பண் :

பாடல் எண் : 11

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 1

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

பொழிப்புரை :

பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும் . இத்தகைய திருச்சிற்றம்பலத்தை , மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு , பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன் ?

குறிப்புரை :

அன்னம் - வீட்டின்பம் . ` பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் ` என்னும் திருவாசகத்தில் சோறு என்பது பேரின்பம் என்னும் பொருள் பயத்தல் காண்க . கடவுளை அன்னம் ( அமுதம் ) என்னும் சொல்லால் குறித்தலுமுண்டு . தான் இறவாது நின்று பிறர் இறப்பை நீக்குதலால் . ` பிழைத்த தன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் ` என்னும் தேவாரத் திருப்பாடலில் அமுதம் என்ற சொல் வீடுபேறு என்னும் பொருள் பயக்குமாறறிக . இனி , தில்லையில் இன்றும் பாவாடை நிவேதனம் உண்டு . பண்டு இது மிகப் பெரிய அளவில் நிகழ்ந்திருக்கலாம் . அன்னம் பாலிக்கும் தில்லை என்பது அது குறித்ததுமாம் . சிறுமை - அம்பலம் சிற்றம்பலம் . பேரம்பலம் இருத்தலின் பிறிதின் இயைபு நீக்கிய அடைகொளியாகும் . சிதம்பரம் என்பது உணர்வு வெளி என்னும் பொருட்டு ; அஃது ஏனைய அம்பலங்களை நீக்கியதாதலின் அதுவும் அவ்வடைகொளியே . பொன்னம் - பொன்னுலக வாழ்க்கை . ஆகுபெயர் . பொன் எனலும் , பொன் - அம் எனப் பிரித்து உரைத்தலும் கூடும் . பொன் என்னும் நிலைமொழி வருமொழியொடு புணருங்கால் அம்முப்பெறுதல் பெருவழக்கு . ` பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி ` ( தி .8 திருவெம்பாவை 16.) ` பொன்னஞ் சிலம்பு ` ( இறையனார் களவியல் மேற்கோள் சூ .18. 146) ` பொன்னங்கடுக்கை ` ( கந் . கலி . 93) ` ` பொன்னங் கமலம் ` ( மீனாட்சி . பிள் . 24) ` பொன்னங்குழை ` ( முத்து . பிள் . 394) ` பொன்னங்கொடி ` ( முத்து . பிள் . 424) பொன்னஞ் . சிலை ` ( சிதம்பர . மும் . 542) ` பொன்னங்குவடு ` ( சிந்தா - 2136) ` பொன்னப்பத்தம் என னகர ஈறு அக்குப் பெற்றது ` ` பொன்னங்கட்டி ` என அம்முப்பெற்றது ( தொல் . எழுத்து . நச் . சூத் . 405). என் அன்பு எனப் பிரிக்க . அன்பு என்பது அம்பு என மருவிற்று . தென்பு - தெம்பு . வன்பு - வம்பு . ( வீண்பு - வீம்பு .) காண்பு - காம்பு . பாண்பு - பாம்பு முதலிய சொற்களால் வல்லெழுத்துக்கேற்ப மெல்லெழுத்துத் திரிதல் காண்க . என் நம்பு எனப் பிரித்து என் விருப்பம் எனலுமாம் . ` நம்பும் மேவும் நசையாகும்மே ` ( தொல்காப்பியம் சொல் . 329.) ஆலித்தல் - விரித்தல் , பெருக்கல் , களித்தல் , நிறைதல் ` ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலம் ` ( தி .9 திருப்பல்லாண்டு ) அகலல் என்பதன் மருவாகிய ஆலல் என்னும் தொழிற் பெயர் வேறு ; ஆலித்தல் என்னும் தொழிற்பெயர் வேறு . ` அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர்களெல்லாம் ` ( தி .12 திருநாட் . 21.) ` ஆலிய முகிலின் கூட்டம் ` ( தி .12 திருநாட் . 24.) என்னம் எனக் கொண்டு எத்தன்மையனவும் என்றுரைத்தலும் பொருந்தும் . ` இன்னம் ... ... பிறவியே ` ` மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே ` என்றார் முன்னும் . ( தி .4. ப .8. பா .4.) உரை காண்க . பாலித்தல் - கொடுத்தருளல் . எல்லோரும் பிறவாமையை வேண்டுதலாயிருக்க சுவாமிகள் திருக்கூத்தைக் காணும் பிறவியையே வேண்டினார் . அக்காட்சி கண்ட அளவானே , இவ்வுடம்பு உள்ளபோதே , பரமுத்திப் பேரானந்த அதீத நிலையை எய்தித் திளைக்க வைத்தலின் . தில்லைத் தரிசனம் பரமுத்தியானந்தத்தை இவ்வுடம்பு உள்ள போதே கொடுத்தலின் , அத்தரிசனத்திற்கு வாயிலாகிய பிறவியை மேலும் வேண்டுவாராயினர் .

பண் :

பாடல் எண் : 2

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.

பொழிப்புரை :

அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி , கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின் .

குறிப்புரை :

வழிபாட்டுக்கு மலர் எடுக்குங்கால் அரும்புகளை நீக்கி மலர்களை மட்டும் பறித்தல்வேண்டும் என்பது விதி . ` அரும் போடு மலர் பறித்திட்டுண்ணா ஊரும் ... ... காடே ` ` அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து ` என ஆசிரியரே அரும்புகளைப் பறித்து வழிபடுதலை உணர்த்தினார் . இது விதி விரோதமெனத் தோன்றும் . பூவினங்களுள் எல்லாவற்றின் அரும்புகளும் வழிபாட்டிற்காகா என்பதில்லை ; தாமரை முதலிய சிலவற்றின் அரும்பு ஆகும் . அரும்பு என்பது அடையின்றி நிற்குங்கால் தாமரை அரும்பிற்கே பொருந்துகிறது . ` அருப்பினார்முலை மங்கை பங்கினன் ` ( தி .2. ப .25. பா .8.) ` அரும்புங் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக் கரும்பின் மொழியாள் ` ( தி .1. ப .46. பா .2.) ` அருப்புப் போல் முலையார் ` ( தி .5. ப .61. பா .5.) என்பவற்றால் அறிக . ` அரும்பார்ந்தன மல்லிகை சண்பகம் ` ( தி .7. ப .13 . பா .4.) என்புழி ஏனைய அரும்புகளை உணர்த்தல் காண்க . ` வைகறை யுணர்ந்து போந்து புனல்மூழ்கி வாயுங்கட்டி , மொய்மலர் நெருங்கு வாச நந்தன வனத்துமுன்னிக்கையினிற் றெரிந்து நல்ல கமழ் முகை யலரும் வேலைத் தெய்வநாயகற்குச்சாத்துந் திருப்பள்ளித் தாமங் கொய்து ` ( தி .12 எறிபத் .9) என்றதால் போதுகளைக் கொய்தல் விதியென்பதும் அவற்றையே அரும்பு என்பதும் உணரக் கிடக்கின்றன . அறுதல் - அற்றம் . செறுதல் - செற்றம் . அற்றப்பட - நீக்கம் உற . ஆய் மலர் - வினைத்தொகை . அரும்புகளையும் , அற்றப் பட ஆய்ந்த மலர்களையும் கொண்டு எனக்கூறலும் ஆம் . அற்றப் படுதல் ஆய்தற்கு அடையாய்க் குற்றம் நீங்கல் எனப் பொருள் தரும் . ` விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் ` எனும் குறளி (1186) லும் இப் பொருட்டாதலறிக . சுரும்பு - வண்டினங்களுள் ஒன்று . ` வண்டும் சுரும்பும் மூசும்தேனார் பூங்கோதாய் ` ( சிந்தா . 2065) கரும்பற்றச் சிலை :- அற்றம் - அழிவு . சோர்வு , துன்பம் , மெலிவு , சிலை - வில் . கரும்பு வில் காதலை விளைத்து இவற்றையெல்லாம் ஆக்குதலால் அற்றச்சிலை எனப்பட்டது . அற்றச்சிலை - அற்றத்தை உடைய சிலை என இரண்டன் உருபும் பயனும் உடன்தொக்கதொகை எனக்கொண்டு தனக்கே அழிவு தந்த சிலையாதலின் கரும்பு அற்றச்சிலைக்காமன் என்றார் எனக்கூறலுமாம் . பெரும்பற்றப்புலியூர் - புலிக்கால் முனிவர்க்குப் பேரின்பத்தில் பெரும்பற்றை விளைத்ததாலும் , அவர் வீடுபேற்றிற் பெரும் பற்றுடையராயிருந்ததாலும் , வணங்கும் எல்லா உயிர்க்கும் சிவனடி நீழலில் பெரும்பற்று விளைத்தலாலும் அப்பெயர் பெற்றது . அன்பினால் தூவுக ; தூவின் அவாவறுத்து வீடுபேறு எய்தலாம் என்னும் கருத்தைக் காமனைக் காய்ந்தவன் எனும் தொடர் குறிப்பிக்கின்றது .

பண் :

பாடல் எண் : 3

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ ( இடுகாட்டில் ) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின் .

குறிப்புரை :

அரித்து சிரித்து என்பன முறையே அரிச்சு சிரிச்சு என மருவின . ` அரிச்சிராப்பகல் ` எனத் தொடங்கும் திருக்குறுந் தொகையிலும் ( தி .5. ப .85. பா .3.) இவ்வாறு வருதல் காண்க . முதலும் மூன்றுமாம் அடிகளில் உற்ற என்னும் பெயரெச்சமும் உற்று என்னும் வினையெச்சமும் அமைந்தன . இரண்டாமடியில் சுற்ற என்பது வினையெச்சம் . இப்பாடல் , இறக்கும்முன் பிறப்பை நீக்கிக் கொள்ளும் நெறியை உணர்த்துகின்றது . சிற்றம்பலம் அடைவார்க்கு வினையால் அரிப்புண்டலும் இறப்பொடு பிறப்பும் இல்லையாம் என்றபடி .

பண் :

பாடல் எண் : 4

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.

பொழிப்புரை :

எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையாகிய துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ? தில்லைமாநகரிலே திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாததொர் அடிமைபூண்ட எனக்கு அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யவல்லன அல்ல .

குறிப்புரை :

அல்லல் - ஆகாமியமாகிய எதிர்வினை . அருவினை - நுகர்ந்தாலன்றித் தீர்த்தற்கரிய பிராரத்தவினை . தொல்லை வல்வினைத் தொந்தம் - பிராரத்த வினையநுபவம் உள்ள அளவும் உள்ள முயற்சியின் விளைவாய்ப் பருவத்தில் இன்ப துன்பங்களைப் பயக்கத்தக்க இருவினை எனப்படும் சஞ்சிதம் . துவந்துவம் - இரட்டை . நல்வினை தீவினை , அறம் மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டை களையும் அவைபோல்வனவற்றையும் வடமொழியில் துவந்துவம் என்பர் . அது தமிழில் தொந்தம் என்று வழங்குகிறது . ` என்புள்ளுருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பங்களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து முன்புள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே ` ( தி .8 குலாப் .3) என்னும் திருவாசகத்தில் துவந்துவங்கள் தூய்மை செய்தல் சஞ்சித வினையையும் , இருவினையையும் , ஈடழித்தல் ஆகாமியத்தையும் , துன்பங்களைதல் பிராரத்தத்தையும் குறித்தல் காண்க . ` தொண்டன் ` என்பது பாடமாயின் , வல்வினையாகிய அடிமை எனக்கொள்க . இருவினை இறைவன் ஆணையின் வரும் என்பது சாத்திரம் . பரமுத்தியிலும் ஆன்மா முதல்வனுக்கு அடிமையாதலின் ` எல்லையில்லதோர் அடிமை ` என்றருளிச் செய்தார் . ` மீளா அடிமை ` ( தி .7. ப .95. பா .1) என்னும் நம்பியாரூரர் வாய்மொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது .

பண் :

பாடல் எண் : 5

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.

பொழிப்புரை :

உடம்பில் உயிர் உயிர்த்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் நான் என்னை ஆளாக உடைய திருச்சிற்றம்பலவனாரை விளக்கமுறப்பெற்றிருப்பேன் . இன்பத்தேன் விளங்கிய அத் திருச்சிற்றம்பலவனார் அடியேனைப் பேரின்பவீட்டில் நிலைபெற்றிருக்கவும் வைப்பர் .

குறிப்புரை :

ஊன் - உடல் . ஆகுபெயர் . நிலாவி - விளங்கி , நிலை பெற்று . உயிர்க்கும் பொழுது - மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் காலம் . நாதன் - உடையான் . தேன் - சிவானந்தம் . வான் - விண்ணுலகு அன்று ; சிவலோகம் . ஊனில் ஆவி என்றும் , ஊன் நிலாவி என்றும் பிரித்துரைக்கலாம் . வானிலாவி என்புழியும் அவ்வாறே கொள்ளலாம் . முதல்வன் திருவருளை மறவாதவர்க்கே பேரின்பம் எய்தும் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 6

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.

பொழிப்புரை :

ஞானிகளும் தேவர்களும் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது தில்லைச் சிற்றம்பலம் ; சிட்டர்களாகிய அந்தணர்கள் வாழ்தற்கு இடமாவது அது . அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடியருளும் ஞான மூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அச்சிட்டர்களாய மெய்ஞ்ஞானியரையே , ஏனையோரைச் செறுதற்கு வல்ல காலன் அணுக மாட்டான் .

குறிப்புரை :

சிட்டர் - அறிவர் ; ஞானியர் ; தில்லைவாழந்தணர் . சிட்டன் - ஞானமூர்த்தியாகிய நடராசப்பெருமான் . சிட்டன் , சிரேஷ்டன் , சிஷ்டாசாரமுடையவன் என்பாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 7

ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னாரிளை யார்விட முண்டவெம்
அருத்த னாரடி யாரை யறிவரே.

பொழிப்புரை :

தனிமுதற்பொருள் உலகங்களுக்கெல்லாம் ஒரே விளக்காய் உள்ளவர் ; செம்மையார் ; தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுபவர் ; முதியார் ; இளையார் ; நஞ்சுண்ட எம்செல்வர் ; அடியாரை அறிவார் .

குறிப்புரை :

ஒருத்தனார் - ஏகன் அநேகன் இறைவன் ( தி .1. ப .5.) உலகங்கட்கு ஒரு சுடர் - ` சுடர்விட்டுளன் எங்கள் சோதி ` ( தி .3. ப .54. பா .5) ` சோதியே சுடரே சூழொளி விளக்கே ` ( தி .8 திருவாச . அருட் . 1) ` சுடர்ச் சோதியுட் சோதியான் ` ( சம்பந் ) ` தூயநற் சோதியுட் சோதி ` ( தி .9 திருவிசைப் . 2.) ` உலக உயிர்க்கெல்லாம் ஒருகண்ணே ` ( இருபா .20). திருத்தம் - செம்மை . திருத்தன் - செம்பொருள் . திருப்தி உடையவன் என்றலும் ஆம் . திருப்தி எண்குணங்களில் ஒன்று . தீர்த்தனுமாம் . உயிர்களைத் திருத்தி யாட்கொண்டவன் என்றலுமொன்று . ` திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங்கொள் கயிலாயா ` ( தி .7. ப .47. பா .8.) விருத்தனார் இளையார் - ` விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து ` ( தி .1. ப .52. பா .6.) அருத்தனார் - எமக்கு மெய்ப் பொருளாயுள்ளவர் . அருத்தம் - நீடுலகிற்பெறும் நிலையுடைய பெருஞ்செல்வம் . அடியாரை அறிவர் - ` அடியார் அடிமை அறிவாய் போற்றி ` ( தி .5. ப .30. பா .3.) 4,9 பார்க்க . ( தி . 5, ப . 13, பா . 10) பார்க்க . ( தி . 6. ப . 85. பா . 2.) பார்க்க . ( தி . 4. ப .23. பா .2.) பார்க்க .

பண் :

பாடல் எண் : 8

விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்நி றைந்த கடிபொழி லம்பலத்
துள்நி றைந்துநின் றாடு மொருவனே.

பொழிப்புரை :

யான் என்னும் செருக்கு மிகுந்த அயனும் மாலும் காண்டற்கு அரிதாய் , ஆகாயத்தையளாவியெழுந்த சோதிப்பிழம்பு ஒப்பற்ற பெருந்தலைவனாய் , தேனிறைந்த மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையம்பலத்துள் திருச்சிற்றம்பல வடிவாய் நிறைந்து பஞ்சகிருத்திய நடனத்தைச் செய்யும் . தொழக்கல்லாதவர்களாகிய அயன்மாலுக்கு அரிய முதல்வன் அன்பால் வழிபட்ட வியாக்கிரர் , பதஞ்சலியார் என்னும் முனிவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றித் தன்னியல்பை உணர்த்திப் பேரின்பம் அருளினன் என்றபடி .

குறிப்புரை :

இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை ( அப் . தி .5 ப .95) பார்க்க . ` விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லையிலாதானே ` ( தி .8 திருவாச . சிவ .) எண் - எண்ணம் . கண் நிறைந்த - கள் நிறைந்த . ஞானமன்றில் ஆனந்தக் கூத்தாடுதலின் நிறைந்து நின்றாடும் என்றார் . சிவபிரானை ஒருவன் என்றல் உபநிடத வழக்கு . முழுமுதல் என்னுங் கருத்தை உடையது . ( வடமொழி சுலோகம் ) ` ஒருவன் என்னும் ஒருவன் காண்க ` என்பது திருவாசகம் . ` ஒளிமணி வண்ணன் என்கோ , ஒருவன் என்றேத்த நின்ற நளிர்மதிச் சடையன் என்கோ ` என நம்மாழ்வாரும் இக்கருத்தை வலியுறுத்துதல் காண்க . ` ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ` எனத் திருத்தாண்டகத்தினும் அருளிச்செய்வர் .

பண் :

பாடல் எண் : 9

வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.

பொழிப்புரை :

மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர் களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின் திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்களை விட்டு ஓடும் . இஃது உண்மை .

குறிப்புரை :

வில் - மேருவாகிய வில் . வட்டப்பட - அரைவட்டமாக அமைய . வாங்கி - வளைத்து . அவுணர் - திரிபுரத்தசுரர்கள் . வல்லை வட்டம் மதில் ; வல் - விரைவு . வட்டம் மதில் - வட்ட வடிவாயமைந்த கோட்டைகள் . ஒல்லை - விரைவு . வட்டம் - தொழுவாரைச் சூழ்ந்த இடம் .

பண் :

பாடல் எண் : 10

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர் ; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத் தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும் .

குறிப்புரை :

முதல்வனை அன்பால் அகத்தே நினைவார் அவனை உணரப் பெறுவர் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 11

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கவல்ல சதுரப்பாடுடையவன் ; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன் . இப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலையை அசையும்படி , செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணனுடைய பத்து முடிகளும் வருந்தும்படி மெள்ள ஊன்றும் செம்மையான திருவடியைச் சென்று கை தொழுது உய்க .

குறிப்புரை :

மதுரம் - இனிமை . சர்வசங்கார காலத்துப் பெருமானது சினத்தைத் தணித்து மீண்டும் படைத்தற்றொழிலைச் செய்யவல்ல மொழியுடையாள் ஆதலின் ` மதுரவாய்மொழி மங்கை ` என்றார் . பங்கு - இடப்பாகம் . செம்பாதியும் கொண்டதையல் ( முத்துக் -. பிள்ளை . ) சதுரன் - சதுரப்பாடு உடையவன் . ` பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத இன்பம் , ஆவண்ணம் மெய்கொண்டவன் தன் வலியாணைதாங்கி , மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்யவாளா மேவு அண்ணல் ` ( திருவிளையாடல் ) ஆதலின் சதுரன் என்றார் . திருமலை - கயிலைமலை . கோயில் என்பது சிதம்பரத்தைக் குறித்தலைப் போலத் திருமலை என்பது கயிலையைக் குறிக்கும் . அதிர - நடுக்கத்தால் அதிர்ச்சியடைய , ஆர்த்து - ஆணவத்தால் செருக்கி ஆர வாரித்து . மிதிகொள் சேவடி - மிதித்தலைக் கொண்ட எனவும் மிதித்து மீள அருள் செய்துகொண்ட எனவும் இருபொருள் பட நின்றது .

பண் :

பாடல் எண் : 1

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

பனைபோன்ற கையையும் , மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன் ; தன்னை நினைப்பவர் மனத்தைக் கோயிலாக் கொண்டவன் ; வேடம் அனைத்துமாம் அம்பலக்கூத்தன் . இத்தகைய சிற்றம்பலக் கூத்தனைத் தினையளவுப் பொழுதும் மறந்து வாழ்வேனோ !

குறிப்புரை :

பனைக்கை - பனைமரம் போன்ற கரிய பரிய கை . வேழம் - கயாசுரன் என்னும் யானை . இறைவனது எண்வகை வீரச் செயல்களுள் யானையை உரித்துப் போர்த்ததும் ஒன்று . வேடம் அனைத்தும் என்றது போக யோக வேக வடிவங்களை . ` பலபல வேட மாகும் பரன் ` ( சம்பந் .) நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் - ` உள்ளம் பெருங்கோயில் ` ( தி .10 திருமந்திரம் .) வாயிலார்செய்த அக வழிபாட்டின் சிறப்பைப் பெரியபுராணத்துக் காண்க . அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்து அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின் என்பது ` மலர்மிசை ஏகினான் ` என்ற திருக்குறட் பகுதிக்குப் பரிமேலழகர் உரைத்த விளக்கம் . தினை - சிறுமைக்குக் காட்டுவதோர் அளவை ; கணப்பொழுதும் மறவேன் என்றது , மறந்தால் உய்யேன் என்பது உணர்த்தியது . இந்நிலை கடவுளை உள்ளவாறு உணர்ந்து அநுபவித்தார்க்கே உளதாவது .

பண் :

பாடல் எண் : 2

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயனை , பேரின்ப வடிவினனை , சிவலோக நாயகனை , ஞான உருவினனை , உலகத்தோற்றத்தின் முன் அதற்கு மூலமாய் முன்னின்ற ஒருவனை , அருச்சுனனுக்கு வேடனாய்த்தோன்றியும் , பாசுபதமீந்தும் அருள்செய்த சிற்றம்பலத்துக் கூத்தப்பிரானைக் கொடியேனாகிய யான் மறந்து வாழ்வேனோ ? மறவேன் .

குறிப்புரை :

தீர்த்தன் - தூயன் . சிவன் - பேரின்ப வடிவினன் . முதலாய ஒருவன் - ` சத்தே முதற்கண் ஒன்றாய் அத்விதீயமாய் இருந்தது ` என்னும் சாந்தோக்கிய உபநிடத உரைபற்றி எழுந்தது . தமக்குத் திருவருள் கூடாவண்ணம் தடுத்துப் பிறசமயம் புகுவித்த வினைக்கொடுமையைக் கருதிக் கொடியேன் என்றார் .

பண் :

பாடல் எண் : 3

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பையும் , கையின்கண் பிரமகபாலத்தையும் மான்கன்றையும் உடையவனும் , சர்வசங்கார நிலையில் விரும்பி எரிவீசி ஆடுவோனும் ஆய சிட்டர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ ?

குறிப்புரை :

கபாலம் - பிரமனது மண்டையோடு . மறி - கன்று . இட்டம் - விருப்பம் . எரி - பிரளயகாலத் தீ . எள்தனை - எட்டனை என்றாயிற்று . தனை - அளவு . எள் - அளவின் சிறுமைக்கு எடுத்துக் காட்டு .

பண் :

பாடல் எண் : 4

மாணி பால்கறந் தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவென்
ஆணியைச் செம்பொ னம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

பிரமசாரியாகிய சண்டேசர் பசுக்களின் பாலைக் கறந்து அபிடேகித்து வழிபட நீண்ட உலகம் பலவற்றையும் ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தவன் ; பொன் உரையாணி போன்றவன் ; செம் பொன்னம்பலத்துள் நின்று ஆடும் செம்பொருள் . அவனைத் தனியனாய நான் மறவேன் .

குறிப்புரை :

மாணி - பிரமசாரி , சண்டேசர் . நீள் + உலகு - நீணுலகு . ( சிவஞான . - காப்பு உரை ). ஆணி - பொன்னின் மாற்று அறிதற்கு வைத்திருக்கும் மாற்றுயர்ந்த பொன் ; தனக்கு உவமையில்லாதான் என்னும் கருத்தில் இறைவனுக்குப் பெயராயிற்று . தாணு - நிலை பெற்றவன் . ஸ்தாணவே நம : என்பது இறைவனது நூற்றியெட்டுப் போற்றிகளுள் ஒன்று .

பண் :

பாடல் எண் : 5

பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

பித்தன் என்ற பெயருடையவனை , இடு காட்டையே ஆடுமிடமாகக்கொண்ட , இயல்பாகவே பாசங்களின் நீங்கியோனை , இளம்பிறைசூடியவனை , எல்லாம் வல்லவனை , செம்பொற் சபையிலே நின்று ஆடும் தலைவனை அடியேன் மறவேன் .

குறிப்புரை :

பித்தன் - பேரன்புடையவன் . பெருங்காடு - மாப்பே ரூழியாகிய சுடலை . அரங்கு - ஆடுமிடம் . முத்தன் - பாசத்தினின்றும் விடுபட்டவன் . சித்தன் - சித்துருவானவன் ; சித்தத்திலிருப்பவன் , அட்டமாசித்திகளை அருள்பவன் . அத்தன் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 6

நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கும் அறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனி னம்பலத்
தாதி யையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

நீதியாகவும் , நிறைவாகவும் , மறைகள் நான்கையும் தந்து பிரமனாதியர்க்கு உபதேசித்தவனாகவும் , ஒருவர்க்கும் அறிய வொண்ணாத சோதியாகவும் , ஒளி வீசும் செம்பொன்னம்பலத்து ஆதியாகவும் உள்ள பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .

குறிப்புரை :

நீதியை - நீதிவடிவாயிருப்பவனை ; ` அறவாழி அந்தணன் ` என்னும் திருக்குறள் நினைக்கத்தக்கது . நிறைவை - எங்கும் நிறைந்தவனை . ` மாலறியா நீதி `, ` குறைவிலா நிறைவே ` என்றார் ( தி .8) மணிவாசகரும் . நான்மறைகளையும் ஒருசேரத் தத்புருஷம் முதலிய நான்கு முகங்களால் வெளிப்படுத்தியவன் ஆகலின் மறையோதியை என்றார் . சோதியை - அறிவுக் கறிவாகிய ஒளியை . ஆதி - முதல்வன் .

பண் :

பாடல் எண் : 7

மைகொள் கண்டனெண் தோளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

திருநீலகண்டனும் , எட்டுத்தோளனும் , முக்கண்ணினனும் . படம் கொண்ட பாம்பை அரையிற் கட்டிய பரமனும் , திருமகள் உறையும் சிற்றம்பலத்தின்கண் எங்கள் ஐயனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

மைகொள் கண்டன் - ஆலகால விடத்தை அடக்கின மையால் கறுத்த கழுத்தை உடையவன் . பைகொள் பாம்பு - படத்தையுடைய பாம்பு . அரை - இடை . ஆர்த்த - கட்டிய . பரமன் - மேலானவன் . செய்யமாது - செய்யாள் , திருமகள் . ஐயன் - தலைவன் , அழகியன் . நுண்ணியன் . ` நூலுணர்வுணரா நுண்ணியோன் அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க ` ( தி .8 திருவாச . திருவண் ) ` வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன் ` ( தி .8 திருவாச - சிவபுரா ).

பண் :

பாடல் எண் : 8

முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙன முய்வனோ.

பொழிப்புரை :

விண்ணிலுள்ள தேவர் வந்து பரவிப் போற்றித் தூய செம்பொன்னினால் முழுதும் எழுதி மேய்ந்த சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமானை இழிவுடைய யான் மறந்து எங்ஙனம் உய்வன் ?

குறிப்புரை :

தேவர்கள் முழுதும் எழுதிமேய்ந்த என மாறுக . தூய செம்பொன் - ஆடகம் . கிளிச்சிறை , சாம்புநதம் , சாதரூபம் என்பவற்றில் தூயதான கனகம் . சிற்றம்பலம் பொன்னம்பலம் என்பது காலங் கடந்த பெயர் வழக்கு . ஆதலின் பராந்தக சோழன் போன்ற சோழ வேந்தர்கட்கு முன்பே தேவர்களால் பொன் வேயப்பட்டது என்பது அறியவேண்டுவதொன்று . முழுதும் எழுதி மேய்ந்த - கோயில் விமானம் முழுதும் பரப்பி வேயப்பட்ட . இழுதையேன் - குற்ற முடையவன் . வேய்ந்த - மேய்ந்த என்றாயது .

பண் :

பாடல் எண் : 9

காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கைம ணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ.

பொழிப்புரை :

கார்காலத்துப் பூக்கும் கொன்றை மாலையனை , கச்சணிந்த தனங்களை உடைய உமைகேள்வனை , தேர் உலாவும் தில்லையுள் கூத்தப்பெருமானை , உண்ணத்தெவிட்டாத அமுது போல் வானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

கார்காலத்து மலர்கின்ற பூவாதலின் காருலாமலர்க் கொன்றை என்றார் . ` கண்ணி கார்நறுங் கொன்றை ` ( புறநானூறு .) காருலாமலர்க் கொன்றை - கார் உலாவுகின்ற காலத்துப் பூத்த கொன்றை மலர் . தார் - போக மாலை ; உயிர்களுக்குப் போகம் நிகழ்தற் பொருட்டுக் கார்காலத்து மலரும் கொன்றைத்தாரணிந்து உமையொரு பாகங்கொண்டு போகியாயிருப்பன் என்க . ` போகம் ஈன்ற புண்ணியன் ` என்றார் தேவரும் . வார் - கச்சு . தேருலாவிய தில்லையுட்கூத்தன் - தேருலாவிய கூத்தன் , தில்லையுள் கூத்தன் . நடராசப் பெருமான் திருவிழாக்காலங்களில் ஏனைய நாள்களில் உலாவராது , தேர்த் திருநாள் மட்டிலுமே உலாவருவதைக் குறித்ததுமாம் .

பண் :

பாடல் எண் : 10

ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற வூன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

உயர்ந்த திருக்கயிலாயத்திருமலையை எடுக்கலுற்ற இராவணன் சிரங்கள் பருத்து விம்முதல் அடைய ஊன்றிய திருவடி உடையவனும் நீர்வளம் சான்ற தில்லையுட் கூத்தனும் ஆகிய பெருமானை நல்ல சார்பில்லாத தொண்டனேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

ஓங்குமால்வரை - ஊழிதோறூழி முற்றும் உயர்ந்து நிற்கும் மலைகளில் தலையாகிய திருக்கயிலாயம் . தலையாய மலைrயெடுத்த தகவிலோன் ( அப்பர் . தி . 6. ப . 97. பா . 10.) ஏந்தலுற்றான் - எடுக்க விரும்பியவன் . சிரம் - தலைகள் . நீர்தேங்கு வயல் என மாறுக . பாங்கு - நற்சார்பு . உரிமை , கிழமை என்றலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 1

கடவு ளைக்கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை யரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது கடவுளும் , பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த , அருட்டிருமேனியுடையவனும் , ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும் , அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே .

குறிப்புரை :

கடவுள் - ஆறு அத்துவாக்களையும் கடந்தவன் . எழுநஞ்சு - இறந்தகால வினைத்தொகை . நஞ்சுண்ட உடலுளானை - ஆலகாலம் உண்டும் நஞ்சால் அழியாத உடலோடு கூடியவனை . ஒப்பாரி - ஒப்பு ,` மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரியாங் கண்டதில் ` ( குறள் 1071) . மற்றாரும் தன்னொப்பார் இல்லாதவன் என்றது . எம் அடலுளான் - எம்முடைய வலியன் . சுடர் உளான் - சிவாக்கினியில் விளங்கி நிற்போன் ; ஞாயிறு , நிலவு , தீ என்னும் முச் சுடர்களில் தெறுகதிரும் , தண்கதிரும் அடுதல் சுடுதல் விளக்கம் முதலிய சத்தியுமாய் இருப்போன் எனினும் அமையும் . கண்டீர் முன்னிலைப் பன்மை அசைச்சொல் ; கண்டாய் என்னும் முன்னிலை ஒருமை அசைச்சொல் போல . ` அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே ` எனப் பின்னும் அருளிச் செய்துள்ளார் . இத்திருப்பதிகம் அரசமுடி மன்னனுக்கே உரித்தாதல் போல வணக்கம் சிவபிரானுக்கே உரியது என்பது உணர்த்துகின்றது . அதனை , ஏனையோர்க்குச் செய்யும்போதும் , ஏனையர் தமக்குச் செய்யும் போதும் , அது , சிவபிரானுக்கு ஆகும் எனப் புத்திபண்ணுவர் அறிவுடையோர் .

பண் :

பாடல் எண் : 2

கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரும் அறிகிலா
அரும்பொப் பானை யரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது , கரும்பும் , கரும்பினிற் கட்டியும் ஒப்பானும் , விரும்பிய பொருளை ஒப்பானும் , தேவரும் அறியா அரும்பு ஒப்பானவனும் , அரத்துறைத் தலத்தை விரும்பிய வண்டு போல்வானும் ஆகிய பெருமானையே .

குறிப்புரை :

சாதகர்க்குக் கரும்பில் உள்ள சாற்றைப்போல அவர்தம் சாதனங்களில் மறைந்து நின்று அவர் சாதித்தவழி அன்பினில் விளைந்த ஆரமுதாய்த் தோன்றலின் கரும்பொப்பானை எனவும் , மெய்யன்பர்களாகிய சீவன்முத்தர்க்கு அவர் தம் அயரா அன்பே இன்பாய் யாண்டும் வெளிப்பட்டு நின்றே அருளுதலினால் கரும்பினிற் கட்டி ( சருக்கரைக் கட்டி ) எனவும் , யாரேயாயினும் யான் எனது என்னும் செருக்கு அறாத வழி அவர்க்கு அவன் திருவருள் தோன்றாது ஆதலின் விண்ணோரும் அறிகிலா எனவும் , ஆயினும் அச் செருக்கு நீங்கும் வகை சிவதன்மம் , சிவயோகம் , சிவஞானம் என்னும் சாதனங்களைச் செய்து வருவார்க்கு அவர் தம் உள்ளத்தே உணர்வின்ப அன்பாய் , முளைத்துத் தோன்றி விரிதலின் அரும்பு ஒப்பானை எனவும் , அங்ஙனம் அரும்பும் அன்பினர் உள்ளக்கமலங்களை முதல்வன் தன் அருட்கதிர்களால் அறியாமைச் சுருள் நீக்கி மலர்வித்துச் ` சீவனுக்குள்ளே சிவமணம்பூத்தது ` என்றபடி வெளிப்படுத்தலின் சுரும்பொப்பானை எனவும் அருளிச்செய்தார் சுவாமிகள் . திருவரத் துறையை முதல்வன் விரும்பியது தன்னை உயிர்கள் அவ்விடத்து அணுக்கமாகக் கண்டு தொழுது உய்தற் பொருட்டு . விரும்பு ஒப்பானை என்றது ஒருவர்க்குத் தாம் விரும்பிய பொருளினும் மேலானது ( அந் நிலைக் கண் ) இல்லாதவாறுபோல எஞ்ஞான்றும் எல்லார்க்கும் தானே தலையாய பேறாய் நிற்போன் என்றபடி .` அருளிற் பெரிய தகிலத்தில் ; வேண்டும் பொருளிற்றலையிலது போல் ` என்னும் திருவருட் பயன் காண்க . ` வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் ` எனத் தோத்திரத்தும் , ` செய்வோர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போற்செய்வன் ` எனச் சாத்திரத்தும் ஓதுதலின் . விரும்பு ஒப்பானை என்றதற்கு உயிர்களின் விருப்பத்தை ஒத்துப் பயன்விளைப்பானை என உரைப்பினும் அமையும் .

பண் :

பாடல் எண் : 3

ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரும் அறிகிலா
ஆறொப் பானை யரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம்தொழுவது ஏறு ஒப்பானும் , எல்லா உயிர்க்கும் இறைவனாகச் சிறந்து நிற்பானும் , தேவரும் அறியாநெறி ஒப்பானும் , அரத்துறைத் தலத்தை மேவிய உறுபொருளாவானுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

ஏறு ஒப்பானை என்றது பீடு ( பெருமை ) உடைமை பற்றி . இறைவேறு ஒப்பான் - எல்லா உயிர்கட்கும் தனியிறைவனாக இருப்பவன் . ஆறு - நெறி ; தன்னை அடைந்தாரைத் தூய்மைசெய்து இன்புறுத்துதல் பற்றியும் , உவகை ஊட்டுதல் பற்றியும் . ஆற்றை ( நதியை ) ஒப்பவன் என உரைப்பினும் அமையும் . தேவர் அறிகிலா என்பது முதல்வனுக்கு அடை ; ஆற்றிற்கு அன்று . ஊறு - உறுவது ; தான் என்றும் உளன் ஆயினும் அறியாமை நீங்கப்பெற்ற பின்னரே உயிர்கள் தன்னை உணர்தலின் , அவ்வுணர்வுக்குப் பின்வந்துற்ற பொருள் போல் வான் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 4

பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை யிளமதி சூடிய
அரப்பொப் பானை யரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது திருவரத்துறையை விரும்பி எழுந்தருளியவனும் பிறை சூடியவனுமாகிய பகல் ஒளியின் பரப்பையும் , இருளில் நன்மைபுரியும் வளர்மதியின் வளர்ச்சியினையும் , குறும்பையும் , அன்புகாரணமாக உண்டாகும் பாலின் சுரத்தலையும் ஒக்கும் முதல்வனையே , பிறரை அன்று .

குறிப்புரை :

பகலது பரப்பு ஒப்பானை என்க . பகல் - பகலின் கண்ணதாகிய பேரொளி . ஞாயிற்றின் ஒளியைப்போலப் பேருணர்வாய் யாங்கணும் நிறைந்தோன் என்றபடி . இரப்பு - இரத்தலால் வரும் வளர்ச்சி அல்லது ஆக்கம் ; அஃது ஒருங்கே நிகழாது முறையாய் நிகழும் . இருள்நல் நிலாவின் வளர்ச்சி ( இரப்பு ) ஒப்பானை என்க . உயிர்களது அறிவின்கண் உள்ள இருளைப் படிமுறையான் அகற்றிச் சிவஞானத்தை மேல்ஓங்கி வளரச்செய்பவன் என்றபடி . ` பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ` என்னும் ( தி .8) திருவாசகத்தின் கருத்தும் இது . பாரித்தல் - வளர்த்தல் ; ` பண்பின்மை பாரிக்கும் நோய் ` என்னும் திருக்குறள் (851) காண்க . அரப்பு - அரம்பு - குறும்பு . ( விளையாட்டு ) அரப்பு ஒப்பானை - தான் செய்யும் செயல்களை விளையாட்டுப்போல எளிதில் செய்வோனை . அரும்பு எனினுமாம் . சுரப்பு ஒப்பானை - சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சாத்திய மந்திரங்களால் வழிபடும் யோகியர்க்குக் கறந்தபோது வெளிப்படும் பால் போல வெளிப்பட்டு அருள்பவனை ; மெய்யன்பால் வழிபடும் சிவஞானிகளுக்குத் தலையீற்றுப் பசு கன்றை நினைந்த போது பாலைச் சுரக்குமாறு போல , அவர் வேண்டும் போதெல்லாம் வெளிப் பட்டருள்வன் - எனச் சாத்திரம் ஓதுமாறு அவரவர் கருத்து வகைபற்றித் தாழ்த்தும் விரைந்தும் வெளிப்படும் வகையைக் குறிப்பித்தபடி .

பண் :

பாடல் எண் : 5

நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை யரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது நெய்யும் , நெய்யிற் சுடர் போல் விளங்கும் மெய்யும் , பெருவியப்பும் போல்வானும் , தேவரும் அறியாதவனும் அரத்துறை யென்னுந் தலத்தை விரும்பிய ஒழுக்கமாவானுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

நெய் ஒத்தல் - பாலில் நெய்போல் மறைய நின்று உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுகவாங்கிக் கடைய முன்நிற்றல் , நெய்யூற்றி ஏற்றும் விளக்கில் உண்டாகும் சுடருருவம் போல்வதோர் வடிவத்தை உடையவன் . ஐ - வியப்பு ; ` ஐ வியப்பாகும் ` ( தொல் - உரி . 89 ) கை - ஒழுக்கம் ; கைஒப்பானை என்றது அறமே வடிவாகியோன் . கை ஒத்தல் - ஒழுக்கத்தோடு ஒற்றுமைப்பட்டு நிற்றல் .

பண் :

பாடல் எண் : 6

நெதியொப் பானை நெதியிற் கிழவனை
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொப் பானை யரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது நியதி ஆவானும் , நியதியின் தலைவனும் , விதியாவானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் , விச்சுவாதிளும் ஆகிய அரத்துறையென்னுந் தலத்தை மேவி உயிர்களுக்குக் கதியாயிருப்பானையே .

குறிப்புரை :

நெதி - நியதி என்றதன் திரிபு . அது பொருள்கள் காரியப்படும் நிலையில் காணப்படும் மாறுதலில்லாத ஒழுங்குமுறை ; இதனை வடநூலார் ருதம் என்பர் . நிதி என்ற பாடமும் உண்டு . நெதியின் கிழவன் - இவ்வொழுங்கை உலகத்திற்கு அமைத்து நடாத்தும் தலைவன் என்றபடி . விதி - செய்வினைப்பயன் செய்தவனையே சென்றடைதற் கேதுவாகிய ஊழ் . இதனை மேலை நாட்டார் அற ஆற்றல் (Moral Force) என்பர் . அதி - உயிர்களின் உணர்வைக் கடந்தவர் . ` உலகினை இறந்து நின்றது அவனுரு ` - ( சித்தி - சுபக்கம் . சூத் .1:49.) ` விசுவாதிகோ ருத்ரோ மஹர்ஷி :` என்பது உபநிடதம் . கதி - நெறி . உயிர்களுக்கு நெறிகளை வகுத்தவர் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 7

புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொப் பானை யரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது புனலும் , பொருந்தாதார்க்கு மின்னலும் . அனலும் போல்வானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் அரத்துறைத் தலத்துக் கனல் போன்றவனுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

புனல் ஒப்பான் - தண்ணீர் எப்பொருளையும் வளர்த்தல் போல , உயிர்தோறும் நின்று அவற்றின் அறிவை வளர்த்து வருவோன் ; ` மருவிய உயிரும் வளர்ப்போன் காண்க ` என்பது தி .8 திருவாசகம் . பொருந்தலர் தம்மை மினல் ஒப்பானை - பகைவர்க்கு இடிபோன்றவனை ; உருபு மயக்கம் . மின் என்பது இங்கு அதனோடுடன் நிகழும் இடியை உணர்த்திற்று . ` செறுநர்த் தேய்க்கும் செல்லுறழ் தடக்கை ` என்பது தி .11 திருமுருகாற்றுப்படை . அனல் - சுழன்று எரியும் தீ . இஃது இறைவன் திருமேனிக்கு உவமையாயிற்று . கனல் - மூளாத் தீ ; உயிர்தோறும் கரந்து நின்று அவற்றின் அறியாமையைத் தேய்த்து ஓங்கிவளரும் பேருணர் வாய் நிற்றல்பற்றி முதல்வனுக்கு இஃது உவமையாயிற்று . ` மூளாத் தீப் போல் உள்ளே கனன்று ` ( சுந்தரர் ) ( தி .7. ப .95. பா .1) எனும் ஆட்சி காண்க . கன்னல் எனினும் அமையும் ; இன்பப் பொருளாய் அநுபவப்படுபவன் என்பது இதன் கருத்து .

பண் :

பாடல் எண் : 8

பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொப் பானை யரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது , பொன்னும் , பொன்னின் சுடர் போன்ற மின்னலும் , அன்னையும் ஒப்பானும் , தேவர்களாலும் அறிய முடியாதவனும் , அரத்துறைத் தலத்து எழுந்தருளியிருந்து தனக்குத் தானே ஒப்பானவனுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

பொன் ஒப்பானை - ` பொன்னார் மேனியனே ` ` பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி ` ` நமோ ஹிரண்ய பாகவே ஹிரண்யவர்ணாய ஹிரண்ய ரூபாய ` என்னும் உரைகள் காண்க . அன்னை ஒப்பான் என்பது அன்னொப்பான் எனவிகாரப் பட்டு . நின்றது . தன் ஒப்பான் - தனக்குப் பிறர் ஒப்பாவதின்றித் தானே ஒப்பாக உள்ளவன் . ` நின்னாவார் பிறரின்றி நீயே யானாய் ` என்று பின்னும் அருளிச்செய்வர் .

பண் :

பாடல் எண் : 9

காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும ரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம்தொழுவது , காழித்தலத்துக் கடவுளும் , பெருமையை உடைய விடையூரும் நித்தத் திருமேனி உள்ளவரும் , பிறரால் வல்லோரும் என்று கூறப்படுவோராகிய திருமால் பிரமனுக்கும் , ஒடுங்கும் தானமாக உள்ளவருமாகிய திருஅரத்துறை அடிகளையே .

குறிப்புரை :

` காழியான் , விடையூரும் மெய்வாழியான் , ஆழியான் பிரமற்கும் ஊழியான் என்னும் மூன்று தொடர்களும் சிவபிரான் என்றுமுள்ளவன் என்னும் மறைகளின் துணிபை வலியுறுத்துவன . காழி - இறைவனுக்கு அருணிலைத் தானமாக அமைந்து பன்னிரண்டு ஊழிகளில் அழியாது நிலைபெற்றுப் பன்னிரு பெயர் எய்திய பதி . விடை - அறவிடை ; அஃது ஊழிக்காலத்துத்தான் அழியாதிருத்தற் பொருட்டு முதல்வனைச் சார்ந்து அவன்றன் ஆணையால் அவனைத் தாங்கும் ஊர்தியாகி நிலைபேறு உடையதாயிற்று . திருமாலையும் பிரமனையும் காப்புக் கடவுளும் படைப்புக் கடவுளுமாக உடைமை பற்றி ஊழியைக் கடக்க வல்லோரும் ஆவார் என்பார் . மெய்வாழியான் - நிலைபேறுள்ள அநாதி முத்த சித்து உருவினன் . என்றின்னவர் - என்ற இவர் என்னும் பொருள்பட நின்றது .

பண் :

பாடல் எண் : 10

கலையொப் பானைக் கற்றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை யரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பொழிப்புரை :

நாம் தொழுவது கலையும் , கற்றார்க்கமுதும் , மலையும் போல்வானும் , மலையெடுக்கலுற்ற இராவணனை மணிமுடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும் , அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே .

குறிப்புரை :

கலையொப்பான் - கலிப்பது கலை ; கலித்தல் - நீக்குதல் , செலுத்துதல் ; மக்களது அறியாமையை நீக்கி , அவர் தம் அறிவை நல்லதன்கண் உய்ப்பது கலை . அதுபோல முதல்வன் உயிர்களின் அகவிருள் நீக்கி அவற்றின் அறிவைப் போகத்தினும் வீட்டினும் செலுத்துபவன் . ஓர் அமுது - ஒப்பற்ற அமுது ; கற்றாரால் தனக்கு உவமையில்லாதது எனத் துணியப்படும் அமுது . ஓர்த்து உணரப்படும் அமுது என வினைத்தொகையாக்கினும் அமையும் . மலையொப்பானை - உலகிற்கு அச்சாக , எல்லா வளங்களையும் தன்பாற் கொண்டு துளக்கமின்றி இருப்பது மலை . முதல்வனும் இத்தன்மையன் என்றபடி . நிலையொப்பானை - முதல்வன் கடல் போன்று அளக்கவாராத கடந்த நிலையினன் ஆயினும், அது நீந்தவல்லார்க்கு அலைத்து ஆடுதற்குக் கைவந்து நின்றாற்போலத் தானும் அன்பர்களுக்கு நிலைத்துநின்று இன்புறும்படி ஆனந்தத்தை மிகக்கொடுப்பவன் என்பது கருத்து ./n இத்திருப்பதிகம் முதல்வன் வணக்கத்திற்கு உரியன் என்னும் முதன்மைக் கருத்தைப் பொற்சரடுபோல் பாடல்தோறும் ஊடுருவப் பெற்று, பல்வேறு அரிய இனிய உவமைகளால் அவன்றன் குறைவிலா மங்கலக் குணங்களைக் கோவை செய்து ஞானத்தால் தொழுவார்க்குத் தரப்பட்ட மணிமாலையாகத் திகழ்தல் அறியத்தக்கது.

பண் :

பாடல் எண் : 1

வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

கந்தையுடை அணிந்தானும் , மதிசூடியும் , வானவர்க்கு உயர்ந்தானும் , திருவண்ணாமலை வடிவினனும் , விருப்பம் உடையானும் , இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் அட்டானும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .

குறிப்புரை :

நினைத்தால் வீடு எய்துவிப்பது அண்ணாமலை என்னும் திருத்தலம் . பிரம விட்டுணுக்களால் முடியும் அடியும் அணுக முடியாதபடி நிமிர்ந்தெழுந்த சோதிப்பிழம்பே மலையாக உருக் கொண்டு உள்ளது ஆதலின் , அத்திருவுரு அண்ணாமலை ( அணுக வொண்ணாத மலை ) என வழங்கி வருவது . இத் திருப்பதிகத்தில் பாடல் தோறும் திருஅண்ணாமலையனை மறந்துய்வனோ ( மறவேன் ) என்றருள்கின்றார் அப்பர் அடிகள் . திரிபுரம் எரித்த செய்தியும் பாடல் தோறும் வருகின்றது . வட்டு - சிறு உடை , அதை அணிந்தவன் , வட்டன் . வானவர் சிட்டன் - வானவரால் பெரியோன் என உணர்ந்து தொழப்படுவோன் . சிட்டன் - சிரேஷ்டன் , உயர்ச்சியுடையோன் . இட்டம் உடையோன் இட்டன் ; முதல்வன் உயிர்களுக்குச் சிவத்துவத்தை வழங்கும் விருப்பம் உடையான்ஆதல்பற்றிஇட்டன்எனப்பட்டான் ; இட்டம் - விருப்பம் . இகழ்ந்தார் - திரிபுரத்தசுரர்கள் ( கமலாக்கன் , தாரகாக்கன் , வித்யுன்மாலி என்னும் மூவர் ) இம்மூவரும் முன்னர்ச் சிவ வழிபாடு உடையராய் இருந்து பின் நாராயணன் நாரதர் என்போரால் புத்தமதம் அறிவுறுக்கப்பட்டுச் சிவவழிபாட்டை இகழ்ந்து கைவிட்டனர் . அவ் விகழ்ச்சியே அவர்தம் திரியும் வலிய முப்புரங்களை அழித்த தென்க . புரம் - கோட்டை , இக் காலத்துப் போர் விமானங்கள் பல வற்றைத் தாங்கிப் பறக்கும் பெருவிமானந் தாங்கிக் கப்பல் 1 போன்றது . ` தொழுவார்க்கே அருளுவன் சிவபெருமான் ` என்னும் உண்மையை விளக்குவது திருவண்ணாமலை வரலாறு . சிவ வழிபாடே ஒருவர்க்குப் பகையை வெல்லும் வலியைத் தருவது . அதனை இகழின் தம்வலி இழப்பர் என்னும் உண்மையை உணர்த்துவது திரிபுரம் எரித்த வரலாறு . அட்டன் - அட்டவன் , அடுதலைச் செய்தவன் . சுவாமிகள் ` மறந்து உய்வனோ ?` எனத் தம்மேல் வைத்துக் கூறினாரேனும் , ` யாரும் மறந்து உய்தல் இல்லை ; யாவரும் திருவண்ணாமலையனை மறவற்க ` என்பதே கருத்தாகக் கொள்க . ` ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே கண்டோம் என்றுந் தீபற ! ஒன்றும் பெருமிகை உந்தீபற ` ` உய்ய வல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு எய்யவல் லானுக்கே உந்தீபற ` என்பவற்றை ஒப்புநோக்குக .

பண் :

பாடல் எண் : 2

வான னைம்மதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

வானத்துள்ளவனும் , பிறைசூடிய பேராற்றல் உடையவனும் , தேனென இனிப்பவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும் , பன்றிக்கொம்பை அணிந்தவனும் , இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் எய்த விடையேறுடையவனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

வானன் - பரமஆகாசம் எனப்படும் சிவலோகத்துள்ளான் ; இதுவே உயிர்களின் உள்ளங்களில் சிற்றம்பலமாக உள்ளது . பொதுவாக ஆகாயத்தை வடிவாகக் கொண்டவன் எனினும் அமையும் . மைந்தன் - வலியன் . தேனன் - தேன் போலும் இனியன் . ஏனன் - ஏனத்தின் கோட்டை மார்பில் அணிந்தவன் . ஏனம் - திருமாலாகிய ஆதிவராகம் . ஆனன் - ஆனை ( விடையை ) ஊர்தியாக உடையவன் .

பண் :

பாடல் எண் : 3

மத்த னைம்மத யானையு ரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைம்முனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

ஊமத்தமலர் அணிந்தவனும் , யானைத் தோலை உரித்துப் போர்த்து எம் சித்தத்துறைபவனும் , திருஅண்ணாமலைத் தலத்துக்குடையவனும் , முத்தனும் , முனிந்தார் புரங்கள் மூன்றையும் எரியுண்ணச்செய்த அத்தனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

மத்தன் - ஊமத்த மலர் அணிந்தவன் . சித்தன் - சிந்தையை கோயிலாகக் கொண்டவன் . முத்தன் - அநாதி முத்தன் ; இயல்பாகவே பாசங்களின் நீங்கியோன் . ` வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் ` என்றபடி . முனிந்தார் - ஒட்டிவாழ வெறுத்த வராய திரிபுரத்தசுரர்கள் . அத்தன் - தந்தையாயிருப்பவன் . ` அத்தா வுனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ` என்றார் ( தி .7. ப .1. பா .1) சுந்தரரும் .

பண் :

பாடல் எண் : 4

காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

காற்றாகியுள்ளவனும் , கலக்குகின்ற வினைகள் விட்டு நீங்கத் தோற்றம்புரிபவனும் , திருவண்ணாமலைத் தலத்துக் குடையவனும் , உலகினை நன்றுந் தீதுமாய்க் கூறுசெய்து வகுத்தவனும் , கொடியவர் புரங்கள் மூன்றையும் எய்த வீரநெறி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

காற்றன் - ( அட்ட மூர்த்தங்களில் காற்றும் ஒன்றாதலின் ) காற்று வடிவானவன் . ` காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி ` என்றார் திருத்தாண்டகத்தும் . கலக்கும் - உயிர்களைத் துன்புறுத்தும் . தேற்றன் - தெளிவிப்பவன் . பழவினைகளைப் பாறுவித்துத் தன்னடி யார்களைத் தெளிவிப்பவன் என்க . கூற்றன் - கூறுசெய்பவன் . ஆற்றன் - சமயநெறிகளாயிருப்பவன் . நீதிநெறியே வடிவாக உடையன் எனலுமாம் . ( ஆறு - நெறி )

பண் :

பாடல் எண் : 5

மின்ன னைவினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

மின் ஒளியுருவாயவனும் , வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்ட அழகியவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும் , என்னை உடையவனும் , இகழ்ந்தவர் புரங்கள் மூன்றையும் எய்த அத்தன்மையனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

மின்னன் - மின்ஒளி போன்ற ஒளிவடிவினன் . தென்னன் - அழகியவன் ; தென்னாடுடையவன் எனினும் அமையும் . என்னனை - என்னை உடையவனை . அன்னனை - அத்தன்மை யோனை , திரிபுரங்களை எரிக்குந் தன்மையோன் . அத்தன்மையாவது வேதத்திற் கூறப்படும் தெய்வம் எல்லாம் கருவிகளாகவே அமையத் தான் ஒருவனே வினைமுதல் ( கருத்தா ) ஆதலும் , கருவிகளால் அன்றிச் சங்கற்ப ஆற்றலால் செயல் நிகழ்த்தலும் சார்ந்தாரைக் காத்தலும் முதலியவற்றால் விளங்கும் இறைமைக் குணம் .

பண் :

பாடல் எண் : 6

மன்ற னைம்மதி யாதவன் வேள்விமேல்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்
கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

ஐந்துவகை மன்றங்களில் ( சபைகளில் ) எழுந்தருளியிருப்பவனும் , மதியாத தக்கன் வேள்வியின்மேல் உருத்துச் சென்றவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும் , புலனைந்தும் வென்ற வென்றி உடையவனும் , சினந்தார் புரங்கள் மூன்றையும் கொன்றவனும் ஆகிய பெருமானைக் கொடியவனாகிய அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

மன்றன் - அம்பலத்தே நடமாடுபவன் . மதியாதவன் - தன்னை முதல்வன் என்று மதிக்க அறியாத தக்கன் . வேள்வி மேல் சென்றன் - அவன் இயற்றிய வேள்வியை அழிக்கச்சென்றவன் . வென்றன் - வென்றவன் ; புலனைந்தும் என்னும் அதற்குரிய செயப்படு பொருள் அவாய்நிலையான் பெறப்பட்டது . ( நேரிழையைக் கலந்து நின்றே புலனைந்தும் வென்றானை என்பர் தி .6 திருத்தாண்டகத்து ) கொன்றன் - கொன்றவன் , அழித்தவன் .

பண் :

பாடல் எண் : 7

வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

வீரச்செயல்களைப் புரிந்தவனும் , விடம் உண்டவனும் , விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும் , திருவண்ணா மலை வடிவினனும் , மருத நிலத்தை இடங்கொண்டவனும் , உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

வீரன் - வீரத்திற்கு உறைவிடமானவன் . இறைவன் வீரச்செயல்களை எட்டாகத் தொகுத்து வழங்கும் வழக்குக் காண்க . உண்டனை - உண்டவனை . விண்ணவர் தீரன் - விண்ணவரை அச்சம் தீர்த்து ஆட்கொள்ளும் திண்ணியன் . ஊரன் - மாயோன் முதலிய தெய்வங்கள் போல ஒவ்வொரு நிலத்திற்கே உரிய கருப்பொருள் ஆதலின்றி எந்நிலத்துக்கும் உரிமை உடைமையின் , மருத நிலத்தை இடங்கொண்டோன் ; திருநின்றியூர் , திருப்புன்கூர் முதலாக ஊர் என முடியும் தலங்களில் உறைவோன் எனினும் அமையும் . ஆரன் - திரு ஆத்திமாலையை அணிந்தவன் ; ஆர் - ஆத்தி . ` நாறும் பூவும் நம்பற் காம் ; நாறாப் பூவும் நம்பற்காம் ` என்ப ஆகலின் அடியார்க்கு எளிதில் கிடைக்கும் ஊமத்தை , ஆத்தி முதலிய ஏற்றுச் சூடி அவர்க்கு அருள் செய்பவன் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 8

கருவி னைக்கடல் வாய்விட முண்டவெம்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

கருவாயிருந்து காப்பவனும் , கடலெழு நஞ்சு உண்ட எம்திருவாகியவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , உருவத்திருமேனி உடையவனும் உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , அருவத்திருமேனி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

கருவினை - உலகெலாமாகி வேறாய் உடனுமாய் நிற்போன் ஆகலின் , உயிர்கள் தோன்றுங்கால் அவ்வக் கருவின் கண் அவ்வவ்வுயிர்களை அவ்வவற்றின் வினைக்கீடாக விழச்செய்து அவற்றின் உடம்பையும் கரணங்களையும் ஆண்டைக்குப் பொருந்தும் நுகர்ச்சிகளையும் தந்து வளர்ப்போன் என முதல்வனைக் குறிப்பித் தருளினார் . இனி உலக முதற்காரணமாகிய மாயைக்குத்தான் தாரகமாய் நின்று தனது சத்திசங்கற்பத்தால் உலகைத் தோற்றுவித்தல்பற்றி முதல்வனைக் கரு என்றார் எனினும் அமையும் . ` ஓங்காரத்தொருவன் காண் . உலகுக் கெல்லாம் வித்தவன்காண் ` ( தி . 6. ப . 48. பா .4.) என சுவாமிகள் பின் அருளிச்செய்தல் காண்க .` தத் ஆத்மாநம் அகுருத ` ( அதுதன்னைத் தானே ஆக்கியது ) என்னும் தைத்திரீய உரைக்கும் இதுவே கருத்து என்க . கடல்வாய்விடம் - கடலாகிய இடத்து எழுந்த ஆலகாலம் ; வாய் - இடம் . ` திருநீலகண்டம் ` தன்னை எண்ணுவார்க்குத் துயர் அனைத்தும் நீக்கி வீடு பயப்பிப்பதாதலின் , அத்திரு அடையாளமுள்ள முதல்வன் திருவுரு மெய்யுணர்ந்தோரால் விரும்பப்படுவது என்னும் கருத்தால் ` கடல்வாய்விடம் உண்ட எம் திருவினை ` என்றார் . ` ஓம் நீல கண்டாய நம ` என்னும் எட்டெழுத்தை நவில்வார் மீளப்பிறவார் எனக் காஞ்சிப் புராணம் ( சிவபுண்ணியப்படலம் ) கூறுகிறது . திருநீல கண்டத் திருப்பதிகம் ஒருவரைப் பிறந்த பிறவியிற் பேணி முதல்வன் கழல் அடையச்செய்யும் என அதன் திருக்கடைக் காப்புக் குறித்தல் காண்க . அருவம் , அருவுருவம் , உருவம் என்னும் நிலைகளைக் கடந்த முதல்வன் உயிர்கள் தன்னை உணர்ந்து உய்யக் கருதி அத்திரு மேனிகளை மேற்கொண்டான் ஆகலின் , உருவினை எனவும் அரு வினை எனவும் அருளிச்செய்தார் . உரு - மகேச்சுரத் திருவுருவங்கள் ; அரு - யோகியர் பிரணவம் , பிராசாதம் முதலிய மந்திரங்களின் துணையால் அகத்தே காணும் ஒளியுரு . அருவுரு - ஐம்பெரு மனுக்களாலும் , திருவைந்தெழுத்தாலும் அமையும் மந்திரத் திருமேனி .

பண் :

பாடல் எண் : 9

அருத்த னையர வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

பொருள் வடிவாயுள்ளவனும் , ஐந்தலையுடைய நாகத்தைத் திருந்த அணிந்தவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , தலைவனானவனும் , தீக்குணங்களைக் கடியாதார் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , உயிர்களுக்கு வினைப்பயனைப் பிறழாது நுகர்விப் போனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

அருத்தன் - நாற்பேறுகளின் இரண்டாவது பேறாகிய பொருளாயிருப்பவன் . சொற்பொருளாயிருப்பவன் எனினும் மெய்ப் பொருள் எனப் பேசப்படுபவன் எனினும் பொருந்தும் . ` கற்றநூற் கருத்தும்நீ அருத்தம் இன்பம் என்றிவை முற்றும்நீ ` ( தி .3. ப .52. பா .3). ` பொன்னானாய் மணியானாய் போகமானாய் பூமிமேல் புகழ்தக்க பொருளே `. ( அப்பர் ) என்னும் திருமுறை உரைகள் காண்க . அரவைந் தலை நாகம் - முன் பின்னாகத்தொக்க இருபெயரொட்டு . ஐந்தலை நாகமாகிய அரவு என்க . திருத்தன் - திருந்த அணிந்தவன் . கருத்தன் - தலைவன் , தன்வயம் உடையோன் . ` சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர் வின்றி நின்ற சங்காரத்தின் வழியல்லது சுதந்திரமின்றி நிற்றலான் , இனிச் சங்காரமே முதல் ` என்றது ( சிவஞான போதம் . 1. 3.) கடியார் - கடிதல் நீக்குதல் , தீமையைக் கடிந்து ஒழுகாத அசுரர் என்றபடி . அருத்தன் - அருத்துவோன் , நுகர்விப்போன் ( வினைப்பயனை என்பது அவாய் நிலையான் வந்தது ). புரமூன்றெய்த அருத்தன் என அடுத்து நின்றமையின் . எய்தது வினைப்பயன் நுகர்வித்தற்கு எனக்கொள்க . சுதன்மன் , சுபுத்தி , சுசீலன் என்போரைக் கொண்டது அந்நியதிபற்றி .

பண் :

பாடல் எண் : 10

அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

இராவணன் அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றிய திருத்தமானவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , இரக்கம் கொண்டு என் உடலில் உற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலுங் கூடுமே? .

குறிப்புரை :

அரக்கன் - இராவணன் . அலற - வாய்விட்டு அரற்றும்படி . திருத்தன் - மாறுபடாதவன் , செய்யன் , திருந்தும்படி செய்தவன் எனினும் பொருந்தும் ; என்னை ? செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றான் அரக்கன் ஆகலின் . இரக்கமாய் - இரங்கியருளி . உடலுறு நோய் ஒன்றேயாயினும் அதனால் பெற்ற வருத்தம் பல வகைப் பட்டமையின் நோய்களை என்றார் . துரக்கன் - துரத்தியவன் . உடலுறு நோய்களைத் - துரக்கனை என்பது பாடமாயின் , உடலில் உற்ற சூலைநோயைக் களைந்த உரக்கனை எனப் பிரிக்க . உரக்கன் - வலிமையுள்ளோன் ; தன்நிலை திரியாதவன் . என் உடல் உறு நோயை இரக்கமாய்க் களைந்த என்றமையின் நோய் பிறநெறி சார்ந்தமை பற்றி உற்றதென்பதும் , அதனைச் சிவபிரான் இரக்கம் ( கருணை ) காரணமாகவே அதன் மூலத்தோடு களைந்தருளினான் என்பதும் பெறப்படுதல் காண்க . ` மந்திரம் நமச்சிவாய ஆக நீறணியப் பெற்றால் - வெந்தறும் வினையும்நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே ` என்ற இடத்தும் நோய் அதன் காரணமாகிய வினையுடன் ஒருங்கே வெந்து அறும் என்றமை காண்க .

பண் :

பாடல் எண் : 1

பட்டி ஏறுகந் தேறிப் பலவி ( ல் ) லம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்தியண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.

பொழிப்புரை :

அடங்காத ஏற்றினை அடக்கி விடையாக் கொண்டு உகந்து ஏறிப் பல மனைகள் தோறும் விருப்பத்தோடு சென்று இரந்து உண்டு அலைந்து சுழலும் , அட்டமூர்த்தியின் திருவுருவாகிய திருஅண்ணாமலையைக் கைகளால் தொழ வினைகள் கெட்டு ஒழியும் ; என்றும் கேடு இல்லை ; காண்பீராக .

குறிப்புரை :

அண்ணாமலையை நினைந்து தொழ உண்டாம் பயன் கூறுகிறது இத்திருப்பதிகம் . பட்டி - அலைந்து திரிந்து கள்ளமேய்ச்சல் மேய்கின்ற மாட்டைப் பட்டிமாடு என்பர் . ஊர் சுற்றித் தன் விருப்பம் போல் திரிவாரையும் பட்டி என்பர் . ` அகப் பட்டியாவார் ` ( குறள் ) ` நோதக்க செய்யும் சிறுபட்டி ` ( கலித்தொகை . 51:1) திருமால் கண்ணனாய் ஆயர்பாடியில் சுற்றித் திரிந்து வெண்ணெய் திருடி உண்டவராதலால் பட்டி என்றார் . அறவிடை எனினும் , அறத்தின் திறம் உயிர்களால் உணர்தல் கூடாமையின் பட்டி என்றார் எனக்கொள்க . அவரே இடபமாய்த் தாங்குதலின் பட்டி ஏறு என்றார் . பலஇல்லம் - தாருகாவனத்திலிருந்த ரிஷிபத்தினியர் வீடுகள் . இட்டமாக - விருப்பத்துடனே . இரந்துண்டல் - பிச்சையேற்றுண்டல் . உழிதரும் - திரியும் . அட்ட மூர்த்தி - எட்டுப்பொருள்களை வடிவமாக உடையோன் . மூர்த்தி - வடிவு , அதனை உடையது மூர்த்தம் . ` இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எரியும் காற்றுமாகி அரு நிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாயமாய் அட்டமூர்த்தியாகி ` ( தி .6. ப .94. பா .1) அட்ட மூர்த்தங்களை உணர்க . திருமால் பிரமன் தேடுதற்கரிய சோதி வடிவாய் எழுந்தருளிய பெருமானாதலின் அட்டமூர்த்தங்களில் ஒன்றும் அத்தன்மையை நினைந்து கூறினார் . வினைகெட்டுப்போம் நமக்குக் கேடு இல்லை எனக் கூட்டுக . கேடு - துன்பம் . காண்மின் என்பது உறுதியுரை , நேரிற்காணுங்கள் என்னும் பொருள் தருதலின் .

பண் :

பாடல் எண் : 2

பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்குமண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.

பொழிப்புரை :

மனைகளிலிடும் பலிக்கெனப் பெற்றம் ஏறும் பெருமான் , தனக்குச் சுற்றமாமெனும் உமையம்மையோடும் வருவார் . துயர்தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைதொழுவார் . நல்ல தவத்தோடு ஞானநெறியில் பிறழாது இருக்கப்பெறுவர் .

குறிப்புரை :

பெய்பலிக்குப் பெற்றம் ஏறுவர் என்று புராணங்களால் கூறப்படும் பெருமான் தொல்புகழாளொடும் அதிட்டித்து ( இடமாகக் கொண்டு ) நின்று அற்றம் தீர்க்கும் அண்ணாமலை என்க . தீர்க்கும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது . முதல்வனுக்கு மூர்த்தமும் இடமே ஆகலின் . சுற்றமாமிகுதல் - வாழ்க்கைத்துணை எனும்படி மேம்படுதல் . தொல்புகழ் - ` சர்வம் சக்திமயம் ஜகத் ` ` அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை எல்லாம் ` ( சித்தி . சுபக்கம் . 69 ) என உணர்த்தப்படும் பொருள் சேர்புகழ் . ( தி .1. ப .10. பா .11) ` உமையாளொடும் உடனாகிய ஒருவன் - பெண்ணாகிய பெருமான் மலை ` என அருளிச்செய்ததும் காண்க . அற்றம் - துன்பம் . கைதொழ - நற்றவத்தொடு ஞானத் திருப்பரே - என்றது கையால் தொழுவோர் சீவன்முத்தராயின் சரியை கிரியை யோகங்களோடு கூடிய ஞானநெறிக்கண் பிறழாது நிற்கப் பெறுவர் எனவும் , ஏனையராயின் , நற்றவத்தினால் ஞானத்தைத் தலைப்படுவர் எனவும் இரட்டுறமொழிய நின்றது .

பண் :

பாடல் எண் : 3

பல்லி லோடுகை யேந்திப் பலவி ( ல் ) லம்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்குமண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை யடையுமே.

பொழிப்புரை :

பல்லில்லாத மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல மனைகளுக்கும் விரைந்து சென்று பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை அவர்தம் உள்ளங்களோடு கவர்வாராகிய சிவபிரானுடைய அடியார் அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ , நல்லவாயின யாவும் நம்மைத் தாமே வந்தடையும் .

குறிப்புரை :

பல்லில்லோடு - பற்கள் உதிர்ந்த மண்டையோடு . ஒல்லை - விரைவு . உணங்கல் - உலரவைத்த பண்டங்களாகிய உணவுப் பொருள்கள் . கவர்வார் - முனிவர்தம் மனைவியரை உணவு வேண்டும் எனக்கேட்டு , அவர்தம் உள்ளங்களையும் அணிகலன்களையும் அவரறியாமே கவர்ந்தவர் . அல்லல் - துன்பம் . நல்லவாயின - நன்மைகள் எல்லாம் . நம்மை அடையும் - நாம் முயல்வதின்றித் தாமே வந்து அடையும் ; முதல்வனைத் தொழும் நம்மைத் தொழுதல் காரணமாக .

பண் :

பாடல் எண் : 4

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.

பொழிப்புரை :

பாடிச்சென்று பலிக்கென்று நின்ற பெருமான் ஓடிப் போய்விட்டனராதலால் செய்வது இனி என்னை ? ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ நம் மேலை ( பழைய ) வினைகள் ஓடிப்போகும் . (` ஓடிப் போயினர் செய்வதொன்றென் கொலோ ` எனப் பேசநின்ற பெருமானது திருவண்ணாமலை - என இசையெச்சம் கொண்டு முடிக்க )

குறிப்புரை :

பாடிச்சென்று - பிச்சையேற்றற்குப் பாடல்களைப் பாடிக் கொண்டு சென்று . பலிக்கு - பிச்சைக்கு . ஓடிப்போயினர் - பிச்சைக்கு என்று வந்தவர் ( உள்ளங்களைக் கவர்ந்துகொண்டு ) ஓடிப்போயினார் . முதல் இரண்டடிகள் தாருகாவனத்துப் பெண்டிர் கூற்று . இவ்வாறு கூறும்படி ஆடல்புரிந்த பெருமானது திருவண்ணாமலையை ஆடியும் பாடியும் கையால் தொழ என இயைக்க .

பண் :

பாடல் எண் : 5

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.

பொழிப்புரை :

தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக ; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட் கொள்வர் ; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும் .

குறிப்புரை :

தேடிச்சென்று - அவன் இருக்குமிடமாகிய அண்ணா மலையைத் தேடிப்போய் . திருந்தடி - மாறுதலின்றிச் செம்பொருளாக உள்ள திருவடிகள் . ஏத்துமின் - புகழ்ந்து போற்றுங்கள் . நாடிவந்து - நம்மைத் தேடிவந்து . நம்மையும் - உம்மை இழிவு சிறப்பு .

பண் :

பாடல் எண் : 6

கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்தியண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன் காகுமே.

பொழிப்புரை :

கரும்பினிடைக் கட்டி ஒக்குமாறு துணித்தும் வெட்டியும் வீணை வகைகளோடு பாடும் விகிர்தனாகிய அட்ட மூர்த்தியும் திருவண்ணாமலை மேவிய நட்டமாடும் பெருமானுமாகிய இறைவனை நண்ணினால் நன்றே ஆகும் .

குறிப்புரை :

கரும்பினிடைக் கட்டியை ஒக்கும் விகிர்தன் எனக் கூட்டினும் அமையும் . துணிவெட்டி - வீணையை மீட்டும்போது ஓசையைத் துணித்தும் நரம்பை வெட்டியும் . வீணைகள் பாடும் - வீணை வாச்சிய வகைகளோடு தானும் பாடுகின்ற . விகிர்தன் - மாறுபாடு உடையவன் ; போக , யோக , வேகம் எனப்படும் ஒன்றொடு ஒன்று ஒவ்வா வேடம் தான் ஒருவனே தரித்தவன் . நட்டமாடியை நண்ண நன்கு ஆகும் என்க . நன்கு - நன்மை .

பண் :

பாடல் எண் : 7

கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னனண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

பொழிப்புரை :

சேர்த்துக் கட்டிய கொண்டையரும் , வேடம் முன் கொண்டவரும் தாளத்திற்கேற்ப நட்டங்கள் ஆடுபவரும் ஆணிப் பொன் போன்றவரும் ஆகிய பரமனார் திருவண்ணாமலையைக் கைகளால் தொழுதால் நம்மிடம் வருதற்குப் பேணி நின்ற பெரு வினைகள் போகும் .

குறிப்புரை :

கோணிக்கொண்டை - சேர்த்துக்கட்டிய சடைக் கொண்டை . வேடம் முன்கொண்டவர் - முன்னர்ப் பலபல வடிவங்களோடு விளங்கியவர் . பாணி நட்டங்கள் - தாளம் இயைந்த பரதவேறுபாடுகள் . ஆணிப்பொன் - மாற்றுரைத்துப் பார்ப்பதற்கு மாதிரியாக வைத்திருக்கும் சுத்தமான பொன் , இங்கே பெருமானை ஆணிப்பொன் என்றார் . ` ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற தாணுவை ` ( தி .5 ப .2. பா .4) என்றார் முன்னும் . பேணிநின்ற - நம்மைக் குறித்து வருகின்ற . முதல் இரண்டடிகளுக்கு நாணத்தால் வளைந்து முன்னர்ப் பெண்டிர் வேடத்தைக் கொண்டவராகிய திருமால் உடன்வரப் பாணியோடு கூடிய நட்டங்கள் ஆடும் பரமனார் என உரைப்பினும் அமையும் . கொண்டையர் வேடம் - மோகினி நிலை . திருமால் மோகினியாக வரத்தாம் பிட்சாடனராகச் சென்றார் என்பது புராணம் .

பண் :

பாடல் எண் : 8

கண்டந் தான்கறுத் தான்கால னாருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்குமண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.

பொழிப்புரை :

திருநீலகண்டரும் , கூற்றுவன் உயிரைப் பண்டு கால் கொண்டு பாய்ந்த பரமனாரும் ஆகிய பெருமானுக்குரிய அண்டமுற ஓங்கி நிமிர்ந்த திருவண்ணாமலையைக் கைகளாற்றொழுதால் நம் மேலை ( பழைய ) வினைகள் நம்மைவிட்டு நீங்கும் .

குறிப்புரை :

காலனார் - எனப் பிரிப்பினும் அமையும் . பன்மை விகுதி இழிவு குறித்து நின்றது .

பண் :

பாடல் எண் : 9

முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றனண் ணாமலை
சிந்தி யாவெழு வார்வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே.

பொழிப்புரை :

முந்துறச்சென்று , மாலைச்செவ்வானன்ன மேனி உடையானுடைய திருவண்ணாமலையை மூன்று பொழுதும் வணங்குவீர்களாக ; அத்திருவண்ணாமலையைச் சிந்தித்தபடி துயிலெழுவார் வினைகளை , நறுமணமுடைய மலர்களைச் சூடும் தலைவனாகிய பெருமான் தீர்ப்பான் .

குறிப்புரை :

முந்திச்சென்று - முற்படச்சென்று . விரைந்து இன்றே போய் என்றபடி . முப்போதும் - மூன்றுகாலத்தும் . அந்தி வாயொளி யான் - அந்திக் காலத்தே தோன்றும் செவ்வொளி வண்ணத்தான் . ` செவ்வானன்னமேனி ` ( கடவுள் வாழ்த்து ) சிந்தியா - மனத்தால் சிந்தியா நின்று . எழுவார் - துயிலெழுவார் . கந்தமாமலர் - மணமுள்ள சிறந்த மலர் . கருத்தன் - எல்லாவற்றிற்கும் கருத்தாய் விளங்குபவன் .

பண் :

பாடல் எண் : 10

மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையு நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பினண் ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.

பொழிப்புரை :

பிரமனும் திருமாலும் காண்கிலாதவனும் , எங்கும் நிறைகின்ற தன்மையுள் நின்று அருள் செய்தவனுமாகிய பெருமான் உறையும் மாண்பினை உடைய திருவண்ணாமலையைக் கைகளாற் றொழுதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் கெடும் .

குறிப்புரை :

மறையினான் - நான்குவேதங்களைஓதும் தொழில் பூண்ட பிரமன் . நிறையும் நீர்மை - எங்கும் நிறைந்த தன்மை ` இங்குற்றேனென்று லிங்கத்தே தோன்றினான் ` என்பர் பின்னும் . பறையும் - கெடும் .

பண் :

பாடல் எண் : 1

எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்தொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்ச லென்னுமா ரூரனே.

பொழிப்புரை :

மூன்று பொழுதினும் பிரமன் தொழ நின்றவனும் , புகழ்ந்து போற்றத்தக்க செம்பொன்னின் வண்ணமேனி உடையவனும் , உயிர் உடம்பைவிட்டு நீங்கும் அப்போதைக்கு அஞ்சல் என்று அபயங் கொடுப்பவனுமாகிய சிவபெருமானை எப்போதும் சிறுபொழுதும் நீர் மறவாது இருக்க . ( சே - போதும் எனப்பிரித்து விடையின்மீது இவர்ந்து வரும் எனினும் அமையும் )

குறிப்புரை :

எப்போதும் - இரவு பகல் எந்தநேரத்தும் , துன்பக்காலத்தேயன்றி இன்பக்காலத்தும் எனலுமாம் . இறையும் - கணப்போதும் . முப்போதும் - காலம் மூன்றினும் . செப்போதும் பொன் - சிவந்த பொன் , சிவப்பு செப்பு என மருவிற்று . செம்பொன் மேனியன் என்றபடி . அப்போதைக்கு - இயமன் கால பாசத்தை வீசியெறிந்து தன் அன்பரை அழைக்கும் அப்போதின் கண் . அஞ்சல் என்னும் - ( அலமந்தபோது ) அஞ்சவேண்டா என்று கூறும் .

பண் :

பாடல் எண் : 2

சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்
அடைகி லாஅர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போலிடு காடரா ரூரரே.

பொழிப்புரை :

மருங்கில்மட்டுமின்றிச் சடையின்மேலும் ஒரு தையலை வைத்தவரும் , அரவை அரையிற் கட்டியவரும் , இடுகாடரும் ஆரூரரும் ஆகியவர் வேற்படையொத்த பெரிய கண்ணை உடைய உமையொரு பாகமாகத் தோன்றி அருள் புரிவர் .

குறிப்புரை :

ஓர் - ஒர் எனக் குறுகியது . ஒர் தையல் - கங்கை . அடைகிலா அரவு - அடங்கி நடக்கமாட்டாத அரவு . தடம் - பெரிய . போல் - ஒப்பில் போலி .

பண் :

பாடல் எண் : 3

விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர்க் கருளுமா ரூரரே.

பொழிப்புரை :

வெண்தலையே இரக்கும் கலனாகக் கொண்டு வீடுகள்தோறும் பலிதேரும் இளமையுடையவரும் , துண்டாகிய வெள்ளிய பிறை முடிவைத்த இறையவரும் , தேவர்களுக்கு அருளும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .

குறிப்புரை :

விண்ட - தோல் தசை நரம்பு முதலியவை நீங்கிய . குழகன் - இளமையுடையவன் . துண்டம் - இருமுனையும் ஒட்டி முழுமையாகாத ஒரு கலைப்பிறை . அண்டவாணர் - தேவர்கள் . வாணர் - வாழ்நர் என்பதன் மரூஉ .

பண் :

பாடல் எண் : 4

விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை
அடைவர் போலரங் காகவா ரூரரே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் , விடையும் ஏறுவர் ; வெண் தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார் ; உடையாகச் சீரையைக் கொண்டவர் . உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர் .

குறிப்புரை :

சீரை - கிழிந்த சீலை அல்லது மரவுரி .

பண் :

பாடல் எண் : 5

துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையொர் பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட் சடையில் திசைமுழு
தளக்குஞ் சிந்தையர் போலுமா ரூரரே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் , துளையுள்ள துதிக்கை உடைய யானையின் உரித்த தோலைப் போர்த்தவர் ; வளையணிந்த கையாளாகிய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்தெய்தியவர் ; அவர் தமது பிறை பொருந்திய சடையினால் , எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும் ; உலகமே உருவமா ( விச்சுவரூபியா ) க நின்றாடுவார் என்பது கருத்து .

குறிப்புரை :

துளைக்கை வேழம் - துளையுடைய கையோடு கூடிய யானை . உரி - உரிக்கப்பட்டது ; தோல் . வளைக்கையாள் - வளையல் அணிந்த கையையுடையவள் ; பார்வதி . பார்வதி தேவியை இடப் பாகத்தே கொண்டு மகிழ்வு எய்துவித்து அவ்வின்பத்தால்தானும் திளைத்திருக்கும் . சடையுள் திங்களையுடைய ஆரூரர் என்க .

பண் :

பாடல் எண் : 6

பண்ணி னின்மொழி யாளையொர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர் போலுமா ரூரரே.

பொழிப்புரை :

பண்ணையொத்த இனிய மொழியாளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விசும்பில் விளங்கும் பிறையினைச் சூடி , திருநீற்றுப் பொடியினைத் திருமேனியிற் பூசிச் சுடலையினை அண்மித் திருவாரூர்ப் பெருமான் ஆடுவர் .

குறிப்புரை :

பண்ணின் இன்மொழியாள் - ` பண்ணினேர் மொழியாளுமை ` ( தி .5. ப .10. பா .1) இசையினிமையை ஒத்த மொழியை உடையவள் . பாகமா - இடப்பாகத்தேகொண்டு என்னும் பொருளது . விண்ணினார் விளங்கும் மதி - விண்ணிலே பொருந்தி விளங்கும் மதி . சுண்ணநீறு - கலவைச் சந்தனம்போலக் கொள்ளப்படும் திருநீறு . அண்ணி - நெருங்கி .

பண் :

பாடல் எண் : 7

மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறு மிறைவனார்
கட்டு வாங்கங் கனன்மழு மான்தனோ
டட்ட மாம்புய மாகுமா ரூரரே.

பொழிப்புரை :

தேனொழுகும் புதுமலரணிந்த குழலாளாகிய உமையம்மையொடு பெரிய ( திருமாலாகிய ) விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவனார் , கட்டுவாங்கம் , சுடர்ந்தெரியும் கனல் , மழு , மான் எனுமிவற்றைக்கொண்ட எட்டுத் தோளராகிய திருவாரூர்ப் பெருமானே ஆவர் .

குறிப்புரை :

மட்டு - தேன் . தேன் நிறைந்த பூக்கள் சூடிய என்றபடி . வார்குழல் - நீண்ட கூந்தல் . மால்விடை - திருமாலாகிய இடபம் . பெரிய விடை என்றும் ஆம் . இட்டமா - விருப்பமாக . உகந்து - மகிழ்ந்து . கட்டுவாங்கம் - இறைவன் திருக்கரத்தேந்திய கட்வாங்கம் என்னும் ஆயுதம் . கனல் மழு - சொலிக்கின்ற மழு . அட்டமாம் புயம் - எட்டுத்தோள்கள் . ஆரூரர் ஆகும் ( விளங்குவார் ) என்க .

பண் :

பாடல் எண் : 8

தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி யெல்லியு ளாடு மிறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதுமா ரூரரே.

பொழிப்புரை :

பிறைத் திங்கள் விளங்கும் சடையினரும் , கனலைக் கரத்தேந்தி நள்ளிருளில் நட்டம் ஆடும் இறைவரும் , காமனைச் சினந்து நோக்கிய கண்ணினரும் , ஆராய்ந்த நான்மறைகளால் ஓதப்பெறும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .

குறிப்புரை :

தேய்ந்த திங்கள் - தக்கன் மகளிர்களிடம் காட்டிய ஒருதலைப் பக்கமான அன்பால் அவன் சாபமிட அதனால் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து குறைந்ததால் ஒரு கலையான சந்திரன் . கமழ் - விளங்குகின்ற . எல்லி - சர்வசங்காரகாலமாகிய நள்ளிரவு . காய்ந்து - சினந்து . ஆய்ந்த - அறிஞர்கள் நுணுகிக் கற்கும் .

பண் :

பாடல் எண் : 9

உண்டு நஞ்சுகண் டத்து ளடக்கியங்
கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்டவாண ரடையுமா ரூரரே.

பொழிப்புரை :

நஞ்சினை உண்டு கண்டத்துள் அடக்கியவரும் , இண்டை மாலையைத் தம் செஞ்சடையுள் வைத்த இயல்பினரும் , கோவணத்தை ஆடையாகக் கொண்டவரும் , மிகுந்த எரியைக் கரத்தில் உடையவரும் , தேவர்கள் அடைந்து வழிபடும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .

குறிப்புரை :

நஞ்சு உண்டு கண்டத்துள் அடக்கிய என மொழி மாறுக . அங்கு - தலையில் . இண்டை - தலையில் அணியும் மாலை . ` சுரும்பார் மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம் ` ( தி .2. ப .114. பா .1) கொண்ட - அணிந்த அல்லது ஏற்றுக்கொண்ட . கூரெரி கொண்டவன் கோவண ஆடையன் எனத் தனித்தனியே கூட்டுக .

பண் :

பாடல் எண் : 10

மாலு நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆல முண்டழ காயவா ரூரரே.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் அறிய இயலாதவரும் , காலனைக் கடந்திட்டுச் சூலமும் , மானும் , மழுவும் ஏந்திய கையினரும் , ஆலம் உண்டதனால் அழகுபெற்று விளங்கிய கண்டத்தையுடைய வரும் திருவாரூர்ப் பெருமானேயாவர் .

குறிப்புரை :

அறிகிற்கிலார் - அறிதற்குஇயலாதவரானவர். காலனாய அவன் - காலனாகிய இயமன். கடந்திட்டு - வென்று. ஆலம் உண்டு அழகாய ஆரூரர்-ஆலகால நஞ்சை உண்டு அதைத் திருமிடற்றிலே நிறுத்தி நீலகண்டனாம் அழகிய தோற்றம் பெற்ற ஆரூர் இறைவர்.

பண் :

பாடல் எண் : 1

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பரா ரூரரே.

பொழிப்புரை :

கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாச்சியங்களைக் கொண்டு இசைத்து மருங்கிலே நின்று பிளந்தவாயை உடைய பல பூதங்கள் ஆடாநிற்ப ஆடுங்கூத்தராய் அக்குமணிகளையும் அரவையும் பூண்பவர் திருவாரூர்ப் பெருமானாவர் .

குறிப்புரை :

கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி முதலியன இறைவனது திருக்கூத்திற்கு முழங்கும் பக்கவாச்சியங்கள் . பகுவாயன - திறந்தவாயை உடையனவாகிய . ஒக்க ஆடல் உகந்து - ஒருசேர அவைகளும் தன்னோடு ஆடுதலை விரும்பி . உடன் - அவற்றோடு . கூத்தராய் - சங்காரதாண்டவராய் . அக்கு - சங்குமணி . ஆர்ப்பர் - கட்டுவர் .

பண் :

பாடல் எண் : 2

எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புக ழாரூ ரரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பந்தமும் , வீடுமாயிருக்கும் தேவதேவனாகிய திருவாரூர்ப் பெருமானுக்குரிய முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும் , சிரத்தினும் தங்குதற்கு எவ்வளவு பெருந்தவம் நீ செய்தனை ? ( திருவாரூர் , அரநெறியை உள்ளத்திற் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நற்றவத்தார்க்கு அன்றி எய்தொணாது என்றபடி ).

குறிப்புரை :

நெஞ்சமே ! எந்த மாதவம் செய்தனை - மனமே மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய் ! இது வியப்புமொழி . பந்தம் - உலக ஈடுபாடு . பந்தமும் வீடுமாயவன் என்றபடி . அந்தமில் புகழ் - முடிவில்லாத புகழ் . ஆரூர் அரநெறி என்பது ஆருர்த் திருக்கோயில்களில் பூங்கோயில் , அரநெறி , பரவை யுண்மண்டளி என்பவற்றுள் ஒன்று . சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் . சிந்தை - உள்மனம் . நிலையான நினைப்பு உண்டாக்கும் அடி மனம் .` அரநெறி சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்க எந்த மாதவம் செய்தனை ` என்றியைக்க .

பண் :

பாடல் எண் : 3

வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக்
கிண்டை மாலை புனைந்து மிராப்பகல்
தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க்
கண்ட மாளவும் வைப்பரா ரூரரே.

பொழிப்புரை :

வண்டுகள் அணுகப்பெறாது சூழ உலாவும் மலர்களைக்கொண்டு வளரும் சடைக்கு இண்டை மாலைகள் புனைந்தும் , இரவும் பகலும் தொண்டுகள் புரிந்தும் தொடர்ந்து விடாது வழிபடுவார்க்கு அண்டங்களை ஆளவும் கொடுக்கும் பெருமான் திருவாரூரர் ஆவர் . ஆளவும் என்னும் எச்ச உம்மையால் சிவஞானமாகிய முக்கியப் பயனைத் தருவதோடு எனக்கொள்க .

குறிப்புரை :

சரியைத்தொண்டு செய்வார்க்கு உளதாம் அவாந்தரப் பயனைக் கூறுகிறது இத்திருப்பாடல் . வண்டுலாமலர் - வைகறையில் வண்டுகள் தேனுண்ண வருவதன்முன்பே எடுத்த மலர் ஆதலின் ஆண்டு உள்ள தேனை நுகர்தற்கு வண்டுகள் உலாவுகின்றன என்றவாறு . வளர்சடை - வளர்கின்ற திருச்சடை . புனைந்தும் - தொடுத்தும் . இராப்பகல் - இரவும் பகலும் . தொடர்ந்துவிடாதவர்க்கு - இப்பணிகளை மேற்கொண்டு இடையே விடாது தொடர்ந்து பணிசெய்வார்க்கு . அண்டம் ஆளவும் வைப்பர் - உலகமுழுவதையும் ஒரு குடைக்கீழ் அரசாளும் உரிமையைத் தருவதும் செய்வர் . ` துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண்ணேறலாகும் ` என்றார் பிறாண்டும் .

பண் :

பாடல் எண் : 4

துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய்
என்பெ லாம்நெக் கிராப்பக லேத்திநின்
றின்ப ராய்நினைந் தென்று மிடையறா
அன்ப ராமவர்க் கன்பரா ரூரரே.

பொழிப்புரை :

துன்பங்கள் முற்றும் நீங்கி நலம் சான்றவராய் எலும்பெல்லாம் நெகிழ்ந்து இரவும் பகலும் வழிபட்டு நின்று இன்பமுடையோராய் நினைந்து என்றும் இடையறாத அன்பர்க்கு அன்பராய் இருப்பர் திருவாரூர்ப் பெருமான் . ( இவ்வியல்புடையார்க்கே முதல்வனும் , அன்பனாய் , அவரைத் தன் தமர்க்குள் வைக்கும் என்றபடி .)

குறிப்புரை :

இறைவன் அன்பர்க்கன்பராம் தன்மை கூறுகிறது இத் திருப்பாடல் . துன்பெலாம் அறநீங்கி - இன்பங்களினின்று நீங்கியது போலத் துன்பங்களினின்றும் முற்றிலும் விடுதலை பெற்று . துன்பங்களை இன்பங்களாகவோ , தமக்குத் தொடர்வில்லாதனவாகவோ கருதும் மனஇயல்பு பெற்று என்றபடி . அற - முற்றிலும் . சுபத்தராய் - நலஞ்சான்ற சிந்தையராய் , உவகையுள்ளவராய் என்றபடி . சுபம் - நலம் . இடையறா அன்பு , தைலதாரை போன்று இடையறவில்லாத அன்பு .

பண் :

பாடல் எண் : 5

முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்
முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கித னாரூ ரடைமினே.

பொழிப்புரை :

ஈமக்கிடையில் கிடத்துவதற்கு முன்பு , அடங்காத ஐந்து புலன்களைக் குற்றமறக்களைந்து முரண்பாடு கொண்ட அத்தக்கன் வேள்வியாகிய குறும்பை அடக்கியவனாகிய சிவபெருமான் உறையும் திருவாரூரை நீர் அடைந்து வழிபடுவீராக .

குறிப்புரை :

முருட்டு மெத்தை - முரட்டுத் தன்மைவாய்ந்த படுக்கை . இறந்தபின் கிடத்தும் ஈமப்படுக்கை . முன்கிடத்தா முனம் - எல்லோர் முன்னிலையிலும் கிடத்துவதற்கு முன்னரே . அரட்டர் ஐவர் - வலிய தீயவர்களாகிய ஐம்பொறிகள் . ஆசறுத்திட்டு - குற்றம் தீர்த்துஅவற்றால் விளையும் தீமைகளை மாற்றி நல்வழியில் செலுத்தி . முரட்டடித்த - முரட்டுத்தனத்தால் நடத்திய . அரட்டடக்கி - குறும்புகளை அடக்கியவன் . யாக்கை நிலையாது ஆகலின் , அஃது உள்ள போதே விரைந்து திருவாரூர் அடைந்து உய்க என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

எம்மை யாரிலை யானுமு ளேனலேன்
எம்மை யாரு மிதுசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்
கம்மை யாரைத்தந் தாராரூ ரையரே.

பொழிப்புரை :

எம்மைக்காத்தற்குரிய இருமுதுகுரவரும் இலர் ; யானும் ( இளம் பருவத்தினன் ஆகலின் ) தனித்து வாழும் மன உறுதி உள்ளேன் அல்லேன் ; எனது அன்னையை ஒத்த உடன்பிறந்தாரும் ( திலகவதியாரும் ) இதனைச் செய்ய ( எனக்குத் துணையாய் நின்றருள ) வல்லரே ! ( ஆயினும் அவர் இதுபோது உயிர்விடத் துணிதலின் ) தாயாய் உடனிருந்து உபகரிக்கவல்லார் ஆர் ? என்று இங்ஙனம் பன் முறை வாய்விட்டு அரற்றிய எளியேனுக்குத் திருவாரூரில் எழுந்தருளியுள்ள பெருமானே ( ஐயரே ) வீட்டு நெறிக்கு உரிய என் உடன் தோன்றினாரை ( உயிர்தாங்கச் செய்து ) எனக்கு இருமுதுகுரவரும் , ஆசானும் , கேளும் , உறவுமாக வைத்தருளினார் . இப்பாட்டு நாவுக்கரசர் , முதல்வன் தமது தமக்கையாரை உம்பருலகணைய உறும் நிலை விலக்கி உயிர்தாங்கி மனைத்தவம் புரிந்திருக்க வைத்தது தாம் பின்னர் மெய்யுணர்வு பெற்றுத் திருத் தொண்டின் நெறி பேணி உய்தற்பொருட்டே என நினைந்து பாடியது .

குறிப்புரை :

முதல் அடியில் எம் ஐயர் என்பது நீண்டு நின்றது ; ஐயர் - தாய் தந்தையர் என்னும் இரு முதுகுரவர் . இரண்டாம் அடியில் எம்மையார் என்றதில் என்அம்மை , எம்மை என ஆகி ஆர்பெற்றது . இங்கு நாவுக்கரசருக்குத் தமக்கையாராகிய திலகவதியாரைக் குறிக்கும் . இது - என்றது தாம் இன்றியமையாததாக உணர்ந்த நற்சார்பாய் உடனிருத்தலை , ஆயினும் இதுபோது அவர் உயிர்விடத் துணிதலின் என்றது இசையெச்சம் . அம்மையார் எனக்கு ? என்றதில் அம்மை - அம்மைக்கு வாயிலாவார் அல்லது தாய்போல்வார் எனப் பொருள்படும் . அம் ஐ எனப் பிரித்து அழகிய ஆசான் என உரைப்பினும் அமையும் . அம்மை - வீடு . இப் பாட்டுப் பெரியபுராணத்துத் திலகவதியார் உயிர்தாங்கும் செய்தி கூறும் பகுதிக்கு அகச்சான்று ஆதல் காண்க . ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் திருவிருத்தத்தில் உடன் தோன்றினராய் என்றதும் திலகவதியாரைக் குறித்தே எனக்கொள்க .

பண் :

பாடல் எண் : 7

தண்ட வாளியைத் தக்கன்றன் வேள்வியைச்
செண்ட தாடிய தேவர கண்டனைக்
கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க்
கொண்டி யாயின வாறென்றன் கோதையே.

பொழிப்புரை :

என்றன் கோதையாகிய இவள் தண்டத்தை ( ஒறுப்பு முறை ) க் கையாள்பவனும் , தக்கன் செய்த பெருவேள்வியைச் செண்டு ஏந்தி ஆடுதல்போல் எளிதாக அட்ட தேவர்கள் முதல்வனும் ஆகிய ஆரூர் வீதிவிடங்கனை ( அவன் உலாப்போதரும்போது ) பன்முறை கண்டு அவனைக் காதலித்து அன்பே வடிவாய் நம் வயப்பட்டு ஒழுகாத கொண்டி ( பட்டி ) ஆயினவாறு என்னே !

குறிப்புரை :

இது தன் மகள் முதல்வனைக் கண்டு காதலித்துப் பின் அவனைக் காணுந்தோறும் காதல் கைமிக்குப் பிச்சியாயினமையை வியந்து செவிலி கூறியது . தண்டம் - அறத்தின் மூவகைகளில் மூன்றாவதாகிய ஒறுப்பு . இதனை ஆண்டவன் தண்ட ஆளி . தக்கன் வேள்வியைத் தகர்த்தது ஒப்ப நாடிச் செய்த ஒறுப்புமுறையே என்றற்கு முதல்வனை இப் பெயரால் குறித்தார் . அகண்டன் - கண்டிக்கப்படாதவன் , தேசகாலப் பொருள்களால் எல்லைசெய்யப்படாதவன் என்பது கருத்து . முதல்வன் தேசம் காலம் பொருள் அனைத்தையும் தன் பேரருளில் அடங்கக் கொண்டு நிறைநீர்மை உடையன் ஆகலின் அகண்டன் ; அஃது ஈண்டு முதல்வன் , தலைவன் என்னும் துணையாய் நின்றது , ஆதலின் தேவர் அகண்டன் என்னும் தொடர் தேவர்க்கு முதல்வன் என விரியும் . கொண்டி - ( காதலால் ) கொள்ளப்பட்டவள் , பிச்சி .

பண் :

பாடல் எண் : 8

இவள்ந மைப்பல பேசத் தொடங்கினாள்
அவண மன்றெனி லாரூ ரரனெனும்
பவனி வீதி விடங்கனைக் கண்டிவள்
தவனி யாயின வாறென்றன் தையலே.

பொழிப்புரை :

இவள்நம்பால் ஒருநெறிப்படாதபலபேச்சுக்களைப் பேசத்தொடங்கிவிட்டாள் . இவள் உள்ள அவ்விடத்தேம் அல்லேம் எனின் ( அதாவது , இவள் தனித்துள்ளபோது ) ஆரூர் அரன் என மொழிவாள் . என்றன் தையலாகிய இவள் உலாப்போந்த வீதிவிடங்கப் பெருமானைக் கண்டமையால் காம நோயுடையாள் ஆனவாறு இது !

குறிப்புரை :

செவிலி தலைவியின் காதலொழுக்கத்தை நற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்தியது இது . அவணம் அன்றெனின் : அவண் - அவ்விடம் ; அவணம் - அவ்விடத்தேம் ; எனவே , யாம் இவள் உள்ள அவ்விடத்தேம் ஆதல் இல்லை எனில் என்றபடி . ஆரூர் அரன் எனும் என்பதில் எனும் - செய்யும் என்னும் முற்று . தவனி - காமத்தீயால் தபிக்கப்பட்டவள் . 7, 8 ஆவது திருப்பாடல்கள் முதல்வனைக் கண்டுணரும் ஆன்மாக்கள் அவனால் வசீகரிக்கப்பெற்று உலகியல் தழுவாது அருள்வயப்பட்டுச் சீவன் முத்தராம் தன்மையை அகப்பொருள் மேல் வைத்துக் குறிப்பவை .

பண் :

பாடல் எண் : 9

நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
காரொத் தமிடற் றர்கனல் வாயரா
ஆரத் தருறை யும்மணி யாரூரைத்
தூரத் தேதொழு வார்வினை தூளியே.

பொழிப்புரை :

கங்கைச் சடையரும் , திருநீலகண்டரும் , அரவாகிய ஆரம் உடையவருமாகிய பெருமான் உறையும் அணி ஆரூர்த் தலத்தைத் தூரத்தே கண்டு தொழுவார் வினைகள் தூளியாகிக் கெடும் .

குறிப்புரை :

இத்திருப்பாடல் : ஆரூர் நினைத்துத்தொழ முத்தியளிப்பது என்கிறது . நீரை - கங்கையை ; நிமலன் - குற்றமற்றவன் ; காரொத்த மிடற்றர் - மேகத்தை ஒத்த நீலகண்டத்தர் ; கனல்வாய்அரா - கனல் போன்ற நஞ்சை வாயின் கண்ணே உடைய பாம்பு . ஆரம் - மாலை . அணி - அழகு . தூரத்தேதொழுவார் - திருவாரூரை நினைந்து தூரத்திலிருந்தே வணங்குவார் . வினை - பழவினை நிகழ்வினைகள் . தூளி - தூசி , பொடி .

பண் :

பாடல் எண் : 10

உள்ள மேயொ ருறுதி யுரைப்பன்நான்
வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வய லாரூ ரமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.

பொழிப்புரை :

உள்ளமே ! நான் ஓர் உறுதி உரைப்பன் ; கேள் ; கங்கைவெள்ளத்தைத் தாங்கும் விரித்த சடை உடைய வேதியனும் சேறு , நீர் பொருந்திய வயல்களை உடைய ஆரூர் அமர்ந்த எம் வள்ளலுமாகிய பெருமான் சேவடிகளை வாழ்த்து ; வணங்கு .

குறிப்புரை :

\\\\\\\'ஒன்றுறுதி ` - என்பதும் பாடம் ; அதனை உறுதி ஒன்று என மாறுக . வெள்ளந்தாங்கும் சடை - உலகத்தை அழிக்கும் பெரு வெள்ளமாய் விரைந்துவந்த கங்கையைத்தடுத்த சடை . வேதியன் - வேதங்களை அருளிச்செய்தவன் . அள்ளல் - சேறு . சேறும் நீருமாய்ச் சிறந்த வயல்கள் சூழ்ந்த ஆரூர் என்றபடி . வள்ளல் - தியாகேசன் . சேவடி - செம்மையான திருவடிகள் ; சிவந்த எனினும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 11

விண்ட மாமலர் மேலுறை வானொடும்
கொண்டல் வண்ணனுங் கூடி யறிகிலா
அண்ட வாணன்த னாரூ ரடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே.

பொழிப்புரை :

விரிந்த மலர்மேலுறை பிரமனும் , மேக வண்ணனாகிய திருமாலும் கூடி அறியகில்லாத திருவாரூர் அண்டவாணனது திருவடிகளைத் தொழப் பழைய வல்வினைகள் நில்லாமற் கெடும் .

குறிப்புரை :

கொண்டல் - மேகம் . ஆரூர் அண்டவாணன் தன் அடிதொழ எனக்கொண்டு கூட்டுக .

பண் :

பாடல் எண் : 12

மையு லாவிய கண்டத்த னண்டத்தன்
கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐய னாரூ ரடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாம்அல்லல் ஒன்றிலை காண்மினே.

பொழிப்புரை :

கரிய கண்டம் உடையானும் , அண்டத்திலுள்ளானும் , கையிற் சூலம் உடையானும் , கண்ணுதலானும் ஆகிய திருவாரூர்த்தலத்தின்கண் ஐயன் அடிதொழும் எல்லாரும் உய்தி பெறலாம் ; துன்பம் ஒன்றும் அவர்க்கில்லை ; காண்பீராக .

குறிப்புரை :

ஆரூர் இறைவன் அடிதொழுவார்க்கு அல்லல் இல்லை என்றறிவிக்கிறது. மை - விஷத்தின் கரியநிறம். அண்டத்தன்-பாரொடு விண் உலகமாய்ப் பரந்து விரிந்தவன். உலாவிய - விளங்கிய. ஐயன் - அழகியன் அல்லது தலைவன். அடி தொழுவார்க்கெலாம் அல்லல் ஒன்றில்லை. அவர்கள் உய்யலாம் என்றியைக்க. காண்மின் அஃது உண்மை என்பதைக் காணுங்கள்.

பண் :

பாடல் எண் : 1

பாற லைத்த படுவெண் தலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடையன்னி யூரனே.

பொழிப்புரை :

பருந்துகள் அலைக்கும் வெள்ளிய மண்டை ஓட்டைக் கையிற் கொண்டவனும் , திருநீறு பூசிய சிவந்த மேனியனும் , உமையம்மை ஒரு கூறுகொண்ட மெய்யனும் , அரவு ஆட்டி ஆறலைக் குஞ்சடையனும் அன்னியூர்த்தலத்து இறைவனே .

குறிப்புரை :

அன்னியூரன் இயல்புரைக்கின்றது இத் திருப்பதிகம் . பாறு - பருந்து . படுவெண்டலை - தசை அழிந்த வெள்ளிய தலை . நீறு அலைத்த - திருநீறுவிரவிய . நேரிழை - பார்வதி . கூறு - இடப்பாகம் . அலைத்த - கலந்த . மெய் - உடம்பில் . கோள் அரவு - கொள்ளும்தன்மை வாய்ந்த வாயையுடைய பாம்பு . நஞ்சாகிய குற்றம் உடைய பாம்பு எனினுமாம் . ஆட்டிய - ஆடுதலைச் செய்யும்படி அணிந்த . ஆறு - கங்கை . அலைத்த - பரந்துவிரிந்த .

பண் :

பாடல் எண் : 2

பண்டொத் தமொழி யாளையொர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தானன்னி யூரனே.

பொழிப்புரை :

பண் பொருந்திய இனியமொழியுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனும் , இண்டையணிந்த சடையனும் , இருளார்கண்டனும் , யானைத்தோல் உரித்துப் போர்த்தவனும் , அண்டங்களுக்கு அப்புறத்தில் உள்ளவனும் அன்னியூர்த் தலத்து இறைவனே .

குறிப்புரை :

பண்டு ஒத்த மொழி எனப்பிரித்துப் பண்ணின் இசை தங்கிய இனிய மொழி எனப் பொருள் காண்க . இருள் - கருமை . உரி - தோல் . அண்டத்தப்புறத்தான் ; உலகவர் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன் . ` ஏழண்டத்தப்பாலான் ` ( தி .6. ப .8. பா .5) பாகமாய்க் கொண்ட இண்டைச் செஞ்சடையன் எனக் கூட்டி உரைக்க .

பண் :

பாடல் எண் : 3

பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போலன்னி யூரரே.

பொழிப்புரை :

நாள்தோறும் வாழ்த்தி வணங்குவோரது வல் வினைகளைத் துரக்கும்படி நீக்குபவரும் , தம்மிடப்பாகத்தில் குரவு நறு மணம் வீசும் குழல் உமையைக் கூறாகவுடையவரும் , அரவம் ஆட்டுபவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

பரவி - இறைவன் புகழை விரித்தோதி . நாளும் - நாள் தோறும் . பணிந்தவர்தம் - வணங்கியவர்களுடைய . துரவையாக - இல்லையாக . துடைப்பவர் - போக்குபவர் . குரவம் - குரவமலர் . குழல் - கூந்தல் . கூறராய் - ஒருகூற்றிற் கொண்டவராய் .

பண் :

பாடல் எண் : 4

வேத கீதர்விண் ணோர்க்கு முயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றாரன்னி யூரரே.

பொழிப்புரை :

வேதங்களை இசையோடு ஓதுவோரும் , விண்ணோர்க்கும் உயர்ந்தவரும் , ஒளிவெண்பிறை பொருந்திய சடையுடைய தலைவரும் , நீதியினால் தம் அடியார்களுக்கெல்லாம் ஆதியாகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

சோதி - ஒளி . துன்று - நெருங்கிய . அல்லது படர்ந்த . அடியார்தமக்கு ஆதி - அடியவர்களால் தம் உணர்வின் முதல் எனக் கருதப்படுவோன் ; ` போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே ` ( தி .8 திருவாசகம் - திருப்பள்ளி எழுச்சி - 1) என்றாற்போல .

பண் :

பாடல் எண் : 5

எம்பி ரானிமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி யிருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றாரன்னி யூரரே.

பொழிப்புரை :

தேவர்களுக்கெல்லாம் இன்பம் செய்வோராகிய எம் ஈசனாரும் , எம் தலைவரும் , துன்பஞ்செய்யும் வல்வினை போதற்காகத் தொழும் அன்பர்களுக்கு அன்பராகி நின்றவரும் அன்னி யூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

எம்பிரான் - எங்கள் தலைவன் . எம் ஈசன் - எம்மை ஆள்வோன் . துன்பவல்வினை - துன்பத்திற்குக் காரணமாகிய வலிய வினை . தொழுமவர்க்கு அன்பர் - செருக்கு நீங்கா உள்ளத்தால் தன்னை அளக்கலுறுவார்க்குச் சேயனாய் , அன்பால் தொழுவார்க்கே அணுக்கனாய் நிற்பன் முதல்வன் .

பண் :

பாடல் எண் : 6

வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீரன்னி யூரரே.

பொழிப்புரை :

வெந்த திருநீறு மெய்யின்கண் பூசிய நலம் வாய்ந்த வரும் , நறுமலர் சூடும் கருத்தினராகிய அன்பர் சிந்தைகளில் நிறைந்த சிவனாரும் , சிவந்த தீயின் வண்ணம் உடையவரும் , அழகிய தண்ணளி உடையவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே , காண்பீராக .

குறிப்புரை :

வெந்தநீறு - திருநீறு . ` தமது அந்தமில் ஒளி அல்லா ஒளி யெலாம் வந்து வெந்து அற வெந்தநீறு - மற்று அப்பொடி ` நன்மேனி - அநாதிமுத்த சித்துஉரு . நறுமலர் சூட்டி வழிபடுவேம் என்னும் கருத்தினர் தம் அடிமனத்திற் பொருந்திநின்று மங்கலக் குணங்களையும் பேரின்பத்தையும் தோற்றுவிப்பவன் என்க . சிவனார் - மங்களத்தைச் செய்பவர் . இன்பவடிவினர் . செய்ய தீவண்ணர் - தீப்போன்ற செய்ய நிறத்தர் . அந்தணாளர் - உயிர்களின் நன்மையின் பொருட்டு அறம் உரைத்து , அதன் வடிவாகவும் பயனாகவும் நிற்றலின் அந்தணாளர் எனப்பட்டார் ; ` அறவாழி அந்தணன் ` என்பது திருக்குறள் (8) ஆழி - கடல் ).

பண் :

பாடல் எண் : 7

ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையொர் பாகமா
ஆனை யீருரி யாரன்னி யூரரே.

பொழிப்புரை :

தசை பொருந்தியிருந்த வெண்டலையிற் பலி கொண்டு திரியும் பெருமான் வானவர் வணங்குமாறு , உமாதேவி யாரை ஒரு பாகமாகக்கொண்டு ஆனைத்தோல் போர்த்தவர் அன்னி யூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

ஊனை , தேனை - என்பவற்று ஐ சாரியை , ஈர் உரி - ஈர்ந்தஉரி , குருதிதோய்ந்து குளிர்ந்த உரி எனினுமாம் .

பண் :

பாடல் எண் : 8

காலை போய்ப்பலி தேர்வர்கண் ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தாரன்னி யூரரே.

பொழிப்புரை :

நெற்றிக்கண் உடையவரும் , காலையே போய்ப் பலி ஏற்பவரும் , வானவர்களும் விரும்புகின்ற சோலை சூழ் புறங்காட்டினை அரங்காகக் கொண்டவரும் , ஆலின்கீழ் அறத்தை நான்கு முனிவர்களுக்கு உரைத்தவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே .

குறிப்புரை :

காலை - தக்கபொழுது ; காலைநேரத்தே எனினும் அமையும் . பிச்சை கொள்வார் செல்லும் காலை நேரத்தே கடைத்தலை சென்றவர் என்று இகழும் புகழுரை இது . தேர்வர் - ஆராய்ந்து பெறுவர் ( பக்குவ ஆன்மாக்களைப் பருவத்திற்சென்று ஆள்வர் என்றபடி ). நெற்றிக்கண்ணார் என்று மொழிமாறுக . மேலை வானவர் - மேலவராகிய தேவர்கள் . புறங்காடு - ஊர்ப்புறத்தே அமைந்த இடுகாடு . பலரையும் புறங்காணும் காடு எனினுமாம் . அரங்கு - ஆடுமிடம் . சோலைசூழ் அன்னியூர் எனவும் , வானவர் வந்து விரும்பிய , புறங்காடு அரங்காகக் கொண்ட அன்னியூரர் எனவும் இயைக்க .

பண் :

பாடல் எண் : 9

எரிகொள் மேனிய ரென்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றாரன்னி யூரரே.

பொழிப்புரை :

தீவண்ண மேனியரும் , எலும்பணிந்து இன்புறு வாரும் , திரிந்துவந்து தொல்லைகள் புரிந்த மூவெயில்களைத் தீயெழச் சினந்தவரும் , மாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவரும் அன்னி யூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

எரிகொள்மேனி - நெருப்பினது சிவந்த நிறத்தைக் கொண்ட திருமேனி . மூவெயில் - மூன்று கோட்டைகள் . செற்றவர் - அழித்தவர் .

பண் :

பாடல் எண் : 10

வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் றாரன்னி யூரரே.

பொழிப்புரை :

வஞ்சனை பொருந்திய இராவணனின் இருபது கைகளும் தலைகளொடு இறும்படியாகப் பஞ்சின் மெல் விரலால் அடர்த்தபோது உமையம்மை அஞ்ச , ` ஆயிழையே ! அஞ்சல் ! அஞ்சல் !` என்று அருளியவர் அன்னியூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

வஞ்சரக்கன் - வஞ்ச அரக்கன் என்பதன் தொகுத்தல். வஞ்சத்தன்மையுடைய இராவணன். கரம் - கைகள். அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் (5+5+6+4=20) இருபது. இருபது தோள்களும். இற - நொறுங்க. பஞ்சின் மெல் விரலாலடர்த்து - இராவணனது ஆணவத்தை மட்டிலுமழித்து அவனை நிக்ரகத்தால் அநுக்கிரகம் செய்வான் வேண்டி அடர்த்தவராதலின் பஞ்சினும் மெல்லிய விரலால் அடர்த்தார் என்றார். வலிய ஊன்றினால் அவன் அழிந்திருப்பான் என்பது கருத்து. ஆயிழை அஞ்சல் அஞ்சல் - இராவணன் கைலையங் கிரியைப் பெயர்த்த காலையில் அம்மலை துளக்கம் எய்தியது. அதனால் உமையம்மை அஞ்சிப் பெருமானைத் தழுவினாள். அவ்வச்சக் குறிப்பை உணர்ந்த இறைவன், `ஆயிழையே, அஞ்சாதே! அஞ்சாதே!` என்று கூறினான் என்பது கருத்து. ஆயிழை - ஆராய்ந்து கொண்ட அணிகலன்கள் அணிந்தவள்.

பண் :

பாடல் எண் : 1

ஓத மால்கடல் பாவி யுலகெலாம்
மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே. 

பொழிப்புரை :

அலைகளை உடைய பெருங்கடல் பரவிய சிறப்பினதும், உலகெலாம் உள்ள நற்குணம் வாய்ந்த பெண்கள் வலங்கொள்ளும் மாண்பினதுமாகிய மறைக்காட்டில் உறையும் பெருமானை விரும்பி, எல்லோராலும் தியானிக்கப்படும் அவர் திருவடிகளை வாழ்த்த நம் பாவங்கள் கெடும்.

குறிப்புரை :

\\\"மறைக்காடரோ\\\" என்பதும் பாடம். ஓதம் - வெள்ளப் பெருக்கு. பெருகியும் குறைந்தும் வரும் இயல்பு கடலுக்குரியது. பெருக்கத்தை ஓதம் என்பர். மால் கடல் -பெரிய கடல். பாவி - பாவிய என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. பாவிய - சூழ்ந்த. உலகெலாம் -திசை எல்லாம். (திருமறைக்காட்டைச் சூழக்கடல் உள்ளது என்பது கருத்து.) மறைக்காடரை என்பது பாடமாயின், மறைக் காடரை ஏத்த, உலகெலாம் காதல்செய்து கருதப்படும் அவர் பாதம் ஏத்த- எனத் தனித்தனி இயைத்துப் பொருள் கொள்க. இதில் \\\"உலகு\\\" என்பது உயர்ந்தோரை. \\\"மற்றனைத்தையும் விட்டுச் சிவனொருவனே தியானிக்கத்தக்கவன்\\\" என்று அதர்வசிகை கூறலின், (மறை உணர்ந் தோரால்) காதல் செய்து கருதப்படுமவர் என்றார்.பறைதல் -கெடுதல் அல்லது நீங்குதல்.

பண் :

பாடல் எண் : 2

பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீரடி யார்தம்மை
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே. 

பொழிப்புரை :

ஊர்க்குப் புறத்தே உள்ள நீரிலெல்லாம் தாழை பூப்பதும், ஆக்கம் பெருகியதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! யார்க்கும் காண்டற்கரியீர்! உம் பணி செய்யிலன்றோ அடியார்களைத் தேவரீர் திருவருள் செய்தற்குத் திருவருள் நோக்கம் புரிந்தருள்வது! (பணிந்து பணிசெய்வார்க்கன்றி முதல்வன் அருள் கைகூடாது என்பது கருத்து)

குறிப்புரை :

புறணி - உப்பங்கழிக்கரை. புறணியருகெலாம் பூக்கும் தாழையையுடைய மறைக்காடு என்க. ஆக்கம் - செல்வம். மா - சிறந்த. ஆர்க்கும் காண்பரியீராகிய நீர் நும் பணிசெய்யிலே, அவ்வடியார் தம்மை நோக்கிக் காண்பது செய்வீர் என்றியைத்துப் பொருள் காண்க. நோக்கிக் காண்பது - கருணையோடு பார்த்து அருள்செய்வது.

பண் :

பாடல் எண் : 3

புன்னை ஞாழல் புறணி யருகெலாம்
மன்னி னார்வலங் கொள்மறைக் காடரோ
அன்ன மெல்நடை யாளையொர் பாகமாச்
சின்ன வேட முகப்பது செல்வமே.

பொழிப்புரை :

ஊர்க்குப் புறத்தே உள்ள நீரின் அருகெல்லாம் புன்னையும் ஞாழலும் பொருந்தியதும், மன்னுதலுற்ற நல்லடியார் வலங்கொள்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! அன்ன மென்னடையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக்கொண்டு நீர் உகப்பதாகிய செல்வம் சின்னமாகிய உமது வேடமே.

குறிப்புரை :

புன்னை-புன்னைமரங்கள். ஞாழல்-சுரபுன்னை. புறணி யருகெலாம் புன்னை ஞாழல் இவற்றையுடைய மறைக்காடு என்க. மன்னினார் - புகழால் நிலை பெற்றவர். வலங்கொள் - வலம் செய்யும். அன்னமெல் நடையாள்-அன்னம் போன்ற மெல்லிய நடையினை யுடையவளாகிய பார்வதி. சின்னவேடம் - அடையாளமாகிய திரு வேடம்; அவை திருநீறு அக்கமணி முதலியவை. (நீர்) உகப்பது (ஆகிய) செல்வம் சின்னமாகிய வேடமே என ஏகாரம் பிரித்துக் கூட்டுக. சிவசின்னங்களே மேலான செல்வம்; அவற்றையே இறைவர் உகப்பது என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

அட்ட மாமலர் சூடி யடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக விருக்கு மிடமிதே. 

பொழிப்புரை :

எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்டவடிவாகிய புன்சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நட்டம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமோ?

குறிப்புரை :

அட்டமாமலர் - சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறிய எட்டு மலர். `எட்டுக் கொலாமவர் சூடும் இனமலர்` (தி. 4. ப. 18. பா.8.) என்றார் முன்னும். புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியா வர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டும் புலரிக்காலத்துக்கு உரியவை. அடும்பு-அடப்பமலர். வட்டப் புன்சடை - வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை. கொல்லாமை, அருள், பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்.

பண் :

பாடல் எண் : 5

நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே. 

பொழிப்புரை :

நெய்தலும் ஆம்பலும் நிறைந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ளதும், மெய்யன்பினார் வலம் கொள்வதும் ஆகிய மறைக்காட்டுறையும் பெருமானே! பெண்ணொருபாகம் கொண்ட தேவரீர், கவர்த்த புன்சடையில் வருத்தமுற்ற பிறையை அதனை விழுங்கக் காத்திருக்கும் பாம்புடன் ஒருங்கு வைத்தருளியது என்னையோ? (நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றா நயத்தலினால் முதல்வனைச் சாரும் போது நலிவும் மெலிவும் இல்லையாகும் என்பது கருத்து).

குறிப்புரை :

நெய்தலும் ஆம்பலும் நிறையும் வயல் என்க. இதனால் வயல்களின் சேற்றுவளங் கூறப்பட்டது. மெய்யினார் - மெய்ப் பொருளைத் தலைப்பட்டு உணர்ந்தோராய `செம்பொருள் கண்டார்`. கவர் புன்சடை - கிளைத்த மெல்லிய சடை. பைதல் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 6

துஞ்சும் போதுந் துயிலின்றி யேத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பது மைந்தலை நாகமே.

பொழிப்புரை :

உறங்கும்போதும் உறங்காது உள் உணர்வோர் வஞ்சனையின்றி வலஞ்செய்யும் மறைக்காட்டுறையும் பெருமானே! பஞ்சனைய மெல்லடி உடைய இப்பாவை பலி கொணர்ந்து தேவரீர் பாத்திரத்தில் இடாது அஞ்சி நிற்பதற்குக் காரணம் தேவரீர் அணிந்துள்ள ஐந்தலை நாகமே, அதனை ஏன் அணிந்தீர்?

குறிப்புரை :

துஞ்சும்போதும் - உறங்கும்போதும். துயிலின்றி - அறிவு ஓய்தல் இன்றி. உறக்கத்திலும் இறைவனை நினைந்தே இருத்தலின் துயிலின்றி என்றார். வஞ்சம் இன்றி என்பது வஞ்சின்றி எனத் தொக்கது. பஞ்சின் மெல்லடிப்பாவை - முனிபன்னியருள் ஒருத்தி. பலிகொணர்ந்து - பிச்சைகொண்டு. அஞ்சிநிற்பதும் - பயந்து நிற்பதும். ஐந்தலைநாகமே - ஐந்தலை நாகத்திற்கே. ஐந்தலைநாகம் - முதல்வன் திருமேனியில் உள்ள ஐந்தலை நாகம் என்பது குண்டலினி எனப்படும் சுத்தமாயை; அதன் காரியமாகிய சிவம், சத்தி, சாதாக் கியம், ஈசுவரம், சுத்தவித்தை என்னும் ஐந்து தத்துவங்களும் ஐந்தலை எனப்பட்டன. முதல்வன் இருவகை மாயைக்கும் ஆதாரமாகவும் தலைவனாகவும் உளன் என்பது வேதாகமங்களுட் கூறப்படும் உண்மை. அதனை `மாயையைப் பிரகிருதி (முதற்காரணம்) என அறிக, மாயையை உடையவன் மகேசுவரன் என்றறிக`. என்னும் சுவேதா சுவதர உபநிடத உரையால் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 7

திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொண்மறைக் காடரோ
உருவி னாளுமை மங்கையொர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே. 

பொழிப்புரை :

அருள் திருவுடையாரின் செல்வம் நிறைந்து விளங்கித் தோன்றும் விழாக்களால் அழகு பெற்றதும், நெஞ்சு நும்பால் மருவினார் வலம் செய்வதும் ஆகிய மறைக் காட்டுறையும் பெருமானே! நல்ல அழகிய உருவமுடைய உமை மங்கையை ஒரு பாகமாக மருவியதோடு, கங்கையைச் சடையிற் சூடியுள்ளது என்னையோ?

குறிப்புரை :

செல்வம்மல்கு திருவினார்-செல்வங்கள் நிறைந்த திருவினை உடையவர் எனினும் அமையும். உமை முதல்வனது திரு வருளாகிய சிற்சத்தி; கங்கை இயற்கை எனப்படும் உலக முதற் பொருளின் சட ஆற்றலுக்கு ஓர் அடையாளம். முதல்வன் தன் சிற்சத்தியோடு பிரியாதுநின்று அதனைக் காரணமாகக் கொண்டு எவையும் செய்யவல்லன் என்பதும், இயற்கையாற்றல் அவன் ஒரு கூற்றில் அவன் விருப்பின்படி அடங்கியும் விரிந்தும் நிற்கும் என்பதும் இவ் வுண்மையாம். பெரிய நல்லடையாளத்தால் உணரத்தக்கவை என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 8

சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லன லேந்த லழகிதே. 

பொழிப்புரை :

சங்குகளை அலைகள் கரையிலே கொண்டு வந்து உலவவிடும் கடற்கரைச் சோலையிடத்துக் கப்பல்கள் வந்து வலங் கொள்வனபோன்று வரிசைகொள்ளும் மறைக்காட்டுறையும் பெருமானே! தேவரீர் கங்கையைச் செஞ்சடையில் வைப்பதும் அன்றி, அகங்கையில் அனலையும் ஏந்தல் அழகியதேயோ?

குறிப்புரை :

சங்கு வந்தலைக்கும் - ஊர்ந்து வரும் சங்குகளால் அலைக்கப்படும். தடங்கானல் -பெரிய கடற்கரைச் சோலை. வாய்- இடத்து. வங்கம் - கப்பல். இயற்கையின் மாறுபட்ட ஆற்றல்களைத் தன் பேராற்றலுள் அகப்படக்கொண்டு இணைத்து வேண்டியவாறு தொழிற் படுத்துவன் என்பதுகருத்து. உமையம்மைக்குத் தெரியாதபடி கங்கையை மறைத்துவைத்ததே தவறு; மேலும் இல்லை என்று உறுதி உரைப்பார்போலக் கையில் அனல் ஏந்தல் அழகாகுமா? என்பது நயம்.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்காட் டியெடுத் தான்தலை யீரைந்தும்
மறைக்காட் டான்இறை யூன்றலும் வாய்விட்டான்
இறைக்காட் டாயெம் பிரானுனை யேத்தவே. 

பொழிப்புரை :

தன்பாலுள்ள குறையைக் காட்டாதவனாகிய இராவணன் ஏறிவந்த தேர் வழிச்செல்லுதலைத் தடுத்த திருக்கயிலாய மலையைச் சிறுபோது தன்வலிகாட்டி எடுக்கலுற, அவன் பத்துத் தலைகளும், மறைக்காட்டுப் பெருமானே! நீ சிறிது திருவிரல் ஊன்றுதலும், வாய்விட்டரற்றினன். எம்பெருமானே! நீ அடியேன் உனை ஏத்துதலால் எனக்கு இறப்பைக் காட்ட மாட்டாய்; இறவாத இன்ப அன்பே காட்டுவாய் என்றபடி.

குறிப்புரை :

குறைக்காட்டான் - குறைக்கு ஆள்தான் எனப்பிரித்து, குற்றங்களுக்கு ஆளாயிருப்பவன் இராவணன் எனினும் அமையும். விட்ட - செலுத்திய. குத்த - முட்ட. மாமலை - பெருமைக்குரிய திருக் கயிலைமலை. இறைக்காட்டி எடுத்தான் - சிறிது நேரம் தன் தலைமையின் பெருமையை நந்திதேவர்க்கறிவித்துத் தூக்கினவன். இறை - சிறிது. வாய்விட்டான் - அலறினான். இறைக்காட்டாய் - இறப்பைக் காட்டமாட்டாய்; இறை - இறப்பு. இறைவனை ஏத்துவார்க்கு இறப்பொடு பிறப்பில்லை என்றபடி.

பண் :

பாடல் எண் : 1

பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

பொழிப்புரை :

பண்ணையொத்த மொழியாளாகிய உமை அம்மையை ஒருபங்கிற் கொண்டவரே ! மண்ணுலகத்தவர் வலம் புரியும் மறைக்காட்டுறையும் பெருமானே ! அடியேன் என்கண்களால் உம்மைக் காணுமாறு , வேதங்களால் அடைக்கப் பெற்ற இக்கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள்செய்வீராக .

குறிப்புரை :

கண்களால் உமது திருக்காட்சியைக் காணத் திருக்கதவைத் திறந்தருள்வீராக என வேண்டியது இத் திருப்பதிகம் . பண்ணினேர் மொழியாள் - திருமறைக்காட்டு அம்பிகையின் திருப்பெயர் . யாழைப் பழித்த மொழியம்மை என்றும் வீணா விதூஷிணி என்றும் இன்றும் வழங்குகிறது . மொழியாளாகிய உமை என்க . பங்கர் - ஒருபாகத்தே உடையவர் . மண்ணினார் - நிலவுலகிலே உள்ள மக்கள் . திண்ணமாக - உறுதியாக .

பண் :

பாடல் எண் : 2

ஈண்டு செஞ்சடை யாகத்து ளீசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.

பொழிப்புரை :

ஆகத்தில் ஈண்டிய செஞ்சடைகொண்ட இறைவரே ! தொகுதியாய கருமுகிலின் நிறத்தையும் தளிரின் ஒளியையும் உடைய மணிகண்டரே . அடியேனை ஆண்டுகொண்ட நீரே அருள் செய்வீராக ; நீண்ட இப்பெருங்கதவின் வலியினை நீக்குவீராக .

குறிப்புரை :

ஈண்டு - திரண்டு கூடிய , அதாவது , சேர்த்துக் கட்டிய . மூண்ட கார்முகில் - திரண்ட கரிய மேகம் . முறி - தளிர் . இறைவன் கண்டம் கறுப்பு நிறமும் ஒளியும் உடையது என்க . நீண்ட மரக்கதவின்வலி - நெடுநாளாகத் திறக்கப்படாத கதவின் வலிமையை .

பண் :

பாடல் எண் : 3

அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே.

பொழிப்புரை :

அட்டமூர்த்தியாகிய எந்தையே ! தீயவர் புரங்களைச் சுட்ட உயர்ந்த தேவரே ! பட்டமாகக் கட்டிய சடைமுடியுள்ள பரமரே ! செவ்வையாக இக்கதவினைத் திறப்பித் தருள்வீராக .

குறிப்புரை :

அட்டமூர்த்தி - ஐம்பூதமும் ஞாயிறும் மதியும் உயிருமாகிய எண்வகை வடிவு . மூர்த்தியது என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி . அப்பர் - தந்தையானவர் . துட்டர் - துஷ்டராகிய திரிபுரத்தசுரர் . வான்புரம் - வானிலேபறக்கும் கோட்டை , சுட்ட - எரித்து அழித்த . சுவண்டர் - திருவெண்ணீறணிந்தவர் . பட்டம் கட்டிய சென்னி - சடை முடியில் பிறை முதலியன தங்கியிருத்தல்தான் ஏகநாயகன் என்னும் பட்டத்தைக் காட்டுகின்றது என்பது கருத்து . பரமர் - மேலானவர் . சட்ட - செவ்வையாக யாம் உம்மை நேரே காணும்படி .

பண் :

பாடல் எண் : 4

அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடைவிருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே.

பொழிப்புரை :

அருமை உடைய நான்மறை அருளிய நாவுடை யவரே ! பெரிய புரம் எரியுண்ணுமாறு சுட்ட உயர்ந்த தேவரே ! விரிந்த கோவண ஆடை கொண்ட மிகப்பழையவரே ! பெரிய இக்கதவினைப் பிரித்தருள்வீராக .

குறிப்புரை :

அரிய - பொருள் உணர்தற்கு அரிய ( நான்மறை ). விரிகொள் - விரித்தலைக்கொண்ட . விருத்தர் - பழையோன் .

