திருக்கடம்பந்துறை


பண் :

பாடல் எண் : 1

முற்றிலாமுலை யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கு மறிவில ளாகிலும்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்றம் ஊர்தியென் றாளெங்கள் பேதையே.

பொழிப்புரை :

எங்கள் பேதையாகிய இவள் முற்றாத இளமுலை உடையாள் ஆயினும் , அற்றந் தீர்க்கும் அறிவில்லாதவள் ஆயினும் , கற்றைச் செஞ்சடையானாகிய கடம்பந்துறைப் பெருமான் இவர்ந்து வரும் ஊர்தி இடபம் என்று கூறுகின்றாள் . ( செவிலி கூற்று )

குறிப்புரை :

முற்றிலா - முழுதும் எழாத ; இளைய . எங்கள் பேதை இவள் - பேதைப்பருவம் உள்ள எங்கள் மகள் . அற்றம் தீர்க்கும் அறிவு - தலைவன் துன்பத்தைப் போக்கும் காம உணர்வு . அற்றம் - துன்பம் . முற்றிலா முலையாள் , அறிவிலள் என்றது இளையள் , பேதை , காமஞ்சாலாதவள் என்றபடி . ஆகிலும் - அங்ஙனமிருந்தாலும் . கற்றைச் செஞ்சடை - அடர்ந்த செஞ்சடைக் கற்றை . ஊர்திபெற்றம் - வாகனம் எருது . கடம்பந்துறைக் கற்றைச் செஞ்சடையான் ஊர்திபெற்றம் என மாறுக . என்றாள் - காமஞ்சாலா இளையோளாய எமது மகள் இறைவனைக் கண்டு காதலித்து அவன்றன் அடையாளம் கூறத் தொடங்கிவிட்டாள் என்பதாம் . உலாப்புறம் போந்த முதல்வனைக் கண்ட பேதைப் பருவப் பெண் அவன்றன் திருவுருவில் உளங்கொடுத்தாள் என்க .

பண் :

பாடல் எண் : 2

தனகி ருந்ததொர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.

பொழிப்புரை :

நீங்கள் உள்ளக்களிப்பு மிக்கு உடையீராயினும் . நுமது இழிவு நீங்குதற்கு முதல்வனைத் தொழுமின்கள் ; கனகப் பொன்சடையான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நினையும் வல்லமை பெற்றவர் விசும்பு ஆள்வர் ஆதலால் .

குறிப்புரை :

தனகு - உள்ளக்களிப்பு ; இதனை உடையோர் செய்வது அறியமாட்டார் . அன்னோர் முதல்வனை உணராமையின் இழிஞர் , அல்லது குற்றம் உடையோர் ஆவர் . அவ்விழிவு நீங்கி உய்தற் பொருட்டு அன்னோரைத் ` தொழுதெழுக ` என உணர்த்துகின்றார் சுவாமிகள் . முனகு - இழிவு , குற்றம் . சிவபிரானை நினைந்தெழுவார் முத்திபெறுவது சரதம் ஆகலின் , உள்ளக் களிப்புள்ள உலகரையும் தொழுதெழுக என்றருளிச் செய்தபடி .

பண் :

பாடல் எண் : 3

ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.

பொழிப்புரை :

பெருமை மிக்க நல்லியல்புகள் பொருந்திய அன்பர்களே ! ஆரியமும் , தமிழும் , இசையும் ஆனவனும் மிக்க குணத்தார் குறியாக நின்றவனும் ஒருபாற் பார்வதிதேவியாரை உடையவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறை சென்றடைவீர்களாக .

குறிப்புரை :

ஆரியம் - வடமொழி . ` வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்குமானவன் ` ( தி .6. ப .87. பா .1) என்பதறிக . கூரிய - சிறந்த ; மிகுந்த . குறி - சொல்லும் எல்லை . காரிகை - அழகு . சீரியல் பத்தர் - சிறந்த தன்மை வாய்ந்த பக்தர் என்க . கூரிய குணத்தார் குறி நின்றவன் என்பதற்குச் சிவஞானிகள் ஒரு குறிக்கண்வைத்து உணர , அக்குறிக்கண் நின்று அவர்க்குப் பேரின்பம் தருவோன் எனவும் பொருள் கொள்ளலாம் .

