பண் :இந்தளம்

பாடல் எண் : 1

பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.

பொழிப்புரை :

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

பொருளியைபுக்கேற்பத் திருப்பாடல்களுள் மொழிமாற்றி உரைக்கப்படுமாற்றை அறிந்துகொள்க. பித்தன் - பேரருள் உடையவன்; பேரருள் பித்தோடு ஒத்தலின், `பித்து` எனப்படும். எனவே, பேரருள் உடைய சிவபெருமானுக்கே, `பித்தன்` என்னும் பெயர் உரியதாயிற்று. இனி, `சிவபெருமான்` பிறர்வயம் இன்றித் தன்வயம் உடைமையாற் செய்யுஞ் செயல்கள் பிறரால் அறிதற்கு அரிய நெறியினவாய், ஒருநெறிப்படாத பித்தர் செயலோடு ஒத்தல் பற்றியும் அவன், `பித்தன்` எனப்படுவன் என்ப. அச்செயல்களாவன, `வேண்டப்படுவதனைச் செய்தல், செய்யாமை, வேறொன்று செய்தல்` என்பன. இவற்றை முறையே, `கர்த்திருத்துவம், அகர்த்திருத்துவம், அந்யதாகர்த்திருத்துவம்` என்பர். எனவே, `பித்தன்` என்றது, பின்வரும், `பெருமான் (பெருமை யுடையவன் - தலைவன்)` என்றதன் காரணத்தைக் குறிப்பால் உணர்த்தியவாறாயிற்று. `பிறைசூடி` என்றதும், `பித்தன்` என்றதனாற் பெறப்பட்ட பேரருளை ஆளுந்தன்மைக்குச் சான்றாய், பின்வரும், `அருளாளன்` என்பதன் காரணத்தை அங்ஙனம் உணர்த்தியதேயாம். தக்கனது சாபத்தால் இளைத்து வந்த சந்திரனை அவன் அழியாதவாறு காக்க அவனது ஒரு கலையைச் சிவபெருமான் தனது முடியிற் கண்ணியாகச் சூடிக்கொண்டமையால் அஃது அவனது பேரருளுக்குச் சான்றாயிற்று. அருட்டுறைப் பெருமான் சுவாமிகளை நோக்கி, `முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே - என்பெயர் பித்தன் என்றே பாடுவாய்` (தி.12 பெ.புரா. தடுத்.73) என்று அருளினமையின், இத்திருப்பதிகத்தின் முதற்சொல்லாகிய, `பித்தா` என்பது, இறைவன் அளித்த சொல்லாதல் வெளிப்படை. இனி, `அச்சொல்லை இறைவன் முன்னை ஆசிரியரது திரு மொழியினின்றே எடுத்து அளித்தனன்` என்பது, அச்சொல்லை அடுத்து சுவாமிகளது பயிற்சி வாயிலாகத் தோற்றுவித்த, `பிறைசூடி` என்னும் தொடரால் பெறப்படும். அஃது எங்ஙனம் எனின், `பித்தா பிறைசூடீ` என்னும் தொடர், திருஞானசம்பந்த சுவாமிகளது திருப் பாடலிடத்து முன்பு தோன்றி விளங்குதலின் என்க. அத்தொடர் அமைந்த அவரது திருப்பாடல்: விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே (தி.1 ப.89 பா.3) வன்றொண்டப் பெருமானாரை இங்ஙனம் முன்னை ஆசிரியர் திருமொழிவழியே நின்று பாடுமாறு திருவருள் செய்தது, இவரை, முன்னை ஆசிரியர்களது பெருமையையும், அவர்களது திருமொழிப் பெருமையையும் இனிது விளக்கி அடியார்க்கு அடியாராம் வழிநிலை ஆசிரியராகுமாறு செய்யும் குறிப்பினைப் புலப்படுத்தவாறாம். முன்னை ஆசிரியராவார் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும். அதனை இவர், `நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை` (தி.7 ப.67 பா.5) என்று குறித்தருளுவார். அத் திருப்பாடலிற்றானே, ` தொண்ட னேன்அறி யாமை யறிந்து கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டிஎன் களைகளை யறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை` என்று, தம்மை இறைவன் வழிநிலை ஆசிரியராக்கினமையையும் குறிப்பால் அருளிச்செய்வர். அங்ஙனம் இவர் அருளிச்செய்வதற்கு ஏற்ப, இவரைத் திருவாரூரில் இறைவன் தன் அடியார்க்கு அடியராகச் செய்து, திருத்தொண்டத் தொகை பாடுவித்தமையையும், அது பற்றிப் பின்னரும் இவர், `நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்` (தி.7 ப.78 பா.10) எனத் தம்மைக் குறித்தருளினமையையுங் காண்க. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் ஆகிய அவ்விருவர்க்கு முன்னரும் ஆசிரியர் உளராயினும், ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று திருப்பதிகம் அருளிச்செய்து திருவருள் நெறியைப் பரப்பும் தொண்டினை அவ்விருவர் வாயிலாகவே நிகழச் செய்தமையால், பேராசிரியப் பெருந்தன்மையை அவ்விருவரிடத்தே இறைவன் வைத்தானாவன். அதனைத் திட்பமுற உணர்ந்தே சேக்கிழார் நாயனார், அவ் விருவரையே, `பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக் கண் ணிரண்டு` (தி.12 பெ.புரா.திருநாவு. 185) என வரையறுத்து அருளிச் செய்தார். அவ்வாசிரியர்வழி நிற்பிக்கப்பட்ட இச்சுவாமிகளை இறைவன் முதற்கண், `மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக` என்றும், பின்னரும், `இன்னும் பல்லாறுலகினில் நம்புகழ் பாடு` என்றும், (தி.12 பெ. புரா. தடுத். 70,76) ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று பாடப் பணித்தமையால், ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பேராசிரியராயது எவ்வாறு என்பது இனிது விளங்கும். இனி, செல்லும் இடங்களில் எல்லாம் ஞானசம்பந்தரைச் சிவிகை, சின்னம் முதலியவைகளுடன் செல்லச் செய்தமையால், அவ்விருவருள்ளும் தலைமைத் தன்மையை இறைவன் ஞானசம்பந்தரிடத்து வைத்தமை புலனாகும். இவற்றானே, நால்வர் ஆசிரியருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் முதற்கண் வேறு வைத்து, `மூவர் முதலிகள்` என வழங்குமாறும் இனிது என்பது பெறப்பட்டது. இனி, பலவிடத்தன்றிச் சிலவிடத்துச் சென்று இறைவன் பொருள்சேர் புகழை மிகப்பாடிய அருளாசிரியர் திருவாதவூரடிகளே யாதலின், அவர் நான்காம் ஆசிரியர் ஆயினார் என்க. அன்றியும், மூவர் தமிழும் இசைத் தமிழாயும், அடிகள் தமிழ் இயற்றமிழாயும் இருத்தல் கருதத்தக்கது. உளங் குளிர்ந்த போதெலாம் உகந்துகந்து பாடி அன்பு மீதூர்ந்து இன்புறும் அன்புப் பாடல்களுக்கு இயற்றமிழினும், இசைத்தமிழே சிறந்து நிற்பது என்பது, `கோழைமிட றாககவி கோளும்இல வாகஇசை கூடும்வகையால் ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசன்` (தி.3 ப.71 பா.1) எனவும், `கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால் ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே` (தி.3 ப.52 பா.7) எனவும், `அளப்பில கீதம்சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே` (தி.4 ப.77 பா.3) எனவும் போந்த ஆசிரியத் திருமொழிகளால் பெறப்படும். இத்துணையும் இத்திருப்பதிகத்தின் தொடக்கத்தால் அறியற் பாலவாயின என்க. `எதனால்` என்பது, `எத்தால்` என மருவிற்று. `எத்தாலும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `வைத்தாய்` என்பதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வைத்தது தவங் காரணமாக என்க. `திருவெண்ணெய்நல்லூர்` என்பது தலத்தின் பெயர்; `அருட்டுறை` என்பது கோயிலின் பெயர். `இப்பொழுது அல்லேன் எனல் ஆமே` என்றதனால், `ஆளாயது முன்பே` என்பது போந்தது. `முன்பு` என்றது, திருக்கயிலையில் இருந்த காலத்தை. `ஆமே` என்ற ஏகார வினா, `ஆகாது` என எதிர்மறைப் பொருள்தந்து நின்றது. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத்தே (தொல். சொல். 246) என்பது இலக்கணமாதலின் இத்திருப்பாடல், சுவாமிகள் தம் முன்னை நிலையை நினைந்து அருளிச்செய்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

நாயேன்பல நாளும்நினைப்
பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

`கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும்` ( தொல். பொருள். 276) என்றவாறு, இழிவு மிகுதிக்கு உவமை கூறுங்கால் நாயைக் கூறுதல் வழக்காதல் பற்றி, `நாயேன்` என்று அருளினார். `மனத்து` என, வேண்டா கூறியது, `உன்னை நினையாத மனம் கோளில் பொறிபோலக் குணம் இலதாமன்றே` என, அதன் பயனையும், அது பெறாமையையும் நினைந்து, `பேயாய்` என்பதில் உள்ள ஆக்கச் சொல் உவமை குறித்து நின்றது, `ஆள்வா ரிலிமா டாவேனோ` (தி.8 திருவா. 21.7) என்பதிற்போல. பேய், பயனின்றி விரையத் திரிதலின், அச்செயற்கு அஃது உவமையாயிற்று. அலமரலை மிக உடைமை பற்றியே பேய்க்கு, `அலகை` என்னும் பெயர் உளதாயிற்று. திரிந்தமை இன்பத்தைப் பெறுதற்பொருட்டும், எய்த்தமை அது பெறாமையானும் என்க. ஆயன் - உயிர்களாகிய ஆயத்தை (பசுக் கூட்டத்தை) உடையவன். `ஆயாய்` என்பதே பாடம் எனலுமாம். இத் திருப்பாடல், சுவாமிகள் இப்பிறப்பில் தம் இளைய காலத்து நிலையை நினைந்து அருளிச்செய்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மன்னேமற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

குறிப்புரை :

`நினைப்பேன்` என எதிர்காலத்தால் அருளற் பாலதனைத் திட்பம்எய்துவித்தற்பொருட்டு, `நினைக்கின்றேன்` என நிகழ்காலத்தால் அருளினார். `பொன்னே` முதலிய ஏகார எண்களின் இறுதியில் தொகுக்கப்பட்ட, `இவற்றை` என்பதனை விரித்து, `உந்தி` என்பதனோடு முடிக்க. `பொருது` என்பதற்கு, `கரை` என்னும் செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது. இத்திருப்பாடல், `இனிப் பிழைசெய்யேன்` என்றுகூறி, முன்பு செய்த பிழையைப் பொறுக்குமாறு வேண்டி அருளிச்செய்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

முடியேன்இனிப் பிறவேன்பெறின்
மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப்
பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப் படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

குறிப்புரை :

`முடியேன்` முதலிய எதிர்மறைகள், `தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே` (தி.8 திருவா. 6. 39) என்பதுபோல, அவற்றிற்கு ஆற்றாமை குறித்து நின்றன.`ஊர்தி` என்றது, வினைமுதற் பொருண்மையுணர்த்தும் இகர ஈறு தகர வொற்றுப் பெற்று வந்த படர்க்கைப்பெயர். நெறிகோடினமை, திருக் கயிலையில் மாதர்பால் மனம் போக்கினமை. பொய்ம்மைகள் பலவாவன, மாதர் பால் மனம் போக்கினமையை விண்ணப்பியாது முன் போலவே வழிபாட்டில் நின்றமையும், அதனை இறைவன் தானே உணர்ந்து, `நீ விரும்பிய மாதர் இன்பத்தை நுகர்தற்கு நிலவுலகிற் சென்று பிறக்க` என்ற பொழுது, `மையல் மானுட மாய்மயங் கும்வழி- ஐய னேதடுத் தாண்டருள் செய்` (தி.12 பெ.புரா. திருமலை. 28) என்று வேண்டிக் கொண்டதனை மறந்தமையும், அம்மறவி காரணமாக, `உனக்கு ஆளல்லேன்` எனப் பலவாறு முரணிக் கூறினமையும், பிறவுமாம்.மானுடமாய்ப் பிறந்த ஞான்று முன்னை நிகழ்ச்சிகளை மறந்தமையும், அம்மறவியால், `அடியேன் அல்லேன்` எனக் கூறியதும் இயற்கையாக நிகழற்பாலனவாகலின், அவை பொய்ம்மையாயின வாறு என்னையெனின், நம்மனோர் உள்ளத்திற்காயின் அவையேயன்றி மிகப் பெரிய பொய்களும் பொய்யல்லவாம்; சுவாமிகள் உள்ளத்திற்கு அவை பொய்யாகாதொழியா. `தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்` ( குறள் - 433) என்றருளியது, சுவாமிகள் போலும் உயர்ந்தோரை நோக்கியன்றோ! `உரைத்தேனை` என இறந்த காலத்தால் அருளாது, `உரைப் பேனை` என எதிர்காலத்தால் அருளினார், அவைபோலும் செயல்கள் இனி நிகழா என்றல் எவ்வாறு கூடும் என்னும் திருவுள்ளத்தினால். இவ்வாறு, அறியாமையால் பிழை செய்தல் உயிர்கட்கும், அதனை அருளால் பொறுத்துக்கொள்ளுதல் உனக்கும் இயல்பு என்பார், `கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்நீ` என்று அருளிச் செய்தார். `தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே` (தி.2 ப.64 பா.1) எனவும், `பிழைத்ததெலாம் பொறுத் தருள்செய் பெரியோய்` (தி.6 ப.31 பா.5) எனவும், `வெறுப்பனவே செய்யும் என் சிறுமையைநின் பெருமை யினாற் பொறுப்பவனே` (தி.8 திருவா. 24.2) எனவும் ஆசிரியர் எல்லாரும் இவ்வாறே அருளிச் செய்தல் காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பாதம்பணி வார்கள்பெறு
பண்டம்மது பணியா
யாதன்பொரு ளானேன்அறி
வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், `ஆதன்` என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

குறிப்புரை :

பேற்றை, `பண்டம்` என்று அருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தண்ணார்மதி சூடீதழல்
போலுந்திரு மேனீ
எண்ணார்புர மூன்றும்எரி
யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

`திருமேனி` என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது. `மண்ணுதல்` என்பது, முதனிலைத் தொழிற்பெயராய், `மண்` என நின்றது. இவ்வாறன்றி, `நிலத்தின்கண் நிறைந்த ` என்று உரைத்தலும் ஆம். `அண்ணால்` என்பது, `அண்ணா` என மருவிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஊனாய்உயி ரானாய்உட
லானாய்உல கானாய்
வானாய்நில னானாய்கட
லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆனாய்உனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

`ஊன்` என்றதும், ஆகுபெயராய், உடம்பையே குறித்து நின்றது. `ஊன் ஆய்` எனப் பிரித்து, உயிருக்கு அடையாக்குக. இவ்வாறன்றி, `ஊன்` என்றது பொதுமையில் நின்று, சத்ததாதுக்களை உணர்த்திற்று என்றலுமாம். வானமும் நிலமுமாயினமையை அருளவே, இடைநின்ற ஏனைய பூதங்களாயினமையும் கொள்ளப் படும். இங்ஙனம் எல்லாமாய் நின்றமையை ஓதியது, `எல்லாவற்றையும் உடைய பெரியோனாகிய உனக்கு ஆளாதலினும் சிறந்த பேறு ஒன்று உளதோ! அப்பேறு எனக்குக் கிடைத்திருக்கவும், அதன் பெருமையறியாது இகழ்ந்தமை பொருந்துமோ` என்பதைத் தெரிவித்தற் பொருட்டாம். `ஆனாய்` என்றது, என்றும் உறைதலை அருத்தாபத்தி யான் உணர்த்திற்று.`பொருந்தினவனே` என்றும் ஆம். இனி, `ஆனாய்` என்பதற்கு, `இடப வாகனத்தை உடையவனே` என்றும் உரைப்பர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஏற்றார்புரம் மூன்றும்மெரி
யுண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி
வேனோசெக்கர் வான்நீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆற்றாய்உனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

சிவபெருமான், திரிபுரத்தை நகைத்தெரித்தமையால், `சிலை தொட்டாய்` என்றது போர் செய்வாரது தன்மை பற்றி வந்த பான்மை வழக்கு. `தேவரும், மக்களும் ஆகிய எல்லார்க்கும், அவர் வேண்டியவற்றை அருள்செய்யும் அருளாளனாகிய, உனக்கு ஆளாகி யதனை மறுத்துரைத்தேன்` என இரங்கிக் கூறுவார், திரிபுரம் எரித்தமையையும், பகீரதனுக்காகக் கங்கையைத் தாங்கினமையையும் எடுத்தோதியருளினார். சொல்லுவாரது தேற்றாமை, சொன்மேல் ஏற்றப் பட்டது. `செக்கர்` என்பது ஆகுபெயராய், சடையைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மழுவாள்வலன் ஏந்தீமறை
யோதீமங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின
தீர்த்தல்லுன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். சுவாமிகள் தாம் முன்பு தொழுது வேண்டினவாறே ஆள வந்த திருவருளின் திறத்தை நினைந்து கசிந்தருளிச் செய்தவாறு. மழுவாள், இரு பெயரொட்டு. மழுவேந்துதல் முதலியனவும், தொழுவாரது துயர் தீர்த்தலைக் குறிக்கும் குறிப்புக்களாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

காரூர்புன லெய்திக்கரை
கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ்
பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள்
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் `அடியவனல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

இத்திருப்பாடல் தம்மைப்பிறர் போலவும், இறைவனைப் படர்க்கையிலும் வைத்து அருளிச் செய்த திருக்கடைக்காப்பு. இதனையும் முன்னைத் திருப்பாடல்களோடு ஒத்த முறையிலே அருளிச் செய்தார். `இறைவனுக்கு முன்பே ஆளாகிய யான், அவ்வாறு ஆளாகாத பிறர்போல, `ஆளல்லேன்` என முரணிக் கூறியது பொருந் துமோ` எனப் பிறரை நோக்கி வினவித் தம் செய்தியைப் புலப்படுத்தும் முகத்தால், `நீவிரும் எனது வரலாற்றை உணர்ந்து, இப்பதிகத்தை ஓதின், அவனுக்கு ஆளாகி உய்வீர்` என அருளுதற் பொருட்டு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண்டீர்
உமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லைச்
சேத்திட்டுக்குத் தித்தெரு வேதிரியுஞ்
சிலபூதமும் நீரும் திசைதிசையன
சோத்திட்டுவிண் ணோர்பல ருந்தொழநும்
மரைக்கோவணத் தோடொரு தோல்புடைசூழ்ந்
தார்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும்பாம்
படிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, நீர், பெரிய மலையையும், சுரத்தையும் கோயிலாகக் கொண்டுள்ளீர். உம்மைச் சுமந்து கொண்டு திரிகின்ற முல்லை நிலத்து இளைய ஓர் எருது, மண்மேடுகளைத் தன் கொம்பால் குத்தித் தெருவில் துள்ளித் திரியும். சில பூதங்களும், அவற்றின் உரப்பல் முதலிய செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. தேவர் பலரும், `சோத்தம்` எனச் சொல்லி வணங்குமாறு, நீர் அரையிற் கோவணத்தோடு, ஒரு தோலைச் சுற்றி, அதன்மேற் கச்சாகக் கட்டியுள்ளதும் பாம்பு; கையிற் பிடித்திருப்பதும் பாம்பு; அதனால் அடியேங்கள் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

வருவித்துரைத்தன சொல்லெச்சங்களும் இசையெச்சங்களுமாம்; இவ்வாறு உரைப்பனவற்றைப் பின்னரும் அறிந்து கொள்க.
கோ திட்டை - மிக்க மேட்டு நிலம்; கோ வல் - மிக்க வன்னிலம், இவை இரண்டும் உடனிலை (சிலேடை) வகையால், மலையையும், சுரத்தையும் குறித்து, அஞ்சுதற் காரணத்தைத் தோற்று வித்தன. `பரங்குன்று` என்பதும் `கோவலூர்` என்பதும் இவற்றின் உண்மைப் பொருள். பரங் குன்று - மேலான மலை; கூடற் குடவயின் நிற்றலின் மேலதாயிற்றுப் போலும்!
`சில்லை` என்பது, `தொல்லை, வெள்ளை` என்பனபோல, ஐகார ஈற்றுப் பண்புப் பெயர். சிறுமையை, `சின்மை` என்றல் பான்மை வழக்கு. அஃது ஈண்டு, இளமைமேல் நின்றது. ` சே` திட்டு, `குத்தி` எனப் பிரிக்க. திட்டு - மேடு. நீர் - நீர்மை; குணம்; அஃது ஈண்டு, செயலைக் குறித்தது. `பூதங்கள் வாளா சூழ்கின்றன வில்லை` என்பார், ``பூதமும் நீரும்`` என இரண்டாக்கி அருளினார். அடுக்கு, பன்மை பற்றி வந்தது. `சோத்தம்` என்பது, தாழ்ந்தோர், உயர்ந்தோரிடத்துக் கூறும் வணக்கச் சொல்; அஃது அம்மின்றி, `சோத்து` எனவும் வழங்கும். அவை, தாழ்ந்தோர் செய்யும் வணக்கத்திற்குப் பெயராயும் நிற்கும்.
இது முதல், மூன்று திருப்பதிகத் திருப்பாடல்களைச் சிலர், எல்லாச் சீர்களும் மாச்சீராகி வர, ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர் உடையதாமாறு சீர் அறுப்பர். சுவாமிகள், இதன் ஆறாம் திருப் பாடலுள் ``தென்னாத் தெனாத் தெத்தெனா`` எனச் சீர் அறுத்து அருளினமையை அவர்நோக்கிற்றிலர். எவ்வாறு சீர் அறுப்பினும், இத் திருப்பாடல்களுள் ஒற்றுக்களும், குற்றியலுகரமும் அலகுபெறா தொழிதல் பெரும்பான்மையாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

முண்டந்தரித் தீர்முது காடுறைவீர்
முழுநீறுமெய் பூசுதிர் மூக்கப்பாம்பைக்
கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர்
கடலைக்கடைந் திட்டதோர் நஞ்சையுண்டீர்
பிண்டஞ்சுமந் தும்மொடுங் கூடமாட்டோம்
பெரியாரொடு நட்பினி தென்றிருத்தும்
அண்டங்கடந் தப்புறத்தும் மிருந்தீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, அடியோங்கள் `பெரியாரொடு நட்டல் இன்பந் தருவது` என்று கருதியிருப்பேமே ஆயினும், நீர் தலை மாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்வீர், அதன்கண் உள்ள சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள், கடலைக் கடைந்து கொணர்ந்து ஊட்டிய பெருவிடத்தினை எளிதாக உண்டீர், இவ்வண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர். அதனால், ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்துகொண்டு உம்மோடு தொடர்புகொள்ள வல்லேம் அல்லேம் ஆதலின், உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

``பெரியாரொடு நட்பு இனிதென் றிருத்தும்`` என்பதனை முதற்கண்ணும், ``அண்டங்கடந் தப்புறத்தும் இருந்தீர்`` என்பதனை, ``நஞ்சை உண்டீர்`` என்பதன்பின்னும் வைத்துரைக்க. பின்னரும் இவ்வாறு மாற்றியுரைக்கற்பாலனவற்றை, பொழிப்புரை பற்றி அறிந்துகொள்க.
முண்டம் - தலை. இங்குத் தலைமாலை. `முதுகாடு, புறங்காடு` என்பன, `இடுகாடு, சுடுகாடு` இரண்டற்கும் பொதுவாய பெயர்கள். மெய்யின் முழுமை, நீற்றின்மேல் ஏற்றப்பட்டது. `மூர்க்கப்பாம்பு` என்பது மருவி நின்றது. முண்டம் தரித்தல் முதலியன, இறப்பிற்கு அஞ்சுவார்க்கு அச்சம் விளைப்பனவாதலும், அண்டங்கடந்து இருப்பவரோடு கூடுதல், பிண்டத்தொடு நிற்பார்க்கு இயல்வதன்று ஆதலாலும், ``பிண்டம் சுமந்தும் மொடுங் கூடமாட்டோம்` என்று அருளிச் செய்தார். `சுமத்தலால்` என்பது, `சுமந்து` எனத் திரிந்துநின்றது, ``அஃதாற்றா - தெழுவாரை யெல்லாம் பொறுத்து`` (குறள். 1032). என்பதிற்போல. `இவ்வுடம்பு கொண்டு உம்மை அணுகுதல் இயலாது` என்பது உள்ளுறைப் பொருள். உம்மைகள், சிறப்பும்மைகள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மூடாய முயலகன் மூக்கப்பாம்பு
முடைநாறிய வெண்டலை மொய்த்தபல்பேய்
பாடாவரு பூதங்கள் பாய்புலித்தோல்
பரிசொன்றறி யாதன பாரிடங்கள்
தோடார்மலர்க் கொன்றையும் துன்னெருக்குந்
துணைமாமணி நாகம் அரைக்கசைத்தொன்
றாடாதன வேசெய்தீர் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே, இறைவரே, உம்மிடத்து உள்ளவை அறியாமையுடைய முயலகன், கொடிய பாம்பு, முடை நாற்றம் வீசும் வெண்டலை, நெருங்கிய பல பேய்கள், பாட்டுப் பாடித் திரிகின்ற பூதங்கள், பாய்கின்ற புலியின் தோல், நன்மை, தீமை அறியாத பாரிடங்கள் என்னும் இவையே. உமக்கு மாலை, இதழ் நிறைந்த கொன்றைமலரும், எருக்கம்பூவுமாம். இவற்றோடு அரையில், பெரிய மணியையுடைய பாம்பைக் கட்டிக் கொண்டு, எங்கட்குப் பொருந்தாத செயல்களையே மேற்கொண்டீர்; அதனால், அடியேங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`மூடன்` என்பதனை, `மூடு` என்று அருளினார். `மூள் தாய` எனப் பிரித்து, `சினங்கொண்டு தாவிய` என்று உரைத்தலும் ஆம். திணை விராய் எண்ணியவற்றிற்கு, பன்மை பற்றி அஃறிணை முடிபு கொடுக்கப்பட்டது. கொன்றைப் பூவும், எருக்கம் பூவும் உலகர் விரும்பாதன. துணை - மாலை. `அடாதன` என்பது, நீட்டலாயிற்று. ``எம்பெருமான்`` என்றது, பன்மை ஒருமை மயக்கம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மஞ்சுண்டமா லைமதி சூடுசென்னி
மலையான்மடந் தைமண வாளநம்பி
பஞ்சுண்டவல் குற்பணை மென்முலையா
ளொடுநீருமொன் றாயிருத் தல்லொழியீர்
நஞ்சுண்டுதே வர்க்கமு தங்கொடுத்த
நலமொன்றறி யோம்உங்கை நாகமதற்
கஞ்சுண்டுப டம்மது போகவிடீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் தோன்றும் பிறையைச் சூடிய முடியினையுடைய, மலைமகளாகிய நங்கைக்கு மணவாள நம்பியாகிய நீர், துகில் சூழ்ந்த புறத்தினையும், பெருத்த ஊற்றினிமை பொருந்திய தனங்களையும் உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு ஞான்றாயினும் ஒழிகின்றிலீர். நீர் நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அமுதம் ஈந்த நற்செயலை நாங்கள் சிறிதும் அறிந்திலோம்: உமது கையில் உள்ள பாம்பிற்கோ படங்கள் ஐந்து உள்ளன. அப்பாம்பினை ஒருஞான்றும் அப்பாற்போக விடுகின்றிலீர்; அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

மஞ்சு - மேகம். மாலைக் காலத்தில் மேகம் எழுதல் இயல்பாதலால், `மஞ்சுண்ட மாலை` என்று அருளினார். `மேகம் சூழ்தற்குரிய மதி` என்றும் ஆம். ``பஞ்சு`` என்றது, கருவியாகு பெயர். `அல்குல்` என்பது. `பிருட்டம்` என்னும் வடசொற் குறிக்கும் பொருளையே குறிப்பது. அதனால், தொல்காப்பியர் முதலாகச் சங்கத்துச் சான்றோர் பலரது செய்யுட்களுள்ளும், திருமுறைகளாகிய அருளாசிரியர்களது திருமொழிகளுள்ளும் இச்சொல் காணப்படுவதாம். இதன் பொருளை இனிது விளக்கவே போலும், குமரகுருபர அடிகள், தமது சிதம்பரச் செய்யுட்கோவையில் இறைவனது, `மாதிருக்கும் பாதியன் (அர்த்த நாரீசுவரன்)` ஆகிய வடிவத்தை வியந்து பாடிய, ``ஒருவனும் ஒருத்தியுமாய வடிவத்தை, `ஒருவர்` என்ற ஒருசொல் இல்லாவிடில் எப்படிக் குறிப்பது?`` என்ற ஒரு செய்யுள் போலவே, மற்றொரு செய்யுளில் (பா.73),
செவ்வாய்க் கருங்கண்பைந் தோகைக்கும் வெண்மதிச்
சென்னியற்கும்
ஒவ்வாத் திருவுரு ஒன்றே யுளதவ்
வுருவினைமற்
றெவ்வாச் சியமென் றெடுத்திசைப் பேமின்
னருட்புலியூர்
பைவ்வாய்ப் பொறியர வல்குலெந் தாயென்று
பாடுதுமே. -சிதம்பரச் செய்யுட் கோவை 73 என்று நயம்படக் கூறினார்!
`எந்தாய்` என்பது, `எம் தாய்` எனப் பிரிக்கப்பட்டு, அண்மை விளியாய், ` எமக்குத் தாயே` எனப் பொருள் தந்து அம்மைக்கும், `எந்தை` என்னும் முறைப்பெயரின் ஈறு விளியேற்குமிடத்து `ஆய்` எனத் திரிந்ததாகக் கொள்ளப்பட்டு, `எமக்குத் தந்தையே` எனப் பொருள் தந்து, அப்பனுக்கும் பொருந்துதல் காண்க. இதனால், `அல்குல்` என்பது ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் உள்ள உறுப்பேயாதல் இனிது விளங்குவதாம். இன்னும் மேற்காட்டிய செய்யுளில், `பையரவல்குல்` என உவமத்தொடுபுணர்ப்பினும் ஆடவர்க்கு உரித் தாதல் குறிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. வரலாற்று முறையின் வந்த பண்டைக் கல்வியையுடைய நூலாசிரியரது நூல்கள், உரையாசிரியரது உரைகள், அண்மைக் காலத்துப் புலவரது செய்யுள்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் இஃது இனிது விளங்கிக் கிடக்கும் இடங்கள் பலவற்றையும் ஈண்டு எடுத்துக்காட்டின், பெரிதும் இயைபின்றிச் செல்வதாம்.
இவ்வாறாகவும், சிலர் இச்சொல்லை இடக்கர்ப் பொருளுடையதாகக் கொண்டு, `இதனைக் கூறுதல் உயர்ந்தோரது பண்பிற்கு ஒத்ததாதல் எங்ஙனம்!` என மலைவர். அதனோடமையாது, கலித் தொகைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில், ``கோடுயர் அகலல்குற் கொடிபுரை நுசுப்பினாள்`` என்பதனை, ``கோடுயர் அகல்குறிக் கொடி புரை நுசுப்பினாள்`` எனத் திருத்தி, குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்டாற்போல, குற்றங் களையப் புகுந்து, இல்லாத குற்றத்தைக் கொணர்ந்து தாம் குற்றப் பட்டாருமுளர்.
அத் திருத்தஞ் செய்தார் கொண்ட பொருளைப் புகழ்ந்து கூறும் வழக்கு, நல்லாசிரியரிடத்து யாண்டும் இல்லையென்றுணர்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பொல்லாப்புறங் காட்டகத் தாட்டொழியீர்
புலால்வாயன பேயொடு பூச்சொழியீர்
எல்லாம்அறி வீர்இது வேயறியீர்
என்றிரங்குவேன் எல்லியும் நண்பகலும்
கல்லால்நிழற் கீழொரு நாட்கண்டதுங்
கடம்பூர்க்கரக் கோயிலின் முன்கண்டதும்
அல்லால்விர கொன்றிலம் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே, இறைவரே, நீர், பொல்லாங் குடை மயானத்தில் ஆடுதலைத் தவிரீர்; அங்குப் புலால் வாயோடு திரிவனவாகிய பேய்களோடு ஆரவாரித்தலை ஒழியீர்; `எல்லாவற்றையும் அறிகின்ற நீர் இது மட்டில் அறிகின்றிலிரே` என்று, உம் அடியவனாகிய யான், இரவும் பகலும் கவல்வேன். முன் ஒருநாள் கல்லால நிழலில் ஆசிரியக் கோலமாகக் கண்டதும், மற்றொருநாள் கடம்பூர்க் கரக்கோயிலில் இலிங்க மூர்த்தியாகக் கண்டதும் தவிர, பிறிதொரு காலத்தும் மயானத்தின் இழிவை நீர் அறிந்து நீங்கியதை யாம் சிறிதும் கண்டதிலம் அதனால், அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

``புலால் வாயன பேய்`` என்றது, பிணந்தின்னும் பேய்களை. அவற்றைக் கூறியது, புறங்காட்டது இயல்பு குறித்தவாறு. பூச்சு- பூசல்; ஆரவாரம். எல்லி - இரவு.
``கடம்பூர்க் கரக்கோயில்`` என்றது, நிலவுலகத் தலங்கள் பல வற்றையும் குறித்தற்கு, ஒன்றை எடுத்தோதியவாறு. விரகு - அறிவு, அஃது அறிந்து நீங்குதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்
சில்பூதமும் நீருந் திசைதிசையன
பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்
படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, `தென்னாத்தெனாத் தெத்தெனா` என்று பாடுகின்ற சில பூதங்களும், அவற்றின் செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. ஆயினும், நீர், பலவாகிய நான்கு வகைப் பட்ட வேதங்களைப் பாடுவீர்; திருப்பாசூரில் இருக்கின்றீர் எனினும், `படம் பக்கம்` என்னும் பறையைக் கொட்டும் தலமாகிய திருவொற்றியூரீராய்த் தோன்றுகின்றீர். பண் போலும் மொழியினை யுடைய உமையை ஒரு பாகத்தில் நீங்காது கொண்டு, குடி வாழ்க்கையீராய்க் காணப்படுகின்றீர் ஆயினும், புறங்காட்டிடத்தில் பற்று நீங்கமாட்டீர். `அண்ணாமலை யிடத்தேன்` என்றீர் ஆயினும், ஆரூரில் இருக்கின்றீர் அதனால், உம்மை ஒருதலையாகத் துணிதல் கூடாமையால், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`தென்னாத்தெனாத் தெத்தெனா` என்றது, இசைக்குரிய வண்ணவகையே யாயினும், உடனிலை வகையால், வாயில் வந்தபடி பாடுதலையுங் குறித்தது.
படுகாடு - யாவரும் அழியும் காடு. ``அண்ணாமலையேன்`` என்றது வேறு முடிபாகலின், பால்வழு வின்றாயிற்று. `அண்ணா மலையேம்` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சிங்கத்துரி மூடுதிர் தேவர்கணந்
தொழநிற்றீர்பெற் றமுகந் தேறிடுதிர்
பங்கம்பல பேசிடப் பாடுந்தொண்டர்
தமைப்பற்றிக்கொண் டாண்டு விடவுங்கில்லீர்
கங்கைச்சடை யீர்உம் கருத்தறியோம்
கண்ணுமூன்றுடை யீர்கண்ணே யாய்இருந்தால்
அங்கத்துறு நோய்களைந் தாளகில்லீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

கங்கையை உடைய சடையை உடையவரே, இறைவரே, நீர், வேட்டுவர் போலச் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொள்வீர் ஆயினும், தேவர் கூட்டம் வணங்க நிற்பீர். யானை முதலியன இன்றி எருதை விரும்பி ஊர்வீர் ஆயினும், `இவர் சிலரை ஒட்டி அடிமைகொள்ளல் எற்றிற்கு` என உம்மைப் பலரும் பல குறை சொல்லுமாறு, பாடவல்ல, தொண்டர்களை வலிந்து ஈர்த்து அடிமை கொண்டு, அவர்களை விடவும் மாட்டீர் அதனால், உம் கருத்தினை நாங்கள் அறியகில்லோம். கண்களோ மூன்றுடையீர் ஆயினும், நாங்கள் உம் எதிர் நின்று அகலாதிருக்கின்றோம் என்றால், நீர் எங்கள் உடம்பில் பொருந்தியுள்ள நோயைத் தீர்த்துப் பணிகொள்ள மாட்டீர் ஆகலின், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

``சிங்கம்`` என்றது, நரசிங்கத்தை. திருமால் நரசிங்கமாய்த் தோன்றி இரணியனை அழித்து அவன் குருதியைப் பருகினமையால் செருக்குற்று உலகத்தை அழிக்கத் தொடங்க, தேவர்கள் முறையீட்டிற்காகச் சிவபெருமான் சரபமாய்த் தோன்றி, அதனை அழித்து, அதன் தோலைப் போர்த்துக்கொண்டான் என்பது புராண வரலாறு. இதனைச் சரபோபநிடதமும் கூறும். ``கண்ணேயாய்`` என்றதில், ``கண்`` என்றது முன் இடத்தை; அது, ``கண்ணின்று கண்ணறச் சொல்லினும்`` (குறள் - 184). என்பதனாலும் அறியப்படும். `கருத்தாயிருந்தால்` என்பதும் பாடம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பிணிவண்ணத்த வல்வினை தீர்த்தருளீர்
பெருங்காட்டகத் திற்பெரும் பேயும்நீரும்
துணிவண்ணத்தின் மேலும்ஓர் தோலுடுத்துச்
சுற்றுநாகத்த ராய்ச்சுண்ண நீறுபூசி
மணிவண்ணத்தின் மேலும்ஓர் வண்ணத்தராய்
மற்றும்மற்றும் பலபல வண்ணத்தராய்
அணிவண்ணத்த ராய்நிற்றீர் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே, இறைவரே, நீர், பிணிக்கும் இயல்பினையுடைய எங்கள் வலியவினையை நீக்கி அருள் பண்ணு கின்றிலீர்; அன்றியும், பெரிய காட்டிடத்திற் பெரிய பேயும் நீருமாய்த் துணிந்து நிற்கின்ற தன்மையின் மேலும், தோல் ஒன்றை உடுத்து, அதன் மேற் சுற்றிய பாம்பை உடையவராய், சாம்பலை நறுமணப் பொடியாகப் பூசிக் கொண்டு, நீல மணிபோலும் நிறத்தின் மேலும் மற்றொரு நிறத்தை யுடையவராய், அதன்மேலும் பற்பல நிறத்தை உடையவராய், எவ்வாற்றானும் அழகிய வடிவத்தை உடையவராகியே நிற்றலால் அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`எல்லாம் வல்லிராகிய உம்மை யாது செய்து உவப்பிப்பேம் என அஞ்சுகின்றேம்` என்றவாறு. `நும் குறை எம்மால் முடிந்தது என உவந்து எமக்கு நீர் அருளல் இல்லை; எம் அன்பு மாத்திரைக்கே அருள்வீர்` என்பது உள்ளுறைப் பொருள்.
``நீரும்`` என்புழி, `ஆய்` என்பதும், ``சுண்ணம்`` என்புழி, `ஆக` என்பதும் தொகுத்தலாய் நின்றன. ``நாகத்தராய்`` முதலியன, இட வழுவமைதி. மணிவண்ணம், உமையுடையது; ``ஓர் வண்ணம்`` என்றது, மாணிக்க வண்ணத்தை; அதுவே சிவபிரானுடையது. மற்றும் பல பல வண்ணமாவன, அடியார்கள் பொருட்டும் உலகத்தை நடத்துதற் பொருட்டும் கொள்ளும் வடிவங்கள். இறைவனைச் சார்ந்த பொருள் யாதாயினும் அஃது அழகுடையதாகி அவனுக்குப் பேரழகு செய்வ தல்லது பிறிதாகாமையின், ``அணிவண்ணத்தராய்`` என்று அருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கோளாளிய குஞ்சரங் கோளிழைத்தீர்
மலையின்தலை யல்லது கோயில்கொள்ளீர்
வேளாளிய காமனை வெந்தழிய
விழித்தீர்அது வன்றியும் வேய்புரையும்
தோளாள்உமை நங்கையொர் பங்குடையீர்
உடுகூறையுஞ் சோறுந்தந் தாளகில்லீர்
ஆளாளிய வேகிற்றீர் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே, இறைவரே, நீர், கொலைத் தொழிலை மேற்கொண்ட யானையைக் கொல்லுதல் செய்தீர்; மலை உச்சியில் அல்லது கோயில் கொள்ளமாட்டீர்; வேட்கையை விளைக்கும் அம்பினை ஏவிய காமனை வெந்து அழியுமாறு அழித்தீர்; அதற்கு மாறாயும், மூங்கில் போலும் தோள்களை யுடையவளாகிய, `உமை` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையீர்; நும் அடியவர்க்கு, உடுக்கின்ற கூறையையும், உண்கின்ற சோற்றையும் கொடுத்து ஆளமாட்டீர்; அடியவரை அடிமை கொள்ளுதல் மட்டுமே வல்லீர்; அதனால், அடியேங்கள். உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`யானையை வெறுப்பீர், மலைக்கண் வாழ விரும்புதல் என்னை?` என்றவாறு. ``ஆளிய`` மூன்றனுள், முதலன மூன்றும் பெயரெச்சங்கள்; அவை, `ஆண்ட` என டகரம் பெற்று வரற்பாலன, இகரம் பெற்று வந்தன. இறுதியது, `செய்யிய` என்னும் வினையெச்சம். `ஆளா ளியவே கற்றீர்` என்பதும் பாடம்; வேள் - வேட்கை; முதனிலைத் தொழிற்பெயர்; அது, காரியவாகுபெயராயிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பாரோடுவிண் ணும்பக லுமாகிப்
பனிமால்வரை யாகிப் பரவையாகி
நீரோடுதீ யுந்நெடுங் காற்றுமாகி
நெடுவெள்ளிடை யாகி நிலனுமாகித்
தேரோட வரையெடுத் தவரக்கன்
சிரம்பத்திறுத் தீரும செய்கையெல்லாம்
ஆரோடுங்கூ டாஅடி கேள்இதுஎன்
அடியோம்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, மண்ணுலகமும் விண்ணுலகமும் ஆகியும், மலை ஆகியும், கடல் ஆகியும், எவ்விடத்தும் இயங்குகின்ற காற்றும் ஆகியும், எல்லையற்ற வெளி ஆகியும். நிலம் ஆகியும் இவ்வாறு எல்லாப் பொருளும் ஆகி நின்றீர். இனி, தனது ஊர்தி தடை யின்றி ஓடுதற் பொருட்டு நுமது மலையைப் பெயர்த்த அரக்கனது தலைகள் பத்தினையும் நெரித்தீர். உம்முடைய இச்செய்கைகள் எல்லாம், யார் செய்கையோடும் ஒவ்வா; இஃது என்! இவற்றால் அடி யோங்கள் உமக்குப் பணிசெய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`இஃது என்` என்றது, பெரியோனது பேராற்றலை யறிந்து துணுக்குற்ற அச்சக் குறிப்பு.
``பார், விண்`` என்றது உலகங்களையும், `` நெடுவெள்ளிடை நிலன்`` என்றது, அவற்றிற்கு முதலாகிய பூதங்களையும் என்க. உம்மையையும், `ஆகி` என்பதனையும் செய்யுள் நோக்கி, ஏற்ற பெற்றியான் விரித்தும் தொகுத்தும் அருளியவாறு. `பத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. ``ஆர்`` என்றது, ஆகுபெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமென்
றமரர்பெரு மானையா ரூரன்அஞ்சி
முடியால்உல காண்டமூ வேந்தர்முன்னே
மொழிந்தாறுமோர் நான்குமோ ரொன்றினையும்
படியாஇவை கற்றுவல் லவடியார்
பரங்குன்றமே யபர மன்னடிக்கே
குடியாகிவா னோர்க்கும்ஓர் கோவுமாகிக்
குலவேந்தராய் விண்முழு தாள்பவரே.

பொழிப்புரை :

தேவர் பெருமானாகிய சிவபெருமானிடத்தில் அச்சங்கொண்டு, நம்பி ஆரூரன், முடியொடு நின்று உலகத்தை ஆள் கின்ற மூவேந்தர் முன்னிலையில், `அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும்` என்று சொல்லிப் பாடிய இப்பதினொரு பாடல்களையும், இவையே தமக்கு நெறியாகும்படி ஓதி உணர வல்ல அடியார்கள், திருப் பரங்குன்றத்தை விரும்பி எழுந்தருளியுள்ள அப்பரமனது திருவடி நிழலிலே வாழ்கின்றவராய், அரசர் குடியில் தோன்றிய அரசரோடு ஒருங்கொத்து மண் முழுதும் ஆண்டு, பின் தேவர்க்கும் ஒப்பற்ற அரசராகி விண் முழுதும் ஆள்பவரே ஆவர்.

குறிப்புரை :

``மொழிந்த`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலா யிற்று. திருக்கடைக்காப்பினையும் ஒழியாது ஓதுதல் வேண்டும் என்பார், `பதினொன்றும்` என்பது வரக் கூறினார். படி - முறை; நெறி. `இவ் வுலகத்திலே இறைவனது திருவடி இன்பத்தைப் பெறுவர்` என்றற்கு, ``பரமன் அடிக்கே குடியாகி`` என முதற்கண் அருளினமையின், அதனை மீள இறுதிக் கண் அருளாது, ``விண்முழு தாள்பவரே`` என்று போயினார். ``கோ`` என்றது, பன்மை யொருமை மயக்கம். ``வானோர்க்கும்`` ``கோவும்`` என்னும் உம்மைகள், சிறப்பு. ``குல வேந்தராய்`` என்பதில் உள்ள ஆக்கச் சொல் ஒப்புமை குறித்து நின்றது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங்
கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெல்வாயி லரத்துறை நீடுறையுந்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்
நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன்
தொடர்ந்தேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

மலையிடத்துள்ள அகில்களையும் , ஒளியை யுடைய மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள திருநெல்வாயில் அரத்துறையின் கண் என்றும் எழுந்தருளியிருக்கும் , நிலவினை யுடைய வெள்ளிய பிறையைச் சூடிய மாசற்றவனே , உலகியலில் நின்றோர் அனைவரும் , ` நல்ல துணையாகிய இல்லாளை மணந்தார் ; இல்லற நெறியிலே ஒழுகினார் ; நன்றாக உண்டார் ; உடுத்தார் ; மூப்படைந்தார் ; இறந்தார் ` என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை உடையவராய் நீங்குவதன்றி நில்லாமையை அறிந்து உன்னை அடைந்தேன் ; ஆதலின் , அடியேன் அச்சொல்லிலிருந்து பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` நல்வாய் ` என்றதில் வாய் - துணை . ` இல் ` என்றது இல்லாளைக் குறித்தது . ` பிறனில் விழையாமை ` ( குறள் , அதி . 15) என்றாற்போல . ` இல் செய்தார் ` என்றது , ` பொருள் செய்தார் ` என்றல் போல , ` இல்லாளை அடைந்தார் ` எனப்பொருள் தந்தது . ` உடுத்தார் ` என்றது , இனிது வாழும் வாழ்க்கை வகையில் ஒன்றை எடுத்து ஓதியது ஆகலின் , ` உண்டார் ` என்பதும் தழுவப்பட்டது . சொல்லை உடையாரை , ` சொல் ` எனப் பாற்படுத்தருளினார் . இத்திருப்பதிகம் முழுதும் , ` உய்ய ` என்பதனை , ` உய்ந்து ` எனத் திரிக்க . சூழ்ச்சியை , ` சூழல் ` என அருளினார் . இறைவனிடம் தம் அடிமை தோன்ற வெளிப்படையாகக் கூறாது குறிப்பாற் கூற நினைந்தாராகலின் , ` உய்யும் வழியைச் சொல் ` என , அது வேறொன்று உளதுபோல அருளினாராயினும் , ` உய்தி நீயேயாகலின் , உன்னை வேண்டுகின்றேன் ; என்னை உய்யக்கொள் ` என்பதே திருக்குறிப்பு என்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கறிமாமிள கும்மிகு வன்மரமும்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெறிவார்குழ லாரவர் காணடஞ்செய்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
வறிதேநிலை யாதஇம் மண்ணுலகின்
நரனாக வகுத்தனை நானிலையேன்
பொறிவாயில்இவ் வைந்தினை யும்மவியப்
பொருதுன்னடி யேபுகுஞ் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

கறிக்கப் படுகின்ற மிளகையுடைய கொடியையும் , மிக்க வலிய மரங்களையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள , நெறித்த நீண்ட கூந்தலையுடைய மகளிர்தாம் பிறர் அனைவரும் விரும்பிக் காணத்தக்க நடனத்தைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே , உயிர்கள் பலவும் பயன் ஏதும் இன்றிப் பிறந்து இறக்கும் இம் மண்ணுலகத்தில் அடியேனை மகனாகப் படைத்தாய் ; ஆதலின் , நான் இறவாது இரேன் ; அதனால் , ` பொறி ` எனப்படுகின்ற , அவாவின் வாயில்களாகிய இவ்வைந்தினையும் அடங்குமாறு வென்று , உன் திருவடிக்கண்ணே புகுதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` குழலாரவர் ` - அவர் , பகுதிப்பொருள் விகுதி . ` காண நடஞ்செய் ` என்பது பிழைபட்ட பாடம் . இத்திருப்பாடல் , ` பொறி வாயில் ஐந்தவித்தான் ` என்னும் திருக்குறளை (6) நினைப்பிப்பது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

புற்றாடர வம்மரை ஆர்த்துகந்தாய்
புனிதாபொரு வெள்விடை யூர்தியினாய்
எற்றேஒரு கண்ணிலன் நின்னையல்லால்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான்
வண்டார்குழ லாள்மங்கை பங்கினனே
அற்றார்பிற விக்கடல் நீந்தியேறி
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

புற்றின்கண் வாழ்கின்ற ஆடுகின்ற பாம்பை விரும்பி அரையின்கண் கட்டியவனே , தூய்மையானவனே , போர் செய்கின்ற வெண்மையான இடப ஊர்தியை உடையவனே , எம் பெருமானே , வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே , திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே , அடியேன் ஒருகண் இல்லாதவனாய் இருக்கின்றேன் ; இஃது எத்தன்மைத்து என்பேன் ! மற்றும் வினவின் , உன்னையன்றி வேறொரு பற்றுக்கோடு இல்லேன் ; ஆதலின் , அடியேன் , இறப்புப் பொருந்திய பிறவிக் கடலைக் கடந்து கரையேறிப் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` ஆர்த் துகந்தாய் ` என்றதனை , ` உகந்து ஆர்த்தாய் ` என மாற்றி யுரைக்க . இறைவனது விடைக்குப் போர் செய்தல் இன்மையின் , ` பொருவிடை ` என்றது , இனம்பற்றிய அடை புணர்த்ததாம் ; இறைவனைச் சார்ந்த பொருள்கட்கு இவ்வாறான அடைபுணர்த்தல் பின்னும் வருதலை அறிந்துகொள்க . இனி , ` திரிபுரம் எரித்த ஞான்று திருமால் உருத்திரிந்து வந்து தாங்கிய இடபமே போர்விடை ` என்றும் , ` அறக் கடவுள் உருத்திரிந்து வந்த இடபம் அறவிடை ` என்றும் கூறுப . ` அற்றம் ` என்பது , அம்முக் குறைந்து நின்றது . அற்றம் - அறுதி ; இறப்பு . இத்திருப்பாடல் , ` பிறவிப் பெருங்கடல் நீந்துவர் ` என்னும் திருக்குறளை (10) நினைப்பிப்பது , ` மற்றேயொரு பற்றிலன் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கோஓடுயர் கோங்கலர் வேங்கையலர்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நீஇடுயர் சோலைநெல் வாயிலரத்
துறைநின்மல னேநினை வார்மனத்தாய்
ஓஒடுபு னற்கரை யாம்இளமை
உறங்கிவ்விழித் தாலொக்கும் இப்பிறவி
வாஅடியி ருந்துவருந் தல்செய்யா
தடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

கிளைகள் உயர்ந்த கோங்க மரத்தின் மலர்களையும் , வேங்கை மரத்தின் மலர்களையும் மிகுதியாகத் தள்ளிக் கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள , நெடியனவாக ஓங்கிய சோலைகளை உடைய திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , உன்னை நினைகின்றவரது நெஞ்சத்தில் வாழ்பவனே , இப்பிறப்பு , உறங்கியபின் விழித்தாற் போல்வது ; இதன்கண் உள்ள இளமையோ , ஓடுகின்ற நீரின் கரையை ஒக்கும் ; ஆதலின் , ` என் செய்வது ` என்று மெலிவுற்று நின்று வருந்தாது , அடியேன் , இப் பிறவியிலிருந்து பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

இத்திருப்பாடலில் அளபெடைத் தொடை வந்தது . அளபெடையின்றி ஓதுதல் பாடமாகாமை அறிக . ஓடு புனற்கரை - ஆற்றின் கரை ; அது நிலையாது அழிதல் திண்ணமாகலின் , யாக்கை நிலையாமைக்கு உவமையாயிற்று . உறங்கி - உறங்கியபின் . பிறப்பை , ` உறங்கியபின் விழித்தாற் போல்வது ` எனவே , இறப்பு , விழித்தபின் உறங்கினாற் போல்வது என்பது பெறப்படும் . படவே , ` பிறப்பும் இறப்பும் , விழிப்பும் உறக்கமும் போலக் கடிதின் மாறி மாறி வரும் ` என யாக்கையது நிலையாமையை அருளிச்செய்தவாறாயிற்று . இது , ` உறங்குவது போலும் சாக்கா டுறங்கி - விழிப்பது போலும் பிறப்பு ` என்னும் திருக்குறளை (339) மேற்கொண்டு ஓதியதாதல் அறிக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

உலவும்முகி லிற்றலை கற்பொழிய
உயர்வேயொ டிழிநிவ வின்கரைமேல்
நிலவும்மயி லாரவர் தாம்பயிலும்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
புலன்ஐந்து மயங்கி அகங்குழையப்
பொருவேலொர் நமன்றமர் தாம்நலிய
அலமந்தும யங்கி அயர்வதன்முன்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

உலாவுகின்ற மேகங்களினின்றும் மலையின்கண் மழை பொழியப்பட , அந்நீர் , ஓங்கிய மூங்கில்களோடு இழிந்து வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள , விளங்குகின்ற மயில் போலும் மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத் துறையின் கண் எழுந்தருளியுள்ள மாசற்றவனே , ஐந்து புலன்களும் தத்தமக்கு உரிய பொறிகளுக்கு எதிர்ப்படாது மாறும்படியும் , மனம் மெலியும்படியும் , போர் செய்கின்ற முத்தலை வேலை ( சூலத்தை ) உடைய கூற்றுவனது ஏவலர் வந்து வருத்த , பற்றுக்கோடின்றி , உணர்வு தடுமாறி நின்று இளைத்தற்குமுன் , அடியேன் , இறப்பினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

தலைப் பெயல் சிறந்ததாகலின் அதனையே அருளினார் . ` அவர் `, பகுதிப் பொருள் விகுதி . ` புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐமேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள்புரிவான் ` ( தி .1 ப .130 பா .1) என்று சம்பந்தப் பெருமானாரும் , ` வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மை உன்தாள் என்றன் நெஞ்சத்து எழுதிவை ` ( தி .4 ப .96 பா .6) என அப்பர் பெருமானாரும் அருளிச் செய்தமை காண்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

ஏலம்மில வங்கம் எழிற்கனகம்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நீலம்மலர்ப் பொய்கையில் அன்னமலி
நெல்வாயி லரத்துறை யாய்ஒருநெல்
வாலூன்ற வருந்தும் உடம்பிதனை
மகிழாதழ காஅலந் தேன்இனியான்
ஆலந்நிழ லில்லமர்ந் தாய்அமரா
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

` ஏலம் இலவங்கம் ` என்னும் மரங்களையும் , அழகிய பொன்னையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவா நதியின் கரையில் உள்ள , நீலோற்பல மலர்ப் பொய்கையில் அன்னங்கள் நிறைந்திருக்கும் திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளி யுள்ளவனே , அழகனே , ஆல் நிழலில் அமர்ந்தவனே , என்றும் இறவாதிருப்பவனே , ஒரு நெல்லின் வால் ஊன்றினும் பொறாது வருந்துவதாகிய இவ்வுடம்பினை யான் உறுதி யுடையது என்று கருதி மகிழாது உறுதியை நாடி உழன்றேன் ; அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லி யருள் .

குறிப்புரை :

` நீல் அம் மலர் ` எனப்பிரித்து , ` நீலம் ` என்றதில் அம்முக் குறைந்ததாக உரைக்க . ` ஊன்றவும் ` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . அமரன் - மரித்தல் இல்லாதவன் ; இஃது , ஈண்டுக் காரணக் குறியாய் , சிவபெருமானை உணர்த்திற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சிகரம்முகத் திற்றிர ளாரகிலும்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நிகரின்மயி லாரவர் தாம்பயிலுந்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
மகரக்குழை யாய்மணக் கோலமதே
பிணக்கோலம தாம்பிற வியிதுதான்
அகரம்முத லின்னெழுத் தாகிநின்றாய்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

மலைச் சிகரத்தினின்றும் , திரளாய் நிறைந்த அகிலையும் பிறவற்றையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரையில் உள்ள , உலகின் மயில்கள் போலாத வேறுசில மயில்கள் போலும் சிறந்த மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , காதில் மகர குண்டலத்தை அணிந்தவனே , எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமாகிய முதல் எழுத்துப்போன்று , பொருள்களுக்கெல்லாம் முதற்பொருளாகி நிற்பவனே , இவ்வுடம்பு தான் , மணக்கோலந்தானே கடிதிற் பிணக்கோலமாய் மாறுகின்ற நிலையாமையை உடையது ; ஆதலின் , அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` அகிலும் ` என்ற உம்மை எதிரது தழுவிய எச்சம் . ` நிகரில் மயில் ` என்றதற்கு ஈண்டு உரைத்தவாற்றை , ` அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ ` என்னும் திருக்குறட்குப் (1081) பரி மேலழகர் உரைத்த உரைபற்றியும் உணர்க . ` அவர் `, பகுதிப் பொருள் விகுதி ; தாம் , அசைநிலை . ` பிறவி ` என்றது உடம்பை . ` இதுதான் ` என்னும் பிரிநிலை , உடம்பினது இழிவு தோற்றி நின்றது . ` அகர முதலின் எழுத்தாகி நின்றாய் ` என்றது , ` அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி - பகவன் முதற்றே உலகு ` என்னும் திருக்குறளை (1) மேற் கொண்டு அருளிச்செய்ததாதல் அறிக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

திண்ணிய தேர்களை உடைய , நீண்ட தெருக்களை யுடைய இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனது திரண்ட தோள்கள் இருபதையும் முன்னர் நெரித்துப் பின்னர் அவனுக்கு அருள்பண்ணி , நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த , முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , மேலான ஒளி வடிவினனே , தேவனே , தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே , நான் முற் பிறப்பிற் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலும் சொல் லும் பேற்றினைப் பெற்றேன் ; இனி , அடியேன் , உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

தேவர்க்குத் தேவர் , காரணக் கடவுளர் ; அயனும் , மாலும் . நாமமாவது , திருவைந்தெழுத்து . ` பண்டு செய்த பாக்கியத்தால் திருவைந்தெழுத்தைப் பயிலப் பெற்றேன் ; இனி , அதன் பயனைப் பெறுதல் வேண்டும் ; அப் பயனை அளித்தருள் ` என வேண்டி யருளியவாறு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாணாவுரு வாகியொர் மண்ணளந்தான்
மலர்மேலவன் நேடியுங் காண்பரியாய்
நீணீண்முடி வானவர் வந்திறைஞ்சுந்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
வாணார்நுத லார்வலைப்பட் டடியேன்
பலவின்கனி ஈயது போல்வதன்முன்
ஆணோடுபெண் ணாமுரு வாகிநின்றாய்
அடியேனுய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

சிறப்பில்லாத குறள் உருவாகி உலகத்தை அளந்த திருமாலும் , மலரின்கண் இருக்கும் பிரமனும் தேடியும் காணுதற்கு அரியவனே , நீண்ட முடியினையுடைய தேவர்கள் வந்து வணங்கு கின்ற , திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , ஆணும் பெண்ணுமாகிய உருவத்தைக் கொண்டு நிற்பவனே , அடியேன் , ஒளி பொருந்திய நெற்றியையுடைய மாதரது மையலாகிய வலையிற்பட்டு , பலாப் பழத்தில் வீழ்ந்த ஈயைப் போல அழிவதற்குமுன் , அவர் மையலினின்றும் பிழைத்துப்போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் - கூனும் குறளும் ஊமும் செவிடும் - மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு - எண்பே ரெச்சம் ` ( புறம் . -28) என்பவாகலின் , குறள் உருவினை , ` மாணா உரு ` என்று அருளிச்செய்தார் . ` நீள் நீள் ` என்றது , ` நீளல் நீண்ட ` எனப் பொருள் தந்து , ` உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் ` ( க லி . -23) என்றாற் போல நின்றது . ` வாளார் ` என்பது , எதுகை நோக்கி , ` வாணார் ` எனத் திரிந்து நின்றது . ` நீணுலகெலாம் ` ( தி . 5 ப .2 பா .4) என்றாற்போல , ` ஆணோடு பெண்ணாம் உருவாகி நின்றாய் ` என்றது , அவ்வுருவம் பெண்ணாசை நீக்கியருளுவது என்னும் குறிப்புடையது ; ` நின்றனையே - பெண்பயிலுருவ மொடு நினைந் தெனது பெண்மயலகற்றுநா ளுளதோ ` ( சோணசைல மாலை - 10) எனப் பிற்காலத்தவரும் கூறுமாறு அறிக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

நீரூரு நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனைத்
தேரூர்நெடு வீதிநன் மாடமலி
தென்னாவலர் கோனடித் தொண்டன்அணி
ஆரூரன் உரைத்தன நற்றமிழின்
மிகுமாலையொர் பத்திவை கற்றுவல்லார்
காரூர்களி வண்டறை யானைமன்ன
ரவராகியொர் விண்முழு தாள்பவரே.

பொழிப்புரை :

நீர் பாய்கின்ற நீண்ட வயல்கள் சூழ்ந்த , முல்லை நிலத்தை உடைய திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளி யிருக்கின்ற மாசற்றவனாகிய இறைவனை , தேர் ஓடும் நீண்ட தெருக்களில் நல்ல மாடமாளிகைகள் நிறைந்த , தென்னாட்டில் உள்ள திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவனும் , சிவபெருமானுக்கு அடித் தொண்டனும் ஆகிய அழகிய ஆரூரன் பாடிய , நல்ல தமிழ் மொழியினால் ஆகிய உயர்ந்த பாமாலையின்கண் உள்ள பத்துப் பாடல் களாகிய இவற்றைக் கற்று உணரவல்லவர் , கருமை மிக்க , களிப்பினை உடைய வண்டுகள் ஒலிக்க வருகின்ற யானையை உடைய மன்னர் களாகி மண்ணுலகம் முழுதும் ஆண்டு , பின் தேவர்க்குத் தலைவராய் ஒப்பற்ற விண்ணுலகம் முழுதும் ஆள்பவர் ஆவர் .

குறிப்புரை :

` நாவ லூர் ` என்னும் இருபெயரொட்டின்கண் ` நாவல் ` என்னும் ஒரு பெயரைப் பிரித்தோதினார் , ` மா , பலா ` என்றல்போல . ` அணி ஆரூரன் ` என்றருளியதனால் , ` ஆரூரன் ` என்றது ஊரால் வந்த பெயராயிற்று . ` அடித்தொண்டு பண்ணி ` என்ற ஒரு பாடமும் உண்டு . வண்டுகள் , மதநீரில் மொய்ப்பன என்க . ` மன்னராகி ` என்றதனால் , ` தேவர்க்குத் தலைவராகி ` என்பதும் , ` விண்முழுது ஆள்பவர் ` என்ற தனால் , ` மண்முழுது ஆள்பவர் ` என்பதும் பெறப்பட்டன .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே
அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே
அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே
மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரத்தின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய , ` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , நீ தலைக்கு அணிகலமாகத் தலைமாலையை அணிந்தது என் ? சடையின்மேல் , ` கங்கை ` என்னும் ஆற்றைத் தாங்கியது என் ? கொல்லும் தன்மை யுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என் ? அவ்வுடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என் ?

குறிப்புரை :

சிவபிரான் , தலைமாலையை மார்பில் அணிதலேயன்றித் தலையிலும் அணிந்துள்ளான் என்பது , ` தலைமாலை தலைக் கணிந்து ` ` தலையா லேபலி தேருந் தலைவன் ` ( தி .4 ப .9 பா .1) என்றாற்போலத் திருமுறைகளிற் பிறவிடத்தும் காணப்படும் . இது தலையில் அணியும் உருத்திராக்கம் போல்வதாம் . தலைகள் , இறந்த பிரமன் முதலியோருடையவை . கதம் - சினம் . ` நாகக்கச்சு ` என்பதும் பாடம் . ` மகோதை ` என்பது நகரமும் , ` அஞ்சைக்களம் ` என்பது திருக்கோயிலும் என்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்டதென்னே
பிறங்குஞ்சடை மேற்பிறை சூடிற்றென்னே
பொடித்தான்கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே
புகர்ஏறுகந் தேறல் புரிந்ததென்னே
மடித்தோட்டந்து வன்றிரை யெற்றியிட
வளர்சங்கம்அங் காந்துமுத் தஞ்சொரிய
அடித்தார்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால் , கரு வளர்கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துக்களை ஈன , இங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய , ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய திரு வஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , நீ , விரும்பத் தகாத பாம்பை , பிடித்து ஆட்டுதலையும் , பூணாகப் பூணுதலையும் மேற்கொண்டது என் ? விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது என் ? சாம்பலை எடுத்து உடம்பு முழுதும் பூசிக் கொண்டது என் ? இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது என் ?

குறிப்புரை :

` ஓர் நாகத்தை ` என்றது , இடைநிலைத் தீவகமாய் , முன்னும் சென்று இயைந்தது . அதன்கண் , ` ஒன்று ` என்பது , ` சிறிது ` என்னும் பொருளதாய் , இழிபினை உணர்த்திற்று . ` பொடித்தான் ` என்புழித் தகரம் , விரித்தல் . ஏற்றிற்கு இழிவு , யானை , குதிரைகளோடு , நோக்க வருவது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

சிந்தித்தெழு வார்க்குநெல் லிக்கனியே
சிறியார்பெரி யார்மனத் தேறலுற்றால்
முந்தித்தொழு வார்இற வார்பிறவார்
முனிகள்முனி யேஅம ரர்க்கமரா
சந்தித்தட மால்வரை போற்றிரைகள்
தணியாதிட றுங்கட லங்கரைமேல்
அந்தித்தலைச் செக்கர்வா னேஒத்தியால்
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

மூங்கில்களையுடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய , அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக் களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , உன்னை நினைந்து துயிலுணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவனே , முனிவர்கட்கெல்லாம் முனிவனே , தேவர்கட்கெல்லாம் தேவனே , உன்னை உள்ளந்தெளியப்பெற்றால் , சிறியாரும் பெரியாராவர் . விரைந்து வந்து உன்னை வணங்குபவர் , இறத்தலும் பிறத்தலும் இலராவர் . அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு , நீ , மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியை உடையையாய் இருக்கின்றனை .

குறிப்புரை :

` அடியேனும் அவ்வாற்றால் உன்னைத் தெளிந்து உன்னிடம் பிணிப்புண்டு , உன்னை வணங்கப்பெற்றேன் ஆதலின் எனக்கும் அவ்விறத்தல் பிறத்தல்களை நீக்கியருளல் வேண்டும் ` என்பது திருக்குறிப்பு . நெல்லிக்கனி , அமுதத் தன்மையுடையது ஆதலின் , ` நெல்லிக் கனியே ` என்றது , ` அமுதமே ` என்றவாறு . நெல்லிக்கனி அத்தன்மைத்தாதலை , அதியமான் ஔவையார்க்கு அளித்த நெல்லிக்கனி பற்றியும் அறியலாகும் . மாணிக்கவாசகரும் இறைவனை , ` நெல்லிக் கனியைத் தேனைப் பாலை - நிறைஇன்னமுதை அமுதின் சுவையை ` ( தி .8 புணர்ச்சிப் பத்து - 4) என்று அருளிச் செய்தார் . ` சிறியாரும் ` என்னும் உம்மையும் , ` பெரியார் ` என்னும் ஆக்கவினைக் குறிப்பில் ஆக்கச்சொல்லும் தொகுத்தலாயின . ` மனந் தேறலுற்றால் ` என்பது வலிந்து நின்றது . ` நீ அவர் மனத்து ஏறலுற்றால் ` எனப் பொருள் கூறுவாரும் உளர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

இழைக்கும்மெழுத் துக்குயி ரேஒத்தியால்
இலையேஒத்தி யால்உளை யேஒத்தியால்
குழைக்கும்பயிர்க் கோர்புய லேஒத்தியால்
அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால்
மழைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டழைக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

துளிகளைத் தூற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் , பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி , வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய , ` மகோதை ` என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , நீ , உலகத்தை இயக்குதலில் , எழுதப்படும் எழுத்துக்களுக்கு உயிரெழுத்துப் போல்கின்றாய் ; இல்லா தாய் போல்கின்றாய் ; ஆயினும் உள்ளாய் போல்கின்றாய் ; உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய் ; அடியார்களுக்கு அணியையாதலில் , அவரோடு ஒருகுடிப் பிறப்பினை போல்கின்றாய் .

குறிப்புரை :

` ஆதலால் , அடியேனுக்கு அருளல் வேண்டும் ` என்பது குறிப்பெச்சம் . ` எழுத்து ` எனச் சிறப்பித்துக் கூறப்படுவன உயிரும் மெய்யுமே யாகலானும் , அவற்றுள் உயிரைப் பிரித்தமையால் , ` இழைக்கும் எழுத்து ` என்றது , மெய்யெழுத்தாயிற்று . மெய்யெழுத்துக்கள் தனித்தியங்கும்வழி அகரத்தால் இயக்கப் படுமாயினும் மொழியிடத்து இயங்குங்காலத்துப் பிற உயிர்களானும் இயங்குமாதலின் , ` உயிர் ` எனப் பொதுப்பட அருளிச்செய்தார் . இனி , ` உயிர் ` என்றது , தலைமை பற்றி அகரத்தைக் குறிக்கும் எனக் கொண்டு , ` எழுத்து ` என்றது , ஏனைய எல்லா எழுத்துக்களையும் என்று உரைத்தலுமாம் . எழுத்துக்கள் இயங்கும் முறைமை கட்புலனாக அறியப் படுதல் வரிவடிவிலாகலின் , ` இழைக்கும் எழுத்து ` என விதந்தருளினார் . இறைவன் இல்லாதவன்போறலாவது , ஆய்வு முறையில் எவ் வாற்றால் தேடினும் அங்ஙனம் தேடுவார்க்கு அகப்படாதே நிற்றல் . உள்ளவன்போறலாவது , அன்பினால் அடைந்தார்க்குப் பல்லாற்றானும் அநுபவப் பொருளாதல் . இவ்விடத்தும் , ` ஒத்தி ` என ஒப்புமை வகையால் அருளியது , உரையுணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வாயிருப்பினும் , அடியவர்கட்கு ஏனைப்பொருள் போல உரை யுணர்வினாற்றானே உணரப்படுதலை நினைந்து என்க . இந் நிலையையே , ` உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை ஒழிவின்றி உருவின்கண் அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர அருளினை ` என விளக்கியருளினார் , சேக்கிழார் நாயனார் . ( தி .12 பெ . பு . திருஞா . பு 161) ` உனையே ஒத்தியால் ` என்பது பிழைபட்ட பாடம் . இவ்வாறெல்லாம் நிற்றலின் அடியேனுக்கும் அவ்வாற்றால் அருள்பண்ணவேண்டும் என்பது குறிப்பு . ` எழுத்துக்கு உயிரே ஒத்தி , குழைக்கும் பயிர்க்குப் புயலே ஒத்தி ` என்பவை , மறுபொருளுவமம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வீடின்பய னென்பிறப் பின்பயனென்
விடையேறுவ தென்மத யானை நிற்கக்
கூடும்மலை மங்கை யொருத்தியுடன்
சடைமேற்கங்கை யாளைநீ சூடிற்றென்னே
பாடும்புல வர்க்கரு ளும்பொருளென்
நெதியம்பல செய்த கலச்செலவின்
ஆடுங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

பொன் , மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினையுடைய , மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய , ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே , நீ , ` வீடு , பிறப்பு ` என்னும் இரண்டனுள் ஒன்றையே அமையாது , மறுதலைப் பொருள்களாகிய அவ்விரண்டனையும் அமைத்ததன் பயன் யாது ? மதத்தையுடைய யானை இருக்க , எருதினை ஊர்வது என் ? திருமேனியில் நீங்காது பொருந்தியுள்ள மலைமகளாகிய ஒருத்தியோடு கங்கை என்பவளையும் சடையில் வைத்தது என் ? உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது ?

குறிப்புரை :

` வீட்டின் ` என்னும் டகரம் தொகுத்தலாயிற்று . ` செய்த ` என்பது ` ஆக்கிய ` என்னும் பொருளதாய் , தந்தமையைக் குறித்தது . சேரநாட்டுக் கடற்றுறை பற்றி , ` சேரலர் - சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி ` - அகம் - 149 எனச் சான்றோருங் கூறினார் . ` வீட்டை அமைத்தது , உயிர்களை நிலையாய இன்பத்தில் இருத்துதற் பொருட்டும் , பிறப்பை அமைத்தது , அவ் வின்ப நுகர்ச்சிக்குத் தடையாய் உள்ள பாசத்தை அறுத்தற்பொருட்டும் , விடையை ஊர்வது , அறத்தை நிலை பெறுத்தற்பொருட்டும் , மலை மங்கையோடிருப்பது , உயிர்கட்குப் போகம் அமைதற்பொருட்டும் , கங்கையைத் தரித்தது , அப்போகம் பிறவாற்றால் இடையிற் சிதைந் தொழியாவாறு நிலைபெறுத்தற் பொருட்டும் ஆகலின் , அவற்றுள் வீடொன்றும் ஒழிந்த எல்லாவற்றையும் எய்திய அடியேனுக்கு , இனி அம் முடிந்த பயனாகிய வீட்டையளித்தருளல் வேண்டும் ` என்பது குறிப்பு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே
இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே
பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே
பரமாபர மேட்டி பணித்தருளாய்
உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங்
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டரவக்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

யாவர்க்கும் மேலானவனே , எல்லார்க்கும் மேலிடத்தில் உள்ளவனே , வலிமையோடு , ` சங்கு , இப்பி , முத்து ` என்பவற்றைக் கொணர்ந்து வீசி , வலம்புரிச்சங்கை மேலே கொண்டு முழங்கி , ஆர்ப்பரவத்தையுடையதாகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தந்தையே , நீ இராப் பொழுதில் புறங்காட்டில் எரியில் நின்று ஆடியது என் ? இறந்தவரது தலையில் பிச்சையேற்றல் என் ? உன்னை ஏத்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது ? சொல்லியருளாய் .

குறிப்புரை :

` இரா ` என்பது செய்யுளாகலின் இறுதி குறுகி , ` பனியத்து , வெயிலத்து ` என்பதுபோல . அத்துப்பெற்றது , ` இரவத்து , உரவத்து ` என்புழி , அத்தின் அகரம் அகரமுனைக் கெடாது நிற்றல் , இலேசினாற்கொள்க . ( தொல் . எழுத்து . 134) ` முழங்கி ` என்னும் எச்சம் , ` அரவக்கடல் ` என்புழித் தொக்கு நிற்கும் , ` உடைய ` என்னும் பெயரெச்சக் குறிப்பொடு முடியும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஆக்கும்மழி வும்மைய நீயென்பன்நான்
சொல்லுவார்சொற் பொருளவை நீயென்பன்நான்
நாக்கும்செவி யும்கண்ணும் நீயென்பன்நான்
நலனேஇனி நான்உனை நன்குணர்ந்தேன்
நோக்குந்நெதி யம்பல எத்தனையும்
கலத்திற்புகப் பெய்துகொண் டேறநுந்தி
ஆர்க்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் தலைவனே , இன்பம் தருபவனே , விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி , நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய , ` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே , அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன் ஆதலின் , ` எப்பொருளின் ஆக்கத்திற்கும் , அழிவிற்கும் காரணன் நீயே ` என்றும் , ` அவற்றிற்குக் காரணங்களாகப் பிற பிற வற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே ` என்றும் , ` புலனுணர்வுக்குக் காரணமான , ` நாக்கு , செவி , கண் ` என்பனவும் நீயே ` என்றும் துணிந்து சொல்லுவேன் .

குறிப்புரை :

` அதனால் , அவ்வுணர்வு நிரம்பாத பொழுதைக்குரிய இவ்வுலக வாழ்க்கையை இனி நீ அடியேற்கு வைக்கற்பாலையல்லை ` என்பது திருக்குறிப்பு . ` போ ` என்பது , ` போக்கு ` என வருதல்போல , ` ஆ ` என்பது ` ஆக்கு ` எனப் பெயராய் வந்தது . ` ஆக்கு , அழிவு , நலன் ` என்பன ஆகுபெயராய் , அவற்றின் காரணங்களையும் , ` நிதியம் ` என்பது அவ்வாறு அதனாற் கொள்ளப்படும் பொருள்களையும் உணர்த்தின . ` நீ ` என்புழியெல்லாம் , தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரங்களை விரிக்க . ` நாக்கு , செவி , கண் ` என்றது , பிற கருவிகள் எல்லாவற்றையும் தனித்தனி கூறிக்கொள்ளுதற்கு வைத்த குறிப்பு மொழி . இதுமுதல் மூன்று திருப்பாடல்களிலும் , சுவாமிகள் , தாம் இறைவனைத் தலைப்படுதல் இன்றி ஒருநொடிதானும் அமைய மாட்டாமையை நேரே அருளிச்செய்கின்றார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
விளங்குங்குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத்
தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக்
கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங்
கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன்
றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

ஒளிவிடுகின்ற குழையையணிந்த காதினையுடைய அந்தணனே , கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய ` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , நீ , இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போலும்படி நெரித்தாய் ; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு , கண்டம் கறுப்பாயினாய் ; பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை விரைவில் அறுத்தலும் செய்தாய் ; அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன் ; உடம்பாலும் துறந்து விட்டேன் .

குறிப்புரை :

` இனி எனக்கு அருள்பண்ணத் தகும் ` என்பது குறிப் பெச்சம் . இலங்கைக்கு இறையை நெரித்தமையும் , பிரமன் தலையை அறுத்தமையும் வினைத் தொடக்கை அறுத்தற்கும் , நஞ்சுண்டமை அருள்பண்ணுதற்கும் எடுத்துக்காட்டியவாறு . செவியைச் சிறப்பித்தது , தம் முறையீட்டைக் கேட்டருளல் வேண்டும் எனற் பொருட்டு ; ` வேதியன் ` என்றதும் அதுபற்றி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான்
பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்
வடிக்கின்றன போற்சில வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டடிக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

மூன்று அரண்கள் , ஒருமுறை கைந்நொடிக்கும் அளவிலே எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனே , முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பனபோல , சில வலிய அலைகள் அவைகளை ஈர்த்து வந்து வீசி , வலம்புரிச்சங்கினால் , கரையி லுள்ளாரைத் தாக்குகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள அழகிய சோலைகளை யுடைய , ` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற தந்தையே , நீ பெண்யானைக்கு ஆண்யானை போல உயிர் கட்கு யாண்டும் உடன்செல்லும் துணைவனாய் உள்ளாய் ; என் போலும் மக்கட்கும் , பிரமன் திருமால் முதலிய தேவர்கட்கும் தலைவனாய் உள்ளாய் ; இவற்றையெல்லாம் உணர்ந்து , அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன் .

குறிப்புரை :

` ஆதலின் , எனக்கு அருள்பண்ண இனித்தடை என்னை ?` என்பது குறிப்பு . ` பிடிக்குக் களிறே ஒத்தியால் ` என்பது மறுபொருள் உவமம் ; வலிமை நிலைக்களமாக வந்தது ( தொல் - பொருள் - 275). ` பிடிக்குங் களிறே ` என்பதும் பாடம் . புரம் எரித்தமை பாசத்தை அறுத்தலையும் , மக்கட்கும் தேவர்க்கும் தலைவனாயிருத்தல் இன்பம் வழங்குதலையும் வலியுறுத்தும் . இறைவன் இயல்பினை இவ்வாறு உணர்ந்து , அவனை மறவாது நிற்றலே , அவனது அடிநிழலை அடையும் நெறியாகும் என்பது , ` அயரா அன்பின் அரன் கழல் செலுமே ` என்னும் சிவஞான போத ( சூ .11) த் தால் அறியப்படும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

எந்தம்மடி களிமை யோர்பெருமான்
எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன்
அந்தண்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனை
மந்தம்முழ வுங்குழ லும்மியம்பும்
வளர்நாவலர் கோன்நம்பி ஊரன்சொன்ன
சந்தம்மிகு தண்தமிழ் மாலைகள்கொண்
டடிவீழவல் லார்தடு மாற்றிலரே.

பொழிப்புரை :

என்போலும் அடியவர்கட்கு முதல்வனும் , தேவர்கட்குத் தலைவனும் , எனக்கு எஞ்ஞான்றும் அருள்பண்ணும் சிவனும் ஆகிய , அழகிய குளிர்ந்த கரையின் கண்ணதாகிய , ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள ,` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையை , மத்தளமும் வேய்ங்குழலும் , ` மந்தம் ` என்னும் அளவாக இயம்பப்படுகின்ற , நன்மை வளர்கின்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் போற்றிய இசை நலம் மிக்க , தமிழ்ச்சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மாலைகளை வாயிலாகக்கொண்டு அப் பெருமானது திருவடிகளில் பணிய வல்லவர் நிலையாமை நீங்கப் பெற்று , நிலைபேறுடையவராவர் .

குறிப்புரை :

` அடிகள் ` முதலிய மூன்று பெயர்களும் , ` அப்பன் ` என்பதனோடு தனித்தனியாக தொகைநிலை வகையான் இயைந்தன . இனி , அவை ஒருபொருண்மேற் பல பெயர்களாய் நிற்ப , அவ்விடத்து ஐயுருபுகள் தொகுத்தலாயின எனலுமாம் . ` மணிமிடற்றன் ` என்பது ` சிவன் ` என்னும் சிறப்புப் பெயரளவினதாய் நின்றது . ` குரல் , துத்தம் , கைக்கிளை , விளரி , தாரம் , உழை , இளி ` என்னும் ஏழிசைகளையும் , ` தோற்கருவி , துளைக்கருவி , நரம்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக் கருவி ` என்னும் ஐவகைக் கருவிகளினின்றும் எழுப்புமிடத்து , ` மந்தம் , மத்திமம் , உச்சம் ` என்னும் மூவகை நிலையால் எழுப்பப்படுமாகலின் , அவற்றுள் மெல்லிதாகிய மந்தம் இயம்புதலை எடுத்தோதியருளினார் . மந்தம் மெலிவும் , மத்திமம் சமமும் , உச்சம் வலிவுமாகும் . ` ஞானசம் பந்தன் ` என்பதனை , ` சம்பந்தன் ` என்றாற்போல , ` ஆருரன் ` என்பதனை , ` ஊரன் ` என ஒரு சொற் குறைத்து அருளிச்செய்தார் ; இவ்வாறு இனியும் பலவிடத்து அருளிச் செய்தலைக் காணலாம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
ஓண காந்தன் தளியு ளீரே.

பொழிப்புரை :

` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , ` நெய் , பால் , தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவாரது கையில்காசு ஒன்றும் காணப்படுகின்ற தில்லை . அவ்வாறே , உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி , இவ்வுலகத்தில் , புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று , அச்சுழற்சி யாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது அழுந்திப் போவேனாகிய அடியேனுக்கு , அதனினின்றும் கரையேறும் வழியொன்றனைச் சொல்லியருளீர் .

குறிப்புரை :

` நெய்யும் பாலும் தயிரும் ` என்றது , பிற வழிபாட்டுப் பொருள்களையும் தழுவநின்றது . ` பூசனை செய்யலுற்றால் ` என்பதே பாடம் எனல் சிறப்பு . இத் திருப்பதிகத்தும் , வருகின்ற திருப்பதிகத்தும் உள்ள திருப்பாடல்களை , எண்சீரடியினவாகச் சீரறுக்கமாட்டாதார் , நாற்சீராக அறுத்து , ` நெய்யும்பாலும் `. ` கூடிக்கூடி ` என்றாற்போல்வனவற்றை எவ்வாற்றானும் மூவசையினவாக்குமாறின்றி , நாலசைச் சீராகவே கொண்டு இடர்ப்பட்டார் , நாலசைச் சீர் வேண்டும் ஆசிரியர் , அதனை வலியுறுத்தற் பொருட்டு ஒரோவழிச் சில சீர்களைத் தாம் வேண்டியவாறே நாலசைச் சீராக அறுத்துக் காட்டினும் , நேர்பசை நிரைபசைகளையும் , நேரசை நிரையசைகளுள்ளே அடக்குதலே அதனாற் பெறும் பயனாகக் கொண்டார் என்பது , அவர் நூலானும் , பிறர் நூலானும் நன்குணரக் கிடத்தலின் , நாலசைச் சீர்களைக் குற்றுகரமின்றிக் கோடல் பொருந்தாமை யறிக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு ளீரே.

பொழிப்புரை :

` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , பிறை தங்குமாறு சேர்த்துக் கட்டியுள்ள உமது சடையின் மேலும் , ஒப்பற்ற அலைகள் தோன்றிப் புரளுமாறு வீசுகின்ற , ` கங்கை ` என்னும் தேவியோவெனில் , உமது பக்கத்தில் எஞ் ஞான்றும் உள்ள உமாதேவியார்க்கு அஞ்சி ஒருஞான்றும் வாய் திறத்தலே இல்லை ; உம் மூத்த மகனாகிய விநாயகனோவெனில் , வயிறு ஒன்றையே முதன்மையாக உடையவன் ; ( பிறிதொன்றையும் அறியான் ). இளைய மகனாகிய , அகங்கையில் வேற்படையை யுடைய முருகனோவெனில் , விளையாட்டுப் பிள்ளை ; ( யாதொன்றையும் பேணான் ). தேவியாராகிய உமையம்மையாரோவெனில் , உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவாரல்லர் ; ( நீரோ அடியவர் குறை நோக்கி யாதும் செய்யீர் ) ஆதலின் , உம் குடிக்கு யாங்கள் அடிமை செய்ய மாட்டேமாகின்றேம் .

குறிப்புரை :

இடைக்கண் வருவித்துரைத்தன பலவும் இசை யெச்சங்கள் . ` கோ ` என்னும் உயர்திணைச் சொல் அஃறிணை வாய் பாட்டதாய் , அல்வழிக்கண் இயல்பாயும் , வேற்றுமைக்கண் , ` கோஒன் ` என , ஒன் சாரியை பெற்றும் பண்டைக் காலத்தில் வழங்கிற்று . பின்னர் , சாரியை முதல் ஒகரம் கெட்டு , னகரமே சாரியையாகப் பெற்று வேற்றுமைக்கண் , ` கோன் ` என வழங்கிற்று . அதன் பின்னர் , னகரம் பாலுணர்த்தும் ஈறேயாய் நிற்ப உயர்திணை வாய்பாட்டதேயாய் , ` கோ ` என்பது வேறு ; ` கோன் ` என்பது வேறு என இருவேறு சொற் களாயிற்று . அவற்றுள் , ஈண்டு ` கோன் ` என்பது , தகரத்தொடு புணர் வுழி இரண்டன் தொகைக்கண் ஈறு திரிந்து , ` கோற் றட்டி ` என நின்றது . இஃதறியாது , ` கோல் தட்டி ஆளார் ` எனப் பிரித்து , ` நும் ஆணையைக் கடந்து ஆட் கொள்ளமாட்டார் ` எனவும் , ` கோல் தட்டியாளால் ` என்றும் , ` கொற்று அட்டி ஆளார் ` என்றும் பாடத்தை வேறு வேறாக ஓதி , முறையே , ` வீணை வாசித்துக்கொண்டிருப்பவள் ` எனவும் , ` கூலி கொடுத்து ஆளார் ` எனவும் உரைப்ப .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
மதியு டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஓண காந்தன் தளியு ளீரே.

பொழிப்புரை :

தலைவரே , ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , உம்மால் யாதானும் ஒன்றை அடையினும் , அடையாதொழியினும் அவ்வாற்றான் வேறுபடுதல் இன்றி எஞ்ஞான்றும் ஒருபெற்றியே உம் திருவடியைப் பற்றிநின்று துதிக்கும் அடியவர் , ` நம்மையன்றி வேறொரு துணையும் இல்லாதவர் ` என்று நினைத்து , அறிவுடையவர்க்கு உரிய செய்கை ஒன்றும் நீர் செய்கின்றிலீர் ; அதனால் , உம் அடியவர் தங்கள் கையிற் பொருள் இல்லாதொழிந்த காலத்தும் , அது காரணமாக வழியொன்றும் காணாது அலைந்த காலத்தும் , உம்மைப் பிறருக்கு ஒற்றியாகவைத்துப் பிழைத்தல்தான் செயற்பாலதோ ? ( சொல்லீர் )

குறிப்புரை :

காலங் கண்ணிய , ` போழ்து ` இரண்டும் . ஈண்டு வினை யெச்ச விகுதிகளாய் நின்றன . பழித்தல் வாய்பாட்டால் அருளிச் செய்கின்றமையின் , ` மதியுடையவர் செய்கை செய்வீர் ` என்பது பாடமாகாமை யறிக . ` ஆபத் ` என்னும் ஆரியச்சொல் , ` ஆவத் ` என வந்து , ஈறு திரிந்து நின்றது . ` ஆபத் ` என்றே ஓதுவார் பலர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர்
பல்லை உக்க படுத லையிற்
பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓண காந்தன் தளியு ளீரே.

பொழிப்புரை :

` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , யாம் வல்ல கருத்துக்கள் பலவும் சொல்லி உம்மை வாழ்த்தியபோதும் , நீர் வாய்திறந்து , எமக்கு ஈய யாதேனும் ஒருபொருளை , ` இல்லை ` என்றும் சொல்கின்றிலீர் ; ` உண்டு ` என்றும் சொல்கின்றிலீர் ; நீர் எம்மைப் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு ? நாள் தோறும் சென்று , பல் நீங்கிய , இறந்தாரது தலையில் இவ்வுலகில் பிச்சை ஏற்கத் திரிந்தும் , இல்வாழ்க்கையை விரைவில் விட்டொழிய மாட்டீர் .

குறிப்புரை :

` உமக்கு அடியேங்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம் ` என்பது குறிப்பெச்சம் . ` பல்லை ` என்னும் ஐ , சாரியை , ` திரிந்தும் ` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . பகல் - நாள் . ` இருப்பதே நீர் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்
கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ஓண காந்தன் தளியு ளீரே.

பொழிப்புரை :

` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , நீர் , தம்மிற் பலகாலும் கூடி , அடியவர்க்கு உரிய , பொருந்திய தாளத்தொடுபட்ட பாட்டுக்களைக் குற்றம் உண்டாகாமலே பாடியும் , ஆடியும் , மனம்நெகிழ்ந்து அழுதும் , மற்றும் அவ்வாற்றால் அன்புடையராய் இருப்பவர்க்கு நன்மை செய்யு மாற்றினை நினைக்கின்றிலீர் ; உம்மைக் காண வந்து பலவிடத்திலும் தேடித் தேடித் திரிந்தாலும் , என்னிடத்தில் இரக்கம் வைத்துக் காட்சி யளிக்கமாட்டீர் ; கோயிலைவிட்டுப் போகவும் மாட்டீர் ; கோயிலில் வந்து பாடுகின்ற எனக்குப் பற்றுக்கோடும் தரமாட்டீர் ; ( என் செய்வேன் !)

குறிப்புரை :

` தொண்டர் பாணி `, ` கொண்ட பாணி ` எனத் தனித்தனி இயையும் . ` தங்கள் ` என்றது , சாரியை . ` பாணி ` ஆகுபெயர் . தேடித் திரிந்தது , காணப்படாமையால் . இஃது இறைவர்க்கு இயல்பாயினும் , ஈயாமைப் பொருட்டுக் கரந்தாராக அருளினார் . இத் திருப்பாடலும் , ஏழாம் திருப்பாடலும் பற்றி , இத்தலத்தில் சுவாமிகள் சென்ற பொழுது , இறைவர் ஆங்குள்ளதொரு புளியமரத்தில் ஒளிந்து கொண்டதாகவும் , அதனை அறிந்த சுவாமிகள் அங்குச் சென்று இத் திருப்பதிகத்தைப் பாட , இறைவர் அப்புளியமரத்தில் இருந்த காய்களைப் பொற்காய்களாக்கி உதிர்க்க , சுவாமிகள் அவற்றைப் பெற்று மகிழ்ந்ததாகவும் ஆங்குச் செவிவழி வழக்கு ஒன்று வழங்குகின்றது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்
மலைம கள்மது விம்மு கொன்றைத்
தாரி ருந்தட மார்பு நீங்காத்
தைய லாள்உல குய்ய வைத்த
காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம்உண் டாக நீர்போய்
ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
ஓண காந்தன் தளியு ளீரே.

பொழிப்புரை :

` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே . தேன் ததும்புங்கொன்றை மாலையை உடைய உமது பெரிய அகன்ற மார்பினின்றும் நீங்காத , நீண்ட கரிய கூந்தலையும் , வாள்போலும் நெடிய கண்களையும் உடைய மலைமகளாகிய தேவி . உலக மெல்லாம் துன்பமின்றி வாழ்தற் பொருட்டு வைத்துள்ள சிறந்த அறச்சாலையாகிய , மேகம் தவழும் பெரிய சோலையை யுடைய , ` கச்சி ` என்னும் பழைய ஊரின்கண் உள்ள திருக்காமக் கோட்டம் இருக்க , நீர் சென்று , ஊரவர் இடும் பிச்சையை ஏற்பது ஏன் ?

குறிப்புரை :

` அடியேங்களாகிய எங்களுக்குக் கரத்தற் பொருட்டுத் தானோ ?` என்பது கருத்து . ` கச்சியில் காமக்கண்ணியம்மை , காமக் கோட்டத்தில் எழுந்தருளியிருந்து , என்றும் முப்பத்திரண்டறங்களையும் வளர்க்கின்றாள் ` என்பது புராண வரலாறு . இங்கு சுவாமிகள் அருளிச்செய்த இப்பொருளைக் குமரகுருபரர் , தமது திருவாரூர் நான் மணி மாலையில் , ` புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும் இருவே றியற்கையும் இவ்வுல குடைத்தே அதா அன்று , ஒருகா லத்தின் உருவமற் றொன்றே இடப்பால் முப்பத் திரண்டறம் வளர்ப்ப வலப்பால் இரத்தல் மாநிலத் தின்றே ... ... ... ... ... பன்மணி மாடப் பொன்மதிற் கமலைக் கடிநகர் வைப்பினிற் கண்டேம் வடிவம் மற்றிது வாழிய பெரிதே ` என நயம்பட அருளினமை காண்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

பொய்ம்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள்ஒன் றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை யன்றே எம்பெரு மான்
ஓண காந்தன் தளியு ளீரே.

பொழிப்புரை :

` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே . நீர் பொய்ச்சொல்லினாலே காலங் கழித்து , திருக்கோயிலின் புறத்தும் காணப்படீர் ; அகத்தும் காணப்படீர் . ஆகவே நீர் நும் அடியவரை மெய்சொல்லி ஆளமாட்டீர்போலும் ! இனி , பின்வரும் நாள்களிலும் ஒன்றும் தரமாட்டீரேயாம் ; ஏனெனில் , எம்மை ஆளாகப் பெறுமளவும் விடாது வழக்காடுதல் அல்லது , பெற்றுவிட்டால் பின்பு எம்பால் ஒரு பணியையும் விரும்புகின்றிலீர் . எவ்வாற்றான் நோக்கினும் , நீர் எமக்கு யாதும் ஈகின்றவராயோ , யாதும் சொல்கின்றவராயோ தோன்றவில்லை . இந்நிலையில் நீர் எமக்குத் தலைவராய் இருத்தல் , இப்பிறப்பு வந்தபின்னன்று ; முற் பிறப்புத் தொட்டேயாம் .

குறிப்புரை :

` பொய்ம்மை ` என்றது , ` பிறவிடங்களிற் காணப்படா தொழியினும் திருக்கோயிலில் காணப்படுவேம் ` என்று மறைகள் வாயிலாகச் சாற்றினமையை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வலையம் வைத்த கூற்ற மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலைஅ மைத்த சிந்தை யாலே
திருவ டீதொழு துய்யின் அல்லால்
கலைஅ மைத்த காமச் செற்றக்
குரோத லோப மதவ ரூடை
உலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன்
ஓண காந்தன் தளியு ளீரே.

பொழிப்புரை :

` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , எத்தகையோரையும் கொண்டு செல்ல , பாசத்தைக் கையிலே கொண்டுள்ள கூற்றுவன் வந்து வானத்தின்மேல் நின்ற செய்தியைக்கேட்டு , அடியேன் , நீர் கற்போல அமைத்துத் தந்த அம் மனத்தைக் கொண்டே உமது திருவடியைத் தொழுது அக்கூற்றுவனுக்குத் தப்ப நினைக்கின்றேனேயன்றி , விதி அமைத்துத் தந்த ஐம் பொறிகளாகிய ஐந்து உலைக்களக் கூட்டத்தைப் பொருளாக உள்ளத் தமைத்து , ` காமம் , மாற்சரியம் , குரோதம் , உலோபம் , மதம் ` என்ப வரிடைப் பொருந்தி வாழ நினைக்கின்றிலேன் .

குறிப்புரை :

` இத்துணைப் பெரும்பேற்றை உம்பால் விரும்பும் எனக்கு நீர் சிறிது பொன்தானும் தாரீராகின்றீர் ` எனக் குறிப்பெச்சம் வருவித்து , ஏனைய திருப்பாடல்களோடு இயைய இயைத்துக் கொள்க . ` வலையம் ` என்றது உவமையாகுபெயராய் , வளையவீசும் பாசத்தைக் குறித்தது . ` மீவான் ` என்றதனை . ` மீகண் ` என்பதுபோலக் கொள்க . கலை - நூல் . அஃது அதனுட் சொல்லப்படும் விதியைக் குறித்தது . ` கலை யமைத்த ஐ உலை ` என இயையும் . தாபத்தை உண்டாக்குதலின் , ஐம்பொறியாகிய புழைகளை உலைக்களங்களாக உருவகித்தருளினார் . ` காமம் ` என்பது முதல் . ` மதம் ` என்றது காறும் உள்ளன , உம்மைத் தொகைபடத் தொக்கு ஒருசொல் நீர்மையவாய் இழித்தற்கண் வந்த உயர்திணை விகுதியை ஏற்றன . ` மதவரூடு ஒன்ற மாட்டேன் ` என இயையும் . ` மதவருடை ` எனின் யாப்பு அமையாமையின் , அதுபாடம் அன்றென்க . இதன்கண் , பின் மூன்று வரிகளிலும் , ` சிலையம் வைத்த ` என்பனபோலவே பாடங்கள் சில உள .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

வார மாகித் திருவ டிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
ஒற்றி யூரேல் உம்ம தன்று
தார மாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊரும் காடு உடையும் தோலே
ஓண காந்தன் தளியு ளீரே.

பொழிப்புரை :

` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே , ` கங்கை ` என்பவளைத்தாரமாகக் கொண்டு , இடமின்றிச் சடையில் வைத்துள்ள அடிகளே , நீர் மார்பில் அணியும் ஆரமாவது பாம்பு ; வாழும் ஊர் உமக்கு உரிமையில்லாதது ; ` ஒற்றியூர் உளதே ` எனில் ` ஒற்றி ` யெனவே , அஃது உம்முடையது அன்றாயிற்று . உமக்கு இல்லமாவது சுடுகாடு ; உமது உடையாவது தோல் . இங்ஙன மாதலின் , உம்மிடத்து அன்புடையவராய் உம்திருவடிக்குத் தொண்டு செய்யும் அடியவர் உம்மிடத்தினின்றும் பெறுவது எதனை ?

குறிப்புரை :

நகைப் பொருளிடத்து , ` ஆரூர் ` என்பது வினாவாய் நின்று . ` உம்முடையதன்று ` என்னும் விடையை இசையெச்சமாகத் தந்து நிற்கும் . ` வாழ்வது ஆரூர் ` என முன்னர் வந்தமையின் , பின்னர் , ` ஊர் ` என்றது இல்லமாயிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

ஓவ ணம்மேல் எருதொன் றேறும்
ஓண காந்தன் தளியு ளார்தாம்
ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட
வரைது கில்லொடு பட்டு வீக்கிக்
கோவ ணம்மேற் கொண்ட வேடம்
கோவை யாகஆ ரூரன் சொன்ன
பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.

பொழிப்புரை :

நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும் , திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர் , நம்பியாரூரனை , தாமே பத்திரம் எழுதிக் கொண்டுவந்து ஆட்கொண்ட எல்லைக்கண் , துகிலும் பட்டும் உடுத்திருந்து , பின்பு அவர் ஆணைவழியே அவரை அவன் அணுகிப் பாடுதலாகிய தொண்டினைச் செய்யும் எல்லைக் கண் கோவண மட்டிலே உடையவராய் நின்ற கோலத்தின் தன்மைகள் பலவும் நிரல்படத் தோன்றுமாறு அமைத்து அவன்பாடிய , பா வடிவாகிய இத் தமிழ்ச் செய்யுள்கள் பத்தினையும் பொருளுணர்ந்து அன்பு மீதூரப் பண்ணொடு நன்கு பாடவல்லவர்க்கு அவர் செய்த பாவம் விரைந்து நீங்கும் .

குறிப்புரை :

ஓ வணம் - ஓவு வண்ணம். `ஆளுங்கொண்டு அரை துகிலொடு` என்பது பாடமாகாமை யறிக. `வல்லார்` என்பதும் பாடம் அன்று என்க. பாவங்கள் அனைத்தையும், இனம் பற்றி ஒருமையாக அருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , படத்தையுடைய பாம்பைத் தலையிலே வைத்து , பாய்கின்ற புலியினது தோலை அரையிற் கட்டி , பகைவரது திரிபுரங்கள் எரிந்தொழியுமாறு வெகுண்டு , அந்நாளிற்றானே அவ்வூரிலுள்ள மூவருக்கு அருள் பண்ணினீர் ; கூற்றுவனை முன்னர்க் கொன்று , பின்னர் உயிர்ப்பித்து , அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர் ; இன்ன பெருமைகளையுடையீராய் இருந்தும் , தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு , பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என் ?

குறிப்புரை :

திரிபுரம் எரித்த ஞான்று , ஆங்கிருந்த அசுரர்களுள் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடாதிருந்த மூவரைச் சிவபிரான் உய்யக்கொண்டு , ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்டமையை , ஆறாந் திருமுறைக் குறிப்பில் விளக்கினோம் . ( தி .6 ப . 60 பா .9). இதனை இத் திருமுறையின் ஐம்பத்தைந்தாந் திருப்பதிகத்து எட்டாவது திருப்பாடலில் சுவாமிகள் இனிது விளக்குதல் காண்க . மடங்கல் - கூற்றுவன் . ` எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன் ` என்பது சொற் பொருள் . இது , ` மடங்கலான் ` என , பாலுணர்த்தும் ஈறுபெற்று நின்றது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

இழித்து கந்தீர் முன்னை வேடம்
இமைய வர்க்கும் உரைகள் பேணா
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட
வுயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை
அவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , அரி பிரமர்க்கும் அவரது முன்னை உடம்புகளை நீக்கி , அவற்றை விரும்பித் தோள்மேற் கொண்டீர் ; ` என்றும் இறவாதபடி காப்பவன் ` என்னும் புகழை விரும்பாது , எல்லாப் பொருள்களையும் அழித் தொழித்து , அதன்பின்னர் அவைகளை மீளத் தோன்றச் செய்தலை விரும்பினீர் ; அங்ஙனமாக , நீர் முன்பு மேற்கொண்ட , மேலான தவத்தினை , தேவர் வேண்டிக்கொண்டமையால் அழித்தற்கு வந்த மன்மதனை , அவனுடைய தந்தையாகிய திருமால் ஒன்றும் செய்யமாட்டாது பார்த்துக் கொண்டிருக்க . நெற்றிக்கண்ணால் எரித்து , பின் உயிர்ப்பித்த வெற்றியை விரும்பியது என் ?

குறிப்புரை :

இழித்தல் - இறக்குதல் , ` முன் ` என்றது , சங்கார காலத்துக்கு முற்பட்ட காலத்தை . ` இமையவர் ` என்றது , தலைமை பற்றி , காரணக் கடவுளர்மேல் நின்றது . சிவபிரானது மோனநிலையை நீக்குமாறு தேவர்கள் மன்மதனை வேண்டி விடுக்க , அவன் அங்குச் சென்று அப்பெருமானால் எரிக்கப்பட்டு , பின்னர் அவன் தேவி வேண்டு கோட்கு இரங்கி அப்பெருமானாலே உயிர்ப்பிக்கப் பெற்றமையை , கந்த புராணத்துட் காண்க . ` எல்லா உலகங்களையும் ஒருநொடியில் அழிக்கவும் ஆக்கவும் வல்ல பேராற்றலையுடையீராகிய நீர் , அவ் வாற்றலை ஒரு சிறுபிள்ளையிடத்துக் காட்ட நினைத்தது நுமக்குப் புகழாகுமோ ` என்றபடி . ` நீர் செய்வன அனைத்தும் , புகழ் முதலியவற்றை விரும்பியன்றி , தெறல்வழியானும் , அளிவழியானும் பிறர்க்கு நலஞ்செய்தற் பொருட்டேயாம் ` என்பது குறிப்பு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

படைக ளேந்திப் பாரி டம்மும்
பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவ ணத்த ராகி
உண்மை சொல்லீர் உம்மை யன்றே
சடைகள் தாழக் கரண மிட்டுத்
தன்மை பேசி இல்ப லிக்கு
விடைய தேறித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , பூதகணங்கள் பலவகையான படைகளை ஏந்திக் கொண்டு உம் திருவடிகளை வணங்கித் துதிக்க . உம் தேவியுடனே . உடையைக் கோவண உடையாக உடுத்துக்கொண்டு , சடைகள் நீண்டு அசையக் கூத்தாடிக் களித்துப் பின்னர் , இல்வாழ்க்கை யுடையாரைப் பெருமையாகச் சொல்லி , அவர்தம் இல்லங்களில் பிச்சைக்குத் திரிதல் என் ? உமது உண்மை நிலையைச் சொல்லியருளீர் .

குறிப்புரை :

` அன்றே ` என்றது அசைநிலை . ` உம்மை உண்மை சொல்லீர் ` என்றதனை . ` நூலைப் பொருள் அறிவித்தான் ` என்பது போலக் கொள்க . ` உண்மை சொல்லீர் உண்மை யன்றே ` என்பதும் பாடம் . நடனமாடிக் களித்துப் பொழுது போக்குதல் செல்வமுடையார் செயல் என்க . ` இட்டு ` என்றதன்பின் , வினைமாற்றுப் பொருள் தரும் , ` பின் ` என்பது வருவிக்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்
பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணு ளீராய்க் கருத்தில் உம்மைக்
கருது வார்கள் காணும் வண்ணம்
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்
வான நாடர் மருவி ஏத்த
விண்ணு ளீராய் நிற்ப தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , விண்ணுலத்தில் உள்ளோர் சூழ்ந்து போற்ற ஆங்கு உள்ளீராய் இருந்தும் , இம் மண்ணுலகத்தில் பண்களாகியும் , அவற்றையுடைய பாட்டுக்களாகியும் , அடியார்களது உள்ளத்தில் நிறைந்தும் , மக்கள் முதலிய உயிர்களின் கண்களாகியும் , உம்மை உள்ளத்தில் நினைபவர் , புறத்தேயும் காணும்படி உருவங் கொண்டும் இருத்தல் என் ?

குறிப்புரை :

செய்யுட்கு ஏற்பப் பிறவாற்றான் அருளிச்செய்தாராயினும் , ஏனைய திருப்பாடல்களோடு ஒப்ப இவ்வாறு உரைத்தலே திருவுள்ளம் என்க . மதியம் வைத்தல் , உருவத்தின் வகைகளைக் குறிக்கும் குறிப்பு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

குடமெ டுத்து நீரும் பூவுங்
கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடமெ டுத்தொன் றாடிப் பாடி
நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
வடமெ டுத்த கொங்கை மாதோர்
பாக மாக வார்க டல்வாய்
விடம்மி டற்றில் வைத்த தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , அடியார்கள் குடத்தைச் சுமந்து நீரையும் பூவையும் ஈட்டிக் கொண்டு வந்து உமக்குப் பணிசெய்ய , நீர் , உம்மை என்றும் பிரியாது உடனிருத்தற் பொருட்டு , மணிவடம் அணிந்த தனங்களையுடைய மங்கை ஒரு பாகத்தில் இருக்க நடனத்தை மேற்கொண்டு , ஆடலும் பாடலும் நன்கு இயைய ஆடியும் பாடியும் அவர்கட்கு இன்பந் தருவீர் ; அவ்வாறிருந்தும் , நீண்ட கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்தது என் ?

குறிப்புரை :

` அது , வேண்டுங்காலத்து உமிழப்படுங்கொல்லோ என்னும் அச்சத்தை விளைவிப்பது ` என்னும் குறிப்பொடு இவ்வாறு அருளிச்செய்யப்பட்டது . ` ஒன்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மாறு பட்ட வனத்த கத்தின்
மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர்
பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
கூறு பட்ட கொடியும் நீருங்
குலாவி யேற்றை அடர ஏறி
வேறு பட்டுத் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் உம்மொடு மாறுபட்டு நின்ற , காட்டில் வாழப்பிறந்த , வலிய களிற்றை உரித்து , அதன் தோலை , விருப்பம் உண்டாகப் போர்த்தீர் ; அன்ன வீரத்தை உடையீராயும் , உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும் எருதையே ஊர்தியாகச் செறிய ஊர்தலும் , பிறர் இடுகின்ற பிச்சைக்கென்று இல்லந்தோறும் திரிதலும் செய்து , நுமது பெருமையினின்றும் வேறுபட்டு ஒழுகுதல் என் ?

குறிப்புரை :

` வனத்தின் மருவ வந்த ` என்றது இன அடை . ` ஏறி ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின் , இவ்வாறு உரைக்கப் பட்டது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

காத லாலே கருதுந் தொண்டர்
கார ணத்த ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம்
புவனி யேத்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசை
நித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று , பூதங்கள் பாட , உலகம் உயர்த்துக்கூறுமாறு , நடனத்தை விரும்பி ஆட வல்லீர் ; அவ்வாறாகவும் , உலகியல் விளங்குதற் பொருட்டு , யோகியர் சூழ , ஏழிசையின்வழி நிலைத்து நின்று , வேதத்தை ஓதித் திரிதல் என் ?

குறிப்புரை :

` நடனம் மெய்யுணர்வைத் தருவதாகலின் , அதனை மேற்கொண்டு செய்கின்ற நீர் , உலகியல் நூலைப் பரப்பிக் கொண்டிருத்தல் என்னோ ?` என்றவாறு . உயிர்களின் நிலை வேறு பாட்டிற்கேற்ப , இறைவன் பந்தத்தையும் , வீட்டையும் தருபவனாய் நிற்றலை அருளிச் செய்தபடி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

குரவு கொன்றை மதியம் மத்தங்
கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர்
விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேற் பழிகள் போக்கீர்
பாக மாய மங்கை அஞ்சி
வெருவ வேழஞ் செற்ற தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , ` குரா மலர் , கொன்றை மலர் , ஊமத்த மலர் , பிறை , தனங்களையுடைய நங்கையாகிய கங்கை , பாம்பு ` ஆகிய எல்லாம் தலைமயங்கிக் கிடக்கின்ற சடையினை யுடையீர் ; யாவர்க்கும் மூத்தீர் ; அங்ஙனமாயினும் , எஞ்ஞான்றும் உம்மையே கருத்தில் வைத்துப் பாடுகின்ற என்மேல் உள்ள பாவத்தைப் போக்கீராதலோடு , உமது பாகத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சங் கொள்ளுமாறு , யானையை உரித்துப் போர்த்தது என் ?

குறிப்புரை :

` குரவு முதலியன விரவுகின்ற சடையுடையீர் ` என்றது , ` கங்கையும் பாம்பும் தம் ஆற்றல் மடங்கிப் பிறையோடு குரா முதலிய மலர்கள் போலக் கிடக்க வைத்த பேராற்றலுடையீர் ` என்றபடி . ` போக்கீர் ` என்றதன்பின் , ` அதனோடு ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . ` அடியவரைக் காக்கின்றிலீர் ; மனைவியை அஞ்சப்பண்ணுகின்றீர் ; இது தகுவதோ ` என்பதாம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்
நிச்ச யத்தால் நினைப்பு ளார்பால்
பாடுங் காட்டில் ஆட லுள்ளீர்
பரவும் வண்ணம் எங்ங னேதான்
நாடுங் காட்டில் அயனும் மாலும்
நணுகா வண்ணம் அனலு மாய
வேடங் காட்டித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , உம்மைத் தெளிந்த உள்ளத்துடன் நினைப்பவர் முன்னே , உயர்ந்த மாளிகைகளையுடைய கச்சியம்பதியில் எழுந்தருளியுள்ளீர் ; என்றாலும் , பேய்கள் பாடும் காட்டில் ஆடலை உடையீர் ; அதுவன்றியும் , அயனும் மாலும் தமது தலைமையை ஆய்ந்து காணுதற்குக்கொண்ட சான்றிடத்து , அவர்கள் உம்மை அணுகாதவாறு தீப் பிழம்பாய் நின்ற வடிவத்தையே எங்கும் காட்டித் திரிவது என் ? உம்மையாங்கள் வழிபடுவது எவ்வாறு ?

குறிப்புரை :

` நாடுங் காட்டில் ` என்றதில் காட்டு - சான்று . காட்டில் ஆடுதல் உயர்வு தாராமையாலும் , இருவராலும் அணுகப்படாமை காட்சிக்கு அரிய நிலையாதலாலும் , ` பரவும் வண்ணம் எங்ஙனே ` என்று அருளினார் . தான் , அசைநிலை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

விரித்த வேதம் ஓத வல்லார்
வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னை
விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யால்ஆ ரூரன் தொண்டன்
அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
செம்மை யாளர் வானு ளாரே.

பொழிப்புரை :

விரிவாகச் செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓத வல்லவர் வாழ்கின்ற , கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள , யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தணனை , அவனுக்குத் தொண்டனும் , அவன் அடியார்க்கு அடியனும் அகன்ற சோலையையுடைய திருநாவலூரனும் ஆகிய நம்பியாரூரன் விருப்பத்தொடு சில வற்றை வினவிச் செய்த , தமிழ்ச்சொற்களாலாகிய மாலை பத்தினையும் , அவன் தெரித்துச் சொன்ன குறிப்பில் நின்று பாட வல்லவர் , கோட்டம் நீங்கிய உணர்வினையுடையராய் . சிவலோகத்தில் இருப்பவராவர் .

குறிப்புரை :

` ஓத வல்லார் வெண்காடு ` என , வாழ்ச்சிக்கிழமைப் பொருளதாகிய ஆறாவதன் தொகையாக இயைக்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மத்த யானை யேறி மன்னர்
சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

மதத்தையுடைய யானையின்மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே , நீவிர் இறந்தால் , அதுபோது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர் ; இறைவன் ஒருவனே அத்தகையனாய் உளன் ; இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள் . அவ்வாறு வைத்த மனத்தைப் பின் அந்நிலையினின்றும் வேறுபடுத்தி , மீள , இவ் வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா . என் நெஞ்சீரே , நீரும் வாரும் ; அவர்களுடன் , யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் .

குறிப்புரை :

தம் நெஞ்சிற்கு அறிவுறுத்தப் புகுந்தார் , பேரருள் காரணமாக , தலைவராகிய அரசர்க்கும் அறிவுறுத்தார் . ` மத்தயானை ` என்றதில் தகரமெய் , விரித்தல் . ` ஆரும் இல்லை ` என்றது , ` இறைவன் ஒருவனே உளன் ` என்னும் குறிப்பினது . ` செத்தபோதேல் ` எனவும் பாடம் ஓதுப . இழித்தற் குறிப்பால் , நெஞ்சினை உயர்திணையாக விளித்தருளினார் . இது வருகின்ற திருப்பாடல்களிலும் ஒக்கும் . ` வம்மின் ` என்றது , ஏனைய திருப்பாடல்களிலும் இயைய அருளிய தாம் . ` என்பது ` என்புழி ஏழாவது விரிக்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

தோற்ற முண்டேல் மரண முண்டு
துயர மனைவாழ்க்கை
மாற்ற முண்டேல் வஞ்ச முண்டு
நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நினைத்தற் றன்மையை யுடைய நெஞ்சீரே , யாவர்க்கும் , பிறப்பு உளதாயின் , இறப்பும் ஒருதலையாக உண்டு ; அவற்றிற்கு இடையே உள்ள இல்வாழ்க்கையும் துன்பம் தருவதே . அவ்வாழ்க்கையின் பொருட்டுச் சொல்லப்படும் சொல் உளதாயின் . அதன்கண் பெரும்பாலும் வஞ்சனை உளதாவதேயாம் . அதனால் , அவைகளின் நீங்குதற் பொருட்டு , வெண்ணீற்றை யணிந்தவரும் , இடப வாகனத்தை உடையவரும் , மிக்க நீரை நீண்ட சடையிலே தாங்கியவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள் பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` மனம் ` என்றது , நினைத்தற் றன்மையை விதந்தருளியவாறு . குடிப்பிறப்பும் , சால்பும் உடையார் சிலரேயாக , அனையரல்லா தாரே உலகத்துப் பலராதலானும் , அவர் , ` நகை , ஈகை , இன்சொல் , இகழாமை ` ( குறள் - 953.) என்பனவும் ` அன்பு , நாண் , ஒப்புரவு , கண்ணோட்டம் , வாய்மை ` ( குறள் - 983.) என்பனவும் இன்றியே வாழ்தலானும் , ` மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு ` என்று அருளிச் செய்தார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

செடிகொள் ஆக்கை சென்று சென்று
தேய்ந்தொல்லை வீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுட்
பட்டு மயங்காதே
கொடிகொ ளேற்றர் வெள்ளை நீற்றர்
கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , துன்பத்தைக் கொண்ட உடம்பானது , உலகியலில் உழன்று உழன்று மெலிந்து , விரைய வீழ்ந்தொழியாத முன்னே , மாவடுவின் வடிவைக் கொண்ட கண்களையுடைய மாதரது மயக்கத்திற் பட்டு மயங்காது , தம் கொடி தன்னிடத்துப் பொருந்தக் கொண்ட இடபத்தை யுடையவரும் , வெண்மையான நீற்றை அணிந்த வரும் , கோவணமாக உடுத்த ஆடையை உடைய தலைவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` வஞ்சனை ` என்றது , இளமை , அன்பு முதலியவற்றது நிலையாமையை . ஆடையைக் கோவணமாக உடுத்தலாவது , கீழ்வாங்கிக் கட்டுதல் . ஈண்டும் நெஞ்சிற்கு அறிவுறுத்தலே திருவுள்ளமாகலின் , அவ்வாறு உரைக்கப்பட்டது . பிற திருப்பாடல்களிலும் இவ்வாறுரைப்பன அறிந்துகொள்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
வஞ்ச மனத்தீரே
யாவ ராலு மிகழப் பட்டிங்
கல்லலில் வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்
முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

வஞ்சனையை யுடைய நெஞ்சீரே , நமக்கு உட்பட்டவராயே ஐவர் பகைவர் வாழ்வர் ; அதனால் , அவரது தீமையால் யாவராலும் இகழப்படும் நிலையை எய்தித் துன்பத்தில் வீழாது , தாமே மும்மூர்த்திகளாயும் , தமது ஆணை வழியால் மாலும் அயனுமாயும் , எவ்வாற்றானும் உலகிற்கு அவரே முதல்வராகும் முழுமுதல்வராகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

கண்டீர் , முன்னிலை யசை . ` ஐவர் ` என்றது , ஐம்புல ஆசையை . அஃது ஒன்றாயினும் , புலன் வகையால் , ` ஐந்து , எனப்படும் , ` வஞ்சம் ` என்றது , தம்வழி நில்லாது அறைபோதலை . ` சிவபிரான் , சுத்த மாயையைத் தொழிற்படுத்துமிடத்துத் தானே , ` அயன் ` மால் , உருத்திரன் ` என்னும் மூன்று நிலைகளையும் உடையவனாய் நிற்பன் ` என்பதும் , அசுத்த மாயையின் கீழ் உள்ள பிரகிருதி மாயையைத் தொழிற்படுத்துமிடத்து , அத்தொழிலைப் பிறர்மாட்டு வைக்கும் ஆணையாற்றால் , அந்நிலையைப் பெறும் , மூவராயும் நிற்பன் என்பதும் சிவாகம நூல் துணிபு . எனினும் , பிரகிருதி மாயையில் நின்று முத்தொழிலைச் செய்யும் மூவருள் உருத்திரன் , ஏனை இருவர் போலச் சிவபிரானை மறந்து , தானே முதல்வன் என மயங்கித் தருக்குதல் இன்மையின் , அவனை வேற்றுமைப்படுத்து ஓதுதல் திருமுறைகளுட் சிறுபான்மையேயாம் . அவ்வாற்றான் ஈண்டும் , முன்னர் , ` மூவராயும் ` என்றும் , பின்னர் , ` இருவராயும் ` என்றும் அருளிச் செய்தார் . ` முதல்வன் `, ` அவன் ` என்பன , பன்மை யொருமை மயக்கங்கள் . ` முதல்வர் அவரேயாம் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` தேவர் ` என்றது . ஈண்டு , ` முழுமுதற் கடவுள் ` என்னும் பொருளது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

அரித்து நம்மேல் ஐவர் வந்திங்
காறலைப்பான் பொருட்டால்
சிரித்த பல்வாய் வெண்டலை போய்
ஊர்ப்புறஞ் சேராமுன்
வரிக்கொ டுத்தி வாள ரக்கர்
வஞ்சமதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , ஐவர் ஆறலை கள்வர் நம்மேல் வந்து துன்புறுத்தி நன்னெறியின் இடையே அலைத்தலால் வாணாள் வீணாளாய்க் கழிய , மகிழ்ச்சியாற் சிரித்த பல்லினை உடைய வாய் , வெண்டலையாய்ப் போய் ஊர்ப்புறத்திற் சேராத முன்பே , அழகினைக் கொண்ட படப்புள்ளிகளையுடைய பாம்பை அணிந்த , கொடிய அசுரரது பகைமை தங்கிய மதில்கள் மூன்றினையும் எரித்த வில்லை யுடைய பெருமானது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` அலைப்பான் ` என்பது , தொழிற்பெயர்ப் பொருள தாயும் , ` பொருட்டு ` என்றது , ` காரணம் ` என்னும் பொருளதாயும் நின்றன . வரி - அழகு . துத்தி - பாம்பின் படப்பொறி ; அஃது இங்கு இரு மடியாகுபெயராய் , பாம்பையே உணர்த்திற்று . ` வரிக்கொள் ` என்றதில் ககர மெய் , விரித்தல் . அசுரர் கொண்ட பகைமை , அவரது மதில் மேல் ஏற்றப்பட்டது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்
பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மொ டாடி
நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த
அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , நம் இல்வாழ்க்கையை ஆளுதலுடைய சுற்றத்தார் , நம்மீது நிலையற்ற அன்புடையரே ; அதனை நினையாது , அவர்கள் குறையை முடித்தற் பொருட்டு நீரும் எம்மொடு கூடித் திரிந்து , மயக்கத்தையுடையீராயினீர் ; இனி , அவ்வாற்றால் துன்புறுதல் வேண்டா ; இப்பிறப்பில் நாம் வழிபட்டிருக்க , வருகின்ற பிறப்பில் வந்து நமக்கு அருள் பண்ணும் நம் பெருமானது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

கண்டீர் , முன்னிலை யசை . பொத்து - பொத்தல் ; பொள்ளல் ; என்றது , குறையை . ` அவர் பொத்து ` என எடுத்துக் கொண்டு உரைக்க . ` எம்மொடாடி மையல்கொண்டீர் ` என்றாராயினும் , ` எம்மொடு மையல் கொண்டு ஆடினீர் ` என்பது திருவுள்ளம் என்க . உயிர் எந்நிலையில் நின்றது . உள்ளமும் அந்நிலையதாம் ஆதலின் , இவ்வாறு அருளப்பட்டது . இவ்வுண்மையைச் சிவப்பிரகாசத்தின் எழுபதாஞ் செய்யுளால் அறிக . ` நீரும் ` என்னும் உம்மை , இறந்தது தழுவிற்று . ` அம்மை நமக்கருளும் ஐயர் ` என்றது , ஏனையோர் அது மாட்டார் என்பது உணர்த்தற் பொருட்டு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கூச னீக்கிக் குற்றம் நீக்கிச்
செற்ற மனம்நீக்கி
வாச மல்கு குழலி னார்கள்
வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சே , கும்பிட்டுக் கூத்தாடக் கூசுதலை ஒழித்து , காமம் வெகுளி முதலிய குற்றங்களை அகற்றி , யாரிடத்தும் பகை கொள்ளுதலைத் தவிர்த்து , மணம் நிறைந்த கூந்தலையுடைய மகளிரது , வஞ்சனையையுடைய மனைவாழ்க்கையில் உள்ள ஆசையைத் துறந்து எலும்பை அணிதலோடு , விடையை ஊரும் இறைவரது திருக்கோயிலை அவரிடத்து அன்பு வைத்து . ` திரு எதிர் கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; அதுவே செயற்பாலது ; வா .

குறிப்புரை :

` கூசம் நீக்கி ` என்பதும் பாடம் . ` மனம் ` என்றது அண்மை விளி . ` குழலினார்களது மனைவாழ்க்கை ` என்க . மகளிர் இல்லையேல் இல்லையாதல் பற்றி , மனைவாழ்க்கையை அவருடைய தாக்கி யருளினார் . வஞ்சனையாவது , பிழைத்துப் போக வொட்டாது தன்னிடத்தே அகப்பட்டுக் கிடக்குமாறு தளைத்து நிற்றல் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இன்ப முண்டேல் துன்ப முண்டு
ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்னால் மோழை மையாம்
முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை
யடிகளடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

பொறியொன்றும் இல்லாத முட்டைபோலும் நெஞ்சீரே , அறியாமையால் வரும் மனை வாழ்க்கையில் இன்பம் உள்ளதுபோலவே துன்பமும் உளதாதல் கண்கூடு ; ` அழகிய கொன்றை மாலையை அணிந்த இறைவரது திருவடிகளை , அவற்றிற்கு அன்பராய் உள்ளவரல்லது அடையமாட்டார் ` என்று , அறிந்தோர் கூறுவர் ; இவற்றை முன்பு உமக்குச் சொன்னால் நீர் உணரமாட்டாமையின் , அறியாமையாய் முடியும் ; ஆதலாற் சொன்னோமில்லை . இனி மனை வாழ்க்கையைக் கைவிட்டு , இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர் கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` இன்பம் உண்டேல் ` என்ற , ` செயின் ` என்னும் எச்சம் , ` நீரின் றமையா துலகெனின் ` ( குறள் -20.) என்பதிற்போலத் தெளிவின்கண் வந்தது . ` உண்டு ஏழை ` என்புழிக் குற்றியலுகரம் கெடாது நின்றது . ` முன்பு ` என்றது , இறைவனால் ஆட்கொள்ளப்படாத காலத்தை . மோழை புரையாகலின் , மோழைமை அறிவின்மை யாயிற்று ; ` போத்தறார் புல்லறிவினார் ` ( நாலடி -351.) என , அறி வின்மை , ` பொத்து ` எனப்படுதல் காண்க . ` முன்பு சொன்ன மோழை மையான் ` எனவும் பாடம் ஓதுவர் . பின்னர் , ` என்பர் ` என உரை யளவையைக் கூறினமையால் , முன்னர்க் காட்சியளவை கூறுதல் பெறப்பட்டது . ` கொன்றையடிகள் ` என முன்னே வந்தமையின் . ` கோயில் ` என வாளாதே அருளிப் போயினார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

தந்தை யாருந் தவ்வை யாரு
மெட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி
வான நெறிகாட்டும்
சிந்தை யீரே னெஞ்சி னீரே
திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , தந்தையாரும் தமக்கையாரும் நமக்கு எள்ளளவும் துணையாகமாட்டார் ; ஆதலின் , நீர் எம்பால் வந்து உள்ளாய்க் கலந்து உசாவி , எமக்கு வீட்டு நெறியைக் காட்டும் நினைவுடையீராயின் , விளங்குகின்ற திங்களைச் சூடும் நம் தந்தை கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` தந்தையாரும் தவ்வையாரும் ` என்றது அணுக்கராய உறவினர்க்குச் சிலரை எடுத்தோதியவாறு . ` நாம் ` என்பது , ` யாம் ` என்னும் பொருளிலும் வருதல் உண்டென்க . ` சிந்தையீரே ` என்பது பிழைபட்ட பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

குருதி சோர ஆனையின் தோல்
கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன
மாலய னும்அறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
சோதியெம் மாதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , யானையின் தோலை உதிரம் ஒழுகப் போர்த்த , குழல்போலும் சடையை உடையவனும் , இருமருத மரங்களை முரித்து , அவற்றின் இடையே தவழ்ந்த மாயோனும் , பிரமனும் காணாத , வேதத்தை உணர்ந்தோர்க்கும் சொல்ல ஒண்ணாத ஒளி வடிவினனும் , எங்கள் முதல்வனும் ஆகிய சிவபிரான் தன் இடமாக விரும்புகின்ற திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; அதுவே செயற்பாலது ; வாரீர் .

குறிப்புரை :

குழல் , மகளிர் கூந்தலை முடிக்கும் வகைகளுள் ஒன்று . ` மாயோன் கண்ணனாய்ப் பிறந்து ஆயர் பாடியில் வளருங்கால் , தன் தாய் தன்னைப் பிணித்திருந்த உரலுடனே ` தவழ்ந்து , துருவாச முனிவரது சாபத்தால் , ` நளன் கூபரன் ` என்னும் இருவர்தம் பிறப்பு வேறு பட்டு ஆங்கு வந்து தோன்றி வளர்ந்திருந்த இருமருத மரங்களின் இடையே சென்று அவற்றை முரிக்க , அவர் அச்சாபம் நீங்கினர் ` என்பது புராணம் , ` அறியா , ஒண்ணா ` என்னும் பெயரெச்ச மறைகள் இரண்டும் , ` சோதி ` என்றதனோடு தனித் தனி முடிந்தன .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

முத்து நீற்றுப் பவள மேனிச்
செஞ்சடை யானுறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்
பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்
பாதம் பணிவாரே.

பொழிப்புரை :

முத்துப்போலும் வெள்ளிய நீற்றையும் , பவளம் போலும் செய்ய திருமேனியையும் , சிவந்த சடையையும் உடைய இறைவன் வாழும் , அடியவர் மனம் பிணிப்புண்ணுதலையுடைய திருஎதிர்கொள்பாடியில் உள்ள பெருமானை வணங்கவே விரும்பின , சிவனடியானும் , சிவனடியார்க்கு அடியானும் , ` சடையன் ` என் பானுக்கு மகனும் ஆகிய நம்பியாரூரனது இப்பாடல்களை நன்கு பாடவல்லவர் , அப்பெருமானது திருவடியை அடைந்து வணங்கி யிருப்பர் .

குறிப்புரை :

எதிர்கொள்பாடியின் சிறப்புணர்த்துகின்றாராதலின் , ` செஞ்சடையான் ` என வேறொருவன்போல , அருளினார் . ஆதலின் , ` எதிர்கொள்பாடியில் உறையும் செஞ்சடையானாகிய பரமன் ` என்பதே கருத்தென்க . ` பாதம் ` என்புழி , ` அவன் ` என்பது எஞ்சி நின்றது . ஏகாரம் , பிரித்துக் கூட்டப்பட்டது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

தேவர்கள் , செம்பொன்னையும் , மணிகளையும் திறையாகக் கொணர்ந்து திரண்டு வந்து , நினது ஒலிக்கும் கழலை யணிந்த திருவடிகளை , மலர் தூவி வணங்குகின்ற , திருவாரூரில் உள்ள தந்தையே , பறையைக் கிழித்தாற்போன்ற உடம்பைப் பற்றிநின்று பார்த்தேனாகிய எனக்கு , அவ்விடத்துச் சிறுபொருள்களோடு பொருந்திவந்த இன்பத்தையும் , அவ்வின்பத்தோடு பொருந்தி நிகழ்ந்த இல்வாழ்க்கையையும் அஞ்சு தலுடையனாயினேன் .

குறிப்புரை :

` அவ்வச்சத்தை நீக்கியருள் ` என்பது குறிப்பெச்சம் . ` வாழ்வு ` என்றதன்பின் தொகுக்கப்பட்ட செவ்வெண்ணின் தொகைப் பொருளதாகிய இவற்றை என்பது விரித்து , அதனை , ` அஞ்சினேன் ` என்பதனோடு முடிக்க . சிறுமையாவது , நிலையின்மை . அதனையுடைய பொருள்களால் விளையும் இன்பத்திலும் , முன்னும் பின்னும் உளதாந் துன்பமே பெரிதாதலாலும் , அவ்வின்பத்தின் பொருட்டுக் கொள்ளப்படும் இல்வாழ்க்கை அல்லல் பெரிதுடைத்தாதலாலும் , அவை அஞ்சப் படுவனவாயின . தோலாற் போர்க்கப் படுதலின் , உடம்பு பறையோடு ஒப்பதாயினும் , பறை பொள்ளலுடையது அன்மையின் , பொள்ளல் பலவுடைய உடம்பை , கிழிந்த பறை யோடு உவமித்தருளினார் . ` நோக்கியேன் ` என்னும் பெயர் ` யான் ` என்னும் பொதுப் பெயரின் பொதுமை நீக்குதலின் ` யான் நோக்கி னேற்கு ` என்பதற்கு , நோக்கினேனாகிய எனக்கு என்று உரைத்தல் பொருந்துவதாயிற்று . இன்னோரன்னவை இவ்வாறு பொருள் படுதலை , கலித் தொகை , திருவாசகங்களிற் காண்க . ` நோக்கினேற்கு ` என்பது , ` இசைந்த ` என்பவற்றோடு முடியும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

ஊன்மிசை உதிரக் குப்பை
ஒருபொரு ளிலாத மாயம்
மான்மறித் தனைய நோக்கின்
மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

வெள்ளிய நல்ல ஆனேற்றையுடையவனே , திருவாரூரில் உள்ள தந்தையே , இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு , பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ; ஆதலின் , அத் தன்மையை அறியாத , மான் மருண்டாற் போலும் பார்வையினை யுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை , இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன் ; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` அதனை நீக்கியருள் ` என்பது குறிப்பெச்சம் . ` உதிரத்துக்கு என்னும் அத்துச் சாரியை தொக்கு , ` நிலக்கு ` ( குறள் -570.) என்பது போல ` உதிரக்கு ` என நின்றது . இவ்வாறன்றிக் ` குப்பை ` என இயல்பாகவே கொண்டு உரைத்தல் பொருந்தாமை அறிக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அறுபதும் பத்தும் எட்டும்
ஆறினோ டஞ்சும் நான்கும்
துறுபறித் தனைய நோக்கிச்
சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
நாள்தொறும் வணங்கு வாருக்
கறிவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

மணம் கமழும் பூவும் , நீருங் கொண்டு உன்னை நாள் தோறும் வழிபடுவார்க்கு மெய்யுணர்வைத் தருகின்ற , திருவாரூரில் உள்ள தந்தையே , பூதங்கள் ஐந்தும் , ஞானேந்திரியம் கன்மேந் திரியம் என்னும் இந்திரியங்கள் பத்தும் , தன்மாத்திரை ஐந்து அந்தக்கரணம் மூன்று என்னும் நுண்ணுடம்புறுப்புக்கள் எட்டும் , தாத்துவிகங்கள் அறுபதும் , ` காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் ` என்னும் வித்தியா தத்துவங்களாகிய ஆறும் , ` சுத்தவித்தை , ஈசுரம் , சாதாக்கியம் , சத்தி ` என்னும் ஆகிய எல்லாம் புதராக , வேறாகக் கண்டு சொல்லின் . அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவருங் கூறார் ; ஆதலின் , தம்மை , யானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதலுடைய னாயினேன் .

குறிப்புரை :

` அவற்றை நீக்கியருள் ` என்பது குறிப்பெச்சம் , தத்துவ தாத்துவிகங்களை அவற்றின் முறைபற்றிவையாது , செய்யுளுக்கேற்ப வைத்தருளினார் . அந்தக் கரணங்களுள் சித்தம் பிரகிருதியேயாகலானும் , புருடன் தனித் தத்துவம் அன்றாதலானும் , அவற்றை வேறு வைத்தெண்ணாமையும் , சுத்த தத்துவங்களை ஐந்தென்னாது , ` நான்கு , மூன்று ` என்றலும் மெய்ந்நூல் வழக்காதலும் அறிக . இவ்வாறன்றி , ` அஞ்சு நான்கும் ` என்று பாடமோதி அதனை , இருபதெனக் கொண்டு , எட்டும் என்பதனைப் பெயரெச்சமாக்கி , தொண்ணூற்றாறு என்னுந் தொகை வர உரைப்பாரும் உளர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சொல்லிடில் எல்லை யில்லை
சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு
நலமிக அறிந்தே னல்லேன்
மல்லிகை மாட நீடு
மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண் டியங்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம் , வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்துகிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , யான் , ஓட்டைக்குடில்களுள் துச்சி லிருந்துவாழ்ந்த , பேதைக்குரித்தாய , துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப்புகின் , அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை . அங்ஙனமாகவும் , நல்லதொரு புக்கிலுட் குடிபுகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன் ; அதனால் , அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` அவ்வச்சத்தை நீக்கி , அந்நெறியினை அறிவித்தருள் ` என்பது குறிப்பெச்சம் , ` கூரை ` என்றது ஆகுபெயராய் இல்லத்தை உணர்த்திற்று . ஓட்டைக் குடில் என்பது உடம்பினையும் . நல்லதோர் இல் என்பது வீட்டு நிலையையுமாம் . புகுந்து என்றதனால் , அது புக்கிலாயிற்று . ` நல்லதொரு புக்கிலை அறிந்திலேன் ` என்றதனால் , ஓட்டையாகிய இல்லத்துள் ஒதுங்கியிருத்தல் பெறப்பட்டது . ` புக்கிலமைந்தின்று கொல்லோ உடம்பினுள் , துச்சிலிருந்த உயிர்க்கு ` என்பதனை ( குறள் -340.) விரித்தருளியபடி ` மருங்கொடு நெருங்கி ` என்றதனை , ` மலையொடு பொருத ` என்பது போலக் கொள்க . ` அல்லி வண்டியங்கும் ஆரூரப்பனே ` என்றது , ` நின் ஊருள் வண்டுகள் தாமும் நன்கு உண்டு களித்து வாழாநிற்க , அடியனேன் அச்சுற்று வருந்தா நின்றேன் ` என்னும் இறைச்சிப்பொருளைத் தோற்றுவித்தது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நரம்பினோ டெலும்பு கட்டி
நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து
குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை
மாதவித் தொகுதி யென்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

புன்னையும் மாதவியுமாகிய அவற்றையுடைய சோலைக்கண் . யாவரும் விரும்புமாறு மணங்கமழ்கின்ற பேரரும்புகள் எந்நாளும் வாய்மலர்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , அடியேன் , எலும்புகளை நரம்பாற் கட்டின , விருப்பத்தோடு சிறிதும் இசை வில்லாத ( அருவருப்பைத் தருவதான ) குடிசைக்கண் குடியிருத்தலால் , நன்மாளிகையில் வாழும் உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ இயலாதவனாயுள்ளேன் ; அதனால் , அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` அவ்வச்சத்தை நீக்கி உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ அருள்செய் ` என்பது குறிப்பெச்சம் . ` கட்டிய ` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று . ` நரம்பினோடு கட்டிய ` என்றது ` ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் ` என்றாற் போல நின்றது . குரம்பை என்றது உடம்பினை . ` குலம் ` உயர்ந்தாரது தொகுதி . குலத்தினாலென்னும் ஆனுருபு ஒடு உருபின் பொருளில் வந்தது . உயர்ந்தார் என்பது வெளிப்படைப் பொருளில் செல்வரையும் , குறிப்புப் பொருளில் வீடு பெற்றாரையும் குறித்தன . இழிந்த சேரிக்கண் வாழ்வார் , உயர்ந்த மாடத் தெருவிலுள்ளாரோடு வாழ்தல் இயலாதது போலும் நிலையை உடையேன் என்றபடி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மணமென மகிழ்வர் முன்னே
மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே
பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலைதோறும்
பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

வயல்களின் நடுவேயுள்ள சோலைகளிலெல்லாம் , பசிய இளமரக்காக்களை உடைய விளையாடுமிடங்களில் , மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , உலகில் தாய் , தந்தை , சுற்றத்தார் என்போர் முன்பு ( இளமையில் ) தம் மக்கட்குத் திருமணம் நிகழாநின்றது என மகிழ்வார்கள் . பின்பு அவர்தாமே அவர்ளை , ` பிணம் ` என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங் காட்டிற் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர் ; ஆதலின் , இத் தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன் : அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` மக்கட்கு ` என்புழித் தொகுக்கப்பட்ட நான்கனுருபை விரித்து ` மணம் ` என்பதனோடு இயைக்க . ` தாய் , தந்தை , சுற்றம் ` என்பது தாப்பிசையாய் முன்னும் பின்னும் இயைந்தது ` ` வளாகம் ` என்பது ` விளாகம் ` என மருவிற்று . ` அணைவு ` என்பது ஆகு பெயராய் , அணையப்படும் இடத்தைக் குறித்தது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

தாழ்வெனுந் தன்மை விட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது
அலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

மக்கள் யாழிசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட்கொண்டு , அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி , பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு , மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர் ; துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாது , துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர் . அவரது தன்மையைக் கண்டு அவரொடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

தொண்டர் என்பது இழித்தற் குறிப்பு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

உதிரநீர் இறைச்சிக் குப்பை
எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமா லயனுந் தேடிக் கழலிணை
காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

கருமை நிறத்தையுடைய திருமாலும் , பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின்மேல் காணப்படுவதாகிய , விரையக்கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன் விரும்புகின்றிலேன் . அதனது தீமைகள் பலவும் அறிந்து அதற்கு அஞ்சுத லுடையனாயினேன் .

குறிப்புரை :

` குகைம் மேல் ` என்னும் மகரமெய் விரித்தல் . ` கூரை ` என்புழி , உள்ளென்னும் பொருள்படுவதாகிய கண்ணுருபு விரிக்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பொய்த்தன்மைத் தாய மாயப்
போர்வையை மெய்யென் றெண்ணும்
வித்தகத் தாய வாழ்வு
வேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
முடிகளால் வணங்கு வாருக்
கத்தன்மைத் தாகும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள் தோறும் தொழுது , தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மைய தாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும்பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினை யுடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்பும் தன்மையில்லேன் ; அதற்கு , அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` முத்தினை என்பதில் ஐகாரம் முன்னிலையுணர்த்திற்று . அஃது உயர்திணைமேல் நின்றமையின் இரண்டாவதன் தொகைக்கண் தகரம் மிக்கது . இவ்வாறன்றி ஐகாரத்தை இரண்டனுருபு என்றே கொண்டு ` முத்து ` என்றது முன்னிலைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதியாகக் கூறுதலும் ஆம் . ` அத்தன்மைத்து ` என்றது , அத்தன்மைத்தாய பொருள் எனப் பொருள் தந்தது . ` மாயப் போர்வை ` என்றது வாளா பெயராய் , உடம்பு என்னும் அளவாய் நின்றது . உடம்பு நிலையாததாயினும் , அதனை நிலைத்ததாகக் கருதினாலல்லது உலக வாழ்க்கையை நடத்தலாகாமையின் , ` மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும் வித்தகத்தாய வாழ்க்கை ` என்று அருளினார் . சதுரப்பாடில்லாத வாழ்க்கையை சதுரப்பாடுடையதாக அருளியது இகழ்ச்சிக் குறிப்பு ; ` நெருநலுள னொருவன் இன்றில்லை என்னும் - பெருமை யுடைத்திவ் வுலகு ( குறள் -336.) என்றதுபோல . ` வித்தகத்தது ` என்பது , குறைந்து நின்றது . வேண்டுதல் , இன்றியமையாத தாக அவாவுதல் , விரும்புதல் - பற்றுச் செய்தல் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

தஞ்சொலார் அருள்ப யக்குந்
தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர்
அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல்
சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள்
நாதனை நணுகு வாரே.

பொழிப்புரை :

பற்றுக் கோடாதற்குப் பொருந்தாத மகளிர் பொருட்டு மனம் உடைகின்ற தமியேனாகிய நம்பியாரூரன் , அவரது பெருத்த தனங்களின் இன்பத்திலே அச்சந்தோன்றப் பெற்றவனாய் , அழகிய சொற்களையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருவாரூரிலுள்ள தந்தையைச் செவ்விய சொற்களால் வேண்டிப் பாடிய இப் பாடல்களை எண்ணிப் பாடவல்லவர் , நஞ்சை அணிகலமாகத் தாங்கிய கண்டத்தையுடைய எங்கள் பெருமானை அடைவார்கள் .

குறிப்புரை :

தஞ்சு - ஒல்லார் எனப் பிரிக்க . தஞ்சம் ` தஞ்சு ` எனக் கடை குறைந்தது . ஒல்லாமை பொருந்தாமை . ` தடமுலை ` அடையடுத்த ஆகுபெயராய் நின்று அதன் இன்பத்தைக் குறித்தது . நயத்தல் - விரும்புதல் . அது , தன் காரியந் தோன்ற நின்றது . சிந்தித்தல் - அவற்றின் பொருளை என்க . ` சிந்தையா லேத்தவல்லார் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மலைக்கும்மக ளஞ்ச மதகரியை
உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்
சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர்
சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக்
கலவம்மயிற் பீலியுங் காரகிலும்
அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

மான்களின் கொம்புகளையும் , யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து , தோகையையுடைய மயிலினது இறகுகளையும் , கரிய அகிற்கட்டைகளையும் அலையப்பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே ! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர் ; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர் ; முழங்குகின்ற , கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர் ; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர் .

குறிப்புரை :

` இது நும் பெருமை ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க . வருகின்ற திருப்பாடல்களிலும் இவ்வாறே முடிக்க . ` மலைக்கும் மகள் `, ` கலவம் மயில் ` என்னும் மகர ஒற்றுக்கள் விரித்தல் . இத் திருப்பதிகங்களுள் இவ்வாறு வரும் விரித்தல் விகாரங்களை அறிந்து கொள்க . ஏறு , முதனிலைத் தொழிற்பெயர் . ` ஏற்றொழியீர் ` என்பதும் பாடம் . சில்பலி , ஒரு பொருளன்றி , வேறு வேறு பொருள்களையும் ஏற்றல் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர்
செறுத்தீர்அழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பலநாள்
சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறைவா
நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

பொழிப்புரை :

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , அரிதாகிய தாமரைமலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர் ; நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர் ; திருமகட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒருநாள் , அவன் சாத்துகின்ற ஆயிரந் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய , அது நிறைவாகும்படி , தனது கண்ணாகிய மலரைப்பறித்துச் சாத்த மகிழ்ந்து , போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப் படையை அருளினீர் .

குறிப்புரை :

இரணியாட்சன் மகனாகிய அந்தகாசுரன் என்பவன் , தான் தவம் செய்து பெற்ற வரத்தினையுடையவனாகித் திருமால் முதலிய தேவர்கள் அனைவரையும் துன்புறுத்த , அவர்கள் அவனுக்கு ஆற்றாது பெண்டிர் வடிவங்கொண்டு ஓடித் திருக்கயிலையில் இறைவியின் கணங்களோடு இருந்தனர் . அங்கும் அந்த அசுரன் அவர்களைத் துன்புறுத்தச் சென்றபொழுது தேவர்கள் வேண்டிக் கொள்ள சிவபெருமானார் வைரவரை அனுப்பி , அவரது சூலத்தால் அவனை அழிக்கச் செய்தனர் என்பது புராண வரலாறு . ` அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார் ` ( தி .6 ப .96 பா .5) என்று நாவரசரும் அருளிச்செய்தார் . திருமால் இவ்வாறு வழிபட்டுச் சக்கரம் பெற்றமையை , சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ ( தி .8 திருவா - திருச்சா - 18) நீற்றினை நிறையப்பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறையவிட்ட ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில் வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே ( தி .4. ப .64 பா .8) என்னும் திருவாக்குகளால் அறிக . இச்செய்யுள் அடிகளின் முதற்சீர் கனிச்சீராகாது , விளச்சீராய் வந்தது சீர்மயக்கம் என்க . நான்கு ஆறாம் திருப்பாடல்கட்கும் இஃது ஒக்கும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும் , ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து , கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே , நீர் , ` எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம் , நீர் , நெருப்பு , காற்று , வானம் , சந்திரன் , சூரியன் , ஆன்மா ` ஆகிய எல்லாப் பொருள்களுமானீர் . ஆதலின் , ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலை ஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று பெண்டிர் சில பொருள்களை இட , அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று .

குறிப்புரை :

` தக்கதன்றால் ` என , இறைவரது அறியாமைக்கு இரங்கி அவர்க்கு அறிவுதருவார் போன்று அருளியது . தமக்கென ஒன்றையும் மேற்கொள்ளாத அவரது அருள் விளையாட்டின் பெருமையை வியந்து , பழிப்பது போலப் புகழ்ந்தருளிச் செய்தவாறு . ` ஓடு `, ` உம் ` எண்ணிடைச்சொற்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கொடியுடை மும்மதில் வெந்தழியக்
குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித் தீர்இமைக்கும்
மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப்புச்
சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி , மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினாலே ஓசையுண்டாக எய்து , இமைக்கும் அளவில் எரித்தீர் ; ஆதலின் , உமக்கு நிகராவார் யாவர் ? ஒருவரும் இல்லை ; அங்ஙனமாக , மணம் பொருந்திய மலர்களையே அம்பாகவும் , கரும்பையே வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து சாம் பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ ?

குறிப்புரை :

` உமக்கு எத்துணையும் பற்றாத மிக மெலியோனாகிய அவனை அழித்தது , உமக்கு வெற்றியாவதில்லையன்றோ ?` என்றபடி , இதுவும் மேலைத் திருப்பாடற் கருத்துடையதேயாம் . ` வில்லா ` என்புழி ` கட்டிய ` என்பது சொல்லெச்சம் . எம்பெருமான் என்பது பன்மை ஒருமை மயக்கம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்
மற்றும்வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே
உலகங்களெல் லாமுடையீர் உரையீர்
இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய
இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

கயலும் , சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள் , ஒன்றோடு ஒன்று பொருந்தி மேலெழுந்து பாயவும் , கூட்டமாகிய கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக்கண்டு , முன்பு வாளாவிருந்த அன்னப்பறவைகள் அவைகளைத் துன்புறுத்தித் தம் இயல்பினை மேற்கொள்கின்ற ( உண்கின்ற ) அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே , உலகம் எல்லாவற்றையும் உடையவரே , உம்மை அடிபணிந்து , கை கூப்பித்தொழுகின்ற அடியவராவார் , திருமாலும் , பிரமனும் , மற்றைய தேவரும் , அசுரரும் , பெரிய முனிவருமாவர் ; அங்ஙனமாக , நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ ? சொல்லியருளீர் .

குறிப்புரை :

` தொழுவாரவர் ` என்றதில் உள்ள ` அவர் ` பகுதிப் பொருள் விகுதி . ` கோடல் ` என்பது , ` கொண்டல் ` என மருவிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

பொழிப்புரை :

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர் , பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து , நீர்க் குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு , அப்பிழைக்காக நடுக்கமுற , நீர் அவரது கனவில் தோன்றி , ` அன்பனே , நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க `, ` உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும் , நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும் ` என்று அருளிச் செய்து , நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும் படி செய்து , அவரை ஆட்கொண்டருளினீர் .

குறிப்புரை :

` உமது பேரருள் சொல்லும் தரத்ததோ ` என்பது குறிப்பெச்சம் . இத்திருப்பாடலில் குறிக்கப்பெற்ற புகழ்த்துணை நாயனாரது வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்துட் காண்க . அகத்தடிமை , அணுக்கத்தொண்டு ; அஃதாவது இறைவரது அண்மையிலேயிருந்து அவரது திருமேனியைத் தீண்டிச் செய்தற்குரிய பணிவிடைகளைச் செய்தல் . அவற்றைத் திருக்கோயிலிற் செய்பவர் , ` ஆதிசைவ அந்தணர் ` எனப்படுவர் . தம் , தம் இடத்தில் இவ்வகத்தடிமை செய்தற்குரியார் சிறப்புரிமை பெற்ற சைவர் . ` அகத்தடிமை செய்யும் ` என்ற விதப்புத் தோன்றியது . ` நீ , உன்னை அடைந்தவரை ஒரு ஞான்றும் கைவிடுவாயல்லை ` என நினைந்து எழுந்த பேரன்பினால் என்க . நன்றி , நற்செயல் ; திருத்தொண்டு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப்
பகலோன்முத லாப்பல தேவரையும்
தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ்
செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி
விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி
அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட , முழுவதும் செம்மையாயுள்ள கண்டத்தையுடையவரே , கண் விழிப்பது போலத்தோன்றும் அழகிய வட்டங்களையுடைய தழையாகிய மயிற்றோகையோடு ஏலக்காய் மரங்களைத்தள்ளி , ஒளி வீசுகின்ற மாணிக்கம் , முத்து , பொன் என்பவற்றையும் வாரிக்கொண்டு , கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரை யிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரே , நீர் , உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி , சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர் நடுங்கும்படி அதட்டி , அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றைச் சிதைத்தது என்னையோ ?

குறிப்புரை :

` நஞ்சுண்டு காத்த நீரே , அவரை ஒறுத்தது , அவரது பிழை நோக்கியேயன்றோ ` என்றல் திருவுள்ளம் . இதனால் , அவரது பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் கண்ணோட்டமும் ( குறள் -580), யார் மாட்டும் கண்ணோடாது இறைபுரியும் செப்பமும் ( குறள் -541) ஆகிய இறைமைக் குணங்களை வியந்தருளியவாறு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பறைக்கண்ணெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்
குறட்பாரிடங் கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள்சடை தாழப் பெயர்ந்துநட்டம்
பெருங்காடரங் காகநின் றாடலென்னே
கறைக்கொள்மணி கண்டமுந் திண்டோள்களுங்
கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள்ளர வம்புனைந் தீர்பலவும்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

பொழிப்புரை :

நஞ்சைக்கொண்ட நீல கண்டத்தில் கண்டசரமாகவும் , திண்ணிய தோள்களில் வாகு வலயமாகவும் , முன் கைகளிற் கங்கணமாகவும் , தலையில் தலைச் சூட்டாகவும் , அரையில் கச்சாகவும் புள்ளிகளைக்கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே , சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் புனிதரே , நீர் , பறை போலும் பெரிய கண்களையுடைய பேய்க் கூட்டம் பாடு தலைச் செய்யவும் , குறுகிய வடிவத்தையுடைய பூதங்கள் பறைகளை முழக்கவும் , பிறையைக்கொண்ட சடை கீழே தாழ்ந்து அலைய , காலங் கடந்த காடே அரங்கமாக நின்று , அடிபெயர்த்து நடனமாடுதல் என் ?

குறிப்புரை :

` உயிர்களின் பொருட்டே யன்றோ ` என்பது திருவுள்ளம் . பாம்பணியை வகுத்தோதியருளியது அவரது நித்தத் தன்மையை இனிது விளக்குதற் பொருட்டு . ` பிறைக்கொள் , கறைக் கொள் ` என்னும் ககர மெய்கள் விரித்தல் . ` கரங்கள் ` என்புழியும் உம்மை விரிக்க . ` அரையும் ` என்று அருளிச் செய்யாதே ` கச்சுமாக ` என்று அருளிச் செய்தமையால் , இவ்வாறுரைத்தலே திருவுள்ளமாதலுணர்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர்
வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள்ளர வோடென் பணிகலனா
முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள்கரும் புங்கத லிக்கனியுங்
கமுகின்பழுக் காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

` கழை ` என்னும் தன்மையைக்கொண்ட கரும்புகளையும் , வாழைப்பழங்களையும் , கமுக மரத்தின் முற்றிய காய்களையும் வாரிக்கொண்டுவந்து கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற புனிதரே , நீர் , மேகம் போலும் பெரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர் ; அதன் மேலும் , வளர்கின்ற புல்லிய சடையின்மேல் , ` கங்கை ` என்பவளை விரும்பி வைத்தீர் . அங்ஙனமாக , செல்வ வாழ்க்கை வாழ நினையாது , புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும் , எலும்புமே அணிகலங்களாக , மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னோ ?

குறிப்புரை :

இஃது , அவரது பற்றின்மையை அருளிச்செய்தவாறு . கழை , கரும்பின் வகை . இளங்காய் ` கருக்காய் ` எனவும் , முற்றியகாய் ` பழுக்காய் ` எனவும் கூறப்படுமாறறிக . கூப்பிடுதல் , ஒலித்தல் . ` தன்பால் வருவித்தல் ` என்பது நயம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கடிக்கும்மர வால்மலை யாலமரர்
கடலைக்கடை யவ்வெழு காளகூடம்
ஒடிக்கும்முல கங்களை யென்றதனை
உமக்கேஅமு தாகவுண்டீர் உமிழீர்
இடிக்கும்மழை வீழ்த்திழுத் திட்டருவி
யிருபாலுமோ டிய்யிரைக் குந்திரைக்கை
அடிக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு , முன்பு அருவியாய் ஓடி , பின்பு , ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளை மோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே , நீர் , கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு , மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லாவுலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி , அதனையே உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர் ; பின்பு இதுகாறும் அதனை உமிழவும் இல்லை .

குறிப்புரை :

` இப்பேரருளாலும் , அமரத்தன்மையாலும் உம்மை ஒப்பார் பிறர் உளரோ !` என்பது குறிப்பெச்சம் . ` அமுது ` என்றது தேவர்கள் பகிர்ந்துகொண்டு உண்ட அமுதத்தைக் குறித்தது . நஞ்சினை , ` அமுது ` என்று அருளியது அமுதத்தைப் பகிர்ந்துகொண்ட தேவர்கள் , அதனுள் இறைவனுக்குச் சிறிதும் பங்கு வையாது நஞ்சினை மட்டும் முழுதுங்கொடுத்து நீங்கினர் என்னும் இகழ்ச்சி தோன்றுதற்கு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

காரூர்மழை பெய்து பொழிஅருவிக்
கழையோடகில் உந்திட் டிருகரையும்
போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந்
தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும்
சீரூர்தரு தேவர்க ணங்களொடும்
இணங்கிச்சிவ லோகம தெய்துவரே.

பொழிப்புரை :

மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய , அதனாலே வீழ்ந்த அருவியிடத்துள்ள மூங்கிலையும் , அகிற்கட்டையையும் தள்ளிக்கொண்டு , இருகரைகளின்மீதும் போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , சோலைகள் நிறைந்த திருப்புத்தூர்ப் புனிதரை , நம்பியாரூரனது அரிய தமிழ்ப்பாடல்கள் பத்தினாலும் , மொழிக்குற்றம் , இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும் , அத்துதியைக் கேட்பவர்களும் , சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துட் கூடி வாழ்ந்து , பின் சிவலோகத்தை அடைவார்கள் .

குறிப்புரை :

`பெய்து` என்றது `பெய்ய` என்பதன் திரிபு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையையுடைய எம்பெருமானும் , அழகு விளங்கும் , ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும் , தீயில் நின்று ஆடுபவனும் , மேலானவனும் , மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும் , மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி உறையும் இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங் காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

குலவான் - மேலானவன் . மறை - மறு ; புள்ளி . ` ஆன் நெய் , எண்ணெய் ` முதலாக நெய் பலவாகலின் ` தேன்நெய் ` என்றது இரு பெயரொட்டு . ` சிவபிரான் சடையில் கொன்றை முதலிய மலர்கள் பலவற்றை அணிதல் , அவற்றில் உள்ள தேனாகிய பயன் பற்றி ` என்று , தற்குறிப்பேற்றமாக அருளினார் . புரிதல் , விரும்புதல் . இறைவனது விருப்பம் , அவனது சடைமேல் ஏற்றப்பட்டது . இனி , ` தேனால் புரிக்கப் பட்டு உழல்கின்ற சடை ` என்றலுமாம் . ` உழல் சடை ` என இயையாது , ` உழல் எம்பெருமான் ` என்று இயைத்து , ` தேனால் ஆட்டப்படுதலை விரும்புகின்றவன் ` என்று உரைப்பினும் அமையும் . இவ்வாறன்றி , ` தேனாவது வண்டு ` என்றும் , ` நெய் ` என்றது ` தேனை ` என்றும் உரைப் பாரும் உளர் . ` எரித்து ` என்னும் எச்சம் , எண்ணுப் பொருளது . ` மானை ` என்னும் இரண்டனுருபு , ` கையன் ` என்னும் ஏழாவதன் பொருட்கண் வந்த வினைக் குறிப்பொடு முடிந்தது . ` மாறுபட ` என்றது . ` ஆறுபட ` எனப் பிரித்துரைத்தலும் ஆம் . ` அனேகதங் காவதமே , என வரையறுத்தருளியது , புகழ்ச்சி கருதியென்க . ` அனேகதங்காபதம் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கூறு நடைக்குழி கட்பகு வாயன
பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
வாணனின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை
யோர்பெரு மான்உமை யாள் கணவன்
ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

மேலைத்தில்லை அம்பலவாணன் , குறுநடையையும் , குழிந்த கண்களையும் , பிளந்த வாயினையுமுடையனவாகிய பேய்கள் உடன் விரும்பி யாடவும் நரிகள் நின்று ஊளையிடவும் , சிறப்புண்டாக நின்று ஆடுதலை விரும்புவதும் , உயர்ந்த இடபக்கொடியை யுடைய எம்பெருமானும் , தேவர் பெருமானும் , உமாதேவிக்குக் கணவனும் , சடையின்கண் கங்கையை யுடைய தந்தையும் ஆகிய அவ்விறைவனுக்கு உரித்தாயதுமாகிய இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` குறுநடை ` என்பது நீட்டலாயிற்று . வேறு - சிறப்பு . மேலைத்தில்லை கொங்கு நாட்டிலுள்ள ` பேரூர் ` என்னும் வைப்புத் தலம் . இதனைச் சுவாமிகள்கோயில் திருப்பதிகத்திலும் அருளிச் செய்தமை அறியற்பாலது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கொடிக ளிடைக்குயில் கூவு மிடம்மயி
லாலும் மிடம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
கண்டன் இடம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீரும் இடம்திரு
வாகும் இடம்திரு மார்பகலத்
தடிக ளிடம்மழல் வண்ணன் இடம்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

துன்பத்தைக் கொண்ட வினையாகிய பகை நீங்குவதும் , நன்மை வளர்வதும் , மழுப்படையை யுடைய , விளக்கத்தைக் கொண்ட நீரைச் சடையில் ஏற்ற , பிறைத் துண்டமாகிய கண்ணியை யணிந்த நெற்றியை யுடைய நீலகண்டனும் , அழகிய மார்பிடத்தனவாகிய பல அணிகலங்களையுடைய தலைவனும் , நெருப்புப் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவனுக்கு உரியதும் ஆகிய இடம் , கொடி போலும் மகளிர் பாடல்களுக்கு இடையே குயில்கள் கூவுவதும் , அவர் ஆடல்களுக்கு இடையே மயில்கள் ஆடுவதும் ஆகிய ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` கொடிகள் ` என்றது உருவகம் ; அஃது ஆகு பெயராய் அவரது தொழில் மேல் நின்றது . மகளிரது பாடல் ஆடல்களின் மிகுதி உணர்த்தற் பொருட்டு , அவரது பாடல் ஆடல்களுக்கிடையே , குயிலும் மயிலும் கூவுதலும் , ஆடுதலும் செய்வனவாக அருளினார் . ` கண்ணி ` எனினும் ` முடி ` எனினும் ஒக்கும் . ` மார்ப + கலம் ` எனப் பிரிக்க . ` கலம் ` என்றது நல்ல அணிகலங்களையும் , தலை மாலை முதலியவற்றையும் ஒருங்கு கருதியென்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
பாயவி யாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

தேனால் நுழைவிக்கப்பட்டனவாகிய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மாலையையும் , கங்கையையும் , பிறையையும் அணிந்த சடையினையுடைய , மேகங்கள் தவழும் மலையில் வளர்ந்த மங்கையும் சிறந்த தேவியுமாகிய உமையை ஒரு பாகத்தில் பொருந்தி யிருக்குமாறு மகிழ்ந்து வைத்து உயிர்கட்கு அருள் புரிகின்ற , சங்கக் குழையை அணிந்த காதினின்றும் வெள்ளொளிக் கற்றையாகிய அருவித்திரள் பாய , அவற்றாலும் அவியாத நெருப்புப் போலத் தோன்று தலையுடைய அங்கையின் மழுவானது இடையறாது ஒளி வீசுகின்ற தன்மையையுடைய இறைவனது இடம் , ஆரவாரத்தையுடைய கச்சி மாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக் கோயிலே .

குறிப்புரை :

` சங்கக் குழை ` என்பது , எதுகைநோக்கி , ` சங்கு குழை ` என இயல்பாய் நின்றது . ` செவிகொண்டு ` என்பது வேற்றுமை மயக்கம் . அருவி , உருவகம் . ` பாய ` என்னும் அகரந்தொகுத்தல் . ` பாய வியர்த்தழல் ` என்பதும் பாடம் . ` போல் உடை ` என்றதற்கு , ` போலு தலையுடைய ` என உரைக்க . ` கையன் ` என்பதிலுள்ள கை , தன்மை . ` தம் ` என்பது , ஒருமைப் பன்மை மயக்கம் . ` தன் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பைத்த படத்தலை ஆடர வம்பயில்
கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்மழல் வண்ணன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

ஆடும் பாம்பாகிய ஆதிசேடனது பையின் தன்மையைப் பெற்ற படத்தினையுடைய தலையின்கண் நீங்காதிருக்கின்ற இடமாகிய நிலவுலகத்தில் வாழப்புகுவோர் , தமதுள்ளத்தை ஒரு நெறிக்கண்ணே வைத்தபொழுது , அவர்க்கு உயர்ந்து விளங்குவதும் , திருவாளனாகிய சிவபிரானது திருவடிக் கண்ணே பிறழாது வைத்த மனத்தையுடையவராகிய அடியார் . தம் மனம் , விரும்பிக் கொள்ளுமாறு அதனுள் இருத்தப்பட்டதும் , மழுப்படையையுடைய தலைவனும் , நெருப்புப்போலும் நிறத்தையுடையவனும் ஆகிய அப் பெருமானுக்கு உரித்தாயதும் ஆகிய இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` அரவத் தலை ` என்பது , ` தலை அரவம் ` என மாறி நின்றது . பயிலப் புகுவார் , மக்களாய்ப் பிறந்தார் ` வைத்த விடம் ` இரண்டனுள் , முன்னது வினை எச்சம் ; அதனுள் , அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தண்ட முடைத்தரு மன்தமர் என்தம
ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

தண்டாயுதத்தை யுடைய இயமனது ஏவலாளர் , என் சுற்றத்தாராகிய சிவனடியாரை நலியக் கருதும் வலிய துன்பத்தைத் தீர்ப்பதும் , உடம்பை யுடைய இப்பிறவியின்கண் மனம் பொருந்தி நின்று நினைப்பவரது பிறவியை அறுப்பதும் , தனது கண்டம் உடைத்தாயுள்ள கரிய நஞ்சினை , உண்ணும் பொருளாக உண்ட தலைவனும் , ஏழு கடல்களின் உள்ளே உள்ள நிலமேயன்றி அண்டம் முழுவதையும் உடைய பெரியோனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாயதும் ஆகிய இடம் , ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

நமன் தமர் நலியாமையும் , பிறவி எய்தாமையுஞ் செய்தல் கூறவே , இறைவனை அடைவித்தல் சொல்ல வேண்டா வாயிற்று . ` கடந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு
தேத்தும் இடங்கதி ரோனொளியால்
விட்ட இடம்விடை யூர்தி இடங்குயிற்
பேடைதன் சேவலொ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு
மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

பாசப் பிணிப்பால் உண்டாகும் திரிபுணர்வை நீக்கியவர் , கைகுவித்துக் கும்பிட்டுத் துதிப்பதும் , இடபவாகனத்தை யுடையவனும் , அட்டமா நாகங்களையும் அணிந்தவனுமாகிய இறைவனுக்கு உரித்தாயதுமான இடம் , பகலவனது ஒளியினின்று நீங்கியதும் , குயிற் பேடை தனது சேவலோடு கூடி விளையாடுவதும் ஆகிய சோலைக் கண் ஒப்பற்ற மாதவியில் தேன் ததும்பி மலர்ந்த மலர் , மணத்தைப் பொருந்துகின்ற , ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண்ணுள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` ஒளியால் `, ` மாதவியோடு ` என்றன உருபு மயக்கம் . ` விட்டுமிடம் ` என்பது பாடமாயின் , டகரமெய் விரித்தல் என்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர்
தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

` முன்பே அடையப் பட்டவனைக் கடைபோகத் தொழுது உய்வோம் ` என்று நினையாது , புத்தனது பொய்யுரையால் மயங்கிய அசுரரது அரண்கள் மூன்றினையும் சாம்பலாக்கிய வில்லை யுடைவனும் , யாவரிடத்தும் கண்ணோடாது உயிரை வௌவும் கொடிய காலனை அழிந்தொழியும்படி காலால் கொன்றவனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாய இடம் , குளிர்ந்த வனமல்லிகை , முல்லை , குரா , மகிழ் , குருக்கத்தி , புன்னை இவற்றின் மலர்களது அகவிதழில் பெண் வண்டுகள் உறங்குகின்ற , ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகரில் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

` வீந்தவிதல் ` ஒருபொருட் பன்மொழி . மாதவி , குருக்கத்தியின் ஓர் வகையுமாம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
வேனகை யாள்வி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
நட்டநின் றாடிய சங்கரனெம்
மங்கைய வன்னன லேந்து பவன்கனல்
சேரொளி யன்னதொர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

ஐயப்பாடுடையவர் அடைதற்கரியவனும் , முல்லை யரும்புபோலும் நகையினை யுடையாளாகிய , என்றும் பிரிவில்லாத , மிக்க புகழை யுடைய உமாதேவி மகிழும்படி சுடு காட்டில் நின்று நடன மாடுகின்ற சங்கரனும் , எம் அங்கைப் பொருளாய் உள்ளவனும் , நெருப்பை ஏந்துபவனும் , நெருப்பிற் பொருந்தியுள்ள ஒளிபோலும் ஒளியை யுடைய பெரிய மழுப் படையை ஏந்திய அங்கையை யுடையவனும் ஆகிய இறைவன் நீங்காது உறைகின்ற இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க் கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .

குறிப்புரை :

ஏல் , உவம உருபு . ` நகையாள் தவிரா ` எனப்பிரிக்க . ` பெரியகலம் ` என்பது , ` பேரகலம் ` என மருவி வந்தது . ` எம் அங்கைய வன் ` என்றதனை . ` தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் ` என்ற திருவாசகத்தோடு பொருந்தவைத்து நோக்குக . ( தி .8 திருவா . திருவண் . 162.) ` சங்கரனே அங்கையினல்லன லேந்துமவன் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

பொழிப்புரை :

முத்தி பெறுதற் பொருட்டுப் பல்லூழி கால மாயினும் இவ்வுடம்போடே நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும் , அதனால் வினை நீங்கப்பெறும் இடமும் , பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று , அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைப்பிறவிக் கடலில் வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய , ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலைப் பாடப் புகும் பொழுது , சிவபிரானுக்கு அடியவனாகிய , புகழையுடைய நம்பியாரூரன் பாடிய இச் சொல்மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார் அடையும் இடம் , சிவபிரானது இடமே யாகும் .

குறிப்புரை :

காஞ்சி , ஊழிக்காலத்தும் அழிவிலது எனப்படுதலின் , ` பல ஊழிகள் நின்று நினைக்குமிடம் ` என்றருளினார் . ` பெரியோர திடங்கலிக் கச்சியனேகதங் காப்பனிடம் ` என்பதொரு பாடமும் உண்டு . சிவபிரானை , ` சிவலோகன் ` என்றது , ` அவன் இடமாவது அதுவே ` என , பின்னர் வருவதனை யுணர்த்தற் பொருட்டு . இங்ஙனம் உரையாக்கால் , இத் திருப்பதிகப் பயன் சிறப்புடைத்தாமாறில்லை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையொர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ!

பொழிப்புரை :

திருமால், பிரமன் ஆகிய காரணக் கடவுளரிலும் மேலான செல்வத்தை யுடையவரும், தமது திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாக உடையவரும், அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும் விருப்பம் உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை :

`அயனால்` என்னும் மூன்றாம் உருபை, `அயனில்` என ஐந்தாம் உருபாகத் திரிக்க. `மால், அயன்` என்பாரது செல்வமும், அவரிடத்து நிலைபெற்றிருப்பனவல்லவாகலின், சிவபிரானது வரம்பிலின்பம் ஒன்றே எல்லாவற்றிலும் மேலதாயிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

எண்ணி யிருந்து கிடந்தும் நடந்தும்
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ!

பொழிப்புரை :

இருப்பினும், கிடப்பினும், நடப்பினும், தம்மையே முதல்வராக ஓர்ந்து நினைவாரது வினைகளை நீக்குபவரும், அறவடிவினருமாகிய இறைவர், பண்ணாகிய இசைபோலப் பொருந்திய மொழியினையுடைய மகளிர் பலர் இனிய பாடல்களைப்பாட எழுந்தருளியிருக்கின்ற, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

குறிப்புரை :

ஓர்தலாவது “சிவன் எனும் ஓசையல்லது அறையோ” (தி.4 ப.8 பா.1) என்றாற்போலும் ஆசிரியத் திருமொழிகளைப் பொருந்துமாறுபற்றி ஆராய்தல். அவ்வாராய்ச்சி பேதைமையைத் தேய்க்குமாதலின். அதன்பின் சிவபிரான் ஒருவனே முதல்வன் என்னும் உணர்வு அசையாது நிற்பதாம். அண்ணல் என்றது பன்மை ஒருமை மயக்கம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

தெள்ளிய பேய்பல பூத மவற்றொடு
நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர்
புள்ளுவ ராகும் அவர்க்கவர் தாமும்
புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ!