பண் :

பாடல் எண் : 5

மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.

பொழிப்புரை :

திருமலையைப்போல் அழியாதிருக்கும் மறைக் காட்டுறையும் பெருமானே ! கலைகள் வந்திறைஞ்சிக் கழல் ஏத்தப் படுபவரே ! விலைமதிப்பற்ற செம்மணிவண்ணத் திருமேனியரே ! தொலைவில்லாத இக்கதவுகளைத் திறந்தருள்வீராக .

குறிப்புரை :

மலையின் நீடு இருக்கும் மறைக்காடு - திருக்கயிலை ஊழிகளில் அழியாது நிற்றல்போலத் தானும் அழியாது நீடுதலாக இருக்கும் மறைக்காடு . இதுபோன்று ஊழிக்காலத்தும் ஒடுக்கம் கூறப்படாத தலங்கள் பிரளயஜித் எனப்படும் . இரண்டாம் அடி ; கலைகளின் ஆசிரியர்களும் அவற்றைக் கற்றோரும் வந்திறைஞ்சும் திருவடிகளையுடையவர் ; அவற்றால் உரைக்கப்படும் ஏத்தாகிய பொருள்சேர் புகழை உடையர் . ( கலைகளின் தெய்வம் வந்திறைஞ்சி ஏத்தும் எனினும் பொருந்தும் - இக்காரணம் பற்றியே மறைக்காடு எனப்பட்டது ) தொலைவிலா - நீக்கப்படாத , திறக்கப்படாத . துணைநீக்கும் - இணைந்துள்ள நிலையை நீக்கும் , திறப்பியும் என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீரடி கேளுமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.

பொழிப்புரை :

ஊர்ப்புறத்து நீரின் மருங்கெலாம் தாழை பூப்பதும் , தண்பொழில் சூழ்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே ! யார்க்குங் காண்டல் அரியீர் ! அடிகளே ! உமைநோக்கிக் காணும் பொருட்டு இக்கதவைத் திறந்தருள்வீராக !

குறிப்புரை :

புறணியருகெலாம் பூக்கும் தாழையும் தண்ணிதாக ஆக்கும் பொழிலும் . சூழ் - சூழ்ந்த . அடிகேள் - தவமுனிவரே ; உமை - உம்மை .

பண் :

பாடல் எண் : 7

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி யணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.

பொழிப்புரை :

வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசும் மேலானவரே ! முடிவில்லாதவரே ! மறைக்காட்டுறையும் பெருமானே ! எம் தந்தையே ! அடியார்கள் நேர்வாயிலில் வந்து இறைஞ்சிடும் பொருட்டு இப் பெருங்கதவம் பிணிக்கப்பட்டிருத்தலை நீக்கித் திறந்தருள்வீராக .

குறிப்புரை :

விகிர்தர் - மாறுபட்ட வேடங்களை உடையவர் . அந்தமில்லி - கேடில்லாதவர் . அணி - அழகிய . எந்தை - என் தந்தையே . பிணி - கதவுகள் பிணிக்கப் பட்டிருத்தல் .

பண் :

பாடல் எண் : 8

ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.

பொழிப்புரை :

கங்கையாற்றைச் சடையிற் சூடும் மறைக் காட்டுறையும் பெருமானே ! ஒரு கூற்றை உமைக்கு ஈந்த இளையவரே ! விடையேறிய எம்பெருமானே ! இந்த மாறுபாடில்லாத கதவின் வலியினை நீக்கித் திறந்தருள்வீராக .

குறிப்புரை :

ஆறு - கங்கை . அணி - அழகு . கூறு - உடம்பில் ஒரு பாதி . மாதுஉமை - பெண்ணாகிய உமையம்மைக்கு . குழகர் - இளையர் . மாறிலா - ஒப்பில்லாத , முன் மறைகள் அடைத்த நிலையினின்று மாறுதலின்றி உள்ள எனினும் ஆம் .

பண் :

பாடல் எண் : 9

சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி யணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.

பொழிப்புரை :

வெண்பொடிச் சுண்ணம் பூசும் உயர்ந்த தேவரே ! அழகுசெய்து ஏற்றின்கண் ஏறி உயர்ந்து தோன்றும் பரமரே ! அண்ணலே ! ஆதியே ! அணிமறைக் காட்டுறையும் பெருமானே ! திண்ணமாக இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக .

குறிப்புரை :

சுண்ணமும் வெண்பொடியும் எனினும் அமையும் ; கலவைச்சாந்தும் திருநீறும் என்பது பொருள் . பண்ணி - அலங்கரித்து . அண்ணல் - தலைமையானவன் . ஆதி - முதன்மையானவன் . திண்ணம் உறுதி .

பண் :

பாடல் எண் : 10

விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

பொழிப்புரை :

விண்ணுலகத்தவர் விரும்பி எதிர்கொண்டு இன்புறுமாறு மண்ணுலகத்தவர் சென்று வணங்கியெழும் மறைக் காட்டுறையும் பெருமானே ! கண்ணினால் உமைக் காணுவதற்காகக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக .

குறிப்புரை :

தேவர்கள் முன்னர்வந்து வழிபாடு முடித்துள்ளாராகலின் , பின் வழிபடவரும் மண்ணவர்களை எதிர் கொள்ளுகின்றார்கள் என்க . இவ்வியல்பினையுடையது திரு மறைக்காடு என்க .

பண் :

பாடல் எண் : 11

அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.

பொழிப்புரை :

பெருகும் புன்னைகள் சூழ்ந்த மறைக்காட்டுறையும் பெருமானே ! இராவணனை விரலால் அடர்த்திட்ட நீர் எளியேன் பால் இரக்கம் கொஞ்சமும் இல்லாதவராயுள்ளீர் ! எம்பெருமானீரே ! விரைந்து , இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக .

குறிப்புரை :

பத்துத் திருப்பாடல்கள் பாடியும் கதவு திறவாமையைக் கண்ட அப்பர் பெருமான் இரக்கமில்லையோ ! எனக்கூறிய இப் பாடலின் உரை கேட்டு நாவரசரின் பாமாலையினிசையில் ஈடுபட்டிருந்த இறைவன் விரைந்து கதவைத் திறந்தனன் . அரக்கன் - இராவணன் . அடர்த்திட்ட - நெருக்கியருள் செய்த . இரக்கமொன்றிலீர் - இன்று இரக்கம் சிறிதும் என்பால் இலராயினீர் . சுரக்கும் பெருகிய , தேனைச் சுரக்கும் எனினும் அமையும் . சரக்க - விரைவாக .

பண் :

பாடல் எண் : 1

தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.

பொழிப்புரை :

இந்நாள்வரை தோன்றிய கோயில்களும் , இனித் தோன்றும் கோயில்களும் , வேற்றுக்கோயில்களும் பலவுளவேனும் , கூற்றுவனைத்தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும் ; காண்பீராக .

குறிப்புரை :

தோற்றுங்கோயில் - பிறவினை தன்வினைப் பொருள் பட நின்றது , அன்றிப் பலரால் இனித் தோற்றப்படும் கோயில்கள் எனினும் அமையும் . தோன்றியகோயில் - இதுவரை தோன்றியுள்ள சிவாலயங்கள் . வேற்றுக்கோயில்கள் - சிவாலயங்களல்லாத ஏனைய தெய்வங்களின் கோயில்கள் . பலவுள - இவை உலகில் பல உள்ளன . மீயச்சூர் இளங்கோயில் - மீயச்சூரில் பாலத்தாபனம் செய்துள்ள பாலாலயம் . பாய்ந்த - இயமனைச் சினந்து காலால் உதைத்த . குளிர் புன்சடை - கங்கை தங்கியதால் குளிர்ந்த மெல்லிய சடையுடைய . ஏற்றம் - உயர்வானது . பாலத்தாபனமாதல் பற்றிக் குறைவாக எண்ணுதல் வேண்டா என்றபடி . இதனால் வேற்றுக்கோயில்களில் அவரவர் விரும்பும் வடிவில் அருள்பவனும் சிவபிரானே என்றதும் ஆயிற்று .

பண் :

பாடல் எண் : 2

வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள்
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

திருவடிக்கு வழிபாடு செய்தலையே உள்ளத் தடைக்கும் தொண்டர்கள் தம்நெஞ்சைக் கட்டுப்படுத்திப் பாவிக்க நின்றவனும் , எம்மை அடிமையாக உடையானும் விளங்கியருளும் திருமீயச்சூர் இளங்கோயில் வழிபடுவார் சிந்தனையைத் திருத்தவல்லது ஆகும் .

குறிப்புரை :

`கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் ` ( தி .12 பெரியபுராணம் . திருக்கூட்டம் .8) என்றமையின் முதலடிக்கு இவ்வாறு உரைக்கப்பட்டது . வந்தனையைச் சிவபிரானுக்கே செலுத்தும் எனினும் அமையும் . அடித்தொண்டர் அடிமைத் திறம் பேணும் தொண்டர் . பாவிக்க நின்றவன் , எந்தமையுடையாரது திருமீயச்சூர் இளங்கோயில் சிந்தனை திருத்தும் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 3

பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும் , ஆனை அஞ்சுமாறு உரித்தவனும் , அனல் ஆடு வானும் , திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு ; அந்நினைப்பால் வாழ்வாய் .

குறிப்புரை :

பஞ்சமந்திரம் -` ஈசானஸ் ஸர்வவித்யாநாம் ` எனத் தொடங்கும் ஐந்து மந்திரங்கள் . ஓதும் பரமன் - அம்மந்திரங்களால் ஓதப்படும் முழுமுதல் . ஆனை அஞ்ச உரித்து என மொழி மாற்றிப் பொருளுரைக்க . அனலாடுவார் - தீயேந்தி ஆடுபவர் . நெஞ்சமே ! நினைந்திரு . வாழி முன்னிலையசை . இதனால் மேற்குறித்த மந்திரங்கள் வேதங்களின் தெளிவாயுள்ளவை என்றதும் அவற்றால் இறைவனை வழிபடுக என்றதும் ஆயிற்று .

பண் :

பாடல் எண் : 4

நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டுகந் தான்திரு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

மணம் வீசும் மல்லிகை , கூவிளம் , செண்பகம் முதலிய மலர்களை வேறுவேறாக விரித்த சடையிடை ஆற்றோடு கொண்டுகந்தான் திருமீயச்சூரின் இளங்கோயிலில் விடைமேற் கொண்டு உகந்த பெருமானே ! ( அடியார் சாத்தும் மல்லிகை முதலியவற்றை முடியில் ஏற்று மகிழ்ந்து அருள்புரிவன் என்பது கருத்து )

குறிப்புரை :

திருமீயச்சூர் இளங்கோயில் ஏறுகொண்டுகந்த பெருமான் அடியார் புனையும் மல்லிகை முதலியவற்றை விரித்த சடையிடை ( ஆற்றோடு உடன் அமையக் ) கொண்டுகந்தான் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 5

வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர்
செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே.

பொழிப்புரை :

வெம்மையான வண்ணத்தையுடைய நாகம் அஞ்சும்படியாக எப்பொருளையும் கவ்விக்கொள்ளும் வண்ணத்தையுடைய கனல் விரித்தாடுவார் , திருமீயச்சூர் இளங்கோயில் செவ் வண்ணந்திகழ் மேனியுள்ள பிரானது வண்ணங்கள் எப்படிப்பட்டவை !

குறிப்புரை :

` வண்ணம் ` நான்கனுள் மூன்றாவது நிறம் எனப் பொருள்படும் ; ஏனையவை இயல்பு என்னும் பொருளில் வந்துள்ளன . சினக்கும் இயல்புடைய நாகம் வெருவும்படி கவ்வும் இயல்புள்ள ( அடுத்து நின்ற பொருள்களைப்பற்றி அழிக்கும் இயல்பு ) கனலை வீசி ஆடுவர் ; அவர் இயல்பு வியக்கத் தக்கதாகவுள்ளது என்பது கருத்து . பகைப் பொருள்களை ஒருங்குடன் கொண்டு அவ்வவை தத்தம் எல்லை கடவாதபடி காக்கும் இயல்பு அவன்றன் இயல்பு என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அக லாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இளங்கோயிலில் ஒளிவிடும் மேகலை அணிந்த உமையம்மையோடு இது போன்ற நாளினும் அகலாது உள்ள பெருமான் பின்னிக்கொண்டுள்ள சடைமேல் பிறையுடன் சூடியது , பொன்போன்ற கொன்றைக்கண்ணியும் சூடியார் ( கொடுக்கும் ) மலர்களால் அணிபெறத் தொகுக்கப்பெற்ற மாலையும் ஆம் .

குறிப்புரை :

பொன்னங்கொன்றையும் - பொன்னிறமுள்ள கொன்றை மலரும் . பூவணிமாலையும் - பிற பூக்களால் அலங்கரித்துத் தொடுக்கப்பட்ட அழகிய மாலையும் . பின்னும் - நெருங்கிய . சூடிற்று - சூடியது . மின்னுமேகலையாள் - ஒளிவிடும் மேகலாபரணம் அணிந்தவள் . இன்னநாள் - இதுபோன்ற நாளிலும் கலாகருடணம் செய்துள்ள நாளிலும் , அகலார் - நீங்காது எழுந்தருளியிருப்பவர் . அகலார் சூடிற்று கொன்றையும் மாலையும் என இயைத்து வினை முடிவு செய்க . கொன்றைமாலை - திருவடையாளமாலை . ஓங்கார வாச்சியன் , திருவைந்தெழுத்தின் பொருள் என்பதைக் காட்டுவது . ஏனையது அடியார் தொடுப்பது . சூடிற்று - தொழில்மேல் நின்றது .

பண் :

பாடல் எண் : 7

படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் நீற்றினன்
விடைகொ ளூர்தியி னான்திரு மீயச்சூர்
இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

பூதங்களைப் படையாகக் கொண்டவனும் , கொன்றைமாலையனும் , சடையில் வெள்ளம் உடையவனும் , சாந்த வெண்ணீற்றனும் , விடையூர்தியானும் , திருமீயச்சூர் இளங்கோயிலின் கண் செவ்வி தெரிந்து ஏத்துமாறு நின்ற இறைவனேயாவன் .

குறிப்புரை :

படைகொள்பூதத்தன் - பூதப்படையினன் . பைங்கொன்றை - புதிய கொன்றைமலர் . சாந்தவெண்ணீற்றினன் - வெண்ணீற்றைச் சாந்தமாகக் கொண்டவன் . ஏனையவும் இவ்வாறே வெள்ளங்கொள் சடையன் , விடையூர்திகொள்வான் எனச்சொன்னிலைமாற்றிப் பொருள் கொள்ளப்படும் . இடை - சமயம் , செவ்வி . காலம் நன்கு உணர்ந்து திருக்கோயிலுக்குச் சேறல்வேண்டும் என்றபடி .

பண் :

பாடல் எண் : 8

ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

சடையினில் ஓர் ஆறு கொண்ட இயல்பினரும் , வேறுவேறுகொண்ட வேடத்தராமியல்பினரும் . கூறு கொண்டுகந்த அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலின்கண் ஏறுகொண்டு உகந்தாரேயாவர் .

குறிப்புரை :

ஓர் ஆறுகொண்ட சடையினர் தாமும் - ஒப்பற்ற கங்கையைச் சூடிய சடையினை உடையவராகிய பெருமான் . வேறு கொண்டதோர் வேடத்தராகிலும் - பலவேறு மூர்த்தங்களைக் கொண்டவராக இருந்தாலும் ( திருமீயச்சூரிளங்கோயிலில் ) கூறு கொண்டுகந்தாளொடு ஏறுகொண்டுகந்தார் - பார்வதி தேவியாரொடு விடையேறி அருள்செய்யும் மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார் .

பண் :

பாடல் எண் : 9

வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூதத்தா னென்பர் புண்ணியன் தன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

புண்ணியனாகிய இறைவனை வேதத்தான் என்றும் , வேள்வியுளான் என்றும் , பூதத்தான் என்றும் கூறுவர் ; கீதம் கிளரும் திருமீயச்சூரில் , இளங்கோயிலின்கண் அடியவர் ஏதந்தீர்க்க நின்ற இறைவரேயாவர் .

குறிப்புரை :

வேதத்தான் - வேதங்களிடையே விளங்குபவன் , நூற்றெட்டுப் பெயர்களுள் ` கிரிசாயநம ` என்பதன் பொருளும் இது . கிரி - வேதத்தின் பரியாயம் . வேள்வியுளான் - வேள்வித்தீயில் உள்ளான் . என்பர் - என்று சொல்வார்கள் . புண்ணியன் - புண்ணிய வடிவினன் . கீதத்தான் கிளரும் , என்பது எதுகை நோக்கி வலித்து நின்றது . கிளரும் - விளங்கும் . ஏதம் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

கடுக்கண் டன்கயி லாய மலைதனை
எடுக்க லுற்ற இராவணன் ஈடற
விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.

பொழிப்புரை :

விடமுண்டகண்டனும் , கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண் தீர்க்க நின்ற இறைவனேயாவன் .

குறிப்புரை :

கடு - விடம். ஈடு - வலிமை. விடுக்கண் இன்றி - விடு படுதற்கு இடன் இன்றாம்படி. வெகுண்டவன் - அருள் செய்யும் நோக்கோடு சினந்தவன். இடுக்கண் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 1

கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே.

பொழிப்புரை :

மனங்கரைந்து கைதொழுவாரையும் காதலித்து அருள்வன் ; தன்னை விலக்கி இகழாநின்று எழும் புறச்சமயத்தாரையும் வாடச்செய்யான் . இத்தகைய அவன் வரிசையாகிய பூதகணங்களோடு நித்தலும் விரைந்து போவது வீழிமிழலைத் தலத்திற்கே . ( வேண்டுதல் வேண்டாமையிலானாகிய முதல்வன் , அந்தணர் வழிபடுதலால் அவர்க்கு அருள்புரிய விரைந்து தோன்றுவன் என்றபடி .)

குறிப்புரை :

கரைந்து - மனமுருகி ; வாயைவிட்டுப் புகழ்ந்து பேசி என்றலும் ஒன்று . கைதொழுவார் - கையால் தொழுவார் . காதலன் - அன்பு செய்வன் . வரைந்து - ( கடவுள் இல்லை என ) நீக்கி . வைதெழுவார் - துயிலுணரும்போது இகழா நின்று எழும் புறச்சமயத்தார் . வாடலன் - துன்பம் செய்யான் . நிரந்த - வரிசையாக விளங்கும் . பாரிடத்தோடு - பூதங்களோடு . தெய்வம் இல்லை என்பாரும் தன் மக்களே ஆதலின் தான் அவரை வாட்டாது தாமே நாளடைவில் உணர வைப்பன் என்றபடி . விரைந்து போவது - அன்பர் வழிபடும்போது நேர் பட நின்று வழிபாட்டை ஏற்றுக் கொள்ளுதல் .

பண் :

பாடல் எண் : 2

ஏற்று வெல்கொடி யீசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.

பொழிப்புரை :

பிற கொடிகளை வென்று மேம்பட்ட ஆனேற்றுக் கொடியையுடைய ஈசன் தனக்குரிய ஆதிரை நாளில் , தான் வேறு வேறு கோலங் கொண்டு காட்சியளித்தற்கு இடமாகிய திருவீழிமிழலையில் தாம் சந்தனம் எனக்கொண்டு பூசிவந்த வெள்ளை நீற்றைக் கொள்ளாது மணமுள்ள பொருள்களைச் சூடிக்கொள்வர் ; மிக நல்லமதியைச் சூடுவோராகவும் உளர் . சந்தன வெள்ளை நீற்றை விரவல் உடையராய் ( அணிந்து ) நாற்றம் சூடுவர் ( நறுமலர் அணிவர் ) என்றுரைப்பினும் அமையும் .

குறிப்புரை :

ஏற்றுவெல்கொடி - இடபமாகிய வெல்லுங்கொடி . ஆதிரை - திருவாதிரைத் திருநாளில் . நாற்றம் - மணமுள்ள கஸ்தூரி புனுகு முதலிய பொருள்கள் . நன்னறும் - நல்லமணமுள்ள . நீற்றுச்சந்தன வெள்ளை - சந்தனமாகக் கொள்ளப்படும் வெள்ளை நீறு . ` வெந்த சாம்பல் விரையெனப்பூசி ` ( தி .3. ப .54. பா .3) என்றல் காண்க . விரவலார் - அணியாது . வேற்றுக்கோலம் - பல வேறு கோலங்களைக் கொள்ளும் இடம் . நூல்களுட் கூறியபடி யோகியாகத் தோன்றாது போகியாகவும் காட்சி தருகிறான் என்றபடி .

பண் :

பாடல் எண் : 3

புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவ னீசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

சூலம் உடையவனும் , விடை ஊர்தியனும் , வினைகளை வென்றவனும் நாகத்தைப் பூண்டவனும் , வெண்மழு வாள் உடையவனும் , அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும் , இருவினையற்ற மேலோர் தொழும் வீழிமிழலை இறைவனே .

குறிப்புரை :

புனைபொன்சூலம் - அலங்கரிக்கப்பெற்ற பொன்னாலாகிய சூலம் . போர்விடை - போர்செய்யும் ஆற்றலோடுகூடிய இடபம் . வினைவெல் நாகத்தன் - இருவினைகளை இயல்பாகவே வென்றவனும் நாகத்தனும் . வெண்மழுவாள் - வெண்மையான மழு வாயுதமாகிய வாள் . நினைய நின்றவன் - நினைப்பதற்குரியவன் . ஈசனையே - ஈசனே . ஐ சாரியை . எனா - என்று . வினையிலார் - வினை களின் நீங்கினார் . ஈசனே என ( அடியவர்கள் ) இனைய நின்றவன் எனப் பிரித்தால் மோனை கெடாது .

பண் :

பாடல் எண் : 4

மாடத் தாடு மனத்துடன் வைத்தவர்
கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர்
பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர்
வேடத் தார்தொழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

முதல்வனை மாடத்தும் ( விமானத்தும் ), ஆடும் மனத்தும் உடன் வைத்தவராகிய திருமாலும் , வேத கோஷம் செய்யும் பிரமனும் , குருகே?ஷத்திரத்தார் பலரும் ( பாண்டவர் ), வேதத்தின் மூல பாடம் பேணும் அந்தணர்களும் , பழிப்பார் கூறும் பழிப்பு அல்லதாகிய திருவேடம் பூண்ட அடியார்களும் , தொழும் ( பதி ) திருவீழி மிழலையே .

குறிப்புரை :

மாடத்தும் ஆடும் மனத்தும் ( முதல்வனை ) உடன் வைத்தவர் - விண்ணிழி விமானமாகிய புறத்தும் நிலையாது திரியும் மனத்தும் ( அகத்தும் ) முதல்வனை வழிபட்ட திருமால் . கோடத்தார் - கோஷத்தார் .( வேத கோஷம் செய்யும் பிரமன் ) பாடத்தார் - மூல பாடம் பேணும் அந்தணர் . தொழும்பதி என ஒரு சொல் வருவிக்க . திருமால் , பிரமன் , பாண்டவர் எனத் தனித்தவர்களாகக் கொள்ளாது . தொகையினராகக் கோடலும் ஒன்று . மாடம் - மாடம் போன்ற விமானம் .

பண் :

பாடல் எண் : 5

எடுத்த வெல்கொடி யேறுடை யான்தமர்
உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது வீழி மிழலைக்கே.

பொழிப்புரை :

உயர்த்துப் பிடித்த இடபக்கொடியையுடைய சிவ பிரானின் அடியவர்கள் , கோவணமே உடுப்பது ; பிச்சை உணவே உண்பது ; கீழ்நின்ற வல்வினைகளையே கெடுப்பது ; பந்த பாசங்களை விடுத்துப் போவது வீழிமிழலைக்கே .

குறிப்புரை :

எடுத்த - தூக்கிய . வெல்கொடி - வென்ற ( மேம்பட்ட ) கொடி . தமர் - சுற்றமாகிய அடியார் . உண்பது பிச்சை - உண்ணும் உணவு பிச்சையாகக்கொண்டது . கீழ்நின்ற - தாழ நின்ற ; தாழ்தற்குக் காரணமாக நின்ற தீயவினைகள் . விடுத்துப் போவது - உலக பந்தபாசங்களை நீங்கிச் சென்று சேரும் இடம் .

பண் :

பாடல் எண் : 6

குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணு முணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே.

பொழிப்புரை :

குழலையும் , யாழையும் போன்ற மொழியாரை வேட்கையினால் இசையும் , உழலும் உடலைத் தீநெறியின்கண் ஊன்றும் நல்லுணர்வற்றவர்களே ! நெருப்பை நீர் மடியின்கண் கொண்டு கெடாதீர் ; பன்முறையினும் சாற்றினோம் , மிழலையான் திருவடி சார விண்ணாளும் திறம் பெறலாம் .

குறிப்புரை :

குழலை - என்றதில் ஐ சாரியை ; குழலும் யாழும் போன்ற இசையோடு கூடிய மொழியாரிடத்து வைக்கும் வேட்கையால் உடலைப் பேணும் அறிவிலீர் என்றபடி . ஊணும் - ஊன்றும் . உணவும் மருந்தும் உண்டு வலிவுறச் செய்கின்ற ; உண்பிக்கும் , ஊட்டும் எனினும் அமையும் . அங்ஙனம் பேணுதல் நெருப்பை மடியிற் கட்டிக் கொள்வது போன்றது என்கிறார் அப்பர் .

பண் :

பாடல் எண் : 7

தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய
நீர னாடிய நீற்றன்வண் டார்கொன்றைத்
தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே.

பொழிப்புரை :

அறிஞனும் , தீத்திரளைக் கையிற்கொண்டாடுபவனும் , சடைத் தங்கிய கங்கையனும் , ஆடிய திருநீற்றனும் , வண்டார்ந்த கொன்றைத்தாரும் , குளிர்ந்து மணக்கும் கண்ணியும் மாலையும் உடையவனும் , புலன்களை வென்று விளங்கும் வீரனும் வீழிமிழலை யிலுள்ள விகிர்தனே .

குறிப்புரை :

தீரன் - அறிஞன் . தீத்திரளன் - நெருப்புத் திரள் போன்ற செம்மேனியன் எனலுமாம் . நீரன் - கங்கையை அணிந்தவன் . ஆடிய நீற்றன் - உடலெங்கும் நீறுபூசியவன் , கொன்றையாலாகிய தாரும் , மாலையும் , கண்ணியும் அணிந்தவன் . ` கண்ணி கார் நறுங்கொன்றை ` ( புறநானூறு - கடவுள்வாழ்த்து .)

பண் :

பாடல் எண் : 8

எரியி னாரிறை யாரிடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

எரியைக்கையால் ஏந்தியவரும் , யாங்கணும் தங்கி நிற்போரும் , நரிகளைப் பரிகளாகக் கொண்டு இடுகாட்டிடை ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் ( மகாதேவனும் ) தங்கும் இடம் பிறப்போடு கூடிய இறப்பை அகல நினைப்பார் தொழும் தலமாகிய வீழிமிழலை ஆகும் .

குறிப்புரை :

எரியினார் - தமது அங்கைசேர் எரியர் ; தங்குபவர் ; இறை யார் - எங்கும் தலைமையானவர் . முறைசெய்து காப்பாற்றுவோன் எனினும் அமையும் . நரியினார் பரியா இடுகாட்டிடை மகிழ்கின்றதோர் பெரியனார் எனக் கூட்டுக . நரியினார் - இழிவு சிறப்பு ; நரிகளைப் பரிகளாக்கியவரும் , இடுகாட்டில் ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் ஆகியவர் . பிறப்பொடு சாதலை வெரீஇயினார் என்பதும் பாடமாகலாம் அல்லது வெரீஇயினார் என்பது விரியினார் என மருவிற்று என்க . பிறப் பிறப்புக்களை அஞ்சினார் என்பது பொருள் .

பண் :

பாடல் எண் : 9

நீண்ட சூழ்சடை மேலொர் நிறைமதி
காண்டு சேவடி மேலொர் கனைகழல்
வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழி மிழலைக்கே.

பொழிப்புரை :

நீண்டு சூழ்ந்த சடையின்மேல் ஓர் நிலாமதியும் , சேவடியின்மேல் கூப்பிடுதூரம் ஒலிக்கும் ஓர் கழலும் கொண்டு , வேண்டுவாராகிய யாம் உள்ள வீதியுட் புகாது வீழிமிழலைக்கே மீண்டு போவர் ; இதுவோ அவர்தம் அருள் !

குறிப்புரை :

சூழ்சடை - வளைத்து முடித்ததால் சூழ்ந்துள்ள சடை . நிலாமதி - நிலவையுடைய மதி . காண்டு - கூப்பிடுதூரம் . சேவடி மேல் கூப்பிடுதூரம் கேட்கும்படி ஒலிக்கும் ஒரு கழல் உள்ளது என்க . உலாப் புறம் போந்த பெருமானைக்கண்டு அவன் திருவுருவ அழகில் மனங் கொடுத்த தையல் ஒருத்தி , அவன்தன் பக்கல் வாராது திருக் கோயிலுக்கு மீள்வது பொறாது இன்ன இயல்பினர் அவரை விரும்புவார் உள்ள வீதியுட்புகாது மீண்டும் மிழலைக்கே போவது ஆக உள்ளது என இரங்கியதாகக் கொள்க .

பண் :

பாடல் எண் : 10

பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை யாரழ லந்தண ராகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

மாலைக்காலத்து வானவர் வந்து பாலைப் பண்ணும் செவ்வழிப் பண்ணும் கலந்த பாடல்களைப்பாடி வழிபடும் இடம் அந்த மாலைக்காலத்தே அந்தணர் நிறைந்த நெருப்பை வளர்த்து ஆகுதி செய்யும் தொழிலராய் வழிபடும் திருவீழிமிழலையே ஆம் . மாலைக்காலத்தே சுரர்பாடப்பூசுரர் வேட்டு வழிபடும் இடம் என்பது கருத்து .

குறிப்புரை :

ஆகுதி வேலையர் - அவிசு சொரியும் செயலராய் . வேலை - செயல் , தொழில் .

பண் :

பாடல் எண் : 11

மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக்
கழல்கொள் காலின் திருவிர லூன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே.

பொழிப்புரை :

இளமையான ஆனேறுடைய உமைமணாளனது திருக்கயிலாயமலையைச் சுழல ஆர்த்து எடுத்த இராவணனது முடியும் தோளும் இறும்படியாக அவன் தன் கழலணிந்த திருவடியில் உள்ள ஒரு திருவிரலால் ஊன்றுதலும் , அவ்வரக்கன் திருவீழிமிழலையானடி வாழ்க என்று வாய்விட்டரற்றினன் . அரற்றவே உமைமணாளன் அவனை மேலும் ஒறுக்காமல் விடுவித்தனன் .

குறிப்புரை :

மழலை - இளமை . ஏற்று மணாளன் - அத்தகைய விடையையுடைய ( உமை ) மணவாளன் ; மணாளக் கோலத்துடன் இருப்பவன் . சுழல - அசைந்து நிலை திரியலுற . ஆர்த்து - தன் வலிமையைப் பெரிது என எண்ணி ஆரவாரித்து . எடுத்தான் - தூக்கியவன் . முடி தோள் - முடியும் தோளும் . இற - நெரிய . விரலால் ஊன்றினவுடன் அரக்கன் அலறி மிழலையான் அடிவாழ்க என வாழ்த்திப் பாடினன் . வாழ்த்தவே இறைவன் அவனை மேலும் ஒறுக்காமல் விட்டான் என்க .

பண் :

பாடல் எண் : 1

என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

என் உயர்ந்த பொருளே ! தேவர் தொழுகின்ற கழலணிந்த நல்ல பொருளே ! நலம் தீங்கு பகுத்து அறியும் அறிவு சிறிதும் இல்லாத இயல்பினேன் அடியேன் ; எனது செம்பொன்னே ! திருவீழி மிழலையுள் அன்பு வடிவாம் பெருமானே ! அடியேனைக் குறிக் கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

என்பொனே - எனக்குப் பொன்னாய் விளங்குபவனே . இமையோர் - கண்ணிமையாத தேவர்கள் . தொழு - வணங்கும் . பைங்கழல் - சிறந்த வீரக்கழல் அல்லது பசிய பொன்னால் ஆகிய கழல் . நன் பொனே - மாற்றுயர்ந்து விளங்கும் பொன் போன்றவனே . நலந்தீங்கு அறிவு ஒன்றிலேன் - நன்மை தீமை அறியும் அறிவு சிறிதும் இல்லாதவன் . செம்பொனே - சிவந்த பொன்போலும் நிறமுடையவனே . ` பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி ` ( தி .11. பொன்வண்ணத்தந்தாதி . பா .1) அன்பன் - அன்பே தானாய் விளங்குபவன் . குறிக்கொள் - அடியேனை நினைந்து காத்தருள்க . ஏ - அசை .

பண் :

பாடல் எண் : 2

கண்ணி னாற்களி கூரக்கை யால்தொழு
தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

இன்பம் மிகும்படி கண்ணினாற்கண்டு , கையால் தொழுது , எண்ணுமாறறியாது இளைக்கும் எளியேனை , தேவர்கள் தொழும் வீழிமிழலையுள் அண்ணலே , குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

களிகூரும்படி கண்டு , தொழுது , எண்ணுமாறு என்க . கையால் தொழுது என்று பின்வருதலின் , கண்ணினால் கண்டு என்பது முன்தானே போதரும் . களிகூர - களிப்புமிக . கையால்தொழுது - கை களால் வணங்கி . எண்ணும் ஆறு அறியாது - உன்னை நினைக்கும் நெறியறியாது . இளைப்பேன்தனை - வருந்துவேனாகிய என்னை . அண்ணல் - தலைமையானவனே .

பண் :

பாடல் எண் : 3

ஞால மேவிசும் பேநலந் தீமையே
கால மேகருத் தேகருத் தாற்றொழும்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

உலகமே ! விண்ணே ! நன்மையே ! தீமையே ! காலமே ! கருத்தே ! கருத்தாற்றொழும் சீலமே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கோலமே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

நிலனும் வானும் , நலமும் தீங்கும் , இவையனைத்திற்கும் ஆதாரமாய் நின்று நிகழச் செய்கின்ற காலமும் , எண்ணும் எண்ணமும் , குறிக்கொண்டு தொழுதுவரும் நல்லொழுக்கமும் ஆகிய இவையனைத்துமாய் உள்ளவன் முதல்வன் . சீலம் - இடையறவு படுதலின்றி நெறிப்பட்டு ஒழுகும் நல்லொழுக்கம் . கோலம் - அழகிய திருவுரு , மணவாளக்கோலம் .

பண் :

பாடல் எண் : 4

முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேயொரு வாவுரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

முத்தனே ! முதல்வா ! முகிழ்க்கும் முளையை ஒத்தவனே ! ஒப்பற்றவனே ! உருவத்திருமேனி உடைய சித்தனே ! திரு வீழிமிழலையுள் வீற்றிருக்கும் அத்தனே ! அடியேனைக் குறிக் கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

முத்தன் - அநாதிமல முத்தன் . முதல்வன் - உலகிற்குப் பரம ஆதாரமாய் நின்று அதனைத் தன் சக்தி சங்கற்பத்தால் மாயை யினின்று தோற்றி நிறுத்தி ஒடுக்குவோன் . முகிழ்க்கும் முளை ஒத்தல் - அறநெறி நிற்பார் உள்ளத்தில் அவ்வறத்திற்கு முதலாக விளங்கித் தோன்றலும் , சிவஞானியர் உணர்வில் முன்னர்ப் பேருணர்வாயும் பின்னர் இன்ப உருவாயும் முகிழ்த்து வளர்தல் . ` சீவனுக்குள்ளே சிவ மணம் பூத்தது ` என்னுந் திருமந்திரம் ஒப்புநோக்கத்தக்கது . ஒருவன் , முன்னர் விளக்கப்பட்டது . சித்தன் - எல்லாம் வல்லவன் ( வித்தகசித்தர் போல வேண்டுருக் கொள்ளவல்லான் ).

பண் :

பாடல் எண் : 5

கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேயுயிர்ப் பாயுணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

மூலப்பொருளாக உள்ளவனே ! கருவாயுள்ளாய் என்று தெளிந்தவர்க்கெல்லாம் ஒப்பற்றவனே ! உயிர்ப்பாகவும் , உணர்வாகவும் நின்ற செல்வனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குரு மூர்த்தியே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

கருவன் - எல்லாவற்றிற்கும் மூலப் பொருளாய் உள்ளவன் . கருவாய்த் தெளிவார்க்கு ஒருவனே - மூலப் பொருளாய் இருப்பவன் என்பதைத் தெரியும் அறிவினை உடையார்க்கு பலராக ஒருவன் என நின்றவனே ; ஒன்றவன்தானே , ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்றாற்போல உணரநிற்றல் . உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற திருவன் - பிராணனாயும் உணர்வு வடிவாயும் இருக்கின்ற செல்வன் . குருவன் - குருவடி வானவன் .

பண் :

பாடல் எண் : 6

காத்த னேபொழி லேழையுங் காதலால்
ஆத்த னேயம ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

ஏழுலகங்களையும் கருணையால் காத்தவனே ! அமரர்க்கு ஆப்தனே ! அயன்றலையைக் கையில் சேர்த்தவனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கூத்தப்பெருமானே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

காத்தன் - காத்தவன் . பொழில் ஏழு - ஏழு உலகம் . காதலால் - அன்பால் . ஆத்தன் - ஆப்தன் . நம்பத் தகுந்தவன் ; தான் உண்மையை உணர்ந்து உள்ளவாறு எடுத்துரைப்போன் . எனவே அமரர்க்குப் பிரமாண நூல்களை அருளியோன் என்பது கருத்து . அயன்றலை சேர்த்தன் - பிரமன் தலையைக் கையில் கபாலமாகச் சேர்த்தவன் . காதலால் காத்தலும் , நூலான் உணர்த்தலும் , செருக்கு எய்திய வழி ஒறுத்தலுமுடைய கூத்தன் என்பது பாட்டின் திரண்டபொருள் .

பண் :

பாடல் எண் : 7

நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ ரும்முண ராததோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

வானவர் தமக்குரிய நீதிப்படி நித்தலும் நியமங்கள் செய்து ஓதியும் அவர்களால் உணரப்படாது நின்ற ஒப்பற்ற வேதியா ! விகிர்தனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் ஆதியே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

நீதிவானவர் - நீதியால் உயர்ந்த பெரியோர் எனினும் பொருந்தும் . நித்தல் - நாடோறும் . நியமம்செய்து - முறையாக வழிபடு தலைச் செய்து . ஓதி ( யும் ) உணராததோர் வேதியா என இயைக்க . வேதியா - வேதம் விரித்தவனே . ஆதி - முதல்வனே .

பண் :

பாடல் எண் : 8

பழகி நின்னடி சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய
அழக னேயணி வீழி மிழலையுள்
குழக னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

நின்னடியைப் பழகிச் சூடிய பாலனாகிய மார்க்கண்டேயனை வஞ்சனையால் பற்றமுற்பட்ட காலனைச் சாடிய அழகனே ! அழகுமிக்க திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குழகனே ! அடி யேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

பழகி - உனக்குப் பூசைசெய்யும் அணுக்கத் தொண்டுரிமையோடு நெருங்கிப் பழகி . அடிசூடிய - திருவடிகளைத் திருமுடியில் சூடிக்கொண்டவராகிய . பாலனை - மார்க்கண்டேயனை . கழகு - சூது ; கழகின்மேல்வைத்த - வஞ்சனையாற்பற்ற எண்ணிய . சாடிய - உதைத்த . குழகன் - இளமையுடையோன் .

பண் :

பாடல் எண் : 9

அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ்
சுண்ட வானவ னேயுணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

தேவர்கள் அசுரர்களுடன் கூடிக்கடைதலால் எழுந்த நஞ்சினை உண்ட தேவனே ! விரிந்த வான் பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையிற் கோயில் கொண்டவனே ! உணர்வு சிறிதும் இல்லேனாகிய அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

அண்டவானவர் - மேல் உலகிலுள்ள தேவர்கள் . வானவர் ( அசுரருடன் ) கூடிக் கடைந்த என்க . வானவன் - உயர்ந்தவன் . உணர்வு - அறிவு . விண்ட - மலர்கள் விண்ட , மலர்ந்த பூக்களை உடைய . வான்பொழில் - உயர்ந்த சோலை . வீழிமிழலையுள் கொண்டன் - வீழிமிழலையின் உள்ளிடத்தைத் தனக்கு இடமாகக் கொண்டவன் .

பண் :

பாடல் எண் : 10

ஒருத்தன் ஓங்கலைத் தாங்க லுற்றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே.

பொழிப்புரை :

ஓங்கிய திருக்கயிலையைத் தாங்கிப் பெயர்க்கலுற்ற ஒருத்தனாகிய இராவணனின் வலிகெட அவனை வருத்தியவனே ! வஞ்சனை உடையேன் மனத்தின்கண் நிலை பெற்ற திருந்தியவனே ! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் பொருள் வடிவாய் இருப்பவனே ! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக .

குறிப்புரை :

ஒருத்தன் - தான் ஒருவனே பெரியோன் எனச் செருக்கியோன் . ஓங்கல் - திருக்கயிலைமலை . தாங்கலுற்றான் - தாங்கிப் பெயர்க்க முயன்றவன் . உரம் - வலிமை . வருத்தினாய் - துன்புறச்செய்தாய் . வஞ்சனேன் - என் குறையைப் பிறர்க்குத் தெரியாதபடி மறைப்பவன் . மனம் மன்னிய - மனத்தைக் கோயிலாகக் கொண்டு நிலைபெற்ற . திருத்தன் - அழகியன் . அருத்தன் - பொருள் வடிவாக உள்ளோன் .

பண் :

பாடல் எண் : 1

பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மானிடை மருதினில்
பூச நாம்புகு தும்புன லாடவே.

பொழிப்புரை :

பல அன்பர்கள் உலக பாசங்கள் ஒன்றும் இல்லாதவராய் மணமிக்க புதுமலர்கள் கொண்டு திருஇடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் எம்பெருமான் திருவடியை வழிபட்டு வைகுதலைக் கண்டு , புனலாட யாமும் பூசத்திருநாளில் அங்குப் புகுந்து வழிபடுவோம் .

குறிப்புரை :

பாசம் - உலகப்பற்று . ஒன்று - சிறிதேனும் என்னும் பொருட்டு . இலராய் - இல்லாதவராய் . பத்தர்கள் - அன்பர்கள் . நாண் மலர் - அன்றலர்ந்த புதுமலர் . அடி - இறைவன் திருவடிகளை . வைகலும் - நாள்தோறும் ( வழிபடும் ) ஈசனாகிய எம்பெருமானின் இடை மருது என்க . புகுதும் - செல்வோம் . பூசப் புனலாட நாம் புகுதும் எனக் கூட்டுக . திருவிடைமருதூரில் தைப்பூசத் திருநாள் சிறந்ததாதலை இன்றும் காண்க . ( தைப்பூசம் முதல்வன் தீர்த்தம் தரும் நாள் )

பண் :

பாடல் எண் : 2

மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னால்முனி கள்வழி பாடுசெய்
இறைவ னெம்பெரு மானிடை மருதினில்
உறையு மீசனை யுள்குமெ னுள்ளமே.

பொழிப்புரை :

வானவர்களும் முனிவர்களும் மறையின் முறையினால் புதிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்ற இறைவனும் , எம்பெருமானுமாகிய இடைமருதூரில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்கும் .

குறிப்புரை :

வேதவிதிப்படி ( மறையின் முறையினால் ) வானவர் முனிகள் வழிபாடு செய் இறைவன் என இயைக்க . உள்கும் - நினைக்கும் .

பண் :

பாடல் எண் : 3

கொன்றை மாலையுங் கூவிள மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை பிரானிடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே.

பொழிப்புரை :

கொன்றை மாலையும் , கூவிளமும் , ஊமத்தமலரும் ஒருங்கு சென்று சேரும்படியாகத் திகழ்கின்ற சடையில் வைத்தவனாகிய இடைமருதூர் உறையும் எந்தையினை என்றும் நன்றுறக் கைதொழுவார் வினைகள் நாசமாகும் .

குறிப்புரை :

கொன்றைமாலையும் கூவிளமும் மத்தமும் திகழ்சடை சென்றுசேர வைத்தவன் எனினும் அமையும் . என்றும் - நாடொறும் . நன்று கைதொழுவார் - நல்ல முறையில் கையால் தொழுவார் .

பண் :

பாடல் எண் : 4

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளு மிடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.

பொழிப்புரை :

எம்மையாளும் இடைமருதூர் உறையும் இறைவன் கழலைச் செம்மையாகத் தொழுவார் வினை சிந்தும் . அத்தொழுகை இம்மையில் வானவர் செல்வம் விளைத்திடும் ; அப்பிறப்பில் பிறவித் துயர் இல்லாவகையில் நீங்கும் .

குறிப்புரை :

இம்மை - இப்பிறப்பிலேயே . வானவர் செல்வம் - சுவர்க்கபோகம் . விளைத்திடும் - உண்டாக்கும் . அம்மையே - இப் பிறப்பின் பின் எய்தும் நிலையில் . பிறவித்துயர் - பிறவித்துன்பம் . நீத்திடும் - நீக்கும் . ஆளும் - ஆட்கொள்ளும் . செம்மையே - செவ்வியமுறையில் .

பண் :

பாடல் எண் : 5

வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையும்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கு மிடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.

பொழிப்புரை :

வண்டுகள் அணைந்த வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடாமுடியை உடைய கூத்தனார் எனப் படர்க் கையிற் பரவியும் எண்டிசைக்கும் கதியாகிய இடைமருதா என முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபட மேலை வினைகள் யாவும் நம்மைவிட்டு விலகிக்கெடும் .

குறிப்புரை :

வண்டணைந்தனவாகிய வன்னியும் கொன்றையும் கொண்டு என்க . அணிந்த - சூடிய . எண்டிசைக்கும் இடைமருதா - எட்டுத்திசைகளுக்கும் தலைவனாய் விளங்கும் இடைமருதனே . விண்டுபோயறும் - நம்மைவிட்டு நீங்கி ஒழியும் . மேலைவினைகள் - பழவினைகள் . படர்க்கையின் வைத்துப் பரவியும் முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபடின் மேலைவினைகள் விண்டு போய்அறும் என்க ; நம்மைப் பற்றுதல் நெகிழ்ந்து சேய்மைக்கண் விலகிப் பின் இல்லையாய்க் கெடும் .

பண் :

பாடல் எண் : 6

ஏற தேறு மிடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்
ஊறி யூறி யுருகுமெ னுள்ளமே.

பொழிப்புரை :

விடையினை உகந்தேறும் இறைவரும் , தன்னைக் கூறுவார் வினைகளைத் தீர்க்கும் குழகரும் , ஆறு செஞ்சடையின்கண் வைத்த அழகருமாகிய இடைமருதூர் எம்பிரானையெண்ணி என் உள்ளம் ஊறி ஊறி உருகுகின்றது .

குறிப்புரை :

ஏறதேறும் - இடபமேறும் . கூறுவார் - தன்னாமம் சொல்லிப் புகழ்ந்து போற்றுவார் . வினை - துன்பத்திற்குக் காரணமாகிய வினை . என் உள்ளம் ஊறி ஊறி உருகும் - என் மனமானது நெக்கு நெக்கு உருகும் .

பண் :

பாடல் எண் : 7

விண்ணு ளாரும் விரும்பப் படுபவர்
மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே.

பொழிப்புரை :

விண்ணிலுள்ள தேவரான் விரும்பப்படுபவரும் , மண்ணினுள்ள மனிதரான் மதிக்கப்படுபவரும் ஆகிய இறைவர்க்குரிய பொழில் சூழ்ந்த திரு இடைமருதூரை எண்ணி நண்ணியவரை வினையினால் வரும் கேடுகள் நண்ணமாட்டா .

குறிப்புரை :

விரும்பப்படுபவர் - விரும்பி வழிபடப்படுபவர் . மதிக்கப்படுபவர் - மதித்துப்போற்றப்படுபவர் . ( விண்ணவர் முதல்வனை உணர்ந்துளார் ஆதலின் விரும்புவர் ; மண்ணவர் கற்றபின்னன்றி உணரார் ஆகலின் மதித்து உணர்ந்து வழிபடுவர் ). எண்ணினார் - எண்ணத்தை இடங்கொண்ட முதல்வன் , அல்லது அடியார் கருத்தில் ஆர்ந்த இடைமருது எனக் கூட்டப்படும் .

பண் :

பாடல் எண் : 8

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினி லீசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.

பொழிப்புரை :

திருநீறு பூசும் விகிர்தரும் , நறுமண மாலைகள் சூடும் தலைவரும் , என் தந்தைபோல்வாருமாகிய திருவிடைமருதூர் ஈசனைச் சிந்தையால் நினைப்பவர்களது வினைகள் தேயும் .

குறிப்புரை :

வெந்த வெண்பொடி - தமது அருளொளியால் பொருள் அனைத்தும் வெந்து நீறாக ( மாயா சத்தி ரூபமாக ) வந்த வெண்பொடி . கந்தம் - வாசனை . கருத்தனார் - கருத்தின்கண் விளங்குபவன் எனினும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 9

வேத மோதும் விரிசடை யண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கு மிடைமரு தாவென்று
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.

பொழிப்புரை :

தேவர்கள் ஓதும் விரிசடை அண்ணலாரும் பூதங்கள் பாடநின்று ஆடும் புனிதருமாகியவரை ஏதந்தீர்க்கும் இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் இறைவா ! என்று சொல்லிப் பாதங்கள் ஏத்தினால் நம்பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் .

குறிப்புரை :

வேதம் ஓதும் - வேதத்தை அருளிய , அல்லது வேதத்தால் ஓதப்படும் . புனிதன் - தூயன் ; நின்மலன் . ஏதம் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே.

பொழிப்புரை :

இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் ஈசன் , தன்னையடைந்த அன்பர்களுக்குக் கனி , கட்டிபட்ட கரும்பு , குளிர் மலரணிந்த குழலையுடைய பாவை போன்ற பெண்கள் , தனித்து முடிகவித்து நின்று ஆளும் அரசு ஆகிய அனைத்தினும் மிக்க இனிமை உடையவன் . தன்னை அடைந்த மெய்ஞ்ஞானிகளுக்கு அவர்தம் உணர்வு புறத்தே செல்வுழி இப்பொருள்களிலெல்லாம் பரானந்த போகமாய் விளைவன் என்றலும் பொருத்தம் .

குறிப்புரை :

இனியன் என்பதைக் கனி கரும்பு முதலியவற்றோடு தனித்தனி கூட்டுக . கட்டிபட்ட கரும்பு - கட்டியாகிய கரும்புச்சாறு ; வெல்லம் . பனிமலர்க்குழல் - இளமையை அறிவித்தது . பாவை நல்லார் - பதுமைபோன்றழகிய பெண்கள் . தனிமுடி கவித்தாளும் அரசு - நிலம் பொது எனல் இன்றி உலகிற்கு ஒரே அரசனாய் மகுடம் சூடி ஆட்சிசெய்யும் அரசுரிமை . தன்னடைந்தார்க்கு - தன்னையே சரண் என்றடைந்த ஞானியர்க்கு . இப்பாடலில் கூறும் நான்கு பொருள்களும் குழந்தை இளைஞர் குமாரர் முதியர் என்பார்க்கு இனிமை பயப்பன . இந்நான்கு தரத்தினர்க்கும் அப்பொருள்களின் மேலான இன்பம் செய்பவன் என்ற நயப்பொருள் காண்க .

பண் :

பாடல் எண் : 11

முற்றி லாமதி சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை யாலரக் கன்முடி
எற்றி னார்கொடி யாரிடை மருதினைப்
பற்றி னாரைப் பற்றாவினை பாவமே.

பொழிப்புரை :

இளம்பிறை சூடும் முதல்வரும் , மலையால் அரக்கன் முடியை விரலைச் சிறிது ஊன்றி ஒற்றியவரும் , இடபக் கொடியை உடையவரும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள இடை மருதூரினைப் பற்றியவர்களை வினைகளும் அவற்றான் வரும் இடர்களும் பற்றமாட்டா .

குறிப்புரை :

முற்றிலாமதி - குழவித் திங்களாகிய பிறைமதி. ஒற்றினார் - அரக்கன் முடியை மலையால் ஒற்றினார்; அதுவே அவனை அழவைத்தது என்க. எற்றினார் கொடியார் - ஏற்றுக் கொடியார். எற்றினார் குறுக்கல் விகாரம். பற்றினார் - இடைமரு தீசனைப் பற்றுக்கோடாய்க் கொண்டு வாழ்வார். இடைமருதீசனைப் பற்றியவர்களை வினை பாவம் பற்றா என்க. வினை - தூலவினை எனப்படும் ஆகாமியம்; பாவம் - அதன் சூக்கும நிலையாகிய அபூர்வம் (காணப்படாதது).

பண் :

பாடல் எண் : 1

பறையி னோசையும் பாடலி னோசையும்
மறையி னோசையும் வைகு மயலெலாம்
இறைவ னெங்கள் பிரானிடை மருதினில்
உறையு மீசனை யுள்குமெ னுள்ளமே.

பொழிப்புரை :

பறை , பாடல் , மறை ஆகிய மூன்றின் ஓசைகளும் தங்கியிருக்கும் வயற்புறங்களை உடையதும் , இறைவனாகிய எங்கள் பிரான் எழுந்தருளியிருப்பதுமாகிய இடைமருதூரினில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்குகின்றது .

குறிப்புரை :

பறை - தோற்கருவி வாச்சியங்கள் . பாடலின் ஓசை - இசைப்பாடல்கள் பாடுவார் எழுப்பும் ஓசை . மறையின் ஓசை - வேத முழக்கம் . எங்கும் - அயலெலாம் - ஊர்ப்பரப்பு முழுதும் . வைகும் - தங்கும் ; இது இடைமருதிற்குரிய அடை . உள்கும் - நினைக்கும் .

பண் :

பாடல் எண் : 2

மனத்துள் மாயனை மாசறு சோதியை
புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம் மானிடை மருதனை
நினைத்திட் டூறி நிறைந்ததெ னுள்ளமே.

பொழிப்புரை :

மனத்தினுள் மாயமாய் வந்து நிற்பவனும் , குற்றமற்ற ஒளிவடிவானவனும் , மிக்க இளமதியைச் சூடியவனும் , எனக்குத் தாயானவனும் , எம்மானும் இடைமருதூரில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய இறைவனை நினைத்திட்டு அன்பு ஊறி என் உள்ளம் நிறைந்தது .

குறிப்புரை :

மனத்துள் - மனத்திற்குள் . மாயன் - வெளிப்படையாக இன்றி மறைந்து வீற்றிருக்கும் மாயத்தன்மையை உடையவன் . புனிறு - மிக்க இளமை . பிள்ளை வெள்ளைமதி - குழவித் திங்களாகிய வெண்மை பொருந்திய மதி . எம்மான் - தலைவன் . நினைத்தலால் அன்பு ஊறி உள்ளத்தின்கண்ணே நிறைந்து நிற்கின்றது என்க .

பண் :

பாடல் எண் : 3

வண்ட ணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கு மிடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.

பொழிப்புரை :

வண்டணைந்த வன்னியும் , மத்தமுமாகிய மலர்களைக் கொண்டு அணைந்த சடைமுடிக் கூத்தப் பிரானை , எண்டிசைக்கும் தலைவனாகிய இடைமருதா என்றுகூற , நம் பழைய வினைகள் நம்மைவிட்டுப் பிரிந்து கெட்டு நீங்கும் .

குறிப்புரை :

மற்றொரு பாடல் ( தி .5 ப .14. பா .5) இப்பாடலை ஒத்திருப்பதை ஓர்க . மத்தம் - ஊமத்தம்பூ . மத்தம் கூத்தனார் என்ற சொல் வேறுபாடுகள் மட்டுமே கொண்டு இப்பாடல் இரண்டு பதிகங்களில் வருகின்றது .

பண் :

பாடல் எண் : 4

துணையி லாமையில் தூங்கிருட் பேய்களோ
டணைய லாவ தெமக்கரி தேயெனா
இணையி லாவிடை மாமரு தில்லெழு
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.

பொழிப்புரை :

ஊழிக்காலத்துப் புலராது தாழ்க்கும் இருளில் முதல்வன் தனக்கு உடனிருப்பார் பிறரொருவரும் ஆண்டு இன்மையின் , தன் கணங்களாகிய பேய்களோடு அணைந்து காலத்தைக் கழித்தல் அரிதென்று எண்ணி ஒப்பற்றதாகிய திருவிடை மருதூரில் எழுந்த மருதமரத்தின் கீழிருந்து தன் பாங்கியாகிய உமையம்மைக்கே ஆகமம் உரைப்பாராயினர் .

குறிப்புரை :

முதல்வன் என்னும் எழுவாய் வருவித்துரைக்க . துணையிலாமையில் - ஊழிக்காலத்து வேறொருவர் தமக்குத் துணையாக இல்லையாதலால் . தூங்கிருள் - கழியாது தாழ்க்கும் இருளில் . பேய்களோடு அணையலாவது - பேய்களோடு கூடியணைந்து நடமாடிக் காலங்கழித்தல் . அரிதே எனா - எமக்கு அரிய தானதே என்று . இணையிலா - ஒப்பில்லாத . இடைமாமருதில் எழு - இடைமருதில்தோன்றியுள்ள . பணையில் - மருத மரத்தடியில் ( பணை - மருதநிலம் , அஃது அந்நிலத்துக்குரிய மரத்துக்கு ஆயிற்று ) தன் பாங்கிக்கு - தன் பாகத்தே உள்ள பெருமாட்டிக்கு ; அல்லது தனக்கு மனைவியாம் பாங்கு உடையாளுக்கு . ஆகமப் பொருள்களைச் சொல்லும் - ஓதிக் கொண்டிருக்கிறான் . இப் பாடல் நகைச்சுவை யமைந்தது . இடைமருதில் பெருமான் எழுந்தருளியுள்ளதற்கு ஒரு வினோதமான காரணம் கூறியவாறு . (1) இடைமருது - ஊழிக்காலத்து அழியாதது , (2) ஊழியில் இறைவனும் அம்மையும் பேய்களும் அன்றிப் பிறர் இரார் , (3) ஆகமம் அம்மைக்கே முதற்கண் உரைக்கப் படுவது என்பன விளங்குதல் காண்க .

பண் :

பாடல் எண் : 5

மண்ணை யுண்டமால் காணான் மலரடி
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமுந் தானும் பயிலுமே.

பொழிப்புரை :

மண்ணுலகை உண்ட திருமால் மலரடி காணான் , என்றும் விண்ணுலகைப் பிளந்து பறந்து சென்ற நான்முகன் வியன்முடி காணான் என்றும் , மாமருதூரில் இருப்பவனே எனக்கருள் என்றும் என் மொய்குழலாளாகிய மகள் விளையாட்டுக்குரிய தன்தோழியர் கூட்டத்துடன் உரைத்து மகிழ்வாள் . பருவம் எய்தாதாரையும் தன்பால் ஈர்ப்பவன் முதல்வன் என்றபடி .

குறிப்புரை :

விண்ணை விண்டு - வானூடு அன்னமாய்ப் பறந்து சென்று . மொண்ணை - முரண்டலை உடையை என்பது போலும் . மொய்குழல் - செறிந்த கூந்தலினை உடைய என்மகள் . பண்ணையாயம் - விளையாடும் தோழியர் . பயிலும் - சொல்லிக் கொண்டிருக்கும் . இப்பாடல் அகத்துறைப் பொருளமைந்தது . செவிலி கூற்று .

பண் :

பாடல் எண் : 6

மங்கை காணக் கொடார்மண மாலையை
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீரிடை மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தா ரிதழியே.

பொழிப்புரை :

பெண்களே , இடைமருதர் இந்த என்மகளாகிய நங்கைக்குக் கொன்றையைக் கொடுத்துள்ளார் ( கொன்றை மலரின் நிறமாகிய பசலையைக் கொடுத்துள்ளார் .) ஆயின் , அவர் மார்பில் தாராக உள்ள மணமாலையைக் கொடுப்பின் , பக்கத்தில் இருக்கும் பார்வதி காண்பள் ; ஆகலின் அதனைக் கொடுத்தல் இயலாது . இனித் தமது முடியின் கண்ணதாகிய கண்ணியையும் கங்கை ஆண்டிருந்து காண்பாள் ஆகலின் கொடுத்தல் இயலாது . மற்று எங்கிருந்து இப் பசலையாகிய கொன்றையைப் பெற்று இவளுக்கு இவர் கொடுத்தது ?

குறிப்புரை :

இறைவன் மார்பில் தார் ஆவதும் கார்க்கொன்றை , முடிக்கண் கண்ணியாவதும் கொன்றை - இவ்விரண்டிடத்தன்றி வேறு எங்குப் பெற்றுக் கொடுத்தது என்க . இதழி - கொன்றை , பசலை . தலைவி இடைமருதீசர்மேல்கொண்ட காதலால் உடல் பசந்தாள் . பொன்னிறப் பசலை உடம்பெல்லாம் பூத்தது . அதை ஏளனம் செய்யும் தோழியர் அப் பொன்னிறப்பசலையை இறைவரளித்த கொன்றை மாலையாகக் கற்பித்து , பார்வதி கங்கைக்குத் தெரியாமல் இறைவர் எங்கு வாங்கித் தந்தார் இக்கொன்றையை என்று தலைவியை நகையாடுகின்றனர் .

பண் :

பாடல் எண் : 1

மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , மறையை ஓதுவர் ; மான்குட்டியை யேந்திய கையினர் ; திருநீலகண்டர் ; கபாலத்தைக் கொண்ட கையினர் ; எத்துறையும் போகுவர் ; தூய வெண்ணீற்றினர் ; பிறையும் சூடும் இயல்பினராவர் .

குறிப்புரை :

மறை ஓதுதல் முதலியவை , பிறர் ஒருவருக்கும் இல்லாத பெருமை சிவபிரான் ஒருவனுக்கே உண்டு என்பதை உணர்த்தும் உண்மையாம் பெரிய நல்லடையாளங்கள் ஆகும் என்பதைச் சிந்தித்து உணர்தல் வேண்டும் . மறை ஓதுதல் , முதல்வன் உலகிற்குப் பொய் தீர ஒழுக்கநெறி வகுத்தவன் என்பதைக் குறிக்கும் . மான்மறி ஏந்துதல் - வேதத்திற்கு நாதன் என்பதைக் குறிக்கும் . ` வேதமான்மறி ஏந்துதல் மற்றதன் நாதன் நான் என நவிற்றும் ஆறே ` ( தி .11 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பா .6) கறைகொள்கண்டம் - முதல்வன்றன் பேரருள் உடைமையினையும் , யாரையும் எவற்றையும் தன்வயப்படுத்தும் செம்பொருட்டன்மையினையும் குறிக்கும் . கபாலியார் - பிரமகபாலம் ஏந்தியவர் . இஃது உயிர்களுக்கு உள்ள யான் எனது என்னும் செருக்கு அறுத்து இன்பூட்ட வல்லான் என்பதைக் குறிக்கும் . துறை போதல் - கரையைச் சென்று அடைதல் , அல்லது , முற்றக்கற்றல் . எனவே , முதல்வன் எக்கலைக்கும் முதற் கருத்தாவாய் இயற்கை முற்றுணர்வு உடையன் என்பதைக் குறித்தபடி . பிறை சூடுதல் உயிர்களின் அக இருளைப் படிமுறையான் போக்கும் தூய நல்லுணர்வைத் தன் பக்கல் உடையன் என்பதைக் குறிக்கும் . ` தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி - ஆமதியான் என அமைத்த ஆறே ` ( தி .11 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பா .6) என்பதனான் உணர்க . இனத்துச் சார்ந்தார்க்குச் சார்பாய் நின்று தலையளி செய்வோன் என்பதைக் குறிக்கும் எனினும் அமையும் . உம்மை எண்ணுப் பொருளில் வந்தது . துறையும் போகுவர் என்றது ` ஈசானஸ் ஸர்வ வித்யானாம் ` என்னும் வேதமந்திரத்தின் கருத்தைத் தருவதாதல் காண்க . எக்கலைக்கும் முதல்வன் ( சிவபிரான் ) என்பது அம் மந்திரத்தின் பொருள் .

பண் :

பாடல் எண் : 2

கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையும்
தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் . கல்லாதவரையும் , கற்று வல்லவரையும் , வணங்காத நெறியைக் கட்டிப் பேசும் வீணரையும் , தணக்கும் இயல்புடையவர் ; எப்பொருளையும் தணிப்பவர் ( ஒடுக்குவர் ); பிணக்கும் இயல்பினரும் ஆவர் .

குறிப்புரை :

கணக்கிலார் - அளவு படாத நெஞ்சினர் , நன்னெறியில் நின்று ஆராய ஒருப்படாத நெஞ்சினர் என்றபடி , கல்லாதவர் எனினும் அமையும் . கற்றுவல்லார் - கற்றதனால் யாம் எல்லாம் வல்லேம் எனக் கருதிச் செருக்குவோர் . வணக்கிலா நெறி கண்டு கொண்டோர் - முதல்வனை உணர்ந்து பணிதல் வேண்டும் என்னும் கொள்கை யில்லாத சழக்கு நெறியை நன்னெறி எனத் தம் புல்லறிவால் துணிந்து கொண்டோர் . எப்பொருளையும் தணிப்பார் , பிணக்குவார் என்க ; ஒடுக்கித் தோற்றி நடத்துவார் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 3

சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்
பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , மழை சொரிவிப்பார் ; திங்களைச் சூழ்கதிர் விரிவிப்பார் ; ஞாயிற்றின் கண் பொருந்திய விளங்கொளியை எரிவிப்பார் ; எப் பொருளையும் தணிவிப்பார் , அவற்றைப் பிரிவிக்கும் இயல்பினரும் ஆவர் .

குறிப்புரை :

சொரிவிப்பார் மழை - மழையை வேண்டுங் காலத்துப் பெய்யச் செய்வார் . சூழ்கதிர்த் திங்களை விரிவிப்பார் - சந்திரனை நிலவுக்கதிர் விரித்தின்புறுத்தச் செய்வர் . வெயில்பட்ட விளங்கொளி - வெயில் ஒளி பொருந்தி விளங்குகின்ற சூரியனை . எரிவிப்பார் - உலகில் விளங்கச் செய்வார் . எப்பொருளையும் தணிப்பார் - எப்பொருளின் ஆற்றலையும் நிகழாதபடி அடங்கி நிற்கச் செய்வார் . பிரிவிப்பார் - இணைந்து நிற்கும் எப்பொருளையும் பிரிக்க வேண்டுங் காலத்துப் பிரியச் செய்வார் ( செல்வம் , வளம் முதலியன ஓரிடத்தில் நில்லாமே இடம் பெயர்ந்து வருதல் காண்க .)

பண் :

பாடல் எண் : 4

செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் மேருமலை வில்லால் முப்புரங்களை அழியச் செய்வார் ; தீர்த்தங்களை மிகுவிப்பார் ; பல பத்தர்களின் ஊழ்வினை அறுவிப்பார் ; அதுவன்றியும் நல்வினை பெறும்படியும் செய்வார் .

குறிப்புரை :

சிலையால் - இமயவில்லால் . மதில் - முப்புரங்களை . செறுவிப்பார் - அழியச் செய்தவர் . தீர்த்தங்கள் உறுவிப்பார் - புண்ணிய வாவிகள் பலவற்றை உண்டாக்கி அளிப்பவர் . அல்லது , அன்பர்களைத் தீர்த்தங்களை உற்று ஆடச் செய்வர் . ஊழ்வினை - ( அதனால் ) முறையாக விளையும் வினைப்பயனை . அறுவிப்பார் - நீங்கச் செய்பவர் . அது அன்றியும் நல்வினை பெறுவிப்பார் - பத்தர்களை ஊழ்வினை அறுத்தலேயன்றி , சிவஞானத்தை மிகுவிக்கும் சிவ நல்வினைகளை மேற்கொண்டு ஒழுகச் செய்வர் .

பண் :

பாடல் எண் : 5

மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோ ரைந்தலை பாம்பரைச்
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் அன்பர்களால் அன்றி மற்றையவரால் அறியப்படாத இயல்புடையவர் ; மழுவாளை உடையார் ; ஓர் ஐந்தலைப்பாம்பைப் பற்றி ஆட்டி அரையிற் சுற்றியவர் ; தூநெறியால் மிகுகின்ற பெற்றியும் உடையவர் .

குறிப்புரை :

மற்றையார் - மெய்யன்பர் அல்லாதவர் . மழுவாள் - மழுவாகிய வாள் . பற்றி - பிடித்து . ஆட்டி - ஆடச் செய்து . ஐந்தலைப் பாம்பைக் கையில்பற்றி ஆட்டுவர் ; இடுப்பிலும் சுற்றிக் கொள்வர் என்க . மகாமாயை என்னும் குண்டலிசத்தியை ஆள்பவர் என்றபடி . தூநெறி - அவா அறுக்கும் முத்திநெறி ( தூஉய்மை என்பதவாவின்மை . திருக்குறள் . 364 .) அந்நெறி நிற்பார்க்குப் பேரின்பமாய் முறுகித் தோன்றும் பெற்றியர் என்க . ` இன்பம் இடையறா தீண்டும் ` என்னும் திருக்குறளோடு (369) ஒப்பிடுக .

பண் :

பாடல் எண் : 6

திருக்கு வார்குழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யால்தனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , வளைந்த நீண்ட குழலாளை உடைய செல்வராகிய தம்மடியை இருக்குவேதம் முதலிய மெய்ம்மொழிகளால் ஏத்துவார்களின் துயரைச் சுருக்குவார் ; அவை தோன்றுகின்ற நெறி அறுமாறு அருளைப் பெருக்குவார் .

குறிப்புரை :

திருக்கு - வளைத்து முறுக்கி முடித்த . வார் குழல் - நீண்டகூந்தல் , இங்கு உமை . செல்வன - உமையைப் பாகங்கொண்ட செல்வனான சிவபெருமானுடைய . இருக்கு வாய் மொழியால் - இருக்காலும் தம் வாய் மொழியாலும் ( இருக்கு - வேதம் ); தன்னை , சேவடியை எனக் கூட்டுக . துயர் சுருக்குவார் என்க . ஆற்றற - வலிகெட . தோற்றங்கள் ஆற்றறப் பெருக்குவார் - துயர்களின் தோற்றங்கள் வலிகெடும்படி , சிவபுண்ணியச் செயல்களைப் பெருக்குவித்துத் தமக்கு அன்பராகச் செய்து கொள்வர் .

பண் :

பாடல் எண் : 7

முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனின் தானோர் தலைமகன்
என்னை யாளுமி றையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் எனின் அவர் , முன்னே தோன்றியவர் ; மயிலை ஊர்தியாக உடைய முருகவேளின் தாதையார் ; ஒப்பற்ற முதல்வர் ; என்னையாளும் இறைவரும் எம்பிரானுமாவர் ; புதியரிற் புதியரும் அவரே .

குறிப்புரை :

பேரெயிலாளரே எனின் , அவர் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய் , பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியர் ஆதல் முதலிய தன்மையர் என்க . மயில் ஊர்தியையுடைய முருகவேள் தன் ஐயார் ( தந்தையார் ) என்க . மயில் ஊர்தி - மயிலாகிய ஊர்தி ( வாகனம் ). எனின் என்பதை அசைநிலையாகக் கொள்ளினும் அமையும் .

பண் :

பாடல் எண் : 8

உழைத்துந் துள்ளியு முள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கு மன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , உழைத்தும் , துள்ளியும் , தம் உள்ளத்துள்ளே உருவத்தை இழைத்தும் எந்தையே ! பிரானே ! என்று இரவும் பகலும் இடைவிடாது அழைக்கும் அன்பர்கள் இயற்றிய பிழைகளை நீக்கும் தன்மை உடையவராவர் .

குறிப்புரை :

உழைத்தும் - மெய்வருந்தும்படித் திருப்பணிகள் செய்தும் ; துள்ளியும் - பேரின்பமேலீட்டால் ஆடியும் ; உள்ளத்துளே உரு இழைத்தும் - இறைவன் திருவுருவைச் செம்மையாக மனத்தில் சிந்தித்தும் . பிழைப்பு - செய்த பிழையின் பயனாகிய துயர் ; பிழைப்பு நீக்குவர் என்பதற்கு அடியார் எக்காரணத்தாலோ செய்யும் . குற்றத்தைத் தான் ஏற்றுக்கொண்டு அவர்க்கு அத்தீங்கு வாராமே காப்பன் என்றுரைப்பினும் அமையும் ; மெய்யன்பர்கள் குற்றங்கள் செய்யினும் குணமெனக் கொள்வன் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 9

நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவநங் கன்திறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

கங்கை உலாவிய நிமிர்ந்த புன்சடையா என்று போற்றாத அழகு பொருந்திய மன்மதன் திறலைவாட்டிய பெரும்புகழ் உடையவர் ; கச்சுப் பொருந்திய அழகிய மென்முலையாளொடும் பேரெயிலில் வீற்றிருந்தவர் .

குறிப்புரை :

புன்சடையா எனா - தவக்கோலம் பூண்ட பெருமானே எனப் போற்றித் தொழாது . மாறுபட்டுப் பூங்கணை எய்த . எனாத என்பது எனா என நின்றது , அநங்கன் - மன்மதன் . வார் உலாவும் வன ( அழகிய ) முலையாளொடும் பேரெயிலில் உள்ளவர் அநங்கன் திறலை வாட்டியபேர் உளார் என முடிக்க . ` ஓம் காமாரயே நம ` என்பது நூற்றெட்டுப் பெயர்களுள் ஒன்று .

பண் :

பாடல் எண் : 10

பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் , படுதம் என்று கூறப்பெறும் கூத்தைத் தாளம் பொருந்த ஆடுபவர் ; அம்பறாத்தூணி உடையவராய் ( வேடராய் ) வந்து அருச்சுனர்க்கு அருள் செய்தவர் ; பிரமசாரியாய் வந்து ( வாமனாவதார காலத்து ) மண்ணளந்தவனாகிய திருமால் பிரமன் என்போரால் பேணப் பட்ட பெருமை உடையவர் .

குறிப்புரை :

பாணி - இசைப்பாட்டு . படுதம் - கூத்துவகை . பேணியார் - பேணி வழிபடப்பட்டவர் . இசைப் பாட்டோடு படுதம் என்னும் கூத்தாடுவாரும் , தூணியாராய் விசயற்கு அருளியோரும் பேணப்பட்டோரும் ஆகிய அவர் பேரெயிலாளர் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 11

மதத்த வாளரக் கன்மணிப் புட்பகம்
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே.

பொழிப்புரை :

பேரெயில் தலத்து இறைவர் செருக்குடைய வாள் அரக்கன் இவர்ந்து வந்த புட்பக விமானத்தைத் திருமலை தடுக்க உடனே பதைத்து அத்திருமலையின் கீழ்ப்புகுந்து அங்கு ஆர்த்து எடுத்தபோது , அவன் முடிபத்தும் சிதையும் படியாக ஊன்றியவர் .

குறிப்புரை :

மதத்த - செருக்கு உள்ள . சிதைக்கவே - தடைசெய்தமையின் ( இவர் ) ஊன்றிய பேரெயிலாளர் ( ஊன்றியவர் ) என முடிக்க . நீள்முடி பிதக்க - நீண்டமுடி நசுங்கும்படி .

பண் :

பாடல் எண் : 1

முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெம்
தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்
பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

முத்தினை , பவளத்தை , முளைத்த எம் பூங்கொத்தினை , சுடரை , சுடர்போல் ஒளி உடைய பித்தனை , கொல்லும் நஞ்சு போல்பவனை , வானவர்க்குள் நித்தனை நேற்றுக்கண்ட வெண்ணித்தலமே இன்று என் உள்ளத்தில் பதிந்திருந்து பேரின்பத்தை மிகுவிப்பது .

குறிப்புரை :

முளைத்த - எல்லார்க்கும் முன்னே தோன்றிய . எம் தொத்தினை - எங்கள் கொத்தினை ; உறுப்புக்கள் பல மலராக அமைந்த பூங்கொத்துப் போன்றவன் என்க . சுடரை - ஒளிவடிவானவனை . அல்லது சூரிய சந்திரர்களாகவும் நெருப்பாகவும் விளங்குகின்றவனை என்க . சுடர்போல் - சூரிய சந்திரர்கள் போல அன்பர்க்குச் சந்திரனைப் போன்றவனாகவும் ( அல்லாதவர்க்குச் சூரியன் போன்றவனாகவும் இருப்பவன் ). ஒளிப்பித்தனை - ஒளியையுடைய அடியர்மாட்டுப் பேரன்புடையானை . பித்தினை என்பதும் பாடம் ; பேரன்புக்குக் கோசரமாவன் என்பது கருத்து . கொலும் நஞ்சினை - அல்லார்க்கு நஞ்சுபோல்வான் . வானவர் நித்தன் - வானவர் அமர நிலை எய்தச்செய்தவன் . நெருநல் - நேற்று . கண்ட - தரிசித்த . வெண்ணியிது என்று ஒருசொல் கூட்டி முடிக்க . அல்லது கண்டது என்று வினை முற்றாக்கியும் முடிபுரைக்கலாம் . முன் நாள் கண்டகாட்சி உள்ளத்தே நின்று களிப்பைத்தர அதனாற் பாடியது இத்திருப்பதிகம் எனக் கொள்க : அடுத்த பாட்டின் கருத்தும் காண்க .

பண் :

பாடல் எண் : 2

வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.

பொழிப்புரை :

வெண்ணியாகிய பழைய நகரத்தை மேவியவரும் , வெண்திங்களைச் சூடியவரும் , கொன்றைக் கண்ணியை உடைய கொத்தாக உள்ள சடையுடையவரும் , கபாலத்தைக் கையில் ஏந்திய வரும் , ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்தேனுக்கு அவர் நினைவு என் நாவினில் அண்ணித்து அமுதாக ஊறும் .

குறிப்புரை :

தொல்நகர் - மிகப்பழைய நகர் . மேய - எழுந்தருளிய . திங்களார் - பிறையணிந்தவர் . கண்ணித்தொத்த - கொன்றைக் கண்ணி அணிந்த கொத்தாகிய . கபாலியார் - பிரமகபாலமேந்தியவர் . தம்மை - அப்பெருமான்தமை . அண்ணித்திட்டு - இனித்து . நேற்றுக் கண்ட காட்சியை நினைந்திருந்த எனக்கு நாவில் அமுது அண்ணித்து ஊறும் என முடிக்க . என் நாவுக்கு - உருபு மயக்கம் .

பண் :

பாடல் எண் : 3

காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடும்
கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

காற்றும் கனலும் ஆவான் ; கதிர்விக்கும் மாமணிமேற் சண்ணித்த திருநீறு போன்ற திருமேனியுடையான் ; அத்திருமேனியை நினைப்பார் வினையை நீக்குபவன் . கூற்றினை உதைத்த குணமுடைய தனிச்சிறப்புடையவன் . இப்பெருமானை நேற்றுக் காண்டற்கு இடமாக இருந்த திருவெண்ணியே எனக்கு இதுபோது பேரின்பத்தைப் பெருக்குவது .

குறிப்புரை :

காற்றினை - காற்று வடிவானவனை . கனலை - அனல் வடிவினனை . கதிர்மாமணி - ஒளியையுடைய சிறந்தமணி போன்றவனை . நினைப்பார் - தன்னை நினைப்பாரின் . வினை நீக்கிடும் - வினைகளைப்போக்கும் . நீற்றினை - திருநீறணிந்தவனை - அல்லது ; நினைப்பவர் வினையை நீறாக்கியவனை என்க . குணமுடை - அபயமாக அடைந்தவரைக் காக்கும் குணமுடைய . வீற்றினை - வீறு . பெருமை - பெருமை வடிவினனை . ` தொழுதெழுவார் வினை வளம் நீறெழ நீறணியம்பலவன் ` என்னும் ( தி .8) திருக்கோவையார் ஒப்பிடத்தக்கது .

பண் :

பாடல் எண் : 4

நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச்
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

நல்லவனை , விளங்கும் நால்வேதங்களை ஓதும்பிரானை , சொல்வடிவானவனை , ஒளியை , சுடர்விட்டு ஒளிர்கின்ற திருக்கயிலாயத் திருமலை உடையவனை , திரிபுரம் எரிசெய்த வில்லுடையவனை நேற்றுக்கண்ட வெண்ணியே இன்று எம்மை இது செய்வது .

குறிப்புரை :

நல்லன் - நன்மையே வடிவானவன் . திகழ் - விளங்குகின்ற . ஓதியை - ஓதியவனை . சொல்லனை - சொல் வடிவானவனை . சுடரை - ஒளி வடிவானவனை . சுடர்போல் ஒளிர் கல்லன் - சூரியன் போல ஒளிவிடும் வெள்ளிப் பனிமால்வரையை இருப்பிடமாகக் கொண்டவன் . கல் - மலை . கடி - விளக்கம் . அல்லது காவல் . மா - பெரிய . வில்லன் - திரிபுரமழிக்க எடுத்த இமயவில்லை உடையவன் .

பண் :

பாடல் எண் : 5

சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்
படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

சுடரைப் போல் ஒளிர்கின்ற வெண்ணீற்றுப் பொடியணிமேனியனை , பூவிதழும் ( பிறவும் ) சென்னியிலே வைத்த அமுதனையானை , படர்ந்த செஞ்சடையிலே பால் போன்ற மதியைச் சூடியவனை , இடர்கள் நீக்கும் இறைவனை யான் கண்டது வெண்ணித் தலத்திலாகும் . சடைநெருங்கிய சென்னியில் அமுது ( நீர் - கங்கை ) வைத்தவனை - எனினும் அமையும் . ( வைத்த அமுதினை என்பதை அருங்கேடன் என்பது போலக் கொள்க )

குறிப்புரை :

சுடரைப்போல் ஒளிர் - சூரியனைப்போல் வெள்ளிதாய் ஒளிவிடுகின்ற . சுண்ண வெண்ணீற்றனை - திருவெண்ணீற்றுப் பொடி அணிந்தவனை . அடர் - பூவிதழ் . அடியார் சூட்டும் பூவிதழும் , இலையும் சென்னியில் ஏற்றருளும் அமுது போன்றவன் என்க . அடரும் சென்னியில் அமுதுவைத்தவனை எனினும் அமையும் . அமுது - தண்ணீர் , கங்கை . படரும் - விரிந்துள்ள . செஞ்சடை - சிவந்த சடை முடியின்மீது . பால்மதி - பால்போன்ற வெண்மையான சந்திரன் . சூடியை - சூடியவனை . இடரை நீக்கியை - துன்பங்களை நீக்கியவனை .

பண் :

பாடல் எண் : 6

பூத நாதனைப் பூம்புக லூரனைத்
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாதனை நல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

பூதங்களுக்குத் தலைவனை , பூக்கள் நிறைந்த புகலூரனை , மகரந்தம் போல் தவழும் மதியைச் சூடியவனை , தலைவனை , நான்மறை ஓதியவனை , வேதப்பொருளானவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன் .

குறிப்புரை :

பூதநாதன் - பூதகணங்களுக்குத் தலைவன் . பூதம் - உயிர் எனினும் அமையும் . தாதெனத் தவழும் மதி - மகரந்தம் போன்ற மஞ்சளும் வெண்மையுங்கலந்த நிறமுடைய பிறைமதி . சூடி - சூடியவன் . தவழும் - தவழ்கின்ற பிள்ளைமதி எனற்கேற்பத் தவழ்தல் கூறப்பட்டது . நாதன் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 7

ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

ஒருத்தியை ஒருபாகத்தில் அடக்கியும் , மற்றொருத்தியைப் புன்சடையிற் பொருத்திய புனிதனை , கருத்துள் இருப்பவனை , திருநீலகண்டனை , கண்ணுதலானை , நிருத்தம் ஆடுவானை , நேற்று வெண்ணியிற்கண்டு ஏத்தினேன் .

குறிப்புரை :

ஒருத்தி - பார்வதி . ஒருபாகத்து - இடப்பாகத்தே . அடக்கியும் பொருந்திய - கூட்டியும் ஒன்றாகச் செய்த ; முன்பே ஒன்றாந் தன்மையோடிருந்ததேயன்றி தன்னுடம்பினொரு கூறாந் தன்மையை அளித்தும் ஒன்றாகச்செய்த . புனிதன் - தூயன் . புரி - முறுக் கேறிய . கருத்தன் - கருதுவார் கருத்துள் நிற்பவன் . கண்ணுதல் நிருத்தன் - கண்ணுதலை உடைய நிருத்தன் . நிருத்தன் - ஆடல் வல்லான் .

பண் :

பாடல் எண் : 8

சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

சடை உடையவனை , சரியும் கோவண ஆடை கொண்டு உடையவனை , உணர்வார் வினைதீர்த்திடும் மழுவாளொடு பிறவும் படை உடையவனை , பாய்ந்து செல்லும் விடை உடையவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன் .

குறிப்புரை :

சரிகோவணம் - இடுப்பினின்று கீழே சரிந்துள்ள கோவணம் . ஆடைகொண்டுடையன் - ஆடையாகக்கொண்டவன் . உணர்வார் - உணர்பவர் . வினை - பழவினைகளை . வாளொடு - மழுப்படையனை என்க . படை - ஆயுதம் . மழுவாளொடு பிற படையும் உடையவர் என்க . பாய்தரும் விடை - பாய்ந்து செல்லும் எருது .

பண் :

பாடல் எண் : 9

பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னையிளந் திங்களங் கண்ணியான்
பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்
விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே.

பொழிப்புரை :

திருக்கயிலாயப் பொருப்புக்குரியவனை , கங்கை யாளைச் சடையிற் கொண்டவனை , அரும்பு போன்ற இளந்திங்களைக் கண்ணியாகக் கொண்டவனை , திருக்கயிலாயத்தைப் பரவிவாழ்த்தும் தொண்டர்கள் விருப்பத்துக்குரியவனை நேற்றுக் கண்டு வெண்ணியில் ஏத்தினேன் .

குறிப்புரை :

பொருப்பன் - கயிலைமலைக்குரியவன் . புன்சடை - மெல்லிய சடையிடத்து . அரும்பனை - அரும்பு அனை எனப்பிரித்து அரும்பை ஒத்த இளந்திங்கள் என்க . திங்களாகிய கண்ணியை உடையவன் . பருப்பதம் - அவன் எழுந்தருளிய திருக்கயிலைத் திருமலை . அதனை ஏத்தித் தொழும் தொண்டர்களிடத்து விருப்புடையவன் என்க . ஸ்ரீ பருப்பதம் எனக் கோடலும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 10

சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாஅருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.

பொழிப்புரை :

வஞ்சிப்பார் வஞ்சனையைக் களையவல்ல எமது அழகன் ; திருமேனிகாட்டி அருள்செய்த கொள்கையினை உடையான் ; காலன் அஞ்சும்படி உதைத்தவன் ; கண்டம் இருளும்படி செய்த கடல் நஞ்சினை உண்டு அமரர்களை உயிர் வாழச்செய்தவன் . இப் பெருமானை நெருநல்கண்ட இடம் திருவெண்ணியூரே ஆம் .

குறிப்புரை :

வஞ்சனை ( யைச் ) சூல வல்ல எம் சுந்தரன் - என மாறுக . சூலுதல் - தோண்டுதல் , களைதல் . அடியரை வஞ்சிப்பார் செய்யும் வஞ்சனைகளைக் களையவல்லவன் என்றபடி ; இது நாவுக்கரசரது அனுபவம் . கோலமா அருள் செய்தல் - பக்குவர்க்குத் தன் திருமேனி காட்டி ஒப்பற்ற சிவஞானத்தை விளங்கச்செய்தல் . கண்டம் இருள் ஆம் வேலை நஞ்சு என்க . வேலை - ( பாற் ) கடல் .

பண் :

பாடல் எண் : 11

இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலரக் கன்திறல் வாட்டினார்
சிலையி னால்மதி லெய்தவன் வெண்ணியைத்
தலையி னால்தொழு வார்வினை தாவுமே.

பொழிப்புரை :

இலைகளுடன் கூடிய கொன்றை சூடிய ஈசனார் மலையினால் அரக்கன் ஆற்றலை வாட்டினார் , வில்லினால் முப்புரங்களை எய்தவர்க்குரிய வெண்ணியைத் தலையினால் தொழுவார்களது வினை நீங்கும் .

குறிப்புரை :

இலையினார் - அடியார் இடும் வில்வம் வன்னி முதலிய பச்சிலைகளைச் சூடியவர் . திறல் - வலிமை . சிலை - வில் . தலையினால் தொழுதல் - தலைதாழ்த்தி வணங்குதல் . தாவும் - கெடும் , ஒழியும் ; தபு - என்பதன் அடியில் தோன்றியது . குறிப்பு : இத் திருப்பதிகம் அப்பர் பெருமான் அள்ளூறித் தித்திக்கப் பாடியது : இக்ஷுபுரி என்னும் பெயர் இதனால் வந்தது போலும் . இறைவன் திருவுரு கரும்பின் அடையாளம் உடைத்து என்பர் .

பண் :

பாடல் எண் : 1

முற்றிலாமுலை யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கு மறிவில ளாகிலும்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்றம் ஊர்தியென் றாளெங்கள் பேதையே.

பொழிப்புரை :

எங்கள் பேதையாகிய இவள் முற்றாத இளமுலை உடையாள் ஆயினும் , அற்றந் தீர்க்கும் அறிவில்லாதவள் ஆயினும் , கற்றைச் செஞ்சடையானாகிய கடம்பந்துறைப் பெருமான் இவர்ந்து வரும் ஊர்தி இடபம் என்று கூறுகின்றாள் . ( செவிலி கூற்று )

குறிப்புரை :

முற்றிலா - முழுதும் எழாத ; இளைய . எங்கள் பேதை இவள் - பேதைப்பருவம் உள்ள எங்கள் மகள் . அற்றம் தீர்க்கும் அறிவு - தலைவன் துன்பத்தைப் போக்கும் காம உணர்வு . அற்றம் - துன்பம் . முற்றிலா முலையாள் , அறிவிலள் என்றது இளையள் , பேதை , காமஞ்சாலாதவள் என்றபடி . ஆகிலும் - அங்ஙனமிருந்தாலும் . கற்றைச் செஞ்சடை - அடர்ந்த செஞ்சடைக் கற்றை . ஊர்திபெற்றம் - வாகனம் எருது . கடம்பந்துறைக் கற்றைச் செஞ்சடையான் ஊர்திபெற்றம் என மாறுக . என்றாள் - காமஞ்சாலா இளையோளாய எமது மகள் இறைவனைக் கண்டு காதலித்து அவன்றன் அடையாளம் கூறத் தொடங்கிவிட்டாள் என்பதாம் . உலாப்புறம் போந்த முதல்வனைக் கண்ட பேதைப் பருவப் பெண் அவன்றன் திருவுருவில் உளங்கொடுத்தாள் என்க .

பண் :

பாடல் எண் : 2

தனகி ருந்ததொர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.

பொழிப்புரை :

நீங்கள் உள்ளக்களிப்பு மிக்கு உடையீராயினும் . நுமது இழிவு நீங்குதற்கு முதல்வனைத் தொழுமின்கள் ; கனகப் பொன்சடையான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நினையும் வல்லமை பெற்றவர் விசும்பு ஆள்வர் ஆதலால் .

குறிப்புரை :

தனகு - உள்ளக்களிப்பு ; இதனை உடையோர் செய்வது அறியமாட்டார் . அன்னோர் முதல்வனை உணராமையின் இழிஞர் , அல்லது குற்றம் உடையோர் ஆவர் . அவ்விழிவு நீங்கி உய்தற் பொருட்டு அன்னோரைத் ` தொழுதெழுக ` என உணர்த்துகின்றார் சுவாமிகள் . முனகு - இழிவு , குற்றம் . சிவபிரானை நினைந்தெழுவார் முத்திபெறுவது சரதம் ஆகலின் , உள்ளக் களிப்புள்ள உலகரையும் தொழுதெழுக என்றருளிச் செய்தபடி .

பண் :

பாடல் எண் : 3

ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.

பொழிப்புரை :

பெருமை மிக்க நல்லியல்புகள் பொருந்திய அன்பர்களே ! ஆரியமும் , தமிழும் , இசையும் ஆனவனும் மிக்க குணத்தார் குறியாக நின்றவனும் ஒருபாற் பார்வதிதேவியாரை உடையவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறை சென்றடைவீர்களாக .

குறிப்புரை :

ஆரியம் - வடமொழி . ` வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்குமானவன் ` ( தி .6. ப .87. பா .1) என்பதறிக . கூரிய - சிறந்த ; மிகுந்த . குறி - சொல்லும் எல்லை . காரிகை - அழகு . சீரியல் பத்தர் - சிறந்த தன்மை வாய்ந்த பக்தர் என்க . கூரிய குணத்தார் குறி நின்றவன் என்பதற்குச் சிவஞானிகள் ஒரு குறிக்கண்வைத்து உணர , அக்குறிக்கண் நின்று அவர்க்குப் பேரின்பம் தருவோன் எனவும் பொருள் கொள்ளலாம் .

பண் :

பாடல் எண் : 4

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவரும்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே.

பொழிப்புரை :

பண்ணின் இன்மொழி கேட்கும் விருப்புடைய பரமனும் , நான்முகனும் , தேவர்களும் , திருமாலும் , அறியப்படாதவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நண்ணினால் , நம்வினைகளாயவை நாசமாம் .

குறிப்புரை :

பண்ணின் இன்மொழி - இரு காதுகளிலும் இரு குழைவடிவாக அசுவரதரன் , கம்பளதரன் என்பார் . பாடல் பண்ணிசை மொழிகளை அல்லது அடியார்கள் பாடும் பண்ணிசைப் பாடல்களைக் கேட்கும் பரமன் என்க . வண்ணநன்மலரான் - அழகிய நல்ல தாமரையில் உள்ள நான்முகன் ; பல தேவரும் கண்ணனும் அறியான் - ( நான்முகனும் ) தேவர்கள் பலரும் திருமாலும் அறியாதவன் . நண்ண - அடைய . வினையாயின - வினைகள் .

பண் :

பாடல் எண் : 5

மறைகொண் டம்மனத் தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவ்வினை தீரத் தொழுமினே.

பொழிப்புரை :

உபதேசப் பொருளைக் கொண்ட மனத்தே விளங்கித் தோன்றும் முதல்வனை ஒரு நெறிப்பட்ட நெஞ்சின் உள்ளூற வைப்பீர்களாக ; திருநீலகண்டன் உறையும் கடம்பந்துறையை நுமது அறிவைக் கட்டுப்படுத்தும் இருவினை தீரத் தொழுவீர்களாக .

குறிப்புரை :

மறைகொண்ட மனத்தான் - உபதேசப் பொருளைச் சிந்தித்தல்கொண்ட மனத்தை உடையவன் . மறை - உபதேசப் பொருள் ( இரகசியம் ). மனத்துள் - உள்மனத்தின்கண் . நிறைகொண்ட - நிறை என்னும் குணம் கொண்ட ; நிறுத்துதல் அமைந்த . அ - அழகிய . நெஞ்சினுள் - உள்மனமாகிய நெஞ்சின் கண் எனக் கூட்டுக . உற - பொருந்த . வைம்மின் - வைத்து வழிபடுங்கள் , ஓ - அசை . கறை - விடக்கறை . சிறைகொண்ட வினை - உயிர்களின் அறிவைச் சிறைப் படுத்துதலைக் கொண்டிருக்கும் வினைகள் . மனத்தை ஒரு நெறிப்படுத்தி உபதேசப் பொருளில் வைத்து முதல்வனைச் சிந்தித்துணர்வார்க்கு வினைக்கட்டு நீங்கி வியாபக உணர்வு வெளிப்படும் என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

நங்கை பாகம்வைத் தந்நறுஞ் சோதியைப்
பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி யரனுறை கின்றதே.

பொழிப்புரை :

கங்கையைச் செஞ்சடையில் வைத்த பெருமானும் ஆறங்கங்களை ஓதியோரும் ஆகிய இறைவர் உறைகின்றது கடம்பந் துறையாதலால் நங்கையை ஒருபாகம் வைத்த அந்த ஒளியுருவை அவ்விடத்துக் கேடின்றிப் பணிந்தெழுவீர்களாக .

குறிப்புரை :

நங்கை - பார்வதி . நறுஞ்சோதி - நல்லஒளி வடிவினன் . பங்கம் - இழிவு . அங்கம் ஓதி - வேதாங்கங்களாகிய சிகை?ஷ நிருத்தம் முதலான ஆறு அங்கங்களையும் உலகிற்கு அளித்தவன் . உமையொருபாகனை அவன் உறையும் கடம்பந் துறையில் பணிந்தெழுக என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

அரிய நான்மறை யாறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறியாமை உடைய நெஞ்சமே ! அரிய நான் மறைகளாய் உள்ளவனும் , அன்னமயகோசம் முதலிய ஐங்கோசங்களாகப் பேசப்பட்டவனும் , தேவர்கள் வேண்ட நஞ்சுண்டவனும் , அதனாற்கறுத்த கண்டத்தினானுமாகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி நினைப்பாயாக .

குறிப்புரை :

அரிய - உணர்தற்கருமையான . நான்மறை - இருக்கு , யசுர் , சாமம் , அதர்வணம் , ஆறங்கம் - சிகை?ஷ , நிருத்தம் , கல்பம் , வியாகரணம் , சந்தோவிசிதம் , சோதிடம் . ஐந்து புரியன் - அன்னம் , பிராணன் , மனம் , விஞ்ஞானம் , ஆனந்தம் என்னும் ஐங்கோசங்களாக எண்ணப்படுபவன் . இவை உயிர்க்கு இடமாகலின் புரி எனப்பட்டன . மட நெஞ்சமே ! - இந்நாள்வரை அறியாதிருந்த மனமே ! கடம்பந் துறையை உரியவாறு நினை என்க .

பண் :

பாடல் எண் : 8

பூமென் கோதை யுமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்க ளுள்ளத்தால்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநம் தீவினை நாசமே.

பொழிப்புரை :

பூவணிந்த மென்கோதை உடையவளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனை வேள்விகள் செய்தும் , உள்ளத்தால் உணர்வீர்களாக ! மன்மதனைச் சினந்த பெருமான் உறையும் கடம்பந்துறையில் அத்திருநாமம் ஏத்த நம் தீவினைகள் நாசமாம் .

குறிப்புரை :

பூமென்கோதை - பூக்களை அணிந்த மெல்லிய கூந்தலை உடையாளாகிய . ஓமம் செய்தும் - பூவும் நீரும் கொண்டு பூசித்தலோடு வேள்விசெய்தும் . காமன் - மன்மதனை . நாமம் - திருப்பெயர் .

பண் :

பாடல் எண் : 9

பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் உலகில் விரும்பி வணங்கிப் பணிசெய்ய அறியாது தேடி இளைத்தற்குக் காரணனாக இருந்தவன் கடம்பந்துறை மேவியவனும் , ஆரணங்கை ஒருபால் உடையவனுமாகிய புலன்களைந்தும் வென்ற பெரு வீரனாகிய இறைவனே .

குறிப்புரை :

பார் - உலகம் . அணங்கி - விரும்பி , ( அணங்குதல் - விரும்புதல் ) வணங்கி - வழிபட்டு . காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணனாயிருப்பவன் . ஆரணங்கு - அரிய தெய்வமாகிய உமையம்மை . மைந்தன் - வலியன் . நாரணனும் பிரமனும் நிலமிசை விரும்பி வணங்கிப் பணி செய்திருப்பின் முதல்வனைக் கண்டிருப்பர் ; அஃது அறியாது அவர் தேடி எய்த்தனர் எனக்கொள்க .

பண் :

பாடல் எண் : 10

நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலா னைந்துட னாடும் பரமனார்
காலா லூன்றுகந் தான்கடம் பந்துறை
மேலா னாஞ்செய்த வல்வினை வீடுமே.

பொழிப்புரை :

பாலோடு கூடிய ஆனைந்தும் ஆடும் பரமனும் , அரக்கனைக் காலால் ஊன்றி உகந்த பெருமானும் ஆகிய இறைவனைக் கடம்பந்துறையிற் சென்று வழிபட்டால் , நாம் செய்த மேலைவல் வினைகள் கெடும் . ஆதலால் , துன்பங்கெடும் படியாக நூல் அறிவால் நன்றாக நினைத்து வழிபடுவீர்களாக . ( நூல் அறிவு - சிவாகம உணர்வு .)

குறிப்புரை :

நூலால் - சைவாகம விதிப்படி , நன்றா - குற்றமின்றி . நோய் கெட நினைமின்கள் என்க . நோய் - பிறவித்துன்பம் . பாலான் ஐந்து - பால் முதலிய ஆனைந்து என்க . ஆனைந்து - பஞ்சகவ்வியம் . ஆடும் - அபிஷேகம் கொள்ளும் . காலால் ஊன்றுகந்தான் - அரக்கனைக் காலால் ஊன்றுதலை உகந்தவன் . மேலால் நாஞ்செய்த வல்வினை - முற்பிறவியில் நாம் செய்த வலிய வினை .

பண் :

பாடல் எண் : 1

தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடம்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

தளருகின்ற கொள்ளுதல் தப்பாத பாம்பினோடு , குளிர்ந்த பிறைமதி வளரும் அழகு வளர்கின்ற சடையாராகிய சிவபெருமானுக்கு இடம் , பேரிசை கிளர்கின்ற கின்னரங்களின் பாட்டு அறாத , கரிய கடம்பு நிறைந்த ஊரில் திருக்கரக் கோயிலே .

குறிப்புரை :

தளரும் - வளையும் . கோள் அரவம் - விழுங்குதலை உடைய பாம்பு . தண்மதி - குளிர்ந்த பிறைமதி . வளரும் - தங்கும் . கோலம் - அழகிய . வளர்சடையார்க்கு - வளர்கின்ற சடையை உடையவர்க்கு . கிளரும் - விளங்கும் . பேரிசை - மிக்க இசையினை உடையதாகிய . கின்னரம் - ஒருவாச்சியம் . அறா - நீங்காத . களரும் - கறஉப்பு நிறமுடையதாய . கார் - கார்காலத்தே மலரும் . கடம்பூர் - கடம்ப மரங்கள் செறிந்த ஊர் . கரக்கோயில் - ஒரு வகை அமைப்பினை உடைய கோயில் ; இந்திரன் தன் கரத்தால் அகழ்ந்து மூர்த்தியை எடுத்துப் பொன்னுலகத்து வைக்க முயன்றமையைக் குறிக்கும் என்பாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 2

வெலவ லான்புல னைந்தொடு வேதமும்
சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் தோளியைக்
கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

கடம்பூர்த் திருக்கரக் கோயிலின்கண் வீற்றிருக்கும் இறைவன் புலன் ஐந்தினை வெல்ல வல்லமை உடையவன் ; வேதமும் சொல்லவல்லவன் ; சுழல்கின்ற தடுமாற்றமும் நீக்க வல்லவன் : மனையார்ந்த மங்கையாகிய மென்றோளுடைய உமாதேவியாரைக் கலத்தல் வல்லவன்

குறிப்புரை :

பலன் ஐந்தொடு - ஐம்புலன்களோடு ஏனைய பகை வர்க்கங்களையும் . வெலவலான் - வெல்லவல்லவன் . வேதமும் - எண்ணும் எழுத்தும் உலகிற்குச் சொல்லியதோடன்றி வேதங்களையும் . சொலவலான் - சொல்லவல்லவன் . சுழலும் தடுமாற்றமும் - சுழற்சியாகிய அறியாமை மயக்கமும் ஐயுறவும் . அலவலான் - இயல்பாகவே நீங்கியவன் ; ( நீக்கவல்லவன் ). மனையார்ந்த - தனது வீட்டின்கண்ணே தங்கியுள்ள . மென்தோளியை - மெல்லிய தோளை உடையபார்வதியை . கலவலான் - கலத்தல் வல்லவன் .

பண் :

பாடல் எண் : 3

பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு வாரவ ரெள்கநீர்
கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே.

பொழிப்புரை :

உலகப் பொருள்களில் பற்றுச் செய்யாது . புலியின் தோலை உடுத்தோனாகிய சிவபிரான் பணியைச் செய்து , அவ்வாறு எழுவார் பணியினையும் உடன்செய்து கரக்கோயிலைக் கைதொழுது வணங்கி உயர்வீராக ! வைதொழாது எழுவார் எள்ளினால் எள்ளட்டும் .

குறிப்புரை :

பொய்தொழாது - பொய்யான பொருள்களுக்கு அடிமைப்படாது ; உலகப்பற்றுவிட்டு . புலிஉரியோன் - புலித்தோல் உடுத்த சிவபிரான் . வைது எழாது எழுவார் என்க , நீர் , சிவபிரான் பணியைச் செய்யாநின்று எழுந்து , அங்ஙனம் எழுவாராகிய நும்போன்ற அன்பர் பணியினையும் செய்யாநின்று எழுந்து , திருக் கரக்கோயிலைக் கைதொழுது மேல் ஓங்குமின் எனமுடிக்க . பணி செய்தெழா - துயில் உணரும்போது , சிவன் பணி அன்பர் பணி இரண்டையும் சிந்தித்தபடியே உணர்ந்து என்றபடி . வைது எழாது எழுவார் - இறைவனை இகழ்ந்து உணர்வின்றியே எழும் அறிவிலிகள் . அவர் நும்மை இகழ்தல் இயல்பு என்றபடி .

பண் :

பாடல் எண் : 4

துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே
பண்ணி னால்முனம் பாட லதுசெய்தே
எண்ணி லாரெயில் மூன்று மெரித்தமுக்
கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

நல்ல எண்ணமில்லாதாரது முப்புரம் எரித்த முக்கண்ணினானது கடம்பூர்க் கரக்கோயிலை , பண்ணினால் திருமுன்பு பாடல் பரவி அச்சமின்றி நெஞ்சமே தொழுவாயாக !

குறிப்புரை :

துண்எனாமனத்தால் - நடுக்கம் இல்லாத நினைவோடு , அன்பினால் என்றபடி . பண்ணினால் - இசையோடு . முன்னம் - அவனது திருமுன்னே . பாடலதுசெய்து - பாடி . எண்ணிலார் - நல்ல எண்ணமில்லாத திரிபுரத்தசுரர்கள் . திரிபுரம் எரித்தான் ஆயினும் உய்யவல்லார் மூவரைக் காத்தவன் ஆகலின் , அன்பினால் பாடித் தொழுக என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை
நினையு முள்ளத் தவர்வினை நீங்குமே.

பொழிப்புரை :

சுனையுள் பூத்த நீலமலர் போன்ற கண்டத்தனும் , புனையும் பொன்னிறக் கொன்றையுடைய புரிசடையும் ஒலிக்கின்ற கழலும் உடையவனுமாகிய கரக்கோயிற் பெருமானை நினையும் உள்ளத்தவர் வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

சுனை - மலையிடத்துத் தானே தோன்றிய நீர்நிலை . நீல மலர் - குவளைமலர் . அன - ஒத்த . புனையும் - அணியும் . கனையும் - ஒலிக்கும் . கொன்றை , புரிசடை , கழல் இவற்றை உடையான் என்க .

பண் :

பாடல் எண் : 6

குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவ ரன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலும்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.

பொழிப்புரை :

அன்புடையாரெலாம் குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவதும் , கணங்கள் வணங்கி வான்மலர் கொண்டு வைகலும் அடி போற்றிசைப்பதும் கரக்கோயில் தலத்திலாகும் .

குறிப்புரை :

கணங்கள் தூயமலர்கள் கொண்டு முதல்வன்றன் அடிவணங்கி என்றும் போற்றிசைக்கும் தலமாகிய திருக்கரக் கோயிலின்கண் அன்புடையார் எல்லாம் மெய்யன்பர்களின் உயரிய குணங்களைப் பாராட்டிப் பிறர்க்கு எடுத்துரைத்தும் தம் குற்றங்களை எண்ணிப் பேசியும் முதல்வனை வணங்கி அவன்றன் பொருள்சேர் புகழ்சொல்லி வாழ்த்துவர் என்க . கணங்கள் - பூதகணங்கள் அல்லது , பதினெண் கணங்கள் ; விண்ணவரும் மண்மேல் வந்து வணங்குவர் என்பதை அடுத்த பாட்டினும் காண்க .

பண் :

பாடல் எண் : 7

பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்கப் படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

திருக்கடம்பூர்க் கரக்கோயில் பண்ணினைப் பொருந்திய மறையோதிப் பல்பூசனைகளை மண்ணினுள்ளார் செய்வதன்றியும் நாள்தோறும் விண்ணினுள்ளாரும் வியக்கப்படும் பூசனைகள் செய்யக்கருதினர் .

குறிப்புரை :

பண்ணினார்மறை - பண்ணோடு பொருந்திய மறையை ஓதி . பல்பல பூசனை - வேதநெறி . சைவநெறி . பத்திநெறி என்னும் இவைபற்றிச் செய்யப்படும் பலவேறுவகையான பூசைகள் . மண்ணினார் - நிலவுலகில் சிவனடியார்கள் . வைகலும் - நாடோறும் . விண்ணினார்கள் - தேவர்கள் . வியக்கப்படுவன கண்ணினார் - மண்ணுலகில் உள்ளார் வியக்கத்தக்க செயல்களைச் செய்யக் கருதிச் செய்வார்கள் . எங்கெனில் , கடம்பூர்க் கரக்கோயிலின்கண் என்க . விண்ணினார் செய் பூசைகள் குற்றம் குறையின்றி நிறைவுடையன ஆகலின் வியக்கப்படுவன ஆயின , கண்ணினார் - கருதிச்செய்வர் ஆயினர் . கண்ணுதல் - கருதுதல் .

பண் :

பாடல் எண் : 8

அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்
தங்கை யால்தொழு வார்வினை சாயுமே.

பொழிப்புரை :

உமையம்மை உடனிருந்து மகிழ்ந்து பாட அங்கையில் அழல் ஏந்தி நின்று ஆடல் புரிபவன் , ஆய கங்கை யுறையும் சடையான் வீற்றிருக்கும் கரக்கோயிலைத் தம்கையால் தொழுவாருடைய வினைகள் வலியற்றுக்கெடும் .

குறிப்புரை :

அங்கை - அகங்கையிலே . ஆர் அழல் . தாங்குதற்கு அரிய நெருப்பை . ஆடலன் - ஆடுதலைச் செய்பவன் , மங்கை - பார்வதிதேவியார் . மங்கை உடன் ( இருந்து ) மகிழ்ந்து பாட ஏந்தி ஆடலன் எனக்கூட்டுக . சாயும் - வலியற்றுக் கெடும் .

பண் :

பாடல் எண் : 9

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

பொழிப்புரை :

கடம்பமாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல் ; என் போன்றார் கடன் பணிசெய்து தற்போதம் இன்றியே இருத்தல் .

குறிப்புரை :

நங்கடம்பன் - நம்மால் விரும்பிப் போற்றப்படும் . கடம்பமலர் சூடும் முருகன் . பெற்றவள் - பார்வதி . பங்கினன் - பாகமாக உடையவன் . தென் - அழகிய . தன்கடன் - அப்பெருமான் தன் கடமை . அடியேனையும் - அடியவனாகிய என்னையும் . உம்மை இழிபுணர்த்திற்று . தாங்குதல் - காப்பாற்றுதல் . என்கடன் - என்னுடைய கடமை . கிடப்பது - அவன் அருள்வழி நின்று என்செயல் என்பது சிறிதும் இன்றி இருத்தல் .

பண் :

பாடல் எண் : 10

பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர்த் தாமரை யானவன்
பிணங்கும் பேரழ லெம்பெரு மாற்கிடம்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.

பொழிப்புரை :

பாற்கடலில் கிடக்கும் படம்கொண்ட பாம்பு அணையானாகிய திருமாலும் மணம் கமழ் மலர்த்தாமரையானாகிய பிரமனும் தம்மில் மாறுபட்ட போது பேரழலாய் நிமிர்ந்த எம் பெருமானுக்கு இடம் , கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

பணங்கொள்பாம்பு எனக் கூட்டுக . பணம் கொள் - படத்தைக்கொண்ட . பாற்கடல் - திருப்பாற்கடலில் . அணையான் - படுக்கையாகக்கொண்டு அறிதுயில் செய்பவன் . மலர்த்தாமரையான் - வெண்தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவனாகிய பிரமன் . பிணங்கும் - ` யானே பிரமம் ` எனச் சொல்லித் தம்முள் மாறுபடுதற்குக் காரணமாக . பேரழல் - பெரிய சோதிவடிவாய்த் தோன்றியவனாகிய ; இச் சோதிப்பிழம்பே மஹாலிங்கம் எனப்படும் .

பண் :

பாடல் எண் : 11

வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை
அரைக்க வூன்றி யருள்செய்த ஈசனார்
திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கு முள்ளத் தவர்வினை யோயுமே.

பொழிப்புரை :

திருக்கயிலாயத் திருமலைக்கண் இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர் அருள்புரிந்த ஈசனார் வீற்றிருக்கும் , அலைவீசும் குளிர் புனல் சூழ் கரக்கோயிலைக் கூறும் உள்ளத்தவர் வினைகள் ஓயும் .

குறிப்புரை :

வரைக்கண் - திருக்கயிலைத் திருமலையின்கண் . நாலைந்து தோளுடையான் - இருபது தோள்களை உடைய இராவணன் . அரைக்க - நெரிபட . திரைக்கும் - அலைவீசும் . ஓயும் - பலன்தாராது மெலியும் .

பண் :

பாடல் எண் : 1

ஒருவ ராயிரு மூவரு மாயவன்
குருவ தாய குழக னுறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

ஒருவராய் , இருவராய் , மூவராய் நிற்பவனும் குருவடிவுமாகிய குழகன் உறைவிடம் , பருத்தவரால் மீன்கள் குதித்தலைக் கொள்ளும் பழனங்கள் சூழ்ந்த இடமாகிய கடம்பூர்க் கரக்கோயிலே .

குறிப்புரை :

ஒருவராய் - சத்தியைத் தன்னுருவத்தினுள் அடக்கிச் சிவன் என ஒருவராய் . இரு மூவருமாய் என்றதை இருவருமாய் மூவருமாய் எனக்கொள்க . இருவருமாய் - சத்தி சிவம் என்ற பிரிப்பில் இருவரும் ஆகி . மூவருமாயவன் - படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்புரிய அரி அயன் அரன் என்ற மும்மூர்த்திகளாயவன் . ` ஓருருவாயினை மானாங்காரத்து ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம் படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை ` ( தி .1. ப .128) என்பது முதலிய திருமுறை மேற்கோள்களால் உணர்க . குருவதாய குழகன் - தென்முகப் பரமனாய் குருநாதனாக வீற்றிருந்து மௌனோபதேசம் செய்த இளையோன் . பருவரால் - பெரிய வரால் மீன்கள் . பழனம் - மருதநிலம் ; வயலும் வயல் சார்ந்த இடங்களும் . கருவதாம் - எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகிய .

பண் :

பாடல் எண் : 2

வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

வன்னியும் , ஊமத்தமலரும் , வளர் இளந் திங்களும் , கங்கையும் ஆகியவற்றைக் கதிர்விரிக்கும் முடியில் வைத்தவன் , பொன்னின் நிறைந்து புணர்முலையாளாகிய உமாதேவியோடும் கடம்பூர்க் கரக்கோயிலில் நிலைபெற்றவன் ஆவன் . ( எல்லாம் வல்ல முதல்வன் உயிர்களுக்குப் போகம் உதவுதற்குப் போகியாய் இருந்தருள்கின்றான் என்பது கருத்து .)

குறிப்புரை :

மத்தம் - ஊமத்தம்பூ . வளர் இளந்திங்கள் - வளர்கின்ற இளைய திங்கள் . ஓர்கன்னியாள் - ஒப்பற்ற கன்னியாகிய கங்கை . கதிர்முடி - ஒளிவிடும் முடி . பொன்னின் - பொன்போல . மல்கு - ஒளி செறிந்த . புணர்முலை - செறிந்த தனங்கள் . மன்னினான் - நிலைத்து வீற்றிருந்தான் . அன்பர் அணியும் எளிய பொருள்களையும் ஏற்று . சார்ந்தாரைக் காத்து , செருக்கின் மிக்கார் வலிபோக்கி உயிர்களுக்குப் போகத்தை விளைவிப்பன் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 3

இல்லக் கோலமு மிந்த இளமையும்
அல்லற் கோல மறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே.

பொழிப்புரை :

இல்லத்திற்கொள்ளும் கோலங்களும் , இந்த இளமையுமாகிய அல்லற் கோலங்களை அறுத்துஉய்ய வல்லமை உடையீராவீர் ; அதற்குக் கடம்பூர்நகர்ச் செல்வக் கோயிலாகிய கரக்கோயிலை விரைந்து சென்று அடைந்து தொழுவீர்களாக .

குறிப்புரை :

இல்லக்கோலம் - மனைவாழ்க்கையாகிய வேடம் . மனைவி மக்கள் தாய்தந்தை சுற்றம் என்று கொண்டொழுகும் பந்த பாசமாம் தோற்றம் . இந்த இளைமையும் - இப்பொழுது நமக்கு வாய்த்துள்ள இளமைத் தோற்றமும் . அல்லற்கோலம் - துன்பத்தைத் தரும் தோற்றரவுகளாம் . அறுத்து உய வல்லிரே - இவற்றைத் துண்டித்துக்கொண்டு உய்திபெற வல்லமையுடையீர் ஆவீர் , பின்னையது செயின் என்றபடி . இளமை இல்லக்கோலம் பூணத் துணையாய் நிற்றலின் இளமைக் கோலத்தையும் வெறுத்தார் . ஒல்லை - விரைந்து . செல்வக்கோயில் - செல்வச் செழிப்புள்ள திருக்கோயில் . நமக்கு அழியாச் செல்வமாகிய திருக்கோயில் எனினுமாம் . ` பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு ` - குறள் 330 என்னும் பொதுமறையின் பிரயோகமே இது .

பண் :

பாடல் எண் : 4

வேறுசிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழக னுறைவிடம்
ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

தம்மைப்பற்றியன்றி வேறு சிந்தனை இல்லாதவர்களது தீவினைகளைக் கூறு செய்யும் குழகன் உறைவிடம் , செல்வம் ஏறுகின்ற தேவர்கள் தொழுகின்ற ஆறு சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

வேறு சிந்தையில்லாதவர் - மனத்தைப் பலவேறு வழிகளில் செல்லவிடாதவர் ; அதாவது சிவனையே சிந்திப்பார் . கூறுசெய்த - துண்டித்த . ` தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால் `. ஏறுசெல்வம் - பெருகும் செல்வம் . ஆறுசேர் - காவிரியாற்றின் வளம்சேர்ந்துள்ள ; அன்பர்கள் நன்னெறியாகிய சிவஞானத்தை அடைதற்கு இடமாகிய எனினும் ஆம் .

பண் :

பாடல் எண் : 5

திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாள னிருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

இடப்பாகத்தே பார்வதியைக் கொண்டதன்றி , திங்கள் பொருந்திய செஞ்சடை மேலும் ஒரு மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் , மணல் நிறைந்த பகுதியில் புன்னையும் , புலிநகக் கொன்றையும் , தென்னையும் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

மேலும் என்பதில் உள்ள இறந்தது தழீஇய எச்ச உம்மை இடப்பாகத்தில் ஒருத்தியைக் கொண்டிருப்பதோடன்றி என்பதைக் காட்டிற்று . ஓர் மங்கை - ஒரு பெண் ; கங்கை . மணாளன் - என்றும் மணக்கோலங்கொண்டிருப்பவன் . பொங்குசேர்மணல் - மிகுந்த மணற்பரப்பு . ஞாழல் - புலிநகக் கொன்றை . தெங்கு - தென்னை . உம்மை விரித்துரைக்க . உமையொரு பாகனாய் உலகத்தைப் படைப்பதோடு அதனை அழியாமைக் காப்பவனும் சிவபிரான் என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

மல்லை ஞாலத்து வாழு முயிர்க்கெலாம்
எல்லை யான பிரானா ரிருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

வளம் பொருந்திய உலகத்து வாழும் உயிர்கட்கெல்லாம் எல்லையாகிய தலைவர் இருப்பிடம் , முல்லை , கொழுத்த மல்லிகை ஆகிய நல்ல மலர்கள் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

மல்லைஞாலத்து - வளம்பொருந்திய இவ்வுலகத்து . எல்லையான பிரானார் - ஆதி அந்தம் என்னும் இரு கோடிகளாகவும் , சென்றடையும் பரமார்த்தமாகவும் உள்ளவன் . கொல்லை - காடு . கொழுந்தகை - நிலவளத்தால் கொழுத்த தன்மையை உடைய . நல்லசேர் - நல்லனவாய எல்லாம் சேர்ந்த .

பண் :

பாடல் எண் : 7

தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்கிட மாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

நெகிழும் இயல்புடைய ஒளிபொருந்திய அரவத்தொடு , தண்மதி வளர்கின்ற பொன்னிறம் உடைய சடையார்க்கு இடமாவது , கிளர்கின்ற பேரொலி உடைய கின்னரம் பாட்டறாத களர் நிலத்தைச் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .

குறிப்புரை :

தளரும் - நெகிழும் . வாள் - ஒளி . வளரும் - கண்வளரும் அல்லது வளர்ச்சிபெறும் . கிளரும் - விளங்கும் . பேரொலி - மிக்க ஒலியையுடைய . கின்னரம் - ஒருவாச்சியம் . பாட்டறா - பாடுதலை ஒழியாத . களர் - முல்லைநிலம் . முதல்வனை அணைந்தோர் தம்பகைமை தீர்ந்து வாழ்வர் என்பது குறிப்பு . இப்பாடல் பிறிதொரு திருப்பாடலை ( தி .5 ப .19. பா .1) ஒத்திருப்பதை ஓர்க .

பண் :

பாடல் எண் : 8

உற்றா ராயுற வாகி யுயிர்க்கெலாம்
பெற்றா ராய பிரானா ருறைவிடம்
முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

உற்றாராய் , உறவாகி உயிர்க்கெலாம் ஈன்றாராகிய தலைவர் அறிவிற் குறைபாடுடைய முப்புராதிகளின் எயில்களை எய்த முதல்வனார் உறைவிடம் கற்றார்கள் , வாழும் கடம்பூர்க் கரக் கோயிலாகும் .

குறிப்புரை :

உற்றாராய் - உற்றுழி உதவுவோராய் ; நமக்குற்றதைத் தமக்குற்றதுபோலக் கருதும் நெருங்கிய உறவுடையவர் என்றபடி . உறவினர் - தூரக்கேண்மையை உடையவர் . உயிர்க்கெலாம் - எல்லா உயிர்கட்கும் . பெற்றாராய - தாயும் தந்தையுமாகிய . முற்றார் - அறிவு நிரம்பாதவர் . கற்றார் - மெய்ந்நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் .

பண் :

பாடல் எண் : 9

வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானா ருறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

திருநீறணிந்த மேனியவர்க்கெல்லாம் உள்ளத்தில் விளங்கும் தலைவனும் வெண்பிறை சூடிய சென்னியானும் ஆகிய பெருமான் உறைவிடம் கடம்பூரில் உள்ள கள்வன்சேர்ந்த கரக் கோயிலாகும் .

குறிப்புரை :

வெள்ளைநீறு - பால்போன்ற வெள்ளிய திருநீறு . மேனியவர் - உடம்பை உடைய அடியார் . உள்ளமாயபிரான் - மனத் தகத்து எழுந்தருளியிருக்கும் பெருமான் . அடியார் எப்பொழுதும் அப்பெருமானையே எண்ணிக்கொண்டிருத்தலில் உள்ளமாயபிரான் என்றார் . பிள்ளை வெண்பிறை - பிள்ளை மதியாகிய பிறை . கள்வன் - திருமால் ; உள்ளங்கவர்கள்வன் எனக்கொள்ளின் சென்னியனும் , கள்வனுமாகிய பிரானார் உறைவிடம் கடம்பூர்சேர் கரக்கோயில் எனமுடிக்க .

பண் :

பாடல் எண் : 10

பரப்பு நீரிலங் கைக்கிறை வன்அவன்
உரத்தி னாலடுக் கல்எடுக் கல்லுற
இரக்க மின்றி யிறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

பொழிப்புரை :

நீர்ப்பரப்புச் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனாகிய இராவணன் தன் ஆற்றலினால் திருக்கயிலையை எடுக்கத் தொடங்க இரக்கமின்றிச் சிறிது விரலாற்றலையினை அரக்கினவன் இடம் கடம்பூர்க்கரக்கோயில் .

குறிப்புரை :

பரப்புநீர் - பரவியநீர்; கடல். உரம் - வலிமை. அடுக்கல் - மலை. எடுக்கல்லுற - தூக்க. இறைவிரல் - காற்பெரு விரல். தலை - இராவணன் தலையை. அரக்கினான் - அழுத்தி நெரித்தான். அரக்கினான் இடம் என ஒரு சொல் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 1

என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை ; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான் ; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன் .

குறிப்புரை :

என்னில் - என்னைக்காட்டிலும் . ஆரும் - யாரும் . இனியார் - இனிமையைச் செய்வார் . என்னிலும் இனியான் - எனக்கு என்னிலும் இனியான் . என்னுளே - என் உடம்பிற்குள்ளே . உயிர்ப் பாய் - பிராணனாய் . புறம்போந்து - வெளிவந்து . உள்புக்கு - உள்ளே சென்று மீளத்தங்கி . என்னுளே - என் உள்ளத்திற்குள்ளே . நிற்கும் - நிலைத்து எழுந்தருளியிருப்பான் ; அவன் யாரெனில் இன்னம்பர் ஈசன் என்க . ஆன்மார்த்த சிவபூசையில் உள்ளக் கமலத்து வீற்றிருக்கும் இறைவினை வெளியில் மந்திர பூர்வகமாக வெளிக்கொணர்ந்து ஆவாகனம் செய்து மீண்டும் தனக்குள் ஒடுக்கும் நிலையைக் குறித்தது . உயிர்ப்பு - உச்சரிக்கப்படும் மந்திரம் .

பண் :

பாடல் எண் : 2

மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கண்ணால்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்திய ரின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

கள்ளுண்பவர்களும் , பெண்கள் வாட் கண்ணால் கட்டுண்பவர்களும் கருதுவது எதனை ? தட்டி முட்டித் தள்ளாடி விழும்போது துணையாவார் எட்டு மூர்த்தியாகிய இன்னம்பர் ஈசனல்லனோ ?

குறிப்புரை :

மட்டு - கள் . வாட்கணால் கட்டுண்பார்கள் - வாள்போன்ற கண்களால் பிணிக்கப்படுவார்கள் . மட்டுண்பார்களும் கட்டுண்பார்களும் தள்ளாடித் தடுமாறும்போது இன்னம்பர் ஈசனை யன்றிக் கருதுவது என் என முடிக்க . உயிர்கொண்டு போம் பொழுது ஈசனையன்றி உற்றார் இல்லை என்றபடி . தட்டிமுட்டித் தள்ளாடி என்றது - கண் பார்வையும் உடல் வலியும் இழந்து நிற்கும் முதுமை நிலையைக் குறித்தது . எட்டு மூர்த்தியர் என்பது இறைவன் எல்லாமாய் நிற்கும் நிலைகருதி வழிபடற்பாலர் என்றபடி .

பண் :

பாடல் எண் : 3

கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலு மென்மனத் தின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

கண்ணியும் கொன்றையும் , தண்மதியோடு கங்கையும் சூடும் முறுக்குண்ட சடையர் , அனல் , சூலம் , மான் மறி கூடிய கையை உடையவர் , என்று சொன்னவுடன் அவ்இன்னம்பர் ஈசன் என்மனத்தே வெளிப்பட்டொளிரும் .

குறிப்புரை :

கனலும் - விளங்கும் . கண்ணி - தலைமாலை ; கொன்றை பின் வருதலின் தும்பை முதலியன கொள்க . சூடும் - அணியும் . புரிசடை - முருக்குண்ட சடை . அனல் , சூலம் , மான் மறி இவற்றை ஏந்திய கையினர் என்க . இன்னம்பர் ஈசன் கையினர் எனலும் என் மனத்துக்கனலும் எனப் பூட்டுவிற் பொருள் கோளாய்ப் பாடலின் முதற்சீரோடு இயைக்க .

பண் :

பாடல் எண் : 4

மழைக்கண் மாமயி லாலு மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்த மன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

மழைக்காலத்தில் கரிய மயில்கள் ஆரவாரிக்கும் மகிழ்ச்சியைப் போன்று மகிழ்ந்து அழைக்கும் தன்னடியார்களின் அன்பினைத் தன்பாற் குறிக்கொள்ள வேண்டிக் குழைக்கும் பெருமை உடையவன் என்மனத்து இழைக்கும் இன்னம்பர் ஈசனாவன் .

குறிப்புரை :

மழைக்கண் - கார்காலத்து மழையின்கண் . மா - சிறந்த . ஆலும் - ஆரவாரிக்கும் . மகிழ்ச்சியான் - மகிழ்ச்சியோடு . அழைக்கும் - அழைக்கின்ற . தன் - அப்பெருமான் தன் . அடியார்கள் தம் - அடியார்களுடைய . அன்பினை - அன்பை . குழைக்கும் - குழையச் செய்யும் . தன்னைக் குறிக்கொளவேண்டி - தன்னையே குறிக்கோளாக அடையவேண்டி . இழைக்கும் - தன் உருவைப் பொருந்தச் செய்யும் . இன்னம்பர் ஈசன் என்மனத்துத் தன்னைப் பொருத்துவான் என்க .

பண் :

பாடல் எண் : 5

தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

தென்னவனும் , எனையாளும் சிவனும் , மன்னவனும் , மதித்தற்குரிய அழகிய மறைகளை ஓதியவனும் , உலகத் தோற்றத்திற்கு முன்னரே நிலைத்திருந்தவனும் , ஊழியிடத்துச் சேரும் திருநீற்றினை அணிந்தவனும் ஆகிய பெருமான் சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஈசனாவான் .

குறிப்புரை :

தென்னவன் - அழகியவன் . சிவனவன் - சிவன் . மன்னவன் - தலைவன் . மதி - மதித்தற்குரிய . அம் - அழகிய . மறை - வேதங்கள் . முன்னம் மன்னவன் - உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன் ; வனம்சேர் பூழியான் - சுடலைப் பொடிபூசி . பூழி - விபூதி . இன்னம் இன்புற்ற - ( இனன் - சூரியன் ) சூரியன் வழிபட்டு இன்புற்ற . சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் எய்தி மருவி இன்னம்பர் ஆயிற்று என்பர் .

பண் :

பாடல் எண் : 6

விளக்கும் வேறு படப்பிற ருள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கு மென்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கு மென்மனத் தின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

அடியவரல்லாத பிறர் உள்ளத்தில் தன்னை வேறுபடத் தோற்றுபவனும் , தன்னடியார் மனத்து அன்பினை அளப்பவனும் . தொடர்பு கொள்ளும் என்னைக் குறிக்கொள வேண்டி என் மனத்தினின்று உருகச் செய்பவனும் இன்னம்பர் ஈசனேயாவன் .

குறிப்புரை :

விளக்கும் - தோன்றச் செய்யும் . பிறர் உள்ளத்தில் வேறுபட விளக்கும் என்க . பிறர் - தன்னிடம் அன்பு பாராட்டாதவர் . தன்னடியார் மனத்து அன்பினை அளக்கும் என்க . அளக்கும் - உள்ளவாறறியும் . என்னைக் குறிக்கொளவேண்டி இளக்கும் என்க . குளக்கும் - தன்னோடு தொடர்பு கொள்ளும் . குளக்கும் என்றதைக் குழக்கும் என்பதன் போலியாகக் கொண்டு என்னை வசீகரிக்கும் என்றலும் ஒன்று .

பண் :

பாடல் எண் : 7

சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணால்பரு கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற வின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

கங்கையாள் சடைக்கண் உள்ளாள் ; அவன் கையது அனல் . அக்கங்கையாகிய மங்கை ஒரு கடைக்கண்ணால் நோக்க , இமவான் மகளாம் பார்வதி தனது படையனைய கண்களால் அழகைப் பருகநிற்பவன் ; நமக்கு துன்பக் காலத்துப் பற்றுக்கோடாய் நின்ற இன்னம்பர் ஈசன் .

குறிப்புரை :

சடைக்கணாள் புனலாள் - சடையின்கண் தங்கியிருப்பவள் கங்கை . அனல் கையது என்க . கங்கையாகிய மங்கை கடைக் கண்ணால் நோக்க இமவான்மகள் படைக்கணால் பருகப் படுவான் எனக் கூட்டுக . அகரம் தொகுத்தல் விகாரம் . இமவான் மகள் மங்கை - பார்வதி . நோக்க - பார்க்க . படைக்கணால் - வேல் கணை வாள் முதலிய ஆயுதங்கள் போன்ற தன் கண்களால் . பருகப்படுவான் - பார்த்து உண்ணப்படுபவன் . நமக்கு இடைக் கண்ணாய் நின்ற - நமக்குத் துன்பத்துக்கண் தோன்றி நின்ற .

பண் :

பாடல் எண் : 8

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

தூமலர்களைத் தூவித் தொழுது , துதித்து , நின்று அழுது விருப்புற்று அரற்றுகின்ற மெய்யன்பர்களையும் , வாளா பொழுதுபோக்கிப் புறக்கணிப்பார்களையும் கீழ்க்கணக்கெழுதும் இறைவன் இன்னம்பரில் உறையும் ஈசனேயாவன் .

குறிப்புரை :

தொழுது - வணங்கி . தூமலர் - தூய்மையான மலர்கள் . துதித்து நின்று - போற்றியுரைத்து நின்று . காமுற்று - அன்பு கொண்டு . பொழுதுபோக்கி - இறைவனைத் தொழாது இறைவன்புகழ் பேசாது வீண்பொழுதுகடத்தி . புறக்கணிப்பார் - வெறுப்பவர் . கீழ்க்கணக்கு - சிறுவரிகளாய் எழுதும் குறிப்பு .

பண் :

பாடல் எண் : 9

விரியுந் தண்ணிள வேனிலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமும்
திரியு மெல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய வின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

வெள்ளிய பிறைமதி தோன்றும் குளிர்ந்த இள வேனிற் காலத்திலே காமத்தை விளைக்கும் மன்மதன் வெந்தழியும்படி புருவநெரித்தவன் , நெறிகடந்த மும்மதில் தீயெழுந்தெரியுமாறு நோக்கிய இன்னம்பர் ஈசனே .

