திருஅதிகை வீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

செல்வப் புனற்கெடில வீரட்டமும்
சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும்
தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே.

பொழிப்புரை :

நீர் மிக்க கெடிலநதியால் செல்வவளம் பெற்ற அதிகை வீரட்டம் , சிற்றேமம் , மிக்க பரப்பினை உடைய குளிர்ந்த குற்றாலம் , தில்லைச் சிற்றம்பலம் , தெற்கில் உள்ள மதுரை , அழகிய ஆனைக்கா , சிராப்பள்ளி , நல்லூர் , தேவன்குடி , மருகல் , சான்றோர்கள் வழிபட்டுத் துதிக்கும் நாரையூர் ஆகியன - கல்லலகு என்ற வாச்சியத்தையும் , நீண்ட புருவச் சுவடுடைய மண்டையோட்டினையும் கட்டங்கம் என்ற படைக்கலத்தையும் ஏந்திய சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம் .

குறிப்புரை :

தேவன்குடி - திருந்துதேவன்குடி . கல் அலகு - தாளம் . ஓர் ஆயுதம் என்பாரும் உளர் . ` ஒருவாச்சியம் ` என்றது தமிழ்ப் பேரகராதி ( லெக்ஸிகன் ), ` கல்லலகும் கபாலமும் ஏந்தி ` என்க . வேண்டும் இடங்களில் எல்லாம் உம்மை விரிக்க .

பண் :

பாடல் எண் : 2

தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய் நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணா மலை
அறையணிநல் லூரும் அரநெ றியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , கோவலூர் வீரட்டம் , வெண்ணெய்நல்லூர் , அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைநீரை உடைய அண்ணாமலை , அறையணி நல்லூர் , அரநெறி , இடைமருது , இன்னம்பர் , ஏகம்பம் , மேகத்தொடு விளங்கும் சோலைகளை உடைய கயிலாயம் என்பன - நாம் துதிக்குமாறு நெற்றிக்கண்ணனாகிய எம் பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் . அத் தலங்களில் எம்பெருமானைப் போற்றுங்கள் .

குறிப்புரை :

தீர்த்தம் - தூய்மை ; தெய்வத் தன்மை . அரநெறி - சிவநெறி ; அஃது ஒரு தலத்திற்குப் பெயராயிற்று ; அது , திருவாரூரில் உளது . கார்த்தயங்கு - காரொடு ( மேகத்தொடு ) தயங்குகின்ற ( விளங்குகின்ற ). ` வீரட்டம் முதலியன , நீர் ஏத்துதற்பொருட்டாகத் திருக்கோயில் கொண்டு நின்ற ஈசனாகிய கண்ணுதலானது காப்புக்களாம் ; ஆதலின் , அவற்றைச் சென்று ஏத்துமின்கள் ` என முடிவு செய்க .

பண் :

பாடல் எண் : 3

சிறையார் புனற்கெடில வீரட்டமும்
திருப்பா திரிப்புலியூர் திருவா மாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்த நின்ற
சோற்றுத் துறைதுருத்தி நெய்த் தானமும்
அறையார் புனலொழுகு காவி ரிசூழ்
ஐயாற் றமுதர் பழனம் நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப் பேரும்
கழுக்குன்றும் தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

பாறைகளில் மோதிப் பெருகிவருகின்ற நீரை உடைய காவிரியால் தென்புறம் சூழப்பட்ட திருவையாற்றில் அமுதமாக உகந்தருளியிருக்கும் பெருமான் தடுக்கப்படுகின்ற நீரை உடைய கெடில நதிக் கரையிலுள்ள அதிகை வீரட்டம் , பாதிரிப்புலியூர் , ஆமாத்தூர் , நீர்த்துறைகளை அடுத்த சோலைகளில் வாழும் முனிவர்கள் துதிக்க இருக்கும் சோற்றுத்துறை , துருத்தி , நெய்த்தானம் , இருண்ட சோலைகளால் சூழப்பட்ட கானப்பேரூர் , கழுக்குன்றம் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ளான் .

குறிப்புரை :

சிறை - அணை . துறை - ஆசிரியர் நிற்பித்த நெறி . ` முனிகள் ` என்பதில் கள் ஈறு உயர்திணைப் பன்மை யுணர்த்துதல் , ` கடிசொல் லில்லைக் காலத்துப் படினே ` ( தொல் - சொல் - 452) என்பதனாற் கொள்ளப்பட்டது . ஐயாற்றமுதராகிய ` தம்முடைய காப்புக்கள் ` என்க . இதனானே ஐயாறும் கொள்ளப்பட்டது . ` அமுதன் ` என்பது பாடம் அன்று . கறை - கறுப்பு ; மேகம் ; இருள் என்றலுமாம் . ` காவிரிசூழ் ` என்பது இருமாச்சீர்க்கு ஈடாக ஒரு விளங்காய்ச்சீர் வந்தது ; வருகின்ற திருப்பாடலிலும் இவ்வாறு வருதல் காண்க .