பொழிப்புரை :

தெளிவையுடைய பல பேய்பூதங்களுடன், செறிந்த இருளில் நடனத்தைப் புரிகின்றவரும், வஞ்சகராகின்றவருக்குத் தாமும் வஞ்சகராவோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

குறிப்புரை :

தெளிவையுடைய பல பேய்பூதங்களுடன், செறிந்த இருளில் நடனத்தைப் புரிகின்றவரும், வஞ்சகராகின்றவருக்குத் தாமும் வஞ்சகராவோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, `திருப் பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நிலனுடை மான்மறி கையது தெய்வக்
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில்
அனலுடை யார்அழ கார்தரு சென்னிப்
புனலுடை யார்உறை பூவணம் ஈதோ!

பொழிப்புரை :

நிலத்தை வாழும் இடமாக உடைய மான் கன்று கையிடத்ததாக, தெய்வத் தீயாம் தன்மையையுடைய பெரிய மழுவை ஒரு கையிற் பிடித்து, அதனோடே மற்றொரு கையில் நெருப்பை யுடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

குறிப்புரை :

நிலத்தை வாழும் இடமாக உடைய மான் கன்று கையிடத்ததாக, தெய்வத் தீயாம் தன்மையையுடைய பெரிய மழுவை ஒரு கையிற் பிடித்து, அதனோடே மற்றொரு கையில் நெருப்பை யுடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்
கடைகடை தோறிடு மின்பலி என்பார்
துடியிடை நன்மட வாளொடு மார்பில்
பொடிஅணி வார்உறை பூவணம் ஈதோ!

பொழிப்புரை :

பெருமித நடையையுடைய நல்ல ஆனேற்றின் மீது ஏறுபவரும், மகளிரது வாயில் தோறும் சென்று, `பிச்சை இடுமின்` என்று இரப்பவரும், உடுக்கை போலும் இடையினையுடைய தேவியின் அழகிய மேனியின் பொலிவோடு, சாம்பலைப் பூசிக்கொள் வோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

குறிப்புரை :

பெருமித நடையையுடைய நல்ல ஆனேற்றின் மீது ஏறுபவரும், மகளிரது வாயில் தோறும் சென்று, `பிச்சை இடுமின்` என்று இரப்பவரும், உடுக்கை போலும் இடையினையுடைய தேவி யின் அழகிய மேனியின் பொலிவோடு, சாம்பலைப் பூசிக்கொள் வோ ரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மின்னனை யாள்திரு மேனி விளங்கஓர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ!

பொழிப்புரை :

மின்னல்போலும் மாதராள் திருமேனி தனது திருமேனியின் ஒரு பாகத்தில் விளங்க விரும்பிவைத்த `சங்கரன்` என்னும் பெயரையுடையவனும், தன்னை நினையாதவரது அரண்களை முன்பு தீக்கு இரையாக்கிய, பொன் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

குறிப்புரை :

மின்னல்போலும் மாதராள் திருமேனி தனது திரு மேனியின் ஒரு பாகத்தில் விளங்க விரும்பிவைத்த `சங்கரன்` என்னும் பெயரையுடையவனும், தன்னை நினையாதவரது அரண்களை முன்பு தீக்கு இரையாக்கிய, பொன் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ!

பொழிப்புரை :

தனது தலைமையை எல்லை கடந்து மதித்தவனாகிய இராவணனது தீய எண்ணங் காரணமாக, வெகுளி நகை செய்து, தனது இடமாகிய கயிலையை, அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றி, தன்னையே உருகி நினைவாரது ஒப்பற்ற நெஞ்சிலே குடிபுகுந்து, ஒருஞான்றும் நீங்காது உறையும் இறைவன் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

குறிப்புரை :

தனது தலைமையை எல்லை கடந்து மதித்தவனாகிய இராவணனது தீய எண்ணங் காரணமாக, வெகுளி நகை செய்து, தனது இடமாகிய கயிலையை, அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றி, தன்னையே உருகி நினைவாரது ஒப்பற்ற நெஞ்சிலே குடிபுகுந்து, ஒருஞான்றும் நீங்காது உறையும் இறைவன் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாவுறை வான்றனை
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.

பொழிப்புரை :

அழகினால் மிகப் பொலிகின்ற, `திருப்பூவணம்` என்னும் திருத்தலத்தில், விருப்பம் மிக இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவனை, நம்பியாரூரன் பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் இந்நிலவுலகில் பாடுபவர், தம் பாவத்தை அறுப்பவராவர்.

குறிப்புரை :

அழகினால் மிகப் பொலிகின்ற, `திருப்பூவணம்` என்னும் திருத்தலத்தில், விருப்பம் மிக இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவனை, நம்பியாரூரன் பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் இந்நிலவுலகில் பாடுபவர், தம் பாவத்தை அறுப்பவராவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

வீழக் காலனைக் கால்கொடு
பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தான்இடங்
கொண்டது கோவலூர்
தாழை யூர்தகட் டூர்தக்க
ளூர்தரு மபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு
கன்னாட்டு மருகலே.

பொழிப்புரை :

கூற்றுவனை , அவன் உயிரற்று விழுமாறு , காலால் உதைத்த கயிலாய நாதனும் , நடை நிரம்பாத எருதினை ஏறுதலை விரும்பியவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக்கொண்ட ஊர் , ` திருக்கோவலூர் , தாழையூர் , தகட்டூர் , தக்களூர் , தருமபுரம் , வாழைகள் காய்க்கின்ற , செல்வம் வளர்கின்ற மருகல் நாட்டில் உள்ள மருகல் ` என்பவை .

குறிப்புரை :

தாழையூர் , தகட்டூர் , தக்களூர் இவை வைப்புத் தலங்கள் . எல்லாத் தலங்களுடனும் , ` திரு ` என்பதனை இயைக்க . வைப்புத்தலங்கள் அல்லாதவை இன்ன நாட்டில் உள்ளன என்பதனை ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க . ` மருகல் ` என்னும் ஊரைத் தலைமையாகக் கொண்ட நாடு , மருகல் நாடு . பிறவும் இவ்வாறே உணர்க . இந்நாடுகள் சோழமண்டலம் முதலிய மண்டலங்களாகிய பெருநாடுகளின் உட்பகுதிகள் என்க . ` கொண்டது ` என்பதனைத் தனித் தனி கூட்டி உரைக்க . ` கொண்டதும் ` என உம்மையோடு கூடிய பாடமே காணப்படுகின்றது . ` தகடூர் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அண்டத் தண்டத்தின் அப்புறத்
தாடும் அமுதன்ஊர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை
தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்
பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக்
கைநாட்டுக் குறுக்கையே.

பொழிப்புரை :

இவ்வண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள் , ` தண்டந்தோட்டம் , தண்டங்குறை , தண்டலை , ஆலங்காடு , கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த கழிப்பாலை , கடற்கரை , கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல் , குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை ` என்பவை .

குறிப்புரை :

` அப்புறத்து ` என்றது முதற்கண் உள்ள , ` அண்டத்து ` என்பதனோடும் இயையும் . அப்புறத்து அண்டத்தை , ` பகிரண்டம் ` என்ப . தண்டந்தோட்டம் , தண்டங்குறை , கொண்டல் இவை வைப்புத் தலங்கள் . ` கடற்கரை ` என்றது , கோடிக்குழகர் , ஒற்றியூர் போல்வனவற்றை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மூல னூர்முத லாயமுக் கண்ணன்
முதல்வன்ஊர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய
நம்பன்ஊர்
கோல நீற்றன்குற் றாலங்
குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக்
கூற்றத்து வெண்ணியே.

பொழிப்புரை :

அழகிய திருநீற்றை அணிந்த , வெள்விடையை விரும்பியேறின , முக்கண் முதல்வனது தலங்கள் , ` மூலனூர் , முதல்வனூர் , நாலனூர் , குற்றாலம் , குரங்கணின்முட்டம் , வேலனூர் , வெற்றியூர் , வெண்ணிக் கூற்றத்திலுள்ள வெண்ணி ` என்பவை .

குறிப்புரை :

` ஊர் ` எனப்பட்டவை ஐந்தும் வைப்புத்தலங்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ்
சிராப்பள்ளி
பாங்கூ ரெங்கள் பிரானுறை
யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி
பயிலும்ஊர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை
யூர்நாட்டு நறையூரே.

பொழிப்புரை :

எமக்குத் துணையாய் வரும் தலைவனும் , எப்பொருட்கும் மேலானவனும் , எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவனும் ஆகிய இறைவன் நீங்காது வாழும் அழகு மிகுந்த ஊர்கள் , ` தேங்கூர் , சிற்றம்பலம் , சிராப்பள்ளி , அழகு மிக்க கடம்பந்துறை , நாங்கூர் நாட்டிலுள்ள நாங்கூர் , நறையூர் நாட்டிலுள்ள நறையூர் ` என்பவை .

குறிப்புரை :

` எங்கள் பாங்கு ஊர் பிரான் உறையும் , பரமன் பரஞ்சோதி பயிலும் பூங்கூரும் ஊர் ` என எடுத்துக்கொண்டு உரைக்க . ` பூக்கூர் ` என்பது மெலித்தலாயிற்று . தேங்கூரும் , நாங்கூரும் வைப்புத் தலங்கள் . ` தெங்கூர் ` என்பது நீண்டு நின்றதாகக் கருதுவாரும் உளர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

குழலை வென்ற மொழிமட
வாளைஓர் கூறனாம்
மழலை யேற்று மணாளன்
இடம்தட மால்வரைக்
கிழவன் கீழை வழிபழை
யாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலைவெண்
ணிந்நாட்டு மிழலையே.

பொழிப்புரை :

குழலிசையை வென்ற மொழியினையுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனாகிய , இளமையான இடபத்தையுடைய அழகனும் , பெரிய கயிலாய மலைக்கு உரியவனும் ஆகிய இறைவனது தலங்கள் , ` கீழைவழி , பழையாறு , கிழையம் , மிழலை நாட்டிலுள்ள மிழலை , வெண்ணி நாட்டிலுள்ள மிழலை ` என்பவை .

குறிப்புரை :

மிழலை நாட்டு மிழலை வீழிமிழலை . வெண்ணிநாட்டு மிழலை வைப்புத் தலமாதல் வேண்டும் . ` கீழைவழி ` முதலிய மூன்றும் வைப்புத் தலங்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தென்னூர் கைம்மைத் திருச்சுழி
யற்றிருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர
மற்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள்பி ரான்உறை
யுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி
சைநாட்டுப் புரிசையே.

பொழிப்புரை :

சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலங்களிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு இடமாய் , பரவிய புகழையுடையன எவ்வூர்கள் எனின் , அவை , எங்கள் பெருமான் எழுந்தருளியுள்ள , ` தென்னூர் , ஒழுக்கம் நிறைந்த சுழியல் , கானப்பேர் , தேவனூர் , பொன்னூர் நாட்டிலுள்ள பொன்னூர் , புரிசை நாட்டிலுள்ள புரிசை` என்பவை .

குறிப்புரை :

தென்னூர் , தேவனூர் , பொன்னூர் , புரிசை இவை வைப்புத்தலங்கள் . ` எனின் , அவை ` என்பன சொல்லெச்சங்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஈழ நாட்டுமா தோட்டந்தென்
னாட்டிரா மேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்திநெய்த்
தானந் திருமலை
ஆழி யூரன நாட்டுக்கெல்
லாம்அணி யாகிய
கீழை யில்லர னார்க்கிடங்
கிள்ளி குடியதே.

பொழிப்புரை :

சிவபெருமானாருக்கு உரிய தலங்கள் , ஈழநாட்டில் உள்ள மாதோட்டம் , தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம் , சோழநாட்டிலுள்ள துருத்தி , நெய்த்தானம் , திருமலை , கடல் சூழ்ந்த நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில் , கிள்ளிகுடி என்பவை .

குறிப்புரை :

மாதோட்டமாவது , அந்நகரின்கண்ணுள்ள , கேதீச்சரம் . திருமலை , கீழையில் , கிள்ளிகுடி இவை வைப்புத்தலங்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

நாளும் நன்னிலந் தென்பனை
யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
காவு நெடுங்களம்
காள கண்டன் உறையுங்
கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டுவே ளூர்விளத்
தூர்நாட்டு விளத்தூரே.

பொழிப்புரை :

` நன்னிலம் , பனையூர் , கஞ்சனூர் , நெல்லிக்கா , நெடுங்களம் , கடைமுடி , கண்டியூர் , வேளா நாட்டில் உள்ள வேளூர் , விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர் ` என்பவைகளில் , மிக நீண்ட சடையையுடையவனும் , நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனுமாகிய இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன் .

குறிப்புரை :

` நெல்லிக்கா ` என்பது , ஈற்றில் உகரம் பெற்றது . வேளூரும் , விளத்தூரும் வைப்புத் தலங்கள் . ` வேளார் நாட்டு ` எனவும் பாடம் ஓதுவர் . ` தென்பனையூர் , வடகஞ்சனூர் ` என்றது , அவை தம்முள் நோக்கி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

தழலு மேனியன் தையலொர் பாகம்
அமர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற
சோதிசோற் றுத்துறை
கழலுங் கோவை யுடையவன்
காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரந்
தஞ்சைதஞ் சாக்கையே.

பொழிப்புரை :

தழல் போல ஒளிவிடும் திருமேனியை உடையவனும் , மங்கையை ஒரு பங்கில் விரும்பிவைத்துள்ளவனும் , தன்னைத் தொழுதவுடன் தொழுதவரது பழவினையை அறுக்கின்ற ஒளியாய் உள்ளவனும் , கழல் அணிந்த மணிவடத்தை உடையவனும் , ஆகிய இறைவன் விரும்புகின்ற தலங்கள் , ` சோற்றுத்துறை , பழனம் , பாம்பணி , பாம்புரம் , தஞ்சை , தஞ்சாக்கை ` என்பவை .

குறிப்புரை :

பாம்பணி , தஞ்சை , தஞ்சாக்கை இவை வைப்புத் தலங்கள் . ` பாம்புணி ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மைகொள் கண்டன்எண் டோளன்முக்
கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாளர வாட்டித்
திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துக
ளுந்திருப் புன்கூர்நன்
றையன் மேய பொழில்அணி
ஆவடு துறையதே.

பொழிப்புரை :

கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடையவனும் , படத்தைக்கொண்ட கொடிய பாம்பை ஆட்டித் திரியும் மேலவனுமாகிய இறைவனுடைய தலங்கள் , ` வலஞ்சுழி , வயல்களில் வாளை மீன்கள் மேலெழுந்து பாய்ந்து பிறழ்கின்ற திருப்புன்கூர் , அவன் மிக விரும்பிய , சோலையை உடைய அழகிய ஆவடுதுறை ` என்பவை .

குறிப்புரை :

` பொழிலை அணிந்த ` என்றும் , ` பொழில் அழகைச் செய்கின்ற ` என்றும் உரைப்பினுமாம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

பேணி நாடத னிற்றிரி
யும்பெரு மான்றனை
ஆணை யாஅடி யார்கள்
தொழப்படும் ஆதியை
நாணிஊரன் வனப்பகை யப்பன்வன்
றொண்டன்சொல்
பாணி யால்இவை ஏத்துவார்
சேர்பர லோகமே.

பொழிப்புரை :

நாடுகளில் எல்லாம் விரும்பித் திரியும் பெருமானும் , அடியார்கள் தமக்குத் தலைவனாக அறிந்து தொழப்படுகின்ற முதல்வனும் ஆகிய இறைவனை , நாணுடையவளாகிய ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையும் , இறைவன்முன் வன்மை பேசிப் பின் அவனுக்குத் தொண்டன் ஆகியவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைத் தாளத்தொடு பாடித் துதிப்பவர் அடையும் இடம் சிவலோகமேயாம் .

குறிப்புரை :

` நாடது ` என ஒருமையாற் கூறியது , தொகை நிலையால் என்க . ` ஆணை ` என்றது , அஃது உடையானைக் குறித்தது . ` சேர் ` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய் , சேரப்படு மிடத்தைக் குறித்தது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மலையாரரு வித்திரள்
மாமணி யுந்திக்
குலையாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர்
ஆடுந் துறையூர்த்
தலைவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

மலையிற் பொருந்திய அருவிக் கூட்டம் , பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண் , நல்லஆடையை அணிந்த அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` வேறொன்றையும் வேண்டேன் ` என்பது , பிரிநிலை எச்சம் , குலை - கரை , துறையூர் என்றதன் காரணம் விரிப்பார் , பல விடத்து இவ்வாறு ஓதினார் . ` எற்றி ` என்றது , ` எற்றுதலையுடையது ` என்னும் பொருளது . அன்றி , எற்றிய என்பதன் அகரந்தொகுத்தலாயிற்று எனலுமாம் . இது , மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் ஒக்கும் . இள மகளிர்தாமும் நீராட்டு நெறியிற் பிறழாமையுணர்த்துவார் . ` கலை யாரல்குற் கன்னியர் ` என்று அருளிச்செய்தார் . அதனால் , இது , பின்னர்க் கூறப்படும் மகளிர்க்கும் பொருந்துவதாயிற்று . ` உன்னை ` என்றது , வேற்றுமை மயக்கம் . ` கொள் ` என்பது , தற்பொருட்டுப் பொருண்மை விகுதி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மத்தம்மத யானையின்
வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப்
பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

மயக்கங்கொண்ட மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக்கொண்டுவந்து அவற்றில் உள்ள முத்துக்களைக் கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ள , அடியவர் பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

மத்தம் , உன்மத்தம் . இது மதத்தால் ஆயது . மதம் , மதநீர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கந்தங்கமழ் காரகில்
சந்தன முந்திச்
செந்தண்புனல் வந்திழி
பெண்ணை வடபால்
மந்தீபல மாநடம்
ஆடுந் துறையூர்
எந்தாய் உனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

நறுமணம் கமழ்கின்ற கரிய அகில்மரங்களையும் , சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு , சிவந்த குளிர்ந்த நீர் இடையறாது வந்து பாய்கின்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண்ணுள்ள , பெண் குரங்குகள் பல வகையான நடனங்களை ஆடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள எம்தந்தையே , உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

நீர்க்குச் செந்நிறம் நிலத்தியல்பால் ஆயிற்று என்க . ` ஆடல் மகளிர் போல ஆடும் ` என்பார் , ` மந்தி ஆடும் ` என்று அருளிச் செய்தார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

அரும்பார்ந்தன மல்லிகை
சண்பகஞ் சாடிச்
சுரும்பாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கரும்பார்மொழிக் கன்னியர்
ஆடுந் துறையூர்
விரும்பாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

அரும்புகள் நிறைந்தனவாகிய ` மல்லிகை , சண்பகம் ` என்னும் மரங்களை முரித்து , அவற்றில் உள்ள வண்டுகள் நிறையக்கிடக்கக் கொணர்ந்து கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண் , கரும்புபோலும் மொழியினையுடைய கன்னிப் பெண்கள் மூழ்கி விளையாடும் ஒருதுறையைச் சார்ந்த திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள என் விருப்பத்திற்குரியவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` மல்லிகை ` என்றது மரமல்லிகையை , முரிக்கப்படுவது அதுவே யாகலின் , ` நம்பன் ` என்பதனை , ` விரும்பன் ` என்றருளினார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பாடார்ந்தன மாவும்
பலாக்களுஞ் சாடி
நாடாரவந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
மாடார்ந்தன மாளிகை
சூழுந் துறையூர்
வேடாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

பக்கங்களில் நிறைந்துள்ளனவாகிய மா மரங்களையும் , பலா மரங்களையும் முரித்துக் கொணர்ந்து நாடெங்கும் நிறையும் படி எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் உள்ள , செல்வம் நிறைந்தனவாகிய மாளிகைகள் சூழ்ந்த துறையூரில் எழுந்தருளியுள்ள , பல அருட்கோலங்களை யுடையவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

காலத்தை யுடையவனை , ` காலன் ` என்றல்போல , வேடத்தை யுடைவனை , ` வேடன் ` என்று அருளினார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மட்டார்மலர்க் கொன்றையும்
வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி
ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த மலர்களை யுடையகொன்றை மரம் , வன்னி மரம் இவைகளை முரித்து , அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் , வாச்சிய முழக்கமும் , ஆடலும் , பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத் துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே , உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` கொட்டு ` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் , அதன் காரியமாகிய ஓசையின் மேல் நின்றது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

மாதார்மயிற் பீலியும்
வெண்ணுரை யுந்தித்
தாதாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
போதார்ந்தன பொய்கைகள்
சூழுந் துறையூர்
நாதாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

அழகு நிறைந்தனவான மயிற்பீலியையும் , வெள்ளிய நுரைகளையும் தள்ளி , பல மலர்களை மகரந்தத்தோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் , மலர்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழப் பெற்று விளங்கும் திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` மாது ஆர் ` என்றதற்கு , ` விருப்பம் நிரம்ப உண்டாதற்கு உரிய ` என்று உரைத்தலும் ஆம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கொய்யார்மலர்க் கோங்கொடு
வேங்கையுஞ் சாடிச்
செய்யாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
மையார்தடங் கண்ணியர்
ஆடுந் துறையூர்
ஐயாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

கொய்தல் பொருந்திய மலரையுடைய கோங்க மரம் , வேங்கை மரம் இவைகளை முரித்துக் கொணர்ந்து , வயல் நிறைய எறிவதாகிய , ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் , மை பொருந்திய கண்களையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` கொய்யா மலர் ` எனவும் பாடம் ஓதுவர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

விண்ணார்ந்தன மேகங்கள்
நின்று பொழிய
மண்ணாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பண்ணார்மொழிப் பாவையர்
ஆடுந் துறையூர்
அண்ணாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

வானத்தில் நிறைந்தனவாகிய மேகங்கள் நிலைத்து நின்று பொழிவதனால் , மலைக்கண் உள்ள பொருள்களை வாரிக் கொணர்ந்து நிலம் நிறைய எறிவதாகிய , ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் , பண்போலும் மொழியினையுடைய மகளிர் மூழ்கி யாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

மேகம் நின்று பொழிதல் மலையிடத்தாகலின் , அந் நீரால் கொணரப்படுவன மலைபடு பொருள்களாயின . அதனைச் சொல்லெச்சமாக வருவிக்க . ` அண்ணல் ` என்பதன் விளியாகிய ` அண்ணால் ` என்பது , ` அண்ணா ` என மருவிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மாவாய்ப்பிளந் தானும்
மலர்மிசை யானும்
ஆவாஅவர் தேடித்
திரிந்தல மந்தார்
பூவார்ந்தன பொய்கைகள்
சூழுந் துறையூர்த்
தேவாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே.

பொழிப்புரை :

பூக்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழ்ந்துள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள பெருமானே . ` கேசி ` என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்த திருமாலும் , மலர்மிசையோனாகிய பிரமனும் ஆகிய அவ்விருவரும் உன்னை வழிபட்டுத் தவநெறியை வேண்டிக் கொள்ள மாட்டாது , அந்தோ ! உன் அளவினை ஆராய்ந்து தேடியலைந்தனர் ; ஆயினும் , உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் .

குறிப்புரை :

` அலமந்தார் ` என்பதன் பின் , ` ஆயினும் ` என்பது எஞ்சி நின்றது . ` தவநெறியை உன்பால் வேண்டிக் கொள்ளுந் தவமுடை யனாயினேன் ` என்னும் மகிழ்ச்சி மீதூர்வால் , காரணக் கடவுளரும் , அது பெற்றிலாமையை எடுத்தோதியருளினார் . ` அவர் ` என்றது , உம்மை யெண்ணின் தொகைப் பொருட்டாய் நின்றது . ` மாவாய் பிளந்துகந்த மாலும் ` ( தி . 6 ப .82 பா .6.) என , அப்பர் சுவாமிகளும் மாவாய் பிளந்தமையை அருளினமை காண்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

செய்யார்கம லம்மலர்
நாவலூர் மன்னன்
கையால்தொழு தேத்தப்
படுந்துறை யூர்மேல்
பொய்யாத்தமிழ் ஊரன்
உரைத்தன வல்லார்
மெய்யேபெறு வார்கள்
தவநெறி தானே.

பொழிப்புரை :

வயல்கள் நிறையத் தாமரை மலரும் திரு நாவலூருக்குத் தலைவனும் , மெய்ம்மையையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன் , யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது பாடியனவாகிய இப் பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர் .

குறிப்புரை :

` ஆர் ` என்னும் முதனிலை , ` ஆர ` என வினையெச்சப் பொருள் பயந்தது . ` செய்தக்கவல்ல செயக்கெடும் ` என்பதிற் போல ( குறள் -466.).

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

எனது தலையையும் , நாவையும் , நெஞ்சத்தையும் , இத் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானார்க்கே உரியன ஆக்கினேன் ; திருவடித் தொண்டினையும் அவருக்கே வஞ்சனை சிறிதும் இன்றிச் செலுத்தினேன் ; இவற்றை யானே சொல்லின் , பொய்போல்வதாகும் . இந் நிலையில் , இவர் படம் விரித்த பாம்பினைக் கட்டிக்கொண்டு ஒரு கோவணத்தோடு இருந்து , பித்தரோடே ஒத்து , சிறிதும் திருவுளம் இரங்கிலராயினும் , எம்மைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` தனக்கு ` என்றது , பன்மை ஒருமை மயக்கமாய் , செய்யுளில் சுட்டுப் பெயரோடு ஒத்து , முன் வந்தது . ` உவமம் ` என்பது , ` உவமன் ` என ஈறு திரிந்து , ` போலி ` என்னும் பொருளதாய் நின்றது . நச்சு - விருப்பம் ; அருள் . ` ஆகில் ` என்றதில் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . ` இல்லையோ ` என்னும் ஓகாரம் இரக்கப் பொருளதாய் , முறையீடுணர்த்தி நின்றது . இன்னோரன்னவை , ` கடிசொல் இல்லைக் காலத்துப் படினே ` ( தொல் - சொல் . 452) என்றதனாற் கொள்ளப்படுவன . இவை , வருகின்ற திருப்பாடல்கள் எல்லா வற்றினும் ஒக்கும் . இத் திருப்பதிகத்திற்கு இவ்வாறன்றி , ஓகாரத்தை எதிர்மறையாக்கி , ` இவர் நமக்கு அருள் செய்யாராயின் , இவரையன்றி நமக்குப் பிரானார் பிறர் இல்லையோ ` எனப் பொருள் கூறி , ஏனைத் தலங்களிலுள்ள இறைவரைப் பிறரென்றதாக உரைப்பாரும் உளர் . அது , ` ஊடலுடையார் போல் ` என்னாது , ` முறைப்பாடுடையார் போல் ` எனக் கருத்துரைத்தும் , ` அருளாதொழியினும் ` என உம்மையை விரித்துக் காட்டியும் ( தி .12 பெரிய புரா . ஏயர்கோன் . 80-81) உணர்த்திப் போந்த மரபாகாமை யறிக .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அடிகளே யமையுமென் றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
இறைஇறை திருவருள் காட்டார்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

அடியேன் என்னைப் பெற்ற தாயைத் துணையென்று நினைந்திலேன் ; தந்தையைத் துணையென்று நினைந்திலேன் ; என்னை ஆண்ட தலைவனே சாலும் என்று நினைத்தேன் . இவ்வாறு ஒருவன் உளன் ` என்று , தம் சீரடியாரை நினைத்தற்கிடையில் , அன்னங்கள் மிக்கு வாழும் பொய்கை சூழ்ந்த திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் என்னையும் சிறிது திரு வுள்ளத்தடைத்து , சிறிது திருவருளைப் புலப்படுத்திலர் . இவர் தம் அடியவர்க்கு , மறுமை நலம் ஒன்றையே அளித்தலல்லது , இம்மை நலத்தை அருளுவதில்லையாயினும் . இம்மையில் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` இறை ` இரண்டனுள் , முன்னது காலம் உணர்த்தி , மேலே , ` கருதி ` என்றதனோடு இயைந்தது . காட்டாய் என்பது பாடம் ஆகாமை அறிக .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

உற்றபோ தல்லால் உறுதியை உணரேன்
உள்ளமே அமையுமென் றிருந்தேன்
செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற
செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பெற்றபோ துகந்து பெறாவிடி லிகழில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

யான் , ஒரு பொருளினால் நன்மையாதல் தீமையாதல் வந்த காலத்தில் அதனைக் கண்டபின் அல்லது , அதற்கு முன்பே அதன் உண்மை இயல்பை ஓர்ந்துணரும் சிறப்புணர்வு இல்லேன் ; அதனால் , என் பொதுமை யுணர்வே சாலும் என்று அமைந்திருந்தேன் . இத்தன்மையேனிடத்து , தேவர் பொருட்டு அவரைப் பகைத்த அசுரரது முப்புரத்தில் தீயெழச்செய்தும் , நஞ்சினை யுண்டு கண்டத்தில் வைத்தும் , சிவந்த சடை முதலிய தவக் கோலத்தைப் பூண்டும் , ` களை கண் இல்லாது அலமந்தவர்க்கு அருள் பண்ணுபவர் ` எனப் பெயர் பெற்ற திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் , அடியேன் யாது சொல்லி இரந்தாலும் , தாம் மனம் மகிழ்ச்சி அடையப் பெற்றபோது இரக்கம் வைத்து , பெறாதபோது இரக்கம் வையாது விடினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` உறுதி ` என்றது , என்றும் மாறாத இயற்கையை . ` உள்ளம் ` என்றது , ` மனம் ` என்னும் பொருளதாய் , அதனால் வரும் பொது உணர்வைக் குறித்தது . புரம் எரியெழச் செய்தமை முதலியன உடம்பொடு புணர்த்தனவாகலின் , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` உற்றபோதல்லால் உறுதியை யுணரேன் ; உள்ளமே யமையு மென்றிருந்தேன் ` என்றது , தம் எளிமையை விளக்கி யருளியவாறு . ` சொன்னாலும் ` என்ற குறிப்பினால் , பெறுதல் , பெறாமைகள் , உள்ளத்து உவகையைப் பற்றியவாயின .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

நாச்சில பேசி நமர்பிற ரென்று
நன்றுதீ தென்கிலர் மற்றோர்
பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப்
புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம்
பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்
பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

மனமே , பொன் விளையும் எனப் புகழத்தக்க கழனிகளில் பறவைக் கூட்டம் ஒலிப்பதும் , நீர் நிறைந்த பொய்கைகளை யுடையதும் ஆகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அடிகள் எனப்பட்ட இவர்தாம் , சிலரை , ` நம்மவர் ` என்றும் , சிலரை , ` பிறர் ` என்றும் நாவாற் சிலவற்றைச் சொல்லுதலும் . அவர் சொல்வனவற்றைத் தாம் , ` நன்று ` என்று புகழ்தலாதல் , ` தீது ` என்று இகழ்தலாதல் செய்தலும் இலர் . மற்றும் ஓர் முகமன் செய்தலும் இவரிடத்து இல்லை . ஆயினும் , பலரையும் தமக்கு அடிமை என்று மட்டும் ஆளாக்கிக் கொள்வர் . அதன் பின்பு அவரிடம் அன்பு கொண்டு ஓர் இனிய பேச்சுப் பேசுதல் இலர் ; ஒன்றைத் தருதலும் இலர் ; ஆயினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரையன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

முகமன் செய்தலை , ` பூச்சு ` என்றல் வழக்கு . ` தர ` என்னும் வினை எச்சம் , தொழிற் பெயர்ப் பொருள் தந்தது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை
வாட்டிய வகையின ரேனும்
புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை
போகும்நாள் வீழும்நா ளாகிப்
பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

கட்டப்பட்ட வெவ்விய வில்லால் , வானத்தில் இயங்கும் அரண்களை அழித்த வன்கண்மையை உடையவராயினும் , தொண்டுபுரிந்த அந்த நாட்களே புகழத்தக்க நாட்களும் , தொண்டு புரியாது போகும் நாட்கள் பயனின்றிக் கழிந்த நாட்களுமாம் என்று கொண்டு , அன்புசெய்பவருக்கு அருள் செய்பவராகிய , திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவர் , என்னளவில் , யாது சொல்லி இரந்தாலும் திருச்செவியில் ஏலாது , நொடிப் பொழுதில் நீங்குதலையே உடையவராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` பேர்வது ` என்பது தொழிற் பெயர் . அதன்பின் , ` உடையர் ` என்பது எஞ்சிநின்றது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்
தீவினை செற்றிடும் என்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
ஆவதும் அறிவர்எம் மடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

அடியேன் , ` பணிபிழைத்தற் குற்றம் வந்து அழிவைச் செய்யும் ` என்று அஞ்சி , நன்றல்லாத தவத்தைச் செய்வார் சென்ற வழியையும் மிதியேன் ; தமது திருவடித் தொண்டினையன்றி மற்று யாவரது பணியையும் யான் அறிந்திலேன் ; அடியேன் இத் தன்மையேனாதலை எம்பெருமானாராகிய இவரும் அறிவர் . அங்ஙனமாக , என்னைப் புரத்தற்கு , படைகளுள் முதன்மையுடைத்தாகிய சூலத்தைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளாகிய இவரது நிலைமை , பிசைந்த வெள்ளிய சாம்பலைப் பூசுவதே யாயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

நன்றல்லாத தவமாவது , இறைவனை முதல்வனாக அறியாது , வினையையே முதலாக நினைத்து ஒழுகும் ஒழுக்கம் , அதனையுடையவர் புத்தர் , சமணர் , மீமாஞ்சகர் , தார்க்கிகர் , சாங்கியர் என்போர் . ` அடித்தலம் அல்லால் ` எனப் பாடம் ஓதுதலும் ஒன்று . ` ஆர் `, ` பரமர் ` என்றன ஆகுபெயர்கள் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

கையது கபாலங் காடுறை வாழ்க்கை
கட்டங்க மேந்திய கையர்
மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்
வெண்டிங்கள் சூடிய விகிர்தர்
பையர வல்குற் பாவைய ராடும்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
மெய்யரே யொத்தோர் பொய்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

கையின் கண்ணதாகிய தலை ஓட்டினையும் , காட்டில் வாழும் வாழ்க்கையினையும் , ` கட்டங்கம் ` என்னும் படையினை ஏந்திய கையினையும் , மார்பின் கண்ணதாகிய முப்புரி நூலினையும் உடைய ஒளிவிடுகின்ற புல்லிய சடையின்மேல் வெள்ளிய பிறையைச் சூடிய விகிர்தரும் , அரவப் படம் போலும் அல்குலினை உடைய மகளிர் ஆடலைப் புரியும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளும் ஆகிய இவரது தன்மை , சொல் பிறழாதவர் போல வந்து ஆட்கொண்டு , பின்பு பிறழ்தலைச் செய்வதேயாய் விடினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

செய்யுட் கேற்றவாறு ஓதியருளினாராயினும் , ` கையிற் கபாலத்தர் ; கட்டங்கத்தர் ; காடுறை வாழ்க்கையர் ; மெய்யிற் புரிநூலர் ; சடைமேல் திங்களர் ` என்றுரைத்தலே திருவுள்ளம் என்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

நிணம்படு முடலை நிலைமையென் றோரேன்
நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலும்
கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

அடியேன் , நிணம் பொருந்தியதாகிய இவ்வுடம்பை நிலைத்த தன்மையுடையதென்று நினையாது , நெஞ்சம் இறைவருக்கு உரியது என்றே துணிந்தேன் ; இரவும் பகலும் அடியவர் குழாத்தின் ஊடே சென்று தம்மை அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன் ; இவ்வாறாக , படம் பொருந்திய பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவரது தன்மை , பிணம் பொருந்திய காட்டில் ஆடுவதேயாய்விடினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` ஓரேன் ` என்றது . முற்றெச்சம் , ` நெஞ்சமே ` என்னும் ஏகாரத்தை மாற்றி உரைக்க . ` கருத்து ` என்றது , அன்பின் மேல் நின்றது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே
குற்றேவல் நாள்தொறுஞ் செய்வான்
இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும்
எம்பெரு மானென்றெப் போதும்
அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்
தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

நெஞ்சே , நீ அன்பால் இளகி மகிழ்ச்சியோடும் விரைந்து சென்று நாள் தோறும் குற்றேவல் செய்ய அடைகின்றாய் ; ஆயினும் , தமக்கு வரையறுத்த நாளெல்லையைத் தவத்தாற் கடக்க மாட்டாத சிலர் , இயல்பில் அன்பில்லாதவராயினும் , தாம் கேட்ட வாற்றால் வாயினால் எப்போதும் , ` சிவனே சிவனே ` என்று கூப்பிடுந் தன்மையுடையவராயின் , அவர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானார் , யாது சொல்லி வேண்டினும் , நீ பிழை செய்ததைப் பொறுத்து உனக்கு ஒன்றையும் ஈகின்றிலர் ; ஆயினும் உன்னைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; நீ என் செய்தியோ !

குறிப்புரை :

தமது முறைப்பாட்டினை இத் திருப்பாடலில் நெஞ்சின் மேல் வைத்து அருளிச் செய்தார் என்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந்
தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்
மணிப்படு கண்டனை வாயினாற் கூறி
மனத்தினால் தொண்டனேன் நினைவேன்
பணிப்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

வட்டாதல் தன்மையிற் பட்ட உடையும் , நறும் பொடியாகப் பூசிய வெள்ளிய நீறும் , மற்றும் இன்ன தோற்றமும் ஆகிய இவற்றது பெருமையை யுணர்ந்து , அவற்றைக் கண்டால் , அடியேன் நீல கண்டத்தையுடைய எம்பெருமானாரைக் கண்டதாகவே மனத்தால் நினைத்து , வாயால் துதிப்பேன் ; அவ்வாறாக , படத்தை யுடையதன் வகையிற்பட்டபாம்பைப் பிடித்த கையை யுடையவராகிய , திருப்பாச் சிலாச்சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர் , என்னைத் தம்பால் கட்டுண்டு கிடக்குமாறு ஆட்கொண்டு , ஒன்றையும் ஈயாராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` காணில் ` என்றது , அடியவர் வேடத்தை யாதல் அறிக . ` மணிப்படு கண்டன் ` என்றது பன்மை ஒருமை மயக்கம் , பட்டுடை - முழந்தாள் அளவாக உடுக்கும் உடை விசேடம் . ( சிந்தா . 468 நச் . உரை .)

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன்
அடியவர்க் கடியனு மானேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி
லாச்சிரா மத்தெந்தம் மடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

எய்தற்கரிய புகழையுடையராய பெரியோர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர்க்கு யான் ஒரு பிறப்பில் அடியேன் அல்லேன் ; ஏழ் பிறப்பிலும் அடியேன் ; அதுவேயுமன்றி , இவர் தம் அடியார்க்கும் அடியனாயினேன் ; என்னை விற்கவும் , ஒற்றி வைக்கவுமான எல்லா உரிமைகளுமாக இவர்க்கு நான் உரியவனா யினேன் ; இவர்தம் ஒளி பொருந்திய மலர் போலும் செம்மையான திருவடிகளே எனக்கு உறுதுணையாக , என் உள்ளம் அவற்றிடத்து உருகா நிற்கும் ; இவ்வாறாக , இவர் , முன்பு பெருமைகள் பேசி , பின்பு சிறுமைகள் செய்வாராயினும் , அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` காட்டாய் ` என்பதனை , ` காட்டாக ` எனத்திரித்து , முன்னே கூட்டுக . ` உள்ளமும் ` என்னும் உம்மை , ` உடலும் ` என எதிரது தழுவிற்று . ` எம்மடிகள் ` என்பது பாடமாகாமை அறிக . ` எம் மடிகள் ` என அளபெடுத்து ஓதுதலும் ஆம் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 12

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மான்என்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்
தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவல்ஆ ரூரன்
பேசின பேச்சைப் பொறுத்தில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்.

பொழிப்புரை :

` எம்பெருமான் ` என்று , எப்போதும் உரிமையோடு பரவிய புகழை யுடையவனும் , திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவரை யடைந்து அவரது திருவடிகளைத் தொழவேண்டுமென்று பல நாட்கள் வாயினாற் சொல்லி , மனத்தினால் நினைந்தவனும் ஆகிய , வளப்பமான வயல்கள் சூழ்ந்த , திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள் , உண்மையில் ஏசினவும் அல்ல ; இகழ்ந்தனவும் அல்ல ; ஆதலின் , அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் ; அது செய்யாராயினும் , அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை ; என் செய்கோ !

குறிப்புரை :

` ஏசுதல் மனத்தொடு படாதது ; இகழ்தல் மனத்தொடு பட்டது ` என்க . ` பித்தரே ஒத்தொர் நச்சிலராகில் , பின்னையே அடி யார்க் கருள்செய்வதாகில் , பெற்றபோ துகந்து பெறாவிடி லிகழில் ` என்றற் றொடக்கத்தன இகழ்ந்தனபோல நின்றமையின் , ` ஏசினவல்ல இகழ்ந்தனவல்ல ` என்று தெரித்தோதியருளினார் . இவ்விறுதித் திருப் பாடல் முடியும் பொழுதும் , இறைவர் அருள் பண்ணாமையின் இதனைத் திருக்கடைக் காப்பாக ஓதாது , ` பொறுத்திலராயின் இவரலா தில்லையோ பிரானார் ` என முன்னைத் திருப்பாடல்கள் போலவே ஓதியருளினார் . எனினும் , இது முடிந்தவுடன் இறைவர் நிரம்பத் திருவருள் செய்தமையால் , இதனைப் பாடுபவரும் அப் பயன் பெறுதல் , அத் தொடரிலே அமைந்து கிடந்தது என்க . இக் கருத்தானே இத் திருப்பாடலைச் சேக்கிழார் ` திருக்கடைக் காப்பு ` ( தி .12 ஏ . கோ . பு .82.) என்று குறித்தருளினார் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன்
புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணா யாகிலும் பெருமையை உணர்வேன்
பிறவே னாகிலும் மறவேன்
காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால்
கருதா யாகிலுங் கருதி
நானேல் உன்னடி பாடுத லொழியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே . உனக்கு அணிகலமும் , அரைநாணும் சிறுமையையுடைய பாம்பாதல் கண்டு அஞ்சேன் ; நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன் ; நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாதொழியினும் , யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன் ; வேறோராற்றால் நான் பிறவி நீங்குவேனாயினும் , உன்னை மறவேன் ; நீ என்னைக் கடைக்கணியாதொழியினும் , உன்னை கண்ணாரக் காண்பேன் ; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் பண்ணாதொழியினும் , நானோ , என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன் , இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` இஃது என் அன்பிருந்தவாறு ` என்பது குறிப்பெச்சம் . சிறந்தவனை ` நம்பி ` என்றல் மரபு . ` ஆகிலும் ` என வந்த உம்மைகள் , அவை நிகழாமையை உணர்த்தலின் , எதிர்மறை .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்
டெல்லியி லாடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை
சொல்லாய் திப்பிய மூர்த்தீ
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல
மணியே மாணிக்க வண்ணா
நச்சேன் ஒருவரை நான்உனை யல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

உண்மையான தெய்வத் திருமேனியை உடையவனே , துன்பங்களை உளவாக்கவும் களையவும் வல்ல உயர் வுடையவனே , மாணிக்கம் போலும் நிறத்தை உடையவனே , திரு நாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உன்னையன்றி வேறொருவரையும் விரும்பேன் ; உயரஎழுகின்ற பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி நின்று இடுகாட்டில் இரவில் ஆடுகின்ற உன் கோலத்தையே மனத்தில் விரும்பியிருத்துவேன் ; இழிபுடையேனாகிய என் மனத்தில் நீ இவ்வாறு புகுந்து நிற்றற்குரிய காரணத்தைச்சொல்லியருளாய் !

குறிப்புரை :

` மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் ` என்றதும் , ` என் அன்பிருந்தவாறு ` என்றதேயாம் . உயர எழுதல் , படம் எடுத்தல் . ` துச்சனேன் ` என்பது , குறைந்து நின்றது . ` இடர்கள் , என்றது பிறவித் துன்பங்களை . பந்தமும் வீடும் இறைவனே யாதல் திருமுறைகளுட் பல விடத்துங் காணப்படும் . ` மணி ` என்றது உயர்வு குறித்து வந்த உவமையாகு பெயர் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

அஞ்சா தேஉனக் காட்செய வல்லேன்
யாதினுக் காசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
பங்கா எம்பர மேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

பஞ்சு ஊட்டிய அழகிய மெல்லிய பாதங்களை யுடைய , பெரிய மலைக்கு மகளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனே , மேலான இடத்தில் உள்ள , எங்கள் பெருமானே , மேகங்களின்மேற் செல்லுகின்ற வெள்ளிய திங்களைச் செவ்விய சடையின் கண் வைத்த உயர்வுடையவனே , மாணிக்கம் போலும் நிறத்தை யுடையவனே , நஞ்சு தோன்றுகின்ற கண்டத்தையுடையவனே , வெள்ளிய தலையை ஏந்தியவனே , திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , அஞ்சாமலே உனக்கு நான் தொண்டுபுரிய வல்லேன் ; அதன் பயனாக எதற்கு ஆசைப்படுவேன் ? ஒன்றிற்கும் ஆசைப்படேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` அஞ்சாதே ` என்னும் ஏகாரம் , தேற்றம் . அஞ்சுதற் காரணங்கள் உளவாகவும் அஞ்சாமலே என்பது பொருள் . அக் காரணங்கள் இரண்டாவது திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன ; இத் திருப்பதிகத்துள்ளும் சில காண்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை
கல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுனக் கல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன் ; அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லா வற்றையும் கற்றேன் ; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில் நில்லாதவனல்லேன் ; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன் ; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவு மிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன் ; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` பல ` என்றதில் முற்றும்மை தொகுத்தலாயிற்று . ` நீதி ` என்றது அவர் தமக்கு உரியதாகக் கொண்ட ஒழுக்கமும் , அதன்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியும் ஆகிய வரலாறுகளைக் குறித்தது . ` வல்லேன் ` என்றது ` வல்லுதல் ` என்னும் தொழிலின் மறைவினை . ` பரவ ` என்னும் செயவெனெச்சம் , ` பரவுமிடத்து ` என்பதன் திரிபாய் வந்தது . ` மறுமையை நினைந்து பரவமாட்டேன் ` என்றது , ` பயன் கருதாதே வழி படுவேன் ` என்றபடி . ` நல்லேன் ` என்பதில் நன்மை , அது செய்தற் காரணமாகிய உறவைக் குறித்தது . ` உனக்கல்லால் நான் உறவின னல்லேன் ` என்றதனானே , ` நீயன்றி என்னை வேறொருவரும் உறவினனாக நினையார் ` என்பதும் போந்தது ; போதரவே , சுவாமிகளுக்கும் இறைவர்க்கும் தம்முள் உளதாகிய கெழுதகைமை பெறப்பட்ட வாறறிக .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்
கருதா தார்தமைக் கருதேன்
ஒட்டா யாகிலும் ஒட்டுவன் அடியேன்
உன்னடி அடைந்தவர்க் கடிமைப்
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்
பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியே , தேன் நிறைந்த பூவை யணிந்த கூந்தலையுடைய மலை மகளுக்குக் கணவனாகிய உன்னை நினையாதவரை நான் நினையேன் ; நீ எனக்குத் தலைவனாய் என்னொடு ஒட்டாதே போவாயாயினும் , நான் உனக்கு அடியவனாய் , உன்னொடு ஒட்டியே நிற்பேன் ; உன் திரு வடியையே பற்றாக அடைந்த அடியார்க்கு அடியவனாகிய பெருமையை நான் பெற்றுடையேனாயினும் , உன்னைப் பாடுதலை விடமாட்டேன் ; உன் புகழைப் பாடியும் , உனது பெருமைகளை ஆராய்ந்தும் யாவருமறிய உன்னொடு நட்புக் கொண்டேனாதலின் , உன்னை நான் மறக்கமாட்டேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` கணவனை ` என்னும் ஐகாரம் முன்னிலையுணர்த்திற்று ; அஃது உயர்திணைமேல் நின்றமையால் , இரண்டாவதன் தொகைக்கண் , ` இயற்கை மருங்கின் மிகற்கை தோன்ற ` லாய் ( தொல் : எழுத்து : 158.), ககரம் மிக்கது . இவ்வாறன்றி ` கணவன் ` என முன்னிலைக்கண் படர்க்கை வந்தது இடவழுவமைதி எனக் கொண்டு , ஐகாரத்தை உருபாக்கியே உரைத்தலுமாம் . அடியார்க்கு அடியாரானார் அதன்மேல் ஒன்று பெறவேண்டுவது இன்மையின் , ` அதன்பின்னும் உன்னைப் பாடுதல் ஒழியேன் ` என்று அருளிச் செய்தார் . ` நாடி நட்பினல்லது - நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே ` ( நற்றிணை -32.) என்பவாகலின் , ` உம்மை நாடியே நட்டேன் ` என்பார் , ` நாடி நட்டேன் ஆதலால் நான் மறக்கில்லேன் ` என்றருளினார் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்
படுத்தாய் என்றல்லல் பறையேன்
குடப்பாச் சில்லுறை கோக்குளிர் வானே
கோனே கூற்றுதைத் தானே
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடு
மறையோ தீமங்கை பங்கா
நடப்பா யாகிலும் நடப்பனுன் னடிக்கே
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

மேற்கிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் , நீரைப் பொழிகின்ற குளிர்ந்த மேகம் போல்பவனே , யாவர்க்கும் , தலைவனே , இயமனை உதைத்தவனே , அடியவர் அகங்களில் பால் தயிர் நெய் இவைகளை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற , வேதத்தை ஓதுபவனே , உமையை ஒரு பாகத்தில் உடையவனே , திரு நாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , துன்பங்கள் படுமாறு அமைந்த ஊழினது தன்மையால் , நான் பட்ட துன்பங்களை எல்லாம் நீ படுத்தினாய் என்று சொல்லி நான் முறையிடமாட்டேன் . நீ என்னை விட்டு நீங்குவாயாயினும் , நான் உன் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` பட ` என்பதன்பின் ` அமைந்த ` என்பது வருவிக்க . ` படற்பாற் றன்மையின் ` என்பதே பாடம் எனலுமாம் . அல்லல் பறைதல் - துன்பத்தை எடுத்துப் பலரும் அறியக் கூறுதல் , ` மேற்கு ` என்றது சோழநாட்டின் மேற்குப் பகுதியை .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர
நினைந்தேன் உள்ளம்உள் ளளவும்
உய்வான் எண்ணிவந் துன்னடி யடைந்தேன்
உகவா யாகிலும் உகப்பன்
நைவா னன்றுனக் காட்பட்ட தடியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

ஐந்து தலைப் பாம்பினைச் சந்திரனோடு முடியில் வைத்துள்ள அழகனே , தேவர்கட்குத் தலைவனே , திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் அன்று உனக்கு ஆட்பட்டது , துன்பத்தால் வருந்துதற்கு அன்று ; துன்பத்தினின்றும் உய்ந்து , இன்பம் உற எண்ணிவந்தே உன் திருவடியை அடைந்தேன் ; அதனால் , நீ என்னை விரும்பாதொழியினும் , நான் உன்னை விரும்பியே நிற்பேன் ; ஆதலின் , நான் எய்தற்கு வைத்த குறியினை உயிருள்ள அளவும் எவ்வாற்றாலேனும் அடையவே நினைத்தேன் ; இஃது என்அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

சுவாமிகள் கொண்ட குறியாவது இறைவன் திருவடிப் பேறே என்பதும் , அதுவே துன்பம் இல்லாததும் , துன்பத்தினின்றும் எடுத்து இன்பம் தருவதும் ஆகும் என்பதும் , அதனை அடைதற்கு அவன் மாட்டுச் சலியாத அன்பு செய்தல் வேண்டும் என்பதும் உணர்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக்
கருதிடிற் கண்கள்நீர் மல்கும்
பலிதேர்ந் துண்பதொர் பண்புகண் டிகழேன்
பசுவே ஏறினும் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்
மாட்டேன் மறுமையை நினைய
நலியேன் ஒருவரை நான்உனை யல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , யான் இம்மானுட வாழ்க்கையை ஒருபொருளாக நினைத்துச் செருக்கேன் ; இதன் நிலையாமை முதலியவற்றை நினைத்தால் , கண்களில் நீர் பெருகும் . ஆதலின் , பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டும் , அதுபற்றி உன்னை இகழேன் ; நீ எருதையே ஏறினாலும் அதுபற்றி உன்னைப்பழியேன் ; எனக்கு மெலிவு நீங்க வலியே மிகினும் , உன்னை வணங்குதலைத் தவிரேன் ; மறுமை இன்பத்தையும் நினைக்கமாட்டேன் ; உன்னையன்றி வேறொருவரை நீங்காது நின்று இரக்கமாட்டேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

இப் பிறவிதான் இனிவரும் பிறவிக்குக் காரணமாகா தொழிதலும் , தாமே வர நின்ற அப் பிறவிகளை வாராது அழித்தொழிக்குங் கருவியாதலும் சிவபிரானை வணங்குதல் ஒன்றாலன்றிப் பிற வாற்றாற் கூடாமையின் , ` இகழேன் ` என்பது முதலாக அருளினார் . ` கண்கள் நீர் பில்கும் ` என்பதும் பாடம் . ` நினையேன் ` என்பது பாட மாகாமை அறிக . ` நலிதல் ` என்பது இங்கு , உதவுமாறு இடைவிடாது சென்று வேண்டுதலைக் குறித்தது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்
கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயல் தண்டலை வேலி
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

எருதினை ஏறுகின்ற , எனக்குக் கண்போலச் சிறந்தவனே , நண்டுகள் விளையாடும் வயல்களையும் , சோலையாகிய வேலியையும் உடைய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியே , சமணரும் , சாக்கியரும் ஆகிய பேய்கள் மூர்க்கத் தன்மையை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும் , அதனை நேரே கண்டாலும் அதனை யான் ஒரு பொருளாக நினையேன் ; உன்னையன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன் ; உனது தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அங்ஙனம் தொழும்பொழுது கண்டு , அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னை யான் தொழத் தொடங்கினேன் . இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` கொள்ளுதல் ` என்பது இங்கு , கொண்டதையே விடாமல் பற்றுதலைக் குறித்தது . பின்னர் , ` கண்டாலும் ` என்றதனால் , முன்னர் உள்ளது , கேட்டதாதல் பெறப்பட்டது . ` நின்னலது கண்ணாக அறியேன் ` என்று உரைப்பினுமாம் . ` தொண்டாடித் தொழுவார் தொழக்கண்டு தொழுதேன் ` என்பதனை , ` ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள் ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன் ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தால்உனை நானுந் தொழுவனே ` ( தி .5 ப .91 பா .3) என்னும் அப்பர் திருமொழியுடன் வைத்து நோக்குக .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற் றறுமே.

பொழிப்புரை :

அடியவர்களே , பிற பாடல்களை நீர் பாட மறந்தாலும் , பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும் , சோழனது நாட்டில் உள்ளதும் , பழமையான புகழை யுடையதும் , ஆகிய திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை , அவனை ஒரு நாளும் மறவாத , திரட்சியமைந்த , பூவை யணிந்த கூந்தலையுடைய , ` சிங்கடி ` என்பவளுக்குத் தந்தையாகிய , திரு வுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடுங்கள் . பாடின் , உங்கள் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும் .

குறிப்புரை :

கொடிறு ( குறடு ) தன்கண் அகப்பட்டதனை மீள விடாது பிடித்தலின் , அஃது எதிர் வந்த பகைவரை மீளவிடாது அழிக்கும் நாயனார்க்கு உவமையாம் . ஆகவே , ` கொடிறன் ` என்றது , உவமத் தொகைப் பொருண்மைத்தாய குறிப்பு வினைப் பெயராதல் அறிக . ` சிங்கடி ` என்பாள் , கோட்புலி நாயனார்தம் பெண் மக்கள் இருவருள் ஒருத்தி . மற்றொருத்தியின் பெயர் ` வனப்பகை ` என்பது . இவட்குத் தந்தை என்று சுவாமிகள் வேறு பதிகத்துள் தம்மைக் குறித்தருளுவர் . இவ்விருவரையும் நம்பியாரூரர் தம் மக்களாக ஏற்றுக் கொண்ட வர லாற்றைப் பெரிய புராணத்துட் காண்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` தென்னங் குரும்பை போலும் தனங்களையும் , பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து , அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து , அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து , அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும் , கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது ?` என்று வினவின் , பேரரும்புகளின் அருகே சென்று , ` சுரும்பு ` என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட , ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட , அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில் , கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

சிவபிரான் உமையம்மையாரது தவச்சாலையில் முதிய வேதியனாய்ச் சென்று அவரது அன்பினைச் சோதித்தறிந்து அவரை மணந்தருளிய வரலாற்றைக் கந்த புராணத்துட் காண்க . ` அருக ` என்பது , ` அருவ ` என மருவி வந்தது ; ` அருக ` என்றே பாடம் ஓதுதலும் ஆம் . அருகுதல் - மென்மையாக இசைத்தல் . இதனைச் சுருதி கூட்டுதல் என்ப . குவளை சந்திரன்முன் மலர்ந்து , சூரியன்முன் குவிவதும் , கண் போலத் தோன்றுவதும் ஆதலின் , காலையில் அது கண் வளர்வது போலக் காணப்படுவதாயிற்று . ` கண்வளரும் `, ` முகமலரும் ` என்பன குறிப்புருவகங்கள் . தம்மை வினவும் மாணாக்கன் ஒருவனுக்கு அருளிச் செய்யுமாற்றான் அருளுதலின் , ` வினவின் , காண் ` என்றருளினார் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி
இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` போரை விரும்பிய சலந்தராசுரனை அழித்த ஒளியையுடைய சக்கரத்தை , தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி , வழிபாட்டிற் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து , இருள் போலும் அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து , இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது ?` என்று வினவின் , மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும் , முரசு , மத்தளம் ஆகிய வாச்சியங்களது ஓசையும் , சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிக்கெழுதலினால் , கரிய எருமை நீரிற் புக , அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் , தாமரை மலரின்மேல் நெருங்கி விழ , தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

சிவபிரான் சலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித்து , பின் அச்சக்கரத்தினைத் திருமாலுக்கருளின வரலாற்றினைக் கந்தபுராணம் ததீசி யுத்தரப் படலத்துட் காண்க . தக்கன் வேள்வியில் சிவபிரான் இந்திரன் தோளைத் துணித்ததாகவும் வரலாறு உண்டு . ( தி .6) ` கமலக் களிவண்டு ` என்பது மெலித்தலாயிற்று . இவ்வாறன்றி , இயல் பாகவே கொண்டு , ` இரியப் பெறும் ` என்று உரைத்தலுமாம் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` இண்டை மாலையும் விடுபூவும் திரட்டிக்கொண்டு சென்று மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து , கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய , அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி , அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனதுஊர் யாது ?` என்று வினவின் , மண்டபங்களிலும் , கோபுரங்களிலும் , மாளிகைகளிலும் , சூளிகைகளிலும் வேதங்களின் ஓசையும் , மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்புதல் பொருந்திக் கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற , தாமரைப் பொய் கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

சண்டேசுர நாயனாரது வரலாற்றினைப் பெரிய புராணத்துட் காண்க . ` சூளிகை ` என்றது , அதனையுடைய மேல் மாடத்தைக் குறித்தது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
அலைஅடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி
அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்தென் கரைமேல்
கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையால்
கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` மலைமகள் , விளையாட்டை மேற்கொண்டு , மகிழ்ச்சி மேலிட்டவளாய் , அவளது வளைபொருந்திய கைகளால் தனது கண்களை மூடினமையால் , எல்லா உலகங்களையும் ஒருங்கே வலிய இருள் பரந்து மூடிக்கொள்ள , அவ்விருள் நீங்கும்படி நெற்றியிடத்து ஒரு கண்ணைத் தோற்றுவித்து அருள் புரிந்த மேலானவனது ஊர் யாது ?` என்று வினவின் , அலை பொருந்திய நீர் பெருக்கெடுத்து , யானைத் தந்தத்தைப் புரட்டி அகில் மரத்தையும் , சந்தன மரத்தையும் தள்ளிக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரைமேல் உள்ள , நூல்களை யுணர்ந்து அந்நெறியானே வறுமையை ஓட்டுகின்ற அந்தணர்களது வேள்விப்புகையால் , கூட்டமாகிய மேகத்தின் தோற்றம் போன்ற அழகு மிகுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

அம்மை திருக்கண் புதைத்த வரலாற்றினை , பெரிய புராணம் , காஞ்சிப் புராணங்களுட் காண்க . ` கலையடைந்து கலிகடி யந்தணர் ` என்றதனை , ` கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லை ` ( தி .1 ப .80 பா .1) என்ற திருஞானசம்பந்தர் திருமொழியோடு ஒருங்குவைத்துணர்க . ` போன்ற ` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் திறத்தே
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
கலைபயில்அந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` தன்னை வழிபடுவோர்க்கு நின்ற கோலமாய்த் தோன்றுபவனாகிய திருமாலும் , தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் முதல்வராகத் தேவர் பலரும் குறையுடையராய் நிறைந்து வந்து இரக்க , அவரது துன்பத்தைத் திருவுள்ளத்தடைத்து அவர் பொருட்டாக , மலையாகிய வில்லும் , பாம்பாகிய நாணியும் , தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த , உலகியலுக்கு வேறுபட்டவனது ஊர் யாது ?` என்று வினவின் , சொல்வகைகள் பலவற்றையும் , பொருள் வகைகள் பல வற்றையும் உடைய வேதங்கள் நான்கையும் , தோத்திரங்கள் பல வற்றையும் சொல்லித் துதிக்குமாற்றால் இறைவனது நெறிக்கண் கற்பாரும் கேட்பாருமாய் நின்று , எவ்விடத்திலும் நன்மை யமைந்த நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே காண் .

குறிப்புரை :

சிவபிரான் திரிபுரம் எரித்த வரலாறு காஞ்சிப் புராணத்திலும் , திருவிற்கோலப் புராணத்திலும் விரித்தோதப்பட்டது . மாயோன் கோலங்கள் பலவற்றுள் அர்ச்சனைக்குரியது நின்ற கோலமே என , அவனை வழிபடுவோர் கொள்ளுதலின் , ` நிற்பான் ` என்று அருளினார் . ஏனைய கோலங்களை வழிபடுங்கால் அவ்வந் நிலை கருதியே வழிபடுவர் என்க . ` தோத்திரம் ` என்றது தமிழ்ப் பாடல் களை . ` இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ` என்றருளி னார் ஆளுடைய அடிகளும் ( தி .8 திருவா - திருப்பள்ளி -4). சுருதியொரு நான்குமே யன்றித் தோத்திரமும் பல சொல்லுதற்குரியார் அந்தணர் என்பது , இத்திருப்பாடலின்கண் இனிது விளங்க அருளிச் செய்யப் பட்டமையின் , ` வேதத்தில் உரிமை யில்லாதாரே தமிழ்ப் பாடல்களாகிய தோத்திரங்களைச் சொல்லுதற்கு உரியார் ` என்பது , அறியாதார் கூற்றே என்பது தெற்றென உணர்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்
தருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல்
கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` தக்கது சிறிதும் அறியாத தக்கனது வேள்வியில் பெரிய தேவர்கள் , தங்கள் தலை , தோள் , பல் , கை , கண் என்னும் உறுப்புக்கள் வலிமையழிந் தொழியுமாறு ஒறுத்து , சந்திரனது கலைகள் சிதையும்படி கால் திருவிரலால் தேய்த்து , பின்பு அவர் எல்லாரிடத்தும் கருணையை மிக வழங்கிய சிவபெருமான் சேர்ந்திருக்கும் ஊர் யாது ?` என்று வினவினால் , பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு , ` மல்லிகைக் கொடி , சண்பகமரம் ` என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் , கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக , பசுக் கூட்டம் , மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

தக்கன் வேள்வியில் எச்சன் ( வேள்வித் தேவன் ) தலையும் , இந்திரன் தோளும் , சூரியன் பல்லும் , அக்கினி கையும் , ` பகன் ` என்னும் மற்றொரு சூரியன் கண்ணும் இழந்தனர் என்க . சிவபிரான் தக்கன் வேள்வி அழித்த வரலாற்றைக் கந்தபுராணத்துட் காண்க . ` சந்திரனைக் காலால் தேய்த்தனன் ` எனப் புராணங்கூறும் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மேல் ஊன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாசம் ஆகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன்ஊர் வினவில்
பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப்
பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல்
கயல்உகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தனது பத்துத் தலைகளும் , இருபது தோள்களும் சிதைந்து அரற்றுமாறு ஒரு விரலைக் கயிலை மலையின்மேல் ஊன்றி , ` நிலம் , மிக்க நீர் , நெருப்பு , காற்று , வானம் , என்னும் பெரும் பொருள்களாகியும் , நிற்பனவும் நடப்பனவுமாகிய உயிர்களாகியும் நிற்கின்ற தூயவனுடைய ஊர் யாது ?` என்று வினவினால் , அலைகளால் பல பழங்களைத் தள்ளி , பெரிய மாணிக்கங்களையும் பொன்னையும் கொழித்து , ` பாதிரி , சந்தனம் , அகில் ` என்ற மரங்களையும் , தாழம் புதர்களையும் உள்வாங்கி , இவற்றால் எல்லாம் கலங்கல் பொருந்திய நீர் , ஆரவாரித்து வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கயல் மீன்கள் பிறழும் வயல்கள் புடை சூழ்ந்த திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

சிவபிரான் இராவணனை நெரித்த வரலாற்றை இராமாயணம் உத்தரகாண்டத்தில் காண்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

மாலயனுங் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்
வன்னிமதிசென்னிமிசைவைத்தவன்மொய்த்தெழுந்த
வேலைவிடம் உண்டமணி கண்டன்விடை ஊரும்
விமலன்உமை யவளோடு மேவியஊர் வினவில்
சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்
சுரும்பொடுவண்டிசைமுரலப்பசுங்கிளிசொல்துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள்அடி பணிந்து
கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்புருவமாய் நீண்டு நின்றவனும் , வன்னியும் , பிறையும் சடையிற் சூடியவனும் கடலிற் றோன்றிய விடத்தை உண்டு கறுத்த நீலமணி போலும் கண்டத்தை யுடையவனும் , இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமாதேவியோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது ?` என்று வினவினால் , சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும் , அழகிய மயில்கள் ஆடவும் , சுரும்பும் வண்டும் இசை கூட்டவும் , பசிய கிளிகள் தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி , காலை , மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி , உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கிருக்கின்ற திருக் கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

திருமாலும் பிரமனும் அடிமுடி தேடியது இலிங்க புராண வரலாறு . அதனைக் கந்தபுராணத்துள்ளும் விளங்கக் காணலாம் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்தபொருளினைமுன்படைத்துகந்தபுனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்
இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்
இருகரையும் பொருதலைக்கும்அரிசிலின்தென்கரைமேல்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` போர் செய்கின்ற வலிமையையுடைய அசுரனாகிய , ` தாரகன் ` என்பவனைப் போர் செய்து அழியச் செய்த முதல்வனாகிய முருகனை முன்பு படைத்து , அவனைத் தன் மகனாக விரும்பிக்கொண்ட தூயவனும் , கரும்பினால் இயன்ற வில்லையும் , மலர்களால் இயன்ற அம்புகளையும் உடையவனாகிய மன்மதன் உடம்பு வெந்தொழியுமாறு நெருப்பாக நோக்கிய கண்ணையுடைய நெற்றியையுடையவனும் ஆகிய சிவபெருமான் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளும் ஊர் யாது ?` என்று வினவினால் , மிக்க நீரினது அலைகள் மேல் எழுந்துசென்று , ` ஏலம் , இலவங்கம் ` என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென் கரையில் , பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி , பொன்னை மலர்ந்து , பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமணச் சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

கந்தபுராண த்துள் முருகன் சூரபதுமன் முதலிய மூவர் அசுரரை அழிக்கத் தோன்றிய வரலாறே காணப்படுகின்றது . சிவபிரான் மன்மதனை எரித்த வரலாற்றையும் கந்தபுராணத்துட் காண்க . ` கருமை ` என்றது , பசுமையை . ` முத்து , பொன் , பவளம் ` என்பன உரு வகத்தால் அரும்பையும் , மலரையும் , மலர்கள் உள்ள பொகுட்டையும் குறித்தன .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில்
தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நாற்புறத்தும் சூழப்பெற்ற ஊரில் , திருக்குளத்தைக் கொண்ட பெருங் கோயிலின்கண் முறைப்படி , வளவிய தாமரை மலரில் இருக்கும் பிரம தேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய , அதற்கு மகிழ்ச்சியுற்று இருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது ?` என்று வினவினால் , வெண்மையான கவரி மயிரும் , நீலமான மயில் இறகும் , வேங்கை மரம் , கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்களும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில் , கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனினது வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும் தென்றற் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

பிரமதேவன் சிவபிரானை வழிபட்ட தலம் சீகாழி . காஞ்சி முதலிய பிறவும் உள . ` இக் கலயநல்லூரே அங்ஙனம் கொள்ளப்பட்டது ` எனினும் பொருந்தும் . இப்பொருட்கு , ` தலம் ` என்பது , ` தக்க இடம் ` எனப் பொருள்படும் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையும்ஊர் நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீரையும் , வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும் , பிரமதேவனது தலை ஓட்டினையே பாத்திரமாக ஏந்தி , முன்னதாக இசையைப் பாடிக்கொண்டு , உண்ணுகின்ற பிச்சைப் பொருள்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊராகிய , நிறைந்த நீர் ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருக்கலய நல்லூரை , யாவரிடத்தும் நண்பாந் தன்மையையுடைய நல்லோராகிய சடையன் , இசைஞானி என்பவர்க்கு மகனும் , திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய , இசை பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றை அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாடவல்லவர்கள் , துன்பமும் , பாவமும் இலராவர் .

குறிப்புரை :

` பலி ` என்றது , பலியாக இடுதலும் , ஏற்றலும் உடைய பொருளைக் குறித்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும் , அதனால் , ` அம்பு எய்தலில் வல்லவர் ` எனப் புகழத்தக்கவராயினாரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு , ` திருமால் , பிரமன் , இந்திரன் ` என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரே யாகும் .

குறிப்புரை :

` வானவர்கோன் ` என்பதன் இறுதியில் செவ்வெண்ணின் தொகைபட வந்த ` இவர் ` என்பது தொகுத்தலாயிற்று . உம்மை இரண்டனுள் முன்னையது சிறப்பு ; பின்னையது , இறந்தது தழுவிய எச்சம் . எல்லாத் திருப்பாடல்களிலும் , ` வைத்து ` என்றவற்றை அசை நிலை எனினுமாம் . ` நம் திருநாவலூர் ` என்னும் ஆறாவதன் தொகை இங்கு , நிகழ் காலத்து உரிமையோடு இறந்த காலத்து உரிமையும் பற்றி நிற்பதாம் ; ` வினைக் குறிப்புப் பெயரே ஆறன் உருபேற்ற பெயராய் நிற்கும் ` என்பது சேனாவரையர்க்குங் கருத்து என்பது அவரது உரை பற்றி உய்த்துணர்ந்து கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

தன்மையி னால்அடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

தமக்கு இயல்பாக உள்ள ` பேரருளுடைமை ` என்னுங் குணத்தினால் , என் பிழையைத் திருவுளங்கொள்ளாது , அடிமை என்பது ஒன்றையே கருதி , என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந் நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு , ` வன்றொண்டன் ` என்பதொரு பதவியைத் தந்தவரும் , பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து , எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` என்னை ` என்றது உருபு மயக்கம் . ` புன்மைகள் ` என்றது , ` பித்தரே ஒத்தொர் நச்சிலராகில் இவரலாது இல்லையோ பிரானார் ` ( தி .7 ப .14 பா .1) என்றாற்போலும் பாடல்களை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

வேகங்கொண் டோடிய வெள்விடை
ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்கடற் கோடியின்
மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர்பவரும் , மெல்லிய இயல்பினை உடையாளாகிய மங்கை ஒருத்தியைத் திருமேனியிற் கொண்டவரும் , என்னைத் திரு வெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையுங் கொண்ட வரும் , தென்கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூடி இன்பங் கொண்டவரும் , பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

உமையம்மை இறைவரது சத்தியேயாதலை , ` ஆகங் கொண்டார் ` என்பதனாலும் , பிற தெய்வங்கள் அச்சத்தி பதியப் பெற்றனவாதலை , ` போகங்கொண்டார் ` என்பதனாலும் அருளிச் செய்தார் . காளியைக் குறிக்கும் ` மோடி ` என்னும் சொல் , வேற்றுமை சிறிதாதல் பற்றி இங்குக் கொற்றவை ( துர்க்கை ) யைக் குறித்தது . ` கடற் கோடி ` என்றது குமரிமுனையை . அங்கு நின்று அருள் செய்யும் தெய்வமும் , சிவபெருமானது சத்தியினாலே ஆயது என்பதனைத் தெளிவித்தவாறு . சிவபெருமானது சத்தி பதிந்து நடாத்துதல் பற்றி , கொற்றவையும் அச் சத்தியாகவே முகமன் கூறப்படுவள் . அங்ஙனம் கூறப் படுதலைச் சிலப்பதிகாரத்துள் வேட்டுவ வரியுள் கொற்றவையைப் பல படப் புகழ்ந்து நிற்கும் பாட்டாலும் அறிக . எனவே , இமயம் முதற் குமரி காறும் உள்ள நல்வரைப்பு முழுதும் , சிவபெருமானது திருவருள் விளங்கும் திருநிலமாதல் பெறப்பட்டது . ` கடற் கோடி ` என்றதனை , ` கோடிக்குழகர் ` என்னும் தலமாக உரைப்பாரும் உளர் ; அது சிறவாமை அறிக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்
சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத்
தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

ஆனிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவரும் , ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும் , தம் அடியை யடைந்த சண்டேசுவர நாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டு , என் நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவரும் , நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` அஞ்சும் ` என்னும் உம்மையும் , எச்சம் , விடை , ` அறம் ` எனப்படுதலேயன்றி , ` உயிர் ` எனவும் படுமாதலின் , ` சேவினை ஆட்சிகொண்டார் ` என்றது , ` உயிர்களை அடிமைகளாக உடையவர் ` என்பதைக் குறித்ததாம் . சண்டேசுரரைத் தம்மோடு ஒப்ப வைத்தமையாவது , தம் மகனாராகக் கொண்டு , தமது முடி மாலையை வாங்கிச் சூட்டி , அடியார்கட்குத் தலைவராக வைத்து , தம் பரிகல முதலியவற்றை அவர்க்கே உரியவாகச் செய்தமை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

உம்பரார் கோனைத்திண் தோள்முரித்
தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும் , யானையை உரித்தவரும் , சிவந்த பொன்போல்வதும் , நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும் , வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும் , ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` செம்பொன்னார் ` என்பதுஇடைக் குறைந்து நின்றது . ` ஆர் ` உவம உருபு . ` செம்பொனார் , வண்ணர் , தீ வண்ணர் ` எனத் தனித்தனி இயைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்
கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்
பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

திருக்குடமூக்கில் ( கும்பகோணம் ) திருக் கோவலூர் , திருப்பரங்குன்றம் இத்தலங்களைக் கோயிலாகக் கொண்ட வரும் , வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும் , தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நடன மாடுதலை மேற்கொண்டவரும் , சூரியனை (` பகன் ` என்பவனை ) க் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திரு நாவலூரேயாகும் .

குறிப்புரை :

` கோத்திட்டை ` என்பதனை வைப்புத் தலமாகக் கூறுவர் . எனினும் ` பரம் ` என்பதனையே , ` கோ ` என்றும் ` குன்று ` என்பதனையே ` திட்டை ` என்றும் சுவாமிகள் , ஒரு நயம் பற்றி அருளிச்செய்தார் என்பது திருப்பரங்குன்றத் திருப்பதிகத்துள் பெறப் படுதலால் , இங்கு அவ்வாறே பொருளுரைக்கப்பட்டது . திருப்பரங்குன்றத் திருப்பதிகத்துள் , ` கோத்திட்டை ` என்றதற்கு இவ்வாறு உரையாவிடின் , அத்திருப்பதிகத்துள் ஓரிடத்திலும் அத்தலம் சொல்லப் படாததாய்விடும் . வேட்டம் கொண்டது , அருச்சுனன் பொருட்டு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

தாயவ ளாய்த்தந்தை ஆகிச்
சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக்
கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

எனக்குத் தாயாகியும் , தந்தையாகியும் இறத்தல் பிறத்தல்கள் இல்லாதவாறு என்னைத் தமது பொன் போலும் திருவடிக் கண் அகலாதபடி இருக்க வைத்த , மூங்கில் இடத்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` அவள் `, பகுதிப் பொருள் விகுதி . ` போய் அகலாமை ` என்றது , ஒரு சொல் நீர்மைத்து . சிவபெருமான் மூங்கிலை இடமாகக் கொண்டிருந்தமை திருநெல்வேலியில் என்பது , பலரும் அறிந்தது . திருவெண்ணெய்நல்லூரிலும் அவ்வாறு இருந்தமை சொல்லப்படுகின்றது . இனி , ` ஏயவனார் ` எனப் பிரித்து , ` எப்பொருளிலும் பொருந்தி யிருப்பவர் ` என்று உரைப்பினுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

வாயாடி மாமறை ஓதிஓர்
வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்
பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

தீயின்கண் நின்று ஆடுபவரும் , சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில்தொழிலைப் புரிந்த வரும் , பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக்கொண்டு வேதிய வடிவாய் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவராகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` வாய் ` என்றது , ஆகுபெயராய் , சொல்லையுணர்த்திற்று ; சொல்லாவன , ` என் அடியான் இந்நாவல்நகர் ஊரன் ` என்றது முதலியன . ` வேடுவனாய் ` என்றது பன்மை ஒருமை மயக்கம் . ` வேய் ` என்பதும் , அதனாலாகிய வில்லைக் குறித்தது . ` நா ` என்பது , தலைமைப் பண்பை யுணர்த்தும் உரிச்சொல்லாய் நிற்கும் . அதனடியாகவே , ` நாதன் , நாயகன் , நாயன் , நாச்சி ` என்னும் சொற்கள் பிறக்கும் . நா ஆடியார் - தலைமையை ஆள்பவர் , வரையறை இன்மையின் , யகர உடம்படு மெய் பெற்று நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

படமாடு பாம்பணை யானுக்கும்
பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும்
பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

படமாடுகின்ற , பாம்பாகிய படுக்கையையுடைய திருமாலுக்கும் , பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவிக்கும் , மணி வடம் அசைகின்ற ஆனேற்றுக்கும் , ` பாகன் ` எனப்படும் தன்மை யுடையவராய் , ஒருநாள் என்னிடம் வந்து , தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நடனமாடும் பெருமானாராகிய இறைவற்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` படமாடும் அணை ` என இயைக்க . ` பாகன் ` என்பது , ` பாகத்தையுடையவன் ` எனவும் , ` நடத்துபவன் ` எனவும் உடனிலை யாய் ( சிலேடையாய் ) நின்று இருபொருள் பயந்து , ஏற்ற பெற்றியான் இயைந்து , பன்மை யொருமை மயக்கமும் ஆயிற்று . ` ஒருநாள் ` என்றது தமக்குத் திருமணம் தொடங்கிய நாளினை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்
தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும் , மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும் , தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து , உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` நல்வெண்ணெய்நல்லூர் ` என்புழி நன்மை , நடுவு நிலைமையைக் குறித்தது . ` நடுக்கங் கண்டார் ` என்றது ` அஞ்சுவித்தார் ` என்னும் பொருளதாய் , ` உமையை ` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊர்அணி நாவலூர்என்
றோதநற் றக்கவன் றொண்டன்ஆ
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே.

பொழிப்புரை :

முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும் , நமக்கு உரிய ஊரும் , நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு , விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு , நல்ல தகுதியை உடையவனும் , ` வன்றொண்டன் ` என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும் , கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும் .

குறிப்புரை :

` நமக்கு ஊர் ` என்றது , சுந்தரர் அவதரித்த ஊராதல் பற்றி . ` நரசிங்கமுனையரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செய்யும் ஊர் ` என்றமையால் , நரசிங்கமுனையரையருக்கு வழிபடுதலம் திரு நாவலூராய் இருந்தமை பெறப்படும் . நாயனார் இத்திருப்பதிகத்தில் தமது வரலாற்றினை இனிது விளங்க வைத்து அருளிச் செய்தது , நரசிங்கமுனையரையர் வரலாறு , தமது வரலாறு முதலிய பலவற்றையும் அனைவரும் உணர்தற்பொருட்டே என்பது ` என்று ஓத உரைத்த தமிழ் ` என்பதனால் நன்கு விளங்கும் . காதலித்துக் கேட்டல் , அன்பு மாத்திரையால் கேட்டல் ; கற்றுக் கேட்டல் , பொருளை இனிதுணர்ந்து கேட்டல் . ` அறும் ` என்னும் பண்பின் தொழில் , ` வினை ` என்னும் முதலொடு சார்த்தி முடிக்கப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு
மாகச்சிந் திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண்
துருத்திஎங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

ஆராயுங்கால் எங்கள் தலைவர் , பிறத்தலும் இல்லை ; பின்பு வளர்ந்து முதுமை அடைதலும் இல்லை ; முடிவில் இறந்தொழிதலுமில்லை ; உறைவிடம் காட்டிடத்துள்ளது ; அதுவன்றி ஊர்களுள் தமக்கு உரித்தாகக் காப்பது திருவேள்விக்குடியும் , தண்ணிய திருத்துருத்தியும் , அன்றியும் அரைக்கண் இறுகக் கட்டுவது பாம்பு ; இவற்றை முன்பே அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தேயிருப்பேம் . இவற்றை அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தொழிவேமோ !

குறிப்புரை :

` அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே ` என்னும் இறுதித் தொடர்க்கு யாண்டும் இவ்வாறே இருபொருளுங் கொள்க . இதன்கண் உள்ள ஏகாரம் முதற் பொருட்குத் தேற்றமாயும் , இரண்டாவது பொருட்கு எதிர் மறுக்கும் வினாவாயும் நிற்கும் . முதற் பொருள் பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தும் குறிப்பையும் , இரண்டாவது பொருள் அதனைச் செவ்வனே புலப்படுத்தும் வெளிப் படையினதாயும் நிற்கும் . ` மூப்பதுமில்லை ` முதலிய மூன்றும் உலகத்தோடு ஒட்டாமையைக் குறிப்பனவாய் பழித்தல் போறற்கு உரியவாம் . ` வேள்விக்குடி ` என்பது ` உழவு , வாணிபம் முதலியன செய்யுங் குடிகள் வாழும் ஊரன்று ` எனவும் , ` துருத்தி ` என்பது , ` ஆற்றிடைக் குறை ` எனவும் பொருள் தந்து அவ்வாறு நிற்கும் ; ஏனைய அவ்வாறாதல் வெளிப்படை . ` மூப்பதும் இல்லை ` முதலிய மூன்றனுள் ஒன்றே அமைவதாக , ஏனையவற்றையும் மிகுத்தோதியது . பிறர் எல்லாரும் அவற்றை உடையராதலை வலியுறுத்தற்கு . சேர்ப்பு - சேர்ந்து வாழும் இடம் ; அது , பகுதிப் பொருள் விகுதி . ` காட்டகத்தது ` என்பது , குறைந்து நின்றது . ` காப்பது ` என்பது தனித்தனி இயையும் . ` கோன் ` என்றது , பன்மை ஒருமை மயக்கம் . ` தலைமேல் ஆர்ப்பது ` என்பதும் பாடம் . ` பிறத்தல் , பின்பு வளர்ந்து மூத்து இறத்தல் இவற்றையுடையோர் உயிர்த் தொகுதியுட் சேர்ந்தோர் ` என்பதும் , ` இவை இல்லாதவனே இறைவன் ` என்பதுமே , ` இறைவன் யார் ? உயிரினத்தவர் யாவர் ? எனப் பிரித்தறிதற்குரிய வேறுபாடுகளாகும் . ஆகவே , இத் திருப்பாடலிற் செம்பொருள் கொள்ளுங்கால் , ` பிறப்பிறப்பு இல்லாத இறைவர் இவரே என்பதை நன்கறிந்தோமாதலின் , நாம் இவர்க்கு ஆட்படாதொழிதல் எவ்வாறு ` எனக் கொள்க . கொள்ளவே , இவருக்கு ஆட்படாதார் , அவ்வாறொழிதற்குக் காரணம் அவரை மறைத்து நிற்கும் அறியாமையே ` என்பதும் , அவ்வறியாமை நீங்கிய வழி , அணைமுரிந்த நீர் கடலிற் சென்று கலத்தற்கும் , கயிறற்ற ஊசல் தரையைச் சார்தற்கும் யாதோர் இடையீடும் இல்லாமை போல இவர்க்கு ஆட்படுதற்கு யாதோர் இடையீடும் இல்லையாம் ` என்பதும் பெறப்படும் . ` சிவபிரானே இறைவன் ` என்பதனை இருபத்திரண்டு ஏதுக்கள் காட்டித் தெரிவிக்கப் புகுந்த அரதத்த சிவாசாரியாரும் , ` பிறப்பிறப்பாதி உயிர்க்குண மின்மையின் ` என்னும் ஏதுவைக் கூறினமைஈண்டு நினைவு கூரற்பாலது . இங்ஙனமே , இத் திருப் பாடலிலும் , வருகின்ற திருப்பாடலிலும் அருளப்பட்டவை சிவபிரானது இறைமைத் தன்மையைத் தெரிவிப்பனவாதல் அறிந்து கொள்க . ` எங்கோன் ` என்றதை வருகின்ற திருப்பாடல்களிலும் இயைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

கட்டக்காட் டின்னட மாடுவ
ரியாவர்க்கும் காட்சியொண்ணார்
சுட்டவெண் ணீறணிந் தாடுவர்
பாடுவர் தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த்
தோம்பி மறைபயில்வார்
அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் , இடரைத் தரும் காட்டிலே நடனம் ஆடுவார் ; யாராலும் காண்பதற்கு அரியவர் . சுடப்பட்ட வெள்ளிய சாம்பலைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களைச் செய்வார் ; வேதத்தைப் பலகாலும் பயில்கின்றவர்களாகிய அந்தணர்கள் , வட்டமாகிய குழியில் , தூயதாகிய நெய்யினால் எரியை வளர்த்துப் போற்றி , அதன்கண் பாகம் செய்த பொருள்களை ஏற்று உண்பார் ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` முன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்று ` ( தி .8 திருவா - திருச்சதகம் -4) என்றருளியதனால் , வேள்வியுள் ஊன் பாகம் பண்ணப் படுதல் இனிது பெறப்பட்டமையின் , ` அதனை உண்பார் இவர் ` எனப் பழிப்பாயிற்று . ` மறை பயில்வார் அட்டக்கொண்டு ` என்றதனால் , ` வேதமுதல்வரும் , வேள்வி முதல்வரும் ஆகியவர் ` என்பது அருளியவாறாயிற்று . ` அட்டக்கொண்டு ` என்புழிக் ககர ஒற்று , விரித்தல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பேருமோர் ஆயிரம் பேருடை
யார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்
பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமு
துண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் , பெயரும் தமக்குரியனவாக ஆயிரம் உடையவர் ; இவர் பெண்ணும் அல்லர் ; ஆணும் அல்லர் ; இவர்க்கு ஊரும் ஒற்றிஊரே ; அதுவன்றி வேறோர் ஊரை உடைய ராதலை நாம் அறிந்திலோம் ; இருண்ட கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உணவாக உண்டு , கண்டம் கறுப்பாயினார் ; இவர்க்கு ஆரமாவது , பாம்பே ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` பேருமோர் ஆயிரம் பேருடையார் ` என்றது , ` ஊரும் ஒற்றி ` என்றாற்போல , ` பேரும் ஒன்றிலர் ` எனப் பழிப்பாயிற்று . உம்மை , எச்சம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

ஏனக்கொம் பும்மிள வாமையும்
பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட் டிற்றொண்டர் கண்டன
சொல்லியுங் காமுறவே
மானைத்தோல் ஒன்றுடுத் துப்புலித்
தோஒல் பியற்குமிட்டி
யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் பன்றியின் கொம்பையும் , இளமையான ஆமையின் ஓட்டினையும் அணிந்து , ஒற்றை எருதின்மேல் ஏறுபவராய் , தம்மை அடியார்கள் காட்டில் கண்ட கோலங்களையெல்லாம் பலபடியாக எடுத்துச் சொல்லிய பின்பும் , விருப்பம் உண்டாக , மானினது அழகிய தோல் ஒன்றை அரையில் உடுத்து , தோளின் கண்ணும் புலித்தோலை இட்டு , உடம்பின் மேல் யானைத் தோலைப் போர்த்துக் கொள்பவர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

திருமால் கூர்மமாக வடிவங்கொண்ட சிலநாளிலே அதனை அழித்தமையின் ` இள ஆமை ` என்றார் . ` முற்றல் ஆமை ` ( தி .1 ப .1 பா .2) என்றது , செருக்கைக் குறித்ததென்க . ` கானக்காடு ` ஒருபொருட் பன்மொழி . ` காமம் உற ` என்பது , குறைந்து நின்றது . ` மானினது ஐத்தோல் ` என்க . ஐ சாரியை என்றலுமாம் . சிவ பிரானுக்கு மான்றோல் உண்மையும் திருமுறைகளில் சொல்லப்படுதல் காண்க . ` புள்ளி உழை மானின் தோளான் கண்டாய் ` - அப்பர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்
ஊரிடு பிச்சையல்லால்
பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்
ஏறியொர் பூதந்தம்பால்
பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ
றும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் நாவிற்குச் சுவைகள் பலவற்றை ஊட்டி உண்பதற்கு , ஊரவர் இடுகின்ற பிச்சையையன்றி மற்றோர் உணவையும் இலர் . ஒற்றை எருதைக் கயிற்றிற் கட்டி வைத்துக் கொண்டு , அதன் மேல் ஏறிச் செல்வர் . சிறிய பூதங்கள் தம்மிடத்தில் பாட்டு ஈதலைக் கேட்டு நின்று இன்பம் நுகர்பவராவர் . புற்றுக்கள் தோறும் சென்று பல பாம்புகளைப் பிடித்து ஆட்டிப் பிழைப்பர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` ஊட்டிக்கொண்டு ` என்றதில் , கொள் , அடித்துக் கொண்டான் என்பதுபோல , தற்பொருட்டுப் பொருண்மை விகுதி . ` ஓர் பூதம் ` என்றதில் , ` ஒன்று ` என்பது சிறுமை குறித்து நின்றது . ` பாட்டு ` என்பதன்பின் வந்த , ` ஈ ` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் , எதுகை நோக்கிக் குறுக்கலாயிற்று . தம் பெருமைக்கு ஏலாமை பற்றி , ` கொடுத்தல் ` என்னாது ` ஈதல் ` என்றார் . ` பாடிக்கொண்டு ` என்பது விரித்தலாயிற்று என்றலுமாம் . இப்பொருட்கு , உண்ணுதல் - பிழைத்தல் ; உண்பவர் - பிழைத்தற்கு ஏதுவாய் உள்ளவர் . ` ஆட்டிக் கொண்டு ` என்பது , ஒரு சொல் நீர்மைத்து .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

குறவனார் தம்மகள் தம்மக
னார்மண வாட்டிகொல்லை
மறவனா ராய்அங்கோர் பன்றிப்பின்
போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியா
ராய்அங்கோர் சோர்வுபடா
அறவனா ராவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர்தம் புதல்வர்க்கு மனைவி , ஒரு குறவர் மகள் ; இவரும் கொல்லும் தொழிலையுடைய வேடுவராய் முன்பு ஒரு பன்றிப்பின் சென்றார் ; இவை மாயமாம் . இவர் இப் பெற்றியரான இறைவரும் , முன்னவரும் , ஒளி வடிவினரும் , அறவரும் ஆவதை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` மாயம் ` என்றதற்கு , ` வஞ்சனையாய்ப் பொருந்தாச் செயலாம் ` என்றும் , ` அருள் நாடகமாம் ` என்றும் இரு பொருளும் கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பித்தரை ஒத்தொரு பெற்றியர்
நற்றவை என்னைப்பெற்ற
முற்றவை தம்மனை தந்தைக்குந்
தவ்வைக்குந் தம்பிரானார்
செத்தவர் தந்தலை யிற்பலி
கொள்வதே செல்வமாகி
அத்தவ மாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

என்னைப் பெற்ற நற்றாயும் , வயது முதிர்ந்த அவள் தாயும் , இவ் விருவர்க்கும் அன்னை , தந்தை , தமக்கை என்பவரும் ஆகிய எல்லோர்க்கும் இறைவராய் உள்ள இவர் . பித்தரைப் போன்ற ஒரு தன்மை உடையராய் இருக்கின்றார் ; அன்றியும் , இறந்தவர் தலை யோட்டில் பிச்சை ஏற்பதே செல்வமாக , அன்னதொரு தவமுடைய ராதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` அவ்வை ` என்பன , ` அவை ` என இடைக்குறையாய் வந்தன . ` நற்று அவை , முற்று அவை ` எனப் பிரிக்க . ` அன்னை தந்தை ` என்பன பன்மை யொருமை மயக்கம் . ` அனை ` என்பதும் இடைக் குறை . தாய் வழியையே அருளியது , ` எம்பரந்துபட்ட கிளைகள் பலவற்றிற்கும் இவரே இறைவர் ` என்பது உணர்த்தற்கு . ` தவ்வை ` என்றதற்கு , அவள் வாழ்க்கைப்பட்ட குடியையும் , ஏனையோர்க்கும் அவர் பிறந்த குடியையும் கொள்க . இவர் வழியை எல்லாம் கூறவே , தம் வழிக்கு இறைவராதல் சொல்லவேண்டாவாயிற்று . ` ஆகி ` என்றது , உடைமையின் வினை உடையதன்மேல் நின்றவாறு . ` செல்வமாகில் ` என்பது பிழைபட்ட பாடம் . ` தவம் ` என்றதற்கு , பழிப்புப் பொருளில் , ` தவப்பயன் ` என்றும் , புகழ்ச்சிப் பொருளில் , ` தவக் கோலம் ` என்றும் கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

உம்பரான் ஊழியான் ஆழியான்
ஓங்கி மலர்உறைவான்
தம்பர மல்லவர் சிந்திப்
பவர்தடு மாற்றறுப்பார்
எம்பர மல்லவர் என்னெஞ்சத்
துள்ளும் இருப்பதாகி
அம்பர மாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

` இந்திரன் , உருத்திரன் , மால் , அயன் , என்னும் இவர்கள் அளவில் உள்ளரல்லர் என்றும் , ` தம்மை நினைப்பவரது மனக்கவலையைப் போக்குபவர் எம்மளவல்லவர் ` என்றும் சொல்லப்படுகின்ற இவர் , என் மனத்திலும் இருத்தலுடையவராய் வேறு வெளியாதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` இருப்பதாகில் ` என்பது பிழைபட்ட பாடம் . ` அம்பரம் ` என்றதற்கு , ` அருவப்பொருள் ` எனவும் , ` பரவெளி ` எனவும் இருபொருள் கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

இந்திர னுக்கும் இராவண
னுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மாமறை
பாடுவர் மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முக
னும்முட னாய்த்தனியே
அந்தரஞ் செல்வ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் தேவர் கோமானாகிய இந்திரனுக்கும் , அரக்கர் கோமானாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தார் . அந்தணர்க்குரிய மந்திரம் ஓதுதல் , மறைபாடுதல் என்பவற்றையும் , வேடர்க்குரிய மான் கன்றைப் பிடித்தலையும் உடையவர் . ` மால் , அயன் ` என்னும் இருவரும் உடனாயிருப்ப , அவரொடு நிற்றலேயன்றி , தாம் மட்டும் தனியே உயர்ந்தும் செல்வர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

இவை அனைத்தும் , பழிப்பும் புகழும் ஆதல் அறிந்து கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

கூடலர் மன்னன் குலநாவ
லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி
யார்க்கடி மைவழுவா
நாடவல் லதொண்டன் ஆரூரன்
ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்
திருப்பது பண்டமன்றே.

பொழிப்புரை :

பகைவர்க்கு அவர் வணங்கும் அரசனும் , மேன்மை பொருந்திய திருநாவலூர்க்குத் தலைவனும் , நன்மையை யுடைய தமிழைப் பாடவல்ல சிவனடியார்க்கு அடிமை வழுவாது செய்யுமாற்றால் அப்பெருமானை அடைய எண்ணுகின்றவனும் ஆகிய நம்பியாரூரன் , தன் தலைவனுக்கு ஆட்படுதல் இவ்வாறெனச் சொல்லி இப்பதிகத்தைப் பாடவல்லவர் , மேலான உலகத்தில் சென்று தங்குதல் பொருளன்று . ( மிக எளிதாம் )

குறிப்புரை :

நரசிங்கமுனையரையர்க்கு மகன்மையுற்றமைபற்றி, `கூடலர் மன்னன்` என்று அருளினார். `வழுவாது` என்பது, ஈறு கெட்டு நின்றது. `ஆட்படுமாறு` என்றது, `இன்ன தன்மையுடையார்க்கு ஆட்படோம்` என்றும், `இன்ன தன்மையுடையார்க்கு ஆட்படுவோம்` என்றும் இருபொருளும் அருளிப்போந்தமையை.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

அற்றவ னாரடி யார்தமக்
காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபரர் என்று
பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்
ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

பிற பற்றுக்களின்றித் தம் அடியையே பற்றும் அரிய அடியவர்க்குத் தாமும் அவர்க்கு அருளுதலையன்றி வேறு செயலற்றவராய் இருப்பவரும் , பெண்ணொரு பாகத்தராகின்ற பற்றினை உடைய வரும் , ` எம் இறைவர் ` என்று பலராலும் விரும்பப் படுகின்ற தலைவரும் , பகைவருடைய ஊரினை , பெரிய , கொடிய அம்பினால் அழித்த வரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே .

குறிப்புரை :

` அற்றவன் ` முதலிய , வினைப்பெயரும் வினைக் குறிப்புப் பெயருமாகிய நான்கும் , உயர்வு குறித்த ஆர் விகுதி ஏற்றன . ` அடியார் தமக்கு ` என்ற நான்காவது , கிழமைப் பொருட்கண் வந்தது . பராபரர் - மேன்மையும் கீழ்மையும் ஆகிய எல்லாமாய் இருப்பவர் . ` நம் திருநின்றியூர் ` என்றது , தமக்குப் புகழ் பொருளாய் நின்ற உரிமை பற்றி என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்
ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர் போற்றும்எம்
புண்ணியத்தார்
நேசத்தி னால்என்னை ஆளுங்கொண்
டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

மணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்த வரும் , அழகிய திருநீற்றைப் பூசுதலுடையவரும் , சீகாழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற புண்ணிய வடிவினரும் , அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும் , நீண்ட பெரிய கடல் சூழ்ந்த உலகத்தை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றியூரே .

குறிப்புரை :

` வாசத்தின் ஆர் ` என்புழி இன் , வேண்டாவழிச் சாரியை . பூசம் , அம்மீற்றுத் தொழிற் பெயர் . ` ஆளும் ` என்னும் உம்மை , சிறப்பு . ` தேசம் ` என்றது , உலகத்தை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

அங்கையின் மூவிலை வேலர்
அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த
இடம்வளம் மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி
யுந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

அகங் கையில் மூவிலை வேலை ( சூலத்தை ) உடையவரும் , தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க , அவர்கள் தம் மனக்கலக்கத்தை நீங்குமாறு அருள் சுரந்து , பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவர் , உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளியிருக்கின்ற இடம் , வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண் செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே .

குறிப்புரை :

` பாகர் ` என்னும் வினைக்குறிப்பு முற்று எச்சமாயிற்று . ` மகிழ்ந்த ` என்றது , தன் காரியத்தையும் தோற்றுவித்து நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

ஆறுகந் தார்அங்கம் நான்மறை
யார்எங்கு மாகிஅடல்
ஏறுகந் தார்இசை ஏழுகந் தார்முடிக்
கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந்
தார்பரி சாந்தமதா
நீறுகந் தார்உறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்த வரும் , நான்கு வேதங்களையும் உடையவரும் , எவ்விடத்தும் நிறைந்து நின்று , வெல்லுதலை உடைய எருதை விரும்பி ஏறுபவரும் , ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும் , கங்காதேவியைச் சிறப்பாக விரும்பித் தலையில் மறைத்து வைத்திருப்பவரும் , அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும் , பூசிக்கொள்கின்ற சாந்தமாக திருநீற்றை விரும்புகின்ற வரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரே .

குறிப்புரை :

` உகத்தல் ` பலவும் , அவற்றின் காரியத்தைத் தோற்று வித்தன . உமையம்மையை இடப்பாகத்தில் வைத்தமை பொதுவாக உயிர்கட்கு அருள்புரிதலையும் , கங்கையை முடியில் தாங்கியது , சிறப்பாகப் பகீரதனுக்கு அருள்புரிந்தமையும் உணர்த்தலின் , ` முடிக் கங்கை தன்னை வேறுகந்தார் ` என்று அருளினார் . ` கங்கையிடத்துக் காதலை மிக உடையார் ` என்பது நயம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்
லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி
னார்அதி கைப்பதியே
தஞ்சங்கொண்டார்தமக் கென்றும்
இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

வஞ்சனையை உடையவரது மனத்திற் சேராத வரும் , ` நறுநெய் , தயிர் , பால் ` முதலிய ஆனஞ்சினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெருவிருப்புடையவரும் , திருவதிகைப் பதியினையே தமக்கு என்றும் இருக்கையாகும்படி அதனைத் தஞ்சமாகக் கொண்ட வரும் , தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றி யூரே .

குறிப்புரை :

` பால் ` என்றதன் ஈற்றில் , ` முதலிய ` என்பது தொகுத்தலாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஆர்த்தவர் ஆடர வம்மரை
மேற்புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல்
வெம்புலால் கையகலப்
பார்த்தவர் இன்னுயிர் பார்படைத் தான்சிரம்
அஞ்சிலொன்றைச்
சேர்த்தவ ருக்குறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

அரையில் புலியினது பசுந்தோலையும் , ஆடுகின்ற பாம்பையும் கட்டியவரும் , உடம்பில் யானையின் தோலைப் போர்த்தவரும் , அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு செய்து கொண்டவரும் , பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய பிரம தேவனது தலைகள் ஐந்தில் ஒன்றைத் தம் கையில் வைத்துக்கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் திருநின்றி யூரேயாகும் .

குறிப்புரை :

` சேத்தவர் ` எனப் பாடம் ஓதி , ` சேதித்தவர் ` என்பது குறைந்து நின்றதாக உரைப்பாரும் உளர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

தலையிடை யார்பலி சென்றகந் தோறுந்
திரிந்தசெல்வர்
மலையுடை யாள்ஒரு பாகம்வைத்
தார்கற் றுதைந்தநன்னீர்
அலையுடை யார்சடை எட்டுஞ்
சுழல அருநடஞ்செய்
நிலையுடை யார்உறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

தலை ஓட்டிற் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மையை உடையசெல்வரும் , மலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒருபாகத்தில் வைத்த வரும் , மலையின்கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது அலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டுத் திசைகளிலும் சுழலுமாறு அரிய நடனத்தைச் செய்கின்ற நிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரேயாம் .

குறிப்புரை :

` பலி ` என்புழி , நான்கனுருபு விரிக்க . ` கல் துதைந்த ` என்றது , ஆற்றின் இயல்பை விரித்தவாறு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

எட்டுகந் தார்திசை யேழுகந்
தார்எழுத் தாறுமன்பர்
இட்டுகந் தார்மலர்ப் பூசைஇச் சிக்கும்
இறைவர்முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக்
காய்ந்து பலியிரந்தூண்
சிட்டுகந் தார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

திசைகள் எட்டினையும் , ஏழ் எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும் , மனம் அடங்கப்பெற்ற அன்பர்கள் விரும்பியிடுதலால் நிறைந்த மலர்களையுடைய வழி பாட்டினையும் முன்னொருநாள் நிலத்தின்கண் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அங்ஙனம் ஆமாறு வெகுண்டமையோடு , பிச்சை யேற்று உண்ணுதலை உடைய ஒழுக்கத்தினையும் விரும்பு கின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றியூரே .

குறிப்புரை :

ஆறுதல் - அடங்குதல் . ` உகந்து இட்டு ஆர் மலர் ` என்க . ` இடுதலால் ` என்பது , ` இட்டு ` எனத் திரிந்து நின்றது . ஊண் , முதனிலை திரிந்த தொழிற்பெயர் . சிட்டம் என்பது , ` சிட்டு ` எனக் குறைந்து நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

காலமும் ஞாயிறு மாகிநின்
றார்கழல் பேணவல்லார்
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப்
பார்அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன்
மந்திரத் தால்வணங்க
நீலநஞ் சுண்டவ ருக்கிட
மாந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

காலமும் , அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும் , தமது திருவடியையே அன்போடு பற்றவல்ல அடியவர்களது நோன்பினையும் , செயல்களையும் கண்டு அவர்களை விரும்பு கின்றவரும் , நீலநிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு , அவரது திருவடிகளை அவ்வடியவர்கள் துதி செய்யவும் ` திருமால் , பிரமன் , இந்திரன் ` முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும் , திருநின்றியூரே இடமாய் நிற்கும் .

குறிப்புரை :

சீலம் - ஒழுக்கம் . அஃது அதற்கு அடியாகிய நோன்பின் மேல் நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

வாயார் மனத்தால் நினைக்கு
மவருக் கருந்தவத்தில்
தூயார் சுடுபொடி ஆடிய மேனியர்
வானில்என்றும்
மேயார் விடையுகந் தேறிய
வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க் கணியவர்
ஊர்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

வாயார வாழ்த்தி , மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவர்க்கு உண்மைப் பொருளாகின்றவரும் , அரியதவக் கோலத்தை உடைய தூயவரும் , வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியிலே இருப்பவரும் , இடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டினை உடையவரும் , தம்மை அடையாதவருக்குச் சேய்மைக் கண்ணராகின்றவரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே .

குறிப்புரை :

` போந்தவர்க்கு ` என்பது பாடமன்று

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
யறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாய்இருந்
தானைத் திருநாவல்ஆ
ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல்
லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர
மன்னடி கூடுவரே.

பொழிப்புரை :

திரண்ட புகழையுடைய அடியார்களது தொண்டுகள் எந்நாளும் நீங்காதிருக்கின்ற திருநின்றியூரின் கண் சிறந்த வீடுபேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினனாகிய நம்பியாரூரன் பாடிய , பொருத்தமான இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர் , வினை நீங்கப் பெற்று , மண்ணுலகத் தவரும் , விண்ணுலகத்தவரும் வணங்கும் படி , சிவபெருமானது திருவடியை அடைவார்கள் .

குறிப்புரை :

` சீரும் ` என்பது , ` சீர் ` என்பது அடியாகப் பிறந்த பெயரெச்சம் . ` சிவகதி ` என்பது வாளா பெயராய் , ` வீடுபேறு ` என்னும் பொருளதாய் நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே , வாள்போலுங் கண்களை யுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன் ; வேறு யாரை வேண்டுவேன் ! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` நீள ` என்றது , ` கால எல்லை இன்றி ` என்னும் பொருள தாய் , இடைவிடாமையைக் குறித்தது . ` உமை ` என்பது பாடம் அன்று . ` அவள் ` பகுதிப் பொருள் விகுதி . மெலிதல் - மனந்தளர்தல் . ` குண்டையூர்க்கண் பெற்றேன் ` என்றது , ` அஃது என் இல்லத்திற்குச் சேய்த்தாகலின் , பெற்றும் பெறாதவனாய் உள்ளேன் ` எனக் குறை வெளிப்படுத்தியவாறு . மிகப் பெற்ற நெல்லினை , ` சில நெல் ` என்றது ; குறையிரப்பால் வந்த , இளிவரல் பற்றி . ` ஐய சிறிதென்னை ஊக்கி ` ( கலி -37.) என்றாற்போல்வன காண்க . பதினெண் கணங்கள் , முதலாகப் பலரை உடைமையின் , பொதுப்பட , ` பணி ` என்று வேண்டினார் . ` குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ` என்றதனை வருகின்ற திருப்பாடலினும் இயைக்க . ` ஆளிலை ` என்றதனை எல்லாத் திருப்பாடல்களிலும் உய்த்துக்கொண்டுரைக்க . இது முதலாக உள்ள திருப்பாடல்களில் , ` உனை ` என்றாற்போல ஓரசையாய் வருவன , கூன் . கூன் பயின்று வருதல் , இசைத்தமிழிற்கு இயல்பே . இவை களையும் கூன் இன்றி , முன்னவைபோல ஓதுவாரும் உளர் . அட்டுதல் - கொண்டுவருதல் . ( தமிழ் லெக்ஸிகன் ).

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

வண்டம ருங்குழலாள் உமை
நங்கைஓர் பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன் றெரி
செய்தஎம் வேதியனே
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே அவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

வண்டுகள் விரும்பும் கூந்தலையுடையவளாகி , ` உமை ` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே , பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எரித்த எங்கள் அந்தணனே , தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே , உலகெலாம் ஆகியவனே , அடியேன் குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; ஆதலின் , அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளை யிட்டருள் .

குறிப்புரை :

உமை நங்கையோர் பங்குடைமை , போக வடிவத்தையும் , புரமூன்றெரித்தமை , வேகவடிவத்தையும் , வேதியனாதல் , யோகவடிவத்தையும் குறித்தபடியாம் . ` உமை நங்கையோர் பங்குடையாய் ` என , ` நீயும் இல்லுடையை ஆதலின் , யான் வேண்டுவதன் இன்றியமையாமை அறிகுவை ` என்பதனைக் குறிப்பால் அருளினார் ; இதனை , வருகின்ற திருப்பாடல்களில் , வெளிப்படையாகவே அருளிச் செய்வார் . ` உலகியலை நிலைபெறுவிக்கின்றவனும் நீயேயன்றோ ` என்பது , இவற்றின் உள்ளீடாய பொருள் , ` திருக்கோளிலி எம் பெருமான் ` என்பதனை , வருகின்ற திருப்பாடல்களிலும் இயைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட
ருஞ்சடைக் கங்கை வைத்தாய்
மாதர்நல் லார்வருத்தம் மது
நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடைசூழ் குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , எல்லார்க்கும் முன்னவனே , யாவர்க்கும் மருட்கையைத் தரத்தக்க செயல்களைச் செய்ய வல்லவனே , நீ , உன் திருமேனியில் பாதியிற்றானே , ` உமை ` என்னும் ஒரு மாதராளை வைத்தாய் ; அது வன்றி , விரிந்த சடையின்கண் , ` கங்கை ` என்னும் மற்றொரு மாத ராளையும் வைத்தாய் ; ஆதலின் , நீயும் நற்பண்புடைய பெண்டிர் தம் வாழ்க்கை முட்டுற்றவிடத்து அடையும் வருத்தத்தினது தன்மையை நன்குணர்வாயன்றே ? அதனால் உன்னை வேண்டுகின்றேன் ; அடியேன் குற்றம் இல்லாத சோலைகள் புடைசூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` நீயும் அறிதியன்றே ` என்றது , ` நீயும் ஓர் இல் வாழ்க்கையன் ஆதலின் , அவ் வாழ்க்கையை உடைய என்னை நீ வெறுப் பாயல்லை என்று உன்னை வேண்டுகின்றேன் ` என்னும் குறிப்பினை உடையது . தலைவன்முன் நின்று இவ்வாறு கூறுதலின் , நகையு மாயிற்று . மேல் , ` உமை நங்கையோர் பங்குடையாய் ` என்றதும் , இனி அவ்வாறு வருவனவும் அன்ன .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

சொல்லுவ தென்உனைநான் தொண்டை
வாய்உமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத்தாய்க் கொரு
பூசல்செய் தார்உளரோ
கொல்லை வளம்புறவிற் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அல்லல் களைந்தடியேற் கவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல வேண்டுவது என் உளது ? நீ , கொவ்வைக்கனிபோலும் வாயினையுடைய , ` உமை ` என்னும் நங்கையை முன்பு மணந்து , பின்பு இடப்பாகத்திலே வைத்தாய் ; அது காரணமாக உன்னை ஒரு தூற்றுதல் செய்தார் எவரேனும் உளரோ ? இல்லை ஆதலின் , எனக்கு நீ என் இல்வாழ்க்கைக்கு உரியதனைச் செய்தாலும் உன்னைத் தூற்றுவார் ஒருவரும் இல்லை . அடியேன் , சில நெற்களை , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலம் சூழ்ந்த குண்டையூரிற் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அடியேனுக்கு அந்த அல்லலை நீக்கி , அவற்றை அங்குச் சேர்த்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` உனை ` என்பது வேற்றுமை மயக்கம் . கொல்லை புன்செய் நிலம் . அவற்றின் வளம் வரகு முதலியன . ` வளப்புறவு ` என்பது மெலித்தலாயிற்று . இது , வருகின்ற திருப்பாடலிலும் , இறுதித் திருப்பாடலிலும் ஒக்கும் . ` குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ` என்றதனை , வரு கின்ற திருப்பாடலிலும் இயைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

முல்லை முறுவலுமை ஒரு
பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலையிற் பலி
கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புறவிற் றிருக்
கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியேற் கவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே , சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , அடியேன் , குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . ஆதலின் , அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி , அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

அயர்தல் - செயற்படுத்துதல் ; தோற்றுவித்தல் . அது சிரித்தலைக் குறித்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

குரவம ருங்குழலாள் உமை
நங்கைஓர் பங்குடையாய்
பரவை பசிவருத்தம் மது
நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில்சூழ் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய , ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே , பாம்பைக் கட்டியுள்ளவனே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்கவேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித்துன்பத்தையும் அறிவாயன்றே ? அவள் பொருட்டு , அடியேன் , குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள் பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` நயனுடையான் நல்கூர்ந்தானாதல் செயுநீர - செய்யா தமைகலா வாறு ` ( குறள் -219) என்பவாகலின் , பரவையார்க்குப் பசி யாவது , அடியவர் முதலாயினாரை வழிபட இயலாமையேயாம் என்க . ` நீயும் ` என்ற உம்மை , இங்கு ` யானேயன்றி ` என இறந்தது தழுவிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

எம்பெரு மான்உனையே நினைந்
தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழலாள் ஒரு
பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகைசூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அன்பது வாய்அடியேற் கவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையவளை ஒருபாகத்தில் விரும்பி வைத்துள்ளவனே , செம்பொன்னாலியன்ற மாளிகைகள் நிறைந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே , அடியேன் குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற்சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . எம் தலைவனாகிய உன்னையே எப்பொழுதும் நினைந்து துதிக்கும் தொழிலுடையேன் யான் ; வேறுயாரை வேண்டுவேன் ! என்னிடத்து அன்புடையையாய் , அவற்றை அங்குச் சேர்த்து உதவ . நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` அன்பது ` என்னும் ` அது `, பகுதிப் பொருள் விகுதி . ` அன்பு ` அதனை உடையான்மேல் நின்றது . வருகின்ற திருப்பாடலுள் , ` இரக்கம் ` என்பதும் அவ்வாறாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

அரக்கன் முடிகரங்க ளடர்த்
திட்டஎம் மாதிப்பிரான்
பரக்கும் அரவல்குலாள் பர
வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதிகொள் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
இரக்கம தாய்அடியேற் கவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

இராவணனது தலைகளையும் , கைகளையும் நெரித் திட்ட எங்கள் முதற்கடவுளே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே . அகன்ற அல்குலையுடையாளாகிய என் இல்லாள் பரவை தன் வாழ்க்கையை நடத்தமாட்டாது மெலிகின்றாள் ; அவள் பொருட்டு , அடியேன் , சோலைகளில் குரங்குக் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்ற குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; நீ இரக்க முடையையாய் , அடியேன் பொருட்டு அவற்றை அங்குச் சேர்த்து உதவ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

இராவணனை ஒறுத்தமையை அருளிச் செய்தது , இறைவனது பேராற்றலை நினைந்து .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

பண்டைய மால்பிரமன் பறந்
தும்மிடந் தும்மயர்ந்தும்
கண்டில ராய்அவர்கள் கழல்
காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே யவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

முற்காலத்திலே உன் அளவைக்காணப் புகுந்த திருமாலும் பிரமனும் அன்னமாய் விண்ணிற்பறந்து ஓடியும் , ஏனமாய் மண்ணைப் பிளந்து நுழைந்தும் தங்களால் ஆமளவும் முயன்றும் அதனைக் காணாதவர்களேயாக , இன்றும் நின் திருவடி அவர்களால் காணுதற்கு அரிதேயாய கடவுளே , தெளிந்த அலைகளையுடைய நீரை யுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளி யிருக்கின்ற எம்பெருமானே , எல்லா உலகமும் ஆனவனே , அடியேன் , குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்த்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` பண்டையமால்பிரமன் ` என இன்றுள்ளாரின் வேறு போல அருளியது அக்காலத்துக்கொண்ட முயற்சிபற்றி . இனி , அவர் தாம் இன்றுள்ளார்போல் அன்றி வேறு நிலையினராய் இருந்தனர் என்பது நயம் . ` திருவடி ` என்னும் ஒருமைபற்றி . ` அரிது ` என அருளினார் . ` அரிதாயபிரான் ` எனச் சினைவினை முதலொடு முடிந்தது . இனி , துவ்வீறு பண்புணர்த்த , அப்பெயர் , அதனை உடையான்மேல் நின்றதெனலுமாம் . ` ஆய் ` என்றதனை ` ஆ ` எனத்திரிக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

கொல்லை வளம்புறவிற் றிருக்
கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவுந் திரு
நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்
தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர்
வானுல காள்பவரே.

பொழிப்புரை :

கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை , நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான் , தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி , மனம் பொருந்திப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் பாடவல்லவர் , இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி , அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள் .

குறிப்புரை :

` எம்பெருமான் யான் வேண்டின் அருளாதொழியான் ` என்னுந் தெளிவினாற் பாடியன இவை என்பார் , ` நினைந்தேத்திய பத்து ` என்று அருளினார் . ` இவற்றை வல்லார் ` எனவே , ` அத்தெளி வோடே இவற்றைப் பாடுதல் வல்லார் ` என்றதாயிற்று . ` அண்டர்க்கு வானுலகு ` என்க . அது சிவலோகம் . அதனை ஆளுதலாவது , ஆண்டுள்ள தூய இன்பங்களை வேண்டியவாறே துய்த்தல் . இவ் வாறன்றி ` அண்டர் ` என்றது , வாளா பெயராய் நின்றது எனக் கொண்டு , ` தேவரது வானுலகத்தை ஆள்பவர் ` என்றுரைப்பிற் சிறவாமை யறிக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

நொந்தா வொண்சுடரே நுனை
யேநி னைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய்
மனமேபு குந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திரு
மேற்ற ளிஉறையும்
எந்தாய் உன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.

பொழிப்புரை :

அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே , என் தந்தைக்கும் பெருமானே , கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே , என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய் ; ஆதலின் , இனி அடியேன் உன்னை யன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் .

குறிப்புரை :

` நுந்துதல் - தூண்டுதல் . அதுவே , நொந்துதல் என மருவிற்று ` என்றலும் ஆம் . சுடர் , உவமையாகுபெயர் . பின் இவ்வாறு வருவனவும் அவை . ` நின் , உன் ` என்பனவேயன்றி , ` நுன் ` என்பதும் திருமுறைகளில் உள்ளது என்பதை , ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க . ` சிந்தை ` என்பது , சிந்தையுள் நிற்கும் பொருளைக் குறித்தது . ` இனி ஏத்த மாட்டேனே ` என்றது , ` அந்நிலையில் திட்பம் எய்தப் பெற்றேன் ` என்றபடி . ஏகாரம் , தேற்றம் , அதனை எய்தியவாற்றை விளக்குவார் , ` வந்தாய் போயறியாய் ` என்று அருளினார் . ` நுனையே நினைந்திருந்தேன் ` என்றமையால் , முன்னரும் சுவாமிகள் அவ்வாறிருந்தமை பெறப்பட்டது . தளி , கோயில் . மேற்குப் பக்கத்தில் , இருத்தலால் ` மேற்றளி ` எனப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

ஆட்டான் பட்டமையால் அடி
யார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிற
வாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ் திரு
மேற்ற ளிஉறையும்
மாட்டே யுன்னையல்லால் மகிழ்ந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

பெருமையை யுடைய பல மாளிகைகள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் செல்வமாய் உள்ளவனே , அடியேன் உனக்கு அடிமையாயினமையால் , உன் அடியார்க்கு அடியனாகின்ற பேற்றைப் பெற்றேன் . அதனால் , உன்பால் அடியேன் வேண்டற்பாலன பலவற்றையும் வேண்டி , இறுதியாகப் பிறவாத நிலையை வேண்டியொழிந்தேன் . இனி , என் மகிழ்ச்சி மீதூர்வால் உன்னைப் புகழ்தலன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் .

குறிப்புரை :

` ஆள்தான் ` என்பதில் உள்ள ` தான் `, அசைநிலை , ` பட்டு ` என்றதும் , ` பட்டமையால் ` என்றபடியாம் . இறைவனுக்கு ஆட்பட்ட பின்னரே அத்தகையோராய அடியவரை அணுகுதல் கூடும் ஆகலின் , ` உனக்கு ஆட்பட்டமையால் உன் அடியார்க்குத் தொண்டு பட்டேன் ` என்றும் , அடியார்க்கு அடியராய பின்னரே அடிமை நிரம்பு தலாலும் , அது நிரம்பப்பெற்றவர் யாதொன்றனையும் பிறர்பால் சென்று இரத்தல் இன்மையானும் , ` கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன் ` என்றும் அருளினார் . ` உனக்கு , உன் ` என்பன சொல்லெச்சங்கள் . ` கேட்பது ` என்பது . பன்மையொருமை மயக்கம் ; ` கேட்பவெல்லாம் ` என்பதே பாடம் எனலுமாம் . ` ஒழிந் தேன் ` என்பது , ` விட்டேன் ` என்பதுபோல , துணிவுப் பொருளதாய் , ஒருசொல் நீர்மைப்பட்டு நின்றது . ` சேடு மாடு ` என்பன , எதுகை நோக்கி விரித்தல் பெற்று நின்றன . இனி , ` மாட்டு ` என்பது முதனிலைத் தொழிற் பெயராய் , ` வல்லுதல் ` எனப் பொருள்தந்து , அஃது , அதனைத் தரும் இறைவனுக்கு ஆயிற்று என்று உரைப்பினும் ஆம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

மோறாந் தோரொருகால் நினை
யாதி ருந்தாலும்
வேறா வந்தென்னுள்ளம் புக
வல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித் திரு
மேற்ற ளியுறையும்
ஏறே யுன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.

பொழிப்புரை :

அடியேன் ஓரொருகால் மயக்கம் உற்று உன்னை நினையாதிருப்பினும் , நீதானே வந்து என் உள்ளத்தில் புகுந்து நினைப்பிக்கவல்ல உண்மைப் பொருளானவனே . சேறு நிறைந்த குளிர்ந்த கழனிகளை யுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற ஆண் சிங்கம் போல்பவனே . இனி , அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் .

குறிப்புரை :

` மாழாந்து ` என்பதுபோல , ` மோறாந்து ` என்பது ஒரு சொல் என்பது , ஈண்டு அறியப்படுகின்றது . ` தனியாக ` எனப்பொருள் படும் , ` வேறாக ` என்பது , இங்கு , ` தானே ` என்னும் பொருளதாய் நின்றது . இறைவன் தானே வலிய வந்து தமக்குத் தன்னைக் காட்டி நின்றமையை , ஓலை காட்டி ஆண்டமை , திருவடி சூட்டி ஆண்டமை முதலியவற்றால் நன்கறிந்தாராதலின் , இவ்வாறு அருளிச்செய்தார் . இதனானே , இவைபோலும் நிகழ்ச்சிகள் பிறவும் சுந்தரர் பால் நிகழ்ந்தமை பெறுதும் . உள்ளத்தில் இவ்வாறு புகுவன பிறவும் உளவேனும் , அவையெல்லாம் பின்னர் நிலையாது நீங்குதலின் , அவ்வாறில்லாது என்றும் நீங்காது நிற்கும் இறைவனை , ` மெய்ப்பொருள் ` என்று அருளினார் . ` வந்தாய் போயறியாய் ` என முதற்கண் அருளிச் செய்ததும் இவ்வாற்றான் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

உற்றார் சுற்றமெனும் மது
விட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென் இட
ரைத்து றந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலுந் திரு
மேற்ற ளிஉறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

மூன்று மதில்களையும் அழித்தவனே , கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற துணையானவனே , அடியேன் , என்னோடு நெருங்கிய உறவினர் பலர் உளர் என்றும் , மற்றும் சுற்றத்தார் பலர் உளர் என்றும் நினைத்து , அவர்கள் தொடர்பிலே பட்டு , உய்ந்து போகமாட்டாது நிற்கின்ற அந்நிலையைத் துறந்து , உன்னையே புகலிடமாக அடைந்தேன் . அதனால் , இப்பொழுது , எத்தன்மையதான பொருளால் , என்ன குறை அடியேனுக்கு இருக்கின்றது ? ஒன்றும் இல்லை . என் துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிவிட்டேன் . ஆதலின் இனி , உன்னையன்றிப் பிறரைப் பணிந்து புகழ்தலைச் செய்யவே மாட்டேன் .

குறிப்புரை :

உற்றார் , ஒன்றாய் இயைந்தவர் ; அவர் மனைவியும் மக்களும் . சுற்றம் சூழ்ந்தவர் ; அவர் , ஏனையோர் . மனைவியும் , மக்களும் தாமே யன்றித் தம்மைச் சார்ந்தவராலும் பந்தம் உறுவிப்பர் என்பார் , இங்ஙனம் வகுத்தோதியருளினார் ; ` சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் ` என்றார் , மாணிக்கவாசகரும் ( தி .8 திருவம்மானை 20.) நுன் என்பது பற்றி , முதல் திருப்பாடற் குறிப்பிலே கூறப் பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

எம்மான் எம்மனையென் றவர்
இட்டி றந்தொழிந்தார்
மெய்ம்மா லாயினதீர்த் தருள்
செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா ஈருரியாய் கன
மேற்ற ளிஉறையும்
பெம்மான் உன்னையல்லால் பெரி
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

உடம்பு இடமாக வருகின்ற மயக்கமாயினவற்றை எல்லாம் நீக்கி , மெய்யுணர்வைத் தந்தருளுகின்ற மெய்ப்பொருளாய் உள்ளவனே , யானையை உரித்த தோலை உடையவனே , பெருமை பொருந்திய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற பெரியோனே , என்னைத் தாங்குகின்ற . ` என் தந்தை ` என்றும் , ` என் தாய் ` என்றும் சொல்லப்பட்டவர்கள் என்னை இங்குத் தனியே வைத்து விட்டு இறந்துவிட்டார்கள் ; ஆகவே , இனி , உன்னையன்றிப் பிறரை நான் பெரிய பொருளாக நினைத்துப் புகழவேமாட்டேன் .

குறிப்புரை :

துணையாவார் என்று துணியப்படுகின்றவருள் ஒருவரேனும் எஞ்ஞான்றும் எங்கும் உடனாய் நிற்பார் , இல்லை என்றற்கு அவருள் மேம்பட்டவராகிய தந்தை தாயரை எடுத்துக்காட்டி யருளினார் . ஆகவே , ` இறந்தொழிந்தார் ` என்றதன்பின் , ` இனி யாவர் தாம் என்னைத் தாங்குவார் ! ஆதலின் ` என்பது , இசையெச்சமாய் வந்து இயையுமாறு அறிக . ` நமக்குத் துணை தந்தை ` யென்றும் , ` தாய் ` என்றும் , மயங்குகின்ற மயக்கங்கள் எல்லாம் உடம்பு காரணமாக வாதலின் , ` மெய்ம்மால் ஆயின ` என்று அருளிச் செய்தார் . ` பெரிது ` என்றதன்பின் , ` ஆக நினைத்து ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

நானேல் உன்னடியே நினைந்
தேன்நி னைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்
தாய்என் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திரு
மேற்ற ளிஉறையும்
கோனே உன்னையல்லாற் குளிர்ந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

எனது ஒளி பொருந்திய விளக்குப் போன்றவனே , தேன் போன்றவனே , இனிய அமுதம் போன்றவனே , கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , நானோ எனில் , உன் திருவடியை அடைய நினைத்தேன் ; அங்ஙனம் நினைத்த அளவிலே நீ ஊன் பொருந்திய இவ்வுடலுள்ளே வந்து புகுந்துவிட்டாய் ; ஆதலின் , இத்தகைய பேரருளாளனாகிய உன்னையல்லது பிறரை அடியேன் உளங்குளிர்ந்து புகழவேமாட்டேன் .

குறிப்புரை :

` வேண்டுவார் வேண்டுவதை ஈயும் பேரருளும் , பேராற்றலும் உடைய பதியாகிய உனது பெருமையை அறிந்தேனாதலின் , அவை இல்லாத சிறுமையுடைய பசுக்களாகிய பிறரை யான் அடையேன் ` என்றபடி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கையார் வெஞ்சிலைநா ணதன்
மேற்ச ரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும் மெரி
யுண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத் திரு
மேற்ற ளிஉறையும்
ஐயா உன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

எம் பெருமானே , வயலின்கண் பரவியுள்ள பசிய தாமரைகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , நீ உன் கையின்கண் பொருந்திய கொடிய வில்லினது நாணின்மேல் அம்பைத் தொடுத்து , மூன்று மதில்களையும் தீ உண்ணும்படி எரித்தாய் ; ஆதலின் , உன்னையன்றிப் பிறரைத் தேவராக எண்ணிப் புகழவேமாட்டேன் .

குறிப்புரை :

` திரிபுரம் எரித்த வரலாற்றினால் ஏனைய எல்லாத் தேவரும் உனக்கு ஏவலராய்நின்று தாங்கள் நன்மை எய்தினமையை அறிந்தேனாகலின் , யான் உன்னையே தொழுவேன் ` என்றபடி . ` கையார் வெஞ்சிலைநாண் மேல்சரங் கோத்து ` என்ற விதப்பு , ` பிறரால் வளைத்துக் கொள்ளப்படாத வில்லில் , பிறரால் பூட்டப் படாத நாணில் , பிறரால் தொடுக்கப்படாத அம்பினைத் தொடுத்து ` என்பதனை விளக்கிநின்றது . ` ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ - ஒருகணை கொண்டு மூவெயிலுடற்றிப் - பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த - கறைமிடற் றண்ணல் ` ( புறம் -55.) எனச் சான்றோருங் கூறினார் . அது , பகுதிப் பொருள் விகுதி ; ஏகாரம் ; அசை நிலை . இனி ஏகாரத்தை வினாப்பொருளதாக்கி , ` சிலைநாணில் சரம் கோத்தோ எரியுண்ண எய்தாய் ? இல்லை ; சிரித்து எரியுண்ணச் செய்தாய் ` என உரைத்து , ` அதனால் , கரணத்தானன்றிச் சங்கற் பத்தாற் செய்பவன் நீ என அறிந்தேன் ` என்பது போந்த பொருளாக உரைப்பினும் ஆம் . ` ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற ` என்னும் திருவாசகமும் ( தி .8 திருவுந்தி -2.) இக் கருத்தே பற்றி எழுந்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

விரையார் கொன்றையினாய் விம
லாஇனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உட
லில்உயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திரு
மேற்ற ளிஉறையும்
அரையா உன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

நறுமணம் பொருந்திய கொன்றைமாலையை உடையவனே . தூயவனே , அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகளை யுடைய கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , அடியேன் . என் உடலில் உயிர் உள்ளவரையிலும் இனி , உன்னையன்றிப் பிறரை , ` தேவர் ` என்று என் நாவினாற் சொல்லவும் மாட்டேன் ; உன்னையன்றிப் பிறரை உயர்ந்தவராக மதித்துப் புகழவும் மாட்டேன் ; இது திண்ணம் .

குறிப்புரை :

` ஏத்தல் ` என்பது பின்னர் வருகின்றமையின் , முன்னர் வந்த உரைத்தல் , ஒருசொற் சொல்லலாயிற்று . ஆகவே , அதற்கு இவ்வாறுரைத்தல் பெறப்பட்டது . வலியுறுத்தற் பொருட்டு , ` உன்னை யல்லால் ` என்பதனைப் பின்னுங் கூறினார் . முன்னர் , ` நாவதனால் ` என , வேண்டா கூறியதும் அன்னது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

நிலையா நின்னடியே நினைந்
தேன்நி னைதலுமே
தலைவா நின்னினையப் பணித்
தாய்ச லமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திரு
மேற்ற ளிஉறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

சந்திர காந்தக் கற்கள் நிறைந்த பெரிய மதில் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற மலைபோன்றவனே . தலைவனே , அடியேன் , உனது திருவடியையே நிலைத்த பொருளாக உணர்ந்தேன் ; அவ்வாறு உணர்ந்த அளவிலே அவ்வாறே மாறாது என்றும் உன்னையே உணர்ந்து நிற்குமாறு எனக்கு உன் திருவருளைச் செய்தாய் ; அதனால் , அடியேன் , என் , துன்பமெல்லாம் ஒழிந்தவனாயினேன் ; ஆகவே , இனி அடியேன் , உன்னையன்றிப் பிறரை , மனம் மகிழ்ந்து புகழவேமாட்டேன் .

குறிப்புரை :

` நின்னையே ` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத் தலாயிற்று . ` சிலை ` என்பது , விதப்பினால் , உயர்ந்ததன் மேல தாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பாரூர் பல்லவனூர் மதிற்
காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற் றிரு
மேற்ற ளிச்சிவனை
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்டன்ஆ ரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவ
லோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

நிலம் முழுதும் ஆணை செல்கின்ற பல்லவனது அரசிருக்கை ஊராகிய , மதிலை உடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திரு மேற்றளியின்கண் உள்ள சிவபெருமானை , திருவாரூர்ப் பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய , தாள அறுதி பொருந்திய இப் பாடல்களைப் பாடவல்லவர் , சிவலோகத்தை அடைவார்கள் .

குறிப்புரை :

தடுத்தாட்கொண்டது திருவெண்ணெய்நல்லூரிலாயினும் , ` வருக ` என்று பணித்து மணம்புரிவித்து இருக்கச்செய்ததும் , அடியார்க்கு அடிமையாகச் செய்ததும் திருவாரூரிலாதலின் , நாயனார் , தம்மை , ` ஆரூரன் அடியான் ` என்று அருளினார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

முன்னவன் எங்கள்பிரான் முதல்
காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திரு
நீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறை
நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

எல்லார்க்கும் முன்னே உள்ளவனும் , தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும் , யாவரினும் தலையாயவனும் , அழகிய நீலகண்டத்தை உடையவனும் , என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும் , நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய் , எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` எங்கள் பிரான் ` என்பதைப் பெயர்தொறும் வைத்து ஓதினமையின் , அதனையும் , பொதுத் தன்மை நீக்கிச் சிறப்பிக்கும் பெயராகக் கொள்ளுதல் திருக்குறிப்பாதல் பெறப்படும் . ` பன்னிய எங்கள் பிரான் ` என்றதன்பின் , ` இருப்பது ` என்னும் சொல் சொல்லெச்சமாய் மறைந்து நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

அண்ட கபாலஞ்சென்னி அடி
மேல்அலர் இட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழு
தேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரை
யார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபிரானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ் வடிகளை வணங்கி , முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும் , வெண்மையான பிறையை அணிந்தவனும் , வெள்ளிய மழுவை ஏந்தியவனும் , பகைவர்மேல் விரைதல் பொருந்திய , ஒளியை யுடைய மூவிலை வேலை ( சூலத்தை ) உடைய , ` பண்டரங்கம் ` என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான் விரும்பி எழுந் தருளியிருக்கின்றதும் ஆகிய இடம் ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` அண்டம் ` என்றது திரட்சியையும் , ` கபாலம் ` என்றது தலையையும் குறித்தது . ` சென்னி , தொண்டு ` என்பன ஆகு பெயராய் அவற்றை உடையவரைக் குறித்தன . ` அவ்வடி ` எனவும் , ` அப்பண்டங்கன் ` எனவும் சுட்டுக்கள் வருவித்து உரைக்க . பரவுதல் முன்னிலையாகவும் , ஏத்துதல் படர்க்கையாகவும் துதித்தல் என்க . மழுவிற்கு வெண்மை , கூர்மையால் உண்டாவதாம் . மூவிலை அன்மொழித்தொகை . ` பண்டரங்கம் ` ஒருவகைக் கூத்து ; ` நீ பண்டரங்கம் ஆடுங்கால் ` ( கலி - கடவுள் வாழ்த்து ) அதனை உடையவன் பண்ட ரங்கன் . அஃது இடைக் குறைந்து , ` பண்டங்கன் ` என நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

ஆடுமின் அன்புடையீர் அடிக்
காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர் உம
ரோடெமர் சூழவந்து
வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்
தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

அன்புடையவர்களே , அன்புக் கூத்தினை ஆடுங் கள் ; தொண்டராய் உள்ளவர்களே , சிவபெருமானது திருவடிக்கு ஆட்பட்டவர்களது அடியில் உள்ள பொடியை எடுத்துத் தலைமேல் சூடிக்கொள்ளுங்கள் ; பத்தராய் உள்ளவர்களே , உம்மவரோடு எம் மவரும் சூழ ஒன்று கூடி , மனம் மெலிதற்குக் காரணமான இல் வாழ்க்கையில் கிடந்து வருந்தாமல் நன்கு சென்று , திருப்பழமண்ணிப் படிக்கரையைப் பாடுங்கள் .

குறிப்புரை :

உடையாரது ஆட்பட்ட தன்மையை உடைமைமேல் ஏற்றி , ` ஆட்பட்ட தூளி ` என்றார் . ` வாழ்க்கை தன்னை ` என்றது வேற்றுமை மயக்கம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

அடுதலை யேபுரிந்தான் அவை
அந்தர மூவெயிலும்
கெடுதலை யேபுரிந்தான் கிள
ருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலை யேபுரிந்தான் நரி
கான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

உலகத் தொகுதியை அழித்தலை விரும்பினவனும் , வானத்தில் திரிந்த மூன்று மதில்கள் கெட்டொழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும் , நரி உமிழ்ந்த எச்சிலாகிய , வெண்மையான , அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் , ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` கெடுதலையே புரிந்தான் ` என்பதில் உள்ள புரிந்தான் , முற்றெச்சம் . ` நரி கான்றிட்ட எச்சில் ` என்பது இன அடை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

உங்கைக ளாற்கூப்பி உகந்
தேத்தித்தொழு மின்தொண்டீர்
மங்கையொர் கூறுடையான் வா
னோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன் அலை
யார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

தொண்டர்களே , உமையை ஒரு கூறில் உடையவனும் , தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும் , அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும் , கொல்லுதல் பொருந்திய ஒளியை யுடைய முத்தலை வேலை ( சூலத்தை ) ஏந்திய , தாமரை மலர்போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப்படிக்கரையை விரும்பித் துதித்து உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள் .

குறிப்புரை :

` கைகளால் தொழுமின் ` என இயையும் . ` கூப்பி ` என்பது இடைப் பிறவரல் . அலை , ` அலைத்தல் ` என முதனிலைத் தொழிற்பெயர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

செடிபடத் தீவிளைத்தான் சிலை
யார்மதிற் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை எரு
தேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்றன்னைக் கறுத்
தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

கற்கள் பொருந்திய கோட்டைகளில் தீமை உண்டாகத் தீயை எழுவித்தவனும் , நல்ல புனங்களில் மேய்வதாகிய , தனது கொடியிற் பொருந்திய வலிய எருதாகிய ஆனேற்றை ஏறுதற்கு ஊர்தியாகவும் கொண்டவனும் , பாதத்தால் கொடிய வலிய காலனைக் காய்ந்தவனும் , செவ்விய பவளம் போலும் திருமேனியை உடையவனும் , பாசுபத வேடத்தனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப் பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` மதில் ` என்றது திரிபுரத்தை . ` செம்புனஞ்சேர் ` என்றது இன அடை . ` வெள்ளை எருது ` என்பது ஒருசொல் தன்மைத்தாய் , ` ஏறு ` என்பதனைப் பொதுமை நீக்கிச் சிறப்பித்தது , ` இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் ` ( தொல் . சொல் .159) என்றாற்போல . ` ஏற்றையும் ` என்னும் உம்மை மாற்றி உரைக்கப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயி
லாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்
கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால் வேத
கீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

அரக்கனும் , தேரைச் செலுத்திக்கொண்டு சென்று , அதனைத் தடுத்தலால் சினங்கொண்டவனாய்க் கயிலாயமாகிய நல்ல பெரிய மலையை எடுத்தவனும் ஆகிய இராவணனது பத்து வாய்களும் பத்துத் தலைகளில் பொருந்தியிருந்து அலறும்படி ஆக்கியவனும் , பின்பு அவன் கை நரம்பாகிய வீணையால் வேதத்தொடு கூடிய இசைகளைப் பாட , அவனை நலத்திற் பொருந்தச் செய்தவனும் , பால் போலும் வெள்ளிய திருநீற்றை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` அதனைத் தடுத்தலால் ` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` அலற விடுத்தவன் ` என்றது , ` அலறுதலில் விடுத்தவன் ` என்னும் பொருளது . ` படுத்தவன் ` என்புழி , ` நலத்தில் ` என்பது வருவிக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

திரிவன மும்மதிலும் மெரித்
தான்இமை யோர்பெருமான்
அரியவன் அட்டபுட்பம் மவை
கொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும் மடி
யும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

இடம் பெயர்ந்து திரிவனவாகிய மூன்று மதில்களை எரித்தவனும் , தேவர்கட்குத் தலைவனும் , அடைதற்கு அன்புடைய திருமாலும் பிரமனும் அட்ட புட்பங்களால் திருவடியில் அருச்சித்தும் அடியும் முடியும் காணமாட்டாத அளவிறந்தவனும் , பாசுபத வேடத்தை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` திருமால் , பிரமன் ` என்னும் காரணக் கடவுளர் தாமும் , அருச்சித்தற்கு உரியவரேயன்றி , எஞ்ஞான்றும் அடி முடி காணுதற்கு உரியவர் அல்லர் என்பார் , இவ்வாறு ஓதியருளினார் . அட்ட புட்பங்களாவன :- ` புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவர்த்தனம் , பாதிரி , குவளை , அலரி , செந்தாமரை ` என்பன .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

வெற்றரைக் கற்றமணும் விரை
யாதுவிண் டாலமுண்ணும்
துற்றரைத் துற்றறுப்பான் துன்ன
ஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று கரு
தேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று பழி
பாவங்கள் தீர்மின்களே.

பொழிப்புரை :

மிகுந்த பற்றுக்களை அறுத்தற் பொருட்டு உடையில்லாத அரையினை உடையராதலைக் கற்ற சமணர் வேடத்திலே மனம் விரையாது நீங்கி , கீளொடு பிணைத்தலை உடைய கோவண ஆடையை அணிந்த தொண்டர்களே , நஞ்சினை உண்ணும் உணவுடையவரும் , எருதாகிய ஊர்தியை உடையவருமாகிய சிவபெருமானாரை அதுபோல்வனவற்றை நோக்கிப் பித்தரென்று இகழ்ச்சியாக நினையாதீர்கள் ; திருப்பழமண்ணிப்படிக்கரையுள் கோயில் கொண்டிருக்கும் அவரையே துணையாகப் பற்றிநின்று , பழிபாவங்களிலிருந்து நீங்குங்கள் .

குறிப்புரை :

` துற்றறுப்பான் ` என்புழித் துற்ற , மிகுதி ; அது , மிகுதியை யுடைய பற்றுக்களைக் குறித்தது . ` அறுப்பான் கற்ற அமண் ` என முன்னே கூட்டுக . ` கற்ற ` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று . ` வெற்றரை ` என்புழி நின்ற ககர ஒற்று , எதுகை நோக்கி வந்த விரித்தல் . ` கன்று அமண் ` எனப்பிரித்து , ` கன்று போலும் அமணர் ` என்று உரைப்பாரும் உளர் . ` அமண் ` என்பது , அமண் கோலத்தையே குறித்தது . ` அமணரும் ஆகாது , சைவரும் ஆகாது ` எனப் பொருள் தருதலின் , உம்மை எதிரது தழுவிய எச்சம் . ` விண்டு ` என்னும் எச்சம் , ` ஆடை ` என்புழித் தொக்குநின்ற , ` அணிந்த ` என்பதனோடு முடிந்தது . ` அமண் கோலம் ஒவ்வாது என வெறுத்து , வேறு தவக் கோலம் புனைந்த நீவிரும் சமணரைப் போலவே சிவபிரானைப் பித்தன் என்று இகழ்வீராயின் , யாதொரு நெறியும் இல்லாதவராவீர் ` என்பார் , இவ்வாறு அருளிச்செய்தார் . இகழ்வார் , மீமாஞ்சகர் முதலியோர் என்க . ` துற்றர் ` என்பதில் உள்ள துற்று , உணவு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப் பழ
மண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்
குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் மிடர்
கூருதல் இல்லையன்றே.

பொழிப்புரை :

பல உயிர்கள் வாழ்கின்ற தெளிந்த நீரையுடைய , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலத்தை , அக இதழ்களை யுடைய தாமரை மாலையை அணிந்த நம்பியாரூரன் புகழ்ந்து சொன்ன இத்தமிழ்ப் பாடலை இரவிலும் , நல்ல பகலிலும் சொல்லுதலும் கேட்டலும் வல்லராகின்ற அத்தன்மையார்க்கும் , அவரைச் சார்ந்து உற்றார்க்கும் , அவ்வுற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும் துன்பம் மிகுதல் இல்லை .

குறிப்புரை :

` வற்றாத யாறு மண்ணியாறு ` என்பதை , விளக்க ` பல்லுயிர் வாழும் தெண்ணீர்ப் பழமண்ணி ` என்று அருளினார் . தாமரை மலர்மாலை அந்தணர்க்கு உரியது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

செடியேன் தீவினையில் தடு
மாறக் கண்டாலும்
அடியான் ஆவஎனா தொழி
தல்த கவாமே
முடிமேல் மாமதியும் அர
வும்மு டன்துயிலும்
வடிவே தாம் உடையார் மகி
ழுங்கழிப் பாலையதே.

பொழிப்புரை :

திருமுடியின் மேல் , பெருமை பொருந்திய பிறையும் , பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர் , குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும் , ` அந்தோ ! இவன் நம் அடியவன் !` என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக் கழிப்பாலையில் , வாளா இருத்தல் தகுதியாகுமோ !

குறிப்புரை :

` ஆவா ( ஆஆ )` என்னும் இரக்கக் குறிப்பின் அடுக்கு , இறுதிக்கண் குறுகிநின்றது . ` கழிப்பாலை ` என்புழி அது , பகுதிப்பொருள் விகுதி . ` கழிப்பாலையதன்கண் ` என , இறுதிக்கண் தொக்க ஏழாவதை விரித்து , முன்னே , ` ஒழிதல் ` என்பதனோடு முடிக்க . ` மதியும் அரவும் உடன் துயிலும் முடியினையுடையவர் ` என்றது , வினைக்குக் காரணமான விருப்பு வெறுப்புக்களை உளவாக்கும் அறியாமையை நீக்கியருள்பவர் என்னும் குறிப்பினது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

எங்கே னும்மிருந்துன் னடி
யேன்உ னைநினைந்தால்
அங்கே வந்தென்னொடும் முட
னாகி நின்றருளி
இங்கே என்வினையை யறுத்
திட்டெ னையாளுங்
கங்கா நாயகனே கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக் கின்றவனே , நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால் , அங்கே வந்து என்னோடு கூடி நின்று , என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன் .

குறிப்புரை :

` கங்கா நாயகன் ` என்றது , ` எங்கள் சிவபெருமான் ` என்னும் அளவாய் நின்றது . அதன்பின் , ` நீ ` என்னும் எழுவாய் தொகுத்தலாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

ஒறுத்தாய் நின்னருளில் லடி
யேன்பி ழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையுந் நா
யேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம் மறி
யாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய் ; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும் , நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய் ; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தினாய் ; அதனால் , அவ்விடம் கரிதாயினாய் ; இவை உன் அருட்செயல்கள் .

குறிப்புரை :

ஒறுத்தது , நில உலகிற் பிறப்பித்தது , பொறுத்தது , வன்மை பேசியது முதலியவற்றை . ` இரண்டும் அருளினாலே ` என்றற்கு , அதனை இடைநிலையாக வைத்து அருளினார் . என்மாட்டுச் செய்த செயல்களும் தேவர்கள் பொருட்டுச் செய்ததுபோல்வதே என்பார் , நஞ் சுண்டமையை உடன் அருளிச் செய்தார் . ` பிழைத்தனகள் ` என்பதில் ` கள் `, ஒருபொருட் பன் மொழியாய் வந்த விகுதி மேல் விகுதி ; இஃது அஃறிணைக்கண் வகர ஐகார ஈற்றின்பின் வருதல் பெரும்பான்மை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

சுரும்பார் விண்டமல ரவை
தூவித் தூங்குகண்ணீர்
அரும்பா நிற்குமனத் தடி
யாரொடும் அன்புசெய்வன்
விரும்பேன் உன்னையல்லால் ஒரு
தெய்வம் என்மனத்தால்
கரும்பா ருங்கழனிக் கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , வண்டுகள் ஒலிக் கின்ற , அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி , பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்புசெய்வேன் ; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன் ; இஃது என் உணர்விருந்தவாறு .

குறிப்புரை :

` சுரும்பு ஆர் மலர் `, ` விண்ட மலர் ` எனத் தனித்தனி இயைக்க . ` சுரும்பு ஆர் ` என்பதனை , ` சுரும்பு ஆர்க்க ` என்றாக்கி , ` வண்டுகள் ஒலிக்க மலர்கின்ற ` என்று உரைத்தலுமாம் . ` விண்ட ` என்பது , ` விள்ளுந் தன்மை பெற்ற ` எனப் பொருள் தந்தது . ` அரும்பாநிற்கும் ` என்னும் பெயரெச்சம் , ` மனம் ` என்னும் காரணப் பெயர் கொண்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

ஒழிப்பாய் என்வினையை உகப்
பாய்மு னிந்தருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை
ஆவ ணம்முடையாய்
சுழிப்பால் கண்டடங்கச் சுழி
யேந்து மாமறுகிற்
கழிப்பா லைமருவுங் கன
லேந்து கையானே.

பொழிப்புரை :

நீர்ச் சுழிகளை , அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப் பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே , நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின் . என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய் ; பின் அது காரணமாக , என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய் ; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய் ; பின் அது காரணமாக , என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய் ; உன்னை ` இவ்வாறு செய்க ` எனக் கட்டளையிடுவார் யார் ?

குறிப்புரை :

பின்னர் , ` தெழிப்பாய் ` என்றதனால் , முன்னர் ` அள வளாவுவாய் ` என்றமை பெறப்பட்டது . ` கனலேந்து கையானே ` என்பது , ` சிவபெருமானே ` என்னும் பொருளதாய் நின்றது . இத்திருப் பாடலை , திருநாவுக்கரசர் அருளிச்செய்த ` ஓதுவித்தாய் ` என்னும் திருப்பாடலில் , ` நின் பணிபிழைக்கிற் புளியம்வளாரால் - மோது விப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே ` ( தி .4 ப .99 பா .1) என்னும் பகுதியோடு வைத்து உணர்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஆர்த்தாய் ஆடரவை அரை
ஆர்பு லியதள்மேற்
போர்த்தாய் யானையின்தோல் உரி
வைபு லால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினை
கள்ள வைபோகப்
பார்த்தாய் நுற்கிடமாம் பழி
யில்கழிப் பாலையதே.

பொழிப்புரை :

அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல் , ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே , யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே , உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே , உனக்கு இடமாவது , புகழையுடைய திருக்கழிப்பாலையே .

குறிப்புரை :

` அவை , அது ` பகுதிப் பொருள் விகுதிகள் , ` பார்த்தானுக்கிடமாம் ` என்பது பாடம் அன்று . ` பழி இல் ` என்றது , புகழுடைமையின் மேல் நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பருத்தாள் வன்பகட்டைப் பட
மாகமுன் பற்றியதள்
உரித்தாய் யானையின்தோல் உல
கந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் மிமை
யோர்க ளிடர்கடியுங்
கருத்தா தண்கழனிக் கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே , தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே . குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளி யிருப்பவனே , நீ முன்புயானையின் தோலைப் போர்வையாக விரும்பி , பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய் ; முப்புரங்களையும் எரித்தாய் ; இவை உனது வீரச் செயல்கள் .

குறிப்புரை :

` யானையின் தோலைப் படமாகப் பகட்டைப் பற்றி உரித்தாய் ` எனக் கூட்டி , ` ஆக ` என்றதன்பின் , ` விரும்பி ` என ஒரு சொல் வருவித்து உரைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

படைத்தாய் ஞாலமெலாம் படர்
புன்சடை யெம்பரமா
உடைத்தாய் வேள்விதனை உமை
யாளையொர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் தலை
பத்தொடு தோள்நெரியக்
கடற்சா ருங்கழனிக் கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே , உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே , கடலைச் சார்ந்த , கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , நீ , உலகம் எல்லாவற்றையும் படைத்தாய் ; தக்கனது வேள்வியை அழித்தாய் ; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய் ; இவை உன் வல்லமைகள் !

குறிப்புரை :

` எல்லாவற்றையும் ஆக்கவும் , அழிக்கவும் வல்லவன் நீ ` என்றபடி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

பொய்யா நாவதனாற் புகழ்
வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும் விளக்
கேயொத்த தேவர்பிரான்
செய்யா னுங்கரிய நிறத்
தானுந் தெரிவரியான்
மையார் கண்ணியொடும் மகிழ்
வான்கழிப் பாலையதே.

பொழிப்புரை :

பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும் , செம்மை நிறமுடைய பிரமனும் , கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக் கழிப்பாலையையே விரும்பி , மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான் .

குறிப்புரை :

பொய் கூறுதலாவது , மனத்தொடு படாது புகழ்தல் . ` தேவர் பிரான் ` என்றது , ` தேவ தேவன் ` என்றபடி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பழிசே ரில்புகழான் பர
மன்ப ரமேட்டி
கழியார் செல்வமல்குங் கழிப்
பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார் வா
னோருல காள்பவரே.

பொழிப்புரை :

பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும் , யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை , அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள் , தேவர் உலகத்தை ஆள்பவராவர் .

குறிப்புரை :

` சேர் ` என்றது , முதனிலைத் தொழிற் பெயர் . கழிக்கண் உள்ள செல்வங்கள் , சங்கு , முத்து முதலியன . ` கழியார் கழிப்பாலை ` என இயைத்துரைத்தலும் ஆம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` ஒருவரையும் நினையேன் ` என்பது குறிப்பெச்சம் . காதல் நிலைக்களனாக வந்த உவமைக்கண் , ` அன்னே `` எனப் பால் மயங்கிற்று . ` இப்பொழுது ` என்றது , ` உன்னால் மெய்யுணர்வைத் தரப் பெற்ற இப்பொழுது ` என்றவாறு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

கீளார் கோவணமுந் திரு
நீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலை
வாஎனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழ
பாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து , திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே , யாவர்க்கும் தலைவனே , வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே , திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , அடியேன் , உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன் ; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன் ? என்னை நீ ஏற்றுக்கொள் .

குறிப்புரை :

` கோவணமும் ` என்புழி , ` தற்று ` என்பது எஞ்சி நின்றது . ` திருநீறும் ` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று . இவ்வாறன்றி , ` கோவணமும் ` என்ற உம்மை வேறுவினை ஒடுவின் பொருளதாய் நின்றது எனலுமாம் . ` பூசி ` என்பது பெயர் ; விளியேற்று நின்றது . ` ஆளாய் நின்னையல்லால் ` எனவும் பாடம் ஓதுப .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

எம்மான் எம்மனையென் றனக்
கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்
தேஇறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திரு மழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே , எங்கள் தலைவனே , ` என் தந்தை என் தாய் ` என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார் ; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன் ; ஆதலின் , இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` எம் ` என்றது , தம்மைப்போல்வாரையும் உளப் படுத்தாகலின் , பால் வழுவின்றென்க . ` இப்பிறவி ` என இயைக்க . சுட்டு , பிறவியது இழிபினை உணர்த்திற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

பண்டே நின்னடியேன் அடி
யாரடி யார்கட்கெல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொட
ராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , வானுலகில் வாழ்பவனே , உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார் , அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டுவிட்டேன் ; உன்னோடாயினும் , உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன் ; ஆதலின் இனி , யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` பண்டு ` என்றது , தம்மை ஆட்கொண்ட காலத்தை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

கண்ணாய் ஏழுலகுங் கருத்
தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பர
மாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும் , அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும் , பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும் , எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே , நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , தலைவனே , இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` உலகு ` என்றது அவற்றில் உள்ள உயிர்களையும் , ` கண் ` என்றது அறிவையும் , ` கருத்து ` என்றது , கருதப்படுவதனையும் என்க . ` அண்ணால் ` என்பது , ` அண்ணா ` என மருவிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

நாளார் வந்தணுகி நலி
யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

அடியவர்கட்கு , முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற , திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , உனக்கு நான் ஆளாயினபின் , உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன் ? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின் , அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள் .

குறிப்புரை :

` நாள் ` என்றது , இறுதிநாளை ; அதனை இழிவு தோன்ற , ` நாளார் ` என்று அருளினார் . ` எனக்கும் இறுதி நாள் வாராமற் காப்பாய் ` என்பார் , ` மாளா நாளருளும் மாணிக்கமே ` என்று அருளினார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

சந்தா ருங்குழையாய் சடை
மேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை
யேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே , சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே , வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே , இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே , அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , என் தந்தையே , நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` தாங்கி ` என்றது பெயர் ; எச்சமாக்கின் , அது , ` பொடியாய் ` என்ற வினைக் குறிப்புப் பெயரொடு முடியும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

வெய்ய விரிசுடரோன் மிகு தேவர்
கணங்களெல்லாம்
செய்ய மலர்களிட மிகு
செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம் , நல்ல மலர்களை இட்டு வழிபட , அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே , இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , என் தலைவனே , அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` சுடரோன் ` என்புழி , ` முதலாக ` என்பது எஞ்சி நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

நெறியே நின்மலனே நெடு
மாலயன் போற்றிசெய்யும்
குறியே நீர்மையனே கொடி
யேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழ
பாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே , மலத்தாற் பற்றப்படாதவனே , நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே , நற்பண்புடையவனே , கொடிபோலும் இடை யினையுடைய உமாதேவிக்குக் கணவனே , மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , அறிவு வடிவானவனே , அடியேன் , இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

உயிர்களுக்கு அறம் பாவங்களை வகுத்து நடாத்துபவன் இறைவனே யாகலின் , ` நெறியே ` என்று அருளினார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

ஏரார் முப்புரமும் மெரி
யச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழ
பாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.

பொழிப்புரை :

அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும் , கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை , புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் , சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள் .

குறிப்புரை :

வைதிகத் திருவேயன்றி , மன்னவர் திருவும் உடைய வராதலின் , ` கோன் ` என்பதற்கு , ` அரசன் ` என்றே உரைத்தலும் பொருந்துவதேயாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பொன்செய்த மேனியினீர் புலித்
தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித்
தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பர
வையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே , புலியினது தோலை அரையில் உடுத்தவரே , நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , அடிகளே , மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு !

குறிப்புரை :

` பொன்செய்த `, ` மின்செய்த ` என்றவற்றில் , ` செய்த ` என்பது உவம உருபாய் நின்றது . இட்டளம் - துன்பம் . ` இட்டளங்கெட என்செய்தவாறு ` என்றது , ` துன்பத்தை நீக்குகின்றீர் என்று நினைத்து முயல்கின்ற எனக்கு , நீர் துன்பத்தை ஆக்கினீர் ` என்றபடி . இனி , ` இவள்தன் முகப்பே என் செய்தவாறு ` என்றே இயைத்து , ` அருளீர் ` என ஒருசொல் வருவித்து , வருகின்ற திருப்பாடல்களிற்போலவே உரைத்தலுமாம் . இத் திருப்பதிகத்துள் வரும் விளிகள் பலவும் , இறைவரது துன்பந் துடைக்கும் இயல்பினை விதந்து , தம் கருத்தொடு கூடிய பொருளை முடித்து நிற்பனவாதல் அறிக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

உம்பரும் வானவரும் முட
னேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திக
ழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பர
வையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மான்அருளீர் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

எம் பெருமானிரே , நீர் , முன்பு , வானத்தில் உள்ள தேவர்களும் , அவர்கட்குமேல் உள்ள ` அயன் , மால் ` என்பவர்களும் கண்டுநிற்க எனக்குச் செம்பொன்னைக் கொடுத்து , விளங்குகின்ற திரு முதுகுன்றத்தில் எனக்குத் துணையாய் இருந்தீர் ; இப்பொழுது , மணம் பொருந்திய கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் பொருள் முட்டுப்பாட்டினால் மெலிகின்றாள் ; அது பற்றிய அடியேனது துன்பங் கெடுமாறு அருள்செய்தல் வேண்டும் .

குறிப்புரை :

` உம்பர் ` என்றது , வானவர்க்கும் மேலிடத்து உள்ளவரை . ` பொன் ` என்பதே தலைமை பற்றிச் செம்பொன்னைக் குறித்தல் வழக்காயிற்றாயினும் , ` செம்பொன் ` என்பதே , ஏனைக் கரும்பொன் வெண்பொன்னின் நீக்கி , அதனை வரைந்துணர்த்துவது என்க . ` பெருமான் ` என்பது பன்மை யொருமை மயக்கம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பத்தா பத்தர்களுக் கருள்
செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முது
குன்ற மமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண் பர
வையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் பற்றுக்கோடானவனே , அடியார்களுக்கு அருள் பண்ணுகின்ற மேலான பொருட்கும் மேலானவனே , இயல்பாகவே பாசத்தின் நீங்கினவனே , மூன்று கண்களையுடையவனே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , என் அப்பனே , மை தீட்டப்பட்டு அழகு நிறைந்த பெரிய கண்களையுடைய . ` பரவை ` என்னும் பெயரினளாகிய இவள் , பொருள் முட்டுப்பாட்டினால் வருந்தாதபடி , அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

` பற்றா ` என்பது , எதுகை நோக்கித் திரிந்தது . ` மைத்து ` என்றது , ` மை ` என்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம் . ` செம் பொன்னை ` என்பது , முன்னைத் திருப்பாடலினின்றும் வந்து இயையும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

மங்கையொர் கூறமர்ந்தீர் மறை
நான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர் திக
ழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை குணங்
கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே , வேதங்கள் நான்கினையும் விரித்து அருளிச்செய்து அதனை அறநூலாக விரும்பியவரே , சடையின்கண் சந்திரனை அணிந்தவரே , விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , கண்ணோட்டம் உடையவரே , தனங்கள் அழகியாளும் , யான் சொல்லியதைச் சொல்லியவாறே கருதும் தன்மை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு அருள்புரிதல் வேண்டும் .

குறிப்புரை :

` கொங்கை நல்லாள் ` எனச் சினைவினை முதலொடு முடிந்தது . ` குணம் ` என்றது , ஏற்புழிக் கோடலால் , மடத்தினை உணர்த்திற்று . ` கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் ` ( குறள் -575) என்பனவாகலின் , ` அம் கண் ` என்றது , கண்ணோட்டமாயிற்று . ` அங்கணன் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

மையா ரும்மிடற்றாய் மரு
வார்புர மூன்றெரித்த
செய்யார் மேனியனே திக
ழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே ரல்கு
லாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

மைபோலப் பொருந்திய கண்டத்தை யுடையவனே , பகைவரது மூன்று ஊர்களை எரித்த , செவ்விய அழகு நிறைந்த திருமேனியையுடையவனே , விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , தலைவனே , பாம்பினிடத்துப் பொருந்தியுள்ள படம்போலும் எழுச்சியையுடைய அல்குலினை யுடைய பரவையாகிய இவள் பொருளின்றி வருந்துகின்றாள் ; ஆதலின் அதுபற்றிய அடியேனது துன்பங்கெடுமாறு , செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

` செய்ய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` அரவு ஆரும் பை ` என மாற்றிப் பொருள்கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

நெடியான் நான்முகனும் மிர
வியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முது
குன்றம் அமர்ந்தவனே
படியா ரும்மியலாள் பர
வையிவள் தன்முகப்பே
யடிகேள் தந்தருளீர் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் , சூரியனும் , இந்திரனும் வந்து தலையால் வணங்கும்படி , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , தலைவனே , பெண்மைப் பண்புகள் நிறைந்த இயல்பினை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

` இரவியொடு ` என்னும் எண்ணொடு ஏனையவற் றோடும் இயைந்தது . உம்மை , சிறப்பு . படி - தன்மை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கொந்தண வும்பொழில்சூழ் குளிர்
மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர் சடை
மாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள் பர
வையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த பெரிய மதில்கள் மேலும் , மாளிகைகள் மேலும் வந்து தவழ்கின்ற சந்திரன் பொருந்திய சடையினை உடைய பெரிய திருமுது குன்றத்தையுடையவனே , அந்தணனே , பந்து பொருந்திய விரலை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு அருள்பண்ணுவாய் .

குறிப்புரை :

மதிலும் , மாளிகையும் திருமுதுகுன்றத்தின என்க . நின் தலத்தில் உள்ள மதில்கள் மாளிகைகள்தாமும் சந்திரனை முடியில் அணிந்துள்ளன எனச் சிறப்பிக்கும் முகத்தால் , அவையும் சிவபிரான் போலத் தோன்றும் காட்சியின்பத்தினை வெளியிட்டருளினார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

பரசா ருங்கரவா பதி
னெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர முது
குன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள் பர
வையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

மழுப் பொருந்திய கையை யுடையவனே , பதினெண் கணங்களும் புடை சூழவும் , முரசு அணுக வந்து முழங்கவும் திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , எல்லா உலகிற்கும் அரசனே , நறுமணம் பொருந்திய கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

பதினெண்கணங்கள் இவை என்பதனை ஆறாந்திரு முறைக் குறிப்பிற் காண்க . ( தி .6 ப .77. பா .2.) முரசினது உயர்வு தோன்றுதற் பொருட்டு , ` முரசார் ` என உயர்திணையாக ஓதியருளினார் . வருவிக்கப்படுவதனை , ` வந்து ` என்றருளினார் , பான்மை வழக்கால் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

ஏத்தா திருந்தறியேன் இமை
யோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லா முது
குன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பர
வையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

தேவர்கட்கு ஒப்பற்ற தலைவனே , எல்லா உயிர் கட்கும் மூத்தவனே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , கூத்துடையானே , உன்னை யான் பாடாமல் இருந்தறியேன் ; ஆதலின் , மலர்கள் மலர்ந்து பொருந்துகின்ற கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள்முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

பாடாதொழிந்து தேடினமையின் தாராதொழிந்தது ஒக்கும் ; பாடியபின் தாராதொழிதல் ஒவ்வாது என்பார் , ` ஏத்தா திருந்தறியேன் தந்தருளாய் ` என்று அருளினார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பிறையா ருஞ்சடையெம் பெரு
மானரு ளாயென்று
முறையால் வந்தமரர் வணங்
கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயல்
நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளி
தாஞ்சிவ லோகமதே.

பொழிப்புரை :

தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை , அந்தணர் தலைவனும் , வயல் களையுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன் , ` பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள்புரியாய் ` என்று வேண்டிப்பாடிய , இறைவனது திருவருள் நிறைந்த இப் பாடல்களை நன்கு பாட வல்லவர்க்குச் சிவலோகம் எளிய பொருளாய் விடும் .

குறிப்புரை :

` இறை ` என்பது ஆகுபெயராய் , இறையது அருளைக் குறித்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

செண்டா டும்விடையாய் சிவ
னேயென் செழுஞ்சுடரே
வண்டா ருங்குழலா ளுமை
பாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கண
நாதனெங் காளத்தியாய்
அண்டா வுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

விரைந்து நடக்கும் இடப வாகனத்தை உடையவனே , சிவபெருமானே , செழுமையான ஒளி வடிவினனே , வண்டுகள் நிறையச் சூழும் கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே , உன்னைக் கண்டவர் பின்பு நீங்காது பேரன்பு செய்யப்படுபவனே , பூதக் கூட்டத்திற்கு அரசனே , திருக் காளத்தியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே , பரவெளியில் விளங்குபவனே , அடியேன் உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின் , அடியேனுக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` ஆதலால் , அடியேனுக்கு அருள்பண்ணுதல் வேண்டும் ` என்பது குறிப்பெச்சம் . செண்டு , குதிரையின் நடை ; அஃது இங்கு விரைவைக் குறித்தது . கண்டார் காதலித்தலை , கண்ணப்ப நாயனாரது வரலாற்றினால் உணர்க ; ` மேவினார் பிரியமாட்டா விமலனார் ` ( தி .12 கண்ணப்பர் புரா .174) என்றருளியதும் அறியற்பாற்று . ` காதலிக்கும் ` என்பது உடம்பொடு புணர்த்த லாகலானும் , ` எம் ` என்பது , ` காளத்தியாய் ` என்பதன் இறுதி நிலையுடன் முடிந்தமையாலும் இவ்வாறு உரைக்கப்பட்டது . ஏகாரம் தேற்றம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

இமையோர் நாயகனே இறை
வாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கரு
மாமுகில் போன்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உரு
வேதிருக் காளத்தியுள்
அமைவே யுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

தேவர்கட்குத் தலைவனே , கடவுளே , என் துன்பங்களை விலக்குதற்குத் துணையாய் நின்று உதவுபவனே , பொறுமை நிறைந்த அருளையுடையவனே , கரிய பெரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவனே உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய அவ்வடிவத்தை உடையவனே , திருக்காளத்தியுள் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` இடர்த்துணையே ` என்றதனை , ` துன்பத்திற்கு யாரே துணையாவார் ` ( குறள் -1299) என்றதுபோலக்கொள்க . ` அவ்வுரு ` என்பது , ` ஆயுரு ` என வந்தது , செய்யுள் முடிபு . ( தொல் . எழுத்து -208)` அமைவு ` என்றது , தொழிலாகு பெயர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

படையார் வெண்மழுவா பக
லோன்பல் லுகுத்தவனே
விடையார் வேதியனே விளங்
குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ் கண
நாதனெங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால் உகந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

படைக்கலமாகப் பொருந்திய வெள்ளிய மழுவை உடையவனே , சூரியனது பல்லை உதிர்த்தவனே , இடபத்தின்கண் பொருந்தும் அந்தணனே , ஒளிவிடுகின்ற குழையை யணிந்த காதினை உடையவனே , அழகிய வாயில்கள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே ; பூதகண நாதனே , என்னை உடையவனே , அடியேன் , உன்னையல்லது , பிறரை விரும்பிப் போற்றுதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` கடைஆர் ` என்ற விதப்பினால் , அழகென்னும் சிறப்புப் பெறப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

மறிசேர் கையினனே மத
மாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய குரு
வேஉன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார் நினைக்
குந்திருக் காளத்தியுள்
அறிவே யுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

மான் கன்று பொருந்திய கையை உடையவனே . மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனே , யாவராலும் குறிக்கொள்ளப்படும் பொருளே , என்னை மாணாக்கனாக உடைய ஆசிரியனே , அடியவர்கள் நன்னெறிக் கண்ணே நின்று நினைக்கின்ற திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற அறிவுருவனே , அடியேன் உன்னையல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; உனது சிறு பணி விடைகளையே செய்வேன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` சிறு பணிவிடைகளைச் செய்வேன் ` என்றது , ` பெரும் பணிகளைச் செய்யும் தகுதியுடையேனல்லேன் ` எனத் தமது சிறுமையைத் தெரிவித்துக்கொண்டபடி . ` நெறியே நின்னடியார் ` என்பதும் பாடம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

செஞ்சே லன்னகண்ணார் திறத்
தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நல
மொன்றறி யாமையினால்
துஞ்சேன் நானொருகாற் றொழு
தேன்றிருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே , உன் அடியவனாகிய நான் , நன்மை ஒன்றையே உணர்ந்து நில்லாத காரணத்தால் , சிவந்த சேல்போலும் கண்களையுடைய மாதர் கூற்றிலே கிடந்து , மிகக்கதறி வருந்தினேன் ; அதனிடையே ஓரொருகால் , நான் மடிந்திராது உன்னை வணங்கினேன் ; எவ்வாறாயினும் அச்சமின்றி , உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலைச் செய்தலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` உற ` என்பது , ` உற்று ` எனத் திரிந்து நின்றது ; ` கிடந் துற்று ` என , ஒரு சொல்லாகக் கொள்ளினுமாம் . ` நைந்தேன் ` என்பது , ` நஞ்சேன் ` என மருவிற்று . ` அஞ்சாது ` என்றது , ஏத்துதலாகிய முதனிலையோடே முடிந்தது ; அதனால் , மெய்யுணர்ந்தோர் , பிற தெய்வங்களை ஏத்த அஞ்சுதல் - கூசுதல் - பெறப்பட்டது . இனி , அதனை , ` ஏத்தமாட்டேனே ` என்பதனோடே முடித்து , ` பிற தெய்வங்களை ஏத்தாமைக்கண் அச்சமின்றி நிற்பேன் ` என்பது , அதனாற் போந்த கருத்தாக உரைப்பினும் ஆம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பொய்யவ னாயடியேன் புக
வேநெறியொன் றறியேன்
செய்யவ னாகிவந்திங் கிட
ரானவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே விளங்
குந்திருக் காளத்திஎன்
ஐயநுன் றன்னையல் லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

நடுவு நிலைமையை உடையவனாகி வந்து , பொய்யை உடையவனும் , நாய்போலும் அடியவனும் , அழிவில் இன்பத்துள் புகுதற்கு வழி ஒன்றும் அறியாதவனும் ஆகிய எனது துன்பங்களை யெல்லாம் நீக்கி ஆட்கொண்ட பெருமானே , உண்மை வடிவினனே , பேரின்பமானவனே , புகழுடையதாகிய திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே , என் தலைவனே , அடியேன் , உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` பொய்யவன் ` என்றது , உனக்கு ` ஆளல்லேன் ` என்றதனை , ` நாய் அடியேன் ` என்றது , ` உண்மை இதுவாக ` என்றபடி . ` நெறியொன்று அறியேன் ` என்றது , மையல் மானுடமாய் மயங்கும் நிலையினை எய்தினமை குறித்தது . ` இடர் ` என்றதும் , அம் மையல் காரணமாக எய்தற்பாலனவற்றை . ` மெய் ` என்றது , ` உன்னைத் தடுத்தாட் கொள்வோம் ` என்றருளிய மொழி பிறழாது வந்த திருவருளை . ` திரு ` ஆதல் , ஆட்கொண்ட பின்னர் வெளிப்பட்ட நிலையில் அறியப் பட்டது . இவற்றால் எல்லாம் , ` என்னைத் தாங்குதலாகிய நின் கடமையிற் சிறிதும் வழுவினாய் அல்லை ` என்பார் , ` என் ஐய ` என அழைத்தருளினார் . இங்ஙனமாகவே , அடியேன் பிறரை அறிதல் எவ்வாறு நிகழும் என்றதாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கடியேன் காதன்மையாற் கழற்
போதறி யாதவென்னுள்
குடியாக் கோயில்கொண்ட குளிர்
வார்சடை யெங்குழகா
முடியால் வானவர்கள் முயங்
குந்திருக் காளத்தியாய்
அடியே னுன்னையல்லால் அறி
யேன்மற் றொருவரையே.