குறிப்புரை :

வெண்பிறை விரியும் தண்ணிள வேனிலில் என்க . வெண் பிறை விரியும் - வெள்ளிய பிறைமதி தோன்றும் . தண் - குளிர்ந்த . இள வேனிலில் - இளவேனிற்காலத்து மாலை நேரத்தே . புரியும் காமனை - காமத்தை விளைப்பவனாகிய மன்மதனை . வேவப் புருவமும் திரியும் - வெந்தழியப் புருவநெரிப்புச் செய்பவன் . எல்லையில் - அழிவில்லாத ; நெறிகடந்த எனினும் ஆம் . நோக்கிய - பார்த்த .

பண் :

பாடல் எண் : 10

சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற வின்னம்ப ரீசனே.

பொழிப்புரை :

நமக்கு இனியவனாய் நின்ற இன்னம்பர் ஈசனே ! சனியும் , ஞாயிறும் , வெள்ளியும் , திங்களுமாகிய கோள்களை முனிபவனாகிய பத்துத்தலையுடைய இராவணனைக் கனியுமாறு திருவிரலால் ஊன்றிய இன்னாமைக் காரணம் என்னையோ ?

குறிப்புரை :

சனி , வெள்ளி , திங்கள் , ஞாயிறு இவற்றை முனிபவனாய் என்க . இராவணன் நவக்கிரகங்களை அடிமையாக்கி ஆண்டவன் என்பதைக் கருதியது . முனிபவன் - வெறுப்பவன் . கனிய ஊன்றியகாரணம் - மனம் பண்படத் திருவிரலால் ஊன்றிய காரணம் . என்கொலோ - யாதோ ? தேவர்களை அடிமையாக்கிக் கொடுமையே செய்த இராவணனைத் திருந்தும்படி ஊன்றிய காரணம் என்னவோ என வினவினார் .

பண் :

பாடல் எண் : 1

பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.

பொழிப்புரை :

குடமூக்கிலே உள்ள பெருமான் , பூவின் வண்ணத்தை உடையவன் , புண்ணியமே வடிவானவன் , அடியார்கள் ஆகும் வண்ணம் நண்ணி யருள்புரிந்து அடிமைச் சீட்டெழுதி ஆட்கொள்பவன் , தீயின் நிறத்தை உடைய செம்மேனியில் திருநீறு பூசியவன் , கோவண ஆடை உடையவன் .

குறிப்புரை :

பூவணத்தவன் - பூவின் நிறத்தையும் , தன்மையையும் ஒத்தவன் . ` பூவண்ணம் பூவின் மணம் போல ` என்றபடி எங்கும் அருளொடு நிறைந்தவன் என்க . புண்ணியம் - புண்ணியமே வடிவானவன் . ` புண்ணியப்பொருளாய் நின்றான் `. நண்ணி - விரும்பி . அடியார்களை அங்கு நண்ணி ஆவணத்துடையான் என்க . ஆவணத் துடையான் - ` என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக்கெழுதிய ஆவணம் ` ( தி .10 திருமந்திரம் ). ஆவணம் - அடிமைச் சாசனம் . சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட வரலாற்றில் காணலாம் . தீவண மெய்யில் திருநீறு பூசி என்க . தீவணமெய் - நெருப்பின் நிறம் போன்ற சிவந்த திருமேனி . தீவண்ண மெய்யில் திருநீறு பூசியதை நீறுபூத்த நெருப்போடு உவமிப்பர் . ஓர் கோவணத் துடையான் - ஒற்றைக் கோவண ஆடையன் . மேற்குத் திசையின் மூலையின் முடுக்கில் அமைந்த கோயிலாயிருந்தமை பற்றி வழங்கியது குடமுடுக்குக் கோயில் என்பது . பிரளய காலத்தில் சகல உயிர்களையும் அடைத்து வைத்த குடத்தின் மூக்கு இருந்த இடம் என்பது புராணம் . குடமூக்கில் உள்ளான் என்க .

பண் :

பாடல் எண் : 2

பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டிய்யுறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

உலகில் உள்ளவர்களே ! நீர் பிறந்து வாளா திரிந்து இறந்து போகாமல் , எல்லா உலகங்களையும் எரித்து சர்வசங்கார காலத்தில் ஆடும் இறைவனின் திறத்தைச் சிந்தையுள் இருத்துவீராக ! வேர்வை தோன்றுமாறு விரைந்து ஆடிய காளியின் ஆடலை வெல்லுமாறு கூத்து ஆடிய பெருமான் குடமூக்கில் உறைபவன் ஆவான் .

குறிப்புரை :

பூத்து ஆடி - இவ்வுலகில் தோன்றிப் பயனற்ற செயல்களைச் செய்து . கழியாதே - இறவாமல் . பூமியீர் - நிலவுலகினராகிய நீவிர் . தீத்தாடி - தீயின்கண் நின்று ஆடுபவன் . தீர்த்து ஆடி எனப் பிரித்துப் பொருள் காணலுமாம் . திறம் - தன்மையை . வைமின் - எண்ணி மனத்திலிருத்துங்கள் . தன்னோடு போட்டியிட்ட காளியுடன் நடமாடி வென்றவன் என்ற வரலாற்றை உட்கொண்டவை பின் இரண்டு வரிகள் . வேர்த்து - சீற்றங்கொண்டு . விசை - ஆடலின் வேகம் . தீர்க என்று - முடிவடைவதாகுக என்று . கூத்தாடி - ஊர்த்துவ தாண்டவத்தை ஆடியவன் . உறையும் - எளியனாய் உலகினர்வந்து வணங்கி அருள் பெறக் குட மூக்கில் எழுந்தருளியிருப்பவன் என்றவாறு .

பண் :

பாடல் எண் : 3

நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி யெனப்படும்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

உமைநங்கையாளை ஒரு பாகத்திற்கொண்ட தலைவர் . அங்கையாளொடு வண்டு தாழ்சடையினளாகிய கங்கையாளும் , உறையும் குடமூக்கில் காவிரியுமாகிய தீர்த்தச் சிறப்புக்கள் உள்ளன .

குறிப்புரை :

நங்கை - மகளிருள் சிறந்தாரை வழங்கும் பெயர் . நங்கையாகிய உமையாளுடன் கூடி உறையும் குடமூக்கில் என்க . கங்கை கன்னி - ஏழு தீர்த்த மாதாக்களில் இருவர் ( கன்னி - காவிரி ). அறுபதம் - வண்டு . தாழ் - மொய்க்கும் . அங்கையாள் - அழகிய கையினள் . இது ஏனைய தீர்த்த மாதாக்களில் ஒருவரைக் குறிப்பது . இத்தலத்திலுள்ள மகாமகதீர்த்தத்தின்கண் கங்கை முதலிய சப்ததீர்த்த மாதாக்கள் நீராடித் தூய்மை பெற்றதாகப் புராண வரலாறு கூறுகிறது .

பண் :

பாடல் எண் : 4

ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னும்மினி தாகும் மியமுனை
சேதா ஏறுடை யானமர்ந் தவிடம்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

ஓதாதே உணர்ந்த முதல்வன் திறத்தை எவ்வளவேனும் கூறினால் இனிதாகும் ; யமுனையும் கோதாவிரியும் தீர்த்தங்களாகப் பொருந்திய குடமூக்கே சிவந்த ஆனேறுடை யானாகிய சிவபிரான் உறையும் இடம் .

குறிப்புரை :

ஓதாநாவன் - ஏனையர்போல நாவால் ஓதாது எல்லாம் உணர்ந்தவன் இயல்பாகவே இயற்கையுணர்வினன் . ` கல்லாமே கலை ஞானம் கற்பித்தானை ` பிறரைப் புகழாத நாவன் எனலுமாம் . திறத்தை - பெருமையின் வகைகளை . உரைத்திரேல் - உரைப்பீரே யானால் . ஏதானும் - இனிய அல்லவும் ; சிறிதளவேனும் ஏதாக இருந்தாலும் எனலுமாம் . இனிதாகும் - தீமையும் நன்மை விளைக்கும் . இயமுனை , யகரம் மொழிக்கு முதலில் வாராமை கருதி இயமுனை என்றாயது . இய முனை - யமுனை நதி . ஏறுடையான் அமர்ந்த இடம் யமுனை கோதாவிரி உறையும் குடமூக்கில் என்க . சேதா ஏறு - பசுவினமாகிய எருது ; ஆனேறு .

பண் :

பாடல் எண் : 5

நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.

பொழிப்புரை :

நல்ல நெஞ்சே ! நீ , திக்குகளையே ஆடையாக உடைய தலைவனும் வக்கரையென்னும் திருத்தலத்து உறைவானும் ஆகிய இறைவனை வணங்குவாயாக ! அக்கு மாலையினையும் , அரவினையும் அரையில் கட்டியவனும் , கொக்கரையென்னும் பாடலையும் கூத்தையும் உடையவனுமாகிய பெருமான் குடமூக்கிலே உள்ளான் .

குறிப்புரை :

நக்கரையன் - உடையில்லாதவன் . வக்கரை உறைவான் - திருவக்கரை என்னும் தலத்தில் எழுந்தருளி இருப்பவன் . நாடொறும் நன்னெஞ்சே நக்கரையனை வக்கரை உறைவானை நீ வணங்கு என்க . அக்கு - சங்குமணி . அரை - இடை . அரவு அரை என்பதற்குப் பாம்புகளின் அரசன் எனலுமாம் . இடையிலே அக்குமணி கட்டியதோடு அரவையும் இடையின்கண் கட்டியவன் என்க . கொக்கரை - கொக்கிறகம்பூ , பாடல் , ஒருவகை வாச்சியம் ; மூன்றுள் ஏற்பன கொள்க .

பண் :

பாடல் எண் : 6

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

பற்றுக்களைத் துறக்கும் நெஞ்சுடையவர்களாகிய தொண்டர்களே ! மறவனாகிய பார்த்தன்மேற் கணைதொடுத்த எம் குறவேடம் கொண்ட பெருமானும் , குடமூக்கில் உறைபவனுமாகிய இறைவனை உமது பிறவி நீங்குமாறு பித்தராய் நின்று பிதற்றுவீர்களாக .

குறிப்புரை :

துறவி நெஞ்சினர் - அகப்பற்று புறப்பற்றை அடியோடு ஒழித்துத் துறவு எய்திய மனத்தை உடையவர் . பித்தராய்ப் பிதற்றுமின் - ஈடுபாடுடையவராய்ப் பலவாறு அவன் புகழைச் சொல்லுங்கள் . மறவனாய் - வீரனாய் . பார்த்தன் - அருச்சுனன் . கணை - அம்பு . தொட்ட - விடுத்த . குறவன் - கிராத வேடந்தாங்கி நின்றவன் . குரவன் என்பது எதுகை நோக்கித் திரிந்ததெனலுமாம் . அப்பொழுது மறவன் என்பதை வேடன் எனக் கொள்க .

பண் :

பாடல் எண் : 7

தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

பழையதாகிய வலிய வினைகளாம் பற்று அற வேண்டுவோரே ! பகைவராகி யெதிர்ந்த முப்புராதிகளது மூன்று நகரங்களையும் ஒரு மாத்திரைப் போதில் எரியுண்ணக் கொண்டவன் உறையும் குடமூக்கில் , தொண்டராகித் தொழுது பணிவீர்களாக !

குறிப்புரை :

தொண்டராகி - தொண்டு செய்யும் அடியவராய் . பண்டை வல்வினைப் பற்று - பழவினைகளாகிய பிராரத்தங்களின் பிணிப்பு அற - நீங்க . வேண்டுவீர் - விரும்புவீராய நீங்கள் . விண்டவர் - திரிபுரப்பகைவர் . ஒரு மாத்திரை - ஒரு கணப்பொழுதில் . கொண்டவன் - அழித்தவன் .

பண் :

பாடல் எண் : 8

காமி யஞ்செய்து காலங் கழியாதே
ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமி யோடு சரச்சு வதியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

பயன் கருதிய செயல்களையே வாளா செய்து காலம் கழிக்காமல் வேள்விகள் பல செய்து , தன் கணவனாகிய பிரமனோடு சரசுவதியும் கோமி ( கோதாவரி ) யும் , உறையும் குடமூக்கிற் பெருமானை , உள்ளத்தே உணர்வீர்களாக !

குறிப்புரை :

காமியம் - மனம் விரும்பியவை . ஓமியம் - ஓம காரியம் . புறத்தே அக்னிகாரியத்தையும் அகத்தே ஆறாதார யோகத்தையும் உணர்த்தும் . குண்டலிகத் தானமான உந்தியில் ஞான அனலை எழுப்பி அதனுள் விந்துத் தானத்து அமிழ்தமான நெய்யைச் சுழுமுனை இடை நாடிகளாகிய சுருக்கு சுருவங்களால் ஓமித்தல் . உள்ளத்து அர்ச்சித்தலாவது - புறப்பூசை போல அகத்தே கொல்லாமை முதலிய அட்ட புட்பங்கொண்டு வழிபடல் . சாமி - சாமை நிறமுடைய யமுனை ஆகலாம் . கோமி - கோதாவிரி . ` தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரைபுட்கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை ` ( தி .6. ப .75. பா .10.)

பண் :

பாடல் எண் : 9

சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம்
குரவ னாருறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :

பிரமன் , திருமால் முதலிய தேவர்க்கெல்லாம் பரம ஞானாசாரியனாக விளங்கும் பரமன் உறையும் குடமூக்கில் , பல நாளும் பயின்று சிவனுக்குப் பக்தர்களாக முயற்சி செய்து வாழ்வீர்களாக .

குறிப்புரை :

சிரமம் - வருந்திச் செய்யும் இயமம் நியமம் முதலிய முயற்சி . பத்தர் - அன்புடையவராய் . பயிற்றுமின் - சொல்லிப் பழகுங்கள் . மற்றொழிந்தார்க்கெலாம் - ஏனைய தேவர் முதலானோர்க்கும் . குரவன் - தலைவன் அல்லது ஆசிரியன் .

பண் :

பாடல் எண் : 10

அன்று தானரக் கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுக் கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே.

பொழிப்புரை :

அரக்கனாகிய இராவணன் திருக்கயிலாயத்தை அன்று சென்றுதான் எடுக்க , உமை அஞ்சுதலும் தான் பெரிதும் சிரித்துத் தன் நல்விரலை ஊன்றிப் பிறகு அவனை வருத்திச் சாமவேதம் கேட்ட பெருமான் குடமூக்கிலே உறைபவன் ஆவான் .

குறிப்புரை :

அன்றுதான் - முன்னொரு காலத்தே தான் என்ற முனைப்போடு . எடுக்க - தூக்க . நன்று தான் நக்கு - நன்மை உண்டாகச் சிரித்து . முப்புரமழித்த சிரிப்புப் போல அழியச் சிரித்த சிரிப்பன்று என்பார் நன்று தான் நக்கு என்றார் . கொன்று - வருத்தி . கீதம் - சாமகானம் . உறைவது என வருவிக்க .

பண் :

பாடல் எண் : 1

கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.

பொழிப்புரை :

நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் புரிகின்ற நின்றியூரில் , கடிய கையுடைய கூற்றுவனை உதைத் திட்டவரும் அன்பர்களின் கருத்தில் உறைபவரும் ஆகிய இறைவர் , கொடிய கண்களை உடைய வெள்ளிய கபாலம் கொண்டு , குறை கொண்டு விலைகூவுதற்குப்படும் பொருள் ஏதுமிலராகிய இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்புடையவர் ஆவர் .

குறிப்புரை :

கொடுங்கண் - தோண்டப்பட்ட கண்களை உடைய . குறைவிலைப்படுங்கண் ஒன்று இலராய் - குறைந்த விலைக்கு விற்றுக்கொள்வதோர் இடமுமில்லாதவராய் ` விற்றூண் ஒன்றில்லாத நல்கூர்ந்தான்காண் ` ( தி .6. ப .8. பா .1.) பலி தேர்ந்து - இரந்து . நெடுங்கண் - காதளவு நீண்ட கண்கள் . ஆட்டயர் - நாட்டியம் அயர்கின்ற . கடுங்கை - உலகப்பற்றினின்று உயிர்களைப் பிரித்தல் வலிதாதலின் வலிதாகிய கை என்றார் . கருத்தர் - மூலகாரணர் .

பண் :

பாடல் எண் : 2

வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளற் பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதுபவரும் , விளங்குகின்ற வெள்ளியதோடும் வெள்ளிய சங்கக்குழையும் உடைய காதினருமாகிய ( அர்த்தநாரீசுவரரும் ) எமது கள்வரே ! வீதியில் வேலனைய நீண்ட கண்களை உடைய பெண்களின் வெள்வளைகளைக் கொள்வது தேவரீர்க்கு நீதியோ ? உரைத்தருள்வீராக .

குறிப்புரை :

வீதி - தெருவீதியின்கண் . வேல்நெடுங்கண்ணியர் - வேல் போன்று கூரிய நீண்ட கண்களை உடைய தாருகாவனத்து முனிபன்னியர் . வெள்வளை - சங்க வளையல்களை . கொளற் பாலது நீதியே - கொள்வது முறையோ . காதலால் மெலிந்த பெண்களின் கைவளை சோரும் என்பது அகப்பொருள் இயல்பு . வெண் தோட்டராய் - வெண்மையான ஒளி செய்கின்ற தோடணிந்தவராய் . காதில் குழைவைத்த - மற்றொரு காதில் குழையணிந்த . தோடு குழை என்பன மாதொருபாகராய இயல்பு குறித்தன . கள்வர் - பிச்சை கொள்ள வந்து வெள்வளையோடு உள்ளத்தைக் கொண்டவர் ஆதலால் எம் கள்வர் என்றார் .

பண் :

பாடல் எண் : 3

புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.

பொழிப்புரை :

புற்றினைப் பொருந்திய அரவினைப் புலித் தோலின்மேல் சுற்றியவரும் , திருநீற்றைப் பூசிய மேனியினரும் , சுடர் நெற்றிக்கண்ணை உடையாருமாகிய இறைவர் அமர்கின்ற நின்றியூரைப் பற்றிய அன்பர்களை , வினைகளும் அவற்றான் வரும் பாபங்களும் பற்றமாட்டா .

குறிப்புரை :

புற்றினார் அரவம் - புற்றில் உறைகின்றதாகிய பாம்பு . புலித்தோல்மிசை - புலித்தோலின்மேல் . சுற்றினார் - வரிந்து கட்டினார் . சுண்ணப்போர்வை - உடலைப் போர்த்தது போன்ற திருநீற்றுப் பூச்சு . சுடர் - நெருப்பாகிய . அமர் - எழுந்தருளியுள்ள . பற்றினாரை - வணங்குதலை நிலையாகக் கொண்டவர்களை . பற்றா - பற்றமாட்டா . வினை பாவம் - தீவினையும் பாவமும் . வினை - தூலவினை ; ஆகாமியம் . பாவம் - சூக்குமவினை ; சஞ்சிதம் .

பண் :

பாடல் எண் : 4

பறையி னோசையும் பாடலி னோசையும்
மறையி னோசையும் மல்கி யயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையு மீசனை யுள்குமென் னுள்ளமே.

பொழிப்புரை :

பறையின் ஓசையும் , தெய்வப்பாடல்களின் ஓசையும் , வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது .

குறிப்புரை :

பறை - தோற்பறை ; வாத்திய விசேடம் . மல்கி - நிறைந்து . அயல் எலாம் - ஊர்ப்புறமெங்கும் . நிறையும் - நிறைகின்ற . பூம்பொழில் - பூக்களை உடையதாகிய சோலை . உள்கும் - எண்ணும் .

பண் :

பாடல் எண் : 5

சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே.

பொழிப்புரை :

நினைத்தற்குரிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில் . பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் உரியினைப் போர்த்த பரமரே ! சுனையிற் பூத்த நீல மலரும் தோற்றுச் சுளித்தற் கேதுவாய் நெடுங்கண்களை உடையளாகிய இவள் ! இத்தன்மை உடையவன் , என்று என்றும் ஏசுவதன் காரணம் என்னை ?

குறிப்புரை :

சுனையுள் நீலம் - சுனையில் பூத்த நீலப்பூவை ( வெகுளும் ). நெடுங்கணாள் - நீண்ட கண்ணை உடையவள் . இனையன் என்று - காதலித்தாரைக் கை விட்டவன் என்று . என்றும் - நாடோறும் . ஏசுவது - பழித்துரைப்பது . என் கொலோ - யாது காரணத்தாலோ . நினையும் - எல்லோராலும் விரும்பி நினைக்கப்படும் . பனையின் ஈருரி - பனை போன்ற கையை உடையதாகிய யானையை உரித்த தோலை .

பண் :

பாடல் எண் : 6

உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனில்
திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.

பொழிப்புரை :

உரைப்பக் கேட்பீராக ; நும் சென்னியின்கண் உள்ள சிவபிரானை , வரிசையாகிய பொன்மதில் சூழ்ந்த திருநின்றியூரில் மாற்றுரைக்கத்தக்க பொன் போன்ற கற்றைச் சடையுடையராகிய இவரை ஆர் என்று வினவுவீராயின் , அலைத்துப் பாடித் திரிதரும் செல்வர் இவர் .

குறிப்புரை :

நும் உச்சியுளான் - உங்கள் தலைமேல் உள்ளவனாகிய பெருமான் . நிரைப்பொன் - வரிசையான அழகிய ; மா - பெரிய . உரைப்பொன் - மாற்றுரைக்க வைத்த பொன் . இவர் ஆரோ என்னில் எனக்கூட்டுக . திரைத்து - அலைத்து . அழித்து . திரிதரும் - அலையும் .

பண் :

பாடல் எண் : 7

கன்றி யூர்முகில் போலுங் கருங்களிறு
இன்றி ஏறல னாலிது என்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை யெங்கள் விகிர்தனே.

பொழிப்புரை :

திருநின்றியூரைப் பதியாகப் பொருந்தியவனும் , வெற்றிமிக்க ஆனேறு உடையவனுமாகிய எங்கள் விகிர்தன் , கறுத்து ஊர்ந்து வருகின்ற முகில்போன்ற கருங்களிறு இன்றி வேறு ஏறி ஊராதது என்னையோ ?

குறிப்புரை :

கன்றி - கறுத்து . ஊர்முகில் - வானத்தே மெதுவாய்ச் செல்லும் மேகம் . கருங்களிறு . கரியயானை . யானையைக்கொள்ளாது ஏற்றைக்கொண்ட பெருமான் நடந்து வருதல் என்ன காரணமோ என்க . ஏறலனால் - ஏறாதவனாயினான் . இதுஎன்கொலோ - இதற்குக் காரண மென்னவோ ? ` கடகரியும் பரிமாவும் தேருமுகந்தேறாதே இடப முகந்தேறியவாறு `. நிலாயவன் - விளங்கியவன் . வென்றியேறு - வெற்றிக்குரியதாகிய எருது . விகிர்தன் - மாறுபட்ட செயல்களை உடையன் ; ஏறுடையவன் .

பண் :

பாடல் எண் : 8

நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயி லெய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னால்தொழு வார்வினை யோயுமே.

பொழிப்புரை :

நிலையில்லாத வெள்ளெலும்புகளை மாலையாக உடையவனும் , நீண்டதோர் கொல்லுந்தொழிலுடைய வில்லால் எயில் எய்த கொடியவனும் , நிலையினார் வயல்சூழ் திருநின்றியூர் இறைவனும் ஆகிய பெருமானை மொழியினாற் பாடித் தொழுவார் வினைகள் கெடும் .

குறிப்புரை :

நிலையிலா - நிலையற்றவர்களுடைய . வெள்ளை மாலையன் - வெண்ணிறமுடையதாகிய எலும்பு மாலையை அணிந்தவன் . கொலைவிலால் - கொல்லும் தொழில் செய்யும் வில்லால் . எயில் - திரிபுர மதில்களை கொடியவன் - பகைவர்க்குக் கொடியவனாயிருப்பவன் . நிலையின் ஆர் - நிலைத்த தன்மை பொருந்திய உரையினால் தொழுவார் - தோத்திரிப்பார் . ஓயும் - மெலியும் .

பண் :

பாடல் எண் : 9

அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! இஞ்சியாகிய மதிலையுடைய முப்புரங்களை எய்து , தேவர்கள் தொழ , தன்சடையில் வெள்ளிய பிறையைச் சூடிய கூத்தன் உறைகின்ற நின்றியூரை , நீ , அஞ்சியாயினும் , அன்பினைப் பொருந்தியாயினும் நினைத்து உய்வாயாக .

குறிப்புரை :

அஞ்சியாகிலும் - அச்சம் கொண்டாவது . அன்பு பட்டாகிலும் - அன்பு கொண்டாவது . பயபக்தி இரண்டில் ஒன்றையேனும் கடைப்பிடித்து என்றபடி . வாழி முன்னிலையசை . நெஞ்சம் - மனமே ; அண்மைவிளி . நின்றியூரை நீ நினை என்க . இஞ்சி - கோட்டை மதில் . இஞ்சிமாமதில் இருபெயரொட்டு . கோட்டை , மதில் என்றபடி . எய்து - அழித்து . குஞ்சிவான்பிறை - தலையில் சூடிய இளைய அழகிய பிறை .

பண் :

பாடல் எண் : 10

எளிய னாமொழி யாவிலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்றவல் லானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே.

பொழிப்புரை :

எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நெளியுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும் .

குறிப்புரை :

எளியனாமொழியா - யாரிடத்தும்தான் எளியனாய் மொழிபயிலாத ; பிறரால் எளியன் என்று சொல்லப்படாத . இறை - தலைவன் . களியினால் - மகிழ்ச்சி மயக்கத்தால் . நெளிய - துன்பமுற . அளியினால் - அன்பினால் . அல்கும் - இல்லாமற்போகும் .

பண் :

பாடல் எண் : 1

ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை
ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை யோயுமே.

பொழிப்புரை :

ஒளி விளங்குகின்ற மதி பாம்பினை ஒற்றி ஊரும் ; பாம்பும் அம்மதியினைக் கொள்வதற்காக ஒற்றி ஊர்ந்து வரும் ; இவ்வாறு இவை ஒன்றையொன்று ஒற்றி ஊரும்படியாக ஒருசடையில் வைத்த சிவபெருமானுக்குரிய ஒற்றியூரைத் தொழ நம்வினைகள் ஓயும் .

குறிப்புரை :

பாம்பும் மதியும் - தம்மிற் பகையாயினும் ஒளிமதி பாம்பினை ஒற்றி ஊரும் என்க . ஒற்றி - பொருந்தி . ஊரும் - ஊர்ந்து செல்லும் . அப்பாம்பும் அதனை ஒற்றி ஊரும் . ஒற்றி ஊரும் என்ற சொற்கூட்டுக்கு இங்கும் மேலதே பொருள் . ஒற்றி ஊர - பாம்பும் மதியும் பற்றி ஊர்ந்து செல்ல . ஒரு - ஒப்பற்ற . ஓயும் - உள்ளதனிற் குறையும் ( தொல் - சொல் . 330). உயிர்ப்பகை தீர்ப்பவன் என்பதில் உயிர்கட்குப் பகையாகிய ஆணவப்பகையின் வலியைப் போக்குவன் ஆதலின் தொழ வினை ஓயும் என்க .

பண் :

பாடல் எண் : 2

வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிரு ளாடி யிடுபிணக்
காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்தலைக் கையொற்றி யூரரே.

பொழிப்புரை :

மலையரசன் மகளாகிய உமாதேவியார் தளர்ச்சியாகிய ஒன்று உரைக்க , பேய்க்கணங்கள் நெருங்க நள்ளிரு ளின்கண் இடுபிணக்காட்டில் ஓரி கடிக்கும்படியாக எடுத்த துளை உடைய வெண்தலையினைக் கையிலே உடையவர் ஒற்றியூர்த் தலத்து இறைவர் .

குறிப்புரை :

வாட்டம் ஒன்று - ஒரு வருத்தத்தை . மலையான் மகள் - பார்வதி . ஈண்டவே என்பது ஈட்டவே என வலித்தது . அணுகி - உடனாயிருக்கவே . ஆடி - ஆடுதலைச் செய்பவன் . தன் கணவன் இருளிலே பேய்களோடு சுடலையாடுகிறான் என்பதால் உமை வருந்தியதாகக் கூறியது என்க . இடு பிணக்காடு - பிணங்களை இட்டுச்சுடும் காடு என்க . ஓரி - நரி . ஓடு - மண்டை ஓடு . ஒற்றியூரரே மலையான் மகள் வாட்டம் ஒன்று உரைக்கும் என்க . இடுகாட்டில் இட்ட பிணத்தை நரி கடித்துத்தின்ன அதனால் தசை கழிந்த மண்டை ஓடு என்க . வெண்தலை ஓட்டை என்று மாறுக . கை - கையின்கண்ணே உடைய .

பண் :

பாடல் எண் : 3

கூற்றுத் தண்டத்தை யஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே.

பொழிப்புரை :

கூற்றுவனால் வருந்தண்டமாகிய இறப்புக்கு அஞ்சி , அறத்தின் ஆற்றினால் அனைத்தையும் இயக்கும் சிவபிரானடியைக் குறிக்கொள்ளுவீராக ! திருநீற்றினைப்பூசி வணங்கி யெழுந்து நினைக்கின்ற அன்பர்க்கெல்லாம் இனிப்பு ஊறும் கரும்பினை ஒத்து இனிப்பர் ஒற்றியூர்த்தலத்து இறைவர் .

குறிப்புரை :

கூற்றுத் தண்டம் - இயமவாதனை . உயிர்களுக்கு இயமன் விதிக்கும் தண்டனை . அஞ்சி - பயந்து . அறநெறிக் கண்ணதாகிய தண்டத்தினால் மிகை செய்வாரை அடக்கும் அரன் . ஆற்றுத் தண்டத்தும் :- இங்ஙனம் அடக்க இயலாத கூற்றுவன் சலந்தரன் முதலானோரை ஒறுத்தலினின்று உணர்க . குறிக்கொண்மின் - குறியாக்கிக் கொண்டு தொழுங்கள் . ஆற்றுத் தண்டத்தால் அடக்கும் அரனடியைக் கூற்றுத்தண்டத்தை யஞ்சிக் குறிக்கொண்மின் என்க . நீற்றுத்தண்டத்தராய் - நீற்றராய் தண்டத்தராய் என்று கொள்க . திருநீறணிந்து வணங்கித் தெண்டம் செய்பவராய் . ஊற்றுத்தண்டு - கரும்பு . ஊன்று கோல் . இரட்டுற மொழிந்து கொள்க . வழுக்குழி உதவி , அணைந்துழிப் பேரின்பம் பயப்பர் .

பண் :

பாடல் எண் : 4

சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்புக் குறையு மொருவரே.

பொழிப்புரை :

மற்றையூர்களிலெல்லாம் சென்று பலி தேர்ந்து பெற்று மீண்டுபோய் ஒற்றியூரிற்புக்கு உறையும் ஒப்பற்றவராகிய இறைவர் பாய்கின்ற புலியினையுரித்த தோலுடையினராய் , சுற்றி நிற்கின்ற பேய்கள் சுழலச் சுடுகாட்டின்கண் கையில் எரியினைப் பற்றி ஆடும் இயல்பினர் .

குறிப்புரை :

சுற்றும் - சுற்றிலும் . சுழல - தம்மோடு சுழல . எரிபற்றி - எரியேந்தி . பாய்புலி - பாய்கின்ற புலி . பலிதேர்ந்து - இரந்துண்டு . எல்லா ஊர்களிலும் சென்று பலியேற்று ஒற்றியூரை உறையும் இடமாகக் கொண்ட ஒருவர் என்பதாம் . ஒருவர் - ஏகன் என்று வேதாந்தங்களால் கூறப்படும் முதல்வன் .

பண் :

பாடல் எண் : 5

புற்றில் வாளர வாட்டி யுமையொடு
பெற்ற மேறுகந் தேறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை வானோர் கபாலியே.

பொழிப்புரை :

மற்றையவர்களோடு தேவர்களும் தொழுமாறு ஒற்றியூரில் உறைவானாகிய கபாலம் கைக்கொண்ட இறைவன் புற்றிலுறையும் வாள்போன்று வருத்தந்தரவல்ல பாம்பினை ஆட்டி உமையோடு ஆனேற்றின்மேல் உயர்ந்து ஏறித்தோன்றும் பெருமையை உடையவன் .

குறிப்புரை :

புற்றில் வாளரவு - புற்றில் உள்ள ஒளி பொருந்திய நாகம் எனலும் ஆம் . பெற்றம் ஏறு - பசுவினமாகிய எருது . மற்றை யாரொடு - நிலவுலகில் வாழ்வோர் . கபாலி - கபால மேந்தியவன் .

பண் :

பாடல் எண் : 6

போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.

பொழிப்புரை :

போதுகளைவிட்டுப் பூத்த புதுமலர்களைக் கொண்டு கங்கையைத் தாழ்சடையின் கண் வைத்த மணாளனாரும் , திருவொற்றியூரில் வேதம் ஓதும் வித்தகரும் ஆகிய பெருமானின் திருவடிகளை ஏத்தினால் நம் பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

போது - காலந்தோறும் எனலும் ஆம் . தாழ்ந்து - வணங்கி அல்லது மனம் விரும்பி . நீர்மாது - கங்கை . தாழ்சடை - தங்கியுள்ள சடை . ஓதுவேதியனார் - வேதங்களை ஓதியருளியோன் . எல்லாராலும் புகழ்ந்தோதப்படும் வேதம் விரித்த பெருமான் எனலுமாம் . பறையும் - அழியும் . ஒற்றியூர் மணாளனார் பாதமேத்தப் போது தாழ்ந்து புதுமலர்கொண்டு ஏத்த நம் பாவம் பறையும் .

பண் :

பாடல் எண் : 7

பலவும் அன்னங்கள் பன்மலர் மேல்துஞ்சும்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு வொற்றியூர்
நிலவி னானடி யேயடை நெஞ்சமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! அன்னங்கள் பலவும் பலமலர்கள் மேல் தூங்குவதும் கருமை உடைய இருள் விளைத்தலைக் கண்டு பைம்பொழிலை அங்கு உலவும் தோகையுடைய மயில்கள் மேகமெனக் கருதிப் பின் அவையின்மை தெரிந்து வெட்கமுறுதற் சிறப்புடையதுமாகிய திருவொற்றியூரில் விளங்குகின்ற இறைவன் திருவடிகளையே அடைவாயாக !

குறிப்புரை :

அன்னங்கள் பலவும் என்க . பன்மலர்மேல் - பல மலர்களின்மீது . துஞ்சும் - உறங்கும் . கலவமஞ்ஞை - கலாபத்தோடு கூடிய மயில் . காரென - மேகமென்று எண்ணி . வெள்குறும் - நாணமடையும் . அன்னங்கள் உறங்கும் பல மலர்களை உடைய பொழிலை , மயில்கள் மேகங்கள் என்றெண்ணிச் சென்று பின் பொழிலென உணர்ந்து நாணும் . செறிந்த பொழில் என்க . உலவு - சூழ்ந்த . நிலவினான் - விளங்கினவர் ; நிலவையணிந்தவன் .

பண் :

பாடல் எண் : 8

ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
ஒன்று போலு முதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுகந் தாரொற்றி யூரரே.

பொழிப்புரை :

உயர்ந்து அவர் ஏறியதும் ஒரு விடையினை ; உதைத்துக் களைந்ததும் ஒரு கூற்றுவனை ; சூடியதும் ஒளி விளங்கும் ஒரு மதியினை ; இவையனைத்தும் ஒன்றுபோல் உகந்தவர் ஒற்றி யூர்த்தலத்து இறைவர் .

குறிப்புரை :

உகந்து அவர் ஏறிற்று - மகிழ்ந்து அப்பெருமான் ஏறியது . ஒன்று - இடபம் ஒன்றே . போலும் அனைத்தும் ஒப்பில் போலி ; உரையசை , உதைத்துக்களைந்தது - காலால் உதைத்து நீக்கியது . ஒன்று - அடியர் பெருமை எண்ணாத இயமனின் பிழை . சூடிற்று ஒளிமாமதி ஒன்று . உகந்தது - விரும்பிக்கொண்டது . ஒன்று - ஒற்றியூராகிய ஒன்றை . திருவொற்றியூரர் அத்தலத்தையே தாம் விரும்பும் இடமாகக் கொண்டார் . ஒன்று - ஒன்றுதல் ; அதாவது ஏகனாகி அவனருள்வழி நிற்றல் .

பண் :

பாடல் எண் : 9

படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் நீற்றினர்
உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர்
அடையு முள்ளத் தவர்வினை யல்குமே.

பொழிப்புரை :

பூதப்படை கொண்டவரும் , வேதத்தவரும் , இனியகீதத்தவரும் , சடையிற்கொண்ட கங்கையினரும் , சாந்தமெனப் பூசும் வெண்ணீற்றினரும் , தோலை உடையாக உகந்தவரும் ஆகிய பெருமான் உறைகின்ற ஒற்றியூரை அடையும் உள்ளத்தவர்களின் வினைகள் சுருங்கும் .

குறிப்புரை :

படைகொள்பூதத்தர் - பூதப்படை கொண்டவர் . வேதத்தர் - வேதமோதுபவர் . கீதத்தர் - இசைபாடுபவர் . சாந்த வெண்ணீற்றினர் - வெண்ணீற்றைச் சாந்தமாகக் கொள்பவர் . உடையும் தோல் உகந்தார் - தோலையும் உடையாக ஏற்றுக்கொண்டவர் . அல்கும் - சுருங்கும் .

பண் :

பாடல் எண் : 10

வரையி னாலுயர் தோளுடை மன்னனை
வரையி னார்வலி செற்றவர் வாழ்விடம்
திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே.

பொழிப்புரை :

மலையென உயர்ந்த தோள்களை உடைய மன்னனான இராவணனை ஒரு சிறு எல்லையில் ஆற்றல் கெடுத்த பெருமான் வாழும் இடம் , அலைகள் பக்கங்களிற்சூழ்ந்த திரு வொற்றியூர் ; அதனை வாக்கினாற் கூறி விளக்கமுறுவோரே உயர்ந்த வராவர் .

குறிப்புரை :

வரையினால் உயர் - மலைபோன்று உயர்ந்த. ஆல் அசை. மன்னன் - இராவணன். வரையினார் - கயிலைமலைக் குரியவர். வலிசெற்றவர் - வலிமையை அழித்தவர். திரையினார் புடை சூழ் - அலைகளால் சூழப்பட்ட. உரையினால் பொலிந்தார் - புகழ்ந்து பேசுவதால் விளக்கம் அடைந்தவர்கள். திருவொற்றியூரைப் பற்றிய இத்திருப்பதிகத்தை ஓதி விளக்கம் எய்தினார், உயர்ந்தவர்களாவர் என்று உரைத்தலும் ஒன்று. அப்பர் சுவாமிகளும் தமது பதிகப்பயன் உரைத்தது நமச்சிவாயப் பதிகம் கொண்டுணர்க.

பண் :

பாடல் எண் : 1

முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்திப்பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்திக் கோன்தனக் கேயருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

வரிசையாகிய அடர்ந்த செஞ்சடையுடையவராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் முதற்கண் முப்புரங்களை எய்த முதல்வர் ; சிந்திப்பவர்களின் வினைகளைத் தீர்க்கும் செல்வர் ; சந்திரனுக்கு அருள் செய்த தண்ணளியாளர் .

குறிப்புரை :

முந்தி - தேவர்கள் முறையிட்ட ஒலியின் எதிரொலி அடங்குமுன் . ` மணியைக் கையால் நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறிய தில்லையிப்பால் தீயாய் எரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே ` கணை எய்யுமுன் எனலுமாம் . மூவெயில் - திரிபுரம் . தீர்த்திடும் - அழிக்கும் . திரிபுரமெரித்த விரைவுபோல நினைக்குமுன் வினை தீர்ப்பான் என்க . அந்திக்கோன் - சந்திரன் . ஏ - அசை . பந்திச் செஞ்சடை - வரிசையாய் முளைத்துச் சிவந்த சடை . பந்தி - கற்றை ; பின்னல் என்ற பொருள்கட்கும் பொருந்தும் சொல் .

பண் :

பாடல் எண் : 2

மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

படர்ந்தெழும் நாகத்தைப் பூண்ட திருப்பாசூர்த் தலத்து இறைவர் . உமாதேவியை ஒரு பாகத்து மகிழ்ந்த மணவாளர் ; உயிர்களைப் பிறவிதோறும் தொடர்ந்து வரும் வல்லமை உடைய வினைகளாகிய இருளைப் போக்கிடும் ஒளி வடிவானவர் ; எல்லை கடந்த இயமனைக் கால்கொண்டு பாய்ந்து உதைத்தவர் .

குறிப்புரை :

மடந்தை - பார்வதி . பாகம் மகிழ்ந்த - இடப்பாகத்தே கொண்டு மகிழ்வெய்திய . தொடர்ந்த - நம்மைத் தொடர்ந்துவந்த . வல்வினை - தம் பயனை ஊட்டாது அழியாத வலிய வினைகள் . கடந்த - எல்லைமீறித் தம்மை வழிபடுபவரிடம் வந்த . கால்கொடு பாய்ந்தவர் - திருவடியால் சினந்தவர் . படர்ந்த - சுற்றிய .

பண் :

பாடல் எண் : 3

நாறு கொன்றையும் நாகமுந் திங்களும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பருந்துகள் அலைக்கும் மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் , மணம்வீசும் கொன்றையும் , நாகமும் , திங்களும் , கங்கையாறும் செஞ்சடையில் வைத்த அழகர் ; கரியகண்டத்தர் ; கையிற்பிடித்த சூலத்தர் .

குறிப்புரை :

நாறு - மணம் கமழ்கின்ற . நாகம் - பாம்பு . காறு - கறுத்த . பாறினோட்டினர் - சிதறுதலை உடைய . ( இன அடை ) மண்டை ஓட்டை உடையவர் என்றும் கூறலாம் . இன் - அசை .

பண் :

பாடல் எண் : 4

வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
ஒற்றி யேறுகந் தேறு மொருவனார்
நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப்
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

நீண்ட அரவினைப் பற்றியாட்டும் , இயல்பினர் ஆகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் , வெற்றியூரில் உறையும் வேதியர் , ஏற்றினை ஒற்றி உகந்து ஏறும் ஒப்பற்றவர் , நெற்றிக் கண்ணினர் .

குறிப்புரை :

வெற்றியூர் - தேவார வைப்புத்தலங்களில் ஒன்று . ஒற்றி - ஊர்ந்து , பொருந்தி , உகந்து எனலுமாம் . ஒன்றி ஒற்றி ஆயிற்று எனக்கொண்டு ஒற்றை ஏறு என்றலும் ஒன்று . ஏறு - இடபம் . ஏறும் . எழுந்தருளும் . பற்றி - பிடித்து .

பண் :

பாடல் எண் : 5

மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் . தேன் விரிந்த மலர்களையணிந்த நீண்ட கண்ணுடைய உமாதேவியார்பால் விருப்பமும் வேட்கையும் உடையவராயிருப்பவர் ; இவர் தீயவரேல் இவரது சூழ்ச்சித் தன்மைகளை அறியேன் .

குறிப்புரை :

மட்டு - தேன் . நெடுங்கண்ணிபால் - தலைவி இடத்து . இட்டம் - விருப்பம் . வேட்கை - ஆசை . துட்டரேல் - இப்பொழுது துஷ்டராக இருப்பாரேயானால் . சூழ்ச்சிமை - கருதும் எண்ணம் . அறிந்திலேன் - முன்னர் அறிந்திலேன் . பட்ட நெற்றியர் - நெற்றிப்பட்டம் என்னும் அணிகலன் அணிந்த நெற்றியை உடையவர் ; அகத்துறைப்பாடல் ; தோழி அல்லது செவிலி கூற்று .

பண் :

பாடல் எண் : 6

பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லிப் போய்ப்புகு மூரறி யேன்சொலீர்
பல்கு நீற்றினர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

நிறைந்த திருவெண்ணீற்றினராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் , பல்லில்லாத ஓட்டினைக் கையேந்திப் பகலெல்லாம் வெயிலில் நின்று இடுகின்ற பலியினை ஏற்பவர் ; சொல்லிவிட்டுச் சென்று புகுந்த ஊரினை அறியேன் ; சொல்லுவீராக .

குறிப்புரை :

பல்லில் ஓடு - பல இல்லங்களிலும் , பல் இல்லாத மண்டையோடு எனலுமாம் . பகலெலாம் ஓடு ஏந்தித் திரிவார் என்க . எல்லி நின்று - வெயிற்பொழுதில் ஓரிடத்தில் நின்று . இடுபெய்பலி - மண்டை ஓட்டில் இட்ட உணவை . ஏற்பவர் - ஏற்று உண்பவர் . பல்கு - நிறைந்த . சொல்லிச் சென்று தங்கும் ஊர் இது என அறியேன் . அறிவீராயின் சொல்லுங்கள் . அகத்துறைப் பாடல் தலைவி அல்லது தோழி கூற்று . பல்குதல் - மிகுதல் .

பண் :

பாடல் எண் : 7

கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவந் தில்புகுந் தவ்வவர்
இட்ட மாவறி யேனிவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் கட்டிவிட்ட சடையை உடையவரும் , கபாலம் கைக்கொண்டவரும் எட்டிப்பார்த்து இல்லத்தில் புகுந்தவரும் ஆகியர் . இவர் விரும்பிச் செய்வன இவையென யான் முற்ற அறியேன் .

குறிப்புரை :

கட்டிவிட்ட - கட்டிமுடித்த . கபாலியர் - கபால மேந்தியவர் . எட்டி நோக்கி - தம்மை யாரும் காணாதபடி எட்டிப்பார்த்துக் கொண்டு . அவ்வவர் இல் புகுந்து - ஒவ்வொருவர் வீட்டிற்குள்ளேயும் நுழைந்து . இட்டமாய் இவர் செய்வன - தம் விருப்பம் போல் இவர் செய்வனவற்றை . அறியேன் - உணர்வதன்றி எடுத்துச் சொல்லும்வகை அறியாதவளாகி இருக்கின்றேன் . அகத்துறைப் பாடல் . தலைவி கூற்று .

பண் :

பாடல் எண் : 8

வேத மோதிவந் தில்புகுந் தாரவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பாதி வெண்பிறையணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர் , வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார் ; காதில் வெண்குழை வைத்த கபாலியார் ; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார் .

குறிப்புரை :

அவர் - பாசூர்ப்பெருமான் . வேதமோதிவந்து - வேதங்களை ஓதிக்கொண்டு வந்து . இல்புகுந்தார் - வீட்டிற்குள்ளே புகுந்தார் . வைத்த - அணிந்த . நீதி ஒன்றறியார் - நீதி சிறிதும் அறியாதவராய் . நிறை கொண்டனர் - பெண்களின் நிறை என்னும் குணத்தைக் கவர்ந்தார் . பாதி வெண்பிறை - இளம்பிறையைக் கூறும் சொல்வழக்கு . மாதொரு கூறன் ஆதலின் இறைவர்க்கு உரியது பாதி வெண்பிறை ஆயிற்று எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 9

சாம்பல் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பன் மூதெரு தேறு மொருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

தீயதாகிய பாம்பினையும் பற்றி ஆடுபவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் , சாம்பல் பூசுவர் ; தாழ்கின்ற சடையினைக் கட்டுவர் ; தாங்கும் இயல்புள்ள முதிர்ந்த எருதினையேறும் ஒருவர் ; ஒளிதேம்பிய வெண்மதியைச் சூடுவர் .

குறிப்புரை :

சாம்பல் - சர்வசங்காரச் சுடலைப்பொடி . தாழ்சடை - தொங்கிய சடைகளை . ஓம்பல் - காத்தல் ; தாங்குதல் . தாங்கும் இயல்புள்ள அறமே விடையாகலின் ஓம்பல் மூதெருது என்றார் . மூது - பழமை ; அழியாமை . மால்விடை எனக்கொண்டு காத்தல் தொழிலையுடைய எருதெனினுமமையும் . தேம்பல் - இளைத்தல் . தீயதோர் - கொடியதொரு .

பண் :

பாடல் எண் : 10

மாலி னோடு மறையவன் தானுமாய்
மேலுங் கீழு மளப்பரி தாயவர்
ஆலின் நீழ லறம் பகர்ந் தார்மிகப்
பால்வெண் நீற்றினர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பால்போன்ற வெண்ணீற்றையணிந்தவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் மாலினோடு பிரமனும் மேலும் கீழும் அளந்தும் காண்டற்கரியவர் ; ஆலின்நீழல் இருந்து அறம் பகர்ந்த ஞானவடிவினர் .

குறிப்புரை :

மறையவன் - வேதங்களை ஓதுபவனாகிய பிரமன் . ஆலின் நீழல் - கல்லாலின் நீழலிலே அமர்ந்து . அறம்பகர்ந்தார் - ஞானநெறியை உலகிற்கு உபதேசித்தவர் . அளப்பரிது - அளப்பரிய பொருள் . சோதிப் பிழம்பு . மிக - மிகுதியாக . பால் வெண்ணீற்றினர் - பால்போலும் வெள்ளிய திருவெண்ணீறணிந்தவர் .

பண் :

பாடல் எண் : 11

திரியும் மூஎயில் செங்கணை யொன்றினால்
எரிய எய்தன ரேனு மிலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினால்
பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே.

பொழிப்புரை :

பருப்பொருளும் , நுண்பொருளுமாகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் , திரியும் மூன்று புரங்களைச் சிவந்த கணையொன்றினால் எரியுமாறு எய்தனரேனும் , இலங்கையரசன் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர் ஆவர் .

குறிப்புரை :

திரியும் - பல ஊர்களையும் அழித்தற்குச் சுற்றித் திரியும் . செங்கணை - சிவந்த நெருப்பாகிய கணை அல்லது நேரிதாகிய அம்பினாலே . எரிய - எரிந்தழிய . நெரிய - உடல்நெரிய . ஊன்றியிட்டார் - ஊன்றினார் . பரியர் நுண்ணியர் - பெரிதினின் பெரியர் ; நுண்ணிதின் நுண்ணியர் ; ` அண்டங்களெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும் `. ( திருவிளை . கடவு . வாழ்த்து .7) தூலசூக்கும வடிவினர் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 1

காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்
மாட மாமதில் சூழ்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

மணம் கமழ்கின்ற மாடங்களும், மாமதில்களும் சூழ்கின்ற வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர். சுடுகாட்டினை அரங்காகக்கொண்டு, நள்ளிரவில் பூதகணங்கள் பாடப் பெருநடம் ஆடும் பரமர்; மான்போன்ற இப்பெண் வாட, இவளது பொன்னிறத்தைத் தாம் கொண்டு பசலை நிறம் தந்த இயல்புடையவர்.

குறிப்புரை :

காடு அரங்காகக்கொண்டு என மாறுக. இடுகாட்டை நடமாடும் அரங்கமாகக் கொண்டு என்பது பொருள். கங்குல்வாய் - இரவுப்பொழுதில். கணம் - பூதகணங்கள். பாட - பாட்டிசைக்க. மாநடம் - சிறந்த நடனத்தை. வாடமானிறங்கொள்வர் - மான் போன்றவளாகிய தலைமகள் வாட அவளது நிறத்தைக் கொள்பவர். பசலை பூத்தலால் நிறம் மாறிற்று என்க. மணங்கமழ் - அகிற்புகை முதலியவற்றால் மணங்கமழ்கின்ற. கங்குல் என்றது சர்வசங்கார காலத்தை; அப்பொழுது ஆடும் நடனம் சூக்கும பஞ்சகிருத்திய நடனம் எனப்படும்.

பண் :

பாடல் எண் : 2

செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின் றாரெரி யாடுவர்
கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வைத் தார்வன்னி யூரரே.

பொழிப்புரை :

உமையம்மையாரை ஒரு பாகமாக வைத்த வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர், அரையின்கண் சிவந்த கண்ணையுடைய நாகத்தைக் கட்டியவர்; தீத்தொகுதியை அழகிய கரத்தில் ஏந்தி ஆடுபவர்; நீண்ட சடைமேலிடத்தில் கங்கையைக் கொண்டவர்.

குறிப்புரை :

செங்கண் நாகம் - சிவந்த கண்ணை உடைய பாம்பு. அரையது - இடுப்பின் கண்ணது. ஏந்தி நின்றாராய் எரியாடுபவர் என்க. வார்சடை மேலிடம் கங்கை கொண்டவர் என்க.

பண் :

பாடல் எண் : 3

ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாம்
தானங் காட்டித்தன் தாளடைந் தார்கட்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வன்னியூர்த்தலத்து இறைவர், தம்மையடைந்த அன்பர்கட்கெல்லாம், ஞானமும், அதனை அடைதற்குரிய நல்ல நெறியும், அடைதற்குரிய இடமும் காட்டுவர்; தன் திருவடியில் அடைந்தவர்கட்குத் தானங்காட்டுவதோடமையாது வானங்காட்டி ஆளவும் வைப்பார்.

குறிப்புரை :

ஞானம் - கலைஞானம். நன்னெறி - அநுபவ ஞானம். தம்மை அடைந்தார்க்கெல்லாம் - தம்மைச் சேர்ந்தவர் எல்லோர்க்கும். தானங்காட்டுவர் - சரியை, கிரியை, யோக நெறியினர்க்கு; சாலோக, சாமீப, சாரூபங்களாகிய தானத்தை (இடத்தை) வழங்குபவர்.
வானங் காட்டுவர் - ஞானநெறி நின்றார்க்கு சாயுச்யமாகிய வீட்டு நெறிக்கு வழி செய்வார். போல் என்பது அசை. தாளடைதல் - நிஷ்டைகூடுதல், பரமுத்தி நிலையாகிய சிவ சாயுச்யத்தைக் கொடுப்பார். பரமுத்தியினும் முதல்வன் உபகாரம் உண்மையின் காட்டுவர் என்றார். சரியை, யோகங்களும் ஞானம் எனப்படும் என்பதை \\\\\\\"விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் ... ... அரும்பு மலர் காய் கனிகள் அன்றோ பராபரமே\\\\\\\" என்னும் தாயுமானவர் திருவாக்கால் உணர்க.

பண் :

பாடல் எண் : 4

இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் றீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

உலகினுள்ளீரே! வன்னியூர்த்தலத்து இறைவர் தம்மை மெய்ம்மையாக நினைவார்களுடைய வலிய வினையைத் தீர்க்கும் இயல்பினர்; இப்பிறப்பு, அப்பிறப்பு என்ற இரண்டின் உண்மைத் தன்மை அறியாது விளம்பும் சிலரைச் சாராது வந்து வழிபடுவீராக.

குறிப்புரை :

இம்மை - இப்பிறப்பு. அம்மை - மறுபிறப்பும், வீடுபேறும். இவ்விரண்டையும் உண்மை என்றறியாது உலோகாய தரும், ஏகான்ம வாதிகளும் பேசுவர். \\\\\\\"மறு பிறப்பில்லெனும் மடவோரும் சேரார் நின்னிழல்\\\\\\\" (பரிபாடல்) அறியாது - தெரியாது. மெய்ம்மையால் - உண்மையோடு. வம்மின் - வாருங்கள். தீர்ப்பர் - வினைதீர்த்து வீடுபேறளிப்பர்.

பண் :

பாடல் எண் : 5

பிறைகொள் வாள்நுதற் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வேதங்களை வாய்மொழியாக உடைய வன்னியூர்த்தலத்து இறைவர், பிறையின் பேரழகு கொண்ட ஒளி நுதலையும் வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்; திருநீறணிந்த திருமேனியர்; திருநீல கண்டத்தர், ஒளிவீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர்.

குறிப்புரை :

பிறைகொள் வாணுதல் - பிறையின் வடிவத்தைக் கொண்ட ஒளி பொருந்திய நெற்றி. பெய்வளைத் தோளியர் - வளையல் அணிந்த கைகளை உடைய பெண்கள். நிறை - காப்பன காத்து, கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்; கற்பு என்பது.
வெண் மழுவாளினர் - வெண்மையான மழுவாகிய வாளை உடையவர். மறைகொள் வாய்மொழியார் - மந்திரங்களைத் தன்னகத்தே கொண்ட வாயை உடையவர். வாய்மொழி - வேதம்.

பண் :

பாடல் எண் : 6

திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வன்னியூர்த்தலத்து இறைவர் வண்டும், தேனும் திளைத்துப் பொருந்தும் கொன்றையர்; துளையுடைய அயிராவணம் என்ற வேழத்தினை உடையவர்; புலித்தோலினர்; ஒளி வீசும் மதியில் தோன்றும் நிலாக்கதிரைக்கண்டு நாகமானது கொள்ளுவதற்கு நாவினை வளைக்கின்ற நீண்ட சடையினர் ஆவர்.

குறிப்புரை :

திளைக்கும் - உண்டு மகிழும். தேன்படு - தேன் பொருந்திய. துளைக்கை வேழத்தர் தோலர் - துளையோடு கூடிய கையையுடைய யானையின் தோலை அணிந்தவர். சுடர்மதி முளைக்கும் - ஒளி பொருந்திய மதியிலிருந்து உண்டாகும். மூரல் கதிர் கண்டு - நகையொளிபோன்ற நிலாக்கிரணங்களைக் கண்டு. நாவளைக்கும் - அச்சந்திரனை உண்ணுதற்கு நாகம் நாவை வளைத்தற்கிடமாயுள்ள.

பண் :

பாடல் எண் : 7

குணங்கொள் தோளெட்டு மூர்த்தி யிணையடி
இணங்கு வார்கட் கினியனு மாய்நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மனத் தார்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வன்னியூர்த்தலத்து இறைவர் எட்டுத் தோள்களையும் எட்டுக்குணங்களையும் உடைய மூர்த்தி; தன் இணையடிகளை இணங்கி வழிபடுவார்கட்கு இனியராகியவர்; மலர்கள் கொண்டு வணங்குவார் மனத்தின் கண்ணவர்.

குறிப்புரை :

குணங்கொள் - எண்குணங்களைக் கொண்ட குணமும் தோளும் எட்டாகக் கொள்கின்ற எட்டு மூர்த்தி. எட்டு என்பதைத் தனித்தனியே கூட்டுக. எட்டுத் தோள் மூர்த்தி - எட்டுத் தோள்களை உடைய பெருமான். எட்டு மூர்த்தி - அட்ட மூர்த்தங்களை உடையவன். இணையடி - இரண்டு திருவடிகள். இணங்குவார்கட்கு - சேர்பவர்கட்கு. வணங்கி - பணிவுள்ளமுடையவராகி. வைகலும் - நாடோறும். வணங்குவாரது மனத்தார் - மனத்தின்கண்ணே எழுந்தருளுபவர்.

பண் :

பாடல் எண் : 8

இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான்
அயலெ லாமன்ன மேயுமந் தாமரை
வயலெ லாங்கயல் பாய்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

அயற்பக்கமெலாம் அன்னங்கள் மேய்கின்ற, அழகிய தாமரைகளை உடைய வயல்களிலெல்லாம் கயல்மீன்கள் பாய்கின்ற, வன்னியூர்த்தலத்து இறைவர், இயலுகின்ற திருமாலோடு நான்முகன் தவம் செய்து முயன்றும் காண்டல் அரியராய் நின்ற மூர்த்தியாவர்.

குறிப்புரை :

இயலும் - தாமே முதற்பொருள் என்று முரணி நிற்கும். செய்தவம் முயலில் - தவம் செய்து முயலுதற்கண். அம் தாமரை அயலெலாம் அன்னம் மேயும் - அழகிய தாமரை பூத்துள்ள இடங்களின் வயலிலெல்லாம் அன்னங்கள் மேய்ந்து கொண்டிருக்கும். இயல்பு உடைய கயல் பாய்தற்கிடமான வயல்களை உடைய வன்னியூர் என்க.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத் தானது மிக்கிட
இலங்கை மன்ன னிருபது தோளினை
மலங்க வூன்றிவைத் தார்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வன்னியூர்த்தலத்து இறைவர், நன்மை கொண்ட பாகராகிய தம்மை முனிந்திடாது திருக்கயிலையைக் கரங்களைக் கொண்டு கோர்த்தெடுத்தபோது அவ்விலங்கை மன்னனின் இருபது தோள்களை மலங்கும் படியாகத் திருவிரலை ஊன்றியவர் ஆவர்.

குறிப்புரை :

நலங்கொள் - தனக்கு நன்மையே எண்ணுதலைக் கொண்ட. பாகனை - இறைவன் மலை என்று கூறிய தேர்ப்பாகனை. நன்று - நன்கு; மிக. முனிந்திடா - சினந்து. விலங்கல் - கயிலைமலை. கோத்து எடுத்தான் - கைகளை உள்ளே நுழைத்துத் தூக்கியவன். அது மிக்கிட - அக்கயிலைமலை சுமையால் மிக. மலங்க - கலங்க. ஊன்றி வைத்தார் - ஊன்றினார்.

பண் :

பாடல் எண் : 1

சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்தலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர் பாம்பரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றின் கண் எழுந்தருளியுள்ள இறைவர் , அன்பர்களின் சிந்தையின்கண் வந்து பொருந்துதல் உடையவர் ; சீர்மை உடையவர் ; பொந்துகளை உடைய நீண்ட புலால் உடைய வெண் தலையைக் கையில் ஏந்தியவர் ; முந்துகின்ற வாயை உடையதோர் மூவிலைவேல் பிடித்து , அந்தியைப் போன்று சிவந்த வாயினதோர் பாம்பினை அணிந்தவர் ஆவர் .

குறிப்புரை :

வந்து சிந்தை - எழுந்தருளி அடியார்கள் மனத்தை . வாய்தல் - ஆட்சி செலுத்தும் வழி . சீரியன் - மேலோன் . பொந்து ஆர் - கண் , வாய் காது முதலான பொந்துகளை உடைய . முந்தி - முற்பட்டதாய . வாயது - கூரிய முனையை உடைய . அந்தி வாயது - மாலையில் வெளிப்போந்துலவுவது என்றும் அம் தீ வாயது எனப் பிரித்துத் தீய விடத்தை வாயின்கண் உடையது என்றும் பொருள் கொள்ளலாம் .

பண் :

பாடல் எண் : 2

பாகம் மாலை மகிழ்ந்தனர் பால்மதி
போக ஆனையி னீருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெயஞ் சாடுமை யாறரே.

பொழிப்புரை :

ஒருபாகத்தே திருமாலை உடையவர் . பால்மதியை மகிழ்ந்தளித்தவர் . இடர்கள்போக ஆனையின் உரியைப் போர்த்தவர் , தோள்களில் கொன்றைமலர் சூடியவர் . ஆனைந்து ஆடுபவர் .

குறிப்புரை :

பாகம் - உடம்பின் ஒரு பாகத்தே . மாலை - திருமாலைக் கொண்டு . பால்மதி சூடி மகிழ்ந்தனர் என்க . போக - தேவர்களின் இடர்கள் போகும்படி . கோகு - தோள் . கோகம் குலாய தோர் கொன்றை மாலை என்க . குலாயது - விளங்கிச் சூழ்ந்து . கொன்றையுமாக ஆடும் எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 3

நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் னாமத் திருவெழுத்
தஞ்சும் தோன்ற அருளுமை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவரே ! நெஞ்சமாகிய ஆழமுடைய நீர் நிலைக்குள்ளே வஞ்சம் என்கின்ற தப்பவியலாத சுழியிலே நான்பட்டு இறக்கும் போது . தேவரீர் திருநாமமாகிய திருவைந்தெழுத்தும் தோன்ற அருள்வீராக .

குறிப்புரை :

நெஞ்சம் என்பதோர் நீள்கயம் - மனமாகிய ஆழமான நீர்நிலை . வஞ்சம் என்பதோர் வான்சுழிப்பட்டு - வஞ்சனை என்பதொரு பெரிய சுழியின்கண் அகப்பட்டு . துஞ்சும்பொழுது - உணர் விழக்கும்போது . நின்னாமத் திருவெழுத்து அஞ்சும் - உன்னுடைய திருப்பெயராகிய திருவைந்தெழுத்து . தோன்ற - பொருள் நிலை உள்ளவாறு தோன்ற . அருளும் - அருள் செய்வீராக .

பண் :

பாடல் எண் : 4

நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாருமை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் தம்மை நினைக்கின்றவர்தம் நெஞ்சில் உள்ளவர் ; நீண்ட முப்புரங்கள் மூன்றையும் சுடர்விடுகின்ற அழல் உண்ணுமாறு எரி யூட்டியவர் . பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் தோலை உரித்துத் தம்திருமேனியிற் போர்த்தவர் ; எல்லாப் பொருள்களினுள்ளும் கலந்து நிற்கும் இயல்பினர் .

குறிப்புரை :

நினைக்கும் நெஞ்சினுள்ளார் - தன்னை நினைப்பவர்களது நெஞ்சிற்குள் வீற்றிருப்பவர் . நெடுமாமதில் அனைத்தும் - நீண்ட பெரிய முப்புரங்கள் முழுவகையும் . ஒள் அழல்வாய் - ஒளி பொருந்தியதாய் எரியும் நெருப்பினிடத்து . எரியூட்டினார் - எரியும்படி செய்தார் . உரி - தோல் . அனைத்து வாய்தல் உள்ளாரும் - எல்லாப் பொருள்களிடத்தும் பொருந்துதலை உடையவரும் .

பண் :

பாடல் எண் : 5

பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
அரிய பாடல ராடல ரன்றியும்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க் கெளியரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றில் எழுந்தருளும் இறைவர் , பருப் பொருளாயவர் . நுண்பொருளாயவர் . பார்த்தற்கு அரியவர் . அரிய பாடலையும் ஆடலையும் உடையவர் . கரிய கழுத்தினர் ( திருநீல கண்டர் ). பிறர்க்கெலாம் காண்டற்கு அரியவர் . தொண்டருக்கோ எளியவர் .

குறிப்புரை :

பரியர் - பருமையிற் பருமையர் , நுண்ணியர் - நுண்மையின் நுண்ணியர் . பார்த்தற்கரியவர் - பசு , பாச ஞானங்களால் அறிதற்கரியவர் . அரிய பாடலர் - அருமையுடைத்தாகிய பாடல்களைப் பாடுபவர் . ஆடலர் - நடனம் ஆடுபவர் . பிறர்க்கெலாம் காட்சியரியர் - கரவாடும் வன்னெஞ்சராய பிறருக்கு அரியவர் . தொண்டர்க்கு எளியர் - அன்புடைத் தொண்டர்களுக்கு எளியவர் .

பண் :

பாடல் எண் : 6

புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போது மிலாதது மன்றியும்
அலரும் போதும் அணியுமை யாறரே.

பொழிப்புரை :

இருள்புலரும் காலைப் பொழுதிலும் சூரியன் மறையும் அந்திப்பொழுதிலும் இதழ்விரியும் மலர்களால் விதிமுறை தெரிந்தோர் சிலர் பணிய , அங்ஙனம் ஆகமவிதி அறியாதார் இறைவன் சூடும் மலரல்லாத மலர்களையும் , இலைகளையும் கொண்டு அருச்சிக்க அவற்றையும் அணிவன் ஐயாறன் .

குறிப்புரை :

புலரும்போது - காலை . இலாப்பட்ட பொற்சுடர்ப் போது - மாலை . போது என்பதனை? இருவழியும் கூட்டுக . பொற்சுடர் - சூரியன் . மலரும் போதுகளால் சிலர் பணிய என்க . மலர்கின்ற போதுகள் என உரை காண்க . இலரும் - அவ்வகையில் காலையும் மாலையும் மலரிட்டு வழிபடும் ஆற்றல் இல்லாதவரும் . போதும் இலாததும் - மலராம் தன்மையில்லாதவற்றையும் . அன்றியும் - அம் மலரன்றி இலைகளாலும் ; அருச்சிக்க அதனை அலரும் போதுமாகக் கொள்ளும் ஐயாறன் என்க .

பண் :

பாடல் எண் : 7

பங்க மாலைக் குழலியொர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடுமை யாறரே.

பொழிப்புரை :

இம் மங்கையைக் காதன்மை செய்தவர் இடப் பாகத்தே அழகிய மாலையணிந்த கூந்தலையுடைய பார்வதியைக் கொண்ட கங்கை மாலையர் , அங்கமாலை முதலியவற்றைச் சூடும் ஐயாறர் .

குறிப்புரை :

பங்கு அம்மாலைக் குழலியாகிய பார்வதியை உடையவர் பால்நிறக்கங்கையைக் காதன்மைசெய்யும் இயல்பினர் . மங்கு ஐ மாலைமதி - ஒளிமங்கிய அந்திப் போதின்கண் தோன்றும் மதி எனப் பொருள் காண்க . அன்றியும் இம்மங்கையைக் காதன்மை செய்தவர் அம்மாலைக் குழலியைப் பங்கின்கண் உடைய கங்கை மாலையர் எனக் கூட்டுக . மாலை மதியம் - பிறை . அங்க மாலை - என்புமாலை .

பண் :

பாடல் எண் : 8

முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு மருவிய மாதவன்
தன்னை யாறு தொழத்தவ மாகுமே.

பொழிப்புரை :

முன் துன்ப நெறியின்கண் முயன்றொழுகுவீர் எல்லோரும் பின் அத்துன்ப நெறியினின்று பிரித்தருளுவீராக என்று வேண்டும் அறியாமையுடையவர்களே ! நிலைத்த ஐயாற்றில் எழுந்தருளிய மாதவனை முறையே தொழத்தவமாகும் .

குறிப்புரை :

முன் நையாறு எனப்பிரித்து முன்துன்பநெறியின் கண்ணே முயன்று ஒழுகுவீர் எல்லோரும் என்க . பின் நையாறு எனப் பிரித்துப் பின்னர் அத்துன்ப நெறியினின்றும் பிரித்தருளுவீராக என்று வேண்டும் எனப் பொருள் காண்க . மன்ஐயாறு மருவிய - நிலைத்த ஐயாற்றின்கண் எழுந்தருளிய , மாதவன் தன்னை எனக் கூட்டுக . ஆறுதொழ - பெரியதவத்தோனாகிய பெருமானை முறையாகத் தொழ .

பண் :

பாடல் எண் : 9

ஆனை யாறென ஆடுகின் றான்முடி
வானை யாறு வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபுக் கேற்கவ னின்னருள்
தேனை யாறு திறந்தாலே யொக்குமே.

பொழிப்புரை :

பஞ்சகவ்வியங்களைத் திருவபிடேகம் கொண்டு ஆடுகின்றவனாகிய பெருமான் திருமுடியில் வானையளாவிய கங்கை பாய்வதைக் காண்பீராக ; ஐயாறு புகுந்த அடியேனுக்கு அவன் இன்னருள் தேன் ஆறு திறந்து பாய்ந்தாற் போன்று தித்தித்திருக்கும் .

குறிப்புரை :

ஆன்ஐ - பசுவிடத்தில் உண்டாகிய ஐந்து . பஞ்ச கவ்வியம் . ஆறு என - ஆற்றுவெள்ளம்போல . ஆடுகின்றான் - அபிடேகம் கொள்பவன் . முடி - அவனது திருமுடியை . வான் ஐ ஆறு - ஆகாயத் திடத்தே உண்டாகிய அழகிய கங்கை . வளாயது - சூழ்ந்திருப்பது . காண்மின் - காணுங்கள் . நான் ஐயாறுபுக்கு அவன் இன்னருள் ஏற்க எனக்கூட்டுக . ஏற்க - அவனது இனிய அருளைக் கேட்டேனாக . தேனையாறு - தேனாறு . அவனது இன்னருள் வேண்டி நின்ற எனக்கு அவனது அருள் தேனாறு எனப் பெருகி ஓடி வந்தது என்க .

பண் :

பாடல் எண் : 10

அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
றரக்க னீரைந்து வாயு மலறவே
அரக்கி னானடி யாலுமை யாறனே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செவ்வரக்கினைப் போன்று சிவந்த மேனியனும் , அழகிய தளிர் போன்று விளங்கும் மேனியனும் ஆவன் ; செவ்வரக் கனைய சிவந்த அடி உடைய உமாதேவி அஞ்சுதலும் , ` அஞ்சேல் ` என்று கூறி இராவணனது பத்து வாய்களும் அலறுமாறு தன் திருவடி விரலால் அரக்கியவன் ஆவன் .

குறிப்புரை :

அரக்கின் மேனியன் - அரக்குப்போன்ற சிவந்த நிறத்தையுடைய மேனியன் . அந்தளிர் மேனியன் - அழகிய தளிரின் மென்மை போன்ற மெல்லியன் . அரக்கின் சேவடியாள் - அரக்கைப் போன்ற சிவந்த காலடியையுடையாள் . அரக்கன் - இராவணன் . அரக்கினான் - அழுத்தி நெரியச் செய்தான் . அடியால் அரக்கினானும் ஐயாறன் என்க .

பண் :

பாடல் எண் : 1

சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் , அடியவர்களின் சிந்தை வண்ணமும் ; மாறுபடாத வண்ணம் முன்னே தோன்றிய வண்ணமும் , முழுநீறு அணிந்து அந்திவண்ணமாகிய செவ்வண்ணமும் , தழல்போல்வதோர் வண்ணமும் உடைய இயல்பினர் .

குறிப்புரை :

சிந்தை - மனத்தின்கண் . வண்ணத்தராய் - நிலை பெற்ற தன்மையை உடையவராய் . திறம்பாவணம் - மாறுபடாதபடி , முந்தி - முற்பட்டு . முழுநீறணி சந்திவண்ணத்தராய் - முழுநீறு பூசிய செந்நிறத்தை உடையவராய் . சந்தி - காலை மாலை வேளை செவ்வானம் . அந்திவண்ணமுமாவர் - மாலைக் காலத்து செவ்வானம் போன்ற நிறத்தை உடையவருமாவர் . சந்திவண்ணத்தர் - நன்றாகத் தியானிப்பவரது தியான உருவே தன் உருவமாக உடையவர் . சந்தியா சத்திகளின் நிறங்களை உடையவராய் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 2

மூல வண்ணத்த ராய்முத லாகிய
கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்
கால வண்ணத்த ராவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் , எல்லா உலகங்களுக்கும் மூலமாகிய இயல்பும் , முதலாகித் தோன்றிய திருக்கோலத்தின் இயல்பும் , வளமையான சுடர்விடுகின்ற நீலநிறமும் நீண்ட பளிங்கனைய தம் திருவுருவத்தில் நஞ்சின் வண்ணமும் உடையவராய்த் திகழ்வர் .

குறிப்புரை :

மூலவண்ணத்தராய் - உலககாரணராய் . முதலாகிய கோலவண்ணம் - ஒடுக்கிய உலகம் முதலியவற்றைத் தம்மிடத் திலிருந்து தோற்றுவிக்கும் தன்மை . கொழுஞ்சுடர் நீலவண்ணத்தர் . கொழுவிய மிக்க ஒளியை உடைய நீலமணி மேனியராகிய திருமாலைப் பாகமாக உடையவர் . கரிய அகோர முகத்தை உடையவர் எனலுமாம் . பளிங்கு - திருவெண்ணீறணிந்ததால் பளிங்குபோன்ற நிறம் . ஆலவண்ணத்தர் - கரியர் .

பண் :

பாடல் எண் : 3

சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழ காகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்த தொர் வண்ணமும்
அந்தி வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் சிந்தை வண்ணமும் , தீயின் வண்ணமும் , அழகாகிய அந்திப்போதின் வண்ணமும் , தானும் , கடாவும் , பாசக்கயிறுமாக வரிசையாகவரும் காலனைப் பாய்ந்து உதைத்த இயல்பும் உடையவர் .

குறிப்புரை :

சிந்தை வண்ணம் - நினைப்பார் மனமே இடமாகக் கொள்ளும் தன்மை . தீயதோர் வண்ணம் - நெருப்பனைய சிவந்த நிறம் . அல்லது தீயேந்தி நிற்கும் தன்மையும் கொடிய கோபமுடையராம் தன்மையும் என்க . அந்திப்போது - அந்திமாலை போன்ற . பந்தி - ஒழுங்கு . ஒழுங்குமுறையாகிய நீதியை நிலைநாட்டும் காலன் என்க . அந்தீவண்ணம் என்பது அந்தி எனக்குறுகியது . அந்தீ வண்ணம் - நெருப்பாம் தன்மை . அட்ட மூர்த்தங்களில் நெருப்பு வடிவாய் விளங்குபவன் என்க .

பண் :

பாடல் எண் : 4

இருளின் வண்ணமு மேழிசை வண்ணமும்
சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் . இருளின் வண்ணமும் , ஏழிசைகளின் வண்ணவேற்று மைகளும் , சுருண்ட சடையின் வண்ணமும் , ஒளியின் வண்ணமும் , நான்முகனும் திருமாலும் விண்பறந்தும் மண் புகுந்தும் காண்டற் கரிதென மருளும் வண்ணமும் அவர்கள் ஆணவம் அடங்கியவழி அருளும் வண்ணமும் உடையவராவர் .

குறிப்புரை :

இருளின் வண்ணம் - அகோர முகத்தின் நிறம் . ஊழிக் காலத்து இரவின்கண் அதன்மயமாய்ச் சுற்றித் திரியும் தன்மை எனலுமாம் . அன்பரல்லாதார்க்கு இருளின் தன்மை போல உணர்தற் கரிதாய்த் தோன்றும் நிலை எனவும் கூறலுமொன்று . ஏழிசை வண்ணமுமாவர் - குரல் துத்தம் முதலிய ஏழிசையின் தன்மையனாய் விளங்குபவர் . சுருளின் வண்ணமும் - எங்கும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் தன்மை . மருளும் - மயங்கும் . நான்முகன் மாலொடு வண்ணம் - திருமால் பிரமராயிருக்கும் தன்மை எனலும் ஆம் . அருளும் வண்ணம் - அருள் செய்யும் தன்மை . ஆவர் என்பதனை எல்லாவற்றோடும் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 5

இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும்
மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் நல்லியல்புகளினின்றும் இழுக்கி அல்லவை செய்தால் வெவ்விய அழலைப் போன்று வருத்தும் மறக்கருணைவண்ணமும் , மழையைத் தன்னிடத்துடைய பெரிய மேகங்களின் இயல்பு போன்று வரையாது அருள் வழங்கும் வண்ணமும் , தம்மடியார்களை அழைத்து அருள்வழங்கும் வண்ணமும் உடையவர் .

குறிப்புரை :

இழுக்கின் வண்ணங்களாகிய வெவ்வழல் என்றிணைப்பின் ஆணவமலத்தின் பலவேறு உருவங்களாகிய கொடுமைகள் என்க . குழைக்கும் வண்ணங்கள் - மலபரிபாகம் செய்யும் குரு முதலிய முகூர்த்தங்கள் . குழைந்து - கரைத்து வலியிலதாகச் செய்தல் . மழைக்கண் மாமுகில் - மழையைத் தன்னிடத்துக் கொண்ட கரிய முகில் . மழை - நீர் . அழைக்கும் வண்ணம் - ` அருந்தவர் வாவென்றணைத்த மலர்க்கையும் ` ( தி .10 திருமந்திரம் ) அபயகரம் காட்டும் தன்மை .

பண் :

பாடல் எண் : 6

இண்டை வண்ணமு மேழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
அண்ட வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் இண்டைமாலை சூடும் இயல்பும் , ஏழிசை வடிவாகிய இயல்பும் , தொண்டர்கள் நடுவில் நிற்கும் இயல்பும் , ஒளி இயல்பும் , கண்ட வண்ணங்கள் அனைத்தும் , கனல்போன்று செவ்வொளி விரிக்கும் மாணிக்கவண்ணமும் , அண்டங்களின் வண்ணமும் ஆகியவர் .

குறிப்புரை :

இண்டை வண்ணம் - தலைமாலையின் தன்மை . தொண்டர் வண்ணம் - அடியார் தன்மை . கண்ட வண்ணங்களாய் - இவையெல்லாம் பெருமான் கண்ட தன்மைகளாய் . அனல் - நெருப்பெனச் சிவந்து விளங்கும் . மாமணி - சிறந்த மாணிக்கம் . அண்டம் - உலகம் . ஆவர் என்பதை முன்னே தனித்தனிக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 7

விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் எல்லோரும் விரும்பும் இயல்பும் , வேதத்தின் இயல்பும் , கரும்பினையொத்த இனிய மொழியையுடைய உமையம்மையார் இயல்பும் , தம்மை விரும்பும் மெய்யடியார்களின் வினைகளைத் தீர்த்திடும் இயல்பும் , அரும்பின் இயல்பும் உடையராவர் .

குறிப்புரை :

விரும்பும் வண்ணம் - மெய்யன்பர் விரும்பும் வடிவங்கள் . வேதத்தின் வண்ணம் - வேதங்களை வெளிப்படுத்தும் தன்மை . வேதவடிவம் எனலுமாம் . கரும்பின் இன்மொழிக் காரிகை - பார்வதி . விரும்புவார் - தன்னை நேசிப்பார் . வினைதீர்த்திடும் வண்ணம் - காரிகை வடிவம் கொண்டிருப்பது வினை தீர்த்தற்பொருட்டு என்க . அரும்பின் வண்ணம் - மணத்தை உள்ளடக்கிய அரும்பின் தன்மை .

பண் :

பாடல் எண் : 8

ஊழி வண்ணமு மொண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததொர் வண்ணமும்
வாழித் தீயுரு வாகிய வண்ணமும்
ஆழி வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் ஊழிகள் தோறும் ஒளிரும் இயல்பும் , ஒளிச்சுடர் இயல்பும் , யானையின் பச்சைத்தோலைப் போர்த்தருளிய இயல்பும் , ஊழித்தீ உருவாகிய இயல்பும் , கடல்வண்ணமும் உடையவராவர் .

குறிப்புரை :

ஊழி வண்ணம் - ஊழிக்காலமாம் இயல்பு . ஒண் சுடர் - சூரியன் , சந்திரன் அக்கினி . ஆழித்தீ - ஊழிக் காலத்தில் , பெருகி கடலிலிருந்து , உலகை அழிக்கும் வடவைத்தீ . ஆழி வண்ணம் - கடலாம் தன்மை .

பண் :

பாடல் எண் : 9

செய்த வன்திரு நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி தாகிய வண்ணமும்
கைது காட்சி யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றில் எழுந்தருளும் இறைவன் , ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணத்தினன் . காண்பதற்கு அரிய தன்மை வாய்ந்தவன் , மனதிலே சிறைப்படுத்தித் தியானித்தற்கு அருமை வாய்ந்த தன்மையன் . மென்மை தழுவிய அழகினன் .

குறிப்புரை :

ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணம் என்க . எய்த - அடைய . நோக்கரிதாகியவண்ணம் - காணு தற்கரிய தன்மை . கைதுகாட்சி - மனத்திற் சிறைப்படுத்திக் காணுதல் . கைது - கைப்பற்றாக ; அநுபவமாக . ஐது - மென்மை அல்லது அழகு .

பண் :

பாடல் எண் : 10

எடுத்த வாளரக் கன்திறல் வண்ணமும்
இடர்கள் போற்பெரி தாகிய வண்ணமும்
கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும்
அடுத்த வண்ணமு மாவரை யாறரே.

பொழிப்புரை :

ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் , திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணன் ஆற்றல் , துன்பங்கள் போற் பெரிதாகுமாறு செய்தருளிய இயல்பும் , மிகுந்த தன் கைநரம்புகளையே யாழாக்கி அவன் இசைத்தவண்ணம் கண்டு அவனுக்கு அருளாளராக அடுத்த வண்ணமும் உடையவர் ஆவர் .

குறிப்புரை :

திறல் - வலிமை. இராவணன் தன் வலியால் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட தன்மை. இடர்கள்போல் பெரிதாகிய - அவனுடைய துன்பம்போல மலை எடுக்கமுடியாத பருமனாய் ஆகிய தன்மை. கடுத்த - விரைந்து தன் உடலில் பிய்த்த. அடுத்த - அவனுக்கு அருள்செய்யும் குறிப்புப் பொருந்திய.

பண் :

பாடல் எண் : 1

நிறைக்க வாலிய ளல்லளிந் நேரிழை
மறைக்க வாலிய ளல்லளிம் மாதராள்
பிறைக்க வாலப் பெரும்புன லாவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.

பொழிப்புரை :

பிறையோடு கூடிய செஞ்சடையில் கங்கையாகிய பெரும்புனலை உடையவரும் , திருவாவடுதுறையில் உள்ள கபாலியுமாகிய சிவபெருமானோடு ஆடிய திருநீற்றினை நிறைக்கத் தூய்மையுடையவள் அல்லள் இந்த நேரிழையணிந்த பெண் ; அன்றியும் இப்பெண் அதனால் வரும் துயரங்களை மறைக்கும் வல்லமை உடையவளுமல்லள் .

குறிப்புரை :

தலைவனைக் கண்டு மயங்கிய தன் மகளின் நிலையைத் தாய் கூறுவதாக அகப்பொருட் கருத்தமைந்த பதிகம் இது . நிறைக்க - உடலெங்கும் நிறைவிக்க . வாலியள் - தூயவள் . இந்நேரிழை - இந்தத் தலைவி . மறைக்க - மறைத்துப் பேச . வாலியள் அல்லள் - வலியள் அல்லள் . பிறைக் கவாலம் - பிறையையும் கபாலத்தையும் . பெரும்புனல் - காவிரி . கவாலி - கபாலமேந்தியவன் . ஆடிய - உடனுறைந்து புணர்ந்த . சுண்ணம் - திருநீற்றுப்பூச்சு . திருநீற்றுப் பூச்சிற்கும் தான் செய்யும் களவொழுக்கத் திற்கும் போதிய தூய்மை உடையவள் அல்லள் என்றார் . சுண்ணம் நிறைக்க எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 2

தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞக னெம்மிறை
அளவு கண்டில ளாவடு தண்டுறைக்
களவு கண்டன ளொத்தனள் கன்னியே.

பொழிப்புரை :

இக்கன்னி , வெள்ளிய பெருமைமிகுந்து மதிக்கத்தக்க சாயலை உடைய சந்திரனின் பிளவாகிய பிறையினைச் சூடிய எம்மிறைவனாகிய பிஞ்ஞகனின் அன்பின் அளவை முற்றும் கண்டிலளேனும் , திருவாவடுதுறையிலே அவனைக் களவொழுக் கத்தாற் கண்டவளை ஒத்தாள் ஆயினள் .

குறிப்புரை :

தவளம் - வெண்மை . மா - சிறந்த . மதிச்சாயலோர் சந்திரன் பிளவு - முழுமதியின் ஓர் சாயலைக்கொண்ட பிளவுச் சந்திரன் எனலுமாம் . ஒருகலைப் பிறை என்றபடி . பிஞ்ஞகன் - தலைக்கோலம் அணிந்தவன் . எம் இறை அளவுகண்டிலள் - எம் இறைவனது பெருமையின் அளவை அறிந்தாளில்லை . களவு கண்டனள் - களவொழுக்கத்தின் கண்ணே ஈடுபட்டாள் . ஒத்தனள் - அவனோடு உள்ளத்தால் ஒரு தன்மையள் ஆயினாள் .

பண் :

பாடல் எண் : 3

பாதிப் பெண்ணொரு பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங் கொண்டவ னொண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.

பொழிப்புரை :

இப்பெண் , தன் திருமேனியில் ஒரு பாதிப் பெண்ணினை உடையவனே என்றும் , பலவாகிய மறைகளை ஓதியருளி என்னுள்ளத்தைக் கவர்ந்துகொண்டவனே என்றும் , ஒள்ளிய உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஆதியானவனே என்றும் , திருவாவடுதுறையில் விரும்பியெழுந்தருளியிருக்கும் சோதியே என்றும் , சுடரே என்றும் சொல்லும் இயல்பினள் .

குறிப்புரை :

பாதிப்பெண் - பார்வதிதேவியின் பாதி உடலை . ஒரு பாகத்தன் - ஒரு பாகத்தே கொண்டவன் . பன்மறை ஓதி - வேதங்கள் பலவும் விரித்தவன் . ஆதி - முதல்வன் .

பண் :

பாடல் எண் : 4

கார்க்கொண் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொண் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றைய னாவடு தண்டுறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.

பொழிப்புரை :

இப்பெண் , கருமையைக்கொண்ட பெரிய முகில் போலும் கண்டத்தை உடையவனும் , கச்சினைக்கொண்ட மெல்லிய முலையாளாகிய உமையம்மையைச் சேர்ந்து இறுமாந்து இவளது நெஞ்சைப் பிணைக்கும் கொன்றையினை உடையவனும் ஆகிய திருவாவடுதுறைப் பெருமானின் திருமார்பில் அணிந்துள்ள கொன்றைமாலைக்கு மனம் தாழ்கின்றனள் ; காண்பீராக .

குறிப்புரை :

கார்க்கொள் - கருமையைக் கொண்ட . மா - சிறந்த . முகில் - மேகம் . வார்க்கொள் - கச்சினைக் கொண்ட . இறுமாந்து - செருக்கடைந்து . ஆர்க்கொள் - ஆத்திமாலையைக் கொண்ட எனலுமாம் . தார்க்கு - மாலைக்கு . தாழுமா - விரும்புமாற்றை . பெருமானை மென்முலையாற் சேர்ந்து இறுமாந்து அவனணிந்திருக்கும் மாலையைப் பெறப் பணிந்துநின்றாள் ஒரு தலைவி ; காணுங்கள் என்க .

பண் :

பாடல் எண் : 5

கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமு தேயெனும் பண்பினன்
அருகு சென்றில ளாவடு தண்டுறை
ஒருவ னென்னை யுடையகோ வென்னுமே.

பொழிப்புரை :

இப்பெண் , கருத்த கண்டத்தை உடையவனும் , கதிர்காய்கின்ற ஒளிவடிவினனும் , பருகுதற்கினிய பால் அமுது என்று கூறத்தக்க பண்பை உடையவனுமாகிய அப்பெருமான் அருகிற் சென்றனள் . அல்லளாயினும் , அவன்பாற்கொண்ட காதல் மிகுதியால் ` என்னை உடையவன் திருஆவடுதண்டுறையில் உறையும் தலைவனே ` என்று கூறும் இயல்பினள் .

குறிப்புரை :

கருகு - கருகிய . காய் - எரிக்கின்ற . கதிர் - கிரணங்களை உடைய . பருகு - பருகத்தக்கதாகிய . பாலமுதேயெனும் பண்பினன் - பாலும் அமுதமும் ஒத்த பண்பையுடையவன் . அருகு சென்றிலள் - அவன் அருகிற்சென்று காணவுமில்லாதாள் ஒருத்தி . என்னையுடைய கோ - என்னை மனைவியாக உடைய தலைவன் . என்னும் - என்று சொல்லிக்கொண்டிருப்பாள் .

பண் :

பாடல் எண் : 6

குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமும்
தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழக னாவடு தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.

பொழிப்புரை :

இவ்வழகுடைய பெண் , கொன்றை மலர்களும் , கூவிளந்தளிர்களும் , ஊமத்தமலர்களும் சூடிய சடையும் , தையல் ஒரு பாகமும் கொண்ட ஆவடுதண்டுறைக்குரிய அழகனே என்று விரும்பி அழைத்தலால் , கைவளைகள் கழலுகின்ற நிலைமையள் ஆயினள் .

குறிப்புரை :

குழல் - சடைமுடி . கூவிளம் - வில்வம் . கூவிளம் மத்தம் , தழல் இவற்றைத் தாங்கினான் - தையல் - பார்வதி . ஓர் பாகமாத் தாங்கினான் - ஒரு பாகத்தே கொண்டான் . கைவளை கழலும் , உடல் இளைக்கும் , நிறையழியும் என்றவாறு .

பண் :

பாடல் எண் : 7

பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்ல ளாவடு தண்டுறை
மஞ்ச னோடிவ ளாடிய மையலே.

பொழிப்புரை :

இப்பெண் திருவாவடுதண்துறையில் உள்ள , புலன் ஐந்தும் வென்ற பெருவீரனாகிய சிவபெருமானோடு ஆடிக் கொண்ட மயக்கத்தினால் , பஞ்சனைய மெல்லடியுடைய உமா தேவியாரைப் பங்கிற்கொண்ட அப்பரமனைத் தஞ்சப்பொருளாகக் கொண்டு இறுமாப்பு எய்தி , வேறு யாரையும் அஞ்சாதவள் ஆயினள் .

குறிப்புரை :

பஞ்சின்மெல்லடிப்பாவை - பஞ்சுபோல மெல்லிய அடிகளையுடைய பாவை ; பார்வதி . தஞ்சம் - அடைக்கலம் . இறு மாந்து - செருக்கியிருத்தலால் . மஞ்சன் , மைந்தன் என்பதன் போலி . மையல் - காம மயக்கம் . ஆவடுதண்துறை மைந்தனோடு இவளாடியமையால் , அவனையே அடைக்கலமாக எண்ணிச் செருக்கி யாவையும் அஞ்சு வாளல்லள் என்க .

பண் :

பாடல் எண் : 8

பிறையுஞ் சூடிநற் பெண்ணோ டாணாகிய
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
அறையும் பூம்பொழி லாவடு தண்டுறை
இறைவ னென்னை யுடையவ னென்னுமே.

பொழிப்புரை :

இப்பெண் , பிறையினைச் சென்னியிற் சூடிய பெண்ணும் ஆணுமாகிய இறைவனும் , மேகங்களும் , வண்டினங்களும் ஒலிக்கின்ற பூம்பொழில்களை உடைய ஆவடுதண்துறையில் என்னை உடையவனும் ஆகிய பெருமானே , என் கற்பினையும் , உள்ளத்தினையும் , பிற தன்மைகளையும் கவர்ந்து கொண்டவன் என்று சொல்லுமியல்பினள் .

குறிப்புரை :

பெண்ணொடு ஆணாகி - மாதொரு கூறனாகி . அ , சாரியை . நிறை - ஒழுக்கம் . நீர்மை - அழகு . அறையும் - வண்டுகள் ஒலிக்கின்ற . பூம்பொழில் - பூவார்சோலை . என்னும் - என்று சொல்லுவாள் .

பண் :

பாடல் எண் : 9

வையந் தானளந் தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான்
ஐய னாவடு தண்டுறை யாவெனக்
கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.

பொழிப்புரை :

உலகங்களைத் தான் அளந்தவனாகிய திருமாலும் , பிரமனும் ஆகிய இருவரும் மெய்ப்பொருளாகிய பிரமத்தைக் காணலுற்றபோது அவ்விருவர் முன்னே பேரழலாய் நிமிர்ந்த பெருமானே ! ஐயனே ! ஆவடுதண்டுறையில் உள்ள அண்ணலே என்று வாய்விட்டுக்கூவி உடல் மெலிதலால் இவள் கைகளில் உள்ள வெள்வளைகள் கழல்கின்றவாயின .

குறிப்புரை :

வையம் - உலகம் . அளந்தானும் - அளந்தவனாகிய திருமாலும் . அயன் - பிரமன் . மெய்யை - உண்மையான பரம் பொருளை . அழலாயினான் - சோதிவடிவாய்த் தோன்றியவன் . ஐயன் - அழகியவனே ! அண்மைவிளி . இத்தலைவிக்கு ஐயனே ஆவடு தண்துறையா என்று சொல்லும்போதே கைவளை கழல்கின்றதே என்க .

பண் :

பாடல் எண் : 10

பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவ னாவடு தண்டுறை
நக்க னென்னுமிந் நாணிலி காண்மினே.

பொழிப்புரை :

பெருமான் தன் நெஞ்சும் கற்பும் கவர்ந்து கொண்டனனேனும் , அதுகுறித்துச் சிறிதும் நாணமில்லாதவளாகிய இப்பெண் , மீண்டும் , பூதங்கள் பக்கத்தில் நின்று பாடப் பலி கொள்வான் என்றும் , ஆற்றல்மிக்க வாளை உடைய அரக்கனை வலி கெடுத்தான் என்றும் , அக்கமாலைகள் அணிந்தான் என்றும் . திருஆவடு தண்டுறையில் உள்ள திகம்பரன் என்றும் கூறிப் புகழ்ந்தவண்ணம் இருப்பாள் .

குறிப்புரை :

பக்கம் - இருபுறங்களிலும் . பலி - பிச்சை . மிக்க - செருக்கிய . அரக்கன் - இராவணன் . வீட்டினான் - அழித்தான் . அக்கு - என்புமாலை . நக்கன் - எல்லோரும் நகுதற்குரிய உடை நீத்த தோற்றமுடையவன் . இந்நாணிலி - இந்த வெட்கத்தை விட்ட தலைவி . காமம்விடு அல்லது நாண்விடு என்பவற்றுள் நாணத்தை விட்டாள் என்க . நாணிலியாதலின் நக்கன் என்பாள் என்க .

பண் :

பாடல் எண் : 1

கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.

பொழிப்புரை :

நீர் பரந்துவருகின்ற காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பராய்த்துறையில் விரும்பி எழுந்தருளியிருக்கும் அருட் செல்வர் , தம்மடியடைந்த அன்பர்கட்குப் பக்குவகாலம் வருந்துணையும் மறைந்துநின்று அருள்வர் : பின் அக்காலம் வாய்த்தவழி , அவர்வினைகளைச் சுருக்கிக் கெடுக்குமாற்றில் வல்லவர் ; செஞ்சடையிற் கங்கையை உடையார் , ( காலத்தில் வந்தடைந்தவர் வினைகளை மறையும்படிச் செய்பவர் ; விரிந்த கங்கையைத் தம் செஞ்சடையில் சுருக்குமாற்றிலும் வல்லவர் என்றும் இணைக்கலாம் .)

குறிப்புரை :

காலமடைந்தவர் தம்வினை கரப்பர் - காலத்தால் வந்தடைந்த அடியவர்களின் வினைகளை மறையச்செய்வர் . கங்கை சுருங்குமாறு வல்லார் - பெருகிவரும் கங்கையைத் தம் சடையில் சுருக்கும் வல்லவர் . பரப்புநீர் வருகாவிரி - அகன்று பரவிய தண்ணீரை உடையதாய் வருகின்ற காவிரி . இத்தலத்து அகன்ற காவிரியாய் வருதல் குறித்தது . செல்வர் , இத்தலத்து இறைவர் பெயர் . பராய்த்துறை , பராய் என்னும் தலமரம் பற்றிய பெயர் வழக்கு .

பண் :

பாடல் எண் : 2

மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கம்
சேட னார்தென்ப ராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே.

பொழிப்புரை :

தென்பராய்த்துறையுறையும் அருட்செல்வர் , செருக்குடைய யானையின் பச்சைத் தோலினால் போர்த்தித் தம் திருமேனியை மூடியவர் ; வேதங்கள் நான்கினோடு , அங்கங்கள் ஆறினையும் பாடியவர் ; மிக்க பெருமையை உடையவர் ; அப் பெருமானைத் தேடிக்கொண்டு சென்று அடியேன் காண்பேன் .

குறிப்புரை :

மூடினார் - போர்த்தார் . களி - மதத்தால் செருக்கிய . ஈரூரி - உரித்தெடுத்த தோல் . மறை நான்கினோடு ஆறங்கம் பாடினார் என்க . சேடனார் - பெரியவர் ; அடியேன் தேடிக் கொண்டு சென்று காண்பன் என்க .

பண் :

பாடல் எண் : 3

பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிரு ளேமமும்
சிட்ட னார்தென்ப ராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை யறிவரே.

பொழிப்புரை :

தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் பட்டமணிந்த நெற்றியினை உடையவர் ; பாலனைய நிலவு சொரியும் மதிக்கீற்றினை உடையவர் ; நள்ளிருளில் உலகிற்கு இன்பம் செய்யும் பொருட்டு நடனம் ஆடுபவர் ; உயர்வுடையவர் ; தம்மிடம் விருப்பமாயிருக்கும் அடியார்களைத் தாம் நன்கு அறியும் இயல்பினர் ஆவர் .

குறிப்புரை :

பட்ட நெற்றியர் - நெற்றியில் திருநீற்றுப்பட்ட மணிந்தவர் . மதிக்கீறு - பிறை . நள்ளிருள் ஏமம் - இருள் செறிந்த இரவு எனலுமாம் . யாமம் என்பதன் திரிபு ஏமம் . சிட்டர் - சிரேஷ்டர் . இட்ட மாயிருப்பாரை - தன்மேல் விருப்பமாய் இருக்கும் அடியாரை .

பண் :

பாடல் எண் : 4

முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை யறிவரே.

பொழிப்புரை :

தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் , அறியாமையொடு கூடிய சில சொற்களைப் பலர் முன்னிலையிலும் பேசுவார் . எலும்புகள் பலவற்றைப் பூண்டு திரிவார் . தம்மீது அன்பராய் இருப்பாரை நன்கு அறியும் இயல்பினர் .

குறிப்புரை :

முன்பெலாம் - பலர் முன்னிலையிலும் . மோழைமை - அறியாமையொடு கூடிய சொற்கள் . உழிதர்வர் - திரிவர் . அறிவர் - தெரிந்து திருவருள் பாலிப்பர் .

பண் :

பாடல் எண் : 5

போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.

பொழிப்புரை :

உலகில் உள்ளவர்களே ! தென்பராய்த்துறையில் உறைகின்ற ஒளி வடிவான பெருமானை மகரந்தத் தொடும் கூடிய போதுகளைக்கொண்டு புனைந்து தாதவிழும் சடையுடைய அச்சங்கரன் திருவடிகளில் துயரங்களைத் தீர்த்தருள்க என்று பரவித் தொழு தெழுந்து உய்வீர்களாக .

குறிப்புரை :

தாதொடுபோது கொண்டு என மாறுக . தாது - மகரந்தம் . புனைந்து - சாத்தி . உடன் - பின்னர் . தாதவிழ் சடை - மகரந்த முறைந்து மணந்து விளங்கும் சடை . சங்கரன் - இன்பத்தைச் செய்பவன் . பாதத்துள் - திருவடிகளில் . வாதை - பிறவிநோய் . இருவினை முதலிய பாசத்தால்வரும் துன்பங்கள் . தீர்க்க என்று - தீர்த்தருள்வீராக என்று . ஏத்தி - புகழ்ந்து ; தோத்திரித்து . உய்மின் - வாழுங்கள் .

பண் :

பாடல் எண் : 6

நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்தென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.

பொழிப்புரை :

நெஞ்சே ! தென்பராய்த்துறையில் உறைகின்ற அருட்செல்வரும் , நல்லனவாகிய நான்கு மறைகளை ஓதிய நம்பரும் , பல இல்லங்களிலும் வெள்ளியதலையிற் பலிகொள்ளும் இயல்பினரும் , தில்லைத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய பெருமானை விரைந்து வணங்கி மெய்ம்மையாகத் தொழுவாயாக !

குறிப்புரை :

நல்ல நான்மறை - நன்மையைத் தருவனவாய நான்கு வேதங்கள் , தில்லையான் - தில்லையில் எழுந்தருளி இருப்பவன் . வல்லையாய் - விரைவுடையனாய் . தொழு - வணங்கு . வாய்மையே - உண்மையாக .

பண் :

பாடல் எண் : 7

நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி யிழிபுனல் போன்றதே.

பொழிப்புரை :

நெருப்பினைக் குவித்துவைத்தாலொத்த நீண்ட சடை உடையவரும் , மலையினையொத்த மதயானையினை உரித்துப் போர்த்தவரும் ஆகிய திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமார்பிற் புரள்கின்ற முந்நூல் , மலையினை அரித்துக் கொண்டு இழிகின்ற அருவிப்புனலைப் போன்றுள்ளது .

குறிப்புரை :

நெருப்பினால் குவிந்தாலொக்கும் நீள்சடை - நெருப்பைக் குவித்ததுபோன்று செவ்வொளி விரிந்த நீள்சடை . பருப்பதம் - மலைபோன்ற . மதயானை - மதம் பொருந்திய யானை . திருமார்பின் நூல் பொருப்பு அருவி இழிபுனல் போன்றது - மார்பில் அணிந்த பூணூல் மலையினின்று இழியும் அருவி போன்றது என்க .

பண் :

பாடல் எண் : 8

எட்ட விட்ட விடுமண லெக்கர்மேல்
பட்ட நுண்துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே.

பொழிப்புரை :

வானை எட்டுமாறு இட்ட மணலிடு குன்றின் மேல் நுண்ணிய நீர்த்துளிகள் பாய்கின்ற பராய்த்துறையில் உறைகின்ற உயர்ந்த இறைவன் சேவடிகளிற் சென்று அடையும் வல்லமை உடையீராயின் , நம்வினைகளாய் உள்ளவை நம்மைவிட்டு நீங்கிக் கெடும் .

குறிப்புரை :

எட்டவிட்ட - உயரமாக அமைத்த . இடுமணல் எக்கர் - காற்றாலும் அலையாலும் சேர்க்கப்பட்ட மணல் குன்றுகளின் மேல் . பட்ட - மோதிய . நுண்துளி - நுண்ணிய தண்ணீர்த்துளி . அடைகிற்றிரேல் - அடைய வல்லீரேயானால் . நம் வினை உள்ளன விட்டு வீடுமே - நம் வினையாக இருப்பவை நம்மைவிட்டுக் கெடும் .

பண் :

பாடல் எண் : 9

நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை யறிவரே.

பொழிப்புரை :

நெருப்பு அராவி நிமிர்ந்ததனையொத்த நீண்ட சடையையும் , தந்தத்தை அராவி வளைத்ததுபோன்ற பிறைமதியையும் உடையராய்த் திருப்பராய்த்துறையில் விரும்பியெழுந்தருளி இருக்கும் அருட்செல்வர் தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவர் .

குறிப்புரை :

நெருப்பராய் நிமிர்ந்தாலொக்கும் நீள்சடை - நெருப்பு நீண்டு நிமிர்ந்து நின்றது போன்ற சடை . மருப்பராய் வளைந் தாலொக்கும் வாண்மதி - யானையின் மருப்பு வளைந்திருத்தலை ஒக்கும் ஒள்ளிய பிறைமதி .

பண் :

பாடல் எண் : 10

தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
இண்டை கட்டி யிணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே.

பொழிப்புரை :

திருப்பராய்த்துறைத் தலத்து எழுந்தருளியிருப்பவரும் , பாண்டரங்கக் கூத்துடையவரும் ஆகிய இறைவர்க் குற்ற தொண்டுகளைப்பற்றிப் பாடியும் , அப்பெருமான் இணையடிகளில் இண்டைமாலை சாத்தியும் , தூமலர்கள் தூவியும் , கண்டும் , உள்ளத்திற் கொண்டும் அடியேன் உய்ந்து போவன் .

குறிப்புரை :

தொண்டு பாடி - அடிமையாம் தன்மையை விரித்துப் பாடி . இண்டை - தலை மாலை . பண்டரங்கர் - பண்டரங்கம் என்னும் திருக்கூத்தாடுபவர் . இறைவனாடிய திருக்கூத்துக்களில் இதுவும் ஒன்று ( கலித்தொகை - கடவுள்வாழ்த்து ) . பராய்த்துறைப் பாங்கர் - திருப்பராய்த்துறையை இடமாகக் கொண்டவர் . உய்ந்துபோவன் - உய்வேன் .

பண் :

பாடல் எண் : 11

அரக்க னாற்ற லழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.

பொழிப்புரை :

இராவணனது ஆற்றலை அழித்த அழகனும் , நீர் பரக்கின்ற பொன்னி மன்னுகின்ற பராய்த்துறையில் இருக்கை பொருந்திய ஈசனுமாகிய பெருமானை ஏத்துவீர்களாக ! நும்வினைகள் விரைந்து போய்த் தொலையும் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

ஆற்றல் - வலிமை . பரக்கும் - எங்கும் பரவும் . இருக்கை - இருப்பிடம் . பொருக்க - விரைந்து .

பண் :

பாடல் எண் : 1

கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலம் மானை யணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே.

பொழிப்புரை :

தெளிவற்றசிலர் , உலகிற்கெல்லாம் அரசனாகிய சிவபெருமானைச் சுமத்தலாற் குளிர்ந்த மனத்தை உடையராய் அச் சிவானந்தத்தேனை உண்ணாதவராயுள்ளனர் ; சில ஊமர்கள் ஆனைக்காவில் எழுந்தருளியுள்ள தலைவனை அணையாதவர்களாய்த் தம் தசைபொதிந்த உடலை வீணேசுமந்து திரிவர் !

குறிப்புரை :

கோனை - எல்லா உலகிற்கும் தலைவனாகிய பெருமானை . காவி - காப்பாற்றி . குளிர்ந்தமனத்தராய் - மனங் குளிர்ந்தவராய் . தேனை - அப்பெருமானது திருவருளமுதாகிய தேனை . காவி - விரும்பிக் காத்து . உண்ணார் - உண்ணாதவராயினார் . தெண்ணர்கள் - தெளிந்த அறிவில்லாதவர்கள் . ஆனைக்காவில் எம் அண்ணலை - திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய எங்கள் தலைவனை . அணைகிலார் - சென்று தரிசிக்காதவராய் . ஊனை - இவ்வுடலையே . காவி - ஓம்பி . உழிதர்வர் - திரிவர் . ஊமர் - ஊமையர் . வாய்பெற்ற பயனை வாழ்த்திப் பெறாதவராதலால் வாயிருந்தும் ஊமையர் என்றார் .

பண் :

பாடல் எண் : 2

திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

மாறுபடும் மனத்தினை மாறுபாடு நீக்கிச் செம்மைப்படுத்திப் பருகுதற்குரிய தேன் போல் இனிக்கும் பெருமானைப்பற்றிச் செவ்வியறிந்து உருகி நைபவர்க்கு வரக்கடவனவாகிய குற்றங்கள் இல்லாததோடு , அவர்கள் அருகு நின்று ஆனைக்காவின் அண்ணலும் அருள்புரிவன் .

குறிப்புரை :

திருகு - மாறுபட்ட . தீர்த்து - மாறுபாடொழித்து . செம்மை செய்து - தூய்மை செய்து . ஊறல் - உள்ளத்துள்ளே ஊறும் தேன் போன்ற சிவாநந்தானுபவம் . ` கருதுவார் இதயத்துக் கமலத் தூறும் தேனவன்காண் ` ( தி .6. ப . 87. பா .1) பற்றிப்பதமறிந்து பருகி - அன்பால் பணிந்து அப்பெருமானின் திருவருளமுதைச் செவ்வியறிந்து உண்டு . உருகிநைபவர் - மனமுருகி திருவருட் பேற்றிற்கு இளைப்பவர் . ஊனம் - குறை . அருகு - அண்மையில் . நின்றிடும் - எழுந்தருளுவான் .

பண் :

பாடல் எண் : 3

துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின்
என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

என் பொன்போல்வான் என்றும் , ஈசன் என்றும் , இறைவன் என்றும் உள்ளத்தே உள்குவார்கட்கு ஆனைக்காவின் அண்ணல் அன்பனாய் அருள்புரிவான் ஆதலால் , துன்பமும் துயரமும் இன்றி என்றும் குன்றாத இன்பத்தை நீர் விரும்புவீரேயாயின் , இரவு பகல் எப்போதும் வழிபடுவீராக .

குறிப்புரை :

துன்பம் - உடலால் நுகரப்படும் துன்பம் . துயர் - மனத்தால் நுகரப்படும் துன்பம் . என்றும் - எப்போதும் . நீர் - நீங்கள் . இன்பம் வேண்டில் - இன்பத்தோடிருக்க விரும்பினால் . இராப்பகல் - இரவும் பகலும் . ஏத்துமின் - தோத்திரியுங்கள் . என்பொன் - எனக்குப் பொன்னாயிருப்பவன் . ஈசன் - தலைவன் . உள்குவார்க்கு - நினைக்கும் அடியார்களுக்கு .

பண் :

பாடல் எண் : 4

நாவால்நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

நறுமணம் வீசுகின்ற சிவந்த தன் இணையடிகளை நாவினால் பெரிதும் இடைவிடாது ஏத்தி உள்ளத்தே அடைத்தவர்களுக்கும் , ` வினைத் துன்பங்களினின்று எம்மைக் காப்பாயாக ` என்று கைதொழுவார்களுக்கும் , ஆனைக்காவின் அண்ணல் ஆவா என்று அபயம் கொடுத்தருளும் இயல்பினன் ஆவன் .

குறிப்புரை :

நாவால் - நாக்கினால் . நறுமலர்ச் சேவடியை நன்று ஓவாது ஏத்தி என்க . நன்று - நல்லவண்ணம் . ஓவாது - இடைவிடாது . உளத்து அடைத்தார் - மனத்தின்கண்ணே இருத்தியவர் . வினை காவாய் - வினைபோக்கிக் காப்பாற்றுவாய் . தங்கை தொழுவார்க்கெலாம் - தம்கையால் வணங்குவார் எல்லார்க்கும் . ஆ , இரக்கச் சொல் ; இரங்குவான் என்றபடி . அருகே வந்துய்க என்றுமாம் .

பண் :

பாடல் எண் : 5

வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

ஆனைக்காவின் அண்ணலை வஞ்சமின்றி நாள் தோறும் வழிபடுவீர்களாக ; வெவ்விய சொற்களினின்றும் விலகுவீர்களாக ; வீட்டின்பம் பெறும் பொருட்டு நைந்து நைந்து நின்று உள்ளம் குளிர்வார்க்கெல்லாம் ` அஞ்சேல் ` என்று அருள்பவன் அப் பெருமானேயாவன் .

குறிப்புரை :

வஞ்சமின்றி - மனத்தில் வஞ்சனையில்லாமல் . வைகலும் - நாடோறும் . வெஞ்சொல் இன்றி - கொடுஞ்சொற் பேசுதலின்றி . விலகுமின் - வஞ்சனை வெஞ்சொல் இவற்றை விட்டொழியுங்கள் . வீடற என்பதுபாடமாயின் - கெடுதல் நீங்க எனவுங் கொள்க . வீடுற - வீட்டுநெறியை அடைய . நைஞ்சு நைஞ்சு - உருகி உருகி . நைந்து என்பது நைஞ்சு எனத் திரிந்தது ; போலி . உள் - உள்ளம் .

பண் :

பாடல் எண் : 6

நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல் , படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர் களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன் .

குறிப்புரை :

நடையை - உலக நடையை . மெய்யென்று - நிலையானது என்று எண்ணி . நாத்திகம் - கடவுளும் மறுபிறப்பும் இருவினையும் முதலியவற்றை இல்லை என்றுகூறும் உலோகாயதம் . கடவுளும் உயிரும் வீடுபேறும் பொய்யென்று கூறும் கொள்கை . படைகள்போல் - நாற்பெரும்படைகளைப் போல் . வரும் - கொல்ல வரும் . பஞ்சமா பூதங்கள் - ஐந்து பெரிய மண் , நீர் , அனல் , கால் , வளி , என்ற பூதங்கள் . தன்னடைந்தார்க்குத் தடையொன்றும் இல்லாது அடைதற்கு எளிதாய் நிற்பான் என்க .

பண் :

பாடல் எண் : 7

ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்
றழும வர்க்கன்ப னானைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

ஒன்பது வாயில்களும் ஒழுகுகின்ற மாடமாகிய உடம்பினைக் கழுகுகள் அரிக்கும் இறுதிக்காலம் வருதற்கு முன்பே தன் இணையடிகளைக் கைகளால் தொழுது தூய மலர்களால் தூவி நின்று அழுகின்ற அன்பர்கட்கு அன்பனாய் நின்று அருள்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .

குறிப்புரை :

ஒழுகும் மாடம் - எங்கும் ஓட்டைகளையுடைய வீடு . ` மலஞ்சோரும் ஒன்பது வாயில் ` ( தி .8 திருவா .) ஒன்பது வாய்தலும் - ஒன்பது வாயில்களையும் , செவி , மூக்கு , கண் , வாய் , மலக்குறி , நீர்க்குறி ஆகியன . இறக்குமுன் என்பதாம் . வாய்தல் - வாயில் ; வழி . உடம்பு ஒன்பது ஓட்டைகளை உடையது ஆதலின் அவ்வழியை வாயிலென்றார் . கழுகரிப்பதன்முன் - அவ்வுடலாகிய வீடு இறந்து அழிந்து கழுகு அரித்துத் தின்னும் முன்னே . கழலடி - கழலணிந்த திருவடிகளை . அழுமவர்க்கு - அழுபவர்களுக்கு .

பண் :

பாடல் எண் : 8

உருளும் போதறி வொண்ணா வுலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
அருள்கொ டுத்திடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

உலகவாழ்வினை உதறி இறக்கும் போது இது என்று அறிய இயலாத உலகத்தவர்களே ! தெளிவடைவீர்களாக ; தீவினையைச் சேராமல் விரைந்து , இருள் அறுத்து நின்று ` ஈசனே ` என்று உரைப்பவர்க்கெல்லாம் அருள்கொடுப்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .

குறிப்புரை :

உருளும் போது - அழியும் காலம் . அறிவொண்ணா - அறிந்து கொள்ள முடியாது . தெருளும் - தெளிவடையுங்கள் . சிக்கென - பற்றுக்கோடாக . இருள் - அறியாமையாகிய பந்த பாச மயக்கம் .

பண் :

பாடல் எண் : 9

நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர வானந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

அறியாமை உடைய நெஞ்சமே ! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம் , நலம் , சுற்றம் , பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று , ஆனைக் காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக .

குறிப்புரை :

நேசமாகி - அன்புமயமாகி . மடநெஞ்சமே - இதுவரை அறியாதிருந்த மனமே . நினை - நினைப்பாயாக . நாசமாய - அழிவனவாகிய . குலநலம் - குலத்தின் உயர்வு . பராபர ஆனந்தம் - மிக மேலான இன்பம் . உற்றிடும் - உறுவிக்கும் ,

பண் :

பாடல் எண் : 10

ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

ஆனைக்காவின் அண்ணல் , அலைகடல் சூழ்ந்த இலங்கைக்கிறைவனாகிய இராவணன் கீதத்தைக் கின்னரம் போல் மிகப் பொருந்திப்பாடத் தன் திருப்பாதத்துத் திருவிரல் ஒன்றினால் முன்னம் ஊன்றியவர் பின்னவற்குப் பரிந்து அருள் செய்து ஆதி ஆயினர் .

குறிப்புரை :

ஓதம் - கடல் நீர்ப்பெருக்கு . கின்னரம் - வாச்சிய விசேடம் . கின்னரத்தால் கீதம்பாட என்க . கெழுவினான் - தனக்குப் பகைவன் என்ற எண்ணத்தை விட்டு , அவனோடு அன்பால் பொருந்தினான் . பாதம் வாங்கி - அழுத்திய காலைத் தூக்கி . பரிந்து - இரங்கி . ஆதியாயிடும் - தலைவனாயிருக்கும் .

பண் :

பாடல் எண் : 1

கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

பல கொடிகள் எடுக்கப்பெற்றதும் , திருவிழாக்களினால் உண்டாகும் ஆரவாரங்கள் அறாததும் , மணமிக்க பூம் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருக்கச்சியேகம்பரும் திருநீற்றுப் பொடியினைப் பூசிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் சுவாமியும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

கொடிகொள் - கொடிகளைக்கொண்ட . விழாக் குணலை - திருவிழா ஆரவாரம் . அறா - நீங்காத . கடிகொள் - மணம் பொருந்திய . பூம்பொழில் - பொலிவையுடைய சோலை . கொடிகொள் செல்வம் விழா அறா என்பவற்றைத் தனித்தனியே கச்சியேகம்பம் என்பதனோடு கூட்டுக . பொடிகள் - திருநீறு . பூந்துருத்திநகர் அடிகள் - பூந்துருத்தி என்னும் நகருக்குரிய தலைவர் . சேவடி - சிவந்த திருவடிகள் . நாம் இருப்பது அடிகள் சேவடிக்கீழ் என்க . இப்பதிகம் , திருவடிக் கீழிருந்து அநுபவிக்கும் இன்புறு நிலையை உணர்த்துகின்றது . ` ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல் ` ( திருவருட்பயன் . 10.1) என உணர்த்தப்படும் நிஷ்டையின் இயல்பு , இங்குள திருவாக்குப் போலெழும் திருமுறைகளை மூலமாகக் கொண்டது . இது பரமுத்தி நிலையைக் குறிக்கும் . திருப்பூந்துருத்தித் திருமடத்தில் தங்கி வாழ்ந்த குறிப்பு இப்பதிகத்தே அமைந்திருத்தல் அறிதற்குரியது .

பண் :

பாடல் எண் : 2

ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

தோல் உடையினை ஆர்த்துக்கட்டி ஒரு வேட வடிவம் கொண்டு அருச்சுனனோடு படைக்கலந் தொடுக்கு மாயினும் , பூத்த மலர்கள் நிறைந்த நீள்பொழில்களை உடைய பூந்துருத்தி நகரத்துத் தீர்த்தவடிவாய் உள்ள பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

தோலுடை ஆர்த்துக்கட்டி - புலித்தோலை இடையிலே பொருத்திக் கட்டி . பார்த்தனோடு - அர்ச்சுனனோடு . படை தொடும் - கணைதொடுத்துப் போர்புரிவான் . தீர்த்தன் - புனிதன் .

பண் :

பாடல் எண் : 3

மாதி னைமதித் தானொரு பாகமாக்
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு பாகமாக மதித்து ஏற்றவனும் , சடையின்கண் கங்கையைக் காதலால் ஒளித்துக் கொண்டவனும் . பூதங்களுக்குத் தலைவனும் , பூந்துருத்தி நகரில் எழுந்தருளியிருக்கும் முதல்வனும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

மாதினை - உமையை . ஒருபாகமா மதித்தான் - இடப் பாகத்தே ஏற்றுக்கொண்டவன் . கங்கையைக் காதலால் சடைக் கரந்தான் என்க . காதலால் - உயிர்கள்மீது வைத்த அன்பால் . கரந்தான் - மறைத்தவன் பூதநாயகன் - உயிர்களுக்குத் தலைவன் . ஆதி - முதல்வன் .

பண் :

பாடல் எண் : 4

மூவ னாய்முத லாயிவ் வுலகெலாம்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

முப்பெருங்கடவுளராயும் , அவருள் முதல்வனாயும் , இவ்வுலகெல்லாவற்றையும் காப்பவனாயும் , கடிய காலனைக் காய்ந்தவனாயும் , அன்பானினைவாரது உள்ளக் கமலத் தின்கண் தலைவனாக எழுந்தருளியிருப்பவனாயும் உள்ள பூந்துருத்தி நகரின் தேவன் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

மூவன் - முதிர்ந்தவன் . முதலாய் - எல்லாவற்றிற்கும் முதற்காரணனாய் . காவன் - காப்பவன் . கடுங்காலன் - கொடிய எமன் . காய்ந்தவன் - சினந்து அழித்தவன் . பூவின் நாயகன் - நிலவுலகிற்குத் தலைவன் ; அன்றி மலர்மேலுறையும் அரி அயனாக இருப்பவன் என்றும் , அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தில் உறையும் தலைமகன் என்றும் கொள்ளலாம் .

பண் :

பாடல் எண் : 5

செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொன் னார் செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

நம் தேசத்தில் இருப்பினும் உம்பர் உள்ள தேவருலகத்தவரோடு இருப்பினும் , பொன்னும் பொலிவார்ந்த செல்வமும் உள்ள பூந்துருத்தி நகரத்து நம்மவனாகவும் , செம் பொன்னையே யொத்த திருமேனியினனாகவும் வீற்றிருக்கும் பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

செம்பொன் - சிவந்த பொன் . உம்பரானவர் - தேவர்கள் . பொன்பொன் - அழகிய பொன் . ஆர் - பொருந்திய .

பண் :

பாடல் எண் : 6

வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

வன்மைபேசி வன்மையான கொடிய செயல்களையே செய்து திரிந்த திரிபுரங்களைக் கொல்ல எண்ணிப் பேசிக் கொடிய அம்பால் அழித்த பூந்துருத்தி நகர்ச்செல்வன் புன்மை பேசினும் அவன் திருவடிக்கீழேயே இருத்தலை எண்ணுவோம் .

குறிப்புரை :

வல்லம் - வன்மை . வலிசெய் - வன்மையான கொடிய செயல்களையே செய்கின்ற . மூன்றூர் - திரிபுரம் . கொல்லம்பேசி - கொல்லுதலைக் கருத்துட்கொண்டு . கொடுஞ்சரம் - கொடிய அம்பால் . நூறினான் - அழித்தான் . புல்லம் - புன்மை மொழிகள் .

பண் :

பாடல் எண் : 7

ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

ஒப்பற்றவனாய் ஏழு உலகங்களும் தொழ நின்று , பெரிய பாம்பும் , மதியும் , கங்கையும் சடையிற் பொருந்தியவனாய்ப் பூந்துருத்தி நகரத்தே எழுந்தருளியிருக்கும் திருத்தமானவனின் சேவடிக்கீழ் நாமிருக்கப்பெற்றோம் .

குறிப்புரை :

ஒருத்தனாய் - அழியாத முதல்வன் தானொருவனுமேயாய் . பருத்தபாம்பு - பெரிய பாம்பு . பொருத்தன் - அணிந்தவன் . திருத்தன் - திருத்தமாய் விளங்குபவன் . மாறுபடாத செம் பொருள் .

பண் :

பாடல் எண் : 8

அதிரர் தேவ ரியக்கர் விச் சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

அதிரர் , தேவர் இயக்கர் , விச்சாதரர் முதலியவர்கள் கருதுமாறு நின்ற அனைவரும் காண்டலரிய காட்சியானும் , நீர் இருகரையும் பொருதுவருகின்ற பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருப்பவனும் , சரியை முதலியவற்றில் நான்காவதாகிய ஞானத்தாலே எய்துதற்குரியவனும் ஆகிய பெருமானின் சேவடிக் கீழ் நாம் இருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

அதிரர் தேவர் - உரத்தகுரலினராய தேவர் . இயக்கர் - பதினெண்கணத்துள் ஒருவர் . விச்சாதரர் - வித்யாதரர் . கருதநின்றவர் - தேவர் முதலானோர்க்குத் தலைவர் என்று கருதுகின்ற திருமாலும் பிரமனும் . காண்பரிதாயினான் - தாணுவாய் விளங்கியவன் . பொருதநீர் - அலைக்கும் காவிரிநீர் . வரு - வருகின்ற . சதுரன் - சதுரப்பாடுடையவன் . திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களுட்போல இவர் திருப்பதிகங்களிலும் இலிங்கபுராண வரலாறும் புறச்சமயத் தவரைப்பற்றிய பழிப்பும் நியதமாகச் சிலவற்றில் கூறப்படுகின்றன .

பண் :

பாடல் எண் : 9

செதுக றாமனத் தார்புறங் கூறினும்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவி னாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

குற்றம் நீங்காத மனத்தினர் புறம் பேசினும் கொசு நீங்காத பீளைசார்ந்த கண்களையுடைய புறச்சமய நோன்பிகள் இழித்துக் கூறினும் மன்றவாணனாகிய பூந்துருத்திப் பெருமான் சேவடிக்கீழேயே நாம் இருப்போம் .

குறிப்புரை :

செதுகு அறா - தீங்கு அல்லது குற்றம் நீங்காத . புறங்கூறினும் - புறம் பேசினாலும் . கொதுகு - கொசு ; பீளை சார்ந்த கண்கள் என்க . பொதுவில் நாயகன் - பஞ்ச சபைகளின் தலைவன் . அதிபன் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 10

துடித்த தோள்வலி வாளரக் கன்தனைப்
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

பொழிப்புரை :

தோளாற்றலும் மிக்க வாளாற்றலும் உடைய இராவணனை துடிக்குமாறும் , அவன் பிடித்த கைகள் நெரிவுறுமாறும் , கண்ணெலாம் நீர்த்துளிகள் பொடிக்குமாறும் திருவிரலால் ஊன்றிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெருமைமிக்க சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

குறிப்புரை :

துடித்த - தினவெடுத்த. வலி - வலிமை. பிடித்த - கயிலை மலையைப்பற்றிய. நெரிந்துற்றன - நெரிந்தன. கண்ணெலாம் - இருபது கண்களும். பொடிக்க - நீர் அரும்ப. ஊன்றிய - மிதித்த. படிகொள் சேவடி - அன்பர்க்கருளவேண்டி நிலத்தின் கண்ணே பொருந்திய அவனது சிவந்த திருவடிகள்.

பண் :

பாடல் எண் : 1

கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம் பலத்துறை செல்வனார்
தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! முல்லை நிலத்துக்குரிய விடையேற்றினை உடையவரும், கொள்ளும் அரவத்தினை உடையவரும், தில்லைத் திருநகரில் சிற்றம்பலத்தே உறையும் அருட்செல்வரும், பழைய ஊழிக்காலத்தவரும் ஆகிய சோற்றுத் துறையர்க்கு வல்லமை உடையையாய்ப் பணிசெய்வாயாக.

குறிப்புரை :

கொல்லை ஏறு - முல்லை நிலத்துக்குரிய இடபம். முல்லைக்குத் திருமால் தெய்வமாதலால் திருமாலை ஏறாக உடையவன் என்று கூறவந்தவர் கொல்லைஏறு என்றார். அன்றி முல்லை நிலத்துக்குரியதான ஏறு எனினும் அமையும். \\\\\\\"கொல்லைச் சில்லைச்சே\\\\\\\" (தேவாரம் 070201). கோள் - கொல்லும் தன்மையுடைய. தொல்லையூழியர் - மிகப்பழைய ஊழிக்காலங்கள் பலவற்றையும் கண்டவர். வல்லையாய் - வலிமையை உடையையாகி; விரைவுடைமையோடு. பணிசெய் - தொண்டு செய்.

பண் :

பாடல் எண் : 2

முத்தி யாக வொருதவஞ் செய்திலை
அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை
தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! முத்திப் பேறெய்தற்பொருட்டு ஒரு தவமும் செய்திலை; அடியார்களுக்கு விருப்பத்தோடு ஒன்றையும் அளித்தாயில்லை; பூங்கொத்துகள் நின்று மலர்கின்ற சோற்றுத்துறையர்க்கு இனியாகிலும் பத்தியோடு பணி செய்வாயாக.

குறிப்புரை :

முத்தியாக - வீடுபேறடையும்பொருட்டு. தவம் - அடியார்க்களித்தல் அரனை ஓம்பல் முதலிய தவங்கள். செய்திலை - செய்யாதிருந்தாய். அத்தியால் - அருத்தியால்; விருப்பத்தோடு. அதனால் என்றுமாம். அளித்திலை - கொடுக்கவில்லை. அடியார்க் களித்தல் அரன்பணியினும் சிறந்தது என்றபடி. தொத்து நின்றலர் - கொத்துக்களாய் நின்றுமலரும், சோலைகளையுடைய என வருவிக்க. பத்தியாய் - அன்போடு.

பண் :

பாடல் எண் : 3

ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! உடலை ஒட்டி நின்ற மிகுந்த நோய்களையும், பிணித்து நிற்கும் வினைகளையும் கழிந்து அறும்படியாகச் சோற்றுத்துறையர் திருவடிகளைத் தொட்டு நின்று பட்டியாகப் பணிசெய்வாயாக.

குறிப்புரை :

ஒட்டிநின்ற - நம்மோடு நிழலாய் உடனுறைந்தும் அத்துவிதமாய்ப் பிரிப்பின்றியும் நிற்கின்ற. உடலுறுநோய் - உடலைப் பற்றிய நோய்கள்; பிறவி நோய் எனலுமாம். கட்டி நின்ற - சூழ்ந்து நிற்கும் பந்தபாசங்கள். கழிந்து - நீங்கி. அவைபோய்அற - நோய், பாசம், வினை என்ற மூன்றும் விலக. தொட்டு நின்றும் - அவன் திருவடிகளை மனத்தால் தீண்டி நின்றும். பட்டியாய் - மீளா அடிமையாய்.

பண் :

பாடல் எண் : 4

ஆதியா னண்ட வாணர்க் கருள்நல்கு
நீதி யானென்றும் நின்மல னேயென்றும்
சோதி யானென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! முதல்வனும் தேவர்களுக்கு அருள்நல்கும் நீதியனும், நின்மலனும், சோதியனும் ஆகிய சோற்றுத்துறைப் பெருமானுக்கு வேறொன்றும் வாளா வாதித்துக் காலம் போக்காது, பணிசெய்வாயாக.

குறிப்புரை :

அண்டவாணர் - மேலுலகவாசிகளாகிய தேவர் முதலியோர். நீதியான் - நீதிவடிவினன். நின்மலன் - மலமற்றவன். வாதியாய் - பரமன் புகழ்களையே பேசுபவனாய்.

பண் :

பாடல் எண் : 5

ஆட்டி னாயடி யேன்வினை யாயின
ஓட்டி னாயொரு காதி லிலங்குவெண்
தோட்டி னாயென்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! அடியவனை ஆட்டுவிப்பானே என்றும், வினைகளாயினவற்றை ஓட்டியவனே என்றும், திருச்செவியில் விளங்குகின்ற சங்கவெண் தோட்டினை யணிந்தவனே என்றும் சோற்றுத்துறையனார்க்கு நீள நினைந்து நீ பணிசெய்வாயாக.

குறிப்புரை :

ஆட்டினாய் - திருக்கூத்தாடுபவனே! ஓட்டினாய் - விலகச்செய்தவனே!, வெண்தோட்டினாய் - ஒரு பக்கத்து வெண்மையான தோடணிந்தவனே!. நீட்டி - புகழ்களை நீளச் சொல்லிக் கொண்டு.

பண் :

பாடல் எண் : 6

பொங்கி நின்றெழுந் தகடல் நஞ்சினைப்
பங்கி உண்டதோர் தெய்வமுண் டோசொலாய்
தொங்கி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்குத்
தங்கி நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! பொங்கி நின்று எழுந்த கடலினின்றும் விளைந்த ஆலகாலவிடத்தை விழுங்கி உண்ட ஒரு தெய்வம் இத்தெய்வத்தையன்றி வேறு உண்டோ சொல்வாயாக! அச்சோற்றுத்துறையர்க்கு மனம் தாழ்ந்து என்றும்தங்கி நீ பணி செய்வாயாக.

குறிப்புரை :

நஞ்சினைப் பங்கியுண்டதோர் தெய்வமுண்டோ சொலாய் - ஏனையோர் யாவரும் நன்மை தீமை கலந்து பங்கிடு பவராகிய எமது பெருமான் தீமையாகிய நஞ்சைத் தமக்கு வைத்தும், நல்லதாகிய அமிர்தத்தைத் தேவர்க்குவைத்தும் அந்த நஞ்சைப் பங்கிட்டு உண்டதுபோல வேறு தெய்வமுண்டோ? என்க. தொங்கி - துவங்கி. தங்கி - ஒருநெறிப்பட்டு.

