்கன் ; பொருந்தா அரக்கன் . பொருந்தாமை - தனது சிவ பக்திக்கும் கைலையை எடுத்த செயலுக்கும் பொருத்தமில்லாமை . இதிற் பிறாவமை வேண்டினார் . மேல் ( தி .4 ப .94 பா .8.) பிறப்பு உண்டாயின் மறவாமை வேண்டினார் . மறவாமையும் சிவதரிசனமும் கிடைக்கப் பெற்றால் , மனித்தப்பிறவியும் வேண்டுவதென்றார் . ( தி .4 ப .81 பா .4.) எனினும் , ` வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ` என்றதே குறிக்கோளாகும் .

பண் :

பாடல் எண் : 1

வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலையுளீர்
நான்சட்ட வும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே

பொழிப்புரை :

வானத்திலே நிலவொளி ஒழுக ஒழுக நின்று ஒளிவிடும் பிறையோடு அதன் அருகில் தேன் ஒழுகஒழுக நின்று , அழகு செய்யும் கொன்றை மலரைச் சென்னியில் அணிந்தவரே ! பெண் மானின் பார்வை போன்ற மருண்ட நோக்கினை உடைய பார்வதியின் கணவரீர் ! பளிங்குமணி போன்ற தெளிந்த நீரை உடைய வீழி மிழலையில் உள்ள செம்மையீர் ! அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைத் தொண்டனாக மனத்துக் கொள்ளுங்கள் .

குறிப்புரை :

வான் - வானில் . சொட்டச் சொட்ட - நிலா ஒழுகஒழுக நின்று ; அட்டும் - இடும் ( மதி ), வளர்மதி - பிறை . தேன் சொட்டச் சொட்ட நின்று அட்டும் (- இடும் ) கொன்றை . திருக்கொன்றையைச் சென்னியில் வைத்தீர் சென்னி - தலையுச்சி . சடைக்கு ஆகுபெயராக்கலும் பொருந்தும் . மான்பெட்டை - பெட்டைமான் ; பெண்மான் ; ` பிணைமான் இனிதுண்ணவேண்டிக் கலைமாத் தன் கள்ளத்தின் ஊச்சும் சுரம் ` ( ஐந்திணையைம்பது . 38) என்புழி ஆணைக் கலை என்றும் பெண்ணைப் பிணை என்றும் குறித்தல் அறிக . மான்நோக்கி - அணிமுலையம்மை . ( சுந்தர குசாம்பிகை ). நோக்கி மணாளீர் - நோக்கியின் மணவாளரே . மணி நீர் மிழலையுளிர் :- அழகிய நீர்வளமிக்க திருவீழிமிழலைவாணரே , ` நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின் ` ( குறள் 17) என்னுங் குறளுரையில் , ` தன்னியல்பு குறைதலாவது நீர்வாழுயிர்கள் பிறவாமையும் மணி முதலாயின படாமையும் ஆம் ` என்ற பரிமேலழகர் விளக்கம் அறிக . இங்கே , ` மணி நீர் ` என்றதற்கு அப் பொருளுமாம் . நான் மறக்கினும் என்னைக் குறிக்கொண்மின் . ` சட்ட - செம்மையே ` ` சட்ட என்பது செப்பப் பொருட்டாயதோ ரகர வீற்றிடைச் சொல் . அது சட்டம் என இழிவழக்கில் மகரவீற்றாய் மரீஇயிற்று `. ( சிவஞானபோதமாபாடியம் . சூ . 9. அதிகரணம் . 2. வெண்பா . 2 ).

பண் :

பாடல் எண் : 2

அந்தமு மாதியு மாகிநின் றீர்அண்ட மெண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழ லோம்பு மிழலையுள் ளீர்என்னைத் தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

ஆதியும் அந்தமுமாக உள்ளவரே ! உலகங்களின் எட்டுத்திசைகளிலும் பற்றினையும் பற்று நீக்கத்தையும் உயிரினங்கள் இடையே பரப்புகின்றவரே ! காளையை இவர்தலை விரும்பு கின்றவரே ! விரும்பத்தக்க முத்தீயை அந்தணர் பாதுகாக்கும் மிழலை நகரில் உள்ளவரே ! அடியேனைக் கூற்றுவன் தென் திசையில் செலுத்தும் போது அடியேன் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும் .

குறிப்புரை :

அந்தமும் ஆதியும் ஆகிநின்றீர் - முடிவும் முதலுமாகி நின்றவரே , ` ஈறே முதல் ` ( சிவஞானபோதம் . சூ . 1 அதி . 3 ). அண்டம் எண் திசையும் பந்தமும் வீடும் பரப்புகின்றீர் - அண்டங்களில் எட்டுத் திசையிலும் கட்டும் வீடும் பரவச் செய்கின்றவரே . பந்தமும் வீடும் படைப்போன் காண்க . ( தி .8 திருவாசகம் . 3. 52) ` பந்தமும் ஆய் வீடும் ஆயினார் ` ( தி .8 திருவா . 214). பசு ஏற்று உகந்தீர் - விடையேறுதலை விரும்பினீர் . ` பசுவேறித் திரிவீர் ` ` பசுவேறும் எங்கள் பரமன் `. ஏறு - ஏற்று ; கூறு - கூற்று . நாறு - நாற்று . ஏற்றை (- விடையை ) ஏறினீர் எனலுமாம் . உகப்பு - உயர்வு . வெந்தழல் ஓம்பும் மிழலை - தீவேட்கும் செந்தமிழந்தணர் வாழும் திருவீழிமிழலை . மிழலையுள்ளீர் - மிழலையுள் உள்ளவரே , தென்றிசைக்கே - எமலோகத்துக்கே , என்னை உந்திடும் ( செலுத்திடும் ) போது மறக்கினும் என்னைக் குறிக்கொள்மின் .

பண் :

பாடல் எண் : 3

அலைக்கின்ற நீர்நிலங் காற்றன லம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர் கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கு மிழலையு ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

அலைவீசும் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகவும் உள்ளவரே ! மான்கன்று பொருந்திய கையை உடையவரே ! கலைகளினுடைய உண்மைப் பொருளாக உள்ளவரே ! யாரையும் புறக்கணிக்காமல் அருள் வழங்கும் மிழலைப் பெருமானே ! வாழ்க்கை இறுதிக் காலத்தில் உடம்பில் கைகளும் கால்களும் செயலிழக்க அடியேன் நும்மை மறந்தாலும் அடியேனை மனத்தில் குறித்துக் கொண்டு காக்கவேண்டும் .

குறிப்புரை :

அலைக்கின்ற நீர் - அலைதலைச் செய்கின்ற நீரும் ; நிலம் - மண்ணும் ; காற்று - காற்றும் ; அனல் - தீயும் ; அம்பரம் ஆகிநின்றீர் - விண்ணும் ஆகி நின்றவரே ! ` இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி ` ( தி .6 ப .94 பா .1). எல்லாமாய் அல்லனுமாய் இருப்பவனாதலின் , ` மண்ணல்லை விண்ணல்லை ... ... வாயுவல்லை ... ... எரியுமல்லை ` என எல்லாம் அல்லனாதல் உணர்த்தப்பட்டது . கலைக்கன்று - கலை மான் கன்று . சேரும் கரத்தீர் - பொருந்தும் கையையுடையவரே . ` கானமறியொன்று கையுடையான் ` ( தி .4 ப .93 பா .2). கலைப்பொருள் ஆகி நின்றீர் - கலைகளினுடைய உண்மைப் பொருளாகி நின்றீர் - ` கல்வி ஞானக் கலைப் பொருள் ஆயவன் ` ( தி .5 ப .76 பா .6). விலக்கு இன்றி நல்கும் மிழலையுளீர் - விலக்கலின்றி எல்லார்க்கும் எப்பொருளும் தருகின்ற திருவீழி மிழலையில் திருக்கோயில் கொண்டிருப்பவரே . மெய்யில் - உடம்பில் ; கையொடுகால் - கையும் காலும் ; குலைக்கும் இன்று . ` மெய்யிற் கையொடுகால் அசை யாத காலம் கூட்டினீங்கி உயிர்போங் காலம் . அக்காலம் நும்மை மறக்கலாகும் . அப்பொழுதும் மறவாது நும்மை நினைக்கச் செய்யுந் திறத்தை எனக்கு அருளக் குறிக்கொள்மின் .

பண் :

பாடல் எண் : 4

தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி யஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

தீயை ஓம்பும் தக்கனுடைய தலையைத் தீயிலிட்டு அவன் செய்த வேள்வியை அழித்தவரே ! பேய்களைத் தன் விருப்பப்படி ஏவல்கொள்ளும் காளியைத் தேவியாகப் பெற்றுள்ளவரே ! தம் கையில் முக்கோலாகிய மூங்கிலைச் சுமந்து திரியும் அந்தணர்கள் மிகுந்த மிழலையில் உள்ளவரே ! இறுதிக் காலத்தில் விக்கல் எடுப்பதனால் திருவைந்தெழுத்தை ஓதுதலை மறந்து அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொள்மின் .

குறிப்புரை :

தீத் தொழில் - தீயோம்பும் வேள்வி . ` அக்கிநிகாரியம் `. தீத்தொழிலான் :- ஈண்டு வேள்வி செய்த தக்கனைக் குறிக்கும் . தலை - அவனது தலையை . தலை தீயில் இட்டுச் செய்த வேள்வி செற்றீர் - அவன் செய்த வேள்வியில் அவன் தலையை அவியுணவாக இட்டு , அதனை அழித்தவரே . தக்கன் தலையைப் போக்கி ஆட்டுத்தலை ஆக்கிய செயலைக் கந்தபுராணம் தட்சகாண்டத்திற் காண்க . பேய்த் தொழிலாட்டியைப் பெற்றுடையீர் - பேயின் தொழிலை ஆள்பவளைப் பெற்றுடையவரே . ` பேய் எருதும் பெருச்சாளியும் என்று ஏசத்தகும்படி ஏறுவதே இமையாத முக்கண் கூசத்தகும் தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும் இந்தத் தேசத்தவர் தொழும் நாரைப் பதியுட் சிவக்களிறே ` ( திருநாரையூர்ப் பிள்ளையார் இரட்டைமணிமாலை . 4). ` ஏந்திய சீர் வீர னற்குடியேந்திழைக்கும் இருந்தேன் நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை ... ... நாரைப் பதியுள் விநாயகனே ` ( ? . 14) என்பவற்றால் பேயூர்தியுடையாள் ஒரு பெண் விநாயகர்க்குத் தங்கை முறையிற் கொள்ளப்பெறும் வரலாறு உண்டு . ஈண்டும் ` பேய்த் தொழிலாட்டியைப் பெற்றுடையீர் ` என்று பெற்றுடைமை குறிக்கப்பட்டது . வேய்தொழிலாளர் - அந்தணர் . பிடித்துத்திரியும் வேய் - திரிதண்டு . அது மூங்கிற் கொம்பு . விக்கி - தொண்டை விக்கி . அஞ்செழுத்தும் ஓத்து - திருவைந்தெழுத்தோதுதல் . அது சிவனை மறவாமைக்கு உபாயமாவது .

பண் :

பாடல் எண் : 5

தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுற்றியும் பத்திமையால்
மேற்பட்ட வந்தணர் வீழியு மென்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தே னிறக்க நமன்றமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

தோள்களில் பொருந்திய பாம்புகளையும் கையில் சூலத்தையும் மகிழ்ந்து அணிந்தும் , தொண்டாம் தன்மையால் மேம்பட்ட அந்தணர்கள் வாழும் வீழி நகரையும் அடியேனையும் சிறப்பாக உடையீர் ! நெடுங்காலம் உயிர்வாழ்ந்து பின் இறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இவ்வுலகில் பிறப்பெடுத்த அடியேன் இறக்குந்தருவாயில் இயமனுடைய ஏவலரால் கைப்பற்றப்பட்டு உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

தோள் பட்ட நாகமும் சூலமும் சுற்றியும் - திருத்தோளிற் படுதலுற்ற பாம்பையும் சூலப் படையையும் அணிந்தும் . சுற்றுதல் - அணிதல் . ` உச்சிமீது சுற்றினள் ` ( உபதேச காண்டம் . உருத்திராக்க . 13) பத்திமை - ( அன்புடைமை ) தொண்டாந் தன்மை . மேல்பட்ட - மேன்மை அடைந்த . அந்தணர் - செந்தமிழந்தணர் . வீழியும் - திருவீழிமிழலைப் பதியையும் . என்னையும் - அடியேனையும் . வேறு உடையீர் - சிறப்பாகக் கொண்டவரே . வேறுடைமை :- அம் முதல்வன் வீழியிலும் என்னுள்ளத்திலும் சிறந்து நிற்கின்றான் என்றவாறு . ` தில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான் ` ( தி .8 திருக்கோவையார் ). ` எந்தமாதவம் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை ஆய பராபரன் அந்தம் இல்புகழ் ஆரூர் அரனெறி சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே ` ( தி .5 ப .7 பா .2) ` நெஞ்சே தவம் என் செய்தா ... ... மாமயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்துளும் தங்கவே ` ( தி .5 ப .39 பா .6) ` அடியேனுடைய நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே `. ( தி .5 ப .73 பா .4) ` என்னமாதவம் செய்தனை ... ... செந்நெறி மன்னுசோதி நம்பால் வந்து வைகவே ` ( தி .5 ப .77 பா .2) ` வேறாவுன்னடியேன் விளங்கும் குழைக் காதுடையாய் தேறேன் உன்னையல்லால் சிவனே என் செழுஞ்சுடரே ` ( தி .7 ப .28 பா .8). நாட்பட்டு - நெடுங் காலம் கழித்து . ( தி .4 ப .106 பா .3.) இறக்கப் பிறந்தேன் . இறக்கக் கோட்பட்டு எனல் பொருந்துமேற் கொள்க .

பண் :

பாடல் எண் : 6

கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத் தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயி லுறக்கத்தி லும்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

உருத்திராக்கமாலை அணிந்த கழுத்தை உடையவரே ! சுடுகாட்டில் எரிந்து புலால் நீங்கிய மண்டையோட்டினை உண் கலமாக உடையவரே ! வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே ! உணவு உண்ட போதும் , உணவின்றிப் பட்டினியாய் இருக்கும் போதும் நோயுற்ற போதும் , உறங்கும்போதும் , ஐம்பொறிகளால் செயற்படுத்தப்படும் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

கண்டி - உருத்திராக்கமாலை . கண்டிகை பூண்டு . ( தி .4 ப .111 பா .9) கண்திகைக்கச் செய்வது . கரிகாடு - கரிந்த காடு . பண்டி :- தலையோட்டைக் குறித்து நின்றது . பரிகலம் - உண்கலம் . உண் பொருட்கு ஆகுபெயர் . ` தலையதனிற்பலி கொண்டார் ` ( தி .6 ப .96 பா .1) ` நல்ல பரிகலம் திருத்தி ` ( திருவிளை . விருத்த . 24). பரிகலத்தை யுடையீர் ; பதிவீழிகொண்டீர் - திருவீழிமிழலைப் பதியைக் கோயில் கொண்டெழுந்தருளும் இடமாகக் கொண்டீர் . உண்டியில் பட்டினியில் ; நோயில் உறக்கத்தில் நும்மை மறக்கினும் என்றதுணர்க . உண்டபோதும் , பட்டினியாயிருக்கும்போதும் , நோயுடைய காலத்தும் , உறங்கும் போதும் திருவடி நினைவு அமையாது மறத்தல் இயல்பு . வழிபடுங் காலங்களில் வழிபடுவோர் இருத்தற்குரிய முறைகளைச் சைவபத்ததிகள் விதித்தவாறு நோக்கிக்கொள்க . ` உலாவல் நிற்றல் உறக்கம் உணர்வு உண்டிபட்டினி ` ( சிவஞான சித்தியார் . 285) என்றவற்றை நோக்கி ஒன்றற்கொன்று மறுதலையாகப் பொருத்திக்கொள்க . ஐவர் கொண்டியிற் படுதல் - ஐம்புலக் கள்வர் கொள்கையிற் சார்தல் ; புலனெறியிற் போதல் . ` புலனெறி நீத்து அருள்வழிபோய்ப் போதமாம் தன்வலியைப் பொத்திநின்ற மலவலிவிட்டு ` ( திருவிளையாடற் புராணம் ) கொண்டி :- கொள் + தி = கொண்டி . உள் + தி = உண்டி . உள் உண் என்றாயிற்று . பெள் - பெண் ; எள் - எண் என்பனபோலும் .

பண் :

பாடல் எண் : 7

தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி மிழலை யிருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேற் சிவந்ததொர் பாசத்தால் வீசியவெம்
கூற்றங்கண் டும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

இவ்வுலகைப்படைத்த பிரமனுடைய தலை ஒன்றனைக் கொய்தவரே ! தூய வெள்ளிய காளையை வாகனமாகக் கொண்டவரே ! அழகிய வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே ! கோபம் கொண்டு என்மேல் சிவந்ததொரு பாசக் கயிற்றை வீசும் கூற்றுவனைக் கண்டு அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

தோற்றம் கண்டான் - ` உண்டாக்கும் வண்ணம் கண்டான் ` ( சகல கலாவல்லி மாலை . 1) சிரம் - தலை . ஒன்று - ஐந்தலையுள் ஒன்று . ` ஆதிக்கணான் முகத்தில் ஒன்று ... ... தன்கை வாளால் சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவான் `. ( தி .6 ப .20 பா .1). ` தாமரையோன் சிரம் அரிந்து கையிற் கொண்டார் ` ( தி .6 ப .96 பா .1). தூய வெள்ளெருது :- ` வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பிலேனே ` ( தி .4 ப .84 பா .7). ஏற்றம் - ஏறுந்தொழில் . ஏறு , நாறு , சீறு , மாறு , கூறு முதலியவை ஏற்றம் , நாற்றம் , சீற்றம் , மாற்றம் , கூற்றம் என அம்மீறுற்று நிற்றல் அறிக . தோற்றம் (+ தோன்று + அம் ). எழில் - அழகு . திருவீழிமிழலையில் எழுந்தருளி யிருத்தலையுடையீர் . கூற்றம் சீற்றம் கொண்டு . கொண்டு வீசிய கூற்றம் . சிவந்ததொருபாசம் (- கயிறு ) வெங்கூற்றம் - ` கொடுங்கூற்று `. இறக்கும்பொழுது இறைவனை இறையும் எண்ணுதலியலாது . ` நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் , சாம் அன்றுரைக்கத் தருதி கண்டாய் எங்கள் சங்கரனே `. ( தி .4 ப .103 பா .3).

பண் :

பாடல் எண் : 8

சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் சூடிச்சொக் கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலையுள் ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

நீர்ச் சுழிகளை உடைய கங்கையையும் சந்திரனையும் சூடிச் சுத்த நிருத்தம் என்ற ஆடலை நிகழ்த்துபவரே ! பிறரால் பழிக்கப்படும் பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றியவரே ! நெற்றிவிழியிலிருந்து தோன்றிய நெருப்பு காமனது உடலைச் சாம்பலாக்குமாறு செய்தவரே ! வீழிமிழலையில் உள்ளவரே ! அடியேன் பிறவிக்கடலின் சுழியில் அகப்பட்டு உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

சுழி - நீர்ச்சுழி , திங்கள் - பிறை , சொக்கம் - சுத்த நிருத்தம் ( சிந்தாமணி . உரை . 672). பொன்னனையாள் சுத்த நிருத்தம் ஆடிப் பூவணவாணரைச் சேவித்து அடியாரை அருச்சித்து அருத்தி அருந்தும் நியமம் உணர்த்திய திருவிளையாடற் பாடலினுரையில் , நூற்றெட்டுக் கரணங்களை உடைத்தாய்ச் சாந்திக்கூத்து நான்கனுள் ஒன்றாயுள்ள சுத்த நிருத்தம் ` என்றெழுதியதறிக . சொக்கம் பயின்ற காரணத்தாலும் சொக்கன் எனப் பெயர் பெற்றான் கால்மாறியாடிய பால் வெண்ணீற்றன் . ` சடைமேல் மதியும் சூடித் திண்தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசைசேர நடமாடி ` ( தி .6 ப .45 பா .1) பழிப்பட்ட - பழியைப் பட்ட . அரை - திருவரையில் . பற்று - பற்றுதலை ; முதனிலைத் தொழிற் பெயர் . படர் தீ - படர்கின்ற தீ ; இயல்படை . விழிப்பட்ட காமனை அவ்விழித்தீப் பருகவிட்டவரே . திருவீழிமிழலையில் உள்ளவரே . பிறவிச்சுழி - பிறவியென்னும் பெருங்கடல் நீர்ச்சுழியில் , பிறவிச்சுழிப்பட்டு மறத்தலாவது :- பற்றறாது , மண் பொன் பெண் என்னும் மூன்றன் வகையிலும் ஆசைகொண்டு பிறந்திறந்துழலுதல் . அதனால் , திருவடியில் நினைவு செல்லாது .

பண் :

பாடல் எண் : 9

பிள்ளையிற் பட்ட பிறைமுடி யீர்மறை யோத வல்லீர்
வெள்ளையிற் பட்டதொர் நீற்றீர் விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப் பிக்க நமன்றமர்தம்
கொள்ளையிற் பட்டு மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

இளைய பிறைச்சந்திரனை முடியில் அணிந்தவரே ! வேதம் ஓதவல்லவரே ! வெள்ளிய நீற்றை அணிந்தவரே ! நீர் விரிந்து பரவிய மிழலையில் இருப்பவரே ! ஐம்புலப்பொறிகளின் நடுவில் அகப்பட்டு அவை என்னைக் கண்டு சிரித்து என்னைப் பலகாலும் தேய்க்கும்படி இயமதூதுவருடைய கொள்ளையிடும் செயலில் அகப்பட்டு அடியேன் உம்மை மறப்பினும் அடியேனைக் குறிக் கொண்மின் .

குறிப்புரை :

பிள்ளையிற்பட்ட பிறை - பிள்ளைப் பிறை ; இளம் பிறை . ` பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான் ` ( தி .5 ப .20 பா .10). மறை ஓதவல்லீர் - வேதாகமங்களைத் தோற்றி அவற்றை ஓத வல்லரே . வெள்ளையிற்பட்டதொர் நீற்றீர் :- ` வெள்ளை நீறு ` ( தி .3 ப .120 பா .2). ` விரிநீர் மிழலையுள்ளீர் `:- நீர்வள மிகுதிகுறித்தது . ( தி .2 ப .95 பா .10) நள்ளை - நடு , ஐவர் நள்ளையிற்பட்டு - ஐம்புல வேடர் நடுவகப்பட்டு . நக்கர் - சிரித்தலுடையவர் . சிரிப்போர் அவ்வைவர் . பிக்க - பிய்க்க . இறக்குங்கால் ஐவரும் பிரிதலைக் குறித்தது . பிய்த்தல் - பிரித்தல் . நமன்தமர் - எமதூதர் . கொள்ளை - கொள்ளல் . ஐவர் நக்கு அரைப்பிக்க எனப் பிரித்து ஐம்புலவேடரும் நகைத்து , அரைத்தல் செய்ய . அரைத்தல் , அரைப்பித்தல் அரைபடுவது உயிர் . அரைப்பது துயரம் . அரைப்பிப் பவர் ஐவர் . அரைதல் - தேய்தல் . உயிர் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் விட்டு நீங்கி இறக்கும் நிலையில் அதுபடும் துன்பத்தை ஐவர் அரைப்பிக்க அரைபடுவதாகக் கூறினார் . ` நமன் தமர்தம் கோட்பட்டு நும்மை மறக்கினும் ` ( தி .4 ப .95 பா .5) ஐவர் கொண்டியிற் பட்டு மறக்கினும் ( தி .4 ப .95 பா .6) பிறவிச் சுழிபட்டு நும்மை மறக்கினும் ( தி .4 ப .95 பா .8.) என்று மேல்வந்தவாறே ஈண்டும் ` நமன்தமர்தம் கொள்ளையிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மின் ` என்றவாற்றால் , சிவபிரானை எளிதில் மறத்தற்குக் காரணம் கூறியவாறும் , அவன் குறிக்கொண்டாலன்றி அவன் திருவடி நினைவுண்டாதல் அரிதென்று குறித்தவாறும் உணர்க .

பண் :

பாடல் எண் : 10

கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

மனத்தில் ஆத்திரம் கொண்டு இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பயன்படுத்திய கைகளும் உடம்பும் நெரிக்கப்பட்டு நெறுநெறு என்ற ஒலியோடு அழியும்படி அவனை அழுத்திய திருவடிகளால் கூற்றுவனை அழித்தவரே ! நறுமணம் கமழும் கொன்றை மாலையை முடியில் அணிந்தவரே ! மிக்க நீர்வளமுடைய மிழலையில் உள்ளவரே ! உயிர் போகும் நேரத்தில் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

கறு - கறுவுதல் . ` கறுத்தானவர் தம் செயல் ` ( கந்த புராணம் தாரகன் வதை . 158); முதனிலைத் தொழிற்பெயர் . கறுக் கொண்டு . கறுவுதலையுற்று . அரக்கன் - இராவணன் . கயிலையைப் பற்றிய கையும் இற ; மெய்யும் இற ; நெருக்கென்று இற . மெய் - உடல் . நெருக்கு கனல் , சுருக்கெனல் முதலியன வழக்கு . இறல் - ஒடிதல் ; முரிதல் . சேவடியால் நீறு செய்தீர் . கூற்றை நீறு செய்தீர் . கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காய் ` ( தி .4 ப .81 பா .2). ` காலன்றன்னைக் கால்தனிற் பிதிரவைத்தார் ` (312). ` காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி ` ( தி .6 ப .56 பா .10) வெறி - மணம் . வெற்றிவேர் , வெட்டி வேர் மரூஉ . கொன்றைமலர் மாலையை முடியிலே அணிந்தவரே . ` விரி நீர்மிழலையுள்ளீர் `. தி .4 ப .95 பா .9. ` இறக்கு இன்று ` இறக்கின்று - இறக்கும் இன்று . ஆண்டும் குலைக்கும் இன்று ( தி .4 ப .95 பா .3.) எனல் வேண்டும் போலும் .

பண் :

பாடல் எண் : 1

கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

ஒலிக்கும் தீயினைக் கையில் ஏந்திய தேவனே ! திருச்சத்திமுற்றத்தில் உகந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தே ! தலைமை உடையவனாய் விரைந்து வந்து உயிரைப் போக்கும் திறமையை உடைய கூற்றுவன் என்னைத் துன்புறுத்துவதன் முன்னம் , தாமரைப் பூப் போன்ற திருவடிகளின் அடையாளத்தை என்மேல் பொறித்து வைப்பாயாக . அங்ஙனம் பொறிக்காது வாளா விட்டு விட்டால் அழியாத பழி முழுதும் உன்னைச் சூழ்ந்து கொள்ளும் என்பதனை நீ உணர்வாயாக .

குறிப்புரை :

கூற்றம் கோவாய்க் குமைப்பதன் முன் என்மேல் பூவார் அடிச்சுவடு பொறித்துவை . முடுகி அடுதிறல் . திறலையுடைய கூற்றம் . கோ - தலைமை ; தலைவன் . முடுகி - விரைந்து . அடுதல் - கொல்லல் . திறல் - வலிமை . குமைப்பது - அழிப்பது . பூ தாமரை மலர் . ஆர் - உவமவுருபு . சுவடு - குறி . போக விடில் - பொறிக்கப் பெறாது கழிய விட்டால் . மூவா முழுப்பழி - அழியாத பழிமுழுதும் . மூடும் - சூழ்ந்து கொள்ளும் . முழங்கும் தழல் - ஒலி செய்யும் தீ . தழற்கை - தீயேந்தியகை . கைத்தேவா - கையையுடைய தேவனே . திருச்சத்தி முற்றம் , முற்றத்து உறையும் - முற்றத்தில் எழுந்தருளியிருக்கும் . சிவக்கொழுந்தே - சிவமாகிய கொழுந்தே . சிவக்கொழுந்தே கூற்றம் ( என்னைக் ) குமைப்பதன் முன் ( நின் ) பூவடிச் சுவடு என்மேற் பொறித்துவை . விடில் மூவா முழுப்பழி ( நின்னை ) மூடும் என்றார் . ` காவாதொழியிற் கலக்குமுன்மேற்பழி ` ( தி .4 ப .109 பா .2).

பண் :

பாடல் எண் : 2

காய்ந்தா யனங்க னுடலம் பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தா யுயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பா யடியேற் கருளாயுன் னன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே ! மன்மதன் உடம்பு சாம்பலாகுமாறு அவனை வெகுண்டாய் . கூற்றுவனை அவன் உயிர்போகும்படி உதைத்தாய் . உன் திருவடிகளைப் பணிபவர்களின் பல பிறவிகளையும் அறுத்தருளுவாய் . உன்னை வழிபடும் அடியவர்களுடைய உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்ட நீ அடியேனுக்கு அருள்செய்வாயாக .

குறிப்புரை :

அனங்கன் உடலம் பொடிபடக் காய்ந்தாய் - மன்மதனது உடலை நெற்றிக்கண் ணெருப்பால் பொடிபட்டழிய நோக்கினாய் . காலனை முன் உயிர்செகப் பாய்ந்தாய் - எமனை உயிர் உடலின் நீங்கப் பாய்ந்துதைத்தாய் . பாதம் பணிவார்தம் பல் பிறவி ஆய்ந்து ஆய்ந்து அறுப்பாய் - திருவடிகளை வணங்கும் அன்பர்களுடைய பல பிறவிகளும் நுணுகி நுணுகி அறச் செய்தருள்வாய் . ` ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் .` ( தொல்காப்பியம் . 814). அடியேற்கு அருளாய் :- அம் மூன்றனுள் ஒரு திறத்திலேனும் அருள் செய்வாய் . உன் அன்பர் சிந்தை சேர்ந்தாய் - உன் அன்பராகிய அடியவர் உள்ளத்தை அகலாதவனே . திருச்சத்திமுற்றத்துறையும் சிவக் கொழுந்தே , காய்ந்தாய் , பாய்ந்தாய் , அறுப்பாய் , சேர்ந்தாய் என அழைத்து , அடியேற்கு அருளாய் என்று வேண்டினார் .

பண் :

பாடல் எண் : 3

பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

தேவர்கள் உள்ளத்தில் இருப்பவனாய் உள்ள திருச்சத்திமுற்றச் சிவக் கொழுந்துப் பெருமானே ! பல துளைகள் உள்ள கூடாகிய இவ்வுடம்பில் புகுந்து ஐம்பொறிகளும் நாள்தோறும் அடியேனுக்குப் பற்றுக்கோடான உன் திருவடிப்பற்றினை அழிக்க , மத்தால் குழப்பப்படும் தயிர்போலச் சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக . தலைவனே ! அடியேன் உன் அடைக்கலம் என்பதனை நோக்குக .

குறிப்புரை :

பொத்து ஆர் குரம்பை - துளை ( ஒன்பது ) பொருந்திய குடில் ( உடம்பு ). ` பொத்தை ஊன் ` ` மலம் சோரும் ஒன்பது வாயிற் குடில் ` ( தி .8 திருவா .) ` ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும் போது உணரமாட்டேன் ` ( தி .6 ப .99 பா .1) ` ஒழுக்கறா ஒன்பதுவாய் ஒற்றுமை யொன்றுமில்லை .` ( தி .4 ப .52 பா .2) ` ஒன்பதுபோல் அவர் வாசல் வகுத்தன ` ( தி .4 ப .18 பா .9) ஐவர் குரம்பை புகுந்து - ஐம்பொறி வேடர் ( என் ) உடலிற் புகுந்து . நாளும் - நாள்தொறும் . புகல் அழிப்ப - எனக்குப் புகலிடமான நின் திருவடிப் பற்றை அழிக்க . மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை :- ` மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம் .` ( தி .4 ப .52 பா .9). மத்து பொருந்திய தயிர் போலக் கலங்கும் என் மனம் . சிந்தை மறுக்கு - மனக் கலக்கம் . மறுக்கு - ( மறுகலுடையது ) கலக்கம் . ஒழிவி - ஒழியச் செய் . ` மத்துறு தண் தயிரின் புலன் தீக்கதுவ வித்துறுவேன் ` ( தி .4 ப .14 பா .1) ` வல்மத்து இட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன் ` ( தி .4 ப .41 பா .10) ` மத்திடு தயிராகி ` ( தி .4 ப .5 பா .3) அத்தா - தலைவா ; ஆண்டவனே . அடியேன் நினக்கே அடைக்கலம் அமரர்கள் தம் சித்தா - தேவர்களுடைய சித்தியாக உள்ளவனே ; சித்தத்திலுள்ளவனே ; சித்தானவனே . திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே , என் சிந்தை மறுக்கு ஒழிவி என்க . ` இனி இடையாயினார் பெண் என்பது எற்புச் சட்டகம் ; முடைக்குரம்பை ; புழுப் பிண்டம் ; பைம் மறியா நோக்கப் பருந்து ஆர்க்கும் தகைமைத்து ; ஐயம் பித்தும் வளியும் குடரும் கொழுவும் புரளியும் நரம்பும் மூத்திர புரீடங்களும் என்றிவற்றது இயைபு . பொருளன்று . பொருளாயின் . பூவே சாந்தே பாகே எண்ணெயே அணிகலனே என்றிவற்றாற் புனைய வேண்டாவன்றே தான் இயல்பாக நன்றாயின் ? என்று அதன் அசுபத்தன்மை உரைப்பக்கேட்டு நீங்குவர் .` ( இறையனார் களவியல் . பாயிரம் ` காமம் ` பற்றிய ஆராய்ச்சி ) என்றதால் உடலின் இழிவு புலப்படுத்தினார் . ` மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற் பொரு மத்துறவே ` ( தி .8 திருவாசகம் . 133).

பண் :

பாடல் எண் : 4

நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

வில் போன்ற புருவத்தை உடைய பார்வதி கணவனே ! செல்வனே ! சிவக்கொழுந்தே ! நிலைபேறு இல்லாத உடம்பை நிலைபேறு உடையதாகக் கருதி இந்த நீண்ட உலகத்திலே பல துன்பங்களாகிய குழிகளில் விழுந்து சோர்வுறும் அடியேனை நீயாகவே வந்து அடிமை கொண்டுள்ளாய் . அடியேனைக் கை விட்டால் அழிந்துவிடுவேன் .

குறிப்புரை :

வில் ஏர் புருவத்து உமையாள் கணவா - வில்லை ஒத்த திருப்புருவத்தையுடைய உமையம்பிகையின் கண்போன்றவனே ; செல்வா - சென்றடையாத நிலையுடைய பெருஞ் செல்வனே , திருச்சத்தி முற்றத் துறையும் சிவக் கொழுந்தே , வந்து ஆண்டு கொண்டாய் . எத்தகைமையேனை ? நில்லாக் குரம்பை நிலையாக் கருதி இந் நீள் நிலத்து ஒன்று அல்லாக் குழி வீழ்ந்து அயர்வு உறுவேனை . நில்லாக் குரம்பை - நிலையில்லாத உடல் ஆகிய குடி செய் ( குடிசை . மரூஉ ). நில்லாத குடிசையை நிற்பது என்று எண்ணியது . ஒன்று அல்லாக்குழி ` பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறியில் சமண்நீசர் புறத்துறையாம் அவ்வாழ் குழியின் விழுந்தெழும் ஆறு அறியாது மயங்கி அவம்புரிவேன் ` ( தி .12 அப்பர் புராணம் . 73) ` பரசமய நெறிக்குழியில் விழுந்தறியாது மூளும் அருந்துயர் உழந்தீர் ` ( ? . 64) ` வினைப்பர சமயக்குழி நின்றும் எடுத்தாள வேண்டும் ` ( ? . 49) ஒரு பொருளாகக் கருதத் தகாத சமண் சமயக்குழி ; ஒன்று அல்லாத பல குழி . உலகப்பற்றால் விளையும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு துன்பக் குழியாகும் . இடறிய எல்லா இடமும் இடர்க்குழியே . ` பாவப் படுகுழி `. நரகக்குழி ` பிறவிக்குழி ` ` சித்தாந்தத்தே சிவன்றன் திருக்கடைக்கண் சேர்த்திச் செனன மொன்றிலே சீவன் முத்தராக வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிந்து வரும்பிறப்பை அறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்கராகிப் பித்தாந்தப் பெறும் பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங் குழியில் வீழ்ந்திடுவர் இது என்ன பிராந்தி ?` ( சித்தியார் ) விடிற் கெடுவேன் ( தி .4 ப .96 பா .5.) ` வெற்றடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் ` ( தி .8 திருவாசகம் . 127).

பண் :

பாடல் எண் : 5

கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியில்
தெருவிற் புகுந்தேன் றிகைத்தடி யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழு முமையாள் கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

வடிவால் விளங்கும் பார்வதி கணவனே ! செல்வத்தால் பொலிவுபெறும் சத்தி முற்றப் பெருமானே ! கருப்பையை அடைந்த காலத்தும் உன் திருவடிகளையே தியானித்தேன் . கருவில் இருந்து வெளிப்பட்டு வளர்ந்து தெருவில் புகுந்தபோது வியப்புற்ற அடியேனை உலகப்பொருள்களை வியப்போடு பற்றும் நிலையைப் போக்குவிப்பாய் . அடியேனை உலகப்பற்றில் விடுவாயானால் வீணாகக் கெட்டுவிடுவேன் .

குறிப்புரை :

உருவின் திகழும் உமையாள் கணவா - அழகின் விளங்கும் உமையம்பிகையின் கண்ணாவானே . திருவின் பொலிகின்ற சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே . சத்தி முற்றம் திருவாற் பொலிகின்ற சிறப்புணர்த்திற்று . திருச்சத்தி முற்றம் திருமகளாலும் பொலிகின்றது . கருப்புவியில் - கர்ப்பலோகத்தில் . கரு உற்று இருந்து - கருப்பையை அடைந்திருந்து . உன் கழலே நினைந்தேன் ;- ( தி .4 ப .94 பா .6) குறிப்பைப் பார்க்க . தெருவில் புகுந்தேன் திகைத்து :- கருவினின்றும் வெளிப்பட்டு வளர்ந்து தெருவில் முதன் முதலாக உலாவப் புகுந்தபோது திகைத்தல் குழவிகட்கு இயல்பு . அந் நிலைமையை முதியோர்க்கு உலக வாழ்க்கையிற் பொருத்தியுரைத்துக் கொள்க . திகைப்பு ஒழிவி - திகைத்தலை ஒழியச்செய் . ` மறுக்கொழிவி ` ( தி .4 ப .96 பா .3) விடில் கெடுவேன் :- ( தி .4 ப .96 பா .4) ` போகவிடில் மூவா முழுப்பழி மூடும் ` ( தி .4 ப .96 பா .1.) கருவில் நிரம்பியதும் பழைய உணர்வு கூடப்பெற்று , கடவுளை நினைந்திருத்தல் உயிர்க்கியல் பாதலைச் சிவதருமோத்தரம் , தணிகைப் புராணம் அகத்தியனுக்கு உபதேசித்த படலம் முதலியவற்றுட் காண்க . ( தி .4 ப .109 பா .2.)

பண் :

பாடல் எண் : 6

வெம்மை நமன்றமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் றாளென்றன் னெஞ்சத் தெழுதிவை யீங்கிகழில்
அம்மை யடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

பேரின்பவீட்டை நல்கும் சத்திமுற்றச் சிவக்கொழுந்தே ! கொடிய இயமனுடைய ஏவலர் மிகுதியாகக் கூடி என்னைக் கீழே தள்ளுவதன் முன் இம்மை வாழ்விலேயே உன் திருவடிகளை என் நெஞ்சில் சுவடுபடும்படியாக வைப்பாயாக . இவ்வுலகில் என்னை நீ இகழ்ந்து புறக்கணித்து இருப்பாயானால் மறுமையிலே நீ அடியேனுக்கு அருளப் போகும் செய்தியை யாவர் அறிவார்கள்?

குறிப்புரை :

வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் - கொடுங்கூற்று வன்படைஞர் மிகுந்து என்னைக் கலந்து என்னுடலின் நீங்கி உடலை விழச் செய்தற்கு முன்பே , இம்மை - இப்பிறவியிலேயே உன்தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை - உன்திருவடியை என் உள்ளத்தில் எழுதிப் பதிவு செய்துவை . ` பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது பொறித்தான் ` என்று கீழ் வேளூரிற் கேடிலியைப் போற்றியக்கால் உணர்த்திய உண்மையை இங்கு நினைக . ஈங்கு இகழில் - இப்பொழுது அலட்சியம் பண்ணினால் , அம்மை - மறுமையில் , அடியேற்கு - அடியனேற்கு , அருளுதி - அருள்வாய் . என்பது - என்னும் நிலையை . இங்கு - இப்பிறவியில் , அறிவார் ஆர் - உணர்வார் எவர் ? ஒருவரும் இலர் . செம்மை - பேரின்பவீடு , சிறப்பு என்னுஞ் செம்பொருள் ` ( குறள் . 358) ` வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருள் ` ( பரிமேலழகருரை ). ` செம்மையுள் நிற்பராகிற் சிவகதி விளையும் ` ( தி .4 ப .76 பா .2.) என்றதன் குறிப்பை நோக்குக . ` திருச்சத்தி முற்றத் துறையும் சிவக் கொழுந்தே `.

பண் :

பாடல் எண் : 7

விட்டார் புரங்க ளொருநொடி வேவவொர் வெங்கணையால்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளும்
சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

வண்டுகள் நெருங்கும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே ! சிவக்கொழுந்தே ! பகைவருடைய மதில்கள் ஒருநொடியில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய் . அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக .

குறிப்புரை :

தும்பி - வண்டு வகையுள் ஒன்று . பம்பும் - நெருங்கும் . மட்டு - தேன் ; ஆர் - பொருந்திய . ( மலர் அணிந்த ) குழலி - குழலாள் ( உமையம்மையார் ). மலை - இமயம் . மலை மகள் - இமாசல குமாரி . திருச்சத்திமுற்றம் என்னும் பெயரின் காரணம் புலப்பட மலைமகள் பூசை மகிழ்ந்தருளும் சிட்டன் என்றார் . திருச்சத்திமுற்றத்துறையுஞ் சிவக்கொழுந்தே , மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளும் சிட்டா , பகைவர் புரங்கள் ஒரு நொடியில் வேவ ஒரு கணையால் சுட்டாய் என அழைத்து , என் பாசத் தொடர்பு அறுத்து ஆண்டுகொள் என்று வேண்டினார் . விட்டார் - பகைவர் . ஒரு நொடி - கைந்நொடிப் பொழுதாகிய ஒரு மாத்திரையில் . வெங்கணை - சுடுகணை ( - அம்பு ). பாசத் தொடர்பு - பாச சம்பந்தம் ; பாசப் பற்று . சிட்டா - நல்லறிவுருவினனே . ` குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டருளும் என்றும் இனிய பெருமான் ` ( தி .12 பெரியபுராணம் . திருநா . 193).

பண் :

பாடல் எண் : 8

இகழ்ந்தவன் வேள்வி யழித்திட் டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட வன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த வடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

விளங்குகின்ற சத்திமுற்றச் சிவக்கொழுந்தே ! நீலகண்டா ! உன்னை அலட்சியம் செய்த தக்கனுடைய வேள்வியை அழித்து வேள்விக்கு வந்த தேவர்கள் தம்பிழையைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்ட உலகப் பிரசித்தமாக அந்நாளிலேயே வெற்றி கொண்ட உன் செயலைப் புகழ்ந்த அடியேனுடைய குறைபாடுகள் நீங்க விரும்பி அருளுவாயாக .

குறிப்புரை :

திருச்சத்தி முற்றத்துறையும் சிவக்கொழுந்தே , நீலகண்டா , அடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய் . திகழ்ந்த சத்திவிலாசம் மிக்க . இகழ்ந்தவன் - தக்கன் . சிவ நிந்தை செய்தவன் . வேள்வி - தக்கன் செய்த யாகம் . அழித்து இட்டு - வேள்வியை அழித்து , தக்கனுக்கு ஆட்டுத்தலை இட்டு , ஏனையோர்க்கு வெவ்வேறு தண்டனை விதித்திட்டு . இமையோர் - தேவர் . பொறை - பொறுத்தருள்க என்று இரந்து வேண்ட ; பொறை - குற்றம் பொறுத்தல் . நிகழ்ந்திட - பிரசித்தியாக . அன்றே - அந்நாளிலேயே . விசயமும் - பெருவெற்றியும் . கொண்டது - அடைந்தது . கொண்டதைப் புகழ்ந்த அடியேன் எனலாம் . புன்மைகள் - புல்லிய தன்மைகள் , குற்றங்கள் ; சிறுமைகள் . தீரப் புரிந்தருளாய் - ஒழியச் செய்தருள்வாய் . புரிதல் - விரும்புதல் . ( புரிந்து ) விரும்பி எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன்
எக்காத லெப்பய னுன்றிற மல்லா லெனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னும்
திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

சான்றோர் வாழும் தில்லைநகரில் விருப்புடையவனே ! வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வடதிசைக்கு உரியவனே ! சிவக்கொழுந்தே ! பொருத்தமான விருப்பத்தைப் பொருந்திச் சமண் சமயத்தை விடுத்து உன் அடைக்கலமாக வந்து சேர்ந்தேன் . உன்னைப் பற்றிய செய்திகளைத் தவிர வேற்றுச் செய்திகளில் எந்த விருப்பமும் இல்லை . அவற்றால் எனக்கு எந்தப் பயனும் இல்லை .

குறிப்புரை :

தகு + ஆர்வம் = தக்கார்வம் . தக்க ஆர்வம் என்பதன் திரிபுமாம் . மீண்டும் சைவம் புகுதல் வேண்டும் என்னும் தக்க ஆர்வம் திருநாவுக்கரசு நாயனார் தம் மரபுக்குத் தக்க ஆர்வம் மீண்டு சைவம் புகக் கொண்டதும் தகாத ஆர்வம் சமண் சாரக்கொண்டதும் ஆம் . சமண் - சமண் சமயம் ; சமணர் உறவை . தவிர்ந்து - விட்டு . உன்றன் சரண் - ` உன் கழலே ` ( தி :-4 ப .94 பா .6, ப .96 பா .5.) ` உன் பாதமே ` ( தி .4 ப .99 பா .6). ` சரண் புகுந்தேன் ` என்றதால் அடைக்கலம் புக்கேன் எனலுமாம் . ` அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரணமாக , வந்த காலன்றன் ஆருயிரதனை வவ்வினாய் ` ( சுந்தரப்பெருமாள் ). எக்காதல் - எப்பற்று . எப்பயன் - யாது பயன் . உன் திறம் அல்லால் எக்காதலும் எப்பயனும் எனக்கு இல்லை என்றபடி ` உளதே ` என்ற ஏகாரம் எதிர்மறை . மிக்கார்தில்லை - மேலோர் வழிபடும் தில்லை . மிக்கார் - தில்லை வாழ்ந்தணர் ; பதஞ்சலி வியாக்கிரபாதர் முதலோருமாம் . எல்லாக் கோயிலினும் மிக்கு ஆர்தில்லையுமாம் . ` விருப்பன் ` என்பதன் விளி விருப்பா என்பது . மிக - மேலாக . வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் திக்குடையாய் , திருச்சத்தி முற்றத் துறையும் சிவக்கொழுந்தே .

பண் :

பாடல் எண் : 10

பொறித்தே ரரக்கன் பொருப்பெடுப்புற்றவன் பொன்முடிதோள்
இறத்தா ளொருவிர லூன்றிட் டலற விரங்கியொள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

சிவக்கொழுந்தே ! இயந்திரத் தேரை உடைய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக அவனுடைய பொன்னாலாகிய முடிகளை அணிந்த தலைகளும் தோள்களும் நொறுங்குமாறு ஒரு விரலை அழுத்த அவன் அலற அவனிடம் இரக்கம் காட்டிப் பிரகாசமான வாளினை அவன் நலன் குறித்துக் கொடுத்தாய் . தீவினையை உடைய அடியேன் செய்த குற்றமாகிய கொடிய வினையின் பயனாகிய நோயினை அழித்தாய் .

