பண் :

பாடல் எண் : 1

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன் , அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன் . மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன் , நுண்ணியன் , யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன் . தேனும் பாலும் போன்று இனியவன் . நிலைபெற்ற ஒளிவடிவினன் , தேவர்களுக்குத் தலைவன் , திருமாலையும் பிரமனையும் , தீயையும் , காற்றையும் , ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன் . புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம் .

குறிப்புரை :

அரியான் - புறப்பொருளை அறியும் கருவியறிவினாலும் , தன்னையறியும் உயிரறிவினாலும் அறிய வாராதவன் . ` அந்தணர் ` என்றது , ஈண்டுத் தில்லைவாழ் அந்தணரை . ` அந்தணர்தம் சிந்தை யானை ` என்றது , அரியானாகிய அவன் , எளியனாய்நிற்கும் முறைமையை அருளிச்செய்தவாறு . அருமறை - வீடுபேறு கூறும் மறை . அகம் - உள்ளீடு ; முடிந்த பொருள் . இதனான் , எவ்வுயிர்க்கும் முடிந்த வீடுபேறாம் பெருமான் சிவபெருமானேயாதல் தெற்றென விளங்கிற்று . அணு - சிறிது ; இதனை , ` தேவர்கள் தங் கோனை ` என்பதன் முன்னாகவைத்து உரைக்க . யார்க்கும் - எத்தகையோர்க்கும் . தத்துவம் - மெய் . ` தெரியாத ` என்பது , ` தத்துவன் ` என்பதன் முதனிலையோடு முடிந்தது . இதனால் , இறைவனை அணைந்தோரும் அவரது இன்பத்தில் திளைத்தலன்றி , அவனை முழுதும் அகப்படுத்து உணரலாகாமை அருளிச்செய்யப்பட்டது . ` தேன் , பால் ` என்பன உவமையாகு பெயராய் , ` அவை போல்பவன் ` எனப் பொருள்தந்து நின்றன . ` திகழ் ஒளி ` என்பது இசையெச்சத்தால் , ` தானே விளங்கும் ஒளி ( சுயம்பிரகாசம் )` எனப் பொருள் தருதல் காண்க . ஒளியாவது அறிவே என்க . ` தேவர்கள் தம் கோனை ` என்பது முதலிய ஏழும் , ` கலந்து நின்ற ` என்பதனோடு முடிந்தன . ` அணு ` என்றதனால் சிறுமையும் ( நுண்மையும் ), ` பெரியான் ` என்றதனால் பெருமையும் ( அளவின்மையும் ) அருளிச் செய்தவாறு . புலிக்கால் முனிவர்க்குச் சிறந்த உறைவிடமாய் இருந்தமை பற்றித் தில்லை , ` பெரும் பற்றப் புலியூர் ` எனப்பட்டது . ` பிறவாநாள் ` என்றருளியது , பிறவி பயனின்றி யொழிந்த நாளாதல் பற்றி . அறம் பொருள் இன்பங்களாகிய உலகியல்களும் பயனல்லவோ ? என்னும் ஐயத்தினையறுத்து , ` அவை துன்பத்தால் அளவறுக்கப்படும் சிறுமையவாதலின் , இறையின்பமாகிய பெரும்பயனொடு நோக்கப் பயனெனப்படா ` எனத் தெளிவித்தலின் , ` பிறவா நாளே ` என்னும் ஏகாரம் தேற்றம் .

பண் :

பாடல் எண் : 2

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

எல்லாம் வல்லவன் , கங்கையைத் தாங்கிய நீண்ட சடையன் . ஒரு பக்கத்தில் காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன் . பொருள் அற்றவருக்கும் , தாங்குவார் இல்லாது வருந்துபவருக்கும் , அருளுபவன் . தன்னைத் தவிர வேறு எவரும் தனக்கு ஒப்பில்லாதவன் . தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன் . திருவாரூரிலும் உகந்து தங்கியிருப்பவன் ஆகிய எம்பெருமானை நாம் எல்லாருக்கும் மேலானவன் என்று அறிந்தோம் . ஆதலின் அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

கற்றான் - எல்லாம் வல்லவன் ; இஃது இயற்கையைச் செயற்கைபோலக்கூறும் பான்மை வழக்கு . இனிக் கல் தானை எனப்பிரித்து அடையாக்குவாரும் உளர் . கல்தானை - கல்லாடை ; காவியுடை . வலஞ்சுழி சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று . உம்மை , ` தில்லையேயன்றி ` என எச்சஉம்மை . ஆரூரும் என்புழியும் இவ்வாறே கொள்க . அற்றார் - பொருளற்றார் ; அலந்தார் - களைகண் இல்லாதார் ; இவர்க்கு அருள்செய்தலைக் குறித்தருளியது , இம்மை நலங்கள் அருளுதலை அறிவுறுத்தற் பொருட்டு . ` அறிந்தோம் அன்றே ` என்பதனை இறுதிக்கண்வைத்து , ` அதனால் ` என்பது வருவித்துரைக்க . ` மற்றாருந் தன்னொப்பார் இல்லாதான் ` என்றருளியது , தனக்குவமை இல்லாதான் என்றருளியவாறு . கடவுட்பொருள் இரண்டாவது இல்லை என்றவாறு . பலராகக் கூறப்படும் கடவுளர் அனைவரும் உயிர்களாதலை விளக்குதற்கு , ` வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்பெற்றானை ` என்றருளிச் செய்தார் . ` ஏத்தும் பெற்றானை ` என்பது பாடமாயின் , பெற்றத்தான் ( இடபத்தை யுடையவன் ) என்பது குறைந்து வந்ததென்க .

பண் :

பாடல் எண் : 3

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

யானைத் தோலை மேலாடையாக இறுக்கி உடுத்து , தன் கழல்களின் ஒலி ஏனைய இயங்களின் ஒலியோடு கலந்து ஒலிக்க , கையில் தீயை ஏந்தி , பெருமை வளர்கின்ற பருத்த தோள்களை மடித்து அவைகள் அசையுமாறு , பிறைமதியைச் சடையில் அணிந்து மானின் பார்வை போன்ற பார்வையளாகிய மேம்பட்ட சிறந்த ஒளியை உடைய முகத்தவளாகிய உமாதேவி விரும்பிக்காணுமாறும் தேவர் கூட்டம் தலை தாழ்த்து வணங்குமாறும் திருக்கூத்தாடுகின்ற மேம்பட்டவனாகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , இறைவரது ஆடற் சிறப்பின்கண் ஈடுபட்டருளிச் செய்தது . கருமான் - யானை . ` வருதோள் ` எனவும் , ` அருமுகம் ` எனவும் இயையும் . மானம் - பெருமை . ` மடித்து ` என்பது . ` மட்டித்து ` என விரிக்கப்பட்டது . வீக்கி - கட்டி .

பண் :

பாடல் எண் : 4

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன் , தேவர்கள் தலைவன் , தீமைகளை அழிப்பவன் , மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன் . அலைகள் மடங்கி வீழும் கடல் , மேம்பட்டமலை , நிலம் , வானம் , திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள் , எண்திசைகள் , வானத்தில் உலவுகின்ற காய்கதிர் , மதியம் , பிறவும் , ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

மூவா மருந்து - மூப்பாகாமைக்கு ஏதுவாய மருந்து ; அமிழ்தம் . மறிகடல் - அலைவீசும் கடல் . குலவரை - சிறந்த மலை ; இவை எட்டுத் திசைகளில் திசைக்கு ஒன்றாகச் சொல்லப்படுவன . தாரகை - விண்மீன் ; திரிசுடர்கள் - திரிகின்ற சுடர்கள் ; இரண்டு சூரிய சந்திரர் .

பண் :

பாடல் எண் : 5

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

ஒப்பற்ற துணைவன் , அடியவர்களின் துயரைப் போக்கும் அமுதம் போன்றவன் . பரந்த இவ்வுலகில் பிறப்பெடுத்த பின்னர் உடன்தோன்றும் துணைவர் , ஏனைய சுற்றத்தார் , செல்வம் இவற்றிலுள்ள பாசத்தை நீத்து , பெரியபுலன்களின்மேல் செல்லும் மனத்தை அடக்கி , மகளிரோடும் படுக்கையில் நுகரும் சிற்றின்பப் பயனை அடியோடு நீக்கி , ஏனைய தெய்வங்களோடு பொதுவாக நினைப்பதனை விடுத்துத் தன்னையே விருப்புற்று நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

அருந்துணை - ஒப்பற்றதுணை . அருமருந்து - கிடைத்தற்கரிய மருந்து ; அமிழ்தம் . ` தோன்றி ` என்பது ` தோன்றிய பின்னர் ` எனப்பொருள்தரும் . வரும் துணை - உடன்தோன்றும் துணைவர் . பற்று - செல்வம் . வான்புலன் - பெரிய புலன்களின் மேற் செல்லும் மனம் . புலன்கட்குப் பெருமை கடக்கலாகாமை . தன்னைப் பொதுநீக்கி ` நினையவல்லார்க்கு ` என மாற்றியுரைக்க . பொது நீக்கி நினைதலாவது , கடவுளர் பலருள் ஒருவனாக நினையாது , அவர் எல்லார்க்கும் தலைவனாக நினைதல் . மெய்யுணர்வு வாய்க்கப் பெற்றார்க்கன்றி அது கூடாமையின் , ` வல்லோர்க்கு ` என்று அருளிச் செய்தார் . பெருந்துணை - யாதொன்றற்கும் வேறு துணை நாட வேண்டாது , எல்லாவற்றிற்கும் யாண்டும் உடனாய் நின்று உதவும் துணை . இறைவன் அத்தகையோனாதலை , அமணர் இழைத்த தீங்குகள் பலவற்றினும் நாவரசர் கண்டருளினமையை நினைவு கூர்க .

பண் :

பாடல் எண் : 6

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தன் திருமேனியின் இடப்பகுதியாகக் கொண்டவன் . மேம்பட்ட வயிரமலைபோன்ற வடிவினன் . அலரும்பருவத்து அரும்பாய்க் கட்டிய கொன்றைப் பூமாலையான் . நால்வேதமும் ஆறங்கமும் ஆயினான் . வண்டுகள் விரும்பும் நறுமணச்சோலைகள் சூழ்ந்த அழகிய ஆரூரில் மேல் நோக்கும் சுடரொளி போன்றவன் . ஒளிப்பிழம்பு அணைதல் இல்லாத விளக்குப் போன்றவன் . வீடுபேற்று இன்பமாக இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

வெண்ணீற்றுப் பூச்சில் ஈடுபட்டு . ` கனவயிரக் குன்றனைய காட்சியானை ` என்றருளிச் செய்தார் . திருவாரூரிற் காணவேண்டும் உணர்வுண்டாயினமை , ` ஆரூர்ச் சுடர்க்கொழுந்தை ` என்றருளியதனாற் பெறுதும் . பிற இடங்களினும் இவ்வாறே , பின்னர்க் காணுமதனையேனும் , முன்னர்க் கண்டதனையேனும் , அவ்விடங்களில் இறைவர் செய்த அருட்செயல்களையேனும் நினைந்து அருளிச்செய்யுமாற்றினை இடம் நோக்கியுணர்ந்துகொள்க . சுரும்பு - வண்டு . கடிபொழில்கள் - நறுமணச் சோலைகள் . துளக்கு - அசைவு .

பண் :

பாடல் எண் : 7

வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவன் . மேருவை வில்லாகக் கொண்டு , தேவர்களையே அம்பாகக் கொண்டு கொடிய அச்சத்தை விளைத்த அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு அம்பினைச் செலுத்திய தலைவன் . அலைகடலில் தோன்றிய விடத்தை உண்டவன் . வண்டுகள் தங்கும் பூக்களை அணிந்த கூந்தலை உடைய இளைய மகளிரின் கடைக்கண் பார்வையால் அசையாத உள்ளத்தை உடையவராய்ச் சிற்றின்பத்தை அறநீத்த உள்ளத்தார் அடையும் முடிந்த பயனாக இருப்பவன் ஆகிய பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

` எழுநரம்பின் ஓசை` எனப் பின்னர் வருகின்றமையின் , ` வரும் பயன் ` என்றது அவ்வோசைகளான் வரும் பயன் என்க . ` ஏழிசையாய் இசைப்பயனாய் ` ( தி .7. ப .51. பா .10) என்ற அருள் வாக்குங் காண்க . பயன் என்றது , பண்ணென்றாயினும் , பண்ணால் அடையும் இன்பமென்றாயினும் கொள்ளப்படும் . திருமால் அம்பாயும் , காற்றுக் கடவுள் சிறகாயும் , தீக்கடவுள் முனையாயும் அமைந்தமையின் , ` வானவர்கள் முயன்ற வாளி ` என்றருளிச் செய்தார் . ` குன்றவார்சிலை நாணரா அரி வாளிகூர்எரி காற்றின் மும்மதில்வென்ற வாறெங்ஙனே விடையேறும் வேதியனே ` ( தி .2 ப .50. பா .1) என்றருளிச்செய்ததும் காண்க . ` அம்மான் ` என்பதில் அகரம் பலரறி சுட்டு . துறந்தோர் உள்ளப் பெரும் பயன் - துறவுள்ளத்தால் அடையும் முடிந்த பயன் . துளங்காத - கலங்காத .

பண் :

பாடல் எண் : 8

காரானை யீருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை
அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

கரிய யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தியவன் . விருப்பம் மருவிய பொலிவினை உடைய காஞ்சி நகரத்தின் ஏகம்பம் என்ற திருக்கோயிலை உகந்து எழுந்தருள்பவன் . அடியவர்களை அண்மித்திருப்பவன் . தம் முயற்சியால் அறிய முயலும் தேவர்களுக்கு அளவிட முடியாதவன் . நிலவுலகத்தவரும் வானுலகத்தவரும் தன்னை வணங்குமாறு கூத்தினைப் பயில்கின்ற ஒளி உருவன் ஆகி எண்ணற்ற திருநாமங்களை உடையவன் . அத்தகைய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

ஆரேனும் - உலகியலில் குலம் முதலியவற்றால் எத்துணை இழிந்தவராயினும் ; இவர்கட்கு இறைவன் அணியனாய் நின்றமையை உண்மை நாயன்மார் பலரது வரலாற்றில் காண்க . ` ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் - ஆரேனுங் காணா அரன் ` என்பது . ( திருக்களிற்றுப்படியார் - 15.) அடியவர் - உடல் பொருள் ஆவி எல்லாவற்றாலும் தம்மை இறைவற்கே யுரியவராக உணர்ந்தொழுகுவார் . அளவிலான் - வரையறைப் படாதவன் ; அகண்டன் என்றபடி . ` நடம் ` என்பது ` நட்டம் ` என விரிக்கப்பட்டது . பரஞ்சுடர் - மேலான ஒளி . ` ஒளி என்பது அறிவே ` என மேலும் ( தாண்டகம் -1) குறிக்கப்பட்டது . ` பெயர் ` என்பது , ` பேர் ` என மருவிற்று . காமரு - விரும்பப்படுகின்ற . பூ - அழகு .

பண் :

பாடல் எண் : 9

முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

வெள்ளிய பிறைமதியைச் சூடியவன் . மூவுலகும் தானேயாய் இருக்கும் தலைவன் . பகைவருடைய மும்மதிலையும் அழித்தவன் . விளங்கும் ஒளிவடிவினன் . இடப்பாகத்தது நிறத்தால் மரகதமணி போன்றவன் . இன்பம்பயத்தலால் தேனும் பாலும் போன்றவன் . குற்றாலம் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இளையவன் . கூத்தாடுதலில் வல்லவன் . யாவருக்கும் தலைவன் . சிவஞானியர் ஞானத்தால் அறியப் பெற்றவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

பால் மதி - பால்போலும் ( களங்கமில்லாத ) மதி ; ` பகுப்பாய மதி ` எனலுமாம் . செற்றார்கள் - பகைத்தவர்கள் . செற்றான் - அழித்தான் . மரகதம் - மரகதம்போல்பவன் . ` திகழொளியை , தேனை , பாலை ` என்பதனை மேலே ( தாண் -1) காண்க . குற்றாலம் , பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று . ` கூத்தாட வல்லானை ` என்றருளிச்செய்தது , எல்லா வகை ஆடலும் புரிதல் கருதி . காளியொடு ஆடினமையையும் கருதுக . ` ஞானம் பெற்றான் ` என்றதும் , பான்மை வழக்கு . ` பெற்றார்கள் ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 10

காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

பொழிப்புரை :

கரிய உடல் ஒளியை உடையவனும் சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலும் , நறுமணம் கமழும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் தன் அடியையும் முடியையும் காணமுடியாதபடி சீரிய ஒளியை உடைய தீப்பிழம்பாய் நின்ற பழைய மேம்பட்ட ஒளியை உடையவன் . உள்ளத்தில் உள்ள மயக்கத்தைப் போக்கும் ஞான ஒளியானவன் . பெரிய இந்நில உலகையும் , வானத்தையும் , தேவர் உலகையும் உள்ளிட்ட ஏழு உலகங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பாலும் பரவும் எல்லையற்ற பேரொளிப் பிழம்பாய் இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

குறிப்புரை :

கார் ஒளிய - கருநிறத்தினனாகிய . ` தொல்லை ஒளி ` என்றருளியது , அவ்விருவர்க்கும் முன்னோன் ஆனதுபற்றி ` ` காணா வண்ணம் நின்ற ஒளி ` என்றருளியது , உயிர்கள் கட்டுற்றுள்ள நிலையில் அவற்றிற்குத் தோன்றாது நின்று மறைத்தலைச் செய்தல் பற்றியும் , ` சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏர்ஒளி ` என்றருளியது , அவை பருவம் எய்திய நிலையில் வெளிப்பட்டு நின்று அருளுதலைச் செய்தல்பற்றியும் , ` ஏழுலகும் கடந்து அண்டத்தப்பால் நின்ற பேரொளி ` என்றருளியது , அவ்வருள் வழிச் சென்று உலகிறந்து நின்ற வழி அநுபவிக்கப்படும் பெரும் பொருளாதல் பற்றியும் என்க . திகழ்தல் உளதாதலையும் , ஏர்தல் தோன்றுதலையும் ( எழுதலையும் ), பெருமை அளவின்மையையும் உணர்த்தும் என்க . கடிக்கமலம் - நறுமணத் தாமரை . ` இருந்தயன் ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 1

மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்குமிட மறியார் சால நாளார்
தருமபுரத் துள்ளார் தக்க ளூரார்
பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

பொலிவு தரும் வெண்ணீறு அணிந்து, பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வர, நம்பெருமானார் வானத்தில் உள்ள சந்திரன் தவழ்ந்து செல்லும் உயர்ச்சியை உடைய பெருந்தெருக்களை உடைய மயிலாப்பூர், மருகல், கொங்குநாட்டுக் கொடுமுடி, குற்றாலம், குடமூக்கு, கொள்ளம்பூதூர், தருமபுரம், தக்களூர் என்ற திருத்தலங்களில் பல நாள் தங்கி, தாம் உறுதியாகத் தங்கும் இடமாகப் பிறவற்றை அறியாராய், தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கி விட்டார்.

குறிப்புரை :

மாடவீதி - பெருந்தெரு. அஃது உயர்ந்த மேல் மாடங்களை இருமருங்கும் உடையதாய் இருத்தல் இயல்பாதலின், அப்பெயராற் கூறப்படும். மயிலாப்பு - மயிலாப்பூர். இது தொண்டை நாட்டில் (சென்னையில்) உள்ளது. உமையம்மை மயில் உருவாய் இருந்து வழிபட்டது. `ஆப்பு` தறியாகலின், பிணிப்புண்ட இடம் என்னும் கருத்துடையதாம். கொடுமுடி கொங்கு நாட்டுத் தலம். குடமூக்கு, `கும்பகோணம்` என வழங்கப்படுகின்றது. மருகல், கொள்ளம்பூதூர், தருமபுரம் சோழநாட்டுத் தலங்கள். தக்களூர், வைப்புத்தலம். தங்குமிடம் அறியார் என்பதனை முதற்கண்வைத்து எச்சப்படுத்து, ``உள்ளார்`` முதலிய வினைக்குறிப்புக்களிலெல்லாம், `ஆயினார்` என்பதனையும், `அதன் பின்பு` என்பதனையும் முறையானே விரித்து, `புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்` என முடிக்க. ``தங்கும் இடம் அறியாராய்`` என்றருளியது, `தமக்கு ஏற்ற இடம் தேடு வாராய்` என்னும் பொருளையுடையது. `சிற்றம்பலமே` என்னும் ஏகாரம், பிரிநிலை. `வேதமும்` என்பதில் உயிரெதுகை வந்தது. `தாம்` என்பது அசைநிலை. அவ்விடத்துள்ள ஏகாரம் ஈற்றசை. `எம்பெருமானார்` என்னும் எழுவாய் வருவித்துரைக்க. இவை எல்லாம் மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும். மங்குல் - மேகம். மதி - சந்திரன்.

பண் :

பாடல் எண் : 2

நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்
பாகப் பொழுதெலாம் பாசூர்த் தங்கிப்
பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
வேதமும் வேள்விப் புகையும் ஓவா
விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
போகமும் பொய்யாப் பொருளு மானார்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

ஐம்புல இன்பப் பொருள்களும் மெய்ப்பொருளும் ஆகிய, பாம்பினை இடையிலே கட்டிய, நம்மால் விரும்பப்படும் இறைவர் நனிபள்ளி, நல்லூர் இவற்றில் தங்கி ஓர் இராப்பொழுது முழுதும் பாசூரில் தங்கிப் பன்னிருநாள் பரிதிநியமத்திலும் ஏழு நாள் வேதமும் வேள்விப் புகையும் நீங்காத நீர்வளம் மிக்க திருவீழிமிழலையிலும் உகந்திருந்து, இந்நாளில் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கிவிட்டார்.

குறிப்புரை :

நனிபள்ளி, நல்லூர், பரிதிநியமம், மிழலை (வீழிமிழலை) சோழ நாட்டுத்தலங்கள். பாசூர், தொண்டைநாட்டுத் தலம். பாகப் பொழுது-பாதிநாள்; இரவு. `பன்னிருநாள், பரிதி நியமத்தாராய்` என்க. `பன்னிருநாள் எழுநாள்` என்றாற்போலக்கால அளவை அருளியது, அவ்வத் தலங்களின் சிறப்பினைப் புலப்படுத்தற் பொருட்டு. மேலைத் திருத்தாண்டகத்திற், `சால நாளார்` என்றருளியதும் அது. சுவாமிகள் திருமொழியுள் தோன்றியவாறே கொள்வதன்றி, அத்தலங்களின் பெருமை அளவிற்குக் காரணங்காண நாம் வல்லோமல்லோம். அரைக்கு, `அரையின்கண்` என உருபுமயக்கம். போகம்-ஐம்புல இன்பப் பொருள். பொய்யாப் பொருள்-மெய்ப் பொருள். ``போகமும் பொய்யாப் பொருளும் ஆனார்`` என்பதனை ``நாகம் அரைக்கசைத்த நம்பர்`` என்பதன் பின்னும், `இந்நாள்` என்பதனை `எழுநாள் தங்கி` என்பதன் பின்னும் கூட்டுக. `பன்னிரு நாள்` என, இருமாச்சீர்க்கு ஈடாக ஒரு விளங்காய்ச் சீர் சிறுபான்மை வந்தது.

பண் :

பாடல் எண் : 3

துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலும்
தூமதியும் பாம்பு முடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும்
மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

உலகவருக்கு ஒழுக்கத்தை அறிவித்து, ஒரு காலத்தில் சனகர் முதலிய அந்தணர் நால்வருக்கு வேதத்தின் விழுமிய பொருளை அருளிச்செய்த சிவபெருமான் நிலையில்லாப் பொருள்களில் பற்றறுத்தலாகிய ஞானத்தை அறிவித்து, மெய்ந்நூற் பொருள்கள் அனைத்தையும் அருளினார். களங்கமற்ற பிறைமதியையும் பாம்பினையும் அணிகலனாக உடையார், தம் வீரத்தை வெளிப்படுத்தி மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தார். மந்திரங்களும் அவற்றை முறையாகப் பயன்படுத்தும் செயல்களும் தாமேயாக உள்ளார். அப்பெருமான் இந்நாள் தாமே உகந்து தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.

குறிப்புரை :

`மண` என்னும் வினைமுதனிலை விகுதி அம்மின் அகரங்கெட்டு, `மணம்` என வருதல்போல, `துற` என்னும் வினை முதனிலை `துறம்` என வந்தது. எனவே, துறவு என்பது அதன் பொருளாயிற்று. அது, ஞானத்தின்மேலதாம். `எல்லாம்` என்றருளியது, `மெய்ந்நூற் பொருள்கள் அனைத்தையும்` என்றருளியவாறாம். `போலும்` என்பன உரையசைகள்.
தந்திரம் - கடவுள் வழிபாட்டு முறையைக் கூறும் நூல் (கிரியா பாதம்). அறம் - ஒழுக்கம். அந்தணர் நால்வராவர்; அவரைச் சனகர் முதலிய நால்வராகவும் கூறுவர். `அரனார்` என்னும் எழுவாயை முதற்கண் வைத்து, அதனை, `விரித்தார்` முதலிய நான்கனோடும் முடித்து, `அவர்` எனச் சுட்டுப் பெயர் வருவித்து முடிக்க. அறம் அருளிச்செய்தமை, எல்லாம் விரித்தமை முதலியவற்றை எடுத்தோதியருளியது, அவரது பெருமையை வியந்தவாறு. மேலும் இவ்வாறு வருவனவற்றை உணர்ந்துகொள்க. புறங்காட்டில் எரியின்கண் ஆடல், உலகம் யாவும் இறுதி எய்தும் காலத்து, அவ்விறுதியால் தான் தாக்குண்ணாது நிற்றலைக் குறிக்கும். மறம் - வீரம். புறங்காடு -சுடுகாடு.

பண் :

பாடல் எண் : 4

வாரேறு வனமுலையாள் பாக மாக
மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்
திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த
கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

கச்சணிந்த அழகிய திருத்தனங்களை உடைய பார்வதி தம் உடம்பில் ஒரு பகுதியாக அமைய, மழுப்படையைக் கையில் தாங்கிச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தி, விடக்கறை தங்கிய கழுத்தினராய், மன்மதனை வெகுண்ட கண் விளங்கும் நெற்றியினராய்க் கடலில் தோன்றிய விடத்தைத்தாம் உண்டு, உலகைப் பாதுகாத்த பெருமானார், சிறப்புமிக்க குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டதும், நீர் வெள்ளத்தை எல்லையாக உடையதுமாகிய திருவாஞ்சியம், திருநள்ளாறு இவற்றை உகந்தருளின திருத்தலங்களாக உடையவராய், பகைவரோடு போரிடும் காளையை வாகனமாகக் கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவரத் தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.

குறிப்புரை :

வாள்-படைக்கலம். திருவாஞ்சியம், திருநள்ளாறு சோழநாட்டுத் தலங்கள். `கண்டத்தார்` முதலிய மூன்றனையும் முதற் கண் வைத்து உரைக்க. வார் - கச்சு. வனம் - அழகு. ஓதம் - அலை.

பண் :

பாடல் எண் : 5

காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட
ஊரா ரிடுபிச்சை கொண்டு ழல்லும்
உத்தமராய் நின்ற ஒருவ னார்தாம்
சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்
திருவாரூர்த் திருமூலட் டான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

தம் சிறப்பு நிறைந்த திருவடிகளை வணங்கும் தேவர்களுக்கும் தலைவராகிய சிவபெருமானார் கார்காலத்தில் மணம் வீசும் கொன்றைப் பூவாலாகிய முடிமாலையைச் சூடி, மண்டை யோட்டைக் கையில் ஏந்தி, பூதகணங்கள் தம் பெருமையைப் பாட, ஊரிலுள்ளார் வழங்கும் பிச்சையை உணவாகக் கொண்டு திரிகின்ற மேம்பட்டவராய்க் காட்சி வழங்கும் ஒப்பற்றவராய், திருவாரூர்த் திருமூலத்தானத்தில் விரும்பித் தங்கிப் பின் போர் செய்யும் காளை மீது இவர்ந்து பூதங்கள் தம்மைச் சுற்றிவரத் தில்லைச்சிற்றம்பலத்தில் புகுந்தார்.

குறிப்புரை :

கார் ஆர் கொன்றை - கார்ப்பருவத்து நிரம்பப் பூக்கும் கொன்றை. பலவகைக் கொன்றைகளில் `கார்க் கொன்றை` என்பதே சிவபிரானுக்குச் சிறப்பாக உரியது. இதனை, ``கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் - வண்ண மார்பின் தாருங்கொன்றை`` (புறம் - கடவுள் வாழ்த்து), ``கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்`` (அகம் - கடவுள் வாழ்த்து) என்னும் பழந்தமிழ்ப் பாடல்களாலும்.
``ஆர்க்கின்ற நீரும் அனலும் புனலும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும்எல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குட னாகிக் கலந்தனவே.``
என்னும் பதினொன்றாந் திருமுறையாலும் (தி.11 பொன்வண்ணத் தந்தாதி - 50) அறியலாம். கண்ணி - முடியில் அணியும் மாலை. கபாலம் - தலை ஓடு. `ஒருவன்` என்பது சிவபிரானுக்கே உரிய ஒரு சிறப்புப் பெயர். பிச்சை ஏற்றல், துறவியாதற் கேற்பக் கொண்டதென்க. ``கழல் வணங்கும் தேவ தேவர்`` என்பதில் ``வணங்கும்`` என்பது, முதற்கண் நின்ற `தேவர்` என்பதனோடு முடிந்தது. இனி, ``வணங்கும்`` என்பதனை வணங்கப்படும் என்னும் பொருளுடையதாகக் கொண்டு, `தேவ தேவர்` என்பதனோடே முடித்தலும் ஆம். தேவ தேவர் - தேவர்க்கெல்லாம் தேவர். இதுவே இறைவற்குரிய சிறப்புப் பெயராகத் திருவாசகத்து அருளிச்செய்யப்பட்டது. அதனை, ``ஆதி மூர்த்திகட் கருள்புரிந்தருளிய - தேவதேவன் திருப்பெயராகவும்`` (தி.8 கீர்த்தித் திருவகவல் - 121-22) என்புழிக் காண்க. இப்பெயரே திருத்தசாங்கத்துள், `தேவர்பிரான்` என்றருளப்பட்டதென்க. `மகாதேவன், பெரியோன், நெடியோன்` என வருவனவும் இப்பெயர்பற்றி என்க. `திருமூலட்டானம் மேயாராய்ப் (பின்பு) விடை ஏறிப் பூதஞ்சூழப் புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்` என்க. `கொண்டு ழல்லும்` என்னும் விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 6

காதார் குழையினர் கட்டங் கத்தர்
கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
முதலும் இறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ அன்று
வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாள்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

ஆண்டில் மூத்த ஆட்டுவாள், ஊட்டுவாள், ஒல் உறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் என்ற ஐவகையராய செவிலித்தாயரும், நற்றாயும் தந்தையும் இல்லாதவராய், உலகிற்கு முதலாயும் முடிவாயும் உள்ளவர் தாமேயாய்க் காதில் குழை அணிந்து கட்டங்கம் என்ற படைக்கலத்தை ஏந்திக் கயிலாய மலையிலும், காரோணப் பதிகளிலும், உகந்தருளியிருக்கும் சிவபெருமான் அழகிய பெண் இனத்தார் மகிழுமாறு பார்வதியின் திருமணத்துக்கு முற்பட்ட காலத்திலே மன்மதனுடைய உடம்பினை அழித்தவராய், இந்நாளில் பூக்கள் நிறைந்த தம் சடைகள் தொங்கவும், பூதங்கள் சூழவும், தில்லைச் சிற்றம்பலத்தில் புகுந்தார்.

குறிப்புரை :

`மூதாயர் மூதாதை` உம்மைத்தொகை; `மூத்த தாயரும் மூத்த தந்தையும்` எனப் பொருள்தரும். முதல் - தோற்றம். இறுதி - ஒடுக்கம்; இவ்விரண்டும் காரியவாகுபெயர்களாய்த் தத்தம் காரணங்களைக் குறித்தன. `உலகிற்கு முதலாயும் முடிவாயும் உள்ளவன் ஒருவனேயன்றி, வேறுவேறு உளர் அல்லர்` என அறிவுறுத்தவாறு. ``ஆதியந்தமாயினாய்`` (தி.3. ப.52. பா.7.) எனவும். ``ஆதியுமந்தமுமாயினாருக்கு`` எனவும் அருளியனகாண்க. (தி.8 திருவாசகம், திருப்பொற்சுண்ணம் - 20) `மாது ஆய` - அழகாகிய. `மாதர்` என்பது வாளா பெயராய் நின்றது. தலைவரது பிரிவின்கண் தம்மைத் துன்பத்திற் குள்ளாக்குவோன் மதவேளாகலின், அவனைக் காய்தல் மாதர்க்கு மகிழ்ச்சியாவதாயிற்று என்க. போது ஆர் - பூக்கள் நிறைந்த. ``கயிலாய மாமலையார் காரோணத்தார், இந்நாள் புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்`` என்க. `காரோணம்` என்பதும், `மயானம்` என்றல் போல்வது. இப்பெயருடைய கோயில்கள் சில தலங்களில் உள்ளன. திருமாலும் பிரமனும் ஒருசேரத் துஞ்சும் நாளில், அவரது காயங்களை மேலே எடுத்து நின்று ஆடல்புரிந்த இடமென்னும் காரணத்தால் `காயாரோகணம்` எனப்பட்டவை, `காரோணம்` என மரூஉ வழக்காக வழங்கப்படும். காயாரோகண வரலாற்றைக் காஞ்சிப் புராணம் காயாரோகணப் படலத்துட் காண்க. கட்டங்கம் - மழு.

பண் :

பாடல் எண் : 7

இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்
பெரியார்தம் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

தம்மை மறந்தவர் மனத்தில் என்றும் விரும்பித் தங்காதவராய்த் திருமறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மழுப் படையை உடைய பெருமான் உலகியலில் நின்று வாழ்நாள் இறுதி வந்துழி இறந்தவர். யோகம் முதலியவற்றால் நீண்ட நாள் இறவாது இருந்தவர். தேவர்கள் ஆகிய எல்லோருக்கும் தாமே துணையாய், உலகில் பிறப்பெடுப்பவருக்கும் என்றும் பிறப்பெடுக்கும் நிலையைக் கடந்து வீடுபெற்றவருக்கும் தலைவராய்த் தம் பெருமையையே அவர்கள் என்றும் பேசுமாறு அவர் மனத்துள் என்றும் நிலைபெற்று, பின்புறமாக நீண்டு தொங்கும் சடையை உடையவராய்ப் பூதம் சூழத்தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.

குறிப்புரை :

இறந்தார் - உலகியலின் நின்று. நாள்வந்துழி இறந்தவர். இறவாதார் - யோகம் முதலியவற்றால் நெடிதுநாள் இறவாதிருந்தவர். ஏகமாய் நிற்றல் - இவர் எல்லார்க்கும் தாமே துணையாய் நிற்றல். `ஏகமாய் நின்று` என்னும் எச்சம், `பெரியார்` என்னும் வினைக் குறிப்போடு முடிந்தது. பிறந்தார் - கட்டுற்று நின்றவர். பிறவாதார் - வீடு பெற்றார்; இவர் எல்லார்க்கும் தலைவன் இறைவன் என்க. `பேச` என்புழியும் `அவர் மனத்து என்றும் ` என்பது இயையும். `பேச` என்பது `மறந்தார்` என்புழியும் இயையும். மறைக்காடு - வேதாரணியம். `பெரியான்றன்` என்பது பாடமன்று. புறம் தாழ் சடை - பின் புறமாக நீண்டு தொங்கும் சடை; `இது பிறரை வணங்காது நிற்றலைக் குறிக்கும்` என்பர் சிலர். ``தாழ`` எனப் பின்னர்க் கூறியது, அப்பொழுது நிகழ்ந்ததை; `புறந்தார்` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 8

குலாவெண் தலைமாலை யென்பு பூண்டு
குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்
கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கையோ டனலேந்திக் காடு றைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
நிறைவயல்சூழ் நெய்த்தானம் மேய செல்வர்
புலால்வெண் தலையேந்திப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

ஒளி விளங்கும் வெண் மதியம் தீண்டுமாறு உயர்ந்த மாடங்களை உடையதாய் மற்ற இடம் எங்கும் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திரு நெய்த்தானத்தை உகந்தருளிய பெருமான் வளைந்த வெண்தலைமாலை, எலும்புகள் இவற்றை அணிந்து குளிர்ந்த கொன்றைப் பூ மாலையை மார்பில் சூடி, கொல்லுதலில் வல்ல காளையை இவர்ந்து, உடம்பை ஒட்டிக் கொடிய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து உடம்பை மறைத்துக் கொண்டு, கைகளில் மண்டை ஓட்டினையும் தீயையும் ஏந்திச் சுடுகாட்டில் தங்கும் இயல்பினர். அவர், புலால் நாற்றம் கமழும் வெள்ளிய மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பூதங்கள் சூழத் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்தார்.

குறிப்புரை :

குலாவுதல் - வளைதல்; விளங்குதலுமாம். கொல் ஏறு- கொல்லும் இடபம், ` கொல்`, இன அடை.
கலாவுதல் - கலத்தல். `ஓடு` உருபை, கண்ணுருபாகத் திரிக்க. நிலா - சந்திரனது ஒளி. உரிஞ்ச - உராய; தவழ.

பண் :

பாடல் எண் : 9

சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
சங்கரரைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லா
மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்றீ மணிவிளக்குப் பூதம் பற்றப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

கோவணம் அணிந்து வெள்ளிய பூணூல் தரித்தவராய் எல்லோருக்கும் இன்பம் செய்யும் பெருமானைக் கண்டீரோ என்று முக்கணான் முயக்கம் வேட்ட தலைவி தன்பால் அன்புடைய அயலாரை வினவினாள். கட்டியிருந்த வெண்ணிறக் காளையைக் கட்டவிழ்த்து அது விரைந்து செல்லுமாறு அதன் மீது தாவி ஏறி, மண்டை ஓட்டில் எதனையோ ஏந்திக்கொண்டு அழகிய ஆரூரிலே அந்தி நேரத்தில் எங்கள் வெள்வளைகளைத் தாம் முழுமையாய்க் கைக்கொள்வதற்காக நின்று, இந்நாளில் அழகிய தீப்போன்ற ஒளி விளக்குக்களைப் பூதங்கள் ஏந்தி வரத் தில்லைச் சிற்றம்பலத்தில் தாம் விரும்பியவாறு புகுந்தார்.

குறிப்புரை :

சந்தித்த - கூடிய; `சங்கரன்` என்பது பாடம் அன்று. `சங்கரரைக் கண்டீரோ கண்டோம்` என்பதனை ஈற்றிற்கூட்டி, `அச் சங்கரரை` எனச் சுட்டு வருவித்துரைக்க.
இனி, `இந்நாள்` என்பது முதல், `கண்டோம்` என்றாரிடம் கூறுவனவாக வைத்து, கிடந்த வாறே உரைத்தலும் ஆம். சங்கரர் - இன்பத்தைச்செய்பவர். `கண்டீரோ` என்பது, காதல்கொண்டவளது வினாவும், `கண்டோம்` என்பது கண்டோரது விடையும் என்க. `இந்நாள்` என்பது, `ஏறி` என்பது முதலியவற்றோடு இயையும். பந்தித்த - கட்டிய. என் வெள்வளையும் தாமுமாய் மணி யாரூர் நின்று என்க. `எல்லாம்` என்புழி, `எல்லாவற்றையும்` என உருபு விரித்து, அதனை, `அந்தி கொள்ளக் கொள்ள` என்பதனோடு முடிக்க.
அந்தி - மாலைக்காலம். கொள்ள - கவர; இது, `கொள்ளும் பொழுது` எனக் காலம் உணர்த்தி நின்றது. அடுக்கு, பன்மை குறித்தது. பொன் தீ மணி விளக்கு - அழகிய தீப்போலும் மணியாகிய விளக்கு. இனஎதுகை பற்றி, `பொற் றீ` என்பது மெலிந்து நின்றது. `என்கொலோ` என்றது, வெறுப்புப்பற்றி.

பண் :

பாடல் எண் : 10

பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்
பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம்
வேதங்க ளோதிஓர் வீணை யேந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழு பிறப்புக்களிலும் நம்மை அடியவராகக் கொள்ளும் சிவபெருமான் தம் திருவடிகளைச் சான்றோர்கள் முன்னின்று வழிபட்டுத் துதிக்கப் பக்தியால் அவருடைய உகப்பிற்காகவே தொண்டு செய்யும் அடியார் களுடைய துன்பங்கள் நீங்குமாறு திருத்தலங்களில் உகந்தருளி யுள்ளார். வீணையைக் கையில் ஏந்தி வேதங்களை ஓதிக் கொண்டு காளை மீது இவர்ந்து புலித்தோலை இடையில் கட்டிய அவ்வேத கீதர் பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வரத் தில்லைச் சிற்றம்பலத்தைத் தாமே விரும்பிச் சேர்ந்தார்.

குறிப்புரை :

`பத்திமை` என்புழி, `மை` பகுதிப்பொருள் விகுதி. `வேத கீதராய்` என ஆக்கம் வருவித்துரைக்க. ``ஏத்தி`` என்பதும் பாடம். ஏதங்கள் - துன்பங்கள். வீக்கி - கட்டி.

பண் :

பாடல் எண் : 11

பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செய்வார் தம்மைத்
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.

பொழிப்புரை :

இடையில் பட்டை உடுத்தி அதனைப் பாம்பு ஒன்றினால் இறுக்கிக் கொண்டு மேலே யானைத் தோலைப் போர்த்துப் பெருமான் பூதங்கள் தம்மைச் சூழத் தீயைக் கையில் ஏந்தி ஆடற் கலையில் வல்லவராய் உள்ளார். அவர் இந்நாள் தில்லைச் சிற்றம்பலத்திலேயே ஒளிவீசும் சூலப்படை ஏந்தி, பூணூல் அணிந்து, வீணையை எழீஇ வேதம் ஓதி, ஒருகையில் கட்டங்கம் என்ற படையை ஏந்தி விடக்கறை பொருந்திய கழுத்தினராய் மண்டை ஓட்டினை ஏந்தியவராய் உள்ள காட்சியை எல்லீரும் சென்று காண்மின்கள்.

குறிப்புரை :

`பாம்பு` என்றது, உடையின்மேல் கச்சாக உள்ளதனை. `நட்டம் செய்வார்` என இயையும். `செல்வார்` என்பது பாடம் அன்று. `கண்டோம் இந்நாள்` என்பதன் பின்னர், (கண்ட) `கறைசேர் மிடற்றெங் கபாலியார்க்கு` என்றுரைக்க. `உண்டு` என்பது, `சூலம்` என்பதனோடும் இயையும். இத்திருத்தாண்டகம், இறுதிக்கண், தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவர் வெளிப்பட்டு நின்றருளுதலைக் கண்டு, அதனைப் பிறருங் காணுமாறு அருளிச் செய்ததாம். `தில்லையைக் காணமுத்தி` என்னும் வழக்குண்மையையும் நினைக்க. காண வேண்டினார்க்கு அடையாளம் அருளுவார்போல் அருளிச் செய்தது. அவை இறைவனுக்கேயுரிய சிறப்படையாளமாதலையும், அவ்வடையாளங்களை ஓர்ந்துணர்வார்க்கு இறையுணர்வு பெருகு மாற்றினையும் நினைந்தருளியென்க. பின்னும் இவ்வாறு அருளிச் செய்வன உள; அவற்றை ஆண்டாண்டு உணர்க. ஆர்த்து - கட்டி. பகவன் - `ஐசுவரியம், வீரம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்` என்னும் ஆறு குணங்களையுடையவன். பாரிடம் - பூதகணம். சிட்டர் - மேலானவர். விட்டு - ஒளி விட்டு.

பண் :

பாடல் எண் : 1

வெறிவிரவு கூவிளநல் தொங்க லானை
வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற் கரியசீ ரம்மான் தன்னை
அதியரைய மங்கை யமர்ந்தான் தன்னை
எறிகெடிலத் தானை இறைவன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் கெடில நதிக்கரையிலுள்ள எம் பெருமான் நறுமணம் கமழும் வில்வ மாலை அணிந்தவன் . அதிகை வீரட்டத்தில் உகந்தருளியிருப்பவன் . இடபவாகனன் . ஆதிசேடனாகவும் , கருடவாகனத் திருமாலாகவும் பொன் நிறமுடைய பிரமனாகவும் அவருள் உடனாய் இருந்து அவரைச் செயற்படுப்பவன் . பொருள்சேர் புகழுக்குத் தக்கவன் . உணர்ந்தார்க்கும் உணர்வரிய சிறப்பினை உடைய தலைவன் . அதியரைய மங்கை என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன் . அத்தகைய பெருமானை அறிவிலியாகிய யான் என் வாழ்க்கையின் முற்பகுதியில் வழிபடாது பழித்துக் கூறிய செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

வெறி - வாசனை . கூவிள - கூவிளம் = வில்வம் . தொங்கல் - மாலை . பொறி அரவு - ( படத்தில் ) புள்ளிகளை உடைய பாம்பு . புள் ஊர்தியான் - திருமால் . பொன் நிறத்தினான் - பிரமன் . சிவபிரானை இவ்விருவராகவும் அருளிச்செய்தது . காத்தல் படைத்தல் என்னும் அவற்றைச் செய்தும் , செய்வித்தும் நிற்றல்பற்றி . ` செய்தல் தூய உலகங்களிடத்து ` என்றும் , ` செய்வித்தல் தூயவல்லாத உலகங்களிடத்து என்றும் ` அறிக . ` ஒரு விண்முதல் பூதலம் - ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் - படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை ` ( தி .1. ப .128. திருவெழுகூற்றிருக்கை .) என்றருளியதும் இக் கருத்துப் பற்றி . இனி அவ்விடத்து , ` இருவரோடொருவ னாயினானை ` ( தி .1. ப .128.) என்றருளிச்செய்தது , ` இருவர்க்கும் முன்னோனாய் நின்று அவரைத் தோற்றுவித்துப் பின்னர் , அவரோடு ஒப்பவைத்து ` மூவர் ` என்று எண்ணுமாறு நின்றனை ` என்றருளியவாறாம் . அதியரைய மங்கை , அதிகை . வேறுதலமாகவும் கூறுவர் . கெடிலம் , திருவதிகையை அடுத்து ஓடும் நதி . இறை - இறுத்தல் ; எல்லாப் பொருளினும் தங்குதல் . இது வகர இடைநிலை பெற்று இறைவன் என வந்தது , ` துறைவன் , தலைவன் ` முதலியனபோல , இடைநிலை பெறாதவழி இறையன் , இறையான் என வரும் . பண்டு - முன்பு . ` இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது ` என்க .

பண் :

பாடல் எண் : 2

வெள்ளிக் குன்றன்ன விடையான் தன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் தன்னைப்
புள்ளி வரிநாகம் பூண்டான் தன்னைப்
பொன்பிதிர்ந் தன்ன சடையான் தன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை
வாரா வுலகருள வல்லான் தன்னை
எள்கவிடு பிச்சை யேற்பான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய நிலையில்லாத வீட்டுலகை அருளவல்ல எம்பெருமான் வெள்ளி மலை போன்ற காளையை வாகனமாக உடையவன் . வில்லைப் பயன் கோடலில் வல்ல மன்மதனுடைய வில்லைக் கையாண்ட செயலைக் கோபித்தவன் . படப்புள்ளிகளையும் கோடுகளையும் உடைய நாகத்தை அணிகலனாக அணிபவன் . பொன் துகள் போல ஒளிவீசும் செஞ்சடையினன் . சந்திரனைப் போல ஒளிவீசும் தோள்வளை அணிந்த முதல்வன் . பிறர் தன்னை இகழுமாறு பல வீட்டிலுள்ளவர்களும் வழங்கும் பிச்சையை ஏற்பவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

வில்வலான் - காமவேள் . வில் வட்டம் - வில்லை வட்டித்த ( கையாண்ட ) செயல் . பிதிர்தல் - பொடியாதல் . வள்ளி வளை - வள்ளிபோலும் வளை ; வள்ளி - கொடி . வாரா உலகு - மீண்டு வாராத உலகு ; வீட்டுநிலை . ` மீண்டு வாரா வழியருள் புரிபவன் ` ( தி .8 திருவாசகம் , கீர்த்தித்திருவகவல் - 117) எனவும் . ` மற்றீண்டு வாரா நெறி ` ( குறள் - 356) எனவும் அருளிச்செய்தன காண்க . ` எள்க ஏற்பான் ` என இயையும் . எள்க - ( உலகர் ) இகழுமாறு .

பண் :

பாடல் எண் : 3

முந்தி யுலகம் படைத்தான் தன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண் திங்க ளணிந்தான் தன்னைத்
தவநெறிகள் சாதிக்க வல்லான் தன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
செழுங்கெடில வீரட்டம் மேவி னானை
எந்தை பெருமானை யீசன் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

செழிப்புடைய கெடிலநதி பாயும் அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையாய்ப் பெருமானாய் , எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள எம்பெருமான் தான் , என்றைக்கும் கெடுதலில்லாத முதற்பொருள் . அவனே முற்பட்ட காலத்தில் உலகங்களைப் படைத்தவன் . அழகிய வெள்ளியபிறை சூடி அடியார்களின் தவமாகிய நெறியை முற்றுவிப்பவன் . சித்தம் முதலிய கருவிகளால் செய்யப்படும் செயல்களின் பயனாய்த் தேனும் பாலும் போன்று இனியவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது .

குறிப்புரை :

மூவா - கெடாத . மூத்தல் , கெடுதல் என்பது , ` மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து - முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் ` என்னும் தி .11 ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக் கோவையாலும் (14) அறிக . முதல் - தலைவன் . ` வடிவமுடையவன் ` என்னும் பொருளையுடையதாகிய ` மூர்த்தி ` என்னும் சொல் , ` அருட்டிருமேனியை யுடையவன் ` என்னும் பொருளில் வழங்கப் படும் . சந்தம் - அழகு . தவநெறிகள் - தவமாகிய நெறிகள் . சாதித்தல் - முற்றுவித்தல் ; இது , தன்னை உணர்ந்தார்க்கு என்க . இதனானே , உணராதார்க்கு முற்றுவியாமையும் பெறப்பட்டது . இவ்விரண்டனையும் மார்க்கண்டேயர் வாழ்நாள் பெற்றமையும் , தக்கன் தலை யிழந்தமையுமாகிய வரலாறுகள் பற்றி யுணர்ந்து கொள்க . சிந்தையில் தீர்வினை - சித்தம் முதலிய கருவிகளின் நீங்கும் செயல்கள் , அவை : கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டைகூடல் என்னும் பகுதியவாய்ப் பல்வேறு வகைப்பட நிகழ்வன . இஃது ஆகுபெயராய் , அதன் பயனைக் குறித்தது . எந்தை பெருமான் - என் தந்தையாகிய பெருமான் , ஈசன் - ஐசுவரியம் உடையவன் .

பண் :

பாடல் எண் : 4

மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை
மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்
அந்தரமு மலைகடலு மானான் தன்னை
யதியரைய மங்கை யமர்ந்தான் தன்னைக்
கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்
கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
இந்திரனும் வானவரும் தொழச்செல் வானை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

ஆகா , ஊகூ என்ற கந்தருவர் இருவரும் பாடித் திருவடிகளில் நறுமலர்களைத் தூவிக் கைகளைக் குவித்துக் காலையும் மாலையும் இந்திரனும் மற்ற தேவர்களும் வழிபடுமாறு எளிமையில் காட்சி வழங்கும் சிவபெருமான் வேதமந்திரமும் அவற்றின் பொருளும் ஆயவன் . மதியம் , வெங்கதிர் , காற்று , தீ , வான் , அலைகளை உடைய கடல் ஆகியவற்றின் உடனாய் நின்று அவற்றைச் செயற்படுப்பவன் . அதியரையமங்கை என்ற திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது .

குறிப்புரை :

மறைப் பொருள் வேதத்தின் பொருள் . அவை , அறம் முதலிய நான்கு . அந்தரம் - ஆகாயம் . கந்தருவம் - இசை . இருவர் : ` ஆகா , ஊகூ ` என்னும் கந்தருவர் . ` செய்து ` என்பதனைச் ` செய ` எனத் திரித்து , ` இருவர் கந்தருவம் செய இந்திரனும் வானவரும் கூப்பித் தூவித்தொழ ` என இயைக்க . ` காலை மாலை ` என்றது அடியவர் வழிபடுங் காலங்களை வகுத்தருளிச்செய்தவாறு . செல்லுதல் , அடியவர் வழிபாட்டினை ஏற்றருளுதற் பொருட்டு . ` கந்தருவம் செய்து ` என்பது முதல் , ` தொழ ` என்பதுகாறும் இறைவனது முதன்மையையும் , ` செல்வான் ` என்றது , அவனது எளிமைத் தன்மையையும் வியந்தருளியவாறு .

பண் :

பாடல் எண் : 5

ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை யறுப்பிக்கும் அதிகை யூரன்
அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
திருபிறப்பும் வெறுவியரா யிருந்தார் சொற்கேட்
டேழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

பிறவாயாக்கைப் பெரியோன் திருவடிகளை நினைத்துப் பார்ப்பது கூடச் செய்யாராய் உயர்கதியை அடைவதற்குரிய வழியைத்தேடி அவ்வழியே வாழ்க்கையை நடத்தாதவராய் , இடையறாது வருகின்ற பிறப்பின் காரணத்தை உணராராய் , உடம்பில் அழுக்கினைத் தாமே பூசிக்கொண்டு அகக்கண் குருடராய சமண முனிவருடைய மனம்போல் நடப்பேனாகி , இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படாத செயல்களைச் செய்யும் அவர்களுடைய சொற்களை உபதேசமாகக் கொண்டு , கொடிய பிறவியை அடியோடு போக்குவிக்கும் அதிகை வீரட்டானத்து எம்பெருமான் திருவடிகளைச் சரண் புக்கு வாழாமல் ஏழையேன் பண்டு அப்பெருமானை இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் திருவிலராய அமணர்களது இரங்கத்தக்க நிலையில் தாமும் பன்னாள் இருந்தமையை நினைந்து இரங்கியருளியது . ` ஒரு பிறப்பும் ` ஒன்றும் ` என்னும் சிறப்பும்மைகளும் , ` அரும் பிறப்பு ` என்னும் மகர ஒற்றும் தொகுத்தலாயின . உணர்ந்தும் காணார் - நினைந்தும் அறியார் என்றவாறாம் . வருபிறப்பு - தொன்றுதொட்டு இடையறாது வருகின்ற பிறப்பு ; இஃது ஆகுபெயராய் அதன் காரணத்தைக் குறித்தது . நீராடாமையேயன்றி , மாசு பூசிக்கொள்ளுதலும் சமண முனிவரது ஒழுக்கம் என்க . ` வழி காணாதவர் ` என்றது , குருடர் என்றருளியவாறாம் . மனத்தனாகி - மனம்போல் நடப்பவனாகி ; என்றது , ` அவர்வயப்பட்டு ` என்றவாறு . இருபிறப்பு - இம்மை மறுமை . வெறுவியர் - பயன் ஏதும் பெறாதவர் ; ஐம்புல இன்பங்களைக் காய்ந்தமையின் இம்மைப் பயனை இழந்தமையும் , அறத்தின் மெய்மையாகிய திருவருளை உணராமையின் மறுமைப் பயனை இழந்தமையும் அறிக ; ` பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார் ` ( தி .1. ப .116. பா .10.) என்றருளிச்செய்தார் , திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் . ` ஆகி , வாழாது , கேட்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது ` என முடிக்க . ` அடியிணையே ` என்னும் பிரிநிலை ஏகாரம் , இடைக்கண் அதனை விடுத்து வேறொன்றைப் பற்றி அல்லலுற்ற நிலையை விளக்கி நின்றது .

பண் :

பாடல் எண் : 6

ஆறேற்க வல்ல சடையான் தன்னை
அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னைக்
கூறேற்கக் கூறமர வல்லான் தன்னைக்
கோல்வளைக்கை மாதராள் பாகன் தன்னை
நீறேற்கப் பூசும் அகலத் தானை
நின்மலன் தன்னை நிமலன் தன்னை
ஏறேற்க வேறுமா வல்லான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

கங்கையைத் தன்னுள் அடங்குமாறு ஏற்றுக் கொள்ள வல்ல சடையான் , மைபோலக் கரிய முன் கழுத்தினன் . எல்லாப் பொருள்களின் நுண்ணிலையையும் ஏற்று அவற்றுக்குப் பற்றுக் கோடாக நிற்கவும் பருநிலையில் அவற்றுக்கு உள்ளும் புறம்பும் அறிவாய் நிறைந்து நிற்கவும் வல்லவன் . திரண்ட வளையல்களைக் கையில் அணிந்த பார்வதி பாகன் . நீறு , தன்னையே சார்பாக ஏற்க அதனைப் பூசிய மார்பினன் . தானும் களங்கம் இல்லாதவனாய்ப் பிறர் களங்கத்தையும் போக்குவிப்பவன் . காளை வாகனத்தில் தக்கபடி ஏறி அதனைச் செலுத்துவதில் வல்லவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

` கூறு ` இரண்டனுள் முன்னையது , ` உடற்கூறு , நிலக்கூறு ` முதலியனபோல , ` தன்மை ` என்னும் பொருளது ; பின்னது , ` பகுதி ` என்னும் பொருளது . ` தன்மை ` என்றது , நுண்ணிலையை . ` பகுதி ` என்றது . சத்தியை . எனவே , ` கூறு ஏற்க ` என்றது , ` எல்லாப் பொருள்களின் நுண்ணிலையும் ஏற்று , அவற்றிற்குப் பற்றுக்கோடாய் நிற்க ` எனவும் , ` கூறு அமர ` என்றது , அவற்றின் பருநிலையில் அவற்றுக்கு உள்ளும் புறம்பும் அறிவாய் நிறைந்து நிற்க ` எனவும் அருளிச்செய்தவாறாம் . ` கோல்வளைக்கை மாதராள் பாகன் ` எனப் பின்னர் அருளிச்செய்தலின் , இவற்றை மாதொருபாகராதலின்மேல் வைத்துரைத்தல் கூடாமை யறிக . ` கூறேற்கவும் கூறமரவும் வல்லான் ` என்க . நீறு ஏற்க - நீறு , தன்னையே சார்பாகப் பொருந்த - எல்லாம் நீறாயினமையின் அந்நீற்றிற்குப் பிறிதொரு சார்பு இன்றாயிற்று , நின்மலன் - மலம் இல்லாதவன் . நிமலன் - மலத்தை நீக்குபவன் ; எனவே , ` உலகத்தில் தோய்ந்தும் , தோயாது நிற்பவன் ` என்றதாம் . ஏற்க ஏறுதல் - தக்கவாற்றால் நடத்துதல் . ஏறு , அறமும் உயிரும் ஆதலின் , அவற்றைத் தக்கவாற்றால் நடத்துபவன் என்பது உள்ளுறைப் பொருள் .

பண் :

பாடல் எண் : 7

குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்
டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
வானவர்க ளேத்தப் படுவான் தன்னை
எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

மூர்க்கர்களாய் தடுமாறி இளைய பெண்கள் முன்னிலையில் நாணமின்றி உடையில்லாமல் நின்று உணவைக் கையில் பெற்று நின்றவாறே உண்ணும் சமணத்துறவியரின் சொற்களை மனங்கொண்டு அவர்கள் இனத்தவனாகி நல்லுணர்வில்லாமல் திரிந்த நான் , வண்டுகள் சூழ்ந்து திரியும் கொன்றைப் பூ மாலையை அணிந்து வானவர்களால் புகழப்பட்டு , எண்திசையிலுள்ளார்க்கும் தலைவனாய் நிலைபெற்ற எம்பெருமானை ஏழையேனாகிய யான் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது .

குறிப்புரை :

அரசரை ` அரசு ` என்றல்போல , குண்டரை ` குண்டு ` என்றருளினார் . குண்டர் - மூர்க்கர் ; என்றது , சமணரை ; கொண்டது விடாமைபற்றி அங்ஙனம் கூறினார் ; ` திருந்தா அமணர் ` என்றார் திருவிருத்தத்திலும் . ( தி .4. ப .94. பா .10.) குண்டு ஆக்கன் - மூர்க்கர் இனமாகிய செல்வத்தை உடையவன் ; என்றது . ` அவரையே ஆக்கந் தருவாராக மயங்கியவன் ` என்றவாறு . ` குண்டரக்கனாய் ` என்பதும் பாடம் ` ஆய் ` கேட்டு , ஆகி உழந்தேன் ` என இயையும் . ` உண்டி உகந்து ` என்பதனை , கையில் உண்டு என்பதன் பின்னாக வைத்துரைக்க . ` கையில் உண்டு ` என்றது ` கையில் உண்ணும் ஒழுக்கத்தை யுடையாராய் ` என்றவாறு . கையில் நின்று உண்ணுதல் , இலை முதலியவற்றை நிலத்தில் இடின் சிற்றுயிர்கள் பற்றி இறக்கும் என்று . ` உழன்று ` உண்டு , உகந்து , இன்றி நின்றார் ` என்க . அமண் - சமண் முனிவரது கோலம் ( உடையின்றியிருத்தல் .) உடனாகி - கூடி . ` உணர்வு ஒன்று இன்றி இகழ்ந்தவாறு ` என இயையும் . ` உழிதந்தேன் ` என்பதனை , ` உழிதந்தேனாய் ` என எச்சப்படுத்துக . மூர்த்தி - தலைவன் .

பண் :

பாடல் எண் : 8

உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
யூத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் தன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

உறியில் சுருக்கிட்டு வைத்த கஞ்சிக்கரகத்தைக் கையில் தொங்கவிட்டுக்கொண்டு ஊத்தை வாயினை உடைய சமணர்களிடையே யானும் ஒரு மூர்க்கனாகி , கறியோடு நெய் ஊட்டப் பட்ட சோற்றினைக் கையில் வாங்கி உண்டு காண்பவருக்கு வெறுக்கத் தக்க காட்சிப் பொருளாக இருந்த யான் , அலைமோதும் கெடில நதி பாயும் நாட்டிற்குத் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட பெருமானைத் தீவினை உடையேனாய் , பரம்பரையாக வழிபட்டுவரும் குடும்பப் பழக்கம் பற்றியும் நினைக்க இயலாதேனாய் ஏழையேனாய்ப் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

` உறியில் முடித்த ` என்க . முடித்த - முடியிட்ட ; சுருக்கிட்ட . குண்டிகை - கரகம் ; இது கஞ்சியை யுடையது . இவ்வாறு உணவை உறியில் வைத்துத் தூக்கித் திரிதல் , ஈ எறும்பு முதலிய சிற்றுயிர்கள் வீழ்ந்து இறவாமல் காத்தற்பொருட்டு என்க . ` தூக்கிய ` என்னும் பெயரெச்சத்தின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று . ஊத்தை வாய் , பல் விளக்காமையாலாயிற்று . ` சமணர்க்கோர் குண்டாக்கனாய் ` என்றது , ` குண்டர்க்கேற்ற குண்டனாய் அகப்பட்டேன் ` என்றிரங்கி யருளியவாறு . ` நெய் விரவு கறி சோறு ` என்க . பொல்லாத காட்சி - அருவருக்கத்தக்க கோலம் ; அஃது உடையின்றித்திரிதல் . ` மறித்து நினைக்க மாட்டேன் ` என்றது , ` முன்பு நினைந்த பொருளாய் இருந்தும் பழக்கம்பற்றியும் நினையா தொழிந்தேன் ` என்றதாம் . ` ஒருகாலும் ` என உம்மை விரித்துரைக்க . ` வல்வினையேன் ` என்றது , ` அத்துணை வலிதாய் இருந்தது என்வினை ` என்றிரங்கி யருளியவாறு . ` நினைக்க மாட்டேனாய் இகழ்ந்தவாறு ` என்க . கெடில நாடர் பெருமான் - கெடில நாடர்க்காக எழுந்தருளியுள்ள பெருமான் .

பண் :

பாடல் எண் : 9

நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை
நெற்றிமேற் கண்ணொன் றுடையான் தன்னை
மறையானை மாசொன்றி லாதான் தன்னை
வானவர்மேல் மலரடியை வைத்தான் தன்னைக்
கறையானைக் காதார் குழையான் தன்னைக்
கட்டங்கம் ஏந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

எல்லார் உள்ளத்திலும் தங்கியிருப்பவனாகிய எந்தை பெருமான் குறைவிலா நிறைவினனாய் நிலைபெற்றவன் . நெற்றிக்கண்ணன் . வேத வடிவினன் . களங்கம் ஏதும் இல்லாதான் . தேவர்கள் தலையில் தன் திருவடிகளை வைத்து அருளியவன் . கழுத்தில் விடக்கறை உடையவன் . குழைக்காதன் . கையில் கட்டங்கம் என்ற படைக்கலன் ஏந்தியவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

நிறைவு ஆர்ந்த நீர்மை - நிறைவு பொருந்தியதாகிய குணம் . ` குறைவிலா நிறைவேகுணக்குன்றே ` எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் , ( தி .7 ப .70 பா .6) ` குறைவிலா நிறைவே ` என வாதவூர் அடிகளும் ( தி .8 கோயிற்றிருப்பதிகம் - 5) அருளிச்செய்தவாறறிக . அக்குணமே அவற்கு வடிவாதலை நினைவார் , ` நீர்மையனாய் என்னாது ` ` நீர்மையாய் ` என்றருளிச் செய்தார் . ` நிறையார்ந்த ` என்பதும் பாடம் . மறையான் - வேதத்தின்கண் உள்ளவன் . மாசு - மலம் . ஒன்று - சிறிது . ` ஒன்றும் ` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது . கறையான் - நஞ்சை உடையவன் . ` எல்லாவற்றையும் இறத்தலை உடையவன் ` என்பாரும் உளர் ; அப்பொருள் , ` கடவுள் ` என்பதனான் அமைதலின் , இச்சொற்கு வேறு பொருள்வேண்டும் என்க .

பண் :

பாடல் எண் : 10

தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் தன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலும் ஊதுங்
கோவலனும் நான்முகனுங் கூடி எங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.

பொழிப்புரை :

முல்லை நிலத்திலிருந்த குருந்த மரத்தை , அதன் கண் பிணைத்திருந்த இடைக்குலச் சிறுமியர் ஆடைகளை அவர்கள் மீண்டும் எடுத்துக் கொள்வதற்காக வளைத்துக் கொடுத்து , வேய்ங் குழல் ஊதி அவர்களை வசப்படுத்திய இடையனாய் அவதரித்த திருமாலும் , பிரமனும் ஆகிய இருவரும் முயன்றும் அடிமுடிகளின் எல்லையைக் காண இயலாதவாறு அனற்பிழம்பாய் நின்றவனாய்த் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தலைவனாய் , எனக்கும் தலைவனாய் , பண்டைத் தீவினைகள் என்னைச் சூழ்ந்தமையாலே அவற்றின் வழியே சென்று அவனைப் பலவாறு இழித்துப் பேசியும் பின் ஒருவாறு தெளிந்தும் நின்ற அடியேனுடைய அறிவுக்கு அறிவாய் நின்று விரைவில் என் சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்ட பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது .

குறிப்புரை :

தொல்லை வான் சூழ்வினைகள் - பழைய , பெரிய , நிறைந்த வினைகள் ; என்றது சஞ்சிதத்தை . சூழ - ( அவை பிராரத்தமாய் வந்து ) பற்றினமையால் . போந்து - ( ஆற்றமாட்டாது ) வந்து . ` இயற்றியான் `,` எண்ணியார் `,` தேறியார் , என்றாற்போல ( குறள் - 1062, 494, 1154), ` தூற்றினேன் ` ` ஆற்றினேன் ` என்பன , ` தூற்றியேன் ` ` ஆற்றியேன் ` என வந்தன . தூற்றியது , அவ்வினை காரணமாக நிகழ்ந்தவற்றைப் பலரும் அறியப் பாடியருளியது . அதனை , ` காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் ` என்பது முதலிய திருப்பாடல்களில் ( தி .4. ப .1. பா .5.) காண்க . ஆற்றியது , நோயின் முதலினையும் , அது நீங்கும் வாயிலினையும் தமக்கையார் அருளக் கேட்டு ஒருவாறு ஆற்றியது . சுடராய் - சோதியுட் சுடராய் ; ( தி .5. ப .97. பா .3.) அறிவுக்கறிவாய் . ` தூற்றியேனும் , ஆற்றியேனும் ஆகிய எனக்குச் சுடராய் நின்று ` என்க . யமுனை ஆற்றில் ஆடையின்றி நீராடிய மகளிர் பலதேவன் வருகையால் நாணமடைய , அவர்கள் மானம் இழவாதபடி கண்ணன் குருந்த மரத்தின் தழைநிரம்பிய கிளையை வளைத்து உதவினான் என்பது பழைய வரலாறு . ஓசித்து - வளைத்து . தானவர் - அசுரர் .

பண் :

பாடல் எண் : 11

முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்
முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித்
தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை
மதனழியச் செற்றசே வடியி னானை
இலைமறித்த கொன்றையந் தாரான் தன்னை
ஏழையேன் நான்பண்டி கழ்ந்த வாறே.

பொழிப்புரை :

மாசுதீரப்புனல் ஆடும் வழக்கத்தை விடுத்து அற்றம் மறைத்தலுக்கு உடைமாத்திரம் அணிந்த சமணசமயப் பெண் துறவியர் தங்கள் தெய்வம் என்று பெரிதும் மதித்துத் தம் கைகளால் தலைமயிரைப் பறிக்கும் பண்புடையவர்களாகித் தங்கள் கொள்கைகளிலேயே நிலைநின்று தக்க செயல் இன்னது என்று ஆராய்ந்தறிய இயலாதவர்களாகித் தவம் என்ற பெயரால் பொருத்த மற்ற செயல்களைச் செய்பவர் சமணத் துறவியர் . அவர் வழி நின்றேனாகிய யான் . புட்பகவிமானம் சென்ற வழியைக் கயிலை மலை தடுத்ததனால் அதனைப் பெயர்க்கச் சென்ற இராவணனுடைய வலிமை கெடத்துன்புறுத்திய சிவந்த திருவடிகளை உடையவனாய் இலைகளுக்கு இடையே தோன்றிய கொன்றைப் பூவாலாகிய மாலையை அணிந்த எம்பெருமானைப் பண்டு அறியாமை உடையேனாய் இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

` உடை உடாமை , நீராடாமை ` என்னும் சமணநோன்புகளுள் பெண்டிர்க்கு உடை உடாமை உரித்தாகாது , நீராடாமை மட்டுமே உரித்தாகலின் , ` முலைமறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் ` என்றருளிச்செய்தார் . எனவே , இப்பெண்கள் சமணத்துறவெய்தியவர் என்றதாயிற்று . இவர்க்குத்தவமாவது ஆடவராய சமணத் துறவி யார்க்குப் பணிவிடைகள் செய்தலே யாகலானும் , அவற்றுள் சிறந்ததொன்றாகிய தலைமயிரைப்பறித்தலை ஒவ்வொருவராய்ப் போந்து அவர்க்குச் செய்வராகலானும் , ` முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித் தலைபறிக்கும் தன்மையர்கள் ` என்று அருளிச்செய்தார் . ` தீண்டி ` என விதந்தோதியது , தீண்டலாகாமையை உட்கொண்டென்க . கானலை நீரென்றே மயங்கி , அதனைத் தெருட்டுவார் சொற்கும் செவிகொடாது செல்லும் பேதைபோல , அவச் செயலைத் தவச்செயலென்றே மயங்கினார் என்பார் . ` தவமே யென்று அவம் செய்து தக்கது ஓரார் ` என்றருளிச்செய்தார் . அவர் செயல் அன்னதாதல் , ` தவமும் அவமும் , வகுத்தான் வகுத்த வகை ` ( குறள் - 377) என்பதும் , ` அதனால் அவனை யறிதலே தவம் ; அவனையறியாமை அவம் ` என்பதும் உணராது , அறம்முதலிய உறுதிப் பொருள்களை அடைதற்பொருட்டுக் கிடைத்த , அரிய உடம்பை , ஆற்றப் பகையாக வெறுத்து ஒறுத்தலான் என்க . ` காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம் ; அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம் வீண்செயல் ; இறைவன் சொன்ன விதி அறம் .` என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தினை ( சூ .2.27.) ஈண்டுக் கருதுக . மதன் - வலிமை .

பண் :

பாடல் எண் : 1

சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
சடாமகுடத் திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

சந்திரனைப் பெரிய கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் வைத்துள்ளான் . சாமவேதமாகிய இசையை விரும்புபவன் . மண்டையோட்டை ஏந்திய கையினன் . பொன்னார் மேனியில் , மெல்லிய விரலில் பந்தினை ஏந்திய பார்வதி பாகன் . காளையை வாகனமாக உடையவன் . மேம்பட்டயோகி . ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன் ஆகிய இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருப்பவனே .

குறிப்புரை :

` கனகமேனிமெய்யனே ` எனமாற்றியுரைக்க . அணவும் - பொருந்திய . சுடர்த்தொடி அணிதல் முதலியன போல , பந்தடித்தலும் செல்வமகளிர்க்குச் சிறப்பாவதாம் . மாசுணம் - பாம்பு . ` பசு ` என்பது ஆனினத்து இருபாற்கும் பொது ; அஃது ஈண்டு அதன் ஆணினைக்குறித்தது . ` இருத்துமே ` முதலிய எல்லாவற்றிற்கும் , ` உம்மாற் காணப்பட்டவன் ` என்னும் எழுவாய் வருவித்துரைக்க . ` இருத்தும் ` என்பது முதலிய எதிர்கால முற்றுக்கள் இயல்புகுறித்து நின்றன . ` அவன் ` என்பது , ` அத்தன்மையன் ` என்னும் பொருட்டாய் நின்றது . கந்தருவம் - இசை .

பண் :

பாடல் எண் : 2

ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
படஅரவந் தடமார்பிற் பயில்வித் தானே
நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே
ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

காளை மீது ஏறி ஏழுலகமும் சுற்றி வருபவன் . தேவர்கள் தொழுது துதிக்குமாறு இருக்கின்றவன் . பருந்துகள் படியும் , மண்டையோட்டில் பிச்சை எடுப்பவன் . தன் பெரிய மார்பில் படமெடுக்கும் பாம்பு ஊரப்பெற்றவன் . நீறு படிந்த செழுமையான பவள மலையை ஒத்த வடிவினன் . நெற்றியில் அமைந்த கண் ஒன்று உடையவன் . கங்கை தங்கிய சடைமுடிமேல் பிறையைச் சூடியவன் . இத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான் .

குறிப்புரை :

` உழிதருவான் ` என்பதில் இடைநின்ற உகரம் தொகுத்தலாயிற்று . பாறு - பருந்து ; அஃது ஏறுதல் , ஊன் உண்மையால் என்க . ` நீறேறு செழும் பவளக் குன்றொப்பான் ` என்றது இல் பொருளுவமை .

பண் :

பாடல் எண் : 3

முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

இறந்த பிரமர்களின் தலைமாலையால் பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினன் . உலகில்தோற்றம் நிலை இறுதிகளைச் செய்பவன் . கழுத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவன் . கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடிக் காட்சி வழங்குபவன் . இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்குச் சார்பாய் உள்ளவன் . ஐம்பெரும் பூதங்களாய் அண்டங்களின் புறமும் உள்ளும் இருப்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான் .

குறிப்புரை :

` முண்டம் ` என்றது , இறந்த பிரமர்களது தலைகளை ; அவற்றால் இயன்ற மாலை சிவபிரான் மார்பில் உளதென்க . ` முண்டத்தின் ` என்னும் இன்னுருபு , ஏதுப்பொருட்டு . ` முதல் நடு முடிவு ` என்றது , உலகத்தின் தோற்றம் நிலை இறுதிகளை ; அவற்றைச் செய்வோனை அவையாகவே உபசரித்தருளினார் ; ` அந்தம் ஆதி ` ஒடுங்கின சங்காரம் , சங்காரமே முதல் , ஈறே முதல் ` எனப் பல விடத்தும் இவ்வாறே சிவஞான போதத்தும் கூறப்பட்டது . ` வெண் மருப்பு ` என்றது , மாயோன் பிறப்பாகிய வராகத்தின் கொம்பினை , அவ்வராகத்தின் செருக்கினால் உண்டாகிய இடரை நீக்குதற் பொருட்டு , அதனை இறைவன் அழித்து , அவ்வெற்றிக்கு அடையாளமாக அதன் கொம்பினை அணிந்து கொண்டான் என்பது வரலாறு . காறை - கம்பியாக அமைத்து அணியும் அணிகலம் . பன்றிக் கொம்பு மார்பில் உளதாகவும் சொல்லப்படும் . கதம் - கோபம் . கொண்டு - அணிந்து . பிண்டம் - உடம்பு ; ` அதன் இயற்கை ` என்றது , அதற்கு முதல்களாய் உள்ள தத்துவங்களை ; ` அவற்றிற்கு ஓர் பெற்றி என்றது , சார்பாய் நிற்றலை . அப்பாலாய் இப்பாலாதல் - உள்ளும் புறம்புமாய் நிறைந்து நிற்றல் .

பண் :

பாடல் எண் : 4

செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்
சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவில் தனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

நிறத்தால் செய்யவன் . கண்டம் கறுத்தவன் . பசிய கண்களையும் வெளிய பற்களையும் உடையவாய்ப் படமெடுத்தாடும் பாம்புகளை அணிந்தவன் . அடியார்களுடைய வினைகள் நீங்குமாறு அவற்றிற்குப் பகைவனாக உள்ளவன் . குளிர்ந்த கொன்றை சூடிய சடையினன் . சூலத்தைத் தாங்கும் கையினன் . முக்காலங்களாகவும் உள்ளவன் . கரும்பு வில்லினை ஒப்பற்ற வளைந்த அணிகலன் போலக் கைக்கொண்ட மன்மதனைக் கோபித்த தலைவன் . உயரமும் பருமையும் உடைய காளைவாகனன் . இத்தகைய சிறப்பினை உடையவன் அதிகை வீரட்டானத்துப் பெருமானே .

குறிப்புரை :

` செய்யன் ` என்பதற்கு , ` மேனி ` என்னும் எழுவாய் வருவித்து , ` கண்டம் கரியனே ` என மாற்றியுரைக்க . ` போக ` என்னும் வினையெச்சம் , ` வெய்யன் ` என்பதில் தொக்கு நின்ற ` ஆனான் ` என்பதனோடு முடிந்தது ; ` வினைகள் நீங்குமாறு அவற்றுக்குப் பகைவனாய் நின்றான் ` என்றவாறு . கொடும் பூண் - வளைந்த அணிகலம் ; கழல் .

பண் :

பாடல் எண் : 5

பாடுமே யொழியாமே நால்வே தம்மும்
படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்
சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்
தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

இடைவிடாமல் நால்வேதமும் பாடும் இயல்பினன் . பரவிய உடையின் மீது ஒளி சிறக்குமாறு குளிர்ந்த வெள்ளிய பிறையைச் சூடியவன் . தன் இடையில் விளங்குமாறு புலித்தோலையும் பாம்பினையும் சுற்றியிருப்பவன் . கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . குறுக அடியிடும் நடையினை உடைய பூதங்கள் குடமுழா , வீணை , தாளம் இவற்றை ஒலிக்குமாறு , ஐந்தொழில்களையும் செய்யும் மேம்பட்ட கூத்தினை ஆடுபவன் . அழகிய நீண்ட கையொன்றில் தீயை ஏந்துபவன் . அத்தகைய பெருமான் திருவதிகை வீரட்டனே .

குறிப்புரை :

தொண்டை - கொவ்வைக்கனி . குடமுழவம் - குடமுழா ; கடம் . ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாகிய ( தி .12 பெரிய புராணம் , திருநீலகண்ட நாயனார் -1) ஐந்தொழில் நடனமாகலின் , ` மாக் கூத்து ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 6

ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ
வெள்ளப் புனற்கங்கை செஞ்ச டைமேல்
இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

தன்னையே தியானிப்பவருடைய உள்ளத்தில் மிக்க நோயையும் அவர்களைத் தாக்கும் உட்பகைகளாகிய காமம் முதலிய ஆறனையும் அடியோடு நீக்குபவன் . தனித்திருக்கும் நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பலாகி விழுமாறு நோக்கியவன் . நீர் வெண்மையாகிய கங்கையைத் தன் செந்நிறச் சடையில் இறங்கித் தங்குமாறு செய்தவன் . ஏழுலக இயக்கத்திற்கும் தானே காரணமாகியவன் . வானில் உலாவிய முப்புரங்களையும் ஓர் அம்பினால் அழித்தவன் . பண்டு தொட்டு மேம்பட்ட தவத்தைச் செய்பவனாய்த் தன் அடியவர்களுக்குத் தவம் செய்ய வழிகாட்டி ஆகியவன் அத்தகைய பெருமான் அதிகை வீரட்டத்தானே .

குறிப்புரை :

உள்ளத்துள்ள உறுபிணி , பழவினை , ` உறு `, மிகுதி உணர்த்தும் உரிச்சொல் . செறுதல் - தம்மை உடையாரை அழித்தல் , பகை , ஆறு : காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் . இழித்தல் - இறக்கிக்கொள்ளுதல் . ` தவம் ` என்றது ஆகுபெயராய் , அந்நிலையைக் குறித்தது , தவம் செய்வார் பலர்க்கும் முதலாய் நின்று காட்டிய தவமாகலின் ` ஆதிமாதவம் ஆயிற்று . இங்குக் கண்ணுருபு விரிக்க . திரிபுரங்களை அழித்தலும் , ஆதி மாதவத்திருத்தலும் ஒன்றொடொன் றொவ்வாச் செயல்களாய் . புத்தியும் முத்தியும் தரும் முதல்வன் சிவபிரான் ஒருவனேயாதலை விளக்கி நின்றன .

பண் :

பாடல் எண் : 7

குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
குறட்பூதம் முன்பாடத் தான்ஆ டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
ஈமப்பு றங்காட்டில் ஏமந் தோறும்
அழலாடு மேஅட்ட மூர்த்தி யாமே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

குழல் , கொக்கரை , மொந்தை முதலிய இயங்களை இயக்கிக் கைத்தாளமிட்டுக் குட்டையான பூதங்கள் பாட அப் பாடலுக்கு ஏற்பத் தான் ஆடுபவன் . திருவடிகளிலே அசைகின்ற திரு விரல்களால் உயிர்களின் நுண்ணுடம்புகளை அசைத்துச் செயற்படுத்தி , அடியார்களுடைய கனவிலே தன் திருவுருவை அவர்களுக்குக் காட்டுபவன் . அழகு நிரம்பிய தோள்களை விரைவாக அசைத்துக் கூத்தாடுபவன் . ஊருக்குப் புறத்தே உள்ள சுடுகாட்டில் இரவு தோறும் நெருப்பின்கண் நின்று ஆடுபவன் . எட்டு உரு உடையவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

கொக்கரை - சங்கு . மொந்தை - ஒருதலைப்பறை . கழல் ஆடு திருவிரல் - திருவடியின்கண் அசையும் சிறந்த விரல்கள் , ஞான சத்தியும் கிரியாசத்தியுமே திருவடிகளாதலின் , விரல்கள் அவற்றின் கூறுகள் என்க . கரணம் செய்தல் - அசைத்தல் ; இது உயிர்களின் நுண்ணுடம்பை அசைத்தலாகக் கொள்க . இறைவன் கனவில் தோன்றியருளுதல் இவ்வாறென்பது இதனாற்பெறுதும் . ஈமம் - பிணம் சுடும் விறகு . புறங்காடு - சுடுகாடு . ` யாமம் ` என்பது , ` ஏமம் ` என மருவிற்று . அழல் ஆடுதல் - நெருப்பின் கண் நின்று ஆடுதல் . அட்ட மூர்த்தி - எட்டுரு உடையவன் . அவை : நிலம் , நீர் , தீ , காற்று , வானம் , ஞாயிறு , திங்கள் , உயிர் .

பண் :

பாடல் எண் : 8

மாலாகி மதமிக்க களிறு தன்னை
வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்
வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே
கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்
குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
ஆலால முண்டிருண்ட கண்டத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

மதம் மிகுதலானே மயக்கம் கொண்ட ஆண் யானையைக் கொன்று அதன் தோலினைத் தனியே உரித்துத் தன் திருமேனியை முழுதுமாக அது மறைக்குமாறு உதிரப் பசுமை கெடாது உடம்பில் போர்த்தவன் . ஆரவாரம் ஏற்பட மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக் கடைகயிறாகச் சுற்றி ஒலிக்கின்ற கடலை அதன் அலைகள் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட பெரிய விடத்தை உட்கொண்டு இருண்ட கழுத்தினன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

` மதம் மிக்கு மாலாகிய களிறு ` என மாற்றியுரைக்க . ` மேலால் , கீழால் ` என்புழி நின்ற ஆல் இரண்டும் அசைநிலை . ` கை ` என்பது இடைச்சொல் . ` மெய் போர்த்தான் ` என்புழி ஏழாவதன் பொருட்கண் வல்லெழுத்து மிகாமை , இரண்டாவதற்குத் திரிபோதிய இடத்துத் ( தொல் , எழுத்து . நச் .157) தன்னின முடித்தலாற் கொள்ளப்படும் ; அன்றி , இரண்டாவது விரிப்பினும் ஆம் . ` கோலாகலம் ` என்பது குறைந்து நின்றது . கோலாகலம் - ஆரவாரம் . பட - உண்டாக . கொண்ட - ( தேவர் தமது அறியாமையால் ) தேடிக்கொண்ட .

பண் :

பாடல் எண் : 9

செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்பினாண் மலர்க்கூந்தல் உமையாள் காதல்
மணவாள னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

செம்பொன்னாற் செய்து அதன் கண் அழகினை ஊட்டினாற்போல இயற்கையாக அமைத்த செஞ்சடைப்பெருமான் , இயற்கையான தெய்வ மணம் கமழும் தன்மையோடு மலர்களையும் அணியும் கூந்தலை உடைய உமாதேவியினுடைய காதலுக்கு இருப்பிடமான கணவன் . வலக்கையில் மழுப்படையை உடையவன் . நம்மால் விரும்பப்படுபவன் . நான்கு வேதங்களும் வழிபடுமாறு இருப்பவன் . அச்சமில்லாத அசுரர்களின் மும்மதில்களும் நடுங்குமாறு அவற்றை அழித்த அம்பினன் . எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

` அழகு பெய்தாற் போலும் ` என்றது , ` ஊட்டி யன்ன ஓண்டளிர்ச் செயலை ` ( அகம் -68) என்றாற்போல இயற்கையைச் செயற்கையோடுவமித்து வியந்தருளியவாறு . ` எம் ` என்றது , பிற அடியாரையும் உளப்படுத்து . தெய்வம் - தெய்வ மணம் ; இயற்கை மணம் . ` தெய்வம் நாறும் கூந்தல் , நாண்மலர்க் கூந்தல் ` எனத் தனித்தனி முடிக்க . ` வலக்கை ` என்பது மெலிந்து நின்றது . மழுவாள் , இருபெயரொட்டு . கோசரம் - தேயம் ; என்றது உலகங்களை . ` அண்டகோசத்துளானே ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 10

எழுந்ததிரை நதித்திவலை நனைந்த திங்கள்
இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

கங்கையிலிருந்து வெளிப்பட்ட அலைகளின் துளிகளால் நனைக்கப்பட்ட பிறைச் சந்திரன் மெல்லிய ஒளியோடு விளங்குகின்ற நீண்ட சடையினன் . கச்சியில் காமக்கோட்டத்திலுள்ள பவளம் போலச் சிவந்த , கனிபோன்று மென்மையை உடைய வாயினள் ஆகிய உமாதேவியின் இரு தனங்களும் எம்பெருமான் மார்பில் போரிட்டதனால் ஏற்பட்ட அழகிய தழும்புகள் தங்கிய மலைபோன்ற அவன் மார்பில் பூணூல் உள்ளது . சந்தனமும் , நறுமணக்கூட்டுக்களும் சேறுபோலப் பொருந்திய தன் செம்மேனியில் வெண்ணீறு அணிந் துள்ளான் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

எழுந்த - ஓங்கிய . ` நதியது எழுந்த திரைத் திவலை களால் நனைந்த திங்களினது இள நிலவு விளங்குகின்ற சடை ` என்க . இனி , ` நனைந்த ` என்பதனையும் சடைக்கு அடை ஆக்கலுமாம் . கோட்டி - கோட்டத்தை யுடையவள் . காமக்கோட்டம் , கச்சியில் உள்ளது . பொருது - பொருததனால் . கோலம் - அழகு . ` கோலமாக ` என ஆக்கச் சொல் வருவிக்க . வரை - ஆடவர் மார்பில் இருத்தற் குரியவாகக் கூறப்படும் கீற்று . ` சாந்து ` பூசப்படுவ தெனவும் . ` அளறு ` அப்பப்படுவதெனவும் உணர்க . அழுந்திய - நீங்காது நின்ற . ` உமையம்மையார் கச்சியில் கம்பையாற்றங்கரையில் இறைவனை இலிங்கத்தில் வழிபட்டுக்கொண்டிருக்கும்பொழுது , அவனது திருவிளையாடலால் கம்பையாறு பெருக்கெடுத்துவர , அதனைக் கண்டு , அம்மையார் செய்வதறியாது இறைவனைத் தழுவிக்கொள்ள , வெள்ளம் நெருங்கி வாராது சூழ்ந்து சென்றது ` என்பதனையும் , ` பின்னர் அம்மையார் தழுவிய கைகளை வாங்க , அவரது தனத் தழும்பும் , வளைத்தழும்பும் இறைவரது திருமேனியில் நீங்காது நின்றன ` என்பதையும் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத் துள்ளும் , காஞ்சிப் புராணத்துள்ளும் காண்க . இவ்வரலாறு இறைவனது வழிபாட்டினை வலியுறுப்பதாகலின் , இதனைச் சிறந்தெடுத் தோதியருளினார் . இக்கருத்துப் பற்றியே பிற பல இடங்களினும் திருவேகம்பத்தினை நினைந்தருளிச் செய்தலை ஆண்டாண்டுக் கண்டுணர்க . கச்சியம்பதி இச்சிறப்பினை யுடைத்தாதல் பற்றியே , திருக்கயிலையில் உபமன்னிய முனிவர் , தம் மாணாக்கர்க்கு , ` மாதவம் செய்த தென்றிசை` ( தி .12 பெரிய புராணம் - திருமலைச் சிறப்பு -25) எனத் தென்றிசையின் உயர்வைக் கூறியருளியபொழுது . அவர்கள் , ` மானுடர் வாழும் அத்தென்றிசை , கடவுளர் வாழும் இவ்வடதிசையினும் சிறந்ததாதல் எவ்வாறு ?` என ஐயுற்று வினவியதற்கு , ` அங்குள்ள சிவத்தலங்களே அச்சிறப்பிற்குக் காரணம் ` என்பதுணர்த்துவார் , சிறந்தெடுத்தோதிய மிகச் சிலவாகிய தலங்களுள் , இதனை எடுத்தோதி யருளினார் என்க .

பண் :

பாடல் எண் : 11

நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
நீண்டானே நேரொருவ ரில்லா தானே
கொடியேறு கோலமா மணிகண் டன்னே
கொல்வேங்கை யதளனே கோவ ணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்
புவலோகந் திரியுமே புரிநூ லானே
அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

பொழிப்புரை :

தனக்கு ஒப்பார் பிறர் இல்லாத சிவபெருமான் திருமாலும் பிரமனும் தம்முயற்சியால் தேடியும் காண இயலாதவாறு நீண்ட வடிவு கொண்டவன் . தன் சிறப்புத் தோன்றக் கொடியை உயர்த்துமாறு அமைந்த நீலகண்டன் . கொலைத் தொழிலை உடைய வேங்கையின் தோலைக் கோவணத்தின் மீது ஆடையாக உடுத்தவன் . திருநீறு பூசிய திருமேனியினன் . பூணூலை அணிந்த அப்பெருமான் பிச்சை ஏற்றலைக் கருதி மேலுலகங்களிலும் திரிபவன் . தன் அடியவர்களைத் தேவர் உலகத்தை ஆளுமாறு செய்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .

குறிப்புரை :

நெடியான் - திருமால் , நேடி - தேடி ` காணாமை ` என்பது , ஈறு குறைந்துநின்றது . ` கொடி ` என்பது பாம்பிற்கு உவமையாகு பெயராயிற்று . ` மணிகண்டன் ` என்னும் உவமத்தொகை , வடநூன் முடிபு . ` புவ லோகம் ` பூவுலகத்திற்கு மேல் உள்ளது . இதனானே , இனம் பற்றிப் பிற மேல் உலகங்களும் கொள்ளப்படும் என்க . ` அமரர் உலகம் ` என்பது குறைந்து நின்றது .

பண் :

பாடல் எண் : 1

எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களும் சிவனுடைய தொடர்புடையன என்று கூறுமாறு எல்லாப் பொருள்களிலும் கலந்திருப்பவனே ! தீ கதிர் மதியம் ஆகி நிற்பவனே ! கொலைத் தொழிலைச் செய்யும் மழு என்ற படைக்கலம் ஏந்தியவனே ! உயிர்களை உடல்களிலிருந்து பிரிக்கும் கூற்றுவனை உதைத்தவனே ! அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறியாதவருடைய மானதக் காட்சிக்கு அரியவனே ! முறையாகக் குருவிடம் உபதேசம் பெற்றவர்களுடைய துயரை நீக்குபவனே ! வில்லினைக் கொண்டு பெரிய மதில் களை அழித்தவனே ! அதிகை வீரட்டத்தினை உகந்தருளி யிருக்கும் களங்கமற்றவனே ! உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

` சிவன் ` என்பது விடாதவாகுபெயராய் , ` சிவன் வடிவம் ` எனப் பொருள்தரும் . என்ன நின்றாய் என்று சொல்லுமாறு கலந்து நின்றவனே . ` போற்றி ` என்பதன் முன்னும் பின்னும் , ` நினக்கு ` என்பதும் , ` ஆகின்றது ` என்பதும் எஞ்சி நின்றன . யாண்டும் இவ்வாறே கொள்க . எரி சுடர் - எரிகின்ற சுடர் ; ஒளிப் பிழம்பு . ஆக்கம் , உயிர்களின் பொருட்டு அவ்வுருவத்தினை மேற்கொள்ளுதலை யுணர்த்திற்று . இவ்விரு தொடர்களும் , ` ஆசனம் - மூர்த்தி - மூலம் ` என்னும் முறையிற் செய்யும் வழிபாட்டில் முறையே ஆசனத்திற்கும் , மூர்த்திக்கும் உரிய மறைமொழிகளாதற் குரியனவாதலறிக . ` கொல் ` கொல்லுதல் என முதனிலைத் தொழிற் பெயர் . ` கூற்று ` என்பது அஃறிணை வாய்பாடாகலின் , ` ஒன்றை ` என அருளிச்செய்தார் ; அத் தொழில் பெற்று வாழ்ந்து நீங்குவார் பலராகலின் , அவருள் ஒருவனே உதைக்கப்பட்டான் என்க . இனி , ` கூற்றாகிய ஒன்றை ` என்றுரைப்பினும் ஆம் . கல்லாதார் - நல்லாசிரியர் மொழியை உணராதார் . அவர் ஒரு மொழியாகச் செவியறிவுறுப்பது திருவைந்தெழுத்தும் , நூல்களாலும் பொருந்துமாற்றாலும் விளக்குவது அதன் பொருளுமாகலின் , வாளாதே , ` கல்லாதார் ` எனவும் , ` கற்றார் ` எனவும் அருளிப் போயினார் . ` காதல் ` என்பதன் பின் ` செய்யும் ` என்பது தொகுத்தல் ஆயிற்று .

பண் :

பாடல் எண் : 2

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி
உள்குவா ருள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாக மசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

பாடுதலையும் , கூத்து நிகழ்த்துதலையும் பண்புகளாக உடையவனே ! பல ஊழிக்காலங்களையும் படைத்தவனே ! மண்டையோட்டில் இரந்து பெறுவனவற்றையே உணவாக விரும்பி ஏற்றவனே ! உன்னைத் தியானிப்பார் உள்ளத்தைத் தங்குமிடமாக உடையவனே ! சுடுகாட்டில் கூத்தாடுதலை உகப்பவனே ! கார்மேகம் போன்ற கறுத்த கழுத்தை உடையவனே ! ஒதுங்கியிருந்து படமெடுத்து ஆடச்செய்ய வேண்டிய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் கொள்பவனே ! அலைகள் வீசும் கெடில நதியை அடுத்த அதிகை வீரட்டானத்திலிருந்து உயிர்களை ஆள்பவனே -- உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

பாட்டு - பாடுதல் . ஆட்டு - ஆடுதல் . பண்பன் - செம்மையன் ; வல்லவன் . ` பாடுமே யொழியாது நால்வே தம்மும் ` என மேலே ( தி .6. ப .4. பா .5.) அருளிச் செய்தமையின் , இறைவன் பாடுதலுடையனாதலையறிக . ஊண் - உண்ணுதல் . ` ஊண் ஓட்டகத்தே ஆக உகந்தாய் ` என மாற்றியுரைக்க , காடு - சுடலை . அசைத்தல் - கட்டுதல் ; ` ஆட்டுதற்குரிய பாம்பைக் கட்டிக்கொண்டுள்ளாய் ` என வியந்தருளிச் செய்தவாறு . ` ஓர் நாகம் ` என்றதில் ` ஒன்று ` ஒரு தன்மையைக் குறித்து நின்றது . ` அலை கெடிலம் ` என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது . வீரட்டத்து ஆள்வாய் - வீரட்டத்தின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே .

பண் :

பாடல் எண் : 3

முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.

பொழிப்புரை :

முடியில் முல்லை மாலை சூடியவனே ! உடல் முழுவதும் திருநீறு பூசியவனே! எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே ! யாழின் ஏழு நரம்புகளிலும் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே ! உருண்டை வடிவினதாகிய மயிர் நீங்கிய , மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே ! உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்குபவனே ! தில்லைச் சிற்றம்பலத்தை உகந்தருளி யிருக்கிறவனே ! அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே ! உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

முல்லை நிலத்தார் செய்யும் வழிபாட்டினையும் ஏற்றருளுதல் பற்றி , முல்லைக்கண்ணியும் இறைவற்கு உரித்தாயிற்று . பிறநிலப் பூக்களும் இவ்வாற்றான் உரியவாம் என்க . இதனானே சிவபிரான் யாவராலும் வணங்கப்படும் முழுதற் கடவுளாதல் உணரப்படும் . முழுநீறு - மேனி முழுவதுமாகிய நீறு . ` எல்லையாய் ` என ஆக்கம் வருவித்து , ` எல்லாக் குணங்கட்கும் எல்லையாய் நிரம்பி ( உயர்ந்து ) நிற்கும் அருட்குணங்களையுடையவனே ` என உரைக்க . படைத்தல் - உடையனாதல் . சில்லை - வட்டம் . சிரை - மழிப்பு . செல்வன் - இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன் .

பண் :

பாடல் எண் : 4

சாம்ப ரகலத் தணிந்தாய் போற்றி
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

மார்பில் திருநீறு பூசியவனே ! அடியார்கள் மேற் கொள்ளும் தவநெறிகள் அவற்றிற்கு உரிய பயன்களைத் தரும்படி செய்து நிற்பவனே ! ஐம் பொறிகளையும் மனத்தால் அடக்கி உன்னை வழிபடுபவர்கள் செய்யும் சிறிய தொண்டுகளை உள்ளத்துக்கொண்டு அவர்களுக்கு அருள் செய்ய இருக்கும் இளையோனே ! பாம்பும் , பிறையும் , கங்கையும் தம்மிடையே பகை இன்றி ஒருசேர இருக்குமாறு அவற்றைச் சடையில் அணிந்த பண்பனே ! ஆம்பற் பூக்களையும் அணிந்தவனே ! அலைகளை உடைய கெடில நதிக் கரையிலமைந்த அதிகை வீரட்டானத்திருந்து எல்லோரையும் ஆள்பவனே ! உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

தவநெறிகள் , அடியவர் மேற்கொண்டவை . சாதித்தல் - ( துணையாய் நின்று ) முற்றுவித்தல் . கூம்புதல் - மனம் ஒருங்கி நிற்றல் , குற்றேவேல் ( அவர் செய்யும் ) வழிபாடு ; இங்குப் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று . குறிக்கொண்டிருத்தல் - பொருளாக நோக்கியிருத்தல் , நஞ்சுடைய பாம்பிற்கு நீர் பகை என்க . ` சந்திரனை மா கங்கை திரையால் மோதச் சடாமகுடத் திருத்துமே ` என மேல் ( தி .6. ப .4. பா .1.) அருளிச்செய்தமையால் , அது மதிக்கும் பகையாதல் அறிக . பகை தீர்த்தலாவது ஒன்றால் மற்றொன்று அழிந்தொழியாது என்றும் இருக்கச் செய்தல் . ` ஒற்றியூரும் ஒளிமதிபாம்பினை - ஒற்றியூருமப் பாம்பு மதனையே - ஒற்றியூர வொருசடை வைத்தவன் ` ( தி .5. ப .24. பா .1) என அருளிச்செய்தமையுங் காண்க . இஃது இறைவனது திருவருளின் வன்மையைக் குறிக்கும் குறிப்பாதல் உணர்க . ஆம்பல் மலர்க்கு மேல் ( தி .6. ப .5. பா .4.) முல்லைக்கு உரைத்தவாறே உரைக்க .

பண் :

பாடல் எண் : 5

நீறேறு நீல மிடற்றாய் போற்றி
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
யிருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.

பொழிப்புரை :

திருநீறு பூசிய நீலகண்டனே ! ஒளி விளங்கும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவனே ! தன் உடலில் ஒரு கூறாகப் பொருந்துமாறு உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டவனே ! கொடிய பாம்புகளை ஆடச்செய்யும் இளையவனே ! கங்கை தங்கிய தலையினனே ! அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் ஆயினவனே ! காளையை வாகனமாக ஏறிச்செலுத்துதலை என்றும் விரும்புபவனே ! கெடில நதிக் கரையிலுள்ள பெரிய அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையே ! உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

கூறு ஏறு உமை - கூறாய்ப் பொருந்திய உமையை உமையது கூற்றினை என்றவாறு . கோள் - கொடுமை . ` ஏறவே ; என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று . உகப்பாய் - விரும்புவாய் .

பண் :

பாடல் எண் : 6

பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாக மரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடும்ஆன் ஐந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

உன்னையே விரும்பிப் பாடும் அடியார்களுடைய பாடல்களை விரும்பிச் செவிமடுக்கின்றவனே ! பழையாற்றைச் சார்ந்த பட்டீச்சுரத்தை உகந்தருளியிருப்பவனே ! உலகப் பற்றறுத்த அடியார்களுக்கு வீடுபேற்றினை அருள வல்லவனே ! உமாதேவி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்திக் கொண்டவனே ! தம் முயற்சியாலே உன்னை அடைய விரும்புபவர்கள் ஆராய்ந்து அறிதற்கு அரியவனே ! இடையிலே பாம்பினை இறுகக் கட்டியிருப்பவனே ! பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புபவனே ! அலைகெடில வீரட்டானத்தை உகந்து உலகை ஆள்பவனே ! உன்னை வணங்குகின்றேன் .

குறிப்புரை :

பழையாறு , பட்டீச்சுரம் சோழநாட்டுத் தலங்கள் , பழையாற்றின்கண் உள்ள , என்க . ` பட்டீச்சுரத்தாய் ` என்பது ` இறைவனே ` என்னும் அளவாய் நின்றது . வீடுவார் - பாசம் நீங்கப் பெறுவார் . ` வீடுவார்க்கு ` என்னும் உருபு தொகுத்தலாயிற்று . வன்மை , பிறர் அது மாட்டாமை விளக்கிற்று . ` வெருவ ` என்றது , இறைவியுங் கண்டு அஞ்சுதல் பற்றி . ஆடுதல் - மூழ்குதல் . ஆன் ஐந்து - ஆவினின்றும் உளவாகின்ற ஐந்து ; அவை , ` பால் , தயிர் , நெய் , நீர் , சாணம் ` என்பன . இவை ஐந்தும் ஒருங்கு சேர்ந்ததே ` ஆனைந்து ` ( பஞ்சகௌவியம் ) எனப்படும் . இவற்றுள் ஆனீர் ( கோசலம் ) சிலதுளிகளாகவும் , சாணம் அதனினும்மிகக்குறைந்த அளவுமாகச் சேர்க்கப்படும் என்க . ` இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில் - நின்ற மலம் அனைத்தும் நீக்குவது ` ( திருக்களிற்றுப்படியார் - 7) என்பதனான் ஆப்பியது பெருந்தூய்மையையும் , அந்நயத்தானே ஆனீரினது தூய்மையையும் தெற்றெனவுணர்க . இக்காலத்து இஃதறியாத சிலர் , ஆனீரினையும் சாணத்தினையும் பிறவுயிர்களுடையவற்றோடொப்ப வாலாமை யுடையனவென மயங்கி அவற்றை மறுத்து , மோரும் வெண்ணெயும் கொண்டு , தம் மனஞ்சென்றவாறே கூறுப . மோரும் வெண்ணெயும் தயிர் நெய்களின் வேறாகாமைதானும் அவர் நோக்கிற்றிலர் என்க .

பண் :

பாடல் எண் : 7

மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால்கடலும் மால்விசும்பு மானாய் போற்றி
விண்துளங்க மும்மதிலு மெய்தாய் போற்றி
வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
பார்முழுதும் ஆய பரமா போற்றி
கண்துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்க்கெடிலங் கொண்ட கபாலீ போற்றி.

பொழிப்புரை :

நில உலகம் அசையுமாறு கூத்தாடுதலை மகிழ்ந்தவனே ! பெரிய கடலும் வானமும் ஆனவனே ! வானுலகம் நடுங்கும் படி மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்தவனே ! யானைத் தோலினால் உடம்பை மூடிக்கொள்ளும் , உலகியலுக்கு வேறுபட்டவனே ! பண்கள் பொருந்தப் பாடுதலில் பழகியவனே ! உலகம் முழுதுமாய் பரவியிருக்கும் மேம்பட்டவனே ! கண் அசைத்துத் திறந்த அளவில் முற்காலத்தில் மன்மதனை அழித்தவனே ! நீரின் ஆழத்தால் கருநிறம் கொண்ட கெடிலக்கரை வீரட்டானத்தை உகந்து கொண்ட , மண்டைஓட்டை ஏந்தியவனே ! உன்னை வணங்குகின்றேன் .

குறிப்புரை :

விண்துளங்க - விண்ணுலகம் அதிருமாறு . விகிர்தன் - ( உலகியலின் ) வேறுபட்டவன் . ` கார் ` என்னும் மேகத்தின் பெயர் , நீருக்கு ஆயிற்று .

பண் :

பாடல் எண் : 8

வெஞ்சினவெள் ஏறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

மிக்க சினத்தையுடைய வெண்ணிறக் காளையை வாகனமாக உடையவனே ! விரிந்த சடையின் மேல் கங்கை வெள்ளத்தைத் தங்கச் செய்தவனே ! உறங்காது பிச்சை எடுக்கும் மேம்பட்டவனே ! உன்னை வழிபடும் ஒழுக்கத்தை உடைய அடியார்களின் துயரைத் துடைப்பவனே ! விடம் தங்கிய கழுத்தை உடைய தலைவனே ! நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே ! இனிய சொல்லை உடைய பார்வதி பாகனே ! அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் ! உன்னை வணங்குகின்றேன் .

குறிப்புரை :

சினம் , இன அடை . ` துஞ்சாது ` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று . ` கை ` என்பது இடப்பகுதியை யுணர்த்தல் போலக் காலப் பகுதியையும் உணர்த்துமாகலின் . ` தொழுத கை ` என்பதற்கு , ` தொழுத பொழுதே ` என உரைக்க . ` தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி ` என்பது ( தி .8 4.131) திருவாசகத்துப் போற்றித் திருவகவலுள்ளும் வந்தமை காண்க . அம்சொல் - அழகிய சொல் . சொற்கு அழகாவது , கேள்வியிலும் பயனிலும் இன்பந்தருதல் . அமர்தல் - விரும்புதல் . ` அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி ` என்னும் இதுபோல்வன . சார்த்துவகையால் அம்மைக்குரிய மறைமொழிகளாதலுணர்க .

பண் :

பாடல் எண் : 9

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப் பதஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.

பொழிப்புரை :

அடியார் உள்ளத்தை இருப்பிடமாய்க் கொண்டு நிலைபெற்ற சிவபெருமானே ! இதயத்தாமரையில் ஞானவடிவாகத் தங்கியிருப்பவனே ! புண்ணியமே வடிவானவனே ! தூயனே ! காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்திகளாகவும் இருக்கும் மேம்பட்டவனே ! உண்மைப்பொருளே ! என் தந்தையே ! நேரங்களில் சிறந்த அந்திப்பொழுதாக இருக்கும் அரனே ! வீரட்டத்திலிருந்து உலகை ஆள்பவனே ! உன்னை வணங்குகின்றேன் .

குறிப்புரை :

` சிந்தை ` என்றது சிந்திக்கப்படும்பொருளை . எனவே , அசிந்திதனாயினும் சிந்திதனாய் நின்று அருளுதலைக் குறித்தருளிய வாறாம் . ` சிந்தையாய் நின்ற சிவனே போற்றி ` என்பது வழிபாட்டில் மூலமறையாய் நிற்றற்குரியதாதலறிக . சீபர்ப்பதம் ` ` சீசைலம் ` என்னும் தலம் . இது தெலுங்கநாட்டில் உள்ளது ` ` புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் ` என் றருளினாரேனும் , ` புந்திப் புண்டரிகமாய் அதனுள் இருப்பவனே ` என்றல் திருக்குறிப்பென்க . இஃது ஆசனம் , மூர்த்தி இரண்டற்கும் ஒருங்கே யுரித்தாதல் அறிக . இதனால் , அடியவர் உள்ளத்திருந்து அவரது அகவழிபாட்டினை ஏற்றருளுதலைக் குறித் தருளினமை காண்க . புண்ணியன் - அறவடிவினன் . சந்தி ; ` காலை , நண்பகல் , மாலை , என்னும் முப்போதுகள் , சந்திக்குரிய இறைவனை , ` சந்தி ` என்றருளினார் . இம்முப்போதுகளினும் இறைவி முறையே படைப்பாள் ( பிராமி ), காப்பாள் ( வைணவி ), துடைப்பாள் ( இரௌத்திரி ) என நிற்க , இறைவன் அவளோடு அவ்வாறே உடனாய் நின்று . அவைகளில் செய்யப்படும் தொழுகைகளை ஏற்று அருள் புரிவன் என்க . இதனாற் பல தெய்வ உணர்வின்றி , ஒருமுதல் உணர்வோடு செய்யும் சிவநெறி வழிபாட்டு முறை பெறப்படுதல் காண்க . சதுரன் - திறலுடையவன் . தத்துவன் - உண்மைப் பொருளாய் உள்ளவன் . தாதை - தந்தை ; இது விளியேற்று , ` தாதாய் ` என நின்றது . அந்தி - மாலை ; ` முனிவர் வந்தார் ; அகத்தியனும் வந்தான் ` என்பது போல , அருளுதலாகிய சிறப்புப்பற்றி மாலைப்போதினைச் சிறந்தெடுத்தோதினமையின் , மேல் ` சந்தி ` என்றது , ஏனை இரண்டனையுமே எனக்கொள்க . அரன் - அழிப்பவன் . உயிர் அழிக்கப்படாமையின் , அழித்தல் , உயிரைப்பற்றியுள்ளமாசுகளையே என்க . அந்திக்கண் அரனாய் நிற்றல் குறிக்கப்பட்டவாறறிக .

பண் :

பாடல் எண் : 10

முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.

பொழிப்புரை :

முக்கண்ணனே ! முதல்வனே ! முருகனுடைய தந்தையே ! தென்திசைக் கடவுளே ! அறவடிவினனே ! மெய்ப் பொருளே ! என் தந்தையே ! திருமாலும் , பிரமனும் ஒன்று சேர்ந்து அண்ணலே என்று அழைத்துக் கை கூப்புமாறு அசையாது ஒளிப்பிழம்பாய் நின்றவனே ! வீரட்டானத்து இறைவனே ! வேறு எங்கும் பற்றுக் கோடில்லாத அடியேன் தந்தையாகிய உன்னை வணங்குகிறேன் .

குறிப்புரை :

` முதல்வன் தலைவன் , பதி ` என்பன ஒரு பொருட் சொற்கள் . ஒரு சில முதன்மையன்றி , எல்லா முதன்மையுமுடைமையின் , ` முதல்வன் ` என்றருளிச்செய்தார் ; கிளந்தோது மிடத்து , ` முழுமுதற் கடவுள் ` எனக் கூறுப . ` பயந்தாய் ` என்றது . உலக நலத்தின் பொருட்டு மகன்மை முறையாற் படைத்தருளினமை பற்றி ; இதனை , ` கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் - கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலும் ` எனப் பின்னர் ( தி .6. ப .53. பா .4.) மூத்த பிள்ளையார்க்கு அருளிச்செய்யுமாற்றான் அறிக . ` முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி ` என்னும் இதுபோல்வன , சார்த்து வகையால் முருகக்கடவுளுக்குரிய மறைமொழிகளாதலுணர்க . ` தக்கிணன் ` என்பது , எதுகை நோக்கித் ` தக்கணன் ` என நின்றது ; இது , தென்முகக் கடவுளாய் இருந்து அருள்செய்தலைக் குறித்தருளியவாறு . தருமன் - அறவடிவினன் . ` தத்துவனே போற்றி என்தாதாய் போற்றி ` என்பன மேலும் அருளிச்செய்யப்பட்டன . இவ்வாறு வருதல் , அன்புமேலீட்டால் பாடப்படும் வாழ்த்துச் செய்யுள்களுக்கு இயல்பென்க . தொக்கு - கூடி . ` அண்ணால் ` என்பது மருவி , ` அண்ணா ` என வழங்கும் ; அஃது இங்கு இடைக்குறைந்து நின்றது . ` தோளும் கையும் கூப்ப ` என்றருளியது , கைகளைத் தலைக்கு மேலாக எடுத்துக் குவித்தலை உணர்த்துதற் பொருட்டென்க . துளங்காது - அசையாது ; இங்கு ` எரிசுடராய் ` என்று அருளியதுமாலும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற உருவத்தினை . எக்கண்ணும் - எவ்விடத்தும் . ` கண்ணிலேன் ` என்பதில் ` களைகண் ` என்பது , முதற்குறையாய் , ` கண் ` என நின்றது ; புகலிடமுமாம் . ` எறிகெடிலம் ` என்பதற்கு , ` அலைகெடிலம் ` என்பதற்கு உரைத்தவாறேயுரைக்க . ` எக்கண்ணும் கண்ணிலேன் ` என்பதனை ஈற்றில் வைத்து ` நீயே எனக்குக் களைகண் ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 1

அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

அலைகள் ஒன்றொடொன்று மோதுகின்ற கெடில நதி பாயும் நாடனாய்த் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியுள்ள எம் செல்வனுடைய திருவடிகள் திருமாலால் தியானித்துப் போற்றப்படும் . பிரமனுடைய தலைகளுக்கு அணிகளாகும் , முருகனால் தொழப்பட்டு அணுகப்பெறும் . பற்றுக் கோடாகக் கொண்ட அடியவர்களுக்கெல்லாம் அடைக்கலம் நல்கும் , தம்மை வழிபடுபவர்களுடைய பாவத்தைப் போக்கும் , பதினெண் தேவ கணத்தவராலும் பாடப் பெறும் .

குறிப்புரை :

அரவணையான் - திருமால் . அருமறையான் - பிரமன் . சரவணத்தான் - முருகப்பெருமான் . அரற்றுதல் - கூப்பிடுதல் , ` ஐயனே அரனேயென்றரற்றினால் - உய்யலாம் ` ( தி .5. ப .60. பா .7) என்றருளிச் செய்தமை காண்க . முதல் இரண்டு தொடர்களாலும் , காரணக் கடவுளர்களுக்குச் சார்பாய் நிற்றல் அருளிச் செய்தவாறு . மூன்றாவதனால் அபர முத்தர்க்குச் சார்பாதல் அருளிச்செய்தவாறு . நான்காவதனால் பரமுத்தியாதல் அருளிச்செய்தவாறு . ஐந்தாவதனால் , வினை நீக்கத்திற்கு வாயிலாதல் அருளிச்செய்தவாறு , ஆறாவதனால் , யாவராலும் வணங்கப்படுதல் அருளிச்செய்தவாறு , ` தென்கெடிலம் ` என்றதில் , ` தென்னங்குமரி ` ( பதிற்றுப்பத்து -2-1) என்றாற்போல , இனமில்லாத அடை அடுத்தது ; ` தென் ` அழகுமாம் , செல்வன் - எல்லாம் உடையவன் , ஏழு எட்டாம் தொடர்கள் எழுவாய்கள் ; ஏனையவை பயனிலைகள் ; எழுவாயாய் நிற்கும் ` அடி ` என்பன அடைவேறுபாட்டால் ஒரு பொருள் மேற்பல பெயராயின . பின் வருவனவற்றுள்ளும் இவ்வாறுணர்க .

பண் :

பாடல் எண் : 2

கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.

பொழிப்புரை :

விரைந்து செல்வதாய் ஏனைய காளைகளினின்றும் மாறுபட்ட காளையை ஊர்பவனும் , நீண்ட பிறையை முடிமாலையாக அணிந்தவனும் , கெடில நதிக்கரையிலுள்ள அதிகை வீரட்டானத்தை நீங்காது உகந்தருளியிருப்பவனும் ஆகிய எம்பெருமானுடைய திருவடிகள் தீவினை உடையவரால் ஒரு காலும் அணுகப்பெறாதன . நலிவுற்றுச் சரணாக அடைந்தவரை அழியாமல் காப்பன . முழவு ஒலித்தலையும் தாளம் இடுதலையும் பயிற்றுவிப்பன . வெகுண்டெழுந்த கொடிய கூற்றுவன் மீது பாய்ந்தன . கடலால் சூழப்பட்ட இவ்வுலகைக் காக்கும் திருமாலால் விரும்பிப் போற்றப்படுவன .

குறிப்புரை :

முதல் தொடரில் சிலர் அடையாமைக்குக் காரணம் அருளிச் செய்தவாறு , குறைந்து - நலிவுற்று . ஆழாமை - அழியாமல் . இதனால் அருள் மிகுதி அருளியவாறு . பயிற்றுதல் - நன்கு உணரச் செய்தல் ; இது அவை கற்றாரை என்க . இதனால் முதன்மை அருளியவாறு . நான்காவதனால் ஆற்றல் மிகுதி அருளியவாறு . ஐந்தாவது முதலிய நான்கு தொடர்களும் எழுவாய்கள் .

பண் :

பாடல் எண் : 3

வைதெழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்ச வலைப்பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
கணக்கு வழக்கைக் கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்மடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
திருவீரட் டானத் தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

கெடில நாடனாய் அதிகை வீரட்டத்தை உகந்தருளிய செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் எம் பெருமானைத் தூற்றிக் கொண்டே துயிலெழுபவருடைய தீய விருப்பங்களே நிறைவேறச் செய்வன ; வஞ்சனையாகிய வலையிலே அகப்படாதன . கையால் தொழுது நாவினால் துதித்து நாம் அகக் கண்ணால் காண வாய்ப்பு அளிப்பன . உலகத்தார் கணக்கிடும் எல்லையைக் கடந்து நிற்பன . அடியவராகிய நாம் உடலால் தொழுது நாவால் துதித்துக் கையால் நெய் அபிடேகம் செய்யப் பொருந்துவன . நீண்ட வானுலகையும் கடந்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பன .

குறிப்புரை :

வைதல் - கேடு கூறுதல் , எழுதல் - துயிலுணர்தல் . போகா அடி - போகாமைக்கு ( அவர்கள் அழுந்துதற்கு ) ஏதுவாய அடி ; இதனால் , மறைப்பாய் நிற்றல் அருளியவாறு . இவ்வாறருளிச் செய்தமையின் , இறைவனை உறவாக நினையாது பகையாய் நினையினும் , உள்பொருளாக நினையாது இல் பொருளாக நினையினும் வீடு கூடும் என்பாரது கூற்றுப்பொருந்தாமையறிக . வஞ்சவலை - வஞ்சனையாகியவலை . பாடு - படுதல் - ஒன்று - சிறிது . ` ஒன்றும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . இதனால் . கரவுடையார்க்கு அருளாமை அருளியவாறு . ` நாம் ` என்றது , கரவிலாதார் அனைவரையும் உளப்படுத்து , இதனால் , கரவிலார்க்கு அருள் செய்தலும் , அவர் அவ்வருளைப்பெறுமாறும் , அருளப்பட்டன . கணக்கு - எண் . வழக்கு - சொற்றொடர் . இதனால் , மனமொழிகளைக் கடந்து நிற்றல் அருளப்பட்டது . நெய் , என்றது , எண்ணெய் , ஆனெய் தேனெய் என்பன பலவும் அடங்க . இனம்பற்றிப் பால் , தயிர் முதலிய பலவுங்கொள்க . ` நெய் ஆட்டும் அடி ` என இயையும் . இதனால் , ` மன மொழி மெய்கட்கு அகப்படுதல் ` அருளியவாறு . ஆறாவது தொடரில் அண்டங்களின் உள்ளும் புறம்புமாய் நிற்றல் அருளிச் செய்யப்பட்டது .

பண் :

பாடல் எண் : 4

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

தெளிவான நீரை உடைய கெடில நதி பாயும் நாட்டினனாய் , திருவீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் தாமரையை அரும்பச் செய்யும் காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை நிறத்தாலும் ஒளியாலும் ஒப்பன . தம் அழகை ஓவியத்து எழுதலாகாத வனப்பினவாய் அடியார்களுக்கு அருளை வழங்குவன . சுரும்புகளும் வண்டுகளும் சுற்றித் திரியும் வாய்ப்பினை அளிப்பன . சந்திரனையும் கூற்றுவனையும் வெகுண்டன . பெருவிருப்புடைய அடியவரால் குழாமாகப் போற்றப்படுவன . தவறு செய்தவர்களுடைய தவறுகளை அறியும் ஆற்றல் உடையன .

குறிப்புரை :

` அரும்புவித்த ` என்பது , ` அரும்பித்த ` எனத்தொகுத்தலாயிற்று , அரும்புவித்தல் , தாமரையை என்க . தாமரையை மலர்விப்பதேயன்றி அரும்புவிப்பதும் , உலர்விப்பதும் ஞாயிறேயாகலின் , இங்கு அரும்புவித்தல் கூறப்பட்டது . இவ்வுவமையால் திருவடி உலகை முத்தொழிற்படுத்தல் விளங்கும் . இதனையே , ` வானின் முந்திரவி யெதிர்முளரியலாவுறும் ஒன்றலர்வான் முகையாம் ஒன்றொன்றுலரு முறையினாமே ` எனச் சிவப்பிரகாசத்துள் (17) எடுத்தோதினார் என்க . இரண்டாவது தொடரால் உயிருணர்வைப் பிணித்துக் கோடல் அருளியவாறு . ` சுரும்பும் வண்டினங்களும் ` என்க . ` மதம் ` ` மத்தம் ` என நிற்றல்போல , ` இதம் `, ` இத்தம் ` என நின்றது . இதம் - இனிமை , பிணிப்புண்டார்க்குப் பயனுந்தருதல் அருளியவாறு . சோமன் - சந்திரன் . நான்காவது தொடரில் குற்றம்செய்தலும் , செய்தற்கு உடம்படுதலும் உடையாரை ஒறுத்தல் அருளியவாறு . பித்தர் , அன்பர் . ` பெரும்பித்தர் ` என்றதும் , ` பிதற்றும் ` என்றதும் பழித்தது போலப் புகழ்ந்தவாறென்க . இதனால் , பயன் எய்தினார் அம்மகிழ்ச்சி மேலீட்டால் பலபட வாழ்த்துதல் அருளியவாறு . பிழைத்தல் - பிழை செய்தல் , பிழைப்பு - பிழை . அதை அறிய வல்லுதலாவது , அவர் , ` யாம் இதனை மறைத்துவிட்டேம் ` என்று உள் மகிழாதவாறு அப் பிழைக்கேற்ப ஒறுத்தலும் , மறைக்க வொண்ணாதவாறு வெளிப்படுத்தலும் . இதனால் , நடுவுநிலைமை நடாத்தும் திறன் அருளிச் செய்யப்பட்டது . திருந்துதல் - தெளிதல் .

பண் :

பாடல் எண் : 5

ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் மார்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

கெடில நாட்டுத் திருவதிகை வீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் படைப்புக் காலத்து ஒன்றாகி நின்று முற்றழிப்புக் காலத்தில் மாயையைத் தொழிற்படுத்தாது தம் நிலையிலேயே நிற்பன . ஒன்றில் கழலும் மற்றொன்றில் சிலம்பும் ஒலிக்குமாறு அமைந்தன . புகழ்வாருடைய புகழ் உரைகளுக்கு முடிவு காண இயலாதபடி தடுக்கும் ஆற்றல் உடையன . இப்பெரிய நில உலகிலுள்ளார் மகிழ்ந்து துதிக்கும் வாய்ப்பினை அளிப்பன . அவ்வாறு இன்புற்று அடியவர்கள் அருச்சித்த பூக்களைத் தம்பால் தாங்கி நிற்பன .

குறிப்புரை :

` ஒருகாலம் ` என்றது , படைப்புக்காலத்தை . ` ஆண்டு , இறைவர் ஒரு திருவடியினராய் ( ஏகபாதராய் ) நின்று , தமது இடப் பாதியில் அரியையும் , வலப்பாதியில் அயனையும் தோற்று வித்தருளினார் ` எனப் புராணங் கூறலின் , ` ஒன்றாகிநின்றஅடி ` என்றருளிச் செய்தார் . இதனால் , முதலுருவாதல் அருளப்பட்டது . ` ஊழி ` என்றது , முற்றழிப்புக் ( சருவசங்கார ) காலத்தை . ஆண்டு உயர்தலாவது , மாயையைத் தொழிற் படுத்தாதொழிதல் , இதனால் , தன்னிலையில் நிற்றல் அருளியவாறு . கழல் ஆடவர்க்கும் , சிலம்பு பெண்டிர்க்கும் உரியன . இதனால் , அப்பனும் அம்மையுமாய்ச் செம்பாதியாய் இயைந்து நிற்றல் அருளிச் செய்யப்பட்டது . ` உருவிரண்டும் ஒன்றோடொன் றொவ்வாவடி ` ( ப .6 பா .6) என்றருளிச் செய்தலும் இது பற்றி , இஃது அவற்றின் அணிகலன்களையும் , அஃது அவற்றின் உருவத்தையும் வியந்தவாறென்க . இந்நிலை உலகின் கண் வைத்தறியப்படாத அதிசய நிலையாகலான் வியப்புத்தருவதாயிற்று . புகழ் - புகழ்தல் ; முதனிலைத் தொழிற் பெயர் , தகைத்தல் - தடுத்தல் . தகைத்தல் . முற்றுப் பெறாமையால் இடைக்கண் ஒழியச் செய்தல் , இதனால் , அளவில் புகழுடைமை அருளியவாறு . நிலத்தவர் இன்புறுதல் உலகின்பம் பெற்றமை பற்றி . இதனால் உலகவின் பத்தினைப் பயத்தல் அருளிச் செய்யப்பட்டது . ` இன்புற்றார் ` என்றது , அவர்தம்மையே . ` ஏறும் ` என்றது , பயன் பெற்றமை காரணமாக இட்டமையின் , ஏறாதவாறு ஒதுக்கத் தக்கதென்பதும் , அன்னதாயினும் , அப்பயன் வழித்தோன்றிய அன்பு காரணமாக இட்டமையானும் , அவ்வன்பு தானே பின்னர்ப் பயன்கருதாது செய்யும் அன்பாய் முறுகி வளர்தல் வேண்டுமாகலானும் ஏறக் கொள்ளப்பட்ட தென்பதும் தோன்ற நின்றன . இதனான் , உலகவரை ஆட்கொள்ளுமாறு அருளிச் செய்யப்பட்டது .

பண் :

பாடல் எண் : 6

திருமகட்குச் செந்தா மரையாமடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
உருவென் றுணரப் படாதவடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

அழகிய கெடிலநாடனாய திருவதிகை வீரட்டானத்து எம்செல்வன் சேவடிகள் திருமகளுக்குச் செந்தாமரை போல்வன . சிறந்த அடியார்களுக்குத் தேன் போல இனிப்பன . செல்வர்களுக்கு அவர்கள் செல்வத்தைச் செலவிடும் திறத்தை ஓர்ந்து அறிய உரைகல்லாய் இருப்பன . புகழ்பவர் புகழ் எல்லையைத் தடுக்க வல்லன . வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன . தமக்கு உருவம் உடைமையே இயல்பு என்று உணரப்படமுடியாமல் உருவம் அருவம் என்ற நிலைகளைக் கடந்திருப்பன .

குறிப்புரை :

முதல்தொடர் , செல்வத்திற்கு நிலைக்களமாதல் அருளியவாறு . வீடுபெறுதலை , ` சிறத்தல் ` என்பவாகலின் , சிறந்தவர் , வீடுபெற்றார் . ` தேனாய் ` என்புழி ` இன்பம் ` என்றது எஞ்சி நின்றது . உலகர்க்குச் செல்வம் வாயிலாக இன்பத்தை யருளி , வீடுபெற்றார்க்குத் தானே நேராய் இன்பம் அருளும் என்றவாறு . இவை இரண்டனாலும் சிற்றின்பம் பேரின்பங்களை யருளுதல் அருளப்பட்டது . பொருளவர் - செல்வர் . ` உரை ` என்றது கட்டளைக் கல்லினை . இதனால் , செல்வம் படைத்தாரது செல்வத்தின் நன்மை தீமைகளை நுண்ணிதாக அளந்து அவற்றிற்கேற்பப் பயன்கொடுத்தல் அருளப்பட்டது . நான்காவது தொடர் மேலைத் திருத்தாண்டகத்துள்ளும் வந்தமை காண்க . உருவென்று உணரப்படாத - உருவுடைமையே இயல்பென உணரப் படாத ; உருவம் அருவம் இவை அனைத்தையும் கடந்துநிற்றலே இயல்பென உணரப்படுகின்ற ; இதனால் , ஏனையோரது அடிகள் போலாமை அருளப்பட்டது

பண் :

பாடல் எண் : 7

உரைமாலை யெல்லா முடையவடி
உரையா லுணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையி லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பா ரில்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீரட்டானக் கபாலியடி.

பொழிப்புரை :

கரைகளிலே மக்களின் ஆரவாரத்தை மிகுதியாக உடைய கெடில நதி பாயும் நாட்டில் நறுமணம் கமழும் வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் , மண்டையோட்டை ஏந்திய சிவபெருமானுடைய திருவடிகள் பாட்டும் உரையுமாகிய சொற்கோவைகளை உடையன . சொற்களால் முழுமையாக உணரப்படாதன , உமா தேவியை மனம் வாடாமல் மகிழ்வாக வைப்பன . வானவர்களால் வணங்கி வாழ்த்தப்படுவன . அரைமாத்திரை ஒலியற்றாகிய பிரணவக் கலையில் அடங்குவன . தம் பரப்பினை யாரும் அளக்கவியலாதபடி எங்கும் பரவி இருப்பன .

குறிப்புரை :

உரைமாலை - சொற்கோவை ; இது பாட்டும் உரையுமாய் அமையும் ; அவை எல்லாவற்றையும் உடைய என்றதனால் , புகழ்தக்க பொருள் தாமேயாதல் அருளியவாறு . உரையால் - உரையளவையால் ; பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று . இதனால் , தலைப்பட்டே உணரற்பாலவாதல் அருளிச் செய்யப்பட்டது . வாடாமை - பிரிவால் வருந்தாதவாறு . வைக்கும் - ஒருகூறாகக் கொள்கின்ற . இதனால் , வரைமாது பொருளால் வேறாகாமை அருளியவாறு . வானவர்கள் வாழ்த்துதல் , துறக்கத்து அழியாது வாழ்தற்பொருட்டு . இதனால் , துறக்க இன்பம் அருளுதல் அருளப்பட்டது . மாத்திரை - அளவு . அவை எண்ணல் முதலாக உலகத்தார் கொள்வன . ` அரை ` என்றது , அவற்றின் நுணுக்கம் குறித்தவாறு . ` அரை மாத்திரை , பிரணவகலை ` என்பாரும் உளர் . அளக்கிற்பார் - அளக்க வல்லார் . ஐந்து ஆறாம் தொடர்களால் முறையே நுண்மையும் பெருமையும் அருளியபடி . கலி - நீராடுவாரது ஆரவாரம் . ` மாங்கலி ` மாமரங்களின் எழுச்சி என்க . கமழ் - பூவும் புகையும் கமழ்கின்ற .

பண் :

பாடல் எண் : 8

நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
நடுவா யுலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமுந் தந்திரமும் ஆயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

பொழிப்புரை :

கெடிலநாடர் பெருமானாம் திருவீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் இயற்கையிலேயே மலர் மணம் உடையனவாய் மலர்களாலும் அருச்சிக்கப் படுவன . அறமும் நீதியும் தம் வடிவமாக உலகியலையும் நாட்டியலையும் நிகழச்செய்வன . உலகிலே கதிரவனும் மதியமுமாய்ப் புறத்து ஒளிகளைத் தருவன . யோகியர் உள்ளத்தே ஒளிப்பிழம்பாய் உள்ளொளி பெருக்குவன . சந்திரனுக்கு ஏற்பட்ட மாசினைக் கழுவியன . மந்திரங்களும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களுமாய் உள்ளன .

குறிப்புரை :

` நறுமலராய் ` என்பதில் ஆக்கம் உவமை குறித்தது , ` பஞ்சாய்ப் பறந்தான் ` என்றாற்போல . ` ஏனையோர் அடிகள் மலரோடு உவமிக்கப்படுதல் பொலிவு பற்றியே ; இறைவர் அடிகள் அவ்வாறன்றி நறுமணம் பற்றியுமாகும் ` என்பார் , இதனை அருளிச்செய்தார் . இதனால் , அருள்வடிவாதல் அருளப்பட்டது . ` நடு ` என்றது அறத்தையும் நீதியையும் . ` உலகம் `, ` நாடு ` என்பன ஆகுபெயராய் , அவற்றது நடையினை உணர்த்தின . இம்மையோடு மறுமையையும் வேண்டி ஒழுகும் ஒழுக்கம் உலகியல் ; இம்மை ஒன்றனையே வேண்டி ஒழுகும் ஒழுக்கம் நாட்டியல் . அவ்விரண்டனையும் முறையே அறக் கடவுளிடத்தும் , அரசனிடத்தும் நின்று நடத்துதலின் இவ்வாறு அருளிச் செய்தார் ; இதனால் , உலகத்தை நடத்துதல் அருளியவாறு . மூன்றாவது தொடரால் , வெம்மையும் தண்மையுமாய் நின்று உதவுதல் அருளிச் செய்யப்பட்டது . தீத்திரள் - ஒளிப்பிழம்பு . உள்ளே -( யோகியர் ) உள்ளத்தே . இதனை , ` தகர வித்தை ` என உபநிடதங் கூறும் . இதனால் , யோகியர்க்கு அருளுதல் உணர்த்தப்பட்டது . ஐந்தாவது தொடர் தக்கன் வேள்வியில் நிகழ்ந்ததனைக் குறித்தது . அதனால் , மறக் கருணையால் மாசு நீக்குதல் விளங்கும் . மந்திரம் - வழிபாட்டுச் சொல் . தந்திரம் - வழிபாட்டு நூல் . இதனால் , அவையிரண்டாயும் நின்று பயன்தருதல் அருளப்பட்டது . செறி -( நீர் ) நிறைந்த ; இவ்வாறன்றி நாடருக்கு அடையாக்கலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
யடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார்வீ ரட்டத் தலைவன்னடி.

பொழிப்புரை :

இனிய இசை பாடப்படும் குளிர்ந்த கெடிலநதி பாயும் நாட்டில் பெருமைபொருந்திய அதிகைவீரட்டானத் தலைவனுடைய திருவடிகள் அடியார்களுக்குப் பக்கத்தில் உள்ளனவாயும் , அடியார் அல்லார்க்கு தூரத்தில் உள்ளவாயும் அமைந்திருப்பன . அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் போன்று உள்ளன . வழிபடுபவர்களுக்குத் துணையாகும் ஆற்றல் உடையன . உலகப் பற்றற்ற சான்றோர்கள் பற்றும் தகையவாய்ப் பவள நிறத்தை உடையன . மணிகள் போலவும் பொன் போலவும் மதிப்பிடற்கரிய பெருமை உடையன . மருந்தாய்ப் பிறவிப் பிணியை அடியோடு நீக்கும் ஆற்றல் உடையன .

குறிப்புரை :

அணியன அன்மை அடியவரல்லார்க்கும் , சேயன அன்மை அடியவர்க்கும் என்க ; இவ்வாறு எதிர்மறை முகத்தால் அருளிச்செய்தது வலியுறுத்தற்பொருட்டு . இரண்டாவது தொடர் அடியவர் அல்லார்க்கு அணியன வன்மை மாத்திரையேயன்றிச் செய்யும் தீங்கொன்றுமில்லை , அடியவர்க்கு அணியனவாய்ப் பேரின்பம் பயக்கும் என்றருளியவாறு . பாங்கு - பக்கம் . பக்கமாதல் ஆவது , துணையாய் நிற்றல் . வல்லுதல் , எவ்வகையான இடர்களையும் களையவும் , எல்லா இன்பங்களையும் அளிக்கவும் வல்லுதல் . ` பற்றற்றார் ` என்றது , உலகப்பற்றின் உவர்ப்புத் தோன்றப் பெற்றாரையும் , அவ்வாறு தோன்றப் பெற்று அதனின் நீங்கினாரையும் . ` பற்றுதல் ` என்றது , துணையாகப் பற்றுதலையும் , பேறாகப்பெற்று நிற்றலையும் . இந்நான்கனாலும் , பெறும்பேறாதல் அருளியபடி . ` மணியடி `. ` பொன்னடி ` உவமத்தொகைகள் ; இவற்றால் அருமை கூறியவாறு . மாண்பு - ஒப்பற்ற பெருமை ; இதனால் , ஒருசொல்லாகப் பெருமை அருளியவாறு . ` பிணி ` என்றது பிறவி நோயை . இதனாற் பிறவிப் பிணிக்கு மருந்து தானன்றி வேறின்மை அருளப்பட்டது . தணி - இனிய இசை . தகைசார் - பெருமை பொருந்திய .

பண் :

பாடல் எண் : 10

அந்தா மரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்ற லழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலன்னடி.

பொழிப்புரை :

ஒலிக்கும் தழற்பிழம்பாய் வளர்ந்த வடிவினனும் பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனும் , பெரிய பவள மலை போல்வானும் , அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் தூயோனும் ஆகிய எம் பெருமானுடைய திருவடிகள் தாமரைப் பூக்கள் போல மலர்ந்துள்ளன . இராவணனுடைய ஆற்றலையும் போக்கியன , ஏனைய பொருள்களின் தோற்றங்களுக்கு முன்னே தோன்றியன . சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்வனவாம் .

குறிப்புரை :

போது அலர்ந்த - போது அலர்ந்தது போன்ற . அரக்கனையும் , உம்மை உயர்வு சிறப்பு . இவையிரண்டனாலும் , முறையே மென்மையும் வன்மையும் அருளியவாறு . முந்தாகி - முதற்காலமாய் நின்று . முன்னே முளைத்தல் - ஏனைப் பொருள்களின் தோற்றங்கட்கெல்லாம் முன்னே தோன்றுதல் ; இதுவே . சிவதத்துவ நிலையாகச் சொல்லப்படுவது . நான்காவது தொடர் அரியும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற நிலை ; இதுவே , சதாசிவ தத்துவ நிலையாகச் சொல்லப்படுவது , ஐந்தாவது தொடர் உருவத் திருமேனி கொண்டு உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை ; இதுவே ஈசுவரத் தத்துவ நிலையாகச் சொல்லப்படுவது ; சுத்தவித்தை ஈசுரத் தத்துவத்துள்ளும் , சத்தி தத்துவம் சிவதத்துவத்துள்ளும் , அடங்க , சுத்த தத்துவம் மூன்றாகக் கூறப்பட்டவாறு உணர்க . ஆறாவது தொடரால் உயிருணர்வைப் பிணித்தற்றன்மை அருளியவாறு . வெந்தார் . எரிக்கப்பட்டார் . வெந்தாரது நீறு என்க . இதனால் எஞ்ஞான்றும் அழிவின்றி நிற்றலையும் , யாவும் அழிந்தபின் மீளத் தோற்றுதற்கு முதலாதலையும் அருளியபடி . ` முந்தாகி ` முதலிய ஐந்தனாலும் உலகிற்குக் காரணமாய்த் தனக்கு ஒரு காரணமின்றி நிற்றல் அருளிச் செய்யப்பட்டது .

பண் :

பாடல் எண் : 1

செல்வப் புனற்கெடில வீரட்டமும்
சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும்
தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே.

பொழிப்புரை :

நீர் மிக்க கெடிலநதியால் செல்வவளம் பெற்ற அதிகை வீரட்டம் , சிற்றேமம் , மிக்க பரப்பினை உடைய குளிர்ந்த குற்றாலம் , தில்லைச் சிற்றம்பலம் , தெற்கில் உள்ள மதுரை , அழகிய ஆனைக்கா , சிராப்பள்ளி , நல்லூர் , தேவன்குடி , மருகல் , சான்றோர்கள் வழிபட்டுத் துதிக்கும் நாரையூர் ஆகியன - கல்லலகு என்ற வாச்சியத்தையும் , நீண்ட புருவச் சுவடுடைய மண்டையோட்டினையும் கட்டங்கம் என்ற படைக்கலத்தையும் ஏந்திய சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம் .

குறிப்புரை :

தேவன்குடி - திருந்துதேவன்குடி . கல் அலகு - தாளம் . ஓர் ஆயுதம் என்பாரும் உளர் . ` ஒருவாச்சியம் ` என்றது தமிழ்ப் பேரகராதி ( லெக்ஸிகன் ), ` கல்லலகும் கபாலமும் ஏந்தி ` என்க . வேண்டும் இடங்களில் எல்லாம் உம்மை விரிக்க .

பண் :

பாடல் எண் : 2

தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய் நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணா மலை
அறையணிநல் லூரும் அரநெ றியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , கோவலூர் வீரட்டம் , வெண்ணெய்நல்லூர் , அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைநீரை உடைய அண்ணாமலை , அறையணி நல்லூர் , அரநெறி , இடைமருது , இன்னம்பர் , ஏகம்பம் , மேகத்தொடு விளங்கும் சோலைகளை உடைய கயிலாயம் என்பன - நாம் துதிக்குமாறு நெற்றிக்கண்ணனாகிய எம் பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் . அத் தலங்களில் எம்பெருமானைப் போற்றுங்கள் .

குறிப்புரை :

தீர்த்தம் - தூய்மை ; தெய்வத் தன்மை . அரநெறி - சிவநெறி ; அஃது ஒரு தலத்திற்குப் பெயராயிற்று ; அது , திருவாரூரில் உளது . கார்த்தயங்கு - காரொடு ( மேகத்தொடு ) தயங்குகின்ற ( விளங்குகின்ற ). ` வீரட்டம் முதலியன , நீர் ஏத்துதற்பொருட்டாகத் திருக்கோயில் கொண்டு நின்ற ஈசனாகிய கண்ணுதலானது காப்புக்களாம் ; ஆதலின் , அவற்றைச் சென்று ஏத்துமின்கள் ` என முடிவு செய்க .

பண் :

பாடல் எண் : 3

சிறையார் புனற்கெடில வீரட்டமும்
திருப்பா திரிப்புலியூர் திருவா மாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்த நின்ற
சோற்றுத் துறைதுருத்தி நெய்த் தானமும்
அறையார் புனலொழுகு காவி ரிசூழ்
ஐயாற் றமுதர் பழனம் நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப் பேரும்
கழுக்குன்றும் தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

பாறைகளில் மோதிப் பெருகிவருகின்ற நீரை உடைய காவிரியால் தென்புறம் சூழப்பட்ட திருவையாற்றில் அமுதமாக உகந்தருளியிருக்கும் பெருமான் தடுக்கப்படுகின்ற நீரை உடைய கெடில நதிக் கரையிலுள்ள அதிகை வீரட்டம் , பாதிரிப்புலியூர் , ஆமாத்தூர் , நீர்த்துறைகளை அடுத்த சோலைகளில் வாழும் முனிவர்கள் துதிக்க இருக்கும் சோற்றுத்துறை , துருத்தி , நெய்த்தானம் , இருண்ட சோலைகளால் சூழப்பட்ட கானப்பேரூர் , கழுக்குன்றம் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ளான் .

குறிப்புரை :

சிறை - அணை . துறை - ஆசிரியர் நிற்பித்த நெறி . ` முனிகள் ` என்பதில் கள் ஈறு உயர்திணைப் பன்மை யுணர்த்துதல் , ` கடிசொல் லில்லைக் காலத்துப் படினே ` ( தொல் - சொல் - 452) என்பதனாற் கொள்ளப்பட்டது . ஐயாற்றமுதராகிய ` தம்முடைய காப்புக்கள் ` என்க . இதனானே ஐயாறும் கொள்ளப்பட்டது . ` அமுதன் ` என்பது பாடம் அன்று . கறை - கறுப்பு ; மேகம் ; இருள் என்றலுமாம் . ` காவிரிசூழ் ` என்பது இருமாச்சீர்க்கு ஈடாக ஒரு விளங்காய்ச்சீர் வந்தது ; வருகின்ற திருப்பாடலிலும் இவ்வாறு வருதல் காண்க .

பண் :

பாடல் எண் : 4

திரையார் புனற்கெடில வீரட்டமும்
திருவாரூர் தேவூர் திருநெல் லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்து றையும்
வரையா ரருவிசூழ் மாந தியும்
மாகாளம் கேதாரம் மாமேருவும்
கரையார் புனலொழுகு காவி ரிசூழ்
கடம்பந் துறையுறைவார் காப்புக் களே.

பொழிப்புரை :

கெடிலக் கரை வீரட்டம் , திருவாரூர் , தேவூர் , நெல்லிக்கா , புகழை உடைய சான்றோர் வழிபடும் ஒற்றியூர் , ஓத்தூர் , மாற்பேறு , மாந்துறை , மலை அருவிகள் சூழ்ந்த மாநதி , மாகாளம் , கேதாரம் , மாமேரு என்பன காவிரி சூழ்கடப்பந்துறையில் உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருத்தலங்களாம் .

குறிப்புரை :

உரையார் - உரைத்தல் , புகழ்தல் உடையவர் . மாநதி , மாகாளம் , மாமேரு இவை வைப்புத் தலங்கள் . ` கடம்பு ` என்னும் மரப்பெயர் அம்முச்சாரியை பெற்றது .

பண் :

பாடல் எண் : 5

செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும்
திரிபுராந் தகம்தென்னார் தேவீச்சரம்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும்
குடமூக்கும் கோகரணம் கோலக் காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்து றையும்
கழுநீர் மதுவிரியுங் காளிங்க மும்
கணபதீச் சரத்தார்தங் காப்புக் களே.

பொழிப்புரை :

கெடிலக்கரை அதிகை வீரட்டம் , திரிபுராந்தகம் , அழகிய தேவீச்சரம் , வெள்ளம் சூழும் கோட்டுக்கா , குடமூக்கு , கோகரணம் , கோலக்கா , இழித்துரைக்கும் தன்மை இல்லாத பனங் காட்டூர் , பனையூர் , பயற்றூர் , பராய்த்துறை , கழுநீர்ப் பூக்களிலிருந்து தேன் வெளிப்படும் காளிங்கம் என்பன கணபதீச்சரத்தை உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருத்தலங்களாம் .

குறிப்புரை :

திரிபுராந்தகம் , தேவீச்சரம் , கோட்டுக்கா , காளிங்கம் - இவை வைப்புத் தலங்கள் . கணபதீச்சரம் - திருச்செங்காட்டங்குடி . குடமூக்கு - குடந்தை . ( கும்பகோணம் )

பண் :

பாடல் எண் : 6

தெய்வப் புனற்கெடில வீரட்டமும்
செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வந் திரியும் பருப்ப தமும்
பறியலூர் வீரட்டம் பாவ நாசம்
மவ்வந் திரையு மணிமுத்த மும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சு ழியும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங்
கழிப்பாலை தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம் , செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர் , கடல் வெள்ளம் அணுகும் சீசைலம் , பறியலூர் வீரட்டம் , பாவநாசம் , இன்னிசை முழங்கும் மணிமுத்தம் , மறைக்காடு , வாய்மூர் , வலஞ்சுழி , ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் .

குறிப்புரை :

பிடவூரும் , பாவநாசமும் வைப்புத்தலங்கள் . அவற்றுள் பிடவூர் சோழநாட்டின் கணுள்ளது ; சேரமான் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஞான உலாவினைத் திருக்கயிலையிற் கேட்டு மாசாத்தனார் நிலவுலகில்வந்து வெளிப்படுத்திய இடம் . பவ்வம் சென்று நின்று திரியும் - கடல் சென்று நிறைந்து திரும்பும் ; என்றது , ` ஊழியினும் அழியாத ` என்றவாறு . ` ம ` என்பது ஏழிசைகளூட் சிறப்புடையதொன்று , ` இழும் ` என்பது எனலுமாம் . ` வந்து மவ்வினை இரையும் ` என்க . இரைதல் - ஒலித்தல் . மணிமுத்தம் , வைப்புத்தலம் . கவ்வை - ஆரவாரம் .

பண் :

பாடல் எண் : 7

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்
உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையார் விளமர் வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபு ரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , சீர்காழி , வல்லம் , திருவேட்டி , நீர்வளம் மிக்க ஏடகம் , ஊறல் , அம்பர் , உறையூர் , நறையூர் , அரண நல்லூர் , வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவ பெருமான் உகக்கும் விளமர் , வெண்ணி , மீயச்சூர் , வீழிமிழலை , நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம் .

குறிப்புரை :

` தீக்காலி ` என்பதும் பாடம் . இப்பெயருடையதொரு வைப்புத்தலம் உண்டு . திருவேட்டி , அரணநல்லூர் , கரபுரம் - இவை வைப்புத் தலங்கள் , உறையூர் - திருமுக்கீச்சரம் . ` விடையான் ` என்பது பாடம் அன்று .

பண் :

பாடல் எண் : 8

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்
திண்டீச் சரமுந் திருப்பு கலூர்
எள்ளும் படையான் இடைத்தா னமும்
ஏயீச் சுரமுநல் லேமங் கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடி காவும்
குரங்கணின் முட்டமுங் குறும்ப லாவும்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கி யேத்துங்
காரோணந் தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

பூதப்படையை உடையவரும் , கூத்தினை நிகழ்த்துபவரும் , ஆகிய பெருமானார் உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள் , அதிகை வீரட்டம் , திண்டீச்சரம் , புகலூர் , இடைத்தானம் , ஏயீச்சுரம் , ஏமம் , கூடல் , கோடிகா , குரங்கணில் முட்டம் , குறும்பலா , திருவடி ஞானம் பெறச் சத்திநிபாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் நாகை குடந்தைக் காரோணங்கள் , என்பனவாகும் .

குறிப்புரை :

கூடல் - மதுரை . திண்டீச்சரம் , இடைத்தானம் , நல்லேமம் இவை வைப்புத் தலங்கள் , எள்ளும் படை - பூதப்படை . இலயம் - கூத்து . குறும்பலா - திருக்குற்றாலம் . களிப்பைத் தருதலின் திருவடி ஞானமும் ` கள் ` எனப்படும் என்பது , ` காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே - மாயக்கள் ளுண்டாரென் றுந்தீ பற - வறட்டுப் பசுக்களென்றுந்தீ பற ` ( திருவுந்தியார் . 43) என்பதும் காண்க . தெள்ளியார் - சத்திநிபாதம் பெற்றவர் . ` இலயத்தார் தம்முடைய காப்புக்கள் ` என்க . ` திருப்புகலூர் ` என விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் ஒன்று .

பண் :

பாடல் எண் : 9

சீரார் புனற்கெடில வீரட்டமும்
திருக்காட்டுப் பள்ளி திருவெண் காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர் நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வா யிலும்
காரார் கமழ் கொன்றைத் தாரார்க் கென்றும்
கடவூரில் வீரட்டங் காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , காட்டுப்பள்ளி , வெண்காடு , உலகு புகழும் சிறப்பினை உடைய பைஞ்ஞீலி , பந்தணைநல்லூர் , பாசூர் , நல்லம் , வயல்சூழ்ந்த நின்றியூர் , நெடுங்களம் , நெல் வெண்ணெய் , நெல்வாயில் , கடவூர் வீரட்டம் என்பன கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானுடைய திருத்தலங்களாம் .

குறிப்புரை :

` கடவூரில் உள்ள வீரட்டமும் ` என விரித்து மேலே கூட்டி , ` என்றும் காப்புக்கள் ` என முடிக்க .

பண் :

பாடல் எண் : 10

சிந்தும் புனற்கெடில வீரட்டமும்
திருவாஞ் சியமும் திருநள் ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவதாம்
இடைச்சுரமும் எந்தை தலைச்சங் காடும்
கந்தங் கமழுங் கரவீரமும்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , வாஞ்சியம் , நள்ளாறு , தண்பொழில் சூழ் அயோகந்தி , ஆக்கூர் , ஆவூர் , ஆன்பட்டி , இடைச்சுரம் , தலைச்சங்காடு , நறுமணம் கமழும்கரவீரம் , சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம் .

குறிப்புரை :

அயோகந்தி , ஆன்பட்டி இவை வைப்புத் தலங்கள் . அயோகந்தி , ` அசோகந்தி ` என்றும் சொல்லப்படும் . ` இடமாவது ` என்பது பாடம் அன்று .

பண் :

பாடல் எண் : 11

தேனார் புனற்கெடில வீரட்டமும்
திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்
கானார் மயிலார் கருமாரியும்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , செம்பொன்பள்ளி , பூவணம் , தேவரும் வணங்கும் மணஞ்சேரி , மதில்களை உடைய உஞ்சை மாகாளம் , வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம் , விளங்கும் சீசைலம் , பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம் .

குறிப்புரை :

உஞ்சை - உஞ்சேனை மாகாளம் . உஞ்சேனை . மாகாளம் , வாரணாசி , வெகுளீச்சரம் , கருமாரி வைப்புத் தலங்கள் . ஏண் - பெருமை . எகுளீச்சரம் என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 12

திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மாநிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரம புரம்சுழியல் பெண்ணாகடம்
கருநீல வண்டரற்றுங் காளத்தியும்
கயிலாயந் தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , அளப்பூர் , அதிகைக்குத் தெற்கில் உள்ள சித்தவடம் , நீர் வளம் மிக்க மாநிருபம் , மயிலாப்பூர் , பிரமபுரம் , சுழியல் , பெண்ணாகடம் , நல்ல நீலநிறமான வண்டுகள் ஒலிக்கும் காளத்தி , கயிலாயம் என்பன அடியவர்களால் நிலையாகப் போற்றப்படும் கங்கை தங்கும் சடையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் .

குறிப்புரை :

அளப்பூர் , சித்தவடம் , மாநிருபம் இவை வைப்புத் தலங்கள் . சில தலங்ளைப் பின்னும் வேறு பெயராற் கூறியது ` அப்பெயரால் அறியப்படும் சிறப்புப்பற்றி . சீகாழி - பிரமபுரம் . தெற்கு ஏறு - தென்றிசையில் பொருந்திய .

பண் :

பாடல் எண் : 1

விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காண் அவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

விற்று அப்பணத்தால் உணவு வாங்குவதற்குரிய பொருள் ஒன்றும் தன்பால் கொள்ளாத வறியவனைப் போலக் காட்சி வழங்கி, கச்சி ஏகம்பத்தில் உகந்தருளியிருந்து, பிச்சை எடுத்தலைத் தவிர உணவுக்கு வேறு வழியில்லாத பெருந்திறமையனாய், மயானத்துக் காணப்படுபவனாய், ஏழு உலகங்களையும் இடையறாது தாங்கி நிற்கும் கற்றூண் போல்வானாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணங்களின் தலைவனாகிய எம்பெருமான் எப்பொழுதும் என் மனக்கண்களுக்குக் காட்சி வழங்கியவாறே உள்ளான்.

குறிப்புரை :

` விற்று ` என்னும் எச்சம், ` ஊண் ` என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயரைக் கொண்டது . ` ஊண் ` என்பது ஆகுபெயராய், அதற்கு ஏதுவாய பொருள்மேல் நின்றது. ` மற்றூண் ` என்றதும், அவ்வாறே நின்றது. ` பிச்சை` என்பதும், அதனாற்பெறும் உணவையே குறித்தது. மா சதுரன் - பெருந் திறமையன். ` பிச்சை யல்லால் மற்றூண் ஒன்றில்லாத மா சதுரன் ` என்றது, எள்ளி நகைத்தல்போலக் கூறி, இறைவரது இயல்பாய பற்றற்ற நிலையை வியந்தருளியவாறு. மயானத்து மைந்தன் - சுடலைக்கண் வாழும் ஆற்றலுடையவன்; என்றது, ` யாவரும் ஒடுங்குங் காலத்துத் தான் ஒருவனே ஒடுங்காது நிற்கும் முதல்வன் ` என்றபடி. மாசின்மை பொன்னுக்கு அடை. ` பொன் தூண் `, அருமையும் ஒளியும் பற்றிய உருவகம் . பொய்யாது - இடையறாது . பொழில் - உலகம் . தாங்குதல் - நிலைபெறுவித்தல். ` கல் தூண் ` என்றதும் உருவகம். கணநாதன் - சிவகணங்கட்குத் தலைவன். ` சிவகணம் ` என்பது மெய்யுணர்ந்தார் திரட்சி . ` கண் உளான் ` என்றது, ` கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் - நுண்ணியர் எம் காதலவர் ` ( குறள் 1126) என்றாற்போல காதல் மிகுதியால் நிகழ்ந்ததோர் அனுபவம்.

பண் :

பாடல் எண் : 2

இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

என் வினைகளை அழிப்பவனாய் , ஏகம்பத்தில் உறைபவனாய் , அணிகலன்களாக எலும்புகளையே அணிபவனாய் , எல்லா உலக நிகழ்ச்சிகளையும் வகுத்து அமைப்பவனாய் , மூவுலகங்களிலும் வியாபித்திருப்பவனாய் , பஞ்சாதியாக முறையாக வழு ஏதுமின்றி வேதங்களை ஓதும் பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கிய பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாய் , பராய்த்துறை . பழனம் , பைஞ்ஞீலி இவற்றில் உகந்தருளியிருப்பவனாய்க் கொன்றைப் பூவினாலாய மார்பு - மாலை , முடிமாலை இவற்றை அணிபவனாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

இடித்தல் - அழித்தல் , முடித்தல் - வகுத்தமைத்தல் . எனவே , உலக நிகழ்ச்சிகள் யாவும் அவன் வகுத்தவகையே நிகழ்வன என்பதாம் . ஐம்புரி என்பது ` பஞ்சாதி ` என்னும் வேத உறுப்பினை . இஃது ஐம்பது சொல்லாற் புரிக்கப்பட்ட தாயினும் , இப்பெயராற் கூறப்படுதல் வழக்கு . வேதத்தைப் படித்தான் , பிரமன் . பாசுபதன் - பசுபதியாதலை விளக்கும் அடையாளங்களை யுடையவன் . கடி - புதுமை . ` கடிக்கொன்றைக் கமழ்தார் கண்ணியான் ` என மாற்றிப் பொருள் கொள்க . தார் , மார்பில் அணியும் மாலை . கண்ணி , முடியில் அணியும் மாலை . ` கண்ணி கார்நறுங்கொன்றை ; காமர் - வண்ண மார்பிற் றாருங்கொன்றை ` என ( புறநானூறு - கடவுள் வாழ்த்து ) வருதலுங் காண்க .

பண் :

பாடல் எண் : 3

நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன்காண் அவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

நாராயணனாய் , பிரமனாய் , நான்கு வேதங்களையும் ஓதுபவனாய் , ஞானப் பெருங்கடலின் அக்கரையை அடையச் செய்யும் படகு போன்ற நிறைவானவனாய்ப் புண்ணியனாய்ப் பழையோனாய் , முறுக்குண்ட சடை மீது கங்கையை ஏற்ற தூயோனாய் , எங்கும் இயங்குபவனாய்ச் சந்திர சூரியர்களை உடனாய் இருந்து செயற்படுப்போனாய் , நற்பண்புகளில் தனக்கு உவமை இல்லாதானாய் , மெய்யுணர்வுடையோருக்குத் தானே முதற் பொருளாகத் தோன்றுபவனாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணத் தலைவனாகிய எம்பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

` காப்பவன் , படைப்பவன் ` என்னும் பொருளுடையனவாய , ` நாரணன் , நான்முகன் ` என்பன , முத்தொழில்களும் , சிவபிரானுடைய தொழில்களே என்பதை அறிவுறுத்து நின்றன . எனவே , அவற்றுள் ஒரோவொரு தொழிலை நல்வினை மிகுதியாற் பெற்று நின்ற கடவுளரையும் சிவபிரானையும் ஒருவரேயாக மயங்கிக்கொள்ளுதல் வேண்டா என்பதாம் . நாவாய் - மரக்கலம் . ஞானத்தின் கரையை அடையச்செய்தலின் அக் கடற்கு நாவாய் அன்னவன் என்றருளினார் . புண்ணியன் - அறவடிவினன் . புராணன் - பழையோன் ; யாவர்க்கும் முன்னோன் . சாரணன் - எங்கும் இயங்குபவன் . எல்லாவற்றையும் அறிபவன் ; எங்கும் தோற்றுபவன் . சந்திர சூரியர்களது தட்ப வெப்பங்களும் , ஒளிகளும் இறைவனுடைய திருவருளின் பயனே யாதல்பற்றி , ` சந்திரன்காண் கதிரோன் தான் காண் ` என்றருளினார் ; ` நின்வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள ; நின்தண்மையும் சாயலுந் திங்களுள ` ( பரிபாடல் .4. அடி 25 - 26. ) என்பதுங் காண்க . ` தன்மைக்கண் தானே ` என்றது , தன்மையிடத்தில் தன்னோடு உளப்படுத்திக் கூறத்தக்கார் ஒருவரும் இன்றித்தான் ஒருவனேயாய் நிற்பவன் ; தனக்குவமை யில்லாதான் என்றருளியவாறு . இனி , ` எல்லாப் பொருள்களும் தம்தம் இயற்கை நிலையில் நிற்குங்கால் ` தன்னின் வேறாதல் தோன்றாது நிற்ப , தான் ஒருவனேயாய் நிற்பவன் ` என்றருளியதூஉமாம் . ` தக்கோர்க்கெல்லாம் காரணன் ` என்றது , ` தக்கார்க்காயின் முதற்பொருள் தானேயாய்த் தோற்றுபவன் ` என்றபடி . தகுதியாவது . மெய்யுணர்வு ( அருட்கண் ). எனவே , ` மயக்க உணர்வுடையார்க்குத் தான் முதல்வனாய்த் தோன்றான் ` என்பதாம் .

பண் :

பாடல் எண் : 4

செற்றான்காண் என்வினையைத் தீயாடி காண்
திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க்
குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோரேத்தும்
சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன்காண் அவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

என் தீவினைகளை அழித்துத் தீயின்கண் கூத்து நிகழ்த்தித் தன்னைத் தியானிப்பவர்களுக்கு நெருக்கமானவனாய் , உமா தேவியின் கணவனாய் , தேவர்கள் துதிக்கும் வேத வடிவினனாய் , மன் மதனுடைய அம்பு செலுத்தும் ஆற்றலைச் சாம்பலாக்கக் கற்றவனாய் , ஒற்றியூர் , ஏகம்பம் , சோற்றுத்துறை என்ற திருத்தலங்களில் உறை பவனாய்க் காளத்தியில் காணப்படும் கணநாதன் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

தீ ஆடி - நெருப்பின்கண் நின்று ஆடுபவன் ; சுடலைக் கண் சாம்பர்போல நெருப்பும் பரந்திருத்தல் அறிக . ` காடுடைய சுடலைப் பொடி பூசி ` ( தி .1. ப .1. பா .1.) என்றாற்போல வரும் பொடிபூசுதல் வேறு ; ` மண்பொடிக் கொண்டெரித்தோர்சுடலை மாமலை வேந்தன் மகண்மகிழ - நுண்பொடிச் சேரநின்றாடி நொய்யன செய்ய லுகந்தார் ` ( தி .1. ப .39. பா .7.) என்றாற்போல வரும் பொடியாடுதல் வேறு . அவ்வாறே தீ ஏந்துதல் வேறு ; தீ ஆடுதல் வேறு என்க . ` கையெரி வீசி நின்று கனலெரியாடுமாறே ` ( தி .4. ப .22. பா .4.) என்புழி இரண்டும் ஒருங்கு அருளிச் செய்யப்பட்டமை காண்க . ` தழலில் நின்றாடி ` ( பெரிய நாயகியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் -3) எனப் பிற்காலத்தாருங் கூறுதல் நோக்கத்தக்கது . உற்றான் - உறவினன் . ` இமையோர் ஏத்தும் சொல் ` என்புழிச் சொல் என்றது உருவகமாய் , சொல்லே உருவாய் நிற்பவன் எனப் பொருள் தந்தது , ` அறிந்தோர் சொன்மலை ` ( தி .11 திருமுருகாற்றுப்படை -263) என்றாற்போல . சுறா வேந்தன் - மீனக் கொடியுடைய தலைவன் ; மன்மதன் . ஏ வலம் - அம்பின் வலிமை . ` கற்றான் ` என்றது . ` நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் - தீயாண்டுப் பெற்றா ளிவள் ` ( குறள் - 1104) என்றாற்போலக் காதல்பற்றி இயற்கையைச் செயற்கையாக்கி அருளிய பான்மை வழக்கு .

பண் :

பாடல் எண் : 5

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

மனத்திலும் தலைமேலும் சொற்களிலும் உள்ளானாய் , மனம் மெய்மொழிகளைச் செயற்படுத்தித் தன் திருவடிகளை வாயாரப்பாடும் தொண்டர் இனத்தானாய் . தேவர்கள் தலை மேலானாய் , ஏழுலகங்களையும் கடந்தவனாய் , இவ்வுலகில் செவ்விதாகிய பொன் போன்ற நல்ல விளைவை நல்கும் குறிஞ்சி முதலிய நிலத்தில் உள்ளானாய் , நறிய கொன்றைப் பூவில் உறைபவனாய் , மலை நெருப்பு காற்று மேக மண்டலம் இவற்றில் உடனாய் இருந்து இவற்றைச் செயற்படுப்பவனாய்க் கயிலாயத்து உச்சி உள்ளானாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

` மனத்தகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் ` என்றது , ` மனம் , மொழி , மெய் ` என்னும் முப்பொறிகளினும் நின்று அவற்றைத் தொழிற்படுத்துவோன் என்றருளியவாறு . இப்பால் - இவ்வுலகத்துள் . செம்பொன் புனத்தகத்தான் - செவ்விதாகிய பொன்னையுடைய குறிஞ்சி நிலத்து உள்ளவன் ; இங்ஙனம் கூறவே , இனம் பற்றி ஏனைய மூன்று நிலங்களும் கொள்ளப்படும் . இனி இவ்வாறன்றி , ` செவ்விய பொன்போல்வதும் , புனங்களில் உள்ளதும் ஆகிய ( கொன்றைப் போது )` என்று உரைத்தலும் ஆம் . இப் பொருட்கு , ` புனம் ` என்றது முல்லை நிலத்தைக் குறித்ததாகவும் , புனத்தகத்தான் என்புழி ` ஆன் ` என்பதனை மூன்றன் உருபாகவும் கொள்க . ` புனத்தகத்தார் ` எனவும் பாடல் ஓதுப . ` கொன்றைப் போதின் உள்ளான் ` என்றது , கொன்றைப்பூ சிவபிரானுக்கு அடையாளப் பூவாதற் சிறப்புப் பற்றி , அதன்கண் விளங்கி நிற்பான் என்றவாறு . கனம் - மேகம் .

பண் :

பாடல் எண் : 6

எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
ஏகம்பம் மேயான்காண் இமையோ ரேத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்
நல்லவிடை மேல்கொண்டு நாகம் பூண்டு
நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

ஏனைய பொருள் தோன்றுதற்கு முன்னும் இருப்பவனாய் , ஏகம்பத்து விரும்பி உறைபவனாய் , தேவர்கள் துதிக்கப் பொறிவாயில் ஐந்து அவித்தவனாய் , முறுக்கேறிய சடையின் மேல் பாய்ந்த கங்கையை அதன்கண் நிரப்பியவனாய் , பெரிய காளைமீது ஏறிப் பாம்புகளைப் பூண்டு குளிர்ந்த மண்டை யோட்டை ஏந்தி , நாணத்தைக் காப்பதொரு பொருளாகத்துறந்தார் அணியும் காவி யாடை உடுத்துக் காபாலம் என்னும் கூத்தாடும் காளத்திநாதன் என் கண் உள்ளான் .

குறிப்புரை :

` தோன்றாமே ` என்புழி , நிற்க ` என ஒரு சொல் வருவிக்க . ` எல்லாம் தோன்றாமே முன் தோன்றினான் ` எனக் கூட்டுக . ` தோன்றினான் ` என்றது , ` உள்ளான் ` என்பதையும் , ` புலன் ஐந்தும் போக்கினான் ` என்றது , இயல்பாகவே பாசங்களின் நீங்கினமையையுமே குறித்தன . ` பாசத்துட் பட்டவராகிய இமையோர் ஏத்துமாறு , பாசம் இலனாய் நிற்பவன் ` என்றருளியவாறு . பூரித்தல் - நிரப்புதல் . நளிர் - குளிர்ச்சி ; இரத்தம் முதலிய தாதுக்கள் இல்லாமை . ` ஓர் நாணாய் ` என்பது , ` நாணத்தைக் காப்பதொரு பொருள் ` என்னும் அளவாய் நின்றது . அற்ற கல்லாடை - துறந்தமையைக் காட்டும் காவியுடை . காபாலி - ` காபாலம் ` என்னும் கூத்தையுடையவன் . ` கபாலி ` என்பது நீட்டலாயிற்று என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 7

கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

நீலகண்டனாய் , எமக்குக் காட்சி வழங்குபவனாய் , அருளால் ஏற்ற பெற்றியின் பல்வேறு வடிவு உடையவனாய் , வண்டுகள் நுகரும் கொன்றைப் பூவினை அணிந்தவனாய் , ஒளிவீசும் பவள வண்ணனாய் , ஏகம்பனாய் , எட்டுத் திசைகளும் தானேயாய பண்பினனாய் , முப்புரங்களையும் தீக்கொளுவியவனாய் . நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவனாய் , என் உள்ளத்திலிருந்து தீவினைகளை அழிப்பவனாய் , யானைத் தோலைப் போர்த்து மகிழ்ந்து காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்திப் பெருமான் என் கண் உள்ளான் .

குறிப்புரை :

கரி உருவு - கரிபோன்ற நிறம் ; கரிந்த உருவம் எனலுமாம் . ` எம் கண் உளான் ` என்றது ` அடியவர் கண்ணில் உள்ளான் ` என்றதாகக் கொள்க . கண்டன் - வரையறைப்பட்டவன் ; ` அருளால் ` ஏற்ற பெற்றியிற் பல்வேறு வடிவுடையவனாய் நிற்பவன் ` என்றவாறு . எரி பவளவண்ணன் - நெருப்பும் பவழமும் போன்ற நிறமுடையவன் . ` குணம் ` என்றது முற்றும் உணர்தலை ; உணர்தல் கூறவே , இயக்குதலும் தானே பெறப்படும் . ` தீர்த்திடும் ` என்னும் எச்சம் , ` சிந்தையான் ` என்பதன் இறுதிநிலையோடு முடியும் . எனவே , தீர்த்திடுவான் ` எனவும் , ` சிந்தையான் ` எனவும் அருளியவாறாம் .

பண் :

பாடல் எண் : 8

இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண்
வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய் , தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய் , வில்லை ஏந்தி வேடன் உருக் கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய் . பூணூலும் பூண்ட மார்பினனாய் , வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய் , பார்வதி கணவனாய் , மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

` இல் ஆடிச் சென்று சில்பலி ஏற்கின்றான் ` என இயைக்க . இல் ஆடி - இல்லங்கள் தோறும் நடந்து . சில் பலி - அட்டனவும் அடுதற்கு உரியனவும் ஆகிய பொருள்கள் . வில்லாடி - வில் விளையாடல் செய்து . அகலம் - மார்பு . மல் ஆடு - வலிமை பொருந்திய . மழு வாள் - மழுவாகிய படைக்கலம் ; கையில் ஏந்துவன வற்றைத் தோளின்கட் சார்த்துதலும் உண்டாகலின் , மழுவைத் தோளின்கண் உளதாக அருளினார் .

பண் :

பாடல் எண் : 9

தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க
ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்
நம்பன்காண் ஞானத் தொளியா னான்காண்
வானப்பே ரூரு மறிய வோடி
மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக்
கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

வண்டுகள் நுகரும் தேனை உடைய கொன்றை சூடியாய்த் திரு ஏகம்பத்தனாய் , தேன் ஒழுகும் பூக்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்மையை இடப்பாகமாகக் கொண்டவனாய் , நமக்கு இனியவனாய் , ஞானப் பிரகாசனாய் , ஊழியிறுதியில் வானமும் உலகும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனாய் , வண்டுகள் பொருந்திய சோலைகளை உடைய திருக்கானப்பேரூரில் உறைபவனாய் நீலகண்டனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

` தேனப் பூ ` என்பதில் அகரம் சாரியை . ` உண்ட ` என்னும் பெயரெச்சம் , அதன் காரணந் தோன்ற நின்று , உண்ணுதற்குச் சென்ற எனப் பொருள் தந்து நின்றது , ` அறிவறிந்த மக்கட் பேறு ` ( குறள் . 61) என்புழிப் போல , இவ்வாறருளினாரேனும் , ` கொன்றையினது வண்டு உண்டதேனப் பூவினன் ` என்றல் திருவுள்ளமாகக் கொள்க . தேன் ஆர்ந்து உக்க - தேன் நிரம்பித் ததும்பிய . ` உக்க பூ ` என இயைக்க . ` பூங்கோதையாள் ` என்பது ஒருசொற் றன்மையாய் , ` மகடு ` என்னும் பொருள் உடைதாய் நின்று , ` ஞானம் ` என்னும் அடையடுத்து நின்றது . ` ஞானமே வடிவாகிய அம்மை ` என்றருளியவாறு . ` ஞானப் பூங்கோதை ` என்பதே இத்தலத்து அம்மைக்குப் பெயராக வழங்குதல் இங்கு அறியற்பாலது . ` ஞானத்து ஒளியானான் ` என்புழி நின்ற ஞானம் , உயிரறிவு . அதன்கண் ஒளியானான் என்றருளியது . அவ் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்தலை . ` வானப் பேரூர் ` என்புழி , ஊர் என்றருளியது , உலகத்தை . உம்மை சிறப்பும்மை . மறிய - அழிய . ஓடி - விரைந்து , ` மடித்து நின்றான் ` எனற்பாலது , ` மட்டித்து நின்றான் ` என விரித்தலாயிற்று ; எல்லா உலகத்தையும் எஞ்சாது ஒடுக்க வல்லவன் என்பது பொருள் . எல்லாம் ஒடுங்கியபின் ஆடல் புரிந்து நின்றான் ` என்றலுமாம் . கானப்பேர் , பாண்டிநாட்டுத் தலம் .

பண் :

பாடல் எண் : 10

இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான்காண்
குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
மறையுடைய வானோர் பெருமான் தான்காண்
மறைக்காட் டுறையு மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

யாவருக்கும் முதல்வனாய் , ஏழுலகும் , ஏழ் கடலும் இவற்றைச் சுற்றிய மலைகளும் ஆகிப் பலகுறைபாடுகளையும் உடைய உயிர்கள் தனக்குச் செய்யும் குற்றறேவல்களை ஏற்றுக் குடமூக்குத் தலத்திலுள்ள கீழ்க்கோட்டத்தை விரும்பி , வேதம் ஓதும் வானோருக்கும் தலைவனாய்த் திருமறைக் காட்டுத் தலத்தில் தங்கும் நீலகண்டனாய்க் கறைக் கண்டனாய்க் காபாலக்கூத்து ஆடும் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

இறையவன் - யாவர்க்கும் முதல்வன் . குறைஉடையார் - பல்வகையான குறைபாடுகளை உடைய மக்கள் . குற்றேவல் - சிறிய தொண்டு . கொள்வான் - குறைநோக்கி ஒழியாது , மாட்டாமை நினைந்து ஏற்றுக்கொள்பவன் , மறை உடைய - வேதங்கள் தமக்குப் பொருளாக உடைய , ( வானோர் ) என்க ; ` வேதங்களிற் சொல்லப்பட்ட பலதேவர் ` என்றபடி . ` வானோர் ` எனவே , உயிர்வகையினர் என்பதும் , பெருமான் எனவே , பரம்பொருள் என்பதும் பெறப்படும் . படவே , வேதங்களுள் ஒரோவிடத்தில் அவர்களைப் பரம்பொருள் போலக் கூறுதல் , ஒரோ ஒரு கருத்துப் பற்றி எனவும் , சிவபிரானே பரம்பொருள் என்பதே வேதத்தின் துணிபு எனவும் தெளிவித்தவாறாம் .

பண் :

பாடல் எண் : 11

உண்ணா வருநஞ்ச முண்டான் தான்காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்
பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொழிப்புரை :

பிறர் உண்ண இயலாத கொடிய நஞ்சினை உண்டவனாய் , ஊழித் தீயை ஒப்ப அழிப்பதனைச் செய்பவனாய்ப் பண்களுக்குப் பொருந்தப் பல வாச்சியங்களை இயக்கிப் பாடியவனாய் , தான் ஓதிய நான்கு வேதங்களில் கூறப்பட்ட இறைமைப் பண்புகளை உடையவனாய் , அண்ணாமலையானாய் , அடியார் கூட்டம் தன் திருவடிகளைத் தொழுது போற்றுமாறு அருளுபவனாய் , தன்னை மனக்கண்களால் காண்பவர்களுக்கு அரிய காட்சிப் பொருளாய் இருப்பவனாய் உள்ள காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

குறிப்புரை :

உண்ணா - உண்ணலாகாத , அரு நஞ்சம் - மீட்டல் இயலாத பெருவிடம் , அதனை உண்டான் என்றருளினமையால் , அவனது பேராற்றலுடைமையையும் , பேரருளுடைமையையும் விதந்தருளிச் செய்தவாறு . ` ஊழித்தீ அன்னான் ` என்றது , நிறமாகிய பண்பும் , முழுவதூஉம் அழித்தலாகிய தொழிலும் பற்றி வந்த உவமை உகப்பார் - விரும்புவார் ; என்றது தாருகாவனத்து முனிவர் மனைவியரை . ஆர - பொருந்த ` பண்பாடினான் ` என இயையும் . பல் இயம் - வீணை , துடி முதலிய வாச்சியங்கள் , ` பல்லியத்தோடு ` என உருபுவிரிக்க . ` எஞ்சிய பொருள்களை ஏமுறநாடி ` ( தி .11 திருமுரு காற்றுப்படை . 97) என்றாங்கு , வெளிப்படாது நிற்கும் மறைகளும் உளவாதலின் வெளிப்பட்டு வழங்கும் நான்மறைகளை ` பயின்ற நால்வேதம் ` என்றருளிச் செய்தார் . வேதத்தின் பண்பு என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகையை ` காட்டதுயானை ` என்பதுபோல , வாழ்ச்சிக்கிழமையாகக்கொண்டு , ` வேதத்தின்கண் விளங்கும் பண்பு ` என உரைக்க . ` பண்பு ` என்றது , இறைமைக் குணங்களை . அவை சத்தாதல் , ஏகனாதல் , பலவுந் தானாதல் முதலியன . கண் ஆரக் காணுதலாவது , அன்பாகிய காரணத்தால் , கண்ணுக்கு நிறைந்த , இன்பப் பொருளாகக் காணுதல் . அங்ஙனங் காண்பாரது கண்ணையும் , கருத்தையும் தன்னை யன்றிப் பிறிதொன்றையுங் காணாதவாறு ஈர்த்து நிற்றலை , ` ஓர் காட்சியான் ` என்றருளிச் செய்தார் . ` கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியுள் அண்டா ` ( தி .6. ப .26. பா .1.) ` மேவினார் பிரியமாட்டா விமலனார் ` ( தி .12 கண்ணப்ப நாயனார் புராணம் - 174) என்ற இத்திருமொழிகட்கு எல்லாம் இலக்கியமாய் நின்றது , கண்ணப்ப நாயனார் அநுபவமேயாம் . அவர் காளத்தியப்பரைக் கண்ட பின்னர் தம் உடம்பைத் தானுங் காணா தொழிந்தமை அறிக .

பண் :

பாடல் எண் : 1

வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

காபாலக் கூத்தாடும் தலைமையை உடைய பெருமான் தாளத்தொடு பொருந்தப்பாடும் இசைகள் பாடிக் கொண்டு வந்து நின்று வற்புறுத்தி நம்வளைகளைக் கவர்ந்தவராய், நாம் மனம் நெகிழும் வகையாலே நம்மைத் தம் கண்களாகிய அம்புகளாலே துன்புறுத்திக் காமத்தீ மூண்டெழுமாறு பேசி, விரைந்து செல்லும் விடையை இவர்ந்து, பலவகை நறுமணப் பொடிகளையும் செறிவாகப் பூசிக்கொண்டு, விலங்குகளின் தோலை உடுத்துப் பூணூல் அணிந்து, தம் பேரழகு தோன்றச் செல்கின்றார். ஆமாத்தூர்த் தலைவராகிய அவர் அழகினை வந்து காணுங்கள்.

குறிப்புரை :

வண்ணங்கள்- தாளத்தொடு பொருந்தப் பாடும் இசைகள். இவற்றை இசை நூலார், `திறம்` என்ப. வலி செய்தல்- வலாற்காரம் செய்தல். அஃது இவ்வாறென்பது அடுத்துக் கூறப் படுகின்றது. ``வகையால்``, `நாம் மனம் நெகிழும் வகையால்` என்க. கனல-காமத்தீ மூண்டெழுமாறு. கண்ணம்பால் எய்தமையும், கனலப் பேசினமையுமே வலாற்காரஞ் செய்தனவென்க. சுண்ணங்கள்- வெண்பொடிகள் (சாம்பர்கள்). பொடியாயின பொருள்கள் பலவாகலின், பொடிகளும் பலவாயின. துதைய-நெருங்க; `திருமேனி மூழ்க` என்றவாறு. தோன்றுவது திருவுருவமாகக் கொள்க. அடுக்கு மிகுதி பற்றி வந்தது; `நன்கு தோன்ற` என்றபடி. அண்ணலார்- தலைவர்; தந்நிகரில்லாதவர். ``அண்ணலார்`` என்புழி `ஒருவர்` என்பது வருவிக்க. அழகியர்-நல்லியல்புடையவர். ஏகாரம் தேற்றம். ``கண் அம்பால் நின்றெய்து கனலப்பேசி..... போகின்றார் வந்து காணீர்`` என்றது, `வஞ்சித்து வரையாது நீங்குகின்றார்; இதனை நீவிர் காண்மின்கள்` என்னுங் கருத்தினாலாகலின், `அண்ணலார்` என்றதும், `அழகியரே` என்றதும் குறிப்பினாற் கூறிய நகைமொழியாதலறிக. பன்மையாற் கூறியதும் அது பற்றி. `வந்து காணீர்`` என்பதனை இறுதிக்கண் வைத்துரைக்க. காண்போர் தடுத்து நிறுத்துவாராதல் பயன், `மற்றுப் பற்றறுத்துத் தம்மையே பற்றாகப் பற்றுமாறு ஆண்டுகொண்ட அடியவர்களது பற்றினை முற்றுங் களையாது தளரவிடுகின்றார்; `இஃது இவர்க்குத் தக்கது போலும்!` என்பது உண்மைப் பொருள். இதனை,
``சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை யடிமைசெய்ய
எந்தைநீ யருளிச்செய்யாய் யாதுநான் செய்வதென்னே.``
(தி.4. ப.23. பா.4)
எனவும்.
``நின்னையெப் போதும் நினையவொட் டாய் நீ நினையப்புகின்
பின்னைஅப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி.``
(தி.4. ப.112. பா.4)
எனவும் தம் நிலைக்கு இரங்கியும்,
``உன்னைஎப் போதும் மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்
என்னைஒப் பாருள ரோசொல்லு வாழி இறையவனே``
என, தம்மைத் தாமே நகைத்தும் அருளிச்செய்தன போன்ற திரு மொழிகள் நோக்கியுணர்க. இவையெல்லாம் வருகின்ற திருப்பாடல் கட்கும் ஒக்கும். ஐயனார்-முதல்வனார்.

பண் :

பாடல் எண் : 2

வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
கந்தாரந் தாம்முரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண்டி யாழ்செய்
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே.

பொழிப்புரை :

தீயிலிடப்பட்டு வெந்து போனவர் தம் வெள்ளிய சாம்பலைப் பூசி, வெண்ணிற மாலையைப் பரந்த சடையில் சூடி, வீணை ஏந்திக் காந்தாரப் பண்ணைப் பாடிக்கொண்டு எம்பெருமான் சென்று கொண்டிருக்க, அவரை நோக்கி `விடக்கறை வெளிப்பட்ட நீலகண்டரே! நும்ஊர் யாது?` என்று வினவினேன். பசியினால் வருந்தியவரைப் போல வந்து என் வீட்டினுள் புகுந்து `அசைகின்ற அழகிய இடையினை உடைய இளையவளே! அழகிய தாமரை மலர்மேல் வண்டுகள் யாழ் போல் ஒலிக்கும் ஆமாத்தூரே நம்மூர்` என்று சொல்லிப் பெருமான் போய்விட்டார்.

குறிப்புரை :

வெந்தார் - வெந்தவரது. வெள்ளை மாலை, கொக்கிறகு ஊமத்தை முதலியவற்றாலாகிய மாலை. காந்தாரம், ஒருபண்; கந்தாரம் எனக் குறுக்கலாயிற்று. முரலுதல் - பாடுதல், `பிச்சையிடச் சென்ற யான் மனநெகிழ்வுற்று, அவர் பிச்சை ஏலாதே பாடிச் செல்லுதல் பற்றி நகைத்துரைப்பேன் போல ஊர் ஏதென்றேன்` என்க. நோதல் - பசியினாலாயது. வாயிலில் நிற்றல் முதலிய வற்றினின்று பிரித்தமையின், `இல்லே` என்னும் ஏகாரம் பிரிநிலை. `இல்லே புக்கு` என்றமையான், பிறவாற்றானும் தெளிவித்து அவளைத் தமக்கு உரியவளாக உடம்படுவித்தமை பெறப்படும். `நுடங்கு ஏர் இடை மடவாய்` என்றது நலம் பாராட்டியது. அளி வண்டு - `அளி` என்னும் பெயர்த்தாகிய வண்டு; `அளிக்கத்தக்க (இரங்கத்தக்க) வண்டு` என்பது உடனிலைப் பொருள். `அளிவண்டியாழ்செய் ஆமாத்தூர்` என்றதினின்றும், `அருள்பண்ணத் தக்கார்க்கு அருள் பண்ணுவேம் யாம்` என்னும் இறைச்சிப்பொருள் தோன்றியது. `ஆமாத்தூர் என்று போயினார்` என்றது. `ஊரேது` என்று வினாவிய எனது கருத்தினை யறிந்து அதற்கு உடம்படுவார்போல விடைகூறி, அக்கருத்தை முற்றுவியாதே போயினார் என்றபடி. கருத்து வரைந்து கோடல். `அவரைக் கூட்டுவியுங்கள்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 3

கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்
கடிய விடையேறிக் காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி யில்லே புக்கு
இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

கையில் கட்டங்கம் என்ற படையை ஏந்தி, விரைந்து செல்லும் விடையை இவர்ந்து, காபாலக்கூத்தாடும் பெருமான் வேட்கையொடு பொருந்திய சொற்களைப் பேசியவாறே வீட்டிற்குள் புகுந்து வழங்கிய உணவையும் ஏற்றுக்கொள்ளாது, வீட்டை விடுத்துப் போதலையும் செய்யாது நெறிப்படாதனவும் வஞ்சனையை உடையனவுமாகிய செய்திகளையே பேசிக்கொண்டு தம்மை நோக்கும் மகளிரின் நிறை என்ற பண்பினை அழிப்பவர் போலக் காணப்படுகின்றார். வழங்கிய சிலவாகிய உணவுகளையும் ஏலாதவராய்த் தம் மனக்கருத்து இன்னது என்று வெளிப்படையாகக் கூறாதவராய் விளங்கும் ஆமாத்தூர்த் தலைவர் அழகியர்.

குறிப்புரை :

இட்டங்கள் - வேட்கையொடு பொருந்திய சொற்கள். `போவாரல்லர்` என்னும் எதிர்காலச் சொல், நிகழ்காலத்தின் கண் வந்த காலமயக்கம். பட்டிமை-நெறிப்படாமை. படிறு-வஞ்சனை. இவை இரண்டும் இத்தன்மையவான சொற்களைக் குறித்தன. `போல்கின்றார்` என்பதனை ஒப்பில் போலியாக்கி, `பரிசழிக்கின்றார்` என்றவாறாகக் கொள்க. `இடக் கொள்ளார்; பேசாநின்றார்; போல்கின்றார்` என்பன, `வந்து போகின்றானைக் கண்டேன்` என்புழி நிற்கும் நிகழ்காலச் சொற்போன்ற இறப்பில் நிகழ்வாய், `புக்கு` என்னும் செய்தெனெச்சத்தோடு இயைந்தன. பார்ப்பார்-தம்மை நோக்குவார். பரிசு - நிறை. `போல்கின்றார்` என்பதன்பின், `அதனால் யான் என் பரிசழிந்தேன்; பின்னர் வாளாபோகின்றார்` என நின்ற இசையெச்சம் வருவிக்க. அட்டிய - இட்ட. `கொள்ளார் விள்ளார்` என்றது பெயர்த்துரை. ஆண்டும், `நீங்குகின்றார்` என்பது எஞ்சி நின்றது, இவை அனைத்தையும் வினைப் பெயராக்கி, ஆமாத்தூர் ஐயனார் என்பதனோடு இயைத்து, `இவ்வாறு செய்யும் இவர் அழகியரே` என இரங்கியவாறாக உரைக்க. கொள்ளார், விள்ளார் என்பன சொல்லு வாளது குறிப்பினால் இறந்தகால மாயின வென்க.

பண் :

பாடல் எண் : 4

பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூர்த் தலைவர் படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தித் தீப்போன்ற சிவந்த மேனியராய், இமைக்காத முக்கண்களை உடையவராய் நான்கு வேதங்களையும் ஓதுபவராய்த் திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராய்த் தம் உடம்பின் ஒரு பாகத்தை உமாதேவி நீங்காத தலைக்கோலத்தை உடையவராய், தெளிந்த நீரை உடைய கங்கை தங்கும் திருமுடியினராய்த் தீ ஏந்திய கையினராய், அழகியராய்க் காட்சி வழங்குகின்றார்.

குறிப்புரை :

பசைந்த - விரும்பிய. கச்சையர் என்புழி நின்ற அர் என்னும் இறுதிநிலை, பாடல் ஆடல் என்பதனோடும் இயையும். இசைந்தது-இசையச் செய்துகொண்டது. எரியினது மேனிபோலும் மேனியை, எரியின்மேனி என்றது உபசாரம். பிசைந்த - வடித்த. அசைந்த - தங்கிய. இவ்வாற்றான் அழகியரே என்க. அழகியரே என்றது, ஈண்டு, `பார்ப்பாரைப் பரிசழித்தற்கு உரியரேயாகின்றார்; அதனால், என்பரிசினையும் அழித்துச் செல்கின்றார்` என இரங்குதற் பொருட்டாய் நின்றது. இது, வருகின்ற திருப்பாடல்கட்கும் ஒக்கும்.

பண் :

பாடல் எண் : 5

உருளுடைய தேர்புரவி யோடும் யானை
யொன்றாலுங் குறைவில்லை யூர்தி வெள்ளே
றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ
அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

சக்கரங்களை உடைய தேர், குதிரை, யானை, என்பவற்றைக் குறைவறப் பெற்றிருப்பினும் வெள்ளிய காளையையே ஊர்தியாகக் கொண்டு, இருண்ட கழுத்தினராய், சிவந்த தீயின் நிறத்தினராய், பொருள் உடையவர் அல்லர் என்றோ பொருள் இல்லாதவர் அல்லர் என்றோ கூற முடியாத நிலையினராய்ப் புலித்தோலை உடையாக அணிந்து, பூதங்கள் தம்மைச் சுற்றி இருக்குமாறு, மாலை சூடிய மார்பினராய், அருளுடையவராய் உள்ள இமையவர்கள் வழிபட்டுத் துதிக்கும் இறைவராகிய ஆமாத்தூர்த் தலைவர் அழகியவர்.

குறிப்புரை :

ஒன்றாலும் குறைவில்லை என்புழி, ஆயினும் என்பது எஞ்சிநின்றது. பிச்சைக் கோலம் பூண்டமையின் பொருளுடையரல்லர் எனவும், இமையவர்கள் தொழுதேத்த நின்றமையின், இலரும் அல்லர் எனவுங்கூறினார்; `தானாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார் வானாள மண்ணாள வைத்து` என்றதுங் காண்க. (தி.11 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - 53.) அருளுடைய என்பது, மார்பர் என்பதன் இறுதிநிலையோடு முடியும். கோதை, மாலையின் வகை.

பண் :

பாடல் எண் : 6

வீறுடைய ஏறேறி நீறு பூசி
வெண்டோடு பெய்திடங்கை வீணை யேந்திக்
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்
பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

கங்கையைச் சடைமுடியில் கொண்ட எம் தலைவராகிய ஆமாத்தூர் ஐயர் நீற்றினைப் பூசிக் காதில் வெள்ளிய தோட்டினை அணிந்து இடக்கையில் வீணையை ஏந்தி இடப் பாகமாக உமாதேவியைக் கொண்டு காதுகளில் அணிந்த குழை அசையக் கொடுகொட்டிப் பறையை ஒலித்துக் கொண்டு பருந்துகள் புலால் நாற்றம் உணர்ந்து அணுகும் மண்டை ஓட்டினை ஒரு கையில் ஏந்தி, ஆற்றல் மிக்க காளையை இவர்ந்து வந்து, பிச்சைபெறாமல் வஞ்சனையாகிய சொற்களையே பேசும் அழகர் போலும்.

குறிப்புரை :

சங்கினால் ஆயினமையின், வெண்தோடாயிற்று. `இடக்கை` என்பது மெலிந்து நின்றது. இடப்பக்கத்திற்கையில் `வீணை ஏந்தி` என்றுரைத்தலுமாம். `கொடுகொட்டி` என்பது, சிவபிரான் ஆடிய ஒரு கூத்து. அஃது ஈண்டு ஆகுபெயராய் அதற்கேற்ப அடிக்கப்படும் வாச்சியத்தைக் குறித்தது. படுதலை - பட்ட (இறந்த) தலை; பட்டாரது செயல் அவர் தலைமேல் ஏற்றப்பட்டது; `பட்டதனாற் கிடைத்த தலை` எனலுமாம். ``எம் அடிகள்`` என்பதனை முதலிலும். `பலிகொள்வாரல்லர்`` என்பதனை `படிறே பேசி` என்பதன் பின்னும் வைத்துரைக்க. போலும் என்பது உரையசை. பலிகொள்வாரல்லர் என்பதற்கு, மேல், (தி.6. ப.9. பா.3.) போவாரல்லர் என்பதற்கு உரைத்தவாறே உரைக்க.

பண் :

பாடல் எண் : 7

கையோர் கபாலத்தர் மானின் தோலர்
கருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீ றாடித்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
மெய்யொரு பாகத் துமையை வைத்து
மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

கையில் மண்டை யோட்டை ஏந்தி, மான் தோல் உடுத்து, பகைவருடைய மும்மதில்களையும் தீயில் வேவச் செய்து, காண்பார் முன் கூத்தாடும் கருத்துடையவராய், தலைவராகிய பெருமான் செய்ய திருமேனியிலே வெள்ளிய நீற்றினைப் பூசித் திகழும் சிவந்த சடைமேல் திங்களைச் சூடி, உடம்பின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டு, அழகிய தோற்றத்தோடு போகின்றார். அந்த ஆமாத்தூர்த் தலைவரை வந்து காணுங்கள்.

குறிப்புரை :

கருத்து - பிச்சையேற்றலன்றி மற்றோர் எண்ணம்; அது, மகளிரை நிறையழியச் செய்தல். `நிருத்தராய்` என்புழி நின்ற `ஆய்` என்பது, `கபாலத்தர்` முதலியவற்றோடும் இயையும். `ஆடி` என்பதனை, `ஆட` எனத் திரிக்க. அன்றிச் சினைவினை முதன்மேல் நின்றதுமாம். ஆடுதல் - மூழ்குதல். சடைக்குப் புன்மை, உலகினரால் விரும்பிக் கொள்ளப்படாமை.

பண் :

பாடல் எண் : 8

ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றொற்றியூர் உம்மூரே யுணரக் கூறீர்
நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
இருக்குமூ ரினியறிந்தோம் ஏகம்பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

உமக்குக் குறை ஒன்றும் இல்லாதாகவும் காளையை வாகனமாகக் கொண்டு ஒற்றியூரை உம் ஊராகக் கொண்ட காரணத்தைக் கூறுகின்றீர் அல்லீர். ஒரு செயலும் செய்யாமல் நின்று கொண்டிருக்கின்றீர். நீர் எம்மை விடுத்துப் போகும் போது நும் நெற்றிக் கண்ணைக் காட்டி எங்கள் அடக்க குணத்தைக் கைப்பற்றிச் செல்கின்றீர். எல்லா நாள்களும் இப்படியே எங்களுக்குத் துன்பம் செய்கின்றீர். நீர் இருக்கும் ஊரை இப்போது அறிந்து விட்டோம். தலைவராகிய தாங்கள் எம்மை அழைத்துச் செல்லாமல் போகின்ற இடம் ஏகம்பமோ? ஆமாத்தூர்த் தலைவராகிய தாங்கள் எல்லா நிலையிலும் அழகியவரே.

குறிப்புரை :

``ஒன்றாலுங் குறைவில்லை`` என்பதன்பின், `என்பது ஆக` என்னும் முற்றுத்தொடர் வருவிக்க. `உம் ஊரே` என்புழி நின்ற ஏகாரம், வினாப்பொருட்டு. அஃது `ஒற்றியூர்` என்பதனோடு பிரித்துக் கூட்டப்பட்டு, வெள்ளேறு என்பதனோடும் இயையும். `உம்` என்பதும் `ஊர்தி` என்பதனோடும் இயையும். என்செய்வீர் என்றது, `எம்மை வரையமாட்டீர்` என்றவாறு. `அறிந்தோம்` என்றது யாமே அவண் வந்து சேர்வோம் என்னும் குறிப்பினது. ஏகம்பமோ என்னும் சிறப்போகாரம், அஃது எம்மால் நன்கறியப்பட்டதே என்பதுணர்த்தி நின்றது. `எம்மோடு அன்றித்தான் போகின்றீர்; போவீராகில்` என இயைத்து, கொண்டீர் என்பதன்பின் வைத்துரைக்க. அடிகள் என்றதும், `ஐயனாரே` என்றதும் விளி. இத் திருப்பாடல், நீங்கிச் செல்கின்றாரை எதிர்பெய்து கொண்டு கூறியது.

பண் :

பாடல் எண் : 9

கல்லலகு தாங்கொண்டு காளத் தியார்
கடிய விடையேறிக் காணக் காண
இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
யென்றாருக் கெதிரெழுந்தே னெங்குங் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
துருத்தி பழனமோ நெய்த்தா னமோ
அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

காளத்திப் பெருமான் கல்லலகு என்ற வாச்சியத்தைக் கையில் கொண்டு, விரைந்து செல்லும் காளையை இவர்ந்து, எல்லோரும் காணும் வண்ணம் எம் வீட்டிற்குள் தாமே புகுந்து, `பிச்சை இடுமின்` என்று கூறினாராகப் பிச்சை கொண்டு வந்து பார்க்கும் போது, அவரை வீட்டினுள் எங்கும் காணேனாக, `ஒன்றும் சொல்லாதே வீட்டை விடுத்துப் போகின்றவரே! உம் ஊர் துருத்தியோ, பழனமோ, நெய்த்தானமோ யாது? என்று யான் வினவவும் கூறாது, என்னை வருத்தி, அவ்வடிகள் போகின்றார், அத்தகைய ஆமாத்தூர்த் தலைவர் எந்நிலையிலும் அழகியவர்.

குறிப்புரை :

கல்லலகு - (குறிப்புரை. ப.7. பா.1.) கடிய - விரைந்து செல்வதாகிய. `காணக்காண` என்றது, `பலருங்காண` என்றவாறு. புகுதா - புகுந்து. அயலாரோடு இரங்கிக் கூறுகின்றவள், ஆற்றாமை மிகுதியால் இடையே இறைவனை எதிர்பெய்து கொண்டு, `சொல்லாதே போகின்றீர்....நெய்த்தானமோ` என்றாள் என்க. ஓகாரங்கள் ஐயப்பொருள; `துருத்தி` என்புழியும் அவ்வோகாரம் விரிக்க.

பண் :

பாடல் எண் : 10

மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
மணிமிழலை மேய மணாளர் போலும்
கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலும்
கொடுகொட்டி தாள முடையார் போலும்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலும்
தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினா ரையுறவு தீர்ப்பார் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

ஒளி குறையாத திருநீற்றைப் பூசிய மார்பினர், அழகிய திருவீழி மிழலையிலே உகந்தருளியிருக்கும் திருமணக் கோலத்தினர். குவளை மலர் மாலையை அணிந்த உமையம்மைக்குத் தலைவர். கொடு கொட்டி ஆடலுக்கு ஏற்ற தாளம் உடையவர். கயிலாயத்தில் உள்ள எம் செல்வர். தெற்கில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து சேர்ந்தவர். வருந்துபவர்களைக் காப்பாற்ற மாட்டாரோ என்ற ஐயம் தீர்த்து ஆட்கொள்ளும் ஆமாத்தூர்த் தலைவர் எல்லா வகையிலும் அழகியரே.

குறிப்புரை :

மழுங்கலா-ஒளிகுறையாத (வெள்ளிய) மணி - அழகு. மணாளர் - தலைவர். குவளைக் கோதை - குவளை மலரால் ஆகிய மாலையணிந்த உமையம்மை. `கொடுகொட்டி` (குறிப்புரை. பா.6.) அழுங்கினார்-வருந்தினவர். ஐயுறவு - `துன்பங் களைவரோ களையாரோ` என்னும் ஐயம். இத்திருப் பாடலை, முன்னெல்லாம் ஆற்றாளாய் இரங்கிக் கூறியவள், இறுதிக்கண், `பெரியோர் பிழையுட் படார்; அதனால், பின்பு வந்து வரைவார்` எனத்தேறி, ஆற்றியுரைத்ததாகக் கொள்க. அதனால், `அழகியரே` என்றதும் புகழுரையே.

பண் :

பாடல் எண் : 1

நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
நூல்பூண்டார் நூன்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

பந்தணைநல்லூர்ப் பெருமான் வருந்துவதாகிய மாயை உடம்பு உடையர் அல்லாதாராய்ப் பாம்புகளையும் , மார்பில் பூணூலையும் அதன்மேல் ஆமை ஓட்டினையும் அணிந்தவர் . அவர் வளர்கின்ற கருங்குழலியாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு , பிறையைச் சூடிய சடையில் கங்கையையும் கொண்டு அந்தி வானத்தின் செந்நிறமேனியில் அடிமுதல் முடி வரை திருநீறணிந்து , கையில் தீயினைக் கொண்டு , பேய்கள் தங்கும் பரந்த சுடுகாட்டில் கூத்தாடிப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து வந்து பிச்சை ஏற்றவர் .

குறிப்புரை :

` நோவதங்கம் ` என்பது இடைக்குறைந்து , ` நோதங்கம் ` என நின்றது ; ` வருந்துவதாகிய மாயை உடம்பு ` என்பது பொருள் . ஆமை - ஆமை ஓடு ; ஆகுபெயர் . ` ஆதங்கு ` என்பதில் , ` ஆ ` முதனிலைத் தொழிற்பெயர் , ` ஆதல் ( வளர்தல் ) பொருந்திய ` என்பது பொருள் . அந்திவாய் வண்ணம் - அந்தி பொருந்திய நிறம் ; என்றது செவ்வானத்தினை . பாதம்கம் - பாதம் முதல் தலைவரையிலும் . பைங்கண் ஏற்றார் - பசிய கண்ணையுடைய இடபத்தையுடையவர் . பலி ஏற்றார் - பிச்சை கொண்டார் . இத்தலத்தில் இறைவரைப் பிச்சைக் கோலம் உடையவராகவே அருளிச்செய்தார் , நாவுக்கரசர் . ` பைங்கண் ஏற்றார் ` என்பதனையும் உடன் கூறுதலின் , விடையேறிய பிச்சைக் கோலமாக அருளினமை பெறப்படும் .

பண் :

பாடல் எண் : 2

காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணால்
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை நுகர்ந்து , களிற்றுத் தோலால் மெய்யினைப் போர்த்து , மண்டையோட்டினையே உண்கலனாகக் கொண்டு , ஒற்றியூரை உகந்து , அடியார்களுடைய உடற்பிணிகளையும் உட்பகைகளையும் தம் ஒரே பார்வையாலே வலிமைகெடச் செய்து , பிடவம் , மொந்தை , குடமுழா , கொடுகொட்டி , குழல் என்ற வாச்சியங்கள் ஒலிக்கச் சுடுகாட்டினைத் தவிர வேற்று இடங்களை விரும்பாது , அங்குப் பாடியும் ஆடியும் செயற்பட்டுப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து பிச்சை ஏற்றவர் .

குறிப்புரை :

கலன் - உண்கலன் . ஒற்றைக்கண் , நெற்றிக்கண் ; ஒருகண்ணாலே என்றுமாம் . பீடு உலாம்தனை செய்வார் - வலிமை கெடும் அளவு செய்வார் . ஈண்டு , ` உலக்குந்தனை ` என்பது , ` உலாந்தனை ` என நின்றது . ` பிடவம் ` முதல் குழல் ஈறாக உள்ளன , வாச்சியவகைகள் .

பண் :

பாடல் எண் : 3

பூதப் படையுடையார் பொங்கு நூலார்
புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி
ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

தேவர்களை அடிமையாகக் கொண்டு அவர்களுடைய பொன்னுலகை உடைமையாகக் கொண்டு சுற்றிக் கட்டப் பட்ட கழலைத் திருவடிகளில் அணிந்த பந்தணைநல்லூர்ப் பெருமான் வெள்ளம் ஒலிக்கும் கடலில் தோன்றிய விடத்தை உண்டவர் . விரிந்த சடைமேல் வெள்ளிய பிறையினை முடிமாலையாகச் சூடியவர் . வேதங்கள் ஓதி வேள்விகள் செய்யும் அந்தணர்கள் தம்மைப் பரம்பொருளாக விரும்ப இருப்பவர் . திருமாலாகிய போரிடும் காளையை உடைய அப்பெருமான் பூதப்படை உடையவர் . அவர் பூணூல் அணிந்து புலித்தோலை இடையில் அணிந்து பசிய கண்களை உடைய காளை மீது அமர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார் .

குறிப்புரை :

திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் உருத்திரிந்து தாங்கிய இடபம் ` போர்விடை ` என்றும் , அறக்கடவுள் உருத்திரிந்து தாங்கும் இடபம் ` அறவிடை ` என்றும் உணர்க . இனி , ` போர்விடை ` என்புழி , ` போர் ` என்றதனை , ` இன அடை ` என்றலுமாம் . இவை ` செங்கண் விடை ` என வருகின்றுழியும் ஒக்கும் . வேதத்தொழில் வேதத்தின் வழிப்பட்ட தொழில் ; வேள்வி . அதனை உடையவர் , அந்தணர் ; அவர் விரும்ப நிற்றலாவது , வேள்விக்கு முதல்வனாகக் கொண்டு முதற்கண் அவியளித்து அவர் வழிபட , அதனை யேற்று அவர் எண்ணியவற்றை முற்றுவித்தல் . சிவபிரானையே வேள்வியின் முதல்வனாக வேதம் கொண்டுள்ளது என்பது , ` மேத பதிம் காத பதிம் ருத்ரம் ` ( இருக்குவேதம் . 1.43.47.) என்பதனான் அறிக . இதற்கு மாறாகச் செய்யத் தொடங்கிய தக்கன் வேள்வி அழிந்தது ; அவனும் தன்தலை இழந்து யாட்டுத் தலை பெற்றான் என்க . ஓதம் - அலை . உம்பர் - தேவர் . தேவரை அடியவராகவும் , அவரது உலகத்தை உடைமையாகவும் உடையவர் என்றவாறு . ` ஆண்டு ` என்னும் எச்சம் எண்ணுப் பொருளாய் நின்று , ` கழலார் ` என்னும் வினைக்குறிப்பொடு முடிந்தது . ` பாதக்கழலார் ` என இயையும் . தொடு - சுற்றிக் கட்டப்பட்ட . ` போரேற்றினார் ` என்பதும் , இருமாச்சீர்கட்கு ஈடாக மாங்கனிச்சீர் வந்தது .

பண் :

பாடல் எண் : 4

நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

கச்சணிந்த முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகமாக ஏற்ற பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் ஏற்றுக் கங்கை உலாவும் சடைமுடி மேல் திங்கள் சூடியவர் . மான்குட்டியை ஒருகையில் ஏற்ற அப் பெருமான் அழகிய கை ஒன்றில் நெருப்பை ஏற்று , ஊர்களெல்லாம் பிச்சை ஏற்று , பிச்சையிட வந்த மகளிரின் நிறை என்ற பண்பினைக் கவர்ந்தவர் . அவர் மழு ஏந்தி , உலகில் பரவிய புகழுக்கு உரியவராய்ப் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் .

குறிப்புரை :

` அங்கையில் நெருப்பேற்றார் ` என்க . நிறையும் ஏற்றார் - தாருகாவன முனிவர் பத்தினிமாரது கற்பினை வாங்கிக் கொண்டார் ; நெஞ்சைப் புலன்வழி ஒடாது நிறுத்துதலைப் பொருந்தினார் என்றுமாம் . ` ஊரெலாம் பலியேற்றார் ` என்றது செயலையும் , ` பலியேற்றார் ` என்றது கோலத்தையும் குறிக்கும் . இறுதித் திருப்பாடலிலும் இவ்வாறே கொள்க . ஒர்கையில் ` என்பது , ` மழுவேற்றார் ` என்பதனோடும் இயையும் . மறி - கன்று . பார் உலாம் - பூமி முழுவதும் உலாவுகின்ற ; என்றது , யாவராலும் புகழப்படுகின்ற என்றபடி . ` ஏற்றார் ` என வந்தன பலவற்றுள் , ` பைங்கண் ஏற்றார் ` என்புழி உள்ளது ஒன்றும் , ` விடையை உடையார் ` எனவும் , ஏனைய எல்லாம் , ` ஏற்றலைச் செய்தார் ` எனவும் பொருள் தரும் . வருகின்ற திருப்பாட்டினுள்ளும் இவ்வாறே நிற்றல் காண்க .

பண் :

பாடல் எண் : 5

தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலா யடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவராய் , எல்லோருக்கும் முற்பட்டவராய்ச் சூரியனாகவும் அக்கினியாகவும் இருந்து , அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் உள்ள பந்தணை நல்லூர்ப் பெருமான் அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமான ஞானஒளியை உடையவர் . நடுங்காத அழகிய தலையை உடையவர் . தூய நீறணிந்தவர் . சடையில் முடிமாலை சூடியவர் . இடுகாட்டைச் சூழ்ந்திருக்கும் சுடு காட்டில் இரவு தோறும் கூத்து நிகழ்த்துபவர் . அவர் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார் .

குறிப்புரை :

ஏத்தும் - ஏத்துதற்கு ஏதுவாகிய . சோதி - ஒளி ; ஞானம் ; அது . தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்தாங்கறிதல் . இதுவே ஏனைய அருட்குணங்கட்கும் முதலாமாறுணர்க . துளங்கா மணி முடியார் - நடுங்காத அழகிய தலையையுடையவர் ; அஞ்சுவ தொன்றில்லாத முதல்வர் என்றபடி . ` அச்சம் வரின் தலை நடுங்கும் ` என்பதை ` அரசுதலை பனிக்கும் ஆற்றலை ` ( புறம் 42) என்பதனாலறிக . இண்டை . முடியில் அணியும் மாலை . ஈமம் - பிணத்தைச் சுடுங்காடு , பிணத்தை இடும் ( புதைக்கும் ) காடு அதனைச் சூழ்ந்திருக்கும் என்பது பற்றி , ` ஈமஞ்சூழ்ந்த இடுபிணக்காடு ` என்று அருளிச் செய்தார் . இடு பிணக்காடு - இடப்படும் பிணத்தையுடைய காடு . ஏமம் - இரவு . ` ஏமந் தோறும் இடுபிணக் காட்டு ஆடலார் ` என்க . ஆடலார் - ஆடுதலை உடையவர் . ` சுடுகாட்டு ஆடுதல் , இடுகாட்டு ஆடுதல் ` எனவருவன , இறைவன் எல்லாவற்றையும் அழித்த முற்றழிப்புக் காலத்தில் ( சருவ சங்கார காலத்தில் ) மீளத் தோற்றுவித்தற்கு உரியவற்றைச் செய்தலைக் குறிப்பனவாம் . இதுவே ` சூக்கும நடனம் ` எனப்படும் . ` அண்டத்துக்கு அப்புறத்தார் ` என்றது , மாயைக்கு அப்பாற்பட்டு நிற்றலை உணர்த்தும் . ஆதியானார் - எப்பொருட்கும் தாமே முதலாயும் , தமக்கொரு முதல் இல்லாதவராயும் உள்ளவர் . இதுபற்றியே சிவபிரானுக்கு ` ஆதி ` என்னும் பெயர் வழங்கும் . அஃது ஆதிபுராணத் திருக்குறுந்தொகை ` ( தி .5. ப .100.) என்பதனாலும் , ` ஆதியன் ஆதிரையன் ` ( தி .7. ப .97. பா .1.) என்றற்றொடக்கத்துத் திருப்பாடற் பகுதிகளாலும் அறியப்படும் . ` ஆதி பகவன் ` எனத் திருவள்ளுவ நாயனார் தமது முதல் திருக்குறட்கண்ணே இரு பெயரொட்டாக அருளிச்செய்ததும் , ` முதற்கடவுளாவான் சிவபிரானே எனச் சிறப்புவகையான் உணர்த்துதற் பொருட்டே ` எனச் சிவஞான முனிவர் ( சோமேசர் முதுமொழி வெண்பா . பா .1 ) அருளினார் .

பண் :

பாடல் எண் : 6

கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும் , உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான் , மத யானைத் தோலைப் போர்த்தவர் . எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர் . மான் தோலைத் தோளில் அணிந்து , நாகத்தைத் திருமேனியிற் பூண்டு , முடியிலும் பாம்பினைச் சூடி , நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓது கின்ற நாவினை உடையவர் . அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர் .

குறிப்புரை :

கடம் மன்னு - மதம்மிக்க . களி - மயக்கம் . கானப்பேர் , பாண்டிநாட்டுத் தலம் . மடம் - அறியாமை ; அவனருளியவாறன்றித் தாமாக ஒன்றையும் அறியாமை , மான் உரி தோல் - மானை உரித்த ` தோல் . மிசைத் தோளார் ` என்பதனை , ` தோள்மிசையார் ` என மாற்றிப் பொருள்கொள்க . ` மன்னி மங்கை காண நடம் ஆடுவார் ` என இயைக்க . மன்னி - நிலைபெற்று . ` என்றும் இடையறாது ` என்றவாறு . ` ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் நாதனார் ` ( தி .12 திருநீலக்கண்ட நாயனார் புராணம் -1) என்றருளிச் செய்தமை ( தி .6. ப .4. பா .5 உரை ) கூறினாம் , இதனை ; ` அனவரததாண்டவம் ` என்பர் . ` படம் ` என்றது பாம்பினை , சினையாகு பெயர் .

பண் :

பாடல் எண் : 7

முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி யுலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர் . அவர் பிறை சூடிய சடையினர் . மூவுலகும் துதிக்கும் முதல்வர் . சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர் . பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர் . வெள்ளியநீறு அணிபவர் . தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர் . பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார் .

குறிப்புரை :

மூவர் , ` அயன் , மால் , உருத்திரன் ` என்னும் காரணக் கடவுளர் , ஒரோவோர் அதிகாரத்தை இவரிடத்து வைத்து அவர் வாயிலாக , ` படைத்தல் . காத்தல் , அழித்தல் ` என்னும் தொழில்களை நடத்துதலால் , ` மூவரானார் ` என்றும் , முத்தொழிற்கும் தாமே உரியராதல் பற்றி , ` முதல்வ ரானார் ` என்றும் அருளிச்செய்தார் . திங்கள் கங்கையாள் காதலார் - திங்களையும் கங்கையாளையும் காதலித்தலைச் செய்வார் ; திருமுடியில் அணிவார் . ` காதலார் ` என்பதை இருபெயரோடும் தனித் தனி இயைக்க . காம்பு - மூங்கில் . ஏய் , உவம உருபு . ` ஊழி ஆனார் , உலகமானார் ` என்க . ஊழி , உலகம் ஒடுங்குங்காலம் . பற்றார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 8

கண்ணமரு நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப்
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

தமக்கெனப் பெயர் ஒன்றும் இல்லாதவரும் , பிறப்பு இறப்பு பிணி என்பன அற்றவரும் , நில உலகத்தவரும் வானுலகத்தவரும் , பிரமன் உபபிரமர்களும் , உரகர் முதலிய மற்றவர்களும் எதிரே வந்து வணங்கித் துதித்துப் பண்ணோடு கூடிப் பாடுதலை உடையவரும் ஆகிய பந்தணைநல்லூர்ப் பெருமான் கங்கை தங்கும் சடையினர் . கண் பொருந்திய நெற்றியை உடையவர் . கையில் மழு ஏந்தியவர் . காட்டிலும் , நாட்டிலும் உகந்தருளியிருக்கும் அப் பெருமான் பைங்கண் விடை ஊர்ந்து பலி ஏற்றார் .

குறிப்புரை :

காட்டார் - காட்டில் வாழ்பவர் . நாட்டார் - நாட்டில் வாழ்பவர் . ஈண்டு , மலை காட்டினுள்ளும் . கடல் நாட்டினுள்ளும் அடக்கப்பட்டன . எனவே , நிலமுழுதும் உள்ளவர் என்றபடி . இதனை , நாடனென்கோ ஊரனென்கோ ` ( புறநானூறு - 49.) என்பதனோடு நோக்குக . ` சென்னியில் முடியார் ` ( முடியினையுடையார் ) என்க . ` பெண் ` என்றது , கங்கையை . சடைமுடி - சடையாகிய மகுடம் . ` பேரொன்றில்லார் ` என்றது , ` சொல்லுட்படாதவர் .` என்பதையும் ` பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன்றில்லார் ` என்றது , கருவி களுள்ளும் வினையுள்ளும் படாதவர் என்பதையும் குறிக்கும் . மற்றையோர் , உரகர் முதலிய கணத்தவர் . ஏத்த - ஏத்துதலினால் , பாடலார் - பாட்டுக்களை உடையவர் .

பண் :

பாடல் எண் : 9

ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
யனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர் . தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர் . நீறணிந்த மேனியர் . விடத்தை உண்டவர் . வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர் . உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர் . கங்கை தங்கு சடையினர் . ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர் . தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர் . புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர் .

குறிப்புரை :

நீலம் - நீலநிறத்தை உண்டாக்கும் விடம் . நெருப்பு உண்டார் - ` நெருப்பு ` என்றது , வேள்வித்தீயில் இடப்படும் அவியைக் குறிக்கும் . ` வட்டக்குண் டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார் - அட்டக்கொண்டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோமே ` ( தி .7. ப .18. பா .2.) என்றருளிச் செய்தமை காண்க . ` அங்கை அனலும் உண்டார் ` என்றதில் ` உண்டார் ` என்பது , ` ஏற்றார் ` என்னும் பொருள் பட நின்றது .

பண் :

பாடல் எண் : 10

கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலை யின்மே லிருந்து
வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

பொழிப்புரை :

ஞானத்தை அடியார்க்கு வழங்குபவராய்த் தாமே ஞானவடிவாகி , நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய் , நாகை , குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான் . அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர் . வலிமை மிகுந்த அழகிய கயிலாய மலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன் தலைகள் சிதறுமாறு கோபித்த அப் பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர் . அவர் பைங்கண் ஏறு இவர்ந்து பணி ஏற்றவர் .

குறிப்புரை :

கல் ஊர் - கல் மிகுந்த நல்லூர் , சுவாமிகளுக்கு இறைவன் திருவடி சூட்டிய திருத்தலம் ; சோழநாட்டில் உள்ளது . ஞானத்தார் ஞானம் - தம்மை ( இறைவரை ) உணரும் ஞானியரது ஞானம் . எனவே , இத்தகைய ஞானம் இல்லாதார் ஞானியராகார் என்பது பெறப்பட்டது . மல் ஊர் - வலிமை மிகுந்த . மணிமலை - அழகியமலை ; கயிலாயம் .

பண் :

பாடல் எண் : 1

பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப்
பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் தன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

பிற பொருள்களின் கூட்டத்தால் பிறவாது எம் பெருமான் தானே தன் விருப்பத்தால் வடிவங்கொள்பவன். தன்னை விரும்பாதவர்களைத் தானும் விரும்பி உதவாதவன். இயல்பாகவே பந்தங்களின் தொடர்பு இல்லாத ஞான வடிவினன். தூய நன்னெறியில் ஒழுகுவதற்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகுக்கப்பட்ட எத்திசைக் கண்ணும் தானே பரவியிருப்பவன். திருப்புன்கூரை உகந்தருளியிருக்கும் அச்சிவலோகநாதனே நீடூரிலும் உகந்திருப்பவன். அத்தகைய செந்நிறச் சோதி உருவினைக் கீழ் மகனாகிய அடியேன் விருப்புற்று நினையாமல் இந்நாள் காறும் வாளா இருந்த செயல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

பிறவாதே தோன்றுதலாவது, பிற பொருள்கள் முதனிலையாய்க் கூடிநிற்க அக்கூட்டத்தின்வழித் தோன்றாது, தானே தனது இச்சையால், `அருவம், அருவுருவம், உருவம்` என்னும் மூவகைப்பட்ட வடிவங்களைக் கொண்டு, நிற்றல்.` `பிறவாயாக்கைப் பெரியோன்` (சிலப்பதிகாரம் 5 - 169) எனப் பிறருங் கூறினார். இதனானே பிறந்து தோன்றுவார் யாவரது பிறப்பிற்கும் தானே காரணன் என்பதுந் தானே போதரும். `அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக` என்பதும் காண்க. (திருக்களிற்றுப்படியார் - 1). `காரணம் காரணாநாம் தாதா` என்றது `அதர்வசிகை` என்னும் உப நிடதம். பேணுதல் - விரும்புதல். கட்டு - பந்தம். அதன்கண் என்றும் அகப்பட்டதின்மையால், துறத்தல் வேண்டாவாயிற்று. சோதி - ஒளி; என்றது, உணர்வை. எனவே, `இயல்பாகவே மலம் அற்ற தூய உணர் வுடையான்` என்பதுபெறப்படும். `வாலறிவன்` (குறள் - 2) என்றருளினார், திருவள்ளுவ நாயனாரும். அவ்வுணர்வுதானே அவற்கு வடிவமாகலின், `துறவாதே கட்டறுத்த சோதியானை` என்றருளிச்செய்தார். தூ நெறி - குற்றம் இல்லாத நெறி. அடையப்படும் பொருள்களது தூய்மையும், குற்றமும் அவற்றுக்கு வாயிலாகிய நெறிமேல் ஏற்றிக் கூறப்படும் என்க. தூநெறிக்குந் தூநெறியாய் நிற்றலாவது, நன்னெறிக்குச் சிறந்த பற்றுக்கோடாய் இருத்தல். அஃதாவது, அறம் தன்னொடு (இறைவனோடு) பொருந்தியவழிச் சிறந்த பயனாகிய வீடு பேற்றைத் தருதலும், பொருந்தாதவழி அதனைத் தராதொழிதலும், முரணியவழித் தீங்கு பயத்தலும் உடைத்தாமாறு நிற்றல். உம்மை சிறப்பும்மை. இறைவனொடு முரணிச்செய்யும் அறம் தீங்கு பயத்தல் தக்கன் செயலாலும், இறைவனொடு பொருந்திச் செய்யும் மறமும் வீடுபேற்றைத் தருதல் சண்டேசுரரது செயலாலும் நன்குணரப்படும்.
அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும்
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே.
என்றது சிவஞானசித்தி. (சூ.2 - 29) `அன்பிலார்` என்றது முரணி நிற்பாரை என்பது. எடுத்துக்காட்டால் விளங்கும். திறம் - பகுப்பு. திருப்புன்கூர்ப் பெருமானை, `சிவலோகன்` என்றே நாவரசர் அருளிச் செய்கின்றார். அப்பெருமானது திருப் பெயர் `சிவலோகநாதன்` என்பதேயாய் இருத்தல் கருதத்தக்கது. நீதன் (நீசன்) - கீழ்மகன். `நீதனேனாய்` என எச்சமாக்கியுரைக்க. `முன்னர் நினையாதிருந்த நெறியாகிய அறியாமை என்னே!` என்க. இது இவ்விருதலத்திலும் இறைவரை வணங்கிய பொழுது உண்டாகிய பேரின்பத்தில் திளைத்துநின்று, இளமைக் காலமெல்லாம் இதனைப் பெறாதே வாளா (சமணரோடு) கழிந்தமையை நினைந்து கழிவிரக்கங்கொண்டு அருளிச்செய்தது. அஞ்ஞான்றை நிலைபற்றியே தம்மை, `நீதனேன்` என்றார். இவ் வாறே, `ஏழையேன்` முதலாக வருவன காண்க. இத்திருப்பதிகத் துள்ளும், `சிவலோகனை` என்னும் கனிச்சீர் நின்ற அறுசீரடிகள் வந்தன.

பண் :

பாடல் எண் : 2

பின்றானும் முன்றானு மானான் தன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை
நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி
நல்வினையுந் தீவினையு மானான் தன்னைச்
சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நின்றாய நீடூர் நிலாவி னானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

எதிர்காலமும் இறந்தகாலமும் ஆகியவன். தன்னிடம் பெருவிருப்புடைய அடியார்பக்கல், தானும் பெருவிருப் புடையவன். நல்வினையும் தீவினையும் செய்தவர்களுக்கு அவரவர் வினைகளுக்கு ஏற்பப்பயன்களை வழங்குபவன். வானளாவிய தீப்பிழம்பு வடிவானவன். திருப்புன்கூரை உகந்தருளிய அப் பெருமான் நீடூரிலும் நிலையாக உறைந்திருக்கின்றான். அப்பெருமானை நீசனேன் நினையாவாறு என்னே!

குறிப்புரை :

`பின்` முன்` என்றவை காலங்குறித்து நின்றன. அவையாகிநிற்றல், உடல் உயிர்போல அவற்றோடு ஒன்றாய் நின்று அவற்றை இயக்குதல், பித்தர் - பிறிதொன்றையும் விரும்பாது தன்னையே விரும்பும் பேரன்பர். இத்தகைய அன்பு பித்தோடு ஒத்தலின், `பித்து` எனப்படும். பித்தனாய் நிற்றல் - அவரிடத்துப் பேரருளுடையனாதல். இது, நம்பியாரூரர்க்குத் தூதனாய் இருகால் நடந்தமை முதலியவற்றாற் புலனாகும். நன்று - நன்மை; உறுதி. அவர்க்கு அவ்வுறுதிப்பொருள் தானேயாய் நின்றான்; என்றது, `உறுதி யுணர வல்லார்க்கு அவனையன்றி உறுதிப் பொருள் வேறில்லை` என்றவாறு. ஆங்கு, அசைநிலை. நல்வினையும் தீவினையும் செய்தார்க்கு அவை பயனாய்வருதல் அவனை இன்றி ஆகாமையின், `அவை ஆனான்` என்றருளினார். தீயாயது,மாலும் அயனும்தேட நின்ற நிகழ்ச்சியைக் குறிக்கும். ஆய - பொருந்திய. `நீடூர் நின்று நிலாவினானை` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 3

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை
இனிய நினையாதார்க் கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன். நல்லனவே நினையாதவர்களுக்குத் தான் இனியன் அல்லன். தன்னை விரைந்து சரண்புக்கவர்களுக்குத் தான் அருளுவதில் வல்லவன். ஓரிடம் விட்டு மற்றோரிடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான், தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்தருளியிருப்பவன். அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

`எவ்விடத்தும்` என்பது முன்னும் சென்று இயையும் இல்லாமை, ஊனக் கண்ணிற்குப் புலனாகாமை. எவ்விடத்தும் - எந்தப்பொருளிலும். இனிய - நல்லன. வல்லடைதல் - விரைந்து அடைதல். `அருளும் வண்ணம் வல்லான்` என இயைக்க. வண்ணம் - முறைமை. மாட்டாதார், அது (வல்லடைதல்) மாட்டாதார். மாட்டாதான் - இயலாதவன்போல வாளா இருப்பவன். செல்லாத செந்நெறி - ஓர் இடம் விட்டு மற்றோர் இடம் பெயராத நல்லநெறி; அணுவாந் தன்மை நீங்கி எங்குமாய் நிற்றற்குரிய நெறி. எனவே. பிறப்பின்றி வீடுபெறும் நெறி என்றதாம். ``பேரா இயற்கை`` (குறள் - 370.) என்பதும் காண்க. `விளை கழனி` என்பதற்கு, பயனை விளைக்கின்ற கழனி என உரைக்க. `நெல்லால்` என்பதில், ஆல், அசைநிலை.

பண் :

பாடல் எண் : 4

கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயாடியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

கலைஞானத்தை முயன்று கற்றல் வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவன். கொடிய நரகத்தை அடையாதபடி காப்பவன். பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி ஆங்காங்கே உறைபவன். வில்லால் திரிபுரங்களை எரித்தவன். தீயின்கண் கூத்து நிகழ்த்துபவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்தருளியவன். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

`பணிவார்கட்கு, தானே பலவாய வேடங்கள் ஆகி அங்கங்கே பற்றானானை` என்றியைத்து, அதனை முதற்கண் வைத்து, அதன் பின்னர், அவர்கட்கு என்பது வருவித்துரைக்க.
தானே - தான் ஒருவனே. பற்று - உறைவிடம். `ஆனான்` என்றது, `ஆக இருந்தான்` என்னும் பொருளது. இது, `பணிய விரும்புவார்க்கு அவ்விருப்பத்தை எளிதில் நிறைவித்தற்பொருட்டுத் திருக்கயிலை ஒன்றையே இடமாகக் கொண்டிராது எண்ணிறந்த தலங்களில் எழுந்தருளியிருக்கும் பேரருளாளன் என்றருளியவாறு. கல்லாமே - கற்றல் வேண்டாதபடி. கற்பித்தான் - உள்நின்றே உணர்த்தினான்.
இதனைத் திருஞானசம்பந்தரிடத்து இனிது காண்கிறோம். ஏனையோர்க்கும் மெய்ந் நூல்களின் முடிந்த பொருளை எளிதில் தெளிய அருளினமை அறிக. `சிலையால்புரம் எரித்த` என்றது, `தானும் பிறரோ டொப்பக் கரணங்களாற் செய்வான்போலச் சென்றான்` என்றவாறு. நிலை ஆர்- பல நிலைகள் (அடுக்குக்கள்).

பண் :

பாடல் எண் : 5

நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீக்காத பேரொளிசேர் நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

கருவிகளால் அன்றித் தன் நினைவினாலேயே எல்லாப் பொருள்களையும் படைத்துக் காத்து அழிப்பவன். நுண்ணிய பொருள்களிலும் நுண்ணியனாக இயல்பாகவே கலந்திருப்பவன். கருவிகள் கொண்டு படைக்காமல் எல்லாப் பொருள்களையும் தன் நினைவினாலேயே தோற்றுவிப்பவன். தன்னை நெருங்காதவர்களுக்கு அருள் செய்தற்கண் ஈடுபடாதவன். தடுக்காமல் கடல் விடத்தை உண்டவன். அத்தகைய திருப்புன்கூர் மேவிய சிவலோகன் நீக்குதற்கரிய மிக்க பொலிவை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

நோக்குதல் - காத்தல். நோக்காதே நோக்குதல் - கரணத்தால் (கருவியால்) அன்றிச் சங்கற்பத்தால் (நினைவினாலே) நோக்குதல். எவ்வளவும் - எத்துணைப் பொருளையும் (எல்லாவற்றையும்). நுணுகாது - நுணுகாதபடி. யாதொன்றும் - பிறிதொன்றும். `யாதொன்றும் நுணுகாதே என்க. `நுணுகாதே நுணுகினான்` என்றது, இயல்பாகவே நுணுகினான் என்றவாறு. எத்துணை நுண்ணிய பொருளாய் இருப்பினும் அதனினும் நுண்ணியனாய் அதன்கண் நிறைந்து அதனால் தாக்குண்ணாது நிற்றலின், இறைவனினும் நுண்ணிய பொருள் பிறிதொன்றில்லையாதல் அறிக.
ஆக்குதல் - படைத்தல். `யாதொன்றும் ஆக்காதே` என்க. யாதொன்றும் - ஒன்றனையும் ஆக்கி எல்லாவற்றையும் ஆக்கி. நோக்கு தலை முன்னர் அருளிச் செய்தார். அஃது உலகம் ஒடுங்கியபின் மீளத் தோன்றுதற்கு உரித்தாமாறு செய்தலையும் குறித்தற்கு. `நோக்காதே நோக்கி` என்னும் வெண்பாவினை (சிவஞானபோதம். சூ.1.அதி.2.) நோக்குக. தேக்குதல் - நிறைதல்; அஃது இங்குக் `குமட்டுதல்` எனப் பொருள் தந்தது. நீக்காத - நீக்குதற்கரிய. பேரொளி - மிக்க பொலிவு.

பண் :

பாடல் எண் : 6

பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த
முடையானை முடைநாறும் புன்க லத்தில்
ஊணலா வூணானை யொருவர் காணா
உத்தமனை ஒளிதிகழும் மேனி யானைச்
சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீணுலா மலர்க்கழனி நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

மற்றவர் அணியக் கருதாத பாம்புகளை அணிகளாகப் பூணுபவன். மற்றவர்கள் பூசிக்கொள்ள விரும்பாத சாம்பலைச் சந்தனம் போலப் பூசிக்கொள்பவன். புலால் நாறும் மண்டையோடாகிய இழிந்த உண்கலத்தில் உண்ணலாகாத பிச்சை எடுத்த ஊணினை உண்பவன். இவையாவும் தன்பொருட்டன்றிப் பிறர் பொருட்டேயாக, இவற்றின் காரணத்தை மற்றவர் காணமாட்டாத வகையில் செயற்படும் மேம்பட்டவன். இச்செயல்களால் ஒளிமிக்குத் தோன்றும் திருமேனியை உடையவன். மிக உயர்ந்த மேம்பட்ட பவள மலையை ஒப்பவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் மிகுதியாகக் காணப்படுகின்ற மலர்களை உடைய வயல்கள் பொருந்திய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

பூணலாப் பூண் - அணியலாகாத அணி; பாம்பு. பூசாச் சாந்தம் - பூசலாகாத சாந்து; சாம்பல். ஊணலா ஊண் - உண்ணலாகாத உணவு; பிச்சை. ``இரந்து முயிர் வாழ்தல் வேண்டிற் பரந்து - கெடுக உலகியற்றி யான்`` (குறள் - 1062.) என்றமையால், பிச்சை ஊண் உண்ணலாகாததாதல் உணர்க. `பூணலாப் பூண் முதலியவற்றைக் கொண்டது. தன்பொருட்டன்றிப் பிறர்பொருட்டேயாதலின், அவை அவனுக்குப் புகழாவனவன்றி இகழாமாறு இல்லை` என அவற்றது பெருமை உணர்த்தியவாறு.
அதனானே, அவன் உலகியற்கு வேறுபட்டவன் என்பதும் இனிது விளங்கும். `ஒருவர்` என்புழி, முற்றும்மை தொகுத்தலாயிற்று. காணா - உணராத. உத்தமன் - மேலானவன். ஒருவரும் காணாமை - யாவராலும் முற்ற உணர இயலாமை. சேண்உலாம் - உயர்ச்சி பொருந்திய. `நீளுலாம்` என்பது, `நீணுலாம்` எனத் திரிந்தது; `மிகுதி பொருந்திய` என்பது பொருள். மலர் - தாமரை முதலியன.

பண் :

பாடல் எண் : 7

உரையார் பொருளுக் குலப்பி லானை
யொழியாமே எவ்வுருவு மானான் தன்னைப்
புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்
புதியனவு மாய்மிகவும் பழையான் தன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிரையார் மணிமாட நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

சொற்பொருளுக்கு அப்பாற்பட்டவன். எல்லா உருவங்களிலும் நீங்காது உடன் உறைபவன். நீரில் ஆழாத உட்டுளை உடைய நொய்ய பொருள்களாகவும் நீரில் ஆழும் கனமான பொருள்களாகவும் உள்ளவன். மிகவும் பழைமையாகிய தான் புதியவனாகவும் இருப்பவன். அலைகள் நிறைந்த கங்கையைத் தலையில் சூடியவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் வரிசையான அழகிய மாடிவீடுகளை உடைய நீடூரானும் ஆவான். நீசனேன் அவனை நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

உரை ஆர் பொருள் - சொல்லின்கண் பொருந்திய பொருள்; சொற்பொருள். அதற்கு உலப்பிலாமை. முடிவு பெறாமை; `சொல்லி முடிக்கலாகாத தன்மைகளை உடையவன்` என்றபடி, உரு - பொருள். `எவ்வுயிரும்` என்பதும் பாடம். புரை - உயர்ச்சி. கனம் - பருமை. `ஆழாதானை` என்பதில் உள்ள எதிர்மறை, `புரை, கனம்` என்பவற்றையும் நோக்கி நின்றது. நிற்கவே, `புரைத்துப் புரையா தானை, கனத்துக் கனவாதானை` என்றலும் அருளியவாறாயிற்று. `புரைத்து, கனத்து, ஆழ்ந்து` என்பன, காலத்தொடுபட்டு நிகழும் செயற்கையை உணர்த்திநின்றன.
அதனால் `இயல்பாகவே, உயர்ந்தும், கனத்தும், ஆழ்ந்தும் இருப்பவன்` என அவனது பெருநிலையை உணர்த்தியருளியதாயிற்று. `புதியனவுமாய் மிகவும் பழையான்` என்றது, `காரண காரியத் தொடர்ச்சியாய் மேலும் மேலும் தோன்றுவனவாய பொருள்கள் எல்லாமாய்த்தான் நிற்பினும், யாதொரு பொருளுந் தோன்றாது ஒடுங்கிப் பாழ்போலக் கிடந்த நிலையிலும் தான் ஒடுங்காது அவற்றைத் தோற்றுவிக்கும் தலைவனாய் நின்றவன்` என்றருளியவாறு. `முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருள்` (தி.8 திருவாசகம். திருவெம்பாவை - 9) என்றருளிச் செய்ததும் இப்பொருட்டு. `ஸதேவ ஸௌம்யேத மக்ர ஆஸீத்` (சத்தாகிய இதுவே முதற்கண் இருந்தது) என்பது சாந்தோக்கிய உபநிடதம். `புதியனவு மாய்` என்பதில், புதியனவாயும்` என உம்மையை மாறிக் கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 8

கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்
சீரரவக் கழலானை நிழலார் சோலைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீரரவத் தண்கழனி நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

மேம்பட்ட ஆதிசேடனைப் படுக்கையாக உடைய திருமாலும், குளிர்ந்த பொய்கையில் தோன்றும் தாமரையை இருப்பிடமாக உடைய பிரமனும் ஆகிய இருவரும் காண முயன்றும் அறியமாட்டாத அப்பெருமான் இயல்பினை யாவர் உள்ளவாறு அறிய இயலும்? அவனை அறிவோம் என்று நினைக்கும் தேவர்களுக்கும் உண்மையில் அறிய முடியாதவனாய் ஒலிக்கும் அழகிய வீரக்கழலை அணிந்த அப்பெருமான் நிழல் தரும் சோலைகள் உடைய திருப்புன் கூரை மேவியவன். அவனே நீர் பாயும் ஓசையை உடைய குளிர்ந்த வயல்களை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் பண்டு நினையாதவாறு என்னே!

குறிப்புரை :

கூர் அரவம் - (பாம்புகள் எல்லாவற்றுள்ளும்) மிக்க பாம்பு. `மாட்டார்` என்புழி, `ஆயினார்` என்னும் ஆக்கச்சொல் தொக்கது. அவ்விடத்து, ஆகலான் என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `ஆரொருவராயினும் அவரது தன்மையை அறிய வல்லாராகிய தேவர், (அவருள் ஒருவனாக வைத்து) அறிவோ மெனப் புகுவராயின், அவர்க்கெல்லாம் அறியலாகாத திருவடியையுடையவன்` என்க.
`இதனை இனிது விளக்குவது, மாலும் அயனும் அறியலாகாது நின்ற நிலை` என்பார், அதனை முன்னர் அருளிச்செய்தார். `கழலானை` என்புழியும். `கழலுடையனாயினானை` என ஆக்கம் விரித்துரைக்க. சீர் - புகழ். `சீரரவம்` `நீரரவம்` என்புழி அரவம். ஓசை.

பண் :

பாடல் எண் : 9

கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்
செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

கைகளிலிருந்து நெய் கீழே சொட்டுதலால் அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாதே கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமலிருப்பதற்குக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்ணும் கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய் உரைகளாகக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத்தீங்கில் நின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்த அடியேன், வயல்களில் செழிப்பான தாமரைகள் களைகளாகத் தோன்றும் நன்செய் நிலங்களை எல்லையாக உடைய திருப்புன்கூர் சிவலோகநாதன் என்ற பெயரில் உகந்தருளியிருப்பவனாய், கடற்கரைப் பகுதியில் நீர்வளம் உடைய மனைக்கொல்லைகளை உடைய நீடூரிலும் உகந்து தங்கியிருக்கும் அப்பெருமானை, நினையாத கீழ்மகனாய் அடியேன் இருந்தவாறு இரங்கத்தக்கது.

குறிப்புரை :

`கழுத்தே` என்னும் ஏகாரம், பிரிநிலை. `கழுத்தினைக் கைசென்று அடையச் செய்து உண்ணாது, கையினைக் கழுத்துச் சென்று அடையுமாறு செய்து உண்ணுங் கையர்` என்க. அவ்வாறுண்ணுதல், நெய் மிகுதியாக வழிந்தோடாமைப் பொருட்டும், உணவு வீழாமைப் பொருட்டுமாம். கலம் இன்றிக் கையில் உண்ணுதலால், மார்பிற்கு நேராக நீட்டி விரித்தகைகள் அதற்குமேல் உயர்த்தலாகாவாயின. கால் நிமிர்த்தல், நிற்றலால் உண்டாகும் நோயை நீக்கிக்கொள்ளுதற் பொருட்டு நேராக்குதல், கையில் உண்ணுதல், பொருட்பற்று உண்டா காமைப் பொருட்டும், நின்றுண்ணுதல் இடப்பற்று உண்டாகாமைப் பொருட்டுமாம். இவ்வாறொழுகுவோர் ஒருசிலரே என்க. `இவர் இவ்வாறு பற்றுக்களையெல்லாம் விடினும். பற்றக்கடவ பொருளைப் பற்றாமையின், பெறநின்றது என்னை` என்பார். இவ்வாறு இகழ்ச்சி தோன்ற எடுத்தோதியருளினார். நின்று உண்ணும் கையர் - நின்று உண்ணுதலாகிய ஒழுக்கத்தையுடையவர். இனி ``கையர்`` என்பதற்கு `வஞ்சகர்` என்றுரைத்து, `இங்ஙனம் புறத்தாரைமருட்டிநின்றவர்` எனலுமாம். சமணருட் பலர் வஞ்சகராய் இருந்தமையை, அவர் வைதிக சமயத்தார்க்கு அரசன் வாயிலாக இழைத்துவந்த கொடுமைகள் பற்றி யறியலாம். பொய் - பிழை. மெய் - ஒத்தது. `கருதிப்புக்கு` என்றதனால், சுவாமிகள் சமண சமயத்துப் புகுந்த காரணம் நன்கு அறியப்படுகின்றது. `அப்புள்ளுவர்` எனச் சுட்டு வருவித்துரைக்க. புள்ளுவர் - வேடர்; இஃது உவமையாகு பெயராயிற்று. `வேடர்கள் பறவைகளையும், விலங்குகளையும் வலையில் வீழச் செய்தல்போல, மக்களைச் சொல்லில் வசப்படுத்துபவர்` என்றதாம். `அகப்படுத்தப்படாது` என்பது, `அகப்படாது` என விகாரமாயிற்று. `வேடரது வலையிற் சிக்கிய ஒரு பறவையேனும் விலங்கேனும் அவராற் கொல்லப்பட்டு அவர்க்கு இரையாகாது தப்பியோடினாற்போல, இறுதிவரையில் சமண சமயத்திலிருந்து கெட்டொழியாது, மீண்டு வந்தேன்` என்றருளிச்செய்தார். `இத் துணைத் தாழ்த்து வந்தேன்; முன்பே நினையாதொழிந்த வினைதான் என்னே` என்றிரங்கியவாறு காண்க. படப்பை - தோட்டம்.

பண் :

பாடல் எண் : 10

இகழுமா றெங்ஙனே யேழை நெஞ்சே
யிகழாது பரந்தொன்றாய் நின்றான் தன்னை
நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை
நலனழித்து நன்கருளிச் செய்தான் தன்னைத்
திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவ லோ கனை
நிகழுமா வல்லானை நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே.

பொழிப்புரை :

யாதொரு பொருளையும் புறக்கணிக்காது அவற்றிலெல்லாம் உடனாய் இருப்பவன் எம்பெருமான். அவன் இராவணனைக் கயிலை மலையின் அடியில் இட்டு வருந்தச் செய்து அவன் வலிமையைக் குலைத்துப் பின் அவனுக்கு நல்லனவாகிய வாளும் நாளும் வழங்கியவன். மதத்தால் விளங்கிய யானையின் தோலைப் போர்த்தியவன். அவனே திருப்புன்கூர் மேவிய சிவலோக நாதன். தன் விருப்பப்படியே செயற்படவல்ல அப்பெருமான் நீடூரிலும் உகந்தருளியுள்ளான். `அறிவில்லாத மனமே! அப்பெருமானைக் கீழ்மகனாகிய யான் நினையாத செயலே இரங்கத்தக்கது. அவ்வாறாக நீயும் இகழும் செயல் எவ்வாறு ஏற்பட்டது?`

குறிப்புரை :

`ஏழை நெஞ்சே இகழுமாறு எங்ஙனே` என்பதை ஈற்றில் வைத்து, `நான் நினையாவாறு என்னே! நீதானும் இகழுமாறு எங்ஙன் ஆயிற்று` என உரைக்க. இது தம் நெஞ்சினை வேறாக்கி அருளிச்செய்தது. இகழாது - யாதொரு பொருளையும் இகழ்ந் தொழியாது; (எல்லாவற்றிலும் நிறைந்து அவற்றைத் தனது வியாபகத்துள் அடக்கி நிற்பவன்). நகழ - வருந்த. நகழ்வு - துன்பம்; வருத்தம்: `நகழ்வொழிந் தாரவர் நாதனை உள்கி` என்றது காண்க. (தி.10. தந்.9. பா.14.) நிகழுமாவல்லான் - தன் இச்சைவழியே செல்ல வல்லவன்; தன்வய முடையவன்.

