பண் :

பாடல் எண் : 1

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

பொழிப்புரை :

திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந் தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தி யினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க! மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக! பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக! தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாத வனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக! கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக! கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக!/n ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவ பிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். தெவிட்டாத இன்பத்தைக் கொடுக் கின்ற மலைபோலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெரு மானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவ னுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினைமுழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்./n வானமாகி நிறைந்தும் மண்ணாகி நிறைந்தும் மேலானவனே! இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே! உன்னுடைய மிக்க சிறப்பை, கொடிய வினையை உடையவனாகிய யான், புகழுகின்ற விதம் சிறிதும் அறி கிலேன். புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும் பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், பூதகணங்களாகியும், வலிய அசுரராகி யும், முனிவராகியும், தேவராகியும் இயங்குகின்ற இந்த நிலையியற் பொருள் இயங்கியற் பொருள் என்னும் இருவகைப் பொருள் களுள்ளே எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, யான் மெலிவடைந்தேன். எம் பெருமானே! இப்பொழுது உண்மையாகவே, உன் அழகிய திருவடிகளைக் கண்டு வீடு பெற்றேன்./n நான் உய்யும்படி என் மனத்தில் பிரணவ உருவாய் நின்ற மெய்யனே! மாசற்றவனே! இடபவாகனனே! மறைகள், ஐயனே என்று துதிக்க உயர்ந்து ஆழ்ந்து பரந்த நுண் பொருளானவனே! வெம்மை யானவனே! தண்ணியனே! ஆன்மாவாய் நின்ற விமலனே! நிலையாத பொருள்கள் யாவும் என்னை விட்டு ஒழிய, குருவாய் எழுந்தருளி மெய்யுணர்வு வடிவமாய், விளங்குகின்ற உண்மை ஒளியே! எவ் வகை யான அறிவும் இல்லாத எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே! அஞ்ஞானத்தின் வாதனையை நீக்குகின்ற நல்ல ஞானமயமானவனே! தோற்றம், நிலை, முடிவு என்பவை இல்லாதவனே! எல்லா உலகங்களையும் படைப்பாய்; நிலை பெறுத்துவாய்; ஒடுக்குவாய்; அருள் செய்வாய்; அடியேனைப் பிறவியிற் செலுத்துவாய்; உன் தொண்டில் புகப் பண்ணுவாய்; பூவின் மணம் போல நுட்பமாய் இருப்பவனே! தொலைவில் இருப்பவனே! அண்மையில் இருப்பவனே! சொல்லும் மனமும் கடந்து நின்ற வேதப் பொருளாய் உள்ளவனே! சிறந்த அன்பரது மனத்துள் கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடின போல இன்பம் மிகுந்து நின்று, எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!/n ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால் உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே மாசற்றவனே! உன்பொருட்டுப் பொருந்தின அன்பை உடையேனாய், மனம் கசிந்து உருகுகின்ற நன்மையில்லாத சிறியேனுக்குக் கருணைபுரிந்து பூமியின்மேல் எழுந்தருளி நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத் தாயினும் மேலாகிய அருள் வடிவான உண்மைப் பொருளே!/n களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, பூப்போன்ற சுடரே! அளவிலாப் பேரொளியனே! தேனே! அரிய அமுதே! சிவபுரத்தை யுடையானே! பாசமாகிய தொடர்பையறுத்துக் காக்கின்ற ஆசிரியனே! அன்போடு கூடிய அருளைச் செய்து என் மனத்தில் உள்ள வஞ்சம் அழிய, பெயராமல் நின்ற பெருங்கருணையாகிய பெரிய நதியே! தெவிட்டாத அமிர்தமே! எல்லையில்லாத பெருமானே! ஆராயாதார் மனத்தில் மறைகின்ற ஒளியை யுடையானே! என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிராய் நின்றவனே! சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே! அன்பர் பொருட்டு அவைகளை உடையவனே! அன்பர்களிடத்து அன்புடைவனே! கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, தன்மையினால் அல்லாதவனும் ஆகின்ற பேரொளியை யுடையவனே! நிறைந்த இருளானவனே! புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே! முதல்வனே! முடிவும் நடுவும் ஆகி அவையல்லாது இருப்பவனே! என்னை இழுத்து ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய சிவபெருமானே! மிகுந்த உண்மை ஞானத்தால் சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே! ஒருவரால் நுட்பம் ஆக்குதல் இல்லாத இயற்கையில் நுட்பமாகிய அறிவே! போதலும் வருதலும் நிற்றலும் இல்லாத புண்ணியனே! எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே! காண்பதற்கரிய பெரிய ஒளியே! மகாநதி போன்ற இன்பப் பெருக்கே! அப்பனே! மேலோனே! நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும் சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகி யும் மாறுபடுதலையுடைய உலகத்தில் வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவாய் விளங்கும் தெளிவானவனே! தெளி வின் தெளிவே! என் மனத்துள் ஊற்றுப் போன்ற பருகுதற்குப் ெபாருந்திய அமிர்தமே! தலைவனே!/n வெவ்வேறு விகாரங்களையுடைய ஊனாலாகிய உடம் பினுள்ளே தங்கிக் கிடக்கப்பெற்று ஆற்றேன் ஆயினேன். எம் ஐயனே! சிவனே! ஓ என்று முறையிட்டு வணங்கித் திருப்புகழை ஓதியிருந்து அறியாமை நீங்கி அறிவுருவானவர்கள் மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப் பிறவியையடையாமல், வஞ்சகத்தை யுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை அறுக்க வல்லவனே! நடு இரவில் கூத்தினைப் பலகாலும் பயிலும் தலைவனே! தில்லையுள் நடிப்பவனே! தென்பாண்டி நாட்டையுடையவனே! துன்பப் பிறப்பை அறுப்பவனே! ஓவென்று முறையிட்டுத் துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்க, சிவநகரத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர்./n

குறிப்புரை :

சிவபுராணம் - சிவபெருமானது பழையனவாகிய பெருமைகளைக் கூறும் பாட்டு. புராணம் - பழைமை; அது முதற்கண் பழையனவாகிய பெருமையையும், பின்னர் அதனைக் கூறும் பாட்டினையும் குறித்தலின், இருமடியாகு பெயர். `சிவனது பழையனவாகிய பெருமை` என்னும் பொருளைத் தருமிடத்து, இரு பெயரொட்டாகுபெயராம். `பழைமை` என்பது, இங்குக் காலம் பற்றியதாகாது, காலத்திற்கு அப்பாற்பட்ட நிலையே குறிப்பது. இந்நிலையை, அனாதி என்பராதலின், `சிவபுராணம்` என்றதற்கு, சிவனது அனாதி முறைமையான பழைமை எனக் கருத்துரைத்தனர், முன்னோர். இதுபோலும் கருத்துக்களைத் திருவாசகத்தின் பகுதிகள் எல்லாவற்றிற்கும் அவர் உரைத்திருத்தல் அறிக./n இங்கு, கலி வெண்பா என்றது, வெண்கலிப்பாவினை. இதனை, `கலிவெண்பாட்டு` என்பர் தொல்காப்பியர். முழுதும் வெண்டளையே கொண்டு, ஈற்றடி முச்சீர்த்தாய் வருதலின், `கலிவெண்பா` எனவும் பெயர் பெறுவதாயிற்று. எனினும், துள்ளலோசையே நிகழ்வதாகலின், கலிவகையேயாம்./n ``பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்/n ஆசிரி யப்பா வெண்பா என்றாங்/n காயிரு பாவினு ளடங்கு மென்ப`` -தொல். செய். 107/n என்பதும்,/n ``ஆசிரிய நடைத்தே வஞ்சி: ஏனை/n வெண்பா நடைத்தே கலியென மொழிப`` -தொல். செய். 108/n என்பதும் தொல்காப்பியமாதலின், கலிப்பாவும் ஓராற்றான் வெண்பாவேயாதல் அறிக. இதுபற்றியேபோலும், `நெடு வெண் பாட்டு` எனத் தொல்காப்பியமும், `பஃறொடை வெண்பா` எனப் பிற நூல்களும் கூறும். மிக்க அடிகளையுடைய வெண்பாவை, `கலிவெண்பா` என்றும் வழங்கினர் பின்னோர். செப்பலோசையான் வருதலும், துள்ளலோசையான் வருதலும் வெண்பாவிற்கும், கலிப்பா விற்கும் உள்ள வேறுபாடாதல், நன்கறியப்பட்டது. ஆகவே, திரு வாசக உண்மையில், `சிவபுராணத்து அகவல்` என்றமை ஆராய்தற் குரியது./n இது, `திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது, என்பது, பதிப்புகளில் காணப்படுவது. இதுமுதலாகத் திருவாசகப் பகுதிகள் அருளிச் செய்யப்பட்ட தலங்களைப் புராணங்கள் பலதலைப் படக் கூறுகின்றன. நீத்தல் விண்ணப்பம், திருக்கழுக்குன்றப் பதிகம் தவிர, ஏனைய திருவாசகம், திருக்கோவையார் ஆகிய எல்லாவற்றை யும் அடிகள் தில்லையை அடைந்து ஆங்கு எழுந்தருளியிருந்த நாள்களில் அருளினார் எனக் கொள்ளுதலே பொருந்துவதுபோலும்! இறைவன், `தில்லைப் பொதுவில் வருக` என்றருளிய ஆணை வழியே ஆங்கு அடைந்த அடிகள், அதன் பின்னும் இறைவன் தம்மைத் தன் திருவடி நிழலிற் சேர்த்துக் கொள்ளாது வாளாவிருந்தமைபற்றி எழுந்த கையறவினாலே இப்பாடல்கள் எல்லாவற்றையும் பாடினாராவர். இக் கையறவு திருவாசக முழுதும் இனிது வெளிப்பட்டுக் கிடத்தலானும், `தில்லைக்கு வருக` என்று இறைவன் பணித்தனன் என்பது தெளிவாகலானும், அவ்விடத்தை அடையும் முன்னரே அங்ஙனம் வருந்தினார் என்றல் பொருந்தாமையறிக. இவ்வாறாதலின், தில்லைக்குச் செல்லுங்கால் பிறதலங்களில் இறைவனை வணங்கும் அவாவால் அடிகள் ஆங்கெல்லாம் சென்று வணங்கித் தில்லையை நோக்கி விரைந்து சென்றதன்றித் திருப்பாடல்கள் பாடிற்றிலர் எனக் கொள்ளற்பாற்று./n 1-16. அறிவாற் சிவனேயான திருவாதவூரடிகள், `சிவபுராணம்` எனத் தாம் எடுத்துக்கொண்ட இத்திருப்பாட்டிற்கு முதற்கண் கூறும் மங்கல வாழ்த்தாக, இறைவனை, `வாழ்க`, வெல்க, போற்றி` எனப் பன்முறையான் வாழ்த்துகின்றார். அதனானே, இவ்வடிகள் மேல்வரும் அடிகளோடு தொடர்புற்று நிற்க, பாட்டு ஒன்றாயிற்று. இதனால், இத்திருப்பாட்டே தில்லையில் முதற்கண் அருளிச் செய்யப்பட்டது என்பது விளங்கும்./n 1. `நமச்சிவாய` என்னுந் தொடர், தன்னையே குறித்து நின்றது. இதனை முதற்கண் சிறந்தெடுத்தோதியவாற்றால், `மந்திரங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாயதாகிய` என்னும் இசையெச்சம், முதற்கண் வருவித்துரைக்கப்படும். அதனானே, இதனின்மிக்க மங்கலச் சொல் இல்லையாதலும் பெறப்படும். இத்திருப்பாட்டினுட் போந்த உயிரளபெடை ஒற்றளபெடைகள் இல்லாது ஓதின், தளை சிதைதல் காண்க. ``நாதன்`` என்றது, முன்னர்ப் போந்த மந்திரத்தால், `சிவபெருமானை` என்பது விளங்கிற்று. நாதன் - தலைவன். நமச்சிவாய மந்திரம், மந்திரங்கள் எல்லாவற்றினும் மிக்கது. எனவே, `அதற்குப் பொருளாய் உள்ள நாதனே, எல்லாத் தேவரினும் மிக்க முழுமுதற் கடவுள்` என்பது போந்தது. `நாதன்` என்றதற்கு, `நாத தத்துவத்தில் உள்ளவன்` என்று உரைப்பாரும் உளர். மந்திரம், இறைவன் திருவருளினது தடத்த நிலையும், அவனது திருவடி, அதன் உண்மைநிலையுமாம். அவற்றுள் மந்திரம் நம்மனோரால் அறியப் படுதல் பற்றி அதனை முதற்கண் வாழ்த்தி, பின்னர்த் திருவடியையே பன்முறையானும் வாழ்த்துகின்றார்./n 2. ``நெஞ்சின்`` என்றதில் இன், நீக்கப் பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு. இல்லுருபாகக் கொள்ளினும் அப் பொருட்டேயாம்./n 