குறிப்புரை :

திருச்சத்திமுற்றத் துறையும் சிவக்கொழுந்தே , கொடுத்தாய் , செறுத்தாய் . பொறித் தேர் - சூரனது இந்திரஞாலத்தேர் போன்றதோர் இயந்திரத் தேர் . அரக்கன் - இராவணன் . பொருப்பு - கயிலை . எடுப்பு - எடுத்தலை . உற்றவன் - அடைந்தவன் . ( இரா வணன் ). பத்துப் பொன்முடியும் இருபது தோளும் . இற - இற்றொழிய . தாள் ஒரு விரல் - திருத்தாளின் ஒரு விரலை . ஊன்றிட்டு - ஊன்றி யிட்டதால் . அலற - கதற . இரங்கி - திருவுள்ளத்தில் இரங்கி . ஒள் வாள் - ஒளியதாகிய வாள் . குறித்தே - பெயர்குறித்தே ; கருதி எனலும் ஆம் . கொடியேன் செய்த குற்றத்தின் பயனான நோய் . குற்றமாகிய கொடிய வினையின் பயனான நோய் . செறுத்தாய் - அழித்தாய் .

பண் :

பாடல் எண் : 1

அட்டுமி னில்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங் கொண்டவரே.

பொழிப்புரை :

ஒலிக்கப்பட்ட தாளங்களுக்கு ஏற்பக் கூத்து நிகழ்த்திய திருவடிகளும் கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பும் உடையவராய் , நிலையாக நடனமாடும் தலைவராய் , நல்லூரில் உகந்தருளியிருக்கும் பெருமான் ` உணவுக்குரிய பிச்சையிடுமின் ` என்று வீடுகளின் வாசல்தோறும் வந்து தேன் ஒழுகும் கூந்தலை உடைய மகளிருடைய வளைகளைக் கைப்பற்றும் செயல் யாது காரணம் பற்றியதோ ?

குறிப்புரை :

இல் - இல்லின் . பலி - பிச்சை . அட்டுமின் - இடுமின் என்று என்று :- பன்மைப் பொருள் குறித்து நின்றன . அகம் - வீட்டினது . கடைதொறும் - வாயிற் கடையெல்லாம் . தெருக்கடை , வாயிற்கடை , புழைக்கடை அறங்கடை முதலியவற்றை நோக்கி . அங்கங்கு ஏற்றதன் கடையாகக் கொள்ளற்பாற்று . வந்து கொள்ளும் வகை என் கொலோ ? மட்டு - கள் . அவிழும் - விரியும் . குழலார் - குழலினராகிய மகளிர் . தாருகவனத்து முனிவர் பன்னியராகிய பெண்டிர் . குழலார் வளை - குழலினாருடைய கைவளையல்கள் . கொட்டிய பாணி - கொட்டிய தாளம் . கையுமாம் . ` எடுத்திட்ட பாதம் `:- ( தி .4 ப .81 பா .10.) கோள் அரவு - கொலைப் பாம்பு . கோள் - கொலை . நின்று நட்டம் ஆடிய நாதர் . நல்லூரை இடமாகக் கொண்டவர் . நல்லூரில் இடத்தைக் கொண்டவருமாம் .

பண் :

பாடல் எண் : 2

பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகுந் தாருநல் லூரகத்தே
பண்ணிட்ட பாடல ராடல ராய்ப்பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு கறைக்கண்டரே.

பொழிப்புரை :

நீலகண்டப் பெருமானார் , பெண்கள் ஆசைப்படும்படி கொண்ட இவ்வடிவம் பண்டு கொண்ட வடிவமன்று ; பிறர் வழங்கும் பிச்சைக்காகத் திரிபவராய் வீடுகளை அணுகிப் புகுந்தவராய் நல்லூரில் பண்ணோடு கூடிய பாடல்களைப்பாடுபவரும் ஆடுபவருமாக வந்து எங்களை நோக்கிநின்று கண்ணால் சாடை காட்டிப் போயினதற்கு ஒரு காரணம் உண்டு .

குறிப்புரை :

பெண்ணாசை பண்டையது அன்று . இவை பெய்யும் பலிக்காக இன்று புதிதாகக் கொண்டதே ஆகும் என்று ( சொல்லிக் கொண்டு ) திரிவார் . பலிக்குழல்வார் . நல்லூரகத்தே வந்து மனையை நண்ணிட்டுப் புகுந்தாரும் கறைக் கண்டரே . கறைக் கண்டர் - திருநீல கண்டர் . கறை - நஞ்சின் கறுப்பு . பண்ணிட்ட பாடலர் . ஆடலர் . பாடலும் அப் பாடலுக்கு ஏற்ற ஆடலும் உடையவர் . பாடலருமாய் ; ஆடலருமாய்ப் பற்றி நின்று ; நோக்கிநின்று . கண்ணிட்டு - கண்ணடி செய்து . கண்ணாற் சாடை காட்டுதல் . கண்ணடித்துப் போயிற்று . அதற்குத் தக்க காரணம் உளது . ` போயிற்று ` வினையாலணையும் பெயர் . போயினதற்குக் காரணம் உண்டு என்று நான்கனுருபேற்றல் அறிக .

பண் :

பாடல் எண் : 3

படவே ரரவல்குற் பாவைநல் லீர்பக லேயொருவர்
இடுவா ரிடைப்பலி கொள்பவர் போலவந் தில்புகுந்து
நடவா ரடிக ணடம்பயின் றாடிய கூத்தர்கொலோ
வடபாற் கயிலையுந் தென்பானல் லூருந்தம் வாழ்பதியே.

பொழிப்புரை :

படம் எடுக்கின்ற அழகிய பாம்பு போன்ற அல் குலை உடைய பெண்களாகிய நல்லவர்களே ! பகல் நேரத்தில் ஒப்பற்ற பெருமானார் பிச்சை வழங்குபவர்களிடம் பிச்சை பெறுபவரைப்போல வந்து எங்கள் வீடுகளில் புகுந்து வீட்டை விட்டு நீங்காதவராக உள்ளார் . அவர் வடக்கே கயிலைமலையையும் தெற்கே நல்லூரையும் தம் உறைவிடமாகக் கொண்டு கூத்தினை விரும்பி ஆடிய கூத்தர் போலும் .

குறிப்புரை :

படஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் - படத்தையும் அதனொடு எழுச்சியையும் உடைய பாம்பு போலும் பின் புறத்தையுடைய பாவைபோலும் அழகினீர் . பகலே - பகலில் . ஏகாரம் ஏழனுருபின்பொருட்டு . ஒருவர் வந்து இல் புகுந்து நடவார் , அடிகளால் நடவார் . இடுவாரிடை - இடுமவரிடத்தில் . பலிகொள்வார்போல் - ஐயம் ஏற்பவரைப் போல . போலவந்து புகுந்து பயின்று ஆடிய கூத்தர் . நடவார் அடிகள் :- அடிகளால் நடவாதவாரகி ; நடத்தல் ஆர்ந்த அடிகள் . நடம் - திருக்கூத்து . பயின்று - மிகச்செய்து பழகி . கொல் ஓ இரண்டும் அசை . கூத்தர் தம் வாழ்பதி கயிலையும் நல்லூரும் . வடபாற் கயிலையும் தென்பால் நல்லூரும் என்றது இரண்டும் ஒன்றாம் பெருமையன . கயிலைக்காட்சி நல்லூர்க்காட்சி இரண்டும் ஒன்றாமாறு பெற்ற அநுபவ வாக்கு .

பண் :

பாடல் எண் : 4

செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டனல் லூருறை நம்பனை நானொருகால்
துஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு தேற்கவன்றான்
நெஞ்சிடை நின்றக லான்பல காலமும் நின்றனனே.

பொழிப்புரை :

சிவந்த சூரியன் போன்ற ஒளியுடையவனாய்ப் பவளத்திரளிலே விளங்கும் முத்துப்போல நீறணிந்து விடத்தை அழகாகச் சூடிய நீலகண்டனாய் நல்லூரில் உறையும் , நம்மால் விரும்பப்படும் பெருமானை அடியேன் ஒரு முறை உறக்கத்தினிடையே கனவில் கண்டு தொழுதேனாக அவன் தான் என் நெஞ்சினைவிட்டு அகலானாய்ப் பல காலமாக நெஞ்சில் நிலை பெற்றுள்ளான் .

குறிப்புரை :

செஞ்சுடர்ச் சோதிப்பவளத்திரள் திகழ்முத்து அனைய நஞ்சு அணிகண்டர் :- செய்ய சுடரொளியுடைய பவளத் திரட்சியிலே திகழ்கின்ற முத்துப் போன்ற நஞ்சுண்ட கண்டத்து நம்பன் . நஞ்சு அணி கண்டன் ( திருநீலகண்டன் ) முத்து அனைய நஞ்சு என்க . ` மேலாய தவத்தோர் வேடந்தனைப் பூண்டிங்கு ஏலாதனவே இயற்றினீர் மாதவத்தீர் பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவி கொள்ளும் ஆலால நீர்மைத்தே ஐயர் இயற்கையதே ` ( கந்தபுராணம் ; வள்ளியம்மையார் திருமணப் படலம் . ) என்பதில் , நஞ்சு , ` பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவி கொள்ளும் ` என்றதுணர்க . அதனால் , ` திகழ் முத்தனைய நஞ்சு ` எனல் பொருத்தம் . நல்லூரில் உறைகின்ற நம்பன் . நம்பு நசை , நம்பன் - நசையினன் . நசை அன்பும் அன்பருடையதுமாம் . நான் ஒரு கால் துஞ்சிடைக்கண்டு கனவின்றலைத் தொழுதேன் - ஒரு முறை நான் தூக்கத்திலே கனாவிலே கண்டு வணங்கினேன் . தொழுதேற்கு - வணங்கிய எனக்கு . அவன்தான் - அந்நல்லூர்ப் பெருமான் ( என் ) நெஞ்சிடை நின்று அகலான் ஆகிப் பல காலமும் நின்றனன் . தி .8 திருக் கோவையார் 355. ` கனவிழந்துரைத்தல் ` காண்க . ` கனவில் நெஞ்சிடை நின்றகலான் .` ( தி .4 ப .97 பா .9.) நனவில் கையகன்றான் .

பண் :

பாடல் எண் : 5

வெண்மதி சூடி விளங்கநின் றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாடல றாதநல் லூரகத்தே
திண்ணில யங்கொண்டு நின்றான் றிரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற் சேவடியே.

பொழிப்புரை :

வெண்பிறை சூடி உலகு விளங்க நிற்பவனாய்த் தேவர்கள் தொழுமாறு கூத்தாடும் காட்சி நீங்காத நல்லூரை உறுதியான இருப்பிடமாகக் கொண்டு நிற்கும் திரிபுர சங்காரியினுடைய வீரக்கழல்கள் அணிந்த சேவடிகள் அடியேனுடைய கண்கள்முன்னும் நெஞ்சினகத்தும் உள்ளன .

குறிப்புரை :

வெண்மதி ( - வெண்பிறை ) சூடி விளங்கி நின்றான் ; விண்ணோர்கள் தொழநின்றான் ; நல்லூரகத்தே திண் நிலயம் கொண்டு நின்றான் ; திரிபுரம் மூன்று எரித்தான் . ( தி .4 ப .84 பா .1.) அவன் கழற் சேவடியே ( என் ) கண்ணுளும் நெஞ்சத்தகத்தும் உள . நல்லூர் பாடல் அறாதது . அப்பாடல் நண் இலயத்தொடு கூடியது . நண்ணிய இலயத் தோடு பாடல் அறாத நல்லூர் . இலயத்தொடு நண் ( ணும் ) பாடல் எனலுமாம் . நண் + இலயம் - நண்ணிலயம் . திண் + நிலயம் = திண்ணிலயம் . நிலயம் - திருக்கோயில் . திரிபுரம் என்றது வினைத்தொகை . திரியும் புரம் மூன்று என்க . கண்ணுளும் நெஞ்சத்தகத்துளும் என்றது பிழையுற்ற பாடம் . கண்ணுளும் என்றது நோக்கி அகத்துளும் என்று எழுதி யிருக்கலாம் . ` அகத்தும் உளகழல் ` என்று இயற்சீர் வெண்டளை அமைய நின்ற தறிவார்க்கு அது பிழை எனல் புலப்படும் .

பண் :

பாடல் எண் : 6

தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப்போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே.

பொழிப்புரை :

எல்லார் உள்ளத்தும் தெளிவு ஏற்படச் சிவ பெருமான் திருநல்லூரிலே நிலையாக உறைந்திருந்தால் தங்களுக்கு அவன் காட்சி வழங்குமாறு அடியவர்கள் அக்கோயிலுக்குச் சென்று அவனைக் கண்டு கொண்டு நெஞ்சு நிறைவுபெறாதவராய் , தம் பொருத்தமல்லாத புத்தியினால் , ஆற்றில் இழந்த பொருளைக் குளத்தில் சென்று தேடும் அறிவிலிகளைப்போல , எம்பெருமானைத் தரிசிப்பதற்குக் காற்றை விட வேகமாக உலகமெங்கும் சுற்றித் திரிவர் .

குறிப்புரை :

திருநல்லூரகத்தே சிவன் இருந்தால் தொண்டர் சென்று கண்டுகொள்ளார் ? கொள்ளாமை தொண்டராவார்க்குத் தக்கதாமோ ? அறிவின் கேட்டால் , ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடிய அறிவிலோர் போலக் , காற்றினும் கடிது விரைந்து , உலகெல்லாம் திரிதருவர் . அச்சிவ பரஞ்சுடரைக் காண்பதற்கு . தேற்றம் - தெளிவு . தேற்றப்பட - தெளிவுற . சிவன் தேற்றப்பட இருந்தான் . தொண்டர் , தோற்றப்படச் சென்று கண்டுகொள்வர் . தோற்றப்பட - சிவபிரான் தோற்ற அடியர் பட . சிவபிரான் சந்நிதியில் அடியார் தோற்றப்படச் சென்று எனலுமாம் . தோற்றப்படல் - தோற்றத்தை அடைதல் . துன்மதி - கெட்ட புத்தி ; புல்லறிவு . ஆற்றிற் போட்டுக் குளத்தில் எடுத்தது சுந்தர மூர்த்தி நாயனார் தொண்டின் அருட் சிறப்புக்களுள் ஒன்று . இங்கு ஆற்றில் கெடுத்ததும் குளத்தில் தேடியதும் அறியாமையின் செயல் . போட்டு எடுத்ததும் , கெடுத்துத் தேடியதும் வெவ்வேறாகும் .

பண் :

பாடல் எண் : 7

நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங்கொர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே.

பொழிப்புரை :

காலையிலே மலர்கின்ற தாமரைப் பூக்களை உடைய குளங்கள் ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் நல்லூரிலே கீளோடு கூடிய இக்கோவணத்தைப் பத்திரமாக வைத்திருந்து பின்னர் யான் வேண்டும் போது கொடுப்பாயாக என்று சொல்லி வஞ்சனையாக அதனை மறைத்து , ஒளி பொருந்திய கண்களை உடைய அவன் மனைவியோடு அமர் நீதி என்ற வாணிகனை அடியவனாகக் கொண்ட புகழ்ச்செய்தியை இப்பரந்த உலகத்திலுள்ளவர்கள் சிறப்பாகப் பேசுகிறார்கள் .

குறிப்புரை :

நாள்கொண்ட தாமரைப் பூத்தடம் - காலை ( மலர்தலைக் ) கொண்ட தாமரைப் பூக்களையுடைய குளம் . கீள் கொண்ட கோவணம் :- ` கீளார் கோவணம் `. கோவணம் கா - கோவணத்தைக் காத்துவை . கிறி - பொய் . வாள் கொண்ட நோக்கி - வாள்போலும் கண்ணி . வாள் ஒளியுமாம் . ` வாட்கண் ` என்பது பயின்ற வழக்கு . ` வாட்கண் மட நல்லாய் ` ` வாட்டடங்கண் மாதே `. வாணிகன் - அமர்நீதி நாயனார் . ` அல்லிமென்முல்லை யந்தார் அமர்நீதிக்கு அடியேன் ` ( தி .7 திருத்தொண்டத் தொகை ) . ` பழையாறை அமர் நீதி நல்லூரின் முன் கோவணம் நேர் கொண்டு இங்கு அருள் என்று தன் பெருஞ் செல்வமும் தன்னையும் தன் துண்டமதி நுதலாளையும் ஈந்த தொழிலினனே ` ( திருத்தொண்டர் திருவந்தாதி . 7). ` வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும் முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுதிருக்கும் அழிவில் வான் பதம் கொடுத் தெழுந்தருளினார் ஐயர் ` ( தி .12 பெரிய புராணம் . அமர்நீதியார் . 47) என்பன ஆட்கொண்ட வார்த்தைகளுள் அடங்கும் . அகலிடம் :- ` வியனுலகம் `.

பண் :

பாடல் எண் : 8

அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி யார்சடைமேல்
நறைமல்கு கொன்றையந் தாருடை யானுநல் லூரகத்தே
பறைமல்கு பாடல னாடல னாகிப் பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின் றாடிய பிஞ்ஞகனே.

பொழிப்புரை :

பிறை ஒளி வீசும் சிவந்த சடைகள் தொங்குமாறு காலை ஊன்றி நின்று ஆடிய , தலைக்கோலத்தை உடைய பெருமான் , ஓசைமிக்க பசிய பொன்னாலாகிய கழல்கள் ஆரவாரிக்க நின்று , அழகிய சடை மீது தேன் நிரம்பிய கொன்றைப் பூமாலையை உடையவனாய் நல்லூரிலே பறை ஓசைக்கு ஏற்பப் பாடுதலையும் ஆடுதலையும் செய்தவனாகி அடியேனுடைய தன்மையை அழித்தவனாவான் .

குறிப்புரை :

அறை - ஓசை . மல்கு கழல் - மிக்க கழல் . பை கழல் - பசிய கழல் . ஆர்க்க - ஒலிக்க . நின்றான் - நின்று ஆடினான் . அணி - அழகு . நறை - தேன் , மணமுமாம் . தார் - மாலை . பறை - வாத்தியம் . பாடலன் - பாடலுடையவன் : ஆடலன் - ஆடலுடையவன் . பரிசு - தன்மை . அழித்தான் - கெடுத்தான் . காதல் விளைவித்துக் கருத்தை மயக்குதல் குறித்தது . பிறை மல்கு செஞ்சடை - பிறை நிறைந்து தோன்றும் சிவந்த சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகன் :- ` பின் தாழ் சடையான் ` பிஞ்ஞகன் - தலைக் கோலத்தன் .

பண் :

பாடல் எண் : 9

மன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த மருவியெங்கும்
துன்னிய தொண்டர்க ளின்னிசை பாடித் தொழுதுநல்லூர்க்
கன்னியர் தாமுங் கனவிடை யுன்னிய காதலரை
அன்னிய ரற்றவ ரங்கண னேயரு ணல்கென்பரே.

பொழிப்புரை :

நிலைபெற்ற மேம்பட்ட வேதங்களை ஓதும் வேதியர்கள் மகிழ்ந்து துதிக்க , எங்கும் கலந்து பொருந்திய தொண்டர்கள் இனிய இசையைப் பாடித்தொழ , நல்லூரில் உள்ள திருமணம் ஆகாத மகளிர் கனவிலே தாம் விரும்பிய காதலராகிய நல்லூர்ப் பெருமானைக் கண்டு , பிறருக்குத் தொடர்பற்றவர் அல்லராக உள்ள அழகிய கருணையை உடைய அப்பெருமானைத் தமக்கு அருள் நல்குமாறு வேண்டுவர் .

குறிப்புரை :

மன்னிய - நிலைத்த . மாமறையோர் - பெருமையுடைய மறைகளை உணர்ந்த அந்தணர் . மன்னிய மறை - நித்திய வேதம் . மகிழ்ந்து ஏத்த - உள்ளத்தின் மகிழ்ந்து உரையிற் புகழ்ந்து உடலால் வழிபட . எங்கும் மருவித் துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி , தொழுது , அங்கணனே அருள் நல்கு என்பர் . பாடுதல் , தொழுதல் , நல்கல் மூன்றும் தொண்டர் வினைகள் . நல்லூர்க் கன்னியர் கனவிடை உன்னிய காதலர் என்றது அங்கணனை . காதலரை அங்கணனே என்பர் . அருள் நல்கு என்பர் . அங்கணன் - அழகிய கண்ணன் . கண்ணிற்கழகு கருணை . அற்றவர்க்கு அங்கணன் . அற்றவர் . பற்றற்றவர் . அவர்க்கே எவரும் அந்நியராதல் இல்லை . அந்நியர் - பிறர் . அஃது ஈண்டுத் தமிழின் சிறப்பெழுத்தால் அமைந்தது ; எதுகை நோக்கியதும் ஆம் . அன்னியரை அற்றவர் - எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணுபவர் .

பண் :

பாடல் எண் : 10

திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்
உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே.

பொழிப்புரை :

திருமகள் தங்கும் தாமரை , சிறப்பு வளரும் செங்கழுநீர் , பறித்துச் சூடும் நெய்தல் , நிறம் பொருந்திய கோங்கம் , குரா , மகிழ் , சண்பகம் , கொன்றை , வன்னி , நறுமணம் கமழும் நீண்ட கொடிகள் இவற்றால் சூழப்பட்ட மறையோர்களுடைய மாடவீடுகள் நிறைந்த நல்லூரில் அழகு நிறைந்தவளாய் உள்ள பார்வதி பாகனை நாம் தியானிப்போமாக .

குறிப்புரை :

திருவளர் தாமரை - ` திருவளரும் தாமரைப்பூ ` ` திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் ` ` திருமகள் தங்கும் தாமரை எனினும் அமையும் ` சீர்வளர் செங்கழுநீர் - அழகு வளரும் சிவந்த கழுநீர்ப் பூக்கள் . கழுநீர் - கல்லாரம் . நெய்தல் - நெய்தற்பூ . குருவளர் - நிறம் வளரும் . கோங்கம் - கோங்க மலர் . சண்பகம் , கொன்றை , வன்னி ( யிலை .) இவற்றின் மரு அமர்ந்த நல்லூர் - நீள்கொடி மாடங்கள் மலிந்த நல்லூர் - மறையோர் ( வாழும் ) நல்லூர் ( தி .4 ப .97 பா .9.) உரு அமர் பாகத்து உமையவள் பாகன் - ` உருவிற் றிகழும் உமையாள் கணவா ` ( தி .4 ப .96 பா .5) தாமரை முதலிய மலரையும் இலையையும் கொண்டு நல்லூர்ப் பெருமானை ஊழி வழிபடுவோம் என்பது கருத்தாகலாம் . முன்னீரடியும் கொண்டு முடிவது யாதென விளங்கிற்றிலது . உள்குதல் - நினைத்தல் . இதன் முதற் சீர் நான்கும் தி .8 திருக்கோவையார் முதற் பாட்டில் அமைந்தவாறே உள்ளன . இவ்வாறு இருவர் பாக்களையும் நோக்கின் மிக்க ஒற்றுமை காணப்படுகின்றது .

பண் :

பாடல் எண் : 11

செல்லேர் கொடியன் சிவன்பெருங் கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவு மதில்சூ ழிலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோளிறச் செற்ற கழலடியான்
நல்லூ ரிருந்த பிரானல்ல னோநம்மை யாள்பவனே.

பொழிப்புரை :

இடியை ஒத்து ஒலிக்கும் காளை வடிவு எழுதப்பட்ட கொடியை உடைய சிவபெருமானுடைய சிவபுரக் கோயிலகத்தும் புக வல்லேன் அடியேன் . மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகர மக்களின் தலைவனான இராவணனுடைய மலையை ஒத்த உறுதி யுடைய முடிகளோடு தோள்கள் நெரியுமாறு துன்புறுத்திய திருவடிகளை உடையவனாய் நல்லூரில் உறையும் பெருமானே நம்மை அடிமையாக ஆள்பவன் ஆவான் .

குறிப்புரை :

செல்லோ கொடியன் என்பது செல்லேர் கொடியன் என்று இருந்ததெனினோ இடிக்கொடியனாகிய இந்திரனைக் குறிப்பதாகும் . அவனை இங்குக் குறித்தல் பொருந்தாது செல்லோ கொடியன் என்பது விளங்காததாயுளது . நடக்கையோ கொடி தாயுள்ளேன் எனத் தாமே சொல்லிக்கொண்டதாகக் கருதலாம் . சிவபுரமும் புகவும் வல்லேன் - சிவன் பெருங்கோயிலாகிய சிவபுரம் மதில் சூழ்ந்திருக்கும் இலங்கை . இலங்கையர் காவலன் - இலங்கையர்க்கு மன்னன் . காவல் + அன் - காத்தலையுடையவன் . கா + வலன் காத்தலின் வல்லவன் ( பாவலன் , நாவலன் , புரவலன் , இரவலன் ) கல்லார் முடி . கல் - நவரத்தினம் . முடி - ( மணி ) முடி . தோள் இற . இற - இற்றொழிய . முடிகளும் தோள்களும் இற . இறச் செற்ற அடி - கழலடி . அடியனாகிய பிரான் . நம்மை ஆள்பவன் கழலடியானாகிய பிரான் அல்லனோ ? நல்லூர் இருந்த பிரான் . கல்லார் முடி என்றதால் நவரத்தினங்களை இழைத்துப் பதித்துச் செய்யப்பட்ட மணி முடி என இனிது விளங்கும் . முடி பத்தும் தோள் இருபதும் இறச் செற்ற கழலடியான் என்றதால் . அத் திருவடியின் கழலும் ( வெற்றிப்பாடும் ) அதற்குற்ற வருத்தமும் புலப்படும் .

பண் :

பாடல் எண் : 1

அந்திவட் டத்திங்கட் கண்ணிய னையா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

பொழிப்புரை :

வட்டமாகச் சடைக்கற்றையிலே தன் ஒளியைச் சிதறி வண்டுகள் ஒலிக்குமாறு சிறிது மலர்ந்த நந்தியாவட்டப் பூக்களோடு கொன்றைப் பூக்களும் கலக்குமாறு அணிந்த , நம்மால் விரும்பப்பெறும் பெருமானாய் , மாலையிலே வட்ட வடிவோடு ஒளி வீசும் சந்திரனைப் பிறையாகக் கொண்டு முடிமாலையாக அணிந்து திருவையாற்றை விரும்பி உறைந்து அடியேனுடைய அறிவாகிய வட்டத்திடையே புகுந்து நிலையாக இருக்கும் பெருமானுடைய இருப்பினை அடியேன் பொய்ச்செயல் என்று கூறுவேனோ ?

குறிப்புரை :

அந்திவட்டம் திங்கள் கண்ணியன் - மாலையந்தியில் வட்டமாகத் திகழும் மாதர்ப் பிறையைக் கண்ணியாக அணிந்த கருணையன் . ஐயாறு அமர்ந்து வந்து - திருவையாறு திருக்கோயிலில் விரும்பி யெழுந்தருளிவந்து , என் புந்தி வட்டத்து இடை புக்கு நின்றான் - அடியேனது அகச்சூழலிடையிற் புகுந்து நிலைத்தவன் . நின்றானையும் பொய் என்பனோ ? என்னேன் , பொய் எனல் - அவன் புக்கிலன் வந்திலன் நின்றிலன் . அப்படி ஒருவன் யாண்டும் இலன் என்பன முதலிய இன்மை ( நாத்திகம் ) பேசுதல் . வட்டச் சடைக்கற்றை சிந்தி அலம்பச் சிறிது அலர்ந்த நந்திவட்டத்தொடு கொன்றையும் வளாவிய நம்பன் . வட்டமாகச் சிந்தி எனலுமாம் . நந்திவட்டம் - நந்தியாவர்த்தம் பூ ; ` அந்தி வட்டத் திளங் கண்ணியன் ஆறமர் செஞ் சடையான் ` என முதலடியிற் சிறிது வேறுபடுதலன்றிப் பிறிது யாதும் வேறு படாமை ( தி .4 ப .113 பா .5 இற் ) காண்க . தி .4 ப .67 பா .2; ப .77 பா 6 இரண்டும் போல் இவையும் அமைந்துள ( தி .4 ப .84 பா .8, தி :- 5 ப .1 பா .9, ப .93 பா .2, தி .6 ப .5 பா .9.) ` கொன்றை வளாவிய நம்பனையே ` :- வேரிவளாய விரைமலர்க் கொன்றை ` ` சேரி வளாய என் சிந்தை ` ` வாரிவளாய வருபுனல் 2, ` ஏரி வளாவிக் கிடந்தது `. ( தி .4 ப .113 பா .9).

பண் :

பாடல் எண் : 2

பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி
நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங் காலெங் கணாய்நின்றகால்
ஆடகக் காலரி மாறேர வல்லனை யாற்றனவே.

பொழிப்புரை :

பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி , கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி , சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள் , பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள் , அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள் , எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள் , பொன் போன்ற திருவடிகள் , அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து சென்று ஆராயுமாறு பேராற்ற லுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன .

குறிப்புரை :

ஐயாற்றன - ஐயாற்றனுடையன ; வினைக்குறிப்பு முற்று . ஐயாற்றனகால் எனல் பன்மையுருபேற்ற ஆறன் வேற்றுமைத் தொகாநிலைத் தொடராதலும் கால் ஐயாற்றன எனல் வினைக் குறிப்பு முற்றுப் பயனிலை கொண்ட எழுவாய்த் தொடராதலும் அறிக . அரி மால் தேர வல்லன் என்னும் ( மதுரை ஞானசம்பந்தப் பிள்ளையின் பதிப்பிலுள்ள ) பாடம் பொருந்தும் . அரி மான் தேர் வலவன் என்பது பற்பல பழைய பதிப்பிலே உள்ள பாடம் . அரிமால் - அரியாகிய திருமால் . தேர - அடி தேடித் தெரிந்துகொள்ள . அல்லன் - காண்டற்கு எளியன் அல்லன் ஆன சிவபிரான் . வல்லன் எனில் அவன் காட்சிக்கு எட்டா திருக்கவல்லவனான சிவபிரான் என்றுரைக்க . அரி - பிரமன் எனக் கொண்டு அயனும் மாலும் எனலுமாம் . ` பரிமான் தேர் ` ` வல் வினை ` என்றும் பாடபேதம் உண்டு . பாடகம் - காலணியினொன்று . ` பாடகச் செம்பதும மலர்ப்பாவையர் பல்லாண்டிசைப்ப ` ( கம்பரா . பால . திருவவதார . 62) கழல் :- வீரர் வெற்றிக் குறியாக வலக் காலில் அணியும் மணிச் சிறப்பு . பரிதிக் கதிர் - கதிரோனொளி . உக்க - சிந்திய . அந்தி - மாலையந்தி . பரிதிக் கதிர் உக்க அந்தி :- மாலைப் பொழுது ; இரவு . அந்தி நாடகம் - இராக் கூத்து . நங்கை முன் - உடையவளாகிய நம் தாய்க்கு முன்னர் , ஏனம் - பன்றி . காடகக் கால் - காட்டில் ( நடந்த ) கால் . ஏனத்தின் பின் காடகம் நடந்த கால் எனலுமாம் . கணம் - பதினெண்கணமும் . கைதொழும் கால் . எம் கண்ணாய் நின்ற கால் . ஆடகம் - பொன் . உவமை . தி .4 ப .20 பா .4 பார்க்க .

பண் :

பாடல் எண் : 1

ஓதுவித் தாய்முன் னறவுரை காட்டி யமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாயுகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே ! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய் . பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய் . கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய் . அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய் . உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக . நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய் . அடியேனை , உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக .

குறிப்புரை :

ஓதுவித்தாய் - ஓதச்செய்தனை . முன் - இளமையில் ; அமண் சார்புறுமுன் எனலுமாம் . அறவுரை - தருமசாத்திரம் ; சமண் சமயத்துத் தரும போதம் . காட்டி - அறிவுறுத்தி . காதுவித்தாய் - கொல் வித்தாய் . அமணரோடே சேர்வித்து , அவர் என்னைக் கொல்லுமாறு முயலச் செய்தாய் என்றவாறு . கட்ட நோய் பிணி தீர்த்தாய் :- கட்டம் - துன்பம் . கலந்தருளி - என் உயிர்க்குயிராய்த் தோன்றாத் துணையாய்க் கலந்தருளி , போது வித்தாய் - சமண் சமயத்தின் நீங்கிய சைவ சமயத்திற் புகச் செய்தாய் . புகுது என்பதன் மரூஉவே போது என்பது . புகுதுக - போதுக . ` போ ` முதனிலையாயின் , பொருள் வேறுபடல் அறிக . நின் பணி - நின் திருவடித் தொண்டு . பிழைக்கின் - வழுவி னால் . புளியம் வளாரால் - புளியமரத்தின் வளாரினால் . மோதுவிப்பாய் - மோதச் செய்வாய் . ` வளாரினால் அடித்துத் தீய பந்தமும் இடுவர் ` ( சித்தியார் 2:- 15). உகப்பாய் முனிவாய் - விரும்புவாய் வெறுப்பாய் . ( விருப்பும் வெறுப்பும் கொள்வாய் ). ` காயத்திடுவாய் நின்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே ` ( தி .8 திருவாசகம் ). ` எல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும் இந்த நீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவும் என்றும் ` ( சித்தியார் . 2:- 16) ` தேசநெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்த ` ` சரிதப் பகுதிக்கும் சமண் சமயம் புகுந்த சரிதப் பகுதிக்கும் அகச் சான்று இதிற் காண்க `. ( திரு . சி . கே . எஸ் உரை ). அறவுரை என்று நம்பிச் சென்ற அப்பர் கொன்றன்ன இன்னா செய்யப் பெற்றார் ஆதலின் , ` அறவுரை காட்டிக் காதுவித்தாய் ` என்றார் . உகப்பு - அமணர் செய்த கொடுமைகளின் பயன் சமண் புக்க பாவத்தின் கழுவாய் ஆதலின் , அது திருவருளுவப்புணர்த்தும் . முனிவு :- அக்கொடுமைகளின் ஏது ஆதலின் சிவனார் முனிவாயிற்று . அவன் முனிவின்றேல் அமணர் அது செய்ய வல்லரோ ? சூலை தந்ததும் முனிவே . துன்பங்களின் உய்ந்தது உகப்பு .

பண் :

பாடல் எண் : 2

எத்தைக்கொண் டெத்தகை யேழை யமனொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னக் கோகுசெய்தாய்
முத்திற் றிரளும் பளிங்கினிற் சோதியு மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே ! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய் ?

குறிப்புரை :

முத்தின் திரள் - முத்துக் கொத்து . பளிங்கின் சோதி - பளிங்கொளி . பவளத் தொத்து - பவளத் திரள் . ` மொய்பவளத்தொடு தரளம் துறையாருங் கடற் றோணிபுரத்தீசன் ` ( சம்பந்தர் ). பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு . ஏய்க்கும் - ஒத்திருக்கும் . படியாய் - தன்மையனே . பொழில் - சோலை . கச்சியேகம்பனை , முத்தொளியும் பளிங்கொளியும் பவளத்தொளியும் ஒத்தொளிரும் இயல்பினனே , எத்தைக் கொண்டு எத்தகையேழை அமணோடு இசைவித்து என்னைக் கொத்தைக்கு மூங்கர் வழி காட்டு வித்தென்னக் கோகு செய்தாய் ? எஃது + ஐ = எஃதை , எத்தை , மரூஉ . அத்தை , இத்தை என்பனவும் அன்ன . பஃது பத்து என்றாயிற்று ` இத்தை ஆயும் அறிவு ` ( சித்தியார் . சூ . 1). ` இத்தையும் அறியார் ` ( ? . சூ :- 69) ` எங்கித்தைக் கன்ம மெலாஞ் செய்தாலும் ` ( ? . சூ . 10:- 6) ` அத்தின் அளவறியாது ` ( ? பரபக்கம் . சௌ . ம . 3) ` எத்தைக் கொண்டு ` என்றது . அமணரொடு இசைவித்ததன் காரணத்தை வினாயது . ` எத்தகை யேழையமண் ` என்றது இசையுமிடத்தின் இழிவுணர்த்தியது . ` கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்ன `. உவமம் . கொத்தை - குருடு . மூங்கர் - ஊமையர் . ` என்கண் கொத்தையாக்கினீர் ` ( சுந்தரர் ) ` கண்ணாற் கொத்தை ` ( தொல் . சொல் . வேற் . மூன்றாவது . ` இன்னான் ` என்றதற்குக் காட்டு ) ஏழை - நுண்ணுணர்வின்மை . ` நுண்ணுணர்வின்மை வறுமை ` ( நாலடியார் ) ` கோகு ` குறுகு என்றதன் மரூஉ . இழிவு என்னும் பொருளது . தி .4 ப .52 பா .6. குறிப்பு . எனைக்கோகு செய்தாய் . காட்டுவித்தென்ன - காட்டுவித்தாற்போல . காட்டுவித்தல் - காட்டச்செய்தல் . மூங்கர் :- அமணர் . வழி - கடவுள் நெறி .

பண் :

பாடல் எண் : 3

மெய்யம்பு கோத்த விசயனொ டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக் கயவர்நெஞ்சில்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

கச்சி ஏகம்பனே ! உண்மையாக அம்புகளை வில்லில் சேர்த்துப் போரிட்ட அருச்சுனனோடு அக் காலத்தில் ஒரு வேடன் வடிவினனாய்ப் பொய்யாக அம்பை வில்லில் சேர்த்து அவனோடு போரிட்டு அவனுக்கு அம்புறத் தூணியை அருளிச் செய்தவனே ! முப்புரமும் தீக்கு இரையாகுமாறு கைகளால் அம்பு எய்தவனே ! உன்னுடைய வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளைப் போற்றாத கயவர்களுடைய உள்ளத்தில் மாயையால் உண்மையை மறைத்தல் செய்தவனே ! குய்யம் - வஞ்சனை . ( சிந்தாமணி -253)

குறிப்புரை :

கொடிமா மதில்சூழ் கச்சியே கம்பனே , விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் ஆவம் அருளிச் செய்தாய் ; புரம் எரிய எய்தாய் . நுன் அடி போற்றாக் கயவர் நெஞ்சில் குய்யம் பெய்தாய் . மெய்யம்பு - மெய்க்கணை . விசயன் - வெற்றியன் ; அருச்சுனன் . அன்று - அக்காலத்தில் . ( அன்றுதல் - பகைத்தல் ). பகைத்து . அன்று வேடுவன் - பகைத்த வேடன் . பொய்யம்பு - பொய்க்கணை . எய்து - செலுத்தி . எய்து ஆவம் வினைத்தொகையுமாம் . அம்புறை தூணி ( அம்புறாத் தூணி ). தவவேடனான அருச்சுனன் மெய்யாக அம்பு எய்யச் சிவவேடன் பொய்யாக அம்பு எய்து ஆவம் அருளிச் செய்தான் என்றலுமாம் . பாசுபதம் அருளிய வரலாறுணர்க . கையம்பு - கைக்கணை , திருமாலாகிய அம்பு . நுன் - நின் என்றதன் மரூஉ . யான் ( தன்மை ), நீன் முன்னிலை , தான் படர்க்கை . யான் - யன் - என் என்றும் நீன் - நின் - நுன் என்றும் தான் - தன் என்றும் ஆயின . பிற்காலத்தில் நுன் என்பது உன் என்று வழங்கலாயிற்று . ` உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் ` என்றது பழம் பாடலன்று . ஒருகை முகன் தம்பி யாகக் கொண்ட ` நின்னுடைய ` காலத்தின் பின்னது ` போற்றாக் கயவர் ` என்று அப்பரும் சிவனடியே சிந்திக்கும் திருவை எய்தாத வரைக் கயவர் எனப் பழித்தலை அறிக . குய்யம் - இரகசியம் . குஹ்யம் என்றதன் மரூஉ . மறைப்பு . கயவர் அறியாவாறு கடவுள் தன்னை ஒளித்து நிற்றலே குய்யம்பெய்தல் ஆம் . கச்சிமதிலும் அம்மதிலின் கொடியும் தொல் புகழ் வாய்ந்தவை .

பண் :

பாடல் எண் : 4

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை யாயிரம் வைகல்வைகல்
நெறிப்பட விண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே.

பொழிப்புரை :

மதியின் கூறாகிய பிறையை அணிந்த நீண்ட சடையனே ! பெரிய காஞ்சி மாநகரில் உள்ளாயாய்த் தலைக்கோலம் என்ற அணியை அணிந்தவனே ! நாளும் ஆயிரம் பூக்களால் இண்டை மாலை தொடுத்துச் சிவபெருமானுக்கு அணிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து நாள்தோறும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் வரிசை அமைய இண்டை மாலையைத் தொடுக்கின்ற திரு மாலுடைய மனநிறைவை அழிப்பவன் போல நீலகண்டனாகிய நீ ஒரு பூவைக் குறையச் செய்து அப்பூவின் தானத்தில் செந்தாமரை போன்ற தன் கண்ணை இடந்து அவன் பூவாகத் தொடுப்பதற்காக அவன் கண் ஒன்றனைத் தோண்டி எடுக்குமாறு செய்தாயே .

குறிப்புரை :

பிறைத்துண்டம் - ` நிலாத் திங்கட்டுண்டம் `. இக் காலத்தில் அப் பெருங் காஞ்சித் திருவேகம்பத்துள் வடகீழ் மூலையில் நிலாத் திங்கட்டுண்டத்தான் என்னத் திருமால் திகழ்கின்றார் . ` பிறைத் துண்டவார் சடையாய் பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே ` என்றதறிக . குறிக்கொண்டிருந்தது - ஆழி பெறக் கருதி , சிவனடியே சிந்தைக் குறியாகத் தியாநம் புரிந்து , ஆயிரம் செந்தாமரை . ஆயிரம் வைகல் எனலாகாது . வைகல் வைகல் - நாள்தோறும் . நெறிப்பட - இண்டை கட்டும் முறைமையிற் பொருந்த . ` தொண்டர் அஞ்சுகளிறும் அடக்கிச் சுரும்பு ஆர் மலர் இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் ... ... கேதாரமே ` என்றதில் உள்ள நெறி . இண்டை புனைகின்ற திருமால் . ` முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக் கற்றையினாய் ` தி .4 ப .113 பா .2. நிறை - நெஞ்சில் நிறுத்திய உறுதி . ஆடவர்க்கு நிறையும் பெண்டிர்க்குக் கற்பும் உரியன . அழிப்பான் - அழித்தற் பொருட்டு . கறைக்கண்ட - திரூநீலகண்ட ( அண்மைவிளி ). நீ ஒரு பூ குறையச் செய்து . கண்ணைச் சூல்விப்பது தகுமோ ? எனல் ` சூல் விப்பதே ` என்று வினாவியதன் கருத்து : சூல்வித்தல் - தோண்டச் செய்தல் . ` பெருங்காஞ்சி `:- இன்றும் பெரிய காஞ்சிபுரம் சின்னகாஞ்சி புரம் என வழங்குதல் அறிக . பெரியவன் - மகாதேவன் .

பண் :

பாடல் எண் : 5

உரைக்குங் கழிந்திங் குணர்வரி யானுள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மாலெண் வசுக்களே காதசர்கள்
இரைக்கு மமிர்தர்க் கறியவொண் ணானெங்க ளேகம்பனே.

பொழிப்புரை :

சொற்களால் தன் பெருமையைச் சொல்ல இயலாதவனாய் , மனத்தாலும் உணர்வதற்கு அரியவனாய்த் தன்னை வணங்குபவர்களுடைய வினைகளைச் செயலற்றன ஆக்குவான் என்ற கருத்தொடு கையால் தொழுவதே அல்லாமல் , எங்கள் ஏகம்பப் பெருமான் பிரமன் , திருமால் , ஆதித்தர் பன்னிருவர் , வசுக்கள் எண்மர் , உருத்திரர் பதினொருவர் முதலாகத் தன்னை உரத்த குரலில் துதிக்கும் தேவர்களுக்கும் உள்ளவாறு அறிய இயலாதவன் ஆவான் .

குறிப்புரை :

எங்கள் ஏகம்பன் உணர்வரியான் . கைதொழுவது அல்லால் ( எவர்க்கும் ) அறியவொண்ணான் . உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் :- ` உரையுணர் விறந்து நின்றுணர்வதோருணர்வே ` ( தி .8 திருவா .). உள்குவார் வினையைக் கரைக்கும் - நினைப்பவர் வினையை ஒழிப்பான் . என - என்று உறுதியாகக் கருதிக் கொண்டு . கைதொழுவது அல்லால் :- கையால் மலரிட்டுத் தொழுது வழிபடும் அதனால் அல்லாமல் , மற்றெதனாலும் எவர்க்கும் அறிய ஒண்ணான் . கதிரோர்கள் - ஆதித்தர்ப் பன்னிருவர் . மலரவன் - நான்முகன் . மால் - திருமால் . எண் வசுக்கள் - வசுக்கள் எண்மர் . ஏகாதசர்கள் - உருத்திரர் பதினொருவர் . ( கந்தபுராணம் . கணங்கள் செல் .9. கூர்மபுராணம் பலவ . 14. உரை ). அமிர்தம் - அமுதுண்டுஞ் சாம் விண்ணோர் . முப் பத்துமூவர் தேவருள் பன்னிருவர் கதிரோர் , பதினொருவர் உருத்திரர் , எண்மர் வசுக்கள் இருவர் மருத்துவர் என்பர் . அமிர்தம் மருந்து எனப்படும் . படவே மருத்துவர் இருவரே இதில் அமிர்தர் எனப்பெற்றனர் . முப்பத்துமுக்கோடி தேவர்க்கும் முப்பத்துமூவர் தலைவர் என்பர் . ( பொருட்டொகை நிகண்டு 967). ` எங்கள் ஏகம்பன் ` என்றதாலும் பிற இடம் பலவற்றுள் ஏகம்பனைத் தனிச் சிறப்பிற் கூறுதலாலும் ஆசிரியர்க்கு ஆன்மார்த்த மூர்த்தி திருவேகம்பன் எனல் புலப்படும் . திருவாலவாய்ச் சொக்கநாதன் என்பாருமுளர் .

பண் :

பாடல் எண் : 6

கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு
உருகிற்றெ னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா
ஒருபற்றி லாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

திருவொற்றியூரா ! திருவாலவாயா ! திருவாரூரா ! கச்சிஏகம்பனே ! அடியேன் தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக உன் திருவடியைக் காண்பதற்கு அடியேனுடைய உள்ளம் உருகுகிறது . அடியேனும் கிடந்து வருந்தி இளைத்துச் செயலற்று விட்டேன் . அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்பதனையும் கண்டு அடியேன்மாட்டு இரக்கம் கொள்வாயாக .

குறிப்புரை :

கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு என் உள்ளமும் உருகிற்று ; நானும் கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தேன் ; ` கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியில் ` ( தி .4 ப .96 பா .5.) ` கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் ` ( தி .4 ப .94 பா .6.) ` கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர் போலும் ` ( தி .6 ப .89 பா .9). கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகியது என் உள்ளம் ; கிடந்து அலைந்து எய்த் தொழிந்தது நான் என்றதால் , ` நினையாது ஒருபோதும் இருந்தறியேன் ` ` இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் ` ` சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் ` ` தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ` ` நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் ` என்றவை முரணாகாமை உணர்க . அப்பர் எச்சமயம் புகினும் அவர் நாட்டம் எல்லாம் மெய்ப்பொருளுணர்ச்சியிலேயே ஆதலின் , அப்பொருளை அவர் மறந்தாரல்லர் . திருவொற்றியூரா , திருவால வாயா , திருவாரூரா என்று அம் மூன்றனையும் எண்ணிச் சிவபிரானை அழைத்தது யாது காரணத்தால் ? ஒருபற்றிலாமையும் கண்டிரங்குவாய் என்று கச்சியேகம்பனை இரந்தது , அம்மைக்குப் பேரின்ப வீடு தந்தருளியது குறித்துப்போலும் . ` கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் ஊனமது எல்லாம் ஒழித்தான் ` ( தி .6 ப .19 பா .4) ` பற்று அற்றோமே ` ( தி .6 ப .98 பா .3). ` ஒண்கழலாற்கு அல்லால் எப்பற்றும் இலன் ` ( தி .5 ப .97 பா .7). ` கொண்டீச்சுரவனார் பற்று அலால் ஒருபற்று மற்று இல்லையே ` ( தி .5 ப .70 பா .2). ` ஒற்றையேறு உடையான் அடியே அலால் பற்று ஒன்று இல்லிகள்மேற் படைபோகல் ` ( தி .5 ப .92 பா .10)

பண் :

பாடல் எண் : 7

அரியய னிந்திரன் சந்திரா தித்த ரமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை யாருணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை யேகம்ப வென்னோ திருக்குறிப்பே.