பண் :

பாடல் எண் : 7

ஆணி போலநீ ஆற்ற வலியைகாண்
ஏணி போலிழிந் தேறியு மேங்கியும்
தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே
பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! ஆணி போல நீ மிகவும் வலி உடையையாயினும், ஏணியைப் போல் இழிந்தும் ஏறியும் இறங்கியும் வாடுகின்றனை; பிறவிப் பெருங்கடற்குத் தோணியாகிய சோற்றுத்துறையர்க்குப் பூணியாக நின்று பணி செய்வாயாக.

குறிப்புரை :

ஆணி - இருப்பாணி. ஆற்றவலியை - மிக்க வலிமை யுடையாய். ஏணிபோல் இழிந்தேறியும் - ஏணியைப் போலத்தான் இருந்த இடத்திலே இருந்து பிறர் இழியவும் ஏறவும் சாதனமாய் நின்றும் கவலைப்படும். இருப்பாணிபோல வலிமையாய் உள்ளது மான மனம் என முன்னே கூட்டுக. தோணி - பிறவிக்கடலில் இருந்து கரையேற்றும் தோணி போன்றவன். பூணியாய் - அன்புடையையாய்.

பண் :

பாடல் எண் : 8

பெற்ற மேறிலென் பேய்படை யாகிலென்
புற்றி லாடர வேயது பூணிலென்
சுற்றி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
பற்றி நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! ஏற்றினை ஏறினாலென்ன, பேய்கள் படைகளாகிலென்ன, புற்றினைப் பொருந்திய அரவை அணியாகப் பூண்டாலென்ன, நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே சுற்றியும் பற்றியும் பணிசெய்வாயாக.

குறிப்புரை :

பெற்றம் - எருது. பேய்ப்படை - ஊழிக்காலத்திரவில் இடுகாட்டுள் ஆடும்போது அப்பெருமானது படைகள், பேய்கள். ஆடரவேயது பூணிலென் - பாம்பணிந்தாலென்ன. சுற்றி - வலம்வந்து. பற்றி - விடாதுபற்றி. நீ இவற்றை இழிவெனக் கருதாது பணிசெய் என்க.

பண் :

பாடல் எண் : 9

அல்லி யானர வைந்தலை நாகணைப்
பள்ளி யானறி யாத பரிசெலாம்
சொல்லி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
புல்லி நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! தாமரையின் அகவிதழில் வீற்றிருக்கும் பிரமனும், ஆதிசேடனாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் அறிய முயன்றும் அறிய இயலாத தன்மையெல்லாம் சொல்லி, சோற்றுத்துறையர்க்கே நீ என்றும் பொருந்திப் பணிசெய்வாயாக.

குறிப்புரை :

அல்லியான் - வெண்டாமரை மலரின் அகவிதழ்களில் எழுந்தருளியிருப்பவனாய பிரமன். நாகணைப்பள்ளி - பாம்பினை அணையாகவும் பள்ளியாகவும் கொண்ட திருமால். புல்லி - கலந்து.

பண் :

பாடல் எண் : 10

மிண்ட ரோடு விரவியும் வீறிலாக்
குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ
தொண்டு செய்தென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! அமண் முண்டர்களோடு கலந்தும், பெருமையில்லாத குண்டர்களோடு பொருந்தியும் நின்ற நிலைமையினின்று நீங்கி உய்யப் போந்து நீ, சோற்றுத்துறையர்க்கே தொண்டுசெய்து என்றும் உண்டு பணி செய்வாயாக.

குறிப்புரை :

மிண்டர் - வலிய சமணர். விரவியும் - கூடியும். வீறிலா - பெருமையில்லாத. குண்டர் - உடல் கொழுத்தவர் சமணர். கழிந்து - நீங்கி. உய்யப்போந்து - உய்தற்பொருட்டு இறைவனிடத்து வந்து. என்றும் - நாடோறும். உண்டு - பணி செய்வதற்கென்றே உண்டு. பணிசெய் - தொண்டுசெய்.

பண் :

பாடல் எண் : 11

வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை
ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான்
சூழ்ந்த பாரிடஞ் சோற்றுத் துறையர்க்குத்
தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே. 

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே! ஆற்றலோடு வாழ்ந்தவனாகிய இராவணன் ஆழ்ந்துபோய் அலறுமாறு விரலால் ஊன்றினவனாகிய பூதப்படை சூழ்ந்த சோற்றுத்துறைப் பெருமானுக்கு மனமொழிமெய்களாற்றாழ்ந்து பணிசெய்வாயாக.

குறிப்புரை :

வாழ்ந்தவன் - உலகம் புகழ வாழ்ந்தவன். ஆழ்ந்து போய் அலற - கயிலையின்கீழ் ஆழப்பதிந்து அழ. பாரிடம் சூழ்ந்த - பூதகணங்கள் சூழ்ந்த; சோற்றுத்துறை என்க. தாழ்ந்து - வணங்கி.

பண் :

பாடல் எண் : 1

கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புரம் மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.

பொழிப்புரை :

கொல்லிமலையில் வீற்றிருப்பவனும் , குளிர்ச்சி செறியும் குற்றாலத்தில் வீற்றிருப்பவனும் , பகைவர் புரங்கள் மூன்றையும் எரிசெய்தவனும் , திருநெல்லிக்காவில் உள்ளவனும் , நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானை வாயினாற் சொல்லி மெய்யினால் தொழுவார்கள் ஒளியோடு கூடி வாழும் உயர்நிலை பெறுவர் .

குறிப்புரை :

கொல்லியான் - கொல்லிமலைக்குரியவன் . தேவார வைப்புத்தலங்களில் ஒன்று . குளிர்தூங்கு - குளிர்மிக்க . குற்றாலத்தான் - குற்றால மலைச்சாரலில் வாழ்பவன் . குளிர்தூங்கு என்பதைக் கொல்லியுடனும் குற்றாலத்துடனும் கூட்டுக . புல்லியார் - அற்பமானவர் , கீழோர் . நெல்லியான் - திருநெல்லிக்கா என்னும் தலத்துக்குரியவன் . நிலையான - என்றும் நிலைத்ததாயுள்ள . சொல்லி - தோத்திரம் சொல்லி . மெய் - உண்மையாக . சுடர் வாணர் - ஞானத்தினால் நிலைபெற்றோராவர் என்க .

பண் :

பாடல் எண் : 2

இரவ னையிடு வெண்தலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.

பொழிப்புரை :

இரத்தலை உடையவனும் , வெண்தலை ஏந்தியவனும் , எல்லோராலும் பரவப்படுபவனும் , படையுடையார் முப்புரங்களையும் எரியால் நிரந்தவனும் , ஞானாசாரியனும் நிலை பெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானைத் தொழுவார்கள் இவ்வுலகத்து நன்கு வாழ்வோராவர் .

குறிப்புரை :

இரவனை - பிச்சையிரப்பவனை . ஏந்தியை - ஏந்தியவனை . பரவனை - எங்கும் பரவி இருப்பவனை . படையார் - ஆயுதங்கள் செறிந்த . நிரவனை - அழித்தவனை . குரவனை - முதற் பெருங்குருவாக விளங்குபவனை . கொடிவாணர் - ஒழுங்கில் வாழ்பவராவர் .

பண் :

பாடல் எண் : 3

ஆனிடை யைந்தும் ஆடுவ ராரிருள்
கானிடை நடம் ஆடுவர் காண்மினோ
தேனிடை மலர் பாயுநெய்த் தானனை
வானி டைத்தொழு வார்வலி வாணரே.

பொழிப்புரை :

பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமஞ்சனம் கொள்பவரும் , நள்ளிருளில் இடுகாட்டிடை நடம் ஆடுபவரும் ஆவர் ; காண்பீராக ! மலரிடைத் தேன் பொழிந்து பாயும் திருநெய்த்தானனை வானிடைத் தொழுவார்கள் வலிமையோடு வாழ்பவராவர் .

குறிப்புரை :

ஆனிடை ஐந்து - பசுவிடத்துண்டாய பஞ்சகவ்வியம் . ஆர்இருள் - மிக்க இருள் செறிந்த இரவு . கான் - இடுகாடு . மலரிடைத்தேன்பாயும் என்று மாறுக . வானிடைத் தொழுவார் - உள்ளத்தின்கண் உள்ள தகராகாசத்துவைத்துத் தியானிப்போர் . வலி - வினைகளை வெல்லும் வலிமை .

பண் :

பாடல் எண் : 4

விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே.

பொழிப்புரை :

பகைவர் புரமூன்றையும் வெள்ளிய சாம்பலாகி யெழுமாறு கண்டு எரித்தவனும் , கடிதாகிய ஆலகாலத்தை உண்டவனும் ஆகிய ஒளியான திருநெய்த்தானனைத் தொண்டராகித் தொழுவார் ஒளியோடு கூடி வாழ்பவராவர் .

குறிப்புரை :

விண்டவர் - பகைவர் . வெண்ணீறெழக் கண்டவன் - சாம்பராகச் செய்தவன் . கடிது - கொடியது .

பண் :

பாடல் எண் : 5

முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
தங்கை யால்தொழு வார்தலை வாணரே.

பொழிப்புரை :

தம் முன்கைகள் நோகுமாறு கடைந்த தேவர்களும் அசுரர்களும் அஞ்சிநிற்கச் சிறிதும் ஐயுறாது கடல் நஞ்சுண்டு அனைவரையும் காத்தவனும் , உமாதேவியோடு விரும்பி எழுந்தருளியிருப்போனுமாகிய திருநெய்த்தானனைத் தம்கைகளால் தொழுவார் தலைமைத் தன்மையோடு கூடி வாழ்பவராவர் .

குறிப்புரை :

முன்கைநோவக் கடைந்தவர் - ( மந்திரமலையாம் மத்தை இழுத்து ) முன்கை வலியடையக் கடைந்தவராய தேவாசுரர் . நிற்க - ஆலகாலந் தோன்றியதைக் கண்டு அஞ்சி நிற்க . சங்கியாது - சங்கையடையாது ஐயுறாது . நவின்ற - பொருந்திய . தலை - சிறந்த தலைவராய் .

பண் :

பாடல் எண் : 6

சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.

பொழிப்புரை :

உலகெல்லாவற்றையும் சுட்ட திருவெண்ணீற்றினைத் திருமேனியிற்பூசி , நள்ளிருளில் பேய்களோடு சுடுகாட்டில் நடம் ஆடுபவரும் , உயர்ந்த முனிவர்களும் தேவர்களும் ஆராய்ந்து காணும் திருநெய்த்தானரும் ஆகிய பெருமானை விருப்பமாகத் தொழுவார் இன்பத்தோடு கூடி வாழ்பவராவர் .

குறிப்புரை :

சுட்டநீறு - திருநீறு . நள் - செறிந்த . சிட்டர் - தூய உணர்வினர் . தேரும் - ஆராய்ந்து காணும் . இட்டமாய் - விருப்பமாய் .

பண் :

பாடல் எண் : 7

கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தால்தொழு வாரும்பர் வாணரே.

பொழிப்புரை :

தீக்கொள்ளியினின்று எரிவீசிக் கொடிதாகிய கள்ளிக்காட்டில் ஆடும் இயல்பினர் காண்பீராக ; தெளிவு அடைந்து தேறிப் பின்னும் தெளிந்து அத்திருநெய்த்தானரை உள்ளத்தால் தொழுவார் தேவர்களோடு ஒத்த பேரின்பம் பொருந்தி வாழ்பவராவர் .

குறிப்புரை :

கொள்ளித் தீ - சுடுகாட்டுக் குறைக்கொள்ளி . வீசி - சுழற்றி . கள்ளிக்காடு - கள்ளிச்செடி முளைத்த இடுகாடு . தெள்ளித்தேறி - ஆராய்ந்து தெளிந்து . உம்பர்வாணர் - தேவர் உலகில் வாழ்பவராவர் என்க .

பண் :

பாடல் எண் : 8

உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச்
சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே.

பொழிப்புரை :

சென்னியில் உச்சியின்மேல் விளங்கும் இள வெண்பிறையும் பற்றியாட்டற்குரிய பாம்பும் சடையின்கண் வைத்தவனும் , நெற்றிக்கண்ணனுமாகிய திருநெய்த்தானனைச் சுற்றி வந்து மெய்யால் தொழுவார் ஒளி பொருந்தி வாழ்பவராவர் .

குறிப்புரை :

உச்சிமேல் விளங்கும் - ஆகாயத்தே விளங்கும் . ஆடு அரவு - ஆடும் பாம்பு ; ஆடரவொடு வெண்பிறை பற்றிச் சடை பெய்தவன் என்க . நெற்றியின்கண் ஆரழல் கண்ட - ஆரழல் தோன்றும்படி நெற்றியினால் விழித்த . ஊழிக்காலத்தும் உமையம்மை தம் கண்களைப் புதைக்க உலகம் இருண்டகாலத்தும் ( தி .4. ப .14. பா .8.) விழித்தான் என்க . அழல் - நெற்றிக்கண்ணை உணர்த்திற்று . சுற்றி - வலம்செய்து .

பண் :

பாடல் எண் : 9

மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச் செய்யுநெய்த் தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே.

பொழிப்புரை :

திருமாலோடும் வேதங்களை ஓதிய பிரமனும் திருவடியும் திருமுடியும் காண்டற்கரியனாயினானும் . சேல்மீன்கள் தம்மிற்பொரும் திருநெய்த்தானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய பெருமானை அன்புமயக்கத்தால் தொழுவார்களின் வினைகள் வாடிக்கெடும் .

குறிப்புரை :

மாலொடும் - திருமாலொடும் . காலொடும் முடி - திரு வடிகளையும் திருமுடியையும் . காண்பதரிதாயினான் - காணுவதற் கரிதாய் விளங்கியவன் . சேலொடும் செருச்செய்யும் - சேல் மீன்கள் தம்முள் போர்செய்யும் . மாலொடும் - வேட்கையோடும் .

பண் :

பாடல் எண் : 10

வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.

பொழிப்புரை :

வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணிவார்களின் வினைகள் கெடும் .

குறிப்புரை :

வலிந்த தோள் - வலிமையுடைய தோள் என்க. நெருங்க - அழிய. நீள்வரை - நீண்ட கயிலாயமலை. புரிந்து - இடை விடாதுவிரும்பி. கைந்நரம்பு - கையின்கண் உளதாகிய நரம்பு. பரிந்தனை-பரிவு செய்தவனை; இரங்கியவனை. பாறும் - அழியும்.

பண் :

பாடல் எண் : 1

அருவ னாய்அத்தி யீருரி போர்த்துமை
உருவ னாயொற்றி யூர்பதி யாகிலும்
பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே.

பொழிப்புரை :

அருவத் திருமேனியுடையவனாய் யானையின் ஈரப்பட்ட உரியைப் போர்த்தவனாய் , உமையை ஒரு பாகத்தில் உடையவனாய் ஒற்றியூரைத் தன்பதியாக் கொண்டவன் ஆயினும் , பருத்த வரால் மீன்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பழனம் என்னும் தலத்தினுள்ளான் அருட்செல்வத்தினால் இத்தேவர்களுக்குச் செல்வம் பெருகுதலை விரும்பும் .

குறிப்புரை :

அருவன் - உருவமற்றவன் . அத்தி - யானை . உமை உருவன் - பார்வதியோடு கூடிய உருவமுடையவன் . பதி - வாழும் ஊர் . பருவரால் - பெரியவரால் மீன்கள் பொருந்திய . பழனத்தான் - திருப்பழனம் என்னும் தலத்திற்குரியவன் . திருவினால் திரு வேண்டும் - செல்வங்களைக்கொண்டு சிவப்பணி செய்து வீடு பேற்றைக் கேளுங்கள் . இத் தேவர்க்கே - இத்தேவரிடத்தே .

பண் :

பாடல் எண் : 2

வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐய னையறி யார்சிலர் ஆதர்கள்
பைகொ ளாடர வார்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.

பொழிப்புரை :

படங்கொண்ட பாம்பை அரையில் ஆர்த்துக் கட்டிய பழனத்தலத்து இறைவனும் , உலகத்தினுள்ளார் எல்லாரும் வந்து வணங்கி வலம் கொள்ளுதற்குரிய தலைவனும் ஆகிய பெருமானைச் சில குருடர்கள் அறியார் ; சில பொய்யர்கள் வணங்காது வீண் காலங்கள் போக்குவர் .

குறிப்புரை :

வையம் - உலகம் ; அஃது ஆகுபெயராய் மக்களை உணர்த்திற்று . ஐயன் - அழகியவன் . ஆதர்கள் - அறிவற்றவர்கள் . பைகொள் ஆடரவு - படத்தைக் கொண்டு ஆடுகின்ற பாம்பு . ஆர்த்த - கட்டிய . பழனன்பால் - திருப்பழனத்திறைவரிடத்து . அன்பு கொள்ளாதென வருவிக்க . பொய்யர் - பொய்ப்பொருள்களைப் பின்பற்று கின்றவர்கள் . காலங்கள் போக்கிடுவார்கள் - வறிதே காலங்களைக் கழிப்பார்கள் .

பண் :

பாடல் எண் : 3

வண்ண மாக முறுக்கிய வாசிகை
திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணு மாகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீர் அவ னாயிர நாமமே.

பொழிப்புரை :

அழகுபெற முறுக்கப்பெற்ற வட்டமாகிய திருச் சடையிற் சேர்த்து உறுதியாகக் கட்டி முடித்துப் பண்பாடும் இறைவனாகிய பழனத்தலத்துப் பெருமானின் ஆயிரம்நாமங்களை நீர் எண்ணுவீராக .

குறிப்புரை :

வண்ணமாக முறுக்கிய - அழகாக முறுக்கிக் கட்டிய . வாசிகை - தலை . திண்ணமாக - பெரிதாக . பண்ணுமாகவே பாடும் - இசையிலக்கணக்கூறு தெரியப் பாடுகின்ற . அவன் ஆயிரம் நாமத்தை நீர் எண்ணும் - அவனது பல திருப்பெயர்களை நீங்கள் நினையுங்கள் .

பண் :

பாடல் எண் : 4

மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க்கொண் மாலை சடைக்கணிந் திட்டதே.

பொழிப்புரை :

பிடித்த கொடுமையை உடைய பாம்பு நெடுமூச்சு விடவும் , அப்பாம்பினைக்கண்ட பிறைமதி நடுங்கிக் காண அப் பாம்பைப் பற்றியாடுபவனாகிய கொன்றைத்தாரும் மாலையும் உடைய பழனத்தலத்துப் பெருமான் இவற்றைச் சடைக்கணிந்திட்டது என்னையோ ?

குறிப்புரை :

பிடித்த மூர்க்கப்பாம்பாகிய அது மூச்சிட வாக்கு அப்பாம்பினைக் கண்ட துணிமதி பார்க்க அப்பாம்பினைப் பற்றும் பழனத்தான் என மாற்றுக . பிடித்த - பற்றிய . மூர்க்கப் பாம்பு - கொடிய பாம்பு . மூச்சிட - பெருமூச்சுவிட்டுச் சீற . வாக்கு - நீர் ஒழுகியதுபோல் நெளிந்துவரும் . துணிமதி - பிறை மதி . பார்க்க - காண . பற்றும் - பிடித்து ஆட்டும் . தார்க்கொள்மாலை - இண்டை முதலிய மாலை வகைகளோடு . அணிந்திட்டது - தலையில் சூடியுள்ளது . பழனத்தான் சூடியுள்ளான் . கொன்றை மாலையோடு இவற்றைச் சூடியது என்னையோ என்க .

பண் :

பாடல் எண் : 5

நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோல முண்ட குணத்தால் நிறைந்ததோர்
பாலு முண்டு பழனன்பா லென்னிடை
மாலு முண்டிறை யென்றன் மனத்துளே.

பொழிப்புரை :

நேர்ந்ததாகிய கோலமாக நஞ்சினை உண்ட குணத்தால் நிறைந்த நீலகண்டனும் , பழனத்தலத்தின் கண் உள்ள இறைவனும் ஆகிய பெருமானிடத்து என்றன் மனத்துள் சிறிது மயக்கம் உள தாகின்றது .

குறிப்புரை :

நீலம் - நீலநிறம் பொருந்திய விடம் . நேர்ந்ததோர் - பொருந்தியதோர் . கோலமுண்ட - அழகைக் கொண்ட . குணத்தால் நிறைந்தது - நற்குணங்களால் நிரம்பிய அம்பிகை . ஓர் பாலுமுண்டு - இடப்பாகத்தில் எழுந்தருளியுள்ளது . என்னிடை - என்னிடத்தே . மால் - மயக்கம் . இறை என்பதை இறைவனே என்றும் , சிறிது என்றும் பொருள் கூறலாம் .

பண் :

பாடல் எண் : 6

மந்த மாக வளர்பிறை சூடியோர்
சந்த மாகத் திருச்சடை சாத்துவான்
பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய்தந்தை யெம்பெரு மானுமே.

பொழிப்புரை :

பெருமை தரும்படியாக வளர்பிறையைச் சூடி ஒரு சந்தமாகத் திருச்சடை சாத்துவானும் , பந்தமாயினவற்றைத் தீர்ப்பானும் ஆகிய திருப்பழனத்து இறைவன் எந்தையும் , தாயும் , தந்தையும் , எம்பெருமானும் ஆவன் .

குறிப்புரை :

மந்தமாக - மெதுவாக . சந்தம் - மாலை . பந்தம் - வினை ; நம்மைச் சூழ்ந்த பாசம் . எந்தை - என் உண்மையான உயிர்த்தந்தை . தாய் தந்தை - உடலைப்பெற்று வளர்த்த தாயும் தந்தையுமாவன் . எம்பெருமான் - எங்கள் தலைவன் .

பண் :

பாடல் எண் : 7

மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்
பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாட்க ணின்று தலைவணங் கார்களே.

பொழிப்புரை :

எல்லோரும் பார்க்க நின்று பழனத்தின்கண் பரவுவார்க்கு அருள் வழங்கும் இறைவனின் திருவடிக்கண் நின்று தலை வணங்காதவர்கள் , அறிவிலிகளாகி வழியொன்றறியாதவர்களும் , பூக்களைக்கொண்டு கரத்தால் தொழ விழையாத மூடர்களும் ஆவர் .

குறிப்புரை :

மார்க்கம் - உண்மைச் சமயநெறி . மதியில்லிகள் - மதியிலிகள் . பூக்கரத்தில் புரிகிலர் - பூக்களைக் கையில்கொண்டு போற்றாதவர் . பார்க்க - அவனது திருக்கண் நோக்கு விழ . பரவும் - தோத்திரியுங்கள் . தாள்கள் - திருவடிகள் . தலை வணங்காரை நோக்கி இரங்கியது .

பண் :

பாடல் எண் : 8

ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை யாளொடுங் கூடவே.

பொழிப்புரை :

இமையோர்களாகிய தேவர்கள் பணி பல கண்டு தம் பதவியினின்றும் மேலே உயர்ந்தது கண்டும் , தீவினையாளர்கள் தெளிவடைந்தாரல்லர் . இழிந்தவராய மக்கள் பணியையும் விரும்பும் பழனத்தலத்து இறைவன் உமையாளொடுங் கூடி ஒரு கூறனாயினன் .

குறிப்புரை :

வானுலகின்கண் ஏறினாராகிய இமையோர்கள் என்க . கண்டும் தேறுவாரலர் - வானோர் வழிபடக்கண்டும் தெளிவாரல்லர் . பாறினார் - இழிந்தார் . மக்களது பணியையும் விரும்பும் பழனத்தான் என்க .

பண் :

பாடல் எண் : 9

சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புரம் மூன்றெய்தான்
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
எற்றி னான்மறக் கேனெம் பிரானையே.

பொழிப்புரை :

திரியும் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , பற்றியவர்களுடைய வினைகளைத் தீர்க்கும் பெருமானுமாகிய பழனத்தலத்து இறைவன் சுற்றுவாரையும் தொழுவாரையும் மேலே உயர்த்தும் ஒளிவண்ணனாயுள்ளனன் ; எம்பெருமானை எதனால் அடியேன் மறக்கக்கூடும் ?

குறிப்புரை :

சுற்றுவார் - வலம் வருவார் . சுடர்வண்ணன் மேல் - ஒளிவண்ணமுடைய பெருமானிடத்து . தெற்றினார் - உலகங்களை அழித்தவர்களாய் ; திரியும் என்க . பற்றினார் - பற்றுக்கோடாகக் கொண்டவர் . எற்றினால் - எதனால் .

பண் :

பாடல் எண் : 10

பொங்கு மாகடல் சூழிலங் கைக்கிறை
அங்க மான இறுத்தருள் செய்தவன்
பங்க னென்றும் பழன னுமையொடும்
தங்கன் தாளடி யேனுடை யுச்சியே.

பொழிப்புரை :

பழனத்தலத்து இறைவன் , பொங்குகின்ற பெருங்கடல் சூழ்ந்த இலங்கைக்கரசனாம் இராவணனது அங்கமானவற்றை இறுத்து அருள்செய்தவனும் , உமையொரு பங்கனும் , அடியேனுடைய உச்சியிலே தன் தாளிணைகளைத் தங்குமாறு செய்தவனும் ஆவான் .

குறிப்புரை :

பொங்கும் - அலையெழுப்பும். மா - பெரிய. அங்கமான - உடலுறுப்புக்களானவை. பங்கன் - மாதொரு கூறன். தங்கன் - தங்கியிருப்பவன். என்றும் - எப்பொழுதும்.

பண் :

பாடல் எண் : 1

கான றாத கடிபொழில் வண்டினம்
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி
தான றாததோர் கொள்கையன் காண்மினே.

பொழிப்புரை :

மணம் நீங்காத விளக்கம் உடைய பொழில்களில் வண்டினங்களின் தேன் நீங்காத திருச்செம்பொன் பள்ளி இறைவன் , தசைவிட்டு நீங்காத ஒரு வெண்தலையில் பலியினைத் தான் ஏற்றலினின்றும் நீங்காத இயல்புடையவன் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

கான் - மணம் . அறாத - நீங்காத . கடி - விளக்கம் . வண்டினம் - வண்டுக்கூட்டங்கள் . தேன் அறாத - தேனை இழக்காத . ஊன் அறாததொர் வெண்டலை - தசை நீங்காததொரு வெள்ளிய மண்டையோடு . பலிதானறாததோர் கொள்கையன் - பிச்சையெடுக்கும் தொழில் நீங்காத தன்மையன் .

பண் :

பாடல் எண் : 2

என்பு மாமையும் பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.

பொழிப்புரை :

எலும்பும் , ஆமையும் அணிந்து திரிதருகின்ற செம்பொன்பள்ளி இறைவனும் சிவலோகனுமாகிய பெருமானை அன்பு செய்யும் ஆராய்ந்த இழையை அணிந்த பெண்களே ! அப் பெருமானை நம் அழகிய மனக்கோயிலின்கண்ணே நினைந்தால் நம் வினைகள் நாசமாகும் .

குறிப்புரை :

என்பும் - எலும்பு மாலையும் . ஆமையும் - கூர்மாவதாரமாகிய ஆமையின் ஓட்டையும் . பூண்டு - அணிந்து - ` முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு ` ( தி .1. ப .1. பா .2)) உழிதர்வர்க்கு - திரிபவர்க்கு . ஆயிழையீர் - சிறந்த நூல்களை ஆராயும் இயல்பினீர் . பொன்பள்ளி - பொற்கோயில் . நம்பொன்பள்ளி உள்க - அழகிய நமது உள்ளக்கோயிலில் நிறுத்தி உள்க .

பண் :

பாடல் எண் : 3

வேறு கோலத்த ராணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ண லவனையே.

பொழிப்புரை :

வேறுகோலத்தோடு கூடியவரும் , ஆண் , பெண் அல்லாதவரும் , கிழித்த கோவணத்துகிலாடையுடையவரும் , செம்பொன் பள்ளியில் வீற்றிருந்து கங்கையாளைச் சடையிற் சூடிய அண்ணலாகிய அப்பெருமானைத் தெளிந்துகொள்ளுதல் யார்க்கும் எளிதாம் ஒன்றன்று .

குறிப்புரை :

ஆணலர் பெண்ணலர் வேறு கோலத்தர் எனக் கூட்டுக . வேறு கோலத்தர் - ஆண் பெண் அலியலன் என்னுமாறும் இது அவனுருவன்று என்னுமாறும் தனிப்பட்ட கோலம் கொள்பவர் . கீறு - கிழித்த . ஐ - அழகிய . துகில் - ஆடை . இருபெயரொட்டு . சிறந்த ஆடை . அவனைத் தேறலாவதொன்றன்று - அவனைத் துணிதல் பசுபோதத்தால் ஆவதொன்றன்று .

பண் :

பாடல் எண் : 4

அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்
திருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.

பொழிப்புரை :

அருவருப்புக்கொள்ளாது ஒரு வெண்டலையை ஏந்திவந்து தெருவெல்லாம் உழல்வார் செம்பொன் பள்ளி இறைவர் ; திருமாலும் பிரமனுமாகிய இருவரால் திருமுடி , திருவடிகளின் எல்லை தேடப்பட்ட அவ்வொருவர் பலபெயர்களும் கொண்டு திகழ்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

அருவராததொர் - வெறுக்கத்தக்கதல்லாத ஒரு . இருவராய - அருளுடன் சத்தியும் சிவமுமாய் . இடுவார் - வந்து பிச்சையிடுவார் . கடை - வீட்டுவாயில் . உழல்வார் - திரிந்து வருந்துவார் . ஒருவர் தாம் பலபேருளர் - தாமொரு பொருளேயானவர் ஆயினும் பல திருப் பெயர்களை உடையவர் . ஆணவத்தைப் பலியாக இடுதல் உட் பொருள் ` பசுபோதக் கவளமிட ` ( திருவிளையாடல் - கடவுள் வாழ்த்து 15).

பண் :

பாடல் எண் : 5

பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்
ஏவ லாலெயின் மூன்று மெரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.

பொழிப்புரை :

தேவர்கள் சென்று இறைஞ்சுகின்ற செம்பொன் பள்ளி இறைவர் கொன்றைப்பூப் பொருந்திய சடையில் கங்கையைச் சூடியவரும் , ஓரம்பினால் முப்புரம் எரித்தவரும் , மூவர்க்கும் முதலாய் நின்ற மூர்த்தியும் ஆவர் .

குறிப்புரை :

பூவுலாம் - பூக்கள் பொருந்திய . புனல் - கங்கை . ஏ அலால் - அம்பு இல்லாமலே நகைத்தெரித்தவன் என்றபடி . வல் ஏ ஆல் - வலிய அம்பால் எனவும் மாறுக . மூவராய் முதலாய் - படைத்துக் காத்து அழிக்கும் கடவுளராயும் . அம்மூவர்க்கும் முழுமுதலாயும் உள்ளவர் . தேவர் சென்றிறைஞ்சும் - விருத்திரன் என்ற அசுரனைக் கொல்லும் பொருட்டும் தக்கயாகத்தில் போந்தபழி நீங்குதற் பொருட்டும் இந்திரனும் , சிருஷ்டியின்பொருட்டுப் பிரமனும் , கணவனைப்பெற இரதியும் , எட்டுத்திக்குப் பாலரும் வழிபட்டதாய்த் தலவரலாறு .

பண் :

பாடல் எண் : 6

சலவ ராயொரு பாம்பொடு தண்மதிக்
கலவ ராவதின் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவில் லாலெயில் மூன்றெய்த கூத்தரே.

பொழிப்புரை :

பெருமைக்குரிய வில்லால் மூன்றெயில்களை எய்த கூத்தரும் , பொட்டணிந்தவரும் , நீண்ட சடாமுடி உடையவருமாகிய செம்பொன்பள்ளி இறைவர் கங்கையைச் சூடியவராய் , பாம்பும் குளிர்பிறையும் கலந்தவராய் ஆவதன் காரணம் என்னையோ ?.

குறிப்புரை :

சலவராய் - கங்கையைச் சூடியவராய் . கலவராவதின் காரணம் - கலந்தணிபவராதற்குக் காரணம் . நெற்றிப் பொட்டும் நீர்முடியும் அணிந்தவர் . குலம் - உயர்ந்த .

பண் :

பாடல் எண் : 7

கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த ராகி யிருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோ ரைந்தலை நாகமே.

பொழிப்புரை :

கையிற்கொண்ட சூலம் உடையவரும் , கட்டு வாங்கத்தை உடையவரும் , திருநீலகண்டரும் ஆகி இருசுடர்களைப் போன்று சிவந்த திருமேனியும் அதிற்பூசிய வெண்ணீற்றினருமாகிய செம்பொன்பள்ளித் தலைவர் கையின்கண் உள்ளது ஓர் ஐந்தலை நாகமாகும் .

குறிப்புரை :

கைகொள் - கையின்கண் கொண்ட . கட்டுவாங்கத்தினர் - மழுவாயுதத்தினர் . இருசுடர் - சூரிய சந்திரர் வடிவாயிருப்பவர் . கையது - கையின்கண் அணியப்பட்டது . கையிற்பிடித்தது கங்கணமாகக் கொண்டது என்றுமாம் .

பண் :

பாடல் எண் : 8

வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையி னீருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.

பொழிப்புரை :

வெவ்விய கண்ணையுடைய நாகத்தினை அஞ்சும்படி ஆர்த்துக்கட்டியவரும் , பசுமையான கண்ணையுடைய ஆனையின் பச்சைத்தோலைப் போர்த்தவரும் , செங்கண்ணையுடைய திருமாலைத் தமக்கு விடையாக உடையவரும் ஆகிய செம்பொன் பள்ளி இறைவர் தம்மை அடைக்கலமாக அடைந்தவர்களின் வினைகளைத் தீர்ப்பர் .

குறிப்புரை :

வெங்கண் நாகம் - கொடிய கண்ணையுடைய பாம்பு , வெருவுற - அஞ்ச . பைங்கண் - செவ்விய இளைய கண்கள் . ஆர்த்தவர் - கட்டியவர் . அங்கணாய் - அழகிய பற்றுக் கோடாய் . அடைக்கலமாய் , அவ்விடத்தவராய் , அவரையே புகலிடமாய் எனவுமாம் .

பண் :

பாடல் எண் : 9

நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.

பொழிப்புரை :

செம்பொன்பள்ளி இறைவர் நன்மை மிக்க நாரணனும் , பிரமனும் ஆகிய இருவரும் நிலைபெற்ற திருமுடியையும் திருவடியையும் காணத்தொடங்கிச் சென்றும் காண்டலரியவராய் நின்ற அச்சூழ்நிலையில் நீண்டு அழலுருவாயினர் .

குறிப்புரை :

நன்றி - நன்மையையுடைய . பிரமன்போலப் பொய் கூறாமையின் நன்றி நாரணன் என்றார் . நீள் எரியாகிநின்ற சூழலில் நீள் முடியோடு அடி காண்புறச் சென்று காண்பறியானென்க .

பண் :

பாடல் எண் : 10

திரியும் மும்மதில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன லோட்டி யிலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்
அரிய வான மவரருள் செய்வரே.

பொழிப்புரை :

செம்பொன்பள்ளி இறைவர் . திரிகின்ற மும்மதில்களைச் செங்கணை ஒன்றினால் எரியுமாறு எய்து அனலினால் ஓட்டி , இராவணன் நெரியுமாறு தம் திருவிரல் ஒன்றால் ஊன்றியவர் ; தம்மை யடைந்த அன்பர்க்கு அரிதாகிய வீட்டுலக இன்பத்தை அப்பெருமான் அருள்வர் .

குறிப்புரை :

செங்கணை - கூரியநேரிய கணை . அனலோட்டி - அக்கினிதேவனாகிய கணையை ஏவி . அரியவானம் - கிடைத்தற்கரிய வீடுபேறு . ஒன்றினால் - ஒன்றின்கண் வைத்து . அனல்செங்கணை ஒன்றினால் ஓட்டி எரிய எய்து எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 1

மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலால்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

திருக்கடவூரில் மேவும் பெருமான் , மலையில் வாழும் யானை போன்று மயக்கம் செய்த கொடிய வினைகளுக்கே நிலைக்களமாய் யானைபோன்று அடங்காது பலவற்றையும் நினைக்கின்ற நல்வினைகளாகிய யானைகளையும் ஏனைய மதயானையையும் அழிக்கும் இயல்பினர் . கலையின் பயனாகிய ஒழுக்கத்தால் அடையத்தகும் யானை போன்றவர் .

குறிப்புரை :

மலைக்கொள் யானை மயக்கிய வல்வினை - மலையில் வாழும் யானை போன்று மயக்கத்தைச் செய்த கொடிய வினைகள் . வல்வினை நிலைக்கொளானை - கொடிய வினைகளுக்கே நிலைக் களமாய் யானை போன்று அடங்காது பலவற்றை . நினைப்புறும் - நினைக்கின்ற . கொலைக்கை யானையும் - வல்வினையாகிய யானையையும் ஏனை மத யானையையும் . கலைக்கையானை - கல்வியறிவினாலாகிய ஒழுக்கத்தின் பயனாக அடையத்தக்க பொருள்களாயுள்ளவர் .

பண் :

பாடல் எண் : 2

வெள்ளி மால்வரை போல்வதொ ரானையார்
உள்ள வாறெனை யுள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

வெள்ளிமால்வரை போன்ற அயிராவணம் என்னும் ஒப்பற்ற ஆனையை உடையார் ; உள்ளவாறே என் உள்ளத்தில் புகுகின்ற ஆனைபோல்வார் ; கொள்ளும் இடமாகிய கோயிலுள் ஆனையாய் உள்ளவர் ; ஆதலின் கடவூர்த்தலத்து இறைவர் கள்ளம் உடைய ஆனைபோல்வார் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

வெள்ளிமால்வரை - கயிலை ; கயிலைபோன்று வெள்ளிய . ஆன் - எருது ; எருதையுடையர் என்க . அல்லது ஐராவணம் எனினுமமையும் . உள்ளவாறு - மெய்யாக என்னுள் புகுமென்க . ஆனையார் - பெரியர் . கொள் அம் ஆகிய கோயில் - அழகைக் கொண்டதாகிய சிறிய கோயில் எனக்கூட்டுக . கள்ள ஆனை - காண்பதற்கு அரிய யானைபோன்றவர் .

பண் :

பாடல் எண் : 3

ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ வுருக்கிய வானையார்
வேன லானை யுரித்துமை யஞ்சவே
கான லானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

ஞானமாகிய நன்குணரத்தக்க ஆனையார் ; உடற் பொதியைமேவுமாறு உருக்கி உள்ளொளிபெருக்கும் ஆனையார் ; ஆனையை உமாதேவியார் அஞ்சுமாறு உரித்த கடவூர்த் தலத்து இறைவர் ; கானல் ஆனையும் போல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

ஞானமாகிய நண்குணர் - அறியவேண்டுவன பலவற்றையும் நன்கு உணர்ந்தவராகிய . ஊனை - உடலை . வேவஉருக்கிய - கருவி கரணங்களை அன்புமயமாகச் செய்த . வேனல் ஆனை - சினமுள்ளதாய் வந்த யானை . கான் அல் யானை - காட்டில் திரிதல் இல்லாத நல்ல யானை . உமையஞ்ச உரித்த கடவுளர் என முடிக்க . உரித்த உமை பெயரெச்சத்தகரம் தொக்கது .

பண் :

பாடல் எண் : 4

ஆல முண்டழ காயதொ ரானையார்
நீல மேனி நெடும்பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

நஞ்சினை உண்டும் அழகுபெற்ற ஆனையார் ; நீல மேனியை ஒருபாகத்தே உடைய நீண்ட பளிங்கனைய ஆனையார் ; கொழுவிய சுடர்விடும் கோலம் உடைய ஆனையார் ; கடவூர்த் தலத்திறைவர் கால ஆனை போல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

ஆலம் - விடம் . ஆலமுண்டு அழகைப் பெற்ற என்க . அழகாயதொரானையார் - அழகியதொரு யானை போன்றவர் . நீல மேனி - பார்வதி அல்லது திருமாலின் திருவுரு . பளிங்கானையார் - வெண்ணீறணிந்து வெள்ளியராய் விளங்குபவர் . கோலமாய் - அழகியராய் . கொழுஞ்சுடர் ஆனையர் - மிக்கஒளியாய் விளங்கும் இயல்பினர் . கால ஆனை - காலனுக்கு ஆனைபோன்றவர் . காலனை அழித்தவர் .

பண் :

பாடல் எண் : 5

அளித்த ஆன் அஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

அன்பர்கள் பரிந்து கொடுக்கும் பஞ்ச கவ்வியங்களை ஆடிய ஆனையார் ; வெண்மையான இடபக்கொடி உடைய ஆனையார் ; இகழ்ந்து வந்த யானையினை எல்லோரும் எள்குமாறு உரித்த ஆனையார் ; கடவூர்த்தலத்திறைவர் களிப்புற்ற யானை போல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

ஆன் அளித்த அஞ்சும் ஆடிய என்க . ஆன் - பசு . அஞ்சு - பஞ்சகவ்வியம் . வெளுத்த ஏறு - நீள்கொடியில் வெளுத்த ஏறுடையார் என மாறி வெள்விடைக் கொடியர் என்க . எளித்த - எளிதாகக் கருதிக் கொல்லவந்த . எள்குவித் தானையார் - இகழ்ந்து கொன்ற இயல்பினர் . பெயரெச்சத்தகரம் தொக்கது . களித்த - மிக்க இன்பத்தையுடைய .

பண் :

பாடல் எண் : 6

விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

விடுத்த பெரியமலையை விண்ணுற நிமிர்க்கும் ஆனையார் ; தொடுத்த பெரியமலை தூய்மையாக உடைய ஆனையார் ; சினந்துவந்த காலனைக் காய்ந்த ஒப்பற்ற கடவூர்த்தலத்திறைவர் சினத்தலுற்ற ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

விண்ணுற விடுத்த - ஆகாயத்தை அளாவச் செய்த . மால்வரை - பெரியமலை ; கயிலாயம் . மால்வரை தொடுத்த - பெரிய இமயமலையை வில்லாக வளைத்த . கடுத்த - கோபித்த .

பண் :

பாடல் எண் : 7

மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

மண்ணுலகின் உள்ளாரை மயக்கம் உறுவிக்கும் ஆனையார் ; எண்ணிக்கையிற் பெருகிய நல்லடியார் பலர் ஏத்தித்தொழும் ஆனையார் ; விண்ணுலகின்கண் உள்ள தேவர்கள் பலரும் அறிகின்ற ஆனையார் ; கடவூர்த்தலத்து இறைவர் காதலாகித் தொழும் அடியார் கண்ணுள் நின்று காட்சி வழங்கும் ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

மண்ணுளார் - மக்கள் . மயக்குறும் - பரிபாக மடைதற் பொருட்டு மலங்களாகிய அழுக்குகளில் மயக்குறுவிக்கும் . எண்ணுளார் பலர் - பல எண்ணங்களையுடைய பலர் . கண்ணுள் ஆனை - கண்களுக்குள் நீங்காதிருக்கும் ஆனை போன்றவர் .

பண் :

பாடல் எண் : 8

சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

சினக்கின்ற செம்பவளத் திரள்களை உடைய ஆனையார் ; மனத்தின்கண் நிறைந்த வல்வினைகளைத் தீர்க்கும் ஆனையார் ; அன்னைக்கும் மேலாகிய அன்புடையார் மனத்து உறையும் ஆனையார் ; கடவூர்த்தலத்து இறைவர் ஒலித்து முழங்கி வரும் ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

சினக்கும் - சிவக்கும் . திரள் - திரள்போன்ற . மனக்கும் - மனத்தின்கண் . அனைக்கும் - அன்னையினும் . கனைக்கும் - அடியார்களைத் தன்பால் அழைக்கும் .

பண் :

பாடல் எண் : 9

வேத மாகிய வெஞ்சுட ரானையார்
நீதி யானில னாகிய வானையார்
ஓதி யூழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

வேதங்களாய் அதன் ஒளியாய் விளங்கும் ஆனைபோன்றவர் . நீதிமுறை விளங்க நிலத்தின்கண் தோன்றியவர் என்க . வேதங்களை ஓதி பல ஊழிகளையும் கண்டறிந்தவர் . அன்பர்க்கன்பர் கடவூர் இறைவர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

வேதமாகிய ஆனையார் , வெஞ்சுடர் ஆனையார் என்க . நீதியால் - கடமையாக . நிலனாகிய - நிலமாக விளங்கிய ; நிலத்தின்கண் திருமேனிகொண்டு தோன்றிய என்றுமாம் . ஓதி - வேதமோதி . ஊழிதெரிந்துணர் - பல ஊழிகளையும் தெரிந்து உணர்கின்ற .

பண் :

பாடல் எண் : 10

நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

நெடியோனாகிய திருமாலும் , நான்முகனும் காண்போம் என்று ஆணவத்தாற் கருதிப் புகுந்தும் காண்டற்கரியவராய் மாட்சி உடைய பேரழலாக நிமிர்ந்த ஆனையார் ; கடவூர்த் தலத்து இறைவர் காண்டற்குரிய ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

காண்டும் - அடிமுடி காண்போம் . மாண்ட - செருக்கு அழிந்த . காண்டலானை - அனைவரும் காணத்தக்க ஆனை போன்றவர் .

பண் :

பாடல் எண் : 11

அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்க ளிறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.

பொழிப்புரை :

எடுப்பேன் என்று அடுத்துவந்த இலங்கை வேந்தனை எடுக்கலுற்ற இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனையார் ; சினந்த காலனைக் காய்ந்த ஆனையார் ; கடவூர்த் தலத்து இறைவர் கொன்றையணிந்த ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

அடுத்துவந்த - கயிலையை நெருங்கிவந்த. கடுத்த - சினந்துவந்த. கடுக்கை - கொன்றை.

பண் :

பாடல் எண் : 1

குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செய்த பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் சங்கவெண்குழையணிந்த காதினர் ; கோவண ஆடையினர் ; அன்பு செய்யும் அடியார்கட்கு மிக்க அண்மையில் உள்ளவர் ; தம் பழைய அடியார்கள் செய்த பாவமும் பிழையும் தீர்ப்பவர் .

குறிப்புரை :

குழைகொள் காதினர் - குழையணிந்த காதினை உடையவர் . உழையர் - மானைக் கையின்கண் உடையவர் ; பக்கத்திருப்பவர் எனலுமாம் . பழையதம் அடியார் - வாழையடி வாழையாய்த் தொண்டுரிமை பூண்ட அடியவர் . பிழை - குற்றம் . பெருமானடிகள் - இறைவன் ; இத்தலத்து இறைவர் திருப்பெயராகவும் கூறுவர் .

பண் :

பாடல் எண் : 2

உன்னி வானவ ரோதிய சிந்தையில்
கன்னல் தேன்கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை யென்னார் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , தம்மை உன்னித்தேவர்கள் ஓதும் போது அவர்சிந்தையில்கன்னல் போன்றும் தேன் போன்றும் இனிப்பவர் ; தம்மை நோக்கித் தொழுது எழும் அடியவர்கட்கெல்லாம் ` பிறகு அருள்செய்வோம் ` என்னாது அப்போதே அருளும் பெருங்கருணை உடையவர் .

குறிப்புரை :

உன்னி - சிந்தித்து . ஓதிய - புகழ்ந்த கடவூர் மயானத்தார் என்க . அல்லது உன்னி ஓதிய வானவர் சிந்தையில் என மாற்றிப் பொருள் கூறுக . கன்னல் - கரும்பு . பின்னை - பிறகு என்னாது ; உடனே அருள் வழங்குபவர் என்க . அன்றி வானவர் உன்னி ஓதிய மயானத்தார் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , சூலம் ஏந்தியிருப்பவர் ; புலித்தோலை உடுத்திருப்பவர் ; ஆலம் உண்டு அமுதைப் பிறர்க்குத் தேக்கி அளிப்பவர் . காலனுக்கும் காலர் ; மாலையணிந்த மார்பினர் .

குறிப்புரை :

உடை ஆடை - இருபெயரொட்டு . ஆலம் - நஞ்சு . அமுதே மிக - அந்நஞ்சே அமுதமாக . தேக்குவர் - நிறைவிப்பர் . அன்றித்தாம் நஞ்சுண்டு அமரர்க்கு அமுதம் பெருகத் தருபவர் என்க . காலகாலர் - காலனுக்குக் காலனார் .

பண் :

பாடல் எண் : 4

இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வூரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , தேவர்கள் தொழுகின்ற பைங்கழலை உடைய இறைவர் ; வீரம் உடையவர் ; அறமே வடிவானவர் ; அடியார்களின் பிறவி நோயைத் தீர்ப்பவர் .

குறிப்புரை :

பைங்கழல் - பைம்பொன் கழல் . மறவனார் - வலியர் . அறவனார் - அறவடிவினர் . இவற்றிற்கு மறக்கருணை செய்பவர் , அறக்கருணை செய்பவர் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 5

கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் கத்துகின்ற காளியின் சினத்தைத் தணிவித்தவர் ; மதம் பொருந்தியவர் ( ஊமத்தமலரைச் சூடியவர் ) ஒத்தும் ஒவ்வாதும் செய்யும் செயல் பலவற்றைச் செய்து உழல்கின்ற பித்தர்போல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

கத்து - ஆரவாரம் செய்த . கதம் - கோபம் . தணிவித்தவர் - நீக்கியவர் ; நடனத்தால் வென்றவர் . மத்தர் - உன்மத்தர் , அல்லது ஊமத்தை அணிந்தவர் . ஒத்தொவ்வாதன செய்யும் - உலகியலோடு பொருத்தமுள்ளனவாகவும் , பொருத்தமில்லாதனவாகவும் செய்யும் . பித்தர் - ஒருநெறிப்பட்ட செயல் இல்லாதவர் .

பண் :

பாடல் எண் : 6

எரிகொள் மேனி யிளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
அரிய ரண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , சிவந்த தழல் வண்ணம் கொண்ட திருமேனியும் , இளம்பிறை வைத்த சடையும் உடையவர் ; அயிராவணம் என்ற ஆனையை உடையவர் ; அயன் , திருமால் முதலிய தேவர்கள் யாவருக்கும் காண்டற்கு அரியர் ; பெரியர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

எரிகொள்மேனி - நெருப்பின் நிறங்கொண்ட சிவந்த மேனி . கரியர் - எல்லா உயிர்களுக்கும் சான்றாக நிற்பவர் , அகோர முகத்தினர் எனலுமாம் . அண்டத்துளோர் - வானுலகில் உள்ளவர் .

பண் :

பாடல் எண் : 7

அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , உமை ஒருபாகம் உடையவர் ; ஆரணங்களாகிய நான்மறைகளின் தொகுதிகள் தொழுது சேரும் தகைமை உடையவர் ; தம்மை வணங்குவார்களது துன்பங்களைத் தீர்ப்பவர் ; மயக்கம் மிகுவிக்கும் பிணங்களைக் கொண்ட சுடுகாடே பெரும்பதியாக் கொண்டவர் .

குறிப்புரை :

அணங்கு - பார்வதி . ஆரண நான்மறை - ( இருபெயரொட்டு ) வேதங்களாகிய நான்மறை . கணங்கள் - அடியவர் கூட்டம் , மயக்குறும் - அறிவாற்றல் ஒடுங்கிய . பிணங்கொள்காடு - இடுகாடு . எல்லா உலகங்களும் அழிந்து உயிர்கள் மயங்கித் தம்முள் ஒடுங்கும் இடம் பிணங்கொள் காடு எனப்பட்டது .

பண் :

பாடல் எண் : 8

அரவு கையின ராதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வர்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , அரவம் உடைய கையினர் ; ஆதியிற்றோன்றிய பழமையானவர் ; தம்மைப் பரவும் அடியார்களது இடர்களைத் தீர்ப்பவர் ; அவர்களைப் பணியும் கொள்பவர் ; பிரமன் , மாலுக்கும் பெரிய இயல்புடையவராவர் .

குறிப்புரை :

அரவு கையினார் - பாம்பைக் கங்கணமாக அணிந்த திருக்கைகளை உடையவர் . ஆதிபுராணனார் - எல்லாவற்றிற்கும் முதல்வராயும் , பழமையானவராயும் உள்ளவர் . மரவு - மராமரம் . பெருமான் - தலைவன் . * * * * * * * * * 9, 10 9, 10. * * * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 1

கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ள முள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.

பொழிப்புரை :

மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலும் , கங்கை வெள்ளம் தாங்கிய சடையனுமாகிய பெருமானை விரும்பிக் காதல் கொள்ளும் இயல்புடைய திரண்ட வளைகள் பெய்யப்பட்ட இப்பெண் உள்ளத்தால் உள்கி அப்பெருமான் திருப்பெயரையே உரைக்கும் தன்மையள் ஆயினள் .

குறிப்புரை :

மங்கை நல்லாள் ஒருத்தி என்ற எழுவாய் வருவித்துக் கொள்க . காதன்மை கொள்ளும் - ஆசைகொள்ளுவாள் . கோல் வளை - திரண்ட வளையல்களை . பெய்துறும் - உடல் இளைத்தலால் கீழே கழலவிடுவாள் . உள்ளம் உள்கி - மனமுருகி ; திருப்பெயர் உரைக்கும் என்க . வள்ளல் - நாற்றிசை வள்ளலாய் மாயூரத்தைச் சூழ நான்கு திசையிலும் வீற்றிருப்பவன் . வேண்டி - விரும்பி ; சடையனையே விரும்பி என்க . செவிலி கூற்று .

பண் :

பாடல் எண் : 2

சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பால்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே.

பொழிப்புரை :

சடையின்கண் வெண்பிறை வைத்த பெருமை பொருந்திய மயிலாடுதுறைத் தலத்து இறைவனது கொத்தாகப் பொலியும் கொன்றை மலரினைக் கொடுத்தால் தன் சித்தம் தெளிந்து , உடல் பூரித்து வளைகளைச் செறிப்பாள் என் பைங்கொடியாகிய இவள் தன் பச்சைவண்ணமும் நீங்கிப் பழைய நிறம் பெறுவாள் .

குறிப்புரை :

சித்தம் தேறும் - மனந்தெளிவாள் . செறிவளை - கையில் செறித்த வளையல்கள் . சிக்கெனும் - கையில் கழலாது செறிந்து பொருந்தும் ; மகிழ்ச்சியால் உடம்பு பூரிக்க வளைகழலாது தங்கும் என்றபடி . பச்சை - பசலை . என் பைங்கொடி - என் அன்பு மகளாகிய பசிய கொடிபோன்ற பச்சிளம் பருவத்தாள் . பால்மதி வைத்த என்க . மா - சிறந்த . கொத்தினிற் பொலிகொன்றை - கொத்துக்களாய் மலர்ந்து பொலிவுறும் பெருமான் சூடிய கொன்றைமாலை . கொடுக்கில் - தருவாரேயானால் . கொன்றை கொடுக்கில் சித்தம் தேறும் என முன்னே கூட்டிப் பொருள் காண்க . செவிலி கூற்று .

பண் :

பாடல் எண் : 3

அண்டர் வாழ்வும் அமர ரிருக்கையும்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

பொழிப்புரை :

வண்டுகள் சேர்ந்த மயிலாடுதுறைத் தலத்து இறைவனுக்குத் தொண்டுசெய்யும் அடியார் திருப்பாதங்களைச் சூடிச் செறிந்துகொண்டால் , தேவ உலக வாழ்வும் , தேவர்களது பதவி இன்பங்களும் கண்டு வீற்றிருக்கும் கருத்து எமக்குச் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

அண்டர் வாழ்வு - தேவர் பதவி . அமரர் இருக்கை - இங்கு அயன்மால் பதவிகள் . கண்டு - அநுபவித்து . வீற்றிருக்கும் கருத்து - தலைமைதோன்ற இருக்கின்ற குறிக்கோள் . ஒன்றிலோம் - ஒன்றும் எங்கள் மனத்து இல்லை . ஒன்றும் - சிறிதும் . அவை பிறவா நெறியாகிய வீடுபேறாகா . நல்வினைப் பயனுள்ள அளவும் துய்த்து அது முடிந்தவுடன் மண்ணிற்பிறக்கும் நிலையுடையன . ` வானேயும் பெறில் வேண்டேன் ` என்றார் மாணிக்கவாசகரும் . பொழிலின்கண் வண்டுசேர் மயிலாடுதுறை என்க . பாதங்கள் - திருவடிமலர்களை . சூடி - தலையிலே சூடி . துதையில் - பொருத்திக்கொள்வோமே யானால் ; அதுவே வீடுபேறு . ஒன்று , முற்றும்மை தொக்கது .

பண் :

பாடல் எண் : 4

வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்க னருளிலே.

பொழிப்புரை :

பெருவீரம் உடையானும் , பெருமைக்குரிய மயிலாடுதுறையில் உறையும் அழகிய சொல்லை உடையானாகிய உமைபங்கனும் ஆகிய பெருமான் அருளினால் வெவ்விய சினத்தை உடையனாய் விரைந்துவரும் காலன் நம்மிடம் விரைய மாட்டான் ; அஞ்சத்தகுவனவாகிய இறப்பும் பிறப்பும் அறுக்கலாம் .

குறிப்புரை :

வெஞ்சினம் - கொடிய கோபம் . விரைகிலான் - விரைந்துவந்து உயிரைக் கொள்ள மாட்டான் ; ` ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவர் ` என்றார் பின்னும் . அஞ்சு இறப்பும் - அஞ்சுதற்குரியதாகிய இறப்பு . ` யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கு என்கடவேன் ` என்றார் மணிவாசகர் . அறுக்கலாம் - நீக்கிக் கொள்ளலாம் . மஞ்சன் , மைந்தன் என்பதன் போலி . அஞ்சொலாள் உமை - அஞ்சொலாளாகிய உமை . இத்தலத்து இறைவி திருப்பெயர் அஞ்சொல்நாயகி . அஞ்சொல் நாயகி அஞ்சல் நாயகியாய் அதற்கேற்ப அபயாம்பிகை என மொழி பெயர்க்கப் பெற்று ( அபயந்தருபவள் என்ற பொருளில் ) வழங்கி வருகிறது .

பண் :

பாடல் எண் : 5

குறைவி லோங்கொடு மாநுட வாழ்க்கையால்
கறைநி லாவிய கண்டனெண் தோளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே.

பொழிப்புரை :

திருநீலகண்டனும் , எட்டுத் தோளினனும் , வேதம் வல்லவனுமாகிய மயிலாடுதுறை உறையும் இறைவன் நீண்ட கழல்களை ஏத்தி இருந்தால் , கொடிய மானிட வாழ்க்கையால் வருகின்ற குறைவு சிறிதும் இல்லாதவராவோம் .

குறிப்புரை :

கொடு - தீய . மீண்டும் மீண்டும் பிறவிக்கேதுவாய வினை தேடலால் தீயது என்றார் . நீள் கழல் - அழிவில்லாத திருவடிகளை ; ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அம்மானுட வாழ்க்கையால் வினை தேடுதலாகிய குறையிலை என்க .

பண் :

பாடல் எண் : 6

நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைகள் ஆயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.

பொழிப்புரை :

கலைகளை ஆய வல்லவனும் , கயிலாயமலை உடையவனுமாகிய பெருமானின் நிலையை சொல்லும் நெஞ்சமே ! பெருமைக்குரிய மயிலாடுதுறை இறைவன் நம்தலையின் மேலும் மனத்துள்ளும் தங்குதற்கு எத்துணைப் பெருந்தவம் நீ செய்துள்ளாய் !

குறிப்புரை :

நிலைமை சொல்லு நெஞ்சே - நெஞ்சே ! உன் தவத்தின் நிலைமையை உண்மையாக எனக்குச் சொல் . கலைகளாய என்பதற்குக் கலைகள் ஆயன எனவும் ஆய்வதற்கு எனவும் பொருள் கொள்க . கயிலாயநன் மலையன் - திருக்கயிலாயத் திருமலையிலே எழுந்தருளியிருப்பவன் . மயிலாடுதுறையன் தலையின் மேலும் மனத்துள்ளும் எழுந்தருளும் வண்ணம் என்ன தவத்தைச் செய்தாய் சொல் என்று நெஞ்சை விளித்துக்கேட்கும் முறையில் அமைந்தது . உள்ளும் புறமும் வழிபடல் குறிப்பு .

பண் :

பாடல் எண் : 7

நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயிலாடு துறையென்று
போற்று வார்க்குமுண் டோபுவி வாழ்க்கையே.

பொழிப்புரை :

திருநீறணிந்தவனும் , நிமிர்தலுற்ற பொலிவுற்ற சடையினனும் , விடையாகிய ஏற்றினை உடையவனும் , நம்மை ஆளுடையவனும் , புலன்களின் நெறியை மாற்றியவனுமாகிய மயிலாடுதுறை என்று போற்றுகின்ற அடியார்கட்குத் துயரம் மிகுந்த இவ்வுலக வாழ்க்கை உண்டோ ?

குறிப்புரை :

நிமிர் - நீண்ட . புன் - மெல்லிய . புலன் மாற்றினான் - ஐம்புல அவாவை நீக்கியவன் . புவி வாழ்க்கை - மண்ணுலக வாழ்க்கை ; பிறப்பு எனினுமாம் .

பண் :

பாடல் எண் : 8

கோலும் புல்லு மொருகையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.

பொழிப்புரை :

நீல நிறம் உடைய கரிய மயில்கள் ஆடும் துறையினை உடையவனே ! முக்கோலும் , தருப்பைப்புல்லும் , ஒரு கையில் கூர்ச்சமும் , தோலும் பூண்டு துயரம் அடைந்து பயன் யாது ? நுண்ணுணர்வுடையோர்க்கு நூலும் வேண்டுமோ ?

குறிப்புரை :

கோல் - மூன்று கிளைவடிவாயகோல் . அல்லது யோக தண்டம் . இது அந்தணர்க்குரியதாதலை ` நூலேகரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க்குரிய ` ( தொல் , பொருள் . 615) ` முக்கோல்கொள் அந்தணர் ` ( கலித் ) என்பன முதலியவற்றால் அறியலாம் . புல் - தருப்பைப்புல் . கூர்ச்சம் - தர்ப்பை நுனிகளை முடிந்தது ; உயிரையோ கடவுளையோ ஆவாகனம் செய்தற்குரியது . தோலும் பூண்டு - மான்தோல் உடுத்து அல்லது பூணூலில் முடித்து . துயரமுற்று - வருந்தி . நுண்ணுணர்ந்தோர்கட்கு நூலும் வேண்டுமோ - மெய்ப்பொருளை நுணுகி உள்ளவாறறிந்த ஞானிகளுக்குச் சாதனங்கள் வேண்டாம் என்பதைக் குறிப்பது . ஞானியர்கள் சாத்திய மடைந்தவர் ; அவர்களுக்குச் சாதனங்கள் தேவையில்லை என்பதாம் . முக்கோல் முதலியவற்றை உடையவர்களே வேதமோதற்குரியவர் எனப்படுவதால் அவ்வுரிமையைப் பெற்றும் இறைவனை உணராதார்க்குப் பயன் இல்லை என்பதாம் .

பண் :

பாடல் எண் : 9

பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
வணங்கு மாமயி லாடு துறையரன்
அணங்கொர் பால்கொண்ட கோல மழகிதே.

பொழிப்புரை :

படத்தினைக்கொண்டு ஆடுகின்ற அரவனைய அல்குலை உடைய கங்கையை , மணம்கமழும்படி சடையின் கண் வைத்த மறைவடிவானவனும் , வணங்கியெழும் மயிலாடுதுறை உறைபவனுமாகிய இறைவன் அம்மையினை ஒருபாகத்தே கொண்டு அருள்செய்யும் திருக்கோலம் மிக அழகியதாகும் .

குறிப்புரை :

பணம் - பாம்பின் படம் . ஆடு - ஆடுகின்ற . அரவு - அரவுபோன்ற ; அரவுகொள் பணம்போன்ற அல்குல் என்க . பகீரதி - கங்கை . மணங்கொள - அவள் தன்னை மணம் புரிந்துகொள்ள . வணங்கு மாமயிலாடுதுறை ; அணங்கு எனப்பின்னர் வருதலால் இங்கு அதனைக் கூறாது வணங்கு என்றே கூறினார் . அம்பிகை மயில் உருக்கொண்டு பெருமானை வழிபட்டாள் என்பது தலபுராணம் . வணங்கும் பார்வதிதேவியாகிய மாமயிலாடுதுறை என்றார் . அணங்கு - பார்வதி . கோலம் - தோற்றப் பொலிவு .

பண் :

பாடல் எண் : 10

நீணி லாவர வச்சடை நேசனைப்
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனைக்
காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே.

பொழிப்புரை :

நீண்ட நிலவினையும் , அரவத்தையும் சடையில் விரும்பிச் சூடியுள்ளவனைப் பேணாதவர் பேதுறும்படி விலக்கினோம் ; ஒளிபொருந்திய மயிலாடுதுறையினைக் காணில் , ஆர்க்கும் கடுந்துயரங்கள் இல்லை .

குறிப்புரை :

நேசன் - அன்பனை . பேணிலாதவர் - விரும்பாதவர் . பேதுற - துன்புற . ஓட்டினோம் - தீர்க்கச்செய்தோம் . வாள்நிலா - ஒளி நிலவும் புகழ் . காணில் - தரிசித்தால் . கடுந்துயர் - இறப்பு முதலிய மிக்க துன்பங்கள் .

பண் :

பாடல் எண் : 11

பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவ னின்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழும்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.

பொழிப்புரை :

இராவணனது பருத்த தோள்களும் முடிகளும் தூளாகுமாறு இருத்தினவனும் , அவனது இன்னிசையைக் கேட்டலும் வரம் அருளியவனும் ஆகிய பெருமானை , மயிலாடுதுறையில் தொழும் கரத்தினை உடையவர்கள் வினை , கட்டற்றுப்போகும் காண்பீராக ;.

குறிப்புரை :

பருத்த - பெரிய. பொடிபட - சிதற. வரத்தினான் - நாளும், வாளும், பெயரும் வரமாகத் தந்தவன். கரத்தினார் - கையை உடையவர், கருத்தினார் எனவும் பாடம், வினைக்கட்டு - இருவினைப் பந்தபாசங்கள். அறும் - முழுதும் நீங்கும்.

பண் :

பாடல் எண் : 1

வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்
எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்
கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
அண்ண லேயறி வானிவள் தன்மையே. 

பொழிப்புரை :

கழிப்பாலை இறைவனின் நிறம் வடிவம் முதலியவற்றைச்சென்று நேரே கண்டிலள். அவன் திருநாமங்களை எண்ணினாளில்லை. காணாமலே காதல்கொண்டு பிதற்றும் இவள் தன்மையைப் பொழில் சூழ்ந்த கழிப்பாலை இறைவனே அறிவான்.

குறிப்புரை :

வண்ணம் - நிறம். வடிவு - உருவம். சென்று - கழிப் பாலைக்குச் சென்று. கண்டிலள் - நேரே காணவில்லை. காணாமலே காதல் கொண்டாள். எண்ணி - மனத்தில் கழிப்பாலை இறைவனையே நினைத்து. நாமங்கள் ஏத்தி - அவன் திருப்பெயர்களைப் பலகாலும் சொல்லித் தோத்திரித்து. நிறைந்திலள் - மனவமைதி கொள்ளாதவளா யிருந்தாள். அல்லது எண்ணுதலிலும் சொல்லுதலிலுமே மனவமைதி கொள்ளாதவளாயினாள். அவனைக் கூடுதற்கு விழைகிறாள் என்பது குறிப்பு.
கண் - இடம். உலாம் - பொருந்திய. கழிப்பாலைப் பெருமான்மேல் காதல் கொண்டு வருந்தும் ஒருத்தியை ஆற்றுவிக்கக் கருதும் செவிலி கூற்று.

பண் :

பாடல் எண் : 2

மருந்து வானவ ருய்யநஞ் சுண்டுகந்
திருந்த வன்கழிப் பாலையு ளெம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.

பொழிப்புரை :

தேவர்கள் அமிர்தத்தை உண்டு உய்யத் தான் நஞ்சினை உண்டு உகந்து இருப்பவனும் வலிய கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம்பெருமானுமாகிய இறைவனின் சேவடிகளைச் சிந்தையுள் வைத்து யான் பரிந்து உரைத்தாலும், இவள் என் சொல்லைப் பழிக்கின்றாள்.

குறிப்புரை :

மருந்து வானவர் - அமுதத்தை விரும்பிய தேவர். உய்ய உகந்து - பிழைக்கும்படி விரும்பி. நஞ்சு உண்டு அதனால் தீங்கின்றி மகிழ்ந்திருந்தவன் என்க. திருந்துசேவடி - திருத்தமுற்றுச் சிவந்திருக்கும் திருவடி. பரிந்துரைக்கிலும் - அவளது நிலைநோக்கி வருந்தி அதைத் தீர்க்கும்வழி கூறினும். என் சொல் - என் அறிவுரைகளை. பழிக்கும் - பழித்துக் கூறுவாள். \\\\\\\"மாதியன்று நீதிதான்சொல நீயெனக்கு ஆர் எனும்\\\\\\\" (தி.5 ப.45. பா.1) என்னும் பாடற் கருத்தோடு ஒப்பிடுக.

பண் :

பாடல் எண் : 3

மழலை தான்வரச் சொல்தெரி கின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழக னேகழிப் பாலையெம் மண்ணலே
இகழ்வ தோவெனை யேன்றுகொ ளென்னுமே.

பொழிப்புரை :

குழல் இசை போன்ற மொழியினை உடைய இவள், மழலைச்சொல்லே கிளக்கும் இயல்பினள்; தெரியுமாறு சொற்களைப்பேசா இயல்பினளாய்க் கூறிய மொழிகளைக் கேட்பீர்களாக; \\\\\\\"அழகனே! கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் தலைவனே! என்னை இகழ்வதோ? ஏற்றுக்கொள்\\\\\\\" என்கின்றாள்.

குறிப்புரை :

மழலைதான்வர - பேசுங்கால் மழலை மொழியே வெளிவர. சொல் - செவ்விய சொற்களை. தெரிகின்றிலள் - பேசுதற்கு அறியாதவளாயுள்ளாள்; மிக இளையள் என்றது. குழலின் நேர்மொழி - வேய்ங்குழலை ஒத்து இன்பம்தரும் மொழியினை உடையாள்; அன்மொழித்தொகை. கூறிய - கூறிய சொற்களை. கேண்மினோ - கேளுங்கள். ஏன்றுகொள் - ஏற்றுக்கொள்வீராக. என்னும் - என்று சொல்லும். அவள் கூறியன பின்னிரண்டு வரிகள்.

பண் :

பாடல் எண் : 4

செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
மைய லாகி மிதக்கில ளாரையும்
கைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம்
ஐய னேயறி வானிவள் தன்மையே. 

பொழிப்புரை :

சிவந்த மேனியும், அதில் வெண்ணீறு அணியும் கோலமும் உடைய சிவபெருமானின்மேல் மையல் உடையவளாகி, இவள் ஆரையும் மதிக்கிலள்; கையிற் பிடித்த வெண்மழுவினனும், கழிப்பாலையில் உறைவானும் ஆகிய இறைவனே இவள் தன்மையை அறிவான்.

குறிப்புரை :

மையலாகி - மயக்கங்கொண்டவளாகி. ஆரையும் மதிக்கிலள் என்க. தாயார் சொல்லையும் ஏற்றுக்கொள்ளாதவள் என்பதாம். ஐயன் - அழகியன்.

பண் :

பாடல் எண் : 5

கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய
ஒருத்த னைஉமை யாளொரு பங்கனை
அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்
றொருத்தி யாருள மூசல தாடுமே. 

பொழிப்புரை :

ஒருத்தியின் உள்ளம், கருத்தின்கண் இருப்பவனும், கழிப்பாலையுள் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவனும், உமையாளை ஒருபங்கில் உடையவனும் ஆகிய பெருமானை விருப்பத்தாற்சென்று கண்டிடவேண்டும் என்று ஊசலாடுகிறது.

குறிப்புரை :

கருத்தனை - தலைவனை. அருத்தி - மிக்கவிருப்பம். ஒருத்தி - ஒரு பெண். ஆர் உள்ளம் - நிறைந்த உள்ளம். ஊசலாடும் - அலையும்; மனம் தலைவனைக்காண முன்னே இழுக்கவும் பிறர் காணில் நகைப்பர் என்னும் நாணம் பின்னே இழுக்கவும் தடுமாறுதல்.

பண் :

பாடல் எண் : 6

கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
நங்கை யையுட னேவைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே. 

பொழிப்புரை :

இப்பெண், சடையிற் கங்கையை வைத்து மலை மகளாகிய நங்கையைத் தன்னொரு பங்கில் வைத்த இறைவனாகிய திருக்கழிப்பாலைப் பெருமான் இளம்பிறை சூடி இங்குத் திருவுலாப் போதற்கு எழுந்தருள்வான் என்று இறுமாப்பு அடைகின்றாள்.

குறிப்புரை :

மலைமகள் நங்கை - பார்வதி. இங்குவந்திடும் - என்னைத்தேடி இங்கே ஆசையோடு வருவான் என்று சொல்லிப் பெருமையடைவாள். இருவரையும் கொண்டவர் என்னையும் கொள்வர் என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 7

ஐய னேயழ கேயன லேந்திய
கைய னேகறை சேர்தரு கண்டனே
மையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
ஐய னேவிதி யேயரு ளென்னுமே. 

பொழிப்புரை :

இவள், \\\\\\\"தலைவனே! அழகனே! தழலை ஏந்திய கரத்தவனே! திருநீலகண்டனே! மேகங்கள் உலாவுகின்ற பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் அழகியவனே! நன்மை தீமைகளை விதிப்பவனே! அருள்வாயாக!\\\\\\\" என்று கூறுகின்றாள்.

குறிப்புரை :

மையுலாம் - அடர்ந்து செறிந்திருத்தலால் கருமை உலாவும். ஐயனே அருள் விதியே என மாற்றுக. விதியே - இது முறையேயாகும். அழகே அனலேந்திய - அழகிதாக அனலை ஏந்திய எனலுமாம்.

பண் :

பாடல் எண் : 8

பத்தர் கட்கமு தாய பரத்தினை
முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை
அத்த னையணி யார்கழிப் பாலையெம்
சித்த னைச்சென்று சேருமா செப்புமே. 

பொழிப்புரை :

இவள், அன்பர்கட்கு அமுதாயுள்ள மேலானவனை, முத்தியை அளிப்பவனை, முடிவு ஒன்று இல்லாத மூர்த்தியை, தலைவனை, அழகு நிரம்பிய கழிப்பாலையில் வீற்றிருப்பவனாகிய என் சித்தத்தவனைச் சென்று சேருமாறு ஒரு நெறி எனக்குச் செப்புவீர்களாக!\\\\\\\\\\\\\\\" என்கின்றாள்.

குறிப்புரை :

அமுதாய - அமுதம் போன்றவனாகிய. பரத்தினை - மேலானவனை. செப்பும் - சொல்வீராக. சித்தன் - எல்லாம் செய்ய வல்லவன்; சின்மயன் என்றுமாம்.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

பொன்செய் மாமுடி வாளரக் கன்தலை
அஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன்
என்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான்
துஞ்சும் போதும் துணையென லாகுமே. 

பொழிப்புரை :

பொன்னாற் செய்யப்பட்ட முடியணிந்தவனும், வாளுடையவனுமாகிய இராவணன் தலைகள் பத்தும் இறுத்தவன்! கழிப்பாலையுள் எம் தலைவன் என்ன செய்யாதவன்? ஆதலின் அப்பெருமானே தூங்கும்போதும் நமக்குத் துணை எனற்குப் பொருந்தியவன் ஆவன்.

குறிப்புரை :

பொன்செய் மாமுடி - பொன்னால் செய்த பெரிய கிரீடம். என்செயான் - என்ன செய்ய வல்லவன் அல்லன். துஞ்சும்போதும் - இறக்கும்போதும்; உறங்கும்போதும் எனலுமாம். துணை எனல் - துணை என்று சொல்லுதல். ஆகும் - பொருந்தும். அவத்தைகள் பத்தில் சாக்காடு என்னும் நிலையை அடைந்த இடத்தும் என்றபடி.

பண் :

பாடல் எண் : 1

உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே.

பொழிப்புரை :

கோவண உடையினரும் , ஒன்றும் குறைவில்லாதவரும் , படைக்கலங்களைக்கொண்ட பூதகணங்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலித் திருத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சடையிற் கங்கையை வைத்த சதுரப்பாடு உடைய பெருமானை அடையும் வல்லமை உடைய அன்பர்களுக்குத் துன்பங்கள் இல்லை .

குறிப்புரை :

ஒன்றும் குறைவிலர் - கோவண ஆடையராயினும் ஒன்றாலும் குறையுடையரல்லர் . பாரிடம் - பூதகணங்கள் . படை கொள் - படையாக அமைந்த ; பைஞ்ஞீலியார் என்க . சூழ்ந்த - வலம் செய்யப் பெற்ற . சதுரர் - சதுரப்பாடுடையவர் . உலகமெல்லாம் பரவி மூடி அழிக்க வல்லதாக வந்த கங்கையைப் பனித்துளி போலச் சடையில் தரித்தமைபோல்வன சதுரப்பாடுகள் . ஞீலி - ஒருவகை வாழையால் பெற்ற பெயர் .

பண் :

பாடல் எண் : 2

மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.

பொழிப்புரை :

ஊமத்தம் மலர்களைச் சூடிய பெருவீரரும் , சித்தராகத் திரிபவரும் , அன்பர் பலர் தொழுதேத்தும் பைஞ்ஞீலியில் உறையும் அத்தரும் , தொழுவார் வினை தீர்ப்பவரும் ஆகிய அப் பெருமானைத் தொழும் வல்லமை உடையவர் நல்லவர் ஆவர் .

குறிப்புரை :

மத்தமாமலர் - ஊமத்தமாகிய சிறந்த மலர் . சித்தராய் - சித்தத்தில் வைத்தவர்களாய் . வினைதீர்ப்பரால் என்பதிலுள்ள ஆல் அசை . அத்தன் - தலைவன் , தந்தை .

பண் :

பாடல் எண் : 3

விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே.

பொழிப்புரை :

நிணம் பொருந்திய சூலத்தையும் , வெண் மழு வாளையும் படைக்கலமாக உடையவனும் , பேய்களும் தூங்குகின்ற நள்ளிருளில் சுடுகாட்டில் ஆடலை உடையவனும் , பைஞ்ஞீலியில் உறையும் பரமனும் ஆகிய பெருமானைப் பழுது ஒன்றும் இன்றித் தொழுது செல்பவர் வினைகள் பொடியாகும் .

குறிப்புரை :

விழுது - நெய் எனலுமாம் . மழுவாள்படை - ஒளி பொருந்திய மழுவாயுதம் . கழுது - பேய் . துஞ்சு - உறங்கும் . இருள் - ஊழி . பழுது - குற்றம் . தூளி - பொடியாம் .

பண் :

பாடல் எண் : 4

ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே
நின்ற சூழ லறிவரி யானிடம்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி யிருந்த அடிகளே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தம்மிலே ஒன்றித் தேட முற்பட்டும் திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம் , பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும் . இத்தலத்திலேயே அடிகள் என்றும் மேவியிருப்பது .

குறிப்புரை :

ஒன்றி - கூடி . தம்மிலே ஒன்றி எனமாறுக . நின்றசூழல் - அளவுபட்ட நின்ற இடம் . அறிவரியான் - அறிதற்கரியவன் . பார் இடம் - பூமியாகிய இடம் எனலுமாம் . இடம் சென்று - எழுந்தருளி யிருக்குமிடத்திற் சென்று , அடிகள் அறிவரியான் என்க .

பண் :

பாடல் எண் : 5

வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே.

பொழிப்புரை :

வேழத்தின் தோலை உரித்துப் போர்த்த விகிர்தரும் , செஞ்சடைமேல் தாழுமாறு பிறை வைத்தவரும் , தாழைகள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவரும் ஆகிய பெருமான் யாழ்க்குப் பொருந்திய பாடலை உகந்த அடிகள் ஆவர் .

குறிப்புரை :

உரி - தோல் . விகிர்தன் - வேறுபாடுடையவன் . தாழ - தங்க . யாழின் பாடலை உகத்தலாவது - ஒடுக்கிய உயிர்கள் மீளத் தோன்ற எழுப்பும் நாதமுழக்கம் .

பண் :

பாடல் எண் : 6

குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாண னடியடைந் துய்ந்தனே.

பொழிப்புரை :

உடல் பெருக்கிக் குறிக்கோளையறியாச் சமண் மிண்டரோடு பொருந்தி உய்யப்போந்து நான் , கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித்தலத்து எழுந்தருளியுள்ள தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

குண்டு - தாழ்வு எனலுமாம் . குறி - குறிக்கோள் ; உண்மையாக அடையவேண்டிய மெய்ப்பொருள் . மிண்டர் - சொற் செயலால் வலியர் . படுத்து - பட்டு எனப் பொருள் தந்தது . கண்டங்கார் அண்டவாணன் என்க . கார் - பயிர் அடர்ந்திருத்தலால் கரிய நிறம் . அண்டவாணன் - எல்லா உலகங்கட்கும் தலைவன் . உய்ந்தனே - பிழைத்தேன் . ஏ அசை .

பண் :

பாடல் எண் : 7

வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே.

பொழிப்புரை :

வரிகளை உடைய படத்தினைப் பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின் உரியை மெய்ப்பையாக மூடிய உத்தமனார் உறைகின்ற திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் திக்குநோக்கித் தொழுபவர்கள் வானவர்களோடு இனிதாக இருப்பர் .

குறிப்புரை :

வரி - கோடுகள் பொருந்திய . பை - படத்தோடு கூடிய . ஆட்டி - ஆடச்செய்து . மதகரி - மதம் கொண்ட யானை . உரிப்பு - தோல் . திசை - இருக்கும் திசையை நோக்கி .

பண் :

பாடல் எண் : 8

கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாக மசைத்த அடிகளே.

பொழிப்புரை :

செங்கோடலும் , வெண்கோடலும் , கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால் , வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர் , ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர் .

குறிப்புரை :

கோடல் - காந்தள் மலர் . புறவு - காடு . அணி - அழகு செய்கின்ற . வண்டிசைப் பாடல்கேட்கும் பைஞ்ஞீலி என்க . பேடு ஆணும் - பேடாயும் ஆணாயும் இருப்பவர் . பேடென்றும் ( பெண்ணென்றும் ) ஆணென்றும் பிறரறியாததோர் அடிகள் என்க .

பண் :

பாடல் எண் : 9

காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை மங்கையொர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

கார்காலத்துப் பொருந்திய கொன்றை மலர்களாலாகிய தாரினை அணிந்தவனும் , கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமைமங்கையை ஒரு பங்கில் உடையவனும் , பொழில் நுகரவருவோர் இவர்ந்துவந்த தேருலாவுகின்ற பூம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய ஆரா அமுதை அடைந்து உய்வீர்களாக .

குறிப்புரை :

கார்உலாமலர் - கார்காலத்து மேகங்கள் உலவும் காலத்தே மலர்கின்ற . தாரினான் - மாலையை அணிந்தவன் . வார் உலாம் - கச்சு அணிந்த . தேருலாம் பைஞ்ஞீலி , பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி என்க . ஆர்கிலா அமுது - உண்ணா அமுதம் , தெவிட்டா அமுதம் . தருக்கி - செருக்கி . தடவரை - பெரிதாகிய கயிலைமலை . பிறிதொரு பாடலை ( தி .5. ப .2. பா .9) ஒத்துளது இப்பாடல் .

பண் :

பாடல் எண் : 10

தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

அரக்கனாகிய இராவணன் செருக்கினை உற்றுத் தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும் , நெருக்கித் திருவிரலால் ஊன்ற , சிவனையே நினைந்து அவன்பாட அவனுக்கு அருள்புரியும் எம்மான் இடம் பைஞ்ஞீலி என்றுரைப்பார்க்கு இடர்கள் இல்லை .

குறிப்புரை :

சிவனையே நினைந்து என மாறுக . நெருக்கி - இராவணனை மலையின்கீழ் அகப்படுமாறு நெருக்குதலைச் செய்து . இடர் - துன்பம் . இடமாக இருக்கை என்க .

பண் :

பாடல் எண் : 1

நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

பொழிப்புரை :

திருவேட்களத்துள்ளுறைகின்ற நெருங்கிய பொலிவார்ந்த சடையுடைய ஈசனைத் தொழுவீர்களாக ; அங்ஙனம் தொழுதால் நாள்தொறும் நம்வினை பெரிதும் தொலையும் ; என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் .

குறிப்புரை :

நாடொறும் நன்று - நாள்தொறும் நன்மையே உண்டாகும் . என்றும் - எப்பொழுதும் . துன்று - நெருங்கிய . பொற்சடை - பொன்போன்ற சடை எனலுமாம் . தொழுமின் - வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 2

கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகி லெனக்கிட ரில்லையே.

பொழிப்புரை :

கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும் , மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும் , அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின் , எனக்கு இடர்களே இல்லை .

குறிப்புரை :

கருப்புவெஞ்சிலை - கரும்பாகிய கொடிய வில்லையுடைய . காமன் - மன்மதன் . காய்ந்தவன் - எரித்தவன் . பொருப்பு வெஞ்சிலையால் - இமையவில்லால் . புரம் - மூன்று கோட்டைகளை . செற்றவன் - அழித்தவன் . விருப்பன் - விரும்புதற்கு உரியவன் . இடர் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 3

வேட்க ளத்துறை வேதிய னெம்மிறை
ஆக்க ளேறுவ ரானைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.

பொழிப்புரை :

வேட்களத்துறையும் வேதியனும் , எம் இறைவனும் , திருநீலத் திருமிடறு உடைய தலைவனும் ஆகிய பெருமான் விடையுகந்து ஏறுவர் ; பஞ்சகவ்வியம் ஆடுவர் ; பூக்களைக்கொண்டு திருவடி போற்றினால் நம்மைக் காப்பர் .

குறிப்புரை :

எம் இறை - எங்கள் தலைவன் . ஆக்கள் ஏறுவர் - விடை ஏறுவர் . ஆனைஞ்சு - பஞ்சகவ்வியம் . ஆடுவர் - அபிடேகம் கொள்வர் . மிடறு - கழுத்து .

பண் :

பாடல் எண் : 4

அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே.

பொழிப்புரை :

நிறைந்த வெண்பிறையைச் சூடும் மணவாளராகிய திருவேட்களத்து அருட்செல்வரைக் கைகளால் தொழ வல்லவராகில் அதுவே வழியாகும் ; காண்பீர்களாக ; அவ்வழியே நின்றால் அல்லல்கள் இல்லை ; அரிய வினைத் துன்பங்களும் இல்லையாம் .

குறிப்புரை :

அல்லல் - பிறவி முதலிய துன்பங்கள் . அருவினை - நீக்குதற்கரிய இருவினைகள் ; அல்லல் வினை இவற்றை நீக்கும் என்க . மல்கு - மிக்க . வல்லராகில் - முயற்சியுடையரானால் ; அறிவாற்றல் உடையவரானால் ; வேட்களம் சென்று பெருமானைக் கைதொழுதலே வழியாகும் .

பண் :

பாடல் எண் : 5

துன்ப மில்லை துயரில்லை யாமினி
நம்ப னாகிய நன்மணி கண்டனார்
என்பொ னாருறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.

பொழிப்புரை :

நம்மவராகிய திருநீலகண்டனும் , என் பொன் போன்றவனும் ஆகிய இறைவன் உறைகின்ற திருவேட்கள நன்னகரில் இன்பமே வடிவாகிய அவன் சேவடியை ஏத்தியிருப்பதனால் , இனித் துன்பமும் இல்லை ; துயரங்களும் இல்லை .

குறிப்புரை :

துன்பம் - பிறவித்துன்பம் . துயர் இல்லையாம் - ஏனைய துன்பங்கள் இல்லையாகும் . இனி - இனி நாம் செய்ய வேண்டுவது . நன்மணி கண்டனார் - நல்ல நீலமணிபோலும் கழுத்தையுடையவர் . என்பொனார் - எனக்குப் பொன்னாயிருப்பவர் . சேவடி - சிவந்த திருவடி . இருப்பது இன்பச்சேவடி ஏத்தி ; அதனால் இனித் துன்பமில்லை துயரில்லை என முடிக்க .

பண் :

பாடல் எண் : 6

கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.

பொழிப்புரை :

கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது , விரைந்து உயிர்போவதற்கு முன்பே நீர் , உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் கைதொழுவீர்களாக ; தொழுவீராயின் , பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும் .

குறிப்புரை :

கட்டப்பட்டு - துன்புற்று . கவலையில் - மனக்கவலையின்கண் . பொட்ட - விரைவாக ( பொட்டென என்பதன் திரிபு ). வல் உயிர் - பலவும் செய்யவல்ல உயிர் . பட்ட - செய்யப்பட்டுத் தோன்றிய . பாறும் - அழியும் .

பண் :

பாடல் எண் : 7

வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
எட்டு மொன்று மிரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறியாமை உடைய நெஞ்சமே ! வட்ட வடிவாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , எட்டு மூர்த்தியானவரும் , ஒரு பரம்பொருளானவரும் , இரண்டு ( சிவம் , சத்தி ) ஆனவரும் , மும்மூர்த்தியானவரும் உறைகின்ற சிறப்புடையதும் , உயர்ந்தவர்கள் சேர்ந்ததுமான திருவேட்களம் கைதொழுது விருப்புற்று இருப்பாயாக .

குறிப்புரை :

வட்டம் - வட்டவடிவமான . எட்டாயினார் - அட்ட மூர்த்தி வடிவாயினவர் .( தி .6. ப .94. பா .1.) ஒன்றாயினார் - ஒருவராயிருப்பவர் . இரண்டாயினார் - சத்தி சிவமாய் வீற்றிருப்பவர் . மூன்றாயினார் - படைப்பு முதலிய முத்தொழிலால் அயன் , அரி , அரனாய் விளங்குபவர் . சிட்டர் - உயர்ந்தோர் . இட்டம் - விருப்பம் . மடநெஞ்சமே - அறியாமை உடைய மனமே .

பண் :

பாடல் எண் : 8

நட்ட மாடிய நம்பனை நாள்தொறும்
இட்டத் தாலினி தாக நினைமினோ
வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.

பொழிப்புரை :

வட்டவடிவமாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும் , உயர்ந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவேட்களத்தையும் , அங்கு நட்டமாடிய நம்பனையும் , நாள்தோறும் விருப்பத்துடன் இனிது நினைப்பீராக .

குறிப்புரை :

இட்டத்தால் - விருப்பத்தோடு . வட்டவார் முலையாள் - வட்டவடிவமான கச்சணிந்த தனங்கள் .

பண் :

பாடல் எண் : 9

வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.

பொழிப்புரை :

திருவேட்களத்து அருட்செல்வர் வட்டமாக வளைந்த மதில்கள் சூழ்ந்த திரிபுரங்கள் மூன்றையும் சுட்ட கொள்கையர் ஆயினும் , தம்மைச் சூழ்ந்தவர் வல்வினைகளைத் தீர்த்து அவர்களைக் குளிர்விக்கும் சிட்டராவர் .

குறிப்புரை :

வட்டம் - வட்டவடிவாய் . மதில் மூன்று அரண் - மூன்று மதில்களை உடைய வலிய கோட்டை . சுட்ட - அழித்த . சூழ்ந்தவர் - தம்மை வலம் வந்து வணங்கி நிற்பவர் . குட்ட வல்வினை - குழியாகிய வலியவினைகள் .

பண் :

பாடல் எண் : 10

சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி ஆங்கெடுத் தான்முடி பத்திற
வாட வூன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.

பொழிப்புரை :

பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி , மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக .

குறிப்புரை :

சேடன் - பெருமையுடையவன் . வாட - வருந்த . ஊன்றிவாங்கி - சிறிது ஊன்றிப் பின்னர் எடுத்த . வேடனார் - பார்த்தற்குப் பாசுபதம் கொடுத்த தலமாதலின் அருச்சுனனை எதிர்க்க வேடனாய் வந்தவன் என்றார் ; வேடனார் பலகோலங்களைக் கொண்டவர் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 1

கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய லாவதெ னேழைகாள்
நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே ! நமன் தமராகிய எமதூதர் கொல்லவந்தபோது இல்லத்தில் உள்ளவர்கள் செய்யலாவது யாது ? திருநல்லத்தில் எழுந்தருளியிருப்பவனும் , நம்மை ஆளுடையவனும் ஆகிய பெருமான் கழல் சொல்ல வல்லமை உடையீரேல் , உம் துயர்கள் தீரும் .

குறிப்புரை :

தான் , அசை . நமனார் தமர் - எமதூதர் . கொல்ல வந்தக்கால் - உயிர்கொள்ள வந்த இடத்து . இல்லத்தார் - மனைவி மக்கள் முதலாயினார் . ஏழைகாள் - அறிவில் மெல்லியரே ; சொல்ல வல்லிரேல் என்க .

பண் :

பாடல் எண் : 2

பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.

பொழிப்புரை :

பொய்ம்மொழிகளைப் பேசிப் பொழுது கழியாமல் துயரங்கள் தீர்தற்கு ஓர் உபாயம் சொல்லுவேன் ; கேட்பீராக ; தக்கன் வேள்வியைத் தகர்த்த தீவண்ணனாகிய திகம்பரன் உறைகின்ற திருநல்லம் நண்ணி வழிபடுதலே உமக்கு நன்மை .

குறிப்புரை :

பொக்கம் - பொய் ; உலகியலைப் பற்றியன . தீர்வகை - தீரும்வழி . தகர்த்த - அழித்த . நண்ணுதல் - அடைதல் . நக்கன் - நிர்வாண கோலத்தினன் .

பண் :

பாடல் எண் : 3

பிணிகொள் வார்குழற் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டி லரன்நெறி யாவது
நணுக நாதன் நகர்திரு நல்லமே.

பொழிப்புரை :

பாவம் செய்தவர்களே ! மலர் முதலியன விட்டுப் பிணித்தலைக்கொண்ட நீண்ட கூந்தலை உடைய பெண்களிடத்து வைத்த காதலால் , அவர்கட்கு ஆளாகிப் பணிகளைப் பொருந்திச் செய்து பயன் இல்லையாதலால் , நெருங்கிப் பணி செய்ய வேண்டில் அரன் நெறியே அணுகி திருநல்லம் சென்று வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

பிணிகொள் - கட்டுதல் பொருந்திய அல்லது மனத்தைப் பிணித்தல் கொண்ட . வார்குழல் - நீண்ட கூந்தல் . காதலால் - ஆசையால் . பணிகள் - செயல்கள் . அணுக - நெருங்க . வேண்டின் - விரும்பினால் . அரன்நெறி - அரன் நெறியாவதை ; அணுக வேண்டில் என்க . நணுக - சென்றடையுங்கள் . தலைவனாகிய பெருமான் எழுந்தருளியுள்ள நல்லம் நணுகும் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 4

தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போது மிராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் தானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்ல மடைவதே.

பொழிப்புரை :

தம்முயிர் தம்மைவிட்டு நீங்கினால் தமக்கு நல்லது ; அங்ஙனமே இவ்வுடலாகிய குடிசை இமைப்பொழுது கூட நில்லா இயல்புடையது ; உமாதேவிக்கு நல்லவனாகிய இறைவன் உறைகின்ற பதியாகிய திருநல்லம் என்னுந் தலத்தை அடைந்து வழிபடுவதே நமக்கு நல்லது ஆகும் .

குறிப்புரை :

தமக்கும் நல்லதாகிய ( இனிதாகிய ) உயிர்தாம் - மக்களை . இமைக்கும்போது - கண்ணிமைக்கும் நேரத்திற்குள் . இராது - நில்லாதாய் அழியும் . குரம்பை - உயிரின் வீடாகிய உடம்பு . உமைக்கு - பார்வதிக்கு . நல்லன் - நல்லவன் . பதி நல்லமடைவது நமக்கு நல்லது .

பண் :

பாடல் எண் : 5

உரை தளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யானிடம் நல்லமே
பரவு மின்பணி மின்பணி வாரொடே
விரவு மின்விர வாரை விடுமினே.

பொழிப்புரை :

வார்த்தைகள் தளர்ந்து உடல் நடுங்குவதற்கு முன்பே , நரை உடைய இடபவாகனத்தை உடைய இறைவன் வீற்றிருக்கும் இடமாகிய திருநல்லத்திற்சென்று பரவிப் பணிவீர்களாக ; பணிகின்ற அன்பர்களோடு கலந்து வழிபடுவீராக ; அங்ஙனம் கலவாதவர்களை நீங்குவீர்களாக .

குறிப்புரை :

உரை தளர்ந்து - பேச்சுக்குழறி . உடலார் , ஆர் விகுதி இழிவு குறித்தது . நடுங்காமுனம் - நடுக்கமடையுமுன்னே ; முதுமை யடையுமுன்பே என்க . நரைவிடை - வெள்ளிய எருது . புகழுமின் - புகழ் பாடித் தோத்திரியுங்கள் . பணிமின் - வணங்குங்கள் . பணிவாரொடே விரவுமின் - அடியார் இணக்கம் கொள்ளுங்கள் . விரவாரை - அடியரல்லாதாரை . விடுமின் - சேராது நீங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 6

அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.

பொழிப்புரை :

ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும் , திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை வல்லவாறு ` சிவாயநம ` என்று தொழுதால் வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும் .

குறிப்புரை :

அல்லலாக - துன்பம் உண்டாக . வல்லவாறு - இயன்ற அளவு . வீடும் - அழியும் .

பண் :

பாடல் எண் : 7

மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே.

பொழிப்புரை :

மனைவியரும் , மக்களும் , சுற்றத்தாரும் வேற்றுமைப்பட்டுப் பிரிகின்ற இறுதிக்காலம் வருவதற்குமுன்பே ; தலைவன் மேவியுள்ள திருநல்லமாகிய நகரைத் தொழப் போதுவீர்களாக ; எழுவீர்களாக ; அப்பெருமானே புகலாவான் .

குறிப்புரை :

மாதரார் - மனைவியர் . பேதமாகி - வேறுபட்டவராய் . பிரிவதன் முன்னம் - நீங்குவதன் முன்பாக ; இறக்குமுன் என்றபடி . எழுமின் போதுமின் என்க - புறப்படுங்கள் செல்லுங்கள் என்பது பொருள் . புகலாகும் - அதுவே உயிர்க்கு அடைக்கலமாகும் இடமாகும் .

பண் :

பாடல் எண் : 8

வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாம்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை யானிடம் நல்லமே.

பொழிப்புரை :

வண்டுகளின் ஒலி பொருந்திய மலர்களைத் தூவி , நம்மை ஆளுடையானாகிய பெருமான் உறையும் திருநல்லத்தினைத் தொழுவீர்களாக ; தொழுதால் . வெப்பம் பொருந்திய வினைக்கடலினின்றும் நீங்கி நீர் செம்மையாகிய சிவகதியினைச் சேரலாம் .

குறிப்புரை :

வெம்மையான - கொடியதான . வினைக்கடல் - இருவினைப்பரப்பு . ` செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையுமன்றே ` ( தி .4. ப .76. பா .2) என்றார் முன்னும் .

பண் :

பாடல் எண் : 9

கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் , பெருமைமிக்க வேதங்கள் நான்கும் வல்லவர்களாகிய முனிவர்களும் ஆகிய அனைவர்க்கும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருநல்லம் . ஆதலால் , பொருந்திய காலம் கழிவதற்கு முன்பே , இயலும் நெறியில் வணங்கி நின்று வழிபடுவீராக .

குறிப்புரை :

காலமான - நமது வாழ்நாட்காலமாயினவை . கழிவதன் முன்னம் - முடிவதற்கு முன்பே . ஏலுமாறு - பொருந்துமாறு . மாமறை நாலும் வல்லவர் - வேதங்கள் நான்கிலும் வல்லவராய அந்தணர் . கோன் - தலைவன் ; பிரமவிட்டுணுக்களுக்கும் அந்தணர்களுக்கும் தலைவன் என்றபடி .

பண் :

பாடல் எண் : 10

மல்லை மல்கிய தோளரக் கன்வலி
ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி
நல்ல நல்ல மெனும்பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.

பொழிப்புரை :

வளம் நிறைந்த தோள்களை உடைய இராவணன் ஆற்றலை விரைந்து ஒழித்த பெருமான் உறைகின்ற பதியாகிய நல்ல நல்லம் என்னும் பெயரை நாவினால் சொல்லும் வல்லமை உடையவர்கள் தூயநெறியிற் சேர்வர் .

குறிப்புரை :

மல்லை மல்கிய - வலிமை நிரம்பப் பெற்ற . ஒல்லையில் - விரைவில் . பதி - தலத்தினுடைய ; நல்லம் நல்லம் என்று சொல்பவர் தூய வீடுபேற்றை அடைவர் .

பண் :

பாடல் எண் : 1

மாமாத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூரர னேயரு ளாயென்றென்
றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே.

பொழிப்புரை :

தமக்குள்ளே பெரும் பூசல் கொண்டவராகிய திருமாலும் பிரமனும் ஆணவ மயக்கம் கொண்டு தாமாகத் தேடியும் , பெருமானின் திருவடியடையும் திருமுடியையும் காண்கிலர் ; ` ஆமாத்தூர் அரனே ! அருள்வாயாக ` என்று பலமுறை இன்பமுறக் கூவியே இறையானைக் கண்டார் .

குறிப்புரை :

மாமாத்து ஆகிய - மிக்க பெருமை உடையராகிய எனலுமாம் . ( மகத்து என்பதன் திரிபு ); மால்கொடு - அறியாமை கொண்டு . தாமா - நாம் அறிவோம் என்னும் ஆணவத்தால் ; தாள்முடி காண்கிலர் என்க . ஏமாப் பெய்தி - களிப்பு எய்தி . இறையானை - இறைவனாகிய பெருமானை . அருளாய் என்று பணிந்து இறையானைக் கண்டு ஏமாப்பெய்தினார் என்க .

பண் :

பாடல் எண் : 2

சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே.

பொழிப்புரை :

காலை மாலை ஆகிய சந்திகளில் வணங்கப்படுவானும் , யோகநெறி தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும் , தேவர்களால் தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம் மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர் .

குறிப்புரை :

சந்தியானை - மூன்று சந்தியாகாலங்களிலும் தியானிக்கப் படுகிறவனை . சமாதி - யோகநிஷ்டை ; அழுந்தியறிதல் . புந்தி - மனம் . புத்தேளிர் - தேவர் . அந்தியானை - அந்தி வண்ணனை ; அல்லது அழகிய தீயின் உருவினன் என்க . அழகன் - தலத்து இறைவன் பெயர் .

பண் :

பாடல் எண் : 3

காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூரர னேயென் றழைத்தலும்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே.

பொழிப்புரை :

காமமும் பொருளுமாகிய கார்வலையிலே பட்டுப்போகும் நெறியை அறியாமற் புலம்புகின்ற அடியேன் ` ஆமாத்தூர் அரனே !` என்று அழைத்தலும் , தேமாவின் இனிய கனி போலப் பெருமான் தித்தித்தனன் .

குறிப்புரை :

காமாத்தம் - காமமும் பொருளும் என்றும் , காமம் அர்த்தம் என்றுகொண்டு காமத்தையே பொருளாகக்கொண்டு என்றும் காண்க . கார்வலை - அறியாமையைச் செய்யும் வலை . போமாத்தை - மீளும் வழியை ; போமாற்றை என்பதன் திரிபு . தேமாத்தீங்கனி - மிக இனிய மாங்கனி . புலம்புவேனாகிய நான் அழைத்தலும் தித்திக்கும் .

பண் :

பாடல் எண் : 4

பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே.

பொழிப்புரை :

ஐம்பெரும் பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண் நினைந்தேன் ; அந்நினைப்பு என்னை எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன ; காண்பீராக .

குறிப்புரை :

பஞ்ச பூதவலை - ஐம்பூதங்களாகிய வலை . நினை வெய்தலும் - நினைப்பை அடைந்தவுடன் . வஞ்ச ஆறுகள் - வஞ்சனையாகிய ஆறுகள் . வற்றின - நீங்கின . இறைவனை நினைப்போரை மாயாகாரியங்கள் மயக்கமாட்டா என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 5

குராமன் னுங்குழ லாளொரு கூறனார்
அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் யீசனை
நிராம யன்தனை நாளும் நினைமினே.

பொழிப்புரை :

குரவமலர்கள் நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும் , பாம்பு நிலைபெற்ற சடையனும் , திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு செய்யப் பெற்ற ஈசனும் , நிராமயனும் ஆகிய பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக .

குறிப்புரை :

குராமன்னும் - குராமலர் பொருந்திய . குழலாள் - கூந்தலை உடையவளாகிய பார்வதி . ஒரு கூறனார் - இடப்பாகத்தே உடையவர் . அரா - பாம்பு . நிராமயன் - நோயற்றவன் ; பசுத்துவ மில்லாதவன் . இராமன் வழிபட்ட தலவரலாற்றை உட்கொண்டது .

பண் :

பாடல் எண் : 6

பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும்
அத்த னையணி யாமாத்தூர் மேவிய
முத்தி னையடி யேனுள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே.

பொழிப்புரை :

பித்தேறியவனும் , பெரிய தேவர்களால் தொழப்படும் தலைவனும் , அழகு பொருந்திய ஆமாத்தூரை விரும்பிப் பொருந்திய முத்துப் போல்வானும் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தே முயன்று உள்குதலும் , அன்பு என்னும் வெள்ளம் பரவி எழுவதாயிற்று ; காண்பீர்களாக .

குறிப்புரை :

உள் - உள்ளத்தின்கண்ணே அழுந்திக்காண முயலுதலும் - தியானித்தலும் . பத்திவெள்ளம் - அன்புவெள்ளம் . பரந்தது - பரவி நின்றது ; அகத்தே ஒரு குறிக்கண் வைத்து உரை குறியிறந்த அவன் நிலையை உணரும் வியாபக உணர்வைத் தலைப்பட்டேன் என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழற் கோலச் சடையிலோர்
ஆற்றி னானணி யாமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை யாளுடை யீசனே.

பொழிப்புரை :

எம்மை ஆளுடைய இறைவன் , திருநீற்றினால் நிறைந்த திருமேனி உடையவனும் , நேரிழையை ஒரு கூற்றில் உடையவனும் , அழகு நிறைந்த குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில் விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன் .

குறிப்புரை :

நீற்றினார் - திருநீறு பொருந்திய . நேரிழை - பார்வதி . குழல் - தலைமயிர் . கோலம் - அழகிய . குழல் அம்மை பாகத்து முடியாகக்கொண்டு . குழல்கோலமாகக் கலந்த சடை எனலுமாம் . ஆற்றினான் - கங்கை ஆற்றை உடையவன் .

பண் :

பாடல் எண் : 8

பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்
கண்ணித் தாகு மமுதினை யாமாத்தூர்
சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர்
கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே.

பொழிப்புரை :

பண்ணினை உடைய பாடல்களைப் பாடித் தன்னை அன்புசெய்யும் திறம் உடையவர்களுக்கு இனிக்கும் அமுது போல்வானும் , ஆமாத்தூரில் பொருந்தியவனும் , தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு மிகநெருங்கிக் கண்ணினுள்ள கருமணிப் பாவை போன்றவனுமானவனைக் காண்பீர்களாக !.

குறிப்புரை :

பாடல்கள் பண்ணிற்பத்திசெய்வித்தகர் - தோத்திரப் பாடல்களை இசையோடு பாடி அன்புசெய்யும் அடியார் . அண்ணித்தாகும் - இனிக்கும் . சண்ணிப்பானை - திருநீற்றை உத்தூளனமாகப் பூசுபவனை எனலுமாம் . தமர்க்கு - அடியார்க்கு . கண்ணிற் பாவை யன்னான் - கண்மணியை ஒத்தவன் . ` கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் ` ( தாண்டகம் ) அன்னானைக் காண்மின் என்க .

பண் :

பாடல் எண் : 9

குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
மிண்ட ரோடெனை வேறு படுத்துய்யக்
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத்
தண்டனாரிட மாமாத்தூர் காண்மினே.

பொழிப்புரை :

குண்டர்களும் , மயிற்பீலிகளைக்கொள்ளும் குணமில்லாத மிண்டர்களுமாகிய சமணர்களோடு என்னை வேறுபடுத்தி உய்யுமாறு கொண்ட நாதனாகிய குளிர்புனல்சூழ்ந்த வீரட்டத்துத் தேவதேவர் உறையும் இடம் ஆமாத்தூரேயாகும் . காண்பீர்களாக !

குறிப்புரை :

குண்டர் - தின்று கொழுத்தவர் . பீலிகள் - மயில் தோகைகளை . மிண்டர் - வலியர் . ஓடு , நீக்கப்பொருளில் வந்தது . வேறுபடுத்துய்யக்கொண்ட நாதன் - பிரித்து உய்யுநெறிகாட்டிய தலைவன் . வீரட்டம் - திருவதிகை வீரட்டம் . அண்டனார் - உலக முதல்வர் .

பண் :

பாடல் எண் : 10

வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய வாமாத்தூ ரையனே.

பொழிப்புரை :

ஆகாயத்தே இருளைச்சிதைக்கும் மதியை அரவொடும் அஞ்சாதபடி நட்புக் கொள்ள வைத்தவர் . தேன் முதலிய பஞ்சாமிர்தத்தொடும் இளநீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றை அபிடேகம் கொண்டவர் ஆமாத்தூர்ப்பெருமான் .

குறிப்புரை :

வானம் - ஆகாயத்தே . சாடும் - இருளைச் சிதைக்கும் . தானஞ்சாது - மதியும் அரவும் தம்முள் கொண்ட பகைபற்றி அஞ்சாத படி . உடன் - ஒருசேர . தேன் அஞ்சு - தேன் முதலிய அஞ்சு ; பஞ்சாமிர்தம் . ஆனஞ்சு - பஞ்சகவ்வியம் . தெங்கிள நீரொடும் ஆடிய ஐயன் ; ஆனஞ்சாடிய ஐயன் என்க .

பண் :

பாடல் எண் : 11

விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி
அடர வோர்விர லூன்றிய வாமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம்
இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே.

பொழிப்புரை :

அடங்காத விடலையாக வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு விரல் ஊன்றியவனும் , ஆமாத்தூரை இடமாகக் கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னுள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன் .

குறிப்புரை :

விடலையாய் - மூர்க்கனாய். விலங்கல் - கயிலை மலை. அடர - நெரிய. உளமதாக்கொண்டு - ஈசனுக்கு என் உள்ளத்தை இடமாக வைத்து. இன்பு - பேரின்பம்.

பண் :

பாடல் எண் : 1

மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயெனக் காரெனும்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா னென்னுமென் தையலே.

பொழிப்புரை :

சிவபெருமான்மேற் காதல் மிகுந்து , ` மனைக் கண் இரு ` என்று நான் கூறியபோது , ` எனக்கு நீதி சொல்ல நீ என்ன உறவுடையை ?` என்று சொல்வதோடு , ` ஒளி நிறைந்த தோணிபுரத்து இறைவர்க்குத் தாதியாக நான் ஆவேன் ` என்றும் கூறுகின்றனள் என் மகள் .

குறிப்புரை :

மாது இயன்று - பெண்மைக்குரிய இயல்பைமேற் கொண்டு எனலுமாம் . மனைக்கு இரு - வீட்டின்கண் இரு . என்றக் கால் - என்று சொல்லிய இடத்து . நீதிதான்சொல ( தான் அசை ) நீ யெனக்கு ஆர் - இனி நீ எனக்கு நீதி சொல்ல . என்ன உறவுடையாய் . எனும் - என்று சொல்வாள் . சோதிஆர்தரு - ஒளி பொருந்திய . தோணிபுரவர்க்கு - திருத்தோணிபுரத் திறைவர்க்கு . தாதி - பணி செய்பவள் . என்னும் - என்று சொல்வாள் . என் தையல் - என் பெண் . செவிலி கூற்று . அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்துத் தோணிபுரத் திறைவர்மேல் காதல் கொண்டாளொருத்தியின் நிலையை விரித்தது .

பண் :

பாடல் எண் : 2

நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்க தன்று தமது பெருமைக்கே.

பொழிப்புரை :

நீர்வளம் தொகுத்த வயல்களை உடைய தோணி புரத்து இறைவர் நிர்வாணமாய் வந்து ` பலி இடுக ` என்றார்க்கு இட்டம் மிகுந்த என் பெண்ணின் வெள்வளைகளை அவர்கொள்வது தமது பெருமைக்குச் சிறிதும் தகுதியுடையதன்று .

குறிப்புரை :

நக்கம் - நிர்வாணமாய் . பலியிடு - பிச்சையிடு . இட்ட மிக்க - அன்புகொண்ட . இட்ட - பிச்சையிட்ட . மிக்க - மிக்க காமம் என்றலுமாம் . வெள்வளை - வெள்ளிய சங்கவளை . நீர் தொக்க வயல் - நீர் நிறைந்த வயல் . தக்கதன்று - தகுதியன்று ; தமது பெருமைக்குத் தக்கதன்று . பிச்சை கொடு என்று கேட்டு வளையலைக் கவர்ந்து செல்வது இறைவர்தம் பெருமைக்கு ஏற்றதன்று என்க .

பண் :

பாடல் எண் : 3

கெண்டை போல்நய னத்திம வான்மகள்
வண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு காமுறுகின்றனள் கன்னியே.

பொழிப்புரை :

கெண்டைமீன் போன்ற கண்ணை உடைய இமவான் மகளாகிய வண்டுகள் செறிந்த நீண்ட குழலாள் உடனாக உறையும் வெள்ளிய பிறைமதி அணிந்த தோணிபுரத்து இறைவரைக் கண்டு இப்பெண் காமுறுகின்றனள் .

குறிப்புரை :

கெண்டை - சேல்கெண்டை என்னும் மீன் . நயனத்து - கண்களை உடைய . இமவான் மகள் - பார்வதி . வண்டுவார் குழல் - வண்டுகள் மொய்க்கும் மலர் நிறைந்த நீண்ட குழல் . உடனாக - சமேதராக . துண்டவான் பிறை - சிறிதாகிய வெள்ளிய பிறை . தோணி புரவரை - பார்வதியொடு கண்டும் என உம்மைவிரித்துப் பொருள் கொள்க .

பண் :

பாடல் எண் : 4

பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
மேல ளாவது கண்டனள் விண்ணுறச்
சோலை யார்தரு தோணி புரவர்க்குச்
சால நல்லளா கின்றனள் தையலே.

பொழிப்புரை :

பாலையாழின் இனிய இசையை ஒத்த மொழியாளாகிய கங்கை தாழ்சடையின்மேல் உள்ளவளாதலைக் கண்டும் , விண்ணைமிக்குப் பொருந்திய சோலைகள் செறிந்த தோணி புரத்திறைவர்க்கு மிகவும் நல்லவளாகின்றனள் இப் பெண் .

குறிப்புரை :

பாலையாழ்மொழியாளவள் - பாலையாழ் என்னும் யாழிற் பிறக்கும் இசையை ஒத்த மொழியினை உடையாளாகிய கங்கை . தாழ் - தொங்கும் . சடைமேலளாவது - சடையின்மேல் உறைந் திருத்தலை . கண்டனள் கண்டும் என வருவிக்க . விண்ணுற - ஆகாயத்தை அடையுமாறு உயர்ந்த . சோலை ஆர்தரு - சோலைகள் பொருந்திய . சால நல்லள் - மிகவும் இனியள் , தையல் - பெண் ; பார்வதியோடன்றிச் சடையில் மற்றொருத்தியை மறைத்து வைத்திருப்பதைப் பார்த்தும் அவனைக் காதலிக்கின்றாளே ஈதென்ன வியப்பு எனச் செவிலி இரங்கிக் கூறுவது .

பண் :

பாடல் எண் : 5

பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணிபு ரத்துறை
அண்ண லாருக்குச் சால அழகிதே.

பொழிப்புரை :

சுண்ணமாடிய தோணிபுரத்து உறைகின்ற அண்ணலாராகிய சிவபெருமானுக்குப் பலியிட்டவளும் பண்ணை ஒத்த இனிய மொழியாளுமாகிய இப்பெண்ணுக்கு மயக்கம் கொடுத்துப் பெய்யப் பெற்ற வளைகளையும் கொள்வது சால அழகுடைய செயலோ ?

குறிப்புரை :

பண்ணின் நேர்மொழியாள் - இசையினை ஒத்த மொழியையுடையவளாய் . பலியிட்ட - பிச்சையிட்ட , மால்கொடு - காதல் மயக்கம் கொள்ளச்செய்து . பெய்வளை - கையில் பெய்து வைத்த வளையல்களை . கொள்வது - கவர்வது . சுண்ணம் - திருநீறு . ஆடிய - பூசிய . சால அழகிது - மிகமிக அழகாயிருக்கிறது ! என்று புகழ்வது போல இகழ்தல் . திருநீறு பூசித் துறவுக்கோலம் கொண்டவர் இவ்வாறு செய்வது அழகன்று என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

முல்லை வெண்நகை மொய்குழ லாயுனக்
கல்ல னாவ தறிந்திலை நீகனித்
தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு கின்றனை நங்கையே.

பொழிப்புரை :

முல்லையரும்புகளைப் போன்ற ஒளிச் சிரிப்பையும் , வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடைய நங்கையே ! கனிகள் உடையதாகிய பொழில் சூழ்ந்த பழைய தோணிபுரத்து இறைவர்க்கு நீ நல்லவளாகின்றனை ; ஆயினும் உனக்கு அவன் அல்லனாவதனை நீ அறிந்திலை .

குறிப்புரை :

மொய்குழலாய் - செறிந்தகூந்தலை உடையவளே ! அல்லனாவது - உன்னை ஏற்றுக்கொள்ளாது அயலானாயிருப்பதை . அறிந்திலை - அறியவில்லை . கனித்தொல்லையார் பொழில் - கனிகளோடு கூடிய சோலை ; தொல்லைத் தோணிபுரம் என்க . நல்லையாயிடுகின்றனை - நல்லவளாய் அவன்மேல் அன்புகொண்டு ஒழுகு கின்றாய் .

பண் :

பாடல் எண் : 7

ஒன்று தானறி யாருல கத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணி புரவர்தம்
கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே.

பொழிப்புரை :

தலைவிக்குற்ற நோயின் காரணம் வேறொன்றாதலை இவ்வுலகத்தவர் அறியார் ; நின்று சொல்லி அவளுக்கு நிகழ்ந்த நினைப்பு இல்லாதவர்கள் ; நெருங்கிய நீண்டுயர்ந்த பொழில்களை உடைய தோணிபுரத்து இறைவருடைய கொன்றை மலரைச் சூட விழையும் குறிப்பே அந்நோய்க்குக் காரணமாகும் .

குறிப்புரை :

உலகத்தவர் - உலகில் உள்ள மக்கள் . ஒன்று தான் அறியார் - நிகழ்ந்ததொன்றையும் அறியமாட்டார்கள் . நின்று சொல்லி - காதல்மயக்கம் கொண்ட அப்பெண்ணிடம் சென்று நின்று அறிவுரை சொல்லி . நிகழ்ந்த நினைப்பிலர் - அவளுக்கு எதனால் இது நிகழ்ந்தது என்ற நினைப்பிலராயினர் . அவர் சூட்டச் சூடிக் கொண்டு அவர்க்கு மனைவியாகும் காமக் குறிப்பால் அங்ஙனம் ஒழுகுகின்றாள் என் மகள் . இஃது அறியாதவராய் அறிவுரை சொல்லி நிற்கின்றனரே அவர் ஒன்றுமறியாதவர் போலும் எனச் செவிலி உலகவரை நோக்கி இரங்கியது .

பண் :

பாடல் எண் : 8

உறவு பேய்க்கண முண்பது வெண்தலை
உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவ ளென்கண்டன் பாவதே.

பொழிப்புரை :

உறவு பேய்க்கூட்டங்கள் ; உண்பதோ வெண் தலையில் ; வாழ்வதோ சுடுகாட்டில் ; உடலின் ஒரு கூற்றிலோ ஒரு பெண்கொடி ; துறைகள் பொருந்திய கடலை அடுத்த தோணிபுரத்து உறைகின்ற இறைவனாராகிய பெருமானிடத்து இவள் இவற்றுள் எதனைக்கண்டு அன்பு ஆயினள் ?

குறிப்புரை :

உறவு பேய்க்கணம் - தமக்கு உறவுடையவான பேய்க் கூட்டங்கள் . உண்பது வெண்தலை - உண்ணும் பாத்திரம் வெள்ளிய மண்டையோடு . உறைவது ஈமம் - தங்குமிடம் இடுகாடு . இவை மட்டுமல்ல . அவர் முன்பே மணமானவர் என்பதை அறிவிப்பது . உடலிலோர் பெண்கொடி என்பது . பெண்கொடி - பார்வதி . துறைகளார் - கடல்துறைகள் பொருந்திய . இவள் எதைப் பெருமையாக அவனிடம் கண்டு அவன்மேல் காதல்கொள்கிறாள் என இரங்கிக் கூறினாள் செவிலி .

பண் :

பாடல் எண் : 9

மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவள்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே.

பொழிப்புரை :

மேகம் போன்ற கரிய யானையின் தந்தங்களைப் போன்ற தனங்களை உடையவர் காதலித்துச் செல்ல அவர்பின் யானும் சென்று காதலிக்க அவர் அழகில் ஈடுபட்டு அடிமையேன் ஆயினேன் .

குறிப்புரை :

மாகம் - மேகம் ; மேகம்போன்ற கரிய யானை என இயைக்க . மருப்பேர்முலை - தந்தங்களை ஒத்த தனங்கள் . போக - பல பெண்களும் காதலித்துப் பின்செல்ல . யானும் - தோழியாகிய யானும் . அவள் - தலைவி . புக்கதேபுக - செல்லும் வழியிலேயே செல்லுதலால் . யானும் - அவர்க்கு இனி ஆளதே ஆக . நானும் அப்பெருமானழகில் ஈடுபட்டதால் அடிமையேன் ஆயினேன் என்க .

பண் :

பாடல் எண் : 10

இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய காரரக் கன்றனைத்
துட்ட டக்கியதோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே.

பொழிப்புரை :

என் பெண்கொடியாகிய மகள் , தன் தொல்லைகளால் உழந்து இசைபாடிய இராவணனாகிய கரிய அரக்கனது தீய செயலை அடக்கிய தோணிபுரத்து இறைவராகிய அட்டமூர்த்திக்கு அன்புகொண்டவளாகித் தன் விருப்பத்திற்கு உரியனவற்றைச் செய்பவளாயினள் .

குறிப்புரை :

இட்டமாயின - தனக்கு விருப்பமானவற்றையே . கட்டம் - வீண் வார்த்தைகளாகிய செருக்குமொழி . காரரக்கன் - கரிய நிறம் பொருந்திய அரக்கன் . துட்டடக்கிய - துட்டத்தை அடக்கிய . அட்டமூர்த்திக்கு - எட்டு வடிவமாய் இருக்கின்றவனுக்கு . அன்பதுவாகி - அன்புடையவளாகி .

பண் :

பாடல் எண் : 1

துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண் திங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே.

பொழிப்புரை :

கோவண ஆடையையும் , வெண்ணீற்றுப் பொடி யணிந்த மேனியையும் , பொன் விரிந்து மலர்ந்தாலொத்த சடையையும் உடைய புகலூர்த்தலத்துப் பெருமானே ! மின்னல் மலர்ந்தது போன்ற வெண்திங்களைப் பாம்புடன் எதற்காகத் தேவரீர் திருச்சடையில் உடன்வைத்துக் கொண்டுள்ளீர் ?

குறிப்புரை :

துன்னம் - தைக்கப்பட்டதாகிய கோவணம் . சுண்ண வெண்ணீறு - திருவெண்ணீற்றுப்பொடி . பொன்நக்கு அன்ன சடை - பொன்னொளி விளங்கும் சடை . மின்நக்கு அன்ன - மின்னல் விளங் கினாற் போன்ற ஒளியை உடைய . என்னுக்கோ - எதற்கோ . உடன் வைத்திருப்பது - பகையாயினவற்றை ஒன்றாய் வைத்திருப்பது .

பண் :

பாடல் எண் : 2

இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்
நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பி லாத பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி யொள்வளை சோருமே.

பொழிப்புரை :

இப்பெண் , நெட்டுயிர்க்கும் பாம்பையும் , அதனால் கவ்வப்படுகின்ற திங்களையும் , நுரைத்தெழுந்து அலைவீசும் கங்கையையும் நுண்ணிய செஞ்சடையில் வைத்துக் குற்றமில்லாத பொழில்கள் சூழ்ந்த புகலூரில் உறையும் பெருமானை உரைக்குமாறு கூறித் தன் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்கின்றாள் .

குறிப்புரை :

இரைக்கும் - சீறும் அல்லது பெருமூச்சு விடும் . எறிதரு - அப்பாம்பினால் பகைக்கப்படும் , நுண்ணிய - மெல்லிய . புரைப் பிலாத - குற்றமில்லாத . உரைக்குமா சொல்லி - உரைக்கும் இலக்கணம் எப்படியோ அப்படியே சொல்லி ; பிறரை உரைக்கும்படி சொல்லி எனலும் ஆம் , ஒள்வளை சோரும் - ஒள்ளிய வளையல்களைக் கழல விடுவாள் .

பண் :

பாடல் எண் : 3

ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்
ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று
பூசல் நாமிடு தும்புக லூரர்க்கே.

பொழிப்புரை :

அசைந்தாடும் அரவத்தின் படத்தைப் போன்ற அல்குலை உடைய என் சோர்குழலாளாகிய பெண்ணைச் சுற்றத்தார் முதலாயினோர் ஏசலாகும் பழி சுமத்தி அவள் எழிலைக் கொண்டனர் . ஆதலால் , ` ஓ , மகளே ! சொல்வாயாக ! முறையோ ` என்று புகலூர் இறைவர்க்கு நாம் பூசல் இடுவோமாக .

குறிப்புரை :

ஊசலாம் - மனம் இங்குமங்கும் ஊஞ்சல்போல அலையலாகும்படி அல்லது ஊஞ்சல்போல இங்குமங்கும் எங்கும் அசைந்தாடும் பாம்பு ; அல்லது சோர்குழல் ஊசலாம் என்க . அரவல்குல் - பாம்பின் படம்புரையும் அல்குல் . சோர்குழல் - அவிழ்ந்து விழும் கூந்தலினை உடைய என் மகள் . ஏசலாம்பழி - ஊரார் ஏசுதலாகின்ற பழியை . தந்து எழிலைக் கவர்ந்தார் . ஓ சொலாய் - ( மகளே நிகழ்ந்தது யாது ?) முறையோ சொல்வாயாக . புகலூர் இறைவர்க்கு முறையோ என்று பூசல் நாமிடுதும் - புகலூர் இறைவரிடத்துச் சென்று பெருமானே நீ செய்தது நீதியோ என்று ஆரவாரச் சண்டையிடுவோம் . இது செவிலி அல்லது தோழி கூற்று .

பண் :

பாடல் எண் : 4

மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப் பிலாத தலைவனைப்
புன்னைக் கானற் பொழிற்புக லூரனை
என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே.

பொழிப்புரை :

மின்னலையொத்த இடையாளாகிய உமையினை ஒருபங்கில் உடையவனும் , தன்னை நிகர்க்குமொன்றில்லாத தலைவனும் ஆகிய புன்னைக்கானல் பொழில் சூழ்ந்த புகலூரனை என் உள்ளத்து வைத்து அடியேன் இன்பமுற்றிருப்பேன் .

குறிப்புரை :

மின்னின் - மின்னலினை . நேர் - ஒத்த ; இடையாளாகிய உமை என்க . பங்கன் - பக்கத்தே உடையவன் . தன்னை நேர் ஒப்பிலாத தலைவனை - தன்னை வேறு யாரும் ஒவ்வாத தலைமை யுடையோனை . ` மற்றாரும் தன்னொப் பாரில்லாதானை `. புன்னைக் கானல் - புன்னைமரச்சோலை . என்னுளாக - என் மனத்துள்ளாக .

பண் :

பாடல் எண் : 5

விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்க ளோதி யெழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனில்
புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே.

பொழிப்புரை :

விண்ணிற் பொருந்திய பிறைமதியினைச் சூடிய அருள்வேந்தனை , நாமங்கள் கூறியும் , திருவைந்தெழுத்தால் தியானித்தும் , கண்ணினாற் கழலடிகளைத் தரிசிக்கும் இடங்கள் எவை என்றால் அப்புண்ணியன் எழுந்தருளியிருக்கும் புகலூரும் என் நெஞ்சமும் ஆம் .

குறிப்புரை :

விண்ணினார்மதி - வானத்திலே பொருந்திய மதி . நாமங்கள் எண்ணி - அவனது திருப்பெயர்களை எண்ணி . எழுத்தஞ்சும் ஓதி - திருவைந்தெழுத்துக்களை ஓதி . கண்ணினால் - கண்களினால் . கழல் - திருவடி . காண்பிடம் - பெருமானைக் காணுமிடம் . எது எனில் - எதுஎன்றால் . புண்ணியனாய பெருமான் எழுந்தருளியுள்ள புகலூரும் என் மனமுமே ஆகும் . புறக்கண்களால் புகலூரிலும் , அகக்கண்களால் நெஞ்சிலும் காணலாம் . சாதனம் நாமங்களை ஓதி எழுத்தஞ்சும் எண்ணுதல் .

பண் :

பாடல் எண் : 6

அண்ட வாண ரமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை யோதிய பாடலன்
தொண்ட ராகித் தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து ளார்புக லூரரே.

பொழிப்புரை :

புகலூர்த் தலத்து இறைவர் , தேவர்கள் அமுதுண்ணவும் தாம் நஞ்சுண்டவர் ; பழமையில் நான்மறைப் பாடல்களால் ஓதப்பட்டவர் ; தொண்டராகித் தொழுது மதிக்கின்றவர்களின் இதயத் தாமரையில் உள்ளவர் ஆவர் .

குறிப்புரை :

அண்டவாணர் - தேவர் . பாடலன் - பெருமை யுடையவன் . அல்லது பாடலைப் பாடுபவன் என்க . மதிப்பவர் - தியானிப்பவர் . புண்டரீகம் - நெஞ்சக்கமலம் .

பண் :

பாடல் எண் : 7

தத்து வந்தலை கண்டறி வாரிலைத்
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர்க் கல்லது
தத்து வனலன் தண்புக லூரனே.

பொழிப்புரை :

தத்துவங்களின் கூறுபாடுகளை முடிவு போகக் கண்டு அறிவார் இலர் ; அவ்வாறு தத்துவங்களை முடிவு போகக் கண்டவர் காணாதவரேயாவர் ; தத்துவம் தலைநின்றவர்க்கே அல்லது தத்துவவடிவானவன் அல்லன் புகலூர்ப் பெருமான் .

குறிப்புரை :

தத்துவம் தலைக்கண்டு அறிவாரிலை - முப்பத்தாறு தத்துவங்களையும் உள்ளவாறு ஆராய்ந்து அதனை அறிபவர்கள் இல்லை . தத்துவந் தலை கண்டவர் - தத்துவங்களை ஆராய்ந்தவர் . கண்டிலர் - தத்துவாதீதனாகிய இறைவனை அறியாதுபோயினர் . தத்துவம் தலைநின்றவர்க்கல்லது - தத்துவங்களை ஆராய்ந்து அவற்றைக் கடந்து நிற்பவர்க்கல்லாமல் . தத்துவனலன் - அவன் மெய்ப்பொருளல்லன் . தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பெருமானைக் காணுபவர் இல்லை . அப்படி ஆராய்ச்சியில் ஈடுபட்டார் பலர் தத்துவ அளவிலே நின்று தத்துவாதீதனாயிருக்கும் பெருமானை அறியாதவராயினர் . தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்க்கல்லது அவன் உண்மையான வனல்லன் என்க . முன்னைய மூன்றும் முப்பத்தாறு தத்துவங்களைக் குறிக்கும் . நான்காவது வரியில் தத்துவம் - மெய்ப்பொருள் .

பண் :

பாடல் எண் : 8

பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளி றஞ்சினைப்
பொருங்கை யானைகண் டீர்புக லூரரே.

பொழிப்புரை :

புகலூர்த்தலத்து இறைவர் , பெருங்கையோடு பிளிறி வருவதாகிய ஒரு வலியகையானையை உரித்துப் போர்த்த இயல்பினர் ; துதிக்கையை உடைய மதயானைகளாகிய ஐம்புலன்களைப் பொறாது வெல்லும் ஆனைபோல்வார் ஆவர் .

குறிப்புரை :

பெருங்கை - நீண்டு புரளும் துதிக்கை . பிளிறி - அலறி . கருங்கையானை - கரிய கையையுடைய யானை . பெருங்கை யானை கருங்கையானை எனத் தனித்தனி கூட்டுக . களிற்றியானை - இருபெயரொட்டு . உரி - தோல் . வரும் - நம்மை அடரவரும் , கை யானை - கையினையுடைய யானை ; அல்லது நம்மைத் துன்புறுத்தும் மேற் கோளை யுடையதாய் வரும் யானைகள் ; அவை ஐம்பொறிகள் . மத களிறு அஞ்சு - ஐம்பொறிகள் . பொருங்கையான் - போரிட்டழிக்கும் கையை உடையவன் . கை - மேற்கோள் எனினுமாம் . இதற்கு ஆனை - ஆனை போன்றவன் என்க .

பண் :

பாடல் எண் : 9

பொன்னொத் தனிறத் தானும் பொருகடல்
தன்னொத் தநிறத் தானு மறிகிலாப்
புன்னைத் தாது பொழிற்புக லூரரை
என்னத் தாவென என்னிடர் தீருமே.

பொழிப்புரை :

பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமதேவனும் , அலைவீசும் கடலையொத்த நீல நிறத்தவனான திருமாலும் அறியப் படாத இயல்பினரும் புன்னையின் மகரந்தங்களை உடைய பொழில் சூழ்ந்த திருப்புகலூரின்கண் எழுந்தருளியிருப்பவருமான பெருமானை ` என் தந்தையே !` என்று கூற என் இடர்கள் அனைத்தும் தீரும் .

