திருவெண்ணெய்நல்லூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.

பொழிப்புரை :

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

பொருளியைபுக்கேற்பத் திருப்பாடல்களுள் மொழிமாற்றி உரைக்கப்படுமாற்றை அறிந்துகொள்க. பித்தன் - பேரருள் உடையவன்; பேரருள் பித்தோடு ஒத்தலின், `பித்து` எனப்படும். எனவே, பேரருள் உடைய சிவபெருமானுக்கே, `பித்தன்` என்னும் பெயர் உரியதாயிற்று. இனி, `சிவபெருமான்` பிறர்வயம் இன்றித் தன்வயம் உடைமையாற் செய்யுஞ் செயல்கள் பிறரால் அறிதற்கு அரிய நெறியினவாய், ஒருநெறிப்படாத பித்தர் செயலோடு ஒத்தல் பற்றியும் அவன், `பித்தன்` எனப்படுவன் என்ப. அச்செயல்களாவன, `வேண்டப்படுவதனைச் செய்தல், செய்யாமை, வேறொன்று செய்தல்` என்பன. இவற்றை முறையே, `கர்த்திருத்துவம், அகர்த்திருத்துவம், அந்யதாகர்த்திருத்துவம்` என்பர். எனவே, `பித்தன்` என்றது, பின்வரும், `பெருமான் (பெருமை யுடையவன் - தலைவன்)` என்றதன் காரணத்தைக் குறிப்பால் உணர்த்தியவாறாயிற்று. `பிறைசூடி` என்றதும், `பித்தன்` என்றதனாற் பெறப்பட்ட பேரருளை ஆளுந்தன்மைக்குச் சான்றாய், பின்வரும், `அருளாளன்` என்பதன் காரணத்தை அங்ஙனம் உணர்த்தியதேயாம். தக்கனது சாபத்தால் இளைத்து வந்த சந்திரனை அவன் அழியாதவாறு காக்க அவனது ஒரு கலையைச் சிவபெருமான் தனது முடியிற் கண்ணியாகச் சூடிக்கொண்டமையால் அஃது அவனது பேரருளுக்குச் சான்றாயிற்று. அருட்டுறைப் பெருமான் சுவாமிகளை நோக்கி, `முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே - என்பெயர் பித்தன் என்றே பாடுவாய்` (தி.12 பெ.புரா. தடுத்.73) என்று அருளினமையின், இத்திருப்பதிகத்தின் முதற்சொல்லாகிய, `பித்தா` என்பது, இறைவன் அளித்த சொல்லாதல் வெளிப்படை. இனி, `அச்சொல்லை இறைவன் முன்னை ஆசிரியரது திரு மொழியினின்றே எடுத்து அளித்தனன்` என்பது, அச்சொல்லை அடுத்து சுவாமிகளது பயிற்சி வாயிலாகத் தோற்றுவித்த, `பிறைசூடி` என்னும் தொடரால் பெறப்படும். அஃது எங்ஙனம் எனின், `பித்தா பிறைசூடீ` என்னும் தொடர், திருஞானசம்பந்த சுவாமிகளது திருப் பாடலிடத்து முன்பு தோன்றி விளங்குதலின் என்க. அத்தொடர் அமைந்த அவரது திருப்பாடல்: விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே (தி.1 ப.89 பா.3) வன்றொண்டப் பெருமானாரை இங்ஙனம் முன்னை ஆசிரியர் திருமொழிவழியே நின்று பாடுமாறு திருவருள் செய்தது, இவரை, முன்னை ஆசிரியர்களது பெருமையையும், அவர்களது திருமொழிப் பெருமையையும் இனிது விளக்கி அடியார்க்கு அடியாராம் வழிநிலை ஆசிரியராகுமாறு செய்யும் குறிப்பினைப் புலப்படுத்தவாறாம். முன்னை ஆசிரியராவார் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும். அதனை இவர், `நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை` (தி.7 ப.67 பா.5) என்று குறித்தருளுவார். அத் திருப்பாடலிற்றானே, ` தொண்ட னேன்அறி யாமை யறிந்து கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டிஎன் களைகளை யறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை` என்று, தம்மை இறைவன் வழிநிலை ஆசிரியராக்கினமையையும் குறிப்பால் அருளிச்செய்வர். அங்ஙனம் இவர் அருளிச்செய்வதற்கு ஏற்ப, இவரைத் திருவாரூரில் இறைவன் தன் அடியார்க்கு அடியராகச் செய்து, திருத்தொண்டத் தொகை பாடுவித்தமையையும், அது பற்றிப் பின்னரும் இவர், `நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்` (தி.7 ப.78 பா.10) எனத் தம்மைக் குறித்தருளினமையையுங் காண்க. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் ஆகிய அவ்விருவர்க்கு முன்னரும் ஆசிரியர் உளராயினும், ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று திருப்பதிகம் அருளிச்செய்து திருவருள் நெறியைப் பரப்பும் தொண்டினை அவ்விருவர் வாயிலாகவே நிகழச் செய்தமையால், பேராசிரியப் பெருந்தன்மையை அவ்விருவரிடத்தே இறைவன் வைத்தானாவன். அதனைத் திட்பமுற உணர்ந்தே சேக்கிழார் நாயனார், அவ் விருவரையே, `பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக் கண் ணிரண்டு` (தி.12 பெ.புரா.திருநாவு. 185) என வரையறுத்து அருளிச் செய்தார். அவ்வாசிரியர்வழி நிற்பிக்கப்பட்ட இச்சுவாமிகளை இறைவன் முதற்கண், `மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக` என்றும், பின்னரும், `இன்னும் பல்லாறுலகினில் நம்புகழ் பாடு` என்றும், (தி.12 பெ. புரா. தடுத். 70,76) ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று பாடப் பணித்தமையால், ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பேராசிரியராயது எவ்வாறு என்பது இனிது விளங்கும். இனி, செல்லும் இடங்களில் எல்லாம் ஞானசம்பந்தரைச் சிவிகை, சின்னம் முதலியவைகளுடன் செல்லச் செய்தமையால், அவ்விருவருள்ளும் தலைமைத் தன்மையை இறைவன் ஞானசம்பந்தரிடத்து வைத்தமை புலனாகும். இவற்றானே, நால்வர் ஆசிரியருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் முதற்கண் வேறு வைத்து, `மூவர் முதலிகள்` என வழங்குமாறும் இனிது என்பது பெறப்பட்டது. இனி, பலவிடத்தன்றிச் சிலவிடத்துச் சென்று இறைவன் பொருள்சேர் புகழை மிகப்பாடிய அருளாசிரியர் திருவாதவூரடிகளே யாதலின், அவர் நான்காம் ஆசிரியர் ஆயினார் என்க. அன்றியும், மூவர் தமிழும் இசைத் தமிழாயும், அடிகள் தமிழ் இயற்றமிழாயும் இருத்தல் கருதத்தக்கது. உளங் குளிர்ந்த போதெலாம் உகந்துகந்து பாடி அன்பு மீதூர்ந்து இன்புறும் அன்புப் பாடல்களுக்கு இயற்றமிழினும், இசைத்தமிழே சிறந்து நிற்பது என்பது, `கோழைமிட றாககவி கோளும்இல வாகஇசை கூடும்வகையால் ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசன்` (தி.3 ப.71 பா.1) எனவும், `கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால் ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே` (தி.3 ப.52 பா.7) எனவும், `அளப்பில கீதம்சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே` (தி.4 ப.77 பா.3) எனவும் போந்த ஆசிரியத் திருமொழிகளால் பெறப்படும். இத்துணையும் இத்திருப்பதிகத்தின் தொடக்கத்தால் அறியற் பாலவாயின என்க. `எதனால்` என்பது, `எத்தால்` என மருவிற்று. `எத்தாலும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `வைத்தாய்` என்பதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வைத்தது தவங் காரணமாக என்க. `திருவெண்ணெய்நல்லூர்` என்பது தலத்தின் பெயர்; `அருட்டுறை` என்பது கோயிலின் பெயர். `இப்பொழுது அல்லேன் எனல் ஆமே` என்றதனால், `ஆளாயது முன்பே` என்பது போந்தது. `முன்பு` என்றது, திருக்கயிலையில் இருந்த காலத்தை. `ஆமே` என்ற ஏகார வினா, `ஆகாது` என எதிர்மறைப் பொருள்தந்து நின்றது. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத்தே (தொல். சொல். 246) என்பது இலக்கணமாதலின் இத்திருப்பாடல், சுவாமிகள் தம் முன்னை நிலையை நினைந்து அருளிச்செய்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