3. எடுத்துக்கோடற்கண்ணே அருளிச் செய்தமையால், `கோகழி` என்பது திருப்பெருந்துறையேயாதல் பெறப்படும். எங்ஙன மெனின், அடிகள் அருள்பெற்ற தலம் அதுவேயாதலின். இச்சொற்குப் பொருள் பல கூறுப. இப்பெயர் பின்னர் வழக்கு வீழ்ந்தமையின், பலரும் தத்தமக்குத் தோன்றியவாறே வேறுவேறு தலங்களை இதற்குப் பொருளாகக் கூறுவர். `ஆண்ட` என்ற இறந்த காலம், அடிகளை இறைவன் ஆட்கொண்ட காலம்பற்றி வந்தது. எனவே, `கோகழியை ஆள்வோனாய் எழுந்தருளியிருந்த` என்பது அதற்குப் பொருளாம். ``குருமணி`` என்றது, குரவருள் மேம்பட்டவன் என்னும் கருத்தினதாம்; எங்ஙனமெனின், மணியென்னும் உவம ஆகுபெயர், `சிறப்பே காதல் நலனே வலி` (தொல். பொருள் - 275). என்ற நான்கினுள் சிறப்பு நிலைக்களனாக வந்ததாகலின். எனவே, இது, `பரமாசாரியன்` என்றவாறாயிற்று. இங்ஙனங்கூறுதல் இறைவன் ஒரு வனுக்கே உண்மையாயும், ஏனையோர்க்கு முகமனாயும் அமைதலை அறிந்துகொள்க./n 4. ஆகமம், சிவாகமம். வேதம் பொது நூலாதலின், அதன் கண் பாலில் நெய்போல விளங்காது நிற்கும் இறைவனது உண்மை இயல்பு, சிறப்பு நூலாகிய சிவாகமங்களில், தயிரில் நெய்போல இனிது விளங்கி நிற்குமாதலின், ``ஆகமமாகி நின்று அண்ணிப்பான்`` என்று அருளிச் செய்தார். அண்ணித்தல் - இனித்தல்./n 5. இறைவன், ஏகனாய் நிற்றல் தன்னையே நோக்கி நிற்கும் உண்மை நிலையிலும், அநேகனாய் நிற்றல் உலகத்தை நோக்கி நின்று அதனைச் செயற்படுத்தும் பொது நிலையிலுமாம். `சத்தும் அசத்தும் இலவாய் இருந்தபோது தனியே சிவபிரான் ஒருவனே இருந்தான்; அவன், நான் பலவாகுவேனாக என விரும்பினான்` என்றாற்போல உபநிடதங்களில் வருவனவற்றைக் காண்க. `இறைவன்` என்பதற்கு, `எல்லாப் பொருளிலும் தங்கியிருப்பவன்` என்பது சொற் பொருளாயினும், `தலைவன்` என்பதன் மறுபெயராய் வழங்கும். `இறு` என்பது இதன் முதனிலை. `இற` என்பது அடியாக வந்ததென உரைப்பார்க்கு, `கடவுள்` என்பதன் பொருளேயன்றி வேறு பொருள் இன்றாமாதலின், அது சிறவாமை அறிந்துகொள்க. இத்துணையும் வாழ்த்துக் கூறியது; இனி வெற்றி கூறுப./n 6. ``வேகம்`` என்றது, `யான், எனது` என்னும் முனைப்பினை. ``ஆண்ட`` என இறந்த காலத்தாற் கூறினமையின், ஆண்டது, அடிகளையேயாயிற்று. வேந்தன் - ஞானத் தலைவன்./n 7. ``பிறப்பறுக்கும்`` என, `முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை` கூறினமையின், இது, தம்மை உள்ளிட்ட அனைவர்க்கும் செய்தலாயிற்று. பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன். சிவபிரானது தலைக்கோலம், மணிமுடியும், நறுமலர்க் கண்ணியும் முதலாய பிறர் தலைக்கோலங்கள் போலாது, சடைமுடியும், பிறைக் கண்ணியும், கங்கையும், பாம்பும் முதலியனவாக வேறுபட்டு நிற்ற லின், இப்பெயர், அவனுக்கே உரியதாயிற்று. பிஞ்ஞகம், `பின்னகம்` என்பதன் மரூஉ. ``பெய்`` என்றது, கழலுக்கு அடையாய், `கட்டப் படுகின்ற` எனப் பொருள் தந்தது. இதனை இங்ஙனம் கிளந்தோதிய வதனால், `சிவபிரானது வெற்றியே உண்மை வெற்றி` என்பது கொள்ளப்படும். `யாவரது வெற்றியும் சிவபிரானது வெற்றியே` என்பதனைக் கேனோபநிடதம், சிவபிரான் ஓர் யட்ச வடிவில் எல்லாத் தேவர் முன்னும் தோன்றிச் செய்த திருவிளையாடலில் வைத்து விளக்குதல் காண்க./n 8. புறத்தார் - சிவபிரானது திருவருட்குப் புறம்பானவர்; அஃதாவது, அவனது பெருமையை உணரமாட்டாது, ஏனைத் தேவர் பலருள்ளும் ஒருவனாக நினைப்பவர் என்றதாம்./n ``சிவனோடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை;/n அவனோடொப் பாரிங் கியாவரும் இல்லை;``/n ``அவனை யொழிய அமரரும் இல்லை;/n . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ./n அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை;`` -தி.10 திருமந்திரம் 5,6/n என்றற் றொடக்கத்தனவாகத் திருமந்திரம், எடுத்துக் கோடற்கண்ணே சிவபிரானது தனிப் பெருஞ் சிறப்பினை இனிது விளங்க எடுத்தோதி விரித்தலும், அவ்வாறே ஏனைய திருமுறைகளும் அதனைப் பல்லாற்றானும் ஆங்காங்கு வலியுறுத்தோதலும் காண்க./n சிவபிரான் உயிர்கட்குச் செய்யும் செயல் இருவகைத்து; ஒன்று மறைத்தல்; மற்றொன்று அருளல். (மறைத்தலின் வகையே, படைத்தல் முதலிய மூன்றும்). அவற்றுள் மறைத்தலும் அருட்செயலேயாயினும், அது, முன்னர்த் துன்பம் பயத்தலின் மறக்கருணையாய் நிற்க, அருளல் ஒன்றே அறக்கருணையாம். ஆதலின், `திருவருள்` என்பது, அருளலையே குறிப்பதாயிற்று. இவ் அறக்கருணை, அவனது தனிப் பெருமையை உணர்ந்தார்க்கன்றிக் கூடாது என்பதனை, ``பொது நீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும் - பெருந்துணையை`` (தி.6 ப.1 பா.5) என்னுந் திருத்தாண்டகத்தால் உணர்க./n சிவபிரானைப் பொதுநீக்கி உணரும் நிலையே `சரியை, கிரியை, யோகம்` என்னும் தவங்களாம். இத் தவத்தாலே, சிவபிரான் குருவாய் நின்று அஞ்ஞானத்தையகற்றி, மெய்ஞ்ஞானத்தைக் கொடுத்துப் பிறப்பினையறுத்தல் உளதாகும். ஆகவே, சிவபிரானைப் பொதுநீக்கி உணரமாட்டாதவர், அவனது திருவருட்குப் புறம்பாதல் அறிக. ``புறத்தார்க்குச் சேயோன்`` எனவே, அணியனாய் நின்று பிறப்பையறுத்தல், அவனைப் பொதுநீக்கி நினையும் அகத்தார்க் கென்பது பெறப்பட்டது. சிவபிரானைப் பொதுநீக்கி நினையும் நிலை, சத்திநிபாதத்து உத்தமர்க்கே உளதாகும் என்க./n ``பூங்கழல்கள்`` என்றதில், `பூ` என்பது, `பொலிவு` என்னும் பொருட்டாய், திருவடிக்கு அடையாயிற்று./n 9, 10. ``குவிவார்`` இரண்டன் பின்னும் இரண்டனுருபுகள் தொகுத்தலாயின. `குவிப்பார்` என்னாது, ``குவிவார்`` என்று அருளினமையால், `தம் குறிப்பின்றி அவை தாமே குவியப் பெறுவார்` என, அவரது அன்பின் மிகுதி கொள்க. ``கரம்`` என முன்னர்க் கூறிப் போந்தமையின், வாளா, ``சிரங்குவிவார்`` என்று போயினார். எனவே, ``கரங்குவிவார்`` என்றது, `கைகள் தம்மளவில் குவியப் பெறுவார்` எனவும், ``சிரங்குவிவார்`` என்றது, `அவை சிரமேற் சென்று குவியப்பெறுவார்` எனவும் பொருள்படுமாறு உணர்ந்து கொள்க. கைகள் தம்மளவிற் குவியப்பெறுவாரினும், அவை தலைமேற் சென்று குவியப்பெறுவாரது வசமழிவு பெரிதாகலின், `முன்னையோரை உள்மகிழ்தலும், பின்னையோரை ஓங்குவித்தலும் செய்வான்` என்று அருளிச் செய்தார். ஓங்குவித்தல் - ஏனையோர் பலரினும் உயர்ந்து விளங்கச் செய்தல். சிறந்த அறிவராய் (ஞானிய ராய்) விளங்குதலும் இதன்கண் அடங்கும் என்க. `ஓங்குவிப்பான்` என்ற இதனால், உள்மகிழ்தல், பொதுப்பட நிற்கும் நலங்களை அருளுதலாயிற்று. சீர் - புகழ். இத்துணையும் வெற்றி கூறியது; இனி, போற்றி கூறுவார்./n 11. ஈசன் - ஆள்பவன். `போற்றி` என்பது `வணக்கம்` என்னும் பொருளதாகிய தொழிற்பெயர். இதற்குமுன்னர், நான்கனுருபு விரிக்க./n 12. தேசன் - ஒளி (ஞான) வடிவானவன். சிவன் - நிறைந்த மங்கலம் (நன்மை) உடையவன்./n 13. நேயத்தே நிற்றல் - அன்பிலே விளங்கித் தோன்றுதல். ``நின்ற`` என இறந்த காலத்தால் அருளியது, முன்னையோரது அநுபவம் பற்றி என்க./n 14. மாயம் - நிலையின்மை. `பிறப்பை மாய (கெட) அறுக்கும்` என்றும் ஆம். மேல்வரும் பிறப்புக்களை அறுத்தலை மேலே அருளிச் செய்தமையின், இங்கு, `பிறப்பு` என்றது, எடுத்த பிறப்பை; அஃதாவது உடற்சிறையை என்க./n 15. சீர் - அழகு. ``நம் தேவன்`` என்றது, ஏனை அடியார்களையும் நினைந்து. `தம்மையெல்லாம் ஆளாகக் கொண்டு, தமக்குத் தலைவனாய் நின்றருளினவன்` என, அவனது அருட்டிறத்தை நினைந்துருகியவாறு./n 16. ஆராமை - நிரம்பாமை; தெவிட்டாமை. ``மலை`` என்றது காதலின்கண் வந்த உவம ஆகுபெயர். இத்துணையும், `வாழ்த்து, வெற்றி, போற்றி` என்னும் மூவகையில் முதற்கண் மங்கல வாழ்த்துக் கூறியவாறு. இவற்றுள், பொருளியல் புரைத்தலும் அமைந்து கிடந்தவாறு அறிக. ``கண்ணுதலான் ... ... ... எழிலார் கழல் இறைஞ்சி`` என மேல்வரும் அடிகள் இரண்டனையும் இம் மங்கல வாழ்த்தின் பின்னர்க் கூட்டியுரைக்க./n 17-20. ``சிவபுராணந்தன்னை`` என்றதை முதலிலும், ``அவனருளாலே`` என்றதை, ``தாள்`` என்றதன் பின்னரும் வைத்து உரைக்க./n ``சிவனவன்`` என்றதில் `அவன்`, பகுதிப் பொருள் விகுதி. `சிவன்` என்பதில் விகுதியும் உளதேனும், விகுதிமேல் விகுதி வருமிடத்து, முன்னை விகுதியும் பகுதிபோலக் கொள்ளப்படுமாறு அறிந்துகொள்க. ஏகாரம், பிரிநிலை; இதனால் பிரிக்கப்பட்டு நின்றது, `என் ஆற்றலால்` என்பது. `வணங்கி மகிழ` என இயையும். ``மகிழ`` என்றது, சினைவினை முதல் மேல் நின்றதாகலின், அது, ``வணங்கி`` என்றதற்கு முடிபாதற்கு இழுக்கின்று. மகிழ - மகிழ்தல் ஒழியா திருக்குமாறு; இவ்வெச்சம், காரியப் பொருட்டாய், ``மோய`` என்னும் காரணப் பொருட்டாய எச்சத்தொடு முடிந்தது. முற்பிறப்பிற் செய்யப் பட்ட வினைகளுள், முகந்து கொண்டவை போக எஞ்சி நின்றவை, இறைவனது அருளாற்றலாற் கெட்டொழிந்தமையின், இங்கு, ``முந்தை வினை`` என்றது, முகந்து கொண்டவற்றையேயாம். மோய - நீங்க. இது, `மோசனம்` என்னும் வடசொல்லின் திரிபாய்ப் பிறந்ததாம். இப்பாட்டினுள் யாண்டும், மோனை சிதைந்த தின்மையின் `ஓய` எனக் கண்ணழித்தல் பொருந்தாமை அறிக. பிராரத்தம் சிறிது தாக்கினும் இறையின்பம் இடையறவுபட்டுத் துன்பமாமாதலின், `சிறிதும் தாக்காமைப் பொருட்டு` என்பார், ``முழுதும் மோய`` என்றும், அங்ஙனம் அவை முற்றக் கெடுதற்கு இறைவனை இடையறாது உணர்தலன்றிப் பிறிதாறு இன்மையின், `சிவபுராணந்தன்னை உரைப்பன்` என்றும் அருளிச் செய்தார். ``சிவபுராணந்தன்னை`` என, வேறொன்று போல அருளிச் செய்தாராயினும் ``சிவபுராணமாகிய இப்பாட்டினை` என்றலே கருத் தென்க. இஃது உணராதார் சிலர், அடிகள், தம் பாடற்றொகுதி முழுவதற்குமாகவே இப் பெயர் கூறினார் என மயங்கியுரைப்பர்; அவ்வாறாயின், `கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி` முதலியன போல, இப்பாட்டிற்கும் வேறொரு பெயர் வேண்டுமென்று ஒழிக. ``முந்தை வினை முழுதும் மோய`` என, முதலதாகிய இப்பாட்டினுள் அருளிச் செய்தமையின், இஃது, ஏனைய திருப்பாட்டிற்கும் கொள்ளப் படுவதாம். ``யான்`` என்றதை, ``இறைஞ்சி`` என்றதன் முன்னர்க் கூட்டுக./n 21-22. காட்டுதல் - உருவத் திருமேனி கொண்டுவந்தே புலப்படுத்தல். காட்ட - காட்டுதற்பொருட்டு. எய்தி - எய்தியதனால்; ஆசிரியத் திருக்கோலத்துடன் வந்து வீற்றிருந்தமையால், இஃது, ஆட்கொண்டமையாகிய காரியந் தோன்ற நின்றது. `எண்ணுதற்கும்` என்னும் இழிவு சிறப்பும்மை, தொகுத்தலாயிற்று. அடைதல், சொல்லுதல் இவற்றினும் எண்ணுதல் எண்மையுடைத்தாதலின், `அதற்கும் வாராத திருவடி` என்றபடி. ``இறைஞ்சி`` என்றது, மேல் மங்கல வாழ்த்தில் கூறியவாற்றை எல்லாம். `கண்ணுதலானது எண்ணு தற்கும் எட்டாத எழிலார் கழல்களை, அவன் தனது கருணைக் கண்ணைக் காட்டுதற்பொருட்டு வந்து எய்தியதனால், யான் அநுபவ மாகவே இவ்வாறு இறைஞ்சி இச் சிவபுராணத்தை உரைப்பன்` என உரைத்துக் கொள்க./n 23-25. இவ்வடிகளில் உள்ள வினையெச்சங்கள் காரணப் பொருள. ``மிக்காய்`` என்றது, `மேல் உள்ளவனே` என, விளி. ``விளங்கொளியாய்`` என்றது, `தானே விளங்கும் அறிவு வடிவாய்` என, வினையெச்சம். எண் - எண்ணம்; சிந்தை. இது, சீவனைச் சிந்தை என்று கூறியது. (சிவஞானசித்தி - சூ. 