குறிப்புரை :

பொன்னொத்த நிறத்தான் - பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமன் . பொரு - அலைகளால் சண்டையிடும் . கடல் தன்னொத்த நிறத்தான் - கடல்வண்ணனாகிய திருமால் . அறிகிலா - அறிய முடியாத புகலூர் என்க . புன்னைத்தாது பொழில் . புன்னை மலரின் மகரந்தம் செறிந்த சோலை ; புன்னைமலர்ச்சோலை . என்னத்தா என - என் தந்தையே என்று கூற . தீரும் - நீங்கும் .

பண் :

பாடல் எண் : 10

மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்திரள் தோண்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக லூரைத் தொழுமினே.

பொழிப்புரை :

மதச் செருக்குடையவனாய்ச்சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற இராவணனின் திரண்ட தோள்களும் , முடிபத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும் , தன் நரம்புகளே யாழாகக்கொண்டு அவன் ஏத்துதலும் மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக .

குறிப்புரை :

மத்தனாய் - உன்மத்தனாய் . எத்தினான் - எற்றினான் என்பதன் திரிபு . தூக்கி அகற்ற எண்ணியவன் . இற - நெரிய . விரலால் ஒத்தினான் - கால்விரலை ஊன்றினான் . ஒற்றினான் ஒத்தினான் என்றாயது . ஒருங்கு ஏத்தலும் - பின்னர் இறுமாப்பொழிந்து ஒருசேர வணங்குதலும் . பொத்தினான் - காப்பாற்றினான் .

பண் :

பாடல் எண் : 1

பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! நீ முற்பிறவிகளிற் செய்த பழவினைகளின் பயனைக் கண்டும் கண்டும் பின்னும் களிப்புற்றுக் கெடுகின்றனையே , வண்டு உலாவுகின்ற மலரையணிந்த செஞ்சடை உடையவனாகிய திருவேகம்பத்துப் பெருமானுக்குத் தொண்டனாகி உன் துயர்கள் தீரும்பொருட்டுத் திரிவாயாக .

குறிப்புரை :

பண்டு செய்த பழவினை - முற்பிறவிகளிற் செய்த சஞ்சிதம் . பயன் - பிரார்த்தம் . கண்டும் கண்டும் - அனுபவத்தால் பார்த்தும் பார்த்தும் . களித்தி - களிப்படைகின்றாய் . காண் - அசை . வண்டுலா மலர் - தேனுண்ண வண்டுகள் உலவுகின்ற மலர்கள் . திரியாய் - திரிவாயாக . துயர்தீர - அத்துன்பம் நீங்க .

பண் :

பாடல் எண் : 2

நச்சி நாளும் நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழில்
கச்சி யேகம்ப மேகை தொழுமினே.

பொழிப்புரை :

அடியார்கள் நாள்தோறும் நசை உடையவராய் நயந்து தொழவும் , உமைநங்கையார் இச்சையால் வழிபடவும் கண்டு , செறிந்த இனிய பொழில்களை உடைய கச்சியேகம்பத்தினை நீங்களும் கைகளாற் றொழுவீர்களாக .

குறிப்புரை :

நச்சி - அன்புகொண்டு . நாளும் - நாடோறும் . நயந்து - விரும்பி . இச்சையால் - ஆசையால் . உமைநங்கை - காமாட்சி . கொச்சையார் குறுகார் - அறிவில்லாதவர்கள் சென்றடையார் . இத் தலத்துக் காமாட்சி வழிபட்டதைக் குறித்தது இரண்டாவது தொடர் .

பண் :

பாடல் எண் : 3

ஊனி லாவி யியங்கி யுலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானுலாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே.

பொழிப்புரை :

கச்சி ஏகம்பர் , உடல்கள்தோறும் உயிராய் இயங்கி உலகமெல்லாம் பொருந்திய இயல்பினை உடையவராயினும் , வான மெங்கும் உலாவிய இசை விளங்கும் படியாக வெவ்விய சுடுகாட்டில் நட்டமும் ஆடுவர் .

குறிப்புரை :

ஊனில் ஆவி - உயிர்கள் உடலினுள் பொருந்தி . இயங்கி - இயங்க என்பது இயங்கி எனத் திரிந்தது . உலக முழுவதும் தானு லாவிய தன்மையர் ஆயினும் - தான் நிறைந்த தன்மையை உடையவர் ஆனாலும் . வானுலாவிய பாணி - ஆகாயமெங்கும் உலவும் தாள ஓசை . பிறங்க - விளங்க . வெங்கான் - கொடிய இடுகாடு .

பண் :

பாடல் எண் : 4

இமையா முக்கண ரென்நெஞ்சத் துள்ளவர்
தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர்
இமையோ ரேத்த இருந்தவ னேகம்பன்
நமையா ளும்மவ னைத்தொழு மின்களே.

பொழிப்புரை :

இமையாத முக்கண்ணை உடையவரும் , என் நெஞ்சத்தின்கண் உள்ளவரும் , தம்மை யாரும் அறியவொண்ணாத பெருந்தகைமை உள்ளவரும் . தேவர்கள் ஏத்துமாறு வீற்றிருந்தவரும் , நம்மையாள்பவருமாகிய திருவேகம்பரைத் தொழுவீர்களாக .

குறிப்புரை :

இமையா - இமைக்காத . முக்கணர் - மூன்றுகண்களை உடையவர் . இமைத்தால் . கண்பொத்தி பார்வதி விளையாடிய போது ஏற்பட்ட இருண்டநிலை உலகிற்கு உண்டாமோ என்னும் கருணையால் இமையாதிருக்கும் முக்கணர் என்க . தம்மையாரும் உள்ளவாறறிய முடியாத தன்மையர் என்க . ஆளும் - நம்மை ஆட்கொள்ளுவான் .

பண் :

பாடல் எண் : 5

மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி யேகம்பத் தெந்தையே.

பொழிப்புரை :

கச்சியேகம்பத்தின்கண் எழுந்தருளியுள்ள எந்தை , எனக்கு மருந்தும் , சுற்றமும் , மக்களும் ஆகப் பொருந்திநின்று விளங்கும் புண்ணிய வடிவினன் ; கரிய பெரிய கண்ணை உடைய உமாதேவி கைதொழ இருந்தவன் ஆவன் .

குறிப்புரை :

எனக்குப் பொருந்தி நின்று மருந்தினோடு நல் சுற்றமாய எம் புண்ணியன் எனக் கூட்டுக . பொருந்தி நின்று - துணையாய்ப் பொருந்தித்தோன்றி . ஆய - ஆகிய . கருந்தடங்கண்ணினாள் - கரிய பெரிய கண்ணை உடையவளாகிய . காமாட்சி வழிபட்ட வரலாற்றை உட்கொண்டது இத்திருப்பாடல் ( எந்தை - எங்கள் தந்தை .)

பண் :

பாடல் எண் : 6

பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க்
கருளு நன்மைதந் தாயவ ரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
இருள்கெ டச்சென்று கைதொழு தேத்துமே.

பொழிப்புரை :

பற்று அற்றவர்களுக்குப் பொருளும் , நற்சுற்றமும் , அருளும் , நன்மைதந்து ஆதலுற்ற அரும்பொருளும் ஆகியவனும் , சுருளுதலைக்கொண்ட செஞ்சடை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கச்சிஏகம்பத்தை , உம்மைச்சார்ந்த இருள் மலங்கெடச் சென்று கரங்குவித்து வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

பற்றிலார்க்குப் பொருளினோடு நற்சுற்றமும் அருளுமாகிய நன்மைகளைத்தந்து நிற்கின்ற அரியபொருள் . பொருள் - பொன் , மணி , நெல் முதலிய செல்வங்கள் . பற்றிலர்க்கு - பிற பற்று ஒன்றும் இல்லாதவர்களுக்கு . நன்மை தந்து - நன்மைகளைக் கொடுத்து . சுருள்கொள் - சுருளுதலைக்கொண்ட . இருள் - ஆணவ இருள் . ஏத்தும் - தோத்திரம் சொல்லி வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 7

மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்
தாக்கு மைவர்த மாப்பை யவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சியே கம்பனே.

பொழிப்புரை :

கச்சியேகம்பத்து இறைவன் , மெய் , வாய் , கண் , மூக்குச் செவியாகி வந்து ஆக்கிய ஐம்புலன்களினாலாய கட்டினை அவிழ்த்தருளித் தன் திருக்கண்களால் நம்மை நோக்குவான் ; நோய்களை உண்டாக்கும் வினைகள் நம்மிடத்துவாராமற் காக்கும் நாயகன் ஆவன் .

குறிப்புரை :

மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறிகளும் இங்குச் சொல்லப்பட்டன . ஆக்கும் - வினையை உண்டாக்குகின்ற ஐவர்தம் - ஐம்பூதங்களினுடைய . ஆப்பு - கட்டு . அவிழ்த்து - பந்திக்காமல் நீக்கி . அருள் - அருட்பார்வையால் . நமை - நம்மை . நோய் - துன்பம் . அவிழ்த்து நம்மை நோய்வினை வாராமே அருள நோக்குவான் எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 8

பண்ணி லோசை பழத்தினி லின்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சியே கம்பனே.

பொழிப்புரை :

கச்சியேகம்பத்து இறைவன் பண்ணின் இசையாகவும் பழத்தில் இனிய சுவையாகவும் , பெண் ஆண் என்று ஒருபாற்படுத்திப் பேசுதற்கு அரியவனாகவும் , வண்ணம் இல்லாதவனாகவும் , வடிவம் வேறாயவனாகவும் , கண்ணினுட் கருமணியாகவும் உள்ளான் .

குறிப்புரை :

பண் - இராகம் . ஓசை - சுரம் . பண்ணில் ஓசையும் , பழத்தினில் இனிய சுவையும் பிரிவின்றியிருத்தல் போல நும்மொடு உடனாயிருப்பவன் . பெண் என்றாயினும் , ஆண் என்றாயினும் சொல்லுதற்கியலாதவன் . வண்ணமில்லி - தனக்கென ஒரு நிறமில்லாதவன் . வடிவு வேறாயவன் - தனக்கென ஒரு வடிவமில்லாதவன் . வேறாதல் - இங்கு இன்மையைக் குறித்தது . கண்ணிலுண்மணி - கண்ணின்பாவை மணியை ஒத்தவன் , இப்பாடல் இறைவன் உயிர்களுள் அத்துவிதமாய்க் கலந்து நிற்கும் நிலையும் காட்டுவிக்கும் நிலையும் உணர்த்தப்படுவது .

பண் :

பாடல் எண் : 9

திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சியே கம்பனே.

பொழிப்புரை :

கச்சியேகம்பத்து இறைவன் , திருமகளின் நாயகனாகிய திருமாலும் , சிவந்த தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் அஞ்சி வெருவும்படியாக விளங்குகின்ற நிமிர்ந்த சோதி ஒளியாகவும் , ஒப்பற்றவனாகவும் , உணர்வு ஆகவும் , உணர்வல்லாத கருவினுள் நாயகனாகவும் உள்ளான் .

குறிப்புரை :

திரு - இலக்குமி . அயன் - பிரமன் . செம்மலர் - செவ்விய தாமரை . வெருவ - அஞ்ச . ஒருவன் - ஏகன் . உணர்வாய் - உணர்வு வடிவாய் இருப்பவன் சித்தவடிவமானவன் என்க . உணர்வல்லதோர் கருவுள் நாயகன் - உணர்வில்லாத சடப்பொருள்களிலும் நிறைந்திருக்கும் தலைவன் . இறைவன் சட சித்துக்கள் அனைத்திலும் நிறைந்திருப்பவன் என்பதாம் .

பண் :

பாடல் எண் : 10

இடுகு நுண்ணிடை யேந்திள மென்முலை
வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிக ளெம்மை யருந்துயர் தீர்ப்பரே.

பொழிப்புரை :

மிகச் சிறிய ( இடுகிய ) நுண்ணிடையையும் , இளமை உடைய சற்றே ஏந்தினாற்போன்ற மென்முலையையும் , உடைய வடிவினையுடைய பெண்கள்பால் உள்ளம் வையாதீர்கள் ; திருநீற்றுப்பொடியணிந்த மேனியனாகிய , பொழில் சூழ்ந்த கச்சியேகம்பத்து எழுந்தருளியுள்ள இறைவன் எம்மையெல்லாம் அரிய துயரங்கள் தீர்த்துக் காப்பர் .

குறிப்புரை :

இடுகு - சிறுத்த . நுண் - நுண்ணிய . ஏந்து - நிமிர்ந்த . வடிவின் மாதர் - அழகிய வடிவினையுடைய பெண்கள் . திறம் - தன்மை . வையன்மின் - ஈடுபடுத்தாதீர்கள் . அருந்துயர் - அரிய துன்பம் . தீர்ப்பர் - போக்கிக் காப்பர் என்றபடி .

பண் :

பாடல் எண் : 11

இலங்கை வேந்த னிராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக் கவ்விர லூன்றலும்
கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே.

பொழிப்புரை :

எங்கள் நாதனாகிய கச்சியேகம்பத்து இறைவன் , இலங்கை வேந்தனாகிய இராவணன் சென்று தம் திருக்கயிலாயத்தை எடுக்க முற்படுதலும் , தன் திருவிரலை ஊன்றக்கலங்குதலுற்று ` கச்சி ஏகம்பத்து இறைவா !` என்று அவன் அலறினன் ; அதுகேட்டு நலம் பெற மீளும் செலவை அவனுக்கு அருளிய பெருங்கருணைத்திறம் உடையவன் .

குறிப்புரை :

விலங்கல் - கயிலைமலை. கச்சியேகம்பவோ - கச்சியேகம்பனே முறையோ. என்றலும் - என்று தோத்திரித்தலும். நலங்கொள் செலவு - நன்மையைக்கொண்ட மீட்சி. நாளொடு வாள் பெற்றுச் சென்றதைக் குறித்ததாம்.

பண் :

பாடல் எண் : 1

பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற் படவடி யோங்களே.

பொழிப்புரை :

தாமரைப்பூமேல் உள்ளவனாகிய பிரமதேவனும் , பூமகளாகிய இலக்குமிநாயகனாகிய திருமாலும் ` யாங்களே பிரமம் ` என்று கூறாது நடுக்குறும்படியாகத் தீ வடிவாகிய பெருமானே ! திருவேகம்பத்தை உடையவனே ! நின் அடியோமாகிய யாங்கள் அல்லற்படுதலும் ஆமோ ?

குறிப்புரை :

பூமேலான் - பிரமன் . பூமகள் கேள்வன் - திருமகள் கணவனாகிய திருமால் . நாமே தேவரெனாமை - நாங்களே பரம் பொருள் என்று கூறாமலும் ; நடுக்குறவும் என்க . தீமேவும் உருவா - சோதி வடிவாய்த் தோன்றியவனே . அடியோங்கள் அல்லற்பட ஆமோ - அடியோங்களாகிய நாங்கள் துன்புறுதல் தகுதியோ .

பண் :

பாடல் எண் : 2

அருந்தி றல்அம ரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.

பொழிப்புரை :

அரிய திறலை உடைய தேவர்களும் , திருமாலும் , பிரமனும் திருத்தமுறநின்று வழிபடும் வண்ணம் உமைநங்கையோடு இருந்த பெருமானது அருள் எழில் சேர்ந்த கச்சி ஏகம்பத்தைப் பொருந்த சென்று தங்கி வழிபடற்கு எழுவோமாக .

குறிப்புரை :

அருந்திறல் - பெறுதற்கரிய வலிமை . திருந்த நின்று - வழிபாட்டு முறையில் செம்மையாக நின்று . பொருந்தச் சென்று புடைபட்டு - ஏகம்பத்தை அடையச் சென்று அடைந்து . எழுதும் - உயர்வு பெறுவோமாக .

பண் :

பாடல் எண் : 3

கறைகொள் கண்டத்தெண் தோளிறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.

பொழிப்புரை :

திருநீலகண்டனும் , எட்டுத்தோள்களை உடைய இறைவனும் , முக்கண்ணினனும் , வேதம் ஓதும் நாவினனும் , தேவர்களுக்கெல்லாம் ஆதியானவனும் ஆகிய பெருமான் உறைகின்ற பூம் பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்தை நெறியினாற் சென்று முந்துறத் தொழுவோமாக .

குறிப்புரை :

ஆதி - தலைவன் . முறையால் - வழிபாட்டு முறையினால் . தொழுதும் - வணங்குவோம் . முந்தி - விரைந்து .

பண் :

பாடல் எண் : 4

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றுமமு தாயவ னேகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.

பொழிப்புரை :

பொறிகளைப் , புலன்களின்வழிப் போதல் தவிர்த்து , உள்ளத்தை ஒரு நெறியின்கண்படச் செய்து நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறிதலுறும் அமுதாகிய பெருமான் எழுந் தருளியுள்ள திருஏகம்பத்தைத் திருவருட் குறிப்பினாற் சென்று கூடித் தொழுவோமாக .

குறிப்புரை :

பொறி - மெய் , வாய் , கண் , மூக்கு , செவி . பொறியால் நுகரப் படும் புலன்கள் என்க . புலன் - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் . போக்கு - குற்றம் . உள்ளத்தை நெறிப்படுத்து - மனத்தை ஒருவழியில் செலுத்தி . அறிப்புறும் - அறிபு என்பதன் விரித்தல் . அறிவுறும் என்பது பொருள் . குறிப்பினால் சென்று - குறிக்கோளொடு சென்று . தொழுதும் - வணங்குவோம் .

பண் :

பாடல் எண் : 5

சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
டந்தி யாயன லாய்ப்புனல் வானமாய்ப்
புந்தி யாய்ப்புகுந் துள்ள நிறைந்தவெம்
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.

பொழிப்புரை :

சிந்தையுள் சிவமாகிநின்ற செம்மையினோடு , அந்தியாகவும் , அனலாகவும் , புனலாகவும் , வானமாகவும் நினைவார் புத்தியாகிய அந்தக்கரணமாகவும் எல்லாவற்றுள்ளும் புகுந்து , உள்ளத்தில் நிறைந்த எந்தையாரின் கச்சிஏகம்பத்தை ஏத்தித் தொழுவீர்களாக .

குறிப்புரை :

ஒளித்த சிந்தை - உயிரறிவு . சிவம் - இன்பம் . செம்மை - பிறழாமை . அந்தியாய் - அந்திக்காலமாய் . புந்தி - அறிவு .

பண் :

பாடல் எண் : 6

சாக்கி யத்தோடு மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார் பாடுசெ லாதுறப்
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே.

பொழிப்புரை :

புத்தமும் , சமணமுமாகிய நெறிகளிற் பட்டுத் திருவருட்செல்வம் இல்லாதவர் மருங்குசெல்லாமல் , மிகுந்த பூக்களைக்கொண்ட சேவடியானது கச்சியேகம்பத்தை நாவினைக் கொண்டு ஏத்தி விரும்பித் தொழுவோமாக .

குறிப்புரை :

சாக்கியம் - புத்தம் . பாக்கியமிலார் - சிவநெறிப் பேற்றைக் கடைப்பிடிக்கும் பாக்கியமில்லாதவர்கள் . பாடு - பக்கம் . உற - பொருந்த ; ஏத்தித்தொழுதும் எனக் கூட்டுக . பூக்கொள் - பூக்களைக் கொண்ட . நாக்கொடு ஏத்தி - நாவைக் கொண்டு புகழ்பாடி . நயந்து - விரும்பி . தொழுதும் - வணங்குவோம் .

பண் :

பாடல் எண் : 7

மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன் னணியம ரர்க்கிறை
காப்ப தாய கடிபொழி லேகம்பம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே.

பொழிப்புரை :

வெறுப்புமிகுந்து மூப்பினோடு எம்மையெல்லாம் கட்டுவதற்கு முன்பே , அணி உடைய அமரர்க்கு இறை உறைவதும் , காவலுடைய மணமிக்க பொழில் சூழ்ந்ததுமாகிய ஏகம்பத்தைச் சேர்வதாக நாம் சென்று தரிசித்து உய்வோமாக .

குறிப்புரை :

மூப்பு - முதுமைத் தன்மை . முனிவு - வெறுப்பு அல்லது கோபம் . உறுத்து - உறுவித்து , அடையச்செய்து . ஆர்ப்பதன் முன் - கூற்றுவன் பிணிப்பதற்கு முன்பு . அணி அமரர் - வரிசைப்பட்ட தேவர் . காப்பதாய - காவலை உடையதாகிய அல்லது ஊருக்குக் காவல் செய்யும் அரணாகிய . கடி - மணம் . சேர்ப்பு - சேரத்தக்க இடம் . காஞ்சியே சிறந்த தல மெனக்கருதி . நாம் சென்றடைந்துய்தும் - நாம் சென்று வழிபட்டு உய்யுநெறி காண்போம் .

பண் :

பாடல் எண் : 8

ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடும்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! ஒலிக்கின்ற பெரிய மயில்போலும் சாயலை உடைய பெண்களோடும் நீ மிகுந்து கொண்ட மயக்கத்தைத் தவிர்வாயாக ; நீலமாகிய பெருமைமிக்க கழுத்தினை உடைய அண்ணலாகிய ஏகம்பனாருடைய கோலமிக்க மலர்ச் சேவடிகளைக் கும்பிட்டு உய்வாயாக .

குறிப்புரை :

ஆலும் - ஆடும் . சாயல் - தோற்றப்பொலிவு . நீ சாலஉறும் மால்தவிர் என்க . சால - மிகவும் . உறும் - கூடுகின்ற . நீ உறும்மால்தவிர் நெஞ்சமே - மனமே நீ அடையும் மயக்கத்தை விடுவாயாக . கோலம் - அழகிய .

பண் :

பாடல் எண் : 9

பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

அனைத்துப் பொய்யையும் விட்ட உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாகவிளங்குபவனும் , சுடர்விடுகின்ற வெண்மழு ஏந்திய கையை உடையவனும் ஆகிய கச்சியேகம்பத்தை விரும்பிப் பொருந்திய தலைவனைத் தொழுவார்க்கு அல்லல்கள் இல்லையாம் .

குறிப்புரை :

புந்தியுள் - மனத்துள் . மெய்யனை - உண்மைப் பொருளாய் விளங்குபவனை . அல்லல் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

அரக்கன் தன்வலி யுன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை கேட்டவ னேகம்பம்
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.

பொழிப்புரை :

தன் ஆற்றலைக் கருதியவனாய்த் திருக்கயிலையைச் சென்று எடுத்தவனாகிய அரக்கனின் முடிகளையும் தோள்களையும் நெரித்தவனும் , அவனது இரக்கத்திற்குரிய இன்னிசையைக் கேட்டருள்புரிந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திரு வேகம்பத்தை நாம் அருள் இறுமாப்புடன் சார்ந்து தொழுவோமாக .

குறிப்புரை :

அரக்கன் - இராவணன் . தன்வலி உன்னி - தன் ஆற்றலை எண்ணி . நெருங்கி நெருக்கி என்று வலித்தல் விகாரம் பெற்றது . இரக்க இன்னிசை - இரக்கத்தோடு அவன்பாடிய இனிய இசை . சாமகானம் . கேட்டவன் - கேட்டருள் புரிந்தவன் . தருக்கதாக - அருள் இறுமாப்பு . அடியோம் என்ற பெருமித நினைவு .

பண் :

பாடல் எண் : 1

பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறை சென்னிவைத் தான்திரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே ! பண்ணிசை காட்டி வழிபடுகின்ற , நிலவுலகிற் பொருந்திய தன் அன்பர்களுக்குத் திருக்கடைக்கண் காட்டி அருளி , கண்ணிற்கருமணி போன்றுள்ளவனும் , சென்னியின்கண் பெண் , பிறை ஆகியவற்றை வைத்தவனும் ஆகிய பெருமானது திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக .

குறிப்புரை :

பண்காட்டிப் பாடிய - இசையைத் தோற்றுவித்துப் புகழ்ப் பாடலைப் பாடுகின்றவர்களாகிய . ( பாடி - படித்தல் ). கொண்டு சிவவேடமணிந்த தன் அடியவர்கட்கு எனவும் ; படி - பூமி என்று கொண்டு நிலஉலகில் உள்ள அடியவர்களுக்காக எனவும் கூறலாம் . கண் - உண்மையறியும் அறிவுக் கண் . கண்ணில் நின்ற மணி - அறிவுக்கறிவு . பெண் - பார்வதி . காட்டி - இடப்பாகத்தில் கொண்டு என்னும் பொருளது . உய் - உய்வாயாக .

பண் :

பாடல் எண் : 2

கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! கொள்ளியாகிய வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும் , உமை பங்கரும் , வெள்ளிய திருவெண்ணீற்றினரும் , அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும் , விடையேறிய தெளிவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக .

குறிப்புரை :

கொள்ளி வெந்தழல் - கொள்ளிக் கட்டையில் பற்றிய வெவ்விய நெருப்பு . வீசி - சுழற்றி ஆடுவார் ; அனலேந்தியாடுவார் என்பதாம் . ஒளி பொருந்திய கணம் - பூதகணங்கள் . வெள்ளியன் - திருநீற்றுப்பூச்சால் வெண்மை நிறமுடையவன் . கரியன் - அகோர முகத்தை உடையவன் . பசு - இங்கு எருது . தெள்ளியன் - தெளிந்த அறிவினன் .

பண் :

பாடல் எண் : 3

ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் குந்தன் னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! தன்னால் நோக்கப்படும் அடியார்கள் நாவினில் அருள் தேன் பாயுமாறு நோக்கும் திருவெண்காட்டை அடைவாயாக ! உலகீர் ! உடல் நோக்கிய சிற்றின்பங்களைவிரும்பி உழலாது , வான்நோக்கும் வழி எதுவோ அதில் நிற்பீர்களாக .

குறிப்புரை :

ஊனோக்கும் இன்பம் - உடலைக் கருதிய இன்பங்கள் . வேண்டி - விரும்பி . உழலாதே - வருந்தாதே . வானோக்கும் வழி - பேரின்பவீட்டைக் கருதும்வழி ; வழியாவதில் நின்மின் என்க . தானோக்கும் - தன்னால் நோக்கப்படுகின்ற என்றாயது . தேன் நோக்கும் - தேனாயுள்ள பெருமானால் விரும்பப்படுகின்ற .

பண் :

பாடல் எண் : 4

பருவெண் கோட்டுப் பைங்கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை யஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடம்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பருத்த வெள்ளிய தந்தங்களையும் , பசுங்கண்களையும் , மதத்தையும் உடைய வேழத்தின் உருவத்தை உமையாள் அஞ்சக் காட்டி நின்றவனும் , பெரிய சாம்பலால் வெள்ளிய இடுகாட்டில் தங்குபவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாம் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக .

குறிப்புரை :

பரு - பருத்த . வேழத்தின் உருவங்காட்டி நின்றான் - ( யானைத் தோலைப் போர்த்து ) யானையின் உருவந்தோன்ற நின்றவன் . பெருவெண்காடு - சங்காரகாலச் சுடலை . வெள்ளிய சாம்பற்காடாக இருத்தலின் பெருவெண்காடு என்றார் .

பண் :

பாடல் எண் : 5

பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புர மோரம்பால்
செற்ற வன்திரு வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! உயிர்களாற் பற்றத்தக்கவனும் , கங்கை , பாம்பு , பிறையுடன் உற்றவனும் சடையினனும் , உயர்ஞானங்கள் கற்றவனும் , கீழ்மைக்குணமுடையார் புரங்களை ஓரம்பாற் செற்றவனும் ஆகிய பெருமான் உறையும் திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக .

குறிப்புரை :

பற்றவன் - எப்பொருட்கும் சார்பாயிருப்பவன் . கயவர் - அசுரர் . உயர் ஞானங்கள் கற்றவன் - கலைஞானங்களை இயல்பாயுணர்ந்தவன் .

பண் :

பாடல் எண் : 6

கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேயடை நெஞ்சமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! உமையாளை ஒருபாகமாய்க் கூடிய வரும் , விசயற்கு வேடனாய் அருள்புரிந்தவரும் , உயர்ந்த சிவனாரும் ஆகிய அன்பானினைவார் சிந்தையில்மேவிய திருவெண்காடனாரின் திருவடியே அடைவாயாக .

குறிப்புரை :

உமையாளொரு பாகமாய்க் கூடினான் என்க . விசயன் - அருச்சுனன் . சேடனார் - பெருமையுடையவர் . சிந்தை மேய வெண் காடனார் - சிந்தையின்கண் எழுந்தருளிய வெண்காடனார் .

பண் :

பாடல் எண் : 7

தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! கங்கை , பாம்பு , மதி ஆகியவற்றை ஒருங்கு தாங்கியவனும் , முறுக்குண்ட புன்சடையுடையவனும் , கீழவர் புரங்களை எரித்தவனும் , நான்கு மறைகளையும் , ஆறங்கங்களையும் விரித்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவெண் காட்டை அடைந்து வழிபடுவாயாக .

குறிப்புரை :

கங்கை , பாம்பு இவற்றை மதியுடன் தரித்தவன் என்க . புரிந்த - கட்டிய அல்லது முறுக்கிய . புன்சடை - மெல்லிய சடை .

பண் :

பாடல் எண் : 8

பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
சிட்ட னாதியென் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! பட்டமும் , இண்டைமாலைகளும் கொண்டு அன்பர்கள் ` உயர்ந்தவனே ! ஆதியே !` என்று சிந்தைசெய்ய நடனமாடும் மூர்த்தியாகவும் , ஞானச்சுடராய் நின்ற அட்டமூர்த்தியாகவும் உள்ள பெருமானின் திருவெண்காடடைந்து வழிபடுவாயாக .

குறிப்புரை :

பட்டம் - நெற்றியிலணியும் அணிகலன் . இண்டை - கண்ணி . சிட்டன் - மேலானவன் . ஆதி - தலைவன் . சிந்தை செய்ய - மனத்தால் தியானிக்க .

பண் :

பாடல் எண் : 9

ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற் கருள்செயும்
கான வேடன்றன் வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! பன்றி வேடம் கொண்ட திருமாலும் , பிரமனும் தானவேடத்தை முன் தாழ்ந்து அறிய வலிமையில்லாத ஞானவேடனும் , அருச்சுனனுக்கு அருள்செய்யும் காட்டு வேடனும் ஆகிய பெருமானின் திருவெண்காடு அடைந்து வழிபடுவாயாக .

குறிப்புரை :

ஏன வேடத்தினான் - பன்றியாய் அவதரித்த திருமால் ; தான் அவ்வேடம் எனப் பிரிக்க . தான் - இறைவன் . அவ்வேடம் - அனலாகிய உருவம் . தாழ்ந்து - உருவமாறி . ஞானவேடன் - ஞானமே வடிவமாயிருப்பவன் . கான வேடன் - காட்டு வேடன் .

பண் :

பாடல் எண் : 10

பாலை யாடுவர் பன்மறை யோதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவ ரங்கமே.

பொழிப்புரை :

பாலைநிலத்தில் ஆடுபவரும் , பல மறைகளை ஓதுபவரும் , சேல்மீன்போன்று காதளவும் ஆடுகின்ற கண்ணை உடைய உமையொருபாகரும் , கடலிற் பொருந்திய விடமுண்டவரும் ஆகிய வெண்காடர்க்கு இறந்தவர் உறுப்புக்களாகிய எலும்புகளே மாலையாவது .

குறிப்புரை :

பாலை ஆடுவார் - பால் அபிடேகம் கொள்பவர் . சேலையாடியகண் - மீனைப்போன்ற கண்கள் . வேலை - கடல் . ஆர் - பொருந்திய . மாலையாவது - மாலையாகப் பயன்படுவது . மாண்டவர் அங்கம் - இறந்தவர் எலும்புகளே .

பண் :

பாடல் எண் : 11

இராவ ணஞ்செய மாமதி பற்றவை
இராவ ணம்முடை யான்றனை யுள்குமின்
இராவ ணன்றனை யூன்றி யருள்செய்த
இராவ ணன்திரு வெண்கா டடைமினே.

பொழிப்புரை :

அறிவைப்பற்றியிருக்கும் பற்று இல்லாதபடி செய்தற்பொருட்டு அயிராவணத்தை உடைய பெருமானை நினைமின் . இராவணனைக் கால்விரலால் ஊன்றி அருள்செய்த அகோர முகத்தினரின் திருவெண்காட்டை அடைவீராக .

குறிப்புரை :

மாமதிபற்று இராவணம் செய - அறிவைப் பற்று இல்லாதபடி செய்தற்பொருட்டு . உள்குமின் எனக் கூட்டுக . ஐராவணம் என்பது ஐயிராவணம் என வந்தது . நான்காம் அடியில் இராவணன் என்பது கரிய நிறமுடையவன் ; அகோர முகத்தினர் எனப் பொருள் தரும் . உமையை ஒருபாகத்துடைமைபற்றி இவ்வாறு கூறினார் .

பண் :

பாடல் எண் : 1

எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனா ரதென்கொலோ.

பொழிப்புரை :

தென்னைகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர் , என்னை எங்கே என்று தேடி , இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர் , திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார் ; அதன் காரணம் என்னை கொல் ?

குறிப்புரை :

எங்கே - எங்கே இருக்கின்றாய் என்று ; எங்கு ஏய் எனப் பிரித்து ஏய்தல் தங்கியிருத்தல் எனலும் ஆம் . இருந்திடம் தேடிக்கொண்டு - தான் தங்கியிருந்த திருமடத்தைத் தேடிக் கொண்டு . அடையாளம் - வெண்ணீறணிந்த திருக்கோலம் . தெங்கே தோன்றும் - தென்னைகளே மிகுந்து காணப்படும் . அங்கே வா - திருவாய்மூராகிய அங்கு வா . அது என்கொலோ அதற்கு என்ன காரணமோ , அறியேன் என்க .

பண் :

பாடல் எண் : 2

மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி
என்னை வாவென்று போனார தென்கொலோ.

பொழிப்புரை :

எம்பெருமானையே நினைந்து , நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமை உடைய மறைக் காட்டுறையும் மணவாளனார் தன்னை வாய்மூர் இறைவனாமாற்றை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார் ; அதன் காரணம் என்னை கொல் ?

குறிப்புரை :

மன்னும் - நிலைபெற்ற . மா - சிறந்த . மணவாளனார் - மணவாளக் கோலத்தோடு வீற்றிருக்கும் இறைவர் . உன்னி உன்னி - அப் பெருமானையே இடைவிடாதெண்ணி . தன்னை வாய்மூர்த் தலைவன் என்று சொல்லி என்க . ஆமா - ஆமாறு .

பண் :

பாடல் எண் : 3

தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன்
அஞ்சே லுன்னை யழைக்கவந் தேனென்றார்
உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூ ரடிகளே.

பொழிப்புரை :

தரித்து ஓரிடத்தில் இராதவர்க்குத் தஞ்சப் பொருளைக் கண்டேன் என்றேன் ; ` அஞ்சாதே ! உன்னை அழைக்க வந்தேன் ` என்று அருளினார் ; ` உய்ந்தேன் ` என்று மகிழ்ந்து எழுந்து ஓட்டம் எடுத்தேன் ; வாய்மூர் அடிகள் வஞ்சனையில் வல்லவரோ ?

குறிப்புரை :

தஞ்சே கண்டேன் - எளிமையாகவே கண்டேன் , தரிக்கிலாது - தாமதியாது . ஆர் என்றேன் - நீவிர் யார் என்று கேட்டேன் . அஞ்சேல் - அஞ்சாதே ; உன்னை அழைக்க வந்தேன் என்று கூறினார் . உஞ்சேன் - உய்ந்தேன் என்பதன் போலி . உகந்தே எழுந்து - மகிழ்வோடு எழுந்து . ஓட்டந்தேன் - ஓடினேன் . ஓட்டந் தந்தேன் என்பதன் மரூஉ . வஞ்சேவல்லர் - வா என்று சொல்லி மறைந்த வாய்மூர் இறைவர் வஞ்சித்தலில் வல்லவர் . வஞ்சம் என்பது ஈறு குறைந்தது .

பண் :

பாடல் எண் : 4

கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
ஒழியப் போந்திலே னொக்கவே யோட்டந்தேன்
வழியிற் கண்டிலேன் வாய்மூரடிகள்தம்
சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ.

பொழிப்புரை :

அவர் என்னைவிட்டு நீங்குமாறு கண்டேனில்லை ; கண்ணெதிரே கண்டேன் ; என்னைவிட்டு அவர் நீங்கியபின் போந்தேனில்லை ; ஒக்கவே ஓடிவந்தேன் ; ஆயினும் இடைவழியிற் கண்டேனில்லை ; வாய்மூர் அடிகளின் மாயச்சுழலில் அடியேன் இவ்வாறு பட்டுச் சுழல்கின்றதன் காரணம் என்னையோ ?

குறிப்புரை :

கழியக் கண்டிலேன் - அவர் மறைவதைப் பார்த்தேனில்லை ; மறைந்திலர் என்பதாம் . கண்ணெதிரே கண்டேன் - கண்ணெதிரே பார்த்தேன் ; தோன்றிக்கொண்டே இருந்தார் . ஒழியப் போந்திலேன் - அவரைவிட்டுத் திரும்பவில்லை . ஒக்கவே - அவருடன் சேரவே . ஓட்டந்தேன் - ஓடினேன் . வழியில் கண்டிலேன் - அங்ஙனம் ஓடிவந்தும் இடையிலே அவரைக் காணவில்லை . சுழி - வாய்மூர் இறைவரது திருவிளையாடலாகிய சுழல் .

பண் :

பாடல் எண் : 5

ஒள்ளி யாரிவ ரன்றிமற் றில்லையென்
றுள்கி யுள்கி யுகந்திருந் தேனுக்குத்
தெள்ளி யாரிவர் போலத் திருவாய்மூர்க்
கள்ளி யாரவர் போலக் கரந்ததே.

பொழிப்புரை :

ஒளியுடையவர் இவரையன்றி மற்றுயாரும் இல்லை என்று நினைந்து நினைந்து மகிழ்ந்திருந்த எளியேனுக்கு , திருவாய் மூரின்கண் தெளிந்தவர் இவர்போலக்காட்டிக் கள்ளம் உடையவர் போல ஒளித்துவிட்டனரே .

குறிப்புரை :

ஒள்ளியார் - அறிவு வடிவமாயிருப்பவர் . தெள்ளியார் - தெளிந்த பேரறிவாளர் ; இவர் திருவாய்மூர்த் தெள்ளியார் இவர்போலத் தோன்றி என்க . கள்ளியாரவர்போல - கள்ளத் தன்மை உடையவர்போல . கரந்ததே - மறைந்ததே ; என்கொலோ என்பதைத் தந்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 6

யாதே செய்துமி யாமலோ நீயென்னில்
ஆதே யேயு மளவில் பெருமையான்
மாதே வாகிய வாய்மூர் மருவினார்
போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ.

பொழிப்புரை :

எச்செயல் செய்தாலும் அவன் செயல் என்று எண்ணினால் அதுவே நல்ல பயனைத்தரும் . அளவில்லாத பெருமையுடையான் அவன் , மாதேவனாகிய வாய்மூர் இறைவா என்றதும் சென்றதும் பொய்யோ ?

குறிப்புரை :

யாதே செய்தும் - பாதகத்தைச் செய்திடினும் . யாம் அலோம் நீ எனில் - ` உலகினில் என் செயல் எல்லாம் உன் விதியே , நீயே உண்ணின்றும் செய்வித்தும் செய்கின்றாயென்றும் நிலவுவதோர் செயலெனக்கு இன்று உன் செயலே என்று நினையின் ` என்றபடி . யாம் செய்திலேம் நீயே செய்விக்கின்றாய் என நினைத்தால் . ஆதே - அதே சுட்டுநீண்டது . ஏயும் - அதனைப் பொருந்தும் எனக் கொள்கின்ற . மாதேவன் - பெரியதேவன் . போதே - வருவாயாக . என்றும் - என்றதும் . புகுந்ததும் - இங்கு வந்ததும்

பண் :

பாடல் எண் : 7

பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா
ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ.

பொழிப்புரை :

பாடி அதனாற்பெற்ற பரிசிலாகிய பழங்காசினைக் கொண்டு வாடிய வாட்டத்தைத் தவிர்ப்பாரைப்போலத் திருவாய் மூர்க்கே தேடிக்கொண்டு ஓடிவந்து இங்கே ஒளித்தவாற்றிற்கான காரணம் என்னையோ ?

குறிப்புரை :

பாடிப்பெற்ற - திருவீழிமிழலையில் பஞ்சமேற்பட்ட காலை மிழலை இறைவரிடம் சம்பந்தர் பாடிப்பெற்ற பரிசில் . பழங்காசு - பரிசிலாகப் பாடி வாங்கிய பழையவாகியவாசிக் காசுகள் . வாடி வாட்டம் - வாடியவாட்டம் என்று பிரித்து மனம் வாடிய வருத்தம் என்க . தவிர்ப்பார் - நீக்கிய இறைவர் . அவரைப்போல் முதலில் மாற்றுக் குறைந்த காசு வழங்கிப் பின் வருத்தந்தணித்து நற்காசு வழங்கிய மிழலை இறைவரைப்போல முதலில் துன்பம் தந்து பின்பு இன்பம் தரும் திருக்குறிப்புப்போலும் என்க . என்னைத் தேடிக் கொண்டு திருவாய்மூர்க்கே எனா - தேடிக்கொண்டு வந்து திருவாய் மூர்க்கே போவோம் என்று சொல்லி .

பண் :

பாடல் எண் : 8

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.

பொழிப்புரை :

வேதங்களாற் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும் , செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன்பாடி அடைப்பித்தவராகிய திருஞான சம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார் ; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ ? இவர் பித்தரேயாவர் .

குறிப்புரை :

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரைத் திருமறைக் காட்டுத் திருமடத்திற் காணாது தேடித் திருவாய்மூர்க்கு வந்து கொண்டிருக்கும் பொழுது பாடியது இச்செய்யுள் . திறக்கப்பாடிய என்னினும் ஒரு பாடலில் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் ; உந்நின்றார் . அவருக்குத் தம்மை மறைக்க வல்லரோ என்றார் . உறைப்பு - திருத்தொண்டின் வலிமையால் , உந்நின்றார் - உவ்விடத்தே நின்றார் . சம்பந்தர் அப்பரைக் காணாது தேடிப் பின் வருதலால் உந்நின்றார் என்றார் . மறைத்தமையால் இவர் பித்தர் என்க .

பண் :

பாடல் எண் : 9

தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.

பொழிப்புரை :

தனக்கு உள்ளம் பொருந்தாமையைத் தவிர்த்தருள் வாயாக என்று வேண்டினும் , பொய்யாக நினைக்கும் எளியேன் பொய்க்கும் அருள் செய்யும் நின்மலனாகிய இறைவன் , எனக்கு எதிரேவந்து வாய்மூருக்கே வா என்று கூறிவந்து தீர்த்தத்தை அடுத்த பொற்கோயிலில் வந்து புகுந்ததும் பொய்தானோ ?

குறிப்புரை :

தனக்கு ஏறாமை - தனக்குப்பொருந்தாத செயலாக . தவிர்க்க என்று - கதவைத் திறக்க என்று . நினைந்தேன் பொய்க்கு - நினைத்து விரும்பிய எனது பொருளற்ற பாட்டிற்கும் . எனக்கே வந்து - என்னிடத்திலே வந்து . வாய்மூர்க்கே எனா - வாய்மூர்க்கே போவோம் என்று சொல்லி . எதிர் - இவ்விடத்தில் ( வழியில் ). புனக்கே - காட்டிலே . பொற்கோயில் - அழகிய கோயில் . பொய்கொலோ - பொய்த் தோற்றந்தானோ .

பண் :

பாடல் எண் : 10

தீண்டற் கரிய திருவடி யொன்றினால்
மீண்டற் கும்மிதித் தார்அரக் கன்தனை
வேண்டிக்கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே.

பொழிப்புரை :

பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன் ; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான் .

குறிப்புரை :

தீண்டற்கரிய திருவடி - திருமால் முதலிய தேவர்களாலும், வேதங்களாலும் தீண்டுவதற்கரிய திருவடி. மீண்டற்கும் மிதித்தார் - அத்திருவடியால் ஆணவம் அழிப்பதற்கேயன்றி அவன் உய்தற்கும் மிதித்தார் என்க. கொள்வன் - பயன்கொள்வேன். என்றலும் - என்று நினைத்தவுடன். தோன்றும் - வெளிப்படுகின்றான்.

பண் :

பாடல் எண் : 1

நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , நீலமாமணி போலும் திருக்கழுத்தினர் ; நீண்ட சடையில் அழகுமிக்க பெரிய மதியையும் கங்கையையும் கூடவைத்தவர் ; சூலம் , மான் , மழு ஏந்தித் தம் ஒளி முடியில் பாலும் நெய்யும் திருவபிடேகம் கொள்வர் .

குறிப்புரை :

நீலமாமணி கண்டத்தர் - பெரிய நீலமணி போன்ற நஞ்சு பொருந்திய கழுத்தையுடையவர் . கோலமாமதி - அழகிற் சிறந்த சந்திரன் . கூட்டினார் - சேரவைத்தார் .

பண் :

பாடல் எண் : 2

கவள மாகளிற் றின்உரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , சோற்றுக்கவளம் கொள்ளும் யானையின் உரியைப் போர்த்தவர் ; வெள்ளிய நகைப்பை உடைய உமைமங்கையை ஒருபங்கிற் கொண்டவர் ; தேவர்கள் போற்றித் திசைநோக்கித் தொழும் பவளம் போன்று சிவந்த மேனியர் .

குறிப்புரை :

கவளம் - யானைக்கிடும் உணவு . மா - பெரிய . உரி - தோல் . தவளம் - வெண்மை . தவளவெண்ணகை மங்கை ; ஒருபொருட் பன்மொழி ( தலத்து அம்பிகையின் திருப்பெயர் ). மிக்க வெண்மையைக் காட்டிற்று . திவளவானவர் - விளங்குதலை உடைய வானவர் . திசைதொழும் - திசைதோறும் வணங்குகின்ற .

பண் :

பாடல் எண் : 3

மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ
மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி னாரவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , மின்னலையொத்த நுண்ணிடையை உடைய கன்னிப்பெண்கள் எங்கும் பலராய்க்கூடிக் காவிரியில் நீராடிப்போற்றித் திருவடிகளைத்தொழ நிலைபெற்று , நான்கு வேதங்களும் பல கீதங்களும் பன்னிய சிறப்புடையவராவர் .

குறிப்புரை :

மின்னின் - மின்னல்போன்ற . மிக்கு - மிகுதியாக . மன்னி - நிலைபெற்ற . பல்கீதமும் - பல்வகை இசைப்பாடல்களையும் . பன்னினார் - சொன்னார் .

பண் :

பாடல் எண் : 4

நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங்
கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே
ஆடி னாரழ காகிய நான்மறை
பாடி னாரவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , சுடுகாடே இடமாய் நீண்டு நின்ற பேயின் தொகுதிகளும் , கூடிய பூதங்களும் தம்மில் இணைந்து நின்று ஆர்க்குமாறு ஆடியவர் ; அழகாகிய நான்மறை பாடியவர் .

குறிப்புரை :

நீடு - பெரிதாய் நீண்ட . காடு - இடுகாடு . இடமாய் - ஆடுமிடமாக . கூடு - பேய்க்கணங்களுடன் கூடுகின்ற . குழுமி - சேர்ந்து . ஆர்க்க - ஆரவாரிக்க .

பண் :

பாடல் எண் : 5

சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்த னேநமை யாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , சித்தரும் , கன்னியரும் , தேவரும் , தானவர்களும் , பித்தர்களும் , நான்கு மறைகளில் வல்ல வேதியரும் பேணிய அத்தனே ! நம்மை ஆளுடையாய் ! என்று கூறும் அன்பர்களுக்கு அன்பராய் இருப்பர் .

குறிப்புரை :

தானவர் - அசுரர் . பித்தர் - ஒன்றொடொன்று ஒவ்வாத வேடமும் செயலுமுடையவர் . பேணிய - விரும்பிய . பத்தர்கட்கன்பர் - அடியார்களுக்கு அன்பர் .

பண் :

பாடல் எண் : 6

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயவென்
றெண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

தேவர்கள் பணிந்து ஏத்த , ( அதுகண்டு ) வியப்புறும் மண்ணுலகத்தோர் , மறவாது ` சிவாய ` என்று தியானிக்க , அவர்களுக்கு இடமாக எழில் மிகும் வானகத்தைப் படைத்தருளியவர் , திருப்பாலைத்துறைப் பிரானே .

குறிப்புரை :

விண்ணினார் - தேவர் . பணிந்தேத்த - வணங்கித் துதிக்க . வியப்புறும் - அதிசயமுறுகின்ற . மண்ணினார் - நிலவுலகில் உள்ளவர் ; தேவர் வழிபடுதலைக் கண்டு வியப்புற்ற மண்ணினார் என்க . ` சிவாய ` - இது சூக்கும பஞ்சாக்ஷரம் எனப்படுவது . எண்ணினார்க்கு - தியானித்தவர்கட்கு . இடமா - வீற்றிருக்கும் இடமாக . எழில் வானகம் - வீடுபேறு . த்ரயீ எனப்படும் வேதங்கள் சிவநாமத்தை இதயநடுவுள் வைத்துப் போற்றுவது போல மூவர் தேவாரங்களில் நடுவணதாகிய இத்திருமுறையில் நடுவணதாகிய 51 ஆவது பதிகத்து இத்திருப்பதிகத்துள் நடுவணதாகிய இத்திருப்பாடலில் நடுவில் ` சிவாய ` என்னும் சிவமூலமந்திரம் அமைந்து விளங்கும் தெய்வ அமைப்பை உடையது இத்திருப்பாட்டு .

பண் :

பாடல் எண் : 7

குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை
விரவி னார்பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

மருவிய புதுமலர்களாகிய மல்லிகையும் செண்பகமும் உதிர்ந்து பரவிய நீர்ப்பரப்பை உடைய பொன்னிக் கரையிலுள்ள திருப்பாலைத்துறையர் , கொடுகொட்டி , கொக்கரை , பண் பொருந்திய வீணை ஆகிய வாச்சியங்களின் இசையினை விரவியவரும் , குரவரும் ஆவர் .

குறிப்புரை :

குரவனார் - குருவாக இருப்பவர் . பண் - இசை . கெழுமிய - பொருந்திய . மருவு - அணிந்த , பொருந்திய . நாண்மலர் - புது மலர் . மலராகிய மல்லிகை சண்பகம் என்க . பரவு - பரவிய .

பண் :

பாடல் எண் : 8

தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
தடரும் போதர னாயருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனல்
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

நறுமணமுடைய கங்கை படரும் செஞ்சடை உடைய திருப்பாலைத்துறையர் , தம்மைத்தொடரும் தொண்டரைத் துன்பங்கள் தொடர்ந்துவந்து வருத்தும்போது அரனாகத் தோன்றி அருள்செய்பவர் ; கடலினின்றெழுந்த நஞ்சினை உண்டு அணிசெய்யப் பெற்ற திருக்கழுத்தினர் .

குறிப்புரை :

தொடரும் - தன்னைத் தொடர்ந்து பற்றிய . துக்கம் - துன்பம் . அடரும்போது - வருத்தும்போதில் . அரனாய் - அத்துன்பத்தை அழிப்பவனாய் . கடி - விளக்கம் அல்லது மணம் . புனல் - கங்கை . படரும் - பரவியிருக்கும் .

பண் :

பாடல் எண் : 9

மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியல்
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , மேகமண்டலத்தைத் தோய்கின்ற பிறையினைச் சூடுவர் ; மேகலையாக நாகம் தோய்ந்த அரையினை உடையவர் ; நல்லியலுடைய போகம் தோய்தற்குரிய இரண்டு தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகம் தோய்ந்தவர் .

குறிப்புரை :

மேகலை - பெண்கள் இடையில் அணியும் அணிகலன் . மேகலை கூறியது மாதொரு கூறராதல் பற்றி .

பண் :

பாடல் எண் : 10

வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்
அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற் கரியவர்
பைங்க ணேற்றினர் பாலைத் துறையரே.

பொழிப்புரை :

திருப்பாலைத்துறையர் , வெவ்விய கண்ணை உடைய வாளரவை ஆட்டி அச்சுறுத்துவர் ; அழகிய கண்ணை உடையவர் ; அடியார்க்கு அருள் வழங்குபவர் ; செங்கண்ணை உடைய மாலும் அயனும் தேடற்கு அரியவர் ; பைங்கண்ணை உடைய இடபத்தை வாகனமாக உடையவர் .

குறிப்புரை :

வெங்கண் - கொடிய கண் . வாள் அரவு - ஒளி பொருந்திய பாம்பு . ஆட்டி - ஆடச்செய்து . வெருட்டுவர் - தோற்றத்தால் அச்சம் விளைவிப்பவர் . அங்கணார் - அழகிய கருணை பொருந்திய கண்களை உடையவர் .

பண் :

பாடல் எண் : 11

உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாஅருள் செய்தபா லைத்துறை
கரத்தி னால்தொழு வார்வினை யோயுமே.

பொழிப்புரை :

தன் ஆற்றலினால் இராவணன் உயர்ந்த திருக்கயிலாய மாமலையை நெருக்கலுற்றானை நெரித்து , அவன் பாடலும் கேட்டு இரக்கமாக அருள்புரிந்த திருப்பாலைத்துறையைக் கரங்களால் தொழுவார் வினை நீங்கும் .

குறிப்புரை :

உரத்தினால் - வலிமையினால் . உயர்மாமலை - உயர்ந்த கயிலைமாமலையினால் . நெருக்கினானை - மலைமகளை அஞ்சச் செய்தவனை . நெரித்து - ஊன்றி . கரத்தினால் - கைகளால் .

பண் :

பாடல் எண் : 1

நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் , நல்லவர் ; நல்லதோர் நாகத்தைக் கையிற்கொண்டு ஆட்டுவர் ; வல்வினைகளைத் தீர்க்கும் மருந்துகள் அளிக்க வல்லவர் ; பல்லில்லாத ஓடு கையேந்திப் பலி திரிகின்ற அருட்செல்வர் ஆவர் .

குறிப்புரை :

நல்லர் - நன்மையுடையவர் . ஆட்டுவர் - ஆடச் செய்பவர் ; வல்வினை தீர்க்கும் மருந்துகள் வல்லர் என்க . வல்வினை - வலியதாகிய பழவினைகள் . மருந்துகள் வல்லர் - பழவினைகளாகிய நோய் தீர்க்கும் அருட்செயல்களில் வல்லவர் . போல் - அசை . செல்வர் - உலகமெல்லாம் தம் உடைமையாகக் கொண்டவர் .

பண் :

பாடல் எண் : 2

நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடும்
தேவர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் நாவலம் பெருந்தீவாகிய ( ஜம்புத்வீபம் ) காட்டிலுள்ளவர் . அனைவரும் மேவிவந்து வணங்கி , வினையொடு பாவமாயினவற்றைப் பற்றறுவித்திடும் தேவர் ஆவர் .

குறிப்புரை :

நாவலந் தீவு - இமயத்தின் தென்பாலுள்ள இந்த நாட்டிற்கு நாவலந்தீவு அல்லது சம்புத்தீவு என்று பெயர் . இமய உச்சி யிலுள்ள மானசரோவரத்தின் நடுவே உள்ள நாவல் மரத்தை உடைய நாடு . வாழ்பவர் - வாழும் மக்கள் . மேவிவந்து - விரும்பி வந்து . வினை பாவம் இவற்றினது கட்டுக்களை அறுவித்துக் கொள்ளும்படிசெய்யும் தேவராயிருப்பவர் என்க . பற்றறுவித்தல் - சிறிதும் இல்லாது நீங்கச்செய்தல் .

பண் :

பாடல் எண் : 3

ஓத மார்கட லின்விட முண்டவர்
ஆதி யாரய னோடம ரர்க்கெலாம்
மாதொர் கூறர் மழுவல னேந்திய
நாதர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் அலைகள் பொருந்திய கடலின் விடம் உண்டவர் ; அயன் தேவர்களாதியாகிய உலகங்களுக்கெல்லாம் ஆதியாயவர் ; உமையொரு பாகர் ; மழுவினை வலக்கையில் ஏந்திய நாதர் ஆவர் .

குறிப்புரை :

ஓதம் - அலை . ஆர் - பொருந்திய ; அயனோடு அமரர்க் கெல்லாம் ஆதியார் என்க . ஆதியார் - முதலானவர் . அயன் - பிரமன் , வலன் - வலது திருக்கரம் . போல் - அசை .

பண் :

பாடல் எண் : 4

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் சந்திரனோடு சூரியனும் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின் ஐந்துதலை உடைய அரவின் பணியையும் கொண்டருளும் மைந்தர் ( பெருவீரர் ) ஆவர் .

குறிப்புரை :

தாம் - சந்திர சூரியர்கள் . உடன்வந்து - உடனாய் சேரவந்து . சீர்வழிபாடுகள் - சிறப்பு வழிபாடுகள் . செய்தபின் - வழிபாடுகள் செய்தபின்னர் . ஐந்தலை அரவு - ஐந்து தலைகளோடு கூடிய நாகம் . பணி - பணிவிடை . சந்திரன் , சூரியன் , ஐந்தலை நாகம் பூசித்த தலம் என்ற தலவரலாற்றுக் குறிப்பு அமைந்துள்ளது . அருள் - அருள்செய்த . மைந்தர் - வலியர் .

பண் :

பாடல் எண் : 5

பண்டொர் நாளிகழ் வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத்
தண்ட மாவிதா தாவின் தலைகொண்ட
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் , முன்னோர் நாளில் குற்றங்களை உடைய தக்கன் இகழ்வதற்காகக் கொண்ட வேள்வியினைக் கெடும்படியாகச் செய்தவரும் , தண்டனையாகப் பிரம தேவனின் தலையைக்கொண்ட செண்டு உடையவரும் ஆவர் .

குறிப்புரை :

பண்டோர் நாள் - முன்பொரு சமயம் . இகழ் - இகழ்ந்த . வான்பழி - மிக்கபழி . ஆர் - இழித்தற் பொருளில் வந்தது . கொண்ட - மேற்கொண்ட . வேள்விக்குமண்டை - வேள்வியாகிய செருக்கு மிக்க செயல் . கெட - அழிய . தண்டமா - தண்டனையாக . விதாதா - பிரமன் . செண்டர் - செண்டு என்னும் ஆயுதத்தை உடையவர் .

பண் :

பாடல் எண் : 6

வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை யுரித்த கரத்தினர்
செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை
நம்பர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் புதிய பூக்களையணிந்த குழல் உடைய உமாதேவியார் மனம் சுழல , ஒப்பற்றதாய் நினைப்பாரை நடுங்கச்செய்யும் இயல்பினதாய யானையை உரித்த திருக்கையினர் ; செம்பொன்னைப் போன்ற கொன்றை மலர்களையணிந்த செஞ் சடையை உடைய நம்பர் ஆவர் .

குறிப்புரை :

வம்பு - மணம் பொருந்திய . பூங்குழல் - பூக்களோடு கூடிய கூந்தலுடைய . மாது - பார்வதி . மறுக - அஞ்சி மயங்க . கம்ப யானை - அசைகின்ற யானையை . கரத்தினர் - கையை உடையவர் . செம்பொனார் - சிவந்த பொன்னின் நிறம் பொருந்திய . இதழி - கொன்றை . நம்பர் - விரும்பத்தக்கவர் .

பண் :

பாடல் எண் : 7

மானை யேந்திய கையினர் மையறு
ஞானச் சோதிய ராதியர் நாமந்தான்
ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்கும்
தேனர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் மானை ஏந்திய கையை உடையவர் ; குற்றமற்ற அறிவொளியாயவர் ; உலகிற்கெல்லாம் ஆதியாயவர் ; தம் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஓதினால் வந்து அண்ணிக்கின்ற தேனும் ஆவர் .

குறிப்புரை :

மையறு - குற்றமற்ற . ஞானச்சோதியர் - அறிவாகிய ஒளியை உடையவர் . ஆதியர் - தலையானவர் . நாமத்தான் ஆன அஞ்செழுத்து - அவரது திருப்பெயரான திருவைந்தெழுத்து . அண்ணிக்கும் - இனிக்கும் . தேனர் - தேனாயிருப்பவர் .

பண் :

பாடல் எண் : 8

கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி
அழக ரால்நிழற் கீழற மோதிய
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் கழல்கொண்ட சேவடியினர் ; காலனைக் காய்ந்தருளியவர் ; தழல் வண்ணம் கொண்ட செம்மேனியர் ; வெண்ணீற்றுப்பொடியணிந்த அழகர் ; கல்லால நிழற் கீழ் இருந்து அறம் ஓதிய குழகர் ஆவர் .

குறிப்புரை :

தழல்கொள்மேனி - தழலின் நிறத்தைக்கொண்ட திருமேனி . சாந்த வெண்ணீறணி அழகர் - சந்தனம்போலத் திரு வெண்ணீற்றை அணிந்த அழகியர் . ஆல் நிழற் கீழ் - கல்லால மர நிழலின் கீழ் .

பண் :

பாடல் எண் : 9

வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் வட்டமாக வளைந்த மதில் மூன்றுடன் கூடிய வல்லரண்களைச் சுட்டசெய்கையர் ; ஆயினும் தம்மை உள்ளத்தே சூழ்ந்தவர்களின் திரண்ட வல்வினைத் துன்பங்களைத் தீர்த்துக் குளிரும்படிச்செய்யும் உயர்ந்தோர் ஆவர் .

குறிப்புரை :

வட்டம் - வட்டவடிவாகிய . மா - சிறந்த . வல்லரண் - வலிய கோட்டை . சுட்ட - அழித்த . குட்டவல்வினை - திரண்ட பழ வினைகள் . இப்பாடல் தி .5 ப .42 9 ஆவது பாடலைப் பெரிதும் ஒத்துள்ளது .

பண் :

பாடல் எண் : 10

தூர்த்தன் தோண்முடி தாளுந் தொலையவே
சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல்
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடும்
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்திறைவர் மிக்க கொடியவனாகிய இராவணனது தோள்களும் , முடிகளும் , தாள்களும் தொலையுமாறு திருப்பாதத்து ஒரு விரலைச் சேர்த்தியவர் ; உலகிலுள்ளோரெலாம் ஆர்த்துவந்து நீராடிடும் தீர்த்த வடிவினர் ஆவர் .

குறிப்புரை :

தூர்த்தன் - தீ ஒழுக்கமுடையவன் . தொலைய - அழிய . ஒரு விரல் சேர்த்தினார் என்க . உலகத்தார் ஆர்த்து வந்து என்க . ஆர்த்து - ஆரவாரம் செய்து . ஆடிடும் - மூழ்குகின்ற . தீர்த்தர் - தீர்த்த மாயிருப்பவர் . தீர்த்தங்களின் வடிவமாயிருப்பவர் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 1

கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

வளைந்த பிறைமதி சூடி , கோவணம் அணிந்து விரும்பியும் பயனற்ற நாணமில்லாத வாழ்க்கை உடையவரேனும் , வீணையிற் பாடல் பயின்ற சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கண்டு தொழுதபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

கோணல் மாமதி - வளைந்து பிறந்த பிறை . ஓர் கோவணம் - ஒரு கோவணமணிந்து . நாணில் வாழ்க்கை - வெட்கமில்லாத வாழ்க்கை . கோவணங்கட்டித் திரிதலின் நாணில் வாழ்க்கை என்றார் . நயந்தும் - விரும்பியும் . பயன்நிலை - பயனுக்கு நிலைக்களனாயிருப்பவர் . பாணில் - இசைகளில் . வீணை பயின்றவன் - இசைகளில் வீணை இசையைப் பழகியவன் . உலகப் படைப்பின்போது இறைவனிடத்துண்டாம் நாததத்துவத்தை வீணையாகக் கூறல் மரபு . காணில் அல்லது - கண்டு தொழுதாலல்லாமல் . துயில் - உறக்கம் . என் கண் துயில் கொள்ளுமோ என்க . அகப்பொருட்டுறையில் தலைவி கூற்றுப் போல வைத்துத் தம்மியல்பு கூறுகிறார் .

பண் :

பாடல் எண் : 2

பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி
அண்ண லையம ரர்தொழு மாதியைச்
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம்
நண்ணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

பண்வடிவானவரும் , பவளத்தொகுதி போன்ற மாமணி மேனியுடைய அண்ணலும் , தேவர்கள் தொழும் முதல்வரும் , திருநீற்றுப்பொடியணிந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தை நண்ணினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

பண்ணினை - இசை வடிவானவனை . பவளமாமணித் திரள் - பவளமணிக்குவியல் போன்ற . ஆதியை - முதன்மையானவனை . நண்ணில் அல்லது - சென்று தொழுதால் அல்லாமல் . சுண்ணம் - வாசனைப்பொடி . வெண்பொடியையே வாசனைப் பொடியாக அணிந்தவர் .

பண் :

பாடல் எண் : 3

உற்ற வர்தம் உறுநோய் களைபவர்
பெற்ற மேறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டம்
கற்கி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

தம்மைப் பற்றுக்கோடாக அடைந்தவரது மிக்க துயரங்களைக் களைபவரும் , இடபம் ஏறுபவரும் , விளங்கும் சடையுடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற பாயும் கெடில நீர்சுற்றிச் சூழ்கின்ற திருவதிகைவீரட்டத்தைக் கற்ற பின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

உற்றவர்தம் - தம்மை அடைந்தவர்களுடைய . உறு நோய் - மிக்க துன்பங்களை . பெற்றம் - எருது . பிறங்கு - விளங்குகின்ற . சுற்றும் - சுற்றிலும் . கற்கில் அல்லது - துதித்தால் அல்லது .

பண் :

பாடல் எண் : 4

முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டம்
கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

முதிராத வெள்ளிய பிறையினைச் சூடும் முதல்வரும் , சினக்கப்பட்டார் வாழும் மூன்று புரங்கள் தீயெழுமாறு மேருமலையாகிய வில்லைத் தாம் கொண்டு எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கற்றால் அல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

முற்றா - இளைய . செற்றார் - பகைவர் . வில்தான் கொண்டு எயில் எய்தவர் எனப்பிரிக்க .

பண் :

பாடல் எண் : 5

பல்லா ரும்பல தேவர் பணிபவர்
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன்
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டம்
கல்லே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

பலவகைப்பட்ட தேவர்களாலும் பணியப்படுபவரும் , நல்லார்களாலும் விரும்பிப் பரவப்படுபவரும் , வில்லால் மூவெயில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கல்லேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

பல்லார் - பலமக்கள் . தேவர் என்புழி உம்மை விரிக்க . நல்லாரும் - நல்லவர்களும் . நயந்து - விரும்பி .

பண் :

பாடல் எண் : 6

வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக்
கொண்டான் கோல மதியோ டரவமும்
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டம்
கண்டா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

வண்டுகள் பொருந்திய கொன்றையும் , ஊமத்த மலரும் , பிறையும் , அரவமும் அழகு வளரும் தம் சடையிற் கொண்டவரும் , பகைவரது மும்மதில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கண்டபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

வண்டார் - வண்டுகள் பொருந்திய . மத்தம் - ஊமத்தம் . வளர்சடைக் கொண்டான் . கோலமதியோடு அரவமும் கொண்டான் என்க . விண்டார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 7

அரையார் கோவண ஆடைய னாறெலாந்
திரையா ரொண்புனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்குவீ ரட்டன்பால்
கரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

இடுப்பிற் பொருந்திய கோவண ஆடையரும் , வழியெல்லாம் அலையெறியும் ஒள்ளிய நீர் பாய்கின்ற கெடிலக் கரையில் விளங்கும் நறுமணமுடைய திருநீற்றுப்பூச்சினரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

அரையார் - இடுப்பிலே பொருந்திய . ஆறெல்லாம் - வழிகளெல்லாம் . திரையார் - அலைகளோடு கூடிய . ஒண்புனல்பாய் - ஒள்ளிய தண்ணீர் பாய்கின்ற . விரையார் - மணம் பொருந்திய . கரையேனாகில் - என் குறைகளைச் சொல்லேனாயின் .

பண் :

பாடல் எண் : 8

நீறு டைத்தடந் தோளுடை நின்மலன்
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை
ஏறு டைக்கொடி யான்திரு வீரட்டம்
கூறி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த பெருந்தோளராகிய மலமற்ற வரும் , இடபக்கொடியுடையாரும் ஆகிய பெருமான் உறைவதும் புனல் பாய்கின்ற கெடில ஆற்றினுடைய கரையில் உள்ளதுமாகிய திருவதிகைவீரட்டத்தைக் கூறினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

தடம் - பெரிய . நின்மலன் - மலமற்றவன் . ஆறுடைக் கெடிலம் - பல கால்வாய்களாகிய வழிகளை உடைய கெடிலம் . ஏறுடைக்கொடி - இடபக்கொடி .

பண் :

பாடல் எண் : 9

செங்கண் மால்விடை யேறிய செல்வனார்
பைங்க ணானையி னீருரி போர்த்தவர்
அங்கண் ஞாலம தாகிய வீரட்டம்
கங்கு லாகவென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

சிவந்தகண்ணை உடைய திருமாலாகிய விடையேறிய திருவருட்செல்வரும் , பசிய கண்ணை உடைய ஆனையின் பச்சைத் தோலை உரித்துப் போர்த்தருளியவரும் , அழகிய இடமகன்ற உலகமுழுதானவருமாகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் ( காணேனாயின் ) என் கண்கள் இரவாயினும் ஆக , உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

செங்கண்மால் விடை - சிவந்த கண்களை உடைய திருமாலாகிய எருது . ஈருரி - உரித்ததோல் . அங்கண் - அழகிய இடமகன்ற . ஞாலமதாகிய - உலகத்ததாகிய . கங்குல் வீரட்டம் ஆக அல்லது என்க . இரவுப்பொழுதில் வீரட்டத்தை அடைந்தால் அல்லது என்பது கருத்து . அல்லது என்றது முன் பாடல்களிலிருந்து வருவிக்கப் பெற்றது .

பண் :

பாடல் எண் : 10

பூணா ணாரம் பொருந்த வுடையவர்
நாணா கவ்வரை வில்லிடை யம்பினால்
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டம்
காணே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

பூண் , நாண் , மாலை முதலியவற்றைப் பொருந்த உடையவரும் , அழகிய மேருமலையாகிய வில்லிடை நாணுடன் கூடிய அம்பினால் , பகைவர் மும்மதில்களை எய்தவர் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் காணேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

பொருந்த - தமக்கு ஏற்ற வகையில் . பூண் - அணிகலன் . நாண் - பூணநூல் முதலிய கயிறுகள் . ஆரம் - மலர்மாலைகள் . நாக நாண்வரை வில்லிடை - இமயவில்லின் வாசுகிப் பாம்பாகிய நாணில் . பேணார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 11

வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கம்
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

மலைகளில் நிறைந்த வயிரத்தின் தொகுதியும் , மாணிக்கமும் ஆகியவற்றைக்கொண்டு அலையார்ந்த புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ளதும் , நறுமணமிக்க திருநீற்றினையணிந்த இறைவன் விளங்குவதுமாகிய திருவதிகை வீரட்டத்தை உரையேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?

குறிப்புரை :

வரையார்ந்த - மலையிடத்தே பொருந்திய . திரள் - குவியல் . மாணிக்கத்திரள் எனவும் கூட்டுக . உரையேனாகில் - புகழ்ந்து பாடேனாயின் .

பண் :

பாடல் எண் : 12

உலந்தார் வெண்தலை உண்கல னாகவே
வலந்தான் மிக்கவவ் வாளரக் கன்றனைச்
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம்
புலம்பே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.

பொழிப்புரை :

இறந்தவர்களது ( வாழ்நாள் உலந்தார் ) வெள்ளிய தலைகளை உண்கலனாகக்கொண்டு , வெற்றிமிக்க அவ்வாளரக் கனாகிய இராவணனைச் சிலம்பணிந்த திருவடி விரலால் ஊன்றிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் புலம்பிப் பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

குறிப்புரை :

உலந்தார் - இறந்தவர். உண்கலன் - உண்ணும் பாத்திரம். வலம் - வெற்றி. புலம்பேனாகில் - மனங்கரைந்து பலகாலும் சொல்லிப் புகழேனாயின்.

பண் :

பாடல் எண் : 1

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி சேரு மவருக்கே.

பொழிப்புரை :

கன்னற்கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய் , எட்டுவகைப்பட்ட நாண்மலர்களாகிய தேனவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

எட்டு நாண்மலர் - அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள் . அவையாவன :- புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவர்த்தம் , பாதிரி , குவளை , அலரி , செந்தாமரை ஆகிய பூக்கள் போல விரும்பத்தக்க எண்குணங்கள் எனலுமாம் . மட்டு அலர் - தேன் நிறைந்த மலர் . இடுவார் - அர்ச்சிப்பார் . மாயும் - அழியும் . ஆல் அசை . கட்டி - கரும்புக் கட்டியாகிய வெல்லத்தோடு . தேன் கலந்தன்ன - தேனைக் கலந்ததை ஒத்த ; வீரட்டனார் என்க . அடிசேருமவருக்கு - திருவடிகளைச் சேர்பவர்களுக்கு . வினைமாயும் என இயைத்து முடிவு கொள்க . பூசையால் பவன் முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபும் இங்கு நினைக்கத்தக்கது . ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத்திருப்பதிகம் . அகப்பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை , ஐம்பொறியடக்கம் , பொறை , அருள் , அறிவு , வாய்மை , தவம் , அன்பு என்னும் நலஞ் சிறந்தார் மனத் தகத்து மலர்கள் எட்டும் . இதனைத் தண்டகம் என்பர் .

பண் :

பாடல் எண் : 2

நீள மாநினைந் தெண்மல ரிட்டவர்
கோள வல்வினை யுங்குறை விப்பரால்
வாள மாலிழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

பொழிப்புரை :

வட்டமாகவும் , பெரிதாகவும் ஓடுகின்ற கெடில நதிக்கரை வேலிபோல் சூழ்ந்த வீரட்டத்திறைவர் , தம்மை இடை விடாது நினைந்து எண்வகை மலர்களால் வழிபடுபவர்களின் கொடிய வல்வினையை நீக்குவர் .

குறிப்புரை :

நீளமா - இடைவிடாது . கோளவல்வினையும் - கொடுமை பொருந்திய வலிய வினைகளையும் . ஆல் - அசை . வாளம் - வட்டமாக . மால் இழியும் - பெரிதாக ஓடுகின்ற . வேலி என்பது வேளி எனத் திரிந்தது .

பண் :

பாடல் எண் : 3

கள்ளி னாண்மல ரோரிரு நான்குகொண்டு
உள்கு வாரவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.

பொழிப்புரை :

தெள்ளிய நீர்வயலிற் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய வெண்ணீறணிந்த திருமேனி உடைய பெருமான் , தேன் ஒழுகுகின்ற புதிய எட்டு மலர்களைக்கொண்டு அருச்சித்துத் தம்மை உள்குவார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார் .

குறிப்புரை :

கள்ளின் நாண்மலர் - தேன் நிறைந்த மலர் . ஓர் இருநான்கு - எட்டுமலர்கள் . தெள்ளுநீர் - தெளிந்த நீர் .

பண் :

பாடல் எண் : 4

பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட்டு
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.

பொழிப்புரை :

செறிந்த குளிர்நீர் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய புலித்தோலை ஆடையாக உடுத்த பெருமானே , எட்டுவகைப்பட்ட பூங்கொத்துக்களை இட்டு வணங்கிநிற்கும் அடியார்களுடைய வல் வினைகளை ஓட்டுவார் .

குறிப்புரை :

பூங்கொத்தாயின - எட்டுவகை மலர்களின் பூங் கொத்துக்கள் . மூன்றோடோரைந்து - எட்டு . இட்டு - சாத்தி . வாங்கி - வளைந்து ; வணங்கி . வீங்கி - பெருகிய . உடையாடை - உடுத்தற்குரிய ஆடை.

பண் :

பாடல் எண் : 5

தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன்
தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேன லானை யுரித்தவீ ரட்டரே.

பொழிப்புரை :

மீன்களை உடைய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக் கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும் , ஆனை உரித்தவருமாகிய பெருமான் , தேன் உடைய அழகிய போதுகளாகிய எட்டுவகைப்பட்ட மணமலர்களை இட்டு வணங்குவார் வினைகளைத் தீர்ப்பவர் ஆவர் .

குறிப்புரை :

தேனப்போதுகள் - தேன் பொருந்திய பூக்கள் . தான் - தானே . அப்போது - அம்மலர்களை . இடுவார் - அருச்சிப்பார் . மீனத் தண்புனல் - மீன்கள் நிறைந்த குளிர்ந்த புனல் . வேனலானை - கோபமுடையானை . உரித்த - தோலை உரித்தெடுத்த .

பண் :

பாடல் எண் : 6

ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.

பொழிப்புரை :

வன்மை உடையதாகிய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும் , வேழத்தின் உரியைப் போர்த்தவருமாகிய பெருமானே , இதழி ( ஏழி ) யாகிய கொன்றை மலர்களைக் கொண்டு பணிந்த அடியார்களுடைய ஊழியாகத் தொடர்ந்துவரும் பழைய வினைகள் ஓடும்படி நீக்குவார் .

குறிப்புரை :

ஏழி - ஏழை முன்னாக உடையது எட்டு . தொன்மலர் - தொன்மையாகச் சொல்லப்பட்ட மலர் . ஊழி - பல பிறப்புக்கள் . பாழி - வலிமை .

பண் :

பாடல் எண் : 7

உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

பொழிப்புரை :

மலைகளினின்று வந்து இழிவதாகிய கெடில நதியின் கரையில் உள்ளதும் , நறுமணஞ் சூழ்ந்து எழில் பெற்றதுமாகிய திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே , ஆகம நூல்கள் உரைக்கின்ற நெறியின்படி எட்டு வகைப்பட்ட ஒளியுடைய மலர்களை இட்டு வணங்கும் அடியார்களின் அலைகள்போல் வருகின்ற வல்வினைகளைத் தீர்ப்பவர் ஆவர் .

குறிப்புரை :

உரைசெய் நூல்வழி - உரைக்கப்பட்ட சிவாகம நூல் முறைப்படி . ஒண்மலர் - விளக்கமான மலர்கள் . திசைகள் போல்வரு - அலைகளைப் போலச் சிறிதும் பெரிதுமாய்த் தொடர்ந்து வரும் . வரைகள் - மலைகள் . விரைகள் - மணப்பொருள்கள் .

பண் :

பாடல் எண் : 8

ஓலி வண்டறை யொண்மல ரெட்டினால்
காலை யேத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

பொழிப்புரை :

மழைநீர் வந்து இழிகின்ற கெடில நதியின் கரையில் உள்ளதும் , வேலிகள் சூழ்ந்து எழில் உடையதுமாகிய திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே , ஓலமிடும் வண்டுகள் ஒலிக்கும் எட்டுவகைப்பட்ட மலர்களால் தம்மைக் காலத்தேவந்து வழிபடுவார்களின் வினையைத் தீர்ப்பவர் .

குறிப்புரை :

ஓலிவண்டறை - ஓலமிடுவதாகிய வண்டுகள் ஒலிக்கின்ற . காலை - காலையிலே . ஆல் அசை . ஆலி - ஒலித்து . கூடிவேலி சூழ்ந்து - வேலிபோலச் சூழ்ந்து .

பண் :

பாடல் எண் : 9

தாரித் துள்ளித் தடமல ரெட்டினால்
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்திரை பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.

பொழிப்புரை :

வலிமை உடையதாய்த் தெளிந்துவரும் அலைகளை உடையதாய்ப் பாய்கின்ற கெடிலநதியின் கரையின்கண் உள்ள வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள மணம் வீசும் செஞ்சடையை நன்கு கட்டிய பெருமான் , மனத்தே இறைவன் திருவுருவைத்தாங்கிச் சிந்தித்து எட்டு வகைப்பட்ட மலர்களால் ஏத்தும் வல்லமை உடைய அடியார்களின் வினைகளைக் கெடுப்பார் .

குறிப்புரை :

தாரித்து - தரித்து என்பது தாரித்து என நீண்டது . தரித்தல் - மனத்திற்கொள்ளல் . தடமலர் - பெரிதாகிய மலர் . பாரித்து - மிகுந்து . பாற்றுவார் - கெடுப்பார் . மூரி - பெரிய . வேரி - தேன் பொருந்திய மலர்கள் . வேய்ந்த - கட்டிய .

பண் :

பாடல் எண் : 10

அட்ட புட்ப மவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்
தட்டு மாறுசெய் கிற்பவ திகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே.

பொழிப்புரை :

திருவதிகைவீரட்டனார் திருவடி சேரும் அடியார்கள் , அட்டபுட்பங்களைவிதிமுறைப்படி கொண்டு அட்ட மூர்த்தியும் , ஆதியற்றவரும் ஆகிய பெருமானின்பால் அணைந்து பொருந்துமாறு வழிபாடு செய்யும் திறம் உடையவர் ஆவர் .

குறிப்புரை :

அட்டபுஷ்பம் - எட்டுமலர்கள். அவைகொளுமாறு - பூக்களை எடுக்கும் விதிமுறைப்படி எடுத்து. அட்டமூர்த்தி - எட்டு வடிவினனாகிய இறைவன். அனாதி - ஆதியற்றவன். அட்டுமாறு செய்கிற்ப - இறைவனைச் சூடுமாறு செய்வார்கள். அடிச்சேருமவர்கள் செய்கிற்ப என்க.

பண் :

பாடல் எண் : 1

வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்
காறு சூடலும் அம்ம அழகிதே.

பொழிப்புரை :

மணம் வீசுகின்ற பூம்பொழில்களை உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள நம் இறைவர் , பிறிதொன்றற் கில்லாத பெருஞ்சிறப்புடைய திருக்கயிலாயத்தை உடையவர் . உமையம்மையை ஒருபங்கில் உடையவர் ; வளைந்த பிறை சூடியவர் . ஆயினும் கங்கையாற்றினைச் சடையிற் சூடல் மிக்க அழகும் வியப்பும் உடையதே .

குறிப்புரை :

வீறுதானுடைய வெற்பன் - பெருமை பொருந்திய மலையரையன் . கூன் பிறை - வளைந்த பிறை . நாறு - மணம் கமழும் . அம்ம - வியப்புமொழி ; மிக என்னும் பொருட்டு .

பண் :

பாடல் எண் : 2

புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலு மம்ம வழகிதே.

பொழிப்புரை :

தெளிந்த நீர்வளம் உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள பெருமான் , புள்ளிகளை உடைய புலித்தோலாடையும் , வெள்ளி போன்ற நிறம் கொண்ட திருநீற்றுப் பூச்சுடைய திருமேனியும் உடையவராயினும் , நஞ்சை அள்ளி உண்டல் மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும் .

குறிப்புரை :

புள்ளிகொண்ட - புள்ளிகளைக்கொண்ட . புலியுரி - புலித்தோல் . வெள்ளி கொண்ட வெண்பூதி - வெள்ளியின் நிறத்தைக் கொண்ட வெண்மையான விபூதி . நள்ளி - விரும்புபவன் ஆகிய நாரையூரான் என்க .

பண் :

பாடல் எண் : 3

வேடு தங்கிய வேடமும் வெண்தலை
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூ ரான்நடம்
ஆடு பைங்கழ லம்ம வழகிதே.

பொழிப்புரை :

நாட்டின்கண் தங்கிய புகழை உடைய நாரையூரில் எழுந்தருளியுள்ள பெருமான் , வேடத்தன்மை தங்கிய திருவேடமும் , வெண்தலை ஓட்டில் தங்கிய உணவை உண்ணும் கொள்கையும் உடையவராயினும் , நடம் ஆடுகின்ற பைங்கழல் சேவடி மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும் .

குறிப்புரை :

வேடு - வேடர் வடிவம் . பலியுண் கொள்கை என்க . கொள்கை - செயல் . நாடு தங்கிய - நாட்டின்கண் பொருந்திய .

பண் :

பாடல் எண் : 4

கொக்கின் தூவலுங் கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக்
கக்கி னாரமு மம்ம வழகிதே.

பொழிப்புரை :

திருநாரையூரில் எழுந்தருளியுள்ள நம் பெருமான் கொக்கு வடிவாய் நின்ற அசுரனின் இறகும் , கூவிள மலராலாகிய தலைக் கண்ணியும் , மிகுந்த வெண்தலைமாலையும் , விரிந்த சடையும் உடைய திகம்பரனேயாயினும் அக்கின் மாலை அணிந்திருத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

தூவல் - தூவி ; இறகு . கொக்கின் வடிவமாய் வந்த அசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன் இறைவன் . கூவிளங் கண்ணி - வில்வமாலை . மிக்க - பலவாய . நக்கன் - நிர்வாணி . அக்கின் ஆரம் - என்பு மாலை .

பண் :

பாடல் எண் : 5

வடிகொள் வெண்மழு மான்அமர் கைகளும்
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம வழகிதே.

பொழிப்புரை :

வடித்தலைக்கொண்ட ஒளியால் வெள்ளிய மழுப்படையும் மானும் விரும்புகின்ற கரங்களும் , திருநீற்று வெண் பொடி பூசிய செம்பவளம் ஒத்த மேனியும் , ஒருபங்கில் இருக்கும் நடித்தலைக் கொண்ட நன்மயில் போன்ற உமாதேவியும் உடைய திரு நாரையூர்ப் பெருமான் வடிவு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

வடிகொள் - உலையில் வடித்தெடுத்தாற் போன்று கூரிய . பொடி - திருநீறு . நடிகொள் - நடித்தலைக் கொண்ட . நடி - முதனிலைத் தொழிற்பெயர் . வடிவு அம்ம அழகிது என்க .

பண் :

பாடல் எண் : 6

சூலம் மல்கிய கையுஞ் சுடரொடு
பாலும் நெய்தயி ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலு மம்ம வழகிதே.

பொழிப்புரை :

உலகத்தில் புகழ் நிறைந்த திருநாரையூர் , நம் பெருமான் சுடரொடு நிறைந்த சூலம் பொருந்திய கையும் , பால் , நெய் , தயிர் முதலிய பஞ்சகவ்வியம் ஆடிய தன்மையும் உடையவராயினும் , ஆலநிழலில் இருந்து அறம் உரைத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

மல்கிய - பொருந்திய ; சுடரொடு - நெருப்போடு . ஞாலம் மல்கிய - உலகில் புகழால் நிறைந்த . ஆலநீழல் - கல்லாலநிழல் .

பண் :

பாடல் எண் : 7

பண்ணி னால்மறை பாடலோ டாடலும்
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை யம்ம வழகிதே.

பொழிப்புரை :

இசையொடு பொருந்திய நான்மறைகளைப் பாடுதலும் , ஆடுதலும் , நல்ல எண்ணமில்லாத தீயோர்களது முப்புரங்களை எரித்தலும் , தம்மைப் பொருந்தியவரது துயரங்களைத் தீர்த்தலும் ஆகிய திருநாரையூர் அண்ணலார் செய்கைகள் அனைத்தும் மிக்க வியப்பும் அழகும் உடையனவேயாம் .

குறிப்புரை :

பண்ணினால் - இசையினாலே . மறை பாடுதலோடு என்க . எண்ணிலார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 8

என்பு பூண்டெரு தேறி யிளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது வம்ம வழகிதே.

பொழிப்புரை :

எலும்புகளைப் பூண்டு , எருதின்மேல் ஏறி , இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி , நல்ல பகலிலும் பலிதேர்வராயினும் , திருநாரையூரில் உள்ள அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே .

குறிப்புரை :

மின்புரிந்த - மின்னலைப்போல் முறுக்கி விளங்கிய . நன்பகல் - நல்ல பகற்போது . பலிதேரினும் - உணவு இரந்தாலும் . அன்பன் - அன்பே வடிவமாயவன் .

பண் :

பாடல் எண் : 9

முரலுங் கின்னர மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுலாம்
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக்
கரவும் பூணுத லம்ம வழகிதே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற கின்னரமும் , மொந்தையும் முழங்க , நீண்டு நிகழும் இரவில் இடுகாட்டில் நின்று எரித்து ஆடுதலும் , அரவினைப் பூணுதலும் ஆகியவை கடல் ஒலிக்கும் திருநாரையூர் நம் பெருமானுக்கு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

முரலும் - இனிய ஓசையோடு ஒலிக்கும் . கின்னரம் - ஒருவகை வாத்தியம் . மொந்தை - தோற்பறை . நரலும் - ஆரவாரிக்கும் . வாரி - கடலால் சூழப்பட்ட உலகின்கண் பொருந்திய எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 10

கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்தலை யீரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையு மம்ம வழகிதே.

பொழிப்புரை :

கொன்றையினை உடைய அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான் திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும் .

குறிப்புரை :

கடுக்கை - கொன்றை . அம் - அழகிய . நடுக்கம் வந்து இற - நடுக்கமடைந்து நொறுங்க . அடுத்த - ஊன்றிய .

பண் :

பாடல் எண் : 1

மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

பொழிப்புரை :

மையணிந்த கண்களையுடைய உமையை ஒருபங்கில் உடையவனும் , மானும் மழுவும் பொருந்திய கைகளை உடையவனும் , செவ்விதாகிய ஒப்பற்ற ஒளி வடிவினனும் , மாமரங்கள் பொருந்திய பொழில் சூழ்ந்த திருக்கோளிலியில் உறையும் திகம்பரனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் நாசமாம் .

குறிப்புரை :

மைக்கொள் கண் - கருமை நிறத்தைக்கொண்ட கண்கள் . மையுண்ட கண் எனினும் பொருந்தும் . மான் , மழு இவை பொருந்திய கையையுடையன் என்க . செய்யதோர் சோதியன் - சிவந்த பேரொளியாகிய வடிவினன் . கொக்கு அமர் - கொக்குக்கள் தங்கிய மாமரம் எனினும் அமையும் . நக்கன் - நிருவாண கோலத்தை உடையவன் . நாசம் - நாசம் ஆம் ; அழியும் .

பண் :

பாடல் எண் : 2

முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை வாய விகிர்தனைக்
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும்நம் அல்லலே.

பொழிப்புரை :

முத்தினைப் போல்வானும் , உலக முதலாக உள்ள திருவுரு உடையோனும் , வித்தும் விளைவும் ஆகிய மேலானவனும் , பூங்கொத்துக்களை உடைய பொழில்கள் சூழ்ந்த கோளிலியில் உறையும் அத்தனும் ஆகிய பெருமானைத் தொழ நம் அல்லல்கள் நீங்கும் .

குறிப்புரை :

முத்தினை - முத்துப்போன்றவனை . முதலாகிய - முதற் பொருளாகிய . வித்தினை - உலகிற்கு மூலகாரணனாய் இருப்பவனை . விளைவாய விகிர்தனை - உலகில் எல்லாமாய் விரிந்து விளைந்து நிற்பவனை . விகிர்தன் - ஒன்றோடொன்று ஒவ்வாத போக , யோக , கோர வடிவங்களை உடையவன் . அல்லல் - துன்பம் . முன் பாட்டில் வினையாகிய காரணம் அழியும் என்றார் . இங்கு அதன் காரியமாகிய துன்பம் கெடும் என்கிறார் .

பண் :

பாடல் எண் : 3

வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர்
கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக்
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

வெள்ளிய அலைகளை உடைய கடல் விடம் உண்ட ஒப்பற்ற திருநீலகண்டனும் , நெஞ்சு கலந்து தொழுமவர்க்கு அன்பே வடிவாய் அருள்புரிபவனும் , மேகங்கள் பொருந்துகின்ற அழகிய சோலைகளை உடைய கோளிலியில் விரும்பி உறையும் தேவனுமாகிய பெருமானைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

வெண்டிரைப்பரவை - வெள்ளிய அலைகளோடு கூடிய கடல் . கண்டனை - கழுத்தை உடையவனை . கலந்தார் தமக்கு - அன்பால் தம்மோடு மனமொத்தவர்க்கு (` கலந்த அன்பாகி ` தி .8 திருவாசகம் ). கொண்டலம் பொழில் - மேகங்கள் சூழ்ந்த பொழில் . அண்டனை - எல்லா உலகமுமாயவனை .

பண் :

பாடல் எண் : 4

பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவுங் கங்கையுந் திங்களு மொண்சடை
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை நித்தல் நினைமினே.

பொழிப்புரை :

வலிய வினைகள் பலவும் கெடும் தன்மையினால் , கங்கையும் மதியும் உலவும் ஒள்ளிய சடை பொருந்தியவனும் , குளிரும் பொழில்களை உடைய கோளிலியில் நிலவியவனுமாகிய பெருமானை நாடோறும் நினைந்து தொழுவீராக ! ` தொழுவார்க்கன்றி வினை நீங்கா ` என்பது கருத்து .

குறிப்புரை :

வல்வினை பலவும் என மாறுக . பாறும் - அழியும் . பரிசினால் - தன்மையினால் . உலவும் - பரவும் . குலவினான் - விளங்க அணிந்தவன் . நித்தல் - நாடோறும் .

பண் :

பாடல் எண் : 5

அல்ல லாயின தீரு மழகிய
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே
கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே.

பொழிப்புரை :

அழகிய முல்லையைப் போன்ற வெள்ளிய முறுவலை உடைய உமாதேவியார் அஞ்சுமாறு குறிஞ்சியில் வாழும் யானையை உரித்தவனும் , கோளிலியில் உறையும் திருவருட் செல்வனுமாகிய பெருமான் சேவடிகளைச் சென்று தொழுவீர்களாக ; உம் அல்லலாயின அனைத்தும் தீரும் . ` அல்லல் நீங்கும் என்பதற்குக் கயாசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தமை சான்று ` என்றபடி .

குறிப்புரை :

அல்லல் - துன்பம் . முல்லை வெண்முறுவல் - முல்லை போலும் வெள்ளிய பற்கள் . கொல்லை - தினைப்புனம் . குறிஞ்சிக் கருப்பொருள் என்றபடி . இஃது இன அடை . யானை - கயாசுரன் . வீடுமே , ஏகாரம் தேற்றம் .

பண் :

பாடல் எண் : 6

ஆவின் பால்கண் டளவி லருந்தவப்
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.

பொழிப்புரை :

பசுவின் பாலை முன் உண்டமையால் , மிக்க அருந்தவம் உடைய பாலனாகிய உபமன்யு அப்பால் வேண்டலும் , ` செல்க ` என்று பாற்கடலைக் கூவி அருளியவனும் குளிர் பொழில் களையுடைய கோளிலியில் விரும்பி உறைபவனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் வீடும் . ` பெருமானது அளவில் ஆற்றலும் பேரருளுடைமையும் ` குறித்தபடி .

குறிப்புரை :

ஆவின்பால் கண்டு - காமதேனுவின் பாலை முன் உண்டு அறிந்தமையால் , அளவில் அருந்தவப் பாலன் - அளவற்ற அரிய தவத்தை உடைய குழந்தை உபமன்யு . வேண்டலும் - விரும்பி அழுதலும் . செல்லென்று - உபமன்யுவை நோக்கிச் செல்வாயாக என்று . கூவினான் - அழைத்து ஏவல் செய்தான் . வீடும் - அழியும் . உபமன்யு தாய்மாமன் வசிட்டனிடத்து வளர்ந்தபோது உண்டது காமதேநுவின்பால் , தந்தை வியாக்கிர பாதரிடம் வந்தபோது அது கிடைக்காமையால் அது வேண்டி அழுதார் . ` பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் ` ( தி .9 திருப்பல்லாண்டு -9).

பண் :

பாடல் எண் : 7

சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலால்
கூத்த னாருறை யுந்திருக் கோளிலி
ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே.

பொழிப்புரை :

பெருமைமிக்க நல்ல மனைவியும் , பெற்ற பிள்ளைகளும் , பொருந்திய சுற்றத்தாரும் நிலைத்த சார்பு ஆதல் இல்லையாதலால் ஆடும் பெருமான் உறையும் திருக்கோளிலியை ஏத்தி , நீர் தொழுவீராக ; நும் இடர்கள் தீரும் . ` இறைவனே இருமைக்கும் நீங்காத்துணை ` என்றபடி .

குறிப்புரை :

சீர்த்த - சிறப்பின் மிக்க . ஆர்த்த - நம்மோடு ஒன்றாய்ப் பிணித்த . ஆரவாரம் செய்யும் எனினும் அமையும் . பற்றிலை - பற்றுக்கோடாதல் இல்லை . இடர் - துன்பம் . மனைவி , மக்கள் , சுற்றம் என்போர் உயிர்த்துணையாகார் . உயிர்க்கும் உடலுக்கும் நிலைத்த துணைவன் சிவபிரானே என்றபடி . தீருமே - ஏகாரம் தேற்றம் .

பண் :

பாடல் எண் : 8

மால தாகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடைமுடி யாமுனம்
கோல வார்பொழிற் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே.

பொழிப்புரை :

மயக்கத்தை உடையவராகி மயங்கும் மனிதர்களே ! உமக்குரிய காலம் வந்து இறுதியுறுவதற்கு முன்னம் , அழகுடைய நீண்ட பொழில்களை உடைய கோளிலியில் விரும்பி உறைகின்ற நீல கண்டனை ஒன்றி நின்று நினைப்பீராக ! ` யாக்கை நிலையாமையைக் கருதிப் பேரருளாளனை நினைந்து உய்க !` என்றபடி .

குறிப்புரை :

மாலதாகி - உலகப் பொருள்களில் மயக்கத்தைப் பொருந்தினவராகி . காலம் வந்து கடைமுடியாமுனம் - இறத்தற்கு உரிய காலம் வந்து இறுதியாக உம் வாழ்வை முடித்தற்கு முன் . கோலம் - அழகிய . வார் - நீண்ட .

பண் :

பாடல் எண் : 9

கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது
தேடி நீர்திரி யாதே சிவகதி
கூட லாந்திருக் கோளிலி யீசனைப்
பாடு மின்னிர வோடு பகலுமே.

பொழிப்புரை :

கேடுகள் சூழ்ந்து மூடிக்கிடந்து துயர் என்னும் நாகநாட்டினைத் தேடி , நீர் திரியாது , திருக்கோளிலி ஈசனை இரவும் பகலும் பாடுவீர்களாக ; பாடுவீர்களாயின் சிவகதியே கூடலாம் .

குறிப்புரை :

கேடுமூடி - துன்பமே மிகுதியாய்ப் பரவி . கிடந்துண்ணும் - செய்வதொன்றின்றித் துன்பமே நுகரும் . உலகீர் , நாடே தேடித் திரிகின்றீர் ; அது செய்யாது இறைவனை இரவும் பகலும் பாடுமின் . சிவகதி - ( சிவஞானமாகிய நெறி ) சேரலாம் என்றபடி .

பண் :

பாடல் எண் : 10

மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
அடர்த்துப் பின்னு மிரங்கி யவற்கருள்
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.

பொழிப்புரை :

செருக்கை உட்கொண்டு திருக்கயிலாயப் பெருமலையை எடுக்கலுற்றானாகிய இராவணனை நெருக்கிப் பின்னும் இரக்கமுற்று அவனுக்கு அருள்கொடுத்த பெருமான் உறைகின்ற கோளிலியே தொழப் பழைய பிறவிகளிற் செய்த வினைத் துன்பங்கள் விடுத்து நீங்கும் . ` பிழைத்தாரையும் பின்னர் இரங்கி வந்தடையில் முதல்வன் காத்தருள்வான் ` என்பது குறிப்பு .

குறிப்புரை :

மடுத்து - தான் என்னும் செருக்கை உட்கொண்டு. மா - சிறப்பிற்குரிய. மேலைவினைகள் - பழவினைகள். விடுத்து - நம்மை விட்டு; வினைகள் நீங்கிடும் என்க. மடுத்து - என்பதற்குரிய செயப்படு பொருள் அவாய் நிலையான் வந்தது.

பண் :

பாடல் எண் : 1

முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேயடி யேனை மறவலே.

பொழிப்புரை :

செந்நெல் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே ! ( தியாகராசனே !) உன்னை அடியேன் முன்பே நினையாதொழிந்தேன் ; இன்னமும் நான் உன் சேவடிகளை நன்கு ஏத்தவில்லை ; ஆயினும் அடியேனை மறவாதே ; என்னை நினைந்தருள்வாயாக ! அவனை நாம் நினைக்கில் அவனும் நம்மை நினைப்பான் என்றபடி .

குறிப்புரை :

முன்னமே - காலம் வறிதே கழியாத முன்பே ; உனை நினையாதொழிந்தேன் என்க . இன்னம் - இன்னமும் . உன - உன்னுடையவான ( அ - ஆறன் உருபு ). மறவல் - மறவாதே .

பண் :

பாடல் எண் : 2

விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினைப்
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

விண்ணிலுள்ள தேவர்கள் தொழுது வணங்கும் விளக்கும் , மண்ணுலகிலுள்ளவர் வினைகள் தீர்க்கும் மருந்தும் ஆகிய பண்ணுள்ளவர்கள் பயில்கின்ற திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள அண்ணலார் அடிகளையே தொழுது உய்வீர்களாக !

குறிப்புரை :

விண்ணுளார் - தேவர் . விளக்கினை - ஒளி வடிவானவனை . மருந்தினை - மருந்துபோல்வானை . பண்ணுளார் - இசை வாணர் . விச்சுவசேவியனும் துன்பம் கடிவோனுமாகிய சிவ பிரானையே தொழுதுய்க என்கிறார் .

பண் :

பாடல் எண் : 3

நாளும் நம்முடை நாள்க ளறிகிலோம்
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும்
ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே
கோளிலி யரன் பாதமே கூறுமே.

பொழிப்புரை :

நம்முடைய வாழ்நாள்களின் வரையறையை நாளும் அறியும் ஆற்றல் இல்லை ; நம்மை ஆளும் நோய்களோ தொண்ணூற்றெட்டுக்கு மேலாகும் . அறிவின்மையின்கண் பொருந்தியிருந்து நீர் வருந்தாமல் கோளிலிச் சிவபெருமான் பாதமே கூறுவீராக .

குறிப்புரை :

நாளும் - நாடோறும் . நம்முடைய நாள்கள் - நமக்கு இவ்வுலகில் உளதாய நாள்கள் . ஆளும் - உடலை ஆட்சி செய்யும் . ஐம்பதோடாறெட்டு - தொண்ணூற்றெட்டு . ஏழைமைப்பட்டு - அறியா மையுடையராகி . நையாதே - வருந்தாதே ; மக்கள் - சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோர் . அரன் பாதமே அவரால் பற்றத்தக்கது என்றபடி .

பண் :

பாடல் எண் : 4

விழவி னோசை யொலியறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக்
குழக னார்திருப் பாதமே கூறுமே.

பொழிப்புரை :

விழாக்களின் ஓசையும் ஒலியும் விட்டு நீங்காத குளிர் பொழில்களை உடையதும் , தன்னிடம் பழகி வாழ்வார்களது வினைகளைத் தீர்க்கும் தொல்பதியும் , அழலைக் கையில் ஏந்திய பெருமான் அமர்ந்திருப்பதும் ஆகிய திருக்கோளிலியில் குழகன் திருப்பாதத்தையே கூறுவீராக .

குறிப்புரை :

ஓசை - இன்னதென அறியாத ஆரவாரம் . ஒலி - இசை முதலிய ஒலி நிகழ்ச்சிகள் . பழகினார் - தம்மொடு அன்பு செலுத்திப் பழகினார் . அழல்கையான் அமரும் கோளிலி என்க . குழகன் - என்றும் இளையன் .

பண் :

பாடல் எண் : 5

மூல மாகிய மூவர்க்கும் மூர்த்தியைக்
கால னாகிய காலற்குங் காலனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதன் பாதந் தொழுமினே.

பொழிப்புரை :

மும்மூர்த்திகளுக்கும் மூலமூர்த்தியும் , காலகாலனும் , அழகுமிக்க பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள சூலத்தைக் கையிலே உடையானுமாகிய பெருமானின் பாதங்களைத் தொழுவீராக .

குறிப்புரை :

மூவர்க்கும் மூலமாகிய மூர்த்தியை என மாறுக . காலனாகிய காலன் - காலத்தை வரையறுப்பவனாகிய இயமன் . சூல பாணி - சூலத்தைக் கையின்கண் ஏந்தியவன் . சிவபிரானே தத்துவங் கடந்த முதற்பொருளும் சமயத்தாரால் தொழப்படும் தெய்வமும் என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
நீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.

பொழிப்புரை :

காற்று வடிவாயவனும் , கடல் விடம் உண்டவனும் , வெண்ணீறணிந்தவனும் , நிமிர்ந்த புன்சடை உடைய அண்ணலும் , சடையிற் கங்கையாற்றினை உடையவனும் ஆகிய திருக்கோளிலியில் அமரும் இடபத்தை உடையானை , அவன்றன் திருவடிகளையே தொழுது ஏத்துவீராக .

குறிப்புரை :

காற்றனை - காற்று வடிவானவனை . நிமிர் - நிமிர்ந்த . புன் - மெல்லிய . ஆற்றனை - ஆறு சூடியவனை . ஆல்தனை அமரும் ஏற்றனை எனினும் பொருந்தும் . ஏற்றனார் . ( இடபம் ) ஏற்றூர்தியை உடையவர் . ஏத்தும் - தோத்திரியுங்கள் . முதல்வனை அவன் தன் திருவடியை நினைத்தே தொழுது ஏத்துமின் என்றது அதுவே நினைக்க வருவது ஆதலின் . ` நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை ` ( பரிபாடல் பா .4. அடி .62.)

பண் :

பாடல் எண் : 7

வேத மாயவிண் ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.

பொழிப்புரை :

வைதிகத் தேரின் உறுப்புக்களாய் நின்ற விண்ணோர்களுக்குத் தலைவனும் , நிலைபெற்ற உயிர்கள் ஓதி ஏத்தும் ஒப்பற்றவனும் , வண்டுகள் கோதி ஒலிக்கும் மலர்களின் வளமுடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக .

குறிப்புரை :

வேதமாய - வேத வடிவினனாய் உள்ள . வேதமாய விண்ணோர்கள் - வேதம் , வைதிகத்தேர் ; அதன் உறுப்புக்களாய் இருந்த விண்ணோர் . விண்ணோர்கள் கருவிகளாக சிவபிரான் கருத்தா வாதலை அத்தேரின் அமைப்பு காட்டிற்று . மன்னுயிர் - உலகில் நிலைபெற்ற உயிர்கள் . ஓதியேத்தும் ஒருவனை - கற்றுத் துதிக்கும் முதல்வனை . கோதி - மகரந்தங்களை வாயால்கிண்டி . அறையும் - ஒலிக்கும் . வேதநாயகன் - வேதங்களுக்குத் தலைவன் .

பண் :

பாடல் எண் : 8

நீதி யாற்றொழு வார்கள் தலைவனை
வாதை யான விடுக்கும் மணியினைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.

பொழிப்புரை :

முறையாகத் தொழுவார்களது தலைவனும் , துன்பங்களாயினவற்றை நீக்கும் செம்மணி போல்வானும் , வண்டுகள் கிண்டியொலிக்கும் மலர் வனம் உடைய திருக்கோளிலியில் வேத நாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக .

குறிப்புரை :

நீதியால் - முறையாக . வாதை - துன்பம் . விடுக்கும் - நீக்கும் . 7 ஆவது பாடல் பின்னிரண்டு வரிகளே இங்கும் அமைந்து உள்ளன .

பண் :

பாடல் எண் : 9

மாலும் நான்முக னாலு மறிவொணாப்
பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.

பொழிப்புரை :

மாலும் பிரமனும் அறியவியலாத , பாலனைய மென்மொழியுடைய உமையொரு கூறனாகிய அழகுடைய பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக .

குறிப்புரை :

அறிவொணா - அறியமுடியாத . பாலின் மென் மொழி - பாலனைய மென்மையான இனிய மொழி . நித்தல் - நாடோறும் .

பண் :

பாடல் எண் : 10

அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற்
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

அரக்கனாகிய இலங்கையர் மன்னன் இராவணனை நெருக்கி , அம்முடிகள் பத்தினையும் இறுத்தவனும் , பின் அவனுக்கு இரங்கியவனும் ஆகிய பெருமான் உறையும் திருக் கோளிலிக்கு விருப்பமாகி , அவன் அடிகளே தொழுது உய்வீராக .

குறிப்புரை :

அம்முடி - அழகிய முடி. இறுத்தான் - அழித்தவன். அவற்கு - அவனுக்கு. அருத்தி - ஆசை.

பண் :

பாடல் எண் : 1

தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

தலைமயிரெல்லாவற்றையும் பறிக்கின்ற சமண் ஒழுக்கம் உடையவர்கள் உள்ளத்து நிலையினால் மறைத்தால் மறைக்கவியலுமோ ? அலைநீரின் மருங்கிலுள்ள பொழில்கள் சூழ்ந்த பழையாறைவடதளியின்கண் நிலைபெற்றவன் திருவடிகளையே நினைந்து உய்வீர்களாக .

குறிப்புரை :

கையர் - வஞ்சனையுடையவர்கள் . தலையெல்லாம் - தலையிலுள்ள உரோமங்கள் எல்லாவற்றையும் . தலை - ஆகுபெயர் . பறிக்கும் - ஒவ்வொன்றாகக் களையும் . தலைமயிரைப் பறித்தல் சமணர் இழிவழக்கு . சமண்கையர் - கையையுடைய சமணர் . கை - ஒழுக்கமுமாம் . உள்நிலையினால் - தங்கள் பொய்மை நிலைமையினால் . மறைத்தால் - மறைக்க முயற்சித்தால் . மறைக்கொண்ணுமே - மறைத்தற்கியலுவதொன்றாமோ . ஏகாரவினா எதிர்மறை குறித்தது . அலையினார் - அலைகள் பொருந்திய ; நீர்வளம் சான்ற . அலை - ஆகு பெயர் அல்லது அலைக்கண்மருங்கே என்க . நிலையினான் - எழுந்தருளி இருப்பவன் . சமணர்கள் பழையாறை வடதளித் திருக்கோயிலில் இருந்த பெருமானை மறைத்து வைத்திருந்தகாலையில் , அங்குச் சென்ற அப்பர் , பெருமானைக் காணாது உண்ணாநோன்பு கொண்டு பின்பு இறைவன் காட்சிதரப் பாடியதாதலின் இப்பாடலில் மறைத்தால் மறைக்கவொண்ணுமோ என்றார்கள் .

பண் :

பாடல் எண் : 2

மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை
தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக்
காக்கி னானணி யாறை வடதளி
நோக்கி னார்க்கில்லை யால்அரு நோய்களே.

பொழிப்புரை :

மூக்கினால் ஒலிக்குமாறு தம் மந்திரங்களை ஓதி , அக்குண்டிகை தூக்கினாராகிய சமணர்கள் குலத்தை அடியோடு வேரறுத்துத் தனக்கு அணியாறைவடதளியை ஆக்கிக் கொண்டானாகிய பெருமானை நோக்கினார்க்கு அருநோய்கள் இல்லை .

குறிப்புரை :

சமணர்களின் மந்திரங்கள் மெல்லெழுத்தே மிக்கு மூக்கொலியால் ஓதத்தக்கன ஆதலின் முரன்றோதி என்றார் . ` ஞமண ஞாணன ` ( சுந்தரர் பதிகம் ) தூரறுத்தே தனக்கு ஆக்கினான் - சமணர் கூட்டங்ளை வேரோடு களைந்து சமணர் மறைத்த கோயிலைத் தன்னதாகக் காட்டியவன் . அணி - அழகிய . அருநோய்கள் - நீங்குதற்கரிய துன்பங்கள் . நீர்க்குண்டிகைகள் மூன்றை ஒருசிறு உறியில் தூக்கித் திரிதல் சமணர் வழக்கு .

பண் :

பாடல் எண் : 3

குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில்
மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை
அண்ட ரைப்பழை யாறை வடதளிக்
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.

பொழிப்புரை :

குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , உடை யணியாத மிண்டர்களுமாகிய சமணர்களைத் துரத்திய விமலனும் , தேவதேவனும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள திருநீலகண்டரைத் தொழுது அடியேனின் கரங்கள் உய்ந்தன .

குறிப்புரை :

குண்டர் - கொழுத்தவர் . குணமில்லர் - நற்குணமில்லாதவர் . கூறை - ஆடை . இல் - இல்லாத . மிண்டர் - வலியர் . உடையின்றித் திரிதல் சமணகுருமார்வழக்கு . துரந்த - நீக்கிய , அரசனைக் கொண்டு ஒழித்த . விமலன் - குற்றமற்றவன் . அண்டர் - தேவர் . வடதளிக் கண்டரை - பழையாறை வடதளியாகிய தலத்தில் உறைபவரை .

பண் :

பாடல் எண் : 4

முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரைக்
கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப்
படைய ரைப்பழை யாறை வடதளி
உடைய ரைக்குளிர்ந் துள்குமென் னுள்ளமே.

பொழிப்புரை :

முடைநாற்றம் உடையோரும் , தலையை மழித்த மொட்டையர்களும் , கீழானவர்களுமாகிய சமணர்களை நீக்கியவரும் , கனலையும் வெண்மழுப் படையினையும் உடையவரும் ஆகிய பழையாறை வடதளிக்குடையவரை என் உள்ளம் குளிர்ந்து நினைகின்றது .

குறிப்புரை :

முடையர் - உடல் கழுவாமை , பல் விளக்காமை முதலியவற்றால் முடைநாற்றமுடையர் . தலை முண்டிக்கும் - மயிர் பறித்து மொட்டையாக்கி மழுங்கலாகக்கொள்ளும் . மொட்டரை - மொட்டையரை . கடையரை - ஒழுக்கத்தால் இழிந்தவரை . கடிந்தார் - அழித்தவராகிய . கனல் - ( கனலும் ) எரிக்கும் . வெண்மழுப்படையரை - வெள்ளிய மழுவாகிய ஆயுதத்தையுடையவரை . உள்கும் - நினைக்கும் .

பண் :

பாடல் எண் : 5

ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணும்
கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை
அள்ள லம்புன லாறை வடதளி
வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.

பொழிப்புரை :

ஒளியும் அரியும் உடைய கண்ணை உடைய பெண்டிர்க்கு முன்னும் உடையற்றவராய் நின்றுண்ணும் கள்ளர்களாகிய சமணரைக் கடிந்தவரும் , கரும்பின் ஊறும் சாறு பாய்ந்தோடிச் சேறாகிய நீர்வளம் உடைய பழையாறைவடதளியில் உள்ள வள்ளலும் ஆகிய பெருமானைப் புகழத் துயரங்கள் வாடும் .

குறிப்புரை :

ஒள்ளரிக்கண்ணார் - ஒளியோடு கூடிய செவ்வரி படர்ந்த கண்களையுடைய பெண்கள் . அமணேநின்று - அம்மணமாகி நின்று . உணும் - உண்ணும் . கள்ளரை - கள்ளத்தனமுடையவர்களை . உடையின்றிப் பெண்களிடம் உணவிரக்கும் சமண வாழ்க்கையைக் கருதியது . கடிந்த மகளிர் இடும் பிச்சையை ஏற்று காமமாதிகளை உள்வைத்து நிர்வாணராய் உண்ணும் சமணத் துறவியரை வெறுத்த . கரும்பு ஊறலை - கருப்பஞ்சாறு போன்றவனை . அள்ளல்புனல் - சேற்று வளம் சான்ற நீர் . வாடும் - வருந்தும் .

பண் :

பாடல் எண் : 6

நீதி யைக்கெட நின்றம ணேயுணும்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை யாறை வடதளிச்
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.

பொழிப்புரை :

முறைமை கெட நின்று ஆடையற்றவராய் உண்ணும் சாதியாகிய சமணரைக் கெடுமாறு செய்தருளிய சங்கரனும் , ஆதியும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள சோதியைத் தொழுவாருடைய துயர் தீரும் .

குறிப்புரை :

நீதியைக்கெட - நீதிமுறைகெட . அமணே நின்று - அம்மணமாகவே நின்று . உணும் - இரந்துணும் . சாதியை - சமண மதத்தின் செயல்களை . கெடுமாறு செய்த - அழியுமாறு செய்த . சங்கரன் - அழிப்பவன் . ஆதியை - முதல்வனாய் விளங்குபவனை .

பண் :

பாடல் எண் : 7

திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண்
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை
அருட்டி றத்தணி யாறை வடதளித்
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.

பொழிப்புரை :

திரட்டிய இரையாகிய சோற்றுக் கவளத்தையே மிகத்திணிக்கும் சமண் பொய்யர்களை அங்கிருந்தும் பிரித்த பெருமானை . அருள் திறத்தை உடைய அழகுபொருந்திய பழையாறை வடதளியில் தெளிவிக்கும் பிரானைத் தொழத் தீவினைகள் யாவும் தீரும் .

குறிப்புரை :

திரைதிரள் - வரிசையாக உருட்டிய சோற்றுத் திரள் . திரைவரிசைகளை ஒத்த எனினுமாம் . கவளம் - உணவு . திணிக்கும் - வாயில் பெய்துகொள்ளும் . பிரட்டர் - வஞ்சகர் . பிரித்த - அச் சமண சமயத்திலிருந்து நீங்கச்செய்த . அருள் திறத்து - திருவருள் வலிமையொடு கூடிய . தெருட்டரை - தம் முண்மையை உலகுக்குத் தெளியச் செய்பவனாகிய சிவபெருமானை.

பண் :

பாடல் எண் : 8

ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்
வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே.

பொழிப்புரை :

அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும் , வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம் .

குறிப்புரை :

ஓதினத்து எழுத்தஞ்சும் - ஓதவேண்டிய திருவைந்தெழுத்தையும் . உணரா - ஓதியுணராத . வேதினைப்படுத்தானை - துன்பம் செய்தவனை . வெங்கூற்று - கொடிய கூற்றை . உதை - உதைத்த . பாதன் - திருவடிகளையுடையவன் .

பண் :

பாடல் எண் : 9

வாயி ருந்தமி ழேபடித் தாளுறா
ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்
பாயி ரும்புன லாறை வடதளி
மேய வன்னென வல்வினை வீடுமே.

பொழிப்புரை :

மெய்ம்மையும் பெருமையும் உடைய தெய்வத் தமிழையே பயின்று ஆளாக உறாத ஆயிரஞ் சமணரையும் அழிவின் கட்படுத்தவனும் , பாய்கின்ற பெருந்தண்ணீர் வளம் உடைய பழையாறை வடதளியில் மேவியவனும் ஆகிய பெருமான் என்று சொல்லு மளவிலேயே வல்வினைகள் கெடும் .

குறிப்புரை :

வாய் - வாயினால் . வாய் - வாய்ந்த . சிவனுக்கு ஆளாம் தன்மையில் - உயிர்களைச் செலுத்தும் சிறப்புத்தன்மை வாய்ந்த . இருந்தமிழே படித்து - பெருமையுடைய தமிழ் மொழியைப்படித்து . வேற்று மொழிக்கில்லாத் தனிச்சிறப்புடைய ஞாலம் அளந்த மேன்மை தெய்வத்தமிழ் என்பதை நினைவு கூர்க . தெய்வத்தமிழைப் படித்தும் என உம்மை கூட்டுக . ஆளுறா - அம்மொழியின் பயனாய் விளங்கும் இறைவனை உணர்ந்து அவனுக்கு ஆளாக அடையாத . ஆயிரம் சமணும் - அவ்வூர் சமணப் பள்ளியில் அமைந்த ஆயிரவராகிய கூட்டம் . சமணர் தமிழ்மொழியில் வல்லுநர்களாகி இருந்தும் , அதன் பயனை அறியாது ஒழுகினதை நினைவுகூர்க . அழிவாக்கினான் - அழியச் செய்தான் . என - என்று சொல்ல . வீடும் - அழியும் .

பண் :

பாடல் எண் : 10

செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளித்
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.

பொழிப்புரை :

போரினைச் செய்யும் சேண் புகழ் உடைய இராவணனின் உடலும் , பிடரியும் இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள்வடிவானவனாகிய பழையாறைவடதளியின் அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும் .

குறிப்புரை :

செருத்தனை - போரை. சேண் - புகழால் நீண்ட. எருத்து - பிடரி. இற - நொறுங்க. இறை - சிறிதே. அருத்தனை - பொருள் வடிவானவனை. திருத்தன் - அழகியவன்.

பண் :

பாடல் எண் : 1

பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும்
கருமாற் கின்னருள் செய்தவன் காண்தகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே.

பொழிப்புரை :

போரிடுகின்ற நெறியிற் படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி , மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய காணத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும் .

குறிப்புரை :

பொரும் ஆற்றின் - போர்செய்தற்குரிய முறையால் . படை - சக்கரமாகிய ஆயுதம் . ஆற்றில் வரும்பூம்புனல் மலர் - பொலிவுடைத்தாய் வரும் ஆற்றுத் தண்ணீரும் , மலரும் . உம்மைத் தொகை . கருமாற்கு - கருநிறம் பொருந்திய திருமாலுக்கு . திருமால் வழிபட்ட தலமாதலை நினைப்பித்தது . காண்தகு - காண்டற்கு இனிதாகிய .

பண் :

பாடல் எண் : 2

ஆலத் தார்நிழ லில்லற நால்வர்க்குக்
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்தொழு வார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும் , குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை .

குறிப்புரை :

ஆலத்து - கல்லாலமரத்து . ஆர் - பொருந்திய . கோலத்தால் - அழகிய தமது தோற்றத்தால் . வாக்கினால் சொல்லாது வீற்றிருந்த நிலையும் காட்டிய ஞானமுத்திரையுமாகிய கோலத்தால் என்க . உரை செய்தவன் - சொல்லாமற் சொன்னவன் . ஆர் அருள் - அரிய திருவருள் . ஏல - ஏற்புடைத்தாக .

பண் :

பாடல் எண் : 3

துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

தீவினை செய்தாரைத் துணிக்கின்ற வண்ணத்தையும் , ஒளியையும் உடைய சக்கரப்படையினைக் கொள்வதற்காக எண்ணி , அழகு வண்ணம் உடைய மலர்களைக் கொண்டு திருவடிகளை அருச்சித்த நீலமணிபோலும் நிறமுடையானாகிய திருமாலுக்கு அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றைப் பணிகின்ற இயல்புடையார்க்குப் பாவங்கள் இல்லையாம் .

குறிப்புரை :

துணிவண்ணம் - பகைவரைத் துணிக்கின்ற தன்மை . சுடராழி - ஒளியையுடைய சக்கரம் . கொள்வான் - கொள்வதற்காக . எண்ணி - நினைத்து . அணி - அழகிய . வண்ணத்து - செந்நிறத்து , அலர் - தாமரை மலர் . மணி வண்ணனுக்கு - நீலமணி போன்ற கரிய நிறத்தையுடைய திருமாலுக்கு . பணிவண்ணத்தவர்க்கு - பணியும் தன்மையையுடையவர்க்கு .

பண் :

பாடல் எண் : 4

தீதவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே.

பொழிப்புரை :

தீயவற்றையே செய்து தீவினையில் பின்னும் வீழாது , கருத்தினில் நிலைபெறுமாற்றை உடைய காதல் புரிந்தோராகிய நல்ல மாதவர் பயில்கின்ற மாற்பேற்றைக் கைதொழப் போது வீராக ; உம் வினையாயின போகும் .

குறிப்புரை :

தீதவை செய்து - தீமையாயினவற்றைச் செய்து . தீவினை வீழாதே - தீவினையின்கண் சாராது . போதுமின் எனக் கூட்டுக . காதல் - அன்பு . கருத்தினில் நின்ற - கருத்தோடு நின்ற . பயில் - வாழ்கின்ற . போதுமின் - வாருங்கள் .

பண் :

பாடல் எண் : 5

வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.

பொழிப்புரை :

கச்சினைக்கொண்ட மென்முலை உடைய உமையொரு பங்கினன் உறைவதும் , இழுத்துக் கட்டப் பெற்ற நல்ல முரசுகளும் , நான்மறைகளும் அழகுற ஒலிக்கப்பெறுவதும் , நெடிய பசும் பொழில்களை உடையதுமாகிய திருமாற்பேற்றைக்கைதொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலைபெற வீற்றிருப்பர் .

குறிப்புரை :

வார்கொள் - கச்சணிந்த . வார்கொள்நன்முரசம் - வாரால் இழுத்துக் கட்டப்பட்ட முரசம் . அறை - வண்டுகள் ஒலிக்கும் . வார்கொள் - நீண்ட பொழில் . மன்னுவர் - நிலைபெறுவர் .

பண் :

பாடல் எண் : 6

பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மி னொளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீருங் கவலையே.

பொழிப்புரை :

பழையவல்வினைகளது பற்று அறுக்கும் வகை ஒன்று உண்டு ; அதனைச் சொல்லுவேன் கேட்பீராக ; ஒளிகிளர்கின்றதும் , வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாற் பேறு கண்டு கைதொழக் கவலைகள் தீரும் .

குறிப்புரை :

பண்டை வல்வினை - பழைய வலிமையான வினை - சஞ்சிதம் . பற்றறுத்தல் - முற்றிலும் நீக்குதல் . ஒளிகிளர் - ஒளி விளங்கும் .

பண் :

பாடல் எண் : 7

மழுவ லான்திரு நாமம் மகிழ்ந்துரைத்
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும்
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லார்தமக் கில்லை துயரமே.

பொழிப்புரை :

மழுவினை ஏந்திய வெற்றி உடையானது திரு நாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்ல அடியார்களுக்கு அன்பு செய்து இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற் பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை .

குறிப்புரை :

மழுவலான் - மழுவாயுதத்தை வலக்கரத்தே ஏந்தியவன் . திருநாமம் - திருவைந்தெழுத்து . வழுவில் - குற்றமில்லாத . அன்பு செய்து அழவலார்களுக்கு , இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் என்க .

பண் :

பாடல் எண் : 8

முன்ன வன்னுல குக்கு முழுமணிப்
பொன்ன வன்திகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்திரு மாற்பேறு கைதொழும்
அன்ன வரெமை யாளுடை யார்களே.

பொழிப்புரை :

உலகினுக்கு முன்னேதோன்றியவனும் , முழு மணியும் , பொன்னும் , விளங்கும் முத்தும் , போகங்களும் ஆக விளங்கும் . மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள் .

குறிப்புரை :

உலகுக்கு முன்னவன் என்க . முழுமணிப் பொன்னவன் - முழுமணி போன்றவன் . பொன் போன்றவன் என்க . போகமாம் மன்னவன் - போகத்தைச் செய்பவனாகியும் போகப் பொருளாகியும் நிற்கும் தலைவன் .

பண் :

பாடல் எண் : 9

வேட னாய்விச யன்னொடும் எய்துவெம்
காடு நீடுகந் தாடிய கண்ணுதல்
மாட நீடுய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே.

பொழிப்புரை :

அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து , வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும் , மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள் .

குறிப்புரை :

விசயன் - அருச்சுனன் . வெம்காடு - இடுகாடு . நீடு உகந்து - பெரிதும் விரும்பி . பரலோகம் - மேலான உலகம் .

பண் :

பாடல் எண் : 10

கருத்த னாய்க்கயி லாய மலைதனைத்
தருக்கி னாலெடுத் தானைத் தகரவே
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யால்தொழு வார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

கயிலாயமலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

கருத்தனாய் - தானே தலைவன் என்ற எண்ணமுடையவனாய் . தருக்கினால் - ஆணவத்தால் . தகர - அழிய . ஆர் அருள் - அரிய திருவருள் . அருத்தியால் - ஆசையால் . ஆணவம் உடையாரை இறைவன் ஆட்கொள்ளும் மறக்கருணையை நினைப்பித்தது .

பண் :

பாடல் எண் : 1

ஏது மொன்று மறிவில ராயினும்
ஓதி யஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்
பேத மின்றி யவரவ ருள்ளத்தே
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. 

பொழிப்புரை :

திருமாற்பேற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர் ஏதொன்றும் அறியாதவர்கள் ஆனாலும், திருவஞ்செழுத்தை ஓதி உணர்வார்கட்கு வேற்றுமையின்றி அவரவர் உள்ளத்தே தாமும் அம்பிகையுமாய் மகிழ்ந்து வீற்றிருப்பர்.

குறிப்புரை :

ஏதும் ஒன்றும் - பிறிதொன்றும். ஓதி - அன்போடு ஓதி. உணர்வார்கட்கு - திருவைந்தெழுத்தின் உண்மைப் பொருளை அறிபவர்கட்கு. பேதமின்றி - வேறுபாடின்றி. அவரவர் உள்ளத்தே - அவரவரின் மனத்தே. மகிழ்வர் - வீற்றிருந்து அருள்செய்வர்.

பண் :

பாடல் எண் : 2

அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர்மாற் பேறரே.

பொழிப்புரை :

நெஞ்சே! அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக; உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிரு நீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர்.

குறிப்புரை :

நிச்சலும் - நாடோறும். நித்தல் என்பதன் மரூஉ. நினையாய் - நினைப்பாயாக. கச்ச - கைத்த என்பதன் மரூஉ. எல்லோர்க்கும் கசந்த. மா - கரிய. என - என்று சொல்ல. வைச்சமாநிதி - சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன் தருவர்.

பண் :

பாடல் எண் : 3

சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே. 

பொழிப்புரை :

சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர்.

குறிப்புரை :

சிவபெருமானிடத்து அன்பும் நினைப்பும் இல்லா தொழியின் யாவும் பயன்தரா என்ற கருத்து விளக்கப்படுகிறது. சாத்திரம் - சமய இலக்கண வரம்பு. சழக்கர் - அறிவற்றோர்; பொய்யர். கோத்திரம் - சிறந்தார் ஒருவரின் பரம்பரையைச் சுட்டியுரைப்பது. குலம் - சாதி. பாத்திரம் - வணங்கப்படுதற் குரியவர். பணிதிரேல் - பணிவீரேயானால். மாத்திரைக்குள் - கணப்பொழுதிற்குள்.சாத்திரம் கோத்திரம் குலம் முதலாயின வற்றையே கருதி உண்மைப் பொருளை உணரும் பயனை அறியாதொழுகினாரை வெறுத்தது. இதுகொண்டு இவற்றை வெறுப்பதாகக் கூறல் தவறு. தம்மை மறந்த நிலையில் தாமே அவை நீங்கும், தூங்கினவன் கைப்பொருள்போல என்பதாம்.

பண் :

பாடல் எண் : 4

இருந்து சொல்லுவன் கேண்மின்க ளேழைகாள்
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே. 

பொழிப்புரை :

அறிவில்லாதவர்களே! சிந்தித்திருந்து சொல்லுவேன்; கேட்பீர்களாக! அரிய தவத்தினாலாய பயனைத்தரும் திருவஞ்செழுத்தை ஓதினால் திருமாற்பேற்று இறைவர் உம்மைப் பொருந்தியுள்ள நோய்களாகிய பிணிகள் போகும்படி துரத்துவதாகும் ஒப்பற்ற மருந்தும் ஆவர்.

குறிப்புரை :

இருந்து - அமைந்திருந்து. ஏழைகாள் - அறிவற்ற வர்களே. அருந்தவந்தரும் - பெறுதற்கரிய தவத்தினாலாம் பயனைத் தரும். பொருந்து - உடலிற் பொருந்திய. நோய் - துன்பம். பிணி - நோய். துரப்பதோர் - நீக்குவதொரு. மன்னும் - நிலைபெற்ற.

பண் :

பாடல் எண் : 5

சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினால்
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர்
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே. 

பொழிப்புரை :

உலகில் உள்ளவர்களே! எல்லோரும் அறியச் சொல்லுவேன் கேட்பீர்களாக; இடபத்தின் மேல் வருவாராகிய திருமாற்பேற்று இறைவர் திருவடிகளை ஏத்தினால், உம்மைக் கொள்ளவரும் கூற்றுவனை நீக்கி, குறைகளை அறுத்து, ஆள்கின்ற மாற்றில்லாத செம்பொன்னை ஒப்பர்.

குறிப்புரை :

சாற்றிச் சொல்லுவன் - பலருமறியக் கூறுவன். தரணியீர் - உலகத்தவர்களே. மாற்றிலா - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த.

பண் :

பாடல் எண் : 6

ஈட்டும் மாநிதி சால இழக்கினும்
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்
காட்டில் மாநட மாடுவாய் காவெனில்
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற்பேறரே. 

பொழிப்புரை :

வருந்திச் சேர்த்த பெருஞ்செல்வத்தை மிகுதியாக இழந்தாலும், அழிக்கும் காலன் விரையவந்து அழைத்தாலும், சுடு காட்டில் பெரிய நடனம் ஆடுகின்ற பெருமானே! காப்பாற்றுவாயாக! என்றழைத்தால், திருமாற்பேற்றிறைவர் வாட்டம் தீர்க்கவும் வல்லவராவர்.

குறிப்புரை :

ஈட்டும் - சேர்க்கும். மாநிதி - மிக்க செல்வம். சால - மிக. வீட்டும் - நம்மை அழிக்கும். காட்டில் - இடுகாட்டில். கா - காப்பாற்றுவாயாக. எனில் - என்றழைத்தால். வாட்டம் - இயம வாதனையாம் துன்பம்.

பண் :

பாடல் எண் : 7

ஐய னேயர னேயென் றரற்றினால்
உய்ய லாமுல கத்தவர் பேணுவர்
செய்ய பாத மிரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே. 

பொழிப்புரை :

தலைவனே! சிவபெருமானே! என்று வாய்விட்டு அரற்றினால் உய்தி அடையலாம்; அதுவன்றியும் உலகத்திலுள்ளவர் பேணி மதிப்புச்செய்வர்; அப்பெருமானின் இரண்டு சிவந்த திருப் பாதங்களை நினைத்தால் திருமாற்பேற்று இறைவர் உலகத்தை ஆளவும் வைப்பர்.

குறிப்புரை :

அரற்றினால் - பல்காலும் சொன்னால். செய்ய பாதம் - சிவந்த திருவடிகள். வையம் - உலகம்.

பண் :

பாடல் எண் : 8

******************

பொழிப்புரை :

******************

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 9

******************

பொழிப்புரை :

******************

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 10

உந்திச் சென்று மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
அந்த மில்லதோ ரின்பம் அணுகுமே. 

பொழிப்புரை :

செருக்கு தன்னை உந்தித்தள்ளுதலால் சென்று திருக் கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது சந்தனம் பூசிய தோளும் தாள்களும் இறுமாறு திருவிரலால் ஊன்றிய பெருமானுக்குரியதும், பெண்குரங்குகள் பாயும் பொழில் சூழ்வதுமாகிய திருமாற்பேறு என்று கூறினால் முடிவில்லாத ஒப்பற்ற இன்பம் அணுகும்.