பொழிப்புரை :

வன்கண்மை உடையவனும் , அன்போடு உன் திருவடித் தாமரைகளை உணர்தலைச் செய்யாதவனும் ஆகிய என் நெஞ்சம் உனக்கு உறைவிடமாகுமாறு அதனைக் கோயிலாகக்கொண்டு எழுந்தருளியிருக்கின்ற குளிர்ந்த நீண்ட சடையை உடைய எங்கள் அழகனே , தேவர்கள் தம் தலையினால் திருவடியைச் சேர்கின்ற திருக்காளத்திப் பெருமானே , அடியேன் உன்னையன்றி மற்றொரு வரைக் கடவுளராக அறிதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` காதன்மையால் ` என்பது , ` அறியாத ` என்பதன் முதனிலையோடு முடிந்தது . ` உள்ளம் ` என்பது , குறைந்து நின்றது . முயங்குதலுக்கு , ` திருவடி ` என்னும் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது . ` மற்றொருவர் ` என்பது , ` மற்றொன்று ` என்பது அடியாகப் பிறந்த பெயர் . ஈண்டும் , ` அறிந்தேத்த மாட்டேனே ` எனப் பாடம் ஓது வாரும் உளர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

நீறார் மேனியனே நிம
லாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்
தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலி
கொண்டுழல் காளத்தியாய்
ஏறே யுன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.

பொழிப்புரை :

திருநீறு நிறைந்த திருமேனியை உடையவனே , தூயவனே , தலையாயவனே , எனக்கு அருட்கடலாய் நிற்பவனே , பருந்து சூழும் வெள்ளிய தலையில் பிச்சையேற்றுத் திரியும் , திருக்காளத்திப் பெருமானே , ஆண் சிங்கம் போல்பவனே , அடியேன் உன்னை யறிந்தபின் உன்னையன்றிப் பிறர் ஒருவரைப் போற்றுதலே இலன் ; என் நாவால் ஒன்று செய்வதாயின் , உன்னையன்றி மற்றொரு பொருளைச் சொல்லுதல்தானும் இலேன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

கொழுந்து , உச்சிக்கண் நிற்பதாகலின் , உயர்ந்த பொருளை , ` கொழுந்து ` என உவமம் பற்றிக் கூறல் வழக்கு . ` என் குணக் கடலே ` என்றது , தமக்குப் புலனாம் வகையை அருளியவாறு . ` இனி ` என்றது , சிவபெருமானது பெருமையை அறிந்த கால எல்லையைக் குறித்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

தளிர்போல் மெல்லடியாள் தனை
யாகத் தமர்ந்தருளி
எளிவாய் வந்தெனுள்ளம் புகு
தவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையுந் திருக்
காளத்தி யுள்ளிருந்த
ஒளியே யுன்னையல்லால் இனி
யொன்று முணரேனே.

பொழிப்புரை :

தளிர்போலும் மெல்லிய பாதங்களையுடைய உமாதேவியைத் திருமேனியில் விரும்பி வைத்தருளி , எளிமை உண்டாக என் உள்ளத்தில் புகவல்ல எம்பெருமானே , மலர்களில் களிப்புப் பொருந்திய வண்டுகள் ஒலிக்கின்ற திருக்காளத்தியில் எழுந்தருளி யிருக்கின்ற அறிவு வடிவனே , அடியேன் உன்னையன்றி மற்றொரு பொருளையும் உணர்தலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` எளிமை ` என்பதும் , ` வாய்ப்ப ` என்பதும் ஈறு குறைந்து நின்றன . ` மெல்லடியாள்தனை ஆகத்து அமர்ந்தருளி என் உள்ளம் புகுத ` என்றது , தாம் இறைவனை உள்கும் முறையையும் , ` வல்ல ` என்றது , தம் உள்ளம் அதற்கு ஏலாதாகவும் , அதனை ஏற்புடைத் தாக்கிய அருமையையும் அருளிச்செய்தவாறு . ` மோறாந் தோரொருகால் நினை யாதிருந்தாலும் வேறா வந்தென்னுள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே ` ( தி .7 ப .21 பா .3) ` கல்லியல் மனத்தைக் கசிவித்து ` ( தி .7 ப .67 பா .5) என்றாற்போலப் பிறவிடத்தும் அருளிச்செய்வர் . ` கல்லைப் பிசைந்து கனியாக்கி ` என்றாற் போலும் ( தி .8 திருவா . திருஅம் .5) திரு மொழிகளுள்ளும் , இவ்வருமை பாராட்டப்படுதல் காண்க . ` இனி ` என்பது , ` மற்று ` என்னும் பொருள்பட வந்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

காரூ ரும்பொழில்சூழ் கண
நாதனெங் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணி
நாவலா ரூரன்சொன்ன
சீருர் செந்தமிழ்கள் செப்பு
வார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறு
வார்பிழைப் பொன்றிலரே.

பொழிப்புரை :

மேகம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானாகிய தெவிட்டாத இனிய அமுதம் போல்வானை , அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய புகழ் மிக்க இச்செந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினையாய் உள்ளன யாவும் நீங்கப்பெற்று , சிவலோகத்தை அடைவார்கள் ; குற்றம் யாதும் இலராவர் .

குறிப்புரை :

`கணநாதன்` என்றது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது. `பேரா` என்பது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாய், பிற தேவர் உலகத்தை விலக்கிற்று. பேராமை - அழியாமை. இனி, `பிறவாமை` எனக்கொண்டு, `ஆண்டு அபர முத்தராய் வாழ்வார்` என்று உரைத்தலுமாம்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

விடையா ருங்கொடியாய் வெறி
யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர
மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அடிகே ளெம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே , படைக் கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே , மேலார்க்கும் மேலானவனே , மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே , எங்கள் கடவுளே , அடியேனையும் , ` அஞ்சாதி ` எனச் சொல்லி உய்யக் கொண்டருள் .

குறிப்புரை :

` பரம் ` என்றது , ` யாவரினும் தீர மேலானவன் ` என்பதனையும் , ` பரம்பரன் ` என்றது , ` மேலவர்க்கு மேலானவன் ` என்பதனையும் குறித்தன . ` அடியேனையும் ` என்ற உம்மை , தேவர் முதலாயினாரை அவர்தம் அல்லற் காலத்தில் , ` அஞ்சலீர் ` என்று சொல்லி உய்யக்கொண்டமையைத் தழுவிநின்றது . ` அஞ்சலை ` என்பது ஈற்று ஐகாரம் கெட்டு நின்றது . ` அஞ்சல் ` எனல் தேற்றற் பொருளதாகலின் , புகழ்தல் முதலியனபோல இரண்டாவதற்கு முடிபாகும் என்க . சுவாமிகள் , இங்ஙனம் வேண்டினமையாற் போலும் , இத்தலம் , ` உய்யக்கொண்டான் ` என வழங்குகின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

மறையோர் வானவருந் தொழு
தேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்
கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

அந்தணரும் , அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே , எம்பெருமானே . எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே , இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற் குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே , அழகிய கண்களை யுடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` எனச் சொல்லி உய்யக்கொண்டருள் .

குறிப்புரை :

` மறையோர் வானவர் ` என்பது , உயர்திணைப் பன்மைப் பெயர்க்கண் வந்த உம்மைத்தொகையாதலின் ஒருசொல் லாய் நிற்க , அஃது இறுதிக்கண் சிறப்பும்மை ஏற்றது . அன்றி எண்ணும்மையாக்கி , அது , ` மறையோர் ` என்புழித் தொகுத்தலாயிற்று எனலுமாம் . கண்ணுக்கு அழகாவது , மிக்க கருணை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

சிலையால் முப்புரங்கள் பொடி
யாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மட
மாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்
கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

வில்லால் , திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே , மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே , இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே , மான் பொருந்திய கையை உடையவனே , திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் .

குறிப்புரை :

இத்தலத்தில் இறைவன் மலையின்மேல் கோயில் கொண்டிருத்தலின் , ` மலைமேல் மாமருந்தே ` என்று அருளிச் செய்தார் . மலைமேல் உள்ள மருந்து , கிடைத்தற்கரிய மருந்தாதல் அறிக . அலை , ஆகுபெயர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

செய்யார் மேனியனே திரு
நீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மத
யானை யுரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே , அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே , மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே , மதம் பொருந்திய யானையை உரித்தவனே , கையில் பொருந்திய சூலத்தை உடையவனே , திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , எங்கள் கடவுளே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக்கொண்டருள் .

குறிப்புரை :

` செம்மை ` என்பது , எழுவாயிடத்தும் எதுகை நோக்கி விகாரமாயிற்று . ` செய்ய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்றாகக் கொண்டு , ` செய்ய ` அழகு நிறைந்த மேனியனே ` என்று உரைத்தலுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

சந்தார் வெண்குழையாய் சரி
கோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள் ஒரு
பாக மமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடி
யேனையும் ஏன்றுகொள்ளே.

பொழிப்புரை :

அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந் தவனே , சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே , பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே , நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , எங்கள் கடவுளே , அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள் .

குறிப்புரை :

` சந்தம் , கந்தம் ` என்பன , அம்முக் குறைந்து நின்றன . குழை சங்கினாலாயதாகலின் வெளிதாயிற்று . கோவண ஆடை யாவது , உடையைக் கீழால் வாங்கி உடுப்பது . துகிலின் மிகுதியாலும் மென்மையாலும் சரிதல் உளதாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

அரையார் கீளொடுகோ வண
மும்மர வும்மசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்
கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு , ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே , வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே , எங்கள் இறைவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் .

குறிப்புரை :

வெற்றரையாயிருத்தல் துறந்தோர்க்கும் நிரம்பா தென்றற்கு , ` அரையார் கீளொடு கோவணமும் அரைக்கசைத்து ` என்றருளினார் என்க . ` கோவணமும் ` என்ற உம்மை , எச்சம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பாரார் விண்ணவரும் பர
விப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்
நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தவரும் , விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும் , படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற , அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே , விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே , மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக்கொண்டருள் .

குறிப்புரை :

` பாரார் ` என்பதில் , எண்ணும்மை தொகுத்தலாயிற்று . ` பாரோர் ` என்பதும் பாடம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

நிலனே நீர்வளிதீ நெடு
வானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்
மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்
கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

நிலமே , நீரே , தீயே , காற்றே , நீண்டவானமே என்னும் ஐந்துமாகிநிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே , தாமரை மலரில் உள்ள பிரமன் , மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே , கற்பகத் தருப்போல்பவனே , திருக் கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , தீ யேந்திய கையை உடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் .

குறிப்புரை :

` நிலனே ` என்னும் எண்ணேகாரம் , நீர் முதலியவற்றோடும் இயைந்தது . அவ்வெண்ணின் தொகையும் , ` அயன் மாலவன் ` என்னும் செவ்வெண்ணின் தொகையும் தொகுத்தலாயின . ` கனலே ` என்றது மூன்றாமெழுத்தெதுகையாய்வர , அதன்பின் , ` அனல் சேர் ` என , இரண்டாமெழுத்தெதுகையாய் வந்தது . னகர உயிர்மெய்யின்முன் வந்த லகர ஏகாரமும் , லகர மெய்ம்முன் வந்த சகர ஏகாரமும் ஒருவாற்றான் எதுகை நயத்தைத் தோற்றுவித்து நின்றன . இத்தலத்தில் இறைவருக்கு , ` கற்பகநாதர் ` என்ற ஒரு பெயரும் வழங்கிவருதல் , இங்கும் ` ` கற்பகமே ` என்றும் , ஆறாந் திருமுறை யுள்ளும் ( தி .6 ப .60) ` கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே ` என்றும் அருளினமையோடு வைத்து நோக்கற் பாலது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

வருங்கா லன்னுயிரை மடி
யத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரி
வித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி
யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி , அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி , அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகை யாளனே , கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே , எங்கள் இறைவனே , அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள் .

குறிப்புரை :

` திரு ` என்றது , விடாத ஆகுபெயராய் , திருவடியை உணர்த்திற்று . கூற்றுவனை மாய்த்தற்கு திருவடி விரலே அமையுமாதலின் , ` காலால் ` என்னாது , ` திரு மெல்விரலால் ` என்று அருளிச் செய்தார் . மேலும் இவ்வாறு அருளிச் செய்தமை காண்க . மென்மை கூறியதும் , கூற்றுவனது சிறுமை உணர்த்தற்பொருட்டு என்க . யாண்டி னாற் சிறியனாயினும் , தவத்தாற் பெரியோன் என்பார் , ` பெரும் பாலன் ` என்றும் , அவன் பெருமைக்கு ஏற்ப அருளினை என்பார் , ` பெருந்தகையே ` என்றும் அருளினார் . இதனானே , கூற்றுவனது அறியாமையும் புலப்படுத்தப் பட்டது . ` நம்பன் ` என்னும் பெயரைப் பொருள்பற்றி , ` விரும்பா ` என்று அருளினார் . ` விரும்பத் தக்கவன் ` என்பது பொருள் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

அலையார் தண்புனல்சூழ்ந் தழ
காகி விழவமரும்
கலையார் மாதவர்சேர் திருக்
கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்ல
சிங்கடி யப்பனுரை
விலையார் மாலைவல்லார் வியன்
மூவுல காள்பவரே.

பொழிப்புரை :

அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற , கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற கற்பகம் போல்பவனை , விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல , ` சிங்கடி ` என்பாளுக்குத் தந்தையாகிய நம்பி யாரூரன் பாடிய , விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள் , அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர் .

குறிப்புரை :

` சிங்கடி ` என்பாள் , கோட்புலி நாயனார் மகள் . அவளை நம்பியாரூரர் தம் மகளாக ஏற்றுக்கொண்டமையைப் பெரிய புராணத்துட் காண்க . ( தி .12 ஏ . கோ . புரா . 39).

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே , புரியாகிய நூல் , ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற் பொருந்தி விளங்க , கூர்மை பொருந்திய முத்தலை வேல் ( சூலம் ) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லது வேறு யார் துணை !

குறிப்புரை :

` வளர் கங்கையின் ` எனப் பாடம் ஓதுவாரும் உளர் . ` அங்கையின் ` என்றது , ` கொன்றையன் ` என்பதன் இறுதிநிலையோடு முடிந்தது . ஆண்டு , ஐயுருபு கெட இன்சாரியை நின்றது . உம்மை சிறப்பு . ` என்னமுது `, என்றது , ` எனக்கு உரியதாகக் கிடைத்த அமுது ` என்றதாம் . மிருத்துவைக் கடப்பித்த பெருமானாகலின் , ` அமுதே என்று ` ஈண்டுப் பலவிடத்து அருளிச்செய்தார் . அட்ட வீரட்டத்துள் இத்தலம் , காலனைக் கடந்த வீரட்டமாதல் அறிக . இதனைச் சுவாமிகள் இத் திருப்பதிகத்து மூன்றாம் திருப்பாடலுள் எடுத்தோதியருளினார் . திருநாவுக்கரசு சுவாமிகள் திருவிருத்தத் திருப்பதிகம் முழுவதிலும் , பிற திருப்பதிகங்களுட் சில திருப்பாடல்களிலும் எடுத்தோதி யருளினார் . திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தமது திருப்பதிகத்து இரண்டாம் திருப்பாடலில் எடுத்தோதியருளினார் . இனி , இத் திருத்தலப் பெருமானுக்கு , ` அமுதகடேசர் ` எனப் பெயர் வழங்குதல் , இத்திருப்பதிகத்துள் ஒன்றொழித்து ஏனைய திருப்பாடல்கள் எல்லாவற்றிலும் , ` என் அமுதே ` என்று அருளிச் செய்ததனோடு வைத்து உணரற்பாலது . இப்பெயர்க்குப் புராணம் வேறாகக் கூறுப . ` யாவர் ` என்பதன் திரிபாகிய யார் என்பது , ` ஆர் ` என மருவிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

பிறையா ருஞ்சடையாய் பிர
மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை
யின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

பிறை பொருந்திய சடையை உடையவனே , பிரமன் தலையைக் கையில் ஏந்தி அதிற் பிச்சையை ஏற்கின்ற , வேதத்தை ஓதுகின்ற தேவனே , வேதத்தின் பொருளாய் உள்ளவனே , நஞ்சு தங்கிய கண்டத்தை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனே , என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை ?

குறிப்புரை :

மறையை ஆர்த்தல் ( ஓதுதல் ), பலியேற்குமிடத்தில் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

அன்றா லின்னிழற்கீழ் அறம்
நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்
தாய்மறை யோனுக்குமான்
கன்றா ருங்கரவா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

மான் கன்று பொருந்திய கையை உடையவனே , திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே , நீ , அன்று ஆல் நிழலின்கண் இருந்து நால்வர் முனிவர்கட்கு அருள்பண்ணி , காலன் உயிரைக் கொன்ற வன்செயலையும் செய்தாய் ; அந்தணச் சிறுவனுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுத்தாய் ; இன்னதன்மையை உடைய நீயல்லாது வேறு யாவர் எனக்குத் துணை !

குறிப்புரை :

நால்வர்க்கு அறமுரைத்தமையும் , காலன் உயிரைக் கொன்றமையும் எல்லா முதன்மையையும் உணர்த்தும் குறிப்புக்களாகும் . ` நாள் ` என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது . ` மறையோனுக்கு நாள் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` காலன் ` என்புழி ஐ யுருபு விரித்து , ` மறையோனுக்கு உயிர்கொடுத்தாய் ; என்றுரைப்பாரும் உளர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

போரா ருங்கரியின் னுரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா வென்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

போர்த் தொழில் பொருந்திய யானையின் தோலைப் பொன்போலும் மேனிமேல் போர்த்துக்கொண்டும் , அம் மேனியின் ஒரு பாகத்தில் கச்சுப் பொருந்திய தனங்களை யுடைய உமையை மகிழ்ந்து வைத்தும் உள்ளவனே , கருமை பொருந்திய கண்டத்தை உடையாய் , திருக்கடவூரினுள் ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , தெவிட்டாத என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !

குறிப்புரை :

` போர்த்து ` என்ற வினையெச்சம் , எண்ணின்கண் வந்தது . ` பொன்மேனியின்மேல் ` என்றது , யானைத் தோலினது இழி புணர்த்தி , அது போர்க்கலாகாமையைத் தோற்றுவித்து நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

மையார் கண்டத்தினாய் மத
மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந்
தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

கருமை பொருந்திய கண்டத்தையுடையவனே , யானையின் தோலைப் போர்த்தவனே , கையின்கண் பொருந்திநிற்கும் , படமெடுத்து ஆடுகின்ற பாம்பை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம்போல்பவனே , நீ தப்பாது என் உயிரினுள் புகுந்தாய் ; அங்ஙனம் புகுந்ததன்றி இதுகாறும் வெளிப் போந்தறியாய் ; ஆதலின் , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !

குறிப்புரை :

தப்பாது புகுந்தமையாவது , எல்லாப் பொருளிலும் புகுந்தவன் , தம் உயிரை யாதானுமோராற்றால் ஒழிந்துவிடாது , அதன் கண்ணும் புகுந்தமை . இயல்பாகவே நிறைந்து நின்றமையை , ஒருகாலத்துப் புகுந்ததுபோல அருளினார் , வியப்பினால் என்க . ` என் உயிர் ` என்றதனை , ` இராகுவினது தலை ` என்பதுபோலக் கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

மண்ணீர் தீவெளிகால் வரு
பூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிற
வாவுரு வானவனே
கண்ணா ருண்மணியே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே
எனக் கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

` நிலம் , நீர் , தீ , காற்று வானம் ` என்று சொல்ல வருகின்ற பூதங்களாகியும் . அப் பூதங்களாலாகிய , ` பெண் , ஆண் , அலி ` என்னும் உடம்புகளோடு காணப்படும் உயிர்களாகியும் அவற்றில் வேறற நின்று , நீ உருவங்கொள்ளுமிடத்து , யாதொரு பிறப்பினும் படாத திருமேனியைக் கொண்டு நிற்பவனே , கண்ணின் உள்ளாற் பொருந்தியுள்ள மணிபோல்பவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம்போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !

குறிப்புரை :

` கண் உள் ஆர் மணியே ` என்க . ` கண்ணாரும் மணியே ` என்பதும் பாடம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

எரியார் புன்சடைமேல் இள
நாக மணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகு
வெண்டலை கொண்டவனே
கரியா ரீருரியாய் கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

தீப்போலப் பொருந்தியுள்ள புல்லிய சடையின் மேல் இளமையான பாம்பை அணிந்தவனே , நரிகள் பொருந்திய சுடலைக்கண் உள்ள , சிரிக்கும் வெண்டலையைக் கையில் கொண்டவனே , யானையினிடத்துப் பொருந்தியிருந்து உரிக்கப்பட்ட தோலை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , எங்கள் அரிய பொருளானவனே , என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யார் துணை !

குறிப்புரை :

` இளநாகம் ` என்றதில் , இளமை , வலியின்மையைக் குறித்தது . வலியாவது கலுழனை வெல்லும் ஆற்றல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

வேறா உன்னடியேன் விளங்
குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவ
னேஎன் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

ஒளி வீசுகின்ற குழையணிந்த காதினை உடையவனே , சிவனே , என்னுடைய செம்மையான விளக்கே , காறையாகப் பொருந்திய வெள்ளிய தந்தத்தை உடையவனே , திருக்கடவூரின்கண் உள்ள , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சடையை உடையவனே , உன் அடியவனாகிய யான் , உன்னையல்லது வேறுசிலர் கடவுளர் உளராக நினையேன் ; ஆதலின் , எனக்கு நீயல்லாது வேறு யார் துணை !

குறிப்புரை :

` வேறு ` என்றவிடத்து , ` உளர் ` என்பது எஞ்சிநின்றது . ` கடவுளர் ` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` காறை ` என்பதன் ஐகாரம் தொகுக்கப்பட்டது . இப்பெயர்த்தாயதோர் அணிகலம் கழுத்தில் அணியப்படுவது என்பதனை , ` கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே ` ( தி .6 ப .4 பா .3.) என்றருளியவாற்றால் அறிக . மருப்பு , மாயோன் அவதாரமாகிய வராகத்தினது என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

அயனோ டன்றரியும் மடி
யும்முடி காண்பரிய
பயனே யெம்பரனே பர
மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

முன்னொரு ஞான்று , பிரமனும் திருமாலும் அடியும் முடியும் தேடிப்போய்க் காணுதல் இயலாது நின்ற பொருளாய் உள்ளவனே , எங்கள் கடவுளே , மேலான ஒளிக்கும் மேலான ஒளியாய் இருப்பவனே , மிக்க நீர் பொருந்திய சடையை உடையவனே , திருக்கடவூரின்கண் உள்ள , ` திருவீரட்டானம் , என்னும் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற பிறப்பில்லாதவனே ` என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யார் துணை !

குறிப்புரை :

` அயன் ` இரண்டனுள் முன்னது முகமனாய் வந்த காரண இடுகுறியாயும் , பின்னது உண்மையான் வந்த காரணக் குறியா யும் நின்றன . மாயையும் ஒளியுடையதாகலின் , முன்னர் ` மேலான ஒளி ` என்றது உயிரை என்க . கயம் - மடு ; அது , மிக்க நீரை உணர்த்திற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

காரா ரும்பொழில்சூழ் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணை
யாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்ட னுரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.

பொழிப்புரை :

மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின்கண் உள்ள , ` திருவீரட்டானம் ` என்னும் கோயிலில் விளங்குதல் பொருந்திய இறைவனையே துணையாக விதந்து , அழகிய திரு நாவலூரில் தோன்றியவனும் , திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களை நிலவுலகில் உள்ளவர் பாட வல்லாராயின் , சிவலோகத்தில் இருத்தல் திண்ணம் .

குறிப்புரை :

ஏர்தல் - எழுதல் ; ஈண்டு , புலனாதல் என்னும் பொருட்டு . ` இறையையே ` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலா யிற்று . ` ஆரூரன் ` என்றது , திருவாரூர் இறைவனை . இவர்தம் தந்தை யார்க்குத் தந்தையார் பெயரும் , ` ஆரூரர் ` எனக் குறிக்கப்படுதலின் , திருவாரூர்ப் பெருமானே இவர்தம் குடிக்கு வழிபடு கடவுளாதல் பெறுதும் . அதனால் , அப்பெருமானுக்கு அடியவராகத் தம்மைக் குறித்தருளினார் . ` அடித்தொண்டன் ` எனப் பின்னுங் கூறியது , தம் முன்னோர் போலத் திருநாவலூரில் வாழ்ந்து ஒரோவழி வந்து வழிபட்டு மீளாது , திருவாரூரிலே உறைந்து வழிபட்டமை பற்றி என்க . ` ஏத்த வல்லார் ` என்புழி , ` ஆயின் ` என்று ஒரு சொல் வருவிக்க . ஏகாரம் - தேற்றம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

இத்தனை யாமாற்றை
யறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே யென்றுன்னைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்க முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன் ; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை , ` பித்தன் ` என்று இகழ்ந்து பேசுவர் ; அஃது அவ்வாறாக , நீ , முத்தையும் மாணிக்கத்தையும் , பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ !

குறிப்புரை :

` இத்தனை ` என்றது , பொதிசோறும் தண்ணீர்ப் பந்தரும் கொண்டு மறையவன்போல வீற்றிருந்தமை முதலியன . ` பித்தரே என்றும்மை ` என்பது , அறியாதார் திரித்தோதிய பாடம் , ` மாணிக்கம் ` என்புழியும் இரண்டனுருபு விரிக்க . ` முளைப்பித்து ` என்னும் பிற வினையுள் பி விகுதி தொகுத்தலாயிற்று . ` எழுந்த வித்தனே ` என்றாராயினும் , ` வித்தாய் எழுந்தவனே ` என்பது கருத்தாகக் கொள்க . ` முத்து முதலியவற்றை முளைப்பிக்கும் வித்து ` என்றது இல்பொருள் உவமை . அவ்வுவமையால் , சிவபிரான் தன் அடியவர்கட்கு அரும்பெருஞ் செல்வமாய் இருத்தலைக் குறித்தருளியவாறு . ` வெள்ளடை ` என்றது , கோயிலின் பெயர் ; அஃது ஆங்குள்ள இறைவற்கு ஆகி , விளியேற்றது . ` அன்றே ` என்றது தேற்றம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

ஆவியைப் போகாமே
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக்
குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங்
கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

வாவிகளில் கயல்மீன்கள் துள்ள , குளத்திலும் , நீர்மடைகளிலும் , கருங்குவளையும் , செங்குவளையும் , தாமரையும் , செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய் !

குறிப்புரை :

ஆவியைப் போகாமே நிறுத்தியது , பொதிசோறும் , தண்ணீரும் தந்து என்க . வாவி , பெருங்கிணறு . ஆட்கொள்ளுதல் ஈண்டு , உய்யக்கொள்ளுதல் . ` குளத்திடை `, குளமாகிய இடம் என்க . ` தோறும் ` என்றதனை , ` குளத்திடை ` என்பதனோடும் கூட்டுக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பாடுவார் பசிதீர்ப்பாய்
பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக
உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக்
கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க , உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே , காடே சிறந்த அரங்காய் இருக்க , செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே , திருக் குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும் , பிறவாற்றால் துதிக்கின்ற வரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து , நோயைப் பற்றறுப் பாயன்றோ !

குறிப்புரை :

உவகை மீதூர்வால் , பாடுவாரையும் பரவுவாரையும் , அவர்கட்குச் செய்யும் திருவருள் வகைகளையும் வேறு வேறுபோல அடுக்கி ஓதி வியந்தார் . இதனை வருகின்ற திருப்பாடலை நோக்கியும் அறிக . பாடுவார் பசியைத் தீர்த்தல் தம்மிடத்து வெளியாய் நிகழ்ந்தமை அறிந்து அருளிச் செய்தவாறு . ` காடு ` என்றதற்கு ஏற்ப , ` வேடன் ` என்றது , ஓர் நயம் . ` காடுநின் னிடமாக ` என்பதும் பாடம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

வெப்பொடு பிணியெல்லாந்
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
ஒப்புடை யொளிநீலம்
ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி யழகாய
அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற , மலர்களையுடைய பொய்கைகளில் , மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற , அழகிய நடையையுடைய இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே . நீயன்றோ , என்னை வெப்புநோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய் !

குறிப்புரை :

எல்லாப் பிணிகட்கும் முதலாய்த் தோன்றுவது வெப்பு நோயாகலின் , அதனைத் தலையாயதாக ஓதினார் . சுவாமிகளுக்குப் பிணி தீர்த்தமையாவது , வலிந்து ஆட் கொண்டமையால் நோய் அணுகாத திருமேனியராயினமையேயாம் . ` அப்படி ` என்பது , மிகுதி யுணர்த்துவதோர் வழக்குச் சொல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

வரும்பழி வாராமே
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச்
சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை
அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும் , பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே , அரும்பு களையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும் , பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந் தருளியிருப்பவனே , நீயன்றோ , எனக்கு வருதற்பாலதாய பழி வாராமல் தடுத்து , என்னை ஆட்கொண்டாய் !

குறிப்புரை :

` வருதற்பாலதாய பழி ` என்றது , ` திருக்கயிலையில் இருந்தும் இறைவனை யடையாது பிறப்பில் அகப்பட்டார் ` எனச் சொல்லப்படுதல் . இறைவன் தடுத்தாட் கொண்டமையின் , அப்பழி வாராதொழிந்தமை யறிக . அல்லியை , ` பொய்கை அல்லி ` என்றதனால் , மல்லிகை வேறிடத்துள்ளமை கூறுதல் கருத்தாயிற்று . உடைமையை , விரும்பியதாக அருளியது இலக்கணை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை யடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , பரவெளியின்கண் உள்ள நீ , இம் மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண் யாதொரு துன்பமும் தோன்றாதவாறு , பண்ணின்கண் இனிமையைப் போன்றும் , பழத்தின்கண் சுவையைப் போன்றும் , கண்ணின்கண் மணியைப் போன்றும் , மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ !

குறிப்புரை :

பண்ணிடைத் தமிழும் , பழத்தினிற் சுவையும் இன்பம் பயத்தற்கும் , கண்ணிடை மணியும் , கடுவிருட் சுடரும் உறுதியுணர்த் தற்கும் உவமை யாயின . அவற்றுள் பண்ணிடைத் தமிழ் உள்ளுணர் வநுபவமும் , பழத்தினிற் சுவைபுறவுணர்வநுபவமும் பற்றிவந்தன . அவ்வாறே கண்ணிடைமணி , அவர்பொருட்டு இறைவன்தானும் பொருள்களை உடன் சென்று காணும் நிலையையும் கடுவிருட் சுடர் பொருள்களைக் காட்டும் நிலையையும் பற்றி வந்தன . ` இடை ` என்றன , ஏழனுருபுகள் . ` விண்ணிடை நீ ` என இயைக்க . ` மனத்திடர் வாராமே ஒப்பாய் ` என்றதனால் . ` அவ்வாறு நிற்றல் மனத்திடத்து ` என்பது பெற்றாம் . ` ஒப்பாயன்றே ` என்றதன்பின் , ` அதனால் இது செய்தாய் ` என , தம் பசித் துன்பத்தையும் வெயிற்றுன்பத்தையும் அறிந்து வந்து , சோறும் நீரும் உதவி , நிழலளித்து ஆவியைப் போகாமே காத்து ஆண்ட அருட்டிறத்தை நினைந்துருகி அருளியது , குறிப்பெச்சமாய் நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

போந்தனை தரியாமே
நமன்றமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும்
நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந்
தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயாய்ப் போந்தவன் நீயேயன்றோ ! ஆதலின் , இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும் , யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன் .

குறிப்புரை :

` போந்தனை ` என்றது , முன்னிலை வினையாலணையும் பெயர் . சாதலைத் தவிர்த்து ஆண்டமையால் , ` நமன் தமர் என் மாட்டு வாரார் ` என்பதுபட நின்றமையின் , ` செய்தாலும் ` என்ற உம்மை , எதிர்மறை . ` நோந்தனை , சாந்தனை ` என்புழி நின்ற , ` அளவு ` என்னும் பொருளைத் தரும் , ` தனை ` இரண்டும் , அளவை யுடைய செயல்மேலும் , நிலையின்மேலும் நின்றன . ` ஏல்வை ` என்பது , ` ஏல் ` என நின்றது . அவ்விடத்து உள்ள உம்மை சிறப்பு , ` ஏனும் ` என்பதன் திரிபாகிய ஏலும் என்பதாக வைத்து உரைத்தலும் ஆம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மலக்கில்நின் னடியார்கள்
மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய
தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங்
கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக் களைபவனே , திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும் , மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும் , அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ !

குறிப்புரை :

அலைவில்லாமை தெளிவினாலும் , மால் தீர்தல் அனுபவத்தாலுமாம் . ஆகவே , ` மால் ` என்றது , வாசனை மாத்திரமாய் நிற்பதைக் குறித்தல் அறிக . ` சலம் ` என்னும் பலபொருள் ஒருசொல் , முன்னர்த் துன்பத்தையும் , பின்னர் வெகுளியையும் குறித்து வந்தன . ` வந்தாலும் ` என்னும் உம்மை , சிறப்பு . அதனால் , ஏனைய சிறுதுயரங்களை விலக்குதல் சொல்லவேண்டாவாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

படுவிப்பாய் உனக்கேயாட்
பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன்
தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார்க்
கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

பொழிப்புரை :

திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும் , நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பித்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும் , முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும் , நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ !

குறிப்புரை :

` பொன் ` என்றது , ஆகுபெயராய் அணியின்மேல் நின்றது ; அதனை , ஏற்புழிக் கோடலால் , தொடுவனவற்றிற்கு மட்டுமே கொள்க . ` தொடுவனவற்றைத் தொடுவிப்பாய் ` என்றதனால் , ` இடுவன வற்றை இடுவிப்பாய் , செறிப்பனவற்றைச் செறிப்பிப்பாய் ` என்பன வும் பிறவும் தழுவப்பட்டன . ` துகிலொடு ` என்னும் ஒடுவுருபு , ` தொடியொடு - தொல்கவின் வாடிய தோள் ` ( குறள் -1235.) என்றாற் போல , வேறுவினைப் பொருட்கண் வந்தது . ` தோலுடுத் துழல் வானே ` என்றது , உடம்பொடு புணர்த்தலாகலின் , அதற்கு இவ் வாறுரைக்கப்பட்டது , ` அடியாரைப் பொன் தொடுவிப்பாய் ` என்ற தனால் , அவன் எலும்பணிதலைக் கூறுதலுங் கருத்தாதலும் , ` அல்லா தாரை ` என்றதனால் , ` நல்லாரை ` என்பதும் பெறப்பட்டன . நல்லார் , திருத்தொண்டின் நெறியைப் பற்றினவர் ; அல்லார் , அதனைப் பற்றாதவர் , அவரைக் கெடுவித்தலாவது , வினைவழியில் உழலச் செய்தல் , திருவடியை அடைந்தார் கேடெய்தாமைக்குக் காரணம் கூறுவார் ,` கேடிலாப் பொன்னடி ` என்றருளினார் . அருளவே , ஏனைய சார்புகள் கேடுடையன என்பதும் , அவற்றை அடைந்தார் கெடுவர் என்பதும் பெறப்பட்டன .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

வளங்கனி பொழின்மல்கு
வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர்
வெள்ளடை யுறைவானை
இளங்கிளை யாரூரன்
வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை
பத்தர்கட் குரையாமே.

பொழிப்புரை :

வளப்பம் மிகுந்த சோலைகளையும் , நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற , வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , சிங்கடிக்குத் தங்கையாகிய , ` வனப்பகை ` என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன் , மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை , அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும் .

குறிப்புரை :

` தமிழ்மாலை ` என்பது ஒருசொல் நடைத்தாய் , ` குளிர் ` என்றதனோடு , காரணகாரியப் பொருட்டாகிய இறந்த கால வினைத்தொகை நிலைபடத் தொக்கது . புகழென்னும் பொருளதாகிய , ` உரை ` என்பது ஆகுபெயராய் ; அதனாலாகிய மாலையை உணர்த் திற்று . ` பத்தர்கட்கு உரையாம் ` என்றது , ` திருக்குருகாவூர் இறைவனைப் பரவுவார் , இத் தமிழ்மாலையாலே பரவுக ` எனவும் , ` அங்ஙனம் பரவின் , இதன்கண் அவ்விறைவன் தன் அடியார்கட்குச் செய்தனவாகவும் , செய்வனவாகவும் சொல்லப்பட்ட பயன்களை அடைவார்கள் ` எனவும் அருளியவாறாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து
திறம்பா வண்ணம்
கைம்மாவி னுரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக்
கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங்
கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

யானைத் தோலைப் போர்த்துநின்ற காலத்தில் உமையவள் அஞ்ச , அதனைக் கண்டு நின்றவனும் , திருக்கருப்பறியலூரில் உள்ள , தளிர் கிள்ளுதற்குரிய மாமரங்களில் இருந்து குயில்கள் பாட , கீழே மயில்கள் ஆடுகின்ற சோலைகளையுடைய கொகுடிக் கோயிலில்கண் எழுந்தருளியுள்ள எம்பெருமானும் ஆகிய இறைவனை , நாம் உடலை நேரே நிறுத்திக் கண்களைச் சிறிது மூடியிருந்து உள்ளத்தில் அன்போடு நிலை பெயராது இருத்தி , இவ்வாறு மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` செம்மாந்து ` என்பது , ` சிம்மாந்து ` எனமருவிற்று . ` செம்மாந்து ` என்பதே பாடம் எனலுமாம் . ` சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் உகந்து திறம்பாவண்ணம் வைத்து என்றது , இறைவரைத் தியானிக்குமாற்றினை விதந்தருளியவாறு . ` கொகுடி ` என்பது முல்லைக் கொடியுள் ஒருவகை . அதனாற் சூழப்பெற்றது இக் கோயில் என்பதும் , அதுதானே இங்குக் கோயில்மரவகையாய் இருந்தது என்பதும் இத் திருப்பதிகத்தாற் கொள்ளக்கிடக்கின்றன . ` மனத்தினால் ` என வேண்டா கூறியது , ` மனம் தன்பயனைத் தருமாறு ` என அதன் சிறப்பை முடித்தற்கு . ` நினைந்த போது ` என்பது , ` இனிய ` என்னும் பெயரெச்சக் குறிப்போடு முடியும் . ` ஆறு ` என்றது , ` தன்மை ` என்னும் பொருளதாய் நிற்க , அதன்பின் , ` சொல்லுதற்கரிது ` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது . ` சிவன் ` என்னும் சொற்கு , ` இன்பத்திற்குக் காரணன் ` என்னும் பொருளும் உண்மை அறிக . ` அவர் ` என்றது , ஒருமைப் பன்மை மயக்கம் . இதனை , ` புனிதரவர் தமைநினையும் இன்பங்கூறிச் சாற்றியமெய்த் திருப்பதிகம் ` ( தி .12 பெ . ஏ . கோ . பு .117.) எனச் சேக்கிழார் அருளுதலின் , ` அவர் ` என்பதே பாடமாதல் பெறப்படுகின்றது . இத் திருப்பாடலுள் தியான வழிபாடு சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே
நிறைந்து தோன்றும்
காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக்
கருப்ப றியலூர்க்
கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங்
கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

திருநீற்றால் நிறைந்த மேனியை உடையவராய் நினைக்கின்றவரது உள்ளத்தில் நிறைந்து தோன்றுபவனும் , ` காற்று ` தீ , ஞாயிறு , திங்கள் ` என்னும் பொருள்களாய் நிற்பவனும் , அழித்தல் தொழிலையுடையவனும் , கூற்றுவனை உதைத்தவனும் , வரிசையாகப் பொருந்திய வளைகளையுடைய உமாதேவியோடும் திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலைத் தனக்கு உரிய இடமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` காற்றானை ` என்பது முதலிய நான்கிலும் தனித் தனி உருபு புணர்க்கப்பட்டதாயினும் , கருத்து வகையால் , ` காற்றுத் தீ கதிர் மதியானை ` எனத் தொகைச்சொல்லாய் நிற்றலின் , அவை ஒருசொல் தன்மையவாய் , ` தோன்றும் ` என்னும் எச்சத்திற்கு முடிபாயின . ` தோன்றும் ` என்றதற்கும் , ` உதைத்து ` என்றதற்கும் கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . எண்ணின்கண் வந்த , ` உதைத்து ` என்னும் எச்சம் , ` ஏற்றான் ` என்னும் வினைப்பெயர் கொண்டது . உம்மை , சிறப்பு . இத் திருப் பாடலுள் நீறணிந்து வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து
மூன்று போதும்
கட்டார்ந்த இண்டைகொண் டடிசேர்த்தும் அந்தணர்தங்
கருப்ப றியலூர்க்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக்
கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

நாள்தோறும் , ` காலை , நண்பகல் , மாலை ` என்னும் மூன்று பொழுதுகளிலும் , தப்பாமல் நீரின்கண் மூழ்கிப் பூக்களைப் பறித்து , அவைகளை , கட்டுதல் பொருந்திய இண்டை மாலையாகச் செய்துகொண்டு , மனத்தைத் தனது திருவடிக்கண் சேர்த்துகின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் , முழவம் முதலியவற்றின் கொட்டும் , அவற்றிற்கேற்ற கூத்தும் , பாட்டும் ஆகியவற்றை விரும்பி இருக்கின்ற அழகனும் , எட்டுருவாயவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` இண்டை ` என்பதன்பின் ` ஆக்கி ` என்பது வருவிக்க . இண்டை , முடியிலணிவதாகலின் , அடிசேர்த்தப்படுவது மனமாயிற்று . இனி , ` அடியுறையாக வைத்து ` எனலுமாம் . ` அடிசேரும் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் , ` பாட்டு ` என்பதன்பின் , தொகுக்கப்பட்ட நான்காவது விரிக்க . ` கோயில் ` என்றதில் , ஏழாவது இறுதிக்கண் தொக்கது . ` கருப்பறியலூர்க் கொகுடிக் கோயிலின்கண் நின்றானை ` எனக் கூட்டுக . ` மனத்தினால் ` என்றது வேண்டும் இடங்களிலும் வந்து இயையும் . எட்டுரு , அட்ட மூர்த்தம் . இத் திருப்பாடலுள் பூமாலையால் வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி வினைபோக
வேலி தோறும்
கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியுங்
கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையா ளவளோடுங்
கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

கல்வியில் வல்ல அடியார்கள் புதியனவாகிய பல சொல்மாலைகளைக் கொண்டு புகழ்ந்து வினை நீங்கப் பெறுமாறு , வேலிகள் தோறும் , பசிய அடியினையுடைய செவ்வாழைகளின்மேல் செவ்விய பழங்கள் சாற்றைச் சொரிந்து நிற்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் இளையவாகிய கூரிய பற்களையும் , வரிசையான வளைகளையும் உடையவளாகிய உமாதேவியோடும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நாம் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` விருந்து ` என்பது , செய்யுள் உறுப்புக்களுள் ஒரு பகுதி யவாகிய எண்வகை வனப்புக்களுள் ஒன்று என்பதும் , அஃது யாப்புக்களைப் புதுப்புது வகையில் தொகுப்பது என்பதும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாக்களாலும் , உரைகளாலும் தெளிந்து கொள்க . அதனானே , திருப்பதிகங்களும் ` விருந்து ` என்னும் வனப்பினவாதல் அறியப்படும் . ` வினைபோக ` என , இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது . ` செங்கனிகள் ` என்றமையால் , வாழை செவ் வாழையாயிற்று . குருத்து , ` குருந்து ` என மெலித்தலாயிற்று . அம்மை என்றும் கன்னியேயாதலின் , அப்பொழுது வீழ்ந்து முளைத்த பல்லுடையள் எனப்படுவள் . குருத்து , வெண்மையுமாம் . இத் திருப் பாடலுள் , பாமாலையால் வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

பொடியேறு திருமேனிப் பெருமானைப் பொங்கரவக்
கச்சை யானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளுங்
கருப்ப றியலூர்க்
கொடியேறி வண்டினமுந் தண்டேனும் பண்செய்யுங்
கொகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

நீறு மிகுந்திருக்கின்ற திருமேனியையுடைய பெருமானும் , சீற்றம் மிக்க பாம்பாகிய அரைக்கச்சையை உடையவனும் , நறுமணம் வீசுகின்ற பூப் பொய்கைகளில் கயல் மீனும் , வாளை மீனும் குதிகொள்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள , கொடிப் பூக்களில் , ` வண்டு ` என்றும் , ` தேன் ` என்றும் சொல்லப்படுகின்ற அவற்றது கூட்டங்கள் மொய்த்து இசைபாடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும் , திருவடியிற் பொருந்திய கழலையுடையவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` வண்டு , தேன் ` என்பன , தேனீக்களின் வகை . தேனினது தண்மையால் , வண்டும் தண்ணிதாயிற்று . ` அடியேறுகழலான் ` என்பது , ஒரு பெயர்த்தன்மைத்தாய் நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பொய்யாத வாய்மையாற் பொடிபூசிப் போற்றிசைத்துப்
பூசை செய்து
கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங்
கருப்ப றியலூர்க்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலுங்
கொகுடிக் கோயில்
ஐயனைஎன் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

பொய்கூறாத வாய்மையான உள்ளத்தோடு திரு நீற்றை அணிந்து , ` போற்றி ` எனச் சொல்லிப் பல வகை வழிபாடு களையும் செய்து தங்கள் கையாலே தீயை எரிவித்து வேத ஒழுக்கத்தை வளர்க்கின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள , கொய்தல் பொருந்திய பூஞ்சோலைகளில் குயில்கள் கூவ , அவற்றோடு மயில்கள் ஆடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனாகிய இறைவனை யான் என் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` பொய்யாத வாய்மை ` என மிகுத்தோதியருளியது , ` மறந்தும் பொய்கூறாத ` எனத் தாம் வேண்டிய சிறப்பினை விளக்குதற் பொருட்டு . ` வாய்மையாற் பொடி பூசி ` என்றருளியது , அத்தகை யோரது உள்ளமே திருநீற்றினை விழைதல் பற்றி ; ` பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள் ` என்றருளினார் , சேக்கிழார் நாயனாரும் ( தி .12 திருக் கூட்டச் சிறப்பு -6.). இதனானே , ` மனத்தது மாசாக ` என்னும் திருக்குறளில் , (278) ` மாண்டார் நீறாடி ` என்பதே பாடம் என்பாரது கூற்றும் பொருந்துவதேயாம் ; என்னையெனின் . ` நீராடி ` என்பது , ` மாண்டார் ` என்றதனோடு இனிது இயையாமையின் என்க . அங்ஙனமாயின் , பொதுநூல் செய்தாரை இவ்வாறு ஒருபாற் சார்ந்து கூறினாராக உரைத்தல் பொருந்துமோ எனின் , நீர் பலகால் மூழ்கல் , சோர்சடை தாழக் கொள்ளுதல் முதலியனபோல நீறணிதலும் தாபதர் அனைவர்க் கும் ஒருபடித்தாய் உரித்தெனக் கொள்ளப்படுமாதலின் . ` மழித்தலும் நீட்டலும் வேண்டா ` ( குறள் -280.) என்றாற்போல , இதனையும் கூறினார் என விடுக்கப்படும் என்க . ` இடுநீற்றாற் பையவிந்த நாகம் போல் ` ( நாலடி -66.) எனப் பிறரும் நீற்றினை எடுத்தோதியது உணர்தற்பாலது . இவையெல்லாம் பற்றியே , ` மந்திரமாவது நீறு ` எனவும் , ` தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு ` எனவும் திரு மொழிகள் எழுந்தன ( தி .2 ப .66 பா .1) என்க . ` கையினால் ` என மிகுத் தோதியருளியது , அவர் கைப்பணி செய்தற்கண் தளராது நிற்றலை உணர்த்தற்கு . ` கொய் ` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் , ஆகுபெயராய் , அதனையுடையார்மேல் நின்றது எனினுமாம் . இங்கு . ` கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆருரரை ` ( தி .4 ப .5 பா .1) என்ற திருநாவுக்கரசு சுவாமிகள் திருமொழி நினைக்கத்தக்கது . ` நமக்கு ` என்றது , தம்போல்வாரையும் உளப்படுத்ததாகலின் , பால் வழு இன்றென்க . இத் திருப்பாடலுள் , அறநெறி நிற்றலால் வழி படுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந் தீர்ந்தொழியச்
சிந்தை செய்ம்மின்
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கண்படுக்குங்
கருப்ப றியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையா ளவளோடுங்
கொகுடிக் கோயில்
அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

நறுமணத்தைக் கொண்ட பூக்களையுடைய பொய்கையின் கரைகளில் கரிய எருமைகள் மிக்கு உறங்குகின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் கொடிபோலும் அழகிய நுண்ணிய இடையினையும் , வரிசையான வளைகளையும் உடைய உமையம்மையுடன் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை என் மனத்தினால் நினைந்தபோது அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது ; ஆதலின் , துன்பந் தருவனவாய் உள்ள நோய்களும் , தீவினைகளும் ஒருதலையாக நீங்குதற் பொருட்டு அவனை நினையுங்கள் .

குறிப்புரை :

` தடம் ` ஆகுபெயர் . இத் திருப்பாடலுள் இறைவரை நினைவார்க்கு வரும் பயன் அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும்
பாடி யாடிக்
கறையார்ந்த கண்டத்தன் எண்டோளன் முக்கண்ணன்
கருப்ப றியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவ லொழியாத
கொகுடிக் கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

கருமை நிறம் பொருந்திய கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடையவனும் , திருக்கருப் பறியலூரில் உள்ள குறைவுபடாத வேதத்தை உடைய நாவினராகிய அந்தணர்கள் தம் சிறு பணிவிடைகளை நீங்காது செய்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை , நாம் , நீங்குதற்கரிய வலிய வினைகள் நீங்குமாறு பல நாளும் பாடியும் , ஆடியும் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` மறைநாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக் கோயில் ` என்றது , இங்கு அந்தணரது வழிபாடு நிகழ்தற் சிறப்பினை அருளியவாறு . இத் திருப்பாடலுள் , பாடி ஆடி வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந்
தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைக ளுடையானை விடையானைக்
கருப்ப றியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலஉதிர்க்குங்
கொகுடிக் கோயில்
எங்கோனை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

சங்கினை ஏந்துகின்ற கையினை யுடையவனாகிய திருமாலும் , தாமரைமலர்மேல் இருப்பவனாகிய பிரமனும்காண இயலாத , கங்கை பொருந்திய நீண்ட சடைகளையுடையவனும் , இடபத்தை ஊர்பவனும் , திருக்கருப்பறியலூரில் உள்ள , தேன் நிறைந்த பொழிலாகிய சோலைகள் , சுற்றிலும் கனிகள் பலவற்றை உதிர்க்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` கங்கை ` என்பதன் ஈற்று ஐகாரம் தொகுத்தலாயிற்று . ` கொங்கார்ந்த பொழில் ` என்பது சிறப்புப் பெயராய் , ` சோலை ` என்பதன் பொதுமையை நீக்கி , அதற்கு அடையாய் நின்றது . மாலயனுக்கும் அரியவனாகிய அவன் தமக்கு இனியனாயினமை அருளப் பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பண்டாழின் னிசைமுரலப் பன்னாளும் பாவித்துப்
பாடி யாடிக்
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் பூஞ்சோலைக்
கருப்ப றியலூர்க்
குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் புறங்கூறுங்
கொகுடிக் கோயில்
எண்டோளெம் பெருமானை நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

கண்டவரது கண்கள் குளிர்தற்கு வழியாகிய கமுகஞ் சோலைகளையும் , களிப்பைத் தருகின்ற பூஞ்சோலைகளையும் உடைய திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , கீழ்மைத் தொழில்களைப் பயில்கின்ற சமணராலும் , புத்தராலும் புறங்கூறப்படுகின்ற , எட்டுத் தோள்களையுடைய எம்பெருமானை , நாம் , பல நாள்களும் உள்ளத்திற் கருதி , பண்பொருந்துதற்கு அடிநிலையாகிய இனிய சுருதியை , கூட்டுவார் கூட்டப் பல இசைப் பாடல்களைப் பாடியும் , ஆடியும் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` குளிரும் , களி ` என்னும் அடைமொழிகளை கமுகஞ் சோலைக்கும் , பூஞ்சோலைக்கும் நிரலே கொடுக்க . ` சோலை ` என்றதனை , ` கமுகு ` என்றதனோடும் கூட்டுக . பூஞ்சோலையில் தேன் உளதாகலின் , களிப்புக் கூறப்பட்டது . ` கனிக் கமுகம் ` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும் . கீழ்மைத் தொழில்கள் , வைதிகரை இகழ்தல் பகைத்தல் முதலியன . ` புறங்கூறுங் கோயில் ` என இயைக்கலாகாமை உணர்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங்
கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக்
கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய்
தின்ப மெய்தி
மலைமலிந்த தோளூரன் வனப்பகையப் பன்னுரைத்த
வண்ட மிழ்களே.

பொழிப்புரை :

திருக்கருப்பறியலூரில் உள்ள , குலைகள் நிறைந்த வலிய தென்னை மரங்களையும் , தேன் ஒழுகுகின்ற பூஞ்சோலைகளையும் உடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , இலைத் தன்மை மிகுந்த மழுப்படையை உடைய இறைவனை , ` வனப் பகை ` என்பவளுக்குத் தந்தையாகிய மலைபோலும் தோள்களையுடைய நம்பியாரூரன் மனத்தினால் நினைத்தலாகிய அன்புச் செயலைச் செய்து , அதனானே இன்பமுற்றுப் பாடிய வளப்பமான இத்தமிழ்ப் பாமாலையே , தன்னைக் கற்றவர்களாகிய கல்வி மிக்க தமிழ்ப் புலவர்களது துன்பத்தினைக் களையும் .

குறிப்புரை :

`வேறு வேண்டா` என்பதாம். இது தமிழ்மாலை யாதலின் இதனைக் கற்றற்கு உரியாரும், கற்றோரும் தமிழ்ப்புலவராவர் என்றற்கு. `தென்புலவர்` என்று அருளிச்செய்தார். மொழியது நில எல்லை, அதனைக் கற்றார்க்கு உரித்தாக்கப்பட்டது. கற்றோராகிய புலவர் என மாறிக் கூட்டுக.

பண் :கொல்லி

பாடல் எண் : 1

முந்தை யூர்முது குன்றங் குரங்கணின் முட்டம்
சிந்தை யூர்நன்று சென்றடை வான்திரு வாரூர்
பந்தை யூர்பழை யாறு பழனம்பைஞ் ஞீலி
எந்தையூ ரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

அடியார்களது உள்ளமாகிய ஊரையே விரும்பிச் சென்று அடைபவனும் , எம் தந்தையும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` பழைய ஊராகிய முதுகுன்றம் , குரங்கணின்முட்டம் , ஆரூர் , மகளிரது பந்துகள் உலாவுகின்ற பழையாறு , பழனம் , பைஞ்ஞீலி , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

முதுகுன்றம் ஆதலின் , ` முந்தையூர் ` என அருளினார் . ` ஆரூர் ` என்றதில் உள்ள , ` திரு ` என்றதை எல்லாத் திருப்பாடல்களிலும் உள்ள ஊர்ப்பெயர்களில் வேண்டுவனவற்றோடு கூட்டுக . ` பந்தை ` என்ற ஐகாரம் , சாரியை . சில தலங்களில் இறைவனை , ` கற்பகம் , மாணிக்கம் , அமுது ` எனக் குறித்தருளுதல் போல , இடையாற்றில் , ` எய்தமான் ` எனக் குறித்தருளினார் . ` அம்மான் ` என்பது , இடைக்குறைந்து நின்றது . ` எய்தம்மான் ` என்பதே பாடம் எனலுமாம் . ` முந்தையூர் , பந்தையூர் ` என்பவற்றை வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் .1 பழையாறு , வைப்புத் தலம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

சுற்று மூர்சுழி யல்திருச் சோபுரந் தொண்டர்
ஒற்று மூரொற்றி யூர்திரு வூற லொழியாப்
பெற்ற மேறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்ற மூரெய்த மானிடை யாறிடைமருதே.

பொழிப்புரை :

இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும் , பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` அடி யார்கள் சென்று சூழும் ஊராகிய சுழியல் , சோபுரம் , அவர்கள் ஆராய்கின்ற ஒற்றியூர் , ஊறல் , பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` தொண்டர் ` என்றதனைச் ` சுற்றும் ` என்றதற்குங் கூட்டுக . ` பாதி ` என்றது , முன்னர் அவ்வளவினதாகிய உடம்பினையும் , பின்னர் அதனையுடையவனையும் குறித்தலின் , இருமடியாகு பெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கடங்க ளூர்திருக் காரி கரைகயி லாயம்
விடங்க ளூர்திரு வெண்ணிஅண் ணாமலை வெய்ய
படங்க ளூர்கின்ற பாம்பரை யான்பரஞ் சோதி
இடங்கொ ளூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

கொடிய , படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள் , ` செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை , கயிலாயம் , நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி , அண்ணா மலை , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` கடங்களூர் , விடங்களூர் ` என்பன வைப்புத்தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் . காரிகரை , வைப்புத்தலம் . ` காரிக் கரை , இடங்களூர் ` எனவும் பாடம் ஓதுவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

கச்சை யூர்கா வங்கழுக் குன்றங்கா ரோணம்
பிச்சை யூர்திரி வான்கட வூர்வட பேறூர்
கச்சி யூர்கச்சி சிக்கல்நெய்த் தானம் மிழலை
இச்சை யூரெய்த மானிடை யாறிடைமருதே.

பொழிப்புரை :

பிச்சைக்கு ஊர்தோறும் திரிபவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகியஇறைவன் விரும்புதல் செய்கின்ற ஊர்கள் , ` கச்சையூர் , பலகாக்கள் , அழகிய கழுக்குன்றம் , காரோணம் , கடவூர் , வடபேறூர் , கச்சணிந்தவளாகிய காமக்கோட்டி யம்மையது ஊரெனப்படுகின்ற காஞ்சி , சிக்கல் , நெய்த்தானம் , வீழிமிழலை , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

பல காக்களாவன , ` கோலக்கா , ஆனைக்கா முதலியன . ` காரோணம் ` என்னும் பெயருடைய கோயில்கள் , குடந்தை , நாகை முதலிய சில இடங்களில் உள்ளன . கச்சையூர் , வடபேறூர் இவை வைப்புத்தலம் . சத்தி பீடங்களுள் முதலதாகலின் , காஞ்சியை அம்மைக்கு உரியதாக அருளினார் . ` கைச்சி ஊர் ` எனப் பாடம் ஓதி , ` கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகரை வழிபடுவனவும் , முப்பத்திரண்டு அறங்களையும் வளர்ப்பனவுமாகிய கையை உடையவளது ஊர் ` என்று உரைத்தலும் ஆம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

நிறைய னூர்நின்றி யூர்கொடுங் குன்ற மமர்ந்த
பிறைய னூர்பெரு மூர்பெரும் பற்றப் புலியூர்
மறைய னூர்மறைக் காடு வலஞ்சுழி வாய்த்த
இறைய னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

எங்கும் நிறைந்தவனும் , விரும்பிச் சூடிய பிறையை உடையவனும் , வேதத்தை ஓதுபவனும் , வலஞ்சுழியில் பொருந்தியுள்ள கடவுளும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` நின்றியூர் , கொடுங்குன்றம் , பெருமூர் , பெரும் பற்றப்புலியூர் , மறைக்காடு , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` நிறையனூர் , பிறையனூர் , மறையனூர் ` என்பன வற்றையும் , ` இறைவனூர் ` என்று பாடம் ஓதி அதனையும் வைப்புத் தலங்களாகக் கூறுவாரும் உளர் . பெருமூர் , வைப்புத் தலம் . பெரும் பற்றப்புலியூர் , தில்லை .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

திங்க ளூர்திரு வாதிரை யான்பட் டினமூர்
நங்க ளூர்நறை யூர்நனி நாலிசை நாலூர்
தங்க ளூர்தமி ழானென்று பாவிக்க வல்ல
எங்க ளூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

இறைவனை , ` தமிழில் விளங்குபவன் ` என்று கருதவல்ல யாங்கள் , எம்முள் அளவளாவுங்கால் , எம்மை நீக்கி , ` எம்மினும் உயர்ந்த அடியவர்கட்கு உரிய ஊர் ` என்றும் , யாவரையும் உளப்படுத்து , ` நங்கள் ஊர் ` என்றும் , பிறரொடு சொல்லாடுங்கால் , முன்னிலையாரை நீக்கி , ` எங்கள் ஊர் ` என்றும் சொல்லுமாறு , யாவராலும் அடையப்படும் பெருமானாகிய இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள் , ` திங்களூர் , திருவாதிரையான் பட்டினம் என்னும் ஊர் , நறையூர் , மிகவும் பரவிய புகழினையுடைய நாலூர் , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` நங்களூர் , தங்களூர் , எங்களூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் . ` நனி நல்லிசை` எனவும் , ` நன்று பாவிக்க வல்ல ` எனவும் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

கருக்க நஞ்சமு துண்டகல் லாலன்கொல் லேற்றன்
தருக்க ருக்கனைச் செற்றுகந் தான்றன் முடிமேல்
எருக்க நாண்மலர் இண்டையும் மத்தமுஞ் சூடி
இருக்கு மூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

தீக்கின்ற அந்த நஞ்சினை உண்டவனும் , கல்லால மர நிழலில் இருப்பவனும் , கொல்லும் இடபத்தை ஏறுபவனும் , செருக்குற்ற சூரியனை ஒறுத்துப் பின் அருள்செய்தவனும் , தனது முடியின் மேல் அன்று மலர்ந்த எருக்கம்பூவினாலாகிய இண்டை மாலையையும் , ஊமத்தம் பூவினையும் சூடியவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவன் வீற்றிருக்கும் ஊர்கள் , ` இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` கருக்கு அந் நஞ்சு ` எனப் பிரிக்க . சுட்டு , அத் தன்மையின்மேலது . இனி , ` கருக்க ` எனப்பிரித்து , ` கறுக்க ` என்பது , எதுகை நோக்கித் திரிந்து நின்றதாக உரைப்பாரும் உளர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

ஒளிவடிவினனும் , தீவினைகள் குறைய நிற்பவனும் , திருவருளாகிய தொடர்பினை உடையவனும் , மேலிடத்தில் இருப்பவனும் , தூயவனும் , பாவத்தைப் போக்குபவனும் , ` நள்ளாறு ` என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` ஆக்கூர் , நனிபள்ளி , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` தேசனூர் , பாசனூர் , நாசனூர் , ஈசனூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பேற னூர்பிறைச் சென்னியி னான்பெரு வேளூர்
தேற னூர்திரு மாமகள் கோன்திரு மாலோர்
கூற னூர்குரங் காடு துறைதிருக் கோவல்
ஏற னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும் , பிறையை யணிந்த சடையை உடையவனும் , தெளியப்படுபவனும் , திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும் , இடபத்தை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` பெருவேளூர் , குரங்காடுதுறை , கோவலூர் , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` நாடு ` என்பது அடியாக , ` நாடன் ` என்னும் பெயர் வருதல்போல , ` பேறு ` முதலியன அடியாக , ` பேறன் ` முதலிய பெயர்கள் வந்தன . ` பேறனூர் , தேறனூர் , கூறனூர் , ஏறனூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் . ` வடகுரங்காடுதுறை , தென் குரங்காடுதுறை ` எனக் குரங்காடுதுறைகள் இரண்டு உள .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

ஊறு வாயினன் நாடிய வன்றொண்ட னூரன்
தேறு வார்சிந்தை தேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறு வாரெய்த மானிடை யாறிடை மருதைக்
கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய வெள்ளிய விடையை ஏறுகின்றவரும் , யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள இறைவரது இடையாற்றையும் , இடைமருதையும் , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய் , தெளியத் தகுவாரது உள்ளங்கள் தெளிதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினைத் துன்பம் நீங்க , உடல் குளிர்வார்கள் .

குறிப்புரை :

உடல் குளிர்தல் சொல்லவே , உள்ளமும் , உயிரும் குளிர்தல் சொல்லவேண்டாவாயிற்று . ` ஊறிவாயின ` முதலாக ஓதுவன பாடம் அல்ல . ` நாடிய ` என்பது வினைப்பெயர் . நாடுதல் , தன் காரணந் தோற்றி நின்றது . ` இடைமருதை ஊரன் ஊறுவாயினனாய்த் தேறும் இடங்களொடு நாடிய கூறுவார் ` எனக் கொண்டு கூட்டிப்பொருள் கொள்க . ` எவ்வம் ` என்பதில் , அம்முக் குறைந்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே.

பொழிப்புரை :

கோடிக்குழகரே , அடிகளே , கடற்காற்றுக் கடிதாய் வந்து வீச , இக் கடற்கரையின்மேல் , உமக்கு , யார் துணையாய் இருக்க இருக்கின்றீர் ? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன ; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ ? சொல்லீர் .

குறிப்புரை :

திருமறைக்காட்டு எல்லையின் கோடியில் இருக்கும் அழகராதல் பற்றி , இங்கு உள்ள பெருமான் , ` கோடிக் குழகர் ` எனப் படுவர் . அவரது பெயரே , பின்னர் அத் தலத்திற்கும் ஆயிற்று . அக்கடற் கரையையும் , ` கோடிக்கரை ` என்பர் . ` துணையாக ` என்பது பாடம் அன்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

முன்றான்கடல் நஞ்சமுண் டவ்வத னாலோ
பின்றான்பர வைக்குப காரஞ்செய் தாயோ
குன்றாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
என்றான்றனி யேஇருந் தாய்எம்பி ரானே.

பொழிப்புரை :

குறையாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையில் உள்ள அழகனே , எம்பெருமானே , முன்பு கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட அதனால் , மீட்டும் அவ்வாறு தோன்றின் அதனை உண்டற்பொருட்டோ ? அல்லது கடல் தனியே இருத்தல் கருதி அதற்குத் துணையிருத்தற்பொருட்டோ ? எக்காரணத்தால் இங்கு நீ தனியே இருக்கின்றாய் ? சொல் .

குறிப்புரை :

` பின்றான் ` என்பது , விகற்பத்தின்கண் வரும் , ` அன்றி ` என்பதன் பொருட்டாய் நின்றது . ` பொழில் சூழ்தரு கோடி ` என இயையும் . பொழில் , கடற்கரைச் சோலை .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

மத்தம்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
பத்தர்பலர் பாட இருந்த பரமா
கொத்தார்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
எத்தால்தனி யேஇருந் தாய்எம் பிரானே.

பொழிப்புரை :

களிப்புடையவர் நிறையச் சூழ்ந்த திருமறைக் காட்டிற்குத் தென்பால் , அடியார்கள் பலர் பாடித் துதிக்க எழுந்தருளி யிருக்கும் பரமனே , பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையின்கண் உள்ள அழகனே , எம்பெருமானே , எக்காரணத்தால் நீ இங்குத் தனியே இருக்கின்றாய் ? சொல் .

குறிப்புரை :

மத்தம் , களிப்பு ; அஃது , அதனை உடையார்மேல் நின்றது . களிப்பிற்குக் காரணம் , செல்வ மிகுதி . ` மலி ` என்பது , ` மலிய ` எனப் பொருள் தந்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

காடேல்மிக வாலிது காரிகை யஞ்சக்
கூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல்
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

கோடிக்கரைக்கண் உள்ள அழகனே ! இங்குள்ள காடோ மிகப் பெரிது ; எப்பொழுதும் உன் தேவி அச்சங்கொள்ளுமாறு மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும் , கூகைகளும் பல கூடிக் கூக்குரலிடுதல் இடையறாது ; வேட்டைத் தொழில் செய்து இங்கு வாழ்பவர் மிகவுங் கொடியவர் ; வஞ்சனையுடையவர் ; இவ்விடத்தில் உறை விடத்தைக் கொண்டாயே ; இஃது என் ?

குறிப்புரை :

` காடு ` என்றதும் , கடற்கரைச் சோலையை . அங்கும் ஆறலை கள்வர் வாழ்தல் பெறப்பட்டது . ` இடையறாது ` என்பது சொல்லெச்சம் ; ` குழற ` என்பது பாடம் அன்று . ` இவ்விடம் ` எனச் சுட்டு வருவிக்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

மை பொருந்திய கண்களையுடைய இறைவியின் பாகத்தை உடையவனே , ` கங்கை ` என்பவளும் உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறிடம் இல்லை ; இங்ஙனமாக , கையில் நிறைந்த வளைகளையுடைய காடுகாளோடும் கூடி , பூக்களைக் கொய்தல் பொருந்திய சோலைகளையுடைய கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டாய் ; இஃது எவ்வாறு ?

குறிப்புரை :

காடுகாள் - காடுகிழாள் ; காட்டை உரிமையாக உடையவள் . இவளை , ` பழையோள் ` என்ப . 1 ` காளி ` என்றல் , இவளையே . ` காடுகள் ` என்பது பிழைபட்ட பாடம் . ` காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார் ` ( தி .12 கழறிற்றறிவார் புராணம் 89) என்ற சேக்கிழார் திருப்பாடலை எடுத்துக்காட்டியவர் தாமும் , இதனைத் திருத்தாதே குறிப்பெழுதிச் சென்றார் . திருமுறைத் திருப்பாடல்களில் பலவிடங்களில் பாடங்கள் பிழைபட ஓதப்படுகின்றன என்பதற்கு , இஃதொன்றே போதிய சான்றாகும் . இருவர் மகளிர் உடம்பிலே நீங்கா திருக்க , மூன்றாமவளைக் கூடியது எவ்வாறு என , நகை தோன்ற வினாயது , ` இத்துணை மகளிரோடும் இங்குத் தனியாய் இருத்தல் தகுமோ ` என்பதனைத் தெரிவித்தற் பொருட்டென்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

அரவேரல்கு லாளையொர் பாக மமர்ந்து
மரவங்கமழ் மாமறைக் காடதன் தென்பால்
குரவம்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
இரவேதுணை யாயிருந் தாய்எம்பி ரானே.

பொழிப்புரை :

குங்கும மரத்தின் பூக்கள் மணம் வீசுகின்ற பெருமை பொருந்திய திருமறைக்காட்டிற்குத் தென்பால் குராமரச் சோலை சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே , எம்பெருமானே , பாம்பின் படம் போலும் அல்குலை யுடைய உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்து , இங்கு இராக்காலமே துணையாக இருக்கின்றாய் ; இஃது என் ?

குறிப்புரை :

` அரவு ` முதலாகுபெயர் . ` குரவப்பொழில் ` என்பது மெலித்தலாயிற்று . ` இரவே துணையா ` என்றது , ` ஒருவரும் துணையில்லையாக ` என்றபடி .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பறையுங்குழ லும்மொலி பாடல் இயம்ப
அறையுங்கழ லார்க்கநின் றாடும் அமுதே
குறையாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
இறைவாதனி யேஇருந் தாய்எம்பி ரானே.

பொழிப்புரை :

பறையும் , குழலும் , ஒலிக்கின்ற பாடலும் முழங்க , ஒலிக்கின்ற கழல் ஆரவாரிக்கும்படி அம்பலத்தில் தோன்றி நின்று ஆடுகின்ற அமுதம்போல்பவனே , குறைதல் இல்லாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே , இறைவனே , எம் பெருமானே , நீ ஏன் இங்குத் தனியாய் இருக்கின்றாய் ?

குறிப்புரை :

இங்ஙனம் பலவாறு விளித்தது , ` நீ இவ்வாறு தனித்திருத்தற்கு உரியையோ ` என்னுங் குறிப்பினால் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே.

பொழிப்புரை :

முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே , எம்பெருமானே , ஒற்றி என்ற குறையினால் ஒற்றி யூரையும் , ஆருடையது என்ற காரணத்தால் ஆருரையும் அறுதியாக நீங்கிவிட்டாயோ ? எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய் ?

குறிப்புரை :

கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . சிலேடை வகையால் இங்ஙனம் வினாயது , உனக்கு ஊர் இல்லையா ? எத்துணையோ ஊர்கள் உள்ளனவே ; அவைகளை எல்லாம் விடுத்து , ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும் ? என்றற்கு . ` அது ` என்னும் சுட்டுப் பெயர்கள் , முன்னுள்ள குறிப்பினால் , அவ்வப் பெயரை உடைய ஊர்களைக் குறித்தன .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
படியான்பலி கொள்ளு மிடங்குடி யில்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள்அன்ப தாய்இடங் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் அறிய இயலாத தன்மையை உடையவனே , தலைவனே , நீ பிறரது வழிபாட்டினை ஏற்க நினைக்கு மிடத்து , அதனைச் செய்தற்கு இங்கு நற்குடி ஒன்றேனும் இல்லை ; அதற்கு மாறாக கொடிய வேடர்கள் பலர் வாழ்கின்றனர் ; இத்தன்மையதான இக் கடற்கரைமேல் விருப்பம் உடையையாய் , இவ்விடத்தை உறைவிடமாகக் கொண்டாயே ; இஃது என் ?

குறிப்புரை :

` படியான் `, அண்மை விளி ; ` படியாய் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` கொள்ளுமிடத்து ` என்னும் வினையெச்சத்தின் அத்து , தொகுத்தலாயிற்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே.

பொழிப்புரை :

உலகில் உள்ள ஊர்களில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தென்பால் , அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனை நம்பியாரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர் , சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களேயாவர் .

குறிப்புரை :

அரசன் , அமைச்சன் இவரை , ` அரசு , அமைச்சு ` என்றல் போல , குழகனை , ` குழகு ` என்று அருளிச் செய்தார் . ` தாம் ` என்றது , அசைநிலை . ஏகாரம் , தேற்றம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

பாறு தாங்கிய காட ரோபடு
தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் வாழ்பவரோ ? அழிந்த தலையை ஏந்தியவரோ ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ ? குழையணிந்த காதினை உடையவரோ ? சிறிய கொம்பினையுடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ ? சுடப்பட்ட நீற்றை அணிந்தவரோ ? விளங்குகின்ற பிறையோடு ஆற்றைச் சுமந்த சடையை உடையவரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` தொண்டீர் ` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது ; இறுதித் திருப்பாடலில் , ` பத்தர்காள் ` என்றலைக் காண்க . தலையை உடையவரது அழிவு தலையின்மேல் ஏற்றியுரைக்கப்பட்டது . இளைய ஏறாகலின் , குறுங்கோட்டினை உடையதாயிற்று . பலரும் பலரைத் தலைவர் என்றலின் , ` நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் ` என்று அருளினார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

இட்டி தாகவந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.

பொழிப்புரை :

இறைவரை உமக்கு ஏற்றவாற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே , அருகில் வந்து சொல்லுமின் ; நமக்குத் தலைவ ராகிய தலைவர் , கழுத்து , கை , அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற கரந்தையோ ? அவர் , தொழுவிற் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ ? தம் அடியார்களை , அழிந்த வெண்டலை யில் பிச்சையேற்றுக்கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ ?

குறிப்புரை :

இட்டிதாக - சிறிதாக ; ` இடைநிலம் சிறிதாக ` என்றபடி . இசையுமா நினைதலாவது , போகம் வேண்டுவார் போக வடிவிலும் , யோகம் வேண்டுவார் யோக வடிவிலும் , துன்பம் நீங்க வேண்டுவார் வேகவடிவிலும் நினைதல் .` இங்ஙனமாதலின் , நீவிர் அவர் இயல்பெல்லாம் அறிவீர் ; ஆதலின் வினவுகின்றேன் ; சொன்மின் ` என்றவாறு .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

ஒன்றி னீர்கள்வந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
குன்றி போல்வதோர் உருவ ரோகுறிப்
பாகி நீறுகொண் டணிவரோ
இன்றி யேஇல ராவரோ அன்றி
உடைய ராய்இல ராவரோ
அன்றி யேமிக அறவ ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.

பொழிப்புரை :

இறைவரை உமக்கு ஏற்ற வகையில் நினைந்து துதிக் கின்றவர்களே , நீங்கள் ஒன்றுபட்டு வந்து சொல்லுங்கள் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , குன்றிமணி போலும் நிறம் உடையவரோ ? நீற்றையே குறிக்கோளாகக் கொண்டு அணிவரோ ? யாதொன்றும் இலராய் இரத்தல் தொழிலைச் செய்வரோ ? மற்று எல்லாம் உடையராய் இருந்தும் இரத்தல் தொழிலைச் செய்வரோ ? இவையன்றி , துறவறத்தை மிக உடையரோ ?

குறிப்புரை :

` ஒன்றினீர்கள் ` என்றது முற்றெச்சம் ; ` ஒன்றிநீர்கள் ` என்பது பாடம் அன்று . மதிமறுவுடைத்தாயினும் சிறிதாய அதனைக் கருதாது பெரிதாய ஒளியொன்றையே கருதி ஒளியுடைய முகத்திற்கு அதனை உவமையாகக் கூறுதல் போல , குன்றிமணி சிறிது கருமை உடைத்தாயினும் அது நோக்காது பெரும்பான்மையாகிய செம்மை நோக்கி அதனை இறைவரது நிறத்திற்கு உவமையாக அருளினார் . அன்றி , கருமை அவரது கண்டத்திற்கு உவமமாதற்கு உரித்தென்னுங் கருத்தினால் உவமித்ததுமாம் . ` இன்றி ` என்றது அவரது உண்மை நிலையையும் , ` உடையராய் ` என்றது அவரது பொதுநிலையாகிய ஆளுதல் தன்மையையும் பற்றி என்க . துறவறத்தை மிக உடையராதலாவது , சிறந்த தவக் கோலத்தையும் , யோகத்தையும் , அந்தணர்க்கு அறம் உரைத்தலையும் உடையராதல் . ` இன்றியே இலராவரோ அன்றி உடையராய் இலராவரோ ` என்பதற்கு இவ்வாறன்றி வேறோராற்றான் உரைப்பின் , ஏனையவற்றோடு இயையாமையறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

தேனை யாடுமுக் கண்ண ரோமிகச்
செய்ய ரோவெள்ளை நீற்றரோ
பானெய் யாடலும் பயில்வ ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரோ
மானை மேவிய கண்ணி னாள்மலை
மங்கை நங்கையை அஞ்சவோர்
ஆனை ஈருரி போர்ப்ப ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , மூன்று கண்களை உடையவரோ ? மிகச் சிவந்தநிறம் உடையவரோ ? வெண்மையான நீற்றை அணிந்தவரோ ? பால் , நெய் , தேன் இவைகளை ஆடுதலையும் பலகாற் செய்வரோ ? தம்மையே துணையாகப் பற்றி நிற்பவர்க்கு நல்லவரோ ? மானை நிகர்த்த கண்களை உடைய வளாகிய , மகளிருட் சிறந்த மலைமங்கையை அஞ்சுவித்தற்பொருட்டு ஓர் ஆனையை உரித்த தோலைப் போர்த்துக்கொண்டிருப்பரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` தேனை ஆடும் ` என்றது உடம்பொடு புணர்த்தலாகலின் , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` மேவிய ` என்றது , உவம உருபு . ` அஞ்சுவிக்க ` என்னும் பிறவினை , தொகுத்தல் பெற்று ` அஞ்ச ` என நின்றது .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கோணன் மாமதி சூட ரோகொடு
கொட்டி காலொர் கழலரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
யேறு வேதமு தல்வரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக்
கார்ப்ப ரோநல மார்தர
ஆணை யாகநம் மடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , வளைந்த பெருமை பொருந்திய பிறையைத் தலையிற் சூடுதல் உடையவரோ ? ` கொடுகொட்டி ` என்னும் கூத்தினை ஆடுபவரோ ? காலில் ஒரு கழலை அணிவரோ ? அவரது இசைக் கருவி வீணைதானோ ? அவர் ஏறுவது விடையோ ? அவர் வேதத்திற்குத் தலைவரோ ? அரை நாணாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து அரையில் கட்டுவரோ ? நம்மேல் ஆணையாக நமக்கு நன்மை நிரம்புமாறு நம்மை ஆளுவரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` கொடுகொட்டி காலில் ஓர் கழல் ` என்பது உம்மைத் தொகைபடத்தொக்கு ஒரு சொல்லாய் இறுதி நிலை ஏற்றது . முதற்கண் , ` அடிகள் ` என்றது , ` ஆள்பவர் ` என்னும் பொருளதாய் நின்றது . ` காலர் கழலரோ ` என்பது பிழைபட்ட பாடம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

வந்து சொல்லுமின் மூட னேனுக்கு
வல்ல வாநினைந் தேத்துவீர்
வந்த சாயினை யறிவ ரோதம்மை
வாழ்த்தி னார்கட்கு நல்லரோ
புந்தி யாலுரை கொள்வ ரோஅன்றிப்
பொய்யின் மெய்யுரைத் தாள்வரோ
அன்றி யேமிக அறிவ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

இறைவரை நீர் வல்லவாற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே , யாதும் அறியாதேனாகிய எனக்கு நீங்கள் அருகில் வந்து சொல்லுங்கள் ; நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் நமக்கு வருகின்ற மெலிவை அறிந்து தீர்ப்பரோ ? தம்மை வாழ்த்துகின்றவர்கட்கு நலம் செய்வரோ ? மனத்தொடு பொருந்தச் சொல்லுதலையே ஏற்பரோ ? மற்றும் தாமும் பொய்யில்லாத மெய்யையே சொல்லி நம்மை ஆட்கொள்வரோ ? அதுவன்றி அறிவை மிக உடையரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` புந்தியால் ` என்புழி ஆல் உருபு ஓடுருபின் பொருளில் வந்தது . ` உரை ` முதனிலைத் தொழிற் பெயர் . இதற்கு , ` எம் உரையைத் தம் புந்தியால் ஏற்பரோ ` என்று உரைப்பாரும் உளர் . அறிவு மிக உடையராதல் , எல்லாம் அறிதலும் , தாமே அறிதலும் , அறிந்தாங்கறிதலும் உடையராதல் . ஈண்டும் , ` அறவரோ ` என்று பாடம் ஓதுவார் உளர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

மெய்யென் சொல்லுமின் நமரங் காள்நுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
கையிற் சூலம துடைய ரோகரி
காட ரோகறைக் கண்டரோ
வெய்ய பாம்பரை யார்ப்ப ரோவிடை
யேற ரோகடை தோறுஞ்சென்
றையங் கொள்ளுமவ் வடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

இறைவரை உமக்கு ஏற்குமாற்றால் நினைந்து துதிப்பீராகிய நம்மவர்களே ! நீவிர் அறிந்த உண்மைகள் யாவை ? அவற்றைச் சொல்லுமின் ; நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , கையில் சூலம் உடையரோ ? கரிந்த காட்டில் வாழ்வரோ ? கறுப்பை உடைய கண்டத்தை உடையரோ ? கொடிய பாம்பை அரையிற் கட்டுவரோ ? விடையை ஏறுதல் உடையரோ ? இல்லத்து வாயில்தோறும் சென்று பிச்சை ஏற்கின்ற , பற்றில்லாத துறவரோ ?

குறிப்புரை :

` அவ்வடிகள் ` என்பதில் சுட்டு , ` அத்தன்மையராகிய ` என்னும் பொருளதாய் , பற்றின்மையாகிய சிறப்பினைக் குறித்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

நீடு வாழ்பதி யுடைய ரோஅயன்
நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடு வாரையும் உடைய ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரோ
காடு தான் அரங் காக வேகைகள்
எட்டி னோடில யம்பட
ஆடு வாரெனப் படுவ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , எஞ்ஞான்றும் ஒருதன்மையாய் வாழ்தற்குரிய உலகத்தை உடையரோ ? ` பிரமன் , நெடியோனாகிய மாயோன் ` என்னும் இவர் கட்கும் பெரியரோ ? தம்மைப் புகழ்ந்து பாடும் புரக்கப்படுவாரையும் உடையரோ ? தம்மையே துணையாக அறிந்து பற்றினவர்கட்கு நலம் செய்வரோ ? ` காடே அரங்காக எட்டுக் கைகளினாலும் குறிப்புணர்த்தி , தாளத்தொடு பொருந்த ஆடுவார் ` எனச் சிறப்பித்துச் சொல்லப்படுபவரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` நீடு வாழ்பதி ` என்றது , வீட்டுலகத்தை . ` மாலுக்கும் `, ` பாடுவாரையும் ` என்னும் உம்மைகள் , சிறப்பு .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நமண நந்தியுங் கரும வீரனுந்
தரும சேனனு மென்றிவர்
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
தங்கள் கூறையொன் றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்
றோதி யாரையு நாணிலா
அமண ராற்பழிப் புடைய ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , குமணனது பெரிய மலையிடத்துள்ள சிறிய குன்றுகள் போலத் தம்மிடத்தில் உடையொன்றும் இலராய் நின்றுகொண்டு , ` ஞமணம் , ஞாஞணம் , ஞாணம் , ஞோணம் ` என்று சில மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு , ஒருவரையும் நாணுதல் இல்லாத , ` நமண நந்தி , கரும வீரன் , தருமசேனன் ` என்ற இன்னோரன்ன பெயர்களை யுடையவர்களாகிய சமணர்களால் பழிக்கப்படுதலை உடையரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` என்ற ` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று . ` இவர் ` என்றது , ` இத்தன்மையர் ` என்னும் பொருளதாய் நின்றது . ` என்ற அமணர் ` எனவும் , ` இவர்கின்ற மலை ` எனவும் , இயைத்தலுமாம் . குமணன் , கடையெழுவள்ளல்கட்குப் பின்னர்த் தன் தலையையுங் கொடுத்த கொடையாளனாயினமையின் , ` மலைபோல ` எனக் கூறப்புகுமிடத்து , ` குமணன் மலைபோல ` எனக் கூறுதல் வழக்காயினமை இத் திருப்பாடலாற் பெறுதும் ; அன்றி , சுவாமிகள் காலத்தில் குமணன் மலையில் சமணர் சிலர் இருந்தனராயின் , அதற்கேற்ப , ` குமணன் மலைக்கண் நின்று ` என்று இயைத்துரைக்க . இனி , குமண மாமலை என்ற பாடம் உண்மையின் , கு - நிலம் ; மணம் - பொருந்துதல் என வைத்து ` இந்நிலவுலகத்திற் பொருந்திய மலையிடங்களில் நின்று கொண்டு ` என்றுரைப்பினும் ஆம் . ` ஞமணம் , ஞாஞணம் ` முதலாக அருளியது , சமணர் ஓதும் மந்திரங்கள் மெல்லெழுத்துக்களால் ஆயவை என்பதனை நகைவகையாற் குறித்தவாறு ; ` மூக்கினால் முரன் றோதி ` என்று அருளினார் , திருநாவுக்கரசு சுவாமிகளும் . ( தி .5 ப .58 பா .2)

பண் :கொல்லி

பாடல் எண் : 10

படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
தேத்தி னேன்பணி யீரருள்
வடியி லான்திரு நாவ லூரன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
தம்மை யேமனஞ் சிந்திக்கும்
அடிய னூரனை யாள்வ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

அடியவர்களே , அடியவர்க்கு அடியராவர் செய்யும் செயல்களைப் படியெடுக்கும் தன்மையில் , திருத்தம் இல்லாதவனும் , திருநாவலூரில் தோன்றியவனும் , வனப்பகைக்கு தந்தையும் ஆகிய வன்றொண்டனேன் உங்களை வணங்கித் துதித்தேன் ; கீழ்மையை உடையவனாயினும் , கொடியவனாயினும் , தம்மையே எப்பொழுதும் மனத்தில் நினைக்கின்ற அடியவனாகிய நம்பியாரூரனை , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் கைவிடாது ஆளுதல் செய்வரோ ? அவரது திருவருள் இருந்தவாற்றைப் பணித் தருளுங்கள் .

குறிப்புரை :

`படிசெய் நீர்மையிற் பணிந் தேத்தினேன் ` என்றதை ,
ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே .
( தி .5 ப .91 பா .3) என்ற நாவுக்கரசர் திருமொழியொடு வைத்துக் காண்க . ` வடிவிலான் ` என்பது பாடம் அன்று . ` தம்மை ஆள்வரோ ` என்று வினாவியதும் , ஏனையபோல ஆளுதலையே குறித்துநிற்றலின் , ` தம்வழி நின்று , தமது பாடலைப் பாடுவாரையும் ஆள்வர் ` எனத் திருக்கடைக் காப்பு அருளி யதாயிற்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , எம் தந்தையாகிய சிவபிரான் , தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும் , ஆடையும் , பிறவும் தந்து புரப்பான் ; அதனால் , புகழும் மிகும் ; துன்பங் கெடுதலும் உண்டாம் , இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய நிலையிற்றானே சிவ லோகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறவைத் தருங்காரணம் யாதும் அறுதியாக இல்லை ; ஆதலின் , தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து , தமக்கு விருப்பமாயவற்றையே சொல்லி , அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து நிற்பினும் , அங்ஙனம் சார்ந்தவர்க்கு ஒன்றுந் தருங்குணம் இல்லாத பொய்ம்மையை ஆளுதலையுடைய மக்களைப் பாடுதலை அறவே விடுத்து , அவனது திருப்புகலூரைப் பாடுமின்கள் .

குறிப்புரை :

வேண்டும் சொற்களை வருவித்து , ` தமக்குத் தொண்டராய்த் தம்மையே புகழ்ந்து , தமக்கு இச்சையே பேசினும் , தம்மையே சார்கினும் ` எனக் கூட்டியுரைக்க . தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து இச்சை பேசுதலும் , சார்தலும் ஈயாதாரையும் ஈயப் பண்ணும் தன்மையுடையன என அவற்றது சிறப்புணர்த்தி நிற்றலின் , ` பேசினும் சார்கினும் ` என்னும் உம்மைகள் சிறப்பும்மைகள் . ` சார்வினும் ` என்பது பாடம் அன்று . பொய்ம்மையாவது , உவகையுடையார்போல இனிய முகமும் , இனிய சொல்லுங் காட்டிப் பிறிதொரு காரணத்தின்மேல் இட்டு யாதுந் தாராதொழிதல் . ஓரோவழிச் சிறிது தருவராயினும் , அது மானமுடைய புலவர்க்கு யாதும் தாராதொழிதலினும் இளிவரவே பயத்தலின் , அதனையும் தாராமையாகவே வைத்து , ` தருகிலாப் பொய்ம்மையாளர் ` என்று அருளினார் . இதனை , இளவெளிமான் , பெருஞ்சித்திரனார் இவரிடை நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றியும் உணர்ந்து கொள்க . புலவர்தாம் , செஞ்ஞாயிற்றுச் செலவும் , அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் , பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் , வளிதிரிதரு திசையும் , வறிது நிலைஇய காயமும் என்றிவைகளைச் சென்றளந்து அறிந்தோர் போல அவற்றின் இயல்புகளையும் அறுதியிட்டுரைக்கும் பேரறிவானே ( புறம் -30), தேயம் இடையிட்டும் காலம் இடையிட்டும் உள்ள பொருள்களையும் அறிந்து ( குறள் - 393 உரை ), வள்ளியோர் செவி முதல் வயங்குமொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் ( புறம் .206) பெருமக்கள் என்றும் , அவராற் பாடப்பெற்றோர் , விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப ( புறம் -27) என்றும் அறிந்து கொடுத்தலைச் செய்யாராயினும் , வேற்றுத் தேயத்தராதல் காரணமாக , கேட்டல் மாத்திரையல்லது , யாவதும் காண்டல் இல்லாது யாண்டு பல கழிய ( புறம் -216), செல்வக்காலை நிற்பினும் , அல்லற்காலத்து நில்லாது வந்து ( புறம் - 215) உடனுயிர் துறக்கும் உற்ற நண்பினராதற்கு உரியர் என்று கருதியாயினும் தருதலைச் செய்யார் என்பார் , ` தருகிலாப் பொய்ம்மையாளர் ` என்று அருளினார் . தலைவரது ஊர் முதலியவற்றைப் பாடுதலும் தலைவரைப் பாடுதலேயாமாகலின் , ` எந்தை புகலூர் பாடுமின் ` என்று அருளிச் செய்தார் ; இதனை , ` வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன் - குன்றம் பாடின கொல்லோ ` ( புறம் -131) என்றாற் போல்வன வற்றினுங் காண்க . இதனானே திருப்பதிகங்கள் இறைவரது தலங்கள் முதலியவற்றைப் பெரிதும் புகழ்தற் காரணமும் அறியப்படும் . ` புலவர்கள் ` என்பதில் , ` கள் ` ஒருபொருட் பன்மொழியாய் வந்த விகுதிமேல் விகுதியாதலின் , ` புலவீர்காள் ` என ஈரிடத்தும் விளியேற்றலும் பொருந்துவதாயிற்று . ` அம்மையிற்றான் ` என்பதனை விலக்கலின் , ` இம்மையே ` என்னும் ஏகாரம் , பிரிநிலை . ` சோறும் , கூறையும் ` என்றது , அவற்றோடு உடனெண்ணத் தக்க பிறவற்றையும் தழுவ நின்ற குறிப்பினதாதல் அறிக . ஏத்தல் , ஏத்தப்படுதல் . ஏத்தலும் என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று . ` அம்மை ` என்றது அம்மைக்கு உரியராம் நிலையினை . ஆண்டுப் பிறிதொரு பிறப்பு எடுத்தலினின்றும் பிரித்தலின் , ` அம்மையே ` என்னும் ஏகாரமும் , பிரிநிலையே . ` ஆள்வது ` என்னும் செயப்படு பொருட்பெயர் , அதனைத் தெரிவிக்குங் கருவியாகிய சொல்லுதற்கு ஆயிற்று . அவ் விடத்து நிற்கும் நான்காவது , பகைப் பொருட்டு . ` ஐயுறுதல் ` என்னும் காரியமும் , தன் காரணத்தின்மேல் நின்றது . ஏகாரம் , தேற்றம் . ஈத்துவக்கும் இன்பம் அறியாது தம் உடைமைகளை வைத்திழக்கும் வன்கண்ணரன்றி ( குறள் -228), இரவலரைக் கண்டாற் கரவாது உவந்தீவார் ( குறள் -1061) உலகத்து அரியராகலானும் , ஒரோ வழி அன்னர் உளராய்க் கிடைப்பினும் , அவர்தாம் தருவன நிலை யில்லாத இன்பத்தைச் தரும் சோறுங் கூறையும் போல்வன வல்லது , நிலையுடைய வீடு பேறாகாமையானும் அவரைப் பாடாதே இறைவரைப் பாடுமின் என்பார் , ` சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே ` என அதனை ஐயமறுத் துணர்த்தியருளினார் ; இதனானே , வருகின்ற பாடல்கள் எல்லாவற்றுள்ளும் இஃதொன்றனையே வலியுறுத்தருளிச் செய்தற் காரணமும் உணர்ந்துகொள்ளப் படும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

மிடுக்கி லாதானை வீம னேவிறல்
விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
கூறி னுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , வலியும் வீரமும் இல்லாதவனை , ` இவன் மல்லுக்கு வீமனே போல்வான் , வில்லுக்கு வெற்றியையுடைய அருச்சுனனே போல்வான் ` என்றும் , கொடுத்தற்குணம் இல்லாதவனை , ` இவன் கொடைக்குப் பாரியே போல்வான் ` என்றும் இல்லது கூறிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , நீற்றைக்கொண்ட திரு மேனியையுடைய எம் புண்ணிய வடிவினனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , பல உலக அடுக்கிற்கும் மேல் உள்ள அமரரது உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` வாழ்தல் வேண்டிப் பொய்கூறாது மெய்யே கூறுதலும் ( புறம் -139) செய்யா கூறிக் கிளத்தலை எய்யாமையும் ( புறம் -148) ஆகிய புலவர் பண்புகளின் நீங்கிப் பாடினும் கொடுப்பார் இல்லை ` என்றவாறு . பாரி போல்வார் சிலர் எக்காலத்தும் உளரல்லரோ எனின் , அதுபற்றிக் கொடுப்பார் உளர் என்னார் ஆசிரியர் . என்னையெனின் , ` உரையும் பாட்டும் உடையோர் சிலரே மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே ` ( புறம் -27) என்றும் , ` பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன் றீயாது வீயும் உயிர்தவப் பலவே ` ( புறம் -235) என்றுஞ் சொன்னாராகலின் , அவர்தாம் ஒரோவொருகாலத்து ஒரோவொரிடத்துத் தோன்றி நிற்றலன்றி எஞ்ஞான்றும் எவ்விடத்தும் இல்லாமையும் , உளராயவழியும் சிலரைச் சிலபோது புரத்தலன்றிப் பலரையும் பலகாலத்தும் புரவாமையும் தெளியப்படுதலால் , கடலில் இட்ட காயம்போலச் சிறுபான்மைத்தாய அது , பெரும்பான்மைத்தாய பலர்க்கும் வாழும் வழியாகாமைபற்றி என்க . ` மிடுக்கிலாதான் ` என்றும் , ` கொடுக்கிலாதான் ` என்றும் அருளியது , பலர்க்கு உரிய தன்மையை ஒருவன்மேல் வைத்துக் கூறியவாறு ; என்னை ? ` ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிப ` ( தொல் - பொருள் -222) என்பது இலக்கணமாகலின் . இதனானே பால்வழுவும் இன்றாயிற்று . ` என்று ` என்றதை முன்னவற்றோடுங் கூட்டிச் செவ்வெண்ணாக்குக . ` வில்லுக்கு விசயன் ` என்றமையான் , ஏனையவற்றிற்கும் அவ்வாறு உரைக்கப்பட்டன . ` கொடுப்பாரிலை ` என்றதனை ஒரு சொல்லாக்கி , ` கொடார் ` என்பது அதன் பொருளாக உரைப்பாரும் உளர் . அஃது அப் பொருளதாயின் , ` கொடுப்பாரலர் ` என வருதலல்லது , இவ்வாறு வாராமை மேலும் , அதற்கு எழுவாயின்மையும் உணர்க . ` பொடிக்கொள் ` என்றதில் உள்ள ககரமெய் , விரித்தல் . ` அடுக்கிற்கு ` என்னும் நான்காவது , தொகுத்தல் . ` மேல் ` என்றது , மேல் உள்ளதனை உணர்த்திற்று . அன்றி , ` உள்ள ` என்பது எஞ்சி நின்றது எனலுமாம் . ` அமரர் ` என்பது இடைக்குறைந்து நின்றது . ` அமரர் ` என்பது , முகமனாய்த் தேவரை உணர்த்தல் உலகியல் வழக்காயினும் , உண்மையாய் , அபர முத்தரை உணர்த்தல் மெய்ந்நெறி வழக்கென்க . மேலைத் திருப்பாடலில் , ` சிவலோகம் ` என்றதனையே பின்னர் இவ்வாறு அருளுதலின் , இதற்குப் பிறிது பொருள் கூறல் பொருந்தாமையறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

காணி யேற்பெரி துடைய னேகற்று
நல்ல னேசுற்றம் நன்கிளை
பேணி யேவிருந் தோம்பு மேயென்று
பேசி னுங்கொடுப் பாரிலை
பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண்
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணி யாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , நிலம் சிறிதும் இல்லாதவனை , ` காணியோ பெரிதுடையன் ` என்றும் , கல்வியில்லாத பேதையை , ` கற்று நலம் பெற்றவன் ` என்றும் , ஒருவரோடும் அளவளாவுதல் இல்லாதவனை , ` நண்பரையும் , நல்ல சுற்றத்தாரையும் பேணுதலுடையவன் ` என்றும் , தானே தமியனாய் உண்டு களித்து ஈர்ங்கை விதிராதவனை , ` விருந்தினரை நன்கு புறந்தருவோன் ` என்றும் பொய் சொல்லிப் பாடினும் , நீவிர் வேண்டுவதனை நுமக்குக் கொடுப்பார் இவ் வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , உழவர் எருதுகளைப் பூட்டி நிலத்தை உழ , வயற் பறவைகள் ஒலிக்கின்ற , தண்ணிய திருப் புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரர் உலகமாகிய தேர்க்கு அச் சாணியாய் நின்று அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

மேலைத் திருப்பாடலில் ` மிடுக்கிலாதானை , கொடுக்கிலாதானை ` என்றருளினமையானும் , பின்னும் அவ்வாறு அருளிச் செய்தலானும் , ஈண்டும் இவ்வாறுரைத்தல் திருவுள்ளமாயிற்று . ` பேணி ` என்றது , பெயர் . ` உழுவார் உலகத்தார்க்கு ஆணி ` ( குறள் - 1032) என்புழியும் , ` ஆணி ` என்பது இப்பொருட்டாதல் உணர்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்
நடுங்கி நிற்கும்இக் கிழவனை
வரைகள் போல்திரள் தோள னேயென்று
வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அரைய னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

மெய்ம்முழுதும் நரைகள் வரப்பெற்று , மூப்பெய்தி , உடல் நடுக்கங் கண்டு , கால் தளர்ந்து நிற்கின்ற இத்தன்மையனாகிய கிழவனை , ` மலைகள் போலத்திரண்ட தோள்களையுடைய காளையே ` என்று பொய்யாகப் புகழ்ந்து பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , உயர்ந்த வெள்ளிய இடபத்தினையுடைய புண்ணியனாகிய சிவபிரானது திருப் புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரர் உலகத்திற்குத் தலைவராய் அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

தளர்தலுக்கு , ` கால் ` என்னும் எழுவாய் வருவிக்கப் பட்டது . சுட்டு , தன்மையைக் குறித்தது . ` தோளனே ` என்னும் ஏகாரத்தைத் தேற்றமாகவும் , விளியாகவும் இரட்டுற மொழிந்து கொள்க . இது , பின்வருவனவற்றிற்கும் ஒக்கும் . ` அரையன் ` என்றது , பன்மையொருமை மயக்கம் . தலைவர் ஒருவரேயாதலின் , அந்நிலை யினை , காலத்தான் ஒருவர் ஒருவராக எய்துவர் என்றற்கு இவ்வாறு அருளினார் . பன்மையாக அருளிய வழியும் இதுவே பொருளாகலின் , ` அரையராய் ` என்பதே பாடம் எனினுமாம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப்
பாவி யைவழக் கில்லியைப்
பஞ்ச துட்டனைச் சாது வேயென்று
பாடி னுங்கொடுப் பாரிலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , வஞ்சம் பொருந்திய நெஞ்சை உடையவனும் , பெரும்பொய்யனும் , பாவத்தொழிலை உடையவனும் , நீதி இல்லாதவனும் , பஞ்ச மாபாதகங்களையும் செய்பவனும் ஆகியவனை , ` சான்றோனே ` என்று உயர்த்திப் பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , பொன்போலும் சிவந்த சடையினையுடைய புண்ணியனாகிய சிவ பிரானது திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , மனத்தில் தோன்றும் துன்பங்களையெல்லாம் அறுத்தெறிந்து பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` பஞ்ச ` என்னும் எண்ணுப்பெயர் , அவ்வளவினதாகிய வகையைக் குறித்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

நலமி லாதானை நல்ல னேயென்று
நரைத்த மாந்தனை யிளையனே
குலமி லாதானைக் குலவ னேயென்று
கூறி னுங்கொடுப் பாரிலை
புலமெ லாம்வெறி கமழும் பூம்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அலம ராதம ருலக மாள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , அழகில்லாதவனை , ` அழகுடையவனே ` என்றும் , முழுதும் நரை எய்திய கிழவனை , ` இளையவனே ` என்றும் இழிகுலத்தவனை , ` உயர்குலத்தவனே ` என்றும் மாறிச் சொல்லிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , வயல்களெல்லாம் தாமரை முதலியவற்றின் மணங்கமழ்கின்ற அழகிய திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அலைவின்றி அமரர் உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` மாந்தர் ` என்பதேயன்றி , ` மாந்தன் ` என்னும் சொல்லும் உளது என்க . ( சூளாமணி - தூது . 40) ` மாந்தர் ` என்பதே பாடமாயின் , ஒருமைப் பன்மை மயக்கமாம் . ` இளையனே யென்று ` என்றும் பாடம் ஓதுவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

நோய னைத்தடந் தோள னேயென்று
நொய்ய மாந்தனை விழுமிய
தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று
சாற்றி னுங்கொடுப் பாரிலை
போயு ழன்றுகண் குழியா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆய மின்றிப்போய் அண்ட மாள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

தொழுநோயால் வருந்துகின்றவனை , ` பெரிய தோள்களை யுடைய மல்லனே ` என்றும் , ஒன்றும் ஈயாத சிறுமைக் குணம் உடையவனை , ` இவன் புலவர்கட்கெல்லாம் பெருமை பொருந்திய தாய்போல்பவன் அன்றோ ` என்றும் , நுமக்கு வரும் இளி வரல் கருதாதே பலரும் அறியக் கூறிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , உலகரிடத்துச் சென்று அலைந்து கண்குழிய மெலியாமல் , எம் தந்தையாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , வருத்தமின்றிச் சென்று வானுலகை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` விழுமிய தாய் அன்றோ ` என்றதில் , ` அன்றோ ` என்பது , அத்தொடர்மொழியின் பொருள் நோக்கி வந்தது . ஆயம் - வருத்தம் . ( தமிழ் லெக்ஸிகன் )

பண் :கொல்லி

பாடல் எண் : 8

எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும்
ஈக்கும் ஈகில னாகிலும்
வள்ள லேஎங்கள் மைந்த னேயென்று
வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புள்ளெ லாஞ்சென்று சேரும் பூம்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அள்ளற் பட்டழுந் தாது போவதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , எள் விழுந்த இடத்தை , அவ்விழப்பிற்கு வருந்திக் கூர்ந்து நோக்கித் தேடுபவனாயும் , ஈக்கும் ஈயாது சிந்தியவற்றைச் சேர்ப்பவனாயும் உள்ளவனை , ` அள்ளி வீசும் வள்ளலே , எங்கட்கு வலிமையாய் உள்ளவனே ` என்று சொல்லி வாழ்த்துதலைச் செய்யினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் இல்லை ; ஆதலின் , பறவைகளெல்லாம் சென்று சேர்கின்ற அழகிய புகலூரைப் பாடுமின் ; பாடினால் , உலகியலாகிய சேற்றிற்பட்டு அழுந்தாது பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` விழுந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . வயல்களின் நீர் வளத்தாலும் , பழுத்த மரங்களையுடைய சோலைகளின் வளத்தாலும் , புள்ளெலாம் சென்று சேர்தல் உளதாயிற்று என்க . அள்ளல் , நரகமுமாம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

கற்றி லாதானைக் கற்று நல்லனே
காம தேவனை யொக்குமே
முற்றி லாதானை முற்ற னேயென்று
மொழியி னுங்கொடுப் பாரிலை
பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அத்த னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , ஒருஞான்றும் ஒன்றனையும் கற்றறியாதவனை , ` மிகவும் கற்று வல்லனாயினானே ` என்றும் , அழகு சிறிதும் இல்லாதவனை , ` அழகில் காமதேவனை ஒப்பானே ` என்றும் , ஆண்டும் அறிவும் முதிராதவனை , அவற்றால் முதிர்ந்தவனே என்றும் புனைந்து கூறிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , மரப்பொந்துகளில் ஆந்தைகளின் ஓசை இடையறாது ஒலிக்கின்ற திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரர் உலகிற்குத் தலைவராய் , அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

ஆண்டு முதிர்வால் அடிப்படும் அறிவு மிகுதலின் , அதுவும் பெருமை தருவதாயிற்று . மரங்களின் செறிவால் பகலவன் ஒளி புகாமையின் பகலும் இரவே போல்வதாயினமையின் , ஆந்தைகளின் பாட்டு அறாதாயிற்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

தைய லாருக்கொர் காம னேசால
நலவ ழகுடை ஐயனே
கையு லாவிய வேல னேயென்று
கழறி னுங்கொடுப் பாரிலை
பொய்கை வாவியின் மேதி பாய்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , யாவராலும் அருவருக்கப்படும் தோற்றத்தவனை , ` மகளிருள்ளத்திற்குக் காமன் போலத் தோன்றுபவனே , ஆடவர் யாவரினும் மிக இனிய அழகுடைய வியத்தகு தோற்றத்தை யுடையவனே , முருகனுக்கு வேறாய மற்றொரு முருகனே ` என்று உறுதியாகச் சொல்லிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , பெரிய பொய்கைகளிலும் , சிறிய குளங்களிலும் எருமைகள் வீழ்ந்து உழக்குகின்ற திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரருலகத்திற்குத் தலைவராய் , அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` கையுலாவிய வேலன் ` என்றது , ` முருகன் ` என்னும் பெயரளவாய் நின்றது . ` காமனே யென்று சால நல்வழக் குடையவனே கையுலாவிய வேலனே யென்று ` எனவும் ஓதுப .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்
புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவ லூரன்
வனப்பகை யப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய
பாடல் பத்திவை வல்லவர்
அறவ னாரடி சென்று சேர்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

வயல்களில் செந்தாமரைகள் செழிக்கின்ற அழகிய திருப்புகலூரில் விரும்பி எழுந்தருளியுள்ள செல்வனாய சிவபெருமானை , தேனையுடைய பூஞ்சோலைகளை உடைய திருநாவலூரனும் , வனப்பகைக்குத் தந்தையும் , சடையனார்க்கு மகனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் , அறவடிவினனாகிய அப்பெருமானது அரிய திருவடிகளில் சென்று சேர்வர் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` சிறுவன் ` என்பது , முறைமை சுட்டி வரும் , ` மகன் ` என்னும் பொருட்டாய் வந்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
நின்றும் போந்துவந் தின்னம்பர்த்
தங்கி னோமையும் இன்ன தென்றிலர்
ஈச னாரெழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள்
ஏத்தி வானவர் தாந்தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

மனமே , ஆறங்கங்களையும் ஓதியவராகிய அந்தணர்களது திருவாறைமேற்றளியினின்றும் புறப்பட்டு வந்து திருவின்னம் பரில் பலநாள் தங்கியும் நம்மை இங்குள்ள இறைவர் இனி நாம்செய்யத்தக்கது இன்னது என்று தெளிவித்தாரில்லை ; ஆதலின் , வானவர்கள் தம் நிலையினும் மேன்மேல் உயர்தற் பொருட்டு இரவெல்லாங் காத்து நின்று விடியலில் ஏத்தித் தொழுகின்ற , அழகு மிக்க பெரிய விடையை ஏறும் பெருமானது , செல்வம் நிறைந்த திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; புறப்படு .

குறிப்புரை :

உம்மை , சிறப்பு . ` இன்னதென எடுத்துச் சொல்லாமையின் , இயல்பாக நாம் செய்யும் பணியைச் செயற்பாலம் ` என்றபடி . வானவர்கள் வந்த அன்று செவ்வி வாயாமையின் , இரவெல்லாங் காத்து நின்றனர் என்க . ` தேவர்கள் ` என்ற இடத்து , ` ஆக ` என்பது வருவிக்க . ஈண்டு , ` தேவர்கள் ` என்றது , உயர்ந்த தேவர்களை . ` வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் - தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி ` என்ற திருவாசகத்தைக் காண்க . ( தி .8 திருச்சதகம் 16.)

பண் :கொல்லி

பாடல் எண் : 2

பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்
பண்டை யாரலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்
நினைப்பொ ழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம்
மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந் தெல்லி நாறும்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமையுடைய மனமே , நாம் வாழ்கின்ற ஊரும் , மணந்த மனைவியரும் , பெற்ற மக்களும் , பிற சுற்றத்தாரும் , தேடிய பொருளும் , அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினரல்லர் ; அதனால் , என்றும் உடன் தொடர்ந்தும் வாரார் . ஆதலின் , அவர்களைப் பற்றிக் கவலுதல் ஒழி ; இனி நாம் , சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும் , மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; புறப்படு .

குறிப்புரை :

திணைவிராய் எண்ணப்பட்டன , பன்மையால் உயர் திணை முடிபு கொண்டன . ` நிதியில் ` என்றது , உடம்பொடு புணர்த்தலாகலின் , இவ்வாறுரைக்கப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

புறந்தி ரைந்து நரம்பெழுந்து
நரைத்து நீஉரை யாற்றளர்ந்
தறம்பு ரிந்துநி னைப்ப தாண்மை
யரிது காணிஃ தறிதியேல்
திறம்பி யாதெழு நெஞ்ச மேசிறு
காலை நாமுறு வாணியம்
புறம்ப யத்துறை பூத நாதன்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

மனமே , தோல் திரைந்து , நரம்புகள் வெளித் தோன்றி , வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச் செய்ய நினைப்பது பயனில்லாததாம் ; இதனை நீ அறிவையாயின் , நாம் இளமையிலே செய்து ஊதியம் பெறுதற்குரிய வாணிகம் இதுவேயாக , புறத்திலே அச்சத்தொடு சூழும் பூதங்களுக்குத் தலைவனாகிய இறைவனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; என்னைப் பிறழ்வியாது , விரையப் புறப்படு .

குறிப்புரை :

முதலில் ` புறம் `, ஆகுபெயர் ,. செய்தெனெச்சங்கள் எண்ணின்கண் வந்தன . ` நீ அறிதியேல் ` எனக் கூட்டுக . ` உரையால் ` என்றதில் ஆல் , அசைநிலை . ` புரிந்து ` என்றதனை , ` புரிய ` எனத் திரிக்க . ஆண்மை , ஆளுதல் - பயன்கொள்ளுதல் - தன்மை . அரிது , இல்லாதது . ` திறம்புவியாது ` என்பது விகாரமாயிற்று . ` வாணியம் ` என்பதன்பின் , ` ஆக ` என்பது வருவிக்க . ` வாணிகம் ` என்பது வாணியம் என மருவிற்று . வாணிபம் என்பதும் பாடம் . இத்திருப் பாடலில் , ` புறம்பயம் ` என்பது , ` மடக்கு ` என்னும் அணிநயம்பட அருளப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

குற்றொ ருவ்வரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாம்
செற்றொ ருவ்வரைச் செய்த தீமைகள்
இம்மை யேவருந்திண்ணமே
மற்றொ ருவ்வரைப் பற்றி லேன்மற
வாதெ ழுமட நெஞ்சமே
புற்ற ரவ்வுடைப் பெற்ற மேறி
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமையுடைய மனமே , பொருளைப் பறித்தல் வேண்டி அஃது உடைய ஒருவரைக் கருவியாற் குற்றி , அவர் உடையைப் பறித்து , மேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும் , முறையில் நிற்கும் ஒருவரை முறை யின்றிப் பகைத்து , அப்பகை காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுமை வருங்காறும் நீட்டியாது இம்மையே வந்து வருத்தும் ; இது திண்ணம் ; ஆதலின் , அவைபோல்வன நிகழாதிருத்தற்கு உன்னையன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன் ; புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய , இடப வாகனனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; அவனை நினைந்து புறப்படு .

குறிப்புரை :

` குறு ` என்பது அடியான செய்தெனெச்சம் , ` குற்று ` என வருதல் பண்டைய வழக்கு . குற்று என்பது அடியாக , ` குற்றி ` என வருதல் பிற்கால வழக்கு . குத்துதல் கையாலும் , குற்றுதல் கருவியாலும் நிகழ்வன . முன்னையது புண் செய்யாது ; பின்னையது புண் செய்யும் . கொல்லுதல் ஒன்றாயினும் , அஃது உண்டாகச் செய்யும் செயல்கள் பல உளவாகலின் , ` கொலைகள் ` என்றார் . சூழ்தல் , எண்ணித் துணிதலைக் குறித்தது . எச்செயலுக்கும் மனமே முதலாதலின் , அல்லதை ஒழித்தற்கும் , நல்லதைச் செய்தற்கும் அதனையே துணையாகப் பற்றினார் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கள்ளி நீசெய்த தீமை யுள்ளன
பாவ மும்பறை யும்படி
தெள்ளி தாஎழு நெஞ்ச மேசெங்கண்
சேவு டைச்சிவ லோகனூர்
துள்ளி வெள்ளிள வாளை பாய்வயல்
தோன்று தாமரைப் பூக்கள்மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

மனமே , நீ வஞ்சித்துச் செய்த தீமையால் உள வாகிய பாவமும் நீங்கும்படி , இடபத்தையுடைய சிவலோகனது ஊராகிய , வெள்ளிய இளமையான வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயல்களில் மலர்கின்ற தாமரைப் பூக்களின் மேல் , புள்ளிகளை யுடைய நண்டுகள் பள்ளி கொள்கின்ற திருப்புறம்பயத்தை வணங்கத் தெளிவுடையையாய்ப் புறப்படு .

குறிப்புரை :

` உள் , எள் ` என்பவை அடியாக , ` உள்ளி , எள்ளி ` என்னும் வினையெச்சங்கள் வருதல்போல , ` கள் ` என்பது அடியாக , ` கள்ளி என்னும் வினையெச்சம் வருதலை , இத் திருப்பாடலிற் காண்க . ` கட்டு ` என வருவது , ` களைந்து ` எனப் பொருள்தரும் . ` தெள்ளிது ` என்றதில் , து , பண்புப் பெயர் விகுதி . ` து , று ` என்பன பண்புப் பெயர் விகுதியாதல் பிற்கால முறைமை . அப்பண்புப் பெயர் பண்பியின் மேல் நின்றது . ஈண்டுக் குறித்த பாவம் தமக்கு உளதாகத் துணிந்திலராயினும் , ` உளதாயிருப்பின் , அவையும் நீங்குமாறு வணங்குவோம் ` என்று அருளினார் , அஃது ஒன்றே அதற்குப் பயனாகாமையின் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

படையெ லாம்பக டாரஆளிலும்
பௌவஞ் சூழ்ந்தர சாளிலும்
கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ
லாதெ ழுமட நெஞ்சமே
மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து
மருங்கெ லாங்கரும் பாடத்தேன்
புடையெ லாமணம் நாறு சோலைப்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமை பொருந்திய மனமே , யானைகள் நிரம்பியிருக்க , பல படைகளையும் ஏவல்கொண்டு வெற்றியைப் பெறினும் , அவ்வெற்றியாலே கடல்சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆளினும் , முடிவில் எல்லாம் , தேரையோடு ஒட்டியுள்ள வால்போல ஆகிவிடும் ; ஆதலால் , நீர்மடைகளில் எல்லாம் கழுநீர்ப் பூக்கள் மலர் தலாலும் , பல இடங்களிலும் கரும்பை ஆலையில் இட்டுப் பிழிதலாலும் , எல்லாப் பக்கங்களிலும் தேனின் மணம் வீசுகின்ற சோலை களையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; அவை களைப் பற்றிக் கவலைகொள்ளாது புறப்படு .

குறிப்புரை :

` படைகளை ஆளுதல் ` என்றது , அவ்வாற்றால் வெற்றி பெறுதலைக் குறித்தது . ` சூழ்ந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` அரசு ` அதனையுடைய நிலத்திற்கு ஆயிற்று . ` தேரையொடு பிணைதலை உடைய வால் ` என்க . தேரை பிறந்த பொழுது அதனோடு உடன் தோன்றிய வால் ஒரு கால எல்லையில் அதனைவிட்டு ஒழிதல் போல , படைகளும் , நாடு முதலியனவும் ஒரு காலஎல்லையில் விட்டொழிவனவன்றி , உடன்வருவது யாதும் இல்லை என்றதாம் . ` மலர்ந்து ` என்னும் எச்சம் , எண்ணின்கண் வந்தது . ` ஆட ` என்ற எச்சம் , காரணப் பொருட்டு . ` தேன் ` என்பது , கருப்பஞ்சாற்றையும் குறிக்கும் . ` மணம் நாறு புறம்பயம் , சோலைப் புறம்பயம் ` எனத் தனித்தனி இயையும் . ` சோலைப் புறம்பயம் ` என்றதும் , பிறிதொரு மணம் வீசுதலைக் குறித்தவாறு .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

முன்னைச் செய்வினை இம்மை யில்வந்து
மூடு மாதலின் முன்னமே
என்னை நீதியக் காதெ ழும்மட
நெஞ்ச மேஎந்தை தந்தையூர்
அன்னச் சேவலோ டூடிப் பேடைகள்
கூடிச் சேரு மணிபொழில்
புன்னைக் கன்னி களக்கரும்பு
புறம்ப யம்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமையையுடைய மனமே , ஒருவர் முற்பிறப்பிற் செய்த வினை , இப்பிறப்பில் வந்து அவரைச் சூழ்ந்து கொள்ளும் என்பது உண்மையாதலின் , அங்ஙனம் வந்து சூழ்வதற்கு முன்பே , எமக்கும் பிறர்க்கும் தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய , அன்னப் பேடைகள் , அவற்றின் சேவல்களோடு முன்னே ஊடல் கொண்டு , பின்பு கூடலைச் செய்து வாழ்கின்ற அழகிய சோலைகளில் உள்ள இளைய புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று மணம் வீசுகின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம் ; என்னை நீ கலங்கச் செய்யாது புறப்படு .

குறிப்புரை :

` கன்னிப் புன்னை ` என மாற்றியுரைக்க . பெண் மக்களுள் மணமாகாத இளம் பருவத்தாளைக் குறிப்பதாகிய , ` கன்னி ` என்னும் சொல்லால் , புன்னை முதலியவற்றைக் குறித்தல் உயர்வு பற்றிய பான்மை வழக்கு . ` கழி ` என்றது , கழிபோல நீர் வற்றாது ஓடும் வாய்க்கால்களை . ` புன்னைக் கன்னிகழிக்கணாறும் ` என்று ஒரு பாடம் காணப்படுகின்றது .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மலமெ லாமறும் இம்மை யேமறு
மைக்கும் வல்வினை சார்கிலா
சலமெ லாமொழி நெஞ்ச மேஎங்கள்
சங்க ரன்வந்து தங்குமூர்
கலமெ லாங்கடல் மண்டு காவிரி
நங்கை யாடிய கங்கைநீர்
புலமெ லாமண்டிப் பொன்வி ளைக்கும்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

மனமே , இப்பிறப்பிற்றானே மலங்கள் யாவும் நீங்கும் ; மறு பிறப்பிற்கு வாயிலாக வலிய வினைகள் வந்து அடைய மாட்டா ; ஆதலின் , நீ துன்பத்தை விட்டொழி ; எங்கள் சங்கரன் வந்து தங்கியிருக்கும் ஊராகிய , காவிரிநதி என்கின்ற நங்கை முழுக ஓடுகின்ற , கடலிற் காணப்படுவது போல நாவாய்கள் மிகுந்து காணப்படுகின்ற கங்கைநதியின் நீர் போலும் நீர் , வயல்களிலெல்லாம் மிகப் பாய்ந்து பொன் போலும் செந்நெற்களை விளைவிக்கின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம் .

குறிப்புரை :

` காவிரி நங்கை ஆடிய , கலமெலாம் கடல் மண்டு கங்கைநீர் ` எனக் கூட்டுக . காவிரி நதியில் கரைகடந்து பெருகும் வெள்ளத்தை அந்நதியாகிய நங்கை முழுகிய நீராக அணிந்துரைத்தார் . ` கங்கை ` என்றது , ஆகுபெயராய் அதன் நீரை உணர்த்திற்று . ` பொன் ` உவமையாகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பண்ட ரீயன செய்த தீமையும்
பாவ மும்பறை யும்படி
கண்ட ரீயன கேட்டி யேற்கவ
லாதெ ழுமட நெஞ்சமே
தொண்ட ரீயன பாடித் துள்ளிநின்
றாடி வானவர் தாந்தொழும்
புண்ட ரீகம லரும் பொய்கைப்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமையையுடைய மனமே , முற்பிறப்பில் நீக்குதற்கு அரியனவாகச் செய்த தீய செயல்களின் பழக்கமும் , அச் செயல்களால் வந்த பாவமும் விரைய நீங்கும்படி நான் கண்ட அரிய வழிகளை நீ கேட்டு நடப்பதாயின் , தேவர்கள் அரிய பல தொண்டுகளைச் செய்து . பாடியும் , குதித்து நின்று ஆடியும் தொழுகின்ற , தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகளை யுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; கவலையுறாமல் புறப்படு .

குறிப்புரை :

` பண்டரியன ` என்றாற்போல நீட்டல் இன்றி ஓதுவன பாடம் அல்ல என்பது , ` புண்டரீகம் ` என்றதனானே விளங்கும் . ` கண்ட ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` தொண்டு அரியன ` என்றவிடத்து . ` செய்து ` என்பது வருவிக்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந்
துயக்க றாத மயக்கிவை
அஞ்சி யூரன் திருப்பு றம்பயத்
தப்ப னைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு
துய்து மென்று நினைத்தன
வஞ்சி யாதுரை செய்ய வல்லவர்
வல்ல வானுல காள்வரே.

பொழிப்புரை :

இறந்தும் , பின்பு பிறந்தும் , அதன் பின் வளர்ந்தும் சுழலுதல் நீங்காத மயக்கத் தொழிலாகிய இவைகளுக்கு அஞ்சி , நம்பியாரூரன் , ` திருப்புறம்பயத்தை வணங்கி உய்வோம் ` என்று நெஞ்சினாலே நினைத்து , ஆங்கிருக்கின்ற தன் தந்தையைத் தமிழ்ச் சீர்களால் பாடிய இப்பாடல்களைக் கரவில்லாது பாட வல்லவர்கள் , அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை ஆள்வார்கள் .

குறிப்புரை :

துயக்கு - கலக்கம் ; அஃது அதனைச் செய்கின்ற சுழற்சியைக் குறித்தது . மயக்கமாவது , துன்பத்தை இன்பம் எனக் கருதுதல் . வஞ்சித்தலாவது , இறத்தல் முதலியவற்றிற்கு அஞ்சாது , அஞ்சினார்போலக் காட்டுதல் . மயக்கினை நீக்கவல்ல வானுலகு , சிவலோகம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 1

காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
ஓரி டத்திலே கொள்ளும் நீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர
விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

கருமைநிறம் பொருந்திய நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே , நிலவுலகமெல்லாம் உம்மையே வணங்கித் துதித்துத் தொண்டுபுரியும் பெருமையுடைய , திருப்பைஞ்ஞீலி இறைவரே , காட்டில்வாழும் அழகரே , நீர் வெண்மையான தலையோட்டினைக் கையிற்கொண்டு ஊரெலாந் திரிந்து என்ன பெறப் போகின்றீர் ? இவ் வோரிடத்திற்றானே நீர் வேண்டிய அளவின தாகிய பிச்சையைப் பெற்றுக்கொள்வீர் ; அது நிற்க ; உமக்கு முத்து வடமாவது , பாம்புதானோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது அவர் தமது ஆரமாக மார்பில் பாம்பினை அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . ` கண்டர் `, அண்மை விளி . செய்தல் , ஈட்டுதல் , ` பணியும் ` என்றது , ` பணி ` என்னும் பெயரடியாகப் பிறந்த செய்யும் என்னும் எச்சம் . ` ஆரணீயம் ` என்றது , நீட்டும்வழி நீட்டல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல்
வாய பாம்பது மூசெனும்
பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற்
பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்
மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

இறைவரே , மலையின்கண் பிறந்த , ` சந்தனம் , வேங்கை , கோங்கு , மிக்க கரிய அகில் , சண்பகம் ; என்னும் மரங்களை அலைத்துக்கொண்டு வரும் , தண்ணிய நீர் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கின்ற , காட்டில் வாழும் அழகரே , நுமது வெள் விடை முழக்கமிட்டுச் சினந்து பார்க்கின்றது ; சிவந்த நெருப்புப் போலும் நஞ்சினைக் கொண்ட வாயினையுடைய பாம்பு , ` மூசு ` என்னும் ஓசையுண்டாகச் சீறுகின்றது ; ஆதலின் , நீர் பிச்சைக்கு வரும் போது கையில் பாம்பையேனும் கொண்டுவருதல் வேண்டா .

குறிப்புரை :

இஃது அவர் தமது கையிற் பாம்பினைப் பிடித்து ஆட்டு தலைக் கண்டு அஞ்சியவள் கூறியது . ` செந்தழல் ` என்றது , அடையடுத்த உவம ஆகுபெயராய் , நஞ்சினைக் குறித்தது . விடையையும் வேண்டா என்றலே கருத்தாகலின் , ` பாம்பு வேண்டா ` என்றதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது . ` மலைத்த ` என்பதற்கு , ` மேலே கொண்ட ` என்றும் , ` முரித்த ` என்றும் உரைத்தலுமாம் . பசுமை , இங்குத் தண்மை மேற்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

தூய வர்கண்ணும் வாயும் மேனியுந்
துன்ன ஆடை சுடலையில்
பேயொ டாடலைத் தவிரும் நீரொரு
பித்த ரோஎம் பிரானிரே
பாயும் நீர்க்கிடங் கார்க மலமும்
பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , பாயுந் தன்மையுடைய நீரைக் கொண்ட அகழியில் நிறைந்துள்ள தாமரைகளும் , அதன் கரையில் , மாதவியும் , புன்னையும் பொருந்திய ` சோலைகள் சூழ்ந்த திருப் பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள , காட்டில் வாழும் அழகரே , நீர் , கண்ணும் , வாயும் , மேனியும் அழகியராய் இருக்கின்றீர் ; ஆயினும் , தைத்த கோவணத்தை உடுத்து , சுடலையில் பேயோடு ஆடுதலை ஒழிய மாட்டீர் ; நீர் ஒரு பித்தரோ ? அவற்றை விட்டொழியும் .

குறிப்புரை :

இஃது , அவர் பேயோடு ஆடுதலை நினைந்து அஞ்சியவள் கூறியது . தூய்மை , ஈண்டு அழகு . ` தூயவர் ` என்பது இடவழுவமைதி . ` கண்ணும் , வாயும் , மேனியும் ` என்றது , அவரது திருமேனியிற் சில உறுப்புக்களை விதந்தவாறு . ` ஆடை ` என்ற விடத்தும் இரண்டனுருபு விரிக்க . ` துன்ன ஆடையைத் தவிரும் என்றது , ` நல்லாடையை உடுத்து வாரீர் ` என்றபடி . ` தவிரும் நீர் பித்தரோ ` என்றமையால் பித்தரோ என்ற காரணம் புலப்படுத்தப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

செந்த மிழ்த்திறம் வல்லி ரோசெங்கண்
அரவம் முன்கையில் ஆடவே
வந்து நிற்குமி தென்கொ லோபலி
மாற்ற மாட்டோ மிடகிலோம்
பைந்தண் மாமலர் உந்து சோலைகள்
கந்த நாறுபைஞ் ஞீலியீர்
அந்தி வானமும் மேனி யோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

பசிய , தண்ணிய , சிறந்த பூக்களை உதிர்க்கின்ற சோலைகள் நறுமணம் வீசுகின்ற திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளி இருப்பவரே . காட்டில் வாழும் அழகரே , நீர் மகளிர் மனத்தைக் கவர்தற்கு , ` இயல் , இசை , நாடகம் ` என்னும் முத்தமிழிலும் வல்லிரோ ? நும் மேனியும் அந்தி வானம் போல்வதோ ? சொல்லீர் , அவை நிற்க ; நீர் , உமது முன்கையில் பாம்பு நின்று படம் எடுத்து ஆடும்படி வந்து நிற்பது என் ? இதனால் , நாங்கள் கொண்டுவந்த பிச்சையை இடாது போக மாட்டேமும் , இடமாட்டேமும் ஆகின்றேம் .

குறிப்புரை :

` இப்பாம்பினை விடுத்துவாரீர் ` என்றபடி , இஃது அவர் தமது முன்கையில் பாம்பினைக் கங்கணமாக அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . கொல் ஓ அசைகள் . ` மேனியும் அந்தி வானமோ ` என மாற்றிக்கொள்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

நீறு நுந்திரு மேனி நித்திலம்
நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்
திடகி லோம்பலி நடமினோ
பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

தலைவரே , காட்டில் வாழும் அழகரே , நீர் , அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு , ` யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்றீர் ; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது . ஆயினும் , கரிய நீண்ட கண்களையுடைய பெண் ஒருத்தி யோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர் ; அதன் மேலும் நீர் , கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ ? சொல்லீர் ; இதனால் , உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம் ; நடவீர் .

குறிப்புரை :

இஃது அவரைப் பிரியாது உடன் வருகின்ற தேவியை யும் , அவரது சடையில் உள்ள கங்கையையும் கண்டு அஞ்சினவள் கூறியது . ` இவ்விருவரையும் விடுத்து வாரீர் ` என்பது குறிப்பு . ` நித்திலம் ` என்றவிடத்து , ` போல்வது ` என்பது எஞ்சி நின்றது . நீற்றழகில் திளைத்தவள் , பின் தேவியைக் கண்டு அஞ்சினாள் என்க . அவ் வச்சத்தின்பின் தோன்றிய புலவியானே , ` இடகிலோம் ; நடமின் ` என்றாள் . ` நீணெடுங் கண்ணினாள் ` என்பதும் பாடம் . ` சிறிது பிச்சை இடுமின் ` என்ற குறிப்பெச்சம் வெளிப்படுத்தி உரைக்கப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

குரவம் நாறிய குழலி னார்வளை
கொள்வ தேதொழி லாகிநீர்
இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே
நடந்து போகவும் வல்லிரே
பரவி நாடொறும் பாடு வார்வினை
பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

நாள்தோறும் பாடிப் பரவுவாரது வினைகளைப் பற்றறச் செய்யும் திருப்பைஞ்ஞீலி இறைவரே , காட்டில் வாழும் அழகரே , நீர் , குராமலரின் மணத்தை வீசுகின்ற கூந்தலையுடைய மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்வதே தொழிலாய் , இங்குள்ள இல்லங்களை இரவிலும் வந்து அறிகின்றீர் ; அதனால் , நள்ளிரவில் இங்குநின்றும் நடந்துபோகவும் வல்லீரோ ? அதுவன்றிப் பாம்பு ஆட்டவும் வல்லீரோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது , அவர் இருளிற்கு அஞ்சாராதலையறிந்து அஞ்சினவள் கூறியது . உடன் போக்கை விரும்புதலும் குறிப்பென்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர்
என்பெ லாமணிந் தென்செய்வீர்
காடு நும்பதி ஓடு கையது
காதல் செய்பவர் பெறுவதென்
பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் அழகரே , நீர் , ` யான் , பாடு தலையுடைய வண்டுகள் இசையை முழக்குகின்ற சோலைகளை யுடைய திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சையிடுமின் ` என்று சொல்லி வந்து நிற்கின்றீர் ; நீர் , இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடுகின்றீர் ; அதனோடு ஒழியாது , எலும்புகளை யெல்லாம் அணிந்து என்ன பெறப்போகின்றீர் ? அதுவன்றி , நும் ஊரோ , காடு ; நும் கையில் இருப்பதோ , ஓடு ; இவ்வாறாயின் உம்மைக் காதலிப்பவர் பெறும் பொருள் யாது ? இந்நிலையில் நீர் , ஆடல் பாடல்களிலும் வல்லீரோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது , அவர் தம் மேனியில் எலும்பெல்லாம் அணி தலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . அவரது ஆடல் பாடல்களில் திளைத்தவள் , எலும்பணிதலைக் கண்டு அஞ்சினாள் என்க , கொன்றை , அடையாள மாலையாதலோடு நறுமணம் பொருந்திய தாயும் , காதலித்தார்க்குச் சூட்டுதற்கு உரித்தாயும் இருத்தல்பற்றி , ` அஃது ஒக்கும் ` என மகிழ்ந்தாள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங்
கங்கை யாளொடு திங்களும்
மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு
வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அத்தி யீருரி போர்த்தி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் அழகரே , நீர் , ` யான் அடியார்களும் , சித்தர்களும் பத்திமிகுதியால் திருப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்று சொல்லிவந்து நிற்கின்றீர் ; ` ஊமத்தை , கொன்றை ` என்னும் இவற்றின் சிறந்த மலர்களும் , வன்னியின் இலையும் , கங்கையும் , பிறையும் , அவற்றொடு நெருங்கிய வெண்டலையும் , கொக்கிறகும் , வெள்ளெருக்கும் உம் சடையிலே உள்ளன ; அவைகளே யன்றி , யானையை உரித்த தோலையும் மேனிமேல் போர்த்துக் கொள்வீரோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது அவர் , யானைத்தோல் போர்த்திருத்தலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . ` மாமலர் மத்தக் கொன்றை ` என்பதனை , ` மத்தக் கொன்றை மாமலர் ` என மாற்றியுரைக்க , வெண்டலை தாருகா வனத்து முனிவர்கள் விட்டது என்பதனைக் கந்தபுராணம் ததீசியுத்தரப் படலத்திற் காண்க . ` கொக்கிறகொடு ` என விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் அன்று . கொக்கிறகு , கொக்குருவாய அசுரனை அழித்து அணிந்தது . ` சடைய ` என்ற விடத்து நின்ற , ` தாம் ` என்பது அசை நிலை . ` வெள்ளெருக்கு நுஞ்சடையவாம் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

தக்கை தண்ணுமை தாளம் வீணை
தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்க ரைகுட முழவி னோடிசை
கூடிப் பாடிநின் றாடுவீர்
பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் அழகரே , நீர் , ` யான் , எப்பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்று சொல்லி வந்து நிற்கின்றீர் . நீர் , ` தக்கை , தண்ணுமை , தாளம் , வீணை , தகுணிச்சம் , கிணை , சல்லரி , சங்கு , குடமுழா ` என்னும் இவற்றொடு கூடி , பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடுவீர் ; ஆயினும் , அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது , எலும்பையும் , ஆமையோட்டையும் அணிந்து கொண்டீரோ ? சொல்லீர் .

குறிப்புரை :

இஃது , அவர் , எலும்பும் ஆமையோடும் அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது . அவரது இசையிலும் , கூத்திலும் திளைத்தவள் , எலும்பையும் , ஆமையோட்டையும் கண்டு அஞ்சினாள் என்க . தக்கை முதலாக , குடமுழா ஈறாகச் சொல்லப்பட்டவை , வாச்சிய வகைகள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு
கழுத்தொர் பாம்பவை பின்புதாழ்
மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர்
வேதம் ஓதுதிர் கீதமும்
பைய வேவிடங் காக நின்றுபைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும்
ஆர ணீய விடங்கரே.

பொழிப்புரை :

தலைவரே , காட்டில் வாழும் அழகரே , உமக்குக் கையில் ஒரு பாம்பு ; அரையில் , கட்டிய ஒரு பாம்பு ; கழுத்தில் ஒரு பாம்பு ; அவையெல்லாம் பின்புறமும் ஊர்கின்ற மேனி முழுவதும் நீற்றினால் பூசியுள்ளீர் ; அதனோடு வேதம் ஓதுகின்றீர் ; இவற்றோடு இசையும் உம்மிடத்தில் மெல்ல அழகியதாய்த் தோன்ற வந்து நின்று , ` யான் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்கின்றீர் ; பிச்சை எடுக்கும் இக்கோலம் எத்தன்மையதோ ? சொல்லீர் .

குறிப்புரை :

பிச்சைக்கு வருவோர் இவ்வாறு பாம்புகளை உடம்பெங்கும் அணிந்துவருதல் கூடாது என்றபடி . இஃது , அவர் கை முதலியவற்றில் பாம்பை உடையவராதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரை
மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர்
வேண்டிக் காதல் மொழிந்தசொல்
மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன்
றொண்டன் வாய்மொழி பாடல்பத்
துன்னி இன்னிசை பாடு வார்உமை
கேள்வன் சேவடி சேர்வரே.

பொழிப்புரை :

அன்னங்கள் தங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள , காட்டில் வாழும் அழகராகிய இறைவரை , தோன்றி மறைகின்ற நுண்ணிய இடையினையுடைய மங்கையர் பலர் காதலித்து அக் காதலை வெளிப்படுத்திய சொற்களை யுடைய , நிலைபெற்ற பழைய புகழினையுடைய திருநாவலூரில் தோன்றினவனாகிய வன்றொண்டனது வாய்மொழியான இப் பாடல்கள் பத்தினையும் , மனத்தில் புகக்கொண்டு , இனிய இசையாற் பாடுபவர் , உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது செவ்விய திரு வடியை அடைவர் .

குறிப்புரை :

பாடலை மனம்புகச் செய்தலை, `மனனம் செய்தல்` என்பர். பாடல்களை ஒருவர் சொல்லக் கேட்டுப் பாடுவதிலும், தாம் அறிந்து பாடும்பொழுதே இசை இனிதாய் அமையும் என்க.

பண் :கொல்லி

பாடல் எண் : 1

குருகுபா யக்கொழுங் கரும்புக ணெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தண்ஆ ரூரரைப்
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

குருகுகளே , நீங்கள் பறந்து உலாவுவதனால் செழுமையான கரும்புகள் நெரிந்து பெருகிய சாறு , அருகாகச் சென்று பாய்கின்ற வயல்களையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை , யான் உள்ளத்தால் திளைக்கின்றவாறும் , திசைநோக்கி வணங்கித் துதிக்கின்றவாறும் , நினைந்து நெஞ்சு உருகுகின்றவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவர்க்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` குருகு ` என்னும் அஃறிணை இயற்பெயர் பன்மை குறித்து நின்று , அண்மை விளி ஏற்றது . ` குருகு ` என விளித்தமையின் , வாளா , ` பாய ` என்றாள் . குருகு , ` பறவைப் பொது ` எனவும் , ` நீர்ப் பறவை ` எனவும் , ` அன்னம் ` எனவும் கூறுப . ` வல்லீர்களோ ` என்றது , ` அத்துணை இரங்குவீரோ ` என்றபடி .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

பறக்கும் இயல்புடைய எங்கள் கிளிகளே , பாடும் இயல்புடைய எங்கள் நாகணவாய்ப் புட்களே , அறத்திற்குக் கண் என்று சொல்லத் தக்க தலைவராகிய திருவாரூர் இறைவரை , யான் ஒரு ஞான்றும் மறக்க இயலாமையையும் , அது காரணமாக எனது கைவளைகள் நில்லாது கழன்று வீழ்தலையும் , கண்கள் உறங்குதல் இல்லாமையையும் , என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

பறக்குந் தன்மையால் விரையச் செல்லவும் , பாடுந் தன்மையால் சொல்லவும் வல்லீர்கள் என்பது குறிப்பு . தன்னாலும் , தன் தோழியராலும் வளர்க்கப்படுவனவாகலின் , ` எம் கிள்ளைகாள் எம்பூவைகாள் ` என உரிமை தோன்றக் கூறினாள் . பறத்தலையும் , பாடு தலையும் ஒவ்வொன்றற்கே உரித்தாகக் கூறினாளாயினும் , இரண்டும் இரண்டற்கும் உரியனவாகக் கூறுதலே கருத்தென்க . அறத்திற்குக் கண் எனப்படும் தகுதியாவது , செல்லும் நெறியையும் , செல்லா நெறியையும் அதற்கு அறிவிக்கும் தலைமை .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
ஆளும்அம் பொற்கழல் அடிகள்ஆ ரூரர்க்கு
வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்
கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

சுற்றிலும் ஓடிச் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே , அடியவர்களை ஆளுகின்ற அழகிய பொன் போலும் திருவடிகளை யுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , யான் இவ் வுடம்பின் நீங்காது வாழுமாறும் , என்வளைகள் கழலுமாறும் , மாறாத முறையும் என்னிடத்து மாறி நிகழுமாறும் ஆகிய இவைகளை என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` கவலையற்றுத் திரிகின்ற நீங்கள் என்னையும் அவ்வாறு செய்மின் ` என்பாள் , ` சூழும் ஓடிச் சுழன் றுழலும்வெண் ணாரைகாள் ` என விளித்தாள் . ` சூழ் ` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் , அதனையுடைய இடத்திற்கு ஆயிற்று . அஃது எல்லா இடங்களையும் குறித்தலின் , முற்றும்மை பெற்றது . ` ஆளும் ` என்றது , இன எதுகை ; ` ஆழும் ` எனப் பாடம் ஓதினும் இழுக்காது . ` உடம்பின் நீங்காது வாழுமாறு ` என்றது , ` இறவாமை மட்டிலே உளதாக , ஏனைய எல்லா நலங்களும் போயொழிந்த ` என்றபடி ` மாறும் ` என்றதில் , மாறு முதனிலைத் தொழிற்பெயர் . மாறாத முறைமையாவது , ` சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் - தாங்காது மன்னோ பொறை ` ( குறள் - 990) என்பது . அது மாறி நிகழ்தலாவது , அச்சான் றாண்மைக்கு எல்லையாகிய திருவாரூர் இறைவர்தாமே ,` அன்பு , நாண் , ஒப்புரவு , கண்ணோட்டம் , வாய்மை ` ( குறள் - 986.) என்னும் அடிநிலைகளை அகற்றி , தம் பொருட்டு இறந்துபாடெய்தும் பெண் ணொருத்தியைக் கடைக்கணியாது வாளாவிருத்தல் . சுவாமிகள் , தம் மிடத்து இறைவர் இவ்வாறிருத்தலை , இம்முறையாற் குறித்தருளினார் என்க . முறை பிறழாதாரைப் பற்றியும் இவ்வாறு முறையிடுதல் , ஆற்றா மையுடையார்க்கு இயல்பென்க . ` எனக்கு ` என்றது . உருபு மயக்கம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

சக்கிரவா கத்திளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங் கள்செயும் அடிகள்ஆ ரூரர்க்கு
வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உக்கிரமில் லாமையு முணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

` சக்கிரவாகம் ` என்னும் இனத்து , இளைய பேடைகளே , சேவல்களே , முறையல்லாதவற்றைச் செய்கின்ற தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , யான் மனம் மாறுபடாமையையும் , எனது வளைகள் நில்லாது கழலுதலையும் , அவர்மீது புலவி தோன்றாமையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` சக்கிரம் ` முதலாக நிற்பினும் , இசைகெடாதாகலின் , ` சக்ரம் ` என்றாற்போல ஆரியமாகப் பாடம் ஓதுதல் வேண்டாவென்க . பறவைப் பெயர் , சக்கிரவாகமேயன்றி , சக்கிரவாளம் அன்று . பேடைகளை முன்னே விளித்தாள் . அவை தனக்கு இரங்கும் என்னுங் கருத்தால் , சேவல்களையும் விளித்தாள் . அவை ஆரூரரது அக்கிரமங்களை எடுத்துச் சொல்லும் என்னுங் கருத்தால் . அக்கிரமங்கள் , மேற்கூறியன . மனம் மாறுதலாவது , வேறொருவரைத் தலைவராக ஏற்க நினைத்தல் . புலவாமையைக் கூறியது , தனது எளிமையைக் குறித்தற்பொருட்டு . இங்கும் , சுவாமிகள் , தம் நிலையை இவ்வாற்றாற் குறித்தருளினார் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை யடிகள்ஆ ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.

பொழிப்புரை :

இலைகளைக் கொண்ட சோலையிடத்து இருக்கின்ற வெள்ளிய நாரைகளே , அழித்தல் தொழிலைக் கொண்ட சூலப் படையையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , எனது உடை நெகிழ்கின்றதையும் , உயர்ந்த வளைகள் கழன்றொழிந்ததையும் , கொங்கைகள் பசலை அடைந்ததையும் என்பொருட்டுச் சொல்ல வல்லீர்களோ ?

குறிப்புரை :

சோலையது நிழலின்பத்தில் , எனது வருத்தத்தை நினைக்கின்றிலீர் போலும் என்பாள் ,` இலைகொள் சோலைத்தலை இருக்கும் வெண்ணாரைகாள் ` என விளித்தாள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள்
அண்டவா ணர்தொழும் அடிகள்ஆ ரூரரைக்
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

வண்டுகளே , மேகங்களே , நுண்ணிய மணல்மேல் இருக்கின்ற குருகுகளே , வானத்தில் வாழ்வோராகிய தேவர்கள் வணங்குகின்ற தலைவராகிய திருவாரூர் இறைவரை ஒரு நாள் யான் கண்டவாறும் , அன்றுமுதல் காமத் தீ , கனன்று எரிந்து என் உடம்பை உண்டுவிட்ட வாறும் ஆகிய இவைகளை என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` ஒருநாள் ` என்பது , சொல்லெச்சம் . உடம்பு உளதாய் நிற்பினும் செயலற்றுக் கிடத்தலின் ,` உண்டது ` என்றாள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆனலங் கொண்டவெம் மடிகள்ஆ ரூரர்க்குப்
பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன்
ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

தேனினது இன்பத்தை நுகர்ந்த தேன்களே , வண்டுகளே , மேகங்களே , பசுவினது பயனாகிய பால் முதலியவற்றை உவந்து கொண்ட எம் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , பாலாகிய நற்பொருளைக் கொண்ட எனது பருத்த கொங்கைகள் பசப் பெய்தி , பொன்போலும் பசலை என் மேனியினது அழகையெல்லாம் கொள்ளை கொண்டமையை . என் பொருட்டுத் தெரிவிக்கவும் வல்லீர்களோ ?

குறிப்புரை :

` தேனையுண்ணும் விருப்பத்தை விடுத்து இது செய்தல் வேண்டும் ` என்பாள் , ` தேன் நலங் கொண்ட தேன் வண்டுகாள் ` என்றாள் . ` தேன் ` என்பதும் , வண்டுகளில் ஒரு வகை . ` தேன் வண்டு ` என்பது . உம்மைத் தொகையாய் ஒரு சொல்தன்மைப் பட்டு ஈற்றில் விளியேற்றமையின் , இவ்வாறு உரைக்கப்பட்டது . இனி ,` தேன் வண்டு ` என்பது ஒரு சொல்லாய் வாளா பெயராய் நின்றது எனினுமாம் . ` பயந்து ` என்னும் எச்சம் , எண்ணின் கண் வந்தது . ` ஊன் `, ஆகுபெயர் . சிறப்பும்மை மாற்றியுரைக்கப்பட்டது ; நின்றாங்கு நிறுத்தி , எச்சப் பொருட்டாக உரைத்தல் சிறவாமையறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
அற்றமுற் றப்பகர்ந் தடிகள்ஆ ரூரர்க்குப்
பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும்
உற்றுமற் றின்மையும் உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

சுற்றியுள்ள இடம் முழுவதும் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே , யாவர்க்கும் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , எனது துன்பத்தை முடியச் சொல்லி , எனக்கு வேறு பற்றுக் கோடு இன்மையையும் , யான் பலராலும் அலர் தூற்றப்படுதலையும் , எனக்கு உறவாவார் வேறு இன்மையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` சுற்று ` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகு பெயராய் , அதனையுடைய இடத்தை உணர்த்திற்று . அற்றம் - தளர்ச்சி . ` பற்று ` என்றது , என்றும் தாங்குவோரையும் , ` உறவு ` என்றது , உற்றுழி உதவுவோரையும் என்க . பாடு - பெருமை . அஃது இன்மை இழிக்கப் படுதலை உணர்த்திற்று . இவ்விடத்துள்ள மற்று , அசைநிலை . ` உற்றார் ` என்பது , ஈறு குறைந்து நின்றது .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்
றரவமா டும்பொழில் அந்தண்ஆ ரூரரைப்
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

குராமரங்கள் தமது மலர்மணத்தை வீச , குயில்களும் வண்டுக் கூட்டமும் பாட , பாம்புகள் படமெடுத்து நின்று ஆடுகின்ற சோலைகளையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை யான் தொழுது தேடுகின்ற வகையையும் , துதித்துத் தேடுகின்ற வகையையும் , நெஞ்சுருகித் தேடுகின்ற வகையையும் , என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

இதனையும் மேற்கூறிய வெண்ணாரைகளோடே கூறினாள் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை யுணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

நும் சேவலொடு கூடுகின்ற அன்னப் பெடைகளே , குயில்களே , வண்டுகளே , நடனம் ஆடுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய திருவாரூர் இறைவரை அடையப் பெற்ற பின்பு யான் அவரைப் பாடும் முறையையும் , பணிந்து புகழும் முறையையும் , அவரொடு கூடுதலும் ஊடுதலும் செய்யும் முறையையும் இவை என்று அவருக்கு என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

சேவலொடு கூடியுள்ள நீங்கள் இவற்றைச் சொல்ல வல்லீர்கள் என்பாள் , ` கூடும் அன்னப் பெடைகாள் ` என்றாள் . பாடுதல் , முன்னர்க் கூறினமையின் , ஏத்துதல் , உரையல் என்க . கூடுதலும் ஊடுதலும் , அடையப் பெற்ற பின்னவாகலின் , பின் நிகழ்வன பிறவற்றையுங் கூறினாள் , தனது அன்பின் நிலையை உணர்த்தற்கு .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.

பொழிப்புரை :

அடியவராய் உள்ளவர்களே . மெய்யுணர்ந்தோர் எல்லாம் உள்ளத்தால் நிலையாக நினைந்து , வாயால் துதித்து , கையால் தொழுகின்ற தந்தையாரும் , அழகிய பொன்போலும் திருவடிகளை யுடைய தலைவரும் ஆகிய திருவாரூர் இறைவரை , அவரையே எப்பொழுதும் சித்தத்தில் வைத்ததனால் வந்த புகழையுடையவனும் , சிங்கடிக்குத் தந்தையும் , உண்மையான திருத்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாடுமின் .

குறிப்புரை :

` பாடினால் , அவன் எய்திய பயனை நீவிரும் எய்துவீர் , என்பது குறிப்பெச்சம் . நினைதற் கருவியாகிய உள்ளத்தைக் கூறிய குறிப்பால் , ஏனைய ஏத்தல் , தொழுதல்களுக்கும் உரிய கருவிகள் கொள்ளப்பட்டன , ` அத்தன் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் . ` வைத்த புகழ் ` என்ற பெயரெச்சத் தொடர் காரண காரியப் பொருட்டு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

தம்மானை யறியாத சாதியா ருளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட
லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

உலகில் , தம் தலைவனை உருவறியாத இயல்புடையவரும் உளரோ ! இல்லை ; அங்ஙனமாக , கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடைய அப்பெருமான் , தனது திருவடியை எடுத்து என் தலைமேல் வைத்தேவிடுவான் என்னும் விருப்பத்தினாலே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற அறிவில்லாத , நாய்போலும் சிறுமையுடையேனாகிய யான் , சடைமேற் சூடிக்கொண்ட பிறையை உடையவனும் , விடைமேல் ஏறுகின்ற வேறுபாட்டினனும் , யானையின் தோலைப் போர்ப்பவனும் , கரிந்த காட்டில் ஆடுதல் உடையவனும் , விடையைக் கொடியாக உடையவனும் , எம் தலைவனும் ஆகிய அலையெறியும் கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவன் அதனைச்செய்ய வந்த சிறிது பொழுதினும் அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொரு காலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

சாதி - தன்மை . ` எம்மான்றன் அடிக்கொண்டு ` என்பது பாடம் அன்மை யறிக . ` அடிக்கொண்டு ` என்றவிடத்துக் ககரவொற்று , இசையின்பம் நோக்கி வந்த விரித்தல் . ` அம்மான் தன் அடிக் கொண்டென் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற ` என்றதனால் , இகழ்ந்தமை , ` அது செய்யவந்த காலத்து ` என்பது பெறப்பட்டது . ` கொண்டு ` என மிகுத்தோதியதனால் வைத்தேவிடுதல் பெறப் பட்டது . இது , வருகின்ற திருப்பாடல்கட்கும் ஒக்கும் . இறுதிக்கண் நின்ற , ` யான் ` என்பதனை , ` நாயேன் ` என்றதனோடு கூட்டுக . ` போலும் ` என்னும் உரையசைச் சொல் , குறைந்து நின்றது . வருகின்ற திருப்பாடலில் உள்ள ` என்னே ` என்பது , எல்லாத் திருப் பாடல்களிலும் வந்து இயையுமாகலின் , ` என் மடமை யிருந்தவாறு ` என்பது சொல்லெச்சம் . ` இனியொருகாலும் அது வாயாதுபோலும் ` என்பது குறிப்பெச்சம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

முன்னேஎம் பெருமானை மறந்தென்கொல் மறவா
தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்
குன்றமே ஈசனென் றுன்னியே புகழ்வேன்
அன்னேஎன் னத்தாஎன் றமரரா லமரப்
படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னேஎன் எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை யிறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

எம்பெருமான் என்னை ஆட்கொள்வதற்கு முன்னே அவனை யான் மறந்து இழந்ததென் ! மறவாதிருந்து பெற்றதென் ! ஆட்கொண்ட பின்பு மறவாத மனத்தொடு வாழ்வேனாயினேன் . அன்றியும் , ` பொன்னே ! நல்ல மாணிக்கமே ! வெண்மையான முத்தே ! செம்மையான பவள மலையே ! முதல்வனே !` என்று , அவனை நினைத்துப் பாடுவேன் . அங்ஙனமாக , ` எங்கள் தாய்போல்பவனே , தந்தை போல்பவனே ` என்று தேவர்களால் விரும்பி வழிபடப்படுபவனும் , திருவதிகை மாநகரில் வாழ்பவனும் , அலையெறிகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருக்கின்றவனும் ஆகிய என் இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிதுபொழுதினும் யான் , அறியாது இகழ் வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனி யொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

ஆட்கொள்ளப்படுதற்கு முன்னர் நிகழ்ந்தன யாவும் , ஆட்கொள்ளப்பட்ட பின்னர்த் தொடர்பில்லா தொழிதலின் , ` முன்னே எம்பெருமானை மறந்தென்கொல் , மறவாதொழிந்தென்கொல் ` என்றார் . ` உன்னையே புகழ்வேன் ` என்பது பிழைபட்ட பாடம் . ` எறி கெடில வடவீரட்டானத்துறைவான் ` என்பது , ஒரு பெயர்த் தன்மைத் தாய் , ` என் ` என்றதனோடு இயைந்தது . திருவதிகை , தலத்தின் பெயர் ; வீரட்டானம் கோயிலின் பெயர் . ` அதிகைமாநகருள் வாழ்பவனை , வீரட்டானத் துறைவானை ` எனப் பிரித்தோதினார் , இரண்டனது சிறப்பும் உணர்த்தற்கு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே
விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங்
கரும்பேஎன் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்
காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும்
வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை
இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

காதல் பொருந்திய உமையவள் , உடம்பில் ஒரு கூறாய் இருத்தலின் , கங்கையாளாகிய நங்கை உருமாறி வந்த நீரையும் சடையில் அணிந்து , அதனோடு இளைய பிறையையும் , கீற்றுக்கள் பொருந்திய பாம்பையும் ஒன்றாய் உறங்கும்படி வைத்தருளிய எம் தந்தையாகிய , மிக்க நீர் வந்து மோதுகின்ற கெடில நதியின் வடகரைக் கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை , ` விண்ணுலகத்தார்க்குத் தலைவனே , மண்ணுலகத்தவர் எதிர் நின்று துதிக்கும் கரும்பே , என் கட்டியே ` என்று மனத்தால் நினைந்து விரும்பிய எனக்கு , வினை என் உள்ளத்தை விட்டு நீங்காமையால் , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறுபொழுதினும் யான் அறியாது அவனை இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

` விடகிலா ` என்றதன்பின் , ` ஆக ` என்பது எஞ்சி நின்றது . ` வீடகிலா ` என்றும் பாடம் ஓதுவர் . ` உறைவானை உள்கி விரும்பினேற்கு ` எனக் கூட்டுக . ` கட்டியே ` என்றவிடத்து , ` கரும்பே ` என்றதற்கேற்ப வந்த ஏகாரம் , தொகுத்தலாயிற்று . ` மாதராளால் ` எனத் தொகுக்கப்பட்ட உருபு விரிக்கப்படுமாதலின் , அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது . ` உருமாறி ` என்பது , ஆற்றலான் வந்து இயையும் . ` வளராத ` என்றது , ` இளைய ` என்னும் பொருளது . ` உடன் துயில வைத்தருளும் ` என்றது , பகையாய அவற்றைப் பகை நீங்கி அச்சமற்று வாழ அருள்செய்தான் என்றபடி .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

நாற்றானத் தொருவனை நானாய பரனை
நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்
காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்
தலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்
தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

மும்மூர்த்திகட்கு மேலே உள்ள ஒப்பற்றவனும் , என்னில் வேறறக் கலந்து நிற்கும் முதல்வனும் , திருநள்ளாற்றில் உள்ள சிறந்தவனும் , வெள்ளாற்றில் உள்ள அறநெறியாகியவனும் , ` காற்று , தீ , கடல் ` என்னும் பொருள்களாய் உள்ளவனும் , கயிலாயத்தின் உச்சியில் இருப்பவனும் , வேகமான ` கங்கையாறு ` என்னும் வெள்ள நீரைத் தாங்கியவனும் , பிறையைச் சூடினவனும் , பெரியோனும் , என் தந்தைக்கும் தலைவனும் , யாவராலும் அறிதற்கு அரிய , சிவந்த கண்களையுடைய இடபவாகனனும் , அலையெறிகின்ற கெடிலநதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்ட வந்த சிறிதுபோதினும் , யான் அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாதுபோலும் !

குறிப்புரை :

` நாலாந்தானம் ` எனற்பாலது , நாற்றானம் எனப்பட்டது . ` நாதாந்தத் தேயிருப்பர் நாற்றானத் தேயிருப்பர் ` என்றது காண்க . ( திருக்களிற்றுப்படியார் -80) ` சிவபெருமான் நாலாமவனாய துரியமூர்த்தி ` என்பது வேதத்தின் துணிபு . ` நாற்றானம் ` என்றதற்கு , ` நான்கு திசை` எனவும் , ` வைப்புத் தலத்தின் பெயர் ` எனவும் உரைப் பாரும் உளர் . வெள்ளாறு , வைப்புத் தலம் . ` கங்கை ஆற்று வெள்ள நீரானை ` என மாற்றுக . ` எம்மான் தம்மான் ` என்றது , ` தம் குடி முழுதும் ஆளுடையான் ` என்றவாறு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும்
உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள்
சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரஉந்தி மராமரங்கள் வணக்கி
மறிகடலை இடங்கொள்வான் மலைஆரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

` முருகப்பிரானார் , அவர்க்குத் தாயாகிய மலை மகள் ` என்னும் இவர்களது அழகிய நிறத்தையும் , அன்பையும் ஏற்றுடையவனும் , திருவதிகைமாநகரில் வாழ்கின்றவனும் , தாழ்ந்த கூந்தலையும் , குயில் போலும் மொழியினையும் உடைய நீர்மகளைச் சடையிடத்திற் கொண்ட , கயல் மீனினது கூட்டங்கள் குதிகொள்ளுதலால் விளக்கமுற்றுப் பொருந்திய நீர் பெருகி வர , அதனிடத்து உயர்ந்தெழுகின்ற அலைகள் மராமரங்களை முரித்துத் தள்ளிக்கொண்டு , அலை மறிகின்ற கடலை இடமாகக் கொள்ளும்படி , மலையிடத்துள்ள சந்தன மரங்களை வாரிக் கொணர்ந்து வீசுகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிது பொழுதினும் யான் , அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

` சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையான் ` என்றது , உமையொடும் கந்தரொடும் கூடிய வடிவைக் குறித்தது . சிறுத்தொண்ட நாயனார்க்கு இறைவன் இவ்வடிவுடன் காட்சியளித்தமை , பெரிய புராணத்துட் கூறப்பட்டமை காண்க . ` புரிவும் ` என்பதும் பாடம் . ` தாழ் கூந்தல் குயிலன்ன மொழியாள் புனல் மங்கை ` என மாற்றுக . ` மங்கை ` என்பதில் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று . ` சடையிடையில் ` என்பதன்பின் எஞ்சி நின்ற , ` கொண்ட ` என்பது ` வீரட்டானத்துறைவான் ` என்பதனோடு முடிந்தது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்
வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்புந்
தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியி னுரியானை வேத
விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

மேகம்போலும் , பெருமையையுடைய கண்டத்தை யுடைய எம்பெருமானும் , வலிய பன்றியின் கொம்பை அணிந்த பெரிய தவக்கோலத்தை யுடையவனும் , தேவர்கள் தலைவனும் , யாவர்க்குந் தலைவனும் , குளிர்ந்த சந்திரனும் பாம்பும் ஒன்றை யொன்று அஞ்சி உழல்கின்ற சடையை யுடையவனும் , தாழ்வரைக்கண் திரியும் துதிக்கையை யுடைய , வெற்றி பொருந்திய , கொடிய . பெரிய , மதங்கொண்ட யானையின் தோலை உடையவனும் , வேதத்தில் சொல்லப்பட்ட நெறிமுறைகளாய் உள்ளவனும் , வெள்ளிய நீறு பூசப் பட்ட திருமேனியை உடைய எம் தலைவனும் , அலையெறிகின்ற கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யுள்ளவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலை மேல் சூட்டவந்த சிறிது போதினும் , யான் , அறியாது இகழ் வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனி யொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

` எம்பெருமான் ` என்றவிடத்தும் தொகுக்கப்பட்ட இரண்டனுருபு விரிக்க . ` தலைமகன் ` என்றது , ` தலைவன் ` என்னும் பொருட்டாய் நின்றது . ` எம்மானை மதகரியின் ` என்பது பாடம் அன்று . ` வேத விதியாய் உள்ளவன் ` என்றது , அவற்றின் பயனைத் தருவோனாதல் பற்றி . மதியும் , பாம்பும் ஒன்றை யொன்று அஞ்சுவனவாகக் கூறுதல் , புனைந்துரை வழக்கு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு
மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்
தெண்டோள்எம் பெருமானைப் பெண்பாகம் ஒருபால்
செய்தானைச் செக்கர்வா னொளியானைத் தீவாய்
அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

கொடிதாகிய , ` வினை ` என்னுங் கடலில் வீழ்ந்து தடுமாறும் எத்துணையோ உயிர்கட்குப் பெரிதும் இரங்கித் தனது திரு வருளைக் கொடுத்து வீடுபேறாகிய நலத்தை வழங்கினவனும் , தலைக் கோலங்களை உடையவனும் , மைபோலுங் கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் உடைய எம்பெருமானும் , தனது திருமேனியின் ஒரு கூற்றைப் பெண் கூறாகச் செய்தவனும் , செவ்வானத்தின் ஒளி போல் பவனும் , தீதாகிய வாயினையுடைய பாம்பு படமெடுத்து ஆடுகின்ற சடையையுடையவனும் , மூன்று ஊர்கள் வெந்தொழியுமாறு அம்பை எய்தவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிது போதினும் , யான் , அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

திருவருளாவது , ஞானம் . ` வீடுபேற்றாக்கம் ` என்பது , தொகுத்தலாயிற்று . எத்துணையோ உயிர்கட்கு அருள் புரிந்தமை , காட்சியானும் கேள்வியானும் அறியப்பட்டதென்க . ஞவிலும் , உவம உருபு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்
சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான்
உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

` அழகிய யானை முகத்தையுடைய விநாயகனும் , மயிலூர்தியை உடைய முருக வேளும் ` என்னும் இவர்க்குத் தந்தையும் , ஞானசம்பந்தரால் திருநீற்றில் மூழ்கிய திருமேனியையும் , ` மேற்கு , வடக்கு , கிழக்கு ` என்னும் திசைகளில் உள்ள பிற நாடுகளின் மேற் செல்லும் மண்ணாசை யற்ற மனத்தையும் உடையவனாய்ச் சிறப் பெய்திய நெடுமாறனது முடியின்மேல் நின்ற தென்னாட்டவனும் , அந்திச் செவ்வானம் போலும் நிறத்தை உடையவனும் , தேவர் களுக்குத் தலைவனும் , யானைத் தோலைப் போர்த்தவனும் , திரு வதிகை மாநகரில் வாழ்பவனும் , எனக்கு உரியவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருப்பவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறிது பொழுதினும் யான் , அறியாது இகழ் வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனி யொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

முதன்மை உறுப்பாய தலை யானையாயினமைபற்றி , விநாயகரை , ` யானை ` என்பர் . ` ஞானசம்பந்தரால் ` என்பது வரலாற்றாற் கொள்ளக்கிடந்தது . திருநீற்றைப் பெற்றபின்பு திருவருள் ஒளியில் மூழ்கினமை தோன்ற , ` திருமேனி ` என்று அருளினார் . மேனிச் சிந்தை யான் நெடுமாறன் முடிமேல் தென்னானை எனக்கூட்டுக . ஞான சம்பந்தரால் பாண்டியனை உய்வித்து , அந்நாட்டில் தான் விளங்கி நின்ற அருட்செயலை எடுத்தோதியருளியவாறு . நெடுமாறன் ஆளுடைய பிள்ளையாரது அருள்பெற்றபின்னர் , சிவபிரானது திரு வடியைத் தன்முடிமேற்கொண்டு ஒழுகினானாதலின் அப்பெருமானை , அவன் முடிமேல் நின்றவனாக அருளினார் . ` இறைவன் தன் திருவடியை நேரே வையாது , ஞானசம்பந்தர் வாயிலாகத் தன் முடி மேல் வைத்தமையைப் பாண்டியன் போற்றி நின்றான் ; யானோ , இறைவன் நேரே வந்து தன் திருவடியை என் முடிமேல் வைத்தமையை இகழ்ந்தேன் ` என நினைந்து இரங்கி , இவ்வாறருளிச் செய்தார் என்க . ` மேல் ` என்பதன்பின் , ` நின்ற ` என்றது வருவிக்க . பாண்டியன் சிவனடியை முடிக்கொண்டவனாயின பின்னர்ப் பாண்டிநாடு முழுதும் திருநீற்றொளியில் விளங்கினமை தோன்ற , ` தென்னானை ` என்றும் அருளினார் . ` தென்னவன் ` எனினும் , ` தென்னான் ` எனினும் ஒக்கும் . இப்பகுதி , ` சிவபிரான் பாண்டியநாட்டில் அரசனாய் இருந்து ஆண்டான் ` என்னும் வரலாற்றைக் குறிப்பதாகக் கொண்டு , அதற்கேற்ப உரைப்பாரும் உளர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்
சிலைவளைவித் தொருகணையால் தொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதக்களிற்றி னுரியானைப் பெரிய
கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்
உடையானைப் பேவுருவ மூன்றுமுற மலைமேல்
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

வில்லை வளைத்து எய்த ஓர் அம்பினாலே , பகைமை கொண்ட கொடிய அசுரர்களது ஊர்கள் மூன்றும் வெந்தொழி யுமாறு போர்த்தொழிலை மேற்கொண்ட சிவபெருமானும் , பெரிய கால்களையுடைய மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனும் , பெரிய மூன்று கண்களையும் உடையவனும் , தன்னை மதியாத அரக்கனாகிய , இருபது பெரிய தோள்களையும் , பத்துத் தலைகளையும் உடைய இராவணனது அச்சந்தரும் உருவத்தை ஊன்றிய , கயிலாய மலையின்மேல் நீங்காது இருப்பவனும் , அலை யெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை அவன் தனது திருவடியை என் முடிமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும் , யான் , அறியாது , இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

பகைவரை , ` திருந்தாதார் ` என்பவாகலின் , திருந்தாமை , பகைமை கொள்ளுதலாயிற்று . ` வளைவித்து ` என்புழி . ` எய்த ` என்பது எஞ்சி நின்றது . ` பெரியகண் ` என்றது , ` உலகிற்கு விளக்கந்தரும் கண் ` என்றவாறு . அதனைச் செய்கின்ற சுடர்கள் மூன்றென்பது அறியப்பட்டதாகலின் , ` மூன்றும் ` என முற்றும்மை பெற்றது . ` இராவணனை உருவம் ஊன்றும் ` என்றது , ` நூலைக் குற்றங் கூறினான் ` என்றாற் போல நின்றது . ` பேயுருவம் ` என்பது பாட மாயின் , ` பேயினது உருவம் போலும் உருவம் ` என்று உரைக்க . ` மலை மேல் உற இருந்தான் ` என்றது , ஒருபெயர்த் தன்மைத்தாய் , ` ஊன்றும் ` என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்
எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கு மறிவரிய வத்தர்
பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

எலும்பையே அணிகலங்களாக அணிபவனும் , விடையை ஏறுகின்ற எங்கள் பெருமானும் , இசைஞானிக்கு மகனும் , வளர்ந்த வலிய பனைகளையுடைய சோலைகள் சூழ்ந்த , வயல்கள் நிறைந்த திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனுமான நம்பியாரூரனாகிய என்னால் , மதியாது சில சொல்லப்பட்ட அன்புருவினனும் , யாவருக்கும் அறிதற்கு அரிய தேவர் பெருமானும் , திருவதிகை மாநகரில் வாழ்பவனும் , எனக்குரிய பொன்போன்றவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும் , யான் , அறியாது இகழ்வேனாயினேன்போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

இதனையும் ஏனைய திருப்பாடல்களோடு ஒப்பவே அருளிச் செய்தாராயினும் , தம் பெயரை எடுத்தோதி , தாம் மதியாது சொன்னவற்றிற்கு இறைவன் வெகுளாது உவந்தான் என்பதனை வைத்த குறிப்பால் , மதியாது சொன்னதற்கு இரங்கி அருளிச்செய்த இத் திருப்பதிகத்தைப் பாடுவாரையும் அப்பெருமான் உவந்து அருள் செய்வான் என்று அருளினாராயிற்று . ` சொன்ன ` என்ற பெயரெச்சம் , ` அன்பன் ` என்ற செயப்படுபொருட்பெயர் கொண்டது . மதியாது சொல்லுஞ் சொல்லைச் சொல்விக்கவந்து , சொல்வித்து மகிழ்ந்தானாகலின் , ` அன்பன் ` என்றார் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப் பெயரே என்க.
`திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.
`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.
`மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.
`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.
குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.
அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

இலை - இலைத் தன்மை; கூர்மை. வேல் - படைக்கலப் பொது; இங்கு, மழுவைக் குறித்தது.
கலை மலிந்த சீர், நூல்களில் பெரிதும் காணப்படுகின்ற புகழ், `திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி, கண்ணப்பதேவர் திருமறம்` முதலாக பல நூல்களினும் கண்ணப்பர் வரலாறு சிறந்தெடுத்துக் கூறப்படுதல் அறிக.
மலை மலிந்த - மலைத் தன்மை (பெருமையும், வலிமையும்) நிறைந்த. எஞ்சாத - தொண்டினை முட்டாது செய்த. `மங்கை` என்பது `மங்கலம்` என்பதன் மரூஉ. இஃது, ஊர்ப்பெயர்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

``மும்மை`` என்றது ``இருமை வகை தெரிந்து`` (குறள்-23) என்றாற்போல, `மூன்று` எனப் பொருள் தந்தது. மூன்றாவன: திருநீற்றுப்பூச்சு, கண்டிகைக் கலன், சடைமுடி என்பன.
செம்மையே போவான் - பிறழாது நின்ற உள்ளத்தோடே போவான்.
மெய்ம்மையே - இப்பிறப்புப் பிள்ளைமைப் பருவத்து விளையாட்டானேயன்றி, முற்பிறப்பில் வழிபட்ட தொடர்ச்சியானே. ``திருமேனி`` என்றது, இலிங்கத் திருமேனியை. வெகுண்டது, அவரது நிலையை அறியாமையால் என்க. எழுந்த - பல தவறுகளைச் செய்ய எழுந்து, அங்ஙனமே செய்த. அம்மையான் அடி - வீடுபேற்றைத் தரும் முதல்வனது அடியையே பொருளாக அடைந்த. ``அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங் கழலே எனக் கொண்ட - செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார்`` (தி.12 சண்டேசுரர் புரா. 15) என்ற சேக்கிழாரது திருமொழியைக் காண்க.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்
அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

திரு - இன்பம். `அது நிலைத்து நிற்றலாகிய செம்மையே உண்மைச் செம்மையாம்` எனக் கொண்டவர் திருநாவுக்கரசர் என்க. பிறப்பில் பெருமானாதலின், அத்தகைய செம்மையை யுடைய செம்பொருளாவான் சிவபெருமானே என்பது கருத்து. இஃது அவனது திருமேனிக் குறிப்பாலும், `சிவன்` என்னும் பெயராலுமே நன்கறியப்படும் என்பார், ``சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்`` (தி.4 ப. 112 பா.9) என அவர் ஓர் இடத்தில் அருளிச்செய்தார். ``திருநின்ற செம்மை`` என்பது, இந் நாயனார் அருளிச்செய்த தொடராதலை யறிக. (தி. 4 ப.8 பா.1)
பெருநம்பி - நம்பிகளுட் சிறந்தவர். அமைச்சராய் இருந்தும் அடியவர்க்கு அடிமை செய்தவர்; சைவப் பயிர்க்கு உளவாய் இருந்த களையைக் களைந்தவர்.
ஒருநம்பி - ஒப்பற்ற நம்பி; இறைவனது திருவருளை ஆசிரியராலே அடைந்தவர். சாத்த மங்கை, ஊர்ப்பெயர். அருநம்பி - அரிய செயலைச் செய்த நம்பி; நீரால் திரு விளக்கை ஒருநாள் ஒருபொழுதன்றி, எந்நாளும் எப்பொழுதும் இட்டவர்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

வம்பு அறா வரிவண்டு - நறுமணத்தை விட்டுப் போகாத, வரிகளையுடைய வண்டுகள். `வண்டிற்கு` என நான்காவது விரிக்க. `நாறுமாறு மலரும் மலர்` என இயையும். `மலர்க்கொன்றை` என்றதனை, `கொன்றை மலர்` என மாற்றியுரைக்க. சிவபிரான் ஒருவனுக்கே உரிய சிறப்பு மாலையாகலின், ``நற்கொன்றை`` என்று அருளினார். ``கைச்சிறு மறியவன் கழலலாற்பேணாக் கருத்துடை ஞான சம்பந்தன்`` (தி.1 ப.77 பா.11) என அவர் ஓதியதனையே எடுத்தோதியருளினார் என்க. சிவபிரானால் ஆகமத்தைத் தமிழாற் செய்யத் தமிழகத்தில் வருவிக்கப்பெற்று அங்ஙனமே செய்தருளிய ஆசிரியராகலின், ``நம்பிரான்`` என்று அருளிச்செய்தார். நாட்டம் மிகு - பிறவியில் கண்ணில்லாதவராய் இருந்து, சமணர் முன்னே சிவபிரானது திருவருளாற் கண்பெற்று விளங்கியவர். அம்பர், ஊர்ப்பெயர்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

வார் - கச்சு. வனம் - அழகு. சீர் - சிறப்பு. கார்கொண்ட - மேகம் போன்ற. ஆர் - கூர்மை. களந்தை, ஊர்ப் பெயர்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

பொய்யடிமை யில்லாத புலவர், தொகையடியார். துஞ்சிய - இறைவன் திருவடியிற் சென்று தங்கிய. நாகை - நாகப்பட்டினம். வரிசிலை - கட்டப்பட்டு அமைந்த வில். கழல் - காலில் அணியும் அணி. வரிஞ்சை - ஊர்ப்பெயர். `வரிஞ்சையர்கோன் கழற் சத்தி` என மாற்றி உரைக்க.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

காப்புக் கொண்டிருந்த - தமக்குப் பாதுகாவலாக உணர்ந்திருந்த. நிறை - நெஞ்சைத் தீ நெறியிற் செல்லாது நிறுத்துதல். நெல்வேலி வென்ற - திருநெல்வேலியில், அயல்நாட்டு அரசரை வென்ற. மயிலை - மயிலாப்பூர். அறை - அறுத்தல். ``நிறைக்கொண்ட`` முதலிய மூன்றிலும் ககர ஒற்று, விரித்தலாயிற்று.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

மடல் - இதழ். தார் - மாலை, அதள், தோல். ``ஆடி`` என்றது பெயர். அடல் - வெற்றி.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

இத்திருப்பாடலில் அருளிச்செய்யப்பெற்றவர் அனைவரும், தொகையடியார்கள்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 11

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே. 