4. 28) மேலும் கீழுமாய விண்ணையும், மண்ணையும் கூறவே, இடைநிற்கும் பிற பூதங்கள் யாவும் அடங்கின. ``பூதங்கள் தோறும் நின்றாய்`` என்பது முதலியன, பின் வருவனவற்றுட் காணப்படும். `விண்ணிலும் மண்ணிலும் நிறைந்து நிற்குமாற்றால் அவற்றின் மேல் உள்ளவனே! இயல்பாகவே விளங்கும் அறிவையுடையையாமாற்றால் ஆன்ம அறிவைக் கடந்து நின்று, அவ்வாற்றானே, வரம்பின்றிப் பரந்து நிற்பவனே` என்க. ``மிக்காய்`` என்றதும், ``எண்ணிறந்து`` என்றதும், `எல்லாப் பொருள்களையும் தனது வியாபகத்துள் அடக்கிநிற்பவன்` எனவும், ``எல்லையிலாதான்`` என்றது, `தான் ஒன்றன் வியாபகத்துட் படாதவன்` எனவும் அருளியவாறு. இங்ஙனம் போந்தன பலவும், இறைவனது புகழ், அளவிடப் படாத பெரும் புகழாயிருத்தற்குரிய காரணத்தை உடம்பொடு புணர்த்தலால் தெரிவித்தற் பொருட்டுக் கூறியனவாம். பொல்லா வினை - தீவினை. இறைவனை மறக்கச் செய்வதில் நல்வினையினும் தீவினை வலிமையுடையது. ஆதலின், ``புகழுமாறு ஒன்றறியேன்`` என்றார். `புகழ்தல்` என்பது, இங்கு, `சொல்லுதல்` என்னும் அளவாய் நின்றது. ஆறு - முறைமை. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `நல்வினையுடையோரும், வினை நீங்கப்பெற்றோரும் உனது பெருஞ்சீரினை முறையறிந்து சிறிது சொல்ல வல்லர்; யான் பொல்லா வினையேனாகலின், அவ்வாறு சிறிதும் மாட்டேனாயினேன்` என்றபடி. எனவே, `இங்ஙனமாயினும், உரைப்பன் என்னும் அவாவினால் எனக்குத் தோன்றியவாறே நெறிப்பாடின்றிக் கூறுவன சிலவற்றை ஏற்றருளல் வேண்டும்` என வேண்டிக் கொண்டதாயிற்று. இஃது, அவையடக்கமாயும் நிற்றல் அறிக. அவை, அடியவரது திருக்கூட்டம்./n 26-32. `மிருகம்` என்பது, `விருகம்` என மருவிற்று. கல்லினுள் வாழும் தேரை முதலியன போன்றவற்றை, ``கல்`` என்று அருளினார். இனி, `கல்தானே ஒருபிறப்பு`` எனக் கொண்டு அதற்கும் வளர்ச்சி உண்டென உரைப்பாரும் உளர். கணங்கள் - பூதங்கள். `வல் அசுரராகி` என்க. செல்லா நிற்றல் - உலகில் இடையறாது காணப்பட்டு வருதல். ``பிறப்பும்`` என்றதில், `பிறப்பின்கண்ணும்` என ஏழாவது விரிக்க. ``பிறந்து`` என்றதற்கு, `பலமுறை பிறந்து` என உரைக்க. ``எம் பெருமான்`` என்றது, விளி. ``இன்று`` என்றதனை, இதன்பின்னும், ``மெய்யே`` என்றதனை, ``வீடுற்றேன்`` என்றதன்பின்னும் கூட்டுக. ``கண்டு வீடுற்றேன்`` என்றது, `உண்டு பசிதீர்ந்தான்` என்றாற்போலக் காரண காரியப் பொருட்டு. ``இன்று, கண்டு வீடுற்றேன்`` என்றதனால், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தது, இதனைக் காணாத முன்னை நாள்களில் என்பது பெறப்பட்டது. ``மெய்யே`` என்னும் பயனிலைக்கு, `இது` என்னும் எழுவாய் வருவிக்க. இவ்வாறு வலியுறுத்தோதியது, தாவரசங்கமங்களாய் உள்ள பலவகைப் பிறப்புக் களிலும் பலகாலும் பிறந்து, இனி என்னே உய்யுமாறு என்று இளைத் தற்குக் காரணமாயிருந்தன பலவும், உனது திருவடியைக் கண்ட துணையானே அற்றொழிந்தன; இஃது உன்பெருமை இருந்தவாறு` என வியந்தவாறு. இதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வரு வித்து, அதனை, முடிவில் ``அரனேயோ`` என்றதில் உள்ள, `உனக்கு ஓலம்` என்னும் பொருளதாகிய, ``ஓ`` என்றதனோடு முடிக்க./n 33. உள்ளத்துள் ஓங்காரமாய் நிற்றல் - அகர உகர மகர நாத விந்துக்களாய் நின்று அந்தக்கரணங்களை இயக்கிப் பொருள் உணர்வைத் தருதல். இதனை யோக நெறியாலும், ஞானத்தினாலும் உணர்வர் பெரியோர். அவற்றுள், யோக நெறியாய் உணர்தல் பாவனை மாத்திரத்தாலேயாம். ஞானத்தினால் உணர்தலே அநுபவமாக உணர்தலாகும். அடிகள் ஞானத்தினால் உணர்ந்த உணர்ச்சியால் அருளுதலின், ``உய்ய`` எனவும், ``மெய்யா`` எனவும் போந்த மகிழ்வுரைகள் எழுவவாயின./n 34. விடை - எருது. அதனைச் செலுத்துவோனை, ``பாகன்`` என்றது, மரபு வழுவமைதி./n 35. ஐயன் - தலைவன். என - என்று சொல்லும்படி. `வேதங்கள் சிவபிரானையே தலைவன் என முழங்குகின்றன` என்றதாம். இதனை, சுவேதாசுவதரம், அதர்வசிகை முதலிய உபநிடதங்களில் தெளிவாகக் காணலாம். `ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற` என்ற மூன்றும், முறையே, `மேல், கீழ், புடை` என்னும் இடங்களிற் பரவியிருத்தல் கூறியவாறு. இங்ஙனம் எல்லையின்றிப் பரந்து நிற்றலை, `அகண்டாகாரம்` என்பர். ``நுண்ணியனே`` என்றது, மேற்கூறியவாறு, எங்கும் வியாபகனாய் நிற்றற்குரிய இயைபினை விளக்கியவாறாம். `ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனாதலை யறிந்தே வேதங்கள். உன்னை, ஐயா எனத் துதிக்கின்றன` என்றபடி./n 36. வெய்யாய் - வெப்பமுடையவனே. தணியாய் - தட்ப முடையவனே. இவ்விரண்டும் ஒறுத்தலையும், அருளலையும் குறித்துக் கூறியனவாம். இவற்றை முறையே `அறக்கருணை, மறக் கருணை` என்பர். `யஜமானன்` என்னும் ஆரியச் சொல், `இயமானன்` என்று ஆயிற்று. இஃது உயிருக்குச் சொல்லப்படும் பெயர். ``இயமான னாய் எறியுங் காற்றுமாகி`` (தி.6 ப.94 பா.1) என்றாற் போல்வனவுங் காண்க. `அறக்கருணை, மறக்கருணை என்பவற்றை உயிர்களோடு வேற்றுமையின்றி நின்று செய்கின்றாய்` என்றதாம்./n 37. முதலில் ஞானம்போலத் தோன்றி, பின் ஞானமன்றாய்ப் போதலின், விபரீத ஞானத்தை, ``பொய்`` என்றும், அது பலவகை நிலைகளையுடைமையால், ``எல்லாம்`` என்றும் கூறினார். ``போய் அகல`` என்றதை, அகன்றுபோக என மாறிக் கூட்டுக. ``வந்தருளி`` என்றதில் அருளி, துணைவினை. இறைவனைப் பற்றிவரும் வினைச் சொற்களில், இவ்வாறு வருமிடங்களைத் தெரிந்துகொள்க. வருதல், உள்ளத்தில்./n 38. மெய் - நிலைபேறு. மிளிர்தல் - மின்னுதல். `விளக்கு வந்து ஒளிவிடுங்காலத்து இருள் நீங்குதல் போல, நீ வந்து விளங்கிய காலத்து அஞ்ஞானம் அகன்றது` என்றவாறு. `ஏனைய விளக்குக்கள் போல அணையும் விளக்கல்லை` என்பார். ``மெய்ச்சுடரே`` என்று அருளினார். `நொந்தா ஒண்சுடரே`` (தி. 7 ப.21 பா.1) என்றாற்போல வருவனவுங்காண்க./n 39. `எஞ்ஞானம்` என்றதில் எகரவினா, எஞ்சாமைப் பொருட்டு. `எஞ்ஞானமும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. ``இன்பப் பெருமானே`` என்பதை முன்னர்க்கூட்டி, `இல்லாதேனது அஞ்ஞானந்தன்னை` என இயைக்க./n 40. நல்லறிவு - குற்றத்தொடுபடாத அறிவு. `அறிவை உடையவனே` என்னாது, ``அறிவே`` என்றார், அதனது மிகுதியுணர்த்தற்கு. முன்னர், ``மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற`` என்றது பலர்க்கும், பின்னர், ``அஞ்ஞானந்தன்னை அகல்விக்கும்`` என்றது `தமக்கும்` எனக் கொள்க./n 1. ஆக்கம் - தோற்றம். ``அளவு`` என்றதனை, ``இறுதி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இறுதி - அழிவு. `இல்லாய்` ஆக்குவாய் முதலியனவும், ஏனையபோல விளிகளே./n 42. ஆக்குதல் முதலிய மூன்றும் மறைத்தலின் வகையே யாதலின், அதனைவிடுத்து, ``அருள்தருவாய்`` என்றருளினார்./n 43. ``தொழும்பின்`` என, பின்னர் வருகின்றமையின், வாளா, ``போக்குவாய்`` என்றார். ``என்னை`` என்பதை முதலிற் கூட்டுக. `என்னை உன் தொண்டில் ஈடுபடாதவாறு நீக்குகின்றவனும் நீயே; அதன்கண் ஈடுபடச் செய்கின்றவனும் நீயே` என்றபடி. `இருவேறு நிலையும் எனது பக்குவத்திற்கேற்ற படியாம்` என்றல் திருவுள்ளம்./n 44. நாற்றத்தின் - பூவில் மணம்போல. நேரியன் - நுண்ணியன். இதன்பின், `பரியாய்` என்பதனை வருவித்துக் கொள்க. நுண்மை, அறிதற்கரிய அவனது உண்மை இயல்பும், பருமை அவனது பொதுவியல்பும் என்க. உண்மை இயல்பு அறிதற்கரியதாயினும் அநுபவிக்கப்படும் என்றதற்கு, ``நாற்றத்தின்`` என்று அருளிச் செய்தார். சேய்மை - மறைந்து நிற்கும் நிலை. நணிமை - வெளிப்பட்டு நிற்கும் நிலை./n 45. மறையோன் - வேதத்தை அருளிச் செய்தவன்; இது, `முதற் கடவுள்` என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது./n 46. அப்பொழுது கறக்கப்பட்ட பால், சுவை மிகுதியுடைத் தாதல் அறிக. ஒடு, எண்ணிடைச்சொல். பின்னர், ``சிந்தனையுள் நின்று`` என்றலின், இங்கு, `நாவிற் கலந்தாற்போல` என உரைக்க. பால் முதலியவற்றை நினைப்பினும், சொல்லினும், காணினும் நாவில் நீர் ஊறும்; அவை நாவிற் கலப்பின் மிக்க இன்பம் பயக்கும் என்க./n 47. `சிறந்த` என்பதில், அகரம் தொகுத்தலாயிற்று. தேன் - இனிமை. `தேனாய் ஊறி` என, ஆக்கம் வருவிக்க./n 48. பிறந்த பிறப்பு - இப் பிறப்பு; உடம்பு. ``பிறந்த பிறப்பறுக்கும்`` என அடைகொடுத்து ஓதுதலின், முன்னர் ``எம் பெருமான்``/n (அடி. 31) என்றதின் இது வேறாதலறிக. இங்ஙனமே, இதன்கண், ஒரு சொல் பலவிடத்தும் வருவன வேறு வேறு கருத்துடையவாதல் உய்த்துணர்ந்து கொள்க./n 49. `ஐந்தும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `நினை வார் நினைவின் வண்ணம் எந்நிறத்துடனும் தோன்றுவாய்` என்றபடி. இனிச் சிவபிரானது திருமுகங்கள் ஐந்தனுள்ளும் ஒரோவொன்று ஒரோவொரு நிறம் உடையதாதலும் அறிந்து கொள்க./n 50. இங்கு, `மறைந்திருந்தாயாகிய எம்பெருமானே` என உரைக்க. `அடியார்க்கு வெளிநிற்கும் நீ, தேவர்க்கு மறைந்து நிற்கின்றாய்` என்றபடி. ``வினை`` என்றது, வினையை விரும்பும் தன்மையை. அஃதாவது, தூலப் பொருளாய் நிற்றல். `இத்தன்மை யானே இருளால் மறைக்கப்பட்டேன்` என்றபடி./n 51. மாயம் - அழிதற்றன்மை. இருள் - ஆணவ மலம். தடை மந்திரத்தால் தடுக்கப்பட்டபோது, நெருப்புத் தனது சுடுதற் சத்தி மடங்கி நிற்றல் போல, ஞானத்தால் தடுக்கப்பட்ட காலத்தில் தனது மறைத்தற் சத்தி மடங்கி நிற்றலே ஆணவ மலத்திற்கு நீக்கமாகும். அதனையே இங்கு, `மாய்தல்` என்றார் என்க. ``இருளை`` என்றதில் ஐ, முன்னிலை ஒருமை விகுதி. `இருளின் பக்கத்தனாய் உள்ளாய்` என்றபடி./n 52. ``அறம் பாவம்`` என்றதனால், கன்ம மலங் கூறினார்./n 53. போர்த்து - போர்க்குமாற்றால். `எங்கும் உள்ள` என்க. `புழுவையும் அழுக்கையும்` என எண்ணும்மை விரிக்க. மூடி - மூடப் பட்டு./n 54. மலம் - அழுக்கு. சோரும் - வழிகின்ற. `வாயிலையுடைய குடில்` என்க. இஃது உடம்பைக் குறித்த உருவகம். எனவே, மாயா மலத்தைக் கூறியதாயிற்று. ``குடிலை`` என்றதில் உள்ள ஐயும், ``இருளை`` என்றதில் உள்ள ஐ போல நின்று, `குடிலிடத்தவனாய் உள்ளாய்` எனப் பொருள் தந்தது. `இருளையாயும், குடிலையாயும் நின்று` என முற்றெச்சமாக்கி, மேல் வரும், `நல்கி` என்பதனோடு முடிக்க./n 55-61. மலங்க - யான் மனம் கலங்கும்படி; இது, ``வஞ்சனையைச் செய்ய`` என்றதனோடு இயைந்தது. ``புலன்`` என்றது பொறிகளை. வஞ்சனையாவது, நலஞ்செய்வதுபோலக் காட்டி வினைகளில் வீழ்த்துதல். ``செய்ய`` என்னும் காரணப் பொருட்டாகிய வினையெச்சம். ``விலங்கும்`` என்றதனோடு முடியும். `உனக்கு அன்பாகி` என்க. கலந்த அன்பு, உண்மை அன்பு. நல்குதல் - இரங்குதல்; ``நல்கி`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. தயா, ஆகுபெயர். `தயை உடையவன்` என்பது பொருள். `நல்கியும், காட்டி யும் தயையுடையவனாய் நின்ற தத்துவனே` என்க. தத்துவன் - மெய்ப் பொருளாய் உள்ளவன்./n ``நல்கி`` என்றது, திரோதான சத்தியோடு இயைந்து நின்று மறைத்தலைச் செய்தலையும், ``கழல்கள் காட்டி`` என்றது, அருட் சத்தியோடு இயைந்து நின்று அருளலைச் செய்தலையும் அருளினார் என்க. `ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலங்களையும், அவற்றொடு நின்று இறைவன் சத்தியே நடத்துகின்றது` என்பதையும், அதுபற்றியே அச்சத்தி, `திரோதாயி (மறைப்பது) என்னும் பெயருடைத்தாய், `மலம்` என்று சொல்லப்படுகின்றது` என்பதையும், `ஆணவ மலம் பரிபாகம் அடைந்தபொழுது, அதுவே அருட் சத்தியாய் ஆன்மாவினிடத்தில் பதியும்` என்பதையும்,/n ``ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினைச் செய்ய ஏவும்/n தூயவன் றனதோர் சத்தி திரோதானகரி``/n எனச் சிவஞான சித்தியும் (சூ. 