திருநனிபள்ளி


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

ஆதியன் ஆதிரையன் அயன்
மாலறி தற்கரிய
சோதியன் சொற்பொருளாய்ச் சுருங்
காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங்கோன் உல
கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

எப்பொருட்கும் முதலானவனும் , ஆதிரை நாண் மீனைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும் , பிரமனும் திருமாலும் அறிதற்கரிய ஒளிவடிவானவனும் , சொல்லும் சொற்பொருளுமாய் நின்று , சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும் ஓதியவனும் , தேவர்களுக்குத் தலைவனும் , உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனி பள்ளியே .

குறிப்புரை :

` சொல்லும் , சொற்பொருளுமாய் இருப்பவனாகலின் , அவற்றை எல்லாம் தெரிவிக்கும் முதனூலைச் செய்ய வல்லவனா யினான் ` என்பார் . ` சொற்பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும் ஓதியன் ` என்று அருளிச் செய்தார் . ` ஓதியன் ` இறந்த கால வினைப் பெயர் . ` நம் பெருமான் ` என்றது , ` சிவன் ` என்னும் பொருளதாய் நின்றது . ` அது ` பகுதிப்பொருள் விகுதி . இத்திருப்பாடலின் முதலடியை , ` ஆதியன் ஆதிரையன் அன லாடிய ஆரழகன் ` ( தி .3 ப .61 பா .1) என்ற திருஞானசம்பந்தர் திருமொழியுடன் வைத்துக் காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

உறவிலி ஊனமிலி உண
ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினைவார் வினை
யாயின தேய்ந்தழிய
அறவில கும்மருளான் மரு
ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையினான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

உறவுத் தொடக்கு இல்லாதவனும் , குறைவில்லாத வனும் , தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி அழித்த வில்லை உடையவனும் , தன்னை நினைபவரது வினை யெல்லாம் வலிமை குன்றி அழியும்படி , மிகவும் விளங்குகின்ற திரு வருளை உடையவனும் , தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் , மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` மூன்றும் ` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று . ` செறு வில் ` இறந்த கால வினைத்தொகை . ` வில்லி ` என்பது , இடைக் குறைந்து நின்றது . ` அற இலகும் ` எனப் பிரிக்க . பொழில் மயக்கத்தை உடையதாதல் , இருளால் என்க . ` மருளார்பொழில் வண்டறையும் ` என்றதனை , ` நண்ணும் ஊர் ` என்றதன்பின் கூட்டி உரைக்க . ` மருளார் மொழி வண்டறையும் ` என்பதும் பாடம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

வானுடை யான்பெரியான் மனத்
தாலும் நினைப்பரியான்
ஆனிடை ஐந்தமர்ந்தான் அணு
வாகியொர் தீயுருக்கொண்
டூனுடை இவ்வுடலம் ஒடுங்
கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடெம்பிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

விண்ணுலகத்தைத் தனதாக உடையவனும் , யாவரினும் பெரியோனும் , மனத்தாலும் நினைத்தற்கரியவனும் , பசுவினிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும் , நுண்ணிய பொருளாகி , சுடர் வடிவத்தைக்கொண்டு , ஊனையுடைய தாகிய இவ்வுடம்பினுள் அடங்கிப் புகுந்தவனும் , உலகம் எல்லாம் தன்னுள் அடங்க விரிந்தவனும் , நான் உடைய செல்வமாய் இருப் பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனி பள்ளியே .

குறிப்புரை :

உடம்பிற் புகுதல் , உயிரிடத்து நிற்றல் . ஆகவே , ` அதனினும் நுண்ணியன் ` என்பார் , ` அணுவாகி ` என்றும் , உயிரிட மாகக் காணலுறுவார்க்கு , அவர் இதயத்தில் சுடர் வடிவாய் விளங்கு தலின் , ` தீயுருக்கொண்டு ` என்றும் அருளினார் . இறைவன் , தன்னை நினைவாரது உள்ளத்தில் சுடர்வடிவாய் விளங்குதலை , ` சுடர்விட்டுளன் எங்கள் சோதி ` ( தி .3 ப .54 பா .5) என்றும் , ` ஆன்ற அங்கிப் புறத்தொளி யாய்அன்பின் ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன் ` ( தி .12 திருஞான . புரா . 835) என்றும் அருளிப்போந்தவாற்றான் உணர்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

ஓடுடை யன்கலனா உடை
கோவண வன்னுமையோர்
பாடுடை யன்பலிதேர்ந் துணும்
பண்புடை யன்பயிலக்
காடுடை யன்னிடமா மலை
ஏழுங் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெருமான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