பொழிப்புரை :

இல்லை

குறிப்புரை :

என்னவன் - எனக்கு உரியவன். காதலன் - மகன். `சடையன், இசைஞானி இவர்க்கு மகன்` என்க.
`காதலனும், கோனும் ஆகிய அத்தன்மையுடையவனாம் நம்பியாரூரன்` என்க. உவப்பார் - அன்பால் மனம் உருகுகின்றவர்கள்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கிஉமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறு முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

கூரிய வாயை உடைய பிறை ஒளிரும் நீண்ட சடையை உடையவனும் , ` வேதம் , வாயாற் சொல்லப்படும் பிற சொற்கள் , இந்திரன் , திருமால் , பிரமன் ` என்னும் பொருள்களாய் உள்ளவனும் ஆகிய இறைவனை , அடியேன் , தாழையரும்புகள் , வளைந்த தாழை மரத்தினால் ஈன்றிடப்பட்டு , முட்களையுடைய வாயினை யுடைய இதழ்களைப் பொருந்தி மலர்ந்து மணம் வீசுகின்ற , தேன் மிகுந்த சோலைகள் சூழ்ந்த , மதுவொழுகும் வாயினையுடைய கருங்குவளை மலர்கள் கண்ணுறங்குவது போலக் காணப்படுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` என் தவப்பயன் இருந்தவாறு ` என்பது குறிப்பெச்சம் . அரிவாள் போலும் வடிவம் பற்றிப் பிறையை , ` வள் வாய பிறை ` என்று அருளினார் . ` வாள் ` என்றது குறுகி நின்றது எனினுமாம் . திருமால் கண்ணனாய் இருந்த பொழுது கொக்குருவாய் வந்த அசுரனை , அதன் வாயைக் கிழித்துக் கொன்ற வரலாற்றினைப் பாகவதத்துட் காண்க . திருமால் நீருக்குத் தலைவனாதலாலும் , மண் நீரில் தோன்றி நீரில் ஒடுங்கும் என்பர் ஆதலாலும் திருமாலை உலகத்தை உண்டு உமிழ்பவன் என்றல் வழக்கு . பொன்போலும் நிறமும் , மார்பில் முப்புரிநூலும் , நான்கு முகமும் பிரமனுக்கு உண்மை அறிக .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

ஒருமேக முகிலாகி யொத்துலகந் தானாய்
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்கும்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

உலகிற்கு ஒருபெருந் துணையாய் உள்ள மேகமாகியும் , தம்முள் ஒத்த உலகங்கள் பலவும் தானேயாகியும் , அவற்றில் உள்ள ஊர்வனவும் , நிற்பனவுமாகிய உயிர்களும் , அவற்றின் தோற்ற ஒடுக்கங்கட்குக் காரணமாகிய ஊழிக் காலங்களும் தானே யாகியும் , அலையால் கரையை மோதுகின்ற கடல்களாகியும் , ஐந்து பூதங்களாகியும் அவற்றைப் படைத்து நிற்பவனும் , அறவடிவினனும் , புரிந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை , அடியேன் , திருமகளும் விரும்பத்தக்க செல்வத்தை உடையவர்களது மாளிகைகளும் , முத்தீயையும் வளர்க்கின்ற மேலான தகுதியுடைய அந்தணர்கள் வேதத்தை ஓதி வாழ்கின்ற மாளிகைகளும் உள்ள இடங்களிலெல்லாம் , கரிய எருமைகள் செந்தாமரை மலர்களை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` மேகமுகில் ` ஒருபொருட் பன்மொழி . ` ஒத்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . நகர் - மாளிகை . இதனை , ` செல்வத்தார் ` என்றதனோடும் கூட்டுக . மாளிகைகள் வயல்களின் நடுவே உள்ளன என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையி னருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

வலிமை மிகுந்த மூன்று இலைகளை உடைய சூலத்தை உடையவனும் , இறைவனும் , வேதத்தை ஓதுபவனும் , எட்டுக் குணங்களை உடையவனும் , வண்டுகள் மேலே சூழ்கின்ற கொன்றை மாலையோடு , வெள்ளிய சந்திரனைச் சூடிய சடையை உடையவனும் , இடபத்தை ஏறுபவனும் , ` சுயஞ்சோதி ` எனப்படுகின்ற ஒளியானவனும் ஆகிய இறைவனை , அடியேன் , அன்னப்பறவைகள் , அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்ற தாமரையினது ஒப்பற்ற மலர்களின்மேல் ஏறி விளையாடுகின்ற , அகன்ற நீர்த்துறையின் அருகே கரும்புகள் வளரப்பட்டு , செந்நெற்பயிர்கள் செறிந்து விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` இரும்பு ` என்றது , அதன் தன்மையாகிய திட்பத்தைக் குறித்தது . இறைவனுக்கு உரிய எட்டுக் குணங்கள் இவை என்பதை ஆறாந் திருமுறைக் குறிப்பிற் காண்க . ` என்னும் ` என்றதனால் , ` சோதி ` என்பது , அப்பொருட்டாயிற்று . ஆகவே சிறப்புப் பெயராய் , ` ஒளி ` என்பதன் பொதுமை நீக்கிற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
புனலாகி யனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
ஞாயிறாய் மதியமாய் நின்றஎம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழல்இளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

பூளைப் பூவையும் , அழகிய கொன்றை மாலையையும் , புரித்த சடையின்கண் உடையவனும் , நீராகியும் , நெருப்பாகியும் , ஐம்பூதங்களாகியும் , ` நாளை , இன்று , நேற்று ` என்னும் நாள்களாகியும் , பரவெளியாகியும் , சூரியனாகியும் , சந்திரனாகியும் நிற்கின்ற எங்கள் இறைவனை , அடியேன் , பாளைகள் உளவாகின்ற , பசிய கமுகுகளினது செறிவினிடத்தே உள்ள இளமையான தென்னையினது , மிக்க மயக்கத்தை உண்டாக்குகின்ற கள்ளினை இளைய ஆண் வண்டுகள் உட்கொண்டு திளைத்து இசையைப் பாட , மயில்கள் ஆடுகின்ற , உயர்ந்த சோலையையுடைய , திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

பூளைப் பூவையும் சிவபிரான் அணிதல் இத்திருப் பாடலாற் பெறப்படுகின்றது . முன்னே , ` பூதங்கள் ஐந்தாய் ` என்ற மையின் , ` ஆகாயம் ` , பரவெளியாயிற்று . இளம் பருவத்து ஆடவரைக் குறிக்கும் ` காளை ` என்பது , வண்டிற்கு உவமையாகு பெயராய் வந்தது . அதனானே , அது அஃறிணை இயற்பெயராய்ப் பன்மைப் பொருளும் தருவதாயிற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்
தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை
முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

சீறுகின்ற வாயினையும் , பசிய கண்களையும் உடைய , வெள்ளிய பாம்பினை அரையிற் கட்டியவனும் , தேவர்கள் முடியிற் பதிக்கும் மணிபோன்றவனும் , சிவந்த கண்களையுடைய இடப ஊர்தியை உடையவனும் , முருக்கமரத்தின்கண் பொருந்தியுள்ள மலர்போலும் திருமேனியை உடையவனும் , எல்லாவற்றிற்கும் சான்றாய் நிற்பவனும் , உலகமுழுதும் தானேயாய் நிறைந்தவனும் ஆகிய இறைவனை , அடியேன் , எழுவகைப் பிறப்பினவாகிய உயிர்கள் உள்ள இடங்களில் எல்லாம் வேதத்தை ஓதுகின்ற அந்தணர்கள் வேள்வி வேட்டிருத்தலால் , அவர்கட்கு மிக்க நிதிகளை வழங்குகின்ற மாளிகையின் பக்கங்களில் எல்லாம் , கருக்குவாயினையுடைய பனைமரங்களும் , தென்னை மரங்களும் நிறைந்த சோலைகளை யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

செருக்குறுதலாகிய செருக்குதல் என்பது , வெகுளுதலைக் குறித்து , அதன் காரியமாகிய சீறுதலைக் குறித்தது . பெரும் பாம்புகளின் வயிறு வெண்மையுடையதாதலின் , ` வெள்ளரவு ` என்றார் . ` முன்னிலை ` என்பது இப்பொருட்டாதலை , ` யார்க்கும் முனமொரு தெய்வம் எங்குஞ் செயற்கு முன்னிலையா மன்றே ` என்ற சிவஞான சித்தி ( சூ -2.24) யாலும் அறிக . ` எங்கும் ` என்பது பெயர்த்தன்மைத்தாதலின் , ` உள் பொருள் ` என்றாற்போல , ` உள் எங்கும் ` என்றார் . தேவர்களும் வந்து சூழ்தலின் , எழுபிறப்பும் உள வாயின . ` இரு பிறப்புள் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
குங்குமங்க ளுந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

எருதினை எழுதிய ஒலிக்குங் கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும் , நீரில் துயில்கின்ற திருமாலும் , வேதத்திற்குத் தலைவனாகிய பிரமனும் அடி இணையையும் , அழகிய முடியினையும் காண்டல் அரிதாகிய , ` சங்கரன் ` என்னும் காரணப் பெயரை உடையவனும் , மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை , அடியேன் , இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும் , மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிடநதியின் கரைமேல் உள்ள , கடையர்கள் தாங்கள் களைந்த நீண்ட குவளைக் கொடிகளைச் சேர்த்து எடுக்கின்ற திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன் . இஃது என் தவப்பயன் இருந்தவாறு .

குறிப்புரை :

கொடி காற்றினால் ஒலிப்பது என்க . ` காண ` என்னும் செயவெனெச்சம் , தொழிற் பெயர்ப் பொருள் தந்தது . ` ஆய ` என்னும் பெயரெச்சம் , ` சங்கரன் ` என்னும் பிறபெயர் கொண்டது ; இஃது ஏதுப் பெயராம் . ` மடத்தையலார்கள் ` எனப்பிரித்துக் கூட்டுக . ` கோதைக் குழல் ` எனக் கூட்டப்படும் . ` கடைகள் ` என அஃறிணையாகக் கூறியது பான்மை வழக்கு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்
அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்
கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் [ கரைமேல்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

அரிய மணியாகிய மாணிக்கம் போல்பவனும் , முத்துப்போல்பவனும் , ஆனைந்தினை ஆடுகின்ற தேவர் பெருமானும் , அரிய வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , அழகிய பிற மணிகள் போல்பவனும் , இனிய கரும்பினின்றும் வடிதலையுடைய மிக்க சாறுபோல்பவனும் , அறிதற்கரிய மணியாகிய சிந்தாமணி போல்பவனும் , மாற்று விளங்குகின்ற செம்பொன் போல்பவனும் ஆகிய இறைவனை , அடியேன் முன்னே , நிறம் பொருந்திய மணிகளைக் கொழித்து மலையினின்றும் பாய்ந்து , பின்பு நிலத்தில் சுழித்துக் கொண்டு ஓடுகின்ற , அலைகளுக்கிடையில் , வரிசையான வளையல்களை அணிந்துள்ள மகளிர் மூழ்கி விளையாடுகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள , நீலோற்பல மலர்கள் நீலமணிபோல மலர்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

ஆனஞ்சு - பஞ்சகௌவியம் ; இவை இன்ன என்பதனை , ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
ஈசன்தன் எண்டோள்கள் வீசிஎரி யாடக்
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்
கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலத னயலே
தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே
கழைதழுவித் தேன்தொடுக்குங் கழனிசூழ் பழனக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

பாம்பாகிய அணிகலமும் , அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரிநூலும் பொருந்திய அழகிய மார்பினை யுடைய கடவுளும் , தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதற் பொருட்டு , குழைபொருந்திய காதில் கொடிய பாம்பையும் இட்டு , உடையைக் கோவணமாக உடுத்த அழகனும் , கங்கை நீராற் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை , அடியேன் , தழைத்தலை யுடைய பசுமையான நிறத்தையுடைய செந்நெற் பயிரின் பக்கத்தில் , பெரிய முத்துக்களை யுடைய மென்மையான கரும்பின் ஆழ்ந்த கிடங்குகளின் அருகே வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த பண்ணைகளையுடைய திருக் கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப் பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` இழை `, ` ஈசன் ` என்றவிடத்தும் , எண்ணும்மை விரிக்க . தண்மை , இங்குப் பசுமை மேற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

குனியினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்
குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்
பலஉருவுந் தன்னுருவே யாயபெரு மானைத்
துனியினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
கனியினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

வளைந்த இனிய ஒளியையுடைய சந்திரனைச் சூடியதும் , வண்டுக் கூட்டங்கள் பாட , நீர்த்துளிகள் சிந்துகின்றதுமாகிய சடையினையும் , குண்டலம் பொருந்திய காதினையும் உடையவனும் , பால்போலும் வெள்ளிய நீற்றை அணிந்தவனும் , எல்லா உருவங்களும் தன் உருவமேயாய் நிற்கின்ற பெருமானும் ஆகிய இறைவனை , அடியேன் , தூய நீலோற்பலங்கள் , ஊடலிலும் இனியன வாயும் தூயனவாயும் தோன்றும் மொழிகளையும் , கொவ்வைக் கனிபோலும் வாயினையும் உடைய அழகிய பெண்கள்போலக் கண் வளர்கின்ற , நிறைந்த கிடங்கின் அருகில் உள்ள , பழங்களைப் பழுத்த , இனிய வாழைத் தோட்டங்களைப் பொருந்தியுள்ள சோலைகளை யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` குனிவினிய , துனிவினிய , கனிவினிய ` எனப்பாடம் ஓதுவர் , பலவுருவும் தன்னுருவேயாதல் , ` எல்லாம் சிவன் ` என்ன நிற்றல் . ` துனியினிய தூய மொழித் தொண்டைவாய் நல்லார் ` என்றதனை , ` ஊடினும் இனிய கூறும் ` ( பதிற்று -16) என்பதனால் அறிக . ` நல்லாரையுடைய சோலை ` என்று இயைத்தலுமாம் . ` பொழிற் சோலை ` ஒருபொருட் பன்மொழி .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

தேவியம்பொன் மலைக்கோமான் றன்பாவை யாகத்
தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
தூவியவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்
துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

அழகிய பொன்மலைக்கு அரசன் மகள் தனக்கு மனைவியாய் வாய்க்க , அவளைத் தனது திருமேனியில் ஒருபாகமாகச் சேர்ந்திருக்கும்படி வைத்த பெருமானும் , பாவிகள் விரும்பும் கொடிய நரகத்தில் வீழாதபடி நமக்கு மெய்ந்நெறியைக் காட்டுகின்ற , வேதத்தால் துணியப்பட்ட முதற்கடவுளும் ஆகிய இறைவனை , சிறகுகள் வாய்ந்த நாரைகளும் , குருகுகளும் பறந்து ஒலிக்க , நீர்த்துறைகளில் கெண்டை பிறழ , பிற மீன்கள் துள்ளி விளையாட , குவளைப்பூவின் கண் வண்டுகள் பலவகையான இசைகளைப் பாடுகின்ற வயல்களை யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` தூவியவாய ` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று . ` கயல் ` என்றது , ` மீன் ` என்னும் அளவாய் நின்றது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 11

திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞால மாண்டவர்க்குந் தாம்போய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.

பொழிப்புரை :

புகழ்மிகுந்த , மதம் பொருந்திய யானையை யுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , அலையால் நிறைந்த கடல்சூழ்ந்த தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனைச் செருக்கடக்கியவனும் , செம்மையான சடையின்மேல் வெண்மையான சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை , கரையின்கண் நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு அடிவணங்கி , வணங்கப்பெற்ற அவ் வுரிமையினால் பாடிய இவ்வொளி பொருந்திய தமிழ்ப்பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லையாற் பொருந்திய வகைகளையுடைய நில வுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய் , பின்புசென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர் .

குறிப்புரை :

அரசத்திருவும் உடையவராகலின் , ` மதயானை ஆரூரன் ` என்று அருளினார் . வரையினார் வகை , பலப்பல நாடுகள் , ` தலைவராய் ` என்றதனை , ` ஆண்டவர்க்கும் ` என்பதனோடுங் கூட்டுக . ` அவர்தாம் ` என்பன அசைநிலைகள் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே , கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற , மலையான் மகள் மணவாளனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ சென்று , முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ ?

குறிப்புரை :

வடுப்பட்ட கது வாய் - வடுப்படல் ; ` களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின் ` என்றது ( பதிற்று -15) காண்க . ` தலை ` என்றது , ` மண்டை ` எனப் பொருள் தந்து , அப்பெயரையுடைய ஓட்டினைக் குறித்தது ; ` கவிழ்ந்த மண்டை மலர்க்குநர்யாரென ` ( புறம் -103) என்றாற்போல்வன காண்க . ` முரிந்த வாயையுடையது ` என்றது , ஓட்டின் இழிபுணர்த்தும் அளவாய் நின்றது , ` பித்தவுலகர் ` ( திரு வாசகம் - போற்றி . 36.) என்றாற்போல . ` அடியார் ` எனத் தம்மைப் பிறர்போல அருளினார் என்க . ` அது ` என்றது , பண்டறி சுட்டாய் , இறைவனது கருணையைக் குறித்தது என்பதைச் சேக்கிழார் திருமொழி யான் அறிக ( தி .12 ஏ . கோ . பு -182). இஃது எல்லாத் திருப்பாடல்களின் ஈற்றிலும் சென்று இயையும் . ` அதுவே ` என்னும் ஏகாரம் பிரிநிலை . சிறப்பு ஓகாரத்தை , ` ஆமாறு ` என்றதனொடு கூட்டுக . ` கச்சூர் ` என்பது , தலத்தின் பெயர் ; ` ஆலக்கோயில் ` என்பது கோயிலின் பெயர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை யறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் மில்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானே , இருவகை ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே , திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே , நீ , அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி , கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க , பிச்சைக் கென்று , ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால் , உன் அடியவர் மனம் உருகமாட்டாரோ ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம் .

குறிப்புரை :

கழல் வலத்திருவடியிலும் , சிலம்பு இடத்திருவடியிலும் உள்ளன என்க . ` போது உச்சம் ஆ ` என மாற்றி , சிறப்பும்மை விரிக்க . ` இரத்தல் உனக்கு வேண்டுவதின்று ; அங்ஙனமாகவும் இரக்கின்ற உனது கருத்தினை யாம் அறிகின்றிலேம் ` என்றவாறு . இருவகை ஏழ்பிறப்புக்களாவன , வினைப்பயன் தொடரும் ஏழ்பிறப்பும் , தாவரம் முதல் தேவர் ஈறாக உள்ள ஏழ்பிறப்புமாம் ; ` எழுமை எழுபிறப்பு ` ( குறள் -106) என்றது காண்க . ` அச்சம் ` என்றது , நாணத்தை . ` வடபால் ` என்றதற்கு , ` ஆல நிழலில் ` என்றுரைத்து , ` ஆலக்கோயில் ` என்றதன் காரணம் விளக்கியவாறு என்றலுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

சாலக் கோயில் உளநின் கோயில்
அவைஎன் தலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
வானோ ரறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்க ளுரைத்த அம்மானே.

பொழிப்புரை :

தேவரும் அறிய ஒண்ணாத நிலையையுடையவனே , அழகுடையதும் , குறைவில்லாததும் ஆகிய , குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால் ஆலக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற , கல்லால் நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கு அறங்களை உரைத்த பெருமானே , உனது கோயிலாகப் பல கோயில்கள் இம் மண்ணில் உள்ளன ; அவற்றை யெல்லாம் என்தலைமேல் வைத்துப் புகழ்ந்து , மயக்கமுந் தீர்ந்தேன் ; வினையையும் ஓட்டினேன் ; இங்குள்ள கோயிலைப் புகழ்ந்து , நீ இரந்து சோறிடப்பெற்றேன் .

குறிப்புரை :

வருவித்துரைத்தது , இசையெச்சம் . மயக்கம் , இவ்வுல கின்பத்தைப் பெரிதாக நினைத்தல் ; வினை , அந்நினைவின் வழியே முயலுதல் . ` வடபாலை ` என்னும் ஐகாரம் சாரியை . ` கொண்டாடி ` என்னும் எச்சம் , காரணப் பொருட்டு . ` அறங்கட்டுரைத்த ` என்றும் பாடம் ஓதுவர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

இடப வாகனத்தையும் , இடபக்கொடியையும் , சடை முடியையும் உடையவனே , திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே , எங்கும் , அழகியவாயில்களையும் , நிறைந்த மணிமண்டபங்களையும் , அழிவில்லாத மாடங்களையும் கொண்டு , சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும் , நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால் , தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற , வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள , ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெரு மானே , இஃது உன்கருணை இருந்தவாறேயோ !

குறிப்புரை :

` விடையும் கொடியும் ` என்றது , ஆற்றலாற் பொருளுணர நின்றது . கன்னிமாடம் , கன்னியர் உறையும் மாடம் என்பாரும் உளர் . ` கலந்து ` என்ற எச்சம் , எண்ணின்கண் வந்தது . ` தழுவுதலால் ` என்பது , ` தழுவி ` என வந்தது . ` அடையும் கச்சூர் ` என இயையும் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

மேம்பட்டதாகிய அறநெறியாயும் , அதன் பயனாயும் உள்ளவனே , பகைவரது திரிபுரங்களை எரித்தவனே , காலையில் எழுந்து உன்னை வணங்குவாரது மனக்கவலையை அடியோடு நீக்குபவனே , நீலகண்டத்தை யுடையவனே , மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன்போல்பவனே , மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே , வயல்கள் நிறைந்த , கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , அடியேன் உன்னை மறவேன் .

குறிப்புரை :

திருக்கச்சூரில் , பெருமான் , மலைமேற் கோயில் கொண்டிருத்தலின் , ` மலைமேல் மருந்தே ` என்று அருளிச் செய்தார் . ` கழனி ` என்பது , ` இடம் ` என்னும் பொருளதாய் நின்றது . ` வினையின் பயனே ` என்பதும் பாடம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே யொழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

பிறவாதவனே , இறவாதவனே , யாதொன்றையும் விரும்பாதவனே , மூப்படையாதவனே , இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை விடாதவனே , மறதி இல்லாதவனே , என்றும் சுடு காட்டையே இடமாகக்கொண்டு நடனம் ஆடுபவனே , திருக்கச்சூரில் வடபால் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ , உடைந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் , உன் அடியவர் மனம் வருந்தமாட்டாரோ ? இதனை அறவே ஒழி .

குறிப்புரை :

ஆற்றாமையால் , ` அறவே ஒழியாய் ` என்றாரேனும் , ஒழியாமையைப் பாராட்டுதல் திருவுள்ளமாகலின் , ஈண்டும் ` அதுவே யாமாறிதுவோ ` என்பது வந்தியைவதேயாம் . ஒறுவாய் - மூளியான வாய் . ` முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி ` என்னும் பெரும்பாணாற்றுப் படை (98, 99) அடியின் உரையைக் காண்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

மை பொருந்திய பெரிய கண்களையுடைய மங்கை பங்காளனே , கங்கையையும் , ஆத்திப் பூவையும் , சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே , செம்மைநிறம் உடையவனே , வெண்மைநிறம் உடையவனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன்னைப் புகழ்கின்றவர்கள் பொய்யாகவே புகழ்ந்தாலும் , அதனையும் மெய்யாகவே கொண்டு அருள்செய்கின்றவனே , எங்கள் பெருமானாகிய உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை .

குறிப்புரை :

` நினைத்து அவர் வருந்தாதவாறு , இரத்தலை விட்டொழி ` என்றதாம் . ` ஒழியாத இஃது உன் கருணை இருந்த வாறேயோ !` என , ஈண்டும் வந்து இயையும் என்க . பொய்யே புகழ்தலாவது , அன்பானன்றி , ஒரு பயன் கருதிப் புகழ்தல் , அது பின் அன்பு உண்டாதற்கு வழியாதல்பற்றி , அதனையும் இறைவன் ஏற்று அருளுவன் என்க . ` கங்கை ` என்பதன் ஈற்று ஐகாரம் , தொகுத்தலாயிற்று . ` கங்கா நதியம் ` என்பதும் பாடம் . சிவபிரானுக்கு வெண்மை நிறமும் கூறப்படும் . மிக்க நெருப்பு வெண்மையாதலும் அறிக . இனி , ` வெண்மை , நீற்றினால் ஆயிற்று ` எனினுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

காட்டில் உள்ள கொன்றை மலர் , மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே , மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே , உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே , திருக்கச்சூரில் உள்ளவனே , ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , கீழ்மையுடையேனும் , அறிவில்லாதேனும் ஆகிய யான் , உடம்பை வளர்க்கும் செயலில் நின்று , உன்னை நினையாது விட்டேன் .

குறிப்புரை :

` எனக்கும் இது செயற்பாலதோ ` என்பதனையும் இங்கு உடன்கூட்டியுரைக்க ` ஞானக் கண்ணாய் ` என்றதற்கு , ` ஞானக் கண்ணில் விளங்குபவனே ` என்று உரைப்பினும் ஆம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்ளல் அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பொழிப்புரை :

உமையம்மைக்குக் கணவனே , உனது தன்மைகளைப் பெரியோர் சொல்ல அறிந்து உன்னை மறவாதேனாகிய என்னையும் அடியாருள் வைத்து ஆள்கின்றவனே , விளைதலை யுடைய கழனிகளையுடைய பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன் பால் பேரன்புகொண்டு , அதனால் இன்பம்மீதூரப்பெற்று , தம்மை யறியாது வரும் சொற்களைச் சொல்லி , மணம்பொருந்திய மலர்களைத் தூவி உன்னைப் போற்றி செய்து உயர்வடைகின்ற அடியவர்கள் உனக்கு வேண்டும் பணிகளைச் செய்ய அவாவியிருக்க , நீ சென்று பிச்சை ஏற்பது அழகிதாமோ ? ஆகாதன்றே ?

குறிப்புரை :

` ஆதல் ` இரண்டனுள் முன்னது , உயர்தல் ; பின்னது , விளைதல் . உயர்தலாவது , வீடுபெறுதல் . ` பழனக் கழனி ` என்பதும் பாடம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னு மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லா
ரவர்என் தலைமேற் பயில்வாரே.

பொழிப்புரை :

அன்னங்கள் நிலைத்து வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால் , ` ஆரூரன் ` என்று , திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும் , செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும் , வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , தமிழ் இலக்கணம் அமைந்த இப்பாமாலையைப் பாட வல்லவர் , என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர் .

குறிப்புரை :

` உன்னம் ` என்பது , நினைவாகலின் , இறைவனுக்கு அஃது அருளேயாதல் பற்றி , ` கருணை ` என்று உரைக்கப்பட்டது . ` ஆரூரன் ` என்றதனை , ` வன்றொண்டன் ` என்றதன் பின்னர்க் கூட்டுக . ` நூல் ` என்றது . நூலிற் சொல்லப்பட்ட இலக்கணத்தைக் குறித்தது . ` நூல் ` என்ற பொதுமையான் , ` இயற்றமிழ் நூல் , இசைத் தமிழ் நூல் , என்னும் இரண்டனையுங் கொள்க . ` என்தலைமேல் பயில்வார் ` என்றது , ` சிவனடியாராவர் ` என்றவாறாம் ; என்னை ? சுவாமிகள் தந் தலைமேல் பயில்வார் அவரே யாகலின் . ` எம் தலைமேல் ` என்பதும் பாடம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

எறிக்குங்கதிர் வேயுதிர் முத்தம்மோ
டேலம்மில வங்கந்தக் கோலம்இஞ்சி
செறிக்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக் குந்தழை மாமுடப் புன்னைஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங்கலை மாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

மூங்கிலினின்றும் உதிர்ந்த , ஒளிவீசும் , முத்துக்களோடு , ` ஏலம் , இலவங்கம் , தக்கோலம் , இஞ்சி ` என்பவைகளை , எவ்விடங்களையும் நிரப்புகின்ற நீருள் இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , ` தளிர்த்த தழைகளையுடைய மாமரம் , வளைந்த புன்னை மரம் , குங்கும மரம் , குருக்கத்திப்பந்தர் ` என்னும் இவைகளின்மேல் குயில்கள் இருந்து கூவுதல் ஒழியாத , அஞ்சுகின்ற கலைமானையுடைய திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற , வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` பெய்துகொண்டு ` என்றது முதலியன , செய்யாததனைச் செய்வதுபோல அருளியன . ` சிற்றாறு ` என்பது , பெயர் . அது வடக்காக ஓடுதலின் , இத்தலம் அதன் கீழ்க்கரையில் உளதென்க . குயில் கூவுதலும் மான் அஞ்சுதற்குக் காரணமாகும் . வேறுபடுதல் , உலகிய லினின்றும் . இல்வாழ்க்கையின் நீங்கி , இறைவன் தொண்டே செய்வார் சீரடியார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக்
குடமாமணி சந்தன மும்மகிலும்
துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும்
மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள்
விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

பல குளங்களும் , பல குழிகளும் நிறையும்படி , மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும் , ` சந்தனமரம் , அகில் மரம் ` என்னும் இவற்றையும் , அசைகின்ற நீருள் இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள , வளத்தைக்கொண்ட மதிலும் , மாளிகையும் கோபுரமும் , மணிமண்டபமும் ஆகிய இவை . மேகத்தில் விளங்குகின்ற சந்திரனை அளாவுகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` இவை என்றதும் , மதிதோய் ` என்றதும் , ` வாளைமீன் உள்ளல் தலைப்படல் ` ( திரிகடுகம் -7.) என்புழிப் போல , ஒவ்வொன்றும் வினைமுதலும் , செய்யப்படுபொருளுமாய்த் தடுமாறின .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

வரைமான்அனை யார்மயிற் சாயல்நல்லார்
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார்கமு குந்நெடுந் தாட்டெங்குங்
குறுந்தாட்பல வும்விர விக்குளிரும்
விரையார்பொழில் சூழ்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

மலையில் உள்ள மான்போல்பவரும் , மயில் போலும் சாயலை யுடையவரும் , கூரிய வேல்போலும் கண்களை யுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வழிபட , அவர்கள் தனக்கு அளித்த பொருளை , அலை நிறைந்த நீரில் இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , வரிசையாகப் பொருந்திய கமுக மரங்களும் , நீண்ட அடியினையுடைய தென்னை மரங்களும் , குறிய அடியினையுடைய பலா மரங்களும் ஒன்றாய்ப் பொருந்துதலால் குளிர்ச்சியை அடைகின்ற , மணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற , வேறு பட்ட இயல்பினையுடையவனே , அடியேனையும் உன் சீரடி யாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` மானனையார் ` முதலிய பலவும் வேறு வேறுள்ளாரைக் குறித்தனவல்ல ; அனைவரையும் குறித்தனவேயாம் . ` இறைஞ்ச ` என்றதனால் , திரையார் புனலுட் பெய்துகொள்வது அப் பொருளாயிற்று . அதனைக் குறிக்கும் சொல் சொல்லெச்சமாய் நின்றது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

பண்போலும் மொழியினையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே , யாவரும் ஒடுங்குங் காட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே , இன்பத்தைத் தரும் அரிய அகிலையும் , நல்ல கவரியையும் அலைத்துக்கொண்டு வந்து கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , மண்பொருந்திய மத்தளமும் , குழலும் ஒலிக்க , மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல் , வானத்தில் பொருந்திய சந்திரன் தவழ்கின்ற திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

தண்மை , மனங் குளிர்தலைக் குறித்தது . மண் மத்தளத்திற் பூசப்படுவது ; இதனை , ` மார்ச்சனை ` என்ப .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

துளைவெண்குழை யுஞ்சுருள் வெண்டோடுந்
தூங்குங்கா திற்றுளங் கும்படியாய்
களையேகம ழும்மலர்க் கொன்றையினாய்
கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண்பிறை யாய்பிறங் குஞ்சடையாய்
பிறவாதவ னேபெறு தற்கரியாய்
வெளைமால்விடை யாய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

துளைக்கப்பட்ட வெள்ளிய குழையும் , சுருண்ட வெள்ளிய தோடும் நீண்ட காதினிடத்தில் அசைகின்ற வடிவத்தை யுடையவனே , தேனினது மணத்தை வீசுகின்ற கொன்றை மலரைச் சூடியவனே , அடைந்தவர்க்கு அருள்செய்கின்ற கற்பகம் போல்பவனே , இளைய வெள்ளிய பிறையைச் சூடியவனே , விளங்குகின்ற சடைமுடியை உடையவனே , பிறத்தலைச் செய்யாதவனே , கிடைத் தற்கு அரியவனே வெண்மையான பெரிய விடையை உடையவனே , திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற , வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

தோளில் தோய நீண்டிருத்தலின் , ` தூங்கும் காது ` என்றார் . ` தோடும் சங்கினால் ஆயது ` என்க . ` கள்ளை , பிள்ளை , வெள்ளை என்பன , இடைக்குறைந்து நின்றன . ` கள் ` ஆகுபெயர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய்
சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய்
உழுவார்க்கரி யவ்விடை யேறிஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார்
முழவாரொலி பாடலொ டாடலறா
முதுகாடரங் காநட மாடவல்லாய்
விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

உன்னைத் தொழுகின்றவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே , அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய் , நின்றவனே , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவனே , உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே , பகைவரது திரிபுரத்தில் நெருப்பை மூளுமாறு ஏவியவனே , பேய்களின் ஓசையாகிய அழகுநிறைந்த மத்தளஒலியும் , பாட்டும் , குதிப்பும் நீங்காத புறங்காடே அரங்காக நடனமாட வல்லவனே , விழாக்கள் நிறைந்த தெருக்களையுடைய திருவெஞ்ச மாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

விடை ஒற்றையாகலானும் , தேவர் ஆகலானும் உழுவார்க்கு உதவாதாயிற்று . சிரிப்பினின்றும் எழுந்து சென்றமையால் , ` தீயெழ ஓடுவித்தாய் ` என்றார் . முதுகாடாதலின் , முழவு முதலியன பேயின் முழக்கமே என்க . ` மறுகில் ` என்பது பாடம் அன்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

கடமாகளி யானை யுரித்தவனே
கரிகாடிட மாஅனல் வீசிநின்று
நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய்
நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே
படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண்
பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும்
விடவார்அர வாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

மதநீரையுடைய பெரிய மயக்கங்கொண்ட யானையை உரித்தவனே , கரிந்த காடே இடமாக நெருப்பை வீசிநின்று நடனமாட வல்லவனே , வெள்ளிய இடபத்தை விரும்பியவனே , நல்லோனே , கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே , புள்ளிகளை யுடைய ஆயிரம் படங்கள் பொருந்திய , பருத்த , பசிய கண்களை யுடைய , பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்ற , நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே , திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` துத்திப் படம் ` எனக் கூட்டுக . ` எயிற்றோடு ` என்பது , வேறுவினை ஓடு . ` அழல் ` என்றது , அழல்போலும் வெய்தாய உயிர்ப்பினை . பாம்பிற்கு அருமையாவது , தீண்டப்படுதல் கூடாமை .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

காடும்மலை யுந்நாஅ டும்மிடறிக்
கதிர்மாமணி சந்தன மும்மகிலும்
சேடன்னுறை யும்மிடந் தான்விரும்பித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
பாடல்முழ வுங்குழ லும்மியம்பப்
பணைத்தோளியர் பாடலொ டாடலறா
வேடர்விரும் பும்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

ஒளியையுடைய சிறந்த மணிகளையும் , சந்தனத்தையும் , அகிலையும் , ` முல்லை , குறிஞ்சி , மருதம் ` என்னும் நிலங்களில் சிதறி , ` சேடன் ` என்னும் அரவரசன் வாழ்கின்ற பாதலத்தை அடைய விரும்பி நிலத்தை அகழ்ந்து , கரையைப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , தம் பாடலுக்கு இயைந்த மத்தளமும் , குழலும் ஒலிக்க , பருத்த தோள்களையுடைய மாதர்கள் பாடுதலோடு , ` ஆடுதலைச் செய்தல் ஒழியாத கூத்தர் விரும்பும் திருவெஞ்ச மாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

வேடர் - கதையிற் சொல்லப்படுவோர்போல வேடம் புனைந்து ஆடுபவர் : இவரை , ` பொருநர் ` என்ப . இவர் விரும்புதல் பரிசில் மிக வழங்குவோர் உளராதல் பற்றி . ` நாஅடும் ` என உயிரளபெடை வந்தது . அளபெடையின்றி ஓதுதல் கூடாமையறிக .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

கொங்கார்மலர்க் கொன்றையந் தாரவனே
கொடுகொட்டியொர் வீணை யுடையவனே
பொங்காடர வும்புன லுஞ்சடைமேற்
பொதியும்புனி தாபுனஞ் சூழ்ந்தழகார்
துங்கார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார்வயல் சூழ்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே , கொடுகொட்டியையும் வீணையொன்றையும் உடையவனே , சீற்றம் மிக்க , ஆடுகின்ற பாம்பும் தண்ணீரும் சடையில் நிறைந்துள்ள தூயவனே , காடுகளைச் சூழ்ந்து அழகுமிகுகின்ற , உயர்வு பொருந்திய நீருள் , காடுபடு பொருள்கள் பலவற்றை இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , விரும்பத்தக்க நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` கொடுகொட்டி ` என்னும் பறை அடிக்கப்படுதற் கேற்ப ஆடுதலின் , அக்கூத்து , ` கொடுகொட்டி ` எனப்பட்டது என்க . ` புனஞ் சூழ்ந்து ` என்றதனால் , புனலுட் பெய்யப்படுவன , காடுபடு பொருள் களாயின .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

வஞ்சிநுண்ணிடை யார்மயிற் சாயலன்னார்
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே
னையும்வேண்டுதி யேஎன்று தான்விரும்பி
வஞ்சியாதளிக் கும்வயல் நாவலர்கோன்
வனப்பகை யப்பன்வன்ன் றொண்டன்சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார்
சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே.

பொழிப்புரை :

` வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையை யுடையவரும் , மயில்போலும் சாயலை யுடையவரும் , கூர்மை பொருந்திய வேல்போலும் கண்களையுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வணங்குகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளி யிருக்கின்ற , வேறுபட்ட இயல்பினையுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் ` என்று , விளைவுகளை வஞ்சியாதளிக்கின்ற வயல்களையுடைய திருநாவ லூரில் உள்ளார்க்குத் தலைவனும் , வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டன் விரும்பிப் பாடிய செவ்விய சொற்களாலாகிய இத் தமிழ்மாலைகள் பத்தினையும் பாட வல்லவர் சிவலோகத்தில் வீற்றிருத்தல் திண்ணம் .

குறிப்புரை :

தான் , அசைநிலை . மிகக் கொடுப்பவரை , ` வஞ்சியாது கொடுப்பவர் ` என்னும் வழக்குப் பற்றி , ` வஞ்சியாது அளிக்கும் வயல் ` என்று அருளினார் . இனி , ` வஞ்சியாது அளிக்கும் நாவலூரர் ` என , நாவலூரில் உள்ளார்க்கு அடையாக்கலுமாம் . நாவலூரை , ` நாவல் ` என்றல் , பான்மை வழக்கு . ` என்று வன்றொண்டன் விரும்பிச் சொன்ன ` என இயையும் . ` வன்ன்றொண்டன் ` என ஒற்றளபெடை வந்தது . அளபெடையின்றி ஓதுதல் கூடாமையறிக .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார்
துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே.

பொழிப்புரை :

முஞ்சிப் புல்லின் புதல்மேல் சங்கு தங்கி ஒலிக்கின்ற புகழையுடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, எங்கள் தலைவரே, உம்மை நெஞ்சுருகி விரும்புகின்ற அடியவர், `நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும்; நாளை வாய்க்கும்` என்று எண்ணிக் கொண்டேயிருந்து இறந்துவிட்டால், அதன்பின்பு நீர் அவர்களுக்குச் செய்வது என்ன இருக்கின்றது? பஞ்சியை அடைப்பதனால் குடுக்கை உடைந்து விடுமோ? விரைந்து அருள்புரியீர்.

குறிப்புரை :

இடை - செவ்வி. ``பஞ்சியிடப் புட்டில் கீறுமோ`` என்றது, `எங்களுக்கு உதவும் சிறுபொறையை மேற்கொள்வதனால், நீர் கெட்டுவிடுவீரோ` என்பதனை உள்ளுறுத்து அருளிய உள்ளுறை உவமம். ``பணியீர்`` என்றது, `தாரீர்` என்றவாறு. முஞ்சிப் புதல், மணி முத்தாற்றின் இருமருங்கிலும் உள்ளனவென்க. தருப்பையையும், `முஞ்சி` என்ப.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி
ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ
வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய்
மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே.

பொழிப்புரை :

பெரிய களிற்றியானை, வெள்ளத்தினிடத்திற் சென்று அதனால் வளைத்துக்கொள்ளப்பட்டு மீளமாட்டாது வருந்திப் பின் அரிதில் மீண்டு பிளிறுதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந் தருளியிருப்பவரே, உமது, அழகு பொருந்திய, பொற்றாமரை மலர் போலும் செவ்விய இத்திருவடிகள், இத்தனை ஊரிலும் திரிந்தால், அவை வருந்துமோ! வருந்தாவோ!

குறிப்புரை :

`எம் கால்கள் வருந்தியே நிற்கின்றன; அருளல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். `இச் சேவடி` என இயையும். `இத்தனையும்` என்றது, உலகில் உள்ள ஊர்களையெல்லாம் குறித்து, திரிதல், பிச்சைக்கு என்க. கொல், ஐயப்பொருளதாதலின், `நோவா கொல்` என்பதும் கொள்ளப்பட்டது. ஓகாரம், அசைநிலை. நும்கால் நோவினும் - நோவாதொழியினும், நும்மைச் சார்ந்து திரிகின்ற எம் கால்கள் நோவு பொறுக்கின்றனவில்லை; ஆதலின், எமக்கு விரைந்து அருளுதல் வேண்டும் என்றபடி. `வேரிக் கனகக் கமல மலர்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

தொண்டர்கள் பாடவிண் ணோர்க ளேத்த உழிதர்வீர்
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.

பொழிப்புரை :

கைவாள் ஏந்தியவர், பெருவாள் ஏந்தியவர், வில் ஏந்தியவர் ஆகிய பலரும் புறத்து நின்று காக்கின்ற, புகழையுடைய, நெய் முதலியவற்றை முகந்து சொரிகின்ற கைகளால் வளர்க்கப்படு கின்ற வேள்விகளின் முழக்கம் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந் தருளியிருப்பவரே, நீர், அடியவர்கள் பாடவும், தேவர்கள் துதிக்கவும் தலைவராய்த் திரிவீர்; ஆதலின், பழைமையான இல்லங்கள்தோறும் பிச்சைக்குச் செல்வது தகுதியோ?

குறிப்புரை :

`எமக்கு அருளவேண்டுவதை மறைத்து இது செய்கின்றீர்; எனினும் இஃது உமக்குத்தகாது` என்றபடி. `உழிதர்வீர்` என்றது, பல விடத்தும் பல்காலும் காணப்படுதலின் மிகுதி குறித்தவாறு. `வாளி, வில்லி` என்னும் இகர ஈற்று ஒருமைப்பெயர்கள், பன்மையுணர்த்தும்கள் விகுதிபெற்றன. அவர்கள் புறத்து நின்று காத்தல், கொடியவர்கள் வேள்வியை அழித்தல் செய்யாதபடி என்க.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென்
விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர்
அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர்
முளைப்பிறைச் சென்னிச் சடைமு டிமுது குன்றரே.

பொழிப்புரை :

தன் செயல் விளைப்பதறியாது வந்த கொடிய இயமனை உயிர்போக்கியவரே, புற்றினின்றும் நீங்காத பாம்பின் படம் போலும் அல்குலையுடைய உமையோடு கங்கையும் பொருந்திய, இளைய பிறையையுடைய, தலைக்கண் உள்ள சடைமுடியையுடைய, திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, இப்பிறப்பில் உம்மைப் போற்றுகின்றவர்களது தளர்ச்சியை நினைக்கமாட்டீர்; வரும் பிறப்பில் நீர் அவர்கட்குச் செய்வது என்ன இருக்கின்றது?

குறிப்புரை :

`செய்வது என் உளது` என்றது, இப்பொழுது இன்றிப் பின் வருவது பெரிதாயினும், அது நோக்கி, இப்பொழுது உள்ள துன்பத்தைப் பொறுத்து வாழார்; ஆதலின், இப்பொழுதே அருள் செய்தல் வேண்டும் என்றபடி. ``என்`` என்றதன்பின், `உளது` என்பது தொகுத்தலாயிற்று.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

ஆடி யசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும்
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.

பொழிப்புரை :

மாடங்கள்மேலும், மதில்மேலும், அழகிய கோபுரங்கள் மேலும், மணிமண்டபங்கள்மேலும், மேகங்கள் மூடிக்கொண்டு தவழ்கின்ற, சோலை சூழ்ந்த திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, அடியாரும் நீருமாகச் சென்று இல்லந்தோறும் ஆடியும், பாடியும் வருந்திச் சேர்த்த பொருள்களெல்லாம், உம் தேவிக்கு மட்டில்தான் உரியனவோ? எம்போல்வார்க்குச் சிறிதும் உரியது இல்லையோ?

குறிப்புரை :

`அடியவர்களும் கூடித் தேடிய பொருள்தானே; எங்கட்குச் சிறிதும் கொடுக்க இசைகின்றிலிரே` என்றபடி, அசைதல் - தளர்தல்; வருந்துதல். ``சோலைசூழ்`` என்றதும், அதன்மேலும் முகில் தவழும் என்னும் குறிப்பினது.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக்
குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள்
முழைவள ராளி முழக்க றாமுது குன்றரே.

பொழிப்புரை :

மேகங்கள் மிகுந்த நீண்ட சிகரங்களிடையே மதத்தையுடைய யானைகளும், குகைகளில் வளர்கின்ற யாளிகளும் முழங்குதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், நூல் தங்கியுள்ளதுபோலும், நுட்பமான இடையினையுடைய மங்கையோடு இடுகாட்டின்கண், குழை பொருந்திய காதுகள் பக்கங்களில் மோதும்படி முற்பட்டு நின்று நடனமாடுவதோ?

குறிப்புரை :

``அதனை யாங்கள் நின்று காண்பதோ? நல்லரங்கில் நின்று ஆடுதல் வேண்டும்` என்றவாறு. தமக்கு ஆவது வேண்டுவார், தம் தலைவர்க்கு ஆவதும் வேண்டினார் என்க.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச் சேடிச்சிகள்
மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள்
முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.

பொழிப்புரை :

குன்றில் களிற்றியானையைச் சிங்கம் உண்டுவிட, அதன் பிடியானையையும், கன்றையும் குறத்திகள் தங்கள் குடிலின் முன் கட்டிவைத்துக் காக்கின்ற திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி யிருப்பவரே, நீர், பல இல்லங்களிலும் சென்று, அங்குள்ள இழிந்த நாய்கள் குரைக்க, தொழுத்திகள் தெருவில் வந்து இடுகின்ற அந்தப் பிச்சையை வாங்கச் செல்வது, மேற்கொள்ளத் தக்க வாழ்க்கையோ?

குறிப்புரை :

`சேடியர்` என்பதனை, ``சேடிச்சிகள்`` என்றார்; எனவே, இது, `வேடிச்சி, செட்டிச்சி` என்றாற்போல, இச்சு இடைநிலை பெற்றதென்று கொள்ளப்படும். அப்பலி எனப்பிரித்து, எதுகை நோக்கி அகரம் ஐகாரமாயிற்று என்க. ஐ - அழகு என்று கொண்டு, நகையை உள்ளுறுத்துக் கூறிற்றாக உரைத்தலுமாம். `குன்றினிடை` என்பதில், சாரியை திரிந்துநின்றது.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

அந்தி திரிந்தடி யாரும்நீரும் அகந்தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே.

பொழிப்புரை :

பெண் குரங்கிற்கும், ஆண் குரங்கிற்கும் உண்ணுதற் குரிய பழங்களை அவைகள் தேடிக்கொண்டு மலைப்புறங்களில் முற்பட்டுச் சென்றபொழுது அவைகள் கண்டு, அன்புகொண்டு வணங்குமாறு நின்றருளுகின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, நீரும் அடியாருமாக இல்லந்தோறும், அந்தியிலும், சந்தியிலும் பிச்சைக்குச் சென்று திரிவது தக்கதோ?

குறிப்புரை :

``மந்தி கடுவன்`` என்ற உம்மைத்தொகை, ஈற்றில் உரு பேற்றது.
அந்தியை முன்னர்க் கூறினமையால், ``சந்தி`` என்றது, காலையும், நண்பகலும் என்க.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
அட்டுமின் சில்பலிக் கென்ற கங்கடை நிற்பதே
பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ
முட்டி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே.

பொழிப்புரை :

யாவரும் எதிர்வந்து அடிவணங்க நிற்கின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, அளவறிந்து வாழ்பவளாகிய உம் மனைவி ஊர்கள்தோறும் , அறம் வளர்க்க, நீர், இல்லங்களின் வாயில் தோறும் சென்று `இடுமின்` என்று இரந்து, சிலவாகிய பிச்சைக்கு நிற்றல் பொருந்துமோ? கட்டுள் நில்லாத வெள்ளிய எருது ஒன்றை விரும்பி ஏறுவீராகிய உமது தன்மைதான் என்னோ?

குறிப்புரை :

செட்டு - அளவறிந்து வாழ்தல். `அட்டுமின் என்று சில் பலிக்கு நிற்பதே` எனக் கூட்டுக. `அகத்துக்கண் கடையிடத்து` என்க. `ஏறுவீர்` முன்னிலை வினைப்பெயர்.
``வரையா நாளிடை வந்தோன் முட்டினும்`` (தொ. பொருள் 110) என்புழிப்போல, முட்டுதல், `எதிர்ப்படுதல்` என்னும் பொருளைத் தந்தது.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிறர் என்சொலார்
பத்தியி னால்இடு வாரி டைப்பலி கொள்மினோ
எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல்
முத்திமுத் தாறு வலஞ்செய் யும்முது குன்றரே.

பொழிப்புரை :

எப் பக்கங்களிலும் அலைபுரண்டு செல்லும்படி இரு கரைகளின்மேலும் மோதுகின்ற முத்தியைத் தருகின்ற முத்தாறு வலம்சூழ்ந்து செல்கின்ற திருமுதுகுன்றத்து இறைவரே, ஒன்றையும் நீக்காது எல்லா இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்றால், பிறர் என்ன சொல்லமாட்டார்கள்? ஆகையால், அன்போடு இடுகின்றவர் இல்லத்தில் மட்டும் சென்று பிச்சை வாங்குமின்.

குறிப்புரை :

இதனால், இறைவன் பகுப்பின்றி எல்லார்க்கும் திருவருள்புரிய முற்படுகின்றான்; ஆயினும், அவரவர் இயல்பால், அதனை அடைவோரும், அடையாதவரும் ஆகின்றனர் என்பது உணர்த்தப்பட்டது.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 11

முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
பித்தனொப் பான்அடித் தொண்ட னூரன் பிதற்றிவை
தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார்
எத்தவத் தோர்களும் ஏத்து வார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

முத்தியைத் தருகின்ற முத்தாறு வலமாகச் சூழ்ந்து ஓடுகின்ற திருமுதுகுன்றத்து இறைவரை, அவர் திருவடிக்குத் தொண்டனாய் உள்ள, பித்துக்கொண்டவன் போன்ற நம்பியாரூரன் பிதற்றிய இப்பாடல்களை, தத்துவஞானிகளாயினும், பிறழாத உள்ளத்தை உடைய அன்பர்களாயினும், எத்தகைய தவத்தில் நிற்பவராயினும் பாடுகின்றவர்களுக்கு, துன்பம் இல்லையாகும்.

குறிப்புரை :

பித்தன்ஒத்தல், அப்பெருமானையே அடைய விரும்பி நிற்றல். பிதற்றுதல், அன்புமீதூர்வால், புகழ்வனவற்றைப் பழிபோலக் கூறுதல். ``ஆயினார்`` என்றது, எழுவாய் என்பது படவந்ததோர் இடைச்சொல். மூன்று பெயர்களிடத்தும், விகற்பப் பொருள்தரும், `ஆக` என்பது வருவிக்க. தத்துவ ஞானிகள், நூல்களின் வழித் தத்துவத் தினை நன்குணர்ந்தவர். தடுமாற்றிலார், ஞானத்தின் முதிர்ச்சியால், இறைவனையன்றி வேறொரு பொருளைப் பொருள் என எண்ணாதவர். தவத்தோர், தத்துவ ஞானம் பெற முயல்பவர்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

முடிப்பது கங்கையுந் திங்களுஞ்
செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ
ழக்கணை நூறினார்
கடிப்பதும் ஏறுமென் றஞ்சு
வன்திருக் கைகளால்
பிடிப்பது பாம்பன்றி இல்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

எம் பெருமான் தலையிற் சூடுவது கங்கையையும் சந்திரனையும் , அழித்தது மூன்று மதில்களை , அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார் . தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு . அது கடித்தவுடன் , நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன் ; இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ !

குறிப்புரை :

` உளதாகவும் , ஏன் இவ்வாறு செய்கின்றான் ?` என நினைந்தவாறாம் . ` தனக்கென ஒன்றையும் வேண்டுதலும் முயலுதலும் இல்லாதவனாகலின் , அவனது செய்கைகளுக்குக் காரணம் இதுவென நாம் எங்ஙனம் வரையறுத்துக் கூறுதல்கூடும் ` என்றபடி . ` முடிப்பது , செற்றது ` என்பன இங்கு அவ்வத்தொழில் மேல் நின்றன . ` கணையால் ` நூறினார் என்க . ` கடிப்பதும் ` உம்மீற்று வினையெச்சம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

தூறன்றி யாடரங் கில்லை
யோசுட லைப்பொடி
நீறன்றிச் சாந்தமற் றில்லை
யோஇம வான்மகள்
கூறன்றிக் கூறாவ தில்லை
யோகொல்லைச்சில்லைவெள்
ளேறன்றி யேறுவ தில்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

எம் பெருமானுக்கு , ஆடுகின்ற அரங்கு , காடன்றி வேறு இல்லையோ ! சாந்து , சுடலைப்பொடியாகிய சாம்பலன்றி வேறு இல்லையோ ! தனது திருமேனியில் ஒரு கூறாய் நிற்பது மலையரையன் மகளது கூறன்றி வேறு இல்லையோ ! ஏறுவது , முல்லை நிலத்தில் உள்ள சிறுமையுடைய வெள்ளை எருதன்றி வேறு இல்லையோ !

குறிப்புரை :

காட்டினை , ` தூறு ` என்று அருளினார் . சாம்பல்தான் பல விடத்துண்மையின் , ` சுடலைப்பொடியாகிய நீறு ` என்றார் . பெண்ணொரு கூறாதல் பெருமை தாராமையின் , வேறு கூறு இல்லையோ என்றார் . ` கூறுவது ` என்பது பாடம் அன்று . சிறுமை யாவது , யானை முதலியனபோலப் பெருமையுடைய தாகாமை .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

தட்டெனுந் தட்டெனுந் தொண்டர்
காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனு மாநி
லத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரஞ் சுட்ட
தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர்
காள்எம் பிரானையே.

பொழிப்புரை :

மன அலைவையும் , எல்லாப் பொருட்கும் நிலைக் களமாகிய பெரிய நிலத்தின்கண் உள்ள உயிர்களைக் கொல்லுதலையும் நன்னெறிக்குத் தடை என்று உணர்ந்த அடியவர்களே , மேலானவனும் , திரிபுரத்தை எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை , வெறுத்துப் பேசன்மின் .

குறிப்புரை :

` பேசின் , கெடுவீர் ` என்பது குறிப்பெச்சம் . இதுவும் , அவன் தன்மை வரையறுக்கப்படாதென்றதேயாம் . தட்டு - தடை . ஒட்டு - சார்பு . அடுக்குக்கள் , வலியுறுத்தற் பொருள் . ` தடுமாற்றத்தை , கோறலை ` என்ற இரண்டனுருபுகளை ` தட்டேனும் ` என்பதற்கு முன்னர் வைத்து உரைக்க . ` தொண்டர் காள் ` என்பவற்றையும் அடுக்காக்கி அதனை விரைவுப் பொருட்டென்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

நரிதலை கவ்வநின் றோரி
கூப்பிட நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ
வாரிருட் காட்டிடைச்
சிரிதலைமாலை சடைக்க
ணிந்தஎஞ் செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர்
காள்எம் பிரானையே.

பொழிப்புரை :

அடியவர்களே , நரிகள் , இறந்தோரது தலைகளைக் கௌவி இழுக்க , ஓரிகள் கூக்குரலிட , செறிந்த இருட்காலத்தில் , நெருப்பு எரிகின்ற இடத்தில் , பேய்கள் புடைசூழ்ந்திருக்க அரிய இருளையுடைய காட்டில் , சிரிப்பதுபோலும் தலைமாலையைச் சடையின்கண் அணிந்த எம் செல்வனாகிய எம்பெருமானை , விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசன்மின் !

குறிப்புரை :

` எரிதலை ` என்றதில் , தலை , இடம் . அன்றி , ` நெருப்பு எரிவதுபோலும் தலையை உடைய பேய்கள் ` என்று உரைத்தலுமாம் . ` நரிதலை கௌவ என்பது முதலாக இவ்வாறு எடுத்துச் சொல்லி இகழன்மின் ` என்றவாறு . இவையே அவனது உண்மைநிலையன்று என்றபடி .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

வேயன தோளி மலைம
களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாட
னாகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள்
அல்ல லறுக்கினும்
பேயனே பித்தனே என்ப
ரால்எம் பிரானையே.

பொழிப்புரை :

மூங்கில்போலும் தோள்களையுடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற , வஞ்சனை இல்லாத , பெரிய மலையிடத் தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை , தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும் , அவனைச் சிலர் ` அவன் பேயோடாடுபவன் ; பித்துக் கொண்டவன் ` என்று இகழ்வர் ; எம்பெருமான் , அவர் அங்ஙனம் இகழுமாறு இருத்தல் என் !

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம் . மாயமில்லாதவன் என்றது அவனது பேரருளைக் குறித்தவாறு . ` மாமலை ` எனப் பட்டது , கயிலை . ` நாடு ` என்றது ` இடம் ` என்னும் பொருளது . ` பேயனே , பித்தனே ` என்னும் ஏகாரங்கள் தேற்றம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

இறைவ னென்றெம் பெருமானை
வானவர் ஏத்தப்போய்த்
துறையொன் றித்தூ மலரிட்
டடியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை
யோமல்கு வானிளம்
பிறையன்றிச் சூடுவ தில்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

தேவர் எம்பெருமானை இறைவன் என்று அறிந்து துதிக்கச்சென்று , நன்னெறியிற் பொருந்தி , தூய மலர்களைச் சொரிந்து அவன் அடியிணையைப் போற்றுவர் ; அங்ஙனமாக , அவனுக்கு , பாடும்பாட்டு , மறைகளன்றி வேறு ஒன்றும் இல்லையோ ! சூடும் கண்ணி , வானத்திற்செல்லும் இளம்பிறையன்றி , வேறு ஒன்றும் இல்லையோ !

குறிப்புரை :

` மறை ` என்றது , ` ஒருவருக்கும் விளங்காதன ` என்னும் பொருளதாய் , சிறப்பின்மை தோற்றுவித்தது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

தாருந்தண் கொன்றையுங் கூவி
ளந்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத
ஆதியும் அந்தமும்
ஊரும்ஒன் றில்லை உலகெ
லாம்உகப் பார்தொழப்
பேரும்ஓ ராயிர மென்ப
ரால்எம் பிரானுக்கே.

பொழிப்புரை :

எம் பெருமானுக்கு , மாலையும் , ` தண்ணிய கொன்றைப் பூ , கூவிளையிலை , மிகத் தாழ்ந்த ஊமத்தம்பூ ` என்பன . அளவும் , யாராலும் அறியப்படாத முதலும் , முடிவும் ; அன்பு செய்பவர் சென்று தொழுதற்கு ஊரும் ஒன்றாய் இல்லை ; உலகம் முழுதுமாம் . சொல்வதற்குப் பேரும் ஒன்றல்ல ; ஓர் ஆயிரம் என்று சொல்லி யாவரும் நகைப்பர் ; அவன் இவ்வாறிருத்தல் என்னோ !

குறிப்புரை :

ஆதியும் , அந்தமும் அறியப்படாமை முதலியன அவன் அணுகலாகாது நிற்றலைக் குறிப்பனவாய் , நகுதற்கு ஏதுவாயின .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

அரியொடு பூமிசை யானும்
ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி
திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த
எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

கீற்றுக்களையுடைய பாம்போடு , ` வன்னி , ஊமத்தை , பிறை ` என்பவைகளை , புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை , திருமாலும் , பூமேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறியமாட்டார் ; பிறர் ஆர் அறிவார் ! அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ !

குறிப்புரை :

` இவனை அணுகுவார் யார் ` என்றபடி . ஆதி - அடி . ` முடியும் ` என்பது எஞ்சி நின்றது . ` இனி ` என்றது , ` மற்று ` என்னும் பொருள்பட நின்றது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

கரிய மனச்சமண் காடி
யாடு கழுக்களால்
எரிய வசவுணுந் தன்மை
யோஇம வான்மகள்
பெரிய மனந்தடு மாற
வேண்டிப்பெம் மான்மதக்
கரியின் உரியல்ல தில்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

எம் பெருமானுக்கு கரிய மனத்தையுடைய , கஞ்சியைக் குடிக்கின்ற , கழுமரங்கள் போலத் தோன்றுகின்ற சமணர்களால் , மனம் எரிந்து இகழப்படுதல்தான் இயல்போ ! மலையரையன் மகளாகிய தன் தேவியின் பெருமை பொருந்திய மனம் கலங்க வேண்டி , அவன் மதத்தையுடைய யானையினின்றும் உரித்த தோலல்லது போர்வை வேறு இல்லையோ !

குறிப்புரை :

`` எரிய ` என்னும் எச்சம் , காரணப்பொருட்டு . ` வசை யுணும் ` என்பது , ` வசவுணும் ` என மருவிற்று ; ` வசையுணும் ` என்பதே பாடம் எனினுமாம் . ` தன்மையோ ` என்பதன் முன் , மற்றொரு , ` தன்மை ` என்பது வருவிக்க . ` வசவுணல் ` எனப் பாடம் ஓதினுமாம் . பெரிய மனம் , அருள் மிகுந்த மனம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

காய்சின மால்விடை மாணிக்
கத்தெங் கறைக்கண்டத்
தீசனை ஊரன் எட்டோ
டிரண்டு விரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப்
பனடித் தொண்டன்றான்
ஏசின பேசுமின் தொண்டர்
காள்எம் பிரானையே.

பொழிப்புரை :

அடியவர்களே , காய்கின்ற சினத்தையுடைய , பெரிய விடையை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும் , கறுப்புநிறத்தையுடைய கண்டத்தையுடைய இறைவனும் ஆகிய பெருமானை , அவன் அடித்தொண்டனும் , மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும் , ஏசிப் பாடியனவும் ஆகிய இப்பத்துப் பாடல்களால் , எம் பெருமானைப் பாடுமின் .

குறிப்புரை :

` பயன் பெறுவீர் ` என்பது குறிப்பெச்சம் . ` காய் சினம் ` என்றது இன அடை . ஞானி - ஞானமுறையினன் . ` ஞானவப்பன் ` எனப் பாடம் ஓதுதலுமாம் . ` ஞானத்தந்தை ` என்றது , வனப் பகையைத் தம் மகளாகவும் , தம்மை அவள் தந்தையாகவும் கருதி நிற்றல்பற்றி .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

காண்டனன் காண்டனன் காரிகை
யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்
தூர்எம் மடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று
சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்
தல்லா தவர்கட்கே.

பொழிப்புரை :

அடியேன் , திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனை , உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன் ; அவனுக்கு அடிமை பூண்டேன் ; அடிமையைப் பலகாலும் செய்தேன் ; இவை பொய்யல்ல ; இன்னும் சொல்லுவேன் ; கேண்மின் ; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன் .

குறிப்புரை :

` கண்டனன் ` என்பது , நீட்டலாயிற்று . கருத்தன் - தலைவன் . ஆளுதல் - பயன் படுத்துதல் . வித்து - அறிந்தோர் ; அது , வேதப்பொருளை மேலானதாக உணர்ந்து போற்றுவோரைக் குறித்தது . ` அல்லாதவர்கட்கு ` என்பது , உருபு மயக்கம் . இவை , அடியவர் முன்னர்க் கூறியனவாகும் . இத்திருப்பாடலிலும் வருகின்ற திருப் பாடல்களிலும் , வலியுறுத்தற் பொருட்டுப் பலவற்றையும் அடுக்கிக் கூறி யருளினார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

பாடுவன் பாடுவன் பார்ப்பதி
தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணெனப்
பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் மடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றம
தற்றென் குறிப்பொடே.

பொழிப்புரை :

யான் , இவ்வுலகிற்குத் தலைவனாகிய , திரு வாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை , அவனது திரு வடியைக் கருதிப் பாடுவேன் ; உறுதியாகப் பற்றி அணைத்தற்குத் தேடுவேன் ; தேடிக்கண்டு , என் கருத்தின் வண்ணம் குற்றம் நீங்கிக் கூடுவேன் ; கூடிய களிப்பினால் ஆடுவேன் .

குறிப்புரை :

` பார்ப் பதி ` என்றதை , ` பாருக்குப் பதி ` என்க . ` பார்வதி ` என்றுரைத்தற்கு ஏலாமை யறிக . இறுதிக்கண் வைக்கற் பாலதாய , ` ஆடுவன் ` என்பதை , செய்யுள் நோக்கி இடைவைத்தார் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ
லாலன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி
னாலன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்
தூர்எம் மடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி
ராட்டியைப் பாகமே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் , அன்று காமனைத் தனது நெற்றிக்கண்ணில் உள்ள நெருப்பால் எரித்தவன் ; அன்று , கூற்றுவன்மேற் காலாற் பாய்ந்து அவனை அழித்தவன் ; எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன் ; எம்பெரு மாட்டியை ஒருபாகத்தில் ஆரப்பொருந்தியவன் .

குறிப்புரை :

ஆய்ந்தவன் , ` நுணுகியவன் ` எனலுமாம் . ` ஆர ` என்பதன் , அகரந் தொகுத்தலாயிற்று . ` அடிகளார் ` என்றே உரைப்பின் , ` காய்ந்தவன் ` முதலியவற்றோடு இயையாமை அறிக . ` பாய்ந்தவன் பாரத்தினால் ` என்பதும் பாடம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்
ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று
திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி
மென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்
தூர்ஐயன் அருளதே.

பொழிப்புரை :

யான் , என் உள்ளத்துள்ளே நிலை பெற்றுள்ள ஒளி யுடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன் ; அவ்வறிவின் வழியே சென்று அதனைத் தலைப்பட்டேன் ; இனி , வெளியே , திருவொற்றியூரிற் புகுந்து , ` சங்கிலி ` என்பாளது மெல்லிய தோளையும் , பெரிய தனங் களையும் பொருந்தினேன் ; இவ்விருவாற்றானும் , இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன் ; இது , திருவாமாத்தூரில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனது திருவருள் .

குறிப்புரை :

` உள்ளத்துள்ளே ` என்றதனால் , ` வெளியே ` என்பது பெறப்பட்டது . ` உள்ளத்துள்ளே நின்ற ஒண்பொருள் ` என வேறு போல அருளினார் , பிறர் மதம் பற்றி அருளுகின்றாராதலின் , ` ஆமாத்தூர் ஐயன் அருளைப்பெறும் பாக்கியம் இல்லாதார் , இருதலைப் போகமும் இழப்பர் ( தி .1 ப .116 பா .10); அதனைப்பெற்ற எம் போல்வாராயின் , அவற்றை ஒருங்கே பெற்றுக்களிப்பர் ` என்று அருளிச்செய்தவாறு . ` அது ` பகுதிப்பொருள் விகுதி . சிறிதுணர்ந்து , ஐயுறுவாரைத் தேற்றுவாராகாது , சிறிதும் உணராதாரை உணர்த்து கின்றாராதலின் , ஏகாரம் , தேற்றம் அன்று ; ஈற்றசை .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

வென்றவன் வென்றவன் வேள்வியில்
விண்ணவர் தங்களைச்
சென்றவன் சென்றவன் சில்பலிக்
கென்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி
நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன் அன்றவன் செய்யருள்
ஆமாத்தூர் ஐயனே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன் , தக்கன் வேள்வியில் எல்லாத் தேவர்களையும் வென்றவன் ; சிலவாகிய பிச்சைக்கென்று தெருவிற் சென்றவன் ; நீதியிற் சிறிதும் குறையாதவரிடத்தில் நிலைபெற்று நின்றவன் ; தன்னை அடைந்தார்க்கு அருள்செய்தல் , அடைந்த அன்றேயாகின்றவன் .

குறிப்புரை :

` செய் அருள் ` என்றதனை , ` அருள்செய் ` என மாற்றி யுரைக்க . ` செய் ` முதனிலைத் தொழிற்பெயர் . அன்று , அம்மை - வரும் பிறப்பு என்று உரைத்தல் . ஈண்டைக்கு ஏலாமையறிக .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

காண்டவன் காண்டவன் காண்டற்
கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன்
நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்
தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற்
புரிநூல் புரளவே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன் , தன் அடியவர்கட்கு எளிதில் காணப்பட்டவன் ; திருமாலும் பிரமனும் தேட , அவர்களால் காணுதற்கரிய கடவுளாய் நீண்டவன் ; ஆமாத்தூரையும் ஆண்டவன் ; என்னையும் ஆளாக வைத்து ஆண்டவன் ; மார்பில் முப்புரி நூலைப் புரளப் பூண்டவன் .

குறிப்புரை :

` ஆமாத்தூர் ஐயன் ` என்பதை , மேலைத் திருப் பாடலினின்றும் வருவிக்க . ` ஆண்டவன் ஆண்டவன் ` என்பதை , ` என்னையும் ஆள் ` என்றதனோடுங் கூட்டுக .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

எண்ணவன் எண்ணவன் ஏழுல
கத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டும்என்
பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியொர்
பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத்
தூர்எம் மடிகளே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் , ஏழுலகத்திலும் உள்ள உயிர்கட்குக் கருத்தாய் உள்ளவன் ; தன்னை , ` காண்போம் ` என்று அன்பால் முயல்கின்றவர்கட்குக் கண்ணாய் உள்ளவன் ; திருமேனி ஒரு பாகம் பெண்ணாகியவன் ; பொருந்திய தலைக்கோலத்தை உடையவன் ; அடையத் தக்கவன் .

குறிப்புரை :

` கருத்தாய் உள்ளவன் ` என்றது , அறிவை உண்டாக்கு தலையும் , ` கண்ணாய் உள்ளவன் ` என்றது , அவ்வறிவிற்குப் பொருள்களைப் புலப்படுத்துதலையும் குறித்தன . ` தங்கள் ` இரண்டும் , சாரியை . ` அவர் ` பகுதிப்பொருள் விகுதி . ` ஏழுலகத்துயிர் தங்கட்கும் ` என்னும் முற்றும்மை , தொகுத்தலாயிற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந்
தென்னைப்போ கவிடா
மின்னவன் மின்னவன் வேதத்தி
னுட்பொரு ளாகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர்
ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என்மனத்
தின்புற் றிருப்பனே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன் , அடியார்களுக்குப் பொன்போல்பவனாய் உள்ளவன் ; பொன்னைக் கொடுத்து என்னைத் தன்னினின்றும் நீங்கவொட்டாது பிணித்துக் கொண்ட ஒளிவடிவினன் ; வேதத்தின் உட்பொருளாய் உள்ள அத் தன்மையை உடையவன் ; எனக்கு உரிமையுடையவன் ; அவனை , யான் என்மனத்தில் அன்பால் நினைந்து இன்பமுற்றிருப்பேன் ;

குறிப்புரை :

` மின் ` என்றது , அதன் ஒளியைக் குறித்தது . ` ஆர்வத்தால் ` என்புழி , ` நினைந்து ` என்பது வருவிக்க . ` அன்பினால் இன்பம் ஆர்வார் ` என்ற சேக்கிழார் திருமொழியை ( தி .12 தடுத் . புரா .196) இங்கு நினைவு கூர்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

தேடுவன் தேடுவன் செம்மலர்ப்
பாதங்கள் நாள்தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு
மேலேயொர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை
பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் மடிகளே.

பொழிப்புரை :

யான் , திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன் ; அவனை , உந்திக்குமேல் நால்விரல் அளவில் உள்ள இருதயத்தில் நினைப்பேன் ; வெளியில் சென்றால் வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன் ; அவனுக்கு ஏற்புடையன ஆகும்படி கூத்துக்களை ஆடுவேன் .

குறிப்புரை :

` நாபிக்குமேலே ஓர் நால்விரலில் நாடுவன் ` என்றது , அகப்பூசையைக் குறித்தவாறு . ` காயமே கோயிலாக ` என்னும் திரு நேரிசையுள் ( தி .4 ப .76 பா .4) திருநாவுக்கரசு சுவாமிகளும் , அகப் பூசையைக் குறித்தருளினார் . ` மாட்டுவன் ` என்பது , எதுகைநோக்கி , இடைக் குறைந்து நின்றது . வெளியிலே உள்ள இறைவன் சத்தியை வாங்கிக் கையை முட்டியாகப் பிடித்து இருதயத்துள் சேர்த்தல் வழி பாட்டு முறை ; இவ்வாறு பிடிக்குங் கையை , ` சங்கார முத்திரை ` என்ப .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

உற்றனன் உற்றவர் தம்மை
ஒழிந்துள்ளத் துள்பொருள்
பற்றினன் பற்றினன் பங்கயச்
சேவடிக் கேசெல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர்மேயான்
அடி யார்கட்காள்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும்
பெயர்த்தும்பிற வாமைக்கே.

பொழிப்புரை :

யான் , மீட்டும் மீட்டும் பிறவாமைப் பொருட்டு , உற்றாரை நீங்கி , உள்ளத்தில் உள்ள பொருளை அடைந்தேன் ; திரு வாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனது , தாமரை மலர் போலும் செவ்விய திருவடியிடத்தே செல்ல அவற்றைத் துணையாகப் பற்றினேன் ; அதனால் துன்பங்கள் நீங்கப்பெற்றேன் ; அதன்பின் , அவன் அடியவர்க்கு அடியனாகும் பேற்றையும் பெற்றேன் .

குறிப்புரை :

` உள்ளத்து உள்பொருள் ` என வேறொன்று போல அருளியது , பொதுமையில் உற்றமையை உணர்த்தற்கு . அறுதலுக்கு , ` துன்பம் ` என்னும் வினைமுதல் வருவிக்க . ` சேவடிக்கு ` என்றதனை உருபு மயக்கமாக்கி , ` செல்லல் அற்றனன் ` எனப் பாடம் ஓதுதலுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 11

ஐயனை அத்தனை ஆளுடை
ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு
ளான விமலனை
மையனை மையணி கண்டனை
வன்றொண்ட னூரன்சொல்
பொய்யொன்று மின்றிப் புலம்புவார்
பொற்கழல் சேர்வரே.

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனும் , தந்தையும் , என்றும் உள்ளவனும் , மெய்ம்மையான உள்ளம் உடையவர்க்கு அநுபவப் பொருளாய் விளங்குகின்ற தூயவனும் , திருவருள் மேகமானவனும் , மைபோலும் அழகிய கண்டத்தை உடையவனும் ஆகிய திருவாமாத் தூரை ஆளுதலுடைய இறைவனை , வன்றொண்டனாகிய நம்பி யாரூரன் பாடிய பாடல்களை , வஞ்சனை சிறிதும் இன்றிப் பாடு கின்றவர் , அப்பெருமானது பொன்போலும் திருவடிகளை அடைவர் .

குறிப்புரை :

`சொல்` என்றது முதனிலைத் தொழிற்பெயராய் நின்று இரண்டனுருபுகளை முடித்து, ஆகுபெயராய், சொல்லப்பட்ட பாடலை உணர்த்திற்று. `முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா மின்சொலினதே யறம்` என்னும் திருக்குறளில் (93), `நோக்கி` என்ற வினை யெச்சம், `இன்சொல்` என்றதனோடு முடிந்தவாறறிக. ஒலித்தலை, `புலம்பல்` என்றல், பான்மை வழக்கு. இனி, `அன்பினால் அழுது பாடுவார்` என்று உரைத்தலுமாம்.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் [ இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பலவூர்களிற் சென்று , பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர் ; அங்ஙனம் இரக்குங்கால் , பிச்சைஇட வருகின்ற , பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர் ; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு , எருதின்மேல் ஏறித்திரிவீர் ; இவைகளைப் போலவே , உள்ள பொருளை மறைத்துவைத்து , என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது , ஏதும் இல்லை என்பீர் ; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா ; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும் , மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து , உடம்பிற் பூசிக் கொள்வதற்கு , இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும் , அத்தகையதான சந்தனமும் நீர் , தவிராது அளித்தருளல் வேண்டும் ,

குறிப்புரை :

இடையில் வருவித்துரைத்தன , இசையெச்சங்கள் , ` பத்து ` என்பது , மிகுதியுணர்தற்குக் கூறுவதொரு வழக்கு , ` பாவையரை `, உருபு மயக்கம் , பொய்யாவன , பொருளில்லனவும் , கவர்படு பொருளுடையனவுமாய சொற்கள் . கரவுடையார் போல நடித்தலைக் கரவுடைமையாக அருளினார் என்க . ` கடல் `, ஆகுபெயர் . ` நாகப் பட்டினம் ` என்பது , ` நாகை ` எனவும் , ` காயாரோகணம் ` என்பது , ` காரோணம் ` எனவும் மருவின , காயாரோகணம் , கோயிலின்பெயர் ; இப்பெயர்க் காரணத்தை ஆறாந் திருமுறைக் குறிப்பிற் காண்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , என்னை , கைப்புடைய வேம்பினையும் , தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து , நான் , இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க , நீர் என்முன் நில்லாது , திருத்துருத்தியில் புகுந்து , அங்கே இருந்துவிட்டீர் ; இப்பொழுது உம்மைக் கண்டேன் ; நீர் பாம்பும் , விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விட நினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ ! ஒட்டேன் ; ஏனெனில் , உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன் ; நீர்ச்சேம்பும் , செங் கழுநீரும் , குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந் திருக்கும் தீவண்ணராகிய நீர் , இப்பொழுது எனக்கு ` காம்பு ` என்றும் , ` நேத்திரம் ` என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும் .

குறிப்புரை :

` வேம்பினோடு தீங்கரும்பு விரவித் தீற்றி ` என்றது ` விரகின்மையின் வித்தட் டுண்டனை ` ( புறம் - 227) என்றாற்போல , அன்னதொரு செயலைக் குறித்து நின்றது . பொருளைத் தொகாது வெளிப்படக் கூறினும் , அதன் செயலைத் தொகுத்து , அதற்கு ஒத்ததொரு செயல் கூறலின் , இதனையும் ஒட்டணியின்பாற் படுத்துக் கொள்க . ` தீங்கரும்பு ` என்ற அடையான் , அதன் மறுதலையடை பெறப்பட்டது . வேம்பு உலகின்பமும் , கரும்பு திருவருள் இன்பமும் என்க . இவ்வாறன்றி வேம்பு துன்பமும் , கரும்பு இன்பமும் என இரண்டையும் உலகியலாக உரைத்தல் , சுவாமிகள்பால் ஏற்புடைத் தாகாமை யறிக , ` இவற்றுள் ஒன்றே ஊட்டினீராயின் , உம்பால் இவற்றை வேண்டுவேனல்லேன் ; இரண்டையும் விரவி ஊட்டுதலின் , வேண்டுவேனாயினேன் ` என்றபடி . ` தீற்றி ` என்னும் எச்சம் , ` இருந்தீர் ` என்பதனோடு முடிந்தது , ` தீர்த்தீர் ` என்பது பாட மாகாமை , சிவஞானமா பாடியத்தாலும் உணர்க . ` துருத்தி ` என்பது ` ஆற்றிடைக்குறை ` என்னும் நயம் தோற்றுவித்தது . ` காம்பு , நேத்திரம் ` என்பன பட்டாடையின் வகைகள் என்பதறியாதார் , தம் மனஞ்சென்ற வாறே உரைப்ப .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்
பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

விரிந்த சடையின்மேல் பாம்பையும் , சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே , காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய , கடற்கரைக் கண் உள்ள திரு நாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி , விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண , இசைபாடி , இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர் ; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழி யாது , வீண் சொற்களைப் பேசி , பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின் , மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ ? சொல்லீர் .

குறிப்புரை :

` பாம்பையும் , மதியையும் பகை தீர்த்து இயைய வைத்தநீர் , இயைந்துள்ள உம் தேவியை நும்பால் வெறுப்புக் கொள்ளச் செய்தல் என்னை ? என்பது குறிப்பு . ` எல்லாருங் காணப் பலி கொள்கையையும் , நும் தேவி வெறுப்பன செய்தலையும் ஒழியீரா யினும் , யான் வேண்டுவனவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும் ` என்பது கருத்தாகக் கொள்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே . நீர் வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர் ; மற்றும் , அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ , வீணை அழகுடையதாய் விளங்க , தெருவில் விடையை ஏறிச் செல்வீர் ; கொடியனவாகிய பேய்கள் சூழ நடன மாடுதலை மேற்கொண்டு . அழகுடையவராய் , மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ ? அல்லது பெருமையோ ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக ; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது ? சொல்லீர் .

குறிப்புரை :

` வீணடிமை உகந்தீர் ` என்று கழறுவார் , பிறவற்றையும் எடுத்துக் கூறிக் கழறினார் என்க . ` துட்ட ` என்பது வடமொழி யாகலின் , அதனடியாக வந்த பன்மை உயர்திணையாற் கூறப்பட்டுத் திணை மயக்கமாயிற்று . ` கொடிய பேய்கள் சூழ இருக்கின்ற உமக்குத் தூமதியம் தகாது ` என்றவாறு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

அழகரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது . வன்கண்மை கொண்டு திரிந்தும் , வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும் , காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் , உம் மனம் வேண்டியவாறே திரிவீர் ; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும் ! ஏனெனில் , முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ ! ` கண்டோம் ` என்பார்க்கும் , அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே . நீண்டு நின்றீரல்லிரோ ? அதனால் , நும் இயல்பையெல்லாம் விடுத்து , உமது கருவூலத்திலிருந்து நறுமணம் , ஆடை , ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும் .

குறிப்புரை :

காரியக் கேடாவன , ` துஞ்சலும் , துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தோறும் ` ( தி .3 ப .22 பா .1) என்றாற்போலவும் , ` ஆக்கைக்கு இரைதேடி அலமராதீர்கள் ; பூக்கைக் கொண்டு என் பொன்னடி போற்றுமின் ; நாக்கைக்கொண்டு என் நாமம் நவிலுமின் ` ( தி .5 ப .90 பா .5) என்றாற்போலவும் சொல்லி , பிற முயற்சிகளையெல்லாம் விலக்குதல் ,` தலைக்கு ` என்றதனை , ` தலைக் கண் ` எனத் திரிக்க . தொண்டு கொண்டு ஆள உடம் பட்டமையை , தலைக்கண் ஏற்றுக் கொண்டவாறாக அருளினார் . ` ஏற்றும் திரிவீர் ` என மேலே சென்று இயையும் , இறைவனை , அடைந்தார்க்கும் அவனை அகப்படுத்தியறிதல் இயலாது என்பது . கடலலைத்தே யாடுதற்குக் கைவந்து நின்றும் கடலளக்க வாராதாற் போலப் - படியில் அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவு மெல்லாம் கருத்திற்குச் சேயனாய்க் காண் . - திருக்களிற்றுப்படி . 90 என்றதனால் விளங்கும் , ஆகவே , இறைவனை அகப்படக் கண்டார் உளர் என்பதற்குப் பிரமாணம் இன்மை யறிக . ` சுந்தரனே ` என்பது பன்மை யொருமை மயக்கம் ` சுந்தரரே ` என்று ஓதுதலுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்
பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற , செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு , பூதங்கள் இசையைப் பாட , பலரும் இடுகின்ற பிச்சைக்கு , வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர் ; ஆயினும் , நீர் அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது , அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே ; அங்ஙனமாக , இப்பொழுது எனக்குப் பட்டும் , சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ !

குறிப்புரை :

` வேள்வி `. விருந்தோம்பல் , தீ வளர்த்தல் முதலிய வற்றுள் ஏற்பன கொள்க . ` மேலிட ` என்பது குறைந்து நின்றது . பிச்சை எடுப்பீர்போலக் காட்டுதல் நாடக மேயன்றிப் பிறிதில்லை என்பது , நஞ்சுண்டு தேவரைக் காத்தமையாலே நன்கு விளங்குகின்றது ; ஆதலின் , எனக்குப் பட்டும் சாந்தும் பணித்தருளா திருத்தல் , கரப் பேயன்றி வேறில்லை ` என்றார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நல்லாடையை உடுத்த அகன்ற அல் குலையும் , தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில் , நீர் சொல்ல வந்தவன் போல , ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க , அவனை முன்னர் ஒறுத்து , அவன் சிறந்த இசையைப் பாட , அவனுக்குத் தேரும் , வாளும் கொடுத்தீர் ; அதுவன்றி , வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு , மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர் ; அதுபோல , இன்று எனக்கு அருளல்வேண்டும் .

குறிப்புரை :

சொற்பாடாய் - சொல்லுள் அகப்பட்டதுபோல . இராவணன் கயிலையை எடுத்ததனால் இறைவி நடுக்கங் கொண்டு ஊடல் தீர்ந்து இறைவனைத் தழுவிக் கொண்டாளாதலின் , இராவணன் செய்தது இறைவன் சொல்ல , அச்சொற்படி செய்தது போன்றதாயிற்று . நித்தல் காசருளிச் செய்தமையை , திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர் புராணங்களிற் காண்க . திவ்யம் , ` திப்பியம் ` எனத் திரிந்தது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர்
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்
அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்
தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , யான் உமக்கு வழிவழியாக அடியேன் ; அதுவன்றி , நீர் வலிந்து , என்னை , ` வாழ்விப்பேன் ` என்று சொல்லி அடிமை கொண்டீர் ; மிக்க செல்வம் உடையீர் ; வறுமை யுடையீரும் அல்லீர் ; ஆயினும் , மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீர் ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில் , எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும் ; அதனோடு ஏறிப் போவதற்கு , காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும் ; இவைகளை அளியாதொழியின் , உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது , உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன் .

குறிப்புரை :

திருக்கூட்டங் கூடும் தேவாசிரிய மண்டபத்தை உடைய சிவராசதானியாதலின் . ` திருவாரூரிலே புகப்பெய்த அருநிதியம் ` என்று அருளினார் . அருநிதியம் - தொகுத்தற்கரிய தொகையான நிதியம் , ` முக்கூற்றில் ஒரு கூறு என்றது என்னை யெனின் , அஃது என் மனத்தெழுந்த கருத்து ` என்பார் , ` தோற்ற மிகும் ` என்றார் , இனி . ` இறைவனுக்கு ஒரு கூறு , இறைவிக்கு ஒரு கூறு , அடியவர்க்கு ஒரு கூறு ` என்று கூறிட்டு , அடியவர் கூற்றை அடியார் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதாக அருளினார் என்றலுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , எம்பெருமானே , மண்ணுலகிலும் , விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது . ஆதலின் , நான் உம்மையுந் தெளிய மாட்டேன் ; உம் தேவியாகிய மலையரையன் மகளையும் , சிறுவனாகிய முருகனையும் தெளியமாட்டேன் ; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி , தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின் , அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் ? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ ? சொல்லி யருளீர் ; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில் , உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துக் கொள்வேன் ; பின்பு , ` இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன் ; கொடுமையுடையவன் ` என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா .

குறிப்புரை :

` உம்மதே ` என்புழி , மகரவொற்று விரித்தல் , இறைவரைத் தேறாமை , ஒன்றும் இல்லார்போல நடித்தல்பற்றியும் , இறைவியைத் தேறாமை , அவர் செயலுக்கே அவள் துணையாய் இருத்தல் பற்றியுமாம் . முருகனைத் தேறாமை , ` சிறுவன் ` என்றதனானே பெறப் பட்டது . ` எண்ணின்றி ` என்பது , ` எண்ணிலி ` என நின்றது ; ` எண்ணில ` என்பதே பாடம் எனலும் ஒன்று ,

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீர்
மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பொழிப்புரை :

மான் கன்று பொருந்திய கையை உடையவரே . தலைவரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பெருமையோ மிக உடையீர் ; ` மிக்க பொருட்குவையைத் தருவேன் ` என்று சொல்லி , வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர் ; ஆனால் , இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி , திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர் ; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால் , நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ ! படேன் , இலச்சினை பொருந்திய , நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடை வாளும் , தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும் , பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும் . அன்றியும் , மூன்று பொழுதிலும் , கறியும் , சோறும் , அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும் .

குறிப்புரை :

உறுதிமொழியாவது , ` மாநிதியந் தருவன் ` என்று சொல்லி ஆண்டது , ` உண்டேல் ` என்பது , காரணப் பொருளில் வரும் ` உண்டாக ` என்பதன் பொருளில் வந்தது . இதில் , ` உண்டு ` என்னும் வினைக் குறிப்பு , இறந்தகாலம் பற்றி வந்தது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 11

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.

பொழிப்புரை :

அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மை யால் , அவரை , ` கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய ` பரவை சங்கிலி ` என்னும் இருவருக்கும் , எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே , யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன் ? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும் ; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும் , ஒள்ளிய பட்டாடையும் , பூவும் , கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற , சந்தனமும் வேண்டும் ` என்று வேண்டிப் பாடிய , அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் , அமரர் உலகத்தை ஆள்வார்கள் .

குறிப்புரை :

`என்குடிமுழுதுமே உன்னைத்தான் சார்ந்துள்ளது` என்றற்கு, `பரவைக்கும், சங்கிலிக்கும், எனக்கும் பற்றாய பெரு மானே` என்று அருளினார். மயம் - வடிவம்; தன்மை. `கண்` என்றது, அதன் நோக்கினைக் குறித்தது, கண்டார் பலரும், விரும்பி நோக்கு தலின், அது நிறைய உளதாயிற்று. `அண் மயம்` வினைத்தொகை; `அண்மிய தன்மை` என்பது பொருள். `அமருலகம்` என்பது, முப்பத்துநான்காந் திருப்பதிகத்துள் விளக்கப்பட்டது.

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே
கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே
கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
பனங்காட் டூரானே
மாட்டூ ரறவா மறவா துன்னைப்
பாடப் பணியாயே.

பொழிப்புரை :

காட்டூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற கடலும் , மலையும் , தளிரும் , கொல்லுந் தன்மையுடைய சிங்க ஏறும் போல்பவனே , பாட்டினை மிகவுணர்ந்தவர் பலராலும் , அப் பாட்டுக்களால் பரவப்படுபவனே , எருதை ஊர்கின்ற அறமுதல்வனே , அடியேன் உன்னை என்றும் மறவாது பாடுமாறு திருவருள்செய்யாய் .

குறிப்புரை :

காட்டூரூம் , கொழுநலும் வைப்புத் தலங்கள் , காட்டூரை , ` காட்டுப் பள்ளி ` எனினுமாம் . இதன்கண் , ` கடம்பூர் ` கானப்பேர் , கோட்டூர் , அழுந்தூர் , பனங்காட்டூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன . ` மாட்டு ` என்றதில் , டகர ஒற்று விரித்தல் ; ` பாட்டூர் , மாட்டூர் ` என்பன , வைப்புத் தலத்தின் பெயர் என்பாரும் உளர் . பனங்காட்டூர் - வன்பார்த்தான் பனங்காட்டூர் . இஃதன்றி வேறாகக்கொண்டு , வைப்புத் தலம் என்பர் அவர் . கானப்பேர் ஊர் - ` கானப்பேர் ` என்னும் ஊர் . அளவின்மைபற்றி , ` கடல் ` என்றும் , அசைவின்மைபற்றி , ` மலை ` என்றும் , ஆண்மைபற்றி , ` கொல்லேறு ` என்றும் அருளினார் . இறைவரை , ` கடலே , மலையே ` என்றற்றொடக்கத்தனவாகச் சொல்லி மகிழ்கின்றவர் , அவைகளைச் செய்யுட்கேற்ப வைத்து அருளிச் செய்தார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்
குழகா குற்றாலா
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா
வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா
அவியா அனலேந்திக்
கங்குற் புறங்காட் டாடீ அடியார்
கவலை களையாயே.

பொழிப்புரை :

கொங்கு நாட்டில் பாலை நிலத்தில் உள்ள குரக்குத் தளி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , மூப்படையாதவனே , வானத்தில் திரிபவனே , தேவர்க்குத் தலைவனே , மணவாளக் கோலம் உடையவனே , சங்கக்குழை பொருந்திய காதினையுடையவனே , அழகனே , எஞ்ஞான்றும் அவியாது எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்திக்கொண்டு , இரவில் , புறங்காட்டில் ஆடுகின்றவனே , உன் அடியாரது மனக் கவலையைப் போக்கியருளாய் .

குறிப்புரை :

குரக்குத்தளி , வைப்புத்தலம் . இதன்கண் ` குற்றாலம் , வாய்மூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன . அடியவர் பலர்க்கு விண்ணில் தோன்றிக் காட்சியளித்தலின் , ` மங்குல் திரிவாய் ` என்று அருளிச்செய்தார் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

நிறைக்காட் டானே நெஞ்சத் தானே
நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய்
அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய்
மாகோ ணத்தானே
இறைக்காட் டானே எங்கட் குன்னை
எம்மான் தம்மானே.

பொழிப்புரை :

நின்றியூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , நெறிபிறழாமையையுடைய , சான்றானவனே , அடியவர்கள் நெஞ்சத்தில் இருப்பவனே , அவர்கட்குச் சிறிதும் துன்பத்தைக் காட்டாதவனே , நீர் பொருந்திய சடையை யுடையவனே , நெருப்புப் பொருந்திய கையை யுடையவனே , எம்தந்தைக்குத் தந்தையே , நீ எங்கட்கு உன்னைச் சிறிதும் புலப்படுத்தாதவனோ ?

குறிப்புரை :

` அல்லை யாதலின் , புலப்படுத்தருளுக ` என்பது எதிர்மறை எச்சமாய் வந்தியையும் , இதனுள் , ` நின்றியூர் , மறைக்காடு மாந்துறை , மாகோணம் ` என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன . மாகோணம் - கோணமாமலை ( திரிகோணமலை ). ` நிறைக்காட்டான் ` என்றதில் காட்டு - சான்று . இறைவனே எல்லாப் பொருட்கும் சான்றாதல் அறிக . ` மிறைக்காட்டான் , இறைக்காட்டான் ` என்பவற்றில் ககரவொற்று விரித்தல் , ` இறைக்காட்டாயே ` எனப் பாடம் ஓதுவாரும் ` உளர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

ஆரூர் அத்தா ஐயாற் றமுதே
அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற்
கருகா வூரானே
பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான்
பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய்
பாசூர் அம்மானே.

பொழிப்புரை :

ஆரூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே , அமுதம் போல்பவனே , பிறவாத நெறியை உடையவனே , நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன் .

குறிப்புரை :

` ஆதலின் , உன்னையே பரவுவேன் ` என்பது குறிப்பெச்சம் . இதனுள் , அளப்பூரும் , பேரூரும் வைப்புத் தலங்கள் . ` பாரூர் ` என்பதும் , வைப்புத்தலத்தின் பெயர் என்பார் உளர் . இதனுள் , ` ஆரூர் , கருகாவூர் , பட்டீச்சுரம் , பாசூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன . பிறவாத நெறி , வீடுபெறும்வழி ; பிறப்பில்லாதவன் சிவபெருமானே ஆதலின் , அவனே அதனை அடையும் வழியைத் தருதற்குரிய வனாதலறிக . காரூர் பொழில்கள் புடைசூழ் புறவின் - மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் பக்கங்களிற் சூழ்ந்துள்ள முல்லை நிலத்தையுடைய .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

மருகல் லுறைவாய் மாகா ளத்தாய்
மதியஞ் சடையானே
அருகற் பிணிநின் னடியார் மேல
அகல அருளாயே
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே
கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க் குன்னைப்
பவளப் படியானே.

பொழிப்புரை :

மருகல் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே . சந்திரனைச் சடையில் அணிந்தவனே , கருகிய கண்டத்தை யுடையவனே , கரும்புபோல்பவனே , கட்டிபோல்பவனே , பவளம் போலும் வடிவத்தையுடையவனே , உன் அடியார்மேல் வருகின்ற , மெலிதற் காரணமான நோய்கள் விலகிச் செல்லவும் , உன்னை அடைந்து இன்புறவும் அவர்கட்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

மாகாளம் , வைப்புத்தலம் , அம்பர் மாகாளம் , இரும்பை மாகாளம் எனினுமாம் . இதனுள் , ` மருகல் , வெண்ணி , கானூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன . ` குரல் ` என்றது மிடற்றை . ` கருகற் குரல் ` என்பது , வைப்புத் தலத்தின் பெயர் என்பாரும் உளர் . தம்பொருட்டு வேண்டுவார் , அதனோடு ஒழியாது அனைவர்க்குமாக வேண்டினார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

தாங்கூர் பிணிநின் னடியார் மேல
அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய்
விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய்
நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா
பழனப் பதியானே.

பொழிப்புரை :

வேங்கூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , இடபம் பொருந்திய கொடியையுடையவனே , நம்பனே , பக்கங்களில் உள்ள ஊர்களிற் சென்று பிச்சை தேடுகின்ற வேறுபட்ட தன்மையனே , மேலானவனே , உன் அடியார்மேல் உள்ள பொறுத்தற் கரிய நோய்கள் விலகிச் செல்ல அருள்புரியாய் .

குறிப்புரை :

வேங்கூர் , நாங்கூர் , தேங்கூர் இவை வைப்புத்தலம் . ` தேங்கூர் ` என்றதனை , ` தெங்கூர் ` என்பது முதல் நீண்டதாக உரைத் தலுமாம் . இதனுள் , ` விளமர் , நல்லூர் , பழனம் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன . ` தாங்கு ஊர் ` என்றது , ` பொறுத்தல் மிக்க ` எனப் பொருள் தருதலின் , அதற்கு இவ்வாறுரைக்கப் பட்டது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

தேனைக் காவல் கொண்டு விண்ட
கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார்
அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே
அண்ணா மலையானே
ஊனைக் காவல் கைவிட் டுன்னை
உகப்பார் உணர்வாரே.

பொழிப்புரை :

` ஆனைக்கா , அண்ணாமலை ` என்னும் தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , தேனைப் பாதுகாத்தலை மேற்கொண்டு மலர்ந்த கொன்றைப் பூவினால் ஆகிய வளப்பமான மாலையை அணிந்தவனே , வானுலகத்தைக் காத்தலை மேற்கொண்டு நிற்கின்ற தேவர்களால் அறியப்படாத நிலையை உடையவனே , அழித்தல் தொழிலை உடையவனே , மேலானவனே , உடலோம்புதலை விட்டு , உன்னை விரும்பித் தொழுகின்றவர்களே , உன்னை உணர்வார்கள் .

குறிப்புரை :

` பிறர் உணரமாட்டார் ` என்பது , பிரிநிலை எச்சமாய் வந்தியையும் ; ` உகப்பாரே ` என்னும் பிரிநிலை ஏகாரம் விரிக்க . இதனுள் , ` ஆனைக்கா , அண்ணாமலை ` என்னும் தலங்கள் எடுத் தோதப்பட்டன .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய்
சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப்
பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை
இடங்கொள் கயிலாயா
அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள்
அகல அருளாயே.

பொழிப்புரை :

துருத்தி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , ஒளிவடிவானவனே , சொல்லின்கண் உள்ளவனே , கல்லால மர நிழலில் இருப்பவனே , வெயிலாகியும் , காற்றாகியும் , மற்றும் பல வாகியும் நிற்பவனே , என் மனத்தை மேன்மேல் திருந்தச்செய்து , அதனை இடமாகக் கொண்டவனே , உன்னை அன்புசெய்து அடைந்தவர்களது வினைகள் நீங்க அவர்கட்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

இதனுள் , ` துருத்தி , நெய்த்தானம் , பருதி நியமம் , கயிலாயம் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன , ` பருதிநியமம் ` என்பது , எதுகைநோக்கி , விரித்தலாயிற்று . அடுக்கு , இடைவிடாமை பற்றி வந்தது . ` அருத்தித்து ` என்றது , ` அருத்தி ` என்னும் பெயரடி யாகப் பிறந்த செய்தெனெச்சம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப்
போதா மூதூரா
பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற
புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்
கடர்த்த மதிசூடீ
கலிசேர் புறவிற் கடவூ ராளீ
காண அருளாயே.

பொழிப்புரை :

புலியூர்ச் சிற்றம்பலம் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , ஞான வடிவினனே பழைமையான சிவலோகத்தை உடையவனே , பொலிவு பொருந்திய மூன்று ஊர்கள் எரிந்தொழியுமாறு அழித்த , புரித்த , புல்லிய சடையையுடையவனே , வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனது பெரிய இருபது கைகளையும் நெரித்த , பிறையைச் சூடினவனே , உன்னைக் கண்ணாற் காண அருளாய் .

குறிப்புரை :

இதனுள் , ` புலியூர் , புகலூர் , கடவூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன . புலியூர் - பெரும்பற்றப்புலியூர் ; தில்லை . ` சிற்றம்பலம் ` அங்குக் கூத்தப்பெருமான் உள்ள இடம் . கலிசேர் புறவின் - எழுச்சியையுடைய முல்லை நிலத்தையுடைய . மூதூர் , வைப்புத்தலத்தின் பெயர் என்பாரும் உளர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

கைம்மா உரிவை அம்மான் காக்கும்
பலவூர் கருத்துன்னி
மைம்மாந் தடங்கண் மதுர மன்ன
மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன்
அடியன் தமிழ்மாலை
செம்மாந் திருந்து திருவாய் திறப்பார்
சிவலோ கத்தாரே.

பொழிப்புரை :

மை தீட்டிய , மாவடுப்போலும் பெரிய கண்களையும் , இனிமை நிலைபெற்ற அழகிய சொல்லையும் , இளமையையும் உடையவளாகிய சிங்கடிக்குத் தந்தையும் , சடையனாருக்கு மகனும் , யானைத் தோலையுடைய பெருமானுக்கு அடியனும் ஆகிய நம்பியாரூரனது இத்தமிழ்மாலையை , அப்பெருமான் எழுந்தருளி யிருக்கின்ற பல தலங்களையும் நினைந்து கவலையற்றிருந்து , சிறந்த வாயாற் பாடுவோர் , சிவலோகத் திருப்பவரேயாவர் .

குறிப்புரை :

` மதுரம் மன்னு அம் மொழியாள் ` எனப் பிரிக்க . இனி , ` மதுரம் ` என்றது ஆகுபெயராய்த் தேனைக் குறித்தது எனக் கொண்டு , ` தேன்போலும் மொழி ` என்றலுமாம் . இறைவனைப் பாடுதலின் , வாய் திருவுடையதாயிற்று .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 1

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

கற்றவர்கள் வணங்கித் துதிக்கின்ற புகழையுடைய கறையூரில் உள்ள , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நல்ல தவவடிவினனே , எனக்கு வேறு துணையில்லையாகும்படி , உனது திருவடியையே துணையாக மனத்தில் துணியப்பெற்றேன் ; அவ்வாறு துணியப்பெற்ற பின்பே , நான் மனிதனாய்ப்பிறந்தவனாயினேன் ; அதுவன்றி , இனியொரு பிறப்பிற் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப்பெற்றேன் ; இனி உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` அங்ஙனஞ் சொல்லுமாறு பயில்வேன் ` என்றவாறு ` இல்லையாக ` என்பது , ` இன்றி ` எனத் திரிந்தது . ` பெற்றலும் ` என்றதில் றகர ஒற்று , விரித்தல் . ` பெறலும் ` எனப் பின்னர் வருகின் றமையின் , ` பாவித்தேன் ` என்றதற்கு , ` பாவிக்கப்பெற்றேன் ` என்பது பொருளாயிற்று . ` கறையூர் ` என்பது தலத்தின் பெயர் ; ` பாண்டிக் கொடிமுடி ` என்பது கோயிலின் பெயர் ; ` கறையூர் ` என்பதனையும் வைப்புத்தலம் என்றார் உளர் ; இவ்வாறே பலவற்றையும் கூறுதல் அவர்க்கு இயல்பென்க . ` நமச்சிவாய ` என்னும் சொல் , தன்னையே உணர்த்தி நின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 2

இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாறு , வளைவாக மேலால் விளங்க இடப்படும் மாலையைக் கொணர்ந்து உன் திருவடியை வணங்கித் துதிக்கின்ற . ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , தோழமை கொண்டவனே , உன்னால் விரும்பப்பெற்றவனாகிய யான் , உன் திருவடியைத் துதிக்கின்ற அடியவர்களால் ` இவன் நிலையில்லாத மனத்தை யுடையவன் ` என்று இகழப்பட்ட நாள்களும் , அங்ஙனம் அவர்கள் இகழ்தற்கு ஏதுவாக நான் உன்னை மறந்துவிட்ட நாள்களும் ஆகிய இவைகளை , அடியேன் அழிந்த நாள் என்று கருதுவதன்றி வேறாகக் கருதமாட்டேன் ; ஆதலின் , நான் உன்னை மறக்கினும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` இட்டனுன்னடி ` என்பது , ` நுன்னடி ` என்றும் ` உன்னடி ` என்றும் பிரித்தற்கு ஏற்புடையதாதல் அறிக . ` இட்டனும்மடி ` என்பது பாடம் அன்று . காவிரி நதி , பல பூக்களையும் , மணிகளையும் கரையில் நிரைபடக்கொணர்ந்து ஒதுக்குதலை , வாசிகை கொண்டு வந்து வழி படுதலாக அருளினார் ; இது , தற்குறிப்பேற்றம் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 3

ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

மேலான ஒளியாய் உள்ளவனே , மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாற்றினது பரந்த வெள்ளம் வந்து பாய்கின்ற , ` திருப் பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நா வன்மை யுடையவனே , அடியேன் உன்னை நினையா தொழிந்த நாள்களை , என் உணர்வு அழிந்த நாள்களும் , உயிர்போன நாள்களும் , உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களும் என்னும் இவைகளாகக் கருதுதல் அன்றி , வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன் ; ஆதலின் , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

தாம் வாழும் நாளளவும் உள்ள நிகழ்ச்சிபற்றிக் கூறு கின்றாராகலின் , செய்யுமென்னும் வாய்பாட்டாற் கூறினார் . ` புனல் ` இரண்டனுள் , பின்னது , ` வெள்ளம் ` என்னும் பொருளில் வந்தது . மறைகளையும் , மறைகளின் பொருளையும் சொல்பவனாதல் பற்றி , இறைவனை , நாவலன் என்று அருளினார் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 4

எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

எல்லையில்லாத புகழையுடைய எம்பெருமானே , எந் தந்தைக்கும் தலைவனே , என் பொன்போல்பவனே , என் மணி போல்பவனே , மணிகளைத் தள்ளிவந்து , எவ்விடத்திலும் செல்வத்தை மிகுதியாகச் சொரிந்து பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் . நல்லவர்களால் வணங்கித் துதிக்கப்படுகின்ற , புகழையுடைய கறையூரில் உள்ள , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந் தருளியிருக்கின்ற எல்லாம் வல்லவனே , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை இடை யறாது சொல்லும் .

குறிப்புரை :

` என் ` என்றதனை , ` மணி ` என்றதற்குங் கூட்டுக . ` கரைவாய் ` என மாற்றி யுரைக்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 5

அஞ்சி னார்க்கர ணாதி என்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

ஊட்டப்பட்ட பஞ்சினை உடைய மெல்லிய அடிகளையுடைய பாவைபோலும் மகளிர் காவிரித்துறைக்கண் மூழ்கி விளையாடுகின்ற , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனே , நீ அச்சமுற்று வந்து அடைந்தவர்க்குப் பாதுகாப்பாவாய் என்று அறிந்து , அடியேனாகிய யானும் மிகவும் அச்சமுற்று வந்து உன்னை அடைந்தேன் ; அதனையறிந்து நீ அவ்வண்ணமே ` அஞ்சேல் ` என்று சொல்லி அணைத்து , அடித்தொண்டனாகிய எனக்கு உன் திருவருளை அளித்தாய் ; அதனால் உனக்குக் கெடுகின்றது ஒன்றின்மையைக் கண்டேன் ; இன்ன பெருமையும் முதன்மையும் உடைய உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` அஞ்சுதல் ` என்பது , இரண்டிடத்தும் , அஞ்சி அடைதலின் மேற்று . ` என் ` என்றது . ` இல்லை என்னும் பொருட்டு ; அதனைத் தாம் கண்கூடாக அறிந்தமையைத் தெரிவித்தல் கருத்தாகலின் , அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 6

ஏடு வான்இளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்ப தரைக்க சைத்த
அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

கொல்லுகின்ற புலியினது தோலின் மேல் , ஆடுகின்ற பாம்பை , அரையின்கண் கட்டியுள்ள அழகனே , அழகிய , ஆழ்ந்த காவிரியாற்றினது , ஒலிக்கின்ற குளிர்ந்த நீர் வந்து பாய்கின்ற , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற மேலான ஒளியாய் உள்ளவனே , பெருமையுடையவனே நீ , வானத்தில் தோன்றுகின்ற , பூவிதழ்போலும் இளந்திங்களை முடியிற் சூடினாய் ; அதன்பின் சான்று சொல்லவேண்டுவது என் ! அதனால் , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` சந்திரனைச் சடையிற் சூடியது ஒன்றே , நீ , குறைந்து வந்து அடைந்தாரை ஆழாமற் காப்பவன் என்பதற்குப் போதிய சான்றாம் ` என்றபடி , புலித்தோலாடையும் , பாம்புக் கச்சும் உனது ஆற்றலை உணர்த்தும் என்பது குறிப்பு . ` சேடன் ` என்றதற்கு , யாவும் ஒடுங்கிய பின் , எஞ்சியிருப்பவன் ` என்றும் பொருள் கூறுவர் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 7

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

தென்னங் குரும்பைபோலும் , மெல்லிய கொங்கை களையுடைய கன்னியர் மூழ்கி விளையாடுகின்ற காவிரியாற்றினது , வளப்பமான சோலைகள் நெருங்கிச் சூழ்ந்து அழகுண்டாக நிற்கின்ற கரைக்கண் உள்ள , ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , விரும்பப்படுபவனே , அடியேன் , உனது மலர் போலும் திருவடிகளையே விரும்பி நினைந்தேன் ; அதனால் , நீங்குதற் கரிய வினைகளும் நீங்கின ; இனி , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` வினைகளும் ` என்னும் உம்மை இழிவு சிறப்பு . ` வினைகளும் விண்டனன் ` என்றும் பாடம் ஓதுவர் . ` நம்பன் ` என்பதனை , ` விரும்பன் ` என்று அருளினார் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 8

செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக
மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

செம்பொன்போலும் சடையையுடையவனே , திரி புரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே , மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்து , காவிரி யாற்றினது கரையின்கண் உள்ள , சோலைகளில் கிளைகளின்மேற் குயில்கள் கூவ , சிறந்த மயில்கள் ஆடுகின்ற , ` திருப்பாண்டிக்கொடு முடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனே , உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

` அமர்ந்து ` என்றது , அதன் காரியந் தோற்றி நின்றது . நம்பன் - விரும்பத் தக்கவன் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 9

சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை
தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் வணங்குகின்ற , கறையூரில் உள்ள , ` திருப்பாண்டிக்கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற முதல்வனே , அளவற்ற தேவர் ; ` எமக்குப் புகலிட மானவன் ; எம்தந்தை ; எம்தலைவன் ; எம் தந்தைக்கும் தலைவன் ; எங்கள் பொன் ; எங்கள் மணி ` என்று சொல்லி , உன் பெயர்கள் பலவற்றையும் பிதற்றி நின்று , உன்னைப் பிரியமாட்டார் ; இன்ன பெரியோனாகிய உன்னை நான் மறந்தாலும் , என் நா , உனது திருப்பெயராகிய , ` நமச்சிவாய ` என்பதனை , இடையறாது சொல்லும் .

குறிப்புரை :

சாரணன் - ` அடைக்கலம் ` எனப் பொருள் தரும் ` சரண் ` என்பதனடியாக வந்த தத்திதப் பெயர் . ` என் பொன் ` என்பது பாடம் அன்று . ` எண்ணாயிரகோடி ` என்றது , அளவின்மை குறித்த வாறு . காரணன் - எல்லாக் காரியங்கட்கும் முன்னிற்பவன் ; முதல்வன் . இத் திருப்பாடலின் முதலடி ஒருசீர் மிகுந்து வந்தது அடி மயக்கம் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

கோணி யபிறை சூடி யைக்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே.

பொழிப்புரை :

வளைந்த பிறையைச் சூடினவனும் , தலைக் கோலம் உடையவனும் . பேரருள் உடையவனும் , பிறப்பில்லாதவனும் , இசையோடு உலாவுகின்ற வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் கொன்றைப் பூமாலையை அணிந்தவனும் ` படத்தையுடைய பாம்பாகிய அரைநாணை உடையவனும் ஆகிய கறையூரில் உள்ள , ` திருப்பாண்டிக்கொடுமுடி ` என்னும் கோயிலை விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற பெருமானை , அவன் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுபவர்க்குத் துன்பம் இல்லையாம் .

குறிப்புரை :

இறுதிக்கண் நிற்றற்பாலதாய , ` கறையூரிற் பாண்டிக் கொடுமுடி பேணிய பெருமானை ` என்றது , செய்யுள் நோக்கி , இடைநின்றது . ` பண் ` என்பது நீண்டது ; இதன்பின் , ஓடுவுருபு விரிக்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 1

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , முடைநாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி , வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர் , வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி , ` திடுகு ` என்றும் , ` மொட்டு ` என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம் ; இம்மாநகரிடத்து இங்கு , சிறுகிய , நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை :

` விரவல் ` என்னும் தொழிற்பெயர் , எதிர்மறை ஆகாரமும் , மகர ஐகாரமும் பெற்று நின்றது , ` அழுக்காறாமை ` ( திருக் குறள் . அதிகாரம் . 17.) என்றதுபோல . அஃது ஆகுபெயராய் , அதனையுடைய சொல்லைக் குறித்தது . ` திடுகு , மொட்டு ` என்பன , அச்சுறுத்தும் சில குறிப்புச் சொற்கள் . பிறவுங் கொள்வராயினும் , எல்லாவற்றையும் எஞ்சாது கொள்ளுதல் தோன்ற ஆறலைப்பாரை , ` கூறைகொள்வார் ` என்றல் வழக்கு என்பதை , ` ஆறுபோயினாரெல்லாங் கூறைகோட் பட்டார் ` என்றல் பற்றி அறிக . ` கூறைகொண்டு ஆறலைக்குமிடம் ` என்றதனை , ` ஆறலைத்துக் கூறைகொள்ளுமிடம் ` எனப் பின்முன்னாக மாற்றி யுரைக்க . இகழும் நகரை , ` மாநகர் ` என்றது , இகழ்ச்சிக் குறிப்பினால் . ` இம் முருகன் பூண்டி ` எனச் சுட்டு வருவிக்க . ` மாநகர்வாய் ` என ஒன்றாக ஓதினாரேனும் , ` மாநகர் ` எனவும் , ` இதன்வாய் ` எனவும் இரண்டாக்கி உரைத்தல் கருத்தென்க . ` எற்றுக்கு ` என்பது , ` எத்துக்கு ` என மருவிற்று . ` இங்கு ` என்றது , திருக்கோயிலை . ` அப்பாற் போகலாகாதோ ?` என்பது , ஆற்றலான் வந்து இயையும் . இத்திருப் பாடல்களில் , ஈற்றடிகள் நீண்டி சைத்தன . ` எம்பிரானிரே ` என்றோதுதல் பாடமாகாது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 2

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை , வேடுவர்கள் , வில்லைக் காட்டி , வெருட்டியும் , பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும் , கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை :

` தாது ` என்றது , உதிர்ந்து கிடப்பனவற்றை . ` எல்லைக் காப்பு ` நான்காவதன் தொகை . அது , பகுதிப்பொருள் விகுதி . ` எல்லை காப்பது ` என்பது பாடமாயின் , ` இவ்வெல்லை தான் காக்கப்படுதல் சிறிதும் இல்லையாயின் ` என உரைக்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 3

பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும்
கூறை கொள்ளுமிடம்
முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அப்பாவிகள் , பாவம் என்பதொன்றையறியாராய் , விலங்குகளையே கொன்று தின்று , நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன்கண் நீர் , இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று , இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை :

` பசுக்கள் ` என்பது , விலங்கின் பொதுவை உணர்த் திற்று . ` அப்பாவிகள் ` எனச் சுட்டு வருவிக்க . ` உயிர் ` என்பதும் , ` இழுக்கு ` என்பதும் , எதுகை நோக்கித் திரிந்தன . ` பிச்சை ஏற்கின்ற நீர் , பிறர் பொருளைப் பறித்தலையே தொழிலாக உடையவர் வாழ்கின்ற இடத்தில் இருத்தல் எதற்கு ` என்றவாறு . இழுக்கு நீங்குதலாவது . ` இரப்பவர் ` என்று இகழப்படாது , ` பெரியோர் ` என நன்கு மதிக்கப்படுதல் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 4

பீறற் கூறை உடுத்தொர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளுமிடம்
மோறை வேடுவர் கூடி வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , குற்றமுடைய வேடுவரே கூடி , ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் , வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அவர்கள் , கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு , அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு , வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி , நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால் , அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை :

` வெட்டனராய் ` என்பது பாடம் அன்று . ` பங்கியர் ` என்றதனை , ` வில்லியர் ` முதலியன போலக் கொள்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 5

தயங்கு தோலை உடுத்துச் சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

பொழிப்புரை :

எம் பெருமானிரே , நீர் , விளங்குகின்ற தோலை உடுத்து , இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு , அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால் , தழுவுகின்ற , அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும் , இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை :

` உடுத்த ` என்பது பாடம் அன்று . ` சங்கரனே ` என்றும் ` ஓதுபவனே ` என்றும் உரைத்தல் பொருந்தாமை அறிந்து கொள்க . ` அறியீரோ ` என்னும் ஓகாரம் தொகுத்தலாயிற்று ; அதனை , எடுத்த லோசையாற் கூறியுணர்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 6

விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , நீர் , கொட்டிப்பாடுதற்கு உரிய , தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற ` ` கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா , என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால் , மற்றும் , ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால் , பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை :

கொக்கரை முதலியன , வாச்சிய வகைகள் . ` மத்தளகம் ` எனப் பாடம் ஓதுதலுமாம் . இகரச் சுட்டினை , ` கொடு கொட்டி ` என்றதற்கு முன்னர் வைத்துரைக்க . ` ஆகில் ` என்றதனை , ` மகிழ்வீர் ` என்றதனோடுங் கூட்டுக .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 7

வேத மோதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்றயலே
ஓத மேவிய ஒற்றி யூரையும்
உத்திர நீர்மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளு
முருகன்பூண்டி மாநகர்வாய்
ஏது காரண மேது காவல்கொண்
டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , நீர் , வேதத்தை ஓதிக்கொண்டு , வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு , வெள்ளிய கோவணத்தை உடுத்து , பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர் ; அங்குப் போகாமல் , வேடர்கள் , வருவோரைத் தாக்கி , அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து , யாது காரணத்தால் , எதனைக் காத்துக் கொண்டு , எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர் ?

குறிப்புரை :

திருவொற்றியூரில் உத்திர நாளில் நீர்விழா நடை பெற்றமையை , ` ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்தமாக ஒளிதிகழும் ஒற்றியூர் ` ( தி .6 ப .45 பா .5) என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் திருமொழியால் உணர்க . ` நீர் ` என்றதனை முன்னிலைப் பெயராகக் கோடலுமாம் . ` உத்தி ` என்பது பாடம் அன்று .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 8

படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங்கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
முடவ ரல்லீர் இடரி லீர்முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , நீர் , தனிமையாக இல்லாது , படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும் , பருத்த தோள்களையும் , வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய , ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர் ; முடவரல்லீர் ; ஆகவே , பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர் ; அன்றியும் , நீர் , விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால் , இம் முருகன் பூண்டி மாநகரிடத்து , இங்கு , எதன்பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை :

இடைக்குப் பாம்பு உவமையாகச் சொல்லப்படுதலும் மரபாதல் அறிக .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 9

சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைகலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
மோந்தை யோடு முழக்க றாமுரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

பொழிப்புரை :

எம் பெருமானிரே , வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு , வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி , முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே , நீர் , ` மொந்தை ` என்னும் வாச்சியத் தோடு , வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநக ரிடத்து , அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தி யோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை :

` ஏந்தி ` என்பது எஞ்சி நின்றது . ` மொந்தை ` என்பது நீட்டலாயிற்று . ` வேடர் ` என்பது , மேலைத் தொடர்பாற் கொள்ளப் பட்டது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
ரொன்றுந் தாமிலரே.

பொழிப்புரை :

தேவர் , ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்கு கின்ற , திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற , பந்திற் பொருந்திய விரல்களையுடைய , பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை , அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள் , துன்பம் ஒன்றும் இல்லாதவ ராவர் .

குறிப்புரை :

` சிந்தை ` என்றது , ஆகுபெயராய் , அன்பைக் குறித்தது . ` சிறு தொண்டன் ` என்பதும் பாடம் . ` அவ்வெந்தம் மடிகள் ` எனச் சுட்டு வருவிக்க . ` எந்தம் அடிகள் ` என்றது ஒரு பெயரளவாய் நின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 1

சித்த நீநினை யென்னொடு சூளறு வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளன்ஊர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , ` நும் நெறியாற் பயன் கிட்டாது ` என்று , இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி ; மதத்தையுடைய யானையின் , உரித்த தோலைப் போர்த்த அழகனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊர் , அடியார் பலர் , திருப்பாடல்கள் பல வற்றைப்பாடி ஆடுகின்ற பழைய ஊராகிய மரப்பொந்துகளில் ஆந்தை களின் பாட்டு ஒழியாத திருப்புனவாயிலே ; அதனை நாள்தோறும் தப்பாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம் . அதனாற் போந்தது , ` யாண்டும் பெறலாகாத பெரும் பேற்றினைப் பெற்று விடுவை ` என்பது . ` சூளறும் ` என்பது பாடம் அன்று . சோலைகளில் பகலும் இரவுபோலத் தோன்றுதலின் , ஆந்தை களின் பாட்டு எஞ்ஞான்றும் ஒழியாதாயிற்று . ஏகாரம் , பிரிநிலை , அதனை என்பது சொல் லெச்சம் . இத்தலத்தில் பாலைநில வருணனையே கூறப்படுகிறது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 2

கருதி நீமனம் என்னொடு சூளறு வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி ; எருதினை ஊர்கின்ற எம்பெருமானுக்கு இடமாய் இருப்பது , இந்திரன் முதலிய தேவர் நீங்காதிருக்கின்ற இடமாகிய , வேடர்கள் வாணிகச் சாத்தோடு போர்செய்தலால் , ஆரவாரம் ஒழியாத திருப்புனவாயிலே ; அதனை நாள்தோறும் தப்பாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

இந்திரன் மருதநிலத் தெய்வமாதல் பற்றி , அவன் வழிப் பட்டோரையும் , ` மருத வானவர் ` என்று அருளினார் ; இதற்குப் பிற வாறும் உரைப்ப . திருப்புனவாயில் நெய்தலொடு மயங்கிய பாலைக் கண் இருத்தலின் , இத்திருப்பதிகத்துள் , பாலைக்கேற்ற அணிந் துரையை அருளுவார் . ` வேடுவர் பொறாது சாத்தொடு பூசலறாப் புன வாயில் ` என்று அருளிச்செய்தார் . வருகின்ற திருப்பாடல்களில் இன்ன பிற காண்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 3

தொக்காய்மன மென்னொடு சூளறு வைகலும்
நக்கானமை ஆளுடை யான்நவி லும்மிடம்
அக்கோடர வார்த்தபி ரானடிக் கன்பராய்ப்
புக்காரவர் போற்றொழி யாப்புன வாயிலே.

பொழிப்புரை :

அளவற்ற நினைவுகள் பொருந்தி ஆராய்கின்ற மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி . ஆடை யில்லாதிருப்பவனும் , நம்மை ஆளாக உடையவனும் ஆகிய சிவ பெருமானுக்கு இடமாய் இருப்பது , எலும்பையும் , பாம்பையும் அணிந்த அப்பெருமானுக்கு அன்பராய் , அவனையே புகலிடமாக அடைந்தவர் அவனைப் போற்றுதல் ஒழியாத திருப்புனவாயிலே ; அதனை நாள்தோறும் தப்பாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

` புனவாயிலே ` என்றதற்குப்பின் , மேலைத் திருப் பாடலில் உள்ளனவெல்லாம் வந்து இயையும் . ` தொக்காய மனம் ` எனப்பாடம் ஓதுவாரும் உளர் . ` அக்கோடர வார்த்தபிரான் ` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது . இத் திருப்பாடல்களில் , சீர்மயக்கமும் , அடிமயக்கமும் வந்தன பல .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 4

வற்கென் றிருத்திகண் டாய்மன மென்னொடு சூளறு
பொற்குன்றஞ் சேர்ந்ததொர் காக்கைபொன் [ னாமதுவேபுகல்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , முருடுடையையாய் இருக்கின்றாய் ; என்னொடு இப்பொழுது சூள்செய்தலை ஒழி ; பொன்மலையைச் சேர்ந்த காக்கையும் பொன்னிறமாம் ஆதலின் , கரையிடத்து , சிறிய கற் குன்றுகளும் , புதர்களும் , வெப்பம் மிக்க வெற்றிடமும் பொலிவிழந்து தோன்றுதற்குக் காரணமான எம் பெருமானது திருப்புனவாயிலாகிய அதனையே போற்று ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

` முருடு நீங்கப்பெற்று , நல்லையாவாய் ` என்றபடி , கற் குன்று முதலியன புற்கென்று தோன்றுதல் , திருப்புனவாயிலின் பொலிவினால் என்க . எனவே , ` புற்கென்று தோன்றும் பெரும் பரப்பில் இது பொலிவுற்று விளங்குகின்றது ` என , அதன் சிறப்பை வியந்தவாறாயிற்று . ` புனவாயிலாகிய அதுவே புகல் ` எனக் கூட்டுக . இதன் முதலடியின் இறுதியில் , ` வைகலும் ` என்பதனைச் சேர்த்து ஓதுவது , பிழைபட்ட பாடம் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 5

நில்லாய்மன மென்னொடு சூளறு வைகலும்
நல்லான்நமை ஆளுடை யான்நவி லும்மிடம்
வில்வாய்க்கணை வேட்டுவ ராட்ட வெருண்டுபோய்ப்
புல்வாய்க்கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி ; நன்மையே வடிவமானவனும் , நம்மை ஆளாக உடையவனுமாகிய சிவபெருமான் பெரிதும் உறையும் இடம் , வேடர்கள் , தம் வில்லின்கண் தொடுத்த அம்பினால் வெருட்ட வெருண்டு ஓடி , மான் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே ; நாள்தோறும் அதன் கண் சென்று நில் ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

ஆட்டுதல் , ஈண்டு , வெருட்டுதல் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 6

மறவல் நீமன மென்னொடு சூளறு வைகலும்
உறவும் ஊழியும் ஆயபெம் மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி ; எல்லா உயிர்கட்கும் உறவும் , காலமுமாய் நிற்கும் சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது , சேவற் புறா , தன் பெடை பிரிந்தபின்பு , அதனை , கள்ளிப் புதரின் வளர்ந்த கிளையில் ஏறிநின்று கூப்பிட , புனங்களில் பொன் நிறைந்து காணப்படுகின்ற திருப்புனவாயிலே ; அதனை மறவாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

` மறவல் ` என்றது , ` மறவாது நினை ` என்றவாறு . ` பிறகு ` என்பது , ` பிறவு ` எனத் திரிந்தது . ` கூப்பிட ` என்றதனால் , ` பிரிந்த பிறகு ` என்பது பெறப்பட்டது . புனத்திற் பொன் சூழ்தல் புனவாயிலிலும் , புறா கூப்பிடுதல் பாலை வெளியிலும் என்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 7

ஏசற்று நீநினை என்னொடு சூளறு வைகலும்
பாசற்றவர் பாடிநின் றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற்றுடி பூசல றாப்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி ; பாசம் நீங்கிய மெய்யுணர்வினர் புகழ்ந்து பாடி , நின்று ஆடுகின்ற பழைமையான ஊர் , பல நாட்டிலும் உள்ள அடியவர் பலரும் வந்து காலையிலும் , மாலையிலும் வணங்க , வேடுவர்களது போர்ப்பறை ஆரவாரத்தை ஒழியாத திருப்புனவாயிலே ; அதனை , இகழ்தல் அற்று , நாள்தோறும் தப்பாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

` ஏசு ` முதனிலைத் தொழிற் பெயர் . ` பாசம் ` என்பது குறைந்து நின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 8

கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
கள்ளிவற் றிப்புற் றீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.

பொழிப்புரை :

கொள்ளிபோல முனை சிவந்து நீண்ட வாயினை யுடையனவாகிய , கூரிய பற்களையுடைய பன்றிகள் நிலத்தைக் கிண்ட வெளிப்பட்ட சிறந்த மாணிக்க மணியோடு நெருப்புத் தோன்று மிடத்துச் சிவந்து காட்டும் நிலத்தின்கண் உள்ள கள்ளி உலர்ந்து , புல்தீந்து , கொடிய காடு அழிகையினாலே , புள்ளிமானின் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே .

குறிப்புரை :

மேலைத் திருப்பாடல்களில் உள்ளன பலவற்றையும் முன்னும் பின்னும் கொணர்ந்து இயைத்துரைத்து ஏனைய திருப் பாடல்களோடு பொருந்த உரைத்துக்கொள்க . ` தெள்ளிய ` என்னும் பெயரெச்சத்தின் ஈறும் , ` விழிக்குமிடத்து ` என்னும் வினையெச்சத்தின் அத்தும் தொகுத்தலாயின . ` வற்றி , தீந்து ` என்னும் எச்சங்கள் , எண்ணின்கண் வந்தன . ` கழிக்கவே ` என்பது பாடம் அன்று . ` மானினம் புக்கொளிக்கும் ` என்றது , ` அவைகட்கு அரணாய் நிற்கும் சிறப்பினது ` என்றவாறு . ` தரை ` என்னும் வடசொல் , ரகர றகர வேறுபாடின்றி , ` தறை ` என வருதலும் உண்டு . ` தரை ` என்றே பாடம் ஓதினும் இழுக்காது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 9

எற்றேநினை என்னொடு சூளறு வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூ றுகார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நின் செய்கைதான் எத்தன்மைத்து ! என்னொடு சூள்செய்தலை ஒழி ; நம் வலிய வினையெனப் படுவன யாவும் அடியோடு கெட்டொழிதற்கு மற்றுச் சூழ்ச்சி யாதும் வேண்டா ; கல்லைச் சூழ்ந்த புதரிலும் , கரிய காட்டிடத்தும் இரையை உண்ட கரிய கானங்கோழிகள் , ஈயற் புற்றுக்களின் மேல் ஏறி நின்று , ` கூகூ ` எனக் கூப்பிடுகின்ற திருப்புனவாயிலை நாள்தோறும் தப்பாது நினை .

குறிப்புரை :

` மனமே ` என்பது , மேலைத் தொடர்பால் வந்தியையும் , ` ஆயின ` என்பது , எழுவாய்ப் பொருள் தருவதோர் இடைச்சொல் . ` தூறு ` என்பது , ` காடு ` என்பதனோடு உம்மைத் தொகை படத் தொகுதலின் , ஒற்றிரட்டாதாயிற்று .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
அடியா ரடியன் னாவல வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை ஏத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகிப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.

பொழிப்புரை :

நீற்றின்கண் மூழ்கிய திருமேனியனாகிய சிவ பெருமானது , புனங்களில் பொன் நிறைந்துள்ள திருப்புனவாயிலை , அடியார்க்கு அடியானாகிய திருநாவலூரன் பாடிய இப்பாடல்களை , சோம்பியிராது கற்று , அவற்றால் அப்பெருமானை ஏத்த வல்லவர் , முன்செய்த வினை எல்லாம் மாய்ந்துபோகப் பெற்று , அப்பெரு மானுக்கே அடியராய் வாழ , அவற்றை இசைவழிப் பாடி நின்று ஆட வல்லவர்க்கு , செய்வன தவிர்வனவற்றிற் பிறழ்தலால் வருங் குற்றம் இல்லையாம் .

குறிப்புரை :

இயற்றமிழ்ப் பாவளவிற் பாடி ஏத்துதலினும் , இசைத் தமிழியல்பு நிரம்பப் பாடுதலும் , அதற்கேற்ப ஆடுதலும் சிறந்தன என்றருளியவாறு . ` கீதம் வந்த வாய்மையாற் கிளர்த ருக்கி னார்க்கலால் ஓதி வந்த வாய்மையா லுணர்ந்து ரைக்க லாகுமே ` ( தி .3 ப .52 பா .7) ` கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடும் வகையால் ஏழையடி யாரவர்கள் யாவை சொன சொன்மகிழும் ஈசன் ` ( தி .3. ப .71 பா .1) என்ற திருஞானசம்பந்தர் திருமொழிகளையும் , ` அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளு மாறே ` ( தி .4 ப .77 பா .3) ` தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி ` ( தி .6. ப .31 பா .3) என்ற திருநாவுக்கரசர் திருமொழிகளையும் காண்க. `ஆக` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது.

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 1

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பொழிப்புரை :

பாவியும் , மூடனும் ஆகிய யான் , என் அன்பையும் , அடிமையையும் விட்டொழியும்படி , முத்தும் , சிறந்த மாணிக்கமும் , வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன் ! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்துகொண்டேன் ; ஆதலின் இங்கு இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` போய்த் தொழுவேன் ` என்றது , வருகின்ற திருப் பாடல்களிலும் சென்று இயையும் . ` அது ` , பகுதிப்பொருள் விகுதி . உயிரோடு ஒன்றித்து நிற்பது உடம்பேயாகலின் , ` இது ` என்றது , அதனையே ஆயிற்று . ` இத்தன்மைத்தாகிய உடலின்பங் கருதி ஈண்டு இரேன் ` என்பார் , ` இதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் ` என்று அருளினார் . பின்னும் பலவிடங்களில் உடம்பை இகழ்ந்து அருளுவனவெல்லாம் , இக்கருத்தானே என்க . ` என் இறைவன் ` என இயையும் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 2

ஐவணமாம் பகழியுடை
அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாந் திருநயனம்
விழிசெய்த சிவமூர்த்தி
மையணவும் கண்டத்து
வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பொழிப்புரை :

ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற , வெற்றியையுடைய மன்மதன் சாம்பலாகுமாறு , செந்நிறமான அழகிய நெற்றிக் கண்ணைத் திறந்த சிவமூர்த்தியாகிய , கருமை பொருந்திய கண்டத்தையும் , நீண்ட சடையினையும் உடைய , எங்கள் அரிய அமுதம் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச்சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` வண்ணம் ` என்பது , வகையைக் குறித்தது . ` மன்மதன் ஐந்து வகையான மலர்களையே அம்பாக உடையவன் ` என்பதும் , அம் மலர்கள் , ` தாமரை , மா , அசோகு , முல்லை , நீலம் ` என்பதும் , அவை முறையே , ` உன்மத்தம் , மதனம் , மோகம் , சந்தாபம் , வசீகரணம் ` என்னும் பெயருடையனவாய் , ` சுப்பிர யோகம் , விப்பிர யோகம் , சோகம் , மோகம் , மரணம் ` என்னும் அவத்தைகளைச் செய்யும் என்பதும் , அவ்வவத்தைகள்தாம் , பேச்சும் நினைவும் , மிகுதலும் , பெருமூச்செறிதலும் , உடல் வெதும்பி உணவை வெறுத்தலும் , அழுது பிதற்றுதலும் , மூர்ச்சையுறுதலுமாம் என்பதும் செய்யுள் வழக்காதலின் , அவை எல்லாம் அடங்க , ` ஐவணமாம் பகழியுடை ` என்றும் , அவனை வென்றார் உலகத்து அரியராகலின் , ` அடல் மதனன் ` என்றும் , அவனை எளிதில் அழித்தமை தோன்ற , ` பொடியாகச் செவ்வணமாந் திருநயனம் தீவிழித்த சிவமூர்த்தி ` என்றும் , அம்மூர்த்தியைப் பிரிந்து இங்கே இருப்பேனாயின் , அவனது இன்பத்தை யுணராத பிறர் போல யானும் அம்மன்மதனால் வெல்லப்பட்டேனாவேன் ` என்பார் . ` எம் ஆரமுதை என் ஆரூர் இறைவனை எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் ` என்றும் அருளினார் . மன்மதனது வெற்றிப் பாட்டினை , கந்த புராணத்துக் காமதகனப் படலத்துள் , அவனே கூறு மாறாய் வந்த வற்றான் அறிக .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 3

சங்கலக்குந் தடங்கடல்வாய்
விடஞ்சுடவந் தமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம்
உண்டுகந்த அம்மானை
இங்கலக்கும் உடற்பிறந்த
அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பொழிப்புரை :

வருத்துதலைச் செய்கின்ற உடலிற்பட்டு இவ்வுலகிற் பிறந்த அறிவில்லேனாகிய யான் , தேவர் , சங்குகள் விளங்குகின்ற பெரிய கடலிடத்துத் தோன்றிய ஆலகாலவிடம் தம்மைச் சுடுகை யினாலே அடைக்கலமாக வந்து வணங்க , அப்பொழுதே அவரது துன்பத்தை நீக்கி , அவ்விடத்தை உண்டு , அவரை விரும்பிக் காத்த பெரியோனாகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து , எவ்விடத்து இறத்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` சங்கு ` என்றதன்பின் , ` அலங்கும் ` என்பது , ` அலக்கும் ` என வலித்தலாயிற்று . ` இங்கு ` என்றதன்பின் , ` அலப்பிக்கும் ` என்பது , குறைந்து நின்றது ; ` அலைக்கும் ` என்பது , திரிந்தது என்றலுமாம் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 4

இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்
பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட
அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை
மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பொழிப்புரை :

இவ்வுலகில் வந்து , துன்பத்தைத் தருகின்ற பிறப்பிற் பிறந்து மயங்குவேனாகிய யான் , அங்ஙனம் மயங்காதவாறு நான் பிறந்திருந்த ஊரிற்றானே வந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட அரிய மருந்தும் , அமுதும் போல்பவனும் , வெம்மையான நெருப்புப் போலும் சிறந்த திருமேனியை உடையவனும் , மான் பொருந்திய கையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` வெங்கனல் ` என வந்தமையின் , ` இங்கனம் , அங்கனம் , எங்கனம் ` என்பனவே பாடம் என்பாரும் உளர் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 5

செப்பரிய அயனொடுமால்
சிந்தித்துந் தெரிவரிய
அப்பெரிய திருவினையே
அறியாதே யருவினையேன்
ஒப்பரிய குணத்தானை
இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

நீக்குதற்கரிய வினையையுடையேனாகிய யான் , சொல்லுதற்கரிய பெருமையையுடைய , ` பிரமதேவனும் , திருமாலும் ` என்னும் அவர்தாமும் நினைத்தற்கும் , காண்பதற்கும் அரிய அத் தன்மைத்தாய பெரிய செல்வமாய் உள்ளவனும் , பிறர் ஒருவரது குணமும் நிகர்த்தல் இல்லாத அருட்குணங்களை யுடையவனும் , பிறர் ஒருவரும் தனக்கு நிகரில்லாதவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை நினைத்தலும் , அடைதலும் இன்றிப் பிரிந்து , எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

மக்களினும் பெருமையுடைய தேவர்களினும் பெருமை யுடையராகலின் , ` செப்பரிய அயனொடுமால் ` என்றார் . ` அறிதல் ` என்றது , இங்கு நினைத்தலின் மேற்று . ` அருவினையேன் ` என்றது , ` பிரிந்திருப்பின் அன்னேனாவேன் ` என்றதாம் . ` ஒப்பரிய ` என்ற எச்சம் , ` குணம் ` என்றதனோடு முடிந்தது . அக்குணங்கள் தாம் எட்டென்பது நன்கறியப்பட்டது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 6

வன்னாக நாண்வரைவில்
லங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப்
புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத
மூர்க்கனேன் ஆக்கைசுமந்
தென்னாகப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

வலிய பாம்பு நாணியும் , மலை வில்லும் , திருமால் அம்பும் , அங்கியங் கடவுள் அம்பின் முனையுமாகத் தன் மார்பிற் பொருந்த வலித்து முப்புரத்தை எரித்த தன்மையை உடையவனாகிய எனது திருவாரூர் இறைவனை முன்பே நினைந்து போக முயலாத மூடனேனாகிய யான் , அவனைப் பிரிந்து , என்னாவதற்கு இவ் வுடலைச் சுமந்து இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` பகழி ` என்றதன்பின் , ` ஆக ` என்பது வருவிக்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 7

வன்சயமா யடியான்மேல்
வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தான்
முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை
விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

பின்னிடாத வெற்றியையுடையவனாய்த் தன் அடியவன்மேல் வந்த கூற்றுவனை அவனது மார்பு பிளக்கும்படி வெற்றி பொருந்திய தனது திருவடியால் முன்பு உதைத்து , பின்பு எழுப்பிய மூர்த்தியும் , மின்னலினது ஒளியை உண்டாக்குகின்ற நீண்ட சடையையும் , விடையையும் உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப்பிரிந்து , நான் , என் செய்வதற்கு இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

வலிமை , இங்கு பின்னிடாமை மேற்று . முன் , ` முனிந்து ` என்றதனால் , பின் , ` உகந்து ` என்பது பெறப்பட்டது . ` உகந்த ` என்றது , தன் காரியம் தோன்ற நின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 8

முன்னெறிவா னவர்கூடித்
தொழுதேத்து முழுமுதலை
அந்நெறியை யமரர்தொழும்
நாயகனை யடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தைமறந்திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

பிற உயிர்கட்கு அவை செல்லுமாறு நிற்கும் நெறி யாய் உள்ள பிரமனும் , மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழு முதற் பொருளானவனும் , அப்பொருளை அடையும் நெறியாய் உள்ள வனும் , ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும் , எல்லாத் தேவருள் ளும் சிறந்த தேவனும் , தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து மறந்து , நான் , எதனை அறிந்து அனுபவித்தற்பொருட்டு இவ்விடத் திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` முழுமுதல் ` என்றது எல்லாப் பொருள்களையும் நோக்கியும் , ` நாயகன் ` என்றது தேவர்களை நோக்கியும் , ` தேவர் குலக்கொழுந்து ` என்றது , இங்ஙனம் வேறாயினும் , தேவருள் ஒரு வனாயும் நிற்றல் நோக்கியும் என்க . சொற்சுருக்கம் நோக்கி , ` அந் நெறியை ` என்கின்றார் . பொருள் இனிது விளங்குதற்பொருட்டு , ` முழுமுதலை ` என்றதனை அடுத்து நிற்க வைத்தார் . ` முழுமுதல் ` என்னும் தன்மை விளங்குதல் வேண்டி , ` அப்பொருள் ` என , வேறு போலக் கூறப்பட்டது . ` அடியார்கள் செந் நெறியை ` என்றதன் முன்னிற்கற்பாலதாய , ` தேவர்குலக் கொழுந்து ` என்பது செய்யுள் நோக்கி அதன் பின்னின்றது . மேலைத் திருப் பாடல்களிலெல்லாம் , சொல்லெச்சமாய் எஞ்சி நின்ற , ` இங்ஙனம் ` என்பது ஈண்டு , எஞ்சாது தோன்றிநின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 9

கற்றுளவான் கனியாய
கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்
இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப்
பெரிதடியே கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

மெய்ந்நூல்களைக் கற்று நினைக்குமிடத்துச் சிறந்த கனிபோல இனிக்கின்ற , கண்ணையுடைய நெற்றியையுடையவனும் , என் உள்ளத்தில் நிரம்பப் பொருந்தியுள்ளவனாகிய ஒப்பற்றவனும் , முன்பு இருவராகிய மாலும் அயனும் நினைந்து நன்கு போற்றப் பெற்ற பெருமையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை , அவன் அடியேனாகிய யான் எனது ஒழுக்கத்தைப் பெரிதும் நீங்கிப் பிரிந்து , எதன்பொருட்டு இறவாது உள்ளேனாய் , இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` உள்ள ` என்பது , இடைக்குறைந்து நின்றது . ` கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் ` என்றும் , ` ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ` என்றும் ( குறள் - 356,357) அருளினமையின் , இறைவன் கற்று நினைக்கும் வழித் தோன்றுவோனாதல் அறிக . ` கற்றுளவான் கவியாய ` என்பதே பாடம் எனலுமாம் . ` உளன் ` என்றது , ` உடையன் ` என்னும் பொருட்டாய் நின்றது . ` எற்றுக்கு ` என உருபு விரிக்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

ஏழிசைகளைப் போன்றும் , அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும் , இனிய அமுதத்தைப்போன்றும் இன்பத்தைத் தந்து , அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி , யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு , மாவடுவின் வகிர்போலும் , ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை , அறி வில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` ஏழிசையாய் ` முதலிய மூன்றிடத்தும் வந்த ஆக்கங் கள் உவமை குறித்து நின்றன . உம்மை , எச்சத்தொடு சிறப்பு . ` துரிசு ` என்றது , பரவையாரையும் , சங்கிலியாரையும் காதலித்தமையும் , அவைகாரணமாகச் செய்த சிலவற்றையும் , ஆண்டமையாவது , திருவாரூரிலே குடியேற்றிப் பணிசெய்யவைத்து , அருள்கள் பல செய்தமை . ` ஏழையேன் ` என்றது வாளா பெயராய் நின்றது . ` இருக் கேனோ ` என்னும் ஓகாரம் , எஞ்சி நின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 11

வங்கமலி கடல்நஞ்சை
வானவர்கள் தாம்உய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி
நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த
தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

பொழிப்புரை :

தேவர்கள் பிழைத்தற்பொருட்டு , மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு , அமுதத்தை அவர்கட்கு அருளினவனும் , சிறியேனை ஒரு பொருளாகவைத்து என் வேண்டுகோளுக்கு இரங்கி , என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப்பொருளாய் உள்ளவனும் ஆகிய எனது திருவாரூர் இறை வனைப் பொய்யனாகிய யான் எங்கு இறப்பதற்குப் பிரிந்து இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

குறிப்புரை :

` அருளி ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்த தாதலின் , அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது . சங்கிலியாரோடு கூட்டு வித்ததும் திருவாரூர் இறைவனது திருவிளையாட்டே எனக் கருது கின்றாராதலின் , ` சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனாகிய என் ஆரூர் இறைவன் ` என்றார் . ` பிரிந்திருந்தமையின் உண்மையன்பு இல்லேன் ` என்பார் , ` சழக்கனேன் ` என்று அருளினார் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 12

பேரூரு மதகரியின்
உரியானைப் பெரியவர்தம்
சீரூருந் திருவாரூர்ச்
சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூர னிவைவல்லார்
உலகவர்க்கு மேலாரே

பொழிப்புரை :

செயற்கரிய செய்த பெரியார் தம் புகழ்மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திரு வடியைச் சென்று சேரும் திறத்தையே விரும்பி , புகழ்மிகுந்த மத யானையின் தோலையுடைய அவனை , அவன் அடித்தொண்டனாகிய , இவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாடவல்லவர் , உலகர் எல்லார்க்கும் மேலானவராவர் .

குறிப்புரை :

`பேரூரும்` என்றதற்கு, `பெரிதும் மிக்குப் பாய்கின்ற` என, மதத்திற்கு அடையாக உரைத்தலுமாம். `கரியினுரியான்` என்றதும், `ஆருரன்` என்றதும், சுட்டுப்பெயராய் நின்றன. `பெரியவர்` என்றது தேவாசிரியனில் உள்ள திருக்கூட்டத்தவரை. `சிவனடியே` என்றவிடத்து, `சேர்` என்பது வருவிக்க. `சிவனடிசேர்` என்பதே பாடம் என்றலும் ஒன்று. `அடியன்` என்றது, வாளா பெயராயிற்று. அகலிடத்தில் எங்கும் செல்லுதல், இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களை வணங்க வேண்டி என்க.

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 1

முத்தா முத்தி தரவல்ல
முகிழ்மென் முலையாள் உமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ்
சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும்
பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

இயல்பாகவே கட்டில்லாதவனே , கட்டுற்ற உயிர்கட் கெல்லாம் வீடளிக்கவல்ல , அரும்புகின்ற மெல்லிய தனங்களை யுடையாளாகிய உமையவளது பாகத்தையுடையவனே , சித்திகளை எல்லாம் உடையவனே , அச்சித்திகளை அடையும் வழியைக் காட்டுகின்ற சிவபெருமானே , தேவர்களாகிய விலங்குகட்குச் சிங்கம் போல்பவனே , அடியார்களுக்குப் பற்றாய் உள்ளவனே , அன்புடையார் பலரும் போற்றும் கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` பற்றா ` என்பது , ` பத்தா ` என மருவிற்று . ` ஆவேனே ` என்னும் ஏகாரம் , தேற்றம் . சுவாமிகள் , முன்னரே அடியார்க்கடியரா யினமையின் , இதற்கு இவ்வாறுரைத்தலே திருவுள்ளமாதல் அறிக . திருவாலங்காடு பழையனூரைச் சார்ந்த காடாதல் பற்றி , அதனை விரும்பியவாறாக அருளினார் ; முன்னை ஆசிரியர் இருவர் தாமும் இவ்வாறே அருளினமை காண்க . இறைவனை இவ்வாறு பல பெயர்களால் விளித்தது , அவனைப் பராவுதற் பொருட்டு ; எனவே , தேவர்ப்பராவும் பாடல் களுக்கு இஃது இயல்பாதல் தெளியப்படும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

பொய்யே செய்து புறம்புறமே
திரிவேன் றன்னைப் போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட
மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த
பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

மனத்தொடு பொருந்தாத செயல்களையே செய்து , அதனால் உனக்கு மிகவும் சேய்மையிலே திரிவேனாகிய என்னை , அங்ஙனம் அகன்றொழியாதவாறு தடுத்து இவ்வுலகில் நேரே வந்து என்னை ஆட்கொண்ட மெய்ம்மையுடையவனே , மெய்ம்மை யுடையவர்க்கு மெய்ப்பொருளாய் உள்ளவனே , படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை அரையிற் கட்டிய கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` போகாமே ` என்றதன்பின் , ` தடுத்து ` என்பது வருவிக்க . நேரே வந்து ஆண்ட அருமையை எடுத்து ஓதுகின்றாராகலின் , ` என்னை ` என மறித்தும் வலியுறுத்துக் கூறினார் . இறைவன் நாவலூரர்பால் மெய்யனாயது , ` தடுத்தாள்வோம் ` எனக் கயிலையில் அருளியவாறே வந்து ஆண்டது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரம்மூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

தூண்ட வேண்டாது ஒளிரும் விளக்குப் போலச் சிறந்த ஒளிவடிவினனே , வணங்குவாரது துன்பத்தை நீக்குபவனே , எலும்பையே அணியாகப் பூண்டவனே , முப்புரங்களையும் சாம்பலாகுமாறு அழித்த அறவுருவினனே , முன்பு செய்யப்பட்ட , அழுந்துதற்கு இடமான வினைகளாகிய அவற்றை நீக்கியருளுகின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே , அடியேன் , உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

தூண்டா விளக்கு , இல்பொருளுவமை . ` விளக்கின் ` என்ற இன்னுருபு , ஈறு தொகுத்தலாய் நின்ற , ` நல்ல ` என்னும் குறிப்புப் பெயரெச்சத்தோடு முடிந்தது . இறைவன் பிறர் அறிவிக்க வேண்டாது , தானே அறியும் அறிவினனாதலின் , ` தூண்டா விளக்கின் நற்சோதீ ` என்று அருளினார் . ` புரமூன்றும் செற்ற புண்ணியன் ` உள்ளுறை நகை போல நின்று , தக்கதே செய்தமையைக் குறித்தது . ` பண்டு ` என்பது நீட்டலாயிற்று . பண்டையவற்றை , ` பண்டு ` என்று அருளினார் . ஆண்டான் - தலைவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

மறிநே ரொண்கண் மடநல்லார்
வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே யழிந்தேன் ஐயாநான்
மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அறிவே யாலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

தலைவனே , கருமைபொருந்திய கண்டத்தை யுடையவனே , தீர்க்க இயலாத வினைகளையெல்லாம் தீர்த்தருளுகின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற அறிவு வடிவானவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே , அடியேன் , மான்போலும் ஒளிபொருந்திய கண்களையுடைய , இளைய , அழகிய மாதர் ஆசையாகிய வலையில் அகப்பட்டு , அறிய வேண்டுவனவற்றை அறியாது , அறிவு அடியோடே கெட்டேன் ; அவ்வாறே இனியுங் கெட்டொழியாது , உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` மதி ` என்றது புத்தியை . ` அறிவே ` என்னும் தேற்றேகாரம் , ` முற்றிலும் ` என்னும் பொருளைத் தந்தது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

வேலங் காடு தடங்கண்ணார்
வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன்
மணியே முத்தே மரகதமே
பாலங் காடீ நெய்யாடீ
படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய
அடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

மாணிக்கம் போல்பவனே , முத்துப் போல்பவனே , மரகதம் போல்பவனே , பால் முழுக்கு ஆடுபவனே , நெய் முழுக்கு ஆடுபவனே , விரிந்த புல்லிய சடையை யுடையவனே , பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் வேல்போலும் , பெரிய கண்களையுடைய மாதராசையாகிய வலையில் அகப்பட்டு , உன்னாற் சொல்லப்பட்ட நெறியை மறந்து , மயக்கம் மிகுந்து என்னையே மறந்தொழிந்தேன் ; இனி அவ்வாறு இராது , என்றும் உன் அடியார்க்கு அடியனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

சிவபிரான் , நெறி சொல்லியது , முதல் நூலில் என்க . முன்னர் , ` நெறிமறந்து ` என்றதனால் , பின்னர் ` மறந்தொழிந்தேன் ` என்றது , தம்மையாயிற்று . தம்மை மறந்தமையாவது , திருவாரூரையும் , வீதிவிடங்கப் பெருமானையும் , அடியவர் திருக்கூட்டத்தையும் நினைக்க மறந்தமை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

எண்ணார் தங்கள் எயில்எய்த
எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற
கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணார் இசைக ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

உன்னை மதியாதவரது மதில்களை அழித்த என் தந்தையே , என் தந்தைக்கும் பெருமானே , உலகத்திற்குக் கண்ணாய் நின்று அதனைக் காக்கின்ற முதல்வனே , குற்றமில்லாதவனே , பண் பொருந்திய இசைகளைக் கொண்டு பலரும் துதிக்கின்ற பழையனூர்த் தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` உலகு ` என்றது , உயிர்களை . அவற்றிற்குக் கண்ணாதலாவது , ` கட்டு , வீடு ` என்னும் இருநிலையினும் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்தல் . ` திருத்தல் ஆகாதாய் ` என்றது , ` திருத்துதல் உண்டாகாத இயல்பினனே ` என்னும் பொருட்டாய் , குற்றம் இன்மையைக் குறித்தது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

வண்டார் குழலி உமைநங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

வண்டுகள் நிறைந்த கூந்தலையுடையவளாகிய ` உமை ` என்னும் நங்கைதன் பாகத்தையுடையவனே , கங்கைக்குக் கணவனே , பகைத்தவரது ஊர்களை எரித்த இடப வாகனனே , வேத நெறியை உடையவனே , முன்பு செய்யப்பட்ட , அழுந்துதற்கு இடமான வினைகள் பலவற்றையும் தீர்க்கின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தேவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` பண்டாழ் வினைகள் ` என்றதற்கு , மேலே ( தி .7. ப .52. பா .3.) உரைக்கப்பட்டது . ` அண்டன் ` என்றது , ` தேவன் ` என்னும் அளவாய் நின்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

பேழ்வாய் அரவின் அணையானும்
பெரிய மலர்மேல் உறைவானும்
தாழா துன்றன் சரண்பணியத்
தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்தன்னை
ஆள்வாய் ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

பெரிய வாயையுடைய பாம்பாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் , பெரிதாகிய தாமரை மலர்மேல் இருப்பவனாகிய பிரமனும் விரைவில் உனது முதன்மையை உணர்ந்து உன் திருவடிகளை வணங்குமாறு , தீப்பிழம்பாய் நின்ற மெய்ப் பொருளானவனே , உயிர் , பயனின்றிக் கெடுதற்கு ஏதுவான வினைகளை நீக்கு கின்ற கடவுளே , பழையனூரை ஆள்கின்றவனே , திரு வாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` அரவின் ` என , அல்வழிக்கண் சாரியை வந்தது . ஆயிரம் இதழ்களை யுடைமையின் , ` பெரிய மலர் ` என்றார் . பேழ் வாய் அரவின் அணையும் , பெரிய மலர் இருக்கையும் அவர்தம் பெருமையைக் குறிப்பான் உணர்த்தின . சரண்பணிதல் , தன் காரணந் தோற்றி நின்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

எம்மான் எந்தை மூத்தப்பன்
ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற்
பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

என் தந்தை , என் தந்தைக்கு முன்னோனாகிய தந்தை முதலாக இருவகை ஏழ் தலைமுறைகளில் எங்களை அடிமை கொண்டுள்ள பெருமானே , சுடுகாடாகிய புறங்காட்டில் பேய்களோடு ஆடல் செய்பவனே , பல சிறந்த மலர்களைக்கொண்டு பலரும் வணங்குகின்ற , பழையனூர்க்குத் தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` ஏழேழ் `, உம்மைத்தொகை . இருவகை ஏழ்தலை முறைகளாவன , தந்தை வழியில் ஏழ் தலைமுறையும் , தாய் வழியில் ஏழ்தலை முறையுமாம் . ` மரபிரண்டும் சைவநெறி வழிவந்த ` எனத் திருஞானசம்பந்தரது குடிபற்றிச் சேக்கிழார் அருளியவாறு அறிக . ( தி .12 திருஞான . புரா . 17) இவற்றோடு தந்தைதன் தாய்வழியில் ஓர் ஏழ்கூட்டி . ` மூவேழ் தலை முறை ` என்றலும் உண்டு . ` மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை - ஆழா மேஅருள் அரசே போற்றி ` என்ற திருவாசகத்தைக் காண்க . ( தி .8 போற்றித் திருவகவல் - 119) இடுகாடாகிய புறங்காடும் உண்மையின் , ` ஈமப் புறங்காடு ` என விதந்தருளிச் செய்தார் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

பத்தர் சித்தர் பலர்ஏத்தும்
பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன்
அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்
பரமன் னடியே பணிவாரே.

பொழிப்புரை :

அடியார் பலரும் , சித்தர் பலரும் துதிக்கின்ற கடவுளும் , பழையனூரை விரும்பிய தலைவனும் , ஆகிய திருவாலங்காட்டு இறைவனது அடிமைத் திறத்தின் கண்ணே அன்புடையவராய் , சித்தர்களும் தங்கள் சித்தத்திலே மறவாது வைத்துள்ள புகழையுடைய அடியானாகிய நம்பியாரூரனது இம் மெய்யுணர்வுத் தமிழ்ப் பாடல்களாகிய பத்தினையும் பாடி ஆடுவோர் , சிவபெருமானது திருவடியையே எஞ்ஞான்றும் வணங்கி வாழ்பவராவர் .

குறிப்புரை :

` அவன் அடிநிழலைப் பெறுவர் ` என்றபடி . ` பலர் ` என்றதனை , ` பத்தர் ` என்றதனோடுங்கூட்டுக . ` அன்பு ` என்னும் பண்புப் பெயர் , பண்பியின்மேல் நின்றது . ` சித்தரும் சித்தம் வைக்கும் புகழ் , சிவபிரானது திருவருளால் வாய்க்கப்பெற்றவன் ` என்பது குறிப்பு . சித்தர் சித்தம் வைத்தமையை , பெருமிழலைக் குறும்ப நாயனாரது வரலாற்றால் அறிக . ` சிறுவன் ` என்பதில் உள்ள சிறுமை , ` அடிமை ` என்னும் பொருட்டு . ` அன்பாகிப் பாடி ஆடுவார் ` என இயையும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றைமலர் மாலையையும், பிறையையும் திருமுடியிற் சூடிக் கொண்டு, உமாதேவியோடு, பூதப்படைகள் களிப்புற்றுச் சூழ, வெள்ளி மலையின்மேல் ஒரு மாணிக்கமலை வருவதுபோல விடையின்மேல் வருவார்; `திருமால், பிரமன், இந்திரன்` என்ற பெருந்தேவர்கட்கும், `மற்றைய தேவர், நாகலோகத்தார், அசுரர்` என்பவர்கட்கும் அவரே தலைவர்.

குறிப்புரை :

செந்திருமேனியராதலைக்கருதி, இறைவரை, மாணிக்க மலை போல்வார் என அருளினமையின், வெள்ளியதாதல் பற்றி விடையை, வெள்ளிமலைபோல்வது என அருளிச்செய்தல் திருவுள்ள மாதல் பெறப்படும். `மாணிக்கத்தின்` என்ற இன்சாரியை, அல்வழிக் கண் வந்தது.``பெருமான்` பன்மையொருமை மயக்கம். `மயானம்` என்பது கோயிலின் பெயர். `மயானம்` என்னும் பெயருடைய கோயில்கள் வேறு தலங்களிலும் உள. `பெருமானடிகள்` என்பது ஆண்பால் தேவர்க்குச் சொல்லப்படுவதொரு பெயராதலின், மாதேவனாகிய சிவபெருமான், பெரிய பெருமானடிகளாதல் அறிக. இது பற்றியே திருவாதவூரடிகள், `தேவதேவன்` என்பதே சிவபெருமானுக் குரிய சிறப்புப் பெயராக அருளியுள்ளார் என்க. (தி.8 திருவா. கீர்த்தி. 122)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவர் உமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேவர்கட்குத் தலைவரும், வெள்ளிய முப்புரிநூலை அணிந்த மார்பினை உடைய வரும், வேதத்தை உடைய இசையைப் பாடுகின்றவரும், கண் பொருந்திய நெற்றியையுடையவரும், சிரிப்பதுபோலத் தோன்றும் தலைஓட்டினை ஏந்தியவரும், காலனுக்குக் காலரும் திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவரும், தம்மை மதியாதவரது ஊர்கள் மூன்றை எரித்த இறைவரும், உமை ஒருபாகமும் தாம் ஒருபாகமுமாய்ப் பெண்ணும் ஆணுமாய் நிற்கும் உருவத்தை உடையவரும் ஆவர்.

குறிப்புரை :

``பாகம்`` என்றதனை, ``ஓர்`` என்றதனோடுங்கூட்டி, ``பாகம்`` என்பன இரண்டன் பின்னும், `தாம், ஆய்` என்பன வருவித்து உரைக்க. `உமையோடொருபாகம்` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். `ஊர், திருக்கடவூர்` எனப்பட்டமையால், மயானம் அதனைச் சார்ந்ததாயிற்று.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 3

காயும் புலியி னதளுடையர்
கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

பேய்கள் வாழ்கின்ற திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், சினங்கொள்கின்ற புலியின் தோலாகிய உடையை உடையவர்; நீல கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை யுடையவர்; திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவர்; எல்லா உயிர்கட்கும் தாமே தாயும், தந்தையும், தலைவருமானவர்; பாய்ந்து செல்லுகின்ற ஒற்றை எருதின்மேல் ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர்; ஆயினும் யாவர்க்கும் மேலான இடத்தில் இருப்பவர்.

குறிப்புரை :

`அதளுடை அகண்டர்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். `பலிதேர்ந்து உண்ணும் பரமேட்டி` என்பது, நகைச்சுவை படக் கூறிய தாகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. பரமேட்டி, பன்மை யொருமை மயக்கம். `மயானம்` என்னும் பெயரானே அதற்குரிய அடைபுணர்த்தற்கு இயைபுண்மையின், `பேய்வாழ் மயானம்` எனச் சிறப்பித்தருளினார்.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 4

நறைசேர் மலர்ஐங் கணையானை
நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு
பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற மத்தளம், பிற பறை இவைகளைப் பாட்டுக்களோடு பயில்கின்ற அடியார்கள் நிறைந்த திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேன் பொருந்திய ஐந்துவகை மலர்களாகிய அம்பு களையுடைய மன்மதனை, கண்ணில் உண்டாகிய நெருப்பாற் சாம் பலாக்கிய இறைவராவர்; `இல்லை` என்று சொல்லாமல் யாவர்க்கும் அவரவர் விரும்பியவற்றை ஈபவர்; பிறை பொருந்திய சடையை யுடையவர்.

குறிப்புரை :

உலகின்பத்தை வேண்டி வணங்குவார்க்கு உலகின் பத்தையும், வீட்டின்பத்தை வேண்டி வணங்குவார்க்கு வீட்டின் பத்தையும் தருதலின், `எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்` என்று அருளினார். ``வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்`` (தி.6 ப.23 பா.1) என்று அருளியது காண்க.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 5

கொத்தார் கொன்றை மதிசூடிக்
கோணா கங்கள் பூணாக
மத்த யானை யுரிபோர்த்து
மருப்பு மாமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
பாடி யாடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையையும், பிறையையும் திருமுடியிற்சூடி, கொல்லுந் தன்மையுடைய பாம்புகள் அணிகலங்களாய் இருக்க, மதத்தையுடைய யானைத் தோலைப்போர்த்து, பன்றியின் கொம்பை யும், ஆமையின் ஓட்டையும் உடைய தாலியையுடையவராய், பூத கணங்கள் அன்புசெய்து பாடியும், ஆடியும் சூழப் பிச்சை ஏற்கின்ற பித்தர் கோலத்தவராவர்.

குறிப்புரை :

`மருப்பு` என்றது பன்றியினுடையது என்பது அறியப் பட்டதாகலின், கிளந்து கூறாராயினார். ``ஆமை``, ஆகு பெயர். ``ஆமை`` என்றவிடத்தும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரித்து, `உடைய` என்பதனை வருவித்து முடிக்க. தாலியாவது, வெறு வடமாக அணியப்படாது எவற்றையேனும் கோத்து அணியப்படுவது என்க.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 6

துணிவார் கீளுங் கோவணமுந்
துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், துணிபட்ட நீண்ட கீளும் கோவணமும் நெருங்கப்பட்டு, சுடலைச் சாம்பலைப் பூசி, பாம்புகளை மேலே அணிந்த பாசுபத வேடத்தையுடையவர்; பஞ்ச வடியை அணிந்த மார்பினையுடைய மாவிரத கோலத்தையுடையவர்; திண்ணிய நீண்ட குழையை அணிந்தவர்; புரங்கள் மூன்றையும் நெருப்பின் வாயிற்படுவித்த வீரத்தையுடையவர்; கட்டிய நீண்ட சடையையுடையவர்.

குறிப்புரை :

பாசுபத வேடம், கபாலத்தைக் கையில் ஏந்துதல். பஞ்ச வடி - அகன்ற கயிறு; இது மயிரால் திரிக்கப்படுவது. இறந்த தேவர் களது தலைகளையும், எலும்புகளையும் சிவபிரான் அணிகலமாக அணிதல்போல, அவர்களது மயிரினைக் கயிறாகத் திரித்துப் பூணூலாக அணிவன்; இதனை மாவிரத சமயத்தார் சிறந்தெடுத்து அணிவர்; இவ் வாறே கபாலம் ஏந்துதலைப் பாசுபத சமயத்தர் சிறந்தெடுத்துக் கொள்வர் என்க. ``கடவூர்`` என்றதனை, ``மயானம்`` என்றதனோடுங் கூட்டுக.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 7

காரார் கடலின் நஞ்சுண்ட
கண்டர் கடவூ ருறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தா னாவ துலகேழும்
உடையார்க் கொற்றி யூர்ஆரூர்
பேரா யிரவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கரிய, நிறைந்த கடலினின்றுந் தோன்றிய நஞ்சினையுண்ட கண்டத்தை யுடையவர்; திருக்கடவூரில் உறைகின்ற வாழ்க்கையையுடையவர்; தேர்மேற் பொருந்திய அரக்கனாகிய இராவணன், அதனை விட்டுக் கீழேபோய் வீழ்ந்து உடல் சிதையுமாறு கால்விரலால் தமது மலையை ஊன்றினவர்; ஏழுலகங்களையும் உடையவராகிய அவருக்கு ஊராவது, ஒற்றியாய் உள்ளது, அஃதொழிந்தால் யாருடைய ஊரோ! பெயர், ஆயிரம் உடையவர்.

குறிப்புரை :

`கார்க் கடல், ஆர் கடல்` எனத் தனித்தனி சென்றியை யும். `கருமை பொருந்திய கடல்` என்றே உரைப்பினும் அமையும். `ஒற்றியூர், ஆரூர்` என்னும் பெயர்களை, நகைதோன்ற, இவ்வாறு பொருள்படுத்தருளினார். ``பேர் ஆயிரவர்`` என்றது, ஒரு பெய ரில்லாதவர் என்னும் குறிப்பினது.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 8

வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தளராத தனங்களை யுடைய மங்கையொருத்தியோடு, வேடராய், கொம்பையுடைய பன்றியின்பின் சென்று, அருச்சுனனது தவத்தை அழித்து, அவன் தம்மை அறியாத நிலையில் நின்று போர்புரிந்து, பின்பு அவனுக்கு அம்பறாத் தூணியை நிலையாக வழங்கிய பெருமையைப் பொருந்திய, சடைமுடியை யுடையவர்.

