வடதிருமுல்லைவாயில்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள்என் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , வீட்டின்பமும் , அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும் , இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து , பிறர் ஒருவரையும் துணையாக நினையாது , அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும் , அவர்கள் என்னைப் பற்ற வரின் , பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரி வேன் ; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை , நீ நீக்கியருளாய் .

குறிப்புரை :

` திரு ` என்பது , இப்பொருளதாதல் , ` போகமும் திருவும் புணர்ப்பானை ` ( தி .7 ப .59 பா .1) என்றதனாற் பெறப்பட்டது . ` செல்வமும் ` என்றே போயினாரேனும் , ` அதனால் அடையும் இம்மை இன்பமும் ` என்பதும் கொள்ளப்படும் . ` சீருடைக் கழல்கள் ` என்றார் , வேண்டுவார் வேண்டுவதை ஈந்து புகழ் பெறுதலின் , ` வாயி னால் ` எனப் பின் வருகின்றமையின் , ` மனத்தி னால் ` என்பது பெறப் பட்டது . ` ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப் பனாய்த் திரிவேன் ` என்றது , இவ்வுறைப்பினால் ` இப் பிழையை நீ பொறுத்துக்கொள்வாய் எனத் துணிந்து செய்தேன் ` என்பதும் , ` பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் ` என்றது , ` அங்ஙனம் பொறாது என் கண்ணைக் கெடுத்தது , அறவோனாகிய நினக்கு ஏற்புடைத்தாயிற்றேயெனினும் , யான் என் பிழையை உணர்ந்து உன்பால் குறையிரந்து நின்றபின்பாயினும் , அதனைப் பொறுத்து , எனக்கு அக்கண்ணை அருளித்தருளல் வேண்டும் ` என்பதும் குறிப்பித்தவாறாம் . இன்னும் , ` உன்னையன்றி வேறு பற்றில்லாத அடியவர்படும் துன்பத்தைக் களையாது கண்டு கொண்டிருத்தல் அருளுடையோனாகிய உனக்குத் தகுவதோ ` என்பது , இத்திருப்பதிகம் முழுவதினும் காணப்படுவதாம் . ` ஒருவரையும் ` என்னும் இழிவு சிறப்பும்மை , தொகுத்தலாயிற்று . ` பாசுபதன் ` என்றது , ` பசுபதி ` என்பது , பகுதிப் பொருள் விகுதிபெற்று நின்றவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

உன் தேவியாகிய கொடிபோலும் இடையினை யுடைய உமையவள் கண்டு மகிழுமாறு , பல திறங்களும் கூடிய கூத் தினை , தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே , அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே , கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே , ` இறைவனே , நீ எங்குள் ளாய் ?` என்று தேடிய தேவர்கள் , நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர் கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன் , மேலும் அங்ஙனமே பாடுதற்கு , யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய் .

குறிப்புரை :

` எல்லாவகை நடனங்களும் அமைய ஆடினாய் ` என்பார் , ` கூடிய இலயம் ` என்று அருளினார் . ` உமையவளை மகிழ் விக்க , நடனத்தை நன்கு ஆடுபவனாகலின் , சங்கிலியை வருத்திய என் பிழையைப் பொறுத்திலை ` என்பது திருக்குறிப்பு . ` பாடிய ` என்றதனை , ` செய்த ` என்னும் பெயரெச்சமாகவும் , ` செய்யிய ` என்னும் வினையெச்சமாகவும் , இரட்டுற மொழிந்துரைக்க . ` அற்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக ` ( தி .12 தடுத் . புரா . 70) என்று நீ பணித்தவாறே தலங்கள் பலவற்றிற்கும் சென்று உனது திருப் புகழைப் பாடினேன் ; இனியும் அவ்வாறு இடரின்றிச் சென்று , உனது திருமேனியைக் கண்களாரக் கண்டு இன்புறும்வழியே பாடுதல் உளதாவதாம் ; ஆதலின் , என் கண்ணைக் கொடுத்தருளல் வேண்டும் என வேண்டியவாறாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழம்அன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே , மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து , அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே , சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே , தேவர்களுக்குத் தலைவனே , தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே , சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உன் அடியேன் படு கின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