பண் :

பாடல் எண் : 1

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

சதைப்பகுதியை வளைத்துச் சுவராகச் செய்து ஒன்பது வாயில்களை அமைத்து வெள்ளிய ஒளியை உடைய எலும்புகளைத் தூணாக அமைத்து மயிரினை மேற்பரப்பித் தாமே படைப்பித்த குடில் நீங்கும்படி தக்காரிடத்து வலியச் சென்று , தாவும் மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய் அருள் செய்கின்றார் . தோகைகளைப் பரப்பி மயில்கள் ஆடும் சோலைகளை உடைய திருக்கழிப்பாலைத் தலத்தை உகந்தருளியுள்ள மண்டை யோட்டினை ஏந்திய தலைவராகிய அப்பெருமான் வான் உலகங்களை எல்லாம் கடந்து விரைவாகச் செல்லும் வீடுபேற்றுலகிற்குச் செல்லும் வழியை அமைத்துக் கொடுத்துள்ளார் . இவ்வுடம்பு பெற்றதனாலாய பயன்கொண்டு அவர் வகுத்த வழியிலே செல்வது ஒன்றே நாம் செயற்பாலது . அவர்க்குக் கைம்மாறாக நாம் செயற்பாலது ஒன்றும் இல்லை .

குறிப்புரை :

ஊன் - தசை , உடுத்தி - வளைத்து ; சுவராகச் செய்து மேய்ந்து - மேற்பரப்பி . எடுத்த - கட்டிய . கூரை - குடில் . தவிர - நீங்கும்படி . போவார் - ( தக்காரிடத்துத் ) தாமே வலியச் சென்று அருள் புரிவார் . தயக்கம் - விளக்கம் ; அது , வேடத்தை உணர்த்திற்று , படைத்தார் - உடையார் . தாமரையினார் - தாவுகின்ற மானை ( க்கையிலே ) உடையார் . கான் - காடு ; இஃது உவமையாகுபெயராய்த் தோகையை உணர்த்திற்று . எடுத்து - விரித்து . ` கபால ` என்பதன் ஈற்று அகரம் தொக்கது . கபாலப்பனார் ` என்னும் கனிச்சீரினை இங்கும் மேலைத் திருப்பதிகத்திற்போலக் கொள்க . வானிடம் - மண்ணுலகின் வேறாய உலகங்கள் ; அவற்றை ஊடறுத்துச் செல்லுதல் , எல்லாத் தத்துவங்ளையும் கடந்து சென்று அவரது திருவடியை அடைதல் . வல்லைச்செல்லுதல் , எளிதிற் செல்லுதல் . ` வழி ` என்றது , குறிகளும் அடையாளமும் கோயிலும் ( தி .5. ப .90. பா .6.) முதலாயினவற்றை . ` வழி ` என்பதன் பின் , ` வைத்தார் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . வைத்தார்க்கு என்பது , ` வைத்த அவர்க்கு ` எனப் பொருள்தரும் . இவை வருகின்ற திருப்பாடல்கட்கும் ஆம் . அவர்க்கு - அவர் பொருட்டு ; என்றது ` அவரது கருணைக்குக் கைம்மாறாக ` என்றபடி . அவ்வழியே போதுதல் , அவற்றாற் பயன்கொள்ளும் முறையை யறிந்து , அவ்வாற்றானே ஒழுகுதல் . ` அங்ஙனம் ஒழுகிப் பயன்பெறுதலை யன்றி , அவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு வேறில்லை ` என்றதாம் . இஃது அடித்தடித்து அக்காரம் தீற்றுதல் போலாம் ( திருவாசகம் அற்புதப்பத்து - 3) என்க .

பண் :

பாடல் எண் : 2

முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
முன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை
பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
பிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்
கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

மதில்களுக்குரிய இலக்கணங்கள் நிரம்பிய மூன்று மதில்களையும் சாம்பலாகுமாறு அழித்த பெருமான் ஏனைய பொருள்கள் தோன்றுவதன் முன்னும் அவை அழிந்தபின்னும் உள்ள முக்கண் தலைவர் . கங்கை தங்கிய சடைமுடியிலே பிறைச்சந்திரனும் பாம்பும் பகைமை நீங்கச் சேர்த்து வைத்தவர் . கொடிய விடக் கறையைக் கழுத்தளவில் தங்கச் செய்தவர் , எம்பெருமானார் . கழிப் பாலை மேவிய அக்கபாலப்பனார் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தம் சொற்களால் , இவ்வுடல் அழிய உயிர் செல்லுதற்குரிய வழியை வகுத்தருளியுள்ளார் . அவ்வழியிலே நாம் செல்லுவோம் .

குறிப்புரை :

முறை - ஆக்கும் முறை . முன்னுமாய்ப் பின்னுமாய் தோன்றிக் கெடும் பொருள்கள் எல்லாவற்றின் தோற்றத்திற்கு முன்னும் , ஒடுக்கத்திற்குப் பின்னும் உள்ளவனாகி ; என்றது , ` அவை எல்லாவற்றையும் தோற்றி ஒடுக்கித் தனக்குத் தோற்றக் கேடுகள் இன்றி என்றும் ஒருபடித்தாய் இருப்பவனாய் ` என்றவாறு . ` முக்கண் எந்தை கண்ட எந்தை ` என்பன , ஒரு பொருள்மேற் பல பெயர்கள் . அவை பன்மையொருமை மயக்கமாய் , ` கபாலப்பனார் ` என்பதனோடு இயைந்தன . பிறைக்குப் பாம்பு பகையாயிருப்ப , அவ்விரண்டனையும் அலைத்து ஈர்த்து ஓடுவது கங்கையாகலின் , அவைகளை , ` பிணக்கந் தீர்த்து உடன்வைத்தார் ` என்று அருளிச்செய்தார் . கறை - கறுப்பு ` நஞ்சுக் கறையை ( கறுப்பினை ) ஆர்ந்த ( அழகு நிறைந்த ) மிடற்று அடங்கக் கண்ட ( செய்த ) எந்தை ` என்க . மறை ஆர்ந்த - மந்தணம் நிறைந்த , ` வாய்மொழியான் ` என்றது , தனது வாய்மொழியால் என்றவாறு . அவை வேத சிவாகமங்கள் . யாக்கை மாய என மாறுக .

பண் :

பாடல் எண் : 3

நெளிவுண்டாக் கருதாதே நிமலன் தன்னை
நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
யொருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்
களிவண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

தூயனாகிய அப்பெருமானாரை நெகிழ்ச்சியால் இடையறவு படாமல் நாடோறும் தொடர்ந்து விருப்போடு நினையுங்கள் . சிறந்த அணிகலன்களை உடைய , வண்டுகள் ஒளிந்து தங்கும் கருங்கூந்தலை உடைய உமாதேவியைத் தம் உடம்பில் ஒருபாகமாக விரும்பிக்கொண்டு , அடியார்கள் நினைந்து துதிக்குமாறு , களிப்பை உடைய வண்டுகள் நிறைந்த இருண்ட சோலைகளுக்குத் தாழைவேலியாகச் சூழ்ந்த கழிப்பாலை மேவிய கபாலப்பனார் காற்றை நுகர்தலாலே நிலைத்து நிற்கும் , மாயையின் காரியமாகிய இவ்வுடம்பை இனிக்கொள்ளாது நிலையாக விடுத்தற்குரிய நெறியைக் குறிப்பிட்டுள்ளார் . அந்நெறியிலே நாம் செல்வோம் .

குறிப்புரை :

நெளிவு - நெகிழ்வு . ` அஃது உண்டாமாறு கருதாது நினைமின்கள் ` என்றது , உறுதியாக நினைமின்கள் என்றதாம் . நிமலன்றன்னை என்பது முதற்கண் நிற்கும் . கரும்பொழில் - இருண்ட சோலை . கண்டல் - தாழை . வளி - பிராணவாயு . ` அதனை வாங்கியும் விட்டும் நுகர்தலாலே நிலைத்துநிற்கும் குரம்பை ` என்க . உண்டு - உண்ணுதலால் . ஆர் - பொருந்துகின்ற .

பண் :

பாடல் எண் : 4

பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடிநூறு கமலத்தர் ஆரூ ராதி
ஆனஞ்சு மாடும் ஆதிரையி னார்தாம்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

திருநீறு விளங்கும் திருமேனியை உடைய பெருமானார் திருநீற்றுப்பையையும் வைத்துள்ளார் . அவர் பூணூல் அணிந்து புலித்தோலை உடுத்துப் பாம்புகளை அணிகலனாகப் பூண்டவர் . ஆதிரை நட்சத்திரத்தை உகந்து கொண்டு திருவாரூரில் உள்ள அவ்வாதி மூர்த்தி பஞ்சகவ்விய அபிடேகத்தை ஏற்றுத் தம் திருவடிகளில் அடியவர்கள் இட்ட பல தாமரைப் பூக்களை உடையவர் . சோலைகள் நறுமணம் வீசும் கழிப்பாலை மேவிய அக் கபாலப்பனார் , இறந்து போகும் இப்பொய்யாய உடல் நீங்க உயிர் நிலையாகத் தங்குதற்குரிய இடத்தை அடைவதற்கு உரிய வழியை வகுத்துக் கொடுத்துள்ளார் . அவ்வழியே நாம் செல்வோம் .

குறிப்புரை :

` பூதிப் பையர் ` என ஈண்டு அருளியவாறே திரு முறைகளுள் பிற இடங்களிலும் சிவபிரான் விபூதிப்பை உடையனாய் இருத்தல் குறிக்கப்படுகின்றது . கமலம் , வழிபடுவோர் இட்டவை . ஆதி - முதல்வன் . கடி - நறுமணம் . ` கமழ்ந்து நாறும் ` என்றது . ` மிகுதியாக நறுமணம் பெற்று வீசும் ` என்றபடி . மடி நாறும் - இறப்புத் தோன்றும் . மேனியாகிய இம்மாயம் என்க . மாயம் - பொய்ம்மை ; நிலையாமை ; அஃது அதனை உடைய பொருள்மேல் நின்றது .

பண் :

பாடல் எண் : 5

விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
இறையானாய் எம்மிறையே யென்று நிற்கும்
கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
கழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார்
மண்ணாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

தேவர்கள் விரும்பி வந்து ` தேவருலகம் ஆகிய வனே ! எல்லா இடங்களிலும் பரவி வேதம் ஓதி , கீதம்பாடி , எண் ஆனவனே ! எழுத்தானவனே ! ஏழ்கடலும் ஆனவனே ! எல்லாப் பொருள்களுக்கும் தலைவனே ! எங்கள் தலைவனே ! எங்கள் பற்றுக் கோடே ! மேகங்களும் உலகப் பொருள்களும் ஆயவனே !` என்று போற்றி நிற்கும் கழிப்பாலை மேவிய கபாலப்பனார் இவ்வுலகில் தோன்றிய நிலையாமையை உடைய உடல் நீங்க வழி வைத்தார் . அவ்வழி நாம் செல்வோம் .

குறிப்புரை :

விண்ணவர்கள் விரும்பிவந்து , விண்ணானாய் வேதத்தாய் கடல் ஏழானாய் கண்ணானாய் காரானாய் மண்ணானாய் இறையானாய் எம் இறையே என்று நிற்கும் கழிப்பாலைமேய கபாலப்பனார் ` என்றியைத்துக்கொள்க . இறை - எப்பொருட்கும் தலைவன் . தமக்கு இறைவனாதலை வேறெடுத்துக் கூறினார் என்க . கண் , அறிவு . ` தேவர்கள் பலவாறாக ஏத்திப் பணியும் பெருமான் ` என்றவாறு .

பண் :

பாடல் எண் : 6

விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரான் எரிசுடரான் விண்ணு மாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

கழிப்பாலை மேவிய கபாலப்பனார் , வேண்டு கோளை உடைய வித்தியாதரர்கள் துதிக்க , சூரியன் , அக்கினி , விண்ணுலகத்தார் ஆகிய எல்லாப் பொருள்களையும் ஆக்கும் தந்தையார் . அடியார்கள் மனத்துள் பொருந்தும் உயிர்களின் தலைவர் . பாசுபதவேடத்தையுடைய ஒளி வடிவினர் . கண்ணப்ப நாயனார் தம் வலக்கண்ணை இடந்து அப்பிய செயலைக் கண்டு உகந்தவர் . அவர் பவவகையான பிணிகளுக்கு இருப்பிடமாகிய இந்நிலையற்ற உடம்பு நீங்க வழி வகுத்துள்ளார் . அவ்வழியே நாம் செல்வோம் .

குறிப்புரை :

விண்ணப்பம் - வேண்டுகோள் . விச்சாதரர் - வித்தியாதரர் . விண்ணப்ப விச்சாதரர்கள் - வேண்டுகோளை உடைய வித்தியாதரர்கள் . இவர்கள் இசைபாடுபவர் ஆதலின் , அவர்களையே ஏத்துவோராகவும் , விண்ணப்பத்தை உடையவராகவும் அருளினார் . விரி கதிரான் - சூரியன் . எரிசுடரான் - அக்கினி , பண் அப்பன் - எல்லாப் பொருள்களையும் ஆக்குகின்ற தந்தை ; ` கதிரோன் முதலிய எல்லாப் பொருள்களுமாய் இருந்து , அவற்றை முதலாகக்கொண்டு தோன்றும் பொருள்களைத் தோற்றுவிப்பவன் ` என்றருளியவாறு . ஏயும் - பொருந்துகின்ற . பசுபதி - உயிர்கட்குத் தலைவன் . பாசுபதன் - பாசுபத வேடத்தை உடையவன் . தேச மூர்த்தி - ஒளி உடைய வடிவத்தை உடையவன் . காளத்தி , கண்ணப்ப நாயனார் வழிபட்ட இடமாதலை நினைந்து உருகி அருளிச்செய்தவாறு . வண்ணம் - பல வகை .

பண் :

பாடல் எண் : 7

பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்
பேதப் படுகின்ற பேதை மீர்காள்
நிணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

பிணமாதலைப் பொருந்தும் ஓட்டைக் குடிசையை நிலைபேறுடையதாகத் தவறாக எண்ணும் அறிவிலிகளே ! கழிப்பாலை மேவிய கபாலப்பனார் , கொழுப்புத் தங்கும் சூலத்தவராய் , நீல கண்டராய் , எண்தோளினராய் எண்ணற்ற குணத்தினாலே கணம்புல்ல நாயனாரின் கருத்தை விரும்பி ஏற்றவராய்க் காஞ்சிமாநகரில் உகந்தருளியிருப்பவர் . நறுமணப் பொருளால் நாற்றம் மறைக்கப்பட்ட நிலையில்லாத இவ்வுடல் தொடர்பு நீங்குதற்கு வழிவகுத்துள்ளார் . அவ்வழியே நாம் செல்வோம் .

குறிப்புரை :

பிணம் புல்கு - பிணமாதல் பொருந்தும் . பீறற் குரம்பை - ஒழுகுமாடம் ( தி .5. ப .31. பா .7.), பொத்தல் மண் சுவர் ... குரம்பை . ( தி .5. ப .76. பா .5), ஓட்டை மாடம் ( தி .5. ப .82. பா .9) என அருளிச் செய்வதும் காண்க . எண்குணம் , நிறைந்த குணம் எனத் தனித்தனி இயைக்க . அறுபான் மும்மை நாயன்மாருள் , கணம்புல்லர் ஒருவர் . கருத்து - கருதிச்செய்த தொண்டு ; அது , தலைமயிரை விளக்காக எரித்தமை . ` அது குற்றமாயினும் , அன்பினால் விரும்பி ஏற்றார் ` என்றவாறு . கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள் - ` குற்றம்செய்யினும் குணம்எனக் கருதும் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் `. ( தி .7. ப .55. பா .4.)

பண் :

பாடல் எண் : 8

இயல்பாய ஈசனை எந்தை தந்தை
என்சிந்தை மேவி யுறைகின் றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான
தியம்பகன் திரிசூலத் தன்ன கையன்
கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

கயல்மீன்கள் தம் மீது பாயப்பெற்ற தாழை மரங்களை எல்லையாகக் கொண்டு அவற்றால் சூழப்பட்ட கழிப்பாலை மேவிய கபால அப்பன் செயற்கையான் அன்றி இயற்கையாகவே எல்லோருக்கும் தலைவன் . எம் குலத்தலைவன் . என் சிந்தையில் விரும்பித் தங்கியிருக்கின்றவன் . இடையறாது தொழில் செய்பவன் . அவ்வத்தொழில்களுக்கு ஏற்ற திருமேனிகளை உடையவன் . தூயவன் , முக்கண்ணன் , முத்தலைச் சூலத்தினன் . தீயை வெளிப்படுத்தும் சிரிப்பினன் . அப்பெருமான் மயக்கத்தைத் தரும் நிலையில்லாத இவ்வுடல் நீங்க வழிவைக்க , அவ்வழியே நாம் போதுகம் .

குறிப்புரை :

ஈசன் - ஆள்பவன் ; தலைவன் . ` ஒருவரது ஆணையால் தலைவனாகாது , தானே தலைவனாய் நிற்பவன் ` என்பார் , ` இயல்பாய ஈசன் ` என்றருளிச்செய்தார் . ஐகாரங்கள் சாரியை . எந்தை - என்தந்தை , தந்தை - ( அவன் ) தந்தை , சிந்தை ` என்பது , ` எந்தை ` தந்தை ` என்பவற்றோடும் இயையும் . மேவி - விரும்பி . தம் குடிமுழுதாண்டமை அருளிச்செய்தவாறு . முயல்வான் - இடையறாது தொழில்செய்து நிற்பவன் . தொழில் , ஐந்தொழில் . மூர்த்தி - மூர்த்தம் உடையவன் . தொழில் - தொழிற்கேற்ற திருமேனிகளை யுடையவன் . தீர்த்தன் - தீர்த்தவடிவினன் ; பரிசுத்தன் எனலுமாம் . திரியம்பகன் என்பது , ` தியம்பகன் ` என வந்தது . அம்பகம் - கண் . திரியம்பகன் - முக்கண்ணன் . ` திரிசூலத்தன் , நகையன் ` எனப் பிரிக்க . நகை , புன் முறுவல் , ` கயல்பாயுங் கண்டல் ` என்றது மருதமும் நெய்தலும் மயங்கி நிற்றல் குறித்தவாறு . சூழ்வுண்ட - சூழ்தல் பொருந்திய . ` கண்டலால் சூழ்வுண்ட ` என்க . மயல் - மயக்கம் .

பண் :

பாடல் எண் : 9

செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாம்
கற்றதோர் நூலினன் களிறு செற்றான்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

கழிப்பாலை மேவிய கபால அப்பன் , மனத்தில் பகை எண்ணத்தை நீக்கிச் சிவபெருமான் என்று தன்னை அன்போடு தியானிப்பவர்களின் உள்ளத்தில் உள்ள நோய்களைப் போக்கி அவர்களை இவ்வுலகத்தார் போற்றச் செய்யும் உத்தமனாய் எல்லா வற்றையும் ஓதாதே உணர்ந்தவனாய் இயல்பாகவே எல்லாப் பாசங்களையும் நீங்கியவன் . அப்பெருமான் இந்த நிலையற்ற உடல் நீங்க வைத்த வழியிலே நாம் போவோம் .

குறிப்புரை :

செற்றது - பகைத்தது ; முரணியது . ` சிந்தை உள்ளால் , என்புழி , ஆல் அசைநிலை . சிந்தையுள் உறும் நோய் , கவலை . காட்டுவான் - காணச்செய்வான் ; என்றது , ` உலக முழுதும் அவரைப் போற்றச்செய்வான் ` என்றதாம் . கற்றது ஓர் நூலினன் - பிறர் கற்ற ஒப்பற்ற நூலினது உணர்வினன் ; இயல்பாகவே , எல்லா ஞானங்களையும் உடையவன் என்றபடி . கயிறு - பாசம் . செற்றான் - அறுத்தான் . ` நூலினன் , செற்றான் ` என்பன பன்மை யொருமை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 10

பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்
புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
கால்விரலா லூன்று கழிப்பா லையார்
வருதலங்க மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.

பொழிப்புரை :

போரில் வல்ல அரக்கனாகிய இராவணனுடைய புட்பக விமானம் வெற்றிமாலை சூடிய சிவபெருமானுடைய மலையின் மீது செல்லாதாகக் கீழ் நிலம் அசையுமாறு அவன் மலையைப் பெயர்த்த அளவில் உமாதேவி அஞ்ச அப்பெருமான் மனத்தால் நோக்கி அவன் இருபது கரங்களையும் பத்துத் தலைகளையும் தன் கால் விரலை ஊன்றி நசுக்கியவன் . அப்பெருமான் திருக்கழிப்பாலையை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு பிறத்தலை உடைய நிலையாமையை உடைய இவ்வுடம்பின் தொடர்பு உயிருக்கு என்றும் நீங்கு மாறு செய்யும் வழியை அறிவித்துள்ளான் . அவ்வழியிலேயே நாம் செல்வோம் .

குறிப்புரை :

` பொருத அலங்கல் ` என்பதில் அகரம் தொகுத்தல் . அலங்கல் , வெற்றிமாலை . ` இறைவன் ` என்பது , ` தான் ` என்னும் பொருட்டாய் நின்றது . வருதல் அங்கம் - வருதலை ( பிறத்தலை ) உடைய உடம்பு ` அங்கமாகிய குரம்பை ` என்க .

பண் :

பாடல் எண் : 1

கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோளூர் தண்வளவி கண்டியூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

கொடிகள் கட்டப்பட்ட மாட வீடுகளைக் கொண்ட நீண்ட தெருக்களை உடைய கூடல் , கோட்டூர் , கொடுங்கோளூர் , வளவி , கண்டியூர் , கூத்து நிகழ்த்தும் சிறந்த மருகல் இவற்றில் நாளும் தங்கி அழகிய ஒற்றியூர் ஒற்றிவைக்கப்பட்டது என்னும் பொருளைத் தருதலில் அதனை நீங்கிச் சூரியன் மறையும் மாலையிலே வண்டுகள் ஒலிக்கும் பழனம் , பாசூர் , பழையாறு , பாற்குளம் என்னும் இவற்றை நீங்கி இன்று திருநீறு அணிந்த மேனியராய்ப் பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எங்களுடைய ஊர் புறம்பயம் என்று கூறி எம்பெருமானார் சென்று விட்டார் .

குறிப்புரை :

கூடல் - மதுரை . இதுமுதலாகப்பலதலங்கள் இதன்கண் அருளிச்செய்யப்பட்டன . அவற்றுள் , கொடுங்கோளூர் , வளவி , பாற்குளம் என்பன வைப்புத்தலங்கள் . வைகி - தங்கியபின் , ஒற்றியாக - ஒற்றியாகையால் . இங்கு , ` நீங்கி ` என ஒரு சொல் வருவிக்க . ` வைகி , கைவிட்டு ` என்பன , அவர் அன்றன்று கூறியதனைக் கூறியவாறே தெளிந்து கூறியன . ` இந்நாள் , ` நம் ஊர் புறம்பயம் ` என்று ( சொல்லிப் ) போயினார் ` என்க . முன்பெல்லாம் கண்ட நாள்களை இறந்த காலமாக மறந்து , இறுதியிற் கண்ட நாளையே நிகழ்காலமாக நினைந்துநின்று கூறுகின்றாளாதலின் , அதனை , ` இந்நாள் ` என்றாள் . ` மீண்டு வந்திலர் என்பது குறிப்பெச்சம் . இதனால் தனது விதுப்பு ( விரைவு ) அறிந்து தோழி தூது விடுவாளாதல் பயன் என்க . இறைவனை அடையப் பெறாது வருந்துவார்க்கு அவரது ஆற்றாமையை அறிந்து இறைவன் திருப்புறம்பயத்தில் வெளிநின்றருளல் இதன் உண்மைப்பயன் ; ஆகவே , அதன்பொருட்டு இத்திருப்பதிகம் வெளியாயிற்றென்க .

பண் :

பாடல் எண் : 2

முற்றொருவர் போல முழுநீ றாடி
முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல உறங்கு வேன்கை
ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணு கின்றார்
மற்றொருவ ரில்லைத் துணையெ னக்கு
மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

தவம் முற்றிய ஒருவரைப்போல உடல் முழுதும் திருநீறு பூசி , பிறைசூடி , முந்நூல் அணிந்து ஒற்றுவதற்கு வந்த ஒருவர் போலப் பொய் உறக்கம் கொண்ட என்கையிலிருக்கும் ஒளி பொருந்திய வளையல்களை ஒன்றொன்றாக எண்ணுகின்றார் . எனக்கு இவரன்றித் துணைவர் வேறு யாரும் இல்லை . இவருடைய செயலைக் கண்டு பித்துப்பிடித்தவரைப் போல மயங்குகின்ற என்னிடத்தில் ` எங்களுடைய ஊர் திருப்புறம்பயம் ` என்று கூறிப் பாம்பினைக் கச்சாக அணிந்த எம்பெருமான் பூதங்கள் தம்மைச்சூழ என்னைவிடுத்துப் போய் விட்டார் .

குறிப்புரை :

முற்று ஒருவர் - ( தவம் ) முற்றிய ஒருவர் . முழுநீறு - நீற்றுக்குரிய தன்மை நிறைந்த நீறு ; அது , மிக வெள்ளியதாதல் - ஒற்று ஒருவர்போல உறங்குதலாவது , மறைந்துநின்று உண்மையை , கண்டும் கேட்டும் உணர்கின்ற ஒற்றர் ஒருவர் , அதன்பொருட்டுப் பொய்யாக உறங்குதல்போல உறங்குதல் . ` ஒற்று ஒருவர் ` என்பதும் , ` முற்றொருவர் ` என்றதுபோல வினைத்தொகை . இறைவரது கருத்தினையறிதற் பொருட்டு அவ்வாறுறங்கினாள் என்க . வளையை ஒன்றொன்றா எண்ணியது நலம்பாராட்டி . ` எண்ணுகின்றார் ` என்றது , இறப்பில் நிகழ்வு . ` மற்றொருவர் இல்லைத் துணை எனக்கு ` என்பதனை இறுதிக் கண் கூட்டுக . மால் - பித்து . ` உறங்குவேன் , மயங்குவேன் ` என்பன , இறப்பின்கண் , முந்நிலைக்காலமுந் தோன்றும் இயற்கை உணர நின்றன . ( தொல் - சொல் . 240)

பண் :

பாடல் எண் : 3

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்
திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

தீங்கு தருகின்ற விடத்தை நுகர்ந்த , மாலையின் செந்நிறத்தை உடைய பெருமான் , ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய தோளின் மீது மேலாடையாக அணிந்து , ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி , எம் இல்லத்து வந்து ` திருவே ! உணவு இடு ` என்று கூற , உணவு கொண்டுவர உள்ளே சென்றேன் . உணவுகளோடு யான் மீண்டு வரக் குழம்போ சோறோ ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து , பூதங்கள் சூழப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

ஆகாத - தீங்கு தருகின்ற . ஏகாசம் - மேலாடை . ` ஏந்திவந்த ` தென , அளபெடையாகவும் பாடம் ஓதுப . ` திருவேபலி இடு ` என்றியைக்க . திரு - திருமகள் . பிச்சை ஏற்போர் அதனை இடுவாளை , ` திருமகளே ` என்றழைத்தல் வழக்கு . பாகு - குழம்பு , பலி - சோறு . கண் உள்ளே - கண்ணினது உள்ளிடத்தையே . ` பற்றி ` என்றது , ` கண்ணிற் கருமணியினுள்ள பாவையே யாகி ` என்றதாம் . ` கருமணியிற் பாவாய்நீ போதாய் யாம்வீழும் - திருநுதற் கில்லை இடம் ` ( குறள் 1123) என்பதனை நோக்குக . ` கண்ணுளே ` என்பதும் பாடம் . ` போகாத வேடத்தார் ` என்றது . ` அவரது வேடம் என் கண்ணி னின்றும் நீங்காத இயல்பினது ` என்றதாம் . ` வேடத்தராய்ப் போயினார் ` என்க .

பண் :

பாடல் எண் : 4

பன்மலிந்த வெண்தலை கையி லேந்திப்
பனிமுகில்போல் மேனிப்ப வந்த நாதர்
நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை
நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்
கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்
கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்
பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

பல்மிக்க வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பனிபொழியும் மேகம் போன்று திருநீற்றால் வெள்ளிய மேனியை உடைய வஞ்சகராகிய எம் தலைவர் , நெல் மிக விளையும் நெய்த்தானம் , சோற்றுத்துறை , நியமம் , துருத்தி , நீடூர் , பாச்சிலாச் சிராமம் , கற்கள் மிக்க உயர்ந்த கழுக்குன்றம் , கடற்கரையிலமைந்த நாகைக்காரோணம் என்ற தாம் உகந்தருளியிருந்த திருத்தலங்களை விடுத்து , இன்று பொலிவுமிக்க தம் தேவிமாரோடு கூடியதாம் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

பல் மலிந்த - பற்கள் நிறைந்த . பனி முகில் - பனியைப் பெய்யும் மேகம் ; இது வெள்ளிதாய் இருக்கும் . இனி , ` குளிர்ந்த முகில் ` எனக்கொண்டு , ` அம்மை திருமேனியைக் குறித்தது ` என்றலுமாம் . ` பிரபந்தம் என்பது , ` பவந்தம் ` என்றாயிற்று ` பிரபஞ்சம் ` என்பது , ( திருவிளை . மண்சு . 72) ` பவஞ்சம் ` என வந்ததுபோல . ` உரையும் பாட்டும் ஆகிய செய்யுள்களுக்கெல்லாம் உண்மையில் உரிய பொருள்சேர் புகழையுடைய தலைவர் ` என்றவாறு ` பவந்தர் - வஞ்சர் ; கள்வர் ` என்றுங் கூறுவர் . நியமம் , ` பரிதிநியமம் ` என்னுந் தலம் . பாச்சில் - பாச்சிலாச்சிராமம் . ` நீர்க்கழுக்குன்றம் ` எனமாற்றுக . பொன் அழகு ; கோதையர் ; தேவியார் .

பண் :

பாடல் எண் : 5

செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

இறந்தார் தலைமாலையைக் கையிலெடுத்துத் தலையில் சூடிச் சிவந்த மேனியில் பெரிய தலையை உடைய யானைத் தோலைப் போர்த்துப் பார்வதி பாகராய் , மானைக் கையில் ஏந்தி , ஆறுநூறாயிரத்து அறுபது தேவர்கள் தம் கூத்தினைக் காணுமாறு அருள் செய்து , புலித்தோலை இடையில் கட்டிக் கையில் புத்தகம் ஒன்றனை ஏற்றுப் புறம்பயம் நம் ஊர் என்று எம்பெருமான் போயினார் .

குறிப்புரை :

சிவபிரான் , கையிலும் தலைமாலை ஏந்திநிற்றல் , இத்திருப்பாடலாற் பெறப்படும் . அத் தவத்த தேவர் - அந்தத் தவம் உடைய தேவர் . தேவர் அறுபதின்மருக்கும் . ஆறுநூறாயிரவர்க்கும் ஆடல் காட்டினமை இத்தலத்துள் நிகழ்ந்தது போலும் . புத்தகம் கைக்கொள்ளல் , ஆசிரியக்கோலம் . ` புறம்பய மதனில் அறம்பல அருளியும் ` ( தி .8 திருவா . கீர்த்தி . 90) என்பதனால் , இறைவன் இங்கு ஆசிரியனாய் இருந்து அருளினமை அறியப்படுகின்றது . ` திறம்பயனுறும்பொருள் தெரிந்துணரும் நால்வர்க்கு - அறம்பய னுரைத்தனை புறம்பய மமர்ந்தோய் ` என , ஆளுடைய பிள்ளையாரும் அருளிச் செய்தார் . ( தி .2. ப .30. பா .1.)

பண் :

பாடல் எண் : 6

நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்லபுலி யதள்மேல் நாகங் கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

விடம் அடைந்த கழுத்தினராய் , நீறு பூசி , பெரிய புலித்தோல் மேல் பாம்பினை இறுகத் கட்டிக் கொண்டு , செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய்ப் பவளம் போன்ற சிவந்த மேனியை உடைய எம்பெருமான் யான் உறங்கும் இடத்து வந்து துடியை ஒலித்து என்னை விழிக்கச் செய்து ` யான் பராய்த் துறை ஊரினேன் ` என்றார் `. யான் திடுக்கிட்டு எழுந்திருந்தேன் . பின் அவர் என் குறிப்பறிந்து மெய் தீண்டிச் செய்தனவற்றைச் சொற்களால் எடுத்துக்கூறும் ஆற்றல் இல்லேன் . தம் சிவந்த சடையில் கங்கையைச் சூடி அப்பெருமான் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

` பராய்த்துறையேன் ` என்றது வேறு முடிபாகலின் , பால்வழுவின்மை யுணர்க . இது , வருகின்ற பாடல்களிலும் ஒக்கும் . ` ஓர் பவள வண்ணர் ` என்றது , முன்னர் அறிந்திலாமை குறித்தது . துஞ்சிடை - உறங்குமிடத்து . ` அதன்பின் நிகழ்ந்தது உனக்குச் சொல்ல மாட்டேன் ` என்க . நிகழ்ந்தது , குறிப்பறிந்து மெய்தீண்டியது . மாட்டாமை , நாணத்தால் ஆயதென்க . இனி , ` சொல்லமாட்டேன் ` என்றதற்கு , ` காதலும் நாணமும் ஒருநிலையே நின்றமையால் , கடிந்தாயினும் நயந்தாயினும் ஒன்றும் சொல்ல இயலாதேனாயினேன் ` என்றுரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 7

மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு
திருமுண்ட மாஇட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

ஒருகையில் மான் குட்டியை ஏந்தி , மற்றொரு கையில் மழுப்படையை ஏந்தி , ` யான் மறைக்காட்டில் உள்ளேன் ` என்று இனிய சொற்களைப்பேசி , விளங்கிய திண்ணிய தோள்கள் மீது திருநீற்றைப் பூசி , நெற்றியில் திரிபுண்டரமாகத் திருநீறணிந்து , சுருண்ட கூந்தலை உடைய மகளிர்பின் சென்று , தம் கண்கள் கரிந்து நீர் சொரியுமாறு அவர்களை நெடுநேரம் அசையாமல் நோக்கி , புள்ளிகள் பொருந்திய பாம்புகளை இறுகக் கட்டிக் கொண்டு பூதங்கள் சூழ எம்பெருமானார் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

மறி - மான் கன்று , மழலை - இனிய மொழி . செறி - செறிதல் ; நெருங்குதல் ; கிளைத்தல் . ` நீறு கொண்டு சென்று ` என இயையும் . திருமுண்டமா இட்ட திலக நெற்றி - மங்கல முகமாமாறு இட்ட திலகத்தை உடைய நெற்றியை உடைய ( கூந்தலார் என்க ). நெறி இலங்கு கூந்தலார் - நெறிப்பு விளங்கும் கூந்தலை உடையவர் . அவர் பின் பின் சென்று என்றது , ` அன்னார் பலரிடத்துத் தாமே வலியச் சென்று ` என்றவாறு . நெடுங்கண் பனிசோர - ( நிறையழிந்து ) நீண்ட கண்கள் நீர்த்துளிகளைச் சொரியுமாறு . நோக்கி - காதல் நோக்கு நோக்கி . பொறி - புள்ளி ; இது படத்தின்கண் உள்ளது .

பண் :

பாடல் எண் : 8

நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட்டியுங்
குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை
நல்லாளை நல்லூரே தவிரே னென்று
நறையூரில் தாமும் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

ஓரிடத்தில் தங்காமல் பல ஊர்களும் பிச்சை ஏற்றலைக் கருதிச் சென்று , வளையலை வரிசையாக அணிந்த மகளிர் பிச்சை வழங்க , அதனோடு அவர்களுடைய அடக்கம் என்ற பண்பினையும் கைக்கொண்டு , தம் வாகனமாகக் கொலைத் தொழில் செய்யும் காளையையும் , வாச்சியங்களான கொக்கரையையும் கொடுகொட்டியையும் குடமூக்கு என்னும் தலத்தில் விடுத்து , நல்லாளை , நல்லூர் , நறையூர் இவற்றில் தங்குபவரைப் போலக் கூறிக் கொண்டு , மகளிரை நிறையழிக்கும் கோலமுடைய நம் பெருமானார் பூதம் சூழப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

நில்லாது - ஓர் இடத்தில் நிலையாக இராமல் , ஏகாரம் தேற்றம் , ` பலியுங்கொண்டு ` என்பதனைத் தழுவி நிற்றலின் ` நிறையுங் கொண்டு ` என்னும் உம்மை இறந்தது தழீஇயது . ` கொல்ஏறு ` என்பதில் ` கொல்லுதல் ` என்பது இன அடை . கொக்கரை - சங்கு . ` ஒழிய ` என்பதனை , ` வந்து ` என்பதொரு சொல் வருவித்து முடிக்க . ` குளிர்தண் பொய்கையையும் ` நல்ல ஆட்களையும் ( ஆடவர்களையும் ) உடைய நல்லூர் ` என்க . ` ஆளை ` என்னும் ஐகாரம் , சாரியை . ` நறையூரிற் றாமுந் தவிர்வார்போல ` என்பதனை , ` ஒழிய ` என்பதன் பின்னர்க் கூட்டுக . ` தாமும் ` என்னும் உம்மை அசைநிலை . எல்லா ஊரும் தம்முடையனவே ஆக , சில ஊரைத் தவிர்வார்போல , ` நல்லூரே தவிரேன் ` என்று கூறினார் என்றாள் . பொல்லாத வேடம் - மகளிரை நிறையழிக்கும் கோலம் .

பண் :

பாடல் எண் : 9

விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் திருநீற்றைப் பூசி ஓர் ஆமையோட்டினை அணிகலனாகப் பூண்டு , காதில் சங்கத் தோட்டினை அணிந்து , இடக்கையிலே வீணையை ஏந்திக் கங்கை தங்கும்சடை மீது பிறையை நாற்றிசையும் அதன் ஒளிபரவுமாறு வைத்து , மகிழ்ந்த , செந்தீ நிறத்துப் பெருமானார் , மேகலையை இடையில் அணிந்த உமைபாகராய் , பிறர் அணுகுதற்கரிய சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய தலைவராய் , மேம்பட்ட காளையை இவர்ந்து , பூதம் சூழப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று போயினார் .

குறிப்புரை :

விரை ஏறு - ` மிக்க நறுமணப் பொருளாகப் பொருந்திய ` வெந்த சாம்பல் விரையெனப் பூசியே ` ( தி .3. ப .54. பா .3.) என்றருளிச்செய்ததும் உணர்க . வெண்தோடு - சங்குத் தோடு . ` இடக்கை ` என்பது . ` இடங்கை ` என மெலித்தலாயிற்று . ஆரிடம் - அணுகுதற்கரிய இடம் ; சுடலை . ` எல்லாம் ஒடுங்கிய இடம் ` என்னும் குறிப்பும் ஓர்க . ` ஐயன் ` என்றது , பன்மையொருமை மயக்கம் . புரை - உயர்வு ; தூய்மை .

பண் :

பாடல் எண் : 10

கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கினவி நாய கன்னும்
பூவாய பீடத்து மேல யன்னும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

பொழிப்புரை :

தேவர் தலைவனான இந்திரன் உள்ளிட்டவரும் , முருகனும் , இடர்களையும் விநாயகனும் , தாமரையின் மேல் உள்ள பிரமனும் , உலகங்களை அளந்த திருமாலும் வணங்கி வாழ்த்துச் சொல்லுமாறு இனிய பாடல்களைப் பாடி , அவற்றிற்கு ஏற்ப ஆடி , வண்டு ஒலிக்கும் கொன்றைப் பூவினை அணிந்த தாமும் தம் பூதங்களுமாய்ப் ` புறம்பயம் நம் ஊர் ` என்று பெருமான் போயினார் .

குறிப்புரை :

இத்திருப்பாடல் , இறைவன் வெளிநின்று அருளுங் காட்சியை வகுத்தருளிச் செய்தது . ` இந்திரனை உள்ளிட்ட தேவர் பொருந்த ( புறஞ் சூழ்ந்து நிற்க ). குமரன் முதலாயினார் அருகிருந்து போற்ற ` என்க . பாவாய - பாட்டாகி நின்ற . பாரிடம் - பூதம் . ` தாமுமாய் ` என ஆக்கம் வருவிக்க . பரந்து - பரவி வந்து . பற்றி - என்னைத் தம் வயமாக்கி . பூவார்ந்த - பூவாகி நிறைந்த ; ` அழகு மிக்க ` எனினுமாம் . கொன்றை - கொன்றைக்கண் .

பண் :

பாடல் எண் : 1

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர்களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர் . சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர் . பிறை சூடியவர் . தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி , அரிதின் கிட்டி , அவர்கள் , தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார் . இஃது அவர் பேரருளின் தன்மையாம் .

குறிப்புரை :

நைய - மேலும் மனம் இளக ; ` தற்போதங் கெடும்படி ` என்பது கருத்து . இத்திருப்பதிகத்துள் , ` வைத்தார் ` என்பது சொற்பொருட்பின் வருநிலையாய் , கருத்து வகையால் , செய்தார் , அணிந்தார் , உடையார் , வைத்தார் என . ஏற்ற பெற்றியால் பொருள் தந்துநிற்றல் அறிக . ` நையவைத்தார் ` என்பதன்பின் , ` அவரிடத்து ` என்பது வருவிக்க . திருகு - முறுகுகின்ற ; வலுப்படுகின்ற . சிறந்து - மிகுந்து . துருவி - தேடி ; என்றது , ` அரிதிற் கிட்டி ` என்றவாறு . ஏற - முழுதுமாக . துற்ற - நெருங்கிய . போது , போதாயிருந்து , மதுவாய் - தேனே வடிவாய் . பில்கி - ஒழுகியதனால் . ` நனைந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` அனைய ` என்பது சுட்டு ; அது திருவடியின் சிறப்புணர நின்றது . ` என் தலை மேல் ` என்பது இசையெச்சத்தால் , ` ஒன்றற்கும் பற்றாத சிறியேனாகிய எனது புல்லிய தலையின்மேல் ` எனப்பொருள் படுமாற்றினை ` எடுத்தலோசையாற் கூறிக் காண்க . ` நல்லூர் எம்பெருமானார் ` என்பதனை முதற்கண் கொண்டு உரைக்க . ` ஆறு ` என்றது , செய்கையை . ` நல்லூர் எம்பெருமானார் , நைய வைத்தார் ; நீங்க வைத்தார் ; போர்வை வைத்தார் ; தளிர் வைத்தார் ; அவைபோலத் திருவடி என் தலைமேல் வைத்தார் ; இது , நல்ல செய்கையே ` என்க . ` இது ` என்பது , தமக்குத் திருவடி சூட்டினமையை , ` நல்லூர் எம்பெருமானார் என்பதற்கேற்ப , நல்ல செய்கையே செய்தார் ` என்பது நயம் . ` வைத்தனபல ; அவைபோலத் திருவடியையும் வைத்தார் ` என்றது , ` இஃது அவரது பேரருளின்றன்மை ` என வியந்தருளியவாறு . வருகின்ற திருப்பாடல்களினும் இவ்வாறே உரைக்க .

பண் :

பாடல் எண் : 2

பொன்நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் னதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்நலத்த திரள்தோள் மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை , கங்கை , பிறை என்பன சூடி , காதில் குழை அணிந்து , மார்பில் பூணூல் தரித்து , இடையில் புலித்தோலை உடுத்து , யானைத் தோலைப் போர்த்து , மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு , அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத் தாங்கி , மேம்பட்ட சிறப்புடைய திரு வடிகளை , என் தலைமேல் வைத்த , பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

பொன் நலத்த - பொன்னினது அழகை உடைய . புலி உரி - புலியை உரித்த . இன் அதள் - இனிய தோல் ; இனிமை , மெத்தென்றிருத்தல் . மன் நலத்த - நிலைபெற்ற அழகினையுடைய . மின் நலத்த - மின்னலினது அழகினையுடைய . நன்னலம் - மிக்க நன்மை .

பண் :

பாடல் எண் : 3

தோடேறு மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதல்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

இதழ்கள் மிக்க கொன்றை மலரைத் தலையில் சூடி , எருக்கம் பூ மாலை பூண்டு , தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து , மலைமகளைப் பாகமாகக் கொண்டு , அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக்கொண்டு , கையில் வில் ஏந்தி , யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

தோடு ஏறு - இதழ் நிறைந்த . ` சடைமேல் ` என்பதனை முதற்கண் வைக்க . துவலை - துளி . பாடு ஏறு - பக்கங்களில் ஏறுகின்ற . படு திரைகள் - ஒலிக்கின்ற அலைகள் . எறிய - வீச , பனி மத்த மலர் - குளிர்ந்த ஊமத்தம் பூ . சேடு ஏறு - அழகு மிகுந்த . நாட்டம் - கண் . சிலை - வில் ; பினாகம் . நாடு ( நாடுதல் ) ஏறு - யாவரும் விரும்புதல் பொருந்திய .

பண் :

பாடல் எண் : 4

வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி அறம்நால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் , வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு , விரிந்த சடையில் கங்கையைச் சூடி , மலையை வில்லாகக்கொண்டு , கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு , கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு , வேதங்களை அருளி , முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து , தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி , தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து , மிக்க அருளினாலே , தம் திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

வில் அருளி வரு புருவம் - வில்லுக்கு அருள்புரிந்து ( உவமையாகின்ற பேற்றினை வழங்கித் ) தோன்றுகின்ற புருவம் . பொருத்தாகி - பொருந்துதலாகி . அருவி - யாறு ; கங்கை . கல் அருளி - ( மேரு ) மலைக்கு அருள்புரிந்து . ` ஊராகக் கயிலாயமலையை வைத்தார் ` என்க . சொல் அருளி - சொற்களை வழங்கி ; ` சொல் ` என்றது ஆகுபெயராய் , அதனால் ஆகிய நூலை ( வேதத்தை ) க் குறித்தது . ` விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் ` ( தி .4. ப .7. பா .8.) என சுவாமிகள் அருளிச்செய்தல் காண்க . ` சிவபிரான் , ஆலமர நீழலில் எழுந்தருளியிருந்து நான்கு முனிவர்கட்கு வேதத்தைச் சொல்லி அருளினார் ` என்பது மிகப் பழையதொரு வரலாறாகும் . சனகாதி நான்கு முனிவர்கட்கு மோனநிலையிலிருந்து வேதப்பொருளின் அநுபவத்தைக் காட்டிய வரலாறன்று இது . துறவி - துறவு ; இச்சொல் , ` பிறவி ` என்னும் சொல்போன்றது . தகுதி யெய்திய உயிர்கட்கு ` துறவு ` என்கின்ற ஒருவழியை வைத்தார் என்க .

பண் :

பாடல் எண் : 5

விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவிவைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி , அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி , நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து , தீயினையும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு , அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து , மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

விண் இரியும் - தேவர்கள் அஞ்சி நீங்குவதற்குக் காரணமாய் நின்ற . விண் , ஆகுபெயர் ; `திசை` என்றதும் அது . ` தொழுவார்க்கு வினை அற வைத்தார் ` என்க . கமல மலர்வைத்தது ஆசனமாக என்க ; ` எரியாய தாமரைமேல் இயங்கினாரும் ` ( ப . 16. பா .7.) என்றருளுதல்காண்க . திண் எரி - வலிய ( அவித்தற்கரிய ) நெருப்பு . ` உடனே ` என்றது , ஒரு திருமேனியிலே என்றவாறு . ` தொழுது ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது .

பண் :

பாடல் எண் : 6

உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர் . குறைந்த சந்திரனை வளரவைத்தவர் . பகை , ஆர்வம் , காமம் , உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்த பாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்ல தவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

` பிணி உலவு உலகம் ` என்க . உற்று உலவுதல் - மிகுந்து பரவுதல் . எழுமை - எழுவகைப்பட்ட பிறவி . ` உயிரை அப்பிறவிகளில் வைத்தார் ` என்க . கதிகள் - துறக்க நிரயங்கள் . மற்று , அசைநிலை . ` காணாது ` என்பது ஈறுகெட்டு நின்றது . மறை - மறைவு ` குறை மதியம் வளர வைத்தார் ` என்றது . ` தக்கனது சாபத்தால் தேய்ந்த சந்திரனை அழிந்தொழியாதவாறு முடியில் அணிந்து , பின் வளர வைத்தார் ` என்றவாறு . செற்றம் - சினம் ; பகையுமாம் . ஆர்வம் - மோகம் . ` மலி ` என்றது , ஆர்வத்திற்கு அடை ; காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் ` என அகப்பகை ஆறென்பர் . அவை சிறவாத ( மிகாத ) நெறி - நன்னெறி .

பண் :

பாடல் எண் : 7

மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமேல் அரவைத்தார் அணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர் . அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர் . அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர் . நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர் . தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர் . மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

மாறு - பகை . மலைந்தார் - போர் செய்தவர் . ` மாறாய் மலைந்தார் ` என்க . அரணம் - மதில் . ` அரா ` என்பதிற் குறிற்கீழ் அகரம் , செய்யுளாதலின் குறுகிநின்றது . நிலவ - நிலைத்து நிற்க . நிலையம் - திருக்கோயில்கள் . மலைந்து - முடியில் அணிந்து . அறு திரைகள் - கரையை மோதிஉடைகின்ற அலைகள் .

பண் :

பாடல் எண் : 8

குலங்கள்மிகு மலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளிவிடம்வைத்தார் எண்டோள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர் . இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர் . திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்த விடத்தை உண்டு , அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர் . எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர் . நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர் . அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

குலங்கள் - கூட்டங்கள் . ` குலங்கள் மிகு மலைகள் ` எனவும் , ` ஞாலத்தில் வைத்தார் ` எனவும் கொள்க . குருமணி - நிறம் வாய்ந்த மாணிக்கம் . கோலம் - வேடம் . உலம் கிளரும் - திரண்ட கல்போல உயர்கின்ற ; இது வடிவுவமை . ` உச்சி ` என்றது , படத்தை , ` விடம் உண்டருளிவைத்தார் ` என மாற்றி , ` வைத்தார் ` என்பதற்கு , ` கண்டத்தில் வைத்தார் ` என உரைக்க . ` உள் ` என்பதனை , ஒடுவாகத் திரிக்க . அனிலம் - காற்று . ` விசும்பின் ` என்பதில் உள்ள இன் , வேண்டாவழிச் சாரியை . மிசை - மேல் இடம் . ` விசும்பாகிய மேலிடம் ` என்க . ` நினைந்தாராய் ` என எச்சப்படுத்துக . நினைந்தது சுவாமிகளது வேண்டுகோளை . ` உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் ` ( தி .12 திருநாவு . புரா . 195.) எனக் கூறியதுகொண்டு இவ்வாறு அருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 9

சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர் . இவ்வுலகில் எண்திசைகள் , கீழ்ப்புறம் , மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர் . தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர் . நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர் . கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன் புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர் . காளையை வாகனமாகக் கொண்டவர் . வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர் .

குறிப்புரை :

ஞாயிறும் , திங்களும் வட்ட வடிவினவாதல் பற்றி . அவற்றின் இயக்கத்தை உருள்வதாக அருளிச்செய்தார் . ` சென்று உருளும் ` என்றருளினாராயினும் ` உருண்டு செல்லும் ` என்றலே கருத்து . நின்று - வெளி நின்று ; அருளி என்றது துணை வினை . ` கொன்றருளி ` என வருவதும் அது . மறைபொருள் - இரகசியப் பொருள் ; நல்லாசிரியர்பாற் கேட்டன்றித் தாமே உணரலாகாத பொருள் . ` சேவடியை , கூற்றம் நடுங்கியோடவைத்துக் கொன்றருளினார் ` என்பது கருத்து . இங்கு , ` வைத்தார் ` என்பது , ` உதைத்தார் ` என்னும் பொருளது . நன்று - நன்மை . திருவடிகளே , கூற்றைக் கொன்றதுபோலும் தீமையாகிய மறக்கருணையையும் , மார்க்கண்டேயருக்கு உலவா வாழ்நாள் அளித்ததுபோலும் நன்மையாகிய அறக்கருணையையும் செய்யுமாகலின் ஈண்டு அறக்கருணையே செய்தன என்பார் , ` நன்றருளும் திருவடி ` என்றருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 10

பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவும் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் , பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க , கங்கை அலை வீச , அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர் . தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர் . சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்டவர் . நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர் . உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்டவர் . விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர் .

குறிப்புரை :

உரிஞ்சி - உராய்ந்து , ` உரிஞ்சி , கிடந்து , என்னும் எச்சங்கள் எண்ணுப்பொருளில் வந்தன . ஆம் பரிசு - ஏற்றவகையில் . ` தமக்கு ` என்புழித் ` தாம் ` என்றது , உயிர்களை . ஒம்பரிய - நீக்குதற்கு அரிய . ` வானோரும் நாமும் பரவும் ` என்க . ` நாம் ` என்றது மக்களை .

பண் :

பாடல் எண் : 11

குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்தோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா என்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பொழிப்புரை :

நல்லூர் எம்பெருமானார் , கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளையும் அமைத்தவர் . கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர் . இராவணன் ` தலைவனே ` என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர் . தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து , நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர் .

குறிப்புரை :

குலம் - கூட்டம் . ` வருதிரைகள் ` என்னும் அன்மொழித் தொகை , ` கடல் ` என்னும் ஒரு சொற்றன்மையாய் , ` கிளரும் ` என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று . குரு - நிறம் . மலை , கயிலாயம் . உலம் - திரண்டகல் ; அஃது உவமையாகு பெயராய் , தோள்களை யுணர்த்திற்று . ` உற ` ` துன்பம் உற ` என்க . புகழ் , இராவணனை அடர்த்தும் . அருளியும் இறைவர் அடைந்தவை . புரிந்து ஆளாக - மக்கள் இடைவிடாது சொல்லித் தமக்கு ஆளாகுமாற்றால் . கொள்ள - ( அவர்களை ) ஏற்றுக் கொள்ளுதற்கு ( அப்புகழை வைத்தார் ). ` இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் - பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு ` ( குறள் - 5) என்றருளியது காண்க .

பண் :

பாடல் எண் : 1

குருகாம் வயிரமாங் கூறு நாளாம்
கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையாடியாம்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூரில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் குருத்துப்போன்ற மெல்லிய பொருள்களாகவும் , வயிரம் போன்ற வலிய பொருள்களாகவும் விண்மீன்கள் , ஞாயிறு முதலிய கிழமைகளுக்குரிய கிரகங்கள் என்பனவாகவும் உள்ளான் . பருகாமலேயே , மலத்தைப் போக்கும் அமுதமாவான் . பாலில் நெய்போலவும் பழத்தில் சுவை போலவும் எங்கும் நீங்காது பரவியுள்ளான் . பாட்டில் பண்ணாக உள்ளான் . ஒருநிலையில் பார்வதி பாகனாக உள்ளான் . நாவின் உள்ளே பொருந்தி மொழியைப் பேசுவிப்பவனாவான் . முதற் பொருளாய் உலகத்தோற்றத்து முன்னேயும் இருப்பவன் , முன்னே தோன்றி நின்று எல்லோரையும் நடத்தும் கண் போன்றவன் .

குறிப்புரை :

குருகாம் - நிறத்தைத் தாங்குகின்ற ; ` காவும் ` என்னும் பெயரெச்சத்து ஈற்று உயிர்மெய்கெட்டது . எதுகை நோக்கிக் ககர ஒற்று மிகாதாயிற்று . அன்றி , குருகு , வெண்மை என்றலும் ஒன்று . இனி , ` குருகு ஆம் வயிரம் ` எனக்கொண்டு ` கைவளையாதற்குரிய வயிரம் ` என்றுரைத்தலும் ஆம் . ` வயிரம் ஆம் ` முதலியவற்றில் ` ஆம் ` ` ஆவான் ` என்னும்பொருட்டு . நாள் - நட்சத்திரம் . கோள் - கிரகம் . ` கோளே ` என்னும் ஏகாரம் தேற்றம் . தான் , அசைநிலை . பருகா அமுதம் ` விலக்குருவகம் . பருகிய பின்னர் மிருத்யுவை ( மரணத்தை ) ப் போக்கும் அமுதம்போலாது , பருகாமலே ( மலத்தைப் ) போக்கும் அமுதமாய் உள்ளவன் ` என்பதாம் . இரதம் - சுவை . பாலின் நெய் முதலிய மூன்றும் சுட்டிக் கூறா உவமங்கள் . ஆக்கங்கள் உவமை குறித்தன . ` வயிரமாம் ` என்புழியும் ` ஆம் ` அன்னது . ` மற்றொருகால் தனியனுமாம் ` என்பதைத் தழுவிநிற்றலின் ` பாகனுமாம் ` என்னும் உம்மை , எதிரது தழுவிய எச்சம் ; இறைவன் , உலகத்தைத் தொழிற் படுத்துங்கால் ` தானும் , தன் சத்தியும் ` என இருதிறப்பட்டு நிற்றலும் , அவை அனைத்தும் ஒடுங்கியபின்னர் வாளாவிருக்குங்கால் , சத்தி தன்னிடத்தில் அடங்கியிருப்பத் தான் ஒருவனாயே நிற்றலும் உடையன் என்க . ` பெண்ணுரு ஒருதிறனாகின்று ; அவ்வுரு - தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும் ` ( புறம் . கடவுள் வாழ்த்து .) என்றதுங் காண்க . மீள வுலகத்தைத் தொழிற்படுத்த நினையுங்கால் இருதிறனாய் நிற்பன் ஆதலின் , ` ஓருரு வாயினை ; மானாங் காரத்து - ஈரியல்பாய் ` என்றருளிச்செய்தார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் . ( தி .1 திருவெழுகூற்றிருக்கை .) உள் - வாயினுள் . ` உரையாடி ` என்பது , ` நா உரையாடுதற்கு ஏதுவாய் உள்ள முதல்வன் ` என்னும் பொருள தாய் , கிழமைப் பொருளில் வந்த , ` நாவிற்கு ` என்னும் நான்காவதற்கு முடிபாயிற்று . கரு - முதல் . ` உலகுக்கு ` என்பது , தாப்பிசையாய் , முன்னருஞ் சென்று இயைந்தது . ` கண் ` என்றது , நடாத்துவோனாதல் பற்றி . ` முன்னே தோன்றிநின்று நடாத்துவான் ` என்பது பொருளாகலின் , ` முன்னே தோன்றும் ` என்றது , உடம்பொடு புணர்த்தல் . இத் திருப் பாட்டுள் , ` வயிரம் ` என்றதனால் , இறைவனது சிறப்பினையும் , ` நாள் , கிழமை , கோள் ` என்றவற்றால் , அவன் காலமாய் நின்று அதனை நடாத்தி , உலகினைத் தொழிற்படுத்துதலையும் , ` அமுதம் ` என்றதனால் , அவனது இன்பம் , அருள் , ஆற்றல் என்பவற்றையும் , ` பாலின் நெய் ` முதலிய மூன்றாலும் , அவன் , உடலில் உயிர்போல உலகத்தோடு ஒன்றாய் நிற்றலையும் , ` உமைபாகனும் ` என்றதனால் , அவனது , ` தடத்தநிலை , சொரூபநிலை ` என்னும் இருநிலைகளையும் , ` நாவிற்கு உரையாடி ` என்றதனால் , எல்லாப் பொருள்களையும் இயக்குதலையும் அருளிச் செய்தவாறாம் .

பண் :

பாடல் எண் : 2

வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம்
தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

வித்து , முளை , வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற உருவத்தன் . தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன் . செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன் . தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும் தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம் தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன் .

குறிப்புரை :

` வித்து , முளை , வேர் போல்வான் ` என்றது , முறையே , உலகிற்கு ` முதற்காரணப் பொருளாயும் , உலகமாகிய காரியப் பொருளாயும் , அக்காரியப் பொருள் நிலைத்து நிற்றற்கு ஏதுவாயும் நிற்பவன் ` என்பதை விளக்கிநின்றன . இறைவன் உலகிற்கு முதற் காரணப் பொருளாய் நிற்றலாவது , வித்திற்கு நிலம்போல மாயைக்குச் சிறந்த நிலைக்களமாய் நிற்றல் . ` தாரகமாம் அத்தன் தாள் ` ( சிவஞான போதம் - சூ .1. அதி .2 .) என்றருளிச்செய்தார் , மெய்கண்ட தேவ நாயனார் . எனவே , நிலம் ஈரமாகிப் பதப்பட்ட பின்பே விதை அதனுள் அடங்கிப் பக்குவப்பட்டு முளையைத் தோற்றுவித்தல்போல , இறைவன் எண்ணங்கொண்ட பின்பே , மாயை பக்குவப்பட்டு உலகத்தைத் தோற்றுவிக்கும் என்க . உண்மையில் மாயையே முதற் காரணமாயினும் , அதற்கு இன்றியமையாத நிலைக்களமாய் நிற்றல் பற்றி , பான்மை வழக்கால் இறைவனை முதற்காரணமாகக் கூறுவர் . இறைவன் உலகமாகிய காரியப் பொருளாய் நிற்றலாவது உடல் உயிர் போல உலகிற் கலந்து நிற்றல் . உலகம் நிற்றற்கு இறைவன் ஏதுவாதலாவது , அத்தன்மைத் தாய ஊழினை அவன் இயக்கிநிற்றல் . எனவே , அவ்வூழே இங்கு வேரோடு உவமிக்கப்பட்டதென்க . ஊழ் உலகத்தைப் பற்றி வேறாகாது கிடத்தலின் , அதற்கு முளையின் வேறாகாதவேர் உவமையாயிற்று . ` வேண்டும் உருவம் ` என்பதில் , ` உருவம் ` என்பது , ` உருவினன் ` என அவற்றை உடையவன்மேல் நின்றது . ` இறைவன் தனது இச்சையால் , நினைத்த வடிவத்தினைக் கொள்வன் ` என்பதாம் . ` நிறுத்திடு நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே ` ( சிவஞான சித்தி சூ .1 - 45) என்றதும் காண்க . பத்து - அடியார் இலக்கணம் பத்து . அவை , ` கண்டம் விம்மல் , நாத்தழுதழுத்தல் , நகை முகங்காட்டல் , உடல் நடுங்கல் , மயிர்சிலிர்த்தல் , வெயர்த்தல் , சொல்லின்மை , வசமழிதல் , கண்ணீர் அரும்பல் , வாய்விட்டழைத்தல் ` என்பன . இவ்வாறு உபதேச காண்டத்துட் கூறப்பட்டது . ` பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே ` ( தி .4. ப .18. பா .10.) என சுவாமிகளும் , ` பத்துடையீர் ஈசன் பழவடியீர் ` ( தி .8 திருவெம்பாவை . 3) என ஆளுடைய அடிகளும் அருளினமை காண்க . இனி , ` பற்று ` என்பது , ` பத்து ` என மருவிற்றாகவும் உரைப்பர் . ` பாங்கனுமாம் ` என்பது , காரண ஆக்கப் பெயராய் , ` துணையாய் உடன்நிற்பவன் ` எனப் பொருள் தந்தது . ` பாங்கனுமாம் ` என்பதற்கு , ` தோழனும் ஆவான் ` என்றும் உரைத்தலுமாம் . ` ஓத உலவா ஒருதோழன் ` ( தி .8 திருவெம்பாவை . 10) என்றார் ஆளுடைய அடிகளும் . பால்நிறமும் ஆம் - ( செம்மை நிறமேயன்றிப் ) பால்போலும் வெண்மை நிறத்தனும் ஆவான் . வெண்மை நிறமும் சிவபிரானுக்குச் சொல்லப்படும் என்க . அன்றி , ஐந்து முகங்களில் மேல்முகமாகிய ஈசானமுகம் வெண்மையது ஆதலைக் குறித்தது எனினுமாம் . பரஞ்சோதி - மேலான ஒளி . ` தான் ` இரண்டும் அசைநிலைகள் . தொத்து - கொத்து ; குழு ; ` பதினெண் வகைப்பட்ட குழுக்களாகிய அமரர் கணம் ` என்க . கருத்து - பொய் ; கரவு , ` அமரர் போற்ற அவர்களுக்குத் தோன்றாது என் உள்ளத்துள் மறைந்து நின்ற கரவினை யுடையன் ` என்க . காணா காட்டும் - கண்டறியாதவற்றைக் காட்டும் .

பண் :

பாடல் எண் : 3

பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்
ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

பூவும் , பூவின் நிறமும் அதன் மணமுமாய் நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதி பாகன் . ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன் . தன்னை வழிபடாதவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து காலனால் அச்சம் நிகழா வண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான் .

குறிப்புரை :

` பூத்தானாம் , கோத் தானாம் ` என்பவற்றில் உள்ள ` தான் ` அசைநிலை . நிறத்தான் - நிறமாய் நிற்பவன் . ` பூக்குளால் ` என்பதில் , ` ஆல் ` அசைநிலை . வாசம் - மணம் . கோ - தலைவன் . ` சமயத்தார் கொண்ட தேவனாகி ` என மாற்றுக . ` யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகியாங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர் ` என்றது ( சிவஞான சித்தி சூ .2.25) காண்க . ` இடரே ` என்னும் எண்ணேகாரம் , ` துன்பம் ` என்பதனோடும் இயையும் . இடர் - இடையூறு . துன்பம் - மனக்கவலை . ` ஏத்தாதார்க்கு இடரையும் துன்பத்தையும் ஈவான் ` என்றதனால் , ஏத்துவார்க்கு அவை இரண்டையும் நீக்கியருளுவானாதல் பெறப்படும் . ` காலன் அடையாவண்ணம் காத்தான் ` என்க . ` கண்ணாம் ` என்பதற்கு , ` எனக்கு ` எனவும் , ` உலகுக்கு ` எனவும் ஆங்காங்கு ஏற்குமாற்றாற் கூறுக .

பண் :

பாடல் எண் : 4

இரவனாம் எல்லி நடமாடியாம்
எண்திசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்ல லறுப்பானுமாம்
ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறும்
குரவனாங் கூற்றை யுதைத்தான் தானாங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கரவனாங் காட்சிக் கெளியா னுமாங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை , இராப்பொழுதாகவும் , இரவில் கூத்தாடுபவனாகவும் எண்திசைக்கும் உரிய தேவனாகவும் , என் உள்ளத்தில் உறைபவனாகவும் , பாம்பினை அணிபவனாகவும் அடியார்களுடைய துன்பங்களைத் துடைப்பவனாகவும் , ஆகாயத்தையே வடிவாக உடையவனாகவும் , இடபத்தை இவரும் தலைவனாகவும் , கூற்றினை உதைத்தவனாகவும் தன் புகழ் கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர்களுக்கு என்றும் மறை பொருளாகவும் , அடியார்களின் மனக்கண்களுக்கு எளியவனாகவும் அவர்களுக்குக் கண்ணாகவும் உள்ளான் .

குறிப்புரை :

இரவன் - இராப்பொழுதாய் இருப்பவன் . எல்லி - இரவு . என் உள்ளான் - எனது உள்ளத்திருப்பவன் . அரவன் - பாம்பை அணிந்தவன் . ` எண்டிசைக்கும் தேவனாம் , ஆகாச மூர்த்தியாம் ` என்பன , முறையே , ` மண்ணிற்கும் விண்ணிற்கும் முதல்வனாய் நிற்பவன் ` என்றருளியவாறு . ` ஆகாச மூர்த்தியாம் ` என்பதற்கு , ` ஆகாயத்தையே வடிவாக உடையவன் ` என்றுரைப்பினும் அமையும் ; ` ஆகாய வண்ண முடையாய் போற்றி ` ( ப .57. பா .3) என்று அருளிச் செய்தல் அறிக . குரவன் - குரு . ` ஆனேறு ஏறும் குரவன் ` என்றது , உடம்பொடு புணர்த்தலாகலின் , ` ஆனேறு ஏறுவானாம் ; குரவனாம் எனக்கொள்க . குயலர் - வஞ்சகர் . ` குய்யம் ` என்பது ஈறுதிரிந்து , இடைக்குறைந்து , ` குயல் ` என நின்றது . அதனடியாய்ப் பிறந்த ` குயலர் ` என்பது வாளா பெயராய் நின்றது . ` குயலர் - தேர்ந்தவர் ` என்பது தமிழ்ப் பேரகராதி . காட்சிக்கு எளியனாதல் , வஞ்சம் இல்லாத மெய்யன்பர்க்கு என்க .

பண் :

பாடல் எண் : 5

படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் தானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக
மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

உலகைப்படைத்த பிரமனும் , அதனை ஊழி வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப் பிழம்பாய் நின்ற கருகாவூர் எந்தை , பகைவருடைய மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன் . சூலத்தையும் மழுவையும் ஏந்திப் பாம்பினை இடையில் இறுகக் கட்டிக் காளை மீது இவர்ந்தவன் . வஞ்சனை உடையவர் நெஞ்சத்தைக் கலக்கிக் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன் .

குறிப்புரை :

` பாரை ` என்பது தாப்பிசை , இடத்தல் - பெயர்த்தல் ; படைத்தவனாகிய பிரமனாகியும் , இடந்தவனாகிய திருமாலாகியும் நிற்பான் ` என்றதாம் . பரிசு - ( தனது ) தன்மை . ` ஒன்று ` என்பதற்கு , ` ஒன்றாக ` என உரைக்க . ` அளவற்ற தன்மைகளை உடையவன் ` என்றபடி . ` அழலால் ` என்பதனை , ` அழலை ` எனத்திரித்துக்கொள்க . ஒருக்கி - ஒருங்கு கூட்டி . ` ஒருக்கி நின்று உடைத்தானாம் ` என்க . அடைத்தான் - ( தன்னை ) அடையச் செய்தான் ; தாங்கி நின்றான் . ` சூலம் மழு அடைத்தான் ` என்க . அசைத்தல் - கச்சாகக் கட்டுதல் ; ` கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி ` ( ப .55. பா .2.) என்றருளிச் செய்தல் காண்க . ` ஆனேற்றாற் பயன்கொள்வோர் , இரண்டு ஆனேறு உடையராதல்வேண்டும் ; அவ்வாறன்றி , ஓர் ஆனேற்றினாலே பயன்கொள்கின்றான் ` என்றபடி . ` கடைந்தானாம் ` என்பது , வலித்தலாயிற்று . கடைந்தான் - கலக்கினான் ; ` கடைதான் ` என்பது விரித்தலாயிற்று எனக்கொண்டு , ` விரும்பாத பொருளாய் இகழ நிற்பவன் ` என , உரைத்தலுமாம் . கள்ளம் வல்லாரை , ` அறிவார் ` என்றது , புகழ்தல்போல இகழ்ந்தது .

பண் :

பாடல் எண் : 6

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாம்
சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாம்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

முதற்பொருளாய் வடிவு கொள்வோனாய் , எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டவனாய் , என்றும் மூப்படையாத மேனியனாய் , முக்கண்ணினனாய் , நற்பண்புகளுக்கு இருப்பிடமாய்த் தன்னை அடைந்தவர்களின் துயர்தீர்க்கும் செல்வனாய் , கருகாவூர் எந்தை , சூரியனுக்கும் ஒளி வழங்குபவனாய்த்தன் திருமேனியில் ஒருபாகத்தைத் திருமாலுக்கும் மற்றொரு பாகத்தை உமாதேவிக்கும் வழங்குபவனாய் , மன்றங்களில் கூத்தாடுபவனாய் , தேவர்களுக்கு எல்லாம் இறுதிக்காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்தவனாய் , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் .

குறிப்புரை :

மூலன் - முதற் பொருளாய் உள்ளவன் . இது மூர்த்திமானாதலையும் குறித்தல் காண்க . மூர்த்தி - வடிவமாய் நிற்பவன் , முன் - காலவயப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன் . சீலன் - ஒழுக்கமுடையவன் ; தவவேடம் உடையவன் . செஞ்சுடர் - சூரியன் ; ` அவனுடைய ஒளிக்கும் காரணமாய் உள்ளவன் ` என்றபடி . ` ஓர் பங்கு மாலனும் ` என்பது கருத்தாகக் கொள்க . ` ஓர்பங்கு மாயோனை உடையவனுமாவான் ; மங்கையை உடையவனுமாவான் ` என்றபடி , ` எல்லாம் ` என்பதில் , எச்சத்தோடு உயர்வு சிறப்பாய்நின்ற உம்மை விரிக்க . ` காலனாங்காலன் ` இறுதிக் காலமாய் நிற்கும் கூற்றுவன் .

பண் :

பாடல் எண் : 7

அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டு ( ஆல நிழலில் தங்கி ) ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு , ஆகாய கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறை சூடி , தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான் . அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய் , பார்வதிபாகனாய் , உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் .

குறிப்புரை :

ஆலத்தான் - ஆல் நிழலில் இருப்பவன் . விடம் உண்டவனும் ஆம் . அண்டம் - விண்ணுலகம் . ` வானோர் ` என்றது , வாளா , ` தேவர் ` என்னும் பொருட்டாய் நின்றது . திங்களான் - சந்திரனை யணிந்தவன் . ` நாசன் ` என்புழி ` ஆம் ` என்பது தொகுத்தலாயிற்று . உரைசேர் உலகத்தார் - நாத்திகம் முதலான பலவற்றையும் நாத்தழும் பேறப் பேசும் உலகத்தார் . ` என் உள்ளத்தினும் உள்ளான் ; அவர் உள்ளத்தினும் உள்ளான் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 8

துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
படிதானாம் பாவ மறுப்பா னாகும்
பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாம்
கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கடியானாங் காட்சிக் கரியா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை உடுக்கையாகவும் உடுக்கையின் முழக்கமாகிய ஒலிகளாகவும் , அவ்வொலியிலிருந்து தோன்றிய மொழிகளைப் பேசுவாருடைய சொற்களின் வாய்மை பொய்ம்மைகளைச் சோதிப்பவனாகவும் , நன்னெறியாகவும் , பாவத்தைப் போக்குபவனாகவும் , வெள்ளிய நீறணிந்த பரஞ்சோதியாகவும் கொடிய கூற்றுவனை உதைத்தவனாகவும் , உண்மை கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர் கிட்டுதற்கு அரியனாய் , அவர்களை ஒறுப்பவனாகவும் , அடியார்க்கு வழிகாட்டும் கண்ணாகவும் உள்ளான் .

குறிப்புரை :

துடி - ` உடுக்கை ` என்னும் பறை . இதனை , படைத்தற் றொழிலுக்கு அடையாளமாக இறைவன் ஏந்தி நிற்றலின் , சிறந்தெடுத்து அருளிச்செய்தார் . ` தோற்றம் துடியதனில் ` ( உண்மை விளக்கம் - 36.) என்றது காண்க . ஒலியினும் நுட்பமாய்க் கலந்து நிற்றலின் , ` துடியின் முழக்கந் தானாம் ` என்றருளினார் . ` ஓசை ஒலி யெலாம் ஆனாய் நீயே ` ( ப .38. பா .1.) என அருளிச்செய்தல் காண்க . சொற்களைச் சோதித்தலாவது , அவை வாய்மையாதலையும் , பொய்ம்மையாதலையும் உணர்தல் . படி - நெறி . ` கொடியானாம் கூற்று ` என்க . கடியான் - ஒறுப்பவன் . காட்சிக்கு அரியனாதலும் குயலர்க்கே .

பண் :

பாடல் எண் : 9

விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை செந்நிற ஒளிவீசும் சோதியனாய் , தேவர்களும் அறியாத நிலையினனாய் , தன்னால் கொல்லப் பட்ட யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய் , பலபலதாளத்திற்கு ஏற்பக் கூத்தாடுபவனாய் , அட்டமூர்த்தியாய் , எண்தோளனாய் , என் தலையின் உச்சி மேலானாம் எம் தலைவனாய் , இளைய வடிவினை உடைய மன்மதனைக் கோபித்தவனாய் , அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் .

குறிப்புரை :

உருவம் - நிறம் , சூழல் - நிலை . ` யானையினது பட்டுப் போன்ற மெல்லிய தோலை உரித்தவன் ` என்க ; ` நகம் பட்டு உருவுமாறு உரித்தவன் ` எனினுமாம் . பாணி - தாளம் ; ` பல பல தாளத்தில் நடிப்பவன் ` என்பதாம் . எட்டு உருவம் - அட்ட மூர்த்தம் ; அவை ஐம்பூதங்கள் , சூரியசந்திரர் , ஆன்மா என்பன . மூர்த்தி - தலைவன் . கட்டு உருவம் - இளமையான ( அழகிய ) உருவம் ; இது கூறவே , ` கடியான் ` என்றது , மன்மதனை விளக்கி நின்றது . ` கடியானைக் கட்டுருவங் காய்ந்தானாகும் ` என்க .

பண் :

பாடல் எண் : 10

பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி
யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

தன்னை இடபமாய்த் தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப் போக்கிய கருகாவூர் எந்தை , தன்னைப் பகைத் தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன் . தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த கையனாவான் . நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் .

குறிப்புரை :

பொறுத்திருந்த - இடபமாய்ச் சுமந்திருந்த . சிவபிரான் மாயோனது உள்ளத்தில் வீற்றிருந்து அவனது மனக்கவலையை மாற்றியருளுதலை . ` பையஞ் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தான் ` ( தி .4. ப .4. பா .10.) என அருளிச் செய்தமையான் அறிக . திருவாரூர்த் தியாகேசரது வரலாறு இதனை இனிது விளக்கும் . செறுத்திருந்த - சினந்திருந்த . ` மதில்கள் ` என்புழி உம்மை விரிக்க . ` மூன்று ` என்றது . அம்மதில்களால் சூழப்பட்ட ஊர்களை , ` வேவ மூட்டும் ` என இயையும் . குனிய - வளைந்து நிற்க . ` ஒரு தலையை , தெரிய நோக்கி , அறுத்திருந்த கையான் ` என இயைக்க . தெரிய நோக்கி - ( அவன் செருக்குக் கொண்டமையை ) விளங்க உணர்ந்து . ` ஆம் , ஆகும் ` என்பவற்றிடையே , ` போலும் ` என்றருளினார் . அவற்றிற்கு ஈடாக இஃது இயையினும் பொருந்தும் என்றற்கு .

பண் :

பாடல் எண் : 11

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகும்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன் . தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக்கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன் . பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான் , பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன் . கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன் . அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான் .

குறிப்புரை :

` மூன்றும் , பத்தும் , அஞ்சும் ` என்பவற்றில் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது . ` மாட்டி ` ` அடக்கி ` என்னும் எச்சங்களுக்கும் பயனிலைகள் முன்னே நின்றன . உடனே - கயிலையை எடுத்த உடனே . வைத்து - கால்விரலை வைத்து . எண்ணான் - மதியாதவன் ; இராவணன் . இசைந்தான் - அவனுக்கு அருள்புரிய நேர்ந்தான் ; அதனால் கேட்டான் என்க . அஞ்சு - ஐம்புலன் . ஆகாய மந்திரம் - ஆகாயமாகிய கோயில் ; வீட்டுலகம் , ஆனான் - பொருந்தினான் , கறுத்தான் - வெகுண்டான் .

பண் :

பாடல் எண் : 1

சூலப் படையுடையார் தாமே போலுஞ்
சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இறைவர் சூலப்படை உடையவராய், ஒளி வீசும் பிறையை முடிமாலையாக அணிந்தவராய், விரும்பித் திருமாலை ஒருபாகமாகக் கொண்டவராய், மந்திரமும் அம்மந்திரங்களைப் பயன்கொள்ளும் செயல்களுமாக அமைந்தவராய், கடலில் தோன்றிய விடத்தை உண்டவராய், ஊழ்வினையை நுகரும்போதே உடன் ஈட்டிக் கொள்ளப்படும் மேல் வினைகளை நீக்கும் வேறுபட்ட இயல்பினராய், நறுமணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.

குறிப்புரை :

கண்ணி - முடியிலணியும் மாலை; இஃது ஆகு பெயராய், அதனை உடையவரைக்குறித்தது. மாலை - திருமாலை; விட்டுணுவை. `தந்திரகலை` மந்திரகலை, உபதேசகலை` என, இறைநூல் மூன்று பகுதியாய் நிகழும். அவை முறையே `கரும காண்டம்` உபாசனா காண்டம், ஞானகாண்டம்` எனப்படும். உபாசனா காண்டத்தைக் கருமகாண்டத்துள் அடக்கி, இருபகுதியாக வழங்குதல் பெரும் பான்மை. உபாசனா காண்டத்தை, `பத்தி` காண்டம் என்றும் கூறுவர். முப்பகுதிகளுள் மந்திரகலையையும், தந்திர கலையையும் அருளவே, இனம் பற்றி உபதேசகலையும், கொள்ளப்படும். தந்திரகலை அல்லது கருமகாண்டமாவது, நாள்தொறும் செய்யப்படுவனவும், எவையேனும் சிறப்புப்பற்றி அவ்வந்நாள்களில் செய்யப்படுவனவும், எவையேனும் பயன்கருதி அவற்றின் பொருட்டுச் செய்யப் படுவனவுமாகிய கடமைகளை வகுப்பது; இக்கடமைகள் முறையே, நித்திய கன்மம், நைமித்திக கன்மம், காமியகன்மம் எனப்படும். மந்திரகலை அல்லது உபாசனா காண்டமாவது, கருமகாண்டத்துட் சொல்லப்பட்ட கடமைகளை மேற்கொண்டு செய்யும் செயல் முறைகளைக் கூறுவது. உபதேசகலை அல்லது ஞானகாண்டமாவது, தலைவனாகிய இறைவனது இயல்புகளையும், அவனது அடிமைகளாகிய உயிர்களது இயல்புகளையும், அவனது உடைமைகளாகிய உலகு, உடல், உள்ளம் முதலியவற்றின் இயல்புகளையும் தெரித்துணர்த்துவது. வேலைக் கடல், ஒரு பொருட் பன்மொழி, கடல் நஞ்சினால் தேவர்கட்கு இறுதி வந்த ஞான்று அதனை உண்டு காத்துக் காலத்தால் உதவினார்` என்றுரைத்தலுமாம். `தொல்வினை, ஊழ் வினை, மேல்வினை` என வினைகள் மூன்று வகைப்படும்; அவை முறையே, சஞ்சித கன்மம், பிராரத்த கன்மம், ஆகாமிய கன்மம் எனப்படும். முன்னைய பிறப்புக்களில் எல்லாம் செய்யப்பட்டு நுகரப்படாது கிடப்பன தொல்வினை அல்லது சஞ்சிதகன்மம்; அவ்வாறு கிடப்பனவற்றுள் பக்குவமாகி வந்து நுகர்ச்சியாவன ஊழ்வினை அல்லது பிராரத்தகன்மம்; ஊழ்வினையை நுகரும்பொழுதே உடன் ஈட்டிக் கொள்ளப்படுவன மேல்வினை அல்லது ஆகாமிய கன்மம். அவற்றுள், மேல்வினைகளைத் தீர்த்தலை ஈண்டு அருளிச் செய்தார் என்க.
விகிர்தர் - வேறுபட்டவர்; உலகியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதாம், ஏலம் - கூந்தலிற் பூசும் சாந்து. கமழ் குழலாள் - இயற்கையாகவே மணங்கமழ்கின்ற கூந்தலை உடையவள் `ஏலக்குழலாள், கமழ் குழலாள்` எனத் தனித்தனி முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்
காரானை யீருரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப் படுவார் போலும்
பத்துப் பல்லூழி பரந்தார் போலும்
சீரால் வணங்கப் படுவார் போலும்
திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் கார்காலத்தில் பூக்கும் நறுமணக்கொன்றைப் பூவினை முடிமாலையாக உடையவராய், கரிய யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைத் திருமேனியின் மீது போர்த்தியவராய், உலகத்தாரால் முன் நின்று துதிக்கப்படுபவராய்ப் பல ஊழிக்காலங்களையும் அடக்கி நிற்கும் காலமாய் நிற்பவராய், பலரும் தம்முடைய பொருள்சேர் புகழைச் சொல்லி வணங்க நிற்பவராய், பத்துத் திசைகளிலும் உள்ள நிலப் பகுதிகளும் மற்றும் பரவி நிற்பவராய், நறுமணம் கமழும் அழகிய கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.

குறிப்புரை :

கார் ஆர் கொன்றை - (பார்க்க: ப.2. பா.5. குறிப்புரை.) ஈர் உரிவை - உரித்த தோல். `பத்து` என்பது, `பத்தடுத்த கோடி உறும்` (குறள் - 818.) என்புழிப்போல மிகுதி குறித்துநின்று, பல்லூழிக்கு அடையாயிற்று, பல்லூழி பரந்தார்; என்றது, `பல பொருள்களின் தோற்ற ஒடுக்கங்கட்கும் பற்றுக்கோடாய் நின்று அவற்றை அடக்கி நிற்கும் காலமாகிய ஊழிகளின் தோற்ற ஒடுக்கங்கட்கும் தாம் பற்றுக் கோடாய் நின்று அவற்றை அடக்கிநிற்கும் காலமாய் நின்றார்` என்றதாம். `சீரால்`, `சீரோடு` என்க. சீர் - புகழ், தமது பொருள்சேர் புகழைப் பலரும் சொல்லி வணங்க நிற்பவர் என்பதாம். `திசை` என்றது, நிலப்பகுதிகளை . ஏர் - எழுச்சி. ஈண்டும் `ஏர் ஆர் குழல், கமழ்குழல்` எனத் தனித்தனி முடிக்க.

பண் :

பாடல் எண் : 3

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகும் மண்ணுலகு மானார் போலும்
பூதங்க ளாய புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும்
பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
ஏதங்க ளான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் வேதங்களோடு வேள்விகளைப் படைத்தவராய், விண்ணுலகும் மண்ணுலகும் ஐம்பூதங்களும் தாமேயாகிய பழையவராய்த் தம்மைப் புகழ்வார் உள்ளத்தில் ஞானஒளியாய் நிற்பவராய்த் தம் திருவடிகள் எல்லோராலும் முன்நின்று துதிக்கப்படுவனவாய், அடியார்களுக்கு இன்பம் பயப்பவராய், அவர்களுடைய துன்பங்களையெல்லாம் துடைப்பவராய் அமைந்துள்ளார்.

குறிப்புரை :

`வேதங்கள்` என்புழி, ஆல் உருபு விரிக்க. `வேதங்களோடு பொருந்திய வேள்வி; வைதிக கன்மங்கள்` என்றுரைத்தலுமாம். பயந்தார் - படைத்தார். பூதங்கள், ஐம்பூதங்கள். இவற்றை அருளவே, ஏனைய தத்துவங்களும் கொள்ளப்படும். புராணர் - பழையவர்; யாவருக்கும் முன்னவர், புகழவளர் ஒளியாய் நின்றார் - தம்மை ஏத்த ஏத்த, ஏத்துவார் உள்ளத்தில் மிகுகின்ற ஞானமே வடிவாய் நின்றவர். `பாதம் பரவப் படுவார்` என்றருளியது, `தியானிக்கப்படுதற்கு உரியவர்` என்றவாறு. `பொதுநீக்கித் தனை நினைய வல்லோர்க் கென்றும் பெருந்துணையை` (தி.1. பா.5.) என அருளிச்செய்ததனை மேலே காண்க. `கல்லால் நீழல் - அல்லாத் தேவை - நல்லார் பேணார்` (தி.3. ப.40. பா.1.) என்று அருளிச் செய்தார்கள், திருஞானசம்பந்த சுவாமிகள். `மற்றெல்லோரையும் விலக்கிச் சிவன் ஒருவனே தியானிக்கப்படத்தக்கவன்` (சிவ ஏகோ த்யேயச் சிவங்கரஸ் ஸர்வம் அந்யத் பரித்யஜ்ய) என்றது அதர்வசிகை உபநிடதம். இங்ஙனமே `இளம்பிறைத் - துண்டத்தானைக் கண்டீர் தொழற்பாலதே` (தி.5. ப.94. பா.1.) என்பது முதலாக, `சிவன் ஒருவனே வணங்கப்படுதற்கு உரியவன்` என்பதனைப் பல்லாற்றானும் சுவாமிகள் அறிவுறுத்தருளிச்செய்தமை காண்க. `ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்` (தி.1. ப.1. பா.11.) எனவும், `ஏர்கொள் கச்சித் திருவேகம்பத்து - உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே` (தி.2. ப.12. பா.1.) எனவும், `திருவான்மியூர் உறையும் - அரையா உன்னையல்லால் அடையாதெனது ஆதரவே` (தி.3. ப.55. பா.1.) எனவும், `நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்` (தி.4. ப.1. பா.2.) எனவும், `சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்` (தி.6. ப.98. பா.5.) எனவும், `மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாதமே மனம் பாவித்தேன்` (தி.7. ப.48. பா.1.) எனவும். `கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய் - அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே` எனவும், (தி.7. ப.26. பா.1) `கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம் - அடிகேள் என்னமுதே எனக் கார்துணை நீயலதே` (தி.7. ப.28. பா.1.) எனவும், `உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாதெங்கள் உத்தமனே` (தி.8 திருவாசகம், திருச்சதகம்.2) எனவும் அருளாசிரியர் அனைவரும் இதனை ஒருபடித்தாக அருளிச் செய்தமை காண்க. ஏதங்கள் - துன்பங்கள், துன்பங்களைக் கடிதலும் பத்தர்களுக்கே என்க.

பண் :

பாடல் எண் : 4

திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
பரங்குன்றம் மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

பிற பிறப்புக்களில் உள்ள உயிர்களை அடிமைப் படுத்தி ஆளும் ஆற்றலை உடைய, தேவகணங்கள் தம் திருவடிகளைத் துதித்துத் திசை நோக்கி வணங்குமாறு செய்த இடைமருது மேவிய ஈசர், இந்திரன் செய்த வேள்வியை அழியுமாறு கெடுத்து, மேக வடிவில் வந்த திருமாலை வாகனமாகக் கொண்டு செலுத்திய வேறுபட்ட இயல்பினர். யாழைப் பண்ணும் (சுருதிகூட்டும்) இயல்பினராகிய மகளிரின் ஆடல் பாடல்கள் நீங்காத பரங்குன்றை விரும்பித் தங்கிய பரம்பொருள் ஆவார். எண்ணாயிரவர் என்ற தொகுதியைச் சார்ந்த அந்தணர்கள் வேற்றுத் தெய்வங்களை விடுத்துத் தம்மையே பரம்பொருளாகத் தியானிக்கும் இயல்பினராவர்.

குறிப்புரை :

திண்குணம் - வலிமைக் குணம்; அஃதாவது, பிற பிறப்புக்களில் உள்ள உயிர்களை அடிப்படுத்து ஆளும் ஆற்றல். `திண்குணத்தாராகிய தேவர்` என்க. திசை வணங்க - திசை நோக்கி வணங்குமாறு. `வைத்தார் ` என்பது. `உடையராயினார்` என்னும் பொருட்டு. `விண் குணத்தார் வேள்வி` என்றது. இந்திரன் செய்த வேள்வியை. விண்குணம், ஆகாயத்தின் பரப்பு. நூறி - அழித்து. கொண்டல் மேற்செல் - மேகத்தின் மேல் ஏறிச்சென்ற. `ஒரு காலத்தில் திருமால் மேகமாய் நின்று சிவபிரானைச் சுமந்தார்` என்பதும், அதனால், அக்காலம். `மேக வாகன கற்பம்` எனப் பெயர் பெற்றது என்பதும் புராண வரலாறுகள்.
பண்குணத்தார் - யாழைப் பண்ணும் (சுருதி கூட்டும்) இயல்பினர்; ஆடல் மகளிருடையது. எண்குணம், `தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு. இயல்பாகவே பாசம் இன்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பில் இன்பம், என்பன. எண் ஆயிரவர் - ஆயிரம் என்னும் எண்ணினை உடையவர். `ஆயிரம்` என்பது, ஈண்டு அளவின்மை குறித்தது; எண்ணில் அடங்காதவர் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 5

ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழில்அண் ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
படுவெண் தலையிற் பலிகொள் வாரும்
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
மணிபொழில்சூழ் ஆரூ ருறைகின் றாரும்
ஏகம்பம் மேயாரு மெல்லா மாவார்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் வானளாவிய சோலைகளிலே குரங்குகள் நடமாடும் அண்ணாமலையிலும், அழகிய பொழில்கள் சூழ்ந்த ஆரூரிலும், கச்சி ஏகம்பத்திலும் உகந்தருளியிருக்கின்றார். பார்வதி பாகராய்ப் பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர். வானில் உலவிய மும்மதில்களையும் எய்து வீழ்த்தியவர். எல்லாப் பொருள்களாகவும் உள்ளவர்.

குறிப்புரை :

ஊகம் - குரங்கு, `ஊகச் சோலை, முகில் உரிஞ்சு சோலை` என்க. `அண்ணா` என்பது அண்ணாமலையைக் குறித்த முதற் குறிப்பு. `அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்` (ப.21. பா.8.) `காளத்தி கழுக்குன்றம் கண்ணார் அண்ணா` (ப.71. பா.9.) என்பன காண்க.
பாகு அம் - பாகுபோலும் இனிய அழகிய. பணிமொழி - பணிந்த சொல்.மாகம் அடை - விண்ணில் திரிகின்ற.

பண் :

பாடல் எண் : 6

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் பத்துத் திசைகளும், ஏழு இசைகளும், பதினெட்டு வித்தைகளும், பன்னிரண்டு சூரியர்களும், தீவினைகளும் நல்வினைகளுமாகிப் பத்துத் திசைகளிலும் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார். அவர் கொன்றை சூடிய சடையர். கூத்து நிகழ்த்துதலில் வல்ல இளைஞர். தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்தவர்.

குறிப்புரை :

ஐயிரண்டு - பத்துத் திசைகள். ஆறொன்று - ஏழு இசைகள். அறுமூன்று - பதினெட்டு வித்தைகள். அவை: வேதம் நான்கு அங்கம் ஆறு, புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி, என்னும் உபாங்கம் நான்கு, ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் என்னும் உபவேதம் நான்கு. நான்மூன்று - பன்னிரண்டு சூரியர்கள், இறைவனை வழிபடும் இடங்களில் சூரியன் பலருக்கும் பொதுவாய்ப் பெரும்பான்மையதாதல் அறிக. `நல்வினை` எனப் பின்னர் விதந்தருளினமையின், முன்னர், `வினை` என்றது தீவினை என்பது பெறப்படும். `திசை` என்றது, அவற்றில் உள்ள பொருள்களை.

பண் :

பாடல் எண் : 7

பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் உயிர்களை விட்டு நீங்காத பத்து இயற்கைப் பண்புகளாகவும், உயிர்களுக்கு மலச் சார்பினால் வரும் பதினொரு செயற்கைப் பண்புகளாகவும், பரம் பொருளுக்கு என்று ஒருகால் தொகுத்துச் சொல்லப்படும் நான்கு பண்புகளாகவும், பிறிதொருகால் சொல்லப்படும் ஆறு பண்புகளாகவும் உள்ளனவற்றையும் மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்து உணரப்படும் பொதுவான ஐம்பண்புகளையும் ஐவகை சமித்துக்களையும், திருவைந்தெழுத்தையும் உயிர்கள் சென்று சேரக்கூடிய வழிகள் ஐந்தையும் குறிப்பிட்டு ஞானப்பிரகாசமாகிய ஒளியை உடைய அடியவர்களின் உள்ளத்தாமரையில் உலவிவருபவராவார்.

குறிப்புரை :

` உயிர்கட்குப் பிரியாத (நீங்காத) குணம் என்றது, அதன் இயற்கைத் தன்மையை. அத்தன்மை பத்தாவன இவையென்பது அஞ்ஞான்று வழக்கின்கண் இருந்ததாகல் வேண்டும். ஆயினும் இக்காலத்து அறியப்படாமையால் பின்வருமாறு கூறலாம். இறைவனது எண்குணங்கட்கு மறுதலையான தன்வயமின்மை, சார்ந்ததன் வண்ணமாதல், அறிவிக்கவே அறிதல், ஒவ்வொன்றையே உணர்தல், படிமுறையான் உணர்தல், பெரிதும் சிறிதுமின்றி இடைநிகர்த்ததாதல், இன்னாதது வெறுத்தல், இனியது உவத்தல் என்னும் எட்டும், தனித்துநில்லாமை, தனித்துணரப்படாமை என்னும் இரண்டுமாம். உயிர்கட்குப் பிரிவுடைய (நீங்கத்தக்க) குணம் என்றது மலச்சார்பினால் வரும் செயற்கைத் தன்மையை. அவை பதினொன்றாவன, `பேதைமை, புல்லறிவாண்மை, அமைதி, வெகுளி, மடி, இன்ப நுகர்ச்சி, துன்பநுகர்ச்சி, நுகர்ச்சியின்மை, நன்முயற்சி, தீமுயற்சி, ஊக்கமின்மை என்பன. பேதைமையை, `கேவலநிலை` என்றும், புல்லறிவாண்மையை, `சகலநிலை` என்றும், அமைதி முதலிய மூன்றை, `சத்துவம், இராசதம், தாமதம்` என்றும் மெய்ந் நூல்கள் கூறும். சத்துவம் முதலிய முக்குணங்கள் காரணமாக, இன்ப நுகர்ச்சி முதலிய மூன்றும் உளவாகும். பின்னர் அவற்றால், நன்முயற்சி முதலிய மூன்றும் உளவாகும். மலச்சார்பு நீங்கிய விடத்து இவை அனைத்தும் நீங்குமென்க. பிரியாத குணம், பிரிவுடைய குணம்` என்பவற்றை, முன்னர், `உயிர்கட்கு` என விதந்தருளிச் செய்தமையால், பின்னர், ``விரியாத குணம்`` என்றருளியது, இறைவர்க்கென்பது பெறப்படும். விரியாத குணம் - தொகுத்துக் கொள்ளப்படும் குணம். அவை நான்காவன, `உண்மை, அறிவு, இன்பம் (சத்து, சித்து, ஆனந்தம்), அருள்` என்பன. பிற நெறிகள் அருள் ஒழிந்த மூன்றையே கூறுமாயினும், சிவநெறியுள் `அருள்` என்பதும் இன்றியமையாததென்க. `அருள்உண்டாம் ஈசற்கு அது சத்தி அன்றே`` (சிவஞானபோதம். சூ.5. அதி. 2) என்றதும் நோக்குக. `ஒருகால்` என்றமையால்; `மற்றொரு கால்` என்பது வருவிக்கப்படும். `விரிவிலா என்றது. `விரியாத` என மேற்போந்ததனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது. எனவே, அவரது குணங்களைத் தொகுத்துக் கூறுமிடத்து நான்காகக் கூறுதல் ஒருமுறை எனவும், அவைகளை ஆராயுமிடத்து ஆறாகக் கூறுதல் மற்றொரு முறை எனவும் அருளியவாறாம். அறுகுணங்களாவன `முற்றுணர்வு, வரம்பிலின்பம், இயற்கையுணர்வு. தன்வயம், முடிவிலாற்றல், பேரருள்` என்பன. இவை முறையே, `சருவஞ்ஞதை, திருத்தி, அநாதிபோதம், சுவதந்திரதை, அனந்தசத்தி, அலுத்த சத்தி, எனவும் கூறப்படும். இவற்றோடு `தூய உடம்பு அல்லது விசுத்த தேகம், இயல்பாகவே பாசமின்மை அல்லது நிராமயம்` என்னும் இரண்டுங்கூட்டி எட்டுக்குணம்` என்றலே விரித்துக் கூறலாகலின், `நான்கு` என்றும் `ஆறு` என்றும் கூறுவன தொகுத்துக் கூறலாமாறு உணர்க. தெரிவாய குணம் - மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்துணரப் படுவனவாய குணம். அவை அஞ்சாவன `ஓசை, ஒளி, ஊறு, சுவை நாற்றம்` (சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம்) என்பன. ஐம்பெரும் பூதங்களே உலகிற்கு முதலென்பது யாவர்க்கும் எளிதின் அறியப் படுவதாகலின், அவற்றின் குணங்களாகிய இவற்றை மட்டுமே அருளிச் செய்தார். சமிதை - ஓம விறகு; அதனை ஒன்பது என்றும் பிறவாறுங் கூறுபவாயினும், `ஆல், அரசு, அத்தி, மா, வன்னி, என்பன சிறப்புடையனவாதல் நோக்கி, `அஞ்சு` என்றருளினார். எழுத்தை, `பதம்` என்றருளினார். ``வகரக்கிளவி`` (தொல்.எழுத்து. 81.) என்றாற்போல. அஞ்செழுத்து - திருவைந்தெழுத்து மந்திரம், `அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி`` (தி.7. ப.83. பா.1.) என்றருளியதுங் காண்க. கதி ஐந்தாவன. `மக்கள்கதி. விலங்கு கதி, நரக கதி, தேவ கதி` என்னும் நான்கனோடு, `பரகதி` என்னும் வீட்டு நிலையுங்கூடியன. `இவைகளை எல்லாம் வேதாகமங்களில் சொல்லி யருளினார்` என்க. எரி - சுடர் வடிவம். `எரியாய` என்பதன் ஈற்றில் உள்ள அகரம் விரித்தல். ``தாமரை`` என்றது. அன்பர்களது நெஞ்சத் தாமரையை, உள்ளமாகிய தாமரை மலரின்மேல் இறைவனைச் சுடர் உருவில் தியானிக்கும் தியானமுறையை, `தகர வித்தை` என. உபநிடதங்கள் சிறந்தெடுத்துக்கூறும் (அத யதிதமஸ்மிந் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம் ... சாந்தோக்யம், பத்மகோச ப்ரதீகாசம் தஸ்யமத்யே வஹ்நிசிகா, தஸ்யாஸ் ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித - மகாநாராயணோபநிடதம்) திருவள்ளுவ நாயனாரும் இறைவனை ``மலர்மிசையேகினான்`` (குறள். 3.) என்று அருளிச் செய்தமை காண்க. `எரியையே தாமரை மலராகிய இருக்கையாக உருவகித்தருளினார்` என்றலுமாம்.

பண் :

பாடல் எண் : 8

தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆலம் அமுதாக வுண்டார் போலும்
அடியார்கட் காரமுத மானார் போலும்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் தோலுடையை உடுத்து அதன்மேல் ஒளிவாய்ந்த பாம்பினை இறுக்கிக் கட்டிய சோதி வடிவானவர். விடத்தையே அமுதம்போல உண்டவர். அடியவர்களுக்கு அமுதம் போல் இனியவர். காலனை வெகுண்டுதைத்த திருவடியை உடையவர். கயிலாயத்தை நிலையான இடமாக உடையவர். நறுமணம் வீசும் கூந்தலை உடைய பார்வதி பாகர்.

குறிப்புரை :

சுடர் வாய் - ஒளி வாய்ந்த; மணியை உடைய. `` ஆலம் அமுதாக உண்டார்`` என்பதனை, `அமுது ஆக ஆலம் உண்டார்` என மாற்றி, `தேவர்கட்கு அமுதம் கிடைத்தற் பொருட்டுத் தாம் நஞ்சு உண்டார்` என உரைக்க. ``ஆலம் தான் உகந்து அமுது செய்தானை`` (தி.7. ப.61. பா.1.) எனவும், ``விண்ணாள்வார் அமுதுண்ண மிக்க பெரு விடம் உண்ட - கண்ணாளா`` (தி.12 பெ. புரா. ஏயர்கோன். 286) எனவும் அருளினமை காண்க. இனி, `விடத்தையே அமுதமாக உண்டார்` எனக் கிடந்தவாறே உரைத்தலுமாம். `ஆரமுதம்` என்றது, பேரின்பப் பொருளாதலைக் குறித்தருளியவாறு.

பண் :

பாடல் எண் : 9

பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
அணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் பசிய தளிர்கள் இடையே தோன்றும் கொன்றைப் பூ மாலையர். வேல்போன்ற கண்களை உடைய பார்வதி பாகர். மாலை வானம் போன்ற செந்நிற அழகர். அழகிய நீலகண்டர். உலகில் பிறப்புக்களையும் இறப்புக்களையும் நிகழ்வித்து என் உள்ளத்தில் நீங்காதிருப்பவர். அடியார்களுடைய இடர்களைத் தீர்த்து அவர்களைக் காக்கும் இயல்பினர்.

குறிப்புரை :

``அந்திவாய்`` என்பதில் உள்ள ``வாய்`` என்பது, `அந்திக்கண்` என ஏழாம் வேற்றுமை உருபு. வண்ணம் - நிறம். அந்திக்காலத்தில் தோன்றும் நிறம், செவ்வானத்தின் நிறம் என்க. வரவு - பிறப்பு. செலவு - இறப்பு. இடர் - மேற்குறித்த வரவு செலவுகள்.

பண் :

பாடல் எண் : 10

கொன்றையங் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி
நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
அன்றவ் வரக்கன் அலறி வீழ
அருவரையைக் காலா லழுத்தி னாரும்
என்று மிடுபிச்சை யேற்றுண் பாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய ஈசனார் கொன்றை மலரோடு வில்வமாலையைக் குளிர்ந்த சடைமீது வைத்து மகிழ்ந்த இயல்பினர். தம்மீது அம்பு எய்ய இருந்த மன்மதனைச் சாம்பலாக்கி நெருப்பு வடிவாய் நின்ற தூயவர். இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அன்று அவன் அலறிவிழுமாறு அம்மலையைக் காலால் அழுத்தியவர். என்றும் மற்றவர் இடும் பிச்சையை வாங்கி உண்பவர்.

குறிப்புரை :

கூவிளை - வில்வம். `அவ்வரக்கன்` என்னும் வகரம் தொகுத்தல்.

பண் :

பாடல் எண் : 1

ஆறுசடைக் கணிவர் அங்கைத் தீயர்
அழகர் படையுடைய ரம்பொற் றோள்மேல்
நீறு தடவந் திடப மேறி
நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதம்
கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலு மாவார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருதூரினை விரும்பித் திருத்தலமாகக் கொண்ட ஈசனார் சடையில் கங்கையை அணிந்து , உள்ளங்கையில் தீயினை ஏற்றவர் . அழகர் . படைக்கலங்களை ஏந்திய அழகிய பொலிவு உடைய தோள் மீது , நீறு பூசிக் காளையை இவர்ந்து நாளும் பிச்சை ஏற்பவர் . தம்மைச் சுற்றியுள்ள பூதங்களால் தம் பண்புகள் பாராட்டப் பெறுபவர் . கோவணம் ஒன்றே உடையவர் . கையிலே உண்கலத்தை ஏந்திய வேடத்தவர் . இவ்வுலகிற்குத் தோற்றம் நிலை அழிவு ஆகியவற்றைச் செய்யும் இயல்பினர் .

குறிப்புரை :

படை - மழு , சூலம் முதலிய படைக்கலங்கள் . தடவந்து - தடவி ; பூசி . வகரமெய் உகரத்தொடுகூடி ஈறாதல் பண்டைக் காலத்தின்மையின் ` தட ` என்பதே முதனிலை ; அதனோடு வரல் என்பதனைத் துணைவினையாகக் கூட்டி . ` தைவரல் ` என்பதுபோல , ` தடவரல் ` என்றல் பழைய வழக்குப்போலும் . கூறும் - புகழ்கின்ற . கோவணத்தர் - கோவணம் ஒன்றே உடையவர் . கோள் தால வேடத்தர் - கையிலே கொண்ட உண்கலத்தை உடைய கோலம் உடையவர் ; ` கோடரவ வேடத்தர் ` என்பதே பாடம் எனினுமாம் ; கோடாலம் - கோடு ஆரம் ; ` வளைந்த மாலை ` என்பாரும் உளர் , ` கொள்கை ` என்றது , தன்மையை . ஈறு - அழிவு ; நடுவு - நிலை ; முதல் - தோற்றம் ; இம்மூன்றும் உலகிற்கு என்க ; இவற்றைச்செய்பவர் என்றவாறு .

பண் :

பாடல் எண் : 2

மங்குல் மதிவைப்பர் வான நாடர்
மடமா னிடமுடையர் மாத ராளைப்
பங்கின் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலிதிரிவ ரென்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண்டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவிய இடங்கொண்ட பெருமானார் வானத்தில் இயங்கும் பிறையைச் சடையில் வைத்தவர் . தேவருலகிற்கும் உரியவர் . பார்வதியை இடப்பாகமாக உடையவர் . மான்குட்டியை இடக்கரத்தில் வைத்திருப்பவர் . பால்போன்ற திருநீற்றை அணிந்து , படிக மணிமாலை பூண்டு , அடியார் பாவங்களைப் போக்குபவர் . சங்குகள் அலைகளில் உலவும் சாய்க்காடு என்ற தலத்தை ஆள்பவர் . பல அரிய செயல்களை உடையவர் . எங்கும் பிச்சைக்காகத் திரியும் இயல்பினர் . என் உள்ளத்தை விடுத்து என்றும் நீங்காதிருப்பவர் .

குறிப்புரை :

மங்குல் - ஆகாயம் ; மேகமுமாம் . மடமான் - இளமையான மான் ; ` மான் கன்று ` என்றபடி . இடம் , இடக்கை . பளிக்கு வடம் - படிகமணி மாலை . உகளும் - பிறழ்கின்ற . ` சாய்க்காடு ` என்னும் தலம் நெய்தல் நிலத்தது ; அதனால் சங்குகள் திரையில் ( அலையில் ) உகளுதற்கு ( பிறழ்தற்கு ) உரியதாயிற்று . சரிதை - செயல் .

பண் :

பாடல் எண் : 3

ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்
அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்
கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
கொடுமழுவர் கோழம்பம் மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஆலமர நிழலிலும் ஆகாயத்திலும் மலை உச்சியிலும் இருப்பவர் . ஒரே உருவில் ஆணும் பெண்ணுமாக இருப்பவர் . காலங்களுக்கு அப்பாற் பட்டவர் . நீலகண்டர் . தம்மை அறியாதார் உள்ளத்துக்குத் தொலைவில் இருப்பவர் . பல வேடங்களை உடையவர் . முல்லை நிலத்துக்கு உரிய திருமாலைக் காளைவாகனமாக உடையவர் . கொடிய மழுப்படை ஏந்தியவர் . கோழம்பம் , ஏலக்காய் மணம்கமழும் ஈங்கோய் மலை இவற்றை விரும்பி நீங்காதிருப்பவர் .

குறிப்புரை :

ஆணர் - ஆணாய் இருப்பவர் . பெண்ணர் - பெண்ணாய் இருப்பவர் . ` காலம் பல கழித்தார் ` என்றது , ` காலத்தால் தாக்குண்ணாது அதனைக் கண்டுகொண்டிருப்பவர் என்றருளியவாறு . அஃதாவது , காலவயத்தால் ` பிறப்பு , குழவிநிலை , இளமை , முதுமை , இறப்பு ` என்னும் இவைகள் இன்றி , என்றும் ஒரு தன்மையராயே நின்று , பிறர்க்கு அவை உளவாதலைக் கண்டு கொண்டிருப்பவர் என்பதாம் . ` காணாதார்க்கு அவர் கருத்துக்குத்தாம் சேயார் ` என இயைத்துரைக்க . காணாதார் - அறியாதார் . சேயார் - தொலைவில் உள்ளவர் . கொல்லேறு ` என்பது ஐகாரச் சாரியை பெற்று , ` கொல்லை ஏறு ` என நின்றது . திருமாலாகிய ஏறுமாம் . கோழம்பம் , ஈங்கோய் சோழநாட்டுத் தலங்கள் , ஏலம் - ஏலக்காய் .

பண் :

பாடல் எண் : 4

தேசர் திறம்நினைவார் சிந்தை சேரும்
செல்வர் திருவாரூ ரென்று முள்ளார்
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்
நேச ரடைந்தார்க் கடையா தார்க்கு
நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்
ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஒளியுடையவர் , தம் அருள் திறங்களைத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் சென்றடையும் செல்வர் . திருவாரூரில் என்றும் இருப்பவர் . பூவிலுள்ள மணம்போல உலகங்கள் எங்கும் பரவியிருப்பவர் . மான் தோலைப் போர்த்தியவர் . யானைத் தோலையும் உடையவர் . எவ்விடத்தும் உருக்காட்டாது மறைந்தே இருக்கும் கள்வர் . அடியார்களுக்கு அன்பர் . தம் அடிகளை அடையாதவர்களுக்குக் கொடியவர் . கட்டங்கப் படையுடையவர் . தம்மை விருப்புற்று நினைப்பவரை என்றும் தாங்குபவர் . காவிரியாகிய தீர்த்தத்தை உடையவர் .

குறிப்புரை :

தேசர் - ஒளியுடையவர் . திறம் நினைவார் - தமது அருட்டிறங்களை நினைப்பவர் . ` மலரின்கண் வாசம் ` என மாறுக . ` வாசம் என்பது வாசமாயுள்ளவர் ` என்னும் பொருளது . ` வஞ்சக் கள்வர் ` என்றது , அகப்படாமை பற்றி , ` ஒளிக்கும் சோரனைக் கண்டனம் ` ( திருவாசகம் - திருவண்டப்பகுதி 141.) என்றருளினமை காண்க . நிட்டுரவர் - கொடியவர் . ஈசர் - தலைவர் ; தாங்குபவர் . பொன்னி - காவிரியாறு ; ` பொன்னியாகிய தீர்த்தத்தை உடையவர் ` என்க . வாய்த்த - பொருந்திய .

பண் :

பாடல் எண் : 5

கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்
கரவாதே தம்நினைய கிற்பார் பாவம்
துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
தூய மறைமொழியர் தீயா லொட்டி
நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்
இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் வஞ்சனை மனத்தை உடைய கள்வர்க்குத் தம்மை மறைத்துக் கொள்பவர் . உள்ளத்தில் வஞ்சனையின்றித் தம்மை விருப்புற்று நினைப் பவருடைய பாவங்களை விரட்டுபவர் . கடல் விடத்தை உண்டவர் . தூய வேதங்களை ஓதுபவர் . அறிவில்லாத அசுரர்களின் மும்மதில் களையும் தீயிட்டுச் சாம்பலாக்கியவர் . நீண்ட சடை முடியர் . விரைந்து செல்லும் காளையை இவர்ந்து எங்கும் பிச்சை யெடுப்பவர் . எங்களை ஆள்பவர் . என் உள்ளத்தைவிட்டு நீங்காது இருப்பவர் .

குறிப்புரை :

கரத்தல் , தம்மையும் மறைத்து , தம்மால் அருளப்படும் நலங்களையும் அருளாதொழிதல் , கரியமனம் - வஞ்சனை பொருந்திய மனம் . ` அகங்குன்றி - மூக்கிற் கரியா ருடைத்து ` ( குறள் - 277.) ` யாழின் மொழிமங்கை பங்கன்சிற்றம்பலம் ஆதரியாக் - கூழின் மலிமனம்போல் இருளாநின்ற கோகிலமே ` ( தி .8 திருக்கோவையார் - 322.) என்றற் றொடக்கத்தனவற்றால் , குற்றம் பொருந்திய மனத்தை , ` கரியமனம் ` என்றல் வழக்கு என்பது அறியப்படும் . நிரப்பர் - வறியவர் ; அறிவில்லாதவர் ; என்றது அசுரரை . சிவவழிபாடு சிறந்த தென்றுணர்ந்து மேற்கொண்டு , பின்னர் . புத்தர் கூற்றைக் கேட்டு அதனை விட்டமைபற்றி இவ்வாறருளிச் செய்தார் . ` நிரப்பர் புரம் மூன்றும் ஓட்டித் தீயால் நீறுசெய்வர் ` என இயையும் .

பண் :

பாடல் எண் : 6

கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்
குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
பொடியாரு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடியார் குடியாவர் அந்த ணாளர்
ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்றுரியர் எவரும் போற்ற
இடைமருது மேவி யிடங் கொண் டாரே.

பொழிப்புரை :

எல்லோரும் போற்றுமாறு இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் இடபக்கொடியினராய்க் கூத்தாடுபவராய்க் கொன்றை சூடியவராய் , அழகிய நீறு பூசிய மேனியராய்த் திருநீற்றுப் பையினை உடையவராய்ப் புலித்தோலை உடுத்தவராய்ச் சீறும் பாம்பினராய்ப் பூணூலை அணிந்தவராய் அடியவர்களுக்கு மிக அணுகிய உறவினராய்க் கருணையுடையவராய் , வேள்வித் தீயில் ஆகுதியிடும் போது சொல்லப்படும் மந்திரவடிவினராய்த் தேவர் போற்றுமாறு பிளிறிக்கொண்டு வந்த களிற்றைக்கொன்று அதன் தோலைப் போர்த்தியவராவர் .

குறிப்புரை :

அடியார் குடி ஆவர் - அடியவரது குடியினராவர் ; என்றது , ` மிக அணுகிய உறவினராவர் ` என்றவாறு . அடியவர்க்கு வேண்டும் நலங்களை எளிவந்து செய்தல் பற்றி , இவ்வாறு அருளிச் செய்தார் . ` மந்திரத்தாராகிய அமரர் ` என்க . இடியார் குரல் - இடி போலும் குரல் . ` அமரர் போற்ற ` என்னும் எச்சம் , ` உரியர் ` என்னும் வினைக் குறிப்புக் கொண்டது .

பண் :

பாடல் எண் : 7

பச்சை நிறமுடையர் பாலர் சாலப்
பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
கலனொன்று கையேந்தி யில்லந் தோறும்
பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்
பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்
இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

என்றும் உள்ளாராய் இடைமருதுமேவி இடங் கொண்ட எம்பெருமானார் பார்வதிக்குரிய தம் இடப்பாகத்தே பச்சை நிறம் உடையவராய் . மிக இளையராகவும் மிகப் பழையராகவும் காட்சி வழங்கி , அடியார்களை அவர்களுடைய பிழைகளைப் போக்கி ஆட்கொள்பவர் . கோபம் கொள்ளும் பாம்பினைக் கச்சையாகப் பூண்ட தோள்களை உடையவர் . கையில் மண்டையோடாகிய பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்து உண்பவர் . ஆயினும் உண்மை நிலையினில் மிகவும் பெரியவர் . விளங்குகின்ற சடைமுடியை உடையவர் . தம்மை விரும்பும் அடியார் களுடைய விருப்பத்தை மிகவும் அறிந்தவர் .

குறிப்புரை :

பச்சை நிறம் , அம்மையுடையது . ` கச்சையாக ` என்க . கதம் - கோபம் . கலன் - பாத்திரம் ; கபாலம் . ` கொள ` என்றதனை , ` கொண்டு ` எனத் திரிக்க . இச்சை - விருப்பம் . மிக அறிவர் - நன்கு அறிவர் ; அறிந்து முற்றுவித்தருளுவார் . என்றும் உள்ளார் - தோற்றமும் ஈறும் இல்லாதவர் . இத்தன்மையே , ` மெய்ம்மை ` என்றும் , ` சத்து ` என்றும் சொல்லப்படுகின்றது . ` பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே ` ( தி .9 திருப்பல்லாண்டு - 2) என்றதுங் காண்க .

பண் :

பாடல் எண் : 8

காவார் சடைமுடியர் காரோ ணத்தர்
கயிலாயம் மன்னினார் பன்னு மின்சொல்
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
பயிலுந் திருவுருவம் பாகம் மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
புரமூன்றும் ஒள்ளழலாக் காயத் தொட்ட
ஏவார் சிலைமலைய ரெங்கும் தாமே
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்டு எங்கும் தாமேயாகப் பரவியிருக்கின்ற பெருமானார் , சோலை போலப் பரவிய சடையினராய் நாகை குடந்தைக் காரோணங்களிலும் , கயிலாயத்திலும் , தங்குபவராய்ப் பூக்கள் நிரம்பிய புனலால் சூழப்பட்ட புன்கூரில் வாழ்பவராய் , இனிய சொற்களாலாகிய பாடல்களின் பொருளை ஆளுதல் உடையவராய் , வாள் போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய் , முப்புரங்களையும் தீக்கொளுவுமாறு கொண்ட அம்பொடு பொருந்திய மலையாகிய வில்லை உடையவராய் விளங்குகின்றார் .

குறிப்புரை :

கா . ஆர் - சோலைபோலப் பொருந்திய . இன்சொற் பாவார் - இனிய சொல்லால் ஆகிய பாக்களில் உள்ளவர் . பொருளாளர் - அப்பாக்களின் பொருளை ஆளுதலுடையவர் . அணவு - பொருந்திய . திருப்புன்கூர் , சோழநாட்டுத்தலம் . ஏ ஆர் - அம்பு பொருந்திய . சிலை - வில் . ` மலைச்சிலையர் ` என மாற்றி யுரைக்க . ` எங்கும் பிறிது பொருள் இன்றித் தாமே உள்ளார் ` என்க .

பண் :

பாடல் எண் : 9

புரிந்தார் நடத்தின்கட் பூத நாதர்
பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மில்
பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்
பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
எரிந்தா ரனலுகப்பர் ஏழி லோசை
யெவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் கூத்தில் விருப்பம் உடையவர் . பூதங்களின் தலைவர் . தம் இருப்பிடமாகிய வீட்டுலகை விடுத்துப் போந்து சோலைகள் சூழ்ந்த ஆரூரில் புகுந்து தங்குபவர் . அகன்ற வாயை உடைய பேய்களை என்றும் பிரியாதவராய்த் தாம் விரும்பும் சுடுகாட்டில் எரிக்கப்படுபவருடைய தீயினை விரும்புபவர் . எழுவகையில் அமைந்த இசையால் தம்மையே பரம்பொருளாகத் துதிப்பவர்கள் உள்ள இடங்களிலெல்லாம் தேவர்களும் போற்றுமாறு என்றும் நிலையாக இருப்பவராவர் .

குறிப்புரை :

புரிந்தார் - விருப்பம்கொண்டார் . ` நடத்தின்கண் புரிந்தார் ` என மாற்றுக . தம் இல் - பரலோகம் . ` தம் இல் பிரிந்தாராய்ப் போந்து ஆரூர் புக்கு உறைவர் ` எனக் கூட்டுக . அகல்வாய - அகன்ற வாயினையுடைய . எரிந்துஆர் - எரியாநின்று நிறைந்த . ` பேயும் தாமும் பிரியாராய்க் காட்டில் அனல் உகப்பர் ` என இயையும் . ` ஏழில் ஓசை - ஏழுவகையில் அமைந்த இசையால் ( ஏத்துவார் என்க ). ` ஏழில் இயம்ப ` ( தி .8 திருவாசகம் . திருவெம்பாவை 8.) என்றருளியதில் , ` இயம்ப ` என்றதனால் , ` இயம் ` என்பது சொல்லெச்சமாய் வந்தியையும் ; இயையவே , ` இயங்கள் ஏழு வகையான இசையில் இயம்ப ` என்பது பொருளாதல் அறிக . என்று ஏத்துவார் - என்று உணர்ந்து போற்றுவார் .

பண் :

பாடல் எண் : 10

விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
செழுமுடியுந் தோளைஞ்ஞான் கடரக் காலால்
இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது மேவி இடம் கொண்ட பெருமானார் ஒளிவீசும் பெரிய மழுப்படையை உடையவர் . கடல் நஞ்சுண்டவர் . அழகர் . நீர்வளம் மிக்க வெண்காட்டில் உள்ளவர் . தேன் பொருந்திய மாலையை அணிந்த மார்பில் திருநீறு பூசியவர் . மழபாடியிலும் இரும்பை , அம்பர் , உஞ்சைனி என்ற மாகாளங்களிலும் உறைபவர் . பெருமை விளங்கும் வலிய அரக்கர்கோனாகிய இராவணனை அவன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற போது சிறந்த தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு திருவடியால் நசுக்கிப் பின் அவன் பக்கல் இரக்கம் கொண்டு அவனுக்குப்பல வெற்றிகளையும் வழங்கியவர் .

குறிப்புரை :

விட்டு இலங்குதல் - மின்னுதல் , விடங்கர் - அழகர் , மட்டு - தேன் . தார் - இன்பமாலை . மாலை , போர்க்கு உரியது ; ` தாரும் மாலையும் அணிந்த மார்பு ` என்க ` தார்மாலை மார்ப ` ( தண்டி ) என்றமை காண்க . ` சிட்டி ` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று . ` சிட்டி ( சிருட்டி )` என்றது , ஆணையை . ` வென்றியீந்தார் ` என மாற்றியுரைக்க .

பண் :

பாடல் எண் : 1

வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

சோலைகள் விளங்கும் திருப்பூவணத்தை உகந்தருளியிருக்கும் புனிதராகிய சிவபெருமான் பக்கல் , அடியார்களுடைய மனக்கண்முன் கூர்மை பொருந்திய மூவிலைச் சூலமும் , நீண்ட சடைமீது அணிந்த பிறையும் , நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய முடி மாலையும் , காதுகளில் கலந்து தோன்றும் குழையும் , தோடும் , இடிபோல ஒலித்து வந்த யானையின் தோலாகிய போர்வையும் , அழகு விளங்கும் முடியும் , திருநீறணிந்த அப்பெருமானுடைய திருமேனியும் காட்சி வழங்குகின்றன .

குறிப்புரை :

வடி ஏறு - கூர்மை பொருந்திய , ` வடிவு ஏறு ` எனவும் பாடம் ஓதுவர் . திரிசூலம் - இலை மூன்றாகிய வேல் . கடி ஏறு - புதுமை பொருந்திய . ` குழையுந் தோடும் கலந்து தோன்றும் ` என்பது , தானும் தன் தேவியுமாய் நிற்றல் குறித்தது . ` குழையும் சுருள்தோடும் ` ( தி .8 திருவாசகம் , திருக்கோத்தும்பி 18) என்று அருளிச்செய்ததுங் காண்க . இடி ஏறு - இடிபோலுங் குரல் பொருந்திய . முடி - சடைமுடி . பொடி - நீறு .` பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கு ` என்பதனை . முதற்கண் வைத்துரைக்க . ` தோன்றும் ` என்பன , இங்கு ` உளதாகும் ` என்னும் பொருளவாய் , ` மலை நிற்கும் ` என்பதுபோல , முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கையை ( தொல் . சொல் . 240.) உணர்த்தும் .

பண் :

பாடல் எண் : 2

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
ஊணாகி யூர்திரிவா னாகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேல்
சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் ஆணும் பெண்ணுமாகிய வடிவும் , அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதம் போன்று இனிமை தரும் செயல்களும் , உணவுக்காக ஊர்களில் திரியும் காட்சியும் , ஒற்றை வெண்பிறையும் , பகைவருடைய மும்மதில்களையும் நீண்ட பாம்பினை மலையாகிய வில்லில் நாணாகப் பூட்டி எரித்த செயலும் , இறந்தவருடைய எலும்புகளால் உடம்பில் பொருந்துமாறு பூண்ட மாலையும் அரைஞாணும் அடியவர் மனக்கண்களுக்கு விளக்கமாகக் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

` அமுதமாகித் தோன்றும் ` திரிவானாகித் தோன்றும் . என்பவற்றிற்கு ` அவ்வடிவு ` என்னும் எழுவாய் வருவிக்க . ` ஊணாகி ` என்பதில் உள்ள ` ஆகி ` என்பதனை , ` ஆக ` எனத்திரிக்க , ஊண் ஆக - உணவு உண்டாதற்பொருட்டு . ` திரிவான் ` என்புழி , ` ஆதல் ` என்பது எஞ்சிநின்றது . பற்றார் - பகைவர் ; திரிபுரத்து அசுரர் . ` மேல் ` என்பது , ஆகுபெயராய் , மேலிடத்துத் ( வானில் ) திரியும் மதில்களை யுணர்த்தும் . சேண் நாகம் - நீண்ட பாம்பு , ` நாகவில் ` என இயைத்து , ` நாகத்தை உடைய வில் ` என உரைக்க . ` வாசுகியென்னும் பாம்பாகிய நாணையுடைய மலையாகிய வில் ` என்றதாம் . பூண் நாண் வினைத் தொகை . இதன்கண் , ` நாண் ` என்றது , மாலையை . ` செய்த ` என்னும் அடை , ` பூண்நாண் ` என்பதை மட்டுமே சிறப்பித்து நின்றது .

பண் :

பாடல் எண் : 3

கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களுக்கு மனக்கண் முன்னர் , அவர் கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும் , மேம்பட்ட மறைகளை ஓதும்சனகர் முதலிய முனிவர் நால்வர்க்கும் வேத நெறிகளைச் சொற்களால் விளக்கியமை போல மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும் , அவர் உடலைச் சுற்றுமாறு அணிந்த பாம்புகளும் ஏந்திய மான் குட்டியும் , அறத்தின் உண்மையை உணர்ந்தவன் அல்லாத காலனை ஒறுத்த காட்சியும் , தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும் , யாவரும் அருவருக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

ஆல் நிழலில் எழுந்தருளியிருந்து நான்கு முனிவர்கட்கு நான்கு வேதங்களை அருளினார் என்பதில் நால்வராவார் பெயர் திருமுறைகளில் எங்கும் சொல்லப்படவில்லை . சனகர் முதலிய நால்வர்கட்குக் கல்லால் நிழலிலிருந்து அருள்புரிந்ததாகக் கந்த புராணம் கூறும் வரலாற்றில் வேதத்தை ஓதிய பின்னர் உண்டாகிய ஐயத்தை நீக்கியருளியது சொல்லப்படுகின்றதேயன்றி , வேதத்தை அருளியது சொல்லப்படவில்லை . ஆகவே , அந்நால்வரை இவ் வரலாற்றிற்கொள்ளுதல் பொருந்து மாறில்லை . அன்றியும் சனகர் முதலிய நால்வர்க்கு இறைவன் மோன நிலையில் இருந்து அருளியதே சிறந்தெடுத்துக் கூறப்படுகின்றது ; இங்கு அவ்வாறின்றி , ` சொல்லாகச் சொல்லியவா தோன்றும் தோன்றும் ` எனப்பட்டது . ` விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் ` ( தி .4. ப .7. பா .8.) ` ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு - மொழிந்த வாயான் ` ( தி .1. ப .53. பா .6.) என்றாற்போலப் பிற இடங்களிலும் இவ்வாறே ஓதியருளினமை காண்க . நெறிகள் - அறம் முதலிய நான்கையும் அடையும் வழிகள் . அல்லாத காலன் - அறத்தின் உண்மையை உணர்ந்தவன் அல்லாத இயமன் , அறத்தின் உண்மை யாவது , உலகர்க்கு விதிக்கப்பட்ட . விதி , இறைவன் அடியார்க்குப் பொருந்தாது என்பது . ஐவகை - ஐந்து நிறம் . அவை படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றல்களைக் குறிக்கும் . இவ்வைவகை ஆற்றல்களே ஒருங்கு நிற்குமிடத்து , ` ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் ` என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும் . தனித்தனி பிரிந்து நிற்குமிடத்து , ` மனோன்மனி , மகேசுவரி , உமை , இலக்குமி , வாணி ` என்னும் தேவியராய் நிற்ப , இறைவனும் அவர்களையுடைய , ` சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , மால் , அயன் ` என்னும் தேவர் களாய் நிற்பன் . அமர்தல் - விரும்புதல் ; மேற்கூறிய உண்மையை யெல்லாம் உணர்பவரே , மெய்யுணர்வுடையோராகலின் அவரிடம் இறைவன் அருளைமிகச் செய்வான் என்றருளியபடி . பொல்லாத எலும்பு - யாவருக்கும் அருவருப்பாய் உள்ள எலும்பு .

பண் :

பாடல் எண் : 4

படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையி னொலிதோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமும் கீளுந் தோன்றும்
மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களுடைய மனக்கண்முன்னர்ப் படைக்கலமாம் நன்மை நிறைந்த மழுவும் , அவர் ஏந்திய மானும் , அருகில் இருக்கும் பன்னிரண்டு கைகளை உடைய முருகப்பெருமான் வடிவும் , விரைந்து செல்லும் காளையும் , அக்காளை வடிவம் எழுதிய கொடியும் , நான்மறையின் ஒலியும் , முக்கண்களும் , உடையாக அமைந்த கீளும் கோவணமும் , பற்களை உடைய வெள்ளிய மண்டை ஓட்டு மாலையும் , அவரைச் சுற்றிக் காணப்படும் பூதங்களின் மகிழ்வும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

படை மலிந்த - படைக்கலமாம் தன்மை நிறைந்த , ` பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை ` என்பதும் பாடம் , ` மலிந்த விடை ` என்பது , ` கொடி ` என்பதனோடும் இயையும் . ஊர்தி வால் வெள் ளேறே சிறந்த - ` சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப ` ( புறம் - கடவுள் வாழ்த்து ) என்றதுங்காண்க . நயனம் - கண் ; இதனை எடுத்தோதினமையால் , ஏனையோரது கண்களின் வேறுபட்ட தென்பது பெறப்படும் . ` ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் ` என்னும் உபநிடதம் . வேறுபடுதலாவது , நெற்றியில் மேல்நோக்கி இருத்தல் . உடை - உடுத்தல் , ` உடையாய் மலிந்த ` எனலுமாம் . ` கீள் ` என்பது , கோவணத்தோடு இணைத்துத் தைத்து அரைநாணாகக் கட்டுவது , மூரல் - நகைப்பு ; தசைமுதலிய நீங்கிக் கிடக்கின்ற தலை பற்களோடு தோன்றுதல் , நகைப்பது போல்வதாயிற்று . புடை - பக்கம் .

பண் :

பாடல் எண் : 5

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களுடைய மனக்கண் முன்னர்த்தம்மிடம் பேரன்பு கொள்ளும் அடியவர்களுக்கு அவர் அருள் செய்யும் செயலும் , அழுக்கற்ற சிவந்த சடையின் மேல் அணிந்த பிறையும் , பிச்சை ஏற்கும் அவருக்கு அடியவர்கள் வழக்கமாக இடும் பிச்சையை அவர் ஏற்கும் காட்சியும் , பெரிய கடலில் நஞ்சினை உண்டதனால் இருண்ட கழுத்தும் , கயல்கள் பாயுமாறு விரைவான கலங்கல் வெள்ளமாக ஆயிரமுகத்தோடு வானிலிருந்து இறங்கிய கங்கை தன்னுள் அடங்குமாறு சிவபெருமான் விரித்த சடையின் அழகும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

மயல் - காதல் ; பேரன்பு . ` ஏற்றல் இயல்பாகத் தோன்றும் ` என இயைக்க . கலுழி - பெருக்கம் . ` கலுழியை உடைய கங்கை ` என்க . ` வானில் ( வானிலிருந்து ) தோன்றும் ` என்பதில் உள்ள , ` தோன்றும் ` என்பது எச்சம் . அது , ` புயல் ` என்னும் பெயரொடு முடிந் தது . ` புயல் ` என்றது , கருத்தா ஆகுபெயராய் மழையைக் குறித்தது . ` புயல்போலப்பாய ` என உவம உருபு விரிக்க . பாய - பாய்ந்து ஒழுகுமாறு .

பண் :

பாடல் எண் : 6

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண்களின் முன்னர் அழகுக் கடலாய் உள்ள தாமரை மலர் போன்ற அழகிய நிறத்தை உடைய திருவடிகளும் , அத்திருவடிகளின் மீது பூமண்டலத்திலுள்ளவர்கள் துதித்து அருச்சித்த பல மலர்களும் , காட்டிய புகைகளும் , ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரை உடைய இராவணனுடைய உடலை அழித்த திருமாலுடைய துன்பம் தரும் தீவினையைப் போக்கி அவருக்குச் சக்கரம் வழங்கிய அழகிய செயலும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

` பாராகிய ஆழி வட்டத்தார் ` என்க ; ` பூமண்டலத்தில் உள்ளவர் ` என்பது பொருள் . ஆழி வட்டம் - கடலாற் சூழப்பட்ட வளையம் . பரவி - துதித்து . சீர் ஆழித்தாமரை - அழகென்னுங் கடலாய் உள்ள தாமரை மலர் . திருந்திய - செம்மையான . ஓர் - ஒப்பற்ற . ` இலங்கை வேந்தனை அழித்தவன் திருமால் ` என்பது வெளிப்படை யாதலின் , அப்பாவத்தைக் கெடுப்பித்து , ஆழி ( சக்கரம் ) ஈந்தமை ` இன்னார்க்கு ` என்பது சொல்ல வேண்டாதாயிற்று .

பண் :

பாடல் எண் : 7

தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர் தம் அடியவர்களுக்கு அருள்புரிந்த மேம்பட்ட செயலும் , பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கிய செயலும் , மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதியை இடப் பாகமாகக் கொண்ட வடிவும் , யானைத்தோலை விரும்பிப் போர்த்திய வனப்பும் , செறிந்த சடைமீது கங்கை , பாம்பு , பிறை போன்ற இவற்றை வைத்துப் பொன்போன்ற திருமேனி பொலிந்து தோன்றும் வனப்பும் தோற்றம் வழங்கும் .

குறிப்புரை :

தகவு - தகுதி ; அவை வரலாறுகளும் , அவற்றிற்கேற்ற வடிவு நிலைகளுமாம் . கால சங்காரர் , சண்டேசானுக்கிரகர் முதலிய வடிவுநிலைகளை நோக்குக .

பண் :

பாடல் எண் : 8

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்
திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியவர்களின் மனக் கண் முன்னர் அப்பெருமானுடைய செறிந்த வீரக்கழலும் , திருவடிகளும் , முப்புரங்களை அழித்த வில்லும் , நால்வருக்கு உண்மை நெறியை மோனநிலையில் விரித்துரைத்த நுண்மையும் , நெற்றிக்கண்ணும் , வாகனமாம் காளையும் , அடியார்களுடைய மறுபிறவியை நீக்கி அருள் செய்கின்ற கூறுபாடும் , பார்வதியின் வடிவும் , கங்கையும் , புள்ளிகளை உடைய பாம்பும் , பிறைச் சந்திரனும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

` கழலும் அவற்றையணிந்த திருவடியும் ` என்க . நால்வர்க்கு நெறி காட்டினமை மேலும் குறித்தருளப்பட்டது . ( பா .3.) நேர்மை - நுண்மை . மறுபிறவி அறுத்தருளல் , ஆகாமியத்தைத் தடுத்தல் , ` மலிந்தது ` என்னும் தொழிற்பெயர் குறைந்து நின்றது .

பண் :

பாடல் எண் : 9

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
அணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்க் கோங்குஅரும்பினை ஒத்த முலையை உடைய பார்வதிக்கு வழங்கிய இடப்பாகமும் , இடியைப் போல அழிக்கும் ஆற்றலுடைய மகாவராகத்தினுடைய மணி வயிரக் கோவையைத் தோற்கச் செய்யும் ஒளியை உடைய மருப்பும் , வையை நதிக் கரையில் நிற்கும் காட்சியும் , உமாதேவி மகிழ்தற்குக் காரணமாக அவர் ஆடிய அழகிய கூத்தும் , சிவந்த வானத்தினும் ஒளிமிக்கு விளங்கும் , மலைகளைத் தம் திண்மையால் தோற்கடிக்கும் வலிய புயங்களும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

` அரும்பு ` என்பது , ` அருப்பு ` என வலித்தலாயிற்று . ஓட்டும் - தோற்றோடச் செய்யும் . ` அணிகிளரும் மணி ` என இயைத்துரைக்க . உரும் - இடி . அடர்க்கும் கேழல் - கொல்லும் பன்றி . உருமு , அழித்தற் பண்பு பற்றிய உவமை . மருப்பு - கொம்பு . ` அதனை மறைக்கின்ற வயிரக்கோவை ` என்க . ` மணம் ` என்பது மணாட்டியை உணர்த்திற்று . மலிந்த - மகிழ்ந்த , அம்மை மகிழ ஆடும் நடனம் என்றவாறு . ` வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறம் ` மண் சுமந்த திருவிளையாடல் . அது தோன்றுதல் , உளத்திற்கு என்க . இவ்வாறுரைக்கற் பாலனவும் சில உளவாதலறிக . இதற்கு வேறுபொருள் கற்பிப்பார் , பிறிதோர் எண்ணம் உடையர் என்க . திகழ்ந்த - திகழ்ந்தது போன்ற . ` சோதிப் புயம் ` என இயையும் . பொருப்பு ஓட்டி - மலையை வென்று .

பண் :

பாடல் எண் : 10

ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங்
குழற்கணிந்த கொள்கையொடுகோலந் தோன்றும்
பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்த் தம்மைச் சரணமாக அடைந்து சண்டேச நாயனாருக்கு அருள் செய்து தாம் முடிமேல் சூடிய மாலையை அவருக்கு வழங்கிய காட்சியும் , தம்பக்கல் அடைந்து தொண்டு செய்யும் அடியவர்களுக்கு அருள் செய்து அவர்களுடைய பல பிறவிகளையும் போக்கும் தன்மையும் , கோங்கு வில்வம் ஊமத்தம் மலர் என்பவற்றை அணிந்த அழகும் , பூக்களை அம்புகளாக உடைய மன்மதனுடைய உருவத்தை அழித்த வனப்பும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

சண்டேசுர நாயனார்க்குத் தனது முடியிலிருந்த கொன்றைமாலையைச் சிவபிரான் அணிவித்தமையைப் பெரிய புராணத்துட் காண்க . பல பிறவி அறுத்தருளல் , சஞ்சிதத்தை அழித்தல் , கோங்கமலரும் இறைவற்கு உரியதென்க . கூவிளை - வில்வம் , மத்தம் - ஊமத்தை , இது மயக்கத்தை உண்டாக்கும் என்பதுபற்றி , ` மதமத்தம் ` எனப்படும் . ` குழல் ` என்றது சடையை ; ஆடவர் தலை மயிர்க்கும் ` குழல் ` என்பது பெயராகும் . கொள்கை - விருப்பம் .

பண் :

பாடல் எண் : 11

ஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை
மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவந் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை யரக்கர் கோனை
நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பொழிப்புரை :

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியவர்களின் மனக்கண் முன்னர்த் தம்மை ஒன்றிய உள்ளத்தோடு தியானிப்பவர் உள்ளத்தில் அவர்கள் தியானித்த அதே வடிவில் இருக்கின்ற காட்சியும் , கச்சின்மேல் அணிகலன்களை அணிந்த தனங்களை உடைய பார்வதியை ஒருபாகமாக வைத்து மகிழ்ந்த வடிவமும் , நீர் நிறைந்த வடிவுடைய கடலால் சூழப்பட்ட இலங்கையின் மன்னனான இராவணன் உடம்பினை நெறு நெறு என்னும் ஓசை ஏற்படுமாறு நசுக்கிய நிலையும் , போரிடும் வடிவத்தை உடைய கூற்றுவனை உதைத்த அழகிய செயலும் காட்சி வழங்கும் .

குறிப்புரை :

உருவ - ஊடுருவ ; ஊன்ற . உள்குவார் - நினைப்பார் . ` அவர் உள்ளத்துள்ளே ` எனச் சுட்டுப்பெயர் வருவிக்க . ` ஆரொருவர் ` என்பதும் பாடம் . ` அவ்வுரு ` என்றது , அவர் உள்கிய உருவத்தை ; இதனானே அன்பர் நினைத்த வடிவாதலன்றித் தனக்கென ஒரு வடிவம் இலனாதல் விளங்கும் . ` மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே ` ( பரிபாடல் . 4 அடி . 56 .) என்றார் சான்றோரும் . வார் - கச்சு . ` கச்சினை ஊடுருவுகின்ற அத்தன்மையையுடைய பூண் அணிந்த முலை ` என்க . இனி , ` உருவம் , அழகு ` எனக்கொண்டு , ` கச்சினையுடைய அழகிய , பூண் அணிந்த முலை ` என்று உரைத்தலும் ஆம் . ` நன்மங்கை ` என்று அருளிச்செய்தார் , அவரது அருளே அவளாகலின் . நீர் உருவக் கடல் - நீர் மயமான கடல் . போர் உருவக்கூற்று - போர்க் கோலத்துடன் வந்த இயமன் . ` போர் ` என்றது மார்க்கண்டேயர்மேற் சினந்து எழுந்தமையை .

பண் :

பாடல் எண் : 1

முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் தான் முன்னே நிற்பவனாய் , செறிந்த சடைமுடிமேல் பிறையை வளைவாகச் சூடியவனாய் , அசுரர்களுடைய மும்மதில்களையும் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு கொடிய அம்பினாலே அழிந்து சாம்பலாகும்படி அழித்தவனாய் , தூய முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியோடு விளையாடி மகிழ்ந்தவனாய் அழகிய மதுரை மாநகரத்து ஆலவாய் ஆகிய திருக்கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானிக்கும் வாய்ப்பினை யான் பெற்றுள்ளேனே என்று தாம் பெற்ற பேற்றின் அருமையை உணர்ந்து கூறியவாறாம் .

குறிப்புரை :

` தோன்றி முளைத்தானை ` என முன்னே கூட்டுக . ` எல்லார்க்கும் ` எனச் சிறப்புடைய உயர் திணைமேல் வைத்து அருளிச்செய்தாராயினும் , ` எல்லாப் பொருட்கும் ` என்பதே திருக் குறிப்பாகக் கொள்க . எல்லாப் பொருட்கும் முன்னே தோன்றி முளைத் தமையாவது , அவற்றின் தோற்றத்திற்கெல்லாம் தானே நிமித்த காரணனாய் முதற்கண் நின்றமை . இனி இதற்கு , ` ஏனைய தலங்களில் உள்ள இலிங்க மூர்த்திகட்கெல்லாம் முன்னே தோன்றி முளைத்த , தான்றோன்றியாகிய ( சுயம்புவாகிய ) இலிங்கமூர்த்தி ` எனவும் உரைப்பர் . வளைத்தான் - அணிந்தான் . ` சுடுசரம் கோத்து அதனால் துளைத்தானை ` என்றல் கருத்தென்க . துவள - உடல் மெலிய . துவளவும் நீறு ஆகவும் ஆடி என்க . உமையது மேனி துவளுதலும் , நீறு படிதலும் கலவியால் ஆவன ; நீறே சாந்தாகலின் , அதனையே கூறினார் ; உமையொடு கூடிய அழகர் ( சோமசுந்தரர் ) ஆதலின் இவ்வாறு அருளிச்செய்தார் . ` கூடல் ` என்பது மதுரை நகரத்திற்கும் , ஆலவாய் என்பது அங்குள்ள திருக்கோயிலுக்கும் பெயர் , திருக் கோயிலின் பெயராகிய ஆலவாய் என்பதே பின்னர் நகரத்திற்கு ஆகி வழங்கிற்று . ` தென்கூடல் ` என்பது , செய்யுள் நெறியாகிய இனச் சுட்டில்லா அடை . மேலனவற்றோடியைய , ` சிவன் ` என்பதில் தொகுத்தலாய் நின்ற இரண்டனுருபு விரித்து , ` அடியே ` என்னும் பிரிநிலை ஏகாரத்தை அதனுடன் கூட்டுக . அவ்வேகாரம் மேல்நின்ற ஐயுருபுகளோடும் இயையும் . ` சிந்திக்க ` என்னும் வினையெச்சம் , ` சிந்தித்தல் ` என்னும் தொழிற்பெயர்த் தன்மைத்தாய் நின்றது . இவ்வாறு நிற்றல் . வழக்கினுட் பயின்றுவருவதேயாம் . இது , ` வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய ` ( தொல் . சொல் .457.) என்னும் விதியானே அமையும் . ` சிவனை அடிசிந்தித்தல் ` என்பது , ` அரசனை அடி பணிதல் ` என்பதுபோலக் கொள்க . ` பெற்றேன் ` என்றது , அப்பேற்றின் அருமை உணர நின்றது . எனவே , ` முளைத்தானை ` என்பது முதலாக வகுத்துக் கூறிய பலவற்றிற்கும் அவனது அருமையை உணர்த்துதலே கருத்தாயிற்று .

பண் :

பாடல் எண் : 2

விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்
கரந்துமையோ டுடனாகி யிருந்தான் தன்னைத்
தெண்ணிலவு தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

தேவருலகிலுள்ள மேலாருக்கும் மேலாயவனாய் , வானத்தில் உலவிய முப்புரங்களையும் அழித்தவனாய் , வண்டுகளின் பண்ணோசை நிலைபெற்ற பசிய பொழில்களை உடைய பழன நகரில் உள்ளானாய் , பசும் பொன்நிறத்தனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , சடைக்கற்றைக்குள் அடங்கிய கங்கையை உடையவனாய் , உமையோடு வெளிப்படையாக உடனாகியும் அவளைத் தன் உருவில் மறைத்தும் இருப்பவனாய்த் தெளிந்த ஞானம் உடையார் பலரும் தங்கியிருக்கும் தென் கூடல் ஆலவாயில் உள்ள சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

விண்ணுலகின் மேலோர்கள் - தேவர்கள் . பண்நிலவு - ( வண்டுகளின் ) இசை நிலைபெற்ற . பழனம் , சோழ நாட்டுத் தலம் . உள்நிலவு - உள் இடம் வாய்ந்த . தெள் நிலவு - தெளிவு ( ஞானம் ) நிலைபெற்ற ; கூடல்மாநகர் , சங்கம் முதலியவற்றை யுடையதாய் இருந்தமையும் , திருஞானசம்பந்தரால் திருப்பாசுரம் அருளி உண்மையை விளக்கியருளப் பெற்றமையும் ஓர்க .

பண் :

பாடல் எண் : 3

நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை
நிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக்
காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
கடுங்குரலா யிடிப்பானைக் கண்ணோர் நெற்றித்
தீத்திரளைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கங்கையை நீண்ட சடையில் தங்கச் செய்தவனாய் , பின் பகீரதன் பொருட்டாக அதன் ஒரு பகுதியை நிலத்தின்கண் பெருகி ஓடவிட்டவனாய் , பால் , தயிர் , நெய் என்பவற்றின் அபிடேகத்தைப் பலகாலும் உடையவனாய் , பகை கொண்டு வந்த கொடிய கூற்றுவனைத் தண்டித்தவனாய் , காற்றின் திரட்சியாய் மேகத்தின் உள்ளே இருந்து கொடிய இடியாக ஓசை எழுப்புபவனாய் , நெற்றியின் கண் தீத்திரட்சி போன்ற கண்ணை உடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

` அந்நீர் ` என எடுத்துக் கொண்டு , ` நிலம் மருவி ஓடக் கண்டான் ` என இயைக்க . கண்டான் - ஆக்கினான் . பகீரதன் பொருட்டு , முதற்கண் கங்கையைச் சடையில் தாங்கி . பின்னர் நிலத்தின்கண் பெருகியோட விட்ட வரலாறுண்மை அறிக . பயின்று - மிகுதியாக . கால் திரள் - காற்றின் திரட்சி . ஆகாயத்தின் ஓசை காற்றினால் வெளிப்படுமாகலின் , ` கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடுங்குரலாய் இடிப்பானை ` என்றருளிச் செய்தார் . ` நெற்றி ஓர் கண் ` என மாற்றி , ` நெற்றியில் உள்ள ஒரு கண்ணாகிய தீத் திரளை ` என உரைக்க . கண்ணையே தீத்திரள் என்றருளிச்செய்தமையால் , ` திரள் ` என்பது , சினையிற் கூறும் முதலறி கிளவியாம் . ( தொல் . சொல் . 114.)

பண் :

பாடல் எண் : 4

வானமிது வெல்லா முடையான் தன்னை
வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
கானமதில் நடமாட வல்லான் தன்னைக்
கடைக்கண்ணால் மங்கையையு நோக்கா வென்மேல்
ஊனமது வெல்லா மொழித்தான் தன்னை
யுணர்வாகி யடியேன துள்ளே நின்ற
தேனமுதைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

வான் உலகினையும் நிலவுலகினையும் தன் உடைமையாக உடையவனாய்ப் பாம்பினைக் கச்சாக அணிந்தவனாய் வலிய பேய்கள் சூழச்சுடுகாட்டில் கூத்தாட வல்லவனாய் , தன் கடைக்கண்களால் உமாதேவியை நோக்கி அவள் பரிந்துரைத்த குறிப்பினையும் பெற்று என்பால் உள்ள குறைகளை எல்லாம் நீக்கினவனாய் , அடியேன் உள்ளத்துள்ளே ஞானவடிவினனாய் நின்று தேன் போலவும் அமுது போலவும் இனியனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

இது - இவ்வுலகம் , ` ஊனமது ` எல்லாம் என்பதில் ` எல்லாம் ` என்பது ` முழுதும் ` என்னும் பொருளதாய் நின்றது . வரி - கீற்று ; ` வரியும் ( கட்டுகின்ற ) கச்சு ` எனக் கச்சிற்கு அடையாக்கலும் ஆம் . ` வல்லான் ` என்றது , பிறர் அது மாட்டாமை யுணர்த்திநின்றது . ` மங்கையையும் நோக்கி ` என்றதனால் , ` என்னையும் நோக்கி ` என்பது பெறப்பட்டது . ` மங்கையை நோக்கி ஊனம் ஒழித்தான் ` என்றதனால் பாசம் அறுதல் அவன் அருளாலே என்பது பெறப்பட்டது . ` மங்கையுமை ` என்பதும் பாடம் . தேனமுது - தேனாகிய அமுது . சுவையாலும் பயனாலும் சிறந்ததாகிய உணவை , ` அமுதம் ` என்றல் வழக்கு . இறைவனைத் தேனமுதாக அருளிச்செய்தது உருவகம் .

பண் :

பாடல் எண் : 5

ஊரானை யுலகேழாய் நின்றான் தன்னை
யொற்றைவெண் பிறையானை யுமையோ டென்றும்
பேரானைப் பிறர்க்கென்று மரியான் தன்னைப்
பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை
அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கயிலை மலையை இருப்பிடமாக உடையவனாய் , ஏழுலகமும் பரந்து இருப்பவனாய் , ஒற்றைப்பிறையை அணிந்தவனாய் , உமாதேவியை விடுத்து என்றும் நீங்காதவனாய் , அடியார் அல்லாதார் நினைத்தற்கு அரியனாய் , பேயோடு எந்நாளும் சுடுகாட்டில் கூத்தாடுதலில் தெவிட்டாதவனாய் , தான் விடத்தை உண்டு அமரர்களுக்கு அமுதம் ஈந்தவனாய் , வேதமந்திரங்களைக் கூறிப் பிரமனும் திருமாலும் துதிக்கும் புகழுடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

` உலகு ` எனப் பின்வருகின்றமையின் ` ஊர் ` என்றது , கோநகரங்களை ; அவை தேவர் உலகங்கட்குமாம் . ஒற்றைப் பிறை - ஒரு கலையை உடைய பிறை ; ` உமையோடு ` என்புழி , ` இருத்தல் ` என ஒருசொல் வருவிக்க . அன்றி , ஓடுஉருபை இன்னுருபாகத் திரிப்பினும் ஆம் . பேரான் - நீங்காதவன் . ` பேயோடு ஆடல் ` என இயைக்க . ஆரான் - நிரம்பான் ; முடித்திடாதவன் . சீர் - புகழ் .

பண் :

பாடல் எண் : 6

மூவனை மூர்த்தியை மூவா மேனி
யுடையானை மூவுலகுந் தானே யெங்கும்
பாவனைப் பாவ மறுப்பான் தன்னைப்
படியெழுத லாகாத மங்கை யோடு
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

யாவரினும் முற்பட்டவனாய் , அடியார்கள் விரும்பிய வடிவில் காட்சி வழங்குபவனாய் , என்றும் மூத்தலில்லாத திருமேனியை உடையவனாய் , தானே மூவுலகம் முழுதும் பரவியிருப்பவனாய் , அடியவர்களின் தீவினையைப் போக்குபவனாய் , ஓவியத்து எழுதவொண்ணா அழகிய உமையோடு விரும்பி யிருப்பவனாய் , தேவர்கள் நடுங்குதலைக் கண்டு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அமுதத்தை ஈந்த தேவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே .

குறிப்புரை :

மூவன் - மூத்தல் ( யாவரினும் பெரியோனாதல் ) உடையவன் ; இது ` மூ ` என்னும் முதனிலைத் தொழிற்பெயரடியாகப் பிறந்த பெயர் . ` பாவன் , மேவன் ` என்பனவும் அவை ; தமிழகத்துள் பண்டைக்காலத்தில் , ` மூவன் ` என்னும் பெயர் வழக்கில் இருந்தமை பழந்தமிழ்ச் செய்யுள்களால் அறியப்படுகின்றது . ` அம்மூவனார் ` ( அகம் - 10) ` மூவன் ` ( புறம் - 209) முதலியன காண்க . மூவா - மூப்பு அடையாத ; அழியாத . பாவன் - பரத்தலுடையவன் . மேவன் - விரும்பியிருத்தலுடையவன் .

பண் :

பாடல் எண் : 7

துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத்
துன்பந் துடைத்தாள வல்லான் தன்னை
இறந்தார்க ளென்பே யணிந்தான் தன்னை
யெல்லி நடமாட வல்லான் தன்னை
மறந்தார் மதில்மூன்றும் மாய்த்தான் தன்னை
மற்றொருபற் றில்லா அடியேற் கென்றும்
சிறந்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

பற்றறுத்த சான்றோருக்குப் பற்றுக்கோடாகும் வழியாய் இருப்பவனாய் , அடியார்களுடைய துன்பத்தைப் போக்கி அவர்களை ஆட்கொள்ளவல்லவனாய் , இறந்தவர்களுடைய எலும்பையே அணிந்தவனாய் , இரவில் கூத்தாடவல்லவனாய்த் தன்னை மறந்த அசுரர்களின் மும்மதில்களையும் அழித்தவனாய் , வேறுபற்றில்லாத அடியார்களுக்கு என்றும் மேம்பட்டு அருளுபவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

துறத்தல் பிறப்பிற்கு அஞ்சியாகலின் , அதனை அறுப்பவன் , பிறப்பில் பெருமானாகிய சிவபிரான் ஒருவனேயாதல் உணர்த்துவார் , ` துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் ` என்றும் , அவ்வாறு தன்பற்றினையே தூநெறியாக அறிந்து பற்றுவார்க்கு அவர் விரும்பியவாறே பிறவித்துன்பத்தினை அடியோடு அவன் அகற்றியருளுதல் உணர்த்துவார் , ` துன்பந் துடைத்தருள வல்லான் ` என்றும் அருளிச்செய்தார் . எல்லி - இரவு . திரிபுரத்து அசுரர்கள் , முன்பு சிவபிரானை வழிபட்டிருந்து , பின்னர் புத்தனது போதனையால் அதனை விட்டொழித்தாராதலின் , அவர்களை , ` மறந்தார் ` எனக் குறித்தருளினார் . சிறந்தான் - தாங்கிநிற்கும் தலைவன் . ` மற்றொரு பற்றில்லா அடியேற்கு ` என எடுத்தோதியருளியது , ஏனையோர்க்கும் அஃது இன்றியமையாததாதல் உணர்த்துதற்கு ; இதனை , ` மற்றுப் பற்றெனக்கின்றி நின்றிருப் பாதமேமனம் பாவித்தேன் ` ( தி .7. ப .48. பா .1.) என வன்றொண்டப் பெருமான் வலியுறுத்தருளியது காண்க . ` அடியார்க்கு ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 8

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி , அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய் , மாசற்றவனாய் , கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய் , பிறையைச் சடையில் சூடியவனாய் , தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

வாயான் , மனத்தான் , என்பன இறைவன் , சொல்லுதற்கும் , நினைத்தற்கும் உரிய கருவிகளாகிய அவற்றிற் கலந்து நின்று தொழிற்படுத்துதலைக் குறித்தன . ` கருத்தான் ` என்றது மனத்தின் தொழிற்பாடாகிய எண்ணத்தில் , அவன் கலந்து நிற்றலை உணர்த்திற்று . ` கருத்து ` என்றது , விருப்பத்தையே . அதனை அறிந்து முடித்தலாவது , வேண்டுவார் வேண்டுவனவற்றை அவர்தம் முயற்சியின்வழிக் கூட்டுவித்தல் . கருதப்பட்டதே சொல்லப்படுதலின் , ` வாயுள் நின்ற சொல்லானை ` என்று அருளிச் செய்யாராயினார் . தூயான் - இயல்பாகவே பாசம் இல்லாதவன் ; அஃது அவன் ஊர்தியாலும் கொடியாலுமே அறியப்படும் என்பது அருளுவார் , ` தூவெள்ளை ஏற்றான்றன்னை ` என்றருளிச் செய்தார் . தொடர்ந்து நிற்றல் - உடனிருந்து புரத்தல் . ` நின்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` நின்ற தாயானை ` என்பதும் பாடம் . தவத்தவர் செய்யும் தவமேயாய் நிற்பவன் இறைவன் என்க . எனவே , அவனை நோக்கிச் செய்யப்படுவதே தவம் எனப்படுவது என்பதாம் . இனி , தவத்தின் பயனாய் உள்ளவன் என்பதும் , அதன் பொருளாகும் . தலையாய தேவராவார் . திசைக்காவலர் , அயன் , மால் முதலியோர் . இவர்கள் தேவர்கட்குத் தலைமை பூண்டு நிற்றலின் , ` தேவாதி தேவர் ` என வழங்கப்படுவர் . அவ்வழக்கின் பொருளை நன்குணர்த்தத் திருவுளம்பற்றி , ` தலையாய தேவாதி தேவர் ` என்றருளினார் . ` தேவர்க்கும் ` என்னும் சிறப்பும்மை தொக்கது . இறைவன் அவர்கட்குச் சேயன் ( காணப்படாதவன் ) ஆதல் , அதிகாரச் செருக்கினால் அவனை , எண்ணாதொழிதலால் என்க . இறைவன் , தன் அடியார்கட்குத் தொடர்ந்து நின்ற தாயாகி நிற்றலும் , செருக்குடையார்கட்குத் சேயனாகி நிற்றலும் ஒருங்கு அருளிச்செய்யப்பட்டன .

பண் :

பாடல் எண் : 9

பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் தன்னைப்
பழியிலியாய் நஞ்சுண் டமுதீந் தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை
வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை
மேலாய தேவாதி தேவர்க் கென்றும்
திகைச்சுடரைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

தீவினையாகிய இருளைப் போக்கும் ஞானச் சுடராய் , அடியார்களின் பாவங்களைப் போக்குபவனாய்ப் பழி ஏதும் இல்லாதவனாய் நஞ்சினை உண்டு தேவர்க்கு அமுதம் ஈந்தவனாய்க் கிளைத்தெழுந்த தீயாகி அசுரருடைய மும்மதில்களையும் அழித்தவனாய் , நடுவுநிலை தவறாதவனாய் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவனாய் , மேலான ஒளிவடிவினனாய் , விண்ணவர்களுக்கு மேலும் உயர்வுதரும் அப்பக்தியாய் உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்களுக்கும் ஒளிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

பகையாவது இருளேயாம் , ஒளிக்குப் பகையாவது அதுவேயாகலின் , ` பகைக்குச் சுடராய் ` என நான்காவது விரிக்க . சுடராவது ஞானம் . புண்ணியமும் வினையேயாயினும் கொடுமை மிகுதிபற்றி பாவத்தைக் களைதலையே எடுத்தோதியருளினார் . இருளாவது , மூலமலமாகிய அறியாமை . அதனாலேயே வினை வருதலின் , அதனை நீக்கவே வினையொழியும் என்றதாயிற்று . ` பழியிலி ` என்றது , ` தான் அமுதத்தை உண்டு பிறர்க்கு நஞ்சைக் கொடுத்தான் என்ற பழி இல்லாதவன் ` என்றருளிய படி ; இது . தேவர்கள் இப்பழியுடைமையை உட்கொண்டு அருளிச்செய்தது . வகைச் சுடர் - கிளைத்தெழுகின்ற தீ . ` தீயாக ` என்க . வளைவிலி - கோட்டம் ( பட்சபாதம் ) இல்லாதவன் ; நடுவு நிலைமையுடையவன் . ` சலமிலன் சங்கரன் ` ( தி .4. ப .11. பா .6.) ` சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய் ` ( சிவஞானபோதம் சூ .10 அதி . 2. ) என்பன காண்க . ` மிகைச் சுடர் ` என்றதற்கு ` மிகைமக்கள் ` ( நாலடி -163) என்றாற் போல , ` மேலான ஒளி ,` என உரைக்க . ` விண்ணவர்கட்கு மேலும் அப்பக்தியாய் உள்ளவன் ` என்க . ` மேலாய ` என்றதற்கு , மேல் , ( பா .8.) ` தலையாய ` என்றதற்கு உரைத்தது உரைக்க . திகை - திசை . திகைச்சுடர் - திசை காட்டும் ஒளி ; கலங்கரை விளக்கு . தேவர்கட்கும் உண்மைநெறி உணர்த்துவோன் என்றபடி .

பண் :

பாடல் எண் : 10

மலையானை மாமேரு மன்னி னானை
வளர்புன் சடையானை வானோர் தங்கள்
தலையானை யென்தலையி னுச்சி யென்றுந்
தாபித் திருந்தானைத் தானே யெங்கும்
துலையாக வொருவரையு மில்லா தானைத்
தோன்றாதார் மதில்மூன்றுந் துவள எய்த
சிலையானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கயிலை மலையை உடையவனாய் , மேரு மலையில் தங்கியிருப்பவனாய் , வளர்ந்த செஞ்சடையினனாய் , வானோருள் மேம்பட்டவனாய் , என் தலையின் உச்சியில் என்றும் நிலைபெற்றிருப்பவனாய் , எங்கும் தனக்கு நிகராவார் இல்லாதவனாய்த் தன்னை அணுகாது பகையைப்பூண்ட அசுரர் மதில்கள் மூன்றும் அழியுமாறு பயன்படுத்திய வில்லை உடையவனாய் இருக்கும் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

மலையான் - மலைபோன்றவன் ; பெருமை யுடையவன் . தாபித்து - நிறுவி ; ` தன்னை நிறுவி ` என்க ; ` நிலையாய் இருந்தான் ` என்றபடி . ` தானேயாய் ` என ஆக்கம் வருவிக்க . ` எங்கும் ஒருவரையும் துலையாக இல்லாதான் ` என இயையும் . துலை - ஒப்பு . தோன்றாதார் - அருகில் வாராதவர் ; பகைவர் . துவள - மெலிய . ` தூளா ` என்பதும் பாடம் . ` துகளா ` என்பதே பாடம் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 11

தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் தன்னைத்
தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப்
பரிந்தவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை
ஆத்தனை யடியேனுக் கன்பன் தன்னை
யளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

பிறன் மனைவியை விரும்பிய இராவணனுடைய தோள்களையும் பத்துத்தலைகளையும் நசுக்கியவனாய் , பின் அவன் எழுப்பிய வீணை இசைகேட்டு அருள் செய்தவனாய் அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்கு இரங்கிப் பாசுபதாத்திரம் ஈந்தவனாய் , நம்பத்தகுந்தவனாய் , அடியேன் மாட்டு அன்பு உடையவனாய் , அளவற்ற பல ஊழிக்காலங்களையும் கண்டும் தன் நிலைபேற்றில் மாறுபடாது இருக்கும் பரிசுத்தனாகிய தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

குறிப்புரை :

தூர்த்தன் - பிறன்மனை விழைந்தவன் ; இராவணன் . பார்த்தன் - அருச்சுனன் . பணி - தொண்டு ; தவம் . பரிந்து - இரங்கி . ஆத்தன் - நம்பத்தக்கவன் . தீர்த்தன் - பரிசுத்தன் .

பண் :

பாடல் எண் : 1

ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமைய மாதொருகூ றாயி னானை
மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய் , அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய் , விரும்பத்தக்க பார்வதி பாகனாய் , தாமரை மலர் மேல் உள்ள பிரமனும் , திருமாலும் காண முடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந் தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம் செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும் .

குறிப்புரை :

ஆதி - பழங்காலம் . நான்முகத்தில் ஒன்று சென்று - ஏனைய நான்கு முகங்களினும் ஒருமுகம் முற்பட்டு . அல்லாத சொல் - உண்மையல்லாத சொல் ; அது , ` என் மகனே , வா ` என்று அழைத்தது . ` வாள் ` என்றது , நகத்தை . சேதித்த - அறுத்த . ` திருவடி ` என்றது , வயிரவரை . செல்ல - விலகிச் செல்லும்படி . நல்கி - அருள்புரிந்து . ` சிவலோக நெறி ` என்றது உண்மையை ; அஃதாவது தானே முதல்வன் என உணர்த்தினமையை ; அவ்வாறுணரும் நெறி தானே சிவபிரானை அடையும் நெறியாகலின் , அதனை , ` சிவலோக நெறி ` என்றருளிச் செய்தார் . காட்டியது , பிரமதேவனுக்கு , ` பிரமன் ஐந்துதலை உடையனாய் இருந்தபொழுது , தானே முதல்வன் எனச் செருக்குக் கொண்டு திருமாலுடன் கலாம் விளைத்தனன் . அதுபோது சிவபிரான் வயிரவரை அனுப்ப , அவரைக்கண்டு , ` வா , என் மகனே ` எனப் பிரமன் , அகங்காரத்துடன் அழைத்தலும் அவர் அவ்வாறு அழைத்த அவனது தலையைக் கிள்ளினார் ; பின்பு அவனது செருக்கு நீங்கியபொழுது , சிவபெருமான் அவனுக்கு நல்வரம் அருளினார் ` என்னும் வரலாறு இங்குக் குறிக்கப்பட்டது . அவ்வரலாறு இஞ்ஞான்று வழங்குதற்கேற்ப இதற்குப் பொருள் உரைக்கப்பட்டது . ஆயினும் , சுவாமிகள் காலத்தில் அது வேறுபட வழங்கிற்று எனக்கொள்ளின் , பிறவாறு உரைத்தலுங் கூடும் . இதனை மேற்காட்டியவகையில் , காஞ்சிப் புராணம் வயிரவேசப்படலத்துட் காண்க . மாதிமைய - பெருமையுடைய , ` அழகிய இமயமாது ` என்றலுமாம் . நாதி - நாதன் , நான் அடியேன் - நானாகிய அடியேன் ; சிறப்புப் பெயர் பின் வந்தது ; ` அடியேனாய் ` என எச்சப்படுத்தலுமாம் . ` நினைக்கப் பெற்று ` என்பதற்கு , மேலைப் பதிகத்துள் உரைத்தவாறே உரைக்க . ` உய்ந்தவாறு ` எனபதன் இறுதியில் , ` நன்று ` என்னும் பயனிலை எஞ்சிநின்றது .

பண் :

பாடல் எண் : 2

படையானைப் பாசுபத வேடத் தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய் , முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்கு ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய் , காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

படையான் - பல படைகளை உடையவன் . பாசுபத வேடம் - பாசுபத மதத்திற் கொள்ளப்படும் வேடம் . அனங்கன் - மன்மதன் . பார்த்தான் - விழித்து எரித்தான் . ` ஆவா ` என்பது , இரக்கக் குறிப்பிடைச் சொல் . ` என்று ` என்பதனை ` என்ன ` எனத் திரித்தலுமாம் . சங்கத்த - சங்கின்கண் உள்ள . ` ஏற்றின் கண் ` என உருபுவிரிக்க . நடை - நடத்தல் ; செல்லுதல் உடையவன் .

பண் :

பாடல் எண் : 3

படஅரவ மொன்றுகொண் டரையி லார்த்த
பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
யமுதாக வுண்டானை ஆதி யானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

படமெடுக்கும் பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய , மேலும் கீழுமாய் நிற்பவனை , பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை , வலிய பாம்பினைக்கொண்டு கடைந்த போது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை , எல்லோருக்கும் முற்பட்டவனை , இதழ்களிலே வண்டுகளின் ஒலி நிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை , சிறந்த இரத்தினம் போன்று கண்ணுக்கு இனியவனை . மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை , நள்ளாற்றில் உகந்தருளி யிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

பராபரன் - மேலும் கீழுமாய் நிற்பவன் . ( பரம் - மேல் , அபரம் - கீழ் .) ` மேல் , கீழ் ` என்பன , அத்தன்மையுடைய பொருளை உணர்த்தின . பைஞ்ஞீலி , சோழநாட்டுத்தலம் . ` கடைந்த நஞ்சு ` என்பது , ` ஆறு சென்ற வெயர் ` என்பது போல நின்றது . ` அரவம் பற்றிக் கடைந்த ` என்றது , கடைந்தாரது அறியாமையைத் தோற்றுவித்தற்கு . நஞ்சின் தோற்றத்திற்குரிய காரணத்தை விதந்தருளியவாறு . ஆதியான் - முதல்வன் . மடல் அரவம் - இதழ்களின் பக்கலில் முரலும் வண்டுகளின் ஓசை . மாமணி - உயர்ந்த ரத்தினம் . மாணி - பிரமசாரி ; மார்க்கண்டேயர் . ஆய் - துணையாகி ` நடலை , என்பதன் ஈற்று ஐகாரம் தொகுத்தலாயிற்று . நடலை அரவம் - ஒடுங்குதற்கு ஏதுவாகிய ஒலி ; அது சிலம்பினால் ஆயதென்க ; ` சிலம்பை ஒலிப்பித்தான் ` என்றது , காலால் உதைத்தமையைச் சிறப்பித்தருளியவாறு .

பண் :

பாடல் எண் : 4

கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்
கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்
சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

கட்டங்கம் என்ற படையைக் கையில் ஏந்திக் கங்கணம் அணிந்து , காதில் தோடு அணிந்து , உடம்பை எரித்த சாம்பலைத் தன் திருமேனியில் நிறையப் பூசி அழகனாய்த்தன் கையில் சூலம் ஏந்தி எலும்பு மாலையை நிறையச் சூடிப் பூதக்கூட்டமும் தானுமாய்ப் பரந்து சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

விடு - ஒளிவிடுகின்ற ` அங்கம் சுட்டு ` என மாறுக . ` அங்கம் ` என்றது உடம்புகளனைத்தையும் . ` சுட்டு ` எனவே , ` சாம்பல் ` என்பது தானே வந்தியையும் . ` சுந்தரன் ` என்றது , ` சாம்பல் பூசி இருப்பினும் , அழகனே ` என்றவாறு . ` பட்ட ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . அங்கம் - எலும்பு . கணம் - பூதம் . கம் - ஆகாயம் ; வெளி . வெளியாகிய காட்டில் என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 5

உலந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்
ஒருநொடியி லுழல்வானை உலப்பில் செல்வம்
சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்
திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோகனைக்
கலந்தார்தம் மனத்தென்றுங் காத லானைக்
கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

இறந்தவர்களுடைய எலும்பு மாலையை அணிந்து உலகமெல்லாம் ஒரு நொடிநேரத்தில் சுற்றிவருகின்றவனாய் , அழிவில்லாத பெருஞ்செல்வத்தைச் சிலந்திப் பூச்சிக்கு அருளிய தேவதேவனாய்ச் சிராப்பள்ளியில் உகந்தருளியிருக்கும் சிவலோகனாய்த் தன்னைக் கூடிய அடியவருடைய உள்ளத்தைத் தான் என்றும் விரும்புபவனாய்க் காஞ்சியில் ஏகம்பத்து உறைவானாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூவினால் செயற்கை அழகு கொண்ட குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

உலந்தார் - இறந்தார் . உலப்பு - குறைதல் . சிலந்தியை அரசனாக்கிய வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் கோச்செங்கட் சோழநாயனார் புராணத்துட் காண்க . ` நலம் ` என்றது , செயற்கை நலத்தை ; மாலை என்றவாறு .

பண் :

பாடல் எண் : 6

குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்
குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்
சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்
தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

அடியவர் குடி என்ற பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்க வல்லவனாய் , பார்வதியை இடப்பாகனாய் , உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குக்களை நீக்கித் தன் திருவருளாகிய புனித நீரில் அவற்றை மூழ்குவிப்பவனாய் , வேதத்தை ஓதுபவனாய் , பிறை சூடிய சடையினனாய் , நடுக்கத்தைப் போக்கி இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு அறம் என்னும் உண்மைப்பொருளின் வழியில் வாழ்ந்து தன்னை வழிபடுபவருக்கெல்லாம் நன்மையை நல்கும் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

குலம் - குடிப்பிறப்பு ` குலங்கெடுத்து ` எனவும் பாடம் ஓதுவர் . கோள் - துன்பம் . குல வரை - உயர்ந்த மலை . மலம் - ( உயிரைப் பற்றியுள்ள ) அழுக்கு . அவை , ` ஆணவம் , கன்மம் , மாயை ` என மூன்று . மா தீர்த்தம் - உயர்ந்த புனித நீர் ; என்றது , தனது திருவருளை . ஆட்டுதல் - மூழ்குவித்தல் . மறையவன் - வேதத்தை ஓதியவன் . ` புனிதநீராட்டுவோன் மறையவனே ` என்னும் நயங் காண்க . சலம் - பொய் ; நடுக்கமுமாம் . தயா மூல தன்மம் என்னும் தத்துவம் ` இரக்கமே அடிநிலை அறம் ` என்னும் உண்மை . ` அஃது இறைவனை உணர்ந்தார்க்கே கைகூடும் என்றவாறு . இத்தொடரினைப் புத்தர் முதலியோர் வாளாவாய்ப்பறையாகச் சாற்றுதல் பயனுடைத் தாகாது என்றபடி . தாழ்ந்தோர் - வணங்கினோர் . ` நின்று தாழ்ந்தோர் ` என இயையும் .

பண் :

பாடல் எண் : 7

பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை யுதைத்தவன்தன் சிரங்கொண் டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

பூவாய் விரியும் கொன்றை மலரைச் சூடிய சடையினனாய்ப் புறம்பயம் , புகலூர் , மறைக்காடு , வலிவலம் என்ற திருத்தலங்களை உகந்தருளிய பெருமானாய் , மற்றைய விலங்குகள் அஞ்சி ஓடுதற்குக் காரணமான வலிமையை உடைய களிற்றின் தோலை உரித்த வலிமையை உடையவனாய் , ஏனைய தேவர்களும் அஞ்சி ஓடுமாறு தக்கனுடைய வேள்வி முழுதையும் அழித்தவனாய் , அவனை ஒறுத்து அவன் தலையை நீக்கினவனாய் , நாவினின்றும் வெளிப்படுமாறு வேதத்தை ஓதுபவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

` பூவாய் விரிகின்ற ` என ஆக்கம் விரிக்க . ` கொன்றை மலர் ` என மாற்றுக . புறம்பயம் , புகலூர் , மறைக்காடு , வலிவலம் சோழநாட்டுத் தலங்கள் . மாஇரி அக்களிறு - மற்றைய விலங்குகள் ( யானைகள் ) அஞ்சி நீங்குகின்ற அத்தன்மையுடைய யானை ; கயாசுரன் . தே இரிய - எல்லாத் தேவரும் அஞ்சி ஓடும்படி . ` உதைத்து ` என்றது . ` தண்டித்து ` என்னும் பொருளது . ` அவன் ` என்றது , தக்கனை . நாவிரிய - நாவினின்றும் தோன்றுமாறு .

பண் :

பாடல் எண் : 8

சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற
வில்லானை யெல்லார்க்கும் மேலா னானை
மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்
காளத்தி யானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதுபவனாய் , ஒளி வீசும் பவளம் போன்ற செந்நிறத்தானாய்ப் பழைய அசுரருடைய மூன்று மதில்களையும் எரியச் செய்த வில்லினை ஏந்தியவனாய் , எல்லாருக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய்க் கல்லாலின் கீழே அமர்ந்து நால்வேதங்களின் அறத்தையும் மௌன நிலையில் நால்வருக்கு உபதேசித்தவனாய்க் காளத்தியையும் , கயிலை மலையையும் உகந்தருளிய பெரியவனாய்க் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

சொல்லான் - சொல்லின்கண் உள்ளவன் . சுடர்ப் பவளச் சோதியான் - ஒளியையுடைய பவளம் போலும் ஒளியினையுடையவன் . ` தொல் புரம் ` என இயையும் , ` நான்கின் கண்ணும் ` என உருபு விரிக்க . கண்டான் - வகுத்தான் . ` காளத்தி மலையானை ` என்பதே பாடமாதல் வேண்டும் .

பண் :

பாடல் எண் : 9

குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை
அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்
சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்
சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்
நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

மேம்பட்ட முனிவனான மார்க்கண்டேயனுடைய குறை வாழ்நாள் ஆகிய சாபம் தீருமாறு திருவடியால் கூற்றுவனை வருத்திய பெருமானாய்ப் பகைமை உண்டாயினமையின் அசுரர் உடைய மும்மதில்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்தவனாய்த் தன்னை அடைந்து வேண்டியவர் வேண்டியதை ஈவானாய்ச் ` சிவ பெருமானே எம் இறைவன் ` என்று அவனையே வழிபட்டுக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு எல்லா நலன்களாகவும் விளங்கும் குண பூரணனாகிய நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

முனிவன் - மார்க்கண்டேயர் . அவருக்கிருந்த சாபம் ஆவது , ` பதினாறு ஆண்டோடு வாழ்நாள் முடிக ` என்பது ; இஃது இறைவன் இட்டதே . அது , அவரது முன்னை வினைபற்றியே இடப் பட்டதென்க . ` ஆக வேவ ` என இயையும் . ஆக - மிக ; ஆக்கச் சொல் மிகுதி குறித்தலும் உண்டு . இனி , ` அன்றுதல் ( பகைத்தல் ) ஆயினமையால் ` என்று உரைப்பினும் அமையும் . அழல் வாய் - தீயாகிய வாயையுடைய அம்பு ; அன்மொழித்தொகை . திரிபுரம் எரித்த ஞான்று , தீக்கடவுளே அம்பின் முனையாக நின்றனன் என்க . இனி , ` அழலது வாயினைச் செலுத்தி ` எனலுமாம் . திரிபுரங்கள் , தம்மியல்பால் தாம் அழிந்தன என்பார் , அடர்ப்பித்தான் என்னாது ` அடர்வித்தான் ` என்றருளிச்செய்தார் . ` சென்றியாது ` என்பது , ` சென்றாது என நின்றது . ` சென்றியாது என்பதே பாடம் ` எனலுமாம் . எம்பெருமான் சிவனே யென்றிருத்தலாவது , பிறர் ஒருவரையும் முதற் கடவுளாக மயங்காது அவன் ஒருவனையே தெளிந்து வழிபடுதல் ; அவர்க்கு எல்லா நலங்களுமாய் இருப்பான் என்க . அமைதியாய் அடங்கியிருப்பாரை , ` சிவனே என்றிருப்பார் ` என்னும் வழக்கு நயமும் தோற்றுவித்தவாறு . ` நன்று ` என்றது , தொகுத்தருளிச்செய்தது .

பண் :

பாடல் எண் : 10

இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
இராவணனை யிருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே
யுற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.

பொழிப்புரை :

தான் சாகா வரம் பெற்றானாகச் செருக்கிய இராவணனை அவன் தோள்கள் இருபதும் நசுங்குமாறு திருவடி விரலை ஊன்றியவனாய்ப் பின் அவன் உறவாகி இசைத்த இன்னிசை கேட்டு இரங்கி அவன் துயரைத் துடைத்தவனாய்த் தன்னை மறவாத அடியவர் மனத்து என்றும் நிலைபெற்றிருப்பவனாய்க் கொன்றை , வன்னி , ஊமத்தம் பூ இவற்றின் தேன் நிறைந்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .

குறிப்புரை :

மிக்க - செருக்கிய . மிகுதி செருக்காதலை , ` மிகுதியான் மிக்கவை செய்தாரை ` ( குறள் . 158) என்பதனால் உணர்க . ` உறவாகி ` எனப் பின்னர் அருளிச்செய்தமையால் ` இராவணனை ` என்புழி , ` பகையாகி ` என்பது பெறப்படும் . ` மீண்டு - மறித்து ; இது வினை மாற்றுப் பொருள் குறித்துநின்றது . ` மீண்டு உறவாகி ` என இயைக்க . நறவு - தேன் ; இது மேற்சொல்லப்பட்ட மலர்களினின்றும் சொரியப்படுவது .

பண் :

பாடல் எண் : 1

முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலும்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும்
கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

முடியில் தாமரை மலரை அணிந்த மூர்த்தியாய் மூவுலகும் பரந்தவராய் , தாமரைக் கண்ணராய் , கல்லலகு என்ற வாச்சியத்தை ஒலிக்கப் பழகியவராய் , தம்மை அருச்சிப்பதற்குத் தாமரைக் கூட்டத்தை நாடும் அடியவர்கள் செய்யும் குற்றேவலை மகிழ்ந்த இளையராய் , தம் திருவடித் தாமரைகளை அடியவர்களின் உள்ளத்தாமரையில் வைத்தவராய் , ஆக்கூரிலே ( தாமாகவே இலிங்க வடிவில் எழுந்தருளியவர் ) தான்தோன்றியப்பர் உள்ளார் .

குறிப்புரை :

முடி - முடியின்கண் . கடி - நறுமணம் . கல்அலகு - கற்கப்படும் மாத்திரை அளவு . ( பார்க்க : ப .7. பா .1 குறிப்பு .) பாணி - தாளம் . அதனைப் பயிலுதலாவது , நடனம் புரிதல் . கொடித் தாமரை என்பது அடையடுத்த ஆகுபெயராய் , அதன் மலரைக் குறித்தது . காடு - மிகுதி . நாடுதல் , பறித்துச் சாத்தி வழிபடுதற்பொருட்டு . தொண்டரது குற்றேவலை மகிழ்தலாவது , அவரது எளிய தொண்டினைப் பொருள் நோக்கி இகழாமல் , அன்பு நோக்கி ஏற்றுக் கொள்ளுதல் . அடித் தாமரை , உருவகம் , ` மலர் ` என்றது , அன்பரது உள்ளக்கமலத்தை . ` தான் தோன்றி ` என்பது சிவபிரானுக்குக் காரணப்பெயர் ; ` ஒருவரால் தோற்றுவிக்கப்படாது , தானே தன் இச்சைவழி நினைத்த வடிவில் தோன்றுபவன் ` என்பது பொருள் . இப்பெயர்க்கு ஏற்ப , இத்தலத்தில் இறைவன் தானே தோன்றிய இலிங்க வடிவாய் ( சுயம்புமூர்த்தியாய் ) எழுந்தருளியிருத்தல் அறியத்தக்கது .

பண் :

பாடல் எண் : 2

ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணரப் படாததொன் றில்லை போலும்
காதிற் குழையிலங்கப் பெய்தார் போலுங்
கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

ஒரு நூலையும் ஆசிரியர்பால் கல்லாது எல்லா நூல்களையும் அறிந்தவராய் எல்லாச் செய்திகளையும் உணர்ந்தவராய்க் காதில் ஒளி வீசுமாறு குழையை அணிந்தவராய்க் கவலைக்கு இடமாகிய பிறவித்துன்பம் அடியவருக்கு வாராமல் தடுப்பவராய் , வேதங்களும் ஆறு அங்கங்களும் ஓதியவராய் , விடத்தால் சூழப் பட்டுக் கறுத்த கழுத்தினராய்த் தாமே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தமக்கு ஓர் ஆதியின்றி ஆக்கூரில் தான் தோன்றியப்பர் உகந்தருளி யுள்ளார் .

குறிப்புரை :

ஓதிற்று - படிக்கப்பட்டது . ` எம்பெருமான் ஒரு நூலும் ஓதியது இல்லை ; அவனால் உணரப்படாத பொருளும் ஒன்றும் இல்லை ` என உலகில் வைத்து அறியப்படாததோர் அதிசய நிலையை உணர்த்தியருளியவாறு ; ` இயல்பாகவே எல்லாவற்றையும் உணர்பவன் ` என்பதாம் , ` கவலை ( க்கு இடமாகிய ) இடும்பை ` என இயையும் . ` காத்தல் `, ஈண்டு , வாராது தடுத்தல் . வேதத்திற்குரிய ஆறு அங்கங்களாவன : சிட்சை , வியாகரணம் , நிருத்தம் , சோதிடம் , கற்பம் , சந்தோவிசிதி . சிட்சை - வேதத்தை ஓதும் ஒலிவகையை விளக்கும் . வியாகரணம் - இலக்கணம் , நிருத்தம் , மொழிநூல் , சோதிடம் , பஞ்சாங்கம் பற்றிக் காலநிலை கூறுவது . கற்பம் - சடங்கு முறை வகுப்பது , சந்தோவிசிதி - இசையமைப்பைக் கூறுவது . அளவு - எல்லை . ஆதிக்கு எல்லையாதலாவது , தானே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தனக்கு ஓர் ஆதியின்றி இருத்தல் .

பண் :

பாடல் எண் : 3

மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன வொளியார் போலும்
ஐவாய் அரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

மைபூசிய மலர்போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய் , நீலகண்டராய் , நெய்அணிந்த முத்தலைச்சூலக் கையராய் . திருநீறுபூசிய எண் தோளராய் , கூரிய மழுப்படையினராய் , காலைச் சூரியன் போன்ற செந்நிற ஒளியினராய் , ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுகக் கட்டியவராய்த் தான் தோன்றியப்பர் அடியவர் அகக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

` நெய் ஆர் ` என்றது இன அடை . வை - கூர்மை . வாள் - ஒளி . வளர் ஞாயிறு - வளர்வதற்குரிய ஞாயிறு ; காலையில் தோற்றஞ் செய்யும் கதிரவன் .

பண் :

பாடல் எண் : 4

வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
பூங்கங்கை தோய்ந்த சடையார் போலும்
கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும்
கட்டங்கம் ஏந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

கூர்மை விளங்கும் வெள்ளிய மழுப்படையைக் கையாளுதலில் வல்லவராய்க் கடலில் தோன்றிய வஞ்சனை உடைய கரிய நஞ்சினை உண்டவராய்த் திருநீற்றோடு பூணூலை அணிந்த மார்பினராய் , அழகிய கங்கை தோய்ந்த சடையினராய் , மணம்நாறும் கொன்றை மாலையினராய்க் கட்டங்கம் என்ற படையை ஏந்திய கையராய்த் திருவடியில் பொற்கழல் அணிந்தவராய்த் தான்தோன்றி யப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

வடி - வடித்தல் ; கூர்மையுமாம் . வெண்மை , வாயிடத்துத் தோன்றுவது , ` வஞ்ச நஞ்சு ` என இயையும் . நஞ்சுக்கு உள்ள வஞ்சமாவது , குளிர்ச்சியுடையதாய் இருந்தே கொல்லுதல் ; ` சிங்கி குளிர்ந்துங் கொலும் ` ( நீதி நெறி விளக்கம் . 58) என்றது காண்க . பூ - அழகு . கடி - நறுமணம் .

பண் :

பாடல் எண் : 5

ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
இடுவெண் தலைகலனா ஏந்தி நாளும்
மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
மாகாச மாயவெண் ணீருந் தீயும்
மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாச மென்றிவையு மானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

புலித்தோலை இடையில் உடுத்துப் பாம்பு மேலாடையாக உடல் மேல் தொங்க மண்டையோட்டினையே பிச்சை வாங்கும் பாத்திரமாக ஏந்தி மின்னலை வென்று ஒளிவீசும் கங்கை தங்கும் சடைமுடிமேல் வெண்பூமாலைகளைச் சூடி மிக்க ஒளியை உடைய வெள்ளிய நீரும் தீயும் சந்திரனும் சந்திரன் உலவும் விண்ணும் மண்ணுலகும் வானுலகும் ஆகிய எங்கும் பரந்திருப்பவராகிய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

ஏகாசம் - மேலாடை ; அஃது இங்கு உடையைக் குறித்தது . ` புலித்தோலின்கண் பாம்பு தாழ ` என்க . கலன் - அணிகலம் . ஏந்தி - தாங்கி ; பூண்டு . மேக ஆசம் - மேகத்தினது நகைப்பு ; மின்னல் . ஆசம் - நகைப்பு ; ` ஹாசம் ` என்பதன் திரிபு ; மின்னலை வென்ற சடை என்க . அதனை முடிமேல் ( தலைமேல் ) புனைந்தார் ( அழகுபெறக் கொண்டார் ) என்க . வெள்ளி மாலை - வெண்மையான மாலை ; எருக்கு மத்தம் முதலிய மலர்களால் ஆகியன . மாக ஆசம் - ஆகாயத்தின் நகைப்பு ( நகைப்பாகிய நீர் என்க ). மாகம் - ஆகாயம் . ` நீரினை ` ஆகாயத்தின் நகைப்பு ` என்றது , மேலிருந்து மழையாய் ஒழுகுதல் குறித்து ; ` மாகாசம் - மிக்க ஒளி ` எனினுமாம் .

பண் :

பாடல் எண் : 6

மாதூரும் வாள்நெடுங்கண் செவ்வாய் மென்தோள்
மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலும் இறுதியு மில்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளா வமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

காதல் மிகுகின்ற ஒளியை உடைய நெடிய கண்கள் , சிவந்த வாய் , மெல்லிய தோள்கள் இவற்றை உடைய பார்வதியை மார்பில் அணைத்துப்பின் பாகமாகக் கொண்டு நிலமும் கடலுமாய் , ஆதியந்தம் அற்றவராய்த் தீங்குகளை வெல்லும் நல் வினை வடிவினராய் , எண்திசைகளும் தமக்கே உடைமையாக உடைய செல்வராய் , ஆதிரை நட்சத்திரத்தை விரும்பிக் கொள்பவராய்த் தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

மாது ஊரும் - காதல் மிகுகின்ற , ` ஊர் ` என்றதும் , ` திரைகள் ` என்றதும் முறையே அவற்றை உடைய நிலத்தையும் கடலையும் குறித்து நின்றன . தீது ஊர - தீவினையை வெல்ல ; ஊர்தல் வெல்லுதலாதல் . ` அடுத்தூர்வது அஃதொப்பது இல் ` ( குறள் . 621.) என்புழியுங் காண்க . அமர்ந்தார் - விரும்பினார் ; ` திருவாதிரையைத் தமக்குரிய நாளாக விரும்பிக்கொண்டார் ` என்பதாம் . திருவாதிரை நாளைச் சிவ பிரான் தனக்குரியதாகக் கொண்டமையானே அந்நாளில் மதிநிறையப் பெறும் மார்கழித் திங்கள் தேவர் எல்லார்க்கும் சிறப்புடைத் திங்களாயிற்று என்க .

பண் :

பாடல் எண் : 7

மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
மான்தோ லுடையா மகிழ்ந்தார் போலும்
கோலானைக் கோவழலாற் காய்ந்தார் போலும்
குழவிப் பிறைசடைமேல் வைத்தார் போலும்
காலனைக் காலாற் கடந்தார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஆலானைந் தாடல் உகப்பார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

பெரிய யானையின் தலையைப் பிளந்தவராய் மான்தோலை உடையாக விரும்பி ஏற்று , அம்பினை உடைய மன்மதனைத் தம் கண்நெருப்பினால் கோபித்துச் சாம்பலாக்கி இளம்பிறையைச் சடைமேல் சூடிக் காலனைக் காலால் ஒறுத்துக் கயிலாயத்தைத் தம் இருப்பிடமாக ஏற்றுப் பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் செய்யப் படுவதனை உகந்த தான்தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

கோலான் - ( தம் மீது எய்யக்கொண்ட ) அம்பினை உடையவன் ; மன்மதன் . கோ - கண் . கடந்தார் - வென்றார் . ஆல் - நிறைந்த . மால் , ` மான்று ` என வருதல்போல , ` ஆல் , ` ஆன்று ` என வருதலின் , ` ஆன்றோர் ` என்பதற்கு இதுவே முதனிலையாதலறிக . இதுதானே சகரமூர்ந்து , ` சால் ` என நிற்கும் என்க . இனி , இதனை , ` அகல் என்பதன் மரூஉ ` எனக் கூறுவாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 8

கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
ஊழித்தீ யன்ன வொளியார் போலும்
எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லும் இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணராய்க் காமனை அக்கண்ணின் தீயினால் எரித்தவராய்ப் பிறர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவராய் , ஊழித் தீப்போன்ற ஒளியினை உடையவராய்ப் பல கோடிப் பேர்களுக்கு உரியவராய் , காளையை இவர்ந்து செல்லும் தலைவராய் , அண்ணாமலையையும் , ஆரூரையும் உகந்தருளியிருப்பவராய்த் தான் தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

` எண்ணாயிரங் கோடி ` என்றது , அளவின்மை கூறியவாறு , ` அண்ணாமலை ` என்பது , ` அண்ணா ` எனக் குறைக்கப்பட்டது .

பண் :

பாடல் எண் : 9

கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியான் சதுர்முகனு நேட நின்ற
நீலநற் கண்டத் திறையார் போலும்
படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்
அடியார் புகலிடம தானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

புதுமை நிறைந்த தளிர்கள் கலந்த கொன்றைப் பூ மாலை , விடு பூக்கள் மகரந்தம் நிரம்பிய முடிமாலை இவற்றைச் சூடியவராய்த் திருமாலும் பிரமனும் தேடுமாறு ஒளிப்பிழம்பாய் நின்ற நீலகண்ட இறைவராய்த் தீவண்ணமும் பொன் வண்ணமும் தம் கூற்றிலும் நீல மணிவண்ணம் தேவியின் கூற்றிலும் அமைந்த திருமேனியராய் அடியவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக உள்ள தான்தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

கடி ஆர் - புதுமை நிறைந்த . ` கொன்றைமலராகிய மாலையும் , போதும் . கண்ணியும் ` என்க . கதிர் போது - கதிர்க்கின்ற ( ஒளிவீசுகின்ற ) விடுபூ . தாது அணிந்த - மகரந்தத்தைக் கொண்டுள்ள ; இதனை இடைநிலை விளக்காகக் கொண்டு , ` மாலை , போது ` என்பவற்றோடும் இயைக்க . ` மாலை போது கண்ணி ` என்பது உம்மைத் தொகையாய் நின்று , ஆகுபெயராய் , ` அவற்றையுடையார் ` எனப் பொருள் தந்தது . ` நெடியான் ` என்புழி உம்மை தொகுத்தல் ஆயிற்று . ` நெடியானும் ` என்பதும் பாடம் . படி - உருவம் . ` மேனி ` என்றதும் , வண்ணத்தையே ; அழல் வண்ணமும் , பொன் வண்ணமும் தமது கூற்றிலும் , மணி ( நீலமணி ) யின் வண்ணத்தைத் தேவியின் கூற்றிலும் உடையவர் என்க . மோனை நயம் இன்மையின் , ` பணி வண்ணம் ` என்பதே பாடம் எனக்கொண்டு ; ` பாம்பை அணிந்த வடிவம் ` என்று உரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

திரையானுஞ் செந்தா மரைமே லானுந்
தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறிச் செல்வார் போலும்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
காலத் தீயன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

பொழிப்புரை :

பாற்கடற்பரமனும் , செந்தாமரைமேல் உறையும் பிரமனும் ஆராய்ந்து தேடியும் காண முடியாது நாணுமாறு செய்த மேம்பட்டவராய் , போரிடும் காளையை இவர்ந்து செல்பவராய் , நெகிழ்ச்சியில்லாத மலையையே வில்லாகவும் பாம்பையே நாணாகவும் கொண்டு ஊழித்தீயை ஒத்த கோலத்தை உடையவராய்ப் பகைவர்களின் மும்மதில்களையும் அழித்த செயலுடைய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

திரையான் - நீரிடைக் கிடப்பான் ; திருமால் . ` காணாராய் நாணும் ` என்க . புரையான் - உயர்ந்தோன் . ` நாணும் ` என்னும் பெயரெச்சம் . ` புரையான் ` என்னும் ஏதுப் பெயர் கொண்டது . ` புரையான் ` என்பது வேறு முடிபாகலின் , பால்வழு வின்மை அறிக . ` புரையார் ` என்பதே பாடமாகக் கோடலும் ஆம் . கரையா - நெகிழாத ; வளையாத மலையை வளைத்தார் என்றபடி . ` வரையே வில் ` என ஏகாரத்தை மாறிக் கூட்டுக . அவ்வேகாரம் , ` நாகம் ` என்பதனோடும் இயையும் . ` நாணாக ` என்பதில் உள்ள ` ஆக ` என்பது வில்லோடும் இயையும் . ` ஆக ` என்னும் எச்சங்கள் , ` கனலார் ` என்னும் இறந்தகால வினைக் குறிப்போடு முடியும் . கனல் - கனல் போல்வது ; சினம் . வரையார் - கொள்ளார் ; பகைவர் .

பண் :

பாடல் எண் : 1

பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச்
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

உலகத்தார் போற்றும் திருப்பழனம் , சீசைலம் பைஞ்ஞீலி என்ற திருத்தலங்களை உடைய பெருமான் சிறப்புடைய செழிப்பான பவளக்குன்றம் போல்பவனாய்த் திருமுடிமேல் பிறையைச் சூடியவனாய் , எண்ணிறந்த பெயர்களை உடையவனாய்ப் பிறர் தம் முயற்சியால் தன்னைக் காண முடியாதவனாய்க் கரிய கடலால் ஒருபுறம் சூழப்பட்ட அழகிய குளிர்ந்த நாகைக் காரோணத்தில் என்றும் தரிசிக்கும் வகையில் உள்ளான் .

குறிப்புரை :

பழனம் , பைஞ்ஞீலி சோழநாட்டுத் தலங்கள் . சீபருப் பதம் ( சீசைலம் ), வடநாட்டுத் தலம் . ` சூடி ` என்னும் எச்சம் , ` உடைய ` என்னும் பெயரெச்சக் குறிப்போடும் , ` தன்னை ` என்னும் இரண்டாவது , ` காட்சி ` என்னும் தொழிற்பெயரோடும் முடிந்தன . காட்சி , காணுதல் என்க . கார்ஆர் - கருமைநிறைந்த ; கார் , மேகமும் ஆம் . ` நாகை ` என்பது , ` நாகபட்டினம் ` என்பதன் குறுக்கம் . இது கடற் கரையில் உள்ளதென்பது வெளிப்படை . ` காரோணம் ` என்பது , திருக்கோயிலின் பெயர் .

பண் :

பாடல் எண் : 2

விண்ணோர் பெருமானை வீரட் டனை
வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்
பெண்ணானை ஆணானைப் பேடி யானைப்
பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை
அண்ணா மலையானை ஆனைந் தாடும்
அணியாரூர் வீற்றிருந்த அம்மான் தன்னைக்
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

விண்ணோர் பெருமானாய் வீரட்டனாய் , வெண்ணீறு அணிந்த மேனியனாய்ப் பெண் ஆண் பேடிகளாய் உள்ளானாய்ப் பெரும்பற்றப் புலியூர் அண்ணாமலை அழகிய ஆரூர் என்ற திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானாய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்பும் பெருமானை இடம் அகன்ற கடல் ஒரு பக்கம் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்தில் என்றும் காணலாம் .

குறிப்புரை :

வீரட்டன் - வீரட்டானத்தான் . ` வீரட்டானை ` எனவும் பாடம் ஓதுவர் . மெய் - உடம்பு . மேனி - நிறம் . ` அணிந்த மேனி ` என்பது ` அணிந்ததனால் ஆகிய மேனி ` எனக் காரண காரியப் பொருளதாய் நின்றது . பெரும்பற்றப் புலியூர் - தில்லை . ` ஆன் ஐந்து ஆடும் அம்மான் ` என இயையும் . கண் ஆர் - இடம் மிகுந்த ; ` கண்ணுக்கு நிறைந்த ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

சிறையார் வரிவண்டு தேனே பாடுந்
திருமறைக் காட்டெந்தை சிவலோகனை
மறையான்ற வாய்மூருங் கீழ்வே ளூரும்
வலிவலமும் தேவூரும் மன்னி யங்கே
உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்
பற்றியாள் கின்ற பரமன் தன்னைக்
கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் இனிமையாகப்பாடும் திருமறைக்காடு , வேதம் முழங்கும் திருவாய்மூர் , கீழ்வேளூர் , வலிவலம் , தேவூர் இவற்றில் உகந்தருளி இருக்கும் உத்தமனாய் , எந்தையாகிய சிவலோகனாய் , ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு உலகை ஆள்கின்ற மேம்பட்ட பெருமானைக் கருமை நிறைந்த கடல்புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

தேனே பாடும் - தான் உண்ட தேனையே இசையாகப் பாடுகின்ற ; ` மிக இனிமையாகப் பாடுகின்ற ` என்றதாம் . ` எந்தையாகிய சிவலோகனை ` என்க . மறை ஆன்ற - வேதம் நிறைந்த . வாய்மூர் , கீழ்வேளூர் , வலிவலம் , தேவூர் சோழநாட்டுத் தலங்கள் . ஒற்றியூர் , தொண்டைநாட்டுத் தலம் . ` ஒற்றி ஊரை இல்லாக ( உறையுளாக ) ப் பற்றி ` என்க . கறை ஆர் கடல் - கருமை நிறைந்த கடல் .

பண் :

பாடல் எண் : 4

அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை
ஆச்சிரா மந்நகரும் ஆனைக் காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை
மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்
சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

அன்னங்கள் மிகுகின்ற பொய்கைகள் சூழ்ந்த அம்பர் , பாச்சிலாச்சிராமம் , ஆனைக்கா என்பனவற்றை முன்னரே கோயிலாகக் கொண்டவனாய் , மூவுலகும் தான் பரந்திருக்கும் வடிவினனாய்ச் செஞ்சடைமேல் தனக்குரிய அடையாளப் பூச்சுக்களையும் பிறையையும் சூடிய பெருமானை இளையனவாதலின் நெடுநாள் நிலைத்திருக்கக்கூடிய புன்னை மரங்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

அன்னம் ஆம் - அன்னப்பறவை மிகுகின்ற . அம்பர் - திருவம்பர் ; அம்பர்ப் பெருந்திருக்கோயில் , அம்பர் மாகாளம் இரண்டுங் கொள்க . ஆச்சிராமம் - திருப்பாச்சிலாச்சிராமம் ; இம் மூன்றும் சோழநாட்டுத் தலங்களே . சின்னம் - தனக்கென்று உள்ள அடையாளம் ; அவை , ` கொன்றை , எருக்கு , ஊமத்தை ` முதலியன . கன்னி - அழியாமை . அம் . சாரியை .

பண் :

பாடல் எண் : 5

நடையுடைய நல்லெருதொன் றூர்வான் தன்னை
ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய
படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்
பன்மையே பேசும் படிறன் தன்னை
மடையிடையே வாளை யுகளும் பொய்கை
மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்
கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

நல்ல நடையினை உடைய காளையை இவர்ந்து செல்பவனாய் , ஞானப் பெருங்கடலாய் , நல்லூரை விரும்பியவனாய் , மழுப்படையை ஏந்தியவனாய்த் தன் நிலையைப் பலவாகப் பேசும் பொய்யனாய் , மடைகளிடையே வாளை மீன்கள் தாவும் பொய்கைகளை உடைய மருகலின் ஒளிவீசும் நீல கண்டனாய் உள்ள பெருமானை நல்ல முகப்புக்களை உடைய பெரிய மாடங்கள் ஓங்கும் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

படையுடைய - படைஞராவார் பிடிக்கின்ற . மழுவாள் - மழுவாகிய ஆயுதம் . பன்மையே பேசுதல் - தனது நிலையை ஒன்றாகச் சொல்லாது , பலவாறாகச் சொல்லுதல் . அஃதாவது , தன்னை , ` உருவுடையன் ` என்றும் , உருவிலன் ` என்றும் , ` ஓர் ஊரும் இல்லாதவன் ` என்றும் , ` பல ஊர்களை உடையவன் ` என்றும் , ` பெயர் ஒன்றும் இல்லாதவன் ` என்றும் , ` அளவற்ற பெயர்களை உடையவன் ` என்றும் , ` இல்லத்தவன் ` என்றும் , ` துறவி ` என்றும் மற்றும் இன்னோரன்ன பலவாகச் சொல்லுதல் . இது பற்றி , ` படிறன் ` ( பொய்யன் )` என்றருளிச்செய்தார் . எல்லாவற்றுக்கும் ` அப்பாற் பட்டவன் ` என்பது திருக்குறிப்பு . எனவே , ` படிறன் ` என்றது , உள்ளுறைச் சிறப்பு ( பழிப்பது போலப் புகழ்தல் ) ஆயிற்று . மருகல் சோழநாட்டுத் தலம் . வாய் , ஏழனுருபு . ` மருகல்வாய் உள்ள சோதியாகிய மணிகண்டன் ` என்க . கடை - வாயில் ; இதனை எடுத்தோதியது அழகு பற்றி .

பண் :

பாடல் எண் : 6

புலங்கள்பூந் தேறல்வாய் புகலிக் கோனைப்
பூம்புகார்க் கற்பகத்தைப் புன்கூர் மேய
அலங்கலங் கழனிசூ ழணிநீர்க் கங்கை
யவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் தன்னை
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே
ஏகாச மிட்டியங்கு மீசன் தன்னைக்
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

வயல்களிலே பூக்களில் தேன் பொருந்தியுள்ள புகலித் தலைவனாய் , பூம்புகாரில் உள்ள கற்பகமாய் , அசைகின்ற கதிர்களை உடைய வயல்கள் சூழ்ந்த புன்கூரில் அழகிய நீரை உடைய கங்கையைச் சடைமேல் கொண்ட தலைவனாய் , தலைமாலையைச் சூடிப்பாம்பினை மேலாடையாகத் தரித்து விளங்குகின்ற ஈசனைக் கடலிலே மரக்கலங்கள் சூழ்ந்து காணப்படும் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

புலம் - வயல் . தேறல் - தேன் . வாய் - வாய்ந்த ; பொருந்திய . ` வயல்கள் பூக்களது தேனைப் பொருந்தியுள்ள புகலி ` என்க . ` வாய்ப்புகலி என்பதும் பாடம் . புகலி - சீகாழி , பூம்புகார் - காவிரிப்பூம்பட்டினம் . புன்கூரும் சோழநாட்டுத்தலம் . ` புன்கூர்மேய அம்மான் ` என இயையும் . அலங்கல் - அசைதல் . அசைவன நெற்கதிர்கள் என்க . ` கழனிசூழ் புன்கூர் ` என முன்னே கூட்டுக . இனி , ` கழனியைச் சூழ்தற்குரிய கங்கை ` என , கிடந்தவாறே கங்கைக்கு அடையாக்கலும் ஆம் . ஆதரித்தல் - விரும்புதல் ; அது . விரும்பி அணிதலாகிய காரியத் தின்மேல் நின்றது . ` தலைமாலையையும் ` பாம்பையும் பற்றி ஏகாசமாக இட்டு ` என்க . ஏகாசம் - மேலாடை . அது மேலாடை போலத் தோளில் இடப் படுவதைக் குறித்தது . ` கொண்டு ` என ஏகாரம் இன்றி ஓதுதல் பாடம் அன்று . கடலில் கலங்கல் கரையோரத்து உளதாகும் என்க . ` கலங்கள் ` எனப் பாடம் ஓதுதலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 7

பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்
புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்
சின்மணிய மூவிலைய சூலத் தானைத்
தென்சிராப் பள்ளிச் சிவலோகனை
மன்மணியை வான்சுடலை யூராப் பேணி
வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

பொன்போன்று அழகிய கொன்றை மாலை சூடும் புண்ணியனாய் , வெண்ணீறு பூசியவனாய்ச் சிலமணிகள் கட்டப்பட்ட முத்தலைச் சூலத்தை ஏந்தியவனாய் , அழகிய சிராப்பள்ளிமேய சிவலோகனாய்த் தலையாய மணிபோல்பவனாய்ப் பெரிய சுடுகாட்டைத் தங்கும் இடமாக விரும்பிக்கொண்டு வலிய காளையை இவரும் வேதங்களில் வல்ல பெருமானை இரத்தினக் கற்களைக் கரைசேர்க்கும் வெள்ளிய அலைகள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

பொன் மணி - பொன்போலும் அழகிய . அம் , சாரியை . பூங்கொன்றை ` என்பதனை , ` கொன்றைப் பூ ` என மாற்றியுரைக்க . சில் மணிய - சில மணிகள் கட்டிய ( சூலம் ). மன்மணி - நிலைபெற்ற இரத்தினம் ; ` தலையாய மணி , என்றலுமாம் . வல்லெருது - தன்னைத் தாங்கவல்ல எருது . கல்மணி - கற்கள் என்னும் பெயரவாகிய மணிகள் .

பண் :

பாடல் எண் : 8

வெண்டலையும் வெண்மழுவும் ஏந்தி னானை
விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்
புண்தலைய மால்யானை யுரிபோர்த் தானைப்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை
எண்டிசையும் எரியாட வல்லான் தன்னை
யேகம்பம் மேயானை யெம்மான் தன்னைக்
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

கோவணம் உடுத்து வெண்ணீறு பூசிப் புண்ணைத் தலையிலுடைய பெரிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து வெண்தலை ஓட்டையும் வெள்ளிய மழுவையும் ஏந்திய புண்ணியனாய் , வெண்ணீறணிந்து எட்டுத் திசைகளிலும் தீயில் கூத்தாடுபவனாய் , ஏகம்பத்தில் விரும்பித் தங்கும் எம்பெருமானைத் தாழைப்புதர்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

வெண் மழு - கூரிய மழு . அசைத்த - கட்டிய யானைக்குத் தலைபுண் ஆதல் , அங்குசத்தால் குத்தப்படுதலால் என்க . இது , இனப் பொதுமைபற்றிக் கூறப்பட்டது . எட்டுத் திசையிலும் எரியாடுதல் , அவற்றை அழித்தென்க . கண்டல் - தாழை . கழனி போலுதல் பற்றி , தாழம்புதர் உள்ள இடங்களைக் ` கழனி ` என்றருளிச் செய்தார் ; நெய்தலொடு மருதம் மயங்கியது என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

சொல்லார்ந்த சோற்றுத் துறையான் தன்னைத்
தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை
வில்லானை மீயச்சூர் மேவி னானை
வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்
பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப்
பொறியரவம் மார்பாரப் பூண்டான் தன்னைக்
கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

வேதங்கள் முழங்கும் சோற்றுத்துறை , மீயச்சூர் என்ற இவற்றை மேவியவனாய்ப் பலரையும் நல்ல நெறியில் ஒழுகச் செய்து நரகலோகத்தைப் பாழ்படச் செய்பவனாய் , ஒளியுடையவனாய் , வேதியர் நால்வருக்கும் வேத நெறியை அறிவித்தவனாய்த் தீய அசுரரின் மும்மதில்களையும் அழித்தவனாய்ப் புள்ளியை உடைய பாம்பினை மார்பில் பொருந்த அணிந்த பெருமானாய்க் கல்லாலின் கீழ் அமர்ந்த பிரானை உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

சொல் - புகழ் . நரகத்தைத் தூர்த்தலாவது , பலரும் நன்னெறியில் ஒழுகச் செய்தலால் பாழ்படச் செய்தல் ; இதுவே இறைவனது குறிக்கோள் என்க . ` வில்லானை ` எனப் பொதுப்பட அருளிச் செய்தாரேனும் , ` மேருமலையாகிய வில்லானை ` என்பது இசையெச்சத்தாற் கொள்ளப்படும் . மீயச்சூர் - சோழநாட்டுத் தலம் . பொல்லாதார் - அசுரர் . ` புல்லாதார் ` என்பது பாடம் எனலுமாம் . ` பூண்டான் ` என்பது , ` பூண்டு சென்றான் ` எனத் தன் காரியந் தோன்ற நின்றமையின் , ` பொன்ற ` என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று . பொன்ற - அழிய . பொறி - புள்ளி . ஆர - நிரம்ப .

பண் :

பாடல் எண் : 10

மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்
மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்
மெய்யென்று கருதாதே போத நெஞ்சே
பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை
அவன்பற்றே பற்றாகக் காணின் அல்லால்
கனைகடலின் தெண்கழிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! துறவு நிலையில் உள்ள சமணர்களின் பொய்யுரைகளையும் தம் பெருமையை எடுத்துரைக்கும் சமண சமய இல்லறத்திலுள்ள அறிவிலிகள் பேசும் பொய்யுரைகளையும் உடம்பிலே துவராடையை அணிந்த புத்தர்களின் பொய்யுரைகளையும் மனத்துக் கொள்ளாமல் , யானைத்தோல் போர்த்த எம்பெருமானைப் பற்றும் பற்றினையே உண்மையான விருப்பச் செயலாகக் கொண்டு காண்பதனை விடுத்துக் கடலின் கழி சூழ் நாகைக் காரோணத்து எம் பெருமானைக் காண இயலுமா ? அப்பெருமான் தன்னையே பற்றும் பற்றினை அடியவர்களுக்கு அருள் செய்து அகக்கண்களுக்குக் காட்சி வழங்குவான் என்பது .

குறிப்புரை :

அமணர் - ஆருகத மதக் குருமார் . ` அவர்களது மாண்பினை உரைக்கும் ( உரைத்துப் போற்றும் ) குண்டர் ` என்க ; இவர் , இல்லறத்தவர் . சினை - உடம்பு . சீவரத்தர் - துவர் தோய்த்த ஆடையர் ; புத்தமதத் துறவிகள் . ` போத ` என்பதனை , போந்து , எனத் திரிக்க . பனை , உவம ஆகுபெயராய்த் துதிக்கையையும் , சினையாகு பெயராய் யானையையும் உணர்த்திய இருமடியாகு பெயர் . எந்தை அவன் - எம் தந்தையாகிய அவன் . பற்று - துணை . ` அவன் பற்று ` என்பது , ` அவனது துணை ` எனத் துணைக்கிழமைப் பொருளதாகிய ஆறாம் வேற்றுமைத் தொகை . ` காணலாமே ` என்னும் ஏகாரம் , இங்கு வினாப்பொருள் தந்தது . ` நெஞ்சே பொய்யர் பொய்களை எல்லாம் மெய்யென்று கருதாதே போந்து அவன்பற்றே பற்றாகக் காணில் அல்லால் காணலாமே ` என முடிக்க . இனி , ` அல் ஆல் கடல் ` எனப் பிரித்து இயைத்து , ` இருள் நிறைந்த கடல் ` எனப் பொருள்கொண்டு , ` காணின் காணலாமே ` என முன்னைத் திருப் பாடல்களிற் போலவே உரைத்தலும் ஆம் . ` தென்கழி ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 11

நெடியானும் மலரவனும் நேடி யாங்கே
நேருருவங் காணாமே சென்று நின்ற
படியானைப் பாம்புரமே காத லானைப்
பாம்பரையோ டார்த்த படிறன் தன்னைச்
செடிநாறும் வெண்தலையிற் பிச்சைக் கென்று
சென்றானை நின்றியூர் மேயான் தன்னைக்
கடிநாறு பூஞ்சோலை யந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாதபடி நீண்டு வளர்ந்த உருவமுடையவனாய் , பாம்புரத்தை விரும்பியவனாய் , பாம்பினை இடையில் கட்டிய வஞ்சகனாய் , முடை நாற்றம் வீசிய தலையோட்டில் பிச்சைக்கு என்று திரிந்தவனாய் , நின்றியூரை விரும்பித் தங்கிய பெருமானை மணங்கமழும் பூக்களை உடைய சோலைகளால் அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நாகைக் காரோணத்து என்றும் காணலாம் .

குறிப்புரை :

நெடியான் - திருமால் . நேடி - தேடி . ` உருவம் நேர் காணாமே ` என்க . காணாமே - காணாதபடி . சென்று - நீண்டு . படி - வடிவம் . பாம்புரம் , நின்றியூர் , இவை சோழ நாட்டுத் தலங்கள் . ` அரையோடு `, ` அரையின்கண் ` என்க . ` அரையோடு சேர ` என . ஒரு சொல் வருவித்தலும் ஆம் . செடி - முடைநாற்றம் . சென்றது , தாருகாவன முனிவரது பத்தினியர்பால் என்க . கடி நாறு - மணம் வீசுகின்ற .

பண் :

பாடல் எண் : 1

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மணாளன் ஆம் சிவபெருமான் தூண்டப்பட்ட விளக்கொளி போன்ற ஒளியினனாய்ப் பழைய தேவர்களுக்கு முடிமணியாய்த் தன்னை நினையாதார் காண்பதற்கு அரிய கடவுளாய்த் தன்னைத் தியானிப்பவருக்கு மிக எளியனாய் வேண்டுவார் வேண்டுவதை ஈவானாய்ப் பேறாகிய தன்னை அடைவதற்குத் தானே ஆறாய் ( வழியாய் ) விரதங்களால் மாட்சிமைப்பட்ட மனமுடைய சான்றோர்களின் மனத்தானாக உள்ளான் .

குறிப்புரை :

தூண்டப்பட்ட விளக்கு மிக்க ஒளியுடையதாகு மாகையால் . இறைவனை , ` தூண்டு சுடர் அனையசோதி ` என்றருளினார் . சூளாமணி - தலையில் அணியும் மணி ; இது பெருவிலையுடைய தாய் ஒர் அரிய மணியாய் இருக்கும் . ` கருதுவார்க்கு ஆற்ற எளியான் ` எனப் பின்னர் அருளிச் செய்தமையால் , முன்னர் , ` கருதாதார்க்கு ` ஆற்ற அரியான் என்பது கொள்ளப்படும் . ` காண்டற்கு ` என்பது பின்னரும் சென்று இயையும் . எனவே , அன்பரல்லாதார்க்குச் சால அரியனாயும் , அன்பர்க்குச் சால எளியனாயும் நிற்பன் என்பது உணர்த்தியருளியவாறாதல் அறிக . ` வேண்டுவது ` என்னும் ஒருமை , இனப்பொதுமை உணர்த்தி நின்றது . ஆகவே , அது , வேண்டப்படுவன பலவற்றையும் குறிக்கும் . உலகவர்க்கு அவரவர் வினைவழியால் எழும் விருப்பத்தினை , அவர்க்குத் தோன்றாது , அவரும் பிறருமாகிய உயிர்கட்குப் பின்னும் , அவரின் மேம்பட்ட தெய்வங்கட்குப் பின்னும் , சடமாகிய பௌதிகங்கட்குப் பின்னும் கரந்து நின்றும் , அடியவர் தன்மாட்டு வைத்த அன்பின்வழித் தோன்றும் விருப்பத்தினை , அவர்க்குக் கன்றை நினைந்துருகும் தாய்ப்பசுவின் முலையிற் பால்தானே விம்மி யொழுகுவதுபோல வெளிப்பட்டு நின்றும் முடித்தருளுதலை , ` வேண்டுவார் வேண்டுவதே ஈவான் ` என்று அருளிச்செய்தார் . ` ஈவான் ` என்றதனால் அங்ஙனம் முடித்தல் கைம்மாறற்ற கருணை காரணமாகவன்றிப் பிறிதொன்றான் அன்று என்பது விளங்கும் . ( உயர்ந்தோர் , தாழ்ந்தோர்க்கு வழங்குதலே ஈகை எனப்படும் என்க .) வினைகளின் பயன் , ` உயிர்கள் , தெய்வங்கள் சடமாகிய பௌதிகங்கள் என்னும் மூன்றன் வழியாகவே வரும் எனவும் , அவை முறையே , ` ஆதியான்மிகம் , ஆதிதைவிகம் , ஆதிபௌதிகம் ` எனப்படும் எனவும் உணர்க . ஆதியான்மிகம் முதலிய மூன்றன் விளக்கத்தை ` ஆதி தைவிகம் ஆதி பௌதிகம் ` ( ஞானாமிர்த அகவல் - 19.) எனவரும் பாடற் பகுதியிற் காண்க . இம்மையில் வினைவழித் தோன்றும் விருப்பம் இம்மையிலே முடிதல் , இறைவனை அது வேண்டிச் செய்யும் வழிபாட்டினால் ஆகும் . அவர்க்கு இறைவன் அதனை , கடைந்தவழித் தோன்றும் நெருப்புப்போலத் தோன்றியும் தோன்றாதும் நின்று அருளுவனாகலின் , அவர்க்கு , அவன் , காண்டற்கு அரியனுமாகாது எளியனுமாகாது இடைநிகரனாய் நிற்பன் என்க . அவனருளாலே அவனை அணுக வேண்டுதலின் , அவனையே மெய்ந்நெறி என்று அருளிச் செய்தார் . விரதமாவது , கடிவன கடிந்து , கொள்வன கொண்டு ஒழுகுதல் . அது மனத்திட்பத்தான் நிலைபெறுவதாகலின் , ( அவை ) ` மாண்ட மனத்தார் ` என்றருளிச் செய்தார் . மாண்ட - மாட்சிமைப்பட்ட . இவ்வெச்சம் இடப்பெயர் கொண்டதென்க . மணாளன் - அழகன் . இத்திருத்தாண்டகங்கள் முன் இரண்டு சீர்களும் மூவசைச் சீராகவும் , பின் இரண்டு சீர்களும் ஈரசைச் சீராகவும் , அவற்றுள்ளும் நான்காஞ்சீர் தேமாவாகவும் வந்த நாற்சீர்த் தூக்கு இரண்டானாய அடிகளால் வருதலேயன்றி , ஒரு தூக்கின் முதற்சீர் ஈரசையாய் வெண்டளை தட்டு நிற்கவும் , இரண்டாஞ் சீர் ஈரசையாய்ப் பெரும்பாலும் வெண்டளையும் , சிறுபான்மை ஆசிரியத் தளையும் தட்டு நிற்கவும் வருதலும் உண்டாகலின் இத்திருப்பாடலின் மூன்றாம் அடியின் இரண்டாந் தூக்கின் முதலிரண்டு சீர்கள் , ` மெய்ந்நெறி கண்டாய் ` என நின்றன .

பண் :

பாடல் எண் : 2

கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளரும் கூர்வாட் படையான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

கைகளால் ஒலிக்கப்படும் வீணையை வாசிப்பதில் வல்லவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய் ஒளி விளங்கும் ஞான விளக்குப்போன்ற வடிவினனாய் மெய் அடியார் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் வித்தாய்ப் படம் எடுக்கும் நாகத்தை அணிந்தவனாய் மேலாளரையும் கீழ்ப்படுத்த மேலானாய்ப் பாசூரை உகந்தருளியிருப்பவனாய்க் கூர்மை மிக்க வாட்படையை உடையவனாய் மறைக்காட்டுள் உறையும் மணாளன் உள்ளான் .

குறிப்புரை :

கைகிளரும் வீணை - கைகள் மிக்குத் தோன்றுதற்கு ஏதுவாகிய வீணை . ` வல்லவன் ` என்பது இடைக்குறைந்து நின்றது . ` மெய்சோதி கிளரும் ` என மாற்றி , ` திருமேனி ஒளி மிகுகின்ற ` என உரைக்க . ` கிளரும் ` என்றது . சினைவினையை முதலோடு சார்த்தியது . முளைப்பது போன்று வெளிப்பட்டுத் தோன்றுதல்பற்றி , ` வித்து ` என்றருளினார் . பை - படம் . பாசூர் , தொண்டைநாட்டுத்தலம் . வை - கூர்மை . ` வாள் ` என்றது மழுவை .

பண் :

பாடல் எண் : 3

சிலந்திக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறையும் மணாளன் முன்னொரு கால் சிலந்திக்கு அருள் செய்தவனாய் , திரிபுரங்களைத் தீ மடுத்தவ னாய் , நிலம் அதனைச் சூழ்ந்த நீர் , தீ , காற்று என்ற பூதங்களில் எங்கும் பரவி இருப்பவனாய் , உருவமும் உருவம் அற்ற நிலையும் உடையவனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்ப் பிரமனும் திருமாலும் தானேயாய்க் களங்கம் நீங்கிய பெரிய விடை ஒன்றினை இவர்பவனாய் அடியார்கள் மனக்கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

சிலந்திக்கு அருள்செய்தமையை மேலே ( ப .20. பா .5) காண்க . ` துக்க ` என்பன மூன்றும் , ` தொக்க ` என்பதன் மரூஉ . ` மறைந்த ` என்பதே அவற்றின் பொருள் . ` தொக்க ` என்றே பாடம் ஓதுதலும் ஆம் . ` சலம் துக்க சடை ` என இயையும் . ` தானே ` என்பதை , ` தாமரையான் ` என்பதற்கு முன்னே கூட்டுக . ` மலம் தொக்க ` என்றது , தூய விடை என்றவாறு .

பண் :

பாடல் எண் : 4

கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளிமிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறையும் மணாளன் கள்ளிகள் படர்ந்த சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவனாய்க் காலனைக் காலால் ஒறுத்தவனாய்ப் புள்ளியை உடைய மான்தோலை உடுத்தவனாய்ப் புலித்தோலையும் ஆடையாகக் கொண்ட புனிதனாய் , வெள்ளி போல ஒளி வீசும் பிறையை முடிமேல் சூடியவனாய் , வெண்ணீறு அணிந்தவனாய்த் திருச்செந்தூரை விரும்பும் முருகனுக்குத் தந்தையாய் உள்ளான் .

குறிப்புரை :

கள்ளி - கள்ளிச்செடி , முதுகாடு - சுடுகாடு . கடந்தான் - வென்றான் . உழை - மான்களில் ஒருவகை . வெள்ளிமிளிர் - வெள்ளி போல ஒளிவிடுகின்ற . ` வள்ளி மணாளன் ` என்றது , ` முருகன் ` என்னும் ஒரு சொற்றன்மைத்தாய் , ` நம் ` என்றதனோடு தொகைநிலை வகையான் இயைந்து நின்றது . ` நம் முருகன் ` என்றருளியது , சிவபெருமானுக்கு அடியராயினார்க்கெல்லாம் இளம்பெருமானடிகளாய் நிற்றல் கருதி , அவற்குத் தாதை யாயினமையை எடுத்தோதியதனால் , கணபதியை அருளி , தனதடி வழிபடும் அவர் இடர்களைக் கடிதல் போல , இப்பெருமானை அருளி அவரது பகைகளைக் கடிகின்றமை பெற்றாம் . பகையாவது வினையேயாகலின் , அப்பெருமானது கைவேலினை , ` வினை ஓட விடும் கதிர்வேல் ` ( கந்தரனுபூதி . 40.) என்றருளிச் செய்தார் , அவரைத் தலைப்பட்டு நின்ற அருணகிரிநாத அடிகள் என்க .

பண் :

பாடல் எண் : 5

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய் , தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய் , ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய் , ஆரியனாய்த் தமிழனாய் , அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய் , வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான் .

குறிப்புரை :

மூரி முழங்கு ஒலிநீர் - மிகமுழங்குகின்ற முழக்கத்தினையுடைய நீர் ; என்றது கடல் நீரையும் மழை நீரையும் . முழுத்தழல் - நிரம்ப எரிகின்ற நெருப்பு . ` பொங்கழலுருவன் ` ( தி .3. ப .120. பா .1.) என்றருளினார் , ஆளுடைய பிள்ளையாரும் . ` ஏரி நிறைந்தனைய ` என்னும் உவமை , மிகுதியேயன்றி , ` ஊருணி நீர்நிறைந் தற்றே ` ( குறள் - 215) என்றாற்போலப் பயனும் குறித்து நின்றது . ` இன்னடியார் ` என்றது , தனக்கு இனியராகும் சிறப்பின் உடையாரை அவர் அவன் அருளாலல்லது , தாமாக ஒன்றும் செய்யா ரென்க ; ` நல்ல அடியார் ` ( தி .2. ப .85.) என்றருளிச் செய்ததும் இவரையே என்க . ஆரியன் - ஆரியமொழியாய் இருப்பவன் . தமிழன் - தமிழ் மொழியாய் இருப்பவன் . சிறப்புடைய மொழிகள் இவை இரண்டல்லது பிறிதின்மையால் , இவைகளையே ஒதியருளினார் ; ` சத்தப் பிரபஞ்சம் ` எனப்படும் மொழியாய் உள்ளவனும் இறைவனே என்றருளியவாறு . வாரிமதம் - வெள்ளம் போலும் மதம் . ` மதம் ` என்பது வடசொல்லாகலின் ககரம் மிகாது நிற்றலும் உடைத்தாயிற்று . இறைவனை மதயானையோடு உவமித்தது , வலிமையும் பெருமையும்பற்றி .

பண் :

பாடல் எண் : 6

ஆடல்மால் யானை யுரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை விரித்துப் போர்த்தவனாய் , கோடி என்ற தலத்தில் உறையும் இளையவனாய் , அகத்தியான்பள்ளியையும் , ஆரூரையும் கோயிலாகக் கொண்டவனாய் , அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய் , இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான் .

குறிப்புரை :

ஆடல் - வெற்றி . அகத்தியான் பள்ளி , கோடி ( கோடிக்குழகர் ) சோழநாட்டுத் தலங்கள் . நாடிய - விரும்பிய . ` நன்மையோடு ` என்பதனை ` நன்மையால் ` எனக் கொள்க . நன்மையாவது , அருள் . ` அருளால் , வாட்டம் தவிர்ப்பான் ` என இயையும் . இம்மை - இப்பிறப்பு . அம்மை - வருபிறப்பு . ` வாடிய ` என்பது , எதிர்வில் இறப்பாய் ` அம்மை ` என்பதனோடு இயைந்தது . அவ்வெச்சம் , தொழிற்பெயர் கொண்டது .

பண் :

பாடல் எண் : 7

வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய்
பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறையும் மணாளன் கடலில் தோன்றிய நஞ்சினைத் தன் கழுத்தளவில் அடக்கியவன் . வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன் . மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவன் . தேவர்கள் போற்றும் தலைவன் . பால் நெய் முதலிய பஞ்ச கவ்விய அபிடேகம் உகந்தவன் . சீசைலத்தில் உறைபவன் . அவனே கடல் நிற வண்ணனாகிய திருமாலை ஒருகூறாகத் தன் மேனியில் கொண்ட ஆற்றலுடையவன் .

குறிப்புரை :

ஆல் ஐசேர் வேள்வி - மிக்க அழகு பொருந்திய வேள்வி . பருப்பதம் , ` சீசைலம் ` என்னும் தலம் . பரவை மேனி மால் - கடல்நிறம்போன்ற நிறத்தினையுடைய திருமால் .

பண் :

பாடல் எண் : 8

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கும் இறைவன் கண்டாய்
என்னெஞ்சே யுன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் அடியார்களுக்கு மறுமையைப் பயக்கும் அமுதமாய்ச் செல்வத்தைக் கொடுத்து இம்மையில் நலன்பயக்கும் தெளிந்த தேனாய் , நம் மனத்தைவிட நமக்கு இனியவனாய் , உண்மையான ஞானப்பிரகாசம் நல்கும் விளக்காய் , திருவெண்காட்டில் உறைபவனாய் , நம் தீவினைகள் நீங்குமாறு நம் மயக்கத்தைப் போக்கும் மருந்தாகவும் உள்ளான் .

குறிப்புரை :

` அம்மை பயக்கும் அமிர்து ` என்றது வேற்றுமை உருவகம் . ` அம்மை ` என்றது , வீட்டுலகத்தை . ஆக்கம்செய்து - செல்வத்தைக்கொடுத்து . உன்னில் - நினைத்தால் . வெண்காடு , சோழ நாட்டுத்தலம் . போக - நீங்குமாறு . மம்மர் - மயக்கம் ; அது , பொருளல்லவற்றைப் பொருளென்றுணர்வது . அதற்கு மாறாகின்றவன் இறைவனல்லது பிறிதின்மையின் , ` மம்மரறுக்கும் மருந்து ` என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 9

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்
ஆதியு மந்தமு மானான் கண்டாய்
பால விருத்தனு மானான் கண்டாய்
பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமான ஆணவ மலத்தைச் செயலறச் செய்யும் தலைவனாய் , முத்தமிழும் நான்மறையும் ஆகியவனாய் , கல்லால மர நிழலில் அமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு அறத்தை மௌனநிலையில் உபதேசித்தவனாய் , ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் அந்தமுமாக உள்ளவனாய்ப் பாலனும் விருத்தனுமாக வடிவு எடுத்தவனாய்ப் பெரிய பவள மலைபோன்ற உருவினனாய் , கொன்றைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனாய் , மறைக்காட்டு உறைகின்ற மணாளன் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

` நோய் மூலம் ` என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகை , பின்முன்னாக , ` மூலநோய் ` என நின்றது . எல்லாத் துன்பங்கட்கும் மூலம் , ` ஆணவம் ` எனப்படும் அகஇருள் . அதனை நீக்குவோன் இறைவனே என்றதாம் . ` அறத்தான் ` என்பது , ` அறத்தைச் சொல்லியவன் ` எனப் பொருள்தரும் . ` பால விருத்தம் ` என்பது உம்மைத் தொகையாய் நிற்ப , அதனோடு இறுதிநிலை புணர்ந்து , ` பால விருத்தன் ` என , வந்தது . ` எல்லாக் கோலங்களையும் உடையவன் ` என்பது பொருள் . மதுரைத் திருவிளையாடல்களில் , விருத்த குமார பாலரான திருவிளையாடல் இங்கு நினைக்கத்தக்கது . மாலை சேர் - மாலையின்கண் சேர்ந்த . கொன்றை - கொன்றைப் பூ . ` மலிந்தான் ` என . உடைமையை , உடைய பொருளோடு சார்த்தியருளினார் .

பண் :

பாடல் எண் : 10

அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று
சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் பிரமனும் திருமாலும் அறியாத வகையில் தீத்தம்பமாய் நீண்டு உயர்ந்த தலைவன் . இராவணன் துயரால் நடுங்குமாறு ஒளி வீசும் விரலால் அழுத்தியவன் . தசக்கிரீவன் என்ற பழைய பெயரை உடைய அவனுக்கு இராவணன் என்ற பெயரையும் வழங்கிப் பல அருள்களையும் செய்தவன் . அவனுக்கு மேம்பட்ட வாட்படையையும் ஈந்தவன் . அடியார்களுக்கு மயக்கத்தைத் தரும் ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களைத் தீர்ப்பவன் .

குறிப்புரை :

` அயனவன் , மாலவன் ` என்புழி நின்ற ` அவன் ` என்பன பகுதிப்பொருள் விகுதிகள் . ` துயரால் துளங்க ` என உருபு விரித்துரைக்க . துளங்க - நடுங்குமாறு . ` வைத்தான் ` என்பது ` ஊன்றினான் ` என்னும் பொருட்டாய் நின்றது . ` பெயர ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` மீட்சி எய்த ` என்பது பொருள் . பேர் , ` இராவணன் ` என்பது . இதற்கு ` அழுதவன் ` என்பது பொருள் . இஃது அவன் திருக்கயிலையின் கீழ்க்கிடந்து அழுதமையை என்றும் மறவா திருத்தற்பொருட்டுக் கொடுக்கப்பட்டது என்க . ` பேரும் ` என்னும் உம்மை , எச்சம் . மயர் உறு - மயக்கத்தால் வருகின்ற . வினைநோய் - வினையாகிய நோய் ; உருவகம் .

பண் :

பாடல் எண் : 1

கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மானத் தொளியன்ன மேனியான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

துதிக்கையையும் , பெருமையையும் மதத்தையும் உடைய யானைத் தோலைப் போர்த்தியவனாய் நீலகண்டனாய் , கண் பொருந்திய நெற்றியை உடையவனாய் , எல்லாருக்கும் தலைவனாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பு ஒன்றினை ஆட்டியவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய்க் கூரிய சூலத்தை ஏந்தியவனாய் , எங்களுக்குத் தலைவனாய் , ஏழுலகும் பரந்தவனாய் , எரிகின்ற விளக்குப் போல்பவனாய் , விளங்கும் மழுப்படையை ஏந்தியவனாய்ச் செந்நிற வானம் போன்ற மேனியனாய்த் திருவாரூரில் உறைபவனாய் , என் மனக் கண்ணிற்குச் சிவபெருமான் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

` கை , மானம் , மதம் ` என்ற மூன்றும் ` களிறு ` என்ற ஒன்றனோடு தனித்தனி முடிந்தன . அம்மான் - அனைவர்க்கும் தலைவன் ; இதில் , அகரம் , ` அவனன்றி ஒர் அணுவும் அசையாது ` ( தாயுமானவர் .) என்பதிற்போலப்பலரறி சுட்டு . ` ஆடரவு ஒன்று ` என்பதில் ` ஒன்று ` என்றது , இழிபு குறித்து நின்றது ; அணுகலாகாத தீமை ஈண்டு இழிபு என்க . அயில் - கூர்மை . எம்மான் - எம் தலைவன் . ` எம் ` என்றது , தம்மை உள்ளுறுத்த அடியவர்களை . எரி சுடரோன் - எரிகின்ற விளக்குப் போல்பவன் . ` நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த ` ( தி .4. ப .80. பா .5.) எனத் திருவிருத்தத்துள்ளும் அருளிச் செய்தார் . செம்மானம் , ` செவ்வானம் ` என்பதன் மரூஉ . என் சிந்தையான் - என் உள்ளத்தில் புக்கவன் ; இதனையே , எழுவாயாகக் கொண்டுரைக்க .

பண் :

பாடல் எண் : 2

ஊனேறு படுதலையி லுண்டி யான்காண்
ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் ரூர்ந்துழலும் ஐயா றன்காண்
அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

புலால் மணம் தங்கிய மண்டையோட்டில் உணவைப் பெற்று உண்பவனாய் , ஓங்கார வடிவினனாய் , ஊழிகளுக்குத் தலைவனாய்க் காளையை இவர்பவனாய் , திருவையாற்றில் உறைபவனாய் , எல்லா உலகங்களும் பரவினவனாய் , அண்டங்களுக்கு அப்பாலும் பரவியவனாய் , கையில் மானை ஏந்திய நீலகண்டனாய்ப் பெருந்தவத்தினனாய்த் திருவாரூர்ப் பெருமான் என் மனக் கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

இதனுள் வந்த ஏறுதல் , பொருந்துதல் . படுதலை - அற்றதலை . ஓங்காரம் , மொழியின் நுண்ணிலை பருநிலைகளைக் குறிக்கும் குறி . இந்நிலைகள் , ` வாக்குக்கள் ` எனப்படும் . நுண்ணிலை , ` சூக்குமை , பைசந்தி ` என இரண்டாகவும் , பருநிலை , ` மத்திமை , வைகரி ` என இரண்டாகவும் சொல்லப்படும் . இந்நால்வகை வாக்குக்களே பொருள்களின் துணிபுணர்வுக்குக் காரணமாகும் . ஊழி - படைப்புத் தொடங்கி , அழிப்புக்காறும் உள்ள கால அளவு . முதல் - முதல்வன் ; முதற்கண் உள்ளவன் . ` ஊழிக்கண் முதல் ஆனான் ` என்க . இனி , ` ஊழிக்கு முதல்வன் ஆனான் ` எனக் கொண்டு , ` எல்லாவற்றையும் நடத்தும் அக்காலத்தை நடத்தும் தலைவன் ஆயினான் ` என்றுரைப்பினும் அமையும் . ` ஐயாறன் ` என்பது ஒரு பெயர்த் தன்மைத்தாய் , ` உழலும் ` என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று . ` தவமும் , தவப்பயனும் ஆகின்றவன் ` என்க .

பண் :

பாடல் எண் : 3

ஏவணத்த சிலையால்முப் புரமெய் தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் தான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் தான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
அனலாடிகாண் அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
திருவாரூ ரான்காண் என்சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூரில் உள்ள பெருமான் அம்பைச் செலுத்தும் வில்லால் முப்புரத்தையும் அழித்தவன் . அவன் இறைவனாய் , மறை ஓதுபவனாய் , நிர்விக்கினனாய்ப் பாவத்தை அழிக்கும் தூய ஒளியுடைய சூலப்படையினனாய் , சூரியன் சந்திரன் அக்கினி என்பவரைத் தன் மூன்று கண்களாக உடையவனாய் , ஏற்றமுறையால் என்னை அடிமை கொண்டவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய் , அடியார்க்கு அமுதமாயினவன் . தீப் போன்ற தன்னுடைய திருவுருவில் கழுத்தில் விடத்தாலாய கருமையை உடையவனாவான் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

ஏ வண்ணத்த சிலை - அம்பை உடைத்தாகும் தன்மையை உடைய வில் . மறையவன் - மறை ஓதுபவன் . ஈசன் - ஆள்பவன் . தூ வண்ணச் சுடர் - வெள்ளிய ஒளி ; இது கூர்மை குறித்தவாறு . பாவத்தை அழித்தற்குத் தூயதாயிற்றென்பது உள்ளூறை , சுடர் மூன்றாவன ; சூரியன் , சந்திரன் , நெருப்பு . இவை இறைவனிடத்து முறையே , ` வலக்கண் ` இடக்கண் , நெற்றிக்கண் ` எனநிற்கும் . ஆவணம் - அடிமையோலை ; என்றது , அஃது உடையார் , தம் அடிமையை எங்கிருப்பினும் விடாது பற்றி ஈர்த்து ஆள்வதுபோல ஆண்டமையை . இனி , ` ஆ வண்ணத்தால் - ஏற்கும் வழியால் ` என்றுரைப்பினும் அமையும் . கரி உரு , மிடற்றில் உள்ளது ; ` கரியுரியன் ` என்பதே பாடம் எனக் கோடலுமாம் .

பண் :

பாடல் எண் : 4

கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்
கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்
எங்கள்பால் துயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
ஏழ்கடலு மேழ்மலையு மாயி னான்காண்
பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் தான்காண்
பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்
செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூரில் உள்ள பெருமான் தேன் ஒழுகும் மலராலான முடி மாலையைச் சூடி குற்றாலத்தும் உறைபவன் . கொடிய மழுப்படையும் வெண்ணிறக் காளை வாகனமும் உடையவன் . எங்கள் துயரைப் போக்கும் தலைவன் . ஏழ் கடல்களும் ஏழு மலைகளும் ஆகியவன் . அலைகள் உயர்ந்த பெரும்பரப்புடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன் . பொன்னால் ஆகிய தூணையும் பவளத் திரளையும் நிகர்ப்பவன் . பிறையோடு சிவந்த கண்களை உடைய ஒளி வீசும் பாம்பினையும் உடன் வைத்தவன் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

கொங்கு வார் - தேன் ஒழுகுகின்ற . ` கொல்லை . என்பதில் ஐ சாரியை . ` எங்கள் ` என்றது அடியார்களை . ` போல்வான் ` என்பதை , ` பொற்றூண் ` என்பதனோடுங் கூட்டுக . ` அராவை ` என இரண்டனுருபு விரிக்க .

பண் :

பாடல் எண் : 5

காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
போரேறு நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண்
புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்
நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் மேகங்கள் தவழும் பெரிய உச்சியை உடைய கயிலாய மலையிலும் இருப்பவன் . நீல கண்டன் . நெற்றிக்கண்ணன் . காளை எழுதிய நீண்ட கொடியை மேல் உயர்த்தியவன் . புண்ணியன் , குணபூரணன் . நீர் சுவறுதலுக்குக் காரணமான தீப்போன்ற அழிக்கும் சூலப்படையவன் . மாசற்றவன் . தன் நிகர் இல்லாதவன் . சிறப்பு மிக்க திருமாலைத் தன் உடம்பின் ஒரு பாகமாக உடையவன் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

கார் - மேகம் . நெடுங்குடுமி - உயர்ந்த சிகரம் . ` போர் ஏற்றை நெடுங்கொடிமேல் உயர்த்தான் ` என்க . ` பல்குணம் ` என்றது , எண்குணங்களும் புலப்பாட்டு வகையாற் பலவாதல் பற்றி ; ` அனந்த கல்யாண குணன் ` என்னும் வழக்குண்மையும் உணர்க . நீர் ஏறு சுடர் - நீர் சுவறுதற்கு இடனாகும் தீ . சீர் - புகழ் .

பண் :

பாடல் எண் : 6

பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்
பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபாலி காண்
இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்
இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்
சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் பிறையையும் பாம்பாகிய முடிமாலையையும் சடையில் உடையவன் . பிறப்பற்றவன் . ஆண் , பெண் என்ற இருபகுப்பினை உடைய உருவத்தன் . நீலகண்டன் . வெண்ணீற்றன் . தன் திருவடிகளை வழிபடுபவர்களுடைய பிறவிப் பிணியைப் போக்கும் காபாலக் கூத்தாடுபவன் . கைகளில் பெரிய வளையல்களை அணிந்த பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவன் . பெரிய நிலமாகவும் அதனைத் தாங்கிப் பாதுகாப்பவனுமாக உள்ளவன் . சிறகுகளை உடைய அழகிய களிப்புடைய வண்டுகள் பொருந்திய செம்மைப் பகுதியை உடையவன் . அவன் என் சிந்தையுளான் .