பொழிப்புரை :

தீப் போன்ற ஒளியை உடைய சிவந்த சடைமுடியனாகிய ஏகம்பனே ! திருமால் , பிரமன் , இந்திரன் , சந்திரன் , சூரியன் முதலிய தேவர்கள் எல்லோரும் உரிய உன்னுடைய வெற்றி பொருந்திய கோயிலின் முதல்வாசலில் உன் காட்சியை விரும்பி வாடிக் கிடக்கின்றார்கள் . முறுக்கேறிய சிவந்த சடைகளை உடைய , சிவானந்த போகத்தைத் துய்க்க விரும்பும் முனிவர்களும் உன் காட்சி கிட்டாமையால் தனிமைத் துன்பம் உறுகின்றார்கள் . அவர்களுக்குக் காட்சி வழங்குவது பற்றி உன் திருவுள்ளம் யாதோ ? அருளுவாயாக .

குறிப்புரை :

தீயை ஒத்த செந்நிறத்தைக் கொண்ட சடையுடைய திருவேகம்பனே , நின்கடைத் தலையினராய் உணங்கிக் கிடந்தார் ; புலம்புகின்றார் . ( நின் ) திருக்குறிப்பு என்னோ ? அரியும் அயனும் இந்திரனும் சந்திரனும் ஆதித்தினும் அமரரும் மற்றெல்லாரும் தாம் புகலடைதற்குரிய நின் கடைத்தலை . கொற்றக் கடைத்தலை . அரி - திருமால் . அயன் - பிரமன் . ( தி .4 ப .100 பா .9.) உரிமை - அபயம் அளித்தலில் ஆண்டவனுக்கும் , அடைக்கலம் புகுதலில் அடிமைகட்கும் உண்டு . கொற்றக்கடை கற்றைச் சடையானுக்குரியதைக் குறித்ததுமாம் . கடைத்தலை - தலைக்கடை . முதல் வாயிற் கடை . கடைத்தலையார் - புறங்கடையாராகி . ` புரங் கடந்தானடி காண்பான் புவி விண்டுபுக்கறியா திரங்கி டெந்தா யென்றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு கரங்க டந்தானொன்று காட்டமற்றாங் கதுங் காட்டிடென்று வரங்கிடந்தான்றில்லை யம்பலமுன்றிலம் மாயவனே ` ( தி .8 திருக்கோவை . 86) உணங்கா - உணங்கி ; வற்றி . ` புனல்காலே உண்டியாய் அண்டவாணரும் பிறரும் வற்றி யாரும் நின்மலரடி காணா மன்ன `. ( தி .8 திருவாசகம் ) ` வான் வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான் ` ( ? ) ` உலவாக் காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனைக் காண்பான் பலமா முனிவர் நனி வாடப் பாவியேனைப் பணி கொண்டாய் ` ( ? ) ` தொழுகையர் அழுகையர் துவள்கையர் ` ( ? பா . 965. 1062). புரி - முறுக்கு . போகம் - சிவாநந்தபோகம் . புலம்பு கின்றார் - வாடுகின்றார் . எரிதரு சடை . செஞ்சடை :- தீயைப் போன்ற சிவந்த சடை . திருக்குறிப்பு - திரு வுள்ளக் கருத்து . என்னோ - யாதோ ?

பண் :

பாடல் எண் : 8

பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பரைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

பாம்பினை இடுப்பில் இறுகக் கட்டிப் பரவிய சடை முடியை உடைய பால் நிறத்தனே ! கச்சி ஏகம்பனே ! அடியார்கள் இரு கைகளையும் குவித்துக் கொண்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு அடியார் குழாத்துடன் கூடிப் பலநாள்களாகத் தரையில் புரண்டு உன் திருவடிகளே தங்களுக்கு அடைக்கலம் என்று கூறிவந்து அடைந்துள்ளனர் . அவர்களுக்கு நீ இரங்கி அருளுவாயாக .

குறிப்புரை :

பால்வண்ணனே , ஏகம்பனே , அன்பர்கள் கூடிப் பூசிப் புரண்டு சரண் என்று ஏம்பலிப்பார் ( கள் . அவர் ) கட்கு இரங்கு . பாம்பு அரை சேர்த்தி :- அரவக்கச்சு . படரும் சடை முடியையுடைய பால் வண்ணன் . கூம்பல் - குவிதல் . ( கூப்பல் - குவித்தல் ) கூம்பலைச் செய்த கரம் . கரதலம் - கைத்தலம் ; கையகம் . கைத்தலத்தைப் பெற்ற அன்பர்கள் . அன்பே கூம்பலைச் செய்த கைகளைப் பெறுவித்தது . ` கூம்பலங் கைத்தலத்தன்பர் என்பூடுருகக் குனிக்கும் பாம்பலங்காரப் பரன் ` ( தி .8 திருக்கோவையார் . 11). பல்நாள் - நெடுங்காலம் . சாம்பர் - திருநீறு . தரை - நிலம் . நின் தாள் சரண் - உன் திருவடியே புகல் ( தி .4 ப .96 பா .9.) ஏம் பலித்தல் - வருந்தி வந்தடைதல் . ஏம்பல் - ஏங்குதல் . ஏம்பல் என்னும் சொல்லினின்று ஏம்பலித்தல் என்பது தோன்றிற்று . கலக்கமுமாம் . சாம்பல் - சாம்பர் . ( பந்தல் - பந்தர் ). ஈற்றுப் போலி .

பண் :

பாடல் எண் : 9

ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி யல்லமென்னில்
சான்றுகண் டாயிவ் வுலகமெல் லாந்தனி யேனென்றெனை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய சுடர்வண்ணனே.

பொழிப்புரை :

கச்சி ஏகம்பத்தில் விரும்பி உறைகின்ற ஒளி வடிவினனே ! எம் பெருமானே ! அடியேனை உன் அடியவன் என்று ஏற்றுக் கொண்ட நீ இப்பொழுது அடியேனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால் , நீ அடியேனை ஏற்றுக் கொண்டதற்கு இவ்வுலகம் முழுதும் சாட்சி என்பதனை நினைத்துப்பார் . தன் உணர்வு இல்லாதவன் என்று அடியேனைப் பற்றி நின்ற ஐம்பொறிகளுக்கும் போக்கியப் பொருளாக வழங்கிப் பின் அந்தப் போக்கியப் பொருளா யிருந்த தன்மையிலிருந்து அடியேனை மீட்டுக் கொண்டாய் என்பதனை உளம் கொள்வாயாக .

குறிப்புரை :

கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே , என்னை ஏன்று கொண்டாய் . எனை - என்னை . என்னை என்ற பாடம் தவறு . இனி எம்பெருமான் , யாம் உன்னை ஏன்று கொண்டாம் அல்லம் எனில் , இவ்வுலகம் எல்லாம் ( கொண்டதற்குச் ) சான்று கண்டாய் . என்னை ஐவர் ஊன்றி நின்றார் . தனியேன் என்று கருதினர் அவ்வைவரும் . ஊன்றி நின்ற ஐவர்க்கும் என்னை ஒற்றிவைத்தாய் . பின்னை அவ்வொற்றியெல்லாம் சோன்று கொண்டாய் - சுவன்று கொண்டாய் . சூன்று என்பது சோன்று என மருவும் . சூன்று - தோண்டி . கைப்பற்றி என்றதாம் . சுவன்று என்றதன் மரூஉவுமாகும் . சுவறல் - உறிஞ்சல் . சோன்று - உறிஞ்சி . ஈண்டு அஃது ஒற்றியெல்லாம் மீட்டுக் கொண்டாய் என்ற கருத்ததாயிற்று . ஒற்றி நீக்கித் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளலாம் . கச்சி - திருக்கச்சி . ஏகம்பம் - ஏகாம்பரம் . மேய - மேவிய - எழுந்தருளிய . சுடர்வண்ணன் :- ` தீவண்ணன் `. என்னை ஏற்றுக் கொண்டாய் அடிமை என்று அதனால் நீ எம்பெருமான் . நான் உன் அடியேன் . இனி அல்லேன் எனல் இயலாது . அல்லம் எனில் , இவ்வுலகம் எல்லாம் சான்று . ஏன்றுகொண்டது மெய்மை என்பதற்குச் சான்று . சூலை நோய் தீர்த்து ஆட்கொண்டமையும் சமணர் செய்த கொடுமையனைத்தும் தாக்காதவாறு காத்தமையும் ஏன்று கொண்டதற்குத் தக்க சான்றாம் . அவ்வுண்மையை உலகம் எல்லாம் அறிந்துள .

பண் :

பாடல் எண் : 10

உந்திநின் றார்உன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல் பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலு மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி யெங்ஙன மோவந் திறைஞ்சுவதே.

பொழிப்புரை :

மதில்களை உடைய காஞ்சி நகரில் உறைபவனே ! உன்னுடைய திருவோலக்க மண்டபத்தின் வாயிலைப் பொருந்தித் தேவலோக அரம்பையர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நிற்கிறார்கள் . பழைய வானவர் கூட்டத்தினர் தமக்கு இடப்படும் திருத் தொண்டு யாது என்று அறிவதற்கு ஓலக்கத்தில் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார்கள் . பிரமனும் திருமாலும் அம்மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள் . இவ்விடத்தில் நிற்கின்ற அடியோங்கள் அவ்வளவு கூட்டம் நிரம்பிய உன் திருவோலக்க மண்டபத்தில் எங்ஙனம் வந்து உன்னைக் கண்டு வழிபடல் இயலும் ?

குறிப்புரை :

சூளைகள் - வேசிகள் . அரம்பையர் . உனது திருவோலக் கத்தில் . உந்தி - தள்ளி . நடனம் புரிந்து எனலுமாம் . தொல்லை - பழமை . வானவர் ஈட்டம் - தேவர் கூட்டம் . வாய்தல் பற்றி - கடை வாயிலைப் பற்றிக்கொண்டு . துன்றி நின்றார் - நெருங்கி நின்றனர் . பணி அறிவான் - கட்டளையை அறிந்து கொள்ளவேண்டி . அயனும் (- பிரமனும் ) திருமாலும் பணி அறிவான் வந்து நின்றார் . மதிற் கச்சி :- கச்சி மதில் மிக்க பெருமையுடையது ; பலராலும் பல நூலிலும் புகழப்படுவது . இந்த நின்றோம் - இவ்விடத்தில் நின்ற யாம் . இகரச் சுட்டின் திரிபு இந்த என்பது . அ - அந்த . உ - உந்த என்றதாலறிக . ` இந்தா ` என்பதற்கு மதுரைச் சங்கப் பதிப்பான தமிழ்ச் சொல்லகராதியில் உள்ள விளக்கத்தைக் காண்க . இந் நின்றோம் என்றதாம் . இனி வந்து இறைஞ்சுவது எங்ஙனமோ ? எங்கனமோ என்றதன் மரூஉவே எங்ஙனம் என்பது . அங்ஙனம் முதலிய சுட்டுமுதற் சொற்களும் யாங்ஙனம் என்பதும் மரூஉ மொழியே . சிந்தாமணி . கந்தபுராணம் முதலியவற்றில் எதுகைத் தொடரில் அமைந்த பாக்களாலும் அவ் வுண்மையை அறியலாம் .

பண் :

பாடல் எண் : 1

மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின வன்புடைத் தொண்டர்க் கமுதரும்பி
இன்னல் களைவன வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பர் எம்பெருமானுடைய திருவடி இணைகள் இமவான் மகளாகிய பார்வதியின் கைகளால் அழுத்தித் தடவப் பட்டன. வேதங்கள் குறிப்பிடும் துறைகளை எல்லாம் பின்பற்றுவதற்குப் பற்றுக்கோடாம் பொருளாய் உள்ளன. தூய தாமரை போன்ற வடிவின; தம்மாட்டு அன்புடைய அடியவர்களுக்கு அமுது வழங்கி அவர்களுடைய துயர்களைப் போக்குவன.

குறிப்புரை :

இன்னம்பரான்தன் இணை அடியே மலைமகள் கையால் வருடின; மறைகள் சொன்ன துறைதொறும் பொருளாயின; கமலத்து அன்ன வடிவின; தொண்டர்க்கு அமுது அரும்பி இன்னல் களைவன அம்பர், இனிமை - அம்பர் = இன்னம்பர். `அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்டுறை அழுந்தூர் ஆறை` (க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகம். 4).
மன்னுமலை:- நிலையான இமயகிரி. மன்னுமகள் - என்றுமுள்ள தேவி. மலைமகள் - இமாசலகுமாரி. வருடின:- ... ... பாவை ... ... குழலி ... ... வளைக்கரம் கூப்பி நின்று வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் காந்தள் அணங்கும் அரவிந்தம் ஒக்கும்` (தி.4 ப.92 பா.18).

பண் :

பாடல் எண் : 2

பைதற் பிணக்குழைக் காளிவெங் கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ் செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங்கூற்றை யுதைத்தன வும்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன வின்னம்ப ரான்ற னிணையடியே.

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணை அடிகள் இளம் பிள்ளைகளின் பிணங்களைக் காதணிகளாக அணியும் காளியின் கொடிய கோபத்தைப் போக்குவதற்கு மற்றவர்களால் செய்தற்கு அரிய திருக்கூத்தினை நிகழ்த்துவன. சிறப்புடைய அந்தணனாகிய மார்க்கண்டேயன் உயிர் தப்புவதற்காகக் கொடிய கூற்றுவனை உதைத்தன. தேவர்களுக்கெல்லாம் கிட்டுதற்கு அரியன.

குறிப்புரை :

இன்னம்பரான் இணையடியே காளி கோபம் பங்கப் படுப்பான் திருநடஞ் செய்தன; மறையோன் உய்தற்பொருட்டுக் கூற்றை உதைத்தன; உம்பர்க்கெல்லாம் எய்தற்கு அரியன. பைதல் - இளமை. பிணக்குழை:- பிணக்கு - மாறுபாடு.
உழை - ஏழனுருபு. மாறுபட்டு ஆடிய திருக் கூத்தில். பணிக்குழை என்று இருந்தது ஆயின், பணிக்குழை - பாம்பாலாகிய குழை என்க. `சர்ப்ப குண்டலம்`. அரவக் குழை`.
வெம் கோபம் - வெய்ய சினம் . பங்கப்படுப்பான் - கேடுபடச் செய்ய. செய்தற்கு அரிய திருநடம் - காளியாற் செய்தற்கு எளிதல்லாத ஊர்த்துவதாண்டவம். அருமை:- நாணின் நீங்கிக் காலை மேலே தூக்கியாட ஒவ்வாமை.
சீர்மறையோன்:- மார்க்கண்டேய முனிவர். சீர் என்னும் அடை மறைக்கும் அவர்க்கும் உரித்து. உய்தற்பொருட்டு - (இறவா திறைவனடியிலிருத்தற்பொருட்டு) இறத்தலினின்றும் தப்புதற் பொருட்டு. வெங்கூற்று - வெய்ய கூற்றன். உம்பர் தேவர். எய்தற்கு - அடைதற்கு.

பண் :

பாடல் எண் : 3

சுணங்குநின் றார்கொங்கை யாளுமை சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின மன்னு மறைகடம்மில்
பிணங்கிநின் றின்னன வென்றறி யாதன பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின வின்னம்ப ரான்ற னிணையடியே.

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள் தேமல் படர்ந்த கொங்கைகளை உடைய உமாதேவியால் சூடப்பட்டன; தேவர்கள் வணங்கிநின்று தூய மலர்களைத் தூவி வாழ்த்துதலைப் பொருந்தியன; என்றும் நிலைபெற்ற நான்கு வேதங்களும் தம்முள் கருத்து மாறுபட்டு உண்மையில் இத்தன்மையன என்று அறியப்படாதன; பேய்க் கூட்டத்தொடு கலந்து நின்று கூத்து நிகழ்த்தின.

குறிப்புரை :

சுணங்கு - தேமல். நின்று ஆர் கொங்கை - நின்று பொருந்திய கொங்கை. `கொங்கை` மரூஉ. கையாற் கொள்ளப் படுவது என்னும் பொருட்டு, அவையல் கிளவி. சொல்லலாகாமை குறித்துப் பெயரிட்டு வழங்கிய தமிழ்ச் சான்றோர் பெருமைகளை நினைந்து போற்றுக. `முதுக்குறைந்தனள்` என்பது முதலியவற்றை வழக்கிரண்டனுள்ளும் ஈண்டெண்ணுக. உம்பர் தூமலரால் வணங்கி நின்று வாழ்த்திய பெருமையுடையன இணையடி.
மன்னும் மறைகள்:- வேதம் நித்தியம் என்னும் பொருட்டு, தம்மில் பிணங்கி நின்று இன்னன என்று அறியாதன - தம்முள் முரண் உற்று, சிவபிரான் திருவடிகள் இத்தன்மையன என்று அறியமாட்டா தன. `மறையிலீறுமுன் தொடரொணாத நீ` (தி.8 திருவாசகம்). `வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்` (தி.8 திருவாசகம்) `நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்து அடியேன் பாலே புகுந்து பரிந் துருக்கும் பாவகத்தால்` (தி.8 திருவாசகம்) `நான்மறைகள் தாம் அறியா எம்பெருமான்` (தி.8 திருவாசகம்) `மிக்க வேத மெய்ந்நூல் சொன்னவனே சொற்கழிந்தவனே` (தி.8 திருவாசகம்). கணம் - கூட்டம். பேய்க் கூட்டத்தோடு இணங்கி நின்று ஆடின.

பண் :

பாடல் எண் : 4

ஆறொன் றியசம யங்களி னவ்வவர்க் கப்பொருள்கள்
வேறொன்றி லாதன விண்ணோர் மதிப்பன மிக்குவமன்
மாறொன்றி லாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன்றி லாதன வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள் ஆறு ஆறாக நான்கு வகைகளில் அடங்கிய சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு வேறாகாது அவ்வப் பொருள்களாக நின்று அருள்புரிவன; தேவர் களால் மதிக்கப்படுவன; தம்மை ஒப்பனவும் தம்மின் மிக்கனவும் இல்லாதன; நில உலகமும் மேல் உலகமும் அழிந்த காலத்தும் தமக்கு அழிவு இல்லாதன.

குறிப்புரை :

ஆறு ஒன்றிய சமயங்கள் - (தி.4 ப.100 பா.7, தி.5 ப.89 பா.6, தி:-6 ப.50 பா.7, ப.65 பா.7, ப.68 பா.5.) அறுவகைச் சமயம். `அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து` (தி.7 ப.55 பா.9); ஆறாறாக நாற்றிறத்தில் ஒன்றிய சமயங்கள். அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்பன நாற்றிறம். அவ்வச் சமயங்களின் அவ்வவர்க்கு அவ்வப் பொருள்களேயாய் நின்று அருள் புரிவான் சிவபெருமான். `யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` (சித்தியார்). அப் பொருள்கள் அன்றி வேறு ஒன்று இல்லாதனவாய் விளங்குவன.
விண்ணோர் - அச் சமயத்திற்கெல்லாம் மேலானவராய சுத்தாத்துவித சைவசித்தாந்த ஞானாநந்தச் செல்வர்கள். தேவருமாம். மதிப்பன - உணர்வன; உணரப்படுவன. உவமன் இலாதன. மிக்கு இலாதன. மாறு இலாதன. உவமன் ஒன்று மிக்கு மாறு இலாதன. தி.4 ப.100 பா.10. உவமன் வேறு. ஒப்பு வேறு. `ஒப்புடையன் அல்லன் ஓர் உரு வனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமன் இல்லி` `ஒப்பிலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் திருப்பாதத் தப்பன்` (தி.8 திருவாசகம்) `உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள் தந்து ... காட்டி ... அருள் புரிந்த என் தலைவன்`. இணையடிக்கு மிக்கதும் இல்லை உவமனும் இல்லை. மாறு (- ஒப்பு) மில்லை. `மாற்றுடை` என்னும் வழக்குணர்க. மண்ணும் விண்ணும் (இடவாகு பெயர்) மாய்ந்திடினும் இணையடி மாயாதன.

பண் :

பாடல் எண் : 5

அரக்கர்தம் முப்புர மம்பொன்றி னாலட லங்கியின்வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு வாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன வின்னம்ப ரான்ற னிணையடியே.

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணை அடிகள், அரக்கர் களுடைய முப்புரங்களும் அம்பு ஒன்றினால் அழிக்கும் நெருப்பிற்கு இரையாகி மறையுமாறு அக்காலத்தில் வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் நின்றன; எடுத்துக்கொண்ட வேடர் வடிவம் சிறக்குமாறு கொடிய காட்டிலே வேடர்களுடைய அடிகளின் வடிவின ஆயின; பல ஊர்கள்தோறும் பிச்சை எடுக்க நடந்தன.

குறிப்புரை :

அரக்கர் - திரிபுரத்தசுரர். முப்புரம் - `மூன்றூர்`. அம்பு ஒன்று:- `மால் கணை`. அங்கி - நெருப்பு. `மூவார் புரங்கள் எரித்த அன்று`. அங்கியின் வாய்க் கரத்தல் - எரிந்தொழிதல். வைதிகத் தேர் மிசை - வேதக் குதிரை பூட்டிய பூமியாகிய தேர்மேல். வேத சம்பந்தம் வைதிகம். ஈண்டுக் குதிரையை உணர்த்திற்று. கட்டு உருவம்:- வேடர் வடிவம் இயல்பானதன்று; கட்டிக்கொண்டது. கட்டுருவம் - கட்டொளி யுமாம். தடத்தம் என்றவாறு. பரக்க - பரந்து விளங்க. வெங்கான் - வெய்யகாடு. கான் இடை - காட்டில். வேடு உருவு ஆயின - வேட்டுவ வடிவாயின. பல்பதிதோறு - பல்லூர்தொறும். இரக்க - இரத்தல் செய்ய. `பத்தூர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி` (தி.7 ப.46 பா.1) இணையடி இரக்க நடந்தன. இணையடி தேர் மிசை நின்றன என்றதாற் பெருஞ்செல்வமும் பல்பதிதோறிரக்க நடந்தன என்றதாற் பொல்லா வறுமையும் உணர்த்தி, இறைவனது ஏரி நிறைந்தனைய செல்வத்தையும் விற்றூணொன்றில்லாத நல்குரவையும் குறித்தவாறறிக.

பண் :

பாடல் எண் : 6

கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழன்முன் றேடின கேடுபடா
ஆண்டும் பலபல வூழியு மாயின வாரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின் றாடின மேவுசிலம்
பீண்டுங் கழலின வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள், நிலத்தைக் கிழித்தும் கிளரியும் பொலிவை உடைய பன்றி வடிவெடுத்த திருமாலால் தேடப்பட்டன; எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஊழிகள் கடந்தாலும் கெடுதியை அடையாதன; வேதங்களின் விரும்பிய பொருள் புலப்படுமாறு திருக்கூத்து நிகழ்த்தின; விரும்பிய சிலம்பும் கழலும் அணிந்தன.

குறிப்புரை :

கீண்டும் - கிழித்தும்; நிலத்தைக் கிளறியும். கிளர்ந்தும் - கிண்டியும். கிளர்தல் - கிண்டல். கேழல் - பன்றி. பொன் - அழகு, திரு. திருமால் உருக்கொண்ட பன்றியாதலின், திருவையுடைய கேழல் என்றுமாம். ஏனைப் பன்றிக்குப் `பொன்` என்னும் அடை பொருந்தாது. அவை தம்மை வளர்ப்பார்க்குப் பொன் கிடைக்கத் தாம் கைம் மாறுதலும் கொலையுண்ணலும் அடைகின்றமையாற் பொருந்தும் போலும். கேடுபடா ஆண்டும் ஆயின. பல பல ஊழியும் ஆயின. இணையடி காலங் கடந்த உண்மையை உணர்த்தியவாறு. ஆரணம் - வேதம். வேண்டும் பொருள்கள் ஆரணத்தின் விளங்க இணையடி நின்று ஆடின. வேதங்களில் அவரவர்க்கு வேண்டும் பொருள்கள் விளங்க நின்று திருவடி ஆடின. திருவுருத்திரம் துறவினார்க்குரித்து; சீசூத்தம் துறவாதார்க்குரித்து என்றவாறு. அவரவர் வேண்டும் பொருள்கள் பற்பல வேதங்களில் உள. மேவு சிலம்பு ஈண்டும் கழலின - மேவிய சிலம்பும் ஈண்டிய கழலும் உடையன.

பண் :

பாடல் எண் : 7

போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன வாறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள், வழிபடத் தக்கன; கொடிய முயலகனுடைய வெகுளியால் ஏற்பட்ட இழிவைப் போக்கும் தன்மையன; அறு வகைச் சமயங்களைச் சார்ந்த அடியவர்களைத் தெளிவிக்கும் தன்மையன; தெளிவடைந்த அடியவர்களை மேம்பட்ட நெறிக்கண் உயர்த்தும் தன்மையன.

குறிப்புரை :

போற்றும் தகையன - உயிர்கள் எல்லாம் போற்றிப் பயன் கொள்ளும் தகைமையுடையன. பொல்லா முயலகன் - பொலி வில்லாத முயலகன் என்னும் அசுரன். `தருக்கிய முயலகன் மேல்தாள் வைத்தான்` (தி.6 ப.90 பா.9) `அடிகொண்டார் சிலம்பலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்`. (தி.6 ப.96 பா.3) முயலகனது கோபப் புன்மையை ஆற்றும் தகைமையுடையன. புன்மை - குற்றம்; புல்லிய தன்மை. ஆறு சமயத்தவரவரைத் தேற்றும் தகையன. (தி.4 ப.100 பா.1) உரை பார்க்க. தேற்றுதல் - தெளித்தல். தெளிவித்தல். `தெள்ளித் தெளிக்கும் புலவோர்` (சகலகலா வல்லிமாலை.3) தேறிய தொண்டரை - தெளிந்த தொண்டர்களை. செந் நெறிக்கே - செம்மையதான சிவநெறியிலே. ஏற்றும் - ஏறப்பண்ணும். இணையடியே போற்றுந் தகையன; புன்மை ஆற்றுந் தகையன; ஆறு சமயத்தவரவரை ஆற்றுந் தகையன; தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந் தகையன என்று இயைக்க. முயலகன் புன்மை ஆற்றுதல் ஆணவ மல நீக்கம். செந்நெறிக்கே ஏற்றுதல் திருவருளாக்கம் (சிவப் பேறு). போற்றுதல் - புகழ்(ந்து வழுத்து)தல். கன்ம மல நீக்கம். தேற்றுதல் - மாயாமல நீக்கம். மும்மல நீக்கம் (பாசவீடு).

பண் :

பாடல் எண் : 8

பயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக் குலாவின கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென் றேசதுர் வேதங்கணின்
றியம்புங் கழலின வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணை அடிகள், அச்சமும் கீழ்மையும் ஒரு சேர வழங்கும் பாவங்களைப் போக்குவன; பார்வதியினுடைய தனங்களாகிய பொலிவுடைய தாமரை மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாகிய தம் இனத்தனவாகக் கொண்டு நட்புச் செய்தன; அவன் அருளாலன்றித் தம் முயற்சியால் மாத்திரம் அடைய முடியாத தான்தோன்றி என்று சொல்லத் தகுந்த சிவபெருமானே அத்திருவடிகள் என்று நான்கு வேதங்களும் இயம்பும் சிறப்பினவாய்க் கழல்களை அணிந்தன, சிவபெருமான் செய்யும் அருள்களை அவன் திருவடிகளே வழங்கும் என்பதாம்.

குறிப்புரை :

இணையடி பாவம் தவிர்ப்பன; பார்ப்பதி ... குலாவின; சதுர் வேதங்கள் இயம்பும் கழலின. பயம் - அச்சம். புன்மை - குற்றம் (தி.4 ப.100 பா.7.) பாவம் அச்சத்தையும் குற்றத்தையும் தோற்றும். தவிர்ப்பன - நீக்குவன. பார்ப்பதி - பருவதராச புத்திரி. குயம் - கொங்கை. பொன்மை - பொன்னியல்பு; பொலியும் தன்மை. `பொற்றாமரை` என்னும் வழக்குணர்க. பொன்மை மாமலர் - பொன்போற் செய்ய அழகிய தாமரைப் பூ. மா - அழகு; பெருமை. குயத்திற்கு மா மலர் உவமை. இணையடியும் தாமரை குயமும் தாமரை. இரண்டும் இனமாய்க் குலாவின. கூடவொண்ணாமை - சேரவொன்றாமை. கூட வொண்ணாச் சயம்பு - அடைதற்கரிய தான்றோன்றி. தாணு - சிவன். கேநோபநிடத வரலாறு குறித்து நிற்பதொரு சிவநாமம். `தாணுவே உனையல்ல தாணுவே`. (சேதுபுராணம். சிவதீர்த்.91). சதுர்வேதங்கள் - நான்மறைகள். நின்று - தம் எல்லையில் அடங்கி. இயம்பும் - சொல்லும். சொல்வன வேதங்கள். சொல்லப்படுவன கழல்கள். அக் கழல்களையுடையன இணையடி.

பண் :

பாடல் எண் : 9

அயனொடு மாலிந் திரன்சந்த்ரா தித்த ரமரரெலாம்
சயசய வென்றுமுப் போதும் பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியனகர்க்கும்
இயபர மாவன வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள், பிரமன், திருமால், இந்திரன், சந்திரன், சூரியன் மற்றுள்ள தேவர்கள் எல்லோரும் சய சய என்று பல்லாண்டு பாடிக் காலை நண்பகல் அந்தி என்ற முப்பொழுதுகளிலும் பணியும் திறத்தன. குளிர்ந்த கடலால் சூழப்பட்ட பரந்த இந்த நில உலகத்தில் உள்ளவர்களுக்கும் தேவர் உலகத்தவருக்கும் நாகர் உலகத்தவருக்கும் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் நல்குவன.

குறிப்புரை :

இதன் முதலடியிலே `ஆதித்தர்` என்று நிற்குங் காய்ச்சீர் முன் `அமரரெலாம்` என்னும் நிரை முதற் சீர் வந்து வெண்டளை கெட்டு, ஓரெழுத்து மிகுங் குற்றம் தோன்றச் சிலர் பதித்தனர். `சந்த்ராதித்தர்` என்றோ `இந்த்ரன்` என்றோ கொண்டால் அக் குற்றம் தவிரும். மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை பதிப்பில், `சந்திராதித்தமரரெலாம்` என்றுளது. ஆதித்தய + அமரர் - ஆதித்தமரர் எனல் பொருந்தாது. (தி.4 ப.99 பா.7) சயசய - வெல்க வெல்க `சய சய போற்றி` (தி.8 திருவாசகம். 5. 66). முப்போதும் - காலை நண்பகல் மாலை. `கைப்போது மலர் தூவிக் காதலித்து வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வன்` (தி.4 ப.7 பா.3). பணிவன - பணியப்பெறுவன. தண் கடல் - குளிர்ந்த நீர்க் கடல். கடல் சூழ் நிலம். வியல் நிலம். `வியல் என் கிளவி அகலப் பொருட்டே` (தொல்காப்பியம்). முற்றுக்கும் - முழுவதுக்கும். வியல் + நகர். நாகர் நகர் - நாகருலகம். மண்ணோர், விண்ணோர், நாகர் என்னும் மூன்றுலகர்க்கும் இகமும் பரமும் ஆவன. இகம் - இம்மை. பரம் - மறுமை. இப்பிறப்பும் மறுபிறப்பும். இகபரம் - இருமைப் பயனுக்கு ஆகுபெயர். `இயபரம்` என்றது மரூஉ. `இகபரங் கெட்டவன்` என்பதை உலகர் வழங்குமாறறிக.

பண் :

பாடல் எண் : 10

தருக்கிய தக்கன்றன் வேள்வி தகர்த்தன தாமரைப்போ
துருக்கிய செம்பொ னுவமனி லாதன வொண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்றலை பத்து நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரானுடைய இணையடிகள், செருக்குற்ற தக்கனுடைய வேள்வியை அழித்தன; தாமரைப் பூ, உருக்கிய செம் பொன் என்பனவும் தமக்கு உவமம் ஆகாத வகையில் அவற்றிலும் மேம்பட்டன; கயிலையைப் பெயர்க்க முற்பட்ட கொடிய இராவணனுடைய தலைகள் பத்தினையும் நெரித்து அவனால் பாடப்பட்ட வேதங்களின் இயல்பைத் தம் இயல்பாகக் கொண்டன.

குறிப்புரை :

தருக்கிய - செருக்கடைந்த. தக்கன் - தட்சன். வேள்வி - யாகம். தகர்த்தன - சிதைத்தன. `தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழ முன் சென்று அழித்தன` (தி.4 ப.92 பா.2). தாமரைப் போது - தாமரை மலரும். உருக்கிய செம்பொன் - தீயிலிட்டு உருக்கப்பட்ட செய்ய பொன்னும். இணையடிக்கு உவமன் இல்லாதவாறு தாமரை மலரும் செம்பொன்னும் இழிவுற்றன. `உவமன் இலாதன`. (தி.4 ப.100 பா.4.) உரை பார்க்க. ஒண்கயிலை - வெள்ளொளியுடைய திருமலை. அரக்கன்:- இராவணன். தலை பத்து நெரித்தவன் - சிவபிரான். அவனது இருக்கு. இருக்கு இயல்பு - மறையின் தன்மை. `ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்த வேதியர் வேள்வியும் ஆவன ... ... ஐயாறன் அடித்தலமே`. (தி.4 ப.92 பா.17). ஈண்டு இருக்கு என்றது மறையென்னும் பொதுப் பொருள் மேலதுமாம். திருவுருத்திரநாப்பணுள்ள திருவைந்தெழுத்தைக் குறித்ததாகக் கோடல் சிறந்தது. அதுவே வேதத்தியல்பாகும். உவமன் இலாதன என்றது குறித்து முன் (தி.4 ப.100 பா.4.) ` மிக்குவமன் மாறொன் றிலாதன` என்றதன் குறிப்புரையில் எழுதியதைக் காண்க.

பண் :

பாடல் எண் : 1

குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புன லாரூ ரவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி யான்றிரு மூலட்டானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

கழுவுதலும் ஒலித்தலும் உடையதாக வரும் தண்ணிய நீர்வளம் மிக்க திருவாரூரில் , விளங்குகின்ற சடைமுடியையும் சிலம்புகள் ஒலிக்கும் திருவடிகளையும் உடைய சிவபெருமானுடைய திருமூலத்தானத்தே , அப்பெருமானுடைய பேரிரக்கத்தையும் அதன் பயன்களையும் எண்ணி உருகுதலால் கண்ணீர் வடித்து வரும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப்பேறு , கூட்டமும் வலிமையும் பரவிய மூர்க்கர்களாகிய சமணர் காணுமாறு , அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்டுமோ ?

குறிப்புரை :

குலம் பலம் - குலமும் பலமும் ; கூட்டமும் வலிமையும் . பாவரு - பரவுதல் வந்த ; பெருகிய . குண்டர் - மூர்க்கர் . அலம்பு அலம்பு ஆ வருபுனல் ; தண்புனல் ; புனல் ஆரூர் . அலம்புதல் - ஒலித்தல் , கழுவுதல் , கழுவுதலும் ஒலித்தலும் உடையதாக வரும் நீர் . தண்ணீர் . நீர் வளம் மிக்க ஆரூர் . ஆரூரிற் கோயில்கொண்டுள்ள சிவபிரான் . அவிர் சடை - விளங்கும் சடை ; சடையான் - சடையுடையவன் . சடை யான் அடி , சேவடி . சிலம்பு அலம்பா வரு சேவடி - சிலம்பு ஒலித்து வருகின்ற செய்ய திருத்தாள் . ( தி .4 ப .92 பா .12) பார்க்க . சடையானும் சேவடியானும் ஆகிய ஈசுவரனது திருவாரூர்த் திருமூலட்டானம் . மூலட்டானம் , மூலஸ்தாநம் என்பதன் திரிபு . மூலாதாரத்தலம் . புலம்பல் அம்பு ஆவரு தொண்டர் . ஈண்டுப் புலம்பல் என்றது உடையவன் தம்பால் வைத்த பேரிரக்கத்தையும் அதன் பயன்களையும் எண்ணியுருகும் பெற்றியாலும் பல பிறவியாக நன்றி மறந்த குற்றத்தை யெண்ணி வருந்தும் வினையாலும் வாய்விட்டுப் புலம்புதல் என்ற பொருளதாயிற்று . கட்டின் நீங்கித் தனிமை உற்றவர்க்கே அது கூடுவது . அதனால் , ` புலம்பே தனிமை ` ( தொல்காப்பியம் ) என்ற பொருளும் அடங்கும் . அம்பு - நீர் . அது விழி நீர்ப் பெருக்கைக் குறித்தது . ` கண்ணீர் ததும்பி ` ( தி .8 திருவாசகம் ). புலம்பலால் , வெள்ளமாவருதல் . அத்தகு மெய்த்தொண்டர்க்குத் தொண்டராகும் புண்ணியம் . திருவாரூர்த் தொண்டருக்கு உறையுள் தேவாசிரிய மண்டபம் . அவர்க்குத் தொண்டராதல் சிவபூசாபலனாகும் . புண்ணியம் - சிவபூசை . ` புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே ` ( சித்தியார் ). புண்ணியம் - சிவபுண்ணியம் . புலம்பல் தொண்டர்க்குரிய இயல்புகளுள் மிகச் சிறந்தது . ` அழு வார்க்கு அமுதங்கள் ` ( தி .4 ப .92 பா .5) ` அழுமவர்க்கு அன்பன் ` ( தி .5 ப .31 பா .7) ` அழவலார்களுக்கு அன்பு செய்து இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் ` ( தி .5 ப .59 பா .7) ` அழும் அதுவே அன்றி மற்று என்செய்கேன் பொன்னம்பலத் தரைசே`. ` அழுதால் உன்னைப் பெறலாமே `. ( திருவாசகம் ). திருவாரூரில் அக்காலத்தில் அமணர் பெருகி யிருந்தனர் . தண்டியடிகள் , நமி நந்தியடிகள் நாயனார் புராணங்களின் உணர்க . தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் , குண்டர்க்கு முன்னே நமக்கும் உண்டு கொல் என்று வியந்து போற்றியவாறுணர்க . அலம்பல் அம்பாவரு - அலம்புதலும் அழகும் பரவலும் உடையதாய் வருகின்ற ( புனல் ) என்றும் ; புலம் - சிவஞானம் . பலம் - சிவஞானப் பயனாய பேரின்பம் என்றும் உரைக்கலாம் . நமக்கும் என்றும்மை விரித்துரைக்க . ( தி .4 ப .101 பா .3, 5, 6.) இலும் அங்ஙனம் விரிக்க .

பண் :

பாடல் எண் : 2

மற்றிட மின்றி மனை துறந் தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட் டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனொ டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் றொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

அருச்சுனனுடைய வில்லின் வலிமையைக் கவர்ந்து அக்காலத்தில் வேடுவனாய்க் காட்சி வழங்கிய திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமானுடைய அடியவர்களுக்கு அடியவராகும் நல் வினைப் பேறு , வீட்டினையும் துறந்து வேறு இடமும் இல்லாமல் இரவில் உண்ணுதல் இல்லாத உடல் வலிய சமணர்கள் கூறும் செய்திகளே உறுதியானவை என்று கருதிக் குற்றம் செய்த அடியேனுக்கும் கிட்டுமோ ?

குறிப்புரை :

மற்று - பிறிது . இடம் - உறையுள் . இன்றி - இன்றியும் . மனை - வீட்டை . துறந்து - விட்டு . அல் - இரவில் . உணா - உண்ணாத . வல் அமணர் - வலிய அமண் சமயத்தார் . சொல் - சொல்லிய ( மதக் ) கோட்பாடுகளை . திடம் - உறுதியுடையவை . என்று - எனக்கொண்டு . துரிசுபட்டேன் - சைவத்தினீங்கிச் சமணத்திற் புக்க குற்றம் அடைந்தேன் . துரிசு பட்டேனுக்கும் - குற்றமுற்றேனுக்கும் . எனக்கும் புண்ணியம் உண்டுகொல் ? வில் திடம் - வில்லை வலிமையால் . வாங்கி - வளைத்தவன் ( சிவன் ). விற்றிடம் - விசயனது விற்றிடம் . ( வில் வலிமை ). அருச்சுனனுடைய வில்லின் திடத்தை வாங்கி ; ` வாங்கல் ` கவர்தல் எனலுமாம் . விசயன் - அருச்சுனன் . அன்று - அவன் காட்டில் தவம் புரிந்த காலத்தில் . ஒரு வேடுவன் - தனி வேடன் . ` புற்றிடங் கொண்டான் ` திருவாரூர்ப் பிரானது தமிழ்த் தொல்பெயர் . வன்மீகநாதன் என்னும் மொழி பெயர்ப்பில் அத்தமிழ்ப் பெயரினது பொருளமைதி இல்லை . அமணர்க்கு இராவுண்டி இராவுண்டி . சொல் - அறிவுறூஉ . திடம் : - வடசொற்றிரிபு . அன்று ஒரு வேடுவனாகி விசயனொடு வில் திடம் வாங்கியாகிய புற்றிடங்கொண்டான் என்க . வாங்கி ஆய்க் கொண்டான் என்றியைத்தல் பொருந்தாது . விசயனொடு அன்றிய வேடுவன் எனலும் ஆம் . அன்றுதல் - பகைத்தல் . வேடுவனாய் வாங்கியாகிய புற்றிடங்கொண்டான் என்றாலன்றி ஆய் என்னும் எச்சத்திற்கு முடிபு பொருந்தாது . ` மனைதுறந்தல்லுணாவல்ல மண் குண்டர் மயக்கம் நீக்கி எனை நினைந்தாட்கொண்டாய் ` ( தி .4 ப .103 பா .6.)

பண் :

பாடல் எண் : 3

ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புர மட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்றிரு வாரூர்த் திருமூலட் டானன்செங்கண்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

போருக்காக வளைத்துக் கொண்ட மேருமலையாகிய வில்லினாலே மும்மதில்களையும் அழித்தவனாய் , தான் போய்த் தேடாமல் இயல்பாகவே மேம்பட்ட செல்வத்தை உடையனாய்த் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறைபவனான , திருமாலாகிய , சிவந்த கண்களை உடைய போரிடும் காளையை உடைய பெருமானுடைய அடியார்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு , ஆடைகளால் பொலிவு செய்யப்படும் வடிவழகின்றி நின்றபடியே உணவினை வாங்கி உண்ணும் மூர்க்கர்களாகிய சமணர் , தம் கண்களால் காணுமாறு , அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

புரம் அட்டவன் ; திருவுடையான் ; திருமூலட்டானன் ; விடையான் அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் , குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ ? ஒரு வடிவு இன்றி - சிறிதும் அழகில்லாமல் . வடிவு - அழகு , உருவம் கருத்தாலறியற்பாலது உருவம் . கண்ணாற் காணற்பாலது வடிவம் . நின்றுண்குண்டர் ; இருந் துண்தேரர் . குண்டர் - மூர்க்கர் . செரு - போரில் . அடி - அடிக்கும் . வில்லடித்தல் என்னும் வழக்குணர்க . வடித்துக் கொண்ட சிலை . வடி - கூர்மை . கூரிய அம்பிற்கும் ஆம் . வெஞ்சிலை - வெய்ய சிலை ( வில் ). கருவியின் ஆகும் செயலைக் கருவிமேல் ஏற்றியுரைத்ததாகும் . புரம் - முப்புரம் . அட்டவன் - எரித்தழித்தவன் . சென்று அடையாத் திரு உடையான் :- ` சென்றடையாத திருவுடையான் ` ( சம்பந்தர் ) ` சென்றடையாச் செல்வன் ` ( தி .6 ப .87 பா .1) எங்கும் நிறைந்த திருவருட் செல்வத்தை இருந்தாங்கிருந்து அறிந்தாங் கறிந்து கொள்ளல் திருவருட் செல்வப் பேறு . அது பெறப்புடை பெயர்ச்சி வேண்டா . ஏகதேசத்திலிருக்கின்ற செல்வம் சென்று அடையப்படும் . சிவனருளின்றேற் கிடையாத செல்வம் எனல் சிறவாது . ` செல்லாத செல்வம் உடையாய் போற்றி ` ( தி .6 ப .57 பா .3) என்பதற்கு அது பொருந்தலாம் . திருவாரூர்த் திருமூலட்டா னேசுவரர் . செங்கண் பொருவிடை . அவ்விடையை ஊரும் பிரான் . அவன் அடி . அடித்தொண்டர் :- ( தி .4 ப .102 பா .2, 4.)

பண் :

பாடல் எண் : 4

மாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு வேனுக்கு முண்டுகொலோ
தேசனை யாரூர்த் திருமூலட் டானனைச் சிந்தைசெய்து
பூசனைப்பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

ஞான ஒளி வடிவினனாகிய திருவாரூர் மூலத் தானப் பெருமானைப் பூசனை செய்யும் நில உலகத்தேவர்களின் அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப் பேறு , அழுக்கு ஏறிய உடம்பினராய் , அகத்து வன்மையைப் புறத்துக் காட்டும் கண்ணினராய் வழுக்கைத் தலையரான சமணர்களுடைய தொடர்பை விடுத்து , எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமானையே நினைத்து வருந்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

மாசு - அழுக்கு . ஏறிய - மிக்க ; ஏறி மேற் படிந்த . மேனியர் - கரிய மேனியுடையவர் . வன்கண்ணர் - அகத்து வன்மையைப் புறத்துக் காட்டும் கண்ணியர் . மொண்ணர் - வழுக்கைத் தலையர் . விட்டு - அகன்று . ஈசனையே - உடையவனையே . நினைந்து - எண்ணெயொழுக்குப்போல நீளத் தொடர்ந்துன்னி . ஏத்துவேனுக்கும் - எடுத்துரைத்து வழிபடும் எனக்கும் ( புண்ணியம் உண்டு கொலோ ?). தேசனை :- ` மெய்ச்சுடருக்கு எல்லாம் ஒளி வந்த பூங் கழலுத்தர கோசமங்கைக் கரேசே` ( தி .8 திருவாசகம் . 119). ஆரூர்த் திரு மூலட்டானனை . சிந்தை செய்து - நினைத்தலையாற்றி . பூசனை - பூசித்தல் . பூசனைப் பூசுரர் - பூசித்தலையுடைய பூதேவர் . பூசுரராகிய தொண்டர் . தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் . ` பூசுரர் ` பூசிக்கும் தொண்டரைக் குறித்தது .

பண் :

பாடல் எண் : 5

அருந்தும் பொழுதுரை யாடா வமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதி லாரூர்த் திருமூலட் டானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

திருத்தமாக அமைந்த பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானனுக்கு உகப்பான தவத்தில் ஈடுபட்ட அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு , உண்ணும் போது யாரிடமும் பேசாதிருத்தலை விரதமாகக் கொண்ட அமணர் கூட்டத்தை விடுத்து , பழைய செயலுக்கு வருந்தி நின்று ` தீவினையை அழிப்பவனே ` என்று , அவனை வாழ்த்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

அருந்தும் பொழுது உரை ஆடா அமணர் :- அமண் சமயத்தினர் உண்ணும் பொழுது பேசிடார் ; பிறர் பேசக்கேளார் ; பேசவிடார் . வெண்குன்றத்தில் ஒருவர் உண்ணும் பொழுது , அவர் வீட்டில் உள்ளாரோ ? என்று வாய்திறந்து நான் பட்டபாட்டை அவ் வெண்குன்றப் பெருமானே அறிவான் . அமணர் திறம் :- சமண் சமயக் கோட்பாடு . அகன்று - நீங்கி . வருந்தி - பரசமயம்புக்குப் போக்கிய வீண்காலங் குறித்து நொந்து . நினைந்து - சிவன் கழலே சிந்தித்து . அரனே என்று - அரகர என்று சொல்லி . வாழ்த்துவேற்கு - வாழ்த்தும் அடியேனுக்கும் . திருந்திய மாமதில் ஆரூர் :- திருவாரூர்த் திருமதில் பெரியதும் திருந்தியதும் மாமதில் ஆரூர் :- திருவாரூர்த் திருமதில் பெரியதும் திருந்தியும் ஆதலை உணர்த்திற்று . திரு மூலட்டானனுக்குப் பொருந்தும் தவம் :- சரியை கிரியை யோகமென்னும் இறப்பில்லாத தவம் , ( சிவ . போ . சூ . 8 அதி 1 ). முற்செய்தவத்தான் ஞானம் நிகழும் :- ` சரியை , கிரியா யோகங்களாகிய தவத்தினைச் செய்தவர் ` ( சிவஞான பாடிய வாசகம் ) தவம் இவ்வாறு சரியை முதல் நால்வகைப்பட்டு அவற்றுள்ளும் பல்வேறு வகைப்பட்டு நிகழ்தல் ( சிவஞானபாடிய லாசகம் ) தவம் உடைத்தொண்டர் :- சரியையாளர் கிரியையாளர் , யோகியர் . அத்தவத்தின் பயனாகிய ஞானத்தைப் பெற்றோரும் தொண்டருள் அடங்குவர் . அவர்க்குத் தொண்டராம் புண்ணியம் வாழ்த்துவேற்கு முண்டுகொல் .