` உன் மனைவியை நீ வெருவச் செய்தாயாயினும் , என் மனைவி வருந்தப் பொறுத்தாயல்லை ` என , அவனது திருவருளைப் புகழ்வார் , ` மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் ` என்றும் , ` சங்கிலியும் என்போலவே உன்னையன்றி வேறு அறியாத தொண்டி னளாதலின் , அவள்பொருட்டு நீ இது செயற்பாலையே ` என்பார் . ` சங்கிலிக்கா என்கண் கொண்ட பண்ப ` என்றும் அருளிச் செய்தார் . சுவாமிகள் இங்ஙனம் , இறைவனது செப்பத்தினைச் சிறப்பித்தோதிய வதனானே , சேக்கிழார் , ` சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையிற் பாடி ` ( தி .12 ஏ . கோ . பு . 277) என்று , இதனை விதந்தோதியருளினார் . இங்ஙனம் சங்கிலியாரது திருத்தொண்டினை ஏற்று நிற்கும் நிலைமையை நினைத்தலின் , ` ஒற்றி மாநகருடையாய் ` என்றும் ஓதினார் . ` சண்பகம் ` என்னும் வடசொல் , ` செண்பகம் ` எனத் திரிந்து வருதல் வழக்கு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளற்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில் , புள்ளிகளையும் , கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட , அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு , அந்த இசை நின்றபொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , உனது திருப்புகழை விருப்பத்தோடு , பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

` பொன் ` உவமையாகுபெயர் . ` வண்டுகளின் இசையைக் கேட்டு , நண்டு , தாமரை மலராகிய படுக்கையின்மேல் உறங்கும் ` என்பதும் , ` புதுமணம் நீங்கிய பின்னர் வண்டுகள் இசை யொழிதலும் , நண்டு எழுந்து உலவும் ` என்பதும் இதன்கண் அமைந் துள்ள அணிந்துரைகள் . ` உலவிட வள்ளல் ` என்பது பாடமெனின் , ` அவ் வள்ளல் ` என்னும் , வகரம் தொகுக்கப்பட்டதாக உரைக்க . ` நலத்தமிழ் ` என்பது , மெலிந்து நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

சந்தன மரத்தின் வேரையும் , கரிய அகிலினது கட்டையினையும் , மென்மையான மயில் இறகினையும் , யானையின் தந்தத்தையும் , முத்துக் குவியல்களையும் , பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும் , பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந் தருளியிருப்பவனே , மாசில்லாத மணி போல்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

சந்தன மரத்தை அடியோடு பெயர்த்துக் கொணர்தலைக் குறிக்க , ` வேரும் ` என , அதனையே குறித்தருளினார் . தண்மை , இங்கு மென்மை மேற்று , ` குவைகள் ` என்றது இருமருங்கிலும் அவற்றை உளவாக்குதல் நோக்கி , ` பாலி வடகரை ` என்றதனான் , இத்தலம் , வடதிருமுல்லைவாயிலாதல் பெறப்பட்டது . பத்தாந் திருப்பாடலாலும் இது பெறப்படுவதாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

மாற்றாது வழங்கும் வள்ளலே , வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே , திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , யான் பொய்யையே பேசி , குற்றங் களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின் , யான் பெற்ற பேறு , மற்று யார் பெற வல்லார் ! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன் ; அது , தவறுடைத்தே . ஆயினும் , அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின் , அடியேன் வேறொரு துணை இல்லேன் ; ஆதலின் , அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய் .

குறிப்புரை :

கள்ளம் , ` உனக்கு ஆளல்லேன் ` என்றதும் , தவநெறி வேண்டிய பின்னும் பரவையாரை விரும்பியதும் . குற்றம் செய்தது , ` பித்தன் ` எனப் பலர்முன் இகழ்ந்தது , பொன் வேண்டுங்கால் ஏச்சுரை களாகப் பாடியது போல்வன . இவைகளை இறைவன் குற்றமாகக் கொள்ளாது , மகிழ்வுற்றமை யறிக . ` மிகை பல ` என்றது , மற்றொரு மாதரைத் தருமாறு வேண்டியது முதலாக , சூள் பிழைத்தமை ஈறாகச் சங்கிலியாரது திருமணத்தில் நிகழ்ந்தவை . ` எல்லாவற்றையும் பொறுத்த நீ , இச்சூள் பிழைத்தது ஒன்றனையும் பொறாதொழிந்தது , அது நின் அடியவட்கு இழைத்த பெருந்தீங்காதல் பற்றி என்பதனை யான் இப்பொழுது உணர் கின்றேன் ` என்பார் , ` மிகைபல செய்தேன் ` என்றும் , ` இதுதான் பொறுக்கலாகாத குற்றமே எனினும் , இது பற்றி எனக்கு நீ முன்செய்த திருவருளையெல்லாம் மறுத்துவிடுவையாயின் , யான் கெட்டொழிவ தன்றி உய்யேன் ` என்பார் , ` அடியேன் பற்றிலேன் உற்றபடுதுயர் களை யாய் ` என்றும் அருளிச்செய்தார் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல்அ றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