குறிப்புரை :

` பிறையும் அரவுமாகிய கண்ணி ` என்க . ` பெண்ணோடு ஆண் ` என்றது , பிறப்பெய்திய உயிர்களைக் குறித்தவாறு . ` மிடற்றான் , வெண்ணீற்றான் ` என்க . இறை - கை . ` இறையின்கண் வளையாள் ` என்க . உருவம் - அழகு . நிலன் - நிலமாய் இருப்பவன் . இயல்பென்றது , தாங்குதல் , பயன்தரல் முதலியவற்றை . ` செம்மை ` என்றது செம்பாதியை ; அம்மை கூற்றைக் குறித்தருளியவாறு . வண்டு ஆர்த்தல் , கூந்தலில் என்க . இயற்கை மணத்தை விரும்பி வண்டுகள் சென்று ஆர்த்தலின் , ` வண்டார் குழலி ` என்பது . அம்மைக்கு ஒரு பெயராதல் அறிக .

பண் :

பாடல் எண் : 7

தலையுருவச் சிரமாலை சூடி னான்காண்
தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்
அலையுருவச் சுடராழி யாக்கி னான்காண்
அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்
கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்
கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்
சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் தலையில் பொருந்துமாறு தலைமாலையைச் சூடியவன் . மக்களும் தேவரும் உள்ள உலகின் மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை வாங்குபவன் . பகைவர்களைத் துன்புறுத்தும் அஞ்சத்தக்க ஒளியை உடைய சக்கரத்தைப் படைத்தவன் . சலந்தரனை அழித்தபிறகு அச்சக்கரத்தைத் திருமாலுக்கு வழங்கியவன் . கொலைத் தொழிலைச் செய்யும் அஞ்சத்தக்க கூற்றுவனை உதைத்தவன் . ஐம்பூதங்களும் ஆகியவன் . வில்லிலிருந்து புறப்படும் அம்பினைச் செலுத்திய செயலை உடையவன் . அவன் என் சிந்தையானே .

குறிப்புரை :

தலை உருவ - தலையில் கயிறு ஊடுருவுமாறு ; ` தலை உருவாகிய வச்சிர ( வயிர ) மாலை ` என்றுரைத்தலும் ஆம் . தமர்கிளைஞர் ; என்றது , தேவரையும் மக்களையும் ; இவர் அனைவரும் அவனுக்கு அடியவராதல் பற்றி , ` தமர் ` என்றருளினார் . ` அலை ஆழி ` என இயையும் . அலைத்தல் - அழித்தல் . ஆழி - சக்கரம் . ஆக்கியது , சலந்தராசுரனை அழித்தற் பொருட்டு . கொள்கை - செய்கை . கூர் - மிக்க . ` சிலையால் ` என உருபு விரிக்க . சரம் - அம்பு . துரந்த - செலுத்திய .

பண் :

பாடல் எண் : 8

ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
கையன்காண் கடற்பூதப் படையி னான்காண்
கண்ணெரியால் ஐங்கணையோன் உடல்காய்ந் தான்காண்
வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
செய்யன்காண் கரியன்காண் வெளியோன் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் தலைவனாய் , என்றும் இளையவனாய் , எல்லோருக்கும் ஆதியாய் , மழுப்படையைத் தோளில் சுமந்த கையனாய்க் கடல் போன்ற பூதப்படையனாய்க் கண் எரியால் மன்மதன் உடலை எரித்தவனாய் , வெப்பம் உடையவனாய்க் கங்கை சூழ்ந்த செஞ்சடையனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , அருச்சுனனுக்கு அருள் செய்தவனாய் , வெண்மை , செம்மை , கருமை என்ற எல்லா நிறங்களையும் உடையவனாய் என் சிந்தையில் உள்ளான் .

குறிப்புரை :

ஐயன் - தமையன் ; கணபதி . ஆதி - ( அவர்க்குத் ) தந்தை . பியல் - சுவல் ( தோள் ). வெய்யன் - வெப்பம் ( தவறு செய்வாரைத் தெறல் ) உடையவன் . ` செய்யன் ` முதலாக அருளியது . ` எல்லா நிறங்களும் உடையவன் ` என்றதாம் . இத்திருத்தாண்டகத்தின் மூன்றாம் அடி மூன்றாஞ்சீர் விளச்சீராய் வந்தது .

பண் :

பாடல் எண் : 9

மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்
மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்
கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் பார்வதி பாகனாய்ச் சுடுகாட்டில் இருப்பவனாய்ப் பிறை சூடியவனாய் , இலைகளிடையே வளர்ந்த கொன்றை மலர் மாலையைச் சூடியவனாய் , எல்லோருக்கும் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன் . முல்லை நிலத் தலைவனான திருமாலை இடபமாக உடைய அப்பெருமான் கொடுங்குன்றத்தும் உறைபவன் . கொல்லும் முத்தலைச் சூலத்தை உடைய அப்பெருமான் வில்லில் பூட்டிய அம்பினைச் செலுத்தும் ஆற்றலுடையவன் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

இலை வளர்த்த - இலையால் வளர்க்கப்பட்ட ( மலர் என்க ). கொலை வளர்த்த - கொல்லும் ஆற்றலை மிகக்கொண்ட . கொடுங்குன்றம் - பிரான்மலை ; பாண்டிநாட்டுத் தலம் .

பண் :

பாடல் எண் : 10

பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்
மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமான் தன்னை ஒப்பார் இல்லாதவன் . பூணூல் அணிந்து நீறு பூசி வேதம் ஓதி , பொன் போன்ற மகரந்தம் உடைய கொன்றைப் பூச்சூடி , ஒன்றாலும் குறைவில்லாத் தலைவனாகிய அப்பெருமான் கடல் நஞ்சு உண்டு வேதவடிவினனாய் எல்லாரையும் நிருவகிப்பவனாய்ப் பகைவர் மும்மதில்களையும் அழித்தவன் . அவன் என் சிந்தையான் .

குறிப்புரை :

பொன் தாது கொன்றை மலர் - பொன்போலும் மகரந்தத்தினை உடைய கொன்றை மலர் . ஓதி - ஓதுபவன் . எறிநீர் - கடல் ; அன்மொழித்தொகை . செற்றான் - அழித்தான் .

பண் :

பாடல் எண் : 1

உயிரா வணமிருந் துற்று நோக்கி
யுள்ளக் கிழியி னுருவெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.

பொழிப்புரை :

அயிராவணம் என்ற யானையை இவராது காளைமீது இவர்ந்து தேவர்களுடைய நாட்டை ஆளாமல் திருவாரூரை ஆண்ட ஐயுறாத தன்மையை உடைய நுண்மணல் உருவினனாகிய உண்மைப் பொருளே ! உயிர்ப்பு இயங்காது மூச்சை அடக்கித் தியானம் செய்து உள்ளமாகிய துணியில் உன்படத்தை எழுதிச் சமாதி நிலையில் இருந்து உயிரை உன்னிடம் அடிமை ஓலை எழுதி ஒப்படைத்து உன் கையில் வழங்கி உன்னால் சிறப்பு வகையில் உணரப்படும் அடியாரோடு உடனாய் இருத்தி . என் தலைவனே ! நீ வழங்கிய அருளாகிய கண் கொண்டு உன்னை உணராதவர்கள் உன் இன்பத்தைப் பெறுதற்கு உரியவர் அல்லர் .

குறிப்புரை :

உயிரா வணம் ( வண்ணம் ) - உயிர்ப்பு இயங்காத படி ; மூச்சை அடக்கி . உற்றுநோக்கி - ஒன்றுபட்டுக் கருதி ( தியானித்து ). கிழி - படம் . உள்ளமாகிய படத்தில் . ` உருவெழுதி ` என்றது , உள்ளம் வேறாகாது நீயே ஆக அழுந்தி ; அஃதாவது சமாதி நிலையைப் பொருந்தி . ` உயிரை உன்கைத் தந்தால் ` என்க . ஆவணம் செய்து தந்தால் - அடிமை ஓலை எழுதி , ( அதனோடே ) கொடுத்தால் ; என்றது , ` சிறிதும் பற்றின்றிக் கொடுத்தால் ` என்றபடி . கையாவது , அருள் ; ` நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும் - நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும் ` ( திருக்களிற்றுப்படியார் - 78) என்றது காண்க . உணரப்படுவார் - உன்னால் சிறப்பு வகையில் உணரப்படுபவர் . இஃது என் அருளிச்செய்தவாறெனின் , ` ஒன்றியிருந்து நினையும் நினைவு நிலையில் யான் என்னும் முனைப்பு நீங்கி அருள் வழியில் நிற்கப் பழகி , பின்னர் உணர்வு நிலையில் அவ்வாறே நிற்கப்பெற்றால் , தன்னால் சிறப்பு வகையில் உணரப்படுவாராகிய அவரோடு உடனாய் விளங்கி நிற்பன் இறைவன் என்றருளிச் செய்ததாம் . உடம்பு நின்றநிலைபற்றிக் கூறலின் , ` உணரப்படு வாரோடு ஒட்டி வாழ்தி ` என , அவர்வழி நிற்பான்போல அருளிச் செய்தார் . ஆகவே , உடம்பு நீங்கியபின் , ` தன்னோடு ஒட்டி வாழச் செய்வான் ` என்பது உணர்ந்து கொள்ளப்படும் . அயிராவணம் - சிவபிரானது யானை ; இஃது இரண்டாயிரங்கோடுகளை உடையது . ` அயிராவணமே ` என்றது , உவம ஆகுபெயர் . இனி , இதற்கு , ` ஐயுறாத தன்மையே ( உண்மைப் பொருளே )` என்றுரைத்தலும் ஆம் . நுண் மணலாலியன்ற சிவலிங்கத் திருமேனியனே என்று உரை செய்தல் இத்தலச் சிறப்பிற்கு ஏற்றதாகும் . ` அயிராவணம் ஏறாது ` என்பது முதல் ` அம்மானே ` என்பது காறும் உள்ளவற்றை முதற்கண் வைத்துரைக்க . ` வாழ்தி ` என்பதன்பின் , ` இங்ஙனம் என்பது வருவித்து இயைக்க . அல்லாதாரே - உனது இன்பத்தைப் பெறுதற்கு உரியர் அல்லாதவரே .

பண் :

பாடல் எண் : 2

எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ
முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியால் உறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.

பொழிப்புரை :

தீ வினையை உடைய மனமே ! உனக்கும் எனக்கும் முற்பட்ட பகை ஏதேனும் உண்டோ ? கொடி போன்ற இடையையும் மெல்லிய தோள்களையும் மடப்பத்தையும் உடைய இளைய மகளிர் நம் மூப்பினை நோக்கி இகழ்வதன்முன் பயன்பட நினைவாயாக . உலகிலுள்ள தேவர்கள் எல்லோரும் எஞ்சாது கூடித் தலையால் முழுமையாக வணங்கி முன்னிடத்தை அடைந்து அழுது அவன் திருவடிக்கண் பூசனை புரியுமாறு அவன் உகந்தருளியிருக்கின்ற ஆரூரை நினையாது பிறிதொன்றனைப் பழுதுபட நினையாதே !

குறிப்புரை :

எழுதுவோர் , மடலேறும் ஆடவர் . ` கொடி இடையார் ` என்பது , ` மகளிர் ` என்னும் பொருட்டாய் நின்றது . ` கொடியிடை யாராகிய இளையார்கள் ` என இயையும் . ஏழை - எளிமை . அவர் இகழ்தல் , முதுமை நோக்கியென்க . ` பழுதுபட நினையேல் ` என்பது , ` பயன்பட நினை ` எனப் பொருள்தந்து நின்றது . பாவிநெஞ்சு - பாவத்தை உடைய மனம் . ` பகை தான் உண்டோ ` என்றது பழுதுபட நினைத்தலை உட்கொண்டு . முழுதுலகில் - உலகம் முழுவதிலும் . அழுதல் அன்பின் செயல் . ` திருவடிக்குச் செய்ய ` என இயையும் . போலும் , அசைநிலை . ` இருக்கின்றான் ஊராகிய ஆரூர் பழுதுபட ( பயன்படா தொழியுமாறு வேறொன்றை ) நினையேல் ` எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 3

தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்
கண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்
ஓரூரா வுலகெலா மொப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே யெங்குற் றாயே.

பொழிப்புரை :

தேரூர் , மாவூர் , திங்களூர் இவற்றில் உறைந்து திகழும் செஞ்சடை மீது பிறை சூடி , நீர் வளம் சான்ற வயல்களையும் கண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மாடங்களையும் உடைய ஒவ்வோர் ஊராக உலகிலுள்ளார் எல்லாம் உமையாள் கணவனே என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்று அழைக்கின்றார்கள் . அவர்களுக்குக் காட்சி வழங்காமல் நீ எங்கே உள்ளாய் ?

குறிப்புரை :

` தேரூர் , மாவூர் , திங்களூர் ` மூன்றும் வைப்புத் தலங்கள் . கார் - நீர் . சாயல் - அழகு . கண் ஆர்ந்த - கண்ணுக்கு நிறைந்த . ` கழனி ஓரூர் ` என இயையும் . ` ஓரூர் ` என்புழி நின்ற ஊர் , ஆகுபெயர் . ` ஓரோர் ஊர் ` எனற்பாலதாய அடுக்குத் தொகுத்தலாயிற்று . தேரூரார் , மாவூரார் , திங்களூரார் முதலாக ஓரோர் ஊராராக உலகில் உள்ளவரெல்லாம் ஒருங்குகூடி ` திங்கள் சூடி உமையாட்கு மணவாளனாய் இருப்பவனே ` என்று வாழ்த்தி , ` ஆரூரா ஆரூரா ` என்கின்றார்கள் ; நீ எங்கே உள்ளாய் ; ( அவர்கள் கண்டிலரே ) எனக் கொண்டு கூட்டியுரைக்க . இங்ஙனம் அரிது பொருள்கொள்ள அமைதலும் அருட்டிருப் பாடல்களுக்கு இயல்பென உணர்க .

பண் :

பாடல் எண் : 4

கோவணமோ தோலோ உடை யாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வது தான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந் தாமையோ
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்
திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
அறியேன்மற் றூராமா றாரூர் தானே.

பொழிப்புரை :

தலைவராகிய பெருமான் உடுப்பது கோவணமோ தோலோ ? ஊர்வது காளையோ , யானையோ ? அவர் இருக்குமிடம் பூவணமோ புறம்பயமோ ? அவர் பொருந்தாதார் வாழ்க்கையாகிய ஐயமேற்றுண்டல் அழகோ அழகன்றோ ? தீப்போன்ற செஞ்சடை மேல் பிறை சூடி நான்கு திசைகளையும் தம் இருப்பிடமாகக் கொண்ட செந்நிறத்து எம்பெருமானார் இப்பொழுது இருக்குமிடம் ஒற்றியூரோ ஆரூரோ அறியேன் . அவர் திருவுள்ளம் எவ்வெவற்றில் எவ்வாறாகி உள்ளதோ ?

குறிப்புரை :

கோவணம் - கீழ் வாங்கிக்கட்டும் உடை . பொருந்தாதார் வாழ்க்கை - நன்மக்களோடு கூடாதவர் வாழ்க்கை ; இரந்து உயிர்வாழ்தல் . திருந்தாமை - அழகன்மை . இது பண்பியை உணர்த்திற்று . மேலனவற்றோடு இயைய , ` திருந்தியதோ ` என்பது வருவிக்க . வைத்து - படைத்து . ` செந்தீ வண்ணர் அம்மானார்தாம் ( தலைவர் தாம் , ஆயினும் ) அவருக்கு உடையாவது கோவணமோ ` தோலோ - ஊர்வது கொல்லேறோ , வேழமோ - பொருந்தாதார் வாழ்க்கையை மேற்கொண்டிருத்தல் அழகோ . அழகன்றோ - ஊர் பூவணமோ , புறம்பயமோ அன்றாயின் , ஆரூர் ( அப்பெயர் சொல்லப் படுதலின் ) உரிமையானதோ , ஒற்றியோ - ஆமாறு ( உண்மை ) அறியேன் எனக்கொண்டு கூட்டுக .

பண் :

பாடல் எண் : 5

ஏந்து மழுவாளர் இன்னம் பராஅர்
எரிபவள வண்ணர் குடமூக் கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாக மாக
வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்
போந்தா ரடிகள் புறம்ப யத்தே
புகலூர்க்கே போயினார் போரே ரேறி
ஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கார்
அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.

பொழிப்புரை :

மழுப்படையை ஏந்திய பெருமான் இன்னம்பரில் இருந்தார் . ஒளி வீசும் பவள நிறத்தை உடைய அவர் குடமூக்கில் இருந்தார் . நீண்ட சடையை உடைய அப்பெருமானார் வளையல் அணிந்த கைகளை உடைய பார்வதி பாகராக வலஞ்சுழிக்கு வந்தார் . அங்கிருந்து புறம்பயத்துக்கும் அடுத்துப் புகலூருக்கும் போயினார் . போரிடும் காளை மீது இவர்ந்து தம் இருப்பிடத்தை முடிவு செய்தவர் போலத் திருவாரூரிலே குடிபுகுந்துவிட்டார் . அப்பெருமானார் செய்வன யாவும் கண்கட்டுவித்தை போல உள்ளன .

குறிப்புரை :

` மழுவாளராய் ` எனவும் , ` பவள வண்ணராய் ` எனவும் , ` வார்சடையாராய் ` எனவும் எச்சமாக்குக . இன்னம்பரார் முதலிய மூன்று வினைக் குறிப்புக்களிடத்தும் , ` ஆயினார் ` என்பது விரிக்க . ஆய்ந்தே - நிலையாக வாழ்தற்குரிய ஊரைத் தேடிக் கொண்டே . ` பல ஊர்களில் தங்கித் தங்கி , ஆரூரில் குடி புகுந்து விட்டார் ` என்பதாம் . இங்ஙனம் கூறியது பலவிடத்துப் பொதுநிலையில் இருக்கக் கண்ட அவரை , திருவாரூரில் சிறந்து வீற்றிருக்கக் கண்டமைபற்றி என்க . ` திருவாரூர் கோயிலாக் கொண்டது ` எனப் பின்னரும் அருளிச் செய்வார் . இவ்வாறு புக்கதை , ` கண்மாயம் ` என்றது , பிற தலங்களினின்றும் சென்றமை அறியப்படாமையால் என்க . கண் மாயம் - மறைந்தவாறு அறியாதபடி மறைதல் .

பண் :

பாடல் எண் : 6

கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.

பொழிப்புரை :

கருப்பையில் துளியாய்ப்புகுந்து நெகிழ்ந்த பிண்டமாய் இருந்து தழைத்து மூளையும் கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து ஓர் உருவம் எய்தி இவ்வுலகில் பிறப்பெடுத்துத் தாய் ஒருத்தியால் வளர்க்கப்பட்ட உயிரும் அந்நிலையில் நிலைத்து நில்லாது எந்த நேரத்திலும் உடம்பை விடுத்து நீங்கலாம் . ஆதலின் அடியேன் உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றை மறவாமல் இருக்கின்றேன் . மீண்டும் அடியேனுக்கு ஒரு பிறவி உண்டாகுமாயின் உன்னை மறவாதிருத்தல் கூடுங்கொல்லோ என்று ஐயுற்றுத் திருவாரூர் மணவாளா ! திருத்தெங்கூராய் ! செம்பொன் ஏகம்பனே ! என்று உன் திருப்பெயர்களைக் கூறியவாறு கலங்குகின்றேன் .

குறிப்புரை :

` கருவாகி ` என்றது , கருப்பையில் துளியாய்ப் புக்க நிலையை . ` குழம்பியிருந்து ` என்பது தொகுத்தலாயிற்று , குழம்பி யிருத்தலாவது , ` கை , கால் , தலை ` முலியன பிரிந்து தோன்றாது நெகிழ்ந்த பிண்டமாய் இருத்தல் . கலித்து - தழைத்து ; அவை பிரிந்து தோன்றி , ` மூளை ` என்புழியும் உம்மை விரிக்க . கருமை , இங்குப் பசுமையைக் குறித்தது . ` ஒன்றாகி ` என்பதனை , ` ஒன்றாக ` எனத் திரிக்க . ` உருவாகி ` என்றது , ` மகனாகி ` என்றவாறு , ` உயிரார் ` என்புழி , ஆர்விகுதி , இழித்தற்கண் வந்தது . கடைபோகாமை இழிபென்க . ` உயிராரும் ` என்னும் சிறப்பும்மையை , ` வளர்க்கப்பட்டு ` என்பதனோடு கூட்டுக . ` கருவாகி ` என்பது முதல் , ` வளர்க்கப்பட்டு ` என்பதுகாறும் , உயிர் , மகனாய்த் தோன்றுதற்கண் உள்ள அருமையை எடுத்தோதியவாறு . அங்ஙனம் தோன்றியும் , அந் நிலையிலே நிலைத்து நில்லாது நீங்குதல்பற்றி , ` கடைபோகார் ` என்றருளிச் செய்தார் . கடைபோதல் - தான் உள்ள துணையும் அவ்வொரு நிலையிலே நிற்றல் . எந்த நேரத்திலும் இறப்பு உளதாதலைக் குறித்து இரங்கியவாறு . இரக்கத்திற்குக் காரணம் , பின்னர் அருளினார் . மருவு ஆகி - பொருந்துதல் ஆகி , ` நின் அடியே மருவாகி ` எனக் கூட்டுக . ` மறவாவண்ணம் ` என்புழி , ` நினைந்து ` என்பது எஞ்சி நின்றது . எனவே , ` இறவாது இப்பிறப்பிலே இருப்பேனாயின் மறத்தல் நிகழாமைபற்றிச் செம்மாந்திருப்பேன் ; அது கூடாதாகலின் , ஒருகால் மீளப் பிறப்பு உண்டாகுமாயின் , மறவாமை கூடுங்கொலோ என நினைந்து மனங் கலங்குகின்றேன் ` என்றருளியவாறாம் . ` துறக்கப் படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு இறப்பன் , இறந்தால் இருவிசும் பேறுவன் ; ஏறிவந்து பிறப்பன் ; பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோஎன்றென் உள்ளம் கிடந்து மறுகிடுமே .` ( தி .4. ப .113. பா .7.) எனத் திருவிருத்தத்துள்ளும் அருளிச்செய்தார் . இதனுள்ளும் , உடலைத் துறத்தல் முதலிய பலவற்றிற்கும் உடம்பட்டு , பிஞ்ஞகன்பேர் மறத்தல் ஒன்றிற்கும் உடம்படாது இரங்கியருளினமை காண்க . மணவாளன் - அழகன் . திருத்தெங்கூர் , சோழநாட்டுத்தலம் . ` செம்பொன்போலும் சிறந்த ஏகம்பம் ` என்க .

பண் :

பாடல் எண் : 7

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

பொழிப்புரை :

முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு , அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு , அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள் . தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள் . உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள் . தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள் . கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள் . அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள் .

குறிப்புரை :

இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து , செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது . செய்யுளாகலின் சுட்டுப்பெயர்கள் ` தலைவன் ` என்பதற்கு முன்வந்தன . நாமம் , ` சிவன் ` என்பது , இச்சொற்றானே வசீகரித்தலையுணர்த்துவது என்றபடி , ` நிறைந்த மங்கலத்தினன் ` என்பது பொருள் . வண்ணம் , பொன் வண்ணம் . ஆரூர் - எல்லாம் நிறைந்த ஊர் . ` பெயர்த்தும் ` என்பதை , ` பெயர்ப்பவும் ` எனத்திரித்து , ` கேட்டவற்றை மீள நினையாது மறக்குமாறெல்லாம் செய்து அவள் மனத்தை யாம் மாற்றவும் ` என உரைக்க . இவ்வாறின்றி , ` பின்னை வண்ணங் கேட்டாள் ; பெயர்த்தும் ஆரூர் கேட்டாள் ` என முன்னே கூட்டியுரைப்பாரும் உளர் ; அவர்க்கு , ` பிச்சியானாள் ` என்பதற்கு முன்னும் ஒரு சொல் வேண்டப் படுவதாம் . ` அவனுக்கு ` என்னும் நான்காவது ஏழாவதன் பொருளில் வந்தது . பிச்சி - பித்தி , நீத்தது மனத்தால் என்க . அகலிடத்தார் ஆசாரமாவது , கன்னியர் இல்வரை இகந்து செல்லாது நிற்றல் . அதனை அகன்றமையாவது தானே இல்லிறந்து சென்று ஆருரை அடையத் துணிந்தமை , தன்னை மறந்தமையாவது , தலைவனையே நினையும் நினைவிலே தான் இது செய்கின்றமை அறியாதொழிந்தமை . தன் நாமமாவது , கன்னி ( நிறை அழியாதிருப்பவள் ) எனப்படுவது . ` தாள ` என்புழி இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கது . ` தாளே ` என்னும் ஏகாரம் , பிறவற்றினின்று பிரித்தலின் பிரிநிலை . தலைப்பட்டாள் - அணைந்தாள் . தாளைத் தலைப்பட்டமையாவது , தனக்கென ஒன்றின்றி அவன் வழியளா யொழிந்தமை . இனி , சத்திநிபாதத்தவரது நிலையை உரைக்குமிடத்து , நாமங் கேட்டல் முதலிய நான்கினையும் முறையே கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டைகூடல் என்னும் நான்குமாகவும் , பின்னர் உள்ளவற்றை அணைந்தோர் தன்மையாகவும் கொள்க . நாமம் பொதுவில் உணரப்படுவது , வண்ணம் சிறப்பாக ஆய்ந்துணரப்படுவதும் , பித்து அதனில் அழுந்துதலும் ஆதல் உணர்க . அன்னை திரோதான சத்தியும் , அத்தன் தடத்த சிவனும் என்க . அகலிடத்தார் ஆசாரம் , தன் முனைப்பில் நின்று வினைகளையீட்டியும் நுகர்ந்தும் பிறப்பிறப்புக்களில் உழலுதல் . தன்னை மறத்தல் , தானொரு பொருள் உண்மையையும் , உண்டாகி அறிந்து நிற்றலையும் மறந்து முதல்வன் ஒருவனையே அறிந்து நிற்றல் . தாள் - முதல்வனது உண்மை இயல்பு ; அஃது இன்ப வடிவினதாதல் அறிக . ` நாமம் கேட்டல் ` முதலிய நான்கையும் , ` சமயம் , விசேடம் , நிருவாணம் ` என்னும் தீக்கைவழி , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என்னும் நான்கு பாதங்களில் நிற்கும் நிலைகளையுணர்த்தியவாறாக உரைப்பாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 8

ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
பாடுவார் தும்புருவும் நார தாதி
பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்
தேடுவார் திருமாலும் நான்மு கனுந்
தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளும்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.

பொழிப்புரை :

திருவாரூர்ப் பெருமானே ! நீ கூத்தாடுவாய் , வேதம் வல்லார் விதிப்படி செய்ய வேண்டும் அளவிற் குறையாமல் உன் நிவேதனத்திற்குரிய அவியைச் சமைப்பார்கள் . தும்புருவும் நாரதன் முதலியோரும் உன் பெருமையைப் பாடுவர் . தேவர்களும் தேவேந்திரனும் உன்னை முன் நின்று துதிப்பார்கள் . திருமாலும் பிரமனும் உன்னைத் தேடுவார்கள் . மலைமகளும் கங்கையும் உன்னைத் தழுவுவார்கள் . இவ்வளவு செய்திகளையும் அடியேன் அறிந்துள்ளேன் . ஆதலின் நாய்போலும் அடியவனாகிய நான் செய்யும் சிறுபணிகள் உனக்கு ஏற்குமோ ? ஏலாவோ ? அறியேன் .

குறிப்புரை :

அளவில் குன்றா - விதிப்படி செய்யவேண்டும் அளவில் குறையாமல் . ` குன்றாது ` என்பது ஈறு குறைந்து நின்றது . அறிந்தேன் - கண்டேன் . ` நாரதாதி ` என்புழி , ` வல்லுநர் ` என்பது வருவிக்க . கூடுமே - உனக்கு ஏற்குமோ , குற்றேவல் - சிறு பணிகள் . குடி கொண்டீர்க்கு என்பது ஒருமைப் பன்மை மயக்கம் . ` நீ நட்டம் ஆடுவாய் ; மறையோர் அவி அடுவார் ; நாரதாதியர் உன்னைப் பாடுவார் ; அமரர்களும் , அமரர்கோனும் உன்னைப் பரவுவார் ; திருமாலும் நான்முகனும் உன்னைத் தேடுவார் ; மலைமகளும் , கங்கையாளும் உன்னைத் தீண்டுவார் ; இவைகளை எல்லாம் கண்டேன் ; ஆதலின் , நாய் போலும் அடியவனாகிய யான் செய்யும் சிறு பணிகள் உனக்கு ஏற்குமோ ` என முடிக்க . இத்திருப்பாடலால் , சுவாமிகள் இறைவனது பெருமையையும் , உயிர்களது சிறுமையையும் உள்ளவாறுணர்ந்து நின்ற மெய்யுணர்வும் , அவ்வுணர்வினால் இறைவனுக்குச் செய்த உண்மைத் திருத்தொண்டின் ஆர்வமும் இனிது புலனாகும் .

பண் :

பாடல் எண் : 9

நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும்
உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.

பொழிப்புரை :

ஆரூர்ப் பெருமானே ! கங்கை தங்கும் செந்நிறச் சடையனே ! நெற்றியில் கண்ணுடையவனே ! நிலாத்திங்கள் துண்டம் ஆகிய பிறை சூடியே ! உன்னைத்தேடி நீ இருக்கும் இடத்தை ஆராய்ந்தவாறே , ஓர் ஊர்கூட எஞ்சாமல் உலகம் முழுதும் எங்கும் திரிந்து , உன்னைக் காண்பதற்குத் தேர்கள் உலவும் பரந்த விதிகளிலே காத்திருந்து , திருமாலும் பிரமனும் கூட முயன்றும் காண இயலாதவர்களாய் , ` தேவர்கள் தலைவனே ` ஆரூரா ! ஆரூரா ! என்று அழைக்கின்றார்கள் .

குறிப்புரை :

நிலா - சந்திரனது ஒளி . திருமாலும் நான்முகனும் , நின்னை ஓர் ஊரும் ஒழியாமே தேடி , எங்கும் ஒற்றித்து , உலகமெலாந் திரிதந்து தேர்ந்துங் காணாது , தேரூரும் நெடுவீதி பற்றி நின்று , ` ஆரூரா ஆரூரா ` என்று ஓலமிட்டு நிற்கின்றார்கள் ; அவர்கள் அங்ஙனம் நிற்குமாறு நீ ஆரூரிடத்தினையாய் உள்ளாய் என முடிவு செய்க . ` ஒற்று வித்து ` என்பது ` ஒற்றித்து ` எனக் குறைந்து நின்றது . ஒற்று வித்தல் - ஒற்றரை விடுத்து உண்மையறியச்செய்தல் .

பண் :

பாடல் எண் : 10

நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
யிராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

பொழிப்புரை :

நல்லூரில் நன்றாகக் கூத்து நிகழ்த்திப் பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை இவர்ந்து , பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து , சேற்றூரில் பலர் காண நின்று , தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று , பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி , பட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற் காலில் நுழைந்து தளிச்சாத்தங் குடி வழியாக எல்லாரும் காணச் சென்று ஒரு நொடிப் பொழுதில் திருவாரூரில் எம் பெருமான் புகுந்தார் .

குறிப்புரை :

பழையாறு , சேற்றூர் , மணற்கால் , தளிச்சாத்தங்குடி இவை வைப்புத்தலங்கள் ; ` தனிச்சாத்தங்குடி ` என்பதும் பாடம் . தாம் ( திருவாரூர்ப் பெருமானார் ) ` நல்லூரில் நட்டம் இட்டு , பழையாற்றில் ஏறேறி , பல்லூரில் பலிதிரிந்து , சேற்றூரில் பலர்காண நின்று , தலையாலங்காட்டில் ஊடே மறைந்துநின்று , பெருவேளூர்த் தளியிலே ( கோயிலிலே ) விரும்பித் தங்கி , பட்டீச்சுரத்தில் இராப் பொழுதைக் கழித்து , மணற்காலில் நுழைந்து , தளிச்சாத்தங்குடி வழியாக யாவருங் காண நடந்து , ஒரு நொடிப்பொழுதில் திருவாரூரை அடைந்தார் ` என முடிவு கூறுக . இடையில் வேண்டும் சொற்கள் , சொல்லெச்சமாக வந்து இயையும் . நல்லூர் , தலையாலங்காடு , பெருவேளூர் , பட்டீச்சரம் இவை சோழநாட்டுத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 11

கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்
கருவரைபோற் களியானை கதறக் கையால்
உரித்தெடுத்துச் சிவந்ததன்தோல் பொருந்த மூடி
உமையவளை யச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்
திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த் தானந்
திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்
அரிப்பெருத்த வெள்ளேற்றை அடரவேறி
யப்பனார் இப்பருவ மாரூ ராரே.

பொழிப்புரை :

கரிய படப்புள்ளிகளை உடைய , கோபிக்கும் பாம்பினைக் கையில் கொண்டு , பார்வதியை அச்சுறுத்திய பெரிய மலையைப் போன்ற மத யானை பிளிறும்படியாக அதன் தோலை உரித்துச் சிவந்த தம் மேனி மீது பொருந்தப் போர்த்து ஒளி பொருந்திய திருமேனியை உடைய செல்வராம் சிவபெருமானார் திருத்துருத்தி , திருப்பழனம் , திருநெய்த்தானம் , திருவையாறு என்ற திருத்தலங்களை உறைவிடமாகக் கொண்டு இந்நாளில் தசை மடிப்பால் கீற்றுக்கள் அமைந்த பிடரியை உடைய வெண்ணிறக் காளையை அது சுமக்குமாறு இவர்ந்து , இப்பொழுது திருவாரூரை உகந்தருளியிருக்கிறார் .

குறிப்புரை :

` கருந்துத்தி ` என்பது வலித்து நின்றது . ` கருநாகம் ` என இயையும் . துத்தி - படத்தில் உள்ள புள்ளிகள் ; கதம் - சினம் . அரிப்பு எருத்தம் - ( தசை மடிப்பால் ) கீற்றுக்கள் அமைந்த பிடர் . அடர - சுமக்க . பருவம் - காலம் ; ஊழி . இது முதலாகப் பல திருப்பதிகங்களிலும் , திருவாரூர் சிவபெருமானது முதலிடமாக இனிதெடுத்து விளக்கி யருளும் குறிப்புக் காணப்படுதல் , மிகவும் உற்று நோக்கத்தக்கது , ` திருவாரூர்த் திருமூலட்டானம் ` எனக் கூறப்படுதலும் கருதத்தக்கது . தில்லையே , ` கோயில் ` என வழங்கப்படினும் , திருவாரூர் அதனினும் பழைய கோயிலாதல் திருப்பதிகங்களாலும் , நாயன்மார்களது வரலாறுகளாலும் இனிது கொள்ளக்கிடக்கின்றது . துருத்தி , பழனம் , நெய்த்தானம் , ஐயாறு இவை சோழநாட்டுத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 1

பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்
பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை
வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை
வன்கருப்புச் சிலைக்காம னுடல் அட்டானைச்
சோதிச்சந் திரன்மேனி மறுச்செய் தானைச்
சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை
ஆதித்தன் பற்கொண்ட அம்மான் தன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

பார்வதி பாகனாய்ப் பண்டு இராவணனை வருத்தியவனாய், வருத்திப் பிரமன் தலை ஒன்றை நீக்கியவனாய், வலிய கரும்பு வில்லை உடைய மன்மதன் உடலை எரித்தவனாய், ஒளி பொருந்திய சந்திரனுடைய உடலில் களங்கத்தை உண்டாக்கியவனாய், ஒளி வீசும் அக்கினி தேவனுடைய கை ஒன்றனைப் போக்கிச் சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய அப்பெருமானைத் திருவாரூரில் அடியேன் தரிசித்து அவனைத் தவிர ஏனையவற்றை எல்லாம் மறந்தேன்.

குறிப்புரை :

`தன் பாதித் திருவுருவில்` எனக் கூட்டுக. தசமுகன் - இராவணன்; இப்பெயர்க்கு, அழுதவன் என்பதே பொருளாதலைக் கருதுக. வாதித்தமை, `நீ தலைவனாதல் எவ்வாறு?` என்று வாதித்தல்; வருத்துதலுமாம். மறுச்செய்தமையாவது; காலால் தரையில் இட்டுத் தேய்த்தமை. அங்கி - அக்கினி. `கைக்கொண்டான்` என்பதில் ககர வொற்று, விரித்தல். சந்திரனைத் தேய்த்தமை முதலிய மூன்றும், தக்கன் வேள்வியிற் செய்தன. அயர்த்தல் - மறத்தல், மறந்தமை, அவனைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் என்க. `அயர்த்தவாறு நன்று` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் தன்னை
ஓதாதே வேத முணர்ந்தான் தன்னை
அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் தன்னை
அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

இராவணன் பொருட்டு மலையை அழுத்திய திருவடியால் கூற்றுவனை உதைத்தவனாய், விளக்கு மின்னல் முத்து இவற்றை ஒத்த திருமேனி ஒளியினனாய், வேதங்களை ஓதாது உணர்ந்தவனாய், நீரை மிகுதியாக நிறைத்த கடலில் தோன்றிய விடத்தை உண்டு அமுதமுண்ட தேவர் இறந்த போதும் தான் இறவாதவனாய், கடல் நீரினுள் இருக்கும் பெண் குதிரை முக வடிவினதாகிய தீயாகவும் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.

குறிப்புரை :

வெற்புறுத்த - இராவணன் பொருட்டு மலையை அழுத்திய; `திருவடி இவ்வாறு மறக்கருணையையும் செய்யும்` என்பதனை நினைந்தருளியவாறு. விளக்கொளியும் மின்னொளியும் செந்நிறமுடையனவாக, வெண்மை நிறமுடைய முத்தின் சோதியையும் உடன்கூட்டி யருளிச்செய்தது. சிவபிரான் செந்நிறமுடையனாதலேயன்றி, படிகம் போலும் வெண்ணிறமும் உடையனாதல்பற்றி யென்க. `வெண்பளிங்கி னுட்பதித்த சோதியானை` (ப.26. பா.4.) எனப் பின்னும் அருளிச்செய்வார். நெருப்பின் நிறத்தையும் வெண்மை என்றே கூறுவர். நையாயிகர். இனி, முத்தின்சோதி திருநீற்றுப் பூச்சிற்கு உவமையாயிற்று. எனினுமாம். ஓதாதே வேதம் உணர்ந்தமை, இயல்பாகவே எல்லாவற்றையும் உணர்ந்திருத்தல். அப்பு உறுத்த கடல் - நீரைத் தன்னிடத்தே உறுவித்துக்கொண்ட கடல். அமுது உண்டவர். எல்லாத் தேவர்களும், உலந்தாலும் - அழிந்தாலும். `சாவா மருந்துண்டவர் சாவ, சாகும் நஞ்சுண்டவன் என்றும் சாவாதிருக்கின்றான்; இதுபோல்வதொரு வியப்புண்டோ` என வியந்தருளிச் செய்தவாறு. `நீல மணிமிடற்றொருவன்போல - மன்னுக பெருமநீயே` (புறம் - 91.) என்ற ஔவையார் பாட்டின் பகுதியையும். அதன் உரையையும் ஈண்டு நினைவு கூர்க. அப்பு உறுத்த - நீரை மிகுதியாக நிறைத்த. `நீரகம்` என்பது, `நீரை உடைய இடம்` என்னும் காரணம் குறித்துக் `கடல்` என்னும் பொருளதாய் நின்றது. `அழல்` என்றது; வடவைத் தீயை. இது, கடலின் நடுவில் நின்று, கடல் பொங்கி உலகை அழியாதவாறு காப்பது என்பது புராணவழக்கு.

பண் :

பாடல் எண் : 3

ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை
யூழிதோ றூழி யுயர்ந்தான் தன்னை
வருகாலஞ் செல்கால மாயி னானை
வன்கருப்புச் சிலைக்காம னுடலட் டானைப்
பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்
புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை
அருவேள்வி தகர்த்தெச்சன் தலைகொண் டானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

தக்கன் வேள்வி செய்த காலத்தில் சூரியன் ஒருவனுடைய கண்களை நீக்கியவனாய், ஊழிகள் தோறும் மேம் பட்டுத் தோன்றுபவனாய், எதிர் காலமும் இறந்த காலமும் ஆயினவனாய், வலிய கரும்பு வில்லை ஏந்திய மன்மதனுடைய உடலை நலிவித்தவனாய், தன்னோடு பொரவந்த யானையை உரித்துப் போர்த்தவனாய், செருக்கொடு வந்த கருடன் உடலைப் பொடி செய்தவனாய், அரிய வேள்வியை அழித்து வேள்வித் தேவனின் தலையை நீக்கிய பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.

குறிப்புரை :

ஒருகாலம், தக்கன் வேள்விசெய்தகாலம். ஒரு தேவர் `பகன்` என்பவர். `உண்ணப் புகுந்த பகனொளித்தோடாமே - கண்ணைப் பறித்தவா றுந்தீபற` (தி.8 திருவா. திருவுந்தி.12) என்றருளினமை காண்க. ஊழிதோ றூழி உயர்தல், மேலே (ப.6. பா.5. குறிப்புரை) விளக்கப்பட்டது. வருகாலம் - எதிர்காலம். செல்காலம் - இறந்த காலம். இவை இரண்டையும் கூறவே, இடைநிற்கும் நிகழ்காலமாதல் தானே பெறப்படும். காலதத்துவமாய் நின்று அதுவாயிலாக எல்லாவற்றையும் நடத்துகின்றான் என்றருளியபடி. புள்ளரையன் - கருடன். அவன் செருக்குக் காரணமாகக் கயிலையில் இடப தேவரது மூச்சுக் காற்றில் அகப்பட்டுச் சிறகொடிந்து வருந்தி வணங்கிச்சென்ற வரலாற்றினைக் காஞ்சிப்புராணத்துட் காண்க. `கார்மலி யுருவக் கருடனைக் காய்ந்தும்` (கோபப்பிரசாதம் - 39.) என்றார் நக்கீரரும். எச்சன் - வேள்வித் தேவன். `தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் - தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடி` (தி.8 திருவாச. திருச்சாழல் - 5.) என்றருளியது காண்க.

பண் :

பாடல் எண் : 4

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை
உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

திருநீறணிந்த மேனியனாய்ப் பளிங்கினுள் பதித்தாற் போன்ற செஞ்சோதியனாய்த் தன்னொப்பார் பிறர் இல்லாதானாய், உத்தமனாய், முத்துப் போன்று இயற்கை ஒளி உடையவனாய், உலகங்களை எல்லாம் காத்து அழித்துப் படைப்பவனாய்த் தீவினையை உடைய அடியேன் மனத்தில் நிலைபெற்றவனாய், மாயைக்கு அப்பாற்பட்ட உயிருக்கு அப்பாற்பட்டவனை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.

குறிப்புரை :

பதித்த - (தான்) வைத்த. ஓப்பான் - எல்லாப் பொருளிலும் ஒரு நிகராகப் பொருந்தியிருப்பவன். உத்தமன் - மேலானவன். வைப்பான் - படைப்பான். `வருவிப்பான்` என்றருளியது, களைந்தபின் மீள வருவித்தலை. இனி, `வைப்பான்` என்றது, நிறுத்துதலை எனக்கொண்டு, `வருவிப்பானை` என்றதனை அதற்கு முன்னே கூட்டியுரைப்பினும் ஆம். அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலான் - மாயைக்கு அப்பாற்பட்ட உயிருக்கு அப்பாற்பட்டவன்.

பண் :

பாடல் எண் : 5

பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்
பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத்
துண்டத்திற் றுணிபொருளைச் சுடுதீ யாகிச்
சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக்
கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து
கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை
அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

மனித உடலில் பிறந்த உயிர் கொண்டு உணரும் உணர்விற்குத் தோன்றுபவனாய், அவ்வுடலையும் படைத்தவனாய்ப் பெரிய வேதங்களின் யாப்பினுள் துணியப்படும் பரம்பொருளாகக் கூறப்படுபவனாய்ச் சுடு தீயாகியும் சுழன்றடிக்கும் காற்றாகியும் நீராகியும் மண்ணாகியும் இருப்பவனாய்த் தீமைக்கு இருப்பிடமாகிய நஞ்சினை உண்டு அதனைக் கழுத்தளவில் இருத்தியவனாய், முக் கண்ணனாய்க் கரும்பும் பாலும் போல இனியனாய், முத்தர்களுக்குப் பயன் தரும் பொருளாய் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன்.

குறிப்புரை :

பிண்டம் - உடல். `அது கொண்டு உணரும் உணர்விற்கும் தோன்றுவான்` என்றதாம். `மற்று` என்னும் அசை நிலை ஈறு திரிந்தது. ஏனையவற்றோடு இயைய, `படைத்தது` என அஃறிணையாக அருளினார். `துண்டம்` என்றது, யாப்பினை. `இன்` ஏதுப் பொருளில் வந்த ஐந்தனுருபு. `இற்றை` என்றதனை, `சுடு தீ` முதலியவற்றோடு சேர முன்னே கூட்டுக. `இன்று காணப்படும்` என்பது பொருள்; ஆயிற்றை` என வினைப்பெயராக்கி உரைத்தலுமாம். தீதின் நஞ்சு - தீமையை உடைய நஞ்சு. அமுது செய்தமை யாவது, தீங்கு யாதும் செய்யாது, அழகு செய்துகொண்டு இருக்க வைத்தமை. `கண்` என்றது `கணு` என்ற நயத்தையும் தோற்றியது. அண்டத்துக்கு அப்புறத்தார் - முத்தர்கள். அவர்கட்குத் தான் ஒருவனே பயன்தருதல்பற்றி, `வித்து` என்று அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 6

நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப்
பாதியா யொன்றாகி யிரண்டாய் மூன்றாய்ப்
பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச்
சோதியா யிருளாகிச் சுவைக ளாகிச்
சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

ஒழுங்குக்கு ஓர் உறைவிடமாய், நிலம் நெருப்பு நீர் எங்கும் நிறைந்த காற்று என்ற இவற்றின் ஒழுங்குகளையும் பண்புகளையும் நிருவகிப்பவனாய், எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடாய்ப் பரசிவமாகிய ஒன்றாய்ச் சிவமும் சத்தியும் என இரண்டாய், அயன் மால் அரன் என்ற மும்மூர்த்திகளாய், அணுவுக்கும் அணுவாய் நிறைந்திருப்பவனாய், செவ்வனம் நிரம்பிய ஏழிசை வடிவினனாய்ச் சோதியாகியும் இருளாகியும் பொருள்களின் சுவைகளாகியும் அடியார்களுக்கு எத்திறத்தினும் சுவைக்கும் திறம் கலந்த பகுதியனாய், வீட்டுலகம் அருளுபவனாய், வீட்டிற்கு வாயிலாகிய ஞானமும் அந்த ஞானத்தால் அடையத்தக்க பயனுமாய், அடியார்க்குத் தன்னை அடையத்தானே ஆறும் பேறுமாக (உபாயமும் உபமேயமும்) இருக்கும் பெருமானைத் திருவாரூரில் அடியேன் கண்டு அவனைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் மறந்தேன்.

குறிப்புரை :

கால் - காற்று. நியமம் - கட்டளை, ஒழுங்கு; என்றது, வன்மை முதலிய பண்புகளையும், பொறுத்தல் முதலிய தொழில்களையும். பாதி - எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடு. ஒன்று - பரசிவம். இரண்டு - சிவமும், சத்தியும். மூன்று - `அரன், மால், அயன்` என்னும் நிலை. பரமாணு - அணுவுக்கு அணுவாய் நிறைந்திருத்தல். பழுத்த - ஏழிசையும் செவ்வனம் நிரம்பிய. சோதி - அறிவு. இருள் - அறியாமை. அறியாமையைச் செய்யும் மலத்தின் ஆற்றலையும் அச்செயலைச் செய்யுமாறு தூண்டி அதன்வழி நிற்றலின், `இருளாய்` என்றும் அருளிச்செய்தார். இந்நிலையே `திரோதானகரி` எனப் படுவது. `சோதியனே துன்னிருளே` (தி.8 திருவாசகம். சிவபுராணம். 72.) என்றருளிச்செய்ததுங் காண்க. அப்பால் - அத்தன்மையுடைய பால். வீட்டின் ஆதி - வீட்டிற்கு வாயிலாகிய ஞானம். `ஞானத்தின் அந்தம்` என்றது, பயனை; அஃதாவது, நிரம்புதல்.

பண் :

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 10

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 1

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

பொழிப்புரை :

நிலையின்மையும் அழிதலுடைமையும் உடைய உலகப் பொருள்களாகிய பெரிய கடலிலே தடுமாறுகின்ற நல்வினை தீவினைகளாகிய இருவினைகளே ! நீங்கள் எனக்கு நலம் செய்வீர் அல்லீர் . இந்த நிலையின்மையை உடைய பெரிய உடலாகிய கடலைச் சிறிது , சிறிதாக அரித்துத் தின்னும் உங்களுக்குத் தின்றற்கு உரிய பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை . ஏனெனில் யான் தேவர்கள் தலைவனாய் , எனக்கும் தலைவனாய்க் குளிர்ந்த பெரிய ஆரூரில் உள்ள பெரிய கடல் போல்வானாய்த் தன்னைத் தொடர்ந்த அடியார்களைத் தன் திருவடிப் பேரின்பத்தில் அடங்குமாறு செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைத் தொடர்வதில் இடையீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன் . அழிந்து போகக் கூடியவர்களே ! இடையில் நின்று என்னைத் தடுக்காதீர்கள் .

குறிப்புரை :

பொய் - நிலையின்மை . மாயம் - மாய்தலுடையது ; என்றது , பல்வேறு வகையினவாய்க் காணப்படும் உலகப் பொருள்களை . ` நீரில் எழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும் போல நிலை யின்றிமாயும் பொருள்களாகிய பெருங்கடல் ` என்றவாறு . புலம்புதல் , ஈண்டு அலமருதல் . நல்வினை தீவினை என்னும் இருவகை வினைகட்கும் பற்றுக்கோடு உலகமாகலின் , அவற்றை உலகின்கட் கிடந்து அலமருவனவாக அருளிச் செய்தார் . இனி , அவ்வுலகப் பொருள்களது இயக்கங்கள்யாவும் இருவினை வழிப்பட்டல்லது நிகழாமையின் , தமக்குக் காட்சிப்பட்ட உலகப் பொருள்கள் அனைத்தையும் அவை காணப்பட்டவாறே கண்டு அவற்றின் வீழ்ந்தழியாது , அவற்றது முதனிலை ஒன்றையே நோக்கி நீங்குவார் , அவைகளை அவ்வினைகளாகவே விளித்தருளினார் . இதனானே , திருப்புகலூரில் தம்மை மயக்குவான் வந்து தம் செயலெல்லாம் செய்த அரம்பையரை சுவாமிகள் நோக்கிய நோக்கு வகையும் பெறப்பட்டுக் கிடந்தது ; பின்னர்ப் பலவாறாக விளிப்பதும் அவர்களையே என்க . இங்ஙனம் நோக்கினும் , மயக்கின்கட்படாது நீங்குதல் , ` எம்மான்றன் அடித்தொடர்வான் ` என்பதனால் இனிதருளிச் செய்யப்பட்டது . ` இங்குளி வாங்குங் கலம்போல ஞானிபால் முன்செய் வினைமாயை மூண்டிடினும் - பின்செய்வினை மாயையுட னில்லாது மற்றவன்றான் மெய்ப்பொருளே ஆயவத னாலுணரும் அச்சு ` ( சிவஞானபோதம் . சூ .10. அதி .2) என்றருளிச்செய்தது இவ்வநுபவத்தையே யென்க . எனவே , சிவஞானிகட்கு , ` இங்குளி வாங்குங் கலம்போல ` ஒரோவழி மல வாசனைவந்து தாக்குமிடத்து , மீளச்சிவஞானத்தின்கண் உறைத்து நிற்கும் நிலையைப் பெற்று அதனின் நீங்குதற் பொருட்டுத் தோன்றி யருளியது இவ்வருமைத் திருப்பதிகம் என்பது விளங்கும் . ` தண்நல் ஆரூர் ` எனப் பிரிக்க . தடங்கடலோடுவமித்தது , தன்னைத் தொடர்ந் தோரை ( த் தனது திருவடிப் பேரின்பத்துள் ஆழ்த்தி ) அடங்கச்செய்தல் ( தாம் தோன்றாதவாறு செய்தல் ) பற்றி என்பது , ` தொடர்ந்தோரை அடங்கச் செய்யும் ` என்பதனால் விளக்கியருளப்பட்டது . ` திருவே ` என்னும் ஏகாரம் எதிர்மறுத்தலை உட்கொண்ட வினாப்பொருட்டு , ` நீங்கள் திருவே ` என மாற்றியுரைக்க . ` நீங்கள் நலஞ்செய்வீரல்லீர்கள் ` என்றபடி , ` இம்மாயப் பெருங்கடல் ` என்றது , உடம்பை . ` கிடந்தது இல்லையே ` என மாறிக் கூட்டுக . கிடந்தது - தின்னக் கிடந்த பொருள் . ` கிடந்து ` என்பதும் பாடம் . ` இல்லையே ` என்னும் ஏகாரம் , தேற்றம் . ` தான் `, அசை . ` தம்மான் . தலைமகன் , தடங்கடல் ` என்பன ஒருபொருள்மேற் பல பெயராய் வந்து , ` தான் ` என்னும் பொருளவாய் நின்றன . எனவே , அப்பெயர்களிடத்து நின்ற இரண்டனுருபுகள் , ` தொடர்ந்தோர் ` என்பதனோடு முடியும் . ` தொடர்வான் ` என்பது ஒடு உருபின் பொருளில் வந்த ஆன் உருபு ஏற்ற பெயர் . அதனை வினையெச்சமாகக் கொள்ளின் , வல்லெழுத்து மிகுதல் கூடாமை யறிக . இடை - இடையீடு , ` கெடுவீர்காள் ` என்பது வைதுரை ( சாபமொழி ). இடறுதல் - இடைநின்று தடுத்தல் . ` கெடுவீர் காள் ` என விளித்தது , ` இடறின் கெடுவீர்கள் ` என்றறிவுறுத்தி அருளியவாறு .

பண் :

பாடல் எண் : 2

ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமா யூழியுமா யுலகே ழாகி
ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன்
தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.

பொழிப்புரை :

ஐம்பெரும் பூதங்களே ! உங்களிலே ஒருவர் விரும்பியதை மற்றவர் விரும்பாது இவ்வுலகம் முழுதையும் உம்மால் தாங்கப்படுவதாக்கி உம் வசப்படுத்துவதில் நீங்கள் ஆற்றலுடையீர் . உங்களுக்கு என்பால் நுகரத்தக்க இன்பம் தரும் பொருள் ஒன்று மில்லை . ஏனெனில் யான் தேவர்களும் தேவருலகமும் ஊழிகளும் ஏழு உலகங்களுமாகி , வள்ளலாய்த் தேவர் தலைவனாய் , ஒளி பொருந்திய ஆரூரில் குளிர்ந்த அமுதமாக இருக்கும் அரனை இடையீடு இன்றித் தொடர்ந்து எப்பொழுதும் காண்பேன் ஆவேன் . உங்களுடைய இடையூறுகளில் என்னை அகப்படுவேனாய்க் கருதிச் செருக்குக் கொள்ளாதீர்கள் .

குறிப்புரை :

` நிலந்தீ நீர்வளி விசும்போடைந்துங் கலந்த மயக்கம் உலகம் ` ( தொல் . பொருள் . 635) ஆதலின் , ` ஐம்பெருமா பூதங்காள் ` எனவிளித்தருளினார் . மயக்குவன சடமின்றிச் சித்தாகாமை யறிக . ` ஒருவீர் ` என்பன முன்னிலைப் பெயர்கள் . இன்னதொரு பெயர் உண்டென்பதும் , உயர்திணையுள் ` ஒருவன் , ஒருத்தி ,` என்னும் இருபாற்கும் பொது என்பதும் ` ` ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி , - இருபாற்கு முரித்தே தெரியுங்காலை ` ( தொல் . சொல் . 191) என்னுங் கட்டளையுள் தன்னின முடித்தலாற் கொள்ளப்படும் . இன்னோரன்ன முன்னிலைப் பெயர்களும் இரு திணைக்கும் பொது என்பது , ` நீயிர் நீயென வரூஉங் கிளவி - பால்தெரிபிலவே உடன்மொழிப் பொருள ` ( தொல் . சொல் . 188.) என்னுங் கட்டளையுள் ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும் . ` ஒருவர் ` என்பது , இன்னார் எனச் சுட்டிக் கூறாது , பொதுப்படக் கூறுதற்கண் வருவதாகலின் , இவ் , ` ஒருவீர் ` முதலியனவும் அன்ன என்க . வேண்டிற்று - அவாவியது ; அது , பண்பானும் , தொழிலானும் ஐயைந்தாகும் . அவைகளை , ` உண்மை விளக்கம் ` முதலிய நூல்களிற் காண்க . பரம் - சுமை ; தாங்கப்படுவது . ` நுகர் போகம் இல்லையே ` என்க . உம்பர் - மேலிடம் ; விண்ணுலகம் . நள் அமிர்து - குளிர்ந்த அமுதம் . காண்பேன் - எப்பொழுதும் காண்பேன் .

பண் :

பாடல் எண் : 3

சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்
செழுங்கண்ணால் நோக்குமிது வூக்க மன்று
பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப்
பளகீரும் வசமன்றே பாரே லெல்லாம்
சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்
தூநயனம் மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே யடைவேன் நும்மால்
நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.

பொழிப்புரை :

பல வடிவங்களில் திரிந்து வேறுபடுகின்ற ஐம்பூதங்களாகிய பொய்ம்மையுடையீர் ! அழிகின்ற சில உருவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு நாடோறும் அவற்றை விரும்பிப் புறத்தில் அழகாக உள்ள கண்களால் பார்க்கும் இச்செயல் நல்லொழுக்கம் ஆகாது . இவ்வுலகம் முழுதும் உம் வசப்பட்டிருப்பது போதாதா ? யானோ ஐம்புலங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய ஞாயிறு திங்கள் தீ என்ற முச்சுடர்களாய் , அயன் அரி அரன் என்ற உருவம் மூன்றாய் , அச்சுடர்களாகிய கண்கள் மூன்றாய்க் கொண்டு , இவ்வுலகத்தை ஆளும் ஆரூரில் உள்ள நல்ல செந்நிறத்தவனாகிய சிவனடிகளையே அடைவேனாக உள்ளேன் . உம்மால் தேய்க்கப்படுவேன் அல்லேன் . உமக்கு நான் இணங்காததைப் பொறுத்துக்கொண்டு நுமக்கு வயப்படும் வேற்றுப் பொருள்களை நோக்கிச் செல்லுங்கள் .

குறிப்புரை :

` சில்லுரு ` என்றது , அழிகின்ற சில உருவங்கள் ` என்ற இகழ்ச்சி தோன்ற . குறி - குறிக்கேள் . பற்றி - பற்றுச் செய்து , விரும்பி . செழுங்கண் - புறத்தில் அழகாய் உள்ள கண்கள் . இது - இச்செயல் . ` ஊக்கம் ` என்பது , இங்கு , ` ஒழுக்கம் ` என்னும் பொருளதாய் நின்றது . தொழில் , திரிந்து வேறுபடுதல் . பளகீர் - பொய்ம்மையுடையீர் ; விளி ; உயர்திணையாக அருளிச்செய்தது , இகழ்ச்சிபற்றி . ` பாரேல் எல்லாம் உம் வசம் அன்றே ` என்க . பார் - உலகம் . சொல் உருவின் - ஐம்புலன்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய . சுடர் மூன்று , ` ஞாயிறு , திங்கள் , தீ , என்பன . உருவம் மூன்று , அயன் , அரி , அரன் ` எனப் பெயர்பெற்று நிற்பன . நயனம் - கண் . நமைப் புண்ணுதல் - தேய்க்கப்படுதல் ; கெடுக்கப்படுதல் . கமைத்து - ( நுமக்கு இணங்காமையைப் ) பொறுத்து ; என்றதும் இகழ்ச்சி பற்றியே என்க .

பண் :

பாடல் எண் : 4

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.

பொழிப்புரை :

விரும்பி நினைக்கப்படும் உடலிலே , வாய் கண் உடல் செவி மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாகநின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐவீர்களே ! உங்களுடைய மயக்கம் பொருந்திய உருவங்களின் இயற்கைகளால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா ? யானோ தேவர்களுக்கு அழகிய உரு வினைத் தந்தவனாய் , அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வானாய் , இவ்வுலகுக்கு எல்லாம் அழகாகும் சிவக்கொழுந்தாய் , என் சிந்தையுள்ளே புகுந்து அதன்கண் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன் . ஆதலால் என்னை உம் அளவில் படுத்தற்குச் செருக்கிக்கொண்டு என்பக்கல் வாராதீர்கள் .

குறிப்புரை :

உன் உருவில் - ( விரும்பி ) நினைக்கப்படுகின்ற உடம்பில் . ` உறுப்பு ` என்றது பொறியையும் , ` குறிப்பு ` என்றது புலனையும் என்க . ` நாற்றத்து ஐவீர் ` என இயையும் . அத்து , வேண்டாவழிச் சாரியை . மன் உருவம் - ( மயக்கம் ) நிலைபெற்ற உருவம் . வைப்பீர் - ( எழாது ) இருத்துவீர் . ` அதற்கு ` என்பது வருவிக்க . ` என் சிந்தை புகுந்து ( அதன் கண் ) தன் உருவைத் தந்தவனை ` என இயைக்க . தலைப்படுவேன் - எப்பொழுதும் அணைந்திருப்பேன் ; இங்கு , ` அதனால் ` என்பது வருவிக்க . துலைப்படுப்பான் - உம் அளவிற்படுத்தற்கு .

பண் :

பாடல் எண் : 5

துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

பொழிப்புரை :

நுகர்பொருள்களிடத்துப் பண்டுதொட்டுப் பற்றுக்கொள்ளுதல் நீங்காமைக்கு ஏதுவாகிய வெற்றி மிக்க பிறர் மயங்குதற்குக் காரணமான வஞ்சனைகளே ! நீங்கள் செயற்கை அழகைப் பரப்பி நீங்கள் கருதிய செயலைச் சுகமாக முடிப்பதற்கு இவ்வுலகம் முழுதும் உழலும் செயல் உங்களுக்கு அரிதன்று . ஆனால் அடியேன் என்சேமநிதியாய் அழகிய மதில்களை உடைய ஆரூரில் மாணிக்கமாய் , வைகல் என்ற தலத்தில் மணவாளனாய் , எனக்கும் தேவர்களுக்கும் பெருமானாய் உள்ளவனை முறைப்படி அடைபவன் . ஆதலின் உங்களால் நான் மற்றவர்போல ஆட்டுவிக்கப்பட மாட்டேன் . ஓடிவந்து என்னை வருத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

துப்பு - துப்புரவு ; நுகர்ச்சிப் பொருள் . பற்று , ` பற்றுதல் ` என முதனிலைத் தொழிற்பெயர் . அறாவிறல் - அறாமைக்கு ஏதுவாய வெற்றி . சோர்வு படு சூட்சியம் - பிறர் அயர்த்தற்கு ஏதுவாகிய வஞ்சகம் . சூழ்ச்சி என்பதன் மரூஉ வாகிய ` சூட்சி ` என்பது , அம்முப்பெற்று நின்றது . ஒப்பனை - செயற்கை அழகு . ` ஒப்பினை ` எனவும் பாடம் ஓதுவர் . பாவித்து பரப்பி . பாவுவித்து என்பது குறைந்தது . உழறுதல் - உழலுதல் . ` இது நுமக்கு அரிதோ ` என்றவாறு . குறை - கருதிய செயல் . ` அரிதே `, ஏகாரம் வினா . வைப்பு - சேம நிதி . வைகல் - ` வைகல்மாடக்கோயில் ` என்னும் சோழநாட்டுத் தலம் . ` நானும் ` என்ற உம்மை எச்சத்தோடு சிறப்பு . ` நானும் பிறர்போல ஆட்டுணேன் ` என்க . ஓட்டந்து - ஓட்டம் தந்து ; அலைந்து . ` ஈங்கு ஓட்டந்து ( என்னை ) அலையேன்மின் ` என்க . அலைத்தல் - வருத்துதல் .

பண் :

பாடல் எண் : 6

பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
குரோதமே யுலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்று
மதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச்
செல்வனைச்சேர் வேன்நும்மாற் செலுத்து ணேனே.

பொழிப்புரை :

பெருமிதம் கொண்ட செருக்கே ! மாண்பு இழந்த மானமே ! காமமே ! பகையே ! கோபமே ! கஞ்சத்தனமே ! துன்பச் சுமைகளே ! நீங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட இப்பேருலகத்தின் எல்லைகாறும் நீங்கள் கருதிய செயலை நிறைவேற்றுவதற்குச் சுற்றித் திரிவது உங்களுக்கு அரிது அன்று . ஆனால் யானோ செந்தாமரையில் தங்கிய பிரமனும் திருமாலும் ஆகி அவர்களையும் கடந்த ஒன்றே ஆகிய பரம்பொருளாகி , எவராலும் தம் முயற்சியால் அறிய முடியாத ஒப்பற்ற செம்பொற் குன்று போன்ற சிவபெருமானாகிய ஆரூர்ச் செல்வனைச் சேர்கின்றவன் . உம்மால் செலுத்தப்படுவேன் அல்லேன் .

குறிப்புரை :

ஆர்வச் செற்றங்களை உம்மைத்தொகை படத்தொகுத்தருளிச் செய்தாராயினும் , அவைகளையும் ஏகார உருபால் தனித்தனி நிற்க விளித்தலே திருவுள்ளம் என்க . மானம் , மாண் பிறந்த மானம் ; அது , உயர்ந்தோரை வணங்க மறுத்தல் . ஆர்வம் - காமம் , செற்றம் - பகை ; மாற்சரியம் . இவைகளைக் கூறவே மோகமும் தழுவிக் கொள்ளப்படும் . பொறை - சுமை ; துன்பம் . ` அயன் , மால் ` என்பவை அவரவர் நிலையைக் குறித்தன . ஒன்று - ஒன்றேயாய பரம்பொருள் . ` ஆகி ` என்னும் எச்சங்கள் , ` ஒண்ணா ` என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தோடு முடிந்தன . குன்று - உவமையாகுபெயர் .

பண் :

பாடல் எண் : 7

இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
அமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

பொழிப்புரை :

துன்பங்களே ! பாவங்களே ! மிக்க துயரம் தரும் வேட்கையே ! வெறுப்பே ! எல்லீரும் உலகுகளைச் சுற்றிச் சுழன்று அவற்றை வசப்படுத்த அவை தடுமாறி உங்கள் இட்ட வழக்காக இருத்தல் போதாதா ? யானோ தேவர்களின் பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துத் தேவர்கள் பெருமானாய்த் தீங்குகளைப் போக்குபவனாயுள்ள ஆரூர்ப் பெருமானை விரையச் சென்று அடையப் போகிறேன் . உம்மால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன் . என்பக்கல் ஓடி வந்து என்னைத் துன்புறுத்தி நும் வசப்படுத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

` வெறுப்பே ` என்னும் எண்ணேகாரம் , இடர் முதலிய எல்லாவற்றோடும் இயையும் . அமையாதே - போதாதோ . அடையார் - பகைவர் ; வானோர்க்குப் பகைவர் அசுரர் .

பண் :

பாடல் எண் : 8

விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே.

பொழிப்புரை :

விரைந்து வந்து ஏவல் கொள்ளும் வறுமையே ! செல்வமே ! கொடிய கோபமே ! மகிழ்ச்சியே ! வெறுப்பே ! நீங்கள் வரிசையாகச் சென்று இவ்வுலகத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து உண்ணுவீர்கள் . உங்களுக்கு நுகரத்தக்க இன்பம் கிட்டவில்லையா ? யானோ தேவர்கள் ஓலமிட்டு ஓடுமாறு வெளிப்பட்ட விடத்தை உண்ட கற்பகமாய் , உயிருக்கு மேற்பட்ட பொருளாய்த் திருவாரூரில் உள்ள மேம்பட்ட சோதி வடிவினனைக் காண்கின்றவன் . உங்களுடைய பண்புகளில் அகப்படமாட்டேன் . விரைந்து ஓடிவந்து என்னை அச்சுறுத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

ஆளும் - ஏவல் கொள்ளும் . செல்வத்தாற் பயன் கொள்ளுதலினும் வறுமையால் துயருழத்தல் விரைவுடைத்தாதல் பற்றி , ` விரைந்தாளும் நல்குரவே ` என்றருளினார் . ` செல்வம் ` என்பதில் அம்முத் தொகுத்தலாயிற்று . வெகுட்சி - சினம் . நிரைந்து - கூடி . ` நிரந்து ` என்பதும் பாடம் . கரைந்து - ஓலமிட்டு . தற்பரம் - உயிருக்கு மேற்பட்ட பொருள் . ` கற்பகம் ` முதலியன ஆகுபெயர்கள் . பரிந்து - விரைந்து . பகட்டல் - வெருட்டல் , ` பகட்டேன் மின்னே `, என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 9

மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணைப் பாதாளக் கருவை யாரூர்
ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

பொழிப்புரை :

தத்தம் தொழில்களிலேயே ஈடுபட்ட ஐம்பொறிகளாகிய காக்கைகளே ! இவ்வுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொரு நாளும் மயக்கமாகிய ஆட்சியை நடத்துகின்ற உமக்கு இன்னும் மனநிறைவு ஏற்படவில்லையா ? யானோ தேவருலகின் உச்சியைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாய்ப் பாதாளத்துக்கும் அடிநிலையாய் ஆரூரை ஆளும் பெருமானை விரைந்து சென்று அடைவேன் . உங்களால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன் . ஓடி வந்து என்னை வருத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

முகரி - காக்கை , ` ஈச்சிறகன்னதோர் தோலறினும் வேண்டுமே - காக்கை கடிவதோர் கோல் ` ( நாலடி -41) என்றவாறு , புண்ணுற்ற உடம்பினை , அதன்கண் உள்ள உயிரது துன்பம் நோக்காது மொய்த்துக் கொத்திப் பறிக்கும் இயல்புடைய காக்கைபோலப் பல வழிகளில் ஈர்த்துத் துன்புறுத்தலின் , பஞ்சேந்திரியங்களை , ` காக்கை காள் ` என விளித்தார் ; ` எறும் பிடை நாங்கூ ழெனப்புல னால்அரிப் புண்டலந்த - வெறுந்தமியேனை விடுதி கண்டாய் ` ( தி .8 திருவா . நீத்தல் விண்ணப்பம் - 25.) என்றருளியதுங் காண்க . நாள் வாயும் - நாள் தோறும் . மம்மர் ஆணை - மயக்கமாகிய ஆட்சி . ` அவ்வுலகம் அமையாதே ` என்க . ` தாங்கிநின்ற ` என்றருளினார் , வீழாது நிற்பித்தல் பற்றி . அதற்கேற்ப ` நெடுந்தூண் ` என்றருளினார் . ` கரு ` என்றது அடிநிலை என்றவாறு .

பண் :

பாடல் எண் : 10

சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்
துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல்
செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந்
தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத்
திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

பொழிப்புரை :

சுருக்கமே ! பெருக்கமே ! காலநிலையே ! செல்வமே ! வறுமையே ! இவ்வுலகைச் சுற்றிப் பெருமிதம் கொண்டு உங்கள் ஆட்சியைச் செலுத்தி நாடோறும் உங்கள் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் செயல் போதாதோ ? யானோ மிகவும் செருக்குற்றுக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் தளருமாறு அவனை அழுத்திப்பின் அவன் பாடலைக் கேட்டு இரங்கி அவனுக்கு அருளிய எம்பெருமானுடைய திருவடிகளிலே இடையீடு இன்றிச் சேர்ந்துள்ளேன் . அழிந்து போகக் கூடிய நீங்கள் என்னைத் துன்புறுத்த முயலாதீர்கள் .

குறிப்புரை :

` நிலை என்றது , காலநிலையை . துப்பு , துப்புரவு ; அஃது அதற்கு ஏதுவாய செல்வத்தின்மேல் நின்றது . அறை - இன்மை ; வறுமை . ` என்று ` எண்இடைச் சொல் . ` அனைவீரும் நித்தல் நிலை பற்றிச் செருக்கி உலகை மிகைசெலுத்தி ` என இயைக்க ; முற்றும்மை தொகுத்தலாயிற்று . மிகை - வரம்பு கடந்த ஆட்சி . மிகைசெலுத்தி என்பது , ` ஆண்டு ` என்னும் பொருளதாய் , ` உலகை `, என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று . வைகல் - நாள்தோறும் . ஆகம் - உடம்பு . ` எடுத்து ` என்றது , ஊன்றுதலாகிய தன் காரியந் தோற்றி நின்றது . இடை - இடையீடு .

பண் :

பாடல் எண் : 1

நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்
நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலும்
காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்
கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலும்
கூற்றினையுங் குரைகழலால் உதைத்தார் போலுங்
கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்
ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அழகிய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள பெருமானார் நெற்றிக்கண் ஒன்று உடையாராய் , நெற்றியில் திருநீறு அணிந்தவராய் , வெள்ளிய எலும்புகளை விடாமல் அணிந்தவராய்க் காற்றைவிட விரைவாகச் செல்பவராய் , ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை உதைத்தவராய்த் தம்மால் கொல்லப்பட்ட புலித்தோல் ஆடையை உடுத்த இளையராய்க் கங்கையையும் சடை மேல் வைத்தவராய் , அகக்கண்களுக்குக் காட்சி நல்குகிறார் .

குறிப்புரை :

` நடந்தார் ` என்பதனை , ` நடத்தினார் ` எனப் பிற வினைப் பொருட்டாக உரைக்க . ` காற்றினையும் ` என்பதை , ` காற்றினிலும் ` எனத் திரித்தலுமாம் . குழகர் - அழகர் . உம்மைகள் , சிறப்பு . திருவாரூர்த் திருக் கோயிலில் ` அரநெறி ` என்பதொரு தலமும் இருத்தலால் , புற்றிடங் கொண்ட இடமாகிய முதலிடம் , ` மூலட்டானம் ` என வழங்கப்படும் .

பண் :

பாடல் எண் : 2

பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
பாசுபதம் பார்த்தற் களித்தார் போலும்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலும்
கபாலங்கட் டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்கள் அட்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானனார் பருத்த பாம்பினை இடையில் இறுக்க அணிந்தவராய் , அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கியவராய்க் கரிய யானைத் தோலினைப் போர்த்தவராய் , மண்டை ஓட்டினையும் கட்டங்கப் படை எழுதிய கொடியினையும் உடையவராய்ப் பெரிய மலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்தவராய் , நந்தி என்ற பெயரினையும் உடையவராய்ப் பகைவருடைய அழித்தற்கரிய மும்மதில்களையும் அழித்தவராய் , நம் மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

பசுபதியின் ( சிவனது ) ஆற்றல் பெற்ற அம்பு , ` பாசு பதம் ` எனப்படும் . பார்த்தன் - அருச்சுனன் . ` கபாலத்தார் , கொடியார் என்க . ` காபாலம் ` என்பதும் பாடம் ; கட்டங்கம் என்னும் படைக்கலம் எழுதப்பட்ட கொடியும் சிவபிரானுக்கு உண்டென்க . எய்தார் என்பது , போர் செய்தார் என்னும் பொருளாய் நின்றது . ` பேரினை நந்தியென்னும் பெயராக உடையார் ` என உரைக்க . அரணங்கள் - மதில்கள் .

பண் :

பாடல் எண் : 3

துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந்
தூய திருமேனிச் செல்வர் போலும்
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும்
மணியுடைய மாநாகம் ஆர்ப்பார் போலும்
வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

கீளூம் கோவணமும் ஆகிய குறைந்த உடைகளையும் தோல் உடையையும் உடையவராய்த் தூய திருமேனியை உடைய செல்வராய் , அடியார்களுடைய பிணிகளை நீங்குமாறு போக்குபவராய் , மொழியைக் கடந்த பெரும்புகழாளராய் , இரத்தினங்களை உடைய மேம்பட்ட நாகங்களை அணிந்தவராய் , வாசுகி என்ற பாம்பினைத் தம் வில்லின் நாணாகக் கொண்டவராய் , அழகிய நீண்ட வீதிகளில் உலாவுபவராய் , அழகிய ஆரூர்ப் பெருமானார் மனக்கண் முன் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

துணி உடை - குறைந்த உடை ; அவை , கீளும் கோவணமும் . என்பார் - எனப்படுவார் ; ` என்பினை அணிந்தவர் ` என்றுமாம் . `( தாம் ) உடைய அடியாரைப் பிணி தீர்ப்பார் ` என இயைக்க . ` பிணி தீர்ப்பார் ` என்பது , ` இனிது ஆட்கொள்வார் ` என்றவாறு . பெரியார் - பேச்சுக்கு ( அடங்காத ) பெரும்புகழை உடையவர் . நாண் - வில் நாண் . ` அணியுடைய வீதிநடப்பார் ` என்றது , ஆரூர்ப் பெருமானார் , வீதி விடங்கராய் இருத்தல்பற்றி . ` வீதி விடங்கராய் நடங்குலாவினரே ` ( தி .9 திருவிசைப்பா - 18.2.) என்றது காண்க .

பண் :

பாடல் எண் : 4

ஓட்டகத்தே ஊணாக வுகந்தார் போலும்
ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
காட்டகத்தே யாட லுடையார் போலும்
காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானனார் மண்டை யோட்டில் பிச்சையெடுக்கும் உணவையே விரும்பியவராய் , அனற் பிழம்பாய்த் தோன்றி அடிமுடி காண முடியாதவாறு உயர்ந்தவராய் , நாட்டிலே மக்கள் பயின்று வரப் பல நெறிகளையும் கூறியவராய் , ஞானப் பெருங்கடலுக்கு உரிமை பூண்ட தலைவராய்ச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் சீகாமரம் என்ற பண்ணில் அமைந்த பாடல்களைப் பாடித்திரிபவராய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை உகப்பவராய் நம்மனக்கண் முன் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

ஊண் ஆக - உணவு மிக , மிகுதல் , பிச்சையால் என்க . ஓர் உரு , அழற்பிழம்பு . ` நாட்டகத்தே நிலவ ` என , ஒரு சொல் வருவிக்க . நடை - நெறி . நாதர் - தலைவர் . ஞானத்தின் பயனாய் நிற்றலின் , ஞானமாகிய கடலுக்குக் கரையாயவர் என்றருளியவாறு . ` ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன பூரணன் காண் ` என ( ப .8. பா .3.) அருளிச்செய்தமை காண்க . காமரம் - சீகாமரப் பண் ; முதற் குறை . ஆட்டகம் - ` ஆடு என்பது திரிந்துநின்றது ` திருமஞ்சன சாலை என்பதே பொருள் .

பண் :

பாடல் எண் : 5

ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்
இமையவர்க ளேத்த இருந்தார் போலும்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
வானத் திளமதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

பன்றியின் முற்றாத கொம்பினை அணிந்தவராய்த் தேவர்கள் வழிபடும்படியாகத் தங்கியிருப்பவராய்க் காட்டில் உள்ள கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தவராய்க் கடல் நஞ்சினை உண்டு கறுத்த கழுத்தினராய்ப் பிறை சேர்ந்த சடையினராய் , உயர்ந்த கயிலை மலையை உகந்து உறைபவராய் , அகரமாகிய எழுத்து ஏனைய எழுத்துக்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருப்பது போல ஏனைய பொருள்களுக்கெல்லாம் காரணராய் , காளையை இவர்ந்தவராய் அடியவர்கள் மனக்கண்முன் அழகிய ஆரூர்ப் பெருமானார் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

திருமால் வராகமாய்த் தோன்றிய சில நாட்களுக்குள்ளே அழித்தமையின் , ` இளமருப்பு ` என்றார் . ` ஏன முளைக்கொம் பவைபூண்டு ` ( தி .1. ப .1. பா .2.) என்றது காண்க . கானம் காடு . கீழ் நிழல் - அடிக்கண் உள்ள நிழல் . ` மகிழ்ந்தார் ` என்றது , ` மகிழ்ந்து வீற்றிருந்தார் ` எனப் பொருள் தந்தது . ஆனத்து - எருதின் மேல் விளங்குகின்ற . முன் எழுத்து , அகரம் ; ` எழுத்தாய் ` என்னும் ஆக்கச் சொல் , உவமைகுறித்து நின்றது . இறைவற்கு அகரம் உவமையாகப் பொதுமறையுட் சொல்லப்பட்டமை வெளிப்படை . ` முன்னெழுத்தாய் நின்றார் ` என்பது . ஒரு பெயர்த் தன்மைத்தாய் , ` ஆனத்து ` என்னும் ஏழாவதன் தொகைக்கு முடிபாயிற்று .

பண் :

பாடல் எண் : 6

காமனையும் கரியாகக் காய்ந்தார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும்
நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையுந் திருமுடியார் தாமே போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் மன்மதனைச் சாம்பலாகுமாறு கோபித்துக் கடல் விடத்தை உண்டு நீலகண்டராய்ப் பிறையையும் சடையில் சூடிச் சொல், சொற்பொருள், நாவால் உச்சரிக்கப்படும் வேதம் இவற்றின் வடிவினராய்ப் பார்வதி பாகராய்க் கங்கையை முடியில் வைத்தவராய் அடியவர் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார்.

குறிப்புரை :

சோமன் - சந்திரன் . ` நா மன்னும் , ஆம் மன்னும் ` என்பன . ` நாமனையும் ஆம் மனையும் ` எனத் திரிபெய்தி நின்றன . ஆம் - நீர் .

பண் :

பாடல் எண் : 7

முடியார் மதியரவம் வைத்தார் போலும்
மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலும்
செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
செல்கதிதான் கண்ட சிவனார் போலும்
கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியா ரடிமை யுகப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் முடியில் பிறையும் பாம்பும் சூடி , மூவுலகும் தாமேயாய்ப் பரந்து புலால் நாற்றம் கமழும் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்து வீடுபேற்றிற்கு உரிய வழியைக் காட்டி மற்றவர் நீக்கும் நஞ்சுண்டு நீல கண்டராய் , எலும்புக்கூட்டினை அணிந்த வேடத்தை உடைய தலைவராய் , அடியார்களுடைய அடிமைப் பணியினை உகப்பவராய் மனக்கண்முன் அடியவர்க்குக் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

ஆர் - ஆத்தி மாலை . செடி - முடைநாற்றம் . கண்ட - படைத்த . தான் , அசைநிலை . கடி ஆர் - நீக்குதலைப் பொருந்திய கங்காளம் - எலும்புக் கூடு . கருத்தர் - தலைவர் . அடிமை - தொண்டு .

பண் :

பாடல் எண் : 8

இந்திரத்தை யினிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்திறைஞ்சும் இறைவர் போலும்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந்
தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே யணியாநஞ் சுண்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் இந்திர பதவியைத் தக்கவருக்கு மகிழ்வோடு ஈந்து , தேவர்கள் வந்து வழிபடும் தலைவராய் அழகிய நீறு பூசி , மிகவும் தூய திருமேனியை உடைய தலைவராய் , அடியவர்கள் உள்ளத்தே தம் திருவைந்தெழுத்தை நிலையாக அமைத்து வாசுகியைத் தம் மலைவில்லின் நாணாக வில்லினை வளைத்து இணைத்து , அழகிய நிலைபெற்ற அணியாகுமாறு விடம் உண்டு நீலகண்டராய் நம்மனக்கண்முன் காட்சி வழங்குகின்றார் .

குறிப்புரை :

இந்திரம் - தலைமை . ` இமையவர்கள் ` என்பது பின்னர் வருதலால் , ` ஈந்தது அவர்கட்கே ` என்பது பெறப்படும் . துதைதல் - செறிந்து மிக்கிருத்தல் ; துதைந்தார் , ` தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனி ` ( தி .12 திருநாவு . புரா . 140) என்றதும் காண்க . ` மனம் ` என்றது , அடியார்களுடையதை . ` மலையை வளைத்தார் ` என வருவித்து முடிக்க . அம் திரத்து அணியா நஞ்சு உண்டார் - அழகு நிலைபெற்ற பொருள்களில் அழகிய பொருளாக நஞ்சினை உண்டார் ; உண்டு கண்டத்தில் வைத்தார் .

பண் :

பாடல் எண் : 9

பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
பிறவி யிறவி யிலாதார் போலும்
முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
முழுநீறு பூசும் முதல்வர் போலும்
கண்டத் திறையே கறுத்தார் போலும்
காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

எல்லா உடம்புகளையும் பாதுகாக்கும் தலைவரான திருவாரூர்ப் பெருமானார் பிறப்பு இறப்பு அற்றவராய் , நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவராய் , உடல் முழுதும் நீறு பூசும் தலைவராய்க் கழுத்து சிறிதே கறுத்தவராய்க் காளத்தி , குடந்தை , நாகை என்ற காரோணப்பதிகள் ஆகியவற்றை உகந்தருளியிருப்பவராய் அண்டத்துப் புறத்தும் உள்ளவராய் நம் மனக்கண்முன் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

பிண்டம் - ( உயிர்களது பலவகைப்பட்ட ) உடம்புகள் . ` அவைகளைக் காப்பவன் இறைவனேயாகலின் , நாம் அதுபற்றிக் கவலுதல் வேண்டா ` என்பது குறிப்பு . முண்டம் - நெற்றி . ` முக்கண் ` என்பது , ` மூன்றாவது கண் ` என்னும் பொருளதாய் நின்றது . இறை - சிறிது .

பண் :

பாடல் எண் : 10

ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை யஞ்சே லென்பார்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலத்தானப் பெருமான் ஒரு காலத்தில் தாம் ஒருவரேயாகிப் பல ஊழிக் காலங்களையும் கண்டு , கங்கையைப் பெருகாதபடி சடையில் கொண்டு தவிர்த்து , பிறப்பு துயரம் சாக்காடு என்பன இல்லாதவராய் , உருகாத மனத்தவர் உள்ளத்தில் உகந்து தங்காதவராய் , தம்மை விரும்புவர் உள்ளத்தை என்றும் நீங்காதவராய் அருகில் வந்து எனக்கு அஞ்சேல் என்று அருள் செய்பவர் ஆவர் .

குறிப்புரை :

` ஒருகாலம் ` என்றது காலத்திற்கு அப்பாற்பட்ட நிலையை ; அஃது உலகம் தோன்றாதிருந்த நிலை . ஒன்று - தாம் ஒரு பொருளே . ஊழி , உலகம் தோன்றி ஒடுங்கும் கால அளவு . ` வெள்ளம் ` என்றது , கங்கையை . ` தவிர்த்தார் ` என்றது , அதனைச் சடையில் அடக்கினமையை . இனி , ` ஊழி வெள்ளத்தை நீக்கி , உலகம் மீளத் தோன்றுமாறு செய்தார் ` எனலுமாம் . ` இடும்பை ` என்பது , ` சாக்காடு ` என்பதனோடும் இயையும் ; ` பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் ` என்பது பொருள் . உகப்பார் - விரும்புவார் . ` அருகாக வந்தென்னை அஞ்சேல் என்பார் ` என்ற அருந்தொடர் , சுவாமிகளுக்கு இறைவன் அநுபவப் பொருளாய் இருந்தமையை இனிது விளக்கும் .

பண் :

பாடல் எண் : 11

நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்
கோளரக்கர் கோன்தலைகள் குறைத்தார் போலும்
சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்
திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

பொழிப்புரை :

அணி ஆரூர்த் திருமூலட்டானப் பெருமானார் நல்ல ஒழுக்க நெறிகளை நூல்கள் வாயிலாக அறிவித்து ஞானப்பெருங்கடற்கு உரிமை உடைய தலைவராய் , வேள்வியில் கொல்லப்பட்டதனை வேள்வி செய்யும் அடியவர் உகப்பிற்காக நுகர்பவராய் , இராவணன் தலைகள் பத்தினையும் நசுக்கியவராய்ப் பகைவருடைய திரிபுரங்களை அம்பு எய்து அழித்தவராய்த் திசைகளிலும் திசைகளில் உள்ள பொருள்களிலும் பரவியவராய் , ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும் அடியார் உகப்பிற்காக ஆயிரம் திருநாமங்களை உடையவராய் , அடியவர்கள் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றார் . சென்றார் - மெலித்தல் விகாரம் .

குறிப்புரை :

நடை - ஒழுக்கம் . நவின்றது , நூலால் என்க . ` ஞானப் பெருங்கடற்கு ஓர் நாதர்போலும் ` என்பது முன்பும் ( பா . 4) வந்தது . ` தொல் , நல் ` என்பன , ` தொன்று நன்று ` என நிற்றல்போல , ` கொல் ` என்பது , ` கொன்று ` என நின்றது , தொழிலும் பண்பாம் முறைமைபற்றி யென்க . ` கொலை ` என்பது பொருள் . கொன்றது - கொல்லப்பட்டது ; இத்தொடர் , வேள்வியுட் கொல்லப்பட்டதனைக் குறித்தது ; ` அது தீதாயினும் , நன்றென்று கருதிச் செய்வாரது கருத்து நோக்கி ஏற்றுக் கொள்கின்றான் ` என்பது திருக்குறிப்பு . இனி , ` கொன்றது ` என்றது , ` கொன்றதனால் ஆகிய பாவம் ` எனக் கொண்டு , ` அதனை ` கொலைத் தொழில் வடிவாய் நின்று நீக்கினார் ` எனக் கோடலுமாம் . ` கொன்றது வினையைக் கொன்று நின்ற அக் குணம் என்று ஓரார் ` என்பது சிவஞானசித்தி . ( சூத்திரம் . 1.71.) ` குறைத்தல் ` ஈண்டு , சிறிது கெடச் சிதைத்தல் . சென்று ஆர் - ( வானத்தில் ) திரிந்து ஆர்க்கின்ற . ` சென்று எய்தார் ` என்றியைப்பினுமாம் . திசை அனைத்தும் ஆனார் - திசைகளில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஆயினார் . அன்று ஆகில் - ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும் ; சிறப்பும்மை தொக்கது . ` ஆயிரம் ` என்றல் , அளவின்மை காட்டுவதொரு வழக்கு . ஒருபெயரும் அவருடைய பெயரல்லாமை , அஃது அவரது உண்மை நிலையை வரையறுத்துணர்த்தாமையானும் , அளவற்ற பெயர் அவருடைய பெயர்களாதல் அவை அவரது அருள் நிலையை ஒவ்வோராற்றான் விளக்கலானும் என்க . ` ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் - திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ ` ( தி .8 திருவாசகம் . திருத்தெள்ளேணம் .1) என்றருளிச் செய்தமையுங் காண்க .

பண் :

பாடல் எண் : 1

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறல்
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
பருப்பதத்தில் அருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
அருமணியை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

செல்வம் தரும் சிந்தாமணியாய் , இனிக்கும் தேன் , பால் , கருப்பஞ்சாறு , தெளிவாகிய அமுதம் போன்றவனாய்ச் சிறந்த ஆசிரியனாய் , குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரை சச்சரி இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய் , எங்கும் கிட்டுதற்கு அரிய பெரிய இரத்தினம் பவளம் முத்து கிளிச்சிறை என்ற பொன் போன்றவனாய்ச் சீசைலத்தின் விலைமிக்க அணிகலனாய் , பாவத்தைப் போக்கும் அரிய மாணிக்கமாய் உள்ள ஆரூர்ப் பெருமானை இதுகாறும் அறியாது நாய் போன்ற , அவன் அடியேன் மறந்திருந்தவாறு கொடியது .

குறிப்புரை :

திரு - அழகு . ` தேறலை பொன்னை ` என்னும் ஐயுருபுகள் தொகுத்தலாயின . தேறல் - தேன் . குரு - நிறம் . குருமணி - சிறந்த ஆசிரியன் என்றுமாம் . குழல் முதலியன வாச்சியவகைகள் . பாணி - தாளம் ; அவற்றை உடையவன் என்றவாறு . இனி , நடனமாடுதல் பற்றிக் கூறியதுமாம் . பருமணி - பெரிய இரத்தினம் . பருப்பதம் - சீபருப்பதம் . அருங்கலம் - விலைமிக்க அணிகலம் . அருமணி - கிடைத்தற்கரிய இரத்தினம் . அயர்த்தல் - மறுத்தல் . ` மறந் திருந்தவாறு கொடிது ` என்க .

பண் :

பாடல் எண் : 2

பொன்னேபோல் திருமேனி யுடையான் தன்னைப்
பொங்குவெண் ணூலானைப் புனிதன் தன்னை
மின்னானை மின்னிடையாள் பாகன் தன்னை
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தத்துவனை யுத்தமனைத் தழல்போல் மேனி
அன்னானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

பொன்னார் மேனியனை , வெண்ணூல் அணிந்த புனிதனாய் ஒளி வீசுவானை , பார்வதிபாகனை , யானைத்தோல் போர்வையனைத் , தன்வயம் உடையவனைத் தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனை , மெய்ப்பயனை , மேம்பட்டவனை , தழல்போன்ற செந்நிற மேனியனை - இவ்வாறெல்லாம் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்கும் ஆரூர்த் தலைவனை இதுகாறும் அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

மின்னான் - மின்போலும் ஒளியுடையவன் . தன்னான் - தன்வயமுடையவன் . தத்துவன் - உண்மைப் பொருளாயுள்ளவன் . அன்னான் - அவன் . மேனியையுடைய அவன் என்க . ` அன்னைபோல்பவன் ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

ஏற்றானை ஏழுலகு மானான் தன்னை
யேழ்கடலு மேழ்மலையு மானான் தன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்
கொடுமழுவாள் கொண்டதோர் கையான் தன்னைக்
காற்றானைத் தீயானை நீரு மாகிக்
கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள
ஆற்றானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

இடபவாகனனாய் , ஏழ்கடலும் ஏழ்மலையும் ஏழுலகும் ஆகிப் பரந்திருப்பவனாய்க் கூற்றுவனாய்த் தருமராசருடைய ஏவலனான கூற்றை உதைத்தவனாய் , மழுப்படை ஏந்திய கையனாய் , காற்றும் தீயும் நீருமாகி நறுமணம் கமழும் செஞ்சடைமேல் கங்கையைத் தரித்தவனாய் உள்ள , ஆரூரிலுள்ள , அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

ஏறு - விடை . ஏழ்மலை , ஏழ்தீவைச் சூழ்ந்திருப்பன . கூற்றான் - கூற்றுவனாய் இருப்பவன் . ` வெள்ளமாகிய கங்கை ஆற்றான் ` என மாறிக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 4

முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை
மூவாத மேனிமுக் கண்ணி னானைச்
சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்
சங்கரனைச் சங்கக் குழையான் தன்னை
மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை
மறுமையும் இம்மையு மானான் தன்னை
அந்திரனை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட கொடிய வினைகளைத் தீர்ப்பவனாய் , மூப்படையாத் திருமேனியில் மூன்று கண்கள் உடையவனாய்ச் சந்திரனும் சூரியனும் ஆகியவனாய் , எல்லோருக்கும் நன்மை செய்பவனாய் , சங்கினாலாகிய காதணியை உடையவனாய் , மந்திரமும் வேதத்தின் பொருளும் மறுமையும் இம்மையுமாய் அழகுநிலை பெற்றிருக்கும் ஆரூரிலுள்ள அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

முந்திய - முற்பிறப்புக்களிற் செய்யப்பட்டு வந்த . சங்கரன் - இன்பத்தைச் செய்பவன் . அம் திரன் - அழகு நிலை பெற்றவன் ; என்றும் ஒருநிலையாய் இருப்பவன் . ` அந்தரன் ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 5

பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்
பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே
உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்
ஓரிபல விடநட்ட மாடி னானைத்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி
நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற
அறநெறியை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

பிறக்கும் வழிகளாகவும் , பெருமையாகவும் , தலைக்கோலம் அணிந்தவனாகவும் , பித்தனாகவும் , அடியவர்கள் உள்ளத்தில் உறவுதரும் வழியாகவும் , வேள்வியாகவும் அமைந்து , சுடுகாட்டிலுள்ள நரிகள் அஞ்சி ஓடக் கூத்தாடுபவனாய்த் துறவு நெறியாகவும் புகையாகவும் காட்சி வழங்கிப் பூவில் நறுமணம் போல உலகெங்கும் பரந்துள்ளவனாய் உள்ள அறநெறியை அறிவித்த ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

பிற நெறி - பிறக்கும் நெறி ; பந்தம் . பீடு - பெருமை . பிஞ்ஞகன் - தலைக்கோலத்தை உடையவன் . உற - உறவு ; முதனிலைத் தொழிற்பெயர் . ஓமம் - வேள்வி . ஓரி - நரி . விட - ( அஞ்சி ) நீங்க . துற - துறவு ; இதனையும் , ` உற ` என்பது போலக் கொள்க . இது பிறவி நெறிக்கு மாறானது ; வீட்டுநெறி . தூபம் - நறும்புகைப் பொருள் ; என்றது வேள்விப் பொருளை . இது ` ஓமமாய் ` என்பதன் பின் வைக்கற் பாலது . தோற்றம் - உலகத் தோற்றம் ; இஃது ஆகுபெயராய் , அதன் காரணத்தைக் குறித்தது . நாற்றமாய் - நாற்றம்போல . தாமரை மலராகிய இருக்கைமேல் வைத்து வழிபடப்படுதல்பற்றி ` நாற்றமாய் நன்மலர்மேல் உறையாநின்ற ` என்றருளிச் செய்தார் . அறநெறி - அறநெறிக்கு முதல் .

பண் :

பாடல் எண் : 6

பழகியவல் வினைகள் பாற்று வானைப்
பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்கும்
குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்
கொடுகொட்டி கொண்டதோர் கையான் தன்னை
விழவனை வீரட்டம் மேவி னானை
விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை
அழகனை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

பழக்கத்தினால் ஏற்படும் வருவினையை அழிப்பவனாய் , ஆன்மாக்களுக்குத் தலைவனாய் , அக்கினித் தேவனாய்ப் பாவங்கள் போக்கும் இளையவனாய் , பாம்பினை ஆட்டுபவனாய்க் கொடுகொட்டிப்பறையைக் கையில் கொண்டவனாய் , விழாக்களில் மேவி இருப்பவனாய் , வீரட்டத்தில் உறைபவனாய்த் தேவர்கள் துதித்து விரும்பும் அழகனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

` பழகிய வல்வினைகள் ` என்றது பழக்கத்தினால் செய்யப்படும் ஆகாமிய வினைகளை . பாற்றுவான் - நீக்குவான் . பாவகன் - அங்கியங் கடவுள் ( அக்கினி தேவன் ). விழவன் - விழாக்களை உடையவன் ; மங்கலத்தையே உடையவன் . விரும்புவான் - விரும்பப்படுபவன் .

பண் :

பாடல் எண் : 7

சூளா மணிசேர் முடியான் தன்னைச்
சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்
கோள்வா யரவ மசைத்தான் தன்னைக்
கொல்புலித்தோ லாடைக் குழகன் தன்னை
நாள்வாயும் பத்தர் மனத்து ளானை
நம்பனை நக்கனை முக்க ணானை
ஆள்வானை ஆரூரில் அம்மான் தன்னை
அறியா தடிநாயே னயர்த்த வாறே.

பொழிப்புரை :

சூளாமணியை அணிந்த முடியை உடையவனாய் , திருநீறு தரித்த ஒளியினனாய் , கொடிய பாம்பினை , இடையில் இறுக்கிக் கட்டியவனாய்ப் புலித்தோல் ஆடையை அணிந்த இளையவனாய் , எப்பொழுதும் அடியவர் உள்ளத்தில் இருந்து அவரால் விரும்பப்படுபவனாய் , ஆடை அற்றவனாய் , முக்கண்ணனாய் , எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

சூளாமணி - உச்சிமணி ; இது பாம்பின் தலையில் உள்ளதைக் குறித்தது . கோள்வாய் - கொல்லும்வாய் . நாள் வாயும் - நாள்தோறும்வந்து வழிபடுகின்ற . ஆள்வான் - எல்லா உலகங்களையும் எல்லாப் பொருள்களையும் ஆளுகின்றவன் .

பண் :

பாடல் எண் : 8

முத்தினை மணிதன்னை மாணிக் கத்தைத்
மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து
கோளரவொன் றாட்டுங் குழகன் தன்னைப்
பத்தனைப் பத்தர் மனத்து ளானைப்
பரிதிபோல் திருமேனி யுடையான் தன்னை
அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

முத்து , மணி , மாணிக்கம் , என்றும் மூப்படையாத கற்பகத்தின் கொழுந்து , வயிரம் இவற்றை வைத்துக் கோத்த மாலை போல்வானாய்க் காளையை இவர்ந்து பாம்பாட்டும் இளையவனாய் , எல்லோரிடத்தும் அன்புடையவனாய் , பக்தர்கள் மனத்தில் நிலைத்து இருப்பவனாய் , சூரியனைப் போல ஒளி வீசும் திருமேனியை உடையவனாய் , எல்லோருக்கும் தலைவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

மூவாத - கெடாத , கொத்து - எல்லா மணியும் கோக்கப்பட்ட மாலை . இதனை , ` வயிரத்தை ` என்பதன் பின்னர்க்கூட்டுக . ` ஊர்ந்து ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது . பத்தன் - அன்புடையன் ; இரக்கம் உடையவன் . பரிதி - சூரியன் .

பண் :

பாடல் எண் : 9

பையா டரவங்கை யேந்தி னானைப்
பரிதிபோல் திருமேனிப் பால்நீற் றானை
நெய்யாடு திருமேனி நிமலன் தன்னை
நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்
செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்
செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

படமெடுத்தாடும் பாம்பைக் கையில் ஏந்தியவனாய்ச் சூரியனைப் போலச் சிவந்த மேனியில் பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனாய் , நெய் அபிடேகம் செய்த திருமேனியை உடைய தூயவனாய் , நெற்றியில் மூன்றாவது கண் உடையவனாய்ச் செழும்பவளத்திரள் போன்ற செந்நிறத்தினனாய்ச் செஞ்சடையில் வெண்பிறை சூடியவனாய்த் திருவையாற்றை உகந்தருளியிருப்பவனான ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

பை ஆடு அரவம் - படத்தையுடைய ஆடுகின்ற பாம்பு . பால் நீறு - பால்போன்ற நீறு . மற்றொருகண் - பிறர் ஒருவர்க்கும் இல்லாத வேறு ஒருகண் . ஐயாறு - ` திருவையாறு ` என்னும் சோழ நாட்டுத் தலம் .

பண் :

பாடல் எண் : 10

சீரார் முடிபத் துடையான் தன்னைத்
தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்
பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப்
பெண்ணிரண்டும் ஆணுமாய் நின்றான் தன்னைப்
போரார் புரங்கள் புரள நூறும்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை
ஆரானை ஆரூரி லம்மான் தன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை :

அழகிய பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் புகழ் அழியுமாறு கால்விரலால் உடல் சிதைய வருத்திப் பிறகு அவனுக்கு அந்தப் பெயருக்கு ஏற்ப எல்லாரையும் அழச்செய்பவன் என்ற பெருமையைக் கொடுத்தானாய்ப் பார்வதி கங்கை என்ற பெண்பாலர் இருவரைக் கொண்ட ஆண்வடிவு உடையவனாய்ப் போரிட்ட திரிபுரங்கள் அழியுமாறு சாம்பலாக்கிய புண்ணியனாய் , வெண்ணீறு அணிந்தானாய் , அடியவர்களுக்குத் தெவிட்டாதவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே .

குறிப்புரை :

தேசு - ஒளி ; அழகு ; புகழுமாம் . நூக்கி - வருத்தி . பேர் - புகழ் . பெண் இரண்டு - உமையும் , கங்கையும் . ` ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை ` ( தொல் . எழுத்து . 304) என்பவாகலின் , ` பெண் இரண்டும் ` என அஃறிணையாக அருளிச் செய்தார் . ` ஆணு மாய் ` என்றது , ` தானுமாய் ` என்னும் பொருட்டாய் நின்றது . நூறும் - அழித்த . ஆரான் . ( அடியவர்கட்குத் ) தெவிட்டாதவன் .

பண் :

பாடல் எண் : 1

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்
ஏழ்கடலும் ஏழுலகும் ஆயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

செம்பொன்னால் செய்த மணிகள் இழைக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்திலுள்ள எம் செல்வன் எம்மைத் தளையிடும் ஊழ்வினையால் ஏற்படும் நோயைத் தீர்த்தவன் . ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவன் . நறுமணம் கமழும் கொன்றை மாலையன் . பிறையோடு சூடிய முடிமாலையை உடையவன் . தேவர்கள் வேண்ட ஓரம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவன் . தீயில் கூத்தாடுபவன் . பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவன் .

குறிப்புரை :

பந்தம் - தளை . வம்பு - வாசனை . உந்து - எழுவிக்கின்ற . ` அனலாடி ` என்னும் எச்சம் எண்ணுப் பொருளது . ` காண் ` என்பன அசைநிலைகள் . ` எம் செல்வன் ` என்பதனை எழுவாயாக எடுத்துக்கொண்டுரைக்க . தான் , ஏ அசைநிலைகள் .

பண் :

பாடல் எண் : 2

அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந்
தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்தும்
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

இடையில் எலும்புகளை அணிந்தவன் . அடியார்களுக்கு எப்பொழுதும் கிட்டுதற்கு அரிய அமுதமாய் இனிக்கும் திருவையாற்றில் உறையும் இறைவன் . கொக்கிறகு , கொன்றை மாலை , குளிர்ந்த பிறை , கொடுமை மிக்க பாம்பு என்பன ஒருசேரத் தங்கி யிருக்கும் சடையினன் . தொண்டர்கள் செல்லும் தூய வழியைக் காட்டுபவன் ஆகிய சிவபெருமான் தேவர்கள் துதித்துப் புகழுமாறு எல்லாத்திக்கிலும் நிறைந்த புகழை உடைய திருவாரூரில் திருமூலத் தானத்து உறையும் எம் செல்வனாகக் காட்சி வழங்குகிறான் .

குறிப்புரை :

அக்கு உலாம் - எலும்பு பொருந்திய . அண்ணிக்கும் - தித்திக்கின்ற . ஐயாறு , தலம் . ` கொக்கு ` என்றது , அதன் இறகை . பீலி - மயில் இறகு . கூர் - ( கொடுமை ) மிக்க . தொக்கு உலாம் - கூடித் தங்குகின்ற ; ` தூநெறி ` என்றது , அதன்கண் மேற்கொள்ளப்படும் ஒழுக்கங்களை . ` ஏத்தும் புகழ் ` என இயையும் . ` சென்னி ` என்பதை , ` கொக்கு ` என்பதற்கு முன்வைத்து , ` சென்னிச் சடையினன் ` என இயைக்க

பண் :

பாடல் எண் : 3

நீரேறு சடைமுடியெம் நிமலன் தான்காண்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தான்காண்
வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்
வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
காரேறு முகிலனைய கண்டத் தான்காண்
கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
சீரேறு மணிமாடத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

சடைமுடியில் கங்கையைத் தரித்த தூயவன் . நெற்றிக்கண்ணன் . கச்சணிந்த முலைகளை உடைய பார்வதி பாகன் . பிறைசேர் சடையன் . பெருந்தேவன் . கார்முகில் போன்ற நீலகண்டன் . கல்லாலின் கீழ் இருந்து அறங்களைச் சனகர் முதலிய நால்வருக்கு மோன நிலையில் உபதேசித்தவன் . சிறப்பு மிக்க அழகிய மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்தில் எம் செல்வனாக அப்பெருமான் உறைகின்றான் .

குறிப்புரை :

வார் - கச்சு . வனம் - அழகு . மாதேவன் ( மகாதேவன் ) - பெருந்தேவன் ; முழுமுதற் கடவுள் . கார் - கருமை நிறம்

பண் :

பாடல் எண் : 4

கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்
கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்
ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தேன்மிக்க மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் காட்டில் திரிகின்ற யானைத் தோலைப் போர்த்தியவன் . கற்பகம் போன்ற கொடையாளி . கூற்றுவனை ஒருகாலத்து உதைத்தவன் . புலால் நாற்றம் கமழும் தலையோட்டில் பிச்சை எடுப்பவன் . உத்தமன் . ஒற்றியூரில் விரும்பி உறைபவன் . காளையை இவரும் தலைவன் . சூரியன் ஒருவனுடைய பற்களை உதிர்த்த முதற்பொருள் ஆவான் .

குறிப்புரை :

கான் ஏறு - காட்டில் திரிகின்ற ; இஃது இன அடை . கற்பகம் , வேண்டுவார் வேண்டுவதை ஈவது . உடைதலை , வினைத்தொகை ; ` உடலின் நின்றும் நீங்கிய தலை ` என்றதாம் . ஆதித்தன் - சூரியன்

பண் :

பாடல் எண் : 5

பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
வானவரு மறியாத நெறிதந் தான்காண்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய பூக்கும் நிலையிலுள்ள மலர்கள் , தூபம் , தீபம் , நல்ல சந்தனம் இவற்றைக் கொண்டு துதித்து நாள்தோறும் தேவர்கள் சிறப்போடு பூசனை செய்யும் திருவாரூரில் திருமூலத் தானத்தில் உறையும் செல்வன் பெண்ணும் ஆணுமாகிய உருவுடையவனாய்ப் பிறப்பு இறப்பு இல்லாதவனாய்ப் பாவத்தில் அகப்பட்ட என்மனத்தின் மயக்கத்தை நீக்கியவனாய்த் தேவர்களும் அறியாத வீடுபேற்றிற்கு உரிய வழியை எனக்கு அருள்பவன் .

குறிப்புரை :

பெண் உருவோடு ஆண் உருவம் ஆகினமையே , அவனது திருமேனியிலும் , உலகத்திலுங் கொள்க . மறப்படும் - பாவத்தின்கண் அகப்பட்ட ; இது சமண் சமயக்கொள்கையில் மயங்கியதைக் குறித்தது . ` பின் எனக்கு , வானவரும் அறியாத நெறி தந்தான் ` என்க . ` நறா ` என்பது செய்யுளாகலின் , இறுதி ஆகாரம் குறுகிற்று . தேன் என்பது பொருள் . சிறப்பு - மேன்மை ; விழாவுமாம்.

பண் :

பாடல் எண் : 6

சங்கரன்காண் சக்கரம்மாற் கருள்செய் தான்காண்
தருணேந்து சேகரன்காண் தலைவன் தான்காண்
அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
எங்கள்பெரு மான்காண்என் னிடர்கள் போக
அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தாமரை களையாக முளைக்கும் வயல்களால் சூழப்பட்டதாய்த் தேவர்களும் போற்றும் திருவாரூரில் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் எல்லோருக்கும் இன்பத்தைச் செய்பவன் . திருமாலுக்குச் சக்கரப்படையை அருளியவன் . பிறை சூடிய தலைவன் . தாமரையிலுள்ள பிரமன் தலைகளுள் ஒன்றனை அறுத்தவன் . அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருவையாற்றில் உறைபவன் . எங்கள் தலைவன் . எங்கள் துன்பங்கள் நீங்குமாறு அருள் செய்யும் இறைவன் .

குறிப்புரை :

சங்கரன் - இன்பத்தைச் செய்பவன் . தருண + இந்து = தருணேந்து ; இளஞ் சந்திரன் . வடமொழிக் குணசந்தி . சேகரம் - தலை . ` தலைவன்தான் ` என்றதில் தான் , அசைநிலை . ஐயாறு , தலம் . ` எங்கள் ` என்றது , அடியராய் இருப்பவரை உளப்படுத்து . இறைவன் - கடவுள் .

பண் :

பாடல் எண் : 7

நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்
நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
மின்திகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
துன்றுபொழிற் கச்சியே கம்பன் தான்காண்
சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த
தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தென்றல் ஊரைச் சேர்ந்த சோலைகளால் மணங்கமழும் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் நன்மையை அருளித் தீமையைப் போக்கும் நம் தலைவன் . நான்மறையோடு ஆறங்கம் ஆயினவன் . மின்னல் போன்ற ஒளியை உடைய முற்பட்டவன் . காளை எழுதிய கொடியை உடையவன் . பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பன் . சோற்றுத்துறையிலும் உறைபவன் .

குறிப்புரை :

` நம் ` என்றது , அனைவரையும் உளப்படுத்து . மின் திகழும் - மின்னல்போல விளங்குகின்ற . ஆதி - முதல்வன் . துன்று - நெருங்கிய . ஆர் மணம் - நிறைந்த வாசனை . ` சூழ்ந்த ஆருர் ; கமழும் ஆரூர் ` எனத் தனித்தனி முடிக்க .

பண் :

பாடல் எண் : 8

பொன்நலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்
புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
கோலமா நீறணிந்த மேனி யான்காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

சிறந்த வளத்தை உடைய வயல்களால் சூழப்பட்ட திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் பொன் நிறக்கொன்றை சூடிய சடையினன் . புகலூரிலும் பூவணத்திலும் உறைபவன் . மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதிபாகன் . வேதியன் , பூணூல் அணிந்த மார்பினன் . பகைவருக்கு அச்சமும் அடியாருக்கு நன்மையும் தருகின்ற , முத்தலைச் சூலத்தை ஏந்தியவன் . திருநீற்றை அழகாக அணிந்த திருமேனியினன் .

குறிப்புரை :

பொன் நலத்த - பொன்னினது அழகை உடைய . வேதியன் - வேதம் ஓதுபவன் . கொன் - அச்சத்தைத் தருகின்ற . நலத்த - நன்மையையுடைய . உயிர்களது பாவத்தை அழித்தலின் , ` நன்மை உடைய மூவிலைவேல் ` என்றருளினார் ; ` கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணம்என் றோரார் ` ( சிவஞான சித்தி . சூ .1.71.) என்றது காண்க . கோலம் - அழகு . மாநீறு . பெருமை உடைய நீறு . ` அழகாக அணிந்த ` என்றலுமாம் . ` செவ்வயல் , நலத்தவயல் ` என இயையும் . செம்மண் விளைவை மிகத் தருவதாம் . நலத்த - வளமுடைய .

பண் :

பாடல் எண் : 9

விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்
மண்டலத்தில் ஒளிவளர விளங்கி னான்காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்
புத்தேளுங் காண்பரிய புராணன் தான்காண்
தெண்டிரைநீர் வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

தெளிந்த அலைகளை உடைய நீர்வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் பகைவர் முப்புரங்களையும் எரித்தவன் . கடலில் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தினன் . வான மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒளிவீசுமாறு அருளியவன் . வாய்மூரிலும் மறைக்காட்டிலும் உறைபவன் . செந்தாமரைக் கண்ணானாகிய திருமாலும் தாமரையில் தங்கும் பிரமனும் காண முடியாத பழையவன் .

குறிப்புரை :

விண்டவர் - நீங்கியவர் ; பகைவர் . வேலை - கடல் . மண்டலம் , சூரியனும் சந்திரனும் ; அவைகளில் ஒளிவிளங்குதல் . இறைவன் திருவுள்ளத்தினாலே என்றவாறு . இனி , ` மண் தலம் ` எனப் பிரித்து , ` மண்ணுலகத்தில் ` என்றுரைத்தலுமாம் . ` மேலை ` என்பதில் , ` ஐ ` சாரியை . புராணன் - பழையோன் .

பண் :

பாடல் எண் : 10

செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
தென்னானைக் காவன்காண் தீயில் வீழ
மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வஞ்சகர்பா லணுகாத மைந்தன் தான்காண்
அருவரையை யெடுத்தவன்தன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு தோளுநெரிந் தலற அன்று
திருவிரலால் அடர்த்தவன்காண் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.

பொழிப்புரை :

திருவாரூர் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் போரில் மேம்பட்ட திருமாலாகிய காளையை உடையவன் . அழகிய திருவானைக்காவில் உறைபவன் . பகைவர் முப்புரத்தை எரித்தவன் . வஞ்சகர் உள்ளத்தில் நெருங்காத வலிமை உடையவன் . கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரிக்கப்பட அவன் அலறுமாறு முன்னொருகால் திருவிரலால் வருத்தியவன் .

குறிப்புரை :

செரு - போர் . ` செரு வளரும் ` என்றது , இன அடை . மால் - பெரிய ; ` மாயோன் ` என உரைப்பினுமாம் . மருவலர் - பகைவர் . மைந்தன் - வலிமையுடையவன் . வஞ்சகத்தில் அகப் படாமைக்கும் வன்மை வேண்டும் என்க . அருவரை - பெயர்த்தற்கரிய மலை , திருக்கயிலை .

பண் :

பாடல் எண் : 1

இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றும்
சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்
தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றும்
கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சே ! நீ துன்பங்கள் ஒழியும் பகையை ஆராய்வாயாயின் இங்கே வந்து நான் சொல்வதனைக் கேள் . செந்நிறம் பொருந்திய சடையில் கங்கையை அணிந்தவனே ! ஞானஒளியாய் உள்ளத்தில் விளங்குபவனே ! திருநீறணிந்த தோளனே ! கடல்விடம் உண்டு கறுத்த கழுத்தினனே ! மான் குட்டியை ஏந்திய கையனே ! ஆற்றலுடைய காளை வாகனனே ! கிட்டுதற்கரிய அமுதே ! எல்லோருக்கும் முற்பட்டவனே ! ஆரூரனே ! எனப்பலகாலும் அழைப்பாயாக .

குறிப்புரை :

இடர் கெடும் ஆறு - துன்பம் ஒழியும் வகையை . எண்ணுதியேல் - ஆராய்வையாயின் ; ` நீ வா ` என்பது , ` யான் சொல்வதைக் கேள் ` என்னும் பொருள்பயப்பதொரு வழக்கு . ` ஈண்டு அலறா நில் ` என இயையும் . ` ஈண்டு ஒளி ` என்று இயைத்து , ` மிக்க ஒளியினையுடைய ` என்றுரைத்தலும் ஆம் . ` சுடர் ஒளி `. வினைத் தொகை ; ` ஒருகாலைக் கொருகால் மிக்கெழுகின்ற ஒளி ` என்பது பொருள் . உள் - உயிருக்குள் . ` சோதி ` என்பது அதனையுடைய பொருள்மேலாகி வாளா பெயராய் நின்றது . உயிரது அறியாமை நீங்குந்தோறும் , இறைவன் அதனுள் அறிவு வடிவாய் நிறைந்து நிற்றல் வெளிப்பட்டு வருதலின் , ` சுடர் ஒளியாய் உள்விளங்கு சோதி ` என்று அருளிச்செய்தார் . கலை மான் - ஆண் மான் . மறி - கன்று . ` என்றென்று ` என்பதன் பின் , ` சொல்லி ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . அடுக்கு , பல்கால் அழைத்தலைக் குறித்தது . நில் - ஒழுகு . ` அலறா நில் ` என்னும் நிகழ்காலச் சொல் இடைவிடாமையை விதித்தற் பொருட்டாய் நின்றது . இறுதியில் , ` இதுவே இடர்நீங்கும் வழியாகும் ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க . இவை பின்வருகின்ற திருப்பாடல்கட்கும் ஒக்கும் . எண்ணத்தின் பின்னதே சொல்லாகலின் , ` இவ்வாறெல்லாம் எண்ணி ` என்பது முன்னரே முடிந்தது . ` உலகியலை நினையாது , இறைவனது அருள் நிலைகளையே நினைந்தும் , சொல்லியும் , பணிந்தும் ஒழுகுவார்க்கே துன்பம் அடியோடு ஒழிவதாகும் ` என்பது கருத்து . ` தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் - மனக்கவலை மாற்றலரிது ` ( குறள் . 7.) என எதிர்மறை முகத்தான் உணர்த்தியதுணர்க . இடர்தான் , ` பேரிடரும் , சிற்றிடரும் ` என இருவகைத்து , பேரிடர் , கட்டு நீங்காதார்க்கு வினைகளான் இடையறாது வருவன ; சிற்றிடர் , கட்டு நீங்கினவர்க்கு முன்னைப் பழக்கத்தால் நிகழும் மறதியான் ஒரோவழி வருவன ; இவ்விருவகை இடர்களுக்கும் காரணமான கட்டும் , கட்டுள் நின்ற பழக்கமும் நீங்குதல் இறை பணியால் அல்லது இன்மையின் , பொதுப்பட , ` இடர் ` என அருளிச் செய்தார் . கட்டு நீங்காதார் செய்யும் பணி அறிவுப் பணியும் , கட்டு நீங்கினார் செய்யும் பணி அன்புப் பணியும் ஆகும் . என்னையெனின் , அவர் முறையே , ` இடர் கெடுமாறு இதுவே ` என்று அறிந்த அறிவு காரணமாகவும் , ` இடர்களையாரேனும் எமக்கு இரங்கா ரேனும் - படரும் நெறி பணியாரேனும் ` ( தி .11 அற்புதத் திருவந்தாதி .2.) இப்பணி தானே எமக்கு இன்பமாவது என்னும் அன்பு காரணமாகவும் செய்தலான் என்க . இப்பணியினைச் சிவாகமங்கள் , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என நான்காக வகுத்து , ` கீழ் உள்ளவர்கள் மேலனவற்றிற்கு உரியரல்லர் ; மேலுள்ளவர்கள் கீழ்உள்ளவற்றிற்கும் உரியர் ; ஆகவே , ஞானிகள் மேற்சொல்லிய நான்கிற்கும் உரியர் ` எனக் கூறும் . இதனை , ` ஞானயோ கக்கிரியா சரியை நான்கும் நாதன்றன் பணி ; ஞானி நாலினுக்கும் உரியன் ; ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன் யோகி ; கிரி யாவான்றான் ஒண்கிரியை யாதி யானஇரண் டினுக்குரியன் ; சரியையினில் நின்றோன் அச்சரியைக் கேயுரியன் ... ` என்னும் ( சிவஞானசித்தி சூ . 12.5) திருவிருத்தத்தால் நன்குணர்க . இந் நால்வருள் ஞானிகள்தம் பணி அன்புப் பணி என்றும் , மற்றையோர் பணி அறிவுப் பணி என்றும் கொள்க . இதனால் , கட்டுற்று நின்றார்க்கேயன்றி , கட்டு நீங்கி வீடு பெற்றார்க்கும் இறைபணி இன்றியமையாததாதல் தெற்றென உணர்ந்து கொள்ளப்படும் . செல்வமுற்றாரும் , தமக்கு ஒரோவழி வரும் சிறு துன்பத்தையும் பெருந் துன்பமாக நினைத்து வருந்துதல்போல , வீடு பெற்றாரும் ஒரோவழித் தமக்கு மறப்பினால் தோன்றும் சிறிது இடரினையும் பேரிடராக நினைந்து வருந்துவர் ; அதனை ஆங்காங்கு அறிந்துகொள்ளலாகும் . இறைபணியின் பெருமை யுணர்த்துவனவே திருப்பதிகங்களுட் பெரும்பாலனவாயினும் , அவற்றுள் இத்திருப்பதிகம் , அஃதொன்றனையே கிளந்தெடுத்துத் தெள்ளத் தெளிய இனி துணர்த்தும் சிறப்புடையது என்க . எனவே , இத் திருப்பதிகம் , சிவநெறிக்கு இன்றியமையாச் சிறப்புடைத்தாதல் இனிது விளங்கும் .

பண் :

பாடல் எண் : 2

செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
சிந்தித்தே னெஞ்சமே திண்ண மாகப்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்
அம்மானே ஆருரெம் மரசே யென்றும்
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! துன்பம் மிக்க தீவினைகள் நீங்கும் வழியை எண்ணுவாயானால் உறுதியாகத் திருநீறணிந்த திருமேனி உடையவனே ! இந்திரனுடைய தோள்களை நீக்கிய தூயனே ! அடியேனை அடிமையாகக் கொண்டவனே ! தலைவனே ! ஆரூரில் உள்ள எம் அரசனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள ஏகம்பனே ! கற்பகமே ! என்று பலகாலும் அழைப்பாயாக .

குறிப்புரை :

செடி - துன்பம் . ` சிந்தித்தியேல் ` என்பது தொகுத்தலாயிற்று . ` நான் சிந்தித்தேன் ; சிந்தித்து இது கண்டேன் ` என்றுரைத்தலுமாம் . ` சிந்தித்தே நெஞ்சமே ` என்னும் பாடத்திற்கு , ` சிந்தித்து என்றென்று கதறாநில் ` என உரைக்க . திண்ணமாக - ஒருதலைப்பட்ட மனத்துடன் . புரந்தரன் - இந்திரன் . ` இந்திரனைத் தோள் நெரித்திட்டு ` ( தி .8 திருவாசகம் . அம்மானை .15) எனவும் , ` புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி - மரந்தனிலேறினார் ` ( தி .8 திருவாசகம் . உந்தியார் 9.) எனவும் அருளிச் செய்பவாகலான் , தக்கன் வேள்வியில் , ` இந்திரன் தோள் நெரிக்கப்பட்ட பின்னர்க் குயிலாகி ஓடி ஒளிந்து பிழைத்தான் ` என்க . அடியேனை ` ஆளாகக் கொண்டாய் ` என்றது , ` இயல்பாகவே அடிமையாய் உள்ள என்னை , அத்தன்மையேனாதலைத் தெளிவித்துப் பணி புரிவித்துக் கொண்டாய் ` என்றவாறு . இதனால் , இனிக் கூறுவன அன்புப் பணியாதல் அறிந்துகொள்ளப்படும் . கற்பகம் , வேண்டுவார் வேண்டுவதை ஈயும் .

பண் :

பாடல் எண் : 3

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சே ! நீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால் நாள்தோறும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று பொழுது விடிவதன் முன் கோயிலைப் பெருக்கி மெழுகிப் பூ மாலையைக் கட்டி எம் பெருமானுக்குச் சாத்தி அவனைத் துதித்துப் புகழ்ந்து பாடித் தலையால் முழுமையாக வணங்கி மகிழ்ச்சியாய்க் கூத்தாடிச் ` சங்கரா நீ வெல்க வாழ்க !` என்றும் ` கங்கையைச் சிவந்த சடையில் வைத்த ஆதிப்பொருளே !` என்றும் ` ஆரூரா !` என்றும் பலகாலும் அலறி அழைப்பாயாக .

குறிப்புரை :

நிலைபெறுதல் - அலமரல் ஒழிதல் . ` மெழுகு ` என்னும் வினைமுதனிலை , ` மெழுக்கு ` எனத் திரிந்து பெயராயிற்று , ` ஒழுகு ` முதலியன ` ஒழுக்கு ` முதலியனவாகத் திரிந்துநிற்றல்போல . தலை ஆர - தலைநிரம்ப . தலை , வணங்குதலாலேயன்றி அதன்மேல் கையைக்குவித்தலாலும் இன்புறும் என்க . ` தலையினாற் கும்பிட்டு ` எனவும் பாடம் ஓதுவர் . ` மெழுக்கும் , கூத்தும் ` என்னும் உம்மைகள் , இறந்தது தழுவின . சய - வெல்க . அலை புனல் . வினைத்தொகை .

பண் :

பாடல் எண் : 4

புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம்
நெஞ்சமே யிதுகண்டாய் பொருந்தக் கேள்நீ
நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா என்றும்
நுந்தாத வொண்சுடரே யென்றும் நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
எண்ணரிய திருநாம முடையா யென்றும்
எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! புண்ணியமும் அதற்கு வாயிலாகிய நல்ல வழிகளும் ஆகியவற்றை எல்லாம் நான் கூறக்கூர்ந்து கேள் . பூணூல் அணிந்த மார்பனே ! தூண்ட வேண்டாத விளக்கே ! தேவர்களும் நால்வேதங்களும் தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் ஒன்று சேர்ந்தாலும் கணக்கிடமுடியாத திருநாமங்களை உடையவனே ! அழகிய ஆரூரனே ! என்று பலகாலும் துதிப்பாயாக .

குறிப்புரை :

` புண்ணியத்திற்கு வாயில் நன்னெறி ` என்க . நுந்தாத - தூண்ட வேண்டாத ; எஞ்ஞான்றும் ஒரு தன்மையாய் ஒளிவிடும் . ` நொந்தாத ` என்பதே , ` அவியாத ` எனப்பொருள் தரும் . கூடி எண்ணரிய - ஒருங்குகூடி எண்ணி அளவிடுதற்கரிய .

பண் :

பாடல் எண் : 5

இழைத்தநா ளெல்லை கடப்ப தென்றால்
இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும்
பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்
அணியாரூர் இடங்கொண்ட அழகா என்றும்
குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே
குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.

பொழிப்புரை :

நெஞ்சே ! இவ்வுடம்போடு கூடி வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட நாள்களின் அளவைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் தாண்ட வேண்டுமென்றால் இரவும் நடுப்பகலும் எம் பெருமானைத் துதித்து வாழ்த்தித் தவறு செய்தனவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அருள் செய்யும் பெரியோனே ! தலைக்கோலம் உடையவனே ! நீலகண்டனே ! எனப் பலகாலும் கூப்பிட வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள் நான் உனக்குப் பாதுகாவலாக இருக்கிறேன் . ஆரூர் உறையும் அழகா ! என்றும் சுருண்ட சடையை உடைய இளையோனே ! என்றும் கூப்பிடு . உனக்கு இவ்வாறு உப தேசித்துவிட்டதனால் இனி என்மேல் உனக்கு உய்யும் வழியைக் காட்டவில்லை என்ற குற்றம் ஏற்படாது . செயற்படாமல் வாளா இருந்தால் குற்றம் உன்மேலதே .

குறிப்புரை :

இழைத்தநாள் எல்லை - இவ்வுடம்பொடு கூடி வாழ்வதற்கு வரையறுத்த நாள்களின் அளவு . ` அவைகளைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் கடப்பதென்றால் ` என்க . ` பிழைத்தது ` பன்மை யொருமை மயக்கம் . ` பிழைத்தவெலாம் ` என்பதே பாடம்போலும் . ` ஞவிலும் ` உவம உருபு ; ` நவிலும் ` என்பதன் போலி ; ` என்ற ` என்பதோர் உவம உருபுண்மையறிக . அரணம் - பாதுகாப்பு ; அது காக்கப்படும் பொருளைக் குறித்தது . ` என்மேல் குற்றமில்லை ` என மாறி , இறுதிக்கண் கூட்டுக . அறியாதார்க்கு , அறிந்தார் கூறாதொழியிற் குற்றமாமாகலான் , ` நான் கூறினேன் ; ( அதனால் ) என்மேல் ( இனிக் ) குற்றம் இல்லை ; ( இனி நீ அது செய்யாதொழியின் குற்றம் உன் மேலதே )` என்றவாறு . இதனான் , அஃது ஒருதலையாகச் செயற்பாலதாதல் அறிக .

பண் :

பாடல் எண் : 6

நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்
சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றும்
சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்
திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! அழிக்கமுடியாத பல பிறவிகளையும் போக்கும் வழியை ஆராய்ந்து பார்த்து இவ்வழியைக் கண்டுள்ளேன் . நாடோறும் காளை எழுதிய கொடியை உடையவனே ! சிவலோகம் அடையும் வழியைக் காட்டிய சிவனே ! தாமரையை உறைவிடமாக விரும்பும் பிரமனும் கருடனை இவரும் தாமரைக் கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கு பவனே ! செல்வம் நிறையும் திருவாரூரா என்று பலகாலும் ` நெஞ்சே நீ நினை `.

குறிப்புரை :

நீப்பு - நீத்தல் விடுதல் . இருந்தேன் - நெடிது நேரம் இருந்தேன் ; ` இருந்து இது கண்டேன் ` என்க . காண் , அசைநிலை . நித்தம் ஆக - நாள்தோறும் நிகழ ; சிந்தி என்க . சே - எருது . தந்த - உலகிற்குச் சொல்லிய . ` சிவன் ` என்பதற்கு , ` மங்கலம் உடையவன் ` என்பது பெரும்பான்மையாகப் பலவிடத்தும் கூறப்படும் பொருள் . ` பேரின்பத்துக்குக் காரணன் , முற்றுணர்வினன் , தூய தன்மையன் , உலகெலாம் ஒடுங்கிக் கிடத்தற்கு இடமாய் இருப்பவன் , நல்லோரது உள்ளங்கள் பதிந்துகிடக்க நிற்பவன் , அறியாமையை மெலிவித்து அறிவை மிகுவிப்பவன் . உயிர்களை வசீகரிப்பவன் ` என்னும் பொருள்களும் கூறுவர் . இனி ` சிவ ` எனும் முதனிலை அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்லாகவும் கொண்டு பொருளுரைப்பர் . இப் பொருள்களை இவ்விடத்தும் பிறவிடத்தும் ஏற்ற பெற்றியாற் கொள்க . புள் - கருடன் . ` மேலை ` என்பதில் ` ஐ ` சாரியை .

பண் :

பாடல் எண் : 7

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்
பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சே ! நான் சொல்வதனைக் கேட்பாயாக . நம்மைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால் , மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் தன்மையை விரும்பினால் , உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால் , செயலற்று இராமல் நான் சொல்வதைக் கேள் , எனக்கு உறவினரும் துணையும் நீயே , உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன் . புற்றில் வாழத்தக்க பாம்பினைக் கச்சாக அணிந்த தூயோனே ! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே ! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக .

குறிப்புரை :

` வேண்டில் ` மூன்றும் வினைச் செவ்வெண் . ஆகவே , அவற்றின்பின் உம்மை கொடுத்துப் பொருளுரைத்துக் கொள்க . பாற்றுதல் - அழித்தல் . பரிசு - தன்மை ; தகுதி - பாவம் நீங்கினால் உலகத்துன்பங்கள் மட்டுமே நீங்கும் ; பிறவித் துன்பம் நீங்காது ; அது நீங்கவேண்டில் இருவினையையும் வீழ்த்துதல் வேண்டும் . அவ்வினைகள் உயிரைப் புறஞ்செல்ல ஒட்டாது வளைத்துக்கொண்டு நிற்றலின் , ` சுற்றிநின்ற சூழ்வினைகள் ` என்றருளிச்செய்தார் . சுற்றி நிற்றல் வளைத்து நிற்றலாகவும் , சூழ்தல் பலவாக மொய்த்து நிற்றலாக வும் கொள்க . ` வேண்டில் ` என்பதனை ` துஞ்சாவண்ணம் ` என்பதனோடுங் கூட்டி , மேலனவற்றோடு கூட்டுக . ` அவைகளுக்குரிய வழியைச் சொல்லுவேன் ` என்க . துஞ்சுதல் - இறத்தல் , இறந்தால் பிறத்தல்வேண்டும் என்க . இவ்வுலகிலே வீட்டின்பத்தைப் பெற்று நின்று உடம்பு நீங்கப்பெற்றார் , கால வயப்பட்டு இறந்தாரல்லரென்க . ` கூற்றம் குதித்தார் ` ( குறள் - 269) எனப்படுவோர் இவரேயாவர் . உற்றவர் - உறவினர் . உறுதுணை - சிறந்த நட்பினர் . உள்கேன் - நினையேன் . ` புற்றரவம் ` என்றது . இனம்பற்றி .

பண் :

பாடல் எண் : 8

மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும்
அம்மானே ஆரூரெம் ஐயா வென்றும்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்
சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! உனக்கு நான் நல்ல புத்தியைக் கொடுக்கிறேன் . பிழைத்துப் போவதற்கு உரிய வழி இதுவே . தேவர்கள் தலைவனே ! அரிய அமுதமே ! ஆதியே ! என்றும் , தலைவனே ! ஆரூரில் உள்ள எம் குரிசிலே என்றும் , அவனைப் போற்றிக் கிட்டிய மலர்களை அவன் திருமேனி மீது தூவி , அவன் கோயிலை வலம் செய்து , தொண்டர்களையும் துதித்து , ஒளிவீசும் பிறை சேர்ந்த தலைவனே ! காலனுக்கும் காலனே ! கற்பகமே ! என்றும் பலகாலும் கதறுவாயாக .

குறிப்புரை :

மதி தருவன் - ( உனக்கு நான் ) அறிவு தருவேன் ; ` கேள் ` என்க . இது , தன்மை வினைமுற்று . ` உய்ந்து ` என்பது ` உஞ்சு ` என மருவிற்று . பதி - தலைவன் . இது மிகுதி உணர்த்தும் , ` அதி ` என்னும் இடைச்சொல்லடுத்து , ` அதிபதி ` என வந்தது . துன்று - நெருங்கிய ; சூழும் - சுற்றிலும் ; ` சூழ்வதாகிய வலம் ` என்றலுமாம் . தொண்டு ( அடியவரது ) தொண்டு ; அது காரிய ஆகுபெயராய் அதற்கு அவன் செய்த அருளைக் குறித்துநின்றது . கதிர் , வெள்ளொளி .

பண் :

பாடல் எண் : 9

பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே
பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும்
எம்பெருமா னென்றென்றே யேத்தா நில்லே.

பொழிப்புரை :

நெஞ்சே ! மேம்பட்ட சோதியே ! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே ! பாவத்தைப் போக்குபவனே ! உலகுக்கே ஒளிதரும் விளக்கே ! தேவதேவனே ! திருவாரூர்த் திருமூலட்டானத்து உறையும் பெருமானே ! தேவர்கள் தலைவனே ! எம்பெருமானே ! என்று அன்பைப் பெருக்கி அவன் முன் நின்று தியானம் செய்து நாளும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூசி நின்று அவன் பெருமையைப் பாடுவாயாக . இவ்வாறு செய்தால் உலகப் பற்றினை அடியோடு நீக்கிவிடலாம் .

குறிப்புரை :

` பாசத்தைப் பற்றறுக்கலாகும் ` என்பதை ஈற்றில் வைத்துரைக்க . பண்டரங்கன் - ` பாண்டரங்கம் ` என்னும் கூத்துடையவன் . ` பாண்டரங்க மாடுங்கால் ` ( கலித்தொகை . கடவுள்வாழ்த்து ) என்றது காண்க . தேசம் - உலகம் ; அஃது உயிர்களைக் குறித்தது . உயிர்கட்கெல்லாம் ஒரு விளக்குப் போன்றவன் இறைவன் என்க . நேர்நின்று - அவன் அருள்வழி நின்று . ` பெருக்கி , உள்கி வீழ்ந்து நின்று , ஏசற்று நின்று , என்பவற்றை , ` நெஞ்சே ` என்பதன் பின்னர் வைத்துணர்க . ஏசற்று நின்று - கூசி நின்று . ` என்றென்று ` என்புழியும் உம்மை விரிக்க . ` எம்பெருமான் ` என்பது , அன்பு மீதூர்வாற் சொல்லப்படுவதாகலின் , அஃது ஒன்றனையும் பல்காற் சொல்லுக என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 10

புலன்கள்ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும்
தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும்
எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்
நலங்கொளடி யென்தலைமேல் வைத்தா யென்றும்
நாடோறும் நவின்றேத்தாய் நன்மை யாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! ஐம்புலன்களால் செயற்படுத்தப்பட்டுக் காலத்தைக் கழித்து , மிகக் தொலைவான இடங்களுக்கு அலையாமல் , என்பக்கம் வந்து யான் சொல்வதனைக் கேள் . கங்கையைச் சடையில் சூடிய தலைவா ! தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே ! இராவணன் தலைகளை நெரித்த தலைவனே ! அழகிய ஆரூரில் உறையும் எம் தந்தையே ! உன் பல நலன்களும் கொண்ட திருவடிகளை என் தலைமேல் வைத்தவனே ! என்று நாள்தோறும் கூறி அவனைத் துதிப்பாயாக . அச்செயலே நமக்கு நன்மை தருவதாகும் .

குறிப்புரை :

போது போக்கி - பொழுதைக் கழித்து . புறம் புறம் - மிகச் சேயதான இடம் . திரியாதே போது - அலையாமல் என்பக்கல் வா ; என்றது , ` யான் சொல்வதைக் கேள் ` என்றபடி . நன்மை ஆம் - ( துன்பம் நீங்கி ) இன்பம் உண்டாகும் . ` என்றென்று ` என மேலெல்லாம் அருளிச்செய்ததனை , இங்கு ` நாடோறும் நவின்றேத்தாய் ` என்றருளிச் செய்தார் . தமது தலையை , நெஞ்சின் தலைபோல அருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 1

கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

அநுபவப் பொருளை ஞானதேசிகன் பால் உணர்ந்தவர்கள் உண்ணும் கனியே! திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் நற்பேறே! உன்னையன்றிப் பிறிதொருபற்றற்றவர்களுக்குக் கிட்டும் அமுதமே! துயர் துடைத்து அடியேனை ஆட்கொண்டவனே! பிறர் ஒப்பாகமாட்டாத வலியவனே! தேவர்கள் போற்றும் அமுதமே! பகைவர்களின் மும்மதில்களை அழித்த சிவனே! திருவாரூர் திருமூலட்டானனே! நீ வாழ்க.

குறிப்புரை :

கற்றவர்கள் - மெய்ப்பொருளை வரலாற்று முறையின் வந்த நல்லாசிரியர்கள்பால் உணர்ந்தவர்கள். கேள்வியுணர்வின் பின்னரே தலைப்பட்டுணரும் உணர்வு நிகழற்பால தாகலின், இறைவனை, கற்றவர்கள் உண்ணும் கனியாக அருளிச் செய்தார். `கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை` (தி.9 திருவிசைப்பா. 5. 2.) என்றருளினமையுங் காண்க. `விழுங்கும் கனி` என்றது, `காழில் கனி` (திருக்குறள். 1191.) என்றது போல, முழுவதூஉம் சுவையுடைய கனியென்றவாறு. இங்கு, `உண்ணும்` என்றதற்கும் அதுவே பொருளென்க. இறைவனைப் புகலிடமாக அடைந்தார்க்குப் பயனும் அவனேயாகலின், `கழலடைந்தார் செல்லுங் கதி` என்றருளினார். அற்றவர் - பிறிதொரு பற்றும் இல்லாதவர். மைந்தன் - வலிமை யுடையவன். `பிறர் ஒருவர்க்கும் இல்லாத வலிமை யுடையவன்` எனவே, அவனது, `முடிவிலாற்றல்` என்னும் அருட் குணத்தினை வியந்தவாறாயிற்று. மருந்து - சாவா மருந்து; அமுதம். `அமுதுண்ணுதலில் விருப்பமுடையவராய வானவர்களுள் மெய்யுணர்வுடையோர், இறைவனையே உண்மை அமுதமாக உணர்ந்து போற்றுவர்` என்றபடி. செற்றவர் - பகைத்தவர்.

பண் :

பாடல் எண் : 2

வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை யீருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

கப்பல்கள் செல்லும் கடலின் நஞ்சை உண்டவனே! மத யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைப் போர்த்தியவனே! தேனொடு மலரும் நறுங்கொன்றை மாலையை அணிந்தவனே! உன்னால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்த இளையவனே! அழகிய நெற்றிக் கண்ணை உடையவனே! தேவர் தலைவனே! ஆல நிழலில் அமர்ந்து அறத்தை மௌன நிலையில் சனகர் முதலியோருக்கு அருளியவனே! ஒப்பற்ற பொற்குன்றே! சிவனே! திருமூலட்டானத்து உறைபவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

வங்கம் மலி கடல் - மரக்கலங்கள் நிறைந்த கடல். ஈர் உரிவை - உரித்த தோல். கொங்கு - தேன்; தேனோடு அலரும் என்க. அம் கண்ணன் - அழகிய கண்களையுடையவன். கண்ணுக்கு அழகாவது, கருணை. `கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம்` (குறள். 575) என்றருளியவர், பெயக்கண்டு நஞ்சுண்ட டமைதலையே கண்ணோட்டத்துக்கு எல்லையாக அருளிச் செய்தார். (திருக்குறள். 580.) ஆகலின், அது செய்த சிவபிரான் ஒருவனையே `அங்கணன்` என்றல், ஆன்றோர் மரபாயிற்று. அமரர்கள்தம் இறைவன் - தேவர்க்குத் தேவன்.

பண் :

பாடல் எண் : 3

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பார்வதி மணவாளனே! இளைய காளையை உடையவனே! என் நெஞ்சில் நிலையாக நிற்பவனே! நெற்றிக் கண்ணனே! இலைவடிவாய் அமைந்த முத்தலைச் சூலம் ஏந்தியவனே! ஏழ்கடலும் ஏழ் உலகமும் ஆகியவனே! வில்லால் மும்மதில்களை எரித்த சிவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! உன் திருவடி வாழ்க.

குறிப்புரை :

மழ விடை - இளைதாகிய இடபம். இலை ஆர்ந்த - தகட்டுநிலை பொருந்திய. மூவிலை - மூன்று கவட்டினையுடைய, ஏழ்கடல், `உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல். கருப் பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நன்னீர்க் கடல்` என்பன. ஏழ் பொழில் - ஏழு தீவு; அவை, `சம்புத் தீவு, சாகத் தீவு, குசத் தீவு, கிரௌஞ்சத் தீவு, சான்மலித் தீவு, கோமேதகத் தீவு, புட்கரத் தீவு` என்பன.

பண் :

பாடல் எண் : 4

பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பொன்னார் மேனியனே! பூதப்படையனே! சிறப்பு நிலைபெற்ற நான்கு வேதங்களும் ஆனவனே! மான் குட்டியை ஏந்திய கையினனே! உன்னையே தியானிப்பவருக்கு உள் பொருளாய் அகக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றவனே! உலகுக்கு ஒப்பற்ற தலைவனே! சென்னியில் வெண்பிறை சூடியவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

பொன் இயலும் - பொன்போல விளங்கும். மறி - மான் கன்று. உன்னுதல் - அன்பால் நினைத்தல். உண்மையன் - உள்பொருளாகின்றவன்; அஃதாவது, அவர் நினைத்த பயனைத் தருபவன். ஒருவன் - முழுமுதல்; பிறரெல்லாம் ஒவ்வொரு கூற்றில் முதன்மையுடைய பல ஏவல் தொழிலினராக, தான் எல்லா முதன்மையும் உடைய ஒரு பெருந்தலைவனாய் இருப்பவன் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 5

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

விடம் தங்கிய கழுத்தினனே! ஞானயோக வடிவினனே! சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வேந்தனே! வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனே! எல்லாம் ஒடுங்கிய இருளில் கூத்தாடுதலை உகந்தவனே! திருநீறு பூசிய சோதியே! சிவந்த சடையை உடையவனே! திருமூலட்டானனே! உன் திருவடி வாழ்க.

குறிப்புரை :

நற்றவன் - ஞானயோக வடிவினன்; அவ்வடிவு மோன முத்திரைக் கையினான் மெய்ம்மையுணர்த்தும் தென்முகக் கடவுள் வடிவென்க. வெஞ்சுடரோன் - பகலவன். துஞ்சு இருள் - எல்லாம் ஒடுங்கிய இருள். இந்நிலையில் ஆடுதல், மீளப்படைத்தற் குரியவற்றைச் செய்தலாகும். இதுவே, `சூக்கும நடனம்` எனவும், `சூக்கும ஐந்தொழில்` எனவும் சொல்லப்படும். தூநீறு, ஒடுங்கிய பொருள்களின் ஆற்றல் வடிவினையும், அதனை மெய்யின்கண் பூசிக் கொள்ளுதல், அவற்றிற்குத் தானே பற்றுக்கோடாதலையும் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 6

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

சங்கரனே! சதாசிவனே! படம் எடுக்கும் பாம்பை அணிந்தவனே! புண்ணியனே! தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும் காணமுடியாத தீப்பிழம்பின் வடிவானவனே! திருமூலட்டானத்து உறைபவனே! உன் திருப்பாதங்கள் வாழ்க.

குறிப்புரை :

சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். `சதாசிவன்` என்பதும் சிவனுக்கு ஒரு பெயர். பொங்கு அரவன் - மிக்க பாம்புகளை அணிந்தவன். புண்ணியன் - அறவடிவினன். இத்திருப்பாடல் முழுவதும் உயிர்களது தலைமேல் தங்கும் இயல்புடைமைபற்றிச் சிறப்பு வகையில் திருவடிக்கே வணக்கங் கூறியதாதல் அறிக. `திருமூலட்டானனே` என்றதனைத் தாப்பிசையாக, `செங்கமலத் திருப்பாதம்` என்றதற்கு முன்னேயுங்கூட்டி, `நின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 7

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் கொன்றைப் பூ அணிந்த சடையனே! சடையில் வானில் உலவும் பிறையையும் ஒளிவீசும் பாம்பினையும் சூடியவனே! பூங்கொம்பு போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனே! கழலணிந்த திருவடிகளால் கூற்றுவனை உதைத்த தலைவனே! விரும்பும் அடியார்க்குக் கிட்டுதற்கு இனிய செல்வமே! நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே! செம்பொன், மரகதம், மாணிக்கம் போன்றவனே! திருமூலட்டானத்தில் உறைகின்றவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

வம்பு - வாசனை. வான் - வானத்திற் செல்லுந் தன்மையுடைய. வாளரவு - கொடிய பாம்பு. `வைத்தாய்` என்றது, `பகைதீர்ந்து வாழ வைத்தாய்` என்னும் குறிப்புடையது. நம்புதல் - விரும்புதல். அரும்பொருளாதலாவது, பயனால், `கிடைத்தற்கரியது கிடைக்கப் பெற்றோம்` என உணரப்படுதல்.

பண் :

பாடல் எண் : 8

உள்ளமா யுள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

என் உள்ளத்தில் நிலைத்திருப்பவனே! உன்னை விரும்புவார் உள்ளத்தை என்றும் நீங்காது இருப்பவனே! வள்ளலே! மணவாளனே! இந்திரனுடைய தோளை நீக்கிய வலிமையுடையவனே! வெண்ணிறக் காளையை ஏறும் உலகியலிலிருந்து வேறு பட்டவனே! எல்லாருக்கும் மேம்பட்டவனே! தெளிந்த நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்றவனே! திருமூலட்டானத்தில் உள்ளவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

உகப்பார் - விரும்புவார். மணாளன் - நாயகன். விகிர்தன் - உலகியலுக்கு வேறுப்பட்டவன். வானவர்கோன் தோள் துணித்த வரலாற்றை மேலே (ப.31. பா.2. குறிப்புரை.) காண்க.
மேலோர் - தேவர். அவர்க்கு மேலோர், அயனும் மாலும்.

பண் :

பாடல் எண் : 9

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பூக்கள் நிறைந்த சடைமுடியை உடையவனே! தூயவனே! தேவர்கள் துதிக்கும் பரம்பொருளே! தெய்வத்தன்மை நிரம்பிய தேவர்களுக்கும் தேவனே! திருமாலுக்குச் சக்கரம் அளித்தவனே! இம்மனிதப் பிறப்பெடுத்தும் வீணாகச் சாகாமல் பிறவிப் பிணியிலிருந்து காப்பாற்றி என்னை ஆண்டவனே! சங்கினை ஒத்த வெள்ளிய நீற்றினை அணிந்த பெருந்திறமை உடையவனே! காளை வடிவம் எழுதிய கொடியை உடையவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

பூ, கொன்றை மத்தம் முதலியன. தேவார்ந்த - தெய்வத்தன்மை பொருந்திய. `தேவர்` என்றது வாளா பெயராய் நின்றது. சதுரன் - திறமையுடையவன். சே - எருது.

பண் :

பாடல் எண் : 10

பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
யன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பிரமனுடைய ஐந்தாம் தலையை நீக்கிய பெரியோனே! பெண்ணுருவும், ஆணுருவுமாய் இருப்பவனே! நான்கு கைகளும் முக்கண்களும் உடையவனே! அமுதத்தை உண்ணும் தேவர்களுக்கு அரசே! ஒரு காலத்தில் இராவணனுடைய இருபது தோள்களையும் கால்களையும் தலைகளையும் நெரித்த திருவடியை உடையவனே! திருமூலட்டானத்தில் உறைபவனே! நீ வாழ்க.

குறிப்புரை :

பெண்ணுருவோடு ஆண் உருவாய் நிற்றலை, அவனது திருமேனியிலும், உலகிலும் கொள்க. ஆற்ற - மிகவும். `அருமருந்த` என்பது இடைக் குறைந்து நின்றது. `அமுதத்தை உடைய` என்பது பொருள். `சிரம்` என்புழியும் உம்மை விரிக்க; `சிரத்தொடு` என ஒடு உருபு விரிப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 1

பொருங்கைமத கரியுரிவைப் போர்வை யானைப்
பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்
காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
இருங்கனக மதிலாரூர் மூலட் டானத்
தெழுந்தருளி யிருந்தானை யிமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியி லப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

போரிடும் துதிக்கையை உடைய மத யானையின் தோலைப் போர்த்தியவனாய்ப் பூவணமும் வலஞ்சுழியும் உறைவிடமாகக் கொண்டவனாய்க் கருப்பங்கட்டியையும் அமுதையும் தேனையும் போன்ற இனியவனாய் , காட்சிக்கு செஞ்சுடராய்ப் பொற் குன்றாய்ப் பெரிய பொன்மயமான மதில்களை உடைய ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளியவனாய் , தேவர்கள் துதிக்கும் பெருந்தவத்தோனாய் உள்ள திருவாரூர் அரநெறியப்பனை அடைந்து அடியேன் நீக்கற்கரிய வினையாகிய நோயினைப் போக்கிக் கொண்ட திறம் நன்று .

குறிப்புரை :

` பொருங் கரி , கைக்கரி , மதகரி ` எனத் தனித்தனி முடிக்க . பொரும் - போர் செய்கின்ற . ` கைக் கரி ` என்பதில் , ` கரி ` என்பது வாளா பெயராய் நின்றது ; ` கரத்தை உடையது ` என்னும் பொருளுடைய வடசொல் விலங்குகளுள் கையுடைத்தாதல்பற்றி , யானையைக் குறிப்பதாயிற்று . தமிழிலும் , ` கைம்மா ` என்பர் . இன்னும் ` களிறு ` எனக் கூறுமிடத்தும் , ` கைக் களிறு ` என்பர் . ` பூவணம் ` பாண்டி நாட்டுத் தலம் . வலஞ்சுழி , சோழநாட்டுத் தலம் . ` இரு மதில் ` என இயைக்க . இரு - பெரிய . அருந்தவன் - அரிய தவ வடிவினன் . அரு வினை - நீக்குதற்கரிய வினை . ` வினையாகிய நோய் ` என்க . ` அறுத்தவாறு நன்று ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

கற்பகமும் இருசுடரு மாயி னானைக்
காளத்தி கயிலாய மலையு ளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை
விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியஎம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

கற்பகமும் , சோம சூரியருமாய் ஆகிக் காளத்தி மலையிலும் கயிலாயத்திலும் உறைந்து , விற்றொழிலில் பழகிய மன்மதன் நீறாகுமாறு நெற்றிக்கண்ணைவிழித்து , அருச்சுனன் முன் வேடனாய்க் காட்சியளித்து , அழகிய சோலைகள் சூழ்ந்த ஆரூர் மூலட்டானத்திலே பொருந்திய எம்பெருமானாய்ப் பகைவர்கள் உள்ளத்தே சூனியமாய் உள்ளவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` காளத்தி , கயிலாயம் ` என்னும் சிறப்புப் பெயர்கள் உம்மைத் தொகையாய்ப் பின் பண்புத் தொகையாகி ` மலை ` யென்னும் பொதுப்பெயரைச் சிறப்பித்து நின்றன . வில் - விற்றொழில் . மதன் - மன்மதன் . ` அற்புதம் ` என்றது , சூனியம் என்னும் பொருட்டாய் நின்றது ; இஃது இப்பொருளதாதலை , ` அற்புதம்போல் ஆனா அறிவாய் ` ( சிவஞானபோதம் . சூ .9. அதி .2) என்புழியுங் காண்க .

பண் :

பாடல் எண் : 3

பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்
பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை
வேதியனைத் தன்னடியார்க் கெளியான் தன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலட் டானம்
புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

பார்வதி பாகனாய்க் கங்கையை இருத்திய முடியினனாய்ப் பாசூரிலும் பரங்குன்றிலும் விரும்பி உறைபவனாய் , வேதியனாய்த் தன் அடியார்களுக்கு எளியவனாய் , மெய்ஞ்ஞான விளக்காய் , நறுமணம் கமழும் மலர்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உள்ள புற்றிடங்கொண்ட பெருமானாய்த் தன்னைத் துதிப்பவர்கள் தலைவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` பாதி ` என்பது அவ்வளவையுடைய உடம்பைக் குறித்தது . ` பாதிக்கண் ` எனவும் , ` பெண்ணொடு ` எனவும் , உருபுகள் விரித்து , ஒடுவை , ` கங்கையான் ` என்னும் வினைக் குறிப்புப் பெயரோடு முடிக்க . பாசூர் , தொண்டைநாட்டுத் தலம் . பரங்குன்று , பாண்டி நாட்டுத் தலம் . வேதியன் - வேதம் ஓதுபவன் . விளக்கான் - விளக்காய் உள்ளவன் . விரை - வாசனை ; பிரிநிலை ஏகாரம் பிறிதொன்றும் இன்மையைக் குறிக்கு முகத்தால் , விரையது மிகுதியுணர்த்தி நின்றது . போது இயலும் - பேரரும்புகள் நிறைந்து தோன்றும் . ` நாறும் பொழில் , இயலும் பொழில் ` எனத் தனித்தனி முடிக்க . ஆதியன் - முதல்வன் ; தலைவன் ; ` இடர் நீக்கிக் காப்பவன் ` என்றல் திருவுள்ளம் .

பண் :

பாடல் எண் : 4

நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை
நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
தத்துவனைச் சக்கரம்மாற் கீந்தான் தன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம்
இடங்கொண்ட பெருமானை யிமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

நந்திதேவருடைய முதற்பெருங்காவலை ஏற்றுக்கொண்ட தலைவனாய் , நாகேச்சுரத்தில் உறைபவனாய் , காலை நண்பகல் மாலை என்ற முப்போதும் வானவர்கள் பூக்களால் அலங்கரித்துத் துதிக்கும் மெய்ப் பொருளாய் , திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய் , சந்திரன் நுழைந்து செல்லுமாறு வானளாவி உயர்ந்த சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உறையும் பெருமானாய் , தேவர்கள் போற்றும் அந்தணனாய் உள்ள ஆரூரில் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` நந்தி பணி ` என்றது , நந்திதேவர் சிவபிரான் திரு முன்பிற் செய்யும் முதற்பெருங் காவலை . நாகேச்சரம் - சோழநாட்டுத் தலம் . சந்தி - காலை , மாலை , நண்பகல் . தத்துவன் - மெய்ப் பொருளாய் உள்ளவன் . இந்து - சந்திரன் . உயரத்தால் மீது செல்லாது உள் நுழையற்பாலதாயிற்று . அந்தணன் - அழகிய தட்பத்தினை ( கருணையை ) உடையவன் ; அது , தான் நஞ்சினை உண்டு பிறரைக் காத்தமையானே நன்குணரப்படுவதாகும் .

பண் :

பாடல் எண் : 5

சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்
சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை
விடக்கிடுகா டிடமாக வுடையான் தன்னை
மிக்கரண மெரியூட்ட வல்லான் தன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம்
மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

பவளம் போல ஒளி வீசும் செம்மேனியில் வெண்ணீறு அணிந்தவனைச் சோதிலிங்கமாக உள்ளவனைப் பெண்ணாகடத்துத் தூங்கானைமாடத்து உறைபவனைப் பிணங்கள் இடும் சுடுகாட்டை உறைவிடமாக உடையவனை , தீமை மிக்க முப்புரங்களை எரித்தவனை , பூக்களின் இதழ்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் நிலைபெற்ற எம்பெருமானை , தன்னை மதியாதவர்களுடைய வேள்வியை அழித்தவனை , அரநெறியில் உறையும் தலைவனை இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய பெருமானை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` பவளம்போலும் திருமேனியில் ` என்க . ` சோதி லிங்கம் ` எனச் சில உள . திருப்பெண்ணாகடக்கோயில் தூங்கானை மாடமாய் உள்ளது . விடக்கு - இறைச்சிகளை உடைய . இடுகாடு - பிணங்களைப் புதைக்கும் காடு . ` மிக்க ` என்பது , ஈறு தொகுத்தலாயிற்று . ` அரண்கள் எல்லாவற்றிலும் மிக்க ` என்பது பொருள் . மிகுதியாவது , வானில் இயங்குதல் . மடல் - பூவிதழ் . ` மடல் குலவும் ` எனற்பாலது , எதுகை நோக்கித் திரிந்தது . குலவும் - விளங்குகின்ற . இறைவன் வலிமையினும் தக்கன் வலிமைக்கே அஞ்சி அவன் வேள்விக்குச் சென்றமையின் , தக்கனேயன்றிப் பிற தேவர்களும் இறைவனை மதியாதவரேயாயினர் . வேள்வி தக்கனுடையதேயாயினும் , உடன்பட்டு முடிக்கச் சென்ற காரணத்தால் , ஏனையோருடைய தும் ஆயிற்று . அன்றி , ` தக்கனார் அன்றே தலையிழந்தார் ` ( தி .8 திருவாசகம் திருவுந்தியார் . 16) என்றாற்போல இழித்தற் குறிப்பால் தக்கனை , ` மதியாதார் ` எனப் பன்மையால் அருளிச்செய்தார் என்றலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 6

தாயவனை யெவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்
தகுதில்லை நடம்பயிலும் தலைவன் தன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் தன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம்
விரும்பியவெம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

எல்லா உயிர்களுக்கும் தாயாய் , தனக்கு ஒப்பு இல்லாத திருத்தலமாகிய தில்லையில் கூத்தனாய் , திருமாலும் , பிரமனும் ஏனைய வானவரும் துதிக்குமாறு அலைகள் மோதி மீளும் கடலின் நஞ்சினை உண்டு மகிழ்ந்த வலியவனாய் , எல்லா உயிர்களையும் விரும்பியவனாய் , சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை விரும்பிய எம்பெருமானாய் , எல்லாப் பொருள்களிலும் தொடக்கத்திலேயே பரவி அவற்றைச் செயற்படுத்துபவனாய் உள்ள ஆரூரில் அர நெறியில் உறையும் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

` எவ்வுயிர்க்கும் தாயவனை ( தாய்போல்பவனை )` என்க . ` தாயவனை ` என்பதில் அகரம் சாரியை , ` தன்னொப்பில்லாத் தலைவன் ` என இயையும் . ` வானோர் ` என்புழியும் உம்மை விரிக்க . மறிவன , அலைகள் என்க . மைந்தன் - வல்லாளன் . ` ஆரூர் மேயவனை ` என மாறுக . மேயவன் - விரும்பியவன் . ஆரூரது சிறப்பும் , மூலட்டானத்தது சிறப்பும் வகுத்துணர்த்தல் வேண்டி , ` மேயவன் ` ` விரும்பியவன் ` எனத் தனித்தனி அருளினார் . ` எல்லாம் ஆயவன் ` என இயையும் . முன்னே - அவற்றது தோற்றத்திற்கு முன்பே ; அனாதியே . எல்லாம் செயற்படுமாறு அவற்றது செயற்பாட்டிற்கு முன்பே அவற்றின்கண் இறைவன் தங்கினாலன்றி அவை செயற் படுதல் கூடாமையின் , ` முன்னே ஆயவனை ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 7

பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்
புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை
மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத்
தினிதமரும் பெருமானை யிமையோ ரேத்த
அருளியனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

பொருள்களை உடைய சொற்களாக அமைந்தவனாய் , புகலூரிலும் புறம்பயத்திலும் விரும்பி உறைபவனாய் , மயக்கம் பொருந்திய மனத்தவருக்கு மயக்கம் போக்கும் அமுதமாய் , மறைக்காட்டிலும் , சாய்க்காட்டிலும் உறைபவனாய் , மரச்செறிவால் இருண்ட பெரிய பொழில்களை உடைய ஆரூர் மூலட்டானத்தில் மகிழ்வாக அமர்ந்திருக்கும் பெருமானாய்த் தேவர்கள் துதிக்க அவர்களுக்கு அருளியவனாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

பொருள் இயல் - பொருள் விளங்குதற்கு ஏதுவாகிய . நற்சொல் - புறத்தே இனிதிசைக்கும் சொல் ; இதனைச் சிவாகமம் ` வைகரி வாக்கு ` என்று கூறும் . பதம் - ( அச்சொல்லது ) நுண் நிலைகள் ; அவற்றை , ` மத்திமை , பைசந்தி , சூக்குமை ` என மூன்றாகப் பகுத்து , ` வாக்கு நான்கு ` என்னும் சிவாகமம் . இனி , ` பொருளியல் நற்சொற் பதங்கள் , உயர்ந்த பொருள்கள் நிறைந்த நல்ல புகழுடைய உலகங்கள் ` என்றலுமாம் . புகலூர் , புறம்பயம் , மறைக்காடு , சாய்க்காடு சோழ நாட்டுத்தலங்கள் . மருள் இயலும் சிந்தை - தன்னைப் பொருளாக உணராது , பிறவற்றைப் பொருள் என்று உணரும் மயக்கம் . அதனைப் பல்லாற்றானும் நீக்கிவருதலின் , ` அதற்கு மருந்து ` என்றார் . இருள் , தழைத்தமையான் ஆயது . ` அருளியன் ` இறந்தகால வினைப் பெயர் ; ` துன்னியார் ` ( குறள் - 188) என்பதுபோல , விரைவு தோன்ற இறந்த காலத்தால் அருளினார் .

பண் :

பாடல் எண் : 8

காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்
காரோணங் கழிப்பாலை மேயான் தன்னைப்
பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் தன்னைப்
பணியுகந்த அடியார்கட் கினியான் தன்னைச்
சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ்
சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற
ஆலவனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

காலனைக் காலால் வெகுண்ட கடவுளாய் , குடந்தை நாகைக் காரோணங்களையும் கழிப்பாலையையும் விரும்பி உறைபவனாய் , உபமன்னியுவாகிய பாலனுக்காகப் பாற்கடலையே அளித்தவனாய் , தன் திருத்தொண்டில் மகிழ்ந்து ஈடுபட்ட அடியவர்களுக்கு இனியனாய் , சேல்மீன்கள் தாவித் திரியும் வயல்களை உடைய திருவாரூர் மூலட்டானத்தில் சேர்ந்திருக்கும் பெருமானாய் , பவளத்தின் ஒளியைத் தருகின்ற ஆலம்விழுது போன்ற சடையை உடையவனாய் உள்ள ஆரூரின் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

காரோணம் , ( குடந்தை , நாகை ) கழிப்பாலை சோழநாட்டுத் தலங்கள் . பாலன் - உபமன்னிய முனிவர் . அவர் மகவாய் இருந்தபொழுது பால் இல்லாது அழ , அவர்க்குப் பாற்கடலை அழைத்து அளித்த வரலாற்றைக் கோயிற்புராணத்துட்காண்க . ` பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் ` ( பா .9) என்ற தி .9 திருப்பல்லாண்டுங் காண்க . பணி உகந்த - தொண்டினை விரும்பிச் செய்யும் . பவளம் ஈன்ற - பவளத்தினது ஒளியைத் தருகின்ற . ஆல் - ஆலம் விழுது போலும் சடை .

பண் :

பாடல் எண் : 9

ஒப்பொருவ ரில்லாத ஒருவன் தன்னை
ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
வைப்பவனை மாணிக்கச் சோதி யானை
மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானைப்
பொ * * * * * * *

பொழிப்புரை :

தன்னை ஒப்பவர் வேறு யாவரும் இல்லாத ஒப்பற்றவனாய் , ஓத்தூரையும் , உறையூரையும் விரும்பி உறைபவனாய் , நமக்குச் சேமநிதிபோல்வானாய் . மாணிக்கத்தின் ஒளியை உடையவனாய் , காற்றும் தீயும் , ஆகாயமும் நீரும் மண்ணும் ஆகிய ஐம்பூதங்களாகவும் உள்ளவனாய் , ......

குறிப்புரை :

ஓத்தூர் , தொண்டை நாட்டுத்தலம் . உறையூர் சோழ மநாட்டுத்தலம் . வைப்பு - சேமநிதி ; அது போல்பவன் என்க . ` வைப்பவன் ` என்பதில் அகரம் சாரியை , மாருதம் - காற்று . வெளி - ஆகாயம் .

பண் :

பாடல் எண் : 10

பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப்
பராய்த் துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
இகலவனை இராவணனை யிடர்செய் தானை
யேத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

பொழிப்புரை :

சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வஞ்சகனாய் , பராய்த்துறையையும் பைஞ்ஞீலியையும் உறைவிடங்களாகக் கருதியவனாய் , மாறுபட்ட இராவணனைத் துன்புறுத்தியவனாய்த் தன்னைத் துதியாதவர் மனத்தினில் இருளாக இருப்பவனாய்ப் புகழ் பொருந்திய சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை உறைவிடமாகக் கொண்ட எம்பெருமானாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே .

குறிப்புரை :

படிறன் - வஞ்சகன்; `வஞ்சகன்` போல நின்று செய்தான் என்பது கருத்து. பராய்த்துறை, பைஞ்ஞீலி சோழநாட்டுத் தலங்கள். இடம் - இடமாக. பாவித்தான் - கருதினான். `இகலவனை` என்றதும் இராவணனையே என்க. இகலவன் - மாறுபாடுடையவன். இருளாதல் - தோன்றாதிருத்தல். அகலவன் - நீங்குதலுடையவன். `அகலவன்` என்பதில் அகல், முதனிலைத் தொழிற்பெயர்; அகரம், சாரியை.

பண் :

பாடல் எண் : 1

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தலைவனாய் , உலகங்கள் துதிக்க நின்றவனே ! ஒரே உருவம் அரி , அயன் , அரன் என்ற மூன்று வடிவம் ஆனவனே ! கோபங்கொண்டு கூற்றுவனை உதைத்தவனே ! மன்மதனையும் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பினால் சாம்பலாக்கியவனே ! பொருந்துதல் உடையவனாய் மண் உலகையும் , தேவர் உலகையும் படைத்தவனே ! மான்குட்டியைக் கையில் ஏந்தியவனே ! அழகியவளாம் பார்வதியை ஒருபாகமாக உடலில் கொண்டவனே ! இச்செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ , செய்த பின்னோ நீ திருவாரூரை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டுள்ளாய் ?

குறிப்புரை :

ஒருவனாய் - ஒப்பற்ற தலைவனாய் . மூவுருவம் ` அரன் , மால் , அயன் ` உருவம் . ` கறுவனாய் ` என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது . ` சினங்கொண்டவனாய் ` என்பது பொருள் . மருவனாய் - பொருந்துதலுடையவனாய் . தெரித்த - படைத்த . மறி - கன்று . ` ஓர்மாது ஓர் பாகத்தைத் திருவினாளாய் ( அழகியாளாய்ச் ) சேரப்படுவதற்கு ` என்க . ` திருவாரூரைக் கோயிலாக் கொண்ட நாள் அந்நாள்களோ , முன்னோ பின்னோ ` என முடிக்க . ` முன் , பின் ` என்பன காலப் பெயர்கள் .

பண் :

பாடல் எண் : 2

மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையான்முப் புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

அழகிய மலை மங்கையாகிய பார்வதியோடு மகிழ்ந்தவனே ! தேவர்கள் வருந்தாதபடி கடல் விடத்தை உண்டவனே ! தேவர்கணம் புடைசூழ இருந்தவனே ! அவர்களுக்கு வலிமை தரும் அமுதத்தை உண்பித்து நிலைபேற்றை அருளியவனே ! நினைக்கவும் முடியாத தீப்பிழம்பாக ஓங்கி இருந்தவனே ! வில்லால் மும்மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவனே ! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்த பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?.

குறிப்புரை :

மலை ஆர் - மலையில் வளர்ந்த . வலி - இறவாதிருக்கும் வலிமை . தழற்பிழம்பாய் நிமிர்ந்தது , அயன் மாலுக்கென்க . ` அலசாமே ` என்பது , ` அலைசாமே ` எனப் போலியாயிற்று ; ` தளராமல் ` என்பது பொருள் . அலைகடல் , வினைத்தொகை . ` எரித்த ` என்பதன்பின் . ` பொழுதிற்கு ` என்பது வருவிக்க . இங்ஙனம் வருவியாது , ` பின்னோ முன்னோ ` என மாற்றியுரைப்பினுமாம் .

பண் :

பாடல் எண் : 3

பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

பாடகம் என்ற அணியினை அணிந்த மெல்லிய அடிகளை உடைய பார்வதியோடு பார்த்தனுடைய வலிமையைப் பரிசோதிப்பதற்கு வேடனாய் வில்லை வளைத்துக் கொண்டு நின்றவனே ! தேவர்களுக்கும் பற்றுக் கோடாய் நின்றவனே ! மாட மாளிகைகள் நிறைந்த தில்லைத் திருப்பதியில் அழகு விளங்கும் பொன்னம்பலத்தில் நிலைபெற்றுக்கூத்தாடத் தொடங்கியவனே ! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

` போய் எய்தநாள் ` என இயையும் . பார்த்தன் - அருச்சுனன் . காண்பான் - வெளிப்படக் காணுதற்பொருட்டு , ` கண்ணவன் ` என்பதில் அகரம் சாரியை .

பண் :

பாடல் எண் : 4

ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
நில்லாயெம் பெருமானே யென்றங்கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

ஓங்கி உயர்ந்து எழுந்து நின்றவனே ! ஓர் ஊழியில் போலப் பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பவனே ! மிகச் சிறப்புடைய உயர்ந்த தேவர்களின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே ! நீருள் பூக்காது திருமாலின் உந்தியில் பூத்த தாமரையில் தோன்றிய பிரமனும் , திருமாலும் , ` பெருமானே ! எங்கள் உள்ளத்தில் நிலைபெற்றிருப்பாயாக ` என்று துதித்து , தம் உள்ளத்தின் கண் கொண்டு செறித்து வைக்கப்பட்டிருப்பவனே ! இச்செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்ட பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.

குறிப்புரை :

` ஓங்கி உயர்ந்து ` ஒருபொருட் பன்மொழி . எழுந்து நின்றது , அழற் பிழம்பாய் . ` ஏழ் ` என்பது பன்மை குறித்து நின்றது , ` ஒருநாள் எழுநாள் போற்செல்லும் ` ( குறள் . 1269.) என்புழிப் போல . ` உகம் ` என்றது , கற்பத்தை . ` ஓர் உகத்திற்போல ஏழ் உலகத்திலும் ஆகி ` என விரித்து , ` ஒரு கற்பத்திற் செய்தல்போலவே , பலகற் பத்திலும் படைப்பு முதலியவற்றைச் செய்து ` என உரைக்க . சீர் - புகழ் . தலையானவானோர் , ` சூரியன் , சந்திரன் , அயன் , மால் ` முதலியோர் . அவர் தக்கன் செயலுக்கு உடம்பட்டமையின் அவன் செய்த வேள்வியை அவர் செய்ததாகவே அருளினார் . ` நீங்கிய நீர்த்தாமரை ` என்றது , நீருட் பூவாத தாமரை , எனத் திருமாலது உந்தித் தாமரையை வெளிப்படுத்திற்று . அத் தாமரையான் பிரமன் . ` நெடுமாலோடு ஏத்தி ` என இயையும் . ஓடு , ஒருவினை ஓடு . நில்லாய் - ( எமது உள்ளத்தில் ) நீங்காதிருப்பாயாக . ` மதி வாங்கி வைப்பதற்கு ` என மாற்றி ` தமது உள்ளதின்கட் கொண்டு செறிப்பதற்கு ` என உரைக்க . அயனும் மாலும் இவ்வாறு இறைவனைத் தியானித்தமை , படைப்புக் காலத்தென்க .

பண் :

பாடல் எண் : 5

பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே
நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே
நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

பாலர் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே ! வழிபடும் அடியவர்களுக்கு அவ்வவ்விடங்களில் பற்றுக்கோடாய் இருப்பவனே ! நீலகண்டனே ! பெருந்தோள்களை உடையவனே ! முக்காலமும் ஆளும் செயலை உடையவனே ! சிவலோகம் சேரும் நெறியை அடியாருக்கு அருளும் புகழுக்குரிய தன்மையனே ! நுண்ணறிவு உடையவனே ! நற்பண்புகளுக்கு இருப்பிடமானவனே ! அருளுருவம் கொண்டவனே ! இச் செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்டதன் பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?.

குறிப்புரை :

` பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே ` என்றது , தோன்றி வளராது என்றும் ஒருபடியே நிற்றல்பற்றி . பற்று - துணை . நெருநல் - நேற்று . சீலம் - செயல் . சீர்மை - புகழுக்குரிய தன்மை . கூர்மை - நுண்ணறிவு . குணம் - நற்பண்பு . நல்ல கோலம் - அருளுருவம் . அவை , ` போகவடிவம் . யோக வடிவம் , வேகவடிவம் ` என மூவகைப்படும் . அவை அனைத்தும் உயிர்களுக்கு நன்மை செய்தற்பொருட்டே ஓரோர் காலத்திற் கொண்டன . ஆகலின் , ` நல்ல கோலம் ` என்றருளிச் செய்தார் . ` நீ ` என்றதனை , ` குணமே ` என்றதன் பின் வைத்துரைக்க . ` நீ கோலங்கொள்வதற்கு ` என்பவர் , இறைவனை அவனது அருட்டிறம் பலவற்றையும் சொல்லி விளித்தருளியது , ` அத்திறங்கட்கேற்ற கோலங்கள் பலவும் ` என்பது உடம்பொடு புணர்த்தலால் தோன்றுதற் பொருட்டு .

பண் :

பாடல் எண் : 6

திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து
மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ
பிறங்கியசீர்ப் பிரமன்தன் தலைகை யேந்திப்
பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு மனித வாழ்க்கையின் பயனையும் அப்பயனை அடையும் வழி முறைகளையும் அறிவர் வாயிலாகக் காட்டியவனே ! அணுவை விடச் சிறிய அணுவாகவும் பெரிய பொருள்களை விடப் பெரியவனாகியும் உள்ளவனே ! ஒவ்வாத செயல்கள் பலவும் உடைய தாருகவனத்து முனிவருடைய மயக்கத்தைத் தீர்த்து அருள் செய்து இருந்தவனே ! மிக்க சிறப்புடைய பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்று உண்டு உழன்று நிற்பவனே ! அறம்பலவும் உரைத்தவனே ! இச் செயல்களை நீ செய்வதன் முன்னோ செய்த பின்னோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

` திறம் ` என்றது , பயனை . ` காட்டி ` என்பதைத் ` திறம் பலவும் ` என்பதற்குங் கூட்டுக . வழி - பயனை அடையும் முறை . செய்கை - அம்முறையிலே செய்யும் முயற்சி ; இவைகளை உயிர்களுக்கு அறிவர் வாயிலாகக் காட்டியது , தொடக்கக் காலத்து என்க . ` பலவும் ` என்றதனால் , ` இன்னபொழுது இன்னாருக்கு , இன்னவாற்றால் ` என வரையறுத்துணர ஒண்ணாதவாறு , பற்பல காலத்துப் பற்பலருக்குப் பற்பல வகையால் ஏற்ற பெற்றி காட்டியருளியதெனக் கொள்க . மறம் - ஒவ்வாத செய்கைகள் ; அவை , ` அவரவர் செய்த வினையே அவரவருக்குப் பயன்தரும் ; அதனைக் கூட்டுவிக்க ஒரு முதல்வன் வேண்டா ` என்னும் கொள்கையின் வழிச்செய்வன . ` மறம் பலவும் உடையாராகிய அவரை ` என்க . செய்யுளாகலின் சுட்டுச்சொல் முன் நிற்றல் பொருந்திற்று . ` உடையாரை மயக்கந் தீர்த்து ` என்பதை . ` நூலைக் குற்றங் களைந்தான் ` என்பதுபோலக் கொள்க . மாமுனிவர் தேவதாருவனத்து முனிவர் . தன்னொடு மாறுபட்டு நின்ற அவரை இறைவன் தெளிவித்துப் பின்னர் அருள் புரிந்தான் என்றுணர்க . ` பிச்சை ஏற்று ` என்றது , பிரமன் தலையைக் கிள்ளியஞான்று , தேவர் பலரது இரத்தத்தைப் பிச்சையாக ஏற்றமையை . அறம்பல உரைத்தமை , ஆல்நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கென்க .

பண் :

பாடல் எண் : 7

நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

மண்ணும் விண்ணும் ஒன்றுபட நீண்ட உருவம் ஆயினவனே ! கலப்பினால் சராசரங்கள் யாவுமாகி நிற்பவனே ! எல்லோரும் கூடி உன் பெருமையைப் பேசக் கற்பகமாய் உள்ளவனே ! வானோருக்கு அசுரர்கள் தீங்கு விளைத்த காரணத்தால் திருமாலைப் படைத்து அசுரர்களுடைய வலிமையைச் சுருக்கி அவர்கள் மாண்டு அழியச் செய்தவனே ! வாசுகியால் வெளிப்பட்ட ஆலகால விடத்தை உண்டவனே ! சலந்தரனை அழித்தவனே ! இச்செயல்கள் செய்வதற்கு முன்னோ செய்தபின்னோ நீ குளிர்ந்த ஆரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

` நிலத்தந்தரத்து ` என்பதும் , ` நீண்ட உருவம் ` என்பதும் தொகுத்தலாயின . அந்தரம் - ஆகாயம் . ` மண்ணும் விண்ணும் ஒன்றுபட நீண்ட உருவம் ` என்பது பொருள் . அவ்வுருவம் , மாலும் அயனும் அடிமுடி தேட நின்ற உருவம் . நிற்பன . அசரம் . நடப்பன - சரம் ; இறைவன் கலப்பினால் இவையெல்லாமாய் நிற்பன் என்க . ` நீயேயாகிக் கலந்து ` என இயையும் . உரைக்க -( அந்நிலையை உணர்ந்து ) போற்ற கற்பகமாய் நிற்றல் , அங்ஙனம் போற்றுவார்க்கு அவர் வேண்டுவன எல்லாம் அளித்தல் . ` வானோர் உய்ய வல்லசுரர் மாண்டு வீழ , காரணத்தால் அன்று நாரணனைக் கற்பித்து வலம் சுருக்கி , வாசுகியை வாய்மடுத்துச் சலந்தரனைக் கொல்வதற்கு ` எனக் கொண்டு கூட்டுக . காரணம் - வானோர்க்கு இடையூறு விளைத்தமை . அன்று - முன்னர் . கற்பித்து - படைத்து . வலம் சுருக்கி - ( அசுரரது ) வலிமையை அடக்கி . ` வாசுகி ` என்றது , அவனால் உமிழப்பட்ட நஞ்சினை ; அதனை ` ஆலகாலம் ` என்பர் ` சலந்தரன் ` என்னும் அசுரனைச் சக்கரத்தால் அழித்த வரலாற்றைக் கந்தபுராணத்துட் காண்க .

பண் :

பாடல் எண் : 8

பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

அழுத்திய திருவடியால் முயலகனை யாருக்கும் தீங்கு நிகழ்த்தாதவாறு அழுத்திவைத்து உலகில் மேம்பட்ட சுடராய்த் திகழ்பவனே ! உன்புகழ் பாடும் அடியவர்களுக்கு என்றும் அழிவில்லா வீட்டுலகம் நல்கியவனே ! பூத கணங்களை உடைய நந்தி தேவர் , தனக்குத் தானே ஒப்பாகும் பார்வதி , புனிதனாகிய பிரமன் , பொய் யுரையாத வேதத்தில் வல்ல நால்வர் மற்றத் தேவர் எல்லோருக்கும் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே ! நீ இச் செயல்களைச் செய்வதன் முன்னரோ செய்த பின்னரோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

` முயலகன் ` என்பவன் தாருகவனத்து முனிவர் விடுத்த அசுரன் . ` பாதுகாத்து ` என்றது , ` சிறைப்படுத்தி ` எனற்பாலதனை நகையை உள்ளுறுத்து அருளிச்செய்தவாறு . ` பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற ` என்றது , கூத்தப்பெருமானாய் நிலஉலகத்தில் நின்றதனை . அஃது ஐந்தொழிலும் உடைய உருவத் திருமேனியாதல் பற்றி அங்ஙனம் அருளிச் செய்தார் . ` அளப்பில கீதஞ் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே ` ( தி .4. ப .77. பா .3.) என , இசையால் ஏத்துவார்க்கு உளதாம் பயன் அளவிடப்படாமையைத் திருநேரிசை யுள்ளும் அருளிச் செய்தார் . ` கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் ` ( தி .2. ப .43. பா .5.) என்றருளிச்செய்த திருஞானசம்பந்தர் திருமொழியையும் நோக்குக . பூதத்தான் - பூதகணங்களை உடையவன் ; நந்தி தேவர் . பொரு நீலி - ( உம்மை ) ஒத்த நீலநிறம் உடையவள் ; உமை . புனிதன் - உயிர்கட்குச் செல்லும் நெறிவகுத்துச் செலுத்தும் ஆசிரியன் ; பிரமன் . பொய் உரையா - மெய்யே கூறும் ( நால்வர் என்க .) மறை நால்வர் - அந்தணர் நால்வர் . விண்ணோர் - தேவர் . இவர்கட்கெல்லாம் சிவபிரான் வேதங்களையும் ஆகமங்களையும் அறிவுறுத்தினமை ஆங்காங்குக் கூறப்படுதலறிக . ` காது பொத்தரைக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம் கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழ்அறம் பகர ` என சுந்தரர் அருளிச்செய்ததுங் காண்க . ( தி .7 ப .65 பா .6.)

பண் :

பாடல் எண் : 9

புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

சென்று சேரத்தக்க எண் வகைப் பிறப்புக்கள் , எண்வகைக் குற்றங்கள் , எண்புலன்கள் , எண்வகை உலகங்கள் , எண்வகைத் தீவுகள் , எண்வகைக் கடல்கள் , எண்வகை அரண்கள் , தீவுகள் எட்டின் எண்வகைப்பட்ட இயல்புகள் , உன் திருவடிகளை அடைந்தவர்களுக்குக் கிட்டும் பயன்கள் எட்டு , எண்வகை ஒளிகள் , ஒன்றும் பலவும் ஆகிய பகுதிகளை உடைய எட்டு நாள்கள் , எட்டு நன்மைகள் , ஞானத்தின் மேம்பட்ட அடியார்களின் மனத்தில் அமைந்த எண்வகைப் பண்புகளாகிய எண்மலர்கள் , எட்டுத் திசைகள் ஆகிய இவற்றைத் தோன்றச் செய்வதன் முன்னோ தோற்றிய பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

புகுதப்படுதல் பற்றிக் கதியை , ` புகை ` என்றருளிச் செய்தார் ; ` மிகு , நகு ` என்பவை ஐகாரம்பெற்று மிகை , நகை ` என வருதல்போல , ` புகு ` என்பது ஐகாரம்பெற்று , ` புகை ` என வந்தது . நெருப்பிற்புகைக்கும் அப்பெயர் , எவ்விடத்தும் புகுதலுடைமை பற்றியே வந்ததென்க . எழுவகைப் பிறப்புக்களோடு , ` நரகர் ` என்னும் பிறப்புங் கூட்ட , பிறப்பு எட்டாம் . அவையே ஈண்டுக் கதியெனப் பட்டன . நரகரைத் தேவருள் அடக்கி , ` பிறப்பு ஏழ் ` எனப்படுமா யினும் , ` நரகரைத் தேவுசெய்வானும் ` ( தி .4. ப .4 பா .2.) என்பது முதலிய பலவற்றானும் , யாதனாசரீரமும் பூதசார சரீரமும் வேறு வேறேயாகலானும் நரகர் தேவரின் வேறாதலே யாண்டும் துணிபு . இனி , விலங்கிற் கீழ்ப்பட்ட பிறப்புக்களை எல்லாம் சிறப்பின்மை பற்றி , விலங்கினுள் அடக்கி , தேவகதி , நரககதி , மக்கள் கதி , விலங்குகதி ` என எல்லாப் பிறப்புக்களையும் நாற்கதியினுள்ளும் அடக்கிக் கூறுவர் . எனினும் , விரித்துக்கூறும் வழி எட்டென்பதே கருத்தென்க . போக்கு - குற்றம் . குற்றம் எட்டாவன , அறியாமை , மயக்கம் , யான் என்றல் ( அகங்காரம் ), எனதென்றல் ( மமகாரம் ), விருப்பு , வெறுப்பு , நல்வினை , தீவினை என்பன , பிறவாறு கூறுங்குற்றங்க ளெல்லாம் இவற்றுள் அடங்குமாறறிந்துகொள்க . இவை மேற்கூறிய கதிகட்கு ஏதுவாதலுணர்க . புலன்கள் - புலன் முதலிய கருவிகள் . அவை உணரப்படுங்கால் , புலன் முதலாகவே உணரப்படுதலின் , எல்லாவற்றையும் ` புலன்கள் ` என்றே அருளிச்செய்தார் . ` சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின் - வகை தெரிவான் கட்டே உலகு ( குறள் .27.) எனத் திருவள்ளுவ நாயனாரும் புலன்களையே எடுத்தோதினார் அவை எட்டாவன , தன் மாத்திரை , பூதம் , ஞானேந்திரியம் , கன்மேந்திரியம் , அந்தக்கரணம் , குணம் , மூலப்பகுதி , புருடதத்துவம் ` என்பன . இவற்றை ` எட்டுக்கொத்து ` என்பர் . இவற்றுள் , தன்மாத்திரை , முதலிய நான்கும் தனித்தனி ஐந்து ; அந்தக்கரணம் நான்கு ; குணம் மூன்றனை உள்ளடக்கிய ஒன்று ; மூலப்பகுதி ஒன்று ; புருடதத்துவம் , காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் ` என ஐந்து ; ஆகமுப்பத்தொன்றாகும் . இவற்றின் இயல்பெல்லாம் சிவாகமங்களுள்ளும் , அட்டப்பிரகரணம் , ஞானாமிர்தம் . சித்தாந்த சாத்திரம் முதலியவற்றுள்ளும் காண்க . ஈண்டு விரிப்பிற் பெருகும் . இவை மேற்கூறிய குற்றங்கட்குச் சார்பாய் நிற்றலுணர்க . ` பூதலங்கள் ` என்றதை , ` பூவோடு ( பூமியோடு ) கூடிய தலங்கள் ` எனவிரிக்க . ` தலங்கள் ` எனப் பொதுப்பட அருளிச்செய்தது , கீழுலகங்களையும் மேலுலகங்களையும் இருமுறையான் உணர்த்தற் பொருட்டென்க . எனவே , நடுநிற்பதாய பூவுலகம் கீழ்ஏழுலகங்களோடும் , மேல் ஏழ் உலகங்களோடும் இயைதற்குரித்தாக , ` எட்டு ` என அனைத்துலகங்களையும் அருளிச் செய்தவாறாயிற்று . இவ் வுலகங்கள் மேற்கூறியவற்றை எய்திய உயிர்கள் போக்கு வரவு புரிதற்கு இடமாய் நிற்றலறிக . பொழில்கள் - தீவுகள் : அவை எட்டாவன . ` நாவல் , சாகம் , குசை , கிரௌஞ்சம் , சான்மலி , கோமேதகம் , புட்கரம் ` என்னும் மக்களிடமாகிய ஏழும் , அவற்றிற்குப் புறத்தேயுள்ள பொன்னில மாகிய தேவர் இடம் ஒன்றுமாம் . ஈண்டுள்ளார்க்குப் புலனாகாமை பற்றி நரகரையும் தேவருள் அடக்கிப் பிறப்பு ஏழென்றல்போல தேவர்க்குரிய பொன்னிலத்துக்கு அப்பால் பேய்கட் குரித்தாய் உள்ள இருள் நிலத்தையும் பொன்னிலத்துளடக்கி , ` பொழில்கள் எட்டு ` என்று அருளிச்செய்தார் . கலை - அத்தீவுகட்கு உடையாய் அமைந்த கடல்கள் . இப்பெற்றி தோன்றவே கடல் என்னாது , ` கலை ` என்றருளினார் ; பிறவும் அன்ன . கடல் எட்டாவன , ` உவர்க்கடல் , பாற்கடல் , தயிர்க் கடல் , நெய்க்கடல் , கருப்பஞ்சாற்றுக்கடல் , தேன் கடல் , நன்னீர்க்கடல் என்னும் ஏழும் , அவற்றிற்கு அப்பால் சக்கரவாள கிரியைச் சூழ்ந்துள்ள பெரும்புறக் கடல் ஒன்றுமாம் . காப்பு - அரண் ; அஃதாவது அக்கடல்களைச் சூழ்ந்து அரண்போல நிற்கும் மலைகள் . அவை எட்டாவன , ஏழுகடலையும் சூழ்ந்துள்ள மலைகள் ஏழும் , பொன்னிலத்தைச் சூழ்ந்துள்ள சக்கர வாளகிரி ஒன்றுமாம் . காட்சி எட்டாவன , பொழில்கள் எட்டினும் காணப்படும் எண் வேறு வகைப்பட்ட இயல்புகள் . அவைகளை யெல்லாம் சிவாக மங்களுள்ளும் , கந்தபுராணத்து அண்டகோசப் படலத்துள்ளும் , சிவ ஞான மாபாடியத்துள்ளும் காண்க . ஈண்டு விரிப்பிற் பெருகும் . பொழில்கள் முதலிய நான்கும் இவ்வுலகத்தனவாகலின் , அவைகளை வகுத்தருளிச் செய்தார் . பயனை ` களைகண் ` என்றருளிச் செய்தார் , ` அவை காரணமாகவே கழற்சேவடியடைந்தார் ` என்பது அறிவித்தற்கு . எனவே , பயன்கருதி வழிபட்டார் அடையும் பயன்கள் எட்டென்ற வாறாயிற்று ; அவை , ` புவலோகம் , சுவலோகம் , மகலோகம் , சனலோகம் , தவலோகம் , பிரமலோகம் , விட்டுணுலோகம் , உருத்திர லோகம் ` என்பன . இவையெல்லாம் பதங்கள் ( பதவிகள் ) எனப்படும் புண்ணிய லோகங்கள் ; சிவலோகமாகிய வீட்டுலகம் இவையனைத்தினும் மேலாய் உளது . அதனிற் சென்றார்க்கு மாறிப்பிறத்தல் இல்லை . பயன் கருதாது வழிபடுதல் உலகியலிற்பற்று நீங்காதவர்க்குக் கூடாமையின் , வீட்டுலகத்தை அடைதல் அவர்க்கு இயலாதாயிற்று . உலகியலின் நீங்காதவருள்ளும் பயன் கருதாது வழிபடுவாருளராயினும் , ` வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் ` ( தி .8 திருவாசகம் . உயிருண்ணிப்பத்து .7) என உவர்த்து , ` வார்கடலுலகின் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரியாயே ` ( தி .8 திருவாசகம் . வாழாப்பத்து .1) என வேண்டுவாரல்லராகலின் , அவர் ஒருவாற்றாற் பயன் கருதி வழிபடுவோரே என்க ; எனினும் இவர் உருத்திரலோகத்தை அடைவர் என்க . நகை - ஒளி ; அஃது அதனை உடைய பொருள்களைக் குறித்தது . அவை எட்டாவன , இராகு கேதுக்கள் ஒழிந்த கோள்கள் ஏழும் , விண்மீன்களுமாம் . சிறப்புப்பற்றி ஞாயிற்றையுந் திங்களையும் வேறுவே றெண்ணுவார் , ஏனைய கோள்களையும் அவ்வாறு எண்ணி , சிறப்பில்லாத விண்மீன்களை ஒன்றாக வைத்து அருளிச்செய்தார் : வானத்திற் காணப்படுவனவற்றையே ஈண்டுக் கூறுதலின் , ` நகை ` என்றது தீயின்மேற்செல்லாதாயிற்று . இவை இரண்டு தொடர்களாலும் மேலுலகங்களும் , அவற்றுள் முன்னிற்பதாய புவலோக மண்டலங் களும் அருளிச்செய்தவாறு . ` நாள் ` என்றது , அஃது ஒன்றும் பலவுமாய பகுதிகளை . அவை எட்டாவன , ` நாள் , வாரம் , பட்சம் , மாதம் , இருது , அயனம் , ஆண்டு , உகம் என்பன . ` புலன்கள் ` என்புழிக் கூறப்பட்ட காலம் , பொருள் தொறும் நிற்கும் சிறப்புக் காலம் எனவும் , இஃது எல்லாப் பொருள் களுக்கும் பொதுவாகிய பொதுக் காலம் எனவும் உணர்க . ` பூதலங்கள் ` முதலாகச் சொல்லப்பட்டன யாவும் அன்ன . நன்மை எட்டாவன , ` அறம் , பொருள் , இன்பம் . வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கும் , அவற்றிற்கு மறுதலையாய . ` மறம் . இன்மை , துன்பம் , பிறப்பு ` என்னும் நான்குமாம் . உறுதிப் பொருட்கு மறுதலையாயவற்றையும் , ` நன்மை ` என்றருளிச் செய்தார் . மலத்தைத் தேய்த்தலிற் பிழையாமை நோக்கி , அங்ஙனம் அல்லாக்கால் அவை . கருணையுடையவனாற் படைக்கப்படுதல் என்னையோ வென்க . ` நலம் ` என்றது , ஞானத்தை . அதுமிக்காருடைய உள்ளத்தில் இருந்து ஞானபூசைக்கு உரியவாகும் மலர்கள் எட்டாவன ` கொல்லாமை , பொறியடக்கம் , பொறுமை , இரக்கம் , அறிவு , மெய் , தவம் , அன்பு ` என்பன . திகை - திசை . அவை எட்டு , கிழக்கு முதலிய பெருந்திசை நான்கும் . தென்கிழக்கு முதலிய கோணத்திசை நான்குமாம் . ` காட்சி எட்டும் ` என்பதனை அடுத்து நிற்றற்பாலதாய . ` திகை எட்டும் ` என்பது , செய்யுள் நோக்கி இறுதிக்கண் நின்றது . தெரித்தல் - தோன்றச் செய்தல் ; படைத்தல் . ` மண்ணும் விண்ணும் தெரித்தநாளோ ` எனமேலும் ( ப .34. பா .1) அருளிச் செய்தார் . ` எட்டு ` என்பது பல்கால் வந்தது , சொற்பொருட்பின் வரு நிலையோடு , இதுவும் ஒர் எண்ணலங்காரம் என்க . இவ்வாற்றா லெல்லாம் உலகத்தோற்றத்தை வகுத்தெடுத்தருளிச் செய்தவாறு . வேதாகம வழக்கும் ஆன்றோர் வழக்கும் பற்றி வரும் இன்னோரன்ன பொருள்கள் எல்லாவற்றையும் ஓரோர் இடத்து ஓரோர்வாயிலால் தன்னுட்கொண்டு நிற்றல் பெருமொழிகட்கு இயல்பென உணர்க . இத்திருத்தாண்டகமும் வரலாற்று முறையான் உணரும் பொருளை உடைத்து . இதற்கு இவ்வாறன்றிச் சில வேறுபடக் கூறு வாரும் உளர் ; வரலாற்று முறையின் உணர்ந்தார் உளராய் , அவர் வேறு பொருந்த உரைப்பன உளவேற் கொள்க . இங்ஙனம் , பொருள்களை அரிதின் உணர மறைவாகக் கொண்டு நிற்றலும் மறைமொழிகட்கு இயல்பேயாம் .

பண் :

பாடல் எண் : 10

ஈசனா யுலகேழும் மலையு மாகி
இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ
வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொழிப்புரை :

உலகம் ஏழையும் மலைகள் ஏழையும் அடக்கி ஆள்பவனே ! இராவணன் ஆற்றலை அழித்து இருப்பவனே ! பொதிய மலையில் அமர்ந்து மலர்களின் மணங்களை மகிழ்ந்து ஏற்கும் தென்றலாகி இருப்பவனே ! மதயானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனே ! சூடிய மலர் மாலையைச் சண்டிகேசுவரருக்குக் கொடுத்தவனே ! சகரபுத்திரர்களின் சாபத்தைத் தீர்த்து அவர்களை ஆட் கொண்டவனே ! இச் செயல்களால் உலகவர் உன்னைப் பரம்பொருள் என்று அறிவதற்கு முன்னோ அறிந்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய் ?

குறிப்புரை :

`உலகேழும் மலையும்` எனப் பின்னர் வருகின்றமையின், `ஈசனாய்` என்றதற்கு, `அவைகளை ஆள்பவனாய்` என்றுரைக்க, மலை, திருக்கயிலை. அதனை இராவணன் பெயர்த்த காலத்து, உலகேழும் நடுங்கினவாகலின், அங்ஙனம் நடுங்கச்செய்த அவனை ஈடழித்தற்குரிய இயைபுணர்த்துவார், `உலகேழும், மலையுமாகி, ஈசனாய்` என்றருளிச்செய்தார். ஈடு - வலிமை. வடதிசைக் கயிலையே யன்றி, தென்றிசைப்பொதியிற்கண் ஆனமையும் குறிப்பினாலுணர்த்துவார், `தென்றலான நாளோ` என்றருளினார். `தாதுமலர்` என்றது தம் முடிக்கண் இருந்த கொன்றைமாலையை. சண்டேசுரநாயனாருக்கு அருளியது மிகப் பழைய வரலாறு என்க. மறித்திட்டு - (நரகத்தினின்றும்) மீட்டு, `சகரர்கள்` என்பார் அறுபதினாயிரவர் என்பதும், அவர் கபில முனிவரது வெகுளித்தீயால் சாம்பலாகி நரகடைந்தனர் என்பதும், அவர் வழியிற் தோன்றிய பகீரதன் தவம்செய்து தேவ கங்கையை மண்ணிற் கொணர்ந்து, அதனைச் சடையில் ஏற்றுப் பின்னர்த் தன் முன்னோர்கள் நல்லுலகை அடையுமாறு அவர் தம் சாம்பலிற் சென்று பாய விடுக்கும்படி சிவபிரானை வேண்டி அங்ஙனம் செய்யப்பெற்றான் என்பதும் பழைய வரலாறுகளாதல் உணர்க. தேசம் - உலகம். `உம்மை` என்னும் உருபேற்ற முன்னிலைப் பெயர் இடைக்குறைந்து, `உமை` என நின்றது. சிவபிரானை உலகம் அறிந்தது மிகப்பழைய காலத்தென்க. `நீயிர் திருவாரூர் கோயிலாக் கொண்ட நாள்` என்க.

பண் :

பாடல் எண் : 1

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

தாம் விரும்பியவாறே விரைந்தும் தாவியும் மெல்லென்றும் நடக்கும் காளையை இவர்ந்து திருவெண்காட்டை விரும்பி அடைந்த , உலகியலுக்கு வேறுபட்ட பெருமான் , தூண்டப் பட்ட விளக்கினது ஒளி போன்ற பிரகாசம் உடைய திருமேனியில் வெண்ணீறணிந்து , சூலத்தைக் கையில் ஏந்திச் சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு , காதிலும் பாம்பினை அணிந்து , பொன் போன்ற சடைகள் தொங்கப் பூணூல் அணிந்தவராய் நீண்டு கிடந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி நீண்ட தெருவழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார் .

குறிப்புரை :

தூண்டு சுடர் மேனி - தூண்டப்பட்ட விளக்கினது ஒளி போலும் திருமேனியில் , ` வாய் ` என்றது நாவினை ; ஆகு பெயர் ; நாவினைப் பலவழியாலும் அடிக்கடி நீட்டுதல் நாகத்திற்கு இயல்பு . பொறி - படத்திற் புள்ளி . ` பொறியரவம் ` என்றது , ` அதனை ` என்னும் சுட்டளவாய் நின்றது . பொற்சடைகள் - பொன்போலும் சடைகள் . ` வெண்ணூலராய் ` என்க . ` நீண்டு ` என்றது , ` நீட ` என்பதன் திரிபாய் , ` பலகாலமாக ` எனப் பொருள்தந்து நின்றது . வேண்டும் நடை - அவர் விரும்பியவாறே நடக்கும் நடை ; அது விரைந்தும் , மெல்லென்றும் , தாவியும் நடத்தல் . ` தாம் செலுத்தியவாறே செல்லும் அறம் , என்பது உண்மைப் பொருள் . விகிர்தன் - உலகியலுக்கு வேறுபட்டவன் .

பண் :

பாடல் எண் : 2

பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
யொத்துலக மெல்லா மொடுங்கி யபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்காடு மேவிய விகிர்தனார் தம் திருவடிகளை மனத்துக் கொள்ளும் அடியவர்களுக்குத் திருவடி தீட்சை செய்து , பாதலத்தையும் கடந்து , கீழ் உருவிச் சென்ற திருவடிகளை உடையவராய் , யாருக்கும் தீங்கு நேராதவகையில் ஏழுலகமாய் நின்ற ஒரே திருவடியை உடையவராய் , ஊழி வெள்ளத்தின் ஒலி , உலகை யெல்லாம் வெள்ளம் மூழ்குவித்து அவ்வுலகமெல்லாம் அழிந்த பின்னர் அடங்கியபோது , தாம் ஒடுங்காது வேதம் ஓதி வீணையை இசைத்து அவ்வொலியில் மகிழ்வர் .

குறிப்புரை :

` பாதம் தனிப்பார் ` என்னும் பாடத்திற்கு , ` பாதத்துத் தனித்து நிற்பார் ` என்றாயினும் , ` பாதத்தைத் தனிப்பக்கொண்டு நிற்பார் ` என்றாயினும் பொருள் கொள்க . ஏழாவதன் தொகையில் மகரங்கெடாது நிற்றல் , இரண்டாம் வேற்றுமைக்குத் திரிபோதிய விடத்துத் ( தொல் . எழுத்து . 158.) தன்னின முடித்தலாற் கொள்ளப்படுவது . ` பாதாளம் ஏழுருவப் பாய்ந்த பாதர் ` என்பதனோடு , ` பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் ` ( தி .12 திருவாசகம் , திருவெம்பாவை . 10) என்றருளிச்செய்ததனை நோக்குக . ஏதம் - துன்பம் ; அடியார்களிடத்துத் துன்பம் உண்டாகாதவாறு துணையாய் நின்றபாதத்தை உடையவர் என்க . இறைவனது ஒரு திருவருளே மறைப்பதாயும் , அருளலாயும் நிற்கும் . அவற்றுள் மறைப்பதாகிய மறக்கருணை ` திரோதான சத்தி ` என்றும் , அருளலாகிய அறக்கருணை ` அருட்சத்தி ` என்றும் சொல்லப்படும் . அவ்விரண்டனுள் உலகத்தை அதனொடு கலந்து நின்று தோற்றி நிறுத்தி ஒடுக்குதலாகிய தொழிலைச் செய்வது திரோதான சத்தி ஒன்றேயாதல்பற்றி ` ஏழுலகுமாய் நின்ற ஏக பாதர் ` என்றருளிச்செய்தார் ; மாகேசுர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் , ` ஏகபாதர் ` என்ற மூர்த்தம் இந் நிலையையே குறித்துநிற்றல் அறிக . ஓதம் - ( கடலின் ) அலைகள் . ஊர் உண்டு - ஊர்களை விழுங்கி ; நிலத்தை அழித்து . ஏறி - மீதூர்ந்து . ஒத்து - ஒன்றாய்க் கலந்து ; கோத்து , ` மடங்கி ` என்பதனை , ` மடங்க ` எனத்திரித்து , ` ஒத்து ` என்பதன்பின் கூட்டுக . வேதத்தை வீணையிலிட்டு வாசித்துக் கேட்டு அமைதி யோடிருப்பார் என்க . உலகமெல்லாம் ஒடுங்கியபின்னர் ஒடுங்காது இன்புற்றிருப்பவர் இவர் ஒருவரே என்றபடி . எனவே , மீள உலகம் தோன்றுங்கால் இவரிடத்திருந்தே தோன்றும் என்பதும் , அதனால் உலகிற்கு முதல்வர் இவரே என்பதும் தாமே பெறப்பட்டுக் கிடந்தன ; இதனையே , ` ஒடுங்கிமலத் துளதாம் ; அந்தம் ஆதி என்மனார் புலவர் ` ( சிவஞானபோதம் . சூத்திரம் . 1.) என்று வரையறையாக அருளிப் போந்தார் , மெய்கண்ட தேவ நாயனார் என்க . இத்திருப்பாடல் பெரும் பான்மையும் திருவடிப் பெருமையையே அருளிச்செய்தவாறாதல் உணர்க .

பண் :

பாடல் எண் : 3

நென்னலையோர் ஓடேந்திப் பிச்சைக் கென்று
வந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்
அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்
அருகே வருவார்போல் நோக்கு கின்றார்
நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ
என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி யாடும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

மெல்லிய தனங்களை உடைய மகளிர் கூடி விரும்பி விளையாடும் வெண்காடு மேவிய விகிர்தனார் நேற்று ஒரு மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை பெறுவதற்காக வந்தாராக ` இதோ வந்துவிட்டேன் ` என்று வீட்டிற்குள் புகுந்து உணவுடன் நான் மீண்டுவர நின்ற இடத்திலேயே நின்று கொண்டு யான் இடவந்த பிச்சையை ஏற்காமல் பக்கத்தில் வருபவரைப் போல என்னைக் கூர்ந்து நோக்கினார் . ` உம் மன நிலை எவ்வாறு இருக்கிறது ? உம்முடைய ஊர் யாது ?` என்று வினவிய எனக்கு மறுமாற்றம் தாராமலே நின்று பின் சென்று விட்டார் ?

குறிப்புரை :

நென்னல் - நேற்று . ஐ சாரியை . ` வந்தேன் ` என்றது , விரைவுபற்றி எதிர்காலத்தை இறந்த காலமாகக் கூறிய வழுவமைதி . நென்னற் கதையாகலின் , ` நிற்கின்றாரும் , கொள்ளாரும் நோக்கு கின்றாரும் , சொல்லமாட்டாருமாயினார் ` என உரைக்க . இவ்வாறெல்லாம் செய்தது , அவளை மெய் தீண்டும் குறிப்புத்தோன்ற . அக்குறிப் புணர்ந்தே அவள் , அவரது நிலைமை முதலியவற்றை வினவினாள் . அவற்றை அவர் அன்று ஒன்றாகச் சொல்லாது பலவாறு சொல்லினமையால் பிற்றைநாள் , ` அவரை எவ்வாறு உணர்ந்து அடைவேன் ` என அவள் கவன்றாள் . இதன் உண்மைப்பொருள் , சத்திநிபாதவகையினால் கேள்வியுணர்வை எய்தி , சிந்தனை உணர்வில் தலைப்பட்ட அடியவரது நிலையென்க . ` விரும்பி ஆடும் விகிர்தனார் ` என்க . ஆடுதல் , காதல் மிகப்பெற்றதனால் அவரது புகழைப் பாடி ஆடுதல் ; அதற்கு ஏதுவான விகிர்தர் என்றதாம் . இனி , ` ஆடும் வெண்காடு ` என முடித்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 4

ஆகத் துமையடக்கி யாறு சூடி
ஐவா யரவசைத்தங் கானே றேறிப்
போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்
புலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
பரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

பார்வதியைப் பாகமாகக் கொண்டு கங்கையைத் தலையில் சூடி ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் காளையை இவர்ந்து சிவபோகத்தை நுகரும் பூதங்கள் பலவும் தம்மைச் சூழப் புலித்தோலை உடுத்து இல்லத்துப்புகுந்து நின்ற அவருக்கு உணவு வழங்க வந்த என்னை உள்ளத்தால் பற்றிக் கூர்ந்து நோக்கி என் அடக்கம் என்ற பண்பினை அழித்துத் தீ வினையை உடைய என் வளைகளை , மேக மண்டலத்தை அளாவிய சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனார் கவர்ந்து சென்றுவிட்டார் .

குறிப்புரை :

` உமை ` என்ற உயர்திணைப் பெயரிடத்து இரண்டனுருபு தொகுத்தலாயிற்று . போகம் - சிவபோகம் . ` உடைத்தாய் ` என்பது , ` பூதம் ` என்னும் அஃறிணை இயற்பெயரொடு பன்மை யொருமைமயக்கமாய் இயைந்தது . ` சூழ ` என்ற குறிப்பால் , ` பூதம் ` என்பது பன்மைப் பெயராயிற்று . பாகு - பாகம் ; அடிசில் . ` பற்றி ` என்றது , உள்ளத்தால் பற்றியதனை . பரிசு - அவள் தன்மை ; நிறை ; பசு போதம் என்பது , உண்மைப் பொருள் . ` பாவியேனைப் பரிசழித்து ` எனக் கூட்டுக . பாவியேனை - அவரை உள்ளத்துட்கொள்ளாத என்னை ; இனி , ` அவரை அணையும் விதி இல்லாத தீவினையேனை ` என்றுரைப்பினுமாம் . மேக முகில் - நீரைப் பொழிகின்ற முகில் .

பண் :

பாடல் எண் : 5

கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங்
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல
உழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்
கள்ள விழிவிழிப்பர் காணாக் கண்ணாற்
கண்ணுள்ளார் போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

மிக்க ஒளியை உடைய குழைகளை அணிந்த , பருத்துக் குறிய வடிவுடைய பூதங்கள் கொடுகொட்டி என்ற பறையை இசைத்துக் கூத்தாடிப்பாட , என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு போவாரைப் போல என்னைச் சுற்றி வருகிறார் . நான் அவரை உள்ளவாறு அறிய இயலாதேனாய்த் திரும்பினேன் . என்னை நேரில் பாராதவரைப் போல அரைக்கண்ணால் பார்க்கிறார் . கண்ணுக்கு அகப் படுபவரைப் போலக் காட்டி மறைந்து நிற்கிறார் . அவர் கங்கையைச் சடையில் கொண்டவர் . வேதம் ஓதிய நாவினை உடையவராய் வெண்காடு மேவிய விகிர்தனார் ஆவர் .

குறிப்புரை :

கொள்ளை - மிகுதி ; அது மிக்க ஒளியைக் குறித்தது . ` குண்டை ` என்பதில் ஐ சாரியை . ` பெருவயிறு ` என்பது பொருள் . ` கவர்ந்திட்டு உழிதருவர் ` என இயையும் . உழிதருவர் . ( போகாது ) சுழல்வர் . தெரியமாட்டாமை , அவரது கருத்துணரமாட்டாமை . ` மாட்டேனாய் ` என்க . கள்ள விழி - மறைத்து நோக்கும் கண் . காணாக் கண் - பாராததுபோலப் பார்க்கும் பார்வை ; இது , ` கள்ளவிழி ` என முன் வந்ததனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது . கண்ணால் - கண்ணோடு . கண் உள்ளார் போல் - கண்ணுக்கு அகப்படுவார்போல ; ஏகாரம் தேற்றம் .

பண் :

பாடல் எண் : 6

தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்
சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்
பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாரால்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக்
கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

காலையும் மாலையும் எப்பொழுதும் மின்னுகின்ற சடைமுடியை உடையவராய் , வேதம் ஓதும் நாவினராய் , வெண்காடு மேவிய விகிர்தனார் , ஏவிப்பணி கொள்ளும் சூலம் மழு என்ற படைகளை ஏந்தியவராய் , ஒளி வீசும் கொன்றைப் பூ மாலையை அணிந்து இருபொருள்படச் சுவையான சொற்களைப் பேசித் தொழுவத்தில் தங்கக் கூடிய வெண்ணிறக் காளையை இவர்ந்து வந்து பிச்சையையும் ஏற்காதவராய்த் தம்மை நோக்கி நிற்பவர் இயல்பினை அழிக்கின்றவர் போல , முப்பட்டைகளாகத் திருநீற்றை அணிந்து எனக்குக் காமத் தீ ஏற்படும் வகையில் பேசி என் உள்ளத்தில் அடக்கத்தை நீக்கி என் வளைகளையும் கவர்ந்து சென்று விட்டார் .

குறிப்புரை :

தொட்டு - ஏவி ; ` படைதொட்டார் ` என்றல் முறை . ` சுவை ` என்பது ஆகுபெயராய் அதனைத் தரும் சொல்லை உணர்த்திப் பின் பன்மை விகுதியேற்றது . ஈண்டுச் ` சுவை ` சொற்சுவை ; அது பொருள் கவர்த்து நிற்றல் . பட்டி - தொழுவம் ; இஃது இன அடை . பரிசு - இயல்பு , ` ஒக்கின்றார் ` என்றது . துணியாமைக்கண் சொல்லியது . கட்டு - பிணிப்பு ; நீங்காது நிற்றல் . கனல் - காமத்தீ ; அதுமூண்டெழ என்க . கருத்து - உள்ளத்து நிறை ; தன்முனைப்பு என்பது உண்மைப் பொருள் . காலை மாலை விட்டு - பொழுது வேறுபாடுகள் இன்றி ; எப்பொழுதும் ; இரவிலும் சடை ஒளிவிடுவதென்றவாறு . ` விட்டு ` என்பது , ` விட ` என்பதன் திரிபு . இனி , ` காலையும் மாலையும் எப்பொழுதும் விட்டு விளங்குகின்ற ( மின்னுகின்ற ) சடை என்று உரைப்பினும் , அமையும் .

பண் :

பாடல் எண் : 7

பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக்
கோணாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய்
உண்பதுவும் நஞ்சன்றேல் ஓவியுண்ணார்
பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப்
பாலைப் பரிசழியப் பேசு கின்றார்
விண்பால் மதிசூடி வேதம் ஓதி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

நங்காய் ! வானத்தில் இயங்கும் பிறையைச் சூடி , வேதம் ஓதி , வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியைப் பாகமாகக் கொண்டு , பெண்கள் விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து கொடிய பாம்புகளைப் பூண்டு நான் வெட்கப் படும்படியாக என்னை நலம் பாராட்டுவார் . உலகில் உண்பார் உறங்குவார் செயல்களோடு அவருடைய செயல்கள் ஒவ்வா . அவர் விடம் ஒன்றே உண்பார் . அன்றேல் கஞ்சத்தனத்தால் உண்பதனை விடுத்து உண்ணாதே இருப்பார் . அழகாக விரிந்த சடையுடையவர் . என்னை நெருங்கி வந்து கூர்ந்து பார்த்துப் பாலினும் இனிமையாக என்னிடம் பேசுகின்றார் .

குறிப்புரை :

` ஒருபாகம் பெண்பால் ; வாழ்வது பேணா வாழ்க்கை ; பூண்பனவும்கோணாகம் ` என்க . ` வாழ்வது ` என்பதுசொல்லெச்சம் . பேணாவாழ்க்கை - ஒருவரும் விரும்பாத வாழ்க்கை ; பிச்சை யூண்வாழ்க்கை . கோணாகம் . ` கோண் ( வளைந்த )+ நாகம் ` எனவும் , ` கோள் ( கொடுமையுடைய )+ நாகம் ` எனவும் ஆம் . நாண் ஆம் சொல் - நாணம் மிகுதற்கு ஏதுவாய சொல் ; அவை நலம் பாராட்டல் முதலியன . உண்மைப் பொருளில் , ஆன்மாவின் தன்னியல்பு பொதுவியல்புகளை இனிதுணர்த்தித் தன்முனைப்பை அகற்றுதலாகக் கொள்க . ` உலகில் உண்பார் உறங்குவார் செயல்களோடு அவர் செயல்கள் ஒவ்வா ; என்னையெனின் , ` உண்பதுவும் நஞ்சு ; அன்றேல் யாதொன்றையும் உண்ணுதலை யொழித்து உண்ணாதே யிருப்பார் ` என்க . தலைவி தோழியை , ` நங்காய் ` என விளித்தாள் . ` அன்றேல் ` என்பது விகற்பித்தற்கண் வந்தது . ஓவி - ஒழித்து . ` ஓபி ` என்பது பிழைபட்டபாடம் . ` நஞ்சென்றால் ` என்பதும் , ` ஒப்பி ` என்பதும் பாடம் . பண்பு , ஈண்டு அழகு . ` அவிர்சடையர் ` என்பதும்பாடம் . பாலைப் பரிசு அழிய - பகுப்பு ( வேற்றுமை ) த் தன்மை நீங்க ; ஒற்றுமை கொண்டாடி - ஐ சாரியை .

பண் :

பாடல் எண் : 8

மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
வானவரும் மாலயனுங் கூடித் தங்கள்
சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்
தோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்
கருதுங்கொல் எம்பெருமான் செய்குற்றேவல்
என்பார்க்கு வேண்டும் வரங்கொ டுத்து
விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்ணிறக் காளையை இவர்ந்து வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியிடம் அவள் ஊடலைப் போக்கும் சொற்களைப் பேசுபவராய்த் தேவர்களும் திருமாலும் பிரமனும் கூடி வேத வாக்கியங்களால் துதித்து அபிடேகம் செய்து தோத்திரங்கள் பலவற்றைச் சொல்லி நறுமணப் பொருள்களைப் புகைத்து , ` எம்பெருமான் யாங்கள் செய்யும் குற்றேவல்களை மனத்துக் கொள்வாரோ ` என்று வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்துத் தமக்கு வேறுபட்ட செயல்கள் உளவாகக் கொண்டு அவற்றிற்காக இடம் பெயர்ந்து செல்வர் .

குறிப்புரை :

மருதங்களா ( க ) - மருதத் திணைச்சொற்களாக ; மனைவி உயர்வும் கிழவோன் பணிவுமாக ( தொல் . பொருள் . 223.) ` மங்கையோடு ` ` மருதங்களா மொழிவர் ` என மாறிக்கூட்டுக . இது புலவிக்காலத்தென்க . சுருதம் - கேள்வி ; மந்திரம் . அதுவும் , இறைவனது பெருமையுணர்த்துவதே யாதல்பற்றி , ` துதித்து ` என்று அருளிச் செய்தார் . கருதுதல் - பொருளாகக் கொள்ளல் , ` யாம் ` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து , ` யாம் செய்யும் குற்றேவலை எம் பெருமான் கருதுங்கொல் ` என்று இயைக்க . விகிர்தங்கள் ஆ - வேறுபட்ட செயல்கள் உளவாக ; நடப்பர் - ஒழுகுவர் . எதுகை இன்மையின் , ` விருதங்களா நடப்பர் ` என்பதே பாடம் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
காணார் பொறியழலாய் நின்றான் தன்னை
உள்ளானை யொன்றலா உருவி னானை
உலகுக் கொருவிளக்காய் நின்றான் தன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும்
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங்கொ டுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்காடு மேவிய விகிர்தனார் , கருடனை உடைய திருமாலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் கீழும் மேலும் தேடிச் சென்றும் காண இயலாதவராய்ப் பொறிகளை வெளிப்படுத்தும் அழற்பிழம்பாய் நின்றவராய் எல்லாப் பொருள்களின் உள்ளிடத்தும் இருப்பவராய் , அடியார்கள் விரும்பும் பல உருவங்களையும் உடையவராய்த் தேன் நிறைந்த கொன்றைப்பூவை அருச்சித்து நீங்காமல் நன்னெறியில் நின்று தவம் செய்த ஐராவதம் என்ற வெள்ளானைக்கு அது வேண்டிய வரங்களைக் கொடுப்பவர் ஆவர் .

குறிப்புரை :

புள்ளான் - கருடக்கொடியை உடையவன் ; திருமால் . ` மண் , விண் ` என்பன வருவித்து , ` மண்புக்கும் , விண் போந்தும் ` என உரைக்க . உள்ளான் - எல்லாப் பொருள்களின் உள்ளிடத்துமிருப்பவன் ; அந்தரியாமி . ஒன்றல்லா உரு , இரண்டாகிய ( அம்மையும் அப்பனுமாகிய ) வடிவம் . விளக்குப் போல விளக்கி நிற்றலின் , ` விளக்கு ` என்றருளினார் . சிறப்புப் பற்றிக்கொன்றை மலரையே எடுத்தோதினார் . காலை - காலம் . வெள்ளானை - ஐராவதம் ; இது கீழ்த்திசைக்கு உரியதாய் இந்திரனுக்கு ஊர்தியாகும் . இத்தலத்தில் ஐராவதம் இறைவனை வழிபட்டுத் துன்பம் நீங்கப்பெற்றமையை , கந்த புராணம் அமரர் சிறைபுகு படலத்துட் காண்க .

பண் :

பாடல் எண் : 10

மாக்குன் றெடுத்தோன்தன் மைந்த னாகி
மாவேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் தன்னைக்
காக்குங் கடலிலங்கைக் கோமான் தன்னைக்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி
வீக்கந் தவிர்த்த விரலார் போலும்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்காடு மேவிய விகிர்தனார் கோவர்த்தனத்தைக் குடையாக உயர்த்திய கண்ணனாகிய திருமாலின் மகனாய்க் கரும்பையே வில்லாகக் கொண்ட மன்மதனுக்குத் துணையாக வந்த தேவர்களெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற போதே ஒரே நொடி நேரத்தில் அவன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் நோக்கியவர் . கடலே அரணாகப் பாதுகாக்கப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய ஒளிவீசும் மகுடம் தாங்கிய தலைகளும் கண்களும் நசுங்கி வெளிப்புறம் தோன்றுமாறு தம் திருவடி விரலை ஊன்றி அவனுடைய செருக்கினை அடக்கியவர் ஆவர் .

குறிப்புரை :

குன்றெடுத்தோன், கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தியவன்; திருமால். வேழம் - கரும்பு. நோக்கும் - அவன் வெற்றியை எதிர்நோக்கும். துணைத் தேவர்-துணையாகப் பின்வந்த பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள். `அவர்கள்யாதும் செய்ய மாட்டாதவராய் ஒழியக் காமனை நெற்றிக்கண்ணால் நொடியில் எரித்தொழித்தான்` என இறைவனது பேராற்றலை வியந்தருளிச் செய்தவாறு. `விழித்து ஆன் தன்னை` எனப்பிரிக்க. ஆன் - அவ்விடத்து. தன்னை - அவனை (காமனை). `விழித்தான் - விழிக்கப் பட்டான்` என்றுரைத்தலுமாம். `காக்கும்` என்னும் பெயரெச்சம். `விரலார்` என்பதனோடு முடிந்தது. இறைவன் காமனை எரித்துப் பின்னர் அவன் மனைவியாகிய இரதி வேண்ட உயிர்ப்பித்தருளினமை அறிக. வீக்கம்-(செருக்கின்) மிகுதி போலும், அசைநிலை.

பண் :

பாடல் எண் : 1

அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
அமரர்களுக் கருள்செய்யும் ஆதி தாமே
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே
சிலையால் புரமூன் றெரித்தார் தாமே
தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

திருப்பழனத்திலே உகந்தருளி உறையும் எம் பெருமான் அலைகள் பொருந்திய கடலின் நஞ்சினை உண்டவர். தேவர்களுக்கு அருள் செய்யும் முதற்பொருள். உயிர்களைக் கவரும் கூற்றினை உதைத்தவர். தம்மால் கொல்லப்பட்ட வேங்கைப் புலியின் தோலை உடுத்தவர். வில்லால் திரிபுரத்தை எரித்தவர். கொடிய சூலை நோயைப் போக்கி என்னை ஆட் கொண்டவர். பிச்சை எடுக்கும் நிலையிலும் அழகான பண்புடையவர்.

குறிப்புரை :

`ஆதி` என்றது, பன்மை ஒருமை மயக்கம். அசைத்தார் - கட்டினார். `அழகாய்ப் பலிதேர்ந்த` என, மாற்றி யுரைக்க.
பலி - பிச்சை. தேர்ந்து - ஆராய்ந்து; தேடி. `பழனநகர் எம் பிரானார்தாமே` என்பதனை எழுவாயாகக் கொள்க. இதன்கண் உள்ள ஏகாரம் ஈற்றசை; ஏனைய ஏகாரங்கள் தேற்றம்; `தாம்` அனைத்தும் அசைநிலை.

பண் :

பாடல் எண் : 2

வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே
மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே
கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே
கருத்துடைய பூதப் படையார் தாமே
உள்ளத் துவகை தருவார் தாமே
யுறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் ஒற்றைச் சடையிலே கங்கை வெள்ளத்தை ஏற்றவர். மேம்பட்டவர் எல்லோருக்கும் மேம்பட்டவர். வஞ்சத்தைப் போக்கி என்னை ஆட்கொண்டவர். ஞானம் பெற்ற பூதங்களைப் படையாக உடையவர். தம்மை நினைக்கும் மனத்திற்கு மகிழ்ச்சி தருபவர். தீராத பெரிய நோய்களையும், சிறிய நோய்களையும் தீர்ப்பவர். ஆழமான கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்.

குறிப்புரை :

மேலார்கள் - தேவர்கள்; அவர்க்கு மேலார்கள், அயனும் மாலும். இனி, அயன் மால் என்பாரையும் தேவர்களுள்ளே வைத்து, அவர்க்கு மேலார்கள் அபரமுத்தர் என்றுரைத்தலுமாம். `கள்ளம்` என்றது சமணரது சார்பினால், தம் செயலுக்குத் தாமே தலைவராக நினைந்திருந்த முனைப்பினை. `கருத்துடைய பூதம்` என்றருளிச்செய்தது, `ஞானம்பெற்ற பூதங்கள்; சிவபூதங்கள்` என்றபடி.
உவகை தருவார் - (வாட்டம் நீக்கி) மகிழ்ச்சி தருவார். உறுநோய் - பெருநோய்கள்; தீரா நோய்கள். `உறுநோயும் சிறுபிணிகளும் தீர்ப்பார்` என்க.

பண் :

பாடல் எண் : 3

இரவும் பகலுமாய் நின்றார் தாமே
எப்போதும் என்நெஞ்சத் துள்ளார் தாமே
அரவ மரையில் அசைத்தார் தாமே
அனலாடி யங்கை மறித்தார் தாமே
குரவங் கமழுங்குற் றாலர் தாமே
கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே
பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் இரவும் பகலும் எப்போதும் என் நெஞ்சத்து உள்ளவராய்ப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தீயில் கூத்தாடித் தம் கையால் எல்லோருக்கும் `அஞ்சன்மின்` என்று அபயம் அளிப்பவராய்க் குரா மலர் மணம் கமழும் குற்றாலத்தில் உறைபவராய்ப் பலபல வேடங்களை விரும்பு பவராய்த் தம்மை வழிபடும் அடியவர்களுக்கு என்றும் பக்கலில் இருந்து உதவுபவர்.

குறிப்புரை :

`ஆடி` என்னும் எச்சம், எண்ணின்கண் வந்தது. மறித்தார் - தடுத்தார்; `அஞ்சேல்` என்று அமைத்து ஆட்கொண்டார். குரவம் - குரவம்பூ; அம், அல்வழிக்கண் வந்த சாரியை. `குரா` என்பது, குரவு என்றாயிற்று. கோலங்கள் - வேடங்கள். `மேன்மேல்` என்றது. `எல்லையின்றி` என்றபடி. பாங்கர் - உடன்நின்று உதவுபவர்; `தோழராகின்றவர்` என்பது நயம்.

பண் :

பாடல் எண் : 4

மாறில் மதில்மூன்று மெய்தார் தாமே
வரியரவங் கச்சாக வார்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறுகொடுஞ் சூலக் கையர் தாமே
யென்பா பரண மணிந்தார் தாமே
பாறுண் தலையிற் பலியார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் தமக்கு நிகரில்லாத மதில்கள் மூன்றனையும் அழித்தவராய்க் கோடுகளை உடைய பாம்பினைக் கச்சாக அணிந்தவராய், திருநீறணிந்த தூயவராய், நெற்றியில் அக்கினியாகிய கண்ணை உடையவராய்க் கொடிய சூலத்தை ஏந்தியவராய், எலும்புகளை அணிகளாக அணிந்தவராய்ப் பருந்துகள் புலால் நாற்றமறிந்து வட்டமிடும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவராய் உள்ளார்.

குறிப்புரை :

மாறுஇல் - அழிதல் இல்லாத. வரி-(படத்திற்) புள்ளி. `நெற்றியின்கண்` என உருபு விரிக்க. ஏறு-பொருந்திய. பாறு உண் - பருந்துகள் வீழ்ந்து புலாலை உண்கின்ற. பலி - பிச்சை.

பண் :

பாடல் எண் : 5

சீரால் வணங்கப் படுவார் தாமே
திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே
ஆரா அமுதமு மானார் தாமே
யளவில் பெருமை யுடையார் தாமே
நீறார் நியமம் உடையார் தாமே
நீள்வரைவில் லாக வளைத்தார் தாமே
பாரார் பரவப் படுவார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் எல்லோராலும் புகழ்ந்து வணங்கப்படுபவராய், எண் திசைகளுக்கும் உரிய தேவராய், தெவிட்டாத அமுதம் ஆவாராய், எல்லையற்ற பெருமை உடையவராய், நீர்வளம் பொருந்திய நியமம் என்ற திருத்தலத்தை உடையவராய், மேருமலையை வில்லாக வளைத்தவராய், எல்லா உலகத்தாராலும் முன் நின்று துதிக்கப்படுபவர் ஆவர்.

குறிப்புரை :

சீரால் - புகழோடு; என்றது, `யாவராலும் ஏத்தி (வணங்கப்படுவார்)` என்றருளியவாறு. `வணங்கப்படுவார்` என்றது, `வணங்கப்படுதற்கு உரியார் அவர் ஒருவரே` என்றருளிச் செய்தவாறு; (ப.16. பா.3. குறிப்புரை.) `திசைக்கெல்லாம் தேவாகி நின்றார்` என்றது, `அவரே முழுமுதற்கடவுள்` என்றருளியவாறு; இது, பன்மை யொருமை மயக்கம்.
ஆரா - தெவிட்டாத. `அமுதமும்` என்னும் உம்மை, சிறப்பு. நீரார்-நீர் போலும் தெளிந்த ஒழுக்கமுடையவர்; அவரது நியமங்களை உடையவர் (தமக்கு உரிய பொருளாக ஏற்றுக்கொள்பவர்) என்க.

பண் :

பாடல் எண் : 6

காலனுயிர் வௌவ வல்லார் தாமே
கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவு முகப்பார் தாமே
கோணாகம் நாணாகப் பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே
பால விருத்தரு மானார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் காலன் உயிரைப் போக்க வல்லவராய், விரைந்து ஓடும் வெள்ளை நிறக் காளையை உடையவராய்ப் பல வேடங்களையும் விரும்புபவராய்க் கொடிய பாம்பினைத் தம் வில்லின் நாணாக இணைத்தவராய், நீல கண்டராய்க் கயிலாயத்தின் உச்சியில் உள்ளாராய், பாலன் மூத்தோன் முதலிய எல்லாப் பருவங்களையும் உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

நாண் - அரை நாண். நீள்வரை - ஊழிதோறும் உயர்கின்ற மலை; கயிலை. `பால விருத்தர்` உயர்திணை உம்மைத்தொகை. உம்மை, `குமரர்` என்பதனைத் தழுவிய எச்ச உம்மை; `எல்லாப் பருவத்தினருமாகி, யாதொரு பருவமும் இலர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 7

ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே
யேழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
தீவாய் அரவதனை யார்த்தார் தாமே
பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் தமக்குப் பொருந்திய பார்வதி பாகராய், ஏழு ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டவராய், அடியார்கள் மலர்களைத் தூய்மை செய்து அணிவிக்க அவற்றை ஏற்று நிற்பவராய், எல்லை கடந்த பெருமை உடையவராய், உருவில் சிறிய பிறையைச் சடையில் அணிந்தவராய், விடம் கக்கும் வாயினை உடைய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தேவருலகிலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த கங்கையைச் சடையில் ஏற்றவராய் உள்ளார்.

குறிப்புரை :

ஏய்ந்த-(தமக்குப்) பொருந்திய; எத்திறம் தான் வேண்டினும் அத்திறமாய் நிற்கின்ற. `ஏழ்` என்பது பன்மை குறித்தவாறு. `மலரை ஆய்ந்து தூவ` என்க. நின்றார் - அத்தூவலை (வழி பாட்டினை) ஏற்று நிற்பவர். இறைவரது பெருமைமுழுவதும் உணர்ந்தார் ஒருவரும் இலர் என்பதுணர்த்துவார், `அளவில் பெருமை உடையார்` என்றருளிச் செய்தார். `நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்` (தி.11 திருமுருகாற் - 278.) என்று நக்கீர தேவர் அருளியது காண்க. `வைத்தார்` `ஆர்த்தார்` என்னும் சொற்குறிப்பினால், `பிறையை நலம்பெற வைத்து, பாம்பை அடக்கிக் கட்டினார்` என்பது பெறப்படும். `தேய்ந்த, தீவாய்` என அடைபுணர்த்ததும் அவை நோக்கி `பாய்ந்த கங்கை` என விதந்தருளிச்செய்தது, அது பிறரால் ஏற்றற்காகாமையை விளக்குதற்கு.

பண் :

பாடல் எண் : 8

ஓராதா ருள்ளத்தில் நில்லார் தாமே
யுள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை யிருந்தார் தாமே
பிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே
ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே
யுலகை நடுங்காமற் காப்பார் தாமே
பாரார் முழவத் திடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் தம்மை நினையாதவர் உள்ளத்தில் நிலையாக இல்லாதவராய், உள்ளத்தில் அன்பு சுரந்து பெருகுகின்ற அன்பர்கள் உள்ளத்தில் நிலையாக இருப்பவராய், என் உள்ளத்தை விட்டு அகலாது இருப்பவராய், தம் அடியவர் அல்லாத பிறருக்குக் காண்பதற்கு அரியவராய், ஊர்கள் நிறைந்த மூவுலகத்தும் பரவியிருப்பவராய், உலகம் துயரால் நடுங்காதபடி காப்பவராய், இவ்வுலகைச் சூழ்ந்த கடல்களிலும் பரவியிருப்பவராய் உள்ளார்.

குறிப்புரை :

ஓராதார்-நினையாதவர். `ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே` (தி.8 சிவபுராணம். 68) என்றருளிச் செய்த திருவாசகத்தினை ஈண்டு நோக்குக. உள் ஊறும் அன்பர் - உள்ளத்தில் சுரந்து பெருகுகின்ற அன்பினை உடையவர். இறைவனது அருட் குணங்களை ஒருகாலைக்கு ஒருகால் மிகுதியாக அறிதலால் அன்பு அவ்வாறு பெருகுவதாயிற்று என்க. பிறரது காட்சிக்கு ஒருஞான்றும் அகப்படாதவராகிய இறைவர் சுவாமிகளது உள்ளத்தில் ஒருஞான்றும் நீங்காதிருந்தமை அவரது மறவாமையாலேயாம். ஆகவே, இத் திருப்பாட்டின் முதல் இரண்டடிகளும் ஒரு பொருளையே பொதுவாகவும். சிறப்பாகவும் அநுபவமாக இனிதுணர்த்தியவாறாதல் அறிக. ஊர் ஆரும் - ஊர்கள் நிறைந்த; மேல் கீழ் உலகங்களிலும் ஊர்கள் உளவென்க. ஆர் முழவம் - ஒலிக்கின்ற மத்தளம்போலும் ஓசையை உடைய கடல்; உவமையாகுபெயர், நிலமும் கடலுமாய் இருப்பவர் என்றபடி.

பண் :

பாடல் எண் : 9

நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே
நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே
பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே
பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே
ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழனநகர் எம்பிரானார் திருமாலுக்கு அடியினைக் காணமுடியாத தீப் பிழம்பின் வடிவில் காட்சி வழங்கியவராய், பார்வதி பாகராய், புலித்தோல் மீது பாம்பினை இறுகக் கட்டி இடையில் அணிபவராய், செஞ்சடையில் கங்கை வெள்ளத்தைத் தேக்கியவராய், ஏழு உலகங்களையும் படைத்து ஆள்பவராய், பல இடங்களிலும் சிவமாகிக் காட்சி வழங்குபவராய், பாண்டவரில் அருச்சுனனுக்கு இரங்கிப் படைகள் வழங்கி அருள்புரிந்தவராய் உள்ளார்.

குறிப்புரை :

நீண்டவர், திருமால்; நீண்டு மூவுலகையும் அளந்த அவர்க்கே அளப்பரிதாக நீண்டார் என்றவாறு. `பூண்டு` என்ற செய்தெனெச்சம், எண்ணுப் பொருளதாய் நின்றது. `உண்டு உறங்கினான்` என்பதிற்போல; எனவே, `` அரவைப் பூண்டார்; புலித் தோலை மேல் ஆர்த்தார்` என்பது பொருளாயிற்று. `பொன்னிறத்த சடை` என இயையும். `ஆண்டு வைத்தார்` என்பதனை, `வைத்து ஆண்டார்` என மாற்றியுரைக்க. வைத்து - படைத்து. அங்கங்கே சிவமாகி நிற்றலாவது, உயிர்கள் வழிபட்டு உய்வான் வேண்டிப் பல இடங்களில் குரு லிங்க சங்கமத் திருமேனிகள் கொண்டு எழுந்தருளியிருத்தல்.
`தாவர சங்கமங்கள் என்றிரண்டுருவில் நின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்`
(சிவஞான சித்தி. சூ. 2-28). என அவரது பெருங்கருணைத் திறம் அருளிச்செய்யப்பட்டது. பரிந்தார் - இரங்கினார். இறைவரை நோக்கித் தவம்செய்துகொண்டிருந்த பார்த்தனை (அருச்சுனனை)க் கொல்லவேண்டி `மூகன்` என்னும் அசுரன் பன்றி வடிவங்கொண்டு வர அதனைப் பார்த்தன் அறியாதிருந்தமை பற்றி, இறைவர் தாமே வேட்டுவ வடிவங்கொண்டு சென்று, அப்பன்றியை விரைந்து அம்பெய்து கொன்ற வரலாற்றினைப் பாரதத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 10

விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே
விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே
புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே
பூந்துருத்தி நெய்த்தானம் மேயார் தாமே
அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே
அரக்கனையும் ஆற்ற லழித்தார் தாமே
படையாப் பல்பூத முடையார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.

பொழிப்புரை :

பழன நகர் எம்பிரானார் காளையை இவர்ந்து தாம் விரும்பிய உலகத்து இருப்பவராய்ச் சூரியன் வழிபடும் சோற்றுத் துறையில் உறைபவராய்த் தேவர் கூட்டத்தால் நாற்பக்கமும் சூழப் பெற்றவராய்ப் பூந்துருத்தியையும் நெய்த்தானத்தையும் விரும்பியவராய், அடுத்துப் புனல்சூழும் திருவையாற்றை உகந்தருளி உறைபவராய், இராவணனுடைய ஆற்றலை அழித்தவராய்ப் பூதங்களைப் படையாக உடையவராய் உள்ளார்.

குறிப்புரை :

`இருப்பர்` என்றது, `சென்று காட்சியளிப்பர்` என்றவாறு. சோற்றுத்துறை சூரியன் வழிபட்ட தலமாகலின், `விரி கதிரோன் சோற்றுத்துறை` என்றருளினார். `சூழ் அத்தேவர்` எனப் பிரிக்க. சோற்றுத்துறையும் பூந்துருத்தியும் நெய்த்தானமும், ஐயாறும் சோழ நாட்டுத் தலங்கள். `பல்பூதம் படையா உடையார்` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 1

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

பகைவருடைய முப்புரங்களை அழித்தவனே ! தீயில் கூத்து நிகழ்த்துபவனே ! கிட்டுதற்கு அரிய அமுதமே ! கூரிய மழுப்படையை ஏந்துபவனே ! குட்டையான பல பூதங்களைப் படையாக உடையவனே ! ஆயிரம் பெயர் உடையவனே ! பிறையைச் சூடும் தலைக்கோலம் உடையவனே ! ஆரா அமுதமாம் ஐயாற்றெம் பெருமானே ! என்று பலகாலும் வாய்விட்டு அழைத்து மனம் உருகி நைகின்றேன் .

குறிப்புரை :

ஆரார் - பொருந்தார் ; பகைவர் . ` நீறாக ` என்னும் ஈறு கெட்ட செயவெனெச்சம் செயப்படுபொருளாய் நின்றது , ` உண்ணக் கண்டேன் ` என்பதிற்போல . ` நோக்கும் ` என்றது , இயைந்து செய்யுங் குறிப்பை உணர்த்திற்று . இனி , ` நீறாம்படி கருதிய ` என்றும் ஆம் . ` அனலாடீ ` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும் . குறள் - குறுகிய வடிவம் . ` ஆயிரம் ` என்றது அளவின்மையைக் குறித்தது . ` ஐயாறன்னே ` என்பதில் னகரம் , விரித்தல் . அரற்றி - வாய்விட்டு அழைத்து . நைகின்றேன் - மனம் உருகி நிற்கின்றேன் . ` இன்னதொரு தவப்பயன் இருந்தவாறு நன்று ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க . ` நைகின்றேனே ` என்னும் ஏகாரம் , தேற்றம் .

பண் :

பாடல் எண் : 2

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

திரிபுரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கிய தூயோனே ! பழையோய் ! பிறைசூடி ! முதல்வா ! முக்கண்ணா ! அம்பு பூட்டிய வில்லினனே ! துயர்க்கடலில் அடியேன் அழுந்தாமல் எடுத்துக் கரையேற்றி ஐயோ ! என்று இரங்கி அருள்புரியும் ஐயாறனே ! என்று வாய்விட்டு அழைத்து நான் மனம் உருகி நிற்கின்றேன் .

குறிப்புரை :

` தீ வாயின் நீறா ` என இயையும் . தீர்த்தன் - தூயோன் . மூவா - முதிராத ; என்றும் இளைதாய் இருக்கும் . ஈண்டும் , ` சூடீ ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ஏ ஆர் சிலை - அம்பு பொருந்தும் வில் ; இது , ` பினாகம் ` என்னும் பெயருடையது ` ஆவா ( ஆ ஆ )` என்பது , அவலப் பொருளும் , வியப்புப் பொருளும் தருவதோர் இடைச்சொல் ; ஈண்டுப் பிறர் பொருட்டுத் தோன்றும் அவலப் பொருள் தந்தது . இனி , ` ஆ வாஎன்று அருள் புரியும் ` எனக்கொள்ளினும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது
நிறையும் அமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே.

பொழிப்புரை :

அழகிய நறுமணப் பொடி பூசியவனே ! அடியவர்களுக்கு ஆரமுதே ! விடம் அணிந்த கழுத்தினை உடையவனே ! சான்றோர்கள் ஓதும் நான்கு வேத வடிவினனே ! என் மனம் உணருமாறு உள்ளே புகுந்திருக்கும் போதெல்லாம் எனக்கு அமுதம் போன்ற இனியனே ! நாங்கள் அஞ்சாதபடி எங்களை ஆட்கொண்ட ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

அம் சுண்ணம் - அழகிய நறுமணப் பொடி ; இது பொன்நிறம் உடையது ; ` திருப்பொற் சுண்ணம் ` என்றது காண்க ( திருவாசகம் .) நாவலர்கள் - பொருள் விரிக்க வல்லவர்கள் ; அவர்கட்கே நான்மறையை உரிமையாக்கினார் என்க . ` அடியார்கட்கு ஆரமுது ` என முன்னர் அருளிச்செய்தமையால் , இங்கு , ` என் நெஞ்சுணர ` என ஒருசொல் வருவித்துரைக்க . உணர - உணருமாறு . உணராதவாறு புக்கிருக்குங்கால் இன்பம் செய்யாமையின் , ` உணரப் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே ` என்றருளிச்செய்தார் . அஞ்சாதே - அஞ்சாதபடி . ஆளுதல் - காத்துப் பணிகொள்ளுதல் . ` காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் ` ( தி .4. ப .1. பா .5.) என முதற்றிருப்பதிகத்தே அருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 4

தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
ஏழ்நரம்பின் இன்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை
வாங்கியருள் செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

பழைய மேல் கடலே ! சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட கீழ்க்கடலே ! விளங்கும் இளம் பிறை சூடீ ! உலகம் முழுதும் நிறைந்தவனே ! ஏழ் நரம்பாலும் எழுப்பப்படும் ஏழிசை யானவனே ! துயரக் கடலில் மூழ்கி வருந்தும் என்னை கரைக்குக் கொண்டுவந்து அருள் செய்தவனே ! ஐயாற்றை உகந்தருளி உறை விடமாகக் கொண்டவனே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

தொல்லை - பழமை . தொடு கடல் - வளைந்த கடல் . இனி , ` சகரர்களால் தோண்டப்பட்ட புதிய கடல் ` எனக் கொண்டு , ` இது கீழ்க்கடல் ` எனவும் , பழைய கடல் மேற்கடல் எனவும் ` குணாஅது கரைபொரு தொடுகடல் ` எனவும் ` குடா அது தொன்றுமுதிர் பௌவம் ` எனவும் , ( புறம் - 6.) கூறியாங்கு உரைத்தலும் ஒன்று ; இப் பொருட்கு , ` தொல்லைக் கடல் தொடுகடல் ` எனத் தனித்தனி முடித்து , அவைகளை வேறு வேறு கடலாக உரைக்க . ` எல்லை ` இரண்டனுள் முன்னது உலகத்தையும் , பின்னது உறைவிடத்தையும் குறித்தன .