2.87)./n பாகமாம் வகைநின்று திரோதான சத்தி/n பண்ணுதலால் மலம்எனவும் பகர்வர்; அது பரிந்து/n நாகமா நதிமதியம் பொதிசடையான் அடிகள்/n நணுகும்வகை கருணைமிக நயக்குந் தானே./n எனச் சிவப்பிரகாசமும் (20) கூறுதலால் அறிக./n இங்ஙனம் திரோதான சத்தியோடு இயைந்து நின்று மலங் களை ஏவி மயக்க உணர்வை உண்டாக்குதலாகிய மறைத்தலைச் செய்தலே, `பந்தம்` என்றும், அருட்சத்தியோடு இயைந்து நின்று, மலங்களை நீக்கி மெய்யுணர்வை உண்டாக்குதலே, `வீடு` என்றும் சொல்லப் படும். ஆகவே, பந்தமும், வீடும் இறைவன் இன்றி ஆகாவாகலின், `பந்தமும் அவனே; வீடும் அவனே` என்கின்றன உண்மை நூல்கள்./n ``பந்தம் வீடவை யாய பராபரன்`` (தி.5 ப.7 பா.2)/n ``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``/n (தி.8 திருவா. திருவண்-52)/n ``பந்தமு மாய்வீடு மாயினாருக்கு``/n (தி.8 திருவா. திருப்பொற்-20)/n என்றாற்போலும் திருமொழிகளைக் காண்க. மறைத்தலும், மலபரி பாகம் வருதற்பொருட்டேயாகலின், கருணையேயாம். இது, மறக் கருணை என்றும், அருளல் அறக்கருணை என்றும் சொல்லப்படும். ஆதலின், பந்தமாய் நின்று மறைத்து வந்ததையும், ``நல்கி`` என அருளிச் செய்தார்./n 62. `அற்ற மலர், மலர்ந்த மலர்` எனத் தனித்தனி முடிக்க. சோதி - ஒளி; என்றது, ஞானத்தை. ``மலர்`` என்றது, உள்ளத் தாமரையை. அஞ்ஞானம் நீங்க, மெய்ஞ்ஞானத்தைப் பெற்றோரது உள்ளத்தின்கண் இறைவன் ஒளியாய் இருப்பவனாதலறிக./n 63. தேசன் - ஒளியாய் இருப்பவன். மேல், ``சுடர்`` என்றது, வரையறைப்பட்டுச் சிறிதாய்த் தோன்றுதலையும், இது, அளவின்றிப் பேரொளியாய் நிற்றலையுங் குறித்தவாறு என்க./n `தேனும் அரிய அமுதமும் போல இனியவனே` என இன்ப நிலை கூறியவாறு. ஒளி, அறிவாகலின், அதனையடுத்து இன்பம் கூறினார். சிவபுரன் - சிவலோகத்தில் இருப்பவன். மேல், தன்மை கூறி, இதனால் இடம் குறித்தருளினார். இதனால் பதமுத்தி எய்துங்காலை அவனது இன்பம் தோன்றப் பெறுதல் அறியப்படும்/n 64. ``பாசமாம் பற்று`` என்றது, காரியத்தைக் காரணமாகக் குறித்தபடி. பற்று, `யான்` என்னும் அகப்பற்றும், `எனது` என்னும் புறப்பற்றும். பாரித்தல் - வளர்த்தல். இதற்கு `ஞானத்தை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ஆரியன் - ஆசிரியன்./n 65. நேச அருள் - அடியவன் என்னும் தொடர்பு காரணமாகத் தோன்றும் அருள்; எனவே, இஃது ஆட்கொண்ட பின்னர் உளதாவ தாயிற்று. புரிதல் - இடைவிடாது செய்தல். `நெஞ்சில்` நின்ற என இயையும். வஞ்சனையாவது, பழையவாதனை பற்றி எழும் சில அவாக்கள். அவை அற்றம் பார்த்து நுழைந்து, பிறவிக் குழியில் வீழ்த்தலின், ``வஞ்சம்`` எனப்பட்டன. ``ஒருவனை வஞ்சிப்பதோரும் அவா`` (குறள் - 366) என்றருளியது காண்க./n 66. அருள்பெற்றாரது நெஞ்சில், வாதனை தாக்காதொழிதல் வேண்டின், இறைவன் அதன்கண் பெயராதுநிற்றல் வேண்டுவதாதல் அறிக. ``பெருங் கருணைப் பேராறே`` என்றது இது, முன்செய்த எல்லா வற்றினும் பேருதவியாதல் குறித்து./n 67. ஆரா அமுது - தெவிட்டாத அமிர்தம்; என்றது, `தேவா மிர்தத்தினும் வேறானது` என்றபடி. அளவின்மை - புதிது புதிதாக எல்லையின்றிப் புலப்பட்டுவருதல். இதனை, ``உணர்ந்தார்க் குணர் வரியோன்`` என்னும் திருக்கோவைப் பாட்டுள், அடிகள், சிற்றின் பத்தில் வைத்து உணர்த்தியருளுமாறறிக. இதனால், வாதனாமலமும் நீங்கப் பெற்றார்க்கு இறைவன் அநுபவப் பொருளாய் நிற்கும் நிலையை விளக்கியவாறாம்./n 68. இதனால், `நீ இத்தன்மையையாயினும் உன்னை உணராதவர்க்குத் தோன்றாமலே நிற்கின்றாய்` என்று அருளினார். இந்நிலை, குருடர்க்கு ஒளியும் இருளேயாதல் போல்வது என்பார், ``ஒளியே`` என்று அருளினார்./n ஊமன்கண் போல ஒளியும் மிகஇருளே/n யாமன்கண் காணா வவை. -திருவருட்பயன் 19./n என்ற திருவருட்பயனைக் காண்க./n 69. `ஓராதார்க்கு ஒளிக்கும் நீ, அடியேனுக்கு விளங்கி இன்பம் பயந்தாய்` என்றதாம்./n 70. இன்பமும் துன்பமும் இல்லாமை தன்னளவிலும், அவை களையுடைமை உயிர்களோடு நிற்றலிலுமாம். இவைகளை, ஓராதா ரிடத்தும், தம்போலும் அடியவரிடத்துமாக மேற்கூறியவற்றோடு எதிர் நிரல் நிறையாக இயைக்க./n 71. ``அன்பருக்கு அன்பன்`` எனவே, அல்லாதார்க்கு அல்லாதானாதல் பெறப்பட்டது. யாவையுமாதல், கலப்பினால் ஒன்றாய் நிற்றலாலும், அல்லனாதல், பொருட்டன்மையால் வேறாய் நிற்றலாலும் என்க./n 72. ``சோதியனே`` என்றது, `சத்தியாய் நிற்பவனே` என்றபடி;/n ``உலகெலா மாகிவேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி``/n (சிவஞான சித்தி. சூ.2.1) எனச் சத்தியை, `ஒளி` என்றமை காண்க. துன் இருள் - செறிந்த இருள்; என்றது ஆணவமலத்தை. ஏகாரம், தேற்றம். தோன்றாமை - அடராமை. `உயிர்கள்போல ஆணவமலத் தால் அணுகப்படாத பெருமையுடையவனே` என்றபடி./n 73. `அனாதிமுத்தனாகலின், அனாதிபெத்தமுடைய உயிர்களின் பொருட்டு உலகத்தைத் தோற்றுவிப்பவனாயினை; அங்ஙனமே முடிவில் ஒடுக்குபவனும், இடைக்கண் நிறுத்து விப்பவனும் ஆயினை` என்றபடி. இது, `பதியாய் நிற்கும் நிலை` என்றும், இத்தொழில்களுள் யாதொன்றனையும் செய்யாதிருத்தல், `சிவமாய் நிற்கும் நிலை` எனவும் சொல்லப்படும். மேல், ``ஆக்கு வாய்`` என்றது முதலியன, `அத்தொழில்களைச் செய்யும் தலைவன்` என்ற ஒன்றையே கூறியது எனவும், இது, அத்தன்மையனாதற்குரிய இயைபு உணர்த்தி, அவனது உண்மை நிலையையும் கூறியது எனவும் கருத்து வேறுபாடு கொள்க./n 74. ஈர்த்து ஆட்கொண்டமை, வலிய வந்து உலகியற் செலவைத் தடுத்து ஆட்கொண்டமையாம். எந்தை பெருமான் - எனக்கு ஞானத் தந்தையான பெருமான்./n 76. `நோக்கு நோக்கே` என இயைத்து, `நோக்குகின்ற குறிப் பொருளே` என உரைக்க. நுணுக்குதல் - நுண்ணிதாகச் செய்தல். ``நுணுக்கரிய`` என்றதில் அருமை, இன்மை குறித்துநின்றது; `இயல் பாக நுண்ணிதாய` என்றபடி, உணர்வுடையதனை, `உணர்வு` என்றே கூறினார்./n 77. `போக்கும், வரவும்` என வேறு வேறாக எண்ணினமை யின், முறையே இறப்பினையும், பிறப்பினையும் குறித்து அருளியன வாம். புணர்வு - தோய்வு; இன்பத் துன்ப நுகர்ச்சிகள். புண்ணியன் - அறவடிவினன்./n 78. ``காவலன்`` என்றது, `தலைவன்` என்னும் பொருளது. ``எம் காவலன்`` என்றதனால், `எம்மைக் காக்கும்` என்பது போந்தது. காண்பு - காணுதல். உன்னுடைய நிலையை முழுதுங் காணுதல் உயிர் கட்கு இயலாது என்றபடி./n அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்/n இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்/n எவ்வுருவோ நும்பெருமான் என்பார்கட் [கென்னுரைப்பேன்/n எவ்வுருவோ நின்னுருவம் ஏது``/n -அம்மை திருவந்தாதி. 61/n கடல்அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்/n கடல்அளக்க வாராதாற் போலப் - படியில் அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம் கருத்திற்குச் சேயனாய்க் காண்./n -திருக்களிற்றுப்படியார்.90/n என்றாற்போல்வன, இதனை விளக்குவனவேயாம்./n 79, 80. `இன்ப வெள்ள ஆறே` என மாற்றியுரைக்க. `பெரு வெள்ளத்திற்கு யாறே காரணமாதல் போல, பேரின்பத்திற்கு நீயே காரணன்` என்றபடி. அத்தன் - அப்பன்; இஃது எவ்வுயிர்க்கும் என்க. மிக்கு ஆய்நின்ற தோற்றம் - மிகுந்து வளர்ந்துநின்ற காட்சி; தூலமாய் விளங்குதலை யுடைய சுடரொளி, நூலறிவு எனவும், சொல்லவாராத நுண்ணுணர்வு அநுபவ ஞானம் எனவும் கொள்க. `சுடரொளியாயும், நுண்ணுணர்வாயும் வந்து` என்க./n 81. `வேறு வேறு` என்பது, `வெவ்வேறு` என மருவிற்று. இது, மாறுபட்ட பல சமயங்களின் கோட்பாடுகளையும், அவற்றாற் பெறும் அநுபவங்களையும் குறித்தது. `இங்ஙனம் பலவேறுவகைப்பட உணர்வு நிகழ்தற்குக் காரணம், உலகமாகிய பற்றுக்கோட்டினது இயல்பு` என்பார், ``மாற்றமாம் வையகத்தின்`` என்றார்./n 82. தேற்றம் - துணிவு; மெய்யுணர்வு; முன்னைய அறிவு களெல்லாம் பின்னர் அறியாமையாய்க் கழிய, இஃது ஒன்றே என்றும் அறிவாய் நிற்பதாகலான், ``அறிவாந் தேற்றமே`` என்று அருளினார். தேற்றத் தெளிவு - துணிபுணர்வின் பயன்; இன்பம்./n 83. `சிந்தனையுள் எழும் ஊற்று` என்றமையால், `உண்ணு தலும் சிந்தனையாலே` என்பது போந்தது. இவ்வாறு நிற்பதோர் அமிர்தம் இன்மையின், ``ஆரமுதே`` என்று அருளினார். இது, வரம்பு படுதலும், வேறு நிற்றலும் இல்லாமை அருளியவாறு./n 84-85. ``வேற்று, விகார, விடக்கு`` என்ற மூன்றனையும், ``உடம்பு`` என்றதனோடு தனித்தனி முடிக்க. வேற்றுடம்பு - தன்னின் வேறாயதாய உடம்பு. விகாரம் - மாறுதல். விடக்கு - ஊன். ``உடம் பினுள்`` என்பதில் உள், ஏழனுருபு. ``கிடப்ப`` என்ற செயவெனெச்சம், தொழிற் பெயர்ப் பொருளைத் தந்தது. ஆற்றேன் - பொறுக்க மாட்டேன்./n 85-88. ``எம் ஐயா`` என்றது முதலியன மெய்யானாரது மொழிகள். ஓ - ஓலம். ``என்றென்று`` என்னும் அடுக்கு, பன்மை பற்றி வந்தது. போற்றியும் புகழ்ந்தும் என்க. `போற்றுதல் - வணங்குதல். பொய் - பொய்யுணர்வு. கெட்டு- கெடப்பெற்று. மெய் - மெய்யுணர்வு. ஆனார் - நீங்கப்பெறாதார். குரம்பை - குடில். கட்டழித்தல் - அடியோடு நீக்குதல். `குரம்பைக் கட்டு` என்பது பாடமாயின், `உடம் பாகிய தளையை` என உரைக்க. ஏனையோர் பலரும் உடம்புடைய ராயே நிற்ப, தான் ஒருவனே அஃது இன்றி நிற்பவனாதலின், ``குரம்பை கட்டழிக்க வல்லானே`` என்றார். தம் உடம்பை நீக்கியருள வேண்டுவார், மெய்யுணர்வில் நிலைபெற்றார்க்கு அருள் செய்யும் முறையை எடுத்தோதினார்./n 89. நள்ளிருள் - செறிந்த இருள். இது, முற்றழிப்புக் காலத்தை உணர்த்துவது. `பயில` என்பது, `பயின்று` எனத் திரிந்தது; `ஒழிவின்றி` என்பது பொருள். இந்நிலையிற் செய்யும் நடனம், `சூக்கும நடனம்` எனப்படும்./n 90. தில்லைக் கூத்துத் தூல நடனமாகும். சூக்கும நடனம், தூல நடனம் இரண்டினாலும், `உலகிற்கு முதல்வன் நீயே` எனக் குறித்த வாறு. இறைவன் மதுரையிலும் அதனைச் சூழ்ந்த தலங்களிலும் அடியார் பலருக்குப் பல திருவிளையாடலாக வெளிநின்று அருளின மையாலும், தமக்கும் உத்தரகோச மங்கைத் தலத்திலே கைவிடாது காத்தல் அருளினமையாலும், பாண்டிநாட்டையே இறைவனுக்கு உரிய நாடாகவும், உத்தரகோச மங்கையையே ஊராகவும் அடிகள் ஆங்காங்குச் சிறந்தெடுத்தோதி அருளுவர் என்க./n தெற்கு - சோழநாடு பற்றிக் கூறப்படுவது. இவற்றால் இறைவன் அடியார்கட்கு எளியனாய் வருதல் குறிக்கப்படும் என்றுணர்க./n 91. `இதுகாறும் கூறிவந்தன பலவும், பிறவியை நீக்குதல் கருதி` என்பார், ``அல்லற் பிறவி அறுப்பானே`` என இறுதிக்கட் கூறினார். கூறவே, தமக்கு