பண் :

பாடல் எண் : 4

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவரும்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே.

பொழிப்புரை :

பண்ணின் இன்மொழி கேட்கும் விருப்புடைய பரமனும் , நான்முகனும் , தேவர்களும் , திருமாலும் , அறியப்படாதவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நண்ணினால் , நம்வினைகளாயவை நாசமாம் .

குறிப்புரை :

பண்ணின் இன்மொழி - இரு காதுகளிலும் இரு குழைவடிவாக அசுவரதரன் , கம்பளதரன் என்பார் . பாடல் பண்ணிசை மொழிகளை அல்லது அடியார்கள் பாடும் பண்ணிசைப் பாடல்களைக் கேட்கும் பரமன் என்க . வண்ணநன்மலரான் - அழகிய நல்ல தாமரையில் உள்ள நான்முகன் ; பல தேவரும் கண்ணனும் அறியான் - ( நான்முகனும் ) தேவர்கள் பலரும் திருமாலும் அறியாதவன் . நண்ண - அடைய . வினையாயின - வினைகள் .

பண் :

பாடல் எண் : 5

மறைகொண் டம்மனத் தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவ்வினை தீரத் தொழுமினே.

பொழிப்புரை :

உபதேசப் பொருளைக் கொண்ட மனத்தே விளங்கித் தோன்றும் முதல்வனை ஒரு நெறிப்பட்ட நெஞ்சின் உள்ளூற வைப்பீர்களாக ; திருநீலகண்டன் உறையும் கடம்பந்துறையை நுமது அறிவைக் கட்டுப்படுத்தும் இருவினை தீரத் தொழுவீர்களாக .

குறிப்புரை :

மறைகொண்ட மனத்தான் - உபதேசப் பொருளைச் சிந்தித்தல்கொண்ட மனத்தை உடையவன் . மறை - உபதேசப் பொருள் ( இரகசியம் ). மனத்துள் - உள்மனத்தின்கண் . நிறைகொண்ட - நிறை என்னும் குணம் கொண்ட ; நிறுத்துதல் அமைந்த . அ - அழகிய . நெஞ்சினுள் - உள்மனமாகிய நெஞ்சின் கண் எனக் கூட்டுக . உற - பொருந்த . வைம்மின் - வைத்து வழிபடுங்கள் , ஓ - அசை . கறை - விடக்கறை . சிறைகொண்ட வினை - உயிர்களின் அறிவைச் சிறைப் படுத்துதலைக் கொண்டிருக்கும் வினைகள் . மனத்தை ஒரு நெறிப்படுத்தி உபதேசப் பொருளில் வைத்து முதல்வனைச் சிந்தித்துணர்வார்க்கு வினைக்கட்டு நீங்கி வியாபக உணர்வு வெளிப்படும் என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

நங்கை பாகம்வைத் தந்நறுஞ் சோதியைப்
பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி யரனுறை கின்றதே.

பொழிப்புரை :

கங்கையைச் செஞ்சடையில் வைத்த பெருமானும் ஆறங்கங்களை ஓதியோரும் ஆகிய இறைவர் உறைகின்றது கடம்பந் துறையாதலால் நங்கையை ஒருபாகம் வைத்த அந்த ஒளியுருவை அவ்விடத்துக் கேடின்றிப் பணிந்தெழுவீர்களாக .

குறிப்புரை :

நங்கை - பார்வதி . நறுஞ்சோதி - நல்லஒளி வடிவினன் . பங்கம் - இழிவு . அங்கம் ஓதி - வேதாங்கங்களாகிய சிகை?ஷ நிருத்தம் முதலான ஆறு அங்கங்களையும் உலகிற்கு அளித்தவன் . உமையொருபாகனை அவன் உறையும் கடம்பந் துறையில் பணிந்தெழுக என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

அரிய நான்மறை யாறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறியாமை உடைய நெஞ்சமே ! அரிய நான் மறைகளாய் உள்ளவனும் , அன்னமயகோசம் முதலிய ஐங்கோசங்களாகப் பேசப்பட்டவனும் , தேவர்கள் வேண்ட நஞ்சுண்டவனும் , அதனாற்கறுத்த கண்டத்தினானுமாகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி நினைப்பாயாக .

