பொது


பண் :கொல்லி

பாடல் எண் : 1

பாறு தாங்கிய காட ரோபடு
தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் வாழ்பவரோ ? அழிந்த தலையை ஏந்தியவரோ ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ ? குழையணிந்த காதினை உடையவரோ ? சிறிய கொம்பினையுடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ ? சுடப்பட்ட நீற்றை அணிந்தவரோ ? விளங்குகின்ற பிறையோடு ஆற்றைச் சுமந்த சடையை உடையவரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` தொண்டீர் ` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது ; இறுதித் திருப்பாடலில் , ` பத்தர்காள் ` என்றலைக் காண்க . தலையை உடையவரது அழிவு தலையின்மேல் ஏற்றியுரைக்கப்பட்டது . இளைய ஏறாகலின் , குறுங்கோட்டினை உடையதாயிற்று . பலரும் பலரைத் தலைவர் என்றலின் , ` நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் ` என்று அருளினார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

இட்டி தாகவந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.

பொழிப்புரை :

இறைவரை உமக்கு ஏற்றவாற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே , அருகில் வந்து சொல்லுமின் ; நமக்குத் தலைவ ராகிய தலைவர் , கழுத்து , கை , அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற கரந்தையோ ? அவர் , தொழுவிற் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ ? தம் அடியார்களை , அழிந்த வெண்டலை யில் பிச்சையேற்றுக்கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ ?

குறிப்புரை :

இட்டிதாக - சிறிதாக ; ` இடைநிலம் சிறிதாக ` என்றபடி . இசையுமா நினைதலாவது , போகம் வேண்டுவார் போக வடிவிலும் , யோகம் வேண்டுவார் யோக வடிவிலும் , துன்பம் நீங்க வேண்டுவார் வேகவடிவிலும் நினைதல் .` இங்ஙனமாதலின் , நீவிர் அவர் இயல்பெல்லாம் அறிவீர் ; ஆதலின் வினவுகின்றேன் ; சொன்மின் ` என்றவாறு .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

ஒன்றி னீர்கள்வந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
குன்றி போல்வதோர் உருவ ரோகுறிப்
பாகி நீறுகொண் டணிவரோ
இன்றி யேஇல ராவரோ அன்றி
உடைய ராய்இல ராவரோ
அன்றி யேமிக அறவ ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.

பொழிப்புரை :

இறைவரை உமக்கு ஏற்ற வகையில் நினைந்து துதிக் கின்றவர்களே , நீங்கள் ஒன்றுபட்டு வந்து சொல்லுங்கள் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , குன்றிமணி போலும் நிறம் உடையவரோ ? நீற்றையே குறிக்கோளாகக் கொண்டு அணிவரோ ? யாதொன்றும் இலராய் இரத்தல் தொழிலைச் செய்வரோ ? மற்று எல்லாம் உடையராய் இருந்தும் இரத்தல் தொழிலைச் செய்வரோ ? இவையன்றி , துறவறத்தை மிக உடையரோ ?

குறிப்புரை :

` ஒன்றினீர்கள் ` என்றது முற்றெச்சம் ; ` ஒன்றிநீர்கள் ` என்பது பாடம் அன்று . மதிமறுவுடைத்தாயினும் சிறிதாய அதனைக் கருதாது பெரிதாய ஒளியொன்றையே கருதி ஒளியுடைய முகத்திற்கு அதனை உவமையாகக் கூறுதல் போல , குன்றிமணி சிறிது கருமை உடைத்தாயினும் அது நோக்காது பெரும்பான்மையாகிய செம்மை நோக்கி அதனை இறைவரது நிறத்திற்கு உவமையாக அருளினார் . அன்றி , கருமை அவரது கண்டத்திற்கு உவமமாதற்கு உரித்தென்னுங் கருத்தினால் உவமித்ததுமாம் . ` இன்றி ` என்றது அவரது உண்மை நிலையையும் , ` உடையராய் ` என்றது அவரது பொதுநிலையாகிய ஆளுதல் தன்மையையும் பற்றி என்க . துறவறத்தை மிக உடையராதலாவது , சிறந்த தவக் கோலத்தையும் , யோகத்தையும் , அந்தணர்க்கு அறம் உரைத்தலையும் உடையராதல் . ` இன்றியே இலராவரோ அன்றி உடையராய் இலராவரோ ` என்பதற்கு இவ்வாறன்றி வேறோராற்றான் உரைப்பின் , ஏனையவற்றோடு இயையாமையறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