பண் :

பாடல் எண் : 5

இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

சடையில் முடி மாலை அணிந்தவனே ! சூரிய சந்திரர் உலவும் ஆகாய வடிவினனே ! அடியவரால் வணங்கப் படுபவனே ! துருத்தியிலும் நெய்த்தானத்திலும் உறைபவனே ! நீல கண்டனே ! தீக் கண்ணனே ! அண்டங்களையும் கடந்த ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

இண்டை - முடிமாலை . ` இருசுடரை உடைய ` என்க . ` தொண்டர் தொழப்படுவாய் ` என்றது , பிறர் தொழ வாராமையைக் குறித்தருளியவாறு . துருத்தி , நெய்த்தானம் சோழநாட்டுத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 6

பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
பசுபதீ பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
கடுவிடை யொன்றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
பார்த்தர்க் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

பகைவர் திரிபுரத்தை எரித்தவனே ! ஆன்மாக்களுக்குத் தலைவனே ! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே ! அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் அறிந்த சான்றோர்களின் நாவில் இருப்பவனே ! விரைந்து செல்லும் காளை வாகனனே ! உன்னையே பற்றுக் கோடாக உடையவரின் நெஞ்சினை உறைவிடமாகக் கொண்டவனே ! அருச்சுனனுக்கு அருள்செய்தவனே ! வேற்றுக் களைகண் இல்லாதவர்களுக்கு அருள் செய்யும் ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

பற்றார் - பொருந்தாதவர் ; பகைவர் . பண்டரங்கன் - பாண்டரங்கம் என்னும் கூத்தை உடையவன் . கற்றவர்கள் இறைவனையே துதித்தல் பற்றி , ` கற்றார்கள் நாவினாய் ` என்றார் . கடு விடை - விரைந்து செல்லும் எருது . ` ஒன்றை ஊர்தியா உடையாய் ` என்க . பற்று ஆனார் - அன்பர் ஆயினார் ; இதனுள் , ` பற்று ` என்பது , பண்பின் பெயர் பண்பியின்மேல் நின்ற ஆகுபெயர் , ` இல்லதென் இல்லவள் மாண்பானால் ` ( குறள் - 53.) என்பதிற்போல . அற்றார் - களைகண் இல்லாதவர் ; ` திக்கற்றவர்க்குத் தெய்வம் துணை ` என்னும் பழமொழியையும் நினைக்க .

பண் :

பாடல் எண் : 7

விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

தேவர் தலைவனே ! விளங்கும் பிறை சூடியே ! பகைவருடைய மும்மதிலையும் எரித்தவனே ! ஏகம்பத்தில் உறைபவனே ! பண் நிறைந்த வேதம் ஓதுபவனே ! ஆன்மாக்களின் தலைவனே ! வெள்ளிய நீறணிந்தவனே ! அண்ணால் ! ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

எண்ணார் - மதியாதவர் ; பகைவர் . எயில் - மதில் ; அரண் . ஈண்டும் , ` பாடீ ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` அண்ணா ` என்பது , ` அண்ணல் ` என்னும் பொருளுடைய ` அண்ணன் ` என்பதன் விளிப் பெயர் ; ` பெருமையுடையவனே ` என்பது பொருள் . ` என்று என்று இவ்வாறு சொல்லி அரற்றி ` என உரைக்க .

பண் :

பாடல் எண் : 8

அவனென்று நானுன்னை யஞ்சா தேனை
அல்லல் அறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று
பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

வீணன் என்று சொல்லுமாறு , உன்னை அஞ்சாது தீய வழியில் சென்று வருந்திய என்னுடைய துன்பங்களைப் போக்கியவனே ! இன்பத்துக்குக் காரணன் என்று நான் உன் பெருமை எல்லாம் சொல்ல எனக்கு உன் திருவருட் செல்வத்தை வழங்குகின்றவனே ! என் உள்ளத்துள்ளே விளங்கித் தோன்றுபவனாய் இருந்து என் பழைய ஊழ்வினையை நீக்குபவனே ! ஆதியே ! ஐயாற்றுப் பெருமானே ! நீயே யாவுமாய் எங்குமாய் நிற்கும் அவன் எனப்படும் பரம் பொருள் என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

` உன்னை அஞ்சாதேனை , ` நான் அவன் ` என்று அல்லல் அறுப்பானே ` எனக் கூட்டுக . அவன் - அவம் உடையவன் ; வீணன் ; பயனற்றவன் . ` நின் பணி பிழைக்கில் புளியம் வளாரால் மோதுவிப்பாய் ` என்று அஞ்சிப் பிழையா தொழுகும் அறிவில்லேனாகிய என்னை , ` இவன் , அறிவது அறிந்து பயன் எய்தும் அறிவு இல்லாதவன் என்று கருதித் திருவுளம் இரங்கிக் கொடிதாகிய சூலை நோயைக் கொடுத்து நல்லறிவு பெறுவித்துப் பின்னர் அந்நோயையும் தீர்ப்பவனே ` என இத்தொடரின் பொருளை விரித்துரைத்துக் கொள்க . ` தீர்ப்பவன் ` என எதிர்காலத்தாற் கூறியது , அன்னதோர் அருள் அவனுக்கு என்றும் உள்ள இயல்பாதலை நினைந்து , இதனுள் , இறைவன் கூற்றில் , ` இவன் ` எனப் படர்க்கையாக அருளற்பாலதனைத் தம் கூற்றாக ` நான் ` எனத் தன்மையில் அருளிச் செய்தார் என்க . ` சிவன் ` என்றது ஈண்டு , ` இன்பத்திற்குக் காரணன் ` எனப் பொருள்தரும் . என்று - என்று உணர்ந்து . எல்லாம் -( உனது புகழ்கள் ) பலவும் . சொல்ல - சொல்லி ஏத்த . செல்வம் - திருவருட்செல்வம் . பவன் - விளங்கித் தோன்றுவோன் . இறுதியில் உள்ள ` அவன் ` என்பது , ` அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது ` ( தாயுமானவர் - 13.) என்பதிற்போல - பலர்அறி சுட்டுப்பெயர் . ` என்று ` என்பதனை , ` ஆதியே ` என்பதனோடுங் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 9

கச்சியே கம்பனே யென்றேன் நானே
கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே.

பொழிப்புரை :

கச்சியில் ஏகம்பத்து உறைபவனே ! கயிலாயனே ! குடந்தை நாகைக் காரோணனே ! நித்திய கல்யாணனே ! விரும்பி நினைப்பவர் மனத்து உள்ளவனே ! நண்பகலில் காளையை இவர்ந்து உலவுபவனே ! தியானம் செய்பவர் மனத்தை உறைவிடமாகக் கொள்பவனே ! அச்சம் , நோய் இவற்றைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

நிச்சல் மணாளன் - என்றும் அழகன் ; என்றும் ஒரு படியனாய் இருப்பவன் ; அழிவில்லாதவன் . ` நித்தமணானர் நிரம்ப அழகியர் ` ( தி .8 திருவாசகம் அன்னைப்பத்து . 3) என்றதும் காண்க . உச்சம் போது ஏறு - ( கடகரியும் பரிமாவும் தேரும் போன்ற ) ஊர்திகள் எல்லாவற்றினும் மேலாக விரைந்து வருகின்ற இடபம் ; இனி , ` உச்சிப் போதின்கண் வெயில்போலும் வெள்ளிதாகிய இடபம் எனலுமாம் . ` நினைத்தல் , உள்குதல் ` என்பவற்றை முறையே , ` ஞாபகம் கொள்ளல் , தியானம் செய்தல் ` என்னும் பொருளுடையனவாகக் கொள்க . ` பிணி ` என்பதன் பின் , ` இரண்டும் ` என்னும் செவ்வெண்தொகை விரிக்க .

பண் :

பாடல் எண் : 10

வில்லாடி வேடனே யென்றேன் நானே
வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
சொல்லாய சூழலா யென்றேன் நானே
சுலாவாய தொல்நெறியே யென்றேன் நானே
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

வில்லைச் செலுத்தும் வேடர் வடிவில் தோன்றியவனே ! திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனே ! வேதங்கள் ஓதப்படும் இடங்களில் உள்ளவனே ! எங்கும் பரவிய நல்லவர்கள் பின்பற்றும் நன்னெறி ஆகியவனே ! எனக்கு எல்லாச் செல்வங்களாகவும் உயிராகவும் இருப்பவனே ! இராவணனுடைய தோள்களை நெரித்தவனே ! உன்னைச் சார்தற்கு இடையூறாக இருக்கும் தீவினையைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே ! என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

` சொல்லாடுதல் ` என்பதுபோல . ` வில்லாடுதல் ` என்பது ஒருசொல் ; வில்லை ஆளுதல் என்பது பொருள் . வேடனாகியது அருச்சுனனின் பொருட்டு . சொல்லாய சூழலாய் - சொல்லாகிய இடத்தில் உள்ளவனே ; ` யான் இவ்வாறெல்லாம் சொல்லும் சொற்களாகியும் இருப்பவனே ` என்றபடி . சுலாவு ஆய - பரத்தல் பொருந்திய தொல் நெறி - தொன்று தொட்டு நல்லோர் பலரும் அடிப்பட்டுச் சென்றநெறி . ` எல்லாம் ஆய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் . ` உயிர் ` என்பது ` உயிர்போன்றவன் ` என உவமையாகுபெயர் . அல்லா வினை - சார்தற்கு உரியதல்லாத வினை ; இஃது இனச்சுட்டில்லா அடை . எனவே , ` வினை ` என்றது நல்வினை , தீவினை ஆகிய இரு வினையையும் குறித்தருளியதாம் . நல்வினையும் பிறப்பிற்கு வித்தாகலின் சார்தற்கு உரியதாகாதாயிற்று ; ` இருள்சேர் இருவினையும் சேரா ` ( குறள் - 5) என்றருளினார் திருவள்ளுவ நாயனாரும் .

பண் :

பாடல் எண் : 1

ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய் . இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய் . மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய் . இமவான் மருமகனாய் உள்ளாய் . உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய் . எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய் . உலகில் உள்ள ஞாயிறு திங்கள் , கோள்கள் , விண்மீன்கள் முதலிய யாவுமாகியுள்ளாய் .

குறிப்புரை :

` ஒசை , ஒலி ` என்பன , ` சத்தம் , நாதம் ` என்னும் பொருளுடையன . ` வெற்றோசையும் பொருளோசையும் ` என ஒசை இருவகைப்படும் . அவற்றுள் , வெற்றோசையை ` ஒசை ` என்றும் , பொருளோசையை ` ஒலி ` என்றும் அருளிச்செய்தார் . பொருளோசை , எழுத்தும் சொல்லுமாக அறியப்படும் , ` எழுத்து ` என்பதும் , ` சொல் ` என்பதும் உண்மையில் முறையே பொருள் உணர்வாகிய ஆற்றலும் , அவ்வாற்றலின் , கூட்டமுமேயாகும் . ஆயினும் , அவ்வாற்றலை எழுப்புகின்ற அளவுபட்ட ஓசையும் , அவற்றது கூட்டமும் ஆகுபெயரால் , ` எழுத்து ` என்றும் , சொல் என்றும் சொல்லப்படுகின்றன . இதுவே , ` எழுத்துக்களின் தன்மை ` எனப்படுவது . ` இதனை ஆசிரியர் தொல்காப்பியனார் நமக்கு உணர்த்தலாகாமையின் உணர்த்திற்றிலர் ` என்பர் உரையாளர் . எழுத்துக்கள் புணர்ச்சிக் கண் ஓன்று வேறொன்றாதலை , ` மெய்பிறிதாதல் ` எனக் குறியிட்டு . ( தொல் . எழுத்து . 110.) அவ்வாறே பலவிடத்தும் ஆண்டமையின் , பொருளுணர்த்தும் ஆற்றலே உண்மை எழுத்தென்பதும் , ஓசை அதற்கு நிமித்தம் என்பதும் அவ்வாசிரியரது கருத்தாதல் தெளிவு . இனி , அவ்வாற்றலைப் புலப்படுக்கும் ஓசையை , ` மெய்தெரி வளியிசை ` ( பொருளைத் தெரிவிக்கும் காற்றொலி ) என விளக்கினார் ( தொல் . எழுத்து . 103.) அதனால் அவற்றை ` எழுத்து ` என்றும் , அவற்றது கூட்டத்தைச் ` சொல் ` என்றும் கூறுதல் பான்மை வழக்கே என்பதும் , ஆயினும் , எழுத்துக்களது உண்மைத் தன்மை உலகத்தார்க்கு இனிது விளங்காது அவைதாமே எழுத்தும் சொல்லுமாய் நிற்றல் பற்றி செவ்வன் வழக்காகவே ஆளப்படுவது என்பதும் விளங்கும் . யாழின் நரம்புகள் ஒரோர் அளவிற்பட்டு நின்று , கேட்டற்கு இனியவாய் இசையுமாறு எழுப்ப எழுந்து ` இசை ` என்னும் காரணக் குறிபெறும் ஓசைபோல , அளவிற்பட்டுப் பொருளுணர்வு தோன்றுமாறு இசைந்து நிற்கும் ஓசையும் ` இசை ` எனப்படுதலின் ` ` ஓரள பிசைக்கும் குற்றெழுத்தென்ப ` ` ஈரள பிசைக்கும் நெட்டெழுத்தென்ப ` ( தொல் . எழுத்து . 3.4 .) என்றாற் போல எழுத்தையும் , ` மெய்தெரி வளியிசை `, ( தொல் . எழுத்து . 103 ) ` ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே ` ` உயர்திணை மருங்கிற் பால்பிரிந்திசைக்கும் ` ( தொல் . சொல் . 1,4 .) என்றாற்போலச் சொல்லையும் , ` இசை ` யென வழங்குவர் ஆசிரியர் . மெய்தெரி வளியிசை , உயிர்வளியின் ( பிராணவாயுவின் ) இயக்கத்தால் புறத்துப்போந்து உரத்து இசைத்தலும் , அஃது இன்றி , எழுவளி ( உதான வாயு ) அளவில் அகத்து மிடற்றின் கண்ணே நின்று மெல்ல இசைத்தலும் ஆகிய இருநிலையை உடைத்து என்பதும் , அவற்றுள் புறத்திசைக்கும் நிலையே இயற்றமிழ் நூலுள் எழுத்தெனவும் , சொல்லெனவும் எடுத்து வரையறை கூறப்பட்ட தென்பதும் , ஏனை அகத்திசைக்கும் நிலை மெய்ந்நூலுள்ளே ( தத்துவசாத்திரத்துள் ) வரையறுத் துணர்த்தப்படும் என்பதும் தொல்லாசிரியர் துணிபென்பது , ` எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே ` எனவும் , ( தொல் . எழுத்து . 102). ` அஃதிவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே ` ( தொல் . எழுத்து . 103.) எனவும் ஓதியவாற்றான் அறியப்படும் . ` சொல்லை வாக்கு ` என்றலின் , அகத்தெழு வளியிசையை , ` மத்திமை வாக்கு ` எனவும் , புறத்திசைக்கும் வளியிசையை , ` வைகரி வாக்கு ` எனவும் மெய்ந்நூல் கூறும் . இனி ; சொல் , அகத்தெழு வளியொடும்படாது நினைவின் கண்ணே நிற்கும் நிலையும் உண்டு ; அது , ` பைசந்தி வாக்கு ` எனவும் , சொல் இவ்வாறெல்லாம் வெளிப்படாது தன்னியல்பில் நிற்கும் நிலை ` சூக்கும வாக்கு ` எனவும் சொல்லப்படும் . இவற்றுள் சூக்கும வாக்கே ` நாதம் ` எனப்படுவது . இதனையே சிலர் , ` நாதப் பிரமம் ` எனக் கடவுளாகக் கூறுவர் ; அது , சொல்லும் சடமே என்பது உணராதாரது கூற்றேயாமென்க . உணர்வுடையோர் , கூற்றாயின் , உண்மை என்னாது , ` அன்னம் பிரமம் ` ( தைத்ரீயம் ) என்பதுபோல உபசாரம் என்க . இங்ஙனங் கூறியவாற்றால் , ` ஓசை` எனப்பட்டதும் , ` ஒலி ` எனப்பட்டதும் வேறு வேறு என்பது விளங்கிற்று . ஒருவன் - ஒப்பற்ற தவைன் . பொன் , மணி முதலியன போல நறுமணங் கமழும் மலர்களும் உலகப் பொருள்களுட் சிறப்புடையன வாகலான் அவைகளை எடுத்தோதியருளினார் . மலையான் - மலையரசன் . சுவாமிகளுக்கு இறைவன் திருநல்லூரில் திருவடி சூட்டினமையை அவரது புராணத்துட் காண்க . தேச விளக்கு - உலகில் உள்ள ஒளிப்பொருள்கள் ; அவை ஞாயிறு , திங்கள் , தீ முதலியன . செம்பொற்சோதீ - செம்பொன்னினது ` ஒளிபோன்றுள்ளவனே ; சோதி , உவமையாகுபெயர் . ` ஆனாய் ` முதலிய பலவும் வினைப்பெயர்கள் . அவை எழுவாயாய் நின்று நீயே என்னும் பெயர்கொண்டு முடிந்தன ; ஏகாரங்கள் , ` பிறரல்லர் ; நீ ஒருவனே ` எனப் பிரித்து நின்ற பிரிநிலை .

பண் :

பாடல் எண் : 2

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

ஊனக்கண்ணால் காணுதற்கு இயலாத திருமேனியை உடையாய் ! பசி , பிணி முதலியவற்றினால் வருந்தாதபடி அருட்பார்வையால் காப்பவன் . நீ , அடக்க முடியாத என் ஐம்புலன்களையும் அடக்குமாறு செய்தாய் . மன்மதனை நெருப்புக் கண்ணால் வெகுண்டாய் . கட்டுதற்கு அரிய பெரிய பாம்பினை வில் நாணாகக் கட்டினாய் . உன் அடியவன் என்று என் தலையில் உன் திருவடிகளை வைத்தாய் . மற்றவரால் போக்க முடியாத ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களை நீக்கினாய் . இவ்வாறு செய்து திருவையாறு அகலாத செம்பொன் சோதியாய் உள்ளாய் .

குறிப்புரை :

நோக்கரிய திருமேனி - ஊனக் கண்ணாற் காணுதல் இயலாத திருமேனி ; ` திருமேனி ` என்பது , வடிவத்தையேயன்றி , இயல்பையுங் குறிக்கும் . நோவாமே - வருந்தாதபடி ; வருத்தம் . பசி பிணி முதலியவற்றாலும் , பிறப்பினாலும் வருவன . நோக்கு - அருட்பார்வை . இனி , ` நோக்கு ` என்பதனை , ` அழகு ` எனக்கொண்டு , ` நோயுறாத அழகிய உடம்பு ` என்றுரைத்தலுமாம் . காப்பரிய - அடக்குதற்கரிய . காத்தாய் - அடக்கினாய் . இறைவனைப் புலன்களை அடக்கியிருப்பவனாகக் கூறுதல் , எல்லா வற்றையும் அறிந்தும் , அவற்றுள் ஒன்றிலும் அழுந்தாது பற்றற்று நிற்றல் பற்றி என்க . ஆர்த்தல் - கட்டுதல் .

பண் :

பாடல் எண் : 3

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொன் சோதியே ! நீ மேகத்தில் மின்னல்களாகவும் , கடல் மலை மேகம் ஆகாயம் என்பனவாகியும் , மண்டை ஓட்டையே செல்வமாகக் கொண்டவனாகவும் , உன்னைச் சார்ந்த அடியவர்களைத் தவறான வழிகளில் செல்லாமல் தடுத்து அடிமை கொள்ள வல்லவனாகவும் , அடியவர் உள்ளக் கருத்தை அறிந்து நிறைவேற்றுபவனாகவும் , என் தலைமேல் தாமரை போன்ற உன் திருவடிகளை வைத்தவனாகவும் , சிவந்த திருமேனியில் நீலகண்டனாகவும் உள்ளாய் .

குறிப்புரை :

கனம் - மேகம் . கடுஞ்சுடர் - மிக்க ஒளி ; மின்னல் . தனம் - செல்வம் ; ` தலை ஓடாகிய பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்தான் உனது செல்வநிலை ` என நகைச்சுவை தோன்ற அருளியவாறு . தகைந்து - தடுத்து ; பிறரிடத்துச் செல்லாதவாறு நிறுத்தி . நஞ்சை உட்கொண்டிருத்தலை , ` சினத்திருந்த ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 4

வானுற்ற மாமலைக ளானாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ வானளாவிய மலைகளில் வடக்கிலுள்ள கயிலை மலையில் உறைவாய் . புலால் மணம் கமழும் ஒளி வீசும் மழுப்படையை உடையாய் . சடையில் பிறை , பாம்பு , கங்கை இவற்றை வைத்தாய் . பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புகிறாய் . அடியவன் என்று என் தலை மீது உன் திருவடிகளை வைத்தாய் . தேன் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் உள்ளாய் .

குறிப்புரை :

வான் உற்ற - ஆகாயத்தை அளாவிய . ` வடகயிலை ` என்றதை ` செஞ்ஞாயிறு ` ( புறம் . 30) என்பதுபோலக்கொள்க . ` தேன் உற்ற ` என்பதில் , ` உற்ற ` உவம உருபு ; இதனை , ` இயைய , ஏய்ப்ப ` முதலியனபோலக் கொள்க .

பண் :

பாடல் எண் : 5

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவனாய்ப் பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாய் , மற்றவர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவனாய் , ஊழிகளுக்கெல்லாம் தலைவனாய்ப் பற்றுக்கோடாய் இருந்து உலகங்களை எல்லாம் காத்தவனாய்க் கழலணிந்த சிவந்த திருவடிகளை என் தலைமேல் வைத்தவனாய் , வலிமை வாய்ந்த மழுப்படையை உடையவனாய் உள்ளாய் .

குறிப்புரை :

` பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவன் ` என்க . ஊழி முதல்வன் - காலத்தை நடத்தும் தலைவன் . பெரியார்கள் - ஞானியர் ; அவர்கட்கெல்லாம் பெரியவன் என்றது , இயற்கையுணர்வும் , சுதந்திர உணர்வும் உடைமை பற்றி . ` உலகு ` என்றது , உயிர்களை ; அவைகளுக்குக் ` கண் ` என்றது , அறிவுக் கறிவாகி நிற்றலை ; ` சொன்ன சிவன் கண்ணா ` ( சிவஞானபோதம் . சூ . 5. அதி . 2.)

பண் :

பாடல் எண் : 6

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பொருள்களில் அவற்றின் பண்புகளாக உள்ளாய் . அடியவர்கள் சுற்றமாக உள்ளாய் . கற்கும் கலையறிவாகவும் அநுபவப்பொருளை ஞானதேசிகர்பால் கேட்டவர்க்கு வேண்டியவை வழங்கும் கற்பகமாகவும் உள்ளாய் . பெற்ற தாயை விட மேம்பட்டவனாய் உள்ளாய் . பிரானாய் அடி என்மேல் வைத்தாய் . நஞ்சினை அடக்கிய நீல கண்டன் நீயே ஆவாய் .

குறிப்புரை :

உற்றிருந்த - பொருள்களை உணர்ந்துள்ள . உற்றவர் - அடைந்தவர் . ஓர் சுற்றம் - தனித்ததொரு களைகண் . ` கற்றவர் ` என்றது , கற்றவழியே தனது நற்றாள் தொழுகின்றவரை . கற்பகம் - விரும்பியவற்றை யெல்லாங் கொடுப்பவன் . செற்று - நஞ்சினைச் செறுத்து ; அடக்கி .

பண் :

பாடல் எண் : 7

எல்லா உலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ எல்லா உலகங்களும் ஆனவனாய் , ஏகம்பத்தில் விரும்பியிருப்பவனாய் , நல்லவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாய் , ஞான ஒளி வீசும் விளக்காய் , கொடிய வினைகளைப் போக்குபவனாய்ப் புகழ்ச் சேவடி என் மேல் வைத்தவனாய்ச் செல்வங்களுள் மேம்பட்ட வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய் .

குறிப்புரை :

` எல்லா உலகமும் ஆனாய் ` என்றது , இறைவனது பெருநிலை ( சருவ வியாபகநிலை ) யையும் , ` ஏகம்பம் மேவி இருந்தாய் ` என்றது . அவன் தனது பேரருள் காரணமாக எளிவந்து நிற்கும் வரையறை ( ஏகதேசமாம் ) நிலையையும் விளக்கியருளியவாறு . எனவே , ஓரிடத்து நிற்றலை விளக்குதற்கு ஏகம்பத்தைக் குறித்தருளியவாறாம் . இதனால் சுவாமிகளுக்கு , திருவேகம்பத்தில் ஒரு தனிப்பேரன்பிருந்தமை தெளியப்படும் . ` நல்லாரை நன்மை அறிவான் ` என்றது , ` பசுவைப்பால்கறந்தான் ` என்பது போல நின்றது , இங்ஙனம் அருளியது , ` நல்லாரது நன்மையை அறிந்து அவர்க்கு அருள் செய்வாய் ` என்றருளியவாறு . இதனானே , ` தீயாரது தீமையை அறிந்து அவரைத் தெறுவாய் ` என்பதும் பெறப்படும் . அதனையன்றி இதனையே எடுத்தோதியருளினமையால் , ` தெறுதல் ஒரோவழி அளவிற்குறைதலும் கைவிடப்படுதலும் உளவாமாயினும் , அருளல் அவை இரண்டுமின்றி அளவின் மிகுதலுமுடைத்து ` என்றல் திருவுள்ளமாதல் பெறப்படுகின்றது . ` கடிதோச்சி மெல்ல எறிக ` ( குறள் - 562.) எனத் தெறுதற்கே மென்மை கூறினமையின் , தலைவராயினார்க்கு இயல்பு இதுவே என்பது திருவள்ளுவ நாயனார்க்குங் கருத்தாதல் அறியப்படும் . சுடர் - ஒளி ; ` ஞானமாகிய ஒளியையுடைய விளக்கு ` என்க . ` செல்வமாய ` என்பது கடைக்குறைந்து , ` செல்வாய ` என நின்றது ; ` உண்மைச் செல்வம் ( அழியாச் செல்வம் - வீடுபேறு ) ஆகிய செல்வத்தைத் தருபவன் நீ ஒருவனே , பிறரில்லை ` என்றபடி . இதனால் ` அழிதன் மாலையவாகிய செல்வங்களையும் சிவபிரானே தருவானாயினும் , அவைகளைத் தம்தம் புண்ணிய விசேடத்தால் தரும் ஆற்றலுடையார் பிறரும் உளர் ; ஆயினும் , அழியாச் செல்வமாகிய வீடு பேற்றைத் தரும் ஆற்றலைப் பிறர் ஒருவரும் உடையராதல் இல்லை , அவர்தாமே அதனைப் பெறாது கட்டுண்டு கிடத்தலின் ` என்பதுணர்க . இனி , ` அழியாது என்றும் செல்லும் நிலைமையையுடைய செல்வம் ` என , இயல்பாகவே வினைத்தொகையாகக் கொண்டு , மேலைப் பொருளே பொருளாக உரைப்பினும் அமையும் ; இவ்வுரைக்கு , ` வாய் - நிலைமை ` என்க .

பண் :

பாடல் எண் : 8

ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய் , எல்லையற்ற பெருமையை உடையவனாய் , பூவினில் நாற்றம் போல எங்கும் பரவியவனாய் , போர்க் கோலம் பூண்டு மும்மதில்களையும் அழித்தவனாய் , நாவினால் பேசும் நடுவுநிலையான சொற்களை உடையவனாய் , நண்ணி என் தலை மீது திருவடிகளை வைத்தவனாய் , ஏனைய தேவர்களும் அறிய முடியாத தேவனாய் உள்ளாய் .

குறிப்புரை :

நடுவுரை - நடுவுநிலையான சொல் ; நீதியான தீர்ப்பு ; அறங்கூ றவையத்தில் ( நீதிமன்றத்தில் ) இருப்பவர்கட்கு இறைவன் நடுவு நிலை ( நீதி ) வடிவில் நின்று , அதனிற் பிறழாதோர்க்கு அருளும் , பிறழ்ந்தோர்க்குத் தெறலும் செய்தருளுவன் என்பது இதனால் அருளிச்செய்யப்பட்டது . திருமுறைகளுட் பலவிடங்களில் , இறைவனை , ` நீதி வடிவினன் ` என்று ஓதுவதன் உண்மை இதனால் விளங்கும் . இறைவனுண்மை கொள்ளாது வினையையே முதலாகக் கொள்வார் , ` அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம் ` ( சிலப்பதிகாரம் - பதிகம் - 55) என்றாற்போல , அந் நீதிதானே அளியும் தெறலும் செய்யும் என்பர் ; அதனை ` அளி , தெறல் ` என்பன அறிவுடைப்பொருளின் பண்பாவதல்லது , அறிவில் பொருளின் பண்பல்லவாகலின் அவற்றிற்கேற்ற செயல்களை அறமே செய்தல் எங்ஙனம் என ஆய்ந்தொழிக . இனி , ` என்பிலதனை வெயில்போலக் காயுமே - அன்பிலதனை அறம் ( குறள் - 77.) ` அல்லாத மாந்தர்க் கறங் கூற்றம் ` ( மூதுரை . 27) என்றாற்போல அருளுவார்க்கு , இறைவன் ஆணை வழியானே அறம் அத்தன்மைத்தாம் என்பது கருத்தாதல் அவர் நூல்களுள் வெளிப்படை யாகலின் , அவைபற்றி ஐயமின்றாதலறிக .

பண் :

பாடல் எண் : 9

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ எண்திசைகளிலும் உள்ள ஒளி வீசும் சுடர்கள் ஆனாய் . ஏகம்பம் மேவிய இறைவன் நீ . வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையை உடையவன் . சென்றால் மீண்டு வருதல் இல்லாத வீடுபேற்றை அளிப்பவன் . அடியார்கள் உன் திருத் தொண்டில் ஈடுபட்டு உன் திருவடிகளை முன்நின்று துதிக்குமாறு உள்ளாய் . தூய மலர்போன்ற உன் சிவந்த திருவடிகளை என் தலை மேல் வைத்தாய் . திண்ணிய மலையாகிய வில்லுக்கு ஏற்ற அம்பினை இணைத்துச் செயற்பட்டவன் ஆவாய் .

குறிப்புரை :

` சுடர் ` என்றது , பொருள்களைத் தோற்றுவித்தலும் , அறிவை விளக்குதலும் பற்றி . ஏகம்பம் மேவி நிற்றல் , இறைவி என்றும் ஏத்தி வழிபட நிற்பதாகலான் , அஃது அடியவர் என்றும் ஏத்தி வழிபட நிற்றலைக் குறித்தருளுங் குறிப்பாயிற்று . தொண்டு இசைத்து - கைப்பணியை ஏற்பித்து . பரவ - வாயால் வாழ்த்த . ` திண்சிலை ` மேருவாகிய வில்லையும் , ` ஓர்சரம் ` திருமாலாகிய அம்பையும் கொள்ள நின்றன .

பண் :

பாடல் எண் : 10

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ பகைவர் முப்புரங்களை அழித்தாய் . தேவர்களுக்கும் மேம்பட்டு நின்றாய் . பார்த்தவர்களையே உயிரைப் போக்கும் கொடிய விடத்தை உண்டாய் . பல ஊழிக்காலங்களாக நிலைபெற்றிருக்கிறாய் . அடியேனைத் தொண்டனாக அடிமை கொண்டாய் . தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் . திண்ணிய தோள்களை வீசித் தீயில் கூத்தாடுதலில் திறமை உடையாய் .

குறிப்புரை :

விண்டார் - நீங்கினார் ; பகைத்தார் . ` கண்டாரைக் கொல்லும் நஞ்சு ` என்றது , பாற்கடலைக் கடைந்தபொழுது தோன்றிய ஆலகாலத்தின் கொடுமை மிகுதியை விளக்கிற்று . தொண்டா - தொண்டானாகும்படி ; தொண்டு , ஆகுபெயர் . ` திண்தோள்விட்டு ` என்புழி , விட்டு - வீசி .

பண் :

பாடல் எண் : 11

ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுந் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

பொழிப்புரை :

ஒருவரும் அறிய முடியாத உயர் நிலையில் உள்ளாய் . வானத்திலே தேரைச் செலுத்தவல்லமை உடையாய் . பெரிய புகழை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கினாய் . வானத்தில் உலாவிய மூன்று மதில்களையும் அழித்தாய் . பிரமனும் திருமாலும் கூடித்தேடும் அடிகளை என் தலைமேல் வைத்தாய் . அத்தகைய நீ திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையையாய் அனைவருக்கும் காட்சி வழங்குகிறாய் .

குறிப்புரை :

ஆரும் அறியா இடம் - எத்திறத்தவரும் அறிய இயலாத நிலை . அவர் , ` சகலர் , பிரளயாகலர் , விஞ்ஞானகலர் ` என்பாரும் , ` மக்கள் , தேவர் , காரணக் கடவுளர் ` என்பாரும் முதலாகப் பலவாற்றாற் கூறப்படுபவர் . ` ஆகாயம் தேர் ஊரவல்லாய் ` என்றது , ` கல்நார் உரித்தல் ` ` கல்லைப் பிசைந்து கனியாக்குதல் ` ( தி .8 திருவாசகம் . போற்றித் திருவகவல் - 97, திருவம்மானை -5) என்றாற்போலச் செய்தற்கரியனவற்றைச் செய்தல் குறித்தது . இனி , திரிபுரம் எரித்த ஞான்று ஊர்ந்த தேரினது நிலையையே குறித்தது எனினும் ஆம் . ` பேரும் பெரிய ` என்றது , ` தசக்கிரீவன் ` எனப் பெருமையாகச் சொல்லப்பட்டமையை . ஊரும் புரம் - வானத்தில் இயங்கும் அரண் . ` பிரமனும் மாலும் இருவருங் கூடித் தேடியும் காணுதற்கரிய திருவடியை எளியேன் தலைமேல் வைத்தருளினாய் ` என்று உருகி அருளிச்செய்தவாறு .

பண் :

பாடல் எண் : 1

நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடியில் உறையும் அழகன் திருநீறணிந்த அழகிய திருமேனியன் . நெற்றிக்கண்ணன் . பார்வதி பாகன் . விடமுண்ட நீலகண்டன் . காளையை இவர்ந்து எங்கும் திரிபவன் . ஏழுலகமும் ஏழ்மலையும் ஆயவன் . பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவன்

குறிப்புரை :

` கண் நிறைந்தான் ` எனச் சினைவினை முதன்மேல் நின்றது . ` நிறைந்தான் ` என்பதே பாடம் எனலுமாம் . ` திரிவான் ` என்றது , பழித்ததுபோலப் புகழ்ந்தது ; ` அடியார்க்கு அருள் செய்தற்பொருட்டு எவ்விடத்தும் தோன்றி நிற்பான் ` என்றபடி . ஏழ்மலை , ஏழு தீவுகளைச் சூழ்ந்தவை ; மாறு - பகை . அட்டான் - அழித்தான் . மணாளன் - அழகன் , தலைவனுமாம் . ` தான் , ஏ ` அசை நிலைகள் .

பண் :

பாடல் எண் : 2

கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் சென்னியில் கொக்கு இறகை அணிந்தவன் . முல்லை நிலக்கடவுளாகிய திருமாலாகிய காளையை இவர்பவன் . கூத்தாடுபவன் . தான் கூத்தாடும்போது இடையில் கட்டிய சங்குமணி ஆடுதலைஉடையவன் . தீயினை உள்ளங்கையில் ஏந்திய முதற்கடவுள் . எலும்பையும் , பாம்பையும் அணிந்தவன் . அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவன் . கங்கை அடங்கியிருக்கும் சடையை உடையவன் .

குறிப்புரை :

கொக்குவடிவாய் இருந்தமையின் , ` குரண்டன் ` எனப் பெயர்பெற்ற அசுரனை அழித்து , அவன் இறகைச் சிவபிரான் தலையில் அணிந்தனன் என்பது புராணவரலாறு . கொல்லை , முல்லைநிலம் . ` அரைமேல் அக்கு ஆடல் உடையான் ` என மாறுக . ` அக்கு ` இரண்டனுள் முன்னதனை எலும்பாகவும் , பின்னதனைச் சங்குமணியாகவுங் கொள்க . மற்று , வினைமாற்று ; அதனால் , ` அடங்கியிருந்த ` என்னும் பொருள் தோற்றியது . ` மற்று ` என்றது இனவெதுகை .

பண் :

பாடல் எண் : 3

நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் , நெற்றிமேல் ஒற்றைக்கண்ணை உடையவன் . பார்வதி பாகன் . பாம்பைப் பிடித்து ஆட்டும் வஞ்சகன் . பல ஊர்களிலும் பிச்சை எடுக்கும் மேம்பட்டவன் . பகைவர் மும்மதில்களையும் அழித்தவன் . பிறையைச் சடையில் அணிந்தவன் . எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய அவன் குற்றமே இல்லாதவன் .

குறிப்புரை :

படிறன் - வஞ்சன் ; என்றது , பாம்பையும் அஞ்சுவித்து ஆட்டுதல்பற்றி . பல் ஊர் - பல ஊர்களில் . பலி தேர் - பிச்சையை நாடிச் செல்கின்ற . பரமன் - மேலானவன் ; ` பலி தேர்தலும் மேன்மை யுடையனாதலும் ஆகிய மாறுபட்ட இயல்புகளை ஒருங்குடையவன் ` என்றபடி , ` ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு - நின்றலால் உலகம் நீங்கி நின்றனன் ` ( சிவஞானத்தி - சுபக்கம் சூ -1 - 51) என்றது காண்க . செற்றார் - பகைத்தார் . செற்றான் - அழித்தான் . ` மற்று ` என்றது , அசைநிலை .

பண் :

பாடல் எண் : 4

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் , அலைமிக்க கங்கையைச் சடையில் ஏற்றவன் . உலகங்களுக்கு எல்லாம் புறத்தவனாக நிற்பவன் . கொலைத் தொழிலைச் செய்யும் கூற்றுவனைத் தண்டித்தவன் . தன்னால் கொல்லப்பட்ட வேங்கைத்தோலை ஆடையாக உடுத்தவன் . வில்லால் முப்புரங்களை அழித்தவன் . பிறையைச் சடையில் வைத்தவன் . பார்வதியின் தலைவன் .

குறிப்புரை :

கொலை ஆன - கொல்லுதல் பொருந்திய . குமைத்தான் - அழித்தான் . ` திரிபுரங்கள் ` எனப் பன்மை தோன்றக் கூறியது , ` ஒரு வில்லினால் மூன்று அரண்களை அழித்தான் ` என்னும் நயந்தோன்றுதற் பொருட்டு . ` மலையார் ` உயர்த்தற் பன்மை .

பண் :

பாடல் எண் : 5

உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேதம் ஆறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் இறந்தவர்களுடைய எலும்புகளை அணிந்தவன் . மகிழ்வோடு பிறருக்கு அருள் செய்பவன் . அழகு விளங்கும் சடையில் கொன்றையை அணிந்தவன் . நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவன் . இறந்தவர்களின் தலைகளை அணிகலனாக உடையவன் . தேவர்களுக்குத் தலைவன் . எங்கும் நிறைந்த தன் திருவடிகளை என் தலைமேல் வைத்தவன் .

குறிப்புரை :

உலந்தார் - இறந்தார் . அங்கம் - எலும்பு . நலம் திகழும் - அழகு விளங்குகின்ற . உம்பரார் - மேலிடத்து இருப்பவர் . மலர்ந்து ஆர் - விரிந்து பொருந்தின ; என்றது எங்கும் நிறைந்த என்ற படி . ` எங்கும் ஆம் அண்ணல் தாள் ` ( சிவஞானபோதம் சூ .2. அதி . 1)

பண் :

பாடல் எண் : 6

தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்
தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்
புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் , பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கி நற்பண்புடையவர்கள் நெஞ்சினைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பூத்த மலர்களால் எல்லோராலும் வழிபடப்படும் தூயவனாய் , எல்லோரும் சார்தற்குரிய பொருளாய் இருப்பவனாய் , அம்புகள் பொருந்தக் கொடிய வில்லை ஏந்தியவனாய் , நீலகண்டத் தெய்வமாய் விலங்குத் தன்மை பொருந்திய மானைக் கையில் ஏந்தியவனாய் உள்ளான் .

குறிப்புரை :

தாமரையான் - பிரமன் . சாய்த்தான் - கிள்ளினான் தகவு - தகுதி ; மெய்யுணர்வு . இருக்கை - இருப்பிடம் ; ` இருக்கையாக ` என ஆக்கம் , வருவிக்க ; இத்தொடரால் , ` பிரமன் தலையைக் கிள்ளியது மெய்யுணர்வு பெறுவித்தற் பொருட்டு ` என்பது குறித்தவாறு . ` பூ மலர் ` வினைத் தொகை ; ` பூத்த மலர் ` என்பது பொருள் ; ` திருமாலின் உந்தியிற் பூத்த மலர் ` என்க . ` அதன்கண் தோன்றிய பிரமனால் ஏத்தப்படுபவன் ` என்றதனால் , அக்காரணக் கடவுளர் இருவர்கட்கும் காரணமாய் நிற்பவன் என்பது போந்தது ; ` முழுவதும் - படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை - காப்போற் காக்கும் கடவுள் ` ( தி .8 திருவா . திருவண் .12 - 14.) என்றருளினமை காண்க . ` மெய்யுணர்வு பெற்றபின்பு அவன் ஏத்துவானாயினன் ` என்பது கருத்து ஆகையால் , ` அப் பூ மலரான் ` என எடுத்துக்கொண்டு உரைக்க . இனி , ` மலரான் ` என்பதில் உள்ள ` ஆன் ` என்பதனை மூன்றாம் வேற்றுமை உருபாகக்கொண்டு உரைத்தலுமாம் . இப் பொருட்கு , பூ - பொலிவு ; ஏத்துதலுக்கு , ` யாவராலும் ` என்னும் வினை முதல் வருவிக்கப்படும் . புணர்ச்சிப் பொருள் - சார்தற்குரிய பொருள் ; என்றது , ` நற்பொருள் ` என்றபடி ; நன்மை - இன்பம் . ஏ - அம்பு . மருவ - பொருந்த . சிலை - வில் . இத் தொடரால் , ` வேகியாயும் ( உக்கிரவடிவம் உடையவனாயும் ) நிற்பவன் ` என்பது உணர்த்தியருளியவாறு . ` மா மருவும் கலை ` என்றது , ` விலங்குத் தன்மை பொருந்திய கலை ` என , மானை வெளிப்படுத்தி நின்றது .

பண் :

பாடல் எண் : 7

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் . நீராகவும் பெரிய மலைகளாகவும் ஆகி , ஒளியாகி , ஆகாயமும் ஆகி , நிலமாகி , ஏழ் கடலும் ஆகிச் சூரியனும் மேகமும் ஆகித் தன் அடியவர் எவரிடத்தும் அன்பனாய் , நுட்பமான சக்தியாகி உலகுக்கு எல்லாம் காரணமாய்க் கச்சணிந்த அழகிய முலையை உடைய பார்வதி பாகனாய் உள்ளான் .

குறிப்புரை :

நிழல் - ஒளி . உம்மை , சிறப்பு . பார் - பூமி . பௌவம் - கடல் . பகல் - பகலவன் ; சூரியன் . வான் - மேகம் . இவையெல்லாம் , இறைவன் பெரும்பொருள்கள் பலவுமாகி நிற்கும் பெருநிலையை விளக்குதற்குச் சிலவற்றை எடுத்தோதியருளியவாறு . ` ஆரேனும் ` என்றது , ` உலகியலில் எத்துணைத் தாழ்வுடையராயினும் ` என்றருளிய தாம் . ` ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங் காண் - ஆரேனுங் காணா அரன் ` ( திருக்களிற்றுப்படியார் . 15). ` அணு ` என்றது , ` நுட்பம் ` என்னும் பொருட்டாய் , சத்தியைக்குறித்தது . ஆதி - உலகிற்கெல்லாம் முதல் ; இதனானே ஐந்தொழில் குறித்து எழும் சத்தி , ` ஆதி சத்தி ` எனப்படுதல் உணர்க . ` வாரார்ந்த வனமுலையாள் பங்கன் ` என்றதும் , அச்சத்திக்குச் சத்திமானாய் நிற்கும் நிலையைக் குறிப்பித்து அருளியதேயாம் .

பண் :

பாடல் எண் : 8

பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் , பொன்னார் மேனியனாய்க் கொன்றைப் பூ மாலை அணிந்தவனாய் , ஒளிவீசும் நீண்ட சடை உடையவனாய் , யானைத் தோலை விரும்பிப் போர்த்த வனாய்த் தன் தகுதியை உடையார் மற்றொருவர் இல்லாதானாய்ப் பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருளாய்த் தன்னோடு கூடிய பார்வதி பாகனாய் உள்ளான் .

குறிப்புரை :

பொன் இயலும் - பொன்னால் இயல்வது போலும் . மின் இயலும் - மின்போல அசைகின்ற . தாங்கரிய சிவம் - பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருள் ; என்றதனால் . ஞாயிற்றின் ஒளி நேரே கண்களால் ஏற்க வியலாததுபோல அவனது பேரருளும் , பேராற்றலும் உயிர்களால் நேரே ஏற்றுக் கோடற்கு இயலாதன . ஆகவே , சத்தியென்னும் நிலை வாயிலாகவே ஒருவாறு ஏற்கப்படும் என்பதாம் . ` மங்கை ஓர் கூறன் ` என்றதும் , இக்கருத்துணர்த்தும் குறிப்பினது என்க . ` பாலுண் குழவி பசுங்குடர் , பொறா தென - நோயுண் மருந்து தாயுண்டாங்கு ... திருந்திழை காணச் - சிற்சபை பொலியத் திருநடம் புரியும் - அற்புதக்கூத்து ` ( சிதம்பர மும்மணிக்கோவை - 1.14 - 21.) என இப்பொருள் விளக்கப்பட்டமை காண்க .

பண் :

பாடல் எண் : 9

ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் ஆலகால விடத்தை உண்டு மகிழ்ந்த முதற்பொருளாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவனாய்த் தன் திருவடியால் கூற்றுவனை ஒறுத்தவனாய் , கண்ணப்பருக்கு அருள் செய்த தலைமகனாய் , பால்போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் , காளை மீது இவர்ந்து பிச்சைக்கு அலையும் பண்பினனாய்த் திருமாலும் அறிவதற்கரிய வலியவனாய் உள்ளான் .

குறிப்புரை :

அடையலர் - பகைவர் . ` அக்காலன் ` என்பதில் , அகரம் பண்டறிசுட்டு . ` காளை ` என்றருளியது . கண்ணைப் பெயர்த்து அப்பும் வீர அன்பினை விரும்பினமைபற்றி . ` பிட்சாடன வடிவிற் சென்ற பொழுது , விடையேறிச் சென்றனன் ` என்பதும் புராண வரலாறு . இனி , ` ஏறி ` என்னும் எச்சம் , ` திரியும் ` என்றதனைச் சிறப்பித்து அடையாய் நின்றதெனக் கொள்ளாது , ` வேறு பொருள்மொழியாய் எண்ணின்கண் நின்றது ` எனக்கொண்டு உரைத்தலுமாம் ; வினையெச்சங்கள் இவ்வாறு நிற்றலும் , ` வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய ` ( தொல் . சொல் . 457.) என்பதனாற் கொள்ளப்படும் . பலி திரியும் - பலிக்கு ( பிச்சைக்கு ) த் திரியும் ; வருமொழி வினையாயவழி வேற்றுமைக்கண் ஒற்றுமிகாமையும் உண்டென்க .

பண் :

பாடல் எண் : 10

ஒருசுடராய் உலகேழு மானான் கண்டாய்
ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர்மீ தோடா இலங்கைக் கோனை
யீடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.

பொழிப்புரை :

மழபாடி மன்னும் மணாளன் ஒப்பற்ற பேரொளியாய் , உலகு ஏழும் பரவி ஓங்காரத்தின் உட்பொருளாய் நின்று , ஞாயிறு முதலிய ஒளிப் பொருள்களாகவும் , அவற்றிலிருந்து வெளிப்படும் ஒளியாகவும் அமைந்து , திரு விழாக்களிலும் வேள்விகளிலும் செவிமடுக்கப்படும் ஒலிவடிவினனாய் , தன் மீது ஞாயிறும் திங்களும் வானில் ஊர்ந்து செல்வது இராவணனுடைய ஆணையால் தடுக்கப்பட்ட இலங்கையில் மன்னனாகிய அவனுடைய வலிமை அழியுமாறு அவன் இருபது தோள்களையும் நசுங்கச் செய்து ஒளிவிளங்கும் மாணிக்கக்குன்றாய் விளங்குகின்றான் .

குறிப்புரை :

ஒருசுடர் - ஒப்பற்ற பேரொளி . ஓங்காரத்தின் ( பிரணவ மந்திரத்தின் ) உட்பொருள் , பொருள்களும் பொருள்களைப் பற்றிய நினைவும் தோன்றி நின்று அழிதலைக் குறிப்பது . அத் தோற்றம் முதலிய மூன்றனையும் நிகழ்விக்கும் தலைவன் இறைவனே யாதலின் , அவனே அவ்வுட்பொருளாவன் என்க . ` விரி சுடர் ` என்றது , ஞாயிறு முதலியவற்றின் ஒளியையும் , ` விளங்கு ` என்றது , அவ்வொளிகளை உடைய பொருள்களாகிய ஞாயிறு முதலியவற்றையும் என்க . ` வேள்வு ` என , விவ்விகுதி நீக்கி , வுவ்விகுதி கொடுக்கப்பட்டது . ` ஓடா இலங்கை ` என இயையும் . ` கோன் ` என்பதனோடு இயைப்பினும் அமைவதேயாம் . ஈடு - வலிமை . மருசுடர் , ` மருவு சுடர் ` என வினைத் தொகை . ` சுடர் மருவு மாணிக்கம் ` என்பது கருத்து . ` மாணிக்கக் குன்று ` என்றது , உவமையாகு பெயர் .

பண் :

பாடல் எண் : 1

அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொன்
சிலையெடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

அலைகள் பொருந்திய பெரிய கடலில் தோன்றிய விடத்தை அமுதமாக உண்டு தேவர்களுடைய உயிரைப் பாதுகாத்த தலைவர் என்றும் , மேருவை வில்லாக வளைத்துப் பெரிய பாம்பினை நாணாகப் பூட்டி நெருப்பாகிய அம்பினைக் கோத்து முப்புரங்களையும் எரித்த செல்வர் என்றும் , தன் மாற்றுக் குறையாத கிளிச்சிறை என்ற பசிய பொன்னாலும் முத்தாலும் நீண்ட பலகை போன்ற வயிரத்தாலும் குவியலாகத் திரட்டி இயற்றப்பட்ட மழபாடியில் உறையும் , மலை போல உறுதியாக அமைந்த வயிரத்தூணே என்றும் எம்பெருமானை முன்னிலையாகவும் படர்க்கையாகவும் சொல்லி நான் மனம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

தலைநீங்கியவிடத்து உயிர் நில்லாமைபற்றி . உயிரைக் காத்தலை , ` தலை காத்தல் ` என்றல் வழக்கு . ` நாகத்தை நாணாகவும் , நெருப்பை அம்பாகவும் கோத்து ` என்றதாம் . போலும் , அசைநிலை . ஆர்த்து , ` ஆர்க்க ` என்பதன் திரிபு . ` பொன்னாலும் , முத்தாலும் , வயிரப் பலகையாலும் குவையாக ( குவியலாக ) ஆர்க்க ( இயற்ற ) உற்ற ( விளங்கித் தோன்றிய ). வயிரத் தூணே ` என்க . ` தூண் ` என்றது உருவகம் . இங்கு இறைவரது திருமேனியின் , அழகில் ஈடுபட்டு , இவ்வாறு அருளிச்செய்தார் . மலை அடுத்த - மலைபோலப் பொருந்திய . ஐயர் , செல்வர் எனப் படர்க்கையாகவும் , வயிரத்தூணே என முன்னிலையாகவும் சொல்லி அரற்றி நைகின்றேன் ` என முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
அந்தரத்திற் கந்தருவர் அமரர் ஏத்த
மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்பம் மேய
கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாட
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

ஓசை பொருந்திய குழல் , மொந்தை , வீணை , யாழ் என்ற இசைக் கருவிகளை இசைத்து வானத்தில் கந்தருவர் என்ற தேவகணத்தாரும் தேவர்களும் துதித்து வேதமந்திரமும் ஓதி , நீரினால் அபிடேகம் செய்து வழிபட , அவர்களுக்கு வானுலகில் வெகுகாலம் அநுபவிக்கும் செல்வத்தைக் கொடுக்கும் , செறிவினால் இருண்ட பொழில்களை உடைய காஞ்சி நகரில் ஏகம்பத்தில் விரும்பியிருக்கும் மேம்பட்ட வயிரக்குவியலால் அமைந்த தூண் போல்வாய் என்றும் , வேத ஒலி பொருந்திய மாடங்களை உடைய மழபாடியில் உள்ள வயிரத்தூண் போல்வாய் என்றும் , நான் பலகாலும் எம்பெருமானை அழைத்து உள்ளம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

அறை - ஓசை . மொந்தை , ஒருவகை வாச்சியம் . ` யாழும் ` என்னும் உம்மை அசைநிலை . அந்தரம் - ஆகாயம் . மறைகலந்த மந்திரம் - வேதத்திற் பொருந்திய மந்திரங்கள் , ` கொண்டு ` என்றது , மேல் , ` யாழும் ` என்றதனோடும் இயையும் . ` வழிபட்டார் அமரர் ஏத்த வானாளக் கொடுத்தி ` என இயையும் ; ` மந்திரஞ் சொல்லி நீரை வார்த்தவர்க்கு , இன்னிசையை நுகர்வித்து வானுலகத்தை உரிமையாகக் கொடுப்பாய் ` எனப் போற்றியவாறு . கறை - கறுப்பு ; மேகம் ; ஆகு பெயர் . ` வயிரத்தூண் , திரள் தூண் ` என்க . கலி - ஆரவாரம் . மறைகலந்த மழபாடி - வேதங்கள் பொருந்திய மழபாடி .

பண் :

பாடல் எண் : 3

உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை யாண்டு கொண்ட
பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காமன் ஆகம்
பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

வலிமை மிக்க கறுத்த உடம்பினராய் , உண்மையறிவு அற்றவராய் , நல்லவரல்லாத ஊத்தை வாயை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்ட பாவமாகிய சுமையை நீக்கி , அடியேனை அடிமையாகக் கொண்ட பருத்த பவளத்தூணே ! பசிய பொன்னில் பதிக்கப்பட்ட முத்தே ! திரிபுரங்களை அழித்துத் தவறான செயலில் ஈடுபட்ட மன்மதனுடைய உடம்பு சாம்பலாகுமாறு தீ விழித்து உலக மக்களுக்கு என்றும் மேம்பட்ட வாழ்வை அருளும் மழபாடியில் உள்ள வயிரத்தூணே ! என்று பலகாலும் நான் வாய்விட்டு அழைத்து உள்ளம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

உரங்கொடுக்கும் - வலிமையைத் தருகின்ற ( இருள் மெய்யர் ); என்றது , ` உண்பதன்றி வேறொன்றை அறியாதவர் ` என்றபடி . பரம் - சுமை ; அது . பொறுக்க வொண்ணாத பாவத்தைக் குறித்தது . ` பவளத்தின் திரளாகிய தூணே ` என்க . பொன் முத்து - பொன்னிற் பதித்த முத்து . முத்து உருவகம் . புரம் - திரிபுரம் . ` புரம் கெடுத்துக் காமன் ஆகம் பொடியாக்கிப் புவியோர்க்கு என்றும் வரம் கொடுக்கும் ` என்றது , மண்ணுலகத்தின் பெருமை குறித்தருளியவாறு .

பண் :

பாடல் எண் : 4

ஊனிகந்தூ ணுறிக்கையர் குண்டர் பொல்லா
வூத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு
ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா
நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

சுவைத்து உண்ணுதலை விடுத்துக்கையில் உறியில் கரகத்தைத் தாங்கி உடல்பருத்த பொலிவற்ற , ஊத்தைவாயினை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்டு , உள்ளத்தில் நல்லறிவு பெற்று , உள்ளத்தில் வயிரம் போல ஒளி வீசும் எம்பெரு மானை நெருங்காத நாய் போன்ற கீழேனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி அடிமையாகக் கொண்ட , மீன் பொருந்திய கங்கையைத் தன் ஆணையால் தலையிலே தங்குமாறு சூடிய அரசனே ! தேவர்கள் தலைவனே ! மேகத்தை உடைய வானளாவிய மாடி வீடுகளை உடைய மழபாடியில் உகந்தருளியிருக்கும் வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

` இகந்த , என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று ` குண்டர் - மூர்க்கர் . ` ஊன் இகந்த ஊண் உடையவர் ` என்றது , புத்தர் ஊன் உணவை விரும்புவோரென்பது குறித்து , அவரிற் பிரித்தற் பொருட்டு . ` சமணர் ` என்புழி இரண்டனுருபு தொகுக்கப்பட்டது . ` ஞான ` என்பதன் அகரமும் தொகுத்தல் , அகம் - உள்ளத்து . ` வயிரம் ` என்பது உருவகம் ; அது , ` நின்னை . என்னும் பொருட்டாய் நின்றது . ` விதி ` என்றது , உலகை அழியாமற் காக்கக் கொண்ட அருளை . ` பெருமான் ` என்றது விளி . வானகம் சேர்தலாகிய மாளிகைகளின் தொழில் , ஊர்மேல் ஏற்றப்பட்டது . ` தூண் ` என்றதனை , இங்கு உவமையாகுபெயர் என்க .

பண் :

பாடல் எண் : 5

சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்
திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்
ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
நம்பியையே மறைநான்கும் ஒல மிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

ஐந்தலைகளைக் கொண்ட பிரமனது ஐந்தாவது தலை அழியுமாறும் திருமாலுடைய தலைமை அழியுமாறும் போக்கி , வலிமை உடைய சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்துச் சந்திரனுடைய ஒளிவீசும் கலைகள் அழியுமாறு கலக்கி , அவர்களை உயிரோடு விட்டு , வெண்ணிறக் காளையை இவர்ந்து , பாம்பினை அணிந்த குணபூரணனே ! தலைவனே ! நான்கு வேதங்களும் உன்புகழ் பாடிப் பெருமை பெறுகின்ற மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

` சிரம் ` என்றது , ` மிக்க தலைகள் ` என்பதனை உட்கொண்டு கூறியது . பொன்றச் சிந்தினமை முதலியன தக்கன் வேள்வியிற் செய்தன ; திருமால் தலையையும் சிந்திய வரலாறுண்மை ஈண்டு அறியப்படுகின்றது . சோமன் - சந்திரன் . உழக்கி - தேய்த்து , நரை ஏற்ற - வெண்மையைக் கொண்ட , ` நம்பியையே நான் அரற்றி ` என இயைக்க .

பண் :

பாடல் எண் : 6

சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

சினந்து பிறரைத் திருத்த முற்படும் சிறுமையின் மேம்பட்ட பருத்த உடலை உடைய சமணர்களாகிய பொல்லாத அறிவினை உடையவர்கள் காட்டிய தீவினைகளில் அழுந்தினேனாய் விளை நிலங்களை அழித்து அவ்விடத்தில் அசோகமரத்தை வளர்த்துப் பாதுகாக்கும் நல்வினையில்லேனாகிய என்னையும் ஒரு பொருளாக ஏற்று அடிமை கொண்டு மகளிரைப் பற்றிய எண்ணத்தை யான் நினையாதவாறு நீக்கி இரக்கத்திற்கு அடிப்படையான அறவழியை எனக்கு வழங்கி என் மனத்தை நல்வழியில் திருத்தும் மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன் .

குறிப்புரை :

சினம் திருத்தும் - வெகுளியை நீக்குகின்ற ; என்றது வஞ்சப் புகழ்ச்சி . ` சிறுப் பெரியார் ` என்றதனை சிறுமையை உடைய பெரியார் ` என வேற்றுமைத் தொகையாகக் கொள்க . செது மதி - பொல்லாத அறிவு . தீவினைக்கே , உருபு மயக்கம் . புனம் - காடு ; அதனைத் திருத்தி வளர்க்கின்ற பிண்டி ( அசோகமரம் ) என்க . பொல்லாங்கு , உலகிற்கு முதல்வனை இல்லை என மயக்குதல் ; அரசமரமும் இத்தகையதென்க . பேணும் - வழிபட்ட . பொறி - நல்லூழ் . ` விழுந்தேனாய்ப்பேணும் பொறியிலியேன்றனை ` என இயைக்க . தனம் திருத்தும் அவர் - மகளிர் . பாற்றி - நீக்கி . தயாமூல தன்மம் என்னும் வழி , உண்மையில் , இறைவனுண்மை உணர்ந்து அவன்வழி நிற்றலே என்க . ` என் மனத்தைத் திருத்திய ` என்க .

பண் :

பாடல் எண் : 7

சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
என்துணையே யென்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப்
பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

பொழிப்புரை :

நீர்ச் சுழிக்கு ஒப்பாகித் தன்னிடத்திலேயே ஆழ்த்தும் பிறவி வழியாகிய துக்கத்தைப் போக்கும் சுருண்ட சடையை உடைய எம் பெருமானே ! சடையில் தூய தெளிந்த நீராகிய கங்கையை ஏற்றவனே ! போக்குதற்கு அரிய பசுத்தன்மையால் உள்ள பாசத்தால் ஏற்படும் பிறப்பை நீக்கிய என் துணைவனே ! என் தலைவனே ! எல்லோருக்கும் தலைவனே ! குறை கூறுதற்கரிய திருமாலும் பிரமனும் காணாத ஒளிப்பிழம்பே ! வேதத்தின் முடிவாகிய உபநிடதங்களுக்கு அணிகலனாய் எனக்குக் கிட்டிய வழித்துணையாகிய மழபாடி வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன் .

குறிப்புரை :

சுழி - சுழல் . ` சுழியாகிய துணை ` என்க . இங்குத் ` துணை ` என்றது , துணையன்மையைக் குறித்தது , ` உடம்போ டுயிரிடை நட்பு ` ( குறள் - 338.) என்பதில் , ` நட்பு ` என்பது போல . ` தூய தெண்ணீர்ச் சடை ` என மேலே கூட்டுக . இழிப்பரிய - இறக்குதல் அரிய ; என்றதனால் . பிறப்பைச் சுமையாகக் கொள்க . பசு பாசப் பிறப்பு - பசுத்தன்மையால் உள்ள பாசத்தால் வரும் பிறப்பு . தம்மான் - உயிர்கட்குத் தலைவன் . பழிப்பரிய - பொதுப்பட ` தேவர் ` என்னாது , காரணக் கடவுளர் ` எனப் போற்றப்படுகின்ற . பரிதி - சூரியன் ; என்றது உருவகம் . சுருதி முடிக்கு அணியாய் - வேதத்தின் தலைக்கு அணிகலமாய் , ` வாய்த்த தூணே ` என இயையும் . வழித் துணையாதல் , உயிர்கட்கென்க .

பண் :

பாடல் எண் : 1

வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூ ரமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலாந் தொழச் செல்வாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

திருநெய்த்தானத்தில் உகந்தருளி உறையும் பெருமானே ! செல்வர்க்கு உரிய கூறுபாடுகள் யாவும் உடைய நீ , உயர்ந்த கயிலை மலையை விரும்பி உறைவாய் . உயர்வற உயர்நலம் யாவும் உடையாய் , வெண்காடு , பாசூர் இவற்றை உறைவிடமாக விரும்புகிறாய் . பகைகளை எல்லாம் போக்கி எமை ஆண்டாய் . எண்திசையிலுள்ளாரும் உன்னை வழிபடுமாறு ஆங்கெல்லாம் செல்வாய் என்று உன் பண்பு நலன்களை நாங்கள் எடுத்துத் துதிக்கிறோம் .

குறிப்புரை :

வகையெலாம் - உடையவர்க்கு ( செல்வர்க்கு ) உரிய வகைகள் பலவும் . உம்மைகள் எச்சப்பொருளன ; சிறப்புமாம் . வான் - உயர்ச்சி . மிகையெலாம் மிக்காய் - மிகுந்து நிற்கும் வகைகள் எல்லாவற்றாலும் மிகுந்து நின்றாய் . ` வகையெலாம் உடையாய் , மிகையெலாம் மிக்காய் ` என்பவற்றால் , இறைவனைப் புகழும் புகழ்கள் யாவும் பொருள்சேர் புகழாதல் தெளிவித்தவாறு . ` முற்று நீ புகழ்ந்துமுன் உரைப்பதென்மு கம்மனே ` ( தி .3. ப .52. பா .3.) என்றருளிய ஆளுடைய பிள்ளையார் திருமொழியுங் காண்க . ` முன்னே யுரைத்தால் முகமனே யொக்கும் ` ( தி .4. ப .112. பா .3.) என்றார் சுவாமிகளும் . பகை , அகப்பகை ; அவை நோய் முதலிய உடற்பகைகளும் , அவா , வெகுளி முதலிய உளப்பகைகளுமாம் . பாசூர் , தொண்டை நாட்டுத் தலம் . திகை - திசை . திசையெலாம் தொழ ஆங்கெல்லாம் செல்வாய் , என உரைக்க ; எவ்வுலகமும் உன்னுடையனவே ` என்றவாறு . ` செய்வாய் ` எனவும் பாடம் ஓதுப . ஐந்தாஞ் சீரில் வரற்பால தாய மோனை , மேலைத் திருப்பதிகத்திற்போல இத் திருப்பதிகத்தும் எல்லாத் திருப்பாடலிலும் ஈற்றடிக்கண் நீக்கப்பட்டது .

பண் :

பாடல் எண் : 2

ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
கோடிகா மேய குழகா என்றும்
பார்த்தற் கருள் செய்தாய் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா என்றும்
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! உனக்கு அடிமையாகப் பிணிக்கப்பட்ட அடியேனிடம் அன்பு உடையாய் , பழைய கயிலாயம் , கோடிகா பழையனூர் இவற்றில் உறைகின்றாய் . நடனக்கலையின் நுட்பங்களெல்லாம் அமையக் கூத்தாடுகின்றாய் . அருச்சுனனுக்கு அருள் செய்தாய் . தூயவனும் சிவலோகநாதனுமாக உள்ளாய் என்று அடியோங்கள் நின்னை துதிக்கின்றோம் .

குறிப்புரை :

ஆர்த்த - ஆர்க்கப்பட்ட ( ஆளாக அணைத்துக் கொள்ளப்பட்ட .) ` எனக்கன்பன் நீயே ` என்றது , என்னிடத்து அன்புடையவன் நீயன்றிப் பிறரில்லை யென்றபடி . ஆதிக்கயிலாயம் - எல்லாவற்றிற்கும் முதலாய கயிலைமலை . கூர்த்த நடம் - நடனக் கலையின் நுட்பங்கள் அமைந்த நடனம் . கோடிகா , சோழ நாட்டுத் தலம் . பழையனூர் , தொண்டைநாட்டில் திருவாலங்காட்டினை அடுத்துள்ளது . ` தீர்த்தன் , சிவலோகன் ` செவ்வெண் .

பண் :

பாடல் எண் : 3

அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்
காளத்திக் கற்பகமும் நீயே யென்றும்
சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந்
சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும்
செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ இரவாகவும் பகலாகவும் உள்ளாய் . பழைய கயிலாயம் , காளத்தி , சோற்றுத்துறை இவற்றை விரும்பி உறைவாய் . கல்லாலின் கீழ் அமர்ந்தவனும் , சொல்லும் பொருளுமாய் இருப்பவனும் , நீயே . உலகில் எல்லா நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு உதவும் செல்வமாகவும் நீ உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

அல் - இரவு . சோற்றுத்துறை , சோழநாட்டுத் தலம் . செல்வாய்த் திரு - யாவும் நடத்தற்கு வழியாகிய செல்வம் . வறுமை வாழ்க்கையை , ` செல்லாத் தீவாழ்க்கை ` ( குறள் - 330) என்றது காண்க .

பண் :

பாடல் எண் : 4

மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும்
வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்
பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்
பூத கணநாதன் நீயே யென்றும்
என்னா விரதத்தாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ வெள்ளிய கயிலை மலை , ஏகம்பம் தென்னூர் இவற்றில் விரும்பி உறைகின்றாய் . மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதிபாகனாய் , பொன்னை ஒத்து ஒளி வீசும் சடை முடியனாய்ப் பூதகணத் தலைவனாய் எம் நாவினில் இனிக்கின்ற சுவைப் பொருளாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

` வெண்கயிலை மேவினாய் ` என்பதன்றி , ` வெண்காடு மேவினாய் ` என்றும் பாடம் ஓதுவர் ; இத் திருப்பதிகத் திருப்பாடல்கள் தோறும் முதலடிக்கண் கயிலையை ஓதியருளுதலின் அது பாடம் அன்றென்க . என் நா இரதத்தாய் - எனது நாவில் இனிக்கின்ற சுவையாயினாய் . ` ஏகம்பத்து என் ஈசன் ` என எடுத்தோதியருளிய இதனாலும் , திருவேகம்பப் பெருமானே சுவாமிகளுக்கு வழிபாட்டுப் பெருமானாய் இருந்தமை பெறுதும் . தென்னூர் , வைப்புத்தலம் ` தென்னூராகிய பதி ` என்க .

பண் :

பாடல் எண் : 5

முந்தி யிருந்தாயும் நீயே யென்றும்
முன்கயிலை மேவினாய் நீயே யென்றும்
நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்
நடமாடி நள்ளாறன் நீயே யென்றும்
பந்திப் பரியாயும் நீயே யென்றும்
பைஞ்ஞீலீ மேவினாய் நீயே யென்றும்
சிந்திப் பரியாயும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! கயிலை , நள்ளாறு பைஞ்ஞீலி என்ற தலங்களைக் கூத்தனாய நீ விரும்பி உறைகின்றாய் . எல்லாப் பொருளுக்கும் முற்பட்டவனாய் நந்திதேவருக்கு அருள் செய்தவனாய் , பாசத்தால் பிணிக்க ஒண்ணாதவனாய்ச் சிந்தையால் அணுக ஒண்ணாதவனாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

முந்தி - ( எல்லாவற்றுக்கும் ) முற்பட்டு . ` முன் கயிலை ` என்றதும் , ` ஆதிக் கயிலை ` என்றதனோடொத்தது . னகரம் திரியாமை செய்யுள் விகாரம் என்க . ` நினைக்கப்படுகின்ற கயிலை ` என வினைத்தொகையாக உரைத்தலுமாம் . நந்தி - அதிகார நந்தி ; இவர்க்கு அருள் செய்தமை திருவையாற்றுப் புராணம் முதலியவற்றுட் காண்க . ` நடம் ஆடி ` என்பது பெயர் . பந்திப்பு அரியாய் - பாசத்தாற் பிணிக்க ஒண்ணாதவனே . நள்ளாறு , பைஞ்ஞீலி இவை சோழநாட்டுத் தலங்கள் . சிந்தையால் அணுகலாகாமையால் , ` சிந்திப்பரியாய் ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 6

தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்
புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்
தெக்காரு மாகோணத் தானே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ மேம்பட்ட கயிலாயனாகவும் ஆக்கூரில் தான்தோன்றி ஈசனாகவும் புள்ளிருக்குவேளூர் , தெற்கே உள்ள மாகோணம் இவற்றில் உறைபவனாகவும் உள்ளாய் . தகுதியுடையவரான அடியாருக்கு நீயே துணையாகவும் எலும்பு மாலை அணிபவனாகவும் உயிர்கள் புகுந்து வாழும் ஏழுலகங்களாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

` தக்காராய அடியார்கட்குத் துணை நீயே ` என்க . துணை என்பது சொல்லெச்சம் . தலை - தலைமை . ஆர் - பொருந்திய . அக்கு ஆரம் - எலும்பு மாலை . ` புக்கு ` என்னும் முதனிலை திரிந்த தொழிற் பெயர் ஆகுபெயராய் , உயிர்கள் புகுந்து வாழும் இடத்தை உணர்த்திற்று . புள்ளிருக்குவேளூர் , வைத்தீசுரன்கோயில் . இதனைச் சார்ந்த பகுதியில் உள்ள தலமே ஆக்கூர் . தெற்கு , ` தெக்கு ` என நின்றது , ஆரும் - பொருந்திய . ` தெக்காரமாகோணம் ` என்பதும் பாடம் . மாகோணம் , வைப்புத் தலம் .

பண் :

பாடல் எண் : 7

புகழும் பெருமையாய் நீயே யென்றும்
பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்
இகழுந் தலையேந்தி நீயே யென்றும்
இராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும்
அகழும் மதிலுடையாய் நீயே யென்றும்
ஆலவாய் மேவினாய் நீயே யென்றும்
திகழும் மதிசூடி நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! அழகிய கயிலை , இராமேச்சுரம் ஆலவாய் இவற்றில் உகந்து உறைபவனே ! எல்லோரும் புகழும் பெருமையை உடையையாய் , யாவரும் இகழும் மண்டை யோட்டை உண்கலமாக ஏந்தியையாய் , ஆலவாயில் அகழும் மதிலும் உடையையாய் , விளங்கும் பிறை சூடியாய் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

புகழும் பெருமையாய் - புகழ்ந்து சொல்லப்படும் பெருமையையெல்லாம் முற்ற உடையாய் ; என்றது , ` மெய்யான புகழை உடையாய் ` என்றவாறு . ` மதில் ` என்பதில் , எண்ணும்மை தொக்கது ; இனி , ` அகலும் என்பது , எதுகை நோக்கித் திரிந்தது ` என்றலுமாம் . அகழ் , மதில் இவை ஆலவாயைச் சூழ்ந்துள்ளவை என்க . இவற்றைச் சிறந்தெடுத்தோதியது . அவையே ` ஆலவாய் ` எனப் பெயர் பெற்று விளங்கும் சிறப்புப் பற்றி . அவை அப்பெயர்பெற்ற காரணம் திரு விளையாடற் புராணத்தாலும் ஒருவாறறியப்படும் .

பண் :

பாடல் எண் : 8

வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும்
வானக் கயிலாயன் நீயே யென்றும்
கான நடமாடி நீயே யென்றுங்
கடவூரில் வீரட்டன் நீயே யென்றும்
ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்
ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும்
தேனாய் அமுதானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ வானளாவிய கயிலாயனாய்க் கடவூர் வீரட்டனாய் , ஒற்றியூரிலும் ஆரூரிலும் உறைபவனாய்த் தேனும் அமுதும் போல இனியனாய் உள்ளாய் . தேவர்களுக்கும் முற்பட்டவனாய் , சுடுகாட்டில் கூத்தாடுபவனாய்த் தக்க யாகத்தில் ஈடுபட்ட தேவர்களின் தலைகளைப் போக்கினாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

மூத்து என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது ; ` மூத்தாய் இளையாய் ` என்பது பொருள் ; இளையையாவாய் என்க ; வானவரது தோற்றத்திற்கு முன் உள்ளமையின் , ` மூத்தாய் ` என்றும் , ஒடுக்கத்திற்குப் பின் உள்ளமையின் ` இளையாய் ` என்றும் அருளிச் செய்தார் . ` வான் கயிலாயம் ` என்பது அகரம் பெற்று நின்றது . ஊனார் - மேலிடத்துள்ளார் ; தேவர் . அவர்தம் தலையைத் தடிந்தது தக்கன் வேள்வியில் . இனி , ` முடிய ( அழிய ) அறுத்தாய் ( அழித்தாய் )` என்றலுமாம் . ` ஒற்றியூர் ஆரூர் `, உம்மைத்தொகையாய் நின்று முதனிலையாயிற்று . இனிமை பயத்தலின் , ` தேனாய் ` என்றும் , இனிமையோடு இறவாது வைத்தலின் , ` அமுதானாய் ` என்றும் அருளிச்செய்தார் . ` தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் ` ( தி .8 திருவாசகம் திருவேசறவு - 10.) என்றது ஈண்டு நோக்கத் தக்கது .

பண் :

பாடல் எண் : 9

தந்தைதா யில்லாதாய் நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
முந்திய முக்கணாய் நீயே யென்றும்
மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ எங்கள் உள்ளத்திலும் மேம்பட்ட கயிலாயம் , ஏகம்பம் , மூவலூர் , தேனூர் என்ற திருத்தலங்களிலும் உறைகின்றாய் . தந்தைதாய் இல்லாத பிறவாயாக்கைப் பெரியோனாய் , யாவருக்கும் முற்பட்ட முக்கண்ணனாய் , எங்களுக்குத் தாய் தந்தையாகவும் தலைவனாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

` தந்தை தாய் இல்லாதான் ` என்பது எஞ்ஞான்றும் பிறத்தல் இல்லாமை குறிப்பது . ` தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி ` ( தி .8 திருவா . திருச்சாழல் 3.) ` தந்தையாரொடு தாயிலர் ` ( தி .3. ப .54. பா .3.) ` தமக்குத் தந்தையர் தாயிலர் என்பது .... எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம் ` ( தி .12 பெ . பு . திருஞான - 829.) ` எம் தாய் ` எனப் பிரிக்க . ` எந்தை ` எனப் பாடம் ஓதுதலுமாம் . முந்திய - ( எல்லாவற்றுக்கும் ) முற்பட்ட . ` முக்கணாய் ` என்பது , ` சிவபிரானே ` என்னும் பொருளதாய் நின்றது . மூவலூர் , தேனூர் இவை வைப்புத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 10

மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே என்றும்
வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்
வீழி மிழலையாய் நீயே யென்றும்
அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :

நின்ற நெய்த்தானா ! நீ உயரிய கயிலை , வீழிமிழலை இவற்றில் உறைபவன் . தன்விமானத்தை நிறுத்திக் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து , உலகப் பற்றைத் துறந்த அடியார்களுடைய பிறவிப் பிணியைப் போக்கி , அறவடிவினனாய் , வானோர்க்கு அமுதம் வழங்கி , ஒருவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு , பொறிவாயில் ஐந்து அவித்துள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம் .

குறிப்புரை :

மறித்தான் - தனது ஊர்தியை நிறுத்திப் பெயர்த்தவன் ; இராவணன் . ` கயிலை ` எனப் பின்னர் வருகின்றமையின் , வாளா , ` மறித்தான் ` என்றருளினார் . ` மறுத்தான் ` என்பதும் பாடம் . வெறுத்தார் - துறந்தவர் . வீழிமிழலை , சோழ நாட்டுத் தலம் . அறத்தாய் - அறவடிவினாய் . ` நஞ்சம் உண்டு அமுது ஈந்தாய் ` என்றும் , ` புலன் ஐந்தும் பொறுத்தாய் ` என்றும் கூட்டுக . பொறுத்தாய் - விரும்பாது கொண்டாய் ; என்றது , ` நுகராது பற்றிநின்றாய் ` என்றதாம் . இத்திருப்பாடலின் ஈற்றடியின் முதலெழுத்து ஏனைய திருப்பாடல்களிற் போல , ` இ , ஈ , எ . ஏ ` என்னும் உயிரொடு கூடிய தகர சகர மெய்களாகாது , வேறாயிற்று .

பண் :

பாடல் எண் : 1

மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்
இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

அறிவில்லாத நெஞ்சமே ! யான் கூற நீ கேட்பாயாக . உடம்பாகிய இடத்தின் உட்புறத்தில் , ஐம்பொறிகள் பரு உடம்பாய் நின்று , விரும்பிய இன்றியமையாத பொருள்களைத் தந்து நிரப்பி , வினைகளுக்குத் தங்கும் இடமாகிய இந்த உடம்பில் இருந்து , ஐம்புல நுகர்ச்சி நுகர்ந்து கொண்டே தப்பித்துப் போகலாம் என்ற எண்ணத்தை விட்டுவிடு . நீண்ட கருங்கண்ணியாகிய பார்வதி பாகனாய்க் கப்பல்கள் இயங்கும் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய நீலகண்டன் விரும்பி உறையும் திருநெய்த்தானத் திருக் கோயிலைத் துதித்துத் தியானிக்க வேண்டும் என்பதனை விருப்புற்று நினைத்து நீ செயற்பட்டால் பிறவிப் பிணியிலிருந்து தப்பலாம் .

குறிப்புரை :

மெய்த் தானம் - உடம்பாகிய இடம் . அகம் படியுள் - உட்புறத்தில் . ஐவர் - ஐம்பொறி ; இவை பருவுடம்பாய் ( தூலதேகமாய் ) நின்று புறத்துள்ள புலன்களைக் கவர்தல் பற்றிப் ` புறக்கருவி ` எனப்படுமாயினும் , அங்ஙனம் கவரும் ஆற்றல்கள் அவ்வுடம்பினுள் அருவாயே நிற்றலின் . ` மெய்த்தானத்து அகம் படியுள் நின்று ` என்று அருளிச்செய்தார் . வேண்டிற்றுக் குறை - விரும்பியதாகிய இன்றியமையாப் பொருளை . முடித்து - தந்து நிரப்பி . கூடு - தங்கும் இடம் . ` இத் தானம் ` என்றது மேற்குறித்த மெய்த்தானத்தை . ஏழைமை - அறியாமை . மைத்து ஆன நீள் நயனி - மையணிந்ததாகிய நீண்ட கண்ணையுடையவள் ; உமை . வங்கம் - மரக்கலம் . ` என்று ` என்பது , ` நினையுமா ` என்பதனோடு இயையும் . நினையுமா நினைந்தக்கால் - நினையுமாற்றை நினைந்தால் . நினைதல் உளதாகுமாயின் செயல் நிகழ்தல் ஒருதலையாகலின் , ` நினைந்தக்கால் உய்யலாம் ` என்றருளி னார் . ` சிவதலத்தைப் பெயரளவில் நினைப்பினும் உய்திகூடும் ` என்பதுணர்த்துவார் , ` நகர் என்று நினையுமா நினைந்தக்கால் ` என்று அருளிச்செய்தார் . ` ஐவர் இவ்வுடம்பகத்தில் நின்று வேண்டி நிற்குங் குறையை அவர்க்கு முடித்துத் தந்துகொண்டு இவ்வுடம்பிற்றானே நீங்கா திருந்து பிழைக்க எண்ணுகின்ற அறியாமையுடைய நெஞ்சே , இவ்வெண்ணம் முடியாதாகலின் இதனைவிட்டொழி ; யான் சொல்லுவதைக்கேள் ; ` அருளின் வடிவாகிய அம்மையை நீக்காது உடன்கொண்டு விளங்குபவனும் , தேவர் பொருட்டு நஞ்சினை உண்டு அவரைக் காத்த அருளாளனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் திருநெய்த்தானம் என்னும் நல்ல தலம் என்று நினையும் நெறியை நினைவையாயின் , உய்தல் கூடும் ` என உரைத்துக்கொள்க . ` நினையுமாற்றால் நினைந்தக்கால் ` என்றுரைத்தலுமாம் . இப்பொருட்கு , ` என்று ` என்பது , ` நினைந்தக்கால் ` என்பதனோடு இயையும் . ` நினையுமாறு ` என்பது , கடைக்குறையாயிற்று .

பண் :

பாடல் எண் : 2

ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை
இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ
விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை
ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த
அம்மானை அரி அயனுங் காணா வண்ணம்
நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! நான் கூறுவதனைக் கேள் ! பிறப்புக்கள் பலவற்றிற்கு ஏதுவாகி நீங்காத இவ்வுடல் தொடர்பிலிருந்து விரைவாக நீங்குதற்குரிய வழி உள்ளது என்பதனை யான் நினக்குக் கூறல் வேண்டா . தேவர்கள் தலைவராய் , இவ்வுலகிலே என்னை அடிமை கொண்டவராய் , மலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களையும் அழித்த பெருமானாராய்த் திருமாலும் பிரமனும் காணா வண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவராய் உள்ளவர் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்ற தலத்தைத் தியானிக்கும் வழியை விரும்பி நினைப்பாயானால் பிறவிப்பிணியிலிருந்து தப்பித்தல் கூடும் .

குறிப்புரை :

` விரைய ` எனப் பொருள்தரும் ` ஈண்ட ` என்பது , எதுகை நோக்கி நீண்டது ; ` ஈண்ட நீங்கலாம் ` என இயையும் . பிறவித் துறவா ஆக்கை இது - பிறப்புக்கள் பலவற்றிற்கும் ஏதுவாகிய நீக்கலாகாத உடம்பாகிய இதனினின்றும் ; நுண்ணுடம்பின் ( சூக்கும தேகத்தின் ) நின்றும் . இதனான் நுண்ணுடம்பின் இயல்பும் உணர்ந்து கொள்ளப்படும் . கட்டு நீங்கி வீடெய்தும்பொழுதே நுண்ணுடம்பு நீங்குவதாகும் . விதி - வினை . ` ஆர் மண்ணில் ` எனவும் , ` ஐ அரி ` எனவும் பிரித்து , ` நிறைந்த மண்ணாலியன்ற உலகத்தில் ` எனவும் , ` அழகிய திருமால் ` எனவும் உரைக்க ` அம்மானை ` என்னும் ஐகாரத்தைச் சாரியை என்றலுமாம் . உம்மை , சிறப்பு . ` துறை ` என்பது . ` இடம் ` என்னும் பொருளது .

பண் :

பாடல் எண் : 3

பரவிப் பலபலவுந் தேடி யோடிப்
பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா
குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக்
குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ
இரவிக் குலமுதலா வானோர் கூடி
யெண்ணிறந்த கோடி யமர ராயம்
நிரவிக் கரியவன் நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! நான் கூறுவதைக் கேள் . உலகெங்கும் தேவை என்று கருதிப் பலபொருள்களையும் தேடித் திரிந்து பாழான இவ்வுடம்பிலே கிடந்து பின்விளைவை நோக்காது , உற்றார் உறவினரோடு கூடி வாழும் குடும்ப வாழ்க்கையை வாழ எண்ணி உடைந்து போதலை நீக்கு . பன்னிரு ஆதித்தர் முதலாகிய வானவர் இனத்தைச் சேர்ந்த கணக்கற்ற தேவர் கூட்டத்தார் ஒன்று சேர்ந்தாலும் தன் புகழை முழுமையாகச் சொல்ல முடியாத சிவபெருமானுடைய நெய்த்தானத்தை நினையுமா நினைத்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

` தேடிப் பரவி ஓடி ` எனக் கூட்டுக . பரவி - எங்குமாய் . வாளா - பின்விளைவை நோக்காது ; ` குரவை ` என்பது ` ` குரவி ` என வந்தது ; அது கைகோத்து ஆடுங் கூத்தாகலின் , ஒக்கலோடும் மக்களொடும் பிணைந்து வாழும் குடி வாழ்க்கையை ` குரவிக் குடிவாழ்க்கை ` என்றருளினார் . குலைகை - உடைதல் . இரவிக் குலம் - சூரியர் கூட்டம் ; சூரியர் பன்னிருவர் எனப்படுதலின் , இவ்வாறருளிச் செய்தார் . ` கூடி ` என்பதன்கண் தொகுக்கப்பட்ட பெயரெச்ச அகரம் விரித்து . ` ஆயம் ` என்பதனோடு முடிக்க . ` அமரர் ` என்றது வாளா பெயராய் நின்றது . ` ஆயம் - கூட்டம் . ` நிரவிக்க ` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று . இப் பிறவினைக் சொல் , ` அளவு படுதல் ` எனத் தன்வினைப் பொருளே தந்து நின்றது . இனி , ` நிறைவிக்க , என்பதன் திரிபாகக் கொண்டு , ` அளவறிய ` என்றுரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 4

அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே
யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து
தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள்
இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும்
நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! அலைகள் போல ஓயாது செயற்படும் வினைக் கூறுகளுக்குச் சார்பாகிய இவ்வுடம்பில் அகப்பட்டு , ஆசை என்னும் கயிற்றால் சுருக்கிடப்படுமாறு தலையைக் கொடுத்து , கீழான இந்த உலக வாழ்வில் முழுகி மிகத் தளர்ந்து , நீ அஞ்சுதல் வேண்டா . இலைகளிடையே தோன்றும் கொன்றைப் பூ , கங்கை , பிறை இவற்றைப் பெரிய சடையிலே வைத்து மகிழ்ந்தவனாய்த் தேவர்கள் போற்றும் மேம்பட்ட நிலையிலுள்ளவனாகிய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும் .

குறிப்புரை :

அலை ஆர் வினைத் திறம்சேர் ஆக்கை - அலைபோல ( இடையறாது வந்து ) பொருந்தும் வினைக் கூறுகட்குச் சார்பாகிய உடம்பு . உள் ஆசை - மனத்தின்கண் எழும் ஆசை . ` ஆசையெனும் பாசம் ` என்றது உருவகம் . ` பாசந்தன்னுள் ` என்பது , ` பாசத்து அகப் படுந்தன்மையில் ` என்னும் பொருளது . ` இலையார் கொன்றை , புனக்கொன்றை ` எனத் தனித்தனி முடிக்க . ` புனற் கொன்றை ` என்பது பாடமன்று .

பண் :

பாடல் எண் : 5

தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
ஆங்காரந் தவிர்நெஞ்சே யமரர்க் காக
முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று
முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! உரிய காலம் முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதி நம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு . தேவர்களுக்காகப் பகைத்து வந்த மதில்கள் மூன்றும் அழியுமாறு முன்னொரு காலத்தில் விரைவாகத் தூக்கிய வில்லை வளைத்து அம்மதில்களைத் தீக்கு இரையாக்க நினைத்துச் செயற்பட்ட பெரிய கருணையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும் .

குறிப்புரை :

` தினைத்தனையும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . ஓர் ( ஒன்று ) - சிறிது . பொறை - பொறுத்தல் ; தாமதித்தல் ; நிலைபெறுதல் . ` மதியால் பேசும் ` என இயையும் . ` உனக்கு உள்ள மதியைப் பெரிதாக நினைந்து பேசுகின்ற ` என்பது பொருளாம் . ` அமரர்க்காக நினைத்த ` என இயையும் . முனைத்து - முற்பட்டு . முடுகிய - விரைந்த ; விரைய எடுத்த .

பண் :

பாடல் எண் : 6

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி
வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை
கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப
அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! துன்பமே விளைக்கின்ற இந்த உடலில் வாழும் வாழ்வு நிலையானது என்று கருதி வினைப்பயனிலே கிடந்து ஈடுபட்டு மகிழாதே . தம்மைப் பற்றித் தாழ்வாகக் கருதுபவர் மனத்து இருப்பவனாய் , முருகனுக்குத் தந்தையாய் , கூத்தாடுதலைப் பண்பாக உடையவனாய் , கொல்லும் முத்தலை வேல் ஏந்திய கையனாய்த் திருவடிகளில் , கழலும் , சிலம்பும் ஒலிக்க இவ்வுலகமே பெயருமாறு ஆடும் ஊழிக் கூத்தில் மனநிறையுடையவனாகிய சிவபெருமானுடைய திருத்தலமாகிய நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

மிறைபடும் - துன்பமே விளைகின்ற . வினை - வினைப்பயன் . வியவேல் - மகிழாதே . குறைவு - தாழ்வு ; பணிவு . வேல் - சூலம் . கழலும் , சிலம்பும் மாதொரு கூறன் ஆதலை உணர்த்தும் . நட்டம் நின்ற - நடனத்தொடு நின்ற . நிறைவு , எல்லா நலங்களும் நிரம்பியிருத்தல் . பெயர - பெயருமாறு ; பெயர , ஆர்ப்ப என மேலே கூட்டி , ` உலகம் முற்றும் பெயர்ந்த பின் ( ஒடுங்கியபின் ) நடனத்தொடு நின்ற நிறைவுடையான் ` என்றுரைத்தலுமாம் . இப்பொருட்கு , நிறைவு . தன்னைப் பெயர்ப்பார் இன்றித் தானே எல்லாவற்றையும் பெயர்ப்போனாய் நிற்கும் முழுமுதற் றன்மை .

பண் :

பாடல் எண் : 7

பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு
வாசக் குழல்மடவார் போக மென்னும்
வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்
துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா
நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! வருக . பேசுதற்கு ஏற்ற உயர்ந்த பொருள் அல்லாத இப்பிறவியைக் கிட்டுதற்கு அரிய பொருளாக உன் அற்பப்புத்தியில் கருதி நறுமணம் கமழும் கூந்தலையுடைய மகளிர் இன்பம் என்னும் வலையில் அகப்பட்டு அழியாமல் , யானைத்தோலை உரித்துப் போர்த்துத்தூய திருநீறு பூசிப் பூணூல் அணிந்து , தன்னை அணுகாத கீழ்மக்களுக்கு அரியவனாயுள்ள சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

` பிறவி ` என்றது , உடலை . வேண்டி - விரும்பி . ` மனம் ` என்றது அதன் குணத்தை . வருக - என்வழி வருக . தூசு - ஆடை ; போர்வை . அகரம் , சாரியை . துதைந்து - நிறைந்து .

பண் :

பாடல் எண் : 8

அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண்
டருநோய்க் கிடமாய வுடலின் தன்மை
தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே
தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா
மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும்
நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! ஐம்புலன்களால் நினைத்தவாறு செயற்படுத்தப்பட்டுக் கொடிய நோய்களுக்கு இருப்பிடமாகிய இவ்வுடலில் நிலையாமையை உனக்குப்புகலிடம் என்று கருதி ஐம்புல இன்பத்தில் ஆழ்ந்து போகாதே . தன்னைப் பற்றுக் கோடாக அடையாத வஞ்சமனத்தவர் காண முடியாத நீலகண்டனாய்த் தேவர்கள் தலைவன் என்று போற்றப்படும் மனத்துக்கினிய சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

` அஞ்ச` என்பதில் அகரம் சாரியை . ` புலன் ஆட்ட இவற்றால் ஆட்டுண்டு ` எனக் கூட்டுக . தஞ்சம் - புகலிடம் . தாழேல் - அழுந்தாதே . ` தாழக் கருதுதியே ; ( அவ்வாறு ) தாழேல் ` எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 9

பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி
போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி
இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே
யிமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்
கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங்
கண்ணுதல்கண் டமராடிக் கருதார் வேள்வி
நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! தகுதியற்ற இவ்வுடலில் வினைவயத்தால் புகுந்த உயிர் இதனை எந்த நேரத்திலும் விடுத்து நீங்கிவிடும் என்பதனை அறிந்தும் கீழான ஐம்புல நுகர்ச்சி வாழ்வினையே கருதிக் கொண்டிருந்து துயர்ப்படல் வேண்டா . தேவர்கள் தலைவனாய் , ஒருகாலத்தில் பார்வதி அஞ்சுமாறு , கரிய அடிகளை உடைய மதயானை அஞ்ச அதனை வெகுண்டவனாய் , நெற்றிக் கண்ணனாய் , தன்னைப் பரம்பொருளாகக் கருதாதவர் கூடி நிகழ்த்திய வேள்வியைப் போரிட்டு அழித்தவனாய் , நிலையாக உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

பொருந்தாத உடல் - தகுதியற்ற ( இழிவுடைய ) உடம்பு . ` அறிந்தும் அறிந்தும் ` என்னும் உம்மைகள் தொகுத்தலாயின . அடுக்குப் பன்மை பற்றி வந்தது . அறிதல் - ஏனைய பலரிடத்து வைத்தென்க . புலை - கீழ்மை . ` ஆங்கு இருந்து நீ இடர்ப்படவேண்டா ` என மாறிக் கூட்டுக . தாள் - முயற்சி ; வலிமை . கருதார் - பகைவர் ; பன்மை கூறியது . பலரும் ஒருவன் செயலுக்கு உடம்பட்டமை கருதி . ` கருதார் வேள்வி கண்டு அமராடி உறை நெய்த்தானம் ` எனக் கொண்டு கூட்டியுரைக்க . ` அமராடி ` என்றது பெயர் ; எச்சமாக ஓதுதல் பாடம் அன்று . நிரந்தரமா - நிலையாக .

பண் :

பாடல் எண் : 10

உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை
உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்
தரிந்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே
தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்
எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே
யெம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.

பொழிப்புரை :

விரதங்களை எல்லாம் மேற்கொண்டு தவ வாழ்வு வாழ முயன்று வாழாத நெஞ்சே ! நிலையாமையை உடைய இவ்வுடல் என்றும் உள்ள உயிரைப்பற்ற வேண்டிய உனக்கு உரிய பொருள் அன்று . உண்மையை உனக்குக் கூறிவிட்டேன் . தம்மிடத்துப் பொருளில்லாத வறியவர்களுக்கு ஒன்றும் ஈயாதவர்களுக்குத் தானும் எதுவும் ஈயாதவனாய்த் திரிபுரங்களை எரித்தவனாய்க் கையில் தீயை உடையவனாய் எட்டுத் தோள்களை உடைய எம்பெருமானே என்று தன்னைத் துதிக்காத இலங்கை மன்னனான இராவணனை நெரித்த , நெய்த்தானம் என்ற திருத்தலத்தை உகந்தருளி உறைகின்ற பெருமானை நினையுமா நினைந்தக்கால் உய்யலாம் .

குறிப்புரை :

உடலின் தன்மையை உயிர் தன் தன்மையாகக் கோடல் மயக்க உணர்வாகலின் , ` இவ்வுடலின் தன்மை உனக்கு உரித்தன்று ` எனத் தெளிவித்தருளினார் ; இதனான் ஆன்ம தரிசனம் செய்வித்த வாறாயிற்று . ` உண்மை யுரைத்தேன் ` என்றது , ` நீ உணர்வுபெறக் கூறினேன் ; கேளாதொழியின் , வருவது காண்டி ` என்றருளியவாறு . வருவது , பிறவித் துன்பம் . `விரதம் தரித்தும் , தவம் முயன்றும் வாழா நெஞ்சே` என்பதனை முதற்கண் கொண்டுரைக்க . தரித்தல் - மேற்கொள்ளுதல் . இதனால் , ` நீதானே உணராதும் , உணர்த்தியும் உணராதும் நிற்கின்றாய் ` என்றபடி . எனவே , ` ஆன்மாக்களுக்கு முற்செய்தவத்தான் ஞானம் நிகழும் ` ( சிவஞானபோதம் சூத்திரம் 8 அதிகரணம் 1. ) என்பது பெறப்பட்டது . தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் - தம்மிடத்துப் பொருள் இலராகிய வறியவர்க்கு ஒன்றும் ஈயாதவர்க்கு அத்தன்மையனாய் ஒன்றும் ஈயாதவனே . ` எரித்தான் ` என்பதன் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது ; எரிதலுடைத்தான ` என்பது பொருள் - ` அன்னன் , உடையான் , பெருமான் ` என்பன விளிகள் .

பண் :

பாடல் எண் : 1

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
காணா தனவெல்லாங் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் இருத்தி, அவனை நினையாத என் மனத்தை அவனை நினைக்கச் செய்து, அரும் பேருண்மைகளை எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, என்னை அடிமையாகக் கொண்டு, கொடிய சூலை நோயைத் தீர்த்து எனக்குக் காணாதன எல்லாம் காட்டிய தூயோனாகிய புண்ணியனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.

குறிப்புரை :

நில்லாத நீர் - உறைந்து நில்லாது ஒழுகும் தன்மைத் தாய நீர்; `அதனைத் தலையிலே நிறுத்திய வல்லாளனாகிய அவனுக்கே நின்று நினைக்குந் தன்மையில்லாது அலமந்து திரியும் தன்மைத்தாகிய என் நெஞ்சினை நினைவித்தல் கூடுவதாயிற்று` என்பது, உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. கல்லாதன - திருவருள் வாயாதவர்க்குச்செய்ய வாராதன; அவை, அவன் கோயில்புக்குப் புலர்வதன்முன் அலகிடல், மெழுக்கிடல் முதற்பலவாய தொண்டுகள்; அவற்றை, சுவாமிகளது அருட்டிருமொழிகளாலும், அருள் வரலாற்றாலும் அறிந்துகொள்க. காணாதன - எங்கும் யாரும் கண்டறியாதன; அவை, வெய்ய நீற்றறையது தான் ஐயர் திருவடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததும், வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுதாய தும், பொங்கு கடற் கல்மிதந்ததும் போல்வன. சொல்லாதன - மறை பொருள்கள்; அவை, `நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்` என்றற் றொடக்கத்து அரும்பேருண்மைகள். `என்னை` என்பதனை, `எனக்கு ` எனத்திரித்து, `எனக்குச் சொல்லி` என மாறிக் கூட்டுக. சொல்லி - தமக்கையார் வாயிலாகத் தெரிவித்து. தொடர்ந்து - இடையறாது அருள்பண்ணி. `என் பொல்லாநோய்` என இயையும்; அது, `கொல்லாது குடர் முடக்கி நின்ற சூலைநோய்` என்பது வெளிப்படை. `பூந்துருத்தி கண்டேன்` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 2

குற்றாலங் கோகரணம் மேவி னானைக்
கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை
உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை
யுணராவென் நெஞ்சை யுணர்வித் தானைப்
பற்றாலின் கீழங் கிருந்தான் தன்னைப்
பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்
புற்றா டரவார்த்த புநிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

குற்றாலம் கோகரணம் இவற்றை விரும்பி உறைந்து கொடிய செயலை உடைய கடியவனாகிய கூற்றுவனை ஒறுத்து, ஆலகால விடத்தை உண்டு கழுத்தில் இருத்தி, உணராத என் நெஞ்சத்தில் அரும் பேருண்மைகளை உணர்வித்து, கல்லால மரத்தின் கீழ் அதனைச் சார்பாகக் கொண்டிருந்து, பண் நிறைந்த வீணையை வாசித்து, புற்றிலிருக்கும் படம் எடுத்தாடும் பாம்பினை இறுக அணிந்த தூயோனாகிய புண்ணியனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

குற்றாலம், பாண்டிநாட்டுத் தலம். கோகரணம், துளுவ நாட்டுத் தலம். `கொடுங் கை` என்பதில், கை - செய்கை. உற்று - (மனம்) பொருந்தி. `நஞ்சினை உற்று உண்டு ஒடுக்கினானை` எனக் கூட்டுக. `பற்று` என்புழி, `ஆக` என்பது வருவிக்க. அங்கு, அசை நிலை.

பண் :

பாடல் எண் : 3

எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை
யெழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை
மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்
நில்லானை நின்றியூர் மேயான் தன்னைத்
தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட
சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப்
புனக்கொன்றைத் தாரணிந்த புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

ஏகம்பம் நின்றியூர் இவற்றில் தங்குபவனாய், எனக்கு என்றும் இனிய எம் தலைவனாய், மனத்தில் என்றும் இருப்பவனாய், வஞ்சகர் நெஞ்சில் நில்லாதவனாய், என்னைத் தனக்கு என்றும் ஆளாகக் கொண்டு நன்மை செய்கின்றவனாய், சங்கினால் ஆகிய நீண்ட காதணியை உடையவனாய் மேட்டு நிலத்தில் வளரும் கொன்றைப் பூமாலை அணிந்த தூயோனாகிய, பாசம் இல்லாதவனை, யான் பூந்துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

`மனத்துக்கண்` என்னும் பொருட்டாகிய `மனத்துக்கு` என்பதில், அத்துத் தொகுத்தலாயிற்று. நின்றியூர், சோழநாட்டுத் தலம். புனம் - முல்லை நிலம். `பொய் ` என்றது, பாசத்தை.

பண் :

பாடல் எண் : 4

வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை
வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை
அறியா தடியே னகப்பட் டேனை
அல்லற்கடல் நின்று மேற வாங்கி
நெறிதா னிதுவென்று காட்டி னானை
நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்
பொறியா டரவார்த்த புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மணம் கமழும் கொன்றைப் பூச் சூடி, ஐராவதம் வழிபட்ட வெண்காட்டில் உறைவானாய், அறியாத புறச்சமயத்தில் அகப்பட்ட என்னை அத்துயரக்கடலில் மூழ்காதபடி தூக்கி எடுத்து, இது தான் நேரிய வழி என்று காட்டி, நாடோறும் என்னை வருத்தும் பிணிகளைத் தீர்த்து, புள்ளிகளை உடைய ஆடும்பாம்பினை இறுகக் கட்டிய தூயோனாகிய பாசம் அற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

வெறி - வாசனை. வெள்ளானை, இந்திரனுக்கு உரிய `ஐராவதம்` என்னும் யானை. இது திருவெண்காட்டிற் பூசித்தமை மேலே காட்டப்பட்டது, (ப.35 பா.9) `அல்லற் கடல்` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, `அகப்பட்டேனை` என்றருளினார். `அடியேன் அகப்பட்டேனை` என்பதனை, `அகப்பட்ட அடியேனை` என மாற்றியுரைக்க. நிச்சல் - நித்தல். பொறி - புள்ளி.

பண் :

பாடல் எண் : 5

மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை
விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி
நக்கானை நான்மறைகள் பாடி னானை
நல்லார்கள் பேணிப் பரவ நின்ற
தக்கானைத் தண்டா மரைமே லண்ணல்
தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம்
புக்கானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

எல்லாரினும் மேம்பட்டவனாய், வெண்ணீறு பூசி, பகைவரின் மும்மதில்களையும் அழித்து, அவற்றின் அழிவுகண்டு சிரித்து, நான்கு வேதங்களையும் ஓதித் தக்கோர்களால் விரும்பி முன்னின்று துதிக்கப்படுபவனாய், பிரமன் மண்டை ஓட்டைச் சுமந்து ஒரு கணநேரத்தில் உலகமெல்லாம் சுற்றித் திரியும் புண்ணியனாய்த் தூயனாய்ப் பாசம் அற்றவனாயுள்ள எம்பெருமானைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.

குறிப்புரை :

மிக்கான் - உயர்ந்தோன். சண்ணித்தான் - பூசினான். மாத்திரைக்கண் - நொடி நேரத்தில்; `மாத்திரைக்குள்` என்பதும் பாடம். உலகமெல்லாம் புக்கது, இரத்த பிச்சை யேற்றற் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 6

ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா
அசைத்தானை அழகாய பொன்னார் மேனிப்
பூத்தானத் தான் முடியைப் பொருந்தா வண்ணம்
புணர்ந்தானைப் பூங்கணையா னுடலம் வேவப்
பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை
படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை
போர்த்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

வாசுகி என்ற பாம்பினையே வில்லுக்கு நாணாகக் கட்டியும், இடையிலே கச்சாக அணிந்தும் இருப்பவனாய், பொன் போன்ற உடம்பும் தாமரையாகிய இருப்பிடமும் உடைய பிரமனுடைய தலை ஒன்றனை அவன் உடலில் பொருந்தாதபடி நீக்கியவனாய், மன்மதன் உடல் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய்ப் பின் அவனிடம் அருள் கூர்ந்தவனாய், கங்கையைச் சடை மீது தரித்தவனாய், யானை நடுங்க அதன் தோலை உரித்துப் போர்த்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன்.

குறிப்புரை :

ஆர்த்தான் - கட்டினான். `கச்சா ஆர்த்தான்` எனக் கூட்டுக. அசைத்தான் - ஆட்டினான், ஆட்டியதும் வாசுகியையே என்க. பூத்தானத்தான் - பூவை உறைவிடமாகக் கொண்டவன்; பிரமன். புணர்ந்தான் - நெருங்கிச் சென்றான்; `சென்று கிள்ளினான்` என்றபடி. `புணர்த்தான்` என்னும் பாடத்திற்கு, `பொருந்தி நில்லாமைக்கு ஏதுவாகிய செயலைச் செய்தான்` என உரைக்க. பரிந்தான் - (பின்னர்) அருள்கூர்ந்தான்; உயிர்ப்பித்தான். `யானை பதைப்ப அதனை உரித்துப் போர்த்தான்` என்க.

பண் :

பாடல் எண் : 7

எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி
யுமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்
திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பகைவர் முப்புரங்களையும் இமைகொட்டும் நேரத்திற்குள் பொடியாகுமாறு எரித்து, மத யானையைப் பற்றித் தன் அழகிய கைகளால் தோலை உரித்து, உமாதேவி அது கண்டு அஞ்ச, அவள் அச்சத்தைப் பார்த்து, சிரித்துச் சடையில் பிறையும் பாம்பும் கங்கையும் சூடிப் பூதகணங்கள் சூழ இருக்கும் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் இல்லாதவனான பெருமானை யான் பூந் துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

`பொடியாக எரித்தானை` எனவும், `கையாற் பற்றி உரித்தானை` எனவும் இயையும். சிரிப்பு, அவள் பேதைமை பற்றி வந்தது. `நீரும்` என்புழி, `வைத்து` என்பது வருவிக்க. புரித்தான் - புரியாகத் திரித்தான்.

பண் :

பாடல் எண் : 8

வைத்தானை வானோ ருலக மெல்லாம்
வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்
வித்தானை வேண்டிற்றொன் றீவான் தன்னை
விண்ணவர்தம் பெருமானை வினைகள் போக
உய்த்தானை யொலிகங்கை சடைமேற் றாங்கி
யொளித்தானை யொருபாகத் துமையோ டாங்கே
பொய்த்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

வானோர் உலகமெல்லாம் படைத்தவனாய், அத்தேவர்கள் வந்து வணங்கி மலர்கொண்டு நின்று துதிக்கும் உலக காரணனாய், அடியவர்கள் விரும்பியதை அளிப்பவனாய், இந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கியவனாய், கங்கையைச் சடையில் மறைத்துப் பாதி உருவாய் உள்ள பார்வதிக்குப் புலப்படாதவாறு செய்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாயுள்ள பாசமற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.

குறிப்புரை :

`வானோர் உலகமெல்லாம்` என்பது தாப்பிசையாய், முன்னரும் சென்றியையும். வித்தான் - காரணன்; முதல்வன். உய்த்தான் - ஓட்டினான். ஒலிகங்கை, வினைத்தொகை.
ஆங்கே - அவ்வொருகூற்றிடத்தே. உமையோடு பொய்த்தது, `நின்னையன்றிப் பிறள் ஒருத்தியையும் யான் கண்டிலேன்` என்று கங்கையைக் கரந்தமையை மறைத்தது; இஃது, `அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப` என்றவாறு வரும் (தொல். பொருள். 218.) அகப் பாட்டு வழக்குப்பற்றி அருளிச்செய்தது.

பண் :

பாடல் எண் : 9

ஆண்டானை வானோ ருலக மெல்லாம்
அந்நா ளறியாத தக்கன் வேள்வி
மீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி
விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேட
நீண்டானை நெருப்புருவ மானான் தன்னை
நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்
பூண்டானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

தேவருலகமெல்லாம் ஆண்டவனாய், ஒரு காலத்தில் தக்கன் வேள்வியில் தொடர்பு கொண்டு தன்னால் தண்டிக்கப்பட்ட தேவர்களோடும் திரும்பியவனாய், தாமரையில் உள்ள பிரமனும் திருமாலும் தேடுமாறு தீப்பிழம்பாக நின்றவனாய், பகைவருடைய மும்மதிலும் தீப்பற்றி அழியுமாறு வில்லைப் பூண்டவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய் உள்ள பாசம் அற்றவனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.

குறிப்புரை :

`வானோர் உலகமெல்லாம் ஆண்டானை` எனவும், `கூடி மீண்டானை` எனவும் இயைக்க. அறியாத - அறிய வேண்டுவதனை அறியாத. `வேள்வி` என்புழி, நீக்கப் பொருளில் வந்த இன்னுருபு விரிக்க. தக்கன் வேள்வியினின்றும் விண்ணவர்கள் உடன் கூடி மீண்டது. அவர்களை உயிர்ப்பித்த பின்னர் என்க. `நீண்டானை` என்பதன்பின், `ஆங்கு` என்பது வருவிக்க. `மாலும் தேர` என்பதும் பாடம். நிலை இலார் - உள்ளம் ஒருநெறியில் நிலை பெறுதல் இல்லாதவர்; `புத்தன் போதனையால், சிவநெறியைக் கைவிட்டவர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 10

மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை
மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை
யெண்டிசைக்கும் கண்ணானான் சிரமே லொன்றை
அறுத்தானை யமரர்களுக் கமுதீந் தானை
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

நந்தி பெருமான் அறிவுரையை அலட்சியம் செய்து தன் கைகளைக் கோத்துக் கயிலை மலையை எடுத்த இராவணனைப் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு காலால் அழுத்தியவனாய்ப்பின் அவன் பாடிய ஏழுநரம்பின் ஓசையைக் கேட்டு அவனுக்கு அருள் செய்தவனாய், எட்டுக் கண்களை உடைய பிரமனின் மேல்தலையாகிய ஐந்தாம் தலையை அறுத்தவனாய்த் தேவர்களுக்கு அமுதம் ஈந்தவனாய், எவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருத்தியவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன்.

குறிப்புரை :

மறுத்தது, நந்திபெருமான் அறிவுரையை. `மறுத்து மலையைக் கையாற்கோத்து எடுத்தான்` என உரைக்க. இறுத்தான் - சிதைத்தான். `பின்பு அவன் இசை கேட்டானை` என உரைக்க. `திசைக்கும்` என்பதனை, `திசைக்கணும்` எனத் திரிக்க. எட்டுக்கண் உடையவன் பிரமன். `கண்ணானை` என்பதும் பாடம். சிரமேல் ஒன்றை - சிரங்களில் மேல் இருந்த ஒன்றை. பொறுத்தான் - (மிடற்றில்) தாங்கினான்.

பண் :

பாடல் எண் : 1

மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

காலத்தால் எல்லாருக்கும் முற்பட்டவனே ! முறையாக எல்லா உலகையும் படைக்கின்றவனே ! ஏழுலகும் தாங்கு கின்றவனே ! இன்பம் தருபவனாய்த் துன்பங்களைப் போக்கு கின்றவனே ! முன்னே காத்தமை போல எப்பொழுதும் எல்லோரையும் காக்கின்றவனே ! தீவினையை உடைய அடியேனுடைய தீவினையை நீக்கியவனே ! திருச்சோற்றுத்துறையிலுள்ள விளங்கும் ஒளியை உடைய சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

மூத்தவன் - காலத்தால் எல்லார்க்கும் முன்னர் உள்ளவன் . முறைமையால் - ஊழின்படி . ` ஏந்து ` என்பது வலிந்து நின்றது . ஏந்து அவன் - எல்லாவற்றையும் தாங்குகின்ற அத் தன்மையன் . இயல்பாகவேகொண்டு , ` யாவரும் ஏத்துதற்குரிய அத்தன்மையனாய் ` என்றுரைத்தலுமாம் . காத்தவனாய் - முன்னே காத்தவனும் தானாய் . காண்கின்றான் - ( பின்னும் ) காக்கின்றான் . கண்டு - திருவுள்ளத்திற் குறித்து . ` நான் உன் அபயம் ` என்க . அபயம் - பயம் இன்மை ; என்றது , ` பயம் இன்மை உளதாமாறு காத்தற்குரிய பொருள் ; அடைக்கலப் பொருள் ` என்றவாறு .

பண் :

பாடல் எண் : 2

தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே
நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட
கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த
சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

உலகத் தலைவனே ! தத்துவனே ! அடியார்க்கு அமுதே ! நிலைபேறுடையவனே ! ஒப்பற்றவனே ! அறிவில்லாத கூற்றுவனை வெகுண்டு உதைத்துத் தண்டித்தவனே ! யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய கஜசம்கார மூர்த்தியே ! கொடிகள் உயர்த்தப்பட்ட மும்மதில்களையும் அழித்த வில்லை உடையவனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

` தலையவன் ` என்பதில் தலை , ` தலைமை ` என்னும் பண்பு குறித்தது . அகரம் சாரியை . தத்துவன் - முதற்பொருளானவன் . நிலையவன் - அழிவில்லாதவன் . நின்று உணரா - மனம் ஒருங்கி ஆராயாத , தோலை மேல் இட்ட ( போர்த்த ) என்க . கூற்றுவன் என்றது , யானைக்குக் கூற்றுவனாயினமையை .

பண் :

பாடல் எண் : 3

முற்றாத பான்மதியஞ் சூடி னானே
முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே
உற்றாரென் றொருவரையு மில்லா தானே
உலகோம்பும் ஒண்சுடரே யோதும் வேதங்
கற்றானே யெல்லாக் கலைஞா னமுங்
கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

வெள்ளிய பிறை மதி சூடியே ! முளைத்து வெளிப்பட்ட கற்பகத் தளிர் ஒப்பவனே ! தனக்கென வேண்டியவர் யாரும் இல்லாதானே ! உலகைப் பாதுகாக்கும் சுடரே ! எல்லாக் கலைஞானமும் ஒதாதுணர்ந்து வேதம் ஓதுபவனே ! ஒன்றும் கல்லாத அடியேனுடைய தீவினையும் அதனால் விளையும் நோயும் நீங்குமாறு அவற்றை அழித்தவனே ! திருச்சோற்றுத் துறையுள் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

உற்றார் - பிறப்பால் வரும் உறவு முறையினர் ; அன்னார் ஒருவரையும் இல்லாதான் என்றது , ` பிறவியை ஒரு ஞான்றும் அடைந்தறியாதவன் ` என்றவாறு . ` கற்றான் ` என்பதுபற்றி மேலே ( ப .1. பா .2.) குறித்தாம் . ` எல்லாக் கலைஞானமும் ` என்னும் உம்மையை எச்சப்படுத்தாது முற்றாகவே கொண்டு , ` எந்தக் கலை ஞானமும் கல்லாதேன் ` என்பது பொருளாக உரைக்க . தீவினை நோய் - தீவினையால் வந்த நோய் ; சூலைநோய் .

பண் :

பாடல் எண் : 4

கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே
காலங்க ளூழிகண் டிருக்கின் றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே
வேதனாய் வேதம் விரித்திட் டானே
எண்ணவனா யெண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

பற்றுக் கோடாய் இருந்து உலகைக் காப்பவனே ! பல ஊழிகளையும் கண்ட , காலம் கடந்த பெருமானே ! தேவனாய்த் தேவர்களுக்கும் மற்றை உயிர்களுக்கும் அருள் செய்பவனே ! வேத வடிவினனாய் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே ! எங்கள் உள்ளத்தில் இருப்பவனாய்ப் பகைவருடைய மும்மதிலும் இமை கொட்டும் நேரத்தில் தீக்கு இரையாகுமாறு அவற்றைக் கண்டு சிரித்த உறுதியுடையவனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! யான் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

கண் அவன் - ( உலகிற்கெல்லாம் ) கண்போலும் அத்தன்மையன் . ` காலங்களாய ஊழி ` என விரிக்க . ` விண்ணவர்க்கும் ` என்னும் உம்மை , சிறப்பு ; அதனால் , ` சிவபிரான் விண்ணவனாதல் , ஏனைய விண்ணவர்போல் வினைவயத்தாலன்றித் தன் இச்சையால் ` என்பதுணர்த்தியருளியவாறாம் . ` விரித்திட்டான் ` என்றது , ` செய் திட்டான் ` என்றதாம் . அதனால் , ` வேதன் ` ( வேதத்தை ஓதுபவன் ) என்றது , பிரமன் முதலிய ஏனையோர்போலன்றி , அவரை ஓதுவித்தற் பொருட்டென்பது உணர்த்தியருளியவாறாம் . எண் அவன் - எல்லா வற்றையும் நினைவு மாத்திரையாற் செய்யும் அத் தன்மையன் ; ` காரணமும் காரணங்களைப் படைத்தோரும் கருதினோரும் ஆகிய வர் ` ( காரணம் காரணானாம் தாதா த்யாதா ) என்னும் அதர்வசிகை வாக்கியத்துள் , கருதினோர் என்றதும் இப்பொருட்டு . எண்ணார் - மதியாதவர் . திண்ணவன் - வலியவன் . ` எண்ணவனே ` என்றும் பாடம் உள்ளது .

பண் :

பாடல் எண் : 5

நம்பனே நான்மறைக ளாயி னானே
நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமா நகரு ளானே
கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவிலாப் பெருமை யானே
அடியார்கட் காரமுதே ஆனே றேறுஞ்
செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பப்படுபவனே ! நால் வேத வடிவினனே ! கூத்தாடவல்ல ஞானத் கூத்தனே ! கச்சி ஏகம்பனே ! காவலை உடைய மும்மதில்களும் பொடியாகுமாறு செலுத்திய அம்பினை உடையவனே ! எல்லையற்ற பெருமை உடையவனே ! அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவனே ! காளையை இவரும் பொன்னார் மேனியனே ! திருச்சோற்றுத்துறை உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

ஞானக் கூத்து - மெய்யுணர்வைத் தரும் கூத்து . அது . கட்டு நெகிழப்பெறாதோர்க்கு , ` ஐந்தொழிற்கும் முதல்வன் தானே ` எனப் பொதுவகையானும் , கட்டு நெகிழப்பெற்றோர்க்கு , ` தனது திருவடி இன்பமே இன்பமாவது ` எனச் சிறப்புவகையானும் உணர்த்தும் . அதனை , முறையே , ` தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு ` எனவும் , ` மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தை யார்பரதந் தான் ` எனவும் விளக்கும் உண்மை விளக்க வெண்பா க்களால் (36,37) உணர்க . கம்பன் - ( உமையம்மைக்கு ) நடுக்கத்தை உண்டாக்கியவன் . ` ஏபெற் றாகும் ` ( தொல் . சொல் . 304) என்றாங்கு , ` ஏகல் லடுக்கம் ` ( நற்றிணை - 116.) என்றாற்போல . ` ஏ ` என்பது , பெருக்கம் உணர்த்தி உரிச்சொல்லாய் நிற்குமாதலின் , அவ்வாறு ` கம்பன் ` என்பதனோடு தொடர்ந்து நின்ற பெயரே ` ஏகம்பன் ` என்பது . இனி , அதனை , ` ஒற்றை மாமரத்தின்கீழ் உள்ளவன் ` எனப் பொருள் தரும் , ` ஏகாம்பரன் ` என்பதன் சிதைவாகவும் உரைப்பர் .

பண் :

பாடல் எண் : 6

ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி
யமைந்தவனே யளவிலாப் பெருமை யானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா
கொடுமூ விலையதோர் சூல மேந்திப்
பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய
பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்
சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

உலகமெல்லாம் நீயேயாகிப் பொருந்திக் குறையாது மின்றி நிரம்பியிருப்பவனே ! எல்லையற்ற பெருமை உடையவனே ! உயிர்களிடத்து அருள் மிகுந்தவனே ! குற்றாலத்தை விரும்பிய கூத்தனே ! முத்தலைச் சூலம் ஏந்தி ஊழிவெள்ளங்கள் எல்லாம் மறையுமாறு உலாவுபவனே ! உன்னைப் பெருமான் என்று நினைக்கும் உள்ளங்களில் சேர்ந்தவனே ! திருச்சோற்றுத்துறையில் உள்ள திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

ஆர்ந்தவன் . பொருந்தினவன் . இதனை , ` நீயே யாகி ` என்பதன்பின் கூட்டுக . அமைந்தவன் - குறை யாதுமின்றி நிரம்பி யிருப்பவன் . கூர்ந்தவன் - ( உயிர்களிடத்து அருள் ) மிகுந்தவன் . பேர்ந்தவன் ( பெயர்ந்தவன் ) - உலாவியவன் . பிரளயம் - ஒடுக்கம் . நெஞ்சினை உடையாரது செயல் , நெஞ்சின் மேல் ஏற்றப்பட்டது .

பண் :

பாடல் எண் : 7

வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே
கடிய அரணங்கள் மூன்றட் டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

தேவனாய் வரம் கொடுக்கும் உள்ளத்தானே ! சிந்தாமணியை உடைய தேவர்கள் பெருமானே ! வேடனாய்ப் பன்றிப் பின் சென்றவனே ! கொடிய மும்மதில்களை அழித்தவனே ! குளிர்ந்த கயிலாயத்தை உறைவிடமாக விரும்பி உறைபவனே ! தன்னை ஒப்பார் பிறர் இல்லாத பார்வதிக்கு இனியனே ! திருச்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

வானவன் - தேவன் ` வானவனாய் ` என்னும் எச்சம் , ` மனத்தினான் ` என்னும் வினைக்குறிப்போடு முடியும் . வண்மை மனம் - வரங்கொடுக்கும் உள்ளம் . மாமணி - சிந்தாமணி ; ` வானோர் அதனை உடையராயினும் , உன்னையே அடைவர் என்றபடி . ` வானோர் பெருமானாகிய நீயே உண்மைவானவனாய் நின்றாய் ` என்பது பட . ` நீயே வானவனாய் ` என மேலே கூட்டுக . கானவனாய் ஏனத்தின் பின் சென்றது அருச்சுனனுக்காக . ` வானவர் பெருமான் இது செய்தான் ` என்றது அவனது எளிவரும் பொருளைத் தெற்றென விளக்கும் . ஏனம் - பன்றி . தானவன் - எவற்றையும் கொடுப்பவன் ; சந்திரன் , எனலுமாம் . ` சந்திரன் ` எனல் தட்பமாய அருளுடைமை பற்றி . இனி , ` அவன் ` என்பதனைப் பகுதிப்பொருள் விகுதியாக்கி , ` தன்னிகரின்றித் தானேயாய் ` என்றுரைத்தலுமாம் . தேனவன் - தேன்போல இனிப்பவன் .

பண் :

பாடல் எண் : 8

தன்னவனாய் உலகெல்லாந் தானே யாகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனா யென்னிதயம் மேவி னானே
யீசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

சுதந்திரனாய் , எல்லா உலகங்களும் தானே ஆனவனாய் , மெய்ப்பொருளாய் , அடியார்க்கு அமுதமாய் என்னை அடிமை கொண்டவனாய் , என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய் , எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் , பாச வினைகளைப் போக்கும் தலைவனாய்ப் பார்வதி பாகனாய்த் தேவர்கள் வணங்கும் காவிரியின் தென்கரையிலுள்ள திருத்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

தன்னவன் - தன்வயமுடையவன் ; சுதந்திரன் . என்னவன் - எனக்கு உரியவன் . பொன்னித் தென்னவன் - காவிரியின் தென்கரையில் உள்ளவன் . திருச்சோற்றுத்துறை , காவிரியின் தென்கரையில் இருத்தல் காண்க .

பண் :

பாடல் எண் : 9

எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே
ஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானே
அறிந்தார்தாம் ஓரிருவ ரறியா வண்ணம்
ஆதியும் அந்தமு மாகி யங்கே
பிறிந்தானே பிறரொருவ ரறியா வண்ணம்
பெம்மானென் றெப்போதும் ஏத்து நெஞ்சிற்
செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளுக்கும் கண்ணாகி உலகங்களைக் காப்பவனாய் , முன் ஏழ் உலகங்களையும் படைக்கும் முதற் பொருளாய் நின்று , பின் அவற்றை அழித்தவனே ! பிரமனும் திருமாலும் அறியாவண்ணம் ஆதியும் முடிவும் ஆகி அவர்களிலிருந்து வேறு பட்டவனே ! தன்னைத் தலைவன் என்று துதிப்பவர்கள் மனத்தில் மற்றவர் அறியாதபடி பொருந்தியிருப்பவனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

குறிப்புரை :

எறிந்தான் - அழித்தான் . ` எல்லாம் ` என்புழி , சாரியையும் நான்கனுருபும் தொகுத்தலாயின . ` எறிந்தானே ` முதலிய மூன்றும் , அழித்தல் காத்தல் படைத்தல்களைக் குறித்தனவென்க . அறிந்தார் - ( ஏனைய எல்லாவற்றையும் ) அறிந்தவர் . ` அறிந்தாராகிய இருவர் ` என்க . இருவர் மாலும் அயனும் . ஆதியும் அந்தமும் ஆயது , ஈண்டு , மேற்குறித்த இருவர்க்கும் என்க . பிறிந்தான் - வேறாயினான் ; அவர்கட்கு மேலோனாயினான் . ` ஏத்து நெஞ்சு ` என்பதற்கு , மேல் ` பேசு நெஞ்சு ` ( பா .6.) என்றதற்கு உரைத்தாங்கு உரைக்க .

பண் :

பாடல் எண் : 10

மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை
வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே கடியிலங்கைக் கோனை யன்று
கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற
மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும்
விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்
செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

பொழிப்புரை :

நீலகண்டனே ! திருமாலும் மற்றைத் தேவரும் அறியாத சூலபாணியே ! இராவணனுடைய ஒளி வீசும் தலைகளையும் தோள்களையும் கால் விரலால் நசுக்கிய மெய்ப்பொருளே ! அடியவர்கள் விரும்பியவற்றை அருளும் தேவனே ! உயிரினங்களின் வேண்டுகோள்களைக் கேட்டு அவர்களுக்கு அருளும் நடுநிலை யாளனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உனக்கு அடைக்கலம் !

குறிப்புரை :

மை - அஞ்சனம் ; மேகமுமாம் . ` கடிய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் . மெய்யவன் - மெய்ப்பொருளானவன் . செய்யவன் - நடுவுநிலையன் .

பண் :

பாடல் எண் : 1

வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
ஒற்றியூர் மேய வொளிவண் ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
கடும்பிணியுஞ் சுடுந்தொழிலுங் கைவிட் டவே.

பொழிப்புரை :

சிவலோகநாதராய ஒற்றியூரில் விரும்பி உறையும் சோதிவடிவினர் , வண்டுகள் மொய்க்கும் செந்தாமரை , கழுநீர் , ஊமத்தை இவற்றை அணிந்த சடை மீது பிறை சூடி , ஆயிரம் தோள்களையும் எட்டுத் திசைகளின் எல்லைகளையும் அவை அடையுமாறு வீசிக்கொண்டு , கூத்தாடி , உலகுக்கு நலன் பயப்பதற்காக விடத்தை உண்டவர் . அவரை அடியேன் கனவில் கண்டேனாக , அவ்வளவில் என் கடிய நோயும் அவை செய்த செயல்களும் நீங்கி விட்டன .

குறிப்புரை :

ஓங்கு - உயரப்பறக்கும் . மல்கும் - நிறைந்த . ` திண்டோள்கள் ஆயிரமும் ` என ஈண்டு அருளிச்செய்தாற் போலவே , ` ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடையானும் ` என முன்பும் ( தி .4. ப .4. பா .8.). அருளிச்செய்தார் . ` உலகுக்கு ஓர் உறுதிவேண்டி நஞ்சு உண்டார் ` என்க . கனவு அகம் - கனவாகிய இடம் . ` ஒளிவண்ணனார் , சூடி , நடமாடி , உண்டார் . அவரைக் கனவகத்திற் கண்டேன் நான் ` என முடிவு செய்க . கடும்பிணி - அவரை முன்னை ஞான்று கண்டதனால் உண்டாகிய காதல்நோய் . ` சுடுந்தொழில் `, அப்பிணியினது என்க . கைவிட்ட - கையகன்றன ; நீங்கின . இத்திருத் தாண்டகத்துள்ளும் அடியின் இறுதிச்சீர்கள் பல கனிச்சீராய் வந்தன .

பண் :

பாடல் எண் : 2

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்
பசுவேறி யுழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே.

பொழிப்புரை :

மார்பில் பாம்பு சூடி , வெண்ணிறக் காளையை இவர்ந்து , கங்கையைச் சடையில் ஆரவாரிக்குமாறு சூடிப் பார்வதி பாகராய் , ஆண்மைத் தொழிலராய் , அக்காளையை இவர்ந்தே உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய் , காமவேட்கையில் பழகுகின்ற ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணைத் தீப் புறப்பட விழித்த பெருமான் , வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கின்றார் .

குறிப்புரை :

ஆகம் - மார்பு . ஆர்க்க - ஒலிக்க . காமத்து ஆல் ஐங்கணை - காமவேட்கையில் பழகுகின்ற ஐந்து மலரம்புகள் ; ` ஆல் ` என்பதனை அசைநிலை என்றலுமாம் . ` எரி விழித்த ` என்பதில் , ` எரி ` என்னும் முதனிலை வினை யெச்சப் பொருள் தந்தது ; ` செய்தக்க வல்ல செயக்கெடும் ` ( குறள் . 466.) ஓமத்தால் - ஓமத்தொடு ` ஒற்றியூர் உறைகின்றார் : ஏறி , சூடி , ஆவர் ; யோகிகண் மூன்றினார் ; அவரை யான் அணையுமா றெங்ஙனம் ` என்க . இத்திருத்தாண்டகத்துள் , எதுகை இருவிகற்பமாய் வந்தது .

பண் :

பாடல் எண் : 3

வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்
வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்
கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்
கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி
உள்ளத்தை நீர்கொண்டீர் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

வேதம் ஓதுதல் நீங்காத ஞான ஒளி திகழும் ஒற்றியூரை உடைய தலைவரே , நீர் விரும்பிக் கங்கையைச் சடையில் சூடி , அதன்கண் பிறையையும் பாம்பையும் உடன் வைத்து , காதல் உணர்வாகிய வஞ்சனையை மனத்தில் மறைத்து வைத்திருப்பது காண்பவர்களுக்குப் பெரியதொரு தீங்காய்த் தோன்றுவதாகும் . பகற்பொழுதில் பிச்சை வாங்கவருபவரைப் போல இசையைப் பாடிக் கொண்டு வந்து , பிச்சையையும் ஏலாது , உம்முடைய பாம்பு , பிறை , காளை எழுதிய கொடி இவற்றைக் காணச் செய்து , எம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டீர் . இதனைச் சற்று நினைத்துப் பார்ப்பீராக .

குறிப்புரை :

` தலையை ஆழ்த்தும் வெள்ளத்தைத் தலையில் வைத்ததும் , மதியும் பாம்பும் ஆகிய பகைப்பொருள்களை உடன் சேர வைத்ததும்போல , கரப்பினும் கரவாது வெளிப்படுவதாகிய கள்ளத்தை ( காதலுணர்வை ) வெளிப்படாதவாறு மனத்தினுள்ளே கரந்துவைத்தீராகலின் , இது , காண்பவர்கட்குப் பெரியதொரு தீங்காய்த்தோன்றும் ` என்றாள் . எல்லே - பகற்கண்ணே . ` பலி ` எனப் பின்னர் வருகின்றமையின் , வாளா , ` கொள்ளத்தான் ` என்றாள் . ` பகலிற்றானே பலிகொள்வீர் போல் வந்து அதனைக் கொள்ளாது வேறு செய்கின்றீர் ` என்பாள் , ` எல்லே ` என்றாள் . கொடி , விடைக்கொடி . ஓதல் - கடல் ஓசை . வேதம் ஓதுதலுமாம் . ` ஓதம் ` என்பதே பாடம் என்றலும் ஒன்று . ` வைத்தீர் ` முதலியன , ஒருமை பன்மை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 4

நரையார்ந்த விடையேறி நீறு பூசி
நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட
எம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்
விடுங்கலங்கள் நெடுங்கடலுள்நின்றுதோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்
திருவொற்றி யூரென்றார் தீய வாறே.

பொழிப்புரை :

வெள்ளை நிறக் காளையை இவர்ந்து , நீறுபூசி , இடுப்பில் பாம்பைக் கச்சாக உடுத்தி , மண்டைஓட்டைக் கையில் ஏந்தி , ஏதும் பேசாது , எம் இல்லத்தினுள் வந்து பிச்சை வேண்ட , ` எம் வணக்கத்திற்கு உரியவரே ! உம் ஊர் யாது ?` என்று யான் வினவ ` வேல் போன்ற கண்களை உடைய பெண்ணே ! அவசரப் படாமல் கேள் . கடலில் மரக்கலங்கள் காணப்படுவதும் , திரைகள் தள்ளுவதனால் சங்குகள் கரையை அடைந்து தவழ்வதுமாகிய திருஒற்றியூர் ` என்றார் . ஒற்றியூரே ஒழியச் சொந்த ஊர் ஒன்று இல்லாமையால் அவரை எங்குச் சென்று மீண்டும் காணஇயலும் ! என்ற எண்ணத்தால் அவருக்கு என ஒரு சொந்த ஊர் இல்லாதது என் தீவினையே என்றாள் .

குறிப்புரை :

நரை - வெண்மை . உரையா - சொல்லாமல் . விரையாது - பதையாமல் . கலங்கள் - மரக்கலங்கள் . நின்று - உயர்ந்து . ` சங்கம் கரை ஏறி ஊரும் ` என்க . ` தோன்றும் ஊர் . ஊரும் ஊர் ` எனத் தனித்தனி முடிக்க . ` பிறருடையதை ஒற்றியாகக் கொண்டுள்ள ஊர் ` என்றமையால் , அவருக்கென்று ஓர் ஊர் இல்லாமை பெறப்பட்டமையின் , ` அவரை ஒருதலையாகச் சென்று அணைவது எங்கு ?` என நினைந்து அவலமுற்றாளாகலின் , ` தீயவாறு ` என்றாள் . ` என் தீவினையின் பயனிருந்தவாறு இது ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

மத்தமா களியானை யுரிவை போர்த்து
வானகத்தார் தானகத்தா ராகி நின்று
பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்
பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்
பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.

பொழிப்புரை :

மதயானைத் தோலைப் போர்த்தித் தேவருலகில் இருக்க வேண்டிய அவர் , எம் வீட்டிற்குள் வந்து பைத்தியம் பிடித்தவரைப் போலத் தாமே தம் பெருமையைப் பேசிக்கொண்டு , பெண்களைப் பயமுறுத்திவிட்டு வெளியே வரக் கண்டு , பத்தர்கள் பலரும் அவரை அணுகி ` நீங்கள் பாடிக்கொண்டே தங்கியிருக்கும் ஊர் யாது ?` என்று வினவப் பங்குனி உத்திரத்தில் தீர்த்தவிழாக் கொண்டாடும் ஒளி திகழும் ஒற்றியூர் என்றார் .

குறிப்புரை :

` தான் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் . அகத்தார் - இல்லிடத்தார் . ` வானத்திருக்கற்பாலராகிய அவர் என் இல்லத்தாராய் வந்துநின்றார் ` என்றவாறு . கேட்பார் இன்றியும் , தமது பெருமையைத் தாமே எடுத்துக் கூறினமையின் . ` பித்தர்போல் ` என்றாள் ; இங்ஙனங் கூறுதல் பிச்சையெடுப்போர்க்கு இயல்பென்க . பேதையர் - பெண்டிர் . `( நீர் ) கூடிப்பாடிப் பயின்றிருக்கும் ஊர் ஏதோ ` என்க . ` உத்திரநாள் தீர்த்தமாக ஒளிதிகழும் ஒற்றியூர் ` என்றமையால் , இஞ்ஞான்று இங்கு மாசிமாதத்தில் நடைபெறும் தீர்த்தவிழா அஞ் ஞான்று பங்குனி உத்திரத்தில் நடந்துவந்ததுபோலும் . ஒத்தமைந்த - இத்தலத்திற்கு ஏற்புடைத்தாய் அமைந்த . ஏற்புடைமைக்குக் காரணம் , நிலத்தியல்பு முதலியன கொள்க . ` என்கின்றார் . இஃதென்னை ` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிவுசெய்க . ` இஃதென்னை ` என மருண்டது . ` இத்துணைப் பெருமையராகிய இவருக்குத் தமக்கென அமைந்ததோர் ஊர் இல்லையோ ` என்று .

பண் :

பாடல் எண் : 6

கடிய விடையேறிக் காள கண்டர்
கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்
எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்
வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடுவெண் டலையொன் றேந்தி வந்து
திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.

பொழிப்புரை :

நீலகண்டர் கைகளில் மானையும் மழுவையும் ஏந்தி , விரைந்து செல்லும் காளையை இவர்ந்து , இடவந்த உணவையும் பிச்சையாகக் கொள்ளாராய் , இடத்தை விட்டு நீங்காதவராயும் உள்ள இப்பெரியவர் யார் என்று எல்லோரும் மருண்டனர் . முன்பு இவர் வடிவுடையமங்கையும் தாமுமாய் மயிலாப்பூரில் வந்த காட்சியைக் கண்டுள்ளோம் . பின் ஒரு நாள் புலால் நாற்றம் வீசும் மண்டை ஓட்டை ஏந்தி இங்கு உலவியவராய்த் திருவொற்றியூரில் புகுந்து விட்டார் . இவர் எவ்வூரார் என்பதனைக் கூட அறிய முடியாமல் இருப்பது நம் தீவினையாகும் .

குறிப்புரை :

கடிய - விரைவுடைய . ` காள கண்டராய் ` என எச்சப் படுத்துக . கலை - மான் . இடிய பலி - மாவால் அமைந்த பிச்சை ; அப் பவகை ; சில்பலி , ஏற்பவராகலின் , இடிய பலியும் ஒருத்தி இடவந்தாள் என்க . ` இட்டிய ` ( சுருங்கிய ) என்பது இடைக் குறைந்தது என்றலுமாம் . ` வடிவுடைய மங்கையுந்தாமுமாய் மயிலாப்புள்ளே வருகின்ற இவரை எல்லாம் எதிர்கண்டோம் ; ( அதனால் , இக்கோலத்துடன் வந்த இவரை ,) எல்லாரும் இவ்வடிகள் யார் என மருள்வாராயினார் ; ( அங்ஙனம் மருளுமாறு ) வெண்டலை ஒன்று ஏந்தி வந்து , மீள மயிலாப்பிற்புகாது திருவொற்றியூர் புக்கார் , இஃது என் தீவினைப் பயன் இருந்தவாறு ` என்பது படக்கொண்டு கூட்டியுரைக்க . ` எல்லாம் ` இரண்டனுள் முன்னது , படர்க்கையிடத்தினும் . பின்னது தன்மையிடத் தினும் உயர்திணைக்கண் வந்தது . ` தான் ` என்னும் அசைநிலை பன்மை ஒருமை மயக்கம் . செடிபடு - முடைநாற்றம் தோன்றுகின்ற . வடிவுடைய மங்கை - அழகு மிக்க பெண்டு ; ` வடிவுடை அம்மை ` என்பதே இத்தலத்து அம்மையது பெயராதல் நினைக்கத்தக்கது .

பண் :

பாடல் எண் : 7

வல்லாராய் வானவர்க ளெல்லாங் கூடி
வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன
எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி
நாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே.

பொழிப்புரை :

தேவர்கள் எல்லோரும் கூடி வணங்கி வாழ்த்தி நிற்கும் பெருமான் எல்லாச் செயல்கள் செய்வதிலும் வல்லாராகவே , பகற் காலத்தில் எந்த வழியினாலும் எந்த வடிவினாலும் தேவர்கள் தம்மைக் காணமாட்டாதவராய் , இவ்வுலகில் எழுந்தருளப் பெண்களும் நான்மறைவல்லோர்களும் ஒன்று கூடி அவரைத் தேடிக் கண்டு ` சான்றீரே ! தாங்கள் இருக்கும் ஊர் யாது ` என்று வினவ , விரைவில் கடல் அலைகள் கரையில் மோதி மீளும் ஒற்றியூர் என்கின்றார் .

குறிப்புரை :

எல்லே - பகற்காலத்திற்றானே . எவ்வாற்றால் - எந்த வழியினாலும் . எவ்வகையார் - எந்த வடிவிலும் . உம்மைகள் தொகுக்கப்பட்டன . ` காணமாட்டார் ` என்பதன்பின் , ` ஆகலின் என்பது வருவிக்க . நாம் இருக்கும் ஊர் - நாமத்தொடு ( அச்சத்தொடு ) காத்திருக்கும் ஊர் . ஓதம் - கடல் ; ஆகுபெயர் . ` திரை கரையேறிப் பின் கடலில் மீளும் ` என்க . ` கரையேறி ` என்பதே பாடம் எனலுமாம் . ` ஒளி திகழும் ஒற்றியூர் ` எனப் பலவிடத்தும் அருளியது . பிரம தேவனது யோகாக்கினியே இங்குக் கோயிலாக அமைந்தது என்னும் இத் தலத்துப் புராண வரலாற்றை நினைப்பிக்கின்றது .

பண் :

பாடல் எண் : 8

நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்
நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்
கலந்து பலியிடுவே னெங்குங் காணேன்
சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்
தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண
முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்
ஒற்றியூ ருறைந்திங்கே திரிவானையே.

பொழிப்புரை :

தோழி ! நான் என் பண்டை நிலையை அடைவதற்கு முடிவு செய்த வழியைக் கூறுகின்றேன் கேளாய் . நேற்று நடுப்பகலில் இங்குப் பெரியவர் ஒருவர் வந்து என் உடையினது பெருமையும் கண்களும் அவர் உள்ளத்திலும் கண்களிலும் பொருந்துமாறு என்னைக் கூர்ந்து நோக்கி என்னை உள்ளத்தால் கலந்தாராக , அவருக்கு உணவு கொண்டு வரச்சென்ற நான் திரும்பி வர எங்கும் காணேனாய் , வஞ்சனையாக மறைந்து விட்டார் . இனி ஒருநாள் அவரைக் காண்பேனானால் அவர் மார்பிலே என் மார்பு அழுந்தும் வண்ணம் என் முலைச்சுவடு அவர் மார்பில் படும்படியாகத் தழுவிக்கொண்டு , ஒற்றியூரில் தங்கி இங்கு உலவும் அவரை , என்னை விடுத்து ஒற்றியூருக்குப் போக விடமாட்டேன் .

குறிப்புரை :

இத்திருப்பாடல் , தலைவி தோழிக்குக் கூறியவாறாக அருளிச்செய்யப்பட்டது . ஏடீ , தோழி முன்னிலைப் பெயர் . ` நிலைப் பாடாக நான் கண்ட ஊர் கேளாய் ` என்க . கலைப்பாடு - உடையினது பெருமை . கலக்க - நிலைகுலையச் செய்ய . வந்து கலக்க ` என இயையும் . கலந்து - பல பொருள்களைக் கூட்டி . இடுவேன் - இடுவேனாகிய யான் . சலப்பாடு - ( இது ) வஞ்சத்தன்மையாகும் . ` அதனால் , அத் திரிவானை இனியொருநாள் காண்பேனாகில் தழுவிப் போகலொட்டேன் ` என முடிவு செய்க . ஆகம் - மார்பு - உலைப்பாடு பட - உலைக்களத்து இரும்புத் தன்மை உண்டாக ; ` உடல் சிவக்க ` என்றபடி , இனி , மோனை நயம் கருதாது . ` முலைப்பாடு பட ` எனப் பிரித்து . ` என்கொங்கையது பெருமை ` பயன்பட ` என்றுரைத்தலுமாம் . ` அடிகள் ` என முன்னர் உயர்த்துக் கூறியவள் , பின்னர் . ` திரிவான் ` என்றது செற்றம் பற்றி .

பண் :

பாடல் எண் : 9

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே . நீ - மண் , விண் , ஞாயிறு முதலிய மண்டலங்கள் , மலை , கடல் , காற்று , எரி , எண் , எழுத்து , இரவு , பகல் , பெண் , ஆண் , பேடு , முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தை யாயும் உள்ளாய் .

குறிப்புரை :

வலயம் - ஞாயிறு முதலிய மண்டிலங்கள் . பேடு - அலி . ` பெரியாயாகிய நீயே ` என்க . உம்மை , எதிரது தழுவியது . ` இத்துணைப் பெரியாய் ; நல்லார்க்கு உள் நல்லை ; தீயை அல்லை ; ஆதலின் , அருள் பண்ணுவாயாக ` என முடிக்க . நல்லார் - பெண்டிர் . உண்மைப் பொருளில் இது அருள் கைவரப் பெற்றாரைக் குறிக்கும் . உள் நல்லை - மனம் நன்றாக உடையாய் .

பண் :

பாடல் எண் : 10

மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச
மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்
திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண
ஓங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்
செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே.

பொழிப்புரை :

எம்பெருமான் , தன்னைப் பொருந்திய மலர் சூடிய கூந்தலை உடைய பார்வதி அஞ்சுமாறு , இராவணன் செய்த செயலால் கயிலை மலை அசைய , எண்திசைகளும் நடுங்க , அவனை வெகுண்டு நோக்கி , அவன் பலம் முழுதும் அழியுமாறு திருவடிவிரல் ஒன்றினால் அவன் அலறுமாறு அழுத்தி , தன் உருவத்தைத் தேடிப் பிரமனும் திருமாலும் முயன்று காணுமாறு தீப்பிழம்பாய் உயர்ந்த பெருமானார் இங்கே ( என்னிடத்தில் ) வந்து தம்முடைய ஊர் திருவொற்றியூர் என்று கூறிச் சென்றார் . அவர் நினைவால் என்னுடைய செறிந்த வளையல்கள் ஒன்று ஒன்றாய் கழன்று விட்டன .

குறிப்புரை :

மரு - வாசனை . ` செரு ` என்றது , கயிலையைப் பெயர்த்தமையை . உரு ஒற்றி - வடிவைக் கூர்ந்து நோக்கி , வளைகள் ஒன்றொன்றாச் சென்றது , மீள மீள நினைத்து மெலிந்தமையால் என்க . ` சென்றவாறு கொடிது ` என , சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 1

நம்பனை நால்வேதங் கரைகண் டானை
ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக்
கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை யாவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

நம்மால் விரும்பப்படுபவனாய் , நான்கு வேதங்களையும் கரை கண்டவனாய் , ஞானப் பெருங்கடலாய் , நன்மையாய் , ஏகம்பனாய் , கல்லாலின் கீழ் இருந்தானாய் , கற்பகமாய் , அடியார் களுக்கு அருள் செய்வானாய் , செம்பொன் , பவளம் , முத்துத்திரள் திங்கள் , ஞாயிறு , தீ இவற்றை ஒப்பானாய் , நீராய் , செல்வமாய் உள்ள , ஆவடுதுறையிலுள்ள சிவபெருமான் திருவடிகளை அடியேன் அடைந்து தீவினையிலிருந்து பிழைத்தேன் .

குறிப்புரை :

` ஞானப் பெருங்கடல் ` என்னும் உருவகம் , இங்கு உவமையாகு பெயராயிற்று , நன்மை - இன்பம் . ` கம்பன் ` என்பது , காஞ்சியில் உள்ள இறைவன் பெயர் . ` அடியார் கட்குக் கற்பகமாய் அருள்செய்வான் ` என்க . ` கற்பகமாய் ` என்பது , ` கற்பகத் தருப்போல ` எனப் பொருள்தரும் . ` செம்பொன் ` என்பது , பொதுவாகப் பொன்னையும் , ` அம்பொன் என்பது , சிறப்பாகத் தூய்மை செய்து ஓடவிடப்பட்ட மாற்று உயர்ந்த பொன்னையும் குறிக்கும் . இனி , ` அம்பொன் ` என்பதில் உள்ள ` பொன் ` என்பது , திருமகளைக் குறித்து , ஆகுபெயராய் , அவளால் தரப்படும் செல்வத்தை உணர்த்திற்று என்றலுமாம் . ` ஆ அடு துறை ` என்பது , ` ஆவினால் ( பசுவினால் ) அடுக்கப்பட்ட ( அடையப்பட்ட ) துறை ` என்னுங் காரணத்தாற் பெற்ற பெயர் . உமையம்மை இங்கு இறைவனைப் பசுவடிவில் வந்து வழி பட்டாள் என்பது இத் தலத்தின் புராணத்தால் அறியப்படுவது . இனி , ` ஆ அடு ` என்பது , ` பசுத்தன்மையை நீக்கிய ` என்றும் ஆம் . இது , வடமொழியில் , ` கோமுத்திபுரம் ` எனப்படுகின்றது , எனவே , ` ஆவடுதுறை ` என்பது மும்மொழித் தொடராய் நிற்றலின் , அவற்றுள் , ` துறை ` என்பதனை ` ` தண்மை ` என்னும் அடை புணர்த்து அருளிச் செய்தார் என்க . ` அரனடியே ` என்னும் ஏகாரம் , ` பிறிதொரு பொருளையும் அடையாது ` எனப் பிறபொருள்களினின்றும் பிரித்தலிற் பிரிநிலை . அடி நாய் - அடிக்கீழகப்பட்ட நாய் . இறைவற்குத் தம்மை அது போன்றவராகக் கொண்டு ஒழுகினமையின் , ` அடி நாயேன் ` என்றருளிச்செய்தார் . ` அடைந்து ` என்னும் வினையெச்சம் , எண்ணின்கண் வந்தது , ` அரன் ` என்புழியும் இரண்டன் உருபு விரித்து , ` அரனையே நாயேன் அடிஅடைந்து உய்ந்தேன் ` எனக் கூட்டுக . பிரிநிலை ஏகாரம் ஏனைப் பெயர்களோடும் இயையும் .

பண் :

பாடல் எண் : 2

மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை
வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி
என்னானை யெந்தை பெருமான் தன்னை
இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

மின்னாய் , மின்னிடையே சேரும் இடியாய் , வெண்முகிலாய் , மழைபெய்யும் கார்முகிலாய்ச் சுதந்திரனாய் , தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனாய்ப் பல்லுயிர்க்கும் தாயாய்த் தந்தையாய் எனக்கு உரிய எந்தையாய்ப் பெரிய உலகங்களும் உலகங்களின் தொகுப்பாகிய அண்டங்களுமாய்ச் செவ்வான் போன்ற நிறத்தினனாய் , ஆவடுதுறையுள்மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேனே .

குறிப்புரை :

மின் - மின்னல் . மின்னிடைச்சேர் உருமு - மின்னலின்கண் பொருந்திய இடி . ` மழை ` என்றது , கருணைமழையை . கருணையை மழையாக உருவகிப்பார் , இறைவனை முகிலாக ( மேகமாக ) உருவகஞ்செய்தார் . சிவபிரான் வெண்ணீறு சண்ணித்த மேனியனாம் இயைபுபற்றி வியப்பத்தோன்ற ` வெண்முகிலாய் மழை பொழிவான் ` என்றருளினார் . இனி மழையையே குறித்தருளியதாகக் கொண்டு , ` வெண்முகிலாய் , எழுந்து , பின் மழை பொழிவான் ` என உரைத்து , ` கருமுகிலாய் , என்பது ஆற்றலாற்கொள்ளப்படும் ` என்றலுமாம் . தன்னான் , தன் வயமுடையவன் . ` பல்லுயிர்க்கு ` என்பதில் , முற்றும்மை விரித்து , அதனையும் , ` ஓர் ` என்பதனையும் , ` தாய் ` என்றதற்கு முன்னுங்கூட்டுக . என்னான் - எனக்கு உரியவன் . ` எந்தை யாகிய பெருமான் ` என்க . செக்கர்வான் - செவ்வானம் . ` வானே ` என்னும் ஏகாரம் தேற்றம் . அன்னான் - போன்றவன் ; இது நிறம்பற்றி அருளப்பட்டது .

பண் :

பாடல் எண் : 3

பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்
பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை
வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

அடியார் உள்ளத்தே பரவினவனாய்ப் பவளக் கொழுந்தாய் , மாணிக்கக் கொத்தாய்த் தன்னை அடைவதற்குத்தானே பற்றுக்கோடாகிய வழியாய்ச் சொற்பொருளின் உணர்வாய் , வித்தாய் , முளையாய் , முளைகளின் கிளையாய் , வேராய்ப் பயனாய் , ஊழ்வினை வயத்தால் வந்த அதன் கொடிய தொடர்பான துயரங்களைத் தீர்க்கும் தலைவனாய் , ஆவடுதுறை மேய அத்தனாய் உள்ள அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

பாவித்தான் - பாவிக்கப்பட்டான் . தொத்து - கொத்து . ` தோற்றம் ` என்றது , உணர்வை . முளைக்கிளை - முளையின்கட் கிளை ; ` முளையை ` என்பதும் உடம்பொடு புணர்த்தலாற் கொள்ளப்படும் . சீர் என்றது பயனை . ` வினைவயத்தின்றன் ` என்புழி , சாரியைகள் இரண்டு வந்தன . வயம் - வழி . சார்பு - நிமித்தம் . இதனால் , ` ஆன்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும் ` ( சிவஞானபோதம் சூ .2. அதி .2) என்றதற்கு உரையளவை பெறப்பட்டது . வெய்ய - கொடியன ; துன்பங்கள் .

பண் :

பாடல் எண் : 4

பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்
கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்
தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்
சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்
ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

பிறைதவழ் செஞ்சடையனாய்த் தன்பால் பெரும் பற்றுக் கொண்ட அடியவரை வீட்டுலகத்திற்கு ஏற்றும் ஏணியாய்த் துயர்க் கடல் சுழியில் அகப்பட்டு வருந்தும் அடியேனை ஏறி அக்கரை அடைய உதவிச்சேர்க்கும் தோணியாய் , தூய ஒளி வீசும் வெள்ளிய காதணி அணிந்தவனாய் , ஒளிவீசும் பொற்காசின் மாற்றினை அளக்கும் உரையாணியாய் ஆவடுதுறையில் மேவிய அரனடியே தொண்டனாகிய அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

பேணிய - பேணப்பட்ட . பித்தர் - பேரன்புடையார் . ` ஏணி ` என்றது ஏகதேச உருவகமாகலின் , ` முத்தியாகிய உயர்ந்த இடத்தை ` என உரைக்க . ` அதனால் சுழிக்கப்பட்டு ` என்க . இங்கு - இவ்வுலகில் . ` இளைக்கின்றேற்கு ` என்பது ` இளைக்கின்றேனை ` என்னும் பொருட்டாகிய உருபு மயக்கம் . அக்கரை - அவ்வுலகு ; இறைவனுலகம் . சுலாவுதல் - அசைதல் . வெண்குழை - சங்கக்குழை . ` ஆணி ` என்பது , பொன்னது மாற்றின் அளவை அறிவது ; இதனை , ` உரையாணி ` என்பர் . ` சுடர் பொற்காசின் ஆணி ` என்றது , ` பொற் காசினது சுடரை அளக்கும் ஆணி ` என்னும் குறிப்பினது ; இங்கு அதனைக் கூறியது , ` உயர்ந்த பொன் ` எனல் வேண்டி . ` பொற்காசு ` என்பது ஒரு சொல்லாய் , ` சுடர் ` என்றதனோடு வினைத்தொகைநிலை படத் தொக்கது .

பண் :

பாடல் எண் : 5

ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை
உதயத்தி னுச்சியை உருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

ஒப்பற்ற மாணிக்கமாய் , உலகுக்கு உறுதியாய் , உதயமலையின் உச்சியாய் , இடியாய் , பெரிய இரத்தினமாய் , பஞ்சகவ்ய அபிடேகப் பிரியனாய் , தூயனாய் , ஆன்மாக்களின் தலைவனாய்ப் பவளக்குன்றாய் , செல்வம் நல்கும் சிந்தாமணியாய்த் தேன் கரும்பு இவற்றின் இனிப்பாய் , ஒளிவீசும் கிட்டுதற்கு அரிய மாணிக்கமாய் , ஆவடுதுறைமேய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

ஒரு மணி - ஒப்பற்ற மாணிக்கம் ; என்றது , ` மாணிக்கம் என்பனதாம் பலவுளபோலாது , தான் ஒருவனேயாய் உள்ளவன் ` என்றதாம் . ` உதயம் ` என்றது , ஆகுபெயராய் , பகலவனை உணர்த்திற்று . ` உச்சி ` என்றதும் , அவ்வாறு , உச்சிப்பொழுதில் விளங்கும் ஒளியைக் குறித்தது . உரும் - இடி , பருமணி - பெரிய மாணிக்கம் ; சிறியது சிறப்புடைத்தன்மையின் , இவ்வாறருளிச் செய்தார் . பவித்திரன் - தூயோன் . பசுபதி - உயிர்கட்குத் தலைவன் . திருமணி - ( கழுவ வேண்டாது இயல்பாகவே ) அழகிய மணி . ` தேனது ` என்பதில் , அது பகுதிப்பொருள் விகுதி . இதனை முன்னே கூட்டி , ` தேனாகித்தித்திப் பாகியவனை ` என உரைக்க . ` சோதியை உடைய அருமணி ` என்க , அருமணி - யாண்டும் கிடைத்தற்கரிய ஒருவகை மாணிக்கம் . ` ஒருமணி ` முதலியன உவமையாகு பெயர்கள் .

பண் :

பாடல் எண் : 6

ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை
யெல்லி நடமாட வல்லான் தன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்
குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை
நீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை
நீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

காளை வாகனனாய் , எண்தோளனாய் , இரவில் கூத்து நிகழ்த்துபவனாய் , அழித்தற் கடவுளாய்க் கூற்றுவனை உதைத்தவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சுண்ட நீலகண்டனாய்த் திருநீறு அணிந்தவனாய் , நீண்ட பாம்பு ஒன்றனை இடையில் இறுகக் கட்டியவனாய் , நீண்ட சடையில் கங்கை சூடியாய் , ஆவடுதுறை மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

ஏற்றான் - இடபவாகனன் . எல்லி - இரவு . கூற்றான் - கூற்றமாய் உள்ளவன் ; அழித்தல் தொழிலைச் செய்பவன் . சிவபிரான் கூற்றுவனை உதைத்தது , அழித்தல் தொழிலைத் தன் ஆணையின் வழிச்செய்யாது , அவன் இச்சைவழித் செய்யத் தொடங்கினமையால் ; எனவே , அதனை இங்கு எடுத்தோதியது , ` அத்தொழிலைத் தனதாக உடையவன் அப்பெருமானே ` என்பது உணர்த்துதற் பொருட்டாயிற்று . குரைகடல் - ஒலிக்கின்ற கடல் .

பண் :

பாடல் எண் : 7

கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக்
கடல்வரைவா னாகாச மானான் தன்னைச்
செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயா னானை
எம்மானை என்மனமே கோயி லாக
இருந்தானை என்புருகும் அடியார் தங்கள்
அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

துதிக்கையை உடைய தோலாத மத யானைத் தோலை உரித்தவனாய்க் கடல் , மலை , மேகம் , ஆகாயம் இவையாவும் ஆனவனாய்ச் செம்பவளமும் வெண்முத்தும் போன்றவனாய்த் திங்கள் சூரியன் தீ என்ற முச்சுடராய் , எம் தலைவனாய் , என் மனத்தையே இருப்பிடமாகக் கொண்டிருப்பது போல எலும்பும் உருகும் அடியவர்களுக்கும் தலைவனாய் , ஆவடுதுறையுள் மேய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

மானக்களிறு - தோலாத களிறு . மானப் பவளம் - பெருமையுடைய பவளம் . எம்மான் - எம் தலைவன் . அம்மான் - அனைவர்க்கும் தலைவன் .

பண் :

பாடல் எண் : 8

மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை
வெள்ளிடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்
கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த
கண்ணானைக் கண்மூன் றுடையான் தன்னைப்
பையா டரவமதி யுடனே வைத்த
சடையானைப் பாய்புலித்தோ லுடையான் தன்னை
ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

வாய்மை வடிவினனாய் , வஞ்சகக் கலப்பு இல்லாதவனாய் , வெற்றிடமாய் , குளிர்ந்த நிழலாய்த் தீ ஏந்திய கையனாய்க் காமன் உடலை எரித்த கண்ணனாய் , முக்கண்ணனாய் , பட மெடுத்தாடும் பாம்பையும் பிறையையும் சேர்த்து வைத்த சடையனாய்ப் புலித்தோல் ஆடையனாய் , எல்லாருக்கும் தலைவனாய் ஆவடுதுறை மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

மெய்யான் - வாய்மை வடிவாய் உள்ளவன் . பொய்யர் - வஞ்சர் . வெள்ளிடை - வெற்றிடம் . ` வெள்ளடை ` என்னும் திருக் கோயிலை அருளுதற்கு ஈண்டு இயைபின்மையின் , அது பாடம் அன்று . ` பை அரவம் . ஆடரவம் ` எனத் தனித்தனி முடிக்க . இவை இனச்சுட்டுடைய அடை . பை - படம் . ஐயான் - அழகியான் ; தலைவனுமாம் .

பண் :

பாடல் எண் : 9

வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை
விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத்
தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்
சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை
மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்
ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

வேண்டுதல் வேண்டாமை இலானாய் , அருச்சுனனை முன்னொரு காலத்தில் வருந்தச் செய்த வேடனாய்த் தூண்டாமலே ஒளிவீசும் சோதியாய்ச் சூலப்படையானாய் , கூற்றுவன் வாழ்நாள் கழியுமாறு உதைத்த வலியவனாய் , மக்களும் தேவரும் வணங்கித் துதிக்கும் தலைவனாய் , ஆவடுதுறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

வேண்டாமை - வெறுத்தல் . வேண்டுவது - விரும்புதல் . ` வேண்டுதல்வேண் டாமை யிலான் ` ( குறள் - 4.) என்றது காண்க . விசயன் - அருச்சுனன் . அசைவித்த - தளர்வித்த . வேடன் , சாதிப் பெயராகவும் ` வேடத்தன் ` என்னும் பொருளதாகவும் கொள்க . மைந்தன் - வலிமையுடையவன் . ஆண்டான் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 10

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்
பாடலோ டாடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்
கோலமா நீல மிடற்றான் தன்னைச்
செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத்
திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

பந்தினைப் பொருந்திய மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனாய்ப் பாடலும் ஆடலும் பயின்றவனாய்க் கொத்தாகப் பூக்கும் நறிய கொன்றை மாலையை அணிந்தவனாய் , அழகிய நீலகண்டனாய்த் தமிழும் வடமொழியும் ஆகிய மேம்பட்டவனாய் , மார்பில் வெள்ளிய பூணூல் அணிந்த அந்தணனாய் , ஆவடு துறை மேவிய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

பந்து அணவும் - பந்தினைப் பொருந்திய . பந்து , அகங்கை புறங்கை இரண்டுங்கூடிய திரட்சியுமாம் ; அது , பந்து போலத் திரண்டு தோன்றுதலே ஈண்டுச் சிறப்பென்க . ` பந்து ` என்பது இப் பொருளதாதலை ` கைக ளும்மணி பந்தசைந்து ` ( தி .12 திருநாவு . புரா . 358.) என்றதனால் அறிக . கொந்து அணவு - கொத்திற் பொருந்திய . கோலமாம் - அழகான ; இங்கு ` செந்தழிழோடு ஆரியன் ` என்றாற் போல , முன்னும் , ` ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் ` என்றருளிச் செய்ததனை மேலே ( ப .23. பா .5.) காண்க . சீரியான் - சிறந்தவன் .

பண் :

பாடல் எண் : 11

தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்
பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பெருவலியால் மலையெடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை
நீசனேன் உடலுறு நோயான தீர
அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் தரித்தவனாய்த் தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்த வனாய் , அவனுடைய செருக்கைப் போக்கியவனாய்ச் சடையில் பிறை சூடியாய்ப் பெரிய வலிமையால் கயிலையைப் பெயர்த்த இராவணனை நெரித்தவனாய்ப் பார்வதி பாகனாய்க் கீழ் மகனான அடியேனுடைய உடலில் ஏற்பட்ட நோயை நீக்கிய ஆவடுதுறை மேவிய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .

குறிப்புரை :

` தரித்தானை ` என்பதனை , ` உண்டான்றன்னை ` என்பதன் பின்னர்க் கூட்டுக . தரித்ததும் , நஞ்சினையென்க . பிரித்தது , தக்கன் செருக்கினை ; அதனை ஆற்றலாற்கொள்க . அரித்தான் - அழித்தான் ; நீக்கினான் .

பண் :

பாடல் எண் : 1

திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

நல்லூழே ! என் செல்வமே ! வானோர்க்குப் புகழ் உண்டாக ஆற்றலை அருளும் ஞானமே ! அடியார்க்குத்திருக்காட்சி வழங்கும் பெரிய சோதியே ! என் கற்பகமாகவும் உறவாகவும் , உடலாகவும் உள்ளமாகவும் உள்ளத்தின் உணர்வாகவும் கண்ணாகவும் கண்ணின் கருமணியாகவும் கருமணியின் பாவையாகவும் செயற்படும் ஆவடுதுறையிலுள்ள தேவர் தலைவனே ! வடிவு புலப்படாத என் வல்வினை நோய் என்னைத் தாக்காதபடி காப்பாயாக .

குறிப்புரை :

` திரு ` என்பது இங்கு , திருமகளது வரவிற்குக் காரணமாகிய நல்லூழ் ; புண்ணியம் . ` என் ` என்பது , ` திரு ` என்றதனோடும் இயையும் . உலகின்பங்கள் எல்லாவற்றையும் தருதலின் , ` செல்வம் ` என்றும் , சித்தத்துள் தித்தித்தலின் , ` தேன் ` என்றும் , வானோர்க்குப் புகழ் உண்டாக ஓரோர் ஆற்றலை வழங்கலின் , அவர்க்குச் சுடர் ( விளக்கு ) என்றும் , முன்னைத் தவம் உடையார்க்குத் தனது உண்மை வடிவிற்றோன்றி யருளுதலின் , ` செழுஞ்சுடர் நற்சோதி மிக்க உருவே ` என்றும் தமக்கு ஆவன பலவும் அவனே அறிந்து செய்தலின் . ` உறவே ` என்றும் , உடலும் உள்ளமும் அருளே ஆகப் பெற்றமையின் ` என் ஊனே ஊனின் உள்ளமே ` என்றும் , உள் நின்று உணர்வைத் தோற்றுவித்து உணர்விற்கு வித்தாய் நிற்றலின் , ` உள்ளத்தினுள்ளே நின்ற கருவே ` என்றும் , வேண்டியவற்றை வேண்டியவாறே பெறத் தருதலின் ` என் கற்பகமே ` என்றும் , உணருந்தோறும் உணருந்தோறும் மேன்மேற் சிறந்து தோன்றலின் , ` கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் ` என்றும் , உருவாய உடல்நோயின் நீக்குதற்கு , ` அருவாய வல்வினை நோய் ` என்றும் அருளிச்செய்தார் . ` அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் காவாய் ` எனக் கூட்டி , அதனை இறுதிக்கண்தந்து முடிக்க . ` கரு ` என்றது , வித்தென்னும் பொருளது . ` உரு , அரு ` என்பன , இங்கு , பொறிகட்குப் புலனாதலையும் , ஆகாமையையும் குறிக்கும் . அமரர் ஏறு - அமரராகிய விலங்குகட்கு அரியேறு ( ஆண் சிங்கம் ) போன்றவன் - ` தலைவன் ` என்றவாறு . ` செழுஞ்சுடர் நற் சோதி ` என்பது சமாஜப் பதிப்பு த் தரும் பாடம் .

பண் :

பாடல் எண் : 2

மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்
மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு
வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தை என் நாவிலிருந்து நீக்கேன் , திருவருள்களை என் நெஞ்சினால் மறவேன் . எண்ணினால் எம்பெருமான் திருவடிகளையே எண்ணுவதல்லால் பிற தெய்வங்களை எண்ணா நாயேன் அத்தெய்வங்களை என் நெஞ்சில் ஏலேன் . என்மேல் நீ செய்யும் செயல்களைக் கண்டு வேதனைப் பட்டு நானும் பொறுக்க இயலாதவனாக உள்ளேன் . ஆவடுதுறையில் உறையும் தேவர் தலைவனே ! அடியேனை அஞ்சேல் என்று அருளுவாயாக .

குறிப்புரை :

` எண்ணின் எம்பெருமான் திருவடியே யல்லால் பிற தெய்வம் எண்ணாநாயேன் ` என மாறிக் கூட்டி , அதனை முதற்கண் வைத்துரைக்க . திருவருள் செயல்வகையாற் பலவாமாகலின் , பன்மையாற் கூறினார் . ` நாவின் மாற்றேன் ; நெஞ்சின் மறவேன் ; ( அதன்கண் ) வஞ்சம் ஏற்றேன் ( ஏற்றமாட்டேன் )` செய்வன , ` ஒறுப்புக்கள் ` என இயையும் . ` செய்வனகள் ` , ` கள் ` ஒரு பொருட் பன்மொழியாய் வந்த விகுதிமேல் விகுதி . ` வேதனைக்கே இடங்கொடுத்து ` என்றது , ` வேதனைகளைப் பொறுத்து ` என்றவாறு . ` நாளும் நாளும் இடங்கொடுத்து ` எனக்கூட்டுக . ` இனி ஆற்றேன் ஆயினேன் ; அதனால் அஞ்சேல் என்னாய் ` என்க .

பண் :

பாடல் எண் : 3

வரையார் மடமங்கை பங்கா கங்கை
மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்
உரையா உயிர்போகப் பெறுவே னாகில்
உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே
கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்
காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்
கரையா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

பார்வதி பாகனே ! கங்கையைச் சடையில் தரித்தமணவாளா ! உன் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே உயிர் நீங்கப் பெறுவேனாயின் மிக்க நோய்கள் எத்தனையும் என்னை அடைந்து என் செய்ய முடியும் ? கரைந்து நினைந்து உருகிக் கண்ணீர் வடித்துக் காதலித்து உன் திருவடிகளே துதிக்கும் அன்பர்களுக்கு அரசே ! ஆவடுதுறை உறையும் அமரர் ஏறே ! அடியேனை அஞ்சேல் என்று அருளுவாயாக .

குறிப்புரை :

` அடியேனை அஞ்சேல் என்னாய் ` என்பதனை , ` உற்றால் என்னே ` என்பதன் பின்னர்க் கூட்டி , ` நின்றன் நாமம் ` என்பது தொடங்கி அஃது இறுதியாக அனைத்தையும் ஈற்றில் வைத்து உரைக்க . உரையா - சொல்லிக்கொண்டு . இறக்குங் காலத்து இறைவனை நினைத்துத் துதிப்பவர்க்குப் பிறவி நீங்குதல் திண்ணமாதலின் இவ்வாறு அருளினார் . எனவே , ` அஞ்சேல் என்னாய் ` என்றது , ` அவ்வாறு போகப் பெறுவதனை அருளுக ` என்றவாறாம் . ` நின் - நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் - சாம் அன்றுரைக்கத்தருதி கண்டாய் எங்கள் சங்கரனே ` ( தி .4. ப .103. பா .3.) என்றாற்போலப் பிறவிடத்தும் அருளிச்செய்தல் காண்க .

பண் :

பாடல் எண் : 4

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிக்
கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்
களிறுரித்த கங்காளா எங்கள் கோவே
நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்
நில்லா வுயிரோம்பு நீத னேன்நான்
அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

ஆவடுதுறையில் உறையும் தேவர் தலைவனே ! ஆரவாரித்த அசுரர்களின் மும்மதில்களும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்து , பார்வதியை அஞ்சுமாறு பார்த்துக் கரிய பெண் யானையைத் தழுவி ஓடிய யானையின் தோலை உரித்தவனே ! முழு எலும்புக்கூட்டை அணிந்தவனே ! எங்கள் தலைவனே ! பூமிக்குப் பாரமாய் , நில்லாத உயிரை உடலில் நிலை நிறுத்த உடலைப் பாதுகாக்கும் கீழ்மகனாகிய அடியேன் அலுத்து விட்டேன் . அடியேனை அஞ்சேல் என்று காப்பாயாக .

குறிப்புரை :

சிலைத்தார் - ( சினத்தால் ) ஆரவாரித்தவர்கள் . உமையவளை அஞ்சநோக்கியது , யானையின்மேல் எழுந்த வெகுளிக் காலத்து . கலித்து - பிளிறி . ` பிடிமேற் கைவைத்து ஓடும் ` என்றது , ` மதங் கொண்டு பெயரும் ` என்றவாறு . ` நிலத்தார் ` என அஃறிணையை உயர்திணைப் பன்மையாகிய உயர்சொல்லால் அருளியது , இழித்தற் குறிப்பினால் ; இழித்தல் , வினைத்தொடக்குடை யாரையே சுமப்ப தாதல் பற்றி . ` அவர் ` பகுதிப்பொருள் விகுதி . ` தம் ` சாரியை . பொறை - சுமை . ஓம்புதல் , நிலை நிறுத்த முயலுதல் . அலுத்தது , நிலத்துக்குப் பொறையாய்த் தோன்றி நில்லா உயிரை ஓம்பி .

பண் :

பாடல் எண் : 5

நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி
நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
துறவாத துன்பந் துறந்தேன் தன்னைச்
சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னே
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
அறவா அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

நீரில் மூழ்கிப் பின் நறிய சிறந்த மலர்களைப் பறித்து உன் திருவடிகளிலே இட்டு , உன்னைத் துதித்து வாழ்த்தித் துன்பங்களைப் போக்கிய அடியேனை , இவ்வுலகில் ஊழ்வினை வந்து யாது செய்ய இயலும் ? தேவர்களிடத்து உறவு பூண்டு அவர்கள் வேண்டியதனால் கடல் நஞ்சினை உண்டு அவர்களைப் பாதுகாத்த அறவோனாகிய ஆவடுதுறை அமரர் ஏறே ! அடியேனை அஞ்சேல் என்பாயாக .

குறிப்புரை :

` நீரின் மூழ்கி நறுமா மலர்கொய்து ` என மாறிக் கூட்டுக . ஏத்தி - புகழ்ந்து . துறவாத - நீக்கலாகாத . ` துன்பம் ` என்றது , துன்பங்கள் எல்லாவற்றிற்கும் அடியாய பேதைமையை . இதனை , ` பிறப்பென்னும் பேதைமை ` ( குறள் - 358) என்றருளினார் , திருவள்ளுவ நாயனார் . சிவாகமங்களுள் ; ` ஆணவம் ` எனப்படுவது இதுவே . இதுவே துன்பத்திற்கெல்லாம் முதலாய் எல்லா உயிர்களும் எஞ்சாது , பற்றியது தெரியாமற் பற்றி , நீக்குதற்கரிதாய் நின்று வருத்துதலின் , ` பொல்லாத ஆணவம் ` ( சிவஞான சித்தி . சூ . 2-79) என்றருளினார் , அருணந்திதேவ நாயனார் . இதனை நீக்கிக் கொண்டோர்க்கு . பிராரத்த கன்மமும் உயிரைத் தாக்காது உடலோடே பற்றி யொழிந்திடுமாகலின் , ` சூழுலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே ` என்றருளிச் செய்தார் . ` வானந்துளங்கிலென் மண்கம்ப மாகிலென் ` ( தி .4. ப .112. பா .8.). என்றற் றொடக்கத்தனவாக சுவாமிகளும் , ` எங்கெழிலென் ஞாயிறெமக்கு ` ( தி .8 திருவாசகம் , திருவெம்பாவை - 19) என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தன , இந்நிலைபற்றியே என்க . இங்ஙனம் அருளிச் செய்தவர் , ` அஞ்சேல் என்னாய் ` என வேண்டியது , ` இந்நிலை சலிக்குங்கொலோ ` என் றெழுந்த அச்சம்பற்றி யென்க . இதனை , ` பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சும் - அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு ` ( குறள் - 1295) என்றருளிய அப்பொருளின் வைத்து அறிந்துகொள்க . ` நறுமா மலர் கொய்து ` முதலியன , துறவாத துன்பம் துறத்தற்கு வாயிலை உடம்பொடு புணர்த்தலாக அருளியவாறு . அறவன் - அறம் உடையவன் ; ` தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் - அருளாதான் செய்யும் அறம் ` ( குறள் - 249) என்பதனால் , அருளுடையவனே அறமுடையவன்ஆவனாகலானும் , பிறர் உய்தற் பொருட்டுத் தான் நஞ்சுண்டவன்போலப் பேரருளுடையார் பிறர் ஒருவரும் ஓரிடத்தும் இன்மையானும் , சிவபிரானை , ` அறவா ` என , வாயார அழைத்தருளினார் . ` அன்ன அறமுடையை ஆதலின் , அடியேனை அஞ்சேல் என்னாய் ` என்பது குறிப்பு .

பண் :

பாடல் எண் : 6

கோன்நா ரணன் அங்கந் தோள்மேற் கொண்டு
கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
நானார் உமக்கோர் வினைக்கே டனேன்
நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

அரசனாகிய நாராயணனுடைய முழு எலும்புக் கூட்டைத் தோள் மேல் தரித்துப் பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்தி யானைத் தோலைப் போர்த்துக் கங்காள வேடம் தரித்தவராய் , எங்கும் உலவுபவரே ! அடியேன் உமக்கு என்ன உரிமை உடையேன் ? வினையாகிய கேட்டினை உடைய எமக்கு எல்லா நல்வினையும் தீவினையும் ஆகிய ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! அடியேனை அஞ்சேல் என்பாயாக .

குறிப்புரை :

` கோனாகிய நாரணன் ` என்க . அங்கம் - எலும்புக் கூடு . ` அங்கம் தோள்மேற்கோடல் ` முதலியவற்றை எடுத்தோதியது , எல்லாவற்றையும் இறுதி செய்ய வல்லீராகலின் , என் வினையையும் இறுதிசெய்வீர் என்றற்கு . ` நான் ஆர் ` என்பதில் உள்ள ` ஆர் ` என்பது , ` என்ன உரிமையுடையேன் ` என்னும் பொருளதாகிய ` யார் ` என்னும் வினா வினைக் குறிப்பின் மரூஉ . வினைக்கேடன் - வினையாகிய கேட்டினை உடையவன் . ` கேடு ` என்பது , அதன் காரணத்தை உணர்த்திய காரியவாகு பெயர் . ` ஓர்வினைக் கேடனாகிய நான் உமக்கு ஆர் ` எனக் கூட்டி , ` ஆயினும் , முன்னே , நல்வினையும் தீவினையும் ஆகிய எல்லா நெறிகளும் நீயே ஆனாய் ஆகலின் , அடியேனை அஞ்சேல் என்னாய் ` என முடிக்க . வினைகாரணமாக உமக்கு நான் அயலவனாயினும் , வினையை அதனோடு ஒற்றித்து நின்று நடத்துவோன் நீயேயாகலின் , வினையை நீக்கி என்னை அஞ்சேல் என்னலாமன்றோ ? ` என்றபடி . வினையை நடத்துவோனும் இறைவனே என்பது உணரவல்லார்க்கு , வினை , பந்தமாகாமையான் இவ்வாறு அருளிச்செய்தார் . ` வேடராய் ` முதலியன , ஒருமை பன்மை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 7

உழையுரித்த மானுரிதோ லாடை யானே
உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே
கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா
கயிலாய மலையானே உன்பா லன்பர்
பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்
கடனன்றே பேரருளுன் பால தன்றே
அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

அகவிக்கொண்டு மயில்கள் ஆடும் ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! மானை உரித்து அதன் தோலை ஆடையாக உடையவனே ! பார்வதியின் தலைவனே ! தேவர் தலைவனே ! மூங்கிற் கோல் சுட்டும் ஆழத்தையும் கடந்த ஆழத்தை உடைய கடலின் நஞ்சினை உண்ட நீலகண்டனே ! கயிலாய மலையில் உறைபவனே ! உன் அடியவர் பிழைகளைப் பொறுப்பதும் உன் கடமை அன்றோ ? உன்பால் பேரருள் உண்டு அன்றோ ?.

குறிப்புரை :

` உழை உரித்து அம் மானுரி தோலை ஆடையாக உடையவனே ` என்க . கழை , இறுத்த - மூங்கில்களை ஒடித்த ; என்றது . மலையினின்றும் வருகின்ற யாறுகள் கலத்தல்பற்றி . ` அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல , தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் ` ( குறள் - 151) தலையாயினார்க்கு இயல்பாகலின் , ` உன்னை , பிழை பொறுப்பாய் என்று அறிந்தோர் சொல்வது , நினக்குப்புகழாகாது , பெரியோயாகிய நினக்கு அது கடனாகலின் ` என்றருளினார் . ` அடியேனை அஞ்சேலென்னாய் ` என்பது இத்திருப்பாடற்கண்ணும் வந்து இயையுமாகலின் , ` உன்பாலது அத்தகைய பேரருளன்றே ; அதனால் அடியேனை அஞ்சே லென்னாய் ` என முடிக்க . ` பிழைத் தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை ` ( தி .8 திருவாசகம் . திருச்சதகம் - 66.) என்றருளியது காண்க . அழை - அகவுதலை . உறுத்து - ( பலர் செவியினும் ) உறுவித்து . ஆலும் - ஆடுகின்ற . ` இமையோர் ஏறே ` என முன்னர் வந்தமையின் , இங்கு இறுதிக்கண் உள்ள ` அமரர் ஏறே ` என்பது , வாளா பெயராய்நின்றது .

பண் :

பாடல் எண் : 8

உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ
ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு
கலந்தார் மனங்கவருங் காத லானே
கனலாடுங் கையவனே ஐயா மெய்யே
மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய
மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்
அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! இறந்தவ ருடைய தலையோட்டைக் கையில் ஏந்தித் தேவர் உலகில் பிச்சை ஏற்பானே ! உன்பால் அன்பால் கலந்தவர்களுடைய உள்ளத்தைக் கவரும் அன்புடையாய் ! கையில் தீ கொழுந்துவிட்டு எரியுமாறு வைத் திருப்பவனே ! தலைவனே ! உண்மையாகத் தூய்மைஅற்ற இவ்வுடலில் ஏற்பட்ட மயக்கங்களில் விழுந்து அழுந்தி ஒவ்வொருநாளும் வருந்தும் அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வாயாக .

குறிப்புரை :

உலந்தார் - இறந்தார் . காதலான் - அருளாளன் . ` மேவினார் பிரிய மாட்டா விமலனார் ` ( தி .12 கண்ணப்பர் புரா . 174) என்றதுங் காண்க . மலம் தாங்கு உயிர்ப் பிறவி மாயக் காயம் - இயல்பாகவே மலத்தினை உடைய உயிரினது பிறவியாகிய நிலையாமையுடைய உடம்பு ; இதனால் , ` நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் ` ( சிவஞானபோதம் சூ .2 அதி . 2.) என்றதற்கு உரையளவை பெறப்பட்டது . அலந்தேன் - துன்பமுற்றேன் .

பண் :

பாடல் எண் : 9

பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்
பசுவேறி யூரூரன் பலிகொள் வானே
கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்
கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்
எல்லாரு மென்தன்னை யிகழ்வர் போலும்
ஏழையமண் குண்டர்சாக் கியர்களொன்றுக்
கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

ஆவடுதுறைத் தேவர் தலைவனே ! பல் நிறைந்த வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திக் காளையை இவர்ந்து ஊர் ஊராகப் பிச்சை எடுப்பவனே ! பார்வதியும் நீயும் சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்புகிறீர் . நீங்கள் இருவீரும் என்னை ஆட் கொள்ளக் கருதவில்லையென்றால் மக்களெல்லாரும் அடியேனை இகழ்ந்து கூறுவர் . அறிவற்ற பரு உடல்களை உடைய சமணர் புத்தர் ஆகிய பயனற்றவர் தொடர்பை நீக்கிவிட்ட அடியேனை அஞ்சேல் என்பாயாக .

குறிப்புரை :

` ஊரூரனாய் ` என எச்சமாக்குக . ` எல்லாம் ` என்பது , உம்மையெண்ணின் தொகைப் பொருட்டாய் நின்றது , இதன் பின் வருவனவற்றிற்கு , ` நீவிர் இருவீரும் என்னை ஆளக்கருதீராகில் , ஒன்றுக்கும் அல்லாதாரது கூற்றிலேபட்டு நல்லாரை இகழ்ந்தமை பற்றி எல்லாரும் என்னை இகழ்வர் ; ஆதலின் , அஞ்சே லென்னாய் ` என உரைக்க . ` கருதீர் ` என்பது வேறு முடிபாகலின் , பால்வழுவின்று ; ` நீரும் எல்லாம் ` என்பது பாடம் அன்று . இதனால் அப்பனையேயன்றி , அம்மையையும் சார்த்துவகையால் வேண்டுதல் பெறப்பட்டது . ` போலும் ` என்பது அசைநிலை . சமண் சமயமும் புத்த சமயத்தோடு ஒத்ததாகலின் , தம்மைச் சாக்கியர் திறத்து ஒழிந்ததாகவும் அருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 10

துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்
துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்
பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்
செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.

பொழிப்புரை :

ஆவடுதுறைத் தேவர் பெருமானே ! துறந்தவர் செல்லும் தூய நெறியிலே வாழ்கின்றேன் அல்லேன் . உனக்கு இணையான மாலைகளைச் சூட்டும் தூய்மை உடையேன் அல்லேன் . உன் திருவருளைப் பற்றிப் பேசியும் அப்படிப் பேசாத நாள்களைப் பயனற்ற நாள்களாகக் கணக்கிட்டும் வாழ்கின்றேன் . செறிவாகப் பொருந்திய மதில்களை உடைய இலங்கை அரசனாகிய இராவணனைச் செறிவான கயிலை மலைக்கீழ் நசுக்கிப் பின் அவனுக்கு அருளிய உன் செயல்களை எல்லாம் அறிந்த அடியேனை அஞ்சேல் என்பாயாக .

குறிப்புரை :

துறந்தார் - உண்மைத் துறவிகள் ; அவர் , தம் செயலற்றுத் தலைவன்வழி நின்றவர் . அவரது தூநெறியாவது , ` யான் , எனது ` என்னும் மயக்க உணர்வாகிய குற்றம் நீங்கிய நெறி . ` சமணத் துறவிகள் அத்தன்மையரும் அவரது நெறி அத்தகையதும் ஆகாமையின் , துறந்தார்தம் தூநெறிக்கண் சென்றேனல்லேன் ` என்றருளிச்செய்தார் . துணைமாலை - பூக்களைப் பிணைத்துச் செய்யும் மாலை . ` தூயேனல்லேன் ` என்றது மேற்கூறிய குறையை நினைந்த நினைவினால் என்க . ` பிறந்தேன் ` என்றதனை , ` பேசின் ` என்றதன் பின்னர்க் கூட்டுக . ` இலங்கைக் கோமானை முன்னர் அடர்த்து , பின்னர் அருள்செய்கை யெல்லாம் ` என்க . ` அவற்றை அறிந்தேன் ` என்றது , ` என்னையும் அடர்த்தே யொழியாது அருளவும் வேண்டும் ` என வேண்டியவாறு . இதனால் , இராவணனுக்கு அருள் புரிந்த வரலாற்றினை சுவாமிகள் ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதிப் பாடலிலும் அருளிச்செய்து முடித்தலின் கருத்து நன்குணரப்படுதலின் . ` அறியா - அத்தன்மையனாய இராவணனுக் கருளுங்கருணைத்திற மானவதன் - மெய்த்தன்மையறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு வணங்கினர் ` என சுவாமிகள் வரலாற்றினும் , ` மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற் கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளு மெனக்காட்ட எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறிந் திசைபாட அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப்பா டருள்செய்தார் .` ( தி .12) என ஆளுடைய பிள்ளையார் வரலாற்றினும் இனிது விளக்கி யருளினார் , சேக்கிழார் நாயனார் .

பண் :

பாடல் எண் : 1

நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

பெரியவனாய் , நான்கு வேத சொரூபனாய் நம்மால் விரும்பப்படுபவனாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் எய்தவில்லை உடையவனாய்த் தேவர்களுக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய் , மந்திர வடிவினனாய்ச் சந்திரன் சூரியன் தீ என்ற மூஒளிகளின் உருவனாய்த் தொண்டராகி வழிபடுபவர்களுக்கு வீட்டுலகை ஈய வல்லவனாய்த் தேவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்தை உகந்தருளியிருக்கும் பெருமான் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

` மேலவர்க்கு மேலான் ` என்பதும் பாடம் . வேத வேள்விச் சொல் - மந்திரம் ; ` அம் மந்திர வடிவாய் இருக்கின்றான் ` என்க . சுடர் மூன்று , ` சூரியன் , சந்திரன் , நெருப்பு ` என்பன . தொல்வான் - பழைய வானுலகம் ; என்றது , தனது உலகத்தை ( சிவலோகத்தை .)

பண் :

பாடல் எண் : 2

ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண்
உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட்கென்றுந்
தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண்
தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட
கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண்
களியானை யீருரிவை கதறப் போர்த்த
வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

வலிவலத்துப் பெருமான் எல்லோருக்கும் உடம்பாய் , உயிராய் , அருளாளர்களுக்கு அநுபவப் பொருளாய் , உலகியலில் திளைப்பார்க்கு அநுபவம் ஆகாதவனாய்ப் பார்வதிக்குத் தேன் போன்று இனியனாய்ச் செல்வமாய்த் திசைகளாய்த் தூயவனாய் , அருச்சுனனுடைய போர்த்தொழிலை அநுபவித்த வேடனாய் , கடலாய் , மலையாய் , மதயானையைக் கொன்று அதன் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்திய தேவனாய் , தேவர்களும் வணங்கித் துதிக்கப்படுபவனாய் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

` ஊனவன் , தேனவன் , என்பவற்றில் அகரம் சாரியை . ஊன் - உடம்பு . உள்ளவன் - அருளாளர்க்கு அநுபவப் பொருளாய் இருப்பவன் . இல்லவன் - உலகத்தார்க்கு அநுபவமாகாதவன் . தேனவன் - தேன்போல இனியவன் . திரு - செல்வம் . தீர்த்தன் - ஆசிரியன் . பணி - செயல் ; போர் .

பண் :

பாடல் எண் : 3

ஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண்
இன்பன்காண் துன்பங்க ளில்லா தான்காண்
தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யெங்கும்
ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
அகங்குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள்
வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

எப்பொருளையும் நடத்துபவனாய் , எல்லாருக்கும் இயக்கத்தை வழங்குபவனாய்த் துன்பக்கலப்பற்ற இன்பம் உடையவனாய்த் தாயாய் , உலகில் தன்னை ஒப்பார் இல்லாத மெய்ப் பொருளாய் , உத்தமனாய்த்தானே எங்கும் பரவியவனாய் , அண்டங் களுக்கும் அப்பாற்பட்டவனாய் , மனம் உருகி மெய் மயிர் பொடித்து அழும் அடியவர்களுக்குத் தன்னை அழைக்கும் அவர்கள் வாயிலுள்ள வனாய்த் தேவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்தில் உறைபவன் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

ஏயவன் ( ஏவியவன் ) - எப்பொருளையும் நடத்தியவன் . இயல்பு - நடை ; இயக்கம் . ` ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ ` ( தி .8 திருவாசகம் . திருச்சாழல் . 1.) என்றருளிச் செய்தமை காண்க . இன்பன் - நிறைந்த இன்பமுடையவன் . துன்பங்கள் - துன்பங்கள் யாவும் . தாயவன் - தாய்போன்ற கருணையை உடையவன் . ` உலகுக்கு ஓர் தாயவன் ` எனக் கூட்டுக . தத்துவன் - மெய்ப் பொருளாய் இருப்பவன் . ஆயவன் - பொருந்தியவன் . அரும்பி - மயிர் சிலிர்த்து ` மெய்வருந்தி ` என்பதும் பாடம் . அன்பர் வாயவனாக அருளியது , அவரது வாய் பிறிதொன்றை அறியாமை குறித்து .

பண் :

பாடல் எண் : 4

உய்த்தவன்காண்உடல்தனக்கோர்உயிரானான்காண்
ஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்
வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண்
விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத்தென்றும்
பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண்
புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி
வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

வலிவலத்துப் பெருமான் உடலுக்கு உயிராய் அதனைச் செலுத்துபவனாய் , ஓங்காரத்தால் குறிப்பிடப்படும் எப் பொருட்கும் தலைவனாய் , உலகுக்கெல்லாம் காரணனாய் , வானத்து மழையாய் , மழையின் விளைவாய்த் தன்னை விரும்பாதார் மனத்துத் தோன்றாதவனாய் , ஏழுலகையும் தாங்குபவனாய்த் தலையில் கங்கை பிறை பாம்பு இவற்றை அணிந்தவனாய் ; வானவர்கள் வணங்கித் துதிக்கப்படுபவனாய் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

உய்த்தவன் - எல்லாவற்றையும் செலுத்தியவன் . ஓங்காரத்து ஒருவன் என்றது , அதன் சமட்டி ( முழு ) ப் பொருளை நோக்கி ; அப்பொருளாவது ` எப்பொருட்கும் தலைவன் ` என்பது . விளைவு - வித்தினின்றும் முளைமுதலியன தோன்றி வளர்ந்து முடிவில் தரும் பயன் . பொய்த்தவன் - தோன்றாதொழிந்தவன் . தாங்குதல் - காத்தல் .

பண் :

பாடல் எண் : 5

கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண்
குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய
நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண்
நிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கை
ஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ
மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் சொற்களாகவும் , சொற்பொருளின் பொதுத் தன்மையாகவும் , சிறப்புத் தன்மையாகவும் , எல்லாக் குற்றங்களாகவும் , நீறணிந் தவனாகவும் , நிழலாகவும் , வெப்பமாகவும் , மேல்நோக்கிய சிவந்த சடையின் மேல் கங்கை நீரை ஏற்றவனாகவும் , ஏழுலகும் ஆகியவனாய் இமை நேரத்தில் மன்மதனைச் சாம்பலாக்கியவனாய் , என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

கூற்று - சொல் . சொல்லின் பொருளை , ` குணமும் , குறியும் ` என இரண்டாக்கியருளினார் ; அதனால் அவற்றை உடைய பொருள்களும் கொள்ளப்படும் . ` குணம் ` என்றது பொதுத் தன்மையையும் , ` குறி ` என்றது சிறப்புத்தன்மையையும் என்க . ` நிழல் ` என்றது - தட்பத்தை உணர்த்தி , நீர்மேல் நின்றது . ` கங்கை ` இயற்பெயர் . ` மாற்று `, முதனிலைத் தொழிற்பெயர் ; மாற்றவன் - மாற்றுதலை உடையவன் ; ` மாற்றிய அவன் ` என வினைத் தொகையுமாம் .

பண் :

பாடல் எண் : 6

நிலையவன்காண் தோற்றவன்கா ணிறையா னான்காண்
நீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்த
சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல்
தேன்மொழியை ஒருபாகஞ் சேர்த்தி னான்காண்
கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக்
கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ
மலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் தோற்றம் நிலை இறுதியாய் நீராய் நிலனாய்த் திரிபுரம் எரித்த வில்லேந்தியவனாய்ச் செவ்வாயினையும் கரிய கூந்தலையும் உடைய பார்வதி பாகனாய்க் கலைகளாய்க் காற்றாய்க் கூற்றுவன் கீழே விழுமாறு அவனை வெகுண்டவனாய்க் கயிலாய மலையினனாய் என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

` நிலையவன் ` முதலிய பலவற்றுள்ளும் அகரம் சாரியை . தோற்று - ` தோன்று ` என்பது திரிந்த தொழிற்பெயர் ; ` தோன்றுதல் ` என்பது பொருள் . நிறை - நிறைவு ; இறுதி ; எனவே , தோற்றம் முதலிய மூன்றனையும் அருளியவாறாயிற்று . கலை - நூல் . கறுத்தவன் - வெகுண்டவன் .

பண் :

பாடல் எண் : 7

பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும்
பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண்
எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி
இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங்
கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங்
கதியவன்காண் மதியவன்காண் கடலேழ் சூழ்ந்த
மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் பெண்ணாய் , ஆணாய் , அரியாய்ப் பிரமனாய்ப் பெரியோரில் பெரியோனாய் , எண்ணாய் , எழுத்தாய் , இயலாய்ச் செவிக்கு இன்பம் தரும் இசையாய்க் கண்ணாய்க் கருத்தாய் , இறந்தோர் செல்லும் வழியாய் , ஞானமாய் , ஏழ்கடல் சூழ்ந்த நிலமாய் என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

பெரியோர்க்குப் பெரியவன் - பெரியராயினார்க்குத் தனது பெருமை தோன்ற நிற்பவன் ; எனவே , ஏனைச் சிறியரா யினார்க்கு அவ்வாறு நில்லாதவன் என்பது பெறப்பட்டது . கேள்வி - ஓசை ; ` கேட்கப்படுவது ` என ஆகுபெயர் . ` இன்பந்தரும் ஓசையாகிய இசை` என்க . ` இயல் ` என்றது , இயன்று ( அடிபெயர்த்துச் ) செய்யப் படுவதாகிய ஆடலை ; எனவே , ` எழுத்தவன்காண் ` முதலிய மூன்றாலும் ` இயல் , இசை , நாடகம் ` என்ற மூன்றும் அருளியவாறு ஆயிற்று . கழிந்தோர் - பாசம் நீங்கப்பெற்றோர் . மதி - ஞானம் .

பண் :

பாடல் எண் : 8

முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி
முதலவன்காண் முடிவவன்காண் மூன்று சோதி
அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும்
அணியவன்காண் சேயவன்காண் அளவில் சோதி
மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம்
வேண்டினன்கா ணீண்டுபுனற் கங்கைக் கென்றும்
மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

வானவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்துப் பெருமான் முன்னவனாய்ப் பின்னவனாய் , என்றும் ஒரே நிலையிலிருக்கும் முதலும் முடிவுமாய் இருப்பவனாய்த் திங்கள் ஞாயிறு தீ என்ற மூவொளியாய் , அடியார்க்கு அணியனாய் , உலகியலில் மூழ்கியவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய் , எல்லையற்ற ஒளியை உடைய மின்னலாய் , இடியாய்த் திருமாலை உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனாய்க் கங்கையைச் சடையில் நிலைபெறச் செய்தவனாய் என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

முன்னவன் பின்னவன் - உலகத்தோற்ற ஒடுக்கங்கட்கு முன்னும் உள்ளவன் ; பின்னும் உள்ளவன் . ` மூவாமேனி ` என்றது உடம்பொடு புணர்த்தலாகலின் ` மூவா மேனியன்காண் ` எனவுங் கொள்ளப்படும் . மூவா மேனி - என்றும் ஒரு நிலையாயே இருக்கும் தன்மை . ` சோதி ` என்றது . ` சுடர் ` என்றவாறு . ` மூன்று சுடர் ஆகிய அத்தன்மையன் ` என்க . ` அடியார்க்கு அணியவன் ( அண்மையில் உள்ளவன் ); அண்டத்தார்க்குச் சேயவன் ` ( தொலைவில் உள்ளவன் ) என நிரனிறையாகக் கொள்க . படைப்புக் காலத்துச் சிலகற்பங்களில் , பிரமனை வலப்பக்கத்திலும் , திருமாலை இடப் பக்கத்திலும் சிவபிரான் தோற்றுவிப்பனாகலின் , ` திருமால் பாகம் வேண்டினன் ` என்றருளிச் செய்தார் . ஈண்டு புனல் - மிக்க நீர் . கங்கை - ` கங்கை ` என்னும் தேவி . மன்னவன் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 9

நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா
நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங்
கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண்
காலங்க ளூழியாய்க் கலந்து நின்ற
பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண்
பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

வானவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் செல்வமாய் , யாரும் மனத்தால் அணுக இயலாத நீதியனாய் வேதியனாய்த் தன்னை விருப்புற்று நினைக்கும் அடியவர் சென்று சேரும் கதியாய் , நீராய்த் தீயாய்ப் பல ஊழிக்காலங்களாய் , எல்லாருக்கும் தலைவனாய்ப் பழமாய்ப் பழத்தின் சாறாய்ப் பாம்பையும் பிறையையும் பழகுமாறு அருகில் வைத்த ஞானமுடையவனாய் என் உள்ளத்து உள்ளான் .

குறிப்புரை :

` நெதி ` யெனினும் , ` நிதி ` எனினும் ஒக்கும் . நினைய ஒண்ணா - மனத்தால் அணுக இயலாத ; உண்மை நீதி மக்களால் உணர்தற்கு அரிதாகலின் , ` யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதி ` என்றருளினார் ; இது பற்றிச் சேரமான்பெருமாள் நாயனார் அரசுபூணுதற்கு அஞ்சி , இறைவனை வேண்டிக் கழறிற்றறிவாராந் தன்மை பெற்றமை யறிக ; இதனால் , அரசன் , அநீதி என்றுணராமையால் ஓறாதொழியினும் , அது செய்தாரை இறைவன் அருள் ஒறுக்கும் என்பது பெற்றாம் . இன்னும் இதனானே , நீதியாயினவற்றை அரசன் உணர்ந்து அளிசெய்யா தொழியினும் , அவனருள் அது செய்யும் என்ப தும் போதரும் . வேதியன் - வேதம் ஓதுபவன் . கார் - மேகம் . பதி - தலைவன் . இரதம் - சுவை . மதியவன் - ஞானமுடையவன் : ` தன்னை அடைந்தாரையும் தன்வண்ணமாக்கும் ஆற்றல் வாய்ந்த ஞான ஒளியை உடையவன் ` என்பார் , ` பாம்போடு திங்கள் பயில ( அச்ச மின்றிப் பழகும்படி ) வைத்த மதியவன் ` என்றருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 10

பங்கயத்தின் மேலானும் பால னாகி
உலகளந்த படியானும் பரவிக் காணா
தங்கைவைத்த சென்னியரா யளக்க மாட்டா
அனலவன்காண் அலைகடல்சூ ழிலங்கை வேந்தன்
கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங்
குழகன்காண் அழகன்காண் கோல மாய
மங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

பொழிப்புரை :

தேவர் வழிபடும் வலிவலத்தான் தாமரையில் உறையும் பிரமனும் வாமனனாய் உலகை அளந்த திருமாலும் கைகளைத் தலைமிசைக் குவித்து முன்னின்று துதித்து முடியையும் அடிகளையும் எளிமையில் காணமாட்டாது , தம் முயற்சியால் காண முற்பட்டமையின் காணமுடியாத தீப்பிழம்பாக நின்றவனாய் இராவணனுடைய பூக்களைச் சூடிய தலைகள் நெரியுமாறு விரலால் அவனை அழுத்திய இளையனாய் , அழகனாய் , அழகிய பார்வதி பாகனாய் என் உள்ளத்தில் உள்ளான் .

குறிப்புரை :

பாலன் - சிறியவன் ; வாமனன் . ` பாலகனாய் ` என்பதும் பாடம் . படியான் - நிலைமையன் . ` அங்கை வைத்த சென்னியராய் ` என்பதனை , ` சென்னி வைத்த அங்கையராய் ` என மாற்றிப் பொருள் கொள்க . இவ்வாறருளினாராயினும் , பரவிக் காணாது ` அளக்க மாட்டாது சென்னி அங்கை வைத்த ` என்றலே கருத்தென்க . ` பரவிக் காணாது ` என்றது , ` முன்பே பரவிக் காண நினையாது ` என்றபடி . பின்பு அங்கை சென்னி வைத்து , பரவி , ` அலர ` என்பது , துச்சாரியை பெற்று , ` அலர்த்த ` என நின்றது ; ` மலர்களை உடைய ` என்பது பொருள் . குழகன் - இளையன் : என்றது , ` அழகன் ` எனப் பின் வருவதற்கு ஏதுக்கூறுங் குறிப்பினதாய் நின்றது . ` மங்கையர் ` என்றது , உயர்த்தற் பன்மை .

பண் :

பாடல் எண் : 1

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

பெரிய மேலைக் கடலால் ஒருபுறம் சூழப்பட்ட கோகரணத்தில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் தாழ்ந்த சடையில் பிறையையும் கங்கையையும் அணிந்தவனாய் , அடியார்களுக்கு அமுதாய் வானத்தில் உலவிய அசுரரின் முப்புரங்களையும் அழித்தவனாய் , அழகிய உருவங்களின் மேம்பட்ட அழகுடைய உருவினனாய் , இசைவகைகளை உடைய நான்கு வேதங்களையும் பாடினவனாய்த் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய் , மந்திரத்தை உடைய வேதமாகவும் உள்ளான் .

குறிப்புரை :

சந்தித்தான் - பொருந்தினான் ; அணிந்தான் , அவ்வுரு - அவரவர் விரும்பி வணங்கும் வடிவம் . இனி , ` அழகிய உருவம் ` எனக் கொண்டு , ` அழகிய உருவங்கள் பலவற்றுள்ளும் அழகிய திரு மேனியை உடையவன் ` என்றுரைத்தலுமாம் . ` பண்தரத்து ` என்பது , ` பந்தரத்து ` எனத் திரிந்து நின்றது . ` இசை வகைகளை உடைய ` என்பது பொருள் . பாணி - தாளம் ; என்றது . அதற்கியைய ஆடும் கூத்தினை . மந்திரத்து மறை - மந்திரத்தை உடைய வேதம் . மாகடல் - பெரிய கடல் ; என்றது மேற்குக் கடலை .

பண் :

பாடல் எண் : 2

தந்தவத்தன் தன்தலையைத் தாங்கி னான்காண்
சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்
கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண்
கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்
வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண்
வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்
வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ ணான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மேற்குக் கடலை அடுத்த கோகரணப் பெருமான் உலகைப் படைத்த பிரமனது மண்டையோட்டை ஏந்தி எங்கும் சஞ்சரிப்பவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் , மலரில் மணம்போல எங்கும் பரவியவனாய் , அதிகை வீரட்டனாய்த் தான் என்றும் அழிவில்லாதவனாய்த் தன்னை அழிப்பாரும் இல்லாதவனாய்த் திருநீறு பூசியவனாய்த் தவமாகிய பெருமிதம் உடையவனாய் , பரந்த கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்த் தன்னிடத்துத் தோன்றித் தன் கருத்துக்கு ஏற்பக் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலாலும் உள்ளபடி அறிய ஒண்ணாதவனாய் , உள்ளான் .

குறிப்புரை :

தந்த அத்தன் - ( உலகத்தைப் ) பெற்ற தந்தை ; பிரமன் . இனி , ஓரொரு கற்பத்தில் . குணருத்திரர் பிரமனிடத்துத் தோன்றுதல் பற்றியும் , விண்ணவர் பகுதியினராகிய பதினோர் உருத்திரர் பிரமனது நெற்றியினின்றும் தோன்றினர் என்று புராணம் ( கந்த புராணம் உருத்திரர் கேள்விப் படலம் ) கூறுதல் பற்றியும் . அவ்வுருத்திரரைத் தந்தமையை மகாருத்திரனாகிய இறைவனைத் தந்ததாக உபசரித்து அருளிச்செய்ததாக உரைத்தலுமாம் . இனி , ` சிருட்டியைக் கற்பித்தற் பொருட்டுச் சிவபிரான் பிரமன்பால் தோன்றினான் ` எனவரும் வரலாறுகள் பற்றி அருளிச்செய்ததூஉமாம் . இவ்வரலாறுகள்பற்றிச் சிவபிரானுக்குத் தாழ்வு ஏற்றுதல் கூடாதென்றற்கு ` தந்த , அத்தன் தன்தலையைத் தாங்கினான் ( ஏந்தியுள்ளான் ) காண் ` எனப் பழிப்பது போலப் புகழ்புலப்பட ஓதியருளினார் . ` தந்தையாதல் உண்மையாயின் , அவனது தலை தடிந்து தாங்கப்படுதல் எவ்வாறு கூடும் . உலக மக்களுள் தந்தையும் மகனும் போலக் கொள்ளுதல் ஈண்டுப் பொருந்தாமையின் ` என்பது திருக்குறிப்பு . சாரணன் - எங்கும் சரிப்பவன் . ` கந்தம் ` என்பது , ` கெந்தம் ` என வந்தது . கெந்தத்தன் - ( மலரில் ) மணம் போல்பவன் . வந்து ஒத்த நெடுமால் - தன்னிடத்துத் தோன்றி , தன்னோடு ஒத்து நின்ற ( முத்தொழில்களுள் ஒன்றைச் செய்கின்ற ) திருமால் .

பண் :

பாடல் எண் : 3

தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண்
தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள
பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண்
புராணன்காண் பூதங்க ளாயி னான்காண்
மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் தான்காண்
மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் தன் உருவையார்க்கும் எதிர்ப்படச் செய்யாதவனாய்த் தாழ் சடையனாய் , அடியார்களுக்கு அநுபவப் பொருளாகிய பொற்சோதியாய் , கங்கா தரனாய் , பழையோனாய் , ஐம்பூதங்களாய் , மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனாய் , யானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு போர்த்தவனாய் , என்றும் நிலை பெற்ற உருவமுடையவனாய் , வேதங்களை ஓதிக்கொண்டு இருப்பவன் ஆவான் .

குறிப்புரை :

தாக்குதல் - எதிர்ப்படுதல் : ` யானை - வெரூஉம் புலிதாக் குறின் ` ( குறள் - 599) என்பதன் உரை காண்க . உள்ள - உள் பொருளாகிய ( அநுபவமாகின்ற ). ` சோதி ` என்பதில் , ` காண் ` என்பது தொகுத்தலாயிற்று . புனலாடினான் , நீரைத் தலையில் அணிந்தவன் . ` பூதலங்களாயினான் ` என்பதும் பாடம் . ` அவள் வெருவ ` என்க . மன் உரு - நிலைபெற்ற . பொருள் ஓதினான் - செய்தான் .

பண் :

பாடல் எண் : 4

ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண்
அன்பன்காண் அணிபழனம் மேயான் றான்காண்
நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண்
நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்
கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்
மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ்கோகரணம் மன்னிய பெருமான் கங்கையைச் சடையில் சூடிய ஆரூரனாய்ப் பழனத்தில் உறைபவனாய் , அன்பனாய்த் திருநீறணிந்து ஒளிவீசும் மேனியனாய் , தலைவனாய் , ஒப்பற்றவனாய் , பிளவு தோன்றுதற்குக் கருவியாகிய மழுப்படையினனாய் , கொக்கரை என்ற வாச்சியத்தை உடையவனாய் , மேம்பட்ட பூதக்கூட்டத்தை உடையனாய் , பகையாகச் செயற்பட்ட மும்மதிலையும் அழித்து மறையச் செய்தவனாவான் .

குறிப்புரை :

பழனம் , சோழநாட்டுத் தலம் . நிழல் - ஒளி . நிருபன் - அரசன் ; தலைவன் . கூறு ஏறு - பிளவு தோன்றுதற்குக் கருவியாகிய . கொக்கரை - ஒரு வாச்சியம் ; சங்குமாம் . மாறு - பகை ; மதிலை உடையாரது செயல் , மதில்மேல் ஏற்றப்பட்டது .

பண் :

பாடல் எண் : 5

சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண்
தீயம்பன் காண்திரி புரங்கள் மூன்றும்
பொன்றப் பொடியாக நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையா ளிகாண்
அன்றப் பொழுதே அருள்செய் தான்காண்
அனலாடி காண்அடியார்க் கமுதா னான்காண்
மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் திரிபுரங்களை நோக்கிச் சென்று மேரு மலையாகிய வில்லை வளைத்துத் தீயாகிய அம்பைச் செலுத்தி வானத்தில் திரிந்த மும்மதில்களும் சாம்பலாகுமாறு செய்தவனாய் , உயிர்களை ஆளாக உடையவனாய் , பூதப் படை உடையவனாய் , அடியார்களுக்கு அன்றன்று அவ்வப்பொழுதே அருள் செய்தவனாய்த் தீயிடையே கூத்தாடு பவனாய் , அடியவர்களுக்கு அமுதானவனாய் , நறுமணம் கமழும் நீண்ட சடையை உடையவனாய் உள்ளான் .

குறிப்புரை :

` அச் சிலை ` என்பதில் , அகரம் பலரறிசுட்டு , ` மேரு மலையாகிய அவ் வில் ` என்பது பொருள் . தீ அம்பு - அக்கினி தேவனாகிய அம்பு . திரி புரங்கள் - ( வானத்தில் ) திரியும் மதில்கள் . பொடி - சாம்பல் . பூதன் - உயிர்களை ஆளாக உடையவன் . ` அன்று அப்பொழுதே ` என்பதற்கு முன் , ` வேண்டினார்க்கு ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . மன்றல் மணம் - நறுமணம் .

பண் :

பாடல் எண் : 6

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபா லிகாண்
கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடி னான்காண்
ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் சடைமுடியாகிய ஓரிடத்தில் பிறையையும் கங்கையையும் சேர்த்து வைத்த புகழோனாய் , பிறப்பில்லாதவனாய் , நஞ்சுபொருந்திய நீல கண்டனாய்க் காபாலக் கூத்து ஆடுபவனாய்க் கட்டங்கம் என்ற படை உடையவனாய்க் கையில் மண்டையோட்டை ஏந்திப் பறை ஒலிக்கப் பல பாடல்கள் பாடியவனாய் , தாளத்திற்கு ஏற்ப ஆடியவனாய் , அடியார்கள் ஓதும் வேத ஒலியையும் பாடும் பாடல் இசையையும் செவிமடுத்தவனாவன் .

குறிப்புரை :

` பெண் ` என்றது , கங்கையை . ஒருபால் - ஓர் இடம் : சடைமுடி . பேர் ( பெயர் ) - புகழ் . கறை ஓடு - நஞ்சு பொருந்திய . பாணி ஆக - தாளம் உண்டாக ; ` ஆடினான் ` என முன்னே கூட்டுக . மறையைக் கேட்டல் பொருள்பற்றியும் , கீதம் கேட்டல் இனிமை பற்றியும் என்க . கேட்டல் , ஓதுவாரிடத்து .

பண் :

பாடல் எண் : 7

மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண்
விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்
முன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண்
மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்
எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண்
ஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்று
மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் ஒளிவீசும் அண்டச்சுவரின் மேலும் பொருந்தியவனாய்த் தேவர்கள் தலைவனாய் , எவ்விடத்தையும் தம் தொழிலுக்கு உட்படுத்திய மூவருக்கும் காரணனாய் , முத்தலைச்சூலம் ஏந்திய அழகினனாய் , என் எண்ணத்தை அளந்து என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய் , அம்பு எய்தலில் வல்லவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு இருந்து , உலகை அளந்த திருமாலால் அறியப்பட முடியாத வியக்கத்தக்க நிலை உடையவனாக உள்ளான் .

குறிப்புரை :

` மேல் ` என்றது , அண்டச்சுவரை உணர்த்தி நின்ற ஆகுபெயர் . முகடு - உச்சி . எங்கும் அளந்த மூவர் - எவ்விடத்தையும் தம் தொழிலுக்கு உட்படுத்திய மும்மூர்த்திகள் . ` மூவர்க்கும் முதலானான் ` என்றதனால் , பரமசிவன் . ` நான்காவது பொருள் ` என்றும் , ` துரிய மூர்த்தி ` என்றும் சொல்லப்படுதல் பெறப்பட்டது . மூவரும் குணமூர்த்திகள் ஆதலின் , நிர்க்குணனாகிய பரமசிவன் , அவர்க்கு அப்பாற்பட்டவனாயினான் என்க . எண் - எண்ணம் ; அதனை அளந்து என்றது , உடன் நின்று உணர்தலை . ஏவலன் - அம்பு எய்யும் தொழிலில் வல்லவன் ; இது , திரிபுரத்திடத்தும் , அருச்சுனனிடத்தும் சென்றமை முதலியவற்றால் நன்கறியப்படும் . ` இமையவர்கள் ஏத்த நின்று அவர்களை அவர்தம் தொழிலில் ஏவுதல் வல்லவன் ` எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 8

பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண்
பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்
முன்னி யுலகுக்கு முன்னா னான்காண்
மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்
இன்னவுரு வென்றறிவொண் ணாதான் றான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் இணைத்த சடைமீது பிறை சூடிப் பேரருளாளனாய்ப் பிறப்பிலியாய் , உலகுக்குக் காரணனாய் , மும்மதிலும் அழித்து மகிழ்ந்த முதல்வனாய்த் தன் உண்மை உருவை மற்றையார் அறிய இயலாத இயல்பினனாய் , ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவனாய்ப் பார்வதி பாகனாய் உள்ளான் .

குறிப்புரை :

` உலகுக்கு முன்னாய் ( அது தோன்ற ) முன்னினான் ( நினைத்தருளினான் )` என்க . ` முன்னினான் ` என்றதனால் , ` ஏனை யோர்போலக் கரணத்தால் ( கருவிகளால் ) அன்றிச் சங்கற்ப ( நினைவு ) மாத்திரையானே , எல்லாம் செய்பவன் ` என்பதாயிற்று . இதனை , ` நோக்காதே நோக்கி ` என்பது முதலாகச் சிவஞானபோத வெண்பா இனிதுணர்த்திற்று . இங்ஙனம் சங்கற்ப மாத்திரையாற் செய்தலான் . அத்தொழில்கள் பற்றி அவன் தன் நிலை வேறுபடுதல் இல்லை என்க . ` அச்செயலை உகந்த ` என்க . எனவே , ` அவ்வாறு செய்தலை விரும்பியே செய்தனன் ` என்பது கருத்தாயிற்று . ` உரு ` என்றது தன்மையை ; எத்திறத்தாராலும் அறிய ஒண்ணாத தன்மையுடையவன் என அவனது பெருமை விளக்கியருளியவாறு . ` இப்படியன் இந் நிறத்தன் , இவ் வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே ` ( ப .97. பா .10.) என இனி வருவதும் , ` இன்ன உரு இன்ன நிறம் என்றறிவதேல் அரிது `( தி .3. ப .71. பா .4) என்றருளிச் செய்ததுங் காண்க .

பண் :

பாடல் எண் : 9

வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண்
வீரன்காண் வீரட்டம் மேவி னான்காண்
பொட்ட அநங்கனையும் நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையி னான்காண்
கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் வீணாக அடியவர்களை உரத்தகுரலில் இழித்துப் பேசுபவருக்குக் கொடிய நெருப்புப் போன்றவனாய்த் தவத்தின் பெருமிதம் உடையவனாய் , வீரட்டத் தலங்களில் விரும்பியிருப்பவனாய் , விரைவாக மன்மதனைச் சாம்பலாகுமாறு தீவிழித்தவனாய் , ஐம்பூத வடிவினனாய்ப் பூதப் படையினனாய் , தீங்குதரும் கொடிய வினைகள் தாக்காதவாறு காத்து அடியவர்களை ஆட்கொள்பவனாய் , கற்கண்டு போன்ற இனியவனாய் , வண்டு தேன் உண்ட கொன்றையைச் சூடியவனாய் , பிறை சூடியாய் உள்ளான் .

குறிப்புரை :

வெடித்தல் - ஒலித்தல் ; நெருப்பை , ` குரையழல் ` ( வெண்பா மாலை - 8) என்றல் செய்யுள் வழக்காதல் உணர்க . ` வெட்ட வெடித்தல் ` என்பது , மிக ஒலித்தல் என்னும் பொருளதாகிய ஓர் இரட்டைக்கிளவி . ` ஆர்க்கும் ` என்பதன் இறுதிநிலை தொகுத்த லாயிற்று . ஆர்த்தல் - ஆரவாரித்தல் இனி , ` வெடித்தல் , நீங்குதல் ` எனக் கொண்டு , ` மிக நீங்கினார்க்கு ( இகழ்ந்தார்க்கு ) அழல்போன்றவன் ` என்றுரைத்தலுமாம் . பொட்ட - கடிதில் : ` பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் ` ( தி .5. ப .42. பா .6.) என்றருளியதுங் காண்க . கட்டவினை - துன்பம்தரும் வினை . கண்டன் - கண்டு ( சருக்கரை ) போன்றவன் : ` கண்டம் ( சருக்கரை ) போன்றவன் ` எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக்
கால்விரலால் தோள்நெரிய வூன்றி னான்காண்
மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு
மீண்டே யவற்கருள்கள் நல்கி னான்காண்
பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண்
போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்
மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

பொழிப்புரை :

மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் கைகளால் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனை , கால் விரலால் தோள்கள் நெரியுமாறு அழுத்தியவனாய் , தன் உடம்பில் உள்ள நரம்புகளை வீணை நரம்புகளாகக் கொண்டு இன்னிசை எழுப்பி , தன்னைச் செவிமடுக்கச் செய்த இராவணனுக்கு அருள்களை விரும்பிக் கொடுத்தவனாய்ப் பொய்யருடைய உள்ளங்களுக்கு அப்பாற்பட்டவனாய் , போரிடுவதற்குரிய படைக்கலன் ஏந்தியவனாய் , அவற்றால் போர் செய்யப்படுவார் ஒருவரும் இல்லாதானாய் , நீலகண்டமும் , நீண்ட சடையும் உடையவனாய் , அடியார்கள் அகக் கண்ணுக்குத் தோற்றம் வழங்குகின்றான் .

குறிப்புரை :

` கையால் எடுத்தற்கரிதாகிய மலையை எடுத்தவனைக் காலால் எளிதில் ஊன்றினான் ` என்பது நயம் . மெய்யின் நரம்பு - உடம்பிலுள்ள நரம்பு . இசையால் - ஒலியால் ; ` இசை கேட்பித்தாற்கு ` என்க . ` மனத்துக்கு ` என்னும் நான்காவது தொகுத்தலாயிற்று . ` போர் செய்தற்குரிய படைக் கலங்களை யுடையவன் ; ஆயினும் , அவற்றால் போர் செய்யப்படுவார் ஒருவரும் இல்லாதவன் ; யாவரும் நெற்றிக் கண் , புன்முறுவல் , கைந்நகம் , கால் , கால் விரல் , என்பவற்றுக்கே ஆற்றாராயினர் ` என்றவாறு ; இதனால் அவனது பேராற்றல் உணர்த்தப் பட்டது .

பண் :

பாடல் எண் : 1

போரானை ஈருரிவைப் போர்வை யானைப்
புலியதளே யுடையாடை போற்றி னானைப்
பாரானை மதியானைப் பகலா னானைப்
பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

தன்னை எதிர்த்து வந்த யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை மேலே போர்த்தி , புலித்தோலை ஆடையாக உடுத்தவனாய் , நிலனாய்ச் சந்திரனாய்ச் சூரியனாய் , வானவெளியாய் , நீராய் காற்றாய்த் தீயாய்ப் பல உயிர்களாய் அட்ட மூர்த்தியாய்ப் பரந்து நிற்பவனாய் , பகைவருடைய மும்மதில்களும் எரியுமாறு நினைத்த போது இவர்ந்து சென்ற தெய்வத்தேருடையவனான திருவீழி மிழலைப் பெருமானை அணுகி வழிபடாதவர்கள் தீய வழியிலேயே சென்று கெடுகின்றவர் ஆவார்கள் .

குறிப்புரை :

போர் ஆனை - போர் செய்ய வந்த யானை ; கயாசுரன் . ஈர் உரிவை - உரித்த தோல் . ` உடை ` என்பது இடையில் உடுக்கப் படுவதற்கும் , ` ஆடை ` என்பது மேலே இடப்படுவதற்கும் ( உத்தரீயம் ) பெயர் . ` உடுக்கப்படுவது , ஆடுதலை ( அலைதலை ) உடையது ` என அவற்றின் காரணம் உணர்க . ` யானைத் தோலைப் போர்வையாகவும் , புலித்தோலை உடுப்பதும் மேலே இடுவதும் ஆகிய கூறைகளாகவும் இறைவன் கொண்டுள்ளான் ` என்பது இங்கு இனிது விளக்கியருளப்பட்டுள்ளது . ` புலி அதளாகிய ஏய் ( பொருந்திய ) உடை ஆடை ` என்க . பார் - பூமி . மதி - சந்திரன் . பகல் - சூரியன் . வெளி - வானம் . முப்புரம் எரிக்கச் சென்றபோது ஊர்ந்து சென்றது , நிலம் முதலியவற்றின் உரிமைத் தெய்வங்களால் இயன்ற தேர் ஆதலின் , ` தெய்வத் தேர் ` என்றருளினார் . ` நெறிக்கு ` என்பது , கண்ணுருபின் பொருளில் வந்த உருபு மயக்கம் . ஏகாரம் , நன்னெறியினின்று பிரித்தலிற் பிரிநிலை . ` சேர்கின்றார் ` என்பது வினைப்பெயர் ; அதன்கண் ஏகாரம் தேற்றம் . இங்ஙனமாதலின் , ` தம்மை யறியாது தாம் தீநெறிக்கண் சென்று கெடுகின்றவரே யாவர் ` என உணர்வித்தவா றுணர்க .

பண் :

பாடல் எண் : 2

சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு
தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னைப்
பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்
கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னைக்
கழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்
சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

பிணங்களை உடைய சுடுகாட்டுச் சாம்பல் , எலும்பு மண்டையோடு பஞ்சவடி என்ற இவற்றை அணிந்தவனாய்ப் பிறப்பைத் தடுக்கின்ற பாசுபத மதத்தினர் விரும்பிக் கொள்ளும் வேடத்தைத் தரித்தவனாய்த் தன்னை ஒழிந்த தேவர்களைத் கொண்டு தக்கன் செய்த வேள்வியை அழித்தவனாய்க் கச்சி ஏகம்பனாய்த் தன் திருவடிகளைத் சார்ந்த அடியவனைக் கோபித்து வந்த கூற்றுவனைக் கீழே விழுமாறு அவனைக் கோபித்து உதைத்தவனாய்த் திரு வீழிமிழலையில் உள்ள பெருமானை அடையாதவர் தீ நெறிக்கண் சேர்கின்றவராவர் .

குறிப்புரை :

மயிர்க் கயிறு - மயிரினாலாகிய பூணூல் ; இது ` பஞ்சவடி ` எனப்படும் . பவம் தாங்கு - பிறப்பைத் தடுக்கின்ற . இறைவன் ஒரோவொரு காரணம்பற்றிக்கொண்ட வேடங்கள் பலவற்றுள் ஒரோவொன்றை ஒவ்வொருவர் விரும்பிக்கொள்ளும் நிலையில் , ` பாசுபத மதத்தினர் விரும்பிக்கொண்ட வேடம் ` என்பார் , ` பாசு பத வேடத்தானை ` என்றருளினார் . வேள்வி , தக்கன் செய்தது ; அதனைத் தேவர் பலரும் உடன்பட்டமையின் , ` பண்டமரர் கொண்டு கந்த வேள்வி ` என்றார் . எல்லாம் - முழுதும் , கவர்ந்தான் - அழித்தான் . கழல் அடைந்தான் , மார்க்கண்டேயன் . கறுத்த - வெகுண்ட . சிவந்தான் - வெகுண்டான் . ` கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள ` ( தொல் . சொல் . 372.) என்பது உணர்க .

பண் :

பாடல் எண் : 3

அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை
அகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட
நின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை
நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்
வென்றானை மீயச்சூர் மேவி னானை
மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்
சென்றானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழிருந்து அறத்தை உபதேசித்தவனாய் , அகத்தியனை அவன் பெருமை தோன்ற உயரச் செய்தவனாய்ப் பிரமனும் திருமாலும் தேடுமாறு அனற் பிழம்பாய் நின்றவனாய் , கடல்விடம் உண்டவனாய்ப் பார்வதியோடு சேர்ந்திருந்தே பொறிவாயில் ஐந்து அவித்தவனாய் , மீயச்சூரை உறைவிடமாக விரும்பியவனாய்ப் பார்வதியின் தவத்தின் திண்மையை அளக்கச் சென்றவனாய்த் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .

குறிப்புரை :

அகத்தியரை உகத்தல் , முனிவருட் சிறந்தோராதல் பற்றி ; இது நிலம் வடதிசை தாழ்ந்து தென்றிசை உயர்ந்த ஞான்று , சிவபிரான் இம்முனிவரைத் தனக்கு நிகராகத் தென்றிசை சென்றிருக்க விடுத்தமை முதலியவற்றால் அறியப்படும் . ` நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை ` என்றது , ` உயிர்கட்குப் போகம் அமைதல் வேண்டிப் போக வடிவம் கொண்டு போகிபோல நிற்கும் அவ்வளவே யன்றி , உண்மையில் போகியல்லன் ` என்றவாறு . மீயச்சூர் , சோழ நாட்டுத் தலம் . நிறை - திண்மை . சிவபிரான் , இமயமலையில் உமையம்மை செய்த தவத்தை அளக்கச்சென்ற வரலாற்றினைக் கந்தபுராணத்துட் காண்க .

பண் :

பாடல் எண் : 4

தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்
சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

தூயனாய்ப் பவளத்தின் ஒளியை உடையவனாய் , எல்லா உயிர்களுக்கும் துணையாக நின்ற தாயாய்த் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய் , எல்லாருக்கும் நன்மை செய்பவனாய்ச் சந்தோக சாமம் ஓதுபவனாய் , மந்திரங்களை எண்ணுபவர் மனத்து உறைபவனாய்த் திருவைந்தெழுத்தின் பயனைத் தெளியாது ஐயுற்று ஓதுபவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .

குறிப்புரை :

தாயான் - தாய் போன்றவன் . வேதத்துள் இசையின்றி இயற்றமிழ்போலச் சொல்லப்படுவன ` இருக்கு ` எனவும் , இசைத் தமிழ்போல இசையோடு சொல்லப்படுவன ` சாமம் ` எனவும் சொல்லப்படும் . அவற்றுள் சாமங்கள் , ` இரதந்திரம் , பிருகத்து , வைரூபம் , வைராசம் ` முதலாகச் சொல்லப்படுகின்றன . அவற்றுள் ` சந்தோக சாமம் ` என்பது ஒன்றுபோலும் . மந்திரிப்பார் - மந்திரங்களை எண்ணுபவர் . ` வஞ்சனையால் ` என்றது , ` பயனுடைத்தாதலைத் தெளியமாட்டாது ஐயுற்று ` என்றவாறு . சேயான் - சேய்மையில் ( தொலைவில் ) உள்ளவன் .

பண் :

பாடல் எண் : 5

நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த
நஞ்சமுது செய்தானை அமுத முண்ட
மற்றமரர் உலந்தாலும் உலவா தானை
வருகாலஞ் செல்காலம் வந்த காலம்
உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா
ஒருசுடரை இருவிசும்பி னூர்மூன் றொன்றச்
செற்றவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

ஞானத்தின் பொருட்டுச் செய்யப்படும் தவத்திற்குப் பயன் அளிக்கும் பெரியவனாய் , தீங்கு செய்வதாய் வந்த விடத்தை அமுதாக உண்டவனாய் , அமுதமுண்ட தேவர்கள் இறந்தாலும் தான் இறவாதவனாய் , முக்காலப் பொருள்களை உணரும் ஞானிகளும் உணரமுடியாத ஒப்பற்ற ஞானப்பிரகாசனாய் , வானத்தின் உலவிய மதில்கள் மூன்றையும் ஒரு சேர அழித்தவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர் .

குறிப்புரை :

நற்றவம் , ஞானத்தின் பொருட்டுச் செய்யப்படும் தவம் ; ஞான சாதனம் . ` இது நிட்காமிய அறமே ` என்பர் . ஆயினும் , சிவபிரானை நோக்கிச் செய்யும் அறமே உண்மையில் ஞான சாதனமாதல்பற்றி , ` நற்றவத்தின் நல்லான் ` என்றருளிச் செய்தார் . ` நற்றவத்தினுள் நற்றவமாய் நிற்பவன் ` என்பது பொருள் . ` மற்று ` என்பது வினைமாற்றாய் , ` உலவாது நிலைபெறுத்தும் அமுதத்தை உண்ட அமரர் நிலைபெறாது உலந்தாலும் ` என்னும் பொருள் தோற்று வித்தது . உலந்தாலும் - அழிந்தாலும் . ` வருகாலம் , செல்காலம் ` என்பன முறையே எதிர்கால நிகழ்கால வினைத் தொகைகள் . ` அத்தை `, ` அதனை ` என்பதன் மரூஉ ; ` வத்து ` என்பதில் உகரம் தொகுத்தலாய் நின்றது எனலுமாம் . ` உற்றவற்றை ` என்பதே பாடம் என்றலும் ஒன்று . எவ்வாறாயினும் , ` முக்காலத்தும் உற்ற பொருளை ` என்பதே பொருள் . உம்மை ; சிறப்பு . முக்காலமும் உணர்தல் யோகத்தாற் கூடும் . இறைவனை உணர்தல் அவன் அருளே கண்ணாகக் காணும் ஞானத்தாலன்றிக் கூடாமையின் , முக்காலமும் உணர்ந்தார்க்கும் இறைவன் உணரலாகாதவனாயினான் என்க .

பண் :

பாடல் எண் : 6

மைவான மிடற்றானை அவ்வான் மின்போல்
வளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்
பெய்வானைப் பிச்சாட லாடு வானைப்
பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்
பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப்
பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை
செய்வானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

கரிய மேகம் போன்ற நீலகண்டனாய் , வானத்து மின்னல்போலச் சடையில் ஒளிவீசும் பிறை அணிந்தவனாய் , எங்கும் மழையாய் அருளைப் பொழிவானாய் , எங்கும் சென்று பிச்சை எடுப்பானாய்ப் பள்ளம் போன்ற வாயை உடைய பேய்க் கூட்டங்கள் ஆரவாரிக்க நிறைந்த தூணியிலிருந்து அம்பைச் செலுத்துபவனாய்ப் பொய்கலவாத மெய்யனாய்ப் பூமியிலும் மேலுலகங்களிலும் பொருந்தும் வாழ்க்கையில் உயிர்களைப் பிறக்கச் செய்வானாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .

குறிப்புரை :

மை வான மிடறு - கரிய மேகம்போலுங் கண்டம் . ` அம் மேகத்தில் தோன்றுகின்ற மின்னல்போல வளர்ந்த சடை ` என்க . மழையாய் - மழை பெய்யும் மேகமாய் நின்று . பிச்சாடல் - பித்தாடல் ; துன்பமின்றி இன்பத்தோடே நின்று ஆடுதல் . ` பிச்சை ஏற்றலை எங்கும் செய்வானை ` என்றலுமாம் . பில வாய் - பிலம் ( பள்ளம் ) போன்ற வாய் . பொய்வான் - குத்திப் பறிப்பான் . பொய்த்தல் - பறித்தல் ; இது , ` புய்த்தல் ` என்பதன் மரூஉ ; இஃது இக்காலத்தில் , ` பிய்த்தல் ` என்றாயிற்று . ` பொய்ப்பான் ` எனற்பாலது எதுகைநோக்கி , ` பொய்வான் ` எனப்பட்டது . மண்டலம் - மேலுலகங்கள் . ` பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை செய்வான் ` என்றது , ` உயிர்களை அன்ன பிறப்புக்களிற் செலுத்துவான் ` என்றதாம் .

பண் :

பாடல் எண் : 7

மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை
வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்
புக்கானை எப்பொருட்கும் பொதுவா னானைப்
பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்
தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்
தத்துவனைத் தடவரையை நடுவு செய்த
திக்கானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

எல்லோருக்கும் மேலானவனாய்க் குறையிரந்து வருபவர்களை விரும்பிக் குறைமுடிப்பவனாய் , அறுவகை வைதிக சமயங்களாகவும் ஆகியவனாய் , எல்லாப் பொருள்களுக்கும் பொதுவானவனாய்த் தேவர்களும் போற்றத்தக்கானாய்த் தன்னைத் தவிர வேறு மெய்ப்பொருள் இல்லாதவனாய் , மேருமலையை நடுவாக வைத்துத் திசைகளைப் பகுக்கச் செய்தவனாய் , உள்ள திருவீழி மிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .

குறிப்புரை :

மிக்கான் - மேமேலான் . குறைந்து - குறையுற்று ; குறையிரந்து . ` அடைந்தாரை ` என இரண்டாவது விரிக்க . மேவலான் - விரும்புதல் உடையவன் ; இது , ` மேவல் ` என்பது அடியாக வந்த பெயர் . இருமூன்று சமயம் , ஆறுசமயங்கள் , சமயங்களை ஆறாகக் கூறுதல் தொன்றுதொட்ட வழக்கு . ஆயினும் அவை இவை என்பதனை வேறுவேறாகக் கூறுவர் . ` சைவம் , வைணவம் , காணாபத்தியம் , கௌமாரம் , சாத்தேயம் , சௌரம் ` என்றல் ஒருவகை ; இவை வேதத்திற் சொல்லப் பட்டு அவரவரால் வழிபடப்படும் கடவுளரைப் பற்றிக் கூறப்படுவன . ` வைரவம் , வாமம் , காளாமுகம் , மாவிரதம் , பாசுபதம் , சைவம் ` இவை உட்சமயங்கள் என்றும் , ` உலகாயதம் , புத்தம் , சமணம் , மீமாஞ்சை , பாஞ்சராத்திரம் , பட்டாசாரியம் ` இவை புறச் சமயங்கள் என்றும் கூறுதல் ஒருவகை ( பிங்கல நிகண்டு ). இவை பழைமை புதுமை பற்றிக் கூறப்படுவன . இவையெல்லாம் இன்றி , ` புறப்புறம் , புறம் , அகப்புறம் , அகம் ` என நால்வகைப்படுத்து ஒவ்வொன்றனுள்ளும் அவ்வாறு சமயங்கள் சிவஞானமாபாடியத்துட் கூறப்பட்டன . எவ்வாறாயினும் , சமயங்கள் ஆறு எனவே யாண்டும் கூறப்படுதல் அறிக . ` பொருளுக்கு ` ` பொருள்களுள் ` என வேற்றுமை மயக்கம் . தக்கான் - மேலானவன் . தத்துவன் - உண்மை இயல்புடையவன் . ` தடவரை ` என்றது , மேரு மலையை ; அதனை நடுவாக வைத்தே நிலத்துத் திசைகள் பகுக்கப்படுதலின் . ` தடவரையை நடுவுசெய்த திக்கான் ` என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 8

வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை
ஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்
உயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற
கானவனைக் கயிலாயம் மேவி னானைக்
கங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்
தேனவனைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

இந்திரனுடைய தோள்களை நீக்கிய வலிமை உடையவனாய் , வளைகுளம் மறைக்காடு என்ற தலங்களில் உறைபவனாய் , உடலாகவும் உயிராகவும் இருப்பவனாய் , ஒரு காலத்தில் அருச்சுனனுடைய தவத்தின் உறுதி நிலையை அறியச் சென்ற வேடுவனாய்க் கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்த் தன்னைச் சேர்ந்தவர்களுக்குத் தேன் போல இனியவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர் .

குறிப்புரை :

வானவர் கோன் தோள் இறுத்தது மேலே ( ப .31 பா .2) காட்டப்பட்டது . வளைகுளம் , வைப்புத்தலம் . இஃது ஐயடிகள் காடவர் கோன் நாயனார் திருவெண்பாப் பெற்றது . கானவன் - வேடன் . தேனவன் - தேன்போல இனியவன் .

பண் :

பாடல் எண் : 9

பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப்
பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்து ளானை
மாருதமால் எரிமூன்றும் வாய்அம் பீர்க்காஞ்
சரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த
தபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்
சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

மாயைக்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளவனாய் , மாயைக்கு இப்பால் அளவற்ற வடிவங்களும் உடையவனாய் , ஆன்மாக்களுக்குத் தலைவனாய் , அடியவர்களுக்கு முத்தி நிலையைக் காட்டும் மேம்பட்டவனாய்த் தன்னை வணங்குபவர் மனத்து இருப்பவனாய் , வாயுதேவன் திருமால் அக்கினி தேவன் இம்மூவரையும் முறையே அம்பின் சிறகாகவும் அம்பாகவும் அம்பின் கூரிய நுனியாகவும் கொண்டவனாய் , அந்த அம்பையும் பயன் படுத்தாது விடுத்த தவச்செல்வனாய்த் தாருகவனத்து முனிவர் விடுத்த வெண்தலையைச் சடைமுடியில் அணிந்தவனாய்த் திருவீழிமிழலையில் உள்ள பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர் .

குறிப்புரை :

பரத்தான் - மேல் நிலையில் உள்ளவன் ; இது மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கும் நிலை . ` இப்பக்கம் ` என்றது , மாயைக்கு உள்ளாய் நிற்கும் நிலையை . பலவாவன , அளவற்ற நிலைகளும் வடிவங்களும் . வரத்தான் - மேலானவன் . பசுபதி - உயிர்கட்குத் தலைவன் . மாருதம் - வாயுதேவன் . மால் - திருமால் . எரி - அக்கினி தேவன் ; ` இவர் மூவரும் முறையே அம்பின் சிறகும் , அம்பும் , அதன் கூர்மையுமாக நின்றனர் ` என்பதை , ` வாய் அம்பு ஈர்க்கு ` என்பதில் எதிர் நிரனிரையாய்க் கொள்க . திணைவிராய் எண்ணியவற்றைப் பன்மைபற்றி , ` மூன்றும் ` என அஃறிணையான் முடித்தருளி னார் . சரம் - அம்பு . சரத்தையும் தாட்கீழ் ( காலின்கீழ் ) இட்டது , அதற்குச் செயல் இல்லாது , சிரித்தெரித்தமையால் . தபோதனன் - தவமாகிய செல்வத்தை யுடையவன் ; என்றது , தவத்தை ஏற்றுப் பயன்தருதல் பற்றி . ` வைத்த ` என்னும் எச்சம் , ` தனன் ` என்பதன் இறுதிநிலையோடு முடியும் . தாருகவனத்து முனிவர்கள் விடுத்த வெண்டலையைச் சிவபிரான் தன் சடையில் அணிந்துகொண்ட வரலாற்றினைக் கந்தபுராண த்துள் ததீசி உத்தரப் படலத்திற் காண்க .

பண் :

பாடல் எண் : 10

அறுத்தானை அயன்தலைகள் அஞ்சி லொன்றை
அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை
இந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்
பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப்
பரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்
செறித்தானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

பொழிப்புரை :

பிரமனுடைய ஐந்தலைகளுள் ஒன்றனை அறுத்தானாய் , அஞ்சாமல் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் தோள்களை முரித்து அவன் இசைத்த நரம்பின் ஒலியைக் கேட்டவனாய்த் தக்கன் வேள்வியில் சந்திரனைக் காலால் தேய்த்தவனாய் , சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்தவனாய்ப் பகீரதனுக்காகவும் தேவர்கள் வேண்டியதற்காகவும் பரவலாக இறங்கிவந்த கங்கையைப் பனித்துளி போலத் தன் சடையில் அடக்கியவனாய் , உள்ள திருவீழிமிழலைப் பெருமானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர் .

குறிப்புரை :

` ஒன்றை அறுத்தானை ` எனக் கூட்டுக . இறுத்தான் - முறித்தான் . இசை , அவன் ( இராவணன் ) பாடியது . இந்து - சந்திரன் . இரவி - சூரியன் . சந்திர சூரியரை ஒறுத்தது தக்கன் வேள்வியில் . ` கங்கைப் புனல் ` என மாற்றிக்கொள்க . ` பனி போல் ` என்றது . ` புல் நுனிமேற் பனித்துளிபோல ` என்றபடி . ஆங்கு - அப்பொழுதே . ` பனி போலாக ` என்பதும் பாடம் . செறித்தான் - அடக்கினான் . ` பகீரதற்காகவும் , வானோர் வேண்டவும் ` என எண்ணுப் பொருளாகக் கொள்க . சிவபிரான் கங்கையைச் சடையில் அடக்கியதற்கு , இவ்விரு காரணங்களும் புராணங்களுட் பெறப்படுகின்றன . அவற்றுட் பகீரதற்காக நிகழ்ந்தது மேலே ( ப .34. பா .10.) குறித்தாம் . வானோர் வேண்ட அடக்கியது , ` உமையம்மை விளையாட்டால் சிவபிரானது கண்களைப் பொத்திய ஞான்று உலகில் மூடிய இருளை நீக்குதற்கு அப்பெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்தபொழுது அம்மை அஞ்சி பெயர்த்துக் கைகளை வாங்கி விதிர்க்க , அக் கைகளின் விரல்கள் பத்தினும் பத்துக் கங்கைகள் தோன்றிப் பெருகி உலகை அழிக்கத் தொடங்குதலும் , அதனையறிந்து அஞ்சிய வானோர் வந்து வேண்டிக்கொண்டமையின் , சிவபிரான் அவைகள் அனைத்தையும் ஒன்றாக்கி வருவித்துச் சடையில் ஏற்றனன் என்பது . இத் திருத்தாண்டகம் , சிவபிரானது எல்லாம்வல்ல தன்மையை எடுத்தோதி , ` அவனை அடையாதார்க்கு உய்யும் நெறி வேறு உண்டாவதில்லை ` என அறிவுறுத்தருளியதாதல் அறிக .

பண் :

பாடல் எண் : 1

கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்
கந்தமா தனத்துளார் காளத்தி யார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
வக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபா லமும்
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

திருமாலுக்குச் சக்கரம் ஈந்த பெருமானார் , கூரிய நுனியினை உடைய சூலமும் மண்டையோடும் விளங்கும் திருக்கைகளை உடையவராய் , காளையை இவர்ந்து வெயில்போல ஒளி வீசும் நீற்றினைப் பூசிக் கயிலை மலை , நாகை குடந்தைக் காரோணங்கள் , கந்தமாதனம் , காளத்தி , மயிலாடுதுறை , உஞ்சைனி இரும்பை அம்பர் மாகாளங்கள் , வக்கரை இவற்றில் தங்கித் திருவீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

கந்தமாதனமலை , மாகாளம் வைப்புத் தலங்கள் . மயிலாடுதுறை , சோழ நாட்டில் உள்ளது . வக்கரை , தொண்டைநாட்டுத் தலம் . அயில் வாய - கூர்மையான வாயினை உடைய . கபாலம் , ` காபாலம் ; என முதல் நீண்டது . வெயிலாய - வெயில் போன்ற ; நண்பகல் வெயில் வெண்ணிறமாதல் காண்க . ` திருக்கயிலை முதலிய இடங்களில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , திருவீழிமிழலையைச் சிறந்த இடமாகக்கொண்டு விளங்குகின்றார் ` என முடிவு செய்க . இவ்வாறு அருளிச்செய்தது , அங்குத் தமக்கும் , ஞானசம்பந்தருக்கும் , இருவரோடும் வந்த இருபெருந் திருக்கூட்டத்தார்க்கும் எளிவந்து இனிது அருள் புரிந்த பெருங்கருணைத் திறம் நோக்கி யென்க .