குறிப்புரை :

``வாடா முலையாள் தன்னோடு வேடுவனாய்ச் சென்று`` என்றதனால், அவள் வேடிச்சியாயினமை பெறப்பட்டது. சிவபிரான் அருச்சுனனுக்கு அளித்த பாசுபதக் கணையாலே, அவன் வில் வன்மை நிலைபெற்றமையின், ``ஆவநாழி நிலையருள் செய்`` என்று அருளினார். `பீடார்ந்தவர், சடைமுடியர்` என வேறு வேறாக ஓதற் பாலதனை, இவ்வாறு, ஒன்றாகத் தொகுத்தோதியருளினார் என்க. ``வேடுவனாய்`` என்றது, பன்மை யொருமை மயக்கம்.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 9

வேழ முரிப்பர் மழுவாளர்
வேள்வி யழிப்பர் சிரமறுப்பர்
ஆழி யளிப்பர் அரிதனக்கு
ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், யானையை உரிப்பர்; மழுப்படையை யுடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ் விடத்துப் பலரது தலைகளை அறுப்பர்; திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர்; என்றும் பசுவினிடத்து உளவாகின்ற ஐந்து பொருள்களை விரும்புவர்; நால்வர் முனிவர்கட்கு அறம் உரைப்பர்; மங்கை யொருத் திக்குத் தலைவராவர்; திருக்கடவூரில் தங்குவர்; சிறிய மான்கன்றைப் பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை யுடையவர்.

குறிப்புரை :

வேண்டும் சொற்கள், ஆற்றலால் வந்தன. இறை - இறுத்தல்; தங்குதல். பாம்பு முதலியன அடங்கிக் கிடத்தலின், ``பேழைச் சடை`` என்று அருளினார்.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

மாட மல்கு கடவூரின்
மறையோர் ஏத்து மயானத்துப்
பீடை தீர அடியாருக்
கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
பாவ மான பறையுமே.

பொழிப்புரை :

மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில், அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற, அடியவர்களுக்கு, அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமானடிகளது புகழை, திருநாவலூரில் தோன்றிய, `ஆரூரன்` என்னும் பெயரை யுடையவனாகிய நம்பி, ஆராய்ந்து பாடிய இந் நல்ல தமிழ்ப் பாடல் களைப் பாடுகின்ற அடியார், பாடக் கேட்கின்ற அடியார் இவர்கள்மேல் உள்ள பாவங்களெல்லாம் பறந்தொழிதல் திண்ணம்.

குறிப்புரை :

`நாவலூர்` என்பதனை, `நாவல்` என்று அருளினார். `நம்பி` என்பது பெருமைபற்றிப் புணர்க்கப்படும் பெயராகலின், அதனை வேறாக ஓதுதலும் பொருந்துவதாயிற்று. `ஆரூர நம்பி` என ஈறு கெட்டு வாராது, இயல்பாகவே வந்தமையின், `ஆரூரனாகிய நம்பி` என உரைத்தல் கூடாமையறிக. ``கேட்பார்`` என வாளா அருளி னாரேனும், `கேட்கும் அடியார்` என்றலே திருவுள்ளம் என்க. `பாடு மடியார் கேட்குமடியார்` என்பது உம்மைத் தொகை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவும் நான்படற் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

தலைவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன் திருவடியை இடையீடின்றி யடையமாட்டாது , மாசுடைய உடம்பு கொண்டே அடைவேனாயினேன் ; அவ் விழி நிலைதானும் நான் அடையத்தக்க தொன்றாகியேவிடுமாயின் , ஒளியிழந்த என் கண்ணுக்கு ஊற்றத்தக்கதொரு மருந்தையேனும் , என் வேண்டு கோளுக்கு விடையாக நீ சொல்லியருள் ; ஏனெனில் , பசு முதலிய வற்றினிடத்திற் பாலை விரும்புவோர் , அவை இடுகின்ற சாணத்தை எடுத்தற் றொழிலைச் செய்தாயினும் அதனைக் கொள்வர் ; அதுபோல , நீ என் குற்றங்களை நோக்கி , இகழாது , உயிர்களிடத்து நீ விரும்புவ தாகிய குணம் என்னிடத்து இருத்தலை நோக்கி என்னை ஏற்றருளுதல் வேண்டும் . அக் குணமாவது ; யான் எப் பிழைசெய்வேனாயினும் , உன் திருவடிக்குப் பிழையைச் செய்யேன் ; வழுக்கிவிழும் பொழுதும் உன் திருப்பெயரைச் சொல்லுதலன்றி , வேறொன்றை அறியேன் .

குறிப்புரை :

திருவடியை இடையீடின்றி அடைதலாவது , உயிர் கருவி கரணங்களோடு கூடாது தூய்தாய் நின்று அடைதல் . ` திருக் கயிலையிலிருந்து அந்நிலையை அடையற்பாலனாகிய யான் இந் நிலையையடைந்தேன் ` என்று இரங்கியவாறு . ` இந்நிலைதான் என்னால் வந்ததே ` என்பார் , ` அதுவும் நான்படற் பாலதொன்றா னால் ` என்றார் . ` படப்பாலதொன்றானால் ` என்னும் பாடம் சிற வாமையறிக . ` பிழுக்கை வாரியும் பால்கொள்வர் ` என்பது ஒட்டணி யாய் நின்றமையின் , அதன் பொருள் வருவித்துரைக்கப்பட்டது . ` திருவடிக்குப் பிழையேன் ` என உருபு விரிக்க . எல்லாம் செய்வது திரு வடியே யாகலின் , அதனை மறந்து , ` யான் செய்தேன் ` என்று எண்ணு வதே திருவடிக்குச் செய்யும் பிழையாதல் உணர்க . ` இப்பிழையைச் செய்யாது , திருவடியை எஞ்ஞான்றும் மறவாது நினையும் இவ் வொன்றன்முன்னே , ஏனைய குற்றங்கள் பலவும் , பாலின்முன் சாணம் போலப் பொருளல்லவாய் ஒழியுமல்லவோ ` என்றபடி . இதனானே , திருவடிப் பிழைத்தலாகிய குற்றத்தின்முன்னே , ஏனைய குணங்கள் பலவும் சிறிதும் பொருளல்லவாய் ஒழியும் என்பதும் பெறப்பட்டது . கண் வேண்டுதலே , கருத்தாகலின் , ` மருந்து ` என்றதற்கு , ` மருந் தேனும் ` என்றுரைத்தலே திருவுள்ளமாதல் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

கட்ட னேன்பிறந் தேனுனக் காளாய்க்
காதற் சங்கிலி காரண மாக
எட்டி னால்திக ழுந்திரு மூர்த்தீ
என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` எட்டு ` என்னும் எண்ணின் வகையினால் விளங்குகின்ற சிறந்த வடிவங்களையுடையவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தரும் வினையையுடையேனாகிய யான் , அவ்வினை காரணமாக , இம் மண்ணுலகிற் பிறந்தேன் ; பிறந்து உனக்கு ஆளாகி , இடையே மாதரை விரும்பி மணந்தேனாயினும் , உன் திருவடியை மறந்திலேன் ; பிறவற்றைச் செய்யத் தவறினேனாயினும் , திருவடிக்குச் செய்யும் அடிமையில் இடைவிடாது நின்றேன் ; என்ன செய்தற் பொருட்டு அவற்றை நான் இப்பொழுது எடுத்துரைப்பேன் ! இத் துன்பமெல்லாம் , என்காதலுக்கு இடமாய் நின்ற சங்கிலி காரணமாக நீ செய்வனவேயாகும்

குறிப்புரை :

` ஆதலின் , நீக்கியருள் ` என்பது குறிப்பெச்சம் , ` கட்டம் ` என்பது , அதற்கு ஏதுவாகிய வினைகளைக் குறித்தது . எட்டு மூர்த்தி - அட்ட மூர்த்தம் . ` எடுத்துரைத்தலாற் பயன் என் ` என்றபடி . ` பெட்டேன் ` என்பது , ` பெட்டன் ` என நின்றது ; அதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை யமுதே
அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சல முரல
வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

கங்கை பொருந்தியுள்ள சடையையுடையவனே , அடியார்கட்குக் கரும்பும் , கட்டியும் , அகங்கையிற்கிடைத்த நெல்லிக் கனியில் உள்ள அமுதமும்போல இனிமையைத் தருகின்றவனே , அனைவர்க்கும் பற்றுக்கோடாய் உள்ளவனே , தந்தையே , சங்குகளும் , சிப்பிகளும் , சலஞ்சலம் என்னும் சங்குகளும் ஒலிக்க , ` வயிரம் , முத்து , பிற மணிகள் , பொன் ` என்பவற்றை வாரிக்கொண்டு , பெரிய கடலின் கண் உயர எழுகின்ற அலைகள் வந்து உலவுகின்ற , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , நீயே எனக்குத் துன்பஞ் செய்வையாயின் , அதனை நான் யாரிடம் நீக்குமாறு எடுத்துச்சொல்வேன் !

குறிப்புரை :

` கங்கை தங்கிய சடையையுடைமை , இருமனைவியரை மணந்து ஒரு மனைவியிடத்துக் கரவாய் நிற்றல் இயல்பாதலைக் காட்டும் குறிப்பினதன்றோ ` என்றபடி . கரும்பு முதலியனவாகக் கூறியது , அடியவர்க்குத் தீங்கு விளைவியாமையைக் குறிக்க வென்க . ` சலசல முரல ` என்பதே பாடம் போலும் ! கடல் எல்லா மணிகட்கும் உறைவிடமாதலின் , அலைகள் அவற்றை வரன்றி வருவவாயின என்க . ` ஓங்கும் ` என்பது குறுகிநின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றால்
யாவ ராகில்என் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்
சொல்லு வாரையல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
கொள்வ தேகணக் குவ்வழக் காகில்
ஊன்று கோலெனக் காவதொன் றருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே . ` தாய் பெற்றதனால் கொள்ளப் பட்டதொரு சுற்றம் என்பது ஒருபொருளன்று ; அன்புடையவர்கள் யாராய் இருப்பினும் என் என்கின்ற இம்முறைமை பற்றி . நீ உன் னிடத்து அன்புசெய்பவரை , உனது இயற்கை வடிவம் அவர்கட்குப் புலனாகுமாறு வெளிநின்று ஆட்கொண்டுவிட்டால் , அதன்பின் உன் பெயரையே சொல்லிக் கொண்டிருப்பவரை , நீ ஒரு ஞான்றும் கடுஞ்சொற்சொல்லுவாயல்லை ; அங்ஙனமாகவும் , மூன்று கண்களை யுடையையாகிய நீ உன் அடியேனது இரண்டு கண்களைப் பறித்துக் கொள்வது , யான் செய்த குற்றங் காரணமாக நீதி நூல்களில் உள்ள முறைமையே யாகில் , எனக்கு உதவியாய் நிற்பதோர் , ஊன்று கோலையேனும் அளித்தருள் .

குறிப்புரை :

மக்கட்கு ` உறவுமுறை ` என்பது அவர்களை ஈன்ற தாயோடு ஒட்டியே வருவதாகலானும் , அவ்வுறவுமுறைமை இல்லா தார்தாமும் அன்புடையராய வழி , அவரினும் சிறந்து நிற்றல் இயல் பாதலானும் , அன்பை முதன்மையாகக் கொள்ளுதலே சிறந்த முறைமையாக வருதலை எடுத்தோதுவார் , இவ்வாறருளிச்செய்தார் . இறைவனுக்குப் பிறப்பால் உறவாவார் ஒருவரும் இன்மையறிக . ` ஈன்று ` என்றதனால் , ` தாய் ` என்பதே தானே வந்து இயைந்தது . ` ஈன்று ` என்றது , ` ஈன்றதனால் ` எனப் பொருள் தந்தது . கொண்டது - பெற்றது . தோன்றுதலுக்கு வினைமுதலும் , அளித் தலுக்குச் செயப்படு பொருளும் வருவிக்கப்பட்டன . ` சொல்லுவார் ` என்றது , அளிக்கப் பட்டவரையேயாம் . ` அல்லாதன சொல்லாய் ` என்றது , ` வெகுள் வாயல்லை ` எனப் பொருள் தந்து , ` சொல்லுவாரை ` என்றதற்கு முடிபாயிற்று . ` இம்முறைமை யெல்லாம் என்னிடத்தேயும் காட்டிய நீ , இதுபோது என்னை வெகுண்டு என் கண்களைப் பறித்துக் கொண்டாய் ` என்றபடி . ஊன்றுகோலை இறைவனே தரவேண்டியது , அவ்வளவிலேனும் அவனது இரக் கத்தைப் பெறின் , வருத்தம் நீங்கும் என்பது பற்றியும் , அவ்வூன்று கோலே கண்ணாக இயங்குதலை அவன் நெடிது கண்டிரான் என்பது பற்றியுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
சுழித்த லைப்பட்ட நீரது போலச்
சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளம்
கழித்த லைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல்பற்றிக் கறகற விழுக்கை
ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , யான் நன்னெறியைத் தலைப் படவே முயல்கின்றேன் ; ஒருஞான்றும் என்னை உன்னைப்போல ஒன்றாலும் தாக்குண்ணாத பெருமையேனாக நினைக்கின்றிலேன் ; அங்ஙனமாகவும் , நீ என் கண்ணைப் பறித்துக் கொண்டதனால் , வழிதெரியாது , சுழியிடத்துப்பட்ட நீர் போலச் சுழலாநின்றேன் . என் உள்ளமும் ஒன்றும் அறியாது சுழல்கின்றது ; இவற்றையும் , கழியிற் பொருந்திய நாயைப் போல ஒருவன் தரும் கோலை விடாதுபற்றி நின்று , அவனால் , ` கறகற ` என்று இழுக்கப்படுதலையும் ஒழித்து , நீ உனது திருவருள்களை எனக்கு அளித்தருள் .

குறிப்புரை :

` வழித்தலைப்படுவான் முயல்கின்றேன் ; உன்னைப் போல் என்னைப் பாவிக்கமாட்டேன் ` என்றது , ` யான் என் செருக் கினால் இக் குற்றம் செய்தேனல்லேன் ` என்றவாறு . உன்னைப் போல் என்னைப்பாவித்தல் என்றது , சிவோகம் பாவனையை ` என்றுங் கூறுப . கழித்தலைப்பட்ட நாய் , கழியிற் கட்டிவைக்கப்பட்ட நாய் ; அஃது ஒருவன் கோலைப்பற்றி நிற்றற்கு உவமை . ` கறகற ` என்பது , விரைவுக் குறிப்பு . ` கறகற ` என்றதன்பின் , ` என்று ` என்பது தொகுத்தலாயிற்று . ` இழுக்கை ` என்றதை , ` இழுக்கப் படுகை ` என்க . ` ஒழித்து ` என்றது , எல்லாவற்றையும் குறித்து , ஒழிக்கப்படுவன பலவாயினமைபற்றி , அருளும் பலவாயிற்று என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானு மித்தனை வேண்டுவ தடியேன்
உயிரொ டுந்நர கத்தழுந் தாமை
ஊன முள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

தேன் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , யான் மான்போலும் பார்வையினை யுடைய மாதரது கண்ணோக்காகிய வலையில் அகப்பட்டு , உனது செயல்முறையையும் , குணத்தையும் நினையாமலே செய்துவிட்ட பெரிய குற்றத்திற்கு அஞ்சியே , நானும் பிறர் போல உன்னை இத் துணை இரந்துவேண்டுவதாயிற்று ; அதனால் , என்றும் உன் அடி யேனாகிய யான் உயிரோடே நரகத்தில் மூழ்காதபடி , எனக்கு உண்டாகிய குறையினை நீக்கி அருள் செய்யாய் .

குறிப்புரை :

` மானை , தேனை ` என்ற ஐகாரங்கள் சாரியை . இறைவன் சீலமாவது , யார்மாட்டுங் கண்ணோடாது முறைசெய்தல் , குணமாவது , அங்ஙனம் செய்தற்கேற்ற , பற்று இகல் இல்லாத நடுவு நிலைமை . சுவாமிகள் , தம்மிடத்து இறைவன் அவ்வாறு இரான் என்று நெகிழ நினைந்தாராகலின் . ` சிந்தியாதே உற்ற வல்வினை ` என்று அருளினார் . உறுதல் - பொருந்துதல் ; அஃது ஈண்டு , செய்தலின் மேல தாயிற்று . ` வல்வினை ` என்றது , அதற்கு ஏதுவாகிய பெருங் குற்ற மான செயலை . அஃதாவது சங்கிலியார் பொருட்டுச் செய்த சூளினைப் பொருட்படுத்தாது கைவிட்டமை , சுவாமிகள் இறைவர்பால் தமக்கு உள்ள தோழமை உரிமையால் , எவற்றையும் நெருங்கி வேண்டி எளிதிற் பெற்றேவிடுவாராக , இது போது அது கூடாதாயினமைபற்றி , ` நானும் இத்தனை வேண்டுவது ` என்றார் . உயிரோடே நரகத்து அழுந்துதலாவது , கண்ணிழந்து அல மருதல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

மற்றுத் தேவரை நினைந்துனை மறவே
னெஞ்சி னாரொடு வாழவு மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
பேதை யேன்பிழைத் திட்டதை யறியேன்
முற்று நீயெனை முனிந்திட அடியேன்
கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , நான் பிறர் ஒருவர் தேவரை நினைந்து உன்னை மறந்தேனில்லை ; அத்தன்மையான நெஞ்சை யுடையவருடன் சேர்ந்திருக்கவும் மாட்டேன் ; அங்ஙனமாக , நீ என்னை முற்றும் வெகுளுமாறு , உன்னை இனிதே பெற்றிருந்தும் பெறாதொழிகின்ற பேதையேனாகிய யான் செய்த பிழைதான் இன்னதென்று அறிகின்றிலேன் ; நான் உன்னை ஓர் இமைப்பொழுதும் மறவேனாயினேன் , இதன்மேல் , உன் அடியேனாகிய யான் செய்யக் கடவதாய் எஞ்சி நிற்பதொரு கடமை யாது ! ஒன்றுமில்லையாதலின் , யான் உற்ற துன்பத்தையும் , மிக்க பிணியையும் நீக்கியருள் .

குறிப்புரை :

சுவாமிகள் உடம்பிற் பிணியும் பெற்றமை யறிக . ` திருவாரூரில் உள்ள தேவனும் , ஒற்றியூரிலுள்ள நீயேயன்றி வேறொரு வன் அல்லனே ` எனவும் , ` நல்லனவாயினும் , தீயனவாயினும் என் செயற்கு நானே முதல்வனாவது , உன்னை மறந்து செய்யினன்றோ ` எனவும் , அங்ஙனமின்றி ` உன்னையே நினைந்து செய்யும் யான் குற்ற முடையேனாயது இவ்வாறு என்பது விளங்குகின்றதில்லை ` எனவும் , ` உன்னை ஓர் இமைப்பொழுதும் மறவாமைக்குமேல் , உயிர்கள் பெறுந்தூய்மையாவது ஒன்று உண்டோ ` எனவும் அருளியவாறு . ` இமைப்பொழுதும் ` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது . சுவாமிகளது உண்மைநிலை இதுவேயாகவும் , அவர்மாட்டு இறைவன் இவையெல்லாம் நிகழச் செய்தது , உலகிற்கு உணர் வுண்டாக்கவே என்பது இதனாற் கடைப்பிடித்துணர்ந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

கூடி னாய்மலை மங்கையை நினையாய்
கங்கை யாயிர முகமுடை யாளைச்
சூடினாய் என்று சொல்லிய புக்கால்
தொழும்பனே னுக்குஞ் சொல்லலு மாமே
வாடி நீயிருந் தென்செய்தி மனமே
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
ஊடி னால்இனி யாவதொன் றுண்டே
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , ` நீ முதலில் மலைமகளை ஒரு பாகமாகப் பொருந்தினாய் ; பின்பு ஆயிரமுகமுடைய கங்கையாளை முடியில் சூடினாய் ; இதனை நினைகின்றிலையே ` என்று சொல்லப் புகுந்தால் , அஃது அடிமையாகிய எனக்குக் கூடுமோ ! ` மனமே நீ துன்ப முற்று என்ன பெறப்போகின்றாய் ` என்று மனத்தோடே சொல்லிக் கொண்டு . யான்அடைந்த குற்றத்திற்கு அஞ்சி உன்னிடத்திலே பிணங் கினால் , இனி வருவதொன்று உண்டோ ?

குறிப்புரை :

` யான் ` கொண்டது நீ முன்பு செய்து காட்டிய வழியேயன்றோ ; என்னை ஒறுப்பது என் ` என்பதனை அடிமையாகிய நான் சொல்லுதல் கூடுமோ என்றவாறு . ` தொண்டனேனுக்கும் ` என்னும் உம்மை , இழிவு சிறப்பு . ` மனனே ` என்றதன்பின் . ` என்று ` என்பது தொகுத்தலாயிற்று ; இவ்வாறன்றி , இறைவனை நோக்கிக் கூறிமுடித்தபின் , மனத்தை நோக்கிக்கூறி இரங்கி நின்றதாக வேறாகவே வைத்துரைப்பினுமாம் . இறைவன் காட்டிய வழியே செய்ததாவது , பரவையாரை மணந்தபின் , சங்கிலியாரை மணந்தமை . இச்செயலிடத்துச் செய்யும் சூள் சூளன்று என்பது , உன் செயலாலே அறியப்பட்டதே என்றல் திருவுள்ளம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்
மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையல் போகுரு டாஎனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

வேதத்தை ஓதுபவனே , மணி முதலியவற்றைக் கரையிடத்துக் கொணர்ந்து சேர்க்கும் தண்ணிய கடல் அலைகள் வந்து உலவுகின்ற , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , எனக்கு வலிமையாய் உள்ளவனே , மணி போல்பவனே , அழகுடையவனே , நீ எனக்கு , ` மகம் ` என்னும் நாண் மீன்கீழ் வந்த , ` சனி ` என்னும் கோள்போல்பவனாயினை ; அகத்தில் உள்ள பெண்டுகள் , நான் , ஆவது ஒரு காரியம் சொன்னால் , ` கண்ணிலியே நீ என் அறிவாய் ; கூவாதே ; போ ` என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன் ; முகத்தில் கண்ணில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன் ? மூன்று கண்களையுடையவனே , இது முறையோ !

குறிப்புரை :

சுவாமிகள் தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறுவாரல்லாராயினும் , அஃது உலகியலாதலின் , அவரிடமும் இஃது உண்டாயின் வியப்பில்லையென்றவாறு . சனி மகத்தில் வந்தால் , நாட்டிற்கும் , மக்களுக்கும் தீங்குவரும் என்றல் , கணிநூல் துணிபு . துன்பம் மிக்கதாயினும் இறைவனை இத்துணை வைது கூறுதல் கூடா தெனினும் , அவன் தன் அடியவரிடத்து இன்னோரன்னவற்றையும் பொறுக்கும் பேரருளாளன் என்பதை விளக்க , இவ்வாறு இத்திரு மொழி எழுந்தது என்க . ` அழையேல் ` என்பதும் பாடம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
ஒற்றி யூருறை செல்வனை நாளும்
ஞாலந் தான்பர வப்படு கின்ற
நான்ம றைஅங்க மோதிய நாவன்
சீலந் தான்பெரி தும்மிக வல்ல
சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்
பரக திதிண்ணம் நண்ணுவர் தாமே

பொழிப்புரை :

கடல் அலைகள் வந்து உலவுகின்ற கரையின்மேல் உள்ள திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனை , என்றும் உலகத்தாரால் போற்றப்படுகின்ற நான்கு வேதம் , வேதத்தின் ஆறு அங்கங்கள் இவற்றை ஓதிய நாவையுடையவனும் , ஒழுக்கத்தில் மிகவல்ல இளமையை யுடையவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பி யாரூரன் பாடிய இப் பத்துப்பாடல்களாகிய இவைகளை வல்லவர்கள் , மேலான கதியைப் போய் அடைவார்கள் ; இது திண்ணம் .

குறிப்புரை :

` பெரிதும் மிக ` ஒருபொருட் பன்மொழி . சிறுமை , இங்கு இளமையைக் குறித்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , முனிவன் ஒருவன் உன்னை அடைக் கலமாக அடைய , அவனைக் காத்தல் நிமித்தமாக , அவன் மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான் , உனது அவ்வாற்றலையறிந்து , என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின் , என்தந்தையாகிய நீ , ` இவன் என் அடியான் ; இவனைத் துன்புறுத்தாதீர் ` என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` என்னை ஏன்றுகொண்டருள் ` என்பது குறிப்பெச்சம் . ` உன்னை ` என இரண்டனுருபும் , ` அடைக்கலமாக ` என ஆக்கமும் வரு விக்க . ` ஆருயிர் ` என்றது , கூற்றுவனது நிலைக்கு இரங்கிய இரக்கம் பற்றி வந்தது . ` வவ்வினாய்க்கு அடியேன் ` எனக்கூட்டுக . ` வவ்வினாய்க்கு ` என்றதனால் , வன்மை , அங்ஙனம் வவ்விய தனையே குறித்ததாயிற்று , ` வண்மை ` எனப் பாடம் ஓதுவாரும் உளர் . மற்று , அசைநிலை . ` நலியாதீர் ` என்பது இசையெச்சம் . எண்ணுதற் கருவியாகிய சிந்தையை எண்ணப்படுதலையுடைய காரியமாகிய விலக்குதலாக ஒற்றுமைப்படுத்தோதினார் . இது , மார்க்கண்டேய முனிவருக்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , இவ்வூரிலுள்ளவர் , ` உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று ; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம் ; எங்களை உய்யக்கொள்க ` என்று வேண்ட , ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை , அந் நிலைமாறி , எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி , அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

சொற்சுருக்கங்கருதி இவ்வாறோதினாரேனும் , எங்கும் மாமழை பெய்து பெருவெள்ளம் தோன்றியும் விடாதாக , இம் மழையைத் தவிர்ப்பின் மற்றும் பன்னிரு வேலி தருவோம் என்று வேண்ட ` அங்ஙனமே தவிர்த்து , இரண்டு பன்னிரு வேலிகளைக் கொண்டருளும் , என்றலே பொருளாதலுணர்க . ` பரந்த ` என்னும் வினைப் பெயரின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . அப்பெயர் , ` பெய்யும் ` என்னும் பயனிலை கொண்டது . இஃது இத்தலத்தில் உள்ளார்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது . இப்பெருமானை இவ்வாறு வேண்டித் திருவருள் பெற்று , தாம் நேர்ந்தவாறே இரண்டு பன்னிரு வேலிகளை இறைவற்குக் கொடுத்தவர்களில் முதல்வர் , ` ஏயர்கோன் கலிக்காம நாயனார் ` என்பதனை வருகின்ற திருப்பாடலால் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்த சண்டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

பூதகணங்கட்குத் தலைவனே , அழகிய சோலை களையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நீ , நல்ல நிலங்கள் பன்னிருவேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த , துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்ததனையும் , முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து ஆட்ட அதனைப் பொறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலாலாகிய பெருமான்மேற் சென்ற தந்தையது பாதங்கள் துணி பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேற் சூடியுள்ள கொன்றைமாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து , அடியேன் , உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

` உற்ற ஏத இரும்பிணி ` எனவும் சென்றதாள் எனவும் இயையும் . மேலைத் திருப்பாடலில் , எல்லாம் இனிது விளங்க அருளி னாராகலின் , ஈண்டு , ` ஈரறு வேலி ` என்றே அருளிப் போயினார் . ` வேலி ஏயர்கோன் ` என்றது , ` வேலியைக் கொடுத்த ஏயர்கோன் ` என விரியும் . வரலாறு கூறுதலின் , ` சிவன் ` என்று வேறாக அருளினார் . ஆளி - ஆளுதலையுடையவன் . இது , சண்டேசுர நாயனார்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

பொன்போலும் , திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளி யிருப்பவனே , ` நல்ல தமிழைப் பாட வல்ல ஞானசம்பந்தனும் , நாவுக் கரையனும் , நாளைப்போவானும் , சூதாடுதலை நன்கு கற்ற மூர்க் கனும் , நல்ல சாக்கியனும் , சிலந்தியும் , கண்ணப்பனும் , கணம் புல்லனும் ` என்ற இவர்கள் குற்றமான செயல்களைச் செய்யவும் , அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து , வந்து , அடியேன் , உனது ஒலிக்கின்ற கழலை யணிந்த திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` குற்றம் ` என்றது , உலகத்தார் கருத்து வகைபற்றி , அவ்வாற்றால் ஞானசம்பந்தர் செய்தது , பாண்டியன் சமணரைக் கழு வேற்றியதனை விலக்கா திருந்தது . நாவுக்கரசர் செய்தது , சமண சமயம் புக்கு முதல்வன் திருவருளை இகழ்ந்து நின்றது . நாளைப் போவார் செய்தது , தில்லை நகருள்ளும் , திருக்கோயிலுள்ளும் புக முயன்றது . மூர்க்கர் செய்தது , சூதாடியது . சாக்கியர் செய்தது , இலிங்கத் திரு மேனியைக் கல்லால் எறிந்தது , சிலந்தி செய்ததுவாய்நூலால் இலிங்கத் தின்மேற் கூடு வேய்ந்தது . கண்ணப்பர் செய்தவை , செருப்புக் காலை இலிங்கத் திருமேனியின் முடியில் வைத்ததும் , வாய்நீரை அதன்மேல் உமிழ்ந்ததும் , எச்சிற் படுத்த இறைச்சியைப் படைத்ததும் . கணம்புல்லர் செய்தது , திருக்கோயிலில் தம் தலைமயிரை விளக்கென்று எரித்தது . இவர் தாம் இவற்றை , மனத்துக்கண் மாசிலராய் அருள்வழியானும் , அன்புவழியானும் செய்தமையை உலகர் அறிய மாட்டாராக , நீ அறிந்து அருள்செய்தனை என்று அறிந்து உன்னை வந்து அடைந்தேன் என்றவாறு . இதனானே , தாம் இறைவனைப் பரவையார் பால் தூது செல்லுமாறு இரந்தமையும் குற்றமாகாமைக் காரணமும் புலப் படுத்தவாறாயிற்று . மேலைத் திருப்பாடலில் சண்டேசுர நாயனாருக்குச் செய்த திருவருளை நினைந்தருளி , அன்ன வாகப் பிற நாயன்மார்க்குச் செய்த திருவருட்டிறங்களை , இத்திருப் பாடலில் நினைந்து அருளிச் செய்தார் என்க . ` சிலந்தி ` என்றதும் , கோச்செங்கட்சோழ நாய னாரையே யாதல் அறிக . ` என்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று . திணைவிராய் எண்ணப்பட்டன , பன்மை பற்றி , ` இவர்கள் ` என உயர்திணை முடிபு கொண்டது . ` பொன் ` என்னும் உவமை சிறப்புப்பற்றி வந்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை யுண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , தேவர்கள் , அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி , கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து , அதில் அமுதந் தோன்றாது பெருவிடந் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஓடிவந்து அடைய அவர்கட்கு உதவுதல் கருதி , கருமை நிறைந்த , அக் கடல் விடத்தை உண்டு , அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தே வைத்த பேரருளாளனே , நீ செய்த இந் நல்ல செய்கையையறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

செய்யுளாகலின் , ` அவர் ` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது . ` இரிய ` என்றது , அதன் காரியமுந் தோன்ற நின்றது . இது , நஞ்சினைஉண்டு தேவர்களைக் காத்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளிச்செய்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்க மில்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை
யர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவியசோலையையுடைய திருப்புன்கூரில் எழுந் தருளியிருப்பவனே , இயக்கரும் , கின்னரரும் , இயமனும் , வருணனும் . அக்கினியும் , இயங்குகின்ற வாயுவும் , சூரியனும் , சந்திரனும் , வசுக்களும் , ஏனைய தேவர்களும் , அசுரர்களும் , மற்றும் அறியாமை நீங்கின புலி , குரங்கு , பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி வழிபட்டுப் பெற்ற அரிய திருவருளை யறிந்து அடியேனும் , தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

` யமனொடு ` என்பதும் பாடம் . ` இயங்கு ` என்றதனை , ` வளி ` என்றதனோடு கூட்டுக . ` மயக்கமில் ` என்றதனை அஃறிணைக்கே ஓதினார் , அவைகட்கு அவ் வியல்பு வாய்த்தல் அரிதாதல் நோக்கி . ` வானவர் தானவர் ` என்பன , செய்யுள் நோக்கிப் , பின் நின்றன . ` அர்ச்சித்தார் ` என்றது முற்றெச்சம் . பன்மை பற்றி உயர்திணையாற் கூறினார் . இங்குக் கூறப்பட்டோர் பலரும் சிவபெருமானை வழிபட்டுத் தாம்தாம் வேண்டிய பயனைப் பெற்றமை , புராணங்கள் பலவற்றாலும் , தலங்கள் பலவற்று ஐதிகங் களாலும் பலரும் நன்கறிந்தது . இது , வழிபட்டோர் பலர்க்கும் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
பொழில்கொளால் நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

தூயவனே , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளையுடைய முனிவர்களுக்கு , அன்று சோலைகளைச் சூழக்கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும் , அருச்சுனனுக்கு அன்று பாசுபதத்தைக் கொடுத்தும் பகீரதன் வேண்டிக்கொள்ள அவன்பொருட்டு , ஆரவாரித்து வீழ்ந்த நீர்வடிவாகிய கங்கையாளை முன்பு உனது சடையில் , அடக்கியும் அருள்செய்தாய் ; அவற்றை யெல்லாம் அறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` போர்த்த ` என்றது ` பொதிந்த ` என்னும் பொருட்டாய் நின்றது ; அதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது . கேள்வியது பெருமை , செவிகள்மேல் ஏற்றப்பட்டது . ` ஆடையைப் போர்த்து அரு மறையை உபதேசிக்கப்பட்ட செவி ` என்றுமாம் . ` அன்று ` என்ற தனை , ` பார்த்தனுக்கு ` என்றதற்குங் கூட்டுக . ஈண்டுக் கூறப்பட்டவை கட்குக் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது . இது , முனிவர் நால்வர்க்கும் , அருச்சுனனுக்கும் , பகீரதனுக்கும் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

தேவதேவனே , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நீ , முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக் கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு , மற்றொருவனை , நீ , கரிந்த காடே அரங்கமாக , உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும் படி அருள்செய்ததை யறிந்து வந்து . அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` தாரகாக்கன் , கமலாக்கன் , வித்தியுன்மாலி ` என்னும் தலைவர் உட்படத் திரிபுரத்தில் இருந்தவர் அனைவரும் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடவும் , ` சுதன்மன் , சுசீலன் , சுபுத்தி ` என்னும் மூவர்மட்டும் முன்போலவே சிவநெறியில் மாறாது நின்று சிவபிரானிடத்து அன்புபூண்டு ஒழுகினமையால் , சிவபெருமான் அவர்களைமட்டும் அழியாது காத்து , மேற் சொல்லியவாறு திருவருள் செய்தனன் என்க . இதனை ` மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார் ` ( தி .1 ப .69. பா .1) எனவும் , ` திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தலையானை ` ( தி .6 ப .60 பா .9) எனவும் , ` உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற ` ( தி .8 திருவா . திருவுந்தி .4) எனவும் ஆசிரியர் அனைவரும் சிறந்தெடுத்தோதிப் போற்றுமாறு காண்க . இவ்வரலாறு , காஞ்சிப் புராணத்து முப்புராரிக் கோட்டப் படலத்துள் விளங்கக் கூறப்படுதல் காண்க . திரிபுரத்தலைவர் , ` தாரகாக்கன் , கமலாக்கன் , வித்தியுன்மாலி ` என்போர் எனவும் , திரிபுரத்தில் உய்ந்த மூவர் , ` சுதன்மன் , சுசீலன் , சுபுத்தி ` என்போர் எனவும் பிரித்தறிந்து கொள்க . சிவபிரான் திருக்கோயில்களில் துவார பாலகர்களாய் நிற்பவர் இவருள் இருவரே என்பது இத் திருப்பாடலால் இனிது விளங்குதல் காண்க . இவ்வரலாறு , ` உலகிற்குத் தீங்குகள் நேரினும் , சிவபிரானைப் பற்றிநிற்பாரை அவை ஒன்றுஞ் செய்யா ` என்பதனை இனிது விளக்கும் . இது , முப்புரத்துள் வாழ்ந்த மூவர்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத்
தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நூலறிவினால் மிக்க ஆறுவகைப் பட்ட சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்திற்றானே , அரிய திரு வருளைச் செய்தும் , அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை , அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து , பின்பு அவன் பாடிய , உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு , அழகிய வாளோடு , மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

சமயங்களை ` ஆறு ` என்றல் தொன்றுதொட்ட வழக்கு . இவைபற்றிக் கூறப்படுவன பல ; அவற்றை ஆறாந்திருமுறைக் குறிப் பிற் காண்க . ` யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர் ` - சிவஞானசித்தி . சூ .2.25 என்றவாறு , எல்லாச் சமயங்களிலும் இருந்து அருள்பவன் சிவ பெரு மானேயாகலின் , ` அறுவகைச் சமயத்து அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து ` என்றருளினார் . ` அவ்வவர் ` என்றது , ` அவ ரவருக்கு ஏற்ற பெற்றியான் ` என்றவாறு , ` சமயம் அவரவர்க்கு ` என்பது பாடம் அன்று . ` புரிந்து ` என்ற எச்சம் எண்ணுப் பொருட் டாகலின் , இவ்வாறு உரைக்கப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானை
உம்ப ராளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமி ழைந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை யிலரே

பொழிப்புரை :

அசைதலையுடைய பெரிய யானையினது தோலை உடையவனும் , காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும் , செம் பொன்னே போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும் , தேவர் களை ஆள்பவனும் , உமையவளுக்குத் தலைவனும் ஆகிய , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பி , அங்ஙனம் விரும்பிய அவ்வன்பானே சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர் , நீங்குதற்கரிய வினைகளை இல்லாதவராவர் ; இது திண்ணம் .

குறிப்புரை :

ஈற்றில் நிற்கற்பாலதாய , ` செழும்பொழில் திருப்புன் கூருளானை ` என்பது , செய்யுள் நோக்கி இடைநின்றது . ஏகாரம் , தேற்றம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தற்றனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிடற் றானைக்
கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளைவ ரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

எருது ஒன்றினை ஓர் ஊர்தியாக உடையவனும் , ஒளியையுடைய நெற்றியையுடைய ஒப்பற்ற சிவபெருமானும் , கருமை பொருந்திய நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும் , பகைவரது ஊர்கள் மூன்றை எரித்தவனும் ஆகிய , நீரில் வாழ்வனவாகிய வாளை மீனும் , வரால் மீனும் குதிகொள்ளுகின்ற நிறைந்த நீரையுடைய கழனிகளை யுடைய செல்வம் பொருந்திய திருநீடூரின்கண் , நில வுலகில் உள்ளார் யாவரும் துதித்து வணங்குமாறு எழுந்தருளியிருக் கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

` ஆகாதன்றே ` என்பது , எதிர்மறை எச்சமாயும் , ஏனையது குறிப்பெச்சமாயும் வந்தியையும் . ` விடை ஒன்று ஓர் ஊர்வது உடையானை ` என மாற்றியுரைக்க . ஒளியுடையதாயது , நெருப்புக் கண்ணினால் என்க . ` கண்ணுதல் ` என்றது , ` சிவபிரான் ` என்னும் அள வாய் நின்றது . இத்திருப்பதிகத்துள் , ` பரமன் ` முதலியவற்றை , ` இறைவன் ` என்னும் பெயரளவினவாகக் கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

துன்னு வார்சடைத் தூமதி யானைத்
துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
பன்னு நான்மறை பாடவல் லானைப்
பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
என்னை இன்னருள் எய்துவிப் பானை
ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
புனித னைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

நெருங்கிய நீண்ட சடையின்கண் தூய்தாகிய பிறையைச் சூடினவனும் , மயக்கம் வாராதவாறு உய்யும் நெறியைக் காட்டுகின்றவனும் , உயர்ந்தோர் ஓதும் நான்கு வேதங்களைச் செய்ய வல்லவனும் , அருச்சுனனுக்கு அருள் புரிந்த தலைவனும் , அவ்வினிய அருளை என்னை எய்துவிப்பவனும் , அயலாய் நிற்பார்க்கு அயலாய் நிற்பவனும் ஆகிய , புன்னையும் குருக்கத்தியும் அரும்புகள் மலர்கின்ற திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

` துயக்குறாமை ` என்னும் எதிர்மறை வினையெச்சம் ஈறு குறைந்து நின்றது . ` என்னை இன்னருள் எய்துவிப்பான் ` என்றது , ` படையை ஊரடைவித்தான் ` என்பதுபோல நின்றது . ` புன்னை மாதவி போதலர் ` என , சினைவினை முதல்மேல் நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

கொல்லு மூவிலை வேலுடை யானைக்
கொடிய காலனை யுங்குமைத் தானை
நல்ல வாநெறி காட்டுவிப் பானை
நாளு நாமுகக் கின்றபி ரானை
அல்ல லில்லரு ளேபுரி வானை
ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக்
கூறி நாம்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

கொல்லுதற் கருவியாகிய சூலத்தை உடையவனும் , கொடிய இயமனையும் அழித்தவனும் , நல்லனவாகிய நெறிகளையே காட்டுவிக்கின்றவனும் , எந்நாளும் நாம் விரும்புகின்ற தலைவனும் , துன்பம் இல்லாத திருவருளைச் செய்பவனும் ஆகிய , முழுகுதற்குரிய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக் கின்ற சிவபெருமானை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

நன்னெறிதான் , அவரவர் நிலைக்கேற்பப் பலவாய் நிற்குமாதலின் , ` நல்லவாம் ` எனப் பன்மையாக அருளினார் . அவை களைப் பெரும்பான்மையும் பிறர்வாயிலாகவே உணர்த்துதலின் , ` காட்டுவிப்பானை ` என்று அருளினார் . ` இல்லருள் `, இல்லாமைக்கு ஏதுவாய அருள் . காவிரியாற்று நீராகலின் , ஆடும் நீராயிற்று . கொல்லை வெள்ளேறு - முல்லை நிலத்தில் உள்ள எருது . ` நாம் ` என்றது , அடியார் பலரையும் உளப்படுத்தும் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

தோடு காதிடு தூநெறி யானைத்
தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்
பாடு மாமறை பாடவல் லானைப்
பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமொ டாட
அலைபு னற்கழ னித்திரு நீடூர்
வேட னாயபி ரானவன் றன்னை
விரும்பி நாம்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

தோட்டைக் காதிலே இட்ட , தூய நெறியாய் உள்ள வனும் , உயிர்கட்குப் பிறப்பும் இறப்புமாய் நிற்பவனும் , இசையொடு பாடுதற்குரிய சிறந்த வேதத்தைச் செய்ய வல்லவனும் ஆகிய , பசிய சோலைகளில் குயில்கள் கூவ , அவ்விடத்தே , ஆடுந் தன்மையுடைய சிறந்த மயில் அன்னத்துடன் நின்று ஆட அலைகின்ற நீரையுடைய வயல்களையுடைய திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை , நாம் விரும்பி வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

வேடனாயது , அருச்சுனனுக்காக என்க . இனி , ` உருவ முடையனாய் எழுந்தருளியிருக்கின்ற ` என்றும் ஆம் . ` துறப்பு ` என்ற விடத்து , எண்ணும்மை தொகுத்தலாயிற்று . ` கூவிட , ஆட அலைகின்ற புனல் ` என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

குற்ற மொன்றடி யாரில ரானாற்
கூடு மாறுத னைக்கொடுப் பானைக்
கற்ற கல்வியி லும்மினி யானைக்
காணப் பேணு மவர்க்கெளி யானை
முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை
மூவ ரின்முத லாயவன் றன்னைச்
சுற்று நீர்வயல் சூழ்திரு நீடூர்த்
தோன்ற லைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

அடியவர் குற்றம் சிறிதும் இலராயினாரெனின் , அவர்கள் அடையுமாறு தன்னையே கொடுப்பவனும் , வருந்திக் கற்ற கல்வியினும் மேலாக இனிமையைச் செய்கின்றவனும் , ஐம்புலன்களை யும் முற்றத்துறந்து பற்றின்றி இருப்பவனும் , காரணக் கடவுளர் மூவருள் முதல்வனாயினவனும் ஆகிய , சுற்றிலும் நீரையுடைய வயல் கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் அங்குச் சென்று அவனைவணங்குவோம் .

குறிப்புரை :

யாவரும் அடியவரேயாதலின் , மக்களை , ` அடியவர் ` என்றார் . ` கூடுமாறதனை ` எனவும் , ` சுற்று நீள் வயல் ` எனவும் ஓதுவன சிறவாமை காண்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

காடி லாடிய கண்ணுத லானைக்
கால னைக்கடிந் திட்டபி ரானைப்
பாடியா டும்பரி சேபுரிந் தானைப்
பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்
தேடி மாலயன் காண்பரி யானைச்
சித்த முந்தெளி வார்க்கெளி யானைக்
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
கூத்த னைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

காட்டில் ஆடுகின்ற , கண்ணையுடைய நெற்றியை யுடையவனும் , கூற்றுவனை அழித்த தலைவனும் , அன்பினால் பாடி ஆடுகின்ற செயலையே விரும்புபவனும் , பொருட்சார்புகளையும் உயிர்ச்சார்புகளையும் நீக்குபவனும் , மாலும் அயனும் தேடிக் காணுதற்கு அரியவனும் , சொல்லாலன்றி , உள்ளத்தாலும் தன்னைத் தெளிந்தவர்க்கு எளியவனும் ஆகிய , அளவற்ற தேவர்கள் தொழு கின்ற , திருநீடூரின்கண் எழுந்தருளியுள்ள இறைவனை நாம் வணங் காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

` காட்டில் ` என்பது தொகுத்தலாயிற்று . ` கோடி ` என்றது , மிகுதியைக் குறித்தவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

விட்டி லங்கெரி யார்கையி னானை
வீடி லாத வியன்புக ழானைக்
கட்டு வாங்கந் தரித்தபி ரானைக்
காதி லார்கன கக்குழை யானை
விட்டி லங்குபுரி நூலுடை யானை
வீந்த வர்தலை யோடுகை யானைக்
கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க்
கண்டு நாம்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

கவைவிட்டு விளங்குகின்ற தீப்பொருந்திய கையை யுடையவனும் , அழியாத , பரந்த புகழையுடையவனும் , மழுவை ஏந்திய தலைவனும் , காதின்கண் பொருந்திய பொற்குழையை யுடைய வனும் , மார்பின்கண் எடுத்து விடப்பட்டு விளங்குன்ற முப்புரி நூலை உடையவனும் , இறந்தவரது தலையோட்டைக் கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை . நாம் , கட்டியைத் தரும் கரும்புகள் வளர்ந்துள்ள திருநீடுரின்கண் கண்டு வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , நாம் அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

இறைவன் எல்லாம் உடையவனாகலின் , பொற் குழையை யுடையவனாதல் சொல்லவேண்டுமோ என்பது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மாய மாய மனங்கெடுப் பானை
மனத்து ளேமதி யாயிருப் பானைக்
காய மாயமு மாக்குவிப் பானைக்
காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
ஓயு மாறுறு நோய்புணர்ப் பானை
ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
வேய்கொள் தோளுமை பாகனை நீடூர்
வேந்த னைப்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

நிலையில்லாத பொருள்கள் மேற்செல்லுகின்ற மனத்தோடு ஒற்றித்து நின்று அதன்வழியே செல்லும் அறிவாய் இருப்பவனும் , பின்னர் அம்மனத்தின் செயலைக்கெடுத்து அறிவை ஒரு நெறிப்படுத்துபவனும் , காற்றும் தீயும் முதலிய கருவிகளாய் நின்று உடம்பாகிய காரியத்தைப் பண்ணுவிப்பவனும் , பின்னர் அதனை அழிப்பவனும் உயிர்கள் வருந்துமாறு , அவற்றை அடையற் பாலனவாகிய வினைப்பயன்களைக் கூட்டுவிக்கின்றவனும் , பின்னர் விரைவில் அவ்வினைகளை அழிப்பவனும் , இவை எல்லாவற்றையும் செய்தற்கு மூங்கில் போலும் தோள்களையுடைய உமையைத் துணையாகக்கொள்பவனும் ஆகிய , திருநீடூரின்கண் எழுந்தருளி யுள்ள முதல்வனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

இத்திருப்பாடலுள் , இறைவன் தனது சத்தியால் , உயிர் கட்குப் பந்தமும் வீடும் தரும் முதல்வனாய் நிற்றலை விரித்தவாறு . படைத்தல் முதலியவற்றைப் பிறர் வாயிலாகவும் செய்தலின் , ` ஆக்கு விப்பான் ` என்றும் அருளினார் . ` உரு நோய் புணர்ப்பானை ` என்பது பாடமாயின் , ` உடம்பின்கண் வினைப்பயன்களை வருவிப்பவனும் ` என உரைக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

கண்ட முங்கறுத் திட்டபி ரானைக்
காணப் பேணு மவர்க்கெளியானைத்
தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத்
துன்ப முந்துறந் தின்பினி யானைப்
பண்டை வல்வினை கள்கெடுப் பானைப்
பாக மாமதி யானவன் றன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
கேண்மை யாற்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

கண்டத்தைக் கறுப்பாகவும் செய்து கொண்ட தலை வனும் , தன்னைக் காண விரும்பும் அடியார்களுக்கு எளியவனும் , தனக்குத் தொண்டு பூண்டவரைப் பெரிதும் விரும்புபவனும் , துன்பம் இல்லாத இன்பத்தைத் தரும் இனியவனும் , பழைய வலிய வினை களையெல்லாம் அழிப்பவனும் , பகுதிப் பட்ட சந்திரனுக்குக் களை கண் ஆயினவனும் ஆகிய இறைவனை , நாம் , கெண்டை மீன்களும் , வாளைமீன்களும் துள்ளுகின்ற நீரையுடைய திருநீடூரின்கண் , கேண்மையோடு வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

உம்மை மாற்றியுரைக்கப்பட்டது , அது , ` மேனி முழுதும் சிவக்கச் செய்துகொண்டவன் , ஓரிடத்துக் கறுக்கவும் செய்து கொண்டான் ` என்பது தோற்றி நிற்றலின் , இழிவு சிறப்பு . உலகின்பம் துன்பத்தொடு விரவாது நிற்றல் இன்மையின் , இறைவன் இன்பத்தினது சிறப்பு உணர்த்துவார் , ` துன்பமுந்துறந்த இன்பத்தையுடைய இனிய வன் ` என்றார் . இவ்வும்மை , உயர்வு சிறப்பு . ` துறந்த ` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று . ` மதிக்கு ` என உருபு விரிக்க . கேண்மை , ஆண்டானும் , அடிமையுமாகிய உறவு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

அல்ல லுள்ளன தீர்த்திடு வானை
அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்
கொல்லை வல்லர வம்மசைத் தானைக்
கோல மார்கரி யின்னுரி யானை
நல்ல வர்க்கணி யானவன் றன்னை
நானுங் காதல்செய் கின்றபி ரானை
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
ஏத்தி நாம்பணி யாவிட லாமே

பொழிப்புரை :

` துன்பம் ` எனப்படுவனவற்றைப் போக்கு கின்றவனும் , தன்னை அடைந்தவர்கட்கு அமுதம் போன்று பயன் தருப வனும் , கொல்லுதலையுடைய வலிய பாம்பைக் கட்டியிருப்ப வனும் , அழகு பொருந்திய யானையின் தோலையுடையவனும் , நன்னெறியில் நிற்பவர்கட்கு அணிகலமாய்த் திகழ்பவனும் , அடி யேனும் விரும்புகின்ற தலைவனும் ஆகிய இறைவனை , நாம் , இரவில் மல்லிகை மலர்கள் மிகவும் மணம் வீசுகின்ற திருநீடூரின் கண் துதித்து வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

குறிப்புரை :

ஞான நெறியில் நிற்பவர்க்கு அந்த ஞானத்தைச் சிறப் பித்து நிற்றலின் , ` அணியானவன் ` என்று அருளினார் ; இதற்கு , ` அண்மையனானவன் ` என உரைப்பாரும் உளர் . ` ஏகமழ் ` என்றதில் ஏ , உரிச்சொல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

பேரோ ராயிர மும்முடை யானைப்
பேசி னாற்பெரி தும்மினி யானை
நீரூர் வார்சடை நின்மலன் றன்னை
நீடூர் நின்றுகந் திட்டபி ரானை
ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்
ஆத ரித்தழைத் திட்டஇம் மாலை
பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே

பொழிப்புரை :

எல்லாப் பெயர்களையும் உடையவனும் , வாயாற் பேசும்வழி பெரிதும் இனிப்பவனும் , நீர் ததும்புகின்ற நீண்ட சடை யினையுடைய தூயவனும் ஆகிய , திருநீடூரை விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , அவன் திருவடியைக்கண்டு வணங்குதற்கு அன்போடு விரும்பி , நம்பியாரூரன் அனைவரையும் அழைத்துப் பாடிய இத்தமிழ்மாலையால் , நிலவுலகத்து உள்ள எவ்வூரின்கண்ணும் இறைவனைப் பாடி வணங்க வல்லவர் , அவனுக்கு அடியவராகி , முத்தியைப் பெறுவார்கள் .

குறிப்புரை :

முற்றும்மை கொடுத்தோதினமையின், `ஆயிரம்` என்றது, `எல்லாம்` என்னும் பொருட்டாதல் பெறப்பட்டது. பொருள் தோறும் உள்ள பெயர்கள் வேறுவேறாயினும், அவை அனைத்தும், ஆகு பெயரால் இறைவனை உணர்த்தும் தன்மையுடையன என்பது மெய்ந் நூல் துணிபு. இதனால், இறைவன் எல்லாப் பொருள்களுமாய் நிற்றல் பெறப்படுவது என்க. `மாலையால்` என உருபு விரிக்க. `ஊர்` என்ற விடத்து, `எல்லாம்` என்பது வருவிக்க. பரவித்தொழுதலுக்குச் செயப்படுபொருள் எஞ்சி நின்றது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

தலைக்க லன்தலை மேல்தரித் தானைத்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கையா னையுரி போர்த்துகந் தானைக்
கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
அலைத்தசெங் கண்விடை ஏறவல் லானை
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

தலையாகிய அணிகலனைத் தலையில் அணிந்த வனும் , தன்னை எனக்கு நினைக்குமாறு தருபவனும் , கொலைத் தொழிலையும் , கையையும் உடைய யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனும் , கூற்றுவனை உதைத்த , ஒலித்தல் பொருந்திய கழலை யணிந்த திருவடியை உடையவனும் , எதிர்த்தவரை வருத்தும் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர வல்லவனும் ஆகிய , பயிர்கள் தம் தலைமேற்கொண்ட செந்நெற்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , அவன் ஆணை வழியே அவனுக்கு அடிமையானேனாகிய அடிநாய் போன்ற யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` எனக்கு ` எனற்பாலது , ` என்னை ` என உருபு மயக்க மாய் வந்தது . ` குரை ` முதனிலைத் தொழிற்பெயர் . சிவபெருமானுக்கு விடை , அறக்கடவுளும் , திருமாலும் ஆதலின் , தீயவரை அலைத்தல் இருவழியும் ஏற்றல் அறிக . இவற்றைச் செலுத்துதல் பிறரால் ஆகாமை யறிக . ` ஆணை யால் ` என்ற மூன்றாவது ` அடியேன் ` என்ற இறந்த கால வினைக் குறிப்புப் பெயரைக் கொண்டது . அடி நாய் - அடிக்கீழ்க் கிடக்கும் நாய் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

படைகளுள் சூலத்தைப் பழக வல்லவனும் , தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்படுத்துக் கொள் பவனும் , வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சைக்கு விரும்புதலைச் செய்பவனும் , காமனது உடலை அமைப்பு அழியச் செய்தவனும் , கங்கையைச் சடையில் தங்கும்படி வைத்தவனும் , தண்ணிய நீரையுடைய மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும் , எல்லாத் தகுதிகளையும் உடையவனும் ஆகிய , நீர்மடைகளில் நீலோற்பல மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` படைக்கண் ` என்ற கண்ணுருபு , ` உள் ` என்னும் பொருளதாய் வந்தது . சூலம் முத்தலை வேலாதலின் , ஏனைய படைகளிலும் சிறந்தது என்க . ` பாவிக்கொள்ளுதல் ` என்பது , மூடிக்கொள்ளுதல் , சுற்றிக் கொள்ளுதல் முதலியன போல்வது . ` இச்சை காதலித்தான் ` என்றது , ` அணியலும் அணிந்தன்று ` ( புறம் - கடவுள் வாழ்த்து ) என்றாற்போல நின்றது . தாழ்தல் - தங்குதல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

வெந்த நீறுமெய் பூசவல் லானை
வேத மால்விடை ஏறவல் லானை
அந்தமா திஅறி தற்கரி யானை
ஆறலைத் தசடை யானைஅம் மானைச்
சிந்தை என்தடு மாற்றறுப் பானைத்
தேவ தேவன்என் சொல்முனி யாதே
வந்தென்உள் ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

வெந்த சாம்பலை உடம்பிற் பூச வல்லவனும் , வேத மாகிய சிறந்த விடையை ஊர வல்லவனும் , முடிவும் முதலும் அறிதற்கு அரியவனும் , ஆற்றுநீர் மோதுகின்ற சடையை உடையவனும் , பெரி யோனும் , எனது மனக் கலக்கத்தைக் களைபவனும் , தேவர்களுக்குத் தேவனும் , யான் இகழ்ந்து சொல்லிய சொல்லை வெறாமல் வந்து என் உள்ளத்திலே புகுந்து நிற்பவனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

வெந்த நீற்றை மெய்யிற் பூசுதலாவது உலகத்தின் ஆற்றலைத் தாங்குதலாகலானும் , வேதத்தை ஏறுதலாவது , உயிர் கட்குச் செய்வன தவிர்வனவற்றை அறிந்து அறிவித்தலாகலானும் இவை பிறரால் ஆகாமை அறிந்து கொள்க . வேதம் , சிவபெரு மானுக்குக் குதிரை , சிலம்பு முதலியனவாய் அமைந்தமைபோல , விடையாக அமைந்தமை இவ்விடத்துப் பெறப்படுகின்றது . கலக்க மாவது , உலகியலிடத்தும் , பிற தேவரிடத்தும் செல்லுதல் . ` சொல் ` என்றது , ` பித்தன் ` என்றதனை . ` தேவதேவன் ` என்புழியும் இரண்ட னுருபு விரிக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்
தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்
படங்கொள்நா கம்மரை யார்த்துகந் தானைப்
பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
நடுங்கஆ னையுரி போர்த்துகந் தானை
நஞ்சம்உண் டுகண் டங்கறுத் தானை
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

பெரிய கைகளால் மலர்களை எடுத்துத் தூவிக் கும்பிடுகின்றவர்கள் , பிறவிடத்துச் செல்லாது , தன் திருவடியிடத்தே செல்லுமாறு செலுத்த வல்லவனும் , படத்தை உடைய பாம்பை அரை யில் விரும்பிக் கட்டியுள்ளவனும் , முன்னர் விளங்கும் பற்களை யுடைய வெள்ளிய தலையில் உண்ணுதல் உடையவனும் , தன் தேவியும் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்துள்ள வனும் , நஞ்சினை உண்டு கண்டம் கரியதாகியவனும் , மாதொரு பாகனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` தடங்கை ` என விதந்தது , அவை தரப்பட்டது . இதன் பொருட்டே யாயினமையை முடித்தற்கு , ` தன்னடிக்கு ` என்றது , உருபு மயக்கம் . ஏகாரம் பிரிநிலை . ` செல்லுமாறு ` என்றதன்பின் , ` செலுத்த ` என்பது வருவிக்க . இனி ` செலுத்துமாறு ` என்னும் வினைதானே , ` செல்லுமாறு ` எனத் தொக்குத் தன்வினையாய் நின்றது எனலுமாம் . ` பல்லின் ` என எடுத்தோதினமையால் , அதன் விளக்கம் பெறப் பட்டது . ` தேவியும் ` என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

வளைக்கைமுன் கைமலை மங்கை மணாளன்
மார னாருடல் நீறெழச் செற்றுத்
துளைத்தவங் கத்தொடு தூமலர்க் கொன்றை
தோலும்நூ லும்துதைந் தவரை மார்பன்
திளைக்குந் தெவ்வர் திரிபுர மூன்றும்
அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

வளையை அணிந்த முன் கையையுடைய மலை மகளுக்கு மணாளனும் , மன்மதனது அரிய உடம்பு சாம்பலாய் ஒழியு மாறு அழித்தவனும் , துளைசெய்யப்பட்ட எலும்பும் , தூய கொன்றை மலரும் , தோலும் , நூலும் நெருங்கிய , கீற்றுக்களையுடைய மார்பை யுடையவனும் , வானத்தில் திரிகின்ற மூன்று அரண்களும் , அதன்கண் வாழ்ந்து இன்பம் நுகர்கின்ற பகைவர் மூவரும் , அவரைச் சார்ந்த அசுரரும் , அவர்தம் பெண்டிரும் , பிள்ளைகளும் வெந்தொழியுமாறு வளைத்த வில்லையுடையவனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

ஏனைய திருப்பாடல்களிற்போல , இத்திருப்பாடலி லும் , ` மணாளன் ` முதலிய பெயர்களிலெல்லாம் , இரண்டனுருபு விரிக்க . ` செற்று ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது . கோத்து அணிதற்பொருட்டு , எலும்பு , துளையிடப்படுவதாயிற்று . தோல் , பூணூலில் முடியப்படுவது ; இது , பிரமசாரி யாதலை உணர்த்தும் . ` மூன்றும் ` எனப் பின்னர் வருகின்றமையின் , ` திரிபுரம் ` என்றது வினைத்தொகை . ` திரியும் முப்புரம் ` எனப்பின்னரும் ( தி .7 ப .61 பா .3) வரும் . இவ்விருவகையானும் முப்புரச் செய்தி , திருமுறைகளிற் பயின்று வருதல் அறிந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

திருவின் நாயக னாகிய மாலுக்
கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாஅறி வொண்ணா
மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
செருவில் லேந்திஓர் கேழற்பின் சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

திருமகளுக்குக் கணவனாகிய திருமாலுக்குப் பல பொழுதுகளிற் பல திருவருள்களைச் செய்த , தேவர் தலைவனும் , உருவம் உடையவனும் , அவ்வுருவம் ஒன்றாக அறியப்படாது , அள வற்றனவாய் அறியப்படுங் கடவுளும் அருச்சுனனுக்கு அருள்செய்தற் பொருட்டு போருக்குரிய வில் ஒன்றை ஏந்திக்கொண்டு , ஒரு பன்றியின்பின்னே , சிவந்த கண்களையுடைய வேடனாய்ச் சென்றவ னும் , என்னிடத்திலும் வந்து பொருந்தியுள்ளவனும் ஆகிய , திரு வாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

திருமாலுக்கு எல்லாப் பிறப்புக்களிலும் , இராம கிருட்டின பிறப்புக்களில் பல பொழுதுகளிலும் பல்வேறு நலங்களை அருள் செய்தமையின் , ` அருள்கள் செய்திடும் தேவர்பிரான் ` என்றார் . அவ்வாறு செய்த திருவருட் செயல்களை எல்லாம் சிவ புராணங்களிலும் , இராமாயண பாரத இதிகாசங்களிலும் இனி துணர்ந்துகொள்க . ஈண்டு விரிக்கிற் பெருகும் . ` உருவினானை ` என்றதன்பின் , ` அவ்வுரு ` என்பது வருவிக்க . ` சென்று ` என்னும் எச்சம் , எண்ணின்கண் வந்தது . ` என்னொடும் ` என்னும் உம்மை , ` அருச்சுனனிடம் சென்றதேயன்றி ` என , இறந்தது தழுவி நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

எந்தை யைஎந்தை தந்தை பிரானை
ஏதமா யவ்விடர் தீர்க்க வல்லானை
முந்தை யாகிய மூவரின் மிக்க
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைக்
கந்தின்மிக் ககரி யின்மருப் போடு
கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

என் தந்தையும் , என் தந்தை தந்தைக்கும் தலைவ னும் , துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும் , யாவர்க்கும் முன்னோராகிய மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும் , தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய , மண்ணியாறு வழியாக , தறி யிடத்தில் நின்று சினம் மிகுகின்ற யானையின் தந்தங்களும் , கரிய அகிற் கட்டைகளும் , கவரிமானின் மயிர்களும் வந்து வந்து வீழ்கின்ற திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல் பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` முந்தை ` என்னும் இடைச்சொல் பெயர்த்தன்மைத் தாய் , அதன்கண் தோன்றியவரை உணர்த்திற்று . ` சிவபிரான் , மூவரின் மேலானவன் ` என்பது மேலே காட்டப்பட்டது . ( தி .7 ப .38 பா .4) தோற்றம் இன்மையின் , அஃது அறியப்படாதாயிற்று ; ` மண்ணியால் ` என உருபு விரிக்க . ` மண்ணி - அலங்கரித்து ` என்பாரும் உளர் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

தேனை யாடிய கொன்றையி னானைத்
தேவர் கைதொழுந் தேவர் பிரானை
ஊன மாயின தீர்க்கவல் லானை
ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்
கான வானையின் கொம்பினைப் பீழ்ந்த
கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய
வான நாடனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

தேனில் மூழ்கிய கொன்றைமலர் மாலையை உடையவனும் , தேவர்கள் வணங்கும் தலையாய தேவனும் , குறையாயவற்றை எல்லாம் போக்க வல்லவனும் , ஒற்றை எருதை உடையவனும் , நெற்றிக்கண்ணை உடையவனும் , காட்டில் வாழும் யானையின் கொம்பை ஒடித்த கள்ளத்தன்மையுடைய சிறுவனுக்கும் காண அரிதான பொருளாய் உள்ளவனும் , வானுலகத்தில் வாழ் பவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

திருமால் கண்ணனாய் இருந்தபொழுது , தன்னைக் கொல்லும் பொருட்டு , ` கஞ்சன் ` என்னும் மாமன் நிறுத்திவைத்த , ` குவலயாபீடம் ` என்னும் யானையை , அதன் கொம்பைப் பிளந்து அழித்த வரலாற்றைப் பாகவத த்துட் காண்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

காளை யாகி வரையெடுத் தான்றன்
கைக ளிற்றவன் மொய்தலை யெல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

காளைபோன்று கயிலாயத்தைப் பெயர்த்தவனாகிய இராவணனது கைகள் முரிந்து , நெருங்கிய தலைகளினின்றும் மூளை வெளிப்படுமாறு தனது கால்விரல் ஒன்றை ஊன்றிய கடவுளும் , தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய , பாளையையுடைய தென்னை மரத்தினது நெற்றுக்கள் விழ , சிவந்த கண்களையுடைய எருமைகள் , நெருங்கிச் சேறுசெய்ய , எங்கும் வாளை மீன்கள் துள்ளுகின்ற வயல் களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

காளை , சினத்தினால் மண்ணைக் கோட்டினாற் குத்து மாகலின் , கயிலையை எடுத்த இராவணனுக்கு அஃது உவமை யாயிற்று . ` காளையாகி ` என்னும் , ஆக்கம் , உவமை குறித்து நின்றது , ` பாளைத்தெங்கின் ` என்னும் தகரமெய் , தொகுத்தலாயிற்று . ` சேடெறிந்து ` என்றதனை , ` சேடெறிய ` எனத் திரிக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

திருந்த நான்மறை பாடவல் லானைத்
தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்
பொருந்த மால்விடை ஏறவல் லானைப்
பூதிப் பைபுலித் தோலுடை யானை
இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்
மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் செவ்வனே பாட வல்லவனும் , தேவர்க்கும் அறிதற்கு அரியவனும் , பெரிய விடை யினை ஏற்புடைத்தாமாறு ஏற வல்லவனும் , திருநீற்றுப் பையும் , புலித் தோலுமாகிய இவற்றையுடையவனும் , இருந்து உண்கின்ற சாக்கிய ரும் , நின்று உண்கின்ற சமணரும் இகழ நிற்பவனும் , அரிய உயிர்கட் கெல்லாம் அமுதம் போல்பவனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

நின்று உண்ணுதல் சமணர்க்குரிய நோன்பாயினமை போல , இருந்து உண்ணுதல் சாக்கியர்க்குரிய நோன்பாயிற்றில்லை யாதலின் , ` இருந்துண் ` என்றது , ` உண்டு கிடந்து வாளா மாய்தலே யன்றி , எம் பெருமானை இகழ்ந்து குற்றத்தின் வீழ்ந்தொழிகின்றார் ` என , அவரது உணவின் இழிபு கூறியவாறாம் என்க . உயிர்களை , மலமாகிய நஞ்சின் வேகத்தைக் கெடுத்து உய்யக்கொள்பவனாதலின் , ` ஆருயிர்க்கெல்லாம் மருந்தன்னான் றனை ` என்றும் , ` அவனினும் இனியதொரு பொருளும் உண்டோ ` என்பார் , ` மறந்து என் நினைக்கேன் ` என்றும் அருளிச்செய்தார் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

மெய்யனை மெய்யில் நின்றுணர் வானை
மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்
புனித னைப்புலித் தோலுடை யானைச்
செய்ய னைவெளி யதிரு நீற்றில்
திகழு மேனியன் மான்மறி யேந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

என்றும் ஓர் அழிவில்லாதவனும் , மெய்ம்மையில் நின்று உணரப்படுபவனும் , அம் மெய்ம்மையை இல்லாதவர்க்கெல் லாம் உணரப்படாதவனும் , முப்புரங்களை எரித்தவனும் , குற்றமில் லாதவனும் , புலித்தோலாகிய உடையை உடையவனும் , சிவந்த நிறம் உடையதாய் , வெள்ளிய திருநீற்றினால் விளங்குகின்ற திருமேனியை உடையவனும் , மான்கன்றை ஏந்துகின்ற , கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடையனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளி யிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

மெய்ம்மையாவது , அவனை உணர்தலே கருத்தாதல் ; அக்கருத்தினைப் பல்வேறு நிலையவாய் நின்று விலக்குவன மலசத்திகளாதலின் , அவற்றால் அக்கருத்தினை இழந்து வேறுபட் டோரால் அவன் உணரப்படானாயினான் என்க . முப்புரம் எரித்தமை , அம்மல சத்திகளை அழிப்பவனாதலையும் , புனிதனாதல் , அச்சத்தி களால் அணுகப்படாதவனாதலையும் விளக்கும் குறிப்பு மொழிகளாய் நின்றன ; ஏனையவும் அவ்வாறியைந்து நிற்றலை நுண்ணுணர்வான் உணர்ந்து கொள்க . ` செய்யனை ` என்றதற்குக் கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` மேனியன் ` என்றவிடத்தும் , இரண்ட னுருபு விரித்துக்கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 12

வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேன்என்
றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
சடையன் காதலன் வனப்பகை யப்பன்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
நங்கை சிங்கடி தந்தைப யந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேற்
பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே

பொழிப்புரை :

வன்றொண்டனும் , சடையனார் மகனும் , வனப்பகை , சிங்கடி என்னும் நங்கையர்க்குத் தந்தையும் , விளைவு மிகுகின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலை வனும் , இறைவனை உளங்குளிர்ந்து பாடும் தமிழையுடையவனும் ஆகிய நம்பியாரூரன் , ` வளமை மிக்க சோலைகளையுடைய திருவாழ் கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதனை நினைப்பேன் ` என்று சொல்லிப் பாடிய , பயன் மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களிடத் தினின்றும் , அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து நீங்கும் .

குறிப்புரை :

` நினைக்கேன் என்று பயந்த உளங்குளிர் தமிழ் , பலங்கிளர் தமிழ் ` எனக்கூட்டித் தனித்தனி இயைத்து முடிக்க . பாடு தலை , ` பயத்தல் ` என்றார் , கவிகளை ` எச்சம் ` எனக் கூறும் வழக்குப் பற்றி . ` கல்வியே கற்புடைப் பெண்டிர் அப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே ஈர்ங்கவியா ` என்ற நீதிநெறிவிளக்கமும் (3) இங்கு நினைக்கற்பாலது . ` வனப்பகை அப்பன் , சிங்கடி தந்தை ` என , பொருட் பின் வருநிலையணியாக , ஒருங்கியைக்க . ` நங்கை ` என்றது , ` வனப் பகை ` என்றதனோடும் இயையும் . ` நலம் ` என்றது , அதனைத் தருவ தாய விளையுளின்மேல் நின்றது . பலம் - பயன் . ` பாடவல்லார் மேனின் றும் ` என , உருபு விரிக்க . ` தான் ` என்றது , தேற்றப் பொருட்டாய் , ` பறையும் ` என்றதனோடு இயைந்தது என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்தஎம் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

இவ்வுடம்பின் கால எல்லையில் இதன் கண் நின்று சாதலும் , பின்பு வேறோர் உடம்பிற் பிறத்தலும் என்னும் இரண்டனை யும் விலக்கி , இவ்வொரு பிறப்பிலே என்னைப் படைத்து , அவ்வாற் றானே இதன்கண் வந்து தனது திருவருளை எனக்கு அளித்தருளிய வனும் , மலைமங்கையை நன்கு மதித்துத் தன் திருமேனியின் ஒருகூற்றில் வைத்த மாணிக்கம் போல்பவனும் , வானினின்றும் வந்த வெள்ளத்தைச் சடையிடையில் வைத்தருளினவனும் , அயலதாகிய என் நெஞ்சிற்கு , அயலாகாது , காய்ந்த இரும்பு கவர்ந்த நீர்போல , உள்ளே கலந்து நிற்பவனும் , எட்டுவகைப் பொருளாய் நிற்கும் ஒருவனும் , காதில் வெள்ளிய குழையை அணிந்தவனும் ஆகிய எங்கள் தலைவனை , அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்த வாறே , ஊழிக்காலத்தில் உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாது மிதந்து நின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ்வள நகரிடத்திற் கண்டு கொண்டேன் ; அதனால் இனி ஒரு குறையும் இலனா யினேன் .

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது குறிப்பெச்சம் . ` இரண்டனையும் ` என்னும் , உம்மை எண்ணின் தொகைச்சொல் , தொகுத்தலாயிற்று . வகுத்தல் - ஆக்குதல் . ` தந்த எம் தலைவனை , வைத்த எம்மானை , ஒருவனாகிய எங்கள் பிரானை ` எனப் பல வாற்றாற் சொல்லி மகிழ்ந்தார் என்க . நன்கு மதித்தலாவது தன்னோடு இணையொத்தவளாக உணர்தல் . அவ்வாறுணர்தற்கு அவள் அவனின் வேறல்லளாயினும் , உயிர்கள் அவளை உணருமாற்றானன்றித் தன்னை யுணரலாகாமை யின் , அவற்றின் பொருட்டுத்தான் அவளை அவ்வாறு வேறுவைத்து உணர்வன் என்க . மனம் அயலதாதலாவது , அவனை எட்டுதற்கு இயைவதாகாமை . அவன் அதனுட்கரந்து நிற்றலாவது , உயிர்வழியாக அதனையுந் தன் வழிப்படுத்துதல் . எண் வகை - அட்ட மூர்த்தம் ; அவை , ` ஐம்பெரும் பூதங் களும் , இரு சுடர்களும் , உயிரும் ` என இவை . இவைதாம் விரியாற் பலவாமாகலின் , ` எண் வகை ` என்று அருளினார் . ` ஒருவனா யிருந்தே இங்ஙனம் பலவாகின்றான் ` என்பார் , ` எண்வகை ஒருவனை ` என்று அருளிச்செய்தார் . கழுமலம் - சீகாழி ; இஃது ஊழி வெள்ளத்தில் தோணி போல மிதந்தமையின் , ` தோணிபுரம் ` எனப் பெயர்பெற்றமை உணர்க . ` கருமை பெற்றகடல் கொள்ள மிதந்ததோர் காலம் மிதுவென்னப் பெருமை பெற்றபிர மாபுரம் ` துயர்இ லங்கும்உல கிற்பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் பெயர்இ லங்குபிர மாபுரம் ` ( தி .1 ப .1 பா .5,8) ` பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின ` ` நிலையும் பெருமையும் நீதியும் சால அழகுடைத்தாய் அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தஇத் தோணிபுரம் ` ` முற்றிக் கிடந்துமுந் நீரின் மிதந்துடன் மொய்த் தமரர் சுற்றிக் கிடந்து தொழப்படுகின்றது ...... கழுமலமே ` ( தி .4 ப .82 பா .1,6,7) எனவும் அருளிச்செய்தனர் , முன்னை அருளாசிரியரும் . கழுமலமே பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களை உடைத்தாதலை , ` பிரமனூர் வேணு புரம்புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி புரம்மன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங் காதி யாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம்நாம் பரவும் ஊரே ` ( தி .2 ப .70 பா .1) என்றற் றொடக்கத்துத் திருஞானசம்பந்தர் திருமொழிகளாலும் , ` பிரமபுரம் வேணுபுரம் பெரும்புகலி வெங்குருநீர்ப் பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்முன் வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம் பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் ` ( தி .12 திருஞா . பு .14) என்னும் சேக்கிழார் திருமொழியாலும் உணர்க . ` கழுமல வளநகர் ` என , சேயதுபோலச் செய்யுள் வழக்குப்பற்றி அருளினாராயினும் , ` இந்நகர் ` எனச் சுட்டியுரைத்தலே திருவுள்ளம் . இது திருப்பதிகங்கள் பலவற்றிற்கும் ஒக்கும் . பெற்றுக்கொண்டேன் , ஏற்றுக்கொண்டேன் என்பதுபோல , ` கண்டுகொண்டேன் ` என்பது ஒருசொல் . மேற்காட்டியவை அனைத் தினுள்ளும் , ` கொள் ` என்பது துணைவினையாய் நின்று , முதனிலை யது பொருளை வலியுறுத்து நிற்கும் . ` கண்டுகொண்டேன் ` என்றது , ` கயிலையிலிருந்தவாறே கண்டுகொண்டேன் ` என்னும் குறிப்பினது என்பதை , சேக்கிழார் திருமொழியான் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

மற்றொரு துணைஇனி மறுமைக்குங் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவ ரறியா
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை யடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

சூழ்ந்துள்ள சுற்றத்தாரையும் துணையென்று நினையாது , ` இவனே துணை ` என்று தெளிந்து , நாள்தோறும் என்னால் வணங்கப்படுகின்ற , ஒளியையுடைய விளக்குப் போல்பவனும் , வீடா வதும் , ஞானமாவதும் , அவற்றை அடைவிப்பனவாய் அமைந்த , தேவராலும் அறியப்படாத அளவற்ற நெறிகளாவனவும் இவை என்ப தனைப் படிமுறையானே அறிவித்து , மெய்ப்பொருளை எனக்கு உணர்த்தியருளிய கடவுளும் ஆகிய பெருமானை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ` திருக்கழுமலம் ` என்னும் இவ்வளநகரிற் கண்டு கொண்டேன் ; அதனால் , முன்பு அவனை மறந்து வருந்திய யான் , இனி ஒருபோதும் அவனை மறவாதிருக்கும் திருவருளைப் பெற்றேன் ; ஆகவே , இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு துணையை நாடேன் .

குறிப்புரை :

` மறுமைக்கும் ` என்ற உம்மை , எச்சத்தொடு சிறப்பு , மறந்து வருந்தியது சித்தவடமடத்தில் என்க . ` தொழப்பட்ட ` என்றது , இருசொல்லாய் நிற்றலின் , ` நான் ` என்றது , ` தொழ ` என்றதனோடு முடிந்தது . ` தொழப்பட்ட ` என்றது , ` தொழப்படுந் தன்மையைப் பெற்ற ` என்றவாறு . தேவர் , உயர்பிறப்பிற்கு உரிய வழியையே அறிதலின் , பிறவி நீங்கும் வழி , அவர்களால் அறியப்படாதாயிற்று . படி முறையானே பலபல நெறிகளையும் சுவாமிகள் கண்டது நெடுங் காலத்திற்கு முன்னர்த்தாயினும் , அவ்வருமையையும் ஈண்டு நினைந்து அருளிச்செய்தார் என்க . ` கற்பனை ` என்றது , ` நினைவு ` என்னும் பொருளதாயினும் , ஈண்டு , ` அறிவு ` என்னும் பொருளதாய் நின்றது ; இது வடசொல் . ` கற்பித்தாய் ` என்றது , ` கற்கச்செய்தாய் ` என்னும் பொருளதாகிய தமிழ்ச்சொல் ; இஃது ` அறிவித்தாய் ` என்னும் பொருட்டு . ` அருங் கற்பனை கற்பித்தாண்டாய் ` ( தி .8 திருவா . கோ . மூ . தி . 7) என்புழியும் இவ்வாறே கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

திருத்தினை நகருறை சேந்தனப் பன்னென்
செய்வினை யறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை யல்லதிங் காரையு முணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

திருத்தினை நகரின்கண் எழுந்தருளியிருக்கின்ற , முருகக்கடவுட்குத் தந்தையும் , என்னுடைய முன்னை வினைகளை யெல்லாம் விலக்குகின்ற , செம்பொன்போலும் சிறப்புடையவனும் , அழகிய பொன்போலும் திருமேனியையுடைய ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானையல்லது வேறு யாரையும் யான் இவ்வுலகில் இறைவராக உணரேன் ; யான் உய்யுங் காரணங் கூடினமையால் இத்தகைய உணர்வைப் பெற்றேன் ; ஆயினும் , விருத்தனும் , பாலனும் ஆகிய அவனை , யான் கனவில் என் அருகே கண்டு , நனவில் எங்குங் காணமாட்டாது பிரிந்திருந்தேன் ; இதுபோழ்து , யாவர்க்கும் தலைவ னும் , நடனம் புரிகின்ற திருவடிகளையுடையவனும் ஆகிய அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , கடலை அடுத்துள்ள , ` திருக் கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் ; அதனால் , இனி அப்பிரிவு இலனாயினேன் .

குறிப்புரை :

` செய்வினை ` இறந்தகால வினைத்தொகை . யாவர்க் கும் முன்னே உண்மையின் , ` விருத்தன் ` என்றும் , பின்னேயும் உண்மையின் , ` பாலன் ` என்றும் அருளினார் . சித்தவடமடத்தில் , உறங்குங் காலத்துவந்து சென்னிமேல் திருவடி நீட்டினமையை , கனவாக அருளினார் . அதன்பின் இறைவர் நம்பியாரூரருக்கு விழிப்பின்கண் வந்து காட்சி வழங்கினமை இவ்விடத்தேயாதல் அறிக . வழியில் திருத்தினை நகரையும் , தில்லையில் நிருத்தம் செய்காலையும் வணங்கினமையை நினைக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

மழையினால் அரும்புகின்ற கொன்றையினது மலரைச் சூடினவனாகிய எங்கள் பெருமானை என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப் பெற்றேனாதலின் , யான் அவனைப் புறம் போகவொட்டாது என்னிடத்தே பிணித்துக் கொள்ளுதலைப் பொருந்தினேன் ; இனி ஒருபோதும் இந்நிலையினின்றும் தவறி உலகிற் போய்ப் பிறவாத பெருமையைப் பெற்றுவிட்டேன் ; யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற வல்லார் ! இவ்வாறாதலின் , அவனை இனியொருகால் இவ்விடத்து யான் நேர்படக் காணாதேயும் , இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும் வல்லேன் ; என்றாலும் , அவனைக் காணாது என் நெஞ்சம் அமையாமையின் , காதிற் குழையை யுடைய நீல கண்டனாகிய அவனை மீளக் காணுதல் வேண்டியே பாடி நிற்கின்றேன் ; இந்நிலையில் அவனை , இதுபோழ்து , அவன் கயிலை யில் வீற்றிருந்தவாறே , கழைக் கரும்பும் , வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள , ` திருக்கழுமலம் ` என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டேன் ; இனியொரு குறையும் இலனாயினேன் .

குறிப்புரை :

` மழைக்கு என்றது உருபு மயக்கம் . ` மழைக்கு அரும்பும் கொன்றை ` என்றது , ` கார்க்கொன்றை ` என்றவாறு . கழை , கரும்பின் வேறுபாடு . ` கதலி , சோலை ` என்பவற் றிடத்து வேண்டும் சொற்களை விரிக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங்
கொடுமழு வாட்படைக் குழகனே யென்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை யோதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

யான் , உறக்கத்தில் , ` குண்டலமும் , குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே ` என்றும் , ` கொடிய மழுவாகிய ஒளியையுடைய படையை உடையவனே ` என்றும் , ` வண்டுகள் ஒலிக் கின்ற கொன்றை மலரைச் சூடியவனே ` என்றும் வாய்பிதற்றி , விழித்த பின் , பழக்கமாய் நமக்கு உள்ள பலவாறான மனத்தை ஒழித்து ஒரு நெறிப்பட்ட மனத்தையுடையேனாய் , அவனது தலங்களை வினாவி அறிந்து , ` அத்தலத்திற் கிடைப்பான் ` என்று எண்ணிப் பல நாளும் சென்று முறைப்படியே வணங்கினேன் ; அவ்வாற்றால் வருமிடத்து , தாழைகளையுடைய கழிக்கரையிடத்துக் கடல் அலைகள் வந்து உலவு கின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்தே அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே கண்டுகொண்டேன் ; இனி , அக் குறையிலேனாயினேன் .

குறிப்புரை :

குண்டலம் , ஆசிரியக் கோலத்தையும் , குழை மண வாளக் கோலத்தையும் காட்டும் என்க . மகளிரை , ` கனங்குழையார் ` என்பவாகலின் , மகளிர்க்கு உரித்தாம் வேறுபாட்டினையுடைய குழை யும் உண்மை பெறப்படுதலால் , இறைவிக்கு உரிய குழையினையே ஈண்டு அருளினார் என்றலுமாம் . முன்னின்றாரை நோக்கியும் அருளிச் செய்கின்றாராகலின் , ` நம் மனம் ` என்று அருளினார் . நினைவின் பன்மையும் , ஒருமையும் , மனத்திற்கு ஆக்கப்பட்டன . ` ஒன்றாய் ` எனச் சினைவினை முதல்மேல் நின்றது . ` பசுபதி ` என்றது , சுட்டுப் பெயரளவாய் நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

வரும்பெரு வல்வினை யென்றிருந் தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவன்என் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

` அளவற்ற வலிய வினைகள்வந்து வருத்துமே ; என் செய்வது ` என்று எண்ணியிருந்து வருந்தினேன் ; அங்ஙனம் வருந்தாத படி எம்பெருமானை மறவாத மனம் வாய்க்கப்பெற்றேன் ; அதனால் , என் மனத்தால் அவனை விரும்பி , மெய்சிலிர்த்து , என்னை இகழா தொழியுமாறு அவனை இரந்து நின்று , முறைப்படியே வணங்கினேன் ; அதனால் , அரும்பும் , பூவும் , அமுதும் , தேனும் , கரும்பும் போல இன்பம் தருபவனும் , யாவர்க்கும் தலைவனும் , அறவடிவினனும் , எனது பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , மிக்க செந்நெல் நிறைந்த வயல்களை யுடைய , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டு கொண்டேன் .

குறிப்புரை :

` மனத்திடை ` என்றது உருபு மயக்கம் . ` குளிர்ப்பு ` என்பதனை , இக்காலத்தார் , ` குளிர்ச்சி ` என்ப . ` பிறவிவேரறுக்குங் கரும்பினை ` என்றதற்கு , கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப் பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
மின்னின துருவினை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

மேகமும் , செல்வமும் போல்பவனும் , பொன் னொளியும் மின்னொளியும் போலும் திருமேனியையுடையவனும் , என்னிடத்துக் கிடைத்த பொருள் போல்பவனும் ஆகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைந்து , அதன் பொருட்டுச் சேய்மை யில் உள்ளார் அவனைத் துதிக்கவும் , அண்மையில் உள்ளார் அவனை வணங்கவும் , அவற்றுள் ஒன்றையும் செய்யாது , அவனைத் தங்கள் வன்மையால் அடைய முயல்பவர்கள் பின்னே சென்று , ` முயல் அகப் படும் வலையில் யானை அகப்படும் ` என்று சொல்லிய அவர்களது சொல்லைக்கேட்டு , அவ்வழியையே முற்றிலும் கடைப்பிடித்து , அவ னிடத்து அன்புடையாரது தோற்றத்தை மேற்கொண்டிருந்தேன் ; ஆயினும் , எனது முன்னைத் தவத்தால் , அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , கயல் மீன்களும் , சேல்மீன்களும் வயலின்கண் விளையாடுகின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் ; அதனால் எண்ணம் கைகூடப்பெற்றேன் .

குறிப்புரை :

` அயல் ` என்றது , அயலாய இடத்தினையும் , ` அடி ` என்றது , அடி உள்ள இடத்தையும் குறித்தன . சேய்மையில் உள்ளாரா வார் , இறைவனைக் கேள்வியளவால் அறிபவராதலின் , துதிக்கவே வல்லராயினர் . அவர் அன்னராயினும் , நல்லாசிரியர் உணர்த்திய வாறே உணரும் திருவருட்பேறு உடையர் என்க . அடிக்கீழ் உள்ளார் இறைவனைத் தலைப்பட்டுணர்வராகலின் , அவர் வணங்குதற்கு உரியவராயினர் . ` அன்பர்கள் ` என்றது , பல திறத்தாலும் அன்பு செய் கின்றவர்களை . ` சாயல் ` என்பது , ` மென்மை ` எனப்பொருள் படுதல் பண்டை வழக்காயினும் ( தொ . சொல் .325), பிற்காலத்தில் , ` தோற்றம் ` என்னும் பொருளும் தருவதாயிற் றென்க . ` தோற்றம் ` என்றது வேடத்தை . அன்பர்களது செயல்களாகிய பரவல் , தொழுதல் முதலிய வற்றுள் ஒன்றும் செய்யாமைபற்றி , ` வேடமாத்திரமே உடையவனாய் இருந்தேன் ` என்றார் . முயற்சியாவன , தம் முனைப்பால் செய்யப் படும் கருமங்களும் , ஆராய்ந்துணரும் ஆராய்ச்சி உணர்வுகளுமாம் . ஏனைய பொருள்களை அகப்படுத்தும் அவையே , இறைவனையும் அகப்படுத்தும் என்று துணிந்து கூறலின் , அவர் கூற்றினை , ` முயல் வலை யானைபடும் ` என மொழிந்ததாக அருளினார் . எண்ணுதல் , இங்கு துணிந்து கடைப்பிடித்தலை உணர்த்திற்று . சுவாமிகள் , பிறர் போல இறைவனைத் தம் முனைப்பாற் செய்யும் வேள்வி முதலிய வற்றால் அகப்படுத்த நினைந்தார் அல்லராயினும் , சித்தவட மடத்தில் இறைவன் தோன்றி மறைந்தபின் , அவனை அறியாது இகழ்ந்த பிழை பற்றி இரங்கிய இரக்க மிகுதி காரணமாக , அவனை மீளக் காண விரைந்த விரைவோடே பல தலங்களிலும் சென்று வணங்கினமையை அவ்வாறு உணர்ந்து , இங்ஙனம் அருளிச்செய்தார் என்க . இதனானே , காமியச் செயற்கேயாக , நிட்காமியச் செயற்கேயாக , இறைவன் வெளி நின்றருளுதல் , எவ்வாற்றானும் அவனது கருணை காரணமாகவன்றி , அச்செயல்களது ஆற்றல் காரணமாக அன்றென்பது தெற்றென உணர்ந்துகொள்க . ` என்னிடை ` என்றதன்பின் , ` கிடைத்த ` என்பது வருவிக்க . ` பொருள் ` என்றது , புதையற் காட்சி , கிழியீடு போல் வனவற்றை .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மனைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்கள தொளியை
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
கனைதரு கருங்கட லோதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

நினைத்து உணரப்படும் கருத்துப் பொருள்களாகிய பாவங்கள் அழிதல் உளவாகும்படி , யான் , மனத்தால் நினைந்தும் , கையால் தொழுதும் எழப்பட்ட , ஒளி பொருந்திய ஞாயிறு போல் பவனும் , தனக்கு மனைவியைத் தர விரும்பிய மலைக்கு மகளாகிய உமைக்குக் கணவனும் , தேவர்களது தலைமணியாகிய மாணிக்கம் போல்பவனும் , வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , அழகியவாகச் சொல்லப்படுகின்ற புகழை உடையவனும் , எங்கள் விளக்குப் போல் பவனும் , மாலும் அயனும் , ` இன்னன் ` என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை , அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ஒலிக்கின்ற கரிய கடலினது அலைகள் வந்து உலவுகின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

பாவத்தினது பன்மையால் , அதனது நாசமும் பல வாயின . எழுதல் , செயப்படுபொருள் குன்றிய வினையாயினும் , நினைதல் தொழுதல்களோடு ஒட்டிநின்று , செயப்படுபொருள் குன்றாதாயிற்று . ` எமக்கு , பிறரெல்லாம் காலையில் தொழுதெழுகின்ற ஞாயிறாய் உள்ளவன் ` என்றல் திருவுள்ளமாகலின் , சுடர் , ஞாயிறா யிற்று . ` மலைதரு ` என்பது பாடம் அன்மை , எதுகை இன்மையானே விளங்கும் . அழகியவாதல் மெய்ம்மையவாதல் . ` ஒருவன் ` என்றது , ` வரையறைப்படுத்து உணரப்படுபவன் ` என்றபடி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
துன்மை யெனுந்தக வின்மையை யோரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை யடிகளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

வேள்வி முதலிய கருமங்களையே மெய்யென்று துணிந்தவர்கள் பற்றுவிடமாட்டாது மனைவாழ்க்கையிலே கட்டுண்டு கிடத்தலும் , முற்றத் துறந்தவர்போலக் காட்டினோரது பொய்யாகிய தவங்கள் ஏனையோரது முயற்சிகளோடொப்பக் கடிதில் அழிந்து போதலும் கண்கூடாய் இருக்க , அவற்றை மேற்கொண்டவர்கள் , தாம் சேற்றில் அழுந்தியிருத்தலை அறியாது , நல்ல நீர்த்துறையிலே நன்கு மூழ்கியிருப்பதாகக் கருதி , பிறரையும் தம் வழியிலே செல்லக் காட்டிய தீநெறியாகிய பொருந்தா நெறியை , யான் பொருட்படுத்தாது வந்து , பிறையை யுடைய சடையை உடையவனும் , எங்கள் தலைவனும் , கருணையை மிக உடையவனும் , ஆகிய சிவபெருமானை அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` வேதவுள்ளுறை , வேதமுடிவு , அருமறை ` முதலியன போலக் கிளந்தோதாதவழி , ` மறை ` என்பது , அதன் கன்ம காண்டத்தைக் குறித்தலே பெரும்பான்மை . கன்ம காண்டத்தின் வழிநிற்போர் , மீமாஞ்சகர் , அவர் , ` காமிய கன்மமே பிறப்பைத்தரும் ; நிட்காமிய கன்மம் வீடுபேற்றைத் தரும் ` எனக் கூறினாராயினும் , காமிய இன்பத்தின் மேலாயதோர் இன்பத்தை யுணராமையின் , நிட் காமியம் செய்யமாட்டாது காமியத்துள்ளே அழுந்தலின் , ` மறை யிடைத்துணிந்தவர் மனையிடையிருப்ப ` எனவும் , சமணரும் , சாக்கியரும் , ` இல்லறம் எவ்வாற்றானும் வீடு பயவாமையின் , துறவறமே மேற்கொள்ளத் தக்கது ` எனக்கொண்டு , துறவையே விரும்பிநிற்பாராயினும் , பற்றற்றான் பற்றினைப் பற்ற மாட்டாமை யின் , எல்லாப் பற்றிற்கு அடியாய தம் முனைப்பு அறாராகலின் , அவரை , போலித் துறவிகளாக வைத்து , ` வஞ்சனை செய்தவர் ` என்றும் , அவர் துறவொழுக்கங்களாகக் கொண்டு ஒழுகுவன வெல்லாம் , இறைவன் திருத்தொண்டின்முன் , பயனால் , கதிர்முன் இருள்போற் கெட்டொழிதலின் , அவற்றை , ` பொய் ` என்றும் , ` கையுள் மாய ` என்றும் அருளினார் . மீமாஞ்சகரது தன்மையை , தாரு காவன முனிவர்கள் வரலாற்றானும் , சமண சாக்கியரது தன்மையை , ஞானசம்பந்தர் நாவுக்கரசரோடு அவரிடை நிகழ்ந்த நிகழ்ச்சிகளானும் நன்குணர்க . கை - சிறுமை ; அஃது அவ்வளவினதாகிய காலத்தை உணர்த்திற்று . ` துன்மை ` என்பது , ` துர் ` என்பது அடியாக ஆக்கப் பட்டதொரு சொல் . ` ஓரேன் ` என்ற முற்றெச்சத்தின்பின் , ` வந்து ` என்பது வருவிக்க . ` காரிருள்போன்ற கறையணி மிடறுடை யடிகள் ` என்றது , சிவபெருமான் என்னும் சிறப்புப்பெயரளவாய் நின்றது . இத் திருப்பாடலின் பொருளைச் சிறிதும் உணரமாட்டாமையால் , பாடத்தைப் பலபட வேறுபடுத்தோதினர் ; அவையெல்லாம் சிறிதும் ஒவ்வாமை அறிந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே

பொழிப்புரை :

செழுமையான கொன்றையினது மலரும் , வில்வ இலையாகிய மலரும் கலந்துள்ள சடைமுடியையுடைய தலைவனை நினைந்து , அன்பினால் அழுகின்ற மலர்போலும் கண்ணிணையுடைய அடியார்க்கல்லது அறிதற்கரிய இணையாகிய அவன் திருவடிகள் இரண்டினையும் , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டு , சடையனார்க்கு மகனாகிய நம்பியாரூரன் பாடிய இப் பத்துப் பாடல்களாலும் தொழுகின்ற , மலரைத் தாங்கிய கைகளை யுடைய அடியார்களை , துன்பமும் , இடும்பையும் அணுகமாட்டா .

குறிப்புரை :

கூவிளை . ஆகுபெயராய் அதன் இலையைக் குறித்தது . அவ்விலையை , மலர்கள் பலவற்றினும் சிறந்ததாகச் சிவபிரான் விரும்புதலின் , அதனையே , ` மலர் ` என்று அருளினார் . இணை ஒன்றே யாகலின் , ` அரிது ` என ஒருமையாற் கூறப்பட்டது . ` அரி தாகிய இணையாகிய அவன் அடியிரண்டும் ` என்க . ` பத்தினாலும் தொழும் ` என உருபு விரித்து முடிக்க . ` தொழும் அடியவர் , மலர் எடுத்த கை ` அடியவர் எனத் தனித்தனி இயைக்க . துன்பம் , இன்பத் திற்கு எதிராய நுகர்ச்சி . இடும்பை , அதற்குக் காரணமாவன பலவற்றுள் ஒன்றாய இடையூறு . இடையூறு இல்லை என்றதனால் , எடுத்த செயல் முற்றி இன்புறுவர் என்றவாறாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

எனக்குப் பொன்னையும் , மெய்யுணர்வையும் , வழங்குபவனும் , அவை வாயிலாக உலகின்பத்தையும் , வீட்டின் பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும் , அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும் , பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும் , இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும் , எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய , அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

` மெய்ப்பொருள் ` என்றது , அதனையுணரும் உணர்வை . உணர்விற்கு , உணர்தல் தன்மையைத் தருதலின் அருமையை நினைகின்றாராதலின் , ` மெய்ப்பொருளும் ` என வேறு போல அருளினார் . ` போகமும் திருவும் ` என்றது , நிரல்நிறை . எனவே , ` திரு ` என்பது வீட்டின்பமாதல் உணர்க . உலகின்பத்தை நுகரும்பொழுது செய்யும் பிழையாவது , இறைவனை மறந்து , முன்னிலைப் பொருள்களையே நினைந்து , விருப்பும் , வெறுப்புங் கொள்ளுதல் . வீட்டின்பத்தை நுகரும்பொழுது செய்யும் பிழையாவது , பாற்கலன்மேற் பூஞை கரப்பருந்த நாடுதல்போல , அப்பேரின் பத்தையே நுகர்ந்திராது , சிற்றின்பத்தை விரும்புதல் , இவை இரண்டும் பண்டைப் பழக்கம் பற்றி நிகழ்வன . இப்பழக்கத்தைத் தன் அடியார்க்கு இறைவன் பலவாற்றால் அறவே நீக்கியருளுவான் என்க . அளவிறந்த தன்மையன் ஆதலின் , ` இன்னதன்மையன் என்றறிவொண்ணா எம் மான் ` என்றும் , அத்தன்மையனாயினும் , தமக்கு எளிதில் பலகாலும் வெளிநின்றமையின் , ` எளிவந்தபிரான் ` என்றும் அருளினார் . ` மறக்கலும் ` என்னும் உம்மை . இழிவு சிறப்பு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

கட்ட மும்பிணி யுங்களை வானைக்
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
விரவி னால்விடு தற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
வாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

மனத்துன்பத்தையும் உடல்நோயையும் ஒழிக்கின்ற வனும் , கூற்றுவனை அழித்த காலை உடையவனும் , துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும் , கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும் , வந்த பழிச் சொல்லும் , வரக் கடவ பழிச்சொல்லும் வாராது ஒழியும்படி அருள்செய்பவனும் , அட்ட மூர்த்தங்களை யுடையவனும் ஆகிய , மலர்கள் தேனோடு மலர்கின்ற சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

விரவினால் விடுதற்கு அரியனாதல் , பேரின்பவடிவின னாதலால் என்க .` மேவினார் பிரியமாட்டார் விமலனார் ` என்ற தி .12 கண்ணப்பர் புராண (174) த்தையும் நோக்குக . பழிச்சொல் , உண்மை யுணராது கூறுவாரது சொற்கள் , அவை இறைவன் , சுவாமிகளது பெருமையை விளங்கச் செய்யும்பொழுது அவரைப் பற்ற மாட்டாது ஒழியும் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
கலைக்கெ லாம்பொரு ளாய்உடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
பகலுங் கங்குலு மாகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
யுணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

மேகங்களையுடைய மலைமேல் மழையாய் நின்று பொழிபவனும் , நூல்களுக்கெல்லாம் பொருளாய் அவற்றுட் பொருந்தி நின்று , காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும் , பகலாகியும் இரவாகியும் இருப்பவனும் , ஒசையைக் கேட்கின்ற செவியாகியும் , சுவையை உணர்கின்ற நாவாகியும் , உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும் , ஒலிக்கின்ற கடலாகியும் , மலையாகியும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

உயிர் காணப்படுவதன்றாயினும் , உடல் வழியாக உண்மை புலப்படுதலின் , ` பார்க்கின்ற உயிர் ` என்று அருளினார் . மழையாய்ப் பொழிதல் முதலிய அனைத்தும் உயிர்கட்கு இரங்கும் இரக்கத்தாலே என்றதென்க . எல்லா உயிர்கட்கும் இரங்குகின்ற அவன் , தான் விரும்பி வந்து ஆட்கொண்ட எனக்கு எத்துணை இரங்குவான் என்பது சொல்ல வேண்டுமோ என்றபடி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

செத்த போதினில் முன்னின்று நம்மைச்
சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தையுண் டேமன முண்டே
மதியுண் டேவிதி யின்பய னுண்டே
முத்தன் எங்கள்பி ரானென்று வானோர்
தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ் வதற்கு முன்னே , நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ ! நெஞ்சு உளதன்றோ ! அறிவு உளதன்றோ ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ ! அவற்றால் தேவர்கள் , ` இயல்பாகவே பாசம் இல்லாதவன் ` என்றும் , ` எங்கள் தலைவன் ` என்றும் வணங்க நிற் கின்ற , முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும் , யாவர்க்கும் தந்தையும் , என் தந்தைக்குத் தலைவனும் , எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

சிந்தையும் ; மனமும் வேறுவேறாதல் அறிந்து கொள்க . ` விதி ` என்றது , விதித்தவாறே செய்த புண்ணியத்தைக் குறித்தது . அதன் பயனாவது மக்கட் பிறப்பும் , அதன் பயனாகிய இறையன்புமாம் . சிந்தை முதலியவற்றைத் தனித்தனியே எடுத்து , ` உளதன்றோ ` என வலியுறுத்தியது , அவனை நினைத்தற்குத் தடையாதும் இன்மையை இனிது விளக்கியவாறு . ` எம் ` என்றது , தம்போல்வாரையும் உளப் படுத்து .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

செறிவுண் டேல்மனத் தால்தெளி வுண்டேல்
தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல்
பொறிவண் டியாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை
பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
அறிவுண் டேஉட லத்துயி ருண்டே
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

நன்மையைத்தரும் கல்வியும் , அதன்பயனாகிய உள்ளத்தெளிவும் , அதன்பயனாகிய இறைவன்பற்றும் நமக்கு உள்ளன என்றால் , அவற்றோடே இறப்பும் , மறுபிறப்பும் , வாழ்நாளை இடை முரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால் , இவற்றை யெல்லாம் அறிகின்ற அறிவும் . அவ்வறிவின்வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின் , புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற , பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை , பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

செறிவு - நிறைவு ; அது பொருள்களை நிரம்ப உணரும் கல்வியைக் குறித்தது , ` சிக்கன ` என்பது , இறுகப் பற்றுதல் . பேரறங்களைச் செய்வார்க்கு முதற்கண் விதித்த வாழ்நாள் மிகுதலும் , பெரும்பாவங்களைச் செய்தார்க்கு அது குறைதலும் உளவாதல் பற்றி , ` வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல் ` என்று அருளினார் . இதனை , ` கொல்லாமை மேற்கொண்டொழுகு வான் வாழ்நாள்மேற் - செல்லா துயிருண்ணுங் கூற்று ` என்னும் திருக்குறளாலும் (326), அதன் உரையாலும் அறிக . வாழ்நாள் இடைமுரிய வருவதனை , ` அவ மிருத்து ` என்ப . ` அறிவு `, ` உயிர் ` என்றவிடத்திலும் , ` உண்டேல் ` எனப் பாடம் ஓதுதலே சிறக்கும் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
பொருளுஞ் சுற்றமும் போகமு மாகி
மெள்ள நின்றவர் செய்வன வெல்லாம்
வாரா மேதவிர்க் கும்விதி யானை
வள்ளல் எந்தமக் கேதுணை யென்று
நாணா ளும்அம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு , செல்வமும் , படைகளும் , இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற , நன்னெறியாய் உள்ளவனாகிய , தேவர்கள் நாள்தோறும் , ` வள்ளல் ` என்றும் , ` எங்களுக்குத் துணை ` என்றும் சொல்லித் துதிக்கின்ற , சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணை யிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

` பொள்ளல் உடல் ` என்றது , அதன் நிலையாமையை உணர்த்தியவாறு . பொருளாய் நிற்பவர் , மக்கள் ; அது ,` தம் பொருள் என்பதம் மக்கள் ` ( குறள் - 63.) என்றதனானும் அறிக . ` சுற்றம் ` என்றது , ` சுற்றி நிற்கும் படை ` எனப் பொருள் தந்தது ; படைபோல்பவர் கிளைஞரும் , நண்பரும் , அவர் படைபோன்று உதவுதல் வெளிப்படை . போகமாய் நிற்பவர் மாதர் , இவர் எல்லோரும் தாமே தாங்குவார் போன்று நின்று தம்மிடத்தே பிணித்துக்கொள்ள முயலுதலின் , அவர் செய்வன மயக்கமாயின . ` அவர் பற்றுவது உடலையே யாதலின் , உடலைப் பொரு ளென்று செய்வன ` என்றார் . ` அள்ளற்கழனி ` என்றது , நீர்வளங் குறை யாதது என்றபடி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

கரியா னைஉரி கொண்டகை யானைக்
கண்ணின் மேல்ஒரு கண்ணுடை யானை
வரியா னைவருத் தம்களை வானை
மறையா னைக்குறை மாமதி சூடற்
குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்
ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்
கரியா னைஅடி யேற்கெளி யானை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும் , இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும் , அழகையுடையவனும் , அடைந் தாரது வருத்தங்களைப் போக்குபவனும் , வேதத்தை உடையவனும் , சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும் , உலகத்தில் உள்ள உயிர்கட் கெல்லாம் விளக்காய் உள்ளவனும் , தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும் , அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

பிறையைச் சூடியது . சார்ந்தாரைக் காக்கும் தன்மையைக் குறிப்பது ஆதலின் , அத்தன்மை அவனுக்கே உளதாதல் பற்றி , ` குறைமாமதி சூடற்கு உரியானை ` என்று அருளினார் . இதனானே , ` பிறை ` என்னாது ` குறைமதி ` என்றருளினார் . ` தக்கன் சாபத்தாற் குறைந்து வந்த மதி ` என்றவாறு . எனவே , ` குறைமதி ` என்றது , இறந்தகால வினைத் தொகையாயிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

வாளா நின்று தொழும்அடி யார்கள்
வானா ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணா ளும்மல ரிட்டுவ ணங்கார்
நம்மையாள் கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி
ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப் பெற்றுவிடுகின்ற செய்தியைக் கேட்டபின்பும் , சிலர் , அவனை நாள் தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர் . அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர் . ஆயினும் , யான் , எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணை யாவான் என்று கருதி , அவனையே உறவாகக் கொண்டு , அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன் ; அன்றியும் , பலரையும் அவனுக்கு ஆளாகு மாறு முன் நின்று அழைக்கின்றேன் ; ஆதலின் , யான் அவனை மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

` வாளா ` என்றது , ` அரிதின் முயன்று செய்வனயாது மில்லாதே ` என்றபடி . முன்னர் , ` கேட்டு ` என்றமையான் , ` நம்மை ஆள்கின்ற தன்மை ` என்றது . காட்சியான் அறியப்படுவதனை என்க . ` பலரை ` என்னும் ஐயுருபு . தொகுத்தலாயிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
கடக்கிலேன்நெறி காணவு மாட்டேன்
கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும்
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
டையா னைஉமை யாளையோர் பாகத்
தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று , அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும் , கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும் , பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான் , பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையை யுடையவனும் , உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய , அழகிய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

` ஊனைப் பெருக்கவே முயலுதல் முதலிய குற்றங்களை யுடைய எனக்கு உய்தி வேறு யாதுளது ` என்றவாறு , அக்குற்றங்கள் இல்லாதாரும் அவனை மறத்தல் கூடாதெனின் , யான் அது செய்தல் கூடாமை சொல்ல வேண்டுமோ என்பது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட
உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்
காத லாற்கடற் சூர்தடிந் திட்ட
செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

என்னை . வழக்கிட்டு ஆட்கொண்டு அதன்பின் கோயிலுள் சென்று மறைந்த , நண்பகற் போது போலும் ஒளியுடைய வனும் , நஞ்சையுடைய பாம்பைக் கட்டியுள்ள உடையை உடைய வனும் , பகலாயும் இரவாயும் உள்ளவனும் , தன்னை நினைப்பவரது உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற தேனாய் உள்ளவனும் , கரும்பின் சாறும் அதன்கட்டியும் போல்பவனும் , தேவர்மீது வைத்த அன்பினால் , கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும் , வேதத்தில் வல்லவனும் ஆகிய , செல்வத்தையுடைய திருவாரூர் இறைவனை , யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

சிறுபொழுதுகளுள் நண்பகல் பேரொளியுடையதாதல் அறிக . ` ஆட்கொண்டு ஒளித்தபின் இனிது வெளிப்பட்டு நின்றமை யின் `,` ஒளித்திட்ட உச்சிப்போதன் ` என்று அருளினார் . இவ் வாறன்றி ,` இந்நிகழ்ச்சி உச்சிப்போதில் நிகழ்ந்தது ` எனக் கொண்டு , ` ஒளித்திட்ட உச்சிப்போதினை உடையவனும் ` என்று உரைத்தலுமாம் . ` உச்சிப்போதன் ` என்பதற்கு , ` தலையில் பூவையணிந்தவன் ` என உரைப்பாரும் உளர் . பட்டி - பட்டினை உடையவன் . ` பட்டு ` என்றது , ` ஆடை ` என்னும் , அளவாய் நின்றது , வேதத்தில் வல்லவரை , ` பட்டர் ` என்றல் அறிக ; ` பட்டராகில் என் சாத்திரங் கேட்கில் என் ` ( தி . 5 ப .99 பா .3.) என்பது திருநாவுக்கரசர் திருமொழி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்
உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக்
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைம்மறத் தற்கரி யானை
அம்மான் றன்திருப் பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்னடி நாயுரை வல்லார்
அமர லோகத் திருப்பவர் தாமே

பொழிப்புரை :

` பரவை ` என்பவள் முன்னிலையாக , எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய் , தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை , கார் காலத்தில் பூக்கின்ற , மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடைய வனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட . அவன் அடிக் கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர் , அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம் .

குறிப்புரை :

` ஆரூரை மறவாமைக்குப் பரவை ஒரு வழியாய் அமைந்தாள் ` என்றபடி . ` ஆரூரைமறத்தற்கரியானை ` என்றாரேனும் , ` மறத்தற்கரிய ஆரூரானை ` என்றலே திருவுள்ளம் என்க . ` காரூர் ........ முடியன் ` என்றதனை , ` அரியானை ` என்றதன் பின்னரும் , ` அடி நாய் ` என்றதனை , ` தொண்டன் ` என்றதன் பின்னரும் வைத்துரைக்க . ` அமரலோகம் `, வடமொழித் தொகைச் சொல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே

பொழிப்புரை :

என் அப்பனே , திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே , கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால் , அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி , அனைவரும் நகைப்பர் ; அது போல , அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந் தடுமாறி , வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல , இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேனாயினேன் ; ` மனமே , நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய் ` என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும் , ` அங்கணனே , அரனே ` என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு , நீ , மனம் இரங்கி , உய்யும் நெறி யொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` நகைப்பர் ` என்பது , ` கைப்பர் ` என முதற்குறையாய் வந்தது . இனி , ` கைத்தல் , வெறுத்தல் ` என்றுமாம் . ` பாழ்புகக் கைப்பர் ` எனக் கூட்டுக . ` அதுபோல ` என்றது , ` அவ்வாறே பிறர் நகைக்கும் படி ` என்றவாறு . ` நின் தொண்டினை மேற்கொண்டு ` என்றது ஆற்றலான் விளங்கிற்று . ` பழுதாக ` என்னும் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று . ` என ` என்றதனை , ` மனனே ` என்றதனோடுங் கூட்டி , இரு தொடர்ப் படுத்துக . ` எந்தை பிரான் ` என்றது , எந்தைக்குப் பிரான் என்னும் பொருளதாகலின் , அதனாற்போந்த பொருள் இதுவே யாயிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை யறிந்தேன்
அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர
உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்ப னேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும் ; அவற்றால் இவ்வுடம்பு , அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகிழந் தொழிவதாம் ; இவற்றை அறிந்தேனாயினும் , நன்மை இல்லாத செயல்களையே பற்றாகத் துணிந்துசெய்து இளைத்தேன் . அதனால் , கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையனாயினேன் ; ஆகவே , இதுபோழ்து நான் உன் திருவடிகளை அடைய உன்னை வேண்டுவேனாயினேன் ; அறிவது அறிந்து வாழும் வாழ்க்கையைச் சிறிதும் அறியாத , ஆரவாரச் சொற்களையுடையேனாகிய எனக்கு . நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` மூப்பு ` என்பது போல , ` நரைப்பு ` என்பதும் தொழிற் பெயர் . ` இன்னே வரும் ` என்றது ` விரைய வரும் ` என்றவாறாம் . ` நன்றியில் வினையே துணிந்தெய்த்தேன் ` என்றதனை , ` அரைத்த மஞ்சளதாவதை யறிந்தேன் ` என்றதன் பின்னர்க் கூட்டுக . அரைத்து வைக்கப்பட்ட மஞ்சள் , அப்பொழுது அழகிதாய் இருந்து , சிறிது நேரத்திற்குப்பின் வெளுத்துப்போவதாம் , இதனை , ` வெயில் மஞ்சள் போல் ` என்று எடுத்துக்கூறுதல் வழக்கு . அது , பகுதிப்பொருள் விகுதி . ஆவதற்கு , ` உடம்பு ` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது . ஆக்கம் உவமை குறித்தது . ` உழையாது ` பயன் விரும்புவார்போல , நன்றியில் வினையே செய்து , உன் திருவடிகளை அடைய விரும்பி உன்னை வேண்டுகின்றேன் ` என்றபடி . இரைப்பன் , வெற்றோசை செய்பவன் . தனக்கு இயைபில்லாததனை வேண்டுதலின் , அது வெற்றோசையாயிற்று . ` இவ்வாறாயினும் , நீ கருணையாளனாதலின் , என் விருப்பத்தினை நிரப்புதல் வேண்டும் ` என்று வேண்டினார் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திட ருற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

என் தந்தையே , திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே , புல்லின் நுனியில் உள்ள பனித்துளி , வெவ்வியவாகிய கிரணங்களையுடைய பகலவனை எதிர்ப்பட்டாற் போல்வதாகிய இம்மானுட வாழ்க்கை ஒரு பொருளாதல் இல்லை ; ஏனெனில் , ` இன்றைக்கு இன்பம் உளதாகும் ; நாளைக்கு இன்பம் உளதாகும் ` என்று நாள்தோறும் நினைந்து ஏமாறினேன் ; இனி மேற்றான் , எனக்கு என்ன உண்டாக இருக்கின்றது ! ஆதலால் , முன்பே உன்னுடைய செவ்விய திருவடியைச் சேர விரும்பாது , கொண்டது விடாத மூர்க்கனான நிலையிலே காலமெல்லாம் போய்விட்டன ; இப்பொழுதே எனக்கு நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` பொருள் ` என்றதன்பின் , ` ஆதல் ` என்பது வருவிக்க . ` இற்றைக்கு ` என்றாற்போலவே , ` நாளைக்கு ` என உரைக்க . ` இடருற்றனன் ` என்றதனால் , எதிர்நோக்கியது இன்பத்தை யாயிற்று . ` இன்று நன்று நாளைநன் றென்று நின்ற இச்சையாற் பொன்று கின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின் ` என்று அருளிச் செய்ததுங் காண்க ( தி .2 ப .99 பா .1) ` முன் ` என்பது , ` முன்னம் ` என வருதல்போல , ` இன் ` என்பது , ` இன்னம் ` என வரும் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவு மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடிய வனே , திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே , என் தந்தையே திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலி னால் , அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின ; நன்மை தீமைகளைச் சிந்தித்து , உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேனாயினேன் ; உலகியலிலும் , இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு சிறிது ஈதலும் செய்தி லேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` முந்தி ` என்றது , இகர ஈற்றுப் பெயர் , சிந்தித்தற்குச் செயப்படுபொருள்கள் வருவிக்கப்பட்டன . ` சிறுச்சிறிது ` என்றது , ` சிறுமையையுடைய சிறிது ` என நின்று , ` மிகச் சிறிது ` எனப் பொருள் தந்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
ஐவ ரும்புர வாசற ஆண்டு
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்
கடைமு றைஉனக் கேபொறை யானேன்
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
வேண்டேன் மானுட வாழ்க்கைஈ தாகில்
இழித்தெ னென்றனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , நன்மைகளையெல்லாம் அழிப்பவராகிய ஓர் ஐவர் என்னை ஆளுதலுடையர் ; அவ் வைவரும் என்னை ஆளுதலை நன்றாகச் செய்து , ` இனி இவனாற் பயனில்லை ` என்று கழித்து , என்னைத் தங்கள் காற்கீழ்ப் போகட்டுப் போய்விட்ட பின்பு . முடிவில் உனக்கே நான் சுமையாயினேன் ; அதன்பின்பே நான் விழிப்படைந்து , உண்மையை உணர்ந்தேன் ; மானுடவாழ்க்கைதான் இத்தன்மையதே யென்றால் , இனி இதனை யான் விரும்பேன் ; இதனை மிக்க இழிவுடை யதாக உணர்ந்துவிட்டேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` ஐவர் ` என்றது , ஐம்பொறிகளை . புரவு - புரத்தல் அஃது அடிமைகொண்டு ஆளுதலைக் குறித்தது . ` அவ் வைவர்கள் ` என எடுத்துக்கொண்டுரைக்க . ` ஆசற ` என்றது , ` அவர்தம் விருப் பத்திற் குறையில்லாதபடி ` என்றவாறு . கழித்துக் காற்பெய்தது , உடல் தளர்ந்தமைபற்றி ; ` கால் ` என்ற விடத்து , ` கீழ் ` என்னும் பொருளுடைய கண்ணுருபு விரிக்க . ` உனக்கே பொறையானேன் ` என்றது , ` பிறராலன்றி உன்னாலே அளிக்கத்தக்கவனாயினேன் ` என்றதாம் . ` கடைமுறை ` என்றது , முன்பே , ` உனக்கு அடைக்கல மாகற்பாலேன் ; அங்ஙனம் ஆகாதொழிந்தேன் ` என்று இரங்கியவாறு . ` விழித்துக்கண்டனன் மெய் ` என்றது , உடல் தளர்ந்தபின் நல்லறிவு எய் திற்று என்றதாம் . நாயனார் தாம் அந் நிலையினரல்லராயினும் , ஞான சம்பந்தரைப்போல இளமையிலே இறைவனை அடையாதொழிந் தமையை நினைந்த வருத்தத்தால் அங்ஙனம் அருளினார் என்க . ` இழித்தேன் ` என்பது குறுகிநின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானங்
கடிய வாயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , யான் , அழகிய , நுண்ணிய இடையினையுடைய மகளிரோடு கூடி மயங்கி நின்று , தீவினையும் நல்வினையுமாகிய இரு வினைகளை மிகுதியாகச் செய்தும் , மெய்ந்நூல்கள் பலவற்றிற் புகுந்து ஞானத்தை யுணராதும் மிகவுங் கொடுமையான செயல்களைச் செய்தேன் ; அதனால் , பற்றத் தக்கதொரு பற்றுக்கோடு இலனாயி னேன் ; இவ்வாறு பலவாகிய பாவங்களைச் செய்து பாவியாகிய யான் , எதன் பொருட்டு உயிர்வாழ்கின்றேன் ! எனக்கு , நீ , உய்யும் நெறி யொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` குற்றம் , குணம் ` என்பன , அவற்றைத் தரும் செயல்கள் மேல் நின்றன . மயக்கமாவது , ஐம்புல இன்பமே இன்பம் எனக் கொள்ளுதல் . ஐம்புல ஆசை உளதாயவழி , அவ்வாசை அடியாக மயக்கமும் , அம்மயக்கம் அடியாக இருவினைகளும் , அவ்விருவினை அடியாக ஞானநூற் பொருளை உணரமாட்டாமையும் , அம்மாட்டாமை அடியாக உயிர்க்கு இறுதி பயக்கும் செயல்களில் அஞ்சுதல் இன்மை யும் , அவ்வின்மை யடியாகத் துணையின்றி அலமருதலும் உளவாதல் ஒருதலை என்பதனை அருளியவாறு . ஐம்புல ஆசைகளுள் தலையாய மகளிராசையின் கொடுமையை விரித்தபடியாம் . ` பாவங்கள் செய்தேனாய்ப் பாவியேனாகியேன் ` என்றது , மேற்போந்தவாற்றா லெல்லாம் உளதான நிலையைத் தொகுத்து அருளிச்செய்ததாம் . ` எற்றுக்கு ` என உருபு விரிக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
குற்றஞ் செற்ற மிவைமுத லாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்
வேண்டில் ஐம்புலன் என்வச மல்ல
நடுக்க முற்றதோர் மூப்புவந் தெய்த
நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
இடுக்க ணுற்றனன் உய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , ஈகை வழியாகப் புகழைத் தரத்தக்க பொருளை , உலோபமும் , பகைமையும் காரணமாகப் பிறருக்குயான் கொடுக்க மாட்டேன் ; ஆசையும் , கோபமும் ஆகிய இவைகளை ஒழிக்க மாட்டேன் ; ஐம்புலன்கள்மேற் செல்கின்ற ஆசைகளை விடநினைத் தால் , யான் அவற்றின் வயத்தேனல்லது , அவை என் வயத்தன அல்ல ; அதனால் , உடல் நடுங்குதல் பொருந்தியதாகிய , ` மூப்பு ` என்பதொன்று வந்து அடைய , அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு சென்று நரகத்தில் இடுதலை நினைத்து அஞ்சித் துன்புறுவேனா யினேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியொன்றை வழங்கி யருளாய் .

குறிப்புரை :

` குற்றம் ` என்றது ஏற்புழிக்கோடலால் உலோபத்தைக் குறித்தது . பகைமை , தாம் வேண்டியதனை முடியாமை பற்றி வருவது . ` காமம் , வெகுளி , மயக்கம் ` என்னும் மூன்றனுள் , சிறப்புடைய இரண்டனை , ` வேட்கையும் சினமும் ` என எடுத்தோதியருளினார் . ` வேண்டில் ` என்றது , ` விடவேண்டில் ` என்றவாறு , ` ஐம் புலன் ` என்றது , அவற்றின்மேற் செல்லும் ஆசையை . ` கிற்றிலேன் ` எனவும் , அல்ல ` எனவும் அருளியன , தம் மாட்டாமையைச் சொல்லி இரந்தவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

ஐவ கைஅரை யர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்
அவ்வ கைஅவர் வேண்டுவ தானால்
அவர வர்வழி யொழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
தீவ ணாசிவ னேஎரி யாடீ
எவ்வ கைஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

சிவலோகத்திற்குத் தலைவனே , நெருப்புப் போலும் நிறம் உடையவனே , சிவபெருமானே , தீயோடு நின்று ஆடுபவனே , திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , ஐவர் வேறுபட்ட தன்மையையுடைய அரசராய் என்னை ஆட்சி கொண்டு ஒருகாலும் விட்டு நீங்காதிருக்கின்றனர் . அவ்வாறு அவர் , தாம் தாம் வேறு வேறுவகையில் என்னை ஆள விரும்பினால் , யான் அவர் வழியே அவர் வேண்டுமாற்றிலெல்லாம் சென்று நடந்து , செய்வது இன்னது என்று அறிகின்றிலேன் ; எனக்கு உய்யும் நெறியாவது எந் நெறி ? அதனை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` அவர் நீங்கார் ` எனப் பின்னர்ப் போந்து அருளினாரா யினும் , ` ஐவர் ஐவகை அரையராகி ` என முன்னர் ஓதுதலே கருத் தாகக் கொள்க . ` ஐவர் நீங்கார் ` என்றே பாடம் ஓதுதலுமாம் . ` அவராகி ` என்றதில் அவர் , பகுதிப்பொருள் விகுதி , ` வந்து ஒழுகி ` எனக் கூட்டுக . ` வந்து ` என்றது , இடவழுவமைதி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

ஏழை மானுட வின்பினை நோக்கி
இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்
வாழை தான்பழுக் குந்நமக் கென்று
வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்
போத மும்பொரு ளொன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , அறிவில்லாத , மானுட இன்பத்தைக் கருதி , முன்னர்ப் பழத்தைத் தந்த வாழை , இனியும் நமக்கு அவ்வாறே தரும் என்று கருது வாரைப்போல , இளமையுடையராய் இன்பம் தந்த மகளிர் என்றும் இவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும் மயக்கமாகிய வலையுள் அகப்பட்டு , அதனானே , வஞ்சனையையுடைய வலிய வினையென்னும் வலையிலும் அகப்பட்டு , அறிவு முதிராத பொது மக்கள் செல்லும் வழியிடத்து நின்று , அறிவின் இயல்பையும் , அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின் இயல்பையும் சிறிதும் அறியாத எளி யேனுக்கு , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

வாழை , ஒரு குலைக்குமேல் மறுகுலை ஈனாது கெடுதல் இளமை , விரையக்கெடுதற்கு உவமை என்க . வினைக்கு வஞ்சனை யாவது , தோன்றாது நின்று வருத்துதல் . ` உள்வலை ` என்றதனை ` வலையுள் ` என மாற்றுக . ` பக்கம் ` என்றதன்பின் , ` நின்று ` என்பது வருவிக்க . ` பொருள் ` என்றவிடத்தும் எண்ணும்மை விரிக்க . ` போக மும் பொருள் ` என்பது பாடமாயின் , ` இன்பமும் , அதனைத் தருகின்ற பொருளும் ` என உரைக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
ஐவ னஞ்சுமந் தார்ந்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையு மின்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே

பொழிப்புரை :

அரைக்கப்படுகின்ற சந்தனக் கட்டையையும் , அகிற் கட்டையையும் இருமருங்கும் தள்ளிக்கொண்டு , மலை நெல்லைத் தாளோடு மேல்இட்டுக்கொண்டு , நிறைந்து ஒலிக்கின்ற காவிரியாற்றின் தென்கரைமேல் உள்ள திருவிடைமருதூரில் எழுந் தருளியிருக்கின்ற எம் குலதேவனாகிய பெருமானைப் பாடிய , நம்பி யாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை , மனத்தால் விரும்பிப் பாட வல்லவர்கள் , நரைத்தலும் , மூத்தலும் , இறத்தலும் இன்றி அவ்விறைவனது செவ்விய திருவடிகளை அடைவர் ; இது திண்ணம் .

குறிப்புரை :

` ஊரன் ` என்றது இடவழுவமைதி . நடலை - துன்பம் ; அது , மிக்க துன்பமாகிய இறப்பைக் குறித்தது . ` இறத்தலின் மேலாய துன்பம் இல்லை ` என்பதனை , ` சாதலின் இன்னாததில்லை ` என்னும் திருக்குற ளாலும் உணர்க (230). ` ஆர்த்து ` என்பது , பாடம் அன்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

நஞ்சினைத் தான் விரும்பி உண்டு , அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும் , யாவர்க்கும் , முதல்வனும் , தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும் , தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும் , மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும் , காலகாலனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு !

குறிப்புரை :

` வியப்பு ` என்பது சொல்லெச்சம் , இவ்விடத்து , சேக்கிழார் , ` விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெருவிடம் உண்ட - கண்ணாளா ` ( தி .12 ஏயர்கோன் . புரா . 286) என்று அருளுதலின் , ` ஆலந் தான் உகந்து அமுதுசெய்தானை ` என்றதற்கு இதுவே , பொருளாதல் அறிக . ` சீலம் ` என்பது , குணம் என்னும் பொருட்டாய் , பெருமையைக் குறித்தது . திருவேகம்பத்தில் உள்ள உமையம்மைக்கு , ` ஏலவார் குழலி ` எனப் பெயர் வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது . ` என்றும் வழிபட ` என இயையும் ; இனி வரும் திருப்பாடல்களிலும் அவ்வாறு இயைவனவற்றை அறிந்துகொள்க . கச்சி ஏகம்பம் , உமையம்மை இறைவனை என்றும் வழிபடும் தலமாய் இருத்தலை , திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துட் காண்க . ` வழிபடப் பெற்ற ` என்றது . ` எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றால் ` ( தி .4 ப .81 பா .4) என்றதுபோல நின்றது . ` வழிபடப்பெற்ற காலகாலன் ` என்றதனை , ` அந்தணர் ஆக்கொண்ட அரசன் ` என்பதுபோலக் கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள் உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய் கின்ற பெருமானும் , ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும் , தேவர் கட்குத் தலைவனும் , தன்னை விடாது பற்றினவர்க்கு , பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும் , தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று , அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய , அழிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற , கற்றையான நீண்ட சடையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .

குறிப்புரை :

` ஒன்று ` என்றது தொகைக் குறிப்பு . ` பற்றவன் ` என்றதில் அகரம் , ஒட்டுச் சொல்லாய ஒரு மொழியிடை வந்த சாரியை . ` பரவிக்கொண்டானை ` என்பதும் பாடம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து , அக்காலை , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும் , யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும் , மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும் , வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய , திருவேகம் பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .

குறிப்புரை :

திரிபுரம் எரித்த ஞான்று சிவபிரானைத் திருமால் இடபமாய்ச் சுமந்தமையை , ` தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ ` என்ற திருவாசகத்தால் உணர்க ( தி .8 திருச்சாழல் -15.)

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும் , கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும் , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் , கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய , கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற , கண்டத்தில் நஞ்சினையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .

குறிப்புரை :

` கண்டம் ` என்றதில் தொக்கு நின்ற ஏழனுருபு . ` உடை ` என்ற , ஈறுகெட்ட பெயரெச்சக் குறிப்பைக் கொண்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யில்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

யாவரையும் வெல்லும் தன்மையுடைய , வெள்ளிய மழு ஒன்றை உடையவனும் , கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும் , அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும் , அரிய வேதங்களையும் , அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய , அளவற்ற புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் , துதித்து வழி படப்பெற்ற , நன்மையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு !

குறிப்புரை :

வெண்மை , கூர்மையைக் குறிக்கும் குறிப்புமொழி , நன்மையுடைமை பற்றியே , இறைவன் , ` சிவன் ` எனப்படுதல் அறிந்து கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

பிறை தங்கியுள்ள சடையையுடையவனும் , தேவர்க்குத் தேவனும் , வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற , ` வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும் , சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய , என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி , துதித்து வழிபடப்பெற்ற , கங்கையை யணிந்த , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .

குறிப்புரை :

திருவேகம்பத்தில் , இறைவி , இறைவனது இலிங்கத் திரு வுருவைத் தவம் செய்து கண்ட வரலாற்றினை , திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துட்காண்க . இனி , கம்பையாற்றின் மணலால் இறைவி இலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்றும் புராணம்கூறும் . அதன் வழி நின்று , ` கண்டு ` என்றதற்கு , ` ஆக்கி ` என்று உரைப்பினும் ஆம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாமுகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும் , வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும் , தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும் , நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய , எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற , கண்களும் மூன்று உடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .

குறிப்புரை :

செய்யும் செயல்கள்தாம் எண்ணில்லாதனவாகலின் , அவற்றால் வரும் புகழ்களும் எண்ணிலவாயின . அவைதாம் அனாதியாக வருதலின் . தொல்புகழாயின . ` கண்ணும் ` என்ற உம்மை சிறப்பு . ` கண்ணு ` என உகரச்சாரியையாகக் கண்ணழிப் பினுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

நாள்தோறும் தன்னையே சிந்தித்து , துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்கு கின்ற மங்கலப் பொருளானவனும் , உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும் , பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய , முடிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற , கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய , நீண்ட சடையையுடைய , திருவேகம் பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு , அடியேன் , கண் பெற்ற வாறு , வியப்பு !

குறிப்புரை :

சிந்தித்தல் , இறைவனது பெருமைகள் பலவற்றை என்க , ` வினை பற்றறுப்பானை ` என்பதும் பாடம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுர மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால் , வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும் , தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய , பரவிய , பழைய புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற , எட்டுக் கைகளையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெரு மானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு !

குறிப்புரை :

அசுரர்கள் வரம் பெற்றதனை அவர்களது ஊர்மேல் ஏற்றி அருளினார் . ` நிரந்தரம் ` என்றது , ` மாறாத அழிவு ` என்றதாம் . ` நிர்க்கண்டகம் ` மாறாதவன்கண்மை . ` நிர் ` என்னும் வடமொழி இடைச்சொல் , இன்மையையேயன்றி தேற்றப் பொருளும் தருவதாதல் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

பொழிப்புரை :

தேவர் பெருமானாகிய சிவபெருமானை , அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே , தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி , ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று , முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து , பின்பு , புறத்தே வழிபடச் சென்று , அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு , தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்று வித்து வெருட்ட , வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள , அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு !

குறிப்புரை :

` எள்கலின்றி ` என்ற விதப்பினால் , அவள் அவனது ஒருகூறாய் நிற்கும் இயல்பு பெறப்பட்டது . ` வழிபாடு செய்வாள் போல் ` என்றது . அவள் வழிபடப்படுவாளே யாதலைக் குறித்தது . உகப்பு , உயிர்கட்கு உணர்வுண்டாக்குதல் பற்றி எழுந்தது என்க . அதனானே , ஓர் உயிரேனும் சிவவழிபாட்டினை எவ்வாற்றானும் ஒழியற்பாலது அன்று என்பது தெற்றென உணர்ந்து கொள்க . வெள்ளங்காட்டி வெருட்டியது , தன்னினும் தன்பெருமானை இனி யனாக உணர்ந்து வழிபடும் அவளது உணர்வு நிலையினைப் புலப் படுத்துதற் பொருட்டு . ` வஞ்சி ` என்றருளினார் , அவளது மெல்லியல் பிற்கு இரங்கி , ` ஓடி ` என்றது , மிக விரைந்தமையை . மெல்லிய இயல் பினளாய்ப் பேரச்சங்கொண்ட அவள்தான் அவ்வச்சங்காரணமாகச் சேணிடை நீங்க முயலாது , தன் பெருமானை விடமாட்டாளாய்க் கைகளால் மார்போடு அணைத்து இறுகத் தழுவிக் கொண்டாளாதலின் , ` தழுவ ` என்றும் , அவ்வாறு , அன்பிற்கு எல்லையாய் நின்ற அவளது உணர்வின் நிலையைப் புலப்படச் செய்த பின்னும் பெருமான் அவட்குக் கரந்து நிற்கமாட்டானாய்த் தன்கள்ளம் நீங்கி வெளி நின்றனனாதலின் , ` வெளிப்பட்ட கள்ளன் ` என்றும் அருளினார் . இங்ஙனம் , இறைவி இறைவனை வழிபட்ட இவ் வரலாறு , திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துள்ளும் , காஞ்சிப் புராணத் துள்ளும் விரிவாகக் கூறப்படுதல் காண்க . மேலைத் திருப்பாடல்களில் தொகுத்தருளிப்போந்த உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடுதலை , இதன்கண் வகுத்தருளிச் செய்தவாறு . இங்ஙனம் , எண்ணில் கோடி ஆகமங்களின் பயனாய் உயிர் கட்கு இன்றியமையாத முதற்கடமையாய வழிபாட்டினை உயிர்கள் பொருட்டு இறைவி என்றும் செய்து , அதனோடு அவள் என்றும் எல்லா அறங்களையும் வளர்த்து நிற்றலானே , தலங்கள் எல்லாவற்றுள் ளும் சிறந்தது காஞ்சியாயிற்று என்க . ` வஞ்சி வெருவி ` என்னாது ` அஞ்சி வெருவி ` எனக் கண்ணழிப்பாரும் உளர் ; அதனால் ஒரு பயனின்மை யறிக . இத் திருப்பதிகத்துள் , ` நல்ல கம்பன் `, ` கள்ளக் கம்பன் ` என வந்தவையும் , அம்மை வழிபட்ட நிலையைக்கருதி அருளினவே யாதலின் , அவற்றை உருத்திரர் வழிபட்ட நிலை , திருமால் வழிபட்ட நிலைகளாகக் கூறும் புராண வரலாற்றோடு இயைக்க முயலுதல் பொருந்தாமை யறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே

பொழிப்புரை :

குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூ ரனாகிய நம்பியாரூரன் , ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும் , மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் , ` இவன் எம் பெரிய பெருமான் ` என்று எப் போதும் மறவாது துதிக்கப்படுபவனும் , யாவர்க்கும் தலைவனும் , கூத்தாடுதலை உடையவனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர் . நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் .

குறிப்புரை :

` பெற்ற ` எனக் கெடுதற்பாலதாகிய மகரம் , செய்யு ளின்பம் நோக்கிக் கெடாதுநின்றதென்க . இனி , ` பெற்றவேறு ` என்பதே பாடம் எனினுமாம் . இவ்வாறன்றி , ` பெற்றத்தை ஏறுதலை உகந்து ஏற வல்லானை ` என்றுரைத்தல் சிறவாமையறிக . ` பெரிய பெருமான் ` என்றதனை , ` பெரிய பெருமானடிகள் ` ( தி .7 ப .53.) என்றது போலக் கொள்க . நன்னெறி , ஞானநெறி ; அதனாற் பெறும் உலகம் , சிவலோகம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

புற்றில் வாளர வார்த்தபி ரானைப்
பூத நாதனைப் பாதமே தொழுவார்
பற்று வான்துணை எனக்கெளி வந்த
பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரம்ஒரு மூன்றும்
பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
கொற்ற வில்அங்கை ஏந்திய கோனைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

புற்றில் வாழும் கொடிய பாம்பைக் கட்டியுள்ள பெருமானும் , பூத கணங்கட்கு முதல்வனும் , தன் திருவடியையே வணங்குவோர் விடாது பற்றுகின்ற சிறந்த துணைவனும் , எனக்கு எளியவனாய் எதிர் வந்தவனும் , அடியவரது பாவங்களைப் போக்கும் தொழிலை உடையவனும் , யாவராலும் அடைதற்கு அரியவனும் , செருக்கு மிக்கவர்களது மூன்று ஊர்கள் அழியுமாறு , திருமால் அம்பாகி நிற்க , வெற்றியைத் தரும் பெரிய மலையாகிய வில்லை அங்கையில் ஏந்திய தலைவனும் ஆகிய இறைவனை , அடியேன் , திருக்கோலக்கா வில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` பூத நாதன் ` என்றது , ` உயிர்கட்கெல்லாம் முதல்வன் ` என்னும் கருத்துடையது . வணங்குகின்றவர் , மேலும் விடாது பற்றி நிற்றல் , அவனது இன்ப நுகர்வினாலாம் . ` துணையை ` என்னும் ஐயுருபு , தொகுத்தலாயிற்று . முற்றல் - முதிர்தல் ; அது , செருக்கு மிகு தலைக் குறித்தல் , வழக்கினுள்ளுங் கண்டுகொள்க . ` வெளிப்பட ` என்பது , ` கண்டுகொண்டேன் ` என வலியுறுத்தோதியதனால் பெறப் பட்டது . ஏகாரம் , தேற்றம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்
ஆய நம்பனை வேய்புரை தோளி
தங்கு மாதிரு வுருவுடை யானைத்
தழல்ம திசடை மேற்புனைந் தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானை
விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்
கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

துணை நூல்களாகிய ஆறும் , முதல் நூல்களாகிய வேதம் நான்கும் ஆகி நிற்கின்ற நம்பனும் , மூங்கில் போலும் தோள் களையுடைய உமாதேவி பொருந்தியுள்ள , சிறந்த திருமேனியை யுடையவனும் , ஒளிர்கின்ற பிறையைச் சடையின் மேற் சூடியவனும் , சினத்தால் எரிகின்ற கண்களையுடைய யானையினது உரித்த தோலை யுடையவனும் ஆகிய இறைவனை , அடியேன் , விண்ணில் உள்ளவர் களும் , மண்ணில் உள்ளவர்களும் துதிக்கின்ற , தேன் பொருந்திய சோலையின்கண் குரா மலர்கள் மணங்கமழ்கின்ற திருக்கோலக்கா வினில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` தழல் மதி ` வினைத்தொகை . தழலுதல் - ஒளிர்தல் . ` குரா ` என்பது , செய்யுளாகலின் , குறியதன்கீழ் ஆகாரம் குறுகிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

பாட்ட கத்திசை யாகிநின் றானைப்
பத்தர் சித்தம் பரிவினி யானை
நாட்டகத் தேவர் செய்கையு ளானை
நட்டம் ஆடியை நம்பெரு மானைக்
காட்ட கத்துறு புலியுரி யானைக்
கண்ணொர் மூன்றுடை அண்ணலை அடியேன்
கோட்ட கப்புன லார்செழுங் கழனிக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

பாட்டின்கண் இசைபோன்று எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்பவனும் , அடியார்களது உள்ளம் அன்பு செய்தற்கு இன்பமாகிய பயனாய் உள்ளவனும் , மண்ணில் வாழும் தேவராகிய அந்தணர்களது வழிபாட்டின் கண் விளங்குகின்றவனும் , நடனம் ஆடு பவனும் , நமக்குத் தலைவனும் , காட்டின்கண் வாழ்கின்ற புலியினது தோலை உடையவனும் , கண்கள் மூன்று உடைய பெருமையுடைய வனும் ஆகிய இறைவனை , அடியேன் , வரம்பகத்து நீர் நிறைந்த செழுமையான வயல்களையுடைய திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` இசையாகி ` என்னும் ஆக்கம் , உவமை குறித்து நின்றது . ` சித்தம் பரிதலுக்கு இனியானை ` என்க . ` பூசுரர் ` என்னும் பெயர்பற்றி , ` நாட்டகத் தேவர் ` என்று அருளினார் . ` நம்பெருமான் ` எனத் தம்மைப் பன்மையாற்குறித்தது , அவனுக்கு ஆளாகிநின்ற சிறப்புப்பற்றி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

ஆத்த மென்றெனை ஆள்உகந் தானை
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத்
தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்
கூத்த னைக்குரு மாமணி தன்னைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

என்னை ஆளாகக் கொள்ளுதலே தனக்குவாய்மை யாவது என்று கருதி என்னை அவ்வாறே விரும்பி ஆண்டருளின வனும் , தேவர்கட்குத் தலைவனும் , முருகனைப் பெற்ற கச்சின்கண் விளங்குகின்ற தனங்களையுடைய இளைய மான்போலும் தேவியை இடப்பாகத்தில் வைத்து , வானுலகத்தில் உள்ள கங்கையைச் சடையின் கண் மறைத்த தூயவனும் , மங்கலம் உடையவனும் , செழுமையான தேன்போல இனிப்பவனும் , தில்லையம்பலத்துள் நிறைந்து நின்று ஆடுகின்ற கூத்தினை யுடையவனும் , ஒளியையுடைய மாணிக்கம் போல்பவனும் ஆகிய இறைவனை , அடியேன் , திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` திருக்கயிலையில் அருளிச்செய்தபடி தடுத்தாட் கொள்ளுதலே , தான் வாய்மையை யுடையவன் என்பதற்கு இயை வதாம் என்று வந்து ஆண்டானன்றி , என் தகுதி பற்றி வந்து ஆண்டி லன் ` என்றபடி . ` குமரனைப் பயந்த ` என்றது இறைவிக்கு அடை யாயும் , இறைவனுக்கு அடையாயும் இயையும் இருநிலைமையும் உடையது என்க . தில்லையம்பலத்துள் நிறைதலாவது , அவ்விடம் பொலிவுபெற நிற்றல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்
ஆள தாகஎன் றாவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த
நித்தி லத்திரள் தொத்தினை முத்திக்
கொன்றி னான்றனை உம்பர்பி ரானை
உயரும் வல்லர ணங்கெடச் சீறுங்
குன்ற வில்லியை மெல்லிய லுடனே
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

அன்று அந்தணனாய்த் திருநாவலூரில் வந்து , அகன்ற இப்பூமியில் உள்ளார் பலர் முன்பும் , ` நீ எனக்குச் செய்யும் அடிமையைச் செய்க ` என்று சொல்லி ஓலை காட்டி வழக்குப்பேசி நின்று , பின்பு , திருவெண்ணெய்நல்லூரில் சென்று மறைந்த , முத்தினது திரட்சியமைந்த கொத்துப்போல்பவனும் , முத்தியளித்தற்குப் பொருந் தியவனும் , தேவர்கட்குத் தலைவனும் , உயர்ந்த வலிய மதில்கள் அழியுமாறு சினந்த , மலைவில்லைஉடையவனும் ஆகிய இறைவனை , இறைவியுடனே , அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன் .

குறிப்புரை :

` ஆள் ` என்பது , சொல்லால் அஃறிணையாயும் நிற்கு மாதலின் , ` அது ` என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றது . ` முத்திக்கு ஒன்றினான் ` என்றது , ` முத்தியை யளிப்பவன் அவன் ஒருவனே ` என்றவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

காற்றுத் தீப்புன லாகிநின் றானைக்
கடவு ளைக்கொடு மால்விடை யானை
நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை
நிரம்பு பல்கலை யின்பொரு ளாலே
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப்
போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற்
கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

காற்றும் , தீயும் , நீரும் ஆகி நிற்பவனும் , எல்லாப் பொருள்களையும் கடந்தவனும் , கொடிய பெரிய இடப ஊர்தியை யுடையவனும் , நீற்றைத் தரும் நெருப்புருவாய் ஓங்கி நிற்பவனும் , நிறைந்த பல நூல்களினது பொருள் வழியே துதித்துத் தன் திருவடியை வணங்குகின்ற அவனது உயிரைப் போக்குவோனது உயிர் நீங்கும்படி தனது திருவடியால் கூற்றுவனுக்கு அழிவைச் செய்த , ஒலிக்கின்ற கழலை யணிந்தவனும் ஆகிய இறைவனை , அடியேன் திருக்கோலக்கா வில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

இடைநின்ற பூதங்களை அருளவே , முதலிலும் இறுதி யிலும் உள்ள , ` வான் , நிலம் ` என்னும் பூதங்களும் கொள்ளப்படும் . ` காற்றுத் தீப் புனல் `, உம்மைத்தொகை . ` கொல்லேறு ` என்றல் மர பாதல் பற்றி , ` கொடுவிடை ` என்று அருளினார் . ` நீற்றுத் தீ ` என்றது , தீயினது தன்மையை விதந்தவாறு . ` தொழும் அவன் ` என்றது மார்க் கண்டேயரை . கூற்றுவனை உதைத்த காரணத்தை எடுத்தோதுகின்றா ராதலின் , ` தொழும் அவன் உயிரைப் போக்குவான் உயிர்நீக்கிட ` என , வேறொருவன்போல அருளினார் . ` நீங்கிட ` என்பதும் பாடம் . ` குரை கழல் ` என்றது , உதைத்த திருவடியின் சிறப்பை அருளியபடி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண்
டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத்
துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த
சோதி யைச்சுடர் போல்ஒளி யானை
மின்ற யங்கிய இடைமட மங்கை
மேவும் ஈசனை வாசமா முடிமேற்
கொன்றை அஞ்சடைக் குழகனை அழகார்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

அன்று பிரமனது தலையை அரிந்து அதன்கண் பிச்சை ஏற்றுத் தேவர்கட்குத் தனது திருவருள் நிலையை வெளிப் படுத்தியவனும் , நெருங்கிய பசிய கழலையணிதற்கு உரிய திருவடி யில் சிலம்பையணிந்த ஒளிவடிவினனும் , விளக்குப்போலும் விளக்கம் உடையவனும் , மின்னலினது தன்மை விளங்கிய இடையினையுடைய இளமங்கை விரும்பும் கடவுளும் , மணங்கமழுமாறு தலையின் மேல் கொன்றை மாலையையணிந்த அழகிய சடையை உடைய அழகனும் ஆகிய இறைவனை , அடியேன் , அழகு நிறைந்த திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` பலி ` என்றது , இங்குத் திருமால் முதலிய தேவ ரிடத்துக்கொண்ட இரத்த பிச்சையை . அயன் சிரத்தை அரிந்ததும் , அதில் இரத்த பிச்சை ஏற்றதும் தேவர்களது செருக்கை நீக்கித் தெளிவைத் தருதற்பொருட்டுச் செய்தனவாதலின் , ` அயன்றன் சிரம் அரிந்து அதிற் பலிகொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை ` என்று அருளினார் . ` துன்று பைங்கழல் ` என்றது அடையடுத்த ஆகு பெயர் . ஒரு காலில் கழலை அணிந்து மற்றொரு காலில் சிலம்பை அணிந்தமையின் , இவ்வாறு அருளிச்செய்தார் . சுடர்போல் ஒளியாத லாவது , எப்பொருளையும் விளக்கி நிற்றல் . ` மங்கை மேவும் ` என்ற தனை , ` மங்கையால் மேவப்படும் , மங்கையை மேவும் ` என இரு வகையாகவுங் கொள்க . ` வாசம் ஆக ` என்னும் எச்சம் , ` கொன்றை ` என்றதன்பின் உருபோடு தொக்குநின்ற ` அணிந்த ` என்பதனோடு முடிந்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

எந்நாளும் இனிய இசையால் தமிழ்ப்பாடலை எங்கணும் பரவச்செய்த திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்கு , அவர் தம் கைகளால் ஒற்றறுத்துப் பாடுதலுக்கு இரங்கி , பலருங் காணத் தாளம் ஈந்த கருணையாளனும் , என் உள்ளத்துள் கொள்ளப்படும் பொருளாய் உள்ளவனும் , தன்னால் ஆளப்படும் பூதங்கள் பாடல் களைப்பாட , அவற்றிற்கு ஏற்ப நின்று ஆடுகின்ற அருள் பொருந்திய கண்களையுடையவனும் , பதினெண் கணங்களாலும் வணங்கப் படுபவனும் , திருக்கோளிலியில் உள்ள பெருங்கோயிலில் எழுந்தருளி யிருப்பவனும் ஆகிய இறைவனை அடியேன் , திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` ஈந்து இரங்கும் தன்மையாளனை ` என்றாரேனும் , ` இரங்கி ஈயும் தன்மையாளனை ` என்றலே திருவுள்ளம் என்பதனை , ` திருஞான சம்பந்தர் திருக்கைக ளால்ஒற்றிப் பெருகார்வத் துடன்பாடப் பிஞ்ஞகனார் கண்டிரங்கி அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் பொருண்மாலைத் திருப்பதிகம் பாடியேபோற்றிசைத்தார் ` ( தி .12 ஏ . கோ . புரா .154) என , இதன் பொருளைச் சேக்கிழார் விளக்கியருளியவாற்றால் உணர்க . பதினெண்கணத்தை , ` எண்கணம் ` என்றது , முதற்குறை . ` இறைஞ்சும் ` என்றதற்கு , கருத்துப்பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது . ஞானசம்பந்தர் பாடலுக்கு இரங்கினமையை நினைந்தவர் , தம் பாடலுக்கும் இரங்கி , ஆளும் பூதங்களை ஆளாக ஈந்து , குண்டை யூரிற்பெற்ற நெல்மலையைத் திருவாரூரில் அட்டித்தரப் பணித் தமையையும் நினைந்து , ` கோளிலிப்பெருங் கோயிலுளானை ` என்று அருளினார்போலும் ! திருக்கோலக்கா , திருஞானசம்பந்தருக்குத் திருத்தாளம் அளித்த தலமும் , திருக்கோளிலி , நாயனாருக்கு நெல்லிட ஆட்கள் அளித்த தலமும் ஆதல் அறிந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக்
கன்றி ரங்கிய வென்றியி னானைப்
பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள்
பரவி யும்பணி தற்கரி யானைச்
சிரக்கண் வாய்செவி மூக்குயர் காயம்
ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்
குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

அன்று இராவணனது வலிமையை முதலில் அழித்து , பின்பு அவன் பாடிய இசைக்கு இரங்கி அருள்புரிந்த வெற்றியை யுடையவனும் , விரிந்த உலகத்தைப் படைத்தும் , உண்டும் களித்தவர்கள் துதித்துப் பணிதற்கும் அரியனாய் உள்ளவனும் , தலையில் அமைந்த , ` கண் , வாய் , காது , மூக்கு ` என்பவற்றோடு , நீண்ட உடம்புமாய் நின்று , தீமையைத் தரும் வினையை ஒழித்த எம் பெரு மானும் ஆகிய இறைவனை , அடியேன் , சோலைகளில் குரங்குக் கூட்டம் குதித்துத் திரிகின்ற , வயல் சூழ்ந்த , திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

உலகத்தை அளித்தவன் ( படைத்தவன் ) பிரமன் ; உண்டவன் , திருமால் . ` உகத்தல் `, ஈண்டு , களித்தல் . ` அளித்து , உண்டு ` என்ற சிறப்புச் செய்தென் எச்சங்கள் , ` உகந்தவர் ` என்ற பொது வினைப்பெயரோடு முடிந்தன . ` இவளும் இவனும் , சிற்றில் இழைத்தும் சிறுபறையறைந்தும் விளையாடுப ` என்றல்போல ; எனவே , ` அளித்து ` என்னும் எச்சம் , எண்ணின்கண் வந்ததாம் . ` காயம் ` என்றது , மெய் என்னும் பொறியை , ஐம்பொறிகளை எடுத் தோதவே , ஏனைய கருவிகள் எல்லாம் தழுவப்படும் . இறைவன் , தன்னால் ஆட்கொள்ளப்பட்டவர்களது கருவி கரணங்களைத் தன் கருவி கரணங்களாகவே கொண்டு , அவற்றைத் தன் வழியே செலுத்தி நிற்றலின் , ` கண் முதலிய கருவிகளாகி ` என்றும் , அதனால் , அவன் அடியார்க்கு நுகர்வினையான் வரும் உள்ளத்திரிபும் , அத்திரிபு காரணமாகக் கிளைக்கும் புதுவினையும் இலவாமாகலின் , ` தீவினை தீர்த்த எம்மானை ` என்றும் அருளிச் செய்தார் . ` நற்பதத்தார் நற்பதமே ` என்று எடுத்துக்கொண்டு , ` சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இதுஉன் தன்மை நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே ` ( தி .6 ப .95 பா .4) `.................. கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாயுட லகத்தே குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி ` ( தி .8 திருவா - திருவண் -171-173) ` எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான்இதற் கிலனொர்கைம் மாறே ` ( ? . கோயில்திருப் -10) என்றாற்போல , ஆரா அன்பால் அருளிப்போந்த அருட்டிருமொழிகள் பலவும் இப்பொருளை வெளியிடுவனவேயாம் . ` தீவினை ` என்ற தனை , இங்கு , இயைபின்மை நீக்கிய விசேடணம் பெற்றதாகக் கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்
கோலக் காவுள்எம் மானைமெய்ம் மானப்
பாட ரங்குடி அடியவர் விரும்பப்
பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்
நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால்
நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காட ரங்கென நடம்நவின் றான்பாற்
கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே

பொழிப்புரை :

ஆலம் விழுது போலும் சடைகளை யுடையவனும் , கரும்பு போல இனிப்பவனும் ஆகிய , திருக்கோலக்கா வில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை , உண்மையமைந்த பெரிய பாடல்களைப் பாடும் வழிவழி அடியவர் பலரும் விரும்புமாறு , அத்திருத் தொண்டிலே பழகும் , திருநாவலூரில் தோன்றிய , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் , உலகில் உள்ளவர்தாமும் மனம் உருகி அவனை முற்பட உணருமாற்றால் பாடிய பத்துப் பாடல் களாகிய இவைகளைப் பாடிய மாந்தர் , காடே அரங்கமாக நடனம் செய்பவனாகிய சிவ பிரானிடத்து உயர்கதியையும் பெறுவர் ; என்றும் நீடு வாழும் இடமும் அவர்க்கு அக்கதியேயாம் .

குறிப்புரை :

கோடரம் - மரக்கிளை ; அஃது இங்கு , ஆலம் விழுதின் மேற்று . ` பாடல் ` என்பது , எதுகை நோக்கி , ` பாடர் ` எனத் திரிந்து நின்றது . ` குடி அடியவர் ` என்றது , ` வழி வழி அடியவர் ` என்றதனை உணர்த்தற்கு . முன்னர் , ` பாடலை உடைய அடியவர் ` என்றதனால் , வாளா , ` பயிலும் ` என்று போயினார் . நாட்டில் உள்ளவரை , ` நாடு ` என்று அருளினார் . ` கதியும் ` என்னும் உம்மை , முன்னர் அடையற் பாலனவாகிய பலவற்றையும் தழுவிநின்ற எச்சத்தொடு சிறப்பு . ` பதி அவர்க்கு அதுவே ` என்றது , ` மீளப் பிறவார் ` என்றவாறு . ` ஆரூரன் ` என்றது , தம்மைப் பிறர்போல அருளிய வேறுமுடிபாகலின் , ` எம்மானை ` என்றவிடத்து , இடவழுவின்மை யறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

மெய்யைமுற் றப்பொடிப் பூசியொர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியொர் நம்பி
கையில்ஓர் வெண்மழு வேந்தியொர் நம்பி
கண்ணும் மூன்றுடை யானொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :

திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே , வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே , கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே , கண்கள் மூன்றை உடையவனாகிய நம்பியே , செம்மை நிறம் உடைய நம்பியே , புல்லிய , சிவந்த சடையை யுடைய நம்பியே , முப்புரங்களை , நெருப்பு எழுமாறு , வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .

குறிப்புரை :

` நம்பி ` என்பது ஆடவருட் சிறந்தவனுக்கு உரிய பெயர் ; அது , சிலவிடத்து , ` தலைவன் ` என்னும் பொருளையும் தரும் . அவ்வாறு இத்திருப்பதிகத்துள் வருவனவற்றை அறிந்துகொள்க . ` நம்பி ` என்றன பலவற்றுள்ளும் இறுதியில் உள்ள ஒன்றை யொழித்து , ஏனைய வெல்லாம் , இயல்பு விளிகளாய் நின்றன . ` நம்பீ என்ற திருப்பதிகம் ` என்ற பாடமும் காணப்படுதலால் , அவைகளை , ` நம்பீ ` என்றே பாடம் ஓதினும் இழுக்காது . இவ்வாறன்றி , அவைகளை விளியல்லாத பெயர்களாகக் கொள்ளுதல் கூடாமை ஓர்ந்துணர்க . ` மெய்யை ` என்றதில் ஐ சாரியை . உருபாகக் கொண்டு , ` மேனியை மறைக்குமாறு ` என்று உரைத்தலுமாம் . ` பூசிய , ஓதிய , ஏந்திய ` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின . ` கண்ணும் ` என்ற உம்மை , அசைநிலை . ` மூன்றும் உடையான் ` என்பதும் பாடம் . ` உடையாரொரு நம்பி ` என்பது , பாடம் அன்று . சிறுமை , புன்மை மேற்று . செறுதல் - பகைத்தல் ; அஃது அதனாற் செய்யப்படும் செயலைக் குறித்தது . ` நீயே ` என்னும் பிரிநிலை ஏகாரத்தொடு கூடிய எழுவாய் , எஞ்சி நின்றது . ` எல்லாப் பிறப்பும் ` ஏழாய் அடங்குதலின் , ` எழுபிறப்பும் ` என்று அருளினார் . ` எங்கள் ` என்றது , தம்போலும் அடியார் பலரையும் உளப்படுத்து . நம்பியை , தலைவனை என்றாற் போல முன்னிலைக்கண் அவ்விகுதி பெற்றுவருதல் பிற்காலத்து அருகி , அஃது எஞ்சி நிற்றலே பெரும்பான்மையாயிற்று . ` கண்டாய் ` என்றது , முன்னிலை யசை .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

திங்கள்நம் பிமுடி மேல்அடி யார்பாற்
சிறந்தநம் பிபிறந் தவுயிர்க் கெல்லாம்
அங்கண்நம் பிஅருள் மால்விசும் பாளும்
அமரர்நம் பிகும ரன்முதல் தேவர்
தங்கள்நம் பிதவத் துக்கொரு நம்பி
தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள்நம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :

திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே , அடியாரிடத்து இனிது விளங்கி நிற்கும் நம்பியே , பிறப்பினை எடுத்த உயிர்களுக்கெல்லாம் அவ்விடத்து மறைந்து நின்று அருள்செய்யும் நம்பியே , மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற , தேவர்கட்குத் தலைவனாகிய நம்பியே , முருகன் முதலிய முத்தர்கட்குத் தலைவ னாகிய நம்பியே , வழிபடப்படுதற்கு ஒப்பற்ற நம்பியே , ` நீயே உலகிற்குத் தந்தை ` என்று தெளிந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .

குறிப்புரை :

` அங்கண் அருள் நம்பி ` என மாற்றியுரைக்க . ` வினை வழிப்பட்ட வானுலகு ` என்பார் , ` மால் விசும்பு ` என்று அருளினார் . ` முதற்றேவர் ` என்றதில் , லகரம் கெடாது திரிந்து நின்றது , இசையின்பம் நோக்கி . ` ஒளியுடையவர் ` என்னும் பொருளதாகிய , ` தேவர் ` என்பது , ஈண்டு , ` ஞானம் மிக்கவர் ` என்னும் பொருளதாய் , முத்தரை உணர்த்திற்று . ` தவம் ` என்றது கடவுள் வழிபாட்டினை .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

வருந்தஅன் றும்மத யானை யுரித்த
வழக்குநம் பிமுழக் குங்கடல் நஞ்சம்
அருந்துநம் பிஅம ரர்க்கமு தீந்த
அருளின்நம் பிபொரு ளாலரு நட்டம்
புரிந்தநம் பிபுரி நூலுடை நம்பி
பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :

அன்று , மதத்தையுடைய யானையை அது வருந்துமாறு உரித்த நீதியை உடைய நம்பியே , ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட நம்பியே , அதன்கண் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த அருளுடைய நம்பியே , அவ் வருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற நம்பியே , முப்புரி நூலையுடைய நம்பியே , காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி நிற்கின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .

குறிப்புரை :

அசுரன் யானையாய் வந்தமையின் , அதனை உரித்தமை நீதியாயிற்று . ` அருளென் நம்பி ` ` அருளு நம்பி ` என்பன வும் , ` வருநட்டம் ` என்பதும் பாடம் அல்ல . ` அப்பொருளால் ` எனச் சுட்டு வருவித்துரைக்க . ` முழுதும் ` என்றவிடத்து , ` ஆகி ` என்பது தொகுத்தலாயிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

ஊறுநம் பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
உரியநம் பிதெரி யம்மறை அங்கம்
கூறுநம் பிமுனி வர்க்கருங் கூற்றைக்
குமைத்தநம் பிகுமை யாப்புலன் ஐந்தும்
சீறுநம் பிதிரு வெள்ளடை நம்பி
செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு [ தென்றும்
ஏறுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :

உள்ளத்தில் , அமுதம்போல ஊற்றெழுகின்ற நம்பியே , எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய நம்பியே , முனிவர்கட்கு , வேதத்தையும் , அதன் அங்கத்தையும் அறியக் கூறிய நம்பியே , அழித்தற்கரிய கூற்றுவனை அழித்த நம்பியே , அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும் கடிந்தொதுக்கிய நம்பியே , திருவெள்ளடைக் கோயிலில் வாழும் நம்பியே , சிவந்த கண்களையும் , செழுமையான கொம்புகளையும் உடைய , வெண்மையான எருதையே எந்நாளும் ஏறுகின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .

குறிப்புரை :

` குமையாப் புலன் ` என்றதில் குமைத்தல் , அடக்குதல் . ` வெள்ளடை ` என்றது , திருக்குருக்காவூர்க்கோயிலின் பெயர் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

குற்றநம் பிகுறு காரெயில் மூன்றைக்
குலைத்தநம் பிசிலை யாவரை கையில்
பற்றுநம் பிபர மானந்த வெள்ளம்
பணிக்கும்நம் பியெனப் பாடுத லல்லால்
மற்றுநம் பிஉனக் கென்செய வல்லேன்
மதியிலி யேன்படு வெந்துய ரெல்லாம்
எற்றுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :

அறிவிலேனாகிய யான் படுகின்ற கொடிய துன்பங்களை எல்லாம் ஓட்டுகின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , உன்னை , ` மலையை வில்லாக வளைத்த நம்பியே , பின்பு அதனைக் கையிற்பிடித்து நின்ற நம்பியே , பின்பு அதனால் பகைவரது மதில்கள் மூன்றை அழித்த நம்பியே , அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்தருளுகின்ற நம்பியே ` எனப் பாடுவதையன்றி ஒப்பற்ற பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என் செய்ய வல்லேன் ! நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .

குறிப்புரை :

குறுதல் - அழித்தல் . குற்று - அழித்து . குலைத்தல் - வளைத்தல் . பலவகை அடைபுணர்த்து ` நம்பி ` எனப் பாடுதற் கிடையில் , அடையின்றியே ` நம்பி ` என்றதனால் , ` ஒப்பற்ற பெரிய நம்பி ` என்பது பெறப்பட்டது . உயிர்கள் உன்னை வாழ்த்துதல் இயலுமன்றி , கைம்மாறு யாதும் செய்தல் இயலாது என்றவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

அரித்தநம் பிஅடி கைதொழு வார்நோய்
ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்தநம் பிஒரு சேவுடை நம்பி
சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம்
தரித்தநம் பிசம யங்களின் நம்பி
தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
இரித்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :

உனது திருவடியைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அரித்தொழிக்கின்ற நம்பியே , நெருங்கிய உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே , பின்பு அவைகளைக் காக்கின்ற நம்பியே , ஒற்றை எருதையுடைய நம்பியே , இல்லந்தோறும் சென்று ஏற்கும் சில பிச்சைக்கென்று , திருமேனியில் அதற்குரிய வேடத்தைப் பூண்ட நம்பியே , சமயங்கள் பலவற்றிற்கும் தலை வனாகிய நம்பியே , அன்று தக்கன் வேள்விச்சாலையிற் புகுந்து , ஆங்கிருந்த தேவரை எல்லாம் அஞ்சியோடச் செய்த நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .

குறிப்புரை :

ஆளுதல் - புரத்தல் . ` முன்னை ` என்றதனால் , ` பின்னை ` என்பதும் பெறப்பட்டது . ` ஈண்டு உலகம் ` வினைத் தொகை . தெரித்தல் - தோற்றுவித்தல் . ` மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ ` ( தி .6. ப .34 பா .1) என்று அருளிச் செய்தார் , திருநாவுக்கரசரும் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும்
பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னைநம் பிஒரு வர்க்கெய்த லாமே
உலகுநம் பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
தென்னைநம் பிஎம் பிரானாய நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :

` நப்பின்னை ` என்பவள் விரும்புகின்ற தோள்களையுடையவனாகிய நீண்ட உருவத்தையுடைய திருமாலும் , பிரமனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் தேடியும் காணமாட்டாத நம்பியே , உலகிற்கு ஒருவனாய நம்பியே , உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி , அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ ! எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள நம்பியே , பின்னிய நீண்டசடையையுடைய நம்பியே , உன் இயல்பெல்லாம் இவை போல்வனவே ; ஆயினும் , இத்தனையை யும் தோன்றாவாறு அடக்கி , பெருநம்பியாகிய நீ எளிவந்து என்னை ஆண்டது என்னையோ ? எமக்குப் பெருமானாகிய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப் பிலும் தலைவன் .

குறிப்புரை :

` காணா நம்பி ` என இயைக்க ` உலகு நம்பி ` என்றது , ` உலகிற்கு ஒரு நம்பி என்றதன் தொகை . ` அஃதல்லால் ` என்னும் ஆய்தம் , இசையின்பம் நோக்கித் தொகுக்கப்பட்டது . ` இவை ` என்றது , ` இத்தன்மையன ` என்னும் பொருளது . ` என்னை ` என்றது , வினா வினைக்குறிப்பு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

சொல்லைநம் பிபொரு ளாய்நின்ற நம்பி
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லைநம் பிஅடி யார்க்கருள் செய்ய
வருந்திநம் பிஉனக் காட்செய கில்லார்
அல்லல்நம் பிபடு கின்றதென் னாடி
அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
இல்லநம் பிஇடு பிச்சைகொள் நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :

சொற்களாய் நிற்கும் நம்பியே , அச்சொற்களின் பொருள்களாய் நிற்கும் நம்பியே , எப்பொருளின் தோற்றத்திற்கும் , ஒடுக்கத்திற்கும் முதல்வனாகிய நம்பியே , அடியார்க்கு அருள்செய்ய வல்லையாகிய நம்பியே , உனக்கு ஆட்செய்ய மாட்டாதார் , உலகில் வருத்தத்தை அடைந்து அல்லல் படுதற்குக் காரணம் என் நம்பி நம்பீ ? பதினெண் கணங்களும் போற்ற , உமையை ஒருபாகத்தில் வைத் திருந்தும் , இல்லங்களை நாடிச்சென்று அங்கு உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்கின்ற நம்பி . நம்பீ , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .

குறிப்புரை :

` சொல்லை ` என்ற ஐகாரம் , சாரியை . ` தோற்றம் ஈறுகட்கு ` என உருபு விரிக்க . ` உனக்கு ஆட்படாதவர் வருந்துதற்குக் காரணம் அவர்களது வினை ` என்பது திருக்குறிப்பு . அடுக்கிநின்ற விளிகள் இரண்டனுள் முன்னது வியப்புப் பற்றியும் , பின்னது வேண்டிக்கோடல் பற்றியும் வந்தன . வியப்பு , அடியார்களை வினை தாக்காதொழிதல் பற்றி எழுந்ததென்க . ` வைத்தும் ` என்னும் சிறப் பும்மை தொகுத்தலாயிற்று . அஃது அவள் எல்லா அறங்களையும் வளர்ப்பவளாதலைக் குறித்தது . ` தாரி ருந்தட மார்பு நீங்காத் தைய லாள்உல குய்யவைத்த காரி ரும்பொழிற் கச்சிமூதூர்க் காமக் கோட்டம் [ உண்டாகநீர்போய் ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே ` என்று அருளிச்செய்தல் காண்க . ( தி .7 ப .5 பா .6)

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

காண்டுநம் பிகழற் சேவடி என்றுங்
கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டுநம் பிஅவர் முன்கதி சேர
அருளும்நம் பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
திருத்துநம் பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டுநம் பிஇமை யோர்தொழு நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :

நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் என்னும் உறுதியோடும் மனம்பற்றி உன்னை விரும்பி உனக்கு ஆட்செய்கின்றவரை , நீ ஆட்கொண்டு அவர் விரைந்து உயர்கதி அடையுமாறு அருள்செய்கின்ற நம்பி நம்பீ , ஒளியையுடைய சிறந்த பிறை பாம்பைப் பொருந்துகின்ற முடியில் , ` கங்கை ` என்னும் நங்கை தங்கும்படி இனிது வைத்துள்ள நம்பி நம்பீ , சமணர்க்குப் பொய்ப்பொருளாய் மறைந்து நின்று , எங்கட்கு மெய்ப்பொருளாய் வெளிநிற்கின்ற நம்பியே , தேவர்கள் வணங்குகின்ற நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .

குறிப்புரை :

` என்றும் ` என்ற உம்மை சிறப்பு . உம்மை இன்றியே ஓதுதலுமாம் . ` நம்பி நம்பி ` என்னும் அடுக்குக்கள் , வேண்டிக் கோடலின்கண் வந்தன . ` பிறை பாம்பைத் தீண்டும் ` என்றது , அஃது அச்சம் இன்றி வாழ்தலைக் குறித்தது . ` கண்ணி தங்க ` என்றும் , ` திருந்து நம்பி ` என்றும் பாடங்கள் உள்ளன . ` சமணுக்குப் பொய்ப் பொருளாகி ` என்க . ` ஈண்டு நம்பி ` வினைத்தொகை . அதன்முன் , ` எங்கட்கு ` என்பது வருவிக்கப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

கரக்கும்நம் பிகசி யாதவர் தம்மைக்
கசிந்தவர்க் கிம்மையோ டம்மையி லின்பம்
பெருக்குநம் பிபெரு கக்கருத்தா * * * *

பொழிப்புரை :

உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக்கொள்கின்ற நம்பியே , அன்பு செய்பவர்க்கு இப்பிறப்பிலும் , வரும் பிறப்பிலும் இன்பத்தை மிகத் தருகின்ற நம்பியே , ...........