பண் :

பாடல் எண் : 6

வீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன் னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் திருமூலட் டானன்செய்ய
பூங்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

மணம் கமழும் சோலைகளை உடைய அழகிய ஆரூரில் திருமூலத்தானத்து உறையும் சிவந்த மலர்போன்ற திருவடிகளை உடைய பெருமான் திருவடிகளில் தொண்டு செய்யும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப் பேறு , பருத்த தோள்களையும் கால்களையும் கொண்டு ஆடை உடுக்காதவராய் ஊமைகள் போல யாரிடமும் பேசாமல் உண்ணும் மூடர்களாகிய சமணர்கள் காணுமாறு நமக்குக் கிட்டும் வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

வீங்கிய தோள்கள் :- வீங்கிய தாள்கள் . தோள்களும் தாள்களும் மிக்க பருமையுடையன . அவற்றிற்கேற்பமற்றைப் பகுதிகளும் பருத்தன எனக்கொள்க . அப்பரிய உடம்பு மறைப்பின்றி நிற்றல் பார்ப்போர்க்கு வெறுப்பை விளைக்கும் . அன்றியும் ஊமையர்போல் பேசாமல் உண்ணுகின்ற நிலை அவ்வெறுப்பை மிகுக்கும் . அதனை வீங்கிய ... ... நின்று வெற்றரையே மூங்கைகள் போல் உண்ணும் மூடர் ` எனக்குறித்தார் . பிறர்க்கு வெறுப்புண்டாக்குவோர் அறிஞராகார் . மூங்கைகள் - ஊமையர் . ` மூடர் முன்னே நமக்குப் புண்ணியம் உண்டு கொலோ ` என்க . தேங்கமழ் சோலை - தேன்மணம் கமழும் சோலைகள் ; தென் ஆரூர் - அழகிய திருவாரூர் . சோலைகளையுடைய ஆரூர் ; திருமூலட்டானம் - திருமூலட்டானேசுவரர் ; செய்ய பூங்கழலான் - சிவந்த தாமரைப் பூவையொத்த பொலிவுடைய கழலணிந்த திருவடியினன் ; அடித்தொண்டர் - திருவடித்தொண்டர் ; அடித் தொண்டர் முடித்தொண்டர் - அடிமன்னர் , முடிமன்னர் என்னும் வழக்கினை தி .4 ப .102 பா .2 ஆவது திருவிருத்தத்திலும் தி .10 திருமந்திரம் 1601 லும் காண்க . ` தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொலோ `.

பண் :

பாடல் எண் : 7

பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட்
டெண்ணில் புகழீசன் றன்னருள் பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதி லாரூர்த் திருமூலட் டானனெங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

உறுதியான பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எங்கள் நல்வினை வடிவினனாகிய பெருமானுடைய அடித்தொண்டருக்குத் தொண்டராகும் புண்ணியம் , தாமாகவே புனைந்துரைத்த சாத்திரங்களை உபதேசிப்பவராய் , வலிய தலைமயிரை நீக்கிக் கொள்பவராய் உள்ள சமண மூர்க்கர்களை விடுத்துக் கணக்கிட முடியாத புகழை உடைய ஈசன் அருளைப் பெற்ற அடியேனுக்கும் உண்டோ ?

குறிப்புரை :

பண்ணிய சாத்திரப்பேய்கள் :- வேதாகமங்களைப் பழித்து அவற்றை முதலாகக் கொள்ளாமல் தாமே படைத்துக் கொண்ட சமய சாத்திரங்களை உடைய பேயர்கள் . அவை பூருவ பக்கப் பொருள்களைச் சித்தாந்தமாகக் கொண்டுரைத்த புனைந்துரை நூல்கள் என்றவாறு . கடவுளை வழிபடாதாரும் கடவுள் இல்லை என்பாரும் பேயர் எனப்படுவர் . சமணர்க்குக் கடவுள் வேறில்லை ; அருகனே கடவுள் . அருகன் மக்களுள் ஒருவனாய் இருந்து அமண் நெறியில் வீடு பெற்றவன் . ` நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த் திரிந்து எய்த்தேன் ` ( தி .7 ப .1 பா .2). ` நமச்சிவாய என்று உன்னடி பணியாப் பேயன் ` ( தி .8 திருவாசகம் 404) ` உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்தலகையா வைக்கப்படும் ` ( திருக்குறள் ) என்பவற்றால் கடவுளை நினையாதாரும் இல்லை என்பாரும் பேய ரெனப்படுதலை அறியலாம் . பண்ணிய சாத்திரங்களுள் ஒன்று தருக்கம் . அத் தருக்கமே பேசித் திரியும் பேய்கள் எனலும் ஆம் . சாத்திரம் கேட்கில் என் , ` சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் `. பறி தலைக் குண்டர் - ` தலையெலாம் பறிக்கும் சமண்கையர் `. சமணர் தலைமயிர்களைப் பறிப்பர் . தலைமயிர் பறித்தல் சுடுபாறையிற் கிடத்தல் முதலியன நிர்ச்சரமென்னும் தவம் என்பர் அருகதர் . எண் - அளவு ; திண்ணிய மாமதில் ஆருர் - ( தி .4 ப .101 பா .5); எங்கள் புண்ணியன் - எங்களுடைய சிவ புண்ணியத்தின் பயனாக உள்ளவன் . புண்ணிய சொரூபியும் ஆம் . புண்ணியன் அடித் தொண்டர் . தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொலோ .

பண் :

பாடல் எண் : 8

கரப்பர்கண் மெய்யைத் தலைபறிக் கச்சுக மென்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ
திருப்பொலி யாரூர்த் திருமூலட் டானன் றிருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

செல்வத்தால் பொலிவு பெற்ற திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் கயிலாயபதியிடம் விருப்பம் பொருந்திய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம் , ஒரோவழித் தம் உடம்பைப் பாயால் மறைப்பவராய்த் தலைமயிரை வலிய நீக்குவதே சுகம் என்று கூறும் சமண சமய மூர்க்கர்கள் உரைத்தன வற்றைக் கேளாமல் சிவபெருமான் பக்கல் கடைத்தேறுவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் உண்டோ ?

குறிப்புரை :

திருமூலட்டானனும் , திருக்கயிலைப்பொருப்பனும் ஆகிய சிவபெருமானுக்கு விருப்பு அமர்ந்த தொண்டர்க்குத் தொண்ட ராம் புண்ணியம் , குண்டர் உரைப்பன கேளாது ( அங்கு உய்யும் வழியின்றி ) இங்கு உய்யப்போந்தேனுக்கும் உண்டு கொல் என்க . மெய்யைக் கரப்பர்கள் - உடலைப் பாயால் மறைப்பவர்கள் . தலை - தலைமயிரை . சுகம் - இன்பம் . என்னும் - என்று கருதும் ; சொல்லும் . குண்டர் - மூர்க்கர் ; உரைப்பன - சொல்லும் உபதேசங்களை . கேளாது - பொருட்படுத்தாமல் ` கேளாம் புறன் ` ( சிவ . போதம் அவையடக்கம் ) அவர் வெள்ளறிவு இதுவென்றொழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் கேளாம் புறன் என்றார் . கேட்டல் - பொருளாகக் கோடல் . அது ` ஊறு கேளாது ` என்பதனாலும் , கேளாரும் வேட்ப மொழிவ தாம் என்பதனானும் அறிக . ( சிவஞானபாடியம் ) தியாகராசர் வீற்றிருப்பதாதலின் எல்லாத் திருவும் பொலியும் ஆரூர் என்பார் திருப்பொலி ஆரூர் என்றார் . செல்வத்திரு , கல்வித்திரு , ஞானத்திரு , பேரின்பத்திரு ( சென்றடையாததிரு ) சிவமேபெறுந்திரு , ` கடைக் கணித்து என் உளம் புகுந்த திருவந்தவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ , அடியோம் திருவைப்பரவி ` என்பனவற்றால் , சிவ பெருமானைத் திருவென்றதறிக . பொருப்பு - மலை , விருப்பு - பக்தி , பொருப்பன் விருப்பு - சிவபக்தி , அமர் தொண்டர் :- வினைத்தொகை .

பண் :

பாடல் எண் : 9

கையிலிடு சோறு நின்றுண்ணுங் காத லமணரைவிட்
டுய்யு நெறிகண்டிங் குய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ
ஐய னணிவய லாரூர்த் திருமூலட் டானனுக்குப்
பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

நம் தலைவனாய் அழகிய வயல்களை உடைய திருவாரூரின் திருமூலத்தானப் பெருமான் பக்கல் உண்மையான அன்புடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம் , கையில் வழங்கப்படும் சோற்றை நின்றபடியே உண்ணும் செயலில் விருப்பம் கொள்ளும் சமணரைவிடுத்து , பிழைத்தற்குரிய வழியைக் கண்டு சிவபெருமான் பக்கல் பிறவிப் பிணியிலிருந்து தப்புவதற்காக வந்து சேர்ந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

கையில் இடுகின்ற சோற்றை நின்று உண்ணும் விருப்பத்தை உடைய அமணர் . அமணரை விட்டு - சமணரை அகன்று ; உய்யும் நெறி - பிறவி தீர்த்துப் பேரின்பம் எய்த ஆம் சைவப்பெரு நெறி . கண்டு - திருவருளால் உணர்ந்து . அருள்சூலை நோய்வடிவில் வந்தது . ` முன்னமே முனியாகி யெனையடையத் தவ முயன்றான் அன்னவனை இனிச் சூலை மடுத்தாள்வன் என அருளி ` ( தி .12 பெரிய . திருநா . 48) ` பண்டுபுரி நற்றவத்துப் பழுதினள விறை வழுவுந் தொண்டரையாளத் தொடங்குஞ் சூலை வேதனை தன்னைக் கண்டரு நெற்றியரருளக் கடுங்கனல்போ லடுங் கொடிய மண்டு பெருஞ் சூலை அவர் வயிற்றினிடைப் புக்கதால் ` ( தி .12 பெரிய . திருநா . 49) ` மாமலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையும் இவ்வாழ்வு பெறத்தரும் சூலையினுக்கெதிர் செய்குறை யென்கொல் ` ( தி .12 பெரிய . திருநா . 73). இங்கு - இச் சைவ நெறியில் . உய்யப் போந்தேனுக்கும் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொல் ? ஐயன் - தலைவன் , அடிகள் , தியாகராசன் , அணி - நீர்வளமும் நிலவளமும் உடைய பயிரழகு . பொய்யன்பில்லா அடித்தொண்டர் - திருவடிக்கு மெய்யன்புடைய தொண்டர்கள் .

பண் :

பாடல் எண் : 10

குற்ற முடைய வமணர் திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ
மற்பொலி தோளா னிராவணன் றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய தோள்களை உடைய இராவணனுடைய வலிமையை அழியச் செய்த பொன்னாலாகிய கழலை அணிந்த சிவபெருமானுடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம் , குற்றமுடைய சமணர்கள் சமயத்தின் கூறுபாடுகளை விடுத்து நீங்கி , சைவ சமயத்தில் அடியேனுக்குச் செய்வதற்காக வகுக்கப்பட்ட செயல்களைச் செய்து பிறவிப் பிணியினின்றும் பிழைத்துப் போவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

குற்றம் உடைய அமண் ; குற்றம் உடைய அமணர் . குற்றம் - அநேகாந்தவாதமும் பிறவும் . திறம் - சமயத்திறம் . கையகலல் - சார்பு விட்டு நீங்கல் . அகன்றிட்டு ( - நீக்கிட்டு ) என்றது நீக்கியதன் அருமை குறித்தது . உற்ற கருமம் :- சைவத்தினீங்கியக்கால் ஒரு கருமமும் உற்றிலது . சமணத்தின் நீங்கிச் சைவத்தின் மீண்டக்கால் உள்ள சூலை நோய் நீக்க , தமக்கையார்க்கு அறிவித்தல் முதலாகத் திரு வதிகையை வழிபட்டது முடிய உள்ள செயல்கள் . மல் - வலிமை . பொலி - விளங்கும் . தோளான் - இருபது தோள்களையுடையவன் . தோளானாகிய இராவணன் . இராவணனது வலியை வாடச் செய்த கழலான் . வாடுதல் , வாட்டுதல் , வாட்டுவித்தல் என்னும் மூன்றற்கும் உள்ள வேறுபாடறிக . பொற்கழல் - பொன்னாற் செய்யப்பட்ட வீரகண்டை . ` ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறனடித் தலமே ` ( தி .4 ப .92 பா .16) கழல் அதனை அணிந்த திருவடிக்கு இடப்பொருளாகு பெயர் ( தானி - இடப் பொருள் ). கழலானடிக்குத் தொண்டு பூண்டொழுகுவோர் கழலானடித் தொண்டர் . அவர்க்குத் தொண்டராம் புண்ணியம் உய்யப் போந்தேனுக்கும் உண்டு கொலோ என்க .

பண் :

பாடல் எண் : 1

வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா னடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே. 

பொழிப்புரை :

தொண்டர்களே! வேம்பு போன்ற கசப்பான சொற்களையே பேசி, இவ்வூன் உடம்பைப் பாதுகாத்து, வினைகளை மிகுதியாகத் தேடிக்கொண்டு வயிற்றை உணவால் நிரப்பிச் சுற்றத்தவர்களே நமக்கு நிலையான துணைவர்கள் என்றிருக்கின்றீர்களே! ஆம்பற் பூக்கள் நிறைந்த பொய்கைகளை உடைய ஆரூரை உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளின் கீழே சாம்பலைப் பூசி வஞ்சனையின்றித் தொண்டுகளைச் செய்து கடைத்தேறுங்கள்.

குறிப்புரை :

வேம்பு:- உவமையாகுபெயர். வேம்பு போற்கசக்கும் பேச்சு. உலகியல் பற்றிய பேச்செல்லாம் முன் பேசிப்பேசி வெறுப்பைத் தருவனவேயாதலின், அவை வேம்பையொத்தன. வேம்பு கைப்பது போலக் கைப்பன. விடக்கு - ஊன்; `வேற்று விகார விடக்குடம்பு` (தி.8 திருவாசகம். 1:- 84) க்கு ஆகுபெயர். ஓம்புதல் - ஊண்புதல் என்பதன் மரூஉ. ஊணால் ஊனைப் பெருக்கல் ஊண்புதல். உண்ணுதல் ஊண் புதல் இரண்டும் இன்றும் வழக்கில் உள்ளன. அது `வீண்பு - வீம்பு.` `பாண்பு - பாம்பு` `காண்பு - காம்பு` எனல் போல மருவி வழங்கு கின்றது. வினை:- தொல்வினை, பழவினை (சஞ்சிதகருமம்); உள் வினை, நிகழ்வினை (பிராரப்தகர்மம்) ; மேல்வினை, வருவினை (ஆகாமியகருமம்) என்பவற்றுள், நிகழ்வினையது நுகர்ச்சியின் எய்திப் பெருகும் வருவினையைக் குறித்தது. சஞ்சிதத்தைப் பெருக்குமாறில்லை. ஆகாமியமே சஞ்சிதமாக மாறுகின்றது. நல்வினை - தீவினையாகிய ஆகாமியம் அறமும் மறமும் ஆகிய சஞ்சிதமாகமாறி இன்பமும் துன்பமும் ஆகிய பிராரப்தமாகும். ஒன்பது தூம்புடைய உடலில், தூர்த்துத்தூர்த்துவரினும் தூராக்குழியான வயிற்றைத் தூம்பு என்றார். `தூராக்குழி` சோற்றுத் துருத்தி` `தொலைவிலாச் சோற்றுத் துன்பக்குழி` `பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள் துருத்திக் கறுசுவை போடுகின்றார்` `சோறிடுந்தோற்பை` `சோறும் கறியும் நிரம்பிய பாண்டத்தை` (பட்டினத்துப்பிள்ளையார் பாடல்). சுற்றம் - சுற்றியிருப்பவர். `காலாடுபோழ்திற் கழி கிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர் - ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட தொடர்புடையேம் என்பார் சிலர்.` (நாலடியார். 113). இருத்திர் - இருப்பீர். தொண்டீர் - தொண்டு புரிதலுடையீர். தொண்டீர் தொண்டு பட்டுய்மின்கள். ஆம்பல். அம்போது = ஆம்பற்பூ. அம்சாரியை. அழகெனல் ஒல்லாது. `புளியம் பழம்` என்பதிலும் அழகெனலாமோ? `பொய்கை` `வாவி` `கயம்` முதலியன வெவ்வேறாதலைப் `பெருங் கதை` முதலிய நூல்களிற் காண்க. `வண்டிமிர் பொய்கையும் வாவியும் கயமும் கேணியும் கிணறும் நீணிலைப் படுவும்` (பெருங். 3. மகத 3:- 5,6) ஆரூர்ப் பொய்கை கமலாலயம் முதலியன. அடிநிழற் கீழ்த் தொண்டுபட்டுய்ம்மின்கள். சாம்பல்:- நீறுபட்டதன்மேலும் நீறு படாதததும் அழியாததும் ஆகும் திருவெண் பொடி. `பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ அடிகள் ஆரூர் ஆதிரைநாளால் அது வண்ணம்` (தி.4 ப.21 பா.8). வேம்பினைப் பேசுதலும், விடக்கினை ஓம்புதலும் வினைகளைப் பெருக்குதலும் தூம்பினைத் தூர்த்தலும், சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கிச் சிவகீர்த்தனம். திருவருட்செல்வம், இறைபணி நிலை. திருவடித்துணை ஓங்க இருத்தல்.

பண் :

பாடல் எண் : 2

ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொ னாரூ ரகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாத னடித்தொண்டன் நம்பிநந்தி
நீராற் றிருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே. 

பொழிப்புரை :

அடியார்களின் அன்புமிக்க நறிய உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடித் தொண்டனும் தொண்டர்களுக்குள் உரையாணிப் பொன்போல் மிகச் சிறந்தவனுமாகிய நம்பிநந்தி, தமிழகத்து வேற்றூர்களில் உள்ளவர் எல்லாம் திருவாரூருக்கு வந்து சேரப் பங்குனி உத்திர விழாவினை ஆராய்ந்து முறைப்படி நடத்தினனாய், நீரை வார்த்துத் திருவிளக்குக்களை எரிய விட்ட செய்தியை நீண்ட தமிழ் உலகம் முழுதும் அறியும்.

குறிப்புரை :

நார் ஊர் நறுமலர் நாதன் - தமது அன்பு மிக்க நறிய (உள்ளத்) தாமரைமேல் விளங்கும் சிவபிரான். நாதனடி - சிவனடி. அடித்தொண்டன் ஆகிய நம்பிநந்தி. `நம்பிநந்தி` என்றுள்ளதை நோக்கி, அது `நமிநந்தி` என மருவியதறிக. நம்பிநந்தி பங்குனி யுத்திரம் பாற்படுத்தான் எனின், ஈற்றடியொடு இனிதியையாது. அடித் தொண்டர் ஆணிப் பொன்னும், பங்குனி யுத்திரம் பாற்படுத்தானும் நாதனடித் தொண்டனும் ஆகிய நம்பி நந்தி, நீரால் திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் என்று கொள்க. பாரூர் பரிப்ப ஆராய்ந்து அடக்கி, ஆரூர் அகத்துப் பாரூர் அடக்கி. தம் பங்குனி யுத்திரம். பார் ஊர் - பாரில் உள்ள பல்லூர்கள். பரிப்ப - தாங்க. ஊர் பலவற்றினின்று திருவிழாக் காணப் புகுதரும் அன்பர் கூட்டத்தை ஆரூரகம் தாங்கி நிற்க. ஆரூரகத்துப் பாரூரெல்லாம் அடங்கவும் பாரூர்களை ஆருர் பரிக்கவும் செய்தருளினார் நம்பிநந்தியடிகள் நாயனார். ஆராய்ந்து அடக்கிப் பரிப்பப் பாற்படுத்தான். ஆராய்ந்து பாற்படுத்தான் எனலுமாம். இது பங்குனியுத்திரம். மார்கழித் திருவாதிரை முன் (தி.4 ப.21 பா.1-10) கூறப்பட்டது. அடித் தொண்டர் x முடித்தொண்டர். `பொடிக் கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் அடித் தொண்டன் நந்தியென்பான் உளன் ஆரூரமுதினுக்கே` (தி.4 ப.102 பா.4) என்ற தால், அடித்தொண்டன் என்றதன் காரணம் கூறப்பட்டது. `அடி மன்னர் x முடிமன்னர்` `முடிமன்னராகி மூவுலகமதாள்வர் அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்` (தி.10 திருமந்திரம். 1601) ஆணிப் பொன் - `ஆணிக் கனகம்` (தி.4 ப.92 பா.16). அடித்தொண்டர் ஆணிப் பொன் - நம்பிநந்தியடிகள் நாயனார். ஆணிப்பொன் - உரையாணிப்பொன். அடித்தொண்டர்க்கு உரையாணிப்பொன். (மாற்றறிய உரைத்துக் காட்டவுள்ள சிறந்த பொன்) ஆவார். `நீறுபுனைவாரடியார்க்கு நெடு நாள் நியதியாகவே, வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால், ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க்காணி எனும் பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்.` (தி.12 பெரிய. திருநாவுக்கரசு புராணம். 31) பங்குனியுத்திரத் திருவிழாவில் ஆரூரில் வந்துள்ள பாரூர் மக்களை அவரவர்க்குத் தக்க பால் ( - இடம்) படச் செய்ததும் நீரால் திருவிளக்கிட்டதும் இதில் ஏத்தப்பட்டன. `நாதரருளால் திருவிளக்கு நீரால் எரித்தார் நாடறிய.` இதன் மூன்றாவதடியில் `நாரூர்` என்று உள்ளவாறு உணராது, பாற்படுத்தான் ஆரூர் எனப் பிரித்தது பிழையாகும். முதலடியில் `ஆரூர்` என்றதும் னகர நகரப் புணர்ச்சியும் மோனையும் நோக்கிப் பிரிப்பது நன்று. மலர் போலும் அடியுமாம்:- `செய்யார் கமலமலர் நாவலூர் மன்னன்` (தி.7 ப.13 பா.11) `அல்லியந் தாமரைத்தார் ஆரூரன்` (தி.7 ப.22 பா.10) `எரியாய தாமரைமே லியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே` (தி.6 ப.16 பா.7) `மலர்மிசையேகினான்` (குறள்). மலர் தொடுத்தற்குரிய நாரும் ஆம். இது பங்குனியுத்திரத் திருவிழாத் தொடக்கம் போலும். ஆரூரிற் பாரூரெல்லாம் அடங்கச் செய்த திறம் வியந்தது. `அக் கணங்கள் ஆர அழல் வலங்கொண்ட கையான் ( நம்பி நந்தியடிகள்) அருட்கதிர் எறிக்கும் ஆரூர்` (தி.4 ப.53 பா.1). `அடித்தொண்டன் நந்தியென்பான்` (தி.4 ப.102 பா.4.) `நந்தி` (தி.4 ப.102 பா.6) `நந்தி பணிகொண்டு அருளும் நம்பன்`. (தி.6 ப.34 பா.4)

பண் :

பாடல் எண் : 3

பூம்படி மக்கலம் பொற்படி மக்கல மென்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலு மாரூ ரினிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ ரேற்றமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து தொழுதும் மடநெஞ்சமே. 

பொழிப்புரை :

மடநெஞ்சமே! எம்பெருமானுடைய திருமேனிக்கு உரிய ஆபரணங்களைப் பொன்னால் செய்து அணிவிப்பர். அஃது இயலாவிடின் பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தல் என்ற உலகியற்படி அத்திருமேனியைப் பொன் அணிகளால் அழகுறுத்துவது போலப் பூவாலும் அழகு செய்வர். திருவாரூரில் இனிது அமர்ந்த பெருமானார் தம் திருமேனிக்கு அணிகலன்கள் வேண்டுவராயின் நாம் தமிழ்ப் பாமாலைகளால் அவருக்கு அணிகலன்கள் செய்து அணிவித்து அவரை வணங்குவோம்.

குறிப்புரை :

படிமம் - பிரதிமா என்னும் வடசொல்லின் திரிபு. பிரதியைப் படி எனல் பயின்ற வழக்கு. பிரதிமா - பிரதிமை, படிமை, படிமம் எனத் திரிந்தது. உபமா,. உவமை, உவமம் என்பது போல்வது. கலம் - பூண். படிமக்கலம் - பிரதிமைக்குப் பூட்டும் பூண். அது பூவாலும் பொன்னாலும் செய்யப்படும். `பொன்னாலாகாது விட்டாலும் பூவாலும் ஆகாதோ` என்பது இயலாதார் கடவுட்குச் செய்யும் பணிபற்றிய வழக்கு, பூம்படிமக்கலம் என்றும் பொற்படிமக்கலம் என்றும் படிமக்கலம் ஆம் என்று இவற்றால் படிமக்கலம் ஆம். இவற்றால் ஆம் - பூவாலும் பொன்னாலும் ஆம். ஆகிலும் - ஆனாலும். ஆரூர் இனிது அமர்ந்தார் - திருவாரூர்த் திருக்கோயிலை யினிது விரும்பிப் புற்றிடங் கொண்ட முதல்வர். படிமக்கலம் வேண்டுவரேல் - பிரதிமாபரணம் விரும்புவாரென்னில்; நெஞ்சமே; நாம்; தமிழ் மாலைகளால் படிமக்கலம் செய்து தொழுதும். நெஞ்சமே, படிமக்கலம் பூம்படிமக்கலம் பொற்படிமக்கலம் என்று இவற்றால் ஆம். ஆகிலும், ஆரூரினிதமர்ந்தார்தாம், வேண்டுவாரெனில், நாம் தமிழ் மாலைகளால் படிமக்கலம் செய்து தொழுதும் எனச் சொல்வகை செய்துகொள்க. `தொழுதும் மடநெஞ்சமே` என்பது `தொழுதுமட நெஞ்சமே` என்று முன் மொழியீற்று மகரவொற்றுக் கெட்டு நிற்கும். அதையுணராமல், யகரவொற்றுடன் பதித்துவிட்டனர் சிலர். படிமக் கலம் என்பது முகம் பார்க்கும் கண்ணாடி பெரியோரிடம் சமர்ப்பிக்கும் உபகரணம் என்னும் பொருளது (தமிழ்லெக்ஸிகன்). படிமம் - பிரதிமை. `படிமம் போன்றிருப்ப நோக்கி` (சீவக. 2642) `திருட்டாந்தம் நன்றியலுலகுக்கெல்லாம் படிமமா` (திருவாலவா. 47: 3.) வடிவம். `பவளத்தின் பருவரை போற்படிமத்தான் காண்`. விரதம்:- `பல்படிம மாதவர்கள் கூடி` (தேவாரம்). தூய்மை:- `படிமப்பாதம் வைத்த வப்பரிசும்` (தி.8 திருவாசகம். 2: 76). என்பவற்றுள் ஈண்டுப் பொருந்துவதுளதேற்பொருத்திக்கொள்க.

பண் :

பாடல் எண் : 4

துடிக்கின்ற பாம்பரை யார்த்துத் துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகிமுனிவர் பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்ட னந்தியென் பானுள னாரூ  ரமுதினுக்கே. 

பொழிப்புரை :

துள்ளுகின்ற பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றி நிலை கலங்காத பிறையைச்சூடி, மேம்பட்ட தொண்டர்களாகி முனிவர்கள் திருத்தொண்டுகளைச் செய்வதோடன்றி, திருநீற்றைப்பூசி வந்து சேரும் அடியவர்களுடைய திருவடிகளைத் தன் தலைமேல் கொள்ளும் அழகினோடு கீழான தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும் நம்பி நந்தியும் ஆரூரில் அமுதம் போன்றுள்ள பெருமானுக்குச் சிறப்பான தொண்டுகளைச் செய்யும் அடியவனாக உள்ளான்.

குறிப்புரை :

`அருமணித்தடம் பூண்முலையரம்பையரொடு அருளிப்பாடியர் உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார் விரிசடை விரதிகள் அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் தெருவினிற் பொலியுந் திருவாரூர்` (தி.4 ப.20 பா.3) என்று முன்னர் அறிவிக்கப் பெற்றுள்ள நவகணத்துள், `வேயொத்த தோளியர்` (௸ ப.19 பா.3) ஆகிய `அரம்பையர்` (௸ ப.20.பா.3) அல்லாத ஏனைய கூட்டத்தினரை எண்கணமும் பின் படர ஏறேற்றமா ஏறிச் செல்லும் அந்தணனை நான் கண்டது ஆரூரே (௸ ப.19.பா.4) என்றருளினார். அக்கணங்களுள் உருத்திர பல்கணத்தரை இங்கு, `முனிவர்` என்று குறித்தார். `அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்` என்று திருவள்ளுவர் (திருக்குறள்) முனிவரைக் கூறியதுணர்க. அம் முனிவர் பலதிறத்தர். அவருள் ஒருதிறத்தார் சிவரூபம் பெற்றுடையவராய் உருத்திர பல்கணத்தார் ஆவர். அவரையே `துடிக்கின்ற பாம்பு அரை(யில்) ஆர்த்துத் துளங்கா மதி (யைத் தலைமேல்) அணிந்து, (அதனால்) முடித்தொண்டர் ஆகி` (னார்) என்று குறித்தார். அவர் ஆரூரமுதினுக்குப் பணிசெய்வர். அவர் பணிசெய்வதேயும் அன்றி நம்பிநந்தியடிகள் பணிசெய்தலும் அமுதினுக்கு உளது என்பது இதனால் உணர்த்தப்பட்டது. முடித்தொண்டர் - மதியை முடிமேல் அணிந்து தொண்டு செய்யுமவர். அடித்தொண்டர் - அடியார் திருவடியைப் பொறுத்த பொற்புடைய தொண்டர். திருவெண் பொடிக் கொண்டு பூசிப் புகும் தொண்டர்களுடைய திருப்பாதங்களை முடிமேற் சூடிப் பொறுத்த பொலிவால் அடித்தொண்டன் என்றது காரணப் பெயர் ஆகும். நந்தி என்பான் - நந்தி என்று சிறப்பித்துக் கூறப்பெறுவார். ஆரூரமுதினுக்கு முனிவர் முடித் தொண்டராகிப் பணிசெய்வதேயும் அன்றி அடித்தொண்டன் நந்தியென்பானுமுளன் என்று உம்மை கூட்டியுரைக்க. `முனிவர்` `முடித்தொண்டர்` என்ற பன்மையும் `அடித் தொண்டன்` என்று `நம்பிநந்தியடிகள்` ஆகிய ஒருவரையே குறித்த ஒருமையும் அறிக.

பண் :

பாடல் எண் : 5

கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கொர் கோடலியால்
இரும்பு பிடித்தவ ரின்புறப் பட்டா ரிவர்கணிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி யாரூ ரமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை வேண்டுவதே. 

பொழிப்புரை :

அரும்புகள் மலரும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் விரும்பி உறையும் பெருமானே! கரும்பினை வில்லாக ஏந்திய மன்மதன் உன்னால் கோபிக்கப்பட்டுச் சாம்பலானான். கோடலியாகிய இரும்பைப் பிடித்துத் தன் தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமன் உன்னால் சண்டீசன் என்ற பதவியளிக்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டான். நீ மனத்தின்கண் கரும்பை விரும்புகின்றாயா இரும்பை விரும்புகின்றாயா? நீ விரும்பும் பொருள் எப்பொருள் என்று அடியேன் உன்பால் வேண்டுவேன்?

குறிப்புரை :

கரும்பு - கரும்பு வில். பிடித்தவர் - கருவேள் ; மன்மதனார். காயப்பட்டார் - நெற்றிக்கண் தீயால் காய்தலையுற்றார். பிடித்தவர் சண்டேசுவர நாயனார். `கோடலியால்` என்றதால் அரி வாட்டாயரைக் குறித்ததன்று. இன்பு:- `தொண்டர்தமக்கு அதிபனாக்கி அனைத்தும் நாம் உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொற்றடமுடிக்குத், துண்டமதிசேர் சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்` (தி.12 பெரிய. சண்டேசுவர. புராணம். 56) என்றதிற் குறித்த இன்பம்; `சிவமயமாய்ப் பொங்கியெழுந்த திருவருளின் மூழ்கி .... ஒளியில் தோன்றிய` இன்பம். `நம்பொருட்டால் ஈன்றதாதை விழஎறிந் தாய் அடுத்ததாதை இனி உனக்கு நாம்` (தி.12 பெரிய. சண்டேசுவர புரா. 55, 54). `எம் பொருட்டுப்புரி பாவமும் புண்ணியமாக்கி எம்பால், விருப்பற்றவர் செய் அறமும் மற மாக்குவிப்பாய்` (காஞ்சிப். தழுவக். 77). `மால்தான் எண்ணி வேள்மதனை ஏவ எறிவிழித்து` (சிவஞான சித்தியார் 53.) `அரனடிக் கன்பர்செய்யும் பாவமும் அறமதாகும், பரனடிக் கன்பிலாதார் புண்ணியம் பாவமாகும், வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி, நரரினிற் பாலன்செய்த பாதகம் நன்மை யாய்த்தே` (சிவஞான சித்தியார். 119)\\\\\\\"ஈசற்கு நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு\\\\\\\" (நன்னெறி. 2) \\\\\\\"ஏற்றுங் கணையைமல ரென்று கருதா மதனைத் துணையை விடுத்தெரித்த தோன்றல்\\\\\\\" (திருவெங்கையுலா 12, 13) இவர்கள் மன்மதனும் சண்டேசுவர நாயனாரும். பெம்மான் என்றது அண்மைவிளி. விரும்பும் மனத்தாய். மனத்து விருப்புமாம். யாது என்று - கரும்பு இரும்புகளுள் நீ விரும்பும் பொருள் எப்பொருள் என்று (அறிந்து) நான் உன்னை யாது என்று வேண்டுவது? `யாதொன்று` `வேண்டுவனே` என்றும் பாடம் உண்டு.

பண் :

பாடல் எண் : 6

கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவ ரெய்தியு மூனமில்லா
அடிகளு மாரூ ரகத்தின ராயினு மந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கும் நந்தி புறப்படிலே. 

பொழிப்புரை :

கொடிகளும், மேற்கட்டிகளும், பறை, கவரி, சங்கு, கைவிளக்கு என்பனவும் கொண்டு குறைவற்ற செல்வர் பலர் திருவாரூரை வழிபடுதலுக்கு வந்து சேருவர். ஒரு குறைவும் இல்லாத திருமூலத்தானப் பெருமானாரும் திருவாரூரில் அமர்ந்திருப்பர். எனினும் அழகிய வெண்ணீற்றை அணியும் அடியவர்களுக்கு, நம்பி நந்தியடிகள் ஆரூரகத்தில் இல்லாமல், ஊருக்கு வெளியே செல்வாராயின் திருவாரூரில் ஒளியே இல்லை போலத் தோன்றும்.

குறிப்புரை :

குடி - குடிகளும், கொள்கின்ற விதானமும், கவரியும் பறையும் சங்கும் கைவிளக்கும் இவற்றொடு அழிவில்லாத பெருஞ்செல்வமும் அடைவோர் (செல்வத்தில் சிறந்த மக்கள்) பலர் திருவாரூரில் வந்திருப்பர். வந்திருந்தாலும் ஊனம் இல்லா ஒருவனாகிய திருமூலட்டானனும் (தியாகராசனும்) திருவாரூரகத்தே வீற்றிருப்பினும் நம்பிநந்தியடிகள் நாயனார் ஆரூரகத்தே இராமல் அதன் புறத்தே படில் திருவெண்ணீறு பூசும் அடியார்க்கு அங்கு ஒளி இராது. இருளை நிகர்க்கும். விதானம் - மேற்கட்டி. கவரி - வெண் சாமரம். பறை - பஞ்சமுக வாத்தியம் முதலியன. சங்கம் - சங்கநாதம். கைவிளக்கு:- திருக்கோயில்களிலும் திருமடங்களிலும் பார்த்து இதன் அமைப்பை அறிக. இடிதல் - அழிதல். இடிவு இல் - அழிவு இல்லாத. எய்துவர் எய்தியும் - பெறுவோர் அடைந்தும். ஊனம் இல்லா அடிகள்:- \\\\\\\\\\\\\\\"வேலை நஞ்சுண்டு ஊனம் ஒன்றில்லா ஒருவன் \\\\\\\\\\\\\\\" (தி.4 ப.112. பா.8) ஆகிய கடவுள். ஆரூர் அகத்தினர் ஆயினும் - திருவாரூரிலே இருப்பவர் ஆயினும். நந்தி புறப்படில் - நம்பி நந்தியடிகள் நாயனார் திருவாரூரின் அகத்திராமல் புறத்தே செல்வாராயின், அம் தவளப் பொடி கொண்டு - திருவெண்ணீற்றுப் பொடியைக் கைக்கொண்டும் (அன்பு கொண்டும்) அணிவார்க்கு - அழகுறப் பூசும் அடியார்க்கு `பொடிக்கொண்டு பூசிப் புகும் தொண்டர்` (தி.4 ப.102 பா.4). இருள் ஒக்கும் - திருவிளக்கிடாமையால் இருண்ட இடத்தை நிகர்க்கும். `ஆவிதனிலஞ் சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தியடிகள்`. (தி.1 ப.62 பா.6).

பண் :

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலில்
குங்குலி யப்புகைக் கூட்டென்றுங் காட்டி யிருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு திப்புன லோடவஞ்ஞான்
றங்குலி வைத்தா னடித்தா மரையென்னை யாண்டனவே. 

பொழிப்புரை :

தொண்டர்களே! விடியற்காலையில் தூப மூட்டி யில் உள்ள கனல் எரியில் குங்கிலியத்தை இட்டுக் குங்கிலியப் புகைக் கூட்டினை எம் பெருமானுக்குக் காட்டிச் சங்குகளை ஊதுங்கள். தன் இருபது தோள்களையும் கயிலையில் அதனைப் பெயர்ப்பதற்குச் செயற்படுத்தின இராவணனுடைய இரத்தம் ஓடுமாறு தன் கால்விரல் ஒன்றனை அழுத்தி நெரித்தவனுடைய திருவடித் தாமரைகளே அடியேனை அடிமைகொண்டன. அவை நுமக்கும் அருள் செய்யும்.

குறிப்புரை :

தொண்டீர் என்று வருவித்து ஒலிப்பித்திடுமின் என முடிக்க. முன் தொண்டிர் உய்மின்கள் என்றதறிக. சிறுகாலை - விடியற்காலை. தடவழல்:- கனலெரி. குங்கிலியப் புகைக் கூட்டு என்பது ஒரு தொகைநிலைத் தொடர். அது காட்டி என்னும் வினைக்குச் செயப்படுபொருள் காட்டி ஒலிப்பித்திடுமின். ஒலிப்பித்தல் என்னும் வினைக்குச் செயப்படுபொருள் சங்கு. இரண்டும் நிகழ்த்தும் வேலை சிறுகாலை. இவ்வாறு ஏவுதலுக்கு ஏது, தம்மையாண்ட திருவடித் தாமரை தொண்டரையும் ஆட்கொள்ளவேண்டும் என்னும் அப்பரது கருணை நோக்கம். இருபது தோள் அங்குலம் - தோள்களில் அழகிய கயிலையை; இருபது தோள்களாகிய அழகிய கூட்டம் எனலுமாம். உலம் - திருக்கயிலையை; திரண்ட கல்லைப் போல. உலம் வைத்தவன் - திரண்ட கல்லைப்போலும் வலிய தோள்களை வைக்கப்பெற்றவன். தோள்களுக்கு உலம் உவமையாகும். செங்குருதிப்புனல் - சிவந்த ரத்தநீர். ஞான்று - நாளன்று. அங்குலி - விரல். ஈண்டுத் திருக்காற் பெருவிரலைக் குறித்தது. வைத்தான் - சிவபெருமான்; வினையா லணையும் பெயர். வைத்தானடி:- ஆறனுருபு தொக்கது. அடித்தாமரை - உருவகம். `தூபம் விதியினால் இடவல்லார்` (தி.4 ப.31 பா.1).

பண் :

பாடல் எண் : 1

வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய்
கடிகமழ்சோலை சுலவு கடனாகைக் காரோணனே
பிடிமதவாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொ லெம்மிறையே.

பொழிப்புரை :

அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர் வதன் காரணம் என்ன ?

குறிப்புரை :

வடிவுடைய மாமலைமங்கைபங்கா - அழகுடைய பெரிய இமாசல குமாரிபாகா . கங்கைவார் சடையாய் - கங்கையின் ஆற்றலைத் தடுத்த நீள்சடையானே . கடிகமழ் சோலை சுலவுகடல் நாகைக்காரோணனே - மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த கடல் அருகேயுள்ள திருநாகையிலே திருக்காரோணம் என்னும் திருக் கோயிலை உடையவனே . காரோணம் = காயாரோகணம் என்பதன் திரிபு என்றும் காயம் உடம்பு . ஆரோகணம் ஏற்றுக் கொள்ளுதல் என்றும் புண்டரிகமகாமுனிவரை இறைவன் தந் திருமேனியில் ஏற்றுக் கொண்டருளினான் என்றும் நாகம் ( ஆதிசேடன் ) பூசித்ததால் பெற்ற பெயர் நாகை என்றும் பெரிய புராண உரையில் சிவக்கவிமணி உரைத்தார் . ` ஒரு ரிஷியைக் காயத்தோடு வானுலகுக்கு ஆரோகணம் செய்யும்படி இறைவன் அருளியதால் காயாரோகணம் என்ப . அது மருவிக் காரோணம் எனத் தலப் பெயருட் சேர்ந்தது ` ( தலச்சிறப்பகராதி 165 அடங்கன் முறை . பக் . 1224 என்று அறிவு சான்ற திரு . ம . பால சுப்பிரமணிய முலியார் பி . ஏ ., பி . எல் ., அவர்கள் எழுதியிருப்பதறிக . ) கார் ஓணத்தான் என்னுந் தமிழ்ச் சொல்லிரண்டன் புணர்ச்சியாகத் தோன்றுகின்றது . ` ஓணத்தான் ` என்றதை எதுகையில் வைத்து , ` பாணத்தான் மதில் மூன்றும் எரித்தவன் பூணத்தான் அரவாமை பொறுத்தவன் காணத்தான் இனியான் கடல்நாகைக் காரோணத்தான் என நம் வினை ஓயுமே ` என்று பாடியருளியதால் , அது தமிழாதல் புலப்படும் . காஞ்சிப் . காயாரோகணப் . 6. பார்க்க . ` காரோணத்தான் ` என்பதன் முதலெழுத்தை ஈற்றில் நிறுத்தி , ரோணத்தான் என்று அடி முதலில் அமைப்பது கெடில் வீரட்டானாரடி சேருமவருக்கே ` என்பது போலும் . ` திருவோணம் `. ` ஓலமார் கங்கையாதி ஓணநீராடல் எல்லாம் ` ( சேதுபுராணம் . தோத்திர . 48) என்பவற்றால் ` ஓணம் ` என்னும் தமிழ்ச் சொல்லாட்சியை உணர்க . எம் இறையே - எம் கடவுளே . பிடி - பெண் யானை . மதவாரணம் - களிறு . பேணும் துரகம் - விரும்பப்படும் குதிரை . யானையும் குதிரையும் இருக்க எருதின் மேல் ஏறுவது ஏனோ ? எருதின் குரலோசையும் நிறமும் அறிவிப்பது இடிகுரல் வெள்ளெருது . திருநாவுக்கரசு சுவாமிகள் திருநாகைக்காரோணத்தில் இறைவன் விடையேறித் திருவீதி வலம் வரும் திருநாளில் சென்று இவ்வாறு பாடியருளினார்போலும் . ஓணப்பிரான் ( திருமால் ) வழிபட்டதாற் ` காரோணம் ` என்று கோயிலைக் குறித்தனர் போலும் , ( காஞ்சிப் . அந்தர் வேதிப் 36-38.)

பண் :

பாடல் எண் : 2

கற்றார் பயில்கட னாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேனெடுங் கண்ணி வியன்கரமே
நற்றா ணெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே.

பொழிப்புரை :

கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும் , நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை , வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே . நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே . இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் .

குறிப்புரை :

கற்றவர்கள் பெருகிய கடலருகேயுள்ள திருநாகைக் காரோணத்திலே எழுந்தருளிய கண்ணுதலே பெருமானே வில்லேந்திய திருக்கை வேற்கண்ணியாகிய என் தாயினுடைய அகல் தடக்கை யேயாகும் . அந் நெடுவில்லின் நாணை வலித்த திருக்கை நின் செங்கையேயாகும் . திரிபுரத்தை அழித்த வெற்றி எவர் கைக்கு உரியது ? கற்றார் - ` கற்றல் கேட்டல் உடையார் பெரியார் ` ( சம்பந்தர் ) பிறவியறுக்கும் திருவடியைத் தொழும் அறிவைத் தோற்றும் சிவாகமங்களைக் கற்றவர் . பயில் - பயின்ற ; மிக்க . கண்ணுதல் - நெற்றிக்கண்ணன் . அன் மொழித் தொகை ( கண்ணுதலான் ). வில் தாங்கிய கரம் - வில்லை ஏந்திய கை . வேல்நெடுங் கண்ணி - வேல்போலும் நெடிய கண்ணை யுடையவள் . வியன்கரமே - அகன்ற கையே ; தடக்கையே . நல்தாள் நெடுஞ்சிலை - நல்லதாளால் மிதிக்கப் பட்ட நெடியவில் . நன்று ஆள் நெடுஞ்சிலை என்று பிரித்துப் பொருள்கொள்ளலும் ஆம் . அது வில்லாண்மை குறிப்பது . வலித்தகரம் என்பதில் தகரம் விட்டிசைக்கப் படும் . படாதேல் தளைகெடும் . செற்றார் - பகைவர் . புரம் - திரிபுரம் . செற்ற - அழித்த . சேவகம் - வீரம் . என்னை - யாது ; எதனுடையது . கொல் அசை . செப்புமின் - சொல்லுமின் .

பண் :

பாடல் எண் : 3

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய வென்னும் மஞ்செழுத்தும்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே.

பொழிப்புரை :

தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்குவாயாக .

குறிப்புரை :

தூயமெல்லிய பூங்கணையைக் கோத்து எரியோங்குந் தொழிலை உண்டாக்கிய மன்மதன் சாம்பலாகும்படி சுட்டகடல் நாகைக்காரோண , உன் திருநாமத்தை வாழ்த்தித் திருவைந்தெழுத்தாகிய நமச்சிவாய என்னும் திருமந்திரத்தை , யான் உடலின் நீங்கும் அந்நாளில் உரைக்கும் ஆற்றலைத் தந்தருள்வாய் , எங்கள் சங்கரனே . தூ - தூய்மை . மென்மலர் - மெல்லியனவாகிய பூக்கள் . மலர்க்கணை - பூக்களாகிய அம்புகளை . கோத்து - கரும்பு வில்லின் நாணில் வைத்துத் தொடுத்து . தீ வேள்வி - அக்கினி காரியம் . தொழிற்படுத்த - தொழிற் படுத்திய ; தொழிற்படச் செய்த . வேள்வித்தொழில் என்றிருப்பது சிறந்தது . ` படுத்த காமம் ` பெயரெச்சத்தொடர் . பொடி - சாம்பல் . ` வெந்துபொடியான காமனுயிர் இரதி வேண்டப் புரிந்தளித்த புண்ணியனே ` ( தி .12 பெரிய புரா . 2379) காய்ந்த தீக்கண்ணால் எரித்த . நாமம் - திருப்பெயர் . பரவி - வாழ்த்தி . திருவஞ்செழுத்து - இந்த திரு விருத்தத்தில் கூறியது தூல பஞ்சாக்கரம் . சாம் அன்று - அடியேன் இவ்வுடலின் நீங்கும் அந்நாளில் ` வீடும் நாள் ` ( தி .4 ப .65 பா .1) ` சாதல்நாள் ` ( தி .4 ப .75 பா .8). உரைக்கத் தருதல் :- ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விடும் நிலையில் ஆவியார் தளர்ந்து நின்னை மறந்துவிடாதவாறு உனக்கு ஆளாகி அன்புமிக்கு உன் திருநாமம் அஞ்சும் சொல்லிக் கசிவினால் தொழச்செய்தல் . சங்கரன் - இன்பத்தை விளைப்பவன் . ` உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின் என்னை மறக்கப் பெறாய் ` ( தி .4 ப .112 பா .3). ` நான் துஞ்சும் போழ்து நின் நாமத் திரு வெழுத்தஞ்சுந்தோன்ற அருளும் ஐயாறரே ! ` மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப் பெற்றால் வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே ( தி .4 ப .77 பா .4). ` எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பிலிருக்கலாமே ` ( தி .6 ப .93 பா .10). ` செம்பவளத் திருமேனிச் சிவனே என்னும் நாவுடையார் நமை ஆளவுடையார் `. ` சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி யெம்மான் ..... அவன்றனை ..... பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால் இவன் எனைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே ` ( தி .4 ப .112 பா .9) ` சிவாயநம என்றிருக்கினல்லால் ..... அத்தனருள் பெறலாமோ ` ( தி .4 ப .94 பா .5). ` சிவாயநம என்று நீறணிந்தேன் ` ( தி .4 ப .94 பா .6). ` மறவாது சிவாய என்று எண்ணினார்க் கிடமா எழில் வானகம் பண்ணினாரவர் பாலைத்துறையரே ` ( தி .5 ப .51 பா .6).