தேனை யாடுமுக் கண்ண ரோமிகச்
செய்ய ரோவெள்ளை நீற்றரோ
பானெய் யாடலும் பயில்வ ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரோ
மானை மேவிய கண்ணி னாள்மலை
மங்கை நங்கையை அஞ்சவோர்
ஆனை ஈருரி போர்ப்ப ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , மூன்று கண்களை உடையவரோ ? மிகச் சிவந்தநிறம் உடையவரோ ? வெண்மையான நீற்றை அணிந்தவரோ ? பால் , நெய் , தேன் இவைகளை ஆடுதலையும் பலகாற் செய்வரோ ? தம்மையே துணையாகப் பற்றி நிற்பவர்க்கு நல்லவரோ ? மானை நிகர்த்த கண்களை உடைய வளாகிய , மகளிருட் சிறந்த மலைமங்கையை அஞ்சுவித்தற்பொருட்டு ஓர் ஆனையை உரித்த தோலைப் போர்த்துக்கொண்டிருப்பரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` தேனை ஆடும் ` என்றது உடம்பொடு புணர்த்தலாகலின் , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` மேவிய ` என்றது , உவம உருபு . ` அஞ்சுவிக்க ` என்னும் பிறவினை , தொகுத்தல் பெற்று ` அஞ்ச ` என நின்றது .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கோணன் மாமதி சூட ரோகொடு
கொட்டி காலொர் கழலரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
யேறு வேதமு தல்வரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக்
கார்ப்ப ரோநல மார்தர
ஆணை யாகநம் மடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , வளைந்த பெருமை பொருந்திய பிறையைத் தலையிற் சூடுதல் உடையவரோ ? ` கொடுகொட்டி ` என்னும் கூத்தினை ஆடுபவரோ ? காலில் ஒரு கழலை அணிவரோ ? அவரது இசைக் கருவி வீணைதானோ ? அவர் ஏறுவது விடையோ ? அவர் வேதத்திற்குத் தலைவரோ ? அரை நாணாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து அரையில் கட்டுவரோ ? நம்மேல் ஆணையாக நமக்கு நன்மை நிரம்புமாறு நம்மை ஆளுவரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` கொடுகொட்டி காலில் ஓர் கழல் ` என்பது உம்மைத் தொகைபடத்தொக்கு ஒரு சொல்லாய் இறுதி நிலை ஏற்றது . முதற்கண் , ` அடிகள் ` என்றது , ` ஆள்பவர் ` என்னும் பொருளதாய் நின்றது . ` காலர் கழலரோ ` என்பது பிழைபட்ட பாடம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

வந்து சொல்லுமின் மூட னேனுக்கு
வல்ல வாநினைந் தேத்துவீர்
வந்த சாயினை யறிவ ரோதம்மை
வாழ்த்தி னார்கட்கு நல்லரோ
புந்தி யாலுரை கொள்வ ரோஅன்றிப்
பொய்யின் மெய்யுரைத் தாள்வரோ
அன்றி யேமிக அறிவ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