வேண்டுவதும் அதுவே என்றதாயிற்று. ``பிறவி`` என்ற பொதுமையால், எடுத்து நின்ற உடம்புங் கொள்க. ஓ - ஓலம்; இதுவே இப்பாட்டிற்கு முடிபாகலின், இதனுடன் வினை முடித்து, ``என்று`` என்றது, முதலியவற்றை, வேறெடுத்துக்கொண்டு உரைக்க. என்று - என இவ்வாறு./n 92-95. ``சொல்லற்கரியானைச் சொல்லி`` என்றதனால், யான் அறிந்த அளவிற் போற்றி என்க. செல்வர் - ஞானச் செல்வராவர். `தம்மைப் பல்லோரும் ஏத்த, தாம் சிவபுரத்தில் சிவனடிக்கீழ் அவனைப் பணிந்து நிற்போராவர்` என, சொற்களை ஏற்குமாற்றாற் கூட்டியுரைக்க. `சிவபுரத்தின் உள்ளார்` என்றது, தூய புலன்களை நுகர் தலை. ஞானச் செல்வராதல் கூறினமையின், அந்நுகர்ச்சியின் உவர்ப்புத் தோன்றியவழி, அங்கிருந்தே பரமுத்தியைத் தலைப்படுதல் பெறப்பட்டது. இதனால், இப்பாட்டினை ஓதுவார்க்கு வரும் பயன் கூறினமை காண்க./n இங்ஙனம், மங்கல வாழ்த்து முதலாக, பாட்டின் பயன் ஈறாகப் பாயிர உறுப்புக்கள் பலவும் அமைய இதனை அருளிச் செய்தமையின், அடிகள் தம் பெருமானைப் பலவாற்றானும் பாடி மகிழ விரும்பி அங்ஙனம் பாடத் தொடங்குங்கால், இதனையே முதற்கண் அருளிச் செய்தார் என்பது பெறுதும். இதனானே, இதனுட் கூறப்பட்ட பாயிரப் பகுதிகள் பலவும், பின்னர் அருளிச் செய்த பல பகுதிகட்கும் பொருந்து தல் கொள்க./n ``சிவ புராணந்தன்னை உரைப்பன்`` எனப் புகுந்த அடிகள், அதனைப் பலவாற்றானும் விளிமுகமாகவே அருளினமையின், அவை யாண்டு நிற்பினும் பொருந்துவனவேயாம். ஆதலின், `எம் பெருமானே, முன்பு பல்லூழிக் காலம் எல்லாப் பிறப்புக்களிலும் பிறந்து இளைத்துப்போனேன்; இதுபோழ்து உன் பொன்னடிகளைக் கண்டு வீடு பெற்றேன்; இது மெய்யே; ஆயினும், உடம்பினுட் கிடப்ப ஆற்றேன்; பொய்கெட்டு மெய் ஆனார்க்கு புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே! தில்லையுட் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! அல்லற் பிறவி அறுப்பானே! `ஓ` என வினைமுடித்துக் கொள்க./n

பண் :

பாடல் எண் : 1

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோ ருலகுந்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5
என்னுடை யிருளை ஏறத் துரந்தும்
அடியா ருள்ளத் தன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும் 10
கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புற வெய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிறது படுத்தும்
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து
உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும் 20
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக் 25
கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக்
குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
வேலம் புத்தூர் விட்டே றருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30
தற்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் கீந்த விளைவும்
மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற் களவறி யொண்ணான் 35
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத் 40
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தண னாகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும் 45
ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவண மதனிற் பொலிந்திருந் தருளித் 50
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் 55
பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
விருந்தின னாகி வெண்கா டதனில் 60
குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்கு
அட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னிற் கரந்த கள்ளமும் 65
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70
தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
இடைமரு ததனில் ஈண்ட இருந்து 75
படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்
ஏகம் பத்தின் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசும்
திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80
சேவக னாகித் திண்சிலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயா றதனிற் சைவ னாகியும் 85
துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும்
திருப்பனை யூரில் விருப்ப னாகியும்
கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்
கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்
புறம்பய மதனில் அறம்பல அருளியும் 90
குற்றா லத்துக் குறியா யிருந்தும்
அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்
டிந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத் 95
தானே யாகிய தயாபரன் எம்மிறை
சந்திர தீபத்துச் சாத்திர னாகி
அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை ஆண்ட பரிசது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனந் தன்னை யொருங்குடன் அறுக்கும் 105
ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் 110
மூல மாகிய மும்மலம் அறுக்குந்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற் களவறி யாதவன் 115
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்
உத்தர கோச மங்கையூ ராகவும் 120
ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெய ராகவும்
இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி
அருளிய பெருமை அருண்மலை யாகவும்
எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் 125
அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி
நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல என்னை யீங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130
ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும்
எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்க மெய்தியும்
பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும்
கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி 135
நாத நாத என்றழு தரற்றிப்
பாத மெய்தினர் பாத மெய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநா டகஎன்று
இதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத் தியல்புடை யம்பொன் 140
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145
ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே.

பொழிப்புரை :

தில்லையாகிய பழைய நகரில் நிருத்தம் செய்தருளிய திருவடிகளால், பல உயிர்களில் எல்லாம் தங்கிப் பல அருட் செயல்களைச் செய்தவனாகி, அளவில்லாத பல குணங்களோடு அழகு பெற விளங்கி மண்ணுலகிலும், விண்ணுலகிலும் மற்றைய தேவருலகிலும் பொருந்திய கல்வியைத் தோற்றுவித்தும், நீக்கியும், என்னுடைய அஞ்ஞான இருளை முழுதும் ஒழித்தும் அடியாருடைய உள்ளத்தில் அன்பானது பெருக, அதனைக் குடியிருப்பாகக் கொண்ட அருளும் தலைமையும் உடையவனாய், மேலுலகத்தில் தான் சொல்லிய ஆகமத்தை நிலைபெற்ற மகேந்திர மலையின்கண் வீற்றிருந்து நிலவுலகத்திற்கு வெளிப்படுத்தியும், கல்லாடம் என்னும் திருப்பதியில் இனிதாக உமாதேவியோடு, யாவரும் விரும்பும்படி ஒருமித்து எழுந்தருளியிருந்தும், பஞ்சப் பள்ளியென்னும் திருப் பதியில் பால் போன்ற மொழியையுடையவளாகிய உமாதேவி யோடும், குறையாமல் மிகும் இனிய அருள் செய்தும், வேடவுருவத் துடன் முருக்கம்பூப் போன்ற உதட்டையுடைய உமாதேவியின் நெருங்கின அழகான தனங்களாகிய குளத்தில் மூழ்கியும், வலைய ராகிக் கெளிற்று மீனைப் பிடித்து, பெருமை வாய்ந்த விருப்பத்தினை யுடைய ஆகமங்களை அக்கெளிற்றினிடமிருந்து கவர்ந்தும், அவ் வாகமங்களை மகேந்திரமலையில் இருந்து பொருந்திய ஐந்து திரு முகங்களாலும் உபதேசித்தருளியும், நந்தம்பாடி என்னும் திருப் பதியில் வேதியனாய், முடிவற்ற ஆசிரியனாய் எழுந்தருளியும், வெவ் வேறு திருவுருவங்களும் வெவ்வேறு குணங்களும், நூறு இலட்சம் வகையினையுடையனவாகி இடப வாகனத்தையுடைய சிவபெருமான், இவ்வுலகத்தை உய்விக்கும் பொருட்டு, தனது இடப் பாகத்தையுடைய உமாதேவியும் தானுமாய் எழுந்தருளி மேல் நாட்டுக் குதிரைகளைக் கொண்டு, அழகு பொருந்த வாணிகக் கூட்டமாய் தானே எழுந்தருளி வந்தும், வேலம்புத்தூர் என்னும் திருப்பதியில் வேற்படையைக் கொடுத்தருளித் தன் திருக்கோலத்தைச் சிறப்பாகக் காணுமாறு செய்த கோட்பாடும், சாந்தம்புத்தூரில் வில்லினால் போர் செய்கின்ற ஒரு வேடனுக்குக் கண்ணாடியில் வாட்படை முதலியவற்றைக் கொடுத்த பயனும், ஓர் அன்பர்க்கு அருளுதற் பொருட்டுக் குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் தோற்பையில், மிக்க நெருப்புத் தோன்றத் தனது உருவத்தை அழகாகக் காட்டிய பழைமையும், திருமாலுக்கும் பிரமனுக் கும் அளவு அறியப்படாதவனாகிய சிவபெருமான், நரியைக் குதிரை களாகச் செய்த நன்மையும், பாண்டியனை ஆட்கொண்டருள, அப் பாண்டியனுக்குக் குதிரையை விற்று, அதற்கு அவன் கொடுத்த மிக்க பொன்னைப் பெறக் கருதாது, என்னை ஆண்டவனாகிய எம் இறைவனது அருள் வழியையே நான் நாடியிருக்குமாறு அழகு பொருந்திய பாதங்களை, மிக்க ஒளியுடன் காட்டியருளிய பழைமையும், வேதியனாகி, அடியேனை ஆட்கொண்டருளி மாயம் செய்து மறைந்த தன்மையும்; மதுரையாகிய பெரிய நல்ல பெருமை வாய்ந்த நகரத்திலிருந்து, குதிரை வீரனாய் வந்த கோட்பாடும், அந்த மதுரை நகரத்தில் அடியவளாகிய வந்தி என்பவள் பொருட்டு, மற்றவர்களுடன் மண் சுமந்தருளிய விதமும், திருவுத்தரகோச மங்கையிலிருந்து வித்தக வேடம் காட்டிய இயற்கையும், திருப்பூவணத்தில் விளங்கியிருந்தருளி, தூய்மையான அழகிய திருமேனியைப் பொன்னனையாள் என்பவளுக்குக் காட்டிய பழைமையும், திருவாதவூரில் எழுந்தருளி இனிய திருவருள் புரிந்து பாதச் சிலம்பு ஓசையைக் காட்டிய செயலும், அழகு நிறைந்த பெருந்துறைக்கு இறைவனாகி, மேன்மை பொருந்திய ஒளியில் மறைந்த வஞ்சகமும், திருப்பூவணத்தில் இனிதாக விளங்கியருளிப் பாவத்தை அழித்த விதமும், தண்ணீர்ப் பந்தலை வெற்றியுண்டாக வைத்து நல்ல நீரைத் தரும் ஆளாகியிருந்த நன்மையும், விருந்தாளியாகி, திருவெண்காட்டில் குருந்த மரத்தின் அடியில் அன்று வீற்றிருந்த கோலமும், திருப்பட்ட மங்கை என்னும் திருப்பதியில் சிறப்பாய் இருந்து அவ்விடத்தில் அட்டமா சித்திகளை அருளிய விதமும், வேடுவனாய் வந்து வேண்டும் வடிவைக் கொண்டு காட்டில் ஒளித்த வஞ்சகமும், படைகளின் உண்மையைக் காட்டச் செய்து, அதற்கு வேண்டிய வடிவம் கொண்டு மேன்மையுடைய ஒருவனாய்த் தோன்றிய தன்மையும், ஓரியூரில், இனிதாக எழுந்தருளி, பூமியில் பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய தன்மையும், பாண்டூரில் மிக இருந்தும், தேவூருக்குத் தென்திசையில் விளங்குகின்ற தீவில் அரசக் கோலம் கொண்ட கோட்பாடும், தேன் பொருந்திய மலர்ச் சோலை சூழ்ந்த திருவாரூரில் ஞானத்தைக் கொடுத்த நன்மையும், திருவிடைமருதூரில் மிக இருந்து பரிசுத்தமான திருவடியை வைத்த அந்தத் தன்மையும், திருவேகம்பத்தில் இயற்கையாய் எழுந்தருளி யிருந்து பெண்ணை இடப்பாகத்தில் கொண்ட தன்மையும், திரு வாஞ்சியம் என்னும் தலத்தில் சிறப்புப் பொருந்த எழுந்தருளி மணம் நிறைந்த கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருந்த விதமும்;