பண் :

பாடல் எண் : 2

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசரம் மேவினார் கேதா ரத்தார்
கெடில வடஅதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
மழபாடி மேய மழுவா ளனார்
வேதிகுடி யுள்ளார் மீயச் சூரார்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

கெடிலக்கரையிலுள்ள அதிகை வீரத்தானப் பெருமான் பெருந்துயரைத் தீர்த்து என்னை வாழச் செய்தவராய்ப் பொன்னார் மேனியில் நீறு பூசி , பூணூல் தரித்து , கோபம் மிக்க பாம்பினை அணிந்து , காதில் வெண்குழையை இட்டு , எல்லோருக்கும் நன்மை செய்பவராய் , கேதீச்சரம் , கேதாரம் , மழு ஏந்தும் மழபாடி , வேதிகுடி , மீயச்சூர் , இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

` பூண் ` என்பது , அகரம் பெற்று , ` பூணநூலர் ` என நின்றது . ` கேதீச்சரம் ` என்பது குறுகிநின்றது ; இத் தலம் ஈழநாட்டில் ( இலங்கையில் ) உள்ளது . திருக்கெடில வடவீரட்டானம் சுவாமிகளை ஆட்கொண்ட தலமாதலை நினைக . மழபாடி , வேதிகுடி சோழநாட்டுத் தலங்கள் ; ` மழபாடி மேய மணவாளனார் ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 3

அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்
அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணா ழிகையார் உமையா ளோடும்
இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை
மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

இமையோர் பெருமானார் உமையாளோடும் தேவர்கள் எல்லோரும் விரும்பித் துதிக்க அண்ணாமலை , ஆரூர் , அளப்பூர் , அந்தணர்கள் மிக்க வைகல் , மாடக் கோயிலின் மூலத் தானம் , ஒற்றியூர் , பெண்ணாகடத்துத் தூங்கானை மாடம் , ஏமகூடம் , பேராவூர் இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்து அடைந்தார் .

குறிப்புரை :

` ஆவூருள்ளார் ` என்பதும் பாடம் . அளப்பூர் , கூடம் ( ஏமகூட மலை ), பேராவூர் இவை வைப்புத் தலங்கள் . மாடக்கோயில் சோழ நாட்டில் , ` வைகல் ` என்னும் தலத்துடன் சேர்த்து , ` வைகல் மாடக்கோயில் ` என , ஆளுடையபிள்ளையாரால் பாடப்பெற்றது . உண்ணாழிகை - மூலத்தானம் . ` மாடக்கோயிலின் உண்ணாழிகையார் ` என்க .

பண் :

பாடல் எண் : 4

வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்
பராய்த்துறையார்சிராப்பள்ளி யுள்ளார் பண்டோர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
யுரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

வேதம் ஓதும் நாவினராய் , முன்பு வெண்கோட்டுக் கருங்களிறு ஒன்றை அது பேரொலி செய்யுமாறு பற்றி அதன் தோலை உரித்துப் போர்த்திய கோபமுற்ற வடிவினைப் பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவி அஞ்சுமாறு காட்டி , வெண்காடு , செங்காட்டங்குடி , வெண்ணி , வேட்களம் , வண்டுகள் பண்பாடும் பழனம் , பராய்த்துறை , சிராப்பள்ளி இவற்றில் தங்கிய பெருமான் திருவீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

வண்டு ஆர் - வண்டுகள் ஒலிக்கின்ற . விடலை - காளை . விடலை வேடம் - வீரக்கோலம் . ` விண் காட்டும் பிறை ` என இயையும் . ` இறைவன் , யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து நின்ற உக்கிரக் கோலத்தைக் கண்டு இறைவி அஞ்சினாள் ` எனப் புராணம் கூறும் .

பண் :

பாடல் எண் : 5

புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சிமேற்
றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்
கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

தம்மைச் சுற்றிப் பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே கூத்து நிகழ்த்தும் பெருமான் , புலித்தோலை உடுத்துக் கச்சிமேற்றளி , குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பம் , கழுமலம் இவற்றில் வீடுகள் தோறும் பிச்சைக்கு உலவும் , முழு எலும்புக் கூட்டைத் தோளில் அணிந்த , வடிவத்தாராய் , மலர் மாலையை அணிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் காளை வடிவம் எழுதப்பட்ட கொடியோடும் செல்வம் மிகும் வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

உடை சூழ்ந்த - உடையாகச் சூழ்ந்த . கலி - ஒலி . கடைசூழ்ந்து - வாயில்கள்தோறும் சென்று . கழுமலம் - சீகாழி . செழு மலர்த் தார்க் குழலி - செழித்த மலர் மாலைகளை அணிந்த கூந்தல் உடையவள் . ` குழலியோடு ` என்னும் மூன்றனுருபு , ` கொடியார் ` என்னும் வினைக்குறிப்பொடு முடிந்தது . உம்மை , சிறப்பு .

பண் :

பாடல் எண் : 6

பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழிய்யார்
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளார் ஏரார்
இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான் , அவ்வூர் மூலத்தானம் , அரதைப்பெரும்பாழி , இரும்புதல் , இரும்பூளை , இன்னம்பர் , ஈங்கோய்மலை , கருகாவூர் , கருப்பறியலூர் , கரவீரம் என்ற இடங்களில் தங்கித் தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு வீழிமிழலையையே விரும்பி அடைந்தார் .

குறிப்புரை :

பெரும்புலியூர் , இரும்பூளை , இன்னம்பர் , ஈங்கோய் மலை , கருகாவூர் , கருப்பறியலூர் . கரவீரம் இவை சோழநாட்டுத் தலங்கள் . பெரும்பற்றப்புலியூர் - தில்லை . பெரும்பாழி , திரு அரதைப் பெரும்பாழி : இதுவும் சோழ நாட்டுத் தலமே . இரும் புதல் ஆர் - பெரிய புதர்கள் நிறைந்த . ` கரும்பனையாள் ` என்பதே திருக்கருகாவூர் அம்மையின் பெயராய் வழங்கும் .

பண் :

பாடல் எண் : 7

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லிய்யார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகண் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

பழையனூர் ஆலங்காட்டுப் பெருமானார் மண்டை ஓட்டினை ஏந்திப் பறையைப்போல குழிந்த விழிகளை உடைய பேய்கள் பல சூழ , நீலகண்டராய் , மார்க்கண்டேயனுக்குத் துன்பம் தரவந்த காலன் அழியுமாறு அவனை ஒறுத்து , மறைக்காடு , வலிவலம் , வாய்மூர் , வாழ்கொளிபுத்தூர் , உஞ்சேனி இரும்பை அம்பர் மாகாளங்கள் , கற்குடி , விற்குடி , கானப்பேர் இவற்றில் தங்கி வீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

மறைக்காடு ( வேதாரணியம் ), வலிவலம் , வாய்மூர் , வாழ்கொளிபுத்தூர் , கற்குடி , விற்குடி இவை சோழ நாட்டுத் தலங்கள் . ` வாள்கொளிபுத்தூர் ` எனவும் பாடம் ஓதுப . கானப் பேர் , பாண்டி நாட்டுத்தலம் . பழையனூர் ஆலங்காடு , தொண்டை நாட்டுத் தலம் . மாகாளம் , வைப்புத் தலம் . பறைக்காட்டும் - பறைபோலத் தோன்றும் . மிறை - துன்பம் . ` கறைக்காட்டும் ` முதலியவற்றில் ககரம் , விரித்தல் . விழி கண் வினைத்தொகை .

பண் :

பாடல் எண் : 8

அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர்
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து என்னை மீட்டவராய் , அஞ்சைக்களம் , ஐயாறு , ஆரூர் , பேரூர் , அழுந்தூர் , தஞ்சைத் தளிக்குளம் , தக்களூர் , சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி , நாகேச்சரம் , நாரையூர் இவற்றில் தங்கி , வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

அஞ்சைக்களம் , மலைநாட்டுத் தலம் . ஐயாறு , ஆரூர் . அழுந்தூர் , நாகேச்சரம் , நாரையூர் இவை சோழநாட்டுத் தலங்கள் . சாந்தை , சாத்தமங்கை என்பதன் மரூஉ ; இதுவும் சோழ நாட்டுத் தலம் ; இங்குள்ள திருக்கோயிலின் பெயரே ` அயவந்தி ` என்பது . பேரூர் , தஞ்சைத் தளிக்குளம் , தக்களூர் இவை வைப்புத் தலங்கள் . வெஞ்சொல் - பயனால் கொடியவாகின்ற சொற்கள் .

பண் :

பாடல் எண் : 9

கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்
கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்
தண்டலையார் தலையாலங் காட்டி லுள்ளார்
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர்
வலஞ்சுழியார் வைகலின்மேல் மாடத் துள்ளார்
வெண்டலைகைக் கொண்ட விகிர்த வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திய , உலகத்தார் கொள்ளும் வேடங்களிலிருந்து வேறுபட்ட வேடத்தை உடைய பெருமானார் , கொண்டல் , கொண்டீச்சரம் , கோவலூர் வீரட்டம் , சோலைகள் சூழ்ந்த தலையாலங்காடு , தலைச்சங்காடு , காவிரி வண்டலொடு மணலைக் கரையில் சேர்க்கும் திருவலஞ்சுழி , வைகல் மாடக்கோயில் ஆகிய தலங்களில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

கொண்டீச்சரம் , தண்டலை ( தண்டலை நீணெறி ), தலையாலங்காடு , வலஞ்சுழி இவை சோழநாட்டுத் தலங்கள் . தலைச் சங்கை - தலைச்சங்காடு ; வைகல் மேல்மாடம் - வைகல் மாடக் கோயில் , இவைகளும் சோழநாட்டுத் தலங்கள் . கோவலூர் வீரட்டம் , நடுநாட்டுத் தலம் . கொண்டல் வைப்புத் தலம் , ` வெண்டலை மான் கைக்கொண்ட ` என்பதும் பாடம் . விகிர்த வேடர் - உலகத்தார் கொள்ளும் வேடங்களின் வேறுபட்ட வேடத்தை உடையவர் .

பண் :

பாடல் எண் : 10

அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்
அரிபிரமர் இந்திரர்க்கும் அரிய ரானார்
புரிச்சந்தி ரத்துள்ளார் போகத் துள்ளார்
பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி
எரிச்சந்தி வேட்கு மிடத்தார் ஏம
கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

திருமால் பிரமன் , இந்திரன் என்பவர்களுக்குக் காண்டற்கு அரியராய் உள்ளாராய் , உலகவர் நுகரும் எல்லா இன்பங்களிலும் கலந்திருப்பாராய் , இமவான் மகளாகிய பார்வதியிடத்து விருப்பமுடையவராய் , மூன்று சந்திகளிலும் தீயை ஓம்பும் வேள்விச் சாலைகளில் உகந்திருப்பவராய் , தாம் சூடிய மாலைகளில் வண்டுகள் பாட ஏழிசையும் பொருந்திய பண்களைப் பாடுபவராய் , உள்ளங் கையை விரித்து அதன்கண் அனலைஏந்தி ஆடும் வேடம் உடையவராய்ச் சிவபெருமான் , அரிச்சந்திரம் , அம்பர்மாகாளம் , புரிச்சந்திரம் , ஏமகூடம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

குறிப்புரை :

அம்பர் - அம்பர்ப் பெருங்கோயில் , அம்பர் மாகாளம் இரண்டுங் கொள்க . இவை சோழநாட்டுத் தலங்கள் . புரிச் சந்திரம் - சந்திரபுரம் ; பிறையனூர் ; இதுவும் , அரிச்சந்திரமும் , ஏமகூடமும் வைப்புத் தலங்கள் . போகத்து உள்ளார் - உலக இன்பத்திலும் உள்ளவர் . ` சந்தி எரிவேட்கும் இடம் ` என மாறுக ; ` வேள்விச் சாலைகள் ` என்பது பொருள் ; ` எரிச்சந்தி ` என்பதில் சகரம் விரித்தல் . ` எரிச்சந்திரவேட்கும் ` என்பது பிழைபட்ட பாடம் . ` தேன் பாட ` என மாற்றி , ` கொன்றை முதலிய மாலைகளில் வண்டுகள் பாட ` என்றுரைக்க . இசை ஆர் கீதர் - ஏழிசையும் பொருந்திய பண்களை யுடையவராய் இருப்பவர் ; ` இசை` என்றதனை , வண்டின் இசை என்றாயினும் , வீணையின் இசை என்றாயினும் கொள்க . ` விரித்து அங்கை ` என்பது ` விரிச்சு அங்கை ` என மரூஉவாய் நின்றது ; போலி எனலுமாம் . ` இசையார் தீதா - விரிச்சங்கை எரிக்கொண்டு ` எனவும் பாடம் ஓதுவர் . ` எரிக்கொண்டு ` என்பதில் ககரம் விரித்தல் .

பண் :

பாடல் எண் : 11

புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்
தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்
வீழி மிழலையே மேவி னாரே.

பொழிப்புரை :

ஒளிவீசும் சடைமுடி உடையவராய் , காளையை வாகனமாக உடையவராய் , வலிமை மிக்க தன் ஆற்றலை நினைத்துக் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய மலைகளை ஒத்த தலைகளையும் தோள்களையும் தாள்களையும் பொற்கழலணிந்த தம் திருவடியின் ஒரு விரலை ஊன்றி மலையின் கீழ் நொறுங்குமாறு செய்து பின் அவனுக்கு அருள் செய்த உலக நாயகர் , புன்கூர் , புறம் பயம் , புத்தூர் , பூவணம் , புலிவலம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விருப்புற்று வந்தடைந்தார் .

குறிப்புரை :

புன்கூர் , புறம்பயம் சோழநாட்டுத் தலங்கள் , புத்தூர் , பூவணம் பாண்டிநாட்டுத் தலங்கள் . புலிவலம் , வைப்புத் தலம் . கூர்மை - மிகுதி ; இது வலிமை மிகுதியைக் குறித்தது . ` தோளும் தாளும் ` என மாற்றிப் பொருள் கொள்க ; ` அவ்வாறு ஓதப்படுவதே பாடம் ` என்றலுமாம் . ` அடிக்கண் உள்ள ஓர் விரலால் ` என்க . புவன நாதர் - உலக முழுவதற்கும் தலைவர் . பாகர் - செலுத்துவோர் ; முதல்வர் .

பண் :

பாடல் எண் : 1

கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்
கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் திறலா னான்காண்
பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்
வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

திருமாலால் விண்ணுலகிலிருந்து கொண்டு வந்து நிறுவப்பெற்ற விமானத்தை உடைய குளிர்ந்த வீழிமிழலையில் உள்ள பெருமான் , கண்ணாய் கண்ணினது ஒளிசேர்தலால் உண்டாகும் காணுதல் தொழிலாய்ப் பாட்டின்கண் உள்ள இசையாகிய இலக்கியத்தில் வைத்துக் காட்டப்படுகின்ற பண்ணாய் , அப்பண்களின் உட்பிரிவுகளாய்ப் பழமாய்ச் சுவையாய்ப் பயன்தருகின்றவனாய் , மண் , நீர் , தீ எல்லாவற்றையும் அசைக்கும் காற்று , நீர் உட்கொண்ட மேகம் சேரும் வானம் என்ற ஐம்பூதங்களாய் , தேவர்களுக்கு மேம்பட்டவனாய் உள்ளான் .

குறிப்புரை :

` கண்ணவன் ` முதலியவற்றில் அகரம் , சாரியை , இறைவன் உயிர்களோடும் உலகத்தோடும் பொருந்தி நிற்கும் நிலையில் , கலப்பினால் அப்பொருள்களேயாகியும் , தன் தன்மையால் தானேயாகியும் , அவைகளை உடன்நின்று இயக்கும் முறையால் அவைகளும் தானுமாகியும் நிற்பன் . இந்நிலைகள் முறையே ` ஒன்றாய் ( அபேதமாய் ), வேறாய் ( பேதமாய் ), உடனாய் ( பேதா பேதமாய் ) நிற்றல் ` எனக் கூறப்படும் . இங்ஙனம் , ` பேதம் , அபேதம் , பேதாபேதம் ` என்னும் மூன்று நிலையும் தோன்ற , அம்மூன்றற்கும் பொதுவாய்ப் பொருந்தி நிற்கும் நிலையே , ` அத்வைத சம்பந்தம் ` எனப்படுகின்றது . ` பிரமப் பொருள் ஒன்றே ; அஃது அத்விதீயம் ` என்னும் உபநிடத வாக்கியத்திற்கும் இதுவே பொருளாகும் . இதுபற்றி வேறுவேறு கூறுவார் கூறுவனவெல்லாம் பொருந்தாமையை ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் , தமது அரிய சிவஞானபோத நூலாலும் , அருணந்தி தேவ நாயனார் முதலிய அருள்மாணாக்கர்களுக்குச் செய்த உபதேசத்தாலும் இனிது விளங்கச்செய்தார் . அதனால் , அம்முதல்நூலின் பாடியத்தாலும் , வழிநூல் சார்பு நூல்களாலும் மேற்குறித்த பொருள் யாவரும் அறிய இனிது விளங்கித் திகழ்கின்றது . அவ்விளக்கங்களை உணர வேண்டுவார் , அந்நூல்களிலும் , பாடியத்திலும் பரக்கக் கண்டு கொள்க . இவ்வத்துவித நிலையில் , இறைவன் கலப்பினால் உலகமேயாய் நிற்கும் அபேதநிலையே , முதற்கண் உலகத்தை நிலைபெறுவித்தற்கு இன்றியமையாததாதல்பற்றி அதனையே அருளாசிரியர்கள் பெரும்பான்மையாகப் பலவிடங்களில் அருளிச் செய்வர் ; அவ்வாறு வருவது இத்திருப்பதிகம் ஆதலின் , ` கண்ணவன் காண் ` என்பது முதலியவற்றிற்கு , ` கண்ணாகி உள்ளவன் ` என்பதுமுதலியனபோலப் பொருள் கொள்க . இதற்கு முன்னும் பின்னும் இவ்வாறு பல திருப்பதிகங்கள் இருத்தலையும் அறிந்து கொள்க . கண் ஒளிசேர் காட்சி - கண்ணினது ஒளி சேர்தலால் உண்டாகும் காணுதற் றொழில் . கந்திருவம் - இசையிலக்கண நூல் . பாட்டு இசையில் காட்டுகின்ற - ( அந்நூல் ) பாட்டின்கண் உள்ள இசையாகிய இலக்கியத்தில் வைத்துத் தெரிவிக்கின்ற . திறல் - திறம் ; இசை , ` பண் , திறம் , திறத்திறம் ` என மூவகைப் படுதலின் , திறத்தையும் திறத்திறத்தையும் , ` திறல் ` என்றருளினார் . ` திறமானான் என்பதே பாடம் ` எனினும் அமையும் . பயக்கின்றான் - பயன் தருகின்றான் . மாருதன் - காற்றாய் உள்ளவன் . திருவீழிமிழலைக் கோயிலின் விமானம் , திருமாலால் விண்ணுலகத்திலிருந்து கொணர்ந்து நிறுவப் பட்டதாகலின் , ` விண் இழி தண் வீழிமிழலை ` என்றருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 2

ஆலைப் படுகரும்பின் சாறு போல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்ணிழி தண் வீழிமிழலையான் ஆலையினின்றும் ஒழுகுகின்ற கரும்பின் சாறு போலத் தித்திக்கும் திருவைந்தெழுத்தைத் தனக்குப் பெயராக உடையவனாய் , நற்பண்புடைய அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவனாய் , வானில் திரியும் மும் மதில்களையும் தீக்கு இரையாக்கிய வில்லை உடையவனாய் , பால் , தயிர் , நெய் இவற்றால் அபிடேகிக்கப்படுபவனாய் , பண்டரங்கக் கூத்தாடுபவனாய் , சாம்பலை உடல் முழுதும் பூசியவடிவினனாய்ப் பிச்சை எடுப்பவனாய் , கடல் விடம் உண்டதால் நீலகண்டனாய் உள்ளான் .

குறிப்புரை :

ஆலைப் படு - ஆலையினின்றும் ஒழுகுகின்ற . அண்ணிக்கும் - தித்திக்கும் . எரி படுத்த - தீயின்கண் படுவித்த ; ஏழாம் வேற்றுமைத் தொகைக்கண் சிறுபான்மை வல்லெழுத்து மிகாமையறிக . ` எரிப்படுத்த ` என்பதே பாடம் எனலுமாம் . நெய் பலவாகலின் , ` நறு நெய் ` என அடைகொடுத்து உணர்த்துப . அடையில் வழிச் சொல்லுவார் குறிப்பால் , குறித்த பொருள் விளங்கும் . பண்டரங்க வேடம் - பாண்டரங்கம் என்னும் கூத்திற்குரிய வேடம் . வேலை - கடல் .

பண் :

பாடல் எண் : 3

தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
சக்கரம்புட் பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபாலிகாண்
காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்
இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்ணிழிதண் வீழிமிழலையான் தண்மை வெம்மை என்ற இரு திறமும் உடையவனாய்த் திருமாலுக்குச் சக்கரத்தை அருளியவனாய் , மூன்று கண்களை உடையவனாய் , காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காமன் உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணனாய் , என் உள்ளத்தில் இருந்த சமண சமயப் பற்றினை நீக்கி என்னை ஆட்கொண்டவனாய் , பிரமன் திருமால் இருவருக்கும் தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கியவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு உள்ளான் .

குறிப்புரை :

` தண்மையும் வெம்மையும் தானே ஆயினான் ` என்றது , ` மாறுபட்ட பலவகை ஆற்றல்களும் தனது ஓர் ஆற்றலுள் அடங்க நிற்பவன் ` என்றருளியவாறு . புள் பாகன் - கருடனை ஊர்பவன் ; திருமால் . இது , திருமால் சிவபிரானை நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூக்கள் கொண்டு வழிபட்டு , இறுதியில் ஒரு நாள் தனது கண்ணையே ஒரு தாமரை மலராகச் சாத்திச் சக்கரம் பெற்ற தலமாதல் அறிக . இதனை , ` நீற்றினை நிறையப் பூசி ` ( தி .4. ப .64. பா .8.) என்னும் இத்தலத் திருநேரிசையுள் விளங்க அருளிச்செய்தார் . எண் இல் - பொருளுணர்வு இல்லாத .

பண் :

பாடல் எண் : 4

காதிசைந்த சங்கக் குழையி னான்காண்
கனக மலையனைய காட்சி யான்காண்
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்
வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்
ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
ஐந்தலைமா நாகம்நாண் ஆக்கி னான்காண்
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழி தண் வீழிமிழலையான் காதில் சங்கக் குழை அணிந்தவனாய்ப் பொன்மலைபோன்ற உருவத்தானாய்ப் பார்வதியின் மேம்பட்ட தவத்தைச் சோதித்தவனாய் , வலிய பன்றியின் வெள்ளிய கொம்பினை அணியாக அணிந்தவனாய் , எல்லாவற்றிற்கும் முற்பட்டவனாய் , அண்டங்களையும் கடந்து பரந்தவனாய் , ஐந்தலைப்பாம்பினைத் தன் வில்லுக்கு நாணாகக் கொண்டவனாய் , வேதம் ஓதுபவனாய் , வேத நெறியை உலகிற்கு உபதேசித்தவனாய் உள்ளான் .

குறிப்புரை :

கனகமலை - பொன்மலை . மாது - உமை ; அவள் தவத்தைச் சோதித்தமை முன்னுங் கூறப்பட்டது ( ப .50 பா .3). ஏனம் - பன்றி ; திருமால்கொண்ட வராக அவதாரம் . எயிறு - பல் ; கொம்பு . நாண் , அரைநாண் , வேதியன் - வேதத்தை ஓதுபவன் .

பண் :

பாடல் எண் : 5

நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
கையின்மழு வாளொடுமா னேந்தி னான்காண்
காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்
வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழி தண்வீழிமிழலையான் நெய் , பால் , இளநீர் இவற்றால் அபிடேகிக்கப்பட்டவனாய் , நித்திய கல்யாணனாகக் காட்சி வழங்குகின்றவனாய் , கைகளில் மழுவும் மானும் ஏந்தியவனாய்க் காலன் உயிரைத் தன் காலால் போக்கியவனாய்ச் சிவந்த அழகிய திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய்ச் செஞ்சடைமேல் வெண்பிறையைச் சேர்த்தியவனாய் , சூடான தீயில் கூத்தாடுபவனாய் உள்ளான் .

குறிப்புரை :

நித்த மணவாளன் - அழியாத மணக்கோலம் உடையவன் : ` நித்த மணாளர் நிரம்ப அழகியர் ` ( திருவாசகம் . அன்னைப் பத்து - 3) என்றருளியதுங் காண்க . இள நீராடுதலும் இங்கு அருளிச் செய்யப்பட்டது . ` நெருப்போடு விளையாடினான் ` என்பது நயம் .

பண் :

பாடல் எண் : 6

கண்துஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
வான்கங்கை சடைக்கரந்த மாதே வன்காண்
பண்தங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழிதண் வீழிமிழலையான் எப்பொழுதும் அறிதுயில் கொள்ளும் திருமால் தனக்குச் சக்கராயுதம் வேண்டுமென்று செந்தாமரை போன்ற தன் கண் ஒன்றனைக் குறைந்த மலராகக் கொண்டு அருச்சித்த அதனைக்கண்டு அவனுக்குச் சக்கரம் அருளியவனாய் , வண்டுகள் உண்ணும் தேனை உடைய கொன்றை , வன்னி , ஊமத்தை என்னும் இவற்றை ஆகாய கங்கையோடு சடையில் மறைத்த பெரியதேவனாய் , பண்போன்ற இனிய சொற்களை உடைய பார்வதி பாகனாய் , மேம்பட்டவனாய் , உயர்ந்த இடத்தில் இருப்பவனாய்ப் பிறையைப் பாம்போடு சடையில் வைத்தவனாய் , அடியார் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றான் .

குறிப்புரை :

கண் துஞ்சும் மால் - எப்பொழுதும் அறிதுயில் கொள்ளும் மாயோன் . மத்தம் - ஊமத்தை . பரமேட்டி ( பரம இஷ்டி ) மேலான வணக்கத்துக்கு உரியவன் .

பண் :

பாடல் எண் : 7

கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்
வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழிதண் வீழிமிழலையான் மலைபோல விளங்கிய தோள்களை உடைய சலந்தரன் என்ற அசுரனுடைய உடலைப்பிளந்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு வழங்கிய கருணையாளனாய் , வில் விளங்கும் தோளை உடைய அருச்சுனன் வலிமையைக் குறையச் செய்து வேடுவனாய் அவனோடு போர் செய்து தன் போர்த் திறமையைக் காட்டியவனாய் , மாயையின் மேம்பட்டதாகிய உயிரினும் மேம்பட்ட பொருளாய் இருக்கின்றவனாய்ச் சதாசிவனாய் , ஒப்பற்றவனாய் , பார்வதியைத் தானும் விரும்பி அவளால் விரும்பப்படுபவனாய் இருப்பவனாவான் .

குறிப்புரை :

கல் பொலி தோள் - மலைபோல விளங்கிய தோள் . பொருததும் விசயனோடேயாம் . காட்டியது , தனது போர்த்திறனை . தற்பரம் ( தத்பரம் ) - அதனின் மேம்பட்டது . ` தற்பரமாந் தற்பரம் ` என்பதற்கு , ` மாயையின் மேம்பட்டதாகிய உயிரினும் மேம்பட்ட பொருள் ` என்க . ` தற்பரமாய் நற்பரமாய் ` என்பதும் பாடம் . ` பாவை விருப்புளான் ` என்பதனை , ` பாவையினது விருப்பத்தை உடையவன் , பாவையை விரும்பும் விருப்பத்தை உடையவன் ` என இரட்டுற மொழிந்துகொள்க .

பண் :

பாடல் எண் : 8

மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன் காண் புத்தன் மறவா தோடி
யெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

ஞானிகள் விரும்பிப்போற்றும் விண்இழிதண் வீழிமிழலையான் உண்மையான தவத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உள் பொருளாய் விளங்குபவனாய்த் தன் இடத்து விருப்பம் இல்லாத இரும்புபோன்ற கடிய மனத்தவர்களுக்குத் தன் உருவத்தைக் காட்டாது மறைந்தே இருப்பவனாய் , சாக்கியநாயனார் மறவாமல் இடும் சிறு கற்களைப் புதிய மலர்களாக ஏற்பவனாய் , தன்னைத் தியானித்தவர்களை உயர்கதிக்கண் செலுத்துபவனாய் , உலகங்களை அழித்துப் படைத்துக் காக்கும் திறல் உடையோனாய் உள்ளான் .

குறிப்புரை :

மெய்த்தவன் - பயனால் , உள்பொருளாய் விளங்கியவன் . ` நிற்பார்க்கெல்லாம் மெய்த்தவன் ` என முன்னே கூட்டுக . ` தன்னிடத்து விருப்பம் இல்லாத இரும்புபோலும் மனத்தையுடைய கன்மிகளுக்கு எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் தனது இருப்பினைப் புலப்படுத்தாது மறைந்தே நின்றவன் ` என்க . புத்தன் , சாக்கிய நாயனார் . சல்லி - கல் . மலர்கள் ஆக்கினான் - மலர்கள்போல நினைத்து ஏற்றுக்கொண்டவன் . ` உள்கினாரை உயர்கதிக்கே உய்த்தவன் ` எனக் கூட்டுக . உய்த்தல் - செலுத்துதல் . அளித்தல் - காத்தல் . வித்தகன் - திறனுடையவன் ; ஒளித்து நின்றே செய்தலின் , ` வித்தகன் ` என்றருளிச்செய்தார் . ` முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை ` ( தொல் . சொல் . 240) கிளவாது , தாம் அநுபவத்தால் அறிந்தது கிளத்தல் திருவுள்ளமாகலின் , இறந்த காலத்தால் அருளினார் ; இது பிறவிடத்தும் ஒக்கும் .

பண் :

பாடல் எண் : 9

சந்திரனைத் திருவடியால் தளர்வித் தான்காண்
தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்
இந்திரனைத் தோள்முரிவித் தருள்செய் தான்காண்
ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடராய் ஓங்கி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழிதண்வீழிமிழலையான் தக்கன் வேள்வியில் சந்திரனைத் திருவடியால் தேய்த்துத் தக்கனை வெகுண்டு எச்சன் தலையை நீக்கி இந்திரனுடைய தோள்களை ஒடித்துப்பின் அவர்களுக்கு அருள் செய்தவனாய் , எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் , தன்னை விருப்போடு நினைப்பவர்களுக்கு அன்பனாய் , மந்திரமும் வேதப்பொருளும் ஆயினானாய்ப் பிரமனும் திருமாலும் மேலும் கீழும் அறியாவண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவனாய் உள்ளான் .

குறிப்புரை :

சந்திரனைத் தளர்வித்தது முதலியன , தக்கன் வேள்வியில் . நினைபவர் , மந்திரத்தினாலும் மறைப்பொருளாலுமே நினைதலின் , அவைகளாய் இருந்து அருள்செய்கின்றான் என்க .

பண் :

பாடல் எண் : 10

ஈங்கைப்பே ரீமவனத் திருக்கின் றான்காண்
எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும்
ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
கோங்குமலர்க்கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்
கொல்லேறு வெல்கொடி மேற் கூட்டினான் காண்
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.

பொழிப்புரை :

விண்இழிதண் வீழிமிழலையான் இண்டங் கொடிகள் அடர்ந்த சுடுகாட்டில் இருப்பவனாய் , எங்கள் தலைவனாய் , யானைத்தோலைப் போர்த்தியவனாய்ப் பார்வதியோடு ஒரே உருவமாய் நின்றவனாய் , ஓங்காரவடிவினனாய் , கோங்கு கொன்றை ஆகிய மாலையை உடையவனாய்க் காளை எழுதிய கொடியை உடையவனாய் , வேங்கைத்தோலை மேலாடையாகக் கொண்ட வனாய் உள்ளான் .

குறிப்புரை :

ஈங்கை - இண்டங் கொடி . ஈமவனம் ( சுடுகாடு ). இரு பெயரொட்டு . கைம்மா - யானை . ` கொல்லேற்றைக் கொடி மேற் கூட்டினான் ` என்க .

பண் :

பாடல் எண் : 1

மானேறு கரமுடைய வரதர் போலும்
மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்
கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலும்
தேனேறு திருவிதழித் தாரார் போலுந்
திருவீழி மிழலையமர் செல்வர் போலும்
ஆனேற தேறும் அழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

திருவீழிமிழலையில் அமர்ந்த செல்வராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் கையில் மானை ஏந்தி வரம் கொடுப்பவராய், பெரிய மலையின் இருபகுதிகளையும் வில்லாகுமாறு வளைத்தவராய், காட்டில் உலவும் யானை கதறுமாறு அதன் தோலை உரித்தவராய்க் கட்டங்கப்படை உடுக்கை இவற்றைக் கைகளில் கொண்டவராய், தேன் பொருந்திய கொன்றைப் பூ மாலையை அணிந்தவராய், காளையை இவரும் அழகராய்க் காட்சி வழங்குகிறார்.

குறிப்புரை :

வரதர் - வரத்தைக் கொடுப்பவர். `மால்வரை வளைத்தார்` என இயையும். கால் வளை வில் - இருமுனையும் வளையும் வில். கான் ஏறு - காட்டிற் பொருந்தும். கரி - யானை. கொடி, விடைக்கொடி. துடி - இடை சுருங்கு பறை (உடுக்கை). இதழி -கொன்றை. ``ஏறது`` அது, பகுதிப் பொருள் விகுதி.
அடிகள் - முதல்வர். இஃது, `அடி` என்பது அடியாகப் பிறந்த பெயர்; `அடி` எனினும், முதல் எனினும் ஒக்கும்; அது பண்பாகு பெயராய், முதலாவாரை யுணர்த்தி, ஆண்பால் பெண்பால் இரு பாலார்க்கும் பொதுவாய் நிற்கும். பின்னர், அஃது உயர்வுபற்றிவந்த திணைவழுவமைதியும் பால்வழுவமைதியுமாக, `கோக்கள், குருக்கள்` என்பனபோல அஃறிணைப் பன்மைவிகுதியாகிய `கள்` என்பதனோடு புணர்ந்து, மேற்கூறியவாறே இருபாலார்க்கும் பொதுவாய் நிற்கும்; எனவே, இது, `சுவாமி` என்னும் வடசொற்கு நேராய தமிழ்ச்சொல் என்பது பெறப்படும். இதனானே, `சுவாமி` என்பதும், தமிழ் மொழியுள் `சுவாமிகள்` என, கள்ளொடு புணர்த்து வழங்கப்படுகின்றது. `அடிகள்` எனற்பாலதனைச் சேக்கிழார் நாயனார், ``வாகீசத் திருவடி`` (தி.12 திருநாவுக்கரசர் புராணம் - 109.) என முதற்கண் `திரு` என்பதனை, புணர்த்து அருளிச்செய்தார். இப்பெயர் உயர்ந்தோர்க்கு உரியதாதல் பற்றி, ``மாமடிகள்`` (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - அம்புலி - 6) என்றாற்போலச் சிலர்க்கு முகமனுரையாய் வழங்கும். எனினும், `தலைவர்` என்பதே இதன் பொருளாகலின், ஆடவருள்ளும் பெண்டிருள்ளும் தலைவராயினார்க்கே இஃது உண்மையில் உரியதாகும். துறவறத்தில் நிற்பவர் பிறர்யாவர்க்கும் தலைவராதல் பற்றி, அவர்களையே சிறப்பாக `அடிகள்` என வழங்குவர். இங்கு, ``அடியேனை ஆளுடைய அடிகள்`` என்றருளியதனால், `அடிகள்` என்பது தலைவர் என்றவாறாதல் இனிது விளங்குதல் காண்க. பொருட்பன்மையன்றி உயர்வுப் பன்மையாகலின், பன்மையொருமை மயக்கமாக ஒருமைச் சொல்லொடு இயைதலும் உண்டு. தாம், ஏ அசைகள். `அடிகள் தாம்` என்பதே எழுவாய்.

பண் :

பாடல் எண் : 2

சமரம்மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்
நாரணனை யிடப்பாகத் தடைத்தார் போலும்
குமரனையும் மகனாக வுடையார் போலுங்
குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

குளிர்ந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கும் இளையவராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் தம்மோடு போரிடவந்த சலந்தரன் என்ற அசுரனைச் சக்கரத்தால் பிளந்த திறமை உடையவராய், நமனை ஒரு காலால் உதைத்து அழித்தவராய், திருமாலை இடப்பாகத்துக் கொண்டவராய், முருகனையும் மகனாக உடையவராய்த் தேவர்கள் பிறகு அமுதம் உண்ணுமாறு முன்னர் அவர்களை அழிக்க வந்த நஞ்சினை உண்டவராவார்.

குறிப்புரை :

சமரம் - போர்; சமரத்துக்கண் மிகுகின்ற (மேம்படுகின்ற) என உரைக்க. சதுரர் - திறலுடையவர். `காலால் குறைத்த` என்க. குறைத்தல் - இல்லையாக்குதல்; அழித்தல்.
நாரணனை இடப் பாகத்துக் கொண்டது, ஒரு சத்தியாதல் பற்றி, குமரன் - முருகக்கடவுள். `பிறர் பின்பு அமுதுண்ணுதற்குத் தாம் முன்பு நஞ்சுண்டவர்` என அவரது பெருங்கருணைத் திறத்தினை நினைந்துருகி அருளிச்செய்தவாறு.

பண் :

பாடல் எண் : 3

நீறணிந்த திருமேனி நிமலர் போலும்
நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்
எயில்மூன்றும் எரிசரத்தா லெய்தார் போலும்
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்
வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்
ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வியன்வீழிமிழலை உறை விகிர்தராய் அடியேனை அடிமையாகக் கொண்ட அடிகள் திருமேனியில் நீறு அணிந்த தூயோராய்த் திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கியவராய், காளை எழுதிய கொடியை உடைய என் தலைவராய், நெருப்பாகிய அம்பினால் மூன்று மதில்களையும் எய்தவராய், உலகியலுக்கு வேறாகக் கொண்ட வடிவுடைய வேடராய்ச் சடைமுடியில் கங்கையை அணிந்த அழகராய்க் காட்சி வழங்குகிறார்.

குறிப்புரை :

நேமி - சக்கரம். தீக்கடவுள் தன் ஆற்றலைக் காட்டி நின்றமையின், ``எரிசரம்`` என்றருளினார். சரம் - அம்பு. வேறு அணிந்த கோலம் - உலகியலுக்கு வேறாகக்கொண்ட கோலம்; `விகிர்தர்` என்பதும் அப்பொருளது.

பண் :

பாடல் எண் : 4

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

பெரிய வீழிமிழலையில் உறையும் வேறுபட்ட இயல்பினை உடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் விநாயகனைப் படைத்து அவனால் கயாசுரனைக் கொல்வித்துத் தக்கனுடைய வேள்வியையும் பிரமன் தலை ஒன்றனையும் அழித்து, யாகதேவன் தலையை அறுத்து, ஐவகை வேள்விகளும் வேதங்களின் ஆறு அங்கங்களுமாக உள்ளார்.

குறிப்புரை :

கை வேழம் - கையை உடையதாகிய யானை; இது கை யுடைமையை விதந்தருளியவாறு. வேழ முகத்தவன், விநாயகக் கடவுள். ``கயாசுரன்`` என்றது, கயமுகாசுரனை. அவனை விநாயகக் கடவுளைத் தோற்றுவித்து அழிப்பித்த வரலாற்றைக் கந்தபுராணத்துட் காண்க. வேள்விமூர்த்தி - யாக தேவன். ஐ வேள்வி - `பிரமவேள்வி, தேவவேள்வி, மனித வேள்வி, உயிர் வேள்வி, பிதிர் வேள்வி, என்பன. இவை முறையே வேதம் ஓதுதலும், வழிபாடு செய்தலும், விருந்தோம்பலும், உயிர்களிடத்து இரக்கங் கொண்டு உணவிடுதல் முதலியன செய்தலும், தென்புலத்தார் கடன் தீர்த்தலும் ஆகும். ``விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன்`` எனவும், விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்`` எனவும் விருந்தோம்பலை, திருவள்ளுவ நாயனாரும் `வேள்வி` என்றருளினார். (குறள் - 87, 88.) இவை முறையே `பிரமயாகம், தேவயாகம், மானுட யாகம், பூத யாகம், பிதிர் யாகம்` எனப்படும். இவையெல்லாம் வைதிக முறை. இனிச் சைவ முறையிற் சொல்லப்படும் ஐவகை வேள்விகள். `கன்மவேள்வி, தவ வேள்வி, செபவேள்வி, தியானவேள்வி, ஞானவேள்வி` என்பன. வைதிக முறையிற் சொல்லப்பட்ட ஐவகை வேள்விகளும் சைவ முறையில், `கன்மவேள்வி` என ஒன்றாய் அடங்கும். `சமயம், விசேடம்` என்னும் இருவகைத் தீக்கைகளின் வழி, `சரியை கிரியை யோகம்` என்னும் மூன்று நெறிகளினும் நிற்றல் தவவேள்வி; அத்தீக்கைகளிற் பெற்றவாறே திருவைந்தெழுத்தைக் கணித்தல் செபவேள்வி; அச் செபத்தின்வழிச் சரியை முதலிய மூன்று நெறியிலும் முறையே சிவபிரானது `உருவம், அருவுருவம், அருவம்` என்னும் மூவகைத் திருமேனிகளைத் தியானித்தல் தியான வேள்வி; பதியாகிய சிவபிரானது இயல்புகளையும் அவனுக்கு அடிமையும் உடைமையும் ஆகிய பசு பாசங்களின் இயல்புகளையும் உள்ளவாறுணர்த்தும் ஞான நூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல், நல்லாசிரியரிடத்தே அந் நூற்பொருளை இனிது கேட்டல், பின்னர்ச் சிந்தித்தல் என்பன ஞான வேள்வி. இவ்வகை வேள்விகளுட் சிறந்ததாகிய ஞானவேள்வியை,
``ஞானநூல் தனைஓதல் ஓது வித்தல்
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றாய்
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை``
என (சிவஞானசித்தி. சூ. 8. அதி. 2) எடுத்தோதுவதும் காண்க. ஆறங்கம் முன்னே (ப.21. பா.2 குறிப்புரை) கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுந்
சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்
பூதகணம் புடைசூழ வருவார் போலும்
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்
வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

பரந்த வீழிமிழலையைச் சேர்ந்த தூயோராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கீளோடு இணைக்கப்பட்ட கோவணம் ஒன்று உடையாராய், மூன்று சுடர்களும் அவற்றின் ஒளியுமாகிய தூயவராய், பொன்னார் மேனிப் புனிதராய், பூதகணம் தம்மைச் சுற்றி வரத் தாம் வருபவராய், மின்னலை ஒத்து ஒளிவீசும் சிவந்த சடையில் பிறை சூடியவராய், அன்னத்தை வாகனமாக உடைய பிரமனுடைய மண்டையோட்டினை ஏந்திய தலைவராய் உள்ளார்.

குறிப்புரை :

துன்னம் - (கீளோடு) இணைத்தல். `அவற்றது சோதி` என்க. தூயார், அவைகளினும் தூயவர். அன்னத் தேர் - அன்னப் பறவையாகிய ஊர்தி. `முடி` என்றது, தலையோட்டினை.

பண் :

பாடல் எண் : 6

மாலாலும் அறிவரிய வரதர் போலும்
மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்
நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வியன் வீழிமிழலை அமர்ந்த விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் திருமாலாலும் அறிய முடியாதவராய், வரம் அருளுபவராய், தம்மை மறவாதவர் பிறவிப்பிணியைப் போக்க வல்லவராய், நான்கு வேதங்களுக்கும் தலைவராய், அஞ்செழுத்தாகிய பெயரை உடையவராய், நம்மால் விரும்பப்படுபவராய், கையில் வேலை ஏந்திய காளியைத் தாருகன் என்ற அசுரனை அழிப்பதற்காகப் படைத்தவராய், விடத்தைத்தம் கழுத்தில் அடக்கித் தேவர்களைப் பாதுகாத்தவராவர்.

குறிப்புரை :

`அஞ்செழுத்தாய நாமத்தை யுடைய நம்பர்` என்க. வேல், சூலம். வீரி - காளி; இவளைத் தாருகன் என்னும் அசுரனை அழித்தற்பொருட்டுப் படைத்தருளினமை யறிக.

பண் :

பாடல் எண் : 7

பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்
பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்
வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்
செஞ்சடைக்கண் வெண்பிறை கொண் டணிந்தார் போலுந்
திருவீழி மிழலையமர் சிவனார் போலும்
அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

திருவீழிமிழலை அமர்ந்த சிவனாராகி அடியேனை ஆட்கொண்ட அடிகள் செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்டவராய், காளமேகம் போன்ற அழகிய நீலகண்டராய், வடகயிலைத்தலைவராய், செஞ்சடையில் வெண்பிறை சூடியவராய், ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் அடியவர்களுக்கு நெருக்கத்தில் இருப்பவராய் உள்ளார்.

குறிப்புரை :

``விரல்`` என்றது நகத்தினை; அடையடுத்த ஆகு பெயர். பை - பாம்பின் படம். மஞ்சு அடுத்த - மேகம் அடுத்தது போன்ற. மணாளர் - தலைவர். கொண்டு - பற்றி. அஞ்சு, பொறிகள். அணியார் - அண்மையில் உள்ளவர்.

பண் :

பாடல் எண் : 8

குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலும்
குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்
புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்
வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்
அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வியன் வீழிமிழலை நகருடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் சமணரிடமிருந்து அடியேனை ஆட்கொண்டவராய், குடந்தையில் உறைபவராய், அடியவர்கள் உள்ளத் தாமரையை ஆசனமாகக் கொண்டவராய், கருடனைக் கொன்று பின் அவனை உயிர்ப்பித்தவராய், வெள்ளிய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் விகிர்தராய், அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவராய் உள்ளார்.

குறிப்புரை :

குடமூக்கில் - குடந்தை (கும்பகோணம்). புள்ளரசு - கருடன்; இவனை முன்னர் ஒறுத்துப் பின்னர் அருள்செய்தமை முன்னே குறிக்கப்பட்டது. (ப.26 பா.3) புறத்து, `அத்து` வேண்டா வழிச் சாரியை; `புறமாகிய அப்பால்` என்க. ஆனார் - உள்ளவர்.

பண் :

பாடல் எண் : 9

முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்
மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வியன்வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை அடிமைகொண்ட அடிகள் முத்துப்போன்ற சிறிதே அரும்புகின்ற நகைப்பினையும், செறிந்த பவளக்கொடிபோன்ற சடையினையும் உடையவராய், சிறிதளவு, தம்பால் பக்தி உடையவருக்கும் இனியராய், அட்டமூர்த்த உருவினராய், நண்பனாகிய குபேரனிடம் விருப்பு உடையவராய், அடியேனுக்குத் தந்தையும் தாயும் ஆவார்.

குறிப்புரை :

முகிழ் முறுவல் - சிறிதே அரும்புகின்ற நகைப்பு. எத்தனையும் - சிறிதாயினும். இரு நான்கு மூர்த்திகள் - அட்ட மூர்த்தம். அவை முன்னே கூறப்பட்டன. (ப.15 பா.9) மித்திரன் - தோழன். வச்சிர வண்ணன் - குபேரன். அத்தன் - தந்தை. அம்மை - தாய்.

பண் :

பாடல் எண் : 10

கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்
கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்
எரியதொரு கைத்தரித்த இறைவர் போலும்
ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்
வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

பரந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கிய தூயராய், அடியேனை ஆளுடைய அடிகள், பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலை உரித்துப் போர்த்துக் கங்கையையும் சிவந்த சடையில் மறைத்து, அக்கினி தேவனுடைய ஒரு கையை நீக்கிய தலைவராய்ப் பன்றியின் கூரிய பல்லை அணிகலனாகப் பூண்டு, சந்திரன் சூரியன் என்ற இருவரையும் தக்கன் வேள்விக்களத்தில் வெகுண்டு ஒறுத்துத் திருமாலும் பிரமனும் தம்மைத் தோத்திரிக்க அவர்களுக்கு அருள் செய்தவர்.

குறிப்புரை :

கரி - யானை. வெருவ - அஞ்ச. கண்டார் - செய்தார். ``எரியது`` அது, பகுதிப்பொருள் விகுதி. ஏனம் - பன்றி. கூன் எயிறு - வளைந்த பல் (கொம்பு). கதிரோர் இருவர். செங்கதிரோனும் (சூரியனும்) வெண்கதிரோனும் (சந்திரனும்). அளித்தார் - வரங்கொடுத்தார்.

பண் :

பாடல் எண் : 11

கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலும்
குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்
கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலைவேற் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

பொழிப்புரை :

வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் கதறிக்கொண்டு விழுமாறு அவனைக் கால் விரலால் நசுக்கிப்பின் அவனுக்கு அருள் செய்தவராய், குயில்போன்ற இனிய சொற்களை உடைய உமையம்மை மனம் குளிர்ந்து காணுமாறு கூத்தாடுதலில் வல்ல இளையராய்ப் பகலவன்போல ஏனைய ஒளிகளைத் தாழ்த்தித் தாம் ஒளி வீசுபவராய்க் கூர்மையான முத்தலைச் சூலப்படையுடையவராய் இருக்கின்றார்.

குறிப்புரை :

வெயிலாய - பகலவன் ஒளிபோன்ற; இது பிற வெளிகளைத் தன்னுள் அடக்கிநிற்கும் தொழில்பற்றி வந்த உவமை; பல்வேறு சிறப்பியல்புகளை உடைய உயிர்களின் அறிவுகள் எல்லாவற்றையும் தம் அறிவினுள் அடக்கி நிற்றல் பொருள் என்க. அயில் - கூர்மை.

பண் :

பாடல் எண் : 1

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவா ளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.

குறிப்புரை :

`ஆளாக்கொண்டு ஆண்டான்` எனக் கூட்டுக. அடியேனை - இயல்பாகவே அடியவனாய் உள்ள என்னை. ஆளாக் கொண்டு - அதனை அறியாதிருந்த அறியாமையை நீக்கி அறிவித்து. ஆண்டான் - அருள் செய்தவன்: `இத்துணைப் பெருங்கருணை யாளனை முன்பே அறிந்து போற்றாது ஆற்றநாள் போக்கினேனே` என இரங்கி யருளியவாறு. நெடுங்களம், சோழநாட்டுத் தலம். நேமிவான் படையால் - சக்கரமாகிய பெரிய படைக்கலத்தால். நீள் உரவோன் - மிக்க வலிமையை உடையவன்: சலந்தராசுரன். கேதாரம், வடநாட்டுத் தலம்.
கேடிலி - அழிவில்லாதவன். பொறி - புள்ளி. வாளரவு - கொடிய பாம்பு. ``போற்றாதே`` என்னும் தேற்றேகாரம் இன்றியமையாது செயற்பாலதனைச் செய்யாதொழிந்த இழிபினைக் குறித்தது. ஆற்ற - மிகுந்த, ``போக்கினேனே`` என்னும் தேற்றேகாரம். அதுபற்றி இரங்கும் இரங்கற்பொருட்கண் வந்தது.

பண் :

பாடல் எண் : 2

சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

`சிறந்து சீர்த்தான்` என்க: சீர்த்தல் - வாய்த்தல் (கிடைத்தல்): ``சீரிடங் காணின்`` எனவும், ``மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து`` (குறள் - 821, 490.) எனவும் வந்தன காண்க. சிவன் - மங்கலமாய் உள்ளவன். கூர்த்தான் - நுணுகியவன். குமைத்து - அழித்து. முனி, மார்க்கண்டேயர். கைம்மா - யானை. உரிவை - தோல். பேணி - விரும்பி.

பண் :

பாடல் எண் : 3

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

``அடியேன்றன்னைப் பன்னாள்`` என்றதனை முதற் கண் கூட்டுக. `தன்னைப் பணிந்து பாட` என இயையும், `அடியேன் றன்னைப் பயில்வித்தானை` என இயைப்பினுமாம். `பன்னாளும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. எத்தேவும் - எந்தக் கடவுளும்: `கடவுளர்க்கெல்லாம கடவுள்` என்றபடி, ஊறும் - சுரக்கின்ற. ``அத்தேன்`` என்பது பலரறி சுட்டாய், உயர்வுப் பொருள் குறித்தது. அண்ணித்தல் - தித்தித்தல். ஆதிப் புத்தேள் - முதற் கடவுள்.

பண் :

பாடல் எண் : 4

இருளாய வுள்ளத்தி னிருளை நீக்கி
யிடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.

பொழிப்புரை :

என் இருண்ட உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்க அறிவற்ற என் துயரங்களையும் தீவினைகளையும் போக்கி, நான் கடைத்தேறுமாறு என் தெளிவற்ற மனத்தில் தெளிவு பிறப்பித்து, தன்னைப் போலச் சிவலோகத்தின் வழியை அறியும் உள்ளத்தை வழங்கிய அருளாளனாய், தொடக்கத்திலிருந்தே பெரிய தவத்தில் நிலைபெற்றிருப்பவனாய், நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட பொருளாய் உள்ள புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

``ஏழையேனை`` என்பதை முதற்கண் வைத்துரைக்க. ஏழைமை - அறிவின்மை. இருளாய - அறியாமை வடிவாகிய. இடர் பாவம் - இடரையும், அதற்கு முதலாய் உள்ள பாவத்தையும். ``உய்ய`` என்னும் வினைஎச்சம் தொழிற்பெயர்ப் பொருள் தந்தது. ``தன்போல்`` என்பதன் பின், `ஆக` என்பது விரிக்க.
ஆதி மாதவம் - முதற்கண் நின்ற பெரிய தவநிலை: `அதன் கண் உள்ளான்` என்றது. `அவனே முதற்கண் ஆசிரியனாய் யோக நிலையில் இருந்து அதனைச் செய்துகாட்டினான்` என்றபடி. இதனானே, `சுவேதாசுவதரம்` என்னும் உபநிடதம் சிவபெருமானை, `பெரிய இருடி` (``விஸ்வாதிகோ ருத்ரோ மகர்ஷி``) என்கின்றது.

பண் :

பாடல் எண் : 5

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

மின்னல் போன்று பிரகாசிக்கும் உருவினனாய், வானத்தில் ஒலி என்ற ஒரே பண்பாய், வீசும் காற்றில் ஒலி ஊறு என்ற இருபண்புகளாய், சிவந்த நெருப்பில் ஒளி, ஊறு, ஒலி என்ற முப்பண்புகளாய், பள்ளம் நோக்கிச் செல்லும் நீரில் சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற நான்கு பண்புகளாய், நிலத்தில் நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற ஐந்து பண்புகளாய்க் குறையாத புகலிடமாக நிலைபெற்ற பொருளாய், பவளக் கொழுந்தாய், முத்தாய், வளர் ஒளியாய், வயிரமாய், பொன்போலும் நிறமுடைய புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

மின் உரு - `மின்னலின் ஒளியாய் உள்ளவன்` வானம், காற்று, தீ, நீர், நிலம் என்னும் ஐம்பெரும் பூதங்களிலும், முறையே ஒன்று முதலாக ஐந்து ஈறாக ஒன்றின் ஒன்று ஒவ்வொரு குணம் ஏற்றமாக, `ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்` என்னும் ஐந்து குணங்களும் அமைந்துள்ளன என்பதனை, ``விண்ணகத்தில் ஒன்றாய்`` என்பது முதல், ``தரணி தலத்து அஞ்சாகி`` என்பதுகாறும் உள்ள தொடர்களால் அருளிச் செய்தார். ``பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி`` (தி.8 திருவாசகம். போற்றித் திருவகவல் - 137 - 41) என்பது முதலியனவாக அருளிச்செய்தவற்றையும் அறிக.
கால் - காற்று. ``உரு`` என்றது பருநிலையை. தாழ் புனல் - வீழும் இயல்புடைய நீர். தரணி - பூமி. எஞ்சா - குறையாத; அழியாத. தஞ்சம் - புகலிடம். `தஞ்ச மாய` என, ஆக்கச்சொல் விரித்துரைக்க. மன் உரு - நிலைபெற்ற பொருள். பொன் உருவை - பொன் போலும் நிறம் உடையவனை.

பண் :

பாடல் எண் : 6

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

பொன்னாலாகிய கழல் ஒலிக்கத் தில்லை அம்பலத்துள் கூத்தாடும் அழகனாய், விடக்கறை பொருந்திய முத்தலைச் சூலப்படையனாய்க் கடலை அடுத்த நாகைக் காரோணத்தை உறைவிடமாக விரும்பியவனாய், என் உள்ளத்துள்ளே தங்கி நீங்காது இருந்தவனாய், ஏழுலகப் பாரத்தையும் தாங்குபவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

அறை ஆர் - ஒலித்தல் பொருந்திய. கறை - நஞ்சு. படைக்கலங்களின் வாயில் நஞ்சு பூசப்பட்டிருத்தல் இயல்பு;
நாகை - நாகபட்டினம். விள்ளாது - நீங்காது. பொழில் - உலகம். பொறை - சுமை.

பண் :

பாடல் எண் : 7

நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா
இறையவனை யெனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

நெருப்பினை ஒத்த சிவந்த திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனாய், என் உள்ளத்தினுள்ளே நீங்காது விரும்பி இருப்பவனாய், வேதம் ஓதுபவனாய், வேதத்தை நன்கு உணர்ந்தவனாய், வெண்காடு, துருத்தி, இடைமருது, ஈங்கோய்மலை இவற்றை நீங்காத இறையவனாய், என்னை ஆட்கொண்ட, கயிலாய மலையை உறைவிடமாகக் கொண்ட புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

`திருமேனியில் வெண்ணீற்றான்` என்க. `விருப்பவன், பொருப்பவன்` என்பவற்றில் அகரம், சாரியை. வேதவித்து - வேதத்தை நன்குணர்ந்தவன்; `வேதத்திற்கு வித்தாய் உள்ளவன்` என்றும் ஆம். வெண்காடு, துருத்தி, இடைமருது, ஈங்கோய் மலை, இவை சோழநாட்டுத் தலங்கள்.

பண் :

பாடல் எண் : 8

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

ஆயிரம் திருநாமங்களை முன்னின்று உச்சரித்துத் தேவர்கள் துதிக்கும் பெருமானாய்த் தன்னை விடுத்து நீங்காத அடியவர்களுக்கும் என்றும் பிறப்பெடுக்கவாராத வீடுபேற்றுச் செல்வத்தை வழங்குபவனாய், மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் முறைகளும் மருந்துமாகித் தீராத நோய்களைப் போக்கியருள வல்லானாய், திரிபுரங்கள் தீப்பற்றிச் சாம்பலாகுமாறு திண்ணிய வில்லைக் கைக்கொண்டு போரிடுதலில் ஈடுபட்டவனான புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

பேர், `பெயர்` என்பதன் மருஉ. `பேர் ஆயிரமும்` என்னும் உம்மை தொக்கது. `ஆயிரம்` என்பது மிகுதிகுறித்தது; ``ஆயிரந் திருநாமம் பாடி நாம்`` (தி.8 திருவாசகம், தெள்ளேணம். 1) என் புழி ஆயிரம் இப்பொருளதாதல். முன்னர், ``ஒரு நாமம்.......... இல்லாற்கு`` என்றதனால் இனிது பெறப்படும்; எனவே `எத்துணைப் பெயர்கள் உள்ளனவோ அத்துணைப் பெயர்களையும் சொல்லி` என்றவாறு; இங்கு, `உள்ளன` என்றது, `ஏத்துவோரால் அறியப் பட்டுள்ளன` என்றதேயாம். பிரிவின்மை - மறதி இன்மை. வாராத செல்வம் என்பது, ``பொச்சாவாக் கருவி`` (குறள் - 537.) என்பது போல, `வாராமையாகிய செல்வம்` எனப் பொருள் தரும்; வாராமை - பிறந்து வாராமை; ``மற்றீண்டு வாரா நெறி`` (குறள் - 356.) ``மீண்டு வாரா வழி அருள் புரிபவன்`` (தி.8 திருவாசகம். கீர்த்தி - 117) என வந்தனவுங் காண்க. இனி, `வருதற்கரிய (கிடைத்தற்கரிய) செல்வம்` என்றுரைத்து, `அதனாற் போந்த பொருள் வீடுபேறு` என்றலுமாம். துன்பத்தோடு இயைபின்றி எல்லையற்று விளையும் வீட்டின்பத்தின் மிக்க செல்வம் வேறின்மையின் அதனை இவ்வாறருளிச்செய்தார்: இதனானே, பூரியார் கண்ணும் உளவாகும் (குறள் - 241.) பொருட் செல்வங்களை வருவிப்பானாதல் கூறவேண்டாதாயிற்று. இனி, `வாராத செல்வம் - இயல்பாகவே உள்ள செல்வம்: திருவருட் செல்வம்` என்றுரைப்பினும் அமையும். மந்திரம். திருவைந்தெழுத்து; தந்திரம், அதனை மேற்கொள்ளும் முறையைக் கூறும் ஆகமங்கள்; மருந்து. அவ்வாகமங்களின் வழிநின்று செய்யும் செபம். பூசை, தியானம் முதலியன: தீராநோய், மலம்; நோய் தீர்தற்கு உரியன யாவை அவையெல்லாம் `மருந்து` எனற்கு உரியனவாகலின், செபம் முதலிய செயல்களை மருந்தென்றருளினார். மந்திரம் முதலிய மூன்றும், உடல்நோயைத் தீர்ப்பவற்றின் மேலும் நோக்குடையன. இவற்றால் இருநோயையும் தீர்த்தல்பற்றி இத்தலப் பெருமானை `வைத்தியநாதன்` எனவும், இத்தலத்தினை, `வைத்தியேசுரன் கோயில்` எனவும் கூறிப் போற்றுவர். அருள - இன்பந்தர. ``வல்லான்`` என்றது, பிறர் அதுவல்லர் ஆகாமையை உணர்த்தி நின்றது. பிறவிநோய் நீங்குதல், அந்நோய் எவ்வாற்றானும் எஞ்ஞான்றும் சிறிதும் இல்லாதவனாகிய சிவபிரானாலன்றிக் கூடாமையால், அவனை அடையாது அந்நோய் நீங்குமாறில்லை என்பதாம். இதனை, `எப்பொழுது ஆகாயத்தைத் தோல் போற் சுருட்டுதல் கூடுமோ அப்பொழுது சிவனை யறியாமல் துன்பத்தினின்று நீங்குதல் கூடும்` என்று விளக்குகின்றது, ``யதா சர்மவ தாகாஷம் வேஸ்டையிஸ்யந்தி மானவாஹா... ததா சிவ மவிஞ்ஞாய துக்கஸ்யாம் தோ பவிஸ்யதி`` `சுவேதா சுவதரம்` என்னும் உபநிடதம். இவ்வுபநிடத வாக்கியப் பொருளை,
``பரசிவ னுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையு மென்றும்
விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைது மென்றல்
உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே
பெருமறை இயம்பிற்றென்னிற்பின்னுமோர் சான்றுமுண்டோ``.
(கந்தபுராணம். தட்சகா, உபதேசப், 25.)
``மானிடன் விசும்பைத் தோல்போற் சுருட்டுதல் வல்லோ னாயின்
ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடு மெய்தும்
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமே அறிதல் வேண்டும்``
(காஞ்சிப்புராணம். சனற்குமாரப். 43)
எனப் புராணங்கள் ஆளக் காணலாம். `உடற்றுன்பம் பிறராலும் நீக்கப் படும்: உயிர்த்துன்பம் சிவபிரானையன்றிப் பிறரால் நீக்கப்படுமா றில்லை` என்பதுபற்றியே, சிவபிரான், `வீடு பேறளிப்பவன்` எனப் படுகின்றானாதலின், உடற்றுன்பத்தை அவன் நீக்கமாட்டுவானல்லன் என்பது அதற்குப் பொருளன்று என்பதும் இங்குப் பெறப்பட்டது. ஆகவே, `உலகப்பயனைப் பிற தேவரிடத்தே பெறல்வேண்டும்` என்பாரது கூற்று, `நாடு வழங்கும் பேரரசனொருவன், நிலஞ் சிறிது வழங்கமாட்டுவானல்லன்` என்பாரது கூற்றோடொப்பதா மென் றொழிக. இவற்றையெல்லாம் இனிது தெரிவித்தற் பொருட்டன்றோ, ``இம்மை யேதரும் சோறுங் கூறையும் ஏத்த லாம் இடர்கெடலுமாம் - அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே`` (தி.7. ப.34. பா.1.) ``பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப் போகமுந் திரு வும்புணர்ப் பானை`` (தி.7. ப.59. பா.1.) என்றற்றொடக்கத்துத் திருமொழிகள் எழுந்தன என்க.
``திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட போரான்`` என்பதும், `அசுரரை அழித்துத் தேவர்க்கு விண்ணுலக இன்பத்தைத் தந்தவன்` என, உலக இன்பத்தையும் அவன் மிக வழங்குவோன் ஆதலைக் குறிப்பித்ததேயாம் என்க.

பண் :

பாடல் எண் : 9

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களையும் ஆக்கியவனாய்ப் பார்வதிபாகனாய், பரவிய சடையிலே கங்கையை மறைத்தவஞ்சகனாய், எனக்குத் துணையாய், உடன் நின்று என்னைத் திருத்தித் தன்னிடத்தினின்றும் நீங்காது அணைத்துக்கொண்டவனாய், நான் மறையின் சிறந்த பொருளாய், குளிர்ந்த வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனாய், விரைந்து செல்லும் காளையை இவர்ந்த உலக காரணனாய், நாரணனாய், தாமரையில் தங்கும் பிரமனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

பண்ணியன் - (எல்லாவற்றையும்) ஆக்கியவன். ``படிறன்`` என்றது. கரந்தமைபற்றி. நண்ணியன் - (எனக்குத் துணையாய்) உடன் நின்றவன். என் ஆக்கி - என்னைத் திருத்தி. தன் ஆனானை - தன்னினின்றும் நீக்காது அணைத்துக் கொண்டவனை. (ஆனாமை, நீக்காமை.) நளிர் - குளிர்மை. கண்ணி - முடியிலணியும் மாலை. காரணன் - முதல்வன். கமலத்து ஓங்கும் புண்ணியன், பிரமன்; ``நாரணன்காண் நான்முகன்காண்`` என்னும் திருத்தாண்டகக் குறிப்புக் காண்க. (ப.8 பா.3)

பண் :

பாடல் எண் : 10

இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய நரம்பின் இசை கேட்டு மகிழ்ந்தவனாய், அடியார்களுடைய கொடிய நோய்களையும் தீவினைகளையும் போக்கியவனாய், அலைவீசும் கடலின் விடமுண்ட நீல கண்டனாய், நெற்றிக்கண் தீயினால் மன்மதனுடைய உடலை எரித்தவனாய், தீப்பொறி கக்கும் மழுப்படையையும் மானையும் அழகிய கைகளில் கொண்டவனாய், உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

குறிப்புரை :

`பத்தும் இறுத்தானை` எனவும், `அருநோய் பாவம் அறுத்தானை` எனவும் கூட்டுக. இறுத்தல் - நெரித்தல். இதனுள்ளும், அருநோயும் பாவமும் அறுத்தல் அருளப்பட்டது: ``வெந்தறும் வினையும் நோயும்`` எனத் திருநேரிசையிலும் (தி.4. ப.77. பா.4.) அருளிச்செய்தார். கலை - மான். பொறுத்தான் - தாங்கினான்.

பண் :

பாடல் எண் : 1

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

விண்ணாகியும் வேறு பூதங்களாகியும் நிலை பெற்றிருப்பவனே ! அடியேனை வேற்றிடத்துக்குத் திரும்பிச் செல்லாதபடி அடிமையாகக் கொண்டவனே ! இன்ப ஊற்றாகி உயிர் அறிவினுள்ளே நிலைபெற்றிருப்பவனே ! இடையறாத சொற்களின் ஒலியே ! சக்தியாகி ஐம்பூதங்களிலும் நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் இருப்பவனே ! காற்றாகி எங்கும் கலந்தவனே ! கயிலை மலையில் உறைபவனே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

` போற்றி ` என்பதுபற்றி ஐந்தாம் திருப்பதிகக் குறிப்பின் தொடக்கத்தில் சில கூறப்பட்டன . ` வேறு ` என்னும் உரிச்சொல் ` வேற்று ` எனத் திரிந்து பெயராய் நின்று , வேறாய பொருள்களை யுணர்த்திற்று . ` விண் ` எனப் பின்னர் வருகின்றமையின் , ` வேற்றாகி ` என்றருளிச் செய்தார் ; ` விண்ணாகியும் பிற நான்கு பூதங்களாகியும் நின்றவனே ` என்பது பொருள் . ` நின்றாய் ` முதலியன , ` நின்றான் ` முதலிய பெயர்கள் விளியேற்று நின்றனவாம் . அவற்றின் பின்னெல்லாம் , ` நினக்கு ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . ` என்னை மீளாமே ஆளாக் கொண்டாய் ` என்க . ஊற்று , இன்ப ஊற்று . உள்ளே ஒளித்தாய் - ` புறக் கண்ணிற்குப் புலனாகாது உயிரறிவினுள் நின்றவனே ` என , சுவேதாசுவதரமும் கூறிற்று . ஓவாத சத்தம் - இடையறாத ஓசை . ஒலி - எழுத்து . எழுத்துகளைப் புலப்படுத்தும் ஓசை இடையறாது நிகழ்ந்த வழியே பொருள் புலப்படுமாகலின் ,` ஓவாத சத்தத்து ஓலியே ` என்றருளிச் செய்தார் . இனி , ` சத்தத்து ` என்னும் அத்து வேண்டாவழிச் சாரியை எனக் கொண்டு , ` அழியாத சத்தமாகிய ஒலியே ( எழுத்தே )` என்றுரைத்தலுமாம் . ஓவாமை - அழியாமை . வடமொழியாளர் , எழுத்தினை , ` அட்சரம் ` ( அழிவில்லாதது ) என்பர் . எழுத்தின் இயல்பு . ` ஓசை யொலியெலாம் ` என்னும் திருத்தாண்டகக் குறிப்பிற் கூறப்பட்டது . ( ப .38 பா .1). ஆற்று - ஆற்றல் ( சத்தி ); முதனிலைத் தொழிற் பெயர் ; அங்கே - விண் முதலிய பூதங்களிலும் , உள்ளத்திலும் , ஒளியிலும் , ஆறங்க நால்வேதங்களிலும் என்க . இது , ` நின்றவாறு ` முதலியவற்றை விளக்கியருளியது , ` காற்றாகி ` என்பதில் , ` ஆகி ` என்பது , ` போன்று ` எனப் பொருள் தந்தது . இஃது அங்கே அமர்ந்தமையை உவமையின் வைத்து விளக்கியவாறு .

பண் :

பாடல் எண் : 2

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பேய்களோடு கூத்தாடுதலை உகந்தவனே ! பிறவியைப் போக்கும் தலைவனே ! உயிர்களைப் பல வகையான பிறப்புக்களில் நிறுத்தி விளையாடுதலில் வல்லவனே ! விரும்பி என் உள்ளத்துப் புகுந்தவனே ! பொய்யைச் சார்பாகக் கொண்ட முப்புரங்களை அழித்தவனே ! என் சிந்தையை விடுத்துப் போகாது இருப்பவனே ! பாம்பைக் கச்சாக அணிந்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

பிச்சாடல் - பித்தாடல் ; வேண்டியவாறே நடித்தல் ( பலவகை நடனங்களையும் செய்தல் ). உகந்தாய் - விரும்பினவனே . ` பேயோடு பிச்சாடல் உகந்தாய் ` என்க . பிச்சாடல் பேயோடு உகந்தமை போல , பிறவியறுத்தலும் சிவ பிரானுக்ககே உரிய சிறப்பியல்பாதல் அறிக . வைச்சு ( வைத்து ) - உயிர்களைப் பலவகையான பிறப்புக்களில் நிறுத்தி . ஆடல் - அவை செயற்படுதலை . நன்று மகிழ்ந்தாய் - மிகவும் மகிழ்ச்சியோடு காண்கின்றவனே ; ` மகிழ்ச்சி ` என்றது , அறியாமை நோக்கி நகைத்தலை . மருவி - அணுகி . பொய்ச்சார் ( பொய்த்தார் ) - நின்னிடத்துக் கொண்ட அன்பினை விட்டவர் . சிந்தையில் மருவினமைக்கும் , மருவி நீங்காது நின்றமைக்கும் வேறு வேறாக வணக்கங் கூறியருளினார் என்க .

பண் :

பாடல் எண் : 3

மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பகைவர் மும்மதில்களையும் அழித்து , விரும்பி என் உள்ளத்துப் புகுந்து , என்னை உருவமுடையவனாகப் படைத்து , என் உயிர் உடம்பின் வழிப்படாதபடி நீக்கி நின் வழிப்படுத்து எனக்கு இன்பமாகிநின்ற செயலுடையவனாய் , உலகத்தாரால் முன்னின்று துதிக்கப்படுபவனாய் , கருவாய்க்கப் பெற்றுச் சஞ்சரிக்கும் காளமேகம் போல் உலகுக்கு நலன் தருவானாய் , உள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

மருவார் - பொருந்தாதார் ; பகைவர் . உருவாகி - உருவ முடையவனாய் நின்று ; இனி , ` ஆக ` என்பது , ` ஆகி ` எனத் திரிந்து நின்றது எனலுமாம் . உள் ஆவி - உடம்பினுள்ளே இருக்கும் உயிர் ; உள்ளிருத்தல் , நுண்ணிதாய் நிறைந்து நிற்றல் . வாங்கி ஒளித்தாய் - பிரித்தெடுத்து மறைத்தாய் ; என்றது , உயிரை உடம்பின் வழிப்பட்டுச் செல்லாது நீங்கி , நின் வழிப்படுத்தினாய் என்றபடி . திரு - இன்பம் . தேசம் - உலகம் . ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு ( தி .5. ப .91. பா .3.) ஞாலத்தாரும் தொழுதலின் , ` தேசம் , பரவப்படுவாய் ` என்றருளிச் செய்தார் . கருவாகி - கருவாய்க்கப் பெற்று ; நீரை உண்டு .

பண் :

பாடல் எண் : 4

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

தேவர் போற்றும் அமுதமாய் , வந்து என் உள்ளம் புகுந்தவனாய் , உயிர்களின் குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய் , ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய் , தேனை வடித்த தெளிவு போல்பவனாய் , தேவர்களுக்கும் தேவனாய் , சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பியவனாய் உள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

மருந்து - அமுதம் . ஊனம் - குறை . உடலே - திரு மேனியை உடையவனே ; இறைவனது திருமேனி உயிர்களின் குறையை நீக்கும் அருளுருவமாதல் , ` வேகியானாற்போல் செய்த வினையினை வீட்டல் ஓரார் `, ` மூன்றும் நம்தம் - கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே ` என்பவற்றால் ( சிவஞான சித்தி . சூ . 1.50,55.) விளங்கும் . அழலாய் நிமிர்ந்தது , அயன் மால்கட்கு . ` ஓங்கி நிமிர்ந்தாய் ` என்பது ஒரு பொருட் பன்மொழி . தேனதனை என்பது தேனத்தை என மருவி நின்றது . அது , பகுதிப் பொருள் விகுதி . வார்த்த - வடித்த . தெளிவே - தெளிவு போன்றவனே , ` வார்த்தை ` என்னும் பெயரெச்சம் , ` தெளிவு ` என்னும் செயப்படுபொருட் பெயர் கொண்டது . ` தேவர்க்கும் ` என்னும் உம்மை சிறப்பு . கானம் - காடு . ஈமக்காடு .

பண் :

பாடல் எண் : 5

ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

ஊர்களாகவும் உலகமாவும் பரவியவனே ! அனற் பிழம்பாய் ஓங்கி உயர்ந்தவனே ! புகழ் வடிவினனாய் எங்கும் பரவியவனே ! நீங்காது என் உள்ளத்தில் புகுந்தவனே ! நீர் நிறைந்த ஓடைபோலக் குளிர்ச்சி தருபவனே ! ஒப்பற்றவனே ! கார்முகில் போல அருளவல்லவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

ஊராகி - பல ஊர்கள் வடிவமாகி . பேர் ( பெயர் ) - புகழ் . ` புகழ் வடிவில் எங்கும் பரவினாய் ` என்றருளியதாம் ; நீராவி - நீரினின்றும் வெப்பத்தால் எழுகிற ஆவி . ` நீரின் கண் ஆவியாயும் நிழலாயும் உள்ளவனே ` என்க . நீரினுள் நிழலாவது , நீர்வாழ் உயிர் முதலியவற்றின் நிழல் ; இது பிரிந்து தோன்றாது நீரினுள் கலந்தே நிற்பது . ` நீர் நிழல் போல் இல்லா அருவாகி நின்றானை ` ( சிவஞான போத ம் சூ . 8. அதி . 2.) என்னும் வெண்பாவையும் , அதன் உரையையும் நோக்குக . நேர்வார் - நிகராவார் . காராகி நின்ற - கருமை நிறம் பெற்று நின்று .

பண் :

பாடல் எண் : 6

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி யுலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

முதற்கண் சில வேறு தேவர்களாய் நின்று அருள் வழங்கிப் பின் அத்தேவர்களும் நீ ஒருவனேயாகி ஒன்றி நின்றவனே ! தேவர்களும் அறிய முடியாத பெரிய தேவனே ! புல்லாகிய ஓரறிவு உயிருக்கும் வாழ்க்கை வழங்கியவனே ! நீங்காது என் உள்ளத்துப் புகுந்தவனே ! உலகுகள் தோறும் பல உயிர்களாக நிற்பவனே ! உலகைப் பற்றி அதனைக் கைவிடாதவனே ! கல்லின் கண்ணும் உள்ள உயிர்களாய் நிற்கும் ஒளிப்பொருளே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

சில் உருவாய்ச் சென்று - முதற்கண் சிலவேறு தேவர்களாய் வேறுவேறு அருளை வழங்கி நடந்து . திரண்டாய் , பின்னர் அத்துணைத் தேவர்களும் நீ ஒருவனேயாய் ஒன்றி நின்றவனே . ` அத்தேவர்களாலும் அறியப்படாத தேவனே ` என்க . சிவபிரான் இவ்வாறு நிற்கும் நிலையை ,` அறிவினால் மிக்க அறுவகைச் சமயத் தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து ` ( தி . 7. ப .55. பா .9.) எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் , ` மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் - தேற்றனே தேற்றத் தெளிவே ` ( தி .8 திருவா . சிவபுரா . 81. 82.) என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தமை காண்க . புல் உயிர் - புல்லாகிய உயிர் ; இதுவே உயிர்களுட்கடைப் பட்டதாதலை , ` புல்லும் மரனும் ஓரறி வினவே ` ( தொல் . பொருள் - 583) எனவும் , ` புல்லாகிப் பூடாய் ` ( தி .8 திருவா . சிவபு .26) எனவும் , வந்தனவற்றால் அறிக . பூட்சி - பூண ( மேற்கொள்ள ) ப்படுவது ; வாழ்க்கை ; அது , தனு கரண புவன போகங்களையும் , இன்ப, துன்பங்களையும் , யான் எனது என்பனவற்றையும் கொண்டு நிற்றல் . ` பார் ` என்றது , ` உலகம் ` என்னும் பொருளது , அதனைப் பற்றுதலும் , விடாமையும் அருள் காரணமாக என்க . கல் உயிர் - கல்லின் கண் உள்ள உயிர் ; கல்லின் கண்ணும் உயிர்கள் உள்ளன என்பது , தேரை காணப்படுதல்பற்றி அறியப்படும் ; எனவே , ` கல்லாய் மனிதராய் ` ( தி .8 திருவா . சிவபு -28) என்பதிலும் , ` கல் ` என்னும் பெயர் அதன்கண் உள்ள உயிர்மேல் நின்றமை பெறப்படும் . ` கனலே ` என்றது , ` ஒளிப் பொருளே ` என்றவாறு . இவ்வாறு அருளிச் செய்தது , கல்லினுள்ளும் கதிரவன் ஒளி , ஊடு சென்று ஆங்கு நுண்ணுயிர்களைக் காத்தல் பற்றி யென்க .

பண் :

பாடல் எண் : 7

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பண்ணின் இசையாகி இருப்பவனே ! உன்னைத் தியானிப்பவரின் பாவத்தைப் போக்குபவனே ! எண்ணும் எழுத்தும் சொல்லும் ஆனவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! விண்ணும் தீயும் நிலனும் ஆகியவனே ! மேலார்க்கும் மேலாயவனே ! கண்ணின் மணி போன்ற அருமையானவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

பண் , ஏழிசைகளது கூட்டத்தானே பிறத்தலின் , பண் பருப்பொருளும் , இசை நுண்பொருளுமாம் ; அதனால் , ` பண்ணின் இசையாகி நின்றாய் ` என்றருளிச் செய்தார் . பாவிப்பார் - நினைப்பார் - எண் , அளவை ; ` எழுத்துச் சொல்லும் ` என உம்மையை மாறிக் கூட்டுக . எழுத்தும் சொல்லும் மொழியின் பகுதிகள் . விண் முதலிய மூன்றனைக் கூறவே , ஏனைய இரண்டுங் கொள்ளப்படும் . மேலவர் - தேவர் . கண்ணினிடத்து உயிராய் நின்று காட்சியை விளைப்பது கருமணியே யாதலின் . ` கண்ணின் மணியாகி நின்றாய் ` என்றருளினார் .

பண் :

பாடல் எண் : 8

இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான வொருவா போற்றி
அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

ஏனைய உயிர்களைப் போல இமைக்காமல் மூச்சு விடாமல் இருப்பவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! பார்வதி பாகனே ! பல ஊழிகளையும் கடந்தவனே ! பொருந்தாத கொடிய விடத்தை உண்டவனே ! முதற் பழையோனே ! பொறுமையாகச் செயற்படும் ஞான ஒளி உடையவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

இமைத்தல் , உயிர்த்தல் முதலியன உடம்பொடு கூடியே விளங்குவதாகிய உயிரின் செயல்களாதலின் , ` இமையாது உயிராது இருந்தாய் ` என்றது , ` தானே விளங்கும் இயல்புடைய கடவுளே ` என்றவாறாம் . ` ஏழ் ` என்றது , ` பல ` என்றவாறு . அமையா - உடம்பொடு பொருந்தாது அதற்குப் பகையாய் நிற்கும் . ஆர்ந்தாய் - உண்டவனே . ஆதி புராணன் - முதற் பழையோன் ; தன்னிற் பழையோர் இல்லாதவன் என்றவாறு ; ` முதல்வனும் பழையவனுமாய் நின்றவனே ` என்றுரைத்தலும் ஆம் . கமை - பொறுமை ; அருள் ; கனல் போலும் திருமேனியுடைமைபற்றி , ` கனலே ` என்பார் , ` அருளுடைய தொரு கனலே ` என வியந்தருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 9

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

மூத்தலோ பிறத்தலோ இறத்தலோ இல்லாது எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டு என்றும் இயற்கையாகவே விளங்கும் தேவர் தலைவரும் தொழும் தெய்வமே ! எங்கும் பரவி யிருப்பவனே ! ஐயோ ! என்று வருந்தும் அடியேனுக்கு எல்லாமாய் இருக்கும் பெருமானே ! கனகத்திரள் போல்பவனே ! கயிலை மலையானே ! அடியேன் துயரங்கள் வருத்த வருந்துகின்றேன் . என்னைக் காப்பாயாக . உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

மூவாய் - மூப்படையாதவனே ; என்றது , ` காலத்தால் தாக்குண்ணாதவன் ` என்றதாம் . பின்தோன்றுதலிற் பிரித்தலின் , ` முன்னமே ` என்னும் ஏகாரம் பிரிநிலை . ` எல்லாப் பொருட்கும் முன்னமே ` என்க . ` முளைத்துத் தோன்றினாய் ` என மாற்றி , ` உளனாய் விளங்கினாய் ` என்றுரைக்க . இயற்கையாகவே விளங்குபவனை , செயற்கையாக முளைத்தவன் போல அருளியது பான்மை வழக்கு . ` தே ` என்பது ` தெய்வங்கள் ` எனவும் , ` ஆதி தேவர் ` என்பது காரணக் கடவுளர் எனவும் பொருள் தரும் . ` தே ஆதிதேவர் ` என்றது செவ்வெண் . ` எங்கும் சென்று ஏறிப் பரந்தாய் ` என்க . ` சென்று ` என்றதும் , செல்லாததனைச் சென்றது போலக் கூறியதாம் . ஆவா , வியப்பிடைச் சொல் . ` அடியேனுக்கு எல்லாப் பொருளுமாய் இருப்பவனே ; ` ஆவாய் ` என்பது சொல்லெச்சம் . ` ஆவாய் அடியேனுக்கு எல்லாம் ` என்பதே பாடம் எனலுமாம் . சுவாமிகளுக்கு இறைவன் எல்லாம் ஆயினமையை , பின்வரும் ` அப்பன் நீ அம்மை நீ ` என்னும் திருத்தாண்டகத்தால் அறிக . நினக்கு அலந்தேனாகிய எனது வணக்கம் ` என்க . நலிய - வருத்த , அலந்தேன் - வருந்தினேன் ; ` காவாய் ` என்றதனை இறுதிக் கண் வைத்துரைக்க .

பண் :

பாடல் எண் : 10

நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பெரும்பரப்புடைய வானகத்திற்கு இருப்பிடமாய் , எப்பொருளின் நீள அகலங்களையும் தன்னுள் அடக்கியவனாய் , உன் அடியையும் , முடியையும் காண அரியும் , அயனும் தம்முள் மாறுபட்டு முயன்றும் அறிய முடியாமல் அனற் பிழம்பாய் நின்றவனாய்க் கொடிய வலிய கூற்றுவனை உதைத்தவனாய் , அடியேனுடைய உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவனாய் , கொடிய இடியும் மின்னலும் ஆகியுள்ள கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

` விசும்பொடு கூடிய கண் ` என்க . கண் - இடம் ; எப் பொருட்கும் இடந்தந்து நிற்றலே விசும்பின் செயலாகும் . நீள அகலம் உடையாய் - எப்பொருளின் நீள அகலங்களையும் நின்னுள் அடக்கியுள்ளவனே . இகலி - ( தம்முள் ) மாறுபட்டு ; தேடியவர் அரியும் அயனும் என்பது நன்கறியப்பட்டதாகலின் அவரைக் கூறாராயினார் . ` இகலிப் போற்றி ` என்பதன் பின்னுள்ள , ` போற்றி ` என்பதனை , ` நின்றாய் ` என்பதன் பின் வைத்துரைக்க . ` இகலிபோற்றி ` என்பதும் பாடம் . ஒன்று - சிறிது ; ஒன்றும் என்னும் முற்றும்மை தொகுத்தல் ஆயிற்று . அறியாமை - அறியாதபடி . வன் கூற்றம் - வலிய இயமன் . உரும் - இடி .

பண் :

பாடல் எண் : 11

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

உண்ணாது உறங்காது இருப்பவனே ! வேதங்களை ஓதாது உணர்ந்தவனே ! உன்பெருமையை நினைத்துப் பார்க்காது செயற்பட்ட இராவணனைச் சிறிதளவு விரலை அழுத்தி நசுக்கி மகிழ்ந்து , அடக்கி ஆள்பவனே ! பின் அவன்பால் பண்ணோடு கூடிய இசையின் இனிமையைச் செவிமடுத்தவனே ! முன்னரேயே அடியேனுடைய உள்ளத்தில் புகுந்தவனே ! உலகுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

` உண்ணாது உறங்காது இருந்தாய் ` என்பதற்கு , மேல் , ` இமையா துயிரா திருந்தாய் ` ( ப .55 பா .8) என்றதற்கு உரைத்தவாறு உரைக்க . ` ஓதாது உணர்ந்தாய் ` என்றது , ` இயற்கை உணர்வுடையவனே ` என்றவாறு , எண்ணா - மதியாத . ` இலங்கைக்கோன் தன்னை ` என்பதன் பின்னுள்ள போற்றி என்பதனை , ` ஈசா ` என்பதன் பின் வைத்துரைக்க . இறை வைத்த - சிறிது ஊன்றி . ` பின் உகந்தாய் ` என்க . பண் ஆர் இசை இன் சொல் - பண்ணாய் நிறைந்த இசையொடு கூடிய இனிய சொல் . ` உகந்தமைக்குக் காரணம் இது ` என்பார் , இதனை அருளிச் செய்தார் . உலகிற்குக் கண்ணாய் நிற்றலாவது , அது நடத்தற்கு நிமித்தமாய் நிற்றல் .

பண் :

பாடல் எண் : 1

பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

எதனையும் தாங்குதலை உடைய நிலமாகவும் நீராகவும் இருப்பவனே ! பூதப்படையை ஆளும் தூயவனே ! நல்வழியில் நிறுத்தப்படும் நெஞ்சில் இருப்பவனே ! என் உள்ளத்தில் நீங்காது இருப்பவனே ! மறைத்துச் சொல்லப்படும் பொருள்களை உடைய வேதத்தை விரித்து உரைத்தவனே ! தேவர்களால் வணங்கப் படுபவனே ! நீலகண்டனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

பொறை - பொறுத்தல் ; தாங்குதல் . நிறை - ( நல்வழியில் ) நிறுத்தப்படுதல் ; ` நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை ` ( கலி - 133 அடி - 12) எனலுமாம் . இங்கு மறையாவது இறைவனது அருள் அநுபவம் ; பிறராவார் , அதனை உணர்ந்து போற்றமாட்டாதார் . மறை - மறைத்துச் சொல்லப்படும் பொருள்கள் ; மறைத்தல் , உணரமாட்டாதார்க்கு என்க ; இனி , ` மந்திரம் ` என்றும் ஆம் . கறை - நஞ்சு .

பண் :

பாடல் எண் : 2

முன்பாகி நின்ற முதலே போற்றி
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
என்பாக எங்கும் அணிந்தாய் போற்றி
யென்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் முன் உள்ள காரணப்பொருளே ! மூப்படையாத உடலை உடைய முக்கண் பெருமானே ! அன்பர்களுக்கு ஆபரணமே ! கங்கைச் சடையனே ! எலும்பாகிய அணிகலன்கள் உடையவனே ! என் உள்ளத்தை நீங்காத தலைவனே ! கண்ணில் பரவியுள்ள ஒளியே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

முன்பு - எல்லாவற்றிற்கு முன்னுள்ள பொருள் . முதல் - எல்லாப் பொருட்கும் அடிநிலை . மூவாத - மூப்படையாத ; என்றும் ஒரு பெற்றியாய் உள்ள . அன்பாகி - அன்பர்களாய் . அணியாய் - அணிமையில் உள்ளவனே ; என்றது ,` அவர்கள் வேண்டுமிடத்து வெளிநிற்பவனே ` என்றவாறு . ` எங்கும் ( உடம்பெங்கும் ) என்பாக ` என்க . கண் பாவி நின்ற - கண்ணிற் பரவியுள்ள . கண் , தீயின் கூறே ஆகலின் , ` கண் பாவி நின்ற கனலே ` என்றருளிச்செய்தார் . எனவே , ` கண் என்னும் பொறியாய் நிற்பவனே ` என்றதாம் ; இது , கனல் உருவமாய் நிற்பதனை நயந்தோன்ற அருளிச் செய்தவாறு .

பண் :

பாடல் எண் : 3

மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

மாலை மதியமே ! என் சிந்தையில் நிலைபெற்று இருப்பவனே ! இனித்தோன்றும் என் வினைகளைப் போக்குபவனே ! வானில் உலவும் பிறை முடியனே ! ஆலையில் பிழியப்படும் கருப்பஞ் சாற்றின் தெளிவே ! அடியார் அமுதமே ! காலையில் தோன்றும் இளஞாயிறே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` மாலை எழுந்த மதி , காலை முளைத்த கதிர் ` என அவற்றது இயல்புகளை விதந்தோதியருளியது , உயிர்கட்கு அவை பயன்பட வைத்த அருட்டிறத்தினை நினைந்து . ` அறுப்பாய் ` என எதிர்காலத்தால் அருளிச் செய்தமையின் , ` மேலை வினைகள் ` எனப்பட்டன , இனித் தோன்றும் வினைகளேயாயின ; இவற்றை ` ஆகாமியம் ` என்ப . மேல் ஆடு - ( கங்கைபோலக் கரந்து நில்லாது ) மேல் நின்று விளங்கும் . ஆலைக் கரும்பு - ஆலையில் இடப்பட்ட கரும்பு . அன்பினால் ஆரப்படும் இன்பம் ஆதலை , ` அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் ` ( தி .12 பெரிய . புரா . தடுத் . 196.) என்றருளிச் செய்தார் . ` ஆரமுதம் ` என்பது , ` அரிய அமுதம் ` என்றாதலேயன்றி , ` ஆரப் படும் ( நிறைய உண்ணப் படும் ) அமுதம் ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 4

உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரின் திகழ்கின்ற சோதீ போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலில் ஒளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

உடலில் நுகரப்படும் வினைகளை அறுப்பவனே ! எரியை ஏந்தி ஆடும் பிரானே ! பிறையை அணிந்த சடையனே ! பல பூதங்களோடு கூத்தாடும் பெருமானே ! விளக்குப் போல ஒளிவிடுகின்ற சோதியே ! என் உள்ளத்தில் தோன்றியிருப்பவனே ! கடலில் ஆழ்ந்திருக்கும் முத்துப் போன்றவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` உடலின் வினைகள் ` என்பது , ` முருகனது குறிஞ்சி ` என்பது போன்றது . ` உடம்பிற்கு உரிய வினைகள் ` என்பது பொருள் . இதனை , ` பிராரத்தம் ` என்ப ; அவற்றை அறுத்தலாவது , அவை உயிரைத் தாக்கி விருப்பு வெறுப்புக்களைத் தோற்றுவியாது , உடலூழாய்க் கழியும்படி , தான் முன்னின்றருளுதலும் , அவை தம்மையும் மெலியவாய் வந்து பொருந்தச் செய்தலும் , வேண்டு மிடத்து , அவற்றை அடியோடு ஆற்றல் கெடச் செய்தலுமாம் . அவற்றது ஆற்றலைக் கெடுத்தருளினமையை , சுவாமிகளுக்கு அமணர் தந்த நஞ்சு யாதும் செய்யா தொழிந்தமை முதலியவற்றின் அறிக . எரி வீசும் - எரியைப் போல ஒளிவிடுகின்ற . ` வீசும் `, வீசுதற்கு இடமாய் உள்ள ; ` ஏந்தியுள்ள ` என்றுமாம் . படரும் - விரிந்த . பல்கணம் . பூத கணங்களே யன்றி , பதினெண்கணங்களும் என்க . கணக் கூத்து , கணங் களின் இடையிற் செய்யப்படும் கூத்து . கூத்தப்பிரான் - நடராசன் . சுடரின் - விளக்குப் போல . ` அவ்வாறு ( விளக்குப் போலத் ) தோன்றி ` என எடுத்துக்கொண்டுரைக்க . இறைவன் உள்ளமாகிய வெளியில் சுடர்போலத் தோன்றுதலை உணர்ந்து வழிபடும் முறையை . ` தகர வித்தை ` என உபநிடதம் கூறுதலை மேலே ( ப .16. பா .17) குறித்தாம் . கடலில் ஒளி ஆய - கடலினுள் ஒளிதலை ( மறைந்திருத்தலை ) உடைய ; என்றது , ` ஆழ்ந்தும் அகன்றும் நுணுகியுணரும் பேரறிவாளர்க்கே கிடைப்பவன் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

மைசேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி
மாலுக்கும் ஓராழி யீந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடீ போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசே ரனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

நீலகண்டனே ! திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே ! ஐயம் திரிபுகள் உள்ள உள்ளங்களில் புகாதவனே ! என் உள்ளத்தே நீங்காது இருப்பவனே ! உடல் முழுதும் வெள்ளிய நீறு பூசியவனே ! சான்றோர்கள் போற்றும் ஞானதீபமே ! கையில் அனலை ஏந்திக் கூத்து நிகழ்த்துபவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

மை - கருநிறம் . பொய் , ஐய விபரீதங்கள் . பால் வெண்ணீறு - பால்போலும் வெள்ளிய திருநீறு . மிக்கார் - உயர்ந்தோர் . ` விளக்கு ` என்றது , பொருள் சேர்ந்த புகழுடைமை பற்றி . கைசேர் அனல் ஏந்தி ஆடீ - கையின் கண் பொருந்தியுள்ள நெருப்பினை விடாது ஏந்தி நின்றே ஆடுகின்றவனே .

பண் :

பாடல் எண் : 6

ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி யுடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

கங்கைச் சடையனே ! அடியார்களுக்கு ஆரமுதே ! நீறு பூசிய மேனியனே ! நீங்காது என் உள்ளத்து இருப்பவனே ! கையில் கூரிய மழுப்படையை ஏந்தியவனே ! ஏழு கிழமைகளாகவும் உள்ளவனே ! நீலகண்டனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

முடி - சடைமுடி . ` கூரேறு , காரேறு ` என்பன , எதுகை நோக்கித் திரிந்தன . ` கூறேறு ` என்பதற்கு , ` கூறு செய்தல் பொருந்திய ` என்றுரைத்தலுமாம் . ` கூரேறு `; ` காரேறு ` என்றே பாடம் ஓதுவாரும் உளர் . கொள்ளும் கிழமை - கணிநூல் வழியாற் கொள்ளப்படும் கிழமைகள் . ` ஏழும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . ` கிழமை ஏழானாய் ` என்றதனால் , கோளும் நாளும் அடியாரை வந்து நலியாமை பெறப்பட்டது , காறேறு கண்ட - கருமை பொருந்துதல் காணப்பட்ட . ` கண்ட மிடறு ` ஒரு பொருட் பன்மொழி என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 7

அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

ஏழுலகம் கடந்தவனே ! ஆதிப்பழம் பொருளே ! பழையவினைகளை நீக்குபவனே ! மன்னவரும் விண்ணவரும் போற்றும் மூர்த்தியே ! அடியார்கள் போற்றும் திருத்தலங்களில் உறைபவனே ! வழிபாட்டினை நோக்கி அடியவர்களை ஆளும் ஒளியே ! நீலகண்டனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` அன்றே ` என்னும் பிரிநிலை ஏகாரம் தொக்கது ; அன்றே - அநாதியே . ` ஆதிபுராணன் ` என்பதற்கு முன்னைத் திருப்பதிகத்துள் உரைக்கப்பட்டது . பண்டை வினைகள் - பல பிறவிகளிற் செய்த வினைகள் ; இவற்றை , ` சஞ்சிதம் ` என்ப . ` பாரோர் ` என்ற வாறே , ` விண்ணோர் ` என்க . பரவும் இடம் - திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனி ; அவைகளை , ` கும்ப விம்ப தம்பம் முதலாயின ` என்பர் . கும்பம் - குடம் ( கலசம் ). விம்பம் - விக்கிரகம் . தம்பம் - இலிங்கம் . முதலாயின , வேள்வித் தீ திருமுறை முதலியன . ` இவ்வாதாரங்களில் வைத்து வழிபடும் அடியவர்கட்கு , அவரது அன்பு நோக்கி அவ்விடங்களில் தோன்றி நிற்பவன் ` என்றவாறு . ` தொண்டர் பரவும் மிடற்றாய் ` என்பது பாடம் அன்று என்பதனை , பின்வருகின்ற , ` தொழில் நோக்கி ஆளும் சுடர் ` என்றதனாலும் அறிந்து கொள்க . ` தொழில் ` என்றது , வழிபாட்டினை ; சைவாகமங்களும் இதனை , ` கிரியை ` எனக் கூறும் . இனி , ` தொழில் ` என்றது அதன் அளவினையே . ` அதன் அளவு , பொருளும் காலமும் முதலிய புறமாயவை பற்றி ` ஆகாது , அன்பாகிய அகமாயது பற்றியே ஆம் ` என்பது , ` பொக்கம் மிக்கவர் பூவும் நீருங் கண்டு - நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே ` ( தி .5 ப .90 பா .9) என்றற் றொடக்கத்துத் திருமொழிகளான் இனிது விளங்கிக் கிடந்தது . ` கண்டம் கறுக்கவும் வல்லாய் ` என்றது , ` நஞ்சினை உண்ணவும் , அதனைக் கண்டத்திற்றானே நிறுத்தவும் வல்லவனே ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 8

பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகிநினை வார்தம் முள்ளாய் போற்றி
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
யாரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

பெருகி அலைவீசும் ஆறுபோல்பவனே ! நீங்காத நோய்களை நீக்குபவனே ! உருகிநினைப்பவர்களின் உள்ளத்தில் உள்ளவனே ! குறைபாடுகளை நீக்கும் பெருமானே ! அரிதில் கிட்டப் பெற்று ஒளிவீசும் பொன் போன்றவனே ! ஒருவராலும் குறை கூறப் படாதவனே ! கார்மேகமாகிப் பொழியும் மழையானவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

ஆறே - ஆறுபோன்றவனே ; இஃது இறைவனது வரம்பிலின்பத்தினை வியந்தருளிச் செய்தவாறு . ` ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் ` என , திருமறைக்காட்டுத் திருப்பதிகத்திலும் ( ப .23 பா .5) அருளிச் செய்தார் . ` பேராநோய் பேரவிடுப்பாய் ` என்பதற்கு , ` தீராநோய் தீர்த்தருள வல்லான் ` ( ப .54 பா .8) என்பதற்கு உரைத்தது உரைக்க . ஊனம் - குறை ; அது , பாசங்களின் வழிப்பட்டு , அவை அலைத்தவாறே அலைப்புண்டல் . இதனை , ` ஐம்புல வேடரின் அயர்ந் தனை வளர்ந்து ` என்றருளிச் செய்தார் மெய்கண்ட தேவநாயனார் . ( சிவஞானபோ - சூ .8) அருகி - அரிதிற் கிடைக்கப்பட்டு . ` யாரும் இகழப்படாதாய் ` என்றது , ` உண்மை உணர்ந்தோர் யாரும் ` என்னும் கருத்துப்பற்றி யாதலின் , ` புத்தர் சமணர் முதலாயினோரால் இகழப் படுபவனன்றோ ` என்னும் தடை நிகழாமை யுணர்க . இங்ஙனமாகவே , ` உண்மையாவது நின்னையன்றி இல்லை ` என்றவாறாம் . கருகுதற்கு , ` மேகம் ` என்னும் வினைமுதல் வருவிக்க . பொழிந்து - பொழியப் பட்டு ; ` பொழிய ` எனத் திரிப்பினுமாம் .

பண் :

பாடல் எண் : 9

செய்யமலர் மேலான் கண்ணன் போற்றி
தேடியுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
பொருளாக வென்னையாட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

செந்தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாதவாறு நின்றவனே ! விடத்தை உண்ட தவறாத அருள் வடிவே ! என்னையும் ஒரு பொருளாக ஆண்டு கொண்டவனே ! பஞ்சகவ்விய நீராட்டை விரும்புபவனே ! சான்றோர்கள் புகழும் நற்குணனே ! துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

செய்ய - செந்நிறத்ததாகிய . கண்ணன் - கரியவன் ; திருமால் . முதற்கண் நின்ற , ` போற்றி ` என்பதனை , இரண்டாவதுடன் கூட்டி அடுக்காக்கி யுரைக்க . அயனும் மாலும் தேடியது அகங்கரித்தன்றிப் போற்றியன்று ஆதலின் , ` போற்றித் தேடி ` என்பது பாட மன்மை அறிக . ` பொய்யாப் பொறை ` என இயையும் , பொறை - அருள் . ` பொருளாக ` என்புழி . ` நினைந்து ` என்பது வருவிக்க , ` என்னையும் ` என்னும் இழிவு சிறப்பு உம்மை தொகுத்தலாயிற்று . ` என்னையும் ஒரு பொருளாக நினைந்து ஆட்கொண்டாய் ` என வுரைக்க . ` மெய்யாக உகந்தாய் ` என்றது , ` பிறிது காரணம் இன்றி அவற்றது தூய்மை கருதியே விரும்பினாய் ` என்றதாம் . குணம் - அருட் குணம் ; அவை தன்வயத்தனாதல் முதலிய எட்டுமாம் . கை - தும்பிக்கை .

பண் :

பாடல் எண் : 10

மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் தன்னை யன்று
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

மேல் உலகில் தங்கும் வாய்ப்பளிக்கப்பட்ட தேவர்கள் தலைவனே ! வானில் உலவிய மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே ! இராவணன் கயிலையைப் பெயர்க்க அவனை வாயால் அலற வைத்துப் பின் அவனை , உன்னை வழிபடும் பண்பினன் ஆக்கியவனே ! அழகில் குறைவில்லாத மன்மதனை ஒருகாலத்தில் சாம்பலாகும்படி கோபித்தவனே ! ஒருகாலத்தில் கூற்றுவனையும் வெகுண்டவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

மேல் வைத்த - மேலிடத்து வைக்கப்பட்ட . மேல் ஆடு - வானத்தில் திரிகின்ற , சீலத்தான் - நின்னை வழிபடுபவன் ; இக் குறிப்புவினைப்பெயர் எதிர்காலம்பற்றியது . ` மன்னன் ` என்பதன் பின்னுள்ள ` போற்றி ` என்பதனை அடுத்த தொடரிற் கூட்டுக . ஈண்டும் , ` போற்றிச் சிலையெடுக்க ` என்பது பாடம் அன்று . சிலை - மலை . கோலம் - அழகு . அதிற் குறைவில்லாதவன் , ( நிரம்ப உடையவன் ) மன்மதன் . கொடிது ஆக - வன்கண்மை தோன்ற ; என்றது , அறியாதார் ` வன்கண்மையாகக் கருத ` என்றவாறு . ` காலதனால் ` என்பது , ` காலத்தால் ` என மருவிற்று . ` அது ` பகுதிப் பொருள் விகுதி . ` காலனையும் ` என்னும் உம்மை ஒருவராலும் காயப்படாமை உணர்த்தி நின்ற சிறப்பும்மை . ` கூற்றங் குதித்தலுங் கைகூடும் ` ( குறள் - 269) என்றார் , திருவள்ளுவநாயனாரும் .

பண் :

பாடல் எண் : 1

பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

மேம்பட்ட பாமாலை சூடியவனே ! உன்தன்மை இன்னது என்று பிறரால் அறியப்படாதவனே ! பிறையை முடியில் சூடியவனே ! ஊமத்த மாலையை அணிந்தவனே ! பஞ்ச கவ்விய அபிடேகத்தை விரும்புபவனே ! பகைவருடைய முப்புரமும் எரியுமாறு நகைத்தவனே ! யானையின் தோலை உரித்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` பாட்டான தொடை ` என்றது உருவகம் . ` நல்ல தொடை ` என்றதனால் , மலர் முதலியவற்றால் செய்யும் வழிபாட்டினும் , பாட்டாற் பரவுதலே இறைவற்குப் பேருவகை செய்யும் என்பது பெறப்பட்டது ; ` பெருகிய சிறப்பின் மிக்க - அற்சனை பாட்டே யாகும் ` ( தி .12 பெரிய புரா . தடுத்தாட் . 70) என , இறைவன் தானே அருளிச் செய்தமை கூறப்பட்டது காண்க . இதுபற்றியே , ` பன்மாலைத் திரளிருக்கப்பாமாலைக்கே பட்சம் பரமற்கு ` என்றருளினார் , தாயுமான அடிகள் ( பன்மாலை .1) பரிசு - உண்மை நிலை . சூட்டு - கண்ணி . ` தூமாலை ` யாவது கொன்றை மாலை என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது ; ` அதனோடு மத்தம் அணிந்தாய் ` என்க . மத்தம் - ஊமத்தை . ஆட்டு - ஆட்டப்படும் பொருள் . ` ஆட்டாக ` என ஆக்கம் வருவித்துரைக்க . ஆனது - பசுவினது . ` ஆட்டான அஞ்சும் ` எனவும் , பாடம் ஓதுவர் . அடங்கார் - பகைவர் ; ` அடங்காதார் என்றும் அடங்கார் ` ( நாலடி - 116) என்பதிற்போல , ` அடங்கார் , அறிவிலார் ` என்றலுமாம் . ` காட்டானை ` என்றது , இனம் பற்றி என்க .

பண் :

பாடல் எண் : 2

அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர்மெய் பூசுந் தலைவா போற்றி
எதிரா வுலகம் அமைப்பாய் போற்றி
யென்றும்மீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

வினைகள் நடுங்கச் செய்யாதபடி அவற்றை நீக்குபவனே ! கல்லால மர நிழற்கீழ் அமர்ந்தவனே ! திறமை உடையவனே ! சிறந்த குழை என்னும் காதணியை அணிந்தவனே ! சாம்பலை உடலில் பூசும் தலைவனே ! தனக்கு ஒப்பில்லாத முத்தி உலகை அமைத்து அதனை அடையும் அடியவருக்கு என்றும் பிறப்பிற்குத் திரும்பி வாராத அருளைச் செய்பவனே ! ஒளி வீசும் சூரியன் முதலிய ஒளிகளுக்குப் பற்றுக் கோடாக இருப்பவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` அதிராமை , மீளாமை ` என்னும் வினையெச்ச மறைகளின் ஈறுகள் கெட்டன . ` மீளா அருள் ` என்பதற்கு , மீளாமைக்கு ஏதுவான அருள் என்று உரைப்பினும் அமையும் . அதிர்த்தல் - நடுங்கச் செய்தல் . சதுரா - திறனுடையவனே . சதுரக்குழை - சிறந்து விளங்குங் குழை . எதிரா - இணையில்லாத . இணையில்லாத உலகமாவது பரமுத்திநிலை ; அஃது உணர்த்த வாராமையின் , உலகமாக அருளிச் செய்தார் ; ` எதிரா உலகம் ` என்றது , அப்பொருளதாதலை , ` என்றும் மீளா அருள் செய்வாய் ` எனப் பின்னர் அருளிச் செய்த குறிப்பானும் உணர்க . ` அமைப்பாய் ` என்றது , ` வழங்குவாய் ` என்றவாறு . ` கதிரார் கதிர் ` என்பதில் பின்னுள்ள கதிர் , ` ஞாயிறு ` என்னும் பொருட்டாய் , வாளா பெயராய் நின்றது . ` கண் ` என்றது , ` கண்போலச் சிறந்தவன் ` என்னும் பொருளதாய் , இன்றியமையாமை உணர்த்தி , ஞாயிற்றின் ஒளிக்கும் முதல் ஒளியாய் நிற்றலை விளக்கிற்று .

பண் :

பாடல் எண் : 3

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாய வண்ண முடையாய் போற்றி
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

செம்மை கருமை வெண்ணிறம் இவற்றை உடையவனே ! நீங்காத செல்வம் உடையவனே ! வியக்கத்தக்கவனே ! பெரிய பொருள்களும் சிறிய பொருள்களும் ஆகியவனே ! ஆகாயத்தின் தன்மை உடையவனே ! தீயோருக்கு வெப்பமும் அடியார்க்குக் குளிர்ச்சியும் அண்மையுமாய் உள்ளவனே ! ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் அருட் சக்தியை உடையவனே ! அனல் ஏந்திய அழகனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` செம்மை , கருமை , வெண்மை ` என்னும் மூன்றுமே முதல் நிறங்களாதல் பற்றியும் அவை முறையே இராசத தாமத சாத்துவிக குணங்களைக் குறிக்கும் குறிப்புக்களாதல் பற்றியும் , ` எல்லாப் பொருளுமாயினவன் ` என்பார் , அவற்றை வகுத்தோதி யருளினார் . செல்லாத - நீங்காத , நீங்காத செல்வமாவன தன்வயத்தனாதல் முதலிய குணங்கள் . ஐ - வியப்பு ; தலைமையுமாம் . வண்ணம் - தன்மை . ஆகாயத்தின் தன்மையாவது , அருவாதலும் , எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கி நிற்றலுமாம் . இவ்வாறாதல் பற்றியே இறைவனது குணத்தினை , ` சிதாகாசம் , அருள்வெளி ` என்பன போன்ற சொற்களாற் குறிப்பர் . இப்பெற்றி நோக்கியே , ` விசும்பு மெய்யாக ` ( நற்றிணை - கடவுள் வாழ்த்து ). என , இறைவற்கு ஆகாயத்தை உடம்பாகக் கூறினார் , சான்றோர் எனத் தைத்திரீய உப நிடதமும் கூறும் . வெய்யாய் - வெம்மை உடையவனே . தணியாய் - தண்மை யுடையவனே . அண்மை . ` அணிமை ` எனப் படுதல் போல , தண்மை . ` தணிமை ` எனப்பட்டது ; ` வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா ` என , ஆளுடைய அடிகளும் அருளினார் . ( தி .8 திருவா . சிவபு .36) அணியாய் - அண்மையில் உள்ளவனே . இங்ஙனம் அருளியவாற்றால் அணிமையின் மறுதலைபற்றி ` சேயாய் ` என்பதுங் கொள்ளப்படும் . ` செய்யாய் கரியாய் ` என்றது முதலிய பலவற்றால் , ஒன்றொடொன்று ஓவ்வாப் பொருள்கள் பலவும் தான் ஒருவனேயாய் நிற்கும் அதிசயநிலை அருளிச் செய்யப்பட்டது ; ` செல்லாத செல்வம் , வேளாத வேள்வி ` என்றருளியனவும் அன்ன , வேளாத வேள்வி - ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் வேள்வி ; என்றது அருட்சத்தியை . அது , சிவபிரானைப் பயன்கருதியும் கருதாதும் வழிபடுவோர்க்குத் தூய்தான உலகப் பயனையும் , வீடுபேற்றையும் தரும் என்பதனை , தூய்தல்லாத உலகப் பயனைத்தரும் வேள்விகளிலே மனஞ்செல் வார்க்கு அறிவுறுத்தற்பொருட்டு , வேள்வியாக அருளிச் செய்தார் . தூய்தன்மை மயக்கஞ் செய்தலும் , தூய்மை அது செய்யாமையுமாம் . இன்னும் தேவர்க்குக் கொடுக்கும் அவியுணவுகளை வேள்வித் தீ வழியாகக் கொடுத்தல் போல , சிவபிரானுக்கு நிவேதிக்கும் நிவேதனங்கள் அனைத்தும் அவனது அருட்சத்தி வழியாகவே நிவேதிக்கப் படுதலின் , அதனை அவ்வாறருளிச் செய்தற்கு இயைபுண்மை யறிக . இது பற்றியே , சிவபிரானுக்கு வேள்வித் தீ வழியாகக் கொடுக்கு மிடத்தும் சிவாக்கினி வழியாகவே கொடுத்தல் சிவநெறி முறைமை யாயிற்று , இதனானே , சைவவேள்வி , பூதாக்கினியையே வளர்க்கும் வைதிக வேள்வி போலாது , சிவாக்கினியை வளர்க்கும் வேள்வியாத லறிக . சிவாக்கினியைப் பிறப்பிக்கும் முறை , அதனை வளர்க்கும் முறை முதலியவெல்லாம் , பிரமாணங்கள் முதலியவற்றினன்றிச் சைவாகமங்களிலே அறியப்படுவனவாம் . ` கையின்கண் ` என உருபு விரிக்க . ` ஆர் ` இரண்டனுள் முன்னது மிகுதியையும் , பின்னது பொருந்துதலையும் குறித்தன . ` ஆரழல் ` என்பதே பாடம் என்றலுமாம் . விடங்கன் - வீரம் உடையவன் .

பண் :

பாடல் எண் : 4

ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

உலகை ஆள்பவனே ! அடியார்களுக்கு இன்பம் அளிப்பவனே ! சிறிதும் வஞ்சனை இல்லாதவனே ! கடல் விடம் உண்டவனே ! மேம்பட்ட மாண்புகளை உடையவனே ! என் உள்ளத்துள் நிலைபெற்றிருப்பவனே ! தம்முயற்சியால் யாரும் காண்டற்கு அரியவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` அமுதெலாம் ` எனப் பன்மை கூறியவதனால் , ` அமுது ` என்றதற்கு , ` இன்பம் ` எனப் பொருளுரைத்துக் கொள்க . சூட்சி - வஞ்சனை . ` சூழ்ச்சி ` என்பது , மருவிநின்றது . மாட்சி - பெருமை , காட்சி - அறிதல் , சிவபிரானது புகழ்ப்பாடல்களாவன யாவற்றுள்ளும் அவனது எண்குணங்கள் ஏற்றபெற்றியாற் பெறப்படுமாயினும் , இத்திருத்தாண்டகத்துள் , அவனது எண்குணங்களும் பெறப்படும் . அஃதாமாறு காட்டுதும் : ஆட்சியால் தன்வயமும் , அமுதினால் வரம்பிலின்பமும் , சூட்சி சிறிதுமின்மையால் இயல்பாகவே பாசங்களின் நீங்குதலும் , நஞ்சமுண்டமையால் பேரருளும் , பெரிதாய மாட்சியால் முடிவிலாற்றலும் , அடியவரது சிந்தையினின்று அறிவித்தலால் இயற்கை யுணர்வும் , காட்சிக் கருமையால் தூய உடம்பும் , கயிலைமலையிருக்கையால் முற்றுணர்வும் பெறப்படுதலை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க . மலைமேல் நின்றார்க்கு எல்லாப் பொருளும் தோன்றுதலால் , கயிலைமலை யிருக்கையால் முற்றுணர்வுடைமை பெறப்படும் என்க . எனவே , இஃதோர் அரும்பெறற்றிருப்பாடலாத லுணர்க .

பண் :

பாடல் எண் : 5

முன்னியாய் நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
யேழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

தவக்கோலம் பூண்ட முதல்வனே ! மூப்படையாத திருமேனியனே ! எனக்குத் தாயும் தந்தையும் ஆயவனே ! ஏழிசையை விரும்புபவனே ! உன்னோடு கூடிய பார்வதியின் துணைவனே ! மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களும் ஆனவனே ! என்றும் அழிவில்லாத கங்கைக்குத் தலைவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` முனியாய் ` என்பது , ` முன்னியாய் ` என விரித்தல் பெற்றது ; பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை - முனியாய் ( தி .5. ப .96. பா .3.) எனத் திருக்குறுந்தொகையில் அருளிச் செய்தமை காண்க . ` தவக்கோலம் உடையவனே ` என்பது பொருள் . இனி , இயல்பாகவே கொண்டு , ` எல்லாவற்றையும் நினைப்பினாற் செய்பவனே ` என்று உரைத்தலுமாம் . ` என் ` எனவும் , ` யாய் ` எனவும் வந்த சொற்கள் ` என்னியாய் ` என இகரம் பெற்றுப் புணர்ந்தன . யாய் - தாய் . ` என் ` என்பது ` எந்தை பிரான் ` என்பனவற்றோடும் இயையும் . ` யாய் , எந்தை ` என்பனவும் விளிப்பெயர்கள் என்க . ` இசையே ` என , பிறவற்றை உகவாதான் போலப் பிரிநிலையேகாரம் புணர்த்தோதினார் , அதன்கண் உள்ள விருப்பமிகுதி புலப்படுத்தற் பொருட்டு ; ` பூம்புகலி - வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே ` ( தி .2. ப .54. பா .8.) என்றதுபோல . இசையில் இறைவற்கு உள்ள விருப்ப மிகுதியை , ` அளப்பில கீதஞ்சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே ` என்றும் சுவாமிகள் உணர்த்தியருளினார்கள் . ( தி .4. ப .77. பா .3.) தந்திரம் - ஆகமம் . ` கன்னி ` என்றது தென்றிசைக் குமரித் தீர்த்தத்தை ; ஆர் கங்கை - நிறைந்த கங்கைநதி . ` இவ்விரண்டிற்கும் ஒருவனே தலைவன் ` என்றருளியவாறு . ` கங்கை ` என்பதற்கு ` கங்காதேவி ` எனப் பொருளுரைப்பின் , ` கங்கையார் ` என்னும் பன்மையோடியையாமையும் , தகரம் மிகுதல் பொருந்தாமையும் அறிக .

பண் :

பாடல் எண் : 6

உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னும் ஊர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
யேசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே யடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

எல்லா உலகிற்கும் உரிமை உடையவனே ! உன் கருத்தறிந்து செயற்படும் காளையை வாகனமாக உடையவனே ! எரி போன்ற அருள் விளக்கே ! பிறர் இகழுமாறு மண்டை யோட்டினை ஏந்தினவனே ! தேவர்கள் அணுகுவதற்கு அரியவனே ! அறிவு வடிவானவனே ! நுண்ணியனே ! ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கங்கள் பல .

குறிப்புரை :

` உரியாய் ` என்றது ` உடையவனே ` என்றவாறு ; ` உலகினுக்கு ` என , உயர்திணைக் கிழமைக்கண் அது உருபுவாராது குவ்வுருபு வந்தது . விடையூர்தியாவது உயிரேயாதலின் , ` உணர்வென்னும் ஊர்வதுடையாய் ` என்றருளினார் , அறமேயன்றி உயிரும் ஊர்தியாமென்பதுணர்க . எரியாய - எரிபோன்ற . தெய்வச்சுடர் - அருள் விளக்கு . ஏசும் - இகழப்படுகின்ற . முண்டி - தசை நீங்கிய தலை , ` அதனைக் கையில் உடையவன் ` என்க . ` போற்றி ` என்பதனை , ` அறிவே ` என்பதனோடுங் கூட்டுக . அறிவு - அறிவே வடிவம் ஆனவன் . அடக்கம் - நுணுகியிருத்தல் ; ` நறுமல ரெழுதரு நாற்றம் போல் - பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் ` ( தி .8 திருவா . அதிசயப் - 9.) என்பதுங் காண்க . கரியான் - திருமால் . ஆழி - சக்கரம் .

பண் :

பாடல் எண் : 7

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
யேறறிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

உயிர்களுடைய எண்ணங்களுக்கு மேற்பட்ட எண்ணங்களை உடையவனே ! உயிர்களைக் கரையேற்றும் பொருட்டு மேம்பட்ட குணங்களை உடையவனே ! பண்ணிடத்திலே விருப்பம் கொண்டு பண்ணோடு யாழினையும் வீணையையும் இசைக்கின்றவனே ! வானத்தையும் கடந்து ஓங்கியிருப்பவனே ! மேலோருக் கெல்லாம் மேலோனே ! இரு கண்களுக்கு மேலே மூன்றாவதான நெற்றிக் கண்ணை உடையவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` எண் ` என்றது , உயிர்களது எண்ணத்தினை . ` மேல் ` என்பது ஏழனுருபு ; ` உம்மை ` நுணுக்கத்தினது மிகுதியுணர்த்தலின் , சிறப்பு . எண்ணம் - எண்ணுதல் . அறிய - பலரும் பார்க்க . ` அரிய ` என்பது பிழைபட்ட பாடம் . குணம் - இயல்பு . பாவித்து - நினைத்து ; விருப்பங் கொண்டு . இதனை வலியுறுத்தற்கு . யாழும் வீணையும் பயிறலை அருளிச் செய்தார் . ` விண்ணின் மேலும் , அதற்கு மேலும் ` என்க . ` விண் ` என்றது , பிருதிவி அண்டத்தை ` மேலார் கண் மேலார் கண் மேலாய் ` என்றதனை மேலே காண்க . ` கண்மேலுங் கண்ணொன் றுடையாய் ` என்பதனை , ` கண்மேற் கண்ணும் சடைமேற் பிறையும் உடையார் ` ( தி .1. ப .67. பா .2.) என்பதனோடு வைத்துக் காண்க .

பண் :

பாடல் எண் : 8

முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

சடையில் பிறை சூடி , திருநீறு பூசிய மூர்த்தியே ! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே ! தம் முயற்சியால் அறிய முற்படுபவர் காணமுடியாதபடி இருப்பவனே ! அடியவர்களின் அடிமைத் தன்மையின் உண்மையை அறிபவனே ! அவர்களைத் தேவருலகை ஆளவைப்பவனே ! காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` முடியாக ஆர்ந்த சடை ` என்க . முழுநீறு - நீற்றின் இலக்கணம் சிதையாது நிரம்பிய நீறு ; மேனியின் முழுமை நீற்றின்மேல் ஏற்றப்பட்டது எனினுமாம் . சண்ணித்தல் - பூசுதல் . சோதித்தார் , அயனும் மாலும் . ` அறிவாய் ` என்றது , ` பிறரறியாதொழியினும் அறிந்து அருள் செய்பவனே ` என்றதாம் ; இதனை நாயன்மாரது வரலாறுகளிற் காண்க . ` அடியார் ` என முன்னே அருளினமையின் , வாளா , ` அமரர் பதியாள வைத்தாய் ` என்றார் . கடியார் - கொடியவர் .

பண் :

பாடல் எண் : 9

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநூறு பெயராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பொழிப்புரை :

அடியார்கள் வணக்கம் சொல்லித் திருவடிகளை வழிபடுமாறு இருப்பவனே ! புண்ணியனே ! முயற்சியால் அணுக அரியவனே ! இடி ஒலிக்கும் வான்மேல் இருப்பவனே ! எண்ணிறந்த பெயர்களை உடையவனே ! நான்கு திசைகளுக்கும் ஒலி வழங்கும் தலைவனே ! பிரமனுக்கும் திருமாலுக்கும் உள்ளவாறு உணர்தற்கு அரியவனே ! காற்று இயங்கும் திசைகளுக்கெல்லாம் காரணனே ! கயிலை மலையானே ! உனக்கு வணக்கம் பல .

குறிப்புரை :

` போற்றி இசைத்து ` என்பது , ` போற்றிசைத்து ` என நின்றது ; இதனுள் , ` போற்றி ` என்னுஞ்சொல் தன்னை உணர நின்றது . இசைத்து - சொல்லி ; இதனானே , ` அவ்வாறு பரவுதல் செய்தற்பாற்று ` என்பது பெறப்பட்டது . ` ஏறு ` என்பது , ` ஏற்று ` என விரித்தலாயிற்று ; ` இடி ` என்பது பொருள் . ` ஏற்றிசைக்கும் வான் ` என்றது , ` மேகம் ` என்றவாறு . அதன்மேல் இருத்தலாவது , அதற்குத் தலைவனாய் நின்று அதனை நடத்துதல் . இனி , இது , நாயனாருக்குக் கயிலை மலை வழியில் இறைவன் விண்ணிலே மறைந்தருள் புரிந்தமையைக் குறித் தருளியதூஉமாம் . ( தி .12 பெ . பு . திருநாவு . 368) எண் - எண்ணப்படுகின்ற . ` ஆயிரத்தெட்டும் நூற்றெட்டுமாகச் சொல்லப்படும் பெயர்களை உடையவன் ` எனவும் பொருள் உரைப்பர் ; அஃது அத்துணைப் பெயர்களால் அருச்சிக்கும் மரபு பற்றியதாம் . போற்றித் திருப்பாடல்கள் பலவற்றின் இறுதிக்கண் இவ்வாறருளிச் செய்தமை , அவைகளை முடித்தற் குறிப்புணர்த்தும் . விளக்குப் போல எல்லாவற்றையும் புலப்படுத்துதலின் , ` விளக்காய நாதா ` என்றருளினார் . காற்று இசைக்கும் - காற்று ஒலிக்கின்ற என்றது , காற்றில்லாத திசைக்கெல்லாம் ` என்றருளிச் செய்தார் . ` வித்து ` என்றது ` காரணன் ` ( தலைவன் ) என்னும் பொருளது . இத்திருப்பதிகத்திற் கிடைத்த திருப்பாடல்கள் இவ்வளவே . இக்கயிலாயப் போற்றித் திருப்பதிகங்களுள் பலவிடத்தும் , இறைவன் தமது சிந்தனையின்கண் நின்றமையை வலியுறுத்தருளிச் செய்தது , கயிலைபோல , உடம்பிற் கயிலை உள்ளம் என்பது உணர்த்துதற் பொருட்டென்க . * * * * * * * * * 10 .

பண் :

பாடல் எண் : 1

மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை
மறையவனும் வானவருஞ் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி யுடையார் ஒற்றை
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே
பண்மலிந்த மொழியவரும் யானு மெல்லாம்
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

உலகத்தை அளந்த நீலமணி நிறத்தவரான திருமாலும் பிரமனும் தேவர்களும் தம்மைச் சூழ , நெற்றிக்கண்ணராய் , ஒற்றைப் பாம்பினைக் கையில் உடையவராய் , இனியமொழிகளையுடைய மற்றப் பெண்களும் யானும் பணிந்து வணங்கித் தம்பின்னே செல்லவும் , மண்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளையுடைய வலம்புர நகரில் புகுந்து , பெருமான் அங்கேயே தங்கிவிட்டார் .

குறிப்புரை :

மண் அளந்த மணி வண்ணர் , திருமால் ; ` மணி வண்ணர் ` என்ற பன்மை , நகையை உள்ளுறுத்தது . மறையவன் - பிரமன் . ` மற்றை ` என்பதனை , ` வானவரும் ` என்பதனோடு கூட்டுக . அணிந்தவை பல பாம்புகளாயினும் , கையிற் பிடித்து ஆட்டி மகிழ்வது ஒரு பாம்பு என்க . கதம் - சினம் . ` காணீர் ` என்பது முன்னிலை அசை : இதனை இறுதிக் கண் கூட்டுக . ` அன்றே ` என்றது , தான் கண்ட அந் நாளினை , ` அன்றே வலம்புரம் புக்கு ` என்க . பண் மலிந்த மொழியவர் , தன்னைப்போலும் பெண்டிர் . பணிதல் - அடிக்கண் வீழ்தலும் . இறைஞ்சுதல் - தலை வணங்குதலுமாம் . ` பின்பின் ` என்னும் அடுக்கு இடைவிடாமை குறித்தது . ` அங்கே ` என்னும் ஏகாரம் , ` மீள இவண் போந்திலர் ` என்பது குறித்த பிரிநிலை . ` நெற்றி யுடையவரும் கையுடையவருமாகிய ஒருவர் , நின்று , செல்ல , புக்கு மன்னினார் ` என வினைமுடிவு செய்க .

பண் :

பாடல் எண் : 2

சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த
தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்
கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்
கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம்
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

வில்லில் பழகிய அம்பு ஒன்றால் முப்புரமும் அழித்த , தீயைப் போன்ற செந்நிறமுடைய பெருமானாய் , இமையவர்கள் வழிபட்டுப்புகழக் கொலைத் தொழிலில் பழகிய மத யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கூத்தாடிக் கொண்டு எங்கும் செல்லும் அக்கூத்தர் , கலைகளில் பழகிய அந்தணர்கள் காணவும் , பூதகணங்கள் சூழவும் , விரைவாகச் செல்லும் காளை மீது பார்வதியும் கங்கையும் தாமுமாக இவர்ந்து , வலம்புரம் சென்று அங்கே தங்கி விட்டார் .

குறிப்புரை :

சிலை நவின்ற - வில்லிற் பொருந்திய . சிறந்து - சிறந்து தோன்றி . கொலை நவின்ற - கொலை பயின்ற . களி - மதமயக்கம் . கலை நவின்ற - கலைகளைப் பயின்ற . அடுக்கு , பன்மை குறித்தது . பாரிடம் - பூதகணம் . ` மலைமகளையும் கங்கையையும் அணைத்துச் சென்றவர் , எம்மை நோக்காதே போயினார் ` என வருந்தினாள் . ` தீவண்ணரும் கூத்தரும் ஆகிய அவர் , காண , சூழ , புக்கு மன்னினார் ` என்க .

பண் :

பாடல் எண் : 3

தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல
வருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

திருமேனியின் ஒரு பகுதி தீயின் நிறமாகவும் , மற்றைப்பகுதி திருமாலின் நிறமாகவும் விளங்கித்தோன்ற , ஆக்கூரிலுள்ள தான்தோன்றி மாடத்திற்குச் செல்பவரைப்போல யான் அப்பக்கம் சென்ற அளவில் ஓரிடத்தையும் நோக்காமல் , பூணூலும் மான் தோலும் பொருந்திய தம் மேனியில் வெள்ளிய நீறு பூசி , வேதக் கருத்துக்களை விரித்து , மாயமாகச் சில பேசிய வண்ணம் , வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே .

குறிப்புரை :

தீக்கூரும் - நெருப்பு மிக்கெரிவது போலும் . ` திருமேனி ஒருபால் ` என்புழியும் உம்மை விரிக்க . ` அரிஉருவம் ஒருபாலும் ` என மாற்றுக . ஒருபால் தம்முருவமும் , ஒரு பால் அரி - ( திருமால் ) உருவமுமாக நிற்பவரை , ` சங்கர நாராயணர் ` என்பர் . இந்நிலை , படைப்புக்காலத்தில் திருமாலை இடப்பாகத்தில் தோற்றுவித்து , அவர்வாயிலாகப் பிரமனைத் தோற்றுவித்து , அவன் வாயிலாக உலகங்களைத் தோற்றுவித்தலைக் குறிப்பதாம் . ஆக்கூர் , சோழ நாட்டுத்தலம் ; இதன்கண் இறைவர் சுயம்பு மூர்த்தியாய் இருத்தலின் , ` தான்றோன்றி ` எனப்படுவர் ; அப்பெயர் , அவரது திருக்கோயிலுக்கும் ஆயிற்று . அது மாடக்கோயிலாதலால் , ` தான்றோன்றிமாடம் ` எனவும் , வழங்கப்படும் . ` அங்குப்போவார் போலக்காட்டி எம்மை அலைவித்தார் ` என்றாள் . அப்பால் - அதன் பின் . எத்திசையிலும் ` ஓரிடத்தும் ` என்பது , ` ஒருவிடத்தும் ` என வந்தது செய்யுள் விகாரம் . வருகின்ற திருப்பாடல்களுள் இவ்வாறு வருவனவும் அவை ` ஒருவிடத்தும் நோக்காராய் ` என்க . நூலும் தோலும் பிரமசாரியாதலை விளக்குவன . துதைந்து - நிறைந்து ; இதனை , ` துதைய ` எனத் திரிக்க . மாயம் - பொய் : ` மறைவிரிக்கின்ற வாயால் மாயம் பேசினார் ` எனப் புலந்து கூறினாள் . ` வாயம்பேசி ` எனவும் பாடம் ஓதுவர் , ` செல்வர் ஒருவர் ` என எழுவாய் கொள்க .

பண் :

பாடல் எண் : 4

மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ
வாவா வெனவுரைத்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

மூப்படையாத கொடிய பாம்பை அரையில் கட்டி , மும்மூர்த்திகளின் உருவமாக உள்ள முதற்கடவுளாம் சிவபெருமான் , வேறுயாரும் இணைக்க முடியாத அக்கினியாகிய அம்பினை வில்லில் கோத்த இளையராய்க் , குளிர்ந்த கொன்றைப் பூவைச்சூடி , இன்று இங்கே போகின்றவரைக் கண்டு அடியேன் பின்னே செல்ல , என்னைப் புறக்கணித்து , என்னை வாவா என்று பொய்யாக அழைத்துவிட்டுத் தம்முடைய பூதகணம் தம்மைச் சூழ , வலம்புரமேபுக்கு அங்கே மன்னினாரே .

குறிப்புரை :

இறைவனை அடைந்த பொருள்களும் என்றும் ஒரு பெற்றியவாய் நீடு வாழ்தலின் , பாம்பும் மூவாதாயிற்று ; ` இளநாகம் ` ( தி .1. ப .1. பா .2.) என்றருளிச்செய்தார் ஆளுடைய பிள்ளையாரும் . பிறையும் அன்னதாதலுணர்க . ` மூர்க்கப் பாம்பு ` என்பது , ` மூக்கப் பாம்பு ` என மருவிற்று . ` மூர்க்கப் பாம்பு ` என்றேயும் பாடம் ஓதுப . இஃது இன அடை . மூவர் , ` அயன் , அரி , அரன் ` என்பவர் . முதல்வர் - தலைவர் . கோவாத கணை - வில்லில் தொடுக்கப் படாத ( அம்பின் தன்மை யில்லாத ) அம்பு : என்றது , ` திருமால் , வாயுதேவன் , அக்கினி தேவன் ` என்ற இவர்களே அம்பாய் அமைந்தமை பற்றி . எரிகணை - எரிக்கின்ற கணை . ` குழகனாராய்ப் போவாரை ` என்க . உடன்கொண்டு செல்லாது ஒளிந்தமையின் . ` வா வா ` என உரைத்ததனை ` மாயம் ` ( பொய் ) என்றாள் . ` உரைத்து , பேசி ` என்றவற்றை , ` செல்ல ` என்ற தன் பின்னர்கூட்டி , ` அவர் ` என எடுத்துக்கொண்டுரைக்க .

பண் :

பாடல் எண் : 5

அனலொருகை யதுவேந்தி யதளி னோடே
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல்மேனிப்
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்
சினவிடையை மேல்கொண்டு திருவா ரூருஞ்
சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

ஒருகையில் தீயை ஏந்தி , இடையில் அணிந்த தோலாடை மீது ஐந்தலையை உடைய பெரிய பாம்பினை இறுகக் கட்டிக் கங்கை தங்கிய சடைமுடியும் பொன் போன்ற திருமேனியும் உடைய புனிதர் , விரும்பித் தேவர்கள் வழிபட்டுத்துதிக்கக் கோபம் உடைய காளையை இவர்ந்து , திருவாரூரும் சிரபுரமும் , இடைமருதும் அடைபவரைப்போல , என்மனம் உருகுமாறும் வளைகள் கழலுமாறும் என்னிடத்துப் பொய்யாகச் சிலவற்றைப் பேசி வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .

குறிப்புரை :

` கையது ` அது , பகுதிப்பொருள் விகுதி . ` கையதன் கண் ` என உருபு விரிக்க . அதள் - தோல் . புனல் பொதிந்த - நீர் உள் நிறைந்த . புரிந்து - விரும்பி . சிரபுரம் - சீகாழி .

பண் :

பாடல் எண் : 6

கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

நீலகண்டராய்க் கூற்றுவன் அழியுமாறு காலினால் உதைத்து மகிழ்ந்த காபாலக்கூத்தாடும் பெருமானார் தாம் உரித்த தோலை ஆடையாக உடுத்து , திருநீறு பூசி முனிவர்கள் தம் இருபுடையும் சூழ்ந்துவர , வீடுகளில் முன்னிடம் தோறும் வீணையை இசைத்துக் கொண்டு சென்றாராக , அவருடைய புன்சிரிப்பு என் சிந்தையைக் கவர , மீண்டும் ஒருமுறை என்னை நோக்காமல் பொய்யாக ஏதோ பேசி , வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .

குறிப்புரை :

முறித்தது - உரித்தது . முண்டம் - தலைமாலை . ` முற்றம் ` என்றது , முன்றிலை . ` சிறுமுறுவல் செய்தவர் ` மறித்து ஒருகால் நோக்காதே போயினார் என வருந்தினாள் .

பண் :

பாடல் எண் : 7

பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்
பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்
கெவ்வூரீர் எம்பெருமா னென்றே னாவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி
வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

பட்டினை உடுத்துப் பவளம் போன்ற தம் மேனியில் பசிய சந்தனம் பூசித் தம் திருவடிகளை ஊன்றியும் தூக்கியும் கூத்தாடிக் கொண்டு என்னிடம் வந்தாராக . யான் ` எம்பெருமான் நீர் எவ்வூரைச் சேர்ந்தவர் ` என்று வினவ என் உயிர்போகுமாறு என்னை விரைந்து பார்த்து , எனக்கு காமமீதூர்வினை வழங்கி , வேறோர் ஊருக்குச் செல்பவரைப்போலப் பொய் பேசிச் சுழன்று நடந்து , வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே .

குறிப்புரை :

பசுஞ் சாந்து - குளிர்ந்த சந்தனம் . ` பாதம் இட்டு ( ஊன்றி எடுத்து ( தூக்கி )` என்றது , நடனம் ஆடிய வகையை விரித்தவாறு . ` எம்பெருமான் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் . ` ஆவி ( உயிர் ) விடுமாற்றினைச் செய்து ` என்க . அது , பகுதிப்பொருள் விகுதி , ` ஆவி விடுமாறாவது , காமம் மீதூர்வு . விரைவு , போகவேண்டுங் குறைபற்றித் தோற்றுவித்தது . வட்டணைகள்பட - சுழற்சி தோன்ற .

பண் :

பாடல் எண் : 8

பல்லார் பயில்பழனம் பாசூ ரென்று
பழனம் பதிபழமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி யின்று வைகி
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்
சொல்லா ரொருவிடமாத் தோள்கை வீசிச்
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கு
மல்லார் வயல்புடை சூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

பலரும் தங்கியிருக்கும் திருப்பழனம் , பாசூர் என்று தம் ஊர்களைக் குறிப்பிட்டு , அவற்றுள் பழனப்பதியில் தமக்கு உள்ள பழந்தொடர்பைக்கூறி , நல்லவர்கள் மிக்க நனிபள்ளியில் இன்று தங்கி , மறுநாள் நள்ளாறு போய்ச் சேர எண்ணியுள்ளதாகக்கூறினார் . இன்ன இடத்துக்குப் போகப்போவதாக உறுதியாய்க் கூறாமல் , திருநீறு பூசிய அழகியராய்த் தம் கைகளை வீசிக் கொண்டு , வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளை உடைய வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .

குறிப்புரை :

பழனம் , சோழநாட்டுத் தலம் . பாசூர் , தொண்டை நாட்டுத் தலம் . பழனத்தை முன்னர்க் கூறினமையால் அதன் பழமை கூறியதாயிற்று . ` பழனம் ( தமக்குப் ) பதியாதல் பழமையாதலைச் சொல்லி நின்றார் ` என்க . நனிபள்ளி , நள்ளாறு சோழநாட்டுத் தலங்கள் . முன்னே இரண்டு ஊர்களைச் சொல்லி . பின்பு , இன்று , ஓர் ஊரிலும் , நாளை ஓர் ஊரிலும் இருப்பதாகக் கூறினமையின் , ` ஓரிடமாகச் சொல்லிற்றிலர் ` என்றால் . ` தோளும் கையும் வீசி `, என்க . ` எங்கும் அல்லாராய் ` என . மோனை நயம் கருதாதே பிரித்து , ` முன்சொல்லிய எவ்விடத்தும் செல்லாராய் ` என்றே உரைக்க . ` மல் ஆர் வயல் ` எனப் பிரித்தலுமாம் . மல் - வளம் .

பண் :

பாடல் எண் : 9

பொங்கா டரவொன்று கையிற் கொண்டு
போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்
தங்கா ரொருவிடத்துந் தம்மே லார்வந்
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்
எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா
என்கண்ணின் நின்றகலா வேடங் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

படமெடுத்து ஆடும் பாம்பு ஒன்றனைக் கையில் கொண்டு , மறுகையில் போரிடும் மழுப்படையை ஏந்தி , ஓரிடத்தும் தங்காராய்ப் போய்க்கொண்டே , தம்மிடத்து மற்றவர் கொள்ளும் விருப்பத்தை நீக்காராய் மெய்ப்பொருளிடத்தே நிற்பவராகத் தம்மைக் கூறிக்கொண்டே ஒன்றோடொன்று பொருந்தாத செயல்களை உடையவராய் , என்கண்களை விட்டு நீங்காத தம் இனிய வேடத்தைக் காட்டி , வானத்திலுள்ள சந்திரன் தவழும்படியான உயர்ந்த மாட வீடுகளைக் கொண்ட வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .

குறிப்புரை :

பொங்கு - சினம் மிக்க . வெண்மை , கூர்மையைக் குறிக்கும் . தத்துவம் - உண்மை . ஒன்றொன்று ஒவ்வா - ஒன்றோ டொன்று ஒவ்வாது , முரணி நிற்கின்றன . ` எங்கே ` என்பதனை , ` ஒவ்வா ` என்பதன் பின்னர்க்கூட்டி , ` அவை எத்தன்மையன ` என்றுரைக்க . ` எத்தன்மையன ` என்னும் வினா ` ஒன்றினும் படாப் பித்தர் செய்கையாம் ` என்பது தோற்றி நின்றது . ` இச் செய்கைதாமே காதலை வளரச்செய்யா நின்றது ` என்பது , ` என் கண்ணின் நின்றகலா வேடங்காட்டி ` என்றதனால் இனிது பெறப்படும் .

பண் :

பாடல் எண் : 10

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி
யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

பொழிப்புரை :

திருமால் வில்லை ஏந்திக் குரக்குச்சேனையோடு , கடலில் அணைகட்டி , இலங்கையைச் சென்று அடைந்து , மேம்பட்ட பலபோர்கள் செய்து , தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்கிரீவன் , வீடணன் முதலியோர் உதவியதால் அரிதில் வென்றழித்த இராவண னுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு , தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி , அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான் . அப்பெருமானார் , இன்று கப்பல்கள் நிறைந்த கடலால் ஒருபுறம் சூழப்பட்டதாய் , மாடவீதிகளை உடைய வலம்புரம் என்ற ஊரை அடைந்து அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார் .

குறிப்புரை :

செங்கண் மால் அரிதின் வென்றமையை நினைவாள் , சிலை பிடித்தமை முதலியவற்றை எடுத்துக் கூறினாள் . புகல் - அடைக் கலம் ; என்றது , அடைக்கலமாக வந்தடைந்த , ` சுக்கிரீவன் , வீடணன் ` என்பவர்களைக் குறித்தது . முடிகள் , தலையில் அணியப்பட்டவை . ` பொடி வாய் வீழ ` என்பது பாடமாயின் , மண்ணில் விழ ` என உரைக்க . ` திருமால் அரிதில் வெல்லும் ஆற்றலுடையவனைக் கால் விரலால் சிறிதே ஊன்றி அடர்த்தார் ` எனவும் , ` திருமால்போல அடர்த்தே ஒழியாது , பின்பு அவனுக்கு அருள்புரிந்தார் ` எனவும் வியந்தவாறு . இவ்வாறு அவரது ஆண்மை மிகுதியையும் . அருள் மிகுதியையும் . நினைந்து நினைந்து ஒருகாலைக்கொருகால் காதல் மீதூரப் பெற்றாள் என்க . ஆண்மையும் அருளும் உடைய ஆடவரிடத்திற்றானே மகளிர்க்குக் காதல் பிறக்கும் என்பதனை , ` கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் - புல்லாளே ஆயர் மகள் ` ( கலி - 103 அடி 63 - 64 ) எனவும் , ` பொருளே காதலர் காதல் - அருளே காதலரென்றி நீயே ` ( அகம் - 53 அடி 15 - 16 ) எனவும் வருவனபோல்பவற்றாற் குறிப்பர் , சான்றோர் .

பண் :

பாடல் எண் : 1

தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்
தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்
பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்ணி என்ற திருத்தலத்திலே விரும்பித் தங்கியிருக்கின்ற உலகியலிலிருந்து வேறுபட்டவராகிய சிவபெருமானார் , தொண்டுகளால் விளங்கும் அடியவர்களுக்கு ஒப்பற்ற வழியாய் உள்ளவரும் , திருநீறு அணிந்த மார்பினரும் , தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி தழற்பிழம்பாய்க் காட்சி வழங்கிய பழம்பொருளானவரும் , வண்டுகள் தங்கும் கொன்றை மாலை அணிந்தவரும் , தேவர்களுக்காக விடத்தை உண்டவலியவரும் , பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவரும் ஆவார் .

குறிப்புரை :

தொண்டு இலங்கும் அடியவர் - தொண்டுகள் விளங்கும் இடமாய் நிற்கின்ற அடியார்கள் . அவர்கள் தம் பெருமானையே பற்றுக்கோடாகக் கொண்டு ஒழுகுதலின் , ` அடியவர்க்கு ஓர் நெறியினார் ` என்றருளினார் . ` நெறியானாரும் ` என்பதும் பாடம் . புராணனார் - பழையவர் . மைந்தனார் - வலியவர் . விண்டவர் - பிரிந்தவர் ; பகைவர் .

பண் :

பாடல் எண் : 2

நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும்
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

செம்மேனியில் வெண்ணீறு பூசியவரும் , நெற்றிக் கண்ணரும் , பார்வதி பாகரும் , பூந்துருத்தியில் உறையும் பழைய வரும் , யானைக் கொம்பு போன்ற பிறையை முடிமாலையாச் சூடிய வரும் , வளைகுளம் , மறைக்காடு இவற்றில் தங்கியவரும் , தம்மை விரும்பும் அடியாருடைய உள்ளத்தில் உறைபவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தர் ஆவார் .

குறிப்புரை :

பூந்துருத்தி , மறைக்காடு ( வேதாரணியம் ) இவை சோழநாட்டுத் தலங்கள் . மருப்பு - யானைக் கொம்பு . வளைகுளம் , வைப்புத்தலம் .

பண் :

பாடல் எண் : 3

கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்
கரிகாட்டில் எரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்
பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்ணி அமர்ந்துறையும் விகிர்தனார் , கையில் முத்தலைச் சூலம் ஏந்தினாரும் , சுடுகாட்டு நெருப்பில் கூத்து நிகழ்த்தும் கடவுளும் , படமெடுக்கும் பாம்பினை ஆட்டுபவரும் , தம்மை வழிபடுகின்றவர்களின் பாவத்தை அழிப்பவரும் , கயல் மீன்கள் பாயும் வயல்களை உடைய திருப்புன்கூர் மேவிய செல்வரும் , உடல்முழுதும் வெண்ணீறு பூசியவரும் ஆவர் .

குறிப்புரை :

கரிகாடு - கரிகின்ற காடு ; சுடலை . பை உலாம் - படம் பொருந்திய . பாற்றுவார் - அழிப்பார் . செய் - வயல் ; ` செய்க்கண் பாய ` என்க . ` வயல்கள் ` என்பது , ` அவைகள் ` என்னும் சுட்டளவாய் நின்றது . திருப்புன்கூர் , சோழநாட்டுத் தலம் . சண்ணித்தல் - பூசுதல் .

பண் :

பாடல் எண் : 4

சடையேறு புனல்வைத்த சதுர னாருந்
தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி
யுண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

சடையில் கங்கை வெள்ளத்தைச் சூடிய திறலுடைய வரும் , தக்கனுடைய பெரிய வேள்வி நிறைவேறாமல் தடுத்தவரும் , உடையாக அணிந்த புலித்தோல் மீது பாம்பினை இறுக்கிக் கட்டிப் பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும் , நீர்மடையில் ஏறிக் கயல்பாயுமாறு நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட மயிலாடுதுறையின் தலைவரும் , காளை எழுதிய கொடியை உயர்த்திய எம் புனிதரும் , வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

ஏறு புனல் - பெருகும் நீர் . சதுரனார் - திறலுடையவர் . உடை ஏறு - உடையாகப் பொருந்திய . உழிதரல் - திரிதல் . மயிலாடு துறை - மாயூரம் . மணாளனார் - தலைவர் .

பண் :

பாடல் எண் : 5

மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி
மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்
பருப்பதமும் பாசூரும் மன்னி னாரும்
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்
கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

ஐம்பூதங்களும் , அவற்றின் பண்புகளுமாய் நிலைபெற்றவரும் , பண்ணோடு கூடிய பாடலும் கூத்தும் நிகழும் சீசைலம் , பாசூர் இவற்றில் உறைபவரும் , நெற்றிக்கண்ணினரும் , மண்டையோட்டினை ஏந்தி வீட்டு வாயில்தோறும் பிச்சை ஏற்கும் செயலை உடையவரும் , பிறையை முடிமாலையாக உடையவரும் , வெண்ணியமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

` இலங்கு ` என்பதனை எல்லாவற்றிற்கும் இயைய , ` மண் ` என்றதற்கு முன்னே கூட்டுக ; மற்று , சடை . குணம் , ` சுவை , ஒளி ஊறு , ஓசை , நாற்றம் ` என்பன . பருப்பதம் - சீ பருப்பதம் ( சீசைலம் ); இது வடநாட்டுத்தலம் . பாசூர் , தொண்டை நாட்டுத்தலம் . கடை - வாயில் .

பண் :

பாடல் எண் : 6

வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாரும்
கூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும்
குரைகழ லாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்
ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
வேடுவராய் மேல்விசயற் கருள்செய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

அடியவருக்கு வீட்டுலகம் நல்குபவரும் , விடமுண்ட நீலகண்டரும் , பகைவருடைய மும்மதில்களையும் எரித்த வரும் , திருவடியால் கூற்றுவனை உதைத்தவரும் , படமெடுத்தாடும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவரும் , கல்லால மர நிழலிலிருந்து அறத்தை உபதேசித்தவரும் , வேடராய் முன்னொரு காலத்தில் அருச்சுனனுக்கு அருளியவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

வீடு - முத்திப்பேறு . மெய்யடியார் , பயன் கருதாது அன்பு காரணமாகவே வழிபடுபவர் . வேலை - கடல் . கூடலர் - பகைவர் . குமை - குமைத்தல் ; அழித்தல் ; முதனிலைத் தொழிற் பெயர் . ` அங்கு ` என்பது அசைநிலை . மேல் - பின் ; ` முன்பு போர்செய்து பின்பு அருள் செய்தார் ` என்றதாம் .

பண் :

பாடல் எண் : 7

மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
மடவா ளவளோடு மானொன் றேந்திச்
சிட்டிலங்கு வேடத்த ராகி நாளுஞ்
சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த
காலன்றன் கால மறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

தேன்பொருந்திய கொன்றைமாலை சூடி மான் ஒன்றைக் கையில் ஏந்திப் பார்வதியோடு ஞானம் புலப்படும் வேடத்தோடும் சிலவாகிய பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும் , உறுதியான பாசத்தால் மார்க்கண்டேயனைக் கட்டவந்த கூற்றுவனுடைய வாழ் நாளைப் போக்கியவரும் , ஒளிவீசும் வெள்ளிய காதணி சேரும் காதுகளை உடையவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

மட்டு இலங்கு - தேனோடு விளங்குகின்ற . ` சிட்டம் ` என்பது ` சிட்டு ` என நின்றது ; ` ஞானம் ` பொருள் இறைவனது வேடங்கள் ஞானத்தைத் தருதல் அறிக . கட்டு - கட்டுதல் ; முதனிலைத் தொழிற்பெயர் . காலன்றன் காலம் - கூற்றுவனது வாழ்நாள் . விட்டு இலங்குதல் - விட்டு விட்டு ஒளிர்தல் ; மின்னுதல் .

பண் :

பாடல் எண் : 8

செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்
திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்
ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
வெஞ்சினத்த வேழமது உரிசெய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

செஞ்சடையில் வெண்பிறை சூடியவரும் , திருவாலவாய் உறையும் செல்வரும் , மைதீட்டிய கண்களை உடைய பார்வதி பாகரும் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுமாகி இருப்பவரும் , மேகத்தை அளாவிய நீண்ட சோலைகளையும் மாட வீதிகளையும் மதிலையும் உடைய ஆரூரில் புகுந்து அங்கே நிலையாகத் தங்கிய வரும் , மிக்க கோபத்தை உடைய யானையின் தோலை உரித்தவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

` சடைக்கு `, ` சடைக்கண் ` என உருபு மயக்கம் . திருவாலவாய் - மதுரைத் திருக்கோயில் . அஞ்சனம் - மை . மஞ்சு - மேகம் . ` சோலையையும் வீதியையும் , மதிலையும் உடைய ஆரூர் ` என்க .

பண் :

பாடல் எண் : 9

வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
களங்கொளவென் சிந்தை யுள்ளே மன்னினாருங்
கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
உளங்குளிர அமுதூறி யண்ணிப் பாரும்
உத்தமரா யெத்திசையும் மன்னி னாரும்
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

வளமான பிறைசூடும் சடையினரும் , தேவர்களுக்காக விடத்தை உண்ட வலியவரும் , என் உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு தங்கியவரும் கச்சி ஏகம்பத்து உறைபவரும் , என் உள்ளம் குளிருமாறு அமுதமாக ஊற்றெடுத்து இனிப்பவரும் , மேம்பட்டவராய் எல்லாத் திசைகளிலும் நிலைபெற்றிருப்பவரும் , ஒளிவீசும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

களம் கொள - தாம் தமக்கென்று ஓர் இடம்பெற்று நிற்றற் பொருட்டு . ` களங்கொளக் கருத அருளாய் போற்றி ` ( தி .8 திருவா . போற்றித் - 171.) என்பதும் இப்பொருள் படுதல் உணர்க . அமுது ஊறி - அமுதம் சுரப்பது போன்று . அண்ணிப்பார் - இனிப்பார் . உத்தமர் - மேலானவர் . ` விளங்குகிளரும் ` என்பது குறைந்து நின்றது ; விளங்கு - விளங்குதல் ; முதனிலைத் தொழிற் பெயர் .

பண் :

பாடல் எண் : 10

பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்
புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்
குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்
திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

பொன்போல் விளங்கும் கொன்றை மாலை சூடிப் புகலூரிலும் பூவணத்திலும் உறைபவரும் , அச்சம் தரும் முத்தலைச் சூலம் ஏந்தியவரும் , குளிர்ச்சி தரும் கங்கைபொருந்திய செஞ்சடையை உடைய இளையரும் , இராவணனுடைய பத்துத்தலைகளையும் தம் காலின் அழகிய விரலால் வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவரும் , மின்னல்போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

பொன் இலங்கு - பொன்போல விளங்குகின்ற . தார் இன்பநிலையிலும் , மாலை வெற்றியிலும் அணியப்படுவன . புகலூர் , சோழநாட்டுத் தலம் ; இதுவே , சுவாமிள் இறைவன் திருவடி கூடிய இடம் . பூவணம் , பாண்டிநாட்டுத் தலம் . கொன் - அச்சம் . கங்கை வைக்கப்பட்டிருத்தலின் , சடை குளிர்ச்சி பொருந்தியதாயிற்று .

பண் :

பாடல் எண் : 1

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவ மார மாக
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த அன்போ
டேத்தவனை யிறுவரையில் தேனை ஏனோர்க்
கின்னமுத மளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

தேவர்களுக்கு எல்லாம் மூத்தவனாய், மூப்படையாத திருமேனியை உடைய முதல்வனாய், இடுப்பில் கொடிய பாம்பைச் சுற்றியவனாய், எலும்புகளையும், பாம்புகளையும் மாலையாக அணிந்தவனாய், அடியவர்களால் பணிந்து அன்போடு தோத்திரிக்கப்படுபவனாய், பெரிய மலையில் உள்ள தேன் போன்றவனாய், தேவர்களுக்கு இனிய அமுதம் வழங்கியவனாய், துயரங்களில் இருந்து எல்லோரையும் காத்தவனாய், கற்பகம் போன்றவனாய்க் கற்குடியில் மேம்பட்டவனாய் உள்ள பெருமானை அடியேன் கண்ணாரக் கண்டேன்.

குறிப்புரை :

மூத்தவன் - முற்பட்டவன். `வானவர்க்கும் மூத்தவனை` எனக் கூட்டுக. மூவா - மூப்படையாத. `முதல்வன்` என்பது, அகரம் பெற்று, ``முதலவன்`` என நின்றது. அக்கு - எலும்பு. அடைந்த அன்பு - அடைந்ததற்குக் காரணமாயிருந்த அன்பு. `அடியார் அன்போடு பணிந்து ஏத்தவனை` எனக் கூட்டுக. ஏத்தவன் - ஏத்தப்படுதல் உடையவன்; இதன்கண், `ஏத்து` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் செயப்பாட்டு வினையாய் நின்றது.
இறு வரை - பெரிய மலை. ``ஏனோர்க்கு`` என்றது, `தனக்கின்றிப் பிறர்க்கு` என்றவாறு; பிறர், தேவர். காத்தவன் - வராமல் தடுத்தவன். விழுமியான் - மேலானவன்.

பண் :

பாடல் எண் : 2

செய்யானை வெளியானைக் கரியான் தன்னைத்
திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் தன்னை
ஐயானை நொய்யானைச் சீரி யானை
அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்
மெய்யானைப் பொய்யாது மில்லான் தன்னை
விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

செம்மை, வெண்மை, கருமை என்ற நிறங்களை உடையவனாய், பிரமனாய், பெருந்திசையும் பரவியவனாய், அழகியவனாய், நன்மையனாய், புகழுடையவனாய், அண்மையில் உள்ளவனாய்த் தீயவர்களுக்குத் தொலைவில் இருப்பவனாய், பஞ்ச கவ்வியத்தில் நீராடும் திருமேனியனாய், பொய்யேதும் இல்லாதவனாய், காளை வாகனனாய், சடைமுடியுடையவனாய், மருண்ட மானைக் கையில் ஏந்தியவனாய், கற்பகமாய்க் கற்குடியில் உறையும் சிறப்புடையவனை நான் கண்ணாரக் கண்டேன்.

குறிப்புரை :

``செய்யானை`` முதலிய மூன்றனையும் மேலே (ப.57 பா.3 குறிப்புரை.) காண்க. திசைமுகன் - பிரமனாய் இருப்பவன். ஐயான் - அழகியவன்; ஐயன் என்றலுமாம்.
நொய்யான் - நுணுகியவன். சீரியான் - புகழுடையவன். மெய்யான் - திருமேனியை உடையவன். வெறித்த - மருண்ட.

பண் :

பாடல் எண் : 3

மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை
விண்ணதனி லொன்றை விரிக திரைத்
தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தைஏ ழிசையைக் காமன்
எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மண்ணில் ஐந்து, நீரில் நான்கு, தீயில் மூன்று, காற்றில் இரண்டு, விண்ணில் ஒன்று என்ற பண்புகளுக்குக் காரணனாய், சூரியனாய், சந்திரனாய், விண்மீன்களாய், அவைகளிலும் எண்ணிறந்தனவாய் உள்ள பொருள்கள் மேல் நிகழும் சொற்களாய், ஏழிசையாய், மன்மதனுடைய அழகிய உடல் அழியுமாறு தீயை வெளிப்படுத்திய அதற்குமுன், திறக்கப்படாத நெற்றிக்கண்ணனாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

``மண்ணதனில் ஐந்து`` முதலியவற்றை மேலே (ப.54 பா.5. குறிப்புரை) காண்க. தாரகைகள் - விண்மீன்கள். `தாரகைகளை` என்பதும், `எண்ணதனை` என்பதும் உடம்பொடு புணர்த்தலாற் கொள்ளப்படும். `தாரகைகளினும் மிக்க எண்` என்க. எண்ணதனில் எழுத்தாவது, எண்ணப்படும் பொருள்மேல் நிகழும் சொல்.

பண் :

பாடல் எண் : 4

நற்றவனைப் புற்றரவ நாணி னானை
நாணாது நகுதலையூண் நயந்தான் தன்னை
முற்றவனை மூவாத மேனி யானை
முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் தன்னைப்
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற
படையானை அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மேம்பட்ட தவத்தினனாய்ப் பாம்பை வில் நாணாகக் கொண்டவனாய் வெட்கப்படாமல் மண்டையோட்டில் இடப்படும் பிச்சையை விரும்பியவனாய், நிறைவுடையவனாய், மூப்படையாத உடம்பினனாய், கடல் நஞ்சை விரும்பி உண்டவனாய், எப்பொருட்கும் பற்றுக்கோடாய் உள்ளவனாய், பகைவருடைய மும்மதில்களையும் அழித்த படையை உடையவனாய், தன்னை அடைந்த அடியவருடைய பாவத்தைப் போக்கக் கற்றவனாய், கற்பகமாய் கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

நற்றவன் - நல்ல தவக்கோலம் உடையவன். நகுதலை ஊண் - வெற்றெலும்பாய்ச் சிரிப்பதுபோலக் காணப்படும் தலை யோட்டில் உண்ணுதல். நயந்தான் - விரும்பினான். முற்றவன் - நிறைவுடையவன்; முந்நீர் - கடல். பற்றவன் - எப்பொருட்கும் பற்றாய் (பற்றுக்கோடாய்) உள்ளவன். பற்றார் - பகைவர். பதிகள், திரி புரங்கள். செற்ற - அழித்த. படை - படைக்கலம்; அம்பு. இயல்பாகச் செய்பவனை, கற்றுச் செய்பவனாக அருளியது, புகழ்தல் கருதி; இஃது இலக்கணை.

பண் :

பாடல் எண் : 5

சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் தன்னைச்
சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்
அங்கையனை அங்கமணி ஆகத் தானை
ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின்
மருவவிரி சடைமுடிமேல் வைத்த வான்நீர்க்
கங்கையனைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

ஐயத்தைப் போக்கி அடிமை கொண்ட தலைவனாய், நன்மை செய்பவனாய், கைப்பிடியை உடைய நெருப்பைப் போன்ற கொடிய மழுப்படையைத் தாங்கும் கையனாய், எலும்பை அணிந்த மார்பினனாய், பார்வதி பாகனாய், பிறையும் பாம்பும் நட்புடன் பழகும் தன் சடைமுடிமேல் ஆகாய கங்கையை வைத்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

சங்கை - ஐயம்; அது, `முதற்பொருள் ஒன்று உண்டோ இல்லையோ` என்பது; இவ்வையத்தினை உண்டாக்கியவர், சமணர்கள். அதனைத் தவிர்த்தமையாவது, `முதற்பொருள் உண்டே` என்பதனை, தீராத சூலைநோய் சில நொடிகளில் தீர்ந்த அநுபவத்தால் உணரக் காட்டினமை. சங்கரன் - இன்பம் செய்பவன். தழல் உறு - நெருப்பாய்ப் பொருந்திய. தாள் - கைப்பிடி; `முயற்சிக்குரிய` என்றலுமாம். `தழல் உறு மழுவாள்` என இயையும். அங்கம் - எலும்பு. `ஆகம்` இரண்டில், முன்னது மார்பு; பின்னது உடம்பு. ``தம்மின் மருவ`` என்றது, `அவை அங்ஙனம் மருவாத பகைப் பொருள்கள்` என்பது தோற்றுவித்தது. வான் நீர்க் கங்கை - விண் யாறாகிய கங்கை; பிரமன் உலகத்திலிருந்த கங்கையை அவனை நோக்கித் தவம் செய்து பகீரதன் பூமியிற் கொணர, அவன் பொருட்டு அதனைச் சிவபிரான் சடையில் தாங்கினன் என்பது புராணம்.

பண் :

பாடல் எண் : 6

பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்
பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை
வேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்
பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பெண்ணாய், ஆணாய், அலியாய்ப் பிறப்பு இறப்பு அற்றவனாய், ஓசை நீங்காத விண்ணாய், விண்ணவர்க்கு மேம்பட்டவனாய், வேதியனாய், வேத கீதம் பாடும் பண்ணாய்ப் பண்ணில் வரும் பயனாய் அமைபவனாய், நில உலகமாய், அவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் பற்றுக்கோடாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

``பெண்ணவன்`` முதலியவற்றில் அகரம் சாரியை. பேரா - நீங்காத. வாணி - சொல்; ஓசை ஆகாயத்தின் குணமாதலின், `சொல்லுக்குக் காரணமாய் உள்ள ஆகாயம்` என்பார், ``பேராவாணி விண்`` என்றருளினார். `ஆணி` எனப் பிரித்து, `நீங்காத ஆணிபோல எல்லாவற்றையும் நிலைபெறுவிக்கின்ற விண்` என்றுரைத்தலுமாம்.
பண்ணவன் - இசையை உடையவன். பண்ணில் வருபயன், இன்பம். `உயிர்கட்குக் கண்` என்றது, காட்சியை (அறிவை) உண்டாக்குதல் பற்றி.

பண் :

பாடல் எண் : 7

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப்
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை
யொருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பண்டையனாய், உலகத்தோற்றத்தில் பரந்து நிற்பவனாய், உலக ஒழுக்கத்தில் குவிந்து இருப்பவனாய், இவ்வுலகாய், தேவருலகாய், இவ்வுலகமெல்லாம் உண்டவனாய்ப் பின் வெளிப்படுத்தியவனாய், அவற்றிற்கு உரிமையாளனாய், ஒருவரும் தன் பெருமையை அறிய முடியாதபடி சேயனாய், பகைவர் முப்புரமும் தீயில் வெந்து பொடியாகி விழச் செய்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

`பண்டையான்` என்பதில் சாரியை ஐகாரம் தொகுத்தலாயிற்று. பரந்து நிற்றல் உலகத்தின் தோற்ற நிலைகளிலும், குவிந்து நிற்றல் அதன் ஒடுக்கத்திலும் என்க. இதனை, ``விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை`` (தி.2 ப.30 பா.3) என்னும் திருஞானசம்பந்தர் திருமொழியோடு நோக்குக. உண்டான் - ஒடுக்கினான். உமிழ்ந்தான் - படைத்தான். `ஒண்ணாது` என்பதன் ஈறுகெட்டது. விண்டான் - நீங்கினான்; சேயனாயினான். கண்டான் - செய்தான்.

பண் :

பாடல் எண் : 8

வானவனை வானவர்க்கு மேலா னானை
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர்தொழு கழலான் தன்னைச்
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லை விடை யேற்றி னானைக்
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

வானவனாய், தேவர்களுக்கு மேம்பட்டவனாய், தன்னை வணங்கும் அடியவர் மனத்துள் விரும்பிப்புகுந்த தேன் போன்றவனாய், தேவர்கள் தொழும் திருவடிகளை உடையவனாய், பலவாகி நின்ற தன் செயல்கள் யாவினும் வெற்றி காணும் தலைவனாய், முல்லை நிலத்தெய்வமாம் திருமாலாகிய காளையை உடையவனாய், குழலும் முழவும் ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்தாடவல்ல, கற்பகம் போன்ற கற்குடியில் விழுமி யானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

தேவ வடிவில் தோன்றுதலின், ``வானவனை`` என்றருளினார். ``குணங்கள்`` என்றது செயலை; அச்செயல்கள் அனைத்தும் தான் நினைத்தவாறே முடித்தலின், ``நின்ற வென்றிக்கோன்`` என்றருளிச்செய்தார். ``அவன்``, பகுதிப்பொருள் விகுதி. ``கொல்லை`` என்னும் ஐகாரம் சாரியை. ``விடை ஏறு`` என்பது, இரு பெயரொட்டு. ``கானவன்`` என்றது, காட்டில் ஆடுதல்பற்றி; இதனால், குழலும் முழவமும் இயம்புவன பூதகணங்கள் என்பது பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 9

கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்
கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த
சிலையானைச் செம்மைதரு பொருளான் தன்னைத்
திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத் தத்துவங்க ளானான் தன்னைத்
தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து
கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

தன்னால் கொல்லப்பட்ட யானையின் தோலைப் போர்த்த செயலினனாய், மலையாகிய வில்லில் திருமாலைக் கூரிய அம்பாகக் கோத்தவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், திரிபுர அசுரருள் சுதர்மன், சுசீலன், சுமாலி என்ற மூவருக்கு நலன் செய்த மேம்பட்டவனாய், மெய்ப்பொருள்கள் ஆகியவனாய், பார்வதி பாகனாய், கையில் மானை ஏந்தியவனாய், கற்பகமாய், கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

கோள் அரி - எல்லாரையும் வெற்றி கொள்ளும் திருமால்; இனி, நரசிங்கமாய்த் தோன்றினமைபற்றி, ``கோளரி`` என்றார் எனினுமாம். அரி, `நெருப்பு (தீக்கடவுள்)` என்றலும் பொருந்தும். `அரியைக்கோத்த` என இயையும். வரை, மேரு மலை. செம்மை - நன்மை. அதனைத் தருபவன் அதனைத் தனக்கு இயல்பாக உடைய சிவபிரானேயாதல் அறிக. திரிபுரத்து ஓர் மூவர், `சுதன்மன், சுசீலன், சுமாலி` என்பவர். திரிபுரத்து அசுரர்கள், புத்தனும் நாரதனும் மயக்கிச் சொல்லிய உரைகளால் மயங்கிச் சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதிற் பிறழாது நின்றவர் இம்மூவரும். அதனால், திரிபுரம் முழுதும் வெந்து நீறாகச் செய்தபொழுது, சிவபிரான், இம்மூவரையும் உய்யக்கொண்டான். இப்பேரருட்டிறத்தினை,
``உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே யுந்தீபற``
என ஆளுடைய அடிகளும், (தி.8 திருவா. திருவுந்தி. 4) `மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள் செய்தார்` (தி.1. ப.69. பா.1.) என ஆளுடைய பிள்ளையாரும்,
``மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல்
காவலாளரென் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவ்வருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே``
என ஆளுடைய நம்பிகளும் (தி.7. ப.55. பா.8.) சிறந்தெடுத்தருளிச் செய்தமை காண்க. இம்மூவர்க்குச் செம்மை செய்தமைதானே, தன்னையடைந்தார்க்கு எஞ்ஞான்றும் இடையூறுவாராது காத்துச் செம்மை தருவன் என்பதற்கு அமையும் சான்று என்பது குறித்தருளியவாறு. தலையான் - முதல்வன். தத்துவங்கள் - காரணப்பொருள்கள். கலை - மான்.

பண் :

பாடல் எண் : 10

பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் தன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக்
குன்றெடுத்த அரக்கன்தோள் நெரிய ஊன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

உலகமாக உள்ளவனாய், சோலைகள் நிறைந்த புன்கூர், புறம்பயம், அறத்தை விரும்பிச் செய்கின்ற புகலூர், இடை மருது, ஈங்கோய் இவற்றில் அழகாக இடங்கொண்டு நீங்காது தங்கும் தலைவனாய், தீயில் கூத்தாடும் திருமேனியை உடையவனாய், ஒரு காலத்தில் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு ஊன்றிய திருவடியை உடையவனாய்க் கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

குறிப்புரை :

பொழிலான் - உலகமாய் உள்ளவன். புறம்பயம், புகலூர், இடைமருது, ஈங்கோய் இவை சோழநாட்டுத் தலங்கள். அறம்புரிந்த - அறத்தை எப்பொழுதும் விரும்பிச் செய்கின்ற. ``புறம்பய மதனில் அறம்பல அருளியும்`` (தி.8 திருவா. கீர்த்தி. 90) என்றருளினமையால், `அறம் புரிந்த புறம் பயனை` எனக்கூட்டி யுரைத்தலுமாம். அழல் ஆடு மேனி. நெருப்பு எரிவது போலும் திரு மேனி. ``அக் குன்று`` என்றது, பலரறி சுட்டாய்க் கயிலைமலையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 1

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா
மதிசூடீ வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும்
நைஞ்சுருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு
வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்
காதன்மையால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

பார்வதி பாகனே! வேதம் ஓதும் நாவனே! பிறை சூடியவனே! தேவர்கள் தலைவனே! என்று புகழ்ந்து நாடோறும் மனம் இளகி உருகி, வஞ்சகமில்லாத அன்பு மிகுந்து, முப்பொழுதும் வாசனை மிக்க நீரும் பூவும் கொண்டு மறவாது வாழ்த்திப்புகழ்ந்து அன்போடு தொழும் அன்பருடைய மனத்தினுள்ளே கன்றாப்பூரில் நடப்பட்டமுளை வடிவினனாய் உள்ள பெருமானைக் காணலாம்.

குறிப்புரை :

பரவி - துதித்து. `வாசனை` என்னும் வடமொழிப்பதம் `வாதனை` எனவும் திரிந்து வருவதாம். வாதனையால் - வாசனையோடு; இங்கு, `விளங்க` என ஒரு சொல் வருவிக்க. இது பூவிற்கு உரியதாக அருளப்பட்டது. `வைகலும் (நாள்தோறும்)` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. மறவாமை ஒன்றே வேண்டப்படுவ தாகலின், வாழ்த்தல் முதலியன வைகலும் செய்ய வேண்டுவவாயின. காதன்மை - அன்பு; காதல் பண்பாதலாலும் பண்பிற்குப் பண்பின்று ஆதலாலும், இதுபோலும் இடங்களில் வரும் பண்புணர்த்தும் மை விகுதி பகுதிப்பொருள் விகுதியேயாம். ``காதன்மை கந்தா`` (குறள் - 507) என வருவதும் காண்க. `தொழுமிடத்து, அன்பு ஒன்றே இன்றியமையாதது` என்பதனை வலியுறுத்துதற்கு, இறுதிக்கண் மறித்தும் காதன்மையால் தொழும் அடியார்`` என்றும், புறத்துப் பிற இடங்களில் விளங்குதல் பொதுவாக, அகத்து அன்பில் விளங்குதலே உண்மையாகலின், ``நெஞ்சினுள்ளே காணலாம்`` என்றும் அருளிச் செய்தார். ``நெஞ்சினுள்ளே`` என்னும் ஏகாரம் உண்மை வகையை நோக்குங்கால் பிரிநிலையாம்; பொதுவகையை நோக்குங்கால் தேற்றமாம். நெஞ்சினுள் விளங்குதல் உண்மையாதல் உணர்த்துவார், ``காணலாம்`` என்றருளினாராகலின், நெஞ்சினைக் காண்டல் கூடுமாயின் அதனுள் காணலாம் என்பதே கருத்தாம். இத் தலத்துள் கன்று கட்டுதற்கு நடப்பட்டதறிதானே சிவனுருவாயினமையின், இங்குச் சிவபிரானை ``நடுதறி`` என்றே அருளிச்செய்தார். இதனுள், நாள்தொறும் தொழுதல் சிறப்பாகப் பணித்தருளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

விடிவது, `விடிதல்` எனத் தொழிற் பெயர்; `தொழிற் பெயர் உம்மை ஏற்று வினையெச்சமாம்` என்பது, `வருதலும் போயினான்` எனறாற் போல்வனவற்றுட் காண்க. விடிதல் - பொழுது புலர்தல். ``மெய்யில் (உடம்பில்)`` என விதந்தோதினமையால், நீர்மூழ்கல் முதலியன முன்னரே அமைந்து கிடந்தனவாம். தற்று - இறுக உடுத்து. ``தெய்வம் - மடிதற்றுத் தான்முந் துறும்`` (குறள் - 1023) என்றது காண்க. கீளொடு கோவணம் தற்று` என்றார். துறந்தார்க்கு இவ்வொழுக்கம் சிறப்பாக உரியதாகலின். செடி - கீழ்மை. கடி - வாசனை. இதனுள், விடியலில் வழிபடுதல் சிறப்பாகப் பணித் தருளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பிநோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

``தாம்`` என்பது அசைநிலையாதலின், `எவரேனுமாக` என்க. ``எவரேனும்`` என்றது, `எவ்வகைக் குற்றமுடையராயினும்` என்றபடி. இலாடம் - நெற்றி. சாதனம் - துணைப்பொருள்; என்றது, உருத்திராக்கம் முதலிய பிற வேடங்களை. திருநீறு` ஒன்றேயும், திருவேடமாதற்கு அமையும் என்றற்கு அதனைப்பிரித்தோதி யருளினார். இனி, உருத்திராக்கத்தையே சாதனம் என்றல் மரபு` என்பாரும் உளர். உள்கி - (திருவேடத்தின் பெருமையை) நினைந்து. உவராதே - வெறுத்தல் இல்லாமலே; அஃதாவது, `எவரேனும் என்பதனாற் குறிக்கப்பட்ட குற்றங்களை நினைந்து வெறுத்தல் சிறிதும் இன்றி` என்றபடி. திருவேடங்கள் பலவகையினவாதல் தோன்ற அவற்றை உடையவரை, `அவரவர்` என்றருளினார். ``கண்ட போதே என்னும் பிரிநிலை ஏகாரம் விரைவு குறித்தது. குற்றியலுகரங் கெடாது நிற்றல் சிறப்பின்மையின், `கண்டபோது` என்னும் பாடம் சிறவாமை யறிக. உகந்து - திருவேடத்தில் உள்ள விருப்பம் எழப்பெற்று. அடிமைத் திறம் நினைந்து - அடியராவார், தலைவனது அடையாளப் பொறியை (முத்திரையை)க் கண்டவுடன், அதனைப் பணிந்தேற்றல் அல்லது, அதனைக் கொணர்ந்தாரது குணங்குற்றம் நோக்கலாமையை உணர்ந்து. உவந்து நோக்கி - திருவேடம் கிடைக்கப் பெற்றமைக்கு மகிழ்ச்சி மிக உடையராய் முகமலர்ந்து நோக்கி. ``இவர்`` என்றது திருவேடம் உடையாரையும், ``அவர்`` என்றது இறைவரையும். ``தேவர்`` என வந்த இரண்டிடத்தும் தெரிநிலை ஓகாரங்கள் தொகுத்தலாயின. இரண்டு ஆட்டாது - உள்ளத்தை இருதலையாகச் செலுத்தாது; என்றது, ஆராயாது என்றபடி `இரண்டாக ஆட்டாது` என ஆக்கம் வருவித்துரைக்க. ``ஒழிந்து`` என்றது, துணிவுப் பொருட்டு. ஈசன் திறமே பேணி - இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே பேணிச் செய்து. கவராதே - அங்ஙனம் செய்யுமிடத்து ஒருஞான்றும் மனம் இரண்டுபடாமலே; கண்டதுமுதல், எதிர்கொண்டு வழிபாடுகள் பலவும் செய்து விடுக்குங்காறும், விடுத்த பின்பும் எப்பொழுதும், திருவேடமுடையாரைச் சிவனெனவே கோடலிற் பிறழாமை வேண்டும் என்பார், `உவராதே` என்பது முதலாக, ``கவராது`` என்பது காறும் அவ்வவ்விடத்தும் அதனை எடுத்தோதி வலியுறுத்தருளினார். இதனால், திருவேடந் தொழுதல் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டது, `திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்` என்றதனால் அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 4

இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு
மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

யாம் பொருள் இல்லாதேம் இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்` என்று மனத்தில் தளர்ச்சியுறாமல், பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டு, நல்லவழியில் பிறழாமல் நின்று, இறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்கு, பயன் கருதாமல் செய்யும் அன்பை மேற்கொண்டு, பொய்யை விடுத்து, மெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

இலம் - (யாம்) பொருள் இலம். காலம் செல்லா நாள் - இக்காலம் எம்மால் ஒன்றும் இயலாத காலம்; `என்றெல்லாம் எண்ணி நெஞ்சகத்தில் இடையாதே (சிறிதும் தளர்ச்சியுறாமல்)` என்க.
``இலங்காலம்`` என்றற்கு இவ்வாறன்றி, ``இலம்படுபுலவர்`` (மலைபடுகடாம் - 576.) என்புழிப்போல, `இன்மையுட்பட்ட காலம் என உரைக்க` எனின், `இன்மை` என்னுங் குறிப்புணர்த்தும், `இலம்` என்னும் சொல்லின் ஈற்று மகரங்கெடாது நிற்றல் வருமொழி வினையாய விடத்தே என்பது, ``இலமென் கிளவிக்குப் படுவரு காலை`` (தொல். எழுத்து - 316) என, வருமொழியை எடுத்தோதி யதனாற் பெறபடுதலின், அங்ஙனம் உரைக்கலாகாமை யறிக. ``இலம் படு`` என்றாற்போல்வனவற்றை, `இலம்பட்ட (இன்மை உண்டாகிய)` என அல்வழியாக விரிப்பின், பின்னர் வருகின்ற, ``புலவர்`` என்றாற் போலும் பெயர்களோடு இனிது இயையாமையின், `இலத்துக்கட்பட்ட, (இன்மைக்கட்பட்ட) என்றாற்போல, வேற்றுமையாக விரிக்க` என்பார். அதன்கண் ஐயம் நிகழாதவாறு, பொது விதியால், மரக்கோடு என்றாற்போல மகரங்கெட்டே முடிதலையும், ``மெய்பிறிதாகிடத்து`` (தொல். எழுத்து. 157) என்னும் நூற்பாவினுள் தன்னின முடித்தலால், ``கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்`` (பு. வெ. மா. 176) ``புலம்புக் கனனே புல்லணற் காளை`` (புறம். 258) என்றாற்போல மகரங்கெட்டுங் கெடாதும் உறழ்ந்து முடிதலையும் விலக்கி, ஈண்டு மகரங் கெடாதே நிற்றல் வேண்டும்` என யாப்புறுத்தற் பொருட்டு, மேற்காட்டிய நூற்பாவினை ஓதினார் ஆசிரியர்; அஃது உணராமை யால், உரையாளர், ஆண்டுப்பெரிதும் இடர்ப்பட்டு உரை உரைத்தனர்; அவையெல்லாம் ஈண்டுத் தோன்றக்கூறிற் பெருகும். ``இலம்பாடு (இன்மை உண்டாதல்) (தொல். சொல் - 260) என்றாற்போல அல்வழியாய், அமைவன, ``அல்வழியெல்லாம் மெல்லெழுத் தாகும்`` (தொல். எழுத்து - 314) என்றதனானே முடியும் என்க.
பசி தீர்க்கப்படுதற்கு, பசித்துவந்து இரந்தார் அனைவரும் உரியராகலின், ``யாவர்க்கும்`` என்றருளினார். ``நல்விருந்தோம்பு வான்`` (குறள் - 84) என விருந்தினைச் சிறப்பித்துக் கூறினாற் போலாது, ``அற்றா ரழிபசி தீர்த்தல்`` (குறள் - 226) என வாளா கூறியதுணர்க. ``நெறி`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``விலங்காதே`` என்றார். அறிவு - இறைவன் எல்லாநலங்களையும் தானே தரும் பெருங்கருணையாளனாதலை அறியும் அறிவு. மெய்யன்பு - பயன் கருதாது செலுத்தும் அன்பு; `அதனை வருந்தியேனும் பெறுக` என்பார், ``புகப் பெய்து`` என்றருளினார். பொய் - பயன் கருதி அன்பு செய்தல். அவ்வாறு செய்தல் வழிமுறையிற் பயன் தருவதாயினும், இறைவன் நெஞ்சினுள்ளே விளங்கித் தோன்றுதலாகிய ஈண்டுக் குறிக்கும் பயனை நேரே தாராமை, பற்றி ``நீக்கி` என்றருளினார். துலங்காமெய் - மெய்துலங்கா; மெய்யுணர்வு விளங்கப்பெறாத (வானவர் என்க) `துலங்காமே` என்பது பாடம் அன்று. கலங்காதே மனம் சிறிதும் தடுமாற்றம் இன்றி; நன்னெறியைத் தெளிந்து, இதனால், உயிர்களிடத்து இரக்கமுடைமை சிறந்தெடுத்துப் பணித்தருளப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

விருத்தன் - யாவரினும் முதிர்ந்தவன். உலக மூர்த்தி - உலகம் முழுவதற்கும் ஒருவனாகிய கடவுள். பொருத்தன் - உறவினன். `பொருந்து` என்னும் முதனிலை திரிந்த `பொருத்து` என்பது `உறவு` என்னும் பொருள் தந்தது. ``புலம்பி`` இரண்டனுள் முன்னது, `முறையிட்டு` என்னும் பொருளது, பின்னது, `பிறிது பற்றின்றி` என்னும் பொருளது. `கருத்து` என்றது விருப்பத்தினை. இதனால், முறையீடும் பற்று நீங்குதலும் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

பொசி - கசிவு; என்றது, செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றை. பொதிந்த - மூடிய. பொல்லாத - இழிந்த. நிலாசும் - நிலைபெற்றிருக்கும்; `நிலாவும்` என்பதே பாடம் போலும்! ``ஈட்டி`` என்பதற்குப் பொருளை என்பது வருவிக்க. வசி - வசப்படுத்தல். வீழ்தல் - மெலிதல். அஞ்சு - அஞ்செழுத்து. கசிவு - நெகிழ்ச்சி: அன்பு. வானவர்கோன் - சிவபிரான். இதனால். இளமை நிலையாமை கருதி விரைந்து இறைவனை வழிபடுதலும். திருவைந்தெழுத்தை ஓதுதலும் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

குறிப்புரை :

ஐ - கோழை. மிடறு - குரல். ``ஆவியார்`` என்றது. நிலையாமை பற்றிய இழித்தற் குறிப்பு. கண்ணை மையினால் எழுதி என்க. இதனால், யாக்கை நிலையாமையை அறிந்து, சிவபிரானை விரைந்து தொழுதல் பணித்தருளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

திருதி - மன உறுதி; `மன உறுதியாகிய பண்பினால் என்றபடி. ஐவர் - ஐம்பொறிகள். காவல் ஏவி - காவலில் வைத்து. திகையாதே - மனங் கலங்காமலே, சுருதி - மறை; மந்திரம். `மானதமாகக் கணிக்கப்படுவது` என்பார், ``சிந்தைச் சுருதி`` என்றருளினார்; ``சுருதிதனை`` என்பதைச் சுருதிதன்னால்` எனத் திரிக்க. துயக்கு - மயக்கம். `சுருதி தன்னால் துயக்கறுத்து` என்க. `மிகக் கருதி` என மாறிக் கூட்டுக. கருதி - தியானித்து. இதனால், திருவைந்தெழுத்தை ஓது முறைமை அருளப்பட்டது. இத்திருப்பதிகத்தின் ஒன்பதாம் திருத்தாண்டகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்
கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

பொழிப்புரை :

வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை :

தனஞ்சயன் - அருச்சுனன். தசக்கிரிவன் - இராவணன். முரண் - வலிமை. `தாளையும் தோளையும் முரண் அழித்து` என்றதனை, `பசுவைப் பால் கறந்தான்` என்பது போலக்கொள்க. கனிந்து - அன்பு கொண்டு. இதனால், இறைவன் புகழைப் பேசுதல், சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

எத்தனை மேம்பட்ட நற்றாய் செவிலித்தாயர், தந்தை, சுற்றத்தார் என்று நம்மால் போற்றப்படுபவருள் எவர் நமக்கு நல்லவர்கள்! எந்தச் செல்வம் நம்மைத்தாங்கக்கூடியதாகும்? நாம் இறந்தால் நம் தேகபந்துக்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின் ஏனைய தேகபந்துக்களை விடுத்து, `என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவை உகந்தருளியிருக்கும் இடமாக உடைய செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை யான் அடைவேனோ?` எனக்குத் துன்புறும் நிலை ஏற்படாது என்றபடி.

குறிப்புரை :

``எத்தாயர்`` என்பது முதலியவற்றில் எகரவினா, `எத்துணைச் சிறந்த` என உயர்வு குறித்து நின்றது. `நற்றாய், செவிலித்தாய், முதலாகத் தாயர் பலராகலின், ``தாயார்`` எனப் பன்மையாக அருளினார். மாடு - செல்வம். ``சும்மாடு`` என்றது, `தாங்குவது` என்னும் பொருட்டாய் நின்றது. ``ஏவர்`` என்றதனை, ``சுற்றத்தார்`` என்றதன் பின்னர்க் கூட்டி, `மற்றும் யாவர் தாம்` என உரைக்க. ``சும்மாடாம்`` என்றாற்போல, `நல்லராவார்` என ஆக்கம் வருவிக்க. ``சும்மாடாம்``, ``நல்லாராவர்`` என்னும் பயனிலைகளை எதிர்நிரல் நிறையாகக் கொடுக்க. ``நல்லார்`` என்பது உயர்திணை யாகலின், அது ``தாயர்`` முதலிய நான் கெழுவாய்கட்கும் பயனிலை யாம். `ஒருவரும்` என்னும் முற்றும்மை தொக்கது, `இல்லையாய்` என எச்சமாக்குக. தீ மூள்வதற்கு இடப்படுவன அனைத்தும், `விறகு` எனப்படுமாதலின், எளிதிற் பற்றுதற்கு இடுவனவற்றை, ``சிறுவிறகு`` என எடுத்தோதியருளினார். `வெந்து தணியுந் துணைதானும் நில்லாது, மூட்டி விட்டு விரைந்து போவர்` என்பது உணர்த்துதற்கு; தீ மூண்டெரிதல் நிகழாநிற்கத் தாம் சென்று கொண்டிருப்பர் என்னும் பொருள்பட, ``செல்லாநிற்பர்`` என, எதிர்காலத்துள் நிகழ்காலம் பற்றி ஓதியருளினார். ``உதவுவார் ஒருவர் இல்லை, செல்லாநிற்பர்` என்றது, ``ஏவர் நல்லார்`` என்புழி, `அஃது என்னை` என்றெழும் அவாய் நிலையை நிரப்பியவாறு. சித்து. அறிவு; அது, சத்தியைக் குறித்தது; இறைவனின் வேடங்களெல்லாம் சத்திவடிவமே யாதலின் அவ்வாறு அருளிச்செய்தார்; ``காயமோ மாயை யன்று காண்பது சத்திதன்னால்`` (சிவஞானசித்தி. சூ. 1.41.) எனவும்,
``உருவருள் குணங்க ளோடும் உணர்வரு ளுருவில் தோன்றும்
கருமமும் அருள்அ ரன்றன் கரசர ணாதி சாங்கம்
தரும் அருள் உபாங்கமெல்லாந் தானருள் தனக்கொன் றின்றி
அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே``
எனவும் (சிவஞானசித்தி சூ. 1 - 47) அருளியன காண்க.
பொன்னி - காவிரியாறு; அஃது என்றும் வற்றாது ஓடுதலின் ``நீடு பொன்னி`` என்றருளிச் செய்தார். ``பெற்றால்`` என்று பெறாதார் போல எதிர்காலத்தாற் கூறியது, பெற்றதன் அருமை நோக்கி யென்க. அல்லகண்டம் - துன்பம். ``கொண்டு`` என்பது, மூன்றாம் வேற்றுமை ஆன் உருபின் பொருள்படுவதோர் இடைச்சொல். என் செய்கேன் - வருந்துதல் என் செய்யக் கடவேன்; யாது மில்லை என்றவாறு; `அவை என்னை ஒன்றும் செய்யா` என்பது கருத்து; ஆகவே, `தாயர் முதலியவரை நல்லாராகவும், மாட்டினைச் சும்மாடாகவும் கருதிக் கிடப்பின், யான் துன்பக்கடலுள் அழுந்தி யொழிவேன்` என்றபடி. `துன்பம்` என்றது, பிறப்பினையும், அதன் கண் வரும் `ஆதியான்மிகம், ஆதிபௌதிகம், ஆதி தெய்வீகம்` என்னும் மூன்றனையுமாம். ஆதியான்மிகம் முதலிய மூன்றும் மேலே (ப.23. பா.1. குறிப்புரை.) குறிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஊனாகி உயிராகி யதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே யென்னுள் வந்து
நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாய்உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

திருவானைக்காவில் உறையும் சிவபெருமானே! ஞானவடிவினனே! என் உடம்பாய் உயிராய், உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீ உள்ளாய். யான் ஏதும் அறியாத நிலையில் என்னுள் வந்து சேர்ந்து, எனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய், தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது.

குறிப்புரை :

``ஊன்`` என்றது, உடம்பை. ஏதும் - சிறிதும். `நானே சிறிதும் அறியாதபடி என்னுள்ளே வந்து` என்றது, `என்றுமே என்னுள் இருந்து` என்றவாறு. நின்றியூர், சோழ நாட்டுத் தலம். `அனைத்தும் நீயே ஆயினமை உணரப்படுதலின் சிலர் உறவும் சிலர் பகையுமாதல் நீங்குதலும், நீயே என் உணர்விற்கு முதலாதல் உணரப்படுதலின், `யான்` என்பது நீங்குதலும், ஞானமே (அறிவே) வடிவாய் நிற்றலின் இன்பம் இடையறாது ஈண்டுதலும் உளவாமாகலின், உன் பொற்பாதம் அடையப்பெற்றால் எனக்கு வரும் துன்பம் யாதுளது` என்றருளிச் செய்தவாறு.

பண் :

பாடல் எண் : 3

ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன்
திறம்மறந்து திரிவேனைக் காத்து நீவந்
தெப்பாலும் நுன்னுணர்வே யாக்கி யென்னை
ஆண்டவனே யெழிலானைக் காவா வானோர்
அப்பாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

அழகான ஆனைக்காவில் உள்ளவனே! தேவர்கள் தலைவனே! எல்லோருடனும் சமமாய் இவ்வுலக நடையோடு பொருந்தி வாழ்வதனை மேற்கொள்ளாத சமணத்துறவியரோடு பொருந்தி வாழ்ந்து, உண்ணுதற்கேற்ற கஞ்சியுணவை நிரம்ப உண்டு, நன்மை தரும் உன் பண்பு செயல்களை மறந்து திரிந்த அடியேனைப் பாதுகாத்து, அடியேன் உள்ளத்து வந்து, எப்பொருட்கண்ணும் உன்னை உணரும் உணர்வைத் தந்து, என்னை அடிமை கொண்டவனே! உன் பொற்பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.

குறிப்புரை :

``ஒப்பாய் இவ்வுலகத்தோடு ஒட்டி வாழ்வான்`` என்றதனை, ``திரிவேனை`` என்றதன்பின் கூட்டி உரைக்க. ``வாழ்வான்`` என்னும் எச்சம், ``காத்து`` என்பதனோடு முடியும். இவ்வுலகத்தோடு ஒப்பாய் ஒட்டி வாழ்தல் - கண்டார் அருவருக்குமாறு நக்கரை யாகாது உடையுடுத்தும், தலைமயிரைப் பறித்தல், நின்றுண்ணல், வெயில் நின்றுழலல் முதலியன இன்றியும் பிறர்போல நின்று ஒத்து வாழ்தல். சுவாமிகள் சமணரோடு இருந்தபொழுது இவ்வாறின்றி உலகத்தோடு ஒட்ட ஒழுகாதொழிந்தமையை நினைந்து, `உலகத்தோடு ஒட்ட ஒழுகுவிக்கவும் திருவுளங்கொண்டருளினாய்` என்றருளினார். ஒன்றலா - ஒன்றாத; பொருந்தாத. தவத்தார், சமணர். துப்பு ஆரும் - உண்ணல் பொருந்திய. ``குறையடிசில்`` என்றது. `கஞ்சி` என்றவாறு. துற்றி - நிறைத்து. `துறு` என்பதேயன்றி, `துற்று` என்பதும் முதனிலையாமாதலின், ``துற்றி`` என வந்தது. `நன்று` என்பது `நற்று` என வலித்தலாயிற்று. `நீ வந்து காத்து` என மாற்றியுரைக்க. முற்பட்டமையை, ``வந்து`` என்றருளினார். காத்தமை, சூலை வாயிலாக மீட்டமை. எப்பாலும் - எப்பொருட்கண்ணும்; இஃது, ``ஆக்கி`` என்பதனோடு இயையும். திருவருள் பெற்ற பின்னர், நாயனார் எங்கும் சிவனையன்றி வேறுபொருளைக் காணாமையின் ``எப்பாலும் நுன்னுணர்வேயாக்கி`` என்றருளினார். ``நுன் உணர்வு`` என்பதனை, `நுன்னை உணரும் உணர்வு` என விரிக்க. `நும்` என்னும் பன்மைப் பெயர்க்கு உரிய ஒருமைப்பெயராய், `நுன்` என்பது திருமுறைக் கண் வழங்கும்; இதுவே, பிற்காலத்தில் நகரங்கெட்டு, `உன்` எனமருவி உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் பயின்று வருவது. எப்பாலும் இறைவன் உணர்வே யாதலையே, `எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்பதறிவு` (குறள் - 355) என மெய்யுணர்வாக அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார். அஃதுணராது, அவ்வருமைத் திருக்குறட்கு மாயாவாத உரை உரைத்தார், பரிமேலழகர். அவ்வுரை போலி என்பது, அவர் காட்டிய எடுத்துக்காட்டுள் அவர் கற்பனை எனக் காட்டிய அனைத்தும் உண்மையேயாதலையும், கற்பனையாவது கானலை நீரென்றுணர்தல் போலும் மயக்க உணர்வேயாகலின், அவர் காட்டினாற்போல்வன வற்றை உண்மை என்னாது கற்பனை என்பார்க்கு, யாண்டும் கற்பனையின் வேறாய் உண்மை இல்லா தொழிதலையும், அவர் காட்டினாற் போல்வனவற்றை, நீரில் எழுத்தும் நிகழ் கனவும்போல நிலையா தொழிதல் பற்றி, `நிலையில் பொருள்` என்றல் அன்றி, `கற்பனைப் பொருள்` என்றல் ஆசிரியர் கருத்தன்று என்பதற்கு. ``நில்லாதவற்றை நிலையின வென்றுணரும் - புல்லறி வாண்மை கடை`` (குறள் - 331) என்பதே போதிய சான்றாதலையும் நுனித்துணர வல்லார்க்குத் தெற்றென விளங்குவதாம். ஆகவே, அவர் காட்டினாற் போல்வனவற்றை, `பொய்` என ஒரோவழி உயர்ந்தோர் கூறுதல் நிலையாமையுடையதென்னுங் கருத்தானன்றி, கற்பனையென்னுங் கருத்தான் அன்று என்பது விளங்கும். விளங்கவே, `பொய்ப்பொருள்` எனப்படுவன ஒரு நிலையின் நில்லாது திரிந்து பலநிலைப்பட்டுச் செல்வன என்பதும், `மெய்ப்பொருள்` என்பது, அவ்வாறன்றி யாண்டும் ஒருபெற்றித்தாய்த் திரிபின்றி நிற்பது என்பதும் போதரல் காண்க.
இறைவனை அவனது திருவருள் கண்ணாகக் காணப் பெற்றோர், பின்னர் எவ்விடத்திலும் அவனை யன்றி வேறொரு பொருளையும் காணுதல் இல்லை என்பதனையும், அங்ஙனம் அவர் காணாதொழிதற்குக் காரணம், அவையெல்லாம் மயக்க உணர்வாகிய அஞ்ஞானமே யாதலின், அவ்வஞ்ஞானம் அவர்மாட்டு இல்லா தொழிந்தமையேயாம் என்பதனையும் வரும் பாடலால் அறியலாம்.
``பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்; பார்க்க
வருஞானம் பலஞானம்; அஞ்ஞான விகற்பம்;
வாச்சியவா சகஞானம் வயிந்தவத்தின் கலக்கம்
தருஞானம்; போகஞா திருஞான ஞேயந்
தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகும்;
திருஞானம் இவையெல்லாம் கடந்தசிவ ஞானம்;
ஆதலால் சீவன் முத்தர் சிவமேகண்டிருப்பர்``
(சிவஞானசித்தி. சூ. 11. பா. 2)

பண் :

பாடல் எண் : 4

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையாதுன்பால்
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்
முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா
கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

எல்லா உலகங்களையும் ஆள்கின்ற ஆனைக்காப் பெருமானே! உன்னை அன்போடு நினைப்பவர்களுடைய நெஞ்சிலே மறைந்து உறையும் வஞ்சனையை உடைய கள்வனே! ஒளி நிறைந்த பிறையைச் சடையில் சூடியவனே! உன்னைச் சரணடையாது, உன்னோடு பகைத்தவர்களின் மதில்கள் மூன்றும் தீயில் எரியுமாறு அழித்தவனே! முன் ஒரு காலத்தில் யானை ஒன்றனைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய உலக காரணனே! செருக்கி ஒலித்துக்கொண்டு வரும் காளையை இவர்ந்த நீல கண்டனே! கயிலாய மலையில் உறைபவனே! உன் திருவடிகளை அடைந்த அடியேன் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே!

குறிப்புரை :

நினையாதவர் நெஞ்சில் ஒளிந்திருத்தல் நோக்கி, வஞ்சக் கள்வா`` என் றருளிச்செய்தார். `உன்பால் அடையாது` என மாற்றுக. `முனைந்தவர்` என்பது வலிந்து நின்றது; `போர்செய்ய முற்பட்டவர்` என்பது பொருள். `முனித்தவர்` என்னும் பாடத்திற்கும் வலித்தல் கொள்க. கனைத்தல் - ஒலித்தல். காளகண்டன் - நஞ்சு பொருந்திய கழுத்தினை உடையவன். ``உன் கழலே சேர்ந்தேன்`` என்பதனை, ``ஆனைக்காவா`` என்பதன் பின் கூட்டி, `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 5

இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்
திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
வேதியனே தென்னானைக் காவுள் மேய
அம்மான்நின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

கொடிய மதச் செருக்குடைய யானைத் தோலைப் போர்த்த வேதியனே! அழகான ஆனைக்காவை உகந்தருளியிருக்கும் தலைவனே! இந்த நிலையின்மையை உடைய பிறவிக் கடலில் துன்பமாகிய சுழியில் அகப்பட்டு, வருந்தும் என்னைக் கைகொடுத்து நீர்ச் சுழியிலிருந்து காப்பவரைப்போல, மனத்திலிருந்து உதவி செய்து, கருணை காட்டி, என்னிடத்தில் அன்பையும், அருளையும் பொழிந்தும், யான் கண்ணால் காணுமாறு வெளியேநிற்கின்றாய் அல்லை. நின் பொற்பாதத்தை அடியேன் அடைப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே!

குறிப்புரை :

மாயம் - நிலையின்மை. கை மான மனத்து உதவி - கை (கொடுத்தல்) போல மனத்தின்கண் உதவிசெய்து; என்றது, `குழியில் வீழ்ந்து கிடப்பாரைக் கையால் எடுத்து வழியிற் செலுத்துதல்போல, சமணசமயக் கொள்கையிலே அழுந்திக் கிடந்த மனத்தைத் திருப்பி உனது திருவருள் நெறியிற் செலுத்தி` என்றவாறு. இவ்வாறு உதவியதாகிய கருணையைச் செய்ததனோடு அமையாது, பின்னரும் நீற்றறை முதலிய பலவற்றால் துடிதுடித்து இறவாதவாறு காத்தருளினை என்பார், ``உதவிக் கருணைசெய்து`` எனவும், ``காதலரு ளவை வைத்தாய்``எனவும் இருகாற் கூறியருளினார். `இவ்வாறெல்லாம் உடன் நின்று தாயினும் சாலப் பரிந்தருளினாய் எனினும், ஊனக் கண்ணாற் காணுமாறு வெளிநின்றாயல்லை` என்றற்கு, ``காண நில்லாய்`` எனக் கூறியருளினார். `இவ்வாறெல்லாம் செய்த உன் அருளாலே உன் பாதத்தை நான் அடையப் பெற்றேன்` என்பது திரு உள்ளம். வெம்மான மதகரி - வெவ்விய பெரிய மதமுடைய யானை. `அம்மான்`` என்றதும் விளிப்பெயர்.

பண் :

பாடல் எண் : 6

உரையாரும் புகழானே யொற்றி யூராய்
கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

புகழுவார் புகழும் சொற்களிலெல்லாம் நிறைந்த புகழுடையவனே! ஒற்றியூர், கச்சி ஏகம்பம், குடந்தை நாகைக் காரோணங்கள் இவற்றில் உறைபவனே! நறுமணமுடைய மலர்களைத் தூவி வணங்கும் அடியவர் மனத்தில் மிக்கு விளங்குபவனே! எலும்பையும் பாம்பையும் மாலையாகப் பூண்டவனே! அலைகள் நிறைந்த நீரை உடைய காவிரியாகிய புண்ணிய தீர்த்தம் நிறைந்த திருவானைக்காவில் உள்ள தேன் போன்ற இனியவனே! தேவர் தலைவனே! உன்பொற்பாதம் அடியேன் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.

குறிப்புரை :

உரை ஆரும் - புகழுவார் புகழும் சொற்களில் எல்லாம் நிறைந்த. விரை ஆரும் - வாசனை நிறைந்த. மிக்கான் - மிகுந்து விளங்குபவன், `அக்கினையும் அரவத்தையும் ஆரமாகப் பூண்டவனே` என்க. தீர்த்தம் - தெய்வயாறு; `பொன்னியாகிய தீர்த்தம்` என்க. மல்கு - நீர்நிரம்பி ஓடும் இடமாகிய. சோலையில் உள்ள தேனே` என்பது நயம். அரையன் - அரசன்; தலைவன்.

பண் :

பாடல் எண் : 7

மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
மான்மறியும் மாமழுவும் அனலு மேந்துங்
கையானே காலனுடல் மாளச் செற்ற
கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
செய்யானே திருமேனி யரியாய் தேவர்
குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய
ஐயாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

நீலகண்டனே! பார்வதிபாகனே! மான்கன்று, பெரிய மழுப்படை, நெருப்பு இவற்றைத் தாங்கும் திருக்கரங்களை உடையவனே! கூற்றுவனுடைய உயிர்போகுமாறு அவனை அழித்த, முழு எலும்புக்கூடு அணிந்தவனே! முற்பிறப்புக்களில் செய்து கொள்ளப்பட்ட வினைகளும் அவற்றின் பயன்களும் ஆனவனே! செம்மேனி அம்மானே! யாவர்க்கும் நேராகக் காண்பதற்கு அரியவனே! தேவர் குலத்துத் தளிர் போன்றவனே! அழகிய ஆனைக்காவுள் உறையும் தலைவனே! உன்பொற்பாதங்களை அடியேன் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.

குறிப்புரை :

மை ஆரும் - கருமை பொருந்திய. மணி - அழகு; `நீலமணி போலும்` என்றுமாம். ``முன்கோள்`` என்றது, முற்பிறப்புக்களில் செய்துகொள்ளப்பட்ட வினையை. விளைவு - அவ்வினையின் பயன். `திருமேனி செய்யானே` என மாற்றுக. செய்யான் - செந்நிறம் உடையவன்; ``திருமேனி செய்யான்`` எனச் சினை முதலொடு சார்த்தி முடிக்கப்பட்டது. `யாவர்க்கும் அரியாய்` என்க. குலம் - கூட்டம். ``கொழுந்து`` என்றது `தலையாயவன்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 8

இலையாருஞ் சூலத்தாய் எண்டோ ளானே
எவ்விடத்தும் நீயல்லா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
தழல்மடுத்த மாமேருக் கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

இலைவடிவாக அமைந்த சூலத்தை ஏந்தியவனே! பெருந் தோள்களை உடையவனே! எவ்விடத்தும் உன்னைத் தவிர வேறு பொருள் இல்லை என்று, தலைமேல் கைகுவித்துக் கும்பிடுபவர் செயல்களுக்கு உதவும் பண்பினனே! மேருவாகிய வில்லைக் கையில் கொண்டு, திரிபுரத்தைத் தீக்கு இரை ஆக்கியவனே! திருவானைக்காவுள் உறையும், தீயில் கூத்து நிகழ்த்துபவனே! சிறிய நோய்களால் துன்புறுத்தப்பட்டு உள்ளம் வருந்தாது, நின் அடியே அடைதல் கூடுமாயின் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.

குறிப்புரை :

இலை ஆரும் - தகட்டு வடிவம் பொருந்திய. இல்லை என்று - கடவுள் பிறர் இல்லை என்று உணர்ந்து; இவ்வாறுணர்தலே, `சிவஞானம்` எனப்படுவது என்க. இச் சிவஞானத்தாற் சிவனை வணங்குவோர் மிகச் சிலரேயாதல் பற்றியே ``ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்`` (தி.5. ப.91. பா.3.) என அருளிச் செய்தார் சுவாமிகள். தன்மையான் - தன்மைக்கண் விளங்குபவன்; என்றது, `அவர் தன்மை தன் தன்மையே யாம்படி ஆண்டு விளங்கி நிற்பவன்` என்றவாறு; எனவே, `சிவனது தன்மை இத்தகையது` என்பதைச் சிவஞானிகள் பாலே நம்மனோர் காண்டல் கூடும் என்பது போந்தது. இதனையே,
``ஒன்றுங் குறியே குறியாத லால்அதனுக்
கொன்றுங் குறியொன் றிலாமையினால் - ஒன்றோ
டுவமிக்க லாவதுவுந் தானில்லை ஒவ்வாத்
தவமிக்கா ரேயிதற்குச் சான்று``
என விளக்கிற்று, `திருக்களிற்றுப்படியார்` என்னும் திருநூல் (10).
தலையாரக் கும்பிடுதல், தலைமேற் கைவித்துக் கும்பிடுதல்; தலைக்கு மேல் உயரக் குவிப்பினும் அவ்வாறு உயர்வதற்கு எல்லையாய் நின்று தலை இன்புறும் என்க. தழல் மடுத்தது, திரிபுரங்களை. `கையில் வைத்த மாமேருச் சிலையாய்` எனக் கூட்டி. `மடுத்த சிலையாய், வைத்த சிலையாய், மேருச் சிலையாய்` எனத் தனித்தனி முடிக்க. ``கையில் வைத்த`` என்ற விதப்பு, `மலை கையில் எடுக்க ஒண்ணாததாக, எல்லா மலைகளினும் மிகப்பெரிதாகிய மகாமேருமலையை எளிதிற் கையிலே வைத்தவன்` என்பது விளக்கிநின்றது. அலையாதே - வருந்தாத படியே; `அலையாதே அடையப் பெற்றால்` என்க.

பண் :

பாடல் எண் : 9

விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத
நெறியானே யெறிகடலின் நஞ்ச முண்டாய்
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்
என்றென்றே நாவினில்எப் பொழுதும் உன்னிக்
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்
கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
அண்ணாநின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

ஆகாய கங்கை தங்கிய செந்நிறச் சடையனே! வேத நெறியை உபதேசித்தவனே! கடலின் விடத்தை உண்டவனே! எண் நிறைந்த புகழ்களுக்கு உரிய பண்புகளையும் செயல்களையும் உடையவனே! உன்னை என் தலைவன் என்று நாவினால் எப்பொழுதும் கூறி மனத்தால் நினைத்துக் கண்கள் மகிழ்ச்சி நிறையுமாறு காணும்படி எப்பொழுதும் நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய ஆனைக்காவுள் உகந்தருளியிருக்கும் அண்ணால்! நின்பொற்பாதம் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.

குறிப்புரை :

விண் ஆரும் புனல் - விண்ணுலகத்திற் பொருந்திய கங்கை. பொதி - கரந்த. சிவபிரானை இன்றிப் பிறரெல்லாத் தேவரும் கூடிச் செய்த தக்கன் வேள்வி முற்றாது கெட்டு, அவனும் தலை இழந்தமையின், `வேதநெறியின் முதற்கடவுள் சிவபிரானே என்பதுதெற்றென விளங்கிக் கிடத்தலின், ``வேதநெறியானே`` என்றருளிச் செய்தார். எண் ஆரும் - எண் என்பன எல்லாம் நிரம்பிய: என்றது, `எண்ணுட்படாத` என்றவாறு. `உன்னை எப்பொழுதும் எம்தலைவன் என்று உரிமையோடு மனத்தினால் நினைந்தும் நாவினால் சொல்லியும், கண்ணாற்கண்டும் எப்போதும் களித்திருக்குமாறு உன் பொற்பாதம் அடையப்பெற்றால்` எனக்கொண்டு கூட்டிப் பொருள் உரைக்க. ``நாவினால்`` என்றதனால், `சொல்லி` என்பதும், ``உன்னி`` என்றதனால் மனத்தினால் என்பதும் தாமேவந்து இயையும். அவை இரண்டிற்குமாகவே, ``என்று என்று`` என இருமுறை அருளிச் செய்தார். இவற்றால், நாயனாருக்கு ஆனைக்கா அண்ணலிடத்து உண்டாகிய அளவிலா ஆர்வம் புலனாவதாம். அண்ணா - அண்ணல்; தலைவனே.

பண் :

பாடல் எண் : 10

கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
குறட்பூதங் கூத்தாட நீயும் ஆடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் தன்னைப்
பருமுடியுந் திரள்தோளும் அடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொழிப்புரை :

கொடியில் எழுதப்பட்ட உருவாக அமைந்த காளையை உடையவனே! பேய்கள் பாடக் குட்டையான பூதங்கள் கூத்தாட, நீயும் கூத்து நிகழ்த்தி, அழகிய பார்வதி பாகனாய், மதில்களை உடைய ஆனைக்காவிலும், உஞ்சேனி, இரும்பை, அம்பர் மாகாளங்களிலும் உறைபவனே! நிலம் முழுதும் சூழ்ந்த கடலிடையே உள்ள இலங்கை மன்னனான இராவணனுடைய பருத்த தலைகளையும் வலிய தோள்களையும் நெரித்து, மகிழ்ந்த உன் திருவடிகளைச் சரணாக அடைந்து உனக்கு அடிமையாகப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.

குறிப்புரை :

கொடி ஏயும் - கொடியிற் பொருந்திய; `கொடியாகப் பொருந்திய` என்றுமாம். கூளி - பேய் `பூதம் இணையொத்தாடும்` என்க. ``நீயும்`` என்றது, `நின்னாவார் பிறரில்லாத சிறப்புடையையாகிய நீ, அக்குறட்பூதத்தோடு நின்று ஆடுகின்றாய்` என அவனது எளிமைத் தன்மையை நினைந்து அருளியவாறு. ``ஆடி`` என்னும் எச்சம் எண்ணுப்பொருட்டு. வடிவு ஏயும் - அழகு பொருந்திய. மாகாளம், வைப்புத்தலம். ``படி ஏயும்`` என்றது. ``படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்`` (குறள் - 606). என்புழிப்போல, `நிலம் முழுதும் உடைய` எனப்பொருள் தந்தது. மேலெல்லாம் ``உன் பொற் பாதம் அடையப்பெற்றால்`` என அருளிப் போந்ததனை இறுதியில் இனிது விளக்கத் திருவுளம்பற்றி, ``இலங்கைக் கோமான்தன்னை அடர்த்து உகந்த அடியே வந்து அடைந்து அடிமை ஆகப்பெற்றால்`` என்று அருளிச் செய்தார். அதனால், திருவடி, முன்னர் மறக்கருணையும் பின்னர் அறக்கருணையும் செய்து வாழ்விப்பன என்பதும், அவைகளை அடைதலாவது `பாதம் ஈசன் பணியலது ஒன்றிலா`து (தி.12 பெ.பு. திருக்கூட்டச் சிறப்பு - 9.) அதனையே மேற்கொண்டு செய்தல் என்பதும் பெறப்பட்டன. ``மதில் ஆனைக்கா` என்றருளிய இத்தலத்தின் திருமதிலை, `சிவபெருமானே எழுந்தருளிவந்து திருநீற்றைக் கூலியாகக் கொடுத்துக் கட்டியது` எனவும், `இது பாதலம் வரையில் ஊடுருவியுள்ளது` எனவும் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 1

முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை
மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்
சார்தற் கரியானை தாதை தன்னை
என்னானைக் கன்றினையென் ஈசன் தன்னை
யெறிநீர்த் திரையுகளும் காவிரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

முன் ஒரு காலத்தில் யானையைக் கொன்று , அதன் தோலைப் போர்த்தியவனாய் , ஞானம் மிகப் பெறாத அடியேனுடைய சிந்தை மனம் வாக்கு இவற்றைத்தான் இவரும் யானைகளாகக் கொண்டு இவர்ந்தானாய் , அடியார்க்கு அல்லது மற்றவருக்குக் கிட்டுதற்கு அரியனாய் , எல்லோருக்கும் தந்தையாய் , என் ஆனைக் கன்று போன்று எனக்கு இனியவனாய் , என்னை அடக்கி ஆள்பவனாய் , அலைகள் மோதும் காவிரியை அடுத்த அழகிய ஆனைக்காவில் தேனாகவும் பாலாகவும் இனியனாய் , நீர்த்திரள் வடிவாக அமைந்த பெருமானை நான் தலைப்பட்டேன் .

குறிப்புரை :

முன் - முற்காலத்தில் . ` ஆனைத் தோல் போர்த்த ` என்றது , ` யானை ஒன்றை உரித்து அதன் தோலைப் போர்வையாகப் போர்த்துக்கொண்ட ` என , இசையெச்சத்தால் , வேண்டுஞ் சொற்கள் வந்து இயைய நின்றது . மூவாத - முதிராத ; ஞானம் மிகப் பெறாத , ` சிந்தையே ` முதலிய ஏகாரங்கள் மூன்றும் எண்ணிடைச் சொல் ; இவ்விடத்தில் , ` காயமே ` என்பது இனம் பற்றிக்கொள்ளப்படும் ; ஏகார எண்ணிற்குத் தொகை கொடாது போயதும் அதுபற்றி . ஏனைய அந்தக் கரணங்களினும் சிந்தை ஆன்ம அறிவிற்கு மிக அணுக்கமாய் நிற்றல் பற்றி ஆன்ம அறிவினை , பெரும்பாலும் ` சிந்தை ` எனத் தொல்லாசிரியர் அனைவரும் வழங்குவராகலின் , அம்முறை பற்றியே இங்கு அதனை , ` சிந்தை ` என்று அருளினார் . இதனையே , ` சிந்தையைச் சீவனென்றும் சீவனைச் சிந்தையென்றும் ........... வந்திடும் ` ( சிவஞான சித்தி . சூ .4. பா .28.) என விளக்கியது . மருள் வழிப்பட்டுச் சென்ற முக்கரணங்களையும் தன் அருள் வழிப்படுத்து ஆண்டான் ` என்றற்கு அவைகளை அவனுக்குரிய மதயானைகளாக உருவகித்து , ` தன் ஆனையாப் பண்ணி ஏறினானை ` என்று அருளுகின்றவர் , அவையெல்லாவற்றிற்கும் அடியாகிய ஆன்ம அறிவினை அதற்கு முன்னே அருள்வழிப்படுத்தினமையை முதற்கண்ணே அருளிச்செய்தார் . ஆன்ம அறிவு மருள் வழிப்பட்டு நிற்குங்கால் கரணங்களும் அவ்வாறே நிற்கும் ; அஃது அருள்வழிப்பட்டு நிற்குங்கால் அவையும் அவ்வாறே நிற்கும் என்பதனை , சிவப்பிரகாசத்து , ` ஞானவாய்மை ` என்னும் பகுதிக்கண் உணர்ந்து கொள்க . அகன் ஞாலத்தகத்துள் தோன்றி வருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு , வான்புலன்கள் அகத்தடக்கி , மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப்போக மாற்றி , பொதுநீக்கித்தனை நினையவல்லார்க்கு அல்லது ( தி .6. ப .1. பா .5.) ஏனையோர்க்குச் சார்தல் கூடாமையின் , ` சார்தற்கு அரியானை எனவும் , உலகிற்கெல்லாம் ஒரு தந்தை யாகலின் , ` தாதை தன்னை ` எனவும் அருளிச்செய்தார் . ` என் ஆனைக் கன்று ` என்றது , காதற்சொல் ( தொல் - சொல் . 56 .). ` எரிகின்ற நீரையுடைய திரை ( வீசுகின்ற திவலைகளை உடைய அலை )` என்க . உகளுதல் - புரளுதல் . தென் - தென்னிலத்துக்கண் உள்ள ; இஃது இயைபின்மை நீக்கிய விசேடணம் ; தென் - அழகுமாம் . செழு நீர் - மிக்க நீர் . பிறவியாகிய கோடை தணிந்து மெய் குளிரப் பெற்றமையின் , ` செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேன் ` என மகிழ்ந்து அருளிச் செய்தார் . அந் நீர்த்திரளில் ஆடப்பெற்றதனால் உளதாகிய இன்பம் , ஏனை நீரின் இன்பம்போல உடலின் கண்ணதேயாய் ஒழியாது . உள்ளத்தையும் உயிரையும் விழுங்கிக்கொண்டு , இங்ஙன் இருந்தது என்று இயம்பவாராது இருந்தமையின் , ` தேன் ` எனவும் , ` பால் ` எனவும் பலவாற்றான் அருளிச்செய்தார் . ` செழுநீர்த் திரள் ` என அருளியது , இத்தலத்துள் இறைவன் நீர் ஊற்றாய் விளங்குதல் பற்றி ; அதற்கேற்ப , ` ஆடினேன் ` என்றாராயினும் , ` தலைப்பட்டேன் ` என்பதே பொருளாகலின் , அச்சொல் இரண்டனுருபுகட்கு முடிபாதலும் , ` மூர்த்தி ` முதலியவற்றோடு இயைதலும் பொருந்திற்று . நீர்த் திரளைத் திருமேனியாகக் கொள்ளுதலின் , ` நீர்த்திரள் ` என்றதனை அடையடுத்த இடவாகு பெயராகக் கொண்டு , மூர்த்தி முதலிய பெயர்களோடு இயைக்க .

பண் :

பாடல் எண் : 2

மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை
வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் உள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை
இமையவர்தம் பெருமானை யுமையா ளஞ்சக்
கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்
கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

அமுதமாக உள்ளவனாய் , தியானிப்பவர் மனத்து இருப்பவனாய் , பிறையை அணிந்த சடையனாய் , மகிழ்ந்து என் உள்ளத்து இருப்பானாய் , பிறப்பு இறப்பு இல்லாதவனாய் , தேவர்கள் தலைவனாய் , பார்வதி அஞ்சுமாறு கரிய மத நீரை உடைய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனாய் , வலிய மழுப்படையை உடையவனாய் , ஊர் ஊராய்ப் பிச்சை எடுத்துத் திரிவானாய்த் திருவானைக்காவில் உள்ள நீர்த்திரள் ` வடிவாக அமைந்த பெருமானைத் தலைப்பட்டேன் .

குறிப்புரை :

மருந்தான் - அமுதமாய் உள்ளவன் : ` பிறவிப் பிணிக்கு மருந்தாய் உள்ளவன் ` எனலுமாம் . ` வளர்மதி ` என்றது , ` இளம்பிறை ` என்றவாறு . ` மதி ` என்பது , அம்ஏற்று , மகர ஈறாய் நின்றது ; அதன்கண் தொக்கு நின்ற இரண்டனுருபு , ` சடையான் ` என்னும் வினைக்குறிப்புக் கொண்டது . ` மகிழ்ந்து ` என்றது . ` அருளி ` என்னும் பொருளது கருந்தானம் - கரிய மதநீர் ; இது கூறினமையால் , ` மதகளிறு ` என்பதில் ` மதம் ` என்றதற்கு , ` களிப்பு ` எனப் பொருள் உரைக்க . இவ்வாறன்றி , ` கருந்தாள மதகரி ` எனப் பாடம் ஓதுவாரும் உளர் . கனம் - பெருமை . ` கனல் மழுவாள் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :

பாடல் எண் : 3

முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை
ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப்
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே.

பொழிப்புரை :

பிறையை முடிமாலையாக அணிந்தவனாய் , கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்க்கு அமுதம் வழங்கும் உறவினனாய் , பல உயிர்களுக்கும் துணையாவானாய் , ஓங்காரத்தின் உட்பொருளாய் , உலகங்களை எல்லாம் தோற்றுவித்துப்பின் ஒடுக்குபவனாய்த் தன்னைத் தலைவன் என்று போற்றாத அசுரர்களின் முப் புரங்களையும் அழித்தவனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

முந்நீர் - கடல் . உற்றான் - உறவினன் ; களைகண் ஆனவன் . ஓங்காரத்து உட்பொருளை மேலே ( ப .39. பா .10) காண்க . ` பெற்றான் ` என்பது , ` தோற்றுவித்தான் ` என்னும் பொருட்டாய் நின்றது . இறக்கம் செய்தல் - ஒடுக்குதலைச் செய்தல் . ` இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் ; தோற்றி - இறைவனே யீண்டிறக்கம் செய்வான் ` ( அற்புதத் திருவந்தாதி - 5.) என்னும் அம்மை திரு மொழியைக் காண்க . ` இரக்கம் செய்வான் ` என்னும் பாடம் சிறப்பின்று .

பண் :

பாடல் எண் : 4

காராருங் கறைமிடற்றெம் பெருமான் தன்னைக்
காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்
தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்
பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

கருமை நிறைந்த நீலகண்டனாய்க் காதில் வெண்ணிறக்குழையை அணிந்தவனாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூ மாலையனாய் , புலித்தோலை ஆடையாக அணிந்தவனாய் , ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவனாய் , படிகமணிமாலையை மார்பில் அணிபவனாய் , உலகங்களை அழிப்பவனாய் , தெய்வத் தன்மை பொருந்திய நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழு நீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

கார் ஆரும் கறை - கருமை பொருந்திய நஞ்சு ; ` மணி மிடறு ` என்பதும் பாடம் . ` கொன்றைப் பூந்தாரானை ` என மாற்றுக . தான் அன்றி - தான் இருப்பின் அல்லது . ஒன்றும் - ஒருபொருளும் . இல்லா - இலையாகின்ற சிறப்பினை உடைய ; என்றது , எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாய் உள்ள என்றபடி . ` பேர் ` என மருவி நின்ற ` பெயர் ` என்பது , ஈண்டு ` பொருள் ` என்னும் பொருளதாய் நின்றது ; ` ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவன் ` என்க . காரியப் பொருட்டாகிய , ` இல்லா ` என்னும் எதிர்மறைப் பெயரெச்சக் குறிப்பு , காரணப் பெயர் கொண்டது . எலும்புமாலை தலைமாலைகளேயன்றி , ஏனையோரொடொப்ப மணிமாலை அணிதலும் சிவபிரானுக்கு உண்டென்பது உணர்த்தற்பொருட்டு , ` மணி ஆரமார்பினானை ` என்றருளினார் ; ` நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பர்க்குக் - கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்கு ` ( தி .5. ப .92. பா .2.) என்று அருளினார் , திருக்குறுந்தொகையினும் . திரிபுரம் எரிக்கச் சென்ற காலத்து , வேதங்களே சிவபிரானுக்குத் தேர்க் குதிரைகளாயின எனப் புராணங் கூறுதல் அறிக .

பண் :

பாடல் எண் : 5

பொய்யேது மில்லாத மெய்யன் தன்னைப்
புண்ணியனை நண்ணாதார் புரம்நீ றாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை
ஏறமரும் பெருமானை யிடமான் ஏந்தும்
கையானைக் கங்காள வேடத் தானைக்
கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

பொய்க்கலப்பற்ற மெய்ம்மை வடிவினனாய் , புண்ணியனாய் , பகைவர் மும்மதில்களும் சாம்பலாகுமாறு அம்பு செலுத்தியவனாய் , தவத்தில் மேம்பட்டவனாய் , காளை வாகனனாய் , மானை ஏந்தும் இடக்கையனாய் , கங்காள வேடத்தானாய் , கட்டங்கம் என்ற படையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உடையவனாய் , தீயைப்போன்று சிவந்த மேனியனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

ஏதும் - சிறிதும் . நண்ணாதார் - நெருங்காதவர் ; பகைவர் . ` புண்ணியம் ` ஈண்டுத் தவம் ; உயிர்கட்குத் தவமாகின்றவன் தானே ` என்றவாறு . கடைதலின்கண் தோன்றும் விறகில் தீப்போல , உயிர்கள் செய்கின்ற தவத்தின்கண் மிக்கு விளங்குபவன் என்க ; தவமாவது , அவனை நோக்கிச் செய்வதே என்பது முன்னே குறிக்கப்பட்டது . ஏறு அமரும் - எருதை ஊர்தியாக விரும்புகின்ற . இடம் - இடப்பக்கத்தில் . செய்யான் - செம்மை நிறம் உடையவன் .

பண் :

பாடல் எண் : 6

கலையானைப் பரசுதர பாணி யானைக்
கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
மலையானை யென்தலையி னுச்சி யானை
வார்தருபுன் சடையானை மயானம் மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

கலையையும் , மழுப்படையையும் ஏந்திய கைகளை உடையவனாய் , பெரிய வயிரத்திரளாய் , மாணிக்கமலையாய் , என் தலையின்மேல் உள்ளானாய் , நீண்டசெஞ்சடையனாய் , சுடுகாட்டில் நிலையாக இருப்பவனாய் , வாசுகி என்ற பாம்பை நாணாகக் கோத்து , தன்னை விருப்புற்று நினையாத அசுரர்களின் மும்மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு , வளைக்கப்பட்ட மேருமலையாகிய வில்லினை உடையவனாய் , திருவானைக்காவில் , உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

கலை - மான் , பரசு தர பாணி - மழுத் தரித்த கை ; மான் மழு ஏந்தினமை குறித்தவாறு . ` பாசுபத பாணியானை ` எனவும் பாடம் ஓதுப . கனம் - பெருமை . மணி - அழகு . ` வயிரத் திரளான் , மாணிக்க மலையான் ` என்பன ஒப்பின் ஆகிய பெயர் . வார்தரு - நீண்ட . நினையாதார் - பகைவர் .

பண் :

பாடல் எண் : 7

ஆதியனை யெறிமணியி னோசை யானை
அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட
வேதியனை அறமுரைத்த பட்டன் தன்னை
விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

எல்லோருக்கும் முற்பட்டவனாய் , மணியின் ஓசை போல எங்கும் பரந்தவனாய் , உலகில் உள்ளவரால் அறிய முடியாதபடி உலகுக்கு அப்பாலும் பரவிய சோதி வடிவினனாய் , வேதத்தின் விழுமிய பொருளாய் , வண்டுகள் தங்கும் கொன்றை மலர் , எல்லோருக்கும் முற்படத் தான் பூண்ட பூணூல் இவற்றால் விளங்கும் வேதியனாய் , அறத்தை உபதேசித்த ஆசிரியனாய் , தாமரையில் விளங்கும் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை நீக்கியவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

ஆதியன் - முதல்வன் . அணி மணியிற் பிரித்தற்கு , ` எறி மணி ` என்றருளினார் . ` மணியின்கண் ஓசையாய்க் கலந்து நிற்பவன் ` என்க . அண்டத்தார் - வானவர் ` அண்டத்துக்கு அப்பால் மிக்கு விளங்கும் ஒளியாய் உள்ளவன் ` என்க . ` அண்டம் ஆரிரு ளூடுக டந்தும்பர் - உண்டு போலுமோரொண்சுடர் ` ( தி .5. ப .97. பா .2.) என்றருளியது காண்க . தொன்னூல் - நூல் பூண்பார் எவரும் பூண்பதற்கு முன்னர்ப் பூண்ட நூல் ; எனவே , ` வேதியன் ` என்றது , ` முதல் வேதியன் ` என்றவாறாம் . இதனால் , ` வேத ஒழுக்கத்திற்கு முதல்வன் அவனே ` என்பது குறிப்பிக்கப்பட்டது . பட்டன் - ஆசிரியன் . ` சேதி ` என்னும் முதனிலைத் தொழிற் பெயரொடு அன் ஈறு புணர்ந்து , ` சேதியன் ` என்று ஆயிற்று ; ` அறுத்தலை உடையவன் ` என்பது பொருள் .

பண் :

பாடல் எண் : 8

மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை
மறவாது கழல்நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்
பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை
ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

கச்சி ஏகம்பத்தை விரும்பி உறைபவனாய் , தன் திருவடிகளை மறவாது விருப்புற்று நினைத்து வாழ்த்தி உயர்த்திப் புகழ்ந்த அடியவர்களைப் பொன்னுலகு எனப்படும் தேவர் உலகை ஆளச் செய்பவனாய் , பூதகணமாகிய படையை உடையவனாய் , சுடு காட்டில் கூத்தாடுதலை விரும்புபவனாய் , பிச்சை ஏற்றலை ஆசைப் படுபவனாய் , பவளத்திரள்போல என் உள்ளத்தில் விளங்குபவனாய் , திருவானைக்காவுள் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

` கச்சி ஏகம்பம் மகிழ்ந்தானை ` என்பது கருத்தாகக் கொள்க ; மகிழ்ந்தான் - விரும்பினான் . ஏத்துதலை , வணக்கங் கூறுதலாக உரைக்க . பொன்னுலகம் - சிவலோகம் ; அன்னதாதலை , மண்ணுல கிற்பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் - பொன்னுலகம்பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் ` ( தி .7. ப .100. பா .5.) என்பதனானும் அறிக . ஆள்வித்தல் - அதன்கண் பெறும் இன்பம் எல்லாவற்றையும் நுகர்வித்தல் . ` பவளத் திரள் ` என்பது , உவமையாகுபெயர் . ` உள்ளம் ` என்றது , அறிவை .

பண் :

பாடல் எண் : 9

நசையானை நால்வேதத் தப்பா லானை
நல்குரவு தீப்பிணிநோய் காப்பான் தன்னை
இசையானை யெண்ணிறந்த குணத்தான் தன்னை
இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்
மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்
திசையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

எல்லோருடைய விருப்பத்திற்கும் உரியவனாய் , நான்கு வேதங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் , வறுமை மனநோய்கள் உடல்நோய்கள் ஆகியவற்றை நீக்குபவனாய்ப் புகழுக்கு உரியவனாய் , எல்லையற்ற நற்குணங்களுக்கு இருப்பிடமாயவனாய் , இடை மருதும் ஈங்கோயும் உறைவிடமாக உடையவனாய் , காளைவாகனனாய் , விரிந்த கடலும் ஐம்பூதங்களும் எட்டுத் திசைகளும் ஆகியவனாய் , திருவானைக்காவுள் உறைவானாய் , உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

நசையான் - விருப்பத்திற்கு உரியவன் ; ` விரும்புதற்கு உரியவன் ` என்றதாம் . நல்குரவு - வறுமை . நோய் - துன்பம் , ` நல்குரவு தீப்பிணிநோய் ` என்னும் செவ்வெண்ணின் தொகை தொகுத்தல் ஆயிற்று . ` நல்குரவும் ` என்பது பாடம் அன்று . இசையான் - பண்ணின் கண் உள்ளவன் . இறைவனது குணத்தை ` எட்டு ` என்றல் , வகையால் அன்றி , விரியால் அன்மையின் , அவை விரியால் எண்ணிறந்தன வாதல் உணர்க . இடைமருது , ஈங்கோய் சோழநாட்டுத் தலங்கள் . ` நீங்காத ` என்னும் எதிர்மறைப் பெயரெச்ச ஈற்று அகரம் தொகுக்கப் பட்டது . அவ்வெச்சம் , ` ஏற்றின்மிசையான் ` என்னும் பெயரொடு முடிந்தது , செய்யுட்கேற்ப உம்மை தொகுத்தும் , பிறவாறும் ஓதப்பட்டதாயினும் , புனலும் காற்றும் திசையும் ஆகியானை ` என்றே கொள்க : ` மிகுதல் ` என்னும் அடை , ` மாண் ` முதலிய எல்லாவற்றிற்கும் ஆகும் ; பெரும் பொருள்களாகிய அவை எல்லாம் ` என்பது கருத்து .

பண் :

பாடல் எண் : 10

பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்
பண்டயன்மால் இருவர்க்கும் அறியா வண்ணஞ்
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்
தேவர்கள் தம் பெருமானைத் திறமுன்னாதே
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்
ஆண்மையெலாங் கெடுத்தவன்தன் இடரப் போதே
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

பொழிப்புரை :

மன்மதன் உடல் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவனாய் , ஒருகாலத்தில் பிரமன் திருமால் இருவரும் தன்னை முடி அடி அறிய முடியாதவாறு தீப்பிழம்பாய் நின்றவனாய் , தேவர்கள் தலைவனாய் , தன்னுடைய வலிமையை நினைத்துப்பாராமல் ஆரவாரித்து ஓடிவந்து , கயிலை மலையை எடுத்த இராவணனுடைய ஆற்றலைப் போக்கிப்பின் அவன் துயரை அப்பொழுதே தீர்த்தானாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

குறிப்புரை :

` வீழப் பார்த்தானை ` எனக் கூட்டுக . சீர்த்தான் - உயர்ந்து தோன்றியவன் . திறம் - வலிமை ; என்றது , வினை வலியையும் தன் வலியையும் . உன்னாதே - ஆராயாமலே . ஆர்த்து - ஆரவாரித்து .

பண் :

பாடல் எண் : 1

கூற்றுவன்காண் கூற்றுவனைக்குமைத்த கோன்காண்
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

உலகை அழிப்பவனாய் , கூற்றுவனை அழித்த தலைவனாய் , உலக காரணனாய் , உலகில் நீரும் காற்றும் கனலும் ஒலிக்கின்ற மேகமும் அதன் மின்னலுமாகி , பவளச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்து , பிறைதவழும் சென்னியனாய் , கங்கை வெள்ளத்தை நிமிர்ந்த சடைமேல் ஏற்றவனாய் , அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கச்சி ஏகம்பத்திலுள்ள பெருமான் என் எண்ணத்தின்கண் ஆயினான் .

குறிப்புரை :

சிவபிரானை , ` கூற்றுவன் ` என்றல் , அழித்தல் தொழிலை உடைமை பற்றி . குமைத்த - அழித்த . குவலயம் - பூமி . கலிக்கும் - ஒலிக்கின்ற ; இடிக்கின்ற : இதற்கு , ` மேகம் ` என்னும் வினைமுதல் வருவிக்க . ` கலிக்கும் ` என்னும் பெயரெச்சம் , ` மின் ` என்னும் கருவிப்பெயர் கொண்டது ; மின்னலும் இடியும் புலப்பாட்டு வகையால் முறையே காரண காரியங்களாகக் கூறப்படும் . கனம் - பெருமை . ` மேனியில் கலந்த ` என்க . ஊர்தல் - தவழ்தல் . ` நிறைய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ஆர்ந்த - பொருந்திய ; ` நிலவுலகில் வந்த ` என்றபடி நிமிர்சடை - நீண்டசடை , ` எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ` என்றது . கோ நகராய சிறப்புப்பற்றி ; இனி , ` எழிலாரும் பொழிலார் ஏகம்பம் ` என ஏகம்பத்திற்கு அடையாக்கலுமாம் ; ` அம்மை இங்கு வழிபடுதற் பொருட்டு திருநந்தனவனம் ஒன்றை ஆக்கினார் ` எனவும் ` ` அஃது , ` அம்பிகாவனம் ` என்னும் பெயருடையது எனவும் இத் தலபுராணங் கூறுதலும் , இதனை அடுத்துள்ள ` அம்பி . என்பதோர் ஊரே அத்திருநந்தனவனமாக இஞ்ஞான்று சொல்லப்பட்டு வருதலும் , ` ஏரி யிரண்டும் சிறகா ` ( தண்டி ) என்னும் வெண்பாவினுள் , ` காருடைய பீலி கடிகாவா ` எனக் காணப்படுதலும் இங்கு நினைத்தற்கு உரியன ; ` கடிகாவா ` என்பதற்கு வேறு பொருள் கூறுவாரும் உளர் . கச்சியில் உள்ள எண்ணிறந்த தலங்களுள் , ஏகம்பம் முதல் தலம் என்க . ` அவன் என் எண்ணத்தான் ` என்றருளியது . சுவாமிகளுக்கு அப்பெருமானிடத்துள்ள அழுந்திய ஆர்வத்தைப் புலப்படுத்தும் . இவ்வாறே , அவனை , ` என் மனத்தே வைத்தேனே ` ( தி .4. ப .7.) என ஒரு திருப்பதிகத்தை முன் அருளிச்செய்தார் . சேக்கிழாரும் , ` திருவே கம்பர் தமை - நேர்ந்த மனத்தில் உறவைத்து நீடு பதிகம் பாடுவார் ` ( தி .12 தி . நா . பு . 323) என சுவாமிகள் புராணத்துட் கூறினார் .

பண் :

பாடல் எண் : 2

பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையகங்கள் பொறைதீர்ப் பான்காண்
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பல உயிர்களாகி எங்கும் பரந்தவனாய் , தன்னை வழிபட்டு எழுபவருடைய பாவங்களையும் வினைகளையும் போக்கியவனாய் , தூய பூக்களாலாகிய முடிமாலையை உடையவனாய் , உலகைப்படைத்துக் காத்து அழிக்கும் பொருளாய் அமைந்த அமுதமாய் , உலகங்களின் பாரத்தைப் போக்குபவனாய் , மலர்களைத் திருவடிகளில் சேர்த்து , விருப்புற்று நினைத்து வழிபடுபவர்களுடைய உள்ளத்தை விடுத்து நீங்காது இருப்பவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .

குறிப்புரை :

` எங்கும் பரந்தவன் ` என இயைக்க . எங்கும் - எல்லாப் புவனங்களிலும் . பரந்தவன் - பரவியவன் . பணிந்தெழுதல் வணங்கும் உணர்வோடே துயிலுணர்தல் ; ` தம்மையே சிந்தியா எழுவார்வினை தீர்ப்பர் ` ( தி .3. ப .54. பா .3.) எனவும் , ` எந்தையார் திருநாமம் நமச்சிவாய - என்றெழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாமே ` ( தி .6. ப .93. பா .10.) எனவும் ` தொழுதெழுவார் - வினைவளம் நீறெழ நீறணி யம்பலவன் ` ( தி .8 திருக்கோவை - 118.) எனவும் அருளியன காண்க . பாவத்தை மட்டிலே நீக்க வேண்டுவார்க்கு அதனையும் , இருவினைகளையும் நீக்கவேண்டுவார்க்கு அவைகளையும் நீக்கியருளுவான் என்பார் , ` பாவமும் வினையும் போகத் துரந்தவன் ` என்றருளினார் . துரத்தல் - ஓட்டுதல் . ` மலர் ` என்பது சொல்லுவாரது குறிப்பால் , கொன்றை மலராம் . ` தோற்றம் நிலை இறுதி ` என்றது . உலகம்படும் முத்தொழிலை . அத்தொடர் உம்மைத் தொகையாய் நின்று , ` அவற்றைச் செய்யும் பொருள் ` என , இரண்டாம் வேற்றுமைப் பொருள்மேல் , ` பொருள் ` என்னும் சொல்லோடு தொக்கது . ` நிற்றல் ` என்பது உண்மையையுணர்த்தல்போல , ` வருதல் ` என்பதும் ஒரோவழி உண்மையை உணர்த்தும் ; அதனால் ` வந்த ` என்றது , ` நின்ற ` என்றவாறாம் . மூலமலமாய நோய்க்குத் தோற்றம் முதலிய மூன்றும் மருந்தாகலானும் , ` உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் என்றப்பால்நாற் கூற்றே மருந்து ` ( குறள் - 950.) என , நோயைத் தீர்ப்பவனும் , ` மருந்து ` எனப்படுதலானும் , ` தோற்றம் நிலையிறுதிப் பொருளாய் வந்த மருந்தவன்காண் ` என்றருளினார் . ` மருந்தவன் ` என்பதில் அகரம் சாரியை . ` நிலவுலகம் ` என்னும் பொருளதாகிய ` வையகம் ` என்பது , இங்கு , ` உலகம் ` எனப் பொதுப் பொருள் குறித்து நின்றது . பொறை - சுமை . ` அதனைத் தீர்ப்பான் ` என்றது . ` உயிர்களது பிறவியை நீக்கியருளுவான் ` என்றவாறு ; ` வையகங்கள் ` என்புழியும் இரண்டனுருபு விரிக்க . ` நினைந்தெழுவார் ` என்பதற்கும் , மேல் , ` பணிந்தெழுவார் ` என்பதற்கு உரைத்தவாறு உரைக்க .

பண் :

பாடல் எண் : 3

நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
தோற்றவன்காண் தோற்றக் கேடில்லா தான்காண்
துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்
பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்தவனாய் , நீரும் தீயும் ஆனவனாய் , கனமான மழுப்படை உடுக்கை அக்கினி இவற்றைக் கைகளில் ஏந்தியவனாய்த் தனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லாதவனாய் , ஒப்பற்றவனாய் , தன்னைத் துணையாகக் கொண்டு தொழும் அடியவர்களுடைய உள்ளத்தைப் பாதுகாப்பவனாய் , புகழ்கள் படைத்தவனாய் , விரிந்த சடைமீது புள்ளிகளை உடைய பாம்பினையும் கங்கையையும் ஏற்றவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .

குறிப்புரை :

நிறை மழு - வெம்மை நிறைந்த மழு . தமருகம் - துடி ( உடுக்கை ). தோற்றவன் - தோன்றுதலுடையவன் ; தோற்று , முதனிலை திரிந்த தொழிற்பெயர் ; அகரம் சாரியை . ` தோற்றக் கேடு ` உம்மைத் தொகை ; ` தோன்றுதலும் அழிதலும் ` என்பது பொருள் . துணை இலி - ஒப்பு இல்லாதவன் ; ` தனக்குவமை இல்லா தான் ` ( குறள் - 7.) என்றார் திருவள்ளுவ நாயனாரும் . ` அவனே துணை என்று ` என்க . ` உள்ளம் ` என்புழி , இரண்டனுருபு விரிக்க . போற்றவன் - காத்தல் உடையவன் ; என்றது , நீங்காதிருப்பவன் ` என்றவாறு . ` புகழ்கள் ` என்றது , ` எல்லாப் புகழ்களையும் ` என்றபடி . ` படைத்தான் ` என்பதில் , ` படைத்தல் ` என்பது , ` படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும் - உடைப் பெருஞ் செல்வர் ` ( புறம் - 188.) என்புழிப்போல ` உடையனாதல் ` என்னும் பொருளது . ` கங்கைப் புனலும் ` என மாற்றியுரைக்க . ` பொறியரவம் விரிசடைமேற் புனலங் கங்கை ` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :

பாடல் எண் : 4

தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் மலைமங்கை பங்கா என்பார்
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்
வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்கும்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத்தானே.