பண் :

பாடல் எண் : 4

பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர் தங்கள்
மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி யோத முலவு கடனாகைக் காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ண மருளெங்கள் வானவனே.

பொழிப்புரை :

உப்பங்கழிவழியே கடலின் வெள்ளநீர் பாயும் கடல் நாகைக் காரோணனே ! எங்கள் தேவனே ! பழியான வழிகளிலே வாழ்க்கையை நடத்திய தீவினையாளர்களான , தலைமயிரை வலியப் போக்கும் மூர்க்கர்களான , சமணர்கள் சொற்களைக் கேட்டு அவற்றின் வழியிலே வாழ்ந்து அழிந்து போகக்கூடிய அடியேனை அழியாதபடி பாதுகாத்து உனக்கு அடியவனாகக் கொண்டாய் . வழிவழியாக அடியேன் உனக்கு அடிமையாகும் முறைமை யாது ? அதனை அடியேற்கு அருளுவாயாக .

குறிப்புரை :

பழியின் வழியே ஓடிய பாவிகளாகிய தலைமயிர் பறிக்கும் குண்டர்களுடைய சொற்படியொழுகி அழிவேனை அழி யாமல் காத்து ஆட்கொண்டருளினாய் . கழிவழியே ஓதம் உலவுகின்ற கடலருகே உள்ள நாகைக்காரோண ! வழி வழி ஆள் ஆகும் வண்ணம் என் ? வழிவழியாக நான் உனக்கு ஆளாகும் முறைமை யாது ? எங்கள் வானவனே அருள் . ` கருவேலை தன்னைக் கடப்பர் . உலகில் மருவாத இன்பத்துள் வைத்தகுருவின் அடியார் அடியார் அடியார் அடியார் அடியாரைச் சார்ந்த அவர் ` ( துகளறுபோதம் ) ` திருவாரூரில் மழவிடை யார்க்கு வழிவழியாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடியாரொடுங் கூடி யெம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே `. ( தி .9 திருப்பல்லாண்டு . 11) ` என்றும் என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்னநின் வணங்கவே வேண்டும் நின்கழற்கண் அன்பு `. ( தி .8 திருவாசகம் 78) ` சிறந்து உன்னைத் தெய்வமெனக் கொள்ளாத சீத்தை பிறந்த குலம் பிறவா நின்ற குலம் பீளினுறந்த குலத்து முமையொரு பால் மேயாய் மறந்தும் பிறவாத வாழ்வெனக்கு வேண்டுமால் `. ( காஞ்சிப் . தழுவக் . 238).

பண் :

பாடல் எண் : 5

செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேன்மொழியார்
வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்த செல்வக்
கந்த மலிபொழில் சூழ்கட னாகைக்கா ரோணமென்றும்
சிந்தை செய்வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே.

பொழிப்புரை :

சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும் , தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு , செல்வம் மிகுந்ததும் , நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள் .

குறிப்புரை :

செம்பவளம் போலும் வாயினையும் கரிய கண்ணினையையும் வெண்பற்களையும் தேன்போலும் இனிய மொழியையும் உடைய மகளிர் வந்து வலம்புரிந்து சிறந்த நடனஞ்செய்ய நிறைந்த செல்வத்தையுடைய மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த கடலையடுத்த நாகையிலுள்ள காரோணத்தை எப்பொழுதும் நினைத்தலைச் செய்கின்ற அன்பர்களைத் திருமங்கை பிரியா திருப்பாள் . துவர் - பவளம் ; ` வளை வளர்கையன் விழிவளர் பாற்கடல் வார்துவரின் - கிளைவளர் காட்சிய சேயரிக்கண் ` ( தணிகைப் . களவு . 206). இணை - இரண்டு . நகை - பல் . நகுதல் - விளங்குதல் பற்றிய காரணப்பெயர் . நகைத்தல் என்பதறிக . செந்துவர்வாய் கருங்கண் வெண்ணகை என்றது முரண் . தேன்மொழி உவமைத்தொகை . மாநடம் - அழகிய கூத்து . காரோணத்தில் வந்து வலஞ்செய்து நடமாடும் மகளிர் எழிலும் மொழியும் உணர்த்தப்பட்டன . திருமங்கை என்றது இலக்குமியை அன்று . பரமானந்தாவேசமாகிய மகாமோட்ச லட்சுமியை ` ( சிவாத்து வித சைவபாடியம் பக்கம் 555). சிவாலயங்களிலும் சிவபூசையிலும் மகாலட்சுமியென வழிபடப் பெறுவதும் இச் சிவமேபெறும் திருவே யாகும் . ` இருவரும் ஒருங்கே இறவருங்காலை எந்தையே ஒடுக்கி ஆங்கவர்தம் உருவம் மீதேற்றிக் கோடலாற் காயாரோகணம் ` மாலும் மலரவனும் , ` எம்மை .... நினது காயத்துறுத்துக என்று இறைஞ்சி நோற்றார் ..... அவ்வாறருளினன் . அதனால் காயாரோகணம் ` நோற்போர் கயிலையை மெய்யோடெய்திக் குடிகொளும் ஆற்றினானும் அப்பெயர் கொண்டது ` ( காஞ்சிப் . (1) காயா . 6. (2) அந்தரு . 37-8)

பண் :

பாடல் எண் : 6

பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்க நீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயுமிச்சைகளே.

பொழிப்புரை :

பனை மரத்தை ஒத்த துதிக்கையை உடைய மத யானையின் தோலைஉரித்த மேம்பட்ட சோதிவடிவினனே ! ஒலிக்கும் கடலால் ஒருபக்கம் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எம் நெற்றிக் கண்ணனே ! இல்லறவாழ்க்கையை விடுத்து இரவில் உண்ணாத வலிய சமணர்களாகிய மூர்க்கர்திறத்து அடியேன் கொண் டிருந்த மயக்கத்தைப் போக்கி அடியேனை விரும்பி ஆட்கொண்ட உனக்கு அடியேன் விரும்பிக் கைமாறாகச் செய்வது யாது உள்ளது ?

குறிப்புரை :

பனையையொத்த கையையுடைய களிற்றை யுரித்த மெய்யொளியே ! முழங்குகின்ற கடலடுத்த திருநாகைக்காரோணத்தில் உள்ள எம் கண்ணுதலே ! மனைதுறந்து இரவில் உண்ணுதலில் வல்ல அமணர்களாகிய மயக்குரையின் நீக்கி என்னையும் ஒரு பொருளாக எண்ணி ஆளாகக் கொண்டருளிய நினக்கு இனியான் செய்யும் இச்சைகள் என் ? ` மனைதுறந்து அல்லுணா வல்லமணர் ` ( தி .4 ப .101 பா .2) பனை :- மரம் . ` பனைக்கைமும்மத வேழம் உரித்தவன் ` பரஞ்சுடர் - மெய்யொளி . ` மெய்ச்சுடருக்கெல்லாம் ` ஒளிவந்த பூங்கழலுத்தர கோசமங்கைக்கரசே` ( தி .8 திருவாசகம் 119). கனைகடல் - முழங்குகடல் ; வினைத்தொகை . கண்ணுதல் - கண்ணுதலான் . அன்மொழித்தொகை . மனை துறந்து - வீட்டைத் துறத்தல் . மனைவியைத் துறத்தல் . அல் - இரவு . உணா - உண்டி . இரவிலுண்ணாதவர் அமணர் . குண்டர் - குண்டாக்கையர் ; மூர்க்கர் . மயக்கம் - மயக்குரை . ஆகுபெயர் . மயக் குரையின் நீக்கி . என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்து நின்னை நினையத் தந்து ஆட்கொண்ட நினக்கு இனியான் செய்யும் இச்சைகள் என் ? இச்சைகளால் ஆம் செயல் ( கைம்மாறு ) களைக் குறித்தலின் , இச்சைகள் என்றது காரண ஆகுபெயர் .

பண் :

பாடல் எண் : 7

சீர்மலி செல்வம் பெரிது டையசெம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு கடனாகைக் காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொ டுண்பது மாதிமை யோவுரையே.

பொழிப்புரை :

சிறப்புமிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன்மலை போன்றவனே ! மழையால் செழித்த சோலைகளால் சூழப்பட்ட கடல் நாகைக் காரோணனே ! கச்சணிந்த மென்மையான முலையை உடைய மகளிர் வந்து பிச்சையிடுமாறு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி ஊர்களில் கிட்டும் பிச்சை உணவை உண்பது பொருத்தமான செயல் ஆகுமா ? சொல்வாயாக .

குறிப்புரை :

கனம் மிக்க செல்வம் பெரிதும் உடைய செம்பொன் மாமலையே முகில் தவழும் சோலைகள் சூழும் கடலடுத்த திருநாகைக் காரோணனே ! வீக்கிய கச்சைத் தாக்கிய மெல்லிய கொங்கையை யுடைய மங்கையரும் வந்து பிச்சையிடப் போயிரந்து ஊர்தோறும் பிச்சைகொண்டு உண்பது மாதிமையோ ? சொல்வாயாக . மாதிமை - ?. மண்டலமாவோடலை மாதி என்பதால் , அத்தன்மையைக் குறித்த பண்புப் பெயர் எனினும் ஈண்டுப் பொருந்தாது . சீர் - கனம் ; மேன்மை . செல்வம் பெரிது - பெருஞ்செல்வம் . செம்பொன் மாமலையே என்று விளித்ததன் கருத்து விளங்காதோ ? சோலைமேலுறங்கும் கார் ( மேகம் ) மிகுதி நோக்கிக் கார்மலி சோலை என்றார் . சுலவு - சூழும் . வார் - கச்சு . வந்து பலி இடச் சென்று இரந்து பிச்சைகொண்டு உண்பது மாதிமையோ (- பெருமையோ ). ஊர்தொறும் கொண்ட பிச்சை யாதலின் பலி ( பிச்சை ) என்றார் .

பண் :

பாடல் எண் : 8

வங்க மலிகட னாகைக்கா ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானொர் விண்ணப்ப முண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை யறியிற்பொல் லாதுகண் டாயெங்க ணாயகனே.

பொழிப்புரை :

கப்பல்கள் நிறைந்த கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உள்ள எம் தேவரே ! எங்கள் பெருமானாரே ! அடியேன் வேண்டிச் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது . அதனைத் திருச்செவி சார்த்தி அருளுவீராக . எங்கள் தலைவரே ! கங்கையைச் சடையுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் . அந்தக் கள்ளச் செயலை மெதுவாகப் பார்வதிப் பிராட்டி அறிவாளானால் பொல்லாங்கு விளையும் என்பதைத் திருவுள்ளம் பற்றவேண்டும் .

குறிப்புரை :

வங்கம் - கப்பல் . மலி - நிறைந்த ; மிக்க . திருநாகைக் காரோணத்து எம்வானவனே ! எங்கள் பெருமானே ! எங்கள் நாயகனே ! ஒரு விண்ணப்பம் உண்டு . அதைக் கேட்டருள்வீர் . சடையுள்ளே கங்கையை மறைத்தாய் ; அம் மறைத்த கள்ளத்தை உமை நங்கையார் மெள்ளத் தெரிந்து கொண்டால் , பொல்லாங்கு விளையும் . இடப்பால் எழிலுடைய நங்கையொருத்தியிருக்க ; அவளறியாவாறு கங்கையென்னும் மற்றொருத்தியைச் சடைமறைவில் வைத்தொழுகுங் கள்ளம் அவ்வுமைநங்கையுள்ளம் அறியக்கூடும் . கூடின் உனக்குப் பொல்லாங்கு விளையும் , நலம் x பொலம் ; நன்று x தீது ; நன்மை x தின்மை ; தீமை ; நன்கு x தீங்கு ; நல்லாங்கு x பொல்லாங்கு என்பன இருவழக்கிலும் அறிக . ` அரும்பாசம் நன்மை தின்மை ஆகும் ` ( சொக்கநாத வெண்பா . 82) நல்லாங்கு ` தீங்கிதென நாடறியேன் ` ( சொக்கநாத வெண்பா . 53) ` இன்மை உயிர்க்குயிர் நீதியின்மை யிருந்தியற்றின் நன்மை தின்மைக் கேதுவோ நான் ` ( சிவபோகசாரம் . 83) ` நன்மை தின்மை ஆட்டுவது நாடாதறிவிலார்தஞ்செயலாய் நாட்டுதல் போல் உண்டோ நகை ` ( சிவபோகசாரம் . 90)

பண் :

பாடல் எண் : 9

கருந்தடங் கண்ணியுந் தானுங் கடனாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்து மிருபது தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்தில னெம்மிறையே.

பொழிப்புரை :

கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .

குறிப்புரை :

இராவணன் , இறைவனும் இறைவியும் வீற்றிருந்த திருக் கயிலைமலையை , அவ்விருவரும் எழுந்தருளியிருக்கும் அருளிடம் எனக்கருதிப் போற்றி நன்றியறிதல் செய்யாது , அவர் அசைய அம் மலை அசைய எடுக்கத் தொடங்கினான் ; அன்று பத்துப் பெருந் தலைகளும் இருபது தோள்களும் பிதிர்ந்து அலறும்படி எம் இறைவன் செய்தது யாது எனில் , பிறிது யாதும் இல்லை . இருந்தருளிச் செய்ததே ஆகும் . ` கருந்தடங்கண்ணி ` என்னும் அழகிய தூய தமிழ்ப் பெயர் , அப்பர் அடிகள் காலத்தின் முன்னரே வழங்கியதென்பதுணர்க . அஃது இப்பொழுது நீலாயதாட்சி என்று வழங்குகின்றது . இவ்வாறு தமிழ் மொழி யிடத்தைக் கவர்ந்து , தாம் நின்று அவற்றை ஒழித்த வடமொழிக் களவில்லை . இரு மொழிக்கும் முதற்குரவர் ஆகிய கண்ணுதலார் , ஒரு மொழியால் மற்றொரு மொழி ஒழியப் படைத்தாரல்லர் .

பண் :

பாடல் எண் : 1

மாசிலொள் வாள்போன் மறியு மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை யன்ன முறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத் தேயெந்தை வீரட்டமே.

பொழிப்புரை :

குற்றமற்ற ஒளிபொருந்திய வாள்போல ஏறி மடங்கும் , பளிங்கு போன்ற நீர் அலைகளின் தொகுதியாகிய ஊசலை ஆடி அங்கு ஒளி பொருந்திய சிறகுகளை உடைய அன்னம் உறங்கத் தொடங்கினால் பசிய இலைகளை உடைய கொடிகளில் உள்ள நீலமலர்களில் தேனைப் பருகி வண்டுகள் பண்ணினைப் பாடுதலைக் கேட்டுக் கெடிலநதி பரிசுப்பொருளாக மணி முதலியவற்றை அவற்றை நோக்கி வீசும் வடகரைக்கண் எம்பிரானுடைய அதிக வீரட்டம் உள்ளது .

குறிப்புரை :

எந்தை வீரட்டம் வடகரைத்தே என்று கொள்க . மாசு - குற்றம் ; ஈண்டுக் கூர்மை , தோற்றம் , நிறம் முதலியவற்றாற் குறைதலை யுணர்த்திற்று . அக்குறைவொன்றும் இல்லாதவாள் மாசில்வாள் ; ஒள்வாள் . மணிநீர்த்திரைத்தொகுதி மறியுந்தோற்றம் வாள்மறிதலைப் போன்றிருக்கும் . அந்நீர்த் திரைத்தொகுதி மறிதலே ஊசலாடுதல் . அதன் மேல் அன்னம் உளது . அஃது உறங்கலுறுகின்றது . அஃது உறங்கப் பண் பாடுவன வண்டுகள் . அவை கருங்குவளை மலர்த் தேனை உண்டு பாடும் . அக்குவளை ` பாசடை நீலம் `. ` பாசறை `- பச்சிலைக் குடில் ; பாடிவீடு . ஈண்டு அது பொருந்தாது . இது பாசடை என்றிருந்து பிழைத்ததே யாகும் . ` பாசடை நிவந்தகணைக் கானெய்தல் ` ( குறுந்தொகை . 9) ` சிறுபாசடைய நெய்தல் ` ( நற்றிணை . 27) ` நெய்தற் பாசடை புரையும் அஞ்செவி ` ( நற்றிணை . 47) ` பிடிச் செவியினன்ன பாசடை ` ( நற்றிணை . 310), ( குறுந்தொகை . 246). ஒண்சிறை அன்னம் அங்கு ஊசலை ஆடி உறங்கல் உற்றால் . வண்டு பண்பாடல்கண்டு கெடிலம் வீசும் . பாடற்பரிசிலாகத் தான் கொணரும் மணி முதலியவற்றை வீசும் . செயப்படுபொருள் உய்த்துரைக்க வேண்டி , முன்னரே ` மணி நீர்த்திரைத் தொகுதி ` என்று குறிக்கப்பட்டது . வண்டு பருக நீலம் கொடுத்த கொடையுமாம் . அதற்குப் ` பருகிய ` என்றதைப் பருக என வினையெச்சமாக்குக . கெடிலநதிக்கு வடகரையின் கண்ணது திருவதிகை வீரட்டம் . கரைத்து - கரையிலுள்ளது .

பண் :

பாடல் எண் : 2

பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர்
அங்காற் குவளைமே லாவி யுயிர்ப்ப வருகுலவும்
செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீர னருள்வைத்த வீரட்டமே.

பொழிப்புரை :

விரும்பத்தக்க அடிப்பகுதியை உடைய பொன்நிறமான மேருமலையாகிய வில்லினை உடைய வீரனாகிய சிவபெருமான் திரிபுரத்தை அழித்துத் தன் அருளை நிலைநாட்டிய அதிகை வீரட்டம் , பசிய கால்களை உடைய தவளைகள் பறை போல ஒலி செய்யப் பசிய இலைகளை உடைய நீர்தங்கும் பள்ளத்தில் அழகிய தண்டினை உடைய குவளை மலர்கள் மணம் வீச , அருகில் உலவும் சிவந்த கால்களை உடைய குருகுகள் குவளைமலர்களை அடையும் நீர் செறிந்த கெடிலநதியின் வடகரையில் உள்ளது .

குறிப்புரை :

வீரட்டம் கெடிலக்கரைத்து , வெங்கால் - வெய்ய அடி . குரு - செந்நிறம் ; ஈண்டுப் பொன் ( மேரு ) மலையைக் குறித்து ஆகுபெயர் . சிலை - வில் . சிலைவீரன் - வில்வீரன் ; சிவபிரான் . அருள் வைத்த வீரட்டம் - முப்புரம் எரித்து உயிர்களுக்கு மும்மலம் ஒழித்த திருவருளை வைத்த திருவீரட்டம் ; ` முப்புரமாவது மும்மலகாரியம் ` ( தி .10 திருமந்திரம் ). பைகால் தவளை - பசிய கால்களையுடைய தவளைகள் . பறைகொட்ட - பறையோசை என்னக் கத்த . பாசிலை - பசிய இலை . இலைநீர் - இலைகளுள்ளநீர் . நீர்ப்படுகர் - நீர் தங்கும் பள்ளம் . ஆற்றங் கரையில் தங்கி இருக்கும் நீர்ப்பகுதியைப் படுகர் என்பர் . அம் கால் குவளை - அழகிய தண்டுடைய குவளை மலர் . ( ஆகுபெயர் ). ஆவி உயிர்ப்ப - மணம்வீச , அருகு உலவும் குருகு . செங்கால் குருகு . ` இவை ` சுட்டன்று . குருகு என்றதன் பொருட்டாய் நின்றது . குருகுகள் சேர்தற்குக் குவளை மலர் இடம் . அதற்கு நீர்ப்படுகர் இடம் . அது கெடிலத்தினது . அதனால் , சேருங் கெடிலக்கரை என்றியைந்தது , பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது , சேர்தற்கு வினைமுதல் குருகுகள் , கரைத்து - கரையின் கண்ணது .

பண் :

பாடல் எண் : 3

அம்மலர்க் கண்ணிய ரஞ்சனஞ் செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் குற்கிரங் கார்தடந் தோண்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத் தேயெந்தை வீரட்டமே.

பொழிப்புரை :

அழகிய மலர் போன்ற மை எழுதிய கண்ணினராய்ச் சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய மகளிர் விரும்பத்தக்க முலைகளுக்குச் சந்தனமும் விலை மதிப்புடைய மாலைகளும் அணிந்தவராய் , தம் இடைக்கு இவை பாரமாகுமே என்ற இரக்கம் இல்லாதவராய்த் தம் பெரிய தோள்கள் நீந்துதலால் மெலிவு அடையும்படி நீராடுதலால் ஒலிக்கும் நீரை உடைய கெடிலநதியின் வடகரையில் உள்ளது எம்பிரானுடைய அதிகை வீரட்டம் .

குறிப்புரை :

அம் - அழகு . மலர்க்கண்ணியர் - செந்தாமரைப் பூவைப்போலுங் கண்ணுடையவர் . அஞ்சனம் - கண்ணிற்கிடும் மை . ` செந்துவர் வாய் ` ( தி .4 ப .103 பா .5). இளையார் - இளம்பெண்டிர் . வெம்மை - சூடு ; விருப்பம் . சாந்தம் - சந்தனம் . விலைபெறு மாலை - விலைமதிப்புடைய மாலைகள் . மருங்குற்கு இரங்கார் - இடைபடும் தளர்ச்சிக்கு வருந்தார் . தடந்தோள் மெலிய முழுகுவார் . குடைதல் :- ` மொய்யார்தடம் பொய்கைபுக்குமுகேர் என்னக் கையாற் குடைந்து குடைந்துன்கழல்பாடி ` இத்திருவாசகத்திற்குறித்த ` மொய்யார் தடம் பொய்கை ` திருப்பெருந்துறையில் உள்ள தீர்த்தம் ஆகும் . விம்முதல் - ஒலித்தல் . புனல் - வெள்ளம் ; நீர்ப்பெருக்கம் . ` புனல் சூழ் அதிகை ` ` புனலாட்டு ` ` சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி ` புனற் கெடிலம் - புனலையுடைய கெடிலநதி எந்தை - வீரட்டேசுவரர் ; தமிழ்ப் பெயர் மறைந்தது . கெடிலவாணர் ( தி .4 ப .10 பா .1-10) என்பது பழம் பெயராயிருக்கலாம் . கெடிலம் + வாழ்நர் . ` வாணர் ` மரூஉ . ` மன்றவாணர் ` ` அம்பலவாணர் ` ` அண்டவாணர் ` ` பாவாணர் ` ` தண்டமிழ் நூற் புலவாணர்க்கோரம்மானே ` ( தி .7 ப .96 பா .6) கடுநிலம் ( - வன்னிலம் ) கடிபுனலம் ( - விரைந்து வரும் புனலுடையது ) கடிபுலம் கேடில்புலம் என்றவற்றுள் ஒன்று மருவிக் கெடிலம் என்றாயிருக்கலாம் . மொழி முதலகரம் எகரமாதல் இயல்பு . வல்லம் - வெல்லம் . பலம் - பெலம் . சயம் - செயம் . கட்டியங்காரன் - கெட்டியங்காரன் ; கெட்டிக்காரன் . ரத்நம் - ரெத்நம் . ரங்கன் - ரெங்கன் என்பன முதலிய பற்பல இரு வழக்கிலும் உள . நெடில் குறிலாதலும் இயல்பே . வா , தா , காண் , தான் , நீன் முதலியன வ , த , கண் , தன் , நின் முதலியனவாகக் குறுகுதல் அறிக .

பண் :

பாடல் எண் : 4

மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை வேண்டுகின்றதி
யானுடைச் சில்குறை யொன்றுள தானறுந் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத் திரைதவழும்
கூனுடைத் திங்கட் குழவியெப் போதுங் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

மீன்களை உடைய குளிர்ந்த புனல் பாயும் அதிகையிலுள்ள வீரட்டரே ! உம்மை அடியேன் வேண்டுகின்ற சிறிய தேவை ஒன்று உள்ளது . குளிர்ந்த எருக்கம் பூ வொடு தேனை உடைய கொன்றைப் பூவை அணிந்த சடைக்கண் தேக்கி வைத்துள்ள கங்கையின் அலைகளில் தவழும் பிறைச் சந்திரனை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும் . அப்பிறை கங்கைவெள்ளத்தில் முழுகிப் போகாதபடி கவனிக்கவேண்டும் .

குறிப்புரை :

மீன்களைக் கொண்ட குளிர்ந்த வெள்ளத்தையுடைய கெடில நதிக்கரையில் உள்ள திருவீரட்டேசுவரரே , உம்மை யான் வேண்டுகின்றதாகிய சிறு குறை ஒன்று உளது . அது யாது என்னில் , நறிய தண்ணிய எருக்கம்பூவையும் தேனுடைய கொன்றைப்பூவையும் சூடிய சடையில் உடைதலையுற்ற கங்கையலையில் தவழும் வளைவுற்ற திங்கட்குழவியை எப்பொழுதும் கருத்திற் கொள்ளுதிர் என்பதேயாகும் . சில்குறை :- சின்மை சிறியதென்னும் பொருட்டு ` தண்புனல் ` ` தண்ணெருக்கு ` பண்புத்தொகை , புனல் வீரட்டம் ; புனல் வீரட்டா ; புனல் வீரட்டரே என்னும் முறையிற் கொள்க ; புனலுக்கும் வீரட்டர்க்கும் இயைபின்மையான் . கங்கைப் பேராற்றலையில் திங்கட்குழவி கெடாதவாறு எப்போதும் குறிக்கொண்டருளுக என்று குறையிரந்தார் . எருக்கின் தேனையுடைய சடை . கொன்றையை யுடைய சடை . சடையானது உடைய கங்கை ; இன் தேன் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 5

ஆரட்ட தேனு மிரந்துண் டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி நீர்பரவைச்
சூரட்ட வேலவன் றாதையைச் சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா வரும்பாவ வேதனையே.

பொழிப்புரை :

விரிந்த நீரை உடைய கடலில் சூரபதுமனை அழித்த வேலை ஏந்திய முருகனுடைய தந்தையாய் வயலால் சூழப்பட்ட அதிகை வீரட்டப் பெருமானைப் பண்டைப் பிறப்பில் வழிபட்டு உய்ய விரும்பாத கொடிய தீவினைப் பயனாகிய வேதனை இப்பிறப்பில் , வியர்வை சொட்டச் சொட்ட வீடு வீடாகத் திரிந்து யாவர் சமைத்த பொருளாயிருப்பினும் அதனைப் பிச்சை யேற்று உண்ணுமாறு செய்துள்ளது .

குறிப்புரை :

விரிநீர்ப்பரவை - பெருகிய நீரையுடைய பரவிய கடல் . பரவைச்சூர் - கடலுள் ஒளித்த சூரனை . அட்ட - கொன்ற . வேலவன் - வேற்படையையுடைய முருகக்கடவுள் . வேலவன்தாதை - வேற்கை யனுக்குத் தந்தையான சிவபிரான் . சூழ்வயல் - சூழ்ந்த வயல் . வயல் ஆர் - வயல்கள் நிறைந்த . அதிகை வீரட்டத்தானை - திருவதிகைக் கெடில வட வீரட்டத் துறையும் பெருமானை . விரும்பா - விரும்பித் தொழலில்லாத . அரும்பாவவேதனை - தீர்தற்கரிய தீவினைப் பயனாகிய துன்பம் . ` பாவவேதனை ` எழுவாய் . ` நிற்பித்திடுகின்றது ` பயனிலை . ஆர் அட்டது ஏனும் - யார் சமைத்ததெனினும் ; இன்னார் சமைத்தார் , யாம் உண்ணலாம் , யாம் உண்ணலாகாது என்று எண்ணும் நிலைமையின்றி , இழிந்தோர் அடினும் , அதை உட்கொண்டு பசித்தீயைப் போக்கும் நோக்குமட்டும் உடையராய் , வீடுதொறும் இரந்துண்டு திரியவும் , அவ்விரப்பும் அதனை விளைக்கும் நிரப்பும் வேர்ஊன்றி நிலைக்கவும் செய்கின்றது சிவவழிபாடு செய்யாத தீவினை . அகம் - வீடு , அகம் அகவன் :- வீடுவீடாகச் செல்பவன் . ` அகவன் ` அகவுதலையுடையவனாய் ; எனலும் மகவன் - மகவுடையனாய் எனலுமாம் . தி .11 பொன் வண்ணத்தந்தாதி 12. வலிவல மும்மணிக்கோவை முதலகவல் பார்க்க . ` அடுக்கிய சீலையராய் அகல் ஏந்தித் தசையெலும்பில் , ஒடுக்கிய மேனியோடு ஊண் இரப்பர் ஒள் இரணியனை , நடுக்கிய மாநரசிங்கனைச் சிம்புளதாய் நரல , இடுக்கிய பாதன்றன்தில்லை தொழாவிட்ட ஏழையரே .` ( கோயிற்றிருப் பண்ணியர் திருவிருத்தம் 36.) ` புகழ்மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண்டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் ; இனிச்சென்று இரவேன் ஒருவரை யாதொன்றுமே ; வருந்தேன் இறந்தும் பிறந்தும் ; மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தேன் . ( திருவிடைமருதூர் மும்மணிக்கோவை . 3, 21) பாடலையும் பார்க்க .

பண் :

பாடல் எண் : 6

படர்பொற் சடையும் பகுவா யரவும் பனிமதியும்
சுடலைப் பொடியுமெல் லாமுள வேயவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்ட ராவர்கெட் டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண் டீரவர் நாமங்களே.

பொழிப்புரை :

அவர் தூய தெளிந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில் அமைந்த அதிகைப் பதியின் வீரட்டராவர் . பரவின பொன் போன்ற ஒலியுடைய சடையும் , பிளந்த வாயை உடைய பாம்பும் , குளிர்ந்த பிறையும் சுடுகாட்டுச் சாம்பலும் எல்லாம் அவருக்கு அடையாளங்களாக உள்ளன . அவருடைய திருநாமங்கள் அவரை அடைக்கலமாக அடைந்தவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் பெரிய துணையாகும் . அவ்வாறாகவும் அறிவுகெட்ட அடியேன் அவரைத் தொடர்ந்து பற்றிக் கொள்ள முயலாமல் விட்டு ஒழிந்தேனே .

குறிப்புரை :

அவர் தூய தெளிந்த நீருடைய கெடில நதிக் கரையில் திகழும் திருவீரட்டானேசுவரர் ஆவார் . அவர்க்கு உரிய அடையாளங்கள் சடையும் பாம்பும் பிறையும் சுடலைப் பொடியும் ஆகும் . அவர்க்கு அவை எல்லாம் உள்ளனவே . அவற்றைக்கண்டும் அவரைத் தொடர்ந்து பற்றிக்கொள்ள முயலாமல் விட்டொழிந்தேனே ! கெட்டேன் . அவர் திரு நாமங்கள் , அவரை அடைக்கலம் என்று அடைந்தவர் நடலையைத் தீர்ப்பதற்கு நல்ல துணையாவன . நடலை - வருத்தம் , துன்பம் . ` நடலைப் படாமை விலக்கு ` ( தி .4 ப .110 பா .6). திருநாமம் நற்றுணையாதலை , ` சாம் அன்று நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் உரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே ` ( தி .4 ப .103 பா .3.) ` உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின் என்னை மறக்கப் பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே .` ( தி .4 ப .112 பா .3) ` நற்றுணையாவது நமச் சிவாயவே ` ( தி .4 ப .11 பா .1) ` நடலைக்கு நற்றுணை `:- ` மறத்திற்கும் அஃதே ( அன்பே ) துணை ` ` துன்பத்திற்கியாரே துணையாவார் ` ( குறள் 76, 1299) என்புழிப்போல நடலையை நீக்குதற்கு நற்றுணை எனப் பொருளுரைக்க .

பண் :

பாடல் எண் : 7

காளங் கடந்ததொர் கண்டத்த ராகிக்கண் ணார்கெடில
நாளங் கடிக்கொர் நகரமு மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டும் யாழ்கொண்டுந் தாமங்ஙனே
வேளங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே.

பொழிப்புரை :

பார்வதியின் பொருட்டு விடத்தை இருத்திய நீலகண்டராகி , வானத்திலே உலவிச் செல்லும் திரிபுர அசுரரைத் திரிபுரத்தோடு அழித்த வீரத்தானத்தை உடைய பெருமானார் , நன்கு பொருந்திய தாளங்கள் , குழல் , யாழ் இவற்றைக் கொண்டு பாம்புகளைச் சூடி , காலையிலே விளக்கமாக உறைவதற்கு அதிகையாகிய ஒரு நகரமும் உடையராய் அவ்வாறே பாய்கால்களை உடைய கெடிலநதிக்கும் உரியவராவர் .

குறிப்புரை :

காளம் - நஞ்சு . கடந்தது - வென்றது . நஞ்சினது கொல்லும் ஆற்றலைக் கொன்று , அதனை உள்ளும் புகாமல் வெளியும் மீளாமல் , திருக்கழுத்தில் அடக்கிக் கொண்ட வெற்றியே கடத்தல் . ஓர் கண்டத்தர் - ஒப்பற்ற திருநீலகண்டர் . நஞ்சினை உட்கொள்ளலோ கான்றலோ செய்யாது தன்னுள் அடக்கிக் கொண்டது எவ்வாறு என்று கண்டோரும் கருதினோரும் ஓருங் கழுத்தினார் எனலுமாம் . ஓர் :- குறுக்கல் . கண் - ஆற்றுக்காற் பாய்ச்சலுக்குக் கரைக்கண் ஆங்காங்குளதாக்கும் நீர் புகுந்தோடும் புழை . கண் ஆர் கெடிலம் - அப் புழை பொருந்திய கெடிலநதி . ` நாளங் கடியும் அதற்கோர் நகரமும் . நாளங்கடி - நாளங்காடி , காலைக்கடை ? மாதிற்கு - உமையம்மையார்க்கு . தாளங்களும் குழலும் யாழும் கொண்டும் தாம் வேளங்கள் கொண்டும் விசும்புசெல்வார் . தாளம் முதலியன ஆடற்கேற்ப இயம்புதற்குக் கொள்ளப்பட்டன . வியாளம் - பாம்பு . அது வேளம் எனத் திரிந்தது . ` வேடங்கள் ` என்றது பிழை எனத் தோன்றுகின்றது . வேடம் என்ற அப் பாடத்திற்கு அவை இயம்புதற்கொப்ப ஆடற்பொருட்டு எனலாம் . விசும்பு செல்லல் - திரிபுரத்தை வெற்றிகொண்டு மீண்டு திருக்கயிலைக்குச் செல்லுதல் . அங்கு வெற்றிக் கூத்தாட , விசும்பில் ஆடிக் கொண்டே செல்கின்றார் . திருவதிகைத் திரிபுராந்தகர் எண்கையுடையாராதலின் , இத்தனையும் கொள்ளவல்லர் . கொடு கொட்டி யாடுங்கால் கொடிபுரை நுசுப்பினாள் சீரும் , பண்டரங்கம் ஆடுங்கால் தூக்கும் , காபாலம் ஆடுங்கால் பாணியும் தருவாள் என்றது ஏறமர் கடவுள் மூவெயில் எய்ததைக் குறித்த கலித்தொகைக் கடவுள் வாழ்த்து . இங்கு அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையும் நோக்குக . இப் பாடலின் பொருள் நன்கு புலப்பட்டிலது .

பண் :

பாடல் எண் : 1

தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் னடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன  கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே. 

பொழிப்புரை :

புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய திருப்புகலூர்ப் பெருமானை அடைக்கலமாகப் பற்றி அவன் திருவடிகளை அடைந்தேன். தன் திருவடிகளை அடைக்கலமாக அடைந்த அளவில் அவன் செய்வனவற்றைக் கேளுங்கள். என் பிறவிப் பிணியைப் போக்கி என் வினையாகிய கட்டினை அறுத்து நீக்கி எழு வகைப்பட்ட நரகத்தில் என்னைக் கிடக்குமாறு விடாமல் சிவலோகத்தில் கொண்டு சேர்த்து விடுவான்.

குறிப்புரை :

புன்னைப்பொழில் புகலூர் அண்ணல் தன்னைச் சரண் என்று (அவ்வண்ணலின்) தாள் அடைந்தேன். தன்னடியை (யான் அடையப் புகலூரண்ணல் செய்வன கேண்மின்கள். 1. என்னைப் பிறப்பறுத்து; 2. என் வினைக்கட்டறுத்து 3. ஏழ் நரகத்து என்னைக் கிடக்கலொட்டான்; 4. சிவலோகத்து இருத்திடும் திருப்புகலூர்த் தலவிருட்சம் புன்னை. பொழில் - சோலை. பிறப்பறுத்தலும் அதற்கேதுவாய வினைக்கட்டறுத்தலும், அதனால் நரகத்துக்கிடக்க லொட்டாமையும், சிவலோகத்திருத்தலும் அண்ணல் செய்வன. திருநாவுக்கரசு நாயனார் பேரின்ப வுருவான தலம் திருப்புகலூரே. பயன் இரண்டு:- பாசவீடும் சிவப்பேறும். முன்னைய மூன்றும் பாசவீடு. பின்னை யொன்று சிவப்பேறு. `வினைக்கட்டு` என்ற பாடமே சிறந்தது. `கள்ளப் புலக் குரம்பைக் கட்டழிக்க வல்லான்` (தி.8 திருவாசகம்) என்புழியும் ஒற்றில்லாதது பிழை. வினைக்கட்டு (கர்மபந்தம்).

பண் :

பாடல் எண் : 2

பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்த னேதமி யேற்கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் யாதுசொல்லே. 

பொழிப்புரை :

பொன்னார் மேனியனே! பார்வதி பாகனே! தனித்து வருந்தும் அடியேனுக்குக் கருணை செய்வாயாக. புன்னை மலர்களிலே வண்டுகள் உறங்கும் புகலூர்த் தலைவனே! யான் இல்லேனாயின் துன்பம் தங்குவதற்கு வேறு இடம் யாது உள்ளது?

குறிப்புரை :

பொன்னை வகுத்தன்ன மேனியனே:- `பொன்னே போற்றிருமேனி யுடையான் கண்டாய்` `பொன்போல மிளிர் வதோர்மேனியினீர்` `பொன்னியலுந் திருமேனியனே போற்றி போற்றி` `பொன்னியலுந் திருமேனியுடையான் கண்டாய்` `பொன்னார் மேனியனே` என்பவை முதலிய பலவற்றினும், பொன்னை வகுத்தாலொத்த மேனியன் என்றது மிக்கநயமுடையது. அதனினும், அம்மேனியனைப் பாகம் பண்ணி அதில் ஒரு பாகத்தை நம் அன்னைக்குத் தந்த அருளை `மென்முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்தனே` என்றது மிக்க இனிமை விளைக்கின்றது. இரக்கத்திற்குத் தக்க பொற்றிரு மேனியும் மங்கை பங்கும் உடைய நீ இரங்காதொழியாய், உனக்கிடமான திருப்புகலூர்ப் புன்னை மலரில் வண்டுறங்கி இன்புறும் அதுவே, நீ இரக்கம் கொண்டு செய்யும் அருளைப்பெற்று இன்புறுவேன் யான் என்பதைக் குறிப்பதாகும். திருமேனியைத் தோற்றும் ஓர் ஒப்புப்பொருளாகப் பொன்னை வகுத்தாய். திருமேனிப் பாதியை நின் கருணையுருவாகத் தோற்றும் பொருட்டு எந்தாயை வகுத்தாய். யான் இல்லேன் ஆயின், அவ்விடும்பைக்குத் தான் வேறு இடம் யாதுளது? யான் அன்றி வேறு இடம் இடும்பைக்கில்லை என்க. `யாதேனுங்காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும் மாதேயும் பாகன் இலச்சினையே ஆதலினால்` (திருக்களிறு 82) நீயும் என்தாயும் எங்கும் பொங்கும் இன்ப நிறைவா யென்றும் இருப்பது மேலோர் அறிந்த உண்மை. ஈறில்லாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பத்தின் உருவமே நீ. துன்பத்துக்கு இடம் நான். எனக்கு இரங்கித் துன்பம் தொலைத்து இன்பம் அளிப்பாய்.

பண் :

பாடல் எண் : 3

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 4

பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூரரசே
மன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்று மிரங்காத வுத்தமனே.

பொழிப்புரை :

பொன்னை ஒத்த நீண்ட சடைக்கண் கொன்றைப் பூவை அணிந்தவனே! புகலூருக்கு அரசனே! பெருமையை உடைய தேவர்கள் தேடும் அமுதமே! திருவலஞ்சுழிப்பெருமானே! எனக்குச் சிறிதும் இரக்கம் காட்டாத மேம்பட்ட பண்பினனே! உனக்கு அடிமையாக அமைந்தும் கட்டுக்கும் வீட்டுக்கும் இடையே கிடப்பவர் என்னைத் தவிர உன் அடியவருள் வேறு யாவர் உளர்?

குறிப்புரை :

பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்:- `பொன்னிசையும் புரிசடை` `பொன்னவில் புன்சடையான்` `பொன்னக்கன்ன சடைப்புகலூரர்` `புகலூரரசே`, `புகலூரண்ணல்` (தி.4 ப.105 பா.1, 2) மன் - பெருமை. உள - உள்ள. தேவர்கள் - திருமால், பிரமன் முதலோர். தேடும் - சரியையிலும் முதலிய இறப்பில் தவத்தின் நெறியிலும் பிற அகந்தை நெறியிலும் அறியா நெறியிலும் தேடிப் பெற முயலும். மருந்தே - பிறவிப் பிணியைத் தீர்க்கும் ஞானானந்த மருந்தே. வலஞ்சுழியாய் - திருவலஞ்சுழியிற்றிருக்கோயில் கொண்டெழுந்தருளிய தேவதேவா. எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமன் வேறுயாரும் இன்றாம்படி நீயே ஆனாய். உன் திருவடிக்கு ஆட்பட்டும் (தொண்டு பூண்டும்) இடைக்கலத்தே கிடப்பவர் வேறு எவரும் இலராம்படி யானொருவனே ஆனேன். அளவில்லா வுயிர்களை ஆட்கொண்டிரங்கியருள்செய்து எனக்கு மட்டும் இரங்காது உள்ளாய். ஆட்பட்ட உயிர்களுள் யான்மட்டும் மீளா ஆளாதலும் ஆளாகாமையும் இன்றி இடையே கிடக்கின்றேன். கட்டுக்கும் வீட்டுக்கும் இடைக்கலத்தே கிடப்பார் யான் அன்றிப் பிறர் யாருமிலர். `தமியேற்கு இரங்காய்` (தி.4 ப.105 பா.2.) என்று வேண்டியும், சிறிதும் இரங்காத உத்தமன் பிறர் ஆவார் இன்றி நீயே ஆனாய். ஒன்று - சிறிதும். `உத்தமன்` இவண் எதிர்மறைக்குறிப்பு `இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட் செய்கின்றேன்` (தி.4 ப.81 பா.8.) என்றதன் உரையை நோக்குக.

பண் :

பாடல் எண் : 5

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 6

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 7

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 10

ஓணப் பிரானு மொளிர்மா மலர்மிசை யுத்தமனும்
காணப் பராவியுங் காண்கின் றிலர்கர  நாலைந்துடைத்
தோணப் பிரானை வலிதொலைத் தோன்றொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே.

பொழிப்புரை :

திருவோணநாளுக்குத் தலைவனான திருமாலும் பிரகாசிக்கும் பெரிய தாமரைமலரில் உறையும் பிரமனும் உன்னைக் காண்பதற்காக வேண்டியும் காண இயலாதவர் ஆயினர். இருபது தோள்களை உடைய மேம்பட்ட தலைவனாகச் செருக்குக் கொண்ட இராவணனுடைய வலிமையை அழித்தவனாகிய, பண்டு தொட்டு நீர்வளம் மிக்க புகலூரில் உறையும் சாய்ந்த திருமேனியை உடைய பிரானை, அணுகிய அளவில், கொடிய தீவினைகள் நம்மைத் துன்புறுத்த நெருங்கிவாரா.

குறிப்புரை :

ஓணப் பிரான் - திருமால். திருவோணம் திருமாலுக்குரிய நாள். `மாயோன் அடையும் நாள்` (சூடாமணி நிகண்டு) `அவிட்ட முதனாளவன்` (சிவஞான மாமுனிவர் பாடல்). ஒளிமாமலர் - தாமரைப்பூ. மலர் மிசை யுத்தமன் - பிரமன். உத்தமன் - சிரேட்டன். ஓணப்பிரானாகிய திருமாலும் மலர்மிசை யுத்தமனாகிய பிரமனும் பரமேசுவரனைக் காணப்பராவினர், பராவுதல் - வாழ்த்தி வணங்குதல். பராவியுங் காண்கின்றிலர். காரணம்:- சீவபோதம் அறாமை. அகந்தையை அகற்றாமை. காண்டல்:- அடிமுடி காண்டல். `பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்` (தி.8 திருவாசகம். 164) `பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக்கு அப்பால்.` (தி.8 திருவாசகம். 346) `போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே` (தி.8 திருவாசகம். 164) `சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை (தி.8 திருவாசகம். 346) என `ஏர்தரும் ஏழுலகு (ம்) ஏத்த எவ்வுருவும் தன்னுருவாய்... ...மேயபிரானைக் காண்டற்குரிய முறைமை அறியாது தேடுதல் இளைப்பைத் தருவதன்றி மற்றென்ன பயத்தது? தோள் எனப் பிரித்து உரைத்தார் பெரியார் ஒருவர். கரம் என்றதால், தோள் எனல் மிகையாகும். தோள்களையுடைய பிரான். ந - சிறப்புணர்த்துவது. `நப்பின்னை` பின்னை காரணப் பெயர். ந, சிறப்புப் பொருளுணர்த்துவதோரிடைச் சொல் என்ப. நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல. `நம்பின்னை` `நற்பின்னை` விகாரமுமாம். (சீவக. 482 உரை). பல பெயர் நல்லென்னும் அடை கொண்டிருத்தலையும் நோக்கின், அது மரூஉ என்றே புலப்படுகின்றது. தொலைத்தோன் - ஒழித்தவன். திருக்காற் பெருவிரலூன்றலுக்கே அவன் வலி முழுதும் பலியாயிற்று. தொல்லை - பழமை. நீர்ப்புகலூர்:- இன்றும் நீர் நடுவே திருக்கோயில் உளது. கோணப்பிரான்:- அடியார்க்காகச் சாய்ந்து கோணலான திருமேனி நிலையை இன்றும் காணலாம்.

பண் :

பாடல் எண் : 1

நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்
எய்தப் பெறினிரங் காதுகண் டாய்நம் மிறையவனே.

பொழிப்புரை :

நெய்தல் நிலத்திலுள்ள நாரை தன் பார்ப்பு என்று கருதி அணுகி வெண்தாழை மடலைத் தழுவும் அழகிய கழிப் பாலையில் உறைபவனே ! இளைய பிறைச் சந்திரனோடு தலையில் பாம்பையும் அருகில் வைத்த திறம் பற்றி யாம் அறியோம் . தன் அருகே பிறைவரினும் பிறை அருகே தான் அணுகப் பெறினும் பாம்பு இரக்கமின்றி பிறையை விழுங்கிவிடும் என்பதனை நம் தலைவனாகிய நீ அறிவாய் அல்லையோ ?