வீரனாகி, வலிய வில்லைத் தாங்கி, பலப்பல வீரச் செயல் களைக் காட்டிய தன்மையும், திருக்கடம்பூரில் இடமுண்டாக இருந் தும், திருவீங்கோய் மலையில் அழகைக் காட்டியும், திருவையாற்றில் சைவனாய் வந்தும், திருத்துருத்தி என்னும் திருப்பதியில் விருப்பத் தோடிருந்தும், திருப்பனையூர் என்னும் பதியில் விருப்பமுடைய வனாய் இருந்தும், சீகாழியில் திருவுருவினைக் காட்டியும், திருக்கழுக் குன்றத்தில் நீங்காது இருந்தும், திருப்புறம்பயத்தில் பல அறச்செயல் களை அருளிச் செய்தும், திருக்குற்றாலத்தில் அடையாளமாய் இருந்தும், முடிவில்லாத பெருமையையுடைய, நெருப்புப் போலும் உருவத்தை மறைத்து, அழகிய கோலத்தினையுடைய ஒப்பற்ற முதற் பொருளின் உருவம் கொண்டு இந்திர ஞாலம் போல எழுந்தருளி, எல்லாருடைய குணங்களும் தன்னிடத்து அடக்கித்தானொருவனே முதல்வனாய் நிற்கிற அருளினால் மேம்பட்ட எம் தலைவன் சந்திரதீபம் என்னும் தலத்தில் சாத்திரப் பொருளை உபதேசிப் பவனாய், ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து அழகு வாய்ந்த திருக் கழிப்பாலை என்னும் தலத்தில் அழகிய திருக்கோலத்தோடு பொருந்தி யிருந்தருளியும்;
மறைமொழிகள் வெளிப்படுவதற்கு இடமான பெரிய மலையாகிய, மகேந்திர மலையையுடையவன் முடிவற்ற பெருமையையும் அருளையும் உடைய பெரியோன், எம்மை ஆண்டருளிய தன்மையைச் சொல்லின், வலிமையையுடைய அழகமைந்த திரு மேனியில், திருவெண்ணீற்றுக் கொடியை உயர்த்திக் காட்டியும், பிறவித் துன்பத்தை ஒருங்கே அழிக்கும் இன்பமே ஆறாகத் தந்தருளியும், உமாதேவியின் பாகத்தையுடைய, மிகவும் பெருங் கருணையையுடையவன், நாதமாகிய பெரிய பறை முழங்கி ஒலிக்கக் கண்டும், அன்பர் மனம் களங்கமடையாமல் ஆட்கொண்டருள்வோன் முத்தலை வேலினைக் கைப்பிடித்தருளியும், மூலகாரணமாகிய மும் மலம் நீக்குகிற பரிசுத்தமாகிய திருமேனியில் ஒளிவீசுகின்ற சோதியாய் உள்ளவன், அன்பரிடத்து அன்புடையவனாகிச் செங்கழுநீர் மலர் மாலையைப் பொருத்தமுடையதாக அழகுபெறத் தரித்தும், திருமாலுக்கும் பிரமனுக்கும் எல்லையறியப் படாதவன் குதிரையின் மீது ஏறி வந்த விதமும், மீண்டும் பிறவிக்கு வாராத முத்தி நெறியை அன்பர்க்குக் கொடுப்பவன், பாண்டி வளநாடே பழைய இடமாகக் கொண்டும், அன்பு செய்கின்ற அடியவரை மிகவும் மேலான முத்தியுலகத்தில் சேர்ப்பவன், திருவுத்தரகோச மங்கையைத் திருப்பதியாகக் கொண்டும், முதன்மையான மும்மூர்த்திகட்குத் திருவருள் செய்த மகாதேவன் என்பதே திருப்பெயராகக் கொண்டும், அடியார்கட்கு அஞ்ஞான இருளை நீக்கியதனால் ஆகிய பேரின்பமாகிய ஊர்தியைக் கொடுத்தருளிய பெருமையை உடைய அருளே மலையாகக் கொண்டும், எப்படிப்பட்ட பெருந் தன்மையையும் எவ்வகைப் பட்டவர் திறத்தினையும் அவ்வத் தன்மைகளால் ஆட்கொண்டருளி, நாய் போன்ற என்னை நன்மை மிகுந்த தில்லையுள் அழகு நிறைந்த `அம்பலத்தில் வருக` என்று சொல்லி, பொருந்த அடியேனை இவ்வுலத்திலே நிறுத்தி, அன்று தன்னோடு கூடப்போன அருள்பெற்ற அடியார், தன்னோடு பொருந்த அவரோடு தான் கலந்து மறைந்தருளியும், தன்னைக் கலக்க வாராதவர்களுள் சிலர், தீயில் குதிக்கவும், ஆசை கொண்டு மயக்கம் அடைந்தும், பூமியில் புரண்டு வீழ்ந்து அலறியும், நிற்க, காலால் வேகம் கொண்டு ஓடிக் கடலில் விழ நெருங்கி, `நாதனே! நாதனே!` என்று அழுது புலம்பி, திருவடியை அடைந்தவர்கள் முத்திப்பேறு எய்தவும், பதஞ்சலி முனிவர்க்கு அருள் செய்த மேலான கூத்தனே என்று இதயம் வருந்த நின்று ஏங்கினவர் ஏங்கி நிற்கவும், ஒலிக்கின்ற கயிலாய மலையின் சிறந்த தலைவன் அழகு பெற்ற இமய மலையின் தன்மை வாய்ந்த அழகிய பொன்னினால் செய்யப்பட்டு விளங்குகின்ற தில்லையம்பலத்தினில் நடனம் செய்த, கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினையுடைய உமாதேவியோடு காளிக்கும் அருள் செய்த, திருக்கூத்தில், அழகு மிக்க புன்னகையையுடைய எம்பெருமான் தன் திருவடியைச் சரணாக அடைந்த தொண்டர்களுடனே விளங்குகின்ற புலியூரில் எழுந்தருளி இனிதாக எனக்கு அருள் செய்தனன்.

குறிப்புரை :

கீர்த்தித் திருஅகவல் - சிவபெருமானது அருட் புகழைக் கூறுகின்ற சிறந்த அகவற் பாட்டு. இதற்கு, முன்னோர் உரைத்த குறிப்பும், `சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை` என்பதேயாகும்.
சிவபுராணத்துள், சிவபெருமானது திருவருட்பெருமையை, பண்பாக எடுத்துப் போற்றிய அடிகள், இதனுள் அதனைச் செயலாக எடுத்துப் போற்றுகின்றார். அச் செயல் பற்பல இடங்களில், பற்பல காலத்தில், பற்பல வகையில் நிகழ்ந்தனவாம். ஆகவே, இதனுட் கூறப்படுவன பலவும், இறைவனது அருட்டிருவிளையாடல்கள் என்பது பெறப்படும்.
அடிகளது காலப் பழைமையால், இதனுட் குறிக்கப்பட்ட தலங்களுள்ளும், வரலாறுகளுள்ளும் பல, பிற்காலத்தவரால் நன்கு அறிதற்கு அரியவாயின. அதனால், அவற்றை அவரவரும் தாம் தாம் கருதியவாற்றால் பலபடக் கூறிப் போந்தனர். ஆகவே, அவர் கூற்றுக்கள், ஏற்றபெற்றியே கொள்ளப்படும் என்க.
அடி 1-3
``திருவடி`` என்றது, விடாத ஆகுபெயராய், அவைகளையுடைய இறைவன் எனப் பொருள் தந்தது. ``எல்லாம்`` என்றதில், `எல்லாவற்றுக்கண்ணும்` என ஏழாவது விரிக்க. பயிலுதல்- நீங்காது நின்று அருள் புரிதல். இறைவன் புறத்தே தில்லையிலும், அகத்தே நெஞ்சத் தாமரையிடத்தும் நடனம் புரிதலை இங்ஙனம் அருளிச் செய்தார். ``பல்குணம்`` என்றதில், `குணம்` ஆற்றல். அஃது, ``எழில்பெற`` என்றதனோடு முடிந்தது. எழில் பெற - எழுச்சிபெற்று நிற்குமாறு. விளங்கி - தடத்தநிலையில் தூலமாய் நின்று. இவ்வெச்சம், ``தோற்றியும், அழித்தும், துரந்தும்`` என வருவனவற்றோடு முடியும்.
அடி 4-8
``மண், விண்`` என்றது பூதங்களை. கீழும் மேலுமான இவற்றைக் கூறவே, இடை நிற்கும் பூதங்களும் அடங்கின. `வானோருலகு` எனப் பின்னர் வருதலின், இவை மக்களுலகாயின. `கல்வியும்` என, தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரித்துரைக்க. `சொல்லும், பொருளும்` என இரு கூற்றுலகத்தையும் குறித்தவாறு. என்னை? துணிபுணர்விற்குக் காரணமாய் நிற்கும் சொற்கள் பல வற்றையுமே ஈண்டு` ``கல்வி`` என்றமையின், தோற்றலும், அழித்தலும் கூறவே, இடைநிற்கும் நிறுத்தலும் அடங்கிற்று; எனவே, `முத்தொழில்களைச் செய்து` என்றவாறாயிற்று. இருள் - ஆணவமலம். `இவ்வாற்றானே இருளைத் துரந்து` என்றபடி. எனவே, `இறைவன் முத்தொழில் செய்தல், உயிர்களின் இயற்கை மலமாகிய ஆணவத்தைத் தொலைத்தற் பொருட்டு` என்பது போந்தது.
சொன்னஇத் தொழில்கள் என்ன
காரணந் தோற்ற என்னில்
முன்னவன் விளையாட் டென்று
மொழிதலும் ஆம்; உயிர்க்கு
மன்னிய புத்தி முத்தி
வழங்கவும், அருளால் முன்னே
துன்னிய மலங்க ளெல்லாம்
துடைப்பதும் சொல்ல லாமே.
என்னும் சிவஞான சித்தியைக் காண்க (சூ. 1.36).
சொற்பல்காமைப் பொருட்டுச் சுருங்க ஓதினாராயினும், `என்னுடை இருளை ஏறத்துரந்து என் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்` எனவும், `ஏனை அடியார் பலருடைய இருளையும் ஏறத் துரந்து அவர் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்` எனவும் வகுத்துரைத்தல் கருத்தென்க. இவ்விரண்டினையும் இத்திருப்பாட்டுள் எடுத்தோதுதல் காண்க.
ஏற - கடைபோக; முற்றிலும். மீதூர்தல் - மேன்மேல் வளர்தல். `அவற்றைக் குடியாக்கொண்ட` என்க. குடி - குடியிருக்கும் இடம். கொள்கை - கோட்பாடு. சிறப்பு - மேன்மை. `கொள்கை சிறப்பு` என்ற இரண்டும், முறையே, காரணப் பெயராயும், காரியப் பெயராயும் நின்று, ``கொண்ட`` என்ற பெயரெச்சத்திற்கு முடிபாயின. இதனால், இறைவன் உயிர்கள் பொருட்டுச் செய்யும் திருவிளையாடல்களைத் தொகுத்துக் கூறியவாறு.
அடி 9-10
``சொன்ன ஆகமம்`` என்றதை முதலிற் கூட்டி, `முன்னர்ப் பிரணவர் முதலியோர்க்குச் சொன்ன ஆகமங்களை` என உரைக்க. சுத்த புவனத்திற் சொல்லப்பட்டவற்றை நிலவுலகத்திற் புலப்படுத்தினமையின், ``தோற்றுவித்து`` என்றருளினார். `எழுதுவிக்கப்பட்டன` என்பதும் இதனானே கொள்க. என்னை? தோற்றுவித்தல் என்பது, `கட்புலனாம்படி செய்தல்` எனவும் பொருள் தருமாகலின், எழுதினோர் சிவகணத்தவர் எனக் கொள்ளப்படும்.
`மகேந்திரமலை வடக்கின்கண் உள்ளது` என ஒரு சாராரும், `தெற்கின்கண் உள்ளது` என மற்றொரு சாராரும் கூறுப. அடிகள் தென்னாட்டில் நிகழ்ந்தவற்றையே அருளிச் செய்தலின், தெற்கின்கண் உள்ளதெனக் கோடலே பொருந்துவதாம். இப் பெயருடைய மலை தெற்கின்கண் உள்ளதென்றே இராமாயணத்தாலும் அறிகின்றோம். ``மன்னு மாமலை`` என்றதனால், அது சிறப்புடைய மலையாதல் விளங்கும்
அடி 11-12
கல்லாடம், ஒருதலம், கலந்து - வெளிப்பட்டு நின்று. நல்லாள், உமையம்மை. நயப்பு உறவு - மகிழ்ச்சியுறுதல்; அஃதாவது, `சினந்தணிதல். மகேந்திரமலையில் தோற்றுவித்தருளிய ஆகமங்களை இறைவன் உமையம்மைக்கு அவ்விடத்தே அறிவுறுத்த, அவள் அவற்றை விருப்பமின்றிக் கேட்டாள்; அதனாற் சினங்கொண்ட இறைவன், நீ ஈங்கிருக்கற்பாலையல்லை எனக் கடிந்து நீக்க, அவள், `கல்லாடம்` என்னும் தலத்தில் சென்று தன் பிழை நீங்க இறைவனை வழிபட்டாள்; அவ் வழிபாட்டினால் மகிழ்ந்த இறைவன் அங்கு அம்மைமுன் வெளிப்பட்டுத் தனது மகிழ்ச்சியைப் புலப்படுத்தி, நின் பிழையைப் பொறுத்தோம் என்று அருள்செய்தான்` என்பது இவ்வடிகளால் கொள்ளத்தகும் வரலாறு.
அடி 13-14
பஞ்சப்பள்ளி, ஒருதலம். பால்மொழி, உமையம்மை. எஞ்சாது ஈண்டும் இன்னருள் - பிரியாது அணுகியிருக்கும் வரம். விளைத்து - கொடுத்து.
அம்மை கல்லாடத்தில் வழிபட்டுக் குற்றம் பொறுத்தருளப் பெற்ற பின்னர்ப் பஞ்சப் பள்ளியில் வழிபட, இறைவன் ஆங்குத் தோன்றியருளியபோது, அம்மை இறைவனோடு நீங்காது உறையும் வரத்தினை வேண்டுதலும், இறைவன் அம்மையை, `வலைஞர் மகளாய்ச் சென்றிரு; பின்னர் வந்து மணம் புரிதும்` என்று அருளினான் என இங்குக் கொள்ளற்பாற்று. குற்றம் பொறுத்த பின்பும் அம்மையை வலைஞர் மகளாகச் செல்லப் பணித்தது, அது முற்றும் நீங்குதற்கு. இனி வலைஞர் தலைவனது தவமே இதற்குச் சிறந்த காரணம் என்க.
அடி 15-16
வேடனைக் குறிக்கும் `கிராதன்` என்னும் வடசொல், `கொல்லும் தொழிலுடையவன்` என்னும் பொருளையுடைய தாதலின், இங்கு அத்தொழிலையுடைய வலைஞனுக்குக் காரணக் குறி யாயிற்று. ``மீன்வலை வீசிய கானவன்`` (தி.8 திருப்படையாட்சி-1) எனப் பின்னும் அருளுவர்.
``கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்``
(-சிலப்.புகார். கானல் -17)
என வலைஞர்களது கொலைத் தொழிலைச் சிலப்பதிகாரமும் கூறுதல் காண்க. கிஞ்சுகம் - முள்முருக்கு; அதன் பூப்போலும் வாயவள், உமையம்மை. விராவு - நெருங்கிய. தடம் - பொய்கை. இன்பம் பற்றி வந்த உருவகம். வலைஞர் மகளாய்ச் சென்று வளர்ந்திருந்த அம்மையை இறைவன் ஓர் வலைஞனாய்ச் சென்று மணந்து அவளோடு கூடி இன்புற்றனன் என்பது இதனுட் குறிக்கப்பட்ட வரலாறு.