ஓட்டினை உண்கலமாகவும் , கோவணத்தை உடை யாகவும் உடையவனும் , ஒரு பக்கத்தில் உமையை உடையவனும் , பிச்சை எடுத்து உண்ணும் தன்மையை உடையவனும் , வாழ்வதற்குரிய இடமாகக் காட்டை உடையவனும் , ஏழு மலைகளையும் , கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` நாடு ` என்றது தீவுகளை , எனவே , ` ஏழும் ` என்றது ` நாடு ` என்றதனோடும் இயைவதாம் . ` மலை `` என்றதும் , தீவுகளைச் சூழ்ந்துள்ள அவைகளையேயாம் . ` பலிதேர்ந்து உண்டு , காடு இடமா உடையன் எனினும் , உலகம் எல்லாவற்றையும் உடையன் ` என்றவாறு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பண்ணற் கரியதொரு படை
ஆழி தனைப் படைத்துக்
கண்ணற் கருள்புரிந்தான்
கரு தாதவர் வேள்விஅவி
உண்ணற் கிமையவரை
உருண் டோட உதைத்துகந்து
நண்ணற் கரியபிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

ஆக்குதற்கு அரிதாகிய சக்கரப்படை ஒன்றை ஆக்கி , அதனைத் திருமாலுக்கு அளித்தவனும் , தன்னை மதியாத வனாகிய தக்கனது வேள்வியில் அவிசை உண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும்படி தாக்கிப்பின் அவர்கட்கு அருள் செய்து , ஒருவராலும் அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

சிவபெருமான் , சலந்தராசுரனை அழித்தற்பொருட்டுச் சக்கரப் படை ஒன்றை உண்டாக்கினமையையும் , அதனால் சலந்த ராசுரனை அழித்தபின்பு அச் சக்கரத்தை , தன்னை வழிபட்ட திரு மாலுக்கு அளித்தமையையும் கந்தபுராணம் முதலிய சிவபுராணங் களுட் காண்க . அச் சக்கரம் , உலகில் செய்யப்படும் சக்கரம் போல்வ தன்று ஆதலின் , ` பண்ணற் கரியதொரு படை ஆழி ` என்று அருளிச் செய்தார் . ` ஆழிப்படை ` என மாற்றிக்கொள்க . இழிவுபற்றி , ` கருதாதவர் ` எனப் பன்மையால் அருளினார் . ` உணற்கு ` என்றதன் பின் , ` சென்ற ` என்பது எஞ்சிநின்றது . ` உகந்து ` என்ற வினையெச்சம் , ` பிரான் ` என்றவிடத்து எஞ்சிநின்ற , ` ஆகியவன் ` என்பதனோடு முடியும் , ` கருதாதவன் ` எனவும் , ` உகந்த ` எனவும் ஓதுவனவே பாடங்கள்போலும் !

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

மல்கிய செஞ்சடைமேல் மதி
யும்மர வும்முடனே
புல்கிய ஆரணன்எம் புனி
தன்புரி நூல்விகிர்தன்
மெல்கிய விற்றொழிலான் விருப்
பன்பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

நிறைந்த , சிவந்த சடையின்மேல் , சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து பொருந்திய திருமேனியனாகிய வேத முதல்வனும் , எங்கள் தூயோனும் , முப்புரி நூலையணிந்த , வேறுபட்ட தன்மையை உடையவனும் , தன்மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தையுடைய அருச்சுனனுக்கு , மெல்லிய வில்தொழிலினால் அருள்பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` புல்கிய ` என்ற பெயரெச்சம் இடப்பெயர் கொண்ட தாகலானும் அவ்விடந்தான் . இறைவனது திருமேனியே ஆகலானும் , இவ்வாறு உரைக்கப்பட்டது . அருச்சுனனோடு போர் செய்தது , வன்கண்மை காரணமாகவன்றி , அருள்காரணமாகவே யாகலான் , அதனை , ` மெல்கிய விற்றொழில் ` என்று அருளினார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

அங்கமொ ராறவையும் அரு
மாமறை வேள்விகளும்
எங்கும் இருந்தந்தணர் எரி
மூன்றவை யோம்புமிடம்
பங்கய மாமுகத்தாள் உமை
பங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும்வயல் திரு
வூர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

தாமரை மலர்போலும் முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளி யிருக்கின்ற இடம் , அந்தணர்கள் மூன்று எரிகளோடே , ஆறு அங்கங்களையும் , அரிய வேதங்களையும் , வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய , செவ்விய கயல் மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனி பள்ளியே .