குறிப்புரை :

நம் ( எம் ) இறைவனே , கழிப்பாலையில் உறைவாய் . பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம் . தன் அருகே பிறை எய்தப் பெறினும் பிறையைத் தான் எய்தப் பெறினும் பாம்பு இரங்காது விழுங்கிவிடும் . அது தெரிந்தும் அவ்விரண்டனையும் உடன் வைத்தது எப்பரிசினாலோ ? அறிய மாட்டோம் யாம் . கழிப்பாலை ஆதலின் , கழிகளில் மேயும் குருகு கைதை மடலைத் தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிப்போய்ப் புல்கும் . ` நெய்தற்குருகு ` என்பது குறித்துக் கலித் தொகையுரைக்குறிப்பில் , இ . வை . அ . ஐயர் எழுதிய ஆராய்ச்சியை நோக்குக . கைதை - தாழை . பைதல் - இளமை ( தி .4 ப .100 பா .2). பைதற் பிறை - இளம்பிறை . ஒடு என்னும் மூன்றனுருபும் உடன் என்பது ஒருங்கே வருதலும் உண்மையால் , ஈண்டு ஆராய்ச்சி இன்று .

பண் :

பாடல் எண் : 2

பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை யானிப் பெருநிலத்தே.

பொழிப்புரை :

மலையை ஒத்த உயர்ந்த கடற்கரை மீது பெரிய மணி பவளம் முத்து என்பனவற்றைப் பரவிச் செலுத்தி அலைகள் கொண்டு வந்து சேர்ப்பதனால் விளங்கித் தோன்றும் கழிப்பாலை என்ற திருத்தலத்தில் உறையும் எம் தலைவன் , எந்தை பெருமான் ஆகிய நீல கண்டன் இப்பேருலகில் அடியேனை அடிமையாகக் கொண்டவன் ஆவான் .

குறிப்புரை :

கருமா மிடறுடைக்கண்டன் எம்மான் கழிப்பாலை . திரைகள் , மணியும் பவளமும் முத்தும் கொணர்ந்து பரந்து உந்திவரைபொரு கரைமேல் எற்றப் பொலிந்து இலங்கும் கழிப்பாலை . கழிப்பாலைப் பெருமான் , எந்தைபெருமான் , இப்பெருநிலத்தே அவன் என்னை ஆளுடையான் . இதன் முதலடியில் பவளமும் முத்தும் என்று கொண்டு வெண்டளை கெடப் பதித்ததுமுண்டு . பழம் பதிப்பில் , ` பவளமுத்தும் ` என்றே உளது . பவளமும் முத்தும் என்று கொண்டார் ` பரந்துந்திவரை ` என்பது விளங்காய்ச் சீராகாமை உணர்ந்திலர் . ` பரந்துவரை ` என்று கொண்டாற்றான ` பவளமும் முத்தும் ` எனலாம் . மணியும் பவளமும் முத்தும் பரந்து வரைபொரு மால்கரைமேல் திரை கொணர்ந்து எற்றப்பொலிந்து இலங்கும் கழிப்பாலை என்பதே நேரிது . பரத்தல் வரையைப் பொருதல் இரண்டும் கரைக்குரியன . வரை பொருகரை - மலையை ஒக்கும்கரை . கொணர்தலும் எற்றுதலும் திரையின் வினைகள் . மணி பவளம் முத்து மூன்றும் திரையாற் கொணரப்படுவன . அதனால் , ` உந்தி ` என்றது ஈண்டுப் பொருந்தாமற் போகும் . பரந்து பொருகரை என்று இயைதலின் அதன் இடையே உந்துதல் ஒல்லாது . உந்திக் கொணர்ந்து எற்றுவன திரை ஆதலின் , அம் முத்தொழிலுள் ஒன்று . ஆண்டு நில்லாது . பருத்த மாமணி ; கரிய அழகிய மிடறு (- கழுத்து ). எற்றுதல் - மோதுதல் . ` இப்பெருநிலத்தே ` என்றும் , ` இவ்வகலிடத்தே ` என்றும் முன் ( தி .4 ப .81 பா .4.) ` இந்த மாநிலத்தே ` என்றும் குறித்ததை நோக்கி இவ்வுலகின் சிறப்பை எண்ணிக் கொள்க . ` பல்யோனியெல்லாம் ஒழித்து மானுடத்து உதித்தல் கண்டிடிற் கடலைக் கையானீந்தினன் காரியங்காண் ` ` நரர்பயில் தேயந்தன்னில் நான்மறை பயிலா நாட்டில் விரவுதல் ஒழிந்து தோன்றல் மிக்க புண்ணியத்தானாகும் , தரையினிற் கீழைவிட்டுத் தவஞ்செய் சாதியினில் வந்து பரசமயங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே !` சைவமாஞ் சமயஞ்சாரும் ஊழ் பெறலரிது சால உயர் சிவஞானத்தாலே போழிள மதியினானைப் போற்றுவார் அருள் பெற்றாரே ! ` வானிடத்தவரும் மண்மேல் வந்து அரன்றனை அர்ச்சிப்பர் `. ` இந்தப் பார்மேல் நாட்டிய நற்குலத்தினில் வந்து அவதரித்துக் குருவால் ஞான நிட்டை அடைந்து அடைவர் நாதன்றாள் `. ( சிவஞானசித்தியார் ). கருமாமிடறுடைக் கண்டன் - திரு நீலகண்டன் . எம்மான் - எம் மகன் (- கடவுள் ). எந்தை - எம் அப்பன் . பெருமான் - பெருமகன் (- பெருங்கடவுள் ,) பெரும் பெயர்ப் பொருள் , பெரியோன் . பரத்துவப் பொருள் , என்னை ஆள் உடையான் :- அடியேனை ஆண்டவன் .

பண் :

பாடல் எண் : 3

நாட்பட் டிருந்தின்ப மெய்தலுற் றிங்கு நமன்றமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார் தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே.

பொழிப்புரை :

இப்பரந்த உலகில் பல காலம் உயிர்வாழ்ந்து சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொள்ளப்பட்டு அழிவதன் முன்னம் , குளிர்ந்த நீர் நிலைகளையும் , தண்டு நீண்ட தாமரைப் பொய்கைகளையும் உடைய அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வல்லமை உடையோமாய் யமபயத்திலிருந்து விடுபட்டோம் .

குறிப்புரை :

குளிர் பொருந்திய நீர் நிலைகளில் தாளூன்றிய தாமரைப் பூக்களையுடைய பொய்கைகளைக்கொண்ட தண்ணிய திருக்கழிப்பாலையண்ணலாகிய முழுமுதல்வனுக்கு, இவ்வகன்ற மண்ணுலகிலே, வன்மையுடையேமாய் ஆட்பட்டு நின்றோம். வன்மை யாது எனில், நமன் தமரால் கொள்ளப்பட்டு ஒழிவதன் முந்திச் சிவனடிமையாகி நின்றதாகும். வன்மை இன்றேல், நமன் தமரால் கொள்ளப்பட்டொழிவது திண்ணம் என்றவாறு. நாள் பட்டிருத்தல் - நெடுங்காலம் வாழ்தல். இன்பம் எய்தல் உறுதல் - சிற்றின்பம் (உலகின்பம்) அடைய விரும்புதல், இங்கு - இவ்வுலகில், நமன் - எல்லாரும் நம்மவன் என்று கொள்ள நடுவனாயுள்ள இயமன். தமர் - எமதூதர். கோட்படுதல் - கொள்ளப்படுதல்; ஒழிவது - இறப்பது. முந்துறல் - முந்திக் கொள்ளல். `ஒழிந்தம்` `வல்லம்` இரண்டும் தன்மைக்கண் ஒருமையைப் பன்மையாகக் கூறும் உயர்சொற்கிளவி. அன்று ஏ அசை. வினாவுமாம். `வல்லமாய் ஆட்பட்டொழிந்தம்`.

பண் :

பாடல் எண் : 1

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு , வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி , மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான் .

குறிப்புரை :

மருள் - மயக்கம் . துயர் - துயரம் . தீர - நீங்க . பிறவிக்கு மயக்கமே ஏது , பிறவித்துயர் தீர மயக்கம் தீர்தல் வேண்டும் . ` பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை மறப்பிலார்கண்டீர்மையல் தீர்வாரே ` என்றதில் , மையல் தீரின் பிறப்பொழியும் . அதுகுறித்துப் பிறப்பில் பெருமானை மறப்பிலாது வழிபடல் வேண்டுமென்று உணர்த்தினார் முதன்மறைப்பிள்ளையார் . ` மருளவா மனத்தனாகி மயங்கினேன் மதியிலாதேன் இருளவா அறுக்கும் எந்தையிணையடி நீழலென்னும் அருளவாப் பெறுதலின்றி அஞ்சிநானலமந்தேன் ` ( தி .4 ப .76 பா .1) மருட்டுயர் - மயக்கத்தாலுறுகின்ற பிறவித்துயரம் . மருட்டுயர் தீர்தல் பயன் . அர்ச்சித்தல் ஏது . தருமை ஆதீனத்தின் 25 ஆவது பட்டம் , சீலத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் அருளிய ஞானபோதம் ஆகிய ` அருச்சனை ` ( ` ஞானசம்பந்தம் ` ம . 17. இ 1 ) என்னும் கட்டுரையால் , அதன் சிறப்பை உணர்க . மாணி - பிரமசாரி . மார்க்கண்டேயன் - மிருகண்டு முனிவர் புதல்வர் . மார்க்கண்டேயற்கு ஆய் - மார்க்கண்டேய முனிவர்க்குப் பூசாபலத் துணையாகி . இருட்டிய - இருளதாய ( மேனியும் ), வளை வாள் எயிறு - வளைந்த வாள்போலுங் கூரிய பல்லும் . எரிபோலும் குஞ்சி - தீயைப் போலும் ( தலையின் ) செம்மயிரும் , சுருட்டிய நாவில் - மடக்கிய நாக்கும் உடைய ( கூற்றம் ). கூற்றம் - உடலையும் உயிரையும் கூறுபடுத்துவது . ஊற்றம் பதைப்ப - இயமன் நடுங்க . உதைத்து ;- உங்ஙனே உவ்விடத்தே . உருட்டிய - உருளச் செய்த . சேவடியான் - செய்யதிருவடியுடையான் . கடவூர் உறை உத்தமன் - திருக்கடவூரில் எழுந்தருளிய உத்தமன் என்னும் திருப்பெயருடையவன் . ` மாணிக்குயிர் பெறக் கூற்றை யுதைத்தன `. ( தி .4 ப .108 பா .1.)

பண் :

பாடல் எண் : 2

பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

ஐந்து சொற்களாக அமைந்த திருவைந்தெழுத்தை ஓதி விருப்பினோடும் தன் நன்மை கருதிச் சிவபெருமானை அணுகியிருந்த பிரமசாரியான மார்க்கண்டேயனுடைய இனிய உயிரை உண்பதற்கு அவனை வெகுண்டு கோபத்தோடு எழுந்து தாக்கிய கூற்றுவனை அவன் கண்கள் குருதியைச் சொரியுமாறு உதைத்துச் செயற்பட்ட சேவடியான் கடவூர் உறை உத்தமனே .

குறிப்புரை :

ஐந்தெழுத்தும் ஐந்து பதம் ஆகும் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளையுணர்த்தும் . அவை மந்திரமாகச் செபிக்கப் படும்போது முன்னர்ப் பிரணவமும் பீசங்களும் கூட்டி யுச்சரிக்கப் படும் . சிவஞான மார்க்கத்திலே ஐந்து பதப்பொருளும் உணரப்படும் . ` அந்தியும் நண்பகலும் அஞ்சு பதஞ்சொல்லி முந்தியெழும் பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென் திருவாரூர்புக்கு எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே ` ( தி .7 ப .83 பா .1) ` மந்திரம் நமச்சிவாய ஆக நீறணியப்பெற்றால் வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே `. ( தி .4 ப .77 பா .4) சிவனே என்னும் நாவுடையார் நமையாளவுடையார் ` ( தி .6 ப .68 பா .6). ஓதிப் பரிவினொடும் இதத்து எழும் மாணி . ஓதி எழும் மாணி . மாணி உயிர் ; இன்னுயிர் . மாணி தன் இன்னுயிர் . உயிர் உண்ண ;- ` உயிர் உண்ணவும் பருகவும் படுவதன்றாயினும் , ` அகலிருவிசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப்பருதி `. ( பெரும் பாணாற்றுப் படை :- 1 - 2) என்றாற் போல ஓர் அணி குறித்து நின்றது ` ( புறநானூறு 230. உரை ). வெகுண்டு - சினந்து , அடர்த்த - தாக்கிய . கதத்து - வலிமையால் . வெகுண்டு என முன் உள்ளது . கதம் என்றது வலியென்னும் பொருட்டு . எழுகாலனை - எழுந்த காலனை . கண்ணிற் குருதிப்புனல் ஆறாக ஒழுக உதைத்து எழும் சேவடியான் திருக்கடவூர் உறை உத்தமன் . ஒழுக உதைத்தெழு சேவடி .

பண் :

பாடல் எண் : 3

கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின னீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

வஞ்சனை பொருந்திய மனத்தினர் காண்பதற்கு அரியவனாய் , மன்மதன் மீது நெருப்பைச் சொரிந்து அவனை அழித்த கண்ணினனாய் , கங்கையும் பாம்பும் சூடிய சிவந்த சடையினை உடையவனாய் , வெண்ணீறணிந்து பால் போன்ற நிறத்தினனாய்க் கூற்றுவனை முன்னொரு காலத்தில் பேரொலி செய்து அதட்டியவன் சிவந்த திருவடிகளை உடைய கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

கரப்பு - மறைத்தல் , வஞ்சகம் . சிந்தையார் - சிந்திக்கும் சித்தம் உடையவர் . காண்டற்கு அரியவன் :- ` உணர்வினேர் பெறவருஞ் சிவபோகத்தை ஒழிவின்றி உருவின்கண் அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை ` ( தி .12 பெரியபுரா . 2064) ` கரவாடும் வன்னெஞ்சர்க்கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை ` ( தி .4 ப .7 பா .2) ` கரவிலாமனத்தராகிக் கைதொழுவார்கட்கென்றும் இரவு நின்றெரியதாடி இன்னருள் செய்யும் எந்தை `, ` வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயான் ` ( தி .6 ப .50 பா .4) ` கள்ள முள்ள வழிக்கசிவானலன் ` ( தி .5 ப .82 பா .4)` வஞ்ச மனத்தவர்கள் காணவொண்ணா மணிகண்டன் ` ( தி .6 ப .42 பா .8) காமன் - மன்மதன் . அவனையும் நெருப்பு உமிழும் கண்ணால் எரித்தவன் . காமனையும் கண்ணெருப்புமிழ்ந்தவன் என்க . யாவரும் அவனைக் காமுறுவர் . எல்லாராலும் காமுறப்படும் அவனையும் தான் காமுறாது முனிந்து உமிழ்ந்த தீயார்ந்த கண்ணினன் நம் சிவபிரான் . ` காமனையும் கண்ணழலால் விழித்தநாளோ `? உம்மை உயர்வு சிறப்பு . ( நன்னூல் சங்கரநமச்சிவாயருரை காண்க ). நீள்புனற் கங்கையும் பொங்கு அரவும் பரப்பிய செஞ்சடையன் . பால் வண்ணன் . ` பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும் `. ( தி .4 ப .81 பா .4.) இது , குங்குமத்தின் மேனி அவன் நிறமே ` ( தி .4 ப .6 பா .3) ` பொன்னார் மேனியன் ` என்பவற்றின் முரணும் என்னற்க . ` செந்நிறத்தள் எந்நிறத்தளா யிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்தனாயிருப்பன் ஆங்கு ` ( திருக்களிற்றுப்படியார் . 79). உரப்பிய - பேரொலி செய்து அதட்டிய . காலனை உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே .

பண் :

பாடல் எண் : 4

மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

மான்குட்டி விளங்கும் கையினனாய் , தேவர் தலைவனான தன்னை மனம் மகிழ்ந்து வழிபட்ட பிரமசாரியின் அரிய உயிரைக் கைப்பற்றுதற்காகக் கொதிக்கும் உள்ளத்தோடு வெகுண்டு புறப்பட்ட , மூவிலை வேலை ஏந்திய கூற்றுவன் வாய் விட்டுக் கதறுமாறு அவனைச் சிதைத்த சேவடியை உடையவன் , கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

மறி - மான்கன்று . திகழ் - விளங்கும் . திகழ்கை :- வினைத்தொகை . வானவர் - முத்தியுலகில் மெய்யின்பம் நுகர்வோர் ; தேவருமாவர் . ` தூயவிண் ` ( தி .4 ப .77 பா .3) ` வானைக் கடந்தண்டத் தப்பால் மதிப்பன ` ( தி .4 ப .92 பா .14) ` காதல் செய்யகிற்பார்க்குக் கிளரொளிவானகந்தான் கொடுக்கும் ` ( தி .4 ப .92 பா .13) என்பன முதலியவற்றால் வான் என்பதன் பொருளை ( வீட்டை ) உணர்ந்து கொள்க . மனம் மகிழ்ந்து குறித்து எழும்மாணி . மகிழ்ச்சி மனத்தில் ; குறித்தல் உயிரில் . குறித்தல் - தியாநம் . மாணிதன் ஆருயிர் :- சித்தாய் அழியாத அஃது , அழியும் உடலுட்புக்கு நிற்றலின் அருமை குறித்தது . மார்க்கண்டேயரைப் போல்வார் அரியர் என்பார் ` ஆருயிர் ` என்றார் . காலன் கொள்ளற்பாலன எளிய உயிர்களாகிய பிற கணக்கிலா திருக்கவும் . ` ஆருயிர் கொள்வான் ` வந்ததால் , ` சேதனம் என்னும் அச்சேறு அகத்தின்மையின் கோது என்று கொள்ளாதாம் கூற்று ` ( நாலடி ) என்பது வாயாதலறிக . கொதித்த சிந்தையில் கறுத்து ( சினத்து ). மூவிலை வேல் - திரிசூலம் . ` தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழ விடுவேன் ` ( கந்தரலங்காரம் ). அலற உறுக்கிய சேவடியான் . உறுக்குதல் - அதட்டல் , சினத்தல் . காலனை உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே .

பண் :

பாடல் எண் : 5

குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமொ டர்ச்சித்த மாணித னாருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

குழையணிந்த காதுகளை உடைய , தேவர் தலைவனாகிய தன்னை நீராடி வழக்கமாக அருச்சித்த மாணியின் அரிய உயிரைக் கைப்பற்ற வந்த தீப்பொறி கக்கும் முத்தலைச் சூலம் ஏந்திய கூற்றுவன் கதறுமாறு அவனைச் சிதறச்செய்த சேவடியான் கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

குழை - குண்டலம் . ` சங்கக்குழை ` ` தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளைநீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்கவளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ `. ( தி .8 திருவாசகம் . 232) குழை திகழ் காது . மறி திகழ்கை . ( தி .4 ப .107 பா .4.) குளிர்ந்து - தண்ணீருட் குளித்தும் உண்ணீர்மை குளிர்ந்தும் , பழக்கம் :- பூசனை புரிந்து கைவந்தமை ; சிவபிரானொடு பழகிய பழக்கம் . அர்ச்சித்த மாணியின் உயிரை அரிதென்றுணராது கொள்ளவந்த காலன் . தழல் - தீ . பொதி - பொதிந்த ; மூடிய உழக்கிய - மிதித்த . ` வருடை பாய்ந் துழக்கல் `. ( சிந்தாமணி 1899) மாணியின் ஆருயிர் கொள்ளவந்த காலனை ` உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே .

பண் :

பாடல் எண் : 6

பாலனுக் காயன்று பாற்கட லீந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

சிறுவனாகிய உபமன்யுவுக்குப் பால் உணவுக்காகப் பாற்கடலையே வழங்கி , பல கிளைகளோடு ஓங்கி வளர்ந்த கல்லால மர நிழலின் கீழ் இருந்து வேதங்களின் செய்திகளைச் சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு உபதேசித்துச் சிறந்த முனிவனான மார்க்கண்டேயனுக்காகச் சூலமும் பாசக் கயிறும் கொண்டு தொடர்ந்து அவனை நெருங்க ஓடிவந்த காலனை வெகுண்ட பெருமான் , கடவூர் உறை உத்தமனாவான் .

குறிப்புரை :

பாலன் - உபமன்னியுமுனிவர் ( வியாக்கிரபாத முனிவருடைய திருமகனார் ). பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து :- ` பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் ` ( தி .9 திருப்பல்லாண்டு 9). ஈந்து , ஈய்ந்து என்றிரு வடிவும் உண்டு . ஈத்தல் ஈதல் என்னும் இரண்டும் முறையே ஈத்து ஈந்து என்றாய வினை எச்சத்திற்கு அடியான தொழிற் பெயர் . ` ஈத்துவக்குமின்பம் ` ( குறள் 228) ` ஈத்தளிக்கவல்லான் ` ( குறள் . 387) ` ஈத்துமொருவுக ` ( தி .4 ப .83 பா .1). ` ஈத்தலும் ஈதலும்போலப் பாத்தலும் பாதலும் ஒன்று ஆதலிற் பாதீடாயிற்று ` என்று ( தொல் . புறத் . 3. உரையில் ) நச்சினார்க்கினியர் உரைத்தார் . அவ்வாறு ` ஈ ` என்னும் முதனிலையும் பகு என்றதன் திரிபாய பா என்பதும் ஒன்றாகா . பகுத்திடுதல் , பகுத்தீடு , பாத்தீடு , பாதீடு என்று மருவிய அதனை மருவாத சொல்லொடு கூட்டி ஒன்றெனல் நன்றன்று . ஈதலும் ஈத்தலும் ஒன்று என்றுமட்டும் உரைத்திருக்கலாம் . ` அவர் எமக்கு ஈந்தது இவ்வூர் ` ( குறள் 1142) ` ஈத்திரங்கான் . ஈத்தொறும் மகிழான் , ஈத்தொறுமாவள்ளியன் ` ( பதிற்றுப் பத்து 61) என்பவற்றால் , ஈந்தது , ஈத்தது என்ற இரண்டு வடிவும் அறிக . ஈத்தொறும் என்றும் ஈயுந்தொறும் என்றும் வேறுபட வரும் . ` கண்மணியனையாற்குக் காட்டுக என்றே மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும் . ஈத்த வோலைகொண்டு ... தேயமும் ` ( சிலப் . 2. 13. 76 - 8) என்றதில் ` ஈத்ததும் ` ` ஈத்த ` என்பனவும் ஈந்ததும் ஈந்த என்பனவும் வெவ்வேறே . வலித்தல் மெலித்தல் என்ன இடமின்றி நிற்கின்றன அவை . ` ஈத்த நிறை ` ( கலித்தொகை . 138) ` ஈத்த இம்மா ` ( ? 139 - 140) ` ஈத்த பயம் ` ( ? 59) ` ஈத்தவை ` ( ? 84) ` ஈத்தார் ` ( ? 109) ` ஈத்தை ` ` தருவாய் ` ( ? 86) ` ஈதல் ` ( ? 27 ; 61) ` ஈயும் வண்கையவன் ` பாடலுள் இருத்தல் உணர்க . ` ஈ ` என்னும் முதனிலை வினை ( ? 42) ஈவாய் ( ? 100) என்றிருவடிவும் நல்லிசைப் புலவர் வேறுபாட்டிற்கொள்ளும் வடிவு வேறுபாட்டினை ஆராய்ந்துணர்க . ஈகின்ற , ஈயும் , ஈகின்றான் என்பனவற்றிற்கு மற்றதன் வடிவில்லை , இறந்தகாலத்தில் மட்டும் அவ்வடிவம் பயின்றுளது . முனி - மார்க்கண்டர் . ஆய்க் காய்ந்த பிரான் .

பண் :

பாடல் எண் : 7

படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

பரவிய சடையிலே கொன்றைமாலை , பாம்பு மாலை , பாம்பினைத் தொடுக்கும் கயிறாகக் கொண்டு தொடுத்துக் கோத்துத் தலையில் அசைகின்ற தலைமாலை என்பனவற்றை அணிந்த திருமேனியனாய் , உண்ணும் பொருள்களைப் பிச்சை எடுப்பதற்காகத் திரிவோனாய் , ஒளி வீசும் முத்தலைச் சூலம் ஏந்திய காலன் துண்டங்களாகுமாறு வெகுண்ட சேவடிகளை உடையவன் கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

படர்சடை - படர்ந்தசடை . சடைக்கொன்றை - சடையில் அணிந்த கொன்றை மலர் மாலை . பன்னகம் - பாம்பு . மாலை :- பாம்பை மாலையாகப் பூண்டுள்ளானென்க . பணி - பாம்பு . பணம் - படம் . பணத்தையுடையது பணி . பணியைக் கயிறாகக்கொண்டு தலைகளைக் கோத்தமாலை ; தலைமாலை ` கடியராக் கயிற்றிற்கட்டுஞ் சதுர் மறைக்கரோடி முட்டாட்டாமரை வாசம் ` ( சேதுபுராணம் இராமனரு . 89). உடைதலை - உடைந்த தலை ; ` உடைதலைமாலை ` ( தி .4 ப .111 பா .1). ` தலைமாலை தலைக்கணிந்து `. கோத்து - கோக்கப் பட்டு ; அணியப்பெற்று . உழல் - உழல்கின்ற , உழல்வது தலைமாலை . உழலற்கு இடம் திருமேனி . உண்டற்குக்கொள்ளும் பிச்சைக்கு என்றே உழல்வோன் (- திரிவோன் ). கொன்றையும் பன்னக மாலையும் பணிகயிறாக் கோத்துழலும் உடைதலைமாலையும் உடைய மேனியன் எனப் பொருத்திக்கொள்க . உம்மையை ஏனையிடத்தும் ஒட்டுக . சுடர் பொதி மூவிலை வேலுடைக் காலனை :- ` தழற் பொதிமூவிலை வேலுடைக் காலனை ` ( தி .4 ப .120 பா .5) துண்டம் ( துண் + து + அம் ). துண்டமது :- அது முன்மொழிப் பொருட்டாய் நின்று சுட்டுப் பொருளையுணர்த்தாது நின்றது . உடறிய - சீறிய ; வருத்திய .

பண் :

பாடல் எண் : 8

வெண்டலை மாலையுங் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

வெள்ளிய தலைகளால் ஆகிய மாலையாகிய கரோடி பொருந்திய விரிந்த சடையின்மீது கங்கையாகிய பெண்ணை அணிந்த தலைவனாய்ப் பேய்களோடு விரும்பி ஆடும் பெருந்தகையாய் , நெற்றியில் தனியான ஒரு கண் உடையவனாய்க் காலனை வெகுண்டவனாய் , கடல் விடத்தை உண்ட பெருமான் கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

வெள்தலை மாலையும் - வெள்ளிய தலைகளைக் கோத்தமாலையும் . கங்கை - கங்கையாற்றையும் , கரோடி - முடிமாலை . த .4 ப .107 பா .7 பார்க்க . விரிசடைமேல் - விரிந்த சடையின்மேல் . பெண்டு - ( பெண்தன்மையுடையது ) கங்கையென்னும் பெண்ணை . அணி நாயகன் - அணிந்த இயவுள் . முதலடியிற் ` கங்கை ` என்றும் இதிற் ` பெண்டு ` என்றும் உள்ள இரண்டும் ஒன்றையே குறிப்பன ஆயினும் முன்னர்ச்சடையில் உள்ளவற்றுட் சில பொருள்களின் வரிசையிற் கூறப்பட்டது . பின்னர்ப் பரன் பெயராகக் கூறப்பட்டது . சடைமேற் பெண்ணையணிந்தவன் பேயோடும் ஆடும் பெருந்தகையான் . கண்நெற்றியன் . தனிக்கண் நெற்றியன் . கண்ணைத் தனியே உடைய நெற்றியன் தனிக்கண்ணையுடைய நெற்றியினன் ... அன்று - மார்க்கண்டேயரைப் பற்றவந்த அந்நாளில் . காலனைக் காய்ந்து உண்டருள் செய்தபிரான் கடவூர் உறை உத்தமனே . கடலின் விடம் - பாற்கடலிற்றோன்றிய நஞ்சினை . உண்டருள் செய்த - உண்ட . நஞ்சிற்கு அருள் செய்தல் இல்லை . துணைவினை . தேவர்க்கும் அசுரர்க்கும் நஞ்சுண்டருள் செய்தார் எனின் , உண்டு அருள் செய்தார் என்றாகும் . ஈண்டு உண்டார் என்பது மட்டும் கொள்ளற்பாலது . சடைமேல் அணிந்த பெண்டு கங்கை .

பண் :

பாடல் எண் : 9

கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை யன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

பன்றி உருவெடுத்துப் பூமியைக் குடைந்துசென்ற கேசவனாகிய திருமால் தன் முயற்சியால் காண்டற்கு அரியவனாய் , தான் வாழ்வதற்காகத் தன் தாமரைபோன்ற கண் ஒன்றனைப் பெயர்த்து அர்ப்பணித்த அத்திருமாலுக்குச் சக்கரப்படையை வழங்கியவனாய் , ஒரு காலத்தில் கூற்றுவனை அழித்தவனாய் , எல்லா ஊழிகளிலும் உள்ள பெருமான் கடவூர் உறை உத்தமன் .

குறிப்புரை :

கேழல் - பன்றி . கேசவன் - அழகிய மயிருடையவன் ; கேசியென்னும் அசுரனைக் கொன்றவன் . கேசி - கஞ்சனால் ஏவி விடுக்கப்பட்டுக் குதிரைவடிவாய் வந்த அரக்கன் ` ` தேவசேனையைப் பிடித்துச் சென்றபோது தேவேந்திரனாற் கொல்லப்பட்ட ஓரசுரன் ` என்றது ஈண்டுத் தொடர்பில்லாதது . கேசவன் என்பது விண்டுவின் துவாதச நாமத்தொன்று . காண்பு - காண்டல் . திருமால் காண்பதற்கரிய திருவடி காலன் காண்பதற்கெளிதாயிற்று என்று ஒலித்தலறிக . ( தி .4. ப .108. பா . 1,2) ` மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து மாலும் அறிந்திலன் மாலுற்றதே வழிபாடு செய்யும் பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக் காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழலடியே ` ( தி .5 ப .114 பா .1) மாமலர் - தாமரை . மலர்க்கண் :- உவமத் தொகை . மலர்க்கீடாகக் கண்ணையிடந்து அப்பியதால் மலர்க்கண் . இடந்து - பேர்த்து . மாலவன் - திருமால் . அன்று - ஆயிரம் பூக்கொண்டு வழிப்பட்ட நாளில் , ஆழி - சக்கரம் . ஈந்து - கொடுத்து . அடுதிறல் - கொல்லும் ஆற்றல் . திறலையுடைய காலனை . அன்று - ( தி .4 ப .107 பா .8) பார்க்க . அடர்த்து - கொன்று ; பொருது . ஊழி - ஊழிக்காலம் .

பண் :

பாடல் எண் : 10

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

தேன் விளங்கும் கொன்றை மாலையும் வில்வ மாலையும் அணிந்த அழகிய முடியின் மீது பஞ்சகௌவிய அபிடேகத்தை விரும்பும் பிரானாய் , ஆரவாரம் செய்து கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட வளைந்த வாளை உடைய இராவணன் பத்துத் தலைகளும் சிதறிவிழுமாறு அழுத்திய சிவந்த பாதங்களை உடையவன் கடவூர் உறை உத்தமன் ஆவான் .

குறிப்புரை :

தேன்திகழ் கொன்றையும் கூவிளமாலையும் திரு முடிமேல் அணிந்தவன் . ஆன் - பசு ( தி .4 ப .63 பா .9; ப .26 பா .5; ப .38. பா .5; ப .53 பா .7; ப .55 பா .3). மலை - திருக்கயிலையை . ஆர்த்து - பேரொலி செய்து . எடுத்த அரக்கன் . கூன்திகழ் அரக்கன் . வாள் - வாளை ( ஏந்திய அரக்கன் ). கொடிய அரக்கன் என்றலுமாம் . முடிபத்தும் குலைந்து விழ ஊன்றிய சேவடி , சேவடியான் கடவூர்உறை உத்தமனே . அவன் பத்து முடியும் குலைந்து விழ உத்தமன் பெரியதாகச் செய்தானல்லன் . திருவடியின் ஒரு விரலை ஊன்றியது ஒன்றே செய்தான் . அச் சிறியதான செயலுக்கே , அவன் தன் பேராற்றல் எல்லாம் ஒழிந்து குலைந்து விழுந்தான் . ` கருமலி ` கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண்டிறல் அரக்கன் உக்கான் ` ( தி .4 ப .71 பா .9) பெருவிரல் இறைதான் ஊன்றப் பிறை யெயிறிலங்க அங்காந்து அருவரையனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான் . ( தி .4 ப .75 பா .10).

பண் :

பாடல் எண் : 1

மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே.

பொழிப்புரை :

மாற்பேறுடையானுடைய தாமரை போன்ற திருவடிகள் பிரமசாரியான மார்க்கண்டேயன் ஆயுள் குறையாது நிலைபெற்றிருக்கக் கூற்றுவனை உதைத்தன . மாவலியினிடத்தில் நிலத்திற்காக யாசகம் செய்த திருமால் காண்பதற்கு அரியன . ஞானத்தால் உணர்ந்த அடியவர்களால் விரும்பித் துதிக்கப்படுவன . மாணிக்கம் போன்று ஒளி வீசுவன . மேலும் வீடுபேற்றை நல்குவன .

குறிப்புரை :

மாணிக்கு - பிரமசாரியாய்ப் பூசித்த மார்க்கண்டேய முனிவர்க்கு . உயிர்பெற :- உள்ள ஆயுள் என்றும் குறையாது நிலைபெற்றிருக்க . உயிரைப் பெறுதல் கொடுத்தல் யாதுமில்லையேனும் ` உயிர் கொடுத்தான் ` ` உயிர் பெற்றான் ` என்னும் வழக்குண்டு . அதன் கருத்து அவ்வவ்விடத்திற்கேற்பக் கொள்ளப்படும் . கூற்று - உடலையும் உயிரையும் வெவ்வேறு ( கூறு ) செய்வது . கூற்றை உதைத்தன . மாவலி - மகாபலி சக்கிரவர்த்தி . பால் :- ஏழனுருபு காணிக்கு - மூவடி மண்ணுக்கு . இரந்தவன் - இரத்தல் செய்தவன் ( திருமால் ). காண்டற்கு - கண்டு வழிபடுதற்கு . அரியன - கிடைத்தல் இல்லாதன . ( தி .4 ப .108 பா .2) ` கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல்முன் தேடின ... ... இன்னம் பரான்றன் இணையடியே ` ( தி .4 ப .100 பா .6) கண்ட - ஞானத்தால் உயிருள் உணர்ந்த . தொண்டர் - ஞானிகள் . பேணி - இடையறாப் பேரன்புகொண்டு , அயரா அன்பு செய்து . கிடந்து - துகளறுபோதத்திற் குறித்த சுகாதீதமாகிக் கிடந்து . பரவப் படுவன - அத்துவிதமாக வழிபடப்பெறுவன . பேர்த்தும் - ஒருமை திரிந்த இடத்தும் . அஃதே - அம்முத்தியின்பமே ஆகும் . மாற்பேறு - திருமாற்பேறு ; காரணப் பெயர் ; உடையான் - சுவாமி . மாணிக்கம் ஆவன :- மலரடி எழுவாய் . உதைத்தன முதலியன பயனிலை . ` மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரமன்னி ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறனடித்தலம் `. ( தி .4 ப .92 பா .16.)

பண் :

பாடல் எண் : 2

கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே.

பொழிப்புரை :

கருடனை வாகனமாக உடைய திருமால் காண்பதற்கு அரியனவாகிய மாற்பேறுடையான் திருவடிகள் அன்பு செய்தால் அகக்கண் புறக்கண் என்ற இரு கண்களும் இல்லாதவர்களுக்கும் அவர் எதிரே நிலையாக இருந்து நிலைபெயராது ஒளி வீசுவன . அழகுமிக்க வாகைமாலையைச் சூடிய பார்வதி தன் கைகளால் தடவுவதால் சிவப்பு நிறம் மிகுவன .

குறிப்புரை :

கருடத்தனிப்பாகன் - கருடனை யூர்ந்து செல்லும் தனியான சாரதி . தனி என்றாலும் மனைவியரொடும் ஏறிச்செல்லுவன் . கருடத்தனிப்பாகன் :- கருடசாரதி ` பார்த்தசாரதி `. காண்டற்கு அரியன : மாவலிபால் காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன ` ( தி .4 ப .108. பா .1). காதல் செய்யில் - அன்பு செய்தால் . குருடர்க்கும் - அகக்கண் புறக்கண் இரண்டும் இல்லாதவர்க்கும் . முன்னே - அவர் எதிரே . குடிகொண்டு இருப்பன . குடியாகியிருந்து நிலைபெயராதொளிர்வன . ` இருள் தரு துன்பப்படலம் மறைப்ப மெய்ஞ்ஞானமென்னும் பொருள்தரு கண்இழந்து உண்பொருள் நாடிப் புகல் இழந்த குருடரும் தம்மைப் பரவக் கொடு நரகக்குழி நின்று அருள்தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே ` ( தி .4 ப .92 பா .4.) ` இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல் இன்று உண்டாம் அன்பின் நிலையே அது `. ( திருவருட் பயன் . 80). கோலம் - அழகு ; அணிசெயல் ( அலங்காரம் ). மல்கு - மல்கிய . செருடக்கடிமலர் :- ` நிருதி மென்சிரீடப் பூவில் ` ( காஞ்சிப் புராணம் :- சிவ புண்ணியப் படலம் 61). கருவேள் பூங்கணையெய்து முன்னர்த் தோல்வியும் பின்னர் , அம்பிகையின் திருக்கையால் சிவனது திருக்கழுத்தைக் கட்டுமாறு செய்து வெற்றியும் உற்றதால் , அம்மையின் திருக்கை அம்மலரினும் மெல்லியன என்றுணரப்படும் என்னும் இடத்தில் காளிதாசர் , ஸ்ரீரீஷபுஷ்பாதிக ஸௌகுமார்யௌ பாஹு ததியாவிதி மேவிதர்க : பராஜிதேநாபி க்ருதௌ ஹரஸ்ய யௌ கண்டபாயேள மகரத்வஜேந ( குமார சம்பவம் 1-41) என்று பாடியுள்ளார் . செல்வி - உமா தேவியார் . கமலம் - தாமரைப் பூ . செங்கமலம் போலும் கரம் (- கை ), கையால் வருடச் சிவந்து நிற்பன மலரடி . மாற்பேறுடையான் மலரடி அரியன ; இருப்பன ; சிவப்பன . ` மலரடி ` என்றதற்குத் தக்கவாறு மோனையமைப்புள்ளதை அறிவார்க்கு ` வெருட ` என்பது பிழையாதல் விளங்கும் .

பண் :

பாடல் எண் : 1

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச்  சுடர்க்கொழுந்தே. 

பொழிப்புரை :

விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.

குறிப்புரை :

பொன் ஆர் திருவடி - பொன்போலும் அழகிய திருத்தாள் திருவடிக்கு விண்ணப்பம் ஒன்று உண்டு (அது கேட்டு அருள்வாய்). போற்றி செய்யும் ஆவி - வழிபடுகின்ற அடியேனை, காப்பதற்கு - உடலின் நீங்காது தடுத்து நிலைபெறச் செய்ய. இச்சை உண்டு ஏல் - திருவுள்ளம் உள்ளது ஏன் எனில், இருமை + கூற்று = இருங்கூற்று; பெருமொழி - `புன்னெறியாமமண் சமயத் தொடக்குண்டான் என்னும் பழிச்சொல்`. அகல - என்பாற் சாராது நீங்க. `தொடக்குண்டு போந்த உடல் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான்` (தி.12 சேக்கிழார் திருவாக்கு) மின் - ஒளி. ஆரும் - நிறைந்த. மூவிலைச் சூலம் - `முத்தலைச் சூலம்` `மூவிலைவேல்`. என்மேல் பொறி-; கொண்டல் துன் ஆர் கடந்தை - மேகம் பொருந்திய பெண்ணாகடம். துன் - துன்னுதல். ஆர் - பொருந்திய. மேவு கொண்டல்:- `வானோக்கி வாழும் உலகெல்லாம்` என்னும் பொருட்டு. கடந்தை சிவதலம். தூங்கானை மாடம் - சிவாலயம் `சோதிலிங்கத் தூங்கானை மாடத்தான்` (தி.6 ப.34 பா.5) `பெண்ணானை தூங்குமிடம்` `பெண்ணானை தூங்குமாடம்` என்றிருந்து, பெண்ணாகடம் என மருவியிருக்கலாம். `புள்ளிருக்குந்திருவேளூர்` எனச் சேக்கிழார் சுவாமிகள் சொல்லியருளினார். அது புள் இருக்கு வேள் ஊர் எனப் பிரித்துப் பொருள் கூறப்படுகின்றது. அதுபோலப் பெண் - தேவ கன்னியார்; ஆ - காமதேனு; கடம் - வெள்ளை யானை எனப் பிரித்துப் பொருள் கூறப்படுகின்றது இதுவும். பொறித்தல் வேறு வடுச் செய்தல் வேறு. `அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கண் மாயாவடுச்செய்தான் காணேடீ` (தி.8 திருவாசகம். 258) என்புழி, `பொறித்தான்` எனிற் பொருந்துமோ? `சுடர்க்கொழுந்து` இறைவன் திருப்பெயர். திரிசூலம் உடைய பெரிய கூற்றனை அஞ்சி அகலத் திரிசூலம் என்மேற் பொறி என்றதுமாம்.

பண் :

பாடல் எண் : 2

ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி  காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே. 

பொழிப்புரை :

செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே! `ஐயோ` இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான் என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.

குறிப்புரை :

ஆ ஆ:- `ஆவா` என்னும் ஆட்சி திருமுறையிற் பயின்றுளது. சிறு தொண்டன் - தொண்டருட் சிறியேன்; சிறு தொண்டு புரிவேன் எனலுமாம். என் நினைந்தான் - யாது கருதினான். அரும் பிணி நோய் - அகற்றுதற்கு அரிய பிணியையும் நோயையும். பிணியாகிய நோயை என்றுமாம். காவாது ஒழியின் - தடுக்காமல் நின்றால். ஒழிதல் - நிற்றல். தொல். உன்மேல் பழி கலக்கும்:- `பூவார் அடிச்சுவடு என்மேற் பொறித்துவை போகவிடில் மூவா முழுப்பழி மூடுங்கண்டாய்`. (தி.4 ப.96 பா.1) காதல் செய்வார்:- `காதல் செய்யில்` (தி.4 ப.108 பா.2). செய்வார்க்குத் தேவா. தேவன் - திவ்வியன். திருவடி நீறு என்னைப் பூசு:- `பூவாரடிச்சுவடு என் மேல் பொறித்தலுமே தேவானவாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. (தி.8 திருவாசகம். 241). செந்தாமரையின் பூ ஆர்கடந்தை - செந்தாமரை மலர்கள் நிறைந்த பெண்ணாகடம்; நீர் நிலவளக் குறிப்பு. கடந்தையுள் தூங்கானை மாடம்:- ஊரும் கோயிலும் எல்லாத் திருவிருத்தத்திலும் கூறப்பட்டன. எம் புண்ணியனே - எமது சிவபுண்ணியப் பயனாயுள்ளவனே. புண்ணியனே காவா தொழியிற் பழி உன்மேற் கலக்கும். திருவடி நீறு பூசு. பூசிக் காத்தருள், என்னை.

பண் :

பாடல் எண் : 3

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 4

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 5

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 6

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி மால்வரைபோல்
இடவம் பொறித்தென்னை யேன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுட் டூங்கானை மாடத்தெந்  தத்துவனே. 

பொழிப்புரை :

பெரிய சோலைகளிலே சந்திரன் பொருந்தி உலவும் கடந்தைத் தலத்தில் உள்ள தூங்கானை மாடத்தில் உறையும் எம் மெய்ப்பொருளே! செலுத்திய தேர்ச்சக்கரம் மேல் உருளாது தடைப்படக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் உடல் நெரியுமாறு அழகிய கால்விரல் ஒன்றால் அழுத்தியவனே! பெரிய இமய மலைபோன்ற வெண்ணிறமுடைய காளை வடிவப் பொறியை அடியேன் உடலில் பொறித்து அடியேனை உன் தொண்டனாக ஏற்றுக் கொள்வாயாக.

குறிப்புரை :

கடவும் - செலுத்தும். திகிரி - தேர். கடவாது ஒழிய - செலுத்தப்படாது நிற்க. கயிலை உற்றான் - திருக்கயிலை மலையை எடுக்கலுற்றான். அதை எடுக்கலுற்ற காரணம் அவன் தேர் செல்ல அம் மலை இடையூறாயிற்றென்பது குறித்தது இது. படவும் - அவன் வருத்தப்படவும். திருவடி அவன் மேற் படவும். அவன் உடல் அம் மலையிற்படவும் (பட்டவுடனே) திருவிரல் - திருக்காற் பெருவிரல். ஒன்று வைத்தாய்:- ஐந்தும் வைத்திருந்தால் ஆகும் கதி சொல்லொணாது என்ற குறிப்பு. பனிமால்வரை - இமாசலம் என்றதன் தமிழ் மால்வரை போல் இடவம். பெரிய மலை போலும் விடை பெரிய விடை` ஈடலிடபம்` `மற்றொன்று இணையில் வலியமாகில் வெள்ளி மலைபோல் பெற்று ஒன்று ஏறிவருவார் அவர் எம்பெருமானடிகளே` (சம்பந்தர்) என்னும் திருக்கடவூர் மயானத்துத் திருப்பாடலை நினைக. இடபம் - இடவம்:- `வபயோரபேதம்`, இடவம் பொறித்து என்னை ஏன்று கொள்ளாய். திங்களை இருஞ்சோலை தடவும் கடந்தை:- `வண்கொண்டல் மதி முட்டுவன மாடம்`. (கம்பரா.) தத்துவன் - மெய்ப்பொருள். ஏன்று கொள்:- `திருப்பாதிரிப்புலியூர் இருந்தாய் அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே`. (தி.4 ப.94 பா.10.)

பண் :

பாடல் எண் : 1

சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங்  கங்கையென்னும்
காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேல்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும்  பசுபதியே.

பொழிப்புரை :

பெரிய கங்கை என்னும் மூங்கில் போன்ற பருத்த தோள்களை உடைய பெண்ணின் ஒளி வீசுகின்ற அணிகலன்களை அணிந்த அழகிய முலைமீது பாம்புகள் தவழும் சடையை உடையவனே! எம்மை அடிமை கொள்ளும் ஆன்ம நாயகனே! சாம்பலைப் பூசிக் கொண்டு, உறங்கும்போது வெறும் தரையிலேயே கிடந்து உறங்கி உன் திருவடிகளை முன் நின்று துதித்து அங்கலாய்க்கும் அடியவர்கள்திறத்து அருள் செய்வாயாக.

குறிப்புரை :

இத்திருப்பதிகத்தில் அடியார்க்காக ஆண்டவனை வேண்டுதலை உணர்க. `சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டு நின்தாள் பரவி ஏம்பலிப்பார்கட்கு இரங்கு கண்டாய்`:- என்பது முன்னும் (தி.4 ப.99. பா.8) உளது. `சாம்பர்` என்றது ஆண்டு. `சாம்பல்` என்றது ஈண்டு. அதனால், ஆங்கெழுதிய குறிப்பே ஈங்கும் அமையும். கங்கை என்னும் பணைத்தோளி. இருமை - பெருமை. அழியாமை, வற்றாமை, தன்கண் முழுகினோர் பிறவி நீக்குதல் முதலியன. காம்பு - மூங்கில். மூங்கிலை ஒப்பாகா யென்று அகற்றி வருத்தும் தோள், பணை - பருமை. காம்பு அலைக்குந் தோள். பணைத்தோள். கங்கை என்னும் தோளி. கதிர்ப்பூண் - `விளங்கிழை`, வனம் - அழகு. கங்கையின் கொங்கைமேல், சடையிலுள்ள பாம்பு அலையும். பாம்பினைச் சடை அலைக்கும். தோளியே தன் அலையால் தன் கொங்கைமேல் பாம்பை அலைக்கும் எனலுமாம். எம்மை ஆளும் பசுபதியே என்று முடியும் இத்திருப்பதிகம் பாடிப் பரவசப்படுத்தும். துயிலினிமையை வேண்டாது துஞ்சும்போதுந்துயிலின்றி யேத்துவாராய அடியார் தரையிற்கிடத்தலையே கொள்வர். துயிலற் பொருட்டுப் பிற கொள்ளார். பசுபதியே இரங்கு. மேல்வருவனவற்றிலும் இவ்வாறே கொள்க.