இறைவரை நீர் வல்லவாற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே , யாதும் அறியாதேனாகிய எனக்கு நீங்கள் அருகில் வந்து சொல்லுங்கள் ; நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் நமக்கு வருகின்ற மெலிவை அறிந்து தீர்ப்பரோ ? தம்மை வாழ்த்துகின்றவர்கட்கு நலம் செய்வரோ ? மனத்தொடு பொருந்தச் சொல்லுதலையே ஏற்பரோ ? மற்றும் தாமும் பொய்யில்லாத மெய்யையே சொல்லி நம்மை ஆட்கொள்வரோ ? அதுவன்றி அறிவை மிக உடையரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` புந்தியால் ` என்புழி ஆல் உருபு ஓடுருபின் பொருளில் வந்தது . ` உரை ` முதனிலைத் தொழிற் பெயர் . இதற்கு , ` எம் உரையைத் தம் புந்தியால் ஏற்பரோ ` என்று உரைப்பாரும் உளர் . அறிவு மிக உடையராதல் , எல்லாம் அறிதலும் , தாமே அறிதலும் , அறிந்தாங்கறிதலும் உடையராதல் . ஈண்டும் , ` அறவரோ ` என்று பாடம் ஓதுவார் உளர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

மெய்யென் சொல்லுமின் நமரங் காள்நுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
கையிற் சூலம துடைய ரோகரி
காட ரோகறைக் கண்டரோ
வெய்ய பாம்பரை யார்ப்ப ரோவிடை
யேற ரோகடை தோறுஞ்சென்
றையங் கொள்ளுமவ் வடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

இறைவரை உமக்கு ஏற்குமாற்றால் நினைந்து துதிப்பீராகிய நம்மவர்களே ! நீவிர் அறிந்த உண்மைகள் யாவை ? அவற்றைச் சொல்லுமின் ; நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , கையில் சூலம் உடையரோ ? கரிந்த காட்டில் வாழ்வரோ ? கறுப்பை உடைய கண்டத்தை உடையரோ ? கொடிய பாம்பை அரையிற் கட்டுவரோ ? விடையை ஏறுதல் உடையரோ ? இல்லத்து வாயில்தோறும் சென்று பிச்சை ஏற்கின்ற , பற்றில்லாத துறவரோ ?

குறிப்புரை :

` அவ்வடிகள் ` என்பதில் சுட்டு , ` அத்தன்மையராகிய ` என்னும் பொருளதாய் , பற்றின்மையாகிய சிறப்பினைக் குறித்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

நீடு வாழ்பதி யுடைய ரோஅயன்
நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடு வாரையும் உடைய ரோதமைப்
பற்றி னார்கட்கு நல்லரோ
காடு தான் அரங் காக வேகைகள்
எட்டி னோடில யம்பட
ஆடு வாரெனப் படுவ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , எஞ்ஞான்றும் ஒருதன்மையாய் வாழ்தற்குரிய உலகத்தை உடையரோ ? ` பிரமன் , நெடியோனாகிய மாயோன் ` என்னும் இவர் கட்கும் பெரியரோ ? தம்மைப் புகழ்ந்து பாடும் புரக்கப்படுவாரையும் உடையரோ ? தம்மையே துணையாக அறிந்து பற்றினவர்கட்கு நலம் செய்வரோ ? ` காடே அரங்காக எட்டுக் கைகளினாலும் குறிப்புணர்த்தி , தாளத்தொடு பொருந்த ஆடுவார் ` எனச் சிறப்பித்துச் சொல்லப்படுபவரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` நீடு வாழ்பதி ` என்றது , வீட்டுலகத்தை . ` மாலுக்கும் `, ` பாடுவாரையும் ` என்னும் உம்மைகள் , சிறப்பு .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நமண நந்தியுங் கரும வீரனுந்
தரும சேனனு மென்றிவர்
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
தங்கள் கூறையொன் றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்
றோதி யாரையு நாணிலா
அமண ராற்பழிப் புடைய ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

தொண்டீர் , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் , குமணனது பெரிய மலையிடத்துள்ள சிறிய குன்றுகள் போலத் தம்மிடத்தில் உடையொன்றும் இலராய் நின்றுகொண்டு , ` ஞமணம் , ஞாஞணம் , ஞாணம் , ஞோணம் ` என்று சில மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு , ஒருவரையும் நாணுதல் இல்லாத , ` நமண நந்தி , கரும வீரன் , தருமசேனன் ` என்ற இன்னோரன்ன பெயர்களை யுடையவர்களாகிய சமணர்களால் பழிக்கப்படுதலை உடையரோ ? சொல்லுமின் .