குறிப்புரை :

` அவை ` பகுதிப்பொருள் விகுதி . முத்தீயை ஓம்புதலே அந்தணர்க்குச் சிறந்த தொழிலாகலின் , ` எரிமூன்றோடு ` என . அவ் விடத்து ஓடுருபு விரிக்க , ` ஓம்புமிடம் ` என்றது , ஒரு பொருள்மேற் பலபெயராய் வந்தது . செவ்விய கயல் - அழகிய கயல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

திங்கட் குறுந்தெரியல் திகழ்
கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளைவான் அரு
மாமருந் தேழ்பிறப்பும்
மங்கத் திருவிரலால் அடர்த்
தான்வல் அரக்கனையும்
நங்கட் கருளும்பிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

சிறிய பிறையாகிய , விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும் , நுண்ணியனாய் நின்று , எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி , நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை நீக்குகின்ற , உயர்ந்த , அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும் , வலிய அரக்கனாகிய இராவணனையும் , அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய , நமக்கு அருள்செய்யும் பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` குறுந் திங்களாகிய திகழ் கண்ணித் தெரியல் ` என்க . ` கண்ணித் தெரியல் ` இருபெயரொட்டு . ` நங்கண் பிணி களை மருந்து ` எனக் கொள்க . ` பிணி ` என்றது , உருவகம் . ` மங்கக் களை மருந்து ` என இயைக்க . ` அரக்கனையும் ` என்ற உம்மை , சிறப்பு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

ஏன மருப்பினொடும் எழில்
ஆமையும் பூண்டுகந்து
வான மதிள்அரணம் மலை
யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன்னுள் ளுயர்
ஞானசம் பந்தர்க்கன்று
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே

பொழிப்புரை :

பன்றியின் கொம்பையும் , அழகிய ஆமை யோட்டையும் விரும்பியணிந்து , வானத்திற்செல்லும் மதிலாகிய அரணின்முன் , மலையையே வில்லாக வளைத்து நின்றவனும் , குறையில்லாத சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை அருள்செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே .

குறிப்புரை :

` மதிளரணம் ` இருபெயரொட்டு . ` அரணம் ` என்றதன் பின் , ` முன் ` என்னும் பொருளதாகிய கண்ணுருபு விரிக்க . இத்தலம் , ஞானசம்பந்தர் தம் தந்தையாரது பியல்மேல் இருந்து தம்மீது ஆணை வைத்துப் பாலைநெய்தல் பாடியருளிய தாகலின் , அச்சிறப்புப் பற்றி , அவருக்கு ஞானம் அருள்புரிந்தமையை நினைந்து அருளிச் செய்தார் போலும் !

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

காலமும் நாள்கழியுந் நனி
பள்ளி மனத்தின்உள்கிக்
கோலம தாயவனைக் குளிர்
நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப்பார் மண்
மறந்துவா னோர்உலகில்
சாலநல் லின்பமெய்தித் தவ
லோகத் திருப்பவரே

பொழிப்புரை :

காலமும் நாள்தோறும் கழியாநிற்கும் , அதனால் , குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன் , கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடு வோர் , தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து , பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து , சிவலோகத்தில் இருப்பவரே யாவர் .

குறிப்புரை :

` காலமும் ` என்ற உம்மை சிறப்பு ; அச்சிறப்பாவது , எல்லா வாழ்விற்கும் முதலாய் நிற்றல் . அச்சிறப்பினையுடைய அது தானும் நில்லாது பெயர்வது என்றவாறு . ` நாளும் ` என்னும் உம்மை , தொகுத்தலாயிற்று . அதன்பின் , ` ஆதலின் ` என்னும் சொல்லெச்சம் வருவித்து , அதனை , ` மதித்துரைப்பார் ` என்றதனோடு முடிக்க . ` சொன்ன ` என்றதனோடு முடிப்பாரும் உளர் . ` காலமும் நாழிகையும் ` என்பதும் பாடம் . ` மண் மறந்து ` என்றது , ` மண்ணிற் பிறவாது ` என்றபடி . அதனை , ` எய்தி ` என்றதன்பின்னர்க் கூட்டியுரைக்க . ` தவலோகம் , சிவலோகம் ` என்பன , வேறுவேறு காரணத்தான் வந்த குறியாய் , ஒன்றனையே உணர்த்துவதாம் . ஏகாரம் , தேற்றம் .
சிற்பி