நாயேன்பல நாளும்நினைப்
பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

`கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும்` ( தொல். பொருள். 276) என்றவாறு, இழிவு மிகுதிக்கு உவமை கூறுங்கால் நாயைக் கூறுதல் வழக்காதல் பற்றி, `நாயேன்` என்று அருளினார். `மனத்து` என, வேண்டா கூறியது, `உன்னை நினையாத மனம் கோளில் பொறிபோலக் குணம் இலதாமன்றே` என, அதன் பயனையும், அது பெறாமையையும் நினைந்து, `பேயாய்` என்பதில் உள்ள ஆக்கச் சொல் உவமை குறித்து நின்றது, `ஆள்வா ரிலிமா டாவேனோ` (தி.8 திருவா. 21.7) என்பதிற்போல. பேய், பயனின்றி விரையத் திரிதலின், அச்செயற்கு அஃது உவமையாயிற்று. அலமரலை மிக உடைமை பற்றியே பேய்க்கு, `அலகை` என்னும் பெயர் உளதாயிற்று. திரிந்தமை இன்பத்தைப் பெறுதற்பொருட்டும், எய்த்தமை அது பெறாமையானும் என்க. ஆயன் - உயிர்களாகிய ஆயத்தை (பசுக் கூட்டத்தை) உடையவன். `ஆயாய்` என்பதே பாடம் எனலுமாம். இத் திருப்பாடல், சுவாமிகள் இப்பிறப்பில் தம் இளைய காலத்து நிலையை நினைந்து அருளிச்செய்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மன்னேமற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