அழகு பொருந்திய சிவந்த வாயினையும் , வெள்ளிய பற்களையும் , கரிய நீண்ட கூந்தலையும் , சிறந்த மயில் போலும் சாயலையும் , அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளை யும் , அழகிய கயல்போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும் , செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

` மணிகெழு ` என்றது , நகை கூந்தல்களோடும் இயை யும் . இவ்வாறன்றி , ஏற்புழிக் கோடலால் , பவளமும் முத்துமாக உரைத்து , ` வாய் , நகை ` என்பவற்றோடே இயைத்து , ` கெழு , உவம உருபு ` என்றலுமாம் . ` அங்கயற்கண்ணார் ` என்றது , பெயர்த் தன்மைத் தாய் , வாய் முதலியவற்றோடு தொக்கு நின்றது , ` அறாத , தழுவு ` என்ற வற்றை , தனித்தனி , ` திருமுல்லைவாயில் ` என்றதனோடு இயைக்க . இரவை முன்னர் , அருளினார் , ` அது பணி ஒழியுங்காலமாக . அப் பொழுதும் ஒழியாது செய்வேன் ` என்றற்கு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் றன்னைஆட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

யாவராலும் விரும்பத் தக்கவனே , அன்று திரு வெண்ணெய்நல்லூரில் வந்து , நாய்போன்றவனாகிய என்னை ஆட் கொண்ட சம்புவே , வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற , பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே , உன்னைத் தேடித் திரிவேனாகிய யான் , செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட , பசிய பொன் போல்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ள வனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

` தடங்கடல் நஞ்சுண்ட கண்டன் ` என்பது , ஒரு பெயர்த் தன்மைத்தாய் , ` ஏத்தும் ` என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று . அவ் வெச்சமும் , ` கண்ட ` என்ற எச்சமும் செயப்படு பொருட் பெயர் கொண்டன .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல் , அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை , அவன் இறக்கும்படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே , செல்வத்தையுடைய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே , சொல்வளமும் , பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே , உயிர்களைக் காப்ப வனே , மேலான ஒளியாய் உள்ளவனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

` செல்வம் ` என்றன இரண்டும் , பொருட் செல்வத்தையும் , அருட்செல்வத்தையும் குறித்தன . இறைவனுக்குப் பொருட் செல்வமாவன , எல்லா உயிர்களும் , எல்லா உலகங்களும் ஆகிய அடிமைகளும் , உடைமைகளுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

பொழிப்புரை :

சொல்லுதற்கரிய புகழை யுடையவனாகிய , ` தொண்டைமான் ` என்னும் அரசன் , எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை , படர்ந்துகிடந்த முல்லைக் கொடியால் தடுத்து , பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே , எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , வெள்ளை விடையை ஏறுபவனே , பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .

குறிப்புரை :

இஃது இத்தலத்தில் , இறைவன் வெளிப்பட்டருளிய வரலாற்றினை எடுத்தோதி யருளியது . அவ்வரலாறாவது , ` இத்தலம் உள்ள நாடாகிய தொண்டை நாட்டை ஆண்ட , ` தொண்டைமான் ` என்னும் அரசன் வேட்டைக்குச் சென்றபோது அவனது யானையின் காலில் சுற்றிக்கொண்ட முல்லைக் கொடியை அவ் யானை அறுத்துச் செல்ல மாட்டாது நிற்க , அரசன் சினந்து அக்கொடியை , தனது வாளினால் வெட்டி விலக்கியபோது , உள்ளே சிவலிங்கம் இருத்தலைக் கண்டு மகிழ்ச்சியுற்று வணங்கி , திருக்கோயில் எடுத்தல் முதலிய திருப் பணிகளைச் செய்தான் ` என்பது , இதனை இத்தல புராணத்துட் காண்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவல்ஆ ரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே

பொழிப்புரை :

நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும் , திருமாலும் அச்சங் கொள்ளும்படி , அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய , அலைகளை வீசுகின்ற கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும் , மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள் , நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி , தேவர்களுக்கு அரச ராகும் நிலையை அடைவர் .

குறிப்புரை :

` மூப்பும் ` என உம்மை கொடுத்துப் பிரித்து , நடலையை வேறு ஓதினமையால் , அஃது இறப்பாயிற்று . நடலை - துன்பம் . அஃது அப் பெருந்துன்பத்தைக் குறித்தது . ` அரசு ` என்றது , அரசராகும் தன்மையை என்க .
சிற்பி