பண் :

பாடல் எண் : 4

திரையார் புனற்கெடில வீரட்டமும்
திருவாரூர் தேவூர் திருநெல் லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்து றையும்
வரையா ரருவிசூழ் மாந தியும்
மாகாளம் கேதாரம் மாமேருவும்
கரையார் புனலொழுகு காவி ரிசூழ்
கடம்பந் துறையுறைவார் காப்புக் களே.

பொழிப்புரை :

கெடிலக் கரை வீரட்டம் , திருவாரூர் , தேவூர் , நெல்லிக்கா , புகழை உடைய சான்றோர் வழிபடும் ஒற்றியூர் , ஓத்தூர் , மாற்பேறு , மாந்துறை , மலை அருவிகள் சூழ்ந்த மாநதி , மாகாளம் , கேதாரம் , மாமேரு என்பன காவிரி சூழ்கடப்பந்துறையில் உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருத்தலங்களாம் .

குறிப்புரை :

உரையார் - உரைத்தல் , புகழ்தல் உடையவர் . மாநதி , மாகாளம் , மாமேரு இவை வைப்புத் தலங்கள் . ` கடம்பு ` என்னும் மரப்பெயர் அம்முச்சாரியை பெற்றது .

பண் :

பாடல் எண் : 5

செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும்
திரிபுராந் தகம்தென்னார் தேவீச்சரம்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும்
குடமூக்கும் கோகரணம் கோலக் காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்து றையும்
கழுநீர் மதுவிரியுங் காளிங்க மும்
கணபதீச் சரத்தார்தங் காப்புக் களே.

பொழிப்புரை :

கெடிலக்கரை அதிகை வீரட்டம் , திரிபுராந்தகம் , அழகிய தேவீச்சரம் , வெள்ளம் சூழும் கோட்டுக்கா , குடமூக்கு , கோகரணம் , கோலக்கா , இழித்துரைக்கும் தன்மை இல்லாத பனங் காட்டூர் , பனையூர் , பயற்றூர் , பராய்த்துறை , கழுநீர்ப் பூக்களிலிருந்து தேன் வெளிப்படும் காளிங்கம் என்பன கணபதீச்சரத்தை உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருத்தலங்களாம் .

குறிப்புரை :

திரிபுராந்தகம் , தேவீச்சரம் , கோட்டுக்கா , காளிங்கம் - இவை வைப்புத் தலங்கள் . கணபதீச்சரம் - திருச்செங்காட்டங்குடி . குடமூக்கு - குடந்தை . ( கும்பகோணம் )

பண் :

பாடல் எண் : 6

தெய்வப் புனற்கெடில வீரட்டமும்
செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வந் திரியும் பருப்ப தமும்
பறியலூர் வீரட்டம் பாவ நாசம்
மவ்வந் திரையு மணிமுத்த மும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சு ழியும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங்
கழிப்பாலை தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம் , செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர் , கடல் வெள்ளம் அணுகும் சீசைலம் , பறியலூர் வீரட்டம் , பாவநாசம் , இன்னிசை முழங்கும் மணிமுத்தம் , மறைக்காடு , வாய்மூர் , வலஞ்சுழி , ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் .

குறிப்புரை :

பிடவூரும் , பாவநாசமும் வைப்புத்தலங்கள் . அவற்றுள் பிடவூர் சோழநாட்டின் கணுள்ளது ; சேரமான் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஞான உலாவினைத் திருக்கயிலையிற் கேட்டு மாசாத்தனார் நிலவுலகில்வந்து வெளிப்படுத்திய இடம் . பவ்வம் சென்று நின்று திரியும் - கடல் சென்று நிறைந்து திரும்பும் ; என்றது , ` ஊழியினும் அழியாத ` என்றவாறு . ` ம ` என்பது ஏழிசைகளூட் சிறப்புடையதொன்று , ` இழும் ` என்பது எனலுமாம் . ` வந்து மவ்வினை இரையும் ` என்க . இரைதல் - ஒலித்தல் . மணிமுத்தம் , வைப்புத்தலம் . கவ்வை - ஆரவாரம் .

பண் :

பாடல் எண் : 7

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்
உறையூர் நறையூர் அரண நல்லூர்
விண்ணார் விடையார் விளமர் வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபு ரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , சீர்காழி , வல்லம் , திருவேட்டி , நீர்வளம் மிக்க ஏடகம் , ஊறல் , அம்பர் , உறையூர் , நறையூர் , அரண நல்லூர் , வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவ பெருமான் உகக்கும் விளமர் , வெண்ணி , மீயச்சூர் , வீழிமிழலை , நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம் .

குறிப்புரை :

` தீக்காலி ` என்பதும் பாடம் . இப்பெயருடையதொரு வைப்புத்தலம் உண்டு . திருவேட்டி , அரணநல்லூர் , கரபுரம் - இவை வைப்புத் தலங்கள் , உறையூர் - திருமுக்கீச்சரம் . ` விடையான் ` என்பது பாடம் அன்று .