குறிப்புரை :

`நினைப்பேன்` என எதிர்காலத்தால் அருளற் பாலதனைத் திட்பம்எய்துவித்தற்பொருட்டு, `நினைக்கின்றேன்` என நிகழ்காலத்தால் அருளினார். `பொன்னே` முதலிய ஏகார எண்களின் இறுதியில் தொகுக்கப்பட்ட, `இவற்றை` என்பதனை விரித்து, `உந்தி` என்பதனோடு முடிக்க. `பொருது` என்பதற்கு, `கரை` என்னும் செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது. இத்திருப்பாடல், `இனிப் பிழைசெய்யேன்` என்றுகூறி, முன்பு செய்த பிழையைப் பொறுக்குமாறு வேண்டி அருளிச்செய்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

முடியேன்இனிப் பிறவேன்பெறின்
மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப்
பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப் படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

குறிப்புரை :

`முடியேன்` முதலிய எதிர்மறைகள், `தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே` (தி.8 திருவா. 6. 39) என்பதுபோல, அவற்றிற்கு ஆற்றாமை குறித்து நின்றன.`ஊர்தி` என்றது, வினைமுதற் பொருண்மையுணர்த்தும் இகர ஈறு தகர வொற்றுப் பெற்று வந்த படர்க்கைப்பெயர். நெறிகோடினமை, திருக் கயிலையில் மாதர்பால் மனம் போக்கினமை. பொய்ம்மைகள் பலவாவன, மாதர் பால் மனம் போக்கினமையை விண்ணப்பியாது முன் போலவே வழிபாட்டில் நின்றமையும், அதனை இறைவன் தானே உணர்ந்து, `நீ விரும்பிய மாதர் இன்பத்தை நுகர்தற்கு நிலவுலகிற் சென்று பிறக்க` என்ற பொழுது, `மையல் மானுட மாய்மயங் கும்வழி- ஐய னேதடுத் தாண்டருள் செய்` (தி.12 பெ.புரா. திருமலை. 28) என்று வேண்டிக் கொண்டதனை மறந்தமையும், அம்மறவி காரணமாக, `உனக்கு ஆளல்லேன்` எனப் பலவாறு முரணிக் கூறினமையும், பிறவுமாம்.மானுடமாய்ப் பிறந்த ஞான்று முன்னை நிகழ்ச்சிகளை மறந்தமையும், அம்மறவியால், `அடியேன் அல்லேன்` எனக் கூறியதும் இயற்கையாக நிகழற்பாலனவாகலின், அவை பொய்ம்மையாயின வாறு என்னையெனின், நம்மனோர் உள்ளத்திற்காயின் அவையேயன்றி மிகப் பெரிய பொய்களும் பொய்யல்லவாம்; சுவாமிகள் உள்ளத்திற்கு அவை பொய்யாகாதொழியா. `தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்` ( குறள் - 433) என்றருளியது, சுவாமிகள் போலும் உயர்ந்தோரை நோக்கியன்றோ! `உரைத்தேனை` என இறந்த காலத்தால் அருளாது, `உரைப் பேனை` என எதிர்காலத்தால் அருளினார், அவைபோலும் செயல்கள் இனி நிகழா என்றல் எவ்வாறு கூடும் என்னும் திருவுள்ளத்தினால். இவ்வாறு, அறியாமையால் பிழை செய்தல் உயிர்கட்கும், அதனை அருளால் பொறுத்துக்கொள்ளுதல் உனக்கும் இயல்பு என்பார், `கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்நீ` என்று அருளிச் செய்தார். `தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே` (தி.2 ப.64 பா.1) எனவும், `பிழைத்ததெலாம் பொறுத் தருள்செய் பெரியோய்` (தி.6 ப.31 பா.5) எனவும், `வெறுப்பனவே செய்யும் என் சிறுமையைநின் பெருமை யினாற் பொறுப்பவனே` (தி.8 திருவா. 24.2) எனவும் ஆசிரியர் எல்லாரும் இவ்வாறே அருளிச் செய்தல் காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பாதம்பணி வார்கள்பெறு
பண்டம்மது பணியா
யாதன்பொரு ளானேன்அறி
வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், `ஆதன்` என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