பொழிப்புரை :

உலகிற்குத் தாயாய் , தன்னொப்பார் இல்லாத தத்துவனாய் ; பார்வதி பாகனாய் , அடியவர்கள் வாக்கில் இருப்பவனாய் , இனி வரக்கூடிய பிறவி நோயைத் தீர்ப்பானாய் , உலகியலிலேயே ஈடுபடும் தன்னை நினையாத தேவர் தானவர் மக்கள் ஆகியோருக்குத் தூரத்திலுள்ளவனாய் , மனமாரத் திருவடியை விரும்பித் தியானித்து எழுபவர் உள்ளத்தில் பொருந்தியவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .

குறிப்புரை :

தாயவன் - தாயாய் இருப்பவன் . வாயவன் - வாயின் கண் இருப்பவன் ; என்றது , ` அவர்சொல்லின்கண் விளங்கி நின்று பயன் தருபவன் ` என்றதாம் ; இதனால் , ` இறைவன் அடியார் நிறை மொழி மாந்தராய் விளங்குதல் இவ்வாற்றான் ` என்பது விளக்கி யருளப்பட்டது . ` வரும் ` என்றது , ` வினையால் பிறப்பும் , பிறப்பால் வினையும் எனக் காரண காரியத் தொடர்ச்சியாய் முடிவின்றி வருகின்ற ` என்றவாறு . பிறவியாகிய நோய் ` என்க . வானவர் - தேவர் ; தானவர் - அசுரர் . மண்ணுளோர் - மக்கள் ; ` உயர்திணையாகிய இவர் அனைவர்க்கும் எட்டாதவன் ` என்றதாம் . சித்தம் ஆர - மனம் இன்பத்தினால் நிரம்ப . ` உள்கி நினைந்து ` என்பது ஒரு பொருட்பன் மொழி . ஏயவன் - பொருந்துதல் உடையவன் .

பண் :

பாடல் எண் : 5

அடுத்தானை யுரித்தான்காண் * *
* * * * * * *

பொழிப்புரை :

தன்னைக் கொல்ல நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவன் .

குறிப்புரை :

இத்திருப்பதிகத்தின் ஐந்தாம் திருத்தாண்டகத்துள் , ` அடுத்தானை உரித்தான்காண் ` என்னும் ஒரு தொடரையன்றி , ஏனைய பகுதிகள் கிடைத்தில ; அத்தொடர் இத்தலத்து அருளிய மற்றொரு திருப்பதிகத்தின் தொடக்கமாகிய ` அடுத்தானையுரித் தானை ` ( தி .4. ப .7. பா .10.) என்னும் தொடரோடு ஒருங்கு ஒத்து நிற்கின்றது .

பண் :

பாடல் எண் : 6

அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் தான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

கூரிய வாயை உடைய அம்பினாலே மும்மதிலையும் அழித்தவனாய் , ஐயாறும் , இடைமருதும் ஆள்பவனாய் , பகைவரைப் பழித்தவனாய் , அடியார்களுக்குத் துணையாய் இருப்பவனாய் , பாம்பினை வில் நாணாகக் கொண்டவனாய் , தலையில் கங்கையைச் சுழன்று தங்கச் செய்தவனாய் , தன் திருவடிகளை வழிபட்ட பகீரதனுக்காக உலகில் ஒடுமாறு கங்கை நீரைச் சிறிது இறக்கியவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆரும் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .

குறிப்புரை :

` அம்பால் அழித்தவன் ` எனவும் , ` அடையாரைப் பழித்தவன் ` எனவும் , ` முடிக்கண் கங்கை சுழித்தவன் ` எனவும் கூட்டுக . அயில்வாய் - கூர்மையான வாயினையுடைய ; ` கூர்மை வாய்ந்த ` எனலுமாம் . ஐயாறும் , இடைமருதும் சோழநாட்டுத் தலங்கள் . அடையார் - தன்னை அணுகாதவர் . பழித்தலாவது , விரும்பாமை ; முன்னின்று அருளாமை . பற்றவன் - துணையாய் இருப்பவன் ; அகரம் , சாரியை . ` புற்று அரவம் ` என்றது இன அடை . நாண் - அரைநாண் . சுழித்தவன் - அடக்கியவன் . ` முனிவர்க்கா ` என்றது , ` அவர்கள் முழுகித் தவஞ்செய்தற் பொருட்டு ` என்றவாறு . இழித்தவன் - இறக்கியவன் ; இழித்ததும் கங்கையை என்க ; ` சடையில் அடக்கிய கங்கையைப் பகீரதன் முன்னிலையாகப் பலர்க்கும் பயன்படுமாறு பூமியில் சிறிது விடுத்தவன் ` என்றவாறு ; சிவபிரானை , கங்கையைச் சடையில் தரித்த நிலைபற்றி , ` கங்காதர மூர்த்தி ` எனவும் , அக்கங்கையைச் சிறிது நிலத்தில் விடுத்தநிலைபற்றி , ` கங்கா விசர்ச்சன மூர்த்தி ` எனவும் கூறுவர் .

பண் :

பாடல் எண் : 7

அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
அழல்வண்ணத் தில்அடியும் முடியுந் தேடப்
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும்
பான்மையன் காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் தான்காண்
கடலில்விடம் உண்டமரர்க் கமுத மீய
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பாடலை விரும்பி , உடல் அசைந்து கூத்து நிகழ்த்தியவனாய் , தன் தீப்பிழம்பாகிய வடிவில் அடியும் , முடியும் , மாலும் அயனும் தேட , அவர்களுக்கு இரங்கியவனாய் , பேய்க் கூட்டங்கள் முன் நின்று துதித்துப் புகழும் இயல்பினனாய் , தன்னை முன் நின்று துதித்துத் தியானிப்பவர்பால் மனம் இளகியவனாய் , யானைத் தோலைப் போர்த்தவனாய் , கடலின் விடத்தை உண்டு தேவர்களுக்கு அமுதம் ஈய மனம் பொருந்தியவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` பாடல் பேணி நடம் ஆடி அசைந்தான் ` எனக் கூட்டி , ` அசைந்து நடம் ஆடினான் ` என மாற்றியுரைக்க . ` அசைந்து ` என்றது , ` அசைவு இல்லாதவன் ` என்பது உணர்த்தி நின்றது . ` அடியும் முடியும் தேட ` என்றதற்கு , ` மாலும் அயனும் ` என்னும் வினைமுதல் வருவித்துக் கொள்க . பசைந்தவன் - இரங்கியவன் ; இரங்கியது அவர்கள் துன்பத்திற்கு . பரவி - பரந்து - பரந்து ; சூழ்ந்து . பான்மை யான் - தன்மையுடையவன் . ` கசிந்தவன் ` என்பதும் , ` இரங்கியவன் ` என்றே பொருள் தரும் . கடலில் விடம் - கடலின்கண் எழுந்த நஞ்சு . ` இசைந்தவன் ` என்றது , அச்செயலுக்கு ஒருவரும் இசைய ( உடன் பட ) மாட்டாமை குறித்து நின்றது .

பண் :

பாடல் எண் : 8

முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
முழங்கிஉரு மெனத்தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

கொடிய கூற்றுவனை அழித்தவனாய் , தன் கோபத்தீயினால் , வலிய பகைவர்களின் மும்மதில்களும் தீயில் வெந்து அழியுமாறு , வில்லை ஏந்தியவனாய் , தலைக்கோலம் அணிந்த வேடத்தானாய் , நறுமணம் கமழும் கொன்றை மாலையையும் , பாம்பையும் தலையில் அணிந்தவனாய் , முத்தலைச் சூலத்தை உடையவனாய் , மழையாய் மின்னி இடித்தவனாய் , உள்ள எழிலாகும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` வன் கூற்றை முடித்தவன் ` எனக் கூட்டுக . கூற்று - இயமன் . முடித்தவன் - அழித்தவன் . சீற்றத் தீ - சினம் என்னும் நெருப்பினாலே . சாபம் - வில் . ` பிடித்தவன் ` என்றது , அவ்வில் பயன்படாதே நின்றதைக் குறித்தது . மூவிலை வேல் - சூலம் . உரும் என - இடியாகி . மழை - மேகம் . ` இடித்தற்கு உரிய மேகமாய் ` என்பார் , ` உருமெனத் தோன்றும் மழையாய் ` என்றருளினார் . ` மழையாய் மின்னி இடித்தவன் ` என்றது , உலகைக் காத்து நிற்கும் கருணையை விளக்கியருளியவாறு .

பண் :

பாடல் எண் : 9

வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு
வஞ்சன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய் , அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய் , தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` நினையாதார்க்கு வருந்தவன் ; ` வஞ்சன் ` என்க . வருந்து - வருந்துதற்கு ஏது ; துன்பம் ; முதனிலைத் தொழிற் பெயர் , ஆகுபெயராய் நின்று , விகுதியேற்றது . அகரம் , சாரியை . ` வருந்தான் காண் ` என்றும் ஓதுப . ` பிணிகள் தீரும் வண்ணம் மருந்தவன் ` என்க ; இதன்கண் , ` தீரும் வண்ணம் ` என்பதற்கு முடிபாக , ` ஆவான் ` என்பது வருவிக்க . பரந்தவன் . பரவி இருப்பவன் ; வியாபி . நடுச்சடையை விடுத்து , திசைக்கு ஒன்றாய் ஆடும் சடைகளை எண்ணி , ` சடை எட்டு உடையான் ` என்றாராகலின் , அஃது , ` ஒன்பது போலவர் கோலக் குழற்சடை ` ( தி .4. ப .18. பா .9.) என அருளிச் செய்ததனோடு மாறுகொள்ளாது என்க .

பண் :

பாடல் எண் : 10

வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் தான்காண்
விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே

பொழிப்புரை :

`கொடிய பெருமை மிக்க புலித்தோலைப் போர்த்தி , வேதத்தின் பொருளாய் , எம் இறைவன் உள்ளான் ` என்று சொல்லி , மிடறு தழுதழுத்து , அழும் அடியவர்களுக்கு அருள் வழங்குபவனாய் , காளையை இவர்ந்து திரிபவனாய் , கூத்தாடும் பூதங்களின் தலைவனாய் , உலகங்களைத் தாங்கும் அற்புதனாய் , சொல்லின் அளவைக் கடந்து நின்ற புகழை உடைய எம் தலைவனாய் , எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

உழுவை - புலி ; அதனை , ` மானம் ` உடையதாக அருளியது , இடம் வீழ்ந்ததனை உண்ணாமை முதலியன நோக்கி ; ` புலி தனது வேட்டத்தின்கண் இடப் பக்கத்து வீழ்ந்த விலங்கினை உண்ணா திருந்து வலப்பக்கத்து வீழ்ந்ததனையே உண்ணும் ` என்பதனை , ` கடமா தொலைச்சிய கானுறை வேங்கை - இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும் ` ( நாலடி . 300.), ` கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென - அன்றவண் உண்ணாதாகி வழிநாள் - பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து - இருங்களிற்றொருத்தல் நல்வலம் படுக்கும் - புலி ` ( புறம் - 190.) என்றாற் போல்வனவற்றால் அறிக . அதள் - தோல் ; ` உரி ` என்றது ` ` உரிக்கப்பட்டது ` எனப் பொதுமையில் நிற்ப , அதனை ` அதள் ` என்றது பொதுமை நீக்கிச் சிறப்பித்தது என்க ; எனவே , ` அதளாகிய உரி ` என விரிதல் பெறப்பட்டது ; போர்த்தல் , ஈண்டு மேலாடையாக இடுதல் ; புலித்தோலைச் சிவபிரான் தன் அரையிற் கட்டுதலேயன்றி , மேலாடையாக அணிதலும் சில விடத்துக் கூறப் படுதல் அறிக . ` என்று இயம்பி ` என்றருளினாராயினும் , ` இன்னோரன்ன புகழை இயம்பி ` என்பதே கருத்தாகக் கொள்க . அழுதல் - கண்கலுழ்தல் . அளிப்பான் - அவர்க்கு வேண்டுவன ஈவான் ; அன்றி , ` அழுவாரை ` என உருபு மயக்கமாகக் கொண்டு , ` காப்பான் ` என்றுரைத்தலுமாம் . ` நடம் ` என்றது , துணங்கைபோல்பவற்றை . ` பூதத்தை உடைய அம்மான் ` என்க . அற்புதன் - அதிசய நிலையினன் . சொற்பதம் - சொல்லினது நிலை ; உம்மை . சிறப்பு .

பண் :

பாடல் எண் : 11

அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் தான்காண்
திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையில்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
பொருகயிலை எடுத்தவன்தன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பிரமன் தலை ஒன்றை அறுத்தவனாய் , தேவர் வேண்ட ஆழ்ந்த கடலின் விடத்தை உண்டு , கங்கையைச் சடையில் அடக்கியவனாய் , தேவர்களுக்கும் தேவனாய் , எண்திசையும் தொழுது வணங்குமாறு கலைமானைக் கையில் தாங்கியவனாய் , தன் இருப்பிடமாகிய கயிலை மலையை அசைக்கவந்து , அதனைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் நசுக்கியவனான , எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

செறுத்தான் - அடக்கினான் . ` ஏனைய உயிர்கட்கே யன்றித் தேவர்க்கும் ` எனப் பொருள் தருதலின் , ` தேவர்க்கும் ` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம் . கலை மான் - ஆண் மான் . கயிலை அசைந்தமையால் உலகம் நடுங்கியது ஆகலின் , ` புகலிடத்தை நலிய வந்து கயிலை எடுத்தவன் ` என்றருளினார் . இனி , ` உலகை வருத்துதற்கு என்றே பிறந்து , கயிலையை எடுத்தவன் ` என்றுரைத்தலுமாம் . ` புகல் இடம் ` என்பது , ` வீட்டு நெறியை அடைய வேண்டுவார் புகுதல் உடைய இடம் ` என , நிலவுலகத்தைக் குறித்து நின்றது . ` இந்தப் பூமி - சிவன் உய்யக் கொள்கின்றவாறு ` ( தி .8 திருவா . திருப்பள்ளி . 10.) எனவும் , ` வானிடத்தவரும் மண்மேல் வந்தரன் றனையர்ச் சிப்பர் ` ( சிவஞான சித்தி . சூ . 2. 92.) எனவும் அருளியன காண்க . ` பொரு கயிலை ` என்றது , ` அவனுக்குத் தடையாய் நின்ற கயிலை ` என்றவாறு . இறுத்தான் - நெரித்தான் .

பண் :

பாடல் எண் : 1

உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க
ஓங்காரத் தொருவன்காண்உணர் மெய்ஞ் ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பார்வதி கண்டு அச்சத்தால் தளருமாறு , வலிய யானையின் தோலை உரித்தவனாய் , ஓங்காரத்தால் உணர்த்தப்படுகின்ற பரம் பொருளாய் மெய்ஞ்ஞானத்தை விரித்தவனாய் , நான்கு வேதங்களையும் ஓதுபவனாய் , உலகில் பல உயிர்களையும் ஊழ் வினைப்படி படைத்தவனாய் , எங்கும் சிறுதெய்வங்களாகவும் தோன்றிப் பரந்திருப்பவனாய் , முப்புரங்களும் சாம்பலாகுமாறு வில்லால் எரித்தவனாய் , அழகு நிறைந்த சோலைகள் நிரம்பிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்தில் உள்ளான் .

குறிப்புரை :

உரம் - வலிமை . ஒல்க - தளர ; அஞ்ச , ` உமையாள் ஒல்கக் களிற்றை உரித்தவன் ` என்க . ஓங்காரத்து - ஓங்காரத்தினால் உணர்த்தப்படுகின்ற . ஒருவன் - தன்போல்வார் ஒருவரும் இன்றித் தான் ஒருவனேயாய் நிற்பவன் . இதுபற்றியே , சிவபிரானை , ` ஏகன் ` என வழங்கும் உபநிடதம் ( சுவேதாசுவதரம் ). ` ஞானம் ` என்றது , அறியற்பாலனவாய பொருள்களை ; அவை பொருள் இயல்புகள் . விரித்தான் - பெரியோர்க்கு விளக்கினான் . ` அவ்வாறு விரித்த ` என இயைவித்து உரைக்க . வேதத்தான் - வேதத்தை உடையவன் ; என்றது , ` அவற்றிற்குத் தலைவன் ` என்றவாறு ; ` வித்தையெல்லாவற்றிற்கும் தலைவ ` ( சிவபிரான் ) என்கின்றது மகோபநிடதம் . விதியினால் - ஊழின்படி . தெரித்தவன் - படைத்தவன் . ` எங்கும் சில்லுருவாய் ` எனக் கூட்டுக . ` உரு ` என்றது , தெய்வங்களை . பன்மை கூறாது சின்மை கூறியது அவற்றது இழிவு தோன்ற என்க ; ` சில்லாண்டிற் சிதையும் சிலதேவர் ` ( தி .9 திருப்பல்லாண்டு . 4.) என்றருளியதுங் காண்க . திரண்டவன் - அவற்றது ஆற்றல்கள் பலவும் தனது ஆற்றலேயாக நிறைந்து நிற்பவன் .

பண் :

பாடல் எண் : 2

நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால்
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண்
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

அடியார்க்கு அன்பனாய் , தன்னிடம் அன்பு இல்லாத கீழ்மக்களை நினைத்துக் கூசி அகல்பவனாய் , தன்னை வணங்குதற்கு நாணாதவர் மனத்தின் கண் எளிமையாய்த் தங்கும் இளையவனாய் , அழகிய மணம் கமழும் கொன்றையை அணிந்தவனாய் , பார்வதி பாகனாய் , தேவர்கள் எப்பொழுதும் வணங்கித் துதிக்கும் எழிலாரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` நேசர்க்கு நேசன் ` என்க . ` நீசர்தம்மை ` என்பதன்பின் , ` அணுகுதற்கு ` என ஒரு சொல் வருவிக்க . கூசன் - கூசுதலுடையவன் ; கூசுதல் - நாணுதல் ; ` நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே ` ( தி .5. ப .90. பா .9.) என்றருளினமை காண்க . கூசாதார் - மாண்பு இறந்த மானங் காரணமாகத் தன்னை வணங்கிக் கூசியொழியாதவர்கள் . ` நெஞ்சின்கண் ` என உருபு விரிக்க . ` தஞ்சம் ` என்பது கடைக் குறைந்து நின்றது . ` தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டு ` ( தொல் . சொல் . 266.) என்பவாகலின் , ` தஞ்சே குடி கொண்ட ` என்பதற்கு , ` எளிமையாகக் குடிகொண்ட ` என உரைக்க . ` கொன்றை வாசன் ` என்றதற்கு ` வாசக் கொன்றையன் ` என்பது கருத்தாகக் கொள்க .

பண் :

பாடல் எண் : 3

பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும்
புண்ணியன்காண் நண்ணியபுண்டரிகப்போதின்
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் தான்காண்
வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பூமி முதலிய எழு உலகங்களையும் தாங்கி , மேம்படும் பாரத்தைச் சுமப்பவனாய் , புண்ணியனாய் , தாமரையில் உறையும் வேதா எனப்படும் பிரமனாய் , அவனைப்படைத்த திருமாலாய் , நீண்ட சடையில் பாம்போடு பிறையைச் சூடியவனாய் , பிறையைப் போன்ற பற்களையும் பிளந்த வாயையும் உடைய பேய்களோடு சுடுகாட்டில் இரவில் கூத்து நிகழ்த்தும் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

பொறை - பொறுத்தல் ; தாங்குதல் ; ` அதனை உடையவன் ` என்றருளினமைக்குக் காரணமாக , ` பூமி ஏழ்தாங்கி ` என்றருளினார் , ` பூமி ` என்றது , ` உலகம் ` என்னும் பொருட்டாய் நின்றது . புண்டரிகப் போது - தாமரை மலர் . மறையவன் - பிரமன் ; அவனைப் பயந்தவன் ( பெற்றவன் ) திருமால் . ` அணிந்து ` என்னும் வினையெச்சம் , ` பிறையவன் ` என்னும் வினைக்குறிப்புப் பெயர் கொண்டது ; ` அணிந்த ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . பிறை திகழும் - பிறைபோல விளங்குகின்ற . எயிறு - பல் . பேழ்வாய் - பெரிய வாய் . எல்லி - இரவு .

பண் :

பாடல் எண் : 4

பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்
பேரவன்காண் பேரா யிரங்க ளேத்தும்
பெரியவன்காண் அரியவன்காண் பெற்றம் ஊர்ந்த
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பூமியாய் , வானமாய் , வெள்ளத்தை உடைய கடலாய் , பனி உறையும் மலைகளாய் , இரவாய்ப் பகலாய் உள்ள சிறப்பை உடையவனாய் , திசைகளாய் , திசைகள் எட்டின் கண்ணும் செறிந்தவனாய் , அடியவர்கள் சிறப்பாகத் தியானிக்கும் பெயர்களை உடையவனாய் , ஆயிரம் பெயர்களால் போற்றப்படும் பெரியவனாய் , அடியார் அல்லார்க்குக் கிட்டுதற்கு அரியவனாய் , காளையை இவரும் அழகினை உடையவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

பார் - பூமி . விசும்பு - ஆகாயம் . பௌவம் - கடல் . பனி வரைகள் - குளிர்ந்த மலைகள் . சீரவன் - புகழை உடையவன் . திசையவன் - திசைகளாய் இருப்பவன் ; அகரம் சாரியை . ` எட்டின்கண்ணும் ` எனவும் , ` ஆயிரங்களால் ` எனவும் உருபுவிரிக்க . ` சிந்திக்கப்படும் பெயர்களை உடையவன் ` என்க ; அவை , ` சிவன் ` முதலியன ; அவைதாம் சிந்திப்பார்க்கு அகஇருளைப் போக்குவனவாதல் அறிக . ஏத்தும் - புகழப்படுகின்ற . ` பெற்றம் ` ஈண்டு , இடபம் , ஏரவன் - அழகினை உடையவன் .

பண் :

பாடல் எண் : 5

பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பெரிய தவக்கோலத்தையும் , தலைக்கோலத்தையும் உடையவனாய்ப் பிறையைச் சூடியவனாய் , அடியேனுடைய துன்புறுத்தும் நோயைத் தீர்க்கும் மருந்தாய் , மந்திரங்களாய் , தேவர்கள் வணங்கும் பெருந்தேவனாய் , மிக்க தவத்தை உடைய பார்வதி பாகனாய் , தேவர்கள் அர்ச்சனை செய்து துதிக்குமாறு இருப்பவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

தவத்துப் பிஞ்ஞகன் - தவக்கோலத்தையும் தலைக் கோலத்தையும் உடையவன் . வாதை - துன்பம் . மாதேவன் - தேவர்கட்குத் தேவனாகிய பெருந்தேவன் . ` தவத்தாளும் ஆயிழையாளும் ஆகிய உமையாள் ` என்க . ` அவளது கூற்றினை விரும்பியவன் ` என்பதாம் . அமர்தல் - விரும்புதல் . கச்சியில் அம்மை காமக் கோட்டத்து எப்பொழுதும் தவம் புரிபவளாதல் அறிக .

பண் :

பாடல் எண் : 6

ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்கம் ஆறும்
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காமன் ஆகங்
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகால் பந்தர்
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

அரிய வேதங்களையும் , ஆறு அங்கங்களையும் ஆராய்பவனாய் , படம் எடுத்து ஆடும் பாம்பு , எலும்பு , ஆமை இவற்றை அணிந்தவனாய் , கண்ணிலிருந்து புறப்பட்ட தீயினால் மன்மதனுடைய உடம்பை எரித்தவனாய் , வெகுண்டெழுந்த கூற்றுவனுடைய உடம்பு அழியுமாறு காலால் பாய்ந்தவனாய் , ஒரு காலத்தில் பல சருகுகளைத் தன் வாயிலிருந்து வெளிப்படும் நூலால் இணைத்துத் தனக்கு நிழல் தரும் பந்தலை அமைத்த சிலந்திக்கு நாட்டை ஆளும் செல்வத்தை ஈந்தவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

` ஆறு , என்பு , ஆமை , ஆகம் ` என்பவற்றில் இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கது . ஆய்ந்தவன் - ஆய்ந்தான் போலும் உணர்வுடையவன் . ` ஆமை ` என்பதில் உம்மை தொகுத்தலாயிற்று . ஆகம் - உடம்பு . ` பொடியாய் வீழ ` என்றதற்கு , ` பொடியாய் வீழ்வது போல வீழ ` என உரைக்க . சருகுகளால் பந்தர் இட்ட சிலந்தியைச் சிவபிரான் அரசனாக்கிய வரலாற்றை , தி .12 பெரியபுராணத்துக் கோச்செங்கட் சோழ நாயனார் புராணத்துட் காண்க .

பண் :

பாடல் எண் : 7

உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்
இமய வடகயிலைச் செல்வன் தான்காண்
இற்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்
சமயமவை யாறினுக்குந் தலைவன் தான்காண்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பார்வதி பாகனாய் , மகிழ்ந்து கங்கையைச் சடையில் ஒடுக்கியவனாய் , இமயமலையில் உள்ள வடகயிலை மலையில் உறையும் செல்வனாய் , வீடுகள் தோறும் பிச்சைக்கு அலையும் வறியவனாய் , ஆறுவகை வைதிகச் சமயங்களுக்கும் தலைவனாய் , மெய்ப்பொருளாய் , உயர்வற உயர்நலம் உடையவனாய்த் தனக்குத்தானே நிகராகும் தேவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

உகந்து ஒலி நீர்க் கங்கை - உயர்ந்து ( மிகுந்து ) ஒலிக்கின்ற நீர்வடிவாகிய கங்கை , ` கங்கையைச் சடையினின்றும் ( பகீரதன் பொருட்டு ) ஒழுகவிட்டான் ` என்க . ` வட இமயக்கயிலை ` என மாற்றுக . இமயக் கயிலை - இமயத்தின்கண் உள்ள கயிலை . ` இற் சென்று ` என இயையும் . ` இல்லங்கள் தோறும் பிச்சைக்குச் சென்று உழலும் ` என்க . ஆறு சமயங்கள் மேலே காட்டப்பட்டன ; எல்லாச் சமயங்களையும் உயிர்களின் அறிவு நிலைக்கேற்ப , இறைவன் , உலகில் தோன்றி நிலவச் செய்தலின் , அவன் ஒருவனே எல்லாச் சமயங்கட்கும் உண்மைத் தலைவன் என்க ; ` எல்லாக் கலைகளுக்கும் சிவபிரானே முதல்வன் ` என மேற் ( பா .2 உரை ) காட்டிய உபநிடத வாக்கியத்திற்கும் இதுவே கருத்து . இனி , ` உயிர்களின் அறிவு நிலைக் கேற்ப வேண்டும் நூல்களைததோற்றுவித்தலேயன்றி வேண்டாதனவற்றை இறைவன் அழித்தலும் செய்வன் ` என்று அருளுகின்றது , திருவாசகம் ; அதனை , ` மண்ணும் விண்ணும் வானோருலகும் - துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் ` ( தி .8 கீர்த்தி . 4,5.) என்புழிக் காண்க ; உத்தமன் - மேலானவன் . தானே ஆய இமையவன் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருந்தேவன் .

பண் :

பாடல் எண் : 8

தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்
தூமலர்ச்சே வடியிணையெம் சோதி யான்காண்
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்
ஒலிகடலில் அமுதமரர்க் குதவி னான்காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

அடிமை செய்யும் அடியார் துயரங்களைத் தீர்ப்பவனாய் , தூய மலர்போன்ற திருவடிகளை உடைய , எம் சோதி வடிவினனாய் , உண்டவிடத்தைக் கழுத்தில் ஒடுக்கியவனாய் , கடலிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தைத் தேவர்களுக்கு உதவியவனாய் , வண்டுகள் பொருந்தும் கொன்றை மலர் மாலையனாய் , ஒளி பொருந்திய சந்திரனும் விண்மீன்களும் ஆயினவனாய் , எட்டுத் திசைகளிலும் அழகு நிறைந்த பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத் தானே .

குறிப்புரை :

தொண்டு படு - தொண்டு பொருந்திய . ` தொண்டர் ` என்றது , வாளா பெயராய் நின்றது . ` படுவிடம் உண்டு ` என மாற்றுக . படு விடம் - இறத்தற்கு ஏதுவாகிய நஞ்சு . வாள் - ஒளி . எண்டிசையும் எழில் ஆரும் - எட்டுத் திசைகளும் அழகு பொருந்துதற்கு ஏதுவாய .

பண் :

பாடல் எண் : 9

முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

யாவரினும் முற்பட்டவனாய் , மும்மூர்த்திகளிலும் வேறுபட்டு , அவர்கள் தோற்றத்துக்குக் காரணனாய் , முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் , முருகனுக்கும் யானைமுகத்தானாகிய விநாயகனுக்கும் தந்தையாய் , பணிந்து தன் திருவடிகளை வணங்கும் அடியவர்களுக்கு அவர்கள் சிந்தையில் அகப்படுபவனாய் , புறப்பொருள்கள் மாட்டுச் செல்லாத உள்ளத்தாருக்கு இன்பவடிவினனாய் , செங்கண்ணனாகிய திருமாலைக் காளையாகக் கொண்டு இவரும் எம் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

குறிப்புரை :

முந்தை - யாவரினும் முற்பட்டவன் . மூவரினும் - ` அயன் அரி அரன் ` என்னும் மூவருள்ளும் . முதல் ஆனான் . தலைவன் ஆகியவன் ; உம்மை , ` முரசு முழங்கு தானை மூவருள்ளும் ` ( புறம் - 35) என்புழிப்போல , முற்று . தண்கட மா - குளிர்ந்த மதநீரை யுடைய விலங்கு ; யானை . ` அடியே ` என்னும் ஏகாரம் , ` தன் திருவடியையே ` எனப் பிரிநிலை சிந்தைக்கு அகப்படுபவனை , ` சிந்தை ` என்றருளினார் ; ` சிந்திதன் ` என்றபடி ; எனவே , ` ஏனையோர்க்கு அசிந்திதன் ` என்றதாம் . சிந்தாத - சிதறாத ; புறத்துச் செல்லாத , சிவன் - இன்ப வடிவினன் ; ` அவன் `, பகுதிப்பொருள் விகுதி . மால் , பெருமை எனக் கொண்டு ` செங்கண் ` என்றதனை விடைக்கு அடையாக்கினும் , அன்றி , ` திருமால் ` எனக்கொண்டு அவனுக்கே அடையாக்கினும் பொருந்தும் . விடைக்குக் கொள்ளின் இன அடையாம் .

பண் :

பாடல் எண் : 10

பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் தான்காண்
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை
தன்னிசைய வைத்தஎழி லரவி னான்காண்
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் தான்காண்
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை
யெடுக்கஅடி யடர்ப்பமீண் டவன்றன் வாயில்
இன்னிசைகேட் டிலங்கொளிவா ளீந்தோன் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

பொழிப்புரை :

பொன்போன்ற ஒளிவீசும் முறுக்கேறிய சடையை உடைய எம் தூயோனாய் , பூதகணத் தலைவனாய் , புலித்தோலாகிய ஆடையின் மேல் இறுக்கிச் சுற்றிய அழகிய பாம்பினை உடையவனாய் , காதில் சங்கினாலாகிய குழையை அணிந்த திறமை உடையவனாய் , மின்னலைப் போல ஒளி வீசும் வெள்ளிய பற்களை உடைய இராவணன் , கோபம் கொண்டு கயிலை மலையை அசைக்கத் தன் திருவடி அவனை நசுக்க , பின்னர் அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட இனிய இசையைக் கேட்டு , அவனுக்குச் சந்திரகாசம் என்ற வாளினை வழங்கிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்திலுள்ளான் .

குறிப்புரை :

` பொன் இசையும் , மின் இசையும் ` என்பவற்றில் . ` இசையும் என்பன உவம உருபுகள் . ` பூத கணத்தை யுடையநாதன் ` என்க . ` ஆடையொடு ` என உருபு விரிக்க . தன் இசைய - தனக்குப் பொருந்த ; இனி , ` தன் ` என்றதனைச் சாரியை யாக்கி , ` ஆடை தன்னொடு வைத்த ` என உருபுவிரித்து உரைத்தலுமாம் . ` காதின் ` என்பதில் , சாரியை நிற்க ஐ உருபு தொக்கது . ` காதினை உடைய சதுரன் ` என்க ; சதுரன் - திறலுடையவன் . மின் இசையும் வெள் எயிற்றோன் , அரக்கன் , இராவணன் . ` அடியினால் அடர்ப்ப ` என்க . அடர்த்தல் - வருத்துதல் . ` மீண்டு ` என்பது மற்றென்பதன் வினைமாற்றுப் பொருள் தந்தது . ` ஈந்தோன் ` என்புழியும் ` காண் ` என்பது விரிக்க .

பண் :

பாடல் எண் : 1

தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்
தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தாய் போல்பவனாய் , எல்லாருக்கும் தலைவனாய் , மலைகளில் உறைபவனாய் , எல்லா உலகங்களும் ஆகியவனாய் , அடியார் அல்லாதாருக்குத் தீப்போன்றவனாய்ச் சேய்மையிலுள்ளவனாய் , அடியார்களுக்கு நிழல் போன்றவனாய் அண்மையில் உள்ளவனாய் , பிறரால் அறியப்படாத வியத்தகு பண்பு செயல்களை உடையவனாய் , வேதம் ஓதுபவனாய் , வேதியர்கள் தியானிக்கும் மந்திரவடிவாய் உள்ளவனாய் , ஆகமமாக இருப்பவனாய் , வேள்வித்தீயாய் இருப்பவனாய் , திருநாகேச்சரத்தில் உள்ள பெருமானை அடைந்து வழிபடாதவர்கள் நல்ல வழியில் செல்லாதவராவர் .

குறிப்புரை :

தாயவன் - தாயாய் இருப்பவன் . தலையவன் - தலைவன் . மலையவன் - மலையின்கண் உள்ளவன் ; சேயவன் - ( அடியரல்லாதார்க்குச் ) சேய்மையில் உள்ளவன் . அணியான் ( அடியார்க்கு ) அண்மையில் உள்ளவன் . மலை , கயிலை , அழல் - வெம்மை ; நிழல் - தண்மை ; ` வெம்மையாயும் தண்மையாயும் உள்ளவன் ` என்றதாம் . மாயவன் - வஞ்சன் . மறையவன் - வேதத்தில் உள்ளவன் . மந்திரன் - மந்திர வடிவாய் உள்ளவன் . தந்திரன் - ஆகமமாய் இருப்பவன் . வளராநின்ற தீ - வேள்வித் தீ ; ` அத்தீயாய் இருப்பவன் ` என்க .

பண் :

பாடல் எண் : 2

உரித்தானை மதவேழந் தன்னை மின்னா
ரொளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

மத யானைத் தோலை உரித்தவனாய் , மின்னல் போல ஒளி வீசும் சடை முடி உடையவனாய் , பார்வதி பாகனாய் , பகைவர் மும்மதில்களை எரித்தவனாய் , அடியார்களுடைய வினைப் பயனாம் நோய்களையும் பாவங்களையும் போக்கியவனாய் , கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து முனிவர் நால்வர்க்கு அறம் , பொருள் , இன்பம் , வீடு என்ற உறுதிப் பொருள்களையும் அவற்றை உணரும் கருவிகளாகிய நான்கு வேதம் ஆறு அங்கங்கள் ஆகியவற்றையும் உபதேசித்தவனாய்த் திருநாகேச்சரத்தில் உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே .

குறிப்புரை :

மின் ஆர் ஒளி முடி - மின்னல்போலும் ஒளியை உடைய முடி ; சடைமுடி . இனி , ` மின்னார் ( கங்கையாரை ) ஒளித்த முடி ` என்றலுமாம் ; இப்பொருட்கு . இரண்டனுருபு தொகுத்தலாயிற்றாக உரைக்க . தரியலர் - பகைவர் . வினைநோய் - வினையால் வரும் நோய் ; பெரு நோய்கள் . அரித்தான் - அறுத்தான் . ` அறம் பொருள் இன்பம் வீடு ` என்றது . ` ஈதலறம் ; தீவினைவிட் டீட்டல்பொருள் ; எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்தொருமித் - தாதரவு பட்டதே இன்பம் ; பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு ` ( ஔவையார் பாடல் ) என்றாற் போலக் கூறும் அவற்றின் இலக்கணங்களை . தெரித்தான் - விளக்கினான் .

பண் :

பாடல் எண் : 3

காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளானை
மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத
ஏரானை இமையவர்தம் பெருமான் தன்னை
இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க
சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

யானைத்தோல் போர்த்த கடவுளாய் , தன்னை விரும்பி நினையாத கீழ் மக்கள் உள்ளத்துக்கண் வாராதானாய் , தன்னை மதிப்பவர் மனத்து இருப்பவனாய் , தன்னிகர் இல்லாத அழகனாய் , தேவர்கள் தலைவனாய் , இயல்பாகவே உலகமெல்லாம் நிறைந்து விளங்கும் பொருள்சேர் புகழ் உடையவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே .

குறிப்புரை :

காரானை உரி - கரிதாகிய யானையினது தோல் , ` காதலித்தலும் நினைத்தலும் இல்லாத கயவர் ` என்க . கயவர் ; கீழ்மக்கள் . ` செல்லானை ` என்று ஓதற்பாலதனை , ` வாரானை ` என்று ஓதியது , இடவழுவமைதி . ` இலாத ` என்றதனை , ` ஒப்பார் ` என்றதற்கும் கூட்டுக ; இது , பின் வருகின்ற ` ஒப்பில்லாத ஏரானை ` என்பதனை இனிது விளக்கியருளியவாறு , ஏர் - எழுச்சி ; ஈண்டு , ` உயர்வு ` என்னும் பொருட்டு , ` மிக்க ` என்பது , ` சீரான் ` என்பதன் முதனிலையோடு முடிந்தது . ` இறைவன் புகழே உலகெலாம் நிறைந்து மிக்கு விளங்குவது ` என்க .

பண் :

பாடல் எண் : 4

தலையானை எவ்வுலகுந் தானா னானைத்
தன்னுருவம் யாவர்க்கும் அறிய வொண்ணா
நிலையானை நேசர்க்கு நேசன் தன்னை
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
மலையானை வரியரவு நாணாக் கோத்து
வல்லசுரர் புரமூன்றும் மடிய எய்த
சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

தலைவனாய் , எல்லா உலகும் தானே ஆனவனாய் , தன் உருவத்தைப் பிறர் அறியமுடியாத நிலையினனாய் , அடியார்க்கு அன்பனாய் , நீண்ட வானத்து உச்சியைத் தடுத்து ஓங்கிய மலைகளானவனாய் , கோடுகளை உடைய பாம்பினை நாணாகக் கட்டி , கொடிய அசுரருடைய மும்மதில்களையும் அழியுமாறு அம்பு எய்த வில்லை ஏந்தியவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே .

குறிப்புரை :

தலையான் - தலைவன் ; முதல்வன் ; பதி . இறைவனை யாவரும் உருவறியார் என்பதனை , ` அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது ` ( தி .11 அற்புதத்திருவந்தாதி - 61.) என்று அருளிய அம்மை திருமொழியாலுங் காண்க . உருவம் என்றது , திருமேனியையே யன்றி அவனது உண்மை இயல்பையும் குறிப்பதே யாம் . வீடு பெற்றார்க்கும் அவனது இன்பத்தை நுகர்ந்து வாழ்தலன்றி , அவனது இயல்பினை முற்றும் அளவிட்டுணர்தல் இயலாது என்பதை , ` கடல்அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும் கடல்அளக்க வாராதாற் போலப் - படியில் அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம் கருத்துக்குச் சேயனாய்க் காண் ` ( திருக்களிற்றுப்படியார் - 90.) என மெய்ந்நூல் விளக்கிற்று . ` மலை மேருமலை ` என்பது , பின் வருவனவற்றால் விளங்கும் . ` அதன்கண் கோத்து ` என இயைவித்து உரைக்க .

பண் :

பாடல் எண் : 5

மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு
விரும்பாத வரும்பாவி யவர்கட் கென்றும்
பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்
பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்
பையானைப் பையரவ மசைத்தான் தன்னைப்
பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்
செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

தன்பக்கல் விருப்பமுடைய அடியவர்களுக்கு உண்மையானவனாய் , தன்னை விரும்பாத கொடிய பாவிகளுக்குப் பொய்யானவனாய் , சுடுகாட்டில் கூத்தாடுபவனாய் , பொன் போல ஒளிவீசும் சடையினனாய் , திருநீறு நிறைந்த பையை உடையவனாய் , பாம்பினை அணிந்தவனாய் , எங்கும் பரவியிருப்பவனாய் , பவள மலைபோலச் சிவந்த திருமேனியை உடையவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

` விரும்புவார்க்கு ` என்றது , ` விருப்பத்தைச் செலுத்துவார்க்கு ` என்றவாறாய் நின்றது . ` அவர்க்கு மெய்யன் ` என்க . அரும் பாவியர்கள் - நீக்குதற்கரிய மிக்க பாவத்தை யுடையவர்கள் ; ` அவர்களே இறைவன்மாட்டு விருப்பம் செலுத்துதலை ஒழிவார் ` என்றபடி . பொய்யான் - சிறிதும் விளங்காது , இல்பொருள்போலவே இருப்பவன் . பொன் பொலிந்த - பொன்போல விளங்குகின்ற ; அல்வழியாகலின் , னகரம் திரியாதாயிற்று . ` பொன் பொதிந்த ` எனவும் பாடம் ஓதுவர் . பொடி - திருவெண்ணீறு . ` பூதிப் பை ` என்பது , வாளா ஓர் பெயராக அருளப்பட்டது . பை அரவம் - படத்தை உடைய பாம்பு . பரந்தான் - எங்கும் நிறைந்தவன் . ` மேனிச் செய்யான் ` எனச் சினை வினை முதல்மேல் நின்றது .

பண் :

பாடல் எண் : 6

துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த
நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை
அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

அறத்தை விரும்பாத குற்றமுடையவர்களைக் கைவிட்டவனாய் , தேவர்கள் பலவாகத் துதித்துப்புகழுமாறு , எல்லா முதன்மைகளாலும் நிறைந்தவனாய் , ஐம்பூதமும் , அவற்றின் காரியமாகிய சராசரமும் ஆகியவனாய் , தன்னைத் தியானிக்காத வஞ்சர்களை மறந்து திருவைந்தெழுத்தை ஓதுபவர்களுக்கு எக்காலத்திலும் சிறந்து உதவுபவனாய் , திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

துரிசர் - குற்றம் உடையவர் . ` துரிசர்தம்மைத் துறந்தானை ` எனவும் , ` வஞ்சகர்தம்மை மறந்தானை ` எனவும் இயைக்க . ஏத்த - புகழும்படி . நிறைந்தான் - எல்லா முதன்மைகளாலும் நிரம்பினான் . ` வல்லோர் ` என்றது . ` நான் மறக்கினும் - சொல்லும்நா நமச்சிவாயவே ` ( தி .7. ப .48.) என்றருளியவாறு சொல்ல வல்லவர் என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

மறையானை மால்விடையொன் றூர்தி யானை
மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்
இறையானை யென்பிறவித் துயர்தீர்ப் பானை
இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம்
என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த
சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

வேதப் பொருளாய் உள்ளவனாய் , பெரிய காளை வாகனனாய் , பெரிய கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாய் , தேவர்கள் தலைவனாய் , என் பிறவித்துயரைப் போக்குபவனாய் , நிலைபெற்ற சிறப்பினை உடைய ஏகம்பத்தில் இனிய அமுதமாக உறைபவனாய் , மற்றவருக்குப் புலப்படாத வகையில் அடியேன் உள்ளத்தினுள்ளே சிறை செய்து வைக்கப்பட்டவனாய் , திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

மறையான் - வேதத்தின்கண் உள்ளவன் : வேதப் பொருளாய் உள்ளவன் . மால்கடல் - பெரிய கடல் . இறையான் - கடவுள் ; ` தேவர்க்குத் தேவன் ` என்றவாறு , ` யான் ஒளித்து வைத்த ` என்க . சிறையான் - சிறையில் உள்ளவன் . இறைவனைத் தாம் அனுபவமாக இடையறாது உணர்ந்து இன்புற்றிருக்கவும் , பிறர் ஒருஞான்றும் அதுமாட்டாது , துன்பிற்கிடந்து சுழல்கின்றார் என்பதனை , பான்மை வகையால் இவ்வாறு அருளிச் செய்தார் . ` நாடி நாரணன் நான்முக னென்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத் தாடி பாதம்என் நெஞ்சு ளிருக்கவே ` ( தி .5. ப .1. பா .10) எனத் திருக்குறுந்தொகையினும் அருளிச்செய்தார் . ` ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும் போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து ` ( தி .11 அற்புதத் திருவந்தாதி -96) என அம்மையும் இவ்வாறே அருளுதல் காண்க .

பண் :

பாடல் எண் : 8

எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்
இருவிசும்பில் வரும்புனலைத் திருவார் சென்னிப்
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப்
பிரமன்தன் சிரமொன்றைக் கரமொன் றினால்
கொய்தானைக் கூத்தாட வல்லான் தன்னைக்
குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

இமைகொட்டும் நேரத்தில் மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனாய் , வானிலிருந்து இறங்கிய கங்கை வெள்ளத்தை அழகிய தலையில் ஏற்றவனாய் , பிறப்பில்லாதவனாய் , அறவழியில் நில்லாத பிரமனுடைய தலை ஒன்றனைத் தன் கை ஒன்றினால் நீக்கியவனாய் , கூத்து நிகழ்த்துதலில் வல்லவனாய் , குறிக்கோள் ஏதும் இல்லாத கொடியவனான என்னை அடியவனாகச் செய்தானாய் உள்ள திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

` இமைக்கும் போதில் ` என்றது , எய்தமை . பெய்தமை இரண்டிற்குமாம் . திரு - அழகு . ` அறம் ` என்றது , வேதத்தின் பொருளை ; அஃதாவது , ` சிவபிரானே முதற்பொருள் ` என்பது , வேதத்தினை ஒழியாது ஓதியும் , உணர்ந்தும் , பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பெரும் பேதையாயினானாகலின் , அவனை உணர்த்தும் வாயிலின்றித் தலைகளில் ஒன்றைக் கொய்தான் ` என்றபடி . குறி - குறிக்கோள் ; ` குறிக்கோள் இலாது கெட்டேன் ` ( தி .4. ப .67. பா .9.) என்றருளினமை காண்க .

பண் :

பாடல் எண் : 9

அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
கெளியானை யாவர்க்கும் அரியான் தன்னை
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறல்
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

கருணை உடையவனாய் , இனிக்கும் பசுப்பால் போல்பவனாய் , உலகில் வளரும் பயிர்களாய் , அப்பயிர்களின் வாட்டம் தீர்க்கும் மழையாய் உள்ளவனாய் , பிரமனும் , திருமாலும் தேடியும் காண முடியாத தீப்பிழம்பாய் , குற்றம் தீரத்தொண்டு செய்யும் அடியவருக்கு எளியவனாய் , மற்றயாவருக்கும் அரியவனாய் , இனிய கருப்பஞ்சாற்றின் தெளிவு போன்றவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

அளியான் - கருணையுடையவன் . அண்ணிக்கும் - தித்திக்கின்ற . ஆன்பால் - பசுவின்பால் . ` மாண்பன் தன்னை ` எனவும் , ` அன்பன்தன்னை ` எனவும் பாடங்கள் ஓதுப . ` ஆன்பால் , தேறல் தெளி ` என்பன அடையடுத்த உவமையாகுபெயர்கள் . துளி - மழை ; இதனை , ` துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் - அளியின்மை வாழும் உயிர்க்கு ` ( குறள் - 557) என்பதனாலும் அறிக . துரிசு - குற்றம் . கரும்பின் பயன் அதன் சாறேயாகலின் , அதனையே , ` தேறல் ` என்றார் . ` உள்ளால் ` என்றதில் ஆல் , அசைநிலை ; உருபாக உரைப்பாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 10

சீர்த்தானை யுலகேழுஞ் சிறந்து போற்றச்
சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் தன்னைப்
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்
பனிமதியஞ் சடையானைப் புநிதன் தன்னை
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்கன் அஞ்ச
அருவிரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவந்
தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

பொழிப்புரை :

உலகங்கள் ஏழும் பரவிப் போற்றும்படியான புகழுடையவனாய் , ஏனையோரினும் சிறந்தவனாய் , நிறைந்து உயரும் செல்வத்தனாய் , மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் பார்த்தவனாய் , பிறை சூடிய சடையினனாய் , தூயோனாய் , ஆரவாரித்து ஓடிவந்து கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அஞ்சுமாறு , அவனைக் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனாய் , தன்னைச் சரணாக அடைந்தவர்களின் பாவங்களைப் போக்குபவனாய் , உள்ள திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .

குறிப்புரை :

சீர்த்தான் - சீரை ( புகழை ) உடைய பொருளானா யினான் . சிறந்து - ஞானத்திற் சிறந்து நின்று ; இங்ஙனம் அருளவே அவ்வாறில்லாதார்க்குச் சிவபிரானைப் போற்றுதல் கூடாதாகும் என்பது பெறப்பட்டது . ` அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் ` ( குறள் - 241) என்பவாகலின் , திருவருளை , ` செல்வம் ` என்றருளினார் . மதனவேள் - மன்மதன் . பொடி - சாம்பல் . ` வீழப் ( விழுமாறு ) பார்த்தானை ` என்க . பனி - குளிர்ச்சி . ` மதியம் ` என்புழித் தொக்கு நின்ற இரண்டனுருபு , ` சடையான் ` என்னும் வினைக்குறிப்போடு முடியும் ; ` மதி அம்சடையான் ` எனலுமாம் . புநிதன் - தூயோன் ; ஒன்றிலும் தோய்வில்லாதவன் . ஆர்த்து - ஆரவாரித்து .

பண் :

பாடல் எண் : 1

ஆளான அடியவர்கட் கன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

தனக்கு அடிமையான அன்பர்களுக்குத் தானும் அன்பனாய் , பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவனாய் , நான் அடைக்கலம் புகுந்த திருவடிகளை உடையவனாய் , ஒப்பற்றவனாய் , சந்தனமும் குங்குமமும் வாசக்கலவைகளும் பூசப்பட்ட தோள்களை உடையவனாய் , துளையிடப்படாத முத்தினை ஒப்பவனாய் , தூய வெள்ளிய கோவணத்தைக் கீளோடு இடுப்பில் கட்டியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள என்றும் அழிதல் இல்லாத பெருமானை அடைக்கலமாக அடைபவர்கள் பிறந்து இறத்தலாகிய கேட்டினை எதிர்காலத்தில் பெறாதார் ஆவர் .

குறிப்புரை :

யாவரும் இறைவனுக்கு அடியவரேயாகலின் , அவனை அறிந்து அடைந்தோரை , ` ஆளான அடியவர்கள் ` என்று அருளினார் . அவர்கட்கு அன்பன் ஆதலாவது , அவர்க்கு வேண்டுவன யாவும் தானே முன்வந்து அருளுதல் ; இதனை , திருஞானசம்பந்தர்க்கு முத்துச்சிவிகை , முத்துப்பந்தர் முதலியவைகளும் , நாயனார்க்குப் பொதிசோறும் , அவர் இருவர்க்கும் திருவீழிமிழலையில் படிக்காசுகளும் , வன்றொண்டர்க்கு ஊரில் இரந்து கொணர்ந்த சோறும் தானே முன்வந்து அளித்தமையாலும் , பிறவாற்றாலும் இனிது தெளியப்படும் . ` புக்க ` என்னும் பெயரெச்சம் , ` தாள் ` என்றதனோடு முடிந்தது . இத் தொடரினை , ` ஆளானவர்கட் கன்பா போற்றி ` என்னும் திருவாசகத் தொடருடன் வைத்து நோக்குக . ( தி .8 போற்றித் - 198) தாள் - திருவடி ; திருவடியே அடியவரைத் தாங்குவன என்பது , ` உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் ` ( தி .11 திருமுருகு - 4) என்றதனானும் விளங்கும் . ` சாந்து ` என்றது , கத்தூரி முதலியவற்றை . சந்தனம் முதலியன , அடியவர் செய்யும் வழிபாட்டிற் பெறுவன . தோளாத - துளை இடாத . துளையிடப்பட்ட முத்துச் செயற்கையாய் சிதைவுபட்டுப் பெருமை குறைதலின் , இறைவனை இயற்கையாய் நின்று பெரிதும் போற்றப்படும் துளையிடாத முத்தாக அருளுவர் ஆசிரியர் ; இதனை , ` தோளா முத்தச் சுடரே போற்றி ` ( தி .11 திருவா . போற்றித் - 197) என்றதனாலும் உணர்க . ` தூயதாக வெளுத்த ` என ஆக்கம் வருவித்து உரைக்க . ` கோவணத்தை ` என்னும் இரண்டாவது , ` கீளானை ` என்னும் வினைக்குறிப்போடும் , ` ஆர்த்த ` என்பது , ` கீளான் ` என்பதன் முதனிலையோடும் முடியும் ; எனவே , ` கோவணத்தை - அரையில் ஆர்த்த கீளின்கண் உடையான் ` என்பது பொருளாம் . கீள் - கோவணத்தை இணைத்துவைத்திருக்குமது . கேடு - அழிவு ; பிறந்து இறத்தல் . நாடுதல் - விரும்புதல் ; விரும்பி அடைதல் .

பண் :

பாடல் எண் : 2

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனை
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

சிவபெருமானுடைய இயல்புகளை உணர்த்தும் பாடல்களில் உள்ள சொற்களின் பொருளை நன்றாக உணர்ந்து , மலங்கள் பற்றற நீங்கப் பெற்றுப் பசுபோதம் நீங்கி , அருளில் அடங்கி நில்லாதவர்கள் உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தை நீக்காதவனாய் , உய்வதற்குரிய வழியை அறியாத நாய் போன்ற கீழ்மையனாகிய என்னை நல்ல வழியில் செல்லும் வண்ணம் விரும்பி ஆட்கொண்டவனாய் , பற்கள் வரிசையாக அமைந்த வாயினால் , உச்சரிப்பில் குறை ஏற்படாதவகையில் பாடியும் ஆடியும் பணிந்து எழுந்தும் , குறை இரந்து தன்னைச் சரணமாக அடைந்தவர்களுடைய பாவங்களைப் போக்கும் ஆற்றலுடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடுஇலார் .

குறிப்புரை :

சொற்பாவும் பொருள் - சொல்லின்கண் பரவிய ( நிறைந்துள்ள ) பொருள் . தூய்மை நோக்கி - தூய்மை பெறுதல் ( மலங்களெல்லாம் பற்றற நீங்குதல் ) குறித்து . தூங்குதல் - பசுபோதம் நீங்கி அருளில் அடங்கிநிற்றல் . ` சொல் ` என்றது , சிவபிரானது இயல்பு உணர்த்தும் பாட்டுக்களை . அவற்றின் பொருளைத் தெரிந்தாலன்றித் தூய்மை நோக்குதலும் , தூங்குதலும் இயலாவாகலான் , ` சொற்பாவும் பொருள் தெரிந்து ` என்றருளினார் ; இவ்வாறே , ` திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் ` என ஆளுடைய அடிகளும் ( தி .8 சிவபுராணம் . 92 -94) அருளியது காண்க . ` மனம் ` என்றது , உயிரினது அறிவை ; அதன் இருளாவது , அறியாமை ; ஆணவ மலம் . பான்மை - பகுதி ; நெறி . நாயினேனை - நாய்போன்றவனாகிய என்னை ; இழி வுடைமைக்கு நாயினை உவமையாகக் கூறுதல் , தொன்றுதொட்ட தொரு வழக்கு . ` நற்பான்மை ` என முன்னர் அருளினமையின் , ` நன் னெறிக்கே ` என்றது , ` அதற்கே ` என்னும் சுட்டளவாய் நின்றது . ` பற்பாவும் பாடி ` என இயையும் ; ` பல் பா ` என்பது , எதுகைநோக்கித் திரிந்தது . பா - திருப்பாடல் . இனி , ` பற்பாவும் ( பற்கள் நிறைந்த ) வாய் ` என்றே இயைத்து , ` எழுத்துக்கள் இனிது பிறத்தற்கு ஏதுவாய பற்களும் அவற்றையுடைய வாயும் பயன் பெறுமாறு பாடி ` என உரைத்தலுமாம் ; இப்பொருட்கு ` பாடி ` என்றதற்குச் செயப்படுபொருளாகிய ` பாடல்கள் ` என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்படும் . குறைந்து - குறை இரந்து . போக்ககிற்பான் - நீக்க வல்லவன் .

பண் :

பாடல் எண் : 3

அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை
ஆதரிக்கும் அடியவர்கட் கன்பே யென்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானை
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

புற்றில் உள்ள பாம்புகளை அணிந்த அழகனாய் , தன்னை விரும்பும் அடியவர்களுக்கு அன்பனாய் , மெய்ஞ்ஞானப் பொருளாய் , பெருந்திறல் உடையவனாய் , பத்தர்களுடைய பத்தி எவ்வளவிற்றாயினும் அதற்கு மனம் இரங்குபவனாய் , பத்தர் அல்லாதவருக்கு இரங்கானாய் , என்றும் அழிவில்லாதவனாய் , என் உள்ளத்துப்புக்கு அங்குள்ள மாசுகளைக் கல்லி எடுத்து நீக்குபவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலம் அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

அளை வாயில் - புற்றாகிய இடத்தில் உள்ள . ஆதரிக்கும் - விரும்புகின்ற . ` அன்பு விளைவான் ` என , பண்பின் தொழில் பண்பிமேல் ஏற்றப் பட்டது . வித்தகன் - திறல் உடையவன் . உளைதல் - வருந்துதல் ; ஈண்டு , மனம் இரங்குதல் . உலப்பு - அழிவு . ` மனத்து ` எனப் பின்னர் வருகின்றமையின் வாளா ` உள்புக்கு ` என்றருளினார் . ` கிளைப்பான் ` என்பது , எதுகை நோக்கி , ` கிளைவான் ` என நின்றது ; கிளைத்தல் - கல்லுதல் . ` மனத்து மாசு ` என்பதன்றி , ` மனப் பசாசு ` எனப் பாடம் ஓதுவாரும் உளர் .

பண் :

பாடல் எண் : 4

தாட்பாவு கமலமலர்த் தயங்கு வானைத்
தலையறுத்து மாவிரதந் தரித்தான் தன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் தன்னைக்
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

தண்டிலே விரிந்த தாமரையில் உறையும் பிரமனுடைய தலை ஒன்றினை அறுத்தவனாய் , மாவிரத சமயத்திற்கு உரிய வேடத்தை அணிந்தவனாய் , கிரகங்களின் பெயரால் அமைந்த கிழமைகள் யாவும் ஆவானாய் , தீவினையை உடைய அடியேன் நின்ற கொடிய நரகக் குழியிலிருந்து அடியேனை மீட்பவனாய் , பவளக் கொத்தினை ஒத்த நிறத்தினனாய் , வேதம் ஓதுபவனாய் , வேதத்தின் பொருள் கொண்ட வீணை ஒலியைக் கேட்பானாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

தாள் பாவு - தண்டின்கண் விரிந்த . தயங்குவான் - விளங்குவான் ; கமல மலரில் தயங்குபவன் , பிரமன் ; ` தங்குவானை ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` மாவிரதம் ` என்றது , மாவிரத சமயத்தவர்க்கு உரிய வேடங்கள் ; அவை , எலும்பு மாலை முதலியன . கோள் பாவும் நாள் - கோள்களின் உரிமை பொருந்திய நாள் ; கிழமைகள் . ` நின்றால் ` என்றதனால் , நில்லாமை பெறப்பட்டது . அவ்வாறன்றி , ` யாதானுமோராற்றால் நின்றாலும் மீட்பான் ` என்றதாம் . வித்து உரு - வித்தாகிய உருக்கள் ; ` அவற்றின் கொத்து ஒப்பான் ` என்றது , ` எல்லாப் பொருள்களின் முதலும் தானேயானவன் ` என்றவாறு ; இனி , ` வித்துருமத்தின் கொத்து ` என்பது குறைந்து நின்றது எனினுமாம் . வித்துருமம் - பவளம் . ` வீணை ` என்றது , கருவியாகு பெயராய் , அதன் இசையைக் குறித்தது .

பண் :

பாடல் எண் : 5

நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்று மானான் தன்னைத்
தொண்டாகிப் பணிவார்கட் கணியான் தன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் தன்னை
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

பெரியவனாய் , வெண்ணிறக் காளை வாகனனாய் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் அணுகமாட்டாத அருள் ஞானத்தானாய் , மூன்று சுடர்களும் ஆனவனாய் , தொண்டர்களாகித் தன்னைப் பணிபவர்களுக்கு அருகில் உள்ளவனாய் , சுயம்பிரகாசனாய் , பார்வதி பாகனாய் , உண்மையாகத் தன்னை தியானிக்காதவர்கள் வினைகளைப் போக்காதவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

நரை விடை - வெள்விடை ; ` முதிய விடை ` என்பது நயம் . நால்வேதமும் ஆறங்கமும் நணுக மாட்டாத சொல் , அருள் ஞானம் ; ` அதனானே உணரப்படும் பொருளாய் உள்ளவன் ` என்பது கருத்து . ` பணிவார்கட் கினியான் தன்னை ` என்பதும் பாடம் . ` வில்லான் ` என்றது , இசையெச்சத்தால் , ` மேரு வில்லானை ` எனப் பொருள்தரும் . மெய் - துணிபு ; ` அஃது உடையாராய் நினையாதார் ` என்றது ஐயத்தொடு நினைவாரை . தீர்க்ககில்லான் - தீர்க்கமாட்டாதவன் ; ` தீர்த்தல் செய்யாதவன் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் வளைத்துக் கொண்டவனாய் , அச்சடையில் வன்னி , கொன்றை , ஊமத்தை மலர்கள் , ஒளி பொருந்திய பாம்பு இவற்றைச் சூடியவனாய் , மும்மதில்களும் தீயில் வெந்து சாம்பலாகுமாறு அழித்தவனாய் , ஆலகால விடத்தை உண்டவனாய் , மன்மதன் உடல் பொடியாக விழுமாறு தீக்கண்ணால் விழித்தானாய் , பார்வதி பாகனாய் , முன்னொரு காலத்தில் வேல் போன்ற கூரிய தந்தங்களை உடைய யானைத் தோலைக் கிழித்து உரித்தவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

` கங்கை சுழித்தானை ` என்க . சுழித்தல் - வளைத்தல் ; அடக்குதல் . இவ்வாறன்றி ` சுழிகளாகிய தானைகளை ( படைகளை ) யுடைய கங்கை ` என்றலுமாம் . ` மலராகிய வன்னி கொன்றை மத்தம் ` என்க . வன்னி , இலையாயினும் , மலர்களோடு ஒப்பக்கொள்ளப் படுதல் பற்றி மலர்களுள் வைத்து எண்ணினார் . ` வேவ அழித்தானை , வீழ விழித்தானை ` என்க . ` ஆலாலம் ` என்பது பாற்கடலில் தோன்றிய விடத்தின் பெயர் . வேல் நல் ஆனை கிழித்தான் - வேல்போலும் நகத்தால் வன்மை மிக்க யானையைப் பிளந்தான் . கயாசுரனாகிய யானையைச் சிவபிரான் தனது நகத்தால் பிளந்தமையை , ` ஒருப தத்தினைக் கவானுறுத் திருகரத் துகிரால் வெரிநி டைப்பிளந் தீரிரு தாள்புடை மேவ குருதி கக்கியே வோலிட வவுணர்தங் குலத்துக் கரியு ரித்தனன் கண்டுநின் றம்மையுங் கலங்க ` என்பதால் ( கந்தபுராணம் . ததீசியுத்தரப்படலம் - 146) அறிக . இனி , ` வேல் ` என்றது வேலேந்திய படை ஆட்களைக் குறித்தது எனக் கொண்டு , ` வேலாண் முகத்த களிறு ` ( குறள் - 500) என்றாற்போல . ` அவர்களைக் கோட்டில் ஏந்திய யானை ` என , அதனது வலிமை தோன்ற அருளியதாக உரைத்தலுமாம் . இன்னும் ` வேல் ` என்றதற்கு , ` வேல் போலும் தந்தத்தினையுடைய ` எனினும் பொருந்தும் . ` நன்மை ` ஈண்டு , வலிமை மிகுதி குறித்தது . ` வேனலானை ` எனவும் , ` வேனிலானை ` எனவும் இரண்டனுருபு விரிந்து நின்றதாகவே ஓதுவன பாடம் ஆகாமைக்கு , ` கிழித்தான் ` என்பதுதானே சான்றாகும் . மேல் , ` விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ ` என அருளிச் செய்தவர் . மறித்தும் ஈண்டே அதனை அருளிச்செய்தார் என்றல் பொருந்துமாறு எங்ஙனம் என்க .

பண் :

பாடல் எண் : 7

உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற
ஓங்காரத்துட் பொருள்தான் ஆயி னானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
விண்ணொடுமண் ஆகாச மாயி னானை
வளரொளியை மரகதத்தி னுருவி னானை
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்
கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

அசைகின்ற ஒளிவிளக்காய் , உள்ளத்து நிலை பெற்ற ஓங்காரத்தின் உட்பொருளாய் , வெள்ளொளி உடைய சூரியன் , சந்திரன் , செந்நிறமுடைய அக்கினி என்ற இவையாகி , தேவருலகும் , நிலவுலகும் , தேவருலகுக்கும் மேற்பட்ட ஆகாயமுமாகி , மாணிக்கத்தின் ஒளியும் மரகதத்தின் ஒளியுமாகி , தேவர் எப்பொழுதும் வாழ்த்தித் துதிக்கும் ஒளிமிக்க திருமேனியை உடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

உளர் ஒளி - அசைகின்ற ஒளி ; விளக்கு . காற்றுக் காரணமாக எஞ்ஞான்றும் அசைந்து விளங்குதலே அதற்கியல்பாதல் பற்றி , அவ்வாறருளினார் . ஓங்காரத்து உட்பொருள் , மேலே காட்டப்பட்டது . ( ப .39 பா .10) விளர் ஒளி - வெளுத்த ஒளி ; ` அதனை விடுகின்ற சுடர்கள் இரண்டும் ஒன்றும் ` என்க . இரண்டு , சூரியனும் சந்திரனும் ; ஒன்று , நெருப்பு . இவை மூன்றனது ஒளியும் வெள்ளியவாதல் அறிந்து கொள்க . முச்சுடர்களில் , ஞாயிறும் திங்களும் ஒருதிறத்தினவாகவும் , நெருப்பு மற்றொரு திறத்தினதாகவும் காணப்படுதல் பற்றி இவ்வாறு , ` இரண்டும் ஒன்றும் ` எனப் பிரித்தோதி யருளினார் ; ` வளர் ஒளி ` என்றது , மாணிக்கத்தினது ஒளியை ; அது , கழுவுந்தொறும் வெளிப்படுதல் பற்றி அவ்வாறு அருளிச்செய்தார் . கிளர் ஒளி - மிக்க ஒளி ; என்றது அவனது அருட்டிருமேனிகளை ; அவை , அவற்றின் மிக்க ஒளியில்லாத பேரொளியினவாதல்பற்றி , அவ்வாறருளிச்செய்தார் . உளரொளியாயும் , வளரொளியாயும் இருப்பவனை அவைகளாகவே அருளியது , ஒற்றுமைபற்றி அருளிய பன்மைவழக்கு . ` கிளரொளி ` என்றது முன்னர்ப் பண்பாகுபெயராய்த் திருமேனியையும் , பின்னர்ச் சினையாகுபெயராய் அதனை உடையவனையுங் குறித்த இருமடி ஆகுபெயர் ; ` உடம்பும் உறுப்பெனப்படும் ` என்பது , ` உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் ` ( குறள் - 993) என்பதனால் அறிக .

பண் :

பாடல் எண் : 8

தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்
உள்குவா ருள்ளத்தி னுள்ளான் தன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

கூற்றுவன் இறக்குமாறு அவனைக் காலால் உதைத்து , தன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயனுக்கு ஒருகாலத்தில் அருள் செய்தவனாய் , புலித்தோலோடு எலும்பும் பாம்பும் பூண்டவனாய் , தன்னை அன்போடு வழிபடுபவர் உள்ளத்து இருப்பவனாய் , கொடிய நஞ்சினைத் தன் கழுத்தில் தங்குமாறு உண்டவனாய் , தேவர்கள் கூடியிருந்த தக்கனுடைய வேள்வியை அழித்தவனாய் , உள்ள கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

` காலால் தடுத்தான் ` என்பது , ` உதைத்தான் ` என்னும் பொருளது . ` காலனைப் பொன்றக் காலால் தடுத்தானை ` எனக் கூட்டுக . ` தடுத்து அருள்செய்தான் ` என எடுத்து இயைவிக்க . மாணி - பிரமசாரி ; மார்க்கண்டேயர் . அதள் - தோல் . ` அதளோடு ` என்றதில் ஓடுவுருபு , ` தொடியொடு தொல்கவின் வாடிய தோள் ` ( குறள் - 1235) என்பதிற் போல , வேறுவினைக்கண் வந்தது . அக்கு - எலும்பு . மடுத்தான் - வாய் மடுத்தான் ; உண்டான் . ` மிடற்றுள் தங்க மடுத்தான் ` என்க .

பண் :

பாடல் எண் : 9

மாண்டா ரெலும்பணிந்த வாழ்க்கை யானை
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்
போகாதென் னுள்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

இறந்தவர்களுடைய எலும்புகளை அணியும் இயல்பினனாய் , கடவூர் மயானம் முதலிய இடங்களில் கூத்தாடுபவனாய் , ஒளி பொருந்திய பாம்போடு எலும்பை அணிபவனாய் , சுடுகாட்டில் ஆடுபவனாய் , என் உள்ளத்தில் இடம் பெற்று , அதனை விடுத்து நீங்காது , என்னை அடிமை கொண்டானாய் , தன் உள்ளத் திருப்பதனைப் பிறர் அறிய இயலாதவனாய் , அச்சம் இல்லாதவனாய்த் தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

எலும்பு அணிந்த வாழ்க்கை - எலும்பை அணிதற்கு ஏதுவாய் நின்ற வாழ்க்கை ; என்றது , ` வறுமை வாழ்க்கை ` என்னும் பொருட்டாய் , அவனது நிலைபேற்றினைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்று , பழித்ததுபோலப் புகழ்புலப்படுத்து நின்றது ; ` மாண்டார் எலும்பு ` என்றதும் அதுபற்றி , பின்னர் ` அரனொடு என்பு பூண்டான் ` என்றது , அவனது பற்றின்மையைக் குறிக்கும் . ` மயானம் , புறங்காடு ` என்னும் இரண்டனுள் முன்னது , ` உலக முழுதும் ஒடுங்கிய நிலையையும் , பின்னது உலகப் புறங்காட்டையும் குறித்து , முன்னின்ற தொடர்களின் பொருளை வலியுறுத்தின . உள் - உள்ளம் . ` அதனை இடங்கொண்டு ` என்க . சிந்தை , அவனது திருவுள்ளக் குறிப்பு ; அதனை அறிவார் ஒருவரும் இல்லை என்க . அசங்கை - அச்சம் இன்மை ; ` அச்சம் இல்லாதவன் ` என்றது , ` தான் யார்க்கும் குடியல்லாத் தன்மை யன் ; தன்வயம் உடையவன் ` என்றபடி . சங்கை - அச்சம் ; அமரர்கள்தம் அச்சம் எல்லாம் தீர்த்தது , அசுரர்களை அழித்து என்க . கீண்டான் - பிளந்தான் ; அழித்தான் .

பண் :

பாடல் எண் : 10

முறிப்பான பேசிமலை யெடுத்தான் தானும்
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்றும் எரிசெய் தானைப்
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

பொழிப்புரை :

தனக்கு அறிவுரை கூறிய தேர்ப்பாகனிடம் கடுஞ் சொற்கள் பேசிக் கயிலைமலையை அசைத்த இராவணன் முதுகு நொறுங்குமாறு அழுத்திப்பின் அவன் தன் கை நரம்புகளை வீணைத் தந்திகளாகக் கொண்டு பாட மலையை அசைத்த அவனுக்குச் சிறிய வாளை அருள் செய்தவனாய் , அடியேன் உள்ளத்தே தன் திருவடிகளைப் பதித்தவனாய் , மும்மதில்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கியவனாய் , அன்பின்றி வழிபடுபவர்களுக்குத் தானும் அருள்புரிவான் போன்று காட்டி வஞ்சிப்பவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே .

குறிப்புரை :

முறிப்பு ஆன - தொடர்பை அறுப்பனவாகிய சொற்கள் ; ` கடுஞ்சொற்கள் ` என்றபடி . தான் , அசைநிலை ; உம்மை , சிறப்பு . முதுகு இற - முதுகு நெரியப்பெற்றமையால் . எடுத்து - உரத்து . பறிப்பான் - அவன் , பகைவரது உயிரை வாங்குதற் பொருட்டு . அரி வாள் - பகைவரது உறுப்புக்களை அறுக்கின்ற வாள் ; ` சிற்றரிவாள் ` என்றது , ` அஃது ஒன்றுதானே பல பெருவீரரை வெல்லும் ஆற்ற லுடைத்து ` என்பது தோற்றுவித்தற்பொருட்டு . ` நீட்டினான் ` என்றது , பான்மைவழக்கால் , ` ஈந்தான் ` என்னும் பொருளைத் தந்தது . பொய்யர்கள் , அன்பின்றி வழிபடுவோர் ; பொய்செய்து - அருள் புரிவான் போன்று அதனைக் கடைபோகச் செய்யாது . கிறிப்பான் - வஞ்சிப்பான் ; கிறி - வஞ்சனையாதல் , ` கேட்டாயோ தோழி கிறி செய்த வாறொருவன் ` ( தி .8 திருவா . திருவம் . 6) என்பதனான் அறிக .

பண் :

பாடல் எண் : 1

கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்
கருதுவார்க் காற்ற எளியான் தன்னைக்
குருமணியைக் கோளரவொன் றாட்டு வானைக்
கொல்வேங்கை யதளானைக் கோவ ணன்னை
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

கண்ணின் கருமணியைப் போன்று அருமையானவனாய், பொற்குன்று ஒப்பவனாய், தியானிக்கும் அடியவர்களுக்கு மிகவும் எளியவனாய், நல்ல நிறமுடைய மாணிக்கமாய், கொடிய பாம்பு ஒன்றினை ஆட்டுபவனாய், வேங்கைத்தோலை உடுத்தவனாய், கோவணம் அணிந்தவனாய், சிந்தாமணியாய், தன்னைச் சரணம் புகுந்தவர்களுக்கு அமுதம் போன்று இனியனாய், பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், அடியேன் சரணடைந்த வீடுபேறாகிய செல்வத்தை நல்கும் மணியாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினையை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப்போனேனே.

குறிப்புரை :

கருமணி, கண்ணில் உள்ளது. கனகம் - பொன். ``கனகத்தின்`` என்பதில் `இன்` அல்வழிக்கண் வந்த சாரியை. ``கருதுவார்க்கு ஆற்ற எளியான்`` என்பது மேலே (ப.23. பா.1) வந்தது. குருமணி - நிறம் வாய்ந்த மணி. ``கோவணவன் தன்னை`` என்பது பாடம் அன்று. அருமணி - கிடைத்தற்கு அரிய மணி. திருமணி - அழகிய மணி. ``கருமணி`` முதலியன உவமையாகு பெயர்கள். `அறியாதிருந்தமைக்குக் காரணம் தீவினை` என்பது உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. அறிதலினின்றும் பிரித்தலின், ``அறியாதே`` என்னும் ஏகாரம் பிரிநிலை. திகைத்தல் - மயங்குதல். `திகைத்தவாறு இரங்கத் தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்
காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப்
பால்மதியஞ் சூடியோர் பண்பன் தன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் தன்னைப்
பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

நீலகண்டனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய், கட்டங்கப்படையை ஏந்தியவனாய், நில உலகு விண் உலகு பாதாள உலகு இவற்றிற்கு ஒளி வழங்குபவனாய், வெள்ளிய பிறையைச் சூடியவனாய், நற்பண்புக்கு நிலைக்களனாய், தனக்கு நிகரில்லாத ஞான ஒளியை உடையவனாய், பார்வதி பாகனாய், தன்னை விரும்பும் அடியவர்களைத் தானும் விரும்பி, அவர்கள் வினைகளைப் போக்கும் சிறப்பான புகழ் ஒளியை உடையவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

கார்ஒளிய - கரிதாகிய ஒளியினை உடைய. ``கபாலி`` என்புழியும் இரண்டனுருபு விரிக்க. பாரின்கண் உள்ள ஒளி, ஞாயிறு திங்கள் விண்மீன்கள். பாதலத்தில் உள்ளது இருளாகலின், ``பாதாளனை`` என்பதற்கு, `அதன்கண் உள்ள இருளானவனை` என உரைக்க; `ஒளியும் இருளும் அவனே` என்றதற்கு இவ்வாறு ஓதியருளினார். ``பாதாளத் தானை`` என்பது பாடம் அன்று. `சூடிய` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``ஓர் பண்பு`` என்றது, சார்ந்தாரைக் காத்தலை. பேரொளி - எல்லா ஒளிகட்கும் முதலாய் உள்ள ஒளி. பேணுவார்- விரும்பிப் போற்றுவார். பேணி - குறிக் கொண்டு. சீர்ஒளி - (வினை தீர்க்கப்பெற்றார் புகழும்) புகழ்களை உடைய ஒளி; வினை, இருளோடொப்பது ஆகலின், அதனை நீக்குபவனை, ``ஒளி`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 3

எத்திசையும் வானவர்கள் தொழநின் றானை
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை
முளைத்தெழுந்த செழும்பவளக் கொழுந்தொப் பானைச்
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

எல்லாத் திசைகளிலும் தேவர்களால் தொழப்படுபவனாய், இடப வாகனனாய், அடியேன் என் தலைவன் என்று பக்தி யோடு பணியத் தன்னைப் பல நாளும் பாமாலை பாடப் பழகுவித்தவனாய், முத்து, மணி, மாணிக்கம், முளைத்தெழுந்த செம்பவளக் கொத்து என்பன போலக் கண்ணுக்கு இனியவனாய், எல்லாம் செய்ய வல்லவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

`வானவர்கள் எத்திசைக்கண்ணும் தொழ ஆங்கு நின்றானை` என்க; தேவர்கள் ஆங்காங்குத் தத்தமக்குரிய இடங்களில் நின்று தம் தம் தொழிலைச் செய்துவருதலின், அவர்கள் ஆங்காங்கு அத்தொழிலை இனிது நடாத்தி வாழ்தற்பொருட்டுத் தொழுவாராகலின், அவர்கட்கு ஆங்காங்கு நின்று அருளல் வேண்டுவதாயிற்று; `வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் - தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி`` (தி.8 திருவா. திருச்சதகம் - 16) என்று அருளியது காண்க. `பணிந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ``புகழ்புரிந்தில்`` (குறள் - 59) என்பதிற்போல. `பணிந்து பாட` என்று இயைத் துரைப்பினுமாம். பன்னாள் பாமாலை பாட அருளினமையை நினைந்து உருகி அருளிச்செய்தார். பவளம், `கொடி` எனப்படுதலின், ``முளைத்தெழுந்த`` என்று அருளினார். சித்தன் - எல்லாம் செய்ய வல்லவன்.

பண் :

பாடல் எண் : 4

ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை
உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்
கான்திரிந்து காண்டீப மேந்தி னானைக்
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான்தெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு
தன்னுடைய திருவடியென் தலைமேல் வைத்த
தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

உடம்பில் கருவாகி நின்ற உயிருக்குள் ஒளி வடிவாய் உள்ளவனாய், உத்தமனாய், அடியார் மனத்தில் உறைபவனாய், காட்டில் வேடனாய்த் திரிந்து அருச்சுனன் பொருட்டுக் காண்டீபம் என்ற வில்லினை ஏந்தியவனாய், கார்மேகம் போன்ற நீலகண்டனாய், கனலாகவும், காற்றாகவும் உள்ளானாய், தானே ஆராய்ந்து அடியேனைத் தன் அடிமையாகக் கொண்டு தன்னுடைய திருவடிகளை என் தலைமேல் வைத்த கரும்பு போன்ற இனியனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

ஊன் - உடம்பு. அதனுள் நின்ற கரு, உயிர்; அதனுள் நின்ற சோதி இறைவன் என்க. கான் - காடு. காண்டீபம் - வில். `காண்டீபம் ஏந்திக் கான் திரிந்தான்` என்க; இது செய்தது அருச்சுனன் பொருட்டு. தெரிந்து - உரிய பொழுதைத் தெரிந்து. அங்கு - அப்பொழுது; `அங்கே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. அருள் பெறும் நிலையை உயிர்கள் அடையுமாயின் இறைவன் சிறிதும் தாழ்த்தல் இன்றி அப்பொழுதே அருளுவனாகலின், ``அங்கு ஆளாக் கொண்டு, தன்னுடைய திருவடி என் தலைமேல் வைத்த`` என்று அருளினார். `தீங்கரும்பு` இன எதுகை. `தீன்கரும்பை` எனப் பாடம் ஓதுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 5

தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்
தாமரையான் நான்முகனுந் தானே யாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சம்மாய்
மேலுலகுக் கப்பாலா யிப்பா லானை
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்
கங்கங்கே அறுசமய மாகி நின்ற
திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்து, தாமரையில் உறையும் பிரமனும் தானேயாகி, ஐம்பூதங்களும், மேலுலகும், அதற்கு அப்பாலும் இப்பாலுமாய்ப் பரந்து, சங்கு மணியையும், முத்தையும் அணிந்து, அடியவர்களுக்கு அவர்களுடைய பக்குவ நிலைக்கு ஏற்ப ஆறு வைதிக சமயங்களாகிய வழியானவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

`தாமரையானாகிய நான்முகன்` என்க. உம்மை, ஏனை இருவரையுங்கொள்ளநிற்றலின் எச்சம். மேலுலகுக்கு அப்பாலாய் இப்பாலுமாம் நிலையை அருளுவதே திருவுள்ளமாகலின், தக்கன் வேள்வி தகர்த்தது முதலியவற்றை எச்சமாக்கி அருளினார். அக்கு - எலும்பு. `அக்கினையும் முத்தினையும் ஒப்ப அணிந்து` என்றது, வேண்டுதல் வேண்டாமை இன்மையைப் புலப்படுத்தி, அறுசமயத்தார்க்கு அருளும் அருள்வேறுபாட்டினால், அவன் கோட்டம் இலனாதலைத் தெரிவித்தற்பொருட்டு. ``அறுசமயங்கள்`` என்றது உட் சமயங்கள்; அவை (ப.50. பா.7 குறிப்புரை) குறிக்கப்பட்டன. சமயங்கள் அவரவரது அறிவு நிலைக்கு ஏற்ப அமைந்தனவாகலின், அவற்றால் அடையும் பயனும் வேறுபடுவவாயின; எனினும், `இறைவன் உண்மை கொள்வார் அனைவரும் தொண்டரே` என்பது, ``தொண்டர்க்கு`` என்றதனால் பெறப்பட்டது. சேக்கிழார் நாயனாரும், திருஞானசம்பந்த சுவாமிகளது திருமணத்தில், ``ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும்`` (தி.12 திருஞான. புரா. 1252) வீடுபெற்றமை தெளிவித்தருளினார். திக்கு - கதி; அறுசமயத்தவர்க்கும் அவனே கதியாகலின், ``அறுசமயம் ஆகி நின்ற திக்கு`` என்று அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 6

புகழொளியைப் புரமெரித்த புனிதன் தன்னைப்
பொன்பொதிந்த மேனியனைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியு மானான் தன்னை
வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியுங் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக்
கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

புகழாகிய ஒளியை உடையவனாய், திரிபுரத்தை எரித்த தூயோனாய், பொன்னிறம் அமைந்த திருமேனியனாய், பழமையானவனாய், விண்ணின் பண்பாகிய ஒளியும் திருவிழாக்களில் கேட்கப்படும் ஒலியும் ஆகியவனாய், வெண்காட்டில் உறையும் விகிர்தனாய், கால்களில் அணிந்த கழல்களின் ஒலியும் கைவளைகளின் ஒலியும் சிறக்க வீடுகள் தோறும் பிச்சைக்கு என்று சஞ்சரிக்கும் மேம்பட்ட ஒளியை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

புகழ் ஒளி - யாவரும் புகழும் ஒளி. பொன் பொதிந்த - பொன்னை நிறைத்து வைத்தது போலும். புராணன் - பழையோன். விண் ஒலி - விண்ணினது பண்பாகிய ஒலி; அஃது எடுத்தோதிய விழவொலி ஒழித்து ஒழிந்த எல்லாவகை ஒலிகளையும் குறித்து நின்றது. ``கைவளை`` என்றது, கங்கணத்தை. பிட்சாடன வடிவத்தில் அழகிய அணிகளும் கொள்ளப்பட்டன என்க. கடைதோறும் - வாயில்கள் தோறும். திகழ்ஒளி - தானே விளங்கும் ஒளி.

பண் :

பாடல் எண் : 7

போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்
புலியதளே உடையாகத் திரிவான் தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும்
காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் தன்னை
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்
வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

யானையை உரித்த தோலைப் போர்த்துத் திருமேனியின் ஒளி சிறக்குமாறு புலித்தோலை உடுத்துத் திரிவானாய், பொறிவாயில் ஐந்தவித்தானாய், முப்புரங்களையும் வெகுண்டவனாய், காலனைத் திருவடியால் உதைத்தவனாய், மேம்பட்ட கூத்தினை நிகழ்த்துபவனாய், பத்தர்களாய் வணங்கும் அடியார்களுடைய வலிய வினைகளும், அவற்றால் நிகழும் நோய்களும், நீங்குமாறு மருந்தாகி அவற்றைப் போக்கியவனாய், திருமுது குன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

`ஆனையின் உரிதோல் பொங்கப் பொங்கப் போர்த்துத் திரிவான்` எனக் கூட்டுக. ``ஆனையின்னுரிதோல்`` என்பதில் னகரம், விரித்தல். பொங்குவது, திருமேனியின் ஒளி; `ஆனையை உரித்த ஞான்று கொண்ட திருமேனியின் பேரொளியைக் காணமாட்டாது தேவர்கள் கண்ணொளி இழக்க, அத்துன்பம் நீங்குதற் பொருட்டுச் சிவ பிரான் அவ்யானையின் தோலைத் திருமேனிமறையப் போர்த்துக் கொண்டான்` என்பதே புராணம் ஆதல் உணர்க. காத்தான் - அடக்கினான். மாத்து ஆடி - மகத்தாக (பெரிதாக) ஆடல் புரிந்து. ``ஆடி`` என்பதனை, ``ஆகி`` என்பதனோடாயினும், ``வணங்கும்`` என்பதனோடாயினும் முடிக்க. மணி மந்திரங்களையும் கொள்ள நிற்றலின், ``மருந்தும்`` என்னும் உம்மை, எச்சம்; சிறப்புமாம்; ஏததேச உருவகமாகலின், `வல்வினையாகிய நோய்` என உரைக்க. `வினை வேரறும் வண்ணம்` எனச் சினைவினை முதலொடு சார்த்தி அருளப்பட்டது; `வினையது வேர்` என்றும், `வேரோடறும் வண்ணம்` என்றும் உரைப்பினும் அமையும்.

பண் :

பாடல் எண் : 8

துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச்
சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்
பெண்ணினோ டாணுருவாய் நின்றான் தன்னை
மறவாதே தன்திறமே வாழ்த்துந் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

இயல்பாகவே உடம்பு இன்றி இருப்பவனாய், சோதி வடிவினனாய், தான் பிறப்பெடுக்காமல் பிறவி எடுக்கும் உயிர்களுக்கெல்லாம் தானே நலன் செய்பவனாய், பெண்ணுருவும், ஆண் உருவுமாக இருப்பவனாய், தன்னை மறவாமல், தன் பண்பு செயல்களையே வாழ்த்தும் அடியவர்களின் உள்ளத்தே எப்பொழுதும் நிலைபெற்றிருக்கும் பண்பினை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

யாக்கையைத் துறவாதே துறந்தமையாவது, இயல்பாகவே உடம்பின்றி இருத்தல். ``தானே ஆகி`` என்னுமிடத்து, `துணை` என்பது வருவிக்க. பிறவாதே எவ்வுயிர்க்கும் தானே துணையாதலாவது, தோன்றாது நின்றும் ``இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்`` (தி.7. ப.29. பா.1.) என வியக்குமாறு, அருளாலே வேண்டும் வடிவங்கொண்டு, இம்மெனத் தோன்றியும் இம்மென மறைந்தும் உயிர்கட்கு வேண்டும் நலங்களைப் புரிந்தருளுதல்; இதனால், கருவாய்ப்பட்டுப் பிறந்து, உணவினால் வளர்ந்து வாழ்ந்து மாயும் உடம்புகளைத் தம்வயத்தாலன்றி வினைவயத்தாற் பெற்றுப் பிறந்தே நிற்பார் உயிர்கட்கு மெய்த்துணைவர் ஆகாமை பெறப்பட்டது. அனவரதம் - எப்பொழுதும். ``திறல்`` என்றது, அறிந்தாங்கறிதலை.

பண் :

பாடல் எண் : 9

பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்
புவலோக மெல்லா முழிதந் தானை
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்
கற்றூணைக் காளத்தி மலையான் தன்னைக்
கருதாதார் புரமூன்றும் எரிய அம்பால்
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

பொன்மயமான தூண்போல்பவனாய், புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டினை ஏந்தி மேல் உலகம் எல்லாம் திரிபவனாய், பிறையை முடிமாலையாக அணிந்தவனாய், முழுமுதற் கடவுளாய், எல்லா உலகங்களிலும் விரவி நின்று, தனக்கு இறுதி யில்லாது கற்றூண்போல அவற்றைத் தாங்குபவனாய்க் காளத்தி மலையில் உறைபவனாய், பகைவருடைய மும்மதில்களையும் எரியுமாறு வில்லால் அழித்தவனாய், திருமுதுகுன்றம் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

``பொற்றூண்`` என்றது, உயர்வுபற்றி அருளிய உவமை; ``மாசொன்றில்லாப் பொற்றூண்காண்`` (ப.8. பா.1) என மற்றோர் இடத்தினும் அருளிச்செய்தார். ``புவலோகம்`` என்றது, அதனை முதலாக உடைய மேலுலகங்களைக் குறித்த ஆகுபெயர். உழிதந்தது, பிச்சை ஏற்றற் பொருட்டு. `மூவுலகின் கண்ணும்` என உருபு விரிக்க. ``கற்றூண்`` என்றது உருவகம்; `எல்லா உலகங்களிலும் விரவி நின்று அவற்றை நிலைபெறுவிக்கின்றவன்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 10

இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி
யெழுநரம்பி னிசைபாட இனிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப்
புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து
வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

தன்னை இகழ்ந்து, கயிலையை அசைத்த இராவணனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு விரலை ஊன்றி, அவன் ஏழுநரம்புகளைக் கொண்டு இசைபாட, அதனை இனிது கேட்டு, அவன் இசை ஞானத்தைப் புகழ்ந்தவனாய், பூந்துருத்தியில் உறையும் புண்ணியனாய், தேவர்களுக்குச் செல்வமாய், பார்வதி பாகனாய் மகிழ்ந்தவனாய், பிறையைச் சடையில் சூடித் திருமாலைத் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

இகழ்ந்தான் - அவமதித்தவன்; மதியாது கயிலையைப் பெயர்த்தவன்; இராவணன். `அவன் பாட` என எடுத்துக்கொண்டு உரைக்க. புகழ்ந்தான் - மகிழ்ந்தான். பூந்துருத்தி, சோழநாட்டுத் தலம்.
நிதி - நிதிபோன்றவன்; அம் தன் சாரியைகள். மகிழ்ந்தான் - இன்புற்றான்; `பாகம் வைத்து மகிழ்ந்தான்` என்க. திருமாலை ஒரு பாகத்தில் திகழக் கொண்டமை, மேலே காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆராத இன்னமுதை அம்மான் தன்னை
அயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச்
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

தெவிட்டாத இனிய அமுதமாய்த் தலைவனாய் , பிரமனும் திருமாலும் அறியாத முதலவனாய் , கொன்றை மாலை அணிந்த சடையனாய் , நன்மை தருபவனாய் , ஒப்பற்றவனாய் , நீராய் , தீயாய் , காற்றாய் , நீண்ட வானமாய் , ஆழ்ந்த கடல்கள் ஏழும் சூழ்ந்த நிலனாய்ப் பரந்து இருக்கும் பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

ஆராத - நிறையாத ; தெவிட்டாத . ` நீரான் ` முதலியவற்றிற்கு , ` நீராய் உள்ளவன் என்றாற்போல உரைக்க , பயிலுதல் , ஈண்டு . ` நூலைப் பயிலுதல் ` என்பது போலப் பலகாலும் சிந்தித்தல் முதலியன செய்து வழிபடுதல் . ` பாழ் ` என்றது , ஆகுபெயராய் பயனில்லாத நெறியை ( சமண சமயத்தை ) க் குறித்தது ; எப்பொருட்கும் முதல்வனாகிய இறைவனை உளன் என்று ஒருதலையாகத் துணியாது , ` உளனோ , இலனோ ` என ஐயுற்று நிற்றலின் சமண் சமயம் பாழ் நெறி ( பயனில்லாத நெறி ) ஆயிற்று . ` அஃது ஐயத்தை உடைய நெறியே ` என்பதனை , ` அத்தி நாத்தி ` ( உண்டு இல்லை ) என்னும் அதன் தத்துவக் கொள்கையே இனிது விளக்கும் . அதுபற்றியே , ` ஐயுறும் அமணரும் ` ( தி .1. ப .128. அடி . 36. ) என்று அருளிச் செய்தார் , ஆளுடைய பிள்ளையார் . ஐயத்தையுடையார் வீடுபேறு எய்தாமை , ` ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் - வானம் நணிய துடைத்து ` ( குறள் . 353.) என்னும் பொதுமறையான் இனிது விளங்கிக் கிடந்தது ; ஆகவே , சமண் சமயத்தை சுவாமிகள் . ` பாழ்நெறி ` என்று கூறி அதன் உண்மை யுணர்த்தி யருளினார் என்க . ` பாழின்கண்ணே ` என உருபு விரிக்க . ஏகாரம் பயனுடைய நன்னெறியினின்று பிரித்தலின் , பிரிநிலை . ` பாழே ` என்பதற்கு ( இவ்வாறன்றி , ` பாழாகவே பயனின்மை உண்டாகும்படியே )` என ஆக்கம் வருவித்து உரைப்பினும் ஆம் . ` உழன்றவாறு இரங்கத்தக்கது ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போல் கண்டத் தானைத்
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

காளை வாகனனாய் , தேவர்களால் தியானிக்கப் படுபவனாய் , வேதம் ஓதுபவனாய் , வெண்பிறை சூடிய சடையனாய் , நீலகண்டனாய் , மெய்ப் பொருளாய் , ஒப்பற்றவனாய் , பகைவருடைய மும்மதிலும் தீயில் மூழ்க அழிக்கும் அம்பினைக் கோத்து எய்தவனாய் , கூரிய சூலப் படையை உடையவனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

எண்ணத்தான் - தியானத்தின்கண் உள்ளவன் . சாமம் - கருமை . போல் , அசைநிலை . அயில் - கூர்மை .

பண் :

பாடல் எண் : 3

பூதியனைப் பொன்வரையே போல்வான் தன்னைப்
புரிசடைமேல் புனல்கரந்த புனிதன் தன்னை
வேதியனை வெண்காடு மேயான் தன்னை
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் தன்னை
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின் முக்கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

நீறு அணிந்தவனாய் , பொன்மலை போல்வானாய் , முறுக்கேறிய சடையின் கங்கையை மறைத்த தூயோனாய் , வேதியனாய் , வெண்காட்டில் உறைவானாய் , வெண்மையான காளை வாகனனாய் , தேவர்களுக்கு எல்லாம் முற்பட்டவனாய் , திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டவனாய் , தலைவனாய் , மை தீட்டிய கண்களை உடைய பார்வதிபாகனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

பூதியன் - வீபூதியை ( திருவெண்ணீற்றை ) அணிந்தவன் ; ` ஐசுவரியம் உடையவன் ` என்றலுமாம் . விண்ணோர்க்கு எல்லாம் ஆதியன் - எல்லாத் தேவர்கட்கும் முதலில் உள்ளவன் . ` முதற் கடவுள் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 4

போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும்
பொடியாக எய்தானைப் புனிதன் தன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்
சிறிதளவில் அவனுடலம் பொடியா வாங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

யானையின் தோலைப் போர்த்தவனாய் , முப்புரங்களும் சாம்பலாகுமாறு அம்பு எய்தவனாய் , தூயனாய் , கச்சணிந்த முலையை உடைய பார்வதிபாகனாய் , அலைகள் கரையை அடைந்து மீண்டுவரும் கடலுள் தோன்றிய விடத்தை உண்டு , தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய் , மன்மதன் யமனுலகத்தை அடையுமாறு சிறிது நேரத்தில் அவன் உடலம் சாம்பலாகுமாறு தீத் தோன்ற விழித்தவனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

` வார்த் தாங்கு ` என்பதில் தகரம் விரித்தல் . வார் - கச்சு . வனம் ( வன்னம் ) - அழகு . ` தென்றிசை` என்பது , காலன் ஊரைக் குறிக்கும் குறிப்பு மொழி . ` திசைக்கே ` , ` திசைக்கண்ணே ` என வேற்றுமை மயக்கம் . பொடியா - சாம்பலாகும்படி . ஆங்கே - அப்பொழுதே ; கண்ணுதற் கடவுளிடத்துக் காமன் , மலரம்புகளை ஏவித் தன் செயலைச் செய்தமை உலகம் அறிந்ததாகலின் , வாளா , ` ஆங்கே ` என்று அருளினார் ; எனவே , ` அவன் அம்பெய்த அந் நொடியிலே ` என்பது பொருளாயிற்று . பார்த்தான் - ( நெற்றிக் கண்ணால் நோக்கினான் ).

பண் :

பாடல் எண் : 5

அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்
கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப் பாரில்லா தானைத்
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

தன்னைச் சரணாக அடைந்த அடியவர்பால் பாவங்கள் , துன்பங்கள் , நோய்கள் , பழைய தீவினைகள் , வறுமை என்பன அணுகாதவாறு அவற்றைப் போக்கியவனாய் , கார்முகில் போன்ற நீலகண்டனாய் , மிக்க வெகுளியை உடைய சலந்தரனுடைய உடலைச் சக்கரத்தாலே அழித்தவனாய் , ஒப்பற்றவனாய் , மெய்ப்பொருளாய் , உத்தமனாய் , தன்னைத் தியானிக்கும் அடியவர் நெஞ்சில் ஊன்றி யிருப்பவனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

அடைந்தார் - தன்னை அடைக்கலமாக அடைந்தவர் . அல்லல் நோய்கள் - துன்பத்தைத் தரும் பிணிகள் . ` பாவங்கள் ` என்றது பிராரத்தத்தையும் , ` அருவினைகள் ` என்றது சஞ்சிதத்தையும் நோக்கி என்க . நல்குரவு - வறுமை . ` அவர்பாற் செல்லாவண்ணம் ` என உரைக்க . நேமி சக்கரம் . ` நேமியால் தடிந்தான் ` என்றதனால் , ` கடுஞ்சினத்தோன் ` என்றது , ` சலந்தரனை ` என்பது தெளிவு . ` சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடி ` என்றருளியதும் ( தி .8 திருவா . திருச்சாழல் . 18), கந்தபுராணம் ததீசி யுத்தரப் படலத்துள் சலந்தராசுரனைச் சிவபிரான் அழித்த வரலாற்றை விரித்துரைத்ததும் காண்க . படிந்தான் - ஊன்றியிருந்தான் .

பண் :

பாடல் எண் : 6

கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளங்
கனலாடு திருமேனிக் கமலத் தோன்தன்
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

சிவந்த சடையின் மீது கங்கை வெள்ளத்தை மறைத்தவனாய் , தீப்போன்ற சிவந்த தன் திருமேனிக்கண் பிரமனுடைய மண்டையோட்டினைச் சுமக்கும் கையை உடையவனாய் , தேவர்களுக்குத் தலைமைத் தேவனாய் , விளங்குகின்ற ஞானப்பிரகாசனாய் , தன் திருவடிகளைத் தியானிப்பவர் வருந்தாத வகையில் அவரைக் காப்பவனாய் , ஐம்பூதங்களாகி எங்கும் பரவியுள்ளவனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத் தக்கது .

குறிப்புரை :

` கங்கை வெள்ளம் செஞ்சடைமேல் கரந்தான் ` என்க . ` கனலாடு ` என்றதில் ஆடு உவம உருபு . ` திருமேனிக்கண் கையானை ` என இயையும் ; ` உயர்ந்த திருவுருவில் இழிந்த தலையையும் தாங்கியுள்ளான் ` என அவனது அருள்விளையாட்டை வியந்து அருளிச் செய்தவாறு . இவ்வாறன்றி , ` கனலாடு திருமேனி ` என்றதனை , கமலத்தோனுக்கு அடையாக்குதல் பொருந்தாமை அறிக . வருந்தாமை - துன்புறாதபடி .

பண் :

பாடல் எண் : 7

நதியாருஞ் சடையானை நல்லூ ரானை
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை
மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை
நிதியாளன் தோழனை நீடூ ரானை
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

கங்கை தங்கிய சடையினனாய் , குபேரனுக்குத் தோழனாய் , நல்லூர் , நள்ளாறு , நல்லம் , தேன் ஒழுகும் பொழில்களால் சூழப்பட்ட வாய்மூர் , மறைக்காடு , ஆக்கூர் , நீடூர் , நெய்த்தானம் , ஆரூர் என்னும் திருத்தலங்களில் உறைபவன் ஆகிய பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

நதி ஆரும் - கங்கை பொருந்திய . ஆரூர்போல , ` நல்லூர் , நள்ளாறு , நல்லம் , வாய்மூர் , மறைக்காடு ( வேதாரணியம் ), ஆக்கூர் , நீடூர் , நெய்த்தானம் ` என்பனவும் சோழநாட்டுத் தலங்கள் . மது வாரும் - தேன் ஒழுகுகின்ற , நிதியாளன் - குபேரன் .

பண் :

பாடல் எண் : 8

நற்றவனை நான்மறைக ளாயி னானை
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றவனைச் செஞ்சடைமேல் திங்கள் சூடுந்
திருவாரூர்த் திருமூலட் டானம் மேய
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் தன்னைக்
குறைந்தடைந்து தன்திறமே கொண்டார்க் கென்றும்
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

பெருந்தவத்தை உடையவனாய் , நான்கு வேத வடிவினனாய் , பெரியவனாய் , பகைவர் மதில்கள் மூன்றையும் அழித்தவனாய் , சிவந்த சடையின் மீது பிறையைச் சூடித் திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறையும் வெற்றியனாய் , கொடிய பாம்புகளைப் பூண்டவனாய் , தம் தேவையைக் கருதித் தன் தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்த அடியவர்களுக்கு என்றும் பற்றுக்கோடாக இருப்பவனாய் , உள்ள பள்ளியின் முக்கூட லில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

நற்றவன் - நல்ல தவக்கோலம் உடையவன் . கொற்றவன் - தலைவன் ; ` கொற்றம் ( வெற்றி ) உடையவன் ` என்றே உரைத்தலுமாம் . கூர் அரவம் - மிக்க பாம்புகள் . தன் திறமே கொண்டார் - தனது தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்தவர்கள் . பற்றவன் - துணையாய் இருப்பவன் .

பண் :

பாடல் எண் : 9

ஊனவனை உடலவனை உயிரா னானை
உலகேழு மானானை உம்பர் கோவை
வானவனை மதிசூடும் வளவி யானை
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக் கயிலாய மலையு ளானைக்
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

ஊனாய் , உடலாய் , உயிராய் , ஏழுலகமுமாய் , தேவர்கள் தலைவனாய் , பரமபதமாகிய வீட்டுலகில் இருப்பவனாய் , பிறை சூடியாய் , வளவி என்ற தலத்தில் உறைபவனாய் , பார்வதி காணப் பன்றியின்பின் போன வேடனாய் , கயிலாய மலையில் உள்ளவனாய் , ஒன்றுபட்டு இளகி உருகும் அடியவருடைய நெஞ்சில் , அப்பொழுது கறந்த பால் போல் இனியவனாய் , பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

ஊனவன் - தசை முதலியனவாய் உள்ளவன் . உடலவன் - அத்தசை முதலியவற்றால் இயன்ற உடம்பாய் உள்ளவன் . உயிர் ஆனான் - அவ்வுடலின்கண் உள்ள உயிராய் இருப்பவன் . உலகு ஏழும் ஆனான் - அவ்வுயிர்கள் மாறிச் செல்லும் பல உலகங்களாய் இருப்பவன் . ` வானவன் ` என்றது , பிறவிப் பெயர் ; ` தேவராய் இருப்பவன் ` என்பது பொருள் ; இதனை , ` உம்பர் கோ ` என்றதற்கு முன்னர் வைத்து உரைக்க . உம்பர் கோ - தேவர்கட்குத் தலைவனாய் இருப்பவன் . வளவியான் - ` வளவி ` என்னும் தலத்தில் இருப்பவன் ; இது வைப்புத் தலம் . ` மலைமகள் முன் ` என்றது . ` அவள் காண ` என்றவாறு : ` காண்டலால் அவன் வருத்தத்திற்கு அவள் வருந்துமாறு ` என்பது திருக்குறிப்பு . வராகம் - பன்றி ; இஃது அருச்சுனனை அழிக்க வந்தது . கானவன் - வேட்டுவன் . கலந்து - ஒன்றுபட்டு . உருகி நைதல் , ஒருபொருட்பன்மொழி ; ` உருகி நினைவார் ` என்பதும் பாடம் . பானவன் - பருகப்படுபவனாய் உள்ளவன் ; இது , ` பானம் ` என்பது அடியாகப் பிறந்த பெயர் . ` பால் நவன் ` எனப் பிரித்து , ` நவமாய ( புதிய - கறந்த ) பால்போல்பவன் ` என்றுரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித்
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்
குரைகழலாற் கூற்றுவனை மாள அன்று
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

தன்னைத் தடுத்த தேர்ப்பாகனை வெகுண்டு , தன் தோள்களைக் கொட்டிக் கயிலை மலையைப் பத்துத் தலைகளாலும் இருபது தோள்களாலும் பெயர்த்த தசக்கிரிவனைத் தன் கால் விரலால் நசுங்குமாறு அழுத்தி , அவன் நரம்பு ஒலியோடு இசைத்த பாடலை மகிழ்வோடு கேட்டு , இராவணன் என்ற பெயரையும் , கூரிய வாளையும் கொடுத்தவனாய் , கழல் ஒலிக்கும் திருவடியால் கூற்றுவன் மாளுமாறு ஒரு காலத்தில் உதைத்தவனாய் , உள்ள பள்ளியில் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

இராவணனது செயலைத் தடுத்து அவனுக்கு அறிவுரை கூறினவன் அவன் அமைச்சன்; அவனை இராவணன் முனிந்தான் என்க. `தோள்` என்புழியும் உருபும் உம்மையும் விரிக்க. `மாள ஊன்றி` என்றது, ஊன்றியவாறே இருப்பின் அவன் மாளுதல் ஒருதலையாதல் பற்றி. `பேரோடும்` என்னும் உம்மை, எச்சம். `வாள்தன்னைக் கொடுத்தானை` என்க. படுத்தான் - கொன்றான்.

பண் :

பாடல் எண் : 1

தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லில் திகழ்சீரார் காளத்தியுங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

தில்லைச்சிற்றம்பலம் , செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கொல்லி அறைப்பள்ளி , கோவல் வீரட்டம் , கோகரணம் , கோடிகா , முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி , முழையூர் , பழையாறை , சத்தி முற்றம் , குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

சிற்றம்பலம் , தில்லைக் கோயிலில் கூத்தப் பெருமான் நடனம் புரியும் இடம் ; இது மிகச் சிறப்புடைத்தாதல் பற்றி இப்பெயர் அத் திருக்கோயில் முழுவதையும் குறித்தல் உண்டு . சிறுமை + அம்பலம் = சிற்றம்பலம் . சிறுமை - நுண்மை ; அஃதாவது இறைவனது அருளாற்றல் . அம்பலம் - வெளி . எனவே , ` சிற்றம்பலம் ` என்பது , ` அருள்வெளி ` என்பதாம் . திருமுறைகளைத் தொடங்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` எனத் தொடங்கி , முடிக்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` என முடித்தற்கும் இதுவே காரணம் ; அஃதாவது , அவை அருள் வெளியினின்றும் தோன்றிய அருள் நாத ஒலிகளாய் இருத்தலே காரணம் என்க . தேவாரத் திருப்பதிகங்கள் தில்லையில் சேமிக்கப் பட்டதும் இதுபற்றியே என உணர்க ,. இறைவனது அருளாற்றல் அறிவே வடிவாய் இருத்தல்பற்றி , ` சிற்றம்பலம் ` என்பது , வடமொழியில் , ` சிதம்பரம் ` எனப்படும் . சித் - அறிவு ; அம்பரம் - ஆகாசம் ; வெளி . இதனை , ` சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம் ` ( தி .12 தில்லைவாழ்அந் . புரா . 2.) என விளக்கியருளினார் , சேக்கிழார் நாயனார் . பர வியோமம் - மேலான வெளி . இனி , உபநிடதங்களில் தகர வித்தை கூறும் இடங்களில் வரும் , ` தகராகாசம் ` என்பதில் , ` தகரம் ` என்பதற்கும் , ` சிறுமை ` என்பதே பொருள் . இறைவனுக்கு உண்மையில் இடமாவது அவனது அருள்வெளியே . அதனால் , உயிர்கள் பொருட்டு அவன் பற்பல திரு உருவங்களைத் தனது திருமேனியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களும் அவனது அருட்டிருமேனிகளை நினைக்கும் நெஞ்சகமும் , ` சிற்றம்பலம் ` எனக் கூறுதற்கு உரியனவாம் . ஆயினும் அவற்றுள்ளும் , இறைவன் உலகில் உருவத் திருமேனி கொண்டு உலகம் முழுவதையும் இயக்குவதாகிய ஐந்தொழில் ( பஞ்சகிருத்திய ) நடனத்தை இயற்றி நிற்கும் இடமும் , அறிவுடைப் பொருளாகிய உயிரோடு ஒற்றுமைப்பட்டு அதன் அறிவை விளக்கி நின்று உதவும் நெஞ்சகமுமே சிறப்பாக , ` சிற்றம்பலம் ` எனப்படுகின்றன . எனினும் , இறைவன் உலகில் நடனக் கோலங் கொண்டு விளங்கும் இடங்களில் தில்லையே முதன்மையுடைத்து என்பது வரலாற்று முறையான் வருதல் பற்றி , அஃது ஒன்றே , ` சிற்றம்பலம் ` என்னும் பெயருடைத்தாயிற்று ; இது , காரண இடுகுறிப் பெயர் என்க . புறத்துத் தில்லைச் சிற்றம்பலம் , அகத்து நெஞ்சகமும் இறைவற்குச் சிறந்த இடமாம் என்பதனை , ` சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தையுள்ளும் - உறைவான் ` என்னும் தி .8 திருக்கோவையால் உணர்க (20). இவ்வாற்றால் , தில்லைச் சிற்றம்பலம் முதற்றிருக் கோயிலாதல் பெறப்படுதலின் , அதுவே சிறப்பாக , ` கோயில் ` எனப்படுகின்றது . இவ்வாற்றால் அதனையே முதற்கண் வைத்து அருளிச்செய்தார் . திருவாரூர் பழைமை பற்றித் தில்லை போலும் பெருமையுடைத்தாதல் பற்றி , திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் , தமது திருத்தலக்கோவையில் அதனை முதற்கண் வைத்து , தில்லையை அதன் பின்வைத்து , அவற்றிற்குப்பின் ஏனைய தலங்களை அருளிச்செய்தார் . திருவாரூரின் பழமை , ` ஒருவனாய் உலகேத்த ` என்னும் திருப்பதிகத்தால் நன்கு உணர்க . ` காழி ` என்பது தவிர்த்து , ஏனைய தலங்கட்கெல்லாம் , ` திரு ` என்பதனை முதலிற் கொள்க . காழியை , ` சீகாழி ` என்றல் மரபு . தில்லைச் சிற்றம்பலம் . செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கோடிகா , சத்திமுற்றம் இவை . சோழ நாட்டுத் தலங்கள் . தேவன்குடி - திருந்துதேவன்குடி . கோவல் - கோவலூர் ; கோவலூர்வீரட்டம் . நடுநாட்டுத் தலம் . கோகரணம் , துளுவநாட்டுத் தலம் . முல்லைப் புறவம் - முல்லைக் கொடியை உடைய காடு ; இது , முருகன் பூண்டிக்கு அடை . முருகன்பூண்டி , கொங்குநாட்டுத் தலம் . கல்லின் திகழ் - மலையினால் விளங்குகின்ற . காளத்தி , தொண்டைநாட்டுத் தலம் . கொல்லியறைப்பள்ளி , முழையூர் , பழையாறை இவை வைப்புத் தலங்கள் . ` முளையூர் ` என்பதும் பாடம் . ` குளிர் ` என்பது அடைமொழி . நிலவுலகின் பொருட்டு இறைவன் திருக்கயிலையில் புவன பதியாய் . அறக்கருணையும் மறக்கருணையும் புரிந்து வீற்றிருத்தலின் , மக்கள் யாவரும் அவனையே நினைத்தும் , வாழ்த்தியும் , வணங்கியும் உய்தல் வேண்டும் . அனைவர்க்கும் அது கூடாமை அறிந்து , அப் பெருமான் நிலமுழுதும் ஆங்காங்குத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருந்து அருள்புரிகின்றானாதலின் , இத் தலங்களில் எல்லாம் , ` கயிலாய நாதனையே காணலாமே ` என்று அருளிச் செய்தார் . ஏகாரங்கள் இரண்டனுள் முன்னையது பிரிநிலை ; பின்னையது தேற்றம் . இதனால் , ` சிவபிரானை , நிலவுலகத்தில் எவ்விடத்து எவ்வுருவில் எவ்வாறு கண்டு வழிபடினும் , அவ்விடத்தைத் திருக் கயிலையாகவும் , ஆங்கு விளங்கும் இறைவனைக் கயிலைத் தலைவனாகவும் கருதி வழிபடுதல் வேண்டும் ` என்பது பெறப்பட்டது . இது , சமய தீக்கைக்கண்ணே வலியுறுத்தப்படுகின்றது ; ஆயினும் , அதற்கு மேற்பட்ட தீக்கை முதலியவற்றை அடைந்தோர்க்கும் யாவர்க்கும் இதுவே நெறி என்பதே திருமுறைகளின் முடிபு . ` திருக்கயிலையை நேர்படக் கண்டு வழிபடும் வழிபாடே நிலவுலகில் சிவபிரானை நேர்படக் கண்டு வழிபடும் வழிபாடு ` என்பதனானே , நாயனார் , இவ்வுடல்மாளுதற்குமுன் எவ்வாறேனும் திருக்கயிலையைக் கண்டு வழிபடுதல் வேண்டும் என்னும் உறைப்புடன் எத்துணை இடையூறுகளாலும் மனம் பின்னிடையாது கயிலைநோக்கிச் செவ்வனஞ் சென்று கொண்டே இருந்தார் . ஆயினும் , அவர் வாயிலாக அருளிச்செய்ய வேண்டிய இன்றியமையாத அரும் பெருந் திருப்பதிகங்கள் அதுகாறும் அருளிச் செய்யப்படாதிருந்தமையின் , அவைகளை அருளுவித்தற் பொருட்டு அவரை இறைவன் இடைவழியினின்றும் மீள எளிதில் தமிழ்நாடு போதரச் செய்தான் என்க .

பண் :

பாடல் எண் : 2

ஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீ ரட்டா னம்முங்
கோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

ஆரூர் மூலட்டானம் , ஆனைக்கா , ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம் , ஆவூர் , பேரூர் , பிரமபுரம் , பேராவூர் , பெருந்துறை , காம்பீலி , பிடவூர் , எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம் , கோட்டூர் , குடமூக்கு , கோழம்பம் , மேகங்கள் தங்கும் கழுக்குன்றம் , கானப்பேரூர் ..... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

ஆரூர் மூலட்டானம் , ஆனைக்கா , ஆக்கூர்த் தான் தோன்றிமாடம் , ஆவூர் , பிரமபுரம் , குறுக்கை வீரட்டானம் , கோட்டூர் , குடமூக்கு , கோழம்பம் இவை சோழநாட்டுத் தலங்கள் . பிரமபுரம் - சீகாழி . குடமூக்கு - கும்பகோணம் . பேணும் கூரார் - வழிபடும் அன்பு மிக்கவர்களையுடைய . கழுக்குன்று , தொண்டைநாட்டுத் தலம் . கார் ஆர் - மேகம் படியும் . கானப்பேர் , பாண்டிநாட்டுத் தலம் . பேரூர் , பேராவூர் , பெருந்துறை , காம்பீலி , பிடவூர் இவை வைப்புத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 3

இடைமரு தீங்கோ யிராமேச் சரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக்களூர்
தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

இடைமருது , ஈங்கோய் , இராமேச்சரம் , இன்னம்பர் , ஏர்இடவை , ஏமப்பேறூர் , சடைமுடி , சாலைக்குடி , தக்களூர் , தலையாலங்காடு , தலைச்சங்காடு , கொடுமுடி , குற்றாலம் , கொள்ளம் பூதூர் , கோத்திட்டை , கோட்டாறு , கோட்டுக்காடு , கடைமுடி , கானூர் , கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

இடைமருது , ஈங்கோய் , இன்னம்பர் , தலையாலங் காடு , தலைச்சங்காடு , கொள்ளம் பூதூர் , கோட்டாறு , கடைமுடி , கானூர் , கடம்பந்துறை இவை சோழநாட்டுத் தலங்கள் . இராமேச்சரம் , குற்றாலம் இவை பாண்டி நாட்டுத் தலங்கள் . கொடுமுடி - பாண்டிக்கொடுமுடி ; இது கொங்குநாட்டுத் தலம் . ஏர் - அழகு . இடவை , ஏமப்பேறூர் , சடைமுடி , சாலைக்குடி , தக்களூர் , கோத்திட்டை , கோட்டுக்காடு இவை வைப்புத்தலங்கள் .

பண் :

பாடல் எண் : 4

எச்சி லிளமர் ஏம நல்லூர்
இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்
ஆவடு தண்டுறை யழுந்தூர் ஆறை
கைச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

எச்சில் இளமர் , ஏமநல்லூர் , இலம்பையங் கோட்டூர் , இறையான்சேரி , அச்சிறுபாக்கம் , அளப்பூர் , அம்பர் , ஆவடுதுறை , அழுந்தூர் , ஆறை , கைச்சினம் , கற்குடி , கச்சூர் , ஆலக் கோயில் , கரவீரம் , காட்டுப்பள்ளி , கச்சிப்பலதளி , ஏகம்பம் .... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

அம்பர் , ஆவடுதுறை , அழுந்தூர் , கைச்சினம் , கற்குடி , கரவீரம் , காட்டுப்பள்ளி இவை சோழநாட்டுத் தலங்கள் . ` அம்பர் ` என்றதனால் , ` அம்பர்ப் பெருந்திருக்கோயில் , அம்பர் மாகாளம் ` என்னும் இரண்டனையும் , ` காட்டுப்பள்ளி ` என்றதனால் , ` மேலைக் காட்டுப்பள்ளி , கீழைக் காட்டுப்பள்ளி ` என்னும் இரண்டனையுங் கொள்க . இலம்பையங்கோட்டூர் , அச்சிறுபாக்கம் , கச்சூர் ஆலக் கோயில் , ஏகம்பம் இவை தொண்டைநாட்டுத் தலங்கள் . ` கச்சி ` என்றதனை , ஏகம்பத்திற்குங் கூட்டுக . ` கச்சி ` என்பது தலத்தின் பெயரும் , ` ஏகம்பம் ` என்பது , கோயிலின் பெயருமாம் . ` ஏகம்பம் ` என்னும் பெயர்பற்றி மேலே ( ப .44. பா .5.) குறிப்பிடப்பட்டது . எச்சிலிளமர் , ஏம நல்லூர் , இறையான்சேரி , அளப்பூர் , ஆறை , கச்சிப் பல தளி இவை வைப்புத் தலங்கள் . தளி - கோயில் . கச்சித் தலத்தில் ஏகம்பமே யன்றி எண்ணிறந்த கோயில்கள் உளவாதலின் , அவை எல்லாவற்றையும் , ` கச்சிப் பலதளி ` என்று அருளிச்செய்தார் . ` எச்சி லிளமர் ` என்பதேயன்றி , ` எச்சிலிளவர் ` எனவும் பாடம் ஓதுப .

பண் :

பாடல் எண் : 5

கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவு
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரு மேம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி னுள்ளுங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

கொடுங்கோளூர் , அஞ்சைக்களம் , செங்குன்றூர் , கொங்கணம் , குன்றியூர் , குரக்குக்கா , நெடுங்களம் , நன்னிலம் , நெல்லிக்கா , நின்றியூர் , நீடூர் , நியமநல்லூர் , இடும்பாவனம் , எழுமூர் , ஏழூர் , தோழூர் , எறும்பியூர் , அழகிய ஏமகூடம் , கடம்பை இளங் கோயில் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

அஞ்சைக்களம் , மலைநாட்டுத் தலம் . குரக்குக்கா , நெடுங்களம் , நன்னிலம் , நெல்லிக்கா , நின்றியூர் நீடூர் , இடும்பாவனம் , எறும்பியூர் , கடம்பை , இளங்கோயில் இவை சோழநாட்டுத் தலங்கள் . கடம்பை - கடம்பூர் . இளங்கோயில் - மீயச்சூர் இளங்கோயில் . கொடுங்கோளூர் , செங்குன்றூர் , கொங்கணம் , குன்றியூர் , நியமநல்லூர் , எழுமூர் , ஏழூர் , தோழூர் , ஏமகூட மலை இவை வைப்புத் தலங்கள் . எழுமூர் - தஞ்சை எழுமூர் . ஏர் ஆரும் . அழகு நிறைந்த . ` ஏராறும் ` என்பது பாடம் அன்று .

பண் :

பாடல் எண் : 6

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணை களர்காறை கழிப்பா லையுங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

மண்ணிப்படிக்கரை , வாழ்கொளிபுத்தூர் , வக்கரை , மந்தாரம் , வாரணாசி , வெண்ணி , விளத்தொட்டி , வேள்விக்குடி , விளமர் , விராடபுரம் , வேட்களம் , பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை , பெண்ணாகடம் , பிரம்பில் , பெரும்புலியூர் , பெரு வேளூர் , கண்ணை , களர் , காறை , கழிப்பாலை , முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

மண்ணிப்படிக்கரை , வாழ்கொளிபுத்தூர் , வெண்ணி , வேள்விக்குடி , விளமர் , வேட்களம் , பெரும்புலியூர் , பெருவேளூர் , களர் , கழிப்பாலை இவை சோழநாட்டுத் தலங்கள் . ` வாள்கொளி புத்தூர் ` என்பதும் பாடமாகக் கொள்வர் . வெண்ணி - வெண்ணியூர் . வக்கரை , தொண்டைநாட்டுத் தலம் . அருட்டுறை , பெண்ணாகடம் இவை நடுநாட்டுத் தலங்கள் . ` அருட்டுறை ` என்பது திருவெண்ணெய்நல்லூர்க் கோயிலின் பெயர் . ` பெண்ணை ` என்பது அத்தலத்தை அடுத்து ஓடும் ஆற்றின் பெயர் . மந்தரமலை , வாரணாசி , விளத்தொட்டி , விராடபுரம் , பிரம்பில் , கண்ணை , காறை , இவை வைப்புத்தலங்கள் . ` மந்தரம் ` என்பது ` மந்தாரம் ` என நீட்டலாயிற்று ; அன்றி , அவ்வாறே பெயர் பெற்றதொரு வைப்புத் தலம் உண்டெனின் , கொள்க .

பண் :

பாடல் எண் : 7

வீழி மிழலைவெண் காடு வேங்கூர்
வேதிகுடி விசய மங்கை வியலூர்
ஆழி யகத்தியான் பள்ளி யண்ணா
மலையாலங் காடும் அரதைப் பெரும்
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

வீழிமிழலை , வெண்காடு , வேங்கூர் , வேதிகுடி , விசயமங்கை , வியலூர் , ஆழி , அகத்தியான்பள்ளி , அண்ணாமலை , ஆலங்காடு , அரதைப் பெரும்பாழி , பழனம் , பனந்தாள் , பாதாளம் , பராய்த்துறை , பைஞ்ஞீலி , பனங்காட்டூர் , காழி , கடற்கரையை அடுத்த நாகைக்காரோணம் .... ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .

குறிப்புரை :

வீழிமிழலை , வெண்காடு , வேதிகுடி , விசயமங்கை , வியலூர் , அகத்தியான்பள்ளி , அரதைப்பெரும்பாழி , பழனம் , பனந்தாள் , பாதாளம் , பராய்த்துறை , பைஞ்ஞீலி , நாகைக் காரோணம் இவை சோழநாட்டுத் தலங்கள் . ஆழி - கடல் ` ஆழியை அடுத்த அகத்தியான் பள்ளி ` என்க . பாதாளம் - பாதாளேச்சுரம் . காழி - சீகாழி ; இது மேலும் அருளிச்செய்யப்பட்டது . நாகை - நாகப்பட்டினம் ; அதன்கண் உள்ள திருக்கோயிலின் பெயர் . காரோணம் . அண்ணாமலை , நடுநாட்டுத் தலம் . ஆலங்காடு , தொண்டை நாட்டுத் தலம் . வேங்கூர் , பனங்காட்டூர் இவை வைப்புத்தலங்கள் . ` வெங்கூர் ` என்பதும் பாடம் . தொண்டைநாட்டுத் தலங்களுள் ஒன்றாய் விளங்கும் , ` வன்பார்த்தான் பனங்காட்டூர் ` என்பது வேறு .

பண் :

பாடல் எண் : 8

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

உஞ்சேனை மாகாளம் , ஊறல் , ஓத்தூர் , உருத்திர கோடி , மறைக்காடு , மேகங்கள் பொருந்திய பொதியமலை , தஞ்சை , வழுவூர்வீரட்டம் , மாதானம் , கேதாரம் , வெஞ்சமாக்கூடல் , மீயச்சூர் , வைகாவூர் , வேதீச்சரம் , விவீச்சுரம் , வெற்றியூர் , கஞ்சனூர் , கஞ்சாறு , பஞ்சாக்கை .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

ஊறல் , ஓத்தூர் இவை தொண்டை நாட்டுத்தலங்கள் . மறைக்காடு , மீயச்சூர் , வைகா , கஞ்சனூர் இவை சோழ நாட்டுத் தலங்கள் . மேற்சொல்லப்பட்ட இளங்கோயில் ( பா .5.) மீயச்சூரிலுள்ள மற்றொரு திருக்கோயில் ; அது மூலட்டான மூர்த்தி பாலாலயத்துள் இருந்தபொழுது பாடப்பட்ட இடம் என்பர் . வைகா - வைகாவூர் . கேதாரம் , வடநாட்டுத்தலம் . வெஞ்சமாக்கூடல் , கொங்கு நாட்டுத் தலம் . உஞ்சேனை மகாளம் . உருத்திரகோடி பொதியில்மலை , தஞ்சை , வழுவூர் வீரட்டம் , மாதானம் வேதீச்சுரம் , விவீச்சுரம் , வெற்றியூர் , கஞ்சாறு , பஞ்சாக்கை இவை வைப்புத் தலங்கள் . மஞ்சு ஆர் - மேகம் படியும் . ` மறைக்காட்டுள்ளும் , வெற்றியூரினும் , பஞ்சாக்கையினும் காணலாம் ` என முடிக்க . உம்மைத் தொகை ஒருசொல் நடைத்தாகலின் , ஏற்ற பெற்றியால் ஒரோரிடத்து உருபொடு கூடிய எண்ணும்மை கொடுக்கப்பட்டது .

பண் :

பாடல் எண் : 9

திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும்அதிகை வீரட் டானம்
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

திண்டீச்சரம் , சேய்ஞலூர் , செம்பொன்பள்ளி , தேவூர் , சிரபுரம் , சிற்றேமம் , சேறை , கொண்டீச்சரம் , கூந்தலூர் , கூழையூர் , கூடல் , குருகாவூர் வெள்ளடை , குமரி , கொங்கு , தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம் , ஐயாறு , அசோகந்தி , ஆமாத்தூர் , கண்டியூர் வீரட்டம் , கருகாவூர் , ... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

சேய்ஞலூர் , தேவூர் , சிற்றேமம் , சேறை , கொண்டீச்சரம் , குருகாவூர் வெள்ளடை , ஐயாறு , கண்டியூர் வீரட்டம் , கருகாவூர் இவை சோழநாட்டுத் தலங்கள் . சிரபுரம் - சீகாழி ; இதுவும் செம்பொன் பள்ளியும் மேலும் அருளிச்செய்யப்பட்டன . சில தலங்களை மீளவும் வலியுறுத்து அருளிச்செய்தல் , அவற்றிற்கு உள்ள சிறப்புப்பற்றி எனக் கொள்க ; அச்சிறப்பு முழுதும் இஞ்ஞான்று நாம் அறிதல் அரிது . ` ஒரு தலத்தை வேறு பெயரால் மீள அருளுதல் , அப்பெயர்பற்றி அறியப்படும் பெருமை தோன்றுதற்பொருட்டு ` என்பது மேலும் கூறப்பட்டது . ` வெள்ளடை ` என்பது குருகாவூர்க் கோயிலின் பெயர் . அதிகை வீரட்டானம் , ஆமாத்தூர் இவை நடுநாட்டுத் தலங்கள் . அதிகைவீரட்டானம் . நாயனார் திருவருள் பெற்ற தலம் என்பது வெளிப்படை . கூடல் - மதுரை ; பாண்டிநாட்டுத் தலம் . திண்டீச்சரம் . கூந்தலூர் , கூழையூர் , குமரி , கொங்கு , அசோகந்தி இவை வைப்புத் தலங்கள் . அண்டர் - தேவர் .

பண் :

பாடல் எண் : 10

நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமேச் சரம்
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்
ஓமாம் புலியூர்ஓர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

நறையூரிலுள்ள சித்தீச்சரம் , நள்ளாறு , நாரையூர் , நாகேச்சரம் , நல்லூர் , மேம்பட்ட துறையூர் , சோற்றுத்துறை , சூல மங்கை , தோணிபுரம் , துருத்தி , சோமேச்சரம் , உறையூர் , கடலை அடுத்த ஒற்றியூர் , ஊற்றத்தூர் , ஓமாம்புலியூர் , ஒப்பற்ற ஏடகம் , கறையூர் , கருப்பறியல் , கன்றாப்பூர் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை :

நறையூர்ச் சித்தீச்சரம் , நள்ளாறு , நாரையூர் , நாகேச்சரம் , நல்லூர் , சோற்றுத்துறை , துருத்தி , உறையூர் , ஓமாம்புலியூர் , கருப்பறியலூர் , கன்றாப்பூர் இவை சோழநாட்டுத் தலங்கள் . ` சித்தீச்சரம் ` என்பது நறையூர்த் திருக்கோயிலின் பெயர் . நல்லூர் , நாயனார்க்குத் திருவடிசூட்டிய தலமாதல் அறிக . தோணிபுரம் - சீகாழி ; இது மேலும் அருளிச்செய்யப் பட்டது . உறையூர் - மூக்கீச்சரம் . துறையூர் , நடுநாட்டுத் தலம் . ஒற்றியூர் , தொண்டைநாட்டுத் தலம் . ` கடலைச் சார்ந்த ஒற்றியூர் ` என்க . ஏடகம் , பாண்டிநாட்டுத் தலம் . சூலமங்கை , சோமேச்சரம் , ஊற்றத்தூர் , கறையூர் இவை வைப்புத் தலங்கள் .

பண் :

பாடல் எண் : 11

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலிநெய்த் தானத்தோ டெத் தானத்தும்
நிலவுபெருங் கோயில்பல கண்டால் தொண்டீர்
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற
கயிலாய நாதனையே காண லாமே.

பொழிப்புரை :

புலிவலம் , புத்தூர் , புகலூர் , புன்கூர் , புறம்பயம் , பூவணம் , பொய்கைநல்லூர் , வலிவலம் , மாற்பேறு , வாய்மூர் , வைகல் , வலஞ்சுழி , வாஞ்சியம் , மருகல் , வன்னி , வளமான நிலத்தை உடைய நெய்த்தானம் முதலிய எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங் கோயில்கள் பலவற்றைக் கண்டால் , தொண்டர்களே ! செருக்கிய வலிமை மிக்க இராவணனைத் தன் கால் விரலால் நசுக்கிய கயிலாய நாதனை அவ்விடங்களிலெல்லாம் காணலாம் .

குறிப்புரை :

புத்தூர் , பூவணம் இவை பாண்டி நாட்டுத் தலங்கள் . புகலூர் , புன்கூர் , புறம்பயம் , வலிவலம் , வாய்மூர் , வைகல் . வலஞ்சுழி , வாஞ்சியம் , மருகல் , வன்னி , நெய்த்தானம் இவை சோழநாட்டுத் தலங்கள் . வைகல் - வைகல் மாடக்கோயில் . வன்னி - வன்னியூர் . நிலம் மலி - நிலத்தின்மேற் புகழ் நிறைந்த மாற்பேறு , தொண்டைநாட்டுத் தலம் . புலிவலம் , பொய்கைநல்லூர் இவை வைப்புத் தலங்கள் . எத்தானத்தும் - எடுத்தோதியனவேயன்றிப் ( பெரியோரால் வணங்கப்படும் ) எத்தலத்திலும் . நிலவு பெருங் கோயில் பல கண்டால் - விளங்குகின்ற பெருமைபொருந்திய திருக்கோயில்கள் பலவற்றையும் சென்று காண்பீராயின் - தொண்டீர் - தொண்டர்களே . இங்கு , ` கண்டால் கயிலாய நாதனையே காணலாம் ` என்றது , ` அவ்விடங்களிற் காணலாம் ` என்றதேயன்றி , கயிலைப் பெருமானை அடைதல் கூடும் ` என்றருளிச்செய்ததூமாம் . ஆகவே , ` அத்தலங்களை இயன்ற அளவிற் கரவாது சென்று காணுமின் ` என்பது அருளாணை யாயிற்று ; நாயனார் அங்ஙனஞ் சென்று கண்டமை சொல்லவேண்டா . ` கலியும் வலியும் மிக்கோன் ` என்க . கலி - எழுச்சி ; செருக்கு .

பண் :

பாடல் எண் : 1

பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.

பொழிப்புரை :

மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி , வருந்தி அழியுமாறு சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி , திருக்காட்டுப்பள்ளி , மது நிறைந்து மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி , மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி , சிவப்பள்ளி , செம்பொன் பள்ளி , செழிப்புமிக்க நனிபள்ளி , தவப்பள்ளி புகழ்பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமைமிகக் காப்பாராவார் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` பள்ளி ` எனவருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . சக்கரப்பள்ளி , நனிபள்ளி சோழநாட்டுத் தலங்கள் . காட்டுப் பள்ளி , சிராப்பள்ளி , செம்பொன் பள்ளி , கொல்லியறைப் பள்ளி மேலைத் திருப்பதிகத்துட் கூறப்பட்டன . ` சிராப் பள்ளி ` என்பது எதுகை நோக்கிக் குறுகிற்று . பொருப் பள்ளி , சிவப் பள்ளி , தவப் பள்ளி , பரப்பள்ளி இவை வைப்புத் தலங்கள் . வரை - மலை . புலந்து அழிய - பகைத்து அழிய . பொன் - அழகு . கள் ஆர் - தேன் நிறைந்த . ` கலவச் சாரல் ` என்பது மெலித்த லாயிற்று . கலவம் - மயில் . ` பரலோகத்து ` என்புழி , இரண்டனுருபு தொகுத்தலாயிற்று . பாலிப்பார் - காப்பார் ; ஆளுவார் .

பண் :

பாடல் எண் : 2

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாம்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங்
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே.

பொழிப்புரை :

காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம் , கடவூர் வீரட்டானம் , விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம் , வழுவூர் வீரட்டானம் , பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம் , இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம் , குறுக்கை வீரட்டானம் , தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , அட்ட வீரட்டங்களை வகுத்து அருளிச்செய்தது . அவை , கண்டியூர் வீரட்டம் , கடவூர் வீரட்டம் , அதிகை வீரட்டம் , வழுவை வீரட்டம் , பறியலூர் வீரட்டம் , கோவலூர் வீரட்டம் , குறுக்கை வீரட்டம் , விற்குடி வீரட்டம் என்பனவாதல் அறிக . இவ்வீரட்டங்கள் முறையே , ` பிரமன் சிரத்தை அரிந்தது காலனை உதைத்தது , திரிபுரத்தை எரித்தது , யானையை உரித்தது , தக்கன் வேள்வியைத் தகர்த்தது , அந்தகாசுரனை அழித்தது , காமனை எரித்தது , சலந்தராசுரனை அழித்தது ` ஆகிய வீரச்செயல்களைச் சிவபிரான் செய்தருளிய இடங்களாகும் . இதனை , ` பூமன் சிரங்கண்டி , அந்தகன் கோவல் , புரம் அதிகை மாமன் பறியல் , சலந்தரன் விற்குடி , மாவழுவூர் , காமன் குறுக்கை , யமன்கட வூர்இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே ` என்னும் பழஞ்செய்யுளான் அறிக . இவற்றுள் , அதிகையும் கோவலும் நடுநாட்டில் உள்ளவை ; ஏனையவை சோழநாட்டில் உள்ளன . வழுவை , வைப்புத் தலம் . வழுவை , ` வழுவூர் ` எனவும்படும் . விற்குடியை , ` குடி ` என்றருளினார் , அவ்வாறருளினும் ஈண்டு , இனிது பொருள் விளங்குமாகலின் , ` கோத்திட்டை ` என்றதற்கு , விற்குடிக்கு அடையாகுமாற்றாற் பொருள்கொள்க ; என்னையெனின் , ஈண்டு வீரட்டமாயினவற்றையன்றிப் பிற தலங்களை அருளிச்செய்தல் திருவுள்ளமன்றாகலின் . காமரு சீர் - விரும்பத்தக்க புகழினையுடைய . நவின்றுரைத்தல் - பல்காலும் சொல்லுதல் . ` முன்னர் ஒருகால் அறிந்து சொல்லி , பின்னர்ப் பலகாலும் சொல்லிப் போற்றுவார்க்கு ` என உரைக்க . ` உரைப்பார்க்கு அகல்வர் ` என இயையும் . ` அகல்வர் ` என்றது , ` அகலுதலாகிய பயன் உளதாகும் ` என்னும் பொருளதாய் , ` உரைப்பார்க்கு ` என்னும் நான்காவதற்கு முடிபாயிற்று . இனி , ` உரைப்பாரை ` என உருபுமயக்கமாக்கி உரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி
கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடிமா குடிதேவன் குடிநீலக்குடி
புதுக்குடியும் போற்றஇடர் போகு மன்றே.

பொழிப்புரை :

நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும் , நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய செம்பங்குடி , நல்லக்குடி , பெருமைமிக்க நாட்டியத்தான்குடி , கற்குடி , இனிய களக்குடி , செங்காட்டங்குடி , கருந்திட்டைக்குடி , கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி , வேள்விக் குடி , நன்மமைமிகு வேட்டக்குடி , வேதிகுடி , மாணிகுடி , விடைவாய்க் குடி , புற்குடி , மாகுடி ,, தேவன்குடி , நீலக்குடி , புதுக்குடி , என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` குடி ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . நாட்டியத்தான் குடி , செங்காட்டங்குடி , வேட்டக்குடி , நீலக்குடி இவை சோழநாட்டுத் தலங்கள் . வேள்விக்குடி , கற்குடி , வேதிகுடி , தேவன்குடி இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப் பட்டன . விற்குடியை , ` வீரட்டம் ` என்பது நோக்கி மேலைத் திருத்தாண்டகத்துள்ளும் , ` குடி ` என்பது நோக்கி இத்திருத்தாண்டகத்துள்ளும் அருளிச் செய்தார் . செம்பங்குடி , நல்லக்குடி , தென்களக்குடி , கருந்திட்டைக்குடி , கடையக்குடி , மாணிகுடி , விடைவாய்க்குடி , புற்குடி , மாகுடி , புதுக்குடி இவை வைப்புத் தலங்கள் . ` விடைவாய் திருப்பதிகம் ` என ஒரு திருப்பதிகம் , கல்வெட்டிலிருந்து மிக அண்மையில் கிடைத்து , சென்னை சைவசித்தாந்த சமாசத்தினரால் பதிப்பிக்கப் பெற்றது . அத்தலம் , விடைவாய்க்குடியே போலும் .

பண் :

பாடல் எண் : 4

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்
அளப்பூரோ மாம்புலியூ ரொற்றி யூரும்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
துடையூருந் தொழஇடர்கள் தொடரா வன்றே.

பொழிப்புரை :

பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர் , பெரும் பற்றப்புலியூர் , பேராவூர் , நறையூர் , நல்லூர் , நல்லாற்றூர் , நாலூர் , சேற்றூர் , நாரையூர் , உறையூர் , ஓத்தூர் , ஊற்றத்தூர் , அளப்பூர் , ஓமாம்புலியூர் , ஒற்றியூர் , துறையூர் , துவையூர் , தோழூர் , துடையூர் , என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` ஊர் ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . நல்லாற்றூர் , நாலூர் , சேற்றூர் , துவையூர் , துடையூர் இவை வைப்புத் தலங்கள் . ஆரூர் , பெரும்பற்றப்புலியூர் , பேராவூர் , நறையூர் , நல்லூர் , நாரையூர் , உறையூர் , ஓத்தூர் , ஊற்றத்தூர் , அளப்பூர் , ஓமாம் புலியூர் , ஒற்றியூர் , துறையூர் , தோழூர் இவை மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன . பெரும்பற்றப்புலியூர் - தில்லை . பிறை ஊரும் சடை முடி - பிறை தவழ்கின்ற சடைமுடி .

பண் :

பாடல் எண் : 5

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.

பொழிப்புரை :

நீர்ப்பெருக்கினை உடைய கங்கையாற்றைச் சடையிலணிந்த சிவபெருமான் திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன் , கடம்பூர் கரக்கோயில் , மணங்கமழும் பொழில்கள் சூழ்ந்த ஞாழற்கோயில் , கருப்பறியலூரில் மலைபோன்று விளங்கும் கொகுடிக்கோயில் , அந்தணர்கள் வேதம் ஓதி வழிபாடு செய்து துதிக்கும் இளங்கோயில் , மணிக்கோயில் , ஆலக்கோயிலாகிய திருக் கோயில் , என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்து படிமீது வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும் தீரும் .

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் , ` கோயில் ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . பிற்காலத்தில் , ` தஞ்சைப் பெருங்கோயில் ` என்பதுபோல , அக்காலத்தில் , ` பெருங்கோயில் ` என எழுபத்தெட்டுக் கோயில்கள் இருந்திருத்தல்வேண்டும் . ` அம்பர்ப் பெருங்கோயில் ` என்பது ஒன்று திருப்பதிகத்தாற்றானே காணப்படுகின்றது . இனி , ` பெருங்கோயில் எழுபதினோடு எட்டு ` என்று அருளப்பட்டவை கோச்செங்கட்சோழ நாயனாரால் எடுக்கப்பட்ட கோயில்கள் ` என்றலும் பொருந்தும் . ` கரக்கோயில் ` என்பது , கடம்பூர்க்கோயில் ; ` கொகுடிக் கோயில் ` என்பது கருப்பறியலூர்க்கோயில் ; இவை சோழ நாட்டில் உள்ளவை . ` கரக்கோயில் ` என்பது , ` இந்திரன் கரத்தால் அகழ்ந்த கோயில் ` எனவும் , ` கொகுடி ` என்பது ` ` முல்லைக் கொடியின் வகை ` எனவும் கூறுவர் . இளங்கோயிலும் , ஆலக்கோயிலும் மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன . ஞாழற் கோயில் , மணிக் கோயில் இவை வைப்புத் தலங்கள் . இருக்கு - வேதம் ; மந்திரமுமாம் . ` திருக்கோயிலாகிய , சிவன் உறையும் கோயில் ` என்க . இதனால் , இத்திருப்பெயர் சிவன் கோயிலுக்கே உரித்தாதல் அறிக . இவ்வாறாகவே , ` திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் ` ( தி .6. ப .95. பா .5.) ` திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனி தன்னை ` ( சிவஞான சித்தி . சூ . 12-4) என்றவற்றின் பொருள் இனிது உணர்ந்து கொள்ளப்படும் . சூழ்தல் - வலம் வருதல் .

பண் :

பாடல் எண் : 6

மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூ ராலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே.

பொழிப்புரை :

மலையரசன் மகளாகிய பார்வதியொடு மகா தேவன் மகிழ்ந்துறையும் மறைக்காடு , வளப்பம் மிக்க சோலைகள் சூழ்ந்த தலைச்சங்காடு , தலையாலங்காடு , பரந்த கடலால் சூழப் பட்டதும் , அழகியதும் , குளிர்ந்ததுமாகிய சாய்க்காடு , மோதித்தள்ளும் நீரையுடைய கொள்ளிக்காடு , பலரும் புகழும் பழையனூர் ஆலங்காடு , பனங்காடு , பாவை போன்ற பெண்கள் தங்கள் பாவம் நீங்குதற்காக விலை ஏறப்பெற்ற தம் வளையல்கள் கலந்து ஒலிக்கும்படி ஆடும் பொய்கைகளை உடைய வெண்காடு ஆகியவற்றை அடைந்து வணங்க வினைகள் விட்டு நீங்கும் .

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் , ` காடு ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . சாய்க்காடு , கொள்ளிக்காடு இவை சோழநாட்டுத் தலங்கள் . பனங்காடு , வைப்புத் தலம் . மறைக்காடு , தலைச்சங்காடு , தலையாலங்காடு , ஆலங்காடு , வெண்காடு இவை மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன . பழையனூர் , ஆலங்காட்டிற்குச் சார்பாய் உள்ளது . விலை ஆடும் வளை - விலை ஏறப்பெற்ற வளையல்கள் .

பண் :

பாடல் எண் : 7

கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
கண்ணுதலோன்நண்ணுமிடம்அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநக ரால வாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.

பொழிப்புரை :

கடுக்காயைத் தின்னும் வாயினராகிய சமணரை நீக்கி என்னை அடிமை கொள்ளும் கண்ணுதற் கடவுளாகிய சிவ பெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில் , நெடு வாயில் , பயிர் நிறைந்த வயல் சூழ்ந்த நெய்தல்வாயில் , நிலவும் முல்லைவாயில் , ஞாழல்வாயில் , வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில் , அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில் , மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில் , குண வாயில் , ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` வாயில் ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது . ` முல்லை வாயில் ` என்னும் பெயருடைய தலங்கள் தொண்டைநாட்டில் ஒன்றும் , சோழநாட்டில் ஒன்றும் உள்ளன ; அவை முறையே , ` வட திருமுல்லைவாயில் , தென் றிருமுல்லை வாயில் ` என வழங்கப்படும் . ` ஆலவாய் ` என்பதே மதுரைத் திருக்கோயிற் பெயராயினும் ` ஆலவாயில் ` என்றலும் வழக்காதல் பற்றி , ` மதுரை நகர் ஆலவாயில் ` என்று அருளிச்செய்தார் ; ` நீள்கடிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே ` ( தி .3. ப .52. பா .1) என்று அருளிச் செய்த திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பாடலிலும் , ` ஆலவாயில் ` என வந்தது என்றலே சிறப்புடைத்தாதல் அறிக . புனவாயில் , பாண்டிநாட்டுத் தலம் . குடவாயில் சோழநாட்டுத் தலம் . அண்ணல்வாயில் , நெடுவாயில் நெய்தல்வாயில் , ஞாழல் வாயில் , குணவாயில் இவை வைப்புத் தலங்கள் . கடு வாயர் - கடுக்காயைத் தின்னும் வாயினை யுடையவர் ; சமணர் . கடுக்காயை அவ்வப்பொழுது வாயிலிட்டுத் தின்னுதல் சுவைப் புலனை விரும்பச் செய்யும் நாவினது ஆற்றலைக் கெடுத்தற் பொருட்டு . ` மடு ` என்றது வையை ஆற்றினை . ` மடுவார் ` என்றாயினும் , ` மடு ஆர் ` என்றாயினும் கொள்க . ` ஆன ` என்புழி , ` வாயில் ` என்பது எஞ்சி நின்றது .

பண் :

பாடல் எண் : 8

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
சுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்
குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர
மத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி
யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே.

பொழிப்புரை :

கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம் , மாகாளேச்சுரம் , நாகேச்சுரம் , நாகளேச்சுரம் , நன்மை பொருந்திய கோடீச்சரம் , கொண்டீச்சரம் , திண்டீச்சரம் , குக்குடேச்சுரம் , அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம் , அகத் தீச்சுரம் , அயனீச்சுரம் , அத்தீச்சுரம் , சித்தீச்சுரம் , அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போகடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` ஈச்சரம் ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது . ` ஈச்சுரம் ` என்றும் , ` ஈச்சரம் ` என்றும் இருவகையாகவும் ஆங்காங்கு ஏற்றபெற்றியாற் பாடம் ஓதுவர் . ` இறைவன் ` எனப் பொருள் தரும் . ` ஈஸ்வரன் ` என்னும் ஆரியச்சொல் , தமிழில் வடசொல்லாய் வந்து வழங்குமிடத்து , ` ஈச்சுவரன் ` எனத் திரிந்து , பின் , ` அவன் இருக்கும் இடம் ` எனப் பொருள் தருதற் பொருட்டு . அம்முப் பெறுங்கால் . இங்ஙனம் இருவகையாகச் சிதைந்து வழங்குகின்றது . கோடீச்சரம் - கொட்டையூர் ; இது சோழநாட்டுத் தலம் . நாகேச்சுரம் , கொண்டீச்சுரம் , திண்டீச்சுரம் , சித்தீச்சுரம் , இராமேச்சுரம் இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . நந்திகேச்சுரம் , மாகாளேச்சுரம் , நாகளேச்சுரம் , கோடீச்சுரம் , குக்குடேச்சுரம் , அக்கீச்சுரம் , ஆடகேச்சுரம் , அகத்தீச்சுரம் , அயனீச்சுரம் . அத்தீச்சுரம் இவை வைப்புத் தலங்கள் . ` நாடகம் ஆடி ` என்னும் பெயரினது ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று . நன்கு ஆன - நன்மை பொருந்திய . கானல் - கடற்கரை . ` இடுதிரை ` என்பது நீட்டலாயிற்று . சுரம் , ` ஈச்சரம் ` என்பதன் முதற்குறை .

பண் :

பாடல் எண் : 9

கந்தமா தனங்கயிலை மலைகே தாரங்
காளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்
விந்தமா மலைவேதஞ் சையம் மிக்க
வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.

பொழிப்புரை :

கந்தமாதனம் , கயிலைமலை , கேதாரம் , காளத்தி , கழுக்குன்றம் , இடமகன்ற அண்ணாமலை , தென்றல் தவழும் பொழில்களை உடைய சரிவுகளுடன் கூடிய வடபற்பதம் , மகேந்திரமாமலை , நீலமலை , ஏமகூடமலை , விந்தமாமலை , வேதமலை , சையமலை , சோலைகள் மிக்க அகன்ற பொதியின் மலை . மேருமலை , உதயமலை , அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம் . எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் புகழ்ந்து போற்றுவோம் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , மலையாய் உள்ள தலங்களை வகுத்து அருளிச்செய்தது ; ` மலை ` என்பதனை எடுத்தோதியும் , ஓதாதும் அருளிச்செய்தார் , அஃதின்றி நிற்கும் சொற்கள் தாமே பெரும் பான்மையும் , அவற்றின் சிறப்புப் பெயராய் நிற்றலின் . பற்பதம் , கயிலை இவை வடநாட்டுத் தலங்கள் . ` வடபற்பதம் ` என்றதனால் , திருப்பருப்பதம் இந்திர நீலப்பருப்பதம் இரண்டுங் கொள்க . கேதாரம் , காளத்தி , கழுக்குன்றம் , அண்ணாமலை , ஏமகூடம் , பொதியில் இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . கந்தமாதனம் , மகேந்திரம் , நீலமலை , விந்தம் , சையம் , மேரு , உதயமலை , அத்தமலை இவை வைப்புத் தலங்கள் . வைப்புத் தலங்களுள் , ` வேத மலை ` எனவும் ஒன்று உளது போலும் ! மந்தம் - மந்தானிலம் ; தென்றற் காற்று . ` ஏத்துவோம் ஏத்துவோம் ` என அடுக்காக இயைக்க .

பண் :

பாடல் எண் : 10

நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்குளமு நல்
லிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளம்களங்கா என அனைத்துங் கூறுவோமே.

பொழிப்புரை :

நள்ளாறு , பழையாறு , கோட்டாறு , நன்மை நிலவும் , நாலாறு , திருஐயாறு , தெள்ளாறு , வளைகுளம் , தளிக்குளம் , நல்ல இடைக்குளம் , திருக்குளம் , அஞ்சைக்களம் , குறையாத சிறப்புடைய நெடுங்களம் , வேட்களம் , நெல்லிக்கா , கோலக்கா , ஆனைக்கா , பரந்து திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு , குளம் , களம் , கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` ஆறு , குளம் , களம் , கா ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது . நள்ளாறு , கோட்டாறு , ஐயாறு இவை மேலைத் திருப் பதிகத்திற் சொல்லப்பட்டன . பழையாறு , நாலாறு , தெள்ளாறு இவை வைப்புத் தலங்கள் . வளைகுளம் , தளிக்குளம் , இடைக்குளம் , திருக்குளம் ஆகிய அனைத்தும் வைப்புத் தலங்கள் . தளிக்குளம் - தஞ்சைத் தளிக்குளம் . அஞ்சைக்களம் , நெடுங்களம் , வேட்களம் மூன்றும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . நெல்லிக்கா , ஆனைக்கா , கோடிகா இவையும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . கோலக்கா , சோழநாட்டுத் தலம் .

பண் :

பாடல் எண் : 11

கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறைஆவடு
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.

பொழிப்புரை :

கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் தன் கால் விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை , தென்பாலைத்துறை , எழுமுனிவர் பண்டுதவம் செய்த தவத்துறை , வெண்டுறை , பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் ஆலந்துறை , சோற்றுத்துறை , பூந்துறை , பெருந்துறை , குரங்காடுதுறை , மயிலாடு துறை , கடம்பந்துறை , ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` துறை ` என வருவனவற்றை வகுத்து அருளிச்செய்தது . பராய்த்துறை , சோற்றுத்துறை , பெருந்துறை , கடம்பந்துறை , ஆவடுதுறை , இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . பாலைத்துறை , வெண்டுறை , ஆலந்துறை , குரங்காடுதுறை , மயிலாடுதுறை இவை சோழ நாட்டுத் தலங்கள் . ` குரங்காடுதுறை ` என்ற பொதுமையால் , வடகுரங்காடுதுறை , தென் குரங்காடுதுறை இரண்டும் கொள்க . ஆலந்துறை - அன்பிலாலந்துறை . குயில் - குயில்களை உடைய . தவத்துறை , பூந்துறை இவை வைப்புத் தலங்கள் . ` தவத்துறை , ஏழு முனிவர் தவம் செய்த இடம் ` என்பது ` பண்டெழுவர் தவத்துறை ` என்பதனால் விளங்கும் .

பண் :

பாடல் எண் : 1

அலையார் புனற்கங்கை நங்கை காண
அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்
தொலையாத வென்றியார் நின்றி யூரும்
நெடுங்களமும் மேவி விடையை மேல்கொண்
டிலையார் படைகையி லேந்தி யெங்கும்
இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த
வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.

பொழிப்புரை :

அலைபொருந்திய நீரையுடைய கங்கையை உமையம்மை காணுமாறு அம்பலத்தில் பிறர் ஆடுதற்கரிய திருக்கூத்தை ஆடி . அக்கூத்து வேடம் ஒரு காலும் விட்டு நீங்காத வெற்றியையுடைய சிவபெருமான் நின்றியூரையும் , நெடுங்களத்தையும் விரும்பிப் பொருந்தி , இடபவாகனத்தை ஏறி இலைவடிவு கொண்ட முனைகளையுடைய படைக்கலங்களைக் கையிலேந்தி , எல்லா இடங்களிலும் நிறைந்து , இமையவரும் , அருகிலிருந்து , உமையும் வணங்கித் துதிக்க மலையின் கண் நிறைந்து திரண்ட அருவியால் ஆகிய காவிரியாறு சூழ்ந்த வலஞ்சுழியைத் தாம் புகுந்துறையும் இடமாக விரும்பி மேற்கொண்டார் .

குறிப்புரை :

` கங்கையை நங்கை காண ` என உருபு விரித்துரைக்க . ` அருநட்டம் ஆடுங்கால் கட்டிய சடை நெகிழ்தலின் அதனுள் மறைத்து வைக்கப்பட்ட கங்கையை உமையம்மை காண்கின்றாள் ` என நகைச்சுவை தோன்ற அருளியவாறு . அவ்வேடம் எனச் சுட்டு வருவிக்க . வென்றியார் - வெற்றியை உடையவர் . நின்றியூர் , நெடுங்களம் சோழநாட்டுத் தலங்கள் . மலைஆர் - மலையின்கண் நிறைந்த ` மலை ஆர் அருவி , திரள் அருவி ` என்க . ` அருவியால் ஆகிய பொன்னி ` என்றவாறு . இமையவரே அன்றி , உமையவள் இறைஞ்சி ஏத்துதலும் இத் திருத்தாண்டகத்துள் அருளப்பட்டது . ` மன்னினாரே ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 1

கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமருங் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

நிறம் வாய்ந்த மணிபோன்ற அழகுடையவனும் , கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் , தலைவனுமாகிய சிவ பெருமான் நீலமணி போற்றிகழும் கரிய கழுத்தால் அழகு மிக்கவனும் கல்லால மரநிழலில் இருந்தவனும் , பருத்த மணிகளை உடைய பெரிய பாம்பினை அணியாகப் பூண்டவனும் , பவளக்குன்றுபோல் காட்சியளிக்கும் மேலோனும் , தெளிந்த நீர் ஓடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும் , தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும் , யாவர்க்கும் வரமருளும் வரதனும் ஆவான் .

குறிப்புரை :

கருமணி - நீலமணி . பருமணி - பருத்த ( பெரிய மாணிக்கம் . மணி நீர் - அழகிய நீர் . மா தேவன் - ( தேவர்கட்கெல்லாம் ) பெரிய தேவன் . வரதன் - வரத்தைக் கொடுப்பவன் . குருமணி - நிறம் வாய்ந்த மணி . ` அழகமருங் கோமான் , கோடீச்சரத்துறையுங் கோமான் ` எனத் தனித்தனி முடிக்க . ` கோடீச்சரம் ` என்பது , திருக் கோயிலின் பெயர் .

பண் :

பாடல் எண் : 2

கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டையூரிற்
கோடீச்ச ரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

குலைகளை உடைய தெங்குகள் நிறைந்த சோலையால் சூழப்பட்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவன் ஆகிய சிவபெருமான் மான்கன்றை ஏந்திய கரத்தனும் , கலைகளைப் பயில்வோருக்கு ஞானக் கண்ணாய் விளங்குபவனும் , அலைகள் பொருந்திய கங்கையாற்றைத் தன்செஞ்சடையில் ஏற்றவனும் , அண்டச் சுவரின் உச்சிக்கும் அப்பாலவனும் , மலைபடுபொருள்களை அடித்துக்கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து மேவிய மைந்தனும் ஆவான் .

குறிப்புரை :

கலை - மான் . ஞானக் கண் - அறிவாகிய கண் ; உருவகம் ; ` கற்பார்க்கு அக்கல்வியறிவாய் நின்று பயன் தருவோன் ` என்றபடி . கபாலம் - தலை ஓடு ; ` அண்ட கபாலம் ` என்றது , அண்டச் சுவரின் உச்சியை . மலைப் பண்டம் - மலையில் விளையும் பொருள்கள் ; அவை , ` அகில் , சந்தனம் , யானைத் தந்தம் ` முதலியன . தெங்கு - தென்னை .

பண் :

பாடல் எண் : 3

செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய்தயிர்தே னாடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகள் நான்கு பக்கங்களிலும் சூழ விளங்கும் கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்து உறையும் தலைவன் செந்தாமரை மலரை அணிந்தவனும் , சிவன் என்னும் நாமம் தனக்கே உரியவனும் , தேவர்க்குத் தலைவனும் , பந்தாடும் மெல்லியவிரல்களையுடைய பார்வதியைத் தன் ஆகத்தின் பாகத்தில் கொண்டவனும் , பால் , தயிர் , நெய் , தேன் இவற்றில் ஆடப் பெறுபவனும் , மந்தார மரங்களைத் தள்ளிக் கொண்டு வரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து நிலைபெற்று நிற்கும் மணவாளனும் ஆவான் .

குறிப்புரை :

மலர்களுட் சிறந்தது தாமரை மலரும் , தாமரை மலர்களுள்ளும் சிறந்தது செந்தாமரையும் ஆதல்பற்றி , ` செந் தாமரைப்போ தணிந்தான் கண்டாய் ` என்று அருளினார் . ` பூவிற்குத் தாமரையே ` ( திருவள்ளுவமாலை - 36.), ` பூவெனப்படுவது பொறிவாழ் பூவே ` ( நால்வர் நான்மணிமாலை - 40) என வந்தனவுங் காண்க . சிவன் - மங்கலம் உடையவன் . மந்தாரம் , ஒருவகை மரம் . உந்தி - புரட்டி . கொந்து - ( மலர்க் ) கொத்து .

பண் :

பாடல் எண் : 4

பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவிரி வாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

துகில் கொடிகள் அசையும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் திருநீறு திகழுந் திருமேனியை உடைய புனிதனும் , கருட வாகனனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை உதவியவனும் , இடிபோன்று அச்சந்தரும் முழக்கத்தையுடைய இடபத்தினை ஊர்பவனும் , எட்டுத் திசைகளுக்கும் விளக்கமாய் நிற்பவனும் , பூவிதழ்களைச் சுமந்த அலைகள் புரளும் காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்துப் பொருந்திய மைந்தனும் ஆவான் .

குறிப்புரை :

பொடி - திருநீறு . புள் பாகன் - பறவை ( கருட ) வாகனத்தை உடையவன் ; திருமால் . ஆழி - சக்கரம் . இடி ஆர் - இடிபோலும் ; ஆர் , உவம உருபு . ஏறு - இடபம் . எண்டிசைக்கும் விளக்கு - உலக முழுதிற்கும் ஒளியைத்தரும் விளக்கு . மடல் - பூ ; சினையாகுபெயர் . கொடி ஆடு - துகிற் கொடிகள் அசைகின்ற .

பண் :

பாடல் எண் : 5

அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைக ளாறங்க மானான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்
சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் [ கண்டாய்
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

கொக்குக்கள் அமர்ந்திருக்கும் வயல்கள் நாற்புறமும் சூழ்ந்துள்ள கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , சங்கு மணியையும் , பாம்பையும் இடையில் கட்டியவனாய் , உணர்தற்கரிய நான்மறைகளும் ஆறங்கங்களும் ஆனவனாய் , தக்கனது பெருவேள்வியைத் தகர்த்தவனாய் , சதாசிவனாய் , சலந்தரன் உடலைப் பிளந்தவனாய் , நீலநிற மயிற் பீலியை அடித்துக் கொண்டு வரும் நீரினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய் , கையில் மழு ஏந்தியவனாய் விளங்குபவன் ஆவான் .

குறிப்புரை :

மைக் கொள் மயில் - கருமை ( நீல ) நிறத்தைக் கொண்ட மயில் ; இனி , ` மேகத்தை விரும்புகின்ற ` என்றும் ஆம் . ககர ஒற்று , விரித்தல் . ` தழை ` என்றது , தோகையை . ` கொக்கு அமரும் வயல் ` என்றது , ` நீர் நீங்காத வயல் ` என்பதைக் குறித்த குறிப்புமொழி .

பண் :

பாடல் எண் : 6

சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் [ கண்டாய்
மண்டுபுனல் பொன்னிவலஞ்சுழியான் கண்டாய்
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையும் கோமான் தானே.

பொழிப்புரை :

கொடிகள் கட்டப்பட்டு , மேகங்கள் தவழும் வண்ணம் மிக உயர்ந்த மாடங்களைக் கொண்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , சண்டேசுரனை நல்ல தேவர்கள் தொழுமாறு செய்தவனும் , சதாசிவனும் , சங்கரனும் , தொண்டர் பலரும் புகழ்ந்து வணங்கும் திருவடிகளை உடையவனும் , பற்றிப் பின் தொடர்வதற்கு அரிய பேரொளிப் பிழம்பாய் நின்றவனும் , மிக்குவரும் புனலையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும் , பெருமைமிக்க தவத்தவர் நுகரும் அமிர்தமும் ஆவான் .

குறிப்புரை :

` சண்டன் ` என்றது , சண்டேசுவர நாயனாரை , அண்டர் - தேவர் . ` அரிதாய் ` என்பதற்கு , ` அரிய பொருளாய் , என உரைக்க . ` மாமுனிவர் தம்முடைய மருந்து ` என்றது ` ` தேவர்கள் அமுதத்தை இறப்பை நீக்கும் மருந்தாக விரும்பி உண்பர் ; பெருமை பொருந்திய தவத்தோர் அவ்வாறன்றிச் சிவபிரானையே அம் மருந்தாக அறிந்து அடைவர் ` என்றதாம் . கொண்டல் - மேகம் .

பண் :

பாடல் எண் : 7

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்
பணமணிமா நாக முடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

நற்குணமிக்க அடியார்கள் வாழ்கின்ற கொட்டை யூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , எட்டுதற்கரியவனாய் , குற்றமற்றவனாய் , அழிவில்லாதவனாய் , மேலுலகத்து உள்ளவனாய் , படமுடைய பெரிய நாகத்தை அணிபவனாய் , பண்டரங்கக் கூத்தினை ஆடுபவனாய் , ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களை உடையவனாய் , மணலை வாரிக் கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய் , திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பிய அதிகாரத்தை வழங்குபவனாய் விளங்குபவன் ஆவான் .

குறிப்புரை :

அணவுதல் - எட்டுதல் . ` அணைவரியான் ` என்பதும் பாடம் . அவிநாசி - அழிவில்லாதவன் . அண்டத்தான் - மேல் உலகத்தில் இருப்பவன் . பணம் - பாம்பின் படம் . மாதவன் - திருமால் . வரதன் - வரத்தைக் ( அவர்கள் விரும்பிய அதிகாரத்தை ) கொடுப்பவன் .

பண் :

பாடல் எண் : 8

விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

குராமரங்கள் நிறைந்த சோலைகள் நாற்புறமுஞ் சூழ்ந்த கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவ பெருமான் . மணங்கமழும் கொன்றைப் பூ மாலையை உடையவனும் , வேதங்களால் போற்றப்படும் தலைவனும் , புள்ளிகளை உடைய புலித் தோலை இடையில் உடையாக உடுத்தியவனும் , அழலாடுபவனும் , அழகனும் , தொடர்ந்து வரும் அலைகளையுடையதும் நீர் நிரம்பியதும் ஆகிய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும் , வஞ்சமனத்தாரால் உணரப்படாத மைந்தனும் ஆவான் .

குறிப்புரை :

விரை - வாசனை . வேதங்கள் தொழநின்ற நாதன் - வேதங்களால் போற்றப்படும் முதல்வன் . ` குரா ` என்பது , குரவு ` என நின்றது . குரா , ஒருவகை மரம் . அமரும் - பொருந்தியுள்ள .

பண் :

பாடல் எண் : 9

தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்
தசரதன்றன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய்
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

குளிர்ந்த குளங்களில் செங்குவளை மலர் மேலெழுந்து விளங்கும் கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , இதழ்கள் மிக்க தாமரை மலரை ஆதனமாக உடையவனாய் , தயரதராமனுடைய துன்பங்களைக் களைந்தவனாய் , இளம்பிறையையும் பாம்பினையும் கங்கையையும் . தன் பழைய சடையில் வைத்தவனாய் , கலைகள் அறுபத்து நான்கும் ஆனவனாய் , வளத்தை மிகுவிக்கும் நீர்ப் பெருக்கினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய் , முனிவர்கள் வணங்கி எழும் பொற்பாதங்களை உடையவனாய் விளங்குபவன் ஆவான் .

குறிப்புரை :

தளம் - இதழ் . தசரதன் மகன் - இராமன் . அசைவு - தளர்ச்சி ; அது , சீதையை இழந்து பின்னர் அடைந்த துன்பத்தையும் சீதையை மீட்ட பின்னர் இராவணனைக் கொன்ற பழியினால் எய்திய துன்பத்தையும் குறிக்கும் . இவ்விரு துன்பங்களையும் இராமன் , சிவபிரானைப் பூசித்து நீங்கப்பெற்றனன் என்பதே உண்மை இராமாயணம் . என்பது இன்றைய இராமாயணத்திலும் காணப்படுவது , பிற வாக்கியங்கள் இஞ்ஞான்று அதன் கண் காணப்படாதொழியினும் அவற்றை அறிவிக்கும் தலங்கள் அவற்றிற்கு என்றும் சான்றாய் நின்று நிலவும் . எட்டு எட்டு இருங்கலைகள் - ` அறுபத்து நான்கு ` என வரையறை கூறப்படும் பெரிய கலைகள் . ` மா முனிகள் ` என்றது , தல வரலாற்றின்படி , ஏரண்டரையும் , மார்க்கண்டேயரையும் சிறப்பாகக் குறிக்கும் . ` குளம் கிளர் என இயையும் , ஏழாவதன் தொகையில் மகரம் , கெடாது நின்று திரிந்தது . கிளர் - மிக்கு விளக்குகின்ற .

பண் :

பாடல் எண் : 10

விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

ஓதிய நான்மறை ஆறங்க , வழிஒழுகும் வேதியர்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , பகைவர் புரமூன்றையும் எரித்தவனும் , வலிய அரக்கனாகிய இராவணன் உடலைக் கயிலை மலையின் கீழ் வைத்துச் சிதைத்தவனும் , குளிர்ந்த தாமரையில் வாழ் நான்முகனும் திருமாலும் தேட நெருப்புப் பிழம்பாய் நீண்டவனாகிய கழலை உடையவனும் , வண்டுகள் மொய்க்கும் பூஞ்சோலைகள் மிக்க வலஞ்சுழியில் வாழ்பவனும் , தேவர்க்குத் தேவனும் ஆவான் .

குறிப்புரை :

விண்டார் - பகைவர் . விலங்கலில் - ( கயிலாய ) மலையின்கீழ் . அடர்த்தான் - சிதைத்தான் . இறைவனது ஆற்றலை ( சத்தியை ) த் திருவடியாகக் கூறும் மரபு பற்றி , ` கழலான் ` என்று அருளிச் செய்தாராகலின் , அதற்கு ` சத்தியை உடையவன் ` எனப் பொருள் கூறுக .

பண் :

பாடல் எண் : 1

சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்
சுடராழி நெடுமாலுக் கருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை
அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

சொல்லாகவும் பொருளாகவும் வேதங்களாகவும் திகழ்பவனும், ஒளிமிக்க சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருளியவனும், இரவாகவும் பகலாகவும் இருப்பவனும், அன்பர் அல்லா தார்க்கு அரியனாகவும் அடியார்க்கு எளியனாகவும் இலங்குபவனும் அசுரர்க்கு அரணாயமைந்த திரிபுரங்கள் அழிய அம்பு எய்த வில்லினனும், விசயற்குப் பாசுபதம் அருளிய அருளாளனும், சூரியனும் பெருந்தவமுனிவர்களும் விரும்பிப் போற்றும் நல்லவனும், தீயாடுபவனும், விரும்புதற்குரிய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

சொல்லான் - சொல்லுவார் சொல்லும் சொற்கள் எல்லாமாய் இருப்பவன். பொருளான் - அச்சொற்களின் பொருளாய் இருப்பவன். சுருதியான் - வேதங்களாய் இருப்பவன். சுடர் ஆழி - ஒளிவீசும் சக்கரம். அல் - இரவு. ``அடியார்கட்கு எளியான்`` என்று அருளியதனால், ``அரியான்` என்றது பிறர்க்கு என்பது பெறப்பட்டது. சரம் - `பாசுபதம்` என்னும் அம்பு. சூரியனும் பெரு முனிவர்களும் இத்தலத்து வழிபட்டு நலம் பெற்றனர் போலும்! ``நன்னகர்`` என்றது, `சிவதலம்` என்பதனைத் தமிழாற் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 2

பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னைப்
பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்
மதியாகி மதிசடைமேல் வைத்தான் தன்னை
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் தன்னை
நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பட்ட மெல்லிய பாதங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், நிலமும், நீரும், தீயும் வீசும் காற்றும் ஆனவனும், மேகம் தவழும் வானமும், அவ்வானத்தில் ஊரும் மதியும் ஆகி அம்மதியைத் தன் சடைமுடிமேல் தாங்கியவனும், என் மனத்தைத் தன் வழி நிறுத்தி அதன் நினைவுகள் எல்லாம் தானாகி நின்றவனும், நெடிய கடலைக் கடைந்தார் அனைவரும் ஓடி நீங்கும் வண்ணம் ஓங்கி எழுந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்கட்கு அமுதம் ஈந்தவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

`என்நெஞ்சு உண்டு அதன் நினைவாகி நின்றான்` என்க. நெஞ்சத்தை உண்டமையாவது, அவன்வழி நிறுத்திக் கொண்டமை; அதனால், அது நினைப்பனயாவும் அவன் நினைப்பித்த வாறே நினைக்கும் நினைவுகளாயினமையின், இவ்வாறு அருளிச்செய்தார். இதனால், சுவாமிகளது கரணங்கள் சிவகரணங்களே ஆயினமை தெற்றென விளங்கும். ``கடைந்தவர்`` என்பது, `கடைந்தவராகிய அவர்` எனச் சுட்டும் சுட்டுப்பொருள் உடையது; செய்யுளாகலின் சுட்டுச்சொல் முன்னிற்றல் பொருந்திற்று.

பண் :

பாடல் எண் : 3

மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை
முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்
தேவாதி தேவர்கட்குந் தேவன் தன்னைத்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் தன்னை
ஆவாத அடலேறொன் றுடையான் தன்னை
அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற
நாவானை நாவினில்நல் லுரையா னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

யாவர்க்கும் முன்னே தோன்றி வைத்தும் மூப்பு இன்றி என்றும் ஒரு பெற்றியனாய் உள்ளவனும், தேவர்கட்குத் தலைவராகிய நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோருக்கும் தலைவனாய்த் திகழ்பவனும், நான்முகனுடைய சிரங்களில் ஒன்றைக் கொய்தவனும், காற்றெனக் கடிதியங்குவதும் வெற்றியையுடையதுமாகிய ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், ஆகி, அடியேன் நினையுந்தொறும் நாவான் நுகரப்படும் தித்திப்பாகும் சுவையாகவும், நாவிற்பயிலும் நல்லுரையானாகவும் விளங்கும் சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

மூவாது மூத்தல் - `தோன்றுவனவற்றிற்கெல்லாம் முன்னே தோன்றினான்` என்னுமாறு காலம்பற்றி வரும் பிற பொருள்களினது தோற்றம் போல்வதொரு தோற்றத்தால் மூத்தவனாகாது, இயல்பாக என்றும் உளனாதல், இவ்வாறு ஈண்டு அருளிச்செய்த இதனால், ``முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி`` (ப.19 பா.1) என்றாற்போல அருளிச்செய்தவற்றின் உண்மைப்பொருள் இது வென்பது இனிது விளங்கும். முடியாது - அழியாமல்; ஏகாரம் தேற்றம். மூவாது மூத்தமையின், முடிதல் இல்லையாயிற்று. `தான் இங்ஙனம் மூவாது மூத்து முடியாது நின்று, பிற பொருள்கட்கெல்லாம் முதலும் நடுவும் முடிவும் ஆயினான் என்க. தே ஆதி தேவர் - தேவர்களுக்குள் ஆதிதேவர்; காரணக் கடவுளர்; அயனும், மாலும்; `தே` என்பது, சொல்லால் அஃறிணையாதலின், ஒருமைபன்மை இரண்டிற்கும் பொதுவாய், ஈண்டுப் பன்மைப்பொருள் தந்தது. உம்மை, சிறப்பு, ``ஆ`` என்றதனை, ``ஏறு`` என்றதனோடு இயைத்து, ``ஆனேறு`` என்று பொருள் கொள்க. வாதம் - காற்று; `காற்றுப்போலும் கடுநடையை உடைய ஏறு` என்க. அண்ணித்தல் - தித்தித்தல். ``நா`` என்றது, அதன் புலமாகிய சுவையை; அது தித்திப்பை உணர்த்திற்று.

பண் :

பாடல் எண் : 4

செம்பொன்னை நன்பவளந் திகழும் முத்தைச்
செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற
கம்பனையெங் கயிலாய மலையான் தன்னைக்
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்
நம்பனையெம் பெருமானை நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

செம்பொன், நற்பவளம், ஒளிமுத்து, செழுமணி என்றெல்லாம் ஒப்புக் கூறப்படுபவனும், வணங்குவார் சித்தத்தில் உறைபவனும், மணங்கமழும் மலர்களை கணைகளாகக் கொண்ட மன்மதன் இறக்கும் வண்ணம் விழித்து மகிழ்ந்தவனும், மதில் சூழ்ந்த கச்சியில் ஏகம்பனாய் மன்னுபவனும, கயிலாய மலையில் வாழும் எம் தலைவனும், சம்பாதி சடாயு என்ற கழுகுகளும் இராமனும் தமக்கு நன்மைதருவான் இவன் என்று ஆராய்ந்து வணங்கும் இறைவனும், எம்பெருமானும், தலைவனுமாகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

வம்பு அவிழும் - வாசனையோடு மலர்கின்ற. மலர்க் கணை வேள் - மன்மதன். உலக்க - அழியும்படி. மகிழ்ந்தது அவனது குற்றம் (சிவாபராதம்) நீங்கினமை குறித்து.
மலையான் - மலையின் கண் உள்ளவன். ``எம்`` என்பது `மலையான்` என்பதனோடு இயைந்தது. கழுகு, என்றது `சம்பாதி, சடாயு` என்னும் இரண்டினையும். இவை பூசித்த தலம் புள்ளிருக்கு வேளூர் என்பது,
``தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.``
(தி.2. ப.43. பா.1.) எனத் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளால் இனிதெடுத்து அருளிச்செய்யப்பெற்றது. காகுத்தன் - இராமன். `நாரை வழிபாடு செய்த தலம் நாரையூர்` என்பது தெளிவாதலின், கழுகுகள் வழிபாடு செய்தமையையும், அக்கழுகுகள் இவை என்பதும், அவற்றது பெருமையும் இனிதுணர்த்தியருளுவார் காகுத்தன் வழிபட்டமையையும் உடன் நினைப்பித்தருளி, அஃறிணை உயிர்களும் வானிடத்தவர்களும் மண்மேல் அரன்றனை அருச்சித்துப் பயன் பெற, ஊனெடுத்து உழலும் ஊமர் ஒன்றையும் உணராது, வாணாள் வீணாள் கழித்தல் இரங்கத்தக்கதன்றோ என அறிவுறுத்தருளினார் என்க. திருக்கழுக்குன்றமும் கழுகுகள் வழிபடும் தலமாதல் அறியத் தக்கது.

பண் :

பாடல் எண் : 5

புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்
புரிசடைமேற் புனலடைத்த புனிதன் தன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை
வெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் தன்னை
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

உட்டொளை பொருந்திய கரத்தையுடைய யானையது தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடையின்மேல் கங்கையைச் செறித்துவைத்த புனிதனும், மணங் கமழும் வெள்ளெருக்கம்பூமாலையை அணிந்தவனும் வெள்ளிய நீறு செம்மேனியிடத்து விரவி விளங்குபவனும், பருவதராசன் மகள் தவம் செய்து அடையப்பெற்ற மணாளனும், வெள்ளிய விடையை உயர்த்திய நற்கொடியை உடைய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

புரை - கவிப்பு; யானையது உடலில் புரையாய் (கவிப்பாய்) அமைந்த உரிவை (தோல்) என்க. `புரை உடைய கரி` என யானைக்கு அடையாக்கி, `புரை - உயர்ச்சி அல்லது குற்றம்` எனலுமாம்.
அடைத்த - உட்செறித்த. விரை - வாசனை` `மலைமகள் தவஞ்செய்து அடைந்த மணாளன்` என்க. `செய் மணாளன்` என்னும் வினைத்தொகை, `இது பயனாக` என்னும் பொருள்மேல் தொக்கது. பிணி நோய், உம்மைத்தொகை. நோய் - துன்பம். நரை - வெண்மை.

பண் :

பாடல் எண் : 6

பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்
பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை
மறவாத மனத்தகத்து மன்னி னானை
மலையானைக் கடலானை வனத்து ளானை
உறவானைப் பகையானை உயிரா னானை
உள்ளானைப் புறத்தானை ஓசை யானை
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பிறவாமையானும், இறவாமையானும் புகழ் பெருகியவனும், பேய்களின் பாட்டிற்கேற்பக் கூத்தாடும் பித்தனும், தன்னை மறவாத மனத்திடத்தே மன்னி நிற்பவனும், மலையிடத்தும் கடலின் கண்ணும் வானின் மேலும் விளங்குபவனும், உறவும் பகையும் உயிரும் ஆகுபவனும், அகத்தும், புறத்தும் திகழ்பவனும், தேனிறைந்த கொன்றைப் பூவைச் சூடியவனும் ஆகிய சிவபெருமானை நாரை யூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

``பெருகினான்`` என்றதற்குமுன், `புகழ்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `பிறவாது, இறவாது` என்னும் வினையெச்ச மறைகள் காரணப் பொருளவாகலின், `பிறவாமையாலும், இறவாமை யாலும் புகழ் பெருகினான்` என உரைக்க. பிறத்தல் இறத்தல்களினின்றும் நீங்கி வீடு பெற்றாரது பெருமைதானே ஏனையோரது பெருமைகள் எல்லாவற்றினும் மேம்பட்டு விளங்கிநிற்குமாயின், இயல்பாகவே அவைகளை இல்லாதவனுக்கு உளதாகும் பெருமை மிகுதி சொல்ல வேண்டுவதோ என்பது திருக்குறிப்பு. வீடு பெற்றாரது பெருமையே. ஏனையெல்லாப் பெருமையினும் மேம்பட்டு விளங்கும் என்பதனை,
``இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்றுலகு`` (குறள் - 23)
என்பதனால் அறிக. இனி, `கிணற்றுள் வீழ்ந்தாரை எடுக்கலுறுவார், அதன் பொருட்டுத் தாமும் கிணற்றுள் வீழுமாறு போல, பிறவியுட் பட்டாரை எடுத்தற்பொருட்டுப் பிறவியில்லாத இறைவன் தானும் பிறவியுள் வீழ்வனாகலின், அஃது அவற்குப் புகழாவதல்லது இகழாமாறு இல்லை` என்பாரது கூற்று, உவமப்போலியுடைத்து. எங்ஙனம் எனின், கிணற்றுட் கிடப்பார் இருவருள், மேல் எழமாட்டாது நீர்வயப்பட்டு அமிழ்ந்துவார் அதன் கண் அழுந்துவோரும், அவ்வாறன்றி மேலே மிதப்பார் அவரை எடுப்போருமாவர் என்பது தெளிவு; அங்ஙனமே உடம்புடைய இருவருள், `அவிச்சை, வினை, மாயை` என்ற இவற்றின் வயப்பட்டு, `முட்டை, வெயர்வை, விதை, கருப்பை` என்னும் நால்வகைத் தோற்றுவாய்களின் வழித் தோன்றும் உடம்பிற் கட்டுண்டு, குறித்த தொன்றாகமாட்டாக் குறையுற்று, எடுத்த உடம்பின் ஆற்றலளவிற்கேற்ற அறிவு இச்சை செயல்களையே உடையராய், உண்டு, உறங்கி, `பசி, பிணி, மூப்பு` முதலியன காலவயத்தான் ஒருதலையாக வந்து பற்ற, அவற்றைத் தவிர்க்க மாட்டாது தாங்கி, இடையே இன்பத் துன்ப நுகர்ச்சியால் விருப்பு வெறுப்புக்கள் மீதூர. உறவும் பகையும் கொண்டு நல்லன தீயன வற்றைச் செய்து இறப்பவர் பிறப்பின்கண் அழுந்துவோரும், அவ்வா றன்றி வேண்டிய உருவத்தை வேண்டியவாறே தமது இச்சையால் தோற்றுவாய் யாதுமின்றிக் கொண்டு இம்மெனக் கடிதில் தோன்றி, அத் தோற்றத்திற்குப் பயனாம் செயல் கடிதின் முடிய, இம்மெனக் கடிதின் மறைபவரே பிறவியின்கண் அழுந்துவாரை அதனினின்றும் எடுப் போரும் ஆவர் எனல் வேண்டும். அவ்வாறன்றி, வினைவயப்பட்டு நிற்கும் மேற்கூறிய பிறவியுடையார்க்கு அவர் அவ்வுவமை கூறுதல் பொருந்தாமையின் என்க. எனவே, உயிர்களின் பொருட்டு வேண்டிய உருவத்தை வேண்டியாங்குத் தோற்றுவாய் இன்றித் தனது இச்சையின் வழி அருளால் திருமேனி கொள்ளுதலுக்கு அஃது உவமையாம் அன்றி, உயிர்கள் வினையிற் கட்டுண்டு அதனால், நால்வகைத் தோற்றத்துட்பட்டு மாயா சரீரமாகிய பிறவி எடுத்தற்கு அஃது உவமை ஆமா றில்லை என்க. இதனானே, `பிறவியாவது இது` வெனவும், `அருள் தோற்றமாவது இது` வெனவும் வேற்றுமை தெரிந்து, `பிறவி`, மலமுடைய உயிர்கட்கு அன்றி நின்மலனாகிய இறைவற்கு ஒருவாற்றானும் ஒரு ஞான்றும் எய்துதல் இல்லை` எனவும், அஃது எய்தாமை பற்றி அவன் உயிர்களின் பொருட்டு அருட்டிருமேனி கொள்ளுதற்குத் தடை ஒன்றும் இல்லை எனவும், அதனால் நின்மல னாகிய இறைவனை எவ்வாற்றானும் மலமுடைய உயிர்க்கு உரிய பிறவியுடையனாகக் கருதுதலும், சொல்லுதலும் அவனுக்குப் பெரிய தோர் இழுக்குச் செய்தலாம் எனவும் கடைப்பிடித்து உணர்ந்து கொள்க.
`பித்தன்` என்றது, ஓர் வரையறையின்றித் தான் வேண்டியது செய்வன் என்னும் கருத்தினதாய், அவனது தன்வயமுடைமையைப் பழித்ததுபோலப் புகழ்ந்ததாம்.
இந்நிலை, `செய்தல் (கர்த்திருத்துவம்), செய்யாமை (அகர்த் திருத்துவம்), வேறொன்று செய்தல் (அந்யதாகர்த்திருத்துவம்)` என மூன்றாய் விளங்கும்; இவற்றை, ``ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்``
என (நல்வழி) விளக்கினார், ஔவையார்.
வனம் - காடு. ``உள்ளான்`` என்றது, `கலந்து நிற்பவன்` என்றபடி, ``உறவானைப் பகையானை`` என்றது, `உயிர்கள் தமக்கு உறவாக நினைக்கப்படுபவராயும், பகையாக நினைக்கப்படுபவராயும் நிற்பவன் அவனே` என்றவாறு, உள்ளான் புறத்தான் - எல்லாப் பொருள்களின் உள்ளும் புறமும் நிறைந்துள்ள வியாபகன். ஓசை, பூதங்களுட் சிறந்த விசும்பின் பண்பாகலின், அதனை எடுத்தோதி யருளினார். நறவு - தேன்.

பண் :

பாடல் எண் : 7

தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்
தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்
கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
அறுமுகனோ டானைமுகற் கப்பன் தன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

தக்கனது வேள்வியை அதன் பயன் கெடுமாறு அழித்தவனும், பிரமனது தலையைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்ற தலைவனும், கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கும் கரத்தினனும், உயிரைக் கொள்ளுதலையுடைய நாகத்தை அணியாகப் பூண்டவனும், உருத்திராக்கம் என்பு இவற்றை அணிந்த அழகனும், ஆறுமுகன், ஆனைமுகன் ஆகிய இருவருக்கும் தந்தையும், ஆடை அணியாதவனும், வக்கரை நள்ளாறு என்னுந் தலங்களில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

சாடினான் - அழித்தான். சச்சரி, ஒருவகை வாச்சியம். அக்கு - சங்குமணி. நக்கன் - உடையில்லாதவன்; இது பிட்சாடன கோலத்தை நோக்கி அருளியது. இனி ` பற்றற்றவன்` என்ற உண்மைப் பொருளும் உடையது என்க. வக்கரை, தொண்டை நாட்டுத் தலம். நள்ளாறு, சோழநாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 8

அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை
அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை
எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை
நரிவிரவு காட்டகத்தி லாட லானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மாலும் நான்முகனும் ஏத்தி வணங்கும் தந்தையும், இயமனுக்கு இறுதியை ஆக்கும் மகாசங்காரக் கடவுளும், அளந்தறிய இயலாத எரிப்பிழம்பாம் இலிங்கத்தினது இயல்புவிரிக்கும் இலிங்க புராணத்து விளங்கித் தோன்றுபவனும், அருமைமிக்க எண்ணும் பண்ணும் எழுத்தும் ஆனவனும் , திரிபுரங்களை அழித்து ஆண்டுத் தன்னை மறவாத மூவர்க்கும் அருள் செய்தவனும், சிலந்திக்குப் புவிபுரக்கும் அரசனாம் பேற்றையளித்த செல்வனும் ஏனை விலங்குகளொடு நரிகள் கலந்து திரியும் சுடுகாட்டில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

அந்தகன் - அந்தத்தை (இறுதியை)ச் செய்பவன்; இயமன்; `அவனுக்கு அந்தத்தைச் செய்பவன்` என்றதனால், `மகா சங்காரக் கடவுள்` என்றவாறு. இனி, `அந்தகாசுரனுக்கு அந்தத்தைச் செய்தவன்` என்றலுமாம். `அளக்கலாகா இலிங்கம், எரிபுரியும் இலிங்கம். எனத் தனித்தனி இயையும். ``அளக்கலாகாமை, மாலும் அயனும் அடிமுடி தேடி அறியலாகாமையான் விளங்கும். இவ்வரலாற்றைக் கூறும் புராணமே இலிங்க புராணம். இது, சிவபிரானே முதற்பொருள் என நிறுவுதலையே பொருளாக உடைமையின், அதன்கண் இனிது விளங்கி நிற்பவன் என்பார். சிவபிரானை, ``இலிங்க புராணத்துளான்`` என்று அருளிச்செய்தார். இச்சிறப்பு நோக்கியே, சுவாமிகள், இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையை (தி.5. ப.95.) உலகிற்கு அருளிச்செய்து உதவினார் என்க. இப்புராணப் பொருளே.
``பிரமன் அரிஎன் றிருவருந்தம் பேதைமையால்
பரம மியாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனா ரழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ``
எனத் திருவாசகத்துள் (தி.8 திருத்தோணோக்கம் - 12) தொகுத்து அருளிச் செய்யப்பட்டது. இவ்வரலாற்றின் விரிவை, கந்த புராணம், அடிமுடி தேடு படலத்துள் விரித்துக் கூறிற்று. இது பற்றியே, சிவனடியாரை இகழவந்தவரும், அவர்கட்கு, ``இலிங்கத் திட்ட புராணத்தீர்`` (திரு வாய்மொழி 4. 10.5.) என இப்புராணத்தாற் பெயர் கொடுத்தார் என்க. எரி புரியும் - நெருப்பின் ஒளியை வீசும். இலிங்கம் - குறி; அது, கை கால் முதலிய உறுப்பின் பகுப்பு யாதும் அற்ற பொதுப் பிழம்பினைக் குறித்தது; `தாணு` எனவும், `கந்து` எனவும் வருவதும்இது, `எண்ணும் எழுத்தும் ஆனானை` என்றாற்போலவே, `பண் ஆனானை` என்பார், ``பண் ஆரெழுத்தானானை`` என்று அருளிச்செய்தார். ``ஆரெழுத்து`` என்புழி நின்ற, `அருமை` என்பதனை, `எண், பண்` என்பவற்றிற்குங் கூட்டுக. திரிபுரம் எரித்த ஞான்று மூவர்க்கு அருள்செய்தமையை மேலே (ப.60. பா.9 குறிப்புரை) காண்க.

பண் :

பாடல் எண் : 9

ஆலாலம் மிடற்றணியா அடக்கி னானை
ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்
பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கிறைவ னாயி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

ஆலால நஞ்சினைத் தன் கழுத்திற்கு அணியாகக் கொண்டு அதன் நச்சுத் தன்மையைக் கெடுத்தவனும், கல்லால மர நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர் நால்வருக்கும் அறமுரைத்தவனும், பாலும் தேனும் பழமும் பசிய கரும்பும் ஆகி அவற்றின் இனிய சுவையாய்ப் பயில்பவனும், மேன்மைமிக்க வேதியர்க்கு வேள்வியாய் விளங்குபவனும், வேள்வியின் பயனாய் விளைபவனும், குற்ற மற்றவனும், நான் மறைகளாலும் இறைவனாகப் போற்றப்படுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

நஞ்சை வைத்ததனால் ஆகிய நீலநிறம், செம்மேனியனாகிய சிவபிரானுக்குக் கண்டத்தை நீலமணிபோல அழகு செய்து நிற்றலின், ``ஆலாலம் மிடற்று அணியா அடக்கினான்`` என்று அருளிச் செய்தார். `பால் முதலியவுமாகி, அவற்றின் சுவைகளும் ஆயினான்` என்க. உம்மை, எச்சம். வேதியருள் மேலாவார். ``எரியலால் உருவம் இல்லை....ஐயன் ஐயாறனார்க்கே`` (தி.4. ப.40. பா.5.) என்று அருளியவாறு, எரி, சிவபிரான் உருவேயாதலை யறிந்து வேட்பவரே யாகலின், `மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி` என்று அருளினார்; ``விருப்புறும் அங்கி யாவார் விடை உயர்த் தவரே`` (தி.12 பெ. புரா. திருஞா. 1241) என்று திருஞானசம்பந்தர் சிந்தையில் தெளிந்தமை அறிக.
இக்கருத்தினையும், மற்றும் பகலவனையும் சிவபிரானது உருவாகவே அறிந்து காலை, மாலை, நண்பகற் பொழுதுகளில் வழி படுதலே உண்மைப் பொழுது வழிபாடு (சந்தியாவந்தனம்) என்பதனையும் சுவாமிகள்
``எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்``
எனவும்,
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான் அரன்உரு அல்லனோ``
எனவும் அருளிச்செய்தார்கள். (தி.5. ப.100. பா.7,8.) இதனானே, காயத்திரி மந்திரத்தின் பொருளும் சிவபிரானே என்பதும் தெளியப் படும்; இதனை, ``உயர்காயத்திரிக்கு உரிப்பொருளாகலின் என்னும் பொருளதாக வடமொழியில் ஓதினார், அரதத்தாசாரியர். ஆகவே, திருவைந்தெழுத்தின் பொருளே காயத்திரியின் பொருளாக அறிதலும், அதனால் திருவைந்தெழுத்தினையே முதற்றிருமந்திரமாக உணர்ந்து ஓதுதலும் மேலாய வேதியர்க்கு உரியனவாதல் விளங்கிற்று. இதனை,
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே``
(தி.3. ப.22. பா.2.) என இனிது விளங்க அருளிச்செய்தார். திருஞான சம்பந்த சுவாமிகள். இவ்வருளிச் செயலைச் சேக்கிழார் சுவாமிகள்,
``மந்திரங்க ளானஎலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிக நூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயம் தெளிய எல்லாம்
செழுமறையோர்க் கருளிஅவர் தெளியு மாற்றால்
முந்தைமுதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம்அஞ் செழுத்து மேயென்று
அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்``
(தி.12 பெ. பு. திருஞா. 266.) என விரித்தோதியருளினார்.
இவ்விரிவினுள் ``வைதிகநூற்சடங்கு`` என்றது, ``எரி பெருக்குவர்`` எனவும், ``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்`` எனவும் மேற்காட்டிய சுவாமிகள் திருமொழியுட் குறிக்கப்பட்டவற்றை எனவும், ``அச்சடங்கினால் வந்த சிந்தை மயக்குறும் ஐயம்`` என்றது, எரியையும் அருக்கனையும் அன்னபிறவற்றையும் சிவபிரான் உருவாக அறியாது பிறவாறு மயங்கிக்கொள்ளுதலை எனவும், ``அவ்வையமெல்லாம் தெளிய அருளி` என்றது, எரி ஈசனது உருவருக்கமே என்றும், அருக்கனாவான் அரனுருவே என்றும், பிறவும் அன்ன என்றும் இவ்வாறு தெளிவித்தருளினமையை என்றும் நாயனார் திருமொழியோடு கூட்டி உணர்ந்துகொள்க.
இதனானே, திருஞானசம்பந்தரது தொகைத் திருமொழிகட்கு நாயனார் திருமொழி விரியாக நின்று விளக்கந்தந்தருளுதலையும், அவ்விளக்கத்தின்வழி நின்றே சேக்கிழார் விளக்கம் தந்து செல்லுதலையும் அறியலாகும்.
இவ்வாற்றால் எரியைச் சிவபிரான் உருவருக்கமாக உணராது, எல்லாத் தேவர்கட்கும் அவரவர்க்கும் உரிய அவியைச் சுமந்து சென்று கொடுக்கும் ஒரு தேவனது உருவாகவும், பிறவாறும் கொண்டு வேட்டல் வேட்பித்தல்களைச்செய்வோரும், அவ்வாறே பகலவன் வழிபாடு முதலியவற்றைப் பிறவாற்றாற் செய்வோரும் மேலாய வேதியர் ஆகாமை பெறப்பட்டது. இம்மேலாய வேதியர் ஆகாதாரைத் திருமூல நாயனார், ``பேர்கொண்ட பார்ப்பான்`` (தி.10 திருமந்திரம் - 519) என்று அருளிச்செய்தார். இன்னோரன்ன அருமைத் திருமொழிகள் பலவற்றான், ``வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்`` (தி.3. ப.54. பா.1.) என்புழி. ``அந்தணர்`` என அருளிச்செய்யப் பட்டவரும், திருமுறையும் பிறவுமாகிய சைவநூல்களுள் `அந்தணர்` எனப் போற்றப்படுவோரும் இன்னர் என்பது ஐயமற விளங்கும்.
ஈண்டு, ``மேலாய வேதியர்`` என்றதில், மேலாய என்னும் அடையை, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாகக் கொண்டு `வேதியருள் மேலாய வேதியர்` எனவும், இயைபின்மை நீக்கிய விசேடணமாகக் கொண்டு, `மக்களுள் மேலாய வேதியர்` எனவும் எவ்வாறுரைப்பினும் மேற்கூறிய எல்லாம் பொருந்துமாறு அறிந்து கொள்க.
இனி, மேலாய வேதியரால் வேட்கவும் வேட்பிக்கவும்படும் வேள்விகள் அப்பொழுதேயாயினும், வழிமுறைக்கண் ஆயினும் சிவபிரானை அடைவிக்கும் ஆகலின், அவனை அவ்வேள்விகளின் பயன் என்று அருளிச்செய்தார். இச் சைவநெறி, வைதிக நெறிக்குச் சிறிதும் மாறானது அன்றென்பது உணர்த்துதற் பொருட்டு, ``நாலாய மறைக்கிறைவன் ஆயினான்`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 10

மீளாத ஆளென்னை உடையான் தன்னை
வெளிசெய்த வழிபாடு மேவி னானை
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து
வன்கூற்றி னுயிர்மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்
தோள்வலியுந் தாள் வலியுந் தொலைவித் தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

விட்டுப்பிரியாத அடிமையாக என்னை உடையவனும், அறிவு ஒன்றிச் செய்த வழிபாட்டை விரும்புபவனும், மார்க்கண்டேய மறையவனுக்கு ஒருகாலும் மாளாதவாறு உயிரளித்து வலிய கூற்றின் உயிர் நீங்கும் வண்ணம் உதைத்தவனும், தன் தோள் வலிமையை மதித்துக் கயிலை மலையை எடுக்க முயன்ற காமுகனாகிய இராவணனுடைய தோள்வலியும் முயற்சி மிகுதியும் கெடச் செய்து, அவன் தன்னை உணர்ந்த அப்பொழுதே அவனுக்கு மிகுந்த வாழ்நாளையும் வாளையும் வழங்கிய தலைவனும் ஆகிய சிவ பெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

``ஆள்`` என்பதில், `ஆக` என்பது விரித்து. `என்னை மீளாத ஆளாக உடையான்` என உரைக்க. வெளி - ஒளி; அறிவு; அது சிவபிரானையே. முதல்வனாக அறிவது. `வெளியோடு செய்த வழிபாடு` என்க. மேவினான் - விரும்பினான். ``வெளி`` என்றது ஆகு பெயராய், `வெளிதாகிய நாரை செய்த வழிபாட்டை விரும்பினவன்` என்னும் பொருளையும் தோற்றுவித்தல் காண்க. மறையவன், மார்க்கண்டேயர். `மாளற்பாலதாய மறையவன் உயிரை மாளாமை வைத்து, மாளாததாய வன்கூற்றின் உயிரை மாள வைத்தான் என்றது, அவனது எல்லா முதன்மையும் உடைமையை வியந்தருளிச்செய்தவாறு. இராவணனை, `தூர்த்தன்` என்றல், பிறன்மனை நயந்தமைபற்றி. நாள் - வாழ்நாள்; ``நீண்ட வாழ்நாள்`` என்பது, எடுத்தோதியதனாற் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 1

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , சொல் வடிவாய் நிற்கும் நான்கு மறைகளும் ஆறு அங்கங்களும் ஆனவரும் , சொல்லையும் அதன் பொருளையும் கடந்த ஒளிப்பிழம்பாம் தன்மையரும் , பக்க மலைகள் நிறைந்த கயிலை மலையில் வாழ்பவரும் , கடலிடத்துத் தோன்றிய நஞ்சையுண்டு கறுத்த கழுத்தினரும் , வலிமைமிக்க அழகிய மலை போன்ற திண்ணிய தோளினரும் , பருவதராசன் மகள் பார்வதியின் கணவரும் , கொலைத் தொழில் பழகிய மூவிலை வேலை ஏந்திய அழகரும் ஆவார் .

குறிப்புரை :

சொல் மலிந்த - சொற்கள் நிறைந்த ; என்றது , ` சொல்வடிவாய் நிற்கும் ` என்றபடி . ` சொற்பொருள் ` என்றது , சொற்பொருள் உணர்வை ; அதுவே நாதமாதலின் , ` அதனைக் கடந்த ` என்றது , ` நாதத்தைக் கடந்த ` என்றவாறாயிற்று . ` சுடர் ` என்றது கதிர்களையும் , ` சோதி ` என்றது அக்கதிர்களின் திரட்சியையும் . நாதந்தானே உயிர்களின் அறிவை விளக்கி அவ்வறிவாய் நிற்றலின் , ` அதனைக் கடந்த சுடர்ச் சோதி ` யாதலாவது , அதுபோல விளக்குவதொரு பொருளை வேண்டாது , தானே இயல்பாய் விளங்கி நிற்கும் அறிவாதலாம் . ஆகவே , ` சொன்மலிந்த நான்மறை ஆறங்கம் ஆகிச் சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதி ` என்றது , ` தான் இயல்பாகவே விளங்கும் இயற்கை யுணர்வினனாய் நின்று , நாதத்தைச் செலுத்தி , அது வாயிலாக உயிர்களின் அறிவை விளக்கிநிற்பவன் ` என்றருளியவாறாதல் அறிக . ` உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் - நின்ற மெய்யா ` ( தி .8 திருவா . சிவ புரா . 33 - 34) என்றாற்போலுந் திரு மொழிகள் இதனையே குறிக்கும் என்க . சமட்டியாய் ( தொகுதியாய் ) நிற்கும் ஓங்காரம் வியட்டியில் ( பகுதியில் ) ` அகாரம் , உகாரம் , மகாரம் , விந்து , நாதம் ` என ஐந்தாய் உயிர்களின் அறிவை விளக்கும் ; அவை அங்ஙனம் விளக்கும்படி அவற்றை இறைவன் ஐவகை நிலையில் நின்று செலுத்துமாற்றினை , ` அகார உகாரம் அகங்காரம் புத்தி மகாரமனம் சித்தம் விந்துப் - பகாதிவற்றை நாதம் உளவடிவா நாடிற் பிரணவமாம் போதம் கடற்றிரையே போன்று ` எனவும் , ` எண்ணில வோங்காரத் தீசர் சதாசிவமாம் நண்ணிய விந்துவொடு நாதத்துக் - கண்ணிற் பகரயன்மா லோடு பரமனதி தெய்வம் அகரஉக ரம்மகரத் தாம் ` எனவும் விளக்கியது சிவஞானபோதம் . ( சூ . 4. அதி . 1.) ஓங்காரம் பருப்பொருளாக மேற்கூறிய ஐந்து பகுதிகளாக ( பஞ்சகலைகளாக ) ப் பகுக்கப்படுதலே பெரும்பான்மை ; மற்றும் அதனை மிக நுட்பமாகப் பன்னிரண்டு பகுதிகளாகவும் , பதினாறு பகுதிகளாகவும் பகுத்து , யோகநெறியில் அவைகளை உன்னி உணர்ந்து அவற்றின் நீங்கும் முறையும் உண்டு ; அவ்விடத்து , அப் பகுதிகள் முறையே , ` பன்னிருகலைப் பிராசாத மந்திரம் ` எனவும் , ` பதினாறுகலைப் பிராசாத மந்திரம் ` எனவும் , அவற்றை உன்னி உணரும் யோகம் , பிராசாத யோகம் ` எனவும் கூறப்படும் . அவை எல்லாவற்றிற்கும் முதலாய் யாண்டும் யாவர்க்கும் உடனாய் நின்று உதவுவது இறைவனது திருவருளேயாகும் . அத்திருவருள் ஒன்று தானே எண்ணிறந்த வகையில் அவரவர்க்கு ஏற்குமாற்றால் நின்று உதவும் வியட்டி நிலைகளையே இங்கு , ` சுடர் ` எனவும் , அந் நிலைகள் அனைத்தையும் உடைய முதல்வன் தான் ஒருவனேயாய் நின்று நிலவுதலையே , இங்கு , ` சோதி ` எனவும் அருளிச்செய்தார் என உணர்க . இதனானே மெய்ந்நூல்களின் ( தத்துவ சாத்திரங்களின் ) பரப்புக்கள் அனைத்திற்கும் முதலாய் நிற்பன திருமுறைகள் என்பதும் தெற்றெனத் தெளிந்துகொள்க . ` ஆகிக் கடந்த ` என இயையும் . மேற்கூறியனவெல்லாம் இனிது விளங்குதற் பொருட்டே , ` ஆகிக் கடந்த சுடர்ச்சோதி ` என எச்சமாக்கி , ஒரு தொடர்ப்பட அருளிச் செய்தார் . ` சொற்பொருளும் ` என்ற உம்மை , நுட்பத்தின் மிகுதியுணர நின்ற சிறப்பும்மை . வாணர் , ` வாழ்நர் ` என்பதன் மரூஉ ; ` வாழ்பவர் ` என்பது பொருள் . ` சொற் பொருளுங் கடந்த நுண்ணியராயினும் , உயிர்கள்பொருட்டுப் பரியராயும் விளங்கினார் ` என்பார் , ` கல் மலிந்த கயிலைமலை வாணர் ` என அருளிச்செய்தார் ; ` கல் ` என்றது , பக்க மலைகளை , ` மல் மலிந்த ` ( வலிமை நிறைந்த ) ` அழகிய மலைபோலும் திண்ணிய தோள்களை உடையவர் ` என்க . கொல் மலிந்த - கொல்லுதல் நிறைந்த . மூவிலை வேல் - சூலம் . குழகர் - அழகர் . இத்திருப்பதிகம் முழுவதும் இறைவனைச் சுவாமிகள் , ` கூத்தன் ` என்றே குறித்தருளுகின்றார் .

பண் :

பாடல் எண் : 2

கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

நல்லதேனின் சிறிய துளிகளை மிகுதியாக ஏந்தித் தென்றல் தவழும் முன்றிலின்கண்ணுள்ள பொழிலிடத்துப் பாளைகள் விரிதலால் துளிக்கும் தேனின் மணம் கமழப்பெறுவனவும் , வளைவு பொருந்திய இளம்பிறையைத் தடவும் துகிற்கொடிகளைக் கொண்டவனும் ஆகிய , மாடங்களை உடைய குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , காட்டில் எழுச்சிமிக்க நல்லிள வேட்டுவன் ஆகி விசயனுடைய ஊக்கத்தின் அளவினையும் விற்றொழிலின் பயிற்சி முழுவதையும் அறிந்தவரும் , விரைந்து நடக்கும் நல்லிள ஆனேற்றை ஊர்ந்து இந்நிலவுலகிற்கு அப்பாலும் பிச்சைகொள்ளத் திரியும் அழகரும் ஆவார் .

குறிப்புரை :

கான் - காட்டில் , ` நல் இளங்கலி மறவன் ஆகி ` என்க . கலி - எழுச்சி . மறவன் - வேட்டுவன் . ` கருத்து ` என்றது , ஊக்கத்தை . செரு - போர் . விற்றொழிலில் அவன் பயின்ற அனைத்தையும் காட்டச்செய்தார் ஆகலின் , ` செருத்தொகுதி ` என்று அருளினார் . ` கருத்தளவையும் , செருத்தொகுதியையும் கண்டார் ` என்க . ` ஆன் விடை ` என இயையும் . ` அண்டம் ` என்றது , நில அண்டத்தை . ` அதற்கு அப்பாலும் திரிவர் `. என்றது , ` ஏனைய நீர் அண்டம் முதலிய வற்றுள் உள்ளார்க்கும் இவ்வாறே அருள்செய்வார் ` என்றருளியதாம் . ` தேன் துவலை ` என இயையும் ; இளமை , இங்குச் சிறுமை மேல் நின்றது . துவலை - துளி . ` துவலை மலிதல் `, தென்றலுக்கு அடை . ` தேறல் ` என்றது மாடங்களில் உள்ளார் பருகும் தேனினை . ` கூன் நல் இளம் பிறை தடவு ` என்றது , கொடிக்கு அடை . ` தென்றல் இயங்கும் முன்றிலின்கண் உள்ள பொழிலிடத்துப் பாளைகள் விரியப்பெறுவனவும் , உண்ணப்படும் தேனினது மணம் வீசப்பெறுவனவும் , பிறையைத் தடவும் கொடிகளைக் கொண்டனவும் ஆகிய மாடங்களையுடைய குடந்தை ` என்க .

பண் :

பாடல் எண் : 3

நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையர் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க் கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் திருநீறு பொருந்திய தம் திருவுருவத்தையும் , நெற்றிக் கண்ணினையும் , பிறையொடு பாம்பும் நீர் நிறைந்த கங்கையும் பொருந்திய சடைமுடியையும் , அழகிய பொன்நிறத் தோள்களையும் அடியவர்க்குக் காட்டி அருள்புரிவாராய் , இடபம் பொறித்த கொடியை உயர்த்தியவராய் , ஏழுலகங்களும் வணங்கும் திருவடிகளை உடைய ஈசராய்த் தம் இடப்பங்காய் இடம் பெற்ற மலைமகட்குக் கொழுநராயும் திகழ்பவர் .

குறிப்புரை :

` வருத்திய ` எனப் பொருள் தரும் ` அலைத்த ` என்னும் சொல் , ஈண்டுப் பலவிடத்தும் ` பொருந்திய ` என்னும் அளவாய் நின்றது . நீறலைத்த திருவுரு என்பது முதலாக , ` அம்பொன் தோள் ` என்பது ஈறாக உள்ளவற்றை எடுத்தோதி , ` அவைகளை அடியவர்க்குக் காட்டி அருள்புரிவார் ` என்று அருளிச்செய்தது , மெய்யுணர்வு தோன்றப் பெறும் செவ்வி பெற்று அதனை அவாவி நிற்கும் நன் மாணாக்கர்க்கு அதனை ஒருவார்த்தையால் உணர்த்தியருளும் உறுதிச் சொல்லாய் நின்று பயன் தருவதாதல் காண்க . நிமிர் - உயர்ந்த .

பண் :

பாடல் எண் : 4

தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

வேதவழி ஒழுகுதலில் மிக்க வன்மையுடைய மறையவராய் விளக்கம்பெறும் வேள்வியிடத்து எழும் மிகு புகை விண்ணிடத்துப் போய் மழையைப் பெய்விக்க , கழனிகளில் மாமரத்தினுடைய இனிய கனிகள் சிதற அவற்றின் சாறு பரவிப் பாயும் குடந்தைக் கீழ்க் கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , தக்கனது பெருவேள்வியை அழித்தவரும் , சந்திரனை ஒற்றைக் கலையுடன் கைப்பற்றித் தலையில் தரித்துக் காப்பாற்றியவரும் , செவ்வானொளி , பவளஒளி , மின்னொளி , கொழுவிய சுடர்த்தீயொளி , ஞாயிற்றொளி , ஆகிய எல்லா ஒளியும் ஒருங்கு கலந்தாற் போன்ற செம்மை நிறம் உடையவரும் ஆவார் .

குறிப்புரை :

` கவர்ந்து ` என்றது ஈண்டு , ` கைக்கொண்டுகாத்து என்னும் பொருட்டாய் நின்றது . ` தக்கனது சாபத்தால் தேய்ந்தொழிந்த ஏனைக்கலைகள் போல இவ்வொருகலையும் ஒழியாதவாறு கைப்பற்றிக் காத்துப் பின் சடையில் தரித்தார் ` என்க . சந்திரனைக் கலைகவர்ந்து என்றதனை ` குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் ` ( குறள் . 1029) என்பது போலக் கொள்க . சந்திரனைக் காத்ததும் . தக்கனுக்கு மாறாய செயலேயாதல் அறிக . செக்கர் - செவ்வானம் , ` செக்கர் ஒளி முதலாக ஞாயிற்றின் ஒளிஈறாக உள்ள அனைத்தொளியும் ஒருங்கு கலந்தாற் போலும் செம்மை நிறம் உடையவர் ` என , அவரது திரு மேனிப் பொலிவினை வியந்தருளிச்செய்தார் . ` தீ , ஞாயிறு ` என்றனவும் , அவற்றின் ஒளியையே என்க . திறலாவது , வேதம் முதலிய கலைகளை ஓதுதலினும் ஒழுகுதலினும் உள்ள வன்மை , வேள்வி வேட்டலால் பருவமழை பொய்யாது பெய்தல் பற்றியும் , வேள்விப் புகை உருவத்தால் மேகத்தோடு ஒத்திருத்தல் பற்றியும் ` அவ்வேள்விப் புகைதானே விண்ணிற் போய் மேகமாய் நின்று மழை பொழியும் ` என , தற்குறிப்பேற்றமாக அருளிச்செய்தார் . ` விண் போய் ` என இயைக்க . ` விண்ணாய்ப் பொழிய ` என ஆக்கம் வருவித்து , ` விண் - மேகம் ` என்றலுமாம் . கொக்கு - மாமரம் . ` சிதறி ` என்றதனை , ` சிதற ` எனத் திரிக்க . ` தேறல் ` என்றது , மாம்பழத்தின் சாற்றினை .

பண் :

பாடல் எண் : 5

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நீலவுரு வயிரநிரை பச்சை செம்பொன்
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

அழகிய அரதனங்களைக்கரையில் ஒதுக்கி , மலையினின்று இறங்கிவரும் காவிரியின் நன்னீரால் சிறப்புமிகும் குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , இயமனது ஆற்றலையழித்ததும் , கழல் அணிந்ததும் ஆகிய காலை உடையவரும் , மன்மதனது அழகிய உடலை அழல் உண்ணும் வண்ணம் நுதற் கண்ணை விழித்து நோக்கியவரும் , சனகாதி முனிவர் நால்வர்க்கும் , கல்லாலின் கீழ் அமர்ந்து அறம் உரைத்தருளியவரும் , ஆண் பெண் அலிகளின் அல்லராம் தன்மை உடையவரும் , நீலமணி , வரிசைப் படப்பதித்தற்குரிய வயிரம் , பச்சை , செம்பொன் , நீடு பளிங்கு என்றிவற்றுள் இன்னது ஒன்று போலும் நிறத்தினர் என உணர ஒண்ணாததொரு நிறமுடையவரும் ஆவார் .

குறிப்புரை :

` எழிலை அழல் விழுங்க ` என்க . கண்டார் - நோக்கினார் ; நோக்கியது நெற்றிக்கண்ணால் என்க . ` ஆல் ` என்றது , அதன் நிழலைக் குறித்தது . அல்லர் ஆனார் - அல்லராம் தன்மையை உடையவராயினார் . ` உரு ` என்றது , மணியை , நிரை - வரிசைப்படப் பதித்தற்கு உரிய . ` நிறை பச்சை` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` நவ மணிகளும் , பொன்னும் , பளிங்கும் ஆகிய இவற்றுள் இன்னதன் நிறம்போலும் நிறத்தினர் என உவமையானும் உணர ஒண்ணாததொரு நிறமுடையவர் ` என்றபடி . கோலம் - அழகு .

பண் :

பாடல் எண் : 6

முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்
முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு
சுடர்ச்சோதிக்கடிச்செம்பொன்மலைபோலிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழுமெம் கூத்தனார் , முடியினிடத்தே வளர்மதியைத் தரித்தவராய் , மூன்றாய் எழுந்து தோன்றும் இளஞாயிறுகள் என்னத் தக்க மலர்க்கண்கள் மூன்றுடையவராய் , பாதத்தில் கட்டப்பட்டொலிக்கும் சிலம்பினராய் , அருள் நிறைந்து ஒளிமிக்க வரிசையான பற்களுடன் அழகிதாய் விளங்கும் செவ்வாயினராய் , உடுக்கை போன்ற இடுப்பினை உடைய உமை யம்மையை இடப்பங்காய்க் கொண்டவராய் , ஒளிப்பிழம்பாய் விளக்கம் மிக்க செம்பொன் மலை போன்றவராய் , இந்நாள் என் மனத் திடத்தே புகுந்து குடிகொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

` மூன்றாய்த் தோன்றுங் கண்கள் ` என இயையும் . ` முளைஞாயிறு அன்ன ` என்றது தொழில் பற்றி வந்த உவமை ; ` மூன்று கண்கள் யாதொன்று திறப்பினும் சிறிது திறத்தலே யன்றி முழுவதூஉம் திறப்பின் உலகம் ஆற்றுமாறில்லை ` என அவற்றது ஆற்றல் மிகுதியை உணர்த்தியருளியவாறு . ` அன்ன ஆற்றலை உடையவாயினும் , மென்மையிற் பிறழா ` என்பார் , ` மலர்க்கண்கள் ` என்று அருளினார் . ` அருள் ஆர் , சோதி , அணி ` என்னும் மூன்றும் ` முறுவல் ` என்றதனோடு தனித்தனி முடியும் . ` நிறைந்த அருளைப் புலப்படுத்துவதாயும் , தண்ணிய ஒளியினையுடையதாயும் நின்று , இயல்பானே அழகியதாகிய முகத்திற்குப் பின்னும் பேரழகினைச் செய்வதாகிய முறுவல் ` என்றருளியவாறு . ` இத்தகைய முறுவலோடு கூடிய சிவந்தவாயினது அழகு சொல்ல ஒண்ணாததாய் நிற்கும் ` என்பார் . ` அணிமுறுவற் செவ்வாய் ` என்று அருளினார் . சுடர்ச் சோதி - கதிர்களின் திரட்சியாகிய ஒளிப்பிழம்பு . கடி - விளக்கம் . ` சோதி ` முதலிய மூன்றும் மலைக்கு அடை . இங்ஙனம் முடிகொண்ட வளர்மதி முதலியவற்றை வகுத்துப் புகழ்ந்து , ` குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் ` என்று அருளிய இதனால் , சுவாமிகளுக்குச் சிவபிரானது திருமேனிக் காட்சியால் விளைந்த பேரின்ப மேலீடு தெள்ளிதிற் புலனாகும் . இவ்வருமைத் திருத்தாண்டகத்தை , ` முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும் துடிகொண்ட கையும் துதைந்தவெண் ணீறும் சுரிகுழலாள் படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலும்என் பாவிநெஞ்சிற் குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே .` என்னும் திருவிருத்தத்தோடு உடன்வைத்து உணர்க . ( தி .4. ப .81. பா .7.)

பண் :

பாடல் எண் : 7

காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம்
பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் மேகம் போல விளங்கும் அழகிய உருவத்தையுடைய திருமாலுக்கும் , படைப்பிற்குக் காரணராய்த் தாமரை மலரில் விளங்கும் பிரமனுக்கும் காண முடியாதபடி புகழ் நிலவும் நெருப்புப்பிழம்பு உருவத்தில் சிவந்து காணப்பட்டவரும் , மலையை வில்லாக வளைத்து அசுரருடைய முப்புரங்களையும் அழித்தவரும் , விளங்கும் நிலம் , நீர் , தீ , காற்று மேம்பட்ட ஆகாயம் , சூரியன் சந்திரன் , சுருதி என்றிவையாய்ப் பரவி நின்றவரும் , கூர்மையுடன் திகழும் வேலையுடைய குமரனுக்குத் தந்தையானவரும் ஆவார் .

குறிப்புரை :

கார் இலங்கு திருஉருவத்தவன் - மேகம்போல விளங்கும் அழகிய உருவத்தை யுடையவன் ; திருமால் , கமலத்தில் காரணன் - தாமரை மலரில் இருக்கும் தலைவன் ; பிரமன் . காட்சி ஒண்ணா - காணுதல் கூடாத . சீர் - புகழ் ; ` சீர்ப் பிழம்பு ` என இயையும் . பிழம்பின் - பிழம்புருவத்தில் . சிவந்தார் - சிவப்பு நிறமாயினார் . ` பார் ` என்றது , ` புனல் ` என்றதனோடு எண்ணுநிலை வகையான் இயைந்தது . ` பரமாகாசம் ` என்றது , ` ஏனைய பூதங்களின் மேம்பட்டதாகிய ஆகாசம் ` என்றபடி . ` சுருதி ` என்றது இசையை . பரந்தார் - பரவிநின்றார் .

பண் :

பாடல் எண் : 8

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் பூக்கள் பரவிய பொழிலால் தழுவப்பட்ட புகலூரில் உள்ளவரும் , புறம்பயத்தில் உறைபவரும் , அறத்தை மக்கள் விரும்பி மேற்கொள்ளும் பூந்துருத்தியில் புக்கவரும் , வண்டுகள் சூழ்ந்த பழனத்தை விரும்பிக் கொண்டவரும் , நெய்த்தானத்து நிலைத்தவரும் , சிறந்த தவஞ்செய்தற்கு ஏற்ற சோற்றுத்துறையைப் போற்றிக் கொண்டவரும் , தீயைப் போன்ற ஒளியை உமிழும் சக்கராயுதத்தைத் திருமாலுக்கு ஈந்த வரும் , திருவானைக்காவில் தொண்டு செய்த ஒப்பற்ற சிலந்திக்கு மேம்பட்ட சோழர்குடிக்குரிய அரசாட்சியை அந்நாள் கொடுத்தவரும் ஆவார் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , இறைவன் ஏனைய பல தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலையை நினைந்து அருளிச் செய்தது . புகலூர் , புறம்பயம் , பூந்துருத்தி , பழனம் , நெய்த்தானம் , திரு வானைக்கா அனைத்தும் சோழநாட்டுத் தலங்கள் . மாச் சூழந்த - ( மலர்களின் மிகுதியால் ) வண்டுகள் சூழ்ந்த . ` மா தவத்துச் சோற்றுத்துறை ` என்க . ` சிறந்த தவத்திற்கு உரிய ` என்பது பொருள் . தீச் சூழ்ந்த - தீப்போன்ற ஒளியையுடைய . திகிரி - சக்கரம் . ` ஈந்து ` என்னும் வினையெச்சம் , எண்ணின்கண் வந்தது . திரு வானைக்காவில் வாய்நூலாற் பந்தர் அமைத்த சிலந்தியைச் சோழ மன்னனாக்கிய வரலாற்றை , சேக்கிழார் நாயனார் , கோச்செங்கட் சோழநாயனார் புராணத்துள் விரித்துரைத்தருளினார் .

பண் :

பாடல் எண் : 9

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்
பொறிகிளர்வெண் பூணூல் புனிதர் போலும்
சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்
சதுரநடம் ஆட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை
அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கேட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் சினம் மிகும் பாம்பை அணிந்தவரும் , புலித்தோலை உடுத்தவரும் , பழமையானவரும் , உத்தம இலக்கணமாகிய பொறிகள் ( மூன்று வரிகள் ) விளங்கும் மார்பிடத்து வெள்ளிய பூணூலைத் தரித்த புனிதரும் , சங்குகள் வாழ்வதும் ஒலியுடையதும் ஆகிய கடல் அண்ட முகட்டில் சென்று மோதுமாறு கைகளை வீசித் திறம்பட நடனமாடும் அநாதிசைவரும் , கழலும் , சிலம்பும் கிடந்து ஒலிக்கும் திருவடிக்கு ஆளாதலில் தவறியதனால் , தந்தையாகிய அந்தணனைத் தாளிரண்டும் வெட்டுண்டு வீழ மழுவினாலெறிந்த சண்டேசருக்கு அப்பொழுதே அரவம் தவழும் சடை முடியிடத்துத் திகழும் கொன்றை மாலையைக் கொடுத்தவரும் ஆவார் .

குறிப்புரை :

பொங்கு அரவர் - மிக்க பாம்பை அணிந்தவர் . பொறி - ஒளி . ` புரி கிளர் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` சங்குக் கடல் , அரவக் கடல் ` எனத் தனித்தனி இயைக்க . அரவம் - ஓசை , முகடு - அண்ட முகடு . சதுர நடம் - திறல் வாய்ந்த நடனம் ; இதனை ` காளி யோடு ஆடி வென்ற நடனம் ` என்க . ஆட்டு - ஆடுதல் ; முதனிலை திரிந்த தொழிற்பெயர் . ` கடலின் நீரை அண்ட முகட்டைப் பொருந்துமாறு எழுப்பிவிடும் வகையில் நிலம் அதிர நடம் ஆட்டுகந்தவர் ` என்க . சைவர் - சிவ ( மங்கல ) சம்பந்தம் உடையவர் ; சிவபிரானை , ` அனாதி சைவர் ` என்னும் மரபும் உண்டு . அரவத் திருவடி - கழல் , சிலம்பு இவைகளின் ஒலி பொருந்திய திருவடி . ஆள் பிழைப்ப - ஆளாதலில் தவறியதனால் ; என்றது , ` குற்றம் செய்தமையால் ` என்றபடி . குற்றம் , ஆட்டுதற்கு வைத்திருந்த ஆன்பாற் குடத்தைக் காலால் இடறியது ; பிறிது குற்றமும் உண்டு . ` தந்தையாகிய அந்தணனை ` என்க . அற - தாள் இரண்டும் வெட்டுண்டு விழும்படி . எறிந்தார் - மழுவினால் எறிந்தவர் ; சண்டேசுர நாயனார் . ` அப்போதே அருளும் கொன்றையும் கொடுத்தார் ` என்க . ` கொங்குக் கொன்றை , சடைக்கொன்றை ` என இயைக்க . கொங்கு - வாசனை . அரவச்சடை - பாம்பணிந்த சடை . இவ்வரலாற்றின் விரிவைத் திருத்தொண்டர் புராணத்துள் , சண்டேசுர நாயனார் புராணத்திற் காண்க . திருமுறைகளுள் இவ்வரலாறு வந்துள்ள பிற இடங்களை நோக்கின் , ` எறிந்தாற்கு ` என்பதே பாடமாதல் வேண்டும் எனக் கருதலாகும் .

பண் :

பாடல் எண் : 10

ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

முதன்மை பொருந்திய காவிரி , நல்யமுனை , கங்கை , சரசுவதி , பொற்றாமரை , பிற தாமரைத் தடாகங்கள் , தெளிநீர்க் கிருட்டிணை , குமரி ஆகிய தீர்த்தங்கள் தாவிவந்து சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழுமெம் கூத்தனார் , என் வினைக்கு ஈடாகத் தம்மால் செலுத்தப்பட்டுத் துன்பக்கடலில் வீழ்ந்து துன்புறுகின்ற என்னைக் கூவிக் கரை ஏறும்படி எடுத்து , இப்பிறவியை அறுத்து யான் விண்ணவர் உலகம் எல்லாவற்றையும் தாண்டித் தமது சிவலோகத்தில் சென்று சேரும்படி , மாயை கலவாத தம் அருட்குணம் ஆறனுள்ளும் படுத்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

ஏவி தம்மால் ( இறைவரால்வினைக்கீடாகச் ) செலுத்தப் பட்டு , ` இளைக்கின்றேனைக் கூவி ஏறவாங்கி இப்பிறவி அறுத்து அமர் உலகு அனைத்தும் உருவி ஆங்கே போக ஆண்டுகொண்டார் ` எனக் கொண்டு கூட்டியுரைக்க . கூவி - அழைத்து . ஏற வாங்கி - கரை ஏறும் படி எடுத்து . இப்பிறவி அறுத்து - பிராரத்தத்தை நுகர்ந்து இப் பிறவியைத் தொலைத்த பின்பு . அமர் உலகு அனைத்தும் உருவி - விண்ணவர் உலகம் எல்லாவற்றையும் தாண்டி . ஆங்கே போக - தனது உலகிலே ( சிவலோகத்திலே ) யான் சென்று சேரும்படி . குறி இல் - மாயையின் தன்மை ஒன்றும் இல்லாத . அறு குணத்து ஆண்டு கொண்டார் - தமது அருட்குணம் ஆறனுள்ளும் படுத்து ஆண்டு கொண்டார் . இறைவனது எண்குணங்களை ஆறாகக் கூறுமிடத்து , தூய உடம்பினனாதல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதற்கண்ணும் , இயற்கை யுணர்வு முற்று முணர்தற்கண்ணும் அடங்கும் ; அவ்வாறு அடக்கி , அக் குணங்களை ` ஆறு ` என்றலும் மரபாகலின் , ` அறுகுணத்து ஆண்டு கொண்டார் ` என்றருளினார் . இதனால் , ` பாசம் நீங்கி இறைவனை அடையப்பெற்ற உயிர் அவனது குணங்களெல்லாம் தன்மாட்டு விளங்கக் கொண்டு நிற்கும் ` என்பது பெறப்பட்டது . ` எண் குணத்துளோம் ` ( ப .98 பா .10) எனப் பின்னர் வருதலுங் காண்க . இக் குணங்கள் மேலே ( ப .16. பா .4,7.) காட்டப்பட்டன . தாவி - விரைந்து . ` தாவி வரு தீர்த்தம் ` என்க . முதற் காவிரி - முதற்கண்வைத்து எண்ணப்படும் காவிரி ; இஃது இத்தலத்தின் அணிமைக்கண் உண்மையின் முதற்கண் எண்ணப்படுவதாயிற்று . பொற்றாமரைத் தீர்த்தம் , மதுரைத் திருக்கோயிற்கண் உள்ளது . புட்கரணி - தாமரைக் குளம் ; தாமரைக் குளமாய் உள்ள பிற தீர்த்தங்கள் . கோவி - கிருட்டிணை நதி . குமரி - குமரி யாறு ; இது தென்றிசைக்கண் கடலாற் கொள்ளப்பட்டது . அதனால் , அத் தென்கடல் இஞ்ஞான்று அத்தீர்த்தமாகக் கொள்ளப் படுகின்றது . ` தீர்த்தம் ` என்றது , மகாமகத் திருக்குளத்தை . ` குடந்தைக் கீழ்க்கோட்டத்திற்கு அண்மையில் உள்ள இத்திருக்குளத்தில் தீர்த்தங்கள் பலவும் தெய்வ வடிவில் வந்து கலந்து நிற்கும் என்பது புராணமாகலின் . ` இத்தீர்த்தமெல்லாம் தாவிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டம் ` என்று அருளினார் .

பண் :

பாடல் எண் : 11

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , இறையின்பம் எய்துதலையே முடிந்தபயனாய்த் தெளிய வுணர்ந்து தியானத்தில் செறிந்து நிற்பார் சிந்தையில் தித்திக்கும் சிவலோகத்து அமுதம் ஆவாரும் , நெறித்த கூந்தலையுடைய உமை ஒருபாகமாக இருக்க , அமரர் கூட்டம் வணங்க , எல்லா நலனும் நிரம்பப்பெற்றுத் திகழ்ந்தவரும் , மான்கன்றைத் தம் கரத்தில் ஏந்திய எம் வலியரும் , மதிற்காவல் மிக்க இலங்கையிறை கருத்தழியுமாறு மலைக்கீழ் இட்டு அவனை ஒறுத்துப் பின் இலக்கணம் அமைந்த அவன் இசையைக் கேட்டு விருப்புற்று அவனுக்கு நலம்பல நல்கினவரும் ஆவார் .

குறிப்புரை :

செறிகொண்ட சிந்தை - ஒன்றுதல் கொண்ட மனம் . தெளிந்து - விளங்கி . தேறி - முடிந்த பயனாய் நின்று . ` தித்திக்கும் அமுதம் ` என இயையும் . வாயளவில் தித்திக்கும் தேவர் உலகத்து அமுதத்தின் நீக்குதற்கு , ` சிவபுவனத்து அமுதம் ` என்று அருளினார் . புவனம் - உலகம் . ` சிவபவனத்து ` என்பதும் பாடம் . நெறிகொண்ட குழல் - நெறிப்பைக் ( வளைவைக் ) கொண்ட கூந்தல் . பாகம் ஆக - ஒரு பாகத்தாளாய் இருக்க . நிறைந்து - எல்லா நலனும் நிரம்பப்பெற்று . ` நிறைந்து நின்றார் ` என இயையும் . ` பாகமாகி ` எனப் பாடம் ஓதி , ` நிறைந்து வணங்க ` என்று இயைத்துரைத்தல் சிறக்கும் . மறி - மான் கன்று . குறி - இசையின் இலக்கணம் .

பண் :

பாடல் எண் : 1

புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்
போர்விடையின் பாகன்காண் புவன மேழும்
விரிந்துபல வுயிராகி விளங்கி னான்காண்
விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேதம் நான்கும்
தெரிந்துமுதற் படைத்தோனைச் சிரங்கொண் டோன்காண்
தீர்த்தன்காண் திருமாலோர் பாகத் தான்காண்
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

தேவர்கள் விரும்பித் துதித்து வணங்கும் புகழுக்கு உரியவனும் , போர்த்தொழில் வல்ல இடப ஊர்திக்குத் தலைவனும் , உலகங்கள் ஏழுமாகிப் பல உயிரும் ஆகி விளங்கியவனும் , மணமிக்க கொன்றைக் கண்ணியை உடையவனும் , வேதம் நான்கையும் உணர்ந்து முற்படப் படைப்புத் தொழிலை மேற்கொண்ட பிரமனது சிரத்தைக் கொய்தவனும் , குற்றமற்றவனும் , திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிப் பண்படுத்தப் பட்ட வயல்கள் நாற்புறமுஞ் சூழ விளங்கும் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழுஞ் சிவபெருமான் என்சிந்தையில் என்றும் நீங்காமல் நிற்பவன் ஆவான் .

குறிப்புரை :

புரிந்து - விரும்பி . ` அமரர் புரிந்து தொழுதேத்தும் ` என மாற்றியுரைக்க . ` புகழ்தக்கோன் ` ` புகழப்படுதற்கு உரியவன் அவன் ஒருவனே ` என்றவாறு ; ` பூமிமேல் புகழ்தக்க பொருளே ` ( ப .95 பா .7) எனப் பின்னர் வருவதுங் காண்க . ஏனையோரது புகழ் எல்லாம் பொருள் சேராதனவாய் ஒழிய , இறைவனது புகழே பொருள்சேர் புகழாதல் பற்றி , அவன் ஒருவனே புகழப்படுதற்கு உரியனாயினான் என உணர்க . விடையின் பாகன் - இடப ஊர்திக்குத் தலைவன் . ` உயிராகி ` என்பதில் உள்ள , ` ஆகி ` என்பதனை ` புவனம் ஏழும் ` என்பதனோடுங் கூட்டுக . விரை - வாசனை . முதல் - காத்தல் அழித்தல்களுக்கு முன்னர் . படைத்தோன் - உலகத்தைப் படைத்தவன் ; பிரமன் ; ` வேதம் நான்கும் தெரிந்தும் , முதற்கண் உலகைப் படைத்தமைபற்றி உலகத் தோற்றத்திற்குத் தன்னையே முதல்வனாக மயங்கி , அதனால் தலை ஒன்றை இழந்தான் ` என்பார் , ` வேதம் நான்கும் தெரிந்து முதற் படைத் தானைச் சிரங்கொண்டோன் ` என்று அருளிச் செய்தார் . தீர்த்தன் - முனிவன் . ` சிரங்கொண்டானாயினும் கொல்லாமையுடைய முனிவனே ` என்றவாறு . திருமால் ஓர் பாகத்தில் உடையனாதல் மேலே ( ப .58. பா .3) காட்டப்பட்டது ; அவ்வாறின்றி ` அரியலால் தேவி யில்லை ஐயன் ஐயாறனார்க்கே ` ( தி .4. ப .40. பா .5) என அருளிச் செய்தவாறு , ` திருமாலையும் தனது சத்திகளுள் ஒரு சத்தியாகக் கொண்டு ஒரு பாகத்தில் உடையவன் ` என்று உரைத்தலுமாம் . ` சிவபிரானது சத்தி ஒன்றே செயலாற்றுதற்கண் நான்காய்ப் பிரிந்து நிற்கும் ; அங்ஙனம் நிற்குமாறு , இன்பத்தில் பவானியும் , ஆடவரிடத்துத் திருமாலும் , வெகுளியில் காளியும் , போரில் துர்க்கையும் , என்பது சிவாகமங்களின் துணிபு `. ` ஏகைவ சக்தி : பரமேஸ்வரஷ்ய பின்ன சதுர்த்தா விநியோக காலே போகே பவானி புருஷேசு விஷ்ணு : கோபேது காளீ சமரே து துர்க்கா .` ` திருத்தளி ` என்பது இத்தலத்துத் திருக்கோயிலின் பெயர் .

பண் :

பாடல் எண் : 2

வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்
மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்
கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்
குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்
கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்
தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

கச்சணிந்த முலையினையுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் பெரிய வேதங்கள் ஆனவனும் , நிலமும் விண்ணும் , வெம்மைமிகு தழலும் காற்றும் நீரும் உயர்மலையும் ஆயவனும் , கொடிய நஞ்சையுண்டு கறுத்த கண்டத்தவனும் , எண்டோளினனும் , கயிலைமலையாகிய பொருப்பைத் தன் வாழிடமாகக் கொண்டவனும் ஆகித் தேரோடும் நெடுவீதிகளையுடைய திருப்புத்தூர்த் திருத்தளியில் என்றும் விருப்போடு விளங்கும் சிவ பெருமான் என் சிந்தையிலே என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான் .

குறிப்புரை :

கூர் ஆர் - மறைந்து நின்று தோன்றி வளர்தல் பொருந்திய . மண் முதலியவற்றை அஃறிணையாக எண்ணிச் செல்லுதற்கு இடையே , ` அழலவன் ` என உயர்திணையாக எண்ணினார் , ` அனைத்தையும் சடப்பொருள்களாய் எண்ணினும் , அவற்றிற்குத் தலைமை பூண்ட கடவுளராய் எண்ணினும் , இறை நிறைவு பொருந்தும் ` என்றற்கு , தலைமைக் கடவுளரை , ` அதி தெய்வங்கள் ` என்பர் . கார் ஆரும் - கருமை நிறைந்த ; ` மேகம் போலப் பொருந்திய ` என்றுமாம் . ` விருப்போடு ` என்றது , ` திருத்தளியான் ` என்ற வினைக் குறிப்போடு முடிந்தது .

பண் :

பாடல் எண் : 3

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச்சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

மின்னலும் கொடியும் போன்ற இடையினை யுடைய உமையம்மையால் என்றும் விரும்பப்படும் கேள்வனும் , மலையாகிய வலிமை மிக்க வில்லை வளைத்த கையினனும் , நல்ல பாட்டுக்களை யாக்க வல்ல புலவனாய்ச் சங்கம் போந்து நல்ல பொற்கிழியைத் தருமிக்கு அருளியவனும் ஆகி , மணமிக்க கொன்றை மலர் பொன்னின் வனப்பைக் காட்ட , அருகே நின்ற மேட்டு நிலக் காந்தள் கைகளின் வடிவினைக் காட்ட , இவற்றைக் கண்டு வண்டு இசைபாடும் முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய வளமிக்க திருப் புத்தூர்த் திருத்தளியில் விளங்கும் சிவபெருமான் என் சிந்தையில் என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான் .

குறிப்புரை :

` மின் காட்டும் மருங்குல் , கொடி மருங்குல் ` எனத் தனித்தனி இயைக்க . ` மின்னலைத் தன்னிடத்தே காட்டும் ` என்பது சொற்பொருளாயினும் , ` காட்டும் ` என்பது உவம உருபேயாம் . மருங்குல் - இடை . ` விருப்பவன் ` என்பது ` கேள்வன் ` என்னும் பொருளுடைத்து ; அகரம் , சாரியை ` பொருப்பாகிய வலியை உடைய சிலை ` என்க . பொருப்பு - மலை . சிலை - வில் . ` தருமி ` என்னும் அந்தணச் சிறுவனுக்கு , ` கொங்கு தேர் வாழ்க்கை ` ( குறுந்தொகை -2) என்னும் அகப்பாட்டைப் பாடி ஈந்து , அதனை அறியாது குற்றங்கூறிய நக்கீரர் முன் புலவனாய்ச் சங்கத்திற் சென்று வாதிட்டு , பாட்டுக் குற்றம் அற்றதாதலையும் , அதனைக் குற்றங் கூறியதே குற்றமாதலையும் தெளிவித்து பாண்டியன் வைத்திருந்த பொற்கிழியை அவ்வந்தணச் சிறுவன் பெறச் செய்து மறைந்தமையின் , ` நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி , நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண் ` என்று அருளிச்செய்தார் . கனகம் - பொன் . கிழி - முடிப்பு . இவ்வரலாற்றின் விரிவை , திருவிளையாடற் புராணத்துட் காண்க . இவ்வருட் செயலை ஈண்டு அருளிச் செய்தமையால் , ` தருமி ` என்பவன் ` இத்தலப் பெருமானை வழிபட்டோனாகவும் கருத இடம் உண்டு . ` கொன்றை பொன்காட்ட ` என்க . கடி - வாசனை . கொன்றையும் காந்தளும் பொன்னையும் , கையையும் காட்டுதல் தம்தம் பூக்களின் வண்ணத் தானும் , வண்ணத்தொடு வடிவத்தானும் என்க . ` கொன்றை சொரிகின்ற பொன்னை , காந்தள் கையேந்தி வாங்கும் ` என அணிந்துரைத்தல் கருத்து . புனம் - காடு . கொன்றையையும் காந்தளையும் இயைத்து அருளிச்செய்தமையின் , ` செழும்புறவு ` என்றது , முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய நிலத்தை என்க . தென் - இசை . ` இசை பாடுவது வண்டாக , அதற்குச் சொரியப்படும் பொன்னைக் காந்தள் பெறுகின்ற திருப்புத்தூர் ` என்றது , ` பாட்டை ஆக்கினோன் சிவபிரானாக , அதற்குப் பாண்டியனால் வைக்கப்பட்ட பொற்கிழியைத் தருமி பெற்றான் ` என்பதனைத் தோற்றுவிக்கும் குறிப்பு மொழியாய் நின்று , சிவ பிரானது அமைதி ( திருத்தி ) யையும் , அருள் நிலையையும் விளக்குவ தாம் என்க .

பண் :

பாடல் எண் : 4

ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

இதழ்கள் நிறைந்த தாமரை மலரில் விளங்கும் நான்முகனும் , திருமாலும் இந்திரனும் , பணிந்து துதிக்கும் வண்ணம் இருப்பவனும் , இதழ்களையுடைய கொன்றை , வன்னி , ஊமத்தை ஆகிய மலர்கள் செறிந்த செஞ்சடையினனும் , குற்றமற்ற சங்கம் பக்கத்தே ஏறி முத்தை ஈனும் கடற்கரையை எல்லையாக உடைய மறைக்காட்டில் வாழ் மணியும் ஆகி , வளவிய பயிர்களை மேயும் எருமை கரை மீது ஏறி நீர் நிலையில் படியும் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

ஏடு ஏறு , தோடு ஏறு - இதழ்கள் பொருந்திய . ` ஏடு தோடு ` என வந்தது , பொருட்பின் வருநிலை , கடுக்கை - கொன்றை , துகள்தீர் - குற்றம் அற்ற ; நல்ல . சங்கம் - சங்கு . மாடு - கரை . கானல் - கடற்கரை . மேதி - எருமை . சேடு - மேடு ; என்றது , கரையை , ஏறி - கடந்து சென்று . படியும் - மூழ்குகின்ற , ` மேதி சேடு ஏறி மடுப் படியும் ` என்றது . ` மருத நிலஞ் சூழ்ந்த ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்
காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்
பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும்
பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டிகாண்
தருமருவு கொடைத்தடக்கை யளகைக் கோன்றன்
சங்காதி ஆரூரில் தனியா னைகாண்
திருமருவு பொழில்புடை சூழ்திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

பிறப்பைப் பொருந்துவதற்கு ஏதுவாகிய வலிய வினை நோயை நீக்கியவனும் , விருப்பம் வருதற்குரிய பொலிவுடன் விளங்கும் கச்சி ஏகம்பனும் , நிலையாமைப் பெருமை மேவும் பெரிய நிலவுலகில் பொருந்தும் பிணிகளைத் தீர்க்கும் குளிர்ச்சிமிக்க பெரும் பற்றப் புலியூர் மன்றாடியும் , கற்பகத்தருப் போலக் கொடுக்கும் பெருமை மிக்க கையினையுடைய அளகைக் கோன் ஆகிய குபேரனுக்கு மிக்க நண்பனும் , ஆரூரில் அமர்ந்த ஒப்பற்ற யானையும் ஆகித் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

கரு மருவு - பிறப்பில் பொருந்துதற்கு ஏதுவாகிய காற்றினான் - உமிழ்வித்தான் ; நீக்கினான் . ` அகற்றினான் ` என்பதும் பாடம் . ` பெருமை ` என்னும் பண்புப் பெயரின் ஈறு தொகுத்தலாயிற்று . ` பெருமை மருவு ` என்றது , ` நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும் - பெருமை யுடைத்திவ் வுலகு ` ( குறள் . 336) என்றதனை உட்கொண்டு அருளிய இகழ்ச்சிக் குறிப்பு . ` பிணிகள் தீர்க்கும் மன்றாடி ` என இயையும் . பெரும்பற்றப்புலியூர் - தில்லை . மன்று - சபை . தரு மருவு - கற்பகத் தருவைப்போலும் . அளகைக் கோன் . குபேரன் . சங்காதி - மிக்க நண்பன் ; ( சங்காதம் - மிக்க நட்பு .)` சங்காதி ` என்பதன்றிப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல , ஆரூரில் - திருவாரூரில் ; உள்ள ஒப்பற்ற யானை போன்றவன் , ` யானை ` என்றது , காதற் சொல் . திரு - அழகு .