குறிப்புரை :

அரிய - உணர்தற்கருமையான . நான்மறை - இருக்கு , யசுர் , சாமம் , அதர்வணம் , ஆறங்கம் - சிகை?ஷ , நிருத்தம் , கல்பம் , வியாகரணம் , சந்தோவிசிதம் , சோதிடம் . ஐந்து புரியன் - அன்னம் , பிராணன் , மனம் , விஞ்ஞானம் , ஆனந்தம் என்னும் ஐங்கோசங்களாக எண்ணப்படுபவன் . இவை உயிர்க்கு இடமாகலின் புரி எனப்பட்டன . மட நெஞ்சமே ! - இந்நாள்வரை அறியாதிருந்த மனமே ! கடம்பந் துறையை உரியவாறு நினை என்க .

பண் :

பாடல் எண் : 8

பூமென் கோதை யுமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்க ளுள்ளத்தால்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநம் தீவினை நாசமே.

பொழிப்புரை :

பூவணிந்த மென்கோதை உடையவளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனை வேள்விகள் செய்தும் , உள்ளத்தால் உணர்வீர்களாக ! மன்மதனைச் சினந்த பெருமான் உறையும் கடம்பந்துறையில் அத்திருநாமம் ஏத்த நம் தீவினைகள் நாசமாம் .

குறிப்புரை :

பூமென்கோதை - பூக்களை அணிந்த மெல்லிய கூந்தலை உடையாளாகிய . ஓமம் செய்தும் - பூவும் நீரும் கொண்டு பூசித்தலோடு வேள்விசெய்தும் . காமன் - மன்மதனை . நாமம் - திருப்பெயர் .

பண் :

பாடல் எண் : 9

பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் உலகில் விரும்பி வணங்கிப் பணிசெய்ய அறியாது தேடி இளைத்தற்குக் காரணனாக இருந்தவன் கடம்பந்துறை மேவியவனும் , ஆரணங்கை ஒருபால் உடையவனுமாகிய புலன்களைந்தும் வென்ற பெரு வீரனாகிய இறைவனே .

குறிப்புரை :

பார் - உலகம் . அணங்கி - விரும்பி , ( அணங்குதல் - விரும்புதல் ) வணங்கி - வழிபட்டு . காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணனாயிருப்பவன் . ஆரணங்கு - அரிய தெய்வமாகிய உமையம்மை . மைந்தன் - வலியன் . நாரணனும் பிரமனும் நிலமிசை விரும்பி வணங்கிப் பணி செய்திருப்பின் முதல்வனைக் கண்டிருப்பர் ; அஃது அறியாது அவர் தேடி எய்த்தனர் எனக்கொள்க .

பண் :

பாடல் எண் : 10

நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலா னைந்துட னாடும் பரமனார்
காலா லூன்றுகந் தான்கடம் பந்துறை
மேலா னாஞ்செய்த வல்வினை வீடுமே.

பொழிப்புரை :

பாலோடு கூடிய ஆனைந்தும் ஆடும் பரமனும் , அரக்கனைக் காலால் ஊன்றி உகந்த பெருமானும் ஆகிய இறைவனைக் கடம்பந்துறையிற் சென்று வழிபட்டால் , நாம் செய்த மேலைவல் வினைகள் கெடும் . ஆதலால் , துன்பங்கெடும் படியாக நூல் அறிவால் நன்றாக நினைத்து வழிபடுவீர்களாக . ( நூல் அறிவு - சிவாகம உணர்வு .)

குறிப்புரை :

நூலால் - சைவாகம விதிப்படி , நன்றா - குற்றமின்றி . நோய் கெட நினைமின்கள் என்க . நோய் - பிறவித்துன்பம் . பாலான் ஐந்து - பால் முதலிய ஆனைந்து என்க . ஆனைந்து - பஞ்சகவ்வியம் . ஆடும் - அபிஷேகம் கொள்ளும் . காலால் ஊன்றுகந்தான் - அரக்கனைக் காலால் ஊன்றுதலை உகந்தவன் . மேலால் நாஞ்செய்த வல்வினை - முற்பிறவியில் நாம் செய்த வலிய வினை .
சிற்பி