இதற்கு இவ்வாறன்றி, பார்த்தனுக்கு வேடனாய்ச் சென்று அருள் புரிந்த வரலாற்றைப் பொருளாகக் கூறின், அதனைக் கூறாமையிற் குன்றக் கூறலும், கிஞ்சுக வாயவளோடு இன்புற்றமையை விரித்தோதினமையின், மற்றொன்று விரித்தலுமாகிய குற்றங்கள் தங்கும் என்க. இவ்வரலாறு, அடுத்து வரும் வரலாற்றின் பின்னர்க் கூறற்பாலதாயினும், அம்மைக்கு அருள் புரிந்தவற்றோடு ஒருங்கு இயைதற்பொருட்டு இதனை முன்னரும், ஆகம வரலாறுகள் தம்முள் ஒருங்கியைய, அடுத்து வருவதனை இதன் பின்னரும் அருளினார் என்க.
இத்துணையும், உமையம்மைக்கு அருள்புரிந்த திருவிளை யாடல்களாம்.
அடி 17-18
கேவேடர் - வலைஞர். `கேவேடருள்` என உருபு விரித்து, `வலைஞருள் ஒருவனாய்ச் சென்று` என உரைக்க. ``கெளிறு`` என்றது இங்கு அப்பெயருடைய மீனை உணர்த்தும் சிறப்புப்பொருள் தாராது, `மீன்` என்னும் பொதுப்பொருளே தந்து, சுறாமீனைக் குறித்தது. மா ஏட்டு ஆகிய ஆகமம் - பெரிய சுவடிக்கண் பொருந்திய ஆகமங்கள்.
இறைவன் மகேந்திரமலையில் எழுந்தருளியிருந்து ஆகமங்களைச் சுவடிகளாக்கி வைத்தபின்னர், அவற்றின் பொருளை அம்மைக்கு விளக்கத் திருவுளங்கொண்டு அவளுடன் தனிமையில் இருந்து, `ஈண்டு யாரையும் புகவிடாதி` என நந்தி பெருமானுக்கு ஆணையிட்டு, அம்மைக்கு ஆகமப் பொருளை விளக்கி வருங்கால், அம்மை அவற்றை விருப்பின்றிக் கேட்டிருந்தாள்; அதனால் வெகுண்ட இறைவன் அவளைத் தன்பால் நில்லாது நீங்கச் செய்தான். இதனையறிந்த முருகப் பெருமான், சீற்றங் கொண்டு, நந்தி தேவரது தடைக்கு அஞ்சாது உட்புகுந்து, ஆகமச் சுவடிக் குவியல் முழுவதையும் தமது பன்னிருகைகளாலும் ஒருசேர வாரியெடுத்துக் கடலிற் புக எறிந்தார். அதனால், இறைவன் அவரை, `நீ மதுரையில் மூங்கை மகனாய்ப் பிறக்க` எனவும், நந்திதேவரை, `நீ கடலில் சுறாமீனாகி அலைக` எனவும் வெவ்வுரை கூற, முருகப் பெருமான் மதுரையில் `உப்பூரி குடி` கிழானாகிய வணிகனுக்கு மூங்கைப் பிள்ளையாய்ப் பிறந்திருந்தார். உருத்திரனால் (சிவபெருமானால்) பெற்ற சன்மத்தை (பிறப்பை) உடைமையால், அப்பிள்ளையை, `உருத்திர சன்மன்` என்பர்.
நந்திதேவர் கடலிற் சுறாமீனாகி முருகப் பெருமானால் எறியப்பட்ட ஆகமச் சுவடிகள் அனைத்தையும் வைத்துக் காத்துக் கொண்டு வலைஞர்களுக்கு அகப்படாது திரிந்து அவர்களை அலைத்துவர, அம்மை, மேற்கூறியவாறு கல்லாடத்திலும், பஞ்சப்பள்ளியிலும் இறைவனை வழிபட்டு வலைஞர்கோன், மகளாய்ச் சென்று வளர்ந்து மணப்பருவம் எய்தியிருக்க, முன்னர்க் குறித்த சுறாமீனைப் பிடித்துக் கொணர்வோருக்கு அவளைக் கொடுப்பதாக வலைஞர்கோன் அறிவித்தான். வலைஞர் மைந்தர் ஒருவரும் அச்சுறாமீனை அகப்படுத்த மாட்டாராய் இருப்ப, இறைவன் தானே ஒரு வலைஞர் மகனாய்ச் சென்று சுறாமீனை வலையுட் படுத்துக் கொணர்ந்தான். நந்தி தேவர் முன்னையுரு வெய்தி, ஆகமச் சுவடிகளை இறைவன் முன் வைத்து வணங்கினார். உண்மையையுணர்ந்து, வலைஞனாய் வந்தவர் சிவபெருமானே என்றும் அறிந்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் இறைவன் அம்மையை மணந்து கொண்டு மகேந்திரமலைக்கு எழுந்தருளினான். முருகப் பெருமான் உருத்திரசன்மராய், சங்கத்தார்க்கு உதவியிருந்து, முன்னை நிலை எய்தினார். இவையே, ``கல்லாடத்துக் கலந்தினி தருளி`` என்றதுமுதல் இதுகாறும் வந்த அடிகளில் குறிக்கப்பட்ட வரலாறுகள் என்க. இவற்றைத் திருவிளையாடற் புராணம் சிற்சில வேறுபாடுகளுடன் கூறுமாயினும், ஆளுடைய அடிகளது திருமொழியாற் கொள்ளத்தக்கன இவையே எனக் கொள்க.
அடி 19-20
மற்று, வினைமாற்று. அவைதம்மை - அந்த ஆகமங்களை. சிவபெருமானது - திருமுகங்கள் ஐந்து, `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம்` என்பன.
காமிகம் முதல் வாதுளம் ஈறாக உள்ள சிவாகமங்கள் இருபத்தெட்டினையும் பிரணவர் முதலிய இருபத்தெண்மருக்கும் சிவபெருமான் ஒரோவொருவர்க்கு ஒரோ ஒன்றாக இவ்வைந்து திருமுகங்களானும் அருளிச் செய்தான்; அவற்றுள் முதற் பத்து ஆகமங்களையும் முன்னர்க் கேட்டவர்பால், ஒருவர் வழி ஒருவராக ஒரோவொன்றை மற்றும் இருவர் கேட்டனர். இங்ஙனம் இப்பத்து ஆகமங்களையும் கேட்ட முப்பதின்மரும், `சிவர்` எனப்படுதலின் இவை சிவபேதம் என்னும் பெயருடையவாயின. ஏனைப் பதினெட்டு ஆகமங்களையும் முன்னர்க் கேட்டவர்பால் ஒரோவொன்றை மற்றும் ஒரோவொருவர் கேட்டனர். இங்ஙனம் இப்பதினெட்டு ஆகமங்களையும் கேட்ட முப்பத்தறுவரும், `உருத்திரர்` எனப்படுதலின், இவை, `உருத்திர பேதம்` என்னும் பெயருடையவாயின. இங்ஙனம், சிவாகமங்களைக் கேட்டவர் அறுபத்தறுவராகலின், அவரையெல்லாம் ஒருங்கே தொகுத்து,
அஞ்சன மேனி யரிவையோர் பாகத்தன்
அஞ்சோ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
(தி.10 திருமந்திரம் பா.57)
என்று, ஒருபெற்றியராகவே சுருங்க அருளிச் செய்தார் திருமூல நாயனார். இதனையே, அடிகள், ``சொன்ன ஆகமம்``(அடி 10) என மேலே குறித்தருளினார்.
காமிகம் முதலிய பத்து ஆகமங்களையும் சிவபெருமானிடமிருந்து கேட்ட சிவர்கள், `பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர்` என்போர். இவர்கள் பால் மேற்கூறிய ஆகமங்களை ஒருவர் வழி ஒருவராகக் கேட்ட இவ்விரு சிவர்கள், `திரிகலர், அரர் - பசுமர், விபு - கோபதி, அம்பிகை - சருவருத்திரர், பிரசேசர் - சிவர், அச்சுதர் - திரிமூர்த்தி, உதாசனர் - வைச்சிரவணர், பிரபஞ்சனர் - வீமர், தருமர் - உக்கிரர், ஆதித்தர் - விக்கினேசர், சசி` என்போர். இவருள் இவ்விருவர் ஓர் ஆகமத்தை ஒருவர்பால் ஒருவராகக் கேட்டவர் என்பது மறவற்க.
ஏனைப் பதினெட்டாகமங்களையும் சிவபெருமான்பால் கேட்ட உருத்திரர்கள், `அனாதிருத்திரர், தசாருணர், நிதனேசர், வியோமர், தேசர், பிரமேசர், சிவர், சருவோத்தமர், அனந்தர், பிரசாந்தர், சூலி, ஆலயேசர், விந்து, சிவநிட்டர், சோமதேவர், சீதேவி, தேவவிபு, சிவர்` என்போர். இவர் ஒரோவொருவரிடமும் அவ்வாகமங்களைக் கேட்ட ஒரோ ஒருவர் முறையே, `பரமேசர், பார்ப்பதி, பதுமபூ, உதாசனர், பிரசாபதி, நந்திகேசர், மகாதேவர், வீரபத்திரர், பிருகற்பதி, தசீசி, கவசர், இலளிதர், சண்டேசர், அசம்பாதர், நிருசிங்கர், உசனர், சம்வர்த்தர், மகாகாளர்` என்போர். இவரெல்லாரும், `விஞ்ஞானகலர்` எனப்படுதலின், இவர்கள் கேட்டனவெல்லாம் சுத்தமாயாபுவனத்திலேயாம். இவ்வாகமங்களையே நிலவுலகில் இறைவன் மகேந்திரமலையில் வெளிப்படுத்திச் சுவடிகளாக்கினன் என அடிகள் மேல் (அடி.10) அருளிச் செய்தார் என்க. விஞ்ஞான கலராகிய அறுபத்தறுவருட் சிலரைப் பெயரொற்றுமை பற்றிப் பிறராக நினையற்க.
சிவபிரானது படைத்தல் முதலிய ஐவகை ஆற்றல்களே அவனது சத்தியோசாதம் முதலிய ஐந்து திருமுகங்களாகும். அவற்றுள் சத்தியோசாத முகத்தால் சொல்லப்பட்ட ஆகமங்கள், `காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம்` என்னும் ஐந்துமாம். இவை, கௌசிக முனிவருக்குச் சொல்லப்பட்டன. வாமதேவ முகத்தாற் சொல்லப்பட்ட ஆகமங்கள், `தீர்த்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிர பேதம்` என்னும் ஐந்துமாம். இவை, காசிப முனிவருக்குச் சொல்லப்பட்டன. அகோர முகத்தாற் சொல்லப்பட்ட ஆகமங்கள் `விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம்` என்னும் ஐந்துமாம். இவை, பாரத்துவாச முனிவருக்குச் சொல்லப்பட்டன. தற்புருட முகத்தாற் சொல்லப்பட்ட ஆகமங்கள், `இரௌரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், முகவிம்பம்` என்னும் ஐந்துமாம். இவை, கௌதம முனிவருக்குச் சொல்லப்பட்டன. ஈசான முகத்தாற் சொல்லப் பட்ட ஆகமங்கள், `புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோத்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம்` என்னும் எட்டுமாம். இவை, அகத்திய முனிவருக்குச் சொல்லப்பட்டன. சுத்தமாயா புவனத்தில் பிரணவர் முதலிய அறுபத்தறுவர்க்குச் சொன்ன ஆகமங்களை, இங்ஙனம், மகேந்திரத்தில் ஐந்து திருமுகங்களால் ஐந்து முனிவர்கட்கு இறைவன் பணித்தருளினான் என்க. இம்முனிவர் ஐவரும் இல்லறத்தவராய் இருந்து தம் தம் குடி வழிகளில் தாம் தாம் கேட்ட ஆகம நெறிகளை நிலவுலகிற் பரவச் செய்தனர். இவர்தம் குடிவழிகள் முறையே, சிவ கோத்திரம், சிகா கோத்திரம், சோதி கோத்திரம், சாவித்திரி கோத்திரம், வியோம கோத்திரம் எனப் பெயர் பெற்று விளங்கின. இங்ஙனம் ஐம்முகங்களாலும் ஐவருக்கு எல்லா ஆகமங்களையும் சொல்லி முடித்தபின்பு திருக்கயிலையில் இவைகளை உமையம்மைக்குச் சொல்ல, அவற்றை அவள் முன்போல இல்லாமல் ஆர்வத்துடன் கேட்டு, அவற்றின் முறைப்படியே இறைவனைக் காஞ்சியம்பதியில் வழிபட்டாள் என்பதையே சேக்கிழார்,
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகைஆ ளுடையாள்.
(தி.12 திருக்குறிப்புப் புரா. 50)
என்பது முதலாகக் கூறுகின்றார் எனக் கொள்ளற்பாற்று.
``நவ ஆகமம் எங்கள் நந்திபெற் றானே`` (தி.10 திருமந்திரம். 62) எனத் திருமூலர் அருளியது, அம்மைக்கு எல்லா ஆகமங்களையும் சொல்லிய பின்பு, அவற்றுள் ஒன்பது ஆகமங்களையே இறைவன் நந்தி பெருமானுக்குச் சொன்னான் என்பதைக் குறிப்பதாகும். அவ்வொன்பது ஆகமங்கள் இவை என்பதை,
பெற்றநல் லாகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும் காலோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே. -தி.10 திருமந்திரம்.63
என்ற திருமந்திரத்தால் அறியலாகும். எனினும், இத்திருமந்திரத்துள் மூன்றாம் அடியின் பாடம் திரிபுடையது என்பர். என்னையெனின், அதனுட் கூறப்பட்ட யாமளம் மூலாகாமங்கள் இருபத்தெட்ட னுட்பட்டது அன்றாதலின். நந்தி தேவர் கேட்ட ஆகமங்கள் ஒன்பது என்பதற்கேற்ப, திருமந்திரம் ஒன்பது தந்திரமாக அருளிச் செய்யப்பெற்றமை கருதற்பாலது.
ஆகமங்கள் இறைவனால் சுத்தமாயா புவனத்தில் தோற்று விக்கப்பட்டுப் பிரகிருதி புவனத்திற்கு வந்த வரலாற்றை,
சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமேசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே. -தி.10 திருமந்திரம் 62
எனக் கூறுகின்றது.