பண் :

பாடல் எண் : 6

காம்பாடு தோளுமையாள் காண நட்டங்
கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வோன்காண்
பவளத்தின் பருவரைபோல் படிவத் தான்காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
சங்கரன் காண் பொங்கரவக் கச்சை யோன்காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

மூங்கில் போன்ற தோளுடைய உமையம்மை காணுமாறு பல கூத்து விகற்பங்களையும் கலந்து ஆடியவனும் , சீற்றம்மிக்க பாம்பு கையிற் கங்கணமாய்ப் பொருந்தி ஆடத் தலைஓட்டில் பிச்சை ஏற்பவனும் , பவளத்தால் ஆன பெரிய மலை போன்ற வடிவினனும் , கயிற்றால் பிணித்தற்குரிய சினமிக்க இடபத்தையே யானை என மதிக்கத்தக்க ஊர்தியாகக் கொண்ட சங்கரனும் , பொங்கும் சினப் பாம்பையே அரைப்பட்டிகையாகப் புனைந்தவனும் ஆகி நீர்ச் சேம்புகள் நிறைந்த வயல்கள் நாற்புறமும் சூழ்ந்த திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

காம்பு - மூங்கில் . ஆடு உவம உருபு . படிவத்தான் - வடிவத்தை உடையவன் ; படிமத்தான் ` என்பது பாடம் அன்று , தாம்பு ஆடு - கயிற்றிற் பொருந்தும் ; என்றது ` பசுவாந் தன்மை உடைய ` என்றபடி . ` தாம்பாடு , சினம் ` என்றவை இன அடைகள் . பகடு - யானை ; சிறந்த ஊர்தி யானையே யாகலின் , அதனையே அருளினார் . பொங்கு - சினம் மிக்க ; இதுவும் இன அடை . சேம்பு ஆடு - நீர்ச் சேம்புகள் பொருந்திய .

பண் :

பாடல் எண் : 7

வெறிவிரவு மலர்க் கொன்றை விளங்கு திங்கள்
வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு
பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்
ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானல்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண் அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

மணம்நாறும் கொன்றை மலரையும் விளக்க முடைய திங்களையும் வன்னியையும் விரிந்த சடைமேல் சூடியவனும் , புள்ளிகள் பொருந்திய கோபிக்கும் நாகத்தையும் , எலும்பினையும் அணியாகப் பூண்டவனும் , போர்க்குணமுடைய புலியினது தோலை ஆடையாகக் கொண்டவனும் , அறிதற்கரிய நுண்பொருள்களாய் ஆனவனும் , ஆயிரம் பேர் உடையவனும் ஆகி , அழகியதும் , குளிர்ந்ததும் ஆகிய கடற்கரையிடத்தே நெருங்கி விளங்கும் பொழில்கள் சூழ்ந்ததும் , வரிசையாயமைந்த மாடங்களை உடையதுமாகிய திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

வெறி - வாசனை . மிலைச்சினான் - சூடினான் . பொறி - புள்ளி . கதம் - சினம் . அக்கு - எலும்பு , ` கானல் செறிபொழிலைச் சூழும் ` என்றதனை , நெய்தல் மருதத்தொடு மயங்கியதாக உரைக்க .

பண் :

பாடல் எண் : 8

புக்கடைந்த வேதியற்காக் காலற் காய்ந்த
புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையாளஞ்ச
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்
வெண்மதியைத் தலைசேர்த்த தண்மை யோன்காண்
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை
ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்
திக்கணைந்து வருமருங்கின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

தன்பால் அடைக்கலம் புக்க வேதியன் மார்க் கண்டேயனுக்காக இயமனைக் கோபித்துக் கொன்ற புண்ணியனும் , வெள்ளிய பற்களையும் வெள்ளிய வளையல்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு சினம் மிக்கு எதிர்த்த யானை நடுங்க அதன் தோலை உரித்தவனும் , வெள்ளிய மதிப்பிறையைத் தலையில் தரித்து அருளியவனும் , மன்மதன் வில்லாகக் கொள்ளுதற்கு வாய்ப்புடைய அக்கரும்பும் , பெருமைமிக்க புன்னையும் நெருங்கிய சோலைமிக்க ஆரூர்க்கு அதிபதியும் ஆகி , மெல்லிதாய்க் குளிர்ந்த தென்றல் வடக்குத் திக்கினை அணையவரும் இடத்தில் உள்ள திருப்புத்தூர்த் திருத் தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

வேதியன் - மார்க்கண்டேயர் . வெள்வளை - சங்க வளை . தண்மை - அருள் . ` அக் கரும்பு ` என்பதில் அகரம் பண்டறி சுட்டாய் , பெருமை குறித்து நின்றது . ` கரும்பும் புன்னையும் நெருங்கு சோலை ` என்றதனால் , நெய்தலும் மருதமும் மயங்கியதாக உரைக்க . அதிபதி - தலைவன் . மருங்கு - இடம் .

பண் :

பாடல் எண் : 9

பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்
பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று
ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்
பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

அண்டினார்க்குத் துணையானவனும் , தேவர்க்கும் மற்றையவர்க்கும் அவரின் வேறுபட்டு மேலானவனும் , அவரோடு கலந்து நின்று அவரைப் போலக் கீழானவனும் , தக்கனது வேள்வியை அழித்த வெற்றியினனும் , கொடிய சினத்தை முற்றிலும் அழித்தவனும் , ஞானத்தை மேன்மேலும் வளரச் செய்தலைத் தன்கொள்கையாகக் கொண்டவனும் , அருவி விளங்கும் கழுக்குன்றில் யாம் வணங்கும் தலைக்கோலம் உடையவனும் , மிக்க எழில் படைத்த மன்மதனை விழித்து அழித்தவனும் , ஆகி , புகழ்மிக்க திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

பற்றவன் - துணையாய் இருப்பவன் . ` வானோருக்கும் ஏனோர்க்கும் பற்றவன் ` என்க . பராபரன் ` மேலான பொருளாயும் , கீழான பொருளாயும் இருப்பவன் ; ` மேல் ` என்றது தன்னையும் , ` கீழ் ` என்றது பிறவற்றையும் , பொருட்டன்மையால் தானே ஆகியும் , கலப்பினால் பிற பொருள்களாகியும் இருப்பவன் என்றதாம் . கொற்றவன் - வெற்றியை உடையவன் . ` சினம் ` என்றது , வெறுப்பினை ; அதனானே , அதன் மறுதலையாகிய விருப்புங் கொள்ளப்படும் ; படவே , ` உயிர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு முதலாகிய அறியாமையை நீக்கி அறிவை மேன்மேல் மிகுவித்தலையே குறிக்கோளாகக் கொண்ட தன்மையை ( பெருங்கருணையை ) உடையவன் ` என்று அருளியவாறாம் . இவ்வாறு இறைவன் உயிர்களிடத்து அவற்றிற்கு உயிராய் உள் நின்று செய்துவருதலை , ` மன்னும் இருளை மதிதுரந்த வாறன்பின் மன்னும் அரனே மலந்துரந்து ` எனச் சிவஞான போதமும் , ( சூ . 11. அதி . 2) ` அந்த அருள்உனக்கிங் காதார மாய்அல்லின் இந்து வெனஎறித்திட் டேகமாய் - முந்தி உனை உனக்குத் தான்விளக்கி ஓவா துணர்த்தும் தனைஉனக்குக் காட்டுமே தான் ` எனத் துகளறுபோதமும் (36) விளக்கின . அவ்விடத்து , ` மதி ` எனவும் , ` இந்து ` எனவும் போந்தவை , வளர்பிறைச் சந்திரனைக் குறித்தன என்பது அச்சிவஞானபோத வெண்பா வுரையான் அறிக . பிறங்கு - விளங்குகின்ற . கழுக்குன்றம் , தொண்டைநாட்டுத் தலம் . பேரெழில் ஆர் - மிக்க அழகு பொருந்திய . சீர் - புகழ் .

பண் :

பாடல் எண் : 10

உரம்மதித்த சலந்தரன்தன் ஆகங் கீண்ட
வோராழி படைத்தவன்காண் உலகு சூழும்
வரம்மதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்
வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்
அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணா
அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

தனது வலியைப் பெரிதாக மதித்த சலந்தரனின் உடலைப் பிளந்த ஒப்பற்ற ஆழியைப் படைத்தவனும் , உலகினைச் சூழவருவோனாய் எல்லாராலும் மேலாக மதிக்கப்பட்ட சூரியனுடைய பல்லைப் பறித்தவனும் , இந்திரனுடைய புயத்தை நெரித்த வன்மை யுடையவனும் , பாம்பினைச் செம்பொன் ஆரமாகவும் பூணாகவும் மதித்து அணிந்தவனும் , அலைகடல் சூழ் இலங்கைக்கு இறையாகிய இராவணனுடைய சிரங்களை நெரியச் செய்த சேவடியினனும் ஆகி , திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

உரம் மதித்த - தனது வலியையே பெரிதாக மதித்த . பின்பு கீண்ட ஆழியைப் படைத்தவன் ( உண்டாக்கியவன் ) என்றதாம் ; ஆகவே , ` ஆகம் கீளுதற்கு ஓர் ஆழியைப் படைத்தவன் ` என்பது கருத்தாயிற்று . வரம் மதித்த - யாவராலும் மேலாக மதிக்கப் பட்ட ; ` பலர் புகழ் ஞாயிறு ` ( தி .11 திருமுருகாற்றுப் படை -2) என்றது காண்க . ` அரவினைப் பொன்னாரமாகவும் , பூணாகவும் மதித்து அணிந்தவன் ` என்க . ` அரா ` என்பதன் ஈற்று ஆகாரம் குறுகி நின்றது . ` சேவடி ` என்பது , சினையாகு பெயராய் அதனை உடையவன்மேல் நின்றது .

பண் :

பாடல் எண் : 1

பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

அடியார்கள் பாடிப்பரவவும் பத்தர்கணம் சூழ்ந்து நிற்கவும் பூதங்கள் நெருங்கவும் ஆடற்கேற்ற முழவம் முழங்கவும் அமைந்த சூழலில் அழகிய கையில் அனல் ஏந்தியவரும் , காந்தட் பூவும் , பாம்பும் பொருந்திய சடையில் கங்கையைத் தரித்தவரும் , கொக்கிறகைச் சூடியவரும் , கொன்றைமாலையை அணிந்தவரும் , உலர்ந்த தலையோட்டினைக் கையில் கொண்டவரும் ஆக வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

` பாட , பரவ ` முதலிய செயவெனெச்சங்கள் தொழிற் பெயர்த் தன்மையனவாய் நின்று , ` கண்டேன் ` என்பதற்குச் செயப்படு பொருளாயின . ` அடியார் ` பாடவும் பரவவும் கண்டேன் ` என்க . ` பத்தர் கணங் கண்டேன் ` என்பதனை முதற்கண் வைத்து , ` அடியார் ` என்றதனைச் சுட்டளவாகக் கொள்க . கணம் - கூட்டம் . மொய்த்த - நெருங்கிய . ` பூதமும் அதிர்தலும் கண்டேன் ` என்க . ஆடல் முழவம் - நடனத்தில் முழக்கப்படும் மத்தளம் . முழவம் அதிர்தலை , ` கண்டேன் ` என்றது , ` நேர்பட அறிந்தேன் ` என்றபடி , இவ்வாறு மேலும் உரைக்க வேண்டுமிடம் அறிந்துகொள்க . கோடல் - காந்தட் பூ ; ` கோடலும் அரவும் பொருந்திய சடை ` என்க . ` இதழ் ` என்றது , சிறகினை . வாடல்தலை - உலர்ந்த தலை ஓடு ; ` வற்றல் ஓடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளம் கவர்கள்வன் ` ( தி .1. ப .1. பா .2.) என்றருளிச்செய்தார் , திருஞான சம்பந்த சுவாமிகளும் , ` வாய்மூர் அடிகளை நான் கண்டவாறு இது ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

பால்போன்று இனிக்கும் மொழியாளாகிய பார்வதி ஒரு பங்காகத் திகழப்பெற்றவரும் , பதினெண் கணத்தேவரும் சூழ்ந்து பணி செய்யக் கொண்டவரும் , நீலகண்டரும் , நெற்றிக் கண்ணரும் , பெற்றமூர்பவரும் , ஒளிஉமிழும் இளமதியைத் தரித்தவரும் , திருமுடி மேல் கரந்தை மலரைச் சூடியவரும் , மாலை அணிந்த சடையாலான முடியை உடையவரும் ஆக வாய்மூர் அடிகளை நான் கண்டேன் .

குறிப்புரை :

பதினெண் கணம் - பதினெட்டுக் கூட்டம் ; இக்கூட்டத்தினர் அனைவரும் தேவ இனத்தவர் ; அவர் இன்னர் என்பதனை , ` பதினெண்கணங்களாவார் , 1. தேவரும் , 2. அசுரரும் , 3. முனிவரும் , 4. கின்னரரும் , 5. கிம்புருடரும் , 6. கருடரும் , 7. இயக்கரும் , 8. இராக்கதரும் , 9. கந்தருவரும் , 10. சித்தரும் , 11. சாரணரும் , 12. வித்தியாதரரும் , 13. நாகரும் , 14. பூதரும் , 15. வேதாளமும் , 16. தாராகணமும் , 17. ஆகாசவாசிகளும் , 18. போகபூமியோரும் என இவர் ` என்னும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தின் உரையாலும் , ` விரவுசா ரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் பூதர் கருடர்கின் னரர்இயக்கர் காந்தர்வர் சுரர்த யித்தியர் உரகர்ஆ காச வாசர்உத்தர குருவோர் யோகர் நிருதர்கிம் புருடர் விண்மீன் நிறைகணம் மூவா றாமே ` எனும் சூடாமணி நிகண்டுப் பாவாலும் , பிறவாற்றாலும் அறிக . ( விஞ்சையர் - வித்தியாதரர் , பாசாசர் - வேதாளர் . சுரர் - தேவர் . தயித்தியர் - அசுரர் . உரகர் - நாகர் . உத்தரகுருவோர் - போக பூமியர் . யோகர் - முனிவர் . நிருதர் - இராக்கதர் .) பயிலுதல் - சூழ்ந்து பணிசெய்தல் . உண்ட - ஏற்றுக்கொண்ட . ` நெற்றிவிழி ` என்பதும் , ` சடையின் முடியும் ` என்பதுமே பாடமாதல் வேண்டும் . பெற்றம் - பசு ; இடபம் . காலை - இளமை . ` காலை மதியம் ` என்க . கரந்தை ஒருவகைப் பூ . மாலை - கொன்றை மாலை .

பண் :

பாடல் எண் : 3

மண்ணைத் திகழ நடம தாடும்
வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்
விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்
வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்
நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்
நாலு மறையங்கம் ஓதக் கண்டேன்
வண்ணம் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

நிலவுலகம் நின்று நிலைக்க நிகழ்த்தும் கூத்தாட்டில் கட்டப்பட்ட சிலம்பு ஒலிக்கின்ற பாதங்களை உடையவராய் , விண்ணிற் சென்று விளங்கும் முடியினராய் , ஏற்கும் பலவகை வேடங்கட்கும் பொருந்திய செயல்களைச் செய்பவராய் , பிரியாது விளங்கும் மழுவினராய் , நான்கு மறைகளையும் ஆறு அங்கங்களையும் ஓதுபவராய் , பலவகை நிறங்களும் அழகுபெறத் திகழும் தோற்றத்தினராய்த் திருவாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

` மண்ணை என்னும் ஐகாரம் சாரியை . வரை - ஏற்றுக் கொண்ட ; அணிந்த . விண்ணின் - செவ்வானத்தைப் போல ; ` வானை அளாவி விளங்கும் ` என்றுமாம் . சரிதை - செயல்கள் . ` பலவாய வேடங்கட்கும் ஏற்ற செயல்கள் ` என்க . வண்ணம் - ( பலவகை ) நிறம் ; ` வண்ணப் பொலிந்திலங்கு கோலம் ` என்பது பாடமாயின் , ` வண்ணக் கோலம் ` என இயைத்து உரைக்க .

பண் :

பாடல் எண் : 4

விளைத்த பெரும்பத்தி கூர நின்று
மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்
இளைக்குங் கதநாக மேனி கண்டேன்
என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்
திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்
சேணார் மதில்மூன்றும் பொன்ற அன்று
வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

முன்னைத் தவம் விளைத்த பத்தி மிக நின்று உண்மை அடியார்கள் தம்மை விரும்புமாறு திகழ்பவராய் , கருடனுக்கு அஞ்சுவனவும் இயல்பாகக் கோபம் மிக்கனவும் ஆகிய நாகங்களை அணிந்து விளங்கும் மேனியராய் , எலும்பாலான அணிகலன்களைப் பூண்டு திகழுபவராய் , திருநீற்றில் மூழ்கும் திருமார்பினராய் , வானிடத்து மதில்கள் மூன்றும் அன்று அழியுமாறு வளைத்த வரிந்து கட்டப்பட்ட சிலையைக் கையில் கொண்டவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

விளைத்த - முன்னைத் தவத்தினால் விளைவிக்கப்பட்ட . கூர் - மேன்மேல் மிக . ` மெய்யடியார் தம்மை விரும்ப ` என்றதில் நின்ற , ` தாம் ` என்பது , இறைவன்மேற்றாகிய பெயர் . இளைக்கும் - கருடனுக்கு அஞ்சும் ; ` கருடனுக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்த பாம்புகளைச் சிவபிரான் அணிகலங்களாக அணிந்து கொண்டான் ` என்பது புராணம் . கதம் - சினம் . கலம் - அணிகலம் . ` என்பின் அகலம் திகழ்ந்து ` எனவும் பாடம் கொள்வர் . திளைத்தல் - நீற்றில் மூழ்குதல் . சேண் ஆர் - வானத்தில் பொருந்திய . பொன்ற - அழிய . ` வரிசிலை ` என்பது இன அடை .

பண் :

பாடல் எண் : 5

கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன்
காலிற் கழல்கண்டேன் கரியின் தோல்கொண்
டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்
உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்
நான்மறை யானோடு நெடிய மாலும்
நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக
மான்மறி தங்கையின் மருவக் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

காட்டில் மறைந்து வாழும் யானையின் தோலை உரித்தவராய் , காலிற்கட்டிய கழலினராய் , அவ் யானைத் தோலின் புலாற் பொல்லாங்கு மறையும் வண்ணம் அதனை , போர்வையாகப் போர்த்திக் கொண்ட வடிவினராய் , உயிர்கள் தம்மை நினைத்தற்கு உரிய மனத்தை உபகரித்து அருளினவராய் , நான்மறையானாகிய பிரமனும் நெடியானாகிய திருமாலும் தம் வலப்பாலும் இடப்பாலும் நண்ண வருபவராய் , மான் கன்று நிலையாகப் பொருந்தி நிற்கும் கையினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

கான் மறையும் போதகத்தின் உரிவை - காட்டில் மறைந்து வாழும் யானையின் தோல் ; யானைக்குக் கொடுக்கப்பட்ட இவ்வடை இன அடை . ` அக் கரியின் தோல்கொண்டு ` என எடுத்துக்கொண்டு உரைக்க . ஊன் மறைய - யானைத் தோலினது புலால் தன்மை நீங்கித் தனக்கு உரியதாந் தன்மை அடைய ; இங்கு , ` செய்து ` என ஒரு சொல் வருவிக்க , உள்க . தன்னை நினைத்தற்கு ; மனத்தை வைத்தது ( தந்தது ) உயிர்கட்கு என்க . உணர்வு என்றது , அருளை . மறையோனும் மாலும் நண்ணி வருதல் , வலப்பக்கத்தும் இடப்பக்கத்தும் என்க . திண்ணமாக மருவுதல் - நிலையாகப் பொருந்துதல் .

பண் :

பாடல் எண் : 6

அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்
அவ்வவர்க்கே யீந்த கருணை கண்டேன்
முடியார் சடைமேல் அரவ மூழ்க
மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்
கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

திருவடிகளிற் கட்டிய சிலம்பு ஒலிகளின் ஆரவாரத்தை உடையவராய் , அவரவர்க்கு ஏற்குமாறு ஈந்த கருணையினராய் , சடைச்சுற்றின் நெருக்கினிடை பாம்பு புகுந்து மறைய , அப்பாம்பு தன்னைப் பற்றக் கரந்து வருவதாகக் கருதிப் பெருமை மிக்க பிறையும் அச்சடையின் வேறோர் இடுக்கில் புக்குமறையக் கண்டவராய் , கொடியிடத்துப் பொருந்திய இடபத்தினை உடையவராய் , கோவணமும் கீளும் கொண்டு விளங்குபவராய் , கூரிய மூவிலை வேலினைக் கையில் ஏந்தியவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

அடி ஆர் சிலம்பு ஒலிகள் - அடியின்கண் பொருந்திய சிலம்பினது ஒலிகள் ; பன்முறையாக ஒலித்தலின் , ` ஒலிகள் ` எனப் பன்மை கூறப்பட்டது . ` அவ்வவர்க்கு ஈந்த ` என்றது , ` அவரவர்கட்கு ஏற்குமாற்றான் ஈந்த ` என்றபடி . முடி ஆர்சடை - மகுடமாகப் பொருந்திய சடை . ` அரவம் ஊர ` என்பதே பாடமாதல் வேண்டும் . மூரி - பெருமை . ` ஆர் கொடியதன் மேல் ` என மாற்றி யுரைக்க ; அது , பகுதிப் பொருள் விகுதி ; ` கொடியாக ஆர்ந்த அதன்மேல் ` எனச் சுட்டுப் பெயராக் கொண்டு உரைத்தலுமாம் . குலாவுதல் - விளங்குதல் . வடி - கூர்மை .

பண் :

பாடல் எண் : 7

குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்
ஏழிசையாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

குழையும் நிறைந்த அழகினையுடைய தோடும் விளங்கும் காதுகளை உடையவராய் , கொக்கரை சச்சரி ஆகிய வாச்சியங்களைப் பயன் கொள்பவராய் , இழைகள் பொருந்திய முறுக்கப்பட்ட பூணூலை வலம்வர அணிந்தவராய் , ஏழிசையும் பயிலும் யாழ் வீணைகளின் இசையை நுகர்வாராய் , தழைத்த சடை யினராய் , தம்வயத்தினராய் , தக்கை தாள முழக்கினராய் மேகம் போன்று கறுத்த திருமிடற்றினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

` குழை தோடு இரண்டும் கண்டேன் ` எனச் செவ்வெண்ணாக்கி யுரைக்க . ஆர் திருத்தோடு - நிறைந்த அழகினையுடைய தோடு ; இனி , ` குழையொடு ஆர்ந்த திருத்தோடு ` எனினுமாம் . குழை ஆடவர் அணிவதாகலின் அது தன் கூறாகிய வலக்காதினும் , தோடு பெண்டிர் அணிவதாகலின் அஃது அம்மை தன் கூறாகிய இடக் காதினும் உள்ளன என்க ; ` தோலும் குழையும் துகிலும் சுருள்தோடும் ` ( தி .8 திருவாசகம் . கோத்தும்பி . 18) என்று அருளியதுங் காண்க . கொக்கரை , சச்சரி , தக்கை , தாளம் இவை வாச்சிய வகைகள் . இழை ஆர் புரி நூல் - இழைகள் பொருந்திய புரியினையுடைய பூணூல் ; பூணூலை வலம்வர அணிதல் மங்கலம் உள்ள காலத்தாகலின் , என்றும் நீங்காத மங்கலத்தை உடையவனாகிய சிவபிரானது பூணூல் வலமாகியே தோன்றுவதாயிற்று . தழை ஆர் சடை - தழைத்தல் பொருந்திய சடை . இனி , தழை தளிரைக் குறித்தது எனக் கொண்டு . ` தளிர்போலப் பொருந்திய சடை ` என்றுரைத்தலுமாம் . தன்மை - பிறிதொன்றன் வழிப்படாது தானேயாய் நிற்கும் இயல்பு ; இது ` தன்வயம் அல்லது சுதந்திரதை ` எனப்படும் . கறங்க - ஒலிக்க . மழை ஆர் - மேகம்போலப் பொருந்திய .

பண் :

பாடல் எண் : 8

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

உலகத்தார்க்கு ஏலாத செய்கைகள் ஆம் நஞ்சுண்ணுதல் , பாம்பணிதல் போன்றனவும் , பொருத்தமற்ற செய்கைகள் ஆம் சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் தம்பால் பொலியக் கொண்டவராய் , போற்றி என்று கூறி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய் , அன்பருக்கு அருளும் தன்மையாராய் , நிலனொடு நீராய் நிற்பவராய் , புதியராய் வந்து பரவிய பூதவேதாளக் கணங்களிடையே திகழ்பவராய் , மெல்லியல் உமையும் விநாயகனும் மனைவியும் மகனுமாம் உறவு முறை கொண்டவராய் , பிணிதீர்க்கும் மருந்தாம் தன்மையினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

பொருந்தாத செய்கை - உலகத்தார்க்கு ஏலாத செய்கை ; அவை , சாம்பல் பூசுதல் , எலும்பும் தலைமாலையும் அணிதல் , தலை ஓட்டில் இரத்தல் , நஞ்சை உண்ணுதல் முதலியனவாகக் கொள்க . இன்னோரன்னவை , அவன் பற்றற்றானாதலை உணர்த்தும் . இனி , பொருந்தாத செய்கை , ஒன்றோடொன்று ஒவ்வாத செயல்களுமாம் ; அவை , சடை தரித்துக் கல்லாடை உடுத்தும் பெண்ணொரு பாகனாதல் , ` ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் ` அமரர்க்கு வென்றி தந்து ` ( புறம் - 55) பலவிடத்தும் இரந்து திரிதல் முதலியனவாம் இப்பெற்றியன , அவன் உலகத்துள் யாதொரு கூற்றினும் படாமையை உணர்த்தும் , ` போற்றி ` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று , ` போற்றி இசைத்து ` என்றது , ` போற்றி எனச் சொல்லி என்றவாறு ; இனி , ` போற்று இசைத்து ` எனவே கொண்டு , ` போற்றுதலாகிய சொற்களைச் சொல்லி ` என உரைத்தலுமாம் . பரிந்தார் - அன்பு செய்தவர் . பரிசு - தன்மை : உம்மை , சிறப்பு ` பாராய்ப் புனலாகி ` என்றதனால் , ஏனைய பூதங்களும் கொள்ளப்படும் ; அவையாகி நிற்றல் , அப் பூதங்கட்குத் தலைவராக எண்ணப்படும் தேவர்கள் அவனது குறிப்பின்வழி நிற்குமாற்றால் காணப் பட்டது . விருந்து - புதுமை ; ` புதியனவாய்ப் பரந்த தொகுதி ` என்றது . வேறிடங்களிற் காணப்படாது நிறைந்து நின்று மருட்கையை விளைத்த கூட்டம் ; அவை பூதவேதாளங்கள் முதலிய பதினெண் கணங்களுமாம் . மெல்லியல் - உமை . ` விநாயகனும் ` என எண்ணின்கண் நின்ற எச்ச உம்மையானே ` முருகனும் ` என்பது தழுவப்பட்டது . பிணி , உடல் நோயும் , உயிர் நோயும் என்க . எனவே ` மருந்து ` என்றதும் அவை யிரண்டற்கும் ஏற்றவாற்றாற் கொள்ளப்படும் .

பண் :

பாடல் எண் : 9

மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்
வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்
கையம் பரணெரித்த காட்சி கண்டேன்
கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்
ஐயம் பலவூர் திரியக் கண்டேன்
அன்றவன்றன் வேள்வி யழித்து கந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

மெய்யன்பர்க்கு அருளுபவராய் , வேட்டுவக் கோலம் கொண்டு நின்றவராய் , கையிடத்துக்கொண்ட அம்பால் அரண்களை அழித்த காட்சியினராய் , பாம்புக்கங்கணராய் , அங்கையில் அனல் ஏந்தியவராய் , பல ஊர்களிலும் திரிந்து பிச்சை ஏற்பவராய் , பகைத்த தக்கன் வேள்வியை அழித்தவராய் மகிழ்ந்து உலகம் பரவ இருந்தவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கணடேன் .

குறிப்புரை :

` மெய்யன்பரானார்க்கு ` என்புழி , ` செய்யும் ` என ஒருசொல் வருவிக்க ; அன்றி , ` அருள் - அருளுதல் ` என்றலுமாம் . ` கங்கணம் , பாம்பினால் ஆயது ` என்க . அன்று அவன் - பகைத்த அவன் ; தக்கன் . ` பரவ உகந்து இருத்தல் ` எனக் கூட்டுக . வேடுவனாய் நின்ற நிலை முதலியன , வீரக் குறிப்பு , கபாலம் ஏந்தி நிற்றல் முதலியவற்றால் காணப்பட்டன ; அன்றி , அவற்றை எல்லாம் சுவாமிகள் காணுமாறு இறைவன் அங்கே காட்டியருளினான் எனினும் இழுக்காகாது .

பண் :

பாடல் எண் : 10

கலங்க இருவர்க் கழலாய் நீண்ட
காரணமுங் கண்டேன் கருவாய் நின்று
பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்
பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்
இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்
வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

மாலும் அயனும் கலங்குமாறு நீண்ட தழற் பிழம்பாய்த் தோன்றிய காரணராய் , முதலாய் நின்று பயன்களைத் தன்னுட் கொண்டு மகிழ்ந்த பண்பினராய் , பாடல் இசையும் ஏனைய ஒலியும் தாம் ஆம் தன்மையராய் , இலங்கைக் கிறை இராவணனுடைய பத்துத் தலைகளும் நசுங்கச் செய்து பின் அவனுக்கு வரங்கள் ஈந்த பெருமையராய் , வலக்கையிடத்து அனல் ஏந்தியவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

கலங்க - திகைக்க . இருவர் , மாலும் அயனும் ; அவர் திகைத்தது , அளவறியப்படாது நீண்டு நின்றமை கண்டு . காரணமாவது , அவர் தமது மயக்கம் நீங்கித் தனது முதன்மையை உணருமாறு செய்ய நினைந்தமை ; அஃது அதன் பயனாய் விளைந்த விளைவைக் குறித்தது ; அவ்விளைவாவது , அவ்விருவரும் அவன் அடியாராய் ஏவல் கேட்டு நின்றமையை . கரு - முதல் . பலங்கள் - பயன்கள் . தரித்து உகத்தல் - தாங்கியருளுதல் . ` எல்லா விளைவுகட்கும் முதற்பொருளாய் , அவ்விளைவுகள் அனைத்தும் முன்னே தன்னிடத்து அடங்கி நின்று பின்தோன்றுமாறு செய்யுந் தன்மை ` என்றபடி . கூட - ஒத்து இயைய . இலங்கைத் தலைவனுக்கு ஈந்த பெருமையைக் கண்டது , அதுபோலும் பல நிகழ்ச்சிகளால் என்க . ` வலக்கை ` என்பது மெலிந்து நின்றது ; ` வலத்தின்கண் கையின் ` என அடுக்காக்கி உரைத்தலுமாம் . ` அனல் ` என்றது , மழுவை .

பண் :

பாடல் எண் : 1

ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும் , ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும் , ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும் , நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும் , கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும் , அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

` உலகு அனைத்தும் ` என்பதனை , இடைநிலைத் தீவகமாக வைத்து , ` உலகம் முழுதும் தனது ஒரு வியாபகத்துள் அடங்கி நிற்கும் பொருளாகும்படி அவையனைத்துமாய் நிறைந்து நின்றார் ` என உரைக்க . இனி , ` ஒன்றாய் உலகனைத்தும் ஆனார் ` எனப் பாடம் ஓதி , ` முன்னர்த் தாமாகிய ஒரு பொருளாய் நின்று . பின்னர் உலகப் பொருள் பலவும் ஆயினார் , என்றுரைத்தலே சிறப்பென்க . ` இருள் உளதாய் , பகலும் இரவும் இலவாய் , சத்தும் அசத்தும் இலவாய் இருந்தபோது தனியே சிவபிரான் ஒருவனே இருந்தான் - ( சுவேதாசுவதரம் ) ` அவன் , நான் பலவாகுவேனாக என விரும்பினான் ` எது எது ( முன்பு ) இருந்ததோ அதை அதை எல்லாம் அவன் படைத்தான் - அதனைப் படைத்த பின்பு அதனுள் நுழைந்து , சத்தும் தியத்தும் ஆயினன் - ( தைத்ரீயம் ) என இவ்வாறு வரும் உபநிடதப் பகுதிகள் பலவும் ஈண்டுக் காணத்தக்கன . ` தொறு ` என்பதன் திரிபாகிய , ` தோறு ` என்பதனை , பின்னுள்ள ` ஊழி ` என்புழியும் விரிக்க . ஊழி தோறும் உயர்தல் , பல உயிர்களை வீடு பெறுவித்து என்க . நின்று - ஒரு நிலையே நின்று . ` எங்கும் ஆகி நிமிர்ந்தார் ` என்க . நிமிர்தல் , இங்குப் பரத்தல் மேலது . கொன்று ஆடும் - உயிர்களைக் கொன்று திரிகின்ற . கோலம் - அழகு . பழனை , ` பழையனூர் ` என்பதன் மரூஉ . ` பழையனூர் என்பது ஊர் ` எனவும் , ` ஆலங்காடு என்பது அதனை அடுத்த காடு ` எனவும் கருதப்படுதலின் , ஆலங்காட்டுப் பெருமானை அவ்வூரை உடையவனாகவும் அருளிச்செய்தார் . சென்று ஆடும் - தேடிச் சென்று மூழ்குகின்ற . ` மூர்த்தி , தலம் , தீர்த்தம் ` என்னும் மூன்று வடிவிலும் இறைவன் இருந்து , வழிபடுதல் , தங்குதல் , மூழ்குதல் ` என்னும் இச் செயல்களின்வழி உயிர்கட்கு அருள்புரிதல் நோக்கி , ` சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே ` என்று அருளிச் செய்தார் . திருவருளே உண்மைச் செல்வம் ஆதலின் , அதனை உடைய சிவபிரானே , ` செல்வன் ` என்றும் , ` திருவாளன் ` என்றும் சொல்லப்படுவான் . ` செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே ` ( தி .1. ப .80. பா .5.) அதர்வசிகை உபநிடதமும் , சர்வைஸ்வரிய சம்பந்நர் , ` சர்வேஸ்வரர் , சம்பு ` எனக் கூறிற்று .

பண் :

பாடல் எண் : 2

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே
வானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மலைமகளைத் தம் உடலிற்பாகமாக விரும்பிக் கொண்டவரும் , வானோரால் வணங்கப்படுபவரும் , கங்கையாளைத் தம் செஞ்சடைமேல் வைத்தவரும் , சரண்புக்குத் தம் செயல் அற்று இருப்பார்க்கு அன்பர் ஆனவரும் , பற்பல வேடங்களைப் புனைபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , மலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களையும் அழித்தவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

சரண் என்று இருத்தலாவது , தமது அறிவு இச்சை செயல்கள் யாவும் அவரது அறிவு இச்சை செயல்களின் வழிப்படுவன அல்லது தனித்து நிற்கமாட்டாமையை உணர்ந்து , தம் செயலின்றி , எல்லாம் அவர் செயலாக நிற்றல் . ` பலபல வேடங்களும் ஆனார் ` என , உம்மையைப் பிரித்துக் கூட்டி , ` ஆனார் ` என்பதற்கு , ` உடையவர் ஆனார் ` என உரைக்க . அட்டார் - அழித்தார் .

பண் :

பாடல் எண் : 3

ஆவுற்ற ஐந்தும் உகந்தார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே
புனிதப் பொருளாகி நின்றார் தாமே
பாவுற்ற பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேவுற் றடிபரவ நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

பசுவிடத்துப் பொருந்திய ஐந்து பொருள்களையும் விரும்பியவரும் . அளவிறந்த பெருமையுடையவரும் , மலரின்கண் மணம்போல எல்லாப் பொருள்களிலும் நுண்ணியராய் நிறைந்து நின்றவரும் , பா என்னும் ஓசையாம் உறுப்புப் பொருந்திய பாட்டினை விரும்புபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , தேவர் பலரும் அடைந்து அடிபரவ நின்றவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

ஆ உற்ற ஐந்து - பசுவின்கண் பொருந்திய ஐந்து ; பால் , தயிர் , நெய் , நீர் , சாணம் என்பன . உகந்தார் - ஆடுதற்கு விரும்பினார் . பூவுற்ற நாற்றமாய் நின்றார் - மலரின்கண் மணம் போல எல்லாப் பொருள்களிலும் நுண்ணியராய் நிறைந்து நின்றார் . புனிதப் பொருள் - இயல்பாகவே மாசின்றித் தூய்தாய பொருள் . இத் தன்மையை , ` விசுத்த தேகம் ` என்னும் , சிவாகமம் . பா உற்ற பாடல் - ` பா ` என்னும் உறுப்புப் பொருந்திய பாட்டு ; ` பா ` என்னும் உறுப்புடைமையை எடுத்தோதியது , இசையிடத்து விருப்பம் உடையர் என்பது உணர்த்துதற்கு . ` தெய்வம் ` என்னும் பொருளதாகிய , ` தே ` என்னும் பெயர் , சொல்லால் அஃறிணையாதலின் , அத்திணை இருபாற்கும் பொதுவாய் , ஈண்டுப் பன்மைக்கண் வந்தது ; ` தேவர் பலரும் அடைந்து அடிபரவ நின்றார் ` என்பது பொருள் .

பண் :

பாடல் எண் : 4

நாறுபூங் கொன்றை முடியார் தாமே
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமே
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மணங்கமழும் கொன்றை மலரைச் சூடிய முடியினரும் , மறை நான்கும் அங்கம் ஆறும் சொன்னவரும் , நரைத்துத் திரைத்து மூத்து விளிதல் இல்லாத மேனியை உடையவரும் , அழகிய பிறையைத் தஞ்சடைமேல் வைத்தவரும் , அழிந்தாருடைய வெள்ளிய தலையோட்டில் பிச்சை ஏற்று உண்டவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , தம் இயல்புகளைத் தெளிவாக உணர்ந்த மெஞ் ஞானியரின் சித்தத்தில் இருந்தவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

மாறு இலா மேனி - அழிதல் இல்லாத உடம்பு ; எனவே , ` தோற்றம் இல்லாதது ` என்பதும் முடிந்தது ; ` மாயையின் கலக்கமாய்த் தோன்றி நின்றழியும் உடம்பின்றித் தம் இச்சையாற் கொள்ளும் அருளுடம்பு உடையவர் ` என்றதாம் . மா - பெருமை . பெருமையாவன , மாசின்மையும் , என்றும் ஒருபடித்தாய் நிற்றலும் முதலியன என்க . பாறினார் - அழிந்தவர் . தேறினார் - தமது உண்மையையும் பெருமையையும் ஐயுறாது தெளிந்து நின்றவர் .

பண் :

பாடல் எண் : 5

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

இரவும் பகலுமாய் நின்றவரும் , அந்தியும் சந்தியும் ஆனவரும் , சொல்லும் , பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் ஆனவரும் , தோத்திரமும் சாத்திரமும் ஆனவரும் , மற்றை உலகியலுரைக்கும் எல்லாப் பாக்களும் ஆனவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , செல்லுதற்குரிய வழியைக் காட்ட வல்ல வரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

அல் - இரவு . அந்தி - மாலை . சந்தி - ` காலை , நண்பகல் ` என்னும் ஏனைய இருபொழுதுகள் ; இம் முப்பொழுதுகளும் இறைவனை நினைந்து வழிபடுதற்கு உரிய பொழுதுகளாகலின் , அவ்வாறு வழிபடுவார்க்கு , அப் பொழுதுகளின் தலைமைத் தெய்வங்களாய் நின்று அவரவர் விரும்பும் உலகின்பத்தையும் வீட்டின்பத்தையும் ( புத்தி முத்திகளைத் ) தருபவன் சிவபெருமான் ஒருவனே யாகலின் , ` அந்தியும் சந்தியும் ஆனார் தாமே ` என்று அருளிச் செய்தார் . ` பொருள் ` என்புழித் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க . உலகனைத்தும் சொல்லும் பொருளும் என்னும் இருகூற்றின் உள்ளே அடங்கலின் , ` சொல்லும் பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் ` என்று அருளினார் . இனி , ` பொருள் ` என்றது , பொருளுணர்வை எனக் கொள்ளுதலுமாம் . தோத்திரம் , இறைவனது புகழ்ப் பாடல்கள் . சாத்திரம் , இறைவனது இயல்பையும் , அவனுக்கு அடிமையும் உடைமையும் ஆகிய உயிர் உலகங்களது இயல்பையும் , ஐயமும் மருட்கையும் இன்றித் தெளிவிப்பன , அதனால் , அவை இரண்டும் இறைவனையே பொருளாக உடைமையின் , ` தோத்திரமும் சாத்திரமும் ஆனார் ` என்று அருளிச் செய்தார் . அவையிரண்டனாலும் அஞ்ஞானந்தேய , ஞானம் மிகும் என்க . திருவள்ளுவ நாயனாரும் , ` இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு ` ( குறள் - 5) என்பதனால் தோத்திரத்தினது இன்றியமையாமையையும் , ` ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு ` ( குறள் - 357) என்பதனால் சாத்திரத்தினது இன்றியமையாமையையும் உணர்த்தியருளினார் . ` பல் உரைக்கும் ` என்புழி , ` உரை ` என்றது பொருளை . ` உரைக்கும் ` என்பதன்பின் , ` உரிய ` என ஒருசொல் வருவிக்க . பா - பாட்டு . வீடுபற்றிய மெய்ந்நெறிச் செய்யுளும் நூலும் ஆகிய தோத்திர சாத்திரங்களேயன்றி ` அறம் , பொருள் , இன்பம் ` என்பவை பற்றிய உலகியற் செய்யுளும் நூல்களுமாகிய அவைகளாய் நிற்பவரும் அவர்தாமே என்பார் , ` பல் உரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே ` என்று அருளிச்செய்தார் . சிறப்புப் பற்றிப் பாட்டினை எடுத்தோதி அருளினாராயினும் , ` உரை எலாம் ஆனார் ` என்பதும் கொள்ளப்படும் . இவற்றுள் , தோத்திர சாத்திரங்களாய் நிற்றல் இடையீடின்றி நேரே எனவும் , பல்லுரைக்கும் உரிய பாவெலாம் ஆகி நிற்றல் ` அறம் , பொருள் , இன்பம் ` என்னும் உறுதிப் பொருள்கள் வாயிலாக எனவும் கொள்க . ஆல் நிழல் இருந்து அறம் முதலிய நான்கினையும் நால்வர் முனிவர்கட்கு முதற்கண் உணர்த்தி , உலகியலும் மெய்ந்நெறியும் ஆகிய இரண்டனையும் தெரிவித்தருளிய முதல் ஆசிரியன் சிவ பிரானே யாகலின் , ` செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே ` என அருளிச்செய்தார் ; ` அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ ` என்று அருளிச்செய்ததுங் காண்க . ( தி .8 திருவா . திருச்சாழல் . 20)

பண் :

பாடல் எண் : 6

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டான இசைபாட நின்றார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்டோள்க ளெட்டு முடையார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

தொண்டராய்ப் பணிவார்க்கு அருகில் உள்ள வரும் , தூய வெண்ணீற்றையணிந்து நல்லநிறமுடையவரும் , குளிர்ந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் திருமாலும் தேடத் தழற் பிழம்பாய் நிமிர்ந்து ஓங்கியவரும் , பழைமையான இசையில் பாட அது கேட்டு மகிழ்ந்து நின்றவரும் , பழையனூரைத் தமக்கு உரியதாக உடையவரும் , வலியதோள்கள் எட்டும் உடையவரும் திருவாலங் காட்டுறையும் அடிகளே ஆவார் .

குறிப்புரை :

தொண்டாய் - தொண்டராய் . சுவண்டர் - சுவண்ணர் ( நல்ல நிறம் உடையவர் ) என்பதன் மரூஉ . ` பண்டான ` என்பதன் இறுதி நிலை தொகுத்தலாயிற்று ; ` பண்டு ஆன ( பழைமையான )` என்று ஆயினும் , ` பண் தான ( பண்களுக்குரிய தானங்களிலே - இடங்களிலே - பொருந்திய )` என்றாயினும் பிரித்துப் பொருள் கொள்க . இங்குக் கூத்தப்பெருமான் எட்டுத் தோள்களை உடையவராய் இருத்தல் நினைவு கூரத்தக்கது .

பண் :

பாடல் எண் : 7

மையாருங் கண்ட மிடற்றார் தாமே
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரூம் ஆனைக் காவும்
அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

கருமைபொருந்திய மிடற்றினை உடையவரும் , சுடுகாட்டில் மகிழ்ந்து ஆடினவரும் , ஐயாறும் , ஆரூரும் , ஆனைக்காவும் தில்லையம்பலமும் கோயிலாகக் கொண்டவரும் , படம் விரித்தாடும் பாம்பைக் கச்சையாகவும் கங்கணமாகவும் பிறவாகவும் கட்டியவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , திருமகள் வழிபட அவட்கு வரமளித்து நின்றவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே யாவர் .

குறிப்புரை :

மை ஆரும் - கருமை நிறம் பொருந்திய , ` மையாருங் கண்ட மிடறு ` என்றதனை , ` இடைச்சொற் கிளவி , உரிச்சொற் கிளவி ` ( தொல் . சொல் . 159.) என்பனபோலக் கொள்க . அம்பலம் - தில்லை யம்பலம் . ஐயாறு முதலிய நான்கும் சோழ நாட்டுத் தலங்கள் . அம்பலத்தை நினைந்தருளியது , இத்தலத்திலும் பெருமான் ஆடும் பெருமானாய் நின்றருளுதலைக் கண்டு என்க . இங்குள்ள அம்பலம் அரதன அம்பலமாகும் . செய்யாள் - திருமகள் ; இவள் , இந்திரனால் தலையற்று வீழ்ந்த தன் கணவன் திருமாலை உயிர்ப்பித்துத் தர வேண்டிச் சிவபிரானை வழிபட்டு , அவ்வேண்டுதல் நிறைவுறப் பெற்றாள் என்பது திருவாரூர்த் தல வரலாறு .

பண் :

பாடல் எண் : 8

விண்முழுதும் மண்முழுது மானார் தாமே
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாக் காமனையுங் காய்ந்தார் தாமே
காலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

விண்முழுதுமாய் மண்முழுதுமாய் வியாபித்து நின்றவரும் , உயர்ந்தோர்கள் புகழும் குணத்தினரும் , நெற்றிக் கண்ணை விழித்துக் காமனைக் காய்ந்தவரும் , காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தவரும் , பண்கள் உலவுதற்கு இடமாகிய பாடல்களை விரும்புபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , வலிய மழுவாயுதத்தை ஏந்திய கரத்தவரும் திருவாலங்காட்டுறை செல்வரே ஆவார் .

குறிப்புரை :

மிக்கோர்கள் - உயர்ந்தவர்கள் ; அவர்கள் அவரது குணத்தை ஏத்துதல் அவை பிறரிடத்து இல்லாத பேரருட் குணங்களாதல் பற்றி . விழியால் - விழித்தற் செயலால் . ` காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தார் ` என்க . பண் இயலும் பாடல் - பண்கள் உலாவும் பாடல்கள் .

பண் :

பாடல் எண் : 9

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே
கயிலை மலையை உடையார் தாமே
ஊராஏ கம்ப முகந்தார் தாமே
ஒற்றியூர் பற்றி யிருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய கரிய நஞ்சை உண்டவரும் , கயிலை மலையை உடையவரும் , தமக்குரிய ஊராக ஏகம்பத்தை விரும்பிக் கொண்டவரும் , தமக்குரித்தல்லாததாய் ஒற்றியாகப் பெற்ற ஊர் என்று கொள்ளத்தகும் ஒற்றியூரை நிலையாகப் பற்றி நின்றவரும் , உலகத்தாரால் உயர்த்துப் புகழப்படுபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , வலிய வினையாகிய தீராத நோயைத் தீர்ப்பவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரேயாவர் .

குறிப்புரை :

கார் ஆர் - கருமை பொருந்திய ; ` மேகங்கள் உண்கின்ற ` என்றுமாம் . ` ஒற்றியூர் பற்றி இருந்தார் ` என்றது , ` தமக்கு உரித்தல்லாது ஒற்றியாகப் பெற்ற ஊரை நிலையாகப் பற்றியிருக்கின்றார் ` என்னும் நயந்தோற்றி நின்றது . வினை , எளிதில் பிறிதொன்றால் நீங்குவதன்றாகலின் , ` தீராத வல்வினை நோய் ` என்று அருளினார் .

பண் :

பாடல் எண் : 10

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மாலைக் காலத்துப் பிறையைச் சென்னியில் சேர்த்தவரும் , வளமிக்க கயிலை மலையை வணங்காதவனும் கரிய கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனுமாகிய இராவணனுடைய உடல் நெரியுமாறு கால்விரலை ஊன்றி வருத்தினவரும் , பால்போலும் நிறங்கொண்ட மேனியினரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , ஒழுக்கமுடைய உயர்ந்தோர் ஏத்தும் கூறுபாட்டில் அமைந்த அறக்கருணை உடையவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

மாலைப் பிறை - மாலைக் காலத்தில் தோன்றும் பிறை . வந்தியாத - வணங்காத . அடர்த்தார் - வருத்தினார் . ` பாலொத்த நிறத்தார் ` என இயையும் . மேனி நிறம் - மேனியது நிறம் . ` மேனி பாலொத்த நிறத்தார் ` என மாற்றி உரைப்பினும் ஆம் . இந்நிறம் ; திரு நீற்றினால் ஆயது என்க . சீலத்தார் - ஒழுக்கமுடையவர் ; அவர்கட்கே சிவபிரானது அறக் கருணை உரியது ஆகலின் , அவன் அவர்கள் ஏத்தும் திறம் உடையனாயினான் என்க .

பண் :

பாடல் எண் : 1

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
ஆதிரைநா ளாதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

தொண்டர்க்குத் தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும் , சூழும் நரகில் வீழாமல் தொண்டரைக் காப்பவனும் , இப்புவிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆனவனும் , ஆதிரை நாளை விரும்பிக்கொண்ட தலைவனும் , நெற்றியிடத்துத் தோன்றி வளரும் தீயினனும் , அயன் , அரி , அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

தூநெறியாய் நிற்றல் - தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நிற்றல் . சூழ்நரகில் வீழாமே காத்தலும் தொண்டரையே யாம் . ` அண்டத்துக்கு அப்பாற்பட்ட பொருள் உயிர் ; அதற்கும் அப்பாற்பட்ட பொருள் சிவபிரான் ` என்க . ஆதரித்த - விரும்பிய . முண்டம் - நெற்றி . நெருப்பு சிவபிரானது நெற்றிக் கண்ணில் தோன்றிற்று . ஆகலான் , ` முண்டத்தின் முளைத்தெழுந்த தீயானான் ` என்று அருளிச்செய்தார் . மூவுருவம் - அயன் அரி அரன் உருவம் ; அவற்றுள் ஓர் உருவமாய் என்றது , அரனாகி நிற்றலை . முதலாய் - அம் மூவுருவிற்கும் முதலாய் ; என்றது , பரம சிவனாகி நிற்றலை . ` மூவுருவத்து ஓர் உருவாயும் முதலாயும் நின்ற தலையாலங்காடன் ` என்க . தண்டத்தின் - இலிங்க உருவத்தினை உடைய .

பண் :

பாடல் எண் : 2

அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை
அவுணர்புர மொருநொடியில் எரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் தன்னைக்
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப்
புண்ணியனை யெண்ண ருஞ்சீர்ப் போகமெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

சங்குமணி கட்டிய இடையினனும் , தந்தை ஆனவனும் , அசுரர் புரங்கள் மூன்றையும் ஒருவிநாடியில் எரித்தவனும் , கொக்கிறகு செருகப்பட்ட சடைமுடிக்கூத்தனும் , குண்டலஞ்சேர் காதினனும் , தன்னை எண்ணி உருகுவார் மனத்துட்புக்கு அங்கிருந்து போகாத புனிதனும் , புண்ணிய உருவினனும் , அளவற்ற செல்வத்தான் ஆகும் இன்பமெல்லாம் வாய்த்திருந்தானும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

அக்கு - சங்குமணி . ` கொக்கு ` என்றது , அதன் இறகை . மகுடம் - ( சடை ) முடி . குண்டலம் - குழை . குழைவார் - உள்ளம் உருகுபவர் . சீர்ப் போகம் - செல்வத்தால் ஆகும் இன்பம் . தக்கிருந்த - வாய்ந்து இருந்த ; என்றது , ` எல்லா இன்பங்களும் இறைவனையே பற்றிநிற்பன ` என்றவாறாம் ; இனி , இதனைத் தலையாலங்காட்டிற்கு அடையாக்கலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
யிடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

உண்மைத் தவமாகி , வேதமுமாகி , வேதத்தின் முதலும் ஆகி , ஒளிரும் இளம்பிறையைச் சூடி , வேறுபட்ட இயல்பினனும் , வீணே அலைந்து இளைத்த அறிவற்ற என்னைத் துன்பக் கடலில் வீழாமல் கரையேற எடுத்துப் பொய்த்தவத்தார் அறிய முடியாத நெறியில் என்னை நிற்பித்தவனும் , கங்கையைச் சடையில் கரந்து உமையம்மையை ஒரு கூற்றிலே கொண்டு நின்றவனும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண்நாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

சிவபிரானது பணிகளே உண்மைத் தவமாதலின் , அப்பணிகளைப் புரியுமாறு நிற்கும் அவனை , ` மெய்த்தவம் ` என்று அருளினார் . வேத வித்து - வேதத்திற்குக் காரணன் ; முதல்வன் . ` எய்த்து அவமே உழிதந்த ` என்றாரேனும் , ` அவமே உழிதந்து எய்த்த ` என்பதே திருவுள்ளமாகக்கொள்க . எய்த்தது , உடலை வருத்தியதன்றிப் பிறிது பயன் காணாதொழிந்தது . பொய்த்தவத்தார் - இறைவனுண்மை கொள்ளாது பிற சில செயல்களை மேற்கொள்பவர் ; அவர் சமணரும் சாக்கியரும் என்க . ` நிற்பித்தானை ` எனற்பாலது , ` நின்றானை ` எனப்பட்டது . ` புனல் ` என்பது , ` கங்கையாள் ` என்னும் பொருளது .

பண் :

பாடல் எண் : 4

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

சிவனாய் , நான்முகனாய்த் திருமாலாய் , சூரிய சந்திரராய் , தீயாய் , நீராய் , புவலோகமாய் , புவனங்கள் யாவுமாய் , பொன்னாய் , மணியாய் , முத்துமாய் , வேண்டுமிடங்களில் வேண்டிய வாறே தோன்றுபவனாய் , உயிர்கள் வாழ்தற்கேற்ற இடங்கள் யாவுமாய் , இடபத்தை ஊர்ந்து திரியும் ஒரு கோலத்தை உடையனாய் , தவ வேடந்தாங்கிநின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

` சிவனாகி ` என்றது , ` உருத்திரனாகி ` என்றபடி , ` சுடர் ` என்றது ஞாயிற்றையும் திங்களையும் . புவன் - புவலோகமாய் உள்ளவன் ; இது பூலோகத்தை அடுத்து நிற்றலின் வேறு ஓதியருளினார் . ` பொன்னாகி ` முதலிய மூன்றனாலும் , ` செல்வமாய் உள்ளவன் ` என்றவாறு . பவன் - வேண்டும் இடங்களில் வேண்டியவாறே தோன்றுபவன் . திரிவான் ஓர் பவன் - திரிபவனாகிய ஒரு கோலத்தை யுடையவன் . ` நின்ற தலையாலங்காடன் ` என இயையும் . தவன் - தவக்கோலம் உடையவன் .

பண் :

பாடல் எண் : 5

கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்
காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

விரைந்து வரும் புனலையுடைய கங்கையைச் சடையில் கரந்தவனாய் , விரும்பத்தக்க அழகிய பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பனாய் , அழகிய கையில் மான்கன்றொன்றை ஏந்தியவனாய் , ஐயாறு மேயவனாய் , ஆரூரனாய் , குற்றமில்லா அடியார் மாட்டுப் பரிவுடையனாய் , பரிதி நியமத்தவனாய் , பாசூரினனாய் , சங்கரனாய் நின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

` கடும்புனலைக் கரந்தான் ` என்றது , அது கரக்கலாகா ஆற்றலது என்பது உணர்த்துதற்கு . காமரு - அழகிய . ` விரும்பத் தக்க ` என்றுமாம் . ஐயாறு , ஆரூர் , பரிதிநியமம் இவை சோழநாட்டுத் தலங்கள் . பாசூர் , தொண்டைநாட்டுத் தலம் . பங்கம் - குறைபாடு ; குற்றம் . பரிந்தான் - இரங்கினான் .

பண் :

பாடல் எண் : 6

விடம்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலகம் ஆள்விப் பானை
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

விடமுடைய பாம்பினை இடையின்மேல் கட்டியவனாய் , தேவர்களாலும் எண்ணுதற்கரிய அளவினனாய் , தன்னை அடைந்தவரைத் தேவருலகம் ஆளச் செய்பவனாய் , அழகிய பொன்னாய் , அசையும் பெரிய களிற்றியானையை அழித்தவனாய் , உமை திகழ் ஒருபாகனாய் , சடைமுடிமேல் ஒழுகும் நீரையுடைய கங்கையையும் , கொடிய பாம்பையும் , பிறையையும் வைத்தவனாய் அகன்ற கடலை ஒத்தவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண் நாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

வீக்கினான் - கட்டினான் . எண்ணரிய அளவினான் - அளத்தற்கரிய அளவினையுடையவன் ; என்றது , ` அளவின்மை யுடையனாகலின் , யாவராலும் அளத்தற்கரியவன் ` என்றபடி . ` அளவிலான் ` என்பதும் பாடம் . ` அமரர் உலகம் ` என்பது குறைந்து நின்றது . கம்பம் - அசைதல் . அட்டான் - அழித்தான் . மகுடம் - சடை முடி . வார் புனல் - ஒழுகும் நீர் . வாளரவு - கொடிய பாம்பு . தடங்கடல் , அடையடுத்த உவமையாகுபெயர் .

பண் :

பாடல் எண் : 7

விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
முன்னானைப் பின்னானை யந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் தன்னை
உமையிருந்த பாகத்து ளொருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

இடபமூர்ந்து வீட்டு வாயில்கள் தோறும் பிச்சை யேற்பவனாய் , வீரட்டங்கள் எட்டும் மேவினவனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , பிணம் எரிந்து முடைநாறும் சுடுகாட்டில் ஆடுபவனாய் , இறப்பு எதிர்வு நிகழ்வு ஆகிய முக்காலமும் ஆபவனாய் , அரையிலுடை புலித்தோலாகவும் மேலாடை யானைத் தோலாகவும் அமைய விரும்பினனாய் , உமைபொருந்திய பாகத்தோடுள்ள ஒருவனாய் , சடையவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

கடைதோறும் - வாயில்கள்தோறும் . பலி - பிச்சை . ` வீரட்டம் ` என்ற பொதுமையால் , எட்டனையும் கொள்க . முதுகாடு - சுடுகாடு . முன் - இறந்த காலம் . பின் - எதிர்காலம் . அந்நாள் - நிகழ் காலம் . உடை - அரையில் உடுக்கப்படுவது . ஆடை - மேலே இடப்படுவது . ` இவை இரண்டனையும் , புலியையும் யானையையும் உரித்த தோலேயாக விரும்பினான் ` என்க . ` உள் ஒருவன் ` என்றதனை , ` உள் பொருள் ` என்பது போலப் பண்புத்தொகையாகக் கொள்க . பாகத்து உள் ஒருவன் - பாகத்தோடு உள்ள ஒருவன் .

பண் :

பாடல் எண் : 8

கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவேல் ஏந்தி னானை
யென்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

கரும்பின்கண் இருந்த சாறுகொண்டு சமைத்த கட்டியையும் கனியையும் தேனையும் ஒப்பவனாய் , கன்றாப்பூரின் நடுதறியாய் , பன்றியின் வெண்மருப்பாலாகிய காறை அணியினனாய் , இரும்பாலான மூவிலை வேலை ஏந்தியவனாய் , எனக்கு முதல்வனாய் , அழகிய ஆனைக் காவனாய் , வண்டுமொய்க்கும் கொன்றை மலரைச் சூடியவனாய் , தூயவனாய் , தாயானவனாய் , உலகுக் கெல்லாம் பொருள் வழங்குபவனாய்த் திகழும் தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

கரும்பு இருந்த - கரும்பின்கண் இருந்த ; என்றது , ` சாற்று வடிவாய் இருந்த ` என்றவாறு . ` கன்றாப்பின் நடுதறி , காறை , என்பவற்றை மேலே ( ப .61. பா .2; ப .4. பா .3.) காண்க . இரும்பு அமர்ந்த - இரும்பு பொருந்திய ; இஃது உருவ நிலையை விளக்கியது . என்னான் - எனக்கு முதல்வன் . ஆனைக்கா , சோழநாட்டுத் தலம் . சுரும்பு - வண்டு . ` உலகுக்கெல்லாம் நலம் தரும் பொருள் ` என்க .

பண் :

பாடல் எண் : 9

பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்
படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் தன்னைக்
காரணனை நாரணனைக் கமலத் தோனை
எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

பண்டுதொட்டுவரும் இசையிலக்கணத்தொடு பொருந்திய யாழிசையின் பயனாய் , பாலாய் , பாலின் சுவையாய் , பெரியவானமாய் , கனலாய் , காற்றாய் , தன்னைக் கண்ட அளவிலே மகிழ்ச்சி மிகுவார்க்கு எளியனாய் , முதல்வனாய் , திருமாலாய் , நான் முகனாய் , எட்டிதழ்த் தாமரை வடிவிலுள்ள இல்லமாகிய என் நெஞ்சத் துள்ளே நின்ற எம் தலைவனாய் , யானைத் தோற் போர்வையைப் பேணுபவனாய் , இலிங்க வடிவினனாய்த் திகழும் தலையாலங் காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

பண்டு அளவு - தொன்று தொட்டு வரும் அளவு ; என்றது , இசை இலக்கணத்தை . படு பயன் - பாலின்கண் பொருந்திய பயன் ; சுவை . கடு வெளி - பெரிய வானம் . ` கண்ட அளவில் ` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று . மெய்யன்புடையார் பிறிது பயன் வேண்டாது காட்சியையே விரும்பி நிற்பராகலின் , அவரே கண்ட அளவிற் களிகூர்வார் என்க . காரணன் - முதல்வன் . அதிகார சத்தியால் நாரணனாகியும் கமலத்தோனாகியும் நிற்பவன் என்றதாம் . எண்டளம் - எட்டுத் தளம் ; தளம் - இதழ் . ` எட்டிதழ்த் தாமரை வடிவில் உள்ள இல்லமாகிய என் நெஞ்சம் ` என்க . ` இருதய கமலம் எட்டிதழ்த் தாமரை வடிவிற்று ` என்பது , மெய்ந்நூல்களின் துணிபு . தண்டு அரன் - இலிங்க வடிவாய் உள்ள சிவபிரான் ; ` துன்பத்தை நீக்குகின்ற உருத்திரன் ` என்றுமாம் , இனி , ` பண்ணளவு , எண்ணளவு , தண்ணரன் ` என்பன , எதுகை நோக்கித் திரிந்தன என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாமத்
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

இருபது கைகளையுடைய அரக்கர் கோமான் தோள்வளைகளைப் புடைத்து ஓடிச்சென்று ஆராயாது கயிலை மலையை விரைந்தெடுக்க அவன் முத்து விளங்கும் முடிகள் பத்தும் நடுங்கும் வண்ணம் திருவிரல் ஒன்றை அவன்மேல் வைத்து ஊன்ற அவன் தன் பத்து வாயாலும் பாடிய சாமகீதப் பாடலைக் கேட்டு இரக்கம் மிக்கவனாய் அவனுக்கு இராவணன் என்ற பெயரை ஈந்த தத்துவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேனே .

குறிப்புரை :

அது , பகுதிப் பொருள் விகுதி . தன் , சாரியை . கருதாது - ஆராயாது . முடி - மகுடம் . ` துளங்க ` என்புழி , ` அசைத்து ` என ஒரு சொல் வருவிக்க . வளைகள் - தோள்வளைகள் . அவைகளை ` எற்றி ` என்றது , ` தோள்களைப் புடைத்துக்கொண்டு ` என்றவாறு . முடுகுதல் - விரைதல் ; அது , விரைந்து எடுத்த செயல்மேல் நின்றது . ` அவன் மேல் ஆக ` என ஆக்கம் வருவித்து , ` வைப்பு அவன் மேலதாகும்படி ` என உரைக்க . வைப்ப - ஊன்ற . பாடல் - இசை பாடுதல் . பரிந்து - இரங்கி . ` ஈந்த நாமத் தத்துவன் ` என்று அருளினாராயினும் , ` நாமம் ஈந்த தத்துவன் ` என்றலே திருவுள்ளம் என்க . நாமம் - பெயர் ` இராவணன் ` என்னும் பெயர் , ` அழுதவன் ` என்னும் பொருளுடையதாய் , அவன் அஞ்ஞான்று அடைந்த துன்பத்தினை என்றும் நினைப்பித்து நின்றமை யறிக .

பண் :

பாடல் எண் : 1

பாரானைப் பாரினது பயனா னானைப்
படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னை
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்
கனைத்துலகு மானானை அமரர் கோனைக்
காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்
கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

இப்பூமி ஆனவனும் , பூமியின் பயன் ஆனவனும் , படைத்தல் தொழிலே தானாய் அதன்கண் நின்றவனும் , பல்லுயிர் மேலும் இரக்கம் கொண்டவனும் , அடியார்க்குத் தெவிட்டாத இனிய அமுது ஆனவனும் , எல்லா உலகுகளாகவும் விரிந்தவனும் , தேவர் கோனாய்த் திகழ்பவனும் , கரிய கண்டமுடையவனும் , கயிலை மலைக்கு இறையவனும் , நினைவார் மனத்தில் நிற்பவனும் , இயமனை வெகுண்டொறுத்த புகழுடையவனும் , செல்வம் மிக்கவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன் .

குறிப்புரை :

பார் - பூமி . பயன் வித்துக்களின் விளைவைத் தருதல் . படைப்பு ஆகி - படைத்தல் தொழிலே தானாய் அதன்கண் நின்று . ` படைப்பானை ` என்பதும் பாடம் . பரிவோன் - இரங்குவோன் . ஆராத - தெவிட்டாத . ` அடியார்கட்கு அமுதை ` என்க . சீர் - புகழ் ; அது , மார்க்கண்டேயரைக் காத்து , என்றும் பதினாறு வயதினராய் இருக்க அருளியதனால் ஆகியது . ` நானே ` என்னும் பிரிநிலை ஏகாரம் , தாம் அடைதற்கு அரிதாதல் விளக்கி நின்றது . ` செம்பவளக் குன்று ` என்றது ; உவமையாகுபெயர் .

பண் :

பாடல் எண் : 2

விளைக்கின்ற நீராகி வித்து மாகி
விண்ணொடுமண் ணாகி விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்
தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்
முளைக்கின்ற கதிர்மதியும் அரவு மொன்றி
முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்
திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

விளைவை உண்டாக்கும் நீராயும் , வித்தாயும் , விண்ணாயும் , மண்ணாயும் , செம்பொன்விளையும் சுரங்கமாயும் , அலகில் சோதியாயும் , தூண்டுதல் வேண்டா விளக்காயும் , அசைவில்லா வானத்தின்மேல் தோன்றி ஒளிர்பிறையும் பாம்பும் என்றும் மூவாது நின்று ஒலிமிக்க நீரையுடைய கங்கையுடன் விளையாடி மகிழ்கின்ற சடையனாகவும் ஆகித் திருமால் பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

விளைக்கின்ற நீர் - வித்துக்களைப் பதப்படுத்தியும் , பின்னர் அவற்றினின்றும் தோன்றும் முளைகளை வளர்த்தும் பயன் தரச்செய்கின்ற நீர் ; இதனை எடுத்தோதியது , அவன் உலகிற்குச் செய்து வரும் நலத்தினது சிறப்பு . அதனை மறவாது ஊன்றி உணர்வார்க்கே புலனாவதாதலை நினைந்து என்க . ` விளைக்கின்ற நீராகி ` என்றதனால் , ` விளைகின்ற வித்துமாகி ` என்பதும் போதரும் . ` செம் பொற்றுளை ` என இயையும் ; ஈண்டு , ` துளை ` என்றது பொன்னின் பொருட்டு அகழப்படும் நிலச்சுரங்கத்தை ; இதனை , ` ஆகரம் ` என்ப . ` இது , தன்னை அடைந்தார்க்கு நிரம்பிய செல்வத்தைக் கொடுப்பது போல , இறைவன் தன்னை அடைந்தார்க்குப் பெரு நலத்தைத் தருபவன் ` என்பதாம் . ` துளைக்கின்ற ` என்றதும் , ` அகழ்கின்ற ` என்றவாறே யாம் , ` தூண்டரிய ` என்பதில் அருமை , இன்மை குறித்து நின்றது , ` தூண்டுதல் வேண்டாத சுடர் ` ( விளக்கு ) என்றபடி . துளக்கு இல் வான் - அசைதல் இல்லாத வானம் ; எல்லாப் பொருளும் தன்னிடத்தே போக்கு வரவு புரிய , தான் போக்கு வரவு இன்றி நிற்றலின் , ` துளக்கில் வான் ` என்றருளினார் . கதிர் - ஒளி . மூவாது - மூப்படையாது . திளைக்கின்ற - விளையாடி மகிழ்கின்ற . ` மதியும் அரவும் ஒன்றி என்றும் மூவாது நின்று கங்கையொடு திளைக்கின்ற ` என்க . இனி , ஒடு உருபைக் கண்ணுருபாகத் திரித்தலுமாம் . அன்றி , ஒடுவை , ` எண் ஒடு ` என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை
மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்
கலைநிலவு கையானைக் கம்பன் தன்னைக்
காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை
மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்
சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

மலைமகளுடைய தலைவனும் , கடலில் படும் முத்தும் , மரகதமும் , சிறந்த மாணிக்க மணியும் போல்பவனும் , மான் கன்றையே மிக்க செல்வமாகக் கையிடத்துக் கொண்டவனும் , கச்சி ஏகம்பனும் , விலைமிக்க வெண்ணீற்று மேனியனும் , உண்மையடியார் கருதுவதையே தானும் கருதி முடித்தருளுபவனும் , வில் நிலவும் கரத்தவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

மா நீர் - மிக்க நீர் , இஃது , அன்மொழித் தொகையாய் , கடலைக் குறித்தது . மா மணி - பெருமை பொருந்திய மணி ; மாணிக்கம் . கலை - மான் . மல்கு - மிக்க ; ` மிக்க செல்வமாகிய கலை நிலவு கையான் ` என்றது , ` மான் கன்றையே மிக்க கைப்பொருளாக உடையவன் ` என்றபடி , கம்பன் - கச்சி ஏகம்பன் . காண்பு இனிய - காட்சிக்கு இனிய . கனகம் - பொன் . ` விலை பெரிய ` என்றது ` சிறிதும் விலைபெறாத ` என்பதனை எதிர்மறைவகையால் நகைதோன்ற அருளிச்செய்தவாறு . ஒன்றும் அறியாது உரைத்தவரை , ` நீயிர் பெரிதும் அறிதிர் ` என்றல்போல . இவை இரண்டானும் , சிவபிரானது பற்றற்ற தன்மையை வியந்தருளியவாறு . ` மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவான் ` என்றது , ` பிறராயின் , அவர் ஒன்று நினைக்கத்தான் வேறோன்று நினைத்தல் போலாது , மெய்யடியார் கருதியதையே தானும் கருதி முடித்தருளுவன் ` என்றதாம் ; இஃது ` என்னை ஆண்டருளினீராகில் அடியேன் பின் வந்தவனை ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்றும் எடுத்தாளவேண்டும் ` எனத் திருவதிகையில் திலகவதியாரும் ` ` வண்ணங்கண்டு நானும்மை வணங்கியன்றிப் போகேன் ` எனப் பழையாறை வடதளியில் சுவாமிகளும் , ` அடியேற்கு இன்று ஞாலம் நின் புகழேயாகவேண்டும் ` என ஆலவாயில் ஆளுடைய பிள்ளையாரும் வேண்டியவற்றையே தானும் வேண்டி முடித்தமை முதலியவற்றால் இனிது விளங்கிக் கிடந்தமை காண்க . சிலை - மேருமலையாகிய வில் .

பண் :

பாடல் எண் : 4

உற்றானை யுடல்தனக்கோர் உயிரா னானை
ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்
பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானைக் கற்பனவுந் தானே யாய
கச்சியே கம்பனைக் காலன் வீழச்
செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

உறவானவனும் , உடலிடத்து உயிர் ஆனவனும் , ஓங்காரத்தில் முழுப்பொருள் தான் ஒருவனே ஆனவனும் , உமை ஒரு பாகத்தைப் பெற்றவனும் , தலைக்கோலச் சிறப்பினனும் , பிறவாதவனும் , பெரியனவும் அரியனவும் ஆகிய எல்லாப் பொருள்களையும் பிறர் எல்லார்க்கும் முன்னே கற்றவனும் , கற்றவனாகிய தானே கற்கப்படும் பொருளுமாய் ஆனவனும் , கச்சி ஏகம்பனும் , இயமன் இறந்துபடச் சினந்தவனும் , தானே விளங்கும் ஒளியினனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன் .

குறிப்புரை :

உற்றான் - உறவானவன் . உடல் தனக்கு - உடம்பு நிலைபெறுதற் பொருட்டு ; உயிராகி அதன்கண் நிற்பவன் என்க . ஓங்காரத்து ஒருவன் - ஓங்காரத்தின் முழுப்பொருள் தான் ஒருவனே ஆகியவன் . ` உமையது ஒரு பாகத்தைப் பெற்றான் ` என்க . எல்லாம் - எல்லாப் பொருள்களையும் . ` முன்னே கற்றான் ` என்றது . ` யாவர்க்கும் முன்னே தான் உணர்ந்தான் ` என்றவாறு . ` கற்பனவும் தானே ஆயினான் ` என்றது , ` கற்றவனாகிய தானே கற்கப்படும் பொருளுமாய் உள்ளான் ` என்றதாம் . திகழ் ஒளி - தானே விளங்கும் ஒளி .

பண் :

பாடல் எண் : 5

நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்
குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த
அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

சாம்பலாயும் , சாம்பலை உமிழும் நெருப்பாயும் , நினைவாயும் , நினைவில் நின்று இனிக்கும் உமையம்மை நிலவு கூறாயும் , இயமனாயும் , தீயனவும் நல்லனவுமாய் நிற்கும் அவ் வினைகளாயும் , நிறைந்த அன்புக் கண்ணீரினராய் நீங்காத ஆனந்தத்தையுடைய அடியார்கள் செய்த அனாசாரமாகிய சிறு குற்றங்களைப் பொறுத்து அவர்களை என்றுஞ் சினவாத பெருமானாயும் ஆகித் திருமாற் பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

நீறு - சாம்பல் ; இஃது உலகம் ஒடுங்கிய நிலையையும் , ` நீற்றை உமிழும் நெருப்பு ` என்றது , உலகத்தை ஒடுக்குவதாகிய அவனது சத்தியையும் , ` நினைவு ` என்றது உலகத்தை மீளப் படைக்கும் அவனது சங்கற்பத்தையும் , ` கூறாகி ` என்றது , அச்சங்கற்பத்தின் வழியே படைக்கும் நிலையையும் , ` கூற்றாகி ( கூற்றுவனாகி )` என்றது , வினைகளை ஊட்டுவித்தலையும் , ` கோளுமாகிக் குணமாகி ` என்றது , தீயனவும் நல்லனவுமாய் நிற்கும் அவ்வினைகளுந் தானேயாய் நிற்றலையும் , குறிக்கும் என்க . ` உவகை ` என்றது , அன்பினை . ஆறாத - நீங்காத , ஆனந்தத்து ( அவ்வன்பினால் வரும் ) இன்ப மேலீட்டினால் , ` ஆசாரம் ` என்னும் வடசொல் , தமிழில் பெரும் பான்மையும் புறத்தூய்மையையே குறித்து வழங்கும் என்பது , ` அச்சமே கீழ்கள தாசாரம் ` ( குறள் - 1075.) என்பதனால் அறியப்படும் ; அதனால் , இங்கு ` அனாசாரம் ` என்றது , அறியாமையாலும் மாட்டாமையாலும் , செயல் இழப்பினாலும் மனத்தொடு படாது செய்யும் சிறு குற்றங்களையே யாம் என்பது விளங்கும் .

பண் :

பாடல் எண் : 6

மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை
மறப்பிலியை மதியேந்து சடையான் தன்னை
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை
உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்
கருநிலவு கண்டனைக் காளத்தியைக்
கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச்
செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

மருவுதற்கினிய மறைப்பொருள் ஆனவனும் , மறைக்காட்டில் உறைபவனும் , மறப்பில்லாதவனும் , பிறை சூடிய சடையினனும் , நிலவுகின்ற தன் நிறத்தால் ஒளிரும் சுடர் ஆனவனும் , மேலிடத்து உள்ளவனும் , பேசுதற்கினியவனும் , தவக்கோலம் தாங்கியவனும் , உலகிற்கு வித்தானவனும் , கறுத்த கண்டத்தவனும் , காளத்தி நகரினனும் , நினைப்பவர் உள்ளத்தில் நிற்பவனும் , போர்த் தொழில் பயின்ற படைக்கலங்களை ஏந்தியவனும் ஆகித் திருமாற் பேற்றில் திகழும் எம் செம்பவளக்குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

மருவு இனிய - பொருந்துதற்கு இனிய . ` இனிய பொருள் ; மறைப்பொருள் ` என்க . மறப்பு - மலத்தால் உளதாவ தாதலின் , மலம் இலனாகிய இறைவனுக்கு மறப்பு இலதாயிற்று ; அதனால் - அவன் எல்லாவற்றையும் அறிந்தாங்கு அறிந்து நிற்பன் என்க . உரு - நிறம் . உம்பரான் - மேலிடத்து உள்ளவன் . உரைப்பு இனிய தவத்தான் - ` பேசுதற்கு இனியவன் ; தவக்கோலத்தை உடையவன் ` என்க . ` வித்து ` என்றது . ` காரணம் ` என்னும் பொருளது . ` உலகில் வித்தை ` என்பது பாடம் அன்று . ` கருமை ` என்பது கரு எனக் குறைந்து நின்றது . மறைக்காடு , சோழநாட்டுத் தலம் . காளத்தி , தொண்டை நாட்டுத் தலம் . காளத்தியில் உள்ளவனை , ` காளத்தி ` என ஆகு பெயரால் குறித்தருளினார் என்க . கல்வி - உறுதிப் பொருளைக் கூறும் நூல்கள் ; அவற்றின் பொருளாய் நிற்றல் பற்றி , ` கல்வி ` என்றருளினார் . படை - படைக்கலம் ; மழு , சூலம் முதலியன .

பண் :

பாடல் எண் : 7

பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்
பெரியானை அரியானைப் பெண்ஆண் ஆய
நிறத்தானை நின்மலனை நினையா தாரை
நினையானை நினைவோரை நினைவோன் தன்னை
அறத்தானை அறவோனை ஐயன் தன்னை
அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்
திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

பலவகைப் பிறப்புகளாய் உள்ளவனும் , வினை வயத்தால் பிறவாத பெருமையுடையவனும் , தோற்றம் ஆற்றல் முதலியவற்றில் மிகப் பெரியவனும் , உணர்தற்கு அரியவனும் , பெண்ணும் ஆணுமாகிய வடிவினனும் , குற்றமற்றவனும் , தன்னை நினையாதாரைத் தான் நினையாதவனும் , தன்னை நினைப்போரைத் தான் நினைப்பவனும் , அறமேயாய் நின்று அதனை நிலை பெறுவிப்பவனும் , நன்மை தீமைகளை அடைவிக்கும் அறவோனும் , வியக்கத் தக்கவனும் , தலைவனும் , தேவர்கள் வணங்கும் தன்மையனும் , திகழ்சோதியும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

` பிறப்பான் ` என்பது , ` பிறப்பு ` என்னும் பெயரடியாகப் பிறந்த பெயர் . ` பலவகைப் பிறப்புக்களாயும் உள்ளவன் ` என்பது பொருள் . ` நிறம் `` என்றது , வடிவத்தை , பெண் ஆண் ஆய வடிவம் - மாதிருக்கும் பாதியனாய வடிவம் . ` நினைவான் , நினையான் ` என்பன , ` தன் தமராக நினைவான் , நினையான் ` என்பதாம் . அறத்தான் - அறமேயாய் நின்று அதனை நிலைபெறுவிப்பவன் . அறவோன் - அறத்தினை உடையவனாய் நல்லதற்கு நலனும் , தீயதற்குத் தீமையும் அளிப்பவன் . ஐயன் - வியக்கத்தக்கவன் . அண்ணல் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 8

வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை
வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை
ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்
கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்
கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்
தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

வானில் வளர் முகிலாயும் , மதியமாயும் , வணங்குவார் மனத்தில் உறைபவனாயும் , அழகிய பொன்னாயும் , உடம்பில் உயிர்க்குற்ற உறுதுணையாயும் , அழிவில்லாதவனாயும் , ஒற்றியூர் வாழ் உத்தமனாயும் , ஊழிக்கு ஊழியாயும் , கானகத்து வாழ் கருங் களிறாயும் , காளத்தி வாழ்வானாயும் , கருதுவார் கருத்துள் நிலவுபவனாயும் , முதன் முதலாயும் , தேனில் இனிய சுவையாயும் , நிலவித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

வளர் - மிகுகின்ற ; இதனை மதிக்குங் கூட்டுக . ` முகில் , மதி , சுவை ` என்பன உவமையாகு பெயர்கள் . ` முகில் ` என்றது , கைம்மாறு கருதாது உதவுங் கடப்பாடு உடைமை பற்றியும் , ` மதி ` என்றது , அகவிருளைச் சிறிது சிறிதாக நீக்கி இறுதியில் முற்றும் நீக்குதல் பற்றியும் ` தேனகத்தில் இன்சுவை ` என்றது , பேரின்பஞ் செய்தல் பற்றியும் என்க . வடிவு - அழகு . ஊன் - உடம்பு , உயிர் உடம்பொடு கூடித் தொழிற்படுங்கால் , அத்தொழிற்பாட்டிற்கு இறைவன் உடனாய் நின்று உதவி வருதல் பற்றி , ` ஊனகத்தில் உறுதுணை ` என்று அருளினார் . உலவாதான் - அழியாதவன் . ஒற்றியூர் , காளத்தி தொண்டை நாட்டுத் தலங்கள் . ` காளத்தி ` என்றதற்கு மேல் ( பா .6.) உரைத்தவாறே உரைக்க . ஊழிக்கு அன்று - ஊழிக்கு ஊழி ; ` அன்று ` என்னும் இடைச் சொல் பெயர்த்தன்மைத்தாய் நின்று இரண்டனுருபு ஏற்றது . கருங் களிறு - யானை ; என்றது காதல் பற்றி . ` வானகத்து வளர் முகில் ` என்றாற்போல , ` கானகத்துக் கருங்களிறு ` என்றதும் , அதன் தன்மையை விதந்தருளிச் செய்தவாறு . ` மூலக் கருவை ` என மாற்றி , ` முதல் முதலினை ` என உரைக்க . தோற்றம் எய்தியவற்றுள்ளும் , தம்மால் தோன்றுவனவற்றை நோக்கத் தாம் முதல் எனப்பட்டு வழிநிலை முதலாய் நிற்பனவும் சில உளவாதல்பற்றி , ஒன்றாலும் தோன்றாது , எல்லாவற்றின் தோற்றத்திற்கும் தானே முதலாய் நிற்கும் இறைவனை , ` முதல் முதல் ` என்று அருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 9

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை
முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்
பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னைப்
பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்
ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்
செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

மூவாத முதற்பொருளாயும் , முளையாயும் , மொட்டாயும் , மலரின் வடிவினனாயும் , எக்காலத்தும் வெறுப்பிலனாய்ப் பல்லுயிர்க்குந் துணையாகி இரக்கமுடையனாயும் , மேற் பொருளும் , கீழ்ப்பொருளும் தான் ஆனவனாயும் , மேலான ஒளிப் பிழம்பாயும் , எண்ணுவார் மனத்தில் பொருந்தியிருப்பவனாயும் , உயர்ந்த கரும்பு வில்லையுடைய மன்மதன் ஒள்ளிய நெருப்பிடத்து வெந்து நீறாகுமாறு செய்த பார்வையனாயும் திரிபுரங்களை அழித்தவனாயும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

முற்றாத முதல் - இளையவேர் . முழுமுதல் - அனைத்து வேர் . மொட்டு - அரும்பு . முழு மலர் - மலர்ந்த மலர் . ` மலரின் ` என்னும் , இன் , வேண்டாவழிச் சாரியை ; ` மலராம் மூர்த்தி ` என்பதே பொருள் . ` பல்லுயிர்க்கும் பற்றாகிப் பரிவோன் ` என்க . பற்று - துணை . பரிவோன் - இரங்குவோன் . ` பற்றாகிப் பரிவோன் ` என்றதனை , ` ஓடி வருபவன் ` என்பது போலக் கொள்க . பரஞ்சுடர் - மேலான ஒளி . பரிவோர் - அன்பு செய்வோர் . உற்றான் - பொருந்தியிருப்பான் . உறு நோக்கம் - உற்ற நோக்கம் ; பார்த்த பார்வை . இங்குப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல என்க .

பண் :

பாடல் எண் : 10

விரித்தானை நான்மறையோ டங்க மாறும்
வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
நெரித்தானை நின்மலனை யம்மான் தன்னை
நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்
தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

நான்மறைகளையும் ஆறங்கங்களையும் விரித்தவனும் , கயிலை மலையை எடுக்க முயன்ற இராவணனை விரலூன்றித் துன்புறுத்தியவனும் , குற்றமற்றவனும் , தலைவனும் , பிறைதங்கிய செஞ்சடைமேல் நீர்நிறைந்த கங்கையைத் தரித்தவனும் , இன்பத்தைச் செய்யும் சங்கரனும் , இன்ப காரணனான சம்புவும் பகைத்தார் புரங்கள் மூன்றும் நெருப்பிடத்து வேகுமாறு சிரித்தவனும் , ஒளிப்பிழம்பாய் விளங்கியவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

அம்மான் - தலைவன் . சங்கரன் - இன்பத்தைச் செய்பவன் . சம்பு - இன்பத்தை உண்டாக்குபவன் . தரியலர்கள் - பகைவர்கள் .

பண் :

பாடல் எண் : 1

கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
மதிற்கச்சி யேகம்பம் மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே , நெற்றியிடத்துக் கண் சேர்ந்த இளங்காளையாய் , பக்கமலைகளான மதில்கள் சூழ்ந்த கந்தமாதனத்துறைவானாய் , பலவகைப் புவனங்களிலும் சென்று பிறத்தற்குக் காரணமாகிய மயக்கத்தை அறுக்கும் மருந்தாய் , மதிலாற் சூழப்பட்ட காஞ்சி மாநகரத்து ஏகம்பத்தை மேவியவனாய் , தேவருலகிற் சென்று எறிக்கும் விளக்கொளியாய் , மீயச்சூரில் நிலைத்து நிற்கும் வேறுபடு தன்மையனாய் , மேகத்தினது அழகு சேர்ந்த கண்டத்தனாய் எம் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

` கைத்தலம் ` என்பது போல , ` கண்டலம் ` என்பது இரு பெயரொட்டு : தலம் வடசொல்லாதலின் ணகரம் திரியாது நிற்றலும் பொருந்துவதாயிற்று : விண்டலம் என்பதும் அன்னது . ` நெற்றித் தலம் ` என மாறிக் கூட்டுதலும் ஆம் . கட்டிளமை வடிவமும் சிவ பிரானுக்கு உண்மையின் , ` இளங்காளை ` என்று அருளினார் . ` கல் ` என்றது , பக்க மலைகளை ; எனவே , ` கல் மதில் ` என்றது , உருவக மாயிற்று . கந்த மாதனம் , கயிலை போல்வதொரு மலை ; இது , வைப்புத் தலங்களுள் ஒன்று . மண்டலம் சேர் மயக்கு - பலவகைப் புவனங்களிலும் சென்று சேர்தற்கு ( பிறத்தற்கு ) க் காரணமாகிய மயக்கம் , விண்தலம் - தேவர் உலகம் . ` அதிற் சேரும் விளக்கொளி ` என்றது , தேவர்கட்குப் பெருமையைத் தருதல் கருதி . மீயச்சூர் , சோழநாட்டுத் தலம் . கொண்டல் அம் - மேகத்தினது அழகு . அமர்ந்து - விரும்பி . குழகன் - அழகுடையவன் .

பண் :

பாடல் எண் : 2

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே வண்டுகள் மொய்க்கும் பூக்களணிந்த குழலையுடைய உமாதேவியின் பாகனாய் , திருமறைக் காட்டில் வாழும் அழகினனாய் , பண்டு செய்த வினையான் வரும் துன்பத்தைத் தீர்ப்பவனாய் , வீட்டுலக வழியை யுணர்த்தும் பரமனாய் , செண்டு கொண்டு ஆடும் ஆட்டம் போல எவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாய் , திருவாரூர் மூலட்டானத்தினனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

மணாளன் - அழகன் . பண்டு ஆடு - முற்பிறப்பில் செய்த , ` பழவினை ` என்றது , பெயரளவாய் நின்றது ; ` பண்டு செய்த பழவினையின் பயன் ` ( தி .5. ப .47. பா .1.) என்று திருக்குறுந் தொகையிலும் அருளிச் செய்தார் . பரலோகம் - எல்லா உலகங்களினும் மேலாய உலகம் ; வீட்டுலகம் ; அஃது இறைவனது திருவருள் ; ` வானோர்க்கு உயர்ந்த உலகம் ` ( குறள் - 346.) என்றதும் அது . உலகமும் வெளியும் அல்லாத அதனை ஓர் உலகமும் வெளியும் போல அடை கொடுத்து வழங்குதல் , மன மொழிகளுக்கு உட்படாத அதனை , ஒருவாறு அவற்றுக்கு உட்பட்ட பொருள்களோடு சார்த்தி உவமை வகையான் உணர்தற் பொருட்டு என்க . இந் நுட்பம் உணரமாட்டாதார் , ` வீட்டு நிலையும் ஓர் உலகமே ` என மயங்கிக் கொள்வர் . அது பொருந்தாமை , ` மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க - லுற்றார்க் குடம்பு மிகை ` ( குறள் -345) என முன்னே அருளிச் செய்தமையால் தெற்றென விளங்கும் ; எவ்வாறு எனின் , வீடாவது பிறப்பற்ற நிலையும் , பிறப்பாவது உடம்புமே என்பன எல்லார்க்கும் உடம்பாடாகலின் , வீடு பெற்றார்க்கு உடம்பு உளதாகாது என்பது தானே விளங்கிக் கிடப்பவும் , வீட்டு , நிலையை , ` உலகம் ` என வழங்கும் வழக்கினது கருத்தறியாது , எல்லா உலகங்களினும் மேலாய் உள்ள ஓர் உலகமே ,` வீட்டுலகம் போலும் ` எனவும் , ` அவ்வுலகம் போல அதன்கண் உள்ள இன்பத்தை நுகர்தற்கு ஏற்ப , ` வீட்டுடம்பு ` என்னும் ஒருவகை உடம்புகளும் உள்ளன போலும் ` எனவும் மலையாமைப் பொருட்டு அதனை எடுத்தோதி யருளினாராதலின் என்க . இதனானே வீட்டு நிலையும் ஒரு புவனமாயும் , அதன்கண் இன்பத்தை நுகர்தற்குக் கருவியும் தனுவாயும் ஒழியின் , உலக இன்பம்போல , வீட்டின்பமும் வரையறைப்பட்ட பொருளினால் உளதாவதாய் , உடம்பளவில் வரையறைப்பட்டு நின்று , காலம் . இடங்களாலும் வரையறைப்படுமாகலின் , வீட்டின்பத்தை , ` நிரதிசய இன்பம் ,` எனவும் , ` வரம்பிலின்பம் ` எனவும் , கூறும் சொற்கள் பலவும் பொருள்படா தொழியும் என்பதும் பொருந்துமாறு பற்றி உணர்ந்து கொள்ளப்படும் . சிவநெறி நூல்கள் சிவலோகம் முதலியவற்றைப் பதமுத்தி இடமாகக் கூறுதலன்றிப் பரமுத்தி இடமாகக் கூறாமை யறிக . இத்தகைய பரலோகத்தை அடையும் வாயில் , எவ்வகைத்தான உடம்பும் இல்லாது அருளே வடிவாகிய சிவபிரானை உணரும் உணர்வே யாகலானும் , அவ்வுணர்வும் அவன் தரவே பெறற் பாலதாகலானும் , ` பரலோக நெறி காட்டும் பரமன் ` என்றருளினார் . பரமன் - யாவர்க்கும் மேலானவன் . செண்டாடி - செண்டாடுதல்போல உழற்றி . கொண்டாடும் - பாராட்டுகின்ற .

பண் :

பாடல் எண் : 3

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே , அலைகளுடன் கூடிய நீரையுடைய கங்கை தங்கும் சடையனாய் , அடியார்களுக்கு ஆரமுதாய் , மலையில் தோன்றி வளர்ந்த இளமங்கை பார்வதியின் பங்கனாய் , வானோர்தம் முடிக்கணியாய்த் தன் திருவடிகளைத் தந்து நின்றவனாய் , இலைபோன்ற திரிசூலப்படையினனாய் , ஏழுலகுமாய் வியாபித்த எந்தையாய் , கொலைத் தொழிலிற் பழகிய யானையது தோலைப் போர்த்துக் கொண்டவனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

அலை ஆர்ந்த - அலைகள் நிறைந்த , ` கங்கை ` பெயர் . மலை ஆர்ந்த - மலையிற் பொருந்திய : தோன்றி வளர்ந்த . அணி - அணிகலம் . இலை ஆர்ந்த - இலைபோலப் பொருந்திய . கொலை ஆர்ந்த குஞ்சரம் - கொல்லுதல் பொருந்திய யானை .

பண் :

பாடல் எண் : 4

மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்
பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்
ஐயா றகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனே தனக்கு ஒப்பார் யாரும் இலனாய் , மயிலாடுதுறையைத் தனக்குப் பொருந்திய இடமாகக் கொண்டு மகிழ்ந்தவனாய் , புற்றில் வாழ் அரவுகளை அணிந்த புனிதனாய் , பூந்துருத்தியில் பொய்யிலியாய் , பற்றற்ற அடியார்க்கு மறைதலின்றி வெளிப்பட்டு நிற்பானாய் , ஐயாறு அகலாத ஐயனாய் , குற்றாலத்து விரும்பி உறையுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

` மற்றாரும் தன்னொப்பார் இல்லாதான் ` என்பது முதற்றிருப் பதிகத்தே கூறப்பட்டது . மயிலாடுதுறை , பூந்துருத்தி , ஐயாறு - இவை சோழநாட்டுத் தலங்கள் . குற்றாலம் , பாண்டிநாட்டுத் தலம் . பூந்துருத்திப் பெருமானை , சுவாமிகள் யாண்டும் , ` பொய்யிலி ` என்றே அருளுதல் காணப்படும் . அற்றார்கட்கு அற்றான் - மற்றுப் பற்றுச் சிறிதும் இலராய் நீங்கியவர்கட்கு , மறைந்து நிற்கும் தன்மை சிறிதும் இன்றி நிற்பவன் ; இடையீடில்லாத அனுபவப் பொருளாய் நிற்பவன் என்றபடி . ` அற்றவர்க் கற்ற சிவன் ` ( தி .3. ப .120. பா .2) என ஆளுடைய பிள்ளையாரும் அருளினார் .

பண் :

பாடல் எண் : 5

வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அடிகளே கச்சுப் பொருந்திய அழகிய முலையாளின் பங்கனாய் , மாற்பேற்றைத் தனக்குரிய இடமாகக் கொண்டு மகிழ்ந்தானாய் , போர்ச் செயலில் பழகிய பெரிய விடை ஒன்றை ஊர்தியாக உடையானாய் , புகலூரை நீங்காத புனிதனாய் , கங்கைபொருந்திய நீண்ட ஒப்பற்ற சடையை உடையானாய் , நினைக்கும் அடியாருடைய வினைச்சுமையை இறக்கி வைப்பானாய் , கூர்மை பொருந்திய மூவிலை வேற்படையை உடையானாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

வார் ஆர்ந்த - கச்சுப் பொருந்திய . மாற்பேறு , தொண்டை நாட்டுத் தலம் . காப்பு - இடம் . புகலூர் - சோழநாட்டுத் தலம் . ` சடை ` என்றதனை , ` சடைமுடி ` எனக் கொள்க . இழிப்பான் - இறக்குவான் .

பண் :

பாடல் எண் : 6

கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்
பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே ! மணம் கமழும் கொன்றை மலரை அணிந்து விளங்கும் சடையனாய் , கண்ணை அப்பிய செயற்கு விண்ணைப் பொருந்துதலை ஈடாகக் கொடுத்தானாய் , உலகில் நிறைந்த பல பிறவிகளிலும் பிறத்தலை அறுப்பானாய் , பற்றற்ற அடியார்க்குத் துணை நின்றானாய் , திருவடிகளில் தங்கிய சிலம்பு மிக்கு ஒலிப்பத் திரிவானாய் , தேவர் கூட்டம் வணங்கிப் பரவும் தலைவனாய் , மிகுதியான கொடிகள் கட்டப்பட்ட மதில்களையுடைய தில்லையில் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

கடி மலிந்த - மணம் நிறைந்த . கண் அப்பினார் கண்ணப்ப நாயனார் என்பது வெளிப்படையாகலின் அஃது அருளாராயினார் . விண் அப்பு - வானத்திற் பொருந்துதல் . படி மலிந்த - உலகில் நிறைந்த . பற்று - துணை . ` பற்றவன் ` என்பதில் அகரம் , சாரியை . அலம்ப - ஒலிக்க . ` திரிதல் , பலிக்கு ` என்க .

பண் :

பாடல் எண் : 7

உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்
ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்
காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய்
என்நெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே , மான்கன்று பொருந்தியதொரு கரதலத்தனாய் , ஒற்றியூரைப் பொருந்தி நிற்கும் இடமாக உடையானாய் , மூங்கிலசையும் கழுக்குன்றில் அமர்ந்தானாய் , காளத்திக்கண் திகழும் கற்பகமாய் , பூணூல் கிடந்தசையும் தோள்கள் எட்டுடைய இறைவனாய் , என் நெஞ்சைவிட்டு நீங்கா எந்தலைவனாய் , காதணி ஆட நடன மாடுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

உழை ஆடு கரதலம் - மான் பொருந்தியகை . ஒற்றியூர் , கழுக்குன்றம் , காளத்தி இவை தொண்டை நாட்டுத் தலங்கள் . ஒற்றியா உடையான் - ஒற்றித்து ( பொருந்தி ) நிற்கும் இடமாக உடையவன் . கழை - மூங்கில் . இழை - பூணநூல் . குழை ஆட - காதில் உள்ள குண்டலம் அசைய .

பண் :

பாடல் எண் : 8

படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி யேழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்
குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்புயுறையும் அழகனே படமெடுத்தாடும் பாம்பினைக் கச்சாகக் கட்டியவனாய் , பராய்த் துறையிலும் பாசூரிலும் பொருந்தியவனாய் , ஏழுலகுஞ்சென்று ஆங்காங்கே நடனமாடுவானாய் , நான்மறையின் பொருளினனாய் , எல்லார்க்கும் தலைவனாய் ( நாததத்துவனாய் ) மதநீர் ஒழுகுங் களிற்றினை உரித்த வீரனாய் , கயிலை மலையில் விரும்பி உறைவா னாய் , குடமாடியாம் திருமாலை இடப்பாகமாகக் கொண்டானாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

பன்னகம் - பாம்பு , ` படமாடு பன்னகம் ` எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது . அசைத்தான் - கட்டினான் . பராய்த்துறை , சோழநாட்டுத்தலம் . பாசூர் , தொண்டை நாட்டுத் தலம் . ஏழுலகிலும் சென்று நடனமாடுதல் , அதனை ஆங்கு உள்ளவர்கள் கண்டு உய்தற் பொருட்டு என்க . நாதன் - தலைவன் ; ` நாத தத்துவத்தில் உள்ளவன் ` என்றுமாம் . கடம் ஆடு - மதநீர் ஒழுகுகின்ற . குடம் - திருமால் ஆடிய ஒருவகைக் கூத்து . அதனால் , ` குடம் ஆடி ` என்றது திருமாலின் பெயராயிற்று . சிவபிரான் திருமாலை இடப்பாகத்திற் கொண்டவாற்றை மேலே ( ப .76. பா .1.) காண்க . * * * * * * * 9, 10 9, 10 : * * * * * * * * குறிப்பு : இத்திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்கள் கிடைத்தில .

பண் :

பாடல் எண் : 1

வானத் திளமதியும் பாம்புந் தம்மில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையுந் தீமையு மானார் போலும்
தேனொத் தடியார்க் கினியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே வானத்து விளங்கிய இளமதியும் பாம்பும் தம்முள் நிலவும் பகை நீங்கி வாழ அவற்றை நீள் சடைமேல் வைத்தவரும் , வண்டு தேனை உண்டு மகிழ்ந்து பாடும் தில்லையில் நடனமாடும் தேவரும் , ஞானமாகிய ஒளிப்பிழம்பாய் நின்றவரும் , நன்மையும் தீமையும் ஆனவரும் , அடியார்க்குத் தேன் போன்று தித்திப்பவரும் ஆவார் .

குறிப்புரை :

தம்மில் - தமக்குள் . ஆதரிப்ப - விருப்பங்கொள்ள ; ` பகை நீங்கி வாழ ` என்றவாறு . ` தம்மில் ஆதரிப்ப வளர்சடை மேல் வைத்தார் ` எனக் கூட்டுக ; ` தன்னில் ` என்பது பாடம் அன்று . ` தேனை உண்டு திளைத்து ` என மாறுக . திளைத்து - இன்புற்று . ` ஞானத்தின் ` என்பதில் இன் , அல்வழிக்கண் வந்த சாரியை ; ` ஞானமாகிய ஒண்சுடர் ` என்பது பொருள் ; இஃது உருவகம் . ` நன்மையும் தீமையும் ஆனார் ` என்றது , ` எல்லாம் அவரே : அவர்க்கு வேறாய் ஒன்று இல்லை ` என்றபடி . ` அடியார்க்குத் தேன் ஒத்து இனியார் ` என்க .

பண் :

பாடல் எண் : 2

விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மணல்செறிந்த புகாரின்கண் முத்துக்களை எறிகின்ற தெளிந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , விண்ணோர்கள் தொழுதுவேண்ட நஞ்சுண்டவரும் , பரந்த துருத்தியிடத்தும் வேள்விக்குடியிடத்தும் உறைபவரும் , அண்ணா மலையில் உறையும் அண்ணலவரும் , அதியரைய மங்கையில் அமர்ந்தவரும் , மிக்குப் பொருந்திய மதுக்களிப்பையுடைய வண்டுகள் பண்ணினைப் பாடிப் பறந்துலவும் பராய்த்துறையிடத்து மேவிய பரமரும் ஆவார் .

குறிப்புரை :

பரவ - ` எம் பெருமானே ` என ஏத்தி , ` எம்மைக் காவாய் ` என வேண்டி நிற்க . துருத்தி , வேள்விக்குடி , பராய்த் துறை இவை சோழநாட்டுத் தலங்கள் . அண்ணாமலை , நடுநாட்டுத் தலம் . அதியரைய மங்கை , வைப்புத்தலம் . பண் ஆர் - பண்ணை இசைக்கின்ற . களி வண்டு - மதுக்களிப்பையுடைய வண்டுகள் . ஆடுதல் - பறந்து உலாவுதல் . ` அப்பண்ணினைப் பாடி ஆடும் ` என்க . புகார் - காவிரியாற்றின் சங்க முகம் ; இதனை , ` திண் ஆர் புகார் ` என்றது , மணற் செறிவு நோக்கி . அலைக்கும் - எறிகின்ற ` புகாரின்கண் முத்துக் களை அலைக்கின்ற தெள்ளிய நீரையுடைய திருச்சாய்க்காடு ` என்க .

பண் :

பாடல் எண் : 3

கானிரிய வேழ முரித்தார் போலும்
காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்
வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்
உயர்தோணி புரத்துறையும ஒருவர் போலும்
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மலர்களிடத்துத் தேன் ஒழுகும் வண்ணம் மீன்கள் அவற்றைத் தாக்குகின்ற தெளிந்த நீர்ப் பொய்கைகள் மிக்க திருச் சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே காட்டினின்றும் மற்ற விலங்குகள் நீங்கிப்போமாறுவரும் களிற்றியானையை உரித்தவரும் , காவிரிப்பூம்பட்டினத்து உள்ளவரும் , தேவர்கள் கெட்டோடும் வண்ணம் வானத்தில் பறந்து வரும் திரிபுரங்களையும் எரித்தவரும் , வடகயிலையைத் தம் இருக்கையாகக் கொண்டவரும் , தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவரும் , பிரளய காலத்து ஊழி வெள்ளத்து மேலே உயர்ந்து விளங்கும் தோணிபுரத்து உறையும் ஒப்பற்றவரும் ஆவார் .

குறிப்புரை :

கான் இரிய - காட்டினின்றும் நீங்கிப் போம்படி . வேழம் - யானை . ` காவிரிப்பூம்பட்டினம் ` என்றது , பல்லவனீச் சரத்தை ; இது திருச்சாய்க்காட்டிற்கு அண்மையில் உள்ளதே . வான் - தேவர் ; இடவாகு பெயர் ; ` அவர்கள் அஞ்சி நீங்குமாறு வானத்திற் செல்லுகின்ற புரம் ` என்றவாறு . ` வருபுரம் ` என்றது , இடவழுவமைதி . ஊன் இரி அத்தலை கலனா உடையார் - தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவர் . தோணிபுரம் - சீகாழி . தேன் இனிய - தேன் ஒழுகும்படி . பாயும் - மலர்களில் தாக்குகின்ற .

பண் :

பாடல் எண் : 4

ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்
கானுற்ற ஆட லமர்ந்தார் போலும்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த சோலைகளின் நடுவில் விளங்கித் தோன்றும் திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , தசை பொருந்தி இருந்த வெள்ளிய தலையோடு சேர்ந்த கையினரும் , பல ஊழிகளைக் கண்டவரும் , மான் பொருந்திய கரதலம் ஒன்றுடையவரும் , திருமறைக்காட்டை அணுகியுள்ள கோடிக்கரையில் மகிழ்ந்து உறைபவரும் , காட்டில் ஆடலை விரும்பியவரும் , காமனைக் கண்ணிடத்துத் தோன்றிய அழலால் அழித்தவரும் ஆவார் .

குறிப்புரை :

மறைக்காட்டுக் கோடி - திருமறைக் காட்டை அணுகியுள்ள , ` கோடிக் குழகர் ` என்னும் தலம் . கான் உற்ற ஆடல் - காட்டில் பொருந்திய நடனம் . அமர்ந்தார் - விரும்பினார் .

பண் :

பாடல் எண் : 5

கார்மல்கு கொன்றையந் தாரார் போலும்
காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்
பார்மல்கி யேத்தப் படுவார் போலும்
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்
ஓத்தூ ரொருநாளும் நீங்கார் போலும்
சீர்மல்கு பாட லுகந்தார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே கார் காலத்தில் நிரம்பப் பூக்கும் கொன்றைப் பூவாலாகிய தாரினை உடையவரும் , காலனை ஓருதையால் வீழக்கண்டவரும் , நிறைந்து நின்று பூமியினுள்ளாரால் புகழப் படுபவரும் , திருப்பருப்பதத்தில் எக்காலத்தும் மகிழ்ந்து நின்றவரும் , மிக்க பிச்சை பெறுதற்காக ஊரின்கண் அலைபவரும் , ஓத்தூரை ஒருகாலும் நீங்காதவரும் , தாள அறுதியுடன் கூடிய பாடலை விரும்புபவரும் ஆவார் .

குறிப்புரை :

கார் மல்கு - கார் காலத்தில் நிரம்பப் பூக்கின்ற , வீழக் கண்டார் ` என ஒரு சொல் வருவித்துக்கொள்க . பார் - பூமியில் உள்ளார் ; இடவாகுபெயர் . மல்கி - நிறைந்து நின்று . பருப்பதம் - திருப்பருப்பதம் ; சீசைலம் ; இது தெலுங்கு நாட்டில் உள்ளது . ` பல்லூழி ` என்றது , ` எக்காலத்தும் ` என்றவாறு , ` ஊரின்கண் ` என உருபு விரித்து , ` உழன்றார் ` என்றதனோடு முடிக்க . ஓத்தூர் , தொண்டை நாட்டுத் தலம் . சீர் - தாள அறுதி .

பண் :

பாடல் எண் : 6

மாவாய் பிளந்துகந்த மாலுஞ் செய்ய
மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூ ருடையார் போலும்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
குரைகழலா லன்று குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க் கரியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , கேசி என்னும் குதிரையின் வாயைக் கிழித்து மகிழ்ந்த திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனும் ஆகிய இருவரும் தாமேயாய் நின்றவரும் , என்றும் மாறுபடாமல் ஒருபடித்தாய்த் திகழும் மேனியுடைய முதல்வரும் , முதுகுன்றமாகிய மூதூரினரும் , முனிவர் தலைவனாகிய மார்க்கண்டேயன் மேல் வந்த கூற்றுவனை ஒலிக்கும் கழல் அணிந்த பாதத்தால் அன்று உதைத்தழித்தவரும் தேவர்க்குத் தலைவர் ஆகிய பிரம விட்டுணு இந்திரர்க்கு அரியவரும் ஆவார் .

குறிப்புரை :

மாவாய் பிளந்து - ` கேசி ` என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்து ; இது திருமால் செய்தது , கிருட்டினனாய் இருந்தபொழுது . உகந்த - மகிழ்ந்த . மூவாத மேனி - என்றும் ஒரு படித்தாய் இருக்கும் வடிவம் . முதுகுன்றம் , நடு நாட்டுத்தலம் ; இஃது இக்காலத்து , ` விருத்தாசலம் ` என வழங்கும் . ` முதுகுன்றமாகிய மூதூர் ` என்க . கோவாய முனி - முனிவருள் தலைவராயவர் ; மார்க்கண்டேயர் . தன் , சாரியை .

பண் :

பாடல் எண் : 7

கடுவெளியோ டோரைந்து மானார் போலுங்
காரோணத் தென்று மிருப்பார் போலும்
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்
ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்
படியொருவ ரில்லாப் படியார் போலும்
பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலும்
செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , பெரிய ஆகாயத்தோடு கூட்டி எண்ணப்படுகின்ற ஐம்பூதங்களும் ஆனவரும் , காரோணத்தலங்களில் என்றும் இருப்பவரும் , இடிக்கும் குரலைக் கொண்ட வாயையுடைய பூதப்படையினரும் , ஏகம்பத்தை விரும்பி அதன் கண் இருந்தவரும் பிறர் ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவரும் , பாண்டிக்கொடுமுடியையும் தம் ஊராகக் கொண்டவரும் அடியாருடைய துன்பத்திற்குக் காரணமான நோயைத் தீர்ப்பவரும் ஆவார் .

குறிப்புரை :

கடுவெளி - பெரிய ஆகாயம் . ` கடுவெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் ` என்றது , ` கடுவெளி ஆனமையே யன்றி ஓர் ஐந்தும் ஆனார் ` என்றபடி . ஐந்து , பூதங்கள் . காரோணம்பற்றி மேலே ( ப .2. பா .6) கூறப்பட்டது . இடிகுரல் - இடிக்குங்குரல் . படி - ஒப்பும் , இயல்பும் . ` ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவர் ` என்க . ` ஒருவரும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . பாண்டிக்கொடுமுடி , கொங்கு நாட்டுத் தலம் . ` கொடுமுடியும் தம் ஊர் ` என்றருளினாராயினும் , ` கொடுமுடியையும் தம் ஊராக் கொண்டார் ` என்றலே திருவுள்ளமாகக் கொள்க . செடி - துன்பம் . படு - உண்டாதற்குக் காரணமான . நோய் - பிணி . வினையைக் குறித்தருளியதுமாம் . ` அடியாரை நோய் தீர்ப்பார் ` என்றதனை , ` நூலைக் குற்றங்களைந்தார் ` என்பது போலக் கொள்க .

பண் :

பாடல் எண் : 8

விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலும்
சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலும்
சிலையினார் செங்க ணரவர் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , விலையில்லாத மாலையணிந்த மார்பரும் , வெண்ணீற்றை மெய்யிற் பூசிய விகிர்தரும் , ( மற்றையாரின் வேறுபட்டவர் ) மலையரையன் மங்கையின் மணாளரும் , மாற்பேற்றினைத் தம் இடமாய்க் கொண்டு மகிழ்ந்தவரும் , தோல்வி அறியாத பகைவருடைய மூன்று புரங்களையும் தொலைத்தவரும் , சோற்றுத்துறை , துருத்தி ஆகிய தலங்களில் உள்ளவரும் , வில்லில் நாணாகப் பூட்டிய பாம்பினை உடையவரும் ஆவார் .

குறிப்புரை :

` விலை இலா ஆரம் ` என்றது , எலும்பு மாலையை ; இது , ` விலை ஒன்றும் பெறாத மாலை ` என்னும் பொருளதாய் , ` விலை வரம்பிலா மாலை ` எனப் பிறிதொரு பொருளையும் உடன் உள்ளுறுத்து அருளிச் செய்யப்பட்டமையின் , உடனிலை உள்ளுறை ; இதனை , அணி இலக்கணங் கூறுவார் , சிலேடை அணி என்ப . மலையின் ஆர் - மலையில் தோன்றி வளர்ந்த , மாற்பேறு . தொண்டை நாட்டுத்தலம் . காப்பு - இடம் . தொலைவு - தோற்றல் . தொலைத்தார் - அழித்தார் . சோற்றுத் துறையும் , துருத்தியும் சோழநாட்டுத் தலங்கள் . சிலையின் ஆர் அரவர் - வில்லில் நாணாகப் பூட்டிய பாம்பினை யுடையவர் .

பண் :

பாடல் எண் : 9

அல்லல் அடியார்க் கறுப்பார் போலும்
அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகைநகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , அடியாருடைய அல்லலை அறுப்பவரும் , தம்மை அடைந்தார்க்கு அமருலக ஆட்சியை அளிப்பவரும் , நல்லத்திலும் நல்லூரிலும் பொருந்தி நின்று காட்சி அளிப்பவரும் , நள்ளாற்றை என்றும் பிரியா தவரும் , முல்லைமொட்டுப் போன்ற பற்களை உடைய பார்வதியின் பாகரும் , உயர்திணை யஃறிணைப் பொருள்கள் யாவற்றிற்கும் முன்னே தோன்றியவரும் , தில்லை அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் தேவரும் ஆவார் .

குறிப்புரை :

` அடியார்க்கு அல்லல் அறுப்பார் ` என்க . ` அமருலகம் ஆட்சி ` என்றருளினாராயினும் , ` ஆட்சியாக அளிப்பார் , என்றலே கருத்தாகக் கொள்க . நல்லமும் , நல்லூரும் , நள்ளாறும் சோழநாட்டுத் தலங்கள் ; ` அவற்றுள் நல்லூர் , சுவாமிகளுக்கு இறைவன் திருவடி சூட்டிய தலம் ` என்பது மேலும் கூறப்பட்டது .

பண் :

பாடல் எண் : 10

உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால்
ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்
நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
பெண்ணா ணுருவாகி நின்றார் போலும்
சிறப்புடைய அடியார்கட் கினியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே ! எடுத்த வினையை முடிப்பதில் தீவிரம் மிக்க இராவணன் ஊக்கம் மிக்கு அழகிய கயிலை மலையைக் கையால் பெயர்த்தலும் , உமையாள் அஞ்ச , வெற்றி நிறைதலையுடைய அவன் பெருந்தோள்கள் இருபதும் முடிகள் பத்தும் சோர்ந்து நிலத்தில் வீழும் வண்ணம் கால்விரலை ஊன்றிய நிமலரும் , பிறைச் சந்திரனை அணியாகச் சடையிடத்துக் கொண்ட பெருமானாரும் , பெண்ணுருவும் ஆணுருவும் கலந்து நின்ற அம்மையப்பரும் , பதிஞானச் சிறப்புடைய அடியவர்களுக்கு இனிய வரும் ஆவார் .

குறிப்புரை :

உறைப்பு - கொண்டது விடாமை . பொன் - அழகு . ஊக்கம் செய்து - ஊக்கங்கொண்டு எழுந்து . அஞ்ச - அஞ்சியதனால் , ` அவனது தோள் இருபதும் முடிகள் பத்தும் நிலத்திற் புதைய ` என்க . விரல் , ` கால் விரல் ` என்பது , சொல்லுவாரது குறிப்பாற் கொள்ளக் கிடந்தது . பிறைப் பிளவு - பிறையாகிய பிளவு என்றது , சந்திரனது பிளவு என்றவாறு . சிறப்பு - வீட்டு நெறி ; திருவடி ஞானம் .

பண் :

பாடல் எண் : 1

விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை மேகமாகவும் , நிலனாகவும் , ஆகாயமாகவும் , கடல் சூழ்ந்த பூமியிலுள்ளார் விரும்புகின்ற எண்ணாகவும் , எழுத்தாகவும் , தமக்கென வேறுபட்ட இயல்புகளை உடைய எல்லாப் பொருள்களுமாகவும் , ஏழுலகத்தாரும் வணங்கித்துதித்துக் காணுதற்கமைந்த கண்ணாகவும் அக்கண்ணுள் மணியாகவும் அதனால் காணப்படுகின்ற காட்சியாகவும் , அடியார்கள் விரும்பித் துதித்தற்குரிய பண் நிறைந்த பாடலாகவும் , இன்னமுது ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

விசும்பு - மேகம் . வேலை - கடல் . ` விரும்புகின்ற ` என்றது , எண் எழுத்து இரண்டனையும் என்க . ` இயல்பு ` என்றது , பண்பாகு பெயராய்ப் பல இயல்புகளையுடைய பல பொருள்களையும் உணர்த்தி நின்றது ; உம்மை . எச்சம் . மணி - கண்ணின் மணி . காட்சி - காணுதற்றொழில் . ` கண்ணாகி ` என்பது மூன்றிலும் உள்ள , ` ஆகி ` என்பன உவமை குறித்து நின்றன ; உவமைகள் , சிறப்பு நிலைக்களனாகத் தோன்றின என்க . ` பண் ` என்றது , முன்னர்ப் பாடலையும் , பின்னர் அதன் பொருளையும் குறித்து நின்ற இருமடியாகு பெயர் . ` இன்னமுதாம் ` என்றதும் உவமையே யாம் ; இவ்வுவமை பண்பும் பயனும் பற்றி வந்தது என்க . ` அடியேன் உய்ந்தவாறு நன்று ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

வேதமோர் நான்காய்ஆ றங்க மாகி
விரிகின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்
கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக்
குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக்
காதலால் வானவர்கள் போற்றி யென்று
கடிமலர்கள் அவைதூவி ஏத்த நின்ற
பாதியோர் மாதினனைப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை நான்கு வேதங்கள் ஆகவும் , அங்கங்கள் ஆறு ஆகவும் , பெருகிவளர்கின்ற பொருள்களுக்கெல்லாம் அடியான வித்து ஆகவும் , விடாது தூற்றும் சிறு திவலைகளைப் பொழியும் மாரியாகவும் , உலகங்கள் யாவும் ஆகவும் , கீழ்க்காற்று ஆகவும் , அன்பு மேலீட்டால் தேவர்கள் ` போற்றி ` என்று உரைத்து மணமலர்களைத் தூவித் தோத்திரிக்க நின்ற மாதொரு பாகன் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

விரிகின்ற - தோன்றுகின்ற . ` விரிக்கின்ற ` என்பதும் பாடம் . கூதல் - விடாது தூற்றும் சிறுதுவலை ; இதனை , ` சோனை ` என்ப . கொண்டல் - கீழ்க் காற்று ; இதுவே , மழையைக் கொணர்வது என்பர் . கடி - நறுமணம் .

பண் :

பாடல் எண் : 3

தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்
காண்கின்ற கதிரவனும் கதியு மாகிக்
குடமுழவச் சரிவழியே அனல்கை யேந்திக்
கூத்தாட வல்ல குழக னாகிப்
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை பெரிய ஏழு குலமலைகள் ஆகவும் , காற்றாகவும் , தீ ஆகவும் , குளிர்ந்த விசும்பாகவும் , குளிர் விசும்பின் உச்சி ஆகவும் , கடல்வட்டம் சூழ்ந்ததொரு ஞாலம் ஆகவும் , காண்பதற்குத் துணை நிற்கும் கதிரவன் ஆகவும் , வீடடைதற்குரிய வழியாகவும் , குடமுழவு சச்சரி இவற்றின் முழக்கிற்கு ஏற்ப அனலைக் கையில் ஏந்திக் கூத்தாடவல்ல அழகன் ஆகவும் , படமெடுத்தாடும் பாம்பொன்றினை ஆட்டுவான் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

தடவரை - பெரிய மலை . ` தட வரை ஏழ் ` ஏழு தீவிலும் உள்ளன என்க . கடல் வலயம் - கடலாகிய வட்டம் . காண்கின்ற - ( பொருள்களைக் ) காண்பதற்குத் துணையாக நிற்கின்ற . சரி - ` சச்சரி ` என்னும் வாச்சியம் . ` குடமுழவும் சச்சரியுமாகிய வாச்சியங்களின் வழியே கூத்தாட வல்ல ` என்க . ` குடமுழவச் சதிவழியே ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 4

நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை
நிறைமதிய முடன்சூடி நீதி யாலே
சீராரும் மறையோதி யுலக முய்யச்
செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட
காராருங் கண்டனைக் கச்சி மேய
கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாரிடத்து மக்களும் விண்ணிடத்துத் தேவரும் புகழும் பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை கங்கை பொருந்திய செஞ்சடை மேல் பாம்பு , கொன்றை , அழகுநிறைந்த பிறைமதி ஆகியவற்றைச் சூடியவன் ஆகவும் , சிறப்புமிக்க மறைகளை , அறத்தின் வழி உலகம் ஒழுக ஓதியருளியவன் ஆகவும் , வளவிய கடலைக் கடைந்த பொழுது எழுந்த கடல் அளவு கொடுமை மிக்க நஞ்சினை உண்டதனால் கருமை பொருந்திய கண்டனாகவும் , கச்சி நகரில் விளங்கும் கண்ணுதலாகவும் , கடலை அடுத்துள்ள ஒற்றியூரை உயர்வாக மதிப்பவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

நிறை மதியம் - நிறைதற்கு உரிய சந்திரன் ; ` பிறை ` என்றவாறு . இனி , ` அழகு நிறைந்த மதியம் ` என்றலுமாம் . உடன் சூடி - ஒருங்கு அணிந்து . நீதியால் - அறத்தின் வழி . ஓதி - செய்து ; ` உலகம் உய்ய ஓதி ` என்க . ` அறத்தைத் தான் இயல்பாகவே உணர்ந்தமையின் , அதனை உலகம் உணர்ந்து உய்தற்பொருட்டு வேதத்தைச் செய்தருளினான் ` என்க . நஞ்சைத் தான் உண்டதனைத் தன் கண்டம் உண்டதாகப் பான்மை வழக்கினால் அருளினார் . ஒற்றி - ஒற்றியூர் . பரசும் - துதிக்கின்ற .

பண் :

பாடல் எண் : 5

வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்
விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்
கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்
கொலைப்பகழி உடன் கோத்துக் கோரப்பூசல்
ஆடினார் பெருங்கூத்துக் காளி காண
அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு
பாடினார் நால்வேதம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை தமது திருவிளையாடலின் நிலையை உணர்ந்து வியக்கும் விசயனது மருட்கையைக் காண வேண்டி உமையவளும் வேட்டுவக்கோலம் கொள்ளத்தாமும் ஒரு வேடனாய் வில்லை ஏந்திக் கொலையிற் பழகிய பகழியையும் வில்லிற்கோத்துக் கொம்பினையுடைய பன்றியைத் தொடர்ந்து சென்று கொடிய பூசலைச் செய்தவர் ஆகவும் , காளி காணப் பெருங்கூத்தினை ஆடினார் ஆகவும் , அரிய மறைவாகிய பொருளையுடைய வேதங்களையும் ஆறங்கப் பொருளையும் ஆராய்ந்து மனத்திற்கொண்டு நான்கு வேதங்களையும் பாடினவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

விசயன் - அருச்சுனன் . வியப்பு - தமது திருவிளையாடலின் நிலையை உணர்ந்து வியக்கும் வியப்பு ; இதனைக் காண விரும்பியது , அவனுக்கு ( அருச்சுனனுக்கு ) வரும் தீங்கினை யறிந்து அவனைக் காக்க விரைந்த தமது முற்றறிவு பேரருளோடு பேராற்றலையும் , அத்தீங்கினை அறியாத தனது சிற்றறிவோடு சிறிதாய ஆற்றலையும் அவன் உணர்ந்து , மேலும் மெய்யன்பு செய்து உய்தற் பொருட்டு . ஏனம் - பன்றி ; அதனது கொடுமையை உணர்த்துவார் ` கொம்புடைய ஏனம் ` என்றருளினார் ; ` நிராயுதத்தது அன்று ` என்பது நயம் . கோலம் - வேட்டுவக் கோலமே . ` உமையும் வேட்டுவக் கோலங்கொண்டு உடன் சென்றாள் ` என்பது வியாச பாரதத்தினுங் கூறப்பட்டது ; மற்றும் பெண்டிர் பலரும் சென்றனர் என்பதும் அதனுட் கூறப்படுவது . இதனைத் தமிழில் வில்லிபுத்தூரார் தெரிவித்தது ஓர் நயம் மிக்க பாட்டு ; அஃது , ` ஓரேனம் தனைத்தேட ஒளித்தருளும் இருபாதத் தொருவன் அந்தப் போர்ஏனந் தனைத்தேடிக் கணங்களுடன் புறப்பட்டான் புனங்க ளெல்லாம் சீர்ஏனல் விளைகிரிக்குத் தேவதையாங் குழவியையும் செங்கை ஏந்திப் பார்ஏனை உலகனைத்தும் பணிவுடனே புகழ்ந்திடத்தன் பதிபின் வந்தாள் .` என்பது . வந்தவள் ` வரையரசன் திருமடந்தை ` என , அவள் வேட்டு விச்சிக் கோலங் கொண்டமையையும் மற்றும் எண்ணிறந்த மாதர் அவளைச் சூழ்ந்து நின்றமையையும் அணிந்துரைக்கும் முன்னைப் பாட்டினுள் இனிது விளங்கக் கூறினார் . அம்மையோடு எண்ணிறந்த பெண்டிரும் சென்றனர் என்பது வியாசபாரதத்துட் கூறப்படுவது . இவ்வாறு முதனூலை வழிநூல் இலக்கணம் பிழையாது மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்த செய்யுள்களில் , நயம் கருதித் தொன்மை வரலாறு ஒன்றனை ஆண்டுத் தந்துரைப்பாராய் , ` ஓர் ஏனந் தனைத் தேட ஒளித்தருளும் இருபாதத் தொருவன் ` எனக் கூறிய அவ்வொன்றனையும் கேட்கப் பொறாத சிலர் , மேற்காட்டிய செய்யுளையே தம் பதிப்பில் மறைத்துப் பதிப்பித்தனர் ; முன்னைப் பெருநூல்களில் இவ்வாறு சிலவற்றை மறைத்தலும் , புகுத்தலும் , திரித்தலும் செய்தல் அவர்க்கு இயல்பு என்க . ` விசயன்றன் வியப்பைக் காண்பான் , உமையவளுங் கோலங் கொள்ள , வேடனாய் , விற்பிடித்து , கொலைப்பகழி உடன் கோத்து , ஏனத் தின்பின் கோரப் பூசல் கூடினார் ` எனக் கொண்டு கூட்டுக . ` காளி காணப் பெருங்கூத்து ஆடினார் ` என்க . அருமறை - அரிய மறைவாகிய பொருள் ; ` அங்கம் ` என்றதும் அவை கருதிய பொருளை என்க . ` கொண்டு ` என்றது , ` பின்னர் ` என்பதனை உணர்த்துங் குறிப்பினதாய் நின்றது . ` கூடினாரும் ஆடினாரும் பாடினாருமாகிய பரஞ்சுடரை ` என்க . ` பரஞ்சுடர் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 6

புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலால்
புதுப்பந்தர் அதுஇழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்
சிவகணத்துப் புகப்பெய்தார் திறலால் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு
விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரைப் பெற்ற ஞானத்தினால் உயர் சிலந்தி தன் வாயிலிருந்து வரும் நூலால் மக்களால் செய்யலாகாத பந்தலை இயற்றி அதனைச் சருகால் மூடிய திருத் தொண்டைச் சிந்தித்துச் செய்தமையால் பின் அரசனாகி நிலவுலகை ஆண்டு அப்பிறப்பிலும் சிறந்த தொண்டு செய்யச் சிவகணங்களுள் புக்கு இன்புறுமாறு சேர்த்தருளினவர் ஆகவும் , வலிமையும் , திறமையும் கொண்டு வெள்ளானை , செய்த செயலிடத்து மிக்க அன்பு விரவி யிருந்தமை கண்டு அதற்கு வீடு அருளியவர் ஆகவும் , பத்தர்களுக்கு இன்னமுதம் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்றாம் .

குறிப்புரை :

புத்தி - ஞானம் ; சிலந்தி ஞான முடைத்தாயினமை , முன்னைப் பிறவித் தொடர்பினால் என்க . புதுப் பந்தர் - மக்களாற் செய்யலாகாத பந்தல் ; வாய்நூலாற் செய்த பந்தல் . ` பொதுப் பந்தர் ` என்பது பாடம் அன்று . மேய்ந்த - மூடிய . சித்தி - பேறு ; இவ்வாறு சிவபிரானுக்குத் திருத்தொண்டு செய்யப் பெற்றமை சிறந்த பேறாதல் அறிக . சிறப்பு - முன்னையினும் சிறந்த தொண்டு ; அது சிவபிரானுக்குப் பல இடங்களில் மாடக்கோயில் எடுத்தமை , ` சித்தியினால் அரசாளப் பெற்று , பின்னும் சிறந்த தொண்டு செய்ய சிவகணங்களுள் ஒன்றாகி இன்புறுமாறு சேர்த்தருளினார் ` என்க . இது , கோச்செங்கட் சோழநாயனாரது வரலாறு ; இதன் விரிவைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க . திறல் - வலிமை . வித்தகம் - திறமை . வெள்ளானை , திறலும் வித்தகமும் உடையதாய்ச் செய்த அன்பாவது , சிலந்தி செய்தவாய் நூற்பந்தர் எச்சில் முதலிய இழிவுகளை உடையது எனக்கருதி அதனை அழித்தொழித்துத் தூய நீரினால் ஆட்டி வழிபட்டமை . ` விரவியவாறு ` என்பது கடைக் குறைந்து நின்றது . விரவுதல் - பொருந்துதல் . ` சிலந்திக்கும் வெள்ளானைக்கும் அருளிய இவற்றானே , அவர் பத்தர்களுக்கு இன்னமுதாதல் நன்கறியப்படும் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்
இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்
அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்
அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்
தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்
தத்துவனைச் சாந்தகிலின் அளறு தோய்ந்த
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய எம்பரஞ்சுடரைத் தமக்குத் தாம் அல்லால் இணையாவார் ஒருவரும் இல்லார் ஆகவும் , இடை மருது , ஏகம்பம் என்றிவற்றை என்றும் நீங்காதார் ஆகவும் , யாவர்க்கும் அணைவதற்கு அரியார் ஆகவும் , ஆதி தேவர் ஆகவும் , அடியார்க்கு அரிய அமுதம் போன்ற நல்லன எல்லாம் ஈவார் ஆகவும் , நெருப்பில் மூழ்கினமையால் உண்டான சாம்பற்பூச்சைக் கொண்ட செவ்வானன்ன மேனித் தத்துவன் ஆகவும் , சந்தனம் அகில் ஆகியவற்றின் சேறு தோயப்பெற்ற பருத்த தனத்தினையுடைய பார்வதியின் பாகன் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

` தமக்குத் தாம் அல்லால் இணையார் ஒருவரும் இல்லார் ` என்க . இடை மருது - திருவிடைமருதூர் . ஏகம்பம் - கச்சி ஏகம்பம் ` யாவர்க்கும் அணைவரியர் ` என்க . அணைதல் - சார்தல் . ஆதி தேவர் - முதற்கடவுள் . ` அருமருந்தன்ன ` என்பது , ` அருமருந்த ` என மருவிற்று ; ` அரிய அமுதம் போன்ற ` என்பது பொருள் . தணல் முழுகு பொடி - நெருப்பில் மூழ்கினமையால் ஆகிய சாம்பல் . நெருப்பில் மூழ்கியவை உலகனைத்தும் என்க . செக்கர் - சிவப்பு . சாந்து - சந்தனக் கட்டை ; சந்தனக் கட்டையும் , அகிற்கட்டையும் தேய்த்த அளறு என்றதாம் . அளறு - சேறு ; குழம்பு . ` நீங்காரும் , தேவரும் , ஈபவருமாகிய பாகனை , பரஞ்சுடரை ` என்க . ` பாகன் , பரஞ் சுடர் ` என்பன , பன்மை யொருமை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 8

அண்டவர்கள் கடல்கடைய அதனுள் தோன்றி
அதிர்த்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக் கண்டு
இமைப்பளவி லுண்டிருண்ட கண்டர் தொண்டர்
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று
வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்
பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய எம் பரஞ்சுடரை மேலுலகத்தார் கடலைக் கடைய அதனிடத்து அனைவரையும் நடுங்கச்செய்து எழுந்த ஆலால நஞ்சு கடல் சூழ்ந்த உலகை எட்டுத் திசைகளிலும் சுடுகின்ற தன்மையைக் கண்டு இமைப்பளவில் அதனை உண்டு அதனால் கறுத்த கண்டர் ஆகவும் , தேவர்களும் அசுரர்களும் வண்டுகள் மொய்க்கும் தேன் நிறைந்த மலர்களைத் தூவி நின்று வணங்கித் துதிக்கும் பண்டரங்கக் கூத்தனாம் வேடம் கொண்டவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

` அண்டர்கள் ` என்பது , அகரம் விரித்தலாய் , ` அண்டவர்கள் ` என வந்தது . அதிர்த்து - ( அனைவரையும் ) நடுங்கச் செய்து , ` அதிர்ந்து என்பதும் பாடம் . வேலைஞாலம் - கடலை உடைய உலகம் . ` ஞாலத்தை எண்டிசையை சுடுகின்றவாற்றைக் கண்டு ` என்க . ` ஞாலத்தை எண்டிசையைச் சுடுகின்ற ` என்றதனை , ` யானையைக் கோட்டைக் குறைத்தான் ` என்பது போலக் கொள்க . ` அதனை உண்டு ` எனச் சுட்டு வருவித்து உரைக்க . ` வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று ` என்றதனை , ` தானவர்கள் ` என்றதன் பின்னர்க் கூட்டுக ` தானவர்கள் - அசுரர்கள் .

பண் :

பாடல் எண் : 9

ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை
நான்முகனும் அறியாத நெறியார் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற்பொருந்திய பரஞ்சுடரை ஞாலத்தை உண்ட திருமாலும் நான்முகனும் அறியாத நிலையினை உடையவராகவும் , அந்தகாசுரன் மடிய அவனைச் சூலத்தாற் குத்தியவர் ஆகவும் , பழைய இவ்வுலகில் பல்லுயிரையும் கொல்லும் இயமனைக் காலால் உதைத்து உருட்டித் தன்பால் உண்மை அன்பு கொண்ட அந்தணனைக் கைக்கொண்டு காத்த செவ்வான் அன்னமேனி நிறத்தவர் ஆகவும் , பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

நெறியார் - நிலையினையுடையவர் . அந்தகன் - அந்தகாசுரன் . சுருள - மடிய . ` காலதனால் ` என்பது , ` காலத்தால் ` என மருவி நின்றது . காதல்செய்த அந்தணன் , மார்க்கண்டேயர் , கைக் கொண்ட - அடியாராக ஏற்றுக்கொண்ட . செவ்வான் - செவ்வானம் . செவ்வானம் போலச் சிவந்த திருமேனியில் , பால் போல வெளுத்துள்ள நீற்றினை அணிந்துள்ள அழகினை வியந்தருளியவாறு .

பண் :

பாடல் எண் : 10

வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்
மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோடிச்
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்
தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி
ஏந்துதிரள் திண்டோளுந் தலைகள் பத்தும்
இறுத்தவன்தன் இசைகேட்டு இரக்கங் கொண்ட
பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய எம்பரஞ்சுடரை நெடிய முடியை அணிந்த அரக்கர் கோமானாகிய வேந்தன் விரைந்து ஓடிச் சந்தனம் ஒப்பத்திருநீற்றினை அணிந்த தனது கயிலை மலையைப் பெரிய கைகளால் பெயர்த்திடவும் மெல்லியல் உமைவெருவ , அவ்வளவில் , அவனுடைய வலிமை மிக்கு உயர்ந்து திரண்ட தோள்களும் பத்துத்தலைகளும் இறும் வண்ணம் தன் தாள் விரலை ஊன்றிப் பின் அவனது இசையைக் கேட்டு இரக்கங்கொண்டவன் ஆகவும் சடையாலாகிய முடியிடத்துப் பாம்பை அணிந்தவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

` அரக்கர் கோமானாகிய வேந்தன் ` என்றபடி . ` மெல்லியலாள் ` என்றது , வெருவுதற்கு உரிய இயைபு உணர்த்தியவாறு . சாந்தம் - சந்தனம் . ` நீறணிந்தான் ` என்றது , ` நீறணிந்த தன் ` எனப் பொருள் தந்து நின்றது . தாள் - கால் விரல் ; ஆகுபெயர் . ஏந்து - உயர்ந்த , பாந்தள் - பாம்பு .

பண் :

பாடல் எண் : 1

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி யிருந்தானை எண்டோள் வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பெருமையாம் தன்மை உடையானும் , பெறற்கு அரிய மாணிக்கம் போன்றவனும் , விரும்பி நினைந்தவாறே துயிலெழுவார் மனத்தில் நிலைபெற்றுநின்ற மணிவிளக்கு ஆனவனும் , நீர்நிலையில் தாள்மேல் நின்ற தாமரை மலரில் எழுந்தருளியிருந்தவனும் , எட்டுத்தோள்களையும் வீசி உலகத்தைத் தொழிற்படுத்தும் அரிய ஆற்றல் மிக்க பெரிய கூத்தினை இயற்றும் பெருமானும் , அழகிய கனகக் குன்று போல்வானும் , பண்டு ஆலின் கீழ் நால்வர்க்கும் திருந்திய மறைப்பொருளை உபதேசித்து அருள்செய்தானும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் .

குறிப்புரை :

பெருந்தகை - பெருமையாகிய தன்மை ; அஃது பண்பாகு பெயராய் அதனை உடையானைக் குறித்தது . பேணி - விரும்பி , எழுதல் - துயில்நீங்குதல் . மணி விளக்கு - மணியாகிய விளக்கு . ` நின்ற ` என்றது , ` புறத்துக் காணப்பட்டு நின்ற ` என்றவாறு ; முன்னே கூறப்பட்ட மனம் தாமரை வடிவிற்றாக அதனுள் எழுந்தருளி யிருத்தல்போலப் புறத்தும் எழுந்தருளியிருப்பான் என்பார் , இவ்வாறு அருளினார் . உலகத்தைத் தொழிற் படுத்தும் பெருநடனமாதலின் , ` அருந்திறல் மாநடம் ` ஆயிற்று . ` கனகக் குன்று , சுடர்க் குன்று ` என்க . மாணிக்கம் முதலியன , உவமையாகு பெயர்கள் .

பண் :

பாடல் எண் : 2

துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
ஆரழலை அநங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

உயர்ந்த நகத்தாலன்றிப் பிற கருவிகளால் அழியாதவனும் தன் ஆற்றலால் பலரையும் வென்று கூட்டிய வெற்றிகளை உடையவனும் ஆகிய இரணியனை மார்பைப் பிளந்தவனும் , அழகிய கற்றூணில் தோன்றிச் சிரித்தவனும் ஆகிய திருமாலும் , நான்முகனும் தேடும் அணுகுதற்கரிய நெருப்புப் பிழம்பானவனும் , மன்மதன் உடல் எரிந்து சாம்பராய் உருக்குலைந்து மங்கவும் அவன் மனைவி இரதி அவனைப் பெற்று நகுமாறு செய்யவல்ல அமுதம் ஆனவனும் , வளவிய கயிலை மாமலைமேல் நிலைத்து நின்றவனும் , செம்பொன் நிறங்கொண்டு திரண்ட தோள்களைப்பெற்ற செல்வனும் ஆகிய சிவ பெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் .

குறிப்புரை :

துங்கம் - உயர்வு . ` நகத்தால் அன்றிப் பிற கருவிகளால் அழியாதவனாகிய இரணியன் ` என்க . ` வென்றித் தொகுதிறல் இரணியன் ` என்பதனை , ` திறலால் தொக்க வென்றிகளை உடைய இரணியன் ` என மாற்றி யுரைக்க . ` பலரையும் வென்று கூடிய வெற்றிகளை உடையவன் ` என்றபடி ; ` வென்றி தொகு ` எனப் பாடம் ஓதுதலும் ஆம் . ஆகம் - மார்பு , கீண்ட - பிளந்த ` ` அம் கல் நகு அத் திருமால் ` எனப் பிரித்து ; ` அழகிய கற்றூணில் தோன்றிச் சிரித்த அந்தத் திருமால் ` என உரைக்க . இனி , ` நரசிங்கம் பொன்னிறமாய் இருந்தது ` என்றலுமாம் . அழல் வடிவினனை , ` அழல் ` என்றது , பான்மை வழக்கால் . மங்க - கெடும்படி . நக - ( கண் ) மலர ; இனி , ` மங்கினமையால் மகிழ ` என்றலுமாம் ; இப்பொருள் , பிறர் அநங்கனால் வருந்துதல் அல்லது மகிழமாட்டாமையை விளக்கும் . தான் , அசைநிலை , மருந்து - அமுதம் ; இஃது அநங்கனையும் பின்னர் உயிர்ப்பித்தமை நினைக . ` கயிலை மாமலைமேல் சென்று காணற்பாலனாகிய அவனை இங்குத் திருச்செங்காட்டங்குடியில் கண்டேன் ` என்பது நயம் .

பண் :

பாடல் எண் : 3

உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
பேணியஅந் தணர்க்குமறைப்பொருளைப்பின்னும்
முருகுவிரி நறுமலர்மேல் அயற்கும் மாற்கும்
முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

நினைந்துருகும் அடியாருடைய மனத்தில் ஊற்றெடுக்கும் தேன் ஆனவனும் , தேவர்களுடைய மணிகள் இழைத்த மகுடங்களுக்கு அணியாய் நிற்கும் திருவடிகளை உடையவனும் , உண்மைக் கண்ணே நின்றாராய் உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொற்களை ஏற்றுப் பெருகுநிலையாகிய வீடு அடைதலையே குறிக் கோளாய்க் கொண்டவருடைய அறிவாய் விளங்குபவனும் , தன்னை விரும்பித் தொழும் அந்தணருக்கு விளங்கித் தோன்றும் மறைப் பொருள் ஆனவனும் , பிற்படுவோராம் மணங்கமழும் தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் முற்பட்ட பரமகாரணன் ஆனவனும் , மெய்யான தவத்தைச் செய்வார்க்கு அமைந்த உறுதுணைவனும் , சுருண்ட குழலினையுடைய உமைநங்கைக்கு வாய்த்த பங்கனும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் .

குறிப்புரை :

ஊறும் - ( உருகுகின்ற அம்மனத்தின்கண் ) சுரக்கின்ற . மணிமுடி - மணிகள் இழைத்த மகுடங்கள் . ` உண்மைக் கண்ணே நின்ற குறி ` என இயைக்க , உண்மைக் கண்ணே நிற்றல் , மெய்ப்பொருளை உணர்தல் ஒன்றிலே நிலைபெறுதல் . குறி - குறிக்கோள் . இக் குறிக்கோளை உடையவர் , தாம் தம் சிற்றறிவுகொண்டு கண்டவாறே கண்டு சிறுகி நில்லாது உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொல்லை ஏற்றுப் பெருகிச் செல்வர் ஆகலான் , அவரை , ` பெருகுநிலைக் குறியாளர் ` என்று அருளிச் செய்தார் . அவர்க்குச் சிவபிரான் அவ்வந் நிலையிலும் அவ்வவ்வறிவாய் நின்று முன்னை அறியாமையை அகற்றியருளுதல் பற்றி , அவனை அவரது அறிவாக அருளிச் செய்தார் . தன்னையே விரும்பித் தொழுகின்ற மேலாய அந்தணர்கட்கு வேதப் பொருளை ஐயமறத் தெளிவித்தருளுதலின் , ` பேணிய அந்தணர்க்கு மறைப் பொருளை ` என்றருளினார் . இதனைச் சனகர் முதலிய நால்வர்க்கு அருளியவாற்றால் அறியலாகும் . முழுமுதல் - மேலான காரணம் . சில கற்பங்களில் அயனைத் திருமால் தோற்றுவித்தலும் , மற்றும சில கற்பங்களில் திருமாலை அயன் தோற்றுவித்தலும் எக்கற்பத்திலும் அவர் இருவருள் ஒருவரை முன்னே சிவபிரான் தோற்றுவித்தலும் கூறப்படுதலால் , இருவர்க்கும் பரமகாரணன் சிவபெருமானேயாதல் அறிக . ` அடியவர்கட்கு இன்பப் பொருளாகியும் , அமரர்கட்குத் தலைவனாகியும் , உண்மைகாணும் உள்ளம் உடையவர்க்கு ஞானமாகியும் , சீரிய அந்தணர்க்கு ஞானாசிரியனாகியும் , அயன் மால்கட்குப் பரம காரணனாகியும் , உண்மைத் தவத்தோர்க்கு உற்ற துணைவனாகியும் , உமையம்மைக்குக் கணவனாகியும் நிற்பவன் ` என்றருளிச் செய்தவாறு அறிக .

பண் :

பாடல் எண் : 4

கந்தமலர்க் கொன்றையணி சடையான் தன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவை யொரு பாகத்தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளினானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மணங்கமழும் கொன்றை மலரையணிந்த சடையானும் சிறந்த மரகதமணி உமிழும் ஒளியுடனே விளங்கும் பொன்னின் ஒளிபோல அழகிய மலரணிந்த உமையின் ஒரு பாகத்தொடு தன் பாகம் விளங்குபவனும் , இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களுக்கு நற்றாய் ஆனவனும் , நாயேனுடைய பழைய வினையை அறுத்து அடிமை கொள்ள என் தொண்டினை மதித்துக் கொண்டாற் போல முன்னையோர் உரைத்த இலக்கண நெறியின் அமைந்த தமிழ் மாலையை யான் பாடச் செய்து அதனால் என் மனத்துமண்டிய மயக்கத்தைப் போக்கிய திருவருளைச் செய்தவனும் ஆகிய சிவ பெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

கந்தம் - நறுமணம் . ` மணி ` என்றது , மரகதத்தை . ` மரகதமணியின் ஒளியோடு விளங்குகின்ற பொன்னொளிபோல , தெரிவையை ஒரு பாகத்தில் உடையவன் ` என்க ; ` மரகதக்குவாஅல் மாமணிப் பிறக்கம் - மின்னொளி கொண்ட பொன்னொளி திகழ ` என்று அருளியது திருவாசகமும் ( தி .8 திருவண் . 124. 152.) சந்தம் - அழகு . ` சர அசரங்கட்கு நற்றாய் போன்றவன் ` என்க . ` நாயேனது முன்னைப் பந்தம் ` என விரியும் . ` பந்தம் ` என்றது , வினையை . ஆள் ஆக்கி - அடிமையாகச் செய்து . பணி - தொண்டு . நூல் தமிழ் - இலக்கண நெறியின் அமைந்த தமிழ் .

பண் :

பாடல் எண் : 5

நஞ்சடைந்த கண்டத்து நாதன் தன்னை
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
வியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூர் இடங்கொண்ட மைந்தன் தன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

நஞ்சுபொருந்திய கண்டத்தை உடைய தலைவனும் குளிர்ந்த மலர்களாகிய அழகிய அம்புகளைக் கொண்ட மன்மதன் அழியுமாறு கொடிய சினமாகிய நெருப்பு எழ விழித்த ஒரு நெற்றிக் கண்ணினனும் , கெடில நதிக்கரையில் விளங்கும் பரந்த அதிகை வீரட்டம் மேவினவனும் , மேகம் தவழும் நீண்ட சோலைகளை உடையதும் மாடவீதிகள் நிறைந்ததும் மதிலால் வளைப்புண்டதுமாகிய ஆரூரைத் தனது இடமாகக் கொண்ட மைந்தனும் , சினத்தால் சிவந்து தோன்றும் திரிசூலப் படையினனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியிற் கண்டேன் .

குறிப்புரை :

நளிர் - குளிர்ச்சி . ` சினத் தீ எழ ` என ஒரு சொல் வருவிக்க . கெடில வீரட்டம் - திருவதிகை வீரட்டம் , மஞ்சு - மேகம் . அடுத்த - பொருந்திய . சிவப்பை உண்டாக்குவதாய சினத்தை , ` செஞ்சினம் ` என்றும் , படையை உடையவனது சினத்தைப் படைமேல் ஏற்றியும் , ` செஞ்சினத்த திரிசூலப் படையான் ` என்று அருளிச் செய்தார் . இனிச் சிவபிரானது சினம் செம்மையிற் ( திருவருளிற் ) பிறழாமையின் , ` செஞ்சினத்த ` என்று அருளினார் என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

கன்னியையங் கொருசடையிற் கரந்தான் தன்னைக்
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் தன்னைப்
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

கங்கையைத் தன் ஒப்பற்ற சடையின் ஒரு பால் மறைத்தவனும் , கடவூர் வீரட்டானத்தைச் சிறந்த இடமாகக் கருதினவனும் , காவிரி சூழும் ஐயாற்றில் விளங்கும் எம் புனிதனும் , பூந்துருத்தி நெய்த்தானம் ஆகிய பதிகளில் நிலைபெற்றவனும் , தான் உரைத்த நான்மறைகளின் பொருளைத் தக்கவர்க்கு விளங்க விரித்து உரைக்கும் இயல்பினனும் , தேவர்கள் அன்பு கொண்டு வணங்கிப் புகழ்ந்து ` பரனே ` என்று முழங்கித் தம் தலைமீது அணியாகச் சூடிக் கொள்ளும் சிவந்த அடிகளை உடையவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

` கன்னி ` என்றது , கங்கையை . ஒரு சடை - ஒப்பற்ற சடை ; அன்றி , மிகப்பெருகிவந்த கங்கை புல்நுனிமேல் நீர்போல் ஆயினமையின் , ` ஒரு சடை ` என்றே உரைத்தலுமாம் . கடவூர் வீரட்டம் , ஐயாறு , பூந்துருத்தி , நெய்த்தானம் சோழ நாட்டுத் தலங்கள் , பொன்னி - காவிரி நதி . பரிந்து - அன்பு கொண்டு .

பண் :

பாடல் எண் : 7

எத்திக்கு மாய்நின்ற இறைவன் தன்னை
ஏகம்பம் மேயானை யில்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

எல்லாத் திக்குகளுமாய் நின்ற இறைவனும் , ஏகம்பத்தில் பொருந்தி நிற்பவனும் , தெய்வத்தன்மை இல்லாத ஒன்றைத் தெய்வமாக மனத்துட் கொண்டு தம் மயிரைப் பறிக்கும் சமணருடைய பொய் ஒழுக்கப் படுகுழியில் நான் புக்கழுந்தி வீழாமல் , தன் திருவடியாகிய கரையில் புகும்படி என்னைஎடுத்துப் பத்திக்குரிய வழியைக் காட்டிப் பாவத்தைத் தீர்த்து பழைய வினைப் பயனாக விளைவன எல்லாவற்றையும் விலக்கி என் மனத்துள்ளே ஊறுந் தேனாய்த் தித்திப்பவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங் குடியில் கண்டேன் .

குறிப்புரை :

எத் திக்குமாய் - எவ்விடத்திலும் நிறைந்து , ` இல்லாத் தெய்வம் ` என்றதில் உள்ள இன்மை , ஒன்றின் ஒன்று இன்மை . ` அவ்வின்மையை உடைய தெய்வம் ` என்றது . ` தெய்வத் தன்மை இல்லாத ஒரு பொருள் ` என்றபடி . தெய்வத் தன்மையாவது வினையைத் தொழிற் படுத்துதலாகலானும் , ` சமணர் கூறும் தெய்வம் , அது செய்யமாட்டாது ` என்பதனை அவரே உடம்பட்டுக்கொள்ளுத லானும் அவரது தெய்வத்தை , தெய்வத்தன்மை இல்லாத ஒரு பொருள் என்று அருளிச் செய்தார் . பொத்தி - மூடி ; பொதிந்து ; உள்ளத்துள் இருத்தி ` என்றவாறு . இனி ` தமக்குத் தெய்வம் ` ( தெய்வக்கொள்கை ) இல்லாமையை மறைத்து ` என்று உரைப்பினும் ஆம் . இனி அவர் , அதுபற்றிக் கூறுவனவெல்லாம் உண்மையல்ல ஆதலின் , ` அவர் பொய்யிற் புக்கழுந்தி வீழாமே ` என்றருளினார் . வீழ்தல் - ஆழ்ந்து போதல் ; ` வீழ்தல் ` என்றதனால் , ` பொய்யாகிய படுகுழி ` என்பது பெறப்பட்டமையின் ` போத வாங்கி ` என்பதற்கு , ` தன் திருவடியாகிய கரையிற் புகுதும்படி எடுத்து ` என உரைக்க . ` போத வாங்கி ` என்றது , ` தூண்டில் வேட்டுவன் வாங்க வராது ` என்றாற்போல இடவழு வமைதி ; பத்தி - இறையன்பு ; அதற்கு உரிய வழி இறையுணர்வு ( சிவ ஞானம் ), அதனைச் சூலைநோய் தீர்க்கும் வகையால் அருளினமையால் , ` பத்திக்கே வழிகாட்டி ` என்று அருளினார் . வினைப் பயம் - வினையை அஞ்சும் அச்சம் , இனி , ` பயம் - பயன் ` எனினுமாம் . மனத்துள்ளே ` தித்தித்து ஊறும் தேன் ` என்க .

பண் :

பாடல் எண் : 8

கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

உண்மை நூல்களைக் கல்லாதார் மனத்தை அணுகாது அகலும் கடவுளும் , மெய்ந்நூல்களைக் கற்றவர்கள் ஆராய்ந்து அடையும் அன்பனும் , பிறர்க்குத் துன்பமிழைத்தலாகிய பிழைபட்ட நெறியை விரும்பினவருடைய புரங்கள் மூன்றும் அழிந்து விழுமாறு போர் செய்யவல்ல அம்பினைத் தொடுத்தவனும் நிலையற்ற புலாற்குடிலாகிய உடலிடத்து நரைதிரை மூப்புப் பிணி இறப்பு முதலியவற்றால் நிகழும் மாறுபாடு நீங்க நலங்கள் நிறைவதற்குரிய தவத்தை என்பால் செய்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்லாத செவ்விய நெறியிலே என்னைச் செலுத்துபவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

உண்மை நூல்களைக் கல்லாதவர்க்கு இறையுணர்வு உண்டாதற்கு வாயில் இன்மையின் , ` கல்லாதார் மனத்து அணுகாதவன் ` என்றருளினார் , இது பற்றியே தந்தை தாயர் தம் புதல்வர்க்கு உரிய பருவத்தே தீக்கை செய்வித்து இறைவன் நூல்களை ஓதுவித்தல் அவர்கட்கு இன்றியமையாக் கடனாயிற்று . ` கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன் ` ( தி .3. ப .40. பா .3.) என்று அருளினார் , திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளும் . கண்ணப்பநாயனார் முதலியோர்க்குக் கல்வியின்றியும் இறையுணர்வு உண்டாயிற்றன்றோ ` எனின் , அவரெல்லாரும் முற்பிறப்பிற் கற்ற பெருங்கல்வியும் , அக் கல்வியறிவின் பயனாக வாலறிவன் நற்றாளைத் தொழுத பெருந் தவமும் உடையார் ` என்பதற்கு ; அவர்க்கு உண்டாகிய உணர்வு தவத்தவர் உணர்வினும் மிக மேம்பட்ட உணர்வாய்க் கடிதின் வீடுபயந்தமை தானே போதிய சான்றாம் என்க . தி .12 கண்ணப்ப நாயனார் புராண (102) த்தில் , சேக்கிழார் நாயனார் , ` முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான - அன்பினை எடுத்துக்காட்ட ` என்றருளினார் . கண்ணப்பர்க்கு அன்னதொரு பெருந்தவம் இல்லையாயின் , ` சேணுயர் திருக்காளத்தி மலைமிசை எழுந்து செவ்வே - கோணமில் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் ` என்று ஒருவன் கூறிய அளவில் , மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற அவர் விரைந்து செல்லுதலும் , சென்று காளத்தி மலையை அடைந்த பொழுது தமக்கு முன்னே தம் அன்பு அம்மலை மேற் செல்லுதலும் , சென்று தாம் இறைவரைக் காணாத முன்பே இறைவர் தம்மை நோக்கிய கருணை கூர்ந்த அருட்டிருநோக்கம் வந்து எய்தப் பெறுதலும் , அது பெற்ற ஞான்றே தாம் பிறந்த குலச்சார்பு தம்மை அறவே விட்டு அகன்று போகத் தாம் பொருவில் அன்பே உருவாதலும் , பிறவும் எவ்வாறு இயலும் என்க . இனி , இறைவன் நூலைக் கற்றவர்கள் அவற்றின் பொருளைப் பலகாலும் சிந்தித்துப் பிறரொடு வினாதல் , விடுத்தல்கள் செய்து பயின்றும் இறைவனை உணர்வராகலான் , ` கற்றார்கள் உற்று ஓரும் காதலான் ` என்று அருளினார் . உற்று ஓர்தல் - மனம் பற்றி ஆராய்தல் . காதலான் - அவர்களிடத்துக் கொள்ளும் அன்பினை உடையவன் . ` கற்றல் கேட்ட லுடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்த ` ( தி .1. ப .1. பா .2.) என்றருளினார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும் . பொல்லாத நெறி , புத்த மதம் . உகந்தார் - ( சிவநெறியை விடுத்து அதனை ) விரும்பியவர் . பொன்றிவிழ - கெட்டொழிய . நில்லாத - நிலையாத . நிணக் குரம்பை - புலாற் குடில் ; உடம்பு . பிணக்கம் - மாறுபாடு ; அவை பிணி முதலிய துன்பங்கள் . நிறை தவம் - நிறைய வேண்டுவதாய தவம் . ` தவம் நிரம்பாதிருந்தமையானே சமண் சமயம் புகுதல் உண்டாயிற்று ` என்பதும் , பின்னர் அக்குறையினைச் சூலைநோய்த் துன்பத்தெழுந்த உணர்வினால் நீக்கி ` நிறைவித்தான் ` என்பதும் நினைந்து , ` நிறைதவத்தை நிறைவித்து ` என்றருளினார் . இதனையே சேக்கிழார் , ` முன்னமே முனியாகி எமை அடையத் தவம் முயன்றான் - அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வம் ` ( தி .12 திருநாவுக் . புரா . 48.) என்பதனால் விளக்கினார் . செல்லாத செந்நெறி - புடை பெயர்ந்து போகாத செவ்விய நெறி ; ` அறிவினால் அறியும் முறை ` என்றதாம் .

பண் :

பாடல் எண் : 9

அரியபெரும் பொருளாகி நின்றான் தன்னை
அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்கண் ஏற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழில் செய்யும் அடியார்தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

கிடைத்தற்கரிய பெரும்பொருளாய்த் திகழ்பவனும் , அலையை உடைய கடலிடத்துத் தோன்றிய ஆலால நஞ்சினை உண்ணக் கழிந்த கண்டத்தினனும் , சிவந்த கண்களையுடைய இடபத்தின் மேலேறி ஒளிவிடும் சிறந்த மாணிக்க மணிபோல் விளங்குந் தோற்றத்தை உடையவனும் , தத்தம் நிலைக்கு ஏற்ற தொண்டினைச் செய்யும் அடியார்க்கு உலகங்களைக் கற்பம் முடியுமளவும் ஆள அளிப்பவனும் , அழிவில்லாதவனும் , உமையம்மை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானை நான் செங் காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

அரிய பெரும் பொருள் - கிடைத்தற்கு அரிய பெரும் பொருள் . ` செங்கண் ஏற்றின்மேல் , கரியதொரு கண்டத்தின் கண் கதிர் விடுகின்ற பெரிய நீலமணி விளங்குவது போலும் காட்சி தோன்ற நிற்பவன் ` என்க . உரிய - தம் நிலைக்கு ஏற்ற , ` தொழில் ` என்றது தொண்டினை . ` முழுது ` என்றது , ` கற்பம் முழுதும் ` எனக் காலத்தின் மேல் நின்றது . உலப்பு - அழிவு . ` தெரிவை ` என்புழி இரண்டனுருபு தொகுத்தலாயிற்று .

பண் :

பாடல் எண் : 10

போரரவ மால்விடையொன் றூர்தி யானைப்
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்தானை நிமலன் தன்னைப்
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
பிறங்கொளிவாள் அரக்கன்முடி யிடியச் செற்ற
சீரரவக் கழலானைச் செல்வன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

போரிடத்து எழுப்பும் ஒலியையுடையதும் பெருமை மிக்கதும் ஆகிய ஒரு விடையை ஊர்தியாக உடையவனும் , புறம்பயத்தும் புகலூரிலும் நிலைத்து நின்றவனும் , கங்கையும் , பாம்பும் நிலவும் செஞ்சடைமேல் நிலாக்காலும் வெண்டிங்கட்பிறையை என்றும் நீங்காதவாறு வைத்தவனும் , நிமலனும் , மிக்க ஒலியுடைய புட்பக விமானத்தையுடையவனாய் , வெற்றியால் மூவுலகங்களிலும் விளங்கிய புகழுடைய கொடிகள் அரக்கனாகிய இராவணனுடைய முடிகள் பொடியாகும்படி ஒலிக்கும் அழகிய கழலினனும் , செல்வனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

போர் அரவம் - போருக்காக எழுப்பும் ஒலி . ` ஒன்றாகிய ஊர்தியை உடையவன் ` என்க ; ` ஒரு விடை ஊர்தி ` எனற் பாலது , ` விடை ஒன்று ஊர்தி ` எனப்பட்டது . புறம்பயம் , புகலூர் சோழநாட்டுத் தலங்கள் . நீர் அரவச் செஞ்சடை - நீரையும் பாம்பையும் உடைய செம்மையாகிய சடை . நிலா வெண்டிங்கள் - நிலவை வீசுகின்ற வெள்ளிய பிறை . பேர் அரவம் - மிக்க ஒலி . புட்பகத் தேர் - புட்பகமாகிய ஊர்தி , ` வென்றி வாளரக்கன் பிறங்கொளி முடி ` எனக் கொண்டு கூட்டுக . இடிய - பொடியாகும்படி . சீர் - அழகு . அரவம் - ஒலி .

பண் :

பாடல் எண் : 1

ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்
புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே.
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், சினமிகுந்த நாகத்தை அரைநாணாகக் கட்டியவனும், அடியவர்களுக்கு அன்பனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடைமேல் கங்கையை ஏற்றவனும், சுடுகாட்டில் ஆடுவதை விரும்பியவனும், உலகங்கள் ஏழும் கலக்க முறாதபடி ஒலிக்கும் கடலிடை உண்டான நஞ்சினைத் தன் கழுத்திடத்தே சேர்த்தவனும் ஆவான். அவன் என் சிந்தை இடத்தவன் ஆயினான்.

குறிப்புரை :

ஆர்த்தான் - கட்டினான். ``அழல்`` என்றது, சினத்தை. `நாணா ஆர்த்தான்` எனவும், `கலங்கா வண்ணங் காத்தான்` எனவும் இயையும். ``கடல்வாய் நஞ்சதனைக் கண்டத்துள்ளே சேர்த்தான்`` என்றது, `பெரிய கடலில் தோன்றிய நஞ்சினைச் சிறிய கண்டத்துள்ளே அடக்கினான்` என்னும் நயத்தை உடையது. சிவலோகன் - சிவ லோகத்தைத் தன் உலகமாக உடையவன். `சிவலோகத்தில் இருப்பவன் என் சிந்தையன் ஆயினான்` என வியந்தருளிச் செய்தவாறு.

பண் :

பாடல் எண் : 2

கருத்தன்காண் கமலத்தோன் தலையி லொன்றைக்
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்
ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் தலைவன் ஆவானும், பிரமன் தலைகளில் ஒன்றைக் கோபித்துக் கொய்தவனும், வேகமாகப் பாய்ந்த கங்கை வேகம் நீங்கிப் பரவிய தலையை உடைய ஒருத்தனும் உமையம்மை தங்கிய பங்கினனும், மூன்று வடிவங்களாய் நின்ற அரி, அயன், அரன் ஆகியோருடைய வடிவங்கள் ஒன்றாகித் தனது ஒருவடிவமாக அமைந்த பழையோனும், தேவர்களுக்கெல்லாம் மேலானவனும், மெய்யடியார் உள்ளத்தில் விரும்பி உறையும் தூயவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினான்.

குறிப்புரை :

கருத்தன் - தலைவன். ``காய்ந்தான்`` என்றது, `அறுத்தான்` என்னும் தன் காரியம் தோற்றி நின்றது. பாய்ந்த - வீழ்ந்த. பரந்த - நிறைந்த. மூவுரு - ``அயன், அரி, அரன்`` என்னும் முக் கடவுளர் வடிவம். ``மூவுருவாயும்`` என்னும் உம்மை தொக்கது. ``விருத்தன்`` என்றது, `பழையோன்` என்றவாறு. மூவுருவாய் நிற்றல் பொது வியல்பாக, ஒன்றாய் நிற்றலே உண்மை இயல்பாகலின், `ஒன்றாய் நின்ற விருத்தன்` என்றருளினார். ``மூவுருவாய்`` என்புழித் தொகுக்கப்பட்ட உம்மை, `இப் பொதுவியல்பு உடையனாயினும் தன் உண்மையியல்பு திரியாதவனே` என்பது தோற்றுவித்தது. `தீர்த்தன்` என்னும் வடசொல். ``திருத்தன்`` எனத் திரிந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 3

நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்
அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் நம்புதற்குரியவனும், வெள்ளை விடை ஒன்றை ஊர்தியாகக் கொண்டவனும், தலைவனும், கீதத்தைப் பாடினவனும், இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்கள் உடையவனும், விரும்பி மனமுருகும் அடியார்களுடைய அன்பனும், அனலேந்தி ஆடினவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் அறிய ஒண்ணாதவனும், செம்பொன் அனையானும் ஆவான். அவன் என் சிந்தை யிடத்தவன் ஆயினான்.

குறிப்புரை :

நம்பன் - நம்புதற்கு (விரும்புதற்கு) உரியவன். நரை - வெண்மை. நவிற்றினான் - பாடினான். இன்பன் - இன்பம் தருபவன். `சிவபிரானது முக்கண்களும் இமையாக் கண்கள்` என்பதனை, ``இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்`` (தி.11 திருமுருகாற்றுப்படை. 153. 54.) என நக்கீரதேவரும் கூறினார். ஏசற்று - விரும்பி. ``அழலது`` அது, பகுதிப் பொருள் விகுதி. ``அவன் என்று அறிய ஒண்ணாதவன்`` என்றது, `கருதியும் கேட்டும் உணர ஒண்ணா தவன்` என்பதனையும், ``இவன் என்று அறிய ஒண்ணாதவன்`` என்றது. `கண்டு உணர ஒண்ணாதவன்` என்பதனையும் குறித்து நின்றன.

பண் :

பாடல் எண் : 4

மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்
முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்
ஆரழலாய் அயற்கரிக்கு மறிய வொண்ணாத்
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் மூவுருவாய் மூத்தவனும், மூவர்க்கும் முதல் ஆனவனும், உலகத்தோற்றத்திற்கு முன் ஆனவனும், உலக ஒடுக்கத்திற்குப்பின் ஆனவனும், வீடு பேறு ஆனவனும், உலகங்களைக் காப்பவன் ஆனவனும், உலகிற்குக் கண் ஆனவனும், இறந்துபட்ட பிரம விட்டுணுக்களுடைய என்புக்கூடுகளை அணிந்தவனும், கயிலை மலையினனும், ஆக்கந்தருபவனும், ஆன்ஐந்தில் விரும்பி மூழ்குபவனும், பிரமனுக்கும் திருமாலுக்கும் அறியமுடியாத அழற்பிழம்பாய்த் தோன்றிய தேவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

மூவன் - மூப்பினன்; முன்னோன்; `மூவுருவாயவன்` எனலுமாம். ``முன்பின்`` என்பன, உலகத் தோற்ற ஒடுக்கங்களை எல்லையாக உடையன. முடிவு - வீடு பேறு. `காவல்` என்பது அடியாக, `காவலன் என்பது வருதல் போல, அதன் முதனிலையாகிய `கா` என்பது அடியாக, ``காவன்`` என்பது வந்தது. ``காப்பவன்`` என்பது பொருள். ஆவன் - ஆக்கம் தருபவன். ஆ அகத்து - பசுவினிடத்து உள்ள. `அயற்கு` என்புழியும் எண்ணும்மை விரிக்க.

பண் :

பாடல் எண் : 5

கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் காட்டில் உறைபவனும், வேடனாகிப் பார்த்தனொடு பொருதவனும், கனல் ஆட வல்லவனும், மானைக் கையில் ஏந்தியவனும், நான்கு மறைகளாகவும் ஆனவனும், வலிய இடபமொன்றை ஏற வல்லவனும், பலவகை உடம்புகளாயும் நிற்பவனும், சீவான்மாக்களின் உயிர்க்குயிரானவனும், சொல் ஆனவனும் சொற்பொருள் உணர்வு ஆனவனும், தன்னை உணர்ந்தார்க்கு எக்காலத்தும் தேனாய் இனிப்பவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

கானவன் - காட்டில் உறைபவன். கானவனாய் - வேடனாகி; பொருதது (போர் செய்தது) அருச்சுனனோடு, வல் ஏறு - தன்னைத் தாங்க வல்லதாகிய விடை; அற விடை; அறம் அன்றி, `மறம் தாங்கலாற்றாது` என்பதாம். பிறர் அறத்தின் வழிப்படுவோராய் அதனைச் செலுத்தமாட்டாமை தோன்ற, `ஏறவல்லான்` என்று அருளினார். ஊன் உடம்பு; ஊனவன் - பலவகை உடம்புகளாயும் நிற்பவன். உரை - சொல். உணர்வு - சொற்பொருள் உணர்வு.

பண் :

பாடல் எண் : 6

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப்
புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் உயிரோடு உடங்கியைந்து நின்றவனும், எல்லா உறவினருமாய் ஆனவனும், ஓரிடமும் எஞ்சுதலில்லா வகை எவ்விடத்தும் நிறைந்து நின்றவனும், அழிவில்லாதவனும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனும், நல்ல தவ வேடங்கொண்டவனும், சரணடைந்த பிரமசாரிக்காக அவனைக் கிட்டிய பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.

குறிப்புரை :

உற்றவன் - (உயிர்களோடு) உடங்கியைந்து நின்றவன். உறவு எல்லாம் - அப்பன், அம்மை, உடன் பிறந்தார் முதலிய பலரும். `ஒழிவு அற எங்கும் நின்று` என்க; `ஓரிடமும் எஞ்சுதல் இல்லாது எவ்விடத்தும் நிறைந்து நின்று` என்பது பொருள். ``ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி`` (தி.8 திருவா. போற்றித் - 215.) எனவும், ``உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த யோகமே`` (தி.8 திருவா. பிடித்த.1.) எனவும் அருளியவற்றை நோக்குக. உலப்பு - அழிவு. ``ஆடை`` என்றது, ஆடையின்மேற் கட்டப்படும் கச்சினை. `புறங்காட்டில் எரியின்கண் ஆடல் புரிந்தான்` என்க. நற்றவன் - நல்ல தவக்கோலம் உடையவன். ``நற்றவனாய் அடியடைந்த மாணிக்கு` என்பதும் பாடம், மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர்.

பண் :

பாடல் எண் : 7

உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி
உருண்டோடத் தொடர்ந்தருக்கன் பல்லை [ யெல்லாந்
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற
தலைவன்காண் மலைமகளாம் உமையைச் சால
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி
வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்
சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், மெய்யுணராத தக்கனுடைய வேள்விக்கண் திரட்டி வைக்கப்பட்ட திரவியங்களை உருண்டோட உதைத்தவனும், அருக்கனைத் தொடர்ந்து சென்று அவன் பற்களை எல்லாம் தகர்த்தவனும், தக்கனுடைய தலையைக் கொய்த தலைவனும், மலைமகளாகிய உமை யம்மையை மிக இகழ்ந்தவராய், மாட்சிமைப்பட்டவராய்த் தம்மை மதித்து வேள்விக்கண் வந்து அவியுண்டாருமாகிய வலிமைமிக்க தேவர்களொடு அவர்தம் அறியாமை முழுவதையும் அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

``வேள்வி`` என்றது, வேள்வியின்பொருட்டு நிறைத்து வைக்கப்பட்ட பொருள்களை. உருண்டோட உதைத்தவன் என இயையும். தொடர்ந்து - துரந்து சென்று. அருக்கன் - சூரியன். `சால ஒழிந்த` என இயையும்.
`மாண்டாராய்` என எச்சமாக்கி, `மாட்சிமைப்பட்டவராய் வேள்விக்கண் வந்து அவியை உண்டவர்` என உரைக்க. ``வந்து`` என்றது, இடவழுவமைதி. ``வல்லமரர் உண்டவரோடு`` என்றது, `உண்டவராகிய வல்லமரரோடு` எனப் பொருள் தந்தது. ஓடு எண்ணிடைச்சொல். மதன் - அறியாமை. `அவரது மதனை எல்லாம்` என்க. சிதைத்தவன் - அழித்தவன்.

பண் :

பாடல் எண் : 8

உரிந்தவுடை யார்துவரால் உடம்பை மூடி
உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்
பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
நிரைந்துவரும் இருகரையுந் தடவா வோடி
நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்
திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன்காண் அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், உடை இல்லாதவரும், துவர் தோய்ந்த ஆடையால் உடம்பை மூடுபவராய்த் திரியும் சமண புத்தர்கள் உணராவண்ணம் தன் அடியார்க்கு அருள் புரிந்தவன் ஆவான். குளிர்ந்த மலைமேல் உள்ள பண்டங்களையெல்லாம வாரிக்கொண்டு அவற்றோடு கூட முறைப்பட்டு வரும் பெண்ணையாற்றில் பாய்ந்துவரும் நீர், இணை ஒத்துவரும் இருகரைகளையும் தடவிக்கொண்டு ஓடிக்குற்றமற்ற இறைவனை வலங்கொண்டு இடமும் காலமும் நெடியவாக நோக்கி, மெல்ல அசைந்துலவும் அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

உரிந்த உடையார் - நீங்கிய உடையினை யுடையவர்; உடை இல்லாதவர்; சமணர். துவர் - துவர் தோய்த்த ஆடை; அதனால் உடம்பை மூடுபவர், புத்தர். உழிதரும் - திரிகின்ற. ஊமர் - உணர் வில்லாதவர், பரிந்தவன் - (தன் அடியார்க்கு) அருள் புரிந்தவன் `சமணரும் புத்தரும் இறைவனை இல்லை என்றே சொல்லிக் காலம் போக்கினும் அவன் தன் அடியார்க்கு அருள் செய்தே நிற்கின்றான்` என்றதாம்; `புத்தரும் சமணரும் புறனுரைக்கப் - பத்தர்கட் கருள் செய்து பயின்றவனே`` (தி.3. ப.4. பா.10.) என்றருளினார், திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள். பனி வரை மீப்பண்டம் - குளிர்ந்த மலைகளின் மேல் உள்ள பொருள்கள்; அவை, சந்தனம், அகில், மூங்கில் முதலியன. பறித்து - வாரிக்கொண்டு; `பரித்து` என்பதும் பாடம். உடன் - அவற்றோடு கூட. நிரந்து - முறைப்பட்டு. `பெண்ணைப் பாய்நீர்` என மாற்றுக. நிரைந்து - இணையொத்து. தடவா - தடவிக் கொண்டு. ``நின்மலனை`` என்றது, `நின்மலனாகிய தன்னை` எனப் பொருள் தந்தது. `நீள நோக்கி` இடம் நெடிதாக நோக்கி; `நோக்குவதும் நின்மலனையே` என்க. `அணித்தாய் ஓடும் பெண்ணையாற்று நீரினை, இறைவனை வலம் செய்து கண்டு கொண்டே ஓடுவதாக அருளிச் செய்தார்` என்க.
இதனை அடுத்து நின்ற திருத்தாண்டகம் கிடைக்கவில்லை. இதன் பின் இறுதித் திருத்தாண்டகமே கிடைத்துள்ளது.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்
செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

அடியார்களுடைய அல்லல்களை யெல்லாம் நீக்கியவனும், அடைவதற்கு அரிய பொருளாய் நின்றவனும், மன்மதனது உடலை அழித்தவனும், மலைமகளாம் உமையம்மையின் மனம் நடுங்கவும் தேவர்கள் அஞ்சவும் கயிலை மலையை மதியாது வெகுண்டு ஓடி அதனைப் பறித்தெடுக்க முற்பட்டவனுடைய கைகளும் ஒளிவீசும் முடிகளை உடைய தலைகளும் கண்களும் பிதுங்கிச் செருக்குக்கெடுமாறு ஒறுத்தவனும், திருமுண்டீச்சரத்துக் கோயில் கொண்ட சிவலோகன் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

`அல்லல் எல்லாம் அறுத்தவன்` என்க. ``அரும் பொருளாய் நின்றவன்`` என்றது, அடைந்த பின்னரும், அடைந் தார்க்கு இன்பம் மேன்மேல் விளைத்தலால், அன்னதொரு பொருள் பிறிதில்லாமை உணர நிற்றல் பற்றி. மறுத்தவன் - ஒழித்தவன். `நடுங்கவும் அஞ்சவும் எடுத்தோன்` என்க. கறுத்தல் - வெகுளல். கதிர் முடி - மகுடத்தால் ஒளிபெற்ற தலை. பிதுங்கி - பிதுங்கினமையால். ஓட - (செருக்குக்) கெட.

பண் :

பாடல் எண் : 1

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்
கமலத்தோன் தலையரிந்த காபா லிய்யை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய
திருவானைத் தென் பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் முதல் ஆனவனும் , நுதலிடத்துக் கண் பெற்றவனும் , பிரமனது தலையை அரிந்து , அரிந்த அத்தலை ஓட்டை விரும்பிக் கொண்டவனும் , அழகிய உமையம்மை விளங்கும் உடலின் ஒரு கூற்றை உடையவனும் , உயிர்களுடைய உணர்வுகள் எல்லாம் ஆனவனும் , அவ்வுணர்வுகளை உணர்த்தும் ஓசைகளாகி வருபவனும் , வலஞ்சுழியில் மன்னும் எம்பெருமானும் , மறைக் காட்டிலும் , ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மை யுடையவனும் ஆகும் , தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழில் சிவபெருமானை , நெஞ்சே ! இடைவிடாது சிந்திப்பாயாக .

குறிப்புரை :

கரு - எல்லாவற்றிற்கும் முதல் . கண் நுதல் - கண்ணை உடைய நெற்றியை உடையவன் . கமலத்தோன் - பிரமன் . உரு ஆர்ந்த - அழகு நிறைந்த . உயிர்களும் , அவைகள் உணரும் பொருள்களும் எண்ணிறந்தனவாதல் பற்றி , ` உணர்வெலாம் ` என்று அருளிச் செய்தார் . `ஓ?` என்றது , எழுத்தைப் புலப்படுத்தும் ஓசையை . ` அவ் வோசையாகி வருவான் ` என்றது . உணர்வாய் நின்று அதனை வளர்க்குமாற்றினை விளக்கியபடி . வலஞ்சுழி , மறைக்காடு , ஆவடுதுறை இவை சோழநாட்டுத் தலங்கள் . மேய ( மேவிய ) - விரும்பி எழுந்தருளிய . திருவான் - மேன்மையை உடையவன் . ` பரம்பைக்குடி ` என்பது திருவாலம் பொழிற்குச் சார்பாய் உள்ள ஊர் ; ` பொழில் ` சோலையாதலின் , அஃது அவ்வூரைச் சார்ந்துள்ளது என்க .

பண் :

பாடல் எண் : 2

உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக
வுடையானை யுடைபுலியி னதளே யாகத்
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்
பாம்பணையான் தனக்கன்றங் காழி நல்கிச்
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

களிற்றின் தோலை உரித்தவனும் , அத்தோலைப் போர்வையாகவும் , புலியின் தோலை உடையாகவும் , உடையவனும் , சடைமேல் கங்கையைத் தரித்தவனும் , அழகிய கையிடத்து உருவத் தழலை ஏந்தியவனும் , ஆலகால விடத்தை அமுது செய்தவனும் , இக்கோலத்தையெல்லாம் மேற்கொண்டு நின்றவனும் , பவளப் பெருமலையன்னவனும் , ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு திருமாலுக்கு அன்று சக்கராயுதத்தை வழங்கி மகிழ்ந்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாது சிந்திப்பாயாக .

குறிப்புரை :

` களிறதன் தோல் உரித்தானை , ( அதனைப் ) போர்வையாகவும் புலியின் அதளே உடையாகவும் உடையானை , சடையதன் மேல் கங்கையையும் அங்கையில் தழல் உருவையும் தரித்தானை ` என்க . ` இதெல்லாம் ` என்றதற்கு , ` இக் கோலத்தை எல்லாம் ` என உரைக்க . பரித்தான் - மேற்கொண்டு நிற்பவன் . ` உண்டதெல்லாம் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . பாம்பணையான் - திருமால் . ஆழி - சக்கரம் . சிரித்தான் - மகிழ்ச்சியுற்றான் ; என்றது , ` அருள்பண்ணினான் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 3

உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளால்
கருவீன்ற வெங்களவை யறிவான் தன்னைக்
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை
யள்ளூறி யெம்பெருமான் என்பார்க் கென்றுந்
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

அயன் , அரி , அரன் என்னும் நிலைகளால் மூவுருவாகியும் உண்மையை உணருமிடத்து அம்மூவுருவும் ஓருரு ஆனவனும் , ஓங்காரத்தின் மெய்ப்பொருளாய்த் திகழ்பவனும் , உடம்பின் உள்ளே கருவாய்த் திகழும் மனம் எண்ணும் வஞ்சனையான கொடிய எண்ணங்களை அறிபவனும் , இயமனைக் கழலணிந்த தன் திருவடியால் உதைத்து மாணியாகிய மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த பெறுதற்கரிய அமுது அன்னவனும் , தேவர்களுக்குத் தலைவனும் அன்புமிகப் பெருகி எம்பெருமானே என்று விளித்து அடி அடைவார்க்கு என்றும் நன்மைகளை உண்டாக்குபவனும் ஆகிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே இடைவிடாது சிந்திப்பாயாக .

குறிப்புரை :

உருமூன்று - ` அயன் , அரி , அரன் ` என்னும் நிலைகள் , உணர்வின்கண் - உண்மையை உணருமிடத்து . ஓங்காரத்து மெய்ப் பொருள் , எப்பொருளின் தோற்றம் நிலை இறுதிகட்குக் காரணன் என்பது . ` உடம்பு ` என்றது பருவுடம்பையாகலின் , ` கரு ` என்றது , அதற்கு முதலாய் உள்ள நுண்ணுடம்பாகிய மனத்தை என்க . ` அஃது ஈன்ற வெங்களவு ` என்றது , வஞ்சனையாகிய எண்ணத்தை . அதனை உடம்பினுள்ளால் ஈன்ற என்றது பருவுடம்பு போலப் புலனாகாது நிற்றல் பற்றி . ` அருள் ஈன்ற ` என்றது , ` அருளை அவன் பொருட்டு ஆக்கிய ` என்றபடி , அள் ஊறி - அன்புமிகப் பெருகி . திரு - நன்மை .

பண் :

பாடல் எண் : 4

பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை
வாட்போக்கி யம்மானை யெம்மா னென்று
வாரமதாம் அடியார்க்கு வார மாகி
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

முழுப்பூமியும் , விசும்பும் , பாதாளமும் ஆகிய மூவுலகங்களாய் நின்ற மிக மேலானவனும் , வண்டுகள் மொய்க்கும் குழலினையுடைய உமையம்மையைப் பாகத்திற்கொண்ட ஆரமுதம் போன்றவனும் , அழகிய தில்லையிடத்து ஆடும் கூத்தனும் , வாட் போக்கித் திருத்தலத்துத் தலைவனும் , எம் தலைவன் என்று பாராட்டி அன்பு கூரும் அடியார்பால் அன்புடையவனும் , வஞ்ச மனத்தார்க்கு என்றும் வஞ்சனும் , சிறந்த அரசனும் ஆம் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

` பார் முழுதாய் விசும்பாகிப் பாதாளமாம் ` என்றது , ` மூவுலகமாய் நின்றவன் ` என்றபடி . பரம்பரன் - மிகமேலானவன் . ` வாட்போக்கி ` என்னுந்தலத்திற்குப் பிற்காலத்தில் இப்பெயரே சொல்லப்படினும் , சுவாமிகள் காலத்தில் , ` ஆட் போக்கி ` என்ற பெயரே சொல்லப்பட்டது எனக் கருத இடம் உண்டு ; இத்தலம் சோழ நாட்டில் உள்ளது . வாரம் - அன்பு , சீர் அரசு - சிறந்த அரசன் .

பண் :

பாடல் எண் : 5

வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

மலையில் தங்கி வளர்ந்த இளமங்கையைப் பங்கில் ஏற்றவனும் தேவர்க்குத் தேவனும் , மணி போன்றவனும் , முத்து அனையானும் , அரையிற் பொருந்திய புலித்தோல் மேல் பாம்பைக் கட்டிய தலைவனும் , அடியார்க்கு என்றுந் தலைவனாய் நின்று அருளு பவனும் , வெள்ளிதாய் உயர்ந்த கோவணத்தை அணிந்த புனிதனும் , பூந்துருத்தி வாழ்வானும் , புகலூரானும் ஆகும் , அலை எழும் நீர்நிலைகளை உடைய தென்பரம்பைக்குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

வரை ஆர்ந்த - மலையில் தங்கி வளர்ந்த . அம்மான் - எப்பொருட்கும் தலைவன் . ` அடியார்க்கு என்றும் தம்மானை ` என்க . அடியார்க்குத் தலைவனாய் நின்று அருளுதல் சிறப்பு வகையான் ஆதலின் அதனை வேறெடுத்தோதியருளினார் . புரை - உயர்வு ; வெண்மை . பூந்துருத்தி , புகலூர் சோழநாட்டுத் தலங்கள் . திரை - அலை ; அஃது ஆகுபெயராய் நீரைக்குறித்தது .

பண் :

பாடல் எண் : 6

விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் தன்னை
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்
பாழ்படுப்பான் சிலைமலைநாண் ஏற்றி யம்பு
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

படைப்புக் காலத்து விரிந்தவனும் , அழிப்புக் காலத்துக் குவிந்தவனும் , வேதத்தின் வித்தானவனும் , பரந்த பிறப்பும் இறப்பும் ஆகி நின்றவனும் , சலந்தரன் உடல் இருகூறாய் வேறாக அரிந்தவனும் , ஆழ்கடலிலிருந்து தோன்றிய நஞ்சையுண்டு இமையோ ரெல்லாரும் உய்ய அருள்புரிந்தவனும் , பலவாகிய அசுரர்கள் வாழ் புரங்கள் மூன்றையும் பாழ்படுத்தற்கு மலையாகிய வில்லில் பாம்பாகிய நாணை ஏற்றித் திருமாலாகிய அம்பைத் தெரிந்து எய்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவ பெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

விரிந்தது - படைப்புக் காலத்திலும் , குவிந்தது அழிப்புக் காலத்திலும் என்க . ` விரிந்தனை குவிந்தனை விழுங்குயிர் உமிழ்ந்தனை ` ( தி .2. ப .30. பா .3.) என்றது மேலும் காட்டப்பட்டது . ` பிறப்பு இறப்பு ` என்றதும் , தோற்ற ஒடுக்கங்களை ; அவற்றிற்கு நிமித்தமாய் நிற்பவனை அவையேயாக அருளிச் செய்தார் . ` வேறா ( க ) அரிந்தானை ` என்க . பரிந்தான் - அருள் கூர்ந்தான் . ` சிலையாக மலையில் நாண் ஏற்றி ` என்க . சிலை - வில் .

பண் :

பாடல் எண் : 7

பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்
புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை
எல்லாருந் தன்னை யிகழ அந்நாள்
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

குற்றமிக்க என்னுடம்பில் புகுதற்பொருட்டு என் உடம்பின் புறத்தே நின்று பலகாலும் ஆராய்ந்து குற்றங்களைந்து தூய்மை செய்த புனிதனும் , தாருகாவனத்து முனிவர் எல்லாரும் தன்னை இகழ , அந்நாள் அவரகத்தார் இடுபலி என்ற ஒன்றை முன்னிட்டுக் கொண்டு அங்கே திரிந்தவனும் , தன்னைப் புகழாதாரைத் தான் என்றும் நினையாதவனும் , இடைவிடாமல் தன் பொன்னடி களையே விரும்பி ஒழுகுவாரை மற்றவர் செல்லாத ஞான நெறியிலே செலுத்த வல்லவனும் ஆகும் திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

` அழுக்கு ` என்றது , உடம்பை ; மலம் நீங்கிய முத்தரது தனுவையும் கரணங்களையும் இறைவன் தன்னுடையனவாகக் கொண்டு அவற்றின்கண் தனது அருளாற்றல் வெளிப்பட நிற்பனாகலின் , ` என் அழுக்கிற் புகுவான் ` என்று அருளினார் . ` நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே ` ( ப .95. பா .4.) எனவும் பின்னர் வரும் . ` புறம் புறம் `, என்னும் அடுக்கு , ` கையைக் கையை நீட்டு கின்றான் ` என்றல் போல , இடைவிடாமைப் பொருட்டு . ` புறத்தைப் புறத்தை ` என உருபுவிரிக்க ; ஏகாரம் தேற்றம் . சோதித்தல் - ஆராய்தல் ; குற்றங்களைந்து தூய்மை செய்தல் . ` அந்நாள் ` என்றது , தாருகாவனத்து முனிவர் - பத்தினியர்பாற்சென்ற காலத்தை . ` என்று ` என்றது , ` என்பதை முன்னிட்டுக் கொண்டு ` என்றவாறு . ` அகங்களில் ( இல்லங்களில் ) திரியும் ` என்க . ` திரியும் ` என்றது . இறப்பில் நிகழ்வு . சொல்லாதார் - வாழ்த்தாதவர் . ` சொல்லாதான் ` என்றது , ` நினையாதவன் ` எனத் தன் காரணந் தோற்றி நின்றது . செல்லாத நெறி - செல்லுதற்கு அரிய நெறி ; ஞான நெறி ; ` அழியாத நெறி ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 8

ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ
டயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னைப்
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்
சிந்திய வெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

ஐந்தலைப் பாம்பாகிய படுக்கையில் கிடந்த திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாத தலைவனும் , பந்து பொருந்தும் மெல்லிய விரலினளாகிய பார்வதியைப் பாகமாகக் கொண்டவனும் , பராய்த்துறையிலும் , வெண்காட்டிலும் பயின்று நிற்பவனும் , ஓட்டைகளுடைய வெள்ளிய தலையில் பிச்சை ஏற்பவனும் , பூவணத்தும் புறம்பயத்தும் பொருந்தி நிற்பவனும் , துன்புறுத்திய எம் கொடுவினைகளைத் தீர்ப்பவனும் ஆகிய திருவாலம்பொழிற் சிவ பெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

பராய்த்துறை , வெண்காடு , புறம்பயம் இவை சோழ நாட்டுத் தலங்கள் . பூவணம் , பாண்டி நாட்டுத் தலம் . பொந்து - புழை . சிந்திய - சிதறிக் கிடந்த ; என்றது , ` பல பிறப்புக்களில் பல இடங்களில் செய்யப்பட்டுக் கிடந்த ` என்றவாறு ; இனி , ` சிந்திய - துன்புறுத்திய ` என்றுமாம் . ` சிந்திய வெந்தீவினைகள் தீரநின்ற ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 9

கையிலுண் டுழல்வாருஞ் சாக்கியருங்
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே

பொழிப்புரை :

கையில் உணவை ஏற்று உண்ணும் சமணரும் சாக்கியரும் ஆகிய கல்விப்பயனடையாத வலிய மூடர்க்கு நல்லன் அல்லனும் , நெஞ்சில் கரவு இல்லாதார்க்குக் கரவாது வெளிநின்று அருள்பவனும் , பூணாக அணிகின்ற நாகமே நாணாகவும் , மலையே வில்லாகவும் , அக்கினிதேவனும் வாயுதேவனும் கையிற் பொருந்திய அம்பினுடைய ஈர்க்கும் கோலுமாகக் கொண்டு கொடிய தவத்தைச் செய்து வரங்களைப் பெற்ற அசுரர்களுடைய நெடிய புரங்கள் மூன்றையும் நெருப்பில் வீழ்த்தவனும் , வயல்கள் நிரம்பிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடை விடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

கையில் உண்டு உழல்வார் , சமணர் . சாக்கியர் - புத்தர் , ` உழல்வாரும் சாக்கியரும் ஆகிய கல்லாதார் ` என்க ; மெய்ந்நூல்களைக் கல்லாமையின் , அவர் கல்லாதவராயினர் . அல்லாதான் - நல்லனல்லா தான் . பொய் - கரவு . ` கரவு இல்லாதவர்க்குக் கரவாது வெளிநின்று அருளுபவன் ` என்றபடி . ` பூணுகின்ற நாகமே நாணாகவும் ` பொருப்பே ( மலையே ) வில்லாகவும் எரியும் ( அக்கினி தேவனும் ) காலுமே ( வாயு தேவனுமே ) கையிற் பொருந்திய அம்பினது ஈர்க்கும் கோலுமாகவும் கொண்டு புரங்களை வீழ்த்திய திருவாலம் பொழிலான் , என்க . ` பூண் நாகமே நாணாக ` என்றது , இனம் நோக்கி . ` ஈர்க்குக் கோல் ` என்றதனை , ` எரிகால் ` என்பவற்றோடு எதிர் நிரனிறையாக இயைக்க . ` கோல் ` என்றது , கூர்மையை . ஈர்க்கு - சிறகு . கடுந்தவம் - மிக்க தவம் . திரிபுரத்தவர் மிக்க தவம் செய்தே அவைகளைப் பெற்றமை யறிக . நெடும் புரம் - பெரிய ஊர் ; அரண் . செய்யின் ஆர் - வயல்களால் நிரம்பிய .

பண் :

பாடல் எண் : 1

வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான், வானிடத்து உறைபவனும், தேவர்களுக்கு மேலானவனும், வட மொழியும் இனிய தமிழ் மொழியும் மறைகள் நான்கும் ஆனவனும், ஆன்ஐந்தாம் பஞ்சகவ்வியத்தில் ஆடினவனும், கானவனாகிய கண்ணப்பனுக்கு அருள் செய்தவனும், தன்னைக் கருதுவார் இதயத் திடத்து, தாமரை மலரிடத்து ஊறும் தேன் போன்றவனும், முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்றடையும் பெற்றியதன்றி இயல்பாகவே உள்ள செல்வனும் ஆவான்.

குறிப்புரை :

வானவன் - தேவன்; என்றது, `தேவருள் ஒருவன் போல நின்று, வேண்டுவார் வேண்டுவனவற்றை அருளுபவன்` என்றவாறு; சிவபிரான் தேவருள் ஒருவனாய் நின்று, அவர்கட்கும் மக்கள் முதலிய பிற உயிர்கட்கும் அருளுதல் பற்றி அவனைத் தேவருள் ஒருவனாகவே உணர்தல் மயக்க உணர்வேயாம் என்பதனை,
``தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர்
மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாத
ராவது முணரார் ஆதி அரியயற் கறிய வொண்ணா
மேவுரு நிலையு மோரார் அவனுரு விளைவு மோரார்``
என விளக்கும் சிவஞான சித்தி (சூ 1, 49.) - இதனை அறிவுறுத்தற் பொருட்டே, பின்னர், ``வானவர்க்கு மேலானான் காண்`` என்றருளிச் செய்தார் என்க. ``வடமொழியும் தென்றமிழும் ........ ஆனவன்`` என்றதன் கருத்தை, ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (ப.23. பா.5.) என்றதன் குறிப்பிற் காண்க. ``எல்லாப் பொருளும் வேதத்தின்கண் உள்ளன`` என்றலின், ``மறைகள் நான்கும் ஆனவன் காண்`` என்றதனால், `ஏனை எல்லா நூல்களும் ஆனவன்` என்பது தானே பெறப்பட்டது.
ஐயன் - தலைவன். கானவன் - காட்டில் இருப்பவன். கானவனுக்கு - வேடனுக்கு; கண்ணப்ப நாயனாருக்கு; அவருக்கு அருள் செய்தமையை எடுத்தோதியது, இறைவற்கு அன்பு ஒன்றே உவப்பாவது; அதனால் `அவ்வன்பின் வழிப்பட்ட வழி இழிந்தனவும் உயர்ந்தனவாய், உவகையைப் பயப்பிக்கும்` எனவும், `அதன் வழிப்படாதவழி உயர்ந்தனவும் இழிந்தனவாய், வெறுப்பைத் தோற்றுவிக்கும்` எனவும் உணர்த்துதற் பொருட்டு `இதயத்து` என்புழி அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை; எனவே, `இதய கமலம்` என்பது பொருளாயிற்று. இனி, `இதயத்திடத்து, கமலத்துக்கண் ஊறும்தேன் போன்றவன்` என, ``கமலத்து ஊறும்`` என்றதனை இடைநிலையாக்கி உரைத்தலுமாம். ஊறும் - சுரக்கின்ற. `ஊறும் தேன் போன்றவன்` என்றது, உள்நின்று விளங்கி, இன்பம் தருதல் பற்றி.
சென்று அடையாத செல்வம் - முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்று அடைதல் என்பது இன்றி, இயல்பாகவே உள்ள செல்வம்; அஃது அவனது வரம்பிலின்பம். ``சென்று அடையாத`` என்றதனால், நீங்காது என்றும் உளதாதலும் பெறப்பட்டது. ``சென்றடையாத திருவுடையானை`` (தி.1. ப.98. பா.1.) என்று அருளினார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும். இப்பொருட்கு, ``அடையா`` என்னும் எச்சம் ``செல்வன்``. என்றதன் முதனிலையோடு முடியும்; இனி `பெயர்ந்து சென்று அடையாது, உணர்வு வேறு பாட்டானே அடையப்படும் இன்பப் பொருளாய் உள்ளவன்` என்று உரைத்தலுமாம். ``சிவன்`` என்பதன் பொருளை (ப.31. பா.6 உரை) காண்க. ``சிவனவன்``. என்பதில் அவன், பகுதிப்பொருள் விகுதி. எம் செல்வன் எமக்குச் செல்வமாய் (எல்லா நன்மைகளுமாய்) உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 2

நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த
நாதன்காண் பூதகண மாட ஆடும்
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகும்
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான் உடை இல்லாதவனும், ஒளியுடைய பாம்பினை இடையிற்கட்டிய தலைவனும், பூதகணங்கள் ஆட அவற்றுடன் தானும் ஆடும் அழகனும், கொக்கிறகைச் சூடினவனும், துணை முலைகளை உடைய துடிபோலும் இடையாளுக்குச் சேரப்படும் இடமாந் தகுதிபெற்ற பொலிவையுடையவனும், சம்புடத்துக்கொண்ட வெள்ளிய திருநீற்றை உடையவனும், புவனங்கள் மூன்றிற்கும் உயிராய் நின்ற புகலிடமானவனும், செவ்வானம் போலத்திகழும் மேனியையுடையவனும் ஆவான்.

குறிப்புரை :

நக்கன் - உடையில்லாதவன்; இது பிட்சாடன கோலத்தைக் குறித்தது. `நக்க அரவம்` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. நக்க - ஒளியை உடைய; `ஒளி, மாணிக்கத்தது` என்க.
சொக்கன் - அழகன். சேர்வு - சேரப்படும் இடம். பொக்கன் - பொலிவை உடையவன். பொக்கணம் - சம்புடம். ``சுத்திய பொக் கணத்து`` என்னும் தி.8 திருக்கோவை. (பா. 242.) யும் காண்க. பொருள் - முதற்பொருள்; `உயிர்` என்றவாறு, திக்கு - புகலிடம். செக்கர் - செவ்வானம்; `செக்கர் போலத் திகழும்` என்க. இனி, செக்கர் - சிவப்பு நிறமுமாம். அது, பகுதிப்பொருள் விகுதி.

பண் :

பாடல் எண் : 3

வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண்
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்து எம் செல்வனாம் சிவபெருமான் மணங்கமழும் மலர்களையணிந்த கூந்தலையுடைய உமையம்மையின் கணவனும், நான்முகனும் திருமாலும் காணமுடியாத வலிமையுடையவனும், அசையுமியல்பினையுடைய மதயானை துன்பமிகுதியால் பிளிற, அதன் தோலை உரித்தவனும், கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் இருண்ட கண்டத்தவனும், அம்பர் நகரத்துப் பெருங் கோயிலில் விரும்பி உறைபவனும், அயவந்தித்திருக்கோயிலில் உள்ளவனும், ஐயாறனும், செம்பொன்போல் திகழும் திருவுருவத்தவனும், ஆவான்.

குறிப்புரை :

வம்பு - வாசனை; இயற்கை மணம். கம்பம் - அசைவு. அம்பர் நகர்ப் பெருங்கோயில் - அம்பர்ப் பெருந்திருக்கோயில்; இது சோழநாட்டுத் தலம், ``அயவந்தி`` என்பது, திருச்சாத்த மங்கைத் தலத்தின் திருக்கோயிற் பெயர்; இத்தலம், சோழ நாட்டில் உள்ளது; திருநீலநக்க நாயனார் தோன்றியருளி அயவந்தி நாதரை வழிபட்டது. ஐயாறு - திருவையாறு.

பண் :

பாடல் எண் : 4

பித்தன்காண் தக்கன்தன் வேள்வி யெல்லாம்
பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயினான் காண்
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரில் அமர்ந்தான் தான்காண்
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான். பித்தனாய், தக்கன் வேள்வியை முழுதும் பெருமையிழக்க அழித்துப் பின் அனைவருக்கும் அருள்கள் செய்த முத்தனாய், முத்தீயும் ஆனவனாய், முனிவர்க்கும் தேவர்க்கும் முதலாகும் மேன்மை மிக்க தந்தையாய், புத்தூரில் அமர்ந்தவனாய், அரிசிற்பெருந்துறையை இருந்து ஆளுமிடமாகக்கொண்ட சித்தனாய், நறையூர்ச் சித்தீச்சரத் தவனாய்த் திகழ்பவன் ஆவான்.

குறிப்புரை :

பீடு - பெருமை. தேவர்கட்கே யன்றித் தக்கனுக்கும் பின்னர் அருள் செய்தமை யறிக. முத்தன் - பாசம் இல்லாதவன். முத்தீ, `ஆகவனீயம், காருகபத்தியம். தக்கிணாக்கினி` என்பன. அத்தன் - தந்தை; `முனிவர்க்கும் தேவர்க்குமே அத்தன் எனச் சிறந்தெடுத் தருளிச் செய்தது, அவர்கள் அந்நிலையை இயல்பில் அனுபவமாக ஐயமின்றி உணரும் பிறப்பினராதல் பற்றி. அரிசிற் பெருந்துறையை எடுத்தோதினமையால், புத்தூர், சோழநாட்டில் உள்ள அரிசிற்கரைப் புத்தூர் என்க. புகழ்த்துணை நாயனார் தோன்றியருளி, திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டது. பாண்டிநாட்டுத் தலமாகிய புத்தூர், இதனின் வேறு. அரிசில் - அரிசில் ஆறு. சித்தன் - எல்லாம் செய்ய வல்லவன். சித்தீச்சரம், நறையூர்ச் சித்தீச்சரம்; சோழ நாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 5

தூயவன்காண் நீறு துதைந்த மேனி
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான்தான் காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண்
அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், தூயவனும், ஒளி விளங்கும் பளிங்கு போன்று, திருநீறு செறிந்த மேனிச் சோதியனும், தீயாய்த் திகழ்பவனும், கொடிய அசுரருடைய புரங்களை அழித்தவனும், சிறுமானைச் செங்கையிலேந்திய எம் பெருமானும், தாய் போன்றவனும், ஆரூரில் அம்மானாய்த் திகழ்பவனும், அடியவர்க்கு ஆரமுதம் ஆனவனும், மற்றையர்க்குத் தொலைவில் உள்ளவனும், பாதுகாவலான நெறியினனும் ஆவான்.

குறிப்புரை :

`மேனி சோதியான்` என இயையும், ``சோதியான்`` என, சினையை முதலொடு சார்த்தி முடித்தருளினார். துளங்கும் - ஒளி விளங்குகின்ற. தீயவன் - தீயாய் இருப்பவன். ``சிறுமான் பெருமான்`` என்றது, முரண் தொடை நயம், ஆய் - தாய்; `யாய்` என்பதன் மரூஉ; `தாய்போன்றவன்` என்பது பொருள். அகரம், சாரியை. `ஆரூரில் ஆயவன்` என மாற்றி உரைப்பினும் ஆம். `அடியார்கட்கு` என்றமையால். ``சேயவன்`` என்றது, மற்றையோர்க்கு என்பது பெறப்படும். சேயவன் - சேய்மையில் உள்ளவன். சேமநெறி - பாதுகாவலான நெறி.

பண் :

பாடல் எண் : 6

பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப்
பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும்
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், விளைநிலமானவனும், விளைநிலத்தில் பயிரானவனும், பயிரை வளர்க்கும் மழையானவனும், அம்மழைத்துளியில் நின்ற நீரானவனும், தன் சடைமேல் நீர்நிற்கச் செய்தவனும், நிலவேந்தர் தம் ஆட்சியால் தாம் பெறும் பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைக்குமாறு ஓங்கும் புகழானவனும், பிறை போன்ற விளைந்த பல்லினை உடைய வெள்ளைப் பன்றியாகிய திருமால் இந்நகரின் நீங்காது பலநாளும் வழிபட்டு வணங்கும் புகழினனானவனும், சிறப்புடைய தேவர் எல்லாருக்கும் இன்பக் காரணன் ஆனவனும் ஆவான்.

குறிப்புரை :

``பார்`` என்றது, விளைநிலத்தை, துளி - மழை. பேர் - பெயர்; புகழ். ``இறைகடியன்`` என்று குடிகள் உரைக்கும் இன்னாச் சொல் (குறள் - 564.) இன்றி, ``செங்கோலன்` எனக் கூறும் சொல்லையே நிலவேந்தர் தம் ஆட்சியாற் பெறும் பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைதலின், அதனை, ``நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும் பேர்`` என்று அருளிச் செய்தார். `அவர் நினைவின்கண் உற்று ஓங்கும் பேர்` என்க. பெயலும் விளையுளும் தொக்கு இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவர் நாட்டவாகச் செய்து, (குறள். 545,) அவர்க்கு மேற் கூறிய பரிசைப் பெறுவிப்பவன் இறைவனாதல் பற்றி, அவனை இவ்வாறு அருளிச்செய்தார். ``மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை`` (தி.8 திருவாசகம் - திருவம்மானை. 10.) என்பதும் காண்க.
இதனானே, சிவபிரான் திருக்கோயில் வழிபாடுகள் விழாக்கள் முதலியவற்றை நன்கு காத்தல் நிலவேந்தர்க்கு முதற் கடமையாதலும் பெறப்பட்டது. ``வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் - வீழ்க தண்புனல்`` என, அந்தணரையும் தேவரையும் ஆனினத்தையும் மழையையும் வாழ்த்தியருளிய ஆளுடைய பிள்ளையார், ``வேந்தனும் ஓங்குக`` (தி.3. ப.54. பா.1.) என அரசனை வாழ்த்தியருளியதூஉம் இது பற்றி என்பதனை, ``ஆளும் மன்னனை வாழ்த்திய தர்ச்சனை மூளும் மற்றிவை காக்கும் முறைமையால்`` (தி.12 திருஞான. புரா. 822) எனச் சேக்கிழார் நாயனார் விளக்கியருளினார். `இது செய்யாத அரசன் தானும் கேடுற்றுத் தன் நாட்டினையும் கேடுறச் செய்வான்` என்பதனைத் திருமூல நாயனார் திருமந்திரத்துள்,
``ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே``
எனவும்,
``முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே``
எனவும் அருளிச் செய்தார்.
பிறை எயிறு - பிறைபோன்ற கோரப் பல். வெள்ளைப் பன்றி- சுவேத வராகம்; இது திருமால் கொண்ட வடிவம். திருமால் இவ் வடிவத்துடன் நிலத்தை ஊழி வெள்ளத்திலிருந்து எடுத்து நிறுத்திய பின் இத் தலத்தில் சிவபெருமானை வழிபட்டனன் என்பது புராணம்.
``மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக
ழெயிறத னுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய எழில்அரி
வழிபட அருள்செய்த
பதமுடை யவன்அமர் சிவபுரம்``
(தி.1. ப.21. பா.7.) என்றருளினார் ஞானசம்பந்தரும். சீர் - புகழ், சீர் உடைய தேவர் - வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படும் புகழை உடைய தேவர்கள். ``சிவன்`` என்றது, இங்கு, `இன்பத்திற்குக் காரணன்` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 7

வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்
காமனங்கம் பொடிவிழித்த கண்ணி னான்காண்
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், கொடியவர்க்குக் கொடியவனும், வெப்பமிகு கனலை ஏந்தியவனும், பரந்த கெடிலநதிக்கரை மீதுள்ள அதிகை வீரட்டானத்து அமர்ந்தவனும், மெய்ப்பொருளினனும், பொய்யர் மனத்துட் புகாதவனும், இனிமைமிகும் பாடல் வீணையோடு இயைந்து இனிமை மேலும் மிகுதற்குக் காரணமான விரலினனும், கையில் மழுவாயுதத்தை ஏந்தியவனும், காமனது உடல் எரிந்து சாம்பல் ஆக விழித்த கண்ணினனும், செம்மை நிறத்தவனும், திருமகளைத் திருமாலுக்கு ஈந்தவனும் ஆவான்.

குறிப்புரை :

``வெய்யவன்`` என்றது, வெய்யவர்க்கு. மெய்யவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன். மிக்க கை - மிகுதற்கு ஏதுவாய கை; ``கை`` என்றது, ஈண்டு விரலை. `பொடியாக விழித்த` என ஆக்கம் வருவிக்க.
செய்யவன் - செம்மை (நன்மை) யுடையவன். செய்யவள் - திருமகள்: இவள், பாற்கடலில் தோன்றிய விடத்தைச் சிவபெருமான் உண்டபின்னர், தேவர் அமுதம் வரக் கடைந்தபொழுது தோன்றினமை நோக்கி அப்பெருமானால் ஈயப்பட்டவளாக அருளினார்; இது வானவர்க்கு அமுதம் ஈந்தமை போல்வது என்க. இனி, `வளை - சங்கு; செய்ய வளை - செம்மையாய (நன்றாய) சங்கு என உரைத்து, திருமாலுக்குச் சக்கரமே யன்றிச் சங்கினை அளித்த வரலாறு உளதேனும் கொள்க.
குறிப்பு: இத்திருப்பதிகத்துள், இதனை அடுத்த திருத்தாண்டகங்கள் கிடைத்தில; இறுதித் திருத்தாண்டகமே கிடைத்துளது.

பண் :

பாடல் எண் : 8

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 10

கலையாரு நூலங்க மாயி னான்காண்
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
மண்ணாகி விண்ணாகி நின்றான் தான்காண்
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்
தகர்ந்துவிழ வொருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

பொழிப்புரை :

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், கலைகள் எல்லாம் பொருந்திய வேதநூலும் அங்கங்களும் ஆனவனும், கலைகளிற் பொருந்திய கருத்துக்களாய் உள்ளவனும், தீர்த்த மாயும், மலையாயும், அலைகள் மடங்கி வீழ் கடல்கள் ஏழும் சூழ்ந்து நின்ற நிலவுலகமாயும், விண்ணாயும், நின்றவனும், சிறந்த கயிலாய மலையை எடுத்த பண்புகெட்ட இராவணன் வலியிழந்து விடுமாறு ஒரு விரலால் முடித்தவனும், மலையில் தோன்றி வளர்ந்த மட மகளாம் பார்வதியைத் தன் கூறாகக் கொண்டு ஆண்டவனும் ஆவான்.

குறிப்புரை :

கலை ஆரும் நூல் - கற்கப்படும் பொருள்கள் நிறைந்த நூல்; எனவே, `உறுதிப் பொருள்களை உணர்த்தும் நூல்கள்` என்ற வாறாயிற்று. அங்கம் - கருவி நூல், கலை பயிலும். கலைகளிற் பொருந்திய. கருத்தன் - கருத்துக்களாய் உள்ளவன்; இனி, `கலைகளில் சொல்லப்படும் தலைவன்` என்றலுமாம், திருத்தம் - தீர்த்தம். தலையாய மலை, கயிலாயம். தகவு - பண்பு. தகர்ந்து - வலியழிந்து. சாதித்து - முடித்து. `பின்பு ஆண்டருளிய` என்க. சிலை - மலை `மலைமகள்` என்னும் பாடத்திற்கு சிலை - கல். என்க.

பண் :

பாடல் எண் : 1

ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை
எழுபிறப்பும் எனையாளா வுடையான் தன்னை
ஊராரும் படநாகம் ஆட்டு வானை
உயர்புகழ்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

கூர்மைபொருந்திய மூவிலை வேலை அங்கையிடத்துக் கொண்டவனும், அலையையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனும், தேவர்கள் புகழும் அழகு நிறைந்த மதியைத் தன்னுட்கொண்ட சடையனும், இனி எனக்கு எழ இருக்கும் பிறப்புக்களிலும் என்னை அடிமையாக உடையவனும், ஊரும் இயல்பினதாகிய படநாகத்தை ஆட்டுபவனும் ஆகி உயர்புகழ்சேரும் ஓமாம் புலியூரிடத்தே நிலைத்து நிற்கும் சிறப்பினை உடைய வடதளியில் விளங்கும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

ஆர் ஆரும் - கூர்மை பொருந்திய. மூவிலை வேல் - சூலம், ஏர் ஆரும் - அழகு நிறைந்த. ஊர் ஆரும் - ஊர்தல் பொருந்திய, ஓமாம்புலியூர்த் திருக்கோயில், `வடதளி` என்னும் பெயர் உடையது. திகைத்து - மயங்கி, செலுத்தினேன் - போக்கினேன். ஏகாரங்கட்கு மேலெல்லாம் (ப.54) உரைத்தவாறே உரைக்க.

பண் :

பாடல் எண் : 2

ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா
அமரர்தொழுங் கழலானை யமலன் தன்னைச்
சோதிமதி கலைதொலையத் தக்கன் எச்சன்
சுடர்இரவி அயிலெயிறு தொலைவித் தானை
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்
உயர்புகழார் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
தீதில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

தன்னின்வேறு பிரித்து அரி என்றும் அயனென்றும் அறிய ஒண்ணாத ஆதியானவனும், தேவர்கள் தொழும் கழலினனும், இயல்பாகவே பாசமில்லாதவனும், ஒளியுமிழும் சந்திரனுடைய கலைகளைத் தொலையச் செய்தவனும், தக்கனையும் எச்சனையும் தக்கவாறு தண்டித்தவனும், ஒளிவீசும் இரவியுடைய கூரிய பற்களைத் தகர்த்தவனும் ஆகி, அந்தணர்கள் வேதங்களை மிக ஓதி மூன்று எரிகளையும் முறையே ஓம்புதலினால் உயர்ந்த புகழைப் பொருந்தும் ஓமாம்புலியூரில் திகழும் தீதில்லாத வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள்பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

சிவபிரானுக்கு உரிய `ஆதியான்` என்னும் பெயர் உருத்திரனுக்கும் உரியதாமாகலின், ஈண்டு உருத்திரனை, ``ஆதியான்`` என்று அருளினார் என்க, ``என்று`` என்பது எண்ணிடைச் சொல்; அஃது ஓரிடத்து நின்றே பலவிடத்தும் இயையு மாகலின், ``ஆதியான்`` என்றது முதலாக, ``அமரர்`` என்பது ஈறாக உள்ள எல்லாவற்றொடும் இயைக்க. இவ்வெண்ணிடைச் சொல்லின் தொகைப் பொருளைத் தரும், `இவர்` என்னும் சொல், இறுதிக்கண் தொகுத்தலாயிற்று. ``அறிய ஒண்ணா அமரர்`` என்றது, `அளவறியப் படாத எண்ணிறந்த - தேவர்` என்றருளியவாறு.
அமலன் - இயல்பாகவே பாசம் இல்லாதவன். எச்சன் - வேள்வித் தெய்வம். `இரவியது எயிறு` என்க. அயில் - கூர்மை. ``எயிறு`` என்றதனை, ``எச்சன்`` என்றதன்பின், செவ்வெண் வகையான் இயைத்து, `இவர்களை` என்னும் தொகைச் சொல் விரித்து, திணைவிராய் எண்ணின், பன்மை பற்றி உயர்திணை முடிவு கொண்டதாக உரைக்க. ``தொலைவித்தான்`` என்றதனை, ``கலை தொலைய`` என்றதற்கும் கூட்டுக. `அந்தணர்கள் (வேதத்தை) மிக ஓதி` என்க. எரி மூன்று, மேல் குறிக்கப்பட்டன. இத்தலம் அந்தணர்கள் மிக்கு வாழ்வது என்பது திருப்பதிகங்களுள் இனிது விளங்குவதாம்.

பண் :

பாடல் எண் : 3

வருமிக்க மதயானை யுரித்தான் தன்னை
வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் தன்னைச்
சங்கரன்எம் பெருமானைத் தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி
உத்தமர்வாழ் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
திருமிக்க வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

எதிர்த்துவரும் மதமிக்க யானையின் தோலை உரித்தவனும், தக்கயாகத்தில் இந்திரனுடைய தோள்களை முற்றிலும் துணித்தவனும், நறுமணத்தைத்தரும் செறிந்த குழல் உமையாளின் பாகனும், சங்கரனும், எம்பெருமானும் ஆகி, பூமியின்மேல் ஒளிமிக்க மணிகளானியன்ற மாடங்கள் நிலவுகின்ற வீதிகளை உடையதும், மேலோர்கள் வாழ்வதும் ஆகிய ஓமாம்புலியூரில் அழகுமிக்க வடதளியில் மன்னும் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

வரும் - ஒழுகுகின்ற. `வரும் மதம், மிக்க மதம்` எனத் தனித் தனி இயையும். வானவர்கோன் - இந்திரன்; அவனது தோளைச் சிவபிரான் துணித்தமையை மேலே (ப.31. பா.2.) காண்க.
தோள்கள் நான்காதலின், ``அனைத்தும்`` என்றருளினார். `தருதல்` என்பது, இங்கு `தன்னை விளக்குதல்` என்னும் பொருட்டாய், வளர்தலைக் குறித்து, `வளர்தல் மிக்க` எனக் குழலுக்கு (கூந்தலுக்கு) அடையாயிற்று. ``சங்கரன்`` என்புழியும் இரண்டனுருபு விரிக்க. உரு - ஒளி; இதனை மணிக்கு அடையாக்குக. திரு - அழகு.

பண் :

பாடல் எண் : 4

அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ
அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ
விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் தன்னை
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்
உயர்புகழ்நான் மறைஓமாம் புலியூர் நாளும்
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

பகைத்தவர் புரமூன்றும் வெந்து பொடியாமாறு அழல் உண்டாக விழித்த கண்ணினனும், தேவர்கட்குத் தலைவனும், வெற்றியால் மிக்கு விளங்கிய காலன் உயிரிழந்து விழ விளக்கம் மிக்க தன் திருவடியால் உதைத்த விகிர்தனும் ஆகி, புகழ்பொருந்திய அந்தணாளர் நாளும் முத்தீயையும் ஓம்புதலினால் வரும் உயர் புகழையும் நான்மறை முழக்கத்தையும் உடைய ஓமாம்புலியூரில் தென்றற்காற்று மிக்குத் தவழும் வடதளிவாழ் எம் செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

அன்றினவர் - பகைத்தவர். `அழல் உண்டாக விழித்த` என்க. வென்றி, எவ்வுயிர்மேற் செல்லினும் அதனைக் கைக் கொண்டே மீளுதல்; `அச்செயல் இங்குச் செல்லாதாயிற்று` என்றதாம். ``எடுத்து`` என்றது, `எடுத்து உதைத்த` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. ஒன்றிய சீர் - பொருந்திய புகழ். இருபிறப்பர் - அந்தணர். `நான்மறையை உடைய ஓமாம்புலியூர்` என்க. ``தென்றல்மலி வடதளி`` என்றது. அதனது பரப்பும், சோலை வளமும் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 5

பாங்குடைய எழில்அங்கி யருச்சனைமுன் விரும்பப்
பரிந்தவனுக் கருள்செய்த பரமன் தன்னைப்
பாங்கிலா நரகதனைத் தொண்ட ரானார்
பாராத வகைபண்ண வல்லான் தன்னை
ஓங்குமதில் புடைதழுவும் எழில்ஓமாம் புலியூர்
உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றும்
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

முன்செய்த நன்மையுடையனாகிய அழகிய அக்கினிதேவன் அருச்சனை செய்ய விரும்ப அவன் மேல் இரக்கங் கொண்டு அவன் அதனை இயற்ற அருள் செய்த பரமனும், தன் தொண்டரானார், தீங்குடைய நரகினைப் பாராதவாறு பண்ண வல்லவனும் ஆகி, நாற்புறமும் உயர்ந்தமதில் தழுவி நிற்கும் அழகுடைய ஓமாம்புலியூரில் உயர்ந்த புகழினையுடைய அந்தணர்கள் புகழுமாறு பூசையும் விழவும் செவ்வனே நடைபெறுவதால் உலகோர்க்கு என்றும் தீங்கின்றி நிலவும் அழகிய வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

இத்தலத்தில் அக்கினிதேவன் வழிபட்டு அருள் பெற்றமை இத் திருத்தாண்டகத்தால் அறியப்படுகின்றது. பாங்கு - நன்மை. `நரகதனில்` என்பது பாடம் அன்று. இத்திருத்தாண்டகத்தின் மூன்றாம் அடியின் முதற்றூக்கு நாற்சீராகியும், மூன்றாஞ்சீர் மூவசைச் சீராய் நின்றது. `உலகர்க்கு என்றும் தீங்கில்லாமைக்கு ஏதுவாகிய வடதளி` என்க; அஃது அன்னதாதல் அங்குப் பூசையும் விழவும் செவ்வனே நடைபெறுதலாம்.

பண் :

பாடல் எண் : 6

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை
மணவாள நம்பியைஎன் மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்
பொழில்கெழுவு தரும்ஓமாம் புலியூர் நாளும்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

அரிய தவமுடையோர் வணங்க வாழ்த்தும் தலைவனும், தெவிட்டாத இன்னமுதன்னவனும், அடியார்க்கு வரும் துயரங்களை விலக்குபவனும், நங்கை உமையாளின் கணவனாகிய நம்பியும், எனக்கு அமுதும் ஆகி, பயிர் வளர்ச்சிக்குப் பொருத்தமான புனலால் தழுவப்படும் வயலும், உயர்ச்சி நிலவும் பொழிலும் பொருந்தி விளங்கும் ஓமாம்புலியூரில் நாளும் நடைபெறுவன திருத்தமுற அமையும் அழகிய வட தளி வாழ் எம் செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

ஆராத - தெவிட்டாத. `உமையாளாகிய நங்கைக்கு ஏற்ற மணவாளனாகிய நம்பி` என்க. `நங்கை` என்பது பெண்டிருட் சிறந்தாட்கும், `நம்பி` என்பது ஆடவருட் சிறந்தாற்கும் பெயராதல் அறிக. மருந்து - அமுதம்; `என் மருந்து` என்றது, தமக்கு அநுபவ மாகிய உவகைபற்றி. துங்கம் - உயர்ச்சி. திருந்து - எல்லாம் இனிது அமைந்த.

பண் :

பாடல் எண் : 7

மலையானை வருமலையொன் றுரிசெய் தானை
மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்
கலையானைக் கலையாருங் கையி னானைக்
கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்
புலியூர்எம் உத்தமனைப் புரம்மூன் றெய்த
சிலையானை வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

கயிலை மலையவனும், யானை ஒன்றின் தோலை உரித்தவனும், வேதத்தில் உள்ளவனும், அவ்வேதத்தாலும் அறியப் படாத தன்மையனும், மான் கன்று பொருந்திய திருக்கரத்தினனும், அடியார்களுடைய துயரங்களை நீக்குபவனும், எம்மால் வணங்கப்படும் உத்தமனும், திரிபுரங்களை எரித்த வில்லினனும் ஆகி ஒழுக்கத்தில் தளராத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூரில் வடதளி வாழ் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

மலையான் - மலையின்கண் (கயிலையில்) இருப்பவன். வருமலை - யானை. மறையான் - வேதத்தில் உள்ளவன்; `எனினும் அதனால் அறியப்படாத தன்மையுடையவன்` என்றபடி.
கலை - கூறு; தன்மைகள்; என்றது, அவனது அருளின் கூறுகளையேயாம். இது பற்றியே, வேதத்துட் சொல்லப்பட்ட ஈசானாதி ஐந்து பெருமந்திரங்களை முப்பத்தெட்டுக் கலைகளாக (கூறுகளாக) வைத்து நியசித்துச் சிவபெருமானை வழிபடும் முறையைச் சைவாகமங்கள் விதிக்கின்றன. கலை ஆரும் கையினான் - மான் பொருந்திய கையை உடையவன். `அடியார்கள் துயரம் எல்லாம் கடிவான்` என்க. உலையாத - (ஒழுக்கத்தில்) தளராத.

பண் :

பாடல் எண் : 8

சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்
செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்
தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்
உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

மணிகளைக் கொழித்து ஓடும் கங்கையைச் சூடியவனும், அழகிய மதியையும், படநாகத்தையும உடன் தங்குமாறு வைத்தவனும், அடியடைந்தார்க்கு இனியனும், தன்னொப்பார் பிறரில்லாத தழல் நிறத்தவனும், எல்லார்க்கும் தலைவனும், பெருமை மிக்க நால் வேதங்களையும் ஓதி ஆராய்ந்து அவற்றிலேயே பழகுவார் வாழும் ஓமாம்புலியூர் உள்ளவனும், அடியாருடைய களவில்லா நெஞ்சில் சேர்ந்தவனும் ஆகி வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

`மணியோடு சேர்ந்து ஓடும் கங்கை` என்க. `மணிகளைக் கொழித்து ஓடும்` என்பது பொருள். உடன் - ஒருங்கு. `மதியும் அரவும் தம்முள் இயையாத பகைப்பொருள்களாய் இருப்ப அவைகளை அவ்வாறின்றி இயைய வைத்தவன்` என்றபடி, ``உரு`` என்றது ஆகுபெயராதலின், `தழல் போலும் உருவினானை` என்க. தலைமகன் - தலைவன். இறைவனை, ``மகன்`` என்றது, பான்மை வழக்கால் என்க. தகை - பெருமை. ஓர்ந்து - ஆராய்ந்து. கள்ளாத - களவு செய்யாத; என்றது, `அறிவையும் பிறரை வஞ்சித்துப்பெறாத` என்றவாறு. இதனையே, `எனைத்தொன்றும் - கள்ளாமை காக்க`` என்றருளினார் திருவள்ளுவ நாயனார். (குறள் - 281.)
இத்திருத்தாண்டகத்தை அடுத்து, இறுதித் திருத்தாண்டகமே உள்ளது.

பண் :

பாடல் எண் : 9

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 10

வார்கெழுவு முலையுமையாள் வெருவ அன்று
மலையெடுத்த வாளரக்கன் தோளுந் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே
இன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்
பைம்பொழில்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

கச்சணிந்த தனத்தினள் ஆகிய உமையாள் அஞ்சுமாறு அன்று கயிலை மலையைப் பெயர்த்த கொடிய அரக்கனுடைய இருபது தோள்களையும் இருதாள்களையும் அழகிய பத்துத் தலைகளையும் நெரித்துப் பின் அச்சினத்தினின்றும் மீண்டு அவனது இன்னிசையைக் கேட்டு உவந்தவனும், தேவர்களின் தலைவனும் ஆகி, புவிமுழுதும் பரவும் புகழினையுடைய மறையோர் மிக்கு வாழ்கின்றதும் மாடங்கள் நிறைந்ததும், பசியபொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய ஓமாம்புலியூரில், சிறப்புமிக்க வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண்போக்கினேன்.

குறிப்புரை :

வார் - கச்சு. கெழுவு - பொருந்திய. ஏர் - அழகு. இறுத்து - நெரித்து. ``கேட்டிருந்தான்`` `உவந்தான்` என்னும் குறிப்பினது.
பயிலும் - மிக்கு வாழ்கின்ற. `பயிலும் புலியூர், மாடப்புலியூர். `பொழில் சேர்தரும் புலியூர்` என்க. சீர் - புகழ்.

பண் :

பாடல் எண் : 1

அல்லிமலர் நாற்றத் துள்ளார் போலும்
அன்புடையார் சிந்தை அகலார் போலுஞ்
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்
தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தலத்துத் தான்தோன்றி யீசனாராகிய சிவபெருமானாரே அக இதழ்களையுடைய மலர்களின் நறுமணத்துள் நிலவி இன்பந்தருபவரும் , தம்மாட்டு அன்புடையார் சிந்தையை விட்டு அகலாதவரும் , தாமே சொற்களையுடைய அரிய வேதங்கள் ஆனவரும் , வீட்டுநெறிக்கு வழியாகும் மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் தொழிலினரும் , வில்லால் புரமூன்றையும் எரித்தவரும் , மிக்க இருளும் மிக்க ஒளியும் ஆனவரும் , இரவில் கூத்து ஆட வல்லவரும் ஆவார் .

குறிப்புரை :

அல்லி - அகஇதழ் . ` அக இதழ்களையுடைய மலர்களது நறுமணங்களிலே இருந்து இன்பம் தருவார் ` என்க . சொல்லின் அருமறைகள் - சொற்களையுடைய அரிய வேதங்கள் . தூநெறியாவது , மெய்யுணர்வு ; தத்துவஞானம் ; அதனை இறைவர் , தம்மை நோக்கிச் செய்யும் தவம் காரணமாக வந்து அருளுதலாலும் , அஃது , அவரது ஐந்தொழில்களில் முடிந்த பயனாய் உள்ள தொழிலாதலாலும் , ` தூநெறிக்கு வழிகாட்டும் தொழிலார் ` என்று அருளினார் . வீங்கு இருள் - மிக்க இருள் . ` நல் வெளி ` என்றதும் , ` மிக்க ஒளி ` என்னும் பொருளதே . இறைவரை இருளாகவும அருளியது , மலத்தினது ஆற்றல் கெடுதற் பொருட்டு , அதன்வழிநின்று அதனைத் தொழிற் படுத்தல் பற்றி என்க . இதனையே , ` ஏயுமும் மலங்கள் தத்தம் தொழிலினை இயற்ற ஏவும் தூயவன் றனதோர் சத்தி திரோதான கரியது ` எனச் சிவஞானசித்தியும் . ( சூ . 2. 87.) ` பாகமாம் வகைநின்று திரோதான சத்தி பண்ணுதலான் மலம்எனவும் பகர்வர் ` எனச் சிவப்பிரகாசமும் (3.20) விளக்கின . எல்லி - இரவு . இத்தலத்தில் சிவபிரானைச் சுவாமிகள் , ` தான்தோன்றி ( சுயம்புமூர்த்தி )` என்றே அருளுகின்றார் .

பண் :

பாடல் எண் : 2

கோழிக் கொடியோன்தன் தாதை போலும்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும்
உள்குவா ருள்ளத்தி னுள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாகிய சிவ பெருமான் கோழிக்கொடியோனாகிய முருகனுக்குத் தந்தையாரும் , பூங்கொம்பு போன்ற உமாதேவியை உடலின் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும் , ஊழியின் நிகழ்ச்சிகளுக்குத் தலைவரும் , தம்மை நினைப்பவர் உள்ளத்தில் தாம் நீங்காமல் உள்ளவரும் , சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களையுடைய தேரினை ஊர வல்லவரும் , தம்மை அடைந்தவரிடத்து அன்புடையவரும் , எழுவகைப் பிறவிகளுக்கும் தாமே காரணரும் ஆவார் .

குறிப்புரை :

கோழிக் கொடியோன் - முருகக் கடவுள் . தாதை - தந்தை . கொம்பு அன்னாள் - பூங்கொம்புபோன்றவள் ; உமாதேவி . குளிர்ந்தார் - மகிழ்ந்தார் . ஊழி முதல்வர் - ஊழியின் நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் . உம்மை . சிறப்பு . ` தாமே ` என்னும் ஏகாரம் , பிரிநிலை ; அது , பிறர் இன்றித் தாம் ஒருவரேயாய முழு முதற்றன்மையை விளக்கிற்று . ஆழி என்றது இரட்டுற மொழிதலாய் , சூரிய சந்திரராகிய மண்டிலங்களையும் , தேர்ச் சக்கரங்களையும் உணர்த்தின ; எனவே , ` சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களையுடைய தேரினை ஊரவல்லவர் ` என்றதாயிற்று . வித்தகர் - திறலுடையவர் . ` ஏழு பிறவிக்கும் தாமே ` என்புழி , ` தாமே காரணர் ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 3

தொண்டர்கள் தம்தகவி னுள்ளார் போலும்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்
பத்தர்கள் தம்சித்தத் திருந்தார் போலும்
கண்டம் இறையே கறுத்தார் போலும்
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவ பெருமானாரே , தொண்டர்களுடைய மெய்யன்பினிடத்துத் திகழ்பவரும் , தூய ஞானநெறிக்குப் பற்றுக்கோடாய் நின்றவரும் , பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் , பக்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும் , கண்டம் சிறிது கறுத்தவரும் , மன்மதனையும் இயமனையும வெகுண்டு ஒறுத்தவரும் , முடி மாலையணிந்த சடைமுடியவரும் ஆவார் .

குறிப்புரை :

தகவு - தகுதி ; அது , மெய்யன்பு . தூநெறி - ஞான நெறி , ` அதற்குப் பற்றுக்கோடாய் இருப்பவர் ` என்பதாம் . இருவர் , மாலும் , அயனும் . படி - நிலைமை . இறையை - சிறிதே . இண்டை - முடிமாலை .

பண் :

பாடல் எண் : 4

வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்
ஒளிநீறு பூசு மொருவர் போலும்
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலும்
தம்மிற் பிறர்பெரியா ரில்லார் போலும்
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே வானில் திகழும் பிறைச்சந்திரனாகிய கண்ணியைத் தம் வளரும் சடைமேல் வைத்து மகிழ்ந்த வலியவரும் , ஊன் பொருந்திய சூலம் ஒன்றை உடையவரும் , ஒள்ளிய திருநீற்றைப் பூசும் ஒருவரும் , முச்சந்தி நேரங்களிலும் வழங்கப்படும் அருக்கியம் முதலியவற்றை ஏற்று அருள்பவரும் , தம்மினும் பெரியர் பிறர் இல்லாதவரும் , பன்றியினது கொம்பு மார்பில் விளங்க அணிந்தவரும் ஆவார் .

குறிப்புரை :

` வானத்துத் திங்கள் ` என இயையும் ; ` வானத்துக் கண் உலாவுவதாகிய திங்கள் ` என்பது பொருள் . ` திங்களாகிய கண்ணி ` என்க . கண்ணி - முடியில் அணியும் மாலை . ஒத்த - பொருந்திய . ` வேல் ` என்றது , சூலத்தை . தானம் - கொடை ; அது , சந்தியா காலங்களில் அருக்கியம் முதலியன கொடுத்தலைக் குறித்தது . முப்பொழுது என்றது , சந்தியா காலங்களை . ` அக்காலங்களின் முதல்வராய் இருந்து , வழிபடுவோர் செய்யும் வழிபாடுகளை ஏற்றருளுபவர் ` என்றபடி . ` எல்லாவற்றையும் சிவபிரானே ஏற்றருளுபவன் என்பது என்னை ?` என்னும் ஐயத்தினை நீக்குதற்கு , ` பிறர்பெரியார் இல்லார் ` என்று அருளினார் . இதனையே சிவஞான சித்தி ( சூ . 2. 25.) ` யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படும்இ றக்கும் பிறக்கும்மேல் வினையும் செய்யும் ஆதலால் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே `. என விளக்கிற்று .

பண் :

பாடல் எண் : 5

சூழுந் துயரம் அறுப்பார் போலும்
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்
ஆடலுகந்த அழகர் போலும்
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு
தன்மை யளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே , வந்து வளைத்துக்கொள்ளும் துயரங்களை நீக்குபவரும் , படைப்பு அழிப்புக்களைச் செய்து நிற்பவரும் , ஆழ மிக்க கடலிடத்துத் தோன்றிய நஞ்சை உண்டவரும் , கூத்து ஆடுதலை விரும்பும் அழகரும் , தாழ்ந்த மனத்தினை உடைய அடியேனையும் அடிமைகொண்டு ஞானமளித்த தலைவரும் , ஏழுவகையாகவும் பிறத்தலை அறுத்தெறிபவரும் ஆவார் .

குறிப்புரை :

சூழும் - வந்து வளைத்துக்கொள்கின்ற . தோற்றம் இறுதி - படைப்பு அழிப்புகள் ; உம்மைத் தொகை . அவைகளைச் செய்பவரை அவரேயாகச் சார்த்தியருளிச் செய்தார் . தாழ்வின் மனம் - தாழ் வினை ( இழிவினை ) உடையமனம் . ` மனத்தேனையும் ` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . தன்மை - பெருந்தன்மை ; ஞானம் .

பண் :

பாடல் எண் : 6

பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்
பாரூர் விடையொன் றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்
பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்
வேடம் பரவித் திரியுந் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவ பெருமானாரே , திருவடிகளில் கட்டப்பட்ட சிலம்பினரும் , பூமிமேல் நடக்கும் ஓர் இடபத்தை ஊர்தியாக உடையவரும் , பூதப்படையைச் செயற்படுத்தும் புனிதரும் , புகலூரைப் பொருந்திய புராணரும் , வேதங்களின் பொருளாய் விளங்குபவரும் , திருநீறு , கண்டிகை , சடை , முதலியவை எங்கே காணப்படினும் , அங்கேயெல்லாம் தம்மை ஏத்தி இறைஞ்சி நிற்கும் தொண்டர் துன்பப்படா வண்ணம் காத்து நின்றாரும் ஆவார் .

குறிப்புரை :

பார் ஊர் விடை - பூமியின்மேல் நடத்துதற்குரிய இடபம் ; ` அன்னம் , கருடன் முதலியனபோல ஆகாயத்தில் நடத்துதற்குரிய ஊர்தி அன்று ` என்றபடி . பூம்புகலூர் , அழகிய புகலூர் ; இது சோழநாட்டுத்தலம் ; சுவாமிகள் இறைவன் திருவடியடைந்த இடம் . வேடம் பரவித் திரிவார் - திருநீறு கண்டிகை , சடை , கல்லாடை முதலியவைகள் எங்கே காணப்படினும் அங்கெல்லாம் சிவபிரானை ஏத்தி இறைஞ்சி நிற்பவர் . ஏதப்படாவண்ணம் - துன்பத்திற் பொருந்தாத படி .

பண் :

பாடல் எண் : 7

பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்
பத்தர்கள்தம் சித்தத் திருந்தார் போலும்
கல்லாதார் காட்சிக் கரியார் போலும்
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்
பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானாரே , பற்கள் நிறைந்த தலையோட்டில் உணவு ஏற்று உண்பவரும் , பத்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும் , மெய்ந்நூல்களைக் கல்லாதவரால் காணப்படாதவரும் , அவற்றைக் கற்பவரின் துன்பங்களைக் களைபவரும் , கொடுமைமிகும் பூதப்படையினரும் , அலைமோதுங் கடல் ஏழும் குலமலை ஏழும் தாமே ஆனவரும் , எல்லாரும் ஏத்துதற்குக் காரணமான அருளினரும் ஆவார் .

குறிப்புரை :

பல் ஆர் - பற்கள் நிறைந்த . ` பல் ஆர் ஓடு ` என இயையும் . இனி , பிரமர்தாம் பலராதல் பற்றி , ` பல்லார் தலை ` என்றார் எனினுமாம் . ` கல்லாதார் , கற்றார் ` என்பன , அருள் நூல்களைக் கல்லாதார் கற்றார்களைக் குறித்தன . ஏதம் - துன்பம் . ` பொல்லாத பூதப்படை ` என்றது , அவை பிறரைத் தீண்டி வருத்துவனவாதல் பற்றி ; இஃது இனம்பற்றி நயம்பட அருளிச் செய்ததன்றிச் சிவபூதங்கள் அன்ன அல்ல ; நல்லனவே செய்வன என்க . பொருகடல் - அலை மோதுகின்ற கடல் . ` ஏழ் ` என்றதனைக் கடலுக்கும் கூட்டுக . ` தகுவார் ` என்றது , பெருமை நோக்கியே யன்றி , அருள் நோக்கியுமாம் ; அதனால் , ` சிலர் ` ஏத்தாதொழிதல் என் ` என இரங்கியருளிய வாறாயிற்று .

பண் :

பாடல் எண் : 8

மட்டு மலியுஞ் சடையார் போலும்
மாதையோர் பாக முடையார் போலும்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்
காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவ பெருமானாரே , பூக்களின் தேன்மிகும் சடையினரும் , உமையை ஒரு பாகத்திலுடையவரும் , துன்பம் , பிணிகளைத் தவிர்ப்பவரும் , இயமன் உயிருக்கு இறுதி கண்டவரும் , எப்பொழுதும் கூத்தாடுந் தலைவரும் , நிலம் , நீர் , தீ , வளி , ஆகாசம் ஆம் ஐம்பூதங்கள் ஆனவரும் , எட்டுத் திசைகளும் தாமே ஆனவரும் ஆவார் .

குறிப்புரை :

மட்டு - தேன் ; இது , கொன்றை மலரில் மிகுந்துளது . மலியும் - நிறைந்த . கட்டம் - துன்பம் ; மனக்கவலை . ` கட்டமும் பிணியும் தவிர்ப்பார் ` என்க . பயின்று ஆடுதல் - எப்பொழுதும் ஆடுதல் . ஞாலம் - நிலம் . வெளி - வான் . கால் - காற்று .

பண் :

பாடல் எண் : 9

கருவுற்ற காலத்தே யென்னை ஆண்டு
கழற்போது தந்தளித்த கள்வர் போலும்
செருவிற் புரமூன்றும் அட்டார் போலும்
தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
மலரடிகள் நாடி வணங்க லுற்ற
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவ பெருமானாரே நான் கருவாய்ப் பொருந்திய காலத்திலேயே மெய்யுணர்வைப் பெறும் அவாவை என்பால் உண்டாக்கிப் பின் திருவடித் தாமரைகளைத் தந்து காத்த கள்வரும் , போரில் பகைவர்புரம் மூன்றையும் அழித்தவரும் , தேவர்க்கும் தேவராம் செல்வரும் , கூடியபின் பிரியாத மைந்தரும் , தம்முடைய மலரடிகளை விரும்பி வணங்கிய பிரமனுக்கும் திருமாலுக்கும் ஒப்பற்ற தலைவராய் நின்றவரும் ஆவார் .

குறிப்புரை :

` ஆண்டு ` என்றது , மெய்யுணர்வைப் பெறும் அவாவை உண்டாக்கினமையை ; இது , ` கருவுற்ற நாள் முதலாக வுன்பாதமே காண்பதற்கு , உருகிற்றென் உள்ளமும் ; நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன் ` எனத் திருவிருத்தத்துள் அருளிச்செய்தமையான் அறியப்படும் ( தி .4. ப .99. பா .6.) ` பின்பு கழற்போது தந்தளித்த ` என்க . அளித்த - காத்த . ` கள்வர் ` என்று அருளினார் . முதலில் வெளிப்படாதிருந்து பின்பு வெளிப்பட்டமையின் . செருவில் - போரின்கண் ; ` செருச் செய்கின்ற வில்லால் ` என்று உரைத்தலும் ஆம் . அட்டார் - அழித்தார் . மருவிப் பிரியாத - கூடியபின் பிரியாத ; இறைவன் உயிர்களைக் கூடுதல் அவை மெய்யுணர்வு பெற்ற பின்னரே யாகலின் , பின்னர்ப் பிரிதல் இலனாயினான் . ` துறக்கு மாசொலப்படாய் துருத்தியாய் ` என்றார் திருஞானசம்பந்த சுவாமிகளும் , ( தி .2. ப .98. பா .5.) இருவர் - மாலும் அயனும் ; இவர்கள் முதலில் செருக்குக்கொண்டு இறைவனைத் தேடி எய்த்துப் பின்பு வழிபட்டு உய்ந்தார்களாகலின் ` மலரடிகள் நாடி வணங்கலுற்ற இருவர்க்கு ஒருவராய் நின்றார் ` என்று அருளினார் . ஒருவர் - ஒப்பற்ற தலைவர் .

பண் :

பாடல் எண் : 10

அலங்கற் சடைதாழ ஐய மேற்று
அரவம் அரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொன் றுடையார் போலும்
வான்தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை
விறலழித்து மெய்ந்நரம்பால் கீதங் கேட்டன்
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானார் கொன்றை மாலையணிந்த சடை தாழப் பிச்சை ஏற்க வல்லவரும் , பாம்பினை இடையில் கட்டவல்லவரும் , வலக்கையில் மழுப்படை ஒன்றை உடையவரும் , தருக்கினால் உயர்ந்த தக்கனுடைய வேள்வியைச் சிதைத்தவரும் , கயிலை மலையை எடுத்த அளவில் தனது வெற்றி பற்றி மகிழ்ந்த இராவணனது அவ்வெற்றியை அழித்துப் பின் அவன் தன் உடல் நரம்பால் எழுப்பிய இசையைக் கேட்டு அவற்கு ஒளிவாளைக் கொடுத்தவரும் ஆவார் .

குறிப்புரை :

அலங்கல் - ( கொன்றை ) மாலை . ` வலத்தின்கண் உடையார் ; கைக்கண் உடையார் ` என்க . இனி , ` வலக்கை ` என்பது மெலிந்து நின்றது எனலுமாம் . விலங்கல் - மலை . உகந்த - மகிழ்ந்த ; கயிலையைப் பெயர்த்த அளவில் இராவணனுக்குத் தனது வெற்றிபற்றி ஓர் மகிழ்ச்சி உளதாயிற்று என்க . விறல் - வெற்றி . ` அவ்விறல் ` எனச் சுட்டு வருவித்து உரைக்க மெய்ந் நரம்பு - உடம்பில் உள்ள நரம்பு .

பண் :

பாடல் எண் : 1

மூவிலைநற் சூலம்வலன் ஏந்தி னானை
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேதம் ஆறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
அயன்திருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

மூவிலை கொண்ட நல்ல சூலத்தை வலக்கையில் ஏந்தினவனும் , சூரியன் , சந்திரன் , அக்கினி என்னும் முச்சுடர்களாகிய கண்ணினனும் அழகிய தோற்றத்தினனும் , நாவலனும் , வெள்ளிய இடபம் ஒன்றை ஊர்பவனும் , வேதம் நான்கும் அங்கம் ஆறும் ஆயினவனும் , பசு தரும் பஞ்சகவ்வியத்தை விரும்பியவனும் , தேவர்களுக்குத் தலைவனும் , பிரமனும் திருமாலும் ஆனவனும் , அக்கினியால் போற்றப்படும் காவலனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல்வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

மூன்று சுடர்க் கண்ணான் - ` சூரியன் , சந்திரன் , அக்கினி ` என்னும் முச்சுடர்களாகிய கண்களை உடையவன் . நாவலன் - புலவன் ; என்றது , வேதமும் தமிழும் உரைத்தவனாதல் பற்றி . தருமிக்குப் பொற்கிழியளித்த வரலாறும் நினைக்கத்தக்கது . நரை - வெண்மை . அயன் திருமால் ஆதல் , சுத்தமாயையில் நேரேயும் , பிரகிருதி மாயையில் பிறரை அதிட்டித்தும் அவ்வாறு நிற்றலாம் . இத்தலம் அக்கினி தேவன் வழிபட்ட தலமாதல் பற்றி , ` அனலோன் போற்றும் காவலன் ` என்றருளினார் ; இங்கு இறைவர் , ` அக்கினீச்சுரர் ` எனவும் , தீர்த்தம் , ` அக்கினி தீர்த்தம் ` என்றும் சொல்லப்படுதல் அறியத்தக்கது . ` ஆண்ட ` என்றது , ` ஆட்சியாகக்கொண்ட ` என்னும் பொருளது .