குறிப்புரை :

` கரத்தி நம்பி ` என்பதும் பாடம் . இத்திருப்பதிகத்துள் , இதற்குப் பின்னுள்ளவற்றை நாம் பெற்றிலேம் . இத்திருப்பாட்டின் பின்னுள்ள அடிகள் மறைந்துபோயின .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்ற மில்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
கரிய சோதியை வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ , திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியையுடையவனும் , அந்நெற்றியில் ஒரு கண்ணை உடைய வனும் , வரிசைப்பட்ட வளைகளையணிந்த உமையவளைத் தனது ஒரு கூற்றில் வைத்த செய்கையை யுடையவனும் , குற்றம் சிறிதும் இல்லாத வனும் , கற்றையாகிய அழகிய சடையின் கண் நீரைக் கட்டியுள்ள அழகனும் , தேவர்களுக்கு அரிய ஒளியாய் உள்ளவனும் ஆகிய , வரியையுடைய வரால் மீன்கள் துள்ளுகின்ற , சேற்றையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` தாங்கிய ` என்றன பலவற்றுள் ` ஆறுதாங்கிய ` என்றது ஒன்றொழித்து , ஏனைய , பான்மை வழக்கால் வந்தன . கொள்கை - கருத்து ; விருப்பம் ; அஃது அதன் காரியமாகிய செயலைக் குறித்தது . சிவம் - மங்கலம் ; நன்மை . அமங்கலமாகிய தீமைக்கு யாதும் இயைபின்றி , நன்மையே வடிவாய் உள்ளவன் இறைவன் ஒருவனே யாகலின் , ` சிவன் ` என்பது அவனுக்கே பெயராயிற்று . ` சிவன்எனும் நாமம் தனக்கே யுடையசெம் மேனிஎம்மான் ` என்ற திருமொழி ( தி .4 ப .112 பா .9) யுங்காண்க . இவ்வாறு நிரம்பிய மங்கலம் உடையனாதலைக் குறிக்கவே , அவனை , ` சிவக் கொழுந்து ` என்றும் அருளிச்செய்வர் ஆசிரியர் என்க . ` கொழுந்து ` என்றது , உருவகம் . இத்தலத்து இறைவன் பெயர் ` சிவக்கொழுந்தீசன் ` எனப்படுகின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

பிணிகொளாக்கை பிறப்பிறப் பென்னு
மிதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ
அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதில்மூன்
றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும்
ஐயன் வையகம் பரவிநின் றேத்தும்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ , நோயுடைய உடம்புகளிற் பிறத்தலும் , பின்பு அவற்றினின்று இறத்தலும் ஆகிய இவ்வல்லலை ஒழித்து இறைவன் திருவடியிணைக்கு ஆளாதலைத் துணிந்து நிற்க விரும் பினால் , அதற்கு வழிசொல்லுவேன் ; கேள் ; வஞ்சனையை இயல்பாக உடைய அசுரர்கள் வாழ்ந்த மூன்று ஊர்களை , அழகிய , கொடிய வில்லால் அழியுமாறு வெகுண்ட தலைவனாகிய , செறிந்த , நீண்ட சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , உலகமெல்லாம் , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் நின்று துதிக் கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக ; மனமே , அஞ்சாதி .

குறிப்புரை :

துணிதல் , தன் காரியத்தையும் உடன் தோற்றி நின்றது . வற்புறுத்தற் பொருட்டு , மறித்தும் , ` நெஞ்? u2970?` என்று விளித்து உணர்த்தினார் . அணி , வில்லிற்குரியன பலவுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
முடியு மாகரு தேல்எரு தேறும்
மூர்த்தி யைமுத லாயபி ரானை
அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்
அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ , மாவடுப்போலும் கண்ணிணை களையுடைய மாதர்பாற் செல்கின்ற மையலைப் பொருந்தி , அம் மையல் காரணமாகத் தோன்றுகின்ற பல , வஞ்சனைகளுக்கும் இடமாய்க் கெட்டொழிய நினையாதி ; மற்று , எருதில் ஏறுகின்ற மூர்த்தி யும் , எப்பொருட்கும் முதலாகிய பெருமானும் , அடியார்கள் , ` எம் அடிகள் ` என்று வணங்கித் துதிக்கும் அப்பனும் , இணையில்லாத பெருமையையுடைய தனங்களையுடைய உமைக்குத் தலைவனும் ஆகிய , புதல்களைக்கொண்ட காடுகள் நிறைந்த திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` அடைந்தால் , என்றும் கேடின்றி வாழ்வாய் ` என்றபடி . ` மடந்தையர் ` எனப் பன்மையாக அருளினமையால் , அது , மனைக் கிழத்தியல்லாத காமக் கிழத்தியரும் பரத்தையரும் ஆகிய பலரைக் குறித்தது . ஆகவே , ` வஞ்சனை ` என்றது , தன் எண்ணங்களை இற்கிழத் திக்கு மறைத்தலும் , அவர் ஒவ்வொருவரோடும் அவரிடத்தன்றிப் பிறர் மாட்டு அன்பில்லையாகக் காட்டுதல் முதலியவற்றால் அவரை அடைய முயலுதலும் போல்வனவற்றையாம் . அபரஞான பரஞானங் களே அம்மையின் தனங்களாதலின் , அவை ஒப்பிலவாதல் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற்
பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக்
காவ வென்றுழந் தயர்ந்துவீ ழாதே
அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
மாவின் ஈருரி உடைபுனைந் தானை
மணியை மைந்தனை வானவர்க் கமுதைத்
தேவ தேவனைத் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ , அகன்ற நிலப்பரப்பின்கண் தீவினை களையே செய்தும் , பொய்கள் பலவற்றையே பேசியும் திரிந்து , உயிர்வாழ்வதற்கு இவையே ஏற்புடையன என்று கருதித் துன்பமுற்று மெலிந்து அழியாதி ; மற்று , உலகிற்கு முதல்வனாய் உள்ளவனது இயல்புகளை , நல்லாசிரியர்பாற் பெற்ற அறிவினால் சிந்தித்து , புலியினது உரித்த தோலை உடுத்தவனும் , மாணிக்கம்போல்பவனும் , யாவர்க்கும் வலிய சார்பாய் உள்ளவனும் , தேவர்களுக்கு அமுதம் போல்பவனும் , அவர்கள் அனைவர்க்கும் இறைவனும் ஆகிய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` பாவமே புரிந்து ` எனவும் , ` அலமந்து ` எனவும் முன்னும் பின்னும் உள்ள சொற்குறிப்புக்களால் , பகரப்படுவன , பொய் களேயாயின . ` ஆவ ` என்றது , அன்பெறா அகர ஈற்று வினைப்பெயர் . முதற்கண் பொதுப்பட அருளுகின்றாராதலின் , ` அண்ணல் தன்திறம் ` என , வேறொருவன் போல அருளிச்செய்தார் . ` அறிவினால் ` என்றது , கேட்டலையும் , ` கருதி ` என்றது சிந்தித்தலையும் , ` சென்று ` என்றது தெளிதலையும் , ` அடை ` என்றது அழுந்துதலையும் உணர்த்தி நின்ற வாறு அறிந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்
டுடல் தளர்ந்தரு மாநிதி யியற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்
கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

உளமே , ஒருபொருளல்லாத உயிர் வாழ்க்கையைப் பெரிய பொருளாக நினைந்து , அந் நினைவின் வழியே , ` மெய் வருந்த , அரிய பெரிய பொருட்குவையை ஈட்டி என்றும் இனிது வாழ்தல் எமக்கு இயலும் ` என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்குரைதானும் பொய் என்பதனை நினை ; மனமே , மலைபோலும் தோள்களை உடையவனும் , பல கூத்துக்களை வல்லவனும் ஆகிய உலகில் உள்ளவர் எல்லாம் சென்று பலகாலும் மகிழ்ந்து தங்குகின்ற திருத் தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` தளர்ந்து ` என்றதனை , ` தளர ` எனத் திரித்து , அதனை , ` இயற்றி ` என்றதனோடு முடிக்க . விரும்பிய அளவில் நிதியினை ஈட்டினோரும் , என்றும் வாழ்வோரும் இலராகலின் , அவர்தம் சொற்கள் பொய்யாய் ஒழிதலை , ` உளமே ` என விளித்து அறிவுறுத்தி , பின் , இரந்து வேண்டுவார் , மறித்தும் , ` மனனே ` என்று விளித்தார் என்க . குவலயத்தோர் எல்லாம் பலகாலும் சென்று சென்று மகிழ்ந்து தங்குதல் , அதன் வளப்பத்தால் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

வேந்த ராய்உல காண்டறம் புரிந்து
வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத்
தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடும்இப்
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்
பரம னைக்கடற் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மக்கள் , அரசராய் நின்று உலகத்தை ஆண்டு , செங் கோல் செலுத்திப் பெருமிதத்துடன் அமர்ந்திருந்ததற்கு இடமாய் நின்ற மனித உடம்பாகிய இதனை , இதனொடு கொண்ட தொடர்பு நாள் தோறும் தேயப்பெற்று , பின்பு விட்டு நீங்கி , கொடிய துன்பத்தை நுகர் கின்ற இந்நிலையில்லாத வாழ்வினை , மனமே , சிறிதும் விரும்பாது விடு ; மற்று , மனமே , பாம்பை அகங்கையிற் கொண்டு ஆட்டுதலை விரும்பியவனும் , யாவர்க்கும் மேலானவனும் , கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகப் பெருமானார்க்குத் தந்தையும் ஆகிய , திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

வேந்தராதல் முதலியவற்றிற்கு உரிய எழுவாய் எஞ்சி நின்றது , ` இவ்வுடல் ` என்ற சுட்டு , மக்கட் பிறப்பினைச் சுட்டி நின்றது . ` இது தன்னை இறந்து ` என இயையும் . இறத்தல் - கடத்தல் ; நீங்குதல் . தேய்தலுக்கு வினைமுதல் வருவிக்க . வெந்துயர் , நரகமும் பிற பிறப்புக்களுமாம் . இரண்டினை இரப்பார் , அவ்வவ்விடத்தும் ` மனமே ` என விளித்தார் என்க . ` கடற் சூர் ` என்றதற்கு , ` கடலிடை வாழ்ந்த சூரன் ` என்று உரைத்தலுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது , தவத்தொழிலைச் செய்து , பயனில்லாத சொற்களைப் பேசி , பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக்கொள்ளு தலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே , மக்கள் , பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது ; ஆதலின் , அந்நிலை நின்னின் வேறாய் நிற்க , நீ , தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய , செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக் கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று , இவனே , தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக .

குறிப்புரை :

` தன்னில் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் ; அவரவரது சித்தத்தையும் தனித்தனிக் குறித்தவாறு . ` தவம் ` என்றது , பலவகை நோன்புகளை ; பயனில்லாத சொற்கள் , ` விரதங்களே பயன்தரும் ; முதல்வன் வேண்டா ` என்று கூறுவன . இங்ஙனங் கூறுவோர் மீமாஞ்சகர் ; அவரது நிலையை , ` விரத மேபர மாகவே தியரும் சரத மாகவே சாத்திரங் காட்டினர் ` ( தி .8 திருவா . போற்றி 50,51) எனவும் , ` திசைக்குமிக் குலவு கீர்த்தித் தில்லைக்கூத் துகந்து தீய நசிக்கவெண் ணீற தாடும் நமர்களை நணுகா நாய்கள் அசிக்கஆ ரியங்க ளோதும் ஆதரைப் பேத வாதப் பிசுக்கரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்க ளோடே ` ( தி .9 திருவிசைப்பா 4-5) எனவும் , ` ஆதிமறை ஓதி அதன்பயன்ஒன் றும்மறியா வேதியர்சொல் மெய்யென்று மேவாதே ` - நெஞ்சுவிடுதூது 116-117 எனவும் வந்தனவற்றால் அறிந்துகொள்க . இவர் சிவபிரானுக்குரிய சடைமுடி முதலிய கோலத்தை அணிதலாற் பயன் பெறாமை அறிக . ` இங்ஙனம் வேடமாத்திரத்தால் பெரியையாகக் காட்டுதலை ஒழிக ` என்பார் , ` அதுநிற்க ` என்று அருளினார் . ` முன்னெலாம் ` என்றதன் பின் , ` ஆய ` என்பது வருவிக்க . ` முழுமுதல் என்று அடை ` என இயையும் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
பலருங் கண்டழு தெழஉயிர் உடலைப்
பிரிந்து போம்இது நிச்சயம் அறிந்தாற்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , அன்புள்ள சுற்றத்தாரும் , மற்றும் துணை யாயுள்ளாரும் ஆகிய பலருங் கண்டு , உடல்மேல் விழுந்து அழுது எழும்படி , உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும் ; இது நிச்சயம் . இதனை நீ அறிந்துளை என்றால் , அறியாமையையுடைய வாழ்வாகிய இம் மாறுபட்ட நெறியை நீங்கி , கரிய பெரிய கண்களை யுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும் , உயிர்களில் நிறைந்திருப்பவனும் , காலனுக்குக் காலனும் , எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய , செருந்தி மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை , விரும்பி , அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` துணை ` என்றது , நண்பர் முதலாயினாரை . ` கண்டு அழுதெழ ` என்றது , ` அவர் செய்யலாவது அத்துணையே ; பிறி தில்லை ` என்றவாறு . ` கால காலன் ` என்றது , ` அவனாயின் அந்நிலையை விலக்க வல்லான் ` என்றதாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்
நன்மை யொன்றிலாத் தேரர்புன் சமணாம்
சமய மாகிய தவத்தினார் அவத்தத்
தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமையொர் கூறனை ஏறுகந் தானை
உம்ப ராதியை எம்பெரு மானைச்
சிமய மார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ நன்மையை அடையவிரும்பினால் , நன்மை சிறிதும் இல்லாத புத்தமும் சமணமும் ஆகிய சமயங்களைப் பொருந்திய தவத்தினரது பயனில்லாத செயல்களை விட்டொழி ; நம்மைப் பலர் இகழ்ந்து பேசுதற்கு முன்பே , உமையை ஒரு பாகத்தில் உடையவனும் , எருதை விரும்பி ஏறுபவனும் , தேவர்கட்கு முதல் வனும் , எங்கட்குத் தலைவனும் ஆகிய , மலைச்சிகரம் போலப் பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளி யிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` இகழ்ந்துரைப்பதன்முன் சென்று அடை ` எனவும் , ` நன்மையை வேண்டில் விட்டொழி ` எனவும் இயையும் . ` புன்மை ` என்பதன் மை ஈறு தொகுத்தலாயிற்று . அப்பெயர் , அத்தன்மையை யுடைய சமயத்தைக் குறித்தது . ` தேரர் புன்மையும் சமணுமாம் சமயம் ` என்க . நன்மையொன் றில்லாமையை , அவ்விரண்டற்குங் கொள்க . மலைச்சிகரம் , சோலைக்கு , உயர்ச்சிபற்றி உவமையாயிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து
நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்
நாட லாம்புகழ் நாவலூ ராளி
நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்
முத்தி யாவது பரகதிப் பயனே

பொழிப்புரை :

எல்லையில்லாத , நிலையற்ற பிறவியை வெறுத்து , அதனினின்றும் நாம் நீங்குதலே பொருந்துவது என்று சொல்லி மனத்தைத் தெளிவித்து , திரட்சி பொருந்திய சோலைகளையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானது திருவடியிணையை நினைத்தற்கு ஆகும் , புகழையுடைய திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினை யும் பாட வல்லவர் அடையும் இன்ப நிலையாவது , மிக மேலான நிலையாகிய முடிந்த பயனேயாம் .

குறிப்புரை :

` நீடு பிறவி , பொக்கையினையுடைய பிறவி ` என்க . உள்ளீடின்மையைக் குறிக்கும் ` பொக்கு ` என்பது அம்முப் பெற்று , ` பொக்கம் ` என வருதல்போல , ஐ பெற்று , ` பொக்கை ` என வந்தது . ` பொய் ` என்னும் பொருளதாகிய இது , நிலையின்மையை உணர்த் திற்று . ` மனத்தினைத் தெருட்டி , திருவடியிணையை நாடலாம் பாடல் ` என இயைக்க . ` இணைதான் ` என்னும் தான் , அசைநிலை . ` நாடற்கு ஆம் ` என உருபு விரிக்க . ஆதல் - துணையாதல் . ` நாடெலாம் புகழ் ` என்பது , பாடம் அன்று . ` தமிழ்ப் பாடலாம் இவை பத்து ` என மாறிக் கூட்டுக . முற்றும்மை தொகுத்தலாயிற்று . ` முத்தி ` என்றது , ` இன்ப நிலை ` என்னும் பொருளதாய் நின்றது . மிக மேலான நிலையாவது , இறைவனோடு இரண்டறக் கலத்தல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

திருவும் வண்மையுந் திண்டிற லரசுஞ்
சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி யடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

பெருகி வருகின்ற காவிரியாற்றின் நீர் , கொணர்ந்து தள்ளிய பல மணிகளை , சிறுமகாரது பல குழுக்கள் , விளையாட்டிற் சென்று எடுத்து , தெருக்களிலும் , திண்ணைகளிலும் , முற்றங்களிலும் குவிக்கின்ற , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , நீ , சிலந்தி செய்த செய்கைத் தொண்டினைக் கண்டு , அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழ நாயனார்க்கு , செல்வத்தையும் , கொடைத் தன்மையையும் , திண்ணிய ஆற்றலை உடைய அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு , அடியேன் உனது மலர் போலும் திரு வடியைப் புகலிடமாக அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

சிவத் தொண்டு செய்யும் உணர்வு பெற்றிருந்தமையின் , ` சிலந்தியார் ` என , உயர்திணையாக அருளிச்செய்தார் . ` சிலந்தியாய் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` நினைக்கும் பணி , சொல்லும் பணி , செய்யும் பணி ` எனப் பணிகள் மூவகைப்படுதலானும் , ` செய்தல் ` என்னும் பொதுவினை , அவைகட்கும் ஏற்குமாதலானும் , ` செய்த செய்பணி ` என்று அருளிச்செய்தார் . கோச்செங்கண் நாயனாரது வரலாற்றின் விரிவை , பெரிய புராணத்துட் காண்க . ` தென்றிரு நின்றியூர் ` என்றதற்கு , ` தென்றிசையில் உள்ள திருநின்றியூர் ` என உரைத்தலுமாம் . இதற்கு , தமிழ் நாட்டின்கண் உள்ள ஊர் என்பது கருத்தாகும் . இது சிலந்திக்கு அருளிய செயலை எடுத்து அருளிச் செய்த வாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

அணிகொ ளாடையம் பூணணி மாலை
யமுது செய்தமு தம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல்
ஈன்ற வன்திரு நாவினுக் கரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
காதல் இன்னருள் ஆதரித் தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

திணை வரையறையைக் கொண்ட செவ்விய தமிழைப் பசிய கிளிகள் ஆராய்ந்து சொல்லுகின்ற , செல்வத்தை யுடைய , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , உன்பால் , பாலைக் கொணர்ந்து ஆட்டி , அழகினைக் கொண்ட ஆடை , அழகிய அணிகலம் , சூடுகின்ற மாலை , திருவமுது என்னும் இவற்றைப் பெற்ற சண்டேசுர நாயனாரும் , தனக்குத்தானே நிகராய் உள்ள பாடல்கள் நாலாயிரத்துத் தொள்ளாயிரத்தை அருளிச் செய்தவராகிய திருநாவுக் கரசரும் , அம்பைக் கையிலே கொண்ட கண்ணப்ப நாயனாரும் பெற்ற , அன்பின் பயனாகிய இனிய திருவருளை விரும்பி , அடியேன் உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

` அமுது ` இரண்டனுள் , முன்னையது பால் ; பின்னை யது உண்டி . ` செய்து ` என்றது , ` ஆட்டி ` என்றவாறு . தமக்கு நிவே தனம் செய்த அமுதம் என்பது அது , கறந்து கொணர்ந்து ஆட்டியதைக் குறித்தது . சண்டேசுர நாயனாருக்குச் சிவ பெருமான் , தாம் உடுத்த உடை முதலியவற்றை , அவருக்கு உரியனவாக அளித்தமையை , ` நாம் - உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக ` ( தி .12 பெ . புரா . சண்டே . புரா . 56) என்றது பற்றி அறிந்துகொள்க . ` திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த செய்யுட்கள் நாலா யிரத்துத் தொள்ளாயிரம் ` என்பதனை இங்கு எடுத்தோதி அறிவுறுத் தவாறறிக . ` பனுவல் ` என்பது , பாடலையுங் குறிக்கும் ; பதிகத்தையும் குறிக்கும் ; எனினும் , நம்பியாண்டார் நம்பிகள் , அதனை , ` பதிகம் ` என்றே விளக்குதலை , ` பதிகம் ஏழெழு நூறு பகரு மாகவி யோகி ` - திருவேகாதச மாலை - 7 என்பதனான் அறியலாகும் . சேக்கிழார் , ` நின்றியூர் மேயாரை நேயத்தாற் புக்கிறைஞ்சி ஒன்றியஅன் புள்ளுருகப் பாடுவார் உடையஅரசு என்றும்உல கிடர்நீங்கப் பாடியஏ ழெழுநூறும் அன்றுசிறப் பித்தஞ்சொல் திருப்பதிகம் அருள்செய்தார் ` என்று , ( தி .12 ஏயர் . 150) பொதுவே அருளிப் போயினார் . நம்பியாண்டார் நம்பிகள் , ஓரிடத்து திருஞானசம்பந்தரது திருப்பாடல் பற்றி , ` பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் ` ( தி .11 ஆளுடைய பிள்ளை யார் திருவுலா மாலை - 63,64) என்று , ` பனுவல் ` என அருளிச்செய்தவர் . பிறிதோரிடத்து , ` பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா ` ( தி .11 ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - 22) என்று , ` பதிகம் ` என்பது பட அருளிச் செய்கின்றார் . இவ்வாற்றால் , ` நாலாயிரத்துத் தொள்ளாயிரம் ` என்பதும் , ` பதினாறாயிரம் ` என் பதும் , பதிகங்கள் என்றே கொள்ளக்கிடக்கின்றன . இனி , பாடலன்றி , பதிகமே நாற்பத்தொன்பதினாயிரம் என்பார்க்குச் சான்று ஏதும் இல்லை என்க . ` ஈன்றவன் ` என்று அருளினார் , பாடலையும் , ` எச்சம் ` என்னும் வழக்குப்பற்றி . ` உயர்திணை , அஃறிணை ` என்னும் சொல் வரையறைகளும் , ` அகத்திணை , புறத்திணை ` என்னும் பொருள் வரையறைகளும் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பியல்பாதல் பற்றி , ` திணைகொள் செந்தமிழ் ` என்று அருளினார் . ` செந்தமிழைப் பைங்கிளி தெரியும் ` என்றது , ஓர் நயம் . கிளிகள் தமிழை ஆராய்தல் , பலரிடத்துக் கேட்கும் பயிற்சி பற்றி என்க . இது , நாயன்மார்கட்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி
மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி
ஓங்கு நின்றியூ ரென்றுனக் களிப்பப்
பத்தி செய்தவப் பரசுரா மற்குப்
பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

சித்தர் , தேவர் , அசுரர் , ஆகியோர் வணங்குகின்ற , செல்வத்தையுடைய , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , உன்னிடத்து அன்பு செய்த பரசுராமன் உனக்கு மிக்க புகழையுடைய முந்நூறு வேதியரோடு , முந்நூற்றறுபது வேலிப் பரப்புள்ள நிலத்தை , என்றும் விளங்கும் ` திருநின்றியூர் ` என்று பெயரிட்டு , ஏற்புடைய , பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க , அவனுக்கு உன் திருவடியை அளித்த முறைமையை அறிந்து , அடியேன் , உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

இஃது இத் தலத்தின் தோற்றம் பற்றிய புராண வரலாறு . ஒத்தல் , தாரை வார்த்தற்கு ஏற்புடையதாதல் . முந்நூறு வேதியரையும் இறைவனுக்கு உரியவராக நீர் வார்த்துக் கொடுத்தற்குப் பல கலசங்கள் வேண்டப்பட்டன என்க . இது , பரசுராமனுக்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்
சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந்
தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
பரவி யுள்கிவன் பாசத்தை யறுத்துப்
பரம வந்துநுன் பாதத்தை யடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

மேலானவனே , நெற்பயிர்கள் முத்துக்களைப் பரப்பி , அம்முத்துக்களோடு ஒத்து மதிப்புடைய செம்பொன்போலும் நெற்களை அளிக்கின்ற திருநின்றியூரில் உள்ள இறைவனே , உன்னை , பசு ஒன்று , சூரியனது நீண்ட ஒளி தோன்றுவதற்கு முன்பே எழுந்து , தன் மடியாகிய கலசத்தை ஏந்திப் பால் சொரிந்து வழிபட்டு நின் திருவடியை அடைந்த செய்தியை உறுதிப்படக் கேட்டு , அடியேன் , உனது திருவடியை நினைத்துத் துதித்து , பற்றுக்களை எல்லாம் விடுத்து வந்து அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

பசு சிவபெருமானை வழிபட்டு முத்தி பெற்ற தலங்கள் , ஆவூர் , ஆனிலை முதலியன . நிரவி அளித்தலுக்கு எழுவாய் எஞ்சி நின்றது . இனி , ` முத்தையும் , பொன்னையும் புலவர் முதலியோர்க்கு மிக அளிக்கும் திருநின்றியூர் ` எனினுமாம் . ` ஒருமடி தானே பல கலசங்களாகக் கொள்ளப்பட்டது ` என்பார் , ` கலசங்கள் ஏந்தி ` என்று அருளினார் . இது , பசுவிற்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்த வாறு . ` பசு , காமதேனு ` என்றும் , ` அஃது இங்கு வழிபட்டு முத்தி பெற்ற வரலாறே இத்திருப்பாடலில் குறிக்கப்பெற்றது ` என்றும் உரைப்பாரும் உளர் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

செவ்விய தண்ணிய சிறந்த தாமரை மலரின்கண் இருக்கும் திருமகள் வாழும் , செல்வத்தை யுடைய , அழகிய திருநின்றி யூரில் உள்ள இறைவனே , இந்திரன் ஒருவன் , உன்னிடத்து வந்து உன்னை வழிபட , அதற்கு மகிழ்ந்து , அவனுக்கு , ` நீ , விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய தலைமையையும் , ` காலை , நண் பகல் , மாலை ` என்னும் மூன்று சந்திகளிலும் , இலிங்க உருவத்தை நிறுவி , கலையுருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு , அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற , அழகிய திருப்பொதியில் மலையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து , அடியேன் , உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

இந்திரராய் வருவோர் எண்ணிறந்தவராதலின் , ` ஓர் இந்திரன் ` என்று அருளினார் . ` அருளி ` என்ற எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின் , அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது . ` சகளம் ` என்பது , ` கலையொடு கூடியது ` எனப் பொருள் தருவது . அதனொடு இகர விகுதி புணர்த்து ` சகளி ` என அருளவே , ` கலைகளை உடைய திரு மேனி ` என்பது பொருளாயிற்று . ` தாபரம் நிறுத்திச் சகளிசெய்து ` எனவே , ` இலிங்கத் திருமேனியில் கலையுருவத்தைப் பாவனையால் அமைத்து ` என்றவாறாயிற்று . சிவ வழிபாட்டிற் கொள்ளப்படும் மந்திரங்கள் பலவற்றுள்ளும் , ` பஞ்சப்பிரம மந்திரங்கள் ` எனப்படும் ஐந்தும் , ` சடங்க மந்திரங்கள் ` எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும் . இப்பதினொன்றனையும் , ` சங்கிதா மந்திரங்கள் ` என்ப . ` மந்திரம் ` எனச் சிறந்தெடுத்துச் சொல்லப் படுவன , இப்பதினொன்றுமே என்பதனை , ` பந்தமுறு மந்திரங்கள் பதினொன்று மாதலினால் அந்தமுறை நான்கினோடு முறைபதினொன் றாக்கினார் ` திருமுறைகண்ட புராணம் ( பா .28) கூறுவதும் அறிக . பதினொரு மந்திரங்களுள்ளும் ஈசானம் முதலிய பஞ்சப்பிரம மந்திரங்கள் ஐந்தும் முதன்மையானவை . அவை மந்திரோப நிடதத்துள் நீண்ட தொடர்களாய் உள்ளன . அவையே சிவாகமங்களிற் சிறிய தொடர்களாக அவ்வவ்வற்றிற்கு உரிய வித்தெழுத்துக்களுடன் ( பீஜாட்சரங்களுடன் ) சொல்லப்படுகின்றன . சிவ வழிபாட்டினைச் சுருக்கமாகச் செய்யுமிடத்து , ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்துச் செய்யப்படும் . விரிவாகச் செய்யுமிடத்து , வேத மந்திரங்களை முப்பத் தெட்டுக் கூறுகளாகச் செய்து எலலா உறுப்புக்களாகவும் வைத்துச் செய்யப்படும் . இம் முப்பத்தெட்டுக் கூறுகளே , ` கலை ` எனப்படும் . சிவனது பல்வேறு வகைப்பட்ட சத்திகளே இக்கலைகளின் வடிவாய் நிற்குமாதலின் , அவை வாயிலாகக் கருதப்படும் சிவபிரானது வடிவம் , சத்தி சமூக வடிவமேயாம் . ஆதலின் , இங்ஙனம் சிவபிரானை முப்பத் தெட்டுக் கலைவடிவினனாக உணர்ந்து வழிபடுதல் சிவநெறியில் சிறந்த வழிபாடாக அமைந்துள்ளது . இவை அனைத்தும் தோன்றவே , சுந்தரர் , ` சகளி செய்து இறைஞ்சு அகத்தியன் ` என்று அருளினார் . ஆகவே , சிவ வழிபாட்டின் முறைகளைக் குறிப்பால் அருளியவாறா யிற்று . ` கடவுள் முப்பத்தெட்டுக் கலைவடிவினன் ` என்பது சைவத்தின் கொள்கையாக மணிமேகலை க் காப்பியமும் குறிப்பிடுகின்றது . ( சமயக் கணக்கர்தந் திறங்கேட்ட காதை - 91) சிவ வழிபாட்டிற் கொள்ளப்படும் முறையே , சிவநெறியினர் தம்மைச் சிவமாகப் பாவித்துச் செய்து கொள்ளும் திருநீற்றுப் புண்டரம் , அங்க நியாசம் , கர நியாசம் முதலியவற்றிலும் கொள்ளப்படுவது . ஆகவே , ` சகளி செய்து ` என்றது அவற்றிற்கும் பொருந்துவதாம் . வைதிக நெறியினர் இவற்றைக் கொள்ளுதல் இல்லை . ` அகத்தியர் தமக்கு ` என்பது , ஓது வோர் , தாம் வேண்டியவாறு ஓதிய பாடம் என்க . இஃது , இந்திரனுக்கும் , அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

காது பொத்தரைக் கின்னரர் உழுவை
கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
கோல ஆல்நிழற் கீழறம் பகர
வேதஞ் செய்தவர் எய்திய இன்பம்
யானுங் கேட்டுநின் இணையடி யடைந்தேன்
நீதி வேதியர் நிறைபுக ழுலகில்
நிலவு தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

நீதியையுடைய அந்தணர்கள் நிறைந்திருத்தலால் உளதாகிய புகழ் , உலகமுழுதும் விளங்குகின்ற , அழகிய திரு நின்றியூரில் உள்ள இறைவனே , கேள்வியால் துளைக்கப்பட்ட செவி யினையுடைய நால்வர் முனிவர்கள் , ` கின்னரர் , புலி , கடிக்கும் இயல்புடைய பாம்பு , பற்றுதற்கு அரிய சிங்கம் , குற்றம் அற்ற பெரிய தவத்தவர் குழாம் ` என்ற இவருடன் இருந்து கேட்ப , நீ , அழகிய ஆல் நிழலில் இருந்து , அறத்தின் உண்மைகளை எல்லாம் சொல்ல , அவற்றைக் கேட்டுப் பின்பு வேதங்களை இயற்றி அவர்கள் அடைந்த இன்பத்தினைக் கேட்டறிந்து , அடியேனும் , உனது திருவடியிணையை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

பொத்து - துளை . ` காது பொத்தர் ` என்றதனை , ` பொத்துக் காதர் ` என மாற்றி , ஐயுருபை , குவ்வுருபாகத் திரித்துக் கொள்க . ` காது பொத்தர்க்கு , அவர் குழுவுடன் கேட்பப் பகர ` என்க . கின்னரர் , மாதவர் முதலிய நல்லோரும் , புலி முதலிய கொடிய உயிர் களும் சூழ இருப்ப என்றது , இறைவனது திருமுன்பின் பெருமை யுணர்த்தியவாறு . இடத்தது நன்மையால் , கொடியனவும் அக் கொடுமை நீங்கின என்றபடி . காது பொத்தர் நால்வர் என்பது , ஐதிகத் தான் நன்கறியப்பட்டது . ` காது பொத்தர் - பிறவற்றைக் கேளாது காதைப் பொத்திக் கொண்டவர் ` என்றும் உரைப்பர் . கின்னரர் முதலிய பலரும் சூழ்ந்திருந்தாராயினும் கேட்டோர் அந் நால்வரே யாகலின் , ` குழுவுடன் ` என்ற மூன்றனுருபு , ` தொடியொடு தொல்கவின் வாடிய தோள் ` ( கு றள் -1235) என்புழிப் போல , வேறு வினைப் பொருளதாம் . அறம் முதலிய உறுதிப் பொருள்கள் நான்கும் தொகுத்து நோக்கும்வழி , அறமாகவே அடங்குதலின் , அவை அனைத்தையும் , ` அறம் ` என்றே கூறுதலும் மரபேயாம் . அறம் முதலிய நான்கினையும் நால்வர் முனிவர் கட்கு இறைவன் நுண்ணியவாய்ச் செவியறிவுறுத்த , அவற்றைக் கேட்ட நால்வரும் , நான்கு வேதங்களில் அவற்றை உலகிற்கு இனிது விளங்க விரித்துரைத்தனர் என்பது கூறப்பட்டது . இதுவே , திருமுறைகளில் வேதத்தைப் பற்றிக்கூறும் உண்மை வரலாறு . எனவே , இறைவனே வேதம் , வேதாங்கம் முதலியவற்றை அருளினான் என வருமிடங்கள் எல்லாம் முகமனுரையாய் நின்று , இவ்வுண்மையையே குறிப்பன வாதல் அறிந்துகொள்க . இனி இஞ்ஞான்று வழங்கும் இருக்கு முதலிய வேதங்கள் , இந்நால்வராற் செய்யப்பட்டன என்பது துணியப்படு மாறில்லை . அதனால் , இவற்றிற்கு வரலாறு வேறு கூறுவார் பக்கம் வலியுடைத்து . இன்னோரன்னவை கால வேறுபாட்டால் நிகழ்வன எனப்படும் . வேதம் செய்தவர் எய்திய இன்பமாவது , ` நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ` ( தி .10 திருமந்திரம் -85) என்று நன்னெறியை உலகிற்கு உணர்த்தி மகிழ்ந்த மகிழ்ச்சி . எனவே , சுவாமிகளுக்கும் அவ் வின்பம் உளதாயினமை யறிக . ஏதம் செய்தவர் இன்பம் எய்துதல் கூடாமையானும் , ` வினை செய்தவர் ` என்பது கூறவேண்டாமை யானும் , ஈண்டு மோனை வேண்டுதல் கூடாமை யறிக . இது , நால்வர் முனிவர்க்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க
நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டுநின் பொற்கழ லடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறு
நிலவு தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

பெண் மயில்கள் போலவும் , இளைய பெண் மான்கள் போலவும் , இளைய கிளிகள் போலவும் , பிறை போலும் நெற்றியையுடைய மகளிர் , உயர்ந்த மாடங்களையுடைய மாளிகை தோறும் விளங்குகின்ற , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , நான்கு கொம்புகளையுடைய யானை , உன்முன் நின்று , தனது உடல் , அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே , முன்னை வடிவத்தையும் , விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு அடியேன் , உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

நான்கு கொம்புகளையுடைய யானை , இந்திரனது , ஐராவதம் ; அது , சூரன் மகனால் நான்கு கொம்புகளையும் இழந்து , விண்ணுலகை நீங்கினமையையும் , பின்பு திருவெண்காட்டில் சிவபெருமானை வழிபட்டு , முன்போல நாற்கொம்புகளையும் பெற்று , பின்னர் இந்திரனிடம் சென்றமையையும் , கந்தபுராணத்தான் அறிக . இவ் யானை , மதுரையிலும் சிவபெருமானை வழிபட்டு , துருவாச முனிவரது சாபத்தினின்றும் நீங்கினமையை , திருவிளையாடற் புராணங் கூறும் . ` பீடு ` என்றது , அதனையுடைய உருவத்தைக் குறித்தது . ` பீடும் பெருமையும் பெற்ற ` என்க . ஆண் மயிலே அழகுடையதாயினும் , இவர்கள் ` பெண்மயிலாய் இருந்தே அழகுடையராய் இராநின்றார் ` எனச் சிறப்பிக்கின்றாராதலின் , இல் பொருள் உவமையாக , ` அழகுடைய பேடை மயில் ` என்றல் திரு வுள்ளம் என்க . இஃது , ஐராவதத்திற்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தது . இத்திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்களை நாம் பெறே மாயினேம் . * * * * * * 8, 9, 10 8, 9, 10. * * * * * *

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

மறைய வன்ஒரு மாணிவந் தடைய
வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மான்என் றெப்போதும்
ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , உன்னை , அந்தணனாகிய பிரமசாரி ஒருவன் அன்புடன் வந்து அடைய , அவனது அரிய உயிரைப் போகாது நிறுத்த வேண்டி , உதிரத்தைக்கொண்ட சூலத்தையுடைய இயமனைக் காலால் உதைத்துக்கொன்ற காரணத்தை உணர்ந்து உணர்ந்து , அடியேன் , ` யாவர்க்கும் முதல்வன் ; எமக்குப் பெருமான் ` என்று எப்பொழுதும் துதித்துத் துதித்து , அஞ்சலி கூப்பிநின்று , கழலும் சிலம்பும் ஒலித்தலைக் கொண்ட உனது செவ்விய திருவடியிடத்துக் கொண்ட அன்போடும் வந்து அடைந்தேன் ; என்னை ஏற்றுக் கொண்டருள் .

குறிப்புரை :

` காரணம் ` என்றது , திருவருளை . அடுக்குக்கள் , பன்மை குறித்தன . ` நின்று ` என்றதனை , ` அஞ்சலி செய்து ` என்றதன் பின் கூட்டுக . ` கழலும் சிலம்பும் ` என்பது , ஆற்றலான் வந்தது . ` எங்கள் முதற்கடவுள் ` என்றது , உன்னை முதற்கடவுளாக அறிதல் அனை வர்க்கும் ஆவதன்று என்றபடி . இது , மார்க்கண்டேயருக்குச் செய்த திருவருளை எடுத்தோதி யருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று , தனது வாயினின்றும் உண்டாகும் நூலால் அழகிய பந்தரை உறுதிப்பட ஆக்க , அச் சிலந்தியை , சுருண்ட , சிவந்த சடையை உடையையாகிய நீ சோழ னாய்ப் பிறக்கச்செய்த திருவருளை அறிந்து , அடியேன் , எனது எதிர் வினைக்கு அஞ்சித் துணுக்குற்று , உனது அழகிய மலர்போலும் திரு வடியில் விழுந்து புரண்டு , ` போற்றி ! போற்றி !` என்று துதித்து , அன்பினால் அழுது , உன்னை வந்து அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

சிலந்தியது தெருட்சி , அதனது வாய்க்கு ஆக்கப் பட்டது . சோழன் , கோச்செங்கட் சோழ நாயனார் ; இவரது வரலாற்றை , பெரிய புராணத்துள் விளங்க உணர்க . தொடர்ச்சி - தொடர்பு ; அஃது அருளாகிய தொடர்பைக் குறித்தது . ` அரண்டு ` என்பது , ` துணுக்குற்று ` எனப் பொருள் தருவதொரு சொல் . எதிர்வினை , இனிச் செய்யும் வினை ; இஃது ` ஆகாமியம் ` எனப்படும் ; இது , பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய தாகலின் , அதற்கு அஞ்சிய அச்சத்தினையும் , அதுபற்றி இரந்துநின்ற நிலையையும் இத்துணை வகுத்து அருளினார் . இது , சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

திகழும் மாலவன் ஆயிர மலரால்
ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப்
புகழி னால்அவன் கண்ணிடந் திடலும்
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழு நின்திருப் பாதங்கள் பரவித்
தேவ தேவநின் திறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

தேவர்கட்குத் தேவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , மிக்க புகழுடையவனாகிய திருமால் நாள்தோறும் ஆயிரந் தாமரைப் பூக்களால் உன்னை அருச்சிக் கின்றவன் , ஒருநாள் ஒரு சிறந்தபூக்குறைய , அவன் அதற்கு மெலி யாது , புகழத்தக்க உறுதிப் பாட்டுடன் , தனது கண்களில் ஒன்றைப் பெயர்த்து உனக்குச் சாத்த , அதனைக்கண்டு மகிழ்ந்து அவனுக்கு நீ சிறந்த சக்கரப்படையை அளித்தமையை உணர்ந்து , அடியேன் , என் நிலைமையைப் பெயர்த்து , நிலையில்லாது உழலச் செய்கின்ற வலிய வினைக்கு அஞ்சி , ஒளிவீசுகின்ற உனது திருவடிகளைத் துதித்து , உனது பெருமைகள் பலவற்றையும் பலகாற் பேசி , உன்னை வந்து அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

திருமால் இவ்வாறு சிவபிரானை வழிபட்டு , அப் பெருமான் சலந்தராசுரனை அழித்தற் பொருட்டுத் தோற்றுவித்த சக்கரப் படையைப் பெற்றமையை , ` சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடி நலமுடைய நாரணன்றன் நயனமிடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ ` ( தி .8 திருவா . திருச்சாழல் -18.) ` பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத் தன்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ ` ( தி .8 திருவா . திருத்தோ -10.) என்னும் திருவாசகத் திருப்பாடல்களால் அறிக . ` நாண் மலர் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் , பித்தர்போலப் பலகாற் கூறுதலை , ` பிதற்றி ` என்று அருளினார் . இது , திருமாலுக்குச் செய்த திருவருளை எடுத்தோதி யருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

வீரத் தால்ஒரு வேடுவ னாகி
விசைத்தொர் கேழலைத் துரந்துசென் றணைந்து
போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்
புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
வாரத் தால்உன நாமங்கள் பரவி
வழிபட் டுன்திற மேநினைந் துருகி
ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , நீ , ஒரு வேடுவனாய் உருக்கொண்டு , ஒரு பன்றியை , வீரத்துடன் விரைந்து துரத்திச் சென்று , உன்னை நோக்கித் தவம் செய்துகொண்டிருந்த அருச்சுனனை அடைந்து , அவன்மேல் வைத்த விருப்பத்தால் அவனோடு போர் புரிந்து , பின்பு அவனுக்கு , சிறந்த படையாகிய பாசுபதக் கணையை அளித்தமையை அறிந்து , அடியேன் உனது தன்மைகளை நினைந்து உருகி , உனது திருப்பெயர்களை அன் போடு சொல்லி உன்னை வழிபட்டு , ஆர்வத்தோடு வந்து உன் திருவடி யிணையை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

` விசைந்து ` என்பது பாடம் அன்று . ` அன்பாய்ப் போரைப் புரிந்து விசயனுக்குப் படை கொடுத்தல் ` என இயையும் , இவ்வாறு அருச்சுனனுக்கு அருளிய வரலாற்றை , பாரதத்துட் காண்க . இஃது , அருச்சுனனுக்குச் செய்த திருவருளை எடுத்தோதி யருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப்
புகழி னால்அருள் ஈந்தமை யறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றி
வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை யடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

வேதம் ஓதுபவனே . உலகிற்கு முதலாய மூர்த்தியே , உன் அரையில் எலும்பை அணிந்த பெருமானே , திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , நீ , மூன்று ஊர்களில் ஓங்கி எரிகின்ற நெருப்பை ஒருசேர எழுப்பியபொழுது , அங்கு உன்னையே நினைத்திருந்த மூவராகிய அவர் மட்டில் உய்ந்து , உன் திருவடியை அடைந்து , மேல்உலகத்தை ஆளும் வண்ணம் , அவர்கட்கு , புகழத்தக்க வகையில் திருவருள் ஈந்தமையை அறிந்து , அடியேன் , மேலான உனது திருவடியையே தொழுது முறையிட்டு , உன்னை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` முப்புரத்திலும் ஒக்க எரி தூவ ` என்க . எரியை உண்டாக்கினமையை , தூவியவாறாக அருளினார் . திரிபுரம் எரித்த காலத்தில் , சிவபத்தியிற் பிறழாதிருந்த மூவரைச் சிவபிரான் உய்யக் கொண்டமையை மேலே உரைத்தாம் ( தி .7 பா .55 பா . 8); கண்டு கொள்க . இது , முப்புரம் எரித்தஞான்று மூவர்க்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது . இத் திருப்பதிகத்துள்ளும் , ஏனைய திருப்பாடல்களை நாம் பெறேமாயினேம் . * * * * * * 6, 7, 8, 9, 10 6, 7, 8, 9, 10. * * * * *

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

ஊனங் கத்துயிர்ப் பாய்உல கெல்லாம்
ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
வானங் கைத்தவர்க் கும்அளப் பரிய
வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந்
தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

புலால் வடிவாகிய உடம்பில் இருந்து உயிர்ப்பன வாகிய உயிர்களாய் நின்று அவைகட்கு உணர்வை உண்டாக்கி நிற்பவனும் , விண்ணுலக இன்பத்தையும் வெறுத்துத் தவம் செய்வார் கட்கும் அளத்தற்கரிய வள்ளலாய் உள்ளவனும் , தன் அடியவர்களது உள்ளத்தினுள்ளே , தேனும் கைப்ப , அமுதம் ஊற்றெழுவதுபோல எழுகின்ற ஒளிவடிவினனும் , அழுந்துந்தோறும் இனிமை பயக்கின்ற வனும் , மானை அகங்கையிடத்து ஏந்த வல்லவனும் ஆகிய பெரு மானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்தமையாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனம் காண்பேன் !

குறிப்புரை :

` உயிர்ப்பு ` என்பது அதனையுடைய உயிர்களைக் குறித்தது . ` உலகு ` என்றது உயிர்களையேயாதலின் , ` அவ்வுலகிற் கெல்லாம் ` எனச் சுட்டு வருவித்து , உருபு விரித்துரைக்க . ஓங்கார மாவது , பொருளுணர்வை எழுப்பும் வாக்காதலின் , ` ஓங்காரத்துரு வாகி நின்றானை ` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக . ` வானம் ` ஆகுபெயர் . கைத்தல் இரண்டனுள் , முன்னது வெறுப்பினையும் , பின்னது கைப்புச் சுவையினையும் குறித்தன . விண்ணுலகத்தை வெறுத் தவர் , வீடுபேறு வேண்டுவோர் ; என்றது . பிற சமயிகளை . அவர்தாம் சிவபிரானை உணரமாட்டாராகலின் , ` அவரால் அளத்தற்கரியவன் ` என்று அருளினார் . ` உள்ளத்துள் ` என இயைக்க . ` தேன் ` என்பது , எதுகை நோக்கி , ஈற்றில் அம்முப் பெற்றது ; அதனானே , ` தேனும் ` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . ` கைத்து ` என்றதனை , ` கைப்ப ` எனத்திரிக்க . ` அமுதாகி ` என்றதில் உள்ள ஆக்கம் , உவமை குறித்து நின்றது . அமுதம் , இனிமை பற்றி வந்த உவமை . ` வந்து ` என்ற விதப்பினால் , அஃது இவ்வாறு , ` ஈந்து புகழ் பெற்றான் ` என்றல் போல , காரணப் பொருட்டாய் நிற்றல் பெறப்பட்டது ; அதனானே , ` வாராவிடில் எங்ஙனங் காண்பேன் ` என்ற மறுதலைப் பொருளும் தோன்றுவதாயிற்று . ` வானங்கத்தவர் ` என்பதும் பாடம் . ஊனங்கைத் தவர் , தேனங்கத்து ` என்பன பாடம் அல்ல .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
பாடிஆ டும்பத்தர்க் கன்புடை யானைச்
செல்லடி யேநெருங் கித்திறம் பாது
சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை
நான்உறு குறைஅறிந் தருள்புரி வானை
வல்லடி யார்மனத் திச்சையு ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

பலதிறப்பட்ட அடியவரது தொண்டுகட்கும் இரங்கு பவனும் , இசையோடு பாடி , அதனோடு ஆடலையும் செய்கின்ற சீரடியார்களைத் தன் தமர்களாகக் கொண்டு தொடர்புடையவனாகின்ற வனும் , தன்னை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே மாறுபடாது சென்று அணுகித் தன்னைப் பெற்றவர்கட்கே சித்தியையும் முத்தியையும் தருபவனும் , நல்ல அடியார்களது மனத்தில் , எய்ப்பிற்கு என்று வைத்துள்ள நிதியின் நினைவுபோல நின்று அமைதியைத் தருபவனும் , நான் அடைந்தனவும் அடையற்பாலனவுமாகிய குறைகளைத் தானே அறிந்து , அவற்றைக் களைந்தும் , வாராது தடுத்தும் அருள்புரிபவனும் , கற்றுவல்ல அடியார்களது உள்ளத்தில் தங்குவதற்கு விருப்பம் உடைய வனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

இதன்கண் அடியராவார் பல திறத்தினரையும் அருளிச் செய்தவாறு அறிக . பல்லடியார் , விதி மார்க்கம் பத்தி மார்க்கம் என இருதிறத்திலும் பல்வேறு வகைப்பட நிற்பவர் . பாடிஆடுவார் , இசை கூத்துக்களால் வழிபடுவார் ; இவ் வழிபாடு சிறந்ததாகலின் , வேறு வைத்து அருளினார் . திறம்பாது சென்று சேர்ந்தவர் , வாசனா மலத்தின் தாக்குதலுக்குத் தோலாது , இறைவன் திருவடியைப்பற்றி நின்றவர் . ` நெருக்கி ` என்பது பாடம் அன்று . ` சித்தி ` என்றது , அவர்கள் வாயி லாகத் தான் நிகழ்த்தும் அற்புதங்களை . அவை , ஞானசம்பந்தர் , நாவுக் கரசர் முதலிய ஆசிரியன்மாரிடத்து நிகழ்ந்தவை போல்வன . நல்லடி யார் , திருவும் மெய்ப்பொருளும் எல்லாம் இறைவனே என்று இருப் பவர் . அவர் , சுந்தரர் போல்வார் . வல்லடியார் , ஞானநூல்தனை ஓதல் ஓதுவித்தல் முதலிய ஞான பூசையைச் செய்பவர் . வைப்பு , ஆகு பெயர் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
ஆதிஅந் தம்பணி வார்க்கணி யானைக்
கூழைய ராகிப்பொய் யேகுடி யோம்பிக்
குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
மறுபிறப் பென்னை மாசறுத் தானை
மாழையொண் கண்உமை யைமகிழ்ந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

ஆழ்ந்தவனாகியும் , அகன்றவனாகியும் , உயர்ந் தவனாகியும் உள்ளவனும் , பிறந்தது முதற் சாங்காறும் வழிபடுவார்க்கு அணியனாகின்றவனும் , பணிவுடையவராய் , குடியை , உள்ளத்தில் பற்றின்றிப் புரந்து , மனம் உருகிநின்று , தம்மை மெய்யடியார் கூட்டத்துள் வைத்தெண்ணும் வாழ்க்கையையுடையவர்க்கு அடிமை செய்தலில் தவறாத நெறியை உணர்த்து மாற்றால் , என்னை மறுபிறப் பெடுத்தலாகிய குற்றத்தை அறுத்துத் தூயனாக்கியவனும் , மாவடுப் போலும் கண்களையுடைய உமாதேவியை விரும்பி ஒருபாகத்தில் வைத்தவனும் ஆகிய பெருமானை , அடியேன் , திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

ஆழ்தல் , அகலுதல் , உயர்தல்களுக்கு எல்லை , மாயை யும் , உயிர்களுமாம் . அவற்றிற்கு அப்பாற்பட்டவன் என்பது திருக் குறிப்பு . சிவவழிபாட்டினை இடைக்கண் விட்டொழிவார்க்கு சிவன் , திரிபுரத்தவர்க்கு நின்றாற்போல நிற்பனாகலின் , ` ஆதி அந்தம் பணி வார்க்கு அணியானை ` என்று அருளினார் . இதனானே , சிவவழி பாட்டினை வழங்குவோர் , ` நீவிர் சாங்காறும் இவ்வழிபாட்டினை விடாது செய்தல் வேண்டும் ` என்று விதிப்பதும் , பெறுவோர் , ` யான் சாங்காறும் இதனை விடாது செய்வேன் ; நாள் தோறும் இவ்வழி பாட்டினைச் செய்தன்றி உண்ணேன் ` என்று உறுதிகூறி ஏற்றலும் முறையாயின வென்க . அங்ஙனம் தாம் உடம்பட்டவாறே வழுவாது வழிபடுவார்க்குச் சிவன் , அணியனாய் நின்று அருளுதலையும் , அவரவர்பால் அணுகிநின்று அறியலுறின் அறியப்படுவதே என்பதும் உணர்க . ` பணியார்க்கு ` என்பதும் ஈண்டைக்கியைய உரைக்கற்பாற்றா யினும் , அஃது ஈண்டு ஒவ்வாதென விடுக்க . கூழை . கடை குறைதலாத லின் அது , குறைந்து பின்னிற்றலைக் குறித்தது . குடி - குடும்பம் . புறத்துக் காண்பவர் , குடும்பத்தில் பற்றொடு நிற்கின்றார் எனக் கருத , சிவனடியார் உள்ளத்துப் பற்றின்றியே அதனொடு நிற்றலின் , அந் நிலையை , ` பொய்யே குடியோம்பி ` என்று அருளினார் . குழைதல் , சிவபிரானிடத்தும் , அவன் அடியாரிடத்தும் . ` வாழி ` என்றதில் , இகரம் தொழிற்பெயர் விகுதி . ` வாழியர்க்கு ` என்பதனை , ` வாழிய ரிடத்து ` எனத் திரிக்க . அவரிடத்து வழுவுதல் - அவர்க்கு அடிமை செய்தலில் தவறுதல் . சுந்தரர் அடியார்க்கு அடியராய் , அவர்தம் அடிமைத் திறத்தில் திறம்பாது நின்றமை அறிக . இனி , ` காட்டி ` என்னும் எச்சத்தினை , எண்ணின்கண் வந்ததாகக்கொண்டு , ` வாழி யர்க்கே வழுவா நெறி காட்டுபவனை ` என்று உரைத்தலுமாம் . ` மாசு ` என்றது வினையை . மாசினால் வருவதனை , ` மாசு ` என்றார் . பான்மை வழக்கினால் . ` என்னை மாசறுத்தான் ` என , வினையது நீக்கம் , வினைமுதல்மேல் ஏற்றப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

நாத்தான் தன்திற மேதிறம் பாது
நண்ணிஅண் ணித்தமு தம்பொதிந் தூறும்
ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும்
அளவிறந் தபஃ றேவர்கள் போற்றும்
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்
துருவி மால்பிர மன்னறி யாத
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

அடியேற்கு , எனது நா , தனது புகழைச் சொல்லு தலில் என்றும் மாறுபடாதவாறு என்னிடத்துப் பொருந்தி , உள்ளே அமுதம் நிறைந்தாற்போல இனித்து ஊற்றெழுகின்ற துணைவனாய் உள்ளவனும் , எண்ணில்லாத பல தேவர்களும் துதித்து வணங்குகின்ற வணக்கத்திற்கு உரியவனும் . ` ஞாயிறு , திங்கள் , தீ ` என்னும் முச்சுடர் களிலும் வேறற நிற்பவனும் , திருமாலும் பிரமனும் தேடி அறியப்படாத பெருமையை உடையவனும் , எனக்குப் பெருமையை அளித்தவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

` உன் திறமே ` என்பது பாடம் அன்று , ` திறம்பாமை ` என்பது , ` திறம்பாது ` எனத் திரிந்துநின்றது . ` பொதிந்து ` என்றது , பொதிந்தாலொப்ப நிற்றலை உணர்த்திற்று . ` ஆத்தன் ` என்பது நீட்ட லாயிற்று . ` அடியேன்றனக்கு ஆத்தன் ` என இயைக்க . ` சோத்தம் ` என்பது , கடைக் குறைந்து நின்றது , ` மகத் ` என்னும் ஆரியச்சொல் , ` மாத்து ` எனத் திரிந்து நின்றது . இறைவன் சுந்தரர்க்கு அளித்த பெருமை , தோழமை .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும் , திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த , தமிழ்ச் சொல்லால் அமைந்த மெய்யுணர்வு மாலையாகிய , முன்பு அவர்களால் சொல்லப்பட்டனவற்றையே பின்னும் பிறர் சொல்லிப் போற்றுதலை விரும்புபவனும் , அடியேனது அறியாமையை அறிந்து , கல்லின் இயல்பைக் கொண்ட எனது மனத்தை உருகப்பண்ணி , கழல் அணிந்த தனது திருவடியைப் பெறுவித்து , எனது குற்றங்களை எல்லாம் அறுத்த வன்மையையுடைய , தேவர் பலரும் வணங்க நிற்கின்ற பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

` நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் ` என்று அருளினமையால் ( தி .7 ப .62 பா .8), ` நல்லி? u2970?` என்றதற்கு இதுவே பொருளாயினும் , அது சிறந்த புகழின் மேலும் நோக்குடைத்தேயாம் . அது ` நாவினுக்கரையன் ` என்றதனோடும் இயைவதே . ` நாவினுக்கரசரும் ` என்பது பாடம் அன்று . ` நன்மாலை ` என இயையும் . நன்மை - ஞானம் ; அதனை , ஞானத்தை , ` சன்மார்க்கம் ` ( சிவஞானசித்தி சூ .8) என வழங்குதல் பற்றி அறிக . இவ்வாறு இருவரது பாடலையும் ஒருபெற்றியவாகவே , உணர்த்தி யருளினமையின் , அவை தம்முள் வேறுபாடின்மை அறிந்துகொள்க . இதனானே , ` பாட்டிற்கு நீயும் அவனும்ஒப் பீர்எப் படியினுமே ` எனப் பின்வந்தோரும் நாவுக்கரசரை நோக்கிக் கூறினார் என்க ( நால்வர் நான்மணிமாலை -2). ` சொல்லிய ` என மறித்துங் கூறியது . ` மாலை ` என்னும் ஒப்புமை வழக்கால் , ` முன்னர் ஒருவர் சாத்திய வற்றையே கொண்டு , பின்னரும் பலர் சாத்துதல் ஆகாது போலும் ` என்று ஐயுறினும் உறுவர் என்னும் திருவுள்ளத்தால் . ` உற்ற குறியழியும் ஓதுங்காற் பாடைகளிற் சற்றும் பொருள்தான் சலியாது ` - உண்மைவிளக்கம் -41 என்றமையின் , சொன்மாலைகள் அன்னவல்ல , என்றுந் தூயனவே யாம் என ஐயம் அறுத்தற் பொருட்டு என்க . இவ்வைய மறுத்தற்கண் ஏகாரம் , தேற்றமாம் , பின்னும் அதுதானே பிரிநிலையுமாய் , ` ஏனை எல்லாவற்றினும் மேலாக , இவற்றையே எம் பெருமான் பெரிதும் விரும்புகின்றான் ` என்பதுணர்த்தும் . இவ்வாறு , அவன் இவற்றைச் சிறப்பாக விரும்புதற்குக் காரணம் , இசைமாலை , ஞானமாலை ` என்பவற்றாற் குறிக்கப்பட்டது . அஃதாவது , இசையும் , ஞானமும் ஒருங்கியைந்த சொன்மாலை யாதல் பற்றியே , இவற்றை இறைவன் ஏனையவற்றினும் மேலாகப் பெரிதும் விரும்புகின்றான் என்றவாறு , வேதங்களுள்ளும் ` சாம வேதத்தை இறைவன் பெரிதும் விரும்புவன் ` என்றல் , இசையொடு கூடிநிற்றல் பற்றியேயாம் . இவற்றை ஓது வார்க்கும் , கேட்பார்க்கும் இசையால் அன்பு தோன்றுதலும் , ஞானத் தால் அது நிலைபெறுதலும் உளவாதல் அறியற்பாற்று . இதுபற்றியே , திருப்பதிகங்கட்குத் திருக்கடைக் காப்பாகப் பயன் அருளிச் செய்யப் பட்டதென்பதும் , நுனித்துணரற் பாலது . இனிச் சுவாமிகள் தமது பாடலையும் அவ்விருவர் பாடல் களோடு ஒப்ப இறைவன் மிக விரும்புதலை வெளிப்பட அருள நினைந் திலராயினும் , முன்னைத் திருப்பாடலில் . ` மாத்தெனக்கு வைத் தானை ` என அருளினமையாலும் , இத் திருப்பாடலிலும் இறைவன் தம்மைக் குற்றம் அறுத்துக் குணஞ் செய்தமையை வகுத்தோதினாராக லானும் , பிறவாற்றானும் அதனைக் குறிப்பான் உணர்த்தியருளினார் எனவே கொள்க . அது திருக்குறிப்பு அன்றாயின் , தம் திருப்பதிகங் களது இறுதியில் , சுவாமிகள் திருக்கடைக்காப்பு அருளுவாரல்லர் என்க . இவ்வாறு இத்திருப்பதிகத்துள் , ஞானசம்பந்தர் , நாவுக்கரசரது திருப்பாடல்களின் பெருமையை உலகறிய எடுத்தோதியருளினமை யின் , சேக்கிழார் , ` நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டுகந்தீர் என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந் தேத்தி அருள்பெற்று ` ( தி .12 ஏ . கோ . புரா .44) என எடுத்தோதி , தம் கடப்பாட்டினை இனிது முற்றுவித்தருளினார் என்க . ` வானவர் வணங்க நின்றானை ` என்றதனை ஒருபெயர்ப் படுத்து . ` வல்லியல் ` என்றதனோடு தொக்க தொகையாக்குக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

பாடுமா பாடிப்ப ணியுமா றறியேன்
பனுவுமாப னுவிப்ப ரவுமா றறியேன்
தேடுமா தேடித்தி ருத்துமா றறியேன்
செல்லுமா செல்லச்செ லுத்துமா றறியேன்
கூடுமா றெங்ஙன மோஎன்று கூறக்
குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தல்என் பானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

யான் , முன் உள்ள பாடல்களை , அவைகளைப் பாடும் நெறியாற் பாடி இறைவனை வழிபடுமாற்றை அறிந்திலேன் ; புதிய பாடல்களை யாக்கும் நெறியால் யாத்துத் துதிக்கு மாற்றினையும் அறிந்திலேன் ; மனத்தில் உள்ள குற்றங்களை ஆராயும் நெறியால் ஆராய்ந்து கண்டு அதனைத் திருத்தும் வகையை அறிந்திலேன் ; அதனால் , அதனை நன்னெறியிற் செல்லுமாறு செலுத்தும் வழியை அறிந்திலேன் ; இவற்றால் ` இவன் நன்னிலையைப் பெறுதல் எவ்வாறோ !` என்று நல்லோர்கள் இரங்கிக்கூற இருக்கின்ற காலத்து , என்னையே சிறப்பாக யாவர்க்கும் காட்டி , ` இவன் எனக்கு அடிமை ` என்று சொல்லி வெளிக்கொணர்ந்து , தனக்கு ஆளாகக் கொண்டு , ` இனி , நீ , பயனின்றி வாடி வருந்தலை ` என்று தேற்றிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்த தனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

` பன்னல் ` என்பதன் முதனிலையாகிய , ` பன் ` என்பது , ` ஆராய்தல் ` என்னும் பொருளது . அதுவே , பின்னர் , ஆராய்ந்து பன் முறை சொல்லுதலைக் குறிக்கும் . இனி , அம் முதனிலைதானே உகரம் ஏற்று உயிரீறாய் வேறுபட்டு நின்று ஆராய்ந்து நெறிப்படச் செய் தலைக் குறிப்பதாய் , பஞ்சியை நூலாக்குதலையும் , செய்யுள் செய் தலையும் குறிக்கும் . ஆகவே , ` பனுவல் ` என்னும் தொழிற்பெயர் , ஆகு பெயராய் , அதன் செயப்படுபொருளாகிய , பஞ்சி நூலையும் , செய்யுளையும் குறிப்பதாயிற்று . அவ்வாற்றான் , ஈண்டு , ` பனு ` என்னும் முதனிலை பற்றி , ` பனுவுமா பனுவி ` என்று அருளினார் என்க . தேடுதல் , செலுத்துதல் , கூடுதல் , இவற்றிற்குச் செயப்படு பொருள்களும் , கூறுதலுக்கு வினை முதலும் வருவிக்கப்பட்டன . இத் திருப்பாடலின் முதல் இரண்டடிகளையும் , ஏனையவற்றோடொப்ப வகையுளி செய்து சீரறுக்க . அன்றி , இயல்பாகவே வைத்து , ` அடிமயங் கிற்று ` என்றலுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

பந்தித்தவ் வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
தவத்தை ஈட்டிய தன்னடி யார்க்குச்
சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்
சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

பிணித்துள்ள வினைத் தொடர்பு அறுதலால் , பிறவியாகிய கடலினது பரப்புச் சுருங்குமாறு செய்பவனும் , தன்னை உணர்ந்த உணர்வின் வலிமையால் , தம் செயல்களைத் தன்னிடத்தே சேர்த்து , அதனால் , செய்யும் செயலெல்லாம் தவமேயாகக் குவித்த தன் அடியவர்கட்குத் தனது திருவடிகள் , நினைத்தற்கு எளியவாய்க் கிடைத்தலானே , தனது சிவலோகத்தின் வாயிலைத் திறந்து , அதன்கண் அவர்களைப் புகச்செய்ய வல்லவனும் , தன்னையே வணங்குகின்ற வர்களது மனத்தில் விளங்குபவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

பிறவி நீங்குமாறும் , சிவலோகத்து ஏறுமாறும் இவை என்பது உணர்த்துதற் பொருட்டு , ` பற்றற ` எனவும் , ` எளிதாய் ` எனவும் ஓதினாரேனும் , ` பற்றறுத்து ` எனவும் , ` எளிதாகத் தந்து ` எனவும் ஓதுதலே திருவுள்ளம் என்க . படுகடல் - ஒலிக்குங்கடல் ; என்றது , அடையொடுவந்த உருவகம் , ` தம்மடியார்க்கு என்பது பாடம் அன்று . ` எளிது ` என ஒருமையால் அருளியது , ` பாதம் ` என்னும் பொதுமை நோக்கி . ` எளிதாய் ` என்ற எச்சம் காரணப்பொருட்டு . ` ஏற்ற ` என்றார் , எல்லாவற்றிற்கும் மேல் உளதாதலின் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

எவ்வெவர் தேவர்இ ருடிகள் மன்னர்
எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
அவ்வவர் வேண்டிய தேயருள் செய்து
அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
இவ்விவ கருணைஎங் கற்பகக் கடலை
எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
வவ்விஎன் ஆவிம னங்கலந் தானை
வவிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

தேவர்கள் , இருடிகள் , அரசர்கள் முதலாக எண்ணிறந்தவர்களாகிய எவரெவரும் , எவ்விடத்திலும் இருந்து வழிபட , அவ்வெல்லா இடங்களிலும் நின்று அவர்களது வழி பாட்டினை ஏற்று , அவரவர் விரும்பியதை அவர்கட்கு அளித்து , இவ்வாற்றால் , தன்னை அடைந்தவர்க்குப் புகலிடமாய் நிற்பவனும் , இவ்வாறு உள்ள இவை இவையாகிய அருளைத்தருகின்ற எங்கள் கற்பகத் தருவும் கடலும் போல்பவனும் , யான் , ` எம் பெருமானே , எனக்கு அருள்செய் ` என்று வேண்டிக்கொண்ட பின்பு , என் உயிரைத் தன்னுடையதாகக்கொண்டு , என் உள்ளத்திலே எஞ்ஞான்றும் நீங்காது இருப்பவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

` எவ்வெவரும் ` என்னும் முற்றும்மை தொகுத் தலாயிற்று . ` மற்று `, அசை . ` அவ் ` என்பது அடுக்கி , ` அவ் வவ ` என வருதல் போல் , ` இவ் ` என்பது அடுக்கி , ` இவ்விவ ` என , வந்தது . இவைகளில் , ஈற்றில் நிற்கும் அகரம் , சாரியை . ` இவை இவை ` என்பது , அங்கங்கும் நின்று வழிபாட்டினை ஏற்று வேண்டுவோர் வேண்டுவதை அளித்தலும் , பின்னும் புகலிடமாய் நிற்றலும் ஆகிய இவற்றை , ` இவ்விவர் ` என்பது பாடம் அன்று . ` கருணைக் கற்பகம் . கருணைக் கடல் ` என்றவை , இல்பொருள் உவமைகள் . ` கற்பகம் , கடல் `, என்றவை , உவமையாகு பெயர்கள் ` கற்பகக் கடல் ` உம்மைத் தொகை . உம்மைத் தொகைக்கண் நிலைமொழி மகரஈறு கெட , வரு மொழி வல்லெழுத்து மிகுதலை , ` இன்பத் துன்பம் ` ( தி .8 திருக்கோவை யார் -71.) என்றதனானும் அறிக . சுந்தரர் , ` எம்பெருமானே அருளாய் ` என்று வேண்டியது , திருக்கயிலையில் , ` மையல் மானுட மாய்மயங் கும்வழி ஐய னேதடுத் தாண்டருள் செய் ` ( தி .12 பெ . புரா . திருமலை -28.) என்றது . ` என்ற பின்னை ` என்றது , ` என்று வேண்டியதனாலே ` எனக் காரண காரிய நிலைகள் தோன்ற நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத்
திறல்அ ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும்
பின்னையாய் முன்ன மேமுளைத் தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவா
தடிப ணிந்தறி தற்கரி யானை
வரையின் பாவைம ணாளன்எம் மானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

வானத்தில் திரிகின்ற முப்புரங்களை அழித்ததும் , குற்றம் செய்த , வலிமையுடைய அரக்கனாகிய இராவணனை ஒறுத்ததும் , ஏனை , பெரிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டதும் முடிதற்குக் காரணனான பின்னோனாய் , எப்பொருட்கும் முன்னே தோன்றினவனும் , அரிய நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர்கள் , மனம் மாறுபடாது நின்று அடிபணிந்தும் , அவர்களால் அறிதற்கு அரியவனும் , மலைமகட்குக் கணவனும் ஆகிய எம் பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

தேவர்களாலும் தடுத்தற்கு அரியதாய் எங்கும் பரவின மையின் , ` பெரிய நஞ்சு ` என்று அருளினார் . ` அமுது ` என்றதன்பின் , ` ஆக ` என்பது வருவிக்க . ` நஞ்சினை அமுதமாக உண்டான் ` என்றது , ` தேவர்கள் அமுதத்தைப் பகிர்ந்து உண்டதில் தனக்கு உரிய அமுதாகப் பெற்று உண்டது நஞ்சினையே ` என்றபடி . முற்றுதல் - முடிதல் . ` முற்றும் ` என்ற பெயரெச்சம் , ` பின்னை ` என்ற காரணப் பெயரைக் கொண்டது . ` பின்னை ` என்றது , காலவாகுபெயர் . உலகம் தோன்றி நெடுங் காலம் சென்ற பின்னரே , திரிபுரம் எரித்தமை முதலியன நிகழ்ந்தன என்றலே பொருந்துவதாதல் அறிக . யாவும் தோன்றுதற்கு முன்னே இருத்தலை , முளைத்தலாக அருளினார் , பான்மை வழக்கால் . வேதங்களில் அரிய பொருள்கள் உளவாயினும் , அவற்றைச் சிவாகம வழியால் அன்றி உணரலாகாமையின் , வேதம் ஒன்றையே உணரும் அந்தணர்களால் , சிவபெருமான் அறிதற்கு அரியனாயினான் என்க . எனவே , இங்கு , ` நான்மறை அந்தணர் ` என்றது , சிவாகமங்களை , ` வேத பாகியம் ` என்றும் , அதன்கண் சொல்லப்பட்ட தீக்கை முதலிய வற்றை , ` அந்தணர்களுக்கு உரிய அல்ல ` என்றும் இகழ்ந்து , சிவ பிரானையும் ஏனைத் தேவர்களோடு ஒப்பக் கருதுதலும் , ஒரோவழி , மாயோன் முதலியோரைச் சிவபெருமானினும் உயர்ந்தோராகக் கருதுதலும் உடைய வேதியர்களையேயாயிற்று . மீமாஞ்சகர் கடவுளை அடிபணிதல் இன்மையின் , இத்திருமொழி , மீமாஞ்சகரைக் குறித்தது என்றல் கூடாமை அறிக . வேதத்துள் , ஈசானாதி பஞ்சப் பிரம மந்திரங் களும் , உருத்திரனுக்கு ஆவுதி பண்ணும் மந்திரம் ஏனைய தேவர்கட்கு உரிய ( இந்த்ராய ஸ்வாஹா , வருணாய ஸ்வாஹா ) மந்திரங்கள் போலப் பெயரளவில் நில்லாது , முதற்கண் வணக்கம் சொல்லி , பின்னர்ப் பெயரைக்கூறி , அதன் பின் , ` பசுபதி ` எனச் சிறந்தெடுத் தோதுவதும் , ( நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ) பிறவும் சிவபெருமானது தலைமையை உணர்த்தி நிற்பினும் , அவற்றது சிறப்புச் சிவாகமங்களினன்றித் தெற்றென உணரவாராமையின் , சிவாகமங்களைப் போற்றாதார் , சிவபெருமானை யறிதல் அரிதாயிற்று என்க . சிவாகமங்கள் இன்றி , வேதம் ஒன்றாலேயும் சிவபிரானது தலைமையை அறிதல் கூடும் என்பார் உளராயின் , அன்ன உணர்வுடை யார் , சிவாகமங்களை இகழார் என விடுக்க . சிவாகமத்தை இகழ்வார் , சிவபெருமானது முதன்மையை உணராது தமது உணர்வையே சிறந்ததாகக் கூறி நிற்றல் , இன்றும் எங்கும் கண்கூடாய் அறியப் படுவதேயாதல் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மால்உதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றணை யாதவன் றன்னை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

தன்னொடு மாறுபடுதலை ஏற்ற பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து , அதனை நிரப்ப , மாயோனது உதிரத்தை ஏற்றவனும் , யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தை யுடையவனும் , தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும் , தன்னிடத்திற் பொருந்திய மனத்தையுடையவர்கட்கு எளியவனும் , அறியாமை வழிச் சென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

ஏன்று கொள்ளுதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது . மேலைத் திருப்பாடலில் சிவனை அறியமாட்டாத அந்தணரது தன்மையைக் குறித்தபின் , இத் திருப்பாடலில் , அவர்கட்குத் தந்தை யாய் உள்ளவன் சிவபிரானை இகழ்ந்து அடைந்த நிலை இது என உணர்த்துகின்றார் என்பது , பிரமனை , ` அந்தணன் ` என்ற குறிப்பால் விளங்குவதாகும் . அவன் அடைந்த நிலையை அருளுகின்றவர் , அவனுக்கு உண்மையை உணர்த்தாது , தானே முதல்வன் என்று சொல்லி அவன்பால் வெற்றிபெற நினைத்த அவனது தந்தை அடைந்த நிலையையும் உடன் அருளிச் செய்தார் . பிரமதேவன் தானே உலகிற்கு முதல்வன் என்று சொல்ல , திருமால் அதனை மறுத்து , ` நானே முதல்வன் ` என்று சொல்லியதனால் இருவருக்கும் போர் நிகழ்ந்தபொழுது , சிவபிரான் வைரவக் கடவுளைத் தோற்றுவித்து விடுக்க , அவரைக் கண்டு திருமால் அஞ்சி நீங்கியபின்னும் பிரமன் , ` என் மகனே வா ` என்று அழைத்தல் கண்டு , அவனது நடுத்தலையை நகத்தாற் கிள்ளி அவனது செருக்கை அடக்கி , வைகுந்தத்திற் சென்று திருமாலின் நெற்றியைத் தாக்கி அதனினின்றும் பாய்ந்த உதிரத்தை அக்கபாலத்தில் ஏற்றார் என்பது சிவ புராணத்துட் கூறப்படுதல் காண்க . இது , காஞ்சிப் புராணத்து வைரவேசப் படலத்துள்ளும் விரித்துக் கூறப்பட்டது . ` களேபரம் ` என்றது , கங்காளத்தையே ஆதலின் , ` கங்காளன் ` என்றது , வாளா பெயராய் நின்றது . கங்காளத்தைச் சுமந்து நிற்கின்ற செயலை விடாதிருத்தலையே , ` மாவிரதம் ` என்று அருளினார் . எனவே , இதுபோல்வதொரு கோலத்தைக் கொண்டே , ` மாவிரதம் ` என்னும் சமயம் உளதாயிற்றென்க . ` சான்று ` என்றது , ` அறியும் வழி ` என்னும் பொருளதாய் நின்றது . ` குணம் , குறி ` முதலி யவை ஒன்றும் இல்லாமையின் , அதனைக் காட்டுதல் அரிதாயிற்று . ` அரியவன் ` என்புழியும் இரண்டன் உருபு விரிக்க . ` தன்னை ` என வந்த பலவற்றுள்ளும் , ` தன் ` என்பது , சாரியை . மான்று - மயங்கி . அஃது அறியாமையால் வரும் திரிபு உணர்ச்சியைக் குறித்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
மன்னு நாவல்ஆ ரூரன்வன் றொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்போய்
மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே

பொழிப்புரை :

வறுமையின் வலிமை கெடும்படி அரிய வேள்வித் தீயை வளர்த்தற்கு ஏதுவான , பெரியோர் பலரும் போற்றிக் கற்ற நான்கு வேதங்களின் முடிந்த பொருளாகிய தீப்போலும் உருவின னாகிய சிவபெருமானை , அவனை எஞ்ஞான்றும் தன்னிடத்து நீங்காது கொண்டு நிற்கும் , ` திருவலிவலம் ` என்னும் தலத்தில் வந்து கண்டு , அவன் அடியவனும் , நிலை பெற்ற திருநாவலூரில் தோன்றியவனும் , ` வன்றொண்டன் ` எனப் பெயர்பெற்றவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , இனிய இசையையுடைய , செவ்விய தமிழால் ஆகிய பத்துப் பாடல்களையும் , மனத்தால் விரும்பிப் பாடவல்லவர்கள் , தேவர்கள் விரும்பிப் போற்ற , துன்பம் இல்லாத வானுலகத்தைப் போய் அடைவர் ; இது திண்ணம் .

குறிப்புரை :

` ஓம்பும் நான்மறை , கற்ற நான்மறை ` எனத் தனித் தனி இயைக்க . ` அனல் ` என்றது உருவகமாய் , அனல்போலும் திரு மேனியை உடைய சிவபிரானைக் குறித்தது . அவன் நான்மறையின் முடிந்த பொருளாதலின் , ` முற்று அனல் ` என்று அருளினார் . ` நான் மறை முற்றனல் ஓம வலிவலந்தனில் ` எனவும் பாடம் ஓதுவர் , ` ஒலி கொள் ` என்றது , இறந்த கால வினைத்தொகையாய் . ` பாடிய ` எனப் பொருள் தந்தது . ` வானுலகு விரும்பி ஏத்த , மெலிவில் விண்ணுலகு போய் எய்துவர் ` எனக் கூட்டுக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

செம்பொன் போலும் திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிபவனும் , கரிய கண்டத்தை உடையவனும் , திரு மாலும் பிரமனும் காணாத சம்புவும் , நெருப்பை அகங்கையில் ஏந்திய வனும் , சாமவேதத்தை விரும்புபவனும் , தனக்கு ஒப்பாவதொரு பொருள் இல்லாதவனும் , குடம்போலும் தலையை உடைய பெரிய யானையின் தோலை உடையவனும் , எருதின்மேல் ஏறிவரும் தலைவ னும் , எங்கள் அருந்துணைவனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளி யுள்ளவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

சம்பு - இன்பத்தை ஆக்குபவன் . ` கும்பம் ` என்பது , யானையின் தலைக்கு உவமையாகு பெயர் . சொற்பின் வருநிலை அணிபட அருளுவார் ,` கோவின்மேல் வருங் கோ ` என்று , அருளினார் . முதற்கண் நின்ற , ` கோ ` என்பது வடசொல் . ` நம்பன் ` என்பது , ` விரும்பப்படுபவன் ` என்னும் பொருளதாகலின் , அதற்கு , இவ்வாறு உரைக்கப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
கோனை ஞானக் கொழுந்தினைக் கொல்லை
நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

மணத்தைத் தருகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்தவனும் , வேதத்தின் இசையை விரும்புபவனும் , அன்பு மிகச்சிறந்து , மனம் உருகித் துதிப்பவர்களது வினைத்தொடர்பை அறுப்பவனும் , பால் முதலிய ஆனைந்தினை ஆடவல்லவனும் , ஒலிக் கின்ற கடலும் , மலையும் , உலகும் ஆகியவற்றை ஏழேழாக உடைய தலைவனும் , ஞானத்திற்கு எல்லையாய் உள்ளவனும் , முல்லை நிலத் திற்குரிய வெள்ளிய இடபத்தை உடையவனும் , திருநள்ளாற்றில் எழுந் தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

மிகச் சிறத்தலுக்கு , வினைமுதல் வருவிக்கப்பட்டது . ` சிறந்து ` என , குண வினை , குணிமேல் நின்றது , மலைகளை , எட்டென்றலேயன்றி , ஏழென்றலும் மரபேயாம் என்க . ` தொல்லை நரைவிடை ` என்பதும் பாடம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

பூவில்வா சத்தைப் பொன்னினை மணியைப்
புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்
தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச்
சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறுநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

பூவில் உள்ள மணமும் , பொன்னும் , மணியும் ஆகிய இவைபோல்பவனும் , ` மண் , நீர் , தீ , காற்று , வானம் ` என்னும் ஐம்பெரும் பூதங்களாய் நிற்பவனும் , எருதின்மேல் வரும் செல்வத்தை உடையவனும் , நன்மையே வடிவானவனும் . தேவர்கட்கெல்லாம் தேவனும் , தித்திக்கும் தேன்போல இனிப்பவனும் , குவளைப் பூப் போலும் கண்களையுடையவளாகிய மங்கைதன் பங்காளனும் , கங்கையைத் தாங்கிய சடையை உடையவனும் , ` சீகாமரம் ` என்னும் இசையாற் பாடுமிடத்து , நாவில் இனிமை மிகுகின்றவனும் , திரு நள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` பூவில் வாசம் ` என எடுத்தோதியது , ஏனைய நறுமணங்களில் சிறந்ததாதல் பற்றி . வாசம் முதலிய மூன்றும் சிறப்புப் பற்றி வந்த பொதுமையை யுடையவாக , தேன் , இனிமையை உணர்த் தும் சிறப்பினதாதல் பற்றி , அதனை முன்னையவற்றோடு ஒருங்கு ஓதாராயினார் . ` காற்று ` என்றது , செய்யுள் பற்றி முறை பிறழ நின்றது , ` சேவின் மேல் வரும் செல்வன் ` என்றது , நகைச்சுவை பயப்பதாய் , அவனது முதன்மையை உணர்த்திற்று . ` காவியங்கண்ணி பங்கன் , கங்கைச் சடையன் ` என்றதும் , ` உடம்பில் ஒருத்தியையும் , தலையில் ஒருத்தியையும் உடையவன் ` என்னும் பொருட்டாய் , அன்னதாயிற்று . ` சீகாமரம் ` என்பதனை ` காமரம் ` என்றது , முதற்குறை . ` காமரம் ` என்னும் , பண்ணின் பொதுப்பெயர் , ` சீ ` என்னும் சிறப்புச் சொல்லோடு புணர்ந்து , ஒருவகைப் பண்ணிற்குப் பெயராய் வழங்கும் . இராகங் களுள்ளும் ஒருவகையினை , ` சீராகம் ` எனக் குறியிட்டு வழங்குவர் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

தஞ்ச மென்றுதன் தாளது வடைந்த
பாலன்மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை
நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

` அடைக்கலம் ` என்று சொல்லித் தனது திருவடியை அடைந்த சிறுவன்மேல் சினந்து வந்த இயமனை , வீழ்ந்து உருளும்படி அவனது மார்பில் ஓர் உதை உதைத்தலை மேற்கொண்ட தலைவனும் , தன்னை நினைப்பவரது மனத்தை விட்டு நீங்குதல் இல்லாதவனும் , அறிவு மிக்க தேவர்களும் , அசுரர்களும் கூடிக் கடைந்த கடலுள் மிகுதியாய்த் தோன்றி வெம்மையுற்று நின்ற நஞ்சினை உண்டவனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல் பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` உருள ` என்றது , ` உயிர்நீங்கிக் கிடப்ப ` என்றவாறு . ` உதை ` என்றதன்பின் . ` உதைத்தல் ` என்பது , தொகுத்தலாயிற்று . விஞ்சை - வித்தை ; அறிவு ; தேவரை . ` புலவர் ` என்னும் வழக்கினை நினைக்க . இங்கு , ` இறவாதிருத்தற்கு வழியறிந்தனர் ` என , நகை தோன்ற அருளுவார் , ` விஞ்சை வானவர் ` என்று அருளினார் . மிகுதி , உலகு இடங் கொள்ளாமை . அந்நஞ்சினும் மிகப் பெரிய அமுதாய் நிற்றலின் , அதனை உண்ண வல்லனாயினான் என்பது திருக்குறிப்பு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

மங்கை பங்கனை மாசிலா மணியை
வான நாடனை ஏனமோ டன்னம்
எங்கும் நாடியுங் காண்பரி யானை
ஏழை யேற்கெளி வந்தபி ரானை
அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

மங்கை ஒருத்தியது பங்கை உடையவனும் , இயல் பாகவே மாசில்லாது விளங்கும் மணிபோல்பவனும் , வானமாகிய நாட்டை உடையவனும் , பன்றியும் அன்னமும் எவ்விடத்துத் தேடியும் காணுதல் அரியவனும் , எளியேனுக்கு எளியனாய் எதிர்வந்த தலை வனும் , ஆறு அங்கங்களையுடைய நான்கு வேதங்களோடு நிறைந்து நிற்கின்ற அந்தணர்கள் தனது திருவடியைப் போற்றுகின்ற நம் தலை வனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் . வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` மாசிலா மணி ` இல்பொருள் உவமை . காணாது எய்த்தமையின் , ` திருமால் பிரமன் ` என்னாது , ` ஏனமொடு அன்னம் ` என்று ஓதினார் . ` அப் பெரிய தேவர்கட்கு அரியனாகியவன் , எனக்கு எளிவந்தருளினான் ` என நினைந்து உருகியவாறு . ` எளிவந்த ` என்றதற்கு , ` எளிமை பொருந்தியவனாகிய ` என்று உரைப்பினுமாம் . ` மறை ` என்றது , அதனை ஓதுதலை . ஆன் உருபு . ஒடுவுருபின் பொருளில் வந்தது , ` நங்கள் கோனை ` எனப் பின்னர் அனைவரையும் உளப்படுத்து அருளுவாராயினும் , தமக்கு எளிவந்த தன்மையை நினைந்து , தமக்குப் பிரானாயினமையை ,, முன்னர் வேறெடுத்து அருளிச் செய்தார் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

கற்பக தருவும் பெரிய பொன்மலையும் போல்பவனும் , காமனைக் காய்ந்தவனும் , கண் பொருந்திய நெற்றியை உடையவனும் , சொல் நிலையில் நிற்கும் பொருள் உணர்வாகிய அறியாமையைக் களைந்து , பொருள்கள் , நேரே விளங்குமாறு விளக்குகின்ற தூய ஒளியாய் நிற்பவனும் , என்னை அடியவனாக , திருவெண்ணெய் நல்லூரில் , யாவரும் வியக்கத் தக்க , பழமையதாகத் தீட்டப்பட்டதோர் ஓலையைக் காட்டி அடிமை கொண்ட நன்னிலை யாய் உள்ளவனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` பொன்மலை ` என்றது , ` பெரிய நிதிக்குவை போல் பவன் ` என்றபடி . ` பொருள்களை நேரே தலைப்பட்டுணராது , சொல் வடிவிலே உணருமாறு உணர்வைத் தடுத்து நிற்பது அக இருளாகிய ஆணவமலம் ` என்பதும் , ` எல்லாப் பந்தமும் நீங்கிய வழியும் , இவ் வொருபந்தம் நீங்குதல் அரிது ` என்பதும் , ` அது ` நீங்கின் , இறைவனது திருவடியை அடைதல் எளிது , என்பதும் , ` மூவகை அணுக்க ளுக்கும் முறைமையான் விந்து ஞானம் மேவின தில்லையாகில் விளங்கிய ஞானம் இன்றாம் ; ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல் சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே ` - சிவஞான சித்தி - சூ .1-26 என்றற் றொடக்கத்து மெய்ந்நூற் பகுதிகளான் உணர்ந்துகொள்க . ` நற்பதம் ` என்றது வீட்டு நிலையை ; என்னையெனின் , அதுவே , எல்லாவற்றினும் மேலாய நன்னிலை யாகலின் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை
அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

அன்று ஒரு பன்றியின்பின் அதனைத் துரத்திச் சென்ற வேடனும் , அன்னதொரு மாயம் வல்லவனும் , நால்வர் முனிவர்க்கு ஆல் நிழலில் இருந்து சொல்லிய அறத்தை உடையவனும் , தேவர்கட்கு அரியனாய் நிற்பவனும் , தேவர் சேனைக்குத் தலை வனாகிய , குறவர் மகளாகிய வள்ளிதன் கணவனைப் பெற்ற தலைவ னும் , நான் செய்த குற்றங்களைப் பொறுப்பவனும் , பூக்களின் மணம் பரக்கின்ற திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` சென்ற மறவனை ` எனக் கூட்டுக . ` மறவனாய் ` எனப் பாடம் ஓதி , கிடந்தவாறே யுரைத்தல் சிறக்கும் . ` குறவர் மங்கைதன் கேள்வன் ` என்றது . ` முருகன் ` என ஒருபெயர்த் தன்மைத்தாய் ,` நாயகனான ` என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று . ` பொறுக்கும் ` என்ற எதிர்காலச் சொல்லோடு இயைந்தமையின் , ` செய்த ` என்றது , எதிர்காலத்து இறந்த காலமாம் . இது , ` செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம் ` - தொல் . சொல் . 239 எனச் செய்தெனெச்சத்திற்கு ஓதியவாறுபற்றி உணரற் பாலது . ` விரியும் ` என்ற சொற்பெற்றியால் , ` நறை `, ` பூவின் மணம் ` என்பது உணரநிற்கும் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமல னைஅடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை யருளித்
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

மாதராள் ஒருத்திக்குத் தனது உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும் , மாணிக்கம் போல்பவனும் , தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற , வேத முதல்வனாய் உள்ளவனும் , வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும் , அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும் , தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து , அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும் , திரு நள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றை யும் நினையேன் .

குறிப்புரை :

உடம்பின் ஒரு பகுதியைக் கொடுத்தது , அவனது பேரருளை யுணர்த்தும் , ` உடம்பில் இடங்கொடுத்தான் ` என்பது நயம் , ` வேத வேள்வியர் வணங்கும் விமலன் ` என்றது . ` வணங்காது விடின் தக்கன் அடைந்த நிலை எய்தும் ` என்னும் அச்சத்தாலேனும் அவரால் வணங்கப்படுபவன் என்றவாறு . இறைவன் சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் இருமுறை தூது சென்றமை வெளிப்படை . இதனை எடுத்தோதினமையின் , இத் திருப்பதிகம் , நம்பியாரூரர் தொண்டை நாடு சென்று மீண்டதற்பின் அருளிச்செய்தது என்பது ஐயமின்றி விளங்கு தலால் , ` தொண்டைநாடு நோக்கிச் செல்லுங்கால் இத்தலத்தை வணங்கி அருளிச்செய்தது ` என்றல் பொருந்தாமை யறிக , தொண்டை நாடு நோக்கிச் செல்லும் பொழுது திருக்கடவூரை அடைதற்கு முன்னர் இத்தலத்தை வணங்கிய செயலைக் கூறுமிடத்து , சேக்கிழார் , ` திருப் பதிகம் அருளிச் செய்தார் ` எனக் கூறாது , வாளா போயினமை , ஓர்ந் துணரற்பாலது . ` எளிவந்த தூதனை ` என்றாரேனும் , ` தூதனாய் எளிவந்த வனை ` என்றலே திருவுள்ளம் என்க . தூதனாகியதையும் , தோழமை தந்ததனையும் எடுத்தோதி , அவனது எளிவந்த கருணையைப் பெரிதும் நினைந்து , ` அவனை யன்றி எனக்கு நினைக்கும் பொருளும் உண்டோ ` என உருகியவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள்
இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த
வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

இலங்கைக்கு அரசன் அழகு விளங்குகின்ற கயிலாய மலையைப் பெயர்க்க , அது போழ்து மலையரையன் மகளாகிய உமை அஞ்சுதலும் , அவனது விளங்குகின்ற பெரிய முடி யணிந்த தலைகள் ஒருபதையும் , தோள்கள் இருபதையும் நெரித்து , பின்னர் அவன் செருக்கொழிந்து பாடிய இனிய இசையைக் கேட்டு , வலக்கையிற் பிடிக்கும் வாளினையும் ` இராவணன் ` என்ற பெயரை யும் , அவனுக்கு அளித்த வள்ளலும் , குழவிப் பருவத்தையுடைய சிறந்த சந்திரன் , சடைமேல் தங்கி நன்மையுடன் வாழ்கின்ற ஒளி யுருவினனும் திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` துலங்கு நீண் முடி ` என்றது . அடையடுத்த ஆகு பெயர் . தலையையும் தோளையும் நெரித்தது . கால்விரலால் அம் மலையை ஊன்றியாம் . ` வலக்கை ` என்றது மெலிந்து நின்றது . ` வலங்கை ` என எடுத்தோதியது ,` அதனோடொப்பப் பிடிக்கப் படுவது வேறொன் றில்லாத வாள் ` என , அதன் சிறப்பு உணர்த்தற்கு . ` இராவணன் ` என்பது , ` அழுதவன் ` எனப் பொருள் தரும் . ` மதிச் சடைமேல் ` எனச் சகர ஒற்று மிகுத்து ஓதுதல் பாடம் அன்று . தக்கனது சாபந் தொடராது என்றும் இளைதாய் இனிது , இருத்தலின் , ` நலங்கொள் ` என்று அருளினார் . இனி , இதற்கு , ` அழகு பெற்று விளங்குகின்ற ` என்று உரைத்தலுமாம் , ` நலங்கொள் ` என்பது , ` சோதி ` என்ற இடப் பெயர் கொண்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
வனப்பகை அப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
சிந்தைஉள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே

பொழிப்புரை :

நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநள்ளாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானை , திருநாவலூரில் தோன்றியவனும் , ` சிங்கடி ` என்பவளுக்கும் ` வனப்பகை ` என்ப வளுக்கும் தந்தையும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் , ` இப் பெருமானை மறந்து நான் நினைப்பது வேறு யாது ` என்று சொல்லி , அன்பு மிகுந்து பாடிய பாடல்களாகிய இப்பத்தினையும் மனம் உள்ளுருகிப் பாட வல்லவர்க்கு , இறந்து போதலும் , பிறந்து வருதலும் இல்லையாக , பேரின்ப வெள்ளத்துள் இனிதே இருப்பார்கள் .

குறிப்புரை :

`சிங்கடி தந்தை , வனப்பகை அப்பன்` என வகுத்து அருளிச் செய்தார், அவர்மேலுள்ள அன்பினால், சிறத்தலுக்கு வினை முதல் வருவிக்க. `சிறந்த` என்றது, அதன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. போதலை, `இறந்து போக்கு` என விதந்தமையின், வருதலுக் கும், அவ்வாறு விதந்தோதுதல் திருவுள்ளமாயிற்று. `ஆகி` என்ற தனை, `ஆக` எனத் திரிக்க. அன்றி, `ஆக` என்பதே பாடம் எனலுமாம், இனிதே இருத்தல், துன்பமின்றியே இருத்தல்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள்என் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , வீட்டின்பமும் , அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும் , இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து , பிறர் ஒருவரையும் துணையாக நினையாது , அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும் , அவர்கள் என்னைப் பற்ற வரின் , பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரி வேன் ; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை , நீ நீக்கியருளாய் .

குறிப்புரை :

` திரு ` என்பது , இப்பொருளதாதல் , ` போகமும் திருவும் புணர்ப்பானை ` ( தி .7 ப .59 பா .1) என்றதனாற் பெறப்பட்டது . ` செல்வமும் ` என்றே போயினாரேனும் , ` அதனால் அடையும் இம்மை இன்பமும் ` என்பதும் கொள்ளப்படும் . ` சீருடைக் கழல்கள் ` என்றார் , வேண்டுவார் வேண்டுவதை ஈந்து புகழ் பெறுதலின் , ` வாயி னால் ` எனப் பின் வருகின்றமையின் , ` மனத்தி னால் ` என்பது பெறப் பட்டது . ` ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப் பனாய்த் திரிவேன் ` என்றது , இவ்வுறைப்பினால் ` இப் பிழையை நீ பொறுத்துக்கொள்வாய் எனத் துணிந்து செய்தேன் ` என்பதும் , ` பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் ` என்றது , ` அங்ஙனம் பொறாது என் கண்ணைக் கெடுத்தது , அறவோனாகிய நினக்கு ஏற்புடைத்தாயிற்றேயெனினும் , யான் என் பிழையை உணர்ந்து உன்பால் குறையிரந்து நின்றபின்பாயினும் , அதனைப் பொறுத்து , எனக்கு அக்கண்ணை அருளித்தருளல் வேண்டும் ` என்பதும் குறிப்பித்தவாறாம் . இன்னும் , ` உன்னையன்றி வேறு பற்றில்லாத அடியவர்படும் துன்பத்தைக் களையாது கண்டு கொண்டிருத்தல் அருளுடையோனாகிய உனக்குத் தகுவதோ ` என்பது , இத்திருப்பதிகம் முழுவதினும் காணப்படுவதாம் . ` ஒருவரையும் ` என்னும் இழிவு சிறப்பும்மை , தொகுத்தலாயிற்று . ` பாசுபதன் ` என்றது , ` பசுபதி ` என்பது , பகுதிப் பொருள் விகுதிபெற்று நின்றவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

உன் தேவியாகிய கொடிபோலும் இடையினை யுடைய உமையவள் கண்டு மகிழுமாறு , பல திறங்களும் கூடிய கூத் தினை , தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே , அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே , கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே , ` இறைவனே , நீ எங்குள் ளாய் ?` என்று தேடிய தேவர்கள் , நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர் கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன் , மேலும் அங்ஙனமே பாடுதற்கு , யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய் .

குறிப்புரை :

` எல்லாவகை நடனங்களும் அமைய ஆடினாய் ` என்பார் , ` கூடிய இலயம் ` என்று அருளினார் . ` உமையவளை மகிழ் விக்க , நடனத்தை நன்கு ஆடுபவனாகலின் , சங்கிலியை வருத்திய என் பிழையைப் பொறுத்திலை ` என்பது திருக்குறிப்பு . ` பாடிய ` என்றதனை , ` செய்த ` என்னும் பெயரெச்சமாகவும் , ` செய்யிய ` என்னும் வினையெச்சமாகவும் , இரட்டுற மொழிந்துரைக்க . ` அற்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக ` ( தி .12 தடுத் . புரா . 70) என்று நீ பணித்தவாறே தலங்கள் பலவற்றிற்கும் சென்று உனது திருப் புகழைப் பாடினேன் ; இனியும் அவ்வாறு இடரின்றிச் சென்று , உனது திருமேனியைக் கண்களாரக் கண்டு இன்புறும்வழியே பாடுதல் உளதாவதாம் ; ஆதலின் , என் கண்ணைக் கொடுத்தருளல் வேண்டும் என வேண்டியவாறாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழம்அன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே , மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து , அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே , சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே , தேவர்களுக்குத் தலைவனே , தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே , சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உன் அடியேன் படு கின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

` உன் மனைவியை நீ வெருவச் செய்தாயாயினும் , என் மனைவி வருந்தப் பொறுத்தாயல்லை ` என , அவனது திருவருளைப் புகழ்வார் , ` மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் ` என்றும் , ` சங்கிலியும் என்போலவே உன்னையன்றி வேறு அறியாத தொண்டி னளாதலின் , அவள்பொருட்டு நீ இது செயற்பாலையே ` என்பார் . ` சங்கிலிக்கா என்கண் கொண்ட பண்ப ` என்றும் அருளிச் செய்தார் . சுவாமிகள் இங்ஙனம் , இறைவனது செப்பத்தினைச் சிறப்பித்தோதிய வதனானே , சேக்கிழார் , ` சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையிற் பாடி ` ( தி .12 ஏ . கோ . பு . 277) என்று , இதனை விதந்தோதியருளினார் . இங்ஙனம் சங்கிலியாரது திருத்தொண்டினை ஏற்று நிற்கும் நிலைமையை நினைத்தலின் , ` ஒற்றி மாநகருடையாய் ` என்றும் ஓதினார் . ` சண்பகம் ` என்னும் வடசொல் , ` செண்பகம் ` எனத் திரிந்து வருதல் வழக்கு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளற்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில் , புள்ளிகளையும் , கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட , அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு , அந்த இசை நின்றபொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உனது திருப்புகழை விருப்பத்தோடு , பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

` பொன் ` உவமையாகுபெயர் . ` வண்டுகளின் இசையைக் கேட்டு , நண்டு , தாமரை மலராகிய படுக்கையின்மேல் உறங்கும் ` என்பதும் , ` புதுமணம் நீங்கிய பின்னர் வண்டுகள் இசை யொழிதலும் , நண்டு எழுந்து உலவும் ` என்பதும் இதன்கண் அமைந் துள்ள அணிந்துரைகள் . ` உலவிட வள்ளல் ` என்பது பாடமெனின் , ` அவ் வள்ளல் ` என்னும் , வகரம் தொகுக்கப்பட்டதாக உரைக்க . ` நலத்தமிழ் ` என்பது , மெலிந்து நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

சந்தன மரத்தின் வேரையும் , கரிய அகிலினது கட்டையினையும் , மென்மையான மயில் இறகினையும் , யானையின் தந்தத்தையும் , முத்துக் குவியல்களையும் , பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும் , பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந் தருளியிருப்பவனே , மாசில்லாத மணி போல்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

சந்தன மரத்தை அடியோடு பெயர்த்துக் கொணர்தலைக் குறிக்க , ` வேரும் ` என , அதனையே குறித்தருளினார் . தண்மை , இங்கு மென்மை மேற்று , ` குவைகள் ` என்றது இருமருங்கிலும் அவற்றை உளவாக்குதல் நோக்கி , ` பாலி வடகரை ` என்றதனான் , இத்தலம் , வடதிருமுல்லைவாயிலாதல் பெறப்பட்டது . பத்தாந் திருப்பாடலாலும் இது பெறப்படுவதாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

மாற்றாது வழங்கும் வள்ளலே , வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே , திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , யான் பொய்யையே பேசி , குற்றங் களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின் , யான் பெற்ற பேறு , மற்று யார் பெற வல்லார் ! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன் ; அது , தவறுடைத்தே . ஆயினும் , அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின் , அடியேன் வேறொரு துணை இல்லேன் ; ஆதலின் , அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய் .

குறிப்புரை :

கள்ளம் , ` உனக்கு ஆளல்லேன் ` என்றதும் , தவநெறி வேண்டிய பின்னும் பரவையாரை விரும்பியதும் . குற்றம் செய்தது , ` பித்தன் ` எனப் பலர்முன் இகழ்ந்தது , பொன் வேண்டுங்கால் ஏச்சுரை களாகப் பாடியது போல்வன . இவைகளை இறைவன் குற்றமாகக் கொள்ளாது , மகிழ்வுற்றமை யறிக . ` மிகை பல ` என்றது , மற்றொரு மாதரைத் தருமாறு வேண்டியது முதலாக , சூள் பிழைத்தமை ஈறாகச் சங்கிலியாரது திருமணத்தில் நிகழ்ந்தவை . ` எல்லாவற்றையும் பொறுத்த நீ , இச்சூள் பிழைத்தது ஒன்றனையும் பொறாதொழிந்தது , அது நின் அடியவட்கு இழைத்த பெருந்தீங்காதல் பற்றி என்பதனை யான் இப்பொழுது உணர் கின்றேன் ` என்பார் , ` மிகைபல செய்தேன் ` என்றும் , ` இதுதான் பொறுக்கலாகாத குற்றமே எனினும் , இது பற்றி எனக்கு நீ முன்செய்த திருவருளையெல்லாம் மறுத்துவிடுவையாயின் , யான் கெட்டொழிவ தன்றி உய்யேன் ` என்பார் , ` அடியேன் பற்றிலேன் உற்றபடுதுயர் களை யாய் ` என்றும் அருளிச்செய்தார் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல்அ றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

அழகு பொருந்திய சிவந்த வாயினையும் , வெள்ளிய பற்களையும் , கரிய நீண்ட கூந்தலையும் , சிறந்த மயில் போலும் சாயலையும் , அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளை யும் , அழகிய கயல்போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும் , செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

` மணிகெழு ` என்றது , நகை கூந்தல்களோடும் இயை யும் . இவ்வாறன்றி , ஏற்புழிக் கோடலால் , பவளமும் முத்துமாக உரைத்து , ` வாய் , நகை ` என்பவற்றோடே இயைத்து , ` கெழு , உவம உருபு ` என்றலுமாம் . ` அங்கயற்கண்ணார் ` என்றது , பெயர்த் தன்மைத் தாய் , வாய் முதலியவற்றோடு தொக்கு நின்றது , ` அறாத , தழுவு ` என்ற வற்றை , தனித்தனி , ` திருமுல்லைவாயில் ` என்றதனோடு இயைக்க . இரவை முன்னர் , அருளினார் , ` அது பணி ஒழியுங்காலமாக . அப் பொழுதும் ஒழியாது செய்வேன் ` என்றற்கு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் றன்னைஆட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

யாவராலும் விரும்பத் தக்கவனே , அன்று திரு வெண்ணெய்நல்லூரில் வந்து , நாய்போன்றவனாகிய என்னை ஆட் கொண்ட சம்புவே , வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற , பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே , உன்னைத் தேடித் திரிவேனாகிய யான் , செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட , பசிய பொன் போல்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ள வனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

` தடங்கடல் நஞ்சுண்ட கண்டன் ` என்பது , ஒரு பெயர்த் தன்மைத்தாய் , ` ஏத்தும் ` என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று . அவ் வெச்சமும் , ` கண்ட ` என்ற எச்சமும் செயப்படு பொருட் பெயர் கொண்டன .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல் , அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை , அவன் இறக்கும்படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே , செல்வத்தையுடைய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே , சொல்வளமும் , பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே , உயிர்களைக் காப்ப வனே , மேலான ஒளியாய் உள்ளவனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

` செல்வம் ` என்றன இரண்டும் , பொருட் செல்வத்தையும் , அருட்செல்வத்தையும் குறித்தன . இறைவனுக்குப் பொருட் செல்வமாவன , எல்லா உயிர்களும் , எல்லா உலகங்களும் ஆகிய அடிமைகளும் , உடைமைகளுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

சொல்லுதற்கரிய புகழை யுடையவனாகிய , ` தொண்டைமான் ` என்னும் அரசன் , எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை , படர்ந்துகிடந்த முல்லைக் கொடியால் தடுத்து , பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே , எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , வெள்ளை விடையை ஏறுபவனே , பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

இஃது இத்தலத்தில் , இறைவன் வெளிப்பட்டருளிய வரலாற்றினை எடுத்தோதி யருளியது . அவ்வரலாறாவது , ` இத்தலம் உள்ள நாடாகிய தொண்டை நாட்டை ஆண்ட , ` தொண்டைமான் ` என்னும் அரசன் வேட்டைக்குச் சென்றபோது அவனது யானையின் காலில் சுற்றிக்கொண்ட முல்லைக் கொடியை அவ் யானை அறுத்துச் செல்ல மாட்டாது நிற்க , அரசன் சினந்து அக்கொடியை , தனது வாளினால் வெட்டி விலக்கியபோது , உள்ளே சிவலிங்கம் இருத்தலைக் கண்டு மகிழ்ச்சியுற்று வணங்கி , திருக்கோயில் எடுத்தல் முதலிய திருப் பணிகளைச் செய்தான் ` என்பது , இதனை இத்தல புராணத்துட் காண்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவல்ஆ ரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே

பொழிப்புரை :

நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும் , திருமாலும் அச்சங் கொள்ளும்படி , அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய , அலைகளை வீசுகின்ற கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும் , மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள் , நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி , தேவர்களுக்கு அரச ராகும் நிலையை அடைவர் .

குறிப்புரை :

` மூப்பும் ` என உம்மை கொடுத்துப் பிரித்து , நடலையை வேறு ஓதினமையால் , அஃது இறப்பாயிற்று . நடலை - துன்பம் . அஃது அப் பெருந்துன்பத்தைக் குறித்தது . ` அரசு ` என்றது , அரசராகும் தன்மையை என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

கங்கையைத் தாங்கிய நீண்ட சடையை உடையவனே , பூத கணங்கட்குத் தலைவனே , காலனுக்குக் காலனே , காமன் உடலுக்கு நெருப்பாகியவனே , அலை மிகுகின்ற பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உடைய கண்டத்தை உடையவனே , உயிர்கட்கு முதல்வனே , அறவடிவினனே , தூயோனே , சிவந்த கண்களை யுடைய திருமாலாகிய இடபத்தை யுடையவனே , தெளிந்த தேன் போல்பவனே , கடவுளே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற கருணையாளனே , அடியேனுக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

` அமரர்கட்குத் தலைவனே ` என , வாளா அருளாது , ` அமரர்கள் ஏறே ` என , உருவகித்து அருளினார் , அவனது முதன்மை யின் சிறப்புத் தோன்றுதற்கு . அமரர்கள் ஏறு , ஏகதேச உருவகம் . இது , வலிமை நிலனாக வந்தது . ` ஏறு ` என்ற உருவகம் , ஏனைய பெயர் களோடு இயைந்தது . திணைவழுவமைதி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்
கருத்த ழிந்துனக் கேபொறை யானேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

நிலவுலகின்கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய என்முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே , தெளிவாகிய நிலவொளியை வீசுகின்ற சடையை உடையவனே , இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக் கின்ற அண்ணலே , தேவர்களாகிய , விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , யான் கண் இல்லேனாயினேன் ; அதன்மேலும் , உடம்பில் வந்து பற்றி வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால் , உனக்குத்தான் சுமையாய் விட்டேன் ; எனக்கு உறவாவார் உன்னை யன்றி வேறு யாவர் உளர் ! ஆதலின் , என்னை ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

` என்னை வலிய வந்து ` என்றதில் , என்னை , உருபு மயக்கம் . ` உடம்பில்லடு நோய் ` என்ற லகர ஒற்று , விரித்தல் . சுவாமிகள் கண்ணின்றி இருந்ததோடு , உடம்பிற் பிணியுற்று இருந் தமையையும் நினைக்க . ` கருத்தழிந் துனக்கே பொறை யானேன் ` என்றதை , ` கடை முறை உனக்கே பொறையானேன் ` ( தி .7 ப .60 பா .5) என்றதனோடு வைத்துக் காண்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

ஒப்பி லாமுலை யாள்ஒரு பாகா
உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே
மூவ ருக்கருள் செய்ய வல்லானே
செப்ப ஆல்நிழற் கீழ்இருந் தருளுஞ்
செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

நிகரற்ற தனங்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே , மேலானவனே , ஊமத்தம் பூப் பொருந்திய சடையை உடையவனே , முப்புரங்களைத் தீவளையச் செய்து , அப்பொழுதே அவற்றில் இருந்தவர்களுள் மூவருக்கு மட்டில் அருள் செய்ய வல்லவனே , அறத்தைச் சொல்லுதற்கு ஆல் நிழலில் அமர்ந் தருளிய செல்வனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் அப்பனே ! தேவர்களாகிய விலங்குகளுக்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாருளர் ! என்னை ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

திருவாவடுதுறையில் உள்ள அம்மைக்கு , ` ஒப்பிலா முலையாள் ` என்பது பெயராய் வழங்குதல் நினைக்கத் தக்கது . ` தீ வளைத்து ` என்றதனை , ` தீயாய் வளைத்து ` என விரித்தலுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

கொதியி னால்வரு காளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்
மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்
விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை யுடையவனே , மாணிக்கம் போல்பவனே , மணவாளக் கோலத்தினனே , தேவர்கள் , முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , தேவர்களாய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , அறிவில்லேனாகிய யான் உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால் , செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன் ! எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

சிவபிரான் காளியோடு நடனப் போர் செய்து , அவளது செருக்கை அடக்கிய புராண வரலாற்றினை , ` ஓடிய தார கன்ற னுடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய ஆடிய மாந டத்தெ மனலாடி பாத மவையாம் நமக்கொர் சரணே ` ( தி .4 ப .14 பா .4) எனத் திருநாவுக்கரசரும் , தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடி தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ ( தி .8 திருச்சாழல் - 14) என மாணிக்கவாசகரும் அருளிச்செய்தமை காண்க . விகிர்தன் - உலகியல்பின் வேறுபட்டவன் ; கடவுட் பொருள் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

வந்த வாள்அரக் கன்வலி தொலைத்து
வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடிப் பூசவல் லானே
வேட னாய்விச யற்கருள் புரிந்த
இந்து சேகர னேஇமை யோர்சீர்
ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்த ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

உலகமாகிய வழிக்கு முதலானவனே , வெந்த தனால் ஆகிய வெள்ளிய திருநீற்றைப் பூச வல்லவனே , அருச்சுன னுக்கு வேட உருவத்தில் சென்று அருள்செய்த சந்திர சேகரனே , தேவர் களுக்குப் புகழுடைய தலைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற அந்தணனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! அன்று நீ இருக்கும் இடத்தில் செருக்குக் கொண்டு வந்த கொடிய அரக்கனாகிய இராவணனது வலிமையை அழித்து , பின்பு அவனுக்கு வாழ்நாள் கொடுத்து விடுத்தாய் ; இன்று , என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

` இராவணனை முன்பு ஒறுத்ததோடு ஒழியாது , பின்பு , அவனுக்கு அருள்பண்ணியது போல , இன்று அடியேனை ஒறுத் தொழியாது , அருள்பண்ணுதல் வேண்டும் ` என்றபடி . ` அந்தணா ` என்றதும் , ` அழகிய தட்பத்தையுடையவனே ` என , அவனது அருளுடைமையைக் குறித்தவாறாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

குறைவி லாநிறை வேகுணக் குன்றே
கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

` குறை ` எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவுடையவனே , இறைமைக் குணங்கள் எல்லாவற்றானும் இயன்ற தொரு மலை எனத் தக்கவனே , கூத்துடையவனே , குழையணிந்த காதினை யுடையவனே , சிறையை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாரூரில் உள்ள , செம்பொன் போல்பவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , அடியேனும் உன்னையன்றி உறவினர் ஒருவரையும் உடையேன் அல்லேன் ; எனக்கு உறவாரும் உன்னையன்றி வேறு யாவர் உளர் ! ஆதலின் , யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , உனக்கு வருவதொரு தாழ்வுண்டோ ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி , குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றில்லாமையை வலியுறுத்துணர்த்துவார் , ` குறைவிலா நிறைவே ` என , எதிர்மறையானும் , உடம்பாட்டானும் அருளிச் செய்தார் . ` குறைவிலா நிறைவே குணக்குன்றே ` என்ற இதனை , ` குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே ` ( தி .8 கோயில் திருப் .5) என்ற திருவாசகத்தோடும் வைத்துக் காண்க . தமக்குத் துணைசெய்ய வல்லார் பிறரின்மையை வலியுறுத்து வேண்டுவார் , ` உறவிலேன் ` எனத் தம்மேலும் , ` உறவு யார் ` எனப் பிறர் மேலும் வைத்து , இருவாற்றானும் அருளிச்செய்தார் . ` ஒரு பிழை ` என்றது , சூள் பிழைத்தமையை . ` ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே ` என்றது , சுவாமிகளுக்கு இறைவரோடுளதாய உரிமையை இனிது புலப்படுத்து வதாகும் . திருவாரூரை அடையும் ஆர்வத்தினாலே இந்நிலை வந்தது என்பதனை நினைகின்றாராதலின் , ` திருவாரூர்ச் செம்பொனே ` என்று அருளினார் . இத்தலத்தில் இறைவர்க்கு , ` செம்பொற்றியாகர் ` என்னும் பெயர் வழங்குதல் இதுபற்றியே போலும் !

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

வெய்ய மாகரி ஈருரி யானே
வேங்கை யாடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅட லாழியன் றரிதான்
வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிக ழொளியே
செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

கொடிய , பெரிய யானையினது உரித்த தோலை யுடையவனே , புலித்தோல் ஆடையை உடுத்தவனே , விதிவிலக்குக் களுக்குத் தலைவனே , மெய்ப்பொருளானவனே , அன்று திருமால் வேண்டிக்கொள்ள , வலிமையையுடைய சக்கரத்தை அவனுக்கு அளித்தருளிய இறைவனே , சிவந்த திருமேனியையுடையவனே , ஒளிகள் எல்லாவற்றினும் மேம்பட்டு விளங்குகின்ற ஒளியாய் உள்ளவனே , நெருப்புக்கண்ணை உடையவனே , திருவாவடுதுறை யில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , தேவர்களாகிய விலங்கு கட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவர் உன்னை யன்றி வேறுயாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

` வேங்கை ` என்றது , ஆகுபெயர் . ` விதி ` என்றது , ` ஆணை ` என்னும் பொருளதாய் , விதிவிலக்குகளைக் குறித்தது . ` விதி விலக்குகட்கு முதல்வனானவனே ` என்றதனால் , ` எனது பிழையைப் பொறுப்பினும் , பொறாது ஒறுப்பினும் உன்னையன்றி முதல்வர் வேறு யாருளர் ` என்றவாறாயிற்று . திருமாலுக்குச் சக்கரத்தை அருளினமை யும் , ` வேண்டுவார் வேண்டுவதனை ஈகின்றவன் ` என்பதனைக் குறித்த படியாம் . ` செங்கண் ` என்றது , குறிப்பினால் , ` நெருப்புக் கண் ` என்னும் பொருளைத் தந்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

கோதி லாஅமு தேஅருள் பெருகு
கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே
பசுப தீபர மாபர மேட்டி
தீதி லாமலை யேதிரு வருள்சேர்
சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

கோதில்லாத அமுதம் போல்பவனே , அருள் வெள்ளம் பெருகுகின்ற தோற்றத்தை உடையவனே , தேவர்கள் வணங்குகின்ற தலைவனே , உடம்பின் ஒருபாதியில் மங்கை ஒருத்தியது ஒருபங்கினை உடையவனே , உயிர்கட்குத் தலைவனே , மேலானவனே , மேலிடத்தில் இருப்பவனே , நன்மையால் இயன்ற மலைபோல்பவனே , சிறப்புடைய அருள் பொருந்திய வீரனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற முதற்பொருளான வனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

` கோதிலா அமுதே ` என்ற இதனையும் , மேற்காட்டிய ( தி .8 கோயில் திருப் .) திருவாசகத்திற் காண்க . கோது - சுவையற்றதாய்க் கழிக்கப்படும் பொருள் . ` கோதிலா அமுது ` என்றதனை , ` காழில் கனி ` ( குறள் - 1191) என்றதுபோலக் கொள்க . ` பெருகு ` என்றது , குறிப்புருவகம் . இறைவனது வேடங்கள் அவனது பேரருளைப் பொழிவனவாகலின் , ` அருள்பெருகு கோலமே ` என அருளினார் . ` கோலம் ` ஆகுபெயர் . தீதில்லாமை , அருத்தாபத்தியால் நன்மையைக் குறித்தது . முப்புரம் எரித்தமை முதலிய அனைத்தும் , அருள்காரணமாகவே நிகழ்ந்தன என்றற்கு , ` திருவருள் சேர் சேவகா ` என அருளிச்செய்தார் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாஎயி றாமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

ஆகாயமாகிய நாட்டை உடையவனே , செல்லும் வழிக்குத் துணையாகிய அமுதம்போல்பவனே , குற்றமில்லாத மாணிக்கம் போல்பவனே , வேதத்தின் பொருளாய் உள்ளவனே , பன்றியின் பெரிய கொம்பினையும் , ஆமை ஓட்டையும் , எலும்பையும் , இடப்பட்ட அணிகளாகத் தாங்கிய மார்பையுடையவனே , ` தேன் , நெய் , பால் , தயிர் ` இவைகளால் மூழ்குவித்தலை விரும்புகின்றவனே , இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் யானை போல்பவனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

இத்தலத்தில் இறைவனுக்கு , ` மாசிலாமணியீசன் ` எனப் பெயர்வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது . ` எயிறு ` என்ற இடத்தும் , எண்ணும்மை விரிக்க . ` ஆமை ` ஆகுபெயர் . ` ஈடு ` என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகுபெயராய் , இடப்பட்ட அணிகலங்களைக் குறித்தது . ` ஈடாக ` என ஆக்கச்சொல் வருவிக்க . ஆனைந்தில் , நெய் முதலிய சிறப்புடைய மூன்றனையும் எடுத் தோதவே , ஏனைய இரண்டும் உடன்கொள்ளப்படும் . ` ஆனை ` என்றது , வலியும் , காதலும் நிலைக்களனாக வந்த உருவகம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
சாத லும்பிறப் பும்மறுப் பாரே

பொழிப்புரை :

வெண்டலையோடு பொருந்தும் பிறையையும் , கொன்றைமலர் மாலையையும் , பாம்பினையும் , தேனையுடைய ஊமத்த மலரையும் ஒருங்கு விரவிச் சூடிக்கொண்ட சிறந்த இண்டை மாலையையுடைய , சிவந்த சடைமுடியையுடையவனும் , முதற் கடவுளும் , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவலோக வாணனும் ஆகிய இறைவனை , அவனுக்கு அணுக்கனாய் நிற்கின்ற வன்றொண்டனாகிய , சிங்கடிக்குத் தந்தை , மிக்க அன்போடும் பாடிய இத்தண்ணிய தமிழ்மாலைகளாகிய பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள் , இறத்தலையும் பிறத்தலையும் ஒழித்து , எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள் .

குறிப்புரை :

வெண்டலை, தாருகாவனத்து முனிவர்கள் விடுத்தது; அதனைச் சிவபெருமான் தன் தலையில் அணிந்து கொண்டமை அறிக. `அறுப்பார்` என்றது, அதன் காரியத்தையும் தோற்றுவித்து நின்றது. எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்தல், இறைவன் திருவடி இன்பத்தில் திளைத்திருத்தலாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

யாழைப்பழித் தன்னமொழி
மங்கைஒரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்
குண்ணும்மறைக் காடே

பொழிப்புரை :

யாழின் இசையைப் பழித்த அத்தன்மையையுடைய சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும் , பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபடவேண்டின் , அது , எளிய குரங்குகள் தாழம் புதரூடே புகுந்து , சிறிய புழைகளில் நுழைந்து , வாழைப்பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக்காடேயாகும் .

குறிப்புரை :

` பழித்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . பல பொருள்கள் , கிடத்தலின் , இறைவனது சடைமுடியை , பேழைபோல் வதாக அருளிச்செய்தார் . தாழையையும் , வாழையையும் ஒருங்கோதி யருளியது , ` நெய்தலும் , மருதமும் மயங்கிய நிலம் ` என்பது உணர்த்து தற்கு . இவ்வாறே மேலும் மயங்குநிலமாக அருளப்படுவன அறிந்து கொள்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

சிகரத்திடை இளவெண்பிறை
வைத்தான்இடந் தெரியில்
முகரத்திடை முத்தின்னொளி
பவளத்திர ளோதத்
தகரத்திடை தாழைத்திரள்
ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

தலையில் இளமையான பிறையைச் சூடின இறைவனது இடத்தை அறிய வேண்டின் , சங்கினிடத்தில் தோன்றிய முத்துக்களினிடையே மறைகின்ற பவளக்கூட்டத்தை உடைய அலைகள் , தகர மரங்களின் அடியிலும் , தாழைமரம் , குங்கும மரம் இவைகளின் நிழலிலும் மகர மீனையும் , சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காடேயாகும் .

குறிப்புரை :

முகரம் - ஒலி ; அஃது , ஆகுபெயராய் , சங்கினைக் குறித்தது . ` ஓதத் தகரத்திடை ` என்பது பாடம் அன்று . ` கழை , கரும்பு `, ` சுரும்பு , வண்டு ` என்பனபோல் , ` மகரம் , சுறா ` என்புழி , மகரம் , சுறாவின் வகையாம் என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

அங்கங்களும் மறைநான்குடன்
விரித்தான்இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும்
வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு
வணங்கும்மறைக் காடே

பொழிப்புரை :

வேதங்கள் நான்கினோடு , அவற்றின் அங்கங்களை யும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம் ; அஃது எதுவெனின் , தென்னை மரங்களும் , நீண்ட பனை மரங்களும் தம் தம் பழங்கள் விழநிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில் , சங்குகளும் , விளங்குகின்ற இப்பிகளும் , வலம்புரிச் சங்குகளும் அலைகளால் எறியப் பட , மரக்கலங்களும் உயர்ந்த பாய்மரங்களாகிய கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக்காடேயாகும் .

குறிப்புரை :

` நான்குடன் ` என்ற , ` உடன் ` என்பது , உயர் பின் வழித் தாய் வரும் ஒருவினை ஒடு உருபின் பொருளது . ` தெங்கங்கள் ` என் புழி நின்ற , ` அம் ` என்பது விகுதிப் புணர்ச்சிக்கண் வந்த சாரியை . ` தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ் ` என , சினைவினை முதலொடு சார்த்தப்பட்டது . ` இடறி ` என்றதனை , ` இடற ` எனத் திரிக்க . இடறுதல் , இங்கு எறிதல் மேற்று ` கூம்பொடு ` என்றதன்பின் , ` வந்து ` என்பது வருவிக்க . ` வணங்கும் ` என்றது , தற்குறிப்பேற்றத் தொடு வந்து குறிப்புருவகமாதலின் , அதற்கு இதுவே பொருளாதல் அறிக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நரைவிரவிய மயிர்தன்னொடு
பஞ்சவ்வடி மார்பன்
உரைவிரவிய உத்தமன்னிடம்
உணரல்லுறு மனமே
குரைவிரவிய குலைசேகரக்
கொண்டற்றலை விண்ட
வரைபுரைவன திரைபொருதிழிந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவனும் , அதனால் , புகழ் பொருந்திய மேலானவனும் ஆகிய சிவபெருமானது இடம் யாது என்று உணரப் புக்க மனமே , அது , ஒலி பொருந்திய கரைக்கண் உள்ள மாமரத்தினது , மேகங்கள் தவழ்கின்ற தலையில் , உடைந்த மலைபோல்வனவாகிய அலைகள்மோதி மீள்கின்ற திருமறைக் காடேயாகும் .

குறிப்புரை :

தேவர்களது நிலையாமைத் தன்மையையும் , தனது நிலைத்த தன்மையையும் உணர்த்துதற் பொருட்டே சிவபெருமான் , தேவர்களது தலைகளையும் , எலும்புகளையும் மாலையாக அணித லும் , அவர்களது தலைமயிரைப் பஞ்சவடியாகப் பூணுதலும் செய் வனாகலின் , அவர்களது நரையை உணர்த்துதற்கு நரைவிரவிய பஞ்சவடியையும் பூண்பன் எனவும் , அவ்வாற்றான் அவனுக்குப் புகழ் உளதாவது எனவும் உணர்க . பஞ்சவடி - மயிரினால் இயன்ற பூணநூல் . கடலில் எழுகின்ற ஓசை , அதன் கரையின்கண்ணும் பரவி நிற்றலின் , ` குரைவிரவிய குலை ` என்று அருளினார் . குலை - கரை . நிலமயக்கம் உணர்த்தல் திருவுள்ளமாதலின் , ` சேகரம் ` என்றதற்கு , ` மாமரம் ` என்பதே பொருளாதல் அறிக . குலசேகரக் கொண்டல் என்பது சுவாமிநாத பண்டிதர் பாடம் . ` குலைச் சேகரம் ` என்னும் சகரமெய் , இசைநோக்கித் தொகுத்தலாயிற்று . அலைகள் மலைபோல் எழுந்து கரைக்கண் வந்து சிதறிப்போதலின் , ` விண்டவரைபுரைவன ` என்று அருளினார் . ` விண்ட ` என்றதனை , துணிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாயதாக உரைக்க . ` இழிந்து எற்றும் ` என்றதனை , ` எற்றி இழியும் ` என மாற்றிக்கொள்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

சங்கைப்பட நினையாதெழு
நெஞ்சேதொழு தேத்தக்
கங்கைச்சடை முடியுடையவற்
கிடமாவது பரவை
அங்கைக்கடல் அருமாமணி
உந்திக்கரைக் கேற்ற
வங்கத்தொடு சுறவங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

மனமே , ` கங்கையைத் தாங்கிய சடைமுடியை யுடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாவது , கடலினது கைகள் ஆகிய அலைகள் அக்கடலின்கண் உள்ள அரிய , சிறந்த மணிகளைத் தள்ளிக்கொண்டு , கரைக்கு ஏற்புடைய மரக்கலத்தோடு சுறா மீனையும் கொணர்ந்து சேர்க்கின்ற திருமறைக்காடேயாகும் ` அது பற்றி ஐயமாக நினையாது , அங்குச் சென்று அவனை வணங்கித் துதித்தற்கு ஒருப்படு .

குறிப்புரை :

இத் திருப்பதிகத்துள் , ` உடையவர்க்கு ` என வருவன பாடம் அல்ல . ` அம்கை ` என்றது உவமையாகுபெயராய் , அலை களைக் குறித்தது . ` அங்கையால் ` என உருபு விரிக்க . ` அங்கக் கடல் ` என்பது சுவாமிநாத பண்டிதர் பாடம் . கரைக்கு ஏற்ற வங்கம் - உயர்ந்த பொருள்களைக் கொணரும் மரக்கலம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

அடல்விடை யினன்மழுவா
ளினன்நல்ஆர் அணிகொன்றைப்
படருஞ்சடை முடியுடையவற்
கிடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினிற்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே

பொழிப்புரை :

வெற்றியை உடைய இடப ஊர்தியையுடைய வனும் , மழுப்படையை உடையவனும் , நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியை யுடைய சிவபெருமானுக்கு இடமாவது , பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும் , கழியின் அருகிலும் ; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற , நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும் .

குறிப்புரை :

` அலராலணி ` என்பது பாடம் அன்று . ` கொன்றைச் சடை ` என இயையும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

முளைவளரிள மதியுடையவன்
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை யாளல்லுறு
கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடுசலஞ் சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

புதுவதாகத் தோன்றிய , வளர்தற்குரிய , இளமை யான பிறையை உடையவனும் , யான் முன்னே செய்த வலிய வினை களை , களைகளைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது , செந்நெற் கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற , மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும் , ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற் கரைக்கண் அக்கடல் , வளைந்த சங்குகளோடு , சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும் .

குறிப்புரை :

` முளை , வளர் , இள ` என்னும் மூன்றினையும் , ` மதி ` என்றதனோடு தனித்தனி இயைக்க .` களை களைந்து ` என்றது , அன்ன தொரு செயலைச் செய்தென்றவாறு . ` வளை வயல் , விளை வயல் ` என்க . ` வார் மணற் குணகடல் வாய் ` என மாறுக . ` கடல் ` என்றது , ஆகுபெயர் . எற்றுதற்கு வினை முதல் , அதனானே கொள்ளக் கிடந்தது . ` வளையொடு ` என்றதில் ` வளை `, ` சங்கு ` என்னுந் துணையாய் , வாளாபெயராய் நின்றது . சலஞ்சலம் உயர்ந்த சங்காதலின் , ` வளை யொடு சலஞ்சலம் கொணர்ந்து ` என்றதனை , ` முனிவர் வந்தனர் ; அகத்தியனும் வந்தான் ` என்றாற்போல , சிறப்புப் பற்றி வேறோதிய வாறாக உரைக்க . ` சலஞ்சலமும் ` என்னும் எச்சவும்மை தொகுத்த லாயிற்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

நலம்பெரியன சுரும்பார்ந்தன
நங்கோனிட மறிந்தோம்
கலம்பெரியன சாருங்கடற்
கரைபொருதிழி கங்கைச்
சலம்புரிசடை முடியுடையவற்
கிடமாவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

கங்கை நீரோடு திரித்த சடைமுடியை உடைய வனாகிய சிவபெருமானுக்கு இடமாய் நிற்பது , நற்பொருள்கள் மிக்கனவும் , வண்டுகள் நிறைந்தனவும் , பெரியனவுமாகிய மரக்கலங் கள் பொருந்திய கடலினது கரையைமோதி மீள்கின்ற அலைகள் , வலம்புரிச் சங்குகளையும் , சலஞ்சலச் சங்குகளையும் கொணர்ந்து வீசுகின்ற திருமறைக்காடேயாகும் . இதனை அறிந்தோமாகலின் , நாம் நம் பெருமானது இடத்தை அறிந்தோமாயினோம் .

குறிப்புரை :

` கங்கைச் சலம்புரிசடை முடியுடையவற் கிடமாவது ` என்றதனை முதலிலும் , ` நங்கோனிடம் அறிந்தோம் ` என்றதனை ஈற்றிலும் வைத்து உரைக்க . ` நலம் பெரியன , சுரும்பார்ந்தன , கலம் பெரியன ` என்பவை , சிறப்புப்பெயர் பின் வந்த ஒரு பொருண் மேற் பல பெயர் ; சிறப்புப் பெயர் பின் வாராமை , இயற்பெயர்க்குப் பின்னே யாதல் அறிக . வண்டுகள் நிறைதல் , ஏற்றப்பட்டுள்ள நறுமணப் பொருள்கள் பற்றி .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

குண்டாடியுஞ் சமணாடியுங்
குற்றுடுக்கையர் தாமும்
கண்டார்கண்ட காரணம்மவை
கருதாதுகை தொழுமின்
எண்டோளினன் முக்கண்ணினன்
ஏழிசையினன் அறுகால்
வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு
மணிநீர்மறைக் காடே

பொழிப்புரை :

உலகீர் , சிறிய உடையை உடைய சிலர்தாமும் , மூர்க்கத் தன்மை பேசியும் , சமண சமயக் கொள்கைகளை உரைத்தும் சில பொருள்களை , தம் குறையறிவாற் கண்டார் ; எனினும் , அவை களைப் பொருளாக நினையாது , எட்டுத் தோள்களை உடையவனும் , மூன்று கண்களையுடையவனும் , ஏழிசைகளையுடையவனும் ஆகிய சிவபெருமானது , ஆறு கால்களையுடைய வண்டுகள் சூழ்கின்ற குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஓங்கும் நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காட்டைக் கைகூப்பித் தொழுமின்கள் .

குறிப்புரை :

குண்டர் என்பவர் , சமண் சமய ஆசிரியர் ஒருவர் என்றும் , ` அப்பெயர் , ` குந்தர் ` என வழங்குகின்றது ` என்றும் , அவரது கொள்கையே ` குண்டு ` எனப்படுகின்றது எனவும் உரைப்பாரும் உளர் . அது , பொருந்துமேற் கொள்க . ` கண்டார் ` என்றது , கொல்லாமை முதலிய அறங்கள் நலம் பயக்கும் என்பதனை . அவர் அன்னராயினும் , எல்லாவற்றிற்கும் முதல்வனாகிய இறைவன் உண்மையைக் காணாமை மேலும் , அவ்வுண்மையை அழித்துரைத்த லின் , ` நிழல் நீரும் இன்னாத இன்னா ` ( குறள் -881) என்றாற்போல அவரது அறம் தீங்கு பயத்தலின் , ` அவை கருதாது ` என்று அருளிச் செய்தார் . ஏழிசையை விரும்புதலை , அவற்றை உடைமையாக அருளினார் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பாரூர்பல புடைசூழ்வள
வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை
பங்கன்மறைக் காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள்
பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர்
புகழாகுவர் தாமே

பொழிப்புரை :

கச்சின்மேல் எழுகின்ற அழகிய தனங்களை யுடையவளாகிய உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திரு மறைக்காட்டை , நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும் , வளவிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூ ரார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரனது தமிழ்ப்பாடல்களால் பாடு கின்ற , அப்பெருமானது திருவடித் தொண்டர்கள் , நீர் சூழ்ந்த நிலத் தொடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப்பெறுவார்கள் .

குறிப்புரை :

` தமிழ் மாலைகளால் ` என உருபு விரிக்க . நிலனோடு உயர்தலாவது , நிலவுலகு உள்ளதுணையும் நிலை பெறுதல் . ` பொன்றுந்துணையும் புகழ் ` ( குறள் -156.) என்றதன் பொருளை நோக்குக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே

பொழிப்புரை :

எனக்கு இனியவனும் , தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும் , எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம் , பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள , ` திருவலம்புரம் ` என்னும் தலமே . இதனை அறிந்தேனாகலின் , எனக் கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந் தேனாயினேன் .

குறிப்புரை :

` தினைத்தனைப் புகலிடம் ` என்பது , ` தினைத் தனையதாகிய புகலிடம் ` என விரிக்கப்படும் . ` தினைத்தனையது ` என்றது . ` சிறிது ` என்னும் பொருளது . ` சிறிது புகலிடம் ` என்றது , தமது பணிவு தோன்ற அருளியது . ` மனத்துக்கு என்பதில் , அத்துச்சாரியை தொகுக்கப்பட்டு நின்றது . ` இடம் வலம் ` என்றது , ஓர் முரண்தொடை நயம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும் , புதியவனும் , மரவுரியையும் புலித்தோலையும் அரை யிற் பொருந்தியவனும் , பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும் இரந்து உண்ண விரும்புபவனும் , இரவின்கண் தீயில் நின்று ஆடுப வனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` வில்லினன் நவன் ` எனப் பிரிக்க , சிவபிரான் மரவுரி உடுத்தல் , ஈண்டுப் பெறப்படுகின்றது . நிரத்தல் - நிரம்பக் கிடத்தல் ` இரந்தவன் ` என்பது பாடம் அன்று . ` ஆடி ` என்றது போல , ` விரும்பி ` என்றதும் , பெயர் ; எண்ணின்கண் வந்த வினையெச்சமுமாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு வேந்தியொர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

நீறணிந்த மேனியை யுடையவனும் , சினங் காரண மாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும் , பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும் , நீரை அணிந்த , ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய , இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` நெருப்பு `, ` சினம் ` என்பாரும் உளர் . ` ஏந்திய ` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று ` சடையழல் ` என்னும் உருவகம் , ` வளர் ` என்னும் சிலேடைவினை கொண்டது . ` வளர் அடிகள் ` என இயைத்து , இறந்தகால வினைத்தொகை யாக்குக . ` அணி ` என்றதனால் , ஏறு , கொடியாயிற்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம் படும்இடந் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல் லிடம்வலம் புரமே

பொழிப்புரை :

மலர்களில் உள்ள தேனை ஆங்கு வந்த வண்டுகள் உண்ண , நெருங்கிய , குளிர்ந்த , இளைய தென்னை மரங்களும் , பனை மரங்களும் பழம் விளைகின்ற இடமும் , பெரியகடலினது அலைகள் கரையை மோத , தேவர்கள் தங்கியிருக்கும் இடமும் , எங்கள் இறை வனது நல்ல இடமும் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` பழம் படும் ` என , சினைவினை முதல்மேல் நின்றது . தேவர்கள் தங்குதல் , இறைவனை வணங்குதற்குச் செவ்வி பெறாமை யாலாம் . ` கடல் அலைகளின் குளிரையும் பொறுத்துக் கொண்டு அவர் கள் ஆங்குத் தங்கியிருப்பர் ` என்றபடி . ` எங்கள் அடிகளது ` என உருபைப் பிரித்துக் கூட்டுக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதிள் சிறுமையின் நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்
திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே

பொழிப்புரை :

கொடிய மழுவை எடுக்க வல்லவனும் , கொலை பொருந்திய வில்லையுடையவனும் , மூன்று பெரிய மதில்களை ஓர் இமைப்பொழுதில் பொடியாக்க வல்லவனும் ஆகிய இறைவனது இடம் , கடலில் உண்டாகின்ற மாணிக்கங்களையும் , முத்துக்களையும் , பவளங்களையும் மிகுதியாகத் தாங்கி நிற்கின்ற மணல் பொருந்திய கடற்கரையாகிய இடமும் , திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே .

குறிப்புரை :

` மூன்று ` என்பதும் , ` கடல் ` என்பதும் ஆற்றலாற் கொள்ளக் கிடந்தன . ` சிறுமை `, அதனை உடைய காலத்தின்மேல் நின்ற பண்பாகுபெயர் . நிரவுதல் - அழித்தல் . ` சுமந்திடும் ` என்றதில் இடு , துணைவினை . ` சுமந்திடும் கரை ` எனஇயையும் . ` கரையிடம் , வலம்புரம் ` என்றன , ஒருபொருண்மேற் பல பெயர் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே

பொழிப்புரை :

கரிய மதநீரையுடைய யானைத் தோலையுடைய இறைவனது இடம் , நெருங்கிய , நீண்ட பனைமரங்கள் , கயல் மீன் களோடும் , அடும்பங் கொடிகளோடும் கலந்து நிற்கின்ற இடத்தின்கண் , வலம்புரிச் சங்குகளும் , சலஞ்சலச் சங்குகளும் தம் தம் பெண் சங்குகளோடு மணஞ்செய்து கொள்ளுதலைப் பொருந்தி , பெரிய கடலினின்றும் வருகின்ற கடற்கரையாகிய இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலமே .

குறிப்புரை :

` மருங்கொடு ` என்றதனை , ` மருங்கின்கண் ` எனத் திரிக்க

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நரிபுரி காடரங் காநட மாடுவர்
வரிபுரி பாடநின் றாடும்எம் மானிடம்
புரிசுரி வரிகுழல் அரிவைஒர் பான்மகிழ்ந்
தெரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

நரிகள் விரும்புகின்ற காடே அரங்கமாக நடனம் ஆடுபவனும் , யாழ் இசையைப்பாட நின்று ஆடுகின்ற எம்பெரு மானும் , பின்னிய , சுரிந்த , கட்டிய கூந்தலையுடைய மங்கையை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து , எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` முதுகாடு ` என்றற்கு , ` நரிபுரி காடு ` என்று அருளினார் . ` ஆடுவர் ` என்றது ஒருமைப் பன்மை மயக்கம் , ஒரு பொருள்மேற் பல பெயர் வருங்கால் அவற்றது முடிபினைப் பெயர் தோறும் கொடுத்தலும் அமைவதாகலின் , ` எம்மான் இடம் ` என முன்னுங்கூறினார் ` வரிபுரி ` என்றதில் புரி , புரிக்கப்பட்ட நரம்பினை உடைய யாழுக்கு ஆகுபெயர் . யாழ் உடையவர் பாடுதலை யாழ் பாடுதலாக அருளியது , பான்மை வழக்கு . இறைவன் ஆடும் வகை யெல்லாம் இதனுள் அருளியவாறு .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

பாறணி முடைதலை கலனென மருவிய
நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய
மாறணி வருதிரை வயலணி பொழிலது
ஏறுடை யடிகள்தம் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

பருந்தைக்கொண்ட , முடைநாற்றம் பொருந்திய தலையை உண்கலமாகப் பொருந்தியவனும் , நீற்றை அணிந்தவனும் , நீண்ட சடைமுடியை உடையவனும் இடபத்தை உடைய தலைவனும் ஆகிய இறைவனது இடம் , விளங்குகின்ற , மாறிமாறியும் கூட்டமாயும் வருகின்ற அலைகளையுடைய கடலையும் , வயல்களையும் அழகிய சோலைகளையும் உடையதாகிய , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` முடைத்தலை ` என்னும் தகரவொற்று . இசையின்பம் நோக்கித் தொகுத்தலாயிற்று . ` ஏறுடை அடிகள்தம் இடம் ` என்றதனை , ` முடியினன் ` என்றதன்பின் வைத்து உரைக்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

சடசட விடுபெணை பழம்படும் இடவகை
படவட கத்தொடு பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணலடை இடம்வலம் புரமே

பொழிப்புரை :

தோல் ஆடையை உடுத்துக்கொண்டும் , சாம்பலைப் பூசிக்கொண்டும் உலாவுகின்றவனும் , இல்லங்களின் வாயில் தோறும் பிச்சைக்குத் திரிகின்ற தலை ஓட்டினை உடையவனும் ஆகிய இறைவனது இடம் , ` சடசட ` என்னும் ஓசையை வெளிப் படுத்துகின்ற பனைமரங்கள் பழம் பழுக்கின்ற இடங்களின் வகை பலவும்மிகுமாறு , இடிகின்ற கரையை மணல்கள் அடைக்கின்ற இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலமே .

குறிப்புரை :

` வடகத்தொடு ` என்றது முதலாக , ` கபாலிதன் இடமது ` என்றது ஈறாக உள்ளவற்றை முதற்கண் வைத்து உரைக்க . ` மணற்குன்றுகள் இடிந்து வீழ்ந்து மணற்பரப்பாகிய இடங்களில் பனைமரங்கள் வளர்ந்து , பழங்களைப் பழுக்கும் ஊர் ` என்றவாறு , இது பற்றியேபோலும் , இத்தலத்திற்கு , ` பெரும்பள்ளம் ` என்ற ஒரு பெயரும் வழங்குகின்றது . ` இப்பெயர் , இலிங்க மூர்த்தியின் தலையில் காணப்படும் பள்ளம்பற்றி வந்தது ` என்பர் . ` படகத்தொடு ` என்பது பாடமாயின் , ` படகம் என்னும் பறையோடு ` என உரைக்க . இதற்கு , ` இடவகை பட ` என்புழிப்பகர ஒற்றுத் தொகுத்தலாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

குண்டிகைப் படப்பினில் விடக்கினை யொழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

கரகத்தையுடைய உறியை உடையசமணர்களது பொய்ம்மையை நன்குணர்ந்தவர்களும் , உணர்ந்து தனது திருவடியில் வீழ்ந்து வணங்கியவர்களும் , ஒலிக்கின்ற கழலை அணிந்த , தண்டேந்தி நிற்கும் தண்டி முதலிய சிவகணத்தவர்களும் செய்கின்ற , ` அரகர ` என்னும் ஓசையுடன் , எட்டுத் திசைகட்கும் ஒரு விளக்குப் போல்பவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் , ` திருவலம் புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

படம் - துணி . பின் - பின்னப்பட்டது ; ஆக்கப் பட்டது . இனி , ` படம் ` என்றது , ஆகுபெயரால் , நூற்கயிற்றைக் குறித்தது என்றலுமாம் . விடக்கு - ஊன் . ` விடக்கினை ஒழித்தவர் ` என்றது , ` ஊன் உண்போராகிய புத்தர் போலாதவர் ` என்பது குறித்து நின்றது . ` விடக்கினை ஒழித்தவர் ` என்றது ஆகுபெயராய் அவரது இயல்பை உணர்த்தி நின்றமையின் , இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றாது ( தொல் . எழுத்து 157.) வல்லெழுத்து மிக வேண்டுமிடத்து இயல்பா யிற்று . பொய்யைப் பொய்யென்று உணர்தல்தானே , மெய்யை மெய் யென்று உணர்தலாகிய பயனை எய்துவிக்குமாதலின் , அவர்களையும் வேறோதினார் . ` தண்டி ` என்னும் பெயர்க் காரணம் உணர்த்துவார் , ` தண்டுடைத் தண்டி ` என்று அருளினார் . ` அவன் இனம் ` என்றது , சிவ கணங்களை , ` அர ` என்றது ஒலிக்குறிப்புச் சொல் . அடியவர்களும் , சிவ கணத்தவர்களும் ` அரகர ` என்று சொல்லித் துதிக்க , இறைவன் எழுந்தருளியிருக்கின்றான் என்றபடி . ` தண்டிகுண் டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன் பண்டை யுலகம் படைத்தான் றானும் பாரை அளந்தான்பல் லாண்டி சைப்பத் திண்டி வயிற்றுச் சிறுகட் பூதம் சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான் ` என்ற திருத்தாண்டகத்தைக் காண்க . ( தி .6 ப .93 பா .7) ` சுடர் ` என்றதன்பின் , ` இருக்கும் ` என்பது வருவிக்க . இத்திருப்பாடல் தண்டியடிகள் நாயனாரது வரலாற்றைக் குறிப்பதாக வைத்து உரைப் பாரும் உளர் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்த மிடம்வலம் புரத்தினை
அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே

பொழிப்புரை :

கரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுதலுடைய உயர் குடிப் பிறப்பினரது இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய , அரிய தமிழ்ப் பாடலில் வல்ல , வன்றொண்டனாகிய நம்பியாரூரனது சொல்லால் , பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடிநின்று துதித்தல் , பெருமையைத் தருவதாம் .

குறிப்புரை :

`கருங்கடல் வரும்` என மாற்றியுரைக்க. `இருங்குலம்` என்றது, பெருங்குடி வணிகரை. குலம் - கூட்டம். தவர் - தவத்தை யுடையவர். பெருமையைத் தருவதனை, `பெருமை` என்று அருளி னார். `பெருங்குலத்தவர் கொடு` என்பது பாடமாயின், `குலத்தவர்` என்பதனை ஒரு சொல்லாக வைத்து, `உயர்குலத்தவர் இவற்றைக் கொண்டு துதித்தல், அவர்கட்குப் பெருமை தருவதாகும்` என உரைத்து, `அங்ஙனங் கொள்ளாதொழியின், அக்குலப் பிறப்பாற் பயனில்லை` என்பது அதனாற்போந்த பொருளாக உரைக்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

கரையுங் கடலும் மலையுங்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க் கெல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , நிலம் , கடல் , மலை முதலாய எவ் விடத்திலும் , காலை , மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்தி வருபவனும் , ஒப்பற்றவனும் , உருத்திர லோகத்தை உடைய வனும் , மலையின் இளமையான மகளுக்குக் கணவனும் , தேவர் , அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் , இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` கரை ` என்றது , ` கடலால் சூழப்பட்டுள்ளது ` என நிலத் திற்குப் பெயராயிற்று . ` எல்லாம் ` என்றதனை இரட்டுற மொழிந்து , ` மலையும் ` என்றதன் பின்னருங்கூட்டுக . ` எம் உரை ` என்பது , ஆற்றலாற்கொள்ளக் கிடந்தது . ` உரை ` என்றது , பாட்டும் , கட்டுரையு மாய இருதிறத்துச் சொற்களையுமாம் . ஆகவே , ` யாம் அவனையே , பேசியும் , பாடியும் நிற்பதல்லது , பிறிதொன்றனை அங்ஙனம் செய் தறியேம் ` என்றவாறு , ` உருத்திரலோகம் ` என்றது , சிவலோகத்தை , மலையரையனை , ` மலை ` என்றே அஃறிணைபோல அருளுகின்றா ராகலின் , ` வரைதன் மடமகள் ` என்னாது , ` வரையின் மடமகள் ` என்று அருளினார் . ` இருப்பதும் ` என்ற உயர்வு சிறப்பும்மையால் , ` என்றும் இருப்பது ` என்பது பெறப்பட்டது . ` என்றும் ` என்றது , எல்லை யறியப் படாத பழைமையைக் குறித்தது . திருவாரூரின் பழைமையை ஆளுடைய அரசுகள் , ` ஒருவனாய் உலகேத்த ` என்னும் திருத் தாண்டகத் திருப்பதிகத்துள் பலபடியாக விதந்தோதியருளிய வாற்றான் அறிக . சுவாமிகள் , திருவெண்ணெய்நல்லூரில் முன்னரே ஆட்கொள்ளப் பெற்றாராயினும் , அதனால் , திருக்கயிலையில் தாம் வேண்டிக்கொண்ட வேண்டுகோட்கு இரங்கிய இரக்கம் அறியப்படுவ தன்றி , தன் சீரடியாருள் ஒருவராகத் தம்மையும் வைத்து விரும்பிக் கொள்ளும் விருப்பம் அறியப்படாமையானும் , அஃது அறியச் செய்தற்குரிய இடம் , திருக்கூட்டம் இருக்கும் திருவாரூரேயாகலானும் , ஆட்கொள்ளப்பெற்றிலார்போல , ` எம்மையும் ஆள்வரோ ` என்றும் , அவரது திருவுள்ளத்தை அணுகியறிதல் , புத்தடியேனாகிய எனக்கு இயல்வதன்றாகலின் , பழவடியீராகிய நீவிர் அது செய்தருளல் வேண்டும் என வேண்டுவார் , ` கேளீர் ` என்றும் அருளிச்செய்தார் . ` ஆட்கொள்ளப் பெறுந் தகுதியுடையேன் ` என்பதனை , ` கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் - உரையில் விரவி வருவான் ` என்றதனால் விளக்கினாராகலின் , ` எம்மை ` எனப் பன்மையாக அருளினார் . அங்ஙனமாகவே , ` எம்மையும் ` என்ற உம்மை , இறந்தது தழுவிய எச்சமாம் . ` அவர் ` என்றதும் , ` ஆள்வரோ ` என்றதும் ஒருமை பன்மை மயக்கம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

தனியன்என் றெள்கி யறியேன்
தன்னைப் பெரிதும் உகப்பன்
முனிபவர் தம்மை முனிவன்
முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக்
காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , இனிய பொருள்கள் எல்லாவற்றினும் இனியவனாகிய நம் பெருமானை , யான் , ` தாயும் , தந்தையும் , பிற சுற்றத்தவரும் இல்லாத தனியன் ` என்று இகழ்ந்தறியேன் ; அதற்கு மாறாக அவனையே பெரிதும் விரும்புவேன் ; அவனை வெறுப்பவரை வெறுப்பேன் ; மனத்தோடன்றி முகத்தான் மட்டும் இனிய பல சொற் களைச் சொல்லேன் ; அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் , கனிகள் பலவற்றையுடைய சோலையின்கண் காயையுடைய குலை களை ஈன்ற கமுக மரங்களையுடைய திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` தம்மை ` என்பது பாடம் அன்று . ` முகத்தானே ` என உருபும் , பிரிநிலை ஏகாரமும் விரிக்க . ` பேசி மொழியேன் ` என்றன , ஒரு பொருட் சொற்கள் . ` பேசி யொழியேன் ` என்பதே பாடம் போலும் ! எள்குதல் முதலியவற்றிற்குச் செயப்படு பொருளாகிய ` அவனை ` என்பதை முதற்கண் வருவித்து , செய்யுளாகலின் , சுட்டுப்பெயர் முன் வந்தவாறாகக் கொள்க . ` இனியன் இருப்பதும் ` என்றதனை , ` கனிகள் ` என்றதற்கு முன்னே கூட்டியுரைக்க . இது முதலாக வரும் திருப்பாடல்கள் , முதற்கண் தம் நிலையை மொழிந்து , பின் , ` இப் பெற்றியேமாகிய எம்மை ஆள்வாரோ ` என வினவியவாறாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்
தொடர்ந்தவர்க் குந்துணை யல்லேன்
கல்லில் வலிய மனத்தேன்
கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான்
அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் யாதேனும் ஒன்று சொல்வதா யின் , எனது பெருமையை யன்றி வேறொன்றைச் சொல்லேன் . அயலவர்க்கேயன்றி , உறவினர்க்கும் உதவுவேனல்லேன் ; அத் துணைக் கல்லினும் வலிய மனத்தை யுடையேன் . கல்வியை நிரம்பக் கற்ற பெரிய புலமை வாழ்க்கை உடையவர்களது துன்பத்தைப் பெரிதும் நீக்குகின்றவனும் , அரிய வேதங்களும் , ஆறு அங்கங்களும் சொல்லும் முடிந்த பொருளானவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

குலாவுதல் , விளங்குதலாதலின் , குலா , புகழாயிற்று . அநுபவத்தானே , துன்பம் பற்றறக் கழியுமாகலின் , கற்றவர்களுக்குத் ` துன்பத்தைப் பெரிதும் நீக்குவான் ` என்று அருளினார் . ` எல்லை ` என்றதில் ஐகாரத்தைச் சாரியை யாக்கி , ` எல் - ஒளி ` என்பாரும் உளர் . மேல் இரண்டு திருப்பாடல்களில் தமது தகுதியைப் புலப்படுத்து வேண்டினவர் , இத் திருப்பாடலுள் தகுதியின்மையைப் புலப்படுத்து வேண்டினார் ; ஆதலின் , ` எம்மையும் ` என்ற உம்மை இங்கு இழிவு சிறப்பாம் . ஆகவே , பன்மையும் இழிபுணர்த்திற்றாம் . இவ்வாறே இவ்வும்மை , எச்சமாயும் , இழிவு சிறப்பாயும் வருதலை அவ்வவ் விடத்து ஏற்ற பெற்றியாற்கொள்க . இங்கு , ` எம்மை ` என்றது , ஒருமை பன்மை மயக்கம் . தகுதியுடைமை கூறி , அதுபற்றி அருளல் வேண்டும் என வேண்டுதலும் , தகுதி இன்மைகூறி , அவ்வாறாயினும் நின் கருணையால் எமக்கு இரங்கியருளல் வேண்டும் என்று வேண்டுதலும் ஆகிய இரண்டும் , இறைவனிடத்தில் அடியார் செய்வனவே யாகலின் , அவ்விருவகையும் இத்திருப்பதிகத்துள் விரவி வருவன என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நெறியும் அறிவுஞ் செறிவும்
நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையுந் தறியும் உகப்பன்
வேண்டிற்றுச் செய்து திரிவேன்
பிறையும் அரவும் புனலும்
பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , ஒழுகும் நெறியிலும் , பொருள் களை அறிகின்ற அறிவிலும் , பிறரோடு இணங்குகின்ற இணக்கத் திலும் , சொல்லுகின்ற நீதியிலும் ; மிக்கபொல்லாங்குடையேன் ; பிறரை வருத்துதலையும் , பிரித்தலையும் விரும்புவேன் ; மற்றும் மனம் வேண்டியதனைச் செய்து திரிவேன் ; பிறையையும் , பாம்பையும் , நீரையும் தனது விளக்கமான சிவந்த சடைமேல் வைத்துள்ள இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

நெறி முதலிய நான்கிலும் ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தனுருபு விரிக்க . தறி - தறித்தல் ; முதனிலைத் தொழிற்பெயர் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

நீதியில் ஒன்றும் வழுவேன்
நிர்க்கண் டகஞ்செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன்
வெகுண்டவர்க் குந்துணை யாகேன்
சோதியிற் சோதிஎம் மானை
சுண்ணவெண் ணீறணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , நீதியினின்றும் சிறிதும் வழு வேன் ; அவ்வாறு வழுவுதலை முற்றிலும் களைந்து வாழ்வேன் ; அந்தணர்களை வெறுக்கமாட்டேன் ; வெறுக்கின்றவர்களுக்கும் துணை செய்பவனாகமாட்டேன் . ஒளிக்குள் ஒளியாய் உள்ளவனும் , எங்கட்கு யானை போல்பவனும் , பொடியாகிய வெள்ளிய நீற்றை அணிந்த முதல்வனும் ஆகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

மேல் , ` நீதியும் நான்மிகப் பொல்லேன் ` என்று அருளிச் செய்து , இங்கு , ` நீதியில் ஒன்றும் வழுவேன் ` என்று அருளி யது , ` ஆண்டு கொள்ளப்படாது ஒழிவேன்கொல் ` என ஆற்றாமை யானும் , ` ஆண்டுகொள்ளப்படுதல் கூடும் ` என ஆற்றுதலானுமாம் . இவ்வாறு முரண வருவன பிறவற்றிற்கும் ஈது ஒக்கும் . கண்டகம் - களைதல் . ` நிர் ` என்பது , துணிவுப் பொருண்மை தரும் வடமொழி இடைச்சொல் . ` வேதியர்தம்மை வெகுளேன் ` என்றது , ` புறச்சமயங் களைச் சாரேன் ` என்றபடி . எனவே , வேதநெறியில் உள்ளாருள் தலையாயவரை எடுத் தோதிப் பிறரையும் தழுவிக்கொண்டவாறாம் . ஒளி , உயிரின் அறிவு . அவ்வறிவுக்கு அறிவாய் நிற்றலின் , ` சோதியிற் சோதி ` என்று அருளினார் . ` எம்மானை ` என்றதன்பின் , சகரவொற்று மிகுத் தோதுதல் , பாடம் ஆகாமை யறிக . இறைவனை , ` அடியவர்கட்கு யானை ` என்றல் , அவர்களை எடுத்துச் சுமத்தல்பற்றி . கிடைக்கத் தகுமேநற் கேண்மையாற் கல்லால் எடுத்துச் சுமப்பானை இன்று - திருவருட்பயன் -65 என்பது மெய்ந்நூல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

அருத்தம் பெரிதும் உகப்பன்
அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
உற்றவர்க் குந்துணை யல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்
புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , பொருளையே பெரிதும் விரும்புவேன் ; அதன் பொருட்டு எங்கும் திரிதலையுடையேன் ; துன்புற்றவர் ஒருவர்க்கேனும் உதவியுடையேனல்லேன் ; உறவாயி னார்க்கும் துணைவனல்லேன் ; இன்ன பலவாற்றால் , பொருந்துவதாய பண்பு எனிலோ , ஒன்றேனும் இல்லாதேனாயினேன் . புற்றைப் படைத்து , அதனை இடமாகக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` அலவு ` என்பது அலைதலாகலின் , ` அலவு அலை ` என்றது , ` அலைதலைச் செய்தல் ` என்றதாம் . ` அலந்தார்கள் ` என்றது , விகுதிமேல் விகுதி பெற்ற , உயர்வுப் பன்மைச் சொல் . ` ஒருத்தர்க்கும் ` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . இயல்பாய் இருந்த புற்றினை , எடுத்ததாக , பாற்படுத்தருளிச் செய்தார் . ` எடுத்திட்டு ` என்றதில் , இடு , துணைவினை . ` இட்டு ` என்பது ஓர் அசைநிலை என்பாரும் உளர் . திருவாரூர்த் திருமூலட்டானர் , புற்றிடங் கொண்டு இருத்தலைக் காண்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

சந்தம் பலஅறுக் கில்லேன்
சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
முந்திப் பொருவிடை யேறி
மூவுல குந்திரி வானே
கந்தங் கமழ்கொன்றை மாலைக்
கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , வண்ணங்கள் பலவற்றை அமைத்துப் பாடுதல் மாட்டேன் ; இறைவனை அடைந்த அடியாரது திருவடிகளை அடையமாட்டேன் ; மணங்கமழ்கின்ற கொன்றை மலரால் ஆகிய மாலையையும் , கண்ணியையும் அணிந்தவனும் , தேவர்களால் துதிக்கப்படுபவனுமாகிய எம் தந்தை , போர் செய்கின்ற விடையை ஏறி மூவுலகிலும் முற்பட்டுத் திரிபவனேயாயினும் , அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது , திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` திரிவானே ` என்றதன்பின் , ` ஆயினும் ` என்பது வருவிக்க . ` விண்ணவர் ஏத்தும் ` என்றதற்கு , கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

நெண்டிக்கொண் டேயுங்க லாய்ப்பேன்
நிச்சய மேஇது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப்பொரு ளன்றி யுணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப்
பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , மெய்ப்பொருளையன்றிப் பொய்ப்பொருளைப் பொருளாக நினையேன் ; அதனால் , அம்மெய்ப் பொருளை உணரமாட்டாத முருடர்க்கு முருடான சொற்களை யன்றிச் சொல்லமாட்டேன் ; வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன் ; இஃது எனது துணிபும் , தளர்வில்லாத குணமும் ஆகும் . முன்பு , இலங்கையர் தலைவனாகிய இராவணனைப் பருத்த கயிலாய மலையின்கீழ் இட்டு நெரித்த கடவுள் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

நெண்டுதல் - கிளர்தல் . ` நெண்டிக்கொண்டு ` என்றது ஒருசொல்நீர்மைத்து . ` கணமேயுங் காத்தலரிது ` ` தானேயும் சாலுங் கரி ` ( குறள் -29-1060) என்றாற்போல , ` நெண்டிக்கொண்டேயும் ` என்றதில் ஏகார இடைச்சொல்லும் , உம்மை இடைச்சொல்லும் ஒருங்கு வந்தன . ` பிறிதவண் நிலையலும் ` என்பது இலக்கணமாதலின் ( தொல் - சொல் 251) ஏகாரம் தேற்றமும் , உம்மை சிறப்புமாம் . கலாய்த்தல் , ஈண்டு , உண்மைபற்றி வாதிடுதல் . ` அங்க லாய்த்தல் ` என்ற இழிவழக்கும் , ` அங்குக் கலாய்த்தல் ` என்பதன் சிதைவே யாகலின் , ` கிலாய்ப்பன் ` எனப் பாடம் ஓதி , ` உங்கி லாய்ப்பன் ` என்றொரு சொல்லைக் கொள்ளுதல் சிறவாமை யறிக . இங்கு சுவாமிகள் , தம் தகுதியுடைமையே அருளினார் என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

நமர்பிறர் என்ப தறியேன்
நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பேன்
தக்கவா றொன்றுமி லாதேன்
குமரன் திருமால் பிரமன்
கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , இவர் நம்மவர் என்பதும் , அயல வர் என்பதும் அறியமாட்டேன் ; நான் உண்மை என்று கண்டதையே கண்டு பிறர் சொல்வனவற்றை இகழ்ந்து நிற்பேன் ; ஆரவாரத்தைப் பெரிதும் விரும்புவேன் ; தக்க நெறி ஒன்றேனும் இல்லாதேன் . முருகனும் , திருமாலும் , பிரமனும் ஒருங்கு கூடிய தேவர் பலரும் வணங்கும் தேவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` நமர் ` என்றது , உயிர்க்கு உறுதியாவாரையும் , ` பிறர் ` என்றது , அதற்குத் தடையாய் நிற்பாரையும் . எனவே , அவர் உயர்ந் தோரும் , பொது மக்களும் என்றதாயிற்று . அறியாமை - பகுத் துணர்ந்து , உயர்ந்தோரைச் சேராமை . ` நான் கண்டதே கண்டு வாழ் வேன் ` என்றது . காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு . - குறள் -849 என்றதனை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

ஆசை பலஅறுக் கில்லேன்
ஆரையும் அன்றி யுரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , எனக்கு உள்ள அவாவோ பல ; அவற்றுள் ஒன்றையும் நீக்கமாட்டேன் ; அவ்வவாவினால் யாவ ரிடத்தும் வெகுளிதோன்றுதலின் , எவரிடத்தும் பகைத்தே பேசுவேன் ; ஒன்று சொல்லின் , பொய்யல்லது சொல்லேன் ; எனினும் புகழை மிக விரும்புவேன் ; இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன் . ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` ஆசை பல ` என்றது ஒரு தொடர் . ` அவற்றை அறுக் கில்லேன் ` என வேறெடுத்து உரைக்க . ` செயலே யன்றி மனந்தன் னாலும் ` என்னும் எச்சவும்மை தொகுத்தலாயிற்று . ` பொருளில் புகழ் ` என்பார் , ` ஓ? u2970?` என்று அருளினார் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான்
திருமரு வுந்திரள் தோளன்
மந்த முழவம் இயம்பும்
வளவயல் நாவல்ஆ ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார்
தாம்புகழ் எய்துவர் தாமே

பொழிப்புரை :

வெற்றித் திருப் பொருந்திய திரண்ட தோள்களை யுடையவனும் , மெல்லென ஒலிக்கும் மத்தளம் முழங்குவதும் , வளவிய வயல்களையுடையதும் ஆகிய திருநாவலூரில் தோன்றிய வனும் ஆகிய நம்பியாரூரன் ` எம் தந்தையாகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கும் இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ` என்று அடியார்களோடு ஆராயும் திறம் வல்லனாய்ப் பாடிய இந்த இசைப் பாடல்களை , அவ்விசையொடும் பாட வல்லவர் புகழ் பெறுவர் .

குறிப்புரை :

` அடியார்களோடு ` என்பது , ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` வல்லானாய் ` என எச்சப்படுத்து , ` பாடிய ` என்பது வருவித்து முடிக்க . ` திருமருவும் ` என்றது தொடுத்து , ` ஆரூரன் ` என்றது காறும் உள்ளவற்றை , முதற்கண் வைத்துரைக்க . அரசத் திருவும் உடைமையின் , ` திருமருவும் திரள் தோளன் ` என்று அருளி னார் . ` சந்தம் ` என்றது ஆகுபெயர் . புகழ் , ஈண்டு அடியவர் போற்றும் புகழாதலின் , ` அதனை எய்துவர் ` எனவே , இறைவனுக்கு உரிய வராதல் தானே பெறப்பட்டது .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை

பொழிப்புரை :

மின்னலை உண்டாக்குகின்ற கரிய மேகங்கள் மழையைப் பொழிந்தபின் , அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற , அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது , அகன்ற கரையின்கண் பலவிடத்தும் எழுந்தருளியிருப்பவரும் , திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் , வீற்றிருப்பவராகிய தலைவரும் , தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும் , என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது !

குறிப்புரை :

` பொழிந்தபின் ` என்பது , ` பொழிந்து ` எனத் திரிந்து நின்றது . ` அருவி ` என்றவிடத்து , ஆக்கம் வருவித்து , அருவியாய் வெடிபட இழிந்து என மாற்றியுரைக்க . ` அருவியாய் இழிந்து ` என்ற தனால் , ` மேகங்கள் பொழிந்தது மலையின்கண் ` என்பது பெற்றாம் . ` எற்றுவிக்கும் ` என்பது , ` எற்றும் ` எனத் தொகுத்தல் பெற்றது . ` அறிவார் ` என்றது , அதன் காரியம் தோன்ற நின்றது . துருத்தி , ஆற்றிடைக்குறையாகலின் , இத் திருப்பதிக முழுதும் காவிரி யாற்றைப் பெரிதும் அணிந்தோதியருளினார் என்க . ` எவன் ` என்னும் வினாப் பெயரது மரூஉ வாகிய , ` என்னை ` என்பது இன்மை குறித்தது . ` கற்ற தனாலாய பயன் என் ` ( குறள் -2) என்பதிற்போல , ` பெருமான் , இடர் கெடுத்தான் ` என்றன பன்மை யொருமை மயக்கங்கள் . இவை இவ்வாறு பின்னும் வருதல் அறிக . இத் திருப்பதிகத்தில் உள்ள திருப் பாடல்கள் பலவும் , இரண்டனுருபால் முடிந்தமையின் , இவை அகப் பாட்டு வண்ணமாம் ; எவ்வாறெனின் , ` அகப்பாட்டு வண்ணம் , முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே ` என்பது இலக்கணமாதலின் ( தொல் . பொருள் -525).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை யுள்ளன பற்றறுத் தானை

பொழிப்புரை :

கூடத் தக்கனவாய் உள்ள யாறுகளோடு கூடியும் , அவை வேறு காணப்படாதவாறு கோத்தும் , கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும் , மலைநெற் கதிர்களை யும் சிதறியும் , இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முரித்தும் , கரைகளை மலை தகர்ந்தாற் போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தி யிலும் , திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும் , எனது பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமானை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , பாடும் வகையை அறிகின்றிலேன் !

குறிப்புரை :

கூடுதல் , அளவாய் நிற்றலையும் , கோத்தல் , மிகப் பெருகுதலையும் குறித்தன . வினையிடத்து வரும் எண்ணும்மை களைப் பின்னரும் விரிக்க . ` புனலேனல் ` என்பது பாடம் அன்று . குலை - கரை . மறித்தல் - தகர்தல் , துருத்தியாதலின் , ` கரை ` என்னாது , ` காவிரி ` என்றலும் பொருந்துவதேயாம் . பாடுமாறு அறியாமை , பாட்டினுள் அடங்காமை பற்றி . இதனை ` விரிப்பின் அகலும் தொகுப் பின் எஞ்சும் ` என்றாற்போலக் கொள்க . ( புறம் -53)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்
புல்கியுந் தாழ்ந்தும்போந் துதவஞ் செய்யும்
போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்
தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை

பொழிப்புரை :

கொல்லுகின்ற பெரிய யானையின் தந்தங்களை யும் , மணம் பொருந்திய கொழுமையான கனிகளாகிய வளவிய பயனையும் வாரிக்கொண்டு , அவற்றின் தொகுதியைப் பொருந்தி வந்து வலம் செய்தும் , வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாளரும் , வீட்டுநெறியாளரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைத் தொடர்ந்து வருத்திய மிக்க பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலுங் கடை யேனும் ஆகிய யான் புகழுமாற்றை அறிகின்றிலேன் !

குறிப்புரை :

வம்பு - நறுமணம் ; பழுத்த பழம் , நறுமணம் உடைய தாதல் அறிக . புல்குதல் - பொருந்துதல் ; இங்கு , சூழ்தலைக் குறித்தது . புகழுமாறு அறியாமைக்கும் , மேல்பாடுமாறு அறியாமைக்கு உரைத்தவாறு உரைக்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
அருவினை யுள்ளன ஆசறுத் தானை

பொழிப்புரை :

அருவிகள் , பொரிந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள , பின்பு , கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும் , வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு , தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன் !

குறிப்புரை :

பொரியும் , கரிக்கும் என்பன - எதுகை நோக்கித் திரிந்தன . ` அருவிகள் கவர ` என்றதன்பின் , ` அதன்பின் ` என்பது வரு விக்க . ` அருவிகள் கவர ` என வேறுபோல அருளினாராயினும் , ` அருவிகளாய்க் கவர்ந்து ` என்பதே திருவுள்ளம் என்க . ` கருதி ` என்றது பான்மை வழக்கு . கை - பக்கம் . அறியாமை - அவனது பெருமையாலும் , தமது சிறுமையாலுமாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
உற்றநோய் இற்றையே உறவொழித் தானை

பொழிப்புரை :

பொழியப்பட்டுப் பாய்கின்ற மும்மதங்களை யுடைய யானையது தந்தங்களையும் , பொன்னைப்போல மலர்கின்ற , வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் தள்ளிக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி , எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு , இவ்விடத்தில் சுழித்துக்கொண்டு பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைப் பற்றிய நோயை இன்றே முற்றும் நீக்கியவரும் ஆகிய எம் பெரு மானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன் .

குறிப்புரை :

` இழிந்திழிந்து ` என்ற அடுக்கு , பன்மை குறித்து நின்றது . ` வந்து ஆட ` என மாற்றுக . பலபடியாலும் இடைவிடாது போற்றுதலை , ` பிதற்றுதல் ` என்று அருளினார் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை

பொழிப்புரை :

புகழப்படுகின்ற சிறந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் , பொன்னும் மணியுமாகிய இவைகளையும் வாரிக்கொண்டும் , நல்ல மலர்களைத் தள்ளிக்கொண்டும் , தன்னால் அகழப்படுகின்ற , பெரிய , அரிய கரைகள் செல்வம்படுமாறு பெருகி , முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி , கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றம் உடை யேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , இகழுமாற்றை நினையமாட்டேன் !

குறிப்புரை :

` வரன்றியும் ` என்ற உம்மையை ` பொன்மணி ` என்ற உம்மைத் தொகையின் பின்னர் இயைக்க . ` கரை வளம்பட ` என , இடத்து நிகழ்பொருளின் தொழில் , இடத்தின்மேல் ஏற்றப்பட்டது . மையைக் கழுவுதலும் , பாவத்தைத் தீர்ப்பதன் குறிப்பேயாகும் . ஆணவ மலத்திற்கும் , ` அஞ்சனம் ` என்னும் பெயர் உண்மையை நினைக்க . ` ஒலித்தல் ` என்னும் பொருளைத் தருவதாகிய ` அலம்புதல் ` என்பது பின்னர் , ஒலியுண்டாகக் கழுவுதலையும் குறிப்பதாயிற்று . பெருநோய் உடையார் , உலகத்தவரால் இழிக்கப்படுதல் உணர்க . அறிதல் , இங்கு நினைதலின் மேற்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும்
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
உலகறி பழவினை அறவொழித் தானை

பொழிப்புரை :

அளவில்லாத மாம்பழங்களையும் , வாழைப் பழங்களையும் வீழ்த்தியும் , கிளைகளோடு சாய்த்தும் , மராமரத்தை முரித்தும் , கரைகள் அரிக்கப்படுகின்ற கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு , மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து , ஒளி விளங்குகின்ற முத்துக்கள் இருபக்கங்களும் தெறிக்க , விரைய ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத் துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலை வரும் , எனது , உலகறிந்த பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் துதிக்குமாற்றை அறிகின்றிலேன் !