குறிப்புரை :

உந்திச் சென்று - தேரைச் செலுத்திக்கொண்டு சென்று எனலுமாம். சந்து - மூட்டுவாய். இற - நொறுங்க. அந்தம் - முடிவு. அணுகும் - நெருங்கும்.

பண் :

பாடல் எண் : 1

முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.

பொழிப்புரை :

மொய்க்கின்ற முத்துக்கள் ஊர்ந்து வரும் தண்ணீரை உடைய அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறையும் பெருமான் ` திருவடி போற்றி ` என்று கூறுவோரெல்லாம் , பொய்யுடையதாகி ஊர்கின்ற ஐந்து புலன்களோடு , பொருந்திய வன்மை உடைய தாய் ஊர்கின்ற வினைகளையும் மாற்றும் வல்லமை உடையவர்கள் .

குறிப்புரை :

முத்தூரும் புனல் - முத்துக்களை ஊர்ந்து செல்லும் தண்ணீர் . அரிசிற்கரை - அரிசிலாற்றங்கரை . மொய் - நிறைந்த . போற்றியென்பாரெலாம் - போற்றி என்று சொல்வாரெல்லாரும் . பொய்த்தூரும் புலன் ஐந்து - அழிவையே மேற்கொண்டுள்ள ஐந்து புலன்கள் . புல்கிய - சேர்ந்த . மைத்து ஊரும் வினை - கரிதாய் மயக்கம் செய்து வருகின்ற வினைகள் . மாற்றவும் - நீக்கவும் . வல்லர் - வல்லமையுடையர் .

பண் :

பாடல் எண் : 2

பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துரு காமனத் தார்களைப்
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.

பொழிப்புரை :

வெண்பிறையாகிய தலைக் கண்ணியணிந்த சடையுடைய எம்பெருமானே என்று கூறி , தம்முடைய குற்றங்களை எண்ணிஉணர்ந்த நல்லடியார்கள் கண்ட வணக்கத்துக்குரியவரே ! மிகுதியாகக் கருத்தில் எண்ணி உருகாத மனத்தை உடையவர்களைப் புறக்கணித்திடுகின்ற புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே ! ( எம்மையாண்டருள்க ).

குறிப்புரை :

பிறைக்கண்ணிச் சடை - பிறையாகிய தலைமாலையை உடைய சடை . கறைக்கணித்தவர் - தம் குற்றங்களை எண்ணி ஆராய்ந்தவர் . கண்டவணக்கத்து ஆய் - தரிசித்த வணக்கத்தை மேற்கொண்டு . உற - பொருந்த . கணித்து - இறைவன் புகழைஎண்ணி . புறக்கணித்திடும் - வெறுக்கும் .

பண் :

பாடல் எண் : 3

அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாம்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.

பொழிப்புரை :

அரிசிலாற்றுக்கரையின்மேல் உள்ள அழகு நிறைந்த மதிலை உடைய நம் திருப்புத்தூர்ப் புனிதரை , வணங்கவேண்டிய முறைமைப்படிப் பரவிப் பணிவார்க்கெல்லாம் குற்றமற்ற நன்னெறி தோன்றும் ; காண்பீராக .

குறிப்புரை :

அரிசிலின் - அரிசிலாற்றின் . அணி ஆர்தரு - அழகு பொருந்திய . புரிசை - மதில்களோடு கூடிய . புனிதன் - தூயன் . பரிசொடும் - நல்ல தன்மையோடும் . பரவி - தோத்திரித்து . பணிவார்க்கெல்லாம் - வணங்குவார் எல்லாருக்கும் . துரிசில் நன்னெறி - குற்றமற்ற நல்ல வீட்டுநெறி . தோன்றிடும் - உண்டாம் .

பண் :

பாடல் எண் : 4

வேத னைமிகு வீணையில் மேவிய
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை
நாத னைநினைந் தென்மனம் நையுமே.

பொழிப்புரை :

வேதங்கள் ஓதுபவனை , வீணையில் மிகுகின்ற கீதங்கள் உடையவனை , மணம் வீசுகின்ற கொன்றையாகிய அழகிய போதினை அணிந்தவனை , அரிசிற் புனல் சூழ்ந்த புத்தூரில் உள்ள நாதனை , என் மனம் நினைந்து நெகிழ்கின்றது .

குறிப்புரை :

வேதனை - வேதங்களின் வடிவாயுள்ளவனை , அல்லது வேதங்களை அருளிச்செய்தவனை . மிகு - சிறந்த . வீணையில் மேவிய கீதனை - வீணையில் பொருந்திய இசை வடிவானவனை . கிளரும் - விளங்கும் . நறும் - மணங்கமழும் . கொன்றையம் போதனை - கொன்றைமலரணிந்தவனை . புனல்சூழ்ந்த - நீர்வளம் சூழ்ந்த .

பண் :

பாடல் எண் : 5

அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.

பொழிப்புரை :

கோங்கின் அரும்புபோன்ற முலையுடைய பெண்களோடு கூடித் துன்பங்கள் மிகுந்த வாழ்க்கையின்மேல் விருப்பம் சேர்கின்ற நிலையைவிட்டு நீங்கி , நல்ல பக்தி கொண்டு , திருப்புத்தூரில் உள்ள இறைவனைச் சிந்திக்கச்சிந்திக்கக் கரும்புச் சாற்றைவிடத் தித்திக்கும் ; காண்பீராக .

குறிப்புரை :

அரும்புபோல் - தாமரையரும்புபோலும் . அருப்பு - வலித்தல் விகாரம் . அல்லல் - துன்பம் தருகின்ற . விருப்புச் சேர் நிலை - விருப்பம் சேர்க்கும் தன்மை . நல்லிட்டமாய் - நல்ல விருப்பத்தோடு . சிந்தை செயச்செய - மனத்தால் நினைக்க நினைக்க . அண்ணிக்கும் - இனிக்கும் .

பண் :

பாடல் எண் : 6

பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப்
பூம்புன லும்பொ திந்தபுத் தூருளான்
நாம்ப ணிந்தடி போற்றிட நாள்தொறும்
சாம்ப லென்பு தனக்கணி யாகுமே.

பொழிப்புரை :

பாம்பும் , பிறையும் , பொலிவுள்ள கங்கைநதியும் படர்ந்த செஞ்சடையின்கண் பொதிந்த புத்தூரில் உள்ள புனிதர் , நாள்தொறும் நாம் பணிந்து , தன் திருவடியைப் போற்றிட , தான் சாம்பலையும் , எலும்பையும் தமக்கு அணியாக்கொள்வர்

குறிப்புரை :

படர் - தங்கிய . புன் - மெல்லிய . பூம்புனல் - அழகிய கங்கையாறு . பொதிந்த - மறைத்துவைத்த . நாம் பணிந்து நாள்தோறும் போற்றிடப் புத்தூருளான் என வினை முடிவு செய்க . அவனுடைய அடையாளமாய் அழகு செய்வன சாம்பலும் , என்பும் ஆம் . அணி - அழகு விளைப்பனவாகும் .

பண் :

பாடல் எண் : 7

கனல்அங் கைதனி லேந்திவெங் காட்டிடை
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர்
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.

பொழிப்புரை :

புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் தம் அழகிய கையினில் தீயையேந்தி , வெவ்விய காட்டிடை நெருப்புப் பொருந்திய இடத்திடை எய்தி நின்று ஆடும் இயல்பினர் ; பாடும் இயல்பினர் ; பின்னுதற்குரிய அழகிய செஞ்சடைமேல் பிறையும் கங்கையும் சூடும் இயல்பினர் .

குறிப்புரை :

கனல் - நெருப்பு . அங்கை - அகங்கையில் . வெங்காட்டிடை - இடுகாட்டில் . அங்கு , அசை . நெருப்பு அவ்விடங்களில் பற்றியெரியும்படி அனல்வீசி என்க . பினலம்செஞ்சடை - பின்னியது போன்று முறுக்குண்ட அழகிய சிவந்த சடை . தருபுனல் - ஓடிவரும் கங்கை அல்லது மக்கட்கு நல்வாழ்வு தரும் கங்கை என்க . போலும் - அசைப்பிலயம் என்ற பாடத்திற்குப் பிரளயம் என்பதன் இடைக் குறை என உரைக்க .

பண் :

பாடல் எண் : 8

காற்றி னுங்கடி தாகி நடப்பதோர்
ஏற்றி னும்மிசைந் தேறுவ ரென்பொடு
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப்
போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே.

பொழிப்புரை :

புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் . காற்றைவிட விரைந்து நடப்பதாகிய ஒப்பற்ற இடபத்தினும் மனம் ஒத்து ஏறுவர் ; எலும்பும் திருநீறும் அணிவர் ; ` தம்மையே நினைவாகிப் போற்றி ` என்று வழிபடுவார்க்கு அன்பர் ஆவர் .

குறிப்புரை :

கடிதாகி - விரைவுடையதாய் . ஏற்றினும் - இடபத்தின் கண்ணும் . இசைந்து - விரும்பி . நினைவாய்த் தம்மைப் போற்றி யென்பார்க்கு அன்பர் .

பண் :

பாடல் எண் : 9

முன்னும் முப்புரஞ் செற்றன ராயினும்
அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம்
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே.

பொழிப்புரை :

புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் , முன்னும் மூன்றுபுரங்களைச் சினந்தவராயினும் , வருந்தித் தம்மையடைந்தவர்க்கெல்லாம் அன்னம் போல்வர் ; விரிந்த சடை ஒளி விளங்கும் மின்னலென உடையவர் ; திருமேனி செம்பொன்னென உடையவர் ஆவர் .

குறிப்புரை :

முன்னும் - முற்காலத்தும் . செற்றனராயினும் - அழித்தனரானாலும் . அலந்து - வருந்தி , அடைந்தார்க்கெல்லாம் - அடைந்தவரெல்லார்க்கும் . அன்னம் - இளைப்பாற்றும் உணவு - திருவெண்ணீறணிந்த தோற்றத்தால் அன்னத்தை ஒப்பர் . விரிசடையால் மின்னலை ஒப்பர் . செம்பொன்னும் ஒப்பர் என்க .

பண் :

பாடல் எண் : 10

செருத்த னால்தன தேர்செல வுய்த்திடும்
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல்
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.

பொழிப்புரை :

பொழில்கள் நிறைந்த புத்தூர்த் தலத்திறைவர் , பொருதற்குத் தன்னுடைய தேர் செல்லுமாறு செலுத்துகின்ற கருத்தொடு கூடியவனாகிய இராவணன் திருக்கயிலையை எடுக்கலுற்ற போது , அவன் உடலும் பருத்த தோள்களும் சிதைந்து கெடும் படியாகத் தம் திருப்பாதத்து ஒரு திருவிரலைப் பொருத்தியவர் ஆவர் .

குறிப்புரை :

செருதன்னால் - போரால் . தன - தன்னுடையவான . உய்த்திடும் - செலுத்தும் . கருத்தனாய் - எண்ணமுடையவனாய் .

பண் :

பாடல் எண் : 1

ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர்
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய
திருத்த னைப்புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே.

பொழிப்புரை :

ஒப்பற்றவனும் , மூன்றுலகங்களுக்கும் தேவர்க்கும் பொருளாய் உள்ளவனும் , அடியேன் மனத்துள் அமர்கின்ற கருத்தனும் , தீயாடிய திருத்தமுற்றவனுமாகிய பெருமானைப் புத்தூரிற் சென்று , கண்டு , உய்ந்தேன் .

குறிப்புரை :

ஒருத்தனை - மூவுலகொடு தேவர்க்கும் ஒருவன் என்று ஏத்தப்படுபவனை . அருத்தனை - பொருளாயிருப்பவனை . கருத்தனை - முதற் பொருளானவனை . கடுவாய்ப்புனல் - கடுவாய் என்னும் ஆற்றின் தண்ணீர் . திருத்தன் - திருத்தமானவன் . உய்ந்தேன் என்பது உய்ந்தென் எனக் குறுகியது . ஏ - அசை . கடுவாய் நதிக்கரையில் உள்ள புத்தூர் என்க .

பண் :

பாடல் எண் : 2

யாவ ருமறி தற்கரி யான்றனை
மூவ ரின்முதல் லாகிய மூர்த்தியை
நாவி னல்லுரை யாகிய நாதனைத்
தேவனைப் புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே.

பொழிப்புரை :

எல்லோரானும் அறிதற்கு அருமை உடையவனும் , மும்மூர்த்திகளுக்கும் முதலாகிய கடவுளும் , நாவில் நல்ல உரையாகி அருளும் நாதனும் , தேவனுமாகிய பெருமானைப் புத்தூரிலே சென்று கண்டு உய்ந்தேன் .

குறிப்புரை :

மூவரின் முதலாகிய மூர்த்தியை - அரி அயன் அரன் என்னும் மூவரில் தலைவராயிருப்பவனை . நாவில் நல்லுரையாகிய நாதன் - நாவின்கண்ணிருந்து வரும் நல்ல உரைகளின் வடிவாயிருப்பவன் .

பண் :

பாடல் எண் : 3

அன்ப னையடி யாரிடர் நீக்கியைச்
செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே
கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே.

பொழிப்புரை :

அன்பே வடிவானவனும் , அடியார்கள் துன்பங்களை நீக்குபவனும் , செம்பொன் மேனியனும் விளங்கும் திருக்கச்சி யேகம்பத்தில் வீற்றிருப்பவனும் ஆகிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரில் உள்ள நம் பெருமானைக் கண்டு நான் உய்யப் பெற்றேன் .

குறிப்புரை :

இடர் - துன்பம் . தென்புத்தூர் - கடுவாயாற்றின் தென் கரையிலமைந்த புத்தூர் . நம்பன் - மேலானவன் , பழையவன் .

பண் :

பாடல் எண் : 4

மாதனத்தைமா தேவனை மாறிலாக்
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக்
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே.

பொழிப்புரை :

பெருஞ்செல்வமாகிய அருட்செல்வம் உடையானும் , மகாதேவனும் , மாறுபாடில்லாத பஞ்சகவ்வியத் திரு முழுக்குக் கொள்பவனும் , சங்கவெண்குழையணிந்த காதுடையவனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரின் நாதனைக் கண்டு நான் உய்யப்பெற்றேன் .

குறிப்புரை :

மா - பெரிய . தனத்தை - செல்வங்களின் வடிவாயிருப்பவனை . மாறிலா - ஒப்பில்லாத , கோதனத்தில் - பசுவினிடம் கிடைக்கும் செல்வங்களில் அல்லது பசுவின் பாற்காம்புகளில் . ஐந்து - பஞ்சகவ்வியம் .

பண் :

பாடல் எண் : 5

குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட்
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக்
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
அண்ட னைக்கண் டருவினை யற்றெனே.

பொழிப்புரை :

மிகுந்த பல குற்றத்தை நீக்கி என்னை ஆட்கொண்டு நல்ல அருள் திறம் காட்டிய கூத்தனும் , திருநீல கண்டனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் பொருந்தியிருக்கும் பெருமானைக் கண்டு அருவினைகள் அற்றேன் .

குறிப்புரை :

குண்டுபட்ட குற்றம் - சமணர்களிடையே அகப்பட்ட குற்றம் . தவிர்த்து - நீக்கி . கண்டனை - நீலகண்டனை . அண்டன் - உலகங்களின் வடிவானவன் . அற்றேன் - நீங்கினேன் .

பண் :

பாடல் எண் : 6

பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட
மைந்த னைம்மண வாளனை மாமலர்க்
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.

பொழிப்புரை :

பாசமாகிய கட்டினை அறுத்து , என்னை ஆட்கொண்ட பெருவீரனும் , மணவாளக்கோலம் உடையானும் , பெரிய மலர்களின் நறுமணம் மிக்க நீரை உடைய கடுவாய்க் கரையிலுள்ள தென்புத்தூரில் உள்ள எந்தையும் ஆகிய ஈசனைக் கண்டதனால் அடியேற்கு இனிதாயிற்று .

குறிப்புரை :

பந்தபாசம் - அன்புப் பிணிப்பாகிய ஆசை . மைந்தனை - வலிமையுடையவனை . கந்தம் - மணம் . கண்டு - காணுதலால் . இனிதாயிற்று - என் வாழ்வு இனிதாயிற்று என்க .

பண் :

பாடல் எண் : 7

உம்ப ரானை யுருத்திர மூர்த்தியை
அம்ப ரானை யமலனை யாதியைக்
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே.

பொழிப்புரை :

தேவர் உலகத்துக்கும் அப்பால் உள்ளவனும் , உருத்திரமூர்த்தியும் , அம்பர்த்தலத்து எழுந்தருளியிருப்பவனும் , மலம் அற்றவனும் , ஆதியானவனும் , சங்குகளையுடைய நீர்பாயும் கடுவாய்க்கரைக்கண் தென்புத்தூரில் உள்ளவனும் ஆகிய எம்பெருமானைக் கண்டதனால் அடியேற்கு இன்பம் ஆயிற்று .

குறிப்புரை :

உம்பரானை - தேவர்கள் தலைவனை . உருத்திர மூர்த்தியை - அழித்தற்கடவுளாய்ச் சங்காரகாரணனாயிருப்பவனை . அம்பரானை - ஆடையணிந்தவனை அல்லது அம்பரனை எனப் பிரித்து அழகிய மேலானவனை என்க . அம்பர் என்னும் தலத்திலிருப்பவனை எனலுமாம் . அமலன் - குற்றமற்றவன் . ஆதியை - முழுமுதற் கடவுளை . கம்பு நீர் - சங்குகளை உடைய நீர் .

பண் :

பாடல் எண் : 8

மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய நித்த மணாளனைப்
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னேயென இன்பம தாயிற்றே.

பொழிப்புரை :

குற்றம் நிறைந்த பாசமாகிய மயக்கத்தை அறுமாறு செய்து என்னுள்ளத்துக்குள் நேசம் ஆகிய நித்தமணாளன் என்ற திருப்பேர்கொண்டவனும் , பூசத்திருநாளில் ஆடற்குரிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரின்கண் உள்ளவனும் ஆகிய ஈசனே என்று கூற அடியேற்கு இன்பமாயிற்று .

குறிப்புரை :

மாசு ஆர் - குற்றம் பொருந்திய . பாசமயக்கு - ஆசையாகிய மயக்கத்தை . அறுவித்து - நீங்கச்செய்து . நேசமாகிய - அன்பு வடிவமாகிய . நித்தமணாளனை - என்றும் மணவாளக் கோலத்திலிருப்பவனை . பூசநீர் - பூசநாளில் தீர்த்த விசேடமுடையது .

பண் :

பாடல் எண் : 9

இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட்
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தெனே.

பொழிப்புரை :

பிச்சையிடுவார் இட்ட சோற்றுருண்டையினைப் பெற்றுத் தம் பெரிய கொடிய வாயில் இடும் சமணர்களது கட்டியுரைக்கும் பேச்சைக்கொள்ளாமல் , கடுவாய்த்தென்கரைப் புத்தூரின் கண் எழுந்தருளியுள்ள அடிகட்கு ஆட்படப் பெற்று நான் பெரும் பாக்கியம் செய்தவன் ஆயினேன் .

குறிப்புரை :

இடுவாரிட்ட - கொடுக்கும் குணமுள்ளவர் இட்ட . கவளம் - சோற்றுருண்டை , கவர்ந்து - உண்டு . இரு - பெரிய . கடுவாயிட்டவர் - கடுக்காயை வாயின்கண் இட்டவர் . கட்டுரை - அறிவுரை . கொள்ளாதே - ஏற்றுக்கொள்ளாமல் ; தம்முன்னைநிலை நினைந்து கூறியது . ஆட்படவே பெற்று - ஆளாகுந்தன்மையையே பெற்று . நான் பாக்கியம் செய்தேன் - நான் சிறந்த பாக்கியத்தைச் செய்தவனானேன் .

பண் :

பாடல் எண் : 10

அரக்க னாற்ற லழித்தவன் பாடல்கேட்
டிரக்க மாகி யருள்புரி யீசனைத்
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தெனே.

பொழிப்புரை :

இராவணனது ஆற்றலை அழித்து அவன்பாடல் கேட்டுப் பின்னர் இரங்கி அருள்புரியும் ஈசனாகிய , அலைகளைக் கொண்ட கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன் .

குறிப்புரை :

ஆற்றல் - வலிமை . திரைக்கொள் - அலைகளைக் கொண்ட .

பண் :

பாடல் எண் : 1

இரங்கா வன்மனத் தார்க ளியங்குமுப்
புரங்கா வல்அழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்காடு துறைக் கோலக்க பாலியே. 

பொழிப்புரை :

அலைகள் ஆடுகின்ற பெரிய நீரினை உடைய காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் அழகிய கபாலம் கைக்கொண்ட பெருமான், இரங்காத வலிய மனத்தவர்களாகிய அரக்கர்கள் இயங்குகின்ற முப்புரங்காவல் அழியுமாறு பொடியாக்கியவன் ஆவன்.

குறிப்புரை :

இரங்கா வன்மனத்தார்கள் - பிறர் துன்பங்கண்டு இரங்காத கல்மனங்கொண்டவர்கள். இயங்கும் - ஊர்ந்து செல்லும். முப்புரம் - மூன்று கோட்டைகள். காவல் அழிய - காத்தல் தொழில் அழியும்படி. பொடியாக்கினான் - நீறாக்கியவன். தரங்கம் ஆடும் - அலைகள் அசையும். தடநீர் - மிக்கநீர். கோலம் - அழகிய.

பண் :

பாடல் எண் : 2

முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர்ச் சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங் காடு துறையுறை
அத்த னென்னஅண் ணித்திட்டிருந்ததே.

பொழிப்புரை :

முத்தும், மணியும், பவளத்தொடு ஒளிர்கின்ற கொத்தும், சுடர்விடும் சோதியும், சோலைகள் சூழ்ந்த பூங்கொத்துக்கள் மலர்கின்ற குரங்காடுதுறை உறையும் அத்தனும் என்று கூற உள்ளத்தில் தித்தித்திருந்தனன் அப்பெருமான்.

குறிப்புரை :

பவளத்து ஒளிர் தொத்து - ஒளிர் பவளத் தொத்து என மாறுக. விளங்கிய பவளக் கொத்துப் போன்றவன் என்பது பொருள். கொத்தலர் சோலைசூழ் குரங்காடுதுறை என்க. அண்ணித்தல் - இனித்தல்.

பண் :

பாடல் எண் : 3

குளிர்பு னற்குரங் காடுது றையனைத்
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் னுள்ளமும்
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே. 

பொழிப்புரை :

குளிர்கின்ற நீர் சூழ்ந்த குரங்காடுதுறையில் இருப்பவனும், மாந்தளிரைப் போன்ற நிறம் உடைய மேனியினளாகிய உமாதேவியைப் பங்கிற்கொண்டவனும் தண்ணியமதி ஒளியனும் ஆகிய பெருமானை நினைந்த அடியேனுக்கு என் உள்ளமும் தெளிவுறும்படித் தெளிவினைத் தெளிந்தது.

குறிப்புரை :

தளிர்நிறத் தையல் - தளிர்போன்ற நிறத்தையுடைய பார்வதி. உள்ளம் - மனம். தெளிவினை - தெளியவேண்டிய பொருளாயுள்ள இறைவனை. தெளிய - விளங்க, தெளிந்திட்டது - உணர்ந்து தெளிந்து கொண்டது.

பண் :

பாடல் எண் : 4

மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங் காடுதுறைதனில்
அணவன் காண்அன்பு செய்யு மடியர்க்கே. 

பொழிப்புரை :

அன்புசெய்யும் அடியார்க்கு மணவாளக் கோலம் உடையவனும், மலைமகளாகிய உமாதேவிக்கு மங்கலக்கணவனும், கலைஞானிகளாற் காதலிக்கப்பெறுவானும், எண் குணத்தானும், குரங்காடுதுறையில் அண்ணியவனும், ஆவன்.

குறிப்புரை :

மணவன் - எப்பொழுதும் மணவாளனாயிருப்பவன். மலைமகளாய பார்வதிக்கு நித்யமங்கலத்தைச் செய்யும் கணவன் என்க. கலைஞானிகளால் காதல் செய்யப்படும் எண்குணவன் என்க. குணவன் - குணங்களை உடையவன். எண்குணங்களாவன - தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், இயற்கை உணர்வினனாதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை, முற்றுமுணர்தல் என இவை. அணவன் - அணுகியிருப்பவன், அன்பு செய்யும் அடியார்க்கு அருளுவதற்காகக் குரங்காடுதுறையில் அணவன் என முடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 5

ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன்
காலத் தான்உயிர் போக்கிய காலினன்
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங் காடு துறையனே. 

பொழிப்புரை :

குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன் உலகத்தாராற் றொழுதேத்தப்பட்ட நன்மை உடையவனும், காலன் உயிர்போகச் செய்த திருக்காலை உடையவனும், நீலநிறம் நிறைந்த திருமிடற்றை உடையவனும், வெண்ணீறணிந்த கோலத்தை உடையவனும் ஆவன்.

குறிப்புரை :

ஞாலத்தார் - உலகத்தார். காலத்தான் - காலன், இயமன். நீலம் ஆர்மிடறு - நீலக்கறை பொருந்திய கழுத்து; அத்து சாரியை.

பண் :

பாடல் எண் : 6

ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப்
பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடும்
கூட்டி னான்குரங் காடு துறையனே.

பொழிப்புரை :

குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், முன்னர் என்னை அமணர்களோடு ஆட்டுவித்தவனும், பின்னர்த் தன் பொன்னார் திருவடிகளுக்கு இனிய பண்ணிசையை என்னைப் பாட்டுவித்தவனும், வினையை வீட்டியவனும், மெய்யடியார்களோடு என்னைக் கூட்டுவித்தவனும் ஆவன்.

குறிப்புரை :

அமணரோடு என்றனை ஆட்டினான் என்க. ஆட்டினான் - கூட்டிஆட்டுவித்தான். தன - தன்னுடையனவாகிய. பொன்னடிக்கு - பொன்போன்று பொதிதற்குரிய திருவடிகளுக்கு. பாட்டினான் - திருப் பாடல்களைப் பாடச்செய்தான். வினை வீட்டினான் - இருவினைகளை அழியச் செய்தான். மெய்யடியார் - உண்மை அடியார்.

பண் :

பாடல் எண் : 7

மாத்தன் தான்மறை யார்முறை யான்மறை
ஓத்தன் தாரகன் றன்னுயி ருண்டபெண்
போத்தன் தானவன் பொங்கு சினந்தணி
கூத்தன் தான்குரங் காடு துறையனே. 

பொழிப்புரை :

வேதங்களில் கூறிய முறையால் மாற்றுயர்ந்த பொன்போன்றவனும், வேதசாகைகளை அருளிச்செய்தவனும், தாரகனை அடக்கிய காளியைவென்ற வீரனும், முயலகனது சினத்தைத் தணித்த கூத்தனுமாய் விளங்குபவன் குரங்காடுதுறை இறைவன்.

குறிப்புரை :

மாத்தன் - பொன்னின் உயர்ந்த மாற்றுப் போன்றவன்; பெரியவன். மறையார் முறையால் - வேதங்களிற் பொருந்திய இலக்கண நெறியால் தான் மாத்தன் என மாற்றுக. மறைஓத்தன் - வேதமாகிய உண்மை நூலை உடையவன். தாருகன் தன் உயிர் உண்ட பெண் போத்து - தாருகன் என்ற அரக்கனை அழித்து அவனுடைய உயிரைப் போக்கிய காளியை வென்ற. போத்தன் - வீரன். போத்தன் தானவன் - வீரத்துடன் வந்த முயலகன். சினம் - இருவருடைய கோபத்தை. தணி - அடக்கிய. கூத்தன் - திருக்கூத்தாடுபவன்.

பண் :

பாடல் எண் : 8

நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்அழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடம்
கூடு மின்குரங் காடு துறையையே. 

பொழிப்புரை :

நம் தமராகிய தொண்டர்களே! பரமன் பயிலும் இடமாகிய குரங்காடுதுறையையே மனத்தால் நாடி ஆடுவீர்களாக; அழுவீர்களாக; தொழுவீர்களாக; அவன் அடியே பாடுவீர்களாக; அத்தலத்தையே கூடுவீர்களாக.

குறிப்புரை :

நாடி - சென்று. நம் தமராய - நம்முடைய சுற்றத்தினராய. ஆடுமின் - மகிழ்ச்சிக் கூத்தாடுங்கள். \\\\\\\"ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை, பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை, துணையிலி பிணநெஞ்சே, தேடுகின்றிலை தெருவுதோறலைகிலை செய்வதொன்றறியேனே\\\\\\\". (தி.8 திருவாசகம் - 35.)

பண் :

பாடல் எண் : 9

தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்ற வந்தக னைஅயிற் சூலத்தால்
கொன்ற வன்குரங் காடு துறையனே. 

பொழிப்புரை :

குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், தென்றலாகிய நல்ல நீண்டுயர்ந்த தேரை உடையானாகிய காமன் உடல் அழியுமாறு வெவ்விய அனல் பொங்க விழித்தவனும், அன்று காலனைக் கூரிய சூலத்தாற் கொன்றவனும் ஆவன்.

குறிப்புரை :

தென்றல் தேருடையான் - மன்மதன். நன்னெடும் - நல்ல பெரிய. பொன்ற - அழிய. வெங்கனல் பொங்க - கொடிய கோபத்தீ பெருக. விழித்தவன் - நெற்றிக்கண்ணால் சினந்தவன். அன்று அவ்வந்தகன் எனப் பிரித்து மார்க்கண்டேயர் வேண்டிய அன்று அந்த இயமனை என்க. அயில் - கூரிய.

பண் :

பாடல் எண் : 10

நற்ற வம்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநல்
கொற்ற வன்குரங் காடு துறைதொழப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே. 

பொழிப்புரை :

நல்ல தவம் புரிந்தவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் நல் அறம் மிகுந்த நன்மொழியால் அருள் செய்தவனாகிய நல்ல கொற்றவனுறைகின்ற குரங்காடுதுறையைத் தொழுதால் பற்றுகின்ற தீவினையாகியவை கெடும்.

குறிப்புரை :

நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர். உற்ற - பொருத்தமான.
நல்மொழி - நல்ல உபதேச மொழி. பற்றும் - நம்மைப் பிடிக்கும். பாறும் - அழியும்.

பண் :

பாடல் எண் : 11

கடுத்த தோரரக் கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
அடுத்த லும்மவ னின்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங் காடு துறையனே. 

பொழிப்புரை :

குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், சினந்த தேரை உடைய இராவணனது, திருக்கயிலையை எடுக்கலுற்ற தோள்களும் தலையும் இற்று, அவன் அலறும்படியாகத் திருவிரலை அடுத்தவன்; பின் அவன் இன்னிசை கேட்டு அருள்கொடுத்தவன் ஆவன்.

குறிப்புரை :

கடுத்த - விரைவான். தலையிற்றலற - தலை நெரிந்தலற. விரல் அடுத்தலும் - விரல் ஊன்றலும்.

பண் :

பாடல் எண் : 1

வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய்
ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள்
கோழம் பத்துறை கூத்தன் குரைகழல்
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே. 

பொழிப்புரை :

வேழம்பம் என்னும் விளையாட்டைப் புரிகின்ற ஐந்து புலன்களாகியவர்கள் விரும்பினவற்றையே தாமும் விரும்பிச் சென்று உலகியல் ஆழங்காற்பட்டுப் பல அறிவற்றவர்கள் வீழ்வர்; கோழம்பத்தில் உறைகின்ற கூத்தன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் பக்தர்களே மிகவும் திறம் உடையவர்கள்.

குறிப்புரை :

வேழம்பத்து ஐவர் - உயிருக்கு ஏளனத்தைத் தரும் ஐம் பொறிகள். வேழம்பம் என்ற சொல்லுக்குக் கூத்து, ஏளனம், பரிகாசம் என்ற பொருள்கள் உள்ளன; ஏற்பன கொள்க. ஐவர் அர் விகுதி இழித்தற் பொருளில் வந்தது. வேண்டிற்று - விரும்பியதை. வேண்டிப் போய் - தானும் விரும்பிச் சென்று. ஆழம் பற்றி - துன்பப் படுகுழியினைப் பற்றி. ஆதர் - குருடர் அல்லது அறிவிலார். குரை - ஒலிக்கின்ற. தாழும் - வணங்கும். சால - மிக. சதுரர் - சதுரப் பாடுடையவர்.

பண் :

பாடல் எண் : 2

கயிலை நன்மலை யாளுங் கபாலியை
மயிலி யல்மலை மாதின் மணாளனைக்
குயில்ப யில்பொழிற் கோழம்பம் மேயவென்
உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே. 

பொழிப்புரை :

திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது.

குறிப்புரை :

கபாலி - பிரமகபாலத்தை ஏந்தியவன். மயிலியல் - மயிலின் சாயல்தன்மை. பயில் - தங்குகின்ற. உயிரினை - உயிராயிருப்பவனை.

பண் :

பாடல் எண் : 3

வாழும் பான்மைய ராகிய வான்செல்வம்
தாழும் பான்மைய ராகித்தம் வாயினால்
தாழம் பூமணம் நாறிய தாழ்பொழில்
கோழம் பாவெனக் கூடிய செல்வமே. 

பொழிப்புரை :

வணங்கும் தன்மையோடு கூடியவராகித் தம் வாயினால், தாழம்பூக்களின் மணம் வீசுகின்ற பொழிலை உடைய \\\\\\\"கோழம்பத்தலத்து இறைவா!\\\\\\\" என்று கூறியதனால் கூடும் செல்வமே, வாழும் தன்மையராகிப் பெற்ற உயர்ந்த செல்வம் ஆகும்.

குறிப்புரை :

தேவர் பெற்ற செல்வம் இறைவனைப் பாடிப் பணிந்து பெற்ற செல்வமேயாம் என்றது. வாழும் பான்மையராகி - பிறவி யெடுத்தபயனை அடையும் குறிக்கோளோடு வாழும் தன்மையை உடையவராகி அல்லது வீடுபேற்றில் எஞ்ஞான்றும் வாழும் தன்மையை உடையவராகி. அவ்வான் செல்வம் - அவ்வுயர்ந்த வீட்டுநெறியாகிய செல்வத்தில். தாழும் - விரும்பும் அல்லது தங்கும். பான்மையராகி - எண்ணத்தையுடையவராகி. தாழ்பொழில் - நீண்டபொழில். கோழம்பா - திருக்கோழம்பம் என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவனே. கோழம்பா என அவ்வான் செல்வம் கூடிய செல்வம் ஆம் என வினை முடிவுசெய்க.

பண் :

பாடல் எண் : 4

பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்
கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு
கோடல் பூத்தலர் கோழம்பத் துள்மகிழ்ந்
தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே. 

பொழிப்புரை :

வெண்கோடலும் செங்கோடலும் ஆகிய மலர்கள் பூத்து விளங்கும் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனாகிய இறைவனுக்கு இப்பெண் அன்றே அன்புபட்டாள் ஆதலின், பண்ணொடு கூடிய பாடல் ஆக்குவாள்; மணற்குன்றில் மணலினைக் கொண்டு கூடல் இழைப்பாள்.

குறிப்புரை :

பண்ணொடு பாடலாக்கிடும் - பண்ணோடு பாடச் செய்யும். கூடலாக்கிடும் - கூடல் விளைந்திடச்செய்யும். கூடல் - பெண்கள் தன் எண்ணம் நிறைவேறுமோ அன்றிப் பிறிதாமோ என அறிய நிலத்தில் கண்ணை மூடிக்கொண்டு வட்டமிட்டுப் பார்ப்பர். அச் சுழியின் இருமுனைகளும் கூடினால் வெற்றி என்றும் கூடாதொழியின் எண்ணம் பலியாதென்றும் கருதுவர். இதற்குக் கூடலிழைத்தல் என்று பெயர். குன்றின்மணற்கொடு - மலையத் தனை மணலைக் கொண்டு, கூடல் இழைத்திடும் என்க. மலையில் இருக்கும் மணல்களைத் தான் வாழ்வதற்கு இடமாகக்கொண்டு மலரும் கோடல் எனினுமாம். கோடல் - காந்தள். பூத்துஅலர் - பூத்து மலர்கின்ற. பெண்ணிவள் கோழம்பத்துக் கூத்தனுக்கு அன்பு பட்டாளல்லவா அவ்வன்பு, பாடல் கூடல் இவற்றை இவட்கு விளைத்திடும் எனமுடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 5

தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர்
பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன்
குளிர்கொள் நீர்வயற் கோழம்பம் மேவினான்
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே.

பொழிப்புரை :

மாந்தளிரின் வண்ணம் கொண்ட மேனியளாகிய உமாதேவி மிக அஞ்சுமாறு ஒப்பற்ற பிளிறிவரும் யானையின் பச்சைத்தோலைப் போர்த்தவனாகிய, குளிர்ச்சிகொண்ட நீண்ட வயல்களையுடைய கோழம்பத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செறிவினைக்கொண்ட கங்கையினைச் சடைமேலும் நயந்தது வியப்புக்குரியதே.

குறிப்புரை :

தளிர்கொள் - தளிரின் நிறத்தைக்கொண்ட. பிளிறு வாரணம் - பிளிறித் தம்மை அடரவந்த யானை. ஈருரி - உரித்ததோல். நளிர் - குளிர்ந்த தன்மை. நீர் - கங்கை. மேலும் நயந்தது - அப் பெண்ணுக்கு மேலும் நயப்பை உண்டாக்கியது என்றோ அச்சடையின் மேலும் அவள் நயப்புச் சென்றதென்றோ கொள்க.

பண் :

பாடல் எண் : 6

நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம்
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பில்
கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண்
டாதி பாத மடையவல் லார்களே. 

பொழிப்புரை :

வேதங்களை ஓதிய நாவை உடையவரும், இடபக்கொடியினரும், மலைமங்கையாகிய உமாதேவியோடும் கோழம்பத்திற் கோயில்கொண்ட ஆதியுமாகிய பெருமானின் பாதங்களை அடையவல்லவர்கள் தாம் நமக்கும் பிறர்க்கும் தலைவர் என்று மதிக்கத்தக்கவர்கள்.

குறிப்புரை :

நமக்கும் பிறர்க்கும் நாதராவர். கோதை மாது - மாலை சூடிய மங்கை. கோயில்கொண்ட ஆதி எனப் பிரிக்க. ஆதி - முதல்வன். கோழம்பம் அடையவல்லார்களே நாதராவர் என்க.

பண் :

பாடல் எண் : 7

முன்னை நான்செய்த பாவ முதலறப்
பின்னை நான்பெரி தும்மருள் பெற்றது
அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர்
பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே. 

பொழிப்புரை :

அன்னம் பொருந்திய வயலை உடைய கோழம்பத்துள் அமர்ந்திருக்கின்ற பின்னிய நீண்டசடையானைப் பிதற்றியே, முன்பு நான் செய்த பாவம் முதல் அறும்படிப் பின்பு நான் பெரிதும் அருள்பெற்றது.

குறிப்புரை :

முன்னை நான் செய்த பாவ முதல் - முற்பிறவியில் நான் செய்த பாவமாகிய முதல். அற - நீங்க. பின்னை - பின்னர் (இப்பிறவியில்). பெரிதும் - மிகுதியும். ஆர் - பொருந்திய. பின்னல் - முறுக்கிய. வார் - நீண்ட. பிதற்றியே - இறைவன் திருநாமத்தைப் பல காலும் சொல்லியேயாகும்.
முற்பிறப்பில் செய்த பாவங்காரணமாக நான் சமணசமயம் சார்ந்ததும், பின்னர் அதனின் நீங்கிப் பெருமான் திருவருள் பெற்றதும் எல்லாம், அவன் திருப்பெயரைப் பலகாலும் ஓதிய காரணத்தால் ஆயின என்றார்.

பண் :

பாடல் எண் : 8

ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண்
கோழை மாரொடுங் கூடிய குற்றமாங்
கூழை பாய்வயற் கோழம்பத் தானடி
ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே.

பொழிப்புரை :

ஏழையேனாகிய அடியேன் கூழைமீன்கள் பாய்கின்ற வயல்களை உடைய கோழம்பத்தான் அடியை மறந்து அவர்பால் இருந்தது, பெண்களிடம் நின்று இரண்டு கைகளாலும் அவர்கள் இடும் உணவைக்கொண்டு உண்ணும் கோழைகளோடு கூடிய குற்றமாம்.

குறிப்புரை :

ஏழைமாரிடம் - பெண்களிடம். இருகைக்கொடு உண் - இரண்டு கைகளாலும் பிச்சையேற்று உண்ணுகின்ற. கோழை மாரொடும் - துணிவற்றவர்களாகிய சமணர்களிடம். கூடிய - சேர்ந்து வாழ்ந்த. குற்றமாம் - குற்றமாகும். கூழை - மீன்கள். பாய் - பாய்கின்ற. பெருமானை மறந்து, சமண சமயத்தைச் சார்ந்து அங்கு வாழ்ந்திருந்ததற்குக் காரணம் கோழையரொடும் கூடிய குற்றமாகும் என வினை முடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 9

அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி
பரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக்
குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத்
துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே. 

பொழிப்புரை :

பாம்பாகிய படுக்கையில் பயிலும் திருமாலும், பிரமனும் வந்து அடிபரவப்பெறுவானும், பரம்பொருளாகிய உயர்ந்தசோதியும், பரமாசாரியனும் ஆகிய குரவமரங்கள் செறிந்த கோழம்பத்தின்கண் அறிவு வடிவானவனை நீங்குபவர்க்கு உணர்தல் இயலுமோ?

குறிப்புரை :

அரவணை - ஆதிசேடனாகிய படுக்கை. பயில் - உறங்குகின்ற. மால் - திருமால். அயன் - பிரமன். பரவனை - பரவப் படுபவனை. பரமாம் - மேலான. குரவனை - குருநாதனை. குரவு - குராமரங்கள். உரவன் - அறிவு வலியுடையவன். ஒருவர்க்கு - நீங்குபவர்க்கு. உணர்வு பொருந்துமோ என்க.

பண் :

பாடல் எண் : 10

சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே. 

பொழிப்புரை :

போரெதிர்ந்துவந்த சூரபன்மனைக் கொன்ற வேற்படையை உடைய முருகவேளுக்குத் தந்தையும், நல்ல கோழம்பம் மேவிய தேவர்தலைவனும் ஆகிய பெருமானுக்கு அன்புடைய தொண்டர்கள், அமரலோகத்தை ஆளும் உரிமையுடையவராவர்.

குறிப்புரை :

சமரசூரபன்மா - போரிலே வல்ல சூரபன்மா என்ற அசுரன். தடிந்த - கொன்ற. வேல்குமரன் - வேலாயுதத்தை உடைய முருகன். தாதை - தந்தையாகிய சிவபெருமான். அமரர்கோ - தேவர்கள் தலைவனாகிய பெருமான். அன்புடைத் தொண்டர்கள் அமரலோகம் ஆளுதலை உடையவர்களாவர்.

பண் :

பாடல் எண் : 11

துட்ட னாகி மலையெடுத் தஃதின்கீழ்ப்
பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென்
றிட்ட கீத மிசைத்த அரக்கனே. 

பொழிப்புரை :

கொட்ட நறுமணம் வீசுகின்ற கோழம்பத்து இறைவன் என்று விருப்பத்திற்குரிய கீதம் இசைத்த அரக்கன் துட்டனாகித் திருக்கயிலையை எடுக்கலுற்று, அம்மலையின் கீழ்ப்பட்டு விழுந்து படர்ந்து பின் உய்ந்தான்.

குறிப்புரை :

துட்டன் - துஷ்டன். அஃதின்கீழ் - அதன்கீழ். பட்டு - அகப்பட்டு. வீழ்ந்து - ஆணவம் வீழப்பெற்று. படர்ந்து - பெருமானைப்பற்றி. உய்யப்போயினான் - அநுக்ரகம் பெற்றான். கொட்டம் - மணப்பொருளில் ஒன்று. நாறிய - கமழ்கின்ற. என்றிட்ட கீதம் - என்று வரும் இசைப்பாடல். இசைத்த - பாடிய.

பண் :

பாடல் எண் : 1

பூவ னூர்ப்புனி தன்திரு நாமந்தான்
நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.

பொழிப்புரை :

பூவனூரில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் நூறுநூறாயிரம் கூறிப் பரவியவர் , தம் பாவங்கள் சிதைந்துகெட்டுத் தேவர் தலைவனாகிய இந்திரனைவிட மிகப் பெருஞ் செல்வர்கள் ஆவர் .

குறிப்புரை :

புனிதன் - தூயவன் . நூறுநூறாயிரம் - ஒரு கோடி . நண்ணினார் - ஓதியவர் . பாறி - அழிந்து . பறைய - நீங்க . ஏ அசை . தேவர்கோ - இந்திரன் .

பண் :

பாடல் எண் : 2

என்ன னென்மனை யெந்தையெ னாருயிர்
தன்னன் தன்னடி யேன்தன மாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி வொண்ணா னியற்கையே.

பொழிப்புரை :

பூவனூர் மேவிய இறைவன் என்னை உடையவன் ; என் மனையாளாகவும் உள்ளவன் ; என் தந்தை ; என் உயிர் ; தனக்குத்தானே உவமையானவன் ; தன்னடியேனுக்குச் செல்வமாக உள்ள பொன்னன் ; தன் இயல்பினால் இன்னதன்மையன் என்று அறியவியலாதவன் ஆவன் .

குறிப்புரை :

என்னன் - எனக்குற்ற துணையாயிருப்பவன் . என் மனை - என்மனைவி போன்றவன் . ` அப்பன்நீ அம்மை நீ ... ... ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ ` ( தி .6. ப .95. பா .1). எந்தை - எனக்குத் தந்தையாயிருப்பவன் . என் ஆருயிர் - என் அரிய உயிரை . தன்னன் தன்னடியேன் - தனக்குரிய பொருளாயும் தன்னடியவனாயுமுள்ள எனது . தன் - அப்பெருமானுடைய அடியேன் என்க . தனமாகிய பொன்னன் - அடியேனுடைய பெறுதற்கரிய சேமநிதியாகிய பொன்னாயிருப்பவன் . இயற்கை - இயல்பு .

பண் :

பாடல் எண் : 3

குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூ ரீசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.

பொழிப்புரை :

குற்றங்களே மிகப் பெருகிக் குணம்பல கூடாதவர்களே ! புற்றிற்பொருந்திய பாம்பினைச் சூடியவனாகிய பூவனூர் இறைவன் திருநாமத்தை நீர் மடிவதன் முன்பே கற்று வாழ்த்துவீராக ; அங்ஙனம் வாழ்த்தினால் நீர் செய்த வினைகளை மாய்க்கலாம் .

குறிப்புரை :

குற்றம் கூடி - குற்றத்தைக் கூடி . குணம்பல கூடாதீர் - பல நல்ல குணங்களைச் சேராது வாழ்வோரே ! மற்றும் தீவினை செய்தன - முன்பிறப்பிற் செய்த வினைகளோடு இப்பிறப்பிற் செய்தன வாய தீயவினைகளையும் . மாய்க்கலாம் - அழிக்கலாம் . கழிவதன் முன்னம் - இறப்பதன் முன்பாக . கற்று வாழ்த்தும் என வினைமுடிவு செய்க . வாழ்த்தும் - வாழ்த்துங்கள் .

பண் :

பாடல் எண் : 4

ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே.

பொழிப்புரை :

பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமுழுக்குக் கொள்வானும் , தூய வெண்ணீறு செறிந்த செம்மேனியனும் , விரிகின்ற பூணூல் மேவியவனும் ஆகிய பெருமானுக்குரியதும் வெண்ணியின் தென்கரைக் கண்ணதுமாகிய பூவனூரின்கண் புக்குத்தொழும் அடியவர்களின் வினை அவரைவிட்டு நீங்கும் .

குறிப்புரை :

ஆவின்மேவிய ஐந்து - பஞ்சகவ்யம் . அமர்ந்து - விரும்பி . ஆடுவான் - அபிடேகம் கொள்வான் . துதைந்த - செறிந்து பொருந்திய . மேவநூல் விரி - பொருந்த நூல்களில் சிறப்பிக்கப்படும் . வெண்ணியின் - வெண்ணியாற்றின் .

பண் :

பாடல் எண் : 5

புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர்சீர் காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே.

பொழிப்புரை :

புல்லமும் , ஊர்தியூரும் , பூவனூரும் , புனல் வளம் உடைய நல்லமும் , ஊர்திநல்லூரும் , நனிபள்ளியூரும் , தில்லையூரும் , திருவாரூரும் , சீர்காழியும் , நல்லவல்லமும் ஆகியவற்றைக் கூறியவளவிலேயே வல்வினை நீங்கும் .

குறிப்புரை :

புல்லம் - எருது . எருது வாகனனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர்கள் இவை . இத்தலங்களை நினைத்துச்சொல்ல வினை மாயும் என்க .

பண் :

பாடல் எண் : 6

அனுச யப்பட் டதுவிது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரில்தலை யான மனிதரே.

பொழிப்புரை :

கனிந்த மனத்தொடு கண்கள் நீர் நிறைந்து , ஐயப்பட்டபொருளன்று இது ; தெளிந்தது என்று கருதிப் பூவனூர்ப் புனிதனைப் போற்றும் மனிதர்களே எல்லா மனிதர்களிலும் தலையான மனிதராவர் .

குறிப்புரை :

அனுசயப்பட்டு - ஒருவரோடு ஒருவர் பகைமையுற்று . அது இது என்னாதே - அது நன்று இது தீது , இது நன்று அது தீது என்று மாறுபடாமல் . உலகியல் வாழ்விலும் சமய நெறியிலும் இது பொருந்துவதொன்று . உலகில் இவ்வாறு போட்டியிட்டுப் பகைமை கொள்வார் பலர் . சமயநெறியிலும் ஒரு சமயத்தவர் மற்றவரை இகழ்தல் உண்டு ஆதலின் இரு நெறியார்க்கும் பொருந்துவதொன்று இது . கனி மனத்தொடு - கனிந்த மனத்தொடு . தலையான மனிதர் - சிறந்த மனிதர் .

பண் :

பாடல் எண் : 7

ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே.

பொழிப்புரை :

அழகிய பூவனூர் இறைவன் ஆதியில் தோன்றியவனும் , தேவர்களால் அருச்சிக்கப்படுபவனும் , வேதம் ஓதும் நாவினனும் , மலைமங்கையை ஒரு பாதியிற் கொண்டவனும் , பரவிய பெரும் படைக்கலங்களை உடைய பூதநாதனும் ஆவன் .

குறிப்புரை :

ஆதிநாதன் - முதன்மையான தலைவன் . அர்ச்சிதன் - அர்ச்சிக்கப்படுபவன் . வேதநாவன் - வேதமோதும் திருவாயை உடையவன் . வெற்பின் மடப்பாவை - இமயமலை அரசனின் புதல்வி . பசந்த - மிகுந்த . பூதப்படைநாதன் என்க .

பண் :

பாடல் எண் : 8

பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.

பொழிப்புரை :

பூவனூரும் , குளிர்ந்த புறம்பயமும் பூம்பொழில் சூழ்ந்த நாவலூரும் , நள்ளாறும் , நன்னிலமும் , கோவலூரும் , குடவாயிலும் , கொடுமுடியும் , மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன் ஊர்கள் ; காண்பீர்களாக . மூவலூர் வைப்புத்தலம் .

குறிப்புரை :

பூவனூர் முதலாய ஊர்கள் முக்கண்ணனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர்கள் என்க .

பண் :

பாடல் எண் : 9

ஏவம் ஏது மிலாஅம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.

பொழிப்புரை :

விதிவிலக்குகள் ஏதும் இல்லாத அமணர்களாகிய குற்றமுடையோரும் ; பாவகாரிகளுமாகியோர் சொல் வலையிற் பட்டு நான் தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய பூவனூர் புகப்பெற்ற நாள் இன்றேயாகும் .

குறிப்புரை :

ஏவம் - விதிவிலக்குகள் . ஏதும் இலா - எதுவும் இல்லாத . சமண் ஏதலர் - சமணர்களாகிய அயலவர் . பாவகாரிகள் - பாவத்தைச் செய்பவர்கள் . சொல்வலை - சாதுரியப்பேச்சாகிய வலை ; பொய்யைப் பிறர் மயங்க மெய்போலக் காட்டுதல் . நெறி - சமயம் . சொல்வலைப்பட்ட பின் பூவனூர் புகுந்த நாள் இன்று .

பண் :

பாடல் எண் : 10

நார ணன்னொடு நான்முக னிந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்னெனை யாளுடைக் காளையே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் , இந்திரனும் , விநாயகரும் , முருகனும் வணங்கும் கழலை உடைய நிறைவானவனும் , திருப்பூவனூரில் பொருந்திய உலககாரணனுமாகிய பெருமானே , என்னை ஆளுடைய காளைபோல்வான் .

குறிப்புரை :

வாரணன் - யானைமுகக் கடவுளாகிய விநாயகர் . பூரணன் - எல்லாவற்றாலும் நிரம்பியவன் . காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணமாயிருப்பவன் . காளை - காளை போன்றவன் .

பண் :

பாடல் எண் : 11

மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.

பொழிப்புரை :

மேகத்தையொத்த நிறத்தை உடைய இராவணன் திருக்கயிலையைப் புகுந்தெடுத்தலும் , பூவனூர் இறைவன் திரு வடியில் மற்ற விரல்களினும் சிறப்புமிக்குள்ள பெருவிரலைச் சற்று ஊன்றுதலும் தன் உறுப்பெல்லாம் பிளந்து வருந்தியபிறகு பாடி அருள்பெற்று உய்ந்தான் .

குறிப்புரை :

மைக்கடுத்த நிறத்து - கரிய இருளை ஒத்த நிறத்தினை உடைய. புக்கு - அடிவரையில் புகுந்து. மிக்கடுத்த விரல் - இராவணனது செருக்கை அழிக்கப் புகுந்த விரல். பக்கடுத்த பின் - தலைகள் பிளவு ஏற்பட்டு நெரிந்தவுடன். உய்ந்தான் - உயிர் பிழைத்தான்.

பண் :

பாடல் எண் : 1

ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.

பொழிப்புரை :

அலைகளை உடைய பாற்கடலினின்றெழுந்த ஆலகாலவிடத்தை உண்டவனும் , பூதங்களுக்கு நாயகனும் , பொன் வடிவாகிய திருக்கயிலைக்கு இறைவனும் , உமையொரு பங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவனின் திருவடியை ஏத்தித்தொழுதால் நம் பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

ஓதம் - நீர்ப்பெருக்கு . ஆர் - பொருந்திய . நாயகன் - தலைவன் . பொன் - பொன்மயமான . இறை - தலைவன் . பறையும் - அழியும் , நீங்கும் .

பண் :

பாடல் எண் : 2

கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப்
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே.

பொழிப்புரை :

திருக்கயிலைத் தலைவனும் , சினந்த பகைவருடைய முப்புரங்களும் எயில்களுடன் தீயெழுமாறு வெல்ல வல்ல திறம் உடையவனும் ஆகிய மயில்கள் ஆரவாரிக்கும் திருவலஞ்சுழி இறைவனைப் பயின்று தொழார் சில பாவிகளாகிய தொண்டர்கள் .

குறிப்புரை :

கறுத்தவர் - சினங்கொண்டவராகிய . எயில்கள் - மதில்கள் . வெல்வல - வெல்லுதலில் வல்ல . ஆலும் - ஆடும் . பயில்கிலார் - வலஞ்சுழிப் பெருமான் திருநாமத்தைப் பழகாதவர் . தொழும்பர் - ஆளானவர் ; ஏவல் செய்வார் .

பண் :

பாடல் எண் : 3

இளைய காலமெம் மானை யடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்
களைக ணாகக் கருதிநீ ருய்ம்மினே.

பொழிப்புரை :

இளமைப்பருவத்தேயே எம் பெருமானை அடைந்து வழிபடாத துளையற்ற செவிகளை உடைய தொண்டர்களே ! நும் உடல் வளைந்து முதுமைக்காலம் வந்தவிடத்து திருவலஞ்சுழி இறைவனையே உமக்குத் துன்பம் களையும் துணையாகக் கருதி உய்வீராக .

குறிப்புரை :

இளைய காலம் - கருவி கரணங்கள் ஓய்ந்து போகாமல் உள்ள இளமைக் காலத்திலேயே . துளையிலாச் செவித் தொண்டர்காள் - ` தோளாதசுரையோ தொழும்பர்செவி ` என்பது போலச் சிவன் புகழ் கேளாச் செவி கேளாச் செவி என்பதாம் . நும்முடல் வளையும் காலம் - உங்களது உடல் மெலிவு அடைந்து முதுமை எய்தும் காலம் . களைகணாக - பற்றுக்கோடாக , ஆதரவாக .

பண் :

பாடல் எண் : 4

நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவ னையினி யென்றுகொல் காண்பதே.

பொழிப்புரை :

தேனைக்கொண்ட பூக்கள் நிரம்பிய நீர்கொண்டு திருமுழுக்காட்ட எழுந்த மார்க்கண்டேயனுக்காக வேறொன்றும் குறைவில்லாத கொடிய கூற்றுவனை உதைத்திட்டவனும் , வேதங்களை ஓதுதலைக்கொண்ட நாவினனும் ஆகிய திருவலஞ்சுழியிற் பொருந்திய இறைவனை இனிக்காண்பது என்றுகொல் ?

குறிப்புரை :

நறைகொள் - மணம் கொண்ட . பூம்புனல் கொண்டு எழு - சுரங்கப்பாதை வழியே காசிசென்று நாடோறும் அழகிய கங்கை நீரைக் கொண்டு வருகின்ற . மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டேயர் . குறைவிலா - வலிமையில் குறையாத . கொல் - அசை .

பண் :

பாடல் எண் : 5

விண்ட வர்புர மூன்று மெரிகொளத்
திண்தி றற்சிலை யாலெரி செய்தவன்
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே.

பொழிப்புரை :

பகைவர் புரங்கள் மூன்றையும் எரிதல் கொள்ள மிக்க திண்ணியவில்லினால் எரித்தவனாகிய , வண்டுகள் இசையென ஒலிக்கின்ற குளிர்ச்சி உடைய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் தேவதேவனுக்கு அடிமை செய்யும் திறத்து யான் ஆவன் .

குறிப்புரை :

விண்டவர் - அறத்தின் நீங்கியவர் . மனம் பொருந்தாது நீங்கிய பகைவர் . திண்டிறற்சிலை - திண்ணிய வலிமையோடு கூடிய இமயவில் . முரலும் - ஒலிக்கும் . அண்டன் - உலகங்களை உடையவன் . அடிமைத்திறத்தாவன் - அடிமையாம் திறத்தை நான் அடைந்தவனாவேன் . ஏ - அசை .

பண் :

பாடல் எண் : 6

படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான்
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி
அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே.

பொழிப்புரை :

படத்தைக்கொண்ட பாம்பினோடு நிலா தரும் மதியத்தையும் சடையில் அடங்குமாறு வைத்து வாழ வல்லானும் , தேவர் தலைவனும் , மங்கைபங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு அடிமைசெய்யும் திறத்து யான் ஆவன் .

குறிப்புரை :

பால்மதி - பால்போலும் வெள்ளிய சந்திரன் . அஞ்சடை அடங்க - அழகிய சடையின்கண்ணே அடங்கியிருக்க . உம்பர்தம்பிரான் - தேவர்கள் தலைவன் .

பண் :

பாடல் எண் : 7

நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி யீசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.

பொழிப்புரை :

நாவினைக்கொண்டு இசை பாடித்தொழும் அடியார்களின் வினைகளைப் போக்கவல்ல முறுக்கமைந்த சடையையுடைய புண்ணியனாகிய நீண்ட சோலை சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவன் தன் ஓர் அம்பு கொள்ளவும் முப்புரங்களும் எரிக்கப்பட்டன .

குறிப்புரை :

புரிசடை - முறுக்குண்ட சடை . மாக்கொள் - அடர்ந்திருத்தலால் கருமை நிறத்தைக்கொண்ட . ஏ கொள - அம்பு தொட்ட அளவால் . மாக்கொள் சோலை - மாமரங்களைக்கொண்ட சோலை .

பண் :

பாடல் எண் : 8

தேடு வார்பிர மன்திரு மாலவர்
ஆடு பாதம் அவரு மறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி யீசனைத்
தேடு வானுறு கின்றதென் சிந்தையே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் தேடுவாராகி இறைவனின் ஆடும் திருவடியை அறியும் ஆற்றல் இலராகவும் , மாடங்கள் நெடிதுயர்ந்த வீதிகளை உடைய திருவலஞ்சுழி ஈசனை என் சிந்தை தேடுவதற்காக உறுகின்றது !

குறிப்புரை :

ஆடுபாதம் - அருள்செய்யும் திருவடியாகிய தூக்கிய திருவடியை .

பண் :

பாடல் எண் : 9

கண்ப னிக்குங்கை கூப்புங்கண் மூன்றுடை
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்
வண்பொன் னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.

பொழிப்புரை :

கண்ணீர் ததும்புகின்றாள் ; கைகூப்பித் தொழுகின்றாள் ; முக்கண்ணுடைய நண்பனுக்கு என்னை நான் கொடுப்பேன் என்று சொல்கின்றாள் ; வளவிய பொன்னித் தென்கரையில் உள்ள வலஞ்சுழி மேவிய பண்பனாகிய பெருமான் இந்தப் பொன்னனைய தலைவிக்குச் செய்த தன்மை இதுவாகும் .

குறிப்புரை :

பனிக்கும் - நீர் அரும்பும் . என்னை நான் கொடுப்பேன் எனும் - என்னை நானே கொடுத்துக்கொண்டு அவனுக்குரிமை யாக்கிக் கொள்வேன் என்று சொல்லுவாள் . பண்பன் - நற்பண்புகளின் வடிவமாயிருப்பவன் . பொனை - பொன் போன்றவளை . தோழி கூற்று .

பண் :

பாடல் எண் : 10

இலங்கை வேந்த னிருபது தோளிற
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே.

பொழிப்புரை :

இலங்கை வேந்தனாம் இராவணனது இருபது தோளும் இறும்படியாக நன்மைமிக்க திருவடியில் ஒரு விரலால் ஊன்றினானுக்குரிய , மலங்கு மீன்கள் பாய்கின்ற வயல் சூழ்ந்த திருவலஞ்சுழியை வலம் கொள்வார் திருவடிகள் என் தலையின் மேலன .

குறிப்புரை :

இற - நொறுங்க. நலங்கொள் - பிறருக்கு நன்மை செய்யும் குணத்தைக் கொண்ட. மலங்கு - மீன் வகையில் ஒன்று. வலங்கொள்வார்-வலம் செய்வார். `திருவலஞ்சுழி வலங்கொடு பாதத்தால் சுழலு மாந்தர்கள் தொல்வினையதனொடு துன்பங்கள் களைவாரே` திருஞானசம்பந்தர் தேவாரம் (தி.2. ப.106. பா.9.) அருளியமையையும் காண்க.

பண் :

பாடல் எண் : 1

படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே. 

பொழிப்புரை :

படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான் தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை.

குறிப்புரை :

படையும் - மழு, சூலம் முதலிய ஆயுதங்களையும். புல்வாய்அதள் - மான்தோல். தங்கிய - தரித்த. புடை நிலாவிய - ஊர்ப் புறங்களில் விளங்கிய. அல்லல் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 2

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே. 

பொழிப்புரை :

பறவை வடிவாகிய யூபஸ்தம்பம் நட்டு ஓமம் செய்து பசுவினை வேட்டு வேள்வி செய்து மற்றும் பலதிறத்தை உடைய மறையவர்கள் வாழும் பதியாகியதும், களங்கமுடைய பிறையைச் சடையின்கண் வைத்த நெற்றிக்கண்ணராகிய சிவபிரான் சேரும் சிறப்புடையதுமாகிய திருவாஞ்சியம் சேர்வீராக.

குறிப்புரை :

பறப்பை - கருடன் முதலிய பறவை வடிவம் பொறித்த வேள்வித்தூண். நெய் வைக்கும் பாத்திரம் எனலுமாம். பசு - வேள்விப் பசு. படுத்து - சிறந்த பொருளாகக்கொண்டு நிகழ்த்தி. வேள்வித் தீயின் கண் நெய்யைச் சொரிந்தும், வேள்விச் சாலையின்கண் பசுவுக்கு வாயுறை கொடுத்தும் ஆராதித்தும் செய்யும் வேள்விச் செயல்களை உடையோர் வாழும் ஊர் எனக் குறித்தது.பல திறத்தவும் உடையோர் - பல வேள்விக் கூறுபாடுகளையும் உடையவர்கள். \\\\\\\"பறப்பைப் படுத் தெங்கும் பசுவேட்டெரியோம்பும் சிறப்பர் வாழ்வதில்லை\\\\\\\" (தி.1.ப.80. பா.2) என்றார் சம்பந்தரும். கறைப்பிறை - கறையை உடைய பிறைமதி. கண்ணுதல் - நெற்றிக் கண்ணை உடையவனாகிய பெருமான்.

பண் :

பாடல் எண் : 3

புற்றில் ஆடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே. 

பொழிப்புரை :

புற்றில் ஆடும் இயல்புடைய பாம்பினோடு கங்கையும், பிறையும் பொருந்திய செஞ்சடையுடைய தேவர் தலைவன் திருப்பதியாகியதும், சுற்றிலும் மாடங்கள் சூழ்ந்ததுமாகிய திருவாஞ்சியத்தைப்பற்றிப் பாடுபவர்களுக்குப் பாவங்கள் இல்லை.

குறிப்புரை :

ஆடரவு - ஆடுகின்ற பாம்பு. ஆடரவு - வினைத் தொகை; காலம் மூன்றிற்கும் பொது. புனல் - கங்கை. தெற்றும் - பொருந்திய. பற்றி - அடைந்து.

பண் :

பாடல் எண் : 4

அங்க மாறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க் கமரரே. 

பொழிப்புரை :

நம் தேவதேவராகிய இறைவர், ஆறங்கங்களும் நால்வேதங்களும் தங்குகின்ற வேள்வியுடைய அந்தணர்கள் பயிலும் நகராகிய திருவாஞ்சியத்தில், சிவந்த கண்ணையுடைய திருமாலை இடப்பாற்கொண்டு தங்குவார்.

குறிப்புரை :

அங்கமாறு - வேதாங்கங்கள் ஆறு. அவையாவன சிக்ஷை, வியாகரணம், நிருத்தம் முதலியன. அருமறை - உணர்தற்கரிய ருக், யசுர், சாமம், அதர்வணம். தங்கு - பொருந்திய. பயிலும் - எழுந்தருளியிருக்கும். செங்கண்மால் - சிவந்த கண்ணையுடைய திருமால். அமரர்க்கு அமரர் - தேவர்க்குத் தேவர்.

பண் :

பாடல் எண் : 5

நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிக ளுறைபதி
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே. 

பொழிப்புரை :

திருநீறு பூசி நிமிர்ந்த சடையின்மேல் பிறையும் கங்கையும் சூடும் பெருமான் உறையும் பதியாகியதும், களைகளாகிய பிரம்பு முதலியவை ஒருங்கும் வயல்வளமுடைய திருவாஞ்சியத்தைத் தெளிந்து வாழ்பவர்க்குச் செல்வம் பெருகும்.

குறிப்புரை :

மாறுதான் ஒருங்கும் வயல் - நெற் பயிர்களுக்கு மாறாகிய களைகள் அழிந்து குறையும் வயல்கள். தேறி - தெளிந்து.

பண் :

பாடல் எண் : 6

அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க்
குற்ற நற்றுணை யாவா னுறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.

பொழிப்புரை :

பாசக்கட்டுகள் நீங்கிப் பற்று என்பதொன்றும் இன்றி யாரையும் இல்லாதவர்க்குப் பொருந்திய நல்ல துணைவனாகிய பெருமான் உறையும் பதியாகியதும், விண்ணைத் தெற்றுகின்ற மாடங்கள் சூழ்வதுமாகிய திருவாஞ்சியத்தைக் கற்றுச் சேரும் அடியார்களுடைய கருத்தாவான் இறைவன்.

குறிப்புரை :

அற்று - ஆசையற்று. பற்றின்றி - ஆசை சிறிதேனுமில்லாமல். பற்று இன்றி அற்று எனமாற்றி ஆசை சிறிதும் இல்லாமல் விடுத்து என்றலுமொன்று. யாரையும் இல்லவர்க்கு - யாரையும் இல்லாத முற்றத்துறந்த துறவியர்க்கு. உற்ற - பொருந்திய. உறைபதி - உறைகின்ற தலம். தெற்று - கட்டப்பட்ட. கற்றுச் சேர்பவர்க்கு - இறைவன் திருப்பெயர்களைக்கற்று அடைய வல்லவர்களுக்கு. கருத்தாவது - அறிதற்குரிய கருத்துப் பொருளாவதாகும்.

பண் :

பாடல் எண் : 7

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

அருக்க னங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே. 

பொழிப்புரை :

சூரியனும், அக்கினியும், யமனும், பிற தேவர்களும் திருத்தி அணிசெய்கின்ற சேவடியான் திகழும் நகரமாகியதும், மங்கையை ஒருபங்கிற் கொண்டு மகிழ்ந்தவனுடையதுமாகிய திருவாஞ்சியத்தை விருப்பத்தினால் அடைவார்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

அருக்கன் - சூரியன். அங்கி - அக்கினி. திருத்தும் - அவர்களைத் தவறு நீக்கித் திருத்தும். அருத்தி - ஆசை. அல்லல் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 1

உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
நள்ளா றாவென நம்வினை நாசமே.

பொழிப்புரை :

உள்ளே தன் நிறம் கெடாததாகிய ஒப்பற்ற தாமரைத் தொகுதியின் தெளிவு நீங்காததாகிய சிவ ஒளிப் பிழம்பினை , தேன் நீங்காத பொன்போன்ற கொன்றைகமழும் சடையினை உடைய ` நள்ளாறா !` என்று கூற நம் வினைகள் நாசமாகும் .

குறிப்புரை :

அகத்தே உள்ள ஆதாரங்களில் நீங்காத தாமரைகளின் தெளிவாகக் காணப்படுகின்ற சிவசோதி . உள் ஆறாததோர் புண்டரிகத்திரள் - ` ஊறுமருவிய உயர்வரை உச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குள மொன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்பூவின்றிச் சூடான் புரிசடையோனே ` ( தி .10 திருமந்திரம் ). ஏனைத் தாமரைபோல் நீர்க்கீழ்த்தோன்றாத பீசம்முதலாகத் தோன்றி முளைத்த ஒப்பற்ற வெண்டாமரை . புண்டரிகத்திரள் - தாமரையின் தன்மைகள் எல்லாம் திரட்டித் தன்னுட்கொண்டது . தெள்ளாறாச் சிவசோதி - தெளிந்த சிவஞானத்தின் வழிகாணும் சிவமாகியப் பேரொளிப் பிழம்பு . கள் அறாத கொன்றை என்க .

பண் :

பாடல் எண் : 2

ஆர ணப்பொரு ளாமரு ளாளனார்
வார ணத்துரி போர்த்தம ணாளனார்
நாரணன் நண்ணி யேத்துநள் ளாறனார்
கார ணக்கலை ஞானக் கடவுளே.

பொழிப்புரை :

திருமால் பொருந்தி ஏத்துகின்ற நள்ளாற்று இறைவர் , வேதத்தின் பொருளாக விளங்கும் அருளை ஆள்பவர் ; யானையின் தோலைப் போர்த்த மணவாளர் ; எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய கலைஞானக்கடவுள் ஆவர் .

குறிப்புரை :

ஆரணம் - வேதங்களின் தொகுதி . ஆரணப்பொருளாம் அருளாளனார் - வேதப்பொருளாய்விளங்கும் கருணையாளர் . வாரணத்து உரி - யானையினது தோல் . நாரணன் - திருமால் . நண்ணி - சென்றடைந்து . காரணன் - எல்லாவற்றிற்கும் நிமித்த காரணன் . கலைஞானக் கடவுள் - கலைஞானம் தரும் கடவுள் என்க . அல்லது அவற்றிற்குப் பொருளாயுள்ள கடவுள் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில்
சோகம் பூண்டழல் சோரத்தொட் டான் அவன்
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.

பொழிப்புரை :

மேகத்தினைத் தன் உச்சியிற் கொண்டதாகிய மேருமாமலையாகிய வில்லைக்கொண்டு , முப்புரங்களும் சோகம் பூணுமாறு கனல் சோரத் தொட்டவனாகிய அவன் , தன்னொரு பாகத்திற்கொண்ட திருமாலும் , நான்முகனும் வழிபடுமாறு நாகம் பூண்டு கூத்தாடும் நள்ளாற்று இறைவன் .

குறிப்புரை :

மேகம் பூண்டதோர் மேரு வில் - மேகங்கள் வந்து படியும் இமயமலையாகிய வில் . எயில் - திரிபுரம் . சோகம் பூண்டு - துன்பம் மேற்கொண்டு . அழல்சோர - நெருப்புப்பற்ற . தொட்டான் - எய்தான் . பாகம் பூண்டமால் - இடப்பாகத்தே உறையும் திருமால் . திருமாலை இடப்பாகத்தே மனைவியாகக் கொண்டவன் என்றபடி . ஹரிஅர்த்தர் என்ற சிவமூர்த்தம் குறித்தவாறு . பங்கயத்தான் - பிரமன் . திருமால் பிரமரோடு நாகம் அணிந்து கூத்தாடும் நள்ளாறன் என்க .

பண் :

பாடல் எண் : 4

மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்
நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே.

பொழிப்புரை :

செஞ்சடையில் மலிந்த பாம்பினோடு பொலிகின்ற கங்கையை வைத்த புனிதனாராகிய கூற்றுவனை நலிந்த நள்ளாறரது அருளாற்றலையும் கண்டு இறுமாந்து மகிழ்வேன் .

குறிப்புரை :

மலியும் - நிறைந்த . வாளரவம் - ஒளிபொருந்திய பாம்பு . பொலியும் - அழகில் சிறந்து விளங்கும் . நலியும் - உயிர்களைத் துன்புறுத்தும் . கூற்றை - இயமனை . நலிந்து - உதைத்துத் துன்புறுத்தும் . வலியும் - வலிமையினையும் .

பண் :

பாடல் எண் : 5

உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன்
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.

பொழிப்புரை :

தேன்மணக்கும் பொழிலை உடைய திருநள்ளாற்றுப்பெருமான் உற்றுப்பொருந்தியவனாய் நிறைந்து உள்ளத்தைக் குளிர்விப்பவன் ; இறைவனாகிநின்று எண்ணத்தில் நிறைந்தவன் ; மறம் உடையவனாய் அருச்சுனனின் பொருட்டுப் பன்றியின்பின் சென்ற மாயம் என்னையோ ?

குறிப்புரை :

உறவனாய் - உறவுடையவனாய் ; நன்மை செய்பவனாய் . உள்ளம் நிறைந்து - மனத்தின்கண்ணே நிறைந்து . குளிர்ப்பவன் - மனங்குளிரச் செய்பவன் . எண் - எண்ணத்தின் கண்ணே . நறவம் - குங்கும மரம் ; தேனுமாம் . நாறும் - கமழும் . மறவனாய் - அருச்சுனனோடு சண்டையிடப் பன்றியைத் துரத்திச் சென்ற வரலாற்றைக் குறித்தது . மாயம் - பொய்ச்செயலாகிய திருவிளையாட்டு .

பண் :

பாடல் எண் : 6

செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச்
சக்க ரம்மருள் செய்த சதுரரே.

பொழிப்புரை :

சிவந்த வானமும் அழகிற்குத்தோற்று உள்ள மழிதற்குக் காரணமாகிய செஞ்சுடர் வீசும் சோதியரும் , திகம்பரருமாகிய பாம்பினை ஆர்த்துக் கட்டிய நள்ளாற்றிறைவர் வக்கராசுரன் உயிர் போக்கியவராகிய திருமாலுக்குச் சக்கரப் படையை அருள் செய்த திறம் உடையவர் .

குறிப்புரை :

செக்கர் அங்குஅழி - செவ்வானத்தின் நிறம் அவ்விடத்து அழிந்து தோன்ற . நக்கர் - நகுதற்குரிய வேடமுடையவர் . அங்கு அரவு ஆர்த்த நாதனார் என்க . வக்கரன் விருத்தசர்மனுக்கு சைதேவன் தங்கையாகிய சுருததேவியிடம் பிறந்தவன் . இவனும் சிசுபாலனும் சனகசனந்தனர் சாபம் பெற்ற ஜயவிஜயர்களுடைய அவதாரம் . இவன் வலிமை யடக்கப்பெற்றுக் கிருஷ்ணனால் கொல்லப் பட்டவன் . வவ்விய - கொன்ற . மாயன் - திருமால் .

பண் :

பாடல் எண் : 7

வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.

பொழிப்புரை :

நைந்த உள்ளம் உடையவர்களுக்கு அருளும் நள்ளாற்று இறைவர் வஞ்சனைமிக்க நஞ்சினாற் பொலிகின்ற திருக்கழுத்தினர் : தெய்வச் செல்வப்பாவையாகிய உமா தேவிக்கு வேந்தர் : வஞ்சனை உடைய நெஞ்சத்தவர்களுக்கு வழி கொடாதவர் .

குறிப்புரை :

வஞ்சம் - கொல்லும் தன்மையாகிய வஞ்சனையை உடைய . நஞ்சிற் பொலிகின்ற - விடத்தினாலே விளங்குகின்ற . விஞ்சையில் - வியத்தகு செயல்களினால் விளங்கும் . செல்வப் பாவை - ஞானச் செல்வியாகிய சிற்சத்தி . வேந்தனார் - கணவர் . நஞ்ச - நைந்த ; நைஞ்ச என்றாய் நஞ்ச என மருவியது . அன்பினால் உருகில் நஞ்சு போன்ற கொடிய மனத்தவர்க்கும் அருள் செய்யும் . உம்மை தொக்கது .

பண் :

பாடல் எண் : 8

அல்ல னென்று மலர்க்கரு ளாயின
சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான்
வல்ல னென்றும்வல் லார்வளம் மிக்கவர்
நல்ல னென்றும்நல் லார்க்குநள் ளாறனே.

பொழிப்புரை :

அலர்க்கு அல்லன் என்றும் , அருளாயின சொல்லன் என்றும் , சொல்லாமறைச் சோதியானாகிய வல்லன் என்றும் துதிக்க வல்லவர் வளம் மிக்கவராவர் . அத்தகைய நல்லார்க்கு நள்ளாறன் என்றும் நல்லன் .

குறிப்புரை :

அலர்க்கு அல்லன் - நல்லரல்லாதார்க்கு அல்லாதவன் . அருளாயின சொல்லன் - அருளுபதேசம் செய்பவன் . சொல்லாம் மறை - எழுதாக்கிளவியாய் செவிவழியாய் ஓதப்பட்டு வரும் மறையாகிய சுருதி .

பண் :

பாடல் எண் : 9

பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனும்
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.

பொழிப்புரை :

நாம் பணிந்து அடிபோற்றும் நள்ளாற்று இறைவன் , பாம்பாகிய அணையத்தக்க பள்ளியினைக் கொண்ட திருமாலும் , பூவாகிய பணைத்த பள்ளியிற் பொலிகின்ற புராணனாகிய நான்முகனும் , தாம் பணிந்து அளக்க இயலாத ஒப்பற்ற தனித்தழலாக உள்ளவன் .

குறிப்புரை :

அணை - படுக்கை . பள்ளிகொண்ட - உறங்குதலைக் கொண்ட . பரமன் - மேலான திருமால் . பூம்பணை - வயல்களில் தோன்றிய தாமரை . பொலிகின்ற - விளங்குகின்ற . புராணன் - தொல்லோனாகிய பிரமன் . தாம் - இருவர் தாமும் . பணிந்து - வணங்கி . அளப்பொண்ணா - அளக்க ஒண்ணாத . தனித்தழல் - தழலாய் நின்றவன் .

பண் :

பாடல் எண் : 10

இலங்கை மன்ன னிருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும்
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் இற்று மனஞ் சுழலும்படியாகத் திருக்கயிலாயப் பெரு வரையின் மேல் திருவிரல் ஊன்றியவரும் , நன்மை மிகுந்த திரு நீற்றருமாகிய நள்ளாறரை நாள்தோறும் வலம் வந்து வணங்குவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

இற - நொறுங்க. மலங்க - கலங்க. மால்வரை - பெரிய கயிலைமலை. மாயும் - அழியும்.

பண் :

பாடல் எண் : 1

மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.

பொழிப்புரை :

தேனையுடைய மலர்களைவைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு மனம் மயங்கிப் பின் இரங்காமல் , நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக . கருவிலிக்கொட்டிட்டை உறையும் பெருமான் திருவடிகளைக் கூடுவீராக .

குறிப்புரை :

மட்டிட்ட - தேன் பொருந்திய ; மலர்களை அணிந்த எனக் கூட்டுக . குழலார் - கூந்தலையுடையவர் . சுழலில் - ஆசைச் சுழலாகிய . வலைப்பட்டு - வலையின்கண்ணே அகப்பட்டு . பரியாது - வருந்தாது . கட்டிட்ட - பந்தித்துநின்ற . கூடும் - சேருங்கள் .

பண் :

பாடல் எண் : 2

ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

உலகில் நிறைந்த மனிதர்களே ! நாள்தோறும் சிறந்த மலர்களோடு பச்சிலைகளையும் பொருந்துமாறு கொண்டு , நீர் உமக்குக் கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

ஞாலம் - உலகம் . ஏலமாமலர் - பொருந்திய சிறந்த பெரிய மலர் . இலை - பச்சிலைகள் . காலனார் வருமுன் - இறக்குமுன் .

பண் :

பாடல் எண் : 3

பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

குற்றமுடையவற்றைப் பேசுதலால் , நீர் மங்கு மாற்றை நினையாமல் மலர்களைக்கொண்டு , கங்கை சேர்ந்த சடை யானுக்குரிய மணம் மிக்க நெடிய பொழில்களை உடைய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

பங்கம் - பயனற்றவை . பறைந்து - மனம் வருந்தி . மங்குமா - மனஎழுச்சி குன்றுமாறு . கொங்குவார் பொழில் - தேன் நிறைந்த நீண்ட சோலை .

பண் :

பாடல் எண் : 4

வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்
வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
காட னாருறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

மனிதர்களே ! நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

விசயற்கு - அருச்சுனனுக்கு . கோடுநீள் - மரக் கொம்புகள் நீண்டுள்ள . அடியாரிடர் தீர்க்க இறைவன்தானே வரும் என்பது குறிப்பு .

பண் :

பாடல் எண் : 5

உய்யு மாறிது கேண்மி னுலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்
கையி னானுறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

உலகத்தில் உள்ளவர்களே ! இதுவே உய்யும்வழி ; கேட்பீராக ; படம்கொண்ட பாம்பை அரையின்கண் அணிந்தவனும் , மழுப்படை பொருந்திய கையை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற , கொய்து கொள்ளத்தக்க பூக்களை உடைய பொழில் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

பை - படம் . பாம்பு அரையான் - பாம்பை இடையிலே கட்டியவன் . மழுப்படையார் கையினான் என்க . படை - ஆயுதம் . கொய்கொள் - கொய்தலைக்கொண்ட . மலர்களையும் , இலைகளையும் பறித்தலைக் கொய்கொள் என்றார் .

பண் :

பாடல் எண் : 6

ஆற்ற வும்அவ லத்தழுந் தாதுநீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

நீர் , மிகவும் துன்பத்தில் அழுந்தாமல் , தோற்றுகின்ற தீ , நீர் , நிலம் , விசும்பு , காற்று ஆகி நின்றவனும் , கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

ஆற்றவும் - மிகவும் . அவலத்து - துன்பத்து . நீர் - நீங்கள் . தோற்றும் - விறகு முதலியவற்றால் வெளிப்படுத்தப்படும் . காய்ந்தவன் - சினந்தவன் .

பண் :

பாடல் எண் : 7

நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச்செய விரும்பாது , நீர் , கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

நில்லா - நிலையில்லாத . பொல்லா ஆறு - தீயவழி . புரியாது - விரும்பி எப்பொழுதும் செய்யாது . கல்லாரும் மதில் - கற்களால் கட்டப்படுதலைப் பொருந்திய மதில் . கொல்லேறு - கொம்பினால் கொல்லத்தக்கதாகிய சினவிடை .

பண் :

பாடல் எண் : 8

பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மி னுருத்திர
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக்
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

உம்மைப் பிணித்துள்ள துன்பம் நிறைந்த பிறவிப் பிரிவெய்தும் நெறியை உணர்த்தலாகின்ற இதனைக் கேட்பீராக ! உருத்திரகணத்தினார் தொழுதேத்துவதும் , எண்குணத்தினான் உறைவதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

பிணித்த - நம்மைப் பிணித்து நிற்கின்ற . நோய்ப் பிறவி - பிறவியாகியநோய் ; அல்லது நோயும் பிறவியும் . பிரிவெய்துமாறு - நீங்கும்படி . உணர்த்தலாம் - பிறவி என்னை விட்டு நீங்க ஆணையிட்டு உணர்த்தலாம் . நீங்கள் பிறப்பு நீங்குதலோடு பிறர்க்கும் உணர்த்தலாம் . உருத்திரகணத்தினார் - சிவகணங்கள் ; அடியார் கூட்டம் . குணத்தினான் - நற்குணங்களின் வடிவாயிருப்பவன் . சேர்வீராயின் நீங்கள் பிறவிநோயில் நீங்குதல் மட்டுமின்றிப் பிறர்க்கும் பிறவியை நீக்கும் ஆசாரியத் தலைமையைப் பெறுவீர்கள் என்றபடி . ` ஒரு நீயாகித் தோன்றப் பெறலரும் பரிசில் நல்கும் ` என்பது திருமுருகாற்றுப்படை .

பண் :

பாடல் எண் : 9

நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே
கம்ப னாருறை கின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

மனிதர்களே ! நான் சொல்லும் இதனை நம்பிக் கேட்பீராக ; நாள்தோறும் தேவர்கள் ` எம்பெருமான் !` என்று ஏத்தும் ஏகம்பத்து இறைவனார் உறைகின்றதும் , பூங்கொம்பு போன்ற பெண்கள் பயில்வதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

நம்புவீர் - உறுதியைக் கேட்டுணரும் விருப்பமுடையீர் . நம்பு - விருப்பம் . எம்பிரான் - எமது தலைவன் . ஏத்தும் - வணங்கும் . கம்பனார் - திரு ஏகம்பத்துறையும் பெருமானார் . கம்பன் - பிறருக்கு நடுக்கத்தைச் செய்வன் . கொம்பனார் - பூங்கொடி போன்ற அழகிய பெண்கள் .

பண் :

பாடல் எண் : 10

பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

உலகிலுள்ளவர்களே ! இது கேட்பீராக ! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

பாருளீர் - உலகின்கண் உள்ளவர்களே! பருவரை - பெரிய மலை. பேருமாறு - பெயரும்படி. கார்கொள் நீர் - கருமை நிறத்தைக் கொண்ட தண்ணீர். இராவணனுக்கு அருள் செய்தது உலக மறிந்த நிகழ்ச்சியாகலின் பாருளீர் இதுகேண்மின் என விளித்தார்.

பண் :

பாடல் எண் : 1

கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.

பொழிப்புரை :

காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது , சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக .

குறிப்புரை :

கண்ட பேச்சினில் - பயனற்ற பேச்சுக்களில் ஈடுபட்டு . காளையர் தங்கள் பால் - இளைஞர்களிடத்து . மண்டி - நெருங்கி . ஏச்சுணும் - பின் அவரால் ஏசும்மொழிகளைப் பெறும் . கழல் கூறும் - திருவடிகளின் பெருமைகளைக் கூறுங்கள் . மாதராரிடத்து அல்லற் படுகிறவர்கள் இறைவன் திருவடிகளைப் பற்றினால் இன்புறுவர் .

பண் :

பாடல் எண் : 2

சுற்ற முந்துணை நன்மட வாளொடு
பெற்ற மக்களும் பேண லொழிந்தனர்
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்
பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே.

பொழிப்புரை :

சுற்றத்தாரும் , வாழ்க்கைத்துணையாகிய நல்ல மனைவியோடு பெற்ற பிள்ளைகளும் பேணுதலை ஒழிந்தனராதலால் , குற்றமற்ற புகழை உடைய கொண்டீச்சுரத்து இறைவரையன்றி ஒரு பற்று மற்று இல்லை .

குறிப்புரை :

சுற்றமும் - சுற்றத்தினரும் . துணை - துணைவியாகிய . பேணலொழிந்தனர் - விரும்புதலைத் தவிர்ந்தனர் . பற்றலால் ஒருபற்று மற்றில்லை - இறைவனே பற்றுக்கோடாவான் வேறு ஒரு பற்றுக் கோடில்லை . ` பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு ` ( குறள் . 350) ` என்னிலாரும் எனக்கினியாரிலை ` ( தி .5. ப .21. பா .1.) உலகில் இறைவனது சார்பில்லாது பிறிது ஒரு சார்பில்லை என்று அநுபவம் காட்டியவாறு .

பண் :

பாடல் எண் : 3

மாடு தானது வில்லெனின் மாநுடர்
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர லோகத் திருத்துமே.

பொழிப்புரை :

செல்வம் இல்லையென்றால் , மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை . ஆதலால் , பல மாலைகளாற் கூட , நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக ; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும் .

குறிப்புரை :

மாடுதானது இல்லெனில் - செல்வம் இல்லையானால் . செல்வம் இல்லையானால் அவரவரும் தம்போக்கிற் செல்வர் . பாடு - பக்கம் . செல்வாரும் என உம்மைதொக்கது . மாநுடர்பாடுதான் செல்வாரில்லை - மனிதர் பெருமையோடு ஒருவரிடத்துச் செல்லுதல் இல்லை . அடியாருடன் நீர் சென்று பலவகைப்பட்ட திருப்பதிகப் பாமாலைகளால் பாடுங்கள் . இருத்தும் - அப்பெருமான் இருக்கச் செய்வான் .

பண் :

பாடல் எண் : 4

தந்தை தாயொடு தார மெனுந்தளைப்
பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய
கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச்
சிந்தை செய்மின் அவனடி சேரவே.

பொழிப்புரை :

தந்தையும் தாயும் தாரமுமாகிய கட்டாகிய தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள் பெருகி மலர்கின்ற பொழில்களை உடைய கொண்டீச்சுரத்து இறைவனைச் சேவடி சேர்வதன் பொருட்டுச் சிந்தை செய்வீர்களாக .

குறிப்புரை :

தந்தை தாய் மனைவி என்னும் பிணைப்பு ` இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை ` ( குறள் - 41.) என்பதால் தெளிவுபடுதல் அறிதற்குரியது . பயில்வு - பழகுதல் . எய்திய - பொருந்திய . கொந்து - பூங்கொத்து .

பண் :

பாடல் எண் : 5

கேளு மின்இள மைய்யது கேடுவந்
தீளை யோடிரு மல்லது எய்தன்முன்
கோள ராவணி கொண்டீச் சுரவனை
நாளு மேத்தித் தொழுமின் நன்காகுமே.

பொழிப்புரை :

மனிதர்களே ! கேட்பீர்களாக ; இளமைக்குக் கேடு வந்து சளியோடு கூடிய இருமல் வந்தெய்துவதற்குமுன் கொள்ளுகின்ற பாம்பினை அணிகின்ற கொண்டீச்சுரத்து இறைவனை நாளும் ஏத்தித் தொழுவீராக ; உமக்கு நல்லனவே ஆகும்

குறிப்புரை :

கேடு வந்து - கெடுதலை அடைந்து . ஈளை - கோழை . இருமல் எய்தமுன் - முதுமை வருமுன்பே . கோளரா - கொள்ளும் வாயையுடைய பாம்பு . நன்கு - முத்தி ஞானம் .

பண் :

பாடல் எண் : 6

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே.

பொழிப்புரை :

பூங்கொம்பைப்போன்ற பெண்கள் பயில்கின்ற கொண்டீச்சுரத்து இறைவனை ` எம்பிரான் ` என்று ஏத்தவல்லவர்க்கு , வெம்புதற்குக் காரணமாகிய நோயும் , துன்பமும் , வறுமையும் முதலிய சூழ்தற்குரிய வினைகள் இல்லை .

குறிப்புரை :

வெம்பும் - உடல் வெதும்பும் . வெறுமை - வறுமை . இடர் - துன்பம் துயர் என்பன வேறுபாடுடையன . ஒன்று மனத்துன்பம் , மற்றொன்று உடல் துன்பம் , மூன்றாவது பிறவித் துன்பம் , இவ்வாறு கொள்ளலாம் . சூழ் வினை - நம்மைச் சூழ்ந்துள்ள வினைப் பயன்களாகிய இவை . கொம்பனார் பயில் - பூங்கொம்பு போன்றவர்களாகிய மகளிர் பயில்கின்ற .

பண் :

பாடல் எண் : 7

அல்ல லோடரு நோயி லழுந்திநீர்
செல்லு மாநினை யாதே கனைகுரல்
கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே.

பொழிப்புரை :

துன்பத்தோடு அருநோய்களில் அழுந்திச் செல்லும் நெறி எது என்று நினையாமல் , நீர் , கனைத்த குரலை உடைய முல்லை நிலத்துக்குரிய இடபவாகனத்தை ஊர்ந்தவனாகிய கொண்டீச்சுரத்து இறைவனை வல்லவாறு தொழுவீரேயாயின் வினைகள் மாயும் .

குறிப்புரை :

அல்லலோடு - துன்பத்தோடு . அடரும் - நெருக்குகின்ற . நோயில் - பிணியில் . செல்லுமா - பயனின்றி இறந்தொழியுமாறு . நினையாதே - நினைக்காமல் . கனைகுரல் - கனைக்கின்ற ஒலி . கொல்லையேறு - முல்லை நிலத்து எருது . வல்லவாறு - இயன்றவாறு .

பண் :

பாடல் எண் : 8

நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
மாறி லாமலை மங்கையொர் பாகமாக்
கூற னாருறை கொண்டீச் சுரநினைந்
தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.

பொழிப்புரை :

நறுமணம் வீசும் கலவைச்சாந்தணிந்த நல்ல தனங்களையும் மெல்லிய மொழிகளையும் உடைய மாறுபாடற்ற உமா தேவியை ஒருபாகமாகக்கொண்ட கூற்றை உடையவராகிய பெருமான் உறைகின்ற கொண்டீச்சுரத்தை நினைத்து நெஞ்சில் மேலும் மேலும் எண்ணுபவர்களுக்குக் குற்றம் ஒன்றும் இல்லை .

குறிப்புரை :

நாறு - மணம் கமழ்கின்ற . சாந்து - சந்தனம் . மாறு - ஒப்பு . கூறனார் - உடலில் இடக்கூற்றை அளித்தவர் . ஊறுவார் - செல்லுவார் . உறுவார் என்பது முதல்நீண்டு ஊறுவார் என்றாயது . ஊனம் - குற்றம் .

பண் :

பாடல் எண் : 9

அயிலார் அம்பெரி மேருவில் லாகவே
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்
குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு கூர்மையையுடைய ஓரம்பினால் முப்புரங்கள் தூளாகுமாறு விழ எரியால் எய்தவனாகிய , குயில்களை உடைய பொழில் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைப் பயில்கின்ற அடியவர்கள் பெருமை பெறும் பகுதியை உடையவராவர் .

குறிப்புரை :

அயிலார் அம்பு - எரி கூர்மை பொருந்திய அம்பு அக்கினிதேவனாக . திரிபுரமழிக்கச் சென்றகாலையில் அக்கினிதேவன் அம்பாயினான் என்ற கதைக்குறிப்பைக் கொண்டது . மேரு - இமயம் . எயிலாரும் - திரிபுரக் கோட்டையில் உள்ளவரும் . பொடியாய் விழ - தூளாகிக் கீழே விழ . பயில்வாரும் - வழிபடுவார்களும் . உம்மையால் புகழ் கூறுபவர்களோடு மனம் , மெய் , அறிவு ஆகியவற்றால் வழிபடுபவர்களையும் கொள்க . பாலர் - தன்மையை உடையவர் .

பண் :

பாடல் எண் : 10

நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை
மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழில் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.

பொழிப்புரை :

நிலையினைப் பொருந்திய திருக்கயிலையை ஆணவத்தொடு நின்று எடுத்த இராவணனை மலையினால் வருத்தி அவன் ஆற்றலை வாட்டியவனாகிய , குலைகள் பொருந்திய சோலையையுடைய பொழில்கள் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைத் தலையினால் வணங்கலே தவம் ஆகும் .

குறிப்புரை :

நிலையினார்வரை - ஊழிதோறூழி முற்றும் அழியாது நிலைபெறும் அரிய மலையை. தன் உடல் வலிமையின் நிலையிற் பொருந்தி அதன் எல்லையிலே நின்று. விறல் - வலிமை. குலையினார் இன் சாரியை, பொழில்; குலைகளை உடைய சோலை. தவமாகும் - சிறந்த தவம் அதுவேயாகும்.

பண் :

பாடல் எண் : 1

குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.

பொழிப்புரை :

விசயமங்கையுள் வீற்றிருக்கும் வேதியனாகிய பெருமான் , தம் அங்கையில் தருப்பையும் , மலர்களும் கொண்ட அழகிய , குற்றமற்ற மங்கலவாசகம் உரைப்போர் வாழ்த்தும்படி பொருந்த உமையும் தானும் ஒரு திருமேனி உருவில் நின்றான் .

குறிப்புரை :

குசை - தருப்பை . கோசம் - புத்தகம் ; இறைவனது முழு முதல் தன்மைகூறும் பதிகங்களில் ஒன்று . வசையில் - குற்றமற்ற . மங்கல வாசகர் - மங்களவாசகமாகிய வேதவாழ்த்துக் கூறும் அந்தணர் . மணிவாசகரைக் குறித்ததாகக் கூறுவாரும் உளர் . இசைய - தம் திருமேனியோடு பொருந்த . ஒன்றாயினான் - ஓருருவமாயினான் ; மாதொரு கூறனாயினான் என்றபடி . விசையமங்கையுள் - திருவிசயமங்கை என்னும் தலத்துள் . வேதியன் - வேதங்களை அருளிச் செய்தவன் .

பண் :

பாடல் எண் : 2

ஆதி நாத னடல்விடை மேலமர்
பூத நாதன் புலியத ளாடையன்
வேத நாதன் விசயமங் கையுளான்
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

ஆதிக்கண் தோன்றியநாதனும் , வலியுடைய இடபத்தின்மேல் அமரும் பூதநாதனும் , புலித்தோலாடையனும் , வேதநாதனும் ஆகிய பெருமான் விசயமங்கையில் உள்ளான் ; அவன் திருவடிகளைப் புகழ்ந்து உரைக்க வல்லார்க்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

ஆதிநாதன் - எல்லா உலகிற்கும் ஆதியாய் முளைத்த தலைவன் . அடல் - வலிமை . விடை - இடபம் . பூத நாதன் - பூதகணங்களின் தலைவன் . புலியதள் - புலித்தோல் . வேதநாதன் - வேதங்களால் புகழப்படும் தலைவன் அல்லது வேதங்களின் தலைவன் .

பண் :

பாடல் எண் : 3

கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற வுருத்திரன்
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.

பொழிப்புரை :

கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூரில் வெள்ளிய இடபம் பூசிக்க அதற்கு அருள்செய்தவனும் , விசயமங்கையுள் இடமாகக்கொண்டு உறைகின்றவனும் ஆகிய உருத்திரன் , கிள்ளிய விடத்துப் பிரமனுக்குத் தலை ஒன்று அற்றது .

குறிப்புரை :

கொள்ளிடக்கரை - கொள்ளிடநதியின் கரையின் கண்ணே உள்ள . கோவந்தபுத்தூரில் - கோவந்தபுத்தூர் என்னும் தலத்தில் . வெள்விடைக்கு அருள்செய் - வெண்மையான இடபத்திற்கு அருள் செய்த . உருத்திரன் - துன்பத்தை ஓட்டுகின்றவன் . அயனுக்குக் கிள்ளிடத் தலையற்றது - பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றினைக் கிள்ளிட அவ்வயன் ஒரு தலையற்றவனானான் .

பண் :

பாடல் எண் : 4

திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம்
அசைய அங்கெய்திட் டாரழ லூட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.

பொழிப்புரை :

விசயமங்கையில் உள்ள மிகப் பழையவனாகிய பெருமான் , திசைகள் எங்கும் குலுங்குமாறு திரிபுரங்கள் அசையும்படிப் பொருந்திய அழலூட்டியவன் ; அப்பெருமான் திருவடிப்புறத்து விரைந்து மயங்கி விழுந்தனன் கூற்றுவன் .

குறிப்புரை :

திசையும் - எட்டுத் திசைகளும் . எங்கும் - எல்லா உலகங்களும் . குலுங்க - நடுங்க . அசைய அங்கு எய்திட்டுத் திரிபுரங்கள் ஆடி அசையும்படி அவை இருக்கும் இடம் சென்று அடைந்து . ஆர்அழல் - அணைப்பதற்கு அரிய நெருப்பை . விருத்தன் - மிக முதியன் . முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளானவனாதலின் விருத்தன் என்றார் . புறத்தடி - புறக்காலால் . விசையின் - விரைவாக . மங்கி - ஒளி மங்கி .

பண் :

பாடல் எண் : 5

பொள்ள லாக்கை யகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
உள்ளல் நோக்கியென் னுள்ளுள் உறையுமே.

பொழிப்புரை :

ஓட்டைகளை உடைய உடம்பினகத்து ஐம்பூதங்கள் கள்ளத்தனம் உடையவாக்கிக் கலக்கிய கரிய இருளிலே , அவ்விருளை விலக்குதல் புரிந்த விசயமங்கைப்பெருமான் தன் திருவுள்ளத்தே நினைந்தருளலை நோக்கி என் உள்ளத்துள்ளே உறைவான் .

குறிப்புரை :

பொள்ளல் - பொத்தல் . ஒன்பது ஓட்டைகளை உடைய வீடாதலின் உடலைப் பொள்ளல் ஆக்கை என்றார் . உள்ளல் - தன்னை நினையும்படிச் செய்து . அகத்தில் - உள்ளே . கள்ளமாக்கி - வஞ்சகத்தை மனத்தே உளதாக்கி . கலக்கிய - மனத்தை அலைத்த . கார் இருள் - மிக்க இருளை உடைய அறியாமையை . விள்ளலாக்கி - நீங்கும்படி செய்து , உள்ளல் நோக்கி - நான் தியானம் செய்வதைப் பார்த்துக்கொண்டே . உள்ளுள் - உள்ளத்திற்குள்ளே . உறையும் - எழுந்தருளியிருக்கும் .

பண் :

பாடல் எண் : 6

கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச்
செல்வ போற்றியென் பாருக்குத் தென்திசை
எல்லை யேற்றலு மின்சொலு மாகுமே.

பொழிப்புரை :

முல்லைநிலத்துக்குரிய இடபக்கொடியையும் , மேருமலையாகிய வில்லையும் பொருந்த உடையவனாகிய விசய மங்கையின் அருட்செல்வ ! போற்றி ! என்று உரைப்பார்க்குத் தென் திசையில் ஏறுதலும் , இனிய புகழும் உளதாகும் .

குறிப்புரை :

கொல்லை - முல்லைநிலக்காடு . ஏறு - மாலாகிய இடப ஏறு . ஏற்றுக்கொடி - இடபக் கொடி . பொன்மலை - மேருமலை . வில்லை ஏற்றுடையான் - மேரு மலையாகிய வில்லை ஏற்றுக்கொண்டவன் . தென்றிசை எல்லையேற்றலும் - தெற்கில் உளதாய எமனுலக எல்லையில் காலன்வந்து வரவேற்று இன்சொல் கூறுதலுமாம் என்பதாம் . வணங்கிவர வேற்பான்என்க . இன்சொலும் - இன் சொல் கேட்கும் தகுதிப்பாட்டையும் . ஆகும் - கொடுப்பதாகும் . எமனால் வழிபடப்படுவர் என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

கண்பல் உக்க கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழ லுத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.

பொழிப்புரை :

கண்ணும் பல்லும் சிந்திவிட்டகபாலத்தைத் தம் அழகியகைக்கொண்டு உண்ணுகின்ற பலிக்கு எங்கும் திரிகின்ற உத்தமனும் , வெண்பிறையைக் கண்ணியாக உடையானுமாகிய விசயமங்கையின் நண்புக்குரிய கடவுளைத் தொழப்பெற்றது நன்மையேயாகும் .

குறிப்புரை :

கண்பல் உக்க - கண்களும் பற்களும் உதிர்ந்த . கபாலம் - மண்டையோடு . அங்கைக் கொண்டு - அழகிய திருக்கரத்தே கொண்டு . உண்பலிக்கு உழல் - உண்ணும் பிச்சைக்கு வருந்தித் திரிகின்ற . உள்ளொளி - தன்னுள்ளே ஒளியையுடைய . கண்ணி - தலை மாலை . நண்பன் - தோழனாயிருப்பவன் .

பண் :

பாடல் எண் : 8

பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும் நல்வரங் கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி யேநினைந் தாசையால்
காண்ட லேகருத் தாகி யிருப்பனே.

பொழிப்புரை :

பாண்டுவின் மகனாகிய பார்த்தன் ( அருச்சுனன் ) பணிகள் செய்து தான் விரும்பிய நல்வரத்தைக் கொண்ட விசய மங்கையில் உறையும் ஆண்டவன் திருவடியே நினைந்து ஆசையால் அவனைக் காணுதலே கருத்தாக இருப்பன் அடியேன் .

குறிப்புரை :

பாண்டுவின் மகன் - பாண்டு என்னும் குருகுலத் தரசனுடைய மகன் . பார்த்தன் - அர்ச்சுனன் . பணி செய்து - தொண்டு செய்து . வேண்டும் - விரும்பும் . தலவரலாறு கூறியபடி .

பண் :

பாடல் எண் : 9

வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி உய்யக்கொளுங் காண்மினே.

பொழிப்புரை :

மயக்கந் தீர்தற்குரிய மனிதர்களே ! அடியேன் கூறுவதை வந்து கேட்பீராக ; வெந்த திருநீற்றை அணிந்தவனாகிய விசயமங்கைப் பெருமான் தன்னைச் சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனத் தன் உறவுடையவராக்கி உய்யக் கொள்வான் ; காண்பீராக .

குறிப்புரை :

கேண்மின் - கேளுங்கள் . மயல் தீர் - அறியாமை நீங்கிய . சிக்கென - உறுதியாக . பந்து - உறவினன் .

பண் :

பாடல் எண் : 10

இலங்கை வேந்த னிருபது தோளிற
விலங்கல் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.

பொழிப்புரை :

இலங்கைக்கரசனாகிய இராவணனது இருபது தோள்களும் இற்று விழும்படியாகத் திருக்கயிலையை ஊன்றிய திருவிரலை உடையவனாகிய பெருமானுக்குரிய விசய மங்கையை வலம் வந்து வணங்குபவர்களும் , வாழ்த்து இசைப்பவர்களும் நன்னெறிநாடித் தமக்கு நலம் செய்வாராவர் .

குறிப்புரை :

விலங்கல் - மலை . கயிலைமலையிடத்தே ஊன்றிய திரு விரலை உடைவன் என்பார் விலங்கல்சேர் விரலான் என்றார் . நலஞ் செய்வார் - தம்முயிர்க்கு நன்மை செய்தவராவர் . நாடி - அடைந்து .

பண் :

பாடல் எண் : 1

வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.

பொழிப்புரை :

தேடிவைத்த செல்வமும் , மனைவியும் , மக்களும் நீர் செத்தபோது உம்மைச் செறியார் ; பிரிவதே இயல்பாம் ; நாள் தோறும் நீலக்குடியரனை நினையும் சித்தம் ஆகின்சிவகதி சேர்வீர் .

குறிப்புரை :

வைத்த - சேமித்து வைத்த . மாடு - செல்வம் . மக்கள் என்பதிலும் உம்மை சேர்க்க . நீர் - நீங்கள் . செறியார் - உடன் வராதவராய் . பிரிவதே - நீங்குதலைச் செய்வர் . நித்தம் - நாள்தோறும் . நினை - நினைக்கும் . சித்தமாகில் - மனமுடையீரானால் . சேர்திர் - சேருவீர் .

பண் :

பாடல் எண் : 2

செய்ய மேனியன் தேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீலக் குடியரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாம்
கையி லாமல கக்கனி யொக்குமே.

பொழிப்புரை :

சிவந்த திருமேனியனாய்த் தேனும் , பாலும் , தயிரும் , நெய்யும் கொண்டு திருமுழுக்காடும் நீலக்குடி அரனின்மேல் காதல் கொண்டு மறவாத மனத்தினர்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனி போல அப்பெருமான் புலப்பட்டு அருள்புரிவான் .

குறிப்புரை :

செய்ய - சிவந்த . மையலாய் - அன்பு மயக்கம் கொண்டு . கையில் ஆமலகக் கனியொக்கும் - உள்ளங்கையில் நெல்லிக்கனியை ஒத்து வெளிப்படையாய்த் தோன்றி அருள் செய்வான் .

பண் :

பாடல் எண் : 3

ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே.

பொழிப்புரை :

நீலக்குடி உடைய பெருமான் , கங்கையாற்றுடன் கூடிய நீண்ட சடையையுடையவன் . உமாதேவியை ஒரு கூற்றிற் கொண்ட இயல்பினன் . திருமேனிக்கு அழகு தருவதாகிய திருநீற்றை உடையவன் . திருவடி போற்றினார் இடர்களைப் போக்கும் புனிதன் .

குறிப்புரை :

ஆற்ற - மிக . ஆயிழையாள் - அழகிய அணிகலன்கள் அணிந்தவள் . ஒரு கூற்றன் - ஒரு பாகத்தின்கண்ணே உடையவன் . கோலமதாகிய - அழகிய . போற்றினார் - தன்னைப் போற்றியவர்களது . இடர் - துன்பங்களை . புனிதன் - தூயவன் .

பண் :

பாடல் எண் : 4

நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே.

பொழிப்புரை :

நான்கு முனிவர்களுக்கு இன்னருள் புரிய ஆலமரத்தின் நன்னிழலின் கீழ் இருந்தோன் ; ஆலகால நஞ்சு உண்ட கண்டத்துடன் பொருந்திய நீலநிறம் உடையவன் . நீலக்குடி உறையும் மலமற்றவன் ; காலன் உயிர் போக்கிய கடவுள் .

குறிப்புரை :

நாலுவேதியர்க்கு - நான்கு வேதமுணர்ந்த அந்தண யோகியர்க்கு . நால்வராவர் - சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற் குமாரர் . இன்னருள் - இனிய திருவருளைச் செய்யும் . ஆலன் - கல்லாலின் நிழற் கீழ் இருப்பவன் . ஆலநஞ்சு - ஆலகாலமாகிய விடம் . கண்டத்து அமர் நீலன் - கழுத்திலே பொருந்திய நீலநிறத்தை உடையவன் . நின்மலன் - குற்றமற்றவன் . காலன் - காலனுக்குக் காலன் .

பண் :

பாடல் எண் : 5

நேச நீலக் குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சரம் எய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே.

பொழிப்புரை :

`நேசத்துக்குரிய நீலக்குடி அரனே !` என்னாத கீழ்மை உடையவராய் நெடுமால் செய்த மாயத்தால் திரிபுரத்து அசுரர்கள் ஈசன் ஓரம்பு எய்ய எரிந்து சாம்பலாய்ப் போய் நாசமாயினர் .

குறிப்புரை :

நேச - அன்பர்க்கு அன்பனே ! எனா - என்னாத . நெடுமால் - திருமால் . மாயம் - சூழ்ச்சிச் செயல் . நெடுமால் செய்த மாயத்தால் நீசராய் என மாறுக . நீசர் - வெறுக்கத்தக்கவர் . ஓர் சரம் - ஓர் அம்பு . நாசமானார் - அழிந்தனர் - திரிபுரநாதர் - திரிபுரங்களுக்குத் தலைவர் . திருமால் செய்த மாயமாவது , தாரகாசுரன் புதல்வராகிய கமலாக்ஷன் . வித்யுன்மாலி , தாரகாக்ஷன் என்ற மூவரும் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றுப் பல நகரங்களையும் அழித்துவந்தனர் . அதைக் கண்ட திருமால் புத்தராய் நாரதரை அனுப்பி அவர்களுக்குப் புற மதத்தை உபதேசித்து அவர்கள் பெருமானிடம் கொண்டிருந்த பக்திக்கு ஊறு விளைக்கச் செய்து திரிபுரங்களைப் பெருமான் அழிக்கும்படி செய்தார் .

பண் :

பாடல் எண் : 6

கொன்றை சூடியைக் குன்ற மகளொடும்
நின்ற நீலக் குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே.

பொழிப்புரை :

என்றும் பொய்யாகிய உலக வாழ்வை உகந்து இறுமாப்பு அடைகின்ற நீர் இறக்கும்போது நுமக்கு அறியவொண்ணுமோ ? ஒண்ணாதாதலால் கொன்றை சூடும் கடவுளுமாகிய மலை மகளோடும் நின்ற நீலக்குடி அரனே என்று உரைப்பீர்களாக !

குறிப்புரை :

குன்றமகள் - மலையரசன் புதல்வியாகிய பார்வதி . எனீர் - என்று சொல்லுங்கள் . என்றும் - எப்பொழுதும் . உகந்தே இறுமாக்கும் - மகிழ்வோடு பெருமிதம் கொள்ளும் . பொன்றும் போதும் - இறக்கும் போதும் . அறிவொண்ணும் - அவனை அறிதல் உண்டாகும் . இப்பிறப்பில் வாழ்வு சிறக்கும் . இறக்கும்போது அவன் நினைப்பு உண்டாய் மறுபிறப்பும் இல்லையாகும்படிச் செய்யும் என்க .

பண் :

பாடல் எண் : 7

கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே.

பொழிப்புரை :

கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக - நூக்கிவிட , என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன் .

குறிப்புரை :

கல்லினோடு - கருங்கல்லோடு . எனை - என்னை . பூட்டி - சேர்த்துக் கட்டி . அமண் கையர் - அமண் ஒழுக்கத்தையுடையவர் . அதாவது நிர்வாண ஒழுக்கத்தினர் . ஒல்லை - விரைந்து . நீர்புக நூக்க - கடலின்கண்ணே அழுந்தும்படியாகத் தள்ளிவிட . நெல்லு நீள் - நெற்கதிர்கள் பெருகியுள்ள ; நவிற்றி - சொல்லி . உய்ந்தேனன்றே - உய்ந்தேனல்லவா ? திருநாவுக்கரசு சுவாமிகள் கல்லிற் பிணைத்துச் சமணர் கடலில் தள்ளியபோது தாம் திருவருளால் கரையேறிய அற்புதத்தைத் தம் திருவாயால் தெளிய உணர்த்தும் திருப்பாடல் இது .

பண் :

பாடல் எண் : 8

அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி யுடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

` யாம் அழகியவர்கள் ; இளையவர்கள் ` எனும் ஆசையால் ஒழுகி , உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே , நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி அரனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக .

குறிப்புரை :

அழகியோம் - நாம் அழகாக இருக்கின்றோம் . இளையோம் - இளமைத்தன்மை உடையவர்களாக இருக்கின்றோம் . ஆசையால் - நிலையாத இவ்விரண்டையும் பெற்றுக் களிக்கும் ஆசையினாலே . ஒழுகி - தவறான வழிகளில் நடந்து . ஆவி - உயிர் . உடல் விடுமுன்னமே - உடலை விட்டு நீங்கும் முன்பாகவே . நிழலதார் பொழில் - நிழல் பொருந்திய சோலை .

பண் :

பாடல் எண் : 9

கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள்
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.

பொழிப்புரை :

கற்றையாகிய செஞ்சடையில் , குளிர்ந்த கதிர்களை வீசும் வெண்திங்களைப்பற்றிப் பாம்புடன் வைத்த கடவுளாகிய நெற்றிக்கண்ணுடைய நீலக்குடி அரன் , தேவர் சுற்றிவந்து தொழும் கழலணிந்த சோதிவடிவினன் ஆவன் .

குறிப்புரை :

கற்றை - பலவற்றின் தொகுதி . செஞ்சடைக்கற்றை என மாறுக . காய்கதிர் - கிரணங்களை வெளிவிடும் சூரியன் . பற்றி - பிடித்து . பராபரன் - மேலானவற்றிற்கெல்லாம் மேலானவன் . கழற் சோதி - கழலையணிந்த ஒளிவடிவானவன் .

பண் :

பாடல் எண் : 10

தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கொர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தன னென்பரே.

பொழிப்புரை :

நீலக்குடி அரன் தருக்கடைந்து திருக் கயிலையைத் தாங்கிய செறிந்த தோளை உடைய இராவணன் உடலை ஓர் திரு விரலால் நெரித்துப் பின்னையும் இரக்கமாகி அருள் புரிந்த கருணைத் திறம் உடையவன் என்பர் .

குறிப்புரை :

தருக்கி - செருக்கி. வெற்பது - கயிலைமலையை. தாங்கிய - சுமந்த. வீங்கு - பெரிய. அரக்கனார், ஆர் இழித்தற் பொருளில் வந்தது. பீழை செய்யினும் பிழைத்ததுணர்வராயின் பொறுத்தருளுவன் என்க.

பண் :

பாடல் எண் : 1

தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித் தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே.

பொழிப்புரை :

மணம் உடைய மலரைச்சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற உமாதேவியோடு மங்கலக்குடியில் மேவிய மணவாளன் , தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் பின் நிறைந்த அருள் புரிந்தவன் .

குறிப்புரை :

தங்கலப்பிய - தமக்குள்கலந்த . தம்மோடு உறவு கலந்தவனாகிய . அங்கு - அவ்விடத்திலேயே . அலக்கழித்து - சின்னா பின்னம் செய்து . ஆரருள் செய்தவன் - பின்னர் அவனுக்குப் பெறுதற்கரிய திருவருளைச் செய்தவன் . கொங்கு - தேன் . அலர் - மலர் . குழல் - கூந்தல் . கொம்பனையாள் - பூங்கொம்பு போன்றவளாகிய உமை .

பண் :

பாடல் எண் : 2

காவி ரியின் வடகரைத் காண்தகு
மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி ரமனுந் தேடொணொத்
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.

பொழிப்புரை :

காவிரியின் வடகரையில் காணத்தக்க மாமரங்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில் , திருமாலாகிய தேவும் , பிரமனும் தேடி அறியவியலாத தூய எரிவிடும் சுடரை உடைய சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் இறைவன் .

குறிப்புரை :

காண்தகு - காணத்தக்க . மா - வண்டு . விரியும் - படரும் , அல்லது மாமரங்கள் விரிந்து வளரும் என்றோ அடர்த்தியால் கருமை விரியும் என்றோ கொள்க . தேவரி - தெய்வத்தன்மை பொருந்தியவராகிய திருமால் . தூஎரி - தூய நெருப்பு . தன்கண் அழுக்கு இன்றி இருப்பது பிறிதில்லை ஆகலின் தூஎரி என்றார் . சுடர்ச்சோதி - ஒளியையுடைய விளக்கு . உள்சோதி - ஆன்ம சைதன்யத்தினுள் நின்று செலுத்தும் சிவசைதன்யன் . உயிர்க்குயிரானவன் என்றபடி .

பண் :

பாடல் எண் : 3

மங்க லக்குடி யீசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.

பொழிப்புரை :

மங்கலக்குடி இறைவனை மாகாளியும் , சூரியனும் , விண்ணும் மண்ணும் நிகராய சங்கு , சக்கரதாரியாகிய திருமாலும் , பிரமனும் , அகத்தியனும் அருச்சித்தார்கள் .

குறிப்புரை :

மாகாளி - பெருமைக்குரியவளாகிய காளிதேவி . வெங்கதிர்ச் செல்வன் - சூரியன் . விண்ணொடு மண்ணும் - தெய்வலோகத் திலுள்ளாரொடு நிலவுலகிலுள்ளவர்களும் . நேர் - நேர்ந்து . சங்கு சக்கரதாரி - சங்கு சக்கரம் ஆகியவற்றைத் தரித்தவனாகிய திருமால் . சதுர்முகன் - நான்முகனாகிய பிரமன் . அர்ச்சித்தார் - மலர்தூவி வழிபட்டார் .

பண் :

பாடல் எண் : 4

மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி
நஞ்ச மாரமு தாக நயந்துகொண்
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.

பொழிப்புரை :

நீண்ட கடல் சூழ்ந்த மங்கலக்குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய ( பெருவீரனாகிய ) பெருமான் , ஆலகாலவிடத்தைச் செறிந்த அமுதமாக விரும்பி உட்கொண்டு , பஞ்சகவ்வியம் ஆடலை விரும்பி அடியேனுடைய நெஞ்சத்தை ஆலயமாகக்கொண்டு நிலை பெற்றான் .

குறிப்புரை :

மஞ்சன் , மைந்தன் என்பதன் போலி . வார்கடல் - நீண்ட கடல் . ஆரமுதாக - பெறுதற்கரிய அமுதமாக எண்ணி . நயந்து கொண்டு - விரும்பி உண்டு . அஞ்சு - பஞ்சகவ்வியம் . ஆடலமர்ந்து - அபிடேகம்கொள்ள விரும்பி . நின்றது - எழுந்தருளியது .

பண் :

பாடல் எண் : 5

செல்வம் மல்கு திருமங் கலக்குடி
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே.

பொழிப்புரை :

செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியில் , அருட் செல்வம் நிறைந்த சிவ ஒழுக்கம் உடையவராய்ச் செல்வம் மல்கும் செழித்த மறையோர் தொழத் திருவருட்செல்வனாகிய பெருமான் உமாதேவியோடும் திகழ்வது திருக்கோயிலிலாகும் .

குறிப்புரை :

செல்வம் - இயற்கைச்செல்வங்கள் . செல்வம் - பேரின்பம் . உண்டாக்கும் - மல்கும் . சிவநியமம் - சிவத்தைச் சார்விக்கும் நெறி . செல்வம் - மழைவளம் . மல்கும் - பொருந்தும் . செல்வன் - மங்கல வடிவினன் .

பண் :

பாடல் எண் : 6

மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னு வாரு முரைக்கவல் லார்களும்
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.

பொழிப்புரை :

நிலைபெற்ற புகழை உடைய மங்கலக்குடியில் நிலைபெற்ற பின்னுதல் உடைய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை எண்ணுவாரும் , சொல்லும் வல்லமை உடையாரும் , நன்னெறித் தொடர்பு எய்தத் துன்னுவார் ஆவர் .

குறிப்புரை :

மன்னு - நிலைபெற்ற . சீர் - சிறப்புப் பொருந்திய . மன்னிய - எழுந்தருளிய . பின்னு - முறுக்கிய . வார் - நீண்ட . உன்னுவார் - நினைப்பவர் . நன்னெறி - சிவஞானம் . தொடர்வு எய்த - காப்பு உண்டாக . துன்னுவார் - அடைவார் . திருவைந் தெழுத்தை ஓதுவார் சிவஞானத் தொடர்புபெறுவர் என்க .

பண் :

பாடல் எண் : 7

மாத ரார்மரு வும்மங் கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

பொழிப்புரை :

பெண்கள் பொருந்துகின்ற மங்கலக்குடியின் ஆதிநாயகன் , தேவர்கள் தலைவன் ; வேதநாயகன் ; வேதியர்நாயகன் ; பூதநாயகன் ; புண்ணியமூர்த்தி ஆவன் .

குறிப்புரை :

மாதரார் - பெண்கள் . மருவும் - பொருந்தி வாழும் . ஆதிநாயகன் - முதன்மைத் தலைவன் . அண்டர்கள் நாயகன் - தேவர்கள் தலைவன் . வேதியர் - வேதமோதுபவர் . பூதநாயகன் - பசுபதி .

பண் :

பாடல் எண் : 8

வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.

பொழிப்புரை :

வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த மங்கலக் குடியில் இளம் பிறை சூடிய சோதியாகிய பெருமான் , மனம் மாறுபட்ட தந்தையைக் கால் ஒடியுமாறு மழுவை வீசிய சண்டேசுரர்க்கு அருள் புரிந்த இறைவன் ஆவன் .

குறிப்புரை :

வண்டுசேர் பொழில் - வண்டுகள் மொய்க்கும் சோலை . விண்ட - தன் எண்ணத்தின் மாறுபட்ட . தாதை - தந்தை . தாள் அற - கால் இருதுண்டாக . வீசிய - வெட்டிய . துண்டமாமதி - பிறைமதி .

பண் :

பாடல் எண் : 9

கூசு வாரலர் குண்டர் குணமிலர்
நேச மேது மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங் கலக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.

பொழிப்புரை :

மங்கலக்குடி இறைவன் , தம் சிறுமை நோக்கிக் கூசாதவர்களும் , குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , அன்பு சிறிதும் இல்லாதவர்களும் , கீழானவர்களும் , குற்றம் உடையவர்களுமாகிய சமணரோடு என்னை வேறுபடுக்க , உய்ந்தேன் .

குறிப்புரை :

கூசுவாரலர் - பாவம் செய்ய மனம் கூசமாட்டார்கள் . நேசம் - அன்பு . நீர் இழிதகைமையுடையவர் . வெறுக்கத்தக்கவர் . மாசர் பால் - உடலும் அறிவும் குற்றமுடையவர் . வேறுபடுக்க - பிரிக்க .

பண் :

பாடல் எண் : 10

மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.

பொழிப்புரை :

மங்கலக்குடியானுக்குரிய கயிலைமலையினை அலைத்து எடுக்கலுற்ற இராவணன் தன் கரங்களோடு தாளும் , தலையும் சிதைந்து அலைக்கப்பெற்றுப் பின் அழுது அருள்பெற்று நன்றே உய்ந்தான் .

குறிப்புரை :

அலைத்து - அசைத்து. எடுக்குற்ற - தூக்குதலைச் செய்த. கரம் - கைகள். தகர்ந்து - சிதறி. அலைத்து அழுது - தன் தவறுக்கு அடித்துக்கொண்டு அழுது. உய்ந்தான் - பிழைத்தான்.

பண் :

பாடல் எண் : 1

விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

அறியாமை உடைய நெஞ்சமே ! வெண்தலையைக் கையில் உடையவனும் , எறும்பியூர் மலையானும் ஆகிய எங்கள் ஈசன் , கலந்த அடியவர்களுக்குக் கரும்பின் ஊறல் போல்வான் . அவனை விடாது விரும்பியுறுவாயாக .

குறிப்புரை :

ஊறு விரும்பிவிடேல் - கேடுகளை விரும்பி வாணாளை வீணாளாக்கவிடாதீர் . கரும்பின் ஊறல் - கரும்பின் சாறு . கலந்தார்க்கு - மனம் ஒன்றியவர்கட்கு . இரும்பின் - இரும்பு போன்ற . ஊறல் அறாததோர் - நிணக்கசிவு அறாததொரு . வெண்டலை ஏந்தியவன் என்க .

பண் :

பாடல் எண் : 2

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

எங்கள் இறைவன் , விளங்கும் செஞ்சடையையுடைய பிஞ்ஞகனும் , பேணுகின்ற புகழை உடைய சுழன்றாடும் இயல்புடைய பூதகணங்களை உடையவனும் , நெற்றிக்கண்ணனும் ஆகி , மணம் வீசும் கூந்தலை உடைய உமாதேவியோடு நாள்தோறும் விளங்கும் எறும்பியூர் மலையினன் ஆவன் .

குறிப்புரை :

பிறங்கு - விளங்குகின்ற . பிஞ்ஞகன் - அழித்தற் கடவுள் . பேணு - விரும்புகின்ற . சீர் - சிறப்பையுடைய . கறங்கு - சுழல்கின்ற . நறும் - தூய .

பண் :

பாடல் எண் : 3

மருந்து வானவர் தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

எங்கள் இறைவன் வானவர்க்கு மருந்தாகவும் , தானவர்க்கு இன்சுவையாகவும் , முறுக்குண்ட புன்சடையை உடைய புண்ணியனாகவும் , நெற்றிக்கண்ணனாகவும் , பூண்கள் பொருந்தும் முலையையுடைய மங்கை நல்லாளொடும் மேவும் எறும்பியூர் மலையினன் ஆவன் .

குறிப்புரை :

வானவர் மருந்து தானவர்க்கு இன்சுவை என்க . தேவர்களுக்கு அருமருந்து போல்வான் . அசுரர்க்கு இனிய சுவை போல்வான் . தேவர்கட்கும் அசுரர்கட்கும் போகபோக்கியங்கள் அருளியவன் என்க . புரிந்த - முறுக்குண்ட . புன்சடை - மெல்லிய சடை , பூண் பொருந்து முலை என மாறுக . பூண் - அணிகலன்கள் .

பண் :

பாடல் எண் : 4

நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

எம் இறைவன் நீலநிறம் கொண்ட கண்டத்தை உடைய நின்மலனும் , மறம் கொண்ட வேல்போன்ற கண்ணையும் , ஒளியுடைய நுதலையும் உடைய மங்கை ஒருபாகமாகி அறம் புரிந்து அருள் செய்த எம் அண்ணலும் ஆகிய எறும்பியூர் மலையினன் ஆவன் .

குறிப்புரை :

நிறங்கொள் - நீல நிறத்தைக் கொண்ட . நின்மலன் - குற்றமற்றவன் . மறங்கொள் வேல் - வீரச்செயல் செய்யும் வேல் . வாள் - ஒளி . அறம்புரிந்து - அறத்தை விரும்பி . அங்கணன் - சிவன் .

பண் :

பாடல் எண் : 5

நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

பொழிப்புரை :

நறுமணமும் பொன்போன்ற நிறமும் உடைய கொன்றையின் புதிய பூக்களும் , நாகமும் சுரும்புகள் அடர்ந்தது போன்ற சிவந்த சடையின்கண் தூயமதியோடு வைத்து , விண்ணை உறும் பொன்மலையாகிய இமவான்மகளாகிய உமாதேவியோடு ஊர் தோறும் வீற்றிருக்கும் எங்கள் இறைவன் , எறும்பியூர் மலையினன் .

குறிப்புரை :

நறும்பொன் - குற்றமற்ற தூய பொன்போன்ற . நாண் மலர் - புது மலர் . நாகம் - ஞாழல் மரம் . துறும்பு - நெருங்கிய அல்லது பொருந்திய என்க . வான்உறும் - ஆகாயத்தை அளாவும் . பொன்மால் வரை - பொன்மயமான பெரிய இமயமலை . மால்வரைப் பேதை - பார்வதி .

பண் :

பாடல் எண் : 6

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.

பொழிப்புரை :

சினந்து ஊர்வனவாகிய ஐம்பொறிகள் உள்ள உடம்பில் , மாறுபட்டு ஊர்வன மற்றும் பல உள்ளன ; அழுக்கு ஊர்வதாகிய கூடுபோன்ற அவ்வுடம்பின்கண் இட்டு என்னை எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது .

குறிப்புரை :

கறும்பி - சிறிது சிறிதாகத் தின்று . ஊர்வன - நம்மை ஊர்ந்து கொண்டிருப்பன . ஐந்து - ஐம்பொறிகள் . காயத்தில் - உடலில் . திறம்பி ஊர்வன - மனத்தொடு பிறழ்ந்து செல்வன . மற்றும் பல வாவன - அந்தக்கரணங்கள் முதலியன . குறும்பி - மலமூத்திராதி உடலழுக்கு . ஊர்வதொர் - பொருந்திதொரு . கூட்டகத்து - உடலிடத்துள் . இட்டு - அடைத்து .

பண் :

பாடல் எண் : 7

மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன் செய்த வியற்கையே.

பொழிப்புரை :

அறிவற்ற நெஞ்சமே ! பெருந்துன்பங்களால் நாள்தோறும் மற்று இதனை மறந்து மாறுபட்டு நீ நினையாதே ; புறத்தே கோலம் செய்யப்பெற்ற இக்குடிசையில் என்னை இட்டு எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது .

குறிப்புரை :

பேரிடர் இது மறந்து - பெரிய துன்பத்தை விளைப்பதாகிய இவ்வுடலை மறந்து . திறம்பி - உடலுணர்வினின்று மாறுபட்டு . நினையேல் - அதனையே நினையாதொழிவாயாக . புறஞ்செய் - உள்ளழுக்குத் தெரியாதவாறு புறத்தே செய்யும் . கோலக்குரம்பை - அழகிய உடலாகிய வீடு .

பண் :

பாடல் எண் : 8

இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு
துன்ப மும்முட னேவைத்த சோதியான்
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க்
கின்ப னாகு மெறும்பியூ ரீசனே.

பொழிப்புரை :

எறும்பியூர் இறைவன் இன்பமும் பிறப்பும் , துன்பமும் இறப்பும் உடன் வைத்த சோதிவடிவினனும் , ` அன்பனே ! அரனே !` என்று வாய்விட்டு அரற்றுவார்க்கு இன்பமளிப்பவனும் ஆவன் .

குறிப்புரை :

உடனே - ஒருசேர என்னும்பொருட்டு . இவ்வுலகில் பிறப்பும் இன்ப துன்பமும் ஆகிய இருவினைப்பயனும் உடன் வைத்தவன் என்க . சோதியான் - ஒளி வடிவினன் . அரற்றுவார்க்கு - பலகாலும் சொல்லுவார்க்கு .

பண் :

பாடல் எண் : 9

கண்நி றைந்த கனபவ ளத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாயுயி ராயவன்
எண்நி றைந்த வெறும்பியூ ரீசனே.

பொழிப்புரை :

எண்ணமெங்கும் நிறைந்த எறும்பியூர் இறைவன் , கண்ணுக்கு நிறைந்த பெருமைமிக்க பவளத்திரளும் , விண்ணில் நிறைந்த சுடர் விரிகின்ற சோதி வடிவானவனும் , உள்ளத்துள் நிறைந்து உருவாகி உயிராகியவனும் ஆவன் .