குறிப்புரை :

` என்ற ` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று . ` இவர் ` என்றது , ` இத்தன்மையர் ` என்னும் பொருளதாய் நின்றது . ` என்ற அமணர் ` எனவும் , ` இவர்கின்ற மலை ` எனவும் , இயைத்தலுமாம் . குமணன் , கடையெழுவள்ளல்கட்குப் பின்னர்த் தன் தலையையுங் கொடுத்த கொடையாளனாயினமையின் , ` மலைபோல ` எனக் கூறப்புகுமிடத்து , ` குமணன் மலைபோல ` எனக் கூறுதல் வழக்காயினமை இத் திருப்பாடலாற் பெறுதும் ; அன்றி , சுவாமிகள் காலத்தில் குமணன் மலையில் சமணர் சிலர் இருந்தனராயின் , அதற்கேற்ப , ` குமணன் மலைக்கண் நின்று ` என்று இயைத்துரைக்க . இனி , குமண மாமலை என்ற பாடம் உண்மையின் , கு - நிலம் ; மணம் - பொருந்துதல் என வைத்து ` இந்நிலவுலகத்திற் பொருந்திய மலையிடங்களில் நின்று கொண்டு ` என்றுரைப்பினும் ஆம் . ` ஞமணம் , ஞாஞணம் ` முதலாக அருளியது , சமணர் ஓதும் மந்திரங்கள் மெல்லெழுத்துக்களால் ஆயவை என்பதனை நகைவகையாற் குறித்தவாறு ; ` மூக்கினால் முரன் றோதி ` என்று அருளினார் , திருநாவுக்கரசு சுவாமிகளும் . ( தி .5 ப .58 பா .2)

பண் :கொல்லி

பாடல் எண் : 10

படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
தேத்தி னேன்பணி யீரருள்
வடியி லான்திரு நாவ லூரன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
தம்மை யேமனஞ் சிந்திக்கும்
அடிய னூரனை யாள்வ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.

பொழிப்புரை :

அடியவர்களே , அடியவர்க்கு அடியராவர் செய்யும் செயல்களைப் படியெடுக்கும் தன்மையில் , திருத்தம் இல்லாதவனும் , திருநாவலூரில் தோன்றியவனும் , வனப்பகைக்கு தந்தையும் ஆகிய வன்றொண்டனேன் உங்களை வணங்கித் துதித்தேன் ; கீழ்மையை உடையவனாயினும் , கொடியவனாயினும் , தம்மையே எப்பொழுதும் மனத்தில் நினைக்கின்ற அடியவனாகிய நம்பியாரூரனை , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் கைவிடாது ஆளுதல் செய்வரோ ? அவரது திருவருள் இருந்தவாற்றைப் பணித் தருளுங்கள் .

குறிப்புரை :

`படிசெய் நீர்மையிற் பணிந் தேத்தினேன் ` என்றதை ,
ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே .
( தி .5 ப .91 பா .3) என்ற நாவுக்கரசர் திருமொழியொடு வைத்துக் காண்க . ` வடிவிலான் ` என்பது பாடம் அன்று . ` தம்மை ஆள்வரோ ` என்று வினாவியதும் , ஏனையபோல ஆளுதலையே குறித்துநிற்றலின் , ` தம்வழி நின்று , தமது பாடலைப் பாடுவாரையும் ஆள்வர் ` எனத் திருக்கடைக் காப்பு அருளி யதாயிற்று .
சிற்பி