குறிப்புரை :

வருடுதல் - தடவுதல் ; அஃது இங்குப் பறித்தலைக் குறித்தது . கரைதலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது . ` காம்பு ` என்பது கடைக் குறையாய் நின்றது . ` போய் ` என்றது ` போக ` என்பதன் திரிபு . உலகறி பழவினை , கயிலையில் மாதர்மேல் மனம் போக்கியது . அது , திருவெண்ணெய்நல்லூரில் அனைவரும் அறிய வெளிப்படுத்தப்பட்டதாகலின் , உலகறிந்ததாயிற்று . உரைக்குமாறு என்பது , ` உரையுமாறு ` எனத் தொகுத்தலாயிற்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்
புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை

பொழிப்புரை :

அணியவான ஊர்களில் உள்ளவர்களும் , பெரிதாகிய நாடு முழுதும் உள்ளவர்களும் , மனம் விரும்பி நினைக்கு மாறு , பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து , அழகிய கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் திரிய , நீர் நிறைந்த , பெரிய , கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக்கொண்டு கவரி மானினது சிறந்த மயிரைச் சுமந்து , ஒளியையுடைய பளிங்குக் கற்களை உடைத்து , நானிலங்களில் உள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற , பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனக்கு வரும் பிறப்பில் வரக் கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே களைந் தொழித்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் , துய்க்குமாற்றை அறிகின்றிலேன் !

குறிப்புரை :

` ஊரும் , தேசமே ` என்ற உம்மையும் , ஏகாரமும் எண்ணிடைச் சொற்கள் . ` ஊர் , தேசம் ` என்றன , இடத்து நிகழ் பொருளை இடமாக் கூறும் பான்மை வழக்கு . ` ஊர் வந்தது ; தேசம் உய்ந்தது ` என்றல்போல அஃறிணையாக முடிதலின் , இன்னோரன் னவை ஆகுபெயராகா . யாண்டும் உள்ள மக்கள் விரும்பி நினைத்தல் , வளமும் , கடவுட்டன்மையும் பற்றி என்க . ` உள்ளி ` என்றதனை , ` உள்ள ` எனத் திரிக்க . ` நீர் ` என்னும் பொருளைத் தருவதாகிய ` கார் ` என்னும் பெயரடியாக , காரும் என்னும் பெயரெச்சம் வந்தது . தேர்தல் - ஆராய்தல் ; அது கண்டு செல்லுதலைக் குறித்தது . ` வரும்பிறப்பில் வரும் துன்பம் ` என்றது , சூள் பிழைத்த பாவம் தருவதனை . அதனை , இப்பிறப்பிற்றானே கண்ணொளியை இழப்பித்தும் , உடம்பிற் பிணியைக் கூட்டியும் அறுத்தொழித்தமையின் , ` அம்மைநோய் இம்மையே ஆசறுத்தானை ` என்று அருளிச்செய்தார் . இதனால் , இறைவன் தம்மை ஒறுத்த வழியும் , பெரியோர் அதனை வன்கண்மை என்று வெறாது , கருணை என்றே மகிழ்தலை அறிக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
இலங்குமா முத்தினோ டினமணி இடறி
இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
மேலைநோய் இம்மையே வீடுவித் தானை

பொழிப்புரை :

வயல்கள் வளம்படவும் , அதனால் எல்லாக் குற்றங் களும் நீங்கவும் , நீர்பெருகி பொற்கட்டிகளைச் சுமந்துகொண்டு , ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும் , மற்றும் பலவகை மணிகளை யும் எறிந்து , இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முரித்து ஈர்த்துக் கரையைத் தாக்கி , எவ்விடத்தில் உள்ளவர்களும் ஆரவாரம் செய்து ஒலிக்க , கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனக்கு வரும்பிறப்பில் வரக்கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே நீக்கியவரும் ஆகிய எம்பெரு மானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன் !

குறிப்புரை :

` புலங்களை ` என்ற ஐகாரம் , சாரியை . பொன் , ஆகுபெயர் . யாற்றிடைப் புனல் பெருகிவருங்கால் , பூசல் மிகுதலை , ` விருப்பொன்று பட்டவர் உளம்நிறை உடைத்தென வரைச்சிறை உடைத்ததை வையை : வையைத் திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை : அறைகெனும் உரைச்சிறைப் பறைஎழ ஊரொலித் தன்று ` - பரிபாடல் -6 ` மாதர் மடநல்லார் மணலின் எழுதிய பாவை சிதைத்த தெனஅழ ஒருசார் ; அகவயல் இளநெல் அரிகாற் சூடு தொகுபுனல் பரந்தெனத் துடிபட ஒருசார் , ஓதம் சுற்றிய தூரென ஒருசார் , கார்தூம் பற்றது வானென ஒருசார் , பாடுவார் பாக்கங்கொண்டென , ஆடுவார் சேரிஅடைந்தெனக் , கழனிவந்து கால்கோத்தெனப் , பழனவாளை பாளைஉண்டென , வித்திடுபுலம் மேடாயிற்றென ` - பரிபாடல் -7 என்றாற்போல வகுத்துப் பாடுமாற்றான் அறிக . கலங்குதல் , விரை வாலும் , பலநிலங்களது சார்பாலும் என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி யன்றிமற் றறியான்
அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே

பொழிப்புரை :

மங்கை ஒருத்தியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தும் , இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற , பகைத்தலை யுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடைய வனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாத வனாகியும் , அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடிய வனாகிய நம்பியாரூரன் , கங்கை போலப் பொருந்திய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை , தங்கள் கையால் தொழுது , தங்கள் நாவிற் கொள்பவர்கள் , தவநெறிக் கண் சென்று , பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம் .

குறிப்புரை :

` கூறுகந்து ` ` ஏறி ` என்ற எச்சங்கள் எண்ணின்கண் வந்தன . ` மாறலார் ` என்றது , ` மாறல் ` என்னும் தொழிற்பெயரடியாக வந்த பெயர் . ` மாற்றலார் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` அங்கை யான் ` என்று அருளினார் , மேருவை வில்லாக ஏந்திநின்றமைபற்றி . ` அறியான் , அடியவன் ` என்றவை முற்றெச்சங்கள் ; அவை , ` தொழுவன் ` என்ற , ஆக்கச்சொல் தொக்க வினைக்குறிப்புப் பெய ரொடு முடிந்தன . பாடலை நாவின் மேற் கொள்ளுங்கால் , கையால் தொழுது கோடல் வேண்டும் என்க . இதனால் , திருமொழிகளது பெருமை உணர்த்தியருளப்பட்டது . ` தவநெறி சென்று ஆள்பவர் ` என்றமையால் , அமருலகம் , சிவலோகமாயிற்று . ஏகாரம் , தேற்றம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மறைக ளாயின நான்கும்
மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத் திறையும்
தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும் , பல சமயங்களும் , அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும் , இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும் , வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே முதல்வன் ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` ஆயின ` என்றது , எழுவாய்ப்பொருள் தருவதோர் இடைச்சொல் . ` சொல்லும் பொருளுமாகிய இருகூற்றுலகம் ` என்பார் , அவற்றுள் சிறப்புடைய வேதத்தை வேறெடுத்தோதி , ஏனையவற்றை , ` மற்றுள பொருள்கள் ` எனப் பொதுவிற் சுட்டி விடுத்தார் . ` துறை ` என்றது , சமயத்தை . தோத்திரம் - புகழ் . ` தோத்திரத்தையுடைய இறை ` என்க . ` இறை ` என்பது அஃறிணை வாய்பாடாகலின் , அத்திணை இருபாற்கும் பொதுவாய் ஈண்டுப் பன்மைப் பொருள் தந்தது . ` தென்புலத்தார் தெய்வம் ` ( குறள் -43) என்றதில் , ` தெய்வம் ` என்றதுபோல , ` தொன்மை ` என்றது , தோற்றம் ஈறுகட்கு அப்பாற் பட்ட நிலையை . அஃது ஆகுபெயராய் , அந்நிலையையுடைய பொருளைக் குறித்தது . எல்லாவற்றினும் மேலாய நன்மையாகலின் , வீட்டினை ` நன்மை ` என்று அருளிச்செய்தார் . புனல் , காவிரியாற் றினது . இறைவன் - கடவுள் ; இங்கு , அருளுவாரது குறிப்பால் முழு முதற் கடவுள் என்னும் பொருளதாயிற்று . ` அடிசேர்ந்து பயன் பெறுதலேயன்றி ` எனப் பொருள்தந்து நிற்றலின் , ` எம்மையும் ` என்ற உம்மை , இறந்தது தழுவிய எச்சம் . ` ஆள் ` என்றது , முதனிலைத் தொழிற்பெயர் . ` மற்றுள பொருள்களும் எல்லாம் ` என்பதும் பாடம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

வங்கம் மேவிய வேலை
நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை
உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன்என் பார்கள்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

மரக்கலம் பொருந்திய கடலின்கண் நஞ்சு தோன்ற , தங்கள்மேல் வந்து தாக்காது தடுத்துக்கொள்ளுதற் பொருட்டுச் சூழ்ச்சிசெய்த தேவர்கள் ஒருங்கு கூடிச்சென்று ` இந் நஞ்சினை உண்டருளாய் ` என்று வேண்டிக்கொள்ள அவ்வேண்டுகோளை மறாது ஏற்று உண்டு , அதனால் , கறுத்த கண்டத்தை உடையவனாகியவனும் , வேதத்திற்கு உரிய துணை நூல்களைச் செய்தவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே எங்களுக்குத் தலைவன் ` என்று நாள்தோறும் அன்பு செய்கின்றவர் . எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

தாங்கள் இறவாமைப் பொருட்டு இறைவனுக்கு நஞ்சூட்டத் துணிந்தமைபற்றித் தேவரை , ` வஞ்சர்கள் ` என்றார் . ` அடராமைக்கு ` என , பொருட்டுப் பொருளதாகிய நான்காம் உருபு விரிக்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நீல வண்டறை கொன்றை
நேரிழை மங்கை ஓர்திங்கள்
சால வாள்அர வங்கள்
தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

நீல நிறத்தையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரும் , நுண்தொழில் அமைந்த அணிகளை அணிந்த மங்கை ஒருத்தியும் , பிறை ஒன்றும் , பல கொடிய பாம்புகளும் தங்கியிருக்கின்ற சிவந்த சடையையுடைய எம் தந்தையும் , ஆல் நிழலில் இருப்பவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள்தோறும் அவன் தம்மொடு பொருந்தும் செயலினைச் செய்ய வல்லவர் . எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` மங்கை ` என்றது கங்காதேவியை . ` ஆல நிழலுள் எழுந்தருளியிருக்கின்ற ` என்க . உள் , ஏழனுருபு . தம்மொடு பொருந்தும் செயலாவது , இடை விடாது நினைத்தல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

தந்தை தாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய் , ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும் , உண்மையான தவத்தைச் செய் வோர்க்கு உறவான பெருமானும் , அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய , அழகிய , குளிர்ந்த பூக்களையுடைய , நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே எம் தந்தை ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

உண்மைத் தவம் , சிவபிரானைப் பொதுநீக்கி வழி படுதல் . பந்தம் - தொடர்பு ; உறவு . ` தன்மை ` என்னும் பொருளதாகிய , ` பரிசு ` என்பது , இங்கு அன்பினைக் குறித்தது . ` அடிகள் ` என்பது , இங்கு , ` திரு ` என்னும் அடைபெற்று வந்தது .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

கணைசெந் தீஅர வம்நாண்
கல்வளை யுஞ்சிலை யாகத்
துணைசெ யும்மதில் மூன்றுஞ்
சுட்டவ னேயுல குய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

பொருந்திய உலகம் உய்தற்பொருட்டு , சிவந்த நெருப்பு அம்பாகியும் , பாம்பு நாணியாகியும் , மலை வளைகின்ற வில்லாகியும் நிற்க , ஒன்றற்கொன்று துணை செய்கின்ற மதில்கள் மூன்றையும் எரித்தவனாகிய , எங்கும் சென்று சேர்கின்ற அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள்தோறும் அவனது இரண்டு செவ்விய திருவடிக்கண் பணி கின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` துணைசெயும் ` என்றதற்கு , ` தமக்குத் தாமே நிகராகின்ற ` என்று உரைப்பினுமாம் . ` துணைசெய் மும்மதில் ` என்பது பாடம் அன்று . ஏய் உலகு - பொருந்திய உலகு ; என்றது , தேவருல கத்தை . இணை , இணைதல் என்னும் தன்மை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

விண்ணின் மாமதி சூடி
விலையிலி கலனணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை
பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

விண்ணில் உள்ள சிறந்த பிறையைக் கண்ணியாகச் சூடி , விலைப்படும் தன்மை இல்லாத அணிகலங்களை அணிகின்ற தூயவனும் , பண்ணினை ஒத்த சொல்லை உடைய மங்கையது பங்கை உடையவனும் , ஆனேற்றை விரும்பி ஏறுபவனும் , யாவர்க்கும் தலைவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல் வனை , நாள்தோறும் நினையுமாற்றினை வல்லவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையராவர் .

குறிப்புரை :

` விலையிலி கலன் ` என்றது , நகையை உள்ளுறுத் தருளியது . எனவே , ` என்பையும் , தலையையுமே அணிகலனாக அணிந்தவன் ` என்றவாறாயிற்று . இதற்குப் பிறவாறுரைப்பின் , ` மதிசூடி ` என்றதனோடு இயையாமை அறிக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

தார மாகிய பொன்னித்
தண்டுறை ஆடி விழுத்து
நீரில் நின்றடி போற்றி
நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்டஎம் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

சோழன் ஒருவன் , பல பண்டங்களும் உளவாதற்கு ஏதுவாகிய காவிரியின் குளிர்ந்த துறையில் மூழ்கித் தனது முத்து வடத்தை வீழ்த்தி , வீழ்த்திய வருத்தத்தால் கரைஏறாது நீரிற்றானே நின்று , தனது திருவடியைத் துதித்து , ` இறைவனே , எனது முத்து மாலையை ஏற்றுக்கொள் ` என்று வேண்ட , அங்ஙனமே அவ் வாரத்தைத் திருமஞ்சனக் குடத்துட் புகச்செய்து ஏற்றுக்கொண்ட , திரு வானைக்காவைத் தனதாக உடைய முதல்வனுக்கு நாள்தோறும் அன்பு உடையவராய் இருப்பவர் , நாள்தோறும் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

இத்திருப்பாடலிற் குறித்த வரலாற்றைச் சேக்கிழார் , வளவர் பெருமான் திருவாரம் சாத்திக்கொண்டு வரும்பொன்னிக் கிளரும் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற அளவில் திருமஞ் சனக்குடத்துள் அதுபுக் காட்ட அணிந்தருளித் தளரும் அவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார் . என இனிது விளங்க அருளிச் செய்தல் காண்க . ( தி .12 ஏ . கோ . பு .77) ` ஆதியை ` என்றதனை , ` ஆதிக்கு ` எனத் திரிக்க . ` ஈரம் உள்ளுவர் ` எனப் பாடம் ஓதி , ` ஈரத்தால் உள்ளுபவர் ` எனத் திரியாதே உரைத்தல் சிறக்கும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

உரவம் உள்ளதொர் உழையின்
உரிபுலி யதள்உடை யானை
விரைகொள் கொன்றையி னானை
விரிசடை மேற்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லியும் ஏத்து
வார்எம்மை ஆளுடை யாரே

பொழிப்புரை :

வலிமையுள்ள மானினது தோல் , புலியினது தோல் இவைகளை யுடையவனும் , நறுமணத்தைக் கொண்ட கொன்றைமலர் மாலையை அணிந்தவனும் , விரிந்த சடையின்மேல் பிறையை உடையவனும் , பாம்பை உடம்பிற் பல இடங்களில் கட்டியுள்ளவனும் ஆகிய , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள் தோறும் , இரவிலும் , பகலிலும் துதிப்பவர் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` உரம் ` என்பது , ` உரவம் ` என விரிக்கப்பட்டது . ஈண்டு , ` எம்மையும் ` என்னும் உம்மை தொகுத்தல் . இத்திருப்பாடலின் ஈற்றடிப் பாடம் , இவ்வாறாகாது , பெரிதும் பிழைபட்டமை காண்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வலங்கொள் வாரவர் தங்கள்
வல்வினை தீர்க்கு மருந்து
கலங்கக் காலனைக் காலாற்
காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

தன்னை வலம் செய்கின்றவர்களது வலிய வினையாகிய நோயைத் தீர்க்கின்ற மருந்தாய் உள்ளவனும் , கூற்று வனைக் காலாலும் , காமனைக் கண்ணாலும் அவர்கள் கலங்கி அழியு மாறு வெகுண்டவனும் ஆகிய , அசைகின்ற நீர் கரையை மோதுகின்ற திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , நாள்தோறும் அவனது விளங்குகின்ற , செவ்விய திருவடியில் பணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர் .

குறிப்புரை :

` அவர் ` என்றது , பகுதிப்பொருள் விகுதி . ` தங்கள் ` என்றது சாரியை . ` வல்வினை தீர்க்கும் மருந்து ` என்றது , ஏகதேச உரு வகம் . `` கண் ` என்றவிடத்து , மூன்றாவது விரிக்க . சிவத்தல் - வெகுளு தல் . ` காலனைக் காலாலும் , காமனைக் கண்ணாலும் கலங்கச் சிவப் பானை ` என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

ஆழி யாற்கருள் ஆனைக்
காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக
நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன்
வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று
எம்மையும் ஆளுடை யாரே

பொழிப்புரை :

சக்கரத்தை ஏந்தியவனாகிய திருமாலுக்கு அருள் புரிந்த , திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனது பொன் போலும் திருவடி நிழலையே நினைந்து வாழ வல்ல வன்றொண் டனாகிய நம்பியாரூரனது வளவிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர் , எழுவகைப்பட்ட அளவில்லாத பிறப்புக்களும் நீங்கப் பெற்று , மேலே சென்று , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடைய வராவர் .

குறிப்புரை :

திருக்கடைக்காப்பில், `இத்திருப்பதிகத்தை நன்கு பாட வல்லவர்கள் எம்மையும் ஆளுடையார்` என்று அருளினார். அதனைப் பாடுதலே இறைவற்குத் தொண்டாய் நிற்றலின், அதனை யுடையவர் சிவபெருமானுக்கு அடியராகும் நிலையுடையவராவர் என்பதுபற்றி, `ஏழு மாபிறப்பும்` என்னும் முற்றும்மை தொகுத்த லாயிற்று.

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 1

பொருவ னார்புரி நூலர்
புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
வருவதும் இல்லைநம் மடிகள்
திருவ னார்பணிந் தேத்துந்
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவனார் அடி யாரை
ஊழ்வினை நலியஒட் டாரே

பொழிப்புரை :

நம் இறைவர் , தீயவரோடு மாறுபடுபவர் ; முப்புரி நூலை அணிபவர் ; நெருங்கிய தனங்களையுடைய உமையோடு கூடியிருத்தலை உடையவர் ; தம்மை அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை ; திருமகளை உடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற , புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற வராகிய அவர் , தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாது ஒரு தலையாகக் காப்பர் .

குறிப்புரை :

` அவர்களை நினைவதும் இல்லை ` எனப் பொருள் தந்து நிற்றலின் , ` வருவதும் ` என்ற உம்மை , எதிரது தழுவிய எச்சம் . ` திருவன் ` என்பது , ` ஆர் ` என்னும் இடைச்சொற் பெற்று வந்தது . இனி , ` திருவன்னார் ` எனக்கொண்டு , ` திருமகள் போலும் மகளிர் பணிந் தேத்தும் ` என்றலுமாம் . ` உள வினை ` என்பதும் பாடம் . ஏகாரம் , தேற்றம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 2

தொறுவில் ஆன்இள ஏறு
துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்
காண்தகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு
பூசுதல் மன்னும்ஒன் றுடைத்தே

பொழிப்புரை :

பசுக் கூட்டத்துள் , இளைய ஆனேறு , கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி , வயல்களில் உள்ள வாளைமீன்கள் ஓடவும் , செவ்வரிகளையுடைய கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும் , பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திரு வாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல் , சிறந்ததொரு கருத்தை உடையது .

குறிப்புரை :

அக் கருத்தாவது , உலகிற்குப் பற்றுக்கோடு தாமே என்பது . இதனை , ` வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாய்இலர் ` ( தி .3 ப .54 பா .3) என்ற திருப்பாசுரத்திற்கு , ` வெந்த சாம்பல் விரைஎன் பதுதம தந்த மில்லொளி யல்லா வொளியெலாம் வந்து வெந்தற மற்றப் பொடியணி சந்த மாக்கொண்ட வண்ணமும் சாற்றினார் ` ` தமக்குத் தந்தையர் தாய்இலர் என்பதும் அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால் எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம் ` ( தி .12 திருஞா . புரா .828-29) எனச் சேக்கிழார் குறிப்பருளியவாற்றான் உணர்க . இக்குறிப்பினுள் , ` அல்லா ஒளி ` என்றது , மாயேயங்களை . திருப்பாசுரத்துள் , ` பூசி ` என வந்த வினையெச்சம் , ` பூசுதலால் ` என்பதன் திரிபாய் , ` தந்தை யாரொடு தாய் இலர் ` என்றதனை விளக்கும் ஏதுவாயிற்று , ` உழுவார் உலகத்தார்க் காணிஅஃ தாற்றா - தெழுவாரை யெல்லாம் பொறுத்து ` ( குறள் -1032 ) என்பதிற்போல . ஆகவே , ` அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால் ` ( தி .12 திருஞா . புரா .828) என்றது , அவ்வேதுவின் பொருளை விரித்தவாறாதல் அறிக . ` இடிகுரல் ` வினைத்தொகை . ` கறுவிலா மனத்தார்கள் ` என்றது , ` அருளுள்ளம் உடையவர்கள் ` எனப் பொருள் தந்தது , காணுதல் , தன் பின்விளைவையும் உடனுணர்த்தி நின்றது . ` மன் , உம் ` அசைநிலைகள் . ` கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண்டற்று ` என்ற திருக்குறளிலும் (1146) ` மன் , உம் ` என்னும் இரண்டும் இணைந்து அசைநிலையாயினவாறு அறிக .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 3

தூர்த்தர் மூவெயில் எய்து
சுடுநுனைப் பகழிய தொன்றால்
பார்த்த னார்திரள் தோள்மேற்
பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத்
திகழ்திரு வாஞ்சியத் தடிகள்
சாத்து மாமணிக் கச்சங்
கொருதலை பலதலை யுடைத்தே

பொழிப்புரை :

தீர்த்தமாகிய , சிறந்த , பூக்களையுடைய பொய்கைகளையுடைய , புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , நெறி பிறழ்ந்தவரது மூன்று மதில்களை , சுடுகின்ற முனையையுடைய ஓர் அம்பினால் அழித்து , ஒருவனாகிய அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி , தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தை உடைய கச்சு , ஒரு பக்கத்திலே பல தலைகளையுடையதாய் இருக்கின்றது ; இது வியப்பு !

குறிப்புரை :

புத்தன் போதனையால் சிவநெறியை இகழ்ந்தொதுக் கினராகலின் , திரிபுரத்தவரை , ` தூர்த்தர் ` என்று அருளினார் . ` மூன்று ஊர்களை அழித்தற்கு ஓர் அம்பையே விடுத்தவர் , ஒரு தனி மகனை வெல்வதற்குப் பல அம்புகளை விடுத்தமையும் , கச்சில் ஒரு பக்கத்தில் பல தலைகள் இருத்தலும் , மற்றொரு பக்கத்தில் ஒரு தலையேனும் இல்லாமையும் இவையெல்லாம் ஒன்றோடும் பொருந்தாதனவாய் உள்ளன என்றபடி . ` தலை ` இரண்டனுள் முன்னது பக்கத்தையும் பின்னது அழகு சிறக்கக் கைவன்மைபடச் செய்யும் கச்சிற்புனைவை யும் குறித்தன . அப்புனைவு இருபக்கமும் அமைந்து விளங்குவதே கச்சிற்குப் பொருந்துவதாம் . ஐந்தலை நாகமே இறைவர்க்குக் கச்சாக லின் , அஃது ஒரு பக்கம் பல தலைகளையும் , மற்றொரு பக்கம் தலை இன்மையையும் உடைத்தாயிற்று . ` ஒரு தலையிலே பல தலைகளை யுடையது ` என்பது நயம் . ` ஒருதலை , துணிவு ` என்பாரும் உளர் . ` எய்து , பாய்ச்சி ` என , எண்ணின்கண் வந்த வினையெச்சங்கள் . ` சாத்தும் ` என்றதனோடு முடிந்தன . ` பொய்கை திகழ் ` எனப் பாடம் ஓதுதலுமாம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 4

சள்ளை வெள்ளையங் குருகு
தானது வாமெனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி
மறுகிஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்
துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும்
விகிர்தம்ஒன் றொழிகிலர் தாமே

பொழிப்புரை :

` சள்ளை ` என்னும் மீன் , வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை , வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச் சுழன்று , பின் , வாளைமீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற , தெளி வாகிய நீரையுடைய பொய்கைத் துறைகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , வெள்ளிய , நுண்ணிய சாம்பலைப் பூசுகின்ற வேறுபாடொன்றனை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர் .

குறிப்புரை :

` தானதுவாம் ` என்றதில் தான் அசைநிலை . ` அது ` பகுதிப் பொருள் விகுதி .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 5

மைகொள் கண்டர்எண் தோளர்
மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது பரிசே

பொழிப்புரை :

கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மலைமகளோடு உடன்உறைகின்ற வாழ்க்கையையும் , பறிக்கப்பட்ட கூவிளை இலையால் ஆகிய மாலை விளங்குகின்ற சடைமுடியையும் உடைய அழகராகிய , நெய்தற் பூக்களையுடைய அழகிய கழனிகளில் , தாழம்பூக்கள் மணம் வீசுகின்ற , புகழையுடைய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்கு , இளைய வெண்பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிவதுதான் இயல்பு .

குறிப்புரை :

` வாழ்க்கைக் குழகர் , சடைமுடிக் குழகர் ` என இயையும் . ` கழனி கைதையைக் கமழும் வாஞ்சியம் ` என்றலுமாம் . பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிதல் , எல்லாவற்றையும் தம் வண்ணமாக்கி ஏற்றலைக் குறிப்பதாம் . ` பிறையும் , பாம்புமன்றி , வேறு தலைச்சூட்டு இல்லாதவர் ` என்பது நயம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 6

கரந்தை கூவிள மாலை
கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
திகழ்தரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
வல்வினை நலியஒட் டாரே

பொழிப்புரை :

தம் இயல்பு காரணமாக , கரந்தைப் பூவினாலும் , கூவிள இலையாலும் , மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு , மிக்க பூதகணங்கள் புடைசூழ வருபவரும் , நம் இறைவரும் ஆகிய , திருத்தமான மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற , புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் அமுதம் போல்பவர் , தம் அடியாரை , வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாது காப்பவரேயாவர் .

குறிப்புரை :

` மாலை ` என்றதனை , ஏனையவற்றிற்குங் கூட்டுக . ஏகாரம் , தேற்றம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 7

அருவி பாய்தரு கழனி
அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேர்ப்பக்
குருகினம் இரிதரு கிடங்கில்
பருவ ரால்குதி கொள்ளும்
பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
இருவ ரால்அறி யொண்ணா
இறைவன தறைகழல் சரணே

பொழிப்புரை :

மலர்ந்த குவளைப் பூப்போலும் கண்களையுடைய மகளிர் , நீர்த் திரள் பாய்கின்ற கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும் , கிளிகளையும் அங்கு நின்றும் நீங்கிச் சென்று சேரப் பண்ணுகையால் , குருகுகளின் கூட்டம் அஞ்சி நீங்குகின்ற கால்வாய் களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற , பசிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் , ` மால் , அயன் ` என்பார்க்கு அறிய ஒண்ணாத இறைவரது , ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளே நமக்குப் புகலிடம் .

குறிப்புரை :

` அருவி ` உவமையாகுபெயர் . ` ஆய் ` என்றது , இடைநிலைத் தீவகம் . கழனிகளில் விளைந்துள்ள நெற்கதிர்களைக் கவர வரும் குருவிகளையும் , கிளிகளையும் மகளிர் ஓட்ட , அவை பறந்து சென்று சேரும் ஓசையைக் கேட்டு , கால்வாய் அருகில் , மீனைக் கவர இருக்கும் குருகுகள் அஞ்சி நீங்கும் என்றவாறு . ` குருவி , கிளி ` என்பவை , மீன் வகைகள் என்பாரும் உளர் . ` இருவர் ` என்றது , தொகைக் குறிப்பு .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 8

களங்க ளார்தரு கழனி
அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல்
உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளால்நிழற் கீழ்நற்
குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம்
நினைப்பவர் வினைநலி விலரே

பொழிப்புரை :

ஏர்க்களம் நிறைதற்கு ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர , அதனால் மகிழ்வுற்ற வண்டுகள் , கேட்போர் உள்ளம் இன்பம் நிறைதற்குரிய ஆரவாரமான இசை , மேற்சென்று ஒலிக்கின்ற கேள்வியை , குளக்கரைகளில் உள்ள ஆலமரத்தின் கீழ்க்கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி யிருக்கும் இறைவரது , ஒளி வீசுகின்ற , தாமரை மலர்போலும் திருவடி களை நினைப்பவர் வினையால் துன்புறுத்தப்படுதல் இலராவர் .

குறிப்புரை :

ஏர்க்களம் நிறைதல் , நெல்லால் என்க . அன்பைத் தருதலாவது , அதனை வெளிப்படுத்துதல் ; அஃதாவது உபசரித்தல் . எனவே , வயல்கள் வண்டுகட்கு வேண்டும் தேனைத் தந்தன என்க . இனி , ` அளி , தேன் ` என்றே உரைப்பினுமாம் . இசையை , ` பாடல் ` என்றதும் , கேள்வியை , ` காட்சி ` என்றதும் பான்மை வழக்கு . ` நிழல் ` என்றது , கீழ்க்கிளையை . ` கீழ் ` என்றது , ஏழனுருபு . பயிலுதல் , அவ்விசையோடு தன் குரல் அளவொத்து அமையுமாறு அமைக்க முயலுதல் . ` நினைபவர் ` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 9

வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால்
இறையெனக் கருதுதல் இலமே

பொழிப்புரை :

வாழைப் பழங்களையும் , சாறு மிக்கொழுகுகின்ற பலாப் பழத்தின் சுளைகளையும் , ` எனக்கு வைத்த இப் பங்கு சிறிது ` என்று இகழ்ந்து , அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள் கலாய்த்து , தாழை மட்டையும் , வாழை மட்டையுமாகிய கோல்களால் போர் செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி யிருக்கும் மங்கை பங்காளனை யல்லது வேறொருவரை , யாம் , ` கடவுள் ` என்று நினைத்தல் இலம் .

குறிப்புரை :

கூறு - பங்கு . ` தாழை , வாழை ` என்றன ஆகு பெயர்கள் . ` தண்டு ` என்றது , பயனால் அதனோடு ஒத்ததனை .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 10

செந்நெ லங்கலங் கழனித்
திகழ்திரு வாஞ்சியத் துறையு
மின்ன லங்கலஞ் சடையெம்
மிறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கல்நன் மாடப்
பொழிலணி நாவல்ஆ ரூரன்
பன்ன லங்கனன் மாலை
பாடுமின் பத்தரு ளீரே

பொழிப்புரை :

செந்நெற்களையுடைய அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத் தில் எழுந்தருளியிருக்கும் , இனிய மாலைகளை யணிந்த சடையை யுடைய எம் இறைவனது , ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த , பொன்னரி மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய , சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது , பல அழகுகளையுடைய , கற்கத்தகுந்த நல்ல பாமாலையை , அடியராய் உள்ளவர்களே , பாடுமின்கள் .

குறிப்புரை :

`பாடினால் அவனை எளிதிற் பெறுவீர்கள்` என்பது குறிப்பெச்சம். `வயல்களில் செந்நெல் நிறைந்திருப்பது, அந்நெற்களை நிரம்ப ஏற்றிய மரக்கலம்போல் உளது` என்றபடி. `பரவும் மாலை, ஆரூரன் மாலை` எனத் தனித்தனி இயையும். `பொன் அலங்கல்` என்றதற்கு, `மண்மகளுக்கு அணியப்பட்ட பொன்மாலை போலும்` என்று உரைப்பினுமாம். `நலக் கல்` என்பது மெலிந்து நின்றது. `மின் அலங்கல்` எனப் பிரித்தும், மூன்றாம் அடியில், `பொன்னலங்கல நன்மாடம்` எனப் பாடம் ஓதியும், அவற்றிற்கியைய உரைப்பாரும் உளர்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

பரவும் பரிசொன் றறியேன்நான்
பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்
எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க , தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும் பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் , யான் உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியாதேன் ஆகலின் , முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன் ; இரவும் பகலும் உம்மையே நினைவேன் ; என்றாலும் , அழுந்த நினையமாட்டேன் ; ஓலம் !

குறிப்புரை :

` நம்மைச் சொற்றமிழ் பாடுக ` என்றும் ( தி .12 தடுத் . புரா .70.). ` இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு ` என்றும் ( தி .12 தடுத் . புரா .76.). ` ஆரூரில் வருக நம்பால் ` என்றும் ( தி .12 தடுத் . புரா . 108). ` மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ ` என்றும் ( தி .12 ஏ . கோ . புரா .72.). ` கூடலை யாற்றூர் ஏறச் சென்றது இவ்வழிதான் ` என்றும் ( தி .12 ஏ . கோ . புரா . 102.) பலவாறு நீர் பாடுவிக்கவே ஆங்காங்கும் வந்து பாடினேன் என்பார் , ` பரவும் பரிசொன்றறியேன் ` என்றும் , ` என்னையே துணையாகப் பற்றிநிற்கும் சேரமான் பெருமாளை வேறோராற்றால் முன்பே உம்மை வழிபடு வியாது ஒழிந்தேன் ` என்பார் ` பண்டே உம்மைப் பயிலா தேன் ` என்றும் , ` எய்த நினையமாட்டேன் ` என்றும் அருளிச் செய்தார் . முன்பு தாம் தனித்துச் சென்று வழிபட்டாராகலின் , ( தி .12 ஏ . கோ . புரா .71.) சேரமான் பெருமாளோடு மீளச் செல்லாமையை , ` பயிலாதேன் ` என்றார் என்க . கரவின்மை , பொய்யாமை . அருவி யால் ஆயது , ` அருவி ` எனப்பட்டது . ` உண்ண ` என்ற குறிப்பால் , ` கமுகு ` என்றது , அதன் குலையையாயிற்று . கமுகங் குலை உண்ணப் பட்டது போல , தென்னங்குலை உண்ணப்பட்டிலது என்றற்கு , ` தெங்கங் குலைக்கீழ் ` என்று அருளினார் . ` அரவத் திரை ` என்பது மெலிந்து நின்றது . ` திரைக் கோடு ` என இயையும் , திரையை எடுத் தோதினமையால் , அதற்கு இவ்வாறு உரைத்தலே திருவுள்ளமாதல் அறிக . ஒற்றிரட்டிய , ` கோடு ` என்னும் குற்றியலுகரம் அத்துப்பெற்றது , ` வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான் ` என்றல்போல . ஓலமிடுவாரைத் தாங்குவார் கொடுக்கும் எதிர்மொழியும் , ` ஓலம் ` என்பதேயாகலின் இத் திருப்பதிகத்தைக் கேட்டருளிய இறைவனும் , ` ஓலம் ` என்றான் என்க . ஓகாரம் , முறையீட்டின்கண் வந்ததாகலின் , அதற்கு இவ்வாறு பொருள் கொள்ளப்படும் . அதனால் , ஈண்டும் , திருத்தொண்டர் புராணத்தும் , ` அடிகளோ ` என ஓதும் பாடம் சிறவாமையறிக . சீர் நிலைகளும் அன்னவாதல் நோக்குக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

எங்கே போவே னாயிடினும்
அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை யொன்று மின்றியே
தலைநாள் கடைநா ளொக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே
கலைமான் மறியுங் கனல்மழுவும்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

அடியேன் எங்கே செல்வேனாயினும் , முதல் நாளும் இறுதி நாளும் ஒரு பெற்றியவாக , சிறிதும் ஐயம் இன்றி , அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய் , சடைமேற் கங்கையும் , கையில் மானின் ஆண் கன்றும் , சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற , அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம் !

குறிப்புரை :

` சடைமேற் கங்கை ` என மாற்றி , உம்மை விரித்து உரைக்க . ` கரந்தானே ` என்றதில் , தானும் ஏயும் அசைநிலைகள் . இவ் வாறன்றி , ` மறைத்தவனே ` என்று உரைப்பின் , இயையாமை அறிக . ` மழுவும் ` என்றதன்பின்னும் ஆக்கம் வருவிக்க . தலைநாள் கடை நாள் ஒத்தலாவது , முதல்நாள் எழுந்த விருப்பம் , எந்நாளும் மாறாது நிற்றல் . ` ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம் பலநாட் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ ` - புறம் -101 எனப் பிறரும் பிறிதோரிடத்துக் கூறினார் . ` எங்கே போவேனா யிடினும் ` என்றது , தாம் மறந்து செல்லுதலையும் , ` அங்கே வந்து என் மனத்தீராய்த் தங்கும் ` என்றது , அவ்விடத்துத் தம்மை இறைவர் நினைப்பித்தலையும் குறித்து . ` இத் தன்மையீராகிய நீர் , உம்மை நினைந்து நிற்கும் நினைவை முடியாதொழியீர் என்று ஓலமிடுகின் றேன் ` என்றபடி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

மருவிப் பிரிய மாட்டேன் நான்
வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரற்
பட்டை கொண்டு பகடாடிக்
குருவி யோப்பிக் கிளிகடிவார்
குழல்மேல் மாலை கொண்டோட்டம்
தரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

நீர் , பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில் பல பிரிவுகளாய்க் காணப்பட்டு , யானைகளைப் புரட்டி , புனங்களில் குருவிகளையும் கிளிகளையும் ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக் கொண்டு ஓடுதலைச் செய்தலால் அழகிய அலைகளை உடைத்தாய் நிற்கும் , காவிரிக் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் , யான் , சிலர்போல , உறுவது சீர் தூக்கி , உற்ற வழிக்கூடி , உறாதவழிப் பிரியமாட்டேன் ; என்றும் உம் வழியிலே நின்று விட்டேன் ; இனி ஒருகாலும் இந்நிலையினின்றும் நீங்கேன் ; ஓலம் !

குறிப்புரை :

பயன் கருதி நட்புச் செய்வாரது இழிபினை , ` உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரும் நேர் ` - குறள் -813 என்பதனான் அறிக . ` நின்றொழிந்தேன் ` என்று , ஒருசொல்லாய் , துணிவுப் பொருண்மை உணர்த்திற்று . ` ஒழிகிலேன் ` என எதிர்மறை முகத்தானும் அருளினார் , நன்கு வலியுறுத்தற்கு . ` விச்சிய ` என்றதன் ஈறு தொகுத்தலாயிற்று . விச்சுதல் - வித்துதல் ; இதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

பழகா நின்று பணிசெய்வார்
பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழா துமக்காட் பட்டோர்க்கு
வேக படமொன் றரைச்சாத்திக்
குழகா வாழைக் குலைதெங்கு
கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

வாழைக் குலைகளையும் , தென்னங் குலைகளை யும் அழகாகக் கொணர்ந்து கரைமேல் எறிதலால் அழகு நிறைந்துள்ள அலைகளையுடைய , காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் , உமக்கு அடிமைப்பட்டவர் முன்னே , நீர் ஒற்றை ஆடையையே அரையில் பொருந்தஉடுத்து நிற்றலால் , உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்பவர் , அதனால்பெற்ற பயன் ஒன்றையும் யான் அறிகின்றிலேன் ; ஓலம் !

குறிப்புரை :

` உமக்குப் பணிசெய்வோர் பயன் கருதாதே செய்வர் ; யானும் அவ்வாறே செய்கின்றேன் ` என்றபடி . ` ஏகபடம் ` என்றது , வடநூல் முடிபு . ` ஒன்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` ஒற்றை ஆடை ` என்று , அதுதானும் , தோலாதலை உட்கொண்டு , இனி , மோனை நயமும் , பிறவும் நோக்காது ` வேக படம் ஒன்று ` என்றே பிரித்து , ` சினம் பொருந்திய பாம்பு ஒன்றை என்று உரைப்பாரும் உளர் . ` சாத்தி ` என்றதனை , ` சாத்த ` எனத் திரிக்க . ` சாத்தின் ` எனவும் , ` குழகார் வாழை ` எனவும் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` வாழைக் குலைத் தெங்கு ` எனத் தகரம் மிகுத்து ஓதுதல் பாடம் அன்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பிழைத்த பிழையொன் றறியேன்நான்
பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட
மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்
கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட , மலையும் நிலமும் இடம் கொள்ளாத படி பெருகி , மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று , வயல்களில் எல்லாம் நிறைந்து , வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரி யாற்றங் கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாகிய உடைய அடிகேள் , அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன் ; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின் , அது நீங்க அருள்செய் ; ஓலம் !

குறிப்புரை :

தாம் விரும்பியவாறே சென்று வணங்கல் இயலாத வாறு காவிரியில் நீர்ப்பெருக்கை இறைவர் நிகழ்வித்தார் என்று கருதி இவ்வாறு வேண்டினார் . ` ஆட ` என்றது . நிகழ்காலத்தின்கண் வந்தது . ` கொள்ளாமை ` என்றதன்பின் , ` பெருகி ` என ஒருசொல் வருவிக்க . ` கழனி எங்கும் மண்டி ` என மாற்றியுரைக்க . அழைத்தல் - ஒலித்தல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

கார்க்கொள் கொன்றை சடைமேலொன்
றுடையாய் விடையாய் கையினான்
மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய்
முன்நீ பின்நீ முதல்வன்நீ
வார்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

கார்காலத்தைக்கொண்ட கொன்றைமலரின் மாலை யொன்றைச் சடைமேல் உடையவனே , விடையை ஏறுபவனே , அறிவில்லாதவரது ஊர்கள் மூன்றைச் சிரிப்பினால் எரித்தவனே , ஒழுகுதலைக்கொண்ட பல அருவிகள் வாரிக் கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு ஆரவாரிக்கின்ற அலைகளையுடைய , காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவை யாற்றை நினதாக உடைய அடிகேள் , எல்லாவற்றுக்கும் முன்னுள்ள வனும் நீயே ; பின்னுள்ளவனும் நீயே ; எப்பொருட்கும் முதல்வனும் நீயே ; ஓலம் !

குறிப்புரை :

` கார்க் கொள் , வார்க்கொள் ` என்றவற்றில் , எதுகை நோக்கி , ககரம்மிகுந்தது . ` முன்நீபின்நீ முதல்வன்நீ ` என்றது , ` எல்லா வற்றையும் ஆக்குபவனும் நீ அழிப்பவனும் நீ ; ஆதலால் , நீ , யாம் அங்கு வருதற்குரிய வழியைச் செய்யவல்லாய் `; அவ்வாறு செய்ய ஒட்டாது தடுப்பவரும் இல்லை என்றவாறு . நகையை , ` கை ` என்றது , முதற்குறை . ` வாரிய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்
பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயில்எய்த
செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

மலையிடத்துத் தோன்றிய மங்கையை ஒரு பாகத்திற் கொண்டு , உலக முழுவதும் பிச்சைக்குத் திரிபவனே , வில்லிடத்துக்கொண்ட அம்பினால் முப்புரத்தை அழித்த , சிவந்த கண்களையுடைய இடபத்தை யுடையவனே , மலையிடத்துப் பெருகிய பல அருவிகள் வாரிக்கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக் களையும் கைக்கொண்டு இருபக்கங்களையும் அரிக்கின்ற அலைகளை உடைய , காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள் , இறைவனாவான் நீயே ; ஓலம் !

குறிப்புரை :

` ஒருபாலாய் ` என , இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது . ` ஒருபாலா ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` மலைக்கொள் ` என்றதில் , கொள்ளுதல் , ` பெருகுதல் ` என்னும் பொருளது . ` தீர்த்தன் நீ ` என்றது , ` நீயே இறைவனாக , நினக்குமேல் இறைவர் இலராகலின் , யாவும் செய்வாய் ` என்று கூறி , வேண்டிய வாறு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

போழும் மதியும் புனக்கொன்றை
புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
உன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

பகுக்கப்பட்ட சந்திரனும் , புனங்களில் உள்ள கொன்றை மலரும் , நீரும் பொருந்திய முடியையுடைய புண்ணிய வடிவினனே , சுற்றி ஊர்கின்ற பாம்பை அணிந்த , சுடர்களையுடைய ஒளி வடிவினனே , உன்னை வணங்குகின்றவர்களது துன்பம் நீங்கு மாறும் , ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் விருப்பத்தினால் வைத்த உள்ளங்கள் அவர்களைச் செலுத்தி மூழ்குவிக்குமாறும் , மறித்து வீசுகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள் , ஓலம் !

குறிப்புரை :

` சிவபிரானது அடியவர்கள் அவனது அருள்வடிவாகக் கொண்டு முழுகித் துன்பம் நீங்குமாறும் , மற்றும் ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் தீர்த்த நீரின்மேல் வைத்த விருப்பத்தினால் முழுகி மகிழுமாறும் காவிரியின்கண் நீர் பெருகாநின்றது ` என்றவாறு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

கதிர்க்கொள் பசியே யொத்தேநான்
கண்டே னும்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான்
எம்மான் றம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய
வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

என் தந்தை தந்தைக்கும் பெருமானே , மேகங்கள் துளிகளைச்சிதறி மழையைப் பொழிதலால் வெள்ளம் நுரையைச் சிதறிப் பரந்து வருகையினாலே முழங்குகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , நான் உம்மை , பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டேன் ; அவன் உணவைக் கண்டாற்போலக் காணேனா யினேன் ; நீரின் வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேனல்லேன் ; ஓலம் !

குறிப்புரை :

` கதிர்க்கொள் ` என்றதிற் ககர ஒற்று விரித்தல் , கொள்ளுதல் , கைகூடப் பெறுதல் . பசியுடையவனை , ` பசி ` என்றது . பான்மை வழக்கு . ` கதிர்க்கொள் பசியை ஒத்து ` என்று அருளினாரா யினும் , ` கண்டேன் ` என்றதற்கேற்பத் தொழிலுவமமாக மாற்றியுரைத் தலே திருவுள்ளம் என்க . பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டமை , அக்கரைக்கண் கண்டமை எனவும் , உணவைக் கண்டாற்போலக்காணாமை , திருமுன்பு சென்று காணாமை எனவும் , கொள்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கூசி அடியார் இருந்தாலுங்
குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும்
மலர்மேல் அயனுங் காண்கிலார்
தேசம் எங்கும் தெளிந்தாடத்
தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு , தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும் , நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர் ; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர் ; உம்மை , உலகிற்குத் தலைவனாகிய திருமாலும் , தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர் ; பிறர் எங்ஙனங் காண்பார் ! ஓலம் !

குறிப்புரை :

முன்னைத் திருப்பாடல்காறும் இறைவர் யாதும் அருளாமையின் , இத் திருப்பாடலில் நம்பியாரூரர் அவரை இவ்வாறு நெருங்கி வேண்டினார் என்க . காத்தற்றொழில் உடைமைபற்றித் திரு மாலை , ` தேச வேந்தன் ` என்று அருளினார் . ` காண்கிலா ` என்பது பாடம் அன்று . ` பிறர் எங்ஙனங் காண்பார் ` என்பது இசையெச்சம் , அருவிகள் அலைவடிவாயினமையைக் குறிக்க , அவைகளை அலைகள் கொணர்ந்தனவாக அருளினார் . வாசம் - வசித்தல் . அதன்பின் , ` உடைய ` என்பது , தொகுத்தலாயிற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கூடி அடியார் இருந்தாலும்
குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்
உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி எங்குங் காண்கிலேன்
திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

அசைகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் , அடியார் உம்மைவிட்டு நீங்காது கூடியே இருந்தாலும் நீர் , அவர்க்கு அருள்பண்ணும் குணம் சிறிதும் இல்லீர் , ` அருள் பண்ணுதல் வேண்டும் ` என்னும் எண்ணமும் இல்லீர் ; அது நிற்க , நீர் என்பால் பிணக்குக் கொண்டிருந்தும் , யான் அதனை உணர்ந்திலேன் ; உம் அடியேனும் , ` நம்பியாரூரன் ` என்னும் பெயரினேனும் ஆகிய யான் உம்மை இங்குப் பலவிடத்துந் தேடியும் காண்கின்றிலேன் ; அதனால் , உம்மை யான் நேர்படக்கண்ட திருவாரூரையே நினைப்பேனா யினேன் ; ஓலம் !

குறிப்புரை :

இறுதித் திருப்பாடலையும் திருக்கடைக்காப்பாக அருளாது , முன்னைத் திருப்பாடல்கள் போலவே அருளிச்செய்தார் , அதுகாறும் தம் பாடற் பயனைத் தாம் காணாமையின் . அங்ஙனமா யினும் , ` இது திருக்கடைக் காப்பிற்குரிய திருப்பாடல் ` எனவும் , ` இதன் பின்பும் நீர் அருள் பண்ணுதலும் பண்ணாதொழிதலும் உம் இச்சை வயத்தன ` எனவும் விண்ணப்பிப்பார் , ` தொண்டன் ஊரனேன் ` எனத் தம் பெயரைப் பெய்து அருளிச்செய்தார் . இதன் பின்பு இறைவர் , கன்று தடையுண்டெதிரழைக்கக் கதறிக்கனைக்கும் புனிற்றாப்போல் , சராசரங்கள் எல்லாங்கேட்க , ` ஓலம் ` என எதிர்மொழி கொடுத்து , யாற்று நீரை விலக அருளினாராகலின் , இத் திருப்பதிகமும் ஏனைய திருப்பதிகங்கள்போல , தன்னை ஓதுவார்க்கு எல்லாப் பயனையும் அருளுவதாதல் அறிந்துகொள்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

வாழ்வாவது மாயம்மிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின் , இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; அதன் பொருட்டு , நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள் ; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும் , வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

முதற்கண் வந்த , ` ஆவது ` என்பது , எழுவாய்ப்பொருள் தருவதோர் இடைச்சொல் . ` போவது ` என்றது , ` போகவேண்டுவது ` எனப் பொருள் தந்தது . பறி - பை ; அது பை போல்வதாகிய உடம்பைக் குறித்தது . அதனை வருகின்ற திருப்பாடலிலுங்காண்க . ` பறிதான் வாழ்வாவது ` என மேலே கூட்டுக . ` தான் ` என்பது , அசைநிலை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

பறியேசுமந் துழல்வீர்பறி
நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு
நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல
நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

வேறொன்றும் செய்யாது உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே , இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவ தாதலை அறிகின்றிலீர் ; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்று வன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் உளவாகுமோ ? ஆகா வாகலின் , இப்பொழுதே , அறிய வேண்டுவனவற்றை அறியும் வானுலகத்தவரினும் மேலான அறிவுடன் , நல்ல நறுமணத்தையுடைய நீரையும் , சோற்றையும் விருந்தினருக்கு , இன்சொற் பேசி இடுகின்றவர் கள் வணங்குகின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

` கூவிய ` என்றது , ` செய்யிய ` என்னும் வினையெச்சம் . அது , ` கொளும் ` என்றதனோடு முடிந்தது , கொள்ளுதல் - மனத்துட் கொள்ளுதல் . ` நாளால் ` என்றது , வேற்றுமை மயக்கம் . ` உளவே ` என்ற ஏகாரம் , வினா . வானின் உள்ளாரை , ` வான் ` என்று அருளினார் . அவர் அறிவது , துறக்க இன்பத்தையேயாகலின் , அதனை விரும்பாது , வீட்டின்பத்தை விரும்புவாரை , அவரினும் மேலாய அறிவுடைய வராக அருளினார் . இனி , ` அறிவானிலும் அறிவான் ` என்றதற்கு , ` அறிகின்ற உயிரின்கண்ணும் அறிவாய் இருந்து அறிபவன் ` என . இறைவற்கு ஆக்கி உரைப்பாரும் உளர் . விலாமிச்சை வேர் முதலியன இடப்படுதலின் , நீர் , நறுமணம் , உடையதாயிற்று . ` கிறி ` என்றது , மகிழ்வுரைகளை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

கொம்பைப்பிடித் தொருக்காலர்க
ளிருக்கான்மலர் தூவி
நம்பன்நமை யாள்வான்என்று
நடுநாளையும் பகலும்
கம்பக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , யோகதண்டத்தை ஊன்றி , ஒருவழிப் படுத்துகின்ற உயிர்ப்பினை உடைய யோகிகள் , ` இவனே நம்மை ஆள்பவன் ` என்று , நள்ளிரவிலும் , பகலிலும் மந்திர ஒலியோடு மலர்களைத் தூவி விரும்பப்படுகின்ற இறைவனது , அசைதலை யுடைய ஆண் யானையின் கூட்டம் தொடர்ந்துவந்து நின்று , பல சுனை களின் நீரை இறைத்து , செம்பொன்னினது பொடியை உதிர்க்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

` ஒருக்கு காலர்கள் ` என்பது , குறைந்து நின்றது . கால் - காற்று ; உயிர்ப்பு . ` தூவி ` என்ற வினையெச்சம் , ` நம்பன் ` என்ற வினைக் குறிப்புப் பெயர் கொண்டது . இனி , ` தூவி ` என்றதனை , ` தூவ ` எனத் திரித்து , ` சிந்தும் ` என்றதனோடு முடித்தலுமாம் . ஆதல் - தொடர்ந்து வருதல் . இவ்வாறன்றி , ` களிறு ` என்பது , விரித்தலாயிற்று எனலுமாம் . சுனைகளது பன்மையை , நீர்மேல் ஏற்றி அருளினார் . பொன்வண்ணமான மலையில் சுனை நீர்களை வலிமைப்பட இறைத்த லால் , பொற்பொடிகள் உதிர்வவாயின என்க . இத் திருப்பாடலுள் ` யோகிகள் தாமும் இரவும் பகலும் வணங்குவாராக , நீவிர் வாளா பொழுது கழிக்கின்றீர் ; இது பொருந்துவதோ ` என்று அருளியவாறு .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத்
திழப்பார்களுஞ் சிலர்கள்
வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர்
மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு
தவமாவது செயன்மின்
கிழக்கேசல மிடுவார்தொழு
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

அறிவை அழித்துக்கொண்ட மாந்தர்களே , பொருளைத்தேடி , உழக்கரிசியை அட்டு உண்ணுதல் ஒன்றைச் செய்து விட்டு , எஞ்சியவற்றைத் தொகுத்துவைத்துப் பின் இழந்து போவாரும் சிலர் இவ்வுலகில் உளர் ; அவர்கள் , ` அறம் ` என்றாலோ , ` அஃது எமக்கு வேண்டா ; யாம் உண்டு உயிர் வாழ்வேம் ` என்று போவர் . வஞ்சனையால் தம் வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொள்கின்ற அவர் களோடு கூடி , அவர்களது நோன்பாகிய அச்செயலை நீவிர் செய்யன் மின் ; விடியற்காலையில் பகலவன் வருகையை எதிர்நோக்கி நின்று , மந்திர நீரை இறைத்துக் காலைச் சந்தியை முடிக்கின்றவர்கள் வணங்கு கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

உழக்கு , நாழியின் நாற்கூற்றில் ஒருகூறு . ` உண்பது நாழி ` என்றும் , ` நாழி யரிசிக்கே நாம் ` என்றும் ( நல்வழி ) மக்கள்தம் உணவளவு கூறப்படுமாகலின் , ` உழக்கு ` என்றது அவர் தம் உண்ணுதற் செயலின் இழிபு தோற்றிற்று என்க . ஏகாரம் , செயற்பாலன வாய பிற செயல்களின் நின்று பிரித்தலின் , பிரிநிலை . ` படைத்து ` என்றதனை முதற்கண் வைத்து உரைக்க . படைத்தல் - உளவாக்குதல் . ` வழக்கு ` என்பது , ` அறிந்தார்க்கு உரிய முறைமை ` என்னும் பொருள தாய் , அறத்தைக் குறித்தது . மாந்துதல் - குடித்தல் ; ` அறிவைக் குடித்த ` என்றது , பான்மை வழக்கு , ` மாந்தர் ` என்றது விளி . ` சழக்கு ` என்றது , இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லிக் கரத்தலை . ` பிழைக்கே யென்பர் ` என்பதும் பாடம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

வாளோடிய தடங்கண்ணியர்
வலையில்லழுந் தாதே
நாளோடிய நமனார்தமர்
நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிட
மதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , நாட்கள் ஓடிவிட்டன ; ஆதலின் , இயமன் தூதுவர் வருதற்கு முன்பு , வாள்போல இருபக்கமும் ஓடுகின்ற , அகன்ற கண்களையுடைய மகளிரது ஆசையாகிய வலையிற் சிக்காமல் , இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழை மின்கள் ; அங்ஙனம் பிழைத்தற்கு அவனுக்கு இடமாவதுதான் யாது எனில் , இங்குச் சொல்லப்பட்டு வரும் இத்திருக்கேதாரமே . அரையில் கீளுடன் பாம்பைக் கட்டியுள்ள அவனது இடம் ; ஆதலின் , இதனைத் துதிமின்கள் .

குறிப்புரை :

` ஓடிய `, பின்னது முற்று , கண்ணோட்டமின்மையைக் குறிக்க , ` நமனார் ` என உயர்த்து அருளிச்செய்தார் . ` அடிகட்கு ` எனப் பின்னர் வருதலின் , வாளா , ` ஆளாய் ` என்றருளினார் . ` அது `, பகுதிப்பொருள் விகுதி . ` அதுவே ` என்ற ஏகாரம் , பிறவற்றினின்றும் பிரித்துக் கோடலின் , பிரிநிலை . ` யாது ` என்பது எஞ்சிநின்றது . செய்யுளாகலின் இதுவே என்னும் சுட்டுப்பெயர் முன் வந்தது . ` இது ` என்றதன்கண் சுட்டு , ` இங்குச் சொல்லப்படுவது ` என்னும் பொருளது .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

தளிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறி லன்றே
குளியீருளங் குருக்கேத்திரங்
கோதாவிரி குமரி
தெளியீர்உளஞ் சீபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறியுண்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , தேவகோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது , மக்கள் அவ்விடங்களை அடைந்தாலன்றோ ? இதனை மனத்துட் கொண்மின்கள் ; கொண்டு , தெற்கென்னும் திசை கிடைக்க , ` கோதாவரி , குமரி ` என்னும் தீர்த்தங்களிலும் , வடக் கென்னும் திசைகிடைக்க , அழகிய குருக்கேத்திரத்தில் உள்ள தீர்த்தத் திலும் சென்று முழுகுமின்கள் ; அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும் , வடக்கில் கிளிகள் , பழத்தைக் கீறி உண்ணுகின்ற திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதிமின்கள் .

குறிப்புரை :

` தவச்சாலைகள் ஆவது ` என மாற்றியுரைக்க . ` குளியீர் உள் ` எனவும் , ` அம் குருக்கேத்திரம் ` எனவும் பிரிக்க . ` குளியீர் ` என்ற தனால் , ` குருக்கேத்திரம் ` என்றது , அதன்கண் உள்ள தீர்த்தத்தின் மேலதாயிற்று . ` தெற்கு , வடக்கு ` என்றல் , விந்த மலையை வைத்து என்க . இத் திருப்பாடலுள் , ` குமரி முதல் இமயங்காறும் நன்னெறிச் செலவு சென்று , தீர்த்தங்களின் மூழ்குதலும் , தலங்களை வணங்குதலும் வேண்டும் ` என்று அருளியவாறு . ` சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே ` ( தி .6 ப . 36 பா ,9) என்றும் , ` அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே ` ( தி .6 ப .78 பா .1) என்றும் அருளிச்செய்தார் , ஆளுடைய அரசரும் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

பண்ணின்தமிழ் இசைபாடலின்
பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை
வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள்
மணிவாரிக்கொண் டெறியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , பண்ணாகிய , தமிழ்ப்பாடலினது இசையைப் பாடுமிடத்து , அதற்கியையப் பழைதாகிய வேய்ங்குழலும் , மத்தளமும் ஒலித்தலினாலும் , கண்ணுக்கு இனிதாகிய ஒளியையுடைய பொன் வண்ணமான சுனைகள் வயிரங்களை அலைகளால் எடுத்து வீசுதலினாலும் , நிலத்தில் நிற்கின்ற மத யானைகள் , மாணிக்கங்களை வாரி இறைத்தலினாலும் , ` கிண் ` என்கின்ற ஓசை இடையறாது ஒலிக் கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

` பண்ணின் இ? u2970?` என இயையும் . இவ்விடத்து இன் , அல்வழிக்கண் வந்த சாரியையாம் . பழைமை , மரபு . ` வேய் ` ஆகு பெயர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

முளைக்கைப்பிடி முகமன்சொலி
முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர
மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , சிறிய கையை உடைய பெண்யானைகள் , துளையையுடைய கையையுடைய ஆண் யானைகட்கு உறவாய் நின்று , முகமன்கூறி , பெரிய மூங்கில்களை ஒடித்துக் கொடுத்து , சுனைகளின் நீரைத் தெளித்தலால் , அவற்றின் வளைவையுடைய கையினின்றும் பொழிகின்ற மழை மிகுதியாக , மயிலும் , பெண்மானும் நிலத்தைக் கிண்டுதலால் மாணிக்கங்கள் தெறிக்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

` சொல்லி ` என்றது , பான்மை வழக்கு . மூங்கில் இலை கள் யானைக்கு உணவாதல் அறிக . ` தூவி ` என்றது , ` தூவ ` என்பதன் திரிபு . ` மயிலும் மான்பிணையும் நிலத்தைக் கிளைக்கும் ` என்றது , கோழியும் , எருதும் ஆண்டு இல்லை என்பதை விளக்கி நின்றது .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

பொதியேசுமந் துழல்வீர்பொதி
அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று
குழிவீழ்வதும் வினையால்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை
மலங்கவ்வரை யடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , நீவிர் , இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்வீர் ; அப்பொதிதான் பயனற்று ஒழிவதை அறியமாட்டீர் ; அறிவை இழந்த வழியிலே சென்று நீவிர் குழியில் வீழ்வதும் , நும் வினைப்பயனேயாம் . இதனை விடுத்து , முழுதும் கடலாற் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மெலிவடையும் படி அவனை மலையால் முன்பு நெருக்கிப் பின்பு நன்னிலையைப் பெறச்செய்து தான் அம்மலைமேல் இனிதிருந்த வனாகிய சிவ பெருமானது இடம் திருக்கேதாரமே ; அதனைத் துதி மின்கள் .

குறிப்புரை :

` வினையால் ` என்றதில் ஆல் , அசைநிலை . கதி - இடம் . ` கேதாரம் ` என்றதனை இரட்டுற மொழிந்து கொள்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

நாவின்மிசை யரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக்
கடியானடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
ஊரன்னுரை செய்த
பாவின்றமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே

பொழிப்புரை :

தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும் , திரு ஞானசம்பந்தரும் , மற்றும் எவராயினும் , சிவனடியார்களுக்கு அடிய னாகி , அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன் , இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய , இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவ லோகத்தில் இருப்பவராவர் .

குறிப்புரை :

` மி? u2970?` ஏழனுருபு ; அஃது உருபு மயக்கமாய் , நான்காவதன் பொருளைத் தந்தது . ` தமிழ் ` என்றது தாப்பிசையாய் , முன்னுஞ் சென்றியையும் . ` யாவர் ` என்றதன்பின் , ` ஆயினும் ` என்பது வருவிக்க . ` அடியான் ` என்றது முற்றெச்சமாய் , ` அடித் தொண்டன் ` என்னும் வினைக் குறிப்புப் பெயரைக் கொண்டது . ` பாவாகிய இனிய தமிழ் ` என்க . அன்றி , ` இன் , சாரியை ` எனினுமாம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

மானும்மரை இனமும்மயி
லினமுங்கலந் தெங்கும்
தாமேமிக மேய்ந்துதடஞ்
சுனைநீர்களைப் பருகிப்
பூமாமர முரிஞ்சிப்பொழி
லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழற்றுயில்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

மான்களின் கூட்டமும் , மரைகளின் கூட்டமும் , மயில்களின் கூட்டமும் எங்கும் பொருந்தித் தம்விருப்பப்படியே தமக்குரிய உணவுகளைத் தேடி உண்டு , பெரிய சுனைகளில் உள்ள நீரைக் குடித்து , பூத்த பெரிய மரங்களில் உராய்ந்து அவற்றின் செறி வூடே சென்று , தேமாமரச் சோலையின் நிழலில் உறங்குகின்ற , ` திருப் பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

` எங்கள் சிவபிரானது மலை ` என்பது சொல்லெச்சம் ; இஃது இத் திருப்பதிகத்தின் எல்லாத் திருப்பாடல்கட்கும் ஒக்கும் . உரிஞ்சுதல் , செறிவினால் , குறிப்பின்றியும் நிகழ்வது என்க . இத் திரு மலையை , திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும் , திருநாவுக்கரசு சுவாமிகளும் , ` பருப்பதம் ` என்றே குறித்தருளுதலாலும் , சேக்கிழார் நாயனார் , அவர்கள் அருளியவாறே வாளா கூறும் வழி , ` பருப்பதம் ` என்றும் ( தி .12 ஏ . கோ . புரா . 198.), அடைபுணர்த்துக் கூறும் வழி , ` திருப்பருப் பதம் ` என்றும் ( தி .12 திருநா . புரா . 348, தி .12 திருஞா . புரா . 1027). ` திருச்சிலம்பு ` ( தி .12 திருநா . புரா . 349.) என்றும் குறித்தருளுதலாலும் , ` திருப்பருப்பதம் ` என்பதே தமிழ் வழக்கு என்பதும் , சுவாமிகள் , வடமொழி வழக்காக , ` சீபர்ப்பதம் ` என அருளிச்செய்தார் என்பதும் பெறப்படும் . ` பர்வதம் ` என்னும் ஆரியச்சொல் , ` பர்ப்பதம் ` எனத் திரிந்து , ஆரியத்துள் முப்பதாம் மெய் ரகாரத்தோடு இணைந்து , ஈகாரத்தான் ஊரப்பட்டு , திரு என்னும் பொருள் தந்து நின்ற ஓரெழுத்தொரு மொழியின் திரிபாகிய , ` சீ ` என்பதனை , முதற்கண் ஏற்று நின்றது . ` சீ ` என்பது , ` பர்ப்பதம் ` என்பதனோடு ஒட்டி ஒரு சொல்லாய் நிற்றலின் , ` பர்ப்பதம் ` என்பதன்கண் உள்ள குற்றொற்றாகிய ரகர மெய்யின்மேல் உகரம் வாராதொழிதலும் பொருந்துவதாயிற்று . இவ்வாறே , ` சொரூப லக்கணம் , தடத்த லக்கணம் ` என்றாற் போலும் தொகைச் சொற்களுள் , லகர மெய் போல்வன , மொழி முதற்கண் வந்தனவாகாது , மொழியிடைக்கண் வந்தனவாகவே கொள்ளப்படுதல் காண்க . இம்மலை , ` சீசைலம் ` எனவும் வழங்கப் படும் . ` மானும் ` என்றது இன எதுகை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

மலைச்சாரலும் பொழிற்சாரலும்
புறமேவரும் இனங்கள்
மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட
மலங்கித்தம களிற்றை
அழைத்தோடியும் பிளிறீயவை
அலமந்துவந் தெய்த்துத்
திகைத்தோடித்தம் பிடிதேடிடுஞ்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

குறவர்கள் தங்கள் மலைப்பக்கங்கட்கும் சோலைப் பக்கங்கட்கும் அப்பாற்பட்ட இடங்களினின்றும் வருகின்ற யானை களைப் பற்றித் தங்கள் மலையிடத்துக் கொணர்ந்து பிணித்து வைத்து அவைகளைத் துன்புறுத்தி உணவை உண்பிக்க , அதனைக் கண்ட பெண் யானைகள் தமது ஆண் யானைகளும் அவர்களால் பற்றப் படுங்கொல் என மனங்கலங்கி அவைகளை அழைத்து ஓடவும் , அதனையறியாமல் அவ்வாண் யானைகள் தம் பெண் யானைகள் அவர்கள் கையகப்பட்டனகொல் என மருண்டு பிளிறுதலைச் செய்து , பல இடங்களில் திரிந்து அவைகளைக் காணாது இளைத்துவந்து , மீளவும் செய்வதறியாது திகைத்து அவைகளைத் தேடி ஓடுகின்ற , ` திருப் பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

` சாரல் ` என்பவற்றில் நான்கனுருபு விரிக்க . இனங் களாவன , யானை இனம் என்பது இடத்தால் விளங்கிற்று . ` குறவர்கள் ` என்பது , ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` தனகளிற்றை , தன்பிடி ` என்பன பாடம் அல்ல . ` பிடி ` எனப் பின்னர் வருகின்றமையின் , ` அழைத் தோடியும் ` என வாளா அருளினார் . ` அழைத்தோடி ` என்றதனை , ` அழைத் தோட ` எனத் திரிக்க , ` திகைத்து ` என்றது , உயிரெதுகை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

மன்னிப்புனங் காவல்மட
மொழியாள்புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்துகவைக்
கோலிக்கதிர் கொய்ய
என்னைக்கிளி மதியாதென
எடுத்துக்கவ ணொலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

தினைப் புனத்தின் காவலையுடைய இளமைச் சொற்களையுடைய குறமகள் அங்குத் தங்கி அப்புனத்தைக் காத்திருக்குங்கால் , இளம் பெண்போலும் கிளி வந்து , கிளைத்த தாளின்கண் உள்ள கதிர்களைக் கவர , அதனைக் கண்டு அவள் , ` இக் கிளி என்னை மதியாதுபோலும் ` என்று சினந்து , கவணை எடுத்து அதனாற் கல்லை , ஓசையுண்டாக வீச , அவ்வழகிய நல்ல கிளி , தன் எண்ணம் மாறி வெளியேறுகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

இளமைத் தன்மையை , மொழிமேல் வைத்துணர்த்திய வாறு , இளம்பெண்போறல் , அழகு முதலியவற்றால் விரும்பப் படுதல் . ` கோல் ` என்றது , தாளினை . எனவே , ` கோலி ` என்றது , ` தாளின்கண் உள்ளது ` என்றவாறாம் . ` ஒலிப்ப ` என்றது , தன் காரணந் தோற்றி நின்றது . ` கல்லை ` என்பது , ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . தென் - அழகு . பலவிடத்துப் பல பெண்டிர் செய்வனவற்றை , ஒருத்திமேல் வைத்து அருளியவாறு . இது , வருகின்ற திருப்பாடற்கும் ஒக்கும் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

மய்யார்தடங் கண்ணாள்மட
மொழியாள்புனங் காக்கச்
செவ்வேதிரிந் தாயோவெனப்
போகாவிட விளிந்து
கய்பாவிய கவணான்மணி
எறியஇரிந் தோடிச்
செவ்வாயன கிளிபாடிடுஞ்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

மை பொருந்திய பெரிய கண்களையுடையவளும் , இளமையான சொற்களையுடையவளும் ஆகிய குறமகள் தினைப் புனத்தைக் காத்தற் பொருட்டுப் பலவிடத்தும் நன்றாகத்திரிந்து , ` ஆயோ ` என்று சொல்லி ஓட்டவும் , போகாது விடுதலினாலே வருந்தி , கையிற் பொருந்திய கவணால் மணியாகிய கல்லை வீச , சிவந்த வாயினை யுடைய கிளி அஞ்சி ஓடி ஒலிக்கின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

விளிதல் - இறத்தல் ; அது , பெருந்துன்பம் எய்துதலைக் குறித்தது . பாடுதல் - ஒலித்தல் . குறமகள் , ` ஆயோ ` என்று பாடியதற்கு எதிராகக் கிளி தானும் பாடிடும் ` என்பது நயம் . இரண்டாவது , நான்காவது அடிகளில் இன எதுகை வந்தது . இதனானே , ` மையார் ` எனவும் , ` கைபாவிய ` எனவும் ஓதுதல் பொருந்தாமையறிக .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

ஆனைக்குலம் இரிந்தோடித்தன்
பிடிசூழலில் திரியத்
தானப்பிடி செவிதாழ்த்திட
அதற்குமிக இரங்கி
மானக்குற அடல்வேடர்கள்
இலையாற்கலை கோலித்
தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

ஆண் யானைகளின் கூட்டம் , தனது பெண் யானைகளின் கூட்டம் , சாரலிற் பல இடங்களிலும் சென்று திரிதலினால் அதனைக் காணாது , தேடி ஓட , சென்ற இடங்களில் அப்பெண் யானை களின் கூட்டமும் ஆண் யானைகளின் கூட்டத்தைக் காணாது அதன் குரலோசையைக் கேட்டற் பொருட்டுச் செவி தாழ்த்து நிற்க , அந் நிலைக்கு மிக இரங்கி , வீரத்தை உடைய குறவர்களாகிய , வெற்றி பொருந்திய வேடர்கள் , இலைகளால் கல்லை செய்து அமைத்து , அவைகளில் தேனைப் பிழிந்து வார்த்து , அப்பெண்யானைக் கூட்டத்திற்கு இனிதாக ஊட்டுகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

` தன் ` என்றது , குலத்தை யாதலின் , பால்வழுவின்மை யறிக . ` பிடி ` என்றன ஆகுபெயர் . தானம் - இடம் . ` அத் தானம் ` எனச் சுட்டு வருவிக்க . ` குறவர் ` என்பது சாதி குறித்தும் , ` வேடர் ` என்றது , தொழில் குறித்தும் நின்றமையின் , மிகையாகாமை யுணர்க . ` வேட்டம் செய்து கொலைபுரியும் அவர்க்கும் இரக்கம் தோற்றுவிப்பதாய் இருந்தது , அப் பெண்யானைகளின் நிலை ` என்ற படி . ` கலை `, இடைக்குறை . கல்லையை , இக்காலத்தார் , ` தொன்னை ` என்ப .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மாற்றுக்களி றடைந்தாய் என்று
மதவேழங்கை யெடுத்து
மூற்றித்தழ லுமிழ்ந்தும்மதம்
பொழிந்தும்முகஞ் சுழியத்
தூற்றத்தரிக் கில்லேனென்று
சொல்லிஅய லறியத்
தேற்றிச்சென்று பிடிசூளறுஞ்
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

மதத்தை உடைய ஆண்யானை ஒன்று தன் பெண் யானையை , ` நீ மற்றோர் ஆண்யானையைச் சார்ந்தது என் ` என்று சொல்லிக் கையை உயர எடுத்துச் சினம் மிகுந்து , கண்களினின்றும் நெருப்புப் பொறியைச் சிதறி , மதநீரைப் பொழிந்து முகத்தைச் சுளிக்க , அதனைக் கண்ட பெண்யானை , ` நீர் இவ்வாறு அடாப் பழி சொல்லித் தூற்றின் உயிர் தரிக்கலாற்றேன் ` என்று , அயலறியத் தனது தவறின்மையைச் சூளறுத்துக் காட்டி அவ்வாண்யானையைத் தெளியப்பண்ணி அதனை அடைகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே எங்கள் சிவபெருமானது மலை .

குறிப்புரை :

` தவறிலதாகிய தனது பிடியைத் தவறுடையதாக நினைத்து வெகுண்டது , மதமயக்கத்தால் ` என்பார் , ` மத வேழம் ` என்று அருளினார் . கையை உயர்த்தியது , அடித்தற்கு . ` எனினும் . அடியாது பொறுத்து நின்று கேட்டது ` என்றற்கு , ` எடுத்து ` என்றே போயினார் . ` முற்றி ` என்பது , நீட்டல் பெற்றது . அதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது . ` சூழறும் ` என்பது பாடம் அன்று ` தேற்றிச் சென்று சூளறும் ` என்றதனை , ` சூளறுத்துத் தேற்றிச் செல்லும் ` என மாற்றி யுரைக்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

அப்போதுவந் துண்டீர்களுக்
கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டால்எமை
எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில்
என்றோடிஅக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

தினைப்புனத்தைக் காக்கின்ற , கிண்ணம் போலும் , உயர்ந்து தோன்றும் , இளமையான தனங்களையுடைய குறமகள் , தினையை உண்ண வந்த கிளிகளைப் பார்த்து , ` முன்னே வந்து தினையை உண்ட உங்களுக்கு இரங்கி , உங்களை அதட்டாது அப்போது வாளா இருந்தேன் ; ஆயினும் , நீவிர் இடையறாது வந்து தினையை உண்டால் எங்களை , எங்கள் உறவினர் வெகுள மாட்டார் களோ ? ஆதலின் இப்போது உமக்குச் செய்யத் தக்க செயல் இதுதான் ` என்று சொல்லி , அவைகளைக் கவணால் எறிகின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபெருமானது மலை .

குறிப்புரை :

செய்யுளாகலின் , ` முன் ` என்ற பெயர் பின்னும் , ` அப்போது ` என்ற சுட்டுப் பெயர் முன்னும் வந்தன . ` உண்டீர் களுக்கு ` என்றது , அழையாமையாகிய தொழிலுக்கு உரிய , ` இன்ன தற்கு ` என்னும் முதனிலை . அழைத்தல் - கூப்பிடுதல் ; அதட்டுதல் . ` சுழியாரோ ` என்பதும் , ` இதுவோ தொழில் ` என்பதும் பாடங்கள் . ` அக் கிளி ` என்றதில் சுட்டு , ` அத்தன்மையை உடைய ` எனப் பொருள்தந்தது . தன்மை , எப்போதும் வந்து உண்ணுதல் . கவணால் என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

திரியும்புரம் நீறாக்கிய
செல்வன்றன கழலை
அரியதிரு மாலோடயன்
றானும்மவ ரறியார்
கரியின்னின மோடும்பிடி
தேனுண்டவை களித்துத்
திரிதந்தவை திகழ்வாற்பொலி
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

களிற்றியானைகளின் கூட்டத்தோடும் பிடியானை களின் கூட்டம் தேனை உண்டு , பின் , அவ் விருகூட்டங்களும் களித்துத் திரிதருகின்ற அழகு விளங்குதலால் பொலிவெய்திய திருப்பருப்பத மலையில் , வானத்தில் திரிகின்ற முப்புரங்களை நீறாகச் செய்த செல்வனாகிய சிவபெருமானது திருவடிகளை , ஏனையோர்க்கு அரிய திருமாலும் , பிரமனும் ஆகிய அவர்தாமும் காணமாட்டார் .

குறிப்புரை :

` அயன்றானும் ` என்றதில் தான் , அசைநிலை . உம்மை , சிறப்பு . ` அவர் ` என்றது ஒடுவெனெண்ணின் தொகைப் பொருட்டு . ` திரிதந்த ஐ ` எனப் பிரிக்க . அரி அயனும் இறைவன் திருவடியை அங்குக் காண மாட்டாமை , அம் மலையது சிறப்பால் சிவகணத்தவர் பலரும் நெருங்கி நிற்றலின் என்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

ஏனத்திரள் கிளைக்கஎரி
போலமணி சிதற
ஏனல்லவை மலைச்சாரலிற்
றிரியுங்கர டீயும்
மானும்மரை இனமும்மயில்
மற்றும்பல வெல்லாம்
தேனுண்பொழில் சோலைமிகு
சீபர்ப்பத மலையே

பொழிப்புரை :

மலைச் சாரலில் பன்றியின் கூட்டம் நிலத்தை உழ , அவ்விடத்தினின்றும் நெருப்புப் போல மாணிக்கங்கள் வெளிப்பட , அவற்றைக் கண்டு , தினைக்கூட்டத்தையுடைய மலைச்சாரலை விடுத்து ஓடிய கரடியும் , மானும் , மரைக் கூட்டமும் , மயிலும் , மற்றும் பலவும் ஆகிய எல்லாம் பின்பு தேனை உண்டு களிக்கின்ற பூஞ்சோலைகளும் , பிற சோலைகளும் மிகுந்திருக்கின்ற , ` திருப்பருப்பதம் ` என்னும் மலையே , எங்கள் சிவபிரானது மலை .

குறிப்புரை :

` மணி சிதர்த்தி ` என்பதும் , ` தீயென்றவை ` என்பதும் பாடம் அல்ல . ` ஏனல்லவை ` என்றதில் லகர ஒற்று , விரித்தல் . அவை - கூட்டம் . ` இற்று இரியும் ` எனப் பிரிக்க , இறுதல் , இங்கு விடுதல் . பன்றிகள் நிலத்தைக் கிளைத்ததனால் வெளிப்பட்ட மணியைத் தீயென்று அஞ்சித் தினையை உண்ணாது நீங்கியன பலவும் பின் தேனை உண்டன ; பன்றிகள் அது மாட்டாது நின்றன என்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

நல்லாரவர் பலர்வாழ்தரு
வயல்நாவல வூரன்
செல்லலுற வரியசிவன்
சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன
தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைசெல வுயர்வானகம்
ஆண்டங்கிருப் பாரே

பொழிப்புரை :

துன்பம் உறுதல் இல்லாத சிவபெருமானது திருப் பருப்பத மலையை , நல்லவர் பலர் வாழ்வதும் , வயல்களையுடையது மான திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , யாவரது துன்பமும் தீருமாறு பாடிய இத்தமிழ்ப் பாமாலைகளைப் பாட வல்லவர்கள் , சிறிது காலம் செல்லும் அளவிலே உயர்ந்த விண்ணுலகத்தை ஆண்டு அங்கு இருப்பர் .

குறிப்புரை :

` நாவல ` என்ற அகரம் சாரியை . இன்பமே வடிவமான வன் என்பதனை , ` செல்லல் உற அரிய ` என்று அருளினார் . உயர் வானகம் - சிவலோகம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

நத்தார்படை ஞானன்பசு
வேறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானையுரி
போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

விரும்புதல் பொருந்திய பூதப் படைகளையுடைய ஞான உருவினனும் , இடபத்தை ஏறுகின்றவனும் , நனைய ஒழுகுகின்ற இடங்களில் மயக்கத்தைத் தரும் மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்த மணவாளக் கோலத்தினனும் ஆகிய , திருக்கேதீச் சரத்தில் எழுந்தருளிய பெருமான் , அன்பர்களாகிய அடியவர்கள் வணங்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல் , இறந்தவர்களது எலும்பை அணிபவனாகக் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` நத்தார் படை ` என்றதனை , ` நத்தார் புடை ` என ஓதி , ` சங்கினை ஏந்திய திருமாலை ஒரு பாகத்தில் உடைய ` என்று உரைப் பாரும் உளர் . ` நனைய ` என்பதன் இறுதிநிலை எஞ்சி நின்றது , ` செய் தக்க ` என்றாற்போல ( குறள் -466.) ` போர்த்த ` என்ற பெயரெச்சம் , ` மணவாளன் ` என்றதன் இறுதிநிலையொடு முடிந்தது . ` மழுவாளன் என்பதும் பாடம் . ` பற்று ` என்பது , எதுகை நோக்கி , ` பத்து ` எனத் திரிந்து நின்றது . ` அணிவான் ` என்பது , ` அணிபவனாகின்றான் ` என ஆக்க வினைக்குறிப்பாயிற்று . நிகழ்காலம் , முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கையைக் குறித்தது . வருகின்ற திருப்பாடல்களிலும் இவ்வாறே கொள்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும் , நல்ல பிளவாகிய பிறையையும் , கீளினையும் , மதம் நிறைந்த மயக்கத்தையுடைய , யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் , பாலாவி யாற்றின் கரைமேல் , பாம்பு போலும் இடை யினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` பிறை , உரி ` என்றவற்றின் பின்னும் எண்ணும்மை விரிக்க . ` படம் `, ஆகுபெயர் . இடைக்கு , பாம்பையும் உவமை கூறுதல் மரபாதல் அறிக .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

அங்கம்மொழி யன்னாரவர்
அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன்
பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

பிளவு செய்த பிறையைச் சூடினவனாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையையுடைய அந்தணர்களும் , தேவர்களும் வணங்கித் துதிக்க , மரக்கலம் நிறைந்த கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல் , சினத்தாற் சிவந்த கண்ணையுடைய பாம்பைக் கட்டி யுள்ளவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` பங்கு ` என்பது , ` பங்கம் ` என வந்தது . இனி , ` பங்கம் - குறை ` எனலுமாம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

கரியகறைக் கண்டன்நல
கண்மேல்ஒரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும்
மாதோட்டநன் னகருள்
பரியதிரை யெறியாவரு
பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

கருமையாகிய , நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும் , நல்ல இருகண்கள்மேலும் மற்றொரு கண்ணை யுடையவனும் ஆகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , கீற்றுக்களையுடைய சிறகுகளையுடைய வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் , பருத்த அலைகளை வீசிக்கொண்டு வருகின்ற பாலாவி யாற்றின் கரைமேல் , ஆராயத்தக்க வேதங்களை வல்லவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

ஞாயிறும் , திங்களும் உலகினைப் புரப்பனவாகலின் , அவைகட்கு அமைந்த கண்களை , ` நல்ல கண் ` என்று அருளினார் . தீக்கு அமைந்த நெற்றிக்கண் , உலகினை அழிப்பதாதல் அறிக . ` மேலும் ` என்னும் சிறப்பும்மை , தொகுத்தலாயிற்று . ` யாழ் `, ஆகுபெயர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

அங்கத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

தன் அடியார்கள் மேலனவாய் , அவர்களது உடம்பிற் பொருந்துகின்ற நோய்களை முற்றக் களைந்தருள்பவனாகிய சிவபெருமான் , மரக்கலங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் , தனது திருமேனியின் ஒரு கூற்றை அழகு செய்கின்ற மங்கை ஒருத்தியுடன் , பாலாவி யாற்றின் கரைமேல் , தென்னஞ் சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப் பவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` அடியார்மேல் அங்கத்துறு ` என்றதனை , ` மாடத்தின் கண் நிலாமுற்றத்திருந்தான் ` என்பதுபோலக் கொள்க . உயிரின்கண் உறும் நோயை ஒழித்தலையன்றி , ` ஈண்டு , உடற்கண் உறும் நோயை ஒழித்தலை விதந்தோதியருளினார் ` என்க . ஒற்றுமை பற்றி , உடல் , உயிர்க்கு உறுப்பாய் நிற்குமாறு உணர்க . ` அருளி ` என்றது பெயர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

வெய்யவினை யாயவ்வடி
யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பையேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
செய்யசடை முடியான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தன் அடியவர்மேல் உள்ள கொடிய வினைகளாய் உள்ளன வற்றை முற்ற ஒழித்துநின்று , நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ நிற்கின்ற , கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நகரத்தில் , பாம்பு போலும் இடையினை உடையவளாகிய ஒருத்தியோடு , பாலாவி யாற்றின் கரைமேல் , சிவந்த சடைமுடியை உடையவனாய்க் காணப் படுகின்றான் .

குறிப்புரை :

` ஒழித்தருளி ` என்ற வினையெச்சம் , ` சடைமுடியான் ` என்னும் வினைக்குறிப்பிற்கு அடையாய் நின்றது . ` மலிகின்ற ` என்ற பெயரெச்சம் , ` நகர் ` என்ற ஏதுப் பெயர்கொண்டது . ` பை `, ஆகு பெயர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

ஊனத்துறு நோய்கள்ளடி
யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல்
மாதோட்டநன் னகரில்
பானத்துறு மொழியாளொடு
பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தன் அடியார்கள் மேலனவாய் , உடம்பிற் பொருந்தும் நோய்களை முற்ற ஒழித்துநின்று , அலைகளால் வானத்தைப் பொருந்து கின்ற , நீர் நிறைந்த கடல் சூழ்ந்த , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் , பாலும் விரும்பத்தக்க மொழியை யுடையவளாகிய ஒருத்தி யோடு , பாலாவி யாற்றின் கரைமேல் , பன்றியின் கொம்பை அணிந் தவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

உடம்பினைக் குறிக்க வந்த , ` ஊன் ` என்பது , அத்துப் பெற்றது . ` அலைகளால் ` என்பதும் , ` நீர் ` என்பதும் ஆற்றலால் வந்தன . ` வானத்து ` என்றதனை , ` வால் நத்து ` எனப்பிரித்து , ` வெள்ளிய சங்குகள் பொருந்திய ` என்று உரைத்தலும் ஆம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

அட்டன்னழ காகவ்வரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பட்டவ்வரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேல்
சிட்டன்நமை யாள்வான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

அட்ட மூர்த்தமாய் நிற்பவனாகிய . திருக்கேதீச் சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தனது அரையில் பாம்பினை அழகாகக் கட்டிக்கொண்டு , வண்டுகள் தேனை உண்டு ஆர வாரிக்கின்ற சோலைகளையுடைய ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத் தில் , பட்டத்தை யணிந்த அழகிய நெற்றியை உடைய ஒருத்தியோடு , பாலாவி யாற்றின் கரைமேல் , மேலானவனாயும் , நம்மை ஆளுபவனா யும் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` அரைதன்மேல் ` என்றதில் தன் , சாரியை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

மூவரென இருவரென
முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில்
மாதோட்டநன் னகரில்
பாவம்வினை யறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல்
தேவன்எனை ஆள்வான்திருக்
கேதீச்சரத் தானே

பொழிப்புரை :

மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , மாமரங்களின் கனிகள் தாழத் தூங்குகின்ற சோலைகளையுடைய , ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தில் பாவத்தையும் , இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் பலகாலும் வந்து மூழ்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல் , மூவராகியும் , இருவராகியும் , முதற்கடவுளாகியும் நின்று , என்னை ஆள்பவனாய்க் காணப்படுகின்றான் .

குறிப்புரை :

` தாழ ` என்பது , இசையெச்சம் . தாழத் தூங்குதல் , பெரிதாய் , நிரம்ப இருத்தலின் என்க . பாவத்தை அறுக்க விரும்புவோர் உலகரும் , இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் அருளாளரு மாவர் . ` தேவன் ` என்றதன் பின்னும் , ` என ` என்பது விரிக்க . ` எனை ஆள்வான் ` என்றது , ` உயிர்களை ஆட்கொள்பவன் ` என்னும் திரு வுள்ளத்தது . எனவே , ` மூவரென ` என்றது முதலிய மூன்றும் , இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறையை அருளியவாறாம் . ` மூவர் ` என்றது . அதிகார நிலை , ` அயன் , மால் , உருத்திரன் ` என மூன் றென்பாரது கருத்துப்பற்றியும் , ` இருவர் ` என்றது , அஃது , ` அயன் , மால் ` என இரண்டே என்பாரது கருத்துப்பற்றியுமாம் . ` தேவன் ` என்றது . அதிகார நிலைக்கு மேற்பட்ட போக நிலையையும் , உண்மை நிலையையும் குறித்தவாறாயிற்று . இங்ஙனம் , அவரவர் கருத்துப்பற்றி இறைவன் பல்வேறு நிலையினனாய் நின்று ஆட்கொள்ளுதலை . ` நானாவித உருவாய் நமைஆள்வான் ` ( தி .1 ப .9 பா .5.) என்று ஞானசம்பந்தரும் அருளிச்செய்தார் . அவ்விடத்தும் , ` நமை ` என்றது உயிர்கள் பலவற்றையும் குறித்து நிற்றல் அறிக .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

கரையார்கடல் சூழ்ந்தகழி
மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்
கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித்
தொண்டன்னுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்
கூடாகொடு வினையே

பொழிப்புரை :

கறுப்பு நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த , கழியை யுடைய . ` மாதோட்டம் ` என்னும் நல்ல நகரத்தின்கண் உள்ள , சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழிசைபோலும் இசையை உண்டாக்குகின்ற சோலைகளையுடைய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது அடிக்குத் தொண்டனாகி , வேதத்தைச் சொல்லுகின்ற , புகழையுடைய நம்பியாரூரன் பாடிய , குறைதல் இல்லாத இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட , கொடியனவாகிய வினைகள் வந்து பொருந்தமாட்டா .

குறிப்புரை :

`பொழில்` என்றதனை, `செயும்` என்றதன் பின் கூட்டியுரைக்க. `மறை` என்றது, வேதத்தையும், திருப்பதிகத்தையும் எனவும், `ஆர்க்கும்` என்றது, ஓதுதலையும், அருளிச்செய்தலையும் எனவும் இவ்விரு பொருள் கொள்க. குறையாமை, புகழினுடையது. அது, மிகுவதனைக் குறிப்பதாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெரு மானது இடம் , பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே ; அதனை , பிற உயிர்களை வருத்து மாற்றாற் செய்த கொடுஞ்செயல்களால் , பலரும் பல இகழுரைகளைச் சொல்லுமாறு இழிவெய்த நின்ற பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற்பொருட்டுப் பலகாலும் சென்று வணங்குமின்கள் .

குறிப்புரை :

` கொன்று ` என்னும் வினையெச்சம் , ` ஓடி வந்தான் ` என்பதில் , ` ஓடி ` என்பதுபோல் , ` செய்த ` என்றதற்கு அடையாய் நின்றது . ` கொன்று ` என்றது , கொல்லுதலையேயன்றி , கொன்றாற் போலத் துன்பஞ் செய்தலையுங் குறித்தது . புண்ணியமும் , பாவமும் என வினைகள் இரண்டாகலின் , ` பாவ வினைகள் ` என்று அருளினார் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , விளங்குகின்ற , கொன்றை மாலையை அணிந்த சடையையுடைய எங்கள் பெருமானது இடம் , பல நிறங்களையும் காட்டுகின்ற மணிகளோடு , முத்தினையும் தள்ளிக் கொண்டு பாய்கின்ற , ஒலிக்கும் வெண்மையான அருவிகளையுடைய , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை , தலைவணங்கிச் சென்று , இனிய இசைகளைப் பாடி வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` இன்னிசை பாடவே ` என்பதும் பாடம் . ` பிறங்கு சடையன் ` என இயையும் . ` நிறம் ` என்ற பொதுமையால் , பல நிறங்க ளும் கொள்ளப்பட்டன . முத்தின் சிறப்புப் பற்றி , அதனை வேறாக ஓதியருளினார் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டு முடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து , முழுதும் ஒழிதற்பொருட்டு , தோள்கள் எட்டினையும் உடைய , சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை யுடையவனாகிய , நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற , குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை , நாள்தோறும் , முறைப்படி , நெடிது நின்று வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` நம்ம ` என்றதில் மகர ஒற்று , விரித்தல் . ` கண்டத்தில் நஞ்சே யன்றித் தோளும் எட்டு உடையான் ` என்றலின் , ` தோளும் ` என்ற உம்மை , எச்சம் . ` கண்டம் உடையான் ` என்னாது , ` கண்டன் ` என்கின்றாராகலின் , எச்ச உம்மை முன்னர் வந்தது . ` எட்டும் ` என்ற உம்மை , முற்று : ஆடுங்கால் , எட்டுத் திசையிலும் வீசுதற்கு வேண்டும் கைகளை முற்றவுடையன் என்றவாறு .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி யாடியை
முளிறி லங்கு மழுவா ளன்முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , வெம்மை பொருந்திய மழுப்படையை உடைய சிவபெருமான் முற்பட்டு எழுந்தருளியிருக்கின்ற இடம் , பிளிறுகின்ற , மனவலியையும் , பெரிய தும்பிக்கையையும் , பொழி கின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்றி யானைகளோடு , பிடி யானைகள் சூழ்ந்துள்ள , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; ஆதலின் , உங்கள் அறியாமை நீங்குதற்பொருட்டு , அங்குச்சென்று , திருநீற்றில் மூழ்குகின்றவனாகிய அப்பெருமானை வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` அவ் வெண்பொடி யாடியை ` என , எடுத்துக் கொண்டு உரைக்க . முளிறு - முளி ; வெம்மை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவுக் குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , புல்லிய சடையை உடைய அற வடிவின னும் , இலை வடிவத்தைக்கொண்ட சூலப் படையை உடைய எம் தந்தை யும் , எங்கள் தலைவனும் ஆகிய இறைவனது இடம் , பாலை உண்டு தழுவுதலை உடைய குட்டியோடு பெண் முசுவும் , அதனோடு ஆண் முசுவும் மரக்கிளைகளில் தாவுகின்ற காட்டினையுடைய , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை உங்கள் கீழ்மைகள் எல்லாம் நீங்கும் பொருட்டுச் சென்று வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` தழுவி ` என்பதே பாடம் எனின் , அதனை , ` தழுவ ` என்பதன் திரிபென்க . ` கலை ` எனப் பின்னர் வருதலின் , ` முசு ` என்றும் , அதுபற்றிப் பின்னர் , ` கலை ` என்றும் போயினார் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மடமு டைய அடியார் தம்மனத் தேயுற
விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமு டைய அரவன் றான்பயி லும்மிடம்
கடமு டைய புறவிற் றண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

நஞ்சினை உடைய கண்டத்தையுடையவனும் , தேவர்கட்கு மேலானவனும் , படமுடைய பாம்பை யுடையவனும் ஆகிய சிவபெருமான் , தன்னையன்றி வேறொன்றையும் அறியாத அடியவரது மனத்தில் பொருந்தும் வண்ணம் நீங்காது எழுந்தருளி யிருக்கின்ற இடம் , காட்டையுடைய , முல்லை நிலத்தோடு கூடிய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே .

குறிப்புரை :

இது முதலாக உள்ள மூன்று திருப்பாடல்களில் , ` உலகீர் , உங்கள் குறைகளெல்லாம் நீங்குதற் பொருட்டு அதனை வழிபடு மின்கள் ` என்பது குறிப்பெச்சமாக அருளிச்செய்யப்பட்டது . அஃது எவ்வாற்றாற் பெறுதும் எனின் , பின்னரும் ஒரு திருப்பாடலுள் அதனை எடுத்தோதி , இடையே இவற்றை வைத்தருளிய வாற்றாற் பெறுதும் என்க . ஒன்றையே அறிந்து , பிறவற்றை அறியாதொழிதல் ஒப்புமையால் , ` மடம் ` என்று அருளினார் . அடியவர் மனத்தே உறுதலாவது , அவர் அங்ஙனம் வைத்து எண்ணுதல் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடம்
தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடவே
கான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

ஞான வடிவினனும் , நடனம் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான் , குறைபாடு இல்லாத தன் அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணம் , நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம் , தேனும் , வண்டும் தேனை உண்டு இனிய இசையைப்பாட , காட்டில் மயில்கள் அதனைக் கேட்டு இன்புற்றிருக்கின்ற திருக்கழுக்குன்றமே .

குறிப்புரை :

` தேன் ` என்பதும் , வண்டின் வகைகளுள் ஒன்று . ` இன்னிசை பாடியே ` என்பது பாடம் அன்று .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
சந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

அளவற்ற அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணமும் , திருமாலும் நான்முகனும் நாள்தோறும் வந்து வணங்கி வழிபட்ட , மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும் , நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , சந்தன மரம் மணம் வீசுகின்ற , முல்லை நிலத்தோடு கூடிய , குளிர்ந்த திருக் கழுக்குன்றமே .

குறிப்புரை :

` நட்டமாடி நவிலும் இடம் ` என்பது , மேலைத் திருப்பாடலினின்றும் வந்து இயைந்தது . சிந்தை செய்தல் , அதன் காரியத்தை உணர்த்திற்று . ` கந்தம் நாறும் ` என்பதும் பாடம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
கழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , பின்னிய சடையின்கண் தலைக் கோலங் களையுடையவனும் , ` குழை ` என்னும் அணியை அணிந்த காதினை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , மேகங்கள் மிக முழங்க , மிக உயர்ந்த வேயும் , கழையுமாகிய மூங்கில்கள் முத்துக்களைச் சொரிகின்ற , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை , உங்கள் குற்றங்களெல்லாம் நீங்குதற் பொருட்டு வழிபடு மின்கள் .

குறிப்புரை :

` பின்னு சடை ` என்னும் உகரம் தொகுத்தலாயிற்று . ` வேய் , கழை ` என்பன , மூங்கிலின் வகைகள் . ` புன்சடை `, ` குழைகொள் முத்தம் ` என்பனவும் பாடங்கள் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

பல்லின் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்
கல்லின் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு [ மின்களே

பொழிப்புரை :

உலகீர் , பற்களையுடைய வெண்மையான தலையை உடையவன் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம் , பாறைகளின்மேல் வீழ்கின்ற வெண்மையான அருவிகளையுடைய , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை , வலிமை மிக்க , திரண்ட தோள் களையுடையவனாகிய நம்பியாரூரனது வனப்புடைய பாடல்களால் துதித்து வழிபடுவோரை வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` மிக்க பயனை அடைவீர்கள் ` என்பது குறிப்பெச்சம் . ` பல்லில் ` என்பது பாடமாயின் , ` பல இல்லங்களில் செல்லுகின்ற ` என உரைக்க . ` கழுக்குன்றமே , அதனை ` என இரண்டாக்கி உரைக்க . ` வனப்பு ` ஈண்டு , ` விருந்து ` என்பது , அஃது ஆகுபெயராய் , அதனையுடைய பாடலைக் குறித்தது . ` சொல்லல் சொல்லி ` என்றதில் , ` சொல்லி ` என்பது ` உண்ணலும் உண்ணேன் ` ( கலி . பாலைக்கலி 22 ) என்பதில் , ` உண்ணேன் ` என்பதுபோல , ` செய்து ` என , பொதுமை யாய் நின்றது . இவ்வாறு வழக்கினுள்ளும் , செய்யுளுள்ளும் வருதல் காண்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

ஊனாய்உயிர் புகலாய்அக
லிடமாய்முகில் பொழியும்
வானாய்வரு மதியாய்விதி
வருவானிடம் பொழிலின்
தேனாதரித் திசைவண்டினம்
மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை
நலியார்நமன் தமரே

பொழிப்புரை :

உடம்புகளாகியும் , அவைகளில் புகுதலை யுடைய உயிர்களாகியும் , அகன்ற நிலமாகியும் , மேகங்கள் நின்று மழையைப் பொழியும் வானமாகியும் , வினைப்பயன் வருதற்கு வழியாகிய உள்ள மாகியும் நிற்பவனாகிய இறைவனது இடம் , சோலைகளில் தேனை விரும்பி வண்டுக் கூட்டம் இசைபாடுகின்ற திருச்சுழியலாகும் . அதனைப் பல்லாற்றானும் நினைபவர்களை , கூற்றுவன் ஏவலர்கள் துன்புறுத்தமாட்டார்கள் .

குறிப்புரை :

` புகல் உயிராய் ` எனவும் , ` விதிவரு மதியாய் ` எனவும் மாற்றி யுரைக்க . நிலத்தையும் , வானையும் அருளியது , ` உயிர்கள் வாழும் இடங்களாய் ` என்றவாறு . ` மதி ` என்றது , புத்தி தத்துவத்தை . ` புண்ணிய பாவங்கட்குப் பற்றுக்கோடாவது புத்தி தத்துவமே ` என்பதை மெய்ந் நூல்களிற் கண்டுகொள்க . ` மதி ` என்றதற்கு , இவ்வாறன்றி , சந்திரன் என்று உரைத்தலும் ஈண்டுச் சிறவாமை யறிக . இதனானும் , ` விதியாய் ` என ஆக்கச்சொல் வேண்டுதலானும் , ` அதன் மதியாய் ` என்னும் பாடமும் சிறவாதென்க . ` வருவான் ` என்றது , ` நிற்பான் ` என்பது போல , பொருட்டன்மை குறித்ததாம் . பல்லாற்றான் நினைத்தல் , நின்றும் , இருந்தும் , கிடந்தும் , நடந்தும் , வாழ்த்தியும் , வணங்கியும் நினைதல் முதலியவற்றை என்க . நமன் தமர் நலியாமை , வினைகள் பற்றறக் கழிந்தவழியாதலின் , அந்நிலை உளதாம் என்றவாறு .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

தண்டேர்மழுப் படையான்மழ
விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை
வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றான்அவன்
உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர்
நல்லார்துயர் இலரே

பொழிப்புரை :

தண்டுபோல மழுப்படையை ஏந்தியவனும் , இளமையான இடபத்தை யுடையவனும் , தேவர்கள் பொருட்டு , கடலில் எழுந்த நஞ்சினையுண்டு , திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் திண்ணிய தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலிற் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள் , இன்பம் உடையவரும் , துன்பம் இல்லாதவரும் ஆவர் .

குறிப்புரை :

` ஏர் ` உவம உருபு . ` மழுப்படையைத் தண்டு போல உடையான் ` என்றது , ` நெருப்பாய் நிற்கும் அஃது , அவனையாதும் துன்புறுத்தமாட்டாமையைக் குறித்தருளியபடியாம் . ` கடல் எழு நஞ்சு ` என மாற்றிக் கொள்க . ` வளைத்தான் ` என்றது முற்றெச்சம் . ` அவன் ` பகுதிப் பொருள் விகுதி . நன்மை - இன்பமாகலின் , ` நல்லார் ` என்றது , ` இன்பம் உடையவர் ` என்றதாயிற்று .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

கவ்வைக்கடல் கதறிக்கொணர்
முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்
தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்
தெழுவார்அடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர்
அலராள் பிரியாளே

பொழிப்புரை :

ஓசையையுடைய கடல் , முழக்கம்செய்து , தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க , அங்கு , கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்ற வரது திருவடிகளை வணங்குவோர் , தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர் ; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள் அவர் களை விட்டு நீங்காள் .

குறிப்புரை :

` திருச்சுழியலில் சென்று வணங்காது , சென்று வணங்கி வருவோரை வணங்கினும் நலம் பயக்கும் ` என்றபடி . இதனானே , அடியாரது பெருமையும் உணர்த்தியவாறாயிற்று . ` கரைக்கு ` என்றது உருபு மயக்கம் . சிவபிரானை , ` தெய்வம் ` என்றல் பிறர்கோள் பற்றியாம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

மலையான்மகள் மடமாதிட
மாகத்தவண் மற்றுக்
கொலையானையின் உரிபோர்த்தஎம்
பெருமான்திருச் சுழியல்
அலையார்சடை யுடையான்அடி
தொழுவார்பழு துள்ளம்
நிலையார்திகழ் புகழால்நெடு
வானத்துயர் வாரே

பொழிப்புரை :

மலையரையனுக்கு மகளாகிய இளைய மாது தனது திருமேனியின்கண் இடப் பகுதியினளாக , கொலைத் தொழிலை யுடைய யானையின் தோலைப் போர்த்துள்ள எம் பெருமானாகிய , திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சடையை உடையவனது திருவடியைத் தொழுபவர்கள் , மனத்தில் குற்றம் பொருந்தாதவராவர் ; இவ்வுலகில் விளங்குகின்ற புகழை நாட்டிய மகிழ்வோடு நீண்ட வானுலகத்திற்கும் மேற்செல்வார்கள் .

குறிப்புரை :

` ஆகம் இடத்தவள் ` என மாற்றி , ஆக்கம் வருவித்து உரைக்க . ` மற்று ` அசைநிலை . ` புகழால் ` என்புழி ஆல் உருபு , ஒடு உருபின் பொருளில் வந்தது . ` புகழ் ` ஆகுபெயர் . வானம் - தேவர் உலகு . வீட்டுலகம் , ` வானோர்க்கு உயர்ந்த உலகம் ` ( குறள் -346 ) எனப்படுதல் காண்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

உற்றான்நமக் குயரும்மதிச்
சடையான்புலன் ஐந்தும்
செற்றார்திரு மேனிப்பெரு
மான்ஊர்திருச் சுழியல்
பெற்றான்இனி துறையத்திறம்
பாமைத்திரு நாமம்
கற்றாரவர் கதியுட்செல்வர்
ஏத்தும்மது கடனே

பொழிப்புரை :

நமக்கு உறவாயுள்ளவனும் , மேன்மை தங்கிய சந்திரனை யணிந்த சடையை யுடையவனும் , ஐம்புலன்களையும் வென்று பொருந்திய திருமேனியையுடைய பெருமானும் ஆகிய இறைவனது ஊர் திருச்சுழியலே . அதன்கண் நீங்காது இனிது எழுந் தருளியிருக்கப்பெற்ற அவனது திருநாமத்தைப் பயின்றவர் , உயர் கதியிற் செல்வர் ; ஆதலின் உலகீர் , அவனது திருப்பெயரைப் போற்று மின் ; அதுவே உங்கட்குக் கடமையாவது .

குறிப்புரை :

சந்திரனுக்கு மேன்மை , மறுவின்றி நிற்றல் , எனவே , பிறை என்றதாயிற்று . ` மாயையில் தோன்றிய உடம்பன்று , அருட்டிரு மேனி ` என்பார் , ` புலன் ஐந்தும் செற்று ஆர் திருமேனி ` என்று அருளிச் செய்தார் . சிவபிரானது திருமேனியை , ` பிறவா யாக்கை ` ( சிலப்பதி காரம் . இந்திரவிழ , அடி . 169 ) எனப் பிறருங் குறித்தல் அறியத்தக்கது . ` சுழியல் ` என்றதன்பின் , ` அதன்கண் ` என்று எடுத்துக்கொண்டு , ` திறம்பாமை இனிது உறையப் பெற்றான் ` என மாற்றியுரைக்க . ` உறைய ` என்ற செயவெனெச்சம் தொழிற் பெயர்ப் பொருளையும் , ` பெற்றான் ` என்றது , ` உடையான் ` என்னும் பொருளையும் தந்தன . ` ஏத்தும் ` என்றது , ` ஏத்துமின் ` என்பதன் மரூஉ . இவ்வாறன்றி , ` செய்யும் ` என்னும் வாய்பாட்டு வினைச்சொல் , ஏவற் பன்மைப் பொருளைத் தருதல் பிற்கால வழக்கு என்பர் பலர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மலந்தாங்கிய பாசப்பிறப்
பறுப்பீர்துறைக் கங்கைச்
சலந்தாங்கிய முடியான்அமர்ந்
திடமாந்திருச் சுழியல்
நிலந்தாங்கிய மலராற்கொழும்
புகையால்நினைந் தேத்தும்
தலந்தாங்கிய புகழான்மிகு
தவமாம்சது ராமே

பொழிப்புரை :

மாசினை உடைய பாசத்தால் வருகின்ற பிறப்பினை அறுக்க விரும்புகின்றவர்களே , துறைகளை உடையதாதற்கு உரிய கங்கையாகிய நீரினைத் தாங்கியுள்ள முடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடமாகிய திருச்சுழியலை , நிலம் சுமந்து நிற்கின்ற மலர்களாலும் , செழுமையான நறும்புகைகளாலும் வழி பட்டு , நினைந்து துதிமின்கள் ; உமக்கு இவ்வுலகம் சுமக்கத்தக்க புக ழோடு கூடிய மிக்க தவம் உளதாகும் திறல் உளதாகும் .

குறிப்புரை :

` மலந் தாங்கிய பாசம் ` என்றது , ஆணவத்தை . மாசாவது , அறிவை மூடுதல் . அதனால் அஃது ` இருள் ` என்னும் பெயரைப் பெற்றது . அது காரணமாக வினையும் , வினை காரணமாக உடம்பும் வருதலின் , ` மலந்தாங்கிய பாசப் பிறப்பு ` என்று அருளினார் . ` அமர்ந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . மலரை , ` நிலம் சுமந்தது ` என்றார் , அதனாற் கொள்ளப்படும் பயன் , சிவபிரானுக்கு அணிவித்தலே என்றற்கு . ` புகையால் ` என்பதன் பின் , ` வழிபட்டு ` என்பது வருவிக்க . முப்பொறிகளாலும் தொண்டுபடுதலை அருளிய வாறு காண்க . ` தலம் தாங்கிய புகழ் ` என்றது , ` அதனால் எளிதிற் சுமக்கலாகாத மிகுபுகழ் ` என்றதாம் . ` புகழான் ` என்ற ஆனுருபு , உடனிகழ்ச்சிக்கண் வந்தது . ` புகழாம் ` என்பதும் பாடம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

சைவத்தசெவ் வுருவன்திரு
நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்திருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை
தீர்தல்லெளி தன்றே

பொழிப்புரை :

சிவாகமங்களிற் சொல்லப்பட்ட வேடத்தையுடைய சிவந்த திருமேனியை யுடையவனாய்த் திருநீற்றை யணிபவனும் , இடிபோலும் குரலையுடைய இடபத்தை யுடையவனும் , கையின்கண் வைத்த ஒரு வில்லாலே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும் , தெய்வத் தன்மையையுடைய தவத்தோர் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவனது திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து , அவனது திருவடியை நினைபவரது வினைகள் நீங்குதல் எளிது .

குறிப்புரை :

சைவம் - சிவாகமம் . ` உருவன் ` முற்றெ ச்சம் . ` உருமேறு ` உவமத் தொகை . ` கைவைத்த ` என்பதன் ஈற்று அகரம் , தொகுத்தல் . ` தெய்வ தவர் ` எனப் பிரிக்க . ` தெய்வத்தவர் ` என ஒரு சொல்லாகக் கொண்டு , ` தேவர் ` என உரைத்தலுமாம் . மெய் - உடம்பு ; அஃது அதனுள் இருக்கும் நெஞ்சிற்கு ஆகுபெயராயிற்று . நெஞ்சு உடம்பினுள் உளதாகக் கூறப்படுதலை , ` நெஞ்சந்தன்னுள் நிலவாத புலாலுடம்பே புகுந்து நின்ற - கற்பகமே `, ` ஊனின் உள்ளமே ` ( தி .6 ப .95 பா .4, ப .47 பா .1) என்றாற் போல்வன பற்றியுணர்க . இனி , ` மெய்யாக உணர்ந்து ` என்றலுமாம் . ` அன்றே ` அசைநிலை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

பூவேந்திய பீடத்தவன்
றானும்மடல் அரியும்
கோவேந்திய வினயத்தொடு
குறுகப்புக லறியார்
சேவேந்திய கொடியானவன்
உறையுந்திருச் சுழியல்
மாவேந்திய கரத்தான்எம
சிரத்தான்றன தடியே

பொழிப்புரை :

எருதினை , ஏந்துகின்ற கொடியாகப் பெற்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் , மானை ஏந்திய கையை யுடையவனும் , எங்கள் தலைகளின்மேல் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளை , தலைமை அமைந்த வணக்கத்தோடு அணுகச்சென்று அடைதலை , மலராகிய , உயர்ந்த இருக்கையில் உள்ளவனாகிய பிரமனும் , வலிமையுடைய திருமாலும் ஆகிய இவர்தாமும் அறியமாட்டார் .

குறிப்புரை :

` ஆதலின் , அது வல்லேமாகிய யாம் தவமுடையேம் ` என்றவாறு . ` அம் மாவேந்திய கரத்தான் எம சிரத்தான் ` எனச் சுட்டு வருவித்து உரைக்க . தம்போலும் அடியவர் பலரையும் உளப்படுத்து , ` எம சிரத்தான் ` என்று அருளினார் . தலைமை - தலையாயதாந் தன்மை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

கொண்டாடுதல் புரியாவரு
தக்கன்பெரு வேள்வி
செண்டாடுதல் புரிந்தான்திருச்
சுழியற்பெரு மானைக்
குண்டாடிய சமணாதர்கள்
குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது
வானால்வரு விதியே

பொழிப்புரை :

தன்னையே மதித்துக் கொள்ளுதலைச் செய்துநின்ற தக்கனது பெருவேள்வியை , பந்தாடுதல்போலத் தகர்த்து வீசி விளையாடினவனாகிய திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை , மூர்க்கத்தன்மை பேசுகின்ற சமணராகிய அறிவிலிகளும் , குடையை உடையவராகிய புத்தர்களும் அறியாமல் , வலிமை பொருந்திய வாதுசெய்து , அதன் வண்ணமே யாவார்களாயின் , அஃது அவர் வினைப்பயனேயாகும் .

குறிப்புரை :

கொண்டாடியது , தன்னையே என்க . சாக்கியரை , ` குடை உடையவர் ` என்றது , சமணர் வெயிலில் நிற்றலும் , சுடுபாறைமேற் கிடத்தலும் செய்வர் என்பதை விளக்கிற்று . ` அது ` என்றது , வாதத்தை . விதி - அறநெறி . அஃது , ஆகுபெயராய் , அதனால் வரும் வினையைக் குறிக்கும் . ஈண்டு , வினையின் பயனை , ` வினை ` என்றருளினார் என்க . ` வரு மதியே ` என்பதும் பாடம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

நீருர்தரு நிமலன்திரு
மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம்
நெரித்தான்திருச் சுழியல்
பேரூரென வுறைவானடிப்
பெயர்நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலைபத்
தறிவார்துய ரிலரே

பொழிப்புரை :

அருவிகள் பாய்கின்ற இறைவனது திருமலையில் எதிரொலி உண்டாக , அதன் அருகில் தனது ஊர்தியைச் செலுத்திய இராவணனது தலையை நெரித்தவனும் , திருச்சுழியலைத் தனது பெரிய ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனது திருவடிப் பெயரைப் புனைந்தவனும் , திருநாவலூரார்க்குத் தலை வனும் ஆகிய நம்பியாரூரனது இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் உணர்கின்றவர் , துன்பம் யாதும் இலராவர் .

குறிப்புரை :

` நிமலன் மலை ` என்றார் , மலமுடைய அவன் அணுகலாகாமையை நினையாமை பற்றி . ` அயல் அருகு ` ஒரு பொருட் பன்மொழி . இறைவனது பெயரை அவனது திருவடிப் பெயராக அருளினார் , தம் பணிவு தோன்ற . ` அடி ` என்றதன்பின் , பகர ஒற்று மிகாமைப் பாடம் ஓதுவாரும் உளர் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே , என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை , அடியேன் , இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு , அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

`அந்தி ` என்றது இரவையும் , ` நண்பகல் ` என்றது பகலையும் குறிக்கும் குறிப்பு மொழிகளாய் நின்றன . பதம் - சொல் ; அஃது ஆகுபெயராய் , எழுத்தினை உணர்த்திற்று , ` சகரக் கிளவி `, ` வகரக் கிளவி ` ( தொல் . எழுத்து . 62, 81 .) என்றவற்றில் , ` கிளவி ` என்றதுபோல . இனி , ` திருவைந்தெழுத்தில் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும் ` என்றலும் மரபாதல் பற்றி அவற்றை , ` பதம் ` என்று அருளினார் என்றலுமாம் , ` சொல்லிப் பராமரியா ` என்றதனை , ` நடந்து வந்தான் , ஓடி வந்தான் ` என்பன போலக் கொள்க . பராமரித்தல் - ஆராய்தல் . ` வல்வினை ` என்றது , எடுத்த உடம்பிற்குச் செயலறுதியையும் , இறுதியையும் பயப்பவற்றை . சிந்தையால் ` எனவும் , திருவாரூரினுள் எனவும் , உருபும் , உருபின் பொருள்படவரும் இடைச் சொல்லும் விரிக்க . ஏழாவதன் தொகைக் கண்ணும் , வருமொழி வினையாயவிடத்துச் சிறுபான்மை வல்லினம் மிகாமையறிக . இத் திருப்பதிகத்தினுள் , ` என்றுகொல் ` என்பவற்றில் கொல் ஐயப்பொருட்டு . ஐயம் அவா அடியாக நிகழ்ந்தது என்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து
தென்றன் மணங்கமழுந் தென்திரு வாரூர்புக்
கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

செய்யப்பட்டு நிற்கின்ற வினைகளது கொடுமை களெல்லாம் நீங்குமாறு , காலை மாலை இருபொழுதினும் , நெருங்கிய மலர்களைத் தூவி , சுற்றிலும் வலமாக வந்து எனது மனம் குளிர்தற்கு , தென்றற் காற்று நறுமணங் கமழ வருகின்ற அழகிய திருவாரூரினுட் சென்று எந்தை பிரானாரை , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந் நாளோ !

குறிப்புரை :

` எந்தை பிரானாரை ` என்பது , மேலைத் திருப் பாடலினின்றும் வந்து இயைந்தது ,

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

முன்னை முதற்பிறவி மூதறி யாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச்
செந்நெல் வயற்கழனித் தென்திரு வாரூர்புக்
கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொ லெய்துவதே

பொழிப்புரை :

தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில் , பெரிய அறியாமை காரணமாக , வருங்காலத்திற் பெற நினைத்த நினைவு களும் , அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு , செந்நெற் களை விளைவிக்கின்ற , நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய , அழகிய திருவாரூரினுட் சென்று , எனது உயிருக்கு இனிய அமுதம் போல்பவனை , யான் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` முன்னை முதல் ` என்றது , ` அனாதி தொட்டு ` என்றவாறு , ` வருகின்ற , பெற ` என்பன , சொல்லெச்சங்கள் . ` நினைவு ` என்றது , அவாவை , அவாவே பிறவிக்கு வித்தாகலின் , அதனால் உளதாவது துன்பமாயிற்று , இனி , ` முன்னை முதற் பிறவி ` முதலாக அருளியவை , சுவாமிகள் , தமக்குக் கயிலையில் நிகழ்ந்தவற்றை நினைந்து அருளியது என்றலுமாம் . ` செந்நெல் வயற்கழனி ` என்ற தனை , ` இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் ` ( தொல் . சொல் . 159 ) என்றாற் போலக் கொள்க . இன்னமுது , உருவகம் ,

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித் தென்திரு வாரூர்புக்
கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

நல்ல எண்ணம் நீங்குதலால் , அரிய உயிர்களை அவை உடம்போடு கூடி வாழும் நாட்களிலே கொல்லுதற்கு எண்ணு கின்ற எண்ணங்களும் , மற்றும் பல குற்றங்களும் அடியோடு அகன் றொழியுமாறு , உயர்ந்த நெல்விளைகின்ற வயல்களையுடைய அழகிய திருவாரூரின் எல்லையை மிதித்து , அந்நகரினுட் சென்று , எனது உயிர்க்கு இனிய அமுதம் போல்பவனாகிய இறைவனை , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

உணவாய்க் கழிந்தொழியாது , செல்வமாய்ச் சிறந்து நிற்கும் நெல்லென்பார் ,` செல்வம் ` என்றும் , திருவாரூரை அணுக விரும்பும் விருப்ப மிகுதி தோன்ற , ` எல்லை மிதித்து ` என்றும் அருளி னார் , ` என்னுயிர்க் கின்னமுதை ` என மேலைத் திருப்பாடலில் ஓதப் பட்டது , இத் திருப்பாடலினும் வந்து இயைந்தது ,

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய்
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்
கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

நஞ்சு போலும் நிறத்தையுடைய மாமரத்தைக் கடலின் நடுவண் அழித்தவனாகிய முருகனுக்குத் தந்தையும் , எல்லா வற்றினும் முன்னதாக , சுடப்பட்ட சாம்பலை உடம்பின்கண் பூசிய ஒளிவடிவினனும் , கொல்லும் தன்மை வாய்ந்த புலியினது தோலாகிய உடையை உடுத்தவனும் , உலகிற்கு முதல்வனும் , வலிய தலை ஓட்டின் கண் , மகளிர் இடுகின்ற பிச்சையை ஏற்பவனும் ஆகிய எம் பெரு மானை , திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` நஞ்சு போலும் நிறம் ` சூரபன்மனுடையது . ` முன் அணிந்தவன் ` என்னாது , ` முன் காய்ந்தவன் ` என , முன்னர் இயைத் துரைப்பினுமாம் . ` அடு புலி `, அடையடுத்த ஆகுபெயர் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம்
வாழுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்
ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்
கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

பல உயிர்களும் வாழ்கின்ற நிலமும் , தாழ வீழும் நீரும் , ஒளியையுடைய தீயும் , யாண்டும் இயங்கும் காற்றும் , உயர்ந் துள்ள ஆகாயமும் , வெவ்விய கதிர்களை யுடையோனாகிய பகலவ னும் , வளவிய தமிழில் வல்லவர்கள் வகுத்த ஏழிசையாகிய ஏழுநரம் பின் ஓசையும் என்னும் இவை எல்லாமாய் நிற்பவனும் , ஏழுலகமாகிய இவைகளைத் தன் வழிப் படுத்து ஆள்பவனும் ஆகிய எம் பெரு மானை , திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` சூழ் , ஒளி , தாழ் , வாழ் , உயர் ` என்னும் அடை மொழிகள் , கொண்டு கூட்டுவகையான் நில முதலிய ஐந்தனோடும் ஏற்ற பெற்றியின் இயைத்துரைக்குமாறு அருளிச் செய்யப்பட்டன . இஃது அறியாமையின் , ` வாழுயர் ` என்பதனை , ` வானுயர் ` எனப் பாடம் ஓதினார் ; அது பாடம் ஆகாமை சொல்லவேண்டா . குரல் முதலிய ஏழிசைகளும் , இசைத் தமிழ் வல்லார் வரையறுத்த வரையறை யினவாகலானும் , யாழின் நரம்புகள் அவ்வரையறையின் வண்ணமே அமைந்து நின்று அன்ன ஓசையைத் தருமாகலானும் , ` வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசை ஏழ் நரம்பின் ஓ? u2970?` என்று அருளினார் , இனி , ` ஏழி? u2970?` என்றது , ஆகுபெயரான் . அதனையுடைய பாடலைக் குறித்தது எனினுமாம் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமரர்
செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்புக்
கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

இளங்கொம்புபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது கூற்றினை யுடையவனும் , திரு நீறாகிய நறுமணப் பூச்சினை அணிந்தவனும் , எல்லா உயிர்கட்கும் சேமநிதிபோல் பவனும் தன்னோடு ஒப்புமையுடைய தேவர்கட்குச் செம்பொன்னும் , நவமணியும் போல்பவனும் எனக்கு உரிய பொன்னும் மணியுமாய் இருப்பவனும் ஆகிய எம் பெருமானை , அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

வம்பு - வாசனை ` நீறணிந்த வம்பனை ` என்றா ரேனும் , ` நீற்று வம்பு அணிந்தவனை ` என்றலே திருவுள்ளம் என்க . மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர் ; தலைகல னாக உண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர் ; விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் ; அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல்நஞ்சம் உண்ட அவரே . ( தி .4 ப .8 பா .9) பாந்தள்பூ ணாரம் ; பரிகலங் கபாலம் ; பட்டவர்த் தனம்எருது ; அன்பர் வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை ; மலைமகள் மகிழ்பெருந் தேவி ; சாந்தமே திருநீறு ; அருமறை கீதம் ; சடைமுடி ; சாட்டியக் குடியார் ஏந்தெழி லிதயம் கோயில் ; மாளிகைஏழ் இருக்கையுள் இருந்தஈ சனுக்கே . ( தி . 9 ப .15 பா .2) ` தவளச் - சாம்பலம் பொடி சாந்தெனத் தைவந்து தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த வெள்ளேற் றுழவன் ` ( தி .11 ப .11 பா .10) எனப் பலவிடத்தும் இறைவற்குத் திருநீறு நறுமணப் பூச்சாக அருளிச் செய்யப்படுதல் காண்க . தேவர்களைச் சிவனோடு ஒப்புமை உடையவர்களாக அருளியது அவனைப் பொது நீக்கியுணர மாட்டாதார் கருத்துப் பற்றியாம் . அவர் அங்ஙனங் கருதுதலை , தேவரின் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர் மூவராய் நின்ற தோரார் ; முதலுருப் பாதி மாதர் ஆவதும் உணரார் ; ஆதி அரியயற் கரிய ஒண்ணா மேவரு நிலையும் ஓரார் ; அவனுரு விளைவும் ஓரார் . - சிவஞானசித்தி . சூ .1.49 என்பதனான் அறிக . ` ஒப்பமராச் செம்பொனை ` என்னும் பாடம் சிறவாமை யறிக .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

ஆறணி நீள்முடிமேல் ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித் தென்திரு வாரூர்புக்
கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

கங்கையைத் தாங்கிய நீண்ட சடையின் மேல் , பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைச் சூடுகின்றவனும் பருந்து சூழும் வெள்ளிய தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும் , நஞ்சினையுடைய பாம்பை அணிபவனும் ஆகிய இடபக் கொடியைக் கொண்ட எம் பெரு மானை , சேற்றைக் கொண்ட குளிர்ந்த கழனிகளையுடைய அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` சூடி , கொள் ` என்பவற்றிற்குக் கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` நச்சரவு , மேனியில் உள்ளனவாதலின் ` அதனை ஓதியது மிகையாகாமை யறிக .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்
திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

மண்ணுலகத்தை உண்டு உமிழ்ந்த திருமாலும் , சிறந்த தாமரை மலர்மேல் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அணுகுதற்கரிய இறைவனை , இறைவியோடும் மறவாது நினைக்கு மாறும் கண்டு கண் குளிருமாறும் , திண்ணிய , பெரிய மதில் சூழ்ந்த , அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` நீர் ` என்னும் பூதத்திற்குத் தலைவன் மாயோன் என்பது பற்றியும் , ` நிலம் ` என்னும் பூதம் நீரில் ஒடுங்கி நீரில் தோன்றுவது என்பது பற்றியும் , மாயோன் , ` மண்ணினை உண்டு உமிழ்ந்தவன் ` எனக் கூறப்படுவன் என்க . ` எண்ணிய ` என்றது . ` செய்யிய ` என்னும் வினையெச்சம் , ` எண்ணிய , கண்குளிர ` என்னும் வினையெச்சங்கள் , வினைச் செவ்வெண்ணாய் நின்றன .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொன்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே

பொழிப்புரை :

மின்னல்போலும் , நீண்ட சிவந்த சடையையுடைய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருவாரூரை , திரு நாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பி யாரூரன் , நல்ல , நெடிய பேரன்பினால் , பல , சிறந்த சொற்களாகிய மலர்களால் அணிசெய்து சாத்திய பாமாலைகள் பத்தினையும் அங்ஙனமே சாத்த வல்லவர்கள் புண்ணியம் உடையவர்களாய் , பொன்னை முதற் கருவியாக உடைய விண்ணுலகத்தை அடைவார்கள் .

குறிப்புரை :

காதன்மை இறைவனிடத்ததாயினும், இங்கு அவனைத் திருவாரூரிற் சென்று காண்டலாகிய அதன்கண்ணதாகலின், ஆரூரைப் பாடியதாக அருளினார், `கொண்டு` என்றதன் பின், `அணிந்து` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `புண்ணியர்` என்றதனை, முற்றெச்சமாக்கி, முன்னே கூட்டுக. பெருமித மொழியை, `நெடு மொழி` என்றல்போல. இங்கு, இறைவன் வாழ்த்தாகிய பெரு மொழியை, `நெடுஞ்சொல்` என்று அருளினார்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும்
சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்
புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள்
பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமரும்
கொண்ட லெனத்திகழுங் கண்டமு மெண்டோளுங்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

அடியேன் , மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவத்தினனாகிய பெருமானை , அவனது , அடியவர்கள் வணங்கு கின்ற திருவடியையும் , ஒளியையுடைய இளைய பிறைச்சூட்டினையும் , சூதாடு கருவிபோலும் , மெல்லிய தனங்களையுடைய உமையவளது கூறாய் விளங்கும் இடப்பாகத்தையும் , ஒளிவிடுகின்ற செந்தாமரை மலர்போலும் திருமேனியையும் , தேவர்கள் ஓலமிட , அதற்கு இரங்கிக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட நினைவுக்குறி நீங்காதிருக்கின்ற , மேகம்போல விளங்குகின்ற கண்டத்தையும் , எட்டுத்தோள்களையும் , அழகிய நல்ல சடையின்மேல் உள்ள அணிகளையும் கண்குளிரக் கண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

அடித்தொழல் , அடியின்கண் தொழுதல் என்க . ` அடித் தொழலும் ` என்று அருளினாரேனும் , ` தொழுதலையுடைய அடியும் ` என , ஏனையவற்றோடு இயைய உரைத்தலே திருவுள்ளமாதல் அறிக . ` சூது `, ` வண்ணம் ` ஆகுபெயர்கள் . ஆகி வருதல் , மிகுந்து வருதல் . அதற்கு , ` ஒளி ` என்னும் வினைமுதல் வருவிக்க . ` வரும் ` என்றது , ` வருவதுபோலும் ` என்னும் பொருட்டு . சடைமேல் உள்ள அணிகள் , பாம்பு , வெண்டலை முதலியன . கார் - நீர் ; ` மிக்க ` என்றது இசை யெச்சம் . ` கொல் ` என்றதற்கு , மேலைத் திருப்பதிகத்துள் உரைத்த வாறே உரைக்க . ஓகாரம் , இரக்கம் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

கூத லிடுஞ்சடையும் கோளர வும்விரவுங்
கொக்கிற குங்குளிர்மா மத்தமும் ஒத்துனதாள்
ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந்
துள்ளுரு காவிரசும் மோசையைப் பாடலும்நீ
ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன்
அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்
காத லுறத்தொழுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த ` திருக்கானப் பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவுடைய தலைவனை , அடியேன் , என்பால் உள்ள துன்பங்களெல்லாம் கெடு மாறு , அடியவர் உனது பெருமைகளை நினைந்து மனம் உருகி , செறிந்த இசையைப் பாடுதலும் , அவர் நீயேயாகும் பேற்றைப் பெறுதலை உணர்ந்து , அவரோடு அன்பு மிகுந்து , உனது திருவடியை மனம் பொருந்திப் பாடுமாற்றைக் கற்று , உனது குளிர்மிகுந்த சடை முடியையும் , அதன்கண் பொருந்திய கொடிய பாம்பையும் , கொக் கிறகையும் , குளிர்ந்த ஊமத்த மலரையும் , அன்பு மேலும் மேலும் பெருகுமாறு , அகங்கையிற் சிறந்த மலர்களைக் கொண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` விரவும் ` என்றதனை , ` கோளரவும் ` என்றதற்கு முன்னே வைத்துரைக்க . ` ஓதலுணர்ந்து ` என்றதில் உணர்தல் , அடியாரிடமிருந்து கற்றல் . ` பெருமைக்கு ` என்றது , உருபு மயக்கம் . ` நீ ஆதல் ` என்றது , ஆன்மாச் சிவமாம் நிலையை . இனிய இசையைப் பாடி அடியவர் சிவமாந் தன்மையைப் பெறுகின்றார் என்க . உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள் . - திருக்குறள் - 1106 என்றாற்போல்வதே இறையனுபவமும் ஆதலின் , தொழுந்தோறும் உயிர் இன்புற , அன்பு பெருகுவதால் அறிக . கனவிற் கண்ட காளை வடி வினனை , நனவிற் படர்க்கையாக அருளிச்செய்து காதலுற்றுச் செல் கின்றவர் பெரிதும் முறுகி எழுந்த காதலால் , இடையே அவனை எதிர் பெய்துகொண்டு , முன்னிலையாக இதன்கண் அருளிச் செய்தார் என்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை
நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்
தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்
தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசறு சோதியனை
மாருத மும்மனலும் மண்டல மும்மாய
கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

நான் உடைமையாகப் பெற்றுள்ள செல்வம்போல எனக்கு நன்மையைத் தருகின்ற மேலானவனும் , தன்னையே வீடு பேறாக உணர்பவரது சொல்நிலையில் நிறைந்து நிற்கும் மங்கல குணத்தினனும் , தேனிடத்தும் , அதன் தெளிவிடத்தும் உள்ள சுவை போல்பவனும் , தேவர்களுக்குத் தலைவனும் , பூக்கள் உயர்ந்து தோன்றுகின்ற முடியை உடையவனும் , வானத்தில் உள்ள சிறந்த சந்திரனும் , குற்றம் அற்ற ஒளியையுடைய கதிரவனும் , காற்றும் , தீயும் , நிலமும் ஆகி நிற்பவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவத்தினனாகிய பெருமானை , ` காட்டில் சிறந்த நடனம் ஆடுபவன் ` என்று சொல்லித் துதித்துத் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

சொல் நிலையில் நிறைந்திருத்தல் , அவர்களது உணர்விற்கு அகப்பட்டு விளங்கிச் சொல்லாற் சொல்ல நிற்றலாம் . உணராதார்க்கு உணர வாராமையை , ` அதுபழச் சுவைஎன அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரும் அறியார் ` என்றும் , உணர்ந்தவர்க்கு உணரவருதலை , ` இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு ` என்றும் அருளிச்செய்தவாற்றால் அறிக . ( தி .8 திருவா - திருப்பள்ளி .7) ` அமுது ` என்றது , ` சுவை ` என்னும் அளவாய் நின்றது . ` தெளிவு ` என்றதும் ஆகுபெயரால் , அதன் சுவையையே என்க . ` சோதி ` என்றது , அதனையுடைய கதிரவனை . பூதங்களின் வேறாதல் தோன்ற , மதியையும் கதிரையும் வேறாகவும் , மாருதம் முதலிய வற்றின்பின் , ` ஆய ` என எச்சமாகவும் ஓதினாரேனும் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது . இனி ,` மாருதம் முதலியவை மாய்ந் தொழிந்தகாலைக் கானிடை நடனம் ஆடும் பெருமான் என்று சொல்லித் துதித்து ` என உரைப்பினும் அமையும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

செற்றவர் முப்புரமன் றட்ட சிலைத்தொழிலார்
சேவக முந்நினைவார் பாவக முந்நெறியும்
குற்றமில் தன்னடியார் கூறு மிசைப்பரிசும்
கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்
மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்
கற்றன வும்பரவிக் கைதொழ லென்று கொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப் பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவின னாகிய பெருமானை , அவனது , பகைத்தவரது முப்புரங்களை அன்று அழித்த , வில்தொழில் பொருந்திய வீரத்தையும் தன்னை நினைவாரது நினைவின் வண்ணம் நிற்கும் நிலையையும் , அவர்களை நடத்துகின்ற முறையையும் , குற்றமில்லாத அவனது அடியார்கள் சொல்லுகின்ற புகழின் வகைகளையும் , அரையில் உடுக்கின்ற கோவணமும் , பட்டும் , தோலும் ஆகிய உடைகளையும் , வலிமை விளங்குகின்ற திண்ணிய தோள்களையும் , நீறு செறிந்த மார்பின்கண் , பெருமையையுடைய மலைமகள் தழுவியதனால் உண்டாகிய வடுவினையும் , அடியேன் , புகழ்ந்து பாடக்கற்றன பலவற்றாலும் துதித்துக் கைகூப்பி வணங்குதல் எந்நாளோ !

குறிப்புரை :

பாவகம் - நினைவு ; அது , நினைக்கப்படுகின்ற உருவத்தைக் குறித்தது . ` பட்டு , அதள் ` என்றனவும் உடைகளையே யாதலின் , கோவணத்தோடு ஒருங்கெண்ணப்படுவவாயின . ` நீறுதுதை மார்பிடை ` என மாற்றியுரைக்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

கொல்லை விடைக்குழகுங் கோல நறுஞ்சடையிற்
கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே
முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால்
மோக மிகுத்திலகுங் கூறுசெ யெப்பரிசும்
தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந்
திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்
கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப் பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானது , முல்லை நிலத்திற்கு உரிய விடையினது அழகையும் , அழகிய நல்ல சடையின் கண் கொத்தாய் உள்ள பூக்களையும் , மார்பில் கொன்றை மலரின் மாலையையும் , அதன் அருகே ஒரு பாகத்தில் , முல்லை அரும்பின் தன்மையைக் கொண்ட நகையினையும் , மெல்லிய இயல்பினையும் உடையவளாகிய உமாதேவி , காதலை மிகுதியாகக்கொண்டு விளங்கு கின்ற அப்பகுதி தருகின்ற எல்லாத் தன்மைகளையும் , தில்லை நகரில் உள்ள சபையிற் பொருந்தி நின்று ஆடுகின்ற புகழையுடைய நடனத்தை யும் , கையில் உள்ள வலிய மழு , மிக்க தீ என்னும் இவற்றையும் , அடியவர் சாத்தும் மணிவடத்தின் அழகையும் காண்பது எந்நாளோ !

குறிப்புரை :

` விடைக் கழகும் ` என்பது பாடம் அன்று . ` தொத்து ` என்றது , செயற்கைப் பிணிப்பாகிய மாலையை உணர்த்திற்று ; அதனை , மார்பிலணியும் தாராகக் கொள்க . உமாதேவி விளங்கும் பகுதி தருகின்ற தன்மைகள் . ` தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் ` ( தி .8 திருவா . கோத் -18) என்பதில் அம்மைக்கு உரியனவாகக் கூறப்பட்டவை காட்டும் அழகுகள் . நடனம் எவ்விடத்தும் செய்யப்படினும் , அதற்குச் சிறப் பிடம் தில்லையாதல் பற்றி , ` தில்லை நகர்ப் பொதுவுற்று ஆடிய சீர்நடம் ` என்று அருளினார் . ` கைமி? u2970?` என்றது , தாப்பிசையாய் முன்னும் சென்று இயையும் . ` காளையை ` என்னும் இரண்டனுருபை , ` யானையைக் கோட்டைக் குறைத்தான் ` என்புழி , ` யானையை ` என்பதில் உள்ள இரண்டனுருபு போலக் கொள்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும்
பங்கய மாதனையார் பத்தியு முத்தியளித்
தெண்ணுத லைப்பெருமான் என்றெழு வாரவர்தம்
மேசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி
நண்ணுத லைப்படுமா றெங்ஙன மென்றயலே
நையுறு மென்னைமதித் துய்யும்வ ணம்மருளுங்
கண்ணுத லைக்கனியைக் காண்பது மென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

தாமரை மலரில் உள்ள திருமகளைப் போலும் மகளிரது , யாழை முறைப்படி யமைத்தலைப் பயன்படச் செய்கின்ற பாடலின் சிறப்பையும் , அதன்கண்ணே அவர்கள் நெடிது நிற்றலையும் , அதற்கு ஏதுவாகிய அவர்களது பத்தியையும் , தான் ஒருவனே வீடு பேற்றை அளித்தலால் , அதனை விரும்புவோர் யாவராலும் உள்ளத்து இருத்தப்படுகின்ற முதற்கடவுள் என்று தன்னை நினைந்து துயிலெழுகின்ற மெய்யுணர்வுடையோர் , அதன் பொருட்டு அவன் முன் வாடிநிற்கும் வாட்டத்தினையும் , யாவர்க்கும் இறைவனாகிய என் தந்தையையும் ஒருங்கு காணுதலைப் பொருந்துமாறு எவ்வாறு என்று , சேய்மையில் நின்று வருந்துகின்ற என்னையும் பொருளாக நினைந்து உய்தி பெறும்படி அருள்செய்யும் கண்ணுதற் கடவுளும் , கனிபோல இனிப்பவனும் ஆகிய , மிக்க நீரையுடைய , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெரு மானை அடியேன் காணப்பெறுவதும் எந்நாளோ !

குறிப்புரை :

` பங்கய மாதனையார் ` என்றதனை , முதற்கண் வைத்து உரைக்க . ` ஆர் பாடல் ` என்றது . பிறவினை வினைத்தொகை . ` அளித்து ` என்னும் எச்சம் , செயப்பாட்டு வினையாய் நின்ற ` எண்ணு ` என்றதனோடு முடிந்தது . ` விரவி ` என்றதனை , ` விரவ ` எனத் திரிக்க . மகளிரும் ஆடவரும் ஆகிய அடியவரோடு இறைவனை யும் ஒருங்குகாணுதல் எங்ஙனம் என்று ஏக்கற்றதனை அருளிச் செய்தவாறு . ` நைகிற என்னை ` எனப் பாடம் ஓதுதல் சிறவாமை யறிக . ` காண்பதும் ` என்ற உம்மை சிறப்பு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

மாவை யுரித்ததள்கொண் டங்க மணிந்தவனை
வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை
மூவ ருருத்தனதாம் மூல முதற்கருவை
மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்
பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்
பால்நறு நெய்தயிர்ஐந் தாடு பரம்பரனைக்
காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

யானையை உரித்து அத்தோலைப் போர்வையாகக் கொண்டு , எலும்பை மாலையாக அணிந்தவனும் , வஞ்சனை யுடைய வரது மனத்தின்கண் தனது நெஞ்சினாலும் சிறிதும் அணுகாதவனும் , மும்மூர்த்திகளது உருவமும் தன் உருவமே யாகின்ற முதல்முதற் காரணனும் , ` மூசு ` என்னும் ஒலியுண்டாக உயிர்க்கின்ற பெரிய இடபத்தை நடத்துகின்றவனும் , போலியாகவன்றி உண்மையாகவே தன்னை மனத்துட் பொருந்தப் பற்றுகின்ற அவர்கட்கு அமுதம் போல் பவனும் , பால் , நறுநெய் , தயிர் முதலிய ஐந்திலும் மூழ்குகின்றவனும் , மேலோர்க்கெல்லாம் மேலானவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளி யிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெருமானை , அடியேன் , எனக்குக் காவலனாகிய தலைவனாகக் கிடைக்கப்பெறுவது எந் நாளோ !

குறிப்புரை :

` நெஞ்சால் ` என உருபு விரிக்க . நெஞ்சால் அணுகல் , அணுக நினைத்தல் . சிவபிரான் , மூவர் உருவமும் தன் னுருவமேயாக நிற்றல் , அவர்களைத் தன் உருவினின்றும் தோற்றுவித்தலாம் என்க . அப் பெருமான் தனது வலப்புறத்தினின்றும் அயனையும் , இடப்புறத்தி னின்றும் அரியையும் , இருதயத்தினின்றும் அரனையும் தோற்றுவிப் பவன் என்பது , சிவாகமங்களுட் காணப்படும் . கரு - காரணம் . ஆடைக்கு நூல்போல இடைநிலை முதற்காரணனாகாது , ஆடைக்குப் பஞ்சிபோல முதல்நிலை முதற்காரணன் என்றதற்கு , ` மூல முதற்கரு ` என்று அருளிச்செய்தார் . இதனானே , பரமசிவன் , மூவருள் ஒருவனாய உருத்திரனாகாது , அவரின் மேலானவன் என்பது விளங்கு தல் காண்க . இப்பகுதியை , சிவஞான போத முதற் சூத்திரக் கருத்துரைப் பாடியத்துள் பாடியம் உடையார் எடுத்துக் காட்டி விளக்கினமை அறிக . ` மூசு ` என்றது , ஒலிக்குறிப்பு . எருது நடத்துபவனை , ` பாகன் ` என்றல் , மரபு வழுவமைதி . பாவகம் , நாடகமாதலின் , அதற்கு இதுவே பொருளாதல் அறிக . ` தயிர் ` என்றதன்பின் , ` முதலிய ` என்பது எஞ்சி நின்றது ` எனக்குக் காவலாகிய இறை ` என மாற்றி யுரைக்க . ` இறைவ னாவான் , காப்பவனே ` என விதந்தவாறு , ` பதி ` என்னும் வடசொற்கும் பொருள் இதுவேயாதல் உணர்க . ` எய்துவது ` என்றது . நினைவள வினன்றிப் பொருளால் கிடைக்கப் பெறுதல் என்றவாறு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
சுண்ட தனுக்கிறவா தென்று மிருந்தவனை
ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும்
ஆதியை மேதகுசீ ரோதியை வானவர்தம்
கண்டனை யன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

அடியார்களுக்கு எளிய ஒளியுருவினனும் , வேதத்தை ஓதுபவனும் , அத்தூய வேதத்தின் பொருளாய் உள்ள நீதி வடிவினனும் , நீண்ட கடலில் எழுந்த நஞ்சினை உண்டு , அதனால் இறவாது எக்காலத்தும் இருப்பவனும் , பல கற்பங்களில் உலகத்தைப் படைப்பவனாகிய பிரமனும் , அழகிய திருமாலும் அறிய வொண்ணாத தேவனும் , தேவர்களுக்கு ஞானநூலைச் சொல்லிய முதல்வனும் . தேவர்களது கூற்றில் உள்ளவனும் , தனது மேலான தகுதியையுடைய புகழைப் பலரானும் சொல்லப்படுபவனும் ஆகிய , மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளி யிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெருமானை அடியேன் , அன்போடு சென்று அடையப்பெறுவது எந்நாளோ .

குறிப்புரை :

` இருந்தவன் ` என்றது , ` இருக்கும் தன்மையைப் பெற்ற வன் ` என்றவாறு . இவ்வாறு இயல்பாய் உள்ள தன்மையை , இடையே ஒரு காலத்துப் பெற்றாற்போலக் கூறுதல் , பான்மை வழக்கு , எனவே , ` முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் ` - தொல் - சொல் - 240 என்றது செவ்வன் வழக்கிற்காதலின் , இவ்வாறு இறந்த காலத்தாற் சொல்லப்படுவன . அவ்விலக்கணத்தின் வழுவினவென்றாதல் , வழுவியமைந்தன வென்றாதல் கொள்ளல் கூடாமை யறிக . ` அண்டர் ` என்றது , சிவபெருமானிடம் நேர்நின்றும் , வழிநிலையில் நின்றும் சிவாகமங்களைக் கேட்ட சீவர்களையும் , உருத்திரர்களையும் , பிற தேவர் முதலானவர்களையும் குறிக்கும் . ` ஊழி ` காலவாகு பெயர் ` ஓதியை ` என்றது செயப்பாட்டு வினைப் பெயர் . ` வானவர்தங் கண்டனை ` என்றதனை , ஏனையவற்றோடு இயைய வைத்து உரைக்க . கண்டம் கூறு ; பகுதி . சிவபெருமான் தேவரில் ஒருவன் போலவும் நிற்றலின் , ` வானவர்தம் கண்டன் ` என்று அருளிச் செய்தார் . இனி , கண்டன் - ஒறுப்பவன் எனக் கொண்டு , ` தலைவன் ` எனினுமாம் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

நாதனை நாதமிகுத் தோசைய தானவனை
ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
பற்றுவி டாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை யென்றனையாள் தோழனை நாயகனைத்
தாழ்மக ரக்குழையுந் தோடு மணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

உலகிற்குத் தலைவனும் , நுண்ணிய எழுத்தோசை யும் , பரியதாகிய இசையோசையுமாயும் , ஞானமாகிய விளக்கினது ஒளியாயும் , உடம்பின்கண் உள்ள உயிரும் ! நிலத்தில் வளரும் பயிரு மாயும் நிற்பவனும் , மாதொரு பாகத்தை உடையவனும் . மேலான தகுதியையுடைய , தன் அடியார்களது உள்ளத்தின்மேல் வைத்துள்ள பற்றினைச் சிறிதும் நீங்காதவனும் , குற்றம் இல்லாத கொள்கையை யுடையவனும் , என்னைத் தன் தொண்டினிடத்து ஆளுகின்ற என் தூதனும் , தோழனும் , தலைவனும் ஆகியவனும் , தாழத் தூங்குகின்ற மகரக் குழையையும் தோட்டையும் அணிந்த அழகிய காதினை யுடையவனும் ஆகிய , மிக்க நீரையுடைய , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெரு மானை , நாய்போலும் அடியேன் தலைக்கூடப்பெறுவது எந்நாளோ !.

குறிப்புரை :

` நாதன் ` என்றதிலும் , இரண்டன் உருபு விரிக்க . ` மிகுத்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` பாதனை ` என்பதே பாடம் போலும் ! ` என்றனை ஆள் ` என்பது , ` தூதன் ` என்றது முதலிய மூன்றனோடும் இயையும் . தலைவனாய் இருப்பவனே தூதனாயும் , தோழனாயும் இருக்கும் வியப்பினைப் புலப்படுத்தும் முகத்தால் , அவனது பேரருட்டிறத்தை நினைந்து உருகியவாறு ; அதனை , ` நாயடியேன் ` என்றதனாலும் உணர்க . குழை அணிதல் அப்பனாதலையும் , தோடணிதல் அம்மையாதலையும் குறிக்கும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்
ஒண்பொழில் நாவலர்கோ னாகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே

பொழிப்புரை :

கரும்பும் , இனிய அமுதமும் போல்பவனாகிய , மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெரு மானை , ` எய்துவது என்று கொலோ ` என்று நினைந்து மனம் உளைந்து , உளம் உருகி , அழகிய , புகழ் பொருந்திய , தண்ணிய தமிழால் துதிக்க முயன்ற அழகிய சோலைகளையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இவ்விசைப் பாடல்கள் பத்தினை யும் பாட வல்லவர்கள் , சிவனடியார்க்கு உள்ள இயல்புகள் அனைத்தையும் எய்தி , எல்லாத் திசைகளும் புகழ நெடிது வாழ்ந்து , பின்பு ஒருகால் பிறவி எய்துவாராயினும் , மண்ணுலகிற்குத் தலைவ ராய் வாழ்தல் திண்ணம் .

குறிப்புரை :

` மனத்து அயரா ` என்றதனால் , அங்ஙனம் அயரு மாறு , மேலைத் திருப்பாடல்களினின்றும் வருவித்து உரைக்கப்பட்டது . ` இருப்பவர்களாய் ` என , எச்சமாக்குக . ` வான் ` என்றது , வீட்டுலக மாகிய சிவலோகத்தை . ` இழிந்திடினும் ` என்று அருளியதனால் , அதன்கட் செல்லுதல் பெறப்பட்டது . சிவபுண்ணியங் காரணமாகச் சிவலோகத்திற் சென்றார் . பின்னும் அதனான் ஆண்டே சிவஞானம் இனிது விளங்கப்பெற்றுச் சிவனைப் பெறுதலே பெரும்பான்மையாக , மீண்டும் இவ்வுலகில் வந்து பிறத்தல் சிறுபான்மையாதலின் , ` வானின் இழிந்திடினும் ` என எதிர்மறை உம்மை கொடுத்து அருளிச்செய்தார் . இனி , ` தவஞ்செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து பவஞ்செய்து பற்ற றுப்பா ராகத் - தவஞ்செய்த நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலை ` - சிவஞானபோதம் . சூ .8 அதி .1 உடையராகிய அவரை , ` மண்டல நாயகராய் வாழ்வர் ` என்றது , ` வறுமையாம் சிறுமை ` இன்றியும் , ` வாழ்வெனும் மைய ` லுட் படாதும் ( சிவஞானசித்தி - சூ -2.91 ) எளிதிற் சிவஞானத்தை எய்தி , சீவன் முத்தராய் வாழ்வர் என்றவாறாம் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

வடியுடை மழுவேந்தி
மதகரியுரி போர்த்துப்
பொடியணி திருமேனிப்
புரிகுழ லுமையோடும்
கொடியணி நெடுமாடக்
கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி , மதத்தை யுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு , பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும் , கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , திருநீற்றை யணிந்த பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது , குறிப்பெச்சம் . ` வடிவுடை ` என்பது பாடமாகாமை அறிந்துகொள்க . ` ஏந்தி , போர்த்து ` என்ற வினையெச்சங்கள் , ` கூடலையாற்றூரில் `, என்புழி எஞ்சிநின்ற , ` உறையும் ` என்பதனோடு முடியும் . ` திருமேனி அடிகள் ` எனக் கூட்டுக . ` வழிபோந்த ` என , ஏழாவதன் தொகைக்கண் வல்லினம் இயல்பாயிற்று . ` அதிசயம் ` என்றது , காரிய வாகுபெயராய் , அதனைத்தரும் செயலை உணர்த்தி நிற்றலின் , ` போந்த ` என்ற பெயரெச்சம் , தொழிற்பெயர் கொண்டது என்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

வையக முழுதுண்ட
மாலொடு நான்முகனும்
பையிள அரவல்குற்
பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக்
கூடலை யாற்றூரில்
ஐயன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் . பிரம தேவனோடும் , அரவப் படம்போலும் அல்குலையுடைய , இளைய , பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி , கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன் , இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

` திருமால் முதலிய மூவரோடும் உடனாகி ` என ஒரு படித்தாகவே அருளிச்செய்தாராயினும் , திருமாலும் பிரமனும் பணிந்து நிற்பவராயும் , உமை இறைவரோடு ஒப்ப அருகு வீற்றிருப்பவளாயும் இருப்பர் என்பது பகுத்துணர்ந்து கொள்ளப்படும் என்க . இனி , திருமாலையும் , பிரமனையும் தனது திருமேனியிடத்துக்கொண்டு நிற்றலையே , ஈண்டு , ` உடனாகி ,` என்று அருளினார் எனக் கொள்ளு தலுமாம் . ` நான்முகன் ` என்பதிலும் ஒடுவுருபு விரிக்க . ` அரவப்பை அல்குல் இளம் பாவை ` என , மாறிக் கூட்டியுரைக்க . ` உடன் ` என்றதன்பின் , ` ஆகி ` என்பது , எஞ்சிநின்றது . அவ் வினையெச்சம் , மேலைத் திருப்பாடலில் உள்ள வினையெச்சங்கள் முடிந்தவாறே முடியும் . இவை வருகின்ற திருப்பாடல்களினும் ஒக்கும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

ஊர்தொறும் வெண்டலைகொண்
டுண்பலி யிடும்என்று
வார்தரு மென்முலையாள்
மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக்
கூடலை யாற்றூரில்
ஆர்வன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

ஊர்தோறும் சென்று , வெள்ளிய தலையோட்டை ஏந்தி , ` பிச்சை இடுமின் ` என்று இரந்துண்டு . கச்சணிந்த , மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய் , கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக் கொண்டு , திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , பேரன்புடையனாகிய பெருமான் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

` சென்று , இரந்து ` என்பன சொல்லெச்சங்கள் . ` இரந்து ` என்பது , தன் காரியத்தையும் உடன் உணர நின்றது , ` மங்கையொடும் ` என்ற உம்மை சிறப்பு . ` இரந்துண்ணும் வாழ்க்கையை யுடையவன் , மங்கையொருத்தியை மணந்துகொண்டு , இல்வாழ்க்கையைக் கொண் டிருக்கின்றான் ` என்பது நயம் . அருளுடையனாகிய இறைவனை , பான்மை வழக்கால் , ` அன்பன் ` என்றலும் அமையும் என்னும் திரு வுள்ளத்தால் , ` ஆர்வன் ` என்று அருளிச்செய்தார் . ஆர்வம் - பேரன்பு . இனி , ` ஆர்வத்தால் அடையப்படுபவன் ` என்றும் , ` உயிர்களால் அனுபவிக்கப்படுபவன் ` என்றும் உரைப்பினும் அமையும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

சந்தண வும்புனலுந்
தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள்
பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற , நீண்ட சடைமுடியையுடையவனாய் , பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய , பாவைபோலும் உமையோடும் உடனாகி , பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

` புனலும் ` என்ற உம்மை எச்சத்தொடு சிறப்பு . ` ஏனையபோலத் தங்குதற்றன்மை இல்லாத நீரையும் தங்கியிருக்கச் செய்கின்ற சடை என , அவனது ஆற்றலை வியந்தருளிச்செய்தவாறு . ` நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை ` ( தி .6 ப .43 பா .1) என்று , திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்தலுங் காண்க . கருணைக்கு அழகாவது , பெரியராயினார்க்கு , அப்பெருமையைச் சிறக்கச் செய்தல் . ` சந்தம் ` என்பது , கடைக்குறைந்து நின்றது .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

வேதியர் விண்ணவரும்
மண்ணவ ரும்தொழநற்
சோதிய துருவாகிச்
சுரிகுழ லுமையோடும்
கோதிய வண்டறையுங்
கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

அந்தணரும் , தேவரும் , மக்களும் வணங்கி நிற்க , நல்ல ஒளியுருவமாய் , சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் , பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

ஒளியுருவம் , இலிங்க வடிவம் . ` வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர் ` - சிவஞானசித்தி - சூ .2.92 ஆதலின் , ` விண்ணவரும் தொழ ` என்று அருளினார் . வேதியர் மண்ணகத் தேவராதலின் , அவரை வேறெடுத்து விண்ணவர்க்கு முன்னே வைத்து அருளிச் செய்தார் . அவர் உண்மையில் மண்ணகத் தேவராவது , சிவபத்தியுடையராய வழியே என்பது ஈண்டு இனிது விளங்கும் . இவரை , ` செம்மை வேதியர் ` என்று அருளிச் செய்வார் , திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ( தி .3 ப .22 பா .2).

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

வித்தக வீணையொடும்
வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல்
மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அத்தன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

தான் வல்லதாகிய வீணையோடும் , வெள்ளிய முப்புரி நூலை அணிந்து , முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி , பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளி யிருக்கின்ற எந்தை , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்த வாறு !

குறிப்புரை :

` வீணையொடும் , பூண்டு ` என்ற இரண்டும் , மேலைத் திருப்பாடலிற்போலவே , ` உறைகின்ற ` என்பதனோடு முடிதலின் , ` வினையொடும் ` என்றதனை , ` கைப்பொருளொடும் வந்தான் ` என்பதுபோலக் கொள்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

மழைநுழை மதியமொடு
வாளர வுஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல்
ஏந்திழை யாளோடும்
குழையணி திகழ்சோலைக்
கூடலை யாற்றூரில்
அழகன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும் , கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து , நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும் , தாங்கிய அணிகலங் களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி , தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந் தருளியிருக்கின்ற அழகன் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

` சடைமேல் ` என்பதன்பின் , ` வைத்து ` என்பது , எஞ்சிநின்றது . ` மழை நுழை மதியம் ` என்றது அதனது இனிய பண்பினையும் ` வாளரவம் ` என்றது அதனது கடிய பண்பினையும் எடுத்தோதி , அவ்விரண்டனையும் உடங்கியைந்து வாழவைத்தான் என வியந்தருளியவாறு . ` இழை நுழை துகிலல்குல் ` என்றது , தான் தோலை உடையாகக் கொள்ளுதலையும் , ` ஏந்திழையாள் ` என்றது , தான் பாம்பையே அணிகலங்களாக அணிதலையும் குறிப்பினால் விளக்கி , நகைதோற்றுவித்தன .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

மறைமுதல் வானவரும்
மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும்
பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங்
கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும் , அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும் , பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும் , பூதப் படையோடும் , திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு !

குறிப்புரை :

முதன்மையை , ` முதல் ` என்றே அருளினார் . பொருள்கள் பலவாகலின் அவற்றது முதன்மைகளும் பலவாயின . இம் முதன்மைகளையுடைய தேவரை , ` அதிதெய்வம் ` என்ப . முதன்மைத் தேவர் பொருள்தோறும் உண்மையை , தொல்காப்பியத்து , ` கால முலகம் ` என்பது முதலிய மூன்று சூத்திரங்களானும் உணர்க ( சொல் -57,58,59 ). ` பேய்க்கணம் ` என்றது , உலகத்துப் பேயினை . அவைதாமும் சில பயன்கருதி இறைவனை வழிபடும் என்க . ` குறள் படை ` என , ளகரந்திரியாது நின்றது , இசை நோக்கி .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

வேலையின் நஞ்சுண்டு
விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள்
பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக்
கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து , பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு , திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான் , இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு !

குறிப்புரை :

` வேலையின் ` என்றதன்பின் ` எழுந்த ` என்பதும் , ` உடன் ` என்றதன்பின் , ` ஆய ` என்பதும் எஞ்சி நின்றன . ` உடன் ஏய் ` கோலம் என ஓதுதல் சிறக்கும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

கூடலை யாற்றூரிற்
கொடியிடை யவளோடும்
ஆட லுகந்தானை
அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால்
நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும்வல்லார்
தம்வினை பற்றறுமே

பொழிப்புரை :

திருக்கூடலையாற்றூரில் , கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும் , அருள் விளை யாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , ` அவன் செய்த இச்செயல் அதிசயம் ` என்று சொல்லி , ஆராய்ந்த இனிய தமிழால் , திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை , பற்றறக் கெடுதல் திண்ணம் .

குறிப்புரை :

தம்பாற் செய்த திருவிளையாடலை நினைக்கின்றாராத லின், `ஆடல் உகந்தானை` என்று அருளிச்செய்தார். உகத்தல், அதனோடு இருத்தலை உணர்த்திற்று. `என்று சொல் பாடல்கள்` என இயையும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

விடையின்மேல் வருவானை
வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை
யாவர்க்கும் அறிவொண்ணா
மடையில்வா ளைகள்பாயும்
வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்
சாராதார் சார்வென்னே

பொழிப்புரை :

இடபத்தின்மேல் ஏறி வருபவனும் , வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , தன்னை அடைந்தால் , அங்ஙனம் அடைந் தார்மாட்டு , அன்புடையனாகின்றவனும் ஆகிய , நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , யாவராலும் அறியவொண்ணாத , சடைமுடி யின்கண் கங்கையைத் தாங்கியுள்ள பெருமானை அடையாதவரது அடைவுதான் என்னே !

குறிப்புரை :

` பிறவற்றை அடையும் அவர்தம் அடைவுகள் , யாதொரு பயனையும் தாரா ` என்றவாறு . சார்தல் , எவற்றையேனும் தமக்குப் பயன்தரும் பொருளாக உணர்ந்து , அவற்றிற் பற்றுச் செய்தல் . சிவபிரானையன்றி ஏனைய பொருள்கள் யாவும் , என்றும் எவ் விடத்தும் நின்று பயன்தருவனவாகாமையே யன்றி , இடரையும் விளைப்பனவாதலையும் , சிவபிரானது நிலைபேற்றினையும் , அவனது பேரின்பத்தினையும் உணரமாட்டாதார் , பிற பிற பொருள் களைத் தமக்குப் பயன் தருவனவாக உணர்ந்து , முன்னர்ச் சிலவற்றைப் பற்றிப் பின்னர் அவற்றை விடுத்து வேறு சிலவற்றைப் பற்றி , இவ் வாறே காலமெல்லாம் அலமந்து போதலை நினைந்து , ` இவர் பற்றும் பற்றுத்தான் என்னே ` என இரங்கி அருளிச்செய்தார் . ` இங்ஙனம் அவர் அலமருதற்குக் காரணம் அவரது அறியாமை யன்றி வேறில்லை ` என்பது திருவுள்ளம் . இவை , வருகின்ற திருப்பாடல்கள் எல்லா வற்றிற்கும் ஒக்கும் . ` சார்பென்னே ` என்பதும் பாடம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

அறையும்பைங் கழலார்ப்ப
அரவாட அனலேந்திப்
பிறையுங்கங் கையுஞ்சூடிப்
பெயர்ந்தாடும் பெருமானார்
பறையுஞ்சங் கொலியோவாப்
படிறன்றன் பனங்காட்டூர்
உறையுமெங் கள்பிரானை
உணராதார் உணர்வென்னே

பொழிப்புரை :

ஒலிக்கின்ற , பசிய பொன்னாலாகிய கழல்கள் கலிப்பவும் , அணியப்பட்ட பாம்புகள் சுழன்று ஆடவும் , கையில் நெருப்பை ஏந்தி , தலையில் பிறையையும் கங்கையையும் அணிந்து கொண்டு , அடிபெயர்ந்து நின்று நடனம் ஆடுகின்ற பெருமானாகிய , யாவராலும் அறியவொண்ணாமையிற் கள்வனாய் , முழங்குகின்ற பறைகளும் , சங்குகளும் ஒலித்தல் ஒழியாத , தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனை உணரா தாரது உணர்வுதான் என்னே !

குறிப்புரை :

` அறையும் பைங்கழல் ஆர்ப்ப ` என்றருளிச் செய்தது போலவே , ` ஆர்பறையும் சங்கு ஒலியோவா ` என்று அருளிச் செய்தார் என்க . ஆர்பறை , ஆர்க்கும் - முழங்கும் பறை . ` பெயர்ந்து ` எனச் சினைவினை முதல்மேல் நின்றது , ஒரு பொருள் மேற் பலபெயர் வருவழிப் பெயர் தோறும் உருபு கொடுத்துக் கூறுதலும் , இறுதிக்கண் மட்டுமே உருபு கொடுத்துக் கூறுதலும் ஆகிய இரண்டனுள் , ஈண்டு , இறுதிக்கண் மட்டுமே உருபு கொடுத்து , ` பெருமான் , படிறன் , எங்கள் பிரானை உணராதார் ` என்று அருளிச்செய்தார் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

தண்ணார்மா மதிசூடித்
தழல்போலுந் திருமேனிக்
கெண்ணார்நாண் மலர்கொண்டங்
கிசைந்தேத்து மடியார்கள்
பண்ணார்பா டலறாத
படிறன்றன் பனங்காட்டூர்
பெண்ணாணா யபிரானைப்
பேசாதார் பேச்சென்னே

பொழிப்புரை :

குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனை முடிமேற் சூடி , கள்வனாய் , நெருப்புப்போலும் தனது திருமேனிக்கு உரியனவாக எண்ணுதல் பொருந்திய , அன்று மலர்ந்த மலர்களைக்கொண்டு , மனம் பொருந்தித் துதித்து வழிபடும் அடியார்களது பண்ணிறைந்த பாடலின் ஒலி நீங்காத , தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளி யிருக்கின்ற , பெண்ணும் ஆணும் ஆய உருவத்தினனாகிய பெரு மானைச் சொல்லாதவரது சொல்தான் என்னே !

குறிப்புரை :

` திருமேனிக்கு ` என்றதன்பின் , ` உரியனவாக ` என்பது எஞ்சி நின்றது . ` ஏத்தும் ` என்றது , ` ஏத்திவழிபடும் ` எனப் பொருள் தந்தது . சொல்லுதல் , பெயர்கூறுதலும் புகழ்தலும் முதலியனவாம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

நெற்றிக்கண் ணுடையானை
நீறேறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக்
கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றே றும்பிரானைப்
பேசாதார் பேச்சென்னே

பொழிப்புரை :

நெற்றியில் கண்ணை யுடையவனும் , திருநீறு பொருந்திய திருமேனியை உடையவனும் , குற்றம் இல்லாத இயல்பை யுடையவனும் , கோடுதல் இல்லாதவரது மனத்தில் உள்ளவனும் , பாம்பைப் பிடித்து அரையிற் கட்டிய கள்வனும் ஆகிய , தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , எருது ஒன்றின்மேல் ஏறுகின்ற கடவுளைச் சொல்லாதவரது சொல்தான் என்னே !

குறிப்புரை :

` பெற்றம் ` என்பது கடைக்குறைந்து நின்றது . ` ஒன்று ` என்றது , ` ஒற்றை எருது பயன்படாது ` என்னுங் குறிப்பினது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

உரமென்னும் பொருளானை
உருகிலுள் ளுறைவானைச்
சிரமென்னுங் கலனானைச்
செங்கண்மால் விடையானை
வரமுன்னம்அருள்செய்வான்
வன்பார்த்தான்பனங்காட்டூர்ப்
பரமன்எங் கள்பிரானைப்
பரவாதார் பரவென்னே

பொழிப்புரை :

` ஞானம் ` என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும் , உள்ளம் அன்பால் உருகினால் , அதன் கண் நீங்காது தங்குகின்றவனும் , தலை ஓடாகிய உண்கலத்தை உடையவனும் , சிவந்த கண்களை யுடைய பெரிய இடப வாகனத்தை உடையவனும் , தன்னை வழிபடுவார் விரும்பும் வரத்தை விரைந்து அருளுபவனும் , மேலானவனும் ஆகிய , திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளி யிருக்கின்ற எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே !

குறிப்புரை :

` உருகிலுள் உறைவானை ` என்றதனை ` உள்ளம் உருகில் உடனாவார் ` ( தி .2 ப .111 பா .3) என்பதனோடு வைத்து நோக்குக . இதனையே , ` உள்ளம் உருகில் உடனாவர் அல்லது தெள்ள அரியரென் றுந்தீபற சிற்பரச் செல்வரென் றுந்தீபற ` - திருவுந்தியார் 7 என்று மெய்ந்நூல் கூறிற்று . பரவுதல் - முன்னிலையாகத் துதித்தல் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

எயிலார்பொக் கம்மெரித்த
எண்டோள்முக் கண்ணிறைவன்
வெயிலாய்க்காற் றெனவீசி
மின்னாய்த்தீ யெனநின்றான்
மயிலார்சோ லைகள்சூழ்ந்த
வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக்கட்
பயிலாதார் பயில்வென்னே

பொழிப்புரை :

பொலிவு நிறைந்த சில மதில்களை எரித்தவனும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடைய கடவுளும் , வெயிலாய்க் காய்ந்து , காற்றாய் வீசி , மின்னாய் மின்னி , தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய , மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் நீங்காதிருக்கும் பெருமானுக்குச் செய்யும் தொண்டிற் பயிலாதவரது பயிற்சிதான் என்னே !

குறிப்புரை :

` பொக்கம் ஆர் எயில் ` என மாற்றிப் பொருள் கொள்க . பொக்கம் - பொலிவு . இனி , ` ஆர் ` என்றதனைப் பலர்பால் ஈறாகவும் , ` பொக்கம் ` என்றதனை , பொய் எனவுங் கொண்டு , ` பொக்கத்தார் எயில் ` என வைத்து உரைத்தலுமாம் . ` காற்றென வீசி ` என்றதனால் , ஏனையவற்றிற்கும் அவ்வாறு உரைத்தல் திருவுள்ளமாயிற்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மெய்யன்வெண் பொடிபூசும்
விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக்
காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை
அறியாதார் அறிவென்னே

பொழிப்புரை :

மெய்ப்பொருளாய் உள்ளவனும் , வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற , வேறுபட்ட இயல்பினனும் , வேதத்திற்குத் தலை வனும் , கையில் மான் மழுக்களை ஏந்துபவனும் , காலனது காலத்தை இடைமுரிவித்தவனும் , படத்தைக் கொண்ட பாம்பினை அரையின் கண் கட்டியுள்ள கள்வனும் , யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே !

குறிப்புரை :

` மெய்யின் வெண்பொடி பூசி ` எனப் பாடம் ஓதுதலு மாம் . ` காலன் ` என்பது , ` காலத்திற்கு முதல்வன் ` என்பதனால் வந்த காரணக்குறியாகலின் , ` காலன் காலம் அறுத்தான் ` என்றது . ` காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும் , ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வனாயினமையும் , சிவபிரானது ஆணையான் அன்றித் தானே ஆயினான் அல்லன் ` என்பதும் , ` அம்முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் ஒழுகினமையின் , இடை முரிவிக்கப் பட்டான் ` என்பதும் , ` இதனான் எல்லாவற்றையும் தன் இச்சை வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே ` என்பதும் உணர்த்தி யருளியவாறாயிற்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

வஞ்சமற்ற மனத்தாரை
மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ றடியாளைப்
பாகம்வைத் துகந்தானை
மஞ்சுற்ற மணிமாட
வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்தெங் கள்பிரானை
நினையாதார் நினைவென்னே

பொழிப்புரை :

வஞ்சனையற்ற தூய மனம் உடையவரை என்றும் மறவாதவனும் , பிறப்பில்லாதவனும் , செம்பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை யுடையாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய , மேகங்கள் பொருந்திய , மணிகள் இழைத்த மாடங்களையுடைய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரிலும் , எங்கள் நெஞ்சத்திலும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நினையாதவரது நினைவுதான் என்னே !