பண் :

பாடல் எண் : 2

உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த வுத்தமர்கள்
இடும்பைப் படாம லிரங்குகண் டாயிரு ளோடச் செந்தீ
அடும்பொத் தனைய வழன்மழு வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

இருள் ஓடுமாறு, அடுப்பம்பூவை ஒத்த நிறத்தினதாய்ச் செந்தீயை வெளிப்படுத்திக் கோபிக்கும் மழுப் படையை ஏந்தியவனே! நெருப்பைக் கக்கும் படமெடுத்தாடும் பாம்பை இடுப்பில் இறுகக் கட்டியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! பிறவிப் பிணியைப் போக்கி உன் திருவடிகளையே தம் தலைக்கண்வைத்த மேம்பட்டவர்களாகிய அடியவர்கள் துன்புறாத வகையில் அவர்களுக்கு இரங்கி அருளுவாயாக.

குறிப்புரை :

உடம்பைத் தொலைவித்து உன்பாதம் தலைவைத்த உத்தமர்கள்:- (தி.4 ப.112 பா.6.) உடம்பைத் தொலைவித்தலாவது பிறவியில்லாது செய்வித்துக் கொள்வது. (தி.8 திருவாசகம் 1:- 84 - 5. பா. 68; 87; 143; 145; 402; 493; 419; 437). இது பாச வீடு. பாதம் தலை வைத்தலாவது சிவப்பேறு. இவ்விரண்டும் இயைந்ததே வீடுபேறு. இப்பேறு உற்றோரினும் மேலானவர் யாருமிலர். அதனால் `உத்தமர்கள்` என்றார். சீவன் முத்தராயின், அவர்களது உடல் திருக்கோயிலும், அவர்கள் சிவமும் ஆதலின், உடம்பைத் தொலைவித்தமை அவர்களது அநுபவத்திற் புலனாகும். ஏனையோர் உணர்தல் அரிது. `ஓங்குடலம் திருக்கோயில் ... ... சிவன் சீவன்` `நடமாடக் கோயில்` `பராவு சிவர்` என்பவற்றின் பொருளறிவார் இதை அறிவார். இடும்பை - துன்பம். `இடும்பைக்கு இடும்பை படுப்பர்` (மூதுரை). அழல்மழு - தீ மழுப்படை. அதனொளியால் இருளோடும். `ஒத்து அனைய` என்று ஆளுதல் பலவிடத்தும் காணப்படும். அடும்பு, அடம்பு எனலும் உண்டு. (தி.12 பெரி. ஏயர்கோ. 100) `அடும்பு இவர் அணி எக்கர்` (கலித்தொகை. 132). செந்தீயழலும் மழு. `தீப்போலும் அடும்பு. அடும்புபோலும் அழல் மழு` எனல் குற்றம். அழலே உமிழும் படம். படம் பொத்தும் அரவு (-பாம்பு). அரவு - பாம்பாகிய கச்சு, அரவக்கச்சு, அரையாய் - இடையினனே. `பையரா வரையிலார்த்து` (தி.4 ப.58 பா.5). `பைவாயரவரையம்பலத்தெம்பரன்` (தி.8 திருக்கோவையார் 169).

பண் :

பாடல் எண் : 3

தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுட ரைங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

முன்னொருகாலத்தில் தேனை உடைய குளிர்ந்த பூக்களாகிய ஒளிவீசும் ஐந்து அம்புகளை உடைய மன்மதனை வெந்து விழுமாறு நெருப்பினை வெளிப்படுத்திய கண்ணுடையவனாய் எம்மை ஆளும் பசுபதியே! வறுமைத் துன்பம் நீங்காத அடியவர்களுக்கு ஏற்படும் தடுமாற்றமாகிய பெரிய அலைகளை உடைய கடலிலிருந்து அவர்களைக் கரையேற்றுவாயாக.

குறிப்புரை :

தரித்திரம் - வறுமை (வழக்கு). தவிரா - தங்காத. வேற்றிடத்தில் சென்று தங்காது நிலைபெற; நீங்காத என்றபடி. தடுமாற்றம். தட்டு மாறுதல்; சென்ற நெறியில் குறுக்கே தட்டுமானால், அதனின் மாறுதல் என்றும் உண்டு. அது நிலம் பொழுது கருத்து அறிவு முதலிய எவற்றினும் நிகழும். `எவர்கொல் பண்ணவர்கள் எவர் கொல் மண்ணவர்கள் எதுகொல் பொன்னுலகெனத் தட்டுமாறவும்` (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். 12) மூரித்திரைப் பௌவம் - பேரலைக்கடல். தடுமாற்றத்தைக் கடலென்றுருவகஞ் செய்தார். பௌவத்தை நீக்கு என்று வேண்டினார். அடியார்க்கு நீக்கு என்று ஆசிரியர் வேண்டும் இக் கொள்கை பொதுவாக மக்களுக்கும் சிறப்பாகப் பாவலர்கட்கும் தொன்றுதொட்டுளது. நூல்களில் வாழ்த்துப் பாடுதலும் இதனாலேதான். முன்னை நாள்:- சிவபிரான் யோகம் புரிந்திருந்த காலம். ஒருகால்:- பிரமவிட்டுணு முதலோர் ஏவியபோது. `கண்ணுதல் யோகிருப்பக் காமன் நின்றிட வேட்கைக்கு விண்ணுறு தேவராதி மெலிந்தமை ஓரார் எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித்து இமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்துயிர்க்குப் பேரின்பம் அளித்ததோரார்` (சிவஞானசித்தியார்) வேரி - தேன். தண்பூ - குளிர் மலர். பூங்கணை - மலரம்பு. சுடர்க்கணை - ஒளிரம்பு. ஐங்கணை - ஐந்தம்பு. கணைவேள் - அம்புடைய மன்மதன். வேள் - விரும்பப் பெறுமவன். இவன் கருவேள். முருகன் செவ்வேள். வெந்து விழப் பார்த்தகண். செந்தீப் பாரித்தகண். பாரித்தல் - பரப்புதல்; வெளிப்படுத்தல். `தம்பதி என்று உரை பாரித்தான்` (கோயிற் புராணம், திருவிழாச். 2), கண் - நெற்றிக்கண். உடையாய் - உடையானே; சுவாமியே எனலுமாம்.

பண் :

பாடல் எண் : 4

ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்ற மகல்விகண் டாயண்ட  மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

வானளாவிய பெரிய மலைபோன்ற யானை பிளிறுமாறு அதன் உடலைப் பிளந்து மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த பசுபதியே! வேறு எவரையும் பற்றுக்கோடாகக் கருதாமல் உன் திருவடிகளையே வழிபடும் அடியவர்களுடைய நீங்குதல் அரிய வினைத் தொகுதிகளைப் போக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

ஒருவரை - உன்னை அல்லாமல் வேறு ஒரு தெய்வத்தை. `உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன்` (திருவாரூர்த் திருத்தாண்டகம்) `உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது எங்கள் உத்தமனே` (தி.8 திருவாசகம் 6). `நின்மலா ஒர் நின்னலால் தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே` (தி.8 திருவாசகம். 82) தஞ்சம் - அடைக்கலம். தண் + து + அம் = தஞ்சம். வல் + து + அம் - வஞ்சம், தஞ்சம் என்று மற்றொருவரை எண்ணாது உன் பாதமே கதி என்று வழிபடுகின்றவர். இறைஞ்சுகின்றார்:- வினையாலணையும் பெயர். இறைஞ்சுகின்றாரது வினைச்சுற்றம். அருவினை - நீங்கலரிய வினை. சுற்றம் - சூழல்; கூட்டம். வினைச்சுற்றம் - வினைத் தொகையை. அகல்வி - அகலச்செய். `என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து எதிர்வது எப்போது பயில்விக் கயிலைப் பரம்பரனே` (தி.8 திருவாசகம். 138) `அண்டமே அணவும் பெருவரை` என்றது மலையுயர்ச்சியும் பருமையும் குறித்து. வரைக்குன்றம் - வரைகளையுடைய மலை. குன்றம்:- உவமையாகு பெயராய், யானையைக் குறித்தது. `வருங்குன்றம் ஒன்றுரித்தோன்` (தி.8 திருக்கோவையார்). பிளிறுதல்; பிளிறப்பிளத்தல். வேய் - மூங்கிலின் கணுவிரண்டன் இடைநின்ற அமை. `அமைத்தோள்`. `வேய்த் தோளி:- வேயுறு தோளி`. பிளந்து தோல் உரித்தாய். பரு அரை = பரிய அரை. `பராரை` என மரங்களினடியைக் கூறுதல்போல யானையின் பருத்த அடியைக் கூறினார். பருத்தவரை எனலுமாம்.

பண் :

பாடல் எண் : 5

இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்ட  மெண்டிசையும்
சுடர்த்திங்கள் சூடிச் சுழல்கங்கை யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.

பொழிப்புரை :

அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் ஒளி வீசுகின்ற சந்திரனைச் சூடிச் சுழலுகின்ற கங்கையோடு வண்டுகள் நெருங்கிப் பூக்களில் பரவுதலைக் கொண்ட செஞ்சடைப் பசுபதியே! இடையூறு ஏதும் இல்லாமல் தொடர்ச்சியாக உன் திருவடிகளை வழிபடுகின்ற அடியவர்களை வருத்தும் பிறவிப் பிணியைப் போக்குவாயாக.

குறிப்புரை :

இடுக்கு - இடைஞ்சல், முட்டுப்பாடு, இடுங்குதலுமாம். கண் இடுங்குதற்குற்ற வினைகள் தீமை விளைக்கும். அத்தீமையைக் கண்மேலேற்றி இடுங்குகண் (இடுக்கண்) என்பர். ஒன்றும் - சிறிதும். எஞ்சாமை - குறையாமல். `இறைஞ்சுகின்றார்`:- (தி. 4 ப.110 பா.4) அடர்க்கின்ற - வருத்துகின்ற. நோயை விலக்கு. அண்டம் பலவற்றிலும் எட்டுத் திசையிலும் சுடர் (ஒளிர்) தலையுடைய பிறைத்திங்களை அணிந்து, சுழலைக் கொண்ட கங்கையாற்றொடும் வண்டுகள் நெருங்கிப் படர்ச்சியைக் கொண்ட செஞ்சடை வானவனே, எம்மை ஆளும் பசுபதியே, இறைஞ்சுகின்றார்க்கு நோயை விலக்கு, சுரும்பு துன்றிப் படர்தல்; படர்தலைக் கொண்ட சடை எனலுமாம். `படர்சடைக் கொன்றை` (தி.4 ப.107 பா.7.) `படர் பொற்சடை` (தி.4 ப.104 பா.6)

பண் :

பாடல் எண் : 6

அடலைக் கடல்கழி வானின் னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் கொன்றைதிங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா  மணிகிடந்து
படரச் சுடர்மகு டாவெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

நறிய கொன்றை, பிறை, சாம்பல், பாம்பு, தலையில் சூடும் மணி இவை பரவி ஒளி வீசும் சடைமுடியை உடைய பசுபதியே! துயர்க்கடல் நீங்குவதற்காக நின் திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்த அடியவர்கள் வருத்தமுறாத வகையில் அவர்கள் துயரங்களைப் போக்குவாயாக.

குறிப்புரை :

அடலைக் கடல் - `துக்கசாகரம்`. `துயர்க்கடல்` `துன்பக்கடல்` (தி.4 ப.92 பா.6.) கழிவான் - நீங்க. நின் அடியினையே அடைந்தார்:- `ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்`. (1) `தன்னை அடைந்தார்` (4) `நின்னையே அறியும் அறிவறியேன்` (திருவாசகம்). நடலைப் படாமை:- (தி.4 ப.104 பா.6) பார்க்க. படாமை - படாதவாறு. விலக்கு. பசுபதியே நடலைப்படாமை விலக்கு. நின்னையே அடைந்த தொண்டர் படாமை விலக்கு. நறுங்கொன்றையும் திங்களும் சுடலைப் பொடிச் சுண்ணமும் மாசுணமும் சூளாமணியும் கிடந்து படரச் சுடர்கின்ற மகுடனே. `சுடலைப் பொடி பூசி` (தி.1 ப.1 பா.1). `பொடிச்சுண்ணம்` தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் ஆம். `சுண்ண வெண்சந்தனச் சாந்து` (தி.4 ப.2 பா.1). மாசுணம் - பாம்பு. மாசு உண்டல் ஆகிய காரணத்தாற் பெற்ற பெயர். தரையிற் புரண்டு மாசுண்டு நகரமாட்டாது கிடக்கும் பெரும் பாம்பு `மாசுணம்` எனப்படும். `மண்டெரிதான் வாய் மடுப்பினும் மாசுணம் கண்டுயில்- வபேரா பெருமூச்செறிந்து` (நீதிநெறி விளக்கம். 34). சூளாமணி - நாகரத்நம். `திங்கள்` என முன்னர்க் கூறப்பட்டதால், `சுடர்த் திங்கட் சூளாமணி` எனல் ஒவ்வாது. `மேல் இலங்கு சூழிட்டிருக்கும்நற் சூளாமணியும் சுடலை நீறும்` (தி.4 ப.111 பா.6). `மேல் இலங்கு சோதித்திருக்கும் நற் சூளாமணியும் சுடலை நீறும்` (தி.4 ப.111 பா.10)

பண் :

பாடல் எண் : 7

துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு  மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.

பொழிப்புரை :

மும்மதில்கள் உடையனவாய்த் தாம் தங்கும் இடங்களை அழித்தல் தொழிலைப் புரிந்து வானத்திலே உலவும், மந்திரத்தால் செல்லும் தேர்போலப் பறக்கும் ஆற்றலுடைய மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த பசுபதியே! உலகில் பற்றறுத்து நிற்றலாகிய தொழிலையே விரும்பிச் செய்து உன்னுடைய வண்டுகள் சூழ்ந்த திருவடிகளையே தொழும் அடியவர்களுடைய மறத்தலாகிய செயலைப் போக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் மறவித்தொழிலது மாற்று - துறத்தலாகிய தொழிலையே விரும்பிச் செய்து (பற்றற நின்று) நின் வண்டு சுற்றும் மலரடிகளையே வழிபடும் அடியாரது மறத்தற்றொழிலை மாற்றியருள்வாய். மதில் மூன்றுடைய புரம். மந்திரத் தேர்ப் பறவைப்புரம். அந்தரத்தே செல்லும் தேர். மந்திரத்தேர். அறவைத் தொழில் புரிந்து செல்லுந் தேர். அறவைத் தொழில் - பின்னர்த் தன்னைத் துணையிலியாக்குந் தீய தொழில். புரிந்து - செய்து. அந்தரத்தே - வானத்திலே. மந்திரம் - இரகசியம். மந்திரத்தால் செல்லும் தேர். பறவை - பறத்தல். பறவைப்புரம் - பறத்தலையுடைய முப்புரம். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்.
துறவி, மறவி, அறவை, பறவை என்றிரண்டீற்றுத் தொழிலாகு பெயர் பயிலுதலும் அறிக. துறவி மறவி பிறவி இறவி என்றும் துறவு மறவு பிறவு இறவு என்றும் ஈற்றால் வேற்று வடிவுறுதல் காண்க. `பெருந்தகை பிறவினொடிறவுமானான்` (தி.1 ப.110 பா.1).

பண் :

பாடல் எண் : 8

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 10

சித்தத் துருகிச் சிவனெம்பி ரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின் றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்க னிருபது தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

செருக்குற்ற இராவணனுடைய இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும், அவனுக்கு உன் திறத்துப் பக்தி ஏற்படுமாறு நசுக்கியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! மனம் உருகிச் சிவனே எம் தலைவன் என்று மனத்திலே உறுதியான எண்ணம் மிகவே அதனையே எப்பொழுதும் அடைவுகேடாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியவர்களுடைய பிறவிப் பிணியைப் போக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

சித்தத்து - சிந்தையில் உருகி - பிறவற்றையெண்ணுந் திறமெல்லாம் மறந்துருகி. சிவன் எம்பிரான் என்று; சிவபெருமான் எம்பரமன் என்று சிந்தனையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்றார். `பித்துப் பத்தர் இனத்தாய்ப் பரனுணர்வினால் உணரும் மெய்த்தவரை மேவா வினை` (சிவஞானபோதம் சூ. 12. வெ. 2) பித்துப் பெருகப் பிதற்றுதல்:- பித்தர்க்குப் பத்துக்கொண்டு பித்தரருட்பித்தே பெருகி வளர, முன்னை வினையினாலே மூர்த்தியை மறவாது நினைந்து பிதற்றுதல். (தி.4 ப.79 பா.4.) `பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்றுமின்கள்` (தி.4 ப.42 பா.10). `பேர்த்தினிப் பிறவாவண்ணம் பிதற்றுமின்` (தி.4 ப.41 பா.6) `மறுமையைக் கழிக்க வேண்டில், பெற்றதோரு பாயந் தன்னாற் பிரானையே பிதற்றுமின்கள்` (தி.4 ப.41 பா.10). பிணி - பிறவிப் பிணியும், பிறந்திருந்தெய்தும் பிணிகளும். இறவிப் பிணியும், மும்மலப் பிணியும் முதலிய எல்லாம். தீர்த்தருளாய் - போக்கி நின் திருவடி நீழலைத் தந்தருள்வாய். மத்தத்து மயக்கம்.

பண் :

பாடல் எண் : 1

விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட்
படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையு மாலைப் பிறையொதுங்கும்
சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

பகைவரோடு போரிடும் காளையை இவரும் பெரிய பாகனே ! அடியேன் வேண்டி உரைப்பது இது . கொடிய மழுவாள் ஆகிய படையும் , படைகளாய் வரிசைப் படுத்தப்பட்ட பெரிய பூதங்களும் , பாய்கின்ற புலியின் தோலாகிய ஆடையும் , உடைந்த தலைகளால் ஆகிய மாலையும் , மாலையில் தோன்றும் வளர்பிறை தங்கும் சடைமுடியும் தங்கியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிமையை விரும்பும் நெஞ்சம் ?

குறிப்புரை :

விடையும் விடைப்பெரும்பாகா :- விடைத்தல் - வேறு படுத்தல் , சீறுதல் , தாக்குதல் . மற்றை எல்லா விடைகளினும் வேறுபடும் விடையே சிவபெருமானுடையது ` உணர்வென்னும் ஊர்வதுடையாய் போற்றி ` ( தி .6 ப .57 பா .6) என்றதால் விடையை உணர்க . சீற்றமும் தாக்கும் காளை முதலியவற்றிற்கியல்பு . விடைப்பாகன் , பெரும் பாகன் . என் விண்ணப்பம் என்று இப்பதிக முழுதும் உள்ளது . விஞ்ஞாபனம் என்னும் வடசொல்லின்றிரிபென்பர் . வெம் மழுவாள் படையும் - வெய்ய மழுவாளாகிய படையும் . படையாய் நிரைத்த பல் பூதமும் - தானையாக வரிசைப்படுத்திய பல பூத கணங்களும் , பாய் புலித்தோல் உடையும் , உடைதலை மாலையும் , மாலைப் பிறை ஒதுங்கியிருக்கின்ற சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சம் ? ` பாய்புலித் தோல் ` ( தி .4 ப .81 பா .7) ` உடைதலை ` ( தி .4 ப .107 பா .6). என் தனி நெஞ்சமானது மழுவாட்படை முதலிய ஐந்தும் குடிகொண்டிருக்கும் சரக்கறையோ என்று விண்ணப்பம் செய்துகொண்டார் இதில் . சரக்கு - பொருள் . சரக்கறை - கருவூலம் . உடைதலை - உடைந்த தலை . வினைத்தொகை . முடை ( நாற்றம் ) எனல் பொருந்தாது ; முடைத்தலை என்று பாடம் இல்லாமையால் .

பண் :

பாடல் எண் : 2

விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்ப மேலிலங்கு
சங்கக் கலனுஞ் சரிகோ வணமுந் தமருகமும்
அந்திப் பிறையு மனல்வா யரவும் விரவியெல்லாம்
சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

உயரத்தில் மேம்பட்ட பெரிய பக்க மலைகளை உடைய கயிலை மலையானே ! காதுகளில் விளங்கும் சங்கினாலாகிய காதணியும் , வளைவாக உடுக்கப்பட்ட கோவணமும் , உடுக்கையும் , அந்தியில் தோன்றும் வளர்பிறையும் , விடத்தை உடைய வாயதாகிய பாம்பும் ஆகிய எல்லாம் கலந்து கூடியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வெற்பா , கலனும் , கோவணமும் , தமருகமும் , பிறையும் . அரவும் விரவிச் சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சம் ? விஞ்சத்தடவரை வெற்பா - விந்தியம் என்னும் அகன்ற பக்கமலைகளையுடைய கயிலை மலைவாணா . வரை - பக்கமலை ; மூங்கிலுமாம் . ` வெற்பிற் கற்பாவிய வரை `. ` வெற்பிற் கற்பரந்த தாள் வரை ` ( தி .8 திருக்கோவையார் 8 உரை ) சங்கக்கலன் - சங்கக் குழை ; ` கலன் ` என்பது பொதுமை நீங்கி ஈண்டுக் குழைக்குச் சிறந்து நின்றது . சரிகோவணம் - சரிந்த கோவணம் . குபிநம் - அழுக்கு . கௌபீ நம் அதன் திரிபு இது என்பர் . கோவணம் வெண்ணிறத்த தாயிருத்தல் வேண்டும் . நிறங்களுள் தலைமை வெண்மைக்கே உரித்து . அதனால் , ` கோவணம் ` என்று பெயரிட்டனர் எனலுமுண்டு . ` கீளார் கோவணம் ` தமருகம் - உடுக்கு . ` டமருகம் ` என்றதன் திரிபு . அந்திப் பிறை ( பதிகம் 85 பார்க்க ; தி .4 ப .111 பா . 5, 9, 10.) அனல் - நச்சுத் தீ . அனல் வாய் - நச்சுவாய் . அரவு - பாம்பு . விரவி - கலந்து . சந்தித்து - பொருந்தி , என் தனி நெஞ்சம் சரக்கறையோ ?

பண் :

பாடல் எண் : 3

வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்ப மேலிலங்கு
சாந்தாய வெந்த தவளவெண் ணீறுந் தகுணிச்சமும்
பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா னதள்புலித்தோல்
தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

இறந்தவர் தலையைப் பிச்சை எடுக்கும் பாத்திரமாக ஏந்தி இருப்பவனே ! திருமேனியில் விளங்கும் சந்தனம் போன்ற வெள்ளிய திருநீறும் , தகுணிச்சம் என்ற இசைக்கருவியும் , பூத்த தாமரை போன்ற திருமேனியில் அணிந்துள்ள புள்ளிகளை உடைய மான்தோலும் புலித்தோலும் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வீந்தார் - அழிந்தார் ; நூறுகோடி பிரமர்களும் , ஆறு கோடி நாராயணரும் , ஈறிலிந்திரரும் வீய வீயாதவன் ( ஈறிலாதவன் ) ஈசன் ஒருவனே எனல் பின்னர் ஐந்தாவது திருமுறை முடிவிலே காண்க . வீந்தார் `( உலந்தார் ) தலை `:- ( தி .5 ப .53 பா .12, தி .6 ப .20 பா .5) தலைகலன் - தலையாகிய கலன் . கலனை ஏந்தீ என அழைத்தார் . சாந்து ஆய வெந்த நீறு . வெண்ணீறு . தவளம் என்பது வெண்மை எனப் பொருள்தரும் வடசொல் . தவளம் வெளிய நிறத்தைக் குறித்து நிற்றலால் ` வெண்ணீறு ` என்பது பெயரளவாய் நின்றது . ` தவளப் பொடி `. ( தி . 4 ப .112 பா .5) ` வெண்குன்றம் ` ( வந்தவாசிப் பக்கத்தில் உள்ளது ) என்னும் தமிழ்ப்பெயரைத் ` தவளகிரி ` என்று வடசொல்லாற் குறிப்பர் . தகுணிச்சம் :- அகப்புறமுழவுள் ஒன்று . ` தத்தசம்பாரம் தகுணிச்சம் ` என்றது கூற்று . முழவன்று . தகுணிச்சம் விரலேறுபாகம் ... ... பெரும் பறை எனத் தோலாற் செய்யப்பட்ட கருவிகள் ` என்றதே ஈண்டுக் கொள்ளத்தக்கது . ( சிலப்பதிகாரவுரை . அரங்கேற்றுகாதை 13. 27 பார்க்க ). ` சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம் வீணை ` என ( தி .11 திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் . 9) வருதலும் அறிக . பூந்தாமரை மேனி :- ` செந்தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே ` ( தி .8 திருவாசகம் . 30) ` அலங்கலந் தாமரை மேனியப்பா ` ( தி .8 திருவாசகம் . 133) ` சிவபெருமானே செங்கமல மலர்போல் ஆர் உருவாய என் ஆரமுதே ` ( தி .8 திருவாசகம் . 599).

பண் :

பாடல் எண் : 4

வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்ப மேலிலங்கு
வஞ்சமா வந்த வருபுனற் கங்கையும் வான்மதியும்
நஞ்சமா நாக நகுசிர மாலை நகுவெண்டலை
தஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

கொடிய போரிட வந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தவனே ! தலையிலே விளங்குகின்ற வஞ்சனையாக வந்த நீரை உடைய கங்கையும் , வானில் உலவும் பிறையும் , விடத்தை உடைய பெரிய பாம்பும் , சிரிக்கின்ற தலைகளால் ஆகிய மாலையும் , பிச்சை எடுக்க உதவும் மண்டையோடும் வாழும் கரு வூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வெஞ்சமர் - கடும்போர் , போர் வேழம் . வேழத் துரியாய் - களிற்றுத் தோலையுடையவனே . வஞ்சம் ஆ வந்த கங்கை . வல் + து + அம் = வஞ்சம் - வலியுடையது . ஆ - ஆக . வந்த கங்கை . வருபுனல் - வளரும் வெள்ளம் . ` வந்த ` என்றது கங்கைக்கும் ` வரு ` என்றது புனலுக்கும் கொள்க . இன்றேல் , ` வந்த ` ` வரு ` என நின்று வழுவாம் . வான்மதி - ` வானூர் மதியம் ` வால்மதி (- வெண்பிறை ) எனலுமாம் . நஞ்சம் - நஞ்சு ( விடம் ) மாநாகம் - பெரிய பாம்பு . நகு சிரம் மாலை ... ... தலை - நக்கதலை மாலையும் நகுதலையும் . நகுதல் - சிரித்தல் , விளங்குதல் . ` பல்லார் தலை ` ( தி .6 ப .90 பா .7) ` பல்லார்ந்த வெண்டலை ` ( தி .6 ப .48 பா .9). ` பல்லாடுதலை சடைமேலுடையான் ` ( தி .6 ப .93 பா .2). தஞ்சம் - பற்றுக்கோடு . இது சொற்பொருளன்று . ( தண் + து + அம் -) தஞ்சம் அடைந்தவர்பால் தண்மையாகப் பேசுதல் வேண்டும் எனல் வழக்கு வரும்புனல் என்றிருந்ததோ ?

பண் :

பாடல் எண் : 5

வேலைக் கடனஞ்ச முண்டாயென் விண்ணப்ப மேலிலங்கு
காலற்க டந்தா னிடங்கயி லாயமுங் காமர்கொன்றை
மாலைப் பிறையு மணிவா யரவும் விரவியெல்லாம்
சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

கரையை உடைய பாற்கடலினின்றும் தோன்றிய விடத்தை அருந்தியவனே ! கூற்றுவனை அழித்த உன்னுடைய கயிலாய மலையும் , தலைமேலே விளங்கும் விருப்பம் மருவிய கொன்றை மாலையும் அதனோடு தோன்றும் பிறையும் , அழகிய வாயை உடைய பாம்பும் எல்லாம் பெரிதும் கலந்து கிடக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வேலை - கடற்கரை . கடல் - பாற்கடல் . நஞ்சம் உண்டாய் - ஆலாலமுண்டவனே ; நஞ்சுண்டவனே . காலற் கடந்தான் - காலனை வென்றவன் . ` உண்டாய் ` என்னும் முன்னிலையும் ` கடந்தான் ` என்னும் படர்க்கையும் மயங்குமா றின்றிப் பொருள் செய்துகொள்க . கடந்த நின் இடம் எனக்கொள்ளலாம் . கயிலாயமும் கொன்றையும் மாலைப் பிறையும் மணிவாய் அரவும் கலந்து எல்லாம் அமையக் கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சம் ? காமர் - விருப்பம் மருவிய ; அழகிய எனலும் உண்டு . மாலைப்பிறை :- ` அந்திப் பிறை ` ( தி .4 ப .111 பா .2). மணி - மாணிக்கம் . அனல்வாய் அரவு ` ( தி .4 ப .111 பா .2). விரவி - கலந்து . சால - அமைய . கிடத்தலின் மிகையாகக் கொள்ளலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்ப மேலிலங்கு
சூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்
ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென் பாமையோடும்
தாழிட் டிருக்கும் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

விரும்பப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே ! தலையில் விளங்கும் ஒளி சூழ்ந்த சூளாமணி என்னும் தலைக்கு அணியும் மணி ஆபரணமும் , சுடுகாட்டுச் சாம்பலும் , எழு கோவையாக அமைக்கப்பட்ட சிறந்த அக்கு மணிமாலையும் , பாம்பும் , எலும்பும் , ஆமையோடும் சேர்த்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

வீழிட்ட - திரண்ட . விரும்பப்பட்ட எனலுமாம் . கொன்றைக்காய்களும் கொன்றைப் பூங்கொத்துக்களும் வீழிட்டிருக்குந் தோற்றங் குறித்ததுமாம் . தார் - மாலை . கண்ணி , தார் , மாலை என்னும் வேறுபாடு குறித்ததன்று . சூழ் இட்டு - சூழ்தலைச் செய்து . ஏழ் இட்டு இருக்கும் நல்அக்கும் - எழுகோவையாகச் செய்த நல்லக்குமணி வடமும் . 188. பார்க்க . அரவு - பாம்பு . என்பு - எலும்பு . ஆமையோடு , ` ஆமையோடும் ` என்பதில் , ` ஒடு ` என்பதன் நீட்டலுமாம் . ` ஓடு ` எனின் ` சூளாமணியும் சுடலை நீறும் ` தொழுது பாதம் ( தி .4 ப .111 பா .7) என்புழிப் போலவும் ஓசை கெடும் . சூளாமணியும் சுடலை நீறும் ( தி .4 ப .111 பா .7) நல்அக்கும் அரவும் என்பும் ஆமையோடும் தாழ்இட்டு இருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே ? தாழிடுதல் - உள் வைத்துத் திறக்கவொட்டாது தாழக்கோலிட்டுச் செறித்தல் .

பண் :

பாடல் எண் : 7

விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்ப மேலிலங்கு
தொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந் தொழுதுபாதம்
கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங் காமர்கொன்றைத்
தண்டா ரிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

பகைவருடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே ! உன் மேல் விளங்கும் விருப்பம் மருவிய கொன்றையாகிய குளிர்ந்த மாலையும் , தொண்டு செய்யும் அடியவர்களுடைய பாத தூளியும் , தொழுது உன் திருவடியைத் தியானிப்பவர்கள் தரிசித்துக் கொண்டிருக்கும் கயிலாய மலையும் பொருந்தியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

விண்டார் - பகைவர் ; நீங்கினார் . வினையாலணையும் பெயர் . ` வீந்தார் ` ( தி .4 ப .111 பா .3) என்பதுபோல . 3 புரமும் :- முப் புரத்தையும் . எய்தாய் - அம்பெய்து அழித்தவனே . தொண்டு ஆடிய - தொண்டில் முழுகிய ; தொண்டர்கள் முழுகிய , தொண்டு தொண்டர்களுடைய . அடி - திருவடி . அடிப்பொடி - திருவடித்துகள் . தொண்டு - பழமை ; அடிமை . பழமையாகச் சொல்லப்பெற்ற தொண்டர் . தொண்டர்க்குத் தொண்டர் என்றலுமாம் . தொண்டு அடிப்பொடி - தொண்டரடிப்பொடி . அடியார்க்கடியர் அடிப்பொடி நீறு . திருவடி நீறு . தொண்டர்க்குத் தொண்டர் அணியும் நின் திருவடிப் பொடிநீறு ; தொண்டு - ஒன்பது . நவதாண்டவத்துக்கு எண்ணாகு பெயராய்க் கொண்டு , நவதாண்டவம் ஆடிய பழமையான திருவடியின் பொடிநீறு எனல் பொருந்துமேற்கொள்க . தொழுது பதம் கண்டார்கள் - அடியார் பாதங்களைத் தொழுது பரனருளைக் கண்டவர்கள் . பாதங்களைக் கண்டு தொழுதவர்கள் எனலுமாம் . பதம் என்று கொள்வதே நன்று . கண்டவர்கள் கண்டுகொண்டேயிருக்கும் கயிலாயம் . காமர் - விருப்பம் மருவிய . கொன்றைத்தார் ; தண்தார் . தண்ணிய ( குளிர்ந்த ) கொன்றைமாலை . அடிப்பொடி நீறும் கயிலாயமும் கொன்றைத் தாரும் இருக்கும் சரக்கறையோ என் நெஞ்சம் ?

பண் :

பாடல் எண் : 8

விடுபட்டி யேறுகந் தேறீயென் விண்ணப்ப மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழறாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியு மத்தமும் வாளரவும்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

அடக்கமின்றி வேண்டியவாறு திரியுமாறு விடப் பட்ட பட்டிக்காளையை விரும்பி வாகனமாகக் கொள்பவனே ! கொடு கொட்டி , கொக்கரை , தக்கை , குழல் , தாளம் , வீணை , மொந்தை என்ற இசைக்கருவிகளும் , உன் திருமேனியில் விளங்கும் கொன்றை வன்னி ஊமத்தம்பூ , பாம்பு என்பனவும் குணலைக் கூத்தாடும் கருவூலமோ அடியேன் தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .

குறிப்புரை :

` விடு ` என்பது ` விடை ` என்றதன் முதனிலை . பட்டி - தொழுவம் ; களவு விடுபட்டி யேறு - கடவுட்கு என்று விட்ட பட்டி மாடு . நாட்டில் இன்றும் கடவுட்குரியதாய் மாடுவிடுதல் உண்டு . ` பலி யெருது ` என்பது அதனையே . ஏறு உகந்து ஏறி - ஏற்றினை விரும்பி ஏறுவோனே , ` கொடுகொட்டில் ` ` கொடிதாகிய கொட்டி என்னுங் கூத்து ` ` கொடுங்கொட்டி , கொடுகொட்டி என விகாரம் ஆயிற்று , கொடுங்கொட்டி என்றார் எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுதலின் ` கொட்டியாடற்கேற்ற மொட்டிய , உமையவள் ஒருபாலாக ஒருபால் இமையாநாட்டத்து இறைவன் ஆகி , அமையா உட்கும் வியப்பும் விழைவும் , பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க , அவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம் , பொலிய ஆடினன் என்ப மற்றதன் , விருத்தம் காத்தற் பொருளொடு கூடிப் , பொருத்த வரூஉம் பொருந்திய பாடல் திருத்தகு மரபிற் தெய்வத் துதிப்பே . ` இதனான் உணர்க ` என்று கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பகுதியான ` கொடு கொட்டி ஆடுங்கால் தருவளோ ` என்றதற்கு எழுதிய நச்சினார்க்கினியர் உரையைக் காண்க . கொக்கரை - ( தி .4 ப .111 பா .9). சங்கு - வலம்புரிச் சங்கு . ( தி .4 ப .111 பா .3) குறிப்பிற்காண்க . தடுகுட்டம் ? கொடுகொட்டிக் கூத்தும் , கொக்கரையும் , தக்கையும் , குழலும் , தாளமும் , வீணையும் , மொந்தையும் , கொன்றையும் , வன்னியும் , மத்தமும் , அரவும் ஆடும் சரக்கறையோ நெஞ்சம் ?

பண் :

பாடல் எண் : 9

வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்ப மேலிலங்கு
கண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடம்
குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படை
தண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

வெள்ளிய அலைகளை உடைய கங்கையைச் சடையில் ஏந்திய வேறுபட்டவனே ! மார்பின் மேல் விளங்கும் கண்டிகையைக் கழுத்தில் பூண்டு , அரை நாண் கயிற்றின்மீது தலைகளை இணைத்த தலைமாலையை அணிந்து , நீர்ப்பாத்திரம் , கொக்கரை என்ற இசைக்கருவி , வளைந்த பிறை , குட்டையான வடிவத்தை உடைய பூதப்படை இவற்றைப் பெருமானாகிய நீ சேகரித்து வைத்துள்ள சரக்கறையோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன் .

குறிப்புரை :

வெள்திரை கங்கை - வெள்ளலைகளையுடைய கங்கை யாற்றைச் சடையிலடக்கிக் கொண்ட விகிர்தனே ; வேறுபாடு உடையவன் யாரும் விரும்பாதவற்றை மேற்கோடல் , சுடுகாட்டிலாடல் , முதலியவை வேறுபாடுகள் . ` கண்டிகைபூண்டு `:- ` கண்டியிற்பட்ட கழுத்துடையீர் `. ( தி .4 ப .95 பா .6) ` முத்து வடக்கண்டிகையும் `. கடி சூத்திரம் - அரைநாண்கடி - அரை . சூத்திரம் - கயிறு . ` கடிசூத்திரப்பிருது ` என்று விநாயகர் சகத்திர நாமத்துள் ஒன்றுண்டு . கபாலவடம் :- ` விலையில் கபாலக்கலனும் ... உடையார் ` ( தி .4 ப .2 பா .7), குண்டிகை - கமண்டலம் . கொக் கரை - வலம்புரிச்சங்கு , ஒரு வாச்சியம் எனலும் உண்டு . ( தி .4 ப .111 பா .8.) கோணற்பிறை :- அந்திப்பிறை , மாலைப்பிறை , பாதிப்பிறை . ( தி :-4 ப .111 பா .2, 5, 10.) குறட்பூதப்படை - குறளுருவுடைய பூதங்களின் தொகுதி . ` குறளர் சிந்தர் நெடியர் ` என மக்களது வடிவின் வேறு பாடறிக . இம்மூன்றும் திருமாலைக் குறித்து வழங்குதலாலும் அறியப்படும் . பெருங்கதையில் குறளர்க்கு ஆமையை உவமித்துளது . தண்டி - சேகரித்து . தண்டல் - சேகரிப்பு . ( சிவரகசியம் . பாசமோசந . 3).

பண் :

பாடல் எண் : 10

வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்ப மேலிலங்கு
சோதித் திருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்
பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய்புலித்தோல்
சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

பகைவர் உடலைப் பிளக்கும் வெள்ளிய மழுப் படையை ஆள்பவனே ! தலைமேல் விளங்கும் ஒளியுடைய சூளா மணியும் , சுடுகாட்டுச் சாம்பலும் , சிறுபிறையும் , துண்டமான மண்டை யோடும் , பாயும் புலித்தோலும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சரக்கறை அன்றோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன் .

குறிப்புரை :

வேதித்த - பேதித்த . வெம்மழு ஆளீ - வெய்ய மழுவை ஆள்பவனே . கோத்து - ஒளிசெய்து . சோதித்தல் :- சோதனை என்னும் வடசொல்லடியாகத் தோற்றுந் தொழிற் பெயர் . சோதித்து - வினை யெச்சம் . சூளாமணி ஒளிசெய்திருக்கும் . சூளாமணியும் , சுடலை நீறும் , பாதிப்பிறையும் , படுதலைத் துண்டமும் பாய் புலித்தோலும் சாதித்திருக்கும் சரக்கறையோ என்நெஞ்சம் ? ` சுடர்த்திங்கட் சூளாமணி ` ( தி .4 ப .2 பா .1) என்றதால் , திங்களே சூளாமணி எனத்தோன்றும் ஆண்டுத் திங்களும் சூளாமணியும் எனக்கொண்டுரைத்தாம் . ஈண்டும் அவ்வாறே கொள்ளல் சிறந்தது . ` மேல் இலங்கு சூழிட்டிருக்கும் நற்சூளாமணியும் சுடலை நீறும் ` ( தி .4 ப .111 பா .6) என்றும் ` நறுங்கொன்றை சுடலைப் பொடிச் சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து படரச்சுடர் மகுடா ` என்றும் முன் உள்ளன . பின்னதில் திங்கள் வேறு சூளாமணி வேறு என்றதறிக .

பண் :

பாடல் எண் : 11

விவந்தா டியகழ லெந்தாயென் விண்ணப்ப மேலிலங்கு
தவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை தாழ்புலித்தோல்
சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை சூடிநின்று
தவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.

பொழிப்புரை :

மற்றவர்களோடு மாறுபட்டு வந்து ஆடிய திருவடிகளை உடைய எம் தலைவனே ! முற்பிறவிகளில் செய்து விளங்கிய தவத்தானாகிய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட அவனுடைய பத்துத் தலைகளையும் சிதைத்தாய் . முழந்தாளவு தாழ்ந்த புலியின்தோலும் செம்மேனியில் பூசப்பட்ட வெண் திருநீறும் , தலைமாலையும் சூடிக் கொண்டு நீ தவ நிலையில் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிநெஞ்சம் என்பதனை விண்ணப்பம் செய்கிறேன் .

குறிப்புரை :

விவந்து - மாறுபாடு வந்து . வி - மாறுபாடு . விவர்த்தம் - திரும்பி வருதல் . ` விவந்து ` என்பது அதனுடைய திரிபாய வினை யெச்சமென்று கொண்டு , பெயர்ந்து என்று பொருளுரைத்தலுமாம் . ( காளியுடன் மாறுபாடு வந்தாடியது ). கழல் - வலக்காலிலணியும் வீரகண்டை . மேல் இலங்கு தவந்தான் - முற்பிறவிகளிற் செய்து விளங்கிய தவத்தையுடையவனாகிய இராவணன் தான் ; தவம் என்பது பெருந்தவம்புரிந்த இராவணனைக் குறித்ததாகக் கொள்ளலாம் . மேல் இலங்கும் தவம் கயிலையை உணர்த்தியதாகக் கொண்டு எடுத்தலுக்குச் செயப்படு பொருளாக்கலாம் . இறுத்தனை - இறச்செய்தனை இற்றன தலைகள் . இறுத்தது சிவபிரானது திருக்காற் பெருவிரல் நுனி . ` தாழ்புலித்தோல் ` - ` பாய்புலித்தோல் `. சிவந்து ஆடிய - ஆடிச் சிவந்த . ` ஆடியபொடிநீறு ` ` தொண்டாடிய தொண்டடிப்பொடிநீறு ` ( தி .4 ப .111 பா .7). ` சுடலைப் பொடிச் சுண்ணம் ` ( தி .4 ப .110 பா .6). சிரமாலை :- ` நகுசிரமாலை நகுவெண்டலை ! ( தி .4 ப .111 பா .4). புலித்தோலும் நீறும் சிரமாலையும் சூடி நின்று தவம் இருக்கும் சரக்கறையோ நெஞ்சம் ? ` படுதலைத்துண்டம் `:- படுதலையேந்துகையா ` ( தி .4 ப .113 பா .7).

பண் :

பாடல் எண் : 1

வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே.

பொழிப்புரை :

வெண்ணிறத்தினை உடைய சங்கின் துண்டு போன்ற வெண்ணிறமான மண்டையோட்டை ஏந்தியவனாய் , வெள்ளியை முறுக்கினாற் போன்ற வெள்ளிய பூணூலை அணிந்தவனாய் , விரிந்த சடையின்மேல் வெள்ளித்தகடு போன்ற வெண் பிறையைச் சூடியவனாய் , வெள்ளிய எலும்புகளை அணிந்து பவளம் போன்ற உடலில் வெண்ணிறநீற்றைப் பூசிய வேதியன் சிவபெருமான் ஆவான் .

குறிப்புரை :

வெள்ளி - வெண்ணிறத்தையுடையதாகிய , குழை - சங்கினது , துணிபோலும் - துண்டுபோலும் . கபாலத்தன் - கபாலக் கலனைக் கையிலேந்தியவன் . கபாலத்துக்குச் சங்கின் துணி உவமம் . குழை - காது ; ` ஊசலுற்றவர் குழைக்குடைந்திடுதலால் ` ( கந்தபுராணம் திருநாட்டுப் . 44) குண்டலம் எனினும் பொருந்தும் , கபாலத்துக் குவம மாவன யாவும் பொருந்தும் ஆயினும் , அவை ` குழை ` என்பதற்குப் பொருளாதல் வேண்டும் . வெள்ளிப்புரி ; வெள்ளிக்கம்பி ; வெண்புரி நூல் - பூணுநூல் ; முப்புரிநூல் . வெள்ளித்தகடு போன்ற வெண்பிறை . என்பு - எலும்பு . வெள்ளிப்பொடி - திருவெண்ணீறு . கபாலம் , புரிநூல் , பிறை , என்பு , பூச்சு எல்லாம் வெண்ணிறத்தன . கபாலத்துக்குச் சங்கக் குழைத்துண்டமும் , புரிநூற்கு வெள்ளிப்புரியும் , வெண்பிறைக்கு வெள்ளித் தகடும் உவமம் . ` வெண்பிறை `:- ` வெண்டிங்கள் `:- ` செஞ் ஞாயிறு ` போல , இயைபின்மை நீக்கிய அடை கொண்டது . ` வெள்ளிப் பொடிப் பவளப் புறம் :- ` பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு ` ( தி .4 ப .81 பா .4.). ` பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறு ` ( தி .4 ப .81 பா .9.) பவளத்தடவரை போலுந் திண்டோள்கள் ( தி .4 ப .113 பா .1.) ` முழுத்தழல் மேனித்தவளப் பொடியன் ` ( தி .4 ப .112 பா .4.)

பண் :

பாடல் எண் : 2

உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கட் டுணிநெஞ்சமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பொன் போல ஒளிவீசும் செந்நிற முடைய பரவிய சடையில் கடல் போன்ற அலைகளை உடைய கங்கையையும் குளிர்ந்த பிறையையும் வைத்த , சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய தெய்வத்தின் அடிமை செய்தற்கண் துணிவுடையை ஆவாய் . அவ்வாறு செய்தால் பிண்டமாகிய உடலைத் துறந்து , ஏழுலக மான அண்டத்தைக் கடந்து அழியாத பிறவித்துன்பக் கடலைக் கடந்து நாம் பிழைத்துப் பாசநீக்கம் பெற்று அப்பெருமானுடைய வீட்டுலகை அடையலாம் .

குறிப்புரை :

உடலைத் துறந்து , உலகு ஏழும் கடந்து , உலவாத துன்பக் கடலைக் கடந்து , உய்யப் போயிடல் ஆகும் :- உடலைத் துறத்தல் - பிண்டத்தைக் கடத்தல் . ( தி :-4 ப .110 பா .1, ப .113 பா .7) உலகு ஏழும் கடத்தல் - அண்டத்தைக் கடத்தல் , உலவாத துன்பம் - அழியாத பிறவித்துன்பம் . பொதுவாக மும்மலச் சார்பும் சிறப்பாக ஆணவமலப் பிணியும் பற்றிய துன்பம் . அத்துன்பக்கடலைக் கடத்தல் . உய்யப் போயிடல் :- அவற்றைக் கடத்தலாகிய பாசநீக்கம் உயிர்க்குள தாகப் பெறுதல் . கனகம் - ஆடகப்பொன் . வண்ணம் - நிறம் ; அழகுமாம் . படலை - திரட்சி . ` பொன்னளவார்சடை ` ( தி .4 ப .105 பா .4.) சடையிற் கங்கையையும் பிறையையும் சுடலைப் பொடியையும் உடைய கடவுள் . சடைமேல் திருவெண்ணீறு வைத்தல் இன்றும் சைவத் திருமடாலயங்களில் , சீலத்திரு குருமகா சந்நிதானம் இளைய சந்நிதானங்களுக்கும் தம்பிரான்களுக்கும் உள்ள அருளொழுக்கம் ஆகும் . அருச்சுனன் தவம் புரிந்தபோது திருநீற்றைச் சடைப்புறத்தே வைத்திருந்த உண்மையை , ` ஆசினான் மறைப்படியும் எண்ணில் கோடி ஆகமத்தின் படியும் எழுத்தைந்துங் கூறிப் பூசினான் வடிவ மெலாம் விபூதியாலப் பூதியினைப் புரிந்த சடைப் புறத்தே சேர்த்தான் ` ( வில்லிபாரதம் . அருச்சுனன் தவநிலைச் . 37)

பண் :

பாடல் எண் : 3

முன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்
கன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே.

பொழிப்புரை :

தீவண்ணனே ! உன் முன்னிலையில் யான் ஏதாவது கூறினால் அது உபசாரவார்த்தை போலக் காணப்படும் . இம் மூவுலகுக்கும் தாயும் தந்தையும் ஆயவன் நீ அல்லையோ ? உன்னைத் தியானித்துக் கொண்டே என் உயிர் நீங்கும் . என் உயிர் இவ்வுடலை நீங்கியபின் என்னை நீ மறக்கக் கூடாது என்பதனையே யான் உன்னை வேண்டுகிறேன் .