குறிப்புரை :

கண் நிறைந்த - கண் பார்வைக்குச் சிறந்த . கனம் - திரண்ட . பவளத்திரள் - பவளங்களின் தொகுதி . உள் நிறைந்து - மனத்திற்குள் நிறைந்து . உருவாய் - என் வடிவமாய் . எண் நிறைந்த - என் எண்ணத்தில் நிறைந்த .

பண் :

பாடல் எண் : 10

நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை யெம்மிறை காண்மினே.

பொழிப்புரை :

எறும்பியூர் மலைக்குரிய எம்மிறைவன் , நறுமணம் வீசும் கூந்தலையும் இளமையையும் உடைய உமாதேவி நடுக்கம் எய்திட வெண்ணிறம் கொண்ட திருக்கயிலைப் பெருமலையை வீரம் கொண்ட வாளை உடைய இராவணன் ஊன்றி எடுத்தலும் , அவன் ஆற்றலை வாடுமாறு செய்தான் .

குறிப்புரை :

நிறம் - வலிமை . மால்வரை - பெரிய மலை . ஊன்றி - கையை ஊன்றி . நறுங்குழல் - மணமுள்ள கூந்தல் . மறம் - வலிமை .

பண் :

பாடல் எண் : 1

மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.

பொழிப்புரை :

மரத்தின்கண் இருக்கும் கொக்கைப்போல வாய்விட்டுக்கூவி , தீயகுணங்களாகிய பொருள்களையே சுமந்து திரிந்து வருந்தாமல் , கால்வாய்கள் வழியாகப் பரந்து பாயும் காவிரி நீர் அலைக்கின்ற கரையில் உள்ளதாகிய குரக்குக்காவை அடைய , குற்றங்கள் கெடும் .

குறிப்புரை :

மரக்கொக்காமென - மரத்தின்கண்ணே உறையும் கொக்குப் போல . வாய்விட்டலறி - ஓலமிட்டு . சரக்கு காவி - இவ்வுலக வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பச் சரக்குகளைச் சுமந்து . சினமென்னும் சரக்கை ஏற்றி என்றார் பிறிதோரிடத்தும் . அயராது - வருந்தாது . கால்பரக்கும் - பல கால்வாய்களாகப் பிரிந்து விரியும் .

பண் :

பாடல் எண் : 2

கட்டா றேகழி காவிரி பாய்வயல்
கொட்டா றேபுன லூறு குரக்குக்கா
முட்டா றாஅடி யேத்த முயல்பவர்க்
கிட்டா றாஇட ரோட எடுக்குமே.

பொழிப்புரை :

கட்டப்பட்ட கரைக்குள்ளடங்கிய நெறியின் வழியே கழிகின்ற காவிரி பாய்கின்ற வயல்களில் கொட்டும் நெறியெல்லாம் புனல் ஊறுகின்ற குரக்குக்காவினை முட்டாத நெறியே திருவடியேத்த முயலும் அடியவர்களுக்குப் பொருந்தும் நெறியாய துன்பங்கள் ஓடுமாறு அருள் புரிவான் இறைவன் .

குறிப்புரை :

கட்டாறே - கரையாகக் கட்டிவிடப்பட்ட வழி யிலேயே . கழி - செல்லுகின்ற . கொட்டாறே - கொட்டித் தோண்டுமிடந் தோறும் . முட்டாறா - குற்றம் நீங்கிய நெறியிலே . இட்டாறா - விருப்பத்தின்படியே .

பண் :

பாடல் எண் : 3

கைய னைத்துங் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்
கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

பக்கமெங்கும் கலந்து எழுகின்ற காவிரியின் வயல்களனைத்தினும் சென்றிடும் செம்புனல் வெள்ளம் கொய்மீன்களைக் கொணரும் குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

கையனைத்தும் - இரு பக்கங்கள் எங்கணும் . கலந்தெழு - சென்று பரவித்தோன்றுகின்ற . செய் - வயல் . கொய் - மீன் இனங்களில் ஒன்று . செம்புனல் கொணரும் என்க . ஐயன் - அழகியன் அல்லது தலைவன் . அல்லல் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 4

மிக்க னைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா
நக்க னைநவில் வார்வினை நாசமே.

பொழிப்புரை :

அனைத்துத் திக்குகளும் மிகுந்து அருவிகள் புகுந்து பெருகுதலால் காவிரி போந்த புனற்கரையின் கண் கொக்குச் சாதிகள் பயிலும் சோலையை உடைய குரக்குக்காவின்கண் திகம்பரனாய பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும் .

குறிப்புரை :

அனைத்துத்திசையும் மிக்கு - எல்லாத் திசைகளிலும் சென்று மிகுந்து . அருவிகள் புக்குக் காவிரிபோந்த - பல அருவிகளைக்கொண்டு பெரிதாகிக் காவிரியாறு ஓடிவந்த . புனற்கரை - தண்ணீர்க் கரையில் . இனம் - கூட்டம் .

பண் :

பாடல் எண் : 5

விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி
இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக்
கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா
இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

வெள்ளம் பொருந்தி விரிந்தெழுங் காவிரி இட்ட நீரானது வயல் எங்கும் பரந்திடுதலால் சிறந்து , மாமுழவுகள் கொட்ட ஓங்கும் குரக்குக்காவின் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை .

குறிப்புரை :

வெள்ளம் விட்டு - வெள்ளமாய்ப் பெருகி . விரிந்து எழு - பரந்து தோன்றுகின்ற . காவிரி இட்ட நீர் - காவிரியாறு தந்த தண்ணீர் . கொட்ட - அடிக்க . மாமுழவு - பெரிய முழவு என்னும் வாச்சியம் . ஓங்கும் - ஒலி மிகுகின்ற . இட்டமாயிருப்பார்க்கு - விருப்பமாயிருப்பார்க்கு .

பண் :

பாடல் எண் : 6

மேலை வானவ ரோடு விரிகடல்
மாலும் நான்முக னாலும் அளப்பொணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்
பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

மேல் உலகத்திலுள்ள தேவர்களோடு விரிந்த கடலில் துயிலும் திருமாலும் , நான்முகனும் ஆகியவராலும் அளக்க வியலாத பெருமான் உறைவதும் , அழகு மிக்க மாளிகையாகிய கோயிலை உடையதுமாகிய குரக்குக்காவின்பால் வாழ்வோராய்த் திரிவோர்க்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

மேலைவானவரோடு - மேல் உலகின்கண் உள்ளவராய தேவரோடு . விரிகடல் மால் - விரிந்த திருப்பாற் கடலின்கண் உறங்கும் திருமால் . அளப்பொணா - அளத்தற்கரிய . கோல மாளிகை - அழகிய மாடவீடுகள் . கோயில்பாலராய் - கோயிலுக்குச் சென்று வழிபடும் பாலராய் .

பண் :

பாடல் எண் : 7

ஆல நீழ லமர்ந்த அழகனார்
கால னையுதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைக ளாலுங் குரக்குக்காப்
பால ருக்கருள் செய்வர் பரிவொடே.

பொழிப்புரை :

கல்லால நிழற்கீழ் அமர்ந்த அழகரும் , காலனை உதைத்தலைக் கொண்ட கருத்தருமாகிய பெருமான் உறைகின்ற அழகு மிக்க மயில்கள் ஆர்க்கின்ற குரக்குக்காவின்பால் வாழ்வோர்க்குப் பரிவொடு அருள்செய்வர் .

குறிப்புரை :

ஆலநீழல் - கல்லாலின் நிழலில் . காலனை - இயமனை . கருத்தனார் - கருத்தாயிருப்பவர் . கோலமஞ்ஞைகள் - அழகிய மயிலினங்கள் . ஆலும் - ஆடும் . குரக்குக்காப்பாலர் - குரக்குக்காவை அடைந்தவர் . பரிவோடு - இரக்கத்தோடு .

பண் :

பாடல் எண் : 8

செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்க ரையரெம் மாதி புராணனார்
கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

பொழிப்புரை :

செவ்வானத்தைப் போன்றெழுகின்ற சிவந்த சுடர் வீசும் சோதியாரும் , அக்கு மணியை இடுப்பில் அணிந்துள்ளவரும் , ஆதியிலே தோன்றிய பழமை உடையவரும் , கொக்குச் சாதிகள் வயலில் சேர்கின்ற குரக்குக்காவின் திகம்பரனுமாய பெருமானைத் தொழ நம்வினை நாசமாம் .

குறிப்புரை :

செக்கர் அங்கெழு - அந்திவானத்தின் அழகு கெழுமிய . அக்கரையர் - அக்குமணிகளை இடையிலே கட்டியவர் . ஆதி புராணனார் - பழமையான முதல்வர் .

பண் :

பாடல் எண் : 9

உருகி யூன்குழைந் தேத்தி யெழுமின்நீர்
கரிய கண்டன் கழலடி தன்னையே
குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா
இரவு மெல்லியு மேத்தித் தொழுமினே.

பொழிப்புரை :

திருநீலகண்டன் கழலணிந்த பாதங்களை நீர் உருகி , உடல் குழைந்து ஏத்தி எழுவீராக . நம் செழுங்கோயிலாகிய குரக்குக் காவில் வீற்றிருக்கும் பரமாசாரியனாகிய அப்பெருமானையே இரவும் பகலும் ஏத்தித் தொழுவீர்களாக .

குறிப்புரை :

உருகி - மனமுருகி . ஊன்குழைந்து - உடல் வாடி . ஏத்தி எழுமின் - வாழ்த்திச் செல்லுங்கள் . குராவனம் குரவனம் என்றாயது . குராமரங்கள் நிறைந்த சோலை . ஆழ்ந்த வளவிய கோயில் என்க . குரவன் அம்செழுங் கோயில் எனப்பிரித்து குருநாதனாகிய பெருமான் எழுந்தருளிய அழகிய வளவிய கோயில் எனலுமாம் . எல்லி - பகல் .

பண் :

பாடல் எண் : 10

இரக்க மின்றி மலையெடுத் தான்முடி
உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடம்
குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா
வரத்த னைப்பெற வானுல காள்வரே.

பொழிப்புரை :

மலையெடுக்கலுற்ற இராவணன் முடிகளையும் ஆற்றலையும் சுருங்கும்படியாக இரக்கம் இல்லாமல் வருத்தியவனுக்கு இடமாகிய , குரங்குச்சாதி குதித்தலைக்கொள்ளும் குரக்குக்காவில் வரம் அருளும் அப்பெருமானைப் பெற வானுலகு ஆள்வர் .

குறிப்புரை :

முடி உரத்தை - தலைகளோடு வலிமையையும் . ஒல்க - குறைய . அடர்த்தான் - நெரித்தான் . குரக்கினம் - குரங்குக் கூட்டங்கள் . குரங்குக்கா என்ற ஊர்ப்பெயர் காரணம் குறித்தது . குரங்குகள் விளையாடும் சோலை என்க . வரத்தன் - மேன்மையுடையவன் . வரம் அருள்செய்பவன் . பெற - வணங்குதலைப்பெற . வரதன் - தகர ஒற்று விரித்தல் விகாரமுமாம் .

பண் :

பாடல் எண் : 1

திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாம்
கருவ னாகி முளைத்தவன் கானூரில்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே. 

பொழிப்புரை :

கானூரில் தெய்வச்சுடராகிய இறைவன் திருமகள் கணவனாகிய திருமாலும், சிவந்த தாமரை மலர்மேல் உறைகின்ற அழகுடையவனாகிய பிரமனும் ஆகி உலகத்தின் எல்லா உயிர்களுக்கும் கருவிலேயே உற்றுக் காப்பவனாகி முளைத்தவன் ஆவன்.

குறிப்புரை :

திருவின் நாதனும் - திருமகள் கணவனாகிய திருமாலாயும். உருவனாய் - உலகத்தின் உயிரெலாம் படைக்கும் பிரமனாயும்; உலகத்தின்கண் உள்ள எல்லா உயிர்கட்கும் உரு உடம்போடு வந்து அருள் செய்பவனாயும் எனலுமாம். கருவனாய் - எல்லாவற்றிற்கும் கருப்பொருளாயும். முளைத்தவன் - தோன்றியவன். பரமனாய - மேலானவனாகிய. பரஞ்சுடர் - சிவபரஞ் சுடரேயாவன்.

பண் :

பாடல் எண் : 2

பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
உண்டின் றேயென்று கவன்மி னேழைகாள்
கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப்
புண்டரீகப் பொதும்பி லொதுங்கியே. 

பொழிப்புரை :

அறிவற்றவர்களே! பெண்டிர், மக்கள் பெருந்துணையாகவுள்ள நல்ல செல்வம் இன்று உண்டு என்று மகிழாதீர்; தாமரையாகிய பொதும்பில் ஒதுங்கியே கானூர் முளையாகிய கடவுளை நீர் கண்டுகொள்வீராக; (அவரே பெருந்துணையாவார்).

குறிப்புரை :

பெண்டிர் - மனைவியர். பெருந்துணை - உற்ற விடத் துதவும் பெருமைக்குரிய நண்பர் முதலாயினார். நன்னிதி - நல்ல செல்வம். உண்டின்றே என்று - இன்று உள்ளதே என்று. உகவன்மின் - மகிழ்வு கொள்ளாதீர். ஏழைகாள் - அறியாமையுடையவர்களே. கண்டு கொள்மின் - உள்ளவாறு உணர்ந்து வழிபடுங்கள். கானூர் முளை - கானூரில் தோன்றியிருப்பவன். புண்டரீகப் பொதும்பில் - திருவடியாகிய தாமரைக் காட்டில் தங்கி. கண்டுகொள்மின் என்க. ஒதுங்கி - உலக பந்தபாசங்களின்றும் நீங்கி.

பண் :

பாடல் எண் : 3

தாயத் தார்தமர் நல்நிதி யென்னுமிம்
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன் கானூர் முளையினை
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.

பொழிப்புரை :

பங்காளியர், தம் சுற்றத்தார், நல்ல செல்வம் என்னும் இம்மாயத்திலே கிடந்து மயங்கவேண்டா; உம் உடலுள்ளேயே உள்ளவனாகிய கானூர் முளையாகிய பெருமானை உங்கள் வினைகள்கெட வாயாற் கூறிப் பரவி வணங்குவீராக.

குறிப்புரை :

தாயத்தார் - முன்னோர் தேடிய பழம்பொருளின் பாகஸ்தர். தமர் - சுற்றத்தார். இம்மாயத்தே - இப்பொய்மையின் கண்ணே. கிடந்திட்டு - பொருந்தி வருந்திக்கொண்டு. மயங்கிடேல் - அறிவு மயங்காதே. காயத்தே - உன் உடலிடத்தே. உளன் - அருவமாய் எழுந்தருளியுள்ளான். வாயத்தால் - உண்மை அன்பால். மாய - அழிய.

பண் :

பாடல் எண் : 4

குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே. 

பொழிப்புரை :

இரத்தற் குறிப்பொடு நின்று ஏற்று உண்ணும் ஆடையற்ற அமண்நெறியைவிட்டு நீங்கி எம்பிரான் அருள்நிறையும் கழலைப் பற்றினேன்; அதற்குக் காரணம் அறியலுறுவீரேல், கானூர் முளையாகிய கடவுள் என்சிந்தையில் செறிவு செய்திட்டிருப்பதே ஆகும்.

குறிப்புரை :

குறியில் - குறிக்கோள் இல்லாத சமண்நெறி என்க. நின்று - மேற்கொண்டு ஒழுகி. கூறை - ஆடை. இலா - இல்லாத. சமண் நெறி - சமண்சமய ஒழுக்கம். நிறைகழல் - காலில் நிறைந்து அணியும் கழல். அறியலுற்றிரேல் - நீவிர் அறிய விரும்பினீரேயானால். கானூர் முளையவன் - கானூரின்கண் எழுந்தருளியுள்ளவன். செறிவு செய்திட்டிருப்பது - பொருந்தி எழுந்தருளியிருப்பது. என் சிந்தையே - என் சிந்தையின் கண்ணேயாகும்.

பண் :

பாடல் எண் : 5

பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்த னென்று வியந்திட லேழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே! பொத்தலை உடையதும், மண்சுவர் உடையதுமாகிய இழிந்த இக்குடிசையைத் தன்மெய் என்று ஒவ்வொருவரும் வியந்திடல் வேண்டா. சித்தர்களும் பத்தர்களும் சேர்கின்ற திருக்கானூரில் இறைவன் பாதம் அடைதலே உமக்குக் கருமம் ஆகும்.

குறிப்புரை :

பொத்தல் - ஓட்டைகளை உடைய. மண்சுவர் - மண்சுவராலாகிய. பொல்லாக் குரம்பை - தீமைகளை விளைக்கின்ற சிறுவீடு போன்றதாகிய உடலை. ஒன்பது ஓட்டைகளையும் அழிந்து படக்கூடிய தன்மையையும் உடையது உடல். உயிர் அதனுள் இருந்து நீங்குவதாகிய இயல்புபற்றி உடலை வீடு என்றார். மெய்த்தன என்று - உண்மையானது என்று. வியந்திடல் - வியவாதே. ஏழைகாள் - அறிவில்லாதவர்களே. சித்தர்களும் பத்தர்களும் வாழ்கின்ற கானூர் என்க. கருமம் - நாம் செய்தற்குரிய செயல்.

பண் :

பாடல் எண் : 6

கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்
செல்வம் மல்கு திருக்கானூ ரீசனை
எல்லி யும்பக லும்மிசை வானவா
சொல்லி டீர்நுந் துயரங் கள்தீரவே. 

பொழிப்புரை :

கல்வியும், ஞானமும், கலையும் ஆகியவற்றின் பொருளாயிருப்பவனும், செல்வம் மல்கும் திருக்கானூரில் இருப்பவனும் ஆகிய ஈசன் இரவும் பகலும் இசைந்து அருள்புரிய ஆனவாற்றை உம் துயரங்கள் தீரச் சொல்லுவீராக.

குறிப்புரை :

கல்வியாகவும், ஞானமாகவும், கலைப்பொருளாகவும் ஆயவன் என்க. கல்வி - நூல்களும் அறிதற்குரியனவும். ஞானம் - கல்வியால் விளையும் அறிவு. கலைப்பொருள் - கல்வி முதலிய கலைகளால் உணரப்படும் பொருள். எல்லி - பகல். இசைவு ஆனவா - நமக்குப் பொருந்தியவாறு. சொல்லிடீர் - அவன் புகழைச் சொல்லுவீராக. தீர - நீங்க.

பண் :

பாடல் எண் : 7

நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும்
காரும் மாருதங் கானூர் முளைத்தவன்
சேர்வு மொன்றறி யாது திசைதிசை
ஓர்வு மொன்றில ரோடித் திரிவரே. 

பொழிப்புரை :

நீரும், மண்ணும், தீயும், வெயிலும், முகிலும், காற்றும் ஆகிய அனைத்துமாகிக் கானூரில் முளைத்த கடவுளைச் `சேர்தும்` என்ற ஒன்றை அறியாது திசைதோறும் திசைதோறும் உணர்ச்சி சிறிதும் இலராய் ஓடித் திரிவர் உலகத்தவர்.

குறிப்புரை :

பார் - உலகம் (மண்). அருக்கன் - சூரியன். கார் - மேகங்கள். மாருதம் - காற்று. நீர், பார், நெருப்பு, அருக்கன், கார்மாருதமாய் முளைத்தவன் என்க. சேர்வு - தங்கியிருக்கும் ஓரிடம். ஒன்றறியாது - ஒன்று எனவைத்துக்கொள்வதை அறியாமல். திசைதிசை - பல திசைகளிலும். ஓர்வு - ஆராய்ச்சி.

பண் :

பாடல் எண் : 8

ஓமத் தோடயன் மாலறி யாவணம்
வீமப் பேரொளி யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே. 

பொழிப்புரை :

வேள்விகளாலும். திருமாலும், பிரமனும் அறியாதவண்ணம் இடுகாட்டகத்தே பேரொளியாகிய உயர்ந்த பொருளும், காமனைக் காய்ந்தவனும் ஆகிய கானூர் முளைத்த கடவுள் என் சிந்தையே பாதுகாவலுக்குரிய இருப்பாகக் கொள்வன்.

குறிப்புரை :

ஓமத்தோடு - வேள்வி முதலிய செய்தலோடு கூடியவனாய; ஓம் என்கிற அந்தமந்திரத்தை முதலிலுடைய வேதமும் எனலுமாம். அயன் - பிரமன். வீமப்பேரொளி - மிக்க பேரொளி. காமற் காய்ந்தவன் - மன்மதனை எரித்தவன். சேமத்தால் இருப்பாவது - பாதுகாவலோடு கூடிய அவன் இருக்குமிடமாவது. சிந்தை - மனம்.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

வன்னி கொன்றை யெருக்கணிந் தான்மலை
உன்னி யேசென் றெடுத்தவ னொண்திறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.

பொழிப்புரை :

இளமையுடைய மாமதில் சூழ்ந்த கானூர்க்கருத்தன், வன்னியும், கொன்றையும், எருக்கும் அணிந்த தனக்குரிய மலையைப் பெயர்த்தெடுக்க உன்னிச்சென்று எடுத்தவனாகிய இராவணனின் ஒண்திறல் தன்னை வீழும்படியாகத் தனி விரல் ஒன்றினால் வைத்து அடர்த்தவனாவன்.

குறிப்புரை :

எருக்கு - எருக்க மலர். `வெள்ளெருக்கரவம் விரவும் சடை` என்றார் பிறிதோரிடத்தும். மலை - கயிலைமலை. உன்னியே சென்று - நினைவு கூர்ந்தவனாய் அருகிற் சென்று. எடுத்தவன் - தூக்கியவன். ஒண்திறல் - விளங்கிய வலிமை. தன்னை - இராவணனை. வீழ - கீழே விழும்படி. கன்னிமாமதில், சமாதி என்னுமலங்காரம்; புதிய மதில் என்றும், பிறர் நெருங்கா மதில் என்றும் பொருள்படுதல் அறிதற்குரியது.

பண் :

பாடல் எண் : 1

பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
கூரி தாய அறிவுகை கூடிடும்
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன்றன் நாம நவிலவே.

பொழிப்புரை :

சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும் ; பொய்கெடும் ; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும் .

குறிப்புரை :

பூரியா - நிறைந்து , பெருகி . புண்ணியம் பூரியா வரும் . பொய் - புண்ணியத்துக்கு மறுதலையாகிய கீழ்மை . கூரிதாய அறிவு - கூர்மையான நுண்ணறிவு . கைகூடிடும் - உண்டாகும் . சீரியார் - சிறந்தவர் . பயில் - வாழ்கின்ற . நாரிபாகன் - பார்வதிதேவியைப் பாகமாக உடையவன் . நாமம் - திருப்பெயர் . நவில - சொல்ல . செந்நெறி - கோயில் திருப்பெயர் . செம்மை நவிலவரும் எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 2

என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! மின்னுகின்ற நீண்ட சடையையுடையவனும் , வேதவிழுப்பொருளும் , செந்நெல் பொருந்திய வயல் உடைய திருச்சேறையுட் செந்நெறியில் நிலைபெற்ற சோதியுமாகிய பெருமான் நம்மிடம் வந்து தங்க , நீ என்ன மாதவம் செய்தாய் !.

குறிப்புரை :

என்ன - எத்தகைய . மாதவம் - சிறந்த தவம் . செய்தனை - செய்தாய் . மின்னு வார்சடை - மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடை . வேத விழுப்பொருள் - வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன் . செந்நெல் ஆர்வயல் - செந்நெற் கதிர்கள் பொருந்திய வயல்கள் . மன்னு - நிலைத்து விளங்குகின்ற . சோதி - ஒளி வடிவானவன் . நம்பால் - நம்மிடத்து . வைக - நிலையாக வந்து எழுந்தருள .

பண் :

பாடல் எண் : 3

பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.

பொழிப்புரை :

திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால் , பிறப்பு , மூப்பு , மிக்கபசி , மிக்கபிணி , இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும் .

குறிப்புரை :

மூப்பு - முதுமைத் தன்மை . பெரும் பசி - மிக்க பசி . வான்பிணி - பெரிய தீராத நோய்கள் . எய்திடும் - உண்டாகும் . சிறப்பர் - சிறப்புடையவர் . மறப்பதின்றி - மறவாமல் . மனத்தினுள் வைக்க இன்பம் வந்தெய்திடும் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 4

மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

ஊமைகளே ! செல்வத்தைத்தேடி மயக்கத்தில் விழுந்து நீர் ஓடி இளைத்தும் பயன் இல்லை ; உயர்ந்தவர்கள் வாழ்கின்ற சேறைச்செந்நெறி மேவிய கூத்தப்பிரான் திருவடிகளை அடைந்து உய்வீர்களாக .

குறிப்புரை :

மாடு - செல்வம் . மயக்கினில் வீழ்ந்து - நில்லாதவற்றை நிலையின என்றுணரும் அறியாமையில் விழுந்து . எய்த்தும் - வருந்தியும் . ஊமர்காள் - ஊமைகளே ; பேசுதற்குரியவற்றைப் பேசாதவர் ; சொல்லும் கருவியிருந்தும் சொல்லாதவர் . சேடர் - அறிவால் பெருமையுடையவர் . வாழ் - வாழ்கின்ற . ஆடலான் தன் - ஐந்தொழில் ஆடவல்லானாகிய இறைவனது .

பண் :

பாடல் எண் : 5

எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

நாள்தோறும் எண்ணி எரியும் வேலும் உடைய கூற்றுவன் துண்ணெனத் தோன்றினால் , அவனைத் துரத்தும் வழி ஒன்று கண்டேன் ; திண்மை உடையவரும் , சேறையுட் செந்நெறி உறையும் அண்ணலாருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?

குறிப்புரை :

நாளும் எண்ணி - ஒவ்வொரு நாளும் உயிர்களின் வாழ்நாட்களைக் கணித்து . எரி அயில் - எரியும் நெருப்புப் போன்ற கூரிய வேல் . துண்ணென் தோன்றில் - நடுக்கம் உண்டாகும்படி எனக்கு முன் தோன்றிவந்தால் . துண்ணென்றொன்றில் எனவும் பாடம் . துரக்கும் வழி - அவனை ஓட்டும் வழியை . கண்டேன் - கண்டுபிடித்து விட்டேன் . திண்ணன் - வலியன் . அண்ணலார் - தலைமைத் தன்மை யுடையவர் . என்னுக்கு - எதற்கு ?

பண் :

பாடல் எண் : 6

தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

வானம் முறை தவறி ( வறண்டு ) உலகம் நடுங்கினால் என்ன ? ஒப்பற்ற அரசர்கள் ஒருங்கு உடன் சீறிச்சினந்தால் என்ன ? செப்பம் பொருந்திய சேறையுட் செந்நெறி மேவிய அப்பனார் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?

குறிப்புரை :

தப்பி - நிலைதவறி . வானம் - வானத்தில் உள்ள மழை . தரணி - நிலவுலகிற் பெய்யாது . கம்பிக்கில் என் - அசைந்தால் அதனால் விளைவது யாது ? வானம் என்பதற்கு வானமண்டலங்கள் நிலை தடுமாறி அதனால் உலக இயக்கம் நடைபெறாது நின்று போனால் என்ன எனினும் அமையும் . ஒப்பில் வேந்தர் - தன்னை ஒப்பார் இல்லாத அரசர் . ஒருங்குடன் - ஒன்றுசேர்ந்து . சீறில் என் - நம்மைக் கோபித்தால் அதனால் விளைவது என்ன ? செப்பமாம் - செம்மையோடு கூடியதாய . அப்பனார் - தந்தையாவார் . என்னுக்கு அஞ்சுவது - எதற்கு நாம் அஞ்சுவது ? ` திண்ணென் கெடிலப்புனலும் உடையார் ஒருவர்தமர் நாம் அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதும் இல்லை ` என்ற பதிகத் திருப்பாடல்களும் , ` `வானந் துளங்கிலென் மண்கம்பமாகிலென் இருசுடர் வீழிலென் அஞ்சல் நெஞ்சே` ` எங் கெழிலென் ஞாயிறெமக்கு ` என்ற திருப்பாடல்களும் அஞ்சாமையை வெளிப்படுப்பன .

பண் :

பாடல் எண் : 7

வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

தேடிவைத்த செல்வமும் , பெண்களும் , ஒத்தும் ஒவ்வாதும் உள்ள சுற்றத்தார் பிறரும் என்ன செய்வார் ? சித்தரும் , சேறையுட் செந்நெறி மேவிய அத்தருமாகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எதற்கு ?

குறிப்புரை :

வைத்த மாடு - நிலையென்று தேடிச் சேமித்து வைத்த செல்வங்கள் . மடந்தை நல்லார்கள் - மனைவியர் . ஒத்து ஒவ்வாத உற்றார்களும் - செல்வம் உள்ளபோது ஒத்தும் இல்லாதபோது ஒவ்வாதும் புறத்தால் கலந்து அகத்தால் கலவாத உறவினர் . என் செய்வார் - அச்சம் தரும் இறப்பு வரும்போது நமக்கு என்ன உதவியைச் செய்வர் ? சித்தர் - அட்டமா சித்திகள் கைவரப் பெற்றவரைச் சித்தர் என்பது , பெருமான் சித்திகளின் வடிவாக இருப்பவர் என்றோ அறிவு மயமாய் இருப்பவர் என்றோ பொருள் கூறுக . அத்தர் - தலைவர் .

பண் :

பாடல் எண் : 8

குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! குலங்கள் என்னசெய்யும் திறத்தன ? குற்றங்கள் என்ன செய்யும் திறத்தன ? மனம் அசைந்து நீ நின்று சோராதே ; விளங்கும் திருச்சேறையில் செந்நெறி மேவிய கொன்றை மாலையணிந்த இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எற்றுக்காக ?.

குறிப்புரை :

குலங்கள் - வருணாசிரமங்களாகிய சாதிகள் . குற்றங்கள் - நாம் செய்தனவாய தவறுகள் . என் செய்வ - என்ன தீமையைச் செய்யப் போகின்றன . துலங்கி - மனம் வருந்தி . சோர்ந்திடல் - வருந்தாதே . இலங்கு - விளங்குகின்ற . அலங்கனார் - மாலை அணிந்தவர் , அல்லது ஒளியோடு கூடியவர் .

பண் :

பாடல் எண் : 9

பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

பொழிப்புரை :

பழகினால் வருகின்ற பழமையாய் உள்ள சுற்றத்தாரும் விழவிடாவிட்டால் வேண்டியதை எய்தவொண்ணாது ; விளங்குதலைக்கொண்ட சேறையிற் செந்நெறி மேவிய அழகராகிய இறைவர் உள்ளார் ; அஞ்சுவது பின்னை எற்றுக்கு?

குறிப்புரை :

பழகினால் - பழக்கத்தால் . வரும் - உண்டாய் வரும் . பண்டுள - பலகாலமாய் உளதான . சுற்றமும் என்பதிலுள்ள உம்மை உயர்வு குறித்தது . விழவிடாவிடில் - உண்மையானதல்ல என்றறிந்து அவர்கள் நம்மை நீங்கும்படி விட்டுவிடவில்லையானால் . வேண்டிய - உண்மையாய் நமக்குத் துணை செய்யும் பொருள் என்று உணர்ந்து விரும்பிய நன்மைகளை . எய்தொணா - அடையமுடியாது . திகழ்கொள் - விளங்குதலைக்கொண்ட .

பண் :

பாடல் எண் : 10

பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும் , திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை .

குறிப்புரை :

பொருந்து - நிலத்தில் ஆழமாய்ப் பொருந்திய. நீண் மலை - புகழால் உயர்ந்த திருக்கயிலை மலையை. பிடித்து - பற்றி. ஏந்தினான் - தூக்கியவனாகிய இராவணன். வருந்த - உடல் வருந்த. வாங்கினான் - அவனுக்குக் கருணை செய்வதற்காக மீளவும் எடுத்தான். இடர் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 1

சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
எங்கி லாததோ ரின்பம்வந் தெய்துமே.

பொழிப்புரை :

சங்கு வளையல்கள் பொருந்திய முன்கையை உடைய உமாதேவியை ஒருபாகத்திலுடையவனும், சினவெம்மை பொருந்திய மதம் பொழியும் யானையினை வெகுண்டவனும், மணம் உலாவும் பொழிலை உடைய கோடிகாவில் உள்ளவனுமாகிய இறைவா! என்று கூற, எங்கும் இல்லாததோர் இன்பம் வந்து எய்தும்.

குறிப்புரை :

சங்கு உலாம் - சங்கினால் செய்த வளையல்கள் இங்கு மங்கும் அசைகின்ற. முன்கை - மணிக்கட்டினை உடைய. தையல் - பார்வதி. மதவேழம் - மதங்கொண்ட யானை. குலாம் - விளங்குகின்ற. வெகுண்டவன் - சினந்து உரித்துப் போர்த்தவன். கொங்கு - தேன். உலாம் - நிறைந்த. எங்கிலாததோர் இன்பம் - எங்கும் இல்லாததொரு பேரின்பம். \\\\\\\"செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா\\\\\\\" (தி.8 திருவாசகம் - 171.) எய்தும் - தானே வந்து அடையும்.

பண் :

பாடல் எண் : 2

வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை யுள்கிநீர் நாடொறும்
கோடி காவனைக் கூறீரேற் கூறினேன்
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே.

பொழிப்புரை :

நாள்தோறும் நீர் மாதர்பால் ஓடி, வாழ்வினையே நினைந்து வாடி வாழ்வது என் ஆவது? கோடிகா இறைவனைக் கூறீரேல், ஊர்க்காவலிற்பட்டுக் கழிவீர்; கூறினேன்.

குறிப்புரை :

வாடி - பலவகையாலும் வருந்தி. வாழ்வது - வாழ்வதாகிய வாழ்க்கை. என்னாவது - என்ன பயனைத்தருவது. மாதர்பால் - பெண்களினிடத்து; கூடிவாழ்வது என்னாவது என்க. ஓடி - விரைந்து சென்று. வாழ்வினை - உண்மையான வாழ்க்கையின் செயலை. உள்கி - நினைந்து. கோடிகாவன் - கோடிகா என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவன். கூறிரேல் - சொல்லவில்லையானால். கூறினேன் - நிச்சயமாகச் சொன்னேன். கழிதிர் - பயனின்றிக் கழிந்தொழிவீர். பாடி காவல் - அரச நீதி பிழைத்தாரை வழக்குநாடி அரசன் நிறுத்தும் தண்டத்தொழில். \\\\\\\"நெறியின்வழீ இயினாரை வழக்குவினாய் ஒப்ப நாடிச் செய்யும் தண்டத்தொழிலுணர்த்துவதோர் ஏசொல்\\\\\\\" என்பது சிவஞான மாபாடியம். ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவலிட்டாங்கு அவை அவனதாக்கினை யாகலான் என்க.

பண் :

பாடல் எண் : 3

முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்
தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார்
கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங்
கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே.

பொழிப்புரை :

முல்லையையொத்த நல்ல சிரிப்புடைய உமை ஒரு பங்கில் உடையவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் உறையும் அருட்செல்வரும், முல்லை நிலத்து ஏற்றினை வாகனமாக உடைய வரும் ஆகிய கோடிகா இறைவரே என்று விரைந்து ஏத்துவார்க்குக் குற்றம் ஒன்றும் இல்லை.

குறிப்புரை :

முல்லைநன் முறுவல் - முல்லை அரும்பு போன்று வெண்மையான நல்ல பற்களை உடைய. உமை - பார்வதி. தில்லையம்பலத்தில் - சிதம்பரத்தில். உறை - உறைகின்ற.
செல்வனார் - வீடு பேறாகிய செல்வத்தையுடையவர். கொல்லை - முல்லை நிலத்துக்குரிய. ஏற்றினர் - இடப ஊர்தியை உடையவர். ஒல்லை - விரைவாக. ஊனம் - குறை.

பண் :

பாடல் எண் : 4

நாவ ளம்பெறு மாறும னன்நன்னுதல்
ஆம ளஞ்சொலி யன்புசெ யின்னலால்
கோம ளஞ்சடைக் கோடிகா வாவென
ஏவ ளின்றெனை யேசுமவ் வேழையே. 

பொழிப்புரை :

நாவானது வளம் பெறுமாறு அழகிய நுதலை உடைய தலைவி இயன்ற அளவு அழகிய சடையையுடைய கோடிகா இறைவனே என்று அவன் திருப்புகழ் சொல்லி அன்பு செய்தால் பெறலாமேயன்றி அவனை இசைபாடும் வாயால் என்னை வசைபாடுகின்றாளே இந்நங்கை.

குறிப்புரை :

நாவளம் பெறுமாறும் - நம்முடைய நா பயன்தரும் இறைவன் திருப்புகழைப் பேசுவதால் நன்மையைப் பெறும்படியும். மன் நல்நுதல் - நிலைத்த அழகிய நல்ல நுதலை உடைய தலைவி; அன்மொழித்தொகை. ஆமளம் சொல்லி - ஆம் அளவும் சொல்லி எனப் பிரித்து இயன்ற அளவு அப்பெருமானை ஏத்திப் புகழ்ந்து எனப் பொருள்கொள்க. அன்புசெயின் அலால் - இறைவனிடத்து அன்பு செய்தாலல்லாமல். அன்பு செய்தால் அவனை அடையலாமேயன்றிப் பிறர் எவ்வாறு அடையமுடியும். இதை அறியாமல் அவ்ஏழை என்னை ஏசும் என்க. கோமளம்சடை - அழகிய சடை. கோடிகாவா என - கோடிகாவில் எழுந்தருளியவனே என்று. இறைவரது காதலிற்பட்டுத் தன் சொற்பழித்த மகளை நோக்கிச் செவிலித்தாய் கூற்றாகப் பாடியது.

பண் :

பாடல் எண் : 5

வீறு தான்பெறு வார்சில ராகிலும்
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேல்
கூறு வேன்கோடி காவுளா யென்றுமால்
ஏறு வேன்நும்மா லேசப் படுவனோ. 

பொழிப்புரை :

கோடிகாவில் உள்ள இறைவனே! பெருமை பெறுவார் சிலர் ஆயினும் நறுமணம் வீசும் கொன்றையை மிக அருளா தவனானால் கூறுவேன்; என்றும் காமத்துயர் மயக்கம் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?

குறிப்புரை :

வீறுதான் - பெருமிதத்தினை. பெறுவார் - கொள்ளுவார். சிலர் - சில பெண்கள். இறைவனை அடைந்த அடியவர் அருளிறுமாப்புக் கொள்ளுவார்கள். \\\\\\\\\\\\\\\"இறுமாந்திருப்பன்கொலோ ஈசன் பல்கணத்தெண்ணப்பட்டுச் சிறுமானேந்தி தன்சேவடிக்கீழ்ச் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ\\\\\\\\\\\\\\\" (தி.4.ப.9. பா.11) என்பது ஓர்க. நாறு - மணம் கமழ்கின்ற. பூங்கொன்றை - அழகிய கொன்றை மலர். தான் - அசை. மிகு - மிகுதியாக. நல்கானேல் - தாராதொழி வானேயானால்.கோடிகா உளாய் என்று கூறுவேன் மால் ஏறுவேன் என்க. கோடிகா உளாய் - கோடிகாவில் எழுந்தருளியவனே. மால் ஏறுவேன் - காமமயக்கம் அதிகமடைவேன். நும்மால் - உம்மால். ஏசப்படுவனோ - உம்மால் இகழப்படுதற்கு உரியவளாவேனோ.

பண் :

பாடல் எண் : 6

நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி யேசற வுந்தெரி யாததோர்
கோடி காவனைக் கூறாத நாளெலாம்
பாடி காவலிற் பட்டுக் கழியுமே. 

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் தேவர்களும் ஆராய முற்பட்டுத் தேடித் துயர் உறவும் தெரியாத இயல்பை உடைய ஒப்பற்ற கோடிகாவுறையும் இறைவனைக் கூறாத நாட்களெல்லாம் ஊர்க்காவலிற்பட்டுக் கழியும்.

குறிப்புரை :

நாடி - ஆராய்ந்து. வானவர் - தேவர். ஏசவும் - வருத்தவும். பாடிகாவல் - அரசநீதி. பட்டு - பொருந்தி. கழியும் - நீங்கும்.

பண் :

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 10

வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை
அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென
இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே. 

பொழிப்புரை :

வரங்களாற்பெற்ற பலத்தால் திருக்கயிலையை எடுத்த இராவணனை அழிய ஊன்றி அருள்செய்த அப்பன் ஊராகிய குரங்குகள் சேரும் பொழிலை உடைய கோடிகா இறைவனே என்று என் மனத்துக் குற்றங்கள் தீர இரங்குவேன்.

குறிப்புரை :

வரங்களால் - இறைவனிடம் தான் பெற்ற வரங்களால். வரை - கயிலைமலை. அரங்க - கெட. ஏதங்கள் - குற்றங்கள்.

பண் :

பாடல் எண் : 1

வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே. 

பொழிப்புரை :

வெள்ளெருக்கும், பாம்பும் விரவிய சடையொடு கூடிய புள்ளிருக்கு வேளூர்ச் சிவபெருமானின் பொன்னார் திருவடிகள் உள்ளத்துள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்கள் நரகக்குழியில் செறிந்திருப்பர்.

குறிப்புரை :

வெள்ளெருக்கு - வெள்ளெருக்க மலர். அரவம் - பாம்பு. விரவும் - கலந்தணிந்துள்ள. சடை - சடையையுடையவன். பொற்கழல் - அழகிய கழலணிந்த திருவடி. உள்ளிருக்கும் உணர்ச்சி - மனத்திற்குள் நினைத்துக்கொண்டிருக்கும் உணர்ச்சி. இல்லாதவர் - இல்லாதவர்கள். நள்ளிருப்பர் - சென்று நடுவில் இருப்பார்கள். நரகக் குழியில் - பாவமானவை செய்தார் செய்த தீவினை துய்க்குமிடத்தில்.

பண் :

பாடல் எண் : 2

மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேற் புள்ளிருக்கு வேளூர்
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே. 

பொழிப்புரை :

விடைசொல்லும் தெளிவில்லாதவராய் மனையில் வாழும் வாழ்க்கைபோய். கூற்றுவன் வந்து உம்மைக் கொள்ளுவதற்கு முன்பே புள்ளிருக்குவேளூரைப் போற்றும் வல்லமை உடையீரேல் சீறுதற்குரிய தீக்குணங்கள் தேய்ந்து அறும்; காண்பீராக.

குறிப்புரை :

மாற்றம் - கூற்றுவனுக்குச் சொல்லும் மறுமொழி. நம்மைக் கொல்லவருங்காலையில் அவனைப் போ எனச் சொல்லும் விலக்கு. ஒன்று - யாதொன்றையும். அறியீர் - அறியாதவர்களே. மனைவாழ்க்கை போய் - மனைவியோடு வாழும் இல் வாழ்க்கை அழிந்து. கூற்றம் - வாழ்நாளைக் கூறுபடுத்தும் தெய்வம். கொள்வதன் முன்னமே - பற்றிக்கொண்டுபோவதற்கு முன்பே. புள்ளிருக்கு வேளூர்ப் போற்ற வல்லீரேல் - வேளூரில் எழுந்தருளிய வைத்திய நாதப் பெருமானை வணங்குவீரேயானால், சீற்றம் - நம்மைச் சீறும் கூற்றுவனது சீற்றம். தேய்ந்து அறும் - சிறிது சிறிதாகக் குறைந்து நீங்கும்.

பண் :

பாடல் எண் : 3

அரும றையனை ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர்
உருகி நைபவ ருள்ளங் குளிருமே.

பொழிப்புரை :

அரிய வேதங்களை உடையவனும், ஆணொடு பெண்ணாகியவனும், கரிய ஆலகாலவிடம் மிக உண்ட விருப்பத்திற்குரிய திருநீலகண்டனும், வெள்ளியமுப்புரி நூலனும் ஆகிய பெருமானைப் புள்ளிருக்குவேளூரில் உருகி நையும் அடியார்களின் உள்ளம் குளிரும்.

குறிப்புரை :

அருமறையனை - அரிய வேதங்களின் வடிவாய் இருப்பவனை. ஆணொடு பெண்ணனை - ஆணும் பெண்ணுமாய் இருப்பவனை. மாதொரு கூறனை என்றபடி. கருவிடம் - கரிய நிறத்து விடம். மிக - மிகுதியாக. எம் - எமது. புரிவெண்ணூலனை. முப்புரியாக அமைந்த வெண்மையான பூணூல் அணிந்தவனை. உருகி நைபவர் - மனம் உருகிக்கனிபவர். உள்ளம் - மனமானது.

பண் :

பாடல் எண் : 4

தன்னு ருவை யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் நீற்றனைப்
பொன்னு ருவனைப் புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.

பொழிப்புரை :

தன் உருவத்தை ஒருவர்க்கும் அறிய வொண்ணாத ஒளி உருவனும், மேனியில்பூசிய வெண்ணீற்றனும், பொன்னார் மேனியனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்கு வேளூர் என்று கூறவல்லவர்க்கு இடர்கள் இல்லை.

குறிப்புரை :

தன்னுருவை - தனது திருவுருவத்தை. ஒருவர்க்கு அறியவொணா - திருமால், பிரமன் முதலாகிய யாரும் அறிய முடியாத. யாரும் அறியமுடியாதவாறு தனது திருவுருவத்தை உடையவன் என்க. மின்னுருவன் - மின்னல்போன்று ஒளிவடிவத்தினன். பொன்னுருவன் - அழகிய வடிவுடையவன். என்ன வல்லவர்க்கு - என்று சொல்ல வல்லவர்களுக்கு.

பண் :

பாடல் எண் : 5

செங்கண் மால்பிர மற்கும் அறிவொணா
அங்கி யின்னுரு வாகி யழல்வதோர்
பொங்க ரவனைப் புள்ளிருக்கு வேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே. 

பொழிப்புரை :

சிவந்தகண்ணை உடைய திருமாலுக்கும் பிரமனுக்கும் அறியவொண்ணாத அக்கினியின் உருவாகிக் கனலுகின்ற ஒப்பற்ற, பொங்கியெழும் அரவம் அணிந்த இறைவனாகிய புள்ளிருக்குவேளூரில் உமையொருபாகனை வாழ்த்த இன்பம் வரும்.

குறிப்புரை :

செங்கண்மால் - சிவந்த நிறத்தை உடைய செந் தாமரைக் கண்ணனாகிய திருமால். அறிவொணா - அறிதல் ஒண்ணாத. அங்கி - நெருப்பு. அழல்வதோர் - நெருப்புப் போலச் சீறுவதொரு. பொங்கு - சினம் பொங்குகின்ற. அரவன் - பாம்பை அணிந்தவன். இன்பு - இன்பம்.

பண் :

பாடல் எண் : 6

குற்ற மில்லியைக் கோலச் சிலையினால்
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப் புள்ளிருக்கு வேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

பொழிப்புரை :

குற்றங்கள் இல்லாதவனும், அழகுமிக்க மேருமலையாகிய வில்லினால் சினந்தவர் முப்புரங்களைச் செந்தழலாக்கியவனும், புற்றரவம் கொண்டவனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்குவேளூரைப் பற்றும் வல்லமை உடையவர்களது பாவங்கள் கெடும்.

குறிப்புரை :

குற்றமில்லி - இருவினைக் குற்றமில்லாதவன். கோலச் சிலை - அழகிய இமயவில் (மேருமலையாகிய வில்). செற்றவர் - உலகை அழித்து வந்த திரிபுராதிகள். புரம் - கோட்டை, செந் தழலாக்கி - சிவந்த நெருப்பு உண்ணும்படிச் செய்தவன். புற்றரவன் - புற்றிலே உள்ள பாம்பை அணிந்தவன். பற்றவல்லவர் - அடைய வல்லவர். பறையும் - நீங்கும்.

பண் :

பாடல் எண் : 7

கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடின னென்பதன் முன்னம்நீர்
பொய்யி லாஅரன் புள்ளிருக்கு வேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.

பொழிப்புரை :

கைகளோடு கால்களையும் கட்டி உம்மைச் சேர்ந்தவரெல்லாம் எங்கள் ஐயன் இறந்தனன் என்று கூறுவதன்முன்பே, நீர் பொய்யில்லாத சிவபிரானும், புள்ளிருக்குவேளூர்த் திருநீலகண்டனுமாகிய பெருமானை வாழ்த்துவீராக.

குறிப்புரை :

கையினோடுகால்கட்டி - இறந்தவுடன் கைகளையும் கால்களையும் துணியால் கட்டி. உமர் - உம்மவர். உம்மைச் சேர்ந்த உறவினர். ஐயன் வீடினன் என்பதன் முன்னமே - குடும்பத் தலைவனாயிருப்பவன் இறந்தான் என்று சொல்வதன் முன்பாகவே. பொய்யில்லா - பொய்மையில்லாத; தன்னை வேண்டியவர்க்கு அருள் வழங்குதலில் பொய்யில்லாத. மை - கருமை. வாழ்த்தும் - வாழ்த்துங்கள்.

பண் :

பாடல் எண் : 8

உள்ள முள்கி யுகந்து சிவனென்று
மெள்ள வுள்க வினைகெடு மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. 

பொழிப்புரை :

உள்ளத்தால் உள்ளி. உவப்புற்று \\\\\\\"சிவன்\\\\\\\" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே; சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார்பணிகின்ற புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக.

குறிப்புரை :

உள்ளம் உள்கி - மனத்தால் மீண்டும் மீண்டும். உகந்து - மகிழ்ந்திருந்து. சிவன் என்று மெள்ள உள்க - சிவன் சிவன் என்று பரபரக்காது சிந்திக்க. வினைகெடும் - நம் வினைப்பற்றுக் கெடும். மெய்ம்மையே - இது உண்மையேயாகும். புள்ளினார் - சம்பாதி சடாயு என்ற பறவைகளின் வடிவாய் இருந்தோர். பணி - வழிபாடு செய்த.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 10

அரக்க னார்தலை பத்து மழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே. 

பொழிப்புரை :

இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.

குறிப்புரை :

அரக்கனார் - இராவணன். ஆர், இழித்தற்பொருளில் வந்தது. அழிதர - அழிய. நெருக்கி - நெரித்து. மாமலர்ப்பாதம் - மலர்களிற் சிறந்த தாமரை மலர்போன்ற திருவடி. நிறுவிய - மீள அவன் உய்யும்படி நிறுத்திய. பொருப்பினார் - கயிலைமலையார். வீடும் - அழியும்.

பண் :

பாடல் எண் : 1

வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை யன்பிலா லந்துறைக்
கோன்எஞ் செல்வனைக் கூறிட கிற்றியே.

பொழிப்புரை :

நெஞ்சே ! வானத்தைச் சேர்ந்த பிறை மதியைச் சூடிய மைந்தனாகிய சிவபெருமானை நினையும் வல்லமை உடையை இல்லை ; நீ கெடுவாய் , பஞ்சகவ்வியத் திருவபிஷேகம் கொள்வானாகிய திரு அன்பில் ஆலந்துறைக்கோனாம் எம் செல்வனைக் கூறிடும் வல்லமை பெறுவாயாக .

குறிப்புரை :

வானம்சேர் - ஆகாயத்தைச் சேர்ந்துள்ள . மைந்தன் - இளையன் , வலியன் . நெஞ்சே நீ - மனமே நீ . கெடுவாய் - கெட்டுவிடுவாய் . நினைகிற்கிலை - நினையாமல் இருக்கின்றாய் . நீ நன்மையடைதற் பொருட்டுக் கூறவில்லையே ஆதலால் கெடுவாய் என இயைத்துக் கூறுக . ஆனஞ்சு - பஞ்சகவ்வியம் . கோன் - தலைவனாகிய . அன்பிலாலந் துறை இறைவன் திருப்பெயரைப் பலகாலும் சொல் என்பதாம் .

பண் :

பாடல் எண் : 2

கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
ஆர ணப்பொரு ளன்பிலா லந்துறை
நார ணற்கரி யானொரு நம்பியே.

பொழிப்புரை :

அன்பிலாலந்துறையில் திருமாலுக்கும் அரியாராகிய ஒப்பற்ற நம்பி , உலககாரணரும் , கருத்தில் உள்ளவரும் , பிரமகபாலம் கொண்ட கையினரும் , யானை உரிபோர்த்த மணாளரும் , வேதப்பொருள் ஆயவரும் ஆவர் .

குறிப்புரை :

காரணத்தர் - உலகின் நிமித்த காரணராயிருப்பவர் . கருத்தர் - எல்லாவற்றிற்கும் மூலகாரணர் . கபாலியார் - பிரமனது மண்டையோட்டைக் கையின்கண் ஏந்தியவர் . வாரணத்து - யானையினது . உரி - தோல் . ஆரணப்பொருள் - வேதங்களின் பொருளாய் விளங்குபவன் . நாரணன் - திருமால் . ஒருநம்பி - ஒப்பற்ற சிறந்த ஆண் மகனாயிருப்பவன் .

பண் :

பாடல் எண் : 3

அன்பின் ஆனஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்
அன்பி லானையம் மானையள் ளூறிய
அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.

பொழிப்புரை :

அன்பினால் பஞ்சகவ்வியம் ஐந்துடன் திரு முழுக்குக் கொண்டவனும் , எலும்புடைய யானையின் உரியை உரித்துக்களைந்தவனும் ஆகிய , அன்பில் ஆலந்துறையில் உள்ள அம்மானை , நெஞ்சில் அள்ளூறி அன்பினால் நினைந்தவர்களே அறிந்தவர்கள் .

குறிப்புரை :

அன்பின் - அன்பினாலே . ஆன் அமைந்து அஞ்சுடன் ஆடிய - பசுவிடமுளதாய ஐந்து பொருள்களை ஏனைய பொருள்களோடு அபிடேகம் கொண்ட . என்பின் - எலும்புகளாகும்படி . உரித்துக் களைந்தவன் - தோலைஉரித்து நீக்கியவன் . ஆனையை உரித்து என்பின் யானையாகச் செய்தவன் . அன்பிலானை - அன்பில் என்ற தலத்து எழுந்தருளியவன் . அம்மானை - தலைவனை . அள்ளூறிய - செறிந்து ஊறிப் பெருக்கெடுத்த ; அன்பு என்க . ஆர் அறிந்தார்கள் - யார் உண்மையில் உணர்வாராயினார்கள் .

பண் :

பாடல் எண் : 4

சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை
பங்க னாரடி பாவியேன் நானுய்ய
அங்க ணனெந்தை யன்பிலா லந்துறைச்
செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.

பொழிப்புரை :

உள்ளதும் ஐயம் ; சாவதேமெய் ; ஆதலால் உமை பங்கரும் , அழகிய கண்ணை உடையவரும் , எந்தையும் , அன்பிலாலந் துறையில் சிவந்த கண்ணை உடையவருமாகிய பெருமான் அடிகளைப் பாவியேன் நான் உய்யச் சேரவும் வல்லனே !.

குறிப்புரை :

உள்ளது சங்கை - இவ்வுலக வாழ்வில் இருப்பது ஐயம் . சாவது மெய் - இறப்பது நிச்சயம் . மெய் - உண்மையே . உமை பங்கனார் - பார்வதி சமேதராய பெருமான் . அடி - திருவடிகளை . பாவியேன் - சிந்தியேன் . அங்கணன் - அழகிய அருட்கண்ணன் . எந்தை - எங்கள் தந்தை . செங்கணார் - சிவந்த கண்களை உடைய . வல்லனே - வல்லனோ என்க .

பண் :

பாடல் எண் : 5

கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
அக்க ரையின ரன்பிலா லந்துறை
நக்கு ருவரும் நம்மை யறிவரே.

பொழிப்புரை :

கொக்கிறகை உடையவரும் , குளிர் மதிப் பிறையினைச் சடையிற் கொண்டவரும் , சினம்மிக்கு அரக்கர் முப்புரங்களை எரித்தல் செய்தவரும் , அக்கினை அரைக்கசைத்தவருமாகிய அன்பிலாலந்துறையில் திகம்பர உருவினராம் இறைவர் நம்மை அறிவர் .

குறிப்புரை :

கொக்கிறகர் - கொக்கு வடிவில் நின்ற அசுரனை அழித்து அவன் இறகினைச் சூடியவர் சிவபெருமான் ஆதலின் கொக்கிறகர் என்றார் . குளிர்மதி - குளிர்ந்த பிறைமதி . மிக்க - செருக்கிய . அரக்கர் - திரிபுராரிகள் . புரம் - மூன்று கோட்டைகள் . எரிசெய்தவர் - எரியச்செய்தவர் . அக்கரையினர் - அக்குமணி மாலையை அரையிலே கட்டியவர் . நக்குருவர் - நகுதற்குக் காரணமான தோற்றத்தோடு கூடியவர் . நம்மை அறிவர் - நம்மை அறிந்து திருவருள் செய்வர் .

பண் :

பாடல் எண் : 6

வெள்ள முள்ள விரிசடை நந்தியைக்
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ள லார்வய லன்பிலா லந்துறை
உள்ள வாறறி யார்சில ரூமரே.

பொழிப்புரை :

கங்கையாகிய வெள்ளம் உள்ள விரிசடையோடு கூடிய நந்தியாகியபெருமானைக் கள்ளமுள்ள மனத்தவர் காணும் திறமை இல்லாதவர்கள் ; சேறு நிறைந்த வயலை உடைய அன்பிலாலந் துறையின்கண் உள்ளவாறு சில ஊமையர் அறியார் .

குறிப்புரை :

வெள்ளம் - கங்கை . நந்தி - சிவபெருமானுக்குரிய பெயர் . கள்ளம் - வஞ்சகம் . காண்கிலார் - காணமாட்டார் . அள்ளல் - சேறு . ஆர் - பொருந்திய . உள்ளவாறு - உள்ளபடி .

பண் :

பாடல் எண் : 7

பிறவி மாயப் பிணக்கி லழுந்தினும்
உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே
அறவ னெம்பிரா னன்பிலா லந்துறை
மறவா தேதொழு தேத்தி வணங்குமே.

பொழிப்புரை :

பிறவியாகிய பொய்ப்பிணக்கில் அழுந்தினாலும் உறவெல்லாவற்றையும் சிந்தித்து எண்ணி மகிழாமல் , அறவடிவாகிய எம்பெருமானது அன்பிலாலந்துறையை மறவாது தொழுது ஏத்தி வணங்குவீராக .

குறிப்புரை :

பிறவி மாயப்பிணக்கில் - பிறவியாகிய பொய்மையை உடைய மாறுபாட்டுள் . அழுந்தினும் - அழுந்தினாலும் . உறவெலாம் சிந்தித்து - உறவினராயவர் எல்லாரையும் எண்ணி . உன்னி - அவர்களையே மீள மீள நினைத்து . உகவாதே - மகிழாமல் . அறவன் - அறவடிவன் . வணங்கும் - வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 8

நுணங்கு நூலயன் மாலு மிருவரும்
பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா
அணங்க னெம்பிரா னன்பிலா லந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.

பொழிப்புரை :

நுண்ணிய நூல் பல கற்ற பிரமனும் திருமாலுமாகிய இருவரும் மாறுபட்டு எங்கும் திரிந்து இளைத்தும் காணும் திறமையற்றனர் ; அணங்கினை ஒருபாகம் உடைய இறைவன் அன்பிலாலந்துறையை நும் வினைகள் மாய்ந்து அறும் வண்ணம் வணங்குவீராக .

குறிப்புரை :

நுணங்கு - நுண்ணிய . நூல் - வேதநூல்களை ; ஓதும் . அயன் - பிரமன் . பிணங்கு - மாறுபட்டு . எய்த்தும் - வருந்தி இளைத்தும் . காண்கிலா - காணாத . அணங்கன் - அணங்கை உடையவன் . நும் வினை மாய்ந்தறும் வண்ணம் வணங்கும் என்க . வணங்கும் - வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 9

பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக்
கையன் மாருரை கேளா தெழுமினோ
ஐய னெம்பிரா னன்பிலா லந்துறை
மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே.

பொழிப்புரை :

எல்லாப் பொய்யும் உரைக்கும் சமணரும் , சாக்கியருமாகிய சிறுமை உடையவர்கள் பேச்சைக் கேளாது எழுமின் ; ஐயனும் எம்பெருமானும் அன்பிலாலந்துறையில் எழுந்தருளியுள்ள மெய்யனுமாகிய இறைவன் சேவடி ஏத்துவார் மெய்யர் ஆவர் .

குறிப்புரை :

பொய்யெலாம் - பொய்யாயின பலவற்றையும் . சமண் சாக்கியக் கையன்மார் - சமண மதக் கொள்கையினராய சாக்கியர் என்னும் பிரிவினர் . எழுமின் - புறப்படுங்கள் . மெய்யன் - உண்மை வடிவானவன் . ஓ - அசை

பண் :

பாடல் எண் : 10

இலங்கை வேந்த னிருபது தோளிற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்க லெம்பிரா னன்பிலா லந்துறை
வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே.

பொழிப்புரை :

இலங்கை அரசனாம் இராவணன் இருபது தோள்களும் இற்றுச் சுழலும்படியாகத் திருக்கயிலைமாமலை மேல் திருவிரலை ஊன்றியவன் ஆகிய கொன்றைமாலையணிந்த பெருமானுடைய அன்பிலாலந்துறையை வலங்கொண்டு வழிபடுவாரைத் தேவர்கள் வலம் கொண்டு வணங்கிப் போற்றுவர் .

குறிப்புரை :

இலங்கை வேந்தன் - இராவணன். இற்று - நெரிந்து. மலங்க - வருந்த. மாமலைமேல் - சிறந்த திருக்கயிலை மலையின் மேல். அலங்கல் - மலர்மாலை. வலங்கொள்வாரை - வலமாகச் சுற்றி வணங்குவாரை.

பண் :

பாடல் எண் : 1

சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.

பொழிப்புரை :

உயர்ந்தவனை , சிவனை , செழுஞ்சோதி வடிவானவனை , எட்டு மூர்த்தியை , கல்லாலநிழற்கீழ் அமரும் ஆசாரியனை , திருப்பாண்டிக்கொடுமுடிக் கூத்தனைத் தொழுதால் நம்வினை நாசமாம்

குறிப்புரை :

சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன் . செழும் - வளவிய . அட்ட மூர்த்தியை - எட்டு வடிவமாக எழுந்தருளியவனை . ஆல நிழல் - கல்லால மர நிழலின்கண் . பட்டன் - ஆசாரியன் ; ஞானி . நட்டன் - நடனமாடுபவன் . நாசம் - அழியும் .

பண் :

பாடல் எண் : 2

பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவ னெம்பிரான்
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறிவற்ற நெஞ்சமே ! பிரமனும் மாலும் அறியாத பெருமையனும் , தருமவடிவாகிய தத்துவ வடிவினனும் , எம்பிரானும் , பரமனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருப்பாண்டிக் கொடு முடியைத் தொழுவதே கருமமாகக் கொண்டு பணிவாயாக .

குறிப்புரை :

தருமமாகியதத்துவன் - அறவடிவாகியதத்துவன் . கருமம் - செய்யவேண்டிய அவசியச் செயல் .

பண் :

பாடல் எண் : 3

ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனு மித்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.

பொழிப்புரை :

ஒரு பெண் ஊசல் விளையாட்டும் கொண்டிலள் ; ஒள்ளிய கழல் அணிவாளுமல்லள் ; தேசமாம் திருப்பாண்டிக் கொடு முடி ஈசனே என்னும் இத்தனையேயல்லது வேறு பேசுமாறு ஒன்றும் அறியாதவள் ஆயினள் .

குறிப்புரை :

ஊசலாள் அல்லள் - ஊஞ்சல் ஆடுபவளாக இல்லை . ஒண்கழலாள் அல்லள் - ஒளிபொருந்திய சிலம்பு முதலிய அணிகலன்கள் அணிந்துகொள்ளுபவளாகவும் இல்லை . தேசமாம் - சிறந்த ஊராகிய . எனும் - என்று சொல்வாள் . இத்தனையல்லது - இந்த வார்த்தைகளேயல்லாமல் .

பண் :

பாடல் எண் : 4

தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்டலுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.

பொழிப்புரை :

தூண்டிய சுடர்போல் ஒக்கின்ற சோதிவடிவினனாகிய பெருமான் அடியார்களுக்குக் காண்டல் எளியவன் ; பாண்டிக் கொடுமுடி மேவிய பரமனைக் காண்போம் என்று கூறுவார்க்கு ஏதும் கருதவொண்ணா இயல்பினோன் .

குறிப்புரை :

தூண்டிய சுடர்போல் ஒக்கும் - தூண்டப்பட்ட விளக்குப்போல என்று உவமை சொல்லத்தகும் . காண்டலும் எளியன் - காட்சிக்கும் எளியன் . அடியார்களுக்குக் காண்டலும் எளியன் என்க . காண்டும் என்பவர்க்கு - எப்படியேனும் கண்டே தீருவேன் என்று செருக்கோடு காண்பார்க்கு . ஏதும் கருத்தொணான் - எந்த அளவிலும் கருத்தின்கண் புலப்படமாட்டாதவன் .

பண் :

பாடல் எண் : 5

நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன்
திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே.

பொழிப்புரை :

புகழை உடைய வானவர், ஒருவர் முடியோடு மற்றொருவர் முடி நெருக்கும் கூட்டமாக நின்று, இருக்கு வேதம் உரைத்து, பணிந்து ஏத்த இருந்தவனுடைய ஊர், `திருக்கொடுமுடி` என்றலும் தீவினையின் கருக் கெடும்; இது கைகண்ட யோக நெறியாகும் .

குறிப்புரை :

அம்முடி நெருக்கிநின்று - கூட்டமாய் ஒருவர் முடியோடு மற்றொருவர் நெருக்கிக்கொண்டு நின்று . இசை - பொருந்திய இருக்குவேதமொழி . கரு - பிறவி . * * * * * * 6, 7, 8, 9, 10 6, 7, 8, 9, 10. * * * * * * *

பண் :

பாடல் எண் : 1

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

விரிந்தமாமலர்களைக் கொண்டு விரைந்து நீர் , தேவர்நாயகனும் , வண்டுசேர் பொழில்களை உடைய வான்மியூர் ஈசனுமாகிய இறைவன் சேவடியைச் சூழ்வீர்களாக ; முன்பு செய்த பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

விண்ட - முகையவிழ்ந்து மலர்ந்த . மா - சிறந்த . அண்ட நாயகன் தன் - எல்லா உலகங்களுக்கும் தலைவனாகிய பெருமானுடைய . அடி - திருவடிகளை . சூழ்மின்கள் - வலம் செய்து வணங்குங்கள் . பண்டு செய்த பாவம் - முற்பிறப்பில் செய்த பிறவிக்குக் காரணமான பழவினை . பறைந்திடும் - நீங்கும் . வான்மியூர் ஈசனை எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 2

பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

பொருளும் , சுற்றத்தாருமாகிய பொய்ம்மையை விட்டு நீர் மருளுதற்குரிய மாந்தரை மாற்றி மயக்கம் நீக்கி அருளு மாறுவல்ல ஆதியாய் ! என்று கூறியதும் வான்மியூர் ஈசன் மயக்கம் நீக்குவன் .

குறிப்புரை :

நீர் - நீங்கள் . மருளும் மாந்தரை - உலக வாழ்வில் மயங்கி நிற்கும் மக்களை . மயக்கு அறுத்து - அறியாமையாகிய மயக்கத்திலிருந்து விடுவித்து . அருளுமாவல்ல - அருள் செய்யவல்ல . ஆதியாய் - முதன்மையானவனே . என்றலும் - என்று கூறியவுடனே . மருள் - பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் அறியாமையாகிய இருட்டு . அறுத்திடும் - நீக்கும் .

பண் :

பாடல் எண் : 3

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்
தந்த மில்குணத் தானை யடைந்துநின்
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

மந்தமாகிய சிந்தையின் மயக்கத்தை அறுத்து முடிவற்ற குணத்தை உடையவனாகிய பெருமானை அடைந்துநின்று எந்தையே ! ஈசனே ! என்று வழிபடவல்லமை உடையீரேயாயின் வான்மியூர் ஈசன் வந்து நின்றிடும் .

குறிப்புரை :

மந்தமாகிய - அறியாமையால் ஏற்படும் மந்தத் தன்மையாகிய . சிந்தை மயக்கு - மன மயக்கத்தை . அறுத்து - நீக்கி . அந்தம்இல் - முடிவில்லாத . வல்லிரேல் - ஏத்தும் வன்மையை யுடையீரானால் . வந்து நின்றிடும் - வெளிப்பட்டு வந்து தோன்றும் .

பண் :

பாடல் எண் : 4

உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலால்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

கங்கையும் பாம்பும் கலக்கும் சடையோடு கூடிய வள்ளலாகிய வான்மியூர் ஈசன் , உள்ளம் கலந்து ஏத்த வல்லவர்க்கு அல்லால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அல்லன் .

குறிப்புரை :

உள்ளம் உள்கலந்து - உள்ளம் முழுமையும் அவனுக்கே இடமாகக்கொண்டு ; மேற்போக்கான நினைப்பு பயனற்றது ஆதலின் உள்கலந்து என்றார் . ஏத்தவல்லார்க்கலால் - வணங்கவல்லார்க்கே அல்லாமல் . கள்ளம் உள்ளழி - வஞ்சகத்தன்மை உள்ள இடத்து . கசிவானலன் - அருள் செய்யமாட்டான் . வெள்ளம் - கங்கை . விரவும் - கலந்தணிந்த .

பண் :

பாடல் எண் : 5

படங்கொள் பாம்பரைப் பால்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

படம் கொண்ட பாம்பு உடையவனும் , பால் மதி சூடியவனும் , மாலைகள் கொண்ட மென்முலைமாதாகிய உமையொரு கூறனுமான வான்மியூர் ஈசன் , தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினைகள் மடங்க முன்னே வந்து நின்று அருளுவான் .

குறிப்புரை :

படங்கொள் - படத்தைக் கொண்ட . பாம்பரை - பாம்பணிந்தவரை . மதிசூடியை - பிறைமதி சூடியவரை . வடங்கொள் - முத்துமாலைகளை அணிந்த . தொடர்ந்து நின்று - இடையறாது சிந்தித்து நின்று . தொழுதெழுவார் - வணங்கி எழுவார் . மடங்க நின்றிடும் - சுருங்கும் . வான்மியூர் ஈசனைத் தொழுது எழுவார் வினை மடங்கும் என்க .

பண் :

பாடல் எண் : 6

நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்று
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

` நெஞ்சில் நினைக்க ஐம்புலக் கள்வர் நினைக்கவையார் ; பஞ்சனைய மெல்லடியாளாகிய உமைபங்கனே !` என்று அஞ்சிப் புதிய மலர்கள் தூவி அழுதீரேல் வான்மியூர் ஈசன் உம் வஞ்சனையைத் தீர்ப்பர் .

குறிப்புரை :

நெஞ்சில் - மனத்தில் . ஐவர் - ஐம்பொறிகள் . நினைக்க - பல வழிகளிலும் மனத்தை ஈடுபடுத்திப் பலவற்றை நினைக்க . நினைக்குறார் - இறைவனை நினைத்தலைப் பொருந்தாராயினர் . பஞ்சின் மெல்லடியார் - பஞ்சு போன்ற மென்மைத் தன்மை வாய்ந்த காலடிகளை உடையவர் . அஞ்சி - அச்சத்துடனே . நாண் மலர் - புதிய மலர்கள் . அழுதிரேல் - இறைவனைக் கூவி அழைத்து அழுவீர்களேயானால் . வஞ்சம் தீர்த்திடும் - நினைக்க ஒட்டாது தடுத்து இடுக்கண் செய்யும் புலனாசையை நீக்கும் .

பண் :

பாடல் எண் : 7

நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்
குணங்கள் தான்பர விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

நுண்ணிய நூல் பல உணர்ந்த பிரமனும் திருமாலும் அறியும்வல்லமை இல்லாத பேரருட் குணங்களைப் பரவி சுணங்கு படர்ந்த பூண்களை உடைய முலையையும் தூய மொழியையும் உடைய பெண்கள் வணங்க வான்மியூர் ஈசன் நின்றிடுவான் .

குறிப்புரை :

நுணங்கு - நுண்ணிய . நூல் - வேதங்கள் . பரவி - தோத்திரித்து . குறைந்து உக்கவர் - செருக்கொழிந்து மனமுருகியவர் . சுணங்கு - பசலை . பூண் - அணிகலன் . தூமொழியாரவர் - இறைவன் புகழ் மொழிகளைப் பேசுபவர்களாகிய பெண்கள் . உக்கவரும் , மொழி யாரவரும் வணங்க என எண்ணும்மை விரிக்க . வணங்க நின்றிடும் - வணங்க எழுந்தருளும் .

பண் :

பாடல் எண் : 8

ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு வாய பரமனென்
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

வான்மியூர் ஈசன் முதலாகிய மூர்த்தி அரனும் அயனும் திருமாலும் ஆயவன் . பாதிபெண்ணுருவுமாகிய பரமன் என்று ஓதி உள்ளம் குழைந்து ஏத்த வல்லமை உடையவர்களின் துன்பங்களைத் தீர்த்திடுவான் .

குறிப்புரை :

ஆதி - எல்லார்க்கும் முன்னே தோன்றியவன் . அரனாய் அயன் மாலுமாய் - அரன் அயன் அரி ஆகிய மும்மூர்த்திகளாகியும் . பரமன் - மேலானவன் . உள் குழைந்து - மனமுருகி . வாதை - பிறவித் துன்பம் .

பண் :

பாடல் எண் : 9

ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

ஓட்டைமாடமாகிய உடம்பில் உள்ள ஒன்பது வாயில்களும் இடுகாட்டில் வெந்து எரிந்து சாம்பலாவதன் முன் , தன் கழலடியை நெஞ்சில் நாட்டிப் புதுமலர் தூவி வலம் செய்தால் வான்மியூரீசன் வாட்டம் தீர்ப்பான் .

குறிப்புரை :

ஓட்டை மாடத்தில் - எண்ணிறைந்த ஓட்டைகளை உடைய வீடாகிய உடலில் . உருவகம் . ஒன்பது வாசலும் - ஒன்பது வாசல்களும் . வழிகளாவன ; வாய் , கண் , மூக்கு , காது , சிறுநீர் , மலம் கழிப்பதற்கான வாயில்கள் ஆகிய ஒன்பது வழி . காட்டில் - இடு காட்டில் . நாட்டி - மனத்தில் நிலையாக எழுந்தருளச்செய்து . நாண் மலர் - புதியமலர்கள் . வாட்டம் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரீசனே.

பொழிப்புரை :

பாரமாகத் திருக்கயிலையை எடுத்த இராவணனைச் சிதையும்படி திருவிரலால் ஊன்றியவனும் , ஆர்வம் பெருகி அழைத்து அவன் ஏத்தலும் அன்பு கொண்டவனும் வான்மியூர் ஈசன் ஆவன் .

குறிப்புரை :

பாரமா - சுமையாக. மலை - கயிலைமலை. சீரமாக - சீரணிக்க; அழிய. சிரமம் என்றதன் மரூஉவாகக் கொண்டு துன்புற எனலுமாம். ஊன்றினான் - கால்விரலை ஊன்றினான். ஆர்வமாக - அன்புடனே. அழைத்து அவன் ஏத்தலும் - அழைத்து அவனை வணங்குதலும். வாரம் - அன்பு; அருள். `வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்` என்பது ஓர்க.

பண் :

பாடல் எண் : 1

பாணத் தால்மதின் மூன்று மெரித்தவன்
பூணத் தானர வாமை பொறுத்தவன்
காணத் தானினி யான்கடல் நாகைக்கா
ரோணத் தானென நம்வினை யோயுமே.

பொழிப்புரை :

ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும் , தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும் , காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும் !

குறிப்புரை :

பாணத்தால் - அம்பால் . மதில்மூன்று - திரிபுரம் . எரித்தவன் - எரியச்செய்தவன் . பூண - அணிய . பொறுத்தவன் - சுமந்தவன் . காணத்தான் இனியான் - காணுதற்கு இனிய அழகியவன் . இனியதைச் செய்பவன் . என - என்றுசொல்ல . ஓயும் - ஒழியும் . காண - தரிசித்துப் பெருமைகளைக் காண .

பண் :

பாடல் எண் : 2

வண்ட லம்பிய வார்சடை யீசனை
விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை யான கழலுமே.

பொழிப்புரை :

வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும் , விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும் , தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

அலம்பிய - ஒலித்த . வார் - நீண்ட . விண்தலம் - தேவருலகம் . விகிர்தன் - வேறுபாடில்லாதவன் . கண்டல் அம்கமழ் . தாழைமலர்கள் மணம் வீசுகின்ற . அம் , சாரியை , அல்லது அம் கண்டல் எனலும் ஆம் . கண்டலும் - பார்த்தலும் . காண்டலும் என்பது எதுகைநோக்கி கண்டலும் என்றாயது . கழலும் - நீங்கும் .

பண் :

பாடல் எண் : 3

புனையும் மாமலர் கொண்டு புரிசடை
நனையும் மாமலர் சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை
நினைய வேவினை யாயின நீங்குமே.

பொழிப்புரை :

மாமலர்களைக்கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும் . கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

புனையும் - அலங்கரியுங்கள் . மாமலர்கொண்டு - சிறந்த மலர்களைக் கொண்டு , புனையும் என்க . புரிசடை - முறுக்குண்ட நனையும் மாமலர் சூடிய . நனையும் மாமலரும் என்க . நனை - அரும்பு . கனையும் - ஒலிக்கின்ற . வார்கடல் - நீண்டகடல் .

பண் :

பாடல் எண் : 4

கொல்லை மால்விடை யேறிய கோவினை
எல்லி மாநட மாடு மிறைவனைக்
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்
சொல்ல வேவினை யானவை சோருமே.

பொழிப்புரை :

முல்லைநிலத்து விடையேறிய அரசனும் , இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய , கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும் .

குறிப்புரை :

கொல்லை - முல்லை நிலத்துக்குரிய . மால்விடை - திருமாலாகிய எருதினை . ஏறிய - ஊர்தியாக ஏறிய . கோவினை - தலைவனை . எல்லி - இரவு . மா - சிறந்த . கல்லினார்மதில் - கற்களினால் பொருத்திக்கட்டப்பட்ட . சோரும் - அழியும் .

பண் :

பாடல் எண் : 5

மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய கண்டனை வானவர்
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

உண்மையே உருவானவனும் , விடையை ஊர்தியாகக்கொண்டவனும் , வெண்மழுவைக் கையிற்கொண்டவனும் , நாகைக்காரோணனும் , ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

மெய்யன் - உண்மையின் வடிவாய் விளங்குகின்றவன் . வெண்மழுக்கையன் - வெள்ளிய மழுவாயுதத்தைக் கையின்கண் உடையவன் . மை - கரியவிடம் . அனுக்கிய - வருத்திய , வென்ற . விடத்தினை மாற்றிய நீலகண்டன் என்க . ` பிறையனுக்கிய செஞ்சீறடி ` வானவர் ஐயன் - தேவர்கள் தலைவன் .

பண் :

பாடல் எண் : 6

அலங்கல் சேர்சடை யாதிபு ராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை , மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை , கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

அலங்கல் - மாலை . ஆதிபுராணன் - முதலில் தோன்றிய பழையவன் . விலங்கல் மெல்லியல் - மலைமகள் . பாகம் விருப்பனை - பாகமாக விரும்பியவனை . கலங்கள் - கப்பல்கள் .

பண் :

பாடல் எண் : 7

சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவ ரேத்திய வீசனைக்
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும் , தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்திய ஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

சினங்கொள் - கோபம்கொள்ளும் . மால் - கரிய அல்லது பெரிய . கரி - யானையை . சீறிய - சினந்து உரித்துப் போர்த்த . ஏறு - சிங்கஏறு அல்லது காளை . இனங்கொள் - கூட்டம்கொண்ட . கனம்கொள் - மேகங்கள் தங்குதலைக்கொண்ட .

பண் :

பாடல் எண் : 8

அந்த மில்புக ழாயிழை யார்பணிந்
தெந்தை யீசனென் றேத்து மிறைவனைக்
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே.

பொழிப்புரை :

ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே ! ` ஈசனே ` என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும் .

குறிப்புரை :

அந்தமில் - கெடுதல் இல்லாத . புகழ் - புகழையுடைய . ஆயிழையார் - அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்கள் ; பார்வதி எனலுமாம் . எந்தை - என்னுடைய தந்தை . ஈசன் - தலைவன் . கந்தம் - மணம் . திண்ணம் - நிச்சயம் . ` கௌரிநாயக , நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து பெரும்பதம் பிழையா வரம் பலபெற்றோர் இமையாநெடுங்கண் உமையாள் நங்கையும் தாரகற்செற்ற வீரக் கன்னியும் நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும் ...`. ( திருவிடை - மும்மணி .28)

பண் :

பாடல் எண் : 9

கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை
ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த
செருவ னைத்தொழத் தீவினை தீருமே.

பொழிப்புரை :

உலகிற்கெல்லாம் கருவாகியவனும் . கடல்நாகைக் காரோணனும் , பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும் , ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும் .

குறிப்புரை :

கருவன் - மூலகாரணனாய் விளங்குபவன் . இருவர் - திருமால் பிரமன் . ஒருவன் - ஏகன் . அழியாதவன் தானொருவனே யாகலின் ஏகன் என்றார் . உணரார் - பகைவர் . செருவன் - முப்புர மெரித்தலாகிய போரைச் செய்தவன் .

பண் :

பாடல் எண் : 10

கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன்
வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை
அடர வூன்றிய பாத மணைதரத்
தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே.

பொழிப்புரை :

கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான் .

குறிப்புரை :

கடற்கழி தழீஇய , அகரம்தொக்கது . தழி - தழுவுதலை உடையது . வடவரை - வடக்கின்கண் உளதாய திருக்கயிலைத் திருமலை . ஆர்த்த - செருக்கினால் ஆரவாரித்த , அடர - இறக்குமாறு வருத்த . அணைதர - நெருங்கித்தொழ . காலன் தொடர அஞ்சும் . அஞ்சும் - அஞ்சுவான் . துயக்கு - துன்பம் .

பண் :

பாடல் எண் : 1

மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாம்
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது
ஓட்டுப் பள்ளிவிட் டோட லுறாமுனம்
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

பொழிப்புரை :

செல்வத்திடத்து மகிழ்ந்து உறைவீர் ; கேட்டுப் பள்ளிகண்டீர் . உடம்பை விட்டு உயிர் ஓடலுறுவதற்கு முன்பு காட்டுப்பள்ளியிறைவன் திருவடிகளைச் சேர்வீராக .

குறிப்புரை :

மாட்டுப்பள்ளி - செல்வம் நிறைந்த இருக்கைகள் . உறைவீர்க்கெலாம் - தங்கி இறையுணர்வின்றியிருப்போர் எல்லாருக்கும் . இது கேட்டுப்பள்ளிகண்டீர் - இது கேடுதரும் இருக்கை என்பதை உணருங்கள் . கெடுவீர் - நிலையாத மனைவாழ்க்கையை நம்பியிருப்பின் கெட்டுவிடுவீர் . இது என்பதைக் கேட்டுப்பள்ளி என்பதனுடன் கூட்டுக . ஓட்டுப்பள்ளி - ஓடுகின்ற வீடு . விட்டு - பிரிந்து . ஓடலுறாமுனம் - உயிர்செல்வதற்குமுன்பே . காட்டுப் பள்ளியுளான் கழல் - திருக்காட்டுப்பள்ளி என்னும் தலத்து இறைவன் திருவடிகளை . சேர்மின் - அடைந்து வழிபடுங்கள் .

பண் :

பாடல் எண் : 2

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

பொழிப்புரை :

செல்வத்தையே தேடி நீர் உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணமற்றவர்களே ! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளி யுள்ளான் திருவடி சேர்வீராக .

குறிப்புரை :

மாட்டை - செல்வத்தை . மகிழ்ந்து - மனம் செருக்கி . நும்முளே - உங்களுக்குள் . நாட்டுப்பொய்யெலாம் - உலகில் நடக்கும் பல உண்மையில்லாத நிகழ்ச்சிகளையெல்லாம் . நாணிலீர் - வெட்கமில்லாதவர்களே ! கூட்டைவிட்டு - உடலை விட்டு .

பண் :

பாடல் எண் : 3

தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்
ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.

பொழிப்புரை :

தேனை வென்ற சொல்லை உடையவளாகிய மனைவியோடு செல்வமும் கெட்டு உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டு வேடர்கள் கருதும் காட்டுப்பள்ளியின் ஞான நாயகனைச் சென்று நண்ணுவீராக .

குறிப்புரை :

தேனைவென்ற - தேனினும் இனிய . சொல்லார் - சொல்லையுடைய பெண்கள் . ஊனைவிட்டு - உடலையும் விட்டு . பெண்டிர் செல்வம் உடல் இவை பிரிவதன் முன் ; இறக்குமுன்பு என்க . கானவேடர் - காட்டில் வாழும் வேடர் . கருதும் - எண்ணி வழிபடும் . ஞானநாயகன் - பேரறிவின் தலைவன் . நண்ணும் - அடைந்து வழிபடுங்கள் .

பண் :

பாடல் எண் : 4

அருத்த மும்மனை யாளொடு மக்களும்
பொருத்த மில்லைபொல் லாதது போக்கிடும்
கருத்தன் கண்ணுத லண்ணல்காட் டுப்பள்ளித்
திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.

பொழிப்புரை :

பொருளும் , மனைவியோடு மக்களும் பொருத்தம் இல்லை ; பொல்லாத தீமை போக்கிடும் கருத்தனும் , நெற்றிக் கண்ணுடைய அண்ணலும் ஆகிய காட்டுப்பள்ளித் திருத்தன் சேவடியைச் சென்று சேர்வீராக .

குறிப்புரை :

அருத்தமும் - செல்வமும் . பொருத்தமில்லை - நம்மோடு பொருந்தியன அல்ல . பொல்லாதது போக்கிடும் கருத்தன் - தீயனவற்றை நீக்கியருளும் மூலகாரணன் . திருத்தன் - அழகியன் .

பண் :

பாடல் எண் : 5

சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்
அற்ற போதணை யாரவ ரென்றென்றே
கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப்
பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.

பொழிப்புரை :

சுற்றத்தாரும் துணைவியும் மனைவாழ்க்கையும் , உயிர் உடலைவிட்டு நீங்கியபோது பொருந்தாதவர்கள் என்று , கற்றவர்கள் கருதுகின்ற காட்டுப்பள்ளியில் இடபம் ஏறிய பெருமான் அடி சேர்வீராக .

குறிப்புரை :

துணை - மனைவி . அற்றபோது - உயிர் நீங்கிய காலத்து . அணையார் - நம்மொடு உடன் வாரார் . பெற்றம் - எருது .

பண் :

பாடல் எண் : 6

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.

பொழிப்புரை :

அடும்பும் , கொன்றையும் , வன்னியும் , ஊமத்தமுமாகிய மலர்கள் சூடியிருக்கும் புனைதல் செய்யப்பட்ட சடையுடைய தூமணிச் சோதியானும் , கடம்பணிந்த முருகன் தந்தையும் ஆகிய பெருமானே உடம்பை உடையவர்க்கெல்லாம் உறுதுணை ஆவான் ; ஆதலின் காட்டுப்பள்ளியையே கருதுவீர்களாக .

குறிப்புரை :

அடும்பு - அடம்பமலர் . துடும்பல் - நிறைந்திருத்தல் . தூமணிச்சோதி - தூயமணியினது ஒளியை உடையவன் . கடம்பன் - கடம்பமலர்மாலை சூடிய முருகன் . தாதை - தந்தை . கருதும் - வழிபட்ட . உடம்பினார்க்கு - உடலோடு கூடி வாழ்பவர்களுக்கு . உறுதுணையாகும் - உற்ற துணையாகவுதவும் .

பண் :

பாடல் எண் : 7

மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்
ஐயன் தன்னடி யேயடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

உடம்பில் அழுக்குடையவரும் , உடல் மூடுவாருமாகிய புத்தரது பொய்யை மெய்யென்று கருதிப் புகுந்து அவர்களுடன் வீழாதீர் ; கையின்கண் மான் உடையான் ஆகிய காட்டுப் பள்ளியில் எம் ஐயன் திருவடிகளையே அடைந்து உய்வீராக .

குறிப்புரை :

மெய்யின் - உடலின்கண் . மாசு - அழுக்கு . உடல் மூடுவார் - உள் அழுக்கை மறைத்துப் புறத்தே மூடிக்கொள்வாராகிய புத்தர்கள் . பொய்யை - அவர்கள் மெய்போலக்கூறும் பொய் மொழிகளை . புக்குடன்வீழன்மின் - பலரும் ஒரு சேரப் புகுந்து சென்று விழாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 8

வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்
சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலையேதொழுங் காட்டுப்பள் ளிய்யுறை
நீல கண்டனை நித்தல் நினைமினே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே ! வேலை , அழகால் வென்ற கண்ணை உடைய பெண்டிரை விரும்பி , நீர் ஒழுக்கம் கெட்டுத் திகையாதீர் ; காட்டுப்பள்ளியில் உறையும் திருநீலகண்டனை நித்தமும் நினைந்து காலத்தே சென்று தொழுவீராக .

குறிப்புரை :

வேலை வென்ற கண்ணார் - கூர்மையால் சென்று தைத்தலில் வேலை வெற்றிகொண்ட கண்களை உடைய பெண்கள் . திகையன்மின் - உலகவாழ்விலேயே திகைத்துச் செயலற்று நிற்காதீர்கள் . காலையே தொழும் - உடலில் உயிர் உள்ள காலத்திலேயே தொழுது வணங்குங்கள் . நித்தல் - நாடோறும் .

பண் :

பாடல் எண் : 9

இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்
ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.

பொழிப்புரை :

ஊமர்களே ! இன்றைக்கிருப்பார் நாளைக்கில்லை எனும் பொருள் ஒன்றும் உணராது திரிதருவோரே ! அன்று தேவர்களின் பொருட்டு விடமுண்ட திருக்கழுத்தினரது காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக .

குறிப்புரை :

இன்றுளார் - இன்றைக்கு இருப்பவர் . நாளை இல்லை - மறுநாள் இல்லாதவராவர் . எனும்பொருள் - என்று சொல்லும் பழமொழியின் உண்மைப்பொருள் மொழிகளை . உழி தரும் - திரியும் .

பண் :

பாடல் எண் : 10

எண்ணி லாஅரக் கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வாரவர் தம்வினை நாசமே.

பொழிப்புரை :

நல்லெண்ணமில்லாத இராவணன் மலையை எடுக்க , அவன் திருந்துமாறு திருவுளத்து எண்ணி , அவன் நீண்ட முடிகள் பத்தையும் இறுத்தவனுக்குரிய ஞானக்கண்ணுடையவர் கருதி உணரும் காட்டுப்பள்ளியை நண்ணுவாருடைய வினைகள் நாசம் அடையும் .

குறிப்புரை :

எண்இலா - எண்ணமில்லாத ( நம் செருக்கு இறைவன் திருமுன் நிற்குமா என்ற எண்ணம் ). எண்ணி - இவனை நாம் திருத்துவது நிக்ரகத்தாலன்றியில்லை என்று எண்ணி . இறுத்தவன் - நெரித்தவன் . கண்ணுளார் - அறிவுக்கண் உள்ள சான்றோர்கள் .

பண் :

பாடல் எண் : 1

மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறு மிறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. 

பொழிப்புரை :

சிராப்பள்ளிச் செல்வர், தேன் ஒழுகும் நீண்ட குழலை உடைய உமாதேவியோடு பெரிய விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவர்; பாசக்கட்டு நீத்தவர்க்கு இன்னருளே புரியும் மேலோர்.

குறிப்புரை :

மட்டு - தேன்பொருந்திய. வார் - நீண்ட. மட்டுவார் குழலாள், அம்பிகையின் திருப்பெயர். மால்விடை - திருமாலாகிய இடபம். இட்டமா - விருப்பமாக. உகந்து - மகிழ்ந்து. கட்டு - பந்தபாசமாகிய பிணிப்புக்கள். இன்னருளே - இனிய திருவருளையே; நீத்தவர்க்கே அருள்செயும் எனலுமாம். சிட்டர் - சிஷ்டாசாரம் உடையவர்.

பண் :

பாடல் எண் : 2

அரிய யன்தலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்தொழு தேத்து மரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்தொழ அங்கிருப் பார்களே. 

பொழிப்புரை :

திருமால், அயன் ஆகியோர் தலைகளை வெட்டி வட்டுப்போல் ஆடியவரும், அவ்விருவரும் தொழுது வணங்கும் அரும்பொருளும், பெரியவரும் ஆகிய அப்பெருமானுக்குரிய சிராப் பள்ளியைச் சிந்தையுள் பேணும் அன்பர், திருமாலும் பிரமனும் தொழச் சிவலோகத்திருப்பார்கள்.

குறிப்புரை :

அரி அயன் தலைவெட்டி - திருமால் பிரமன் இவர்களின் தலைகளை வெட்டி. (அவற்றை) வட்டாடினார் - வட்டமாகச் சுழற்றிச் செண்டாடினார். வட்டம் - வட்டு என நின்றது. அம்மானைக் காய்களாகக்கொண்டு அம்மானை ஆடினார். சர்வசங்கார காலத்துத் திருமால் பிரமர் முதலானாரையும் அழிப்பர் என்பது பொருள். அல்லது திருமாலை, நரசிங்க அவதாரமெடுத்த காலையில் அழித்ததையும், பிரமன் தலையைக் கொய்ததையும் குறித்ததாகவும் கொள்ளலாம். அரிய அயன் என்று கொண்டு அரியவனாகிய பிரமன் என்று மட்டும் கொண்டு பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றைக் கொய்த இறைவனது திருவிளையாடலைக் குறித்தது எனலுமாம்.அரியயன் தொழு தேத்தும் - திருமாலும் பிரமனும் தொழுது வணங்கும். அரும்பொருள் - தேடுதற்கரிய பொருளாயிருப்பவன். பேணுவார் - விரும்பி வழி படுவார். அங்கு - தெய்வ உலகின்கண். இருப்பார்கள் - தலைமை தோன்ற அமர்ந்திருப்பார்கள்.

பண் :

பாடல் எண் : 3

அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 

பொழிப்புரை :

நெஞ்சே! ஐம்புலக் கள்வரால் இராப் பகலாக அரிக்கப்பெற்று ஆட்டப்பெற்று வருந்தியிராமல் இருக்க, ஓர் உபாயம் சொல்லக் கேட்பாயாக! திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை பொருந்தி இருக்காமல் உன்னைவிட்டு நடக்கும்; நடக்கும்!

குறிப்புரை :

அரிச்சிராப்பகல். அரித்து இராப்பகல் எனப் பிரிக்க. இரவும் பகலும் வயிற்றுக்காக இங்குமங்கும் சென்று உணவு தேடி. ஐவரால் - ஐம்பொறிகளால். ஆட்டுண்டு - ஆட்டுவிக்கப்பட்டு. சுரிச்சிராது - வருந்தியிராமல்; சுரித்து இராது. இவ்வுலக வாழ்விலேயே சுழன்று நில்லாமல் இருப்பதற்கு. நரிச்சு - தங்கியிராமல். நடக்கும் நடக்கும் - செல்லும் செல்லும் என்க. உறுதியை வெளிப்படுத்த இருகாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 4

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 5

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 6

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 10

தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே. 

பொழிப்புரை :

தாயுமாகி எனக்குத் தலைகண்ணுமாகிப் பேயனேனாகிய என்னையும் ஆட்கொண்டருளிய பெருந்தகையும் தேயங்கட்கெல்லாம் நாதனும் ஆகிய பெருமானைச் சிராப்பள்ளி மேவிய நாயனார் என்று கூறி வாழ்த்த நம்வினை நாசம் அடையும்.

குறிப்புரை :

தாயுமாய் - எனக்குத் தாயாகியும்; தலத்து இறைவர் திருப்பெயர். தலைகண்ணுமாய் - மேலான பற்றுக்கோடாயும். பேயனேனையும் - பேயினது தன்மை பொருந்திய என்னையும்; உம் இழிபு குறித்தது. தேயநாதன் - பலதேசங்களுக்கும் தலைவன். நாயனார் - அடியார் தலைவர். நாசம் - கெடும்.

பண் :

பாடல் எண் : 1

கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

பொழிப்புரை :

காலபாசத்தைப் பிடித்தெழும் யமதூதுவர்கள் இவர் பாலகர் , இவர் விருத்தர் , இவர் பழையவர் என்று கூறிவிட்டுச் செல்லார் ; கல்லால் நிழற்கீழ் அமர்ந்த வாட்போக்கியாரது சீலம் நிறைந்தவரே செம்மையுள் நின்று சிவகதிபெறுவர் .

குறிப்புரை :

காலபாசம் - உயிர்களைக்கொண்டு போவதற்கு எம தூதர் வீசும் கயிறு . தூதுவர் - எமதூதுவர்கள் . பாலகர் - இவர்கள் சிறு பிள்ளைகள் . விருத்தர் - இவர்கள் முதியவர்கள் . பழையார் - நல்ல செயல்களில் அறத்தில் பழகினவர்கள் . எனார் - என்று கருத மாட்டார்கள் . வாட்போக்கியார் - வாட்போக்கி என்னும் தலத்திலே எழுந்தருளிய இறைவனுடைய . சீலம் - தூய்மையை . ஆர்ந்தவர் - மனத்தால் எண்ணியவர் . செம்மையுள் நிற்பர் - எமதூதர்க்கும் அஞ்சாது செம்மையான சிவநெறியிலே எஞ்ஞான்றும் வாழ்வர் .

பண் :

பாடல் எண் : 2

விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்தும் ஏத்தியும் இன்புறு மின்களே.

பொழிப்புரை :

பாவிகளே ! எமன் விடுத்த தூதுவர்கள் வந்து வினைக்குழியிலே படுவித்தபோது கதறிப் புலம்பிப் பயன் இல்லை ; அடுத்த கின்னர இசை கேட்கும் வாட்போக்கியை எடுத்தேத்தி இன்புறுவீர்களாக .

குறிப்புரை :

விடுத்த - எமனால் அனுப்பப்பட்ட . வினைக்குழிப் படுத்தபோது - நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நரகக்குழியின் கண் போதரும் போதின்கண் . தேற்றம் - தெளிவு . தெளிவுறலாகுமே - நாம் இந்நாள்வரை அறிந்தன பொய் ; உண்மை இறைவன் திருவடிகளே என்ற தெளிவு ஏற்படும் .

பண் :

பாடல் எண் : 3

வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி நரகத் திடாமுனம்
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார்
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.

பொழிப்புரை :

வந்து இவ்வாறு வளைத்தெழுகின்ற எமதூதுவர்கள் மனம் உந்துதலால் ஓடி நரகத்து இடுவதன் முன்னம் அந்தியின் செவ்வொளி தாங்கிய மேனியராகிய வாட்போக்கியிறைவர் தம்மைச் சிந்தித்து எழுவார்களின் வினை தீர்ப்பர் .

குறிப்புரை :

இவ்வாறு - இவ்விடம் . உந்தி - நும்மைச் செலுத்தி . அந்தியின்னொளி - செவ்வொளி .

பண் :

பாடல் எண் : 4

கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே
ஆற்ற வும்மருள் செய்யும்வாட் போக்கிபால்
ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.

பொழிப்புரை :

எமன் வந்து அழித்திடும்போதில் முடிவு வந்து தெளிவுறல் ஆகாதன்றோ ? மிகவும் அருள்செய்யும் வாட்போக்கி இறைவர்பால் விளக்கை இருள் நீங்க ஏற்றுவீராக .

குறிப்புரை :

தேற்றம் - உறுதி . விளக்கு - அறிவு . இருள் - அறியாமை . ஏ , அசை . ஆற்றவும் ஏற்றுமின் - இயன்ற அளவு இறை ஒளியை உள்ளத்தில் ஏற்றுங்கள் . இருள் நீங்க - அறியாமையாகிய இருட்டுக்கெட . விளக்கு - சிவம் .

பண் :

பாடல் எண் : 5

மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க்
கூறி யூறி யுருகுமென் னுள்ளமே.

பொழிப்புரை :

மாறுபாடுகொண்டு வளைத்தெழும் எமதூதுவர் உடல் வேறு உயிர் வேறு படுப்பதன்முன்பே , கங்கையைச் சிவந்த சடையில் வைத்த வாட்போக்கி இறைவர்க்கு என் உள்ளம் ஊறி ஊறி உருகும் .

குறிப்புரை :

மாறுகொண்டு - பிரம்பைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து . வளைத்துஎழு - எங்கு இருந்தாலும் உயிர்களை வளைத்துப் பிடித்துப் புறப்படுகின்ற . வேறுவேறு படுப்பதன் முன்னம் - உயிரையும் உடலையும் வேறுவேறாய்ப் பிரிப்பதன் முன்பாக . ஊறி ஊறி - அன்பு சுரந்து சுரந்து .

பண் :

பாடல் எண் : 6

கான மோடிக் கடிதெழு தூதுவர்
தான மோடு தலைபிடி யாமுனம்
ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார்
ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.

பொழிப்புரை :

இடுகாட்டிற்கு ஓடி , விரைந்து எழுந்த எம தூதுவர் இடத்தோடு தலையைப்பிடிப்பதற்கு முன்பே , பஞ்சகவ்வியம் ஆடுதலை உகந்த வாட்போக்கி இறைவர் , குற்றமற்றவர்க்கு உண்மையில் முன்னின்றருள்வர் .

குறிப்புரை :

கானம் ஓடி - இடுகாட்டுக்குச் சென்று . கடிது எழு - விரைந்து எழும் . தானமோடு தலைபிடியாமுனம் - நாம் வாழும் இடத்தின்கண் வந்து நம்முடைய தலைகளைப்பற்றி உயிர்கொண்டு போவதற்கு முன்பே . ஆனஞ்சாடி - பஞ்சகவ்விய அபிடேகம் கொண்டவன் . உகந்த - மகிழ்ந்து எழுந்தருளிய . ஊனம் - இருவினைக் குற்றம் . உண்மையில் நிற்பர் - உண்மையாகத் தோன்றி அருள்செய்வர் .

பண் :

பாடல் எண் : 7

பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர்
கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார்
கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.

பொழிப்புரை :

பார்த்துப் பாசம் பிடித்தெழுந்த எமதூதுவர் கூரிய வேலாற்குத்தி வருத்துவதன் முன்பே , ஆரவாரித்த கங்கையைச் சடையில் அடக்கும் வாட்போக்கி இறைவர் புகழ்த்தன்மைகளை உள்ளம் கிளர்ந்து உரைப்பீராக .

குறிப்புரை :

பார்த்து - வாழ்நாள்களைக் கணக்கிட்டுப்பார்த்து . பாசம் - கயிறு . கூர்த்தவேலால் - கூரிய சூலத்தால் . குமைப்பதன் முன் - அழிப்பதற்கு முன்பே . ஆர்த்த - ஆரவாரித்துவந்த . அடக்கும் - சடையின்கண் கொண்டு அதன் வேகத்தைக் குறைத்த . கீர்த்திமைகள் - புகழ்கள் . கிளர்ந்து - விரித்து .

பண் :

பாடல் எண் : 8

நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாட லுகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.

பொழிப்புரை :

எமனைச் சார்ந்தோராகிய தூதுவர் நாடிவந்து , நள்ளிருளில் தாம் பலராய்க் கூடிவந்து வருத்துவதன் முன்பே , ஆடல் பாடல் உகந்த வாட்போக்கி இறைவரை வாடி வழிபட நம்வாட்டம் தீரும் .

குறிப்புரை :

நாடி - தேடி . நமன்தமர் - எமதூதர் . நல்லிருள் - நல்ல நடு இரவில் . கூடிவந்து - சேர்ந்துவந்து . குமைப்பதன்முன் - நம் உயிரை வருத்திக்கொண்டு போகுமுன்னே . ஆடல் பாடல் உகந்த - ஆடுதல் பாடுதல் ஆகிய கலைகளில் விருப்பமுடைய . வாடி - வருந்திச் சென்றடைந்து . ஏத்த - தோத்திரிக்க . வாட்டம் - துன்பம் . தவிரும் - நீங்கும் .

பண் :

பாடல் எண் : 9

கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே
அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க்
கிட்ட மாகி இணையடி யேத்துமே.

பொழிப்புரை :

கட்டுக்களை அறுத்து விரைந்து எழுந்த எம தூதுவர்கள் புறப்படுவதற்கு முன்பே , எட்டுப் பூக்களைச் சூடும் வாட் போக்கி இறைவர்க்கு விருப்பம் உடையவராகித் திருவடி ஏத்துவீராக .

குறிப்புரை :

கட்டுஅறுத்து - நாம் இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டுள்ள பிணிப்பை நீக்கி . கடிதுஎழு - விரைவாய்ப் புறப்பட்டு வரும் . பொட்ட நூக்கிப் புறப்படாமுன்னம் - உயிரைக் கவரும் நோக்கோடு விரைந்து வருமுன் . அட்ட மாமலர் - எட்டுமலர்கள் . இட்டமாகி - விருப்பத்தை உடையவராகி . இணையடி - இரண்டு திருவடிகளை . ஏத்தும் - வணங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 10

இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.

பொழிப்புரை :

இரக்கமென்பதை முன்னும் அறியாது எழுந்த எமதூதுவர்கள் பரவிவந்து அழித்துப் பற்றிக்கொள்வதற்கு முன்பே , இராவணனுக்கு அருள்செய்த வாட்போக்கி இறைவர் அவர்கட்கு அகப்படாமல் தம்மடியாரை ஒளிக்கவும் ஒளிப்பர் .

குறிப்புரை :

இரக்கம் முன்னறியாது எழு - இரக்கம் என்பதையே நம்முன் அறியாது வருகின்ற . பரக்கழித்து - இகழ்ந்து , பழித்து . பற்றுதல் முன்னமே - நம்மைப் பிடித்துக்கொண்டு போகுமுன்பாகவே . அரக்கன் - இராவணன் . கரப்பாரவர் தங்கட்குக் கரப்பதும் - கரப்பாரவர் தங்கட்கே கரப்பார் .

பண் :

பாடல் எண் : 1

பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறும்
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.

பொழிப்புரை :

பட்டமணிந்த நெற்றியினரும் , பாயும் புலியின் தோலை உடுத்தவரும் , நாள்தொறும் நட்டமாடி நின்று பாடுவோரும் , உயர்ந்தவர் வாழ்கின்ற திருவுடைய மணஞ்சேரியில் வட்டமாகிய வார்சடை உடைய எமது பெருமானுமாகிய இறைவர் வண்ணத்தை வாழ்த்துவீராக .

குறிப்புரை :

பட்டநெற்றியர் - பட்டமணிந்த நெற்றியினை உடையவர் . பாய்புலித்தோலினர் - பாய்கின்ற புலியினது தோலை அணிந்தவர் . நாடொறும் நட்டம் நின்று நவில்பவர் - நாள்தோறும் நின்று நடனம் இயற்றுபவர் . வட்டவார்சடை - வட்டமாகக் கட்டிய நீண்ட சடையினை உடையவர் . வண்ணம் - தன்மை .

பண் :

பாடல் எண் : 2

துன்னு வார்குழ லாளுமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின வோயுமே.

பொழிப்புரை :

நெருங்கிய நீண்ட கூந்தலை உடைய உமா தேவியோடு கூடியவரும் , பின்னிய நீண்ட சடைமேற் பிறையை வைத்தவரும் ஆகிய நிலைபெற்ற நீண்ட புகழை உடைய திருமணஞ் சேரியில் மருந்தாம் பெருமானை உள்ளத்தே உன்னுவார்களின் வினைகள் ஓயும் .

குறிப்புரை :

துன்னு - நெருங்கிய . வார் - நீண்ட . குழலாள் - கூந்தலை உடையவளாகிய . பின்னு - ஒன்றோடொன்று பின்னிய . மன்னுவார் - எழுந்தருளியவராகிய . மணஞ்சேரி மருந்தினை - திருமணஞ் சேரியில் எழுந்தருளிய மருந்து போல்வானை . உன்னுவார் - நினைப்பவர்கள் . வினையாயின - பழவினைகளானவை . ஓயும் - ஒழியும் .

பண் :

பாடல் எண் : 3

புற்றி லாடர வாட்டும் புனிதனார்
தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.

பொழிப்புரை :

புற்றிற் பொருந்திய அரவினை ஆட்டும் புனிதரும் , எல்லை மீறிய முப்புராதிகளின் கோட்டைகளைத் தீயெழச் சினந்தவரும் , சுற்றிலும் நெருங்கிய மதில் சூழ்ந்த மணஞ்சேரி உறைபவருமாகிய இறைவரைப் பற்றினார்க்கு அவர் பற்றாவர் ; காண்பீராக .

குறிப்புரை :

ஆடரவு - ஆடுகின்ற பாம்பு . ஆட்டும் - ஆடச்செய்யும் . புனிதனார் - தூயவர் . தெற்றினார் - உலகங்களையெல்லாம் அழித்து வந்தவராகிய ( திரிபுராரிகளின் ). புரம் - கோட்டைகளை . தீயெழ - நெருப்புப்பற்ற . செற்றவர் - அழித்தவர் . சுற்றினார் மதில் - சுற்றிலும் பொருந்திய மதில்கள் . பற்றினாரவர்பற்று அவர் - நிலையாகக் கொண்டவர்களுடைய பற்றுக்கோடு அவரே .

பண் :

பாடல் எண் : 4

மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை
முத்தர் முக்கணர் மூசர வம்மணி
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம்
வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.

பொழிப்புரை :

ஊமத்தமலரும் , பிறையும் வளருஞ் சிவந்த சடையை உடைய முத்தி நாயகரும் , முக்குணங்களை உடையவரும் , ஒலிக்கும் அரவம் அணிந்த சித்தரும் , தீயின்வண்ணம் உடையவரும் , பெருமைமிக்க மணஞ்சேரியில் வித்தாயிருப்பாருமாகிய இறைவர் தம்மை விரும்பியவரைத் தாம் விரும்புபவர் ஆவர் .

குறிப்புரை :

மத்தம் - ஊமத்தமலர் . செஞ்சடைமுத்தர் - சிவந்த சடையினையுடைய முத்திக்குரியவர் . முக்கணர் - மூன்று கண்களை உடையவர் . மூசு அரவம் - உடலில் மொய்க்கும் பாம்பை ( அணிந்த ). தீவணர் - நெருப்புப்போன்ற சிவந்த நிறத்தை உடையவர் . வித்தர் - வித்தகர் ; அறிவே வடிவானவர் . விருப்பாரை விருப்பர் - தன்னை விரும்புவாரை விரும்புபவர் .

பண் :

பாடல் எண் : 5

துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்
அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம்
வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ் வாவதே.

பொழிப்புரை :

துள்ளும் மான்குட்டியையும் , தூய மழு வாளினையும் உடையவரும் , சடைமேற் கங்கையை மறைத்தவரும் ஆகிய சேறு நிறைந்த வயல் சூழ்ந்த மணஞ்சேரியில் உறையும் வள்ளலார் கழல்களை வாழ்த்தலே வாழ்வாவது .

குறிப்புரை :

துள்ளும் - துள்ளிச்செல்லும் . மான்மறி - மான்குட்டி . தூமழுவாள் - தூயமழுவாகிய வாள் . வெள்ளநீர் - வெள்ளமாக வந்த கங்கை நீரை . கரந்தார் - மறைத்துவைத்தார் . சடைமேல் அவர் எனப் பிரிக்க . அள்ளல்ஆர் - சேறு பொருந்திய . வாழ்த்தலே வாழ்வு ஆவது என்க .

பண் :

பாடல் எண் : 6

நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல்
ஊர்ப ரந்த உரகம் அணிபவர்
சீர்ப ரந்த திருமணஞ் சேரியார்
ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.

பொழிப்புரை :

கங்கைநீர் பரவி நிமிர்ந்து விளங்கும் சடையின் மேல் ஊர்ந்து பரவுகின்ற பாம்பினை அணிந்தவராகிய பெருமை பரவிய திருமணஞ்சேரி இறைவர் எழில் பெருகி விளங்கும் சூலப் படையினை உடையவர் .

குறிப்புரை :

நீர் பரந்த - கங்கைநீர் பரவிய . நிமிர் புன்சடை - நிமிர்ந்த மெல்லிய சடை . ` நீர் பரந்த நிமிர்புன்சடை மேலோர் நிலாவெண்மதி சூடி ` ( தி .1 ப .1 பா .3.) ஊர் பரந்த - ஊரின்கண் பரவி வந்த . உரகம் - பாம்பு . ஏர்பரந்த அங்கு - அழகு பெருகிய அவ்விடத்து . இலங்கு - விளங்கு . சூலத்தர் - சூலத்தை உடையவராய் எழுந்தருளியுள்ளார் .

பண் :

பாடல் எண் : 7

சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார்
விண்ணத் தம்மதி சூடிய வேதியர்
மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார்
வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.

பொழிப்புரை :

சுண்ணம் பூசியவரும் , சுட்ட வெண்ணீற்றினை உகந்து ஆடுபவரும் , விண்ணின் மதியைச் சூடிய வேதியரும் ஆகிய மார்ச்சனை பொருந்திய முழவு ஆர்க்கும் மணஞ்சேரி உறையும் இறைவர் , நிறம் உடைய முலையாளாகிய உமையின் வண்ணம் உடையவர் ஆவர் .

குறிப்புரை :

சுண்ணத்தர் - திருநீற்றுப்பொடி அணிந்தவர் . சுடுநீறு - சாம்பல் . உகந்து - மனமகிழ்ந்து . ஆடலார் - ஆடுபவர் . விண்ணத்து - ஆகாயத்தே உள்ள . அம்மதி - அழகிய சந்திரன் . மண்ணத்தம்முழவு - மார்ச்சனையிடப்பட்ட ஒலி பொருந்திய முழவு . வண்ணத்து அம்முலை - நல்ல நிறத்தோடு கூடிய அழகிய தனங்கள் . உமை வண்ணர் - உமையை ஒரு கூற்றிலே பொருந்திய தன்மையர் .

பண் :

பாடல் எண் : 8

துன்ன வாடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம்
மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.

பொழிப்புரை :

பின்னிய நூலாடையினரும் , தூயமழு வாளினரும் , பின்னிய சிவந்த சடையின்மேல் பிறை வைத்தவரும் ஆகிய , நிலை பெற்ற நீண்ட பொழில்கள் சூழும் மணஞ்சேரி உறையும் மன்னனார் கழலே தொழ வாய்ப்பாவது .

குறிப்புரை :

துன்ன ஆடையர் - ஆடை உடுத்தியவர் . தூமழுவாளினர் - தூய மழுவாகிய வாளை உடையவர் . பின்னு - பின்னிய . மன்னு - நிலைபெற்ற . வார் - நீண்ட . மன்னனார் - தலைவனார் . கழலே - திருவடிகளையே . தொழ - வணங்க . வாய்க்கும் - நமக்கு வேண்டுவன எல்லாம் உண்டாகும் .

பண் :

பாடல் எண் : 9

சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேரமண் கையர் புகழவே
மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம்
அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

சித்தர்களும் , தேவர்களும் , திருமாலும் , நான்முகனும் , புத்தரும் , உடையற்றவராய சமண ஒழுக்கத்தினரும் புகழ , உலக மையலிற்பட்டவர் அறியாத மணஞ்சேரி மேவிய எம் தலைவரது அடியார்க்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

சேர் - புத்தமதத்தினரோடு சேர்ந்த . தேர் எனவும் பாடம் . அமண்கையர் - அமண ஒழுக்கத்தினை உடையவர் . மத்தர்தாம் அறியார் - சித்தர் , தேவர் , மால் , நான்முகன் முதலானோர் புகழவும் புத்தர் அமண்கையர் முதலான உன்மத்தர் அறியார் . மத்தர் தாம் - ஊமத்த மலர் அணிந்தவராய இறைவர் தம்மை . அல்லல் - துன்பம் .

பண் :

பாடல் எண் : 10

கடுத்த மேனி யரக்கன் கயிலையை
எடுத்த வன்னெடு நீண்முடி பத்திறப்
படுத்த லும்மணஞ் சேரி யருளெனக்
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.

பொழிப்புரை :

ஆற்றல் மிகுந்த இராவணன் திருக்கயிலையை எடுத்தபோது அவன் நீண்ட முடிகள் பத்தும் இற்றுவிழச்செய்தலும் , ` மணஞ்சேரி இறைவா ! அருள்வாயாக ` என்று அவன்கூவ அவனுக்கு வெற்றிதரும் வாளையும் , நாமத்தையும் கொடுத்தனன் பெருமான் .

குறிப்புரை :

கடுத்த - வெறுக்கத்தக்க . மேனி - உடல் . அரக்கன் - இராவணன் . நெடுநீண்முடி - மிகப்பெரிய நீண்ட திருமுடி . இற - நொறுங்க . படுத்தலும் - செய்தலும் . மணஞ்சேரி அருள் என - மணஞ்சேரி இறைவனே அருள்செய்வாய் என்று வேண்ட . கொற்றவாளொடு நாமம் - வெற்றிபொருந்திய சந்திரகாசம் என்ற வாளையும் இராவணன் என்ற திருப்பெயரையும் .

பண் :

பாடல் எண் : 1

பெருக லாந்தவம் பேதைமை தீரலாம்
திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோ ரானந்தம்
மருக லானடி வாழ்த்தி வணங்கவே.

பொழிப்புரை :

மருகல் இறைவன் திருவடி வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகலாம் ; அறியாமை தீரலாம் ; மாறுபட்டதாகிய சிந்தை திருத்தலாம் ; கடவுண்மயமாகிய ஒப்பற்ற பேரானந்தத்தைப் பருகலாம் .

குறிப்புரை :

தவம் பெருகலாம் - தவம் பெருகுதல் உண்டாகும் . வணங்கவே தவம் பெருகல் ஆகும் . சிந்தை திருத்தல் ஆகும் , பருகல் ஆகும் என்க . பேதைமை - அறியாமை . தீரலாம் - நீங்குதல் உண்டாகும் . திருகல் - மாறுபட்ட எண்ணம் . சிந்தை - மனம் . திருத்தலாம் - அம்மாறுபாட்டுத் தன்மையை நீக்கித் தூய்மை செய்யலாம் . பரமாயதோர் ஆனந்தம் பருகலாம் - மேலானதொரு இன்பத்தை உண்ணலாம் . மருகலில் எழுந்தருளிய இறைவன் திருவடிகளை வாழ்த்தி வணங்க இவை உண்டாகும் என்க .

பண் :

பாடல் எண் : 2

பாடங் கொள்பனு வல்திறங் கற்றுப்போய்
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்திரு
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.

பொழிப்புரை :

பாடங்கொண்ட நூல் திறங்களையெல்லாம் கற்றுப்போய் நாட்டில் உள்ளன எல்லாம் பொருந்திய நாணமற்றீரே ! மாடங்கள் சூழ்ந்த மருகற் பெருமானின் திருவேடத்தைக் கைகளால் தொழுதால் வீட்டுலகமும் உமக்கு எளிதாகும் .

குறிப்புரை :

பாடங்கொள்பனுவல் திறம் - பல கலைப் பிரிவுப் பாடங்களைக்கொண்ட வேதம் முதலிய நூல்களின் தன்மையாய அபர ஞானம் . கற்றுப்போய் - கற்றுச்சென்று . நாடங்குள்ளன - பல நாடுகளிலும் சென்று . தட்டிய - பொருந்திய . நாணிலீர் - பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் பிரானடி பேணாதொழிந்தமையால் வெட்கமில்லாதோரே . மாடஞ் சூழ் - மாடவீடுகள் சூழ்ந்த . மருகற்பெருமான் - திருமருகலில் எழுந்தருளிய பெருமானது . திருவேடம் - அழகிய தோற்றத்தை .

பண் :

பாடல் எண் : 3

சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை
அனைத்து நீங்கிநின் றாதர வாய்மிக
மனத்தி னால்மரு கற்பெரு மான்திறம்
நினைப்பி னார்க்கில்லை நீள்நில வாழ்க்கையே.

பொழிப்புரை :

கோபத்தினால் வருகின்ற செய்யப்படுவதான தொழில்களாகிய பிற தீச்செயல்கள் அனைத்தையும் நீங்கி நின்று ஆதரவாகி உள்ளத்தினால் மருகல் பெருமானாகிய இறைவன் திறத்தை நினைப்பவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை .

குறிப்புரை :

சினத்தினால் - கோபம் முதலியவைகளினால் . வரும் - உண்டாகும் . செய்தொழிலாமவை அனைத்தும் - தீக்குணங்களால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் . மிக ஆதரவாய் - மிக்க அன்பாய் . திறம் - தன்மை . நினைப்பார்க்கு - நினைப்பவர்களுக்கு . நீள் நில வாழ்க்கை இல்லை - வீடு பேற்றின்கண் வாழ்தல் உண்டாம் .

பண் :

பாடல் எண் : 4

ஓது பைங்கிளிக் கொண்பா லமுதூட்டிப்
பாது காத்துப் பலபல கற்பித்து
மாது தான்மரு கற்பெரு மானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.

பொழிப்புரை :

இப்பெண் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைக்கு ஒள்ளிய பால் அமுது ஊட்டிப் பின் அதனைப் பாதுகாத்துப் பலபல வார்த்தைகளை அதற்குக் கற்பித்து மருகற் பெருமானுக்குத் தூது சொல்லிவிடத் தொடங்குகின்றாள் .

குறிப்புரை :

ஓது - சொன்னது கேட்டுப் பதிகங்களையும் வேதங்களையும் பேசுகின்ற . பைங்கிளிக்கு - பச்சைக்கிளிக்கு . ஒண்பால் அமுது ஊட்டி - சிறந்த பால் உணவை உண்பித்து . அட்டி எனவும் பாடம் , பாதுகாத்து - அதைப் பறந்து போகாமலும் இறந்து போகாமலும் பேணி . மாதுதான் - மருகற்பெருமான்மேல் காதல்கொண்ட ஒரு பெண் . தான் இரண்டும் அசை .

பண் :

பாடல் எண் : 5

இன்ன வாறென்ப துண்டறி யேனின்று
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்
மன்னு தென்மரு கற்பெரு மான்திறம்
உன்னி யொண்கொடி யுள்ள முருகுமே.

பொழிப்புரை :

நிலைபெற்ற அழகிய மருகல் இறைவன் திறமே நினைந்து இப்பெண் கொடியாளாகிய தலைவி உள்ளம் உருகுகின்றாள் ; நெருங்கிய கைவளைகள் சோர நின்று கண்ணீர் மல்குகின்றாள் ; இதனைத் தீர்ப்பது இன்ன வழி உண்டு என்பது அறியேனாயினேன் யான் .

குறிப்புரை :

செவிலி கூற்று . இன்னவாறு என்பது - இன்ன தன்மையினால் ( இப்பெண் கைவளை சோரக் கண்ணீர் சொரிதலாகிய ) இது நிகழ்ந்தது என்பது . உண்டு - ஓர் காரணம் இருக்கிறது . அறியேன் - அது இன்னது என்பதை நான் அறியாதவளாயிருக்கிறேன் . இன்று - இற்றைய நாள் . துன்னு - நெருங்கிய . கைவளை - கையின்கண் அணிந்த வளையல்கள் . சோர - கழன்றுவிழ . கண்நீர் மல்கும் - கண்களில் நீர் துளிர்ப்பாள் ( இத் தலைவி ). மன்னு - நிலைபெற்ற . தென் - காவிரியின் தென்கரைத் திசையில் உளதாய அல்லது அழகிய . திறம் - தன்மைகளை . உன்னி - எண்ணி . ஒண் கொடி - சிறந்தகொடி போன்றவளாகிய தலைவி . உள்ளம் - மனம் .

பண் :

பாடல் எண் : 6

சங்கு சோரக் கலையுஞ் சரியவே
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும்
அங்க வீதி யருகணை யாநிற்கும்
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே.

பொழிப்புரை :

பெண்களே ! தன் சங்கு வளையல்கள் நெகிழவும் , உடை சரியவும் இம்மங்கைதான் , மருகல் இறைவன் திருவீதியுலா வருகின்ற அங்க வீதியின் அருகு நாளும் அணைந்து நிற்பாள் ; நான் இதற்கு என்னசெய்வேன் ?

குறிப்புரை :

சங்கு - சங்கினால் அறுத்துச்செய்த வளையல்கள் . சோர - கழன்றுவிழ . கலை - ஆடை . சரிய - இடையினின்றும் அவிழ . மங்கை - மருகற்பெருமான் மேல் காதல் கொண்ட அம்மங்கை . வரும் - உலாவரும் . அங்கவீதி - பிரதானத்திருவீதி . அருகு - சமீபத்தில் . அணையாநிற்கும் - நெருங்கிவரும் . நாளும் - நாடோறும் . ஏ , அசை . நங்கைமீர் - தோழியர்களே .

பண் :

பாடல் எண் : 7

காட்சி பெற்றில ளாகிலுங் காதலே
மீட்சி யொன்றறி யாது மிகுவதே
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத்
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே.

பொழிப்புரை :

என் பெண் மாட்சிகள் நிறைந்த மருகற்பெரு மானுக்கு மனம் தாழும் விருப்பம் மிகவும் உண்டாயினள் ; அவனைக் காணும் காட்சியைப் பெற்றிலள் ஆயினும் காதலினின்று மீளுகைக்கு ஒன்றும் அறியாதவள் ஆகி அவ்விருப்பமே மிகுந்தது .

குறிப்புரை :

காட்சி பெற்றிலளாயினும் - கண்களால் காணும் வாய்ப்பைப் பெறாவிட்டாலும் . காதல் - ஆசை . ஏ , அசை . மீட்சி ஒன்றறியாது - மீளும் வழி ஒன்றையும் அறியாமல் . மிகுவதே - பெருகுகின்றதே . மாட்சி - நற்குண நற்செயல்கள் ; உடையவர் வாழும் மருகல் என்க . மாட்சியாராகிய மருகற்பெருமான் எனலுமாம் . தாழ்ச்சி - விருப்பம் . சால உண்டாகும் - பெரிதும் உண்டாகும் . என்தையல் - என் பெண் .

பண் :

பாடல் எண் : 8

நீடு நெஞ்சுள் நினைந்துகண் நீர்மல்கும்
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்
மாடம் நீள்மரு கற்பெரு மான்வரில்
கூடு நீயென்று கூட லிழைக்குமே.

பொழிப்புரை :

நெஞ்சுக்குள் நீள நினைந்து கண்ணீர் மல்கி ஓடும் மயக்கத்தினோடு இவ்வொண் தொடியணிந்த பெண் , மாடங்கள் நீண்டுயர்ந்த மருகல் இறைவன் வரின் நீ கூடு என்று கூடல் இழைத்து வருந்துவாள் .

குறிப்புரை :

நெஞ்சுள் நீடு நினைந்து என மாறுக . நெஞ்சுள் - மனத்தினுள் . நீடு - நெடிதாக . கண் நீர் மல்கும் - கண்களிலிருந்து நீரைச்சிந்தும் . ஓடும் - நீங்கத்தகும் . மாலினோடு - மயக்கத்தோடு . ஒண்கொடி - ஒள்ளிய கொடி போன்ற . மாதராள் - தலைவி . மாடம் நீள் - மாடவீடுகள் நீண்டுள்ள . மருகற்பெருமான் வரில் - திருமருகலில் எழுந்தருளிய என் காதலனாகிய பெருமான் என்னைத் தேடி வருவானேயானால் , நீ கூடு - நீ கூடுவாயாக . கூடலிழைக்கும் - கண்ணை மூடிக்கொண்டு தான் எண்ணிய காரியம் பலிக்குமா என்பதை அறிய வட்டமிட்டுப் பார்த்து . அக்கூடல் முனை இரண்டும் கூடின் பலிதம் என அறிவது , ` ஆழிதிருத்திச் சுழிக்கணக்கோதி ` ( தி .8 திருக்கோவையார் 186).

பண் :

பாடல் எண் : 9

கந்த வார்குழல் கட்டிலள் காரிகை
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.

பொழிப்புரை :

மணம் வீசும் நீண்ட கூந்தலை முடியாதவளாய் இப்பெண் , மால்விடையோடும் மிக்க அன்பாய் ` மருகற்பெருமானே ! வந்திடாய் !` என்று சிந்தித்து வாராமையாற் பின்னும் திகைப்பாள் ; காண்பீராக .

குறிப்புரை :

கந்தம் - மணம் பொருந்திய . வார் - நீண்ட . குழல் - கூந்தல் . கட்டிலள் - முடித்தாளில்லை . காரிகை - தலைவி . அந்தி - அந்திப்பொழுதின்கண் . மால் விடையோடும் - திருமாலாகிய இடபத்தோடும் . அன்பாய் - காதலாய் . வந்திடாய் - வருவாயாக . மருகற்பெருமானே வந்திடாய் என்று என்க . சிந்தைசெய்து - மனத்தினால் எண்ணி . திகைத்திடும் - திகைப்பெய்தி நிற்கும் .

பண் :

பாடல் எண் : 10

ஆதி மாமலை யன்றெடுத் தானிற்றுச்
சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும்
ஆதி யான்மரு கற்பெரு மான்திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கு மும்பரே.

பொழிப்புரை :

ஆதியிற்றோன்றிய திருக்கயிலாயத் திரு மலையினை அன்று எடுத்தவனாகிய இராவணன் தலை இற்றுச் ` சோதியே ` என்று கூறுதலும் , பழைய அருள் புரிந்திடும் ஆதியானாகிய மருகற்பெருமான் திறத்தையே ஓதி வாழ்பவர் தேவர்க்கும் தேவராவர் .

குறிப்புரை :

ஆதி - முதன்மையான. மாமலை - பெருமைக்குரிய திருமலை. அன்றெடுத்தான் - தான் வாகீசராய் வலம்வந்த அக் காலத்துத் தூக்கியவன். இற்று - அங்கங்கள் நெரிந்து. சோதி - ஒளி வடிவானவனே. உம்பர்க்கும் உம்பர் - தேவர்களால் வணங்கப்படும் தேவர்.

பண் :

பாடல் எண் : 1

ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமை யோடும் உடுத்தது
ஒன்று வெண்தலை யேந்தியெம் உள்ளத்தே
ஒன்றி நின்றங் குறையு மொருவனே.

பொழிப்புரை :

வெண்தலை ஒன்று ஏந்தி எம் உள்ளத்தே ஒன்றிநின்று அங்கு உறையும் ஒருவனாம் இறைவன் வெண் பிறையாகிய கண்ணி ஒன்று உடையவன் ; உமையோடும் உடுத்தது ஒரு கிழிந்த கோவண உடை .

குறிப்புரை :

கண்ணி - தலைமாலை . வெண்பிறையாகிய தலை மாலை ஒன்று . இடையிலணிந்தது ஓர் கோவணம் என்க . ஒன்று - பொருந்திய . கீள் - கோவணத்தொடு சேர்த்துக் கட்டப்படும் அரை நாண்துணி . உமையொடு கூடியவனாயிருந்தும் உடுத்தது கோவணத் தொடு கூடிய கீள் ஒன்றே என்க . வெண்தலை ஒன்றை என ஐயுருபு விரிக்க . ஒன்றி - பொருந்தி . ஏந்தி உள்ளத்து உறையும் ஒருவன் ஒன்றாகிய வெண்பிறைக் கண்ணியுடன் உடுத்தது ஓர் கோவணம் ஒன்றிய கீள் என வினை முடிவு காண்க .

பண் :

பாடல் எண் : 2

இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில்
இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள்
இரண்டு மில்லிள மானெமை யாளுகந்
திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே.

பொழிப்புரை :

அவர்க்கு உள்ளனவாகிச் செய்யுந்தொழில்கள் இரண்டு ; அவர்க்கு உள்ளனவாகிய கோலங்கள் இரண்டு ; எமை ஆளாகக்கொண்டு உகந்து இரவும் பகலும் என் சிந்தையுள் தங்கியிருக்கும் .

குறிப்புரை :

அவர்க்கு - அப்பெருமானுக்கு . உள்ளன - இயல்பாக உள்ளனவாகிய . செய்தொழில் - செய்தொழில்கள் . இரண்டு - பந்தம் , வீடு . உயிர்கட்குப் பந்தம் வீடு என்றவற்றைச் செய்தல் . கோலங்கள் இரண்டு - சிவம் , சக்தி . இல் இளமான் - கங்கையும் , உமையுமாகிய மனைவியர் இருவர் . இரண்டு போது - நினைப்பு மறப்பு ; பெத்தம் முத்தி ; பகல் இரவு .

பண் :

பாடல் எண் : 3

மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்
மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழின் மூன்றினன்
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.

பொழிப்புரை :

மும்மூர்த்திகளுள் நின்று இயலுகின்ற தொழில் மூன்றும் உடையவன் ; மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவன் ; மூன்று கண்ணினன் ; தீத்தொழில் மூன்றுடையவன் ; மூன்றுபொழுதும் என் சிந்தையுள் மூழ்கியிருப்பான் .

குறிப்புரை :

மூன்று மூர்த்தி - அரி , அயன் , அரன் . மூர்த்தியுள் நின்று - மூவரை அதிட்டித்து நின்று . இயலும் - செய்விக்கும் . தொழில் மூன்று - படைத்தல் , காத்தல் , அழித்தல் . மூவிலைச் சூலம் - முத்தொழிலுக்கும் தானே முதல்வனாம் அடையாளம் ; ` மூவிலை ஒருதாட் சூல மேந்துதல் மூவரும் யானென மொழிந்தவாறே ` ( ஒற்றி - ஒருபா ஒருபஃது . 5.11.12) மூன்று கண் - சூரியன் , சந்திரன் , அக்கினி . தீத் தொழில் - வேள்வி . ` தொலையா நிதிய மெய்தித் தந்தையைத் தீத் தொழில் மூட்டியகோன் ` ( தி .11 ஆளுடைய பிள் . திருவந் . 85) தீத்தொழில் மூன்று - ஆகவனீயம் , காருக பத்யம் , தாக்ஷிணாக்கினி என்ற மூவேள்விகள் . மூன்றுபோது - முற்பகல் , நண்பகல் , பிற்பகல் . ` முட்டாத முச்சந்தி ` ` சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்திறைஞ்சு `. ( தேவாரம் .)

பண் :

பாடல் எண் : 4

நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்
நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம்
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி
நாலு போலெம் அகத்துறை நாதனே.