பண் :

பாடல் எண் : 8

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்
திண்டீச் சரமுந் திருப்பு கலூர்
எள்ளும் படையான் இடைத்தா னமும்
ஏயீச் சுரமுநல் லேமங் கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடி காவும்
குரங்கணின் முட்டமுங் குறும்ப லாவும்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கி யேத்துங்
காரோணந் தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

பூதப்படையை உடையவரும் , கூத்தினை நிகழ்த்துபவரும் , ஆகிய பெருமானார் உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள் , அதிகை வீரட்டம் , திண்டீச்சரம் , புகலூர் , இடைத்தானம் , ஏயீச்சுரம் , ஏமம் , கூடல் , கோடிகா , குரங்கணில் முட்டம் , குறும்பலா , திருவடி ஞானம் பெறச் சத்திநிபாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் நாகை குடந்தைக் காரோணங்கள் , என்பனவாகும் .

குறிப்புரை :

கூடல் - மதுரை . திண்டீச்சரம் , இடைத்தானம் , நல்லேமம் இவை வைப்புத் தலங்கள் , எள்ளும் படை - பூதப்படை . இலயம் - கூத்து . குறும்பலா - திருக்குற்றாலம் . களிப்பைத் தருதலின் திருவடி ஞானமும் ` கள் ` எனப்படும் என்பது , ` காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே - மாயக்கள் ளுண்டாரென் றுந்தீ பற - வறட்டுப் பசுக்களென்றுந்தீ பற ` ( திருவுந்தியார் . 43) என்பதும் காண்க . தெள்ளியார் - சத்திநிபாதம் பெற்றவர் . ` இலயத்தார் தம்முடைய காப்புக்கள் ` என்க . ` திருப்புகலூர் ` என விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் ஒன்று .

பண் :

பாடல் எண் : 9

சீரார் புனற்கெடில வீரட்டமும்
திருக்காட்டுப் பள்ளி திருவெண் காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர் நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வா யிலும்
காரார் கமழ் கொன்றைத் தாரார்க் கென்றும்
கடவூரில் வீரட்டங் காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , காட்டுப்பள்ளி , வெண்காடு , உலகு புகழும் சிறப்பினை உடைய பைஞ்ஞீலி , பந்தணைநல்லூர் , பாசூர் , நல்லம் , வயல்சூழ்ந்த நின்றியூர் , நெடுங்களம் , நெல் வெண்ணெய் , நெல்வாயில் , கடவூர் வீரட்டம் என்பன கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானுடைய திருத்தலங்களாம் .

குறிப்புரை :

` கடவூரில் உள்ள வீரட்டமும் ` என விரித்து மேலே கூட்டி , ` என்றும் காப்புக்கள் ` என முடிக்க .

பண் :

பாடல் எண் : 10

சிந்தும் புனற்கெடில வீரட்டமும்
திருவாஞ் சியமும் திருநள் ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவதாம்
இடைச்சுரமும் எந்தை தலைச்சங் காடும்
கந்தங் கமழுங் கரவீரமும்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , வாஞ்சியம் , நள்ளாறு , தண்பொழில் சூழ் அயோகந்தி , ஆக்கூர் , ஆவூர் , ஆன்பட்டி , இடைச்சுரம் , தலைச்சங்காடு , நறுமணம் கமழும்கரவீரம் , சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம் .

குறிப்புரை :

அயோகந்தி , ஆன்பட்டி இவை வைப்புத் தலங்கள் . அயோகந்தி , ` அசோகந்தி ` என்றும் சொல்லப்படும் . ` இடமாவது ` என்பது பாடம் அன்று .

பண் :

பாடல் எண் : 11

தேனார் புனற்கெடில வீரட்டமும்
திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்
கானார் மயிலார் கருமாரியும்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , செம்பொன்பள்ளி , பூவணம் , தேவரும் வணங்கும் மணஞ்சேரி , மதில்களை உடைய உஞ்சை மாகாளம் , வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம் , விளங்கும் சீசைலம் , பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம் .

குறிப்புரை :

உஞ்சை - உஞ்சேனை மாகாளம் . உஞ்சேனை . மாகாளம் , வாரணாசி , வெகுளீச்சரம் , கருமாரி வைப்புத் தலங்கள் . ஏண் - பெருமை . எகுளீச்சரம் என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 12

திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மாநிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரம புரம்சுழியல் பெண்ணாகடம்
கருநீல வண்டரற்றுங் காளத்தியும்
கயிலாயந் தம்முடைய காப்புக் களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம் , அளப்பூர் , அதிகைக்குத் தெற்கில் உள்ள சித்தவடம் , நீர் வளம் மிக்க மாநிருபம் , மயிலாப்பூர் , பிரமபுரம் , சுழியல் , பெண்ணாகடம் , நல்ல நீலநிறமான வண்டுகள் ஒலிக்கும் காளத்தி , கயிலாயம் என்பன அடியவர்களால் நிலையாகப் போற்றப்படும் கங்கை தங்கும் சடையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் .

குறிப்புரை :

அளப்பூர் , சித்தவடம் , மாநிருபம் இவை வைப்புத் தலங்கள் . சில தலங்ளைப் பின்னும் வேறு பெயராற் கூறியது ` அப்பெயரால் அறியப்படும் சிறப்புப்பற்றி . சீகாழி - பிரமபுரம் . தெற்கு ஏறு - தென்றிசையில் பொருந்திய .
சிற்பி