குறிப்புரை :

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் அழல்வணா ! இம்மூவுலகுக்கு ( ம் ) அன்னையும் அத்தனும் ஆவாய் நீ அலையோ ? முன் நின்று சொன்னால் உபசாரவார்த்தையைப் போலத் தோன்றும் . தோன்றினும் அது சத்திய வார்த்தையே அன்றி உபசார வார்த்தை அன்று . நெருப்புருவனே , இந்த மூன்றுலகங்கட்கும் தாயும் தந்தையும் ஆவாய் நீ அல்லையோ ? உன்னை அல்லாது வேறு அம்மையும் அப்பனும் எவ்வுலகங்கட்கும் உண்டோ ? இல்லையே ! இன்மையால் , இவ்வுரைமுகமனுரை ஆகுமோ ! ஆகாது . இது வாய்மை யுரையே . என் உடலினின்று , யான் இறக்குங் காலத்தில் , உன்னை நினைந்து கொண்டே இறப்பேன் . இறந்தால் என்னை மறத்தலைப் பெறாய் . ` கழிந்ததற்பின் `:- ` கற்றபின் நிற்க அதற்குத் தக ` என்பது போல்வது . எம்பிரானாகிய உன்னை நான் வேண்டிக்கொண்டவரம் இதுவே ( என்னை மறத்தலைப் பெறாமையே ). மறக்கப் பெறாமை - மறக்கப் பெறுதலைச் செய்யாமை , மறவாமை என்றபடி . யான் உன்னை நினைந்தே கழிதலால் , அவ்வாறு என்னை நீ நினைக்கச் செய்தலும் , அத்திறத்தில் என்னை நீ மறவாதிருத்தலும் உடனமைந்து கிடந்தன என்றவாறு . ` நினையா என் நெஞ்சை நினைவித்தான் ` ( தி .6 ப .43 பா .1)

பண் :

பாடல் எண் : 4

நின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்
பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே.

பொழிப்புரை :

இறையவனே ! உன்னை எப்போதும் நினைத்திருக்குமாறு செய்ய நீ இசைகின்றாய் அல்லை . உன்னை உறுதியாகத் தியானிக்கப் புகுந்தால் அப்போதே அதனை மறக்கச் செய்து வேறொரு பொருளில் அடியேனுடைய மனம் ஈடுபடுமாறு செய்கின்றாய் . உன்னை எப்போதும் மறந்தவனாயினும் உனக்கு இனியனாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியேனை ஒத்தவர் வேறு எவரேனும் இவ்வுலகில் உள்ளனரோ என்பதனைச் சொல்லுவாயாக .

குறிப்புரை :

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் - நினையா என் நெஞ்சை நினைவித்தாலும் காலை , மாலை , நண்பகல் , நள்ளிரவு எனச் சிலபொழுதுதாம் நினைவித்தருள்கின்றாய் . அந் நினைதற் பயிற்சியால் எப்போதும் நினையும் ஆராவேட்கை அடியேற்குளதாயிற்று . ஆயினும் அவ்வாறே எப்போதும் நினையும் ஆற்றலை அருள் செய்திலாய் . விட்டுவிட்டு நினையும் அஃதன்றி எண்ணெ யொழுக்கை ( தைலதாரையை ) ப் போன்று தொடர்ச்சியாக நினையும் ஆற்றலைத் தந்தருள்கின்றிலை . நினையலை ஒட்டாய் . ( எதிர்மறை வினை ). ` துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே ` நினையும் ஆற்றலெய்தி எப்போதும் நினையும் அளவு என்னுடன் ஒட்டி வாழ்தி என்றவாறு . ஒட்டாமை என்பது ஈண்டுணர்த்தும் பொருளை ஓர்ந்துணர்க . ` உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி ` ` ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை கட்டிநின்ற கழிந்தவை போயறத் தொட்டு நின்றும் அச் சோற்றுத் துறையர்க்கே பட்டியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே `, ` நினையலொட்டாய் ` நினையலொட்டும் என்னும் இரண்டு நிலையிலும் வைத்து அதன் பொருளை நினைக . எப்போதும் நினையவொட்டாய் - எப்பொழுதிலும் ( ஒருவேளையிலும் ) உன்னை நினைதல் எனக்கு ஒட்டுமாறு செய்யாய் . ஒரு வேளை கூட உன்னை நினைக்கச் செய்திலாய் என்றலும் பின்னுள்ள பகுதிக்குப் பொருந்தும் . நீ நினையலொட்டாய் . நினையல் அடியார் ( அப்பர் ) வினை . ஒட்டாமை கடவுள் செயல் . நினையப் புகில் - நினைக்கலுற்றால் , பின்னை - ( முன்னை நினையவொட்டாது செய்ததன்றிப் ) பின்னையும் . அப்போதே - நினைக்கலுற்ற அப்பொழுதிலேயே . மறப்பித்து - மறக்கச்செய்து . பேர்த்து - பெயர்த்து ; நினைப்பைப் பிறிதொன்றிற் பெயர்ந்து செல்ல வைத்து . ஒன்று - பிறிதொன்றனை . நாடுவித்தி - நாடுமாறு செய்கின்றாய் . உன்னை நினையப்புகில் , பிறிதொன்றனை நினையப் பண்ணுவாய் என்றவாறு . இத்திறத்தில் , எப்போதும் உன்னை மறந்திட்டு , உனக்கு இனிதாக இருக்கும் என்னை ஒப்பார் ( எவரேனும் ) உளரோ ? இறையவனே , யாரேனும் உளராயின் , சொல்லு . வாழி .

பண் :

பாடல் எண் : 5

முழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்
தெழிற் 1 பெருஞ் சோதியை யெங்கள் பிரானை யிகழ்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத்
தொழப்படுந்தேவர்தம்மால் தொழுவிக்குந்தன் றொண்டரையே.

பொழிப்புரை :

முழுமையான அனல்போன்ற சிவந்த திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிந்தவனாய் , மேருமலை போன்ற அழகிய பெரிய ஒளிவடிவினனாகிய எங்கள் பெருமானை இகழ்கின்ற நீங்கள் இதனைத் தெரிந்து கொள்ளுங்கள் . பொது மக்களால் தொழப்படும் சிறுதேவரால் தொழப்படும் எம்பெருமானைத் தொழுத பின்னர் அப் பெருமான் பிறரால் தொழப்படும் அச்சிறுதேவரைக் கொண்டும் அவர்களால் தன் அடியவர்களைத் தொழச் செய்வான் .

குறிப்புரை :

முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் - முழுத்தீப் போலும் திருமேனிமேல் வெண்ணீறுடையவன் . தீ முழுமையும் ஒரு மேனியாயுற்றுத் திகழ்பவன் என்றவாறு . தவளம் - வெண்மை . பொடி - திருநீறு , ` தவள வெண்ணீறு ` ( தி .4 ப .113 பா .3) கனகக் குன்றத்து எழில் பெருஞ்சோதியை - பொன்மலைபோலும் எழுச்சியும் அழகும் உடைய மெய்ப்பேரொளியை . ` பரஞ்சோதி ` என்று பண்டிதர் பதிப்பிலுளது . பழம்பதிப்பில் ` பெருஞ்சோதி ` என்றே உளது . எங்கள் பிரானை - எங்களுக்குப் பிரியத்தைச் செய்பவனை , பிரியான் என்றதன் மரூஉவாக் கொண்டுரைத்தல் சிறந்தது . ` அரியானை என்றெடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத திருத்தாண்டகச் செந் தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்றெவ்வுலகும் விளங்கிய பொன்னம்பலத்துமேவியாவும் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழாற் பின்னும் பாடல் செய்வார் ` ( தி .12 திருநா . புராணம் 175). கிழவர் - கிழார் , சிறுவர் - சிறார் , மகவர் - மகார் என்பனபோல மருவியது . பிரான் என்பதுமாம் . இகழ்திர் - இகழ்வீர் . தொழுதல் = தேவர்களைப் பணிவோர் செயல் . படுதல் :- அத் தேவர் வினை . தொழப்படுந் தேவர் தொழுதலும் ; அத்தேவர் தொழப் படுதலும் . ` தொழப்படுந்தேவர் ` என்றது தேவரது ஏற்றத்தைக் குறித்தது . ` தொழப்படுந் தேவர் தொழப் படுவான் ` என்றது சிவபரத்துவத்தைக் குறித்தது . ` தொழப்படுந் தேவர் தம்மால் தொழுவிக்கும் தொண்டரை ` என்றது திருத்தொண்டர் பெருமையைக் குறித்தது . ` தொழுத பின்னை - தொழுதால் . ` கற்றபின் நிற்க அதற்குத் தக ` ( குறள் ) என்புழிப் பரிமேலழகர் உரைத்ததுணர்க . தொழும்போதே உண்டாதலின் பின்னை என்றது காலப் பெயர் அன்று . தொழுவித்தல் - கடவுள் செயல் , தொழுதல் - தொழப்படுந் தேவர் வினை , தொழுவிக்கப்பெறுவோர் தொண்டர் . தொழப்படுந்தேவர் :- உருத்திரன் , திருமால் , நான்முகன் , இந்திரன் முதலியோர் . தொழப் படுவோர் அவராயின் , அவரைத் தொழுவார் யார் ? மண்ணோரும் விண்ணோரும் பாதலத்தோருமாவர் . தொழப்படுவோரால் தொழப் படுவார் சிவபிரானும் சிவத் தொண்டரும் .

பண் :

பாடல் எண் : 6

விண்ணகத் தான்மிக்க வேதத்து ளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்து ளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங்கறைக் கண்டனே.

பொழிப்புரை :

எம் நீலகண்டப் பெருமான் தேவருலகிலும் , மேம்பட்ட வேதத்திலும் , கடலால் சூழப்பட்ட இம்மண்ணுலகத்திலும் , திருமாலுடைய உள்ளத்திலும் , பழகுதற்கு இனிய பண்களிலும் , அடியவர் உள்ளத்தும் , பழைய நாயைப் போன்ற இழிந்த அடியேனுடைய மனக் கண்களிலும் மனத்தும் , தலைமீதும் எங்கும் கரந்து பரந்துள்ளான் .

குறிப்புரை :

விண் அகத்தான் - விண்ணிடத்தவனும் ; மிக்க வேதத்துளான் - மேலான மறைப் பொருளானவனும் ; விரிநீர் உடுத்த மண்ணகத்தான் - பரந்த கடல் புடைசூழ்ந்த நிலத்திலுறைபவனும் ; திருமால் அகத்தான் - திருமாலின் உள்ளத்திற் குடிகொண்டவனும் ; மருவற்கு இனிய பண் அகத்தான் - பொருந்துதற்கு இனியவான பண்ணினிசை யானவனும் ; பத்தர் - தொண்டர் , சித்தத்துளான் - சிந்தையிலுள்ளவனும் . பழ அடியேன் ; நாயடியேன் . அடியேனது கண் , மனம் , சென்னி , கண்ணிலுள்ளவனும் , மனத்திலுள்ளவனும் , சென்னியிலுள்ளவனும் ; கறைக்கண்டனே - நஞ்சின் கறுப்பையுடைய ( திருநீல ) கண்டனே . இங்குக் காட்டத்தக்க ஒப்புமைப் பகுதிகள் அளவிலாதுள்ளன . ` மனத்தகத்தான் ..... வாக்கினுள்ளான் ` சிரத்தின் மேலான் என்கண்ணுளானே ! ( தி .6 ப .8 பா .5.) வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை ......... சிந்திக்கப்பெற்றேன் நானே `.

பண் :

பாடல் எண் : 7

பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.

பொழிப்புரை :

பெரிய கடல் இவ்வுலகைமூட ஊழிவெள்ளம் ஏற்படப் பிரமனுடைய சத்திய உலகத்தும் பெரிய கடல்நீர் பொங்கி அதனை மூழ்க்கப் பிரமனும் இறப்பான் . அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும் கரிய கடல்போன்ற நிறத்தினனாகிய திரு மாலுடைய உடலையும் சுமந்து கொண்டு அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனாய் , ஒடுங்கிய உலகம் மீளத்தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து எம்பெருமான் சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான் .

குறிப்புரை :

பெருங்கடல் மூடிப் பிரளயம்கொண்டு - பெரிய கடலாற் சூழப்பட்டுப் பிரளயம் உற்று பிரமனும் போய் - படைத்தற் றொழிலானாகிய பிரமனும் சென்று ; இருங்கடன் மூடி - தன் பெரிய கடன்மை முடிந்து ; இறக்கும் - மாள்வான் . இறந்தான் களேபரமும் - இறந்த அவனது உடலையும் ; கருங்கடல் வண்ணன் களேபரமும் - கரிய கடலினது நிறம்போலும் நீலநிறமுடைய திருமாலினுடலையும் ; கொண்டு - கைக்கொண்டு . கங்காளர் ஆய் - கங்காளத்தினை மேற் கொண்டவராகி . மீளவரும் கடன் நின்று - ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து ; எம் இறை - எம் இறைவன் . நல்வீணை வாசிக்கும் - அழகிய வீணையை இயம்பும் . வீணைக்கு நலம் - சுருதியியல் கெடாதவாறமைந்து , இன்னிசைத் தோற்றத்துக்குரியதாதல் . ` பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி ` ( தி .6 ப .57 பா .7) ` கங்காள வேடக்கருத்தர் ` ( தி .6 ப .28 பா .7) ` கரியுரித்தாடு கங்காளர் ` ( தி .3 ப .93 பா .6) ` கங்காளன் பூசுங் கவசத் திருநீறு ` ( தி .10 திருமந்திரம் ) - உடல் . மகேசுரமூர்த்தத் தொன்று .

பண் :

பாடல் எண் : 8

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே.

பொழிப்புரை :

கடலில் எழுந்தவிடத்தை உண்டும் எந்தக் குறைபாடும் இல்லாத ஒப்பற்ற சிவபெருமானுக்கு அடிமைகளாய்த் தொண்டு செய்யும் மேம்பட்டவர்களுக்கு , வானமும் மண்ணும் அசைந்து ஒடுங்கினாலும் , பெரிய மலைகள் இடம் பெயர்ந்து மேல் கீழாகத் தடுமாறினாலும் , கடல்களிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் அழிந்தாலும் , சூரிய சந்திரர்கள் இடம் பெயர்ந்து விழுந்தாலும் அவற்றைப் பற்றிய கவலை ஏதும் ஏற்படாது .

குறிப்புரை :

வேலைநஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லாத ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கு , வானம் துளங்கில் என் ? மண் கம்பம் ஆகில் என் ? மால்வரையும் தானம் துளங்கித் தலைதடுமாறில் என் ? தண் கடலும் மீனம்படில் என் ? விரிசுடர் வீழில் என் ? என்று கொள்க . வானம் - விண்ணுலகம் . துளங்கில் - அசைந்தால் . என் - நமக்குறும் அச்சம் யாது ? நமக்கு அதனால் சிறிதும் இடர் இல்லை . மண்ணுலகு , கம்பம் - நடுக்கம் ; ( பூகம்பம் , நிலநடுக்கம் ). மால்வரையும் தண்கடலும் முறையே தானம் துளங்கித் , தலைதடுமாறிலும் ( நீர்வற்றி ) மீன்கள் பட்டொழியிலும் நமக்கு யாதும் இடர்ப்பாடு இல்லை . மால்வரை - பெரிய மலைகள் . தானம் - இடம் . துளங்கி - பெயர்ந்து . தலை தடுமாறல் - நிலைகெடல் . தண்கடலாயிருந்து வறுங்கடலாங் கால் , அதில் உள்ள மீன் முதலியன எல்லாம் மாயும் . படில் - மாய்ந்தால் , விரிசுடர் - உலகெலாம் விரிந்த சுடருடைய செங்கதிர் வெண்கதிர் முதலியவை . வீழில் - விழுந்தால் . தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் ? ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறில் என் ? செப்பம் ஆகும் . சேறைச் செந்நெறி மேவிய அப்பனார் உளர் அஞ்சுவ தென்னுக்கே .` ( தி .5 ப .77 பா .6.)

பண் :

பாடல் எண் : 9

சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.

பொழிப்புரை :

சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மேனிப் பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திடுவானாகில் அவனை அடியேன் ` பவன் ` என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றி அவன் அடியேனை இயக்கும் இடம் தொறும் திரிந்து பலநாளும் அழைத்தால் , இவன் என்னைப் பலநாளாக அழைத்தலைத் தவறாது செய்கிறான் என்று திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான் .

குறிப்புரை :

சிவன் என்னும் திருப்பெயரைத் தன் ஒருவனுக்கே யுரியதாக்கிக் கொண்ட செய்ய திருமேனியையுடைய எம்பெருமா னாகிய அவன் என்னை ஆளாகக் கொண்டு . தண்ணளிசெய்தருள்வான் . அளித்திடும் ஆகில் , அவனை , அடியேன் , ` பவன் ` என்னும் திருப் பெயர்ப் பொருள் முதலியவற்றை உள்ளத்திலும் உரையிலும் பற்றி , ( அவன் இயக்கும் இடந்தொறும் ) இயங்கிப் பலநாளும் அத் திருப்பெயரால் அழைத்துவந்தால் , இவன் என்னைப் பலநாளும் அழைத்துவருகின்றான் . அழைத்தலை ஒழிவதில்லை என்று அடியேற்குக் காட்சிதந்தருள்வான் . சிவன் - செய்யன் . தமிழ்ச் சொல்லாகக் கொண்டு பொருள்கூறிய இடம் இது . செம்மேனி யெம்மான் என்றது ` சிவன் ! என்ற தமிழ்ச் சொல்லின் பொருளாகும் . சிவன் , மகேசுரன் , உருத்திரன் , விண்டு , பிதாமகன் , சமுசாரவைத்தியன் , சருவஞ்ஞன் , பரமாத்துமா என்னும் திருப்பெயர் எட்டுடன் ` பவன் முதலாம் ஆயிரம் பேர் எடுத்துக்கூறிக் குறையாத பேரன்பிற் பதும மலர்கொடு பூசை புரியும் .` ( காஞ்சிப் . திருமாற்பேற்றுப் . 9). ` அகில நாமமும் எமக்குரிப் பெயராம் அவற்றினும் பவன் முதற்பெயர் சிறப்பாத் தகும் ` ( காஞ்சிப் . திருவேகம்பப் . 43) ஆகில் - அன்புடையேம் . ஆகில் . அழைத்தால் நம் விடாப்பிடிக்காக எதிர்ப்பட்டருள்வான் . ( தி .8 திருவாசகம் திருச்சதகம் . 58.) முதலடி பரத்துவம் உணர்த்தியதுணர்க .

பண் :

பாடல் எண் : 10

என்னையொப் பாருன்னை யெங்ஙனங் காண்ப ரிகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே.

பொழிப்புரை :

பொன்னை ஒத்து ஒளியுடையதாய் , தீயை ஒத்துச் செந்நிறத்ததாய்ச் சிவந்த வானத்தைப் பிளந்து நெடுகப் பரவியதாய மின்னலை ஒத்து விட்டு விட்டு ஒளிவீசும் சடைக்கற்றையை உடைய வேதப்பரம்பொருளே ! அடியேனை ஒத்த சிற்றறிவினர் உன்னை யாங்ஙனம் காண இயலும் ? உன்னோடு மாறுபட்டு உன்னை ஒப்பவராகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தேவர்கள் உன்னுடைய அடியையோ முடியையோ காண இயலாதவாறு உன்பெருமை ஏனைய எல்லாத் தேவர்களையும் விட மேம்பட்டுள்ளது .

குறிப்புரை :

பொன்னை ஒத்து , நெருப்பைக் கலந்து , செம்மானத்தை அழித்து , மின்னலை ஒத்தல் பொருந்த மிளிர்கின்ற சடைத்திரளை யுடைய வேதமுதல்வனே , உன்னை இகலி , என்னை ஒப்பவர் எங்ஙனம் உன்னைக் காண்பர் , நின்னை ஒப்பவர் நின்னைக் காணும் படியினது அன்று நின்பெருமை . உன்னை இகலி என்றதை முன் வாக்கியத்திலும் , நின்பெருமை என்றதைப் பின்வாக்கியத்திலும் கொண்டுரைக்க . என்னை ஒப்பார் உன்னை இகலி உன்னை எங்ஙனம் காண்பர் ? நின்பெருமை நின்னைக் காணும்படித்து அன்று , படித்து - தன்மைத்து , படி - தன்மை . பெருமை காணும்படித்து அன்று . ` அவரன்ன ஒப்பாரியாம் கண்டதில் ` ( குறள் 1071) என்றது ஒப்பு . ஒப்பாரித்தல் - அழுவித்தல் ; வளாவுதல் - கலத்தல் , தணித்தலுமாம் . வெந்நீர் வளாவுதல் ` என்னும் வழக்கு நோக்கியும் உணர்க . செம் மானஞ் செற்று :- ` செம்மான நிறம் போல்வதோர் சிந்தையுள் எம் மானைக்கண்டு கொண்டது என் உள்ளம் .` ( தி .5 ப .98 பா .4) ` சிந்தையாய் நின்ற சிவனே போற்றி ` ( தி .6 ப .5 பா .9). செவ்வானம் செம்மானம் எனத் திரியலாம் . வவ்வும் மவ்வும் ஒன்றன் நிலைக் களத்து மற்றொன்று நிற்பன . ` வான மாரி ` என்பது ` மான வாரி ` என்றதறிக . ` சடைக்கற்றையினாய் ` ( தி .4 ப .112 பா .2). ` நின்னை ` என்றிருமுறையும் ` உன்னை ` என்றொருமுறையும் நிற்றலின் பொருத்தம் ஆராய்தற்குரியது .

பண் :

பாடல் எண் : 1

பவளத் தடவரை போலுந்திண் டோள்களத் தோண்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை யச்சடைமேல்
பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந்  நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை சூடும் பனிமலரே. 

பொழிப்புரை :

எம்பெருமானுக்குத் திண்ணிய தோள்கள் பெரிய பவளமலைகள் போலவும், தோள்களில் படியும் சடைக்கற்றைகள் பவளத்தின் தளிர்கள் போலவும், சடைமேல் உள்ள படமெடுக்கும் தலையை உடைய நாகம் பவளக் கொழுந்து போலவும், நாகத்தொடு சூடப்பட்ட இளம்பிறை பவளத்தின் குளிர்ந்த மலர் போலவும் காட்சி வழங்குகின்றன.

குறிப்புரை :

திண்தோள்கள் பவளத் தடவரையைப் `. பல் சடை அத் தோள்மிசையே பவளக்குழை தழைத்தால் `. பைம் முகநாகம் அச்சடைமேல் பவளக்கொழுந்து `. பவளக்கண் வாலமதி அந்நாகத்தொடும் எந்தை சூடும் பனிமலர் (`) என்று சொல்வகை செய்துகொள்க. தடவரை - பெரிய மலை. திண்மை - உறுதி; செறிவு. மிசை - மேல். குழை - குண்டலம். பை - படம். பைம் முகம் - படத்தையுடைய முகம். நாகம் - (ஐந்தலைப்) பாம்பு. வாலமதி - பாலசந்திரன்; இளம்பிறை. `வால` என்றது பால என்றதன் திரிபு. அது வடசொல். `எந்தை` - என் அப்பன். இதுதன்மை. `நுந்தை` முன்னிலை. `தந்தை` படர்க்கை. பனிமலர் - குளிர்பூ. தோளுக்குப் பவளவரையும், சடைக்குத் தழைத்த பவளக்குழையும், நாகத்துக்குப் பவளக்கொழுந்தும், பாலசந்திரனுக்குப் பவளத்தின் பூவும் உவமையாகக் கூறப் பட்டன. `கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ, பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ, புயல் சுமந்த அற்புதமோ, விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ ... சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார்.` (தி.12 பெரிய புராணம். தடுத்தாட்கொண்ட. 140) என்றதாற் பவளமலர் உண்மை அறியப்படும். (தி.4 ப.99 பா.2.) பார்க்க.

பண் :

பாடல் எண் : 2

முருகார் நறுமல ரிண்டை தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தால்
தருவா யெனக்குன் றிருவடிக் கீழொர் தலைமறைவே. 

பொழிப்புரை :

நறுமணம் கமழும் பூக்களாலாகிய இண்டை மாலையைச் சூடி வண்டுகள் ஒலிக்க, பெருகுகின்ற கங்கை ஆறு வந்து பொருந்தியுள்ள சடைக் கற்றையை உடையவனே! பிணிகளால் உண்ணப் பட்டுக் கிடக்கும் இரு தூண்களாகிய இருகால்களை உடைய அடியேன் உடம்பாகிய குடிசை நீங்கினால் அடியேனுக்கு உன் திருவடிக் கீழ்த் தலைமறைவாய் இருக்க இருப்பிடம் அருளுவாயாக.

குறிப்புரை :

முருகு - மணம். ஆர். ஆர்ந்த; நிறைந்த. நறுமலர் - நறிய பூ. இண்டை - இண்டை என்னும் பெயரிய தலையிற் சூடும் வட்ட மாலை தி.4 ப.38 பா.4 குறிப்பிற் காண்க. தழுவி - பொருந்தி. வண்டே - வண்டுகளே. முரலும் - ஒலிக்கின்ற (சடை). முரல்வன வண்டுகள். முரலும் இளம் சடை. பெருகுவது ஆறு (கங்கை). அவ்வாறு அடைவது சடையை. சடைக்கற்றையினை யுடையவனே என்று அழைத்து, உன் திருவடிக்கீழ் ஒரு தலைமறைவு எனக்குத் தருவாய் என்றும், அதுவும் இவ்வுடலின் நீங்கும் போது தருவாய் என்றும் வரம் வேண்டுகின்றார். பிணிமேய்ந்திருந்த குரம்பை. இருகால் குரம்பை. பிணியையே கூரையாக வேயப்பட்டிருந்த குடிசை. இரண்டுகால் நட்டுக் கட்டிய குடிசை. பிணி மேய்ந்திருந்த இருகாற் குரம்பையாகிய இது. நான் உடையது இது. இக்குரம்பை, பிரிந்தால்:- கூடிய நான் நீங்க, இது பிரிந்தால். எனக்கு உன் திருவடிக்கீழ் ஒர்தலை மறைவு தருவாய். தலை மறைவு:- `மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர் நெஞ்சேயவன் சிற்றம்பலத்துள் நின்றாடுங் கழல் எவர்க்குந் தாயவன்றன் பொற்கழல் என் தலைமறை நன்னிழலே` (தி.11 நம்பியாண்டார் நம்பி அருளிய கோயிற்றிருப் பண்ணியர் திருவிருத்தம். 9). குடில் செய் - குடிசை. நன்செய் - நஞ்சை. புன்செய் - புஞ்சை முதலியன போன்ற மரூஉ. குற்றில் - குறில் - குடில். குடியில் செய்யுமாம்.

பண் :

பாடல் எண் : 3

மூவா வுருவத்து முக்கண் முதல்வமீக் கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி மாறிய  தில்லையப்பால்
தீவா யெரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே. 

பொழிப்புரை :

என்றும் மூத்தல் இல்லாத வடிவத்தை உடைய முக் கண்ணனாகிய காரணனே! மிகுந்த துயரிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று உன் இருப்பிடத்தின் வாசலில் தொங்கும் மணியைத் தேவர்கள் கையால் அதன் நாவில் அசைத்து எழுப்பிய ஒலி குறைந்து அழியுமுன் திரிபுரங்கள் நெருப்பில் எரிந்து சாம்பற் பொடியாய்ப் போய்விட்டன.

குறிப்புரை :

மூவா உருவத்து முக்கண் முதல்வ - மூத்தல் இல்லாத அருளுருவையுடைய முக்கண்ணனாகிய முதல்வனே. முக்கண் - அருளுருவத்தில் ஒரு நிலையில் இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி மூன்றும் கண்களாகும். மீக்கூர்தல் - மிகப் பெருகுதல். இடும்பை - துன்பம். காவாய் - காத்தருள்வாய்; என - என்று, கடைதூங்கும் மணியை - வாயிற் கடையில் அசையும் (ஆராய்ச்சி) மணியை. அமரர் - தேவர்கள். கையால் நாவாய் அசைத்த ஒலி - தங்கள் கைகளால், அம்மணி நாக்கிடத்தில் அசையச்செய்ததால் உண்டான ஒலியானது, அசைத்த ஒலி:- காரணப்பெயரெச்சம். ஒலி மாறியது இல்லை - ஒலித்தலின் மாறினதில்லை. ஒலிஒலி ( - ஒலித்த ஒலி) என வினைத் தொகையாக்கல் பொருந்தாது. அப்பால் - ஒலித்த அப்பொழுதே; பால் எனக் காலம் இடமாயிற்று. பால் உருபன்று. திரிபுரம் இருந்த அவ் விடத்தில். தீவாய் - தீயின்கண். `தீயாய்` (பா.பே) எரிந்து - நெருப்பாகித் தீய்ந்து, பொடியாய் - சாம்பலாகி, (கழிந்தது). நாவாய் - நாவின் கண். நா மணிநா, `மிகுகூர்` மரூஉ. `மிக்கூர்` மிக்கு ஊர்கின்ற என்றுமாம். `மிசைமிசை` என்றது மீமிசை என மருவிய போல்வது, மிகல் - மேல். மிசைக் கண் - மீக்கண், மிசைத்தோல் - மீத்தோல், மீந்தோல், மிசைப் போர்வை - மீப்போர்வை முதலியனவும் அறியற்பாலன.

பண் :

பாடல் எண் : 4

பந்தித்த பாவங்க ளம்மையிற் செய்தன விம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென் னேவந் தமரர்முன்னாள்
முந்திச் செழுமல ரிட்டு முடிதாழ்த் தடிவணங்கும்
நந்திக்கு முந்துற வாட்செய்கி லாவிட்ட நன்னெஞ்சமே. 

பொழிப்புரை :

வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய் நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?

குறிப்புரை :

அமரர் முன்னாள், முந்திச் செழுமலர் இட்டு முடியைத் தாழ்த்து அடியை வணங்கும் (அத்தகு முதன்மை யுடைய) நந்தியாகிய சிவபிரானுக்கு நீயே முந்துறும் வண்ணம் தொண்டு செய்யாது விட்டனை; அக்கேடுற்ற மனமே` முற்பிறவியிற் செய்தனவாய்க் கட்டாயுற்ற தீவினைமறங்கள் இப் பிறவியில் வந்து தாக்கியபின்னர், நாணி வருந்துவதில் யாது பயன்? நன்னெஞ்சம் (நல் + நெஞ்சம்) என்றதில் நன்மை இகழ்ச்சிக் குறிப்பு. அம்மை - முற்பிறப்பு. இம்மை - இப்பிறப்பு. வரும் பிறப்பை `உம்மை என்பர். `தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பதன்றி மற்று எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர் கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்` (நாலடியார்.) என்றதில், `உம்மை` என்றது இனி எய்தும் பிறவியைக் குறித்தது அறிக. `அம்மை` என்றது சேய்மைச் சுட்டுச் சொல் லாதலின், அது முற்பிறவிக்கும் பிற்பிறவிக்கும் உரித்தாகும். ஆதலின், `அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே` என்றருளினார் எம்மையும் ஆளுடைய நம்பி. அதில் ஆள்வதற்கு ஆதும் எனக்கொள்ளவும் இடம் உண்டு. யாது என்றது ஆது என்று வந்துளது. `ஆதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்றபோது` (தி.4 ப.3 பா.1) என்றதன் குறிப்பிற் காண்க.

பண் :

பாடல் எண் : 5

அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர் செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய நம்பனையே. 

பொழிப்புரை :

********

குறிப்புரை :

அந்திவட் டத்திளங் கண்ணிய னையா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய நம்பனையே.
(தி.4 ப.98 பா.1)
1இது முன்னர்த் திருவையாற்றுத் திருவிருத்தம் இரண்டினுள் ஒன்றாய் முதலில் உளது. `ஐயாறமர்ந்து வந்தென்` `ஆறமர் செஞ்சடையான்` என்னும் வேறுபாடு மட்டும் கொண்டது. `சிந்தி` என்பது சந்தி எனப் பிழைபட்டது. அதுவே அன்றி, இது வேறுபாடல் ஆகாது. `இளங்கண்ணி` எனல் பொருந்தாது.

பண் :

பாடல் எண் : 6

உன்மத் தகமலர் சூடி யுலகந் தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை தோறும் பலிதிரிவான்
என்மத் தகத்தே யிரவும் பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தொ ரிளம்பிறை சூடிய சங்கரனே. 

பொழிப்புரை :

தன் தலையிலே ஓர் இளம் பிறையைச் சூடிய சங்கரன், ஊமத்தம் பூவைச்சூடி, உலகத்தார் தொழச் சுடுகாட்டில் சுடப் பட்ட பல மண்டை ஓடுகளையும் மாலையாக அணிந்து, பல வீட்டு வாயில்கள் தோறும் பிச்சைக்குத் திரிபவனாய், அடியேனுடைய தலையை விடுத்து இரவும் பகலும் பிரியாதவனாக உள்ளான்.

குறிப்புரை :

உன்மத்தக மலர் - ஊமத்தம் பூ. உலகம் - `எல்லா வுலகமும்`. சுடலைப் பல் மத்தகம். சுடு காட்டிலிருந்த பல்லுடைய தலையையும் பலதலைகளையும் கோத்தமாலைகளையும், கொண்டு அணிந்துகொண்டு, பல் கடைதொறும் - பலவீட்டுக் கடை வாயில் தோறும். பலிதிரிவான் - பிச்சைக்காகத்திரிபவன். என் மத்தகத்தே - என் தலையின். இரவும் பகலும் பிரியான்:- `ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்` (தி.4 ப.1 பா.1) தன் மத்தகத்து - தன் தலைமேல். ஓர் இளம்பிறை சூடிய சங்கரன். ஓர் இளம் பிறையை அணிந்த இன்பச் செயலன். சங்கரன் - இன்பஞ் செய்பவன். உன்மத்தம் என்பதே ஊமத்தம் என்று மருவியது எனல் ஈண்டு விளங்கும். உன் மத்தகம் என்றது ஆராயத்தக்கது. பின் மூன்றடிக் கண்ணும் மத்தகம் தலையைக் குறிப்பதாயினும், கொண்டது பிரம கபாலத்தையும் தலை மாலையையும். இரவும் பகலும் பிரியாதது பிரமரந்திரத்துள்ள சகச்சிரதளபங்கயத்தில்; பிறை சூடியது சடையில் என்றுணர்க. துவாத சாந்தத்தையும் இரவும் பகலும் பிரியாமைக் குரியதாகக் கொள்ளலாம். இரவு - கேவலம். பகல் - சகலம். கிரியா தீபிகை:- `பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம்` என்னும் திருவாசகத்தையும் நினைக.

பண் :

பாடல் எண் : 7

அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்க ளையமுணல்
வரைப்பா வையைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை யாமறை  தேடுமெந்தாய்
உரைப்பா ருரைப்பன வேசெய்தி யாலெங்க ளுத்தமனே. 

பொழிப்புரை :

விண்ணுலகமெல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே! நீக்கப்பட்ட பிரமன் தலை ஓட்டினை ஏந்திய கையினனே! வேதங்கள் தேடுகின்ற எந்தையே! எங்கள் மேம்பட்டவனே! இடையிலே கோவண உடை உடுத்து, பிச்சை ஏற்று வாழும் நீ பார்வதியை மணந்து கொண்ட செயல் என்ன குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு? உன்னைக் குறை கூறுகின்றவர்கள் குறை கூறுதற்கு ஏற்ற செயல்களையே நீ செய்கின்றாய்.

குறிப்புரை :

வான் இரைக்கும் இரைப்பா விண்ணுலகம் எல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே, படுதலை ஏந்துகையா - இறந்துபட்ட பிரமனது கபாலத்தைத் தாங்கிய கையினனே. மறைதேடும் எந்தாய் - வேதங்கள் தேடுகின்ற எந்தையே. `வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே` (தி.8 திருவாசகம்). எங்கள் உத்தமனே; உரைப்பார் உரைப்பன செய்தி - சொல்லுவார் சொல்வனவற்றைச் செய்வாய். அரைப்பால் உடுப்பன:- திருவரையில் உடுப்பன கோவணச் சின்னங்கள்; உண்ணல் ஐயம், ஐயம் - பிச்சையுணவு. கோவணவுடையும் பிச்சை யுண்டியும் உடைய நீ மலைமகளை மணந்து கொண்டது என்ன குடிவாழ்க்கை செய்வதற்கு? வானிரைக்கும் இரைப்பா:- `ஓசை யொலியெலாம் ஆனாய் நீயே`. உரைப்பார் உரைப்பன:- `உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் (திருக்குறள்). சின்னம் - துண்டு. தமிழ்ச்சொல். `சின்மை. சின்னஞ் சிறுபிள்னை. `சின்னஞ் சிறிய. பென்னம்பெரிய` என்பவற்றை அறிக. சின்னம் என்னும் வடசொல் வேறுண்டு. அதன் பொருள் வேறு. ஈண்டு அது பொருந்தாது.

பண் :

பாடல் எண் : 8

துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே. 

பொழிப்புரை :

பற்றற விட்டொழிப்பதற்கு எளியதல்லாத இவ் வுடம்பை விடுத்துக்கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் ஏறிவந்து நிலவுலகிற்கு இறங்கி மீண்டும் பிறப்பேன். பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகின்றது.

குறிப்புரை :

துறக்கப்படாத உடல் - பற்றற விட்டொழிக்க எளிதல்லாத உடம்பு. உடலைத் துறந்து - உடம்பை விட்டு; இறந்து. வெம் தூதுவரோடு - கொடிய யம தூதுவருடன். இறப்பன். இம்மண்ணுலகைக் கடப்பேன். இறந்தால் - கடந்தால். இரு விசும்பு - பெரிய வானுலகம். ஏறுவன் - ஏறிவந்து பிறப்பன்; மீண்டும் மண்ணுலகிற் பிறத்தலை யுணர்த்திற்று. `பூதனாசரீரம் போனால் புரியட்ட ரூபந்தானே யாதனா சரீரமாகி இன்பத் துன்பங்களெல்லாம் நாதனார் ஆணை உய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத் தீதிலா அணுவாய் யோனி சேர்ந்திடும் சீவனெல்லாம்.` (சித்தியார் சூ. 2:- 36). பிறந்தால், பிறையைச் சூடிய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகனது திருப்பெயரை மறந்துவிடுவேனோ என்று என் உள்ளம் அதே நினைவாய்க் கிடந்து சுழலுகின்றது. `ஜீவன் முத்தி` நிலையில் இவ்வையம் உண்டாமெனில். நம்மனோர் கதி என்னையோ? `நன்றறிவாரிற் கயவர் திருவுடையார் நெஞ்சத் தவல மிலர்` (குறள்) `இந்தச் சகந்தனில் இரண்டும் இன்றித் தமோமயம் ஆகி எல்லாம் நிகழ்ந்திட மகிழ்ந்து வாழும் நீர்மையார்` (சிவப்பிரகாசம். 95.)

பண் :

பாடல் எண் : 9

வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை புகுந்தான் றிருமுடிமேல்
வாரி வளாய வருபுனற் கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது போலு மிளம்பிறையே. 

பொழிப்புரை :

தேன் பெருக்கெடுத்தோடும் நறுமணம் கமழும் கொன்றைமலரைச் சூடிப் பாவமில்லாதவனாகிய இறைவன் உலகியல் செய்திகள் யாவும் கலந்து கிடக்கும் அடியேனுடைய உள்ளத்துப் புகுந்தான். அவன் திருமுடி அதன் மேல் வெள்ளமாய் வரும் நீரை உடைய கங்கை இவற்றால் தன் இயக்கம் தடைப்பட இளைய பிறை சடைப் புறமிருந்து திரும்பி ஏரி போன்ற நீர் நிறைந்த கங்கையில் தோய்ந்து கிடக்கிறது.

குறிப்புரை :

வேரி - தேன். வளாய - கலந்த. விரை - மணம். மலர்க் கொன்றை - மலர்களாலாகிய கொன்றை மாலையை. புனைந்து - அணிந்து. அனகன் (அநகன்) - மறமில்லான்; பாவமில்லான். என் சிந்தை புகுந்தான் - என் சிந்தையிற் புகுந்தனன். அனகன் புகுந்தான். `சேரிவளாய சிந்தை` என்றதால், அதன் தூய்மை யின்மை உணர்த்தினார். சேர்தல் பொருந்த எனலுமாம். `புகுந்தான்:- வினையாலணையும் பெயர், புகுந்தானது திருமுடிமேல்; வாரி வெள்ளம். வளாய - கலந்த. வருபுனல் - விரைந்து வருகின்ற நீர்ப்பெருக்கு, கங்கை சடை இரண்டும் பிறைக்குத் தடையாயிருத்தலின், அவற்றிடை மறிவாகி அக் கங்கையாகிய நீர்நிலையிற் கலந்து கிடந்தது அப்பிறை. மறிவு - மறிதல்; தடைபடுதல். ஏரி - நீர்நிலை. ஏரி - ஏர்க்குப் பயன்படுவது. குளி - குளித்தற்குப் பயனாவது. ஊருணி - ஊரினர் உண்ணப் பயனாவது. இந் நீர்நிலைகளின் பயன் வேறுபாட்டா லுண்டான பெயர் வேறுபாடறியாது, எல்லாவற்றையும் ஒரே பொருளிலாள்வது பொருந்தாது. `ஏரி நிறைந்தனையசெல்வன்` `வண்டுடைக் குளத்தின் மீக்கொளமேன் மேல் மகிழ்தலின் நோக்கி` `ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு.` (குறள்)

பண் :

பாடல் எண் : 10

கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கட னீர்சுருங்கிப்
பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும்  பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறு மஞ்சனெஞ் சேயிமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே. 

பொழிப்புரை :

நெடுங்காலம் மலைகள் மழையின்றிச் சூடேறக் கரிய கடலின் நீர் சுருங்குமாறு பல ஆண்டுகள் மழை பெய்யாது போயினும் பஞ்சம் ஏற்படுமே என்று அஞ்சாதே. என்னிடம் வஞ்சினம் கூறும் மனமே! எல்லா உயிர்க்கும் புகலிடமாகிய இச்சிவ பூமியிலே இமையாத முக்கண்களை உடைய பொன் மயமான நெடிய குன்றம் ஒன்று உள்ளது ஆதலின் அடியவர்கள் வருந்த வேண்டிய தேவை இல்லை.

குறிப்புரை :

கல் - மலை. நெடுங்காலம் - நீண்டகாலம். வெதும்பி - வெயிலால், பசுமையற்று வெய்துற்று. கருங்கடல் - நீர்நிறைவாற் கரிய தோற்றத்தையுடைய கடல். நீர்சுருங்கி - நீர் முழுதும் குறைந்து; வற்றி. பல்நெடுங்காலம் - நெடிய பலகாலம். மழைதான் மறுக்கினும் - முகில் மழையைப்பெய்ய மறுத்தாலும். பஞ்சம் - கறுப்பு; வற்கடம். உண்டு - உளது. என்று - என்று சொல்லி. அஞ்சல் - அஞ்சாதே. என்னொடும் சூளறும் நெஞ்சே - என்னுடன் வஞ்சினம் செய்யும் மனமே. இப் புகல் இடத்தே - எல்லா வுயிர்க்கும் புகலிடமான சிவபூமியிலே. பொன்னெடுங் குன்றம் ஒன்று உளது - பொன்னுருவான நெடிய மலை ஒன்றி ருக்கின்றது. அதனால், அஞ்சல் நெஞ்சே - பஞ்சம் வரும் என்ற பயமே வேண்டா. `பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்சே` (தி.4 ப.94 பா.2) என்றும் `வானந்துளங்கில் என்` (தி.4 ப.112 பா.8.) என்றும் `மண் பாதலம்புக்கும் மால்கடல் மூடி` (தி.4 ப.94 பா.9.) என்றும் தொடங்குந் திருவிருத்தங்களை ஈண்டெண்ணுக.
சூளறுதல் சூளுறுதல் இரண்டும் ஒரு பொருளில் ஆளப் படுகின்றன. (கந்தபுராணம் அசமுகி. 29; துணைவரு. 10; கிரவுஞ்ச . 10; சேதுபுராணம். விதூமச். 8; 84; கந்தமாதன. 89; கம்பர். நிகும்ப. 82; பரிபாடல். 8; 70; கலித்தொகை. 41; இறையனாரகப். பக்கம். 18. 107. உரை; மணிமேகலை. 3:- 102. தொல்காப்பியம். பொ. 147. உரை.)

பண் :

பாடல் எண் : 11

மேலு மறிந்தில னான்முகன் மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக்
கால னறிந்தா னறிதற் கரியான் கழலடியே. 

பொழிப்புரை :

பிரமன் மேலே அன்ன வடிவிற் சென்று பெருமா னுடைய முடியை அறிந்தான் அல்லன். கீழே தோண்டிச் சென்று திரு மால் மனக்கலக்கம் உற்றானே அன்றிப் பெருமானுடைய திருவடி களைக் கண்டான் அல்லன். சிவபெருமானை வழிபட்டுக் கொண்டி ருந்த இளையவனான மார்க்கண்டேயன் பால் சென்று அவன் மீது பாசக்கயிற்றை வீசி எறிந்து செயற்படாமல் மடங்கிய மனத்தை உடைய கூற்றுவன் பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியாத சிவ பெருமானுடைய கழல்களை அணிந்த திருவடிகளை அறியும் வாய்ப்பினைப் பெற்றான். அத்திருவடிகள் வாழ்க.

குறிப்புரை :

தி.8 திருவாசகம் 3 :- 50; 4:- 1-10; நான்முகன் அன்னப் புள்ளுருக்கொண்டு மேற்சென்று பறந்து தேடியலைந்து மேலும் அறிந்திலன். மாலும் பன்றியுருக்கொண்டு கீழிடந்து கீழும் அறிந்திலன். மேலும் என்றதால் கீழும் என வருவித்துரைக்கப்பட்டது. அயன் மேற்சென்று மேலும் அறிந்திலன். மால் கீழிடந்து கீழும் அறிந்திலன். மேல் கீழ் என்றன சிவபிரானுடைய திருமுடியையும் திருவடியையும் குறித்த இடவாகு பெயர். மேல்:- `போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே.` `சோதி மணிமுடி சொல்லிற் சொல் இறந்து நின்ற தொன்மை,` கீழ் - `பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்`. பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக்கு அப்பால்`. (தி.8 திருவாசகம். 164. 346) இடத்தல் - இடம்படச் செய்தல். தோண்டல்; `தங்கண்முன் இடக்குங்கை` (தி.12 பெரிய. கண்ணப்ப. 183). இடந்து - இடம் படச்செய்து. மண்ணைத் தோண்டி; பெயர்த்து. மால் - அன்பு. `மாலுங்காட்டி வழிகாட்டி வாராவுலக நெறி ஏறக் கோலங்காட்டி ஆண்டான்` (தி.8 திருவாசகம். 643). உற்ற - மிக்க. தே - சிவபிரான். `தேவு - `சிவமாந்தன்மைப் பெருவாழ்வு` (சித்தியார் கடவுள் வாழ்த்து, சிவ ஞானமாமுனிவர் உரை). தேவழிபாடு - சிவபூசை. பாலன் - மார்க்கண்டேய முனிவர். மிசை - மேல். பாசம் - கயிறு. மறிந்த சிந்தைக்காலன் - மடங்கிய சிந்தனையுடைய எமன். மறிதல்:- (திருவடியால் உதைபட்டு ஊக்கம் ஓழிந்து) மடங்குதல், அறிதற்கு அரியான் கழல் அடியே காலன் அறிந்தான்:- மாலும் அயனும் கீழிடந்தும் மேலுயர்ந்தும் அடியும் முடியும் அறிதற்கரியவனான சிவ பெருமானது திருவடியால் உதைபட்ட முகத்தால், காலன் அதை அறிந்துய்ந்தான். (தி:-4 ப.100 பா.2, ப.107பா.9, ப.98 பா.2) அக் காலனுக்குக் காட்சியளித்தது `அயன் திருமாற் கரிய சிவம்`. அவனை வீட்ட எடுத்தும் அவன் காணக் கிடைத்தது, நாரணனும் நான்முகனும் தேட எடுத்ததும், அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலத்து நட்டம் ஆட எடுத்ததும் ஆகிய திருப்பாதம். அத் திருவடியே என்றும் எங்கும் எவ்வுயிர்க்கும் துணை. அத் திருவடி வாழ்க. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் நான்காம் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது.
சிற்பி