பொழிப்புரை :

எம் உள்ளத்து உறையும் இறைவன் நான்கின் மேலும் ஒருமிகைமுகமாகிய பிரமனது ஐந்தாவது முகத்தைச் சினந்தவன் ; நிலைபெற்ற ஆல நிழலில் நன்கு உணர்ந்திட்ட வேதங்கள் நான்கினை உடையவன் ; இன்பமாகிய நான்கு வேதங்களையே குதிரைகளாகக் கொண்டவன் ; நல்ல நெறி சரியை முதலிய நான்கு ஆகும் .

குறிப்புரை :

நாலின்மேல் முகம் - பிரமனது நான்கு முகங்களுக்கும் அதிகமாய் நின்ற ஐந்தாம் முகம் . செற்றது - கிள்ளியழித்தது . மன்நிழல் - கல்லாலின்கீழ் மன்னிய நிழல் . நன்கு உணர்ந்திட்டது நாலும் - நன்கு உணரும்படிசெய்தது அறம் , பொருள் , இன்பம் , வீடாகிய புருஷார்த்தங்கள் நான்குமாம் . இன்பமாம் நாலுவேதம் - பேரின்பத்திற்கு வாயிலாகிய நான்கு வேதங்கள் ; இருக்கு , யசுர் , சாமம் , அதர்வணம் . சரித்தது - ஓதியருளியது . வேதம் உணர்த்திட்டது எனவும் சரித்தது நாலு நன்னெறி எனவும் கூட்டலாம் . நன்னெறி நாலு - சரியை , கிரியை , யோக , ஞானங்கள் . போல் அசை .

பண் :

பாடல் எண் : 5

அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை
அஞ்சு போலரை யார்த்ததின் தத்துவம்
அஞ்சு மஞ்சுமோ ரோரஞ்சு மாயவன்
அஞ்சு மாமெம் அகத்துறை யாதியே.

பொழிப்புரை :

என் அகத்து உறை ஆதி . ஆனைந்து ஆடி . ஐந்தொழில் நடனம் ஆடி . இடையில் ஐந்தலை அரவார்த்தவன் அவன் . தத்துவங்களாகிய இருபத்தைந்தின் கூறானவன் .

குறிப்புரை :

அஞ்சும் அஞ்சும் - ஐந்து வகையான பசுக்களிலிருந்து உண்டாம் ஐந்து பொருள்களையும் . அஞ்சும் ஆடி - பஞ்சகவ்வியங்கள் ஐந்தையும் அபிஷேகம் கொண்டு . ஓர் அஞ்சும் - ஒப்பற்ற ஐந்தொழில்களையும் . ஆடி - கூத்தின் தத்துவங்களாய் அமைய ஆடி . ` ஐந்து கொலாம் அவர் ஆடினதாமே ` ( தி .4. ப .18. பா .5). அஞ்சுபோல் அரை ஆர்த்த - அரையில் கட்டியது ஐந்தலையரவு என்பதாம் . ` அஞ்சு கொலாம் அவர் ஆடரவின்படம் ` ( தி .4. ப .18. பா .5). அஞ்சும் அஞ்சும் ஓர் ஓர் அஞ்சும் ஆயவன் - ஐம்பூதங்கள் , ஐந்து தன் மாத்திரைகள் , ஞானேந்திரியங்கள் ஐந்து . கன்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இருபது தத்துவங்கள் . அஞ்சுமாம் - ஐம்புலன்களும் ஆகும் .

பண் :

பாடல் எண் : 6

ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள்
ஆறு போலெம் அகத்துறை யாதியே.

பொழிப்புரை :

எம் உள்ளத்துறையும் முதல்வனாகிய பெருமான் , ஆறு கால்களையுடைய வண்டு ஒலிக்கும் கொன்றையை உடையவன் ; கங்கையாற்றைச் சடையிற் சூடிய அண்டங்களுக்கெல்லாம் முதல்வன் ; கூரிய அறிவுடைய அறுவகைச் சமயத்தார்க்கு அச்சமயப் பொருளும் நெறியும் ஆயவன் .

குறிப்புரை :

ஆறுகால்வண்டு - ஆறுகால்களையுடைய வண்டு . மூசிய - மொய்த்த . ஆறு - கங்கை . ஆறு கூர்மையர் - கூரிய அறிவைத் தருகின்ற ஆறு சாத்திரம் . சமயப்பொருள் ஆறு - ஆறு சமயத்தவர் பொருள்போல் இருப்பவன் . ` அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் ` ( சிவஞானசித்தி - சுபக்கம் .1)

பண் :

பாடல் எண் : 7

ஏழு மாமலை யேழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.

பொழிப்புரை :

ஏழுமலை ஏழுபுவனம் ஏழ்கடல் போற்றும் இராவணனது ஏழிசைகேட்டு அருள்செய்தவன் . அவன் திருவடிகள் எழுபிறவிகளிலும் என்னுள்ளத்தின்கண்ணே உள்ளன .

குறிப்புரை :

ஏழுமாமலை - கயிலை தவிர்ந்த ஏழுமலைகள் . பொழில் - தீவு . கடல் ஏழு - பாற்கடல் முதலியன . நரம்பு ஏழு - ஏழு ( சப்த ) சுரங்கள் . ஏழும் சூழ் - ஏழ்பிறப்பிலும் .

பண் :

பாடல் எண் : 8

எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்
எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை
எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே
எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.

பொழிப்புரை :

அட்டமூர்த்தியாய்த் தொழில் செய்பவன் . எண் குணன் . எம் இறைவனாயுள்ள அவ்வெட்டுமூர்த்தி என்னுள்ளத்து எட்டும் மூர்த்தியாய் ஒடுங்கியிருப்பன் .

குறிப்புரை :

எட்டுமூர்த்தி - இறைவனது அட்டமூர்த்தவடிவம் . ஐம் பூதம் , சூரியன் , சந்திரன் , ஆன்மா . எட்டு வான்குணம் - தன்வயத்தனாதல் முதலிய எட்டு உயரிய குணம் . எட்டுமூர்த்தி - நிலம் முதலியவற்றிற்குரிய தேவர்கள் . அவ்வெட்டு மூர்த்தி என்றே பின்னும் கொள்க .

பண் :

பாடல் எண் : 9

ஒன்ப தொன்பதி யானை யொளிகளி
றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.

பொழிப்புரை :

எண்பத்தொரு பதங்களில் பேசப்படுபவன் . பதினெண் சிவகணங்கள் அல்லது எண்பத்தொரு யானைகள் சூழப் பெற்றவன் . உடலிடத்துள்ள ஒன்பது வாயிலும் தீத்தொழிலிற் சேராதவாறு ஒன்பது ஒத்து எனக்குள் ஒடுங்குவான் .

குறிப்புரை :

ஒன்பது களிறு - திசையானைகள் எட்டும் அயிராவணமும் ஆகிய ஒன்பது யானை . ஒன்பது யானை - அவற்றிற்குரிய பிடிகள் . ஒளிகளி எனவும் பாடம் . ஒன்பது ஒன்பது பல்கணம் - பதிணென் சிவகணங்கள் . ஒன்பதாமவை தீத்தொழில் - ஒன்பது வகையான வேள்விகள் . ஒத்து - ஒன்பது வாசல்களும் ஒத்து . சி . கே . எஸ் . அவர்கள் கூறும் விரிவுரை பின்வருவன : ` உரை ஒன்பதொத்து நின்று என்னுள் ஒடுங்கும் என் பேச்சுக்கள் முதலிய எல்லாம் எவ்வளவு விரிந்து சூழினும் முடிவில் நான் என்ற அகங்கார நிலையினவாய் வந்து என்னையே சுற்றி என்னகத்தொடுங்கும் அது ஒன்பது என்னும் எண்ணினைப் போல ; இஃதெவ்வாறெனில் ஒன்பதை எதனால் எத்தனை பெருக்கினும் பெருக்கிவந்த எண்ணில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் ஒன்பதே வருவதுபோல . 9x2=18=1+8=9 9x3=27=2+7=9 9x4=36=3+6=9 9x5=45=4+5=9 9x6=54=5+4=9 9x7=63=6+3=9 9x8=72=7+2=9 9x9=81=8+1=9 மேலும் 9x144=1296=1+2+9+6=18=1+8=9 என்றிவ்வாறு கண்டுகொள்க . ஒன்பது என்ற எண் ஒன்று இரண்டு முதலிய ஏனை எண்களைப்போலத் தனக்கென்று ஒரு தனிப்பெயரில்லாமல் பின் வரும் பத்து என்பதில் ஒன்று குறைந்தால் எதுவோ அது என்றறியப்படுமாறு பெயர்கொண்டிருத்தல் பின்வரும் பாகமாகிய உலகமும் முன்னிற்கும் பதியுமல்லாதது என்றறியப்பட்டும் தனித்து நில்லாது பதியினையோ அன்றிப் பாசத்தையோ சார்ந்து நிற்றலுமான நிலையின் உள்ள உயிரை ஒத்திருக்கின்றதென்பதும் கடிகார யந்திரங்களிலும் ஒன்பதைக் குறிக்க ( IX என்ற X ல் I குறைக்க என்ற பொருள்பட ) IX என்ற குறியீடு கொள்வதும் பிறவும் இங்குக் காணத்தக்கன .`

பண் :

பாடல் எண் : 10

பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்
பத்து நூறவன் பல்சடை தோள்மிசை
பத்தி யாமில மாதலின் ஞானத்தால்
பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.

பொழிப்புரை :

அளவற்ற பெருமையன் . சிவகணங்கள் பல்லாயிரவரை உடையவன் . அடியவர் உள்ளங்களையே தங்குமிடமாகக் கொண்டவன் .

குறிப்புரை :

பத்து நூறவன் - பத்து என்றும் நூறென்றும் கூறும்படிப் பல பொருளாயுள்ளவன்; பத்தியான். பத்து என்றும் நூறு என்றும் சொல்லும் சிலவும் பலவுமாய சடைகளையுடையவன் ஆயிரம் என்றலுமாம். அடியவர்க்கு உள்ள பத்து இலக்கணங்கள் (உபதேச காண்டம் பார்க்க). பள்ளி - உள்ளத்தை. பத்தியான் - பத்தி வலையிற் படுவானாய இறைவன். இடங்கொண்டது - தமக்குரிய இடமாகக் கொண்டது. ஞானத்தால் - என் அறியாமையை உணர்ந்து அருளியதால்.

பண் :

பாடல் எண் : 1

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

பொழிப்புரை :

இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

குறிப்புரை :

மாசில் - சுர இலக்கணங்களில் சிறிதும் வழுவாது இலக்கணம் முழுதும் நிரம்பச் சொல்லைமிழற்றும் இயல்புடைய . மாலைமதியம் - மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி . பௌர்ணிமை மதியைக் குறித்தது . வீசுதென்றல் - மெல்லிதாய் வீசுகின்றதென்றல் ; வீங்கு - பெருகிய . இளவேனில் - சித்திரை , வைகாசி மாதங்கள் . மூசு வண்டு - ( மாலைநேரத்தே மலரும் நீர்ப்பூக்களிடத்தே மொய்க்கின்ற ) வண்டுகள் . அறை - ஒலிக்கின்ற . பொய்கை - அகழ்வாரின்றித் தானே தோன்றிய நீர்நிலை . ஈசன் எந்தை , இருபெயரொட்டு . தலைவனாகிய என் தந்தை . இணையடி - இரண்டு திருவடிகள் . திருவடிநீழல் ஐம்புலன்களுக்கும் விருந்துதரும் இயற்கையின்பத்தை ஒத்தது என்றார் ; வீணை , செவி . மதியம் , கண்கள் . தென்றல் , மூக்கு . வண்டு அறை பொய்கை , வாய் . வேனில் மெய் . இவ்வாறு முறையே ஐந்து புலன்களுக்கும் இன்பந்தருவனவாய இயற்கைச் சூழலை ஒத்து நீற்றறையில் திருவடி நீழலை எண்ணிய அப்பர்சுவாமிகளுக்குத் தண்மையைத் தந்தது ஆதலின் திருவடிநீழல் அளிக்கும் இன்பத்தோடு ஒப்பிட்டார் .

பண் :

பாடல் எண் : 2

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

பொழிப்புரை :

ஞானமும் , கல்வியும் , நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே ; நா கூறி வழிபடுவதும் அதனையே ; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும் .

குறிப்புரை :

ஞானமும் - பரஞானம் . கல்வி - அபரஞானம் . ஞானமும் கல்வியும் - கல்வியால் விளையும் அறிவும் கல்வியும் . நானறிவிச்சை - நான் அறிந்தனவாய மந்திரம் அல்லது கலையுணர்வு . நன்னெறி - ஞானம் , வீடுபேறடையும் வழி .

பண் :

பாடல் எண் : 3

ஆளா காரா ளானாரை யடைந் துய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.

பொழிப்புரை :

இறைவனுக்கு ஆளாகமாட்டார் ; அவ்வாறு ஆளாகிய மெய்யடியார்களைச் சார்ந்து உய்யவும் மாட்டார் . மீளா ஆளாய் மெய்ம்மையுள் நிற்கும் ஆற்றல் இல்லார் ; அத்தகைய இழிந்தவர் செவிகள் துளையிட்டுப் பயன்படுத்தவியலாத செவியோ ? அந்தோ ! வீணே இறந்து மண்ணாகி ஒழிவர் !

குறிப்புரை :

ஆளாகார் - தாம் அடியவராக மாட்டார் .` ஆளா னார்க்கு . எனவும் பாடம் . ஆளானாரை - இறைவன் திருவடிகளுக்கு அடிமை பூண்டாரை . அடைந்துய்யார் - அடியார்க்கு அடியராய் இருந்து உய்நெறிகாணார் . மீளா ஆள் - என்றும் மாறாத அடிமைத் திறம் . மெய்மையுள் - சத்தாகிய இறைவனது தன்மையின்கண் , பிறழாது நிற்கும் இயல்பிலார் . நில்லாத தொழும்பர் எனக்கூட்டுக . தோளாத சுரையோ - துளையிடப்படாத உட்குழியோ . தொழும்பர் - குற்றேவல் செய்வார் . வாளா - பயன் அற்று . கழிவர் - கழிந்தொழிவர் . தொழும்பர் - பெத்தம் முத்திநிலைகளிலும் அடிமையாகியே இருக்கும் உயிர் .

பண் :

பாடல் எண் : 4

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

பொழிப்புரை :

நாணமற்றவர்களே ! துன்பம் மிக்க வாழ்வினைக் கொண்டு என்ன செய்வீர் ? நீர் இறுதியில் சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு ஆன்றோர் சொற்களே சான்று . திருப்பாற்கடலினின்றெழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால் , உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிவிடும் .

குறிப்புரை :

நடலை - துன்பம் . என்செய்திர் - உயிர்கட்குப் பயன் தரும் செயல்கள் என்செய்தீர்கள் . நாணிலீர் - வெட்கம் இல்லாதவர்களே . சுடலை - இடுகாடு . சேர்வது - அடைவது , சொல் பிரமாணம் - சத்தப்பிரமாணத்தாலறிவதொன்றேயன்றி காட்சி அநுபவத்தாலும் அறிவதாம் . உடலினார் - உடல் . இழித்தற் பொருளில் வந்தது ஆர் விகுதி . ஊர்முனிபண்டம் - பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருளாகும் . கைவிட்டால் - காத்தலை நீங்கினால் .

பண் :

பாடல் எண் : 5

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

பொழிப்புரை :

பூக்களைக் கையிற்கொண்டு சிவபிரானின் பொன்னார் திருவடிகளைப் போற்றுதலில்லாதவர்களும் , நாவினைக் கொண்டு இறைவன் திருநாமத்தை நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவுதேடிச் சுழன்று இறுதியில் காக்கைக்கே தாம் இரையாகி ஒழிவர் .

குறிப்புரை :

பூக்கைக்கொண்டு என்க . பொன்னடி - பொன்னைப் போலப் பொதிதற்குரிய திருவடி . நாக்கைக்கொண்டு - நாவைக் கொண்டு என்க . நாமம் - இறைவன் திருப்பெயர் . நவில்கிலார் - கூறாதவர்கள் . ஆக்கைக்கே - உடலுக்கே . இரை - உணவு . அலமந்து - வருந்தி . காக்கைக்கு - காகங்களுக்கே . இரையாகி - உணவாகி . கழிவர் - அழிந்தொழிவர் .

பண் :

பாடல் எண் : 6

குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.

பொழிப்புரை :

விதியற்றவர்களே ! குறிகளும் , அடையாளமும் , கோயிலும் , நெறிகளும் , அவ்விறைவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் வேதங்கள் கூறினும் உம் மனம் அவற்றுட் புகாதது என்னையோ ?

குறிப்புரை :

குறிகளும் - கடவுள் திருவுருவங்களும் , அடையாளம் - விடை கொடி முதலிய சின்னங்கள் , விபூதி உருத்திராக்க சாதனங்கள் . கோயிலும் - திருக்கோயில்களும் , நெறிகளும் - சமய நெறிகளும் . அல்லது சரியை கிரியை யோக ஞான நெறிகளும் என்க . அவர் நின்றதோர் நேர்மையும் - அப்பெருமான் இவற்றை நாம் உய்யும் நெறிகளாகக் காட்டி நின்றதொரு நடுநிலையையும் . நேர்மை நுண்மை எனலுமாம் . அறிய - எல்லாரும் அறிய . ஆயிரம் - பலவான . ஆரணம் - வேதங்களில் கூறிய உபதேசங்கள் . ஓதிலும் - கூறினாலும் . பொறியிலீர் - ஞானப்பொறி இல்லாதவர்களே . ஊழ் எனவுமாம் . மனம் புகாதது என்கொல் - உங்கள் மனம் ஈடுபடாததற்குக் காரணம் என்ன .

பண் :

பாடல் எண் : 7

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

பொழிப்புரை :

தன்னை வாழ்த்துதற்கு வாயும் , தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும் , தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித்துதிக்காமல் , வினையேன் நெடுங்காலம் வீழ்த்தியவாறு என்னே ?.

குறிப்புரை :

மடநெஞ்சு - அறியாமையின் பாற்பட்ட மனம் . தாழ்த்த - வணங்க . சென்னி - தலை . சூழ்த்த மாமலர் - ஆராய்ந்து எடுத்த சிறந்த மலர் . சூழ்ந்த - சூழ்த்த வலித்தல் விகாரம் . துதியாதே - போற்றி வணங்காமல் . வினையேன் - தீவினையேனாகிய நான் . நெடுங்காலம் - பலகாலம் . வீழ்த்தவா - கழித்தேன் . ஆ அது வருந்தத் தக்கது .

பண் :

பாடல் எண் : 8

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.

பொழிப்புரை :

எழுதிய பாவைச் சித்திரம் போன்ற அழகுடைய பெண்கள் திறத்தின் நீங்கி நான்தொழுது போற்றி நிற்க . என்னையும் ஆராய்ந்து கொண்டு உழுத சால் வழியே பின்னும் உழுவதன் பொருட்டு மிக்க இழிவுடைய நெஞ்சம் செய்கின்றது தானா என்னை ?.

குறிப்புரை :

எழுது - நன்றாகத் தீட்டப்பட்ட . பாவை - பதுமை போன்றவர்களாகிய . நல்லார் - பெண்கள் . திறம் - தொடர்பின் தன்மையை . விட்டு - கைவிட்டு . தொழுது - வணங்கி . போற்றி நின்றேனையும் - தோத்திரம் சொல்லி நின்றவனாகிய என்னையும் . சூழ்ந்து கொண்டு - வளைத்துக்கொண்டு நின்று . உழுத சால்வழியே உழுவான் பொருட்டு - மீண்டும் மீண்டும் பொருள் தேடும் முயற்சிகளிலே பல காலும் ஈடுபடும் பொருட்டு . இழுதை - அறியாமை . என்படுகின்றது - என்ன துன்பத்தை அடைகிறது . உழுத சால்வழி உழுதல் நல்ல பயன் தருதல் இல்லை ; அதுபோல வெறுக்கப்பட்டவர்களாகிய பாவை நல்லார் திறத்தில் மீளவும் மனம் செலுத்துலால் பயனில்லை என்பதாம் .

பண் :

பாடல் எண் : 9

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

பொழிப்புரை :

நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைபவர் நெஞ்சுளே புகுந்து நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் , பொய்ம்மையாளர் பூசையிற் பூவையும் நீரையும் கண்டு அவர் தம்மை நாணிச் சிரித்து நிற்பன் .

குறிப்புரை :

நெக்கு நெக்கு - மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து . உருகி உருகி என்க . நெஞ்சுள் - மனத்தினுள்ளே . புக்கு நிற்கும் - புகுந்து எழுந்தருளியிருக்கின்ற . பொன்னார்சடை - அழகு பொருந்திய சடை , பொக்கம் - பொய் . அவர்தம்மை - அவரை நாணி - வெட்கமடைந்து . நக்குநிற்பர் - ஏளனநகை புரிந்திருப்பர் .

பண் :

பாடல் எண் : 10

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

பொழிப்புரை :

விறகில் தீப்போலவும் . பாலிற்பொருந்திய நெய்போலவும் , மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான் .

குறிப்புரை :

விறகில் தீயின் - விறகின்கண் மறைந்திருக்கும் நெருப்பைப் போல . நன்பாலில்படு - நல்ல பாலில் மறைந்திருந்து பின்னர்த் தோன்றும் . மாமணிச் சோதியான் - சிறந்த மணியின் கண் ஒளி மறைந்திருந்து சாணை பிடித்த பின்னர் வெளிப்படல் போல உள்ளத்துள்ளே மறைந்து நிற்பவன் . உறவு - அறிவு , உணர்வு , அன்பு , மாறிக்கூறுவாருமுளர் . அறிவாகிய கயிற்றினாலே . முறுகவாங்கிக் கடைய - நன்றாக இழுத்துக்கடைய . முன்னிற்கும் - நம்முன் தோன்றி அருளுவான் . விறகு . பால் , மணி இவற்றுள் மறைந்து நிற்கும் தீ முதலானவற்றை முறையே முறுகக் கடைதல் , வாங்கிக் கடைதல் , கடைதல் என்பனவற்றால் வெளிப்படுத்தலாம் . அதுபோலப் பக்குவம் இல்லாதோர் பக்குவான்மா இவர்களுக்குக் கடவுள் தோன்றியருளும் வழி கூறப்பட்டது . கயிற்றினால் வாங்கிக் கடைதல் முன் இரண்டற்கும் பொது .

பண் :

பாடல் எண் : 1

ஏயி லானையெ னிச்சை யகம்படிக்
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.

பொழிப்புரை :

தமக்குமேல் தலைவன் இல்லாதவன். உள்ளக் கோயிலான். குணக்குன்று. வாழ்த்துவோர் வாய் இல்லமாக உடையவன். சத்தியை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும்.

குறிப்புரை :

ஏயிலான் - தமக்குமேல் தலைவன் இல்லாதவன். இச்சை அகம்படிக்கோயில் - அன்பாலாகிய உள்ளக்கோயில். வாயிலான் - வாழ்த்தும் இவரது வாயை இல்லாக உடையவன். மனோன்மனியைப் பெற்றதாயிலான் - `இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்`(தி.8 திருவாசகம் -207) 1அரனுக்குத் தாயும் மகளும் நற்றாரமுமாமே` (தி.10. த.4-8. பா.24) நவந்தரு பேதங்களில் மனோன்மனி என்பது ஒரு சத்திபேதம். `சிவம் சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்` (சித்தியார்- சுபக்கம்.77).

பண் :

பாடல் எண் : 2

முன்னை ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே. 

பொழிப்புரை :

பழைய ஞான முதல் தனி வித்தும், பின்னை ஞானம் பிறங்கு சடையனும் , என்னை இருள் நீக்கி ஞானத்தால் ஆண்டவனும் ஆகிய இறைவன் தன்னை ஞானமென்னும் தளையினால் பிணித்து உள்ளத்தே வைப்பேன்.

குறிப்புரை :

முன்னை - பழமையான. ஞானமுதல் தனிவித்து - ஞானம் முளைத்தற்கிடமாயுள்ளவன். அறிவுக்கு முதற்காரணமாய வித்துப் போன்றவன். பின்னை - அதன்பின்னர். ஞானப்பிறங்கு சடையன் - அறிவு மயமான விளங்கிய சடைமுடியவன். என்னை - அடியனை. ஞானத்திருள் - அறிவை மறைத்துநிற்கும் அறியாமையாகிய இருட்டு. அறுத்து - நீக்கி. ஆண்டவன்தன்னை - ஆட்கொண்டவனை. ஞானத்தளையிட்டு - அறிவாகிய கயிற்றால் கட்டி.

பண் :

பாடல் எண் : 3

ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேனுனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே. 

பொழிப்புரை :

சில ஞானிகள் நின்னை ஞானத்தால் தொழுவார்கள்; ஞானத்தால் உன்னை நான் தொழும் திறம் உடையேனல்லேன்; ஞானத்தால் தொழுகின்றவர்கள் தொழுதலைக் கண்டு, ஞானவடிவாகிய பொருளே! உன்னை நானும் தொழுவன்.

குறிப்புரை :

ஞானத்தால் - பேரறிவால். தொழுவார் - இறைவனை வணங்குவார்கள். நான் உனை ஞானத்தால் தொழுவேனலேன் என்க. தொழுவேனலேன் - வணங்குவேனல்லேன். ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு - ஞானநெறியினால் உன்னை வழிபடுவார்கள் செய்யும் வழிபாடுகளைக் கண்டு. ஞானத்தாய் - பேரறிவின் வடிவானவனே.

பண் :

பாடல் எண் : 4

புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே. 

பொழிப்புரை :

புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கில்லையாதலின் புழு வினுங்கடையேனாகிய அடியேன் புனிதனாகிய பெருமானைச் சார்ந்த அடியார் குழுவினுக்குச் சென்றுகூட எவ்விடத்தை உடையேன் ஆவேன்?.

குறிப்புரை :

புழுவுக்கும் குணம் நான்கு - மண்ணில் வாழும் புழுக்களுக்குரிய குணங்கள் நான்கு. அவையாவன - உணவின் பொருட்டு முயலல், உண்டல், உறங்கல், இன்பதுன்பநுகர்ச்சி. எனக்கும் அதே - எனக்கும் நான்கு குணங்களே. இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை என்க. பொல்லாங்கு இவற்றின் பொருட்டுப் பிறரை வஞ்சித்தல், துன்புறுத்தல் முதலியன. புழுவினும் கடையேன் - புழுவினும் இழிந்தவனாகிய யான். புனிதன் தமர் குழுவுக்கு - தூயனாகிய அப்பெருமானது அடியார்களுக்கு. சென்றுகூட எவ்விடத்தேன் என்க. எவ்விடத்தேன் - எத்தகுதியை உடையேன்.

பண் :

பாடல் எண் : 5

மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே. 

பொழிப்புரை :

மனிதர்களே! மலையே வந்து விழுந்தாலும் தத்தம் நிலையில் நின்று கலங்காதீர்கள். ஈசன் அடியார்களை ஐம்பொறிகளாகிய யானைகள் கொன்றுவிடுமோ? கொல்லாவாம்.

குறிப்புரை :

மலையே வந்து விழினும் - மலையே புரண்டு விழுந்தாலும். நிலையில் நின்று - இறைவனது அருள் நிலையிலிருந்து. கலங்கப்பெறுதிர் - கலக்கம் அடையாதீர்கள். தமர்களை - அடியவர்களை. கொலைசெய் யானைதான் - கொல்லும் தன்மையையுடைய ஐம்புலன்களாகிய யானைகள். கொன்றிடுகிற்கும் - கொன்றிடும். ஏ - வினா. கொல்லவல்லதோ என்க. தம்மநுபவம் பொதுவாக்கியது.

பண் :

பாடல் எண் : 6

கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு வாயும் நாவும் உள்ளன; இட்டுக்கொள்ளப் பூவும், நீரும் உள்ளன; தொகுதியாகிய சிவந்த சடையான் உள்ளான்; நாம் உள்ளோம். இவை யெல்லாம் இருக்க எமனால் முனிவுண்பது எற்றுக்கு?

குறிப்புரை :

கற்றுக்கொள்வன - இறைவன் புகழை ஓதிக் கற்பதற்குரியன. வாயுள நாவுள - வாயும் நாவும் உள்ளன. இட்டுக் கொள்வன - அபிடேகம் செய்வதற்கும் சூட்டுவதற்கும்; பூவுள நீருள - நீரும் பூவும் உள்ளன. கற்றைச் செஞ்சடையான் உளன் - தொகுதியான பல சிவந்த சடைகளை உடையவனாகிய பெருமான் அருள் வழங்கக் காத்திருக்கின்றான். நாம்உளோம் - அவ்வருளைப் பெறுதற்கேற்ற பிறவியோடு நாமும் இருக்கின்றோம். நமனால் - எமனால். எற்றுக்கு - எதற்கு. முனிவுண்பது - கோபத்தை அடைவது.

பண் :

பாடல் எண் : 7

மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவு மேசற்ற வர்கட்கே. 

பொழிப்புரை :

மனிதர்களே! இங்கே வாருங்கள்; ஒன்று சொல்லுவேன்; பழம் தந்தால் பழத்தை உண்ணவும் வல்லமை உடையீரோ? புனிதனும் கழல்கள் அணிந்த இறைவனும் ஆகிய கனி; ஏசற்றவர்களுக்கு மிகவும் இனியது; காண்பீராக.

குறிப்புரை :

இங்கேவம் - இங்கேவாருங்கள். ஒன்று சொல்லுகேன்- பயன் தருவதாய செய்தி ஒன்று சொல்கின்றேன். கனி உண்ணவும் வல்லிரே - கனியை உண்ணும்வல்லமை உடையவர்கள் நீங்கள். புனிதன் - தூயன். பொற்கழல் - அழகிய வீரக்கழலையணிந்த திருவடிகள். ஈசன் எனுங்கனி - ஈசன் என்ற பெயரையுடைய கனி. `கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி` (தி.9 திருவிசைப்பா. 47) முதலிய திருமுறை மேற்கோள்களை எண்ணுக. சாலவும் இனிது - மிகவும் இனியது. ஏசற்றவர்கட்கு - குற்றமற்றவர்கட்கு.

பண் :

பாடல் எண் : 8

என்னை யேது மறிந்தில னெம்பிரான்
தன்னை நானுமுன் ஏது மறிந்திலேன்
என்னைத் தன்னடி யானென் றறிதலும்
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே. 

பொழிப்புரை :

முன் என்னையே ஏதும் அறிந்திலேன்; எம் பெருமானையும் அறிந்திலேன். என்னைத் தன் அடியான் என்று பெருமான் அறிதலும் தன்னைக்காணும் தலைவன் என்று நானும் அறிந்துகொண்டேன்.

குறிப்புரை :

என்னை - அடியேனை. ஏதும் அறிந்திலன் எம்பிரான் - சிறிதும் அறிந்தானில்லை எமது தலைவனாகிய இறைவன் என்றுமாம். சிறிது அறிந்திருந்தானாயின் நான் புறச்சமயச் சூழலிற் சென்று மயங்கும் நிலை ஏற்பட்டிராது என்றதைக் குறித்தது. தன்னை - அப்பெருமான்தன்னை. நானும் - அடியேனும். முன் - இளமைக் காலத்து. ஏதும் - சிறிதும். அறிந்திலேன் - அறியாதொழிந்தேன். என்னைத் தன்னடியான் என்று அறிதலும் - இறைவன் என்னை இவன் நம் அடியவனாதற்குரியான் என்று அறிந்ததும். தன்னை - அப் பெருமானை. பிரான் என்று - தலைவன் என்று.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர்
உள்ளத் தேற லமுத வொளிவெளி
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல்
வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே. 

பொழிப்புரை :

மிக்குத் தெளிந்து தித்திப்பதாகிய ஒப்பற்ற உள்ளத்தேன்; அமுதப்பேரொளியும் வெளியும் ஆகிய அவ் அநுபவம் கள்ளம் உடையேனும், கவலைக்கடலைக் கடியாது அவ்வெள்ளத்தே விழுந்துகிடப்பேனுமாகிய எனக்கு விளைந்தது எவ்வாறு?

குறிப்புரை :

தெள்ளத்தேறித்தெளிந்து - தெள்ளத் தெளிவிக்க நானும் உண்மையெனத் தேறித் தெளிவடைந்து. தித்திப்பதோர் - இனிப்பதொரு. உள்ளத்தேறல் - மனத்தின்கண் விளையும் தேன். அமுத ஒளிவெளி - அமுத கிரணத்தை உடையவெளி. கள்ளத்தேன் - வஞ்சகத்தன்மையை உடையவன். கடியேன் - வெறுக்கத்தக்கவன். கவலைக்கடல் வெள்ளத்தேனுக்கு - மனக்கவலை என்னும் கடல் வெள்ளத்தை உடையவனாகிய எனக்கு. எவ்வாறு விளைந்தது - எப்படி உள்ளத்தே தேனும் அமுதமுமாய் விளைந்தது.

பண் :

பாடல் எண் : 1

கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.

பொழிப்புரை :

காலதூதர்களே ! கண்டுகொள்ள அரியவன் . உள்ளத்தைக் கனியச்செய்து முன்பு நான் செய்த அடிமைத் திறத்தைக் கேட்பீரேயானால் தொண்டரைச் சூழாதீர்கள் .

குறிப்புரை :

கண்டுகொள்ளரியான் - காணுதற்கு அரியவன் . கனிவித்து - என்னிடம் கனியும்படியாக அன்பு பாராட்டி . பாழிமை - அடிமைத்திறத்தின் உறைப்பு . கேட்டிரேல் - கேட்டீரானால் . கொண்ட பாணி - பாடுதலை மேற்கொண்ட இசைப்பாடல் . கொடுகொட்டி - தோற்கருவி , வாத்திய விசேடம் . பாணிகொண்ட கொடுகொட்டி என மாற்றி இறைவன் புகழை இசைபாடுவார்க்குப் பக்கவாத்தியமாகக் கொண்ட கொடுகொட்டிதாளம் என்பனவற்றைக் கைக்கொண்ட அடியார்களை என்க . சூழல் - சூழாதேயுங்கள் .

பண் :

பாடல் எண் : 2

நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பர்க்குக்
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.

பொழிப்புரை :

அஞ்சியும் அன்புசெய்தும் இறைவனிடத்து அன்புடையவராய் ஈகை செய்யும் அடியவரைத் துன்புறுத்தாது அகலுங்கள் .

குறிப்புரை :

நடுக்கத்துள்ளும் - அச்சத்திலும் அன்பிலும் வாழ்க்கையில் ஏற்படும் எத்தனையோ நடுங்குதற்குரிய துன்பக் காலத்தின் கண்ணும் . நகையுளும் - உலகவர்கள் ஏளனம் செய்து நகைத்த இடத்தும் . நம்பர்க்கு - இறைவனுக்கு . கடுக்க - ஒப்ப . பெருமானது திரு நடனத்தின்போது அடிக்கப்படும் பறையினை ஒப்ப . கல்லவடம் - மணி மாலைபோன்ற உருத்திராக்க மாலை . பறை எனினுமாம் . இடுவார்கட்கு - அணிவார்கட்கு அல்லது கொட்டுபவர்களுக்கு . கொடுக்க என உரைப்பார்களைக் கொள்க என உரைப்பவர்களைக் கொடுக்கும்படிச் சொல்லியவர்களையும் கொள்க என்று கொடுத்தவர்களையும் . இடுக்கண் செய்யப்பெறீர் - துன்பம் செய்யாதீர்கள் . இங்கும் நீங்குமே - இவ்விடத்தை விட்டும் நீங்குக .

பண் :

பாடல் எண் : 3

கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.

பொழிப்புரை :

கார்காலத்திலே மலர்தலைக்கொண்ட கொன்றையின் மணமிக்க மலர்களைக் கண்ணியாக அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக ; அவர்களை நீர் சாரப்பெறாதீர் ; நீங்குவீராக .

குறிப்புரை :

கார் காலத்தே மலர்தலைக் கொண்ட . கடிமலர் - மணம் பொருந்திய மலர் . கண்ணியான் - தலை மாலையை உடையவன் . சீர் கொள் நாமம் - சிறப்பைக்கொண்ட திருப்பெயர் . சிவன் என்று - சிவ பெருமான் என்று . அரற்றுவார் - பலகாலும் சொல்வார்கள் . ஆர்களாகிலும் ஆக - யாராயிருந்தாலும் இருக்கட்டும் . நீர்கள் - நீங்கள் . சாரப்பெறீர் - அடையாதீர்கள் இங்கும் நீங்குமே .

பண் :

பாடல் எண் : 4

சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப்
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.

பொழிப்புரை :

சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும் , காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல் .

குறிப்புரை :

சாற்றினேன் - சொன்னேன் . நீள்சடைமுடி - நீண்ட சடை முடியை உடைய . சீற்றம் - கோபம் . காமன்கண் சீற்றம் வைத்தவன் - காமனைச் சினந்து எரித்தவன் . சேவடி - திருவடிகளை . ஆற்றவும் - மிகவும் . களிப்பட்ட - களிப்படைந்த . மனத்தராய் - மனத்தை உடையவராய் . போற்றியென்றுரைப்பார் புடை - போற்றி என்று சொல்பவர்களின் பக்கத்தில் . போகல் - செல்லாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 5

இறையென் சொல்மற வேல்நமன் தூதுவீர்
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்தமர்
நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.

பொழிப்புரை :

நமன் தூதுவர்களே ! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர் ; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிர் நீவிர் செல்லேல் .

குறிப்புரை :

இறை - சிறிதும் . மறவேல் - மறவாதீர்கள் . நமன் தூதுவீர் - இயமனுடைய தூதுவர்களே . தமர் - சுற்றம் . நறவம் நாறிய - தேன் நிறைந்த மலரின் மணம் கமழ்கின்ற . நல்நறும் சாந்திலும் - நல்ல மணம் பொருந்திய சந்தனத்தைக் காட்டிலும் . நிறைய - நிரம்ப . நீறணிவார் எதிர் - திருநீறணிவார் எதிரே . செல்லல் - செல்லாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 6

வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.

பொழிப்புரை :

வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராந் திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும் , தூபமும் , மாலையும் , தண்ணிய நறுவிய சாந்தமும் , பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல் .

குறிப்புரை :

வாமதேவன் - சிவன் . சதாசிவமூர்த்தியாகிய இறைவனது வடக்கு நோக்கிய திருமுகம் வாமதேவமுகம் எனப்படும் . வள நகர் - அவன் எழுந்தருளியகோயில் . காமம் - சிவனடியன்றி வேறொன்றில் செல்லாத பற்று . ஒன்று - ஒன்றும் . ஏமம் - திரு நீற்றுக்காப்பு .

பண் :

பாடல் எண் : 7

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நம தீச னடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.

பொழிப்புரை :

படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே ! நமது ஈசன் அடியரை அடையாதீர் ; இடபத்தை ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக .

குறிப்புரை :

படையும் - சூலமும் . பாசமும் - காலபாசமும் . பற்றிய - பிடித்த . கையினீர் - கையை உடையவர்களே . அடையன் மின் - அடையாதீர்கள் . விடைகொள் ஊர்தியன் - இடபவாகனன் . புடை புகாது - பக்கம் செல்லாது . போற்றியே போமின் - உங்களைப் பாதுகாத்துச் செல்லுங்கள் . அவர்களை அணுகில் இயமனுக்கு நிகழ்ந்த தண்டனை அவர்கட்கும் கிடைக்கும் ஆதலால் போற்றிச் செல்லுங்கள் என்றார் .

பண் :

பாடல் எண் : 8

விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்ச மெய்தி யருகணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

பொழிப்புரை :

வித்தையாவதும் , விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே ; அச்சம் கொண்டு , பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக .

குறிப்புரை :

விச்சை - வித்தை , ஞானம் , கல்வி , வேட்கைமை - பக்தி . விரும்புந்தன்மை . நிச்சல் - நாடோறும் . நினைப்பதே - சிந்திப்பதேயாகும் . அச்சம் எய்தி - பயமெய்தி . அருகணையாது - பக்கம் செல்லாமல் . நீர் - நீங்கள் . பிச்சை புக்கவன் - பிக்ஷாடனராய பெருமான் . பேணும் - விரும்பி வழிபடுங்கள் .

பண் :

பாடல் எண் : 9

இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம்
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.

பொழிப்புரை :

இன்னும் கேட்பீராக ; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா .

குறிப்புரை :

இன்னம் கேண்மின் - இன்னமும் கேளுங்கள் . மனத்துடன் - நிறைந்த மனத்தோடு . ஏத்துவார் - வணங்குபவர்கள் . மன்னும் - என்றும் நிலைத்து நிற்பதாகிய . மந்திரந்தன்னில் - மந்திரத்தில் . ஒன்று வல்லாரையும் - ஓரெழுத்து வல்லவர்களையும் . சாரல் - அடையாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 10

மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடை யானடி யேயலால்
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.

பொழிப்புரை :

மற்றும் கேட்பீராக ; மனத்திலே வேறொன்றும் தாங்குதலின்றி மேனிமுழுதும் பூசிய திருநீற்றொடு கோவணமும் கொண்டு ஒப்பற்ற தனி இடபத்தை உடைய இறைவன் திருவடிகளே அல்லால் வேறு பற்று ஒன்றும் இல்லாதவர்களாகிய அடியார்கள்மேல் படைகொண்டு போகவேண்டா .

குறிப்புரை :

மற்றும் - வேறொன்றும் . மனப்பரிப்பு - மனத்தில் பிறிது ஒரு நினைப்பு . சுற்றும் பூசிய - உடல் முழுதும் பூசிய . பற்றொன்று இல்லி கள்மேல் - இறைவனையன்றிப் பற்றுக்கோடு இல்லாதவர்களிடத்தே ஆசையெனலுமாம் . படை போகல் - படைகொண்டு செல்லாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 11

அரக்க னீரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலும்
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே

பொழிப்புரை :

இராவணனை நெரித்த பெருமானது அடி யவர்களைவிட்டு அகலுங்கள் : நீங்கள் ஏதேனும் இடையூறு செய்ய முயன்றால் அவன் திருவடி சுடும் .

குறிப்புரை :

ஈரைந்தலை - பத்துத்தலை. ஓர்தாளினால் - ஒரு திருவடி விரலால். சுருக்கு - பாசத்தால் பிணித்தல். நெருக்கி ஊன்றி இட்டான் - மலையின்கீழ் அகப்படச்செய்து ஊன்றி வருத்தியவன். தமர் - அடியார். நிற்கிலும் - நின்றாலும். சுருக்கெனாது - விரைவாகப் போதல் இன்றி. சுருக்கெனில் - உமது தொழில்களில் ஏதேனும் செய்ய முயன்றால். சூடும் - சுடும் என்பது நீண்டது. திருவடியை நினைப்பித்த வாறு.

பண் :

பாடல் எண் : 1

காச னைக்கன லைக்கதிர் மாமணித்
தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள்
மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம்
ஈச னையினி யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

காசு உடையவனும் , கனல் உடையவனும் , ஒளிச்சுடர்விடும் செம்மணி விளக்கம் உடையவனுமாகிய பெருமானைச் சில தெளிவற்ற மூடர்கள் புகழார் . குற்றத்தினைக் கழித்து ஆட்கொள்ளவல்ல எம் இறைவனை இனி நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?.

குறிப்புரை :

காசனை - விடக்கறையாகிய மாசினை உடையவனை ; பொற்காசு போல்பவன் எனினுமாம் . தேசு - ஒளி . தெண்ணர் - கீழோர் . தெளிந்த அறிவில்லாதவர்கள் . மாசினைக் கழித்து - குற்றம் நீக்கி . மறக்கிற்பனே - மறப்பேனோ .

பண் :

பாடல் எண் : 2

புந்திக் குவிளக் காய புராணனைச்
சந்திக் கண்நட மாடுஞ் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே.

பொழிப்புரை :

புத்திக்கு விளக்காக உள்ள மிகப்பழமையனும் , நடம் ஆடும் சதுரப்பாடு உடையவனும் , அந்திச்செவ்வண்ணம் உடையவனும் , நிறைந்த அழல்கொண்ட மூர்த்தியும் , வந்து என்னுள்ளம் கொண்டவனுமாகிய பெருமானை மறப்பேனோ?

குறிப்புரை :

புந்திக்கு - அறிவுக்கு . புராணன் - பழையவன் . சந்தி - இரவு . சதுரன் - சதுரப்பாடுடையன் . அந்தி வண்ணன் - செம் மேனியன் . ஆரழல்மூர்த்தி - அரிய நெருப்பின் வடிவமாயவன் . வந்து என் உள்ளம் கொண்டானை - தோன்றி என் மனத்தை இடமாக் கொண்டவனை . மறப்பனே - மறப்பேனோ ?

பண் :

பாடல் எண் : 3

ஈச னீசனென் றென்று மரற்றுவன்
ஈசன் தானென் மனத்திற் பிரிவிலன்
ஈசன் தன்னையு மென்மனத் துக்கொண்டு
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

ஈசன் ஈசன் என்றும் வாய்விட்டு அரற்றுவேன் ; ஈசன் என் மனத்தில் பிரிவில்லாதவனாய் உள்ளான் - ஈசனையும் என் மனத்துக்கொண்டபின் , தன்னை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

என்றும் - எப்பொழுதும் . அரற்றுவன் - சொல்லிக் கொண்டிருப்பேன் . பிரிவிலன் - நீங்காது எழுந்தருளியிருப்பவன் . மறக்கிற்பனே - மறப்பேனோ ?

பண் :

பாடல் எண் : 4

ஈச னென்னை யறிந்த தறிந்தனன்
ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால்
ஈசன் சேவடி யேத்தப்பெற் றேனினி
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

இறைவன் சேவடிகளை ஏத்தப் பெறும் இயல்பினன் ஆதலால் என்னை இறைவன் அறிந்ததை யான் அறிந்தேன் ; பிறகும் அவன் சேவடியை ஏத்தப்பெற்றேன் ; ஆதலின் இனி ஈசனை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

என்னை அறிந்தது - என்னைத்தெரிந்து திருவருள் பாலித்ததை . அறிந்தனன் - நானும் அறிந்தேன் . சேவடி - திருவடிகளை . ஏற்றப்பெறுதலால் - என் உள்ளத்தில் ஏற்றிக் கொண்டிருத்தலால் . ஏத்தப்பெற்றேன் - துதிக்கப்பெற்றேன் .

பண் :

பாடல் எண் : 5

தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனி லானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

தேனும் , பாலும் போல்வானும் , சந்திரனும் சூரியனும் போல்வானும் , வானத்தின்கண் வெண்மதியினைச் சூடிய வீரனும் , இளவேனிலுக்குரியவனாகிய மன்மதனைத் தீயழலால் மெலியச் செய்தவனுமாகிய ஞானக் கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

மெலிவுசெய் - எரித்தழித்த . தீயழல் ஞான மூர்த்தியை - நெருப்பின் வடிவமாய் விளங்கும் அறிவுத்தெய்வத்தை .

பண் :

பாடல் எண் : 6

கன்ன லைக்கரும் பூறிய தேறலை
மின்ன னைமின் னனைய உருவனைப்
பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய
என்ன னையினி யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

கன்னலும் , கரும்பின் ஊறிய சாற்றுத் தெளிவு போல்வானும் , ஒளியை உடையவனும் , மின்னலைப் போன்ற உருவம் உடையவனும் , பொன்போலும் மேனியினனும் ஆகிய மாணிக்கக் குன்றுபோல் விளங்கும் என்னை உடையானை , இனியான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

கன்னலை - கரும்பை . கரும்பூறிய கன்னலை . தேறலை - கரும்பினிடத்தே ஊறிய சாற்றை . தேறலை - தேனை . மின்னனை - மின்னல் வடிவாயிருப்பவனை . மின்னனைய உருவனை - மின்னல் போன்ற ஒளிவடிவினனை . பொன்னனை - பொன் போன்றவனை . மணிக்குன்று பிறங்கிய - சிறந்த மாணிக்க மலையாய் விளங்கிய . என்னனை - என்னுடைய பொருளாயுள்ளவனை .

பண் :

பாடல் எண் : 7

கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச்
சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியை
அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர்
விரும்பு மீசனை யான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

கரும்பும் கட்டியும் போல்வானும் , வண்டுகள் சூழும் நறுமண மலர்களை அணிந்த சுடர்விடும் ஒளிக்குள் ஒளி ஆகியவனும் , அரும்புகளிற் பெரிய போதுகளைக் கொண்டு ஆய்மலரால் விரும்பும் இறைவனுமாகிய பெருமானை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

கட்டி - கரும்பின் கட்டியாகிய வெல்லம் . கந்த மாமலர்ச் சுரும்பு - மணங்கமழும் மனத்தாமரை மலரின் அன்புத் தேனை நுகரும் வண்டு . சுடர்ச்சோதியுட் சோதி - விளங்கும் ஒளிக்குள் ஒளியாய்த் திகழ்பவன் . அரும்பினில்பெரும்போது கொண்டு - அரும்புகளாக இருக்கும்போதே மலராவதன் முன்பே எடுக்கப்பட்ட பெரிய மலர்களை ஏற்றுக்கொண்டு . ஆய்மலர் விரும்பும் - அழகிய உள்ளத் தாமரைமலரை விரும்பும் .

பண் :

பாடல் எண் : 8

துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை
நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை
வஞ்ச னேனினி நான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

உறங்கும் போதும் சுடர்விடும் சோதியும் , நெஞ்சத்துக்குள் நிலைத்து நின்று நினைக்கவைக்கும் நீதியும் , ஆலகாலவிடத்தைத் திருக்கழுத்துள் அடக்கிய நம்பனுமாகிய பெருமானை வஞ்சனை உடைய யான் இனி மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

துஞ்சும்போதும் - உறங்கும்பொழுதும் . சுடர்விடு சோதியை - உள்ளத்தில் ஒளிவிடும் விளக்கை . நெஞ்சுள் நின்று - மனத்தில் எழுந்தருளியிருந்து . நினைப்பிக்கும் - என் செயலன்றி அவன் செயலாய்ப் பல்வகை நினைப்புக்களையும் உண்டாக்கும் . நீதியை - நீதியின் வடிவானவனை .

பண் :

பாடல் எண் : 9

புதிய பூவினை புண்ணிய நாதனை
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக்
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான் மறக் கிற்பனே.

பொழிப்புரை :

புதிய பூவும் , புண்ணியநாதனும் , செல்வமும் , நீதியும் , முத்துக்குன்றும் , அடைந்தோர்க்குக் கதியும் , மதியும் , மைந்தனும் ஆகிய திருநீலகண்டமுடைய கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

புதிய - அன்றலர்ந்த . நிதியை - பெறுதற்கரிய செல்வத்தை . நித்திலக் குன்றினை - திருநீற்றுப்பூச்சால் முத்துமலையை ஒப்ப வீற்றிருப்பவனை . கதியை - வீடுபேறான நற்கதியின் வடிவாயிருப்பவனை . மதியை - ஞான வடிவினனை .

பண் :

பாடல் எண் : 10

கருகு கார்முகில் போல்வதொர் கண்டனை
உருவ நோக்கியை யூழி முதல்வனைப்
பருகு பாலனைப் பால்மதி சூடியை
மருவு மைந்தனை நான்மறக் கிற்பனே.

பொழிப்புரை :

கருமை உடைய கார்முகில் போல்வதாகிய ஒப்பற்ற திருநீலகண்டனும் , அழகுடைய நோக்கு இயைந்த ஊழிக் காலத்தும் உள்ள முதல்வனும் , பருகுதற்குரிய பால் போன்ற வெண் மதியைச் சூடியவனும் , அன்பால் நினைவாரை மருவுகின்ற மைந்தனுமாகிய பெருமானை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

குறிப்புரை :

கருகு - கருகிய . கார்முகில் - கார்காலத்து மேகம் . உருவ நோக்கியை - உலகம் உருப்பெற்று உண்டாம்படி நோக்கியவனை . ஊழிமுதல்வனை - ஊழிக்காலத்தும் அழியாத முதற்கடவுளை . பருகு - பருகுகின்ற . பாலனை - பாலாயிருப்பவனை . அல்லது பாலனைய என்று விரிக்க . மருவும் - நம்முள்ளத்தே வந்து பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 1

அண்டத் தானை யமரர் தொழப்படும்
பண்டத் தானைப் பவித்திர மார்திரு
முண்டத் தானைமுற் றாத இளம்பிறைத்
துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

அண்டத்தில் உள்ளவனும், தேவர்களால் தொழப் படும் பொருளும், பவித்திரம் உடைய நெற்றியை உடையவனும், இளம் பிறைப் பிளவினைச் சூடியவனுமாகிய பெருமானே தொழத் தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

அண்டத்தானை - உலகங்களின் வடிவானவனை. அமரர் தொழப்படும் - தேவர்களால் தொழப்படுகின்ற. பண்டத் தானை - உறுதிப்பொருளை. பவித்திரம் ஆர் திருமுண்டத்தான் - தூய்மை பொருந்திய அழகிய திருநீற்றை அணிந்த நெற்றியை உடையவன். பவித்திரம் என்பதற்குக் காணிக்கைப் பாத்திரம் எனவும் பொருளுண்டு. முண்டம் - நெற்றி.

பண் :

பாடல் எண் : 2

முத்தொப் பானை முளைத்தெழு கற்பக
வித்தொப் பானை விளக்கிடை நேரொளி
ஒத்தொப் பானை யொளிபவ ளத்திரள்
தொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

முத்து ஒப்பவனும், முளைத்தெழுகின்ற கற்பக வித்துப் போல்வானும், திருவிளக்கிடை நேர்கின்ற ஒளியை ஒத்திருப்பவனும், ஒளியையுடைய பவளத்திரளின் கொத்தினை ஒப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

முளைத்தெழு - முளைத்துத் தோன்றும். விளக்கிடை நேரொளி ஒத்தொப்பானை - விளக்கையும் அதனிடை ஒளியையும் ஒப்பவனை. பவளத்தின் தொத்து - பவளங்கள் திரண்ட கொத்து. தொழற்பாலது - தொழுந்தன்மையை உடையவன். தொத்து - திரட்சி.

பண் :

பாடல் எண் : 3

பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர்
வண்ணத் தானை வகையுணர் வான்றனை
எண்ணத் தானை யிளம்பிறை போல்வெள்ளைச்
சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

பண் ஒத்தவனும், பவளம் திரண்டது போன்ற செவ்வண்ணம் உடையவனும், வகைகளையெல்லாம் உணர்பவனும், அடியார்கள் எண்ணத்தில் இருப்பவனும், இளம்பிறை போன்ற வெண்சுண்ணம் உடையவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

பண் - இசை. வண்ணம் - நிறம். வகை உணர்வான் தனை - நாம் செய்யும் பல்வகைக் கூறுபாடுகளையும் உணர்பவனை. எண்ணத்தானை - நம் எண்ணமாக இருப்பவனை. வெள்ளைச் சுண்ணம் - திருநீறு.

பண் :

பாடல் எண் : 4

விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப்
படலை யானைப் பலிதிரி வான்செலும்
நடலை யானை நரிபிரி யாததோர்
சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

விடலைப்பருவம் உடையவனும், மணங்கமழும் கொன்றைமாலை உடையவனும், பலிபெறுதற்காகத் திரிந்துசெல்லும் துன்பம் உடையவனும், நரிகள் பிரிந்துசெல்லாத சுடுகாட்டில் இருப்பவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

விடலை - ஆண்மக்களிற் சிறந்தவன். விரை - மணம். படலை - மாலை. பலிதிரிவான் - பிச்சையேற்றுத் திரிவதற்காக. நடலையான் - நடிப்புடையோன். நரி பிரியாததோர் சுடலை - நரிகள் கூடியிருக்கும் இடுகாடு.

பண் :

பாடல் எண் : 5

பரிதி யானைப்பல் வேறு சமயங்கள்
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய
பிரிதி யானைப் பிறரறி யாததோர்
சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

ஞானசூரியனாக உள்ளவனும், பல்வேறு சமயங்களாற் கருதப்பட்டவனும், கண்டார் மனத்தை விரும்பியமர்ந்தவனும், பிறர் அறியாததோர் சுருதியானும் ஆகிய பெருமானே, தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

பரிதியான் - சூரியனாக இருப்பவன். பல்வேறு சமயங்களால் கருதப்படுபவன் என்க. \"யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்\" \"அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்\" சித்தியார்-சுபக்கம்.25.1) எனும் பாடல்கள் காண்க. கண்டார் - மெய்ப்பொருள் காட்சியைக் கண்டவர்கள். பிரிதியான் - ப்ரீதி என்னும் வடசொல் தமிழில் பிரிதி என்றுவரும். விருப்பம் என்பது பொருள்.

பண் :

பாடல் எண் : 6

ஆதி யானை அமரர் தொழப்படும்
நீதி யானை நியம நெறிகளை
ஓதி யானை உணர்தற் கரியதோர்
சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

முதல்வனும், தேவர்களால் தொழப்படும் நீதியானவனும், நியமநெறிகளை ஓதியவனும், உணர்தற்கு அரியதாகிய ஒப்பற்ற சோதியானும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

ஆதியானை - முதலில் தோன்றியவனை. நியமம் - செய்வன தவிர்வனவாய வரையறை. நெறி - நூல்வழி.

பண் :

பாடல் எண் : 7

ஞாலத் தானைநல் லானைவல் லார்தொழும்
கோலத் தானைக் குணப்பெருங் குன்றினை
மூலத் தானை முதல்வனை மூவிலைச்
சூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

உலகமாகி உள்ளவனும், நல்லவனும், வல்லவர் தொழும் கோலத்தை உடையவனும், குணமாகிய பெருங்குன்றானவனும், மூலமாக உள்ளவனும், முதல்வனும், மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

நல்லான் - நன்மையின் வடிவானவன். வல்லார் - அநுபூதியில் வல்லவர்கள். மூலத்தானை - எல்லாவற்றிற்கும் மூலப்பொருளாய் உள்ளவனை.

பண் :

பாடல் எண் : 8

ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்
வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச்
சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள்
சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

முதற்கண்ணே தோன்றிய அட்ட மூர்த்தியும், பஞ்ச கவ்வியம் அபிடேகம் கொள்பவனும், நமது மேல்வினைகள் வெந்து நீங்கும்படிக் கடைக்கண் சாதிப்பவனும், தவத்திடை மாற்றங்கள் தந்து சோதிப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

ஆதிப்பால் - முதன்மைப் பகுதியான. அட்ட மூர்த்தியை - எட்டு வடிவங்களாயிருப்பவனை. நம்மேல் வினை வெந்தற வேதிப்பான் என்க. வேதித்தல் - அறிவித்தல். விரும்பு தவத்திடை சாதிப்பானை - நம்மைத் தவத்தின்கண்ணே நிறுத்துபவன். சாதித்தல் - முடித்தல். மாற்றங்கள் - நாம் செய்யும் தவறுகள். சோதிப்பான் - ஆராய்ந்து களைபவன்.

பண் :

பாடல் எண் : 9

நீற்றி னானை நிகரில்வெண் கோவணக்
கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை
ஆற்றி னானை யமரர்த மாருயிர்
தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

திருநீறணிந்தவனும், ஒப்பற்ற வெள்ளிய கோவணக்கீறு உடையவனும், ஒளிகிளரும் சிவந்த சடைக்கண் கங்கையை உடையவனும் தேவர்க்கு உயிர்வழங்கினானுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

நிகர் இல் - ஒப்பில்லாத. கோவணக்கீறு - கோவணம். கீறு - கிழித்தது என்னும் பொருளது. கிளர் - விளங்கிய. ஒளி - ஒளியையுடைய. ஆறு - கங்கை. அமரர் தம் ஆருயிர் தோற்றினான் - தேவர்களுடைய அரிய உயிரை தன்னுள் ஒடுக்கி மீள உண்டாக்கியவன். அமரர்கள் நஞ்சுண்டு சாவாதுத் தோற்றியவன் எனலுமாம். தக்கன் வேள்வியில் அமரரை எழுப்பியதும் ஆம்.

பண் :

பாடல் எண் : 10

விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்
கட்டிட் டானைக் கனங்குழை பாலன்பு
பட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ்
சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

மெய்ஞ்ஞானத்து அடியேனை விட்டவனும், மெய்ப்பொருளைக் காட்டியவனும், உமாதேவியினிடத்து அன்பு பொருந்தியவனும், பகைத்தவராகிய திரிபுராதிகள் முப்புரங்களைச் சுட்டவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள் விட்டிட்டானை - பரஞானமாகிய உண்மைப்பொருளை வெளிப்படுத்தியவனை. கட்டிட்டான் கனங்குழைபால் - கனவிய குழையினை உடையவளாய பார்வதியினிடத்து. கனங்குழைபால் கட்டிட்டு - பார்வதியினிடத்துக் கட்டுண்டு. அன்பு பட்டிட்டானை - அன்பால் பிணிக்கப்பட்டவன். முப்புரம் சுட்டிட்டானை - பகைவரது திரிபுரங்களைச் சுட்டெரித்தவனை.

பண் :

பாடல் எண் : 11

முற்றி னானை இராவணன் நீண்முடி
ஒற்றி னானை யொருவிர லாலுறப்
பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச்
சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவனும், இராவணன் நீண்முடிகளை ஒற்றியபோது ஒரு விரலால் உறப்பற்றியவனும், ஒரு வெண்டலை உடையவனும், பாம்பினை அரைக்கண் சுற்றியவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

இராவணன் நீண்முடி முற்றினான் - இராவணனது நீண்ட முடியை முறியச்செய்தான். ஒரு விரலால் உறநெறி ஒற்றினான் - கால் விரல் ஒன்றினால் ஒற்றியவன். ஓர் வெண்தலை பற்றினான் - பிரமனது ஒரு தலையைக் கையில் தாங்கியவன். அரை - இடை.

பண் :

பாடல் எண் : 1

புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்
நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை
மிக்குக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனுமாகிய இருவரும் அழகு பொருந்திய ஒளிச்சுடர் நிறம் உடைய பெருமானைப் புகுந்து அணைந்து விரும்பி மலரிட்டு வணங்கிலராய் , மகிழ்ந்து பொருந்தி மணமலர்களைக் கொய்து அருச்சித்திலராய் ஆணவமிகுந்து காண முயன்று காண்கிலராயினார் .

குறிப்புரை :

புக்கணைந்து - இறைவன் இருக்குமிடத்தே உள்ளே புகுந்து நெருங்கி . புரிந்து - விரும்பி . அலர் - மலர் . நக்கு - மனம் மகிழ்ந்து . அணைந்து - நந்தவனமடைந்து . நறுமலர் - மணமலர் . சொக்கு - அழகு . மிக்கு - பிறரின் தருக்கால் மிக்கு . இருவர் - திருமால் , பிரமன் .

பண் :

பாடல் எண் : 2

அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர்
திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர்
உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச்
செலவு காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலக மூர்த்தியாகிய ஒளிநிற வண்ணம் உடைய இறைவனைப் பூவும் நீரும் கொண்டு அபிடேகித்துத் தெளிவடைந்திலராய்த் திருச்சாந்து தீட்டித் திரிந்திலராய்ச் சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார் ..

குறிப்புரை :

அலர் - பூ . ஆட்டி - அபிடேகித்து . தெளிந்திலர் - அறிவு தெளியப்பெற்றாரில்லை . திலகமண்டலம் - பொட்டு . தீட்டி - எழுதி . ஒப்பனை செய்து . திரிந்திலர் - வலமாகச் சுற்றவும் செய்யாதவர்கள் . ஒளிநிறம் - ஒளிவடிவான நிறம் . செலவு காணலுற்றார் - மேலும் கீழுமாகிய வான் நிலம் சென்று காணத் தொடங்கினர் . இருவர் - திருமால் , பிரமன் .

பண் :

பாடல் எண் : 3

ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலகங்களைக் காவல்கொள்ளும் கபாலியாகிய பெருமானின் திரு வேடத்தைக் காணலுற்றார்கள் . சாணநீரோடு , திருவலகும் கைகளிற் கொண்டு வணங்காதவராய்ப் பூக்கள் பெய்த கூடையைப் புனைந்து சுமந்திலர் . முனைப்புடன் காணமுயன்று காண்கிலர் ஆயினார் .

குறிப்புரை :

ஆப்பி - பசுவின் சாணம் . அலகு - கூட்டுதல் . திருவலகிடுதல் , திருமெழுக்கிடுதல் ஆகிய சரியைத் தொண்டுகள் . பூப்பெய் கூடை - பூக்கள் பறித்துப்பெய்து நிரப்பிய கூடை . புனைந்து - திரு மாலை தொடுத்து . சுமந்திலர் - பெருமானுக்குச் சுமந்து செல்லாதவராயினர் . காப்புக்கொள்ளி - காவல் மேற்கொண்டு . கபாலி தன் வேடத்தை - பிரம கபாலத்தைச் சுமந்துகொண்டு திரியும் பிக்ஷாடனரின் திருவுருவத்தை . ஓப்பிக்காணலுற்றார் - பாதுகாத்துக் காணத் தொடங்கினர் . காப்பு - திருநீறு .

பண் :

பாடல் எண் : 4

நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை
மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் நெய்யும் பாலும் கொண்டு அபிடேகித்து நினைந்திலராய்ப் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலராய் ஐயனாகிய வெப்பமுடைய அழலின் நிறம் கொண்ட இயல்புடைய பெருமானது மெய்ம்மையைக் காணலுற்றுக் காண்கிலராயினார் .

குறிப்புரை :

ஆட்டி - அபிடேகம் செய்து . நினைந்திலர் - நினையாராயினர் . பொக்கம் - வஞ்சக வார்த்தை . போக்கி - நீக்கி . ஐயன் - தலைவன் . வெய்ய - வெம்மையை உடையதான . அழல்நிற வண்ணன் - நெருப்புப்போலும் சிவந்த ஒளிவடிவாய்த் தோன்றியவன் . மெய்யை - உண்மையின் வடிவானவனை .

பண் :

பாடல் எண் : 5

எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர்
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர்
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை
நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் எருக்க மாலை கொண்டு இண்டை புனைந்து வழிபடாதவராய் அழகு பெருக்குதற்பொருட்டுக் கோவணம் கிழித்து உடுத்தாதவராய் ஆணவத்தினாற்சென்று சடைதாழ்கின்ற அண்ணலாராகிய பெருமானைத் தத்தமில் நெருக்கிச்சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார் .

குறிப்புரை :

எருக்குக் கொண்டு - வெள்ளெருக்குப் பூவைக் கொண்டு . கண்ணியாகிய இண்டை - தலைமாலையாகிய இண்டை . புனைந்திலர் - கட்டிச் சூட்டினாரில்லை . பெருக்கக் கோவணம் - பெரிதாய்க் கோவணத்தை . பீறி - கிழித்து . உடுத்திலர் - சூட்டினாரில்லை . தருக்கு - செருக்கு . தாழ் - தொங்குகின்ற . நெருக்கி - நெருங்கி .

பண் :

பாடல் எண் : 6

மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர்
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அறிவுடன்கூடி ஒளிநிற வண்ணனாகிய பெருமானை , மரங்களில் ஏறி மலர்பறித்திட்டிலராய் , நிரம்ப நீர் சுமந்து அபிடேகித்து நினைந்திலராய் ஆணவம் நிரம்பக் காண முயன்று காண்கிலர் ஆயினர் .

குறிப்புரை :

மரங்கள் - பூமரங்கள் . நிரம்ப - நிறைய . ஆட்டி - அபிடேகித்து . நினைந்திலர் - நினையாதவராயினார் . உரம் - செருக்கோடு கூடிய வலிமை . நிரம்ப - முழுமையாய் .

பண் :

பாடல் எண் : 7

கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர்
அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய
பட்ட கட்டமுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கட்டுவாங்கமும் கபாலமும் கைக்கொள்ளாதவராய் , எட்டுறுப்புக்களும் நிலத்துப்படக்கிடந்து அடிதாழாதவராய் இறைவன் சேவடியும் திருமுடியும்காணுதற்குச் சென்றெய்திப் பொருந்திய துயரங்கள் உற்றார் அடிமுடி காண்கிலர் .

குறிப்புரை :

கட்டுவாங்கம் - கையில் அணியும் ஓர் ஆயுதம் . கபாலம் - மண்டையோடு . கைக்கொண்டிலர் - தாங்கியிருக்கும் உண்மையை உணராராயினர் . அட்டமாங்கம் கிடந்து - எட்டு உறுப்புக்களும் நிலத்திலே படிய வீழ்ந்து . அடி வீழ்ந்திலர் - திருவடிகளை வணங்காராயினர் . சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன் . காணிய - காணும் பொருட்டு . பட்டகட்டம் - உண்டான துன்பங்கள் பலவற்றையும் .

பண் :

பாடல் எண் : 8

வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மாமல ரிண்டை புனைந்திலர்
எந்தை யேறுகந் தேறெரி வண்ணனை
அந்தங் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் வெந்த திருநீறு விளங்க அணியாதவராய் , மணமிக்க மலர்களால் இண்டை மாலை புனையாதவராய் எந்தையாகிய ஏறுகந்து ஏறும் எரிவண்ணனாகிய பெருமானின் ஆதியும் அந்தமும் காண இயலாதவர் ஆயினார் .

குறிப்புரை :

வெந்தநீறு - திருநீறு . கந்தமாமலர் - மணம் பொருந்திய சிறந்த மலர் . இண்டை - தலைமாலை . எந்தை - எனக்குத் தந்தையாவான் . ஏறு உகந்து ஏறு - இடபத்தை விரும்பி ஊர்ந்து செல்லும் . அந்தம் - அடி முடிகளின் முடிவிடங்கள் .

பண் :

பாடல் எண் : 9

இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் இளமையோடுகூடி எழுந்து கரிய குவளை மலர்களைப் பிளந்து இதழ்களால் பிணைத்துத் திருவடியில் இட்டு வணங்காதவராய் களவு செய்யும் தொழிலை உடைய காமனைக் காய்ந்த பெருமானது அளவினைக் காண முயன்று காண்கிலர் ஆயினார் .

குறிப்புரை :

இளவெழுந்த - எழுந்த இளமைத்தன்மையோடு கூடி எழுந்த . இரும் - கரிய . பிளவுசெய்து - விரித்து . பிணைத்து - கட்டி . களவுசெய்தொழில் - காதலுணர்ச்சியைத் திருட்டுத் தனமாய்ச் செய்யும் . காய்ந்தவன் - சினந்து எரித்தவன் . அளவு - அடிமுடியின் அளவுகள் .

பண் :

பாடல் எண் : 10

கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர்
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
அண்ட மூர்த்தி யழல்நிற வண்ணனைக்
கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கண்டி அணிந்து கபாலம் கையிற்கொள்ளாதவராய் வெண்மை விரிந்த சங்கம் விம்முமாறு வாயில் வைத்தூதாதவராய் அண்டமூர்த்தியாகிய தீ நிறவண்ணனை மண்ணில் கிண்டியும் விண்ணில் பறந்தும் காண முயன்று காண்கிலர் ஆயினார் .

குறிப்புரை :

கண்டி - உருத்திராக்கமாலை . பூண்டு - அணிந்து . விண்ட - வாய் விரிந்த . வான் சங்கம் - வெள்ளிய சங்கு . விம்ம - ஒலிக்க . வாய் வைத்திலர் - வாயின்கண் வைத்து ஊதினாரில்லை . அண்டமூர்த்தி - எல்லா உலகங்களின் வடிவானவன் . கெண்டி - கிண்டி .

பண் :

பாடல் எண் : 11

செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.

பொழிப்புரை :

செங்கண் உடையவனாந் திருமாலும் , பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காண்கின்ற வல்லமை இல்லாதவர்களுக்கு ஆறு பொங்கும் செஞ்சடையை உடைய புண்ணியக் கடவுளாம் இறைவன் ` இங்கு உற்றேன் ` என்று இலிங்க வடிவில் தோன்றினான் .

குறிப்புரை :

செங்கணான் - திருமால். இலிங்கத்தே - சிவ இலிங்கத் திருவுருவத்தின்கண்ணே. பொங்கு - மிக்க. புண்ணியமூர்த்தி - புண்ணியந்திரண்ட வடிவான தலைவன்.

பண் :

பாடல் எண் : 1

பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
மின் னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! பொன்னும் நினையுமாறு அழகு திகழ்கின்ற புன்சடையின் புறத்தே ஒளியுள்ளதாகிய திரண்ட வெண்பிறை சூடியவனே ! நின் உள்ளத்துச் சிறிது அருள் கொண்டு என்னுள்ளத்துள் உளதாகிய இருள் நீங்கிடத் திருவுளம் பற்றியருள்க .

குறிப்புரை :

பொன்னுள்ளத்திரள் - பொன்நிறமுள்ளதாய்த் திரண்ட . புன்சடையின் - மெல்லிய சடையின் . புறம் - மேலே . மின்னுள்ளத்திரள் - மின்னலின் ஒளி உள்ளதாய்த் திரண்ட . வெண் பிறையாய் - வெள்ளிய பிறைச்சந்திரனை அணிந்தவனே . இறை - சிறிது காலம் . நின்னுள்ளத்து - உனது திருவுள்ளத்தில் . அருள் கொண்டு - கருணைகொள்ளுதலால் . இருள் நீங்குதல் - அஞ்ஞானம் அகலுதல் . இதனால் இப்பதிகம் மனத்தொகை எனப்பட்டது . என் மனத்தே நிகழ்வதாயுள்ள உள்ளக் கிடக்கை . எந்தை பிரானிரே - என் தந்தையாகிய பெருமானே . இர் - முன்னிலை விகுதி . ஏ - அசை . பெருமானே ! வெண்பிறையாய் ! இறைப் பொழுது நின்னுள்ளத்து அருள்கொள்ளுதலால் அறியாமையாகிய இருள் நீங்குதல் என் மனத்தே நிகழ்ந்துள்ளது என முடிவு செய்க .

பண் :

பாடல் எண் : 2

முக்க ணும்முடை யாய்முனி கள்பலர்
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ
டக்க ணம்மரை யாயரு ளேயலா
தெக்க ணும்மில னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! முக்கண்ணும் உடையாய் ! முனிவர்கள் பலர் கூடி எண்ணித் தியானிக்கும் கழலை உடையாய் ! புலித்தோலினோடு அழகிய நினது அருளேயல்லாது வேறு எவ்விடத்தும் பொருள் இல்லேன் .

குறிப்புரை :

முக்கணும் உடையாய் - மூன்று கண்களை உடையவனே . முனிகள் பலர் - முனிவர்கள் பலர் . தொக்கு எணும் கழலாய் - கூடி எண்ணும் திருவடிகளை உடையவனே . தோலினோடு - புலித்தோல் உடையோடு . அக்கு அம் அண் அரை - அக்கு மணிமாலை நெருங்கிய அழகிய இடை . அருளே அலாது - கருணையே வடிவாய் இருப்பானேயல்லாமல் . எக்கணும் - எவ்விடங்களிலும் . இலன் - கருணை வடிவின்றி வேறு வடிவு இலனாய எந்தை பிரானிரே என்க .

பண் :

பாடல் எண் : 3

பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல கம்முழு தாளினும்
தனியாய் நீசரண் நீசல மேபெரி
தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! தண்ணியாய் ! விரும்புதற்குரிய தெண்ணிலவு பாயும் படர்புன்சடை முனிவனே ! நீ உலகம் முழுதும் ஆண்டாலும் தனியாய் ! சரண் நீயே ; என்பால் வஞ்சனையே பெரிது ; எனக்கு இனியாய் நீயே .

குறிப்புரை :

பனியாய் - பனிபோன்று குளிர்ந்த தன்மையனாய் . வெங் கதிர்பாய் - வெம்மையை உடைய சூரிய கிரணங்கள் பொருந்திய . படர் - விரிந்த . புன்சடை - மெல்லிய சடை . முனியாய் - முனிவனாய் . தனியாய் நீ - ஏகனாயிருப்பவன் நீ . சலமே - துன்பம் .

பண் :

பாடல் எண் : 4

மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்
குறையு மாயினை கோளர வோடொரு
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி
திறையுஞ் சொல்லிலை யெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! வேதங்களையும் பாடுவீர் ; பெரிய முனிவர்களது மயக்கத்தினுக்கு உறையும் ஆயினீர் ; கொள்ளும் பாம்பினோடு ஒரு பிறையும் சூடினை என்பதல்லால் வேறு சிறிதும் சொல் இல்லை .

குறிப்புரை :

மறையும் - வேதங்களையும் , மாதவர் மாலினுக்கு - தாருகாவனத்து முனிவர் . குறையும் மயக்கத்திற்கு - மயக்காகிய குறையாகவும் . கோளரவு - கொள்ளும் தன்மையதாய பாம்பு . பிறிது - வேறு . இறையும் - சிறிதும் .

பண் :

பாடல் எண் : 5

பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள்
ஆர்த்தா யாடர வோடன லாடிய
கூத்தா நின்குரை யார்கழ லேயல
தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! பூத்துச் செறிந்த கொன்றையினை உடையாய் ; புலியின் தோலை ஆர்த்துக் கட்டினாய் ; ஆடும் பாம்பினோடும் அனலோடும் ஆடும் கூத்தனே ! நின் ஒலிக்கும் கழலே அல்லது எனது நா வேறு ஒன்றையும் ஏத்தாது .

குறிப்புரை :

பூத்தார் கொன்றையினாய் - மலர்ந்த கொன்றைப்பூ மாலையை அணிந்தவனே . அதள் - தோல் . அரவோடு புலியின் அதள் ஆர்த்தாய் என்க . ஆர்த்தாய் - கட்டினாய் . அனலாடிய - தீயேந்தி யாடிய . குரையார் கழலேயலது - ஒலித்தலைப் பொருந்திய . திருவடிகளேயல்லாமல் . ஏத்தா நா - துதியாத நாக்கு . எனக்கு - எனக்குள்ளது .

பண் :

பாடல் எண் : 6

பைம்மா லும்மர வாபர மாபசு
மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும்
அம்மா லல்லது மற்றடி நாயினேற்
கெம்மா லும்மிலே னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! படத்தொடு ஒலிக்கும் அரவுடையவனே ! பரமனே ! இடபத்தின்மேல் அஞ்சனம் தீட்டிய கண்ணுடைய உமாதேவியோடு ஏறும் மைந்தனே ! என்றும் அம்மயக்கமல்லது மற்று அடி நாயினேனுக்கு வேறு எம் மயக்கமும் இல்லேன் . ` நாயினேன் ` என்றும் பாடம் .

குறிப்புரை :

பைம்மாலும் அரவா - படத்தோடு கூடிய நஞ்சினால் மயங்குதற்கு ஏதுவான . பசு - பசு இனத்துளதாய எருது . மைம்மால் கண்ணி - பார்வதி . பார்வதி - கரிய உருவத்தையும் மயக்கம் செய்யும் விழியையுமுடையவள் . மைந்தா - வலியனே . அம்மால் அல்லது - அந்த ஆசை அல்லாமல் . அடிநாயினேற்கு - அடிமையனாகிய நாயேனுக்கு . எம்மாலும் - வேறு எந்த ஆசையும் .

பண் :

பாடல் எண் : 7

வெப்பத் தின்மன மாசு விளக்கிய
செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடு மொண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மில னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! வெப்பத்தின் மனமாசு விளக்கும் செப்பம் உடைமையினால் ` சிவன் ` என்பவர் தீவினைகளை ஒப்பத் தீர்க்கும் ஒள்ளிய கழலை உடையானாகிய உமக்கல்லது வேறுபற்று இல்லேன் .

குறிப்புரை :

வெப்பத்தின் - ஞானஒளி வெப்பத்தினாலே . மனமாசு - மனத்தின்கண் உளதாய அறியாமையாகிய இருளை . விளக்கிய - விளங்கச்செய்த . செப்பத்தால் - செம்மைத் தன்மையால் . சிவன் என்பவர் - செம்மையன் என்று சொல்பவர் . ஒப்ப - முடிய . ஒண் கழலாற் கலது - ஒள்ளிய வீரக்கழலை அணிந்த திருவடியை உடைய பெருமானிடத்தேயல்லாமல் . எப்பற்றும் - வேறுஎவ்வித ஆசையும் .

பண் :

பாடல் எண் : 8

திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும்
நிகழு மொண்பொரு ளாயின நீதியென்
புகழு மாறு மலானுன பொன்னடி
இகழு மாறில னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! விளங்குகின்ற சுடர் சூழ்கின்றவனோடு நாள்தோறும் நிகழும் ஒள்ளிய பொருளாயின நீதிகளை என்னே புகழுமாறு ! அல்லது உன் பொன்னடிகளை இகழுமாறு இல்லேன் .

குறிப்புரை :

திகழும் - விளங்கும் . சூழ்சுடர் - சூழ்ந்த ஒளியோடு கூடிய சூரிய சந்திரர்களை ( உடையதான ). வானொடு - ஆகாயத்தோடு . நிகழும் - உலகின்கண் இயங்குகின்ற . ஒண்பொருளாயின - சிறந்த பொருளாயுமிருப்பன . சூரிய சந்திராகியும் , ஆகாயமாகியும் , உலகப் பொருளாயும் இருப்பவன் . விண்ணும் மண்ணுமாயிருப்பவன் என்க . புகழும் ஆறு அலால் - புகழ்வதையன்றி . நுன் பொன்னடி - உனது அழகிய திருவடி .

பண் :

பாடல் எண் : 9

கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை
எப்பற் றியறி தற்கரி யாயருள்
அப்பற் றல்லது மற்றடி நாயினேன்
எப்பற் றும்மிலே னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

திருமாலால் அறிதற்கரியவனே ! உன் திருவருளாகிய பற்றுக்கோடு ஒன்றைத் தவிர வேறு எப்பற்றும் எனக்கு இல்லை .

குறிப்புரை :

திருமால் பிரமன் - திருமாலும் பிரமனும் . எய்ப்பு அற்று - துன்பம் இன்றி . உன்னை எப்பெற்றியுடையவன் என்று அறிதற்கு அரியவனே என்க . கைப்பற்றியருள் எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 10

எந்தை யெம்பிரா னென்றவர் மேல்மனம்
எந்தை யெம்பிரா னென்றிறைஞ் சித்தொழு
தெந்தை யெம்பிரா னென்றடி யேத்துவார்
எந்தை யெம்பிரா னென்றடி சேர்வரே.

பொழிப்புரை :

எந்தை எம்பிரான் என்று மனம் வாக்குக் காயங்களால் வழிபடுவார் இறைவன் திருவடி சேர்வர் .

குறிப்புரை :

என்றவர் மேல் - என்று கூறியவரிடத்து . மனம் - மனம் பொருந்த . என்று - என்றும் கூறி . இறைஞ்சி - தலைகுனிந்து . தொழுவார் - வணங்குவார் . இறைவன் அடியார்களை இறைவனாகவே கருதி வணங்குவார் என்க . அடியாரை வழிபட்ட பிறகு பெருமானை எந்தை எம்பிரான் என்று எல்லாரும் போற்றி . அடி சேர்வர் - இறைவனது திருவடியை அடைவார்கள் .

பண் :

பாடல் எண் : 1

சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வான்நிறத் தானணி யார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி
வந்திப் பாரவர் வானுல காள்வரே.

பொழிப்புரை :

சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும் , சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும் , அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர் .

குறிப்புரை :

சிந்திப்பார் - தன்னை நினைப்பவர்கள் . செஞ்சுடர் அந்திவான் - சிவந்த ஒளியோடு கூடிய அந்திக்காலத்து வானம் . அணியார் - அழகு பொருந்திய . முந்தி - முற்பட அல்லது தலையிலே . வந்திப்பார் - வாழ்த்துபவர்கள் .

பண் :

பாடல் எண் : 2

அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே.

பொழிப்புரை :

அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும் ; அச்சுடரைக் கண்டு இங்குஆர் அறியவல்லவர்கள் ? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர் .

குறிப்புரை :

அண்டமார் இருள் - எல்லா உலகங்களிலும் பொருந்திய இருள் அனைத்தையும் . ஊடுகடந்து - இடையே நீங்கிச் சென்று . உம்பர் - வானோர் உலகிற்கும் உயர்ந்த உலகின்கண் . போலும் , ஒப்பில்போலி . ஒள்சுடர் - ஒளியையுடைய விளக்கு . அச்சுடர் இங்குக் கண்டறிவார் யார் - அவ்விளக்கை இவ்வுலகத்து அறிபவர் யார்?. திங்கட் கண்ணி - பிறையாகிய தலைமாலை .

பண் :

பாடல் எண் : 3

ஆதி யாயவ னாரு மிலாதவன்
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்
பாதிப் பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே.

பொழிப்புரை :

தன்னுடலிற்பாதி பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் , அனைத்துக்கும் ஆதி ஆகியவன் ; தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் ; மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்முடியை உடைய புண்ணியன் .

குறிப்புரை :

ஆதியாயவன் - முதல்வனானவன் . ஆரும் இலாதவன் - தந்தை தாய் யாரும் இல்லாதவன் . போது - மலர் . புனை - அலங்கரித்த . பரஞ்சுடர் - மேலான ஒளி . சோதியுட் சோதியாய் நின்ற சோதி - ஒளியாயும் ஒளிஉள் ஒளியாயுமிருப்பவன் .

பண் :

பாடல் எண் : 4

இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர்
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்
அட்ட மூர்த்திய ருளென் றடைவரே.

பொழிப்புரை :

ஏற்றினை உகந்து ஏறிப் பட்டிதோறும் மக்கள் இட்ட சோற்றினைப் பலிதேர்வதாகிய ஒரு துன்பவாழ்க்கை உடையவனாகிலும் தேவர்கள் ` அட்டமூர்த்தியே ! அருள்வாயாக ` என்று அடைவர் .

குறிப்புரை :

இட்டதுஇட்டது - அவரவரும் தமக்குப் பலியாய் இட்டவற்றை . ஓர் ஏறு உகந்துஏறி - ஒப்பற்ற எருது வாகனத்தை விரும்பி ஏறி . ஊர் - செலுத்தி . கட்டம் - கஷ்டம் . வானவர் - தேவர் . அருள் - அருள்செய்வீராக .

பண் :

பாடல் எண் : 5

ஈறில் கூறைய னாகி யெரிந்தவெண்
நீறு பூசி நிலாமதி சூடிலும்
வீறி லாதன செய்யினும் விண்ணவர்
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.

பொழிப்புரை :

முடிவற்ற திக்குகளையே ஆடையாக உடுப்பவனாகி எரிந்துவெந்த திருநீறு பூசி நிலவினை உடைய பிறையைச் சூடினும் , தன் பெருமைக்கு உகவாதவற்றைச் செய்யினும் , தேவர்கள் ` இடையூறற்றவனே ! அருள்வாயாக ` என்று இரந்துரைப்பர் .

குறிப்புரை :

ஈறில் - முடிவில்லாத . கூறையன் - திக்குகளாகிய ஆடையை உடையவன் . வீறிலாதன - பெருமையற்ற செயல் . ஊறலாய் - அருளூற்றை உடையவரே , கண்ணீர் சொரிந்து எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

உச்சி வெண்மதி சூடிலும் ஊன்அறாப்
பச்சை வெண்தலை யேந்திப் பலவில்லம்
பிச்சை யேபுகு மாகிலும் வானவர்
அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே.

பொழிப்புரை :

உச்சிக்கண் வெள்ளியமதி சூடினும் , தசை நீங்காத பச்சை வெண்தலையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களுக்குப் பிச்சை ஏற்கப் புகுந்தாலும் , தேவர்கள் ` எம் அச்சம் தீர்த்து அருள்வாயாக ` என்று அடைவர் .

குறிப்புரை :

உச்சி - முடிமீது . ஊன்அறா - தசை நீங்காத . பச்சை - தலையோடு கூடிய . பல இலம் - பல வீடுகள் . பிச்சையே புகும் - பிச்சையேற்பதற்காகச் செல்லும் .

பண் :

பாடல் எண் : 7

ஊரி லாயென்றொன் றாக உரைப்பதோர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
காரு லாங்கண்ட னேயுன் கழலடி
சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.

பொழிப்புரை :

தனக்கென்று ஓர் ஊரில்லாதவனே ! ஒன்றாக உரைக்கும் பேரில்லாதவனே ! பிறைசூடிய பிஞ்ஞகனே ! கருமை பொருந்திய திருக்கழுத்தினனே ! உன் கழலணிந்த திருவடியைச் சேர்தல் இல்லாதவர்களுக்குத் தீயவையே என்றும் சேரும் .

குறிப்புரை :

ஊரிலாய் - தனக்கென ஓர் ஊர் இல்லாதவன் . என்று - இது என்று . ஒன்றாக உரைப்பது - ஒன்று சொல்லுவதற்குரிய . பேர் இலாய் - பெயர் இல்லாதவன் . கார் உலாம் - கருமை நிறம் பொருந்திய . கண்டனே - கழுத்தை உடையவனே . கழலடி - கழலணிந்த திருவடிகள் . சேர்விலார்கட்கு - அடையாதவர்கட்கு . தீயவை - தீமை தருவனவான தீவினைகள் . தீயவே - துன்பந்தருவனவே . அடிசேர்ந்தார்க்குத் தீயவும் நல்லவாம் என்றபடி .

பண் :

பாடல் எண் : 8

எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்
சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாவளப் பாரடைந் தார்களே.

பொழிப்புரை :

எந்தையே ! எம்பெருமானே ! என உள்ளத்தால் நினைந்து சிந்திப்பார்களின் தீவினை தீரும் ; வெந்த திருநீறு பூசிய மெய்யை உடைய வேதியனை அடைந்தவர்கள் அந்தமாக அளக்குந் தன்மை உடையார் .

குறிப்புரை :

உள்கி - நினைத்து . தீரும் - நீங்கும் . ஆல் - அசை . அந்தமா அளப்பார் - அளப்பார் என்பதனை முன்னே கூட்டி நூல்களின் பொருளியல்பை ஆராய்பவர்கள் என்க .

பண் :

பாடல் எண் : 9

ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில்
ஆனை யீருரி போர்த்தன லாடிலும்
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே.

பொழிப்புரை :

பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போர்த்துத் தீயுடன் ஆடினாலும் , தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர் .

குறிப்புரை :

ஏனமருப்பு - பன்றிக்கொம்பு . எழில் - அழகு . ஆனை ஈருரி - ஆனையினை உரித்த தோல் . அனலாடினும் - தீயாடினாலும் . தான் அவ்வண்ணத்தன் - தானும் அனலாடியதற்கேற்ப அனலின் நிறத்தையே உடையவன் . வைகல் - நாடோறும் . தானவண்ணம் - பிச்சையேற்கும் கோலம் எனினுமாம் .

பண் :

பாடல் எண் : 10

ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.

பொழிப்புரை :

படம் கொண்ட பாம்பினை இடுப்பில் கட்டிய இறைவன் , தலைவன் ; அந்தணன் ; ( அழகும் குளிர்ச்சியும் உடையவன் ) ஆண் பெண் வடிவமுடைய திருமேனியினன் ; மேன்மை மிகுந்த வெண் திருநீறு பூசிய கருமைகொண்ட திருக்கழுத்தினன் ; மான்குட்டி உடைய கையினன் .

குறிப்புரை :

ஐயன் - அழகியன் . அந்தணன் - குளிர்ந்த தண்ணளியைச் செய்பவன் . மெய்யன் - உடலை உடையவன் . மேதகு - மேன்மை பொருந்திய . மைகொள் - கரிய நிறத்தைக் கொண்ட . மான்மறி - மான்குட்டி . பைகொள் பாம்பு - படத்தை உடைய பாம்பு . அரை - இடையிலே . ஆர்த்த - கட்டிய . பரமன் - மேலானவன் .

பண் :

பாடல் எண் : 11

ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்
இருவ ராகிநின் றார்கட் கறிகிலான்
அருவ ராஅரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே.

பொழிப்புரை :

இவ்வுலகமெல்லாம் தான் ஒருவனே ஆகி நின்றவனும் , திருமாலும் பிரமனுமாகிய இருவராகி நின்றவர் அறிய இயலாதவனும் , அரிய பாம்பினை இடுப்பில் கட்டியவனும் ஆகிய இறைவனது நிறைந்த கழலணிந்த திருவடிகளை வணங்குவாரின் பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

இவ்வுலகெலாம் - இவ்வுலகங்கள் எல்லாவற்றிற்கும் . ஒருவனாகி நின்றான் - தலைவனாவான் இவன் ஒருவனேயாக இருப்பவன் . இருவர் - திருமால் , பிரமன் . அரு - அரிய . அரா - பாம்பு . அரை - இடை . ஆர்கழல் - பொருந்திய கழலை அணிந்த திருவடி . பறையும் - நீங்கும் .

பண் :

பாடல் எண் : 12

ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாத னேயரு ளாயென்று நாடொறும்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.

பொழிப்புரை :

கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும் , ஒள்ளிய தாமரைமலர் மேலானாகிய பிரமனும் , ` தலைவனே ! அருள்வாய் ` என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம்பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

ஓதவண்ணன் - கடல்நீரை ஒத்த கரிய திருமால் . ஒண்மலர்ச் செல்வன் - பிரமன் . கருதப்படுமவர் - மனத்தால் எண்ணித் துதிக்கப்படுபவர் . தியானிக்கப்படுபவருடைய தியேயப்பொருளாயுள்ளவன் ` சிவஏகோத்தியேய :` என்பது வேதம் .

பண் :

பாடல் எண் : 13

ஔவ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே.

பொழிப்புரை :

அவரவர் உடம்பினால் அடைவதற்கு வெவ்விய தன்மை உடையவன் என்ற கருத்தை ஒழிப்பீராக ; மலர்தல் உடைய நீண்ட மலர்மேல் உறைவானாகிய பிரமனோடு கடல்வண்ணனாகிய திருமாலுமாய்ப் பணிவார்கள் .

குறிப்புரை :

ஔவ தன்மையவரவர் - அந்தந்தத்தன்மையை யுடையவர் . வெவ்வதன்மையன் - கொடியவன் . என்பது ஒழிமின் - என்று கூறுவதைத் தவிருங்கள் . மௌவல் நீள்மலர்மேல் உறைவான் - தாமரை மலரில் உறையும் பிரமன் . முல்லை போலும் வெண்டாமரை மலர் . பவ்வ வண்ணன் - கடல் வண்ணனாகிய திருமால் .

பண் :

பாடல் எண் : 14

அக்கு மாமையும் பூண்டன லேந்தியில்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவ ராற்றொழு வானையே.

பொழிப்புரை :

அக்கமணிகளும் ஆமையும் அணிந்து தீயை ஏந்தி இல்லங்கள்தோறும் புகுந்து பல பலிதேறும் பழமை உடையவனும் , தொகுத்த தேவர்களால் தொழப்படுவானுமாகிய இறைவனை விரும்பி நீங்கள் நரகத்துப்போகாமல் நற்பேறு அடைவீராக .

குறிப்புரை :

அக்கு - அக்குமணிமாலை , என்புமாம் . அஃகு என்ற ஆய்தக்குறியீடு . இல் புக்கு - பல வீடுகளுக்கும் சென்று . பல்பலி - பலவகையான பிச்சைகள் . தேரும் - ஆராய்ந்து கொள்ளும் . புராணன் - பழையவன் . நக்கு - இகழ்ந்து ; சிரித்து . புகேன் மின் - புகாதீர்கள் . தொக்க வானவர் - கூட்டமாய்க்கூடிய தேவர்களால் .

பண் :

பாடல் எண் : 15

கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க ணாரெழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே.

பொழிப்புரை :

அழகிய கண்ணராகிய கங்கை தங்கிய சிவந்த சடையின்மேல் இளம் பிறையினைச் சூடிய தழல்வண்ணர் ; இமைக்காத கண்ணை உடைய எழில் உடைய வானகத்துள்ளோர் வணங்க உள்ளார் ; அதுவே அவர் தன்மை .

குறிப்புரை :

தீ நிறவண்ணன் - சிவந்த நிறத்தையுடையவன் . இங்க ணார் - இங்கு எளிதில் வருபவர் ; இவ்வுலகில் அருள் வழங்க எழுந்தருளியிருப்பர் . எழில் வானம் - அழகிய வானுலக மக்கள் . அங்கணாற்கு - அங்கணனுக்கு ; அவன் தன்மை அது என்க . ஆல் - அசை .

பண் :

பாடல் எண் : 16

ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.

பொழிப்புரை :

நல்ல நெஞ்சே ! வெல்லும் கொடி உடையானோடு நுகர்தற்கு நீ உன்னைக்கொண்டு உய்யப்போதலுற்றால் , மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய பெருமானின் குற்றமற்ற சேவடியே தஞ்சப்பொருளாகும் .

குறிப்புரை :

ஙகரவெல் கொடியான் - இடபக்கொடியான் . படுத்திருக்கும் வடிவில் இடபம் ங போன்றிருத்தலின் ஙகரவெல்கொடியான் என்றார் . நுகர - போகம் பலவற்றையும் அனுபவிக்க . உய்யப்போக்குறில் - வாழ்விக்கச் செலுத்துவாயேயானால் . மகர வெல்கொடி - மகர மீன் பொருந்திய முற்றத்துறந்தாரையும் வெற்றி காணும் கொடி . வெல் கொடி , வினைத்தொகை . மைந்தன் - இளையனாகிய காமன் . காய்ந்தவன் - எரித்தவன் . புகரில் - குற்றமற்ற . புகலாகும் - அடைக்கலமாம் இடமாகும் .

பண் :

பாடல் எண் : 17

சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்
மரண மெய்திய பின்னவை நீக்குவான்
அரண மூஎயில் எய்தவ னல்லனே.

பொழிப்புரை :

புகலடையத்தக்கவர் பிறர் யாவர் ? செயலற்று உயிர் இறக்கும்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன் ? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ ?

குறிப்புரை :

சரணமாம் படியார் - திருவடிகளில் அடைக்கலமாக அடைதற்குரிய தன்மையினர் ; பிறர்யாவர் என்க . சிவபெருமானைத் தவிரப் பிறர் யார் உள்ளனர் . கரணம் - அந்தக்கரணங்கள் . கையில் இகழ்ந்தபின் - கைவிட்டபின் . நவை - வினைக்குற்றங்கள் . அரண மூஎயில் - அரணமைந்த மூன்று கோட்டைகள் .

பண் :

பாடல் எண் : 18

ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாம்
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.

பொழிப்புரை :

நரகர்க்கெல்லாம் ஞமனாகியும் , நமக்கெல்லாம் சிவன் எனப்படுவானாகியும் உள்ளவனும் , மான்குட்டி உடைய கையினனும் , விரைந்து செல்லும் பெருமைமிக்க இடப ஊர்தி உடையவனும் ஆகிய பெருமானின் தமர் என்றாலும் தடுமாற்றம் கெடும் .

குறிப்புரை :

நரகர்க்கு - மக்களில் இழிந்தவர்க்கு . எமன் என்பான் - இயமனாக இருப்பவன் . மான்மறி - மான்குட்டி . கவனம் - வேகநடை . கனவிடை - பெரிதாய எருது . ஊர்தி - வாகனம் . தமர் என்றாலும் - பெருமானுடைய சுற்றத்தினர் என்று கூறினாலும் . தடுமாற்றம் கெடும் - ஐயுறவு நீங்கும் .

பண் :

பாடல் எண் : 19

இடப மேறியு மில்பலி யேற்பவர்
அடவி காதலித் தாடுவ ரைந்தலைப்
படவம் பாம்பரை யார்த்த பரமனைக்
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

இடபத்தின்மீது ஏறியும் , இல்லங்கள்தோறும் பலி ஏற்பவரும் , சுடுகாட்டினை விரும்பி ஆடுபவரும் , ஐந்தலை உடைய படர்ந்த பாம்பினை அரைக்கண் ஆர்த்தவரும் ஆகிய பரமனை வணங்கும் கடப்பாடுடையீராய்ச் சென்று கைதொழுது உய்வீராக .

குறிப்புரை :

இல்பலி - வீடுகளிற் பிச்சை . ஏற்பவர் - கொள்பவர் . அடவி - இடுகாடு . ஐந்தலைப் படவம் - ஐந்து தலைப்படங்களை உடைய . அரை ஆர்த்த - இடையிலே கட்டிய . கடவிராய் - கடமை உடையவராக .

பண் :

பாடல் எண் : 20

இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த வுள்ளத் தவருணர் வார்களே.

பொழிப்புரை :

கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் தூளினைச் சொரிந்திடும் இயல்பினதும் , பொருந்திய வாள்போன்ற பாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர் .

குறிப்புரை :

இணர்ந்து - கொத்துக்களாய் மலர்ந்து . தாது - மகரந்தம் . புணர்ந்த - கூடிய . வாளரவம் - ஒளியோடு கூடிய பாம்பு . அம்சடை - அழகிய சடை .

பண் :

பாடல் எண் : 21

தருமந் தான்தவந் தான்தவத் தால்வரும்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.

பொழிப்புரை :

தொல்லைகள் சேர்ந்த அழலும் தீவினை யாளர்களே ! தானே தருமமாகவும் , தானே தவமாகவும் , தானே தவத்தால்வரும் செயலாகவும் உள்ள வலிய மான்குட்டியைக் கையில் உடைய பெருமானது , அரிய மருந்து போன்ற ( அமிர்தம் ) ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைச் சேர்வீராக .

குறிப்புரை :

தருமம் , தவம் , கருமம் , முதலியனவாய் இருப்பவன் . கருமம் - செயல் . கருமான்மறி - வலிய மான்குட்டி . அருமருந்தன்ன என்பது அருமந்தன்ன என்றாயது . அதிர் - ஒலிக்கின்ற . சிரமம்சேர் அழல் தீவினை - வருத்தத்தைத் தரும் நெருப்புப் போன்ற தீய வினைகள் .

பண் :

பாடல் எண் : 22

நமச்சி வாயவென் பாருள ரேலவர்
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே.

பொழிப்புரை :

நமசிவாய என்று சொல்வார் உளராயின் அவர் தம் அச்சங்கள் நீங்கத் தவநெறியைச் சார்தலால் தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவனாகிலும் இமைத்து நிற்பது மிகவும் அரியதாகும் .

குறிப்புரை :

அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையர் - செப்பமா யமைந்த வாழ்க்கையுடையவர் . இமைத்து நிற்பது - வாழ்வது . சால - மிகவும் .

பண் :

பாடல் எண் : 23

பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் காலநின் றேத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்
புற்ப னிக்கெடு மாறது போலுமே.

பொழிப்புரை :

பரமனைப் பலப்பல காலங்கள் பயிற்றிச் சொற்களால் பல காலம் நின்று ஏத்துவீராக ! உம் பழைய வினைகள் உதயகிரியில் தோன்றிய சூரியனைக்கண்ட அழகிய புல் நுனியில் உள்ள பனித்துளிகள் கெடுமாறு கெடும் .

குறிப்புரை :

பற்பல்காலம் - பலப்பலகாலம் . பயிற்றி - சொல்லி . சொற்பல்காலம் - புகழ்ச் சொற்களால் பலகாலம் . தொல்வினை - பழவினை . வெற்பில் - உதயகிரியில் . வெங்கதிர் - சூரியன் . புற்பனி - புல்லின் முனையில் உள்ள பனித்துளிகள் .

பண் :

பாடல் எண் : 24

மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
கணிசெய் வேடத்த ராயவர் காப்பினால்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெ யாக்கையை நீக்குவர் பேயரே.

பொழிப்புரை :

கரியமணிபோலும் கண்டத்தை உடையவரும் , மான்குட்டியை உடைய கையினரும் , கருதிச் செய்கின்ற வேடம் உடையவராகிய அவர் காத்தருள்வதால் பணிகளைச் செய்ய வல்லவர்களே நல்லோர் ; அவ்வாறு புரியாது நோய் செய்யும் உடம்பை வீணே கழிப்பவர் பேயர் .

குறிப்புரை :

மணிசெய் கண்டம் - நீலமணியின் நிறத்தைச் செய்யும் கழுத்து . காப்பினால் - காத்தல் தொழில் மேற்கொண்டதால் . பணிகள் - அடியார்களின் இருவினை நீக்கும் செயல்கள் . பேயர் - சிவகணத்தார் .

பண் :

பாடல் எண் : 25

இயக்கர் கின்னர ரிந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே.

பொழிப்புரை :

வியக்கும் தன்மை உடையவனாகிய எம் மேலோன் , இயக்கர் , கின்னரர் , இந்திரன் , தானவர் முதலியோர் விரும்ப நின்றவனும் , பிரமனும் திருமாலும் மயக்கம் எய்த வன்மை உடைய பேரெரிவடிவமாயினான் .

குறிப்புரை :

இயக்கர் - கந்தருவர் . கின்னரர் - அசுவமுகமும் நரசரீரமும் உள்ளவர் . கின்னரம் என்னும் வாத்தியத்தை வாசிப்பவர் . தானவர் - அசுரர் . நயக்க - விரும்ப . ஆழியான் - சக்கிராயுதத்தை உடையவன் . மயக்கம் எய்தவன் - அடிமுடி காணாது மயங்கச் செய்தவன் . மால்எரி - பெரிய நெருப்பு . விகிர்தன் - வேறுபாடில்லாதவன் .

பண் :

பாடல் எண் : 26

அரவ மார்த்தன லாடிய அண்ணலைப்
பரவு வாரவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
கரவில் நான்முக னுங்கரி யல்லரே.

பொழிப்புரை :

பாம்பினைக்கட்டி அனலோடு ஆடிய அண்ணலை வணங்குவோர் பாவம் கெடுதற்குக் குரவைக் கூத்து ஆடியவனாகிய திருமாலும் , குளிர்தாமரையின் மேல் கரத்தலில்லாத பிரமனும் சான்றாவார் அல்லரோ ?

குறிப்புரை :

அரவம் - பாம்பு . ஆர்த்த - கட்டிய . மறைதற்கு - நீங்குதற்கு . குரவை - பேயோடு கைகோர்த்து ஆடும் திருமால் கூத்து . குளிர்போதின்மேல் - குளிர்ந்த தாமரைப்பூவின் மேல் ( உறையும் ). கரவில் - வஞ்சனையில்லாத ; கரியல்லர் - சாட்சியாவார் இல்லை .

பண் :

பாடல் எண் : 27

அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்
றுழலும் மூவெயி லொள்ளழ லூட்டினான்
தழலுந் தாமரை யானொடு தாவினான்
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.

பொழிப்புரை :

இறைவன் அழலை அழகிய கையிற்கொண்டவனும் , வானில் ஓங்கி நின்று திரியும் மூன்று மதில்களையும் ஒள்ளழல் ஊட்டியவனும் , எரியென மலரும் தாமரையிலுள்ள பிரமனோடு திருமாலும் பறந்தும் தாவியும் தன் கழலடிகளையும் சென்னியையும் காண்டற்கரியவனுமாவான் .

குறிப்புரை :

அழல் அம்கையினன் - நெருப்பை ஏந்திய அழகிய கையையுடையவன் . அந்தரத்து - ஆகாயத்தில் . ஓங்கி நின்று - உயர்ந்து பறந்து நின்று . உழலும் - திரியும் . தழலும் - நெருப்புப்போல் சிவந்திருக்கும் . தாமரையானொடு - திருமாலோடு . தாவினான் - அன்னமாய்ப் பறந்து சென்ற பிரமன் . கழல் - திருவடி .

பண் :

பாடல் எண் : 28

இளமை கைவிட் டகறலு மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
உளமெ லாமொளி யாய்மதி யாயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே.

பொழிப்புரை :

இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ள மெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாக யான் நினைப்பேன் .

குறிப்புரை :

அகறலும் - நீங்கியதும் . மூப்பினார் - முதுமையை உடையவராய் . இகழ்ச்சி குறித்த பன்மை . வளமைபோய் - உடல் வளம் கெட்டு . பிணியோடு - நோயோடு . மதியாயினான் - அறிவின் வடிவமானவன் . கிளமையே கிளையாக நினைப்பன் - அவ்வுறவையே உறவாக எண்ணுபவன் .

பண் :

பாடல் எண் : 29

தன்னிற் றன்னை யறியுந் தலைமகன்
தன்னிற் றன்னை யறியில் தலைப்படும்
தன்னிற் றன்னை யறிவில னாயிடில்
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.

பொழிப்புரை :

தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான் ; தன்னில் தன்னை அறியும் அறிவிலனாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன் .

குறிப்புரை :

தன்னில்தன்னை - தன்னுடைய உடலில் இறைவனை . அறியில் - அறிவார்களேயானால் . தலைப்படும் - அவரவர் உள்ளத்தில் இடம்பெறுவான் . அறிவிலனாய்விடில் - அங்ஙனம் ஒருவன் அறியா தொழிவானேயானால் . தன்னில் தன்னையும் சார்தற் கரியன் - நம்மிடமுள்ள பெருமானை அடைதற்கு அரியவனாவான் .

பண் :

பாடல் எண் : 30

இலங்கை மன்னனை யீரைந்து பத்துமன்
றலங்க லோடுட னேசெல வூன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
வலங்கொண் டேத்துவார் வானுல காள்வரே.

பொழிப்புரை :

இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர் .

குறிப்புரை :

ஈரைந்து பத்தும் - இருபது தோள்களும். நாடொறும் - தினந்தோறும். தினந்தோறும் வணங்குதலின் இன்றியமையாமை குறித்தது.

பண் :

பாடல் எண் : 1

நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின் றாடும் அமுதினைத்
தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்
ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

திருநீறு நன்கு பூசப்பெற்ற ஒப்பற்ற மேனியையும், ஓங்கிய சடையில் கங்கையாறு அலைவீச நின்று ஆடும் அமுதமும், தேனும் அதன் தெளிவும் அத்தெளிவுவாய்த்த ஊறல் போல்வானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.

குறிப்புரை :

நீறலைத்ததோர் மேனி - திருநீறு நிரம்பப்பூசிய திருமேனி. நிமிர்சடை - கட்டி உயர்ந்த சடை. ஆறு அலைக்க - கங்கையாறு அலைவீச. அமுது - அமுதம் போன்றவன், தேறல் - தேன். தெளிவு - தேனின் தெளிவு. தெளிவாய்த்ததோர் - தெளிதல் பொருந்தியதொரு. ஊறல் - ஊறிய தெளிந்த நீர்.

பண் :

பாடல் எண் : 2

பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச்
சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர்
எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

பொந்துபோல்வதாகிய உடலிற்புகுந்து அதன் கட்டினை நீக்கப் புகுந்திடும் தந்தையும், தீப்போன்ற மேனியை உடையவனும், என் சிந்தையாக உள்ளவனும், தெளிவாகவும் அத்தெளிவு வாய்த்த எந்தையும் ஆகி நின்ற பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

பொந்தை - பொய். புக்குநீக்க - முயன்றுநீக்க. பொந்தையை - பொய்யாகிய உடலின்கண். புக்கு - புகுந்து. நீக்கப் புகுத்திடும் - நாமே அவனை நீக்கவும் நீங்கானாய் உடலில் சென்று புகும். தழல் - நெருப்பு. எந்தை - என்தந்தை.

பண் :

பாடல் எண் : 3

வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே
வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்
கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிநின்
றுள்ளத் தில்லொளி யைக் கண்ட துள்ளமே.

பொழிப்புரை :

இன்ப வெள்ளத்தாராகிய விஞ்சையர்கள் விரும்பும்படி கங்கைவெள்ளத்தைச் சடையில்வைத்த மேலோரை மனம் கள்ளத்தை நீங்க உள்ளம் ஒன்றியிருந்து உள்ளத்தில் ஒளியாகக் கண்டது.

குறிப்புரை :

வெள்ளத்தார் - வெள்ளம்போல நிறைந்த கருணையை உடையவர். விஞ்சையார்கள் விரும்ப - வித்தியாதரர்கள் விரும்ப. வெள்ளத்தை - கங்கையை, கள்ளத்தைக் கழிய - ஆணவம் நீங்க.

பண் :

பாடல் எண் : 4

அம்மா னையமு தின்னமு தேயென்று
தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழும்
செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள்
எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

அம்மானை, அமுதே! இன்னமுதே! என்று தத்துவத்தை அறிந்த அடியார் தொழும் நம் தலைவனும் செம்மையாகிய பெருமை மிக்க நிறம்போல்வதாகிச் சிந்தையுள் இருக்கும் எம்மானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.

குறிப்புரை :

அம்மானை - தலைவனை. அமுதின் அமுதே. அமுதத்தினும் மேலான அமுதம் போன்றவனே. தம்மானை - தனக்குத் தானே தலைவனை. தத்துவத்து அடியார் - தத்துவங்களை அறிந்த அடியவர்கள். செம்மானநிறம் - செம்மையான நிறம்.

பண் :

பாடல் எண் : 5

கூறே றும்உமை பாகமோர் பாலராய்
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்
பாறே றுந்தலை யேந்திப் பலவி(ல்)லம்
ஏறே றுமெந்தை யைக்கண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

கூறாகப் பொருந்தி உமையொரு பாகராகிக், கங்கை ஏறிய சடைமேற் பிறை சூடியவராய், பருந்துகள் ஏறிப்பறக்கும் வெண்டலை ஏந்திப் பல இல்லங்கள் தோறும் இடபம் ஏறிவரும் எந்தையை என் உள்ளம் கண்டு கொண்டது.

குறிப்புரை :

கூறுஏறும் - உடம்பில் ஒரு பாதியில் பொருந்தும். பாறு ஏறும் தலையேந்தி - இடுகாட்டுள் பொருந்திய மண்டையோட்டை ஏந்தி. ஏறுஏறும் - இடபத்தில் ஏறும்.

பண் :

பாடல் எண் : 6

முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
தந்நெஞ் சந்தமக் குத்தாமி லாதவர்
வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லீரே
என்னெஞ் சிலீச னைக்கண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

தம் நெஞ்சம் தமக்குத்தாம் இல்லாத சிலர், முன்னுதற்குரிய நெஞ்சம் இல்லாமல் மூர்க்கராய் வாழ்ந்து சாகின்றார்; வன்மையுடைய நெஞ்சத்தை நீங்க வல்லமை உடையவர்களே! என் நெஞ்சில் ஈசனை என்னுள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

முன் - நினைக்கும். நெஞ்சமின்றி - மனத்தின் கண் இரக்கமின்றி. மூர்க்கராய் - கொடியவராய், சாகின்றார் - இறந்து படுகின்றார்கள். தன்நெஞ்சம் தமக்குத்தாம் இலாதவர் - தன்நெஞ்சினாலாகும் நன்மைகளைத் தாமேதேடிக்கொள்ளாதவர். வன்னெஞ்சம் - கொடியமனம். நீங்குதல்வல்லீரே - நீக்கிக் கொள்ளுதலில் வல்லவர்களே.

பண் :

பாடல் எண் : 7

வென்றா னைப்புல னைந்துமென் தீவினை
கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

புலன்கள் ஐந்தும் வென்றவனும் என் தீய வினைகளைக் கொன்றவனும், குணத்தால் வணங்கிட நன்றாக நல்ல மனத்தில் வைக்கும் ஞானம் என்னும் ஒப்பற்ற பொருளை உடையானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

புலனைந்தும் வென்றானை என்க. குணத்தாலே வணங்கிட - நற்குணங்களினால் வணங்க. நன்றா நன் மனம் - நன்றாகிய நல்ல மனத்தின்கண். ஞானம்வைத்திடும் - அறிவொளியை உண்டாக்கித் தரும். ஒன்றானை - ஒரு வடிவாய் விளங்குபவனை. ஞானமாகிய ஒன்றினால் அறியப்படுபவனை.

பண் :

பாடல் எண் : 8

மருவி னைமட நெஞ்சம் மனம்புகும்
குருவி னைக்குணத் தாலே வணங்கிடும்
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

அறிவற்ற மடநெஞ்சமே! மனம்புகும் குரு நாதனும், குணத்தால் வணங்கத்தக்க திருவும் ஆகிய பெருமானைப் பொருந்தினாய்; சிந்தையுள் சிவனாய்நின்ற உருவினை என்னுள்ளம் கண்டு கொண்டது.

குறிப்புரை :

மருவினை - மருவினையையாய். மடநெஞ்சமே - அறிவற்ற மனமே. குணத்தாலே - நற்குணங்களினாலே. திருவினை - செல்வவடிவாய் உள்ளவனை. உரு - முன்னர் மறைந்து நின்று பின்னர் நினைப்பில் உருவெளிப்பாடுபெற்ற நிலை.

பண் :

பாடல் எண் : 9

தேச னைத்திரு மால்பிர மன்செயும்
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

ஒளி உடையவனும், திருமாலும், பிரமனும் செய்யும் பூசனைகள் பொருந்தினால் அங்குப் பொருந்துகின்ற விருப்பம் உடையவனும், நெஞ்சுக்குள் நிறைவாகி நின்ற ஈசனுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

தேசு - ஒளி. பூசனைபுணரில் - வழிபாடு கூடினால் புணர்வாயதோர் - நம்மோடு கலந்து நிற்பதொரு. நேசன் - அன்பன்.

பண் :

பாடல் எண் : 10

வெறுத்தா னைம்புல னும்பிர மன்தலை
அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்
கறுத்தா னைக்கா லினில்விர லொன்றினால்
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

பொழிப்புரை :

ஐம்புலன்களை வெறுத்தவனும், பிரமன் தலையினை அறுத்தவனும், இராவணன் திருக்கயிலாயத்தின் மேற்சினந்த போது காலினில் திருவிரல் ஒன்றினால் ஒறுத்தவனும் ஆகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

குறிப்புரை :

ஐம்புலனும் வெறுத்தான் என்க. கறுத்தானை - சினந்தவனாகிய இராவணனை. ஒறுத்தானை - தண்டித்தவனை.

பண் :

பாடல் எண் : 1

பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.

பொழிப்புரை :

பாவமும் பழியும் ஆகிய பற்றுக்கள் அறுதலை விரும்புபவர்களே ! பஞ்சகவ்வியம் உகந்து திருவபிடேகம் கொள்ளும் அப்பெருமான் கழலை மகிழ்ந்து மேவுபவராய் நினைவீராக ; காத்து ஆள்வோனாகிய இறைவன் கலந்து அருள் செய்வான் .

குறிப்புரை :

பாவமும் பழி பற்று - பாவமும் பழி பற்றியிருத்தலும் . அற - நீங்க . வேண்டுவீர் - விரும்புகின்றவர்களே . ஆவில் அஞ்சு - பசுவிடம் உண்டாவனவாய பஞ்சகவ்வியம் . உகந்து - மகிழ்ந்து . ஆடும் - அபிடேகம் கொள்ளும் . கழல் - திருவடிகளை . மேவராய் - விரும்புபவராய் . உள்குமின் - நினையுங்கள் . காவலாளன் - காத்தல் செய்பவனாய அப்பரமன் . கலந்து - நம்மோடு உடனாய் நின்று .

பண் :

பாடல் எண் : 2

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கு மீச னெனாதவர்க் கில்லையே.

பொழிப்புரை :

கங்கை நீராடிலும் , காவிரியில் நீராடிலும் , மணமும் குளிர்ச்சியும் உடைய குமரித்துறையில் நீராடிலும் , பெருகி ஒலிக்கின்ற கடல் நீர்த்துறைதோறும் நீராடிலும் என்ன பயன் ? எங்கும் இறைவன் என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லை .

குறிப்புரை :

கொங்கு - மணம் நிறைந்த . ஓங்கு என்பதன் குறுக்கல் ஒங்கு . மா - பெரிய . ஓதநீர் - அலைநீர் . ஈசன் ஒருவன் இருக்கின்றான் அவனருள்பெற இத்தீர்த்தமாடுகின்றோம் என்று எண்ணாதவர்க்கு அத்தீர்த்தமாடுவதால் விளையும் பயன் இல்லை .

பண் :

பாடல் எண் : 3

பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென்
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென்
எட்டு மொன்று மிரண்டு மறியிலென்
இட்ட மீச னெனாதவர்க் கில்லையே.

பொழிப்புரை :

பட்டர் ஆயினும் , சாத்திரங்கள் பல கேட்பினும் , இட்டும் சேர்த்தும் கொடுக்கும் தொழில் பூணிலும் , எட்டும் ஒன்றும் இரண்டும் அறிந்தாலும் என்ன பயன் ? விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம் .

குறிப்புரை :

பட்டர் - குருக்கள் . இட்டும் - கொடைத்தொழில் செய்தும் . அடுதல் - விருந்து சமைத்தல் . ஈதொழில் - அடியார்களுக்குக் கொடுக்கும் தொழில் . பூணில் என் - மேற்கொண்டால் என்ன . எட்டும் அதனோடு ஒன்றும் இரண்டும் என்க . இட்டம் ஈசன் எனாதவர்க்கு - விருப்பம் ஈசனிடத்து உண்டு என்று சொல்லாதவர்க்கு .

பண் :

பாடல் எண் : 4

வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ ராறு முணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே.

பொழிப்புரை :

வேதம் ஓதினாலும் , வேள்விகள் செய்தாலும் , நீதிநூல்கள் பலவற்றை நித்தமும் பயிற்றினாலும் , ஆறங்கங்களை ஓதி உணர்ந்தாலும் என்ன பயன் ? ஈசனை உள்குபவர்க்கு அன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம் .

குறிப்புரை :

நித்தல் - நாடோறும் . பயிற்றில் என் - பயின்றால் என்ன பயன் விளைக்கும் . இல்லை - அருள் இல்லை என்க .

பண் :

பாடல் எண் : 5

காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென் பார்க்கன்றி யில்லையே.

பொழிப்புரை :

காலையில் சென்று கலந்து நீரில் மூழ்கினாலும் , வேளைகள் தோறும் விதிவழிநின்றாலும் , ஆலை போன்று வேள்வி அடைந்து வேட்பிலும் என்னபயன் ? உள்ளம் பொருந்த இறைவன் என்பார்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லை .

குறிப்புரை :

காலை சென்று - சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னுள்ள காலைப்போதிலேயே சென்று . கலந்து - தண்ணீரோடுகூடி . வேலைதோறும் - இடந்தோறும் . விதிவழி - நீதி நூல் வழியே . நிற்கில்என் - ஒழுகினால் விளையும் பயன்யாது ? ஆலை - வேள்வி செய்யுமிடம் . ஏல - மனம்பொருந்த .

பண் :

பாடல் எண் : 6

கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.

பொழிப்புரை :

காட்டுப் பகுதிகளிற் கலந்து திரிந்தாலும் , இழி வின்றிப் பெருந்தவம் செய்தாலும் , ஊன் உண்ணுதலையொழிந்து வானத்தை நோக்கினாலும் என்ன பயன் ? ஞானமயமாகியவன் என்பவர்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றால் நற்பயன் இல்லை .

குறிப்புரை :

கானநாடு - காடும் நாடும் . கலந்து மாறிமாறிக் கூடி . திரியிலென் - க்ஷேத்திராடனம் புரிவதால் என்ன பயன் விளையும் . ஈனம் - குற்றம் . இரும் - பெரிய . ஊனை உண்டல் ஒழிந்து - ஊனுண்டலை விடுத்து . வான் நோக்கிலென் - மேலுலக ஆராய்ச்சியில் ஈடுபட்டால் என்ன பயன் ? ஞானன் - ஞானவடிவினன் .

பண் :

பாடல் எண் : 7

கூட வேடத்த ராகிக் குழுவிலென்
வாடி யூனை வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்த னம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே.

பொழிப்புரை :

வேடங்கள் கூடியவராகித் திரண்டாலும் , உடலை வாடிவருத்தித் திரிந்தாலும் என்ன பயன் ? ஆடல்வேடத்தை உடையவனாகிய அம்பலக்கூத்தனைப் பாடுபவர்க்கு அல்லால் மற்றையோர்க்குப் பயன் இல்லை .

குறிப்புரை :

கூட வேடம் - தாழ்வை மறக்கக்கூடிய வேடம் . குழுமிலென் - கூடினால் என்ன பயன் விளையும் . வாடி - மெய்வருந்தி . ஊன் - மாமிசம் . வருத்தி - இறக்கும்படி வருத்தி உண்டு . ஆடல் வேடத்தன் - ஆடுகின்ற தோற்றமுடையவன் . பாடலாளர்க்கு அல்லால் - பாடுபவர்களுக்கேயல்லாமல் .

பண் :

பாடல் எண் : 8

நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே.

பொழிப்புரை :

நன்கு தவம்நோற்றாலும் , உண்ணாவிரதம் கிடப்பினும் , மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும் , சென்று நீரிற் குளித்துத் திரிந்தாலும் என்ன பயன் ? என்றும் ஈசன் என்பார்க்கேயன்றி மற்றையோர்க்கு இவற்றாற் பயன் இல்லை .

குறிப்புரை :

நோற்றல் - தவம் செய்தல் . குன்றம் - மலை . இருந்தவம் - பெரியதவம் .

பண் :

பாடல் எண் : 9

கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.

பொழிப்புரை :

கோடிதீர்த்தங்கள் தோறும் கலந்து குளித்து அவற்றில் நீராடிக் கிடந்தாலும் அரனிடத்து அன்பு இல்லையாயின் . ஓடும் இயல்பினை உடைய நீரை ஓட்டைக் குடத்திலே நிறைத்து மூடிவைத்திட்ட மூர்க்கன் ஒருவனின் செயலோடே அது ஒக்கும் .

குறிப்புரை :

கோடி - பலவாய எண்ணிற்கு ஓர் வரையறை . பல என்பது பொருள் . ஓடும் நீரினை - ஓடும் தண்ணீரை . அட்டி - அள்ளி முகந்து . மூர்க்கன் - அறிவில்லாதவன் .

பண் :

பாடல் எண் : 10

மற்று நற்றவஞ் செய்து வருந்திலென்
பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக்
குற்ற நற்குரை யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க் குப்பய னில்லையே.

பொழிப்புரை :

மற்றும் நற்றவங்கள் பல செய்து வருந்தினால் என்ன பயன் ? திருக்கயிலாயத்தை உற்று எடுத்த இராவணனது உடல் புகுந்து இற்றுப்போம்படிப் பொருந்திய நல்லொலிக் கழல்களணிந்த சேவடியினிடத்துப் பற்றுதல் இல்லாதவர்க்குப் பயனே இல்லை .

குறிப்புரை :

பொற்றை - மலை. இங்கே கயிலையைக் குறித்தது. உடல் புக்குஇற - உடல் அகப்பட்டு நெரிய. நற்குரையார் கழல் - நல்ல ஒலி பொருந்திய வீரக்கழல்.

பண் :

பாடல் எண் : 1

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயக னாதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

பொழிப்புரை :

வேதங்களுக்கு நாயகனும் , வேதியர்க்கு நாயகனும் , உமாதேவியின் நாயகனும் , பெருந்தவம் உடைய முனிவர்களுக்கு நாயகனும் , ஆதிநாயகனும் , ஆதிரை என்ற விண்மீனுக்கு நாயகனும் , பூதங்களுக்கு நாயகனும் புண்ணியமூர்த்தி ஆவான் .

குறிப்புரை :

வேதநாயகன் - வேதங்களின் தலைவன் . வேதியர் - வேதம் ஓதுபவர் . மாது - பார்வதி . மாதவர் - சிறந்த தவத்தைச் செய்பவர்கள் . ஆதிநாயகன் - எல்லார்க்கும் முதன்மையான தலைவன் . ஆதிரை நாயகன் - திருவாதிரைநட்சத்திரத்திற்குரியவன் . பூதநாயகன் - பூதகணங்களுக்குத் தலைவன் . இப்பாடல் தி .5 ப .73 பா .7 ஆம் பாடலோடு ஒத்திருக்கிறது .

பண் :

பாடல் எண் : 2

செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ
அத்த னென்றரி யோடு பிரமனும்
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.

பொழிப்புரை :

மீண்டும் மீண்டும் செத்துச் செத்துப் பிறப்பதே தெய்வமென்று பொய்யாகக் கருதிப் பக்திசெய்யும் மனப்பாறை உடையவர்கட்கு இறைவன் என்று திருமாலோடு பிரமனும் துதி செய்யநின்ற சோதி உள்ளத்திற் பொருந்துமோ ?.

குறிப்புரை :

தே என்று - தெய்வத்தன்மையுடையது என்று . பத்தி செய் - சுவர்க்கபோகங்களை அநுபவிக்க விரும்பிப் பக்தி செய்யும் . மனப்பாறைகளுக்கு - பாறைபோன்ற கல் மனம் உடையவர்க்கு . ஏறுமோ - என்சொல் காதில் ஏறுமோ . அத்தன் - தலைவன் . துத்தியம் செய - துதிக்க . துத்யம் - துதிக்கும்பாட்டு .

பண் :

பாடல் எண் : 3

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.

பொழிப்புரை :

நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே .

குறிப்புரை :

நூறுகோடி ஆறுகோடி என்பன - பல என்பதற்குச் சொல்லிய எண்ணிக்கை . நொந்தினார் ( நுங்கினார் என்றும் பாடம் ) - அழிந்தனர் . ஆறுகோடி - பல . அங்ஙனே - அவ்வாறே அழிந்தனர் . ஏறு - மிக்க . இந்திரன் கங்கை மணலை எண்ணில் எத்துணையாகுமோ அத்துணையோர் இறந்தனர் . ஈறு இலாதவன் - அழிவு இல்லாதவன் .

பண் :

பாடல் எண் : 4

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே ! ஒருவரோடொருவர் வாதம் செய்து மயங்கும் மனத்தை உடையவர்களாய் ஏது சொல்லுவீராகிலும் , யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம் தேவன் மகாதேவனாகிய சிவபிரான் மட்டுமன்றி வேறு யாரும் இல்லை .

குறிப்புரை :

வாது - சொல்வாதம் . மயங்கும் - பொய்யை மெய் என்று எண்ணும் . ஏது சொல்லுவீராகிலும் - பொருந்தாத மொழிகளை உண்மை போலச் சொல்லுதல் முதலான எவ்வார்த்தைகளைச் சொல்லுபவர்கள் ஆனாலும் . ஏழைகாள் - அறிவற்றவர்களே . யாதோர் தேவர் எனப்படுவார்க்கெலாம் மாதேவன் அலால் தேவர் மற்றில்லையே - ` யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் ` என்னும் சித்தியார் வாக்கோடு ஒப்பிட்டுணர்க .

பண் :

பாடல் எண் : 5

கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

பொழிப்புரை :

கிணற்றாமை கடலாமையை நோக்கி இக் கிணற்றோடொக்குமோ கடல் ? என்று கூறுதலைப்போன்று தேவ தேவனாகிய சிவபெருமானின் பெருந்தன்மையைப் பாவிகளாகிய மக்கள் பார்த்தற்கு அரிது என்பர் .

குறிப்புரை :

கூவல் - கிணறு . குரை - ஒலிக்கின்ற . பாவகாரிகள் - பாவச்செயல் செய்பவர்கள் . பார்ப்பரிது - இறைவனது தன்மையைக் காணுதல் முடியாது .

பண் :

பாடல் எண் : 6

பேய்வ னத்தமர் வானைப் பிரார்த்தித்தார்க்
கீவ னையிமை யோர்முடி தன்னடிச்
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடல்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.

பொழிப்புரை :

பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் அமர்வானும் , வேண்டியிருந்தவர்களுக்கு அருள்வழங்குவானும் , தேவர்கள் முடிகள் திருவடிகளில் சாய்க்கப்பெறுவானும் , தமக்குடலினுள் சீவனுமாய்ச் சிவனுமாய் இருப்பவனை வஞ்சனை உடையவர்கள் சிந்தியார்கள் .

குறிப்புரை :

பேய்வனம் - இடுகாடு . ஈ வன் - ஈ பவன் என்பதன் இடைக்குறை . அடிச்சாய்வன் - அடியில் சாயப்பெற்றவன் . சலவார்கள் - வஞ்சனையுடையவர்கள் . உடல் சீவன் - உடலைச் சீவன் உண்ணின்றியக்குதல் போல அவர்களுக்குள் நின்று ஆட்கொள்ளுபவன் .

பண் :

பாடல் எண் : 7

எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை யயர்த்துபோய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.

பொழிப்புரை :

வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள் ; அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளைக் காண்டற்கு அயர்த்து நரிவிருத்தம் ஆகுவர் .

குறிப்புரை :

எரி - வேள்வித்தீ . உருவருக்கம் - இறைவன் அட்ட மூர்த்தவர்க்கங்களில் தீ ஒன்றாதல் . நரி விருத்தமதாகுதல் - நரியின் எண்ணம்போன்று பயனற்றதாதல் . ` நரிவரால் கௌவச்சென்று நற்றசையிழந்ததொக்கும் `. ( தி .4. ப .27. பா .5).

பண் :

பாடல் எண் : 8

அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில்
அருக்க னாவா னரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை யீசனை யேதொழும்
கருத்தி னைநினை யார்கன் மனவரே.

பொழிப்புரை :

அந்தியில் சூரியன் பாதங்களை வணங்குவர் ; சூரியனாவான் சிவபெருமானின் உருவம் அல்லனோ ? இருக்கு முதலிய நான்கு வேதங்கள் இறைவனையே தொழும் கருத்தினைக் கல்மனம் படைத்தவர்களாய்ச் சிலர் நினைக்கமாட்டார்கள் .

குறிப்புரை :

அருக்கன் - சூரியன் . அரனுரு - அட்டமூர்த்த வடிவங்களில் ஒன்று .

பண் :

பாடல் எண் : 9

தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்
ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.

பொழிப்புரை :

பேய்ப்பெண்ணினது பேய்முலைப்பாலினை உண்டு அவள் உயிர் போகச்செய்த திருமாலுடைய மாயத்துப் பொருந்திய மனத்தை உடையவர்கள் தாயினும் நல்லவனாகிய சங்கரனுக்கு அன்பர்கள் ஆகிய உள்ளத்து அமுது அருந்தப்பெறா இயல்பினராவர் .

குறிப்புரை :

அமுது - அன்பராயவர் உள்ளத்து ஊறும் இறைவன் திருவருள் . மாயன் - திருமால் .

பண் :

பாடல் எண் : 10

அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந் தன்மையை
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.

பொழிப்புரை :

கருத்தில்லாத கீழ்மைக்குணமுடைய மக்கள் , இராவணனது வலிய அரட்டுத்தன்மையினை ஒழித்துப் பின்னும் பேரருள் பெருக்கச்செய்த சிவபெருமானின் பெருந்தன்மையை விருப்பம் புரிந்து அறியப்பெறுகிலர் ஆவர் .

குறிப்புரை :

அரட்டு - துட்டச்செயல் . அருத்தி - அன்பு . கயவக் கணம் - கீழ்மக்கட்கூட்டம் .
சிற்பி