குறிப்புரை :

` மறவாத ` என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது . ` வைத்து உகந்தானை ` என்றதனை , ` உகந்து வைத்தானை ` என மாற்றி உரைக்க . இறைவனுக்கு அண்டத்தில் இடமாவது திருக்கோயிலும் , பிண்டத்தில் இடமாவது அடியவர் நெஞ்சமும் என்பதனை , ` சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் ` ( தி .8 திருக்கோவையார் - 20) என்பதனானும் உணர்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

மழையானுந் திகழ்கின்ற
மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க
உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர்
பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட்
குழையாதார் குழைவென்னே

பொழிப்புரை :

மேகம்போலும் நிறத்தினனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய பிரமனும் என்ற இருவரும் பணி செய்கின்ற வராய் நினைந்து நிற்க , உயர்ந்த வானத்தினும் உயர்ந்து நிற்பவனும் , எல்லாரினும் பழையவனும் ஆகிய , திரு வன்பார்த்தான் பனங் காட்டூரைத் தனது ஊராகக் கொண்டு விளங்குகின்ற , குழையணிந்த காதினையுடைய பெருமானுக்குத் தொண்டுபடுதலில் மனம் நெகிழாத வரது மனநெகிழ்ச்சிதான் என்னே !

குறிப்புரை :

` உழையா நின்றவராய் ` என , எச்சமாக்குக . ` உயர் வானம் ` என்றது , வானத்தினது இயல்பை விதந்தவாறு . அதனினும் உயர்தல் , சிவலோகத்தில் விளங்குதல் . ` குழைக் காதன் ` என மிகற் பாலதாகிய ககர ஒற்று , தொகுத்தலாயிற்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

பாரூரும் பனங்காட்டூர்ப்
பவளத்தின் படியானைச்
சீரூருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் னடித்தொண்டன்
அடியன்சொல் அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார்
உயர்வானத் துயர்வாரே

பொழிப்புரை :

தனது பெயர் நிலம் முழுதும் பரவிய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற பவளம் போலும் உருவத்தையுடைய பெருமானை , புகழ்மிக்க திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள , அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும் அடியவ னாகிய , அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை , அவரவர் ஊரின்கண் உரைசெய்வாரும் சிவ லோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர் .

குறிப்புரை :

`திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த` என்றது, `ஆரூரன்` எனப் பெயர்பெற்றதன் காரணத்தை விளக்கிய வாறு. அடியவர்தாம் பல திறத்தராகலின், `அடித்தொண்டன் அடியன்` என்று அருளினார். `நாய்` என்றது ஆகுபெயராய் உயர் திணை மேல் நின்றமையின், `நாய்ச்சொல்` எனச் சகரம் மிகாதாயிற்று. `ஊரான்` என்பது குறுகி நின்றது; அது வேற்றுமை மயக்கம். `இத் தலத்தையடைந்து பாடுவோரேயன்றி, அவரவர் இடத்திருந்தே பாடு வோரும் பயன்பெறுவர்` என்றவாறு. `உரை செய்வார்` என்றதில், இழிவு சிறப்பும்மை தொகுத்தல். `சொல்` என்னும் ஆகுபெயர் அடுத்து வந்தது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

மாட மாளிகை கோபு ரத்தொடு
மண்ட பம்வள ரும்வ ளர்பொழில்
பாடல் வண்டறையும் பழ னத்திருப் பனையூர்த்
தோடு பெய்தொரு காதி னிற்குழை
தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்
றாடு மாறுவல்லா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

உயர்ந்த மேல்மாடங்களும் , சிறந்த மாளிகைகளும் , கோபுரங்களும் , மண்டபங்களும் நாளும் நாளும் பெருகுகின்ற , ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற , நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளி யிருக்கின்ற , ஒருகாதிற் குழை தூங்க , மற்றொரு காதினில் தோட்டினை இட்டு , அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லாராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையவர் .

குறிப்புரை :

` ஒடு ` எண்ணிடைச் சொல் . ` வளரும் , அறையும் ` என்ற பெயரெச்சங்கள் அடுக்கி , ` திருப்பனையூர் ` என்ற ஒரு பெயர் கொண்டன . ` பழனம் ` என்ற விதப்பால் , ` நல்லன ` என்பது பெறப் பட்டது . ` ஆடுமாறு வல்லார் ` என்பது ஒருபெயர்த் தன்மைத்தாய் , ` திருப்பனையூர் ` என்றதனோடு , ஏழாம் வேற்றுமைத் தொகைபடத் தொக்கது . வருகின்ற திருப்பாடல்களினும் இவ்வாறே கொள்க . ` யாவரினும் மிக்க ` என்பது இசையெச்சம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நாறு செங்கழு நீர்ம லர்
நல்ல மல்லிகை சண்ப கத்தொடு
சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
நீறு பூசிநெய் யாடித் தம்மை
நினைப்பவர் தம்ம னத்த ராகிநின்
றாறு சூடவல்லா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

மணம் வீசுகின்ற செங்கழுநீர் மலரையும் , நல்ல மல்லிகை மலரையும் , சண்பக மலரையும் , சேறு செய்யப்பட்ட கழனி யாகிய வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளி யிருக்கின்ற , நீற்றைப் பூசி நெய்யில் மூழ்கி , தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவராய் நிற்பவரும் , நீரை முடியில் தாங்குகின்றவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

மலர் என்றதன் ஈற்றுக் குற்றொற்றசையே , இசை வகையாற் சீராயிற்று . செங்கழுநீர் மலர் , முதலியன , அவற்றையுடைய கொடி முதலியவற்றைக் குறித்தலின் ஒடுக்கொடுத்துப் பிரித்தருளி னார் . ` சேறு செய் கழனி ` என்றது , பழனத்தின் பொதுமை நீக்கிற்று . ` நெய்யாடி தன்னை ` என்பதும் , ` மனத்தனாகி ` என்பதும் பாடம் அல்ல .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

செங்கண் மேதிகள் சேடெ றிந்து
தடம்ப டிதலிற் சேலி னத்தொடு
பைங்கண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த்
திங்கள் சூடிய செல்வ னாரடி
யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில்
அங்கிருந் துறைவா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய எருமைகள் , வயலைச் சேறாக்கிக் குளங்களில் சென்று வீழ்தலினால் , அங்குள்ள கயல்மீனின் கூட்டமும் , பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்களை யுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக் கின்ற , சந்திரனைச் சூடிய செல்வனார் , தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்க்கின்றவராகிவிடுவாராயின் , அத்தலத்தில் நீங்காது தங்கி வாழ்கின்ற அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

` தீர்ப்பராய் விடில் ` என்ற செயினென் எச்சம் , ` நீரின்றமையா துலகெனின் ` ( குறள் -20) என்றாற்போல , தெளிவுப் பொருட்கண் வந்தது . இறைவரது திருமேனி யழகினை வியந்தருளிச் செய்வார் , இடையே , அவரது திருவருள் அழகினையும் வியந்தருளிச் செய்தார் என்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

வாளை பாய மலங்கி ளங்கயல்
வரிவ ராலுக ளுங்க ழனியுள்
பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த்
தோளும் ஆகமும் தோன்ற நட்டமிட்
டாடு வாரடித் தொண்டர் தங்களை
ஆளு மாறுவல்லா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

வாளை மீன்கள் துள்ள , மலங்கும் , இளமையான கயலும் , வரிகளையுடைய வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கம் எங்கும் , பாளையையுடைய கமுக மரங்கள் சூழ்ந் துள்ள திருப்பனையூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற , திரண்ட தோள் களும் , அகன்ற மார்பும் பொலிவுற நடனத்தை அமைத்து ஆடுபவரும் , தம் அடிக்குத் தொண்டராயுள்ளாரை ஆளுமாறு வல்லவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

` கமுகம் ` என்றதில் , அம் அல்வழிக்கண் வந்த சாரியை . ` தோளும் ஆகமும் தோன்ற ` என்ற விதப்பு , ` திரண்ட தோள் ` ` அகன்ற ஆகம் ` என்பவற்றைத் தோற்றுவித்தது . நட்டம் இட்டு ஆடுதல் , நடன முறைப்படி ஆடுதல் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கொங்கை யார்பல ருங்கு டைந்ந்
தாட நீர்க்குவ ளைம லர்தரப்
பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர்
மங்கை பாகமும் மாலொர் பாகமுந்
தாமுடையவர் மான்ம ழுவினொ
டங்கைத் தீயுகப்பா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால் , குளத்து நீரில் குவளைப் பூக்கள் மலர , அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளி இருக்கின்ற , உமையையுடைய ஒரு பாகத்தையும் , திருமாலை உடைய ஒரு பாகத்தையும் உடையவரும் , அகங்கையில் , ` மான் , மழு , தீ ` என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

` கொங்கையார் ` என்றது , ` மகளிர் ` என்றவாறு . ` குளம் ` என்பது , ஆற்றலான் வந்தது . ` ஓர் ` என்றதனை , ` மங்கை ` என்றதன் பின்னுங் கூட்டுக . மங்கை ஓர் பாகம் உடைமையும் , மால் ஓர்பாகம் உடைமையும் வேறு வேறு நிலைகளாதலின் , அவற்றை ஏற்ற பெற்றியான் உடையவர் எனக்கொள்க . மங்கையும் , மாலும் இருத்தல் இடப்பாகம் ஒன்றிலே என்பதும் உணர்க . ` குடைந்ந் தாட `, என , ஒற்றளபெடை கொள்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர்
தாம்ப ரவிய கருணை யங்கடற்
பாவி ரிபுலவர் பயி லுந்தி ருப்பனையூர்
மாவிரிமட நோக்கி அஞ்ச
மதக ரியுரி போர்த்து கந்தவர்
ஆவி லைந்துகப்பா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

பக்கம் எங்கும் காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய் , பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , மான் தோல்வியுறுகின்ற பார்வையை யுடையவளாகிய உமாதேவி அஞ்சுமாறு , மதம் பொருந்திய யானை யினது தோலை விரும்பிப் போர்த்தவரும் , பசுவிற் றோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையார் .

குறிப்புரை :

` கடல் ` என்றதன் பின்னர் , ` ஆய் ` என்பது வருவிக்க . ` கருணைக் கடலாய் ` என்பதன் கருத்து , ` கடல்போலும் கருணையை உடையவராய் ` என்பதாதல் வெளிப்படை . ` கருணையங்கடலப் - பாவிரி ` என்பது பாடம் அன்று . ` பரவிய ` என்றதற்குப்பின் உள்ள இப்பகுதி , சில பதிப்புக்களில் காணப்படவேயில்லை ; அவைகளில் முதலடி , ` பரவிய ` என்றே முடிகின்றது . ` மா இரி ` எனப் பிரிக்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மரங்கள் மேல்மயி லால மண்டப
மாடமா ளிகை கோபு ரத்தின்மேல்
திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த்
துரங்கன் வாய்பிளந் தானுந் தூமலர்த்
தோன்ற லும்மறி யாமை தோன்றிநின்
றரங்கி லாடவல்லா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட , மண்டபம் , மாடம் , மாளிகை , கோபுரம் இவைகளின்மேல் , தோல் சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , குதிரை உருவங்கொண்டு வந்த , ` கேசி ` என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும் , தூய மலரின்கண் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று , மன்றில் நடனம் ஆட வல்லாராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

பலா முதலிய பெரிய மரங்களின் கிளைகளில் நின்று மயில் ஆடுதல் உண்டு என்பதை இலக்கியங்களிலும் காணலாகும் . ` வலிமுகம் ` என்பது குரங்கின் பெயர்களில் ஒன்றாதலின் , ` வன்முகவன் ` என்றார் . ` முகவன் ` என்றதை , ` கடுவன் , அலவன் ` என்பனபோலக் கொள்க . திருமால் கண்ணனாய் இருந்த காலத்து , கேசி என்னும் அசுரனை அழித்த வரலாற்றை , பாகவதத்துட் காண்க . ` துரங்க வாய் பிளந்தானும் ` என்பதும் , ` அறியாமற்றோன்றி நின்று ` என்பதும் பாடங்கள் . ` அறியாமை ` என்றது , ` அறியாத தன்மை யுடையனாய் ` என்னும் பொருளது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

மண்ணி லாமுழ வம்ம திர்தர
மாட மாளிகை கோபு ரத்தின்மேல்
பண்ணி யாழ்முரலும் பழ னத்தி ருப்பனையூர்
வெண்ணி லாச்சடை மேவிய
விண்ண வரொடு மண்ண வர்தொழ
அண்ண லாகிநின்றா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

மாடம் , மாளிகை , கோபுரம் இவைகளில் , மண் பொருந்திய மத்தளம் அதிர , யாழ்கள் பண்களை இசைக்கின்ற , நல்ல வயல்கள் சூழ்ந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்தப்பட்ட , விண்ணவரும் மண்ணவரும் தொழுமாறு தலைவராகி நின்றவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

மத்தளத்திற் பூசப்படுகின்ற மண்ணினை , ` மார்ச்சனை ` என்ப . ` மண்ணெலாம் ` என்பது பாடம் அன்று . ` பண்ணியாழ் ` என்பதில் உள்ள இகரம் , சாரியை . இனி , ` பண்ணி ` என வினை யெச்சமாகக்கொண்டு , ` யாழ் பண்ணப்பட்டு முரலும் ` என்றும் , ` பண்ணிய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று எனக்கொண்டு , பண்ணப்பட்ட யாழ் இசையை முரலும் , என்றும் உரைத்தலுமாம் . ` சடை ` என்றதன்பின் , ` மீது ` என்பதுபோல்வதொரு தேமாச் சீர்சொல் விடப்பட்டதுபோலும் !

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

குரக்கி னங்குதி கொள்ளத் தேனுகக்
குண்டு தன்னயற் கெண்டை பாய்தரப்
பரக்குந் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொ டைந்தலை
தோளி ருபது தாள்நெ ரிதர
அரக்கனை யடர்த்தா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும்படி குரங்கின் கூட்டம் குதிக்க , அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும் படி பரந்திருக்கின்ற , குளிர்ந்த வயல்களாகிய பழனத்தையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , இரக்கமில்லாதவராய் , அரக்கனாகிய இராவணனை அவனுடைய பத்துத் தலைகளும் , இருபது தோள்களும் நெரியும்படி , தமது காலால் நெருக்கியவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

குண்டு - ஆழம் ; அஃது அதனையுடைய குளத்தைக் குறித்தது . ` குண்டு தண்வயல் ` என்னும் பாடம் சிறவாமை அறிக . ` தாளால் ` என உருபு விரித்து , ` அடர்த்தார் ` என்றதன் முன்னர்க் கூட்டுக .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர்
மாத வர்வள ரும்வ ளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயி லுந்திருப் பனையூர்
வஞ்சி யும்வளர் நாவ லூரன்
வனப்ப கையவ ளப்பன் வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது பங்கை உடையவராய் , பெரிய தவத்தவர்கள் மிகுகின்ற , வளர்கின்ற சோலைகளையுடைய செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடிகளை யுடையவராகிய மகளிர் , ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , நொச்சியே யன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் , வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டனது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

`நொச்சி, வஞ்சி` என்பவற்றை, தம் எயிலைக் காத்தல், பிறர் நாட்டின்மேற் சேறல் என்றானும், அக்காலங்களிற் சூடுதற்குரிய பூவைத்தரும் அம்மரவகைகள் என்றானும் கொள்க. இதனால் திருநாவலூரில் உள்ளாரது ஆண்மை குறித்தருளியவாறாம். இதனையும் ஏனைத் திருப்பாடல்கள் போலவே அருளிச்செய்தாரா யினும், தமது திருப்பெயரைப் பெய்தருளிச் செய்தமையின், திருக் கடைக் காப்பெனவே கொள்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர்
நான்ம றைக்கிட மாய வேள்வியுள்
செம்பொ னேர்மடவா ரணி பெற்ற திருமிழலை
உம்ப ரார்தொழு தேத்த மாமலை
யாளொ டும்முட னேயு றைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

பொழிப்புரை :

அந்தணர்களது நான்கு வேதங்களுக்கு இடமாகிய வேள்வியினுள் உம்மை விரும்பி வழிபடுவோர்க்கு அருள் செய்கின்ற வரே , செம் பொன்னால் இயன்ற பாவைபோலும் மகளிர் அழகுபெற்று விளங்குகின்ற திருமிழலையுள் , நீர் உயர்ந்த மலைமகளோடு உடனாகித் தேவர்கள் தொழுது துதிக்க உறைகின்ற இடத்தை , அழகிய பொன்போலச் சிறந்த வீழி மரத்தின் நிழலாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் .

குறிப்புரை :

` நம்புதல் ` என்றது . நம்பி வழிபடுதலைக் குறித்தது , ` அருள் செய்யும் ` என்ற எச்சம் , ` கொண்டீர் ` என்ற வினைப் பெயரொடு முடிதலின் , அதற்குக் கருத்து நோக்கி , இவ்வாறுரைக்கப் பட்டது . ` வேள்வியுள் நம்பினார்க்கு ` என முன்னே கூட்டுக . ` உள் ` என்றது ஏழாம் வேற்றுமைப் பொருளைத் தரும் இடைச் சொல் . ` செம்பொன் `, கருவியாகுபெயர் . செல்வம் உடை யாரது செல்வச் சிறப்பு இனிது விளங்குதல் அவர்தம் மகளிரிடத்தே யாகலின் , மிழலை நகரத்துச் செல்வச் சிறப்பை இனிது விளக்குதற்கு , மடவாரது அழகினை விதந்தருளிச் செய்தார் . வீழி மரத்திற்குப் பொன் உவமையாயது , ` பொன்போற் பொதிந்து ` ( குறள் 159.) என்றாற் போலச் சிறப்புப் பற்றி . ` வீழி ` என்றது அதன் நிழலை . ` நிழல் ` என்பதும் , அஃது , உள்ள இடத்தையேயாம் . வீழி மரமே இத்தலத்தின் மரமாதலும் , அதனானே இது ` வீழிமிழலை ` எனப்படுவதும் அறிக . ` அடியேற் கும் ` என்ற உம்மை எச்சத்தோடு இழிவு சிறப்பு .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

விடங்கொள் மாமிடற் றீர்வெள் ளைச்சுருள்
ஒன்றிட்டு விட்ட காதி னீர்என்று
திடங்கொள் சிந்தையினார் கலி காக்கும் திருமிழலை
மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை
வந்தி ழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

`நஞ்சினை உண்ட கரிய கண்டத்தை உடையவரே , வெண்மையான சங்கக் குழை ஒன்றினை இட்டுத் தூங்கவிட்ட காதினை உடையவரே ` என்று போற்றி , உறுதி கொண்ட உள்ளத்தையுடைய அந்தணர்கள் , உலகிற்கு வறுமை வாராமல் காக்கின்ற திருமிழலையுள் சிங்கங்கள் தாங்குகின்ற விமானம் ஒன்றை , உம்பொருட்டு மண்மேல் வந்து இறங்கச் செய்த வானுலகத்தையும் தன்கீழ் அடக்குதலையுடைய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் ,

குறிப்புரை :

` வெள்ளை `, விடாத ஆகுபெயர் . ` சுருள் ` என்றது குழையை , ` கலிகாக்கும் ` என்றதனால் , ` சிந்தையினார் `, ` அந்தணர் ` என்பது பெறப்பட்டது . ` கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் ` ( தி .1 ப .80 பா .1) என்ற திருஞானசம்பந்தரது திருமொழியையுங் காண்க . இத் தலத்திருக்கோயிலில் உள்ள விமானம் , திருமாலால் கொண்டுவரப் பட்டு , ` விண்ணிழி விமானம் ` எனப் பெயர்பெற்றுவிளங்குதலை அறிந்து கொள்க . திருமாலை அவரது உலகமாகப் பாற்படுத்தருளிச் செய்தார் , ஒரு நயம்பற்றி , ` வந்து ` என்னும் வினையெச்சம் , ` இழிச்சிய ` என்பதனுள் , இழிதல் வினையைக் கொண்டது , ` அடக்கல் ` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது , அடக்குதல் , மேலோங்குதலும் , தன்கீழ்ப் பணியச்செய்தலும் , இதுவே , மேற்சொல்லிய நயம் என்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

ஊனை யுற்றுயி ராயி னீர்ஒளி
மூன்று மாய்த்தெளி நீரோ டானஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர் செழு மாடத் திருமிழலை
மானை மேவிய கையி னீர்மழு
வேந்தி னீர்மங்கை பாகத் தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

பொழிப்புரை :

உடம்பைப் பொருந்திய உயிரானவரே , ` ஞாயிறு , திங்கள் , தீ ` என்னும் மூன்று ஒளிகளும் ஆனவரே ` தெளிவாகிய நீரோடு ஆனஞ்சினிடைத் தேனை ஆடுதலை விரும்புபவரே , மானைப் பொருந்திய கையை யுடையவரே , மழுவை ஏந்தியவரே , மலைமகள் பாகத்தை உடையவரே , வளவிய மாடங்களையுடைய திருமிழலை யில் , வானின்கண் ஓங்கிய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் ,

குறிப்புரை :

` ஆயினீர் ` முதலிய அனைத்தும் விளிப்பெயர்கள் , இவ்வாறன்றி , ` வீழிகொண்டீர் ` என்றது ஒன்றினையும் விளிப் பெயராக்கொண்டு , ஏனையவற்றை முன்னிலை முற்றாக்கி , அவற்றைத் தமக்கு அருளுதற்குரிய இயைபு தோன்ற எடுத்தோதிய வாறாக உரைப்பினுமாம் . அவ்வாறுரைக்குமிடத்து , அவ்வியைபுகளைத் தோன்ற உரைக்குமாறு அறிந்து கொள்க . ` உற்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` ஆனஞ்சின் ` என்றதன்பின் , ` இடை ` என்பது எஞ்சி நின்றது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

பந்தம் வீடிவை பண்ணி னீர்படி
றீர்ம திப்பிதிர்க் கண்ணி யீரென்று
சிந்தைசெய் திருக்குஞ் செங்கை யாளர் திருமிழலை
வந்து நாடகம் வான நாடியர்
ஆட மாலயன் ஏத்த நாள்தொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

` உயிர்களுக்கு , ` பந்தம் ` வீடு ` என்னும் இரண்டையும் அமைத்தவரே , அவ்வாறு அமைத்தும் அவைகட்கு ஒளித்து நிற்பவரே , நிலாத் துண்டமாகிய கண்ணியைச் சூடியவரே ,` என்று நினைந்திருக்கும் செவ்விய ஒழுக்கத்தை யுடையவர்களது திருமிழலையுள் , நாள்தோறும் வானுலகத்தில் உள்ள நாடக மகளிர்கள் வந்து நடனம் ஆடவும் , திருமாலும் பிரமனும் துதிக்கவும் , அழகிய குளிர்ந்த வீழி மரத்தின் அடியை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் .

குறிப்புரை :

பந்தமாவது , பிறப்பிறப்புக்கள் . ` செங்கையாளர் ` என்றது , அந்தணர்களை , கை , ஒழுக்கம் என்னாது , கை என்றே கொண்டு , தீயோம்புதலின் , ` செங்கை ` என்று அருளினார் என்றலு மாம் . ` செய்கையாளர் ` என்றானும் , ` செம்மையாளர் ` என்றானும் பாடம் ஓதுதல் சிறக்கும் , ` நாடியர் ` என்றது ` தோழியர் ` என்பது போலும் , பெண்பாற் பன்மைப் பெயர் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர் சிறந் தேத்துந் திருமிழலைப்
பரிசி னால்அடி போற்றும் பத்தர்கள்
பாடி யாடப் பரிந்து நல்கினீர்
அரிய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

வேதங்களாகிய குதிரைகளைப் பூண்ட தேரின் மேல் , மலையாகிய வில்லை ஏந்தி நின்று , மதில்கள் மூன்றையும் அழியும்படி வேறுபடுத்தவரே , நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள் , அறிவு மிகுந்து துதிக்கின்ற திருமிழலையுள் , அரிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , உமது திருவடியைப் போற்றுகின்ற அடியவர்கள் அன்பினால் பாடி ஆட , மனம் இரங்கி , அவர்க்கு வேண்டுவனவற்றை அளித்தீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் .

குறிப்புரை :

` ஏந்தி ` என்றதன்பின் ` நின்று ` என்பது எஞ்சி நின்றது . ` திரி ` முதனிலைத் தொழிற்பெயர் . திரிதல் - வேறுபடுதல் . செய்தல் - ஆக்குதல் ` வேறுபடுதலை ஆக்கிய ` என்பது , ` வேறுபடுத்திய ` என்னும் பொருளதாய் , ` மூன்றையும் ` என்ற இரண்டாவதற்கு முடிபாயிற்று . ` செய் ` என்றது , ` வீழிகொண்டீர் ` என்றதனோடு இயையும் , பரிசு - தன்மை ; ஈண்டு , அன்பு .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன்
ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர்
செறிந்த பூம்பொழில்தேன் துளிவீசுந் திருமிழலை
நிறைந்த அந்தணர் நித்த நாள்தொறும்
நேசத்தால் உமைப் பூசிக் கும்மிடம்
அறிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

பொழிப்புரை :

மரங்கள் நெருங்கிய பூஞ்சோலைகள் , தம்மிடத்து வருவோர்க்குத் தேன் துளிகளை வழங்குகின்ற திருமிழலையுள் , நிறைந்துள்ள அந்தணர் பலரும் நாள்தோறும் நிலையாக அன்பினால் உம்மை வழிபடும் இடத்தை அறிந்து , வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , தந்தையது தாளை எறிந்த சண்டேசுர நாயனார் , தமது கண்ணைப் பெயர்த்து அப்பிய கண்ணப்ப நாயனார் முதலாக , உம்மை வழிபட்ட அடியவர் பலர்க்கு உயர்கதியைத் தந்தருளினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் ,

குறிப்புரை :

` எறிந்த , இடந்த ` என்றவற்றிற்குச் செயப்படுபொருள் வருவிக்க , வீசுதல் - வழங்குதல் , ` பொழிறேன் ` என்பதன்றி ` பொழிற் றேன் ` என்பது பாடமாயின் , ` பொழிலின் கண் தேன்துளி வீசப்படும் ` என உரைக்க , ` நித்தமாக ` என , ஆக்கச் சொல் வருவிக்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

பணிந்த பார்த்தன் பகீர தன்பல
பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
திணிந்த மாடந்தொறுஞ் செல்வம் மல்கு திருமிழலைத்
தணிந்த அந்தணர் சந்தி நாடொறும்
அந்தி வானிடு பூச்சி றப்பவை
அணிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

நெருங்கிய மாடங்கள்தோறும் செல்வம் நிறைந்த திருமிழலையுள் , சினம் தவிர்ந்த அந்தணர்கள் , காலை , நடுப்பகல் இவற்றிலும் , அந்திக் காலத்திலும் உயர்வாக இடுகின்ற பூக்களின் ஒப்பனையை அணிந்துகொண்டு , வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , உம்மை வணங்கிய அருச்சுனன் , பகீரதன் , பல அடியவர் , சித்தர் முதலியோர்க்கு முற்காலத்தில் அருள் பண்ணினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் .

குறிப்புரை :

அந்தியை வேறோதினார் , அஃது ஒப்பனைக்குச் சிறந்த காலமாதல் பற்றி . வான் - உயர்வு .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பரந்த பாரிடம் ஊரி டைப்பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்ற மாயினீர்
தெரிந்த நான்மறையோர்க் கிட மாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடி சைகேட்கும்
இச்சை யாற்காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

மிக்க பூத கணங்களை , ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே , ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள் , அரிய , குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே , நீர் , இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால் , அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள் செய்யீர் .

குறிப்புரை :

` உண்ணும் ` என்ற பெயரெச்சம் , ` சுற்றம் ` என்னும் ஏதுப்பெயர் கொண்டது . இத்தலத்தில் இறைவர் ; இசைத் தமிழைப் பாடியோர்க்கு நித்தல் காசு நல்கியது , திருஞானசம்பந்தர்க்கும் , திருநாவுக்கரசர்க்கும் என்பது நன்கறியப்பட்டது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

தூய நீரமு தாய வாறது
சொல்லு கென்றுமை கேட்கச் சொல்லினீர்
தீய றாக்குலையார் செழு மாடத் திருமிழலை
மேய நீர்பலி யேற்ற தென்னென்று
விண்ணப் பஞ்செய் பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

` தீ வளர்த்தலை ஒழியாத கூட்டத்தவராகிய அந்தணர்களது , வளவிய மாடங்களையுடைய திருமிழலையுள் விரும்பி வீற்றிருக்கின்ற நீர் , ` பிச்சை எடுப்பது என் ` என்று வினாவு வோர்க்கு மெய்ப்பொருளாய் விளங்குகின்ற , வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , ` உமக்குத் தூய்மை யாகிய நீரே அமுத மாயினவாற்றினைச் சொல்லுக ` என்று உமையவள் கேட்க , அதனைச் சொல்லியருளினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் .

குறிப்புரை :

தூயநீர் அமுதாதல் , அடியவர் ஆட்ட விரும்பி ஆடுதல் ; நீராட்டி வழிபடுதலை மிகவும் விரும்புகின்றவர் , எனவே , ` எதனையும் விரும்பாத நீவிர் , வழிபாட்டினை விரும்புவது என் ` என்று உமையவள் வினாவ , அதனைச் சிவபெருமான் இனிது விளக்கி யருளினமையை எடுத்தோதியவாறாம் , சிவபிரான் உமைக்கு ஆகமங் கள் பலவற்றையும் சொல்லி , அவற்றின் முடிபாக , ` யாம் விரும்புவது பூசை ஒன்றையே ` என அருளினமையை , எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும் உண்மை யாவது பூசனை எனஉரைத் தருள அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள் பெண்ணி னல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து . ( தி .12 திருக்குறிப்பு . புரா . 51) என்ற சேக்கிழார் திருமொழியான் அறிக . இனி , இன்னதொரு வரலாறு இத்தலத்தைப் பற்றிஉளதேனும் கொள்க . ` உமைக் கேட்க ` என்றும் ` தீயராக் குலையாளர் ` என்றும் ஓதும் பாடங்களே எல்லாப் பதிப்புக்களிலும் காணப்படுகின்றன . இத் திருப்பாடல் இனிது பொருள் விளங்காமையின் , இவ்வாறு அவை பிழை பட்டனபோலும் ! பிச்சை யேற்றல் , தனக்கென யாதும் இன்மையைக் குறிப்பதாகலின் , அஃது , ` அவன் உலகிற்கு வேறானவன் ` என்பதையே உணர்த்தும் என்பார் , ` பலி ஏற்றது என் என்று வினவுவார்க்கு மெய்ப்பொருளா யினீர் ` என்று அருளினார் , வினவுதல் , ஆராய்தல் , ` இருந்தவா காணீர் , இதுஎன்ன மாயம் ! அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த் தான்நாளும் பிச்சை புகும்போலும் , தன்அடியார் வான் ஆள மண்ஆள வைத்து ` ( தி .11 கயிலைபாதி . 53) என மருட்கையுற்று ஓதியதும் , இக்கருத்துப் பற்றியாதல் உணர்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

வேத வேதியர் வேத நீதிய
தோது வார்விரி நீர்மி ழலையுள்
ஆதி வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுகென்று
நாத கீதம்வண் டோது வார்பொழில்
நாவ லூரன்வன் றொண்டன் நற்றமிழ்
பாதம் ஓதவல்லார் பர னோடு கூடுவரே.

பொழிப்புரை :

` வேதத்தை ஓதுகின்ற வேதியர்களும் , வேதத்தின் பொருளை விளக்குபவர்களும் வாழ்கின்ற , பரந்த நீரையுடைய திருமிழலையுள் , பழைதாகிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் ` என்று பாடிய , இனிய இசையை வண்டுகள் பாடுகின்ற நீண்ட சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றினவனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரனது இந்நல்ல தமிழ்ப்பாடல்களை . அப்பெருமான் திருவடிக்கீழ் நின்றுபாட வல்லவர் , அவனோடு இரண்டறக் கலப்பர் .

குறிப்புரை :

`நீதியது` என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. `நீதியர்` என்பது பாடம் ஆகாமை யறிக. `ஆதி` என்றது, `பழையது` என்னும் பொருளது, `என்று` என்றதன் பின், ` பாடிய` என்பது எஞ்சி நின்றது, `பரன்` எனப் பின்னர் வருகின்றமையின், `பாதம்` என, வாளா அருளினார். `பாதத்தின் கண்` என, ஏழாவது விரிக்க.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்
துளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

` குழை பொருந்திய , தூங்குங்காதினை உடையவனே , நம்மாட்டுப் பிழை உளவாவனவற்றை நம் பெருமானார் பொறுத்துக்கொள்வார் என்னும் துணிவினால் அடியேன் பிழை செய்தால் , அதனைப் பொறாததனால் உனக்கு உளதாகும் பழியை நினையாமலே நீ என் கண்ணைப் படலத்தால் மறைத்து விட்டாய் ; இதுபோது இக்கோயிலினுள்ளே இருக்கின்றாயோ ?` என்று யான் வினாவ , மானை ஏந்திய அவன் , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது , குறிப்பெச்சம் . இத்திருப் பதிகத்தை , ` முன்னின்று முறைப்பாடு போல்மொழிந்த மொழிமாலை ` ( தி .12 ஏ . கோ . புரா . 281) எனச் சேக்கிழார் அருளினமையின் , இவற்றையெல்லாம் , முன்னின்ற அடியவர் பலரிடத்தும் சொல்லி முறையிட்டவாறாக உரைக்க . இன்னும் , ` முறைப்பாடு போல் ` என்ற அதனால் , வெளிப்படைப் பொருளில் , ` இதுவோ அவனது கண்ணோட்டம் ` என்று முறை யிடுவார் போல அருளினாராயினும் , ` இதுவும் எனக்குத் தக்கதே போலும் ` என இரங்கினார் என்றே கொள்க . ` உலகியலால் நோக்கின் பிழையாகின்ற அவை , அருள்நெறியால் நோக்கின் செவ்வியவே யாதலின் , பொறுப்பர் எனத் துணிந்தேன் ` எனவும் , ` அன்னது அறிந்தும் அவற்றைப் பொறாது ஒறுத்தாயாயின் , நின் அருள்நெறியை நீயே அழித்தாய் என்னும் பழியையன்றோ நீ பூண்பாய் !` எனவும் , ` என் கண்களை மறைப்பித்தபின் யான் பாடிய பாடல்களுக்குப் பின்னும் நீ , எங்கும் யாதொன்றும் செய்யவும் இல்லை ; சொல்லவும் இல்லை ; ஆதலின் , எங்கே இருக்கின்றாய் ?` எனவும் வினவிய வாறாம் . இங்ஙனம் வினாவிய பின்னும் , ` தான் செய்த ஒறுப்பு தனக்குப் பழியாவதில்லை ; புகழேயாம் ` என்பதைக் குறிப்பால் அருளியதன்றி , இனிது விளங்க அருளிச்செய்து ` எனக்கு இரங்கிலனே ` என்பார் , ` உளோம் போகீர் என்றானே ` என்று அருளினார் . தாம் செய்தது உலகியலால் மட்டுமன்றி அருள் நெறியாலும் பிழையாதலை , அஃதாவது சங்கிலியாராகிய பேரடி யார்க்கு இழைத்த குற்றம் ஆதலைக் கண் மறைந்த பின்னர் அறிந்தாரே யாயினும் , அஃது இனிது துணியப்படாமையின் , இவ்வாறு அருளிச் செய்தார் என்க . நாவலூரர் தம் பிழையது வன்மையை முன்பே உணர்ந்தமையை , இதற்கு முன்னர் அருளிச்செய்த திருப்பதிகங்களுள் உள்ள குறிப்புக்களால் உணர்க . ` படலத்தால் ` என உருபு விரிக்க . படலம் , கண்ணில் படர்ந்து ஒளியை மறைப்பதொன்று . ` மறைப் பித்தாய் ` என்றது , ` மறைவித்தாய் ` எனப் பொருள் தந்தது . ` உளாயே ` என்ற ஏகாரம் , வினா . ஏகாரம் பிறிது பொருள் உடைய தாயின் , இறைவர் , ` உளோம் போகீர் ` என்னார் என்க . ` உள்ளிருந்து ` என்றது ` வெளிநில்லாது ` என்றவாறாம் . ` போகீர் ` என்றது இறைவர் அருளிச்செய்த சொல்லை அவ்வாறே நாவலூரர் கொண்டு கூறியதாம் . ஆகவே , இறைவர் நாவலூரரைப் பன்மைச் சொல்லாற் குறித்தது , புறக்கணிப்புக் காரணமாக என்பது போதரும் . ` உளோம் ; போகீர் ` என்றது , ` யாம் கோயிலினுள் இல்லாமலில்லை ; இருக்கின்றோம் ; நீர் உம் வழியிற் சென்மின் ` என்றதாம் . ` என்றானே ` என்ற ஏகாரம் , தேற்றம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

இடையறியேன் தலையறியேன்
எம்பெருமான் சரணம்என் பேன்
நடையுடையன் நம்மடியான்
என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன்
வெண்ணீற்றன் புலியின்தோல்
உடையுடையான் எனையுடை யான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

யான் யாதொரு செயலிலும் ` முதல் இன்னது ; நடு இன்னது ; முடிவு இன்னது ;` என்று அறியேன் ; ` எம் பெருமானே எனக்குப் புகலிடம் ; ஆவது ஆகுக ` என்று கவலையற்றிருப்பேன் ; அதனையறிந்திருந்தும் , இடப வாகனத்தை யுடையவனும் , விடம் பொருந்திய பாம்பை அணிந்தவனும் , வெண்மையான நீற்றைப் பூசு பவனும் , புலியின் தோலாகிய உடையை உடையவனும் , என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன் , ` இவன் நம்மையே அடைக் கலமாக அடைதலை யுடையவன் ; நமக்கு அடியவன் ` என்ற முறைமை களை நினையாமலே , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ; இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` இடை , தலை ` என்பவற்றை அருளினமையின் , முதல் ( அடி ) என்பதும் கொள்ளப்பட்டது . தலை - முடி ; முடிவு . ` அடை ` முதனிலைத் தொழிற்பெயர் . சுவாமிகளை இறைவன் எவ்வாறு புறக் கணிப்பினும் , அவர் அவனைப் பாடுதல் ஒழியாராகலின் , ` விடை யுடையான் ` என்பது முதலியவற்றாற் புகழ்ந்தோதினார் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

செய்வினையொன் றறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா
யோஎன்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

படத்தையுடைய பாம்பை அணிந்தவனே , ` உனது திருவடியே புகல் ` என்று கருதி , ` செய்யத்தக்க செயல் இது ; தகாத செயல் இது ` என்பதைச் சிறிதும் அறியாத பொய்யடியேனாகிய யான் , அறியாமையாற் பிழைசெய்தேனாயினும் , பொறுத்தல் உனக்குக் கடமையன்றோ ; அங்ஙனம் பொறுத்து எனக்கு அருள் பண்ணாமை யின் , நீ இங்கே இருக்கின்றாயோ ` என்று யான் உரிமையோடு வினாவ , எப்பொழுதும் என்மேல் அருள்கூர்ந்து , என்னை உய்யுமாறு தன் திருவருளைச் செய்ய வல்ல எம்பெருமான் , இதுபோது , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ; இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` செய்வினை ` என்றதனால் , அதன் மறுதலை வினையும் கொள்ளப்பட்டது . ஒன்று - சிறிது . ` ஒன்றும் ` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று . ` பொறுத்தி ` என்ற செயவெனெச்சம் , தொழிற்பெயர்ப் பொருள் தந்தது . வேண்டுதல் , இன்றியமையாமை யாதலின் , அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கம்பமருங் கரியுரியன்
கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்
சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே யிருந்தாயே
என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு
ளோம்போகீ ரென்றானே

பொழிப்புரை :

` நம்பியே , நீ , செவ்விய அணியினை யுடைய மலை மகளோடு உடனாயினவன் ஆதலின் , இருவீரும் இங்கே இருக்கின்றீர் களோ ` என்று நான் வினவ , அசைதல் பொருந்திய யானையினது தோலையும் கறுத்த கண்டத்தையும் , கபாலத்தையும் , செவ்விய பவளம்போலும் உருவத்தையும் உடையவனும் , தேவர்களுக்கு ஒப்பற்ற துணைவனும் ஆகிய இறைவன் , எனக்கு , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` உடனாகி ` என்றது பெயர் . அதன்பின் ` ஆதலின் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . ` இருந்தீர் ` என்ற பயனிலைக்கு , ` இருவீரும் ` என்னும் எழுவாய் , வெளிப்படாது நின்றது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

பொன்னிலங்கு நறுங்கொன்றை
புரிசடை மேற்பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள்
பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார்
தொழுதேத்த அடியேனும்
உன்னமதாய்க் கேட்டலுமே
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

பொன்போல விளங்குகின்ற , நறுமணம் பொருந்திய கொன்றைமலர் , சடையின்மேற் பொருந்துதலால் , மேலும் பொலிவுற்று விளங்க , மின்னலினது தன்மை விளங்குகின்ற நுண்ணிய இடையினை உடையவள் ஒருபாகத்தில் இருக்க , எருதை ஏறு பவனாகிய சிவபெருமானை , இருபாலும் அடியார்கள் நெருங்கி , வணங்கித் துதிக்க , யானும் உயர்ந்த முறைமையினாலே , ` கோயிலு ளாயே ` என்று கேட்க , அவன் , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னா னன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` எருதேறி ` என்றது பெயர் . அதன்பின் இரண்டாவதன் தொகைக்கண் வல்லினம் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்ற லாயிற்று . ( தொல் . எழுத்து . 157) வல்லினம் மிகாமையும் பாடம் . ` எரு தேறித் தொழுதேத்த ` என இயையும் . உயர்ந்த முறைமையாற் கேட்டது , ` நீ , அடியவர் துயர் கண்டு வாளாவிராயன்றே ` என்னும் குறிப்புத் தோன்ற வினாயது . ` கேட்டலும் ` என்றது உம்மீற்று வினையெச்சம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

கண்ணுதலால் காமனையுங்
காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல்
தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய்
இங்கிருந்தா யோஎன்ன
ஒண்ணுதலி பெருமான்றான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

யாவரையும் வெல்லுகின்ற காமனையும் தனது நெற்றிக்கண்ணால் எரித்த ஆற்றலையுடைய , கங்கை விளங்குகின்ற , தெள்ளிய நிலவை அணிந்த சடையின்மேல் தீயின்கண் மலர்ந்தது போலத் தோன்றுகின்ற கொன்றை மலரை உடைய பெருமானை , அடியேன் , ` என் கண்மணியை மறைப்பித்தவனே , இங்கு இருக்கின்றாயோ ?` என்று வினவ , ஒள்ளிய நெற்றியையுடைய வளாகிய உமையம்மைக்குத் தலைவன் , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` காமனையும் ` என்னும் உம்மை சிறப்பு . ` நிலவுச் சடை ` என்னும் சகர ஒற்றும் , ` கொன்றையினானை ` என்னும் இரண்டன் உருபும் , தொகுக்கும்வழித் தொகுத்தலாயின . ` தீமலர்ந்த கொன்றை ` என்றது , மருட்கை யுவமம் . ` ஒண்ணுதலி பெருமானார் ` என்பது பாடம் அன்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

பார்நிலவு மறையோரும்
பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச்
சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர்
ஈங்கிருந்தீ ரேஎன்ன
ஊரரவம் அரைக்கசைத்தான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

` மாலையாகப் பொருந்திய மணம் உடைய கொன்றைப் பூவை அணிந்த சடையை உடையவரே , தாங்குதற்கரிய நஞ்சுபொருந்திய , நீலமணிபோலும் கண்டத்தையுடையவரே , நீர் , மண்ணுலகிற் பொருந்திய அந்தணர்களும் , அடியவர்களும் பணி செய்ய இங்கு இருக்கின்றீரோ ? என்று யான் வினவ , ஊர்கின்ற பாம்பை அரையிற்கட்டிய இறைவன் , ` உளோம் ; போகீர் ` என்றா னன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` சடையனார் ` அண்மை விளி . ` கார் ` என்னும் நிறப் பண்புப்பெயர் ஆகுபெயராய் , நஞ்சினை உணர்த்திற்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

வாரிடங்கொள் வனமுலையாள்
தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப்
பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன்
கருதுமிடந் திருவொற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

கச்சினது இடம் முழுவதையுங் கொண்ட அழகிய தனங்களை யுடையவளாகிய உமையோடு , பூதங்கள் பல சூழ , முதுகாட்டிற் பலகாலும் ஆடுகின்ற , மேலான நிலையில் உள்ளவனும் , கருமை நிறம் தனக்கு இடமாகக் கொண்ட கண்டத்தை யுடையவனும் , தான் விரும்பும் இடமாகிய திருவொற்றியூரையே தனக்கு இடமாகக் கொண்டவனும் ஆகிய இறைவன் , யான் வினவியதற்கு , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` யான் வினவியதற்கு ` என்பது , இயைபு பற்றிக் கொள்ளக்கிடந்தது . வினவிய பொருள் , மேலெல்லாம் சொல்லப் பட்டது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

பொன்னவிலுங் கொன்றையினாய்
போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே
சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே
இங்கிருந்தா யோஎன்ன
ஒன்னலரைக் கண்டாற்போல்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

` பொன்போலுங் கொன்றை மலரை அணிந்த பெருமானே , நீ , கோயிலை விட்டுப்போய் மகிழ மரத்தின் கீழ் இரு ` என்று சொன்ன என்னை , அதன் பொருட்டுக் காணாமலே , சங்கிலி யிடம் சென்று , ` சூளுறவு , மகிழ மரத்தின் கீழே ஆகுக ` என்று சொல்ல வல்ல பெருமானே , நீ , இங்கு இருக்கின்றாயோ என்று யான் வினவ , எம்பெருமான் , என்னை , பகைவரைக் கண்டாற்போல வெறுத்து , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` நவிலும் ` உவம உருபு . ` காணுதல் ` என்பது கண்டு அறிவித்தலை உணர்த்திற்று . ` ஆகுக ` என்பது சொல்லெச்சம் . ` என்ன வல்ல ` என்றது , ` இவ்வாறு கீழறுக்கவல்ல ` என உள்ளுறை நகை . ` வெறுத்து ` என்பது , உவமத்திற் பெற்றது . ` எம் பெருமான் ` என்னும் எழுவாய் , தோன்றாது நின்றது ; வருகின்ற திருப்பாடலினும் இவ்வாறு கொள்க . இங்குக் குறிக்கப்பட்ட வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்துட் காண்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

` மான் போல விளங்குகின்ற சங்கிலியை எனக்கு ஈந்து , அதனால் உளவாகின்ற பயன்களெல்லாம் எனக்கு நன்கு விளங்கும்படி திருவருள் செய்து காத்தாய் ` என்று சொல்லுதற்கு , ` உலகத்தையெல்லாம் பெற்ற தந்தையே , வெண்கோயிலாகிய இவ்விடத்தில் நீ இருக்கின்றாயோ ` என்று யான் வினவ , எம் பெருமான் , ஊன்றுவதாகிய ஒருகோலை அருளி , ` உளோம் ; போகீர் ` என்றா னன்றே ! இத்துணையது தானோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` அருள் செய்தளித்தாய் ` என்றதனை , கற்கறித்து , ` நன்கட்டாய் ` என்றல்போலக் கொள்க . கொள்ளவே , ` உலகமெலாம் ஈன்றவனே ` என்றதும் , நகையாயிற்று . ஆகவே , ` பயன்களெல்லாம் ` என்றது , கண்ணிழந்ததையும் , உடம்பிற் பிணியுண்டாயதையும் குறித்ததாம் . ` ஊன்றுவதோர் கோலருளி ` என்றமையால் , குறிப்பெச்சம் சிறிது வேறுபட்டது . ` என்னுடைய பிரான்அருள்இங் கித்தனைகொ லாம் என்று மன்னுபெருந் தொண்டருடன் வணங்கியே வழிக்கொள்வார் ` ( தி .12 ஏ . கோ . புரா . 281) எனச் சேக்கிழார் அருளுமாறுங் காண்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

ஏராரும் பொழில்நிலவு
வெண்பாக்கம் இடங்கொண்ட
காராரும் மிடற்றானைக்
காதலித்திட் டன்பினொடும்
சீராருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க்
கடையாவல் வினைதானே

பொழிப்புரை :

புகழ் நிறைந்த திருவாரூரில் உள்ள சிவ பெருமானது திருப்பெயரைத் தலையில் வைத்துள்ள நம்பியாரூரன் , அழகு நிறைந்த சோலைகள் விளங்குகின்ற திருவெண்பாக்கத்தை இடமாகக் கொண்ட , கருமை நிறைந்த கண்டத்தை யுடையவனை மிக விரும்பி , அன்போடும் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்மேல் , வலிய வினைகள் வந்து சாராவாம் .

குறிப்புரை :

`அன்பினொடும்` என்ற உம்மை, சிறப்பு. `பாடிய` என்பது சொல்லெச்சம். `வல்லார்க்கு` என்றது உருபு மயக்கம். `தான்` என்னும் அசைநிலை, பன்மை யொருமை மயக்கமாய் வந்தது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ
வாழு நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங்
கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின்கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும் , உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து , தனது இச்சைவழி நடாத்தி , பின்பு நீ முன்செய்த பாவத்தின்பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய , கையில் தமருகத்தையும் , நெருப்பு எரிகின்ற தகழியையும் , சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற , பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம் பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

இத்திருப்பாடலுள் , சுவாமிகள் , தம்மைத் தடுத்தாட் கொண்ட அநுபவத்தையே அருளினமை காண்க . ` மடித்தாடும் ` என்ற பெயரெச்சம் , ` அடிமை ` என்றதன் முதனிலையோடு முடிந்தது . அடிமை - அடிக்குரிய தன்மை ; ` வாழும் ` எனப் பின்னர் வருதலின் , முன்னர் , ` அன்றியே ` என்றது , ` வாழ்தலன்றியே ` என்றதாயிற்று . அவ்வேகாரம் , தேற்றம் . அதனால் , ` மடித்தாடும் அடிமைக்கண் வாழ்தலே செயற்பாலது ` என்பது விளங்கிற்று . ` அடிமை ` என்பதில் மை , பகுதிப்பொருள் விகுதி , எனவும் , ` அன்றி - பகைத்து ` எனவும் உரைப்பாரும் உளர் . ` அடிமைக்கள் `, ` அடிமக்கள் ` என்பனவும் பாடம் . ` நாளும் ` என்ற உம்மை , இழிவு சிறப்பு . ` செக்கிலிடுதல் ` என்றது , ஒறுத்தலைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றது . வருகின்ற திருப் பாடல்களோடு ஒப்ப , ` செக்கிலிடும்போது ` என வாளா அருளினாரா யினும் , அவ்விடத்து எச்ச உம்மை விரித்தல் திருவுள்ளம் என்பது , ஈரிடத்தும் , ` தடுத்து ` என அருளியதனான் விளங்கும் . ` ஆட்கொள் வான் ` என்றது , ` அருள்செய்வான் ` என்னும் பொருளது ; ` கடுத்தாடும் பாம்பு ` எனக் கூட்டுக . ` ஆடி ` என்றது பெயர் . ஆயினும் , இயைபு நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` அன்றே ` என்றது , தேற்றம் . ` இனி நாம் பெற வேண்டுவது யாது ` என்பது குறிப்பெச்சம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பேராது காமத்திற் சென்றார்போ லன்றியே
பிரியா துள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந்
திருவி னாரை
ஓராது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , சாங்காறும் , நீங்காது உலக இன்பத்தில் சென்றவர்போலவன்றி , புகழ் நிறைந்த அன்பையுடையவர்களாய் , தன்னை இடைவிடாது நினைத்து , திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை , அவரது நிலையை அறியாமல் , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய , பெருமையுடையவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

மேலைத் திருப்பாடலில் உள்ள ` மனனே ` என்பது , ஏனைய பாடல்களினும் ஏற்ற பெற்றியிற்சென்று இயையும் . ` சாங்காறும் ` என்பது , இசையெச்சம் . ` சென்றாற்போல் ` என்பது பாடம் அன்று . திரு - திருவருள் . ` பேராளர் ` என்றது தில்லை வாழந்தணரை . இனி , ` பெரியோர்கள் , பெருமையார் ` என அருளுவனவும் அவரை யேயாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து
நாளும் உள்கித்
திரியாத அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுஞ்
சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் [ பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நரியினது வஞ்சனைபோலும் வஞ்சனை யினால் இரண்டுபட்ட தன்மையின் நீங்கி , நாள்தோறும் தன்னை நினைத்து , மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன்சென்று , தனது திருவடியில் வீழ்ந்து வணங்குங் கருத்துடையவரை , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய , பெரியோர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

நரியினது கள்ளம் , அதனோடு ஒரு தன்மைத்தாய கள்ளத்தைக் குறித்தது . அஃதாவது எஞ்ஞான்றும் பயன்கருதியன்றி அடையாமை . ` பிரியாத அன்பராய் ` என்னும் பாடம் சிறவாமை யறிக . ` சிந்தை ` என்றது , கொள்கையை .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட்
டறுப்பிப் பானை
அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங்
காவல் பூண்ட
உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை
மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவராயின் , அக் கட்டினை அறுத்தெறிபவனும் , நமக்கு , பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும் , பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற் கொண்ட இயைபினால் , அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய , பெருமை யுடையவர்களது பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

கருமை பொருந்துதல் , தருமனார் , தமர் ஆகிய இருவர்க்கும் கொள்க . ` கருமையால் ` என்பதும் பாடம் . ` கட்டுவ ராயின் ` என்பதும் , ` நன்னெறியில் வைத்து ` என்பதும் ஆற்றலான் வந்தன . ` கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கும் அடியேன் ` ( தி .7 ப .39 பா .9) எனச் சுவாமிகள் , திருத்தொண்டத்தொகையுள் அருளிச்செய்தமை யின் , ஈண்டு , ` பல்லவன் ` என்றது , அந்நாயனாரையே என்பர் . இதனாலும் ` பல்லவர்க்கு ` என்பது பாடமாகாமை யறிக . ` பல்லவர்க்கும் ` என உம்மையோடும் ஓதுவாரும் உளர் . ` உரிமையால் மறுக்கம் செய்யும் ` எனவும் , ` செய்யும் பெருமான் ` எனவும் இயையும் . இதனால் , உலகத்தை நன்னெறிக்கண் வைத்து ஆளும் அரசர்க்கு இறைவன் துணைசெய்தல் அருளப்பட்டவாறு அறிக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் [ வெண்மதியக்
கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்துகந்
துலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , யானையினது தோலைப் போர்வையாக உடைய , சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச் சூடினவனும் , இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து , அவனால் வெருட்டப் பட்ட சிறுவனுக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும் , நம்மை , அக்கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய , பெருமை நீங்காதவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

` உலவா இன்பம் பெற்றவர் மார்க்கண்டேயர் ` என்பது , வரலாற்றால் இனிது விளங்கிக்கிடப்பது . ` நம்மை ` என்பது , மேலைத் திருப்பாடல்களது இயைபினால் விளங்கிற்று . ` அத்தருமனார் ` எனச் சுட்டு வருவிக்க . நம்மைக் கூற்றுவன் ஏவலரிடமிருந்து மீட்டுக் காத்தல் திண்ணம் என்பது போதர , மார்க்கண்டேய முனிவரது வரலாற்றை எடுத்துக்காட்டியருளினார் . ` பெருமை ஆனார் ` என்பதில் ஐகாரம் தொகுத்தல் . ஆனாமை - நீங்காமை . ` ஆனார் ` என , பண்பின் தொழில் , பண்பின்மேல் நின்றது . இத்திருப்பாடலின் இரண்டாமடியின் நான்காஞ்சீர் , விளமாயிற்று . ` உதைத்துகந்து ` என , ஒற்றளபெடை கொள்ளினுமாம் . ` உதைத்துகந்து வுலவா ` எனவும் ஓதுவர் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய்
ஊன்க ணோட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே
நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி
பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , படம் எடுத்து ஆடும் பாம்பையும் , விரிந்த சடையையும் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும் , பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோ மன்றே ; இனி நாம் பெற வேண்டுவது யாது ! இதனால் , நமக்கு எதனா லும் குறைவில்லாத வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர் ; ஆதலின் , மனமே , இனி நீ , உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது , அதனை முற்றிலும் ஒழி .

குறிப்புரை :

` கண்டாய் ` முன்னிலை அசை . ` எதனாலும் என்பது , ` எத்தாலும் ` என மருவிற்று . ` நம்மை நாளும் குறைவில்லை என்பர் ` என மேலே கூட்டுக . ` என்பர் ` என்றது , ` என்று புகழ்வர் ` எனப் பொருள் தந்தது . முன்னைப் பழக்கத்தை அறவே ஒழித்தலை வற்புறுத்துவார் , மறித்தும் , ` உள்ளமே ` என விளித்தார் . அதனானே , ` ஒழிந்திலையேல் கெடுவை ` என வருவதுணர்த்தலும் பெறப்பட்டது . ` பித்தோடு ஆடி ` என , ஒடு உருபு விரிக்க . பேரருள் பித்துப் போறலின் , ` பித்து ` எனப்படும் . ` ஆடி ` என்றது பெயர் . ` உய்த்தாட்டி ` என்பதும் பாடம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கும்
மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும்
வினையும் போக
விட்டானை மலைஎடுத்த இராவணனைத் தலைபத்தும்
நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , ` தப்பாத , முப்போதும் செய்யும் வழி பாட்டினையுடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே ` என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும் , அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது , பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும் , தனது மலையை எடுத்த இராவணனை , அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச் சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே , இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

` முச்சந்தி ` அடையடுத்த ஆகுபெயர் . ` மூன்று பொழுதும் தவறாது வழிபடும் அந்தணர் மூவாயிரவர்க்கு , வழிபடப் படும் மூர்த்தி ஒருவனேயாதல் வியப்பு ` என்பது நயம் . ` தில்லை மூவாயிரவர் , பிறிதொரு கடவுளை நோக்கார் ` என்பது , உண்மைப் பொருள் . ` பாவமும் ` என முன்னர் வந்தமையின் , ` வினையும் ` என்றது , புண்ணியத்தையாயிற்று . ` விட்டான் ` என்றது , ` விடுவித் தான் ` என்னும் பொருளது . ஊன்றியது சிறிதாகலின் , ` தொட்டான் ` என்றார் . தொடுதல் - தீண்டுதல் . ` நெரியத்தான் ஊன்றா முன்னம் நிற்கிலா தலறி வீழ்ந்தான் மரியத்தான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே ` ( தி .4 ப .47 பா .9) என்று அருளிச்செய்தார் , நாவரசரும் . இத்திருப்பாடலின் முதலடியின் மூன்றாம் சீர் , தேமாவாயிற்று . ` மூவாஅ யிரவர்க்கும் ` என , உயிரள பெடை கொள்ளினுமாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா
கருத கிற்றார்க்
கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே
நம்மை நாளுஞ்
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , கல்லும் தன் தன்மை மாறி உருகும்படி , தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு , எத்தன்மைத்தாய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர் ; அவ்வகையில் நாம் , நம்மை , கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் செக்கிலிட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற , விடையேறுபவனாகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம் பெரு மானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

` கற்றானும் ` என்றதில் தான் , அசைநிலை ; உம்மை இழிவு சிறப்பு . ` அன்றியேகுழையுமாறு ` எனக் கூட்டுக . ஏகாரம் , தேற்றம் . ` கருத கிற்றார் ` என்பது , இறந்தகால வினைப்பெயர் . ` ஆட்டி ` என்றது , ` ஆட்டக் கருதி ` எனப் பொருள் தந்தது . ` பெற்றம் ` என்பது ஈறு குறைந்தது .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே
நம்மை நாளும்
தாடுடைய தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும்
மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நம்மை , தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் , முடைநாற்றத்தையுடைய சமணர்கட்கும் , வயிற்றையுடைய சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை யுடையவனும் ஆகிய , பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டியது யாது ! அதனால் , உயர்ந்தோரால் விரும்பப்படுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொண்டினைச் செய் .

குறிப்புரை :

` நாடு ` என்ற முதனிலைத் தொழிற்பெயர் , செயப் பாட்டு வினைக்கண் வந்தது . ` தாடு - தலைமை ` என்பது தமிழ்ப் பேரகராதி . ` மோடுடைய சாக்கியர் , முடையுடைய சமணர் ` என மொழி மாற்றுப் பொருள்கோள் வந்தது . சமணர் நீராடாமையையும் , சாக்கியர் ஊன் உண்ணுதலையும் அறிக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன்
பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில்
அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய ` உமை ` என்னும் நங்கையது பாகத்தையுடையவனும் , பசிய கண்களையுடைய இடபத்தை யுடைய வனும் , ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள் பவனும் , நம்பியாரூரனுக்குத் தலைவனும் , திருவாரூரை உடையவனும் , மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில் , அழகிய காஞ்சிநதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

குறிப்புரை :

சிவபெருமானது திருக்கோயில் இல்லாத ஊர் ஊரன்று; ஆதலின், அப்பெருமானை, `ஊரூரன்` என்று அருளினார். கொங்கு நாட்டில் காஞ்சிநதிக் கரையில் உள்ள, `பேரூர்` என்னும் வைப்புத் தலத்தில் கூத்தப் பெருமான் சிறந்து விளங்குதலும், அதனால் அது, `மேலைச் சிதம்பரம்` என வழங்கப்படுதலும் உண்மையின், சுவாமிகள் அங்குக்கண்ட காட்சியை நினைந்து, இத்தில்லைச் சிற்றம்பலத் திருப்பதிகத்துள் சிறப்பித்து அருளிச் செய்தார் என்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

உரையாற் சொல்லுதலேயன்றிப் பாட்டாலும் பாடித் துதித்து நிற்பார் செய்த வினைகளை நீக்குகின்ற இறைவரது இடம் , மக்கள் தம் பால் சேர்க்கின்ற பெரிய மரக்கலங்களையும் , சிறிய படகு களையும் கரையிற் சேர்க்கின்ற கடல் அலைகள் பொருந்திய திரு வொற்றியூரே .

குறிப்புரை :

` பாட்டும் ` என்ற உம்மை , எச்சத்தோடு , உயர்வு சிறப்பு , ` திரிவார் ` என்றது , ` பிற செயலைச் செய்யார் ` என்னும் குறிப் பினது . ஈற்றில் உள்ள ஏகாரம் , பிரிநிலை .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் மடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

பந்தாடுதலையும் , கிளியை வளர்த்தலையும் பலகாலும் செய்கின்ற , பாவை போல்வாளாகிய உமையவளது மனத்தைக் கவர்பவரும் , சிவந்த நெருப்புப்போலும் நிறத்தையுடைய வரும் , எங்கள் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாவது , பல பொருள்களைத் தள்ளி வருகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே .

குறிப்புரை :

` பந்தும் கிளியும் ` என்றாரேனும் அவற்றின்கண் செய்கின்ற செயல்கள் என்பது கொள்க . ` போல் `, அசைநிலை ; வருகின்ற திருப்பாடலிலும் இவ்வாறு கொள்க . உந்துதலுக்குச் செயப் படுபொருள் வருவிக்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

பவளமும் , கனியும் போலும் இதழையுடைய , பாவை போன்றவளாகிய உமையது பாகத்தை உடையவனும் , கவளத்தை உண்கிற களிற்றி யானையினது தோலைப் போர்த்தவனும் , தவழ்ந்து பெயரும் பிறை பொருந்திய சடையையுடையவனும் ஆகிய இறைவனுக்கு இடமாவது , புரளுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே .

குறிப்புரை :

` பவளக் கனிவாய் `, பல பொருள் உவமை . கவளம் - யானை உண்ணும் உணவு . ` தவழும் ` என்றதும் , சடையின்கண்ணே யாம் . ஆகவே , ` மதியைத் தவழச் சேர்த்த சடையான் ` என்றவாறா யிற்று . நான்காம் அடியில் , உயிரெதுகை வந்தது .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

என்ன தெழிலும் நிறையும் கவர்வான்
புன்னை மலரும் புறவில் திகழும்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே

பொழிப்புரை :

முதலில் யான் நினைக்குமாறு தன்னைத் தருபவனும் , பின்பு என்னால் நினைக்கப்படுவனும் ஆகிய இறைவன் , எனது அழகையும் , மன உறுதியையும் கவர்தற்பொருட்டு , திருவொற்றி யூரில் , புன்னை மலர்கள் மலர்கின்ற கானலிடத்தே விளங்குவான் .

குறிப்புரை :

இது , சிவபிரான்மேல் காதல்கொண்டாள் ஒருத்தியது கூற்றாக அருளிச்செய்யப்பட்டது . ` என்னது ` என்பதில் னகர வொற்று , விரித்தல் , ` கவர்வான் `, வான் ஈற்று வினையெச்சம் . கடற்கரைச் சோலை . ` புறவு ` எனப்பட்டது . ` தன்னை முன்னம் நினைக்கத் தருவான் - உன்னப்படுவான் ` என்றதனை . என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன் என்னைத் தன்னடி யான்என் றறிதலும் தன்னை யானும் பிரான்என் றறிந்தேனே . ( தி .5. ப .91. பா .8.) என்று அருளிச்செய்ததனானும் அறிக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

பணங்கொள் அரவம் பற்றி பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே

பொழிப்புரை :

படத்தையுடைய பாம்பைக் கையில்பிடித்திருப் பவனும் , மேலானவனும் , பூத கணங்கள் சூழத் தலையோட்டை ஏந்திச் சென்று , துவளுகின்ற இடையினையுடைய மகளிர் இடுகின்ற சோற்றை ஏற்பவனும் ஆகிய இறைவன் திருவொற்றியூரிலே நீங்காது எழுந் தருளியிருப்பான் .

குறிப்புரை :

` பற்றிப் பரமன் ` என்பது பாடம் அன்று . ` ஏந்திக் கவர் வான் ` என இயையும் . வருகின்ற திருப்பாடலில் உள்ள , ` உறையும் ` என்றதனை , மேலும் , கீழும் உள்ள திருப்பாடல்களிலும் இயைத் துரைக்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே

பொழிப்புரை :

படைக்கலத் தன்மை பொருந்திய மழுவையும் , பால்போலும் வெள்ளிய திருநீற்றையும் , இடபம் பொருந்திய கொடியையும் , வேதத்தை ஓதுகின்ற நாவையும் உடையவனும் , தன்னை அடைக்கலமாக அடைபவரது வினைகளை ஒழிப்பவனும் , என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன் ` திருவொற்றி யூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான் .

குறிப்புரை :

` படை ` என்றது , அதன் தன்மையை . ` படையார் மழுவொன்று பற்றிய கையன் ` ( திருமுறை -4.83.1.) என்றதனை நோக்குக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே

பொழிப்புரை :

வானத்தில் உலாவிய மதில்கள் நெருப்பில் வெந்தொழியுமாறு அவற்றை வென்ற , வேறுபட்ட தன்மையை உடைய வனும் , வினைகளைப் போக்குதற்கு மிகவும் நல்ல கடவுளும் , வெண்மையான இடபம் ஒன்றை உடையவனும் ஆகிய இறைவன் , திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான் .

குறிப்புரை :

` நன்று ` என்பது , பெரிதும் எனப் பொருள் தந்தது . ` நன்றும் ` எனப் பிரிப்பினும் ஆம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

தோகையையுடைய மயில்போலும் , வளையை அணிந்த கைகளையுடைய அழகிய மகளிர் பலரும் துதிக்கின்ற , பவளம்போலும் உருவத்தையுடையவனாகிய இறைவன் , கரையில் வந்து உலாவுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரில் இருந்தே , உலகில் உள்ளவரது வினைகளை எல்லாம் தீர்ப்பான் .

குறிப்புரை :

` கலாபம் ` என்னும் ஆரியச் சொல் , ` கலவம் ` எனத் திரிந்தது . ` போல் நல்லார் ` என்றது , வினைத்தொகை .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

பற்றி வரையை யெடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

தமது மலையைப்பற்றி அசைத்த அரக்கனாகிய இராவணனை , அவனது உறுப்புக்கள் ஒடிந்து முரியும்படி நெருக்கின வராகிய இறைவர் , கடல் நீர் சூழ்ந்த , அலைகள் பொருந்திய திரு வொற்றியூரில் இருந்தே , அடியவரைத் தாக்குகின்ற வினைகளை நீக்குவார் .

குறிப்புரை :

` இற்று முரிய ` என்பது ஒருபொருட் பன்மொழி . ஓதம் - மிக்க நீர் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

ஒற்றி யூரும் அரவும் பிறையும்
பற்றி யூரும் பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே

பொழிப்புரை :

ஒன்றை ஒன்று உராய்ந்து ஊர்கின்ற பாம்பும் , பிறையும் பற்றுக்கோடாக நின்று ஊரும் பவளம்போலும் சடையை உடைய இறைவனது திருவொற்றியூர்மேல் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை நன்கு கற்றுப்பாடினால் , வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

` அரவும் பிறையும் உராய்ந்து ஊரும் ` என்றது , அவை ` பகையின்றி நட்புக்கொண்டு வாழும் ` என்றதாம் . இதனை , ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை ஒற்றி யூரும்அப் பாம்பும் அதனையே ஒற்றி யூரஒரு சடை வைத்தவன் ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே . ( தி .5 ப .24 பா .1) என்றதனோடு வைத்து நோக்குக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்
உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே

பொழிப்புரை :

புற்றின்கண் வாழ்கின்ற , படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே , உயிர்களுக்கெல்லாம் தலைவனே , மேலான இடத்தில் உள்ளவனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து , மனத்தால் நினைக்கின்றேன் ; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன் ; உன்னை எக்காரணத்தால் மறப்பேன் !

குறிப்புரை :

`ஒருகாரணத்தாலும் மறவேன் ` என்பது எதிர்மறை எச்சமாயும் , ` யான் இரப்பதனை மறாது அருளல்வேண்டும் ` என்பது குறிப்பெச்சமாயும் வந்து இயையும் . ` எழுமை ` என்றது , வினைப் பயன் தொடரும் ஏழு பிறப்பினை . அதனை , ` எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் ` என்னும் திருக்குறளானும் உணர்க ( 107 ). அவினாசி - அழியாதது ; இத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயராகிய இஃது ஆகுபெயராய் அதன்கண் இருக்கும் இறைவனைக் குறித்தது . இத்திருப்பாடலின் இரண்டாம் அடியில் ஒருசீர் மிகுந்து வந்தது .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

வழிபோவார் தம்மோடும் வந்துடன்
கூடிய மாணிநீ
ஒழிவ தழகோசொல் லாய்அரு
ளோங்கு சடையானே
பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன்
னைக்கிறி செய்ததே

பொழிப்புரை :

அருள் மிக்க , தவக்கோலத்தையுடையவனே , பெருமரப் பொழில்களையும் , நிறைந்த இளமரக் காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது ? உன்னை வணங்கச் செல்பவர் களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன் , உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ ? நீ சொல்லாய் .

குறிப்புரை :

` வழிபோவார் ` என்றதனை , ஏழாவதன் தொகையாக வன்றி , இரண்டாவதன் தொகையாகக் கொள்ளுதலும் பொருந் துவதாதல் அறிக . வழிபோவார் , தல யாத்திரையை மேற்கொண்டவர் . பிறவிடத்தினின்றும் வந்த அவருடன் சேர்ந்து சென்று குளித்த சிறுவர் இருவருள் ஒருவனை முதலை விழுங்கிற்று என்க . ` அம்மாணி ` எனச் சுட்டு வருவித்துரைக்க . ` மாமணி நீ ` என்பது பாடம் அன்று . ` எவன் ` என்னும் வினாப் பெயரின் திரிபாகிய , ` என்னை ` என்பதன்முன் வல்லினம் விகற்பிக்கும் என்க . இஃது அறியாதார் , அதனை இரண்டன் உருபேற்ற தன்மைப் பெயராகக் கொண்டு , வழிபோவேன் றன்னோடும் ` என்னாது , ` வழிபோவார் தம்மோடும் ` என்ற பாடத்தையும் நோக்காது , சிறுவர் இருவரும் , சுவாமிகள் இத் தலத்திற் சென்றபொழுது அவருடன் செல்ல , அவர்களுள் ஒருவனை முதலையுண்டது ` எனச் சேக்கிழாரது திருமொழியொடு முரண உரைத்துக் குற்றப்படுவர் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

எங்கேனும் போகினும் எம்பெரு
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண்
டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
வேன்பிற வாமையே

பொழிப்புரை :

மிகுதியான , ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , எங்கள் தலைவனே , எம்பெருமானாகிய உன்னை நினைத்தால் , கொங்கு நாட்டிலே புகுந்தாலும் , மற்றும் எங்கேனும் சென்றாலும் , என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர் ; ஆகவே , உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன் .

குறிப்புரை :

உம்மை இரண்டனுள் முன்னையது முற்று ; பின்னையது எதிர்மறை . பிரிநிலை ஏகாரம் , இருவகைச் சிறப்பினையும் சிலவிடத்து உணர்த்தும் ; ஈண்டு , ` கொங்கே ` என்பதில் இழிவு சிறப்பை உணர்த்திற்று . ` கொங்கு நாடு நெறிப்படாதோர் மிக்கது ` என்றல் வழக்கு . சுவாமிகளை இறைவர் வழிப்பறி செய்ததும் அந்நாட்டிலே யாதலை நினைக்க . ` கூறைகொண்டு ஆறலைப்பார் இலை ` என்றதனைப் பின் முன்னாக மாற்றியுரைக்க . ` இம்மையில் எனக்குக் குறையாதும் இல்லை ; இனிப் பிறவாமை ஒன்றே வேண்டும் ` என்றவாறு . ` சிறுவனை உயிர்ப்பிக்க எழுந்த அவா நிரம்பாதுவிடின் , பிறப்பு உளதாம் ` என்பது குறிப்பாகக் கொள்க . ` மாணி ` என்பதனை மேலைத் திருப்பாடலினின்றும் வருவித்து , ` இறவாமை ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

உரைப்பார் உரைஉகந் துள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே

பொழிப்புரை :

உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே , உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே , அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே , எல்லாப் பொருட்கும் முதலும் முடிவு மானவனே , சிறந்த முல்லை நிலத்தையும் , சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , கூற்றுவனையும் முதலையையும் , இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள் .

குறிப்புரை :

` உகந்து ` என்னும் வினையெச்சம் எண்ணின்கண் வந்தமையின் , அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது . ` காடுசோலை `, உம்மைத்தொகை . ` கரைக்கால் ` என்றதில் ` கால் ` ஏழனுருபு . ` காலனை ` என்றதனை . ` முதலையை ` என்றதற்கு முன்னர்க் கூட்டி , இரண்டன்கண்ணும் எண்ணும்மை விரித்துரைக்க . ` காலனை முதலை யிடத்தும் , முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்றபடி . செம்பொருள்பட சுவாமிகள் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே , பிள்ளை கரைக்கண் தரப்பட்டமை அறியற்பாற்று .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

அரங்காவ தெல்லா மாயிடு
காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை
நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி
யூர்அவி னாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண்
டகுழைக் காதனே

பொழிப்புரை :

திருப்புக்கொளியூரில் உள்ள , குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலை இடமாகக்கொண்ட , குழையை யணிந்த காதினை உடையவனே , உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது , எல்லாரும் அழிகின்ற முதுகாடு ; அதுவன்றியும் , நீ , அம்பை எடுத்து , வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து , மூன்று ஊர்கள் அழிய அழித்தாய் .

குறிப்புரை :

` உன்னால் ஆகாதது எது ` என்பது குறிப்பெச்சம் . ` எல்லாம் மாய் ` எனப் பிரிக்க . ` எல்லாம் ` என்னும் பொதுப் பெயர் , இங்கு உயர்திணைமேல் நின்றது . ` எல்லாம் ஆய் ` எனப்பிரித்து , ` எல்லாவற்றினும் தெரிந்தெடுத்த இடுகாடு ` என உரைப்பாரும் உளர் . ` சரக்கோல் ` என்னும் இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் உள்ள ககர ஒற்று எதுகை நோக்கி , மெலிந்து நின்றது . ` சரக்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்து ` என விதந்தோதியது , ` அவை பிறரால் அங்ஙனம் செயற்படுத்தற்கரிய பொருள்களானவை ` என்பது பற்றியாம் . ` கோடுதல் ` என்பது இங்கு , ` கெடுதல் ` என்னும் பொருளது . ` புரங்கெட ` என்றேயும் பாடம் ஓதுவர் . ` அவினாசி ` என்றதனை , ` கோயில் ` என்றதன் பின்னர்க் கூட்டுக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

நாத்தா னும்உனைப் பாடல்அன்
றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற
சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி
யூர்அவி னாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட
குற்றமுங் குற்றமே

பொழிப்புரை :

` எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது ` என்றும் , ` உனக்கு வணக்கம் ` என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளிவடிவாய் உள்ள வனே , பூவையணிந்த , நீண்ட சடையை உடையவனே , நடனம் ஆடு பவனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ ?

குறிப்புரை :

` நாத்தானும் ` என்றதில் ` தான் ` அசைநிலை ; உம்மை , எச்சம் ; அதனால் , ` தலையும் பிறரை வணங்காது ; மனமும் வேறொன்றை நினையாது `, என்பன தழுவப்படும் . இழிந்தோர் கூறும் வணக்கச் சொல்லாகிய , ` சோத்தம் ` என்பது , கடைக்குறைந்து நின்றது . ` குற்றம் ` இரண்டனுள் முன்னது , பொதுமையில் ` தன்மை ` என்னும் பொருளதேயாம் . அது , ` குற்றம் ` எனப் பின்னர்க் குறிக்கப்படுதலின் , முன்னரும் அவ்வாறே குறிக்கப்பட்டது . ` குற்றமும் ` என்ற உம்மை உயர்வு சிறப்பு . ` ஆட்பட்ட பின் , விரும்புவதை வேண்டுதல் , நிகழவே செய்கின்றது ` என்பார் , ` உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே ` என்று அருளிச் செய்தார் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

மந்தி கடுவனுக் குண்பழம்
நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ் சலம்புட்பம்
இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி
யூர்அவி னாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன்
நரகம் புகாமையே

பொழிப்புரை :

பெண்குரங்கு , ஆண்குரங்குக்கு , அது செல்லும் மலைப்புறங்களில் , உண்ணத் தக்க பழங்கள் கிடைக்கவேண்டி , ` காலை , நண்பகல் , மாலை ` என்னும் காலங்கள் தோறும் நீரையும் , பூவையும் இட்டு வழிபாடு செய்ய , அதன் மனத்திலும் புகுந்து இருப்ப வனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற , ` நந்தி ` என்னும் பெயரை உடையவனே , உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலையே வேண்டிக் கொள்வேன் .

குறிப்புரை :

` உணப்பழம் ` என்பதும் , ` சலபுட்பம் ` என்பதும் பாடங்கள் . ` புந்தியும் ` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . ` நந்தி ` என்னும் வடசொல் , ` இன்பம் உடையவன் ` எனப் பொருள் படும் . நரகம் புகுதல் , முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனுக்கும் , புதல்வனை இழந்த தாய் தந்தையருக்கும் , அவர்களது துன்பத்தைக் களையாது தமக்கும் உளதாகும் எனக் கருதினமையைக் குறிப்பினால் அருளினாராகக் கொள்க . ` முதலையால் விழுங்கப்படுதல் முதலிய வற்றால் , பாவங் காரணமாக . வாழ்நாள் இடைமுரியப் பெற்றோரும் , புத்திரன் இல்லாதோரும் , பிறர் துன்பம் களைதல் இயலும்வழி அது செய்யாதோரும் நரகம் புகுவர் ` என்பது அறநூல் துணிபு .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

பேணா தொழிந்தேன் உன்னைஅல்
லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி
யேல்இன்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி
யூர்அவி னாசியே
காணாத கண்கள் காட்டவல்
லகறைக் கண்டனே

பொழிப்புரை :

` அணிகலமாகவும் , வில்நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன் ; அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன் ; காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல , நஞ்சினையணிந்த கண்டத்தை யுடையவனே , என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின் , உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன் .

குறிப்புரை :

ஒரோவொரு பயனைப்பெற ஒரோவொரு தேவரை அணுகுவோர் போலவன்றி , எல்லாவற்றிற்கும் உன்னையே அடியேன் அணுகுவேன் ; நீயும் அங்ஙனம் எனக்கு எல்லாவற்றையும் அளிக் கின்றாய் ; இனியும் அளிப்பாய் ` என்பது , இத் திருப்பாடலாற்போந்த பொருளாகக் கொள்க . அறிவுக்கண்ணாவது , அனுபவம் ; அதனை மேலும் மேலும் பெறவிரும்பி , இறைவன் தமக்குக் கண் அளித்த அருஞ்செயலை எடுத்தோதியருளினார் என்க . ` நாண் ` என்றது , வில் நாணேயன்றி , அரை நாணுமாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

நள்ளாறு தெள்ளா றரத்துறை
வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்
தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்
னைக்கிறி செய்ததே

பொழிப்புரை :

திருநள்ளாறு , திரு அரத்துறைகளில் உள்ள நம்பனே , வெள்ளாடையை விரும்பாது , புலித்தோல் ஆடையை விரும்புபவனே , பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக் கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது ?

குறிப்புரை :

முழுகினவன் விரைவில் எழுந்துவாராது மறைந் திருந்து , சில ஆண்டுகளுக்குப்பின் வந்தமையை , ` மாயம் ` என்றார் என்க . இறைவன் செய்த அற்புதச் செயலைச் சிறுவன்மேல் வைத்து வியந்தருளியவாறு . ஐந்தாம் திருப்பாடல் முதலாக வந்த பாடல்கள் , முதலையுண்ட பாலன் மீண்டமைக்கு முன்னும் பின்னும் உள்ள இருநிலைகட்கும் இயையப் பொருள் பயந்து நிற்றலை அறிந்து கொள்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

நீரேற ஏறு நிமிர்புன்சடை
நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ
ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
லார்க்கில்லை துன்பமே

பொழிப்புரை :

நீர் தங்குதலால் பருமை , பெற்ற , நீண்ட புல்லிய சடையை உடைய , தூய பொருளானவனும் , போர்செய்யும் எருதை ஏறுபவனும் , கருமை பொருந்திய கண்டத்தையுடையவனும் ஆகிய , திருப்புக்கொளியூரிலுள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது தொண்டனாகிய நம்பியாரூரன் , ஒரு பயன் கருதிப் பாடிய , இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும் .

குறிப்புரை :

`பயன், முதலையுண்ட பாலனைப் பெறுதல்` என்பது வெளிப்படை. இவ்வதியற்புதச் செயலைச் செய்தமையின், இப் பாடல்கள் புகழை மிக உடையவாயின. மூவர் முதலிகள் வாயிலாக நிகழ்ந்த அற்புதச் செயல்கள் பலவற்றுள்ளும் இதனையே அதியற்புதச் செயலாகப் பின்னுள்ளோர் ஒருவர் குறித்ததும் நினைக்கத்தக்கது ( நால்வர் நான்மணிமாலை - 19). மகனை இழந்து நெடுநாள் வருந்தினோரது வருத்தத்தைப் போக்கிய இப்பாடல்களைப் பாடுவோர்க்கு, ஏனைத் துன்பங்கள் நீங்குதல் சொல்ல வேண்டுமோ என்பது திருவுள்ளம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் மரவும் உடையான் இடமாம்
வாரும் மருவி மணிபொன் கொழித்துச்
சேருந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

இடையறாது ஒழுகும் நீர்ப்பெருக்கு , மணியையும் பொன்னையுங் கொழித்துக்கொண்டு சேர்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , சடையின்மேல் நீரையும் , பல மலர்களையும் பிறையையும் ஊர்ந்து செல்லுகின்ற பாம்பையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` அரவம் ` எனப் பாடம் ஓதி , ` நிலவும் ` என்றதற்கு , ` நிலைபெற்ற ` என உரைப்பாரும் உளர் . ` அருவிபோலக் கடிதாய ஓட்டத்தையுடைய நீர் ` என்றற்கு , ` அருவி ` என்று அருளினார் . ` நறையூர் ` எனப்பட்டது , ஊர்ப்பெயர் எனவும் , ` சித்தீச்சரம் ` எனப் பட்டது கோயிலின் பெயர் எனவும் அறிக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கைம் மடவார் மடுவில் தடநீர்த்
திளைக்குந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

வளையையணிந்த கைகளையுடைய இளமகளிர் , மிக்க நீரினுள் மூழ்கி இன்புறும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , புற்றில் வாழ்கின்ற , படத்தையுடைய பாம்பு போலும் இடையினையுடையவளாகிய தன் தேவி அஞ்சும்படி , துளையையுடைய துதிக்கையையுடைய யானையினது தோலை உரித்துப் போர்த்தவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` ஏர் `, உவம உருபு . உரித்தல் , தன் காரியம் தோன்ற நின்றது . பெருமையை உணர்த்தும் , ` தட ` என்னும் உரிச்சொல் , இங்கு , மிகுதியை உணர்த்திற்று . ` நீர் ` என்பதில் , ` உள் ` என்னும் பொருள் தரும் கண்ணுருபு விரிக்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில் உடையோன் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலம்
திகழுந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

அரும்புபோலும் , மெல்லிய தனங்களையுடைய மகளிரது முகங்களே , தாமரை மலர்போல விளங்குகின்ற திருநறை யூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை இகழுந் தன்மையைப் பெற்ற அசுரர்களது மதில்கள் மூன்றை எரித்த அம்பை யும் , வில்லையும் உடைய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

திருமாலே அம்பும் , மேருமலையே வில்லும் ஆதலின் , அவைகளை உடைமையைச் சிறந்தெடுத்து அருளிச்செய்தார் . ` பதி ` என்றது , ` இடம் ` என்னும் பொருளதாய் நின்றது . ` முகமே ` என்ற பிரிநிலை ஏகாரம் , ` மெய்ம்மைத் தாமரை மலர் மிகையாகும் ` என்னும் பொருளைத் தந்தது . மேலைத் திருப்பாடலில் , ` நீர்த்திளைக்கும் ` என்ற குறிப்பால் , இங்கு , ` முகிழ்மென் முலையார் ` என்றதும் அவரையே என்க . ` கமலம் திகழும் ` என்றது , வினையுவமம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலந் நனிபள் ளிஎழத்
திறக்குந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

தேனைக் கொண்டுள்ள தாமரைமலரை , நன்கு துயிலெழும்படி வண்டுகள் திறக்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச் சரம் ` என்னும் திருக்கோயிலே , வீரத்தைக் கொண்ட இராவணனது மலைபோலும் தோள்களை , தனது மலையால் முரியச்செய்த விரலையுடைய தலைவனாகிய இறைவன் இருக்கும் இடமாகும் .

குறிப்புரை :

` மறங் கொள் ` என்பது , எதுகை நோக்கி , வலிந்து நின்றது . ` உய்யக்கொள்ளுதல் ` என்பதுபோல , ` இறக்கொள்ளுதல் ` என்பதும் ஒருசொல் நீர்மைத்து . ` நறா ` என்னும் குறிற்கீழ் ஆகாரம் , செய்யுளிடத்துக் குறுகிற்று . மலர்கள் கூம்புவதைத் துயில்வதாகவும் , மலர்தலை விழிப்பதாகவும் கூறுதல் இலக்கிய வழக்கு . திறத்தலுக்கு எழுவாய் வருவிக்க . ` திறக்கும் ` என்னாது . ` சிறக்கும் ` என்பதே பாடம் எனலுமாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளும்
செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

குளங்களில் செங்கழுநீர்ப் பூவின் மணங் கமழுமாறு அவைகளின்மேல் கயல்மீன்களும் , சேல் மீன்களும் துள்ளி வீழ்கின்ற , மிக்க நீரையுடைய திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , திருமேனிமுழுவதும் நீற்றை அணிந்தவனும் , அடர்ந்த கூந்தலையுடைய மகளிரது உயர்ச்சி பொருந்திய பண்பு களைக் கொண்டவனும் ஆகிய இறைவன் விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற இடமாகும் .

குறிப்புரை :

` மொய்குழலார் ` என்றது , தாருகாவனத்து முனிவர் பத்தினியரை . அவர்களது உயர்ந்த பண்புகள் , நாணம் முதலியன . மீன்கள் துள்ளுதலால் மலர்கள் மலர்ந்து மணத்தை வீசுகின்றன என்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

ஊனா ருடைவெண் டலைஉண் பலிகொண்
டானார் அடலே றமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

விண்ணிற் பொருந்திய சந்திரன் நுழைந்து செல்லும் , வளவிய சோலைகளினிடத்தில் தேன் நிறைந்து நிற்கும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , ஊன் பொருந்திய , உடைந்த , வெள்ளிய தலையில் , உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்று , ஆனினத்ததாகிய , வெற்றியையுடைய ஏற்றை விரும்புபவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

இத்திருப்பாடலின் முதலடியை , ` ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் ` ( தி .8 திருக்கோத் -2) என்னும் திருவாசக அடியோடு வைத்துக் காண்க . ` ஆன் ` என்றது , ஆனினது பொதுத்தன்மையை . பதிதல் - ஆழ்தல் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

காரூர் கடலில் விடம்உண் டருள்செய்
நீரூர் சடையன் னிலவும் மிடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

கச்சு மேற்பொருந்தப்பெற்ற தனங்களையுடைய மகளிர் அழகுடன் நிறைந்து நிற்கும் தெருக்களில் தேர்கள் ஓடுகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கருமை நிறம் பொருந்திய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , தேவர்கட்கு அருள்செய்த , நீர்ததும்பும் சடையினையுடையவனாகிய இறைவன் விளங்கியிருக்கின்ற இடமாகும் .

குறிப்புரை :

` இளமையையுடைய மகளிரும் , மைந்தரும் செல்வச் சிறப்போடு வாழும் ஊர் , திருநறையூர் ` என்று அருளியபடியாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கரியின் னுரியுங் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியுந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

தமது கடமைகளை விரும்பிச் செய்யும் அந்தணர் கள் , நிறைந்த சொற்களின் பொருளை ஆராய்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , யானைத் தோலையும் , ஆண் மான்கன்றையும் , எரிகின்ற மழுவையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

திருநறையூர் அந்தணர்கள் வேதத்தை ஓதுதல் , தமக்குத் தம் குரவர் கற்பித்த வைதிகச் செயல்களைச் செய்தல் என்பவற்றையே யன்றி , வேதம் முதலியவற்றின் பொருளை ஆராய்தலும் செய்வர் என்றவாறு .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

பேணா முனிவான் பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான் மருவும் மிடமாம்
பாணார் குழலும் முழவும் விழவில்
சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

பண் நிறைந்த குழல்களின் ஓசையும் , மத்தளங் களின் ஓசையும் விழாக்களில் சேய்மைக்கண் சென்று பொருந்துகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை விரும்பாது வெறுத்தவனாகிய தக்கனது பெருவேள்வியின் சிறப்புக் களை எல்லாம் சிறவாதபடி அழித்தவனாகிய இறைவன் பொருந்தி யிருக்கும் இடமாகும் .

குறிப்புரை :

` பேணாது ` என்பதன் ஈறு கெட்டது . ` முனிவன் ` என்பது பாடம் அன்று . வேள்வி , குழல் , முழவு , இவை , ஆகுபெயர்களாய் நின்றன .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த
எறியும் மழுவாட் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியுந் நறையூர்ச் சித்தீச் சரமே

பொழிப்புரை :

நன்னெறியினின்றும் வழுவாத கடப்பாட்டினை யுடைய உயர்ந்தோர்கள் மிக்குள்ள திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கொடிய கூற்றுவனை உதைத்த , குறியினின் றும் தவறாது எறியும் மழுப்படையை உடையவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` வழுவாது ` என்பதன் ஈறு கெட்டது . ` கொடுங் கூற்றுதைத்த ` என்றதனை , ` குறியில் ` என்றதற்கு முன்னே கூட்டுக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

போரார் புரம்எய் புனிதன் அமரும்
சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே

பொழிப்புரை :

போர் செய்தலை உடையவரது முப்புரத்தை அழித்த தூயவனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற , புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்கள் , எழுச்சிபொருந்திய தேவருலகத்தை அடைவார்கள் .

குறிப்புரை :

`சொல் இவை` என்றது வினைத் தொகை.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
உழையீர் உரியும் முடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும் , பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , நெருப்பு நீர்த் தன்மையுடையதாய் ஒழுகினாற்போலும் சடையையும் , மானையும் , யானை , புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` நீர் ` என்றதன்பின் , ` ஆய் ` என , ஆக்கச் சொல் வருவிக்க , ` அழல் நீராய் ஒழுகியனைய ` என்றது , சடையினது நிறத்தையும் , நீண்டு தூங்குதலையும் உணர்த்தற்கு . இனி , ` நீர் அழல் ஒழுகியனைய ` எனமாற்றி , ` நீர் நெருப்பின்மேல் ஒழுகினாற்போலக் கங்கைததும்பும் சடை ` என்று உரைப்பாரும் உளர் . ` உழை ` என்றதன் பின்னும் , எண்ணுமை விரிக்க . மூங்கில் முத்துக்கள் மலையினின்றும் வந்தனவென்க . ` நீர்முத்து ` என்றதில் நீர் - நீர்மை ; சிறப்பு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் னிடமாம்
இண்டை கொண்டன் பிடைஅ றாத
தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

அன்பு , இடையில் அற்றுப்போதல் இல்லாத அடியார்கள் , இண்டை மாலை முதலியவைகளைக் கொண்டுவழி படுகின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , உயிர்கள் செய்த பழைய , வலிமையான வினைகள் நீங்குமாறு நிற்கின்ற , உலகிற்கு முதல்வனும் , தூயவனும் ஆகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` அண்டத்திற்கு முதல்வன் ` என நான்காவது விரிக்க , ` அண்டம் ` என்ற பொதுமையால் , எல்லா அண்டங்களும் கொள்ளப் படும் , இதனை , ` அகிலாண்டகோடி ` என்பர் . ` இண்டை ` என்றது , ஏனையவைகளையும் தழுவநின்ற உபலக்கணம் . ` அன்பு இடையறாத தொண்டர் ` என்பது , ` மெய்யடியார் ` என்றவாறு . யாதானும் ஒரு நிமித்தம் பற்றிச் செய்யப்படும் அன்பு , அந்நிமித்தம் நீங்க , அதனோடே அற்றொழியும் ; அவ்வாறு யாதொரு நிமித்தமும் பற்றாது நேரே செய்யப்படும் அன்பு , ஒரு ஞான்றும் கெடுவது இல்லை . இத்தகைய அன்புடையவரையே , ` மெய்யன்பர் ` என நூல்கள் , யாண்டும் உயர்த்துக்கூறும் . இம் மெய்யன்பினை , இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு . ( தி .11 அற்புதத் திருவாந்தாதி -2.) என்னும் அம்மை திருமொழியால் இனிதுணர்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

சோலைகள் , ஆடுகின்ற மயில்களையும் , சுழலுதல் உடைய வண்டுகளையும் கொண்டு காட்டுகின்ற மிக்க நீரையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , அழகிய பாம்பையும் , கொக்கின் இறகையும் , மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையை யும் முடியில் வைத்துள்ளவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

சிவபெருமான் கொக்குருவம் கொண்ட அசுரனை அழித்து , அதன் அடையாளமாகக் கொக்கிறகைச் சடையில் அணிந் தமையைக் கந்தபுராணத்துட் காண்க . இனி , ` கொக்கிறகு ` என்ப தொரு மலரும் உண்டு . ` முடியில் ` என்பது ஆற்றலாற் கொள்க . கொண்டு காட்டுதலை , ` தருதல் ` என்று அருளினார் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பளிக்குத் தாரை பவள வெற்பில்
குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம்
அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம்
துளிக்கும் சோலைச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

தேனை வண்டுகள் நிரம்ப உண்ணச்செய்து , மேலும் நிலத்திற் சிந்துகின்ற சோலைகளையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , பவளமலையின்மேல் பதிந்து ஓடுகின்ற பளிங்கு அருவிபோலும் முப்புரி நூலை அணிந்த தலைவனாகிய இறைவனுக்கு இடமாகும் .

குறிப்புரை :

` பவள வெற்பிற் குளிக்கும் பளிக்குத் தாரைபோல் நூல் ` எனக் கொண்டு கூட்டி உரைக்க . பவளமலை இறைவனது திரு மேனிக்கும் , அம்மலைமேல் உள்ள பளிங்கு அருவி அவனது மார்பிற் புரளும் முப்புரி நூலுக்கும் உவமை . இஃது இல்பொருளுவமையாம் . ` அளிக்கும் ஆத்தி ` என்னும் பாடம் சிறவாமையறிக . ` மதுவம் ` என்பதில் அம் , தவிர்வழி வந்த சாரியை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு
வதையுஞ் செய்த மைந்தன் இடமாம்
திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறும்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

நிலைபெற்ற மகரந்தமும் , தேனும் , வண்டும் சோலைகளில் நெருங்கியிருக்கின்ற , காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னுந் தலமே , கூற்றுவனுக்கு உதையையும் , ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு அழிவையும் ஈந்த வலிமை உடைய வனாகிய இறைவனுக்கு இடமாகும் .

குறிப்புரை :

விதி - ஊழ் . ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் . - குறள் -380 என்பவாகலின் , ` ஒல்கா விதி ` என்று அருளினார் . மார்க்கண்டேயரது ஊழினை அடியோடு அழித்தமையின் , இறைவனை , ` விதிக்கு வதை செய்தவன் ` என்று அருளினார் . உலையா முயற்சி களைகணா ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகறியப் பான்முளை தின்று மறலி உயிர்குடித்த கான்முளையே போலுங் கரி . - நீதிநெறிவிளக்கம் -50 என , பின்வந்தோர் கூறுதலும் காண்க . இனி ` விதி - தக்கன் ` என்பாரும் உளர் . ` திதியும் ` என்பது , எதுகை நோக்கித் திரிந்து நின்றது . இது , ` திதி ` அடியாகப் பிறந்த பெயரெச்சம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

ஓதக் கடல்நஞ் சினைஉண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனல்உண் டெரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

குளிர்ந்த நீரை உண்டு , தீயை உமிழ்கின்ற மாஞ் சோலைகள் சூழ்ந்த , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , மிக்க நீரை யுடைய கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட , அருள்மிகுந்த பெரு மான் விரும்பும் ஊராகும் .

குறிப்புரை :

பிறர்நலமே கருதுவதாகிய அன்பே ஆக ; அருளே ஆக ; அவை தமக்கு வருங் கேட்டினை அறியும் அறிவைப் போக்கு மாதலின் , அத்தன்மை புலப்படுத்தற்பொருட்டு இறைவனையும் விளைவதறி யாது நஞ்சினை உண்டானாக அருளிச்செய்தார் ; எனவே , ` பித்தன் ` முதலியபோல , ` பேதைப் பெருமான் ` என்றதும் , பழிப்பதுபோலப் புகழ் புலப்படுத்தாயிற்று . மாந்தளிர்கள் நெருப்புப் போலத் தோன்றுதலின் , ` சீதப்புனல் உண்டு எரியைக்காலும் சூதம் ` என்று அருளிச் செய்தார் ; இது விரோதவணி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

உயிர்போலச் சிறந்த மனைவி மக்களும் , ஏனைய சுற்றத்தாரும் , செல்வமும் என்று சொல்லப்பட்ட இன்னோரன்ன வற்றைத் துறந்த ஞானியர் சேர்கின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , இறந்தவரது எலும்புகளையும் ` எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு , புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் .

குறிப்புரை :

` புறங்காட்டில் ஆடினும் தூயவனே ` என்பார் , ` புறங் காட்டாடும் புனிதன் ` என்று அருளினார் . ` சுற்றம் ` என்பது சொல்லால் அஃறிணை முடிபு கொடுக்கப்பட்டது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

காமன் பொடியாக் கண்ஒன் றிமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

தேன் பொருந்திய , மெல்லிய கூந்தலையுடைய மகளிர் , தம் இருக்கையில் இட்ட நறும்புகைகள் , வானத்தில் சென்று நிறைகின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே மன்மதன் சாம்பராகுமாறு கண் ஒன்றைத் திறந்த , வேள்வியாகிய கடலையுடைய வராகிய இறைவர் விரும்பும் இடமாகும் .

குறிப்புரை :

` ஓமக் கடல் ` உருவகம் . ` வேள்விகள் எல்லாவற்றிலும் முதற்கண் வழிபடப்படும் முதல்வர் ` என்றவாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

தன்னைத் தலையால் வணங்குகின்ற தவத்தினை உடையோர்க்கு , எஞ்ஞான்றும் அழியாத செல்வத்தைத் தரும் , ` திருச்சோற்றுத்துறை ` என்னுந் தலமே , இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்கட்கு , நிலையாத இவ்வுலக வாழ்வை நீக்குபவ ராகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` இலை ` என்றது அதனைத் தூவுதலைக் குறித்தது . ` இலையால் ` என்றவிடத்து , ` ஆயினும் ` என்பது எஞ்சி நின்றது ; அதனால் , ` பூவைத் தூவித் துதித்தலே செய்யத்தக்கது ` என்பது பெறப் படும் . ` என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையுமெல்லாம் அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே ` ( தி .4 ப .92 பா .10) ` போதும் பெறாவிடிற் பச்சிலை யுண்டு புனலுண்டெங்கும் ஏதும் பெறாவிடில் நெஞ்சுண் டன்றே ` ( தி .11 திருக்கழுமல மும்மணிக்கோவை -12) என்றாற்போலும் திருமொழிகளால் , பூக்கொண்டு வழிபடுதலே சிறந்ததாதல் அறியப்படுமாறு உணர்க . ` போதும் ` என்றதில் உள்ள உம்மை , ` அரியவனாய இறைவனை மலரால் எளியவனாகப் பெறலாம் ` என்பதை விளக்குவதாம் . ` நொச்சி யாயினுங் கரந்தை யாயினும் பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர் ` ( தி .11 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை -19) என்றதும் , பச்சிலையாதற்கண் சிறந்தன சிலவற்றை அருளியவாறே யாம் என்க . ` நிலையா வாழ்வை நீத்தார் ` என்றது , நிலைத்த வாழ்வை அளித்தார் ` என்னும் கருத்துடையதாம் . ` தாழும் ` என்ற பெயரெச்சம் , ` தவத்தோர் ` என்றதில் உள்ள , ` தவம் ` என்பதனோடு முடிந்தது . தாழுதலையே , ` தவம் ` என்றாராகலின் , பெயரெச்சம் , தொழிற்பெயர் கொண்டு முடிந்ததாம் . ` செல்வச் சோற்றுத்துறை ` என்ற , இரண்டா வதன் பெயர்த் தொகையை , இவ்விடத்திற்கு ஏற்ற பெற்றியான் விரிக்க . முன்னர் , ` நிலையாவாழ்வை நீத்தார் இடம் ` என்றதனால் , பின்னர் , ` தொலையாச் செல்வம் ` என்றது , உலகச் செல்வத்தை யேயாம் . ஆகவே , திருச்சோற்றுத்துறையை அடைந்தவர் , இருவகைச் செல்வத்தையும் பெறுதல் பெறப்பட்டது . ` சோற்றுத்துறை ` என்னும் பெயரும் குறிக்கொளத்தக்கது . ` சோறு ` என்பது , வீடுபேறும் ஆதலை . ` பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் ` ( தி .8 திருவா . திருத்தோ .7) என்பதனாலும் அறிக . இறைவனது ஆணையால் தலங்களும் தம்மை அடைந்தோர்க்குப் பயன்தரும் என்க . ` தவத்தோர் என்றும் தொலையா ` என்பதும் பாடம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்
தற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற் றார்துன் பிலரே

பொழிப்புரை :

பற்றற்றவராகிய அடியார்களது அடிக்கு நாய் போலும் நம்பியாரூரன் , சுற்றிலும் , நிறைந்த நீரையுடைய திருச் சோற்றுத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற , இளமையான சந்திரனைச் சூடிய முதல்வனது திருவடிக்கண் இப்பாடல்களைப் பாடினான் ; இவைகளைக் கற்றவராவார் , யாதொரு துன்பமும் இல்லாதவராவர் .

குறிப்புரை :

` சேர்முதல்வன் `, பிறவினை வினைத்தொகை . தன்வினையெனினும் இழுக்காது . ` இவை ` என்றது தாப்பிசையாய் , ` சொற்றான் ` என்றதற்கு முன்னும் சென்று இயையும் . இவ்வாறன்றி , ` சொல் தான் ` எனப் பிரித்து , ` பாதத்து ` என்புழி , ` சொற்ற ` என்பதனை வருவித்து , ` தான் ` என்றதனை அசைநிலையாக்கி உரைத்தலுமாம் . இவ்வுரைக்கு , ` சொல் ` என்பது , சொல்லுதற் கருவியாகிய , ` வாக்கு ` என்னும் பொருளதாய் , ஆகுபெயரால் , பாடல்களைக் குறித்தது எனப்படும் . ` கற்றார் ` என்றது , எதிர் காலத்துக்கண் வந்த இறந்த காலம் . இறந்த காலமும் , எதிர்காலமும் இங்ஙனம் மயங்கி வருதலை , ` நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான் ; பின் நீ என் செய்வை ` என்றாற்போலும் எடுத்துக்காட்டுக்களான் அறிக .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 1

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே , உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே , உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி , அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள் , தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது , மூண்டெரி யாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல , மனத்தினுள்ளே வெதும்பி , தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறியநின்று . பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது , அதனை , உம்பால் வந்து வாய்திறந்து சொல்வார்களாயின் , நீர் அதனைக் கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர் ; இஃதே நும் இயல்பாயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

இடையில் வருவித்துரைத்தனவெல்லாம் இசையெச்சங் கள் . அடியார்களது அடிமைத் தன்மையை வகுத்தருளிச் செய்தது , அவர்க்கு அருள்செய்தல் , இறைவர்க்கு இன்றியமையாக் கடனாதலை வலியுறுத்தற்கு . அல்லலை வெளியிற்சொல்லி முறையிடுதல் , தீ , சுடர் விட்டு எரிவது போலும் ஆகலின் , வெளியிடாது நெஞ்சொடு நோத லுக்கு அவ்வாறு எரியாது கனலும் தீ உவமையாயிற்று . கனலுதல் , பொதுத்தன்மையாம் . ` வாடுதல் ` என்றது , வாட்டத்தினைப் புலப்படுத்துதலை . ` ஆளாய் இருக்கும் அடியார் ` என்றதனை , ` வேண்டாதே ` என்றதன்பின்னர்க் கூட்டுக . ` வாளாஆங்கு ` என்பது குறைந்து நின்றது . ஆங்கு , அசைநிலை . ` வாழ்ந்துபோதீர் ` என்றதில் , போதல் , துணை வினை . ` நீரே வாழ்வீராக ` என்றது , ` அடியவர் கெடினும் கெடுக ; நீர் கேடின்றி வாழ்மின் ` என்றதாம் . எனவே , இது , அடியவரது கேட்டின் துணிவுபற்றி அவர் வாழ்வின்கண் எழுந்த வருத்தத்தால் , வந்தது என்பது விளங்கும் . நொந்து அருளுகின்றார் ஆதலின் , ` அடியார் ` என , தம்மையே பிறர்போல அருளிச் செய்தார் என்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 2

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை
கொத்தை யாக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

அடிகளே , நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில் , யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழி யொன் றில்லை ; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

நம்பியாரூரர் செய்தது குற்றமாகாமை . ` பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் ` ( தி .7 ப .89 பா .1) என்றவிடத்து விளக்கப்பட்டது . அதனானே , இங்கு , ` குற்றம் ஒன்றும் செய்ததில்லை ` என்று அருளினார் . ` நீரே பழிப்பட்டீர் ` என்றதன் காரணமும் , அவ்விடத்தே , ` பழியதனைப் பாராதே ` என்றதன் விளக்கத்துட் காண்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 3

அன்றில் முட்டா தடையுஞ் சோலை
ஆரூ ரகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தங்கண் காணாது
குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற , சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே , கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல , நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள் , பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது , குன்றின்மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

` உமது பண்டமாற்றுச் செயலிலும் நில்லாது , கொள்வ தன்றிக் கொடுக்கின்றிலீர் ` என்றவாறு . ` காலியின்கண் ` என ஏழனுருபு விரிக்க . ` அவை ` என்றது சுட்டுப்பெயர் . ` பாடும் ` என்றது , ` பாடிப் பயன்பெறும் ` எனப் பொருள்தந்தது . ஈண்டும் , ` அடியார் ` என , தம்மையே பிறர்போல அருளினமை காண்க . ` காணாது ` என , சினை வினை முதல்மேல் நின்றது .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 4

துருத்தி யுறைவீர் பழனம் பதியாச்
சோற்றுத் துறையாள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
மனமே யெனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமைப் பணித்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே , நீர் இன்னும் , ` திருத்துருத்தி , திருப்பழனம் ` என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர் ; திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர் ; ஆதலின் , உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா ; அதனால் உம்பால் அன்புமிக்க அடியார்கள் , தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால் , நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து , மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

` உறைவீர் ` என்றதனை , ` பதியா ` என்றதன் பின்னர்க்கூட்டுக . பணித்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 5

செந்தண் பவளந் திகழுஞ் சோலை
இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே யாமா
றுமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் மடியார்
தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ என்றால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

எங்கள் தலைவரே , இது , செவ்விய தண்ணிய பவளம்போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையை யுடைய திருவாரூர் தானோ ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன் ; உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் , இதுதானோ ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள் , தங்கள் கண் காணப்பெறாது , உம்பால் வந்து , ` எம் பெருமானே , முறையோ ` என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

` பவளம் `, உவமையாகுபெயர் , ` இந்திரகோபம் ` என்பது ஒருவகைவண்டு . ` இதுவே ` என்ற ஏகாரம் , வினா , ` ஆறு ` என்பது , ` பயன் ` எனப் பொருள்தந்தது , ` அறத்தாறிது வென வேண்டா ` ( குறள் -37.) என்பதிற்போல , ` பலவற்றாலும் ` என மூன்ற னுருபு விரிக்க . ` பலவற்றையும் உம்மேல் பாடும் ` எனினுமாம் . ` என்றால் ` என்றது , ` என்னா நின்றால் ` என்னும் பொருளது .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 6

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
சேருந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப்
புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

தினையது தாள்போலும் சிவந்த கால்களையுடைய நாரைகள் திரளுகின்ற திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற , முல்லை நிலத்தில் உள்ள கொன்றையினது மலரால் ஆகிய பொன்மாலை போலும் மாலையை அணிந்த , திரிக்கப்பட்ட புல்லிய சடையை யுடையவரே , உம் அடியவர் , தாம் பொருளில்லாமையால் இன்றி , தங்கள் கண் காணப்பெறாது வருந்தி , மனத்தினுள்ளே வாட்ட முற்றிருப்பதானால் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

` தினைத்தாளன்ன ` என்னும் உவமையது மரபினை , ` தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும் குருகு முண்டுதாம் மணந்த ஞான்றே ` - குறுந்கொகை , 25 என்பதனான் அறிக . ` புனம் ` என்றது , முல்லை நிலத்தை , ` பொன் `, ஆகுபெயர் . ` பொருளின்மையால் வருந்தினும் பெரிதன்று ; கண்ணின்மையால் வருந்துதலைத் தீர்க்க வேண்டாவோ ?` என்றவாறு . ` தாம் ` இரண்டனுள் , பின்னையது அசைநிலை .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 7

ஆயம் பேடை அடையுஞ் சோலை
ஆரூ ரகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா
றுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

ஆண் பறவைக் கூட்டம் , பெண்பறவைக் கூட்டத் துடன் வந்து சேர்கின்ற சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளி யிருக்கின்றவரே , எங்களுக்குப் பொருந்திய பெருமானிரே , உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன் இதுதானோ ? நீர் எனக்கு உம்மை மறவாத மனத்தைக் கொடுத்து , பின்பு ஒரு மாயத்தை உண்டாக்கி , அது காரணமாகப் பிறவியிற் செலுத்தி , உடம்பைக் கொடுத்து , இப்போது கண்ணைப் பறித்துக்கொண்டால் , நீரே இனிது வாழ்ந்துபோமின் !

குறிப்புரை :

` பேடை ` என்றதனால் , ` ஆண்பறவை ` என்பது பெறப் பட்டது ; அவற்றை , ` ஆயம் ` என்றதனால் , ` பேடை ` என்றதும் அன்னதாயிற்று . மறவாமனம் காட்டியது , திருக்கயிலையில் அணுக்கத் தொண்டராகச் செய்தது எனவும் , மாயங்காட்டியது , மாதர்மேல் மனம் போக்கச் செய்தது எனவும் கொள்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 8

கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
இகழா தேத்துவோம்
பழிதா னாவ தறியீர் அடிகேள்
பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

அடிகளே , யாங்கள் இழிவில்லாத உயர்குலத்திலே பிறந்தோம் ; அதற்கேற்ப உம்மை இகழ்தல் இன்றி , நீர் , கழியும் , கடலும் , மரக்கலமும் நிலமுமாய்க் கலந்து நின்ற தன்மையைச் சொல்லும் சொற்களையுடையேமாய்த் துதிப்போம் ; அவ்வாறாகலின் , எம்மை வருத்துதலால் உமக்குப் பழி உண்டாதலை நினையீர் ; அதனால் , உம்மைப்பாடும் அடியேமாகிய யாங்கள் , வழியைக் காண மாட்டாது அலைந்து வாழ்வதாயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

கலந்த சொல் - கலந்ததாகிய பொருளைச் சொல்லும் சொல் , எனவே , சொல்லொடு பொருட்கு உள்ள ஒற்றுமை கருதி , ` கலந்த சொல் ` என அருளியவாறாம் . சொல்லைஉடைய தம்மை , ` சொல் ` என்றது , ஆகுபெயர் , ` கழிந்த சொல்லாகி ` என்பதும் பாடம் . ` உயர்குலம் ` என்றது , ஆதி சைவ குலத்தை , தமக்கு வந்த துன்பத்தைத் தம்மைப் போலும் அடியார் பலர்க்கும் வந்ததாக வைத்து அருளிச்செய்தார் என்க .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 9

பேயோ டேனும் பிரிவொன் றின்னா
தென்பர் பிறரெல்லாம்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ
கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே , விரும்பப்பட்டது காயே எனினும் , விரும்பிக் கைக் கொண்டால் , அது கனியோடொப்பதேயன்றோ ? அதனால் உம்மைத் தவிரப் பிறரெல்லாம் , பேயோடு நட்புச்செய்யினும் , பிரிவு ` என்ப தொன்று துன்பந்தருவதே என்று சொல்லி , அதனைப்பிரிய ஒருப் படார் , ஆனால் , நீரோ , உமது திருவோலக்கத்தின் நடுவே நாய்போல முறையிட்டுத் திரிந்தாலும் , உமக்கு ஆட்பட்டவர்கட்கு , வாய்திறந்து ஒருசொல் சொல்லமாட்டீர் ; இதுவே உமது நட்புத் தன்மையாயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

` வேண்டிற்று ` என்பது , குறைந்து நின்றது . ` வேண்டிற்றுக் காய்தான் ` என மாற்றி , அதன்பின் , ` எனினும் ` என்பது வருவிக்க . ` நடுவே ` என்றது . ` உம் கண்முன்னே என்றவாறு . ` இரக்க மில்லாதோரும் பிறர் துன்புறுவதனைக் கண்முன் காணின் , இரக்கம் உடையவராவர் ; நீர் அதுதானும் இல்லீர் ` என்றபடி .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 10

செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லட்டா னம்மே
இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை
இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

திருமூலட்டானத்தையே பொருந்தி இடமாகக் கொண்டவரே , இது , செருந்தி மரங்கள் , தமது மலர்களாகிய செம் பொன்னை மலர்கின்ற திருவாரூர்தானோ ? இருத்தல் , நிற்றல் , கிடத்தல் முதலிய எல்லா நிலைகளினும் ` உம்மை இகழாது துதிப்பேமாகிய யாம் , உம்பால் வருத்தமுற்று வந்து , ஒரு குறையை வாய்விட்டுச் சொன்னாலும் , நீர் வாய்திறவாதிருப்பிராயின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

` செம்பொன் ` என்றது , சிறப்புருவகம் . ` மலர்தல் , காய்த்தல் ` என்றாற்போல்வன , மலரைத் தோற்றுவித்தல் , காயைத் தோற்றுவித்தல் ` என்னும் பொருளவாய் , செயப்படுபொருள் குன்றா வினையாம் . ` வந்தும் ` என்ற உம்மையை மாற்றியுரைக்க . ` வாய் திறவீர் ` என்பது , மேலைத் திருப்பாடலினின்றும் வந்து இயைந்தது .

பண் :செந்துருத்தி

பாடல் எண் : 11

காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லட்டா னத்தே
அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
வாழ்ந்து போதீரே

பொழிப்புரை :

பல நூல்களும் ஆகி , கருமை மிக்க கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடைய , திருவாரூர்த் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற கச்சுப்பொருந்திய தனங்களையுடையவளாகிய உமாதேவியது பாகத்தைக் கொண்ட வரே , இவ்வுலகில் உள்ள ஊரெல்லாம் அறிய , நீர் , உமது திருவடிப் பெயரைப்பெற்ற நம்பியாரூரனாகிய எனது கண்ணைப் பறித்துக் கொண்டீர் ; அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; இனி நீர் இனிது வாழ்ந்து போமின் !

குறிப்புரை :

`எண்டோள்முக்கண்` என்ற உம்மைத் தொகைச் சொல், `கொண்டீர்` என்ற வினைப்பெயரோடு, இரண்டாவதன் தொகைபடத் தொக்கது. அவற்றது இடையே, `திருமூலட்டானத்து` என்றது நின்று, ஏழாவதன் தொகையாயிற்று. `கலைகள் பலவாகி, முக்கண், மூலட்டானத்துப் பாகங்கொண்டீர், ஊரறிய, ஆரூரன் என்கண் கொண்டீர்; பழிப்பட்டீர்; வாழ்ந்துபோதீர்; எனக் கொண்டு கூட்டியுரைக்க. தம் பெயரைப் பெய்தருளிச் செய்தமையின், இது திருக் கடைக் காப்பாயிற்று. இதன் பின்னர், இறைவர், சுவாமிகள் பெரு மகிழ்வெய்துமாறு கண்ணளித்தருளினமையை அறிந்துகொள்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயா கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாஎன் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

தூய்தாகிய வாயினையுடையவனே , திருப்பரவை யுண் மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , உனக்குத் தொண்டு செய்பவர்கள் படுகின்ற துன்பங்களை நீக்கமாட்டாயோ ! ஐவர்கள் என்னை எப்போதும் குறிக்கொண்டு நோக்கி , உன்னை அடையவொட்டாமல் தடுப்பினும் , நாவையுடைய வாயால் , உன்னையே , நல்லவற்றைச் சொல்லிப் புகழ்வேனாகிய எனக்கு , ` ஆவா ` என்று இரங்கி , அச்சந் தீர்த்தருள் .

குறிப்புரை :

` தூவாய் ` என்றது , வேதத்தைச் சொல்லும் வாய் ` என்றவாறு . இங்ஙனம் வாயைச் சிறப்பித்தருளியது , ` அதனால் அஞ்சேல் என்று சொல் ` என்றற்காம் . ` காவாயா ` என்றது ` காப்பவ னல்லையோ ` என்றபடி . ` காவாயே ` எனவும் பாடம் ஓதுவர் . ` கண்டு கொண்டார் `, முற்றெச்சம் . ஐவர் - ஐம்புலன்கள் . ` நாவாய் ` என விதந்தோதியது , அவையிரண்டும் பிறிதொன்றைச் சொல்ல முயலாமையை விளக்குதற் பொருட்டு நல்லன , பலருக்குச் செய்த திருவருட் செயல்கள் . ` சொல்லுதல் ` என்றது , ` சொல்லிப் புகழ்தல் ` எனப் பொருள் தந்தது . ` என் ` என்றது , தன் காரியத்தின்மேல் நின்றது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி
மின்னானே செக்கர்வா னத்திள ஞாயி
றன்னானே பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

பொன்போலச் சிறந்தவனே , தன்னாலே தன்னைப் புகழ்கின்ற , தானே விளங்குவதோர் ஒளியானவனே , ஒரோவொரு கால் தோன்றி மறைதலால் மின்னலொடு ஒப்பவனே , செக்கர் வானத்தில் தோன்றும் இளஞ்சூரியன் போலும் திருமேனியை உடையவனே , திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே , நின் புகழை எடுத்துரைத்தல் , ஞானியர்க்கு இயல்வதாம் ,

குறிப்புரை :

` ஆம் ` என்றது , ` சிறிதேனும் இயல்வதாம் , என்றபடி . ` தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் சோதி ` என்றது , ` புகழ்வோனும் நீயே ; புகழப்படுபவனும் நீயே ` என்றவாறு . இறைவனையின்றி யாதொரு பொருளும் இல்லையாகலின் . அவன் புகழ்வோனாகியும் நிற்குமாறு அறிக , இவ்வுண்மை உணர்ந்தவர்கட்கே , ` நான் ` என்னும் தற்போதம் நீங்குவதாம் , இதன் பொருட்டே , சிவபூசையின் முடிவில் செபம் , கன்மம் முதலியவற்றைச் சிவபெருமானுக்குத் தானம் செய்யும் மந்திரத்துள் , ` கொடுப்பவனும் சிவனே ` அனுபவிப்பவனும் சிவனே ` என்பன முதலியவற்றோடு , ` வழிபடுபவனும் சிவனே ` எனக் கூறப் படுகின்றது . அதனையே , ` பூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யும் நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும் ஈசனும் ஆகிப் பூசை யான்செய்தேன் எனும்என் போத வாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி - திருவி . புரா . இந்திரன் பழிபடலம் - பா .90 எனத் திருவிளையாடற் புராண முடையார் கூறினார் , முன்னர் வேறொன்றாக வைத்து விளக்கி , பின்னர் , அதுவாய் உள்ளவனே என்றமையின் , ` தன்னானே தன்னை ` என்றதில் , இடவழுவின்மை உணர்க . இனி இவ்வாறன்றி , ` ஆம் ` என்றதனைப் பெயரெச்சமாக்கி , ` தன்மையானே ` என்பது , ` தன்னானே ` என நின்றது எனக் கொண்டு , ` புலவர்க்கு நின்புகழ் போற்றலாமளவே புகழ்ந்திடும் சோதி ` என்றுரைத்தலுமாம் . இதற்கு , மேலைத் திருப்பாடலில் உள்ள , ` ஆவா என் ` என்பது இறுதியின் இயைத்துரைக்கப்படும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணிய மானானே
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்
காமாறென் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

புண்ணியத்தின் பயனாயும் , புண்ணியமாயும் உள்ளவனே , திருப்பரவையுண்மண்டளியுள் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , நீ அருளாதுவிடின் , நாப்பிறழாது உன்னையே நல்லன வற்றாற் புகழ்கின்றவர்கள் போவது எவ்வாறு ? பேய்கள் நீங்காத , பிணத்தை இடுகின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற உனக்கு அடிய வராதல் எவ்வாறு ?

குறிப்புரை :

` நீ அருளாதுவிடின் ` என்பது , ` போமாறென் , ஆமாறென் ` என்ற குறிப்பால் விளங்கும் ,

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றார் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்
தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , ஐவர் என்னை நல்லனவற்றை நோக்காது குறிக்கொண்டு காக்கின்றார் . அவ்வாறு காத்து நிற்பினும் , சொல் லென்னும் மாலையால் , உன்னை என் மனத்தில் இருத்துகின்றேன் ; உன்னையே நினைக்கின்றேன் .

குறிப்புரை :

` என்னை இவ்வாறு வருத்துதல் முறையோ ` என்பது குறிப்பெச்சம் . ` நோக்காமைக் காக்கின்றாய் ` என்பதும் பாடம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பஞ்சேரும் மெல்லடி யாளையொர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேலென் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

செம்பஞ்சு காணப்படும் மெல்லிய அடிகளை யுடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு , நஞ்சு காணப்படும் , நல்ல நீலமணி போலும் கண்டத்தை உடையவனே , திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , உன்னை நெஞ்சில் விளங்கும்படி அழுந்தி நினைக்கின்ற அடியார் களை , ` அஞ்சேல் ` என்று சொல்லிக் காத்தருள் .

குறிப்புரை :

ஏர்தல் - எழுதல் , அழுந்தி நினைத்தல் - மறவாது நினைத்தல் . ` நினைவார் ` என , தம்மையே பிறர்போல அருளினார் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனே , ஆகம ஒழுக்கத்தை உடையவர்கட்கு , உனது திருவருளைத் தருகின்ற பெரியோனே , திருப்பிடவூரில் உறையும் பேரருளாளனுக்குத் தலைவனே , தண்ணிய தமிழால் இயன்ற நூல்களை வல்ல புலமை வாழ்க்கை உடையவர்க்கு , ஒப்பற்ற முதல்வனே , திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனே , உன்னை மறவாது நினைக்கின்ற அடியார் களை . ` அஞ்சேல் ` என்று சொல்லிக் காத்தருள் .

குறிப்புரை :

` அம்மான் ` என்பது , மூன்றிடத்தும் , குறிப்பாகவும் , வெளிப்படையாகவும் வேறு வேறு அடைமொழியோடு நிற்றலின் , கூறியது கூறல் ஆகாமை யறிக , ஆகமம் - சைவாகமம் . அதன் ஒழுக்கம் , சிவபெருமான் ஒருவனையே முதல்வனாக உணர்ந்து , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என்னும் , நான்கு நிலைகளில் இயன்றவகையால் அவனை வழிபடுதல் . சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலையில் இறைவன் திருமுன் கேட்பித்த ஞான வுலாவை , மாசாத்தனார் , திருப்பிடவூரில் கொணர்ந்து நிலவுலகிற்கு அளித்தமை பெரிய புராணத்தால் அறியப்படுதலால் , மாசாத்தனார் , திருப்பிடவூரில் தொன்மையாகவே கோயில் கொண்டிருந்தமை பெறப்படும் , ஆகவே , ` பேரருளாளன் பிடவூரன் ` எனச் சுவாமிகள் அருளிச் செய்தது , மாசாத்தனாரையே என்பது உணரலாகும் , அன்றி , இதற்குப் பொருந்தும் பொருள் வேறு உண்டேனும் கொள்க . இத் தொடரும் இறைவனையே குறித்து வந்த அண்மை விளிப்பெயர்களாக உரைப்பாரும் உளர் , புலவாணர் - புலமை வாழ்க்கை யுடையவர் ; புலவர் . முதனூலைச் செய்தளித்தலின் , இறைவன் அவர்கட்கு முதல்வனாயினான் என்க . இடைக்காலத்தும் , பொருளதிகாரம் ஒன்று செய்தளித்தமை பற்றிச் சேக்கிழார் , இறைவனை , ` நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானை ` ( தி .12 திருஞான . புரா . 883.) என்று அருளினார் . இன்னும் , தமிழ் ஆராயப்பட்ட சங்கங்கள் மூன்றனுள் , சிவபெருமான் முதற்சங்கத்து வீற்றிருந்தமை பற்றி அவர் , அப்பெருமானை , ` தலைச்சங்கப் புலவனார் ` என்றும் அருளிச் செய்தார் ( தி .12 திருஞான - 667.) இதனை , சுவாமிகள் எடுத்தோதியது , தாமும் அருள் நெறிப் புலவாணராயினமை பற்றி என்க , ` நின்னையே உள்கி நினைவாரை அஞ்சேலென் ` என்பதனை , மேலைத் திருப் பாடலினின்றும் கொள்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

விண்டானே மேலையார் மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாம்முன்
கண்டானே கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

` மேல் உள்ளார்க்கு மேல் உள்ளார்க்கு மேல் உள்ள வானம் , எண் , எழுத்து , சொல் , பொருள் மற்றும் எல்லாவற்றையும் முதலிற் படைத்தவனே , வானுலகத்தில் உள்ளவனே , திருப்பரவை யுண்மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , முன்பு என் கண்ணைக் கொண்டாய் ; இப்பொழுது அதனைக் கொடுத்து உன்னைக் காட்டியருள் .

குறிப்புரை :

` விண்தானே , எண்தானே ` என்றவற்றில் உள்ள ` தான் ` அசைநிலை . ஏகாரங்கள் , எண்ணிடைச்சொல் , மேலையார் , பிரகிருதி மாயைக்கு உட்பட்ட விண்ணவர் , அவர்கட்கு மேல் உள்ளவர் , அசுத்த மாயா புவனத்தில் உள்ளவர்கள் , அவர்கட்கு மேல் உள்ள வானம் , சுத்தமாயா புவனம் , இதனை , ` மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி ` ( தி .6. ப .57 பா .7) என்ற ஆளுடைய அரசுகள் திருமொழியோடு ஒருபுடையால் வைத்து நோக்கற் பாலது , சொல்வடிவாய உலகம் . எண்ணும் எழுத்தும் என இருவகைத்து , அவற்றுள் , ` எழுத்து ` என்னும் பகுதியை , ` எழுத்து , சொல் , பொருள் ` என மூன்றாக வகுத்தல் , தமிழ் வழக்கு . ஆதலின் , எண்ணினை , ` தானே ` என வேறு பிரித்தும் , ஏனையவற்றை ஒருங்கு வைத்தும் அருளிச் செய்தார் . சொல்லுலகத்திற்கு முதலாவது சுத்த மாயை யாகலின் , பின்னர் அவ்வுலகத்தை வகுத்தோதுவார் , முதற் கண் , அதற்கு முதலாய சுத்த மாயையை ஓதியருளினார் , ` மேலையார் மேலையார் மேலாய விண் ` என , முன்னே கூட்டுக . ` விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானைப் பதம்சந்திப் பொருள் உருவாம் புண்ணியனை ` ( தி .4 ப .7 பா .8) என்று அருளியவிடத்தும் தமிழ்வழக்குப்பற்றி , சொல்லுலகம் மூன்றாக வகுத்தருளிச் செய்யப்பட்டமை அறியற்பாற்று , இதனுள் , ` சந்தி ` என்றது எழுத்தினையாதல் வெளிப்படை . ` கொண்டிட்டு ` என , எச்ச மாக ஓதினாராயினும் , ` கொண்டிட்டாய் ` என முற்றாக உரைத்தலே திரு வுள்ளம் என்க . இனி , எச்சமாகவே வைத்து , ` கண்ணைக் காட்டு கின்றிலை ` என உரைத்தலுமாம் , ` அண்டம் ` என்பது நீட்டலாயிற்று .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

காற்றானே கார்முகில் போல்வதொர் கண்டத்தெம்
கூற்றானே கோல்வளை யாளையொர் பாகமாய்
நீற்றானே நீள்சடை மேல்நிறை யுள்ளதோர்
ஆற்றானே பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

காற்றாய் உள்ளவனே , கரிய மேகம் போல்வதாகிய ஒப்பற்ற கண்டத்தையுடைய , எம் இனத்தவனே , கோல் தொழில் அமைந்த வளைகளை அணிந்தவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு திரு நீற்றை அணிந்தவனே , நீண்ட சடையின் மேல் நிறைவுள்ளதாகிய ஒரு நதியை உடையவனே , திருப்பரவை யுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே .

குறிப்புரை :

` கண்தனைக் கண்டாய் ` என்பதனை , மேலைத் திருப் பாடலினின்றும் வருவித்து முடிக்க , கூறு - பகுதி ; இனம் . ` வாயாரத்தன்னடியே பாடுந்தொண்டர் இனத்தகத்தான் ` ( தி .6 ப .8 பா .5)

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன் நான் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக் கின்ற தலைவனே , நான் குற்றமுடையேன் ; செய்யும் செயல்களை நல்லனவாகச் செய்யாத தீமையேன் ; கண்டதையெல்லாம் பெற விரும்பும் கொடியேன் ; உன் ஆணையின் வண்ணம் உன்னைப் பாடு மாற்றாற் பாடாத ஓர் அடியேன் .

குறிப்புரை :

` ஆயினும் , எனக்கு இரங்கியருள் ` என்பது குறிப் பெச்சம் . சுவாமிகள் தம் துயரமிகுதியால் இவ்வாறு கூறி இறைவரைப் பெரிதும் குரையிரந்தருளினார் , அதனானே , வினைதோறும் . ` நான் ` என்று , பன்முறை மறித்து அருளிச் செய்தார் , பணி , ` நம்மைச் சொற்றமிழ் பாடுக `( தி .12 தடுத் . புரா . 70) என்று இறைவர் பணித்தது , ` பணி ` என்றது , பணிக்கப்பட்ட நெறியைக் குறித்தது . ` பணியால் ` என , மூன்றாவது விரிக்க , ` எத்தன்மையேனாயி னும் யான் உன் அடியேனாதலின் கைவிடுதல் கூடாது ,` என்றற்கு , இறுதியில் , ` அடியேன் ` என்று அருளிச் செய்தார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே

பொழிப்புரை :

கரந்தை , வன்னி , ஊமத்தை , கூவிளை இவைகளை அணிந்த பரவிய புகழையுடைய திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனை , அன்பு நிறைந்த நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளை விருப்புற்றுப் பாடுவோர் , மேலோர்க்கு மேலோர்க்கு மேலோராவார் .

குறிப்புரை :

கரந்தை முதலியவற்றில், `இலை`, `பூ` என்பவற்றை ஏற்ற பெற்றியாற் கொள்க, `கூவிளம்` என்றதன்பின், `அணிந்த` என்பது, எஞ்சிநின்றது, இனி, `பரந்த-பரவ அணிந்த` என்று உரைத்தலும் ஆம். நிரம்பற்பாலது அன்பேயாகலின், அஃது, ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. `மேலையார் மேலையார் மேலார்` என்றதற்கு, மேல் (தி.7 ப.96 பா.7)) உரைத்தவாறுபற்றி உரைக்க, உரைக்கவே, `சிவலோகத்தில் இருப்பவராவர்` என்பது பொருளா மாறு அறிக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

ஆதியன் ஆதிரையன் அயன்
மாலறி தற்கரிய
சோதியன் சொற்பொருளாய்ச் சுருங்
காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங்கோன் உல
கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

எப்பொருட்கும் முதலானவனும் , ஆதிரை நாண் மீனைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும் , பிரமனும் திருமாலும் அறிதற்கரிய ஒளிவடிவானவனும் , சொல்லும் சொற்பொருளுமாய் நின்று , சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும் ஓதியவனும் , தேவர்களுக்குத் தலைவனும் , உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனி பள்ளியே .

குறிப்புரை :

` சொல்லும் , சொற்பொருளுமாய் இருப்பவனாகலின் , அவற்றை எல்லாம் தெரிவிக்கும் முதனூலைச் செய்ய வல்லவனா யினான் ` என்பார் . ` சொற்பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும் ஓதியன் ` என்று அருளிச் செய்தார் . ` ஓதியன் ` இறந்த கால வினைப் பெயர் . ` நம் பெருமான் ` என்றது , ` சிவன் ` என்னும் பொருளதாய் நின்றது . ` அது ` பகுதிப்பொருள் விகுதி . இத்திருப்பாடலின் முதலடியை , ` ஆதியன் ஆதிரையன் அன லாடிய ஆரழகன் ` ( தி .3 ப .61 பா .1) என்ற திருஞானசம்பந்தர் திருமொழியுடன் வைத்துக் காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

உறவிலி ஊனமிலி உண
ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினைவார் வினை
யாயின தேய்ந்தழிய
அறவில கும்மருளான் மரு
ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையினான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

உறவுத் தொடக்கு இல்லாதவனும் , குறைவில்லாத வனும் , தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி அழித்த வில்லை உடையவனும் , தன்னை நினைபவரது வினை யெல்லாம் வலிமை குன்றி அழியும்படி , மிகவும் விளங்குகின்ற திரு வருளை உடையவனும் , தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் , மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` மூன்றும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . ` செறு வில் ` இறந்த கால வினைத்தொகை . ` வில்லி ` என்பது , இடைக் குறைந்து நின்றது . ` அற இலகும் ` எனப் பிரிக்க . பொழில் மயக்கத்தை உடையதாதல் , இருளால் என்க . ` மருளார்பொழில் வண்டறையும் ` என்றதனை , ` நண்ணும் ஊர் ` என்றதன்பின் கூட்டி உரைக்க . ` மருளார் மொழி வண்டறையும் ` என்பதும் பாடம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

வானுடை யான்பெரியான் மனத்
தாலும் நினைப்பரியான்
ஆனிடை ஐந்தமர்ந்தான் அணு
வாகியொர் தீயுருக்கொண்
டூனுடை இவ்வுடலம் ஒடுங்
கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடெம்பிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

விண்ணுலகத்தைத் தனதாக உடையவனும் , யாவரினும் பெரியோனும் , மனத்தாலும் நினைத்தற்கரியவனும் , பசுவினிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும் , நுண்ணிய பொருளாகி , சுடர் வடிவத்தைக்கொண்டு , ஊனையுடைய தாகிய இவ்வுடம்பினுள் அடங்கிப் புகுந்தவனும் , உலகம் எல்லாம் தன்னுள் அடங்க விரிந்தவனும் , நான் உடைய செல்வமாய் இருப் பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனி பள்ளியே .

குறிப்புரை :

உடம்பிற் புகுதல் , உயிரிடத்து நிற்றல் . ஆகவே , ` அதனினும் நுண்ணியன் ` என்பார் , ` அணுவாகி ` என்றும் , உயிரிட மாகக் காணலுறுவார்க்கு , அவர் இதயத்தில் சுடர் வடிவாய் விளங்கு தலின் , ` தீயுருக்கொண்டு ` என்றும் அருளினார் . இறைவன் , தன்னை நினைவாரது உள்ளத்தில் சுடர்வடிவாய் விளங்குதலை , ` சுடர்விட்டுளன் எங்கள் சோதி ` ( தி .3 ப .54 பா .5) என்றும் , ` ஆன்ற அங்கிப் புறத்தொளி யாய்அன்பின் ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன் ` ( தி .12 திருஞான . புரா . 835) என்றும் அருளிப்போந்தவாற்றான் உணர்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

ஓடுடை யன்கலனா உடை
கோவண வன்னுமையோர்
பாடுடை யன்பலிதேர்ந் துணும்
பண்புடை யன்பயிலக்
காடுடை யன்னிடமா மலை
ஏழுங் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெருமான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

ஓட்டினை உண்கலமாகவும் , கோவணத்தை உடை யாகவும் உடையவனும் , ஒரு பக்கத்தில் உமையை உடையவனும் , பிச்சை எடுத்து உண்ணும் தன்மையை உடையவனும் , வாழ்வதற்குரிய இடமாகக் காட்டை உடையவனும் , ஏழு மலைகளையும் , கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` நாடு ` என்றது தீவுகளை , எனவே , ` ஏழும் ` என்றது ` நாடு ` என்றதனோடும் இயைவதாம் . ` மலை `` என்றதும் , தீவுகளைச் சூழ்ந்துள்ள அவைகளையேயாம் . ` பலிதேர்ந்து உண்டு , காடு இடமா உடையன் எனினும் , உலகம் எல்லாவற்றையும் உடையன் ` என்றவாறு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பண்ணற் கரியதொரு படை
ஆழி தனைப் படைத்துக்
கண்ணற் கருள்புரிந்தான்
கரு தாதவர் வேள்விஅவி
உண்ணற் கிமையவரை
உருண் டோட உதைத்துகந்து
நண்ணற் கரியபிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

ஆக்குதற்கு அரிதாகிய சக்கரப்படை ஒன்றை ஆக்கி , அதனைத் திருமாலுக்கு அளித்தவனும் , தன்னை மதியாத வனாகிய தக்கனது வேள்வியில் அவிசை உண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும்படி தாக்கிப்பின் அவர்கட்கு அருள் செய்து , ஒருவராலும் அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

சிவபெருமான் , சலந்தராசுரனை அழித்தற்பொருட்டுச் சக்கரப் படை ஒன்றை உண்டாக்கினமையையும் , அதனால் சலந்த ராசுரனை அழித்தபின்பு அச் சக்கரத்தை , தன்னை வழிபட்ட திரு மாலுக்கு அளித்தமையையும் கந்தபுராணம் முதலிய சிவபுராணங் களுட் காண்க . அச் சக்கரம் , உலகில் செய்யப்படும் சக்கரம் போல்வ தன்று ஆதலின் , ` பண்ணற் கரியதொரு படை ஆழி ` என்று அருளிச் செய்தார் . ` ஆழிப்படை ` என மாற்றிக்கொள்க . இழிவுபற்றி , ` கருதாதவர் ` எனப் பன்மையால் அருளினார் . ` உணற்கு ` என்றதன் பின் , ` சென்ற ` என்பது எஞ்சிநின்றது . ` உகந்து ` என்ற வினையெச்சம் , ` பிரான் ` என்றவிடத்து எஞ்சிநின்ற , ` ஆகியவன் ` என்பதனோடு முடியும் , ` கருதாதவன் ` எனவும் , ` உகந்த ` எனவும் ஓதுவனவே பாடங்கள்போலும் !

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

மல்கிய செஞ்சடைமேல் மதி
யும்மர வும்முடனே
புல்கிய ஆரணன்எம் புனி
தன்புரி நூல்விகிர்தன்
மெல்கிய விற்றொழிலான் விருப்
பன்பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

நிறைந்த , சிவந்த சடையின்மேல் , சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து பொருந்திய திருமேனியனாகிய வேத முதல்வனும் , எங்கள் தூயோனும் , முப்புரி நூலையணிந்த , வேறுபட்ட தன்மையை உடையவனும் , தன்மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தையுடைய அருச்சுனனுக்கு , மெல்லிய வில்தொழிலினால் அருள்பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` புல்கிய ` என்ற பெயரெச்சம் இடப்பெயர் கொண்ட தாகலானும் அவ்விடந்தான் . இறைவனது திருமேனியே ஆகலானும் , இவ்வாறு உரைக்கப்பட்டது . அருச்சுனனோடு போர் செய்தது , வன்கண்மை காரணமாகவன்றி , அருள்காரணமாகவே யாகலான் , அதனை , ` மெல்கிய விற்றொழில் ` என்று அருளினார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

அங்கமொ ராறவையும் அரு
மாமறை வேள்விகளும்
எங்கும் இருந்தந்தணர் எரி
மூன்றவை யோம்புமிடம்
பங்கய மாமுகத்தாள் உமை
பங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும்வயல் திரு
வூர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

தாமரை மலர்போலும் முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளி யிருக்கின்ற இடம் , அந்தணர்கள் மூன்று எரிகளோடே , ஆறு அங்கங்களையும் , அரிய வேதங்களையும் , வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய , செவ்விய கயல் மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனி பள்ளியே .

குறிப்புரை :

` அவை ` பகுதிப்பொருள் விகுதி . முத்தீயை ஓம்புதலே அந்தணர்க்குச் சிறந்த தொழிலாகலின் , ` எரிமூன்றோடு ` என . அவ் விடத்து ஓடுருபு விரிக்க , ` ஓம்புமிடம் ` என்றது , ஒரு பொருள்மேற் பலபெயராய் வந்தது . செவ்விய கயல் - அழகிய கயல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

திங்கட் குறுந்தெரியல் திகழ்
கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளைவான் அரு
மாமருந் தேழ்பிறப்பும்
மங்கத் திருவிரலால் அடர்த்
தான்வல் அரக்கனையும்
நங்கட் கருளும்பிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

சிறிய பிறையாகிய , விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும் , நுண்ணியனாய் நின்று , எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி , நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை நீக்குகின்ற , உயர்ந்த , அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும் , வலிய அரக்கனாகிய இராவணனையும் , அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய , நமக்கு அருள்செய்யும் பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` குறுந் திங்களாகிய திகழ் கண்ணித் தெரியல் ` என்க . ` கண்ணித் தெரியல் ` இருபெயரொட்டு . ` நங்கண் பிணி களை மருந்து ` எனக் கொள்க . ` பிணி ` என்றது , உருவகம் . ` மங்கக் களை மருந்து ` என இயைக்க . ` அரக்கனையும் ` என்ற உம்மை , சிறப்பு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

ஏன மருப்பினொடும் எழில்
ஆமையும் பூண்டுகந்து
வான மதிள்அரணம் மலை
யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன்னுள் ளுயர்
ஞானசம் பந்தர்க்கன்று
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

பன்றியின் கொம்பையும் , அழகிய ஆமை யோட்டையும் விரும்பியணிந்து , வானத்திற்செல்லும் மதிலாகிய அரணின்முன் , மலையையே வில்லாக வளைத்து நின்றவனும் , குறையில்லாத சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை அருள்செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` மதிளரணம் ` இருபெயரொட்டு . ` அரணம் ` என்றதன் பின் , ` முன் ` என்னும் பொருளதாகிய கண்ணுருபு விரிக்க . இத்தலம் , ஞானசம்பந்தர் தம் தந்தையாரது பியல்மேல் இருந்து தம்மீது ஆணை வைத்துப் பாலைநெய்தல் பாடியருளிய தாகலின் , அச்சிறப்புப் பற்றி , அவருக்கு ஞானம் அருள்புரிந்தமையை நினைந்து அருளிச் செய்தார் போலும் !

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

காலமும் நாள்கழியுந் நனி
பள்ளி மனத்தின்உள்கிக்
கோலம தாயவனைக் குளிர்
நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப்பார் மண்
மறந்துவா னோர்உலகில்
சாலநல் லின்பமெய்தித் தவ
லோகத் திருப்பவரே

பொழிப்புரை :

காலமும் நாள்தோறும் கழியாநிற்கும் , அதனால் , குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன் , கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடு வோர் , தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து , பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து , சிவலோகத்தில் இருப்பவரே யாவர் .

குறிப்புரை :

` காலமும் ` என்ற உம்மை சிறப்பு ; அச்சிறப்பாவது , எல்லா வாழ்விற்கும் முதலாய் நிற்றல் . அச்சிறப்பினையுடைய அது தானும் நில்லாது பெயர்வது என்றவாறு . ` நாளும் ` என்னும் உம்மை , தொகுத்தலாயிற்று . அதன்பின் , ` ஆதலின் ` என்னும் சொல்லெச்சம் வருவித்து , அதனை , ` மதித்துரைப்பார் ` என்றதனோடு முடிக்க . ` சொன்ன ` என்றதனோடு முடிப்பாரும் உளர் . ` காலமும் நாழிகையும் ` என்பதும் பாடம் . ` மண் மறந்து ` என்றது , ` மண்ணிற் பிறவாது ` என்றபடி . அதனை , ` எய்தி ` என்றதன்பின்னர்க் கூட்டியுரைக்க . ` தவலோகம் , சிவலோகம் ` என்பன , வேறுவேறு காரணத்தான் வந்த குறியாய் , ஒன்றனையே உணர்த்துவதாம் . ஏகாரம் , தேற்றம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

தண்ணியல் வெம்மையினான் தலை
யிற்கடை தோறும்பலி
பண்ணியன் மென்மொழியா ரிடங்
கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறை
யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

புண்ணியத்தைச் செய்கின்ற , நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள் , முறைப்படி தனது , திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி , பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத் தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தண்ணிய இயல்பினையும் , வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன் ; வாயில்கள்தோறும் சென்று , பண்போலும் இயல் பினையுடைய இனிய மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற ` பாண்டரங்கம் ` என்னும் கூத்தினை யுடையவன் .

குறிப்புரை :

இறைவனிடத்து அறமாய்க் காணப்படுவதும் , மறமாய்க் காணப்படுவதும் கருணை ஒன்றே யாதலின் , ` தண்மையை யும் , வெம்மையையும் ஒருங்குடையவன் ` என்று அருளினார் . மாறுபட்ட இருதன்மைகள் ஒரு பொருளிற் காணப்படுவது உலகில் இல்லாததோர் அற்புதம் என்றவாறு . ` மொழியாரிடக் கொண்டு ` என்பதும் பாடம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

வலங்கிளர் மாதவஞ்செய் மலை
மங்கையொர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங்கச் சடை
யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில்தண் பனி
வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

பயன் மிகுந்த , பசிய சோலைகள் , குளிர்ந்த , வெள்ளிய சந்திரனைத் தடவுதலால் அழகு மிகுகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , வெற்றி மிக்க , பெரிய தவத்தைச் செய்த மலைமகளை ஒருபாகத்தில் உடையவனாய் , வெள்ளம் மிகுந்த கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றிலே தங்கும்படி தடுத்து வைத்துள்ளான் .

குறிப்புரை :

மலைமகள் தவம்செய்து இறைவன் மணக்கப் பெற்றமையைக் கந்தபுராணத்துட் காண்க . ` உலகமெல்லாம் அழியு மாறு வந்த கங்கையின் பெருக்கம் முழுவதும் சடை ஒன்றில் புல்நுனி மேல் நீர்போல் அடங்கச் செய்தவன் ` என , அவனது பேராற்றலை விதந்தருளிச் செய்தவாறு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கச்சியன் இன்கருப்பூர் விருப்
பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண்ணி உல
கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலையான் நுரை
தீர்புன லால்தொழுவார்
நச்சிய நன்னிலத்துப்
பெருங் கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

நொச்சியின் பச்சிலையும் , நுரை இல்லாத தூய நீரும் கொண்டு வழிபடுவோர் விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் . கச்சிப் பதியில் எழுந்தருளியிருப்பவன் ; இனிய கரும்பின்கண் செல்லுகின்ற விருப்பம்போலும் விருப்பம் செல்லுதற்கு இடமானவன் ; தன்னை நினைந்து உருகுபவரது தலைமேல் இருப்பவன் ; பிச்சையேற்று உண்பவன் ; உலகங்கள் எல்லாவற்றையும் உடையவன் .

குறிப்புரை :

சிறப்புடைத் தலங்களுள் ஒன்றாதல் பற்றிக் கச்சியை விதந்தோதினார் . இன்பமே வடிவினனாகலின் , இன்பத்தை விரும்பும் இயல்பினவாய உயிர்கள் பலவற்றின் விருப்பத்திற்கும் இடம் இறைவனே என்க . ` பிச்சை உண்ணி ; உலகங்கள் எல்லாம் உடையன் ` என்றது , அவனது ஒன்றொடொன்றொவ்வா நிலைகளைக் குறித் தருளியவாறு . நுரையுடைய நீர் வழிபாட்டிற்கு ஆகாமையை அறிந்து கொள்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பாடிய நான்மறையான் படு
பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத்தான் அடி
போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலர்
தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

தலைமேற் குவித்த கையை உடைய பலர் , மிக்க அன்புடையவர்களாய் , ` திருவடி போற்றி ` என்று , பொருந்திய தோத்திரங்களைச் சொல்லி அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவன் , தன்னால் பாடப்பட்ட நான்கு வேதங்களை யுடையவன் ; இறந்த பல பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற , சிறந்த நடனத்தையுடையவன் .

குறிப்புரை :

` பல தோத்திரம் ` என்பதும் பாடம் . ` வாய்த்த ` என்றது வினைப்பெயர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பிலந்தரு வாயினொடு
பெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு
பிள வாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள்கோன்
நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , பிலம் போன்ற வாயையும் , பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்த ராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை , முன்பு , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன் .

குறிப்புரை :

` நிலந்தரு ` என்றதனை , ` மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகள் ` என திருமகளுக்கு ஆக்கி உரைத்தலுமாம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

வெண்பொடி மேனியினான் கரு
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிர
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை உணர்ந்தவர்களாகிய அந்தணர்கள் , பல மந்திரங்களையும் நன்கு பயின்று , பன்முறை துதித்து வணங்கும் , நட்பாம் தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக் கின்ற பெருமான் , வெண்பொடியைப் பூசிய மேனியை உடையவன் ; நீல மணிபோலும் கரிய கண்டத்தை யுடைவன் ; கங்கையாகிய பெண் பொருந்தியுள்ள சடையை உடையவன் ; பிரமதேவனது தலையை , பெருமை கெட அறுத்தவன் .

குறிப்புரை :

` சிரம் பீடழித்தான் ` என்றதனை , ` யானையைக் கோட்டைக் குறைத்தான் ` என்பதுபோலக் கொள்க . நட்பாந்தன்மை - பலராலும் விரும்பப்படும் தன்மை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

தொடைமலி கொன்றைதுன்றுஞ் சடை
யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய்யிற் பகட்
டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கமலம் மலர்
மேன்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

இளமையான அன்னப் பறவைகள் , நீர்மடைகளில் நிறைந்துள்ள , வளவிய தாமரை மலர்மேல் தங்கிப் பின் அப்பாற் சென்று நடத்தல் நிறைந்த திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , மாலையாக நிறைந்த கொன்றைமலர் பொருந்திய சடையை உடையவன் ; ஒளிவீசுகின்ற வெள்ளிய மழுவாகிய ஆளும் படைக்கலம் நிறைந்த கையை உடைய வன் ; திருமேனியில் யானையினது உரித்த தோலாகிய போர்வையை உடையவன் .

குறிப்புரை :

மழு நிறைதலாவது , அவனது அகங்கைக்கு ஏற்புடைய தாய் இருத்தல் . இனி அழகு நிறைந்திருத்தல் என்றுமாம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

குளிர்தரு திங்கள்கங்கை குர
வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமேல் உடை
யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங்கை தட
மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

நறுமணம் பொருந்திய , தளிர்களைத் தருகின்ற கோங்கு , வேங்கை , வளைவையுடைய குருக்கத்தி , சண்பகம் முதலிய பூமர வகைகள் பலவும் குளிர்ச்சியைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தனது ஒளிவீசுகின்ற , புல்லிய சடையின்மேல் , குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரன் , கங்கை , பாம்பு , குராமலர் , கூவிள இலை முதலிய இவைகளை உடையவன் ; இடபத்தை ஊர்கின்றவன் ;

குறிப்புரை :

திங்கள் முதலியனவாகவும் , கோங்கு முதலியனவாகவும் தொடர்ந்த பல்பெயர் உம்மைத் தொகைகளின் ஈற்றில் நின்ற உம்மைகள் , ஏனையவற்றையும் தழுவும் எச்ச உம்மைகள் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங்
கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்தி அருச்
சுனற்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழவில் தகு
சைவர்த வத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

உலகத்தவர் மிக்குள்ள தண்ணிய விழாக்களை யுடைய , தகுதிவாய்ந்த சைவர்களாகிய , தவத்திற் சிறந்த நம்மவர் மிக்கு வாழ்கின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , நிலப் பிளப்புக்கள் மிகுந்த கொடிய கற்சுரத்தில் , கொடிய பன்றியின்பின்னே வேடுவனாய்ச் சென்று அருச்சுனனோடு போராடுதலைப் பொருந்தி , அவனுக்குத் திருவருள் செய்த தலைவனாவான் .

குறிப்புரை :

தவத்தின் மிக்காரை , ` நமர் ` எனத் தம்மொடு படுத்து அருளினமையின் , ` தமர் ` என்றது , அயலவராகிய உலகத்தாரை யாயிற்று . அவர்கள் பயிலுகின்ற விழா , உலகியலில் உள்ள மங்கல வினைகள் . ஆகவே , தண்மை , மகிழ்ச்சியைக் குறித்ததாம் . தவமாவது இறப்பில் தவமாகிய ( சிவஞானபோதம் - சூ .8 அதி .1 வெ .2) சிவபுண்ணியமே என்பது விளங்குதற்பொருட்டு , ` சைவராகிய தவத்தவர் ` என்று அருளினார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

கருவரை போல்அரக்கன் கயி
லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லால்அடர்த்தின் னருள்
செய்த வுமாபதிதான்
திரைபொரு பொன்னிநன்னீர்த் துறை
வன்திகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

அலை மோதுகின்ற காவிரியாற்றினது நல்ல நீர்த்துறையை உடையவனும் , சோழர்கோமகனும் ஆகிய அரசன் செய்த , திருநன்னிலத்துப் பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற பெருமான் , அரக்கனாகிய இராவணன் , கயிலாய மலையின்கீழ் , கரியமலைபோலக் கிடந்து கதறும்படி ஒரு விரலால் நெருக்கிப் பின்பு அவனுக்கு அருள்புரிந்த உமை கணவனாகும் .

குறிப்புரை :

` உமாபதி ` என்றது , ஒரு பெயரளவாய் நின்றது . பொருதலுக்கு , ` கரை ` என்னும் செயப்படுபொருள் வருவிக்க . நரபதி - மக்களுக்குத் தலைவன் ; அரசன் . இங்குக் குறிக்கப்பட்ட சோழ அரசர் , கோச்செங்கணாயனார் என்பதனை , வருகின்ற திருப்பாடலுள் அறிக . இவரது வரலாற்றை , பெரிய புராணத்துட் காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கோடுயர் வெங்களிற்றுத் திகழ்
கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங்
கோயில்ந யந்தவனைச்
சேடியல் சிங்கிதந்தை சடை
யன்திரு வாரூரன்
பாடிய பத்தும்வல்லார் புகு
வார்பர லோகத்துளே

பொழிப்புரை :

தந்தங்கள் உயர்ந்து காணப்படுகின்ற வெவ்விய யானையின்மேல் விளங்குகின்ற கோச்செங்கட்சோழ நாயனார் செய்த , யாவரும் விரும்புகின்ற , திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அழகு பொருந்திய சிங்கடிக்குத் தந்தையும் , சடையனார்க்கு மகனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள் , பரலோகத்துள் புகுவார்கள் .

குறிப்புரை :

` சிங்கடி ` என்பது , ` சிங்கி ` எனக் குறுக்கப்பட்டது . ` சடையன் ` என்றதன்பின் , ` மகன் ` என்பது எஞ்சிநின்றது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

பிறையணி வாணுதலாள் உமை
யாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க நீல
மால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல்லை அளைந்
துகுளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள்சேர் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

சிறகுகளையுடைய அழகிய வண்டுகள், இன்றி யமையாத, அழகிய துளசியிலும், முல்லை மலர்களிலும் மகரந்தத்தை அளைந்து, பின்பு குருக்கத்திக் கொடியின்மேல் சேர்கின்ற திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ பிறைபோலும், அழகிய, ஒளிபொருந்திய நெற்றியை உடையவளாகிய உமையவள் மருளவும், திட்பம் பொருந்திய மனம் கலங்கவும், நீல நிறத்தை உடைய, பெரிய நஞ்சினை உண்டதற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`தேவர்களைக் காத்தற் காரணமாக எழுந்த கருணைதானோ?` என்பது குறிப்பெச்சம். வருகின்ற திருப்பாடல் களில் இவ்வாறுரைப்பனவும் அவை. கணித்தல் - எண்ணுதல், பேழ் கணித்தல் பெரிதும் எண்ணுதல். இது, கழிவிரக்கம், ஐயம், மருட்கை முதலிய பொருள்களை உணர்த்தும். குறை - இன்றியமையாமை. `கொல்லை முல்லை` என்பதும் பாடம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

அருந்தவ மாமுனிவர்க் கரு
ளாகியொர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரிதற் கியல்
பாகிய தென்னைகொலாம்
குருந்தய லேகுரவம் மர
வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மலருந் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

குருந்த மரத்தின் பக்கத்தில் குராமரம், பாம்பினது பல்லைத் தாங்கினாற்போல அரும்புகளைத் தோற்றுவிக்க, செருந்தி மரம், செம்பொன்போலும் மலரைக் கொண்டு விளங்கும் திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, அரிய தவத்தையுடைய சிறந்த முனிவர்கள்மேல் கருணை கூர்ந்து, ஓர் ஆலமரத்தின் கீழ் இருந்து அறத்தைச் சொல்ல இசைந்ததற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`உலகத்தை உய்விக்குங் கருணைதானோ?` என்பதாம். ``அருளாகி`` என, பண்பின் வினை, பண்பின்மேல் நின்றது. ``இயல் பாகியது`` என்றது, அவரது கருத்திற்கேற்ற தன்மையனாகியது என்ற வாறு. ``கொல், ஆம்`` அசைநிலைகள்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

பாலன தாருயிர்மேற் பரி
யாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்
தாக்கிய தென்னைகொலாம்
கோல மலர்க்குவளைக் கழு
நீர்வயல் சூழ்கிடங்கில்
சேலொடு வாளைகள்பாய் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

அழகிய குவளை மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும் உடைய வயல்களைச் சூழ்ந்துள்ள வாய்க்கால்களில், சேல் மீன்களும், வாளை மீன்களும் துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, சிறுவன் ஒருவன்மேல் இரக்கங் கொள்ளாது பகைத்து, அவனது அரிய உயிரைக் கவர வந்த இயமனை அழிவித்து, அச்சிறுவனுக்கு அருளை வழங்கியதற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`அடைக்கலமாக அடைந்தவரைக் காக்கும் கருணை தானோ?` என்பதாம். `பதைத் தெழுந்த காலனை` என்பதும் பாடம். கருத்து - திருவுள்ளம். அதனை ஆக்கியது, மார்க்கண்டேயர்பால் என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

குன்ற மலைக்குமரி கொடி
யேரிடை யாள்வெருவ
வென்றி மதகரியின் னுரி
போர்த்ததும் என்னைகொலாம்
முன்றில் இளங்கமுகின் முது
பாளை மதுஅளைந்து
தென்றல் புகுந்துலவுந் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

இல்லங்களின் முன்னுள்ள இளைய கமுகமரத்தின் பெரிய பாளைகளில் கட்டப்பட்ட தேன் கூடுகளில் உள்ள தேனை, தென்றற் காற்றுத் துழாவி, தெருக்களில் வந்து உலவுகின்ற திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, பல குன்றுகளையுடைய இமய மலையின் மகளாகிய, கொடிபோலும் இடையையுடைய உமை அஞ்சும்படி, வெற்றியையும், மதத்தையும் உடைய யானையின் தோலை உரித்ததே யன்றி, அதனைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டதற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`உலகிற்கு இடர் தீர்த்தலேயன்றி, தீர்க்க வல்லவன் என்றும் காட்டுதல்தானோ?` என்பதாம். ``குன்று`` என்றது, சூழ உள்ள பலவற்றை, மருதநிலமாதலின், முன்றில்களில் கமுக மரங்கள் உள்ளன என்க. கமுகம் பாளைகளில் வண்டுகள் தேன்கூடு அமைத்தல் இயல்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

அரைவிரி கோவணத்தோ டர
வார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத் தன்
றுகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணியும் வரைச்
சந்தகி லோடும்உந்தித்
திரைபொரு தண்பழனத் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

மலைகள் தந்த சிறந்த மாணிக்கங்களையும், அவற்றில் உள்ள சந்தனக்கட்டை, அகிற்கட்டை என்பவைகளுடன் தள்ளிக்கொண்டு வந்து, அலைகள் மோதுகின்ற, குளிர்ந்த வயல்களை யுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, அரையின்கண், அகன்ற கோவணத்தோடு பாம்பைக் கட்டிக்கொண்டு, ஒப்பற்ற நான்கு வேதங்களின் பொருளை, அன்று விரிவாகச் சொல்லி, அதனைக் கேட்டோரை விரும்பி, அவருக்கு அருள் செய்தற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`முதல்நூலின் உண்மைப் பொருள் பிறழாது விளங்கக் கருதியதுதானோ?` என்பதாம். சிவபிரான் வேதத்தை அருளியதே யன்றி, அதன்பொருளை உரைத்த வரலாறுகளும் சொல்லப்படுதல் அறிக. `அவ் வரை` எனச் சுட்டு வருவிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை யுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நிலைபெற்ற பெரிய தவத்தினால், வேள்வித்தீயினின்றும் தோன்றிய சிங்கமும், நீண்ட புலியும், பருத்த பெரிய யானையோடே கதறி அழியும்படி மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின்றும் உரித்த தோலைப் போர்த்த தற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்தானோ?` என்பதாம். தவம், தாருகாவன முனிவர் களுடையது என்க. அம்முனிவர்கள் செய்த வேள்வியில் புலியே யன்றி, `சிங்கம், யானை` என்பனவும் தோன்றினமையை இத்திருப் பாடலால் அறிகின்றோம். `போர்த்தல்` என்பது, `மறைத்தல்` என்னும் பொருளதாய், `உடுத்தல், போர்த்தல்` இரண்டற்கும் பொதுவாய் நின்றது. யானை யுருவங்கொண்ட அசுரனை அழித்ததன்றி, இவ்வாறு கூறும் வரலாறும் உளதென்பதும் இங்கு அறியப்படுகின்றது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

நின்றஇம் மாதவத்தை யொழிப்
பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடி
யாக விழித்தலென்னே
பங்கய மாமலர்மேல் மது
வுண்டுவண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல்சூழ் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

இப்பாடல், ஏடெழுதினோராற் பிழைபட்டதும் மிகையாகப் பிரதிகளில் சேர்ந்தது போலும்! இதனை, ஒன்பதாந் திருப்பாடல் கொண்டு உணர்க.)

குறிப்புரை :

*************

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

வரியர நாணதாக மா
மேரு வில்லதாக
அரியன முப்புரங்கள் ளவை
ஆரழல் ஊட்டல்என்னே
விரிதரு மல்லிகையும் மலர்ச்
சண்பக மும்மளைந்து
திரிதரு வண்டுபண்செய் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

சோலைகளில் திரிகின்ற வண்டுகள், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மலரிலும், சண்பக மலரிலும் மகரந்தத்தை அளைந்து, இசையைப் பாடுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளி யிருப்பவனே, நீ, கீற்றுப் பொருந்திய பாம்பே நாணியாகவும், மாமேரு மலையே வில்லாகவும் கொண்டு, அரியவான மூன்று ஊர்களை, அரிய தீ உண்ணும்படி செய்ததற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`நின்னை மறந்த குற்றத்தைத் தீர்த்தற்பொருட்டுத் தானோ?` என்பதாம். `மலர்` என்றதனை, `விரிதரும்` என்றதன் பின்னர்க்கூட்டி யுரைக்க. `வரிமாமேரு` என்பதொரு பாடம் காணப் படுகின்றது; அதனை, `வரை மாமேரு` என்று ஓதிக்கொள்ளுதல் சிறக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

அங்கியல் யோகுதனை யழிப்
பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடி
யாக விழித்தல்என்னே
பங்கய மாமலர்மேல் மது
வுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுகளுந் திரு
நாகேச் சரத்தானே.
 

பொழிப்புரை :

குளங்களில், தாமரை மலர்களின் மேல் வண்டுகள் தேனை உண்டு இசையைப்பாட, செவ்விய கயல்மீன்கள், நிலைபெற்று நின்று துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கயிலையின்கண் செய்த யோகத்தைக் கெடுத்தற்குச் சென்று சேர்ந்து, பெரிதும் சினங்கொண்ட, மலர்க்கணையை உடைய மன்மதன் சாம்பராகும்படி ஒரு கண்ணைத் திறந்ததற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`உனது காமமின்மையைக் காட்டுதற்குத் தானோ?` என்பதாம். ``அங்கு`` என்றது, பண்டறி சுட்டு. யோகு செய்த இடம் திருக்கயிலையாதலின், ``அங்கு`` என்றும், `சென்று` என்றும் அருளிச் செய்தார்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

குண்டரைக் கூறையின்றித் திரி
யுஞ்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன்மை விர
வாக்கிய தென்னைகொலோ
தொண்டிரைத் துவணங்கித் தொழில்
பூண்டடி யார்பரவும்
தெண்டிரைத் தண்வயல்சூழ் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

அடியார்கள், அடிமைத்தொழில் பூண்டு, ஆர வாரித்து வணங்கித் துதிக்கின்ற, தெளிந்த அலைகளையுடைய, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப் பவனே, மூர்க்கரும், மனவலியுடையவரும் ஆகிய, உடையின்றித் திரியும் சமணரும், புத்தரும் என்னும் பேய்போல்வாரை, அவர் கண்டதே கண்ட தன்மையைப் பொருந்தச் செய்ததற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`அவர்களது வினைதானோ?` என்பதாம். `விரவாகி யது` என்பது பாடம் அன்று. ``தொழில் பூண்டு`` என்றதனை, `தொண்டு` என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கொங்கணை வண்டரற்றக் குயி
லும்மயி லும்பயிலும்
தெங்கமழ் பூம்பொழில்சூழ் திரு
நாகேச் சரத்தானை
வங்க மலிகடல்சூழ் வயல்
நாவல வூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல்லா ரவர்
தம்வினை பற்றறுமே.

பொழிப்புரை :

மகரந்தத்தை அடைந்த வண்டுகள் ஒலிக்க, குயிலும், மயிலும் பாடுதலையும், ஆடுதலையும் செய்கின்ற, தேனினது மணங் கமழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந் தருளியிருக்கின்ற இறைவனை, மரக்கலங்கள் நிறைந்த கடல்போலச் சூழ்ந்துள்ள வயல்களையுடைய திருநாவலூரானாகிய நம்பியாரூரன் பாடிய, குறையில்லாத இப்பாடல்களைப் பாட வல்லவர்களது வினை பற்றறக் கழியும்.

குறிப்புரை :

`கொங்கமர்` என்பதே பாடம் போலும்! `தேங்கமழ்` என்பது குறுகி நின்றது. `தெங்கணை பூம்பொழில்` என்பதும் பாடம். `கடல்சூழ்` என்றது வினையுவமம். ``நாவலவூரன்`` என்பதில் வந்த அகரம், சாரியை. `வயல் நாவலாரூரன்` என்பதும் பாடம். ``அவர்`` பகுதிப் பொருள் விகுதி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

தானெனை முன்படைத்தான் அத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித் தருளினான் ; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு , அந்தோ , நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன் ! செய்யாதொழியவும் , அப்புன்மை நோக்கி ஒழியாது , என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி , வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து , எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம் . ` அது அறிந்து ` என்றதனால் , தோற்றுவித்தது , பாடுதற்பொருட்டு என்ற தாயிற்று . ` அடிக்கு ` என்பது வேற்றுமை மயக்கம் . நொடித்தல் அழித்தல் . எனவே , ` நொடித்தான் மலை ` என்றது , ` அழித்தற் கடவுளது மலை ` என்னும் பொருளதாய் , திருக்கயிலை மலைக்குப் பெயரா யிற்று . ` நொடித்தான் ` என இறந்த காலத்தால் அருளிச் செய்தது , நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவன் ஈச னொருவனே . ( தி . 5 ப .100 பா .3) என்றருளிச் செய்தவாறு , எண்ணில்லாத தேவர் யாவரையும் ஈறுசெய்து , தான் ஈறின்றியே நிற்கும் முதன்மையினை விளக்குதற் பொருட்டு . இதனானே , என்றும் அவ்வாறு நிற்றல் இனிது பெறப்படும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

ஆனை உரித்தபகை அடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

யான் , கருவி கரணங்களை அறிவினால் அடக்கி , அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன் ; அவ்வளவிற்கே , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந் தருளும் அம் முதல்வன் , வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு , ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான் ; அஃது , அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியே னால் நீங்கச்செய்து , அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ !

குறிப்புரை :

ஓடு , ஆன் உருபின் பொருளில் வந்தது . ` கொல் ` ஐயமாகலின் , அதற்குரியது வருவித்துரைக்கப்பட்டது . ஓகாரம் , அசை நிலை . ` மதித்த ` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

மந்திரம் ஒன்றறியேன் மனை
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி
சேசெயுந் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில் அழ
கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

நெஞ்சே , அடியேன் , மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி , அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது , அழகைத் தரும் வேடங்களைப் புனைந்துகொண்டு , இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன் ; எனக்கு , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ !

குறிப்புரை :

அந்தரம் - வெளி . ` என்னை ` என்பது வேற்றுமை மயக்கம் . ` தரம் ` உடையதனைத் ` தரம் ` என்று அருளினார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

வாழ்வை உகந்தநெஞ்சே மட
வார் தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென்னை அது
மாற்றி அமரரெல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்ட
னேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

உலக இன்பத்தை விரும்பிய மனமே , பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்துஅழுந்திக் கிடந்த என்னை , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , அந்நிலையினின்றும் நீக்கி , தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு , என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

ஆழ முகத்தல் - அழுந்துதல் . ` ஆழத்தை விரும்பிய ` என்றும் ஆம் . ` ஆழ வுகந்த ` என்பது பாடம் போலும் !

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

மண்ணுல கிற்பிறந்து நும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல் தொண்ட
னேன்இன்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர்கள் விரும்
பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

` மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார் , பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரை யளவைப் பொருளை , அடியேன் இன்று நேரிற்கண்டேன் ` என்று தன்பால் வந்து சொல்லுமாறு , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந் தருளும் முதல்வன் , தேவரும் கண்டு விருப்பங்கொள்ள , என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச் செய்தான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` கண்டொழிந்தேன் ` என்புழி , ` என ` என்பதொரு சொல் வருவிக்க . ` நும்மை ` என்பதனை , ` தன்னை ` எனப் பாட மோதுதலே சிறக்கும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அஞ்சினை ஒன்றிநின்று அலர்
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மனமே வைகி
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , ஐம்புலன்களைப் பொருந்தி நின்று , பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என்மனத்தின்கண்ணே வீற்றிருந்து , எனக்கு இறப்பை நீக்கி , தேவர் களது கண்முன்னே , என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட , வெவ்விய சினத்தையுடைய யானையூர்தியை அளித்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` நின்று ` என்ற வினையெச்சம் , எண்ணின்கண் வந்தது . ` வெஞ்சினம் ` இனஅடை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

நிலைகெட விண்ணதிர நிலம்
எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும் , நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி , தனது திரு மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே , அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன் , பூக்களைக் கொண்டு , யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு , உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` மலையிடை ` என்பது இன அடை . ` கடலால் ` என்றது , ` கடலுக்கு ` என வேற்றுமை மயக்கம் . ` உலையணையாத வண்ணம் ` என்புழி , ` செய்தான் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

அரவொலி ஆகமங்கள் அறி
வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

` அரகர ` என்னும் ஒலியும் , ஆகமங்களின் ஒலியும் , அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும் , பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும் , மேன்மை நிறைந்த , ` வாணன் ` என்னும் கணத்தலைவன் வந்து , முன்னே வழிகாட்டிச் செல்லவும் , ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` வழிதர ` என்பது , ` வழிதந்து ` எனத் திரிந்து நின்றது . ` சிரம் ` என்றது , தலையாய தன்மையை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

இந்திரன் மால்பிரமன் னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான் , இந்திரன் , திருமால் , பிரமன் , எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு , எனக்கு யானை யூர்தியை அளித்தருளி , அங்கு , மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் , ` இவன் யார் ` என்று வினவ , ` இவன் நம் தோழன் ; ` ஆரூரன் ` என்னும் பெயரினன் ` என்று திருவாய் மலர்ந்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` நந் தமன் ` என்பதே பாடம் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

ஊழிதொ றூழிமுற்றும் உயர்
பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின் சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே

பொழிப்புரை :

ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே ! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும் , பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை , திரு நாவலூரில் தோன்றியவனாகிய யான் , இசை நூலிற் சொல்லப்பட்ட , ஏழாகிய இசையினையுடைய , இனிய தமிழால் , மிக்க புகழை யுடையனவாகவும் , கரும்பின் சுவை போலும் சுவையினை யுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் , திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு , நீ அறிவித்தல் வேண்டும் .

குறிப்புரை :

` திருக்கயிலை மலை , உலகமெல்லாம் அழிகின்ற ஒவ்வோர் ஊழியிலும் ஓங்கி உயர்வது ` என்பது , இத்திருப்பாடலில் குறிக்கப்பட்டிருத்தல் அறியத்தக்கது . ` நாவல ` என்ற அகரம் சாரியை . ` அறிவிப்பது ` என்பது , தொழிற்பெயர் . அதன்பின் , ` வேண்டும் ` என்பது சொல்லெச்சமாயிற்று . இதனால் , இத்திருப்பதிகம் நில வுலகத்தில் மலைநாட்டில் உள்ள திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு உரித்தாதல் அறிக . சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் ஏழாம் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது .
சிற்பி