குறிப்புரை :

பேற்றை, `பண்டம்` என்று அருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தண்ணார்மதி சூடீதழல்
போலுந்திரு மேனீ
எண்ணார்புர மூன்றும்எரி
யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

`திருமேனி` என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது. `மண்ணுதல்` என்பது, முதனிலைத் தொழிற்பெயராய், `மண்` என நின்றது. இவ்வாறன்றி, `நிலத்தின்கண் நிறைந்த ` என்று உரைத்தலும் ஆம். `அண்ணால்` என்பது, `அண்ணா` என மருவிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஊனாய்உயி ரானாய்உட
லானாய்உல கானாய்
வானாய்நில னானாய்கட
லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆனாய்உனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

`ஊன்` என்றதும், ஆகுபெயராய், உடம்பையே குறித்து நின்றது. `ஊன் ஆய்` எனப் பிரித்து, உயிருக்கு அடையாக்குக. இவ்வாறன்றி, `ஊன்` என்றது பொதுமையில் நின்று, சத்ததாதுக்களை உணர்த்திற்று என்றலுமாம். வானமும் நிலமுமாயினமையை அருளவே, இடைநின்ற ஏனைய பூதங்களாயினமையும் கொள்ளப் படும். இங்ஙனம் எல்லாமாய் நின்றமையை ஓதியது, `எல்லாவற்றையும் உடைய பெரியோனாகிய உனக்கு ஆளாதலினும் சிறந்த பேறு ஒன்று உளதோ! அப்பேறு எனக்குக் கிடைத்திருக்கவும், அதன் பெருமையறியாது இகழ்ந்தமை பொருந்துமோ` என்பதைத் தெரிவித்தற் பொருட்டாம். `ஆனாய்` என்றது, என்றும் உறைதலை அருத்தாபத்தி யான் உணர்த்திற்று.`பொருந்தினவனே` என்றும் ஆம். இனி, `ஆனாய்` என்பதற்கு, `இடப வாகனத்தை உடையவனே` என்றும் உரைப்பர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஏற்றார்புரம் மூன்றும்மெரி
யுண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி
வேனோசெக்கர் வான்நீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆற்றாய்உனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

சிவபெருமான், திரிபுரத்தை நகைத்தெரித்தமையால், `சிலை தொட்டாய்` என்றது போர் செய்வாரது தன்மை பற்றி வந்த பான்மை வழக்கு. `தேவரும், மக்களும் ஆகிய எல்லார்க்கும், அவர் வேண்டியவற்றை அருள்செய்யும் அருளாளனாகிய, உனக்கு ஆளாகி யதனை மறுத்துரைத்தேன்` என இரங்கிக் கூறுவார், திரிபுரம் எரித்தமையையும், பகீரதனுக்காகக் கங்கையைத் தாங்கினமையையும் எடுத்தோதியருளினார். சொல்லுவாரது தேற்றாமை, சொன்மேல் ஏற்றப் பட்டது. `செக்கர்` என்பது ஆகுபெயராய், சடையைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மழுவாள்வலன் ஏந்தீமறை
யோதீமங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின
தீர்த்தல்லுன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். சுவாமிகள் தாம் முன்பு தொழுது வேண்டினவாறே ஆள வந்த திருவருளின் திறத்தை நினைந்து கசிந்தருளிச் செய்தவாறு. மழுவாள், இரு பெயரொட்டு. மழுவேந்துதல் முதலியனவும், தொழுவாரது துயர் தீர்த்தலைக் குறிக்கும் குறிப்புக்களாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

காரூர்புன லெய்திக்கரை
கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ்
பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள்
அல்லேன்என லாமே.

பொழிப்புரை :

மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் `அடியவனல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை :

இத்திருப்பாடல் தம்மைப்பிறர் போலவும், இறைவனைப் படர்க்கையிலும் வைத்து அருளிச் செய்த திருக்கடைக்காப்பு. இதனையும் முன்னைத் திருப்பாடல்களோடு ஒத்த முறையிலே அருளிச் செய்தார். `இறைவனுக்கு முன்பே ஆளாகிய யான், அவ்வாறு ஆளாகாத பிறர்போல, `ஆளல்லேன்` என முரணிக் கூறியது பொருந் துமோ` எனப் பிறரை நோக்கி வினவித் தம் செய்தியைப் புலப்படுத்தும் முகத்தால், `நீவிரும் எனது வரலாற்றை உணர்ந்து, இப்பதிகத்தை ஓதின், அவனுக்கு ஆளாகி உய்வீர்` என அருளுதற் பொருட்டு.
சிற்பி