பண் :

பாடல் எண் : 2

தலையேந்து கையானை யென்பார்த் தானைச்
சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்
கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை
மலையானை மற்றொப்பா ரில்லா தானை
மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

பிரமகபாலத்தை ஏந்திய கையினனும் , எலும்பை மாலையாகக் கோத்து அணிந்தவனும் , பிரமவிட்டுணுக்களுடைய எலும்புக்கூடுகளைத் தாங்கும் தோளினனும் , வெண்ணீற்றுப் பூச்சினனும் , கொத்தாய்ப் பொருந்திய நறிய கொன்றை மலர்களை முடிமேல் கொண்டவனும் , கொடுமை வல்ல நாகத்தை உடை மேல் கட்டியவனும் , மேன்மை மிக்க கயிலை மலையவனும் , தனக்குவமை யில்லாதவனும் , சந்திரனும் , சூரியனும் தேவர்களும் திருமாலும் போற்றும் உருவத்திருமேனி உடையவனும் , கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும்பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

தலை - பிரமகபாலம் . என்பு ஆர்த்தான் - எலும்பை மாலையாகக் கோத்து அணிந்தான் . ` சவம் ` என்றது , பிரமவிட்டுணுக்களது எலும்புக் கூட்டினை ; ` கங்காளம் ` எனப்படுவன இவையே . இவை , அவ்விருவரும் சேர இறக்க வரும் நாளில் ஏற்கப்படுவன , நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந் தரத்திருவர் தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ . ( தி .8 திருவா . திருச்சா . 11.) என்றருளிச் செய்ததும் இவைகளையே என்க . குலையேறு - கொத்தாய்ப் பொருந்திய . குலம் - மேன்மை . கலையான் - உருவத் திருமேனியை உடையவன் .

பண் :

பாடல் எண் : 3

தொண்டர்குழாம் தொழுதேத்த அருள்செய் வானைச்
சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்
செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்
பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

தொண்டர்கூட்டமாய்த் திரண்டு தொழுது புகழ அவர்க்கு அருள்செய்பவனும் , ஒளிரும் மழுவாயுதத்தை உடையவனும் , சுழியையுடையதும் , தெளிந்த திரைகளால் மோதி இழிவதும் ஆகிய ஆகாய கங்கையைத் தாங்கிய சடையினனும் , செவ்வானம் போன்ற ஒளியினனும் , தன்னை அடையாமல் பண்டு அமரர்கள் கூடி ஆராய்ந்து மேற்கொண்டு விரும்பிச் செய்த தக்கனுடைய வேள்வி முழுதும் பாழ் செய்து தக்கனையும் எச்சனையும் தலையறுத்துச் சூரியனைப் பல்தகர்த்துப் பகனைக் கண் பறித்துக் கொண்ட கொடியவனும் , கஞ்சனூரை ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

` சுழி ` என்பது , ` கங்கை ` என்பதனோடு இயையும் , அதனை , வேற்றுமைத் தொகையாகவேனும் , வினைத்தொகையாகவேனும் இயைத்து , ` சுழியையுடைய கங்கை ` என்றாதல் , ` சுழிக்கின்ற கங்கை ` என்றாதல் உரைக்க . பொருது - மோதி . ` இழிசடை ` என்பது , ` புக்க அகம் ` என்றல்போல இடப் பெயர்கொண்ட பெயரெச்சமுடிபின் பொருள்மேல் தொக்க இறந்தகால வினைத்தொகை . இனி , ` பழம் உதிர்ந்த கோடு ` என்றல்போல , நீங்கற் பொருட்பெயர்கொண்ட பொருண்மைத்தாய வினைத்தொகையாகக்கொண்டு , ` பகீரதன் பொருட்டுப் பின்னர் கங்கை நிலத்தில் இழிந்த சடை ` என்றுரைப்பினும் ஆம் . செக்கர்வான் - செவ்வானம் . சேராது - தன்னை ( சிவபிரானை ) அடையாமல் . எண்ணி - ( அமரர்கூடி ) ஆராய்ந்து . கொண்டு உகந்த - மேற்கொண்டு விரும்பிச்செய்த . இது தக்கன் வேள்வியே ஆயினும் , அமரர் பலரும் உடம்பட்டுச் செய்தமையின் இவ்வாறு அருளினார் . தலையறுக்கப்பட்ட தலைவர் , தக்கனும் எச்சனும் ; பல் தகர்க்கப் பட்டவன் சூரியன் ; கண்பறிக்கப்பட்டவன் பகன் . கண்டகன் - கொடியவன் ; என்றது , இவ்வாறு அவர்களைக் கண்ணோட்டம் இன்றி ஒறுத்தமைபற்றி இகழ்வார்போல இவ்வாறு அருளிச்செய்தாராயினும் , இவ்வொறுப்புக்கள் அவர்கள் பிற்றைஞான்று நெடுங்காலம் கரையேறாது புக்கழுந்தும் துன்பக் குழியினைத் தீர்த்த பெருங் கருணைச் செயலாதலின் , ` அதனைச் சிறிதும் நெகிழவிடாது செய்தவர் ` எனப் புகழ்ந்ததேயாம் என்க .

பண் :

பாடல் எண் : 4

விண்ணவனை மேருவில்லா வுடையான் தன்னை
மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்
பெண்ணவனை ஆணவனைப் பித்தன்தன்னைப்
பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை
எண்ணவனை எண்டிசையுங் கீழும் மேலும்
இருவிசும்பும் இருநிலமு மாகித் தோன்றுங்
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

சிவலோகனாய், மேருமலையை வில்லாக உடையவனாய், ஞானியர்க்கு உண்மைப் பொருளாகி, உணர்வில்லார்க்கு இல்பொருள் ஆகி அறநெறியும் அருள்நெறியும் ஆனவனும், பெண் ஆண் ஆனவனும், பித்தனும், பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டை இடமாகக் கொண்டவனும், மேலான தகுதியினனும், எண்ணமானவனும், எட்டுத் திசைகளும் கீழும் மேலும் பெரிய ஆகாயமும் பரந்த நிலமும் ஆகித் தோன்றுபவனும், கண்போற் சிறந்தவனும், கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு, மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.

குறிப்புரை :

`விண்ணவன்` என்பதில் உள்ள விண், சிவ லோகத்தை குறிக்கும். `மேருவை வில்லாக உடையான்` என்க. மெய்யாதல் - உணர்வுடையோர்க்கு அநுபவப் பொருளாதல் . பொய்யாதல், உணர்விலார்க்கு இல்பொருள்போல உணரவாராதிருத்தல். விதி - நெறி; அஃது `அறநெறியும், அருள்நெறியும்` என இருவகைத்து என்க. பிணம் இடு காடு - பிணத்தைப் புதைக்கும் காடு. பெருந்தக்கோன் - மேலான தகுதியை உடையவன். எண் - கருத்து. கண்ணவன் - கண்போலச் சிறந்து நிற்பவன்.

பண் :

பாடல் எண் : 5

உருத்திரனை உமாபதியை உலகா னானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

உருத்திரனும் , உமாபதியும் , உலகு ஆள்பவனும் , உத்தமனும் , நித்திலம் அனையவனும் , ஒப்பற்றவனும் , மலையாய் விளங்குபவனும் , மயிர்க் கயிறாகிய பஞ்சவடிப்பூணூல் திகழ் மார்பினனும் , பகலும் , இரவும் , நீரும் , ஆகாயமும் , பரவிய நெருப்பும் ஆனவனும் , முத்தின்கொத்து ஒக்கத் திகழும் திருநீற்றுக் கீற்றினனும் , திருநீற்றைப் பூசிய மேனியை உடையவராய் , இடைவிடாது நினைக்கும் அன்பர்களின் மனத்தில் உறைபவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

உருத்திரன் - ` உருத்திரன் ` என்னும் காரணக்குறியை உடையவன் . இதன் காரணமாவது , ` துன்பத்தை ஓட்டுபவன் ` என்பது . இதனை , ` இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால் உன்னரும் பரம மூர்த்தி உருத்திர னெனும்பேர் பெற்றான் ` எனக் கந்தபுராணமும் ( ததீசிப்படலம் - 46.) ` இடும்பைநோய் , என்ப தோட்டும் இயல்பின் உருத்திரன் ` எனக் காஞ்சிப் புராணமும் ( பரசிராமீச்சரம் - 44.) இனிது விளக்கின . இனி , ` உருத்திரன் ` என்னும் பெயர் , ` ரோதனம் ( அழுதல் ) செய்தவன் ` என்னும் காரணத்தான் வந்தது என்பாரும் உளர் ; அஃது அப்பெயர் அக்கினி தேவனைக் குறிக்குமிடத்திலாம் என்றே உணர்வுடையோர் பகுத்துணர்ந்து கொள்வர் என்பதனையும் கந்தபுராணம் மேற்காட்டிய இடத்திலே . ` செந்தழ லென்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர் வந்தது புகல்வன் கேட்டி வானவர் யாரும் ஈண்டி முந்தையில் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல அந்தமில் நிதியந் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார் ` ` பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலாக் கனல்பால் வைத்துச் செற்றலர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர் உற்றுழி அதுகொ டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையுங் கூறும் ` ` ஓதுமா மறைகள் தம்மில் உருத்திர னெனும்பேர் நாட்டி ஏதிலார் தம்மைச் சொற்ற தீசன்மேற் சாரா அந்த ஆதிநா யகனைச் சுட்டி அறைந்தவும் பிறர்மாட் டேறா மேதைசாலுணர்வின் ஆன்றோர்விகற்பம்ஈதுணர்வரன்றே ` எனத் தெரித்துக் காட்டியது . இங்ஙனமாகவும் , அக்கினிக்குச் சொன்ன காரணத்தையே சிவபிரான்மாட்டுக் கற்பித்துக் கூறுவார் , அதனால் அடைவது உய்தியில் குற்றம் அன்றி வேறு இன்று ; அன்றியும் , வேறு வேறு காரணத்தால் வேறு வேறு பொருளை உணர்த்தும் பல பொருள் ஒரு சொற்கள் அவ்வப்பொருளை உணர்த்துமிடத்து அவ்வக் காரணங்களையே கூறாது , ஒரு காரணத்தினையே யாண்டும் கூறுதல் புலமை நெறியும் ஆகாமை அறிக . எனவே , துன்பந் துடைக்கவல்லனாய காரணம் பற்றிச் சிவபிரான் , ` உருத்திரன் ` எனச் சிறந்தெடுத்துப் போற்றப்படுவன் என்பதனை உணர்த்தி யருளுவார் , ` உருத்திரனை ` என்று அருளிச்செய்த அருமை அறியற்பாலதாதலறிக . உமாபதி - உமைக்குத் தலைவன் . உத்தமன் - யாவரினும் மேலானவன் . ஒருவன் - ஒப்பற்றவன் . சிவபிரான் ஒருவனையே ` ஒருவன் ( ஏகன் )` என உபநிடதங்கள் கூறும் என்பது , பலவிடத்துங் காட்டப்பட்டது . ` ஒருவன் என்னும் ஒருவன் காண்க ` என்பது திருவாசகம் ( தி .8 திருவண் . 43.) பருப்பதம் - மலையாய் இருப்பவன் . பஞ்சவடி - மயிர்க் கயிறாகிய பூணூல் . வெளி - ஆகாயம் . நெருப்பு - நெருப்பாய் இருப்பவன் . நித்திலம் - முத்து . தொத்து - கொத்து ; இவ் உவமை , சிவபிரானது திருநீற்றுக் கோலத்தை விளக்க வந்தது . சிந்தைக் கருத்தவன் - மனத்தின்கண் கருதப்படும் பொருளாய் உள்ளவன் .

பண் :

பாடல் எண் : 6

ஏடேறு மலர்க்கொன்றை யரவு தும்பை
இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கை
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்
செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

இதழ் செறிந்த கொன்றைமலர் , பாம்பு , தும்பைப்பூ , பிறைச்சந்திரன் , எருக்க மலர் , வானின்றிறங்கிய கங்கை ஆகியவைகளால் அழகு விளங்கிய சடையினனும் , தேவர்க்குத் தலைவனும் , பெரிய செம்பொன்மலை போன்றவனும் , தன்னை அடைந்தார் சிந்தையில் கேடின்றி இருப்பவனும் , கீழ்வேளூரிலிருந்து ஆளும் அரசனும் , மடவார்கைகளில் அணிந்துள்ள வளைகளைப் பொய்பேசிக் கவர்ந்து கொள்ளும் அதிசயிக்கத்தக்க திறனுடையவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

ஏடு - இதழ் . வான் இழிந்த - ஆகாயத்தினின்றும் இறங்கிய . சேடு எறிந்த - அழகு விளங்கிய . செம்பொன்மால் வரையான் - செம்பொன்மலைபோன்றவன் . சேர்ந்தார் - தன்னை அடைந்தவர் ; ` அவரது சிந்தையில் கேடின்றி ( நீங்குதல் இன்றி ) இருப்பவன் ` என்க . கிறி - பொய் . ` மடவார் வளைகள் ` என இயையும் . பெய்வளை - அவர் தம் கைகளில் அணிந்துள்ள வளைகள் . இனி , பிச்சையோடு உடன் வீழ மடவார்கள் பெய்தவளைகளை மீள ஈயாமல் ` எம் கையில் வந்தது எமது ஆகலே வழக்கு ` ( பிச்சாடன நவமணி மாலை ) எனக் கொண்டு செல்லும் என்று உரைத்தலுமாம் . காடவன் - அதிசயிக்கத் தக்க திறலுடையவன் ; இது காடம் என்னும் ஆரியச் சொல்லினின்றும் பிறந்த பெயர் .

பண் :

பாடல் எண் : 7

நாரணனும் நான்முகனும் அறியா தானை
நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்
பால்வணனைத் தீவணனைப் பகலா னானை
வார்பொதியும் முலையாளோர் கூறன் தன்னை
மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

திருமாலும் , நான்முகனும் , அறியாதவனும் , வேதமந்திர உருவினனும் , ஆடவருட்சிறந்தவனும் , பூதங்கள் தான் ஏவிய பணிகளைச் செய்ய தான் பிச்சை ஏற்று உண்ணும் பால் நிறத்தவனும் , தீ நிறத்தவனும் , பகல் ஆனவனும் , கச்சணிந்த கொங்கை யாளை உடலின் ஒரு கூற்றாகக் கொண்டவனும் , மானை இடக்கையில் ஏந்தியவனும் , தேவர்கள் மகிழ்ச்சி நிறைவதற்குக் காரணமானவனாய் , கழுத்துக் கருநிறத்தால் மூடப்பட்டவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

` வேதம் ` என்றது , அதன்கண் உள்ள மந்திரங்களை . பாரிடங்கள் - பூதங்கள் . பலி - பிச்சை . ` பால் வண்ணம் திருநீற்றாலும் , தீவண்ணம் இயல்பினாலும் உடையவன் ` என்க . ` மான் இடங்கை உடையன் ` என்க ; இதனுள் , ` இடக்கை ` என்பது இடங்கை என மெலிந்து நின்றது ; ` இடத்திற் கையில் ` என அடுக்காக்கி யுரைத்தலுமாம் . மலிவு ஆர்கண்டம் - ( தேவர்கள் ) மகிழ்ச்சி நிரம்புதற்கு ஏதுவாய மிடறு . கார் பொதியும் - கருமை நிறத்தால் மூடப்பட்ட .

பண் :

பாடல் எண் : 8

வானவனை வலிவலமும் மறைக்காட் டானை
மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத்
தீதிலா மறையோனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

வானிடத்தவனும் , வலிவலமும் மறைக்காடும் உறைபவனும் , மதிசூடும் பெருமானும் , ஆதி அந்தணனும் , மற்றை வருணத்தினனும் , இமவான் மகள் பார்வதியோடும் இனிதிருந்து அருள்செய்யும் பெருமானும் , தன்னை ஏத்தி வணங்குவார்க்குத் தேன் போன்று தித்திப்பவனும் , தீது இல்லாமல் அவர்களைக் காத்தற் பொருட்டுக் காலம்பார்த்துக் கரந்து நிற்பவனும் , தேவராற் போற்றப்படும் வேட்டுவனும் கஞ்சனூராண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

` வலிவலமும் ` என்பதன்பின் , ` உடைய ` என்பது எஞ்சி நின்றது . ` மறையோன் ` என்றது , ` முதல் அந்தணன் ` என்றவாறு . ஏனவன் - அந்தணனேயன்றிப் பிறவருணத்தவனுமாய் இருப்பவன் ; என்றது , யாவரது ஒழுக்கத்தையும் தாங்கி நிற்பவன் என்றதாம் . பேதையோடும் இனி திருத்தல் - யாவர்க்கும் அம்மை யப்பனாய் வீற்றிருந்து அருள்செய்தல் . தேனவன் - தேனாய் இருப்பவன் . ` தித்திக்கும் பெருமான் ` என்றது , தேனவன் என்றதன் கருத்தை இனிது விளங்க அருளிச்செய்தது . மறையவன் - மறைதலை உடையவன் ; தோன்றாது கரந்து நிற்பவன் ; இக் கரவு . ஏனையோர் கரவு போலப் பிறரை அற்றம் பார்த்துக் கெடுத்தற்குக்கொள்ளும் கரவன்றி , பருவம் நோக்கி அருள் செய்தற்குக் கொள்ளும் கரவு , என்பார் ` தீதிலாமறையவனை ` என்று அருளிச் செய்தார் . கானவன் - வேட்டுவன் ; இஃது , அருச்சுனன் பொருட்டுக் கொண்ட கோலம் நோக்கி அருளிச்செய்தது . இப் பேரருள் தேவராலும் போற்றப் படுவது ஆகலின் , ` தேவர் போற்றும் கானவன் ` என்று அருளினார் ; வேடனாகி விசயன்முன் சென்ற பொழுது பதினெண் கணங்களும் சூழ்ந்து சென்றன என்னும் வரலாறு ஈண்டு நினைக்கத் தக்கது .

பண் :

பாடல் எண் : 9

நெருப்புருவத் திருமேனி வெண்ணீற் றானை
நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்
தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத் தானைச்
சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

நெருப்புநிறமுடைய அழகிய திருமேனியில் வெண்ணீற்றை அணிந்தவனும் , நினைப்பவர் நெஞ்சில் நிலைத்து நிற்பவனும் , எங்கும் நிறைந்தவனும் , முயலகன்மேல் காலை ஊன்றி ஆடியவனும் , சலந்தரனைப் பிளந்திட்டவனும் , ஞானிகள் சிந்தையில் விரும்பி வாழ்பவனும் , வேதவிதியானவனும் , சிவாகமவிதியாய் விளங்குபவனும் , இயல்பாகவே விளங்கும் ஒளியாய் , மெய்ப் பொருளாய் , மேலோர்கள் போற்றும் கருத்தாய்த் திகழ்பவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

` நெருப்புருவம்போலும் திருமேனியில் வெண்ணீற்றை அணிந்தவன் ` என்க . ` நெருப்புருவு திருமேனி ` என்பது பாடம் அன்று . நெஞ்சான் - நெஞ்சின்கண் உள்ளவன் . நிறைவு - எங்கும் நிறைந்திருத்தல் . முயலகன்மேல் கால்ஊன்றி ஆடியதும் , சலந்தராசுரனை அழித்ததும் ஆகிய வரலாறுகளை , கந்தபுராண த்துத் ததீசியுத்தரப் படலத்துட் காண்க . தக்கோர் - தகுதி பெற்றவர் ; தகுதி , ஞானம் , ` அதனை அடைந்தவரது விருப்பமாய் இருப்பவன் ` என்றது , ` அவர் இறைவனை அன்றிப் பிறிதொரு பொருளையும் விரும்பார் ` என்றபடி . ` வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் ` எனவும் , ( தி .8 திருவாசகம் . உயிருண்ணிப்பத்து -7.) ` உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே ` எனவும் , ( தி .8 திருவாசகம் . திருப்புலம்பல் -3) ` வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே ` எனவும் , ( தி .8 திருவாசகம் . குழைத்தபத்து -6.) ` கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும் கண்ணாளா ஈதென் கருத்து ` எனவும் ( தி .11 அற்புதத் திருவந்தாதி -72) எழுந்த திருமொழிகள் இங்கு ஒருதலையாக உணரற்பாலன . ` விதி ` என்றது , வேதவிதியை எனவும் , இங்கு , ` வெண்ணீறு என்றது சிவாகமவிதியை ` எனவும் கொள்க . ` வெண்ணீறு ` என்றது , உபலக்கணத்தால் ஏனைய சிவநெறிச் சாதனங்களையும் கொள்ள நின்றது என்க . விளங்கொளி - இயல்பாகவே விளங்குகின்ற ஒளி , மெய் - மெய்ப்பொருள் ; தோற்ற ஒடுக்கங்கள் இல்லாத பொருள் ; இவையிரண்டும் ஆயினமையால் மிக்கோர்கள் போற்றுவராயினர் என்க . ` கருத்து ` என்றது , கொள்கையை ; எனவே , மிக்கோர்களால் போற்றிக் கொள்ளப்படும் பொருள் என்றதாயிற்று .

பண் :

பாடல் எண் : 10

மடலாழித் தாமரைஆ யிரத்தி லொன்று
மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்
தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை
அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்
கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

இதழுடைய வட்டமான தாமரை மலரில் ஆயிரத்தில் ஒன்றாகத் தன் தாமரை மலர்போலும் கண்ணைப் பெயர்த்து இடுதலும் நிறைந்த பெரிய அழகினையும் ஒளியையும் உடைய சக்கராயுதத்தை நெடு மாலுக்கு அருள் செய்தவனும் , யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் , தன் நண்பன் குபேரன் தோற்றுக் கைவிட்ட வலிய சக்கரத்தையுடைய தேரினைத் தன் உடைமை ஆக்கிக்கொண்ட இலங்கைக்கோனை எடுத்தற்கரிய கயிலை மலைக்கீழ் வைத்து நெரித்தவனும் , பின் அவனுக்கு அருளுதலைப் பொருந்திய கருணைக் கடலானவனும் , கஞ்சனூர் ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக்கண்டு , மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

மடல் - இதழ் . ஆழித் தாமரை - வட்டமாக மலர்ந்த தாமரை மலர் . ` ஒன்றாக ` என , ஆக்கம் வருவித்துரைக்க . மலர்க்கண் - மலர்போலும் கண் . இடந்து - பெயர்த்து . இடுதலும் - சாத்திய உடன் . ` மலி கோலம் ` என இயையும் ; ` நிறைந்த அழகு ` என்பது பொருள் . வான் - பெரிய . சுடர் ஆழி - ஒளியை உடைய சக்கரம் . திருமால் சிவபெருமானை நாள்தோறும ஆயிரந்தாமரை மலர்களால் ஆயிரம் திருப்பெயரைச் சொல்லி அருச்சித்து வருகையில் , ஒரு நாள் ஒருமலரை அப்பெருமான் மறைப்ப , அதற்கு ஈடாகத் தன் கண்களைப் பறித்துச் சாத்தியது கண்டு மகிழ்ந்து சக்கரத்தை ஈந்தருளினன் என்பது பழைய வரலாறு என்க . ` நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ ` என்ற திருவாசகமும் ( தி .8 திருச்சாழல் - 18.) காண்க . தும்பி - யானை . தோழன் - தன் ( சிவபெருமானுக்கு ) நண்பன் ; குபேரன் . ` விட்ட ` என்றது , ` தோல்வியால் கைவிட்ட ` என்றவாறு . தேர் , புட்பக விமானம் ; அது வானத்திற் செல்வதாயினும் , தரையினும் செல்லுமாகலின் அதன்பொருட்டு ஆழியை , ( சக்கரத்தை ) உடையதாயிற்று என்க . அருள் ஆர் கருணைக் கடலான் - ( அவனுக்கு ) அருளுதலைப் பொருந்திய கருணைக் கடலாய் உள்ளவன் ; ` பொருள்மன்ன னைப்பற்றிப் புட்பகங் கொண்ட மருள்மன்ன னைஎற்றி வாளுடன் ஈந்து ` என அருளிச் செய்ததும் ( தி .4. ப .17. பா .11.) காண்க .

பண் :

பாடல் எண் : 1

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

தொல்லாசிரியர் ஆராய்ந்து சொல்லிய செவ்விதாகிய தமிழினது இலக்கணத்தை அறியேனும் , கவிபுனைய மாட்டேனும் , எண்ணாயும் திருத்தம்பெற்ற கலைகளாயும் நிற்கும் தன்னையும் தன் கூறுபாடுகளையும் அறிதற்குரிய விதியிலேனுமாகிய எனக்கு அவற்றைக் காட்டினவனும் , அடைந்தேனைத் தாய் தந்தையரைப் போல அன்பாய்த் தொடர்ந்து ஆளாகக் கொண்டவனும் , அழகிய எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன் .

குறிப்புரை :

பன்னிய - ( தொல்லாசிரியர் ) ஆராய்ந்து சொல்லிய . ` செந்தமிழ் ` என்றது , செவ்விதாகிய ( திருத்தமான ) தமிழினது இலக்கணத்தை . ` கவி ` என்றதும் கவியைப் ( பாடலைப் ) பாடுதல் குறித்தது . மாட்டேன் - ஆற்றலுடையேன் அல்லேன் . சுவாமிகள் இவ்வாறு அருளிச்செய்தது , தமிழின் இயல்பை ` இயல் , இசை , நாடகம் ` என்னும் மூன்று திறனும் பற்றி அறிய வேண்டிய அளவு அறியாதவராகவும் , கவிகளை அத்திறம் எல்லாம் அமையுமாறு சிறக்கப்பாட மாட்டாதவராகவும் தம்மைக் கருதியிருந்தமையாம் . தாம் அறிந்தவைகளினும் அறியாதவை மிகுதியாகத் தோன்றுதல் அறிவுடையாரது அறிவிற்கேயாம் . அறிவிலாரது அறிவிற்கு அவை மாறித்தோன்றும் . அத்தோற்றங்களின் வழி உளவாகும் இயல்புகளையே திருவள்ளுவ நாயனார் , பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து ( குறள் . 978) என அருளிச்செய்தார் . இறைவன் , எண்ணும் எழுத்துமாய் நிற்றல்பற்றி , ` எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய தான் ` என்று அருளினார் . பண் - பண்ணப்படுதல் ; திருத்தம் . ` பொறியிலேனைத் தன்னையும் தன் திறமும் அறிவித்து ` எனவும் , ` அடைந்தேனை அன்பால் தொடர்ந்து ` எனவும் கூட்டுக . ` திறத்தையும் ` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று . நெறி - தன்னைப்பெறும் வழி . ` தொடர்ந்து ` என்றது , ஆள நினைந்து அதற்கு ஏற்ற செவ்விபார்த்து நின்றமையை . ` நினைத்ததை நினைத்தவாறே முடித்தான் ` என்பார் . ` என்னை ` என மறித்தும் விதந்து அருளிச்செய்தார் . தென் - அழகு . ` மாணிக்கம் , சுடர் ` என்பன உருவகங்கள் .

பண் :

பாடல் எண் : 2

பளிங்கின்நிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் உள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

படிகமணியின் ஒளியுள்பதித்து விளங்கிய மாணிக்க ஒளியினனும் , பசுபதியும் , பாசுபத வேடத்தவனும் , அறை கூவிப் போருக்கு எழுந்த சலந்தரனை அழித்தவனும் , வேதியனும் , விண்ணவனும் , பொருந்தி வையத்தை அளந்த திருமாலும் , நான்முகனும் ஆனவனும் , துன்பந்துடைக்கும் ஆரமுது ஆனவனும் அவனே ஆமாறு அறிந்தமையால் என் உள்ளம் தெளிந்து எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகும் சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன் .

குறிப்புரை :

பளிங்கின் நிழலுள் பதித்த சோதியான் - படிக மணியின் ஒளியுள் பதிந்து தோன்றும்படி விளங்கிய ஒளியினையுடைய மாணிக்கம் போன்றவன் ; என்றது ; ஆன்மா , சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் இயல்புடைய படிகத்தின் ஒளிபோன்றது ; அதனால் , பெத்த நிலையில் நீல மணியினைச் சார்ந்து நீல மணியாய் நிற்கும் படிகம் போல , மலத்தினைச் சார்ந்து மலமேயாய்க் கிடந்த அவ்வான்மாவை , சிவன் முத்திநிலையில் அம்மலத்தினின்றும் நீக்கி , மாணிக்கத்தைச் சார்ந்து மாணிக்கமாயே நிற்கும் படிகம்போல , தன்னைச் சார்ந்து தானாய் நிற்குமாறு தனது எண்குணங்களையும் அதனிடத்துப் பதிவித்து நிற்பனாகலின் , தமக்கு அவ்வாறு செய்தருளினான் என்பதனை உவமை வகையான் அருளிச்செய்தது என்க . ` சோதி ` என்றது , விடாத ஆகுபெயராய் , அதனை உடைய மணியைக் குறித்தது ; ` மாணிக்கம் ` எனப் பின்னர் வருதலின் வாளா மணி என்பது உணர்த்திச் சென்றார் . ஈண்டுக்காட்டிய ஆன்மாவின் இயல்பு முதலியவற்றை , சருவஞ்ஞானோத்தரம் முதலிய ஆகமங் களிலும் , சித்தாந்த நூல்களிலும் கண்டு கொள்க . ` விளித்தெழுந்த ` என்பது மெலித்தலாயிற்று . விளித்தல் , ஈண்டு அறைகூவல் . வையம் அளந்தவன் - திருமால் ; சிவபிரானை மாயோனாகவும் , பிரமனாகவும் கூறும் கருத்து மேலே பல இடங்களிலும் விளக்கப்பட்டன . ஆமாறு அறிதல் - தக்கதை உணர்தல் ; ` ஆமாறு அறிந்தமையால் உள்ளம் தெளிந்து ` என்க ; இத் தொடரினை , எல்லாவற்றிற்கும் முன்னே வைத்து உரைக்க .

பண் :

பாடல் எண் : 3

கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமரர் ஏத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
யுலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழல்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கருத்திற்குக் கருவானவனும் , மனத்தில் நிலைத்த கருத்தானவனும் ஞானப்பெருஞ்சுடர் ஆனவனும் , அமரர்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்து தோத்திரிக்கும் அழகிய வடிவினனும் , உலகத்திற்கு ஒப்பற்ற வித்தானவனும் , அலையையுடைய கடலாகிய எல்லையையுடைய உலகில் நிறைந்தவனும் , முதல் , இடை , இறுதியாகிய தொழில்களை இயற்றுபவனும் , மலரின் மணத்தை வென்ற குழலினை உடைய உமையம்மையை உடம்பில் பாகமாக வைத்தவனும் , மயானத்து ஆடும் மாசிலாமணியும் திரு எறும்பியூர் மலைமேல் வாசம் செய்யும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .

குறிப்புரை :

கரு - கருத்திற்கு ( அறிவிற்கு ) முதல் ; ` பின்னர் அதன் விளைவாகிய கருத்தாயும் உள்ளவன் ` என்று அருளினார் , ` ஞானச்சுடர் ` என இயையும் . கடுஞ்சுடர் - பேரொளியை உடைய விளக்கு . படிந்து - நிலத்தில் வீழ்ந்து . அண்டம் - உலகம் . ஓத வேலி - அலையை உடைய கடல் ஆகிய எல்லை . நிறை - மிகுதியாய்க் காணப்படுகின்ற . ` நடு இறுதித் தொழிலாய் நின்ற ` எனக் கூட்டுக . ` நடுவும் இறுதியும் கூறவே முதலும் கொள்ளப்படும் . ` தொழில் ` என்றது , தொழில் செய்பவன் மேல் நின்றது . ` நின்ற மணி ` என இயையும் . மரு - வாசனை ; என்றது அதனையுடைய மலர்களை ; ` அவற்றை வென்ற ` என்றது ` தனது இயற்கை மணம் அம்மலர்களது மணத்தின் மிக்கது ` என்றவாறு . வாசம் - வதிதல் . ` மலைமேல் வாச மாணிக்கத்தை ` என மாற்றியுரைக்க .

பண் :

பாடல் எண் : 4

பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போத
உமிழும்அம் பொற்குன்றத்தை முத்தின் தூணை
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்தும்
திகழெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

அம்புகளைத் தூவி ஆற்றல் மிக்க அரக்கர்களுடைய மூன்று புரங்களையும் பாழ்படுத்த பரஞ்சுடரும் , தன்னை விரும்பிப் புகழும் அன்பர்க்கு இன்பத்தை மகிழ்ந்தளிக்கும் அமுதமும் , தேனும் , புண்ணியனும் , புவனிமுழுதும் வெளிப்பட ஒளி உமிழும் அழகிய பொற் குன்றமும் , முத்தின் தூணும் உமையவளின் தலைவனும் , எறும்பியூர் மலைமேல் திகழ்வதும் இமையோர்கள் ஏத்துவதும் ஆகிய மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .

குறிப்புரை :

பகழி - அம்பு . அம்புகளைப் பொழிந்தது , முப்புரத் தலைவர் எதிர்வருமுன் காட்டிய வீரத் திருவிளையாட்டின்கண் என்க . ` இன்பமாய் அமரும் ` என ஆக்கம் வருவிக்க . அது , பகுதிப்பொருள் விகுதி . ஒருமையாற் கூறியது இனம்பற்றி . போத - வெளிப்பட . உமிழும் - வெளிப்படுத்தும் , முழைஞ்சு முதலியவற்றிலிருந்து பொன் முதலியவைகளையும் , சுனைகளிலிருந்து அருவிகளையும் வெளிப்படுத்தும் மலைபோல உலகத்தைத் தோற்றுவித்தல் பற்றி மலையாகவும் , தோற்றுவித்தவற்றைத் தாங்குதல் பற்றித் தூணாகவும் உருவகிப்பார் , சிறப்புத் தோன்ற , ` அம்பொற் குன்றத்தை முத்தின் தூணை ` என்று அருளிச்செய்தார் . ` பெருமான் ` என்றது , ` தலைவன் ` என்றவாறு .

பண் :

பாடல் எண் : 5

பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

பூதங்கள் பலவும் சேர்ந்து பலமுறையும் பாடுதற்கு இயையக் கூத்தாடுபவனும் , கூரிய வாயினை உடைய சூலத்தைக் கையிற் கொண்டு எதிர்ப்படும் போரை வெல்லுதல் மிக வல்ல நிமலனும் , நின்மலனும் , அயன் அன்னமாய் மேலே உயர்ந்து சென்றும் மால் பூமியை அகழ்ந்து சென்றும் காணமுடியாதபடி ஒளியாக நீண்டு எங்கும் பரவினவனும் , அழகிய மலர்களைக் கொண்டு முனிகணங்களால் ஏத்தப்பட்டுப் புகழ்மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செஞ்சுடருமாகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .

குறிப்புரை :

பாரிடம் - பூதம் . உடன் பாட - பலவும் சேர்ந்து பாட . ` பயின்று பாட ` எனக் கூட்டுக . பயிலுதல் - பலமுறையும் செய்தல் . அயில் வாய் - கூர்மையான வாயினையுடைய . ` நேரிடும் ` என்றதில் இடு , துணைவினை . நேர்தல் - எதிர்ப்படுதல் . வடமொழியில் உள்ள ` நிர் ` என்னும் இடைச்சொல் இன்மைப் பொருளையும் , ` நி ` என்னும் இடைச்சொல் பல பொருளையும் தருமாகலின் , ` நிமலன் ` என்றதற்கு ` மலத்தை நீங்கச் செய்பவன் ` எனப்பொருள் கொள்க . ` போர் மிக வல்ல நிமலன் ` என்றது , ` போர் செய்வான் போல , முரணி நின்றாரது குற்றத்தைத் தீர்க்க வல்லவன் ` என்றபடி . அம் மலர் - அழகிய மலர் ; ` அம்மலர் கொண்டு ` என்பதனை , முனிகணங்கள் என்பதன்பின் கொண்டு கூட்டுக . ` அம்மலங் கொண்டு ` எனப் பாடம் ஓதி , அதனை , ` காணாவண்ணம் ` என்றதனோடு இயைத்துரைத்தலே பொருந்துவ தாம் என்க . ` நிமிர்ந்து பரந்தான் ` என இயைக்க . பரத்தல் - எங்கும் ஒளியாக விளங்குதல் .

பண் :

பாடல் எண் : 6

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முன்னீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரன்மந் திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கரிய மேகமாய் நீரைப் பொழிபவனும் , முன்பு முகிலாய்ப் பொழிந்த நீரைப் பின்பு கதிரவனாய் நின்று சுவற்றுபவனும் , விரைந்த நடையுடைய விடை ஒன்றை ஊர்ந்து ஊர்பலவும் திரிபவனும் , தனக்கு உரிய ஊரை ஒற்றியாகவே வைத்துக்கொண்டு உலகம் முழுதும் ஆள்பவனும் , ஓங்காரமாகிய ஒரெழுத்தையே பெயராக உடையவனும் , நான்முகன் , திருமால் , இந்திரன் ஆகியோரால் மந்திரம் கூறித் துதிக்கப்பட்டுப் புகழ் மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செழுஞ்சுசுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப்பெற்றேன் .

குறிப்புரை :

கார்முகில் - கருமையான மேகம் . ` முன்பு முகிலாய்ப் பொழிந்த நீரைப் பின்பு கதிரவனாய் நின்று சுவற்றுவோன் ` என்க . ` முந்நீர் ` என்பதும் பாடம் ஆகாமை யறிக . ` தனக்கு உரிய ஊரை ஒற்றியாகவே வைத்துக்கொண்டு , உலகம் முழுதும் ஆள்கின்றான் ` என நகைதோன்ற அருளியவாறு . எழுத்து ஒன்று ( ஓர் எழுத்து ) என்றது , ஓங்காரத்தை ; அதன் பொருள் சிவபிரானேயாகலின் , அவ்வாறு அருளிச்செய்தார் . எழுத்து ஒன்றை ( ஓர் எழுத்தை ) யே பெயராக உடையவன் என்க . இதனானே , திருவைந்தெழுத்தும் , பிரணவமும் பொருளால் ஒன்றேயாதல் அறிக . இனி , ` அசபை ` எனப்படும் அம்சமந்திரமும் பிரணவத்தின் வேறுபாடே யாகலின் , அதுவும் திருவைந்தெழுத்தின் வேறாகாமை யுணர்க . ` இந்திரன் ` என்புழியும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க . ` இந்திரனும் ` என்றே பாடம் ஓதுவாரும் உளர் . திருமால் முதலியோர் மந்திரத்தால் ஏத்துதலைக் குறிப்பார் , அம்மந்திரங்கள் இவை என்பதை அருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 7

நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சம்மும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாய் செம்பொன்
ஆணியென்றும் மஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

ஒளிமிக்க சந்திரனும் , அழகிய நெருப்பும் , நீரும் , வன்மை , மென்மை ஆகிய இரு நெறிபற்றி விளங்கும் வன்காற்றும் மென்காற்றும் , ஆகாசமும் , ஒளி நிலவும் விண்மீனும் , மண்ணிடத்தும் விண்ணிடத்தும் , மன்னுமுயிர்களும் , என்னுயிரும் தானாய் விளங்குபவனும் , செம்பொன் உரையாணி என்றும் அஞ்சனமாலை என்றும் , அழகிய பவளத் திரட்சி என்றும் அறிந்தோரால் ஏத்தப்பட்டு உயர்ந்த எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப்பெற்றேன் .

குறிப்புரை :

நீள் நிலவு - ஒளிமிக்க சந்திரன் ; ` நிறைமதி ` என்றபடி . அம் தீ - அழகிய நெருப்பு . இரு கால் - வன்கால் , மென்கால் ; ` கடுமையாகவும் , மென்மையாகவும் வீசுகின்ற காற்று ` என்றதாம் ; ` இருங்கால் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . வாள் நிலவு - ஒளி விளங்குகின்ற . தாரகை - விண்மீன் . மன்உயிர் - பலவாகிய உயிர்கள் . அன்புமீதூர்வினால் என் உயிர் என தம்மை வேறு எடுத்தோதினார் . ` என் உயிர் ` என்பது , ` இராகுவினது தலை ` என்பதுபோல , ஒற்றுமைக் கிழமையில் வந்த ஆறாம் வேற்றுமைத் தொகை . ` தானாம் மாணிக்கம் , ஏத்தும் மாணிக்கம் ` எனத் தனித்தனி இயையும் . ஆணி - உரையாணி . அஞ்சனம் - நீலம் ; ` நீலமலை ` என்றல் , அம்மையைக் குறித்து . சேண் - உயரம் ; இது , மலையைச் சிறப்பித்தது .

பண் :

பாடல் எண் : 8

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
யாரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா ஈசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

அறத்தைத் தெரியாதவரும் , ஊத்தை வாயினரும் , அறிவில்லாத சிந்தையினரும் ஆரம்பவாதத்தை உடையவரும் ஆகிய சமணக் குண்டரோடும் கூடி , அரன் திருவடிகளை மறந்து , பழக்கத்தால் என்னை அறியாது அவற்றை நினைத்தலையும் ஒருநாளும் செய்யாது அறிவற்றேன் . வாழ்வெல்லாம் பயனில்லாத வாழ்வாய் ஒழியவும் , மண்மேற்பிறந்த நாளெல்லாம் நாளல்லவாய் வாளா ஒழியவும் இறுதியிற் சிலகாலம் ஈசன் பேர் பிதற்றிச் சிறப்புமிக்க அடிமைக் கூற்றில் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் , செழுஞ் சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப் பெற்றேன் .

குறிப்புரை :

` அறந் தெரியாக் குண்டர் ` என இயையும் . ` அறந் தெரியா ` என்று அதன் உண்மையைச் சிறிதும் உணராது , ` முற்றும் உணர்ந்தவர் தாங்களே பிறர் இல்லை ` எனப் பிதற்றித் திரிந்தமை பற்றி . அதனானே வாயை எடுத்தோதினார் . ஊத்தைவாய் , பல் துலக்காமையால் அமைந்தது , அறத்தினது உண்மை , ` அறமாவது முதல்வன் வகுத்த விதி விலக்குக்களே ` என்பதும் , அதனால் , ` அதன் பயனை ஊட்டுவிப்பவன் அம்முதல்வனே ` என்பதுமாம் . அவற்றைச் சமணர் சிறிதும் உணராமையால் ` அறந்தெரியா ` என்று அருளிச்செய்தார் . ` அறிவு ` என்றது ஆராய்ச்சி அறிவினை . ஆரம்பம் - ஆரம்பவாதம் . அஃதாவது , ` சிதலது வாய்நீர்ச் சிறுதுகளால் பெரும்புற்றுரு அமைந்த பெற்றியது என்ன , ஐம்புலப் பேருரு அனைத்தும் ஐவகை அணுக்கள் , ஆடையின்கண் நூல்போல , ஒன்று தொடங்கி , இரண்டு , மூன்று , நான்கு என வேண்டுமளவும் முறையாகச் சேர்வதனால் அமையும் ` எனக் கூறும் வாதம் . ` அதனை உடைய குண்டர் ` என்க . ` குண்டரோடு கூடி ` என ஒருசொல் வருவிக்க . அயர்த்தல் - மறத்தல் ; மறந்தது ` அரன் திரு வடிகளை ` என்பதனைப் பின்னர் அருளியவாற்றான் அறிக . மறந்து நினைத்தலாவது , பழக்கத்தான் தம்மை அறியாது நினைத்தல் ; ` அதுவும் செய்திலேன் ` என்றார் . ` வாழ்வெல்லாம் வாளா ( பயன் இல்லாத வாழ்வாய் ) ஒழிய , மண்மேல் பிறந்த நாளெல்லாம் நாளல்லவாய் வாளா ஒழிய இறுதியிற் சிலநாள் ஈசன் பேர் பிதற்றி அன்பு செறிந்து அடையப்பெற்றேன் ` என , வேண்டும் சொற்கள் இசை யெச்சத்தால் வருவித்துரைக்க .

பண் :

பாடல் எண் : 9

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

அறிவால் விளங்குகின்ற மனத்தானும் , அறிவார்க்கு அல்லாமல் அறிவில்லாதாரது ஆற்றலால் சிறிதும் அறியப் படாதவனும் , புள்ளிகள் விளங்கும் கொடிய பாம்பினைக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும் புண்ணியனும் , அலைகள் மோதும் கடலில் தோன்றிய நஞ்சுண்ட அடையாளம் திகழும் மிடற்றவனும் , இதழ்களும் தேனும் உடைய கொன்றைப் பூக்களைக் கொண்டு திகழும் சடையானும் , மடைகள் தோறும் மென்மையுடைக் கமலப் பூக்கள் செறிந்து விளங்கும் எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .

குறிப்புரை :

அறிவு இலங்கு மனம் - அறிவால் விளங்குகின்ற மனம் ; ` இலகுபே ரிச்சா ஞானக் கிரியை உட்கரண மாக ` ( சிவஞான சித்தி . சூ . 5. 7. ) என்றபடி , இச்சை முதலிய மூன்று சத்திகளே இறைவனுக்கு அந்தக் கரணங்களாதலின் ` மனம் ` என்றது இச்சா சத்தியையே என்க . ` அறியாதான் ` என்றது , ` அறியப்படாதவன் ` என்றபடி . ஒன்று - சிறிது . ` ஒன்றும் ` என்னும் உம்மை தொகுத்த லாயிற்று . அறியாதார் தம் திறத்து - அறிவில்லாதாரது ஆற்றலால் , இனி , ` தன்னை அறியாதவரைப் பற்றித் தான் ஒன்றும் அறியா திருப்பவன் ` என்றலுமாம் ; அஃதாவது , அவர்கட்கு நன்மை ஏதும் செய்யாதிருப்பவன் என்பதாம் . இப்பொருட்கு , ` ஒன்று ` என்றது , ஒன்று எனவே பொருள்தரும் . ` அறியாதார் தந்திரத்து ` என்பதும் பாடம் . பொறி - புள்ளி . ` புனைந்து பூண்ட ` என்றதனை , ` பூண்டு புனைந்த ` என மாற்றியுரைக்க . புனைதல் - ஒப்பனை செய்து கொள்ளுதல் . குறி - அடையாளம் ; அது , கருமை நிறம் . ` மடல்தேன் ` எனப் பிரிக்க . மடல் - இதழ் .

பண் :

பாடல் எண் : 10

அருந்தவத்தின் பெருவலியா லறிவ தின்றி
அடலரக்கன் தடவரையை யெடுத்தான் திண்டோள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை யேழுலகு மாக்கி னானை
யெம்மானைக் கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

ஆற்றல் மிக்க அரக்கன் அரியதவத்தால் பெற்ற பெருவலியையே நினைத்துச் செருக்குக் கொண்டமையால் அறிவை இழந்து பெரிய கயிலை மலையை எடுக்க அவன் திண்ணிய தோள்கள் ஒடிந்து நசுங்கி ஆற்றல் அழிந்து பாதாளம் போன்ற பள்ளத்தில் கிடந்தானாகப்பின் முன்கை நரம்பினை எடுத்து வீணை நரம்பாகக் கொண்டு இசைத்துக் கீதம் பாட அதனைக் கேட்டு மகிழ்ந்திருந்தவனும் , ஏழுலகங்களையும் படைத்தவனும் , எம் தலைவனும் , யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் , அழகிய எறும்பியூர் மலை மேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

` அரிய தவத்தால் பெற்ற பெருவலியையே நினைத்துச் செருக்குக் கொண்டமையால் அறிவை இழந்து எடுத்தான் ` என்க . ` அறிவதன்றி ` என்பது பாடமாயினும் பொருள் இவ்வாறே கொள்க . ` அடல் அரக்கன் ` என்றதனை முதற்கண் கொண்டு , ` அரக்கனாகிய எடுத்தவனது ` என்க . முரிந்து தோள் முதலியன ஒடிந்து . நெரிந்து - நெருக்கம் எய்தி . பாதாளம் உற்று - பாதாளம் போன்ற பள்ளத்தில் கிடந்து . ` பாட இருந்தவன் ` என்றது , அதனைக்கேட்டு இருந்தவன் ` என்றபடி . கைம்மா - யானை . திருந்து - திருந்திய ; ` அழகு பெற்ற ; மலை ` என்க .

பண் :

பாடல் எண் : 1

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும் , அழகிய கடவுளும் , பிணமுதுகாட்டை உடையவனும் , எல்லாவற்றிற்கும் அடியானவனும் , தேவர்களுடைய அரசனும் , ஆல கால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும் , தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும் , புனிதனும் , எல்லாவற்றையும் காப்பவனும் , கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன் .

குறிப்புரை :

மூவிலைவேல் - சூலம் . மூர்த்தி - கடவுள் . ` முதுகாடு ` என இயையும் . எந்த இடம் அழியினும் என்றும் அழியாதிருப்பது மயானம் ஆதலின் , அதனை , ` முதுகாடு ` என்பர் தொல்லாசிரியர் . முதல் - எல்லாவற்றிற்கும் அடிநிலை , ` போற்றுதற்கு ( வணங்குதற்கு ) ப் புணர்வரிய ( நெருங்குதற்கு அரிய )` என்க ; இது , சிவபிரானது பெருமையும் , தேவர்களது சிறுமையும் குறித்தருளியவாறு . காவலன் - எல்லாவற்றையும் காப்பவன் ; பதி . அமர்ந்தான் - விரும்பியிருந்தான் .

பண் :

பாடல் எண் : 2

பல்லாடு தலைசடைமே லுடையான் தன்னைப்
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் தன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் தன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் தன்னை
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பற்கள் வெளியே தோன்றுகின்ற வெண் தலையைச் சடைமேல் தரித்தவனும் , பாயும் புலியை உரித்துக்கொண்ட தோலாகிய உடையினனும் , சிறந்த ஆறு குணங்களை உடையவனும் , சொற்களும் பொருள்கள் எல்லாமும் ஆனவனும் , என்புஅணி நீங்கப்பெறாத தோற்றத்துடன் ஒளிவிட்டுத் திகழ்பவனும் , முறை யல்லாத செயலை மேற்கொண்ட காலனை முன் ஒறுத்தவனும் , ஆலின் கீழ் இருந்தவனும் , அமுதமானவனும் , கல்லாடை புனைந்தருளும் காபாலியும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன் .

குறிப்புரை :

பல் ஆடு தலை - பல் பொருந்திய ( பல் வெளித் தோன்றுகின்ற ) தலை ; இது , ` வெண்டலை ` எனவும் சொல்லப்படும் ; தாருகாவனத்து முனிவர்கள் சிவபிரான்மேல் ஏவியது ; அதனை அப்பெருமான் சடையில் அணிந்துகொண்டான் . பாய்தல் , புலிக்கு அடை . ` பகவன் ` என்பதன்பொருள் மேலே ( ப .2. பா .11. உரை ) விளக்கப்பட்டது . என்பு அறா - எலும்பு நீங்காதிருக்கின்ற ; ` சுடர் உருவில் என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்கு அன்பறாது என் நெஞ்சு அவர்க்கு ` என்ற அம்மை திருமொழியைக் காண்க . ( தி .11 அற்புதத் திருவந்தாதி - 2) இனி , ` என்பராக் கோலத்தான் ` எனப்பாடம் ஓதுவாரும் உளர் . அல்லாத காலன் - முறையல்லாத செயலை மேற் கொண்டான் இயமன் . * * * * * * 3 - 10 3 -10 * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 1

நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு
நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு
படஅரவும் பனிமதியும் வைத்த செல்வர்
தாந்திருத்தித் தம்மனத்தை யொருக்காத் தொண்டர்
தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீ ராகில்
பொல்லாப் புலால் துருத்தி போக்க லாமே.

பொழிப்புரை :

தம் மனத்தைத் தாம் திருத்தி ஒருமுகப்படுத்தாத மக்களைப் போலப் பேணுவாரின்றித் தனித்துத் தண்டு ஒன்றை ஊன்றி உடல் தளராத முன்னம் , துணைவியாக நேர்ந்த ஒருத்தியைத் தன் உடலின் ஒரு பாகத்து அடங்கச் செய்து , பூமி நிலைதளரும் வண்ணம் பெரிய முகங்கள் ஆயிரத்தொடும் பாய்ந்த ஒருத்தியைப் பரந்த சடைமேல் பொருந்தச் செய்து , பட நாகத்தையும் குளிர்ந்த மதியையும் ஒருங்கே வைத்த செல்வராகிய சிவபெருமான் உவந்து உறையும் பூந்துருத்தி . பூந்துருத்தி என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராகில் துன்பமே விளைக்கும் புலால் பொருந்திய துருத்தி போன்ற உடம்பை நீக்கல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் திருப்பூந்துருத்தியை எடுத்தோதி யருளியது ; இது நாயனார் திருமடம் அமைந்த தலமாதல் அறிக . இத் திருப்பதிகத்துள் எடுத்தோதியன யாவும் சோழ நாட்டுத் தலங்களே . நேர்ந்து - உடம்பட்டு ; ` உடம்பட்டமையால் ` என்க ; உடம்பட்டமை , துணைவியாக மணம் புரிந்து கொண்டமை . ` கண்டு ` என்றன இரண்டும் , ` செய்து ` என்றதேயாம் . ` நிலைதளர்வது மண்ணுலகம் ` என்க ; ` கங்கை விண்ணிலிருந்து ஆயிரமுகமாகப் பாய்வாளாயின் மண்ணுலகம் அழிந்தொழியும் ` என்க . மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயும் அது என்னேடீ சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ . ( தி .8 திருவாசகம் . திருச்சாழல் . 7) என்றருளியது காண்க . வைத்த - பகையின்றி வாழ வைத்த . ` தம் மனத்தைத் தாம் திருத்தி ஒருக்காத் தொண்டர் ` என்க . ஒருக்குதல் - ஒருங்கச் செய்தல் ; இது செய்யாதவரை . ` தொண்டர் ` என்றது , இகழ்தற் குறிப்பு . ` பொதுமக்கள் ` என்பதே பொருள் . ` ஒருக்கால் ` என்பது பாடம் அன்று . ` தொண்டர் போல ` என்னும் உவம உருபு தொகுத்தலாயிற்று . அடுக்கு , இடை விடாமை குறித்தது . என்னல் - என்று நினைத்தலும் , வாழ்த்தலும் . ` என்பீராகில் ` என்றது , நன்மக்களை நோக்கி , ` உறுதி நாடுவீர் ` என விளித்தருளிச் செய்தபடி . துருத்தி - கொல்லன் உலைத் துருத்தி ; இது காற்றை வாங்கியும் விட்டும் நிற்கும் ; அஃது உருவகத்தால் அதுபோல மூச்சினை வாங்கியும் விட்டும் நிற்கும் உடம்பைக் குறித்தது ; நெட்டுயிர்ப்பு எறிதற்குக் கொல்லன் ஊதுலைத் துருத்தியை உவமை கூறுதல் செய்யுள் மரபு . உடம்பை , ` பொல்லா உடம்பு ` என்றது . பசி , பிணி முதலிய பலவற்றானும் உயிர்க்குத் துன்பத்தையே பெரிதும் உறுவித்தல் பற்றி . அதனைப் போக்கலாவது , ஒன்று நீங்க மற்றொன்று வாராதவாறு பிறப்பை அறுத்துக்கொள்ளுதல் ` போக்கலாமே ` என்னும் தேற்றேகாரம் , பிறவாற்றாற் போக்கலாகாமை மேலும் நோக்குடையது என்க .

பண் :

பாடல் எண் : 2

ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே
யகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு
மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தான மென்பீ ராகில்
நிலாவாப் புலால்தானம் நீக்க லாமே.

பொழிப்புரை :

மைதீட்டும் இடமான கண்களையுடைய மடவாரோடு வாழும் நிலையற்ற மனைவாழ்க்கையில் இறுமாந்து வாழ்வீர்காள் ! கோழைக்கு இடமான மிடற்று உட்பகுதி பன்னாளும் பலவற்றையும் பேசி இறுதி நாளில் செயலற்றுக் கோழையினால் அடைக்கப்படும் நிலையை அடைந்தால் அதனை நீங்குதற்கு யாதொரு மருந்துந் தருவாரில்லை . ஆகலான் ஒளிர்மதியையும் , படமாகிய இடத்தினை யுடைய பாம்பையும் , கங்கையையும் தன் விரிந்த சடைமேல் வைத்து மகிழ்ந்த பண்பனாகிய சிவபெருமான் விரும்பி உறையும் நெய்த்தானம் நெய்த்தானம் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராகில் நிலையில்லாத ஊனினாலாகிய உடம்பினை நீக்கல் கைகூடும் .

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் , திருநெய்த்தானத்தை எடுத்தோதி அருளியது . ஐ - கோழை ; ` அதற்குத் தானமாகிய மிடறு ` என்க . அத்து , அல் வழிச் சாரியை . ` மிடற்றின் புறம் அன்றி அகம் ` என்பார் , ` அகமிடறு ` என்றருளினார் . சுற்றி - உழந்து ; அஃதாவது பன்னாளும் பலவற்றையும் பேசி , அகத்து அடைதல் - செயலற்று ஒடுங்குதல் ; அவ்வாறாதற்குக் காரணம் , ` ஐத் தானம் ` என்றதனாற் கொள்ளக் கிடந்தது . ` ஒன்று ` என்றது , மருந்தைக் குறித்தது ; இறுதி நாளில் ஐயினால் மிடறு அடைக்கப்படுவதை நீக்குதற்கு யாதொரு மருந்தும் பயன்படு மாறில்லை ` என்றபடி . ` இல்லை ` என்பதன்பின் , ` ஆகலான் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . மைத்தானம் - மைதீட்டும் இடம் . பைத் தானத்து - படமாகிய இடத்தினை உடைய . இதனைக் கொண்டு கூட்டு வகையால் , ` பாம்பு ` என்றதனோடே இயைக்க . நிலாவா - நிலை யில்லாத . புலால்தானம் - ஊனாலாகிய இடம் ; உடம்பு .

பண் :

பாடல் எண் : 3

பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்று
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே யென்பீ ராகில்
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.

பொழிப்புரை :

நிலையாமை நீங்காத முறைமையுடைய பொருள்களையே சிறப்பித்துப் பேசிப் பொழுது புலர எழுந்தது முதல் பொருளைத் தேடி ஒழுக்கமாக எங்கள் குலத்தொழிலைக் கொண்டுள்ளோம் என்று எண்ணி இறுமாந்த மனத்தராய் அத்தொழிலில் தொடர்தலை உறுதியாகக் கருதி வாழ்வீர்காள் ! நெய்யை ஆறுபோல் ஆடியவரும் , நீலகண்டரும் , நீண்ட செஞ்சடையரும் , நெற்றிக் கண்ணரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் ஐயாறே ! ஐயாறே ! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் தீர்த்துச் சிவனுலகை ஆளலும் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருவையாற்றை எடுத்தோதி அருளியது . பொய் ஆறா ஆறே - நிலையாமை நீங்காத முறைமையையுடைய பொருள்களையே . புனைந்து பேசி - சிறப்பித்துப் பேசி . ` புலர்ந்து ` என்பதனை , ` புலர ` எனத் திரிக்க ; ` பொழுது புலர எழுந்தது முதல் ` என்பது பொருள் . கையாறாக் கரணம் உடையோம் - ஒழுக்கமாக எங்கள் குலத்தொழிலைக் கொண்டுள்ளோம் . ` பொய் யாறா ` என்றது முதல் . ` வாழ்வீர் ` என்றது காறும் , மக்கள் உலகியலில் இறுமாந்திருக்கும் நிலையை வகுத்தருளிச் செய்தவாறு . ` நீலகண்டர் ` என்றது , ` சிவனார் ` என்னும் பெயரளவாய் நின்றது . நெய்யை ஆறுபோல ஆடிய சிவனார் என்க . அல்லல் - பிறவித்துன்பம் . ` அமரர் உலகம் ` என்பது குறைந்து நின்றது . ` மரித்தல் ( இறத்தல் ) இல்லாதவன் என்னும் பொருளுடைய , ` அமரன் ` என்னும் பெயர் , மாயோன் நான்முகன் , இந்திரன் முதலிய பலர்க்கும் உபசாரமாக , சிவபிரானுக்கே அஃது உண்மைப் பெயராம் ஆகலின் , அவனை அடைந்தவரும் ` அமரர் ` எனப்படுவர் என்பதும் . அதனால் , சிவனுலகமே ` அமர லோகம் ` எனப்படும் சிறப்புடையது என்பதும் திருமுறைகளின் துணிபாகலின் , ` அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே ` என்று அருளிச்செய்தார் . சிவனுலகிற் சென்றவரும் பிறத்தல் உண்டாயினும் , அஃது ஒரு தலையன்மையானும் , ஒரோவழிப் பிறப்பினும் , அஃது அல்லற் பிறவி யாகாது , ` பற்றறுப்பாராக ` ( சிவஞானபோதம் - சூ . 8. அதி . 1) ப் பிறக்கும் பிறப்பே யாகலானும் சிவனுலகம் ஆளுதலாகிய பயன் பெற்றோர் , அல்லல் தீர்ந்தவரேயாதலறிக .

பண் :

பாடல் எண் : 4

இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்
ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்
அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே யென்பீ ராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.

பொழிப்புரை :

ஒருபொருள் தமக்கு நட்டமாகும்படி உயர்ந்தோர்க்கு ஒன்று கொடுத்தலையும் பல இடத்தும் அலைந்து திரியும் வறியவர் ஒருவர்க்கு ஒன்று ஈதலையும் செய்யாராய் , ஈன்றெடுத்த தாய் , தந்தை , மனைவியர் , மக்கள் முதலியோர் தம் காலில் பூணும் தளையாதலை அனுபவித்தும் தெளியாராய் , இறுமாந்த மனத்தாராய் அவர்களையே நிலையாகக் கருதி வாழ்வீர்காள் ! நம் அழுகையை நீக்குவிப்பவனும் நம்மை அரையனாக்குபவனும் , நம்மை அமரருலகு ஆள்விப்பவனும் ஆகிய தலைவன் சிவபெருமான் விரும்பி உறையும் பழனம் பழனம் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பன்னாள் செய்து போந்த பழைய வினையாகிய நோயை நீக்கலும் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருப்பழனத்தை எடுத்தோதி அருளியது . ` இழவு ஒன்று ` என்புழி ஆக்கம் வருவித்து , ` ஒன்று இழவு ஆக ( ஒரு பொருள் தமக்கு நட்டமாகும்படி `) என மாற்றியுரைக்க . ` தாவும் ` என்னும் செய்யும் என் எச்சம் , ஈற்று உயிர் மெய் கெட்டு , ` தாம் ` என நின்றது . தாவுதல் - பரத்தல் ; அது , ` பரந்து - கெடுக உலகியற்றியான் ` ( குறள் - 1062.) எனபுழிப்போல , பலவிடத்தும் அலமருதலைக் குறித்தது . இடுதல் . உயர்ந்தோர்க்குக் கொடுத்தல் . ஈதல் - வறியோர்க்கு ஈதல் ; ` இடார் ; தாவும் ஒருவர்க்கு ஈயார் ` என்றவாறாக , ` இட்டு ` என்றதனை முன்னே கூட்டியுரைக்க . ` தாவும் ஒருவர்க்கு ` என விதந்தோதியது , ` அவர்களது அலமரல் கண்டும் மனம் இரங்கலர் ` என்பதுணர்த்துதற்கு . பெண்டிர் ` என்பது , நீட்ட லாயிற்று ; இதுவும் , ` தாய் ` முதலியனபோல , ` மனைவியர் ` என்னும் பொருட்டாகிய முறைப்பெயர் . ` நம் கழல் கோவை ` என மாற்றி , ` நம் காலிற் பூணும் தளை ` என உரைக்க . ` தாய் முதலிய சுற்றத்தார் அனை வரும் தளை ` என்றபடி ; ` ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே ` ( புறம் . 193) என்றதும் அறிக . ` நம் கழல் ` எனத் தம்மோடு உளப்படுத்து அருளிச்செய்தார் , பிறர் நோயைத் தம் நோயாக நினையும் அருட்டிரு வுளத்தால் . ` களித்த மனத்தாராய் ` என்புழி நின்ற ` ஆய் ` என்னும் எச்சச்சொல் , ` ஈயார் , தேறார் ` என்பவற்றோடும் இயையும் . அழல் - அழுதல் ; வருந்துதல் ; ` நம்மை அழல் நீக்குவிக்கும் ` என்க . அரையன் ஆக்கும் - அரசனாகச் செய்யும் . ` நம்மை அரையன் ஆக்கும் ` என்பது பன்மையொருமை மயக்கம் . ` நீக்குவிக்கும் ` என்பது முதலிய செய்யும் , என் எச்சங்கள் மூன்றும் , ` அம்மான் ` என்னும் ஒரு பெயர் கொண்டு முடிந்தன . பயின்று எழுந்த பழவினை - பன்னாள் செய்து போந்த பழைய வினை ; சஞ்சிதம் . பாற்றலாம் - கெடுக்கலாம் .

பண் :

பாடல் எண் : 5

ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்
மாற்றுத் துறைவழி கொண்டோடா முன்னம்
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை யென்பீ ராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கட் சேர லாமே.

பொழிப்புரை :

நிலையற்ற மனைவாழ்க்கையில் இறுமாந்து வாழ்வீர்காள் ! அழுக்கு ஊறுகின்ற துறையாம் இவ் உடலில் உள்ள ஒன்பது பெருவாயில்களின் உள்ளே அகப்பட்டு நின்றமையால் இறைவனை நினைகின்றிலீர் , அவை ஒன்பதையும் , ஒருசேர அடைக்கும் இறுதிப்போதில் இறைவனை நினைக்க விரும்பினும் அது செய்ய மாட்டீர் . மாற்றுத்துறையாகிய யாதனாசரீரத்துடன் செல்லும் வழியை மேற்கொண்டு கால தூதுவரோடு நீவிர் ஓடாமுன்னம் பகைமைத் தொழில் பூண்டாருடைய புரங்கள் மூன்றையும் வெவ்விய அழலிடத்து வீழ்விக்கும் வேந்தனாகிய சிவபெருமான் விரும்பி உறையும் சோற்றுத் துறை சோற்றுத்துறை என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித்துயர் நீங்கித் தூய வீட்டுநெறியினைச் சேர்தல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருச்சோற்றுத்துறையை எடுத்தோதி யருளியது . ஊற்றுத் துறை ஒன்பது , உடம்பில் உள்ள ஒன்பது பெருவாயில்கள் ; அவை அனைத்தும் மாசு வெளிப்படும் புழைகளாய் உள்ளமை பற்றி , அவற்றை , ` ஊற்றுத் துறை ` என்று அருளினார் ; ` அழுக்கு ஊறுகின்ற ஊற்று ` என்றபடி ; ` மலஞ்சோரும் ஒன்பது வாயில் ` ( தி .8 திருவா . சிவபு . 54) என்றருளினார் மாணிக்கவாசகரும் . ` அவ்வாயில்களுக்கு உள்ளே அகப்பட்டு நின்றமையால் , அங்கே மயங்கி இறைவனை நினைந்திலீர் ` என்க . ஓரீர் - நினைந்திலீர் . ஒன்பது வாயில்களும் ஒரு சேர அடைக்கப்படும் காலம் இறுதிக்காலமாத லாலும் , அது வந்தபோது உள்ளத்தை ஆளும் திறன் அழியுமாகலான் , அஞ்ஞான்று இறைவனை நினைக்க விரும்பினும் அஃது இயலாது ஆதலானும் , ` ஒக்க அடைக்கும்போது உணர மாட்டீர் ` என்று அறிவுறுத்தருளினார் ; இறுதித் திருப்பதிகத்துள் . இந்நிலையை சுவாமிகள் தமக்கே வைத்து அருளிச் செய்தல் காண்க ; மாட்டீர் - இயலாதவராய் இருப்பீர் . மாற்றுத் துறை - இதற்கு வேறான மற்றோரு துறை ; அது ` பூதனா சரீரமாகிய இது போல்வதாகிய யாதனா சரீரம் . மாற்றுத் துறை யாகிய வழி ` என்க ; ` அதனைப் பற்றிக்கொண்டு கால தூதுவரொடு ஓடாமுன்னம் ` என்றபடி . கொண்டு - கைக்கொண்டு . ` ஓடாமுன்னம் என்பீராகில் ` என இயையும் . மாயம் - நிலையாமை . மகிழ்ந்து - இறுமாந்து . ` மனைவாழ்க்கைக் கண்னே மகிழ்ந்து ` என்க . ` வாழ்வீர் ` என்றது விளி ; இத் தொடரை முதற்கண்ணே வைத்து உரைக்க . வேற்றுத்தொழில் - வேற்றுமைச் செயல் ; பகைமை .

பண் :

பாடல் எண் : 6

கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்
கள்ளக் கடலி லழுந்தி வாளா
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்
நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்
அலஞ்சுழிக்கு மன்னாகந் தன்னான் மேய
அருமறையோ டாறங்க மானார் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்
வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.

பொழிப்புரை :

மரக்கலங்கள் சுழலுகின்ற கரிய கடலால் சூழப்பட்ட உலகில் வஞ்சனைக் கடலில் அழுந்தி , முயலாமலே , நன்மையைத் தேடி அலைகின்ற நெஞ்சே ! நல்லின்பம் பெற வேண்டில் நம்புதற்குரிய தலைவன் திருவடியிணைக்கே வாழ்த்து நவில் . அங்ஙனம் நவில விரும்பின் எல்லாப் பொருளும் அடங்கச் சுருட்டும் பாம்பரசனாகிய ஆதிசேடனால் விரும்பப்பட்டதும் அருமறையும் ஆறங்கமும் ஆன சிவபெருமான் உறைவதும் ஆகிய கோயிலைக் கொண்ட வலஞ்சுழியே வலஞ்சுழியே என்று பலகாலும் கூறுவையாயின் வலிய வினைகள் தீர வானுலகு ஆளல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் திருவலஞ்சுழியை எடுத்தோதி அருளியது . கலம் - மரக்கலங்கள் . சுழிக்கும் - சுழலுகின்ற ; இயங்குகின்ற . வையம் - பூமி . கள்ளம் - வஞ்சனை ; கரவு ; உலகியல் வாழ்க்கை கரவை இயல்பாக உடையதென்றபடி . வாளா - முயலாமலே . நலம் சுழியா எழு - நன்மையைத் தேடி அலைகின்ற . ` இன்பம் வேண்டில் ` என்றது , ` நீ உண்மையில் இன்பத்தைப் பெற விரும்பினால் ` என்றவாறு . நவிலுதலுக்கு , ` வாழ்த்து ` என்னும் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க . நவில்வாயாகில் - சொல்ல விரும்புவையாயின் . ` இன்பம் வேண்டில் நவில் ` எனவும் , ` நவில விரும்பின் வலஞ்சுழி என் `, ` என்பையாகில் வானாளலாம் ` என வேறு வேறு தொடராக ஓதற் பாலதனை ` சொற்பல்காவாறு ஒரு தொடராக ஓதியருளினார் என்க . ` நெஞ்சே நவில்வாயாகில் ` என முன்னர் ஓதி , பின்னர் , ` என்பீ ராகில் ` என்றது , உயர்வு பற்றியருளிய ஒருமை பன்மை மயக்கம் . ` அலம் ` என்புழி , ` அலமாக ` என ஆக்கம் வருவிக்க . அலம் சுழிக்கும் - எல்லாப் பொருளும் அடங்கச் சுருட்டுகின்ற . மன்நாகம் - பாம்பரசன் ; ஆதிசேடன் ; திருவலஞ்சுழி ஆதிசேடன் வழிபட்ட தலம் என்பது புராணம் . தன் , சாரியை . ` நாகந்தன்னால் மேய கோயில் ` என இயையும் , மேய - விரும்பப்பட்ட .

பண் :

பாடல் எண் : 7

தண்டிகுண் டோதரன்பிங் கிருடி
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை யுலகம் படைத்தான் தானும்
பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்
சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்
கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.

பொழிப்புரை :

தண்டியும் குண்டோதரனும் , பிருங்கியாகிய இருடியும் , புகழ்சார்ந்த நந்தியும் , சங்குகன்னனும் , பண்டு உலகைப் படைத்த பிரமனும் , உலகளந்த திருமாலும் பல்லாண்டு இசைக்கவும் திண்ணிய வயிற்றையும் சிறிய கண்களையுமுடைய பூதங்கள் சில பாடவும் விடை ஒன்றை ஊர்பவனாகிய சிவபெருமான் மேவி உறையும் கண்டியூர் கண்டியூர் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீர் ஆயின் நும் வலிய வினையை விரைவாக நீக்கல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருக்கண்டியூரை எடுத்தோதி அருளியது . ` பிருங்கி இருடி ` என்பது , ` பிங்கிருடி ` எனக் குறைந்து நின்றது . ` பிருங்கி என்னும் பெயருடைய இருடி ` என்பது பொருள் . இவர் அம்மையையும் வழிபடாது சிவபிரானையே வழிபட்ட பெருஞ் சிவபத்தியுடையவர் . இவரைத் தவிர , தண்டி , குண்டோதரன் , நந்தி , சங்குகன்னன் என்பவரெல்லாம் சிவ கணத்தவர் . அவருள் நந்தி பெருமான் , சிவகணங்கட்கெல்லாம் தலைவராய் , சிவபிரானுக்கு அகம்படிமைத் தொழின்மை பூண்டு பிரம்பு ஏந்தி அருகிலிருந்து பணியாற்றுவதுடன் , கயிலை மலைக்குக் காவல் பூண்டவர் ; இதனால் , இவரை , ` பெரிய தேவர் ` எனவும் , ` அபர சம்பு ` எனவும் கூறுவர் . ` பண்டு ` என்பது ஐகாரம் பெற்று . ` பண்டை ` என நின்றது . ` பண்டு படைத்தான் ` என இயையும் , உலகம் படைத்தான் - பிரமன் . பார் - பூமி . பாரை அளந்தான் - திருமால் . ` இவர் அனைவரும் பல்லாண்டு கூறி வாழ்த்தவும் , சில பூதங்கள் புகழ்களைப் பாடவும் விடைமேல் ஏறி வருபவன் ` என்க . ` வெள் ` அடியாக , ` வெள்ளி ` என்பது வருதல்போல , ` திண் ` என்பது அடியாக வரும் திண்ணி என்பது , எதுகை நோக்கி , ` திண்டி ` எனத் திரிந்து நின்றது . ` திண்மையுடையதாகிய ` என்பது பொருள் . ` திண்ணிய வயிறு ` என்றது , பருத்த வயிறு ` என்றே பொருள் தந்து நின்றது .

பண் :

பாடல் எண் : 8

விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே
வெள்ளேற்றான் தன்தமரைக் கண்ட போது
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று
மாதவத்தார் மனத்துள்ளார் மழுவாட் செல்வர்
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்
பங்கயத்து மேலயனும் பரவிக் காணாக்
குடமூக்கே குடமூக்கே யென்பீ ராகிற்
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! வெள்ளேறு ஊறும் விமலனுடைய அடியார்களைக் கண்டபோது ஆலமர் கடவுளை அடைந்த முனிவர் போல் அவர்களைச் சென்றடைந்து , விடம் , உக்க பாம்பு போல அடங்கி வணங்கு . வணங்கி , மாதவத்தார் , மனத்து உள்ளவரும் , மழுப் படையை ஏந்திய செல்வரும் , படத்தையுடைய கொடிய பாம்பாகிய அணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் , பங்கய மலர்வாழ் பிரமனும் புகழ்ந்து தோத்திரித்தும் காணப்படாதவரும் ஆகிய அரனார் மகிழ்ந் துறையும் குடமூக்கே குடமூக்கே என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவையாயின் கொடுவினைகள் தீர அவரைக் கிட்டுதல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருக்குடமூக்கை எடுத்தோதி அருளியது . ` உக்க ` என்பது , ` ஊக்க ` என நீட்டலாயிற்று . விடம் உக்க பாம்பு - விடத்தை உமிழ்ந்துவிட்ட ( விடம் நீங்கிய ) பாம்பு ; இது , மந்திரத்தால் அடங்கிய பாம்பைக் குறித்த படியாம் . நெஞ்சம் தனது கரவையெல்லாம் விடுதற்கு இது உவமையாகச் சொல்லப்பட்டது . நெஞ்சிற்கேற்ப , ` சிந்தி ` என்றாராயினும் , ` வணங்கி ` என்றலே கருத்து . ` தமர் என்றது , அடியவரை . வடம் - ஆலமரம் . ஊக்குதல் - மனத்தைச் செலுத்துதல் . ` வடத்தின்கண் ஊக்கிய அம் மாமுனிவர் ` என்க . இவர் ஆலமர் கடவுளை அடைந்த நான்கு முனிவராவர் . ` நெஞ்சே , வெள்ளேற்றான்தன் தமரைக் கண்டபோது ஆலமர் கடவுளை அடைந்த முனிவர்போலச் சென்று அடைந்து , விடம் உக்க பாம்புபோல அடங்கி வணங்கு ` என்றவாறு . ஆலமர் கடவுளை அடைந்த முனிவர்கள் அவனையே கடவுளாகவும் , ஆசிரியனாகவும் கொண்டமையறிக . படமூக்கப்பாம்பு - படத்தையுடைய கொடிய பாம்பு . ` காணா ` என , இறைவன் நிலையை அவன் திருக்கோயிலுக்குத் தந்துரைத்தருளினார் .

பண் :

பாடல் எண் : 9

தண்காட்டச் சந்தனமுந் தவள நீறும்
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று
எரிவீசி யிரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே

பொழிப்புரை :

மேகலையணிந்து கார்மயிலின் சாயலைக் கொண்டு நீலமலைபோன்று விளங்கும் உமாதேவியார் ஒரு பங்கில் கலந்து நின்று கடைக்கண்ணைச் செலுத்திக் காண , சந்தனமும் , வெண் ணீறும் குளிர்ந்து விளங்க , தழைவிரவித் தொடுக்கப்பட்ட கொன்றைக் குறுமாலையைச் சூடி , எண்ணற்ற இறந்தோருடைய இடமாகிய முது காட்டில் நின்று எரிஏந்தி இரவில் ஆடும் இறைவர் விரும்பி உறையும் வெண்காடே வெண்காடே என்று பலகாலும் நினைந்து வாழ்த்துவீ ராயின் கெடாத வலிய வினைகளாகிய நோய்களைக் கெடுத்தல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருவெண்காட்டினை எடுத்தோதி யருளியது . தண் - தண்மை . தவளம் - வெண்மை . ` கொன்றைக் குறு மாலை ` என மாற்றியுரைக்க . கண்ணியை , ` குறு மாலை ` என்றார் . ` சந்தனமும் நீறும் தண்மையைக் காட்ட , கொன்றை மாலை சூடி இரவு ஆடும் இறைவர் ` என்க . கண் காட்டா - கண்ணைக் காட்டி ; கடைக் கண்ணைச் செலுத்தி , கருவரை - நீலமலை . ` போல் ` என்பது அசை . காஞ்சி - மேகலாபரணம் . கார்மயில் அம் சாயலார் - கார் காலத்து மயில் போலும் சாயலை உடையவராகிய உமாதேவியார் ; மயில் பொலிவுபெறுவது கார்காலத்தே யாதலின் , அதனையே உவமித்தார் . இனி , ` கரிய மயில்போலும் ` எனலுமாம் . ` கார்மயிலஞ் சாயலார் ` என்பது ஒரு சொல் தன்மைப்பட்டு , ` கருவரையனைய ` என்றதற்கு முடிபாயிற்று . ` சாயலார் கலந்து கண்காட்டாக் காண நின்று இரவு ஆடும் இறைவர் ` என்க . எண் காட்டாக்காடு - அளவில்லாத காடு ( ஈமங் ) கள் . ` அளவில்லாத காடுகள் ` என்பது , ` ஈமந்தோறும் ` எனப் பொருள் தந்ததாயினும் , ` உலகம் ஒடுங்கிய வெறுவெளி ` என்பதை உள்ளீடாக உடையது . வீடாத - கெடாத . வீட்டலாம் - கெடுக்கலாம் .

பண் :

பாடல் எண் : 10

தந்தையார் தாயா ருடன்பி றந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே

பொழிப்புரை :

ஒருவருக்குத் தந்தை யார் ? தாய் யார் ? உடன் பிறந்தார் தாம் யார் ? தாரம் யார் ? புத்திரர் யார் ? தாம் தாம் தமக்கு என்ன தொடர்புடையர் ? நிலவுலகிற் பிறந்தது தந்தை முதலியவரோடு முன்னேயும் கூடிநின்றோ ? இறப்பது அவர்களோடு பின்னும் பிரியாது கூடிநிற்கவோ ? ஆகவே சிந்தையீர் , பொய்யான இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா . உமக்கு ஓர் உறுதி சொல்லக் கேண் மின் . ஒளிவீசித் திகழும் மதியும் கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் முடியை உடைய எந்தையாரது திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயிலெழுவார்க்குப் பெரிய வீட்டுலகில் நிலை பெற்றிருத்தல் கைகூடும் . ஆகவே அதனைச் செய்ம்மின் .

குறிப்புரை :

இத்திருப்பதிகத்துள் இதுகாறும் தலங்களுள் சில வற்றை எடுத்தோதிய குறிப்பினால் இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றிலும் சென்று வழிபடுதலை விதித்தருளி , இறுதியில் இத்திருத்தாண்டகத்தினால் , ` சுற்றத் தொடர்பால் மயங்காது . இறை வனது திருவைந்தெழுத்தை மனம்பற்றி ஓதுமாறு ` அதனை அறிவுறுத் தருளுகின்றார் . ` தந்தை ஆர் , தாய் ஆர் ` எனப் பிரிக்க . ` ஆர் ` என்றதனை ` உடன் பிறந்தார் ` என்றதற்கும் கூட்டுக . தாரம் - மனைவி . ` யார் ` என்னும் வினாவினைக் குறிப்பு , ` என்ன தொடர்பு உடையர் ` என்னும் பொருளுடையதாய் , ` யாதொரு தொடர்பும் உடையரல்லர் ` எனப் பொருள் தந்து நின்றது . இவை அனைத்திற்கும் , ` ஒருவர்க்கு ` என்னும் முறைதொடர் பெயரை முதற்கண் வருவித்து உரைக்க . இங்ஙனம் உரைக்கவே , உலகர் கூறும் , ` தந்தை ` முதலிய முறைகள் எல்லாம் போலியே என்று அருளியவாறாயிற்று . அங்ஙனம் அருளினமைக்குக் காரணம் , ` உற்றார் ஆர்உளரோ - உயிர்கொண்டு போம்பொழுது ` ( தி .4. ப .9. பா .10.), ` செத்தால் வந்துதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் ` ( ப .62. பா .1.) என்றாற் போல்வனவற்றால் இனிது விளக்கப்பட்டன . ` தாம் தாம் ஆர் ` என்றது , இனி , ` தாம் தாம் தமக்கு என்ன தொடர்புடையர் ` என்றருளிய தாம் . அஃதாவது , ` தாமே தம்மைக் காத்துக்கொள்வதாக நினைத்தலும் மயக்க உணர்வேயாம் ` என்றபடி . ` அது . தமக்கு இறுதி முதலியன வந்தவிடத்துத் தம்மால் ஒன்றும் ஆகாமையான் இனிது உணரப்படும் ` என்பது திருக்குறிப்பு . ` வந்தவாறு எங்ஙன் போமாறு ஏது ` என்றது , ` நிலவுலகிற் பிறந்தது , இங்குப் பிணிப்புற்று நிற்கின்ற தந்தை முதலியவரோடு முன்னேயும் கூடி நின்றோ ? இறப்பது அவர்களோடு பின்னும் பிரியாது கூடி நிற்கவோ ? அவ்வாறின்றி அவரவர் முன்னும் தொடர்பில்லாதவராய் இருந்து , பின்னும் தொடர்பில்லாதவராய்ப் போகவோ ? என்னும் பொருட்டாய் , ` அனைவரும் முன்னும் பின்னும் ஏதும் தொடர்பில்லாத தமியரேயன்றோ ` எனப் பொருள்தந்தது . ஓர்ந்துணராதபோது , தந்தை தாய் முதலியவர்களும் . தாமும் தமக்கு உறுதி செய்பவர் போலத் தோன்றினும் , ஓர்ந்துணருங்கால் அவை அனைத்தும் போலியே ஆம் என்பார் , ` மாயமாம் இதற்கு ஏதும் மகிழ வேண்டா ` என்றருளிச்செய்தார் . இதற்கு ஏதும் மகிழ வேண்டா - இதனால் சிறிதும் மயங்கற்க . ` ஆதலின் , சிந்தையீர் , இதற்கு ஏதும் மகிழ வேண்டா ` என உரைக்க . ` ஆரே , எங்ஙனே , ஏதோ ` என்னும் ஏகார ஓகாரங்கள் அசைநிலை . ` திகழ்மதி ` என்றதனால் பிறையினது தட்பத்தையும் , ` வாளரவு ` என்றதனால் பாம்பினது கொடுமையையும் குறிப்பித்தருளினார் . திளைத்தல் - நட்புக்கொண்டு விளையாடி மகிழ்தல் . ` மதியும் அரவும் திளைக்கும் சென்னியை ( தலையை ) உடை யவன் ` எனவும் , ` எந்தை ` எனவும் அருளியவாற்றால் , ` அவனே எல்லாப் பொருளையும் தாங்குபவனும் , துன்பம் நீங்கி இன்பம் பெறச் செய்பவனும் , யாவர்க்கும் உறவினனும் ` என்பதனை அறிவுறுத் தருளினார் . ` அன்ன பெரியோனது திருப்பெயரே திருவைந்தெழுத்து ` என்பார் , ` எந்தையார் திருநாமம் நமச்சிவாய ` எனவும் , ` அதனை எஞ்ஞான்றும் காதலாகி ஓதி உணரும் தன்மையால் , துயில்நீங்கி உணர்வு உண்டாகும்பொழுது அதனையே உணரும் உணர்வு உடையவரே வினைத்தொடக்கு அகன்று வீடுபெறுவர் ` என்பார் , ` நமச்சிவாய என்று எழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாம் ` எனவும் அருளிச்செய்தார் . இருக்கல் ஆம் - இருத்தல் கூடும் . இவ்வாறு பொய் அனைத்தையும் அகற்றி உண்மையை அறுதியிட்டு அறிவுறுத் தருளியதனால் , இத் திருத்தாண்டகம் அரியதோர் உறுதித் திருத் தாண்டகமாதல் காண்க .

பண் :

பாடல் எண் : 1

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

பெரிய பூமியாகியும் , நீராகியும் , தீயாகியும் , எறியும் காற்றாகியும் , ஆகாயமாகியும் , ஞாயிறாகியும் , அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும் , இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும் , பெருமையுடையதாகிய நன்மையும் , சிறுமை உடையதாகிய குற்றமும் , பெண்ணும் , ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம் , உருவம் , அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும் , நேற்று ஆகியும் , இன்று ஆகியும் , நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .

குறிப்புரை :

இத்திருப்பதிகத்துள் முதல் திருத்தாண்டகமாகிய இதனுள் முதற்கண்ணே இறைவனது எட்டுரு ( அட்டமூர்த்த ) நிலை அருளிச்செய்யப்பட்டது . அஃது ஏனைய எல்லாவற்றினும் சிறப்புடையது ஆகலின் , அட்ட மூர்த்தத்தை , ` நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாசம் , ஞாயிறு , திங்கள் , இயமானன் ` எனக் கூறுதலே முறை யாயினும் , அவற்றைச் செய்யுளுக்கேற்ப வைத்து அருளினார் என்க . இருநிலம் - பெரிய பூமி . ` இயமானன் ` என்பது , ` யஜமானன் ` என்னும் வடசொல் திரிபு ; இஃது உயிரைக் குறிப்பது ; திருக் கோவையார் உரைத் தொடக்கத்தில் , வேட்போன் ` என மொழி பெயர்த்துக் கூறினார் பேராசிரியர் . எறியும் காற்று - வீசுகின்ற காற்று . அருநிலைய - அழிவில்லாத நிலையை உடைய ; திங்கள் - சந்திரன் . சந்திரனை இவ்வாறு சிறப்பித்தது , தக்கனது சாபத்தால் அழிவெய்தாது நின்ற நிலையைக் கருதி . ஞாயிறு - சூரியன் . அட்டமூர்த்தி - எட்டுரு உடையவன் . ` நிலம் முதலியனவாகியதனால் எட்டுருவாகி ` என்க . பெருநலம் - பெருமையை உடையதாகிய நன்மை . நலத்தை ` பெருமையை உடையது ` என்றதனால் , ` குற்றம் சிறுமையை உடையது ` என்பது பெறப்படும் . ` இப்பெருமை சிறுமை ` என்பன இயைபின்மை நீக்கிய விசேடணங்கள் என்க . பிறர் உரு - ஏனையதேவரது வடிவங்கள் . ` தம் உரு ` என்றது , சிவபிரானது ` அருவம் , உருவம் , அருவுருவம் ` என்னும் மூவகைத் திருமேனிகளையும் . ` சிவதன்மம் , சிவயோகம் , சிவஞானம் ` என்பவற்றால் எய்திநின்றோரது உருவங்களை . நெருநல் - நேற்று ; ஐகாரம் சாரியை . நிமிர் - நீண்ட . சடையை , ` புன்சடை ` என்றல் , உலகியலுக்கு ஒவ்வாமைபற்றி . ` நின்றவாறு ` என்பதனை எழுவாயாகவும் , ` ஆகி ` என்பனவற்றை அதன் பயனிலைகளாகவும் கொண்டு ` நின்றவாறு ஆகி ` எனத் தனித்தனி எண்ணி முடிக்க . ` நின்றவாறு ` என்பதில் , நிற்றலையே , ` ஆறு ` என்றாராகலின் , அத்தொடர் , ` நின்றமை , என்னும் ` தொழிற்பெயர்ப் பொருட்டாய் ஒரு சொற்றன்மை எய்தி நின்றது . தொழிற்பெயர் எழுவாயாய் நிற்குமிடத்து , வினையெச்சமும் , இரண்டாவது முதல் ஏழாவது ஈறாக உள்ள வேற்றுமைகளும் பயனிலையாய் நிற்கும் என்பது , ` அவன் வந்தது நடந்து ; சென்றது விரைந்து ; உண்டது சோற்றை ; போழ்ந்தது வாளால் ` என்றாற்போல்வனவற்றால் அறியப்படும் . இத்தொடர்களில் பயனிலைகளாய் நிற்கும் வினையெச்சத்திற்குப் பின்னும் , வேற்றுமைகட்குப் பின்னும் எழுவாய்க்கண் உள்ள தொழிற்பெயர்களே மீளச் சொல்லத்தக்க சொல்லெச்சங்களாய் எஞ்சி நிற்கும் ; அத்தொழிற் பெயர்கள் , ` இம்மகன் நேற்று யான்கண்ட மகன் ` என்றல்போல எழுவாய்க்கண்பொதுவாயும் , பயனிலைக்கண் சிறப்பாயும் நிற்கும் ; ஆயினும் , அவ்வெச்சத்தை வெளிப்படக் கூறின் அத் தொடர்கள் இனியவாய்த் தோன்றா என்னுங் கருத்தான் அவை எஞ்சி நிற்கவைத்தே வழங்குவர் என அறிக . இவற்றுள் , வினையெச்சம் பயனிலையாய் நிற்றலை , ` அவற்றுள் , நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே ` ( தொல் . அகத்திணை யியல் . சூத் . 2) என்பதின் உரையுள் , இளம்பூரணரும் சிறிது உரைத்தார் . இனி , ` எம் அடிகள் நின்றவாறு வியக்கத்தக்கது ` என ஒருசொல் எஞ்சி நின்றதென , அதனை வருவித்து முடித்தலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 2

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

மண் ஆகியும் , விண் ஆகியும் , மலையாகியும் வயிரமாகியும் , மாணிக்கமாகியும் , கண்ணாகியும் , கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும் , நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும் , பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் , எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .

குறிப்புரை :

` கண்ணுக்கு , பெண்ணுக்கு , எண்ணுக்கு ` என்னும் நான்கனுருபுகள் , ` அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம் ` என்பது போல ஏற்புடைப் பொருட்கண் வந்தன . கலை - நூல் , கலைஞானம் - நூலறிவு . ` ஒடுக்கம் ` எனப் பொருள்தரும் . ` லயம் ` என்னும் வடசொல் , ` பிர ` என்னும் இடைச்சொல்லோடு கூடி , ` பிரளயம் ` எனவரும் . தோற்ற ஒடுக்கங்கள் கால தத்துவத்திற்கு உட்பட்டு நிகழ்வன . சுத்தமாயா புவனங்கள் கால தத்துவத்திற்கு அப்பாற்பட்டவை ; ஆகவே , ` பிரளயத்துக்கு அப்பால் உள்ள அண்டம் ` என்றது , சுத்தமாயா புவனத்தை என்பது பெறப்பட்டது . அவை பலவாயினும் , சுத்த மாயையின் விளைவாக நோக்குமிடத்து ஒன்றாதல் பற்றி , ` ஓர் அண்டம் ` என்றார் . சுத்தமாயா தத்துவங்களும் , புவனங்களும் கால தத்துவத்திற்கு அப்பாற்பட்டமை பற்றி , ` நித்தம் ` எனப்படும் என்பது , ` சுத்த தத் துவம் சிவன்றன் சுதந்திர வடிவமாகும் - நித்தம் என்றுரைப்பர் காலம் நீங்கிய நிலைமை யாலே ` என்பதனால் ( சிவஞானசித்தியார் . சூ . 1-66) உணரப்படும் . எண் - எண்ணுதல் ; ஆராய்தல் ; அஃது ஆராய்ச்சிக்குப் புலனாம் பொருள்மேல் நின்றது ; அதனை உயிர் அறிவின்கண் பதிவிப்பது எழுத்தோசை ( நாதம் ) ஆதலின் ` எண்ணுக்கு ஓர் எழுத்து ` என்று அருளினார் . எழும் சுடர் - தோன்றி விளங்கும் ஒளி ; என்றது , சிவபிரானது தடத்த நிலையை . அந்நிலை படைப்புக் காலத்து விரிந்தும் , ஒடுக்கக் காலத்துக் குவிந்தும் வருதல் பற்றி , ` எழுஞ்சுடர் ` எனப்பட்டது ; ` விரிந்தனை குவிந்தனை ` ( தி .2. ப .30. பா .3) எனத் திருஞானசம்பந்தரும் , ` விரிந்தானைக் குவிந்தானை ` ( ப .86. பா .6) என சுவாமிகளும் அருளிச்செய்ததும் இது நோக்கி என்க . வருகின்ற திருத்தாண்டகங்களில் , ` பரஞ்சுடராய் ` என்பது தவிர்த்துப் பிறவாறு வரும் சுடர்கள் யாவும் இந்நிலையையே குறிக்கும் என்க .

பண் :

பாடல் எண் : 3

கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

மலையாகியும் களர்நிலமாகியும் காடாகியும் , ஆறாகியும் , வாய்க்காலாகிய வழியாகியும் , கடற்கரைக்கழியாகியும் , புல்லாகியும் , புதராகியும் , பூடு ஆகியும் , நகர் ஆகியும் , புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும் , சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும் , போக்கு வரவு ஆகியும் , அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும் , நீராகியும் , நெல்லாகியும் , நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .

குறிப்புரை :

கல் - மலை . ` அளறு ` என்பதுபோல , களர் நிலத்தை , ` களறு ` எனவும் வழங்குபவர் . கான் - காடு . ` காவிரி ` என்றது பொதுப் படப் பிற யாறுகளையும் கொள்ள நின்றது . கால் - யாறுகளினின்றும் பிரிந்துசெல்லும் வாய்க்கால் . ஆறு - வழி ; ` வாய்க்காலாகிய வழி ` என்க . கழி - கடற்கரைக் கழி . புரம் - பல நகரங்கள் . ` புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி ` என்றது , ` அந்நகரங்கட்கு அழிவுமாய் ` என்றவாறு . ` சொல்லுக்கு ` என்னும் நான்கனுருபையும் , மேலைத் திருத்தாண்டகத்திற் கூறிய வாறே கொள்க . சுலாவு - போக்குவரவு . சூழல் - ( அப்போக்கு வரவிற்கு வேண்டப்படும் ) இடம் . ` நெல்லாகி ` என்றதனை , ` நீருமாகி ` என்றதன் பின்னர்க் கூட்டி உரைக்க ; என்னை ? நிலமும் நீரும் இயைவதனால் உண்டாகும் பயனே நெல் ஆதலின் ; ` நீரு நிலனும் புணரி யோரீண் டுடம்பு முயிரும் படைத்திசி னோரே ` ( புறம் - 18) என்றதும் , இது நோக்கி .

பண் :

பாடல் எண் : 4

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

காற்றாகியும் , கரியமுகிலாகியும் , இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம் மூன்றாகியும் , கனவாகியும் , நனவாகியும் , இரவாகியும் , நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும் , இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும் , ஒலிக்கும் கடலாகியும் , அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும் , நீறணிந்த கோலத்தன் ஆகியும் , நீறணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும் , நீண்ட ஆகாயம் ஆகியும் , அவ்வாகாயத்து உச்சியாகியும் , உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும ஏற்றுக் கொண்டவனாகியும் , இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .

குறிப்புரை :

எட்டுருவில் ஒன்றாதல் பற்றி , மேல் , ` எறியும் காற்றுமாகி ` என்று அருளி , ஈண்டு , கார்முகிலோடு ( கரிய மேகத்தோடு ) இயைபுடைமை நோக்கி , ` காற்றாகி ` என்று அருளிச்செய்தார் , மேல் அருளிச்செய்த , ` நெருநல் ` முதலிய மூன்றும் நாள்களையே குறித்தன . ஈண்டு , ` காலம் மூன்றாய் ` என்றது , நொடியும் , நாழிகையும் முதலாகப் பலபடவரும் காலப்பகுதிகள் அனைத்தையும் குறித்தது . கங்குல் - இரவு . கூற்று - இயமன் , ` கொல்களிறு ` உவமையாகுபெயர் . ` கூற்று உதைகொல் களிறுமாகி ` என்பதே பாடம் போலும் ! இது , கூற்றுவனது தோற்ற ஒடுக்கங்களைக் கொள்ள வைத்த குறிப்புமொழி என்க . குரை கடல் - ஒலிக்கின்ற கடல் . கடற்குக் கோமான் - வருணன் . ` நீற்றான் ` என்றது , நீறணிந்த கோலத்தை மேற்கொண்ட நிலையையும் . ` நீறேற்ற மேனி ` என்றது , அந்நிலைக்கு உரிய வடிவத்தையும் குறித்தன . ` விசும்பு ` என்றது அனைத்துலகங்களின் முடிவையும் , ` விசும்பின் உச்சி ` என்றது , அவைகளைத் தோற்றியும் ஒடுக்கியும் நிற்கும் நிலையையும் குறித்தன . ஏற்றான் - உலகத்தின் தொழிற் பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டவன் . ஏறு - இடபம் . ` அதனை ஊர்ந்த செல்வன் ` என்றது , அங்ஙனம் ஏன்றுகொண்டு நிற்கும் தலைவன் ( பதி ) என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

தீயின் வெம்மையாகியும் , நீரின் தண்மையாகியும் , நிலத்தின் திண்மையாகியும் , திசைகள் ஆகியும் , அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வமாகியும் , தாயாகியும் , தந்தையாகியும் , சார்தற்குரிய பற்றுக்கோடாகியும் , நாண் மீனாகியும் , ஞாயிறாகியும் , குளிர் மதியமாகியும் , காயாகியும் , பழங்கள் ஆகியும் , பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும் , அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .

குறிப்புரை :

திண்மை , நிலத்தின் குணம் ; இது கூறினமையால் , ` தீ , நீர் ` என்றவற்றினும் , அவற்றது தட்ப வெப்பங்களாகிய குணங்களையே கொள்க . திசைத் தெய்வம் - திசைக் காவலர் . திசைகளைத் தனித்தனி நோக்கி அருளிச்செய்தலின் , ` ஓர் தெய்வமாகி ` என்று அருளினார் . சார்வு - சார்பு ; துணை ; பற்றுக்கோடு . தாரகை - விண்மீன் ; இது முதலிய மூன்றும் வானத்திலுள்ள ஒளி மண்டிலங்களை நோக்கி அருளிச் செய்தவாறு . ` இரதமாகி ` என்பதும் உடம்பொடு புணர்த்தலாற் கொள்ளப்படும் . இரதம் - சுவை . நுகர்வான் - துய்ப்பவன் ; இனம் பற்றி ஒருமையாக அருளிச்செய்தார் . ` நீ , நான் என்பன , முன்னிலை , படர்க்கை ` என்னுந் துணையாய் நின்றன ; இவற்றானே , ` அவன் ` என்னும் படர்க்கையும் கொள்ள நின்றது . நேர்மை - நுண்மை .

பண் :

பாடல் எண் : 6

அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்கள் ஆகியும் , ஆதியாய வேதங்கள் ஆகியும் , அரிய மந்திரங்கள் ஆகியும் , ஐம்பூதங்களின் தலைவராய தேவர்கள் ஆகியும் , புகழ்ச் சொற்களேயன்றி இகழ்ச் சொற்களும் ஆகியும் , வெள்ளிய மதி ஆகியும் , உலகிற்கு முதல் ஆகியும் , வினையாகியும் , கங்கை , காவிரி , கன்னி போன்ற தீர்த்தங்களுக்குரிய தேவர்கள் ஆகியும் , கடலாகியும் , மலையாகியும் , கழி ஆகியும் , எங்கும் நிறைபொருளாகியும் ஏறூர்ந்த தலைவன் ஆகியும் , தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .

குறிப்புரை :

` ஆதியாய வேதம் ` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று . மறை - மந்திரம் . ` ஐம்பூதம் ` என்றது அவற்றுக்குத் தலைவராய தேவரை . ` மதி , கங்கை , காவிரி , கன்னி ` என்றனவும் அவற்றது தெய்வங்களையே என்க . ` சொல் ` என்றது , புகழையாதலின் , பங்கம் என்றது அவற்றுக்கு மறுதலையாய இகழ்ச்சியை . எனவே , வேதத்துள் , கொடியாரை வைதும் . தேவரை வாழ்த்தியும் கூறும் பலவகைச் சொற்களாயும் நின்றமை அருளியவாறாம் . ஆதி - உலகிற்கு முதற்காரணம் ; மாயை . பான்மை - வினை . கன்னி - குமரித்துறை . கடல் முதலிய மூன்றும் ஆகுபெயரால் அவற்றை அடுத்துள்ள இடங்களை உணர்த்தின . அது , ` எங்குமாய் ` என்ற குறிப்பாற் பெறப்படும் . தொகுக்கப் பட்ட அகரத்தை விரித்து , ` செல்வனாகி எழுஞ்சுடராய எம் அடிகள் ` என அடையாக்கி உரைக்க .

பண் :

பாடல் எண் : 7

மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.

பொழிப்புரை :

மாதாபிதா மக்கள் ஆகியும் , அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும் , கோதாவிரி குமரிகள் ஆகியும் , கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும் , உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும் . ` யாது நிகழினும் நிகழ்க ` எனக் கவலையற்றுத் தன்னையே நினை வார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிற முடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்

குறிப்புரை :

` மக்கள் ` என்றது முறைப்பெயர் . ` கடல் ` என்றது அதன்கண் உள்ள நீரை ; அது , ` மறிகடல் ` என்பதனாற் பெறப்பட்டது . ` விசும்பு ` என்றது , அதன் குணமாகிய ஓசையைக் குறித்தது . ` கோதாவரி , குமரி ` என்றனவும் அவற்றது நீரையே , ` குழகனாகி , புனிதனாகி , எளிதேயாகி ` என்னும் எச்சங்கள் , ` வண்ணர் ` என்பதில் தொக்குநின்ற ` ஆயவர் ` என்பதனோடு முடியும் . ` குழகன் , புனிதன் ` என்பன , பன்மை ஒருமை மயக்கம் . ` எளிது ` என்றது , ` எளிய பொருள் ` என்னும் பொருளது . ` யாதானும் ` என்புழி , ` ஆக ` என்பது வருவிக்க . ` யாது நிகழினும் நிகழ்க ` எனக் கவலையற்றுத் தன்னையே நினைவார் என்றபடி . சுவாமிகள் , தம்மைச் சமணர்கள் கல்லில் கட்டிக் கடலில் வீழ்த்தியபொழுது , ` எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை ` என நினைந்து பாடினமையைப் பெரிய புராணத்துட் காண்க . அழல் வண்ண வண்ணர் - நெருப்பினது நிறம்போலும் நிறம் உடையவர் .

பண் :

பாடல் எண் : 8

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

பசுவும் பசுவிடத்துத் தோன்றும் ஐம்பொருளும் ஆகியும் வேள்விக்குரியன அறியும் அறிவும் , வேள்வித்தீயும் , அத்தீயுட்பெய்யும் உணவும் ஆகியும் , நாவும் நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும் , நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும் , பூவும் , அப்பூவிற் குரிய ஒப்பற்ற நாற்றமும் ஆகியும் , நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும் , தேவர்களும் தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும் , செழுஞ்சுடராய் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .

குறிப்புரை :

அழல் - நெருப்பு ; என்றது வேள்வித்தீயை . அவி - வேள்வித்தீயில் இடப்படும் உணவு . ` நாவுக்கு ` என்பது முதலிய நான்கனுருபுகட்கு , மேல் உரைத்தவாறே உரைக்க . ` நாதமாகி , வேதத்தின் உள்ளாகி ` என்பவற்றையே , ` நாதனாகி , வேதத்தின் உள்ளோனாகி ` என ஓதியருளினார் . ` நாதம் ` என்றது சூக்கும வாக்கையும் , ` வேதத்தின் உள் ` என்றது , வேதத்தின் பொருளையும் என்க . ` வாசமாய் உள்ளால்புக்கு நின்றானாகி ` என்றது , ` நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகி ` என்றபடி . ` தே ` என்னும் அஃறிணைச் சொல் , பன்மையாய் நின்றது . ` முதல் ` என்றதும் அவ்வாறு நின்று தலையாய தேவரைக் குறித்தது . சென்று - பரவி .

பண் :

பாடல் எண் : 9

நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும் , தன்னை யடைந்தார் யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும் , நீள அகலங்களும்ஆகியும் , புகழும் புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும் , பூமியின் பொறைக்குணமும் , பண்ணின் இனிமைப் பண்பும் , அப்பண்புடைய பாடலும் ஆகியும் , மேலான ஒளியாகியும் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்

குறிப்புரை :

` நீர் ` என்றது , அதன் குணமாய சுவையை . ` நீள அகலம் ` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று . ` நீளம் , அகலம் ` என்பன அப்பண்புகளையே குறித்து நின்றன . ` தான் ` என்பது , ` அகலம் ` என்பதனைச் சார்ந்துநின்ற அசைநிலை . ஏகாரம் , எண் ணிடைச்சொல் ; அதனை , ` நீளம் ` என்பதனோடும் கூட்டுக . நிழல் - ஒளி . ` உச்சி ` என்றது , எல்லையை , பேர் - புகழ் . ` பாராகிப் பண்ணாகிப் பாடலாகி ` என்றதனை , ` பெருமையாகி ` என்பதன் பின்னர்க் கூட்டுக . பார் - பூமி ; என்றது , தாங்குதலாகிய அதன்செயலை . பரஞ்சுடர் - மேலான ஒளி . ` அடிகள்தாம் , எய்தானாகி , ஈசனாரும் பரஞ்சுடரும் ஆயினும் , சென்று நின்றவாறு ` எனக்கொண்டு கூட்டி , எடுத்துக்கொண்டு உரைக்க . ` எய்தான் ` என்றது , பன்மை ஒருமை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 10

மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

பொழிப்புரை :

மாலும் , நான்முகனும் ஆகியும் , பெரும்பூதங்கள் ஆகியும் , பெருக்கமும் , சுருக்கமும் , மகிழ்ச்சியும் , ஆகியும் , எட்டுத் திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும் , பரப்பும் பரலோகமும் ஆகியும் , பூலோக புவலோக சுவ லோகங்களும் , அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும் , புராணனுக்குரிய பழமையாகியும் , தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும் , அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும் , எழும் ஒளிப்பிழம்பாகியும் , எம்பெருமான் விளங்கி நின்ற வாறு வியக்கத்தக்கதாகும் .

குறிப்புரை :

` மாபூதம் ` என்றது அவற்றோடு இயைந்து நிற்கும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களையும் , மற்றும் அப்பூதங்களின் கூறாய தாத்துவிதங்களையும் என்க . மருக்கம் - பெருக்கம் ; ` இது , மருங்குசெல்வது ` என்னும் பொருள்பற்றி வந்தது . அருக்கம் - சுருக்கம் ; இது , ` அருகுதல் ` என்பதுபற்றி வந்தது . ` பால் ` என்றது , ` திசைப்பிரிவு ` என்னும் பொருளது . ` எண்டிசை` என்பதில் உள்ள , ` எட்டு ` என்பதனை , ` பால் ` என்றதனோடும் கூட்டுக . பரப்பு - அகலமும் நீளமும் கூடியது . பரலோகம் - எல்லாவற்றினும் மேலாய சிவலோகம் . ` பூதங்கள் ` என்றது , அவற்றின் உட்பட்ட அண்டங் களை . ` புராணன் தானேயாகி ` என்றதும் , ` புராணம் ` எனப்படும் பழமையாகி என்றதேயாம் . ` இயலாதன ` ` இயல்விப்பான் ` என்பன , ` ஏலாதன ` எனவும் , ` ஏல்விப்பான் ` எனவும் மருவி நின்றன ; அது ஏற்பிப்பான் என்னாது ஏல்விப்பான் என்றதனானே அறியப்படும் . இயலாதன - தானின்றித் தாமாக நடைபெறாதன ; அவை சட உலகங்கள் . ` இயல்விப்பான் ஆய் ` என்றது , ` அவைகளை நடை பெறுவித்தற்கு அமைந்து என்றவாறு `. ` ஏல்விப்பானாய் ` என்னும் எச்சம் . ` எழுஞ்சுடராய் ` என்பதில் உள்ள , ` ஆய் ` என்பதனோடு முடியும் . மருக்கம் - மனம் ., அருக்கம் - உணவு என்பர் சுவாமிநாத பண்டிதர் . ( தேவாரத் திருமுறை . தலவரிசை - 1911, பக் . 1228.)

பண் :

பாடல் எண் : 1

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

பொழிப்புரை :

ஏறூர்ந்த செல்வனே! எனக்கு அப்பனும் அம்மையும் தமையனும் நீ. அன்புடைய மாமனும் மாமியும் நீ. பிறப்பு, குடிமை முதலியவற்றான் ஒப்புடைய மனைவியரும், ஒள்ளிய செல்வமும் நீ, ஒரு குலத்தவரும், பிற சுற்றத்தவரும், நிலையாக நின்று வாழும் ஒப்பற்ற ஊரும் நீ, நுகர்ச்சிப் பொருள்களாகவும், ஊர்தி வகைகளாகவும் தோன்றுபவனும் நீ, இப்பொன்னும் இம்மணியும் இம்முத்தும் நீ, எனக்குத் துணையாய் உடனின்று உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்னைத் துறப்பிப்பானும் நீ. நீயே எனக்குக் கடவுள்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், தமக்கு எல்லாப் பொருளும் இறைவனேயாகக் கொண்டு நின்ற தம் அன்பின் மேலீட்டினை அருளிச் செய்தது.
அப்பன் - தந்தை. அம்மை - தாய். ஐயன் - தமையன். ``அன்புடைய`` என்றது, இடைநிலை விளக்காய் நின்று, ``அப்பன்`` முதலிய எல்லாவற்றொடும் இயையும். ஒப்புடைய மாதர் - ``பிறப்பே குடிமை`` (தொல் - பொருள். 269) முதலிய எல்லாவற்றாலும் ஒத்த மனைவியார். ``பெண்ணிற் பெருந்தக்கயாவுள`` (குறள். 54) என்றவாறு, ஒப்புடைய மனைவியை எய்துதல் மிக்க புண்ணியத்தானன்றிக் கூடாமையின், அவ்வாறு எய்திய மனைவி என்பார், ``மாதர்`` எனப் பன்மையால் அருளிச் செய்தார். பொருள் - பணம். `அறநெறியான் வந்த பொருள்` என்பார், ``ஒண்பொருள்`` என்று அருளிச்செய்தார்; ``ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு`` (குறள். 760.) என்றார், திருவள்ளுவநாயனாரும். குலம் - கிளை; இதனை, `சாதி` என்ப. அஃது ஆகுபெயராய், `குலத்தவர்` எனப் பொருள் தந்தது. சுற்றம் - மேற்கூறிய அப்பன் முதலியவரோடு நேராகவும், வழிவழியாகவும் தொடர்புபட்டு வருவோர். ``ஓர் ஊர்`` என்றது, `நிலையாக நின்று வாழும் ஊர்` என்றவாறு. துய்ப்பன - நுகர்ச்சிப் பொருள். உய்ப்பன - ஊர்தி வகைகள்; அவற்றை வேறு ஓதினார், பொருளுடையார்க்கு அவை மிக்க பயனையும், பெருமையையும் தருதலின். செல்வம் உடையார் என்பதை விளக்க, `யானை எருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச்...சென்றோர்` (நாலடி.3) என ஊர்தியையே பிறரும் சிறந்தெடுத்துக் கூறினார். `துய்ப்பனவும் உய்ப்பனவுமாய்` என ஆக்கம் வருவிக்க. துணையாய் - உலகியலாய குழியில் வீழாது காக்கும் துணைவனாய் உடன்நின்று. துறப்பித்தல், உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்க. பொன் முதலிய மூன்றினும் நின்ற இகரச் சுட்டுக்கள், `இவ்வுலகத்தாரைப் பிணிக்கின்ற` என்னும் பொருளுடையன. இம்மூன்று தொடர்களையும், `தோற்றுவாய் நீ` என்பதன் பின்னர்க் கூட்டுக. இறைவன் - கடவுள். ``ஏறு ஊர்ந்த செல்வன்`` என்றது, `என்னை மேற்கதிக்கண் உய்ப்பவன்` என்றபடி, ``அப்பன் நீ`` என்பது முதலிய எல்லாவற்றிற்கும் இயைய. `எனக்கு` என்பதனை முதற்கண் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 2

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

பொழிப்புரை :

அழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரும், ஆன் அஞ்சிலும் ஆடுதலை உகந்த வரும், செம்பவள நிறத்தினரும், செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையராயினார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோரிடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை? யாவர்க்கும் எளியோம் அல்லோம்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் தோன்றக்கூறியருளியது.
வெம்ப - நாம் வருந்தும்படி. வருகிற்பது அன்று - வரவல்லது அன்று; `கூற்றம்` என்பது சொல்லால் அஃறிணையாதலின், `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும். பைய நையும் - மெல்ல வருந்துகின்ற; மென்மை முறை முறையாக வருதல் குறித்தது. பரிவு - துன்பம். `வினைப்பகையும் பரிவும் தீர்ந்தோம்` என இயையும்; `பரிவு தீர்ந்தோம்` என உம்மையின்றி ஓதுதல் பாடம் அன்று. இடுக் கண் - இடையூறு. `எங்கெழில் என் ஞாயிறு` என்பது, `உலகம் எவ் வகையாக நிலைமாறினாலும் எமக்கு அதனால் வரக்கடவது என்னை?` என்பதை உணர்த்துதற்குக் கூறுவதோர் வழக்கு. இதனை, தி.8 திருவாசகம் (திருவெம். 19) சிவஞானசித்தி (சூ. 8. 31.) சீவகசிந்தா மணி (கனகமா. 237) இவற்றுள்ளும் காணலாம். `யாவர்க்கும் எளியோம் அல்லோம்` என்க. ``செங்குன்ற வண்ணர்`` என்புழி நின்ற வண்ணம், வடிவைக் குறித்தது. `என் சிந்தையார் ஆயினார்; அதனால்` என எடுத்துக்கொண்டுரைக்க. ``நம்மேல்`` என்பது முதலியன, உயர்வு பற்றி வந்த ஒருமைப் பன்மை மயக்கம்.

பண் :

பாடல் எண் : 3

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

பொழிப்புரை :

கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?

குறிப்புரை :

இத் திருத்தாண்டம் இறைவனது தன்வயமுடைமையை உணர்த்து முகத்தால், உயிர்களிடத்து நிகழும் அவனது கைம்மாறற்ற உதவியை அருளிச்செய்தது.
ஆட்டுவித்தலாவது, உயிர்களை அவற்றது, `யான் எனது` என்னும் செருக்குக் காரணமாகப் பல்வேறு உடம்பாகிய பாவையுட் படுத்து, வினையாகிய கயிற்றினால் கீழ் மேல் நடு என்னும் உலக மாகிய அரங்கினிடத்து, வினையை ஈட்டியும் நுகர்ந்தும் சுழலச் செய்த லாகிய கூத்தினை இயற்றுவித்தல். ``கோனாகி யான் எனதென்றவ ரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே`` (தி.8 திருவா. திருச்சதகம். 15.) என்றருளிச்செய்தார், மாணிக்கவாசகரும். இவ்வாறு ஆட்டுவித்தல், உலகத்தைப் படைத்தலும் காத்தலும் ஆகிய தொழில்களால் ஆவதாகும்.
அடக்குவித்தல், மேற்கூறியவாறு ஆட்டுவித்தலால் ஆடி வரும் உயிர்கட்கு எய்ப்புத் தோன்றாதவாறு, ஆடலை இடையே சிறிது காலம் நிறுத்தி, யாதும் செய்யாதவாறு அமைந்திருக்கச் செய்தல்; இஃது, உலகம் முழுவதையும் அழிக்கும் முற்றழிப்பினால் நிகழும்.
ஓட்டுவித்தலாவது, பின் நின்று ஆட்டுவிக்கின்ற தன்னை உள் நோக்கி உணராவண்ணம் உயிர்களைப் பிற பொருள்களை நோக்கிப் புறத்தே ஓடுமாறு ஓட்டுதல்; இது, `மறைத்தல்` என்னும் தொழிலினால் ஆவதாகும்.
உருகுவித்தலாவது, புறமே ஓடிப் பயன் காணாது உவர்ப் பெய்திய உயிர்களைப் பின்னர் உள்நோக்கித் தன்னை உணருமாறு செய்து, தன்னையும் தனது உதவியினையும் நினைந்து நினைந்து அன்பு கூர்ந்து மனம் உருகுமாறு செய்தல்.
பாட்டுவித்தலாவது, அவ்வுருக்கத்தின்வழித் தோன்றும் வாழ்த்துக்களையும் புகழ்ச்சிகளையும் வாயார எடுத்துப் பாடுமாறு செய்தல். இப்பாட்டுக்கள் தாமே பாடுவனவும், முன்னுள்ளனவுமாய் அமையும்.
பணிவித்தலாவது, அன்புமிக்கெழுந்து பெருக தன்முனைப்பு அடியோடு நீங்குதலால், தன்முன்னே நிற்றல் இன்றி, நிலஞ்சேர வீழ்ந்து பணியச்செய்தல். உருகுவித்தல் முதலிய மூன்றும் முறையே மன மொழி மெய்கள் என்னும் மூன்றும் தன்வழி (இறைவழி)ப் படச் செய்விப்பனவாதல் காண்க. இம் மூன்றும், `அருளல்` என்னும் தொழிலால் அமைவன. மறைத்தலும் அருளலும் ஆகிய இத் தொழில்களைக் குறித்தே.
``போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்``
(தி.8 திருவா. சிவபு. 43.)
எனவும்,
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
(தி.8 திருவா. திருவண். 52.)
எனவும் அருளிச்செய்தார், ஆளுடைய அடிகள்.
``காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே`` என்றது, `உயிர்கள் உன்னைக் காணாமை, நீ காட்டுவியாமையேயாம் எனவும், ``காண்பாரார் காட்டாக்கால்`` என்றது, `நீ காட்டுவியாத பொழுது, உயிர்கள் தாமே உன்னைக் காண வல்லன அல்ல` எனவும், `உயிர்கள் இறைவனைக் காண்டல் அவன் அருளால் அன்றி ஆகாது ஆதலின்` முத்திக் காலத்திலும் உயிர்கட்கு முதல்வனது உதவி இன்றியமையாதது` என்பதனை உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்து இனிது விளங்க அருளிச்செய்தவாறு.
நெற்றிக்கண், இறைவனது இயற்கைப்பேரறிவினை உணர்த்து மாதலின், ``கண்ணுதலாய்`` என விளித்தருளியது, காட்டுதல் முதலிய பலவற்றிற்கும் உரிய இயைபு உணர்த்தப்பட்டது என்க.
``கண்ணுதலாய்`` என்பதனை முதற்கண் வைத்து, `நீ` என்னும் சொல்லெச்சத்தினை, ஆட்டுவித்தல் முதலிய எல்லாவற்றிற்கும் வருவிக்க. இறைவன், உயிர்களைத் தொழிற்படுத்துதல் பெத்த காலத்தில் திரோதான சத்தியும், அதன் வழித்தாயவினையும், அதன் வழியராகிய காரணக் கடவுளரும் முதலிய வாயில்களாலும், முத்திக் காலத்தில் அருட்சத்தி வாயிலாலும் ஆகலின், `ஆட்டினால், ஓட்டி னால்` என்பனபோல அருளாது, `ஆட்டுவித்தால் பாட்டுவித்தால்` முதலியனவாக அருளினார். அதனால், இறுதிக்கண், ``காட்டாக்கால்`` என்றதற்கும், `காட்டுவியாக்கால்` என்றலே திருவுள்ளம் என்க.
`பாடுவிப்பித்தால்` என்றே ஓதற்பாலதாயினும், செய்யுள் இன்பம் நோக்கி, `பாட்டுவித்தால்` என்று அருளிச்செய்தார். இன்றியமையாமை நோக்கி இவ்வாறு சொற்களை ஆக்கி அளித்தல், தலைவராயினார்க்கு உரியது; அதனால், அச்சொல், ஆசிரியரது ஆணையாற் கொள்ளப்படுவதொன்றாம் என்க. இனி, `பாடுவிப்பித் தால்` என்பதே, எதுகை நோக்கி வேண்டும் விகாரங்கள் எய்தி, `பாட்டு வித்தால்` என நின்றது என்றலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 4

நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.

பொழிப்புரை :

வீடுபேற்றினை அடைய உரியவருடைய வீடு பேறாய் நின்றவனே! ஞானமே வடிவானவனே! நன்மையை விளக்கும் சுடரே! நான்கு வேதங்களுக்கும் அப்பால் நின்ற சொல்பதத்தாராகிய அபர முத்தருடைய சொற்பதத்தையும் கடந்து நின்ற சொல்லற்கரிய சூழலாய்! இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே! கனகமும் மாணிக்கமும் ஒத்த நிறத்தினை உடைய எம் கடவுளே. யான் உன்னை விடுவேன் அல்லேன்.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், இறைவன் தமக்கு அனுபவப் பொருளாயின அருமையை அருளிச்செய்தது.
நற்பதத்தார் - நன்னிலையை (வீடுபேற்றினை) அடைய உரியவர்; இதன்கண் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, `முருகனது குறிஞ்சி` என்றாற்போலக் கிழமைக்கண் வந்தது. உண்மை வீடுபேறு இறைவனேயாகலின், ``நற்பதத்தார் நற்பதமே`` என்று அருளினார். ஞான மூர்த்தீ - அறிவு வடிவாயவனே. `நலச் சுடர்` என்பது, மெலிந்து நின்றது. `நன்மையை விளக்கும் சுடர்` என்பது பொருள். தீமையாகிய உலகைக்காட்டும் சுடர் (மாயை) போலாது, தன்னையே காட்டும் சுடர் என்றபடி, நால்வேதங்கள் வைகரி வாக்குக்களாதலின், அவற்றிற்கு அப்பால் நின்ற சொற்பதம் என்றது, நாதத்தையாம், அப்பதத்தை அடைந்தவர் அபரமுத்தர் எனப்படுவர். அவரது சொற்பதம் என்றது, சூக்குமை வாக்கையேயாம். சூக்குமை வாக்கையும் கடந்தவன் இறைவனாகலின், `சொலற்கரிய சூழலாய்` என்றருளினார். `இது` என்றது, `நற்பதம்` முதலாக மேற்கூறிய தன்மைகள் அனைத்தையும் தொகுத்துச் சுட்டியது. `இது உன் தன்மை` என்பதன் பின், `ஆயினும்` என்பது வருவிக்க. நிற்பது ஒத்து - நிற்பதுபோலக் காட்டி. நிலை இலா - நில்லாது அலைகின்ற. `நெஞ்சந் தன்னுள் வந்து` என ஒருசொல் வருவித்து முடிக்க. `நெஞ்சு வழியாக உடம்பில் நின்றான்` என்பார், `நெஞ்சந்தன்னுள் வந்து உடம்பே புகுந்து நின்ற` என்றார். நிலாவாத - நிலையில்லாத. நெஞ்சின் தன்மையையும், உடம்பின் தன்மையையும் எடுத்தோதியது. அவை அவன் புகுதற்கு உரியனவாகாமையை விளக்குதற்கு. தேற்றேகாரமும் அதுபற்றியே வந்தது. நெஞ்சினுள் நின்று எல்லாப் பயனையும் தருதலின், `கற்பகமே` என்றும், இதனை இனிதுணரப்பெற்றமையின், `விடுவேனல்லேன்` என்றும் அருளினார். கனகம் - பொன். மாமணி - மாணிக்கம். `கனக நிறத்து, மாமணி நிறத்து` எனத் தனித்தனி இயைக்க. `கடவுள்` என்னும் தொழிற்பெயர் ஆன் விகுதி ஏற்று `கடவுளான்` என நின்றது; `கடத்தலை உடையவன்` என்பது பொருள். இஃது இவ்விகுதி இன்றியே ஆகுபெயரால் அப்பொருள் குறித்தல் பெரும்பான்மை.

பண் :

பாடல் எண் : 5

திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்
அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் மக்கள் வாழும் ஊர்க்கு உரிய இயல்பு கூறும் முகத்தால், நன்மக்கட்கு உரிய ஒழுக்க நெறியை வகுத்தருளிச் செய்தது.
``திருக்கோயில்`` என்பது, சிவபிரான் கோயிலைக் குறிக்கும் மரபுச் சொல்; திரு இல் ஊர் - நன்மை இல்லாத ஊர், ``அணியாத ஊர் ,பாடா ஊர், ஊதா ஊர், உண்ணா ஊர்`` என்பன, இடத்து நிகழ் பொருளின் தொழிலை இடத்தின் மேல் ஏற்றிக் கூறிய பான்மை வழக்கு. பரு - பருமை; அஃது ஆகுபெயரால், உடம்பைக் குறித்தது. கோடி - வளைந்து; வணங்கி, ``கோடிப் பாடா`` என, சினைவினை முதல்வினையோடு முடிந்தது. பாங்கு - அழகு. ``தளிகள்`` என்றதும் திருக்கோயிலையே. பேரூராயின், நாள்தோறும் பலரும் ஓரிடத்துச் சென்று வழிபடுதல் அரிதாகலின், அதன்கண் பலதளிகள் வேண்டும் என்க. இதனால், ``பலதளிகள் இல்லா ஊர்`` என்றது, பேரூரினை யாயிற்று; அடுக்க அருளும் இரண்டு ஊர்களும் அவையே என்க. ``சங்கம்` என்றது, வலம்புரிச் சங்கினை; என்னையெனின், அதுவே மங்கல வாச்சியம் ஆகலின், விதானம் - மேற்கட்டி`` பந்தர்; வெண் கொடியும் மங்கலத்திற்கு உரியது. விதானமும், வெண்கொடிகளும் விழா நாட்களில் எடுக்கப்படுவனவாம். `அரும்பு` என்பது, `அருப்பு` என வலிந்து நின்றது; ``அரும்பு`` என்றது, போதினை (பேரரும் பினை). `போது` என்றதும், போதாய் உள்ள நிலையினையே. `மலரைப் போதாய் உள்ள நிலைக்கண்ணே பறித்து` என்க. இட்டு - சிவபிரானுக்குச் சாத்தி - சிவபிரானுக்கு என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. `உண்ணா` என்னும் எதிர்மறை, `இட்டு` என்னும் எச்சத் திற்கும் உரித்து. `ஆகிய அவை எல்லாம்` என்க. `அடவி` என்னும் வட சொல், பெருங்காட்டினைக் குறிக்குமாதலின், அது, `காடு` என்னும் பொதுச்சொல்லின் பொதுமை நீக்கி நின்றது. ``காடே`` என்னும் ஏகாரம். `இவ்வூரின்கண் வாழ்வார் விலங்குகளே` என்பார், ஊரை ``அடவி காடே`` என அருளினார். நிலத்தின்கண் வாழ்வோராலே நிலம், `நன்று` என்றும், `தீது` என்றும் சொல்லப்படும் என்பதனை,
``நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ரா டவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே`` (புறம். 187.)
என்னும் ஔவையார் பாட்டானும் அறிக.

பண் :

பாடல் எண் : 6

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

பொழிப்புரை :

திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாராயின், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாராயின், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராராயின், உண்பதற்குமுன் பல மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாராயின், கொடுநோய்கள் கெட வெண்ணீற்றை அணியாராயின், அங்ஙனம் செய்யாதாரெல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவராவர். அவர்கள் பிறந்த முறைமை தான் யாதோவெனின், தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலேதான்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், மேல் எதிர்மறை முகத்தால் ஓதிப் பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்கட்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தியருளியது.
`திருநாமம்` என்றதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல். `திருநாமமாகிய அஞ்செழுத்து` என்க. ``அஞ்செழுத்தும்`` என்னும் உம்மை, சொல்லுதல் யார்க்கும் எளிதாதலைக் குறித்து நின்றது. திறம் - இயல்பு. `ஒருகாலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. சூழ்தல் - வலம்வருதல். வெண்ணீறணிதலால் உடல்நோய் நீங்குதல் கண்கூடாய்க் காணப்படுவதாகலின், அது நோக்கியேனும் அணிகிலர் என்பார். ``அருநோய்கள் கெட வெண்ணீறு அணியா ராகில்`` என்று அருளிச்செய்தார்.
`அளி அற்றார்` என்பது, `தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்` எனப் பொருள் தரும். அதனால், ஈண்டு அஃது, `இறைவனது திருவருளை இழந்தவர்` என்னும் பொருள் தந்து நின்றது. பிறந்தவாறு ஏதோ என்னில் - பிறந்த முறைமை தான் யாதோ என ஆராயின். பெருநோய்கள் - தீராத கொடுநோய்கள். `மிக நலியச் செத்து` என இயையும். பெயர்த்தும் செத்து - வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து, பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே - மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றவரே யாவர்.
``ஒருகாலும்`` என்பதனை, அது கூறாத இடங்களிலும் கூட்டுக. அஞ்செழுத்துச் செப்புதல் முதலியவற்றை முற்பிறப்பிற் பயிற்சியால் பல்கால் செய்து பயன் பெறாதவர், ஒன்றையேனும் ஒரோஒருகாற் செய்யினும் அடுத்த பிறப்பில் அதனைப் பல்காற் செய்து பயன் பெறுவர்; அவ்வாறு செய்யாதவர் ஒரு பிறப்பிலும் பயன் பெறார் என்பார், வருகின்ற பிறப்புக்களில் நிகழ்வனவற்றை அருளிச் செய்தார். எனவே, `பிறந்தவாறு ஏதோ` என வினவினார்க்கு. `முன்னும் பின்னும் இவ்வாறு வினைச்சூழலால் பிறந்து இறந்து செல்லும் முறையாற் பிறந்ததன்றி விசேடம் ஒன்றும் இன்று` என விடுத்தவாறாயிற்று.
இவ்விரு திருத்தாண்டகங்களிலும், திருக்கோயில், திருவைந்தெழுத்து முதலியவற்றை விதந்தோதினமையால், பிற கோயில்கள், பிற நாமங்கள் முதலியவற்றாலும் பிறவி நீங்கப் பெறார் என்பது பெறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே.

பொழிப்புரை :

நின்னைப்போல் ஆவார் பிறர் இன்றி நீ ஒருவனே ஆனாய், நினைப்பார் தம் மனமாகிய நிலத்துக்கு ஒப்பற்ற வித்தும் ஆனாய், தலைவன் ஆனாய், அரசர்களுக்கு ஒப்பற்ற அமுதம் ஆனாய்; மறை நான்கும் ஆறங்கமுமாய், பொன்னும் மணியும் போகமும் ஆகும் பூமிமேல் புகழ்தற்குரிய பொருளானவனே! நீ எவ்வாறெல்லாம் ஆனாய் எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றிச் சிற்றறிவினையுடைய யான் எவற்றை எஞ்சாது சொல்லிப் புகழ்வேன்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், இறைவனது பெருமை உயிர்களால் அளவிட்டு உணரலாகாமையை அருளிச்செய்தது.
``நின் ஆவார்`` என்பதில், `போல` என்னும் உவம உருபு விரித்துரைக்க. இதனால், இறை (கடவுள்) ஒன்றேயாய், எல்லா வற்றினும் மேலானதாய் நிற்றல் அருளப்பட்டது; ``தனக்குவமை இல்லாதான்`` (குறள்-7,) என்றதும் இவைநோக்கி என்க. ``மனத்துக்கு`` என்பதனை, `மனமாகிய நிலத்துக்கு` என்க. அன்பால் நினைப்பவரது உள்ளத்தில் முளைத்து விளங்கலின், ``வித்து`` என்று அருளினார். மன் - தலைவன். ``மன்னவர்`` என்றது, முறையை (நீதியை) முட்டாமற் செலுத்தும் அரசரை. வையகத்தை யெல்லாம் காத்து அதற்கு இன்பஞ் செய்கின்ற அவரைக் காத்து அவர்க்கு இன்பம் செய்தலின், ``மன்னவர்க்கு ஓர் அமுதமானாய்`` என்று அருளினார். ஓர் - ஒப்பற்ற. இப்பொருள் பற்றி மேலும் (ப.87 பா.6) கூறப்பட்டமை காண்க. போகம் - நுகர்ச்சிப் பொருள். இறைவன் ஒருவனே பொருள் சேர் புகழுடையவனாகியும், புகழ்வார்க்கு அவர் விரும்பிய பொருளை விரும்பியவாறே கரவாது வழங்குபவனாகியும் நிற்றலால், அவன் ஒருவனே புகழத் தக்கவன் என்பார், ``பூமி மேல் புகழ்தக்க பொருளே`` என்று அருளினார்;
``தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்வி னும்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்`` (தி.7. ப.34. பா.1.)
என்றருளிய ஆளுடைய நம்பிகளது திருமொழியையும் காண்க. என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் - எவ்வாறெல்லாம் ஆனாய், எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றி. ஏழையேன் - சிற்றறிவினை உடையயான். என் சொல்லி ஏத்துகேன் - எவற்றை எஞ்சாது சொல்லிப் புகழ்வேன்; `எத்துணையவாகச் சொல்லினும் அவை முடியா` என்றபடி.

பண் :

பாடல் எண் : 8

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.

பொழிப்புரை :

தந்தையே! ஐயா! உன் அடியவன் ஆகிய என்னை என் அன்பு கொண்டு பிணிப்புண்ணச் செய்தாய்; உனது திருவருள் நோக்கத்தாலே என்னைத் தீர்த்த நீர் ஆட்டித் தூயவன் ஆக்கினாய். அடைதற்கு மிகவும் அரியையாகிய நீ எனக்கு மிகவும் எளியை ஆயினாய்; என்மீது இரங்கி எனை ஆண்டுகொண்டு என்செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன்னின்று ஏற்றுக்கொண்டாய். ஒரு நெறிப்படாத பித்தனேனும் யாதுமுணராத பேதையேனேனும், வீணில் உழலும் பேயேனேனும் இழிவு மிகுந்த நாயேனேனும் நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தனை. நின் அருட்செயல்கள் யாவும் எம்போலியரது அளவிற்கு உரியனவோ? அல்ல; அல்ல; எம் பெருமான் திருக்கருணை இருந்த தன்மையைக் காட்டுவனவே அவை.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் இறைவன் தம்மை எளிவந்து ஆண்டருளிய பெருங்கருணைத் திறத்தை நினைந்து மகிழ்ந்தருளிச் செய்தது,
அத்தா - தந்தையே. அன்பு, நாயனாருடையது. எனவே ``ஆர்த்தாய்`` என்றது, `பிணிப்புண்ணச் செய்தாய்` என்றவாறு. `உனக்குத் தொண்டுபடுதல் அன்பினாலாயினும் அச்சத்தினாலாயினுமாகும். அவற்றுள், அடியேனை அன்பினாலே தொண்டனாகச் செய்தாய்` என்றதாம். தீர்த்த நீர் - தூய நீர்; அதனால் ஆட்டுதல், குற்றத்தைக் கழுவுதற்பொருட்டு. `அடியேனை மந்திர நீரால் ஆட்டித் தூய்மை செய்யாது, உனது திருவருள் நோக்கத்தாலே தூய்மை செய்து அருளினாய்` என்பார், `அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக்கொண்டாய்` என்றருளினார். `தீர்த்த நீராட்டுதலை அருள்நோக்கினாலே செய்தாய்` என்றதாம். ``கொண்டாய்`` என்றது, `தூயனாக்கினாய்` என்னும் குறிப்பினது. இங்ஙனம் கழுவவேண்டியது, சமண் சமயத்திற் படிந்திருந்த மாசு தீர்தற்பொருட்டு என்க. ``எத்துணையும்`` என்றதனை, ``எளியை ஆனாய்`` என்பதற்கும் கூட்டுக. நாயனாருக்கு மிக எளியனாகியது, அவர் யாதும் செய்யாதே அவர்தம் தமக்கையார் வேண்டிக் கொண்ட துணையானே இரங்கியருளியதாகும். ஏனையோர்க்கு அவ்வாறின்றி, அவர் தாமே பல்காலும் பணிந்து இரந்து, பல்வகைத் தொண்டுகளையும் செய்து நிற்பவும் அவர்க்குத் தன் திருவருளை வழங்கிலன் என்க. `இரங்கி ஆண்டுகொண்டு` என மாற்றி உரைக்க. ஏற்றுக் கொண்டாய் - என் செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன் நின்று ஏற்றுக்கொண்டாய். பித்தன் - ஒருநெறிப் படாதவன். பேதை - யாதும் உணராதவன். பேயன் - வீணில் உழல்பவன். நாயேன் - நாய் போன்றவன்; இழிந்தவன். இத்துணையவரும் தாமாக அருளிச் செய்தது, வஞ்சகராகிய சமணரது சொல்லின் வஞ்சத்தினை உணர மாட்டாது, அதனை மெய்யென்றே தெளிந்த நன்னெறியாகிய சிவ நெறியைக் கைவிட்டுச் சென்றமை கருதி. இத்துணை இகழ்வுடையேனாகிய என்னை ஆண்டுகொண்டது, யான் செய்த குற்றங்கள் அத்தனையையும் திருவுள்ளத்திற் கொள்ளாது ஒழிந்தமை யன்றி, அவையனைத்திற்கும் தீர்வுசெய்து அன்று என்பார், `பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே`` என்று அருளினார். ``கள்விகுதி``, `பிழைத்தவை` என்பதன் பின் வருதல்போல, ``பிழைத்தனகள்`` என விகுதிமேல் விகுதியாய்ச் சிறுபான்மை வந்தது. ``இத்தனையும்`` என்றது, ``அன்பால் ஆர்த்தாய்`` என்பது முதலாக மேல் அருளிய வற்றை. எம்பரமோ - எம்போலியரது அளவிற்கு உரியனவோ? அல்ல; இன்னதொரு பேரருள் எம்மாட்டு இருந்த தன்மையேயாம் என்க. `ஐயோ` என்பது இரக்கக் குறிப்பிடைச்சொல். ஐய - தலைவனே; இதனை, ``அத்தா`` என்றதன் பின்னர்க் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 9

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.

பொழிப்புரை :

சார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லா வற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். பிறப்பால் குடிமை நல்லேன் ஆயினும் என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், நாயனார், சமண் சமயம் சார்ந்திருந்த காலத்தில் இருந்த தம் நிலையை நினைந்து இரங்கி யருளியது.
குலம் - கூட்டம்; இனம். நாயனார், முன்பு சேர்ந்திருந்தது சமணர் கூட்டத்தில் ஆகலின், அதனை, `பொல்லேன்` என்றார். பொல்லேன் - தீயேன்; `இல்லாதது, இல்லாது, இல்லாத இல்லார்` என்னும் சொற்கள், `இல்` என்பது அடியாக வருதலின், `பொல்லாதது, பொல்லாது, பொல்லாத பொல்லார்` என்னும் சொற்கட்கு அடிநிலை, `பொல்` என்றே கொள்க. இஃது, `இல், இன்மை, இல்லாமை` என்றாற் போல வாராதாயினும், `பொல்லாங்கு, பொல்லாப்பு` எனவரும் என்க.
காத்து ஆள்பவரது (தமக்கையாரது) காவலை இகழ்ந்து சென்று குண்டரோடு கூடினமையின், `குணம் பொல்லேன்` என்றார். குறி - குறிக்கோள்; அது, தலைமயிரைப் பறித்தல் முதலியவற்றால் உடம்பை வருத்தி யொழிதலாகவே இருந்தமையின், `பொல்லேன்` என்றார். மக்களில் பலர் செய்கையால் தீயாராயினும் குறிக்கோள் அளவில் நல்லராதல் உண்டு; அவ்வாறும் இல்லை என்பார், ``குறியும் பொல்லேன்`` எனச் சிறப்பும்மை கொடுத்தோதினார். ``குற்றம்`` என்றது, குற்றமாகிய செயலை; அவை, `கடவுள் இல்லை` என்றல் முதலியன. கோலம் - வேடம். துறந்தார்க்கு அவரது வேடம் அவர்க்கும் பிறர்க்கும் நலம் பயப்பதொன்றாகலின், ``கோலமாய நலம்`` என்றும், அதுதான், உலகத்தார் கண்டோடிக் கதவடைக்கும் கோலமாய் இருந்தமையின், ``பொல்லேன்`` என்றும் ஓதினார்; நலம் பயப்பதனை, `நலம்` என்று அருளினார். `நான் பொல்லேன்` என்றது, ``குணம் நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் - மிகைநாடி மிக்க கொளல்`` (குறள். 504) என்றவாறு, `சிலவற்றாற் பொல்லேனாகாது, எல்லாவற்றாலும் பொல்லேனாயினமையின், யாவராலும் பொல்லேனாக ஒதுக்கப்பட்டேன்` என்றதாம். ``ஞானி அல்லேன்`` எனவும், ``நல்லாரோடு இசைந்திலேன்`` எனவும் அருளியது, `என்னை ஞானி எனவும், என்னால் இசைய (கூட)ப் பட்டாரை நல்லார் எனவும் மயங்கினேன்` என்றவாறு.
நடுவே நின்ற விலங்கு - மனவுணர்வுடைய மக்கட்கும், அஃது இல்லாத பிற உயிர்கட்கும் இடையே நிற்கின்ற ஒருசார் விலங்குகள்; அவை யானை, குரங்கு முதலாயின. மக்கட்கேற்ற சிறப்பு மன உணர்வுடைமையால், ``நடுவே நின்ற விலங்கல்லேன்`` என்றும், அச்சிறப்புணர்வினாற் பயன் கொள்ளாது ஒழிந்தமையால், ``விலங்கல்லாது ஒழிந்தேனல்லேன்`` என்றும் அருளினார்.
``நடுவே நின்ற`` என்றது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம்; இயைபின்மை நீக்கிய விசேடணமாகக்கொள்ளின், அதனாற் போந்த பயன் இன்றாதல் அறிக. தொல்காப்பியத்துள்,
``மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே`` (தொல். மரபியல் - 33)
என்னும் சூத்திரத்தின்பின்,
``ஒருசார் விலங்கும் உளஎன மொழிப`` (தொல். மரபியல் - 34)
என்னும் சூத்திரத்தைப் பாடம் ஓதி, `இதுவும் அது` என, கருத்துரையை மேலைச் சூத்திரக் கருத்துரையொடு மாட்டெறிந்து, `விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராம் என்றவாறு` எனப் பொழிப்புரைத்து, `அவையாவன, கிளியும் குரங்கும் யானையும் முதலாயின` என எடுத்துக்காட்டும் காட்டிப் போந்தார், இளம்பூரண அடிகள்; ஆயினும் அச்சூத்திரத்தைப் பேராசிரியர் பெற்றிலாமையின், அதன் பொருளை, மேலைச் சூத்திரத்துள், ``பிறப்பு`` என்றதனாற் கொண்டார். இவற்றால், `விலங்கினுள் ஒரு சாரன மன உணர்வுடையன` என்பது இனிது விளங்கிற்று.
வெறுப்பன - வெறுக்கத்தக்க சொற்கள்; அவை, `பொய், புறங்கூற்று, கடுஞ்சொல், பயனில்சொல்` என்பன. `வெறுப்பனவும்` என்னும் உம்மை, `மேலனவற்றோடு இவையும் வல்லேன்` என, இறந்தது தழுவிற்று. ``மிகப் பெரிதும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. `இல்லம்` என்பது, `இலம்` என இடைக் குறைந்து நின்றது; `குடிமை` என்பது பொருள். `பிறப்பால் குடிமை நல்லேனாயினும், எனது செயல்களால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன்` என்பார், `இலம் பொல்லேன்` எனவும், அச்செயல்கள்தாம் இவை என்பார், ``இரப்பதே ஈயமாட்டேன்`` எனவும், அருளிச்செய்தார். இச்செயல்களால் அறிவுடையோர், `இவன் குலனுடையானாயின், இலன் என்னும் எவ்வம் உரைத்தலும், ஈயாமையும் உடையவன் ஆகா னன்றே` (குறள் - 223.) என என் குடிமையை இகழ்வாராயினர் என்றவாறு. ``தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் - தோன்றலிற் தோன்றாமை நன்று`` (குறள் - 236) என்றபடி, `இவ்வாறு எல்லா வற்றாலும் யாவரினும் கடைமையை எய்திய யான் எதற்கு மனிதனாய்ப் பிறக்கவேண்டும்` என்பார், ``என்செய்வான் தோன்றினேன் ஏழையேன்`` என்று அருளினார்.
``குலம் பொல்லேன்`` முதலியன, பண்பு முதலியவற்றின் தன்மையை அதனை உடைய பொருள்மேற் சார்த்தி யுரைத்தனவாம். இதனுள், ``குலம் பொல்லேன்`` என்பது முதலாக, ``விலங்கல்லா தொழிந்தே னல்லேன்`` என்பது ஈறாக உள்ளனவற்றை: சமணரொடு கூடியிருந்த நிலைபற்றி ஓதினார்; அதனால், அவற்றின்கண் உள்ள வினைக்குறிப்பு முற்றுக்கள், `பொல்லேனாகி யிருந்தேன்` என்றாற் போல இறந்தகாலக் குறிப்பினவாம். ஏனையவை, எஞ்ஞான்றும் தம்பால் உள்ள நற்பண்புகளால் தாம் அமையாது அருளிச்செய்தனவாம். இவை யாவும், `இறைவன் தனது பெருங்கருணையால் என்னை வலிந்து ஆட்கொள்ளாதொழியின், என் நிலையாதாய் முடியும்` என நினைந்து இரங்கியருளியனவேயாம் என்க.

பண் :

பாடல் எண் : 10

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.

பொழிப்புரை :

சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம், உலகியலைப் பற்றாது, மெய்ந் நெறியையே பற்றி நிற்கும் தமது உள்ள நிலையை அருளிச்செய்தது.
சங்க நிதி - சங்கு வடிவாகக் குவிக்கப்பட்ட நிதி. பதுமநிதி - தாமரை வடிவாகக் குவிக்கப்பட்ட நிதி. இனி, `சங்கம், பதுமம்` என்பன சில பேரெண்கள்` எனவும் கூறுப. `இந்நிதிகள் குபேரனிடத்து உள்ளன` எனவும், `அவற்றிலிருந்து எத்துணைப் பொருள் கொள்ளினும் அதனாற் குறையாது முன்னையளவில் நிரம்பி நிற்கும் தெய்வத் தன்மை உடையன` எனவும் சொல்லுப. தரணி - பூமி. `வான் தருவரேனும்` என இயையும். ``இரண்டும் தந்து`` எனவும், ``தரணியொடு வான் தருவரேனும்`` எனவும் அருளியன, `அவைகளை ஒரு சேரக் கொடுப்பினும்` என்றபடியாம். ``தருவரேனும்`` என்றது, `மனிதருள் சிலர் தரவல்லராயினும்` என்றவாறு. மங்குவார் - நிலையின்றி அழிவார். `மங்குவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒரு பொருளாக மதிப்போம் அல்லோம்` என்க. மாதேவர்க்கு - சிவ பெருமானார்க்கு. இதனை, `மாதேவரிடத்து` எனத் திரித்துக்கொள்க. ஏகாந்தர் - ஒருதலையாய் உணர்வுடையவர்; `பிற தேவரிடத்துப் பலதலைப்பட்டுச் செல்லாதவர்` என்றபடி. ஒரு சாரார், ஏகாரத்தைப் பிரிநிலை இடைச்சொல்லாக்கி, `காந்தர்` எனப் பிரித்து, `அன்பு உடையவர்` என உரைப்பர். `அல்லாராகில் மதிப்போமல்லோம்` என இயையும்.
அங்கம் - உறுப்பு. தொழுநோய் - குட்டநோய். இதனை அருளியது, காட்சிக்கு இன்னாராதலைக் குறித்தற்கு. `காட்சிக்கு இன்னாராவாரை அணுகிப் பணிபுரிதல் கூடாதாயினும் புரிவேம்` என்றல், திருவுள்ளம் என்க.
ஆ - பசு; இஃது, `உயிரோடு நின்றது, உயிர் நீத்தது` என்னும் இரண்டனையும் குறித்து நின்றது. ``ஆவுரித்துத் தின்று உழலும்`` என விதந்தோதியது, `புலையராவார் இவர்` என்பதும், `அவர் புலைய ராயினமை இத் தீத்தொழிலால்` என்பதும் உணர்த்தற்கு. தூய உடம்பினவாய், பிற அனைத்தையும் தூய்மை செய்வனவும் தேவர்கள் விரும்பி ஏற்பனவும் ஆகிய பால் முதலிய ஐந்தினையும் தருவனவாய், தேவரொடு வைத்து வழிபடப்படும் ஆவைக் கோறலாகிய தொழிலினும் தீயதொழில் பிறிதொன்று காணாமையின், அது செய்வாரைப் பிறர் யாவரும், `புலையர்` என்றிகழ்ந்தனர் என்பதாம். புலையர் - கீழோர். வடமொழியுள் இவரை, `சண்டாளர்` என்பர். `இறைவன் தன்னிடத்து உண்மை அன்பு உண்டாகப் பெற்றாரிடத்துப் பிறப்பின் சார்பால் உளவாகி, பல்வேறாகிய காரணங்களால் அகற்றப்படாது நிற்குங் குற்றங்களை நோக்கி அவரைக் கடிந்தொழியாது, அவர்தம் அன்பு ஒன்றையே நோக்கி அவரை உகந்தருளுவன்` என்பதும், பிறப்பு முதலியவற்றால் உயர்ந்தோரும் அவரை வணங்கற் பாலர் என்பது இறைவன் திருவுள்ளமாதலும் கண்ணப்ப நாயனாரது வரலாற்றால் இனிது விளங்கிக் கிடத்தலின், ``புலையரேனும் - கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில், அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளார்`` என்று அருளிச்செய்தார். இதனானே, `சிவனடியாரை` அவர்தம் பிறப்பு முதலியன நோக்கி இகழற்க` என விலக்கினமை பெற்றாம்.
`இறைவனிடத்து எத்துணைச் சிறந்த அன்பும் தொண்டும் உடையராயினும், இலராயினும் அவரை அவர்தம் பிறப்பு, தொழில் முதலியவற்றின் உயர்வு தாழ்வுகட்கேற்பக் கொள்ளுதல் உலகியல்` என்பதும், `பிறப்பு, தொழில் முதலியவற்றால் எத்துணை உயர்வு தாழ்வுகள் உடையராயினும், அவரை அவர்க்கு இறைவனிடத்துள்ள அன்பு, தொண்டு என்னும் இவற்றின் நிலைகட்கு ஏற்பக் கொள்ளுதல் மெய்ந்நெறி` என்பதும் இத்திருத்தாண்டகத்தால் இனிது விளங்கிக் கிடக்கின்றன.
இம் மெய்ந்நெறி முறைமை, `சண்டாளனாய் இருப்பினும், `சிவ` என்று சொல்வானேல், ஒருவர் அவனோடு பேசுக; அவனோடு வசிக்க; அவனோடு இருந்து உண்க` என, உபநிடதத்தினும் (முண்டகம்) கூறப்பட்டமை, பிரம சூத்திரம் நான்காம் அத்தியாயம் முதற்பாதம் பன்னிரண்டாம் அதிகரணத்துள் நீலகண்ட பாடியத்துக் காட்டப்பட்டது. எனினும், அம்மந்திரம் இக்காலத்து அவ்வுப நிடதத்துட் காணப்பட்டிலது; அது மெய்ந்நெறிப்பற்றின்றி உலகியற் பற்றே உடையோரால் மறைக்கப்பட்டது போலும்! அஃது எவ்வா றாயினும், வடநூற்கடலும் தென்றமிழ்க்கடலும் நிலை கண்டுணர்ந்த, சிவஞானபோத மாபாடிய முதல்வராகிய மாதவச் சிவஞான யோகிகள், மேற்காட்டிய உபநிடத மந்திரத்தையே, தமது கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதியில்,
``சிவனெனும் மொழியைக் கொடியசண் டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக
அவனொடு கலந்து பேசுக அவனோ
டருகிருந் துண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோ டுடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தால் ஐயனே கதிவே
றெனக்கிலை கலைசையாண் டகையே``
என மொழிபெயர்த்துக் கூறினார். இவற்றை எல்லாம் அறிந்த பின்பும், `இங்கு`, `சண்டாளன்` என்றது, ஜன்ம சண்டாளனை அன்று; கன்ம சண்டாளனையே; அஃதாவது, பிறப்பில் சண்டாளர் இனத்திற் பிறந்தவனை அன்று; உயர்ந்த வருணத்திற் பிறந்து, தனது சாதி தருமத்தில் வழுவினமையால் சண்டாளத்துவம் எய்தி நின்றவனையே` என மீளவும் தம் உலகியல் முறைமையினையே நிலைநிறுத்த முயல்வர் சிலர். இக்கருத்தினை உபநிடதம் வெளிப்படக் கூறாது செல்லினும், அதனை விளக்கவே புகுந்த சிவஞான யோகிகள் தாமும் கூறாதது என்னையோ என்க. இனி, மேற்கூறிய உபநிடத மந்திரத்தினையே உபவிருங்கணம் செய்யும் (வலியுறுத்திக் கூறும்) வாசிட்டலைங்க சுலோகம் ஒன்றை, காசிவாசி செந்திநாத ஐயர் அவர்கள் காட்டி யுள்ளார்கள்; அதனுள்ளும், சண்டாளனைக் `கன்ம சண்டாளன்` என விதந்தோதவில்லை. விதவாதவழி `சண்டாளன்` என்னும் சொல், இயல்பாய் உள்ள உண்மைச் சண்டாளனைக் குறித்தல் அன்றி, ஒரு காரணம் பற்றி அவனோடு ஒப்பிக்கப்படுவானைக் குறிக்குமாறில்லை. ஆகவே, ஓரிடத்தும் இல்லாத அப்பொருளை அச்சொல்லிற்கு யாண்டும் கற்பித்துக் கூறுதல், அச்சுருதிகளாலும் அவர் மனம் மெய்ந் நெறிக்கண் செல்லாமையையே காட்டுவதாகும். இத்தன்மையோரை நோக்கியே, ``பலநல்ல கற்றக்கடைத்தும் மன நல்ல ராகுதல் மாணார்க் கரிது`` (குறள் - 823) என்றருளினார், திருவள்ளுவநாயனார். ஆகவே, அவர் கூறும் அது, மெய்ந்நெறி முறைமை கூற எழுந்த உபநிடதங்கட்கும், திருமுறைத் திருமொழிகட்குங் கருத்தாகாமை அறிக. ``ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்` என்றெழுந்த நாயனார் திருமொழி, இவ்வகை விவாதங்கட்குச் சிறிதும் இடம் செய்யாது, பிறப்பால் புலையராயினாரையே குறித்தல் இங்குக் குறிக்கொண்டு உணர்தற்பாலதாகும்.

பண் :

பாடல் எண் : 1

ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்
அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
தலையதனிற் பலிகொண்டார் நிறைவாம் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்
மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்
கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.

பொழிப்புரை :

கண்ணப்பரது பூசையினையும் அன்புகருதி ஏற்றுக்கொண்ட காபாலியாராகிய சிவபெருமானார் நோய் தீர்த்து அடியேனை ஆளாகக் கொண்டவரும் , அதிகை வீரட்டானத்திருந்து ஆட்சி செய்பவரும் , பிரமனது சிரத்தைக் கொய்து கையிற் கொண்ட வரும் , அத்தலையோட்டில் பிச்சை ஏற்றவரும் , வாமனனாகி வந்து மண் இரந்து திரிவிக்கிரமனாய் வளர்ந்து மூவுலகையும் அளந்து மிக்க செருக்குற்ற நிலையில் அப்பேருடம்பின் உதிரத்தை வெளிப்படுத்தி அவனை அழித்தவரும் , மான்போன்ற உமையை இடப்பாகமாகக் கொண்டவரும் , மழு ஆயுதத்தை வலக்கையில் ஏந்தியவரும் , நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்துக் காமனை அழித்தவரும் ஆவார் .

குறிப்புரை :

ஆமயம் - நோய் . தாமரையோன் - பிரமதேவன் , ` அத் தலையதனில் ` என , சுட்டு வருவித்துரைக்க . நிறைவு - மிக்கசெருக்கு , ` வாமனனார் ` என்றது . திருமால் மகாபலியிடம் மூன்றடி மண் பெறுதற் பொருட்டுக் கொண்ட குறள் வடிவத்தை . மூன்றடி மண்பெற்று திரிவிக்கிரமனாய் மூவுலகத்தையும் அளந்து மகாபலியையும் பாதலத்தில் இருத்திய பின்னர்ச் செருக்குக்கொண்டு உலகத்தைத் துன்புறுத்தினமையால் , சிவபிரான் , திரிவிக்கிரமனை அழித்து அவன் முதுகெலும்பைத் தண்டாயுதமாகக் கொண்டருளினான் என்பது புராண வரலாறு ஆதலின் , ` வாமனனார் மாகாயத்து உதிரங் கொண்டார் ` என்று அருளிச்செய்தார் , மா காயம் - பேருடம்பு ; உலகினை அளந்த உருவம் . ` மானை இடப்பக்கத்திற் கொண்டார் ` என்க . ` உடல் கொண்டார் ` என்பது , ` அழித்தார் ` என்ற பொருளதாய் , ` காமனை ` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று . ` கண்ணால் நோக்கி உடல் கொண்டார் ` என இயையும் . ` கண்ணப்பர் பணியும் கொள் ` என்றது , ` விதிமார்க்கத்திற்கு முற்றிலும் மாறான பூசையையும் அவர் அன்பு காரணமாகக் கொண்டருளினார் ` என்றபடி . இதனால் , அன்பு ஒன்றையே இறைவர் சிறப்பாக விரும்புவது என்பது குறித்தருளிய வாறாம் . பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங் கருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ ( தி .8 திருவா . திருத்தோணோக்கம் .3) என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 2

முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார்
முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்
செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்
சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்
அடியேனை ஆளுடைய அடிக ளாரே.

பொழிப்புரை :

அடியேனைத் தமக்கு ஆளாகவுடைய தலைவர் ஆகிய சிவபெருமானார் உத்தமவிலக்கணமாகிய கீற்றுப் பொருந்திய மார்பினிடத்து முப்புரிநூல் பொருந்தக் கொண்டவரும் . பழைய பன்றியில் முளை போன்ற கொம்பினைப் பூணாகக் கொண்டவரும் , கிண்ணம் போன்ற அழகிய முலைகளையுடைய பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவரும் சிவந்த உடலில் வெண்ணீறு விளங்கக் கொண்டவரும் , தூய்மை நிறைந்து முறுக்குண்ட சங்கினாலியன்ற தோட்டினைக் கொண்டவரும் , அமரர் சூழ்ந்து சுடர் முடியால் தமது அடியைத் தொழக் கொண்டவரும் , அந்நாளில் தாருகாவன முனி பத்தினியர் இட்ட பிச்சையோடு அவர்களது அன்பினையும் கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

வரைமார்பு - கீற்றுப் பொருந்திய மார்பு . முயங்க - பொருந்த . முதுகேழல் - பெரிய பன்றி , முளை மருப்பு - முளையாகிய கொம்பு . ` பூணாக்கொண்டார் ` என மாறிக் கூட்டுக . திருமால் வராக அவதாரங்கொண்டு பூமியைப் பிரளய வெள்ளத்தில் ஆழாதபடி கொம்பில் ஏற்று நிறுத்தியபின்னர்ச் செருக்குற்று உலகைத் துன்புறுத்தினமையால் , சிவபிரான் அதனை அழித்து , அதன் கொம்பினை மார்பிற்கு அணிகலமாக அணிந்தனர் என்பது புராண வரலாறு . செப்பு - கிண்ணம் . ` செம்மேனியின்கண் ` என உருபு விரிக்க . துப்புரவு ஆர் - தூய்மை நிறைந்த . சுரி சங்கு - குவிந்த முகமுடைய சங்கு ; குழையேயன்றித் தோடும் சங்கினால் ஆயது என்க . ` அமரர் சூழ்ந்து சுடர்முடியால் அடி தொழவும் கொண்டார் ` என்க . பலி - பிச்சை ; ` அப்பலி ` என்றது , ` அந்நாளில் கொண்டபிச்சை` என்றவாறு . ` ஆயிழையார் ` என்றது , தாருகாவன இருடியர் பத்தினியரை .

பண் :

பாடல் எண் : 3

முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு
மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப
அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்
மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்
சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.

பொழிப்புரை :

சடையை முடியாகக் கொண்டவரும் , முதலில் காணப்படுகின்ற வெள்ளிய பிறைச் சந்திரனையும் படத்தால் மறைக்கும் இளம்பாம்பையும் உடன் உறையும்படி அம்முடிக்கண் கொண்ட வரும் , ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும் கழலினையும் ஒலிக்கும்படி அடிக்கண் கொண்டவரும் , கொடுமை குறையாத முயலகனை அடிக்கீழ்க் கொண்டவரும் , கூர்மையைக் கொண்டு நிரம்ப இலங்குகின்ற மழுவினை வலக்கையிற் கொண்டவரும் , திருமாலை இடப்பாகமாகப் பொருந்தக் கொண்டவரும் , துடியைக் கையிற் கொண்டவரும் , எலும்புக் கூட்டினைத் தோள் மேற் கொண்டவரும் ஆகிய சிவபெருமானாரே சூலை நோயைத் தீர்த்து அடியேனை ஆட் கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

முடி - சடைமுடி ; கொண்டார் - ( அதனை ) மேற் கொண்டார் . முளை - முளைத்த ; முதலிற் காணப்படுகின்ற . மூசுதல் - மொய்த்தல் ; அது படத்தால் மறைத்தலைக் குறித்தது . உடன் ஆக - உடன் உறையும்படி ; அம்முடிக்கண் கொண்டார் என்க . ` சிலம்பு ` என்புழித் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க . அலம்பு - ஓலிக்கின்ற . ஆர்ப்ப - ஒலிக்க . ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும் கழலினையும் ஒலிக்கும்படி ` அடிக்கண் கொண்டார் என்க . ` சிலம்பலம்பக் கழலும் ஆர்ப்ப ` என்பதே பாடம்போலும் ! வடி கொண்டு - கூர்மையைக் கொண்டு . ` ஆர்ந்து ` என்பதனை , ` ஆர ` எனத் திரிக்க . ` நிரம்ப இலங்குகின்ற ` என்பது பொருள் . திருமாலை இடப் பாகத்தே கொண்டமை மேலே ( ப .76. பா .1) காட்டப்பட்டது . துடி - உடுக்கை . ` தோள்மேல் ` என்றதுபோல . ` துடி கையிற் கொண்டார் ` என்க . கங்காளம் - பிரம விட்டுணுக்களது எலும்புக் கூடு . ` திரிவிக்கிரமனை அழித்துக்கொண்ட முதுகெலும்பு ` எனவும் கூறுப .

பண் :

பாடல் எண் : 4

பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்
பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்
அக்கினொடு படஅரவம் அரைமேற் கொண்டார்
அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்
கொடியானை யடலாழிக் கிரையாக் கொண்டார்
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்
செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.

பொழிப்புரை :

திருநீற்றுப் பையினையும் புலித்தோலையும் புயத்தில் கொண்டவரும் , பூதப் படைகள் தம்மைப் பக்கங்களில் சூடிக் கொண்டவரும் , அக்குமணியையும் படநாகத்தையும் இடுப்பின்மேல் கொண்டவரும் , தாம் படைத்தவையாகிய எல்லா உலகங்களையும் ஒடுங்குமாறு செய்தலைக் கொண்டவரும் , கொக்கிறகினையும் வில்வத்தினையும் முடித்த சடையில் கொண்டவரும் , கொடிய சலந்தராசுரனை ஆற்றல் மிக்க ஆழிக்கு இரையாகக் கொண்டவரும் , செந்நிறத் திருமேனி விளங்கக் கொண்டவரும் ஆகிய சிவனாரே கீழ்மையேனை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

பொக்கணம் - இப்பி வடிவாகச் செய்யப்பட்ட திரு நீற்றுச் செப்பு . இதனை , இக்காலத்தார் , ` சம்புடம் ` என வழங்குவர் . ` புயத்திற்கொண்டார் ` என்றதனால் , ` பொக்கணம் ` என்றது , திரு நீற்றுப் பையைக் குறித்தது என்க . புலித்தோலை அரையில் உடுத்தலே யன்றி , தோளில் இடுதலும் உண்டென்க . அக்கு - எலும்பு . ` அவை அடங்கவும் கொண்டார் ` என உம்மையை மாற்றியுரைக்க . அடங்க - ஒடுங்க . கூவிளம் - வில்வம் . ` கொண்டை ` என்றது , கட்டிய சடை முடியை . கொடியான் - சலந்தராசுரன் ; அடல் ஆழிக்கு இரையாக்கியது அவனையே என்பது வெளிப்படையாகலின் ` கொடியானை ` என்றே அருளிப் போயினார் . அடல் ஆழி - வெற்றியையுடைய சக்கரம் . செக்கர் - செவ்வானம் ; சிவப்புமாம் . செடியேன் . கீழ்மையேன் .

பண் :

பாடல் எண் : 5

அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்
அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரம்நற் பொருசிலையா வளைத்துக்கொண்டார்
மாகாளன் வாசல்காப் பாகக் கொண்டார்
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.

பொழிப்புரை :

அந்தகாசுரனைக் கூரிய சூலத்தால் அழுத்தி அவன் உயிரைக் கொண்டவரும் , திரிபுரம் அழிக்கச் சென்ற காலத்தில் உணர்தற்கரிய வேதத்தைத் தேர்க்குதிரையாக்கிக் கொண்டவரும் , ஆலால சுந்தரனை இரட்டைக் கவரி வீசக்கொண்டவரும் , சுடுகாட்டை நடனமாடுமிடமாகக் கொண்டவரும் , மந்தர மலையைப் போரிடுதற்குரிய வில்லாக வளைத்துக் கொண்டவரும் , மாகாளனை வாசல் காப்பாளனாகக் கொண்டவரும் , தந்திர மந்திரங்களில் பொருந்தி நின்று அருளுதலைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானார் சமணரிடமிருந்து என்னை நீக்கி என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

அந்தகன் - அந்தகாசுரன் . அயில் - கூர்மை . திரிபுரம் அழிக்கச் சென்ற காலத்தில் வேதத்தையே தேரிற்பூட்டும் குதிரையாகக் கொண்டமையறிக . சுந்தரன் - ஆலால சுந்தரர் ; இவர் திருக்கயிலையில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண்டுகள் செய்பவராதலின் , அவரே கவரி வீசுவோருமாதல் அறிக ; இவரே , சுவாமிகள் காலத்துக்குப் பின்னர் நம்பியாரூரராய் அவதரித்தருளினமை வெளிப்படை . துணை - இரண்டு . மந்தரமும் மேருமால் வரையின் பகுதியேயாதலின் , அதனையே வில்லாக வளைத்ததாக அருளினார் . மாகாளரை வாயில் காவலராகக் கொண்டமையை , சிவபூசையில் மகாகாளர் துவார பாலகருள் வைத்துப் பூசிக்கப்படுதல் கொண்டும் உணரலாம் . தந்திரம் . தெய்வ வேள்வி முதலிய ஐவகை வேள்விகள் . மந்திரம் - சிவ வழிபாடு . இவைகளில் பொருந்தி நின்று உயிர்கட்கு அருள் புரிதலின் , ` தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் ` என்று அருளினார் . ` அருளி உயிர்களை உய்யக்கொண்டார் ` என்க .

பண் :

பாடல் எண் : 6

பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்
பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்
நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்
வாரடங்கு வனமுலையார் மைய லாகி
வந்திட்ட பலி கொண்டார் வளையுங் கொண்டார்
ஊரடங்க வொற்றிநகர் பற்றிக் கொண் டார்
உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

பொழிப்புரை :

பூதகணங்கள் பல இசைக் கருவிகளையும் இயக்கக் கொண்டவரும் , மேனியில் பவளநிறத்தையும் வெண்ணீற்றுப் பூச்சில் பளிங்கு நிறத்தையும் கொண்டவரும் , கங்கை தங்கும் சடைமுடிமேல் பிறைச் சந்திரனையும் கொண்டவரும் , அழகு நிறைந்த மிடற்றினில் நீலநிறம் கொண்டவரும் , கச்சிற்குள் அடங்கும் அழகிய முலையாராகிய தாருகாவன முனிபத்தினியர் காதலால் மயக்கம் கொண்டு வந்திட்ட பிச்சையுடன் அவர்களுடைய கைவளையல்களையும் கொண்டவரும் எல்லா ஊர்களும் தம் ஆட்சியில் அடங்கியிருக்கத் திருஒற்றியூரைத் தமக்கு இடமாகப் பற்றிக் கொண்டவருமாகிய சிவ பெருமானார் என் உடலிற் பொருந்திய சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

பாரிடங்கள் - பூத கணங்கள் , கருவி - இசைக்கருவி ; வாச்சியம் . பளிங்கு - பளிங்குநிறம் ; இது நீற்றினால் ஆயது . கோலம் நிறை - அழகுமிக்க . வனமுலையார் , தாருகாவனத்து முனிவர் பத்தினியர் . வளை - அவர்களது வளைகள் . ` ஒற்றி நகர் பற்றி , ஊர் அடங்கக் கொண்டார் ` என இயைக்க . ` ஒற்றியாய் உள்ள ஊரை உறை விடமாகப் பற்றிக்கொண்டு , எல்லா ஊர்களையும் தம்முடையனவாகக் கொண்டுள்ளார் ` என்பதுநயம் . அடங்க - முழுவதும் . ` எல்லா ஊர்களும் தம் ஆட்சியில் அடங்கியிருக்க , திருஒற்றியூரைத் தமக்கு இடமாகப் பற்றிக் கொண்டார் ` என்பது உண்மைப் பொருள் .

பண் :

பாடல் எண் : 7

அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்
ஆலால வருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்
சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே.

பொழிப்புரை :

அழகிய தில்லை அம்பலத்தைத் தாம் ஆடும் அரங்காகக் கொண்டவரும் , கடலில் வந்த ஆலால நஞ்சினை அமுதாகக் கொண்டவரும் , அழகு மிகுகின்ற சரங்களாகிய பொன் போன்ற கொன்றை மலராலாகிய மணம் கமழ்கின்ற மாலையைக் கொண்டவரும் , விருப்பம் நிறைந்த கோடி என்றதலத்தில் கூடி இருத்தலைக் கொண்டவரும் , மாணிக்கத்தோடு கூடிய படத்தையுடைய பாம்பினைத் தோள்வளையாகக் கொண்டவரும் , மேற் கொண்டு நீண்ட வீதியில் வருதற்குப் பெரிய இடபத்தைக் கொண்ட வரும் , உரித்த புலியினது தோலை உத்தரியமாகவும் உடையாகவும் கொண்டவரும் , சூலத்தைக் கையில் கொண்டவருமாகிய சிவ பெருமானார் என்னைத் தமக்கு அடிமையாகக் கொண்டவராவார் .

குறிப்புரை :

கணிவளர்தார் - அழகுமிகுகின்ற பூக்களாகிய . பொன் இதழி - பொன்போன்ற கொன்றை . கமழ்தார் - மணம் வீசுகின்ற மாலை . காதல் ஆர் கோடி - விருப்பம் நிறைந்த கோடிக் குழகர் என்னும் தலம் ; சோழநாட்டில் உள்ளது . மணிபணத்த அரவம் - மாணிக்கத்தோடு கூடிய படத்தையுடைய பாம்பு . மேல் நெடு வீதி போத - மேற்கொண்டு , நீண்ட வீதியில் வருதற்கு . மால்விடை கொண்டார் - பெரிய இடபத்தைக் கொண்டார் . ` துணிதோல் ` என இயையும் ; ` உரித்த தோல் ` என்பது பொருள் . ஆடை - உத்தரீயம் . உடை அரையில் உடுப்பது .

பண் :

பாடல் எண் : 8

படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்
பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்
கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்
நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி யிடைமருதுங் கொண்டார் பண்டே
யென்னைஇந்நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே.

பொழிப்புரை :

படத்தையும் கொடுமைக் குணத்தையுமுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலையும் இந்திரனையும் பங்கயத்துப் பிரமனையும் தம் விருப்பப்படி படைத்துக் கொண்ட வரும் , குடமூக்கிற் கீழ்க் கோட்டத்தைக் கோயிலாகக் கொண்டவரும் , கூற்றுவனை உதைத்து ஒப்பற்ற வேதியனாம் மார்க்கண்டேயனை வாழக் கொண்டவரும் , துதிக்கையை உடைய யானையினது தோலினை உடலில் போர்த்திக்கொண்டவரும் , தம்மை நினையாத பாவிகளை நீங்கக் கொண்டவரும் , இடைமருதினைத் தமக்கு இடமாகக் கொண்டவரும் , ஆகிய சிவபெருமானார் என்னை இந்நாள் ஆட்கொண்ட இறைவர் ஆவார் .

குறிப்புரை :

` மூர்க்கப் பாம்பு ` என்பது , ` மூக்கப் பாம்பு ` எனத் திரிந்து நின்றது . வானோன் - ( அயன்மால்கட்கு ) மேலானவன் ; உருத்திரன் ; இனி , வானுலகத்தை உடையவன் ; இந்திரன் ` என்று உரைத்தலும் ஆம் . குடமூக்கு - குடந்தை ; கும்பகோணம் ; அதன்கண் உள்ளதொரு தலம் , கீழ்க்கோட்டம் .` ஓர் வேதியன் ` என்றது மார்க்கண்டேயரை . நெடுமூக்கின் - தும்பிக்கையை யுடைய . நீக்கப் பட்டாரை , ` கொண்டார் ` என்றது , இல் பொருளையும் , ` பொருள் என வழங்கல்போல , எதிர்மறைவகையால் உடைமையாதல் அருளிய பான்மை வழக்கு . ` இடைமருதும் இடமாக்கிப் பண்டே கொண்டார் ` என இயையும் . உம்மை , ` குடமூக்கிற் கீழ்க்கோட்டமே யன்றி ` என , இறந்தது தழுவிற்று .

பண் :

பாடல் எண் : 9

எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியாத் திரன்தலையும் வேறாக் கொண்டார்
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்த
உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.

பொழிப்புரை :

வேள்வித் தெய்வத்தின் நிணம் பொருந்திய தலையைக் கொண்டவரும் , சூரியர்களில் ஒருவனாகிய பகனது கண்ணைக் கொண்டவரும் , சூரியர்களில் மற்றொருவனுடைய பற்களை உடைத்து ஒறுத்தலைக் கொண்டவரும் , தன்னையே மெச்சினவனாய் , மாறான , வழியல்லாத வழியிற் சென்ற தக்கன் தலையை வேறாகக் கொண்டவரும் , வெற்றியுடைய அக்கினி தேவனின் கரத்தைக் கொண்டவரும் , வேள்வியைக் காத்து நின்ற வெற்றியில் உயர்ந்த இயமனுடைய தாளை அறுத்தவரும் , சந்திரனை உதைத்தவரும் , அறிவில்லாத தக்கனுடைய வேள்வி முழுவதையும் அதில் ஈடுபட்டார் அனைவருக்கும் அச்சம் உண்டாக அழித்துப் பின் அனைவருக்கும் அருள் செய்தவரும் ஆகிய சிவபெருமானார் அடியேனை ஆட்கொண்ட அமலர் ஆவார் .

குறிப்புரை :

எச்சன் - வேள்வித் தெய்வம் . பகன் - சூரியர்களில் ஒருவன் . ஒருவன் - மற்றொருவன் . மெச்சன் - தன்னை வியந்தவன் ; செருக்குக் கொண்டவன் ; மெச்சனாகிய வியாத்திரன் என்க . ` யாத்திரிகன் ` என்பது . ` யாத்திரன் ` எனத் திரிந்து நின்றது , ` யாத்திரிகன் ` என்பது , ` வழிச்செல்வோன் ` எனப் பொருள்தருமாகலின் , வியாத்திரிகன் , என்பது . ` மாறான ( வழியல்லாத ) வழியிற் செல்பவன் ` எனப் பொருள் தந்து , தக்கனைக் குறித்தது . ` வியாத்திரன் - தொழில் செய்வோன் ` என்பது தமிழ்ப் பேரகராதி . ` வெஞ்சின வேள்வி வியாத்திரனார்தலை துஞ்சின வாபாடி உந்தீபற ` ( தி .8 திருவா . திருவுந்தி .10) என்றருளியது காண்க . ` அவன் தலையை வேறாக் கொண்டார் ` என்றது , யாட்டின் தலையாகச் செய்தமையை . விறல் - வெற்றி . அங்கி - அக்கினிதேவன் . ` தக்கன் ஏவலால் இயமன் வேள்வியைக் காத்துநின்றான் ` என்பதும் , ` அவன் கால் முரிக்கப் பட்டான் ` என்பதும் இங்கு அறியப்படுகின்றன . ` வேள்வி காத்து ` என்பது பாடம் அன்றென்க . உச்ச நமன் - வெற்றியில் மிக்க இயமன் . ` சந்திரனை உதைத்தார் ` எனச் சீர்கள் வேறுபட வந்தன . அச்சம் எழ -( தீநெறியில் செல்வோர் யாவர்க்கும் ) அச்சம் உண்டாதற் பொருட்டு . ` வந்துகொண்டு . பேசிக் கொண்டு ` என்பன போல . ` அழித்துக் கொண்டு ` என்றதில் கொண்டு என்பது துணைவினை . ` இவ்வாறு அழித்து ` என இயைவித்துரைக்க . ` அருளும் செய்தார் ` என்பது உணர்த்துதலே ஈண்டுத் திருவுள்ளம் என்க . ` அருளும் ` என்னும் உம்மை , சிறப்பும்மை .

பண் :

பாடல் எண் : 10

சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்
உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்
காபால வேடங் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்
வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

பொழிப்புரை :

தன் சடைகள் பலவற்றுள் ஒன்றிடத்தே கங்கையை அடக்கித் தரித்துக் கொண்டவரும் , வீணையைத் தடவிச் சாம வேதத்தின் இசையைக் கொண்டவரும் , புள்ளி மான் தோலை உடை என்னும் ஒரு தன்மையில் ஏற்றுக்கொண்டவரும் , தம்மை நினைவார் உள்ளத்தைத் தம்மிடத்து ஒருங்கிநிற்கும்படி செய்து கொண்டவரும் , வீட்டு வாசல் தோறும் பிச்சை கொண்டவரும் , கையில் கனல் கொண்டவரும் , காபால வேடத்தை விரும்பிக் கொண்டவரும் , இடபத்தைத் தன் வெற்றிக் கொடியில் பொருந்தக் கொண்டவரும் , ஆகிய சிவபெருமானார் என் கொடிய துயரங்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

கங்கை சிவபிரானது சடைகள் பலவற்றில் ஒரு சடைக்கே போதியதாகாது புல் நுனிமேல் நீர் போல் ஆயிற்று என்ப ஆகலின் , ` சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார் ` என்றருளினார் . உம்மை , சிறப்பு . ` வீணையைத் தடவிச் சாமத்தின் இசையைக் கொண்டார் ` என்க . சாமம் - சாம வேதம் . உழை - மான் ` உடை ` என்றது அதன்தன்மையை , அதனால் , ` உடைஒன்றில் ` என்றதற்கு , ` உடை என்னும் ஒரு தன்மையில் ` என உரைக்க . தோலுங் கொண்டார் - தோலை ஏற்றுக் கொண்டார் . இவ்வும்மை இழிவு சிறப்பு . உள்குவார் - நினைப்பார் . ஒருக்கிக் கொண்டார் - தம்மிடத்து ஒருங்கி நிற்கும்படி செய்து கவர்ந்து கொண்டார் . ` கடை முன்றில் ` என்பது , ` கடைக்கண் முன்றிற்கண் ` என ஏழாம் வேற்றுமைப் பன்மொழித் தொகை . ` கனலும் ` என்புழி , ` கையில் ` என்பது , ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` கனலும் ` என்னும் உம்மை , ஏந்துதல் கூடாமை குறித்து நின்ற உயர்வு சிறப்பு . காபால வேடம் - காபாலம் ` என்னும் நடனக் கோலம் . ` விடையை வென்றிக்கொடியதனில் மேவுமாறு கொண்டார் ` என்க .

பண் :

பாடல் எண் : 11

குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்
குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்
தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார்
இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே

பொழிப்புரை :

குரா மலர் பாம்பு , பிறை இவற்றைச் சடைமேல் கொண்டவரும் , நந்தீசனைக் குடமுழா வாசிப்பவனாகக் கொண்ட வரும் , சிராமலையைத் தாம் சேர்வதற்குத் திருந்த அமைந்த இடமாகக் கொண்டவரும் , தென்றலைத் தனது நெடிய தேராகக் கொண்ட மன்மதன் அழியச் சினத்தைக் கொண்டவரும் , பராபரன் என்பது தம் பெயராக அமையக் கொண்டவரும் , மேருமலையை வில்லாகக் கையில் கொண்டவரும் , பயங்கள் பலவற்றை உண்டாக்கி இராவணன் என்று பேர் இயம்ப அவனைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமா னார் என் துன்பந்தரும் நோய்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

அராவும் மதியமும் என்க . ` நந்தீசனைக் குடமுழா வாசகனாக் கொண்டார் ` என்க , வாசகன் - வாசிப்பவன் . ` வாணன் ` என்பவனேயன்றி நந்திதேவரும் குடமுழா வாசித்தல் உண்டு என்க . இனி . ` வாசகன் ` என்றது , மாணிக்க வாசகராகிய திருவாதவூர் அடிகளைக் குறிப்பதாக வைத்து , ` நந்தி தேவரையே அவ்வாறு அவ தரிக்கச் செய்தார் ` எனக்கொள்வாரும் உளர் . சிராமலை - திருச்சிராப் பள்ளிமலை , தென்றல் தேரான் - மன்மதன் . பொன்ற - அழிய ; ` பொன்றச் சினத்தைக் கொண்டார் ` என்க . பராபரன் ( பரன் அபரன் ) - மேலவனும் , கீழவனும் ஆயினவன் ; எல்லாவற்றையும் தன்னுள் அடங்கக் கொண்டவன் ; ` மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க ` ( திருவா . திருவண் . 50) என்றருளியது காண்க . பருப்பதம் , மேரு மலை ; ` அதனைக் கையில் வில்லாகக் கொண்டார் ` என்க . இனி , ` திருப்பருப்பதம் ` என்னும் தலத்தை இடமாகக் கொண்டார் ` என்று உரைத்தலுமாம் . பயங்கள் - அச்சங்கள் ; உறுப்புக் குறைதலும் , உயிர் நீங்குதலும் போல்பவைபற்றி அச்சம் பலவாய்த் தோன்றினமையின் . ` பயங்கள் ` எனப் பன்மையாக அருளினார் . ` இராவணன் என்று ` என முன்னர் வந்தமையின் , அவனை என்றது இராவணனைச்சுட்டுதல் பொருந்துமாறறிக . ` பயங்கள் பண்ணி , இராவணன் என்று பேர் இயம்ப அவனைக் கொண்டார் ` என்க . கொண்டார் என்றது ` ஏற்றுக் கொண்டார் ` என்றபடி ; பின்னர் வாள் முதலியன கொடுத்து அருள் புரிந்தமையின் , ` கொண்டார் ` என்று அருளினார் .

பண் :

பாடல் எண் : 1

அண்டங் கடந்த சுவடு முண்டோ
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ
பண்டை யெழுவர் படியு முண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
கண்ட மிறையே கறுத்த துண்டோ
கண்ணின்மேற் கண்ணொன் றுடைய துண்டோ
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்களே ! நீங்கள் கண்ட எம்பிரானிடம் அண்டம் கடந்து நின்றதற்கான அடையாளம் உண்டோ ? அங்கையில் அனலேந்திய ஆடலுண்டோ ? பண்டை முனிவர் எழுவர் பணி செய்யும் படியும் உண்டோ ? பூதங்கள் பல சூழப் போதல் உண்டோ ? கண்டம் சிறிதே கறுத்தது உண்டோ ? கண்களுக்கு மேலாக நெற்றியில் கண் ஒன்று உண்டோ ? தொண்டர் சூழும் அத்தொடர்ச்சி உண்டோ ? நீங்கள் அவனைக் கண்டவண்ணம் எமக்குச் சொல்வீராக .

குறிப்புரை :

சுவடு - நடந்து சென்ற அடையாளம் ; அஃது , இங்கு , ` அறிகுறி ` என்னும் அளவாய் நின்று , அதனையுடைய , அயன்மால் தேட நீண்ட ஒளி வடிவைக் குறித்தது , ` ஏந்திய ஆடல் ` என வினை முதலின் தொழில் , வினைமேல் ஏற்றப்பட்டது . பண்டை எழுவர் - ` அகத்தியர் , புலத்தியர் , அங்கிரா , கவுதமர் , வசிட்டர் , காசிபர் , மார்க்கண்டேயர் ` என்னும் முனிவர் . படி - உருவம் ; ` கண்ணாற் கண்டதுண்டோ ` என வினவுவார் , ` உருவம் ` என்றார் . ` பணியும் உண்டோ ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` போந்தது ` என்றது , தொழிலை உணர்த்திய பெயர் . இறையே - சிறிதே . சூழ - சுற்றிலும் . தொடர்ச்சி - தொடர்தல் . ` சூழ் அத் தொடர்ச்சி ` எனப் பிரித்து உரைத்தலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 2

எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
யிலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ
சொரிகின்ற புனலுண்டோ சூலம் உண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்களே ! நீங்கள் கண்ட எம்பிரானிடம் இள ஞாயிறு போன்று ஒளிவிடும் அவன் உடலின் ஓருபால் விளங்குகின்ற அணியினை உடைய உமாதேவி உண்டோ ? வெள்ளிய இடப முண்டோ ? பரவுகின்ற தீப்பொறியும் ஒலியுமுடைய தழலுமுண்டோ ? வேழத்தின் தோல் உண்டோ ? வெண்ணூல் உண்டோ ? வரியும் புள்ளி யும் பொருந்திய பாம்பைக் கொண்ட சடையுமுண்டோ ? அச்சடை மேல் வைக்கப்பட்ட இளமதியும் உண்டோ ? சடையிலிருந்து ஒழுகும் நீர் உண்டோ ? கையில் சூலும் உண்டோ ? நீங்கள் அவனைக் கண்ட வண்ணம் எமக்குச் சொல்வீராக .

குறிப்புரை :

` எரிகின்ற ` என்றது , ` நெருப்புப்போல ஒளி விடுகின்ற ` என்னும் பொருளது . ` மேனியின் ஓர்பால் இலங்கிழை உண்டோ ` என மாறிக் கூட்டுக . இலங்கிழை - விளங்குகின்ற அணியினை உடையாள் ; உமாதேவி . ` உண்டு ` என்பது , அஃறிணை ஒருமை குறித்து வருதலேயன்றி , இடையில் தோன்றாது , பொருளோடு உடனுளதாய உண்மைத் தன்மை குறிக்கும் வழி , இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் வருமாதலின் , ` இலங்கிழை உண்டோ ` என்றருளினார் . விரிகின்ற - பரவுகின்ற . பொறி - தீப்பொறி . அரவம் - ஒலி . தழல் - நெருப்பு . நெருப்பை , ` குரை அழல் ` என்றலும் வழக்காதலின் , ` அரவத் தழல் ` என்று அருளினார் . வரி - கீற்று . சொரிகின்ற - ஒழுகும் தன்மை வாய்ந்த . புனல் - நீர் .

பண் :

பாடல் எண் : 3

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்களே ! நீவிர் கண்ட எம்பெருமான் பிறைக் கண்ணியைச் செஞ்சடைமேல் வைத்ததுண்டோ ? அவனுக்கு நெற்றியில் கண்ணுண்டோ ? பூசும் நீறுதான் அவனுக்குச் சந்தனமோ ? புலால் நாறும் வெள்ளெலும்புமாலையை அவன் பூண்டதுண்டோ ? பூதங்கள் அவனைச் சூழ்ந்ததுண்டோ ? போர்க்குணமுடைய இடபம் அருகில் உண்டோ ? போர் செய்யும் தன்மை வாய்ந்தனவும் , வேல்போன்றனவுமாகிய கண்களையுடைய உமையம்மை அவன் பாகமாகப் பொருந்திய துண்டோ ? கார்காலத்து மலரும் கொன்றை மாலை அவனுடலில் கலந்ததுண்டோ ? வளைந்தமாலை போல்வதும் படமெடுத்தாடுவதும் ஆகிய பாம்பு தோள்மேல் விளங்குதல் உண்டோ ? அவனை நீங்கள் கண்டவண்ணம் எமக்குக் கூறுவீராக .

குறிப்புரை :

நிலா மாலை - பிறைக் கண்ணி . சாந்து - சந்தனம் ; ` நீறு தான் சாந்தோ ` என்க . கலா மாலைக்கண் - போர் செய்யும் தன்மை வாய்ந்த கண் . சுலா மாலை அரவம் - வளைந்த மாலை போலும் பாம்பு .

பண் :

பாடல் எண் : 4

பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! நீவிர் கண்ட எம்பெருமான் பண் நிறைந்த வீணையை வாசித்துப் பழகியதுண்டோ ? பூதங்கள் பல சூழ்ந்து வர வெளியே போந்ததுண்டோ ? உண்ணற்காகாத கொடிய நஞ்சை உண்டதுண்டோ ? ஊழித் தீப் போன்ற ஒளி அவன்பால் உண்டோ ? கண் , மகிழ்வால் நிறைதற்குக் காரணமான திருவடியால் அவன் காலனை உதைத்ததுண்டோ ? மன்மதனையும் நெற்றிக்கண்ணிடத்துத் தோன்றிய நெருப்பால் அவன் அழித்ததுண்டோ ? பகைவருடைய திரிபுரங்கள் மேல் அவன் அம்பு எய்ததுண்டோ ? நீங்கள் அவனை எவ்வகையில் கண்டீர்கள் ?.

குறிப்புரை :

கண் ஆர் கழல் - கண் நிறைதற்கு ( மகிழ்வதற்கு ) ஏதுவாகிய திருவடி . ` கழலானது காலனைச் செற்றது உண்டோ ` என்க . அன்றி , ` கழலாற் செற்றது உண்டோ ` என உருபு விரித்துரைப்பினுமாம் . எண்ணார் - மதியாதவர் .

பண் :

பாடல் எண் : 5

நீறுடைய திருமேனி பாக முண்டோ
நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ
கொல்புலித்தோ லுடையுண்டோகொண்டவேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ
அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! நீவிர் கண்ட எம்பெருமானுக்குத் திருமேனியில் நீறு பூசிய பாகமுண்டோ ? நெற்றியில் நெருப்புமிகும் ஒரு கண்ணுமுண்டோ ? கூறுபடுத்துங்கொடிய மழுவாயுதம் கையிலுண்டோ ? கொல்லும் புலியது தோலாகிய உடையுண்டோ ? கங்கையைத் தாங்கும் சடையுண்டோ ? அச்சடையிடத்துப் பாம்பு உண்டோ ? அப் பாம்பின் அருகே பிறையுண்டோ ? பெருமை அளவிட முடியாத இடபக் கொடியுண்டோ ? கூத்துமுண்டோ ? நீங்கள் அவன் கொண்ட எவ்வகை வேடத்தில் அவனைக் கண்டீர்கள் ?.

குறிப்புரை :

` பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் ` ( தி .8 திருவா . திருக்கோத்தும்பி . 18) என்று அருளியவாறு . அம்மை பாகத்தில் சந்தனம் இருக்க , தன் பாகத்தில் மட்டுமே நீறுபூசியிருத்தலின் , ` நீறுடைய திருமேனி பாகம் உண்டோ ` என்று அருளினார் . ` பாகம் ` என்புழி , ` பாகமாய் ` என ஆக்கம் வருவித்து உரைக்க . ` முற்றும் ` என்பதற்கு முற்றுதலும் என உரைக்க . முற்றுதல் - முதிர்தல் ; ( நெருப்பு ) மிகுதல் . கூறு உடைய - கூறுபடுத்தலை உடைய . ` கூறுடைய ` என்பது , எதுகை நோக்கித் திரிந்தது என்றலும் ஆம் . ` கொண்ட வேடம் ` என்பது , முன்னும் பின்னும் சென்று எல்லாவற்றோடும் இயையும் . ` நெற்றிமேல் ஒற்றைக்கண் முற்றுதல் ` முதலியன வேடத்திற்கு உறுப்புக்களாதலின் , வேடம் முற்றுதல் உண்டோ என்றது , சினை வினையை முதலொடு சார்த்தி முடித்ததாக உரைக்க . ` அளவிலாத கொடி ` என இயையும் . அளவிலாமை - ஒப்பாதல் , உயர்வாதல் இல்லாமை . இலயம் - கூத்து .

பண் :

பாடல் எண் : 6

பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்
கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! சிவபெருமானை நான் கனவில் கண்டவாறே நனவிலும் அவன் நெற்றிப்பட்டமும் செவித்தோடும் ஓரொருபாகத்தில் விளங்கக் கண்டேன் , நிலம் அழகுபெறுமாறு பிச்சை பெறப் பல இடங்களிலும் திரிந்தலையக் கண்டேன் . வாச்சியங்களைப் பூதகணங்கள் இயம்பப் பலவகைக் கூத்துக்களை ஆடக் கண்டேன் , காதிற்குழையும் சென்னியில் பிறையும் விளங்கக் கண்டேன் , உயர்த்திய மழுக்கொடி திண்டோளை ஒட்டி ஆடக்கண்டேன் ; வலிமை மிக்க மழுவாயுதம் வலக்கையில் திகழக் கண்டேன் ; மேலான அவனைத் திருவாலவாயிற் கண்டேன் . அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?.

குறிப்புரை :

` கனவில் நான் கண்டவாறே ` என்றதனை , ` கண்டேன் ` என்றவற்றோடு முடித்து , ` நனவிலுங் கண்டேன் ` எனவுரைக்க . பட்டம் - நெற்றிப் பட்டம் . இதுவும் , ஒருபாலே உள்ளது என்க . தோடு , இடக்காதில் மட்டும் உள்ளது . ` பார்திகழ ` என்றது , ` தனது செலவினால் நிலம் அழகுபெற ` என்றதேயன்றி , ` அதன்கண் வாழ்வார் மெய்யுணர்வு பெற்று விளங்க ` என்றதுமாம் . ` கொட்டி ` என்றதனை , ` கொட்ட ` எனத் திரிக்க ; ` வாச்சியங்களைப் பூதகணங்கள் இயம்ப ` என்பது பொருள் . இலயங்கள் - பலவகைக் கூத்துக்கள் . ` காதிற் குழையும் சென்னியிற் பிறையும் இலங்கக் கண்டேன் ` என்க . ஏற்றுக் கொடியே யன்றி , கட்டங்க ( மழு ) க் கொடியும் சிவபிரானுக்கு உண்டென்க . ` வலக்கை ` என்பது மெலிந்து நின்றது - ` வலத்திற் கையில் ` எனலுமாம் . சிட்டன் - மேலானவன் . ` சிட்டனை ` என்றது , ` அவனை ` என்னும் சுட்டளவாய் நின்றது . ` இறைவனை நான் இவ்வாறு கண்டேன் ; நீரும் இவ்வாறு கண்டதுண்டோ ?` எனக் குறிப்பெச்சம் வருவித்து உரைக்க . அங்ஙனம் உரையாவிடில் , இத் திருப்பதிகத்தோடு இயையுமாறில்லை . இனி , இத்திருப்பதிகத்தை , ` வினா விடைத்திருப்பதிகம் ` என்பார் , பிற அடியார்கள் , ` பட்டமுந்தோடும் ஓர் பாகம் கண்டது உண்டோ ` என்பன முதலாக வினாவும் வினாவிற்கு இறுத்த விடையாகக் கொள்வர் , இனிவரும் திருத்தாண்டகங்களுட் சிலவும் அன்ன .

பண் :

பாடல் எண் : 7

அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்
அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன்
மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

மறைவல்லவனும் , மாதவத்தவனும் ஆகிய சிவ பெருமானுடைய சடையில் அலைவீசி ஓடும் நீர்ப் பெருக்கையுடைய கங்கையைக் கண்டேன் . கொன்றை மலரால் ஆன மாலையை அவன் அணிந்த தன்மையைக் கண்டேன் . பிச்சைக்கு ஓடித்திரியும் அவன் கையில் பாம்பைக் கண்டேன் . பகற்பொழுதில் பழனத்திருப்பதியில் அவன் சென்று புகுதலைக் கண்டேன் . அவன் ஆரவாரம் மிக்க கச்சி மேற்றளியில் மேவி இருக்கக் கண்டேன் . அவனது கறைபொருந்திய மிடற்றைக் கண்டேன் ; கையில் கனலும் கண்டேன் . அரையில் இறுக்கி உடுத்த மான் தோலைக் கண்டேன் . அவனை நான் கண்டவாறு இது . அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?

குறிப்புரை :

அலைத்து ஓடு - அலைவீசி ஓடும் தன்மையை உடைய . ` திரிவார் கை ` என , உடம்பொடு புணர்த்ததனால் , ` திரிதல் கண்டேன் ` என்பதும் கொள்ளப்படும் . ` மேற்றளியே ` என்புழி , ` மேற்றளிக் கண்ணே ` என உருபு விரிக்க . கனல் கையில் உளதாதல் வெளிப்படை . வலித்து - இறுக்கி . மாதவன் - பெரிய தவக்கோலத்தை உடையவன் . `( நான் ) கண்டவாறு இது ; இவ்வாறு நீவிரும் கண்டதுண்டோ ?` என்க .

பண் :

பாடல் எண் : 8

நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன்
இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! எம்பெருமான் திருநீறு திகழும் திருமேனியுடன் உலவக் கண்டேன் . அவன் நீண்ட சடைமேல் நீர்நிறை கங்கை பொருந்தக் கண்டேன் . கூறுபடுத்தலைப் பொருந்திய கொடிய மழுவாயுதத்தை அவன் கொள்ளக் கண்டேன் . கொடுகொட்டி என்னும் வாச்சியத்தையும் கையலகு என்னும் ஆயுதத்தையும் அவன் கையிற் கண்டேன் . ஆறு பொருந்திய அவன் தலையில் அழகிய மதியையும் கண்டேன் . அவன் அடியார்க்கு ஆரமுதம் போன்று இன்பஞ் செய்தலைக் கண்டேன் . அவன் இடபவாகனமேறி இவ்வழியே வரக் கண்டேன் . அவனை இவ்வகையில் யான் கண்டேன் . அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?.

குறிப்புரை :

நிகழ்தல் - உலாவுதல் , ` கூறேறும் ` என்பதற்கு மேல் . ( பா .5) ` கூறுடைய ` என்றதற்கு உரைத்தவாறே உரைக்க . அலகு - ஒரு வகை வாள் ; அவ்வகையில் சிறிதாயதனை , ` கையலகு ` என்று அருளினார் . ` சென்னியின்கண் அணிந்த மதி ` என்க . ` ஆக ` என்னும் , செயவெனெச்சம் தொழிற் பெயர்ப் பொருள்தந்து நின்றது . ` இந்நெறி ` என்றது , சுவாமிகளும் பிற அடியவரும் உள்ள இடத்தை .

பண் :

பாடல் எண் : 9

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டு
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
இமையோர் பெருமா னிலாத தென்னே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! இமையோர் பெருமானுடலில் மணமுடைய வெண்ணீறு உண்டு . அவன் கைகளில் ஒன்றில் வெண்டலையும் ஒன்றில் வீணையுமுண்டு . சுரைபோன்று தோன்றும் சடை முடியுண்டு அவனுக்கு , அதில் அவன் சூடும் பிறை ஒன்றுண்டு . அவன் சூலாயுதத்தையும் தண்டாயுதத்தையும் சுமந்ததுண்டு , அவனுக்கு இடுப்பில் கட்டிய கோவண ஆடையுண்டு , அவன்பால் ஊன்றுகோலும் போர்க்குந்தோலும் அழகாக உண்டு . அவனிடத்து இருக்கும் பாம்பு பசி இல்லாததாகலின் இரையுண்டறியாதது . அவனிடம் எல்லாம் உள . இவ்வாறு அவனை நான் கண்டேன் . நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம் ?

குறிப்புரை :

விரை உண்ட - வாசனையை ஏற்ற ; இனி , ` வாசனைப் பொருளாம் தன்மையைக் கொண்ட ` என்றுமாம் . சுரை - உறை . ` சுரை உண்டு ` என்றதில் உள்ள , ` உண்டு ` என்பதனை , ` உண்ண ` எனத் திரிக்க . ` சடைமுடியானது சுரைபோல உள்வாங்கும்படி சூடும் பிறை ` என்றபடி . தண்டு - தண்டாயுதம் ; சிறப்புப் படைக்கலங்கள் சூலமும் மழுவும் என்பதனால் ஏனைய படைக்கலங்கள் சிவபிரானுக்கு உரியவல்ல என்பது , பொருளன்று என்க . கோவண ஆடை - கீழ் வாங்கி உடுத்தப்படும் உடை . வலிக்கோல் - ஊன்றுகோல் ; இது , பிரம்பும் மாத்திரைக்கோலும் ஆகும் . இறைவனுக்கு அணியாய பாம்புகள் . பசி , பிணி , மூப்பு முதலியன இன்றி , என்றும் ஒருபெற்றியன வாய் இருத்தலின் , ` இரை உண்டு அறியாத பாம்பு ` என்று அருளினார் . ` பசியோடிருக்கும் பாம்பு ` என , நகைச்சுவையும் தோற்றியது . ` இமையோர் பெருமான் இலாதது என் ` என்றது , தேற்றம் பற்றி . ` உளன் ` என்றதனை , எதிர்மறை முகத்தால் அருளிச்செய்தவாறு . ` வெண்ணீறு முதலியன உண்டு ; அவற்றை நீவிர் கண்டது உண்டோ ?` என்க .

பண் :

பாடல் எண் : 10

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

பொழிப்புரை :

இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் ` என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன் . அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன் . உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன் ; ஓரூர்க்கே உரியனல்லன் . யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன் . அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன் , இன்ன நிறத்தையுடையவன் , இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது .

குறிப்புரை :

` கண்ணாளும் தானும் ` என்றதன் பின் ` ` ஆகி ` என்பது வருவித்து , அதனை , ` மயானத்தான் , வார்சடையான் ` என்னும் வினைக்குறிப்பு முற்றுக்களோடு முடிக்க . கச்சி மயானம் , கச்சி ஏகம்பத்திற்கு அணித்தாய் உள்ள ஒரு வைப்புத்தலம் . வார்சடை - நீண்டசடை . என்னின் - எனறு சொல்வோம் எனில் . அல்லான் - அத்தன்மையன் அல்லன் ; என்றது , அதுவே முற்றிலும் அவனுடைய இயல்பு அன்று ; அஃது அவனது பொதுவியல்பே என்றபடி . ` மற்று , அவனுடைய உண்மை இயல்பு யாது எனின் ` என்பது எஞ்சி நின்றது . ஒப்பு உடையன் அல்லன் - இவற்றைத் தன்பொருட்டாக ஏற்றுடையவன் அல்லன் . ஒருவன் அல்லன் - உலகப் பொருள்களில் ஒருவனல்லன் . ஓர் ஊரன் அல்லன் - ஓர் இடத்தில் வரையறைப்பட்டு நிற்பவன் அல்லன் . ஓர் உவமன் இல்லி - தனக்கு எவ்வாற்றானும் யாதொரு பொருளும் உவமையாதல் இல்லாதவன் . இங்கு , ` அதனால் ` என்பது வருவிக்க . ` அப்படி ` முதலிய மூன்றும் , ` கச்சிமயானத்தான் , வார் சடையான் ` என்றாற்போலும் இயல்புகளைக் குறித்தன ; அவரவரும் , தாம் தாம் , அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணின் அவைகளைக் காணலாமே யல்லது , மற்றைய பொருள்கள் போல , பிறரொருவர் , இன்ன வகையுட்பட்டவன் , இன்ன நிறத்தை உடையவன் , இன்ன வடிவம் உடையவன் என்று , சொல்லோவிய மாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக்காட்டல் இயலாது ` என்க . ` இறைவன் ` என்புழித் தொகுக்கப்பட்ட இரண்டாம் வேற்றுமையை விரித்து , ` என்று ` என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்க . எனவே , ` மேலைத் திருத்தாண்டகங்களினும் , வருந் திருத் தாண்டகத்தினும் பலவாற்றானும் வினாவிய இயல்புகள் யாவும் அவன் அருள் பெற்றார்க்கன்றிக் காணவாரா ` என்பதனை அறி வுறுக்கும் முகத்தால் , அப்பேறு வாய்க்கப்பெற்ற தாமும் , பிற அடியவர் களும் ஆகியோரது நிலையை நினைந்து மகிழ்ந்தருளியவாறாயிற்று .

பண் :

பாடல் எண் : 11

பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்
புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்
மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் தன்னை
அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்
சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! நான் சிவபெருமானை என் சிந்தனையுட் கண்டவாறே என் கண்ணிலும் அவன் பொன்னார் மேனி மேல் திருநீற்றுப் பொடியும் கண்டேன் ; புலித்தோலாகிய உடை கண்டேன் . தன்னிடப்பாகத்தில் மின்னலைப் போன்ற நுண்ணிய இடையை உடைய உமையாள் பொருந்தக் கண்டேன் . ஒளியுடைப் பாம்பு ஒன்றையும் அரைமேற்கண்டேன் . அன்னம்போன்ற வெள்ளிய தேரினை ஊர்ந்த அரக்கன் அலற அவனை நசுக்கிய திருவடியையும் கண்டேன் . அடையாளப் பூவாகிய கொன்றை மலராலான தலை மாலையையும் கண்டேன் . நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம் ?

குறிப்புரை :

பொடி - திருவெண்ணீறு . ` தன்மேல் புணர ` எனமாற்றி , ` தன்னிடத்துப் பொருந்த ` என உரைக்க . ` பாகத்தில் நுண்ணிடையாள் பொருந்தக் கண்டேன் ` என இயையும் . ` பாம்பும் ` என்னும் உம்மை , எச்சம் . அன்னத்தேர் - அன்னம் போலும் வெண்மையாகிய விமானம் ; புட்பக விமானம் . சின்னமலர்க் கொன்றை - அடையாளப் பூவாகிய கொன்றை . ` சிவனை நான் சிந்தையுட் கண்டவாறே கண்ணிலும் கண்டேன் ; நீவிரும் அவ்வாறு கண்டது உண்டோ ?` என்க .

பண் :

பாடல் எண் : 1

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

பொழிப்புரை :

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை . தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும் , நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின் .

குறிப்புரை :

` நாம் ` என்றது , எடுத்தலோசையால் , ` சிவ பெருமானுக்குத் தமராகிய நாம் ` எனப் பொருள் தந்தது . ` ஆர்க்கும் ` என்றதும் , அவ்வாறு , ` இவ்வுலகில் எத்துணைப் பெரியார்க்கும் ` எனப் பொருள்தந்தது . குடி - அடிமை . அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும் வருமாகலின் ( தொல் - சொல் . 100.) ` நமனை அஞ்சோம் ` என , இரண்டாம் வேற்றுமை வந்தது . ` நரகத்தில் இடப்படோம் ` எனவும் பாடம் ஓதுப . நடலை - பொய் . யாதானும் ஒன்றான் அச்சம் வரப் பெறுவோரே பொய்யுடையராவராகலின் , அச்சம் இல்லாதார்க்குப் பொய்யும் இல்லையாயிற்று . ஏமாப்போம் - களிப்புற்றிருப்போம் . பிணி அறியோம் - ` பிணியாவது இது ` என அறியோம் . பணிவோம் அல்லோம் - யாரிடத்தும் சென்று யாதானும் ஒன்று வேண்டி அவரை வணங்குவோம் அல்லோம் . ` எந்நாளும் ` என்றதனை , ` இன்பமே ` என்றதற்கு முன்னும் கூட்டுக . ` இன்பமே ` என்றதன்பின் , ` உள்ளது ` என்பது எஞ்சிநின்றது . ` இன்பமே ` என்ற பிரிநிலை ஏகாரத்தை , ` துன்பம் ` என்றதனோடுங் கூட்டுக . ` துன்பம் இல்லை ` என்றதன் பின் , ` என்னை ?` என்னும் வினாவை வருவிக்க . ` தாம் ` என்றது , ஒருமைப் பன்மை மயக்கம் . ` தன்மையன் ` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று . ` ஓர் காதிற் சங்கவெண் குழைக் கோமான் ` என மாற்றிக் கொள்க . ` சங்கவெண் குழையை உடைய ஓர் காதினை உடைய கோமான் ` என , கிடந்தவாறே உரைத்தலும் ஆம் . ` அவன் சேவடி இணை ` என , சுட்டு வருவித்துரைக்க . கொய்மலர் - பறித்தற்கு உரிய மலர் ; என்றது அப்பொழுது அலர்ந்து பொலிவு பெற்றிருப்பதனை . குறுகினோம் - அடைந்தோம் .

பண் :

பாடல் எண் : 2

அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.

பொழிப்புரை :

பரந்த பூமிமுழுதும் எமக்கு இடமாகும் . ஊர்கள் தோறும் தம் உணவை அட்டுண்ணும் இல்லறத்தான் அதனைப் பிறர்க்கு இட்டு அல்லது உண்ணாராதலின் எமக்கு உணவுப் பிச்சையிடுதலை அவர்கள் ஒருபோதும் விலக்கார் . அம்பலங்கள் யாம் தங்கும் இடங்க ளாகும் . யாம் தன்னுடன் கிடந்தால் பூமிதேவி எம்மைப் புரட்டி எறியாள் . இது பொய்யன்று , மெய்யே . போர்விடையை ஊர்தியாக உடைய சிவபெருமானார் எம்மைத் தம் அடிமையாக ஏற்றுக் கொண்டார் . அதனால் இனியாம் ஏதும் குறைவில்லேம் ; துன்பமாயின எல்லாம் தீர்ந்தேம் . குற்றமற்றேம் ஆயின் யாம் சிறந்த உடைகளை உடுத்துப் பொன்னாபரணங்களைப் பூண்டு திரியும் அரசர் சொல்லும் சொல்லை ஏற்க வேண்டிய கடப்பாடு உடையேம் அல்லேம் .

குறிப்புரை :

அகலிடம் - அகன்ற இடத்தை உடையது ; பூமி . ` அது முழுதும் எமக்கு இடமாய் நிற்க ` என்க . ` அகலிடமே இடமாகும் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . அட்டு உண்பார் . இல்லத்தில் சமைத்து உண்பவர் ; இல்வாழ்வார் ; இவரது தலையாய அறம் விருந்தோம்ப லும் , ஈகையும் ஆதலின் , ` அவர் ஐயம் விலக்கார் ` என்று அருளினார் . ஐயம் - பிச்சை . இதனால் , ` ஊர்கள் தோறும் இல்லத்தார் இடும் ஐயமே உணவு ` என்றதாயிற்று . அம்பலங்கள் - பொது இடங்கள் . ` அம் பலங்கள் புகலிடமாம் ` என்க . புகலிடம் - தங்கும் இடங்கள் . ` பூமிதேவி யாம் தன்னுடன் கிடந்தால் எம்மைப் புரட்டாள் ; இது பொய்யன்று ; மெய்யே ` என்க . எனவே , ` அரசரோடு எமக்கு யாதும் தொடர்பில்லை ` என்றபடி . இகலுடைய விடை - போர்விடை . துகில் - சிறந்த உடை . ` திரிவார் ` என்றது , அரசரை ; அவரை அங்ஙனம் அருளியது , தமது பெருமையும் அவரது சிறுமையும் தோன்ற . துரிசு - குற்றம் . ` துரிசற்றோம் ` என்றதனை ` விடையுடையான் ஏன்று கொண்டான் ` என்றதன் பின்னர்க் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 3

வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்
மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
கன்மனமே நன்மனமாய்க் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.

பொழிப்புரை :

கச்சணிந்த கொங்கை மாதருடன் சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையில் பொருந்தோம் . மகாதேவா மகாதேவா என்று பலகாலும் அவனை வாழ்த்தி விடியற்காலத்து நீராடப் பெற்றோம் , திருநீறணியும் சைவத் திருக்கோலமே எம்பால் நிலவப் பெற்றோம் . பண்டு கல்லாய்த் திகழ்ந்த மனம் கரிய மேகம் பொழியும் மழை போலக் கண்ணீர் சோருமாறு நன்மனமாய்க் கரையப் பெற்றோம் . ஆகவே உலகியற் பொருளில் பற்றற்றேமாகிய யாம் பூமி முழுவதையும் ஆண்டு ஆனை ஏறி வரும் அரசர் ஏவும் பணிகளை ஏற்க வேண்டிய கடப்பாட்டினேம் அல்லேம் .

குறிப்புரை :

` மனையில் சேரோம் ` என்றது , ` மகளிரொடு வாழும் மனைவாழ்க்கையின் நீங்கினோம் ` என்றபடி ; ` மனை வாழ்க்கை உடையவர் அன்றோ அரசர்க்கு அடங்கியவர் ` என்பது திருக்குறிப்பு . ` புரோதாயம் ` என்றது , ` பூர்வோதயம் ` என்பதன் திரிபு ; ` பகலவன் தோன்றுதற்கு முன்னே ` என்பது பொருள் ; ஆண்ட புரோதாயம் - துயிலுணருங்காலமாகப் பயின்ற விடியற்காலத்து ; ` நீர் ஆடப் பெற்றோம் ` என இயையும் . ` பெற்றோம் ` என்றருளியன பலவும் , அவை , தாம் சமணரிடை இருந்த காலத்து இல்லாதிருந்தமையைக் குறித்தன . ` கோலமே ` என்னும் பிரிநிலை ஏகாரம் , ` உடை இல்லாமை , உறிதூக்குதல் , பாய் இடுக்குதல் ` முதலியவற்றை தவிர்ந்தமை விளக்கிற்று . இறைவனை நினையுங்கால் உருகாதிருந்த மனத்தை , ` கல்மனம் ` என்றார் . ` அது , மழைபோலக் கண்ணீர் சோருமாறு நன்மனமாய்க் கரையப் பெற்றோம் ` என்று அருளினார் . இங்கு , ` ஆகலான் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . கார் ஆண்ட - மேகம் பொழிந்த . பகடு - யானை . பணிகேட்க - ஆணையின்கண் நிற்க . ` பற்றற்றோம் ` என்ற தனை , முதற்கண் வைத்துரைக்க .

பண் :

பாடல் எண் : 4

உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.

பொழிப்புரை :

சிவவேடத்தையுடைய சிவனடியார்கள் எம் உறவினர் ஆவர் . கோவணமும் கீளும் யாம் உடுப்பனவாய் உள்ளன . ஆகவே பகைவரும் எம்மை வெகுளார் . தேன் நிறைந்து பொன் போன்று திகழும் நல்ல கொன்றை மாலையணிந்த புகழுடைய சிவ பெருமானுடைய நமச்சிவாய மந்திரத்தை நாவால் சொல்ல வல்லேமாய்ச் சுறவுக்கொடியானாகிய மன்மதனைப் பொடியாக அக்கினி நேத்திரத்தை விழித்த சோதிவடிவினனையே தொடர்வுற்றே மாதலின் , தீமை , நன்மையாய்ச் சிறக்கப் பிறப்பிற் செல்லேம் ஆயினேம் .

குறிப்புரை :

உருத்திர பல்கணத்தர் - சிவவேடத்தையுடைய சிவனடியார்கள் . செறுவார் - வெகுள்வார் ; பகைவர் ; செறமாட்டார் - வெகுளமாட்டார் . தீமை , தீமையாய் வாராமை மேலும் , அதுதானே நன்மையாய்ச் சிறந்து நிற்கும் என்க . நறவு ஆர் - தேன் நிறைந்த . பொன் இதழி - பொன்போலும் கொன்றை . ` நமச்சிவாயஞ் சொல்ல ` எனவும் பாடம் ஓதுவர் . ` நாவார் சொல்ல ` என இயையும் . சுறவு - மீன் ; மீன் பொருந்திய கொடியை உடையவன் மன்மதன் . சுடர் நயனம் - அக்கினி நேத்திரம் . ` சோதியையே ` என்னும் தேற்றேகாரம் , அவன் தொடர்தற்கு அரியனாதலை விளக்கி நின்றது . உறவும் , உடுப்பனவும் வேறாய் உலகியலின் நீங்கினமையின் பகைவர் பகைமையொழிதலும் , நமச்சிவாயச் சொல்லிச் சுடர் நயனச் சோதியைத் தொடர்வுற்றதனால் , தீமை நன்மையாதலும் பிறப்பிற் செல்லாமையும் உளவாயின என்க .

பண் :

பாடல் எண் : 5

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய் , இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம் . இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை . யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம் . யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம் . அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின .

குறிப்புரை :

இடைதல் - பின்வாங்குதல் . எதிராவார் - இணை யாவார் ; உம்மை , ` உயர்வாவாரும் இல்லை ` என , எதிரது தழுவிற்று . இனி , ` எதிராக ஆரும் ` இல்லை என்றலுமாம் . ` சேர்வோம் அல்லோமாய் ` என , எச்ச மாக்குக . அன்றே - அமணரை விட்டு நீங்கிய அன்றே . உறுபிணி - மிக்கநோய் . செறல் - வருத்துதல் . ` பிணியார் ` எனவும் , ` ஓடிப்போனார் ` எனவும் உயர்திணையாக்கியருளியது , அதனது மாட்டாமையாகிய இழிபுணர்த்தற்கு . பொன்றினார் - இறந்தவர் . நண்ணிய புண்ணியம் - அடைந்த புண்ணியப் பயன் . ` சேரப்பெற்றோம் , புண்ணியத்துளோம் ` என்பவற்றை முதற்கண் வைத்து , ` அதனால் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க .

பண் :

பாடல் எண் : 6

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே.

பொழிப்புரை :

` அயன் , அரி , அரன் என்னும் மூவுருவிற்கும் முதலுருவாயவனே ! அட்டமூர்த்தியே ! முப்பத்து மூவர் தேவர்களும் அவர்களின் மிக்க இருடியரும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் செம்பவளத் திருமேனியுடைய சிவனே ` என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார் . அதனால் கடிதாய செயலும் களவும் அற்றோமாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டினேம் அல்லேம் .

குறிப்புரை :

` மூவுருவின் முதல் உரு ` என்றது , ` மூவுருவினுள் முதலாய உரு `, ` மூவுருவிற்கும் முதலாய உரு ` என இருவகையாகவும் பொருள் கொள்ள நின்றது . இருநான்கான மூர்த்தி - எட்டுருவாய இறைவன் . ` முப்பத்து மூவராய தேவர்கள் ` என்க . ` நாவுடையாரே ` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று . ` அன்றே ` என்றது , தேற்றம் உணர்த்திற்று . அதன்பின் , ` அதனால் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . ` சிறிது நிலத்தை ஆளும் நும் அரசனே யன்றி , நாவலந்தீவு முழுதிற்கும் தலைவராய் உள்ள அரசர் ஒருவர் தம் ஏவலரை , எம்மை அழைத்து வருமாறு ஏவி விடுத்தாராயினும் , யாம் அவர் ஆணையின் வழி நிற்கும் கடமையுடையோம் அல்லோம் ` என்றவாறு . ` கடவம் அல்லோம் ` என்றதன்பின் . ` என்னை ?` என்னும் வினாச்சொல் வரு விக்க . கடுமை - கடிதாய செயல் ; பிறரை நலிதல் . ` கடுமையும் களவும் உடையாரே அரசன் ஆணைக்கு அஞ்சற்பாலர் ` என்பது திருக்குறிப்பு .

பண் :

பாடல் எண் : 7

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே.

பொழிப்புரை :

நிற்பனவும் , நடப்பனவும் , நிலனும் , நீரும் , நெருப்பும் , காற்றும் , நெடுவானும் , புன்மையதும் , பெரியதும் , அரியதும் , அன்புடையார்க்கெளியதும் , அளக்கலாகாத் தற்பரமும் , சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானை அவன் நன்மைகளையும் , பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம் ; அதனால் பிழையற்றோம் . அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்பப் பேயர் பேசுமாறுபோல யாம் பேசுவமோ ?

குறிப்புரை :

நிற்பன - அசரம் . நடப்பன - சரம் . அற்பம் - சிறுமை ; இது முதலிய மூன்று பண்புகளும் ஆகுபெயராய் , அவற்றை உடைய பொருள்மேல் நின்றன . ` அளக்கலாகாப் பரம் ` என இயையும் . பரம் - மேலான பொருள் . தத்பரம் - உயிருக்கு மேற்பட்டது . சதாசிவம் - சதா சிவதத்துவம் . தானும் - தானேயாகியும் ; யானும் - யானாகியும் . இவை முறையே இறைவனது பொருட்டன்மையையும் கலப்பினையும் உணர்த்தி , இரட்டுற மொழிதலால் , உடனாதலையும் உணர்த்தும் . ` தன்மையனைப் பேசக்கடவோம் ; அவனால் முன்னமே பிழை யற்றோம் ; பேயர் பேசுவன பேசுதுமோ ` என்க . ` பேயர் ` என்றது , சிறந்த உணர்வு இல்லாமை பற்றி . ` பேசுவன ` என்றது , அரசனுக்கு வணங்கி நின்று , அவனுக்கு ஏற்பப் பேசுதலை .

பண் :

பாடல் எண் : 8

ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.

பொழிப்புரை :

எவ்வுலகினுக்கும் ஈசனும் , இறைவனும் , தேவர்கள் தலைவனும் , எரிபோன்று மிக்கு ஒளிரும் தேசனும் , செம்மேனியிடத்து வெண்ணீற்றானும் , மலையரையன் பொற்பாவை தன்னைக் காதலிக்க , தானும் அவளைக் காதலிக்கும் நேசனும் ஆகிய சிவபெருமானைத் தினமும் நினையப் பெற்றோம் . அதனால் நின்றுண்ணும் சமணர் என்றும் மறவாதிருக்கும்படி எமக்குச் சொன்ன உறுதிபோலும் சொற்களை எல்லாம் யாம் மறந்தொழிந்தோம் . இந்நிலையில் என்னிடம் வந்த நீர் யார் ? மன்னன் ஆவான் தானும் யாரே ?.

குறிப்புரை :

ஈசன் - ஆள்பவன் . ` எவ்வுலகினுக்கும் ஈசன் ` என்க . இறைவன் - எங்கும் நிறைந்திருப்பவன் . தேசன் - ஒளியை யுடையவன் . ` செம்மேனியில் வெண்ணீற்றானை ` என்க . சிலம்பரையன் - மலையரசன் . பொற்பாவை - அழகிய பாவை போல்பவள் . நலம் செய்கின்ற - காதலிக்கின்ற . ` நேசன் ` என்றது ` தானும் அவளைக் காதலிப்பவன் ` என்றபடி . நின்று உண்பார் , சமணர் . நினைய - என்றும் மறவாதிருக்கும்படி . ` எம்மைச் சொன்ன ` என இயையும் . ` எம்மை ` என்றதனை . ` எமக்கு ` என்க . வாசகம் - உறுதிபோலும் சொல் . ` அன்றே மறந்தோம் ` என்க . அன்றே - அவரைவிட்டு நீங்கிய அன்றே , ` மறந்தோம் ` என்றதன்பின் , ` ஆதலின் ` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க . ` சமணரே நும் அரசன் பணிகேட்பர் ; சிவன் அடியார் அது கேளார் ` என்பார் , ` வந்தீராகிய நீர் யாவிர் ? மன்னவன் என நும்மால் குறிக்கப்பட்டவன் யாவன் ? என வினவினார் ; இவ்வினா , ` நும்மோடும் அவனோடும் எமக்குச் சிறிதும் தொடர்பில்லை ` என்றது விளக்கிற்று .

பண் :

பாடல் எண் : 9

சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே.

பொழிப்புரை :

சடையுடையானும் ஒருகாதில் விளங்கும் சங்கக் குழையானும் , சாம்பலைப் பூசிப் பாம்பை அணிந்த மேனியானும் , விடையுடையானும் , புலித்தோலாம் மேலாடையானும் , வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த உடை உடையானும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான் . அதனால் பாசத்தை முழுதும் உதறியெறியும் நிலையினை உடையோம் . ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களையுமுடைய அரசனுடைய ஆணைகேட்கும் தொழில் உடையோம் அல்லோம் .

குறிப்புரை :

விடை - இடபம் . வேங்கை அதள் - புலித்தோல் ; அது , மேலாடையாதலும் அறிக . ` புள்ளிமான் ` என இயையும் . உழை , மான்களுக்குள் ஓர் இனம் . ` படை ` என்றது , படைவீரர் முதலிய ஏவலாளர் அனைவரையும் . ` நின்ற ` என்றது , ` படை ` என்றதனோடு முடிந்தது , ` அவர்களை உடையான் ` என்றது , அரசனை . பணி கேட்கும் பணியோம் அல்லோம் - ஆணை கேட்கும் தொழில் உடையோம் அல்லோம் . படியோம் - நிலையினை உடையோம் . ` பாசத்தை அற வீசும் படியோம் ` என்க . ` பணியோம் அல்லோம் ` என்றதன்பின் , ` என்னை ?` என்னும் வினாச்சொல் வருவிக்க .

பண் :

பாடல் எண் : 10

நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே.

பொழிப்புரை :

நாவிடத்து இன்பம் நிறையச் சிவபெருமானையே பாடப் பெற்றோம் அதனால் உடை உடாத சமணர் எம்மை விரும்பாது விலகப்பெற்றோம் . அமரர் தலைவனாகிய சிவபெருமான் மனமிரங்கி எமை ஆள்வான் . நான்முகனும் திருமாலும் அறிதற்கு அரிய அனற் பிழம்பாய் நீண்டவனும் தேவர்க்குத் தேவனுமாகிய சிவபெருமான் எம் சிந்தையில் மன்னி நின்றான் . அதனால் அவனுக்குரிய எண் குணங்களை உடையேமாயினேம் . ஆகவே இயமனே வந்து தன் தலைமையை உரைத்து எம்மைக் குற்றேவல் செய்க என்றாலும் அதனை எமக்குரிய நெறியாகக் கொள்ளோம் .

குறிப்புரை :

நா ஆர - நாக்குளிர . நம்பன் - சிவபெருமான் . நாணற்றார் - உடை உடாத சமணர் . நள்ளாமே நீங்க - விரும்பாது விலக . ` ஆ ஆ ` என்றது , இரக்கக் குறிப்பு ; எனவே , ` மனம் இரங்கி ` என்றது , பொருளாயிற்று . ` சேர்ந்திருந்தான் ` என்பதன்பின் , ` அதனால் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . தென்றிசைக்கோன் - இயமன் . கோ ஆடி - தனது தலைமையை உரைத்து . குணமாக - நெறியாக . ` எண் குணத்துளோம் ` என்றதனை , ` அதனால் ` என வருவிக்கப்பட்ட சொல்லெச்சத்தின் பின்னர்க் கூட்டி , இதன்பின்னும் , ` ஆகலான் ` என்னும் ஒரு சொல்லெச்சம் வருவிக்க . எண்குணம் சிவபிரானுக்கு உரியன ; அவை மேலே காட்டப்பட்டன . இதனால் , ` சிவபிரானை அடைந்தோர் , அவனது எண்குணங்களையும் பெறுவர் ` என்பதும் பெறப்பட்டது .

பண் :

பாடல் எண் : 1

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

புண்ணியா , அழகிய புகலூர் மேவிய புண்ணியனே , நினையுந்தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினையின் அல்லது வேறு எதனை விரும்பி நினைவேன் ? நினது கழலடியையே கைதொழுது காணின் அல்லது வேறு காட்சியில்லேன் ; மற்றொரு பற்றுக்கோடும் இல்லேன் . யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய் . அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன் . ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

எண்ணுகேன் - நினையும் தன்மையுடையேனாகிய யான் . ` சொல்லி ` என்றது , ` கருதி - விரும்பி ` எனப் பொருள் தந்தது . ` கண் ` என்றது காட்சியை . களைகண் - பற்றுக் கோடு . ` மற்றோர் ` என்றதனை , ` கண் ` என்றதற்கும் கூட்டுக . கழல் அடி - கழல் அணிந்த திருவடி . ` எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினையின் அல்லது , வேறு எதனை விரும்பி நினைவேன் ; நினது கழலடியையே கைதொழுது காணின் அல்லது , வேறு காட்சியில்லேன் ; மற்றொரு பற்றுக்கோடும் இல்லேன் ` என உரைக்க . ஒண் உளே - யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய இவ்வுடம்பிலே . ஒக்க அடைக்கும் போது - அவை அனைத்தும் ஒருசேர அடைக்கப் படுங்காலத்து ; என்றது , ` இறப்பு நேருங் காலத்து ` என்றபடி . உணரமாட்டேன் - மேற் குறித்தவாறு உன்னையே நினைதலையும் , காணுதலையும் வல்லேன் அல்லேன் ; ` ஆதலின் , அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன் ; என்னை ஏன்று கொண்டருள் ` என முடிக்க . ` என்னை ஏன்றுகொண்டருள் ` என்பது குறிப்பெச்சம் . பூம்புகலூர் - அழகிய புகலூர் , ` புண்ணியா , பூம்புகலூர் மேவிய புண்ணியனே ` என்ற விளிகளை முதற்கண்வைத்து உரைக்க . வருகின்ற திருத் தாண்டகங்களிலும் அவ்வாறே உரைக்க . புண்ணியன் - புண்ணிய ( அற ) வடிவினன் . ` புண்ணியா , புண்ணியனே ` என்றன , முன்னர்ப் பொதுவாகவும் , பின்னர்த் திருப்புகலூர்பற்றிச் சிறப்பாகவும் அருளிச் செய்தவாறு . ` உன்னடிக்கு ` என்னும் நான்கனுருபு , ` ஊர்க்குச் சென்றான் ` என்பதுபோல , ஏழாவதன் பொருட்கண் வந்தது ; இது புறனடை யான் அமைந்தது ( தொல் - சொல் . 110) ` உன்னடிக்கே ` என்னும் ஏகாரம் , இவ்வுலகில் வாழ்வதினின்றும் பிரித்தலிற் பிரிநிலை .

பண் :

பாடல் எண் : 2

அங்கமே பூண்டாய் அனலா டினாய்
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்சடை யினாய்
பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவ தேவே.

பொழிப்புரை :

திருப்புகலூர் மேவிய தேவ தேவே ! எலும்புகளை அணியாகப் பூண்டவனே , அனலாடீ , ஆதிரை நாண்மீனை உடையவனே , கல்லால மர நிழலமர்ந்தோனே . ஆனேற்றை ஊர்ந்தவனே , குறைஒன்றுமில்லாத பரவிய சடையினனே , பாம்பொடு திங்களை வைத்து அவற்றின் பகை தீர்த்தாண்டவனே , தேவர் வேண்டப் பிறிது எண்ணம் ஒன்று இன்றியே சமுத்திரத்தில் தோன்றிய நஞ்சினையுண்டு சாதலும் மூத்தலும் இல்லாத வலிய சிங்கமே ! உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

அங்கம் - எலும்பு . ஆதிரையாய் - திருவாதிரை நாண் மீனை உடையவனே . பங்கம் - குறை . சங்கை - பிறிதோர் எண்ணம் . ` நஞ்சினை , தேவர் வேண்ட சங்கை ஒன்று இன்றியே உண்டு ` என இயைக்க . மூவா - கெடாத . சிங்கம் - சிங்கம் போல்பவனே ; உவமையாகு பெயர் ; இது , வலிமை நிலைக்களனாகத் தோன்றியது ; அஃதாவது , சிவபிரானது பேராற்றலை உணர்த்தியருளியது ; இஃது அறியாதார் , ` சுவாமிகளை இறைவன் சிங்க வடிவில் தோன்றி உண்டருளினான் ` எனத் தமக்குத் தோன்றியவாறே படைத்திட்டுக் கொண்டு கூறுப ; சேக்கிழாரது மெய்ம்மை கூறும் திருமொழிக்கு மாறாக அவர் கூறும் படைத்து மொழியைச் சிறிதும் கொள்ளற்க . தேவ தேவே - தேவர்கட்குத் தேவனே ; பெருந்தேவனே . ` அங்கமே பூண்டாய் ` என்றற்றொடக்கத்தன பலவும் , இறைவனது அருட்டிறங்களை எடுத்தோதித் தம்மை ஏன்றருள வேண்டியவாறு ; இனிவரும் திருத் தாண்டகங்களும் அன்ன .

பண் :

பாடல் எண் : 3

பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்
பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்
மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேல் தரவ றுத்தாய்
அவர்வேண்டும் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! பட நாகத்தைக் கச்சையாகக் கொண்டவனே , பால்போலும் வெள்ளிய திரு நீற்றினாய் , பளிக்குக் குழையினனே , பண்போலும் இன் சொல்லும் மை பூசிய கண்ணுமுடைய பார்வதியைப் பாகங்கொண்டவனே , மான் கன்றை ஏந்திய கையினனே , வஞ்சமிக்க கள்வரைப் போன்ற ஐம்புலன்களும் வஞ்சம் செய்தலை என்னினின்றும் நீக்கினை . அவை விரும்பும் காரியம் எனக்கு நன்மை பயக்குமாறு இல்லை . என்னுரை பொய்யுரை யன்று : உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக .

குறிப்புரை :

பை - படம் . பளிக்கு - பளிங்கு போல்வது ; சங்கு பண் ஆர் - பண்போலும் . மறி - கன்று . கள்வர் ஐவர் - ஐம்புல வேடர் . ` என் மேல் ` என்றது , ` என்னினின்றும் ` என்றவாறு . தரவு - வஞ்சச்செயல் . ` ஐவரையும் தரவு அறுத்தாய் ` என்றதனை , ` நூலைக் குற்றங் களைந்தான் ` என்பதுபோலக் கொள்க . வேண்டும் - விரும்பும் . ஆவது இல்லை - நன்மை பயக்குமாறு இல்லை . ` பொய்யுரையாது ` என்றது , ஐம்புலவாழ்க்கையை வெறுத்தமையையும் , ` திருவடிக்கே போதுகின்றேன் ` என்றமையையும் ; இவ்வாறு வலியுறுத்து அருளிச்செய்தது திருவடி சேர்தற்கண் அவாமிக் கெழுந்தமையால் என்க .

பண் :

பாடல் எண் : 4

தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகி
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! தாங்கள் செய்து வந்த சிவ வழிபாட்டினை இடையிலேயே விட்டொழிந்த மயக்கத்தினராகிய திரிபுரத்தசுரரின் மூன்று மதிலும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்துச் செங்கணையால் அவற்றை அழித்த தேவனே ! மயக்கமின்றி நின்னையே வழிபடுவார் மனத்தில் ஏற்படும் மெலிவைத் தீர்ப்பவனே ! தேவர்களுக்கு மருந்தாய் என்றும் அவருற்ற பிணி தீர்ப்பவனே ! அருளே உருவமாகி எப்பொருட்கும் முதலாகிய வேதமானவனே ! பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாத பொருளானவனே ! உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

தெருளாதார் - தெளியாதவர் ; சிவவழிபாட்டினை இடையிலே விட்டொழித்தவர் ; திரிபுரத்து அசுரர் . ` செங்கணை ` என்றது , ` குருதி தோய்ந்த ` என்னுங் குறிப்பு மொழி ; இஃது இன அடை . மருளாதார் - திரிபுரத்தவர்போல மயங்கியொழியாதவர் . வாட்டம் - மெலிவு ; கவலை . அருளாகி - அருளே உருவமாகி . ஆதியாய் - எப் பொருட்கும் முதலாய் . அலர்மேலான் , பிரமன் . நீர்மேலான் , திருமால் . ஆய்ந்தும் - தேடியும் .

பண் :

பாடல் எண் : 5

நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே
கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! கங்கை தங்கிய செஞ்சடைமேல் நிலவையுடைய வெள்ளிய திங்களை நீங்காமல் உறையும்படி விரும்பிவைத்த நீதியனே ! பருமை பொருந்திய படுதலையில் பிச்சை கொள்வானே ! பண்டு மன்மதனைச் சுட்டு எரித்தவனே ! பாவங்களை நாசம் செய்பவனே ! கருமை பொருந்திய மேகம் போன்ற கண்டத்தை உடையவனே ! கரியதும் கையுடையது மாகிய களிறுகதற அதனை உரித்து அதன் தோலைப் போர்த்த போர்த்தொழில் வல்ல சிங்கமே ! உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

நிலா வெண்டிங்கள் - நிலவையுடைய வெண்மையான சந்திரன் . பார் ஏறு - பருமை பொருந்திய ; பெரிய . படுதலை - அழிந்த தலை ; ` தலைஓடு ` என்றபடி . கார் ஏறு - கருமை பொருந்திய . ` கருங்களிறு , கைக்களிறு ` என்க . ` போர் ஏறு ` என்றதும் , வீரம் பற்றி ; ` களிற்றை அழித்த ஏறு ` என்பது நயம் ; ஏறு - சிங்க ஏறு .

பண் :

பாடல் எண் : 6

விரிசடையாய் வேதியனே வேத கீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானம் மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்
வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! விரி சடையாய் ! வேதத்தாற் புகழப்படுவோனே ! வேதத்தைப் பாடுபவனே ! விரிந்த பொழிலால் சூழப்பட்ட வெண்காட்டினனே ! மீயச்சூரை உடையவனே ! திரிபுரங்களை எரித்தழித்த தேவதேவனே ! திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறைவோனே ! இனிய பண்பு உடையாரின் மனத்துள்ளவனே ! மாகாளத்து வாழ்பவனே ! வலஞ்சுழி வள்ளலே ! மாமறைக்காட்டெந்தையே ! என்றும் முறுக்குண்டு திகழும் சடையானே ! உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்று கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

வேதியன் - வேதத்தாற் புகழப்படுபவன் . வேதகீதன் வேதத்தைப் பாடுபவன் . வெண்காடு , மீயச்சூர் , திருவாரூர் , வலஞ்சுழி , மறைக்காடு சோழநாட்டுத் தலங்கள் ; இவ்விடங்களில் இருந்து அருள்புரியும் நிலையை நேரிற்கண்டருளியவற்றை எல்லாம் நினைந்து ஓதி வேண்டியருளினார் . மாகாளம் , வைப்புத் தலம் ; பிற மாகாளங்களும் உள . ` மருவ இனியார் ` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று . ` இனிய பண்பு உடையவர் ` என்பது பொருள் .

பண் :

பாடல் எண் : 7

தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! கடவுட்டன்மை மிக்க கடவுளே , எல்லாத் தேவரும் நான்முகனும் , இந்திரனும் , மாலும் தேடிக் கண்டு நின்று திருவடிமேல் பூக்களை இட்டு நாவிற்பொருந்திய மறையைப்பாடி நட்டம் ஆடிப் போற்ற இள மரக்காவுடன் பொருந்திய பொழிலாகிய சோலையையுடைய கானப் பேரூர்என்ற திருத்தலத்தில் விளங்குபவனே ! கழுக்குன்றின் உச்சியில் உள்ளவனே ! மனம் வாக்கு மெய்களைக் கடந்தவனே ! நின் பூவைப் போலப் பொருந்திய அழகிய திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்றுகொண்டருள்வாயாக .

குறிப்புரை :

தே ஆர்ந்த தேவன் - கடவுட்டன்மை நிரம்ப உடைய கடவுள் ; ஏனையோர் அதனைச் சிறிது சிறிது உடையர் என்க . ` தேவர் எல்லாம் ` என்றதனை , ` எல்லாத் தேவரும் ` என மாற்றி , எல்லாத் தேவரும் , நான்முகனும் , இந்திரனும் , மாலும் , தேடிநின்று , அலர் இட்டு , மறைபாடி , ஆடிப்போற்ற ` என இயைத்து உரைக்க . ` போற்ற ` என்ற எச்சம் , ` கானப் பேராய் `, ` கழுக்குன்றத்து உச்சியாய் ` என்னும் வினைக்குறிப்புக்களைக் கொண்டன . கா - இள மரக்கா . பொழில் - பெருமரச் செறிவு . ` பொழிலாகிய சோலை ` என்க . கானப்பேர் , பாண்டிநாட்டுத் தலம் . கழுக்குன்றம் . தொண்டை நாட்டுத் தலம் . பூ ஆர்ந்த - பொலிவு நிறைந்த , ` பூப்போலப் பொருந்திய ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 8

நெய்யாடி நின்மலனே நீல கண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! நெய்யாடுபவனே , நின்மலனே , நீல கண்டனே , நிறைவுடையவனே , வேதம் வல்லானே , நீதியனே , மைவிரவு கண் மடவாள் பார்வதி திகழ் பாகத்தானே , மான்தோலை உடையாகக் கொண்டு மகிழ்ந்தவனே , இப்பொழுது பறித்தல் பொருந்திய , வில்வம் கொன்றை இவற்றால் ஆகிய மாலையைக் கொணர்ந்து இட்டு அடியேன் பொய்யில்லாத நின்புகழ்விரிக்கும் தோத்திரங்களைக் கூறி வழிபட்டு நின்று நின் சேவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்று கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

நெய் ஆடி - நெய் ஆடுபவனே . நிறைவு உடையாய் - யாதொரு குறையும் இல்லாது எல்லாவற்றாலும் நிறைந்த தன்மையை உடையவனே , நீதியான் - நீதியாய் இருப்பவன் . மை ஆடு - மை பொருந்திய . கொய் ஆடு - இப்பொழுது பறித்தல் பொருந்திய . கூவிளம் - வில்வம் . ` கூவிளம் , கொன்றை இவற்றால் ஆகிய மாலை ` என்க . ` அடியேனாகிய நான் ` என்க . கூறி நின்று - வேண்டிநின்று . ` நாளிட்டு ( காலையே சாத்தி )` என்பதே பாடம் போலும் ! இதனால் , ` சுவாமிகள் இறைவனை மாலை சாத்தியும் , மலர்தூவியும் வழிபட்டு இத் திருப்பதிகத்தை அருளிச் செய்து வேண்டி நின்றார் ` என்பது பெறப்படும் . பொய்யாத சேவடி - அடியவர்கட்குத் தப்பாது உதவும் செம்மை ஆகிய திருவடி .

பண் :

பாடல் எண் : 9

துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
யக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! தைத்தல் பொருந்திய கோவணத்தை உடையவனே ! தூய நீற்றினனே ! ஒளி மிகுந்து விளங்கும் வெள்ளிய மழுவாயுதத்தைக் கையிற் கொண்டு , தன்னைச் சார்ந்த குளிர்ந்த பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடைமுடிமேல் வைத்து மகிழ்ந்த அருள்தன்மையனே ! அன்னநடை மடவாள் பார்வதி திகழும் பாகத்தை உடையவனே ! எலும்பு மாலை அணிந்தவனே ! முதற்கடவுளே ! நான் நின் பொன்னால் ஆகிய கழல் அணிந்த திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்று கொண்டு அருள்வாயாக .

குறிப்புரை :

துன்னம் - தைத்தல் ; கீளோடு இணைத்தல் . துதைந்து இலங்கு - ஒளி மிகுந்து விளங்குகின்ற . தன் அணையும் - தன்னைச் சார்ந்த . ` தன்னனையும் ` என்பது பாடம் அன்று . அக்கு ஆரம் - எலும்பு மாலை ஆதியான் - முதற்கடவுள் . பொன்னங் கழல் - பொன்னால் ஆகிய கழல் .

பண் :

பாடல் எண் : 10

ஒருவனையும் அல்லா துணரா துள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே ! ஒருவை ஆகிய நின்னையல்லது என் உள்ளம் வேறு உணராது . உணர்வு கலங்குமாறு புலனாகாது அருவாய் நின்ற இருவினைகளையும் முக்குணங்களையும் என்மேல் விடுத்துப் பொய்யான யான் எனது என்னும் செருக்கினை அறுத்தாய்க்குச் செய்யும் கைம்மாறு இல்லேன் . ஏலம் நிறைந்த கரிய மலைகளைச் சூழ்ந்து கடற்கரை விளங்கும் இலங்கைக்கு அரசனது விரைந்து செல்லும் தேர் , மேலே ஓடாமல் காலால் ஊன்றிய போர் செய்யும் திருக்கயிலாய மலையானே ! நான் நின் திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்று கொண்டருள்வாயாக .

குறிப்புரை :

` ஒருவனை ` என்பதில் ஐ , முன்னிலை விகுதி ; அன் , சாரியை . தடுமாற்றத்து - கலக்கத்தையுடைய ; என்றது , ` கலக்கத்தைச் செய்கின்ற ` என்றபடி . ` தடுமாற்றத்து இருவரையும் மூவரையும் ` என இயையும் . ` உள்ளே நின்ற ` என்றது , ` புலனாகாது அருவாய் நின்ற ` என்றவாறு . இருவர் - இரு வினை . மூவர் - முக்குணம் . இல்லாத தரவு - பொய்யான ` யான் எனது ` என்னும் செருக்கு ; எல்லாவற்றிற்கும் இறைவனே முதல்வனாதலின் , உயிர்கள் கொள்ளும் ` யான் எனது ` என்னும் உணர்வு பொய்யாயிற்று . இல்லேன் - ` நிரம்பிய அன்பு இல்லேன் ; இல்லேன் போதுகின்றேன் ` என இயையும் . ` அன்பு இல்லேன் ; ஆயினும் ஏற்றருள் ` என்பது திருக்குறிப்பு . ஏலம் , மரவகை . கருவரை - பெரிய மலைகள் . கானல் - கடற்கரை . ` கருவரை சூழ் இலங்கை , கானல் இலங்கை ` என்க . கடுந்தேர் - விரைவுடைய விமானம் . மீது ஓடாமை - மேலே ஓடாதபடி . செற்ற - ஊன்றிய . ` செற்ற வரை ` என இயையும் ; ` செற்ற ` என்னும் பெயரெச்சம் , ` உண்ட இல்லம் ` என்பது போல . ` வரை ` என்னும் இடப்பெயர் கொண்டது . ` பொருதல் - போர் செய்தல் . திருக்கயிலாய மலையை , ` பொரு வரை ` என்று அருளினார் , இராவணனைத் தடுத்து நிறுத்தினமை பற்றி . காலாற் செற்றமை அருளியதனோடு அமையாது , இறுதியில் திருக் கயிலையை நினைந்து அருளினார் என்க . திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் ஆறாம் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது .
சிற்பி