இனி,
``அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்``
-தி.10 திருமந்திரம். பா.60
என்றாற்போல ஆகமங்களை அளவிலவாகக் கூறுதல், அவற்றின் பொருளைப் பற்பல காலங்களில் பற்பலருக்கு விளக்கிய உபாகமங்களையாம். திருமூலர், மூலாகமங்களை, `இருபத்தெட்டு` என வரையறுத்தருளிச் செய்தது போல, உபாகமங்களை, `இரு நூற்றேழு` என வரையறுத்தருளிச் செய்யாமையறிக. இனி இதனை, `ஆகமங்களிற் போந்த கிரந்தங்களை அளவில எனக் கூறியது` என்றலுமாம்.
இவற்றின் பின்னர்,
மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்தே
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
-தி.10 திருமந்திரம். பா.65
எனத் திருமூலர் அருளியது, ஆகமங்களின் பொருளை மக்கட்கு விளங்கச் செய்தற் பொருட்டே, `ஆரியம், தமிழ்` என்னும் இருபெரு மொழிகளும் தோற்றுவிக்கப்பட்டன என்றவாறாம்.
``வார்பனி`` என்றது, பகுத்துணர்வோடு கூடாத புலனுணர்வை. ``ஏரி`` என்றது நிறைந்த ஞானத்தை. ஆரியமும், தமிழும் சிவாகமப் பொருளையே சிறந்தெடுத்துக் கூறும் என்பதனை,
அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும்; அதனை உணரலு மாமே. -தி.10 திருமந்திரம்.66
என்று அவர் இனிது விளங்க அருளிச் செய்தார்.
``தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர``
(தி. 1. ப.77 பா.4) என்ற ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியும் இங்கு நினைக்கத் தக்கது. ``ஆரியமும் தமிழும் உடனேசொலி`` (தி.10 திருமந்திரம். 65) ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (தி.6 ப.23 பா.5) என்றாற்போலச் சிலவிடங்களில் ஆரியத்தை முன் வைத்தும், ``தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் விரண்டும்`` (தி.10 திருமந்திரம். 66), ``தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழற்சேர (தி.1 ப.77 பா.4) என்றாற் போலச் சிலவிடங்களில் தமிழை முன்வைத்தும் அருளிச் செய்தலின், அவ்விருமொழியும் ஒப்ப உயர்ந்தனவாகவே உயர்ந்தோர் தழுவினர் என்பது பெறப்படும். படவே, அவற்றுள் ஒன்றனையே உயர்ந்தோர் மொழியெனக் கொண்டு, பிறிதொன்றனை அன்னது அன்றென இகழ்தல் கூடாமை அறிக.
இவ்விரண்டினாலும், ஆகமத்தை நிலவுலகில் நெறிப்பட வழங்குவித்தமை அருளியவாறு.
அடி 21-22
`நந்தம் பாடி` என்பது, சாத்தங்குடி, கொற்றங்குடி முதலியனபோல, `நந்தன் பாடி` என்பதன் மரூஉவாதல் வேண்டும். பின்னர், `வேலம் புத்தூர்` என வருவதும், அன்னது. இப்பெயருடைய தலம் இஞ்ஞான்று அறியப்படாமையின், இதன்கண் இறைவன் நான்கு வேதங்களையும் முற்ற ஓதி உணர்ந்த வேதிய வடிவத்துடன், அவ் வேதங்களைச் செவ்வனே ஓதுவித்துப் பொருள் உணர்த்தும் ஆசிரியனாய் எழுந்தருளிய வரலாறும் அறியப்படவில்லை. இறைவன் மதுரையில் வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த ஒரு திருவிளையாடல், பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்திற் காணப்படுகின்றது. இது, வேதத்தை விளங்கச் செய்தமை அருளியவாறு.
அடி 23-26
``இயற்கை`` என்றது, செயலை. நூறு நூறாயிரம் - கோடி; இஃது அளவின்மை குறித்து நின்றது. ``இயல்பினது`` என்றது, பன்மை ஒருமை மயக்கம். ``இயல்பினவாகி`` என்பதே, பாடம் எனல் சிறப்பு. ``ஆகி`` என்றதன்பின், `நிற்ப` என்பதும், ``உய்ய`` என்றதன் பின், `கொள்ள` என்பதும் எஞ்சி நின்றன.
``சொன்ன ஆகமம்`` என்பது முதலாக இதுகாறும் வந்தவற்றுள் உள்ள, `தோற்றுவித்தருளியும், எய்தியும், விளைத்தும், படிந்தும், வாங்கியும், பணித்தருளியும், அமர்ந்தருளியும், இயல்பினதாகி நிற்ப, உய்யக்கொள்ள` என வந்த வினையெச்சங்கள், ``வந்தருளி`` என்ற எச்சத்தோடே முடிந்தன. ஆகவே, ``வந்தருளி`` என்றது, `இங்ஙனம் வந்தருளி` என மேற்போந்த செயல்களையே குறித்ததாயிற்று. அவை அனைத்திலும் இறைவன் அம்மையோடு உடனாய் நின்றமையறிக. ``தோற்றுவித்தருளியும்`` என்றது முதலாக உம்மைகொடுத்து அருளிச் செய்து, ``வந்தருளி`` என வாளா அருளினமையின் அவ்வெச்சங்கள் இவ்விடத்து முடிந்து நிற்கப் படுபொருளே பொருளாம் என்பது விளங்கும். ஆகவே, இவை மிகப் பழைய வரலாறுகள் என்பது உணரப்படும். அதனால், இதன்பின், `பின்னர்` என வேறெடுத்துக் கொண்டு உரைக்கப்படும்.
அடி 27-28
இதுமுதலாகப் பாண்டியன் பொருட்டுச் செய்யப் பட்ட அருள்விளையாடலை அருளுகின்றார். குடநாடு - மேற்கே உள்ள நாடு என்றது, பாண்டியன் நாட்டினையே. அதனை இங்ஙனங் கூறியது, திருப்பெருந்துறையிலிருந்து வருபவர்போல வந்தமையைக் குறித்தற்கு. சதுர்பட - திறமை தோன்ற. திறமை - குதிரையை நடத்துதற்கண் உள்ளது. சாத்து - வணிகக் கூட்டம். இறைவன், அடிகள் பொருட்டுச் சிவகணங்களைக் குதிரை வாணிகர்களாகக் கொண்டு, தான் அவர்கட்குத் தலைவனாய் நெடுந்தொலைவிலிருந்து காணப் பட்டு வந்து மதுரையில் பாண்டியனிடம் பல குதிரைகளைக் கொடுத்துச் சென்ற வரலாறு பலவிடங்களிலும் சொல்லப்படுவதே. ``எழுந்தருளியும்`` எனச் சுருங்க அருளினாராயினும், பின் வருவன வற்றோடு இயையுமாறு, `எழுந்தருளிய அருளும்` என உரைக்க.
அடி 29-30
வேலம் புத்தூர், `வேலன் புத்தூர்` என்பதன் மரூஉ முடிபு. இப்பெயர், முருகக்கடவுளோடு இதற்கு உள்ள தொடர்பு பற்றி வந்ததாகலாம். `வேலம் புத்தூரின்கண்` என ஏழாவது விரிக்க. விட்டேறு - வேற்படை. ``பொருவேடற்கு`` எனப் பின்னர் வருகின்ற குறிப்பு, இதற்கும் பொருந்துவதாம். ஆகவே, இத்தலத்தில் வேல் வல்ல வீரன் ஒருவனுக்கு இறைவன் வேற்படை வழங்கி அவன் வாயிலாகப் பாண்டியனுக்கு வெற்றியுண்டாகச் செய்தனன் என்பது பெறுதும். இவ்வாறன்றி இதனைத் திருவிளையாடற் புராணங்கள் கூறும் உக்கிரகுமார பாண்டியர் வரலாற்றோடு இயைத்துரைத்தற்கு, அடிகள் வாக்கில் காணப்படுவதொரு குறிப்பும் இல்லை.
கோலம் பொலிவு - தனது அருட்கோலம் விளங்குதல். சொற்பொருள் இவ்வாறாயினும், `பொலிதலை யுடைய கோலத்தைக் காட்டிய` என்பதே கருத்தாகக் கொள்க. கொள்கை, விளைவு முதலியனவாக இங்கு வருவன பலவும், செயலையே குறிப்பன என்க.
அடி 31-32
`கண்ணாடி` என்னும் பொருளதாகிய, `தர்ப்பணம்` என்னும் ஆரியச் சொல், `தற்பணம்` எனத் திரிந்து நின்றது. குறிற்கீழ் ரகாரத்தை உடைய ஆரியச் சொல் தமிழில் வருங்கால், அதன்மேல் உகரம் பெற்று, `தருப்பணம்` என்றாற் போல வருதலே பெரும்பான்மையாயினும், அம்மெய்யெழுத்து, பின்னர் வல்லொற்றோடு கூடி ஈரொற்றாய் நிற்கும் இடங்களில் தமிழில், செய்யுளில், ஏற்குமிடத்தில் வல்லின றகரமாய்த் திரிந்து, `தற்பணம்` என்றாற்போல ஓரொற்றாய் நிற்றலும் பலவிடங்களிற் காணப்படுவதாம். இங்கு, ``விற்பொரு வேடற்கு`` என்ற எதுகையையும் நோக்குக. இவ்வாறன்றி ஆரியத்தில் உள்ளவாறே தர்ப்பணம் என ஓதுதல் கூடாமையறிக. `சாத்தம் புத்தூர்` என்பதே பாடமாதல் வேண்டும். இப்பெயர், அரிகர புத்திரராகிய மாசாத்தனாரோடு இத்தலத்திற்கு உண்டாகிய தொடர்பு பற்றி வந்ததாகலாம். வேடன் - மறவன். பொருவேடன் - போர் புரியும் மறவன்; வீரன். `இவனுக்கு வில் ஈந்த விளைவும்` என்க. வேலம் புத்தூரில் வேல் வீரன் ஒருவனுக்கு நேரே தோன்றி வேல் கொடுத்தருளியது போல, சாத்தம் புத்தூரில் வில்வீரன் ஒருவனுக்குக் கண்ணாடியில் தீட்டப்பெற்றிருந்த வண்ண ஓவியத்தில் நின்று இறைவன் வில் வழங்கினான் என்பது பெறுதும். `வில்` எனினும், அம்புப் புட்டிலும் உடன் கொள்ளப்படுவதேயாம். இவனாலும் பிறிதொருகால் இறைவன் பாண்டிய மன்னனுக்கு வெற்றியுண்டாகச் செய்தான் என்க. இவையெல்லாம் பிற்காலத்தில், யானை எய்த திருவிளையாடல், நாகம் எய்த திருவிளையாடல் முதலியவற்றில் சிறிது சிறிது இயைபுபட்டுத் தோன்றுவவாயின.
அடி 33-34
மொக்கணி - குதிரை வாயில் கொள்ளுக் கட்டும் பை. அருணகிரிநாதரும், ``சர்க்கரை மொக்கிய (கந்தர் அலங்காரம் - காப்புச் செய்யுள்). என, வாய் நிறைய இட்டுக் குதட்டுதலை, `மொக்குதல்` என்றார். `தழல்போலும் மேனி` என்க. சொக்கு - அழகு; அது, விடாத ஆகுபெயராய், சொக்கலிங்க மூர்த்தியைக் குறித்தது. காட்டுதல் - தெளிவித்தல். `குதிரை வாணிகனாய் வந்த கோலத்தைச் சொக்கலிங்கத்தின்கண் உளதாகப் பின்பு பாண்டியனுக்குத் தெளிவித்த பழைமையும்` என்றபடி. பழைமை - பழைய தொடர்பான செயல். எனவே, `இவையெல்லாம் நம்மாட்டு உள்ள கருணையால் சிவபெருமானே செய்தருளினான்` எனப் பாண்டியன் பின்னர் உணர்ந்து வியந்து, அப்பெருமான்பால் அன்பு மீதூரப் பெற்றான் என்க. இவ்வாற்றால் வேலம்புத்தூர் முதலிய தலங்களும், பாண்டியன் நாட்டின்கண் உள்ளனவாதல் பெறப்பட்டது. முதற்கண் குறித்த குதிரை வாணிகனாய் வந்தது ஒன்றையே இங்கு மீள எடுத்தோதினாராயினும், ஏனைய அருள் விளையாடல்களும் கொள்ளப்படும். இனி, ``மொக்கணி`` என்றதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இதுகாறும் பாண்டியனுக்கு அருள் புரிந்தமை அருளியவாறு. இனித் தமக்கு அருள் செய்தவாற்றைக் கூறுவார்.
அடி 35-36
இறைவன் அடிகள் பொருட்டு நரிகளைக் குதிரைகளாக்கிக் கொணர்ந்த வரலாறு நன்கறியப்பட்டது. இது மேல், சாத்தாய் எழுந்தருளியது எனக் குறிக்கப்பட்டதின் வேறன்றாயினும் அங்குப் பாண்டியன் முன் வந்து தோன்றிய திருவருளையும், இங்குத் தம்மைக் காக்க நினைந்து செய்த திருவருளையும், குறித்தற்கு வேறுவேறாக அருளிச் செய்தார் என்க.
அடி 37-41
இங்கும், ``திருவடி`` என்றது, `அதனையுடையவன்` என்றே பொருள் தந்தது. `விற்று` எனின், அகவலடி இனிது நிரம்பாமையின் `விற்றும்` என்பதே பாடம் போலும். ஈண்டு கனகம் - மிகுந்த பொன். இசையப் பெறாது - நேர்தல் பெறாமையால். தூண்டு சோதி - மிக்க ஒளிவடிவினனாகிய அவ்விறைவன். தோற்றியது, பாண்டியன் முன் தோன்றி அடிகள் கொணர்ந்த பொன்னை எல்லாம் தானே ஏற்றுக்கொண்டமையை உணர்த்தி, அவரைத் தம் விருப்பப்படி செல்லுமாறு விடப்பணித்தது என்க. இதனையும், ``தொன்மை`` என்றார், முன்பு ஆண்ட கருணையை விடாது செய்தமை பற்றி. `என்னை ஆண்டுகொண்டருளுதற் பொருட்டுப் பரிமாவிற்றும் கனகம் ஈடுசெய்யப் பெறாமையால் வருந்தி யான் அருள்வழி இருப்ப, அவன் தோற்றிய தொன்மையும்` என்க. இசையப் பெறாமை குதிரைகள் நரிகள் ஆனமையாலாம். குதிரைகள் பின்பு நரிகளாயின என்பது, `நரியைக் குதிரையாக்கிய நன்மையும்` என மேலே கூறியதனால் அறியப்பட்டது. என்னை, அவை அங்ஙனம் ஆகாதிருப்பின், நரியைக் குதிரையாக்கியது அறியப்படுமாறில்லையாகலின். ``நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்`` என ஈண்டு அடிகள் அருளிச் செய்தவாற்றால், அன்னதொரு திருவிளையாடல் நிகழ்ந்ததில்லை என்பாரது கூற்றுப் பொருந்தாமை விளங்கும்.
அடி 42-43
``அருளி`` என்றது, `அருளினவன்` எனப் பெயரா யிற்று, `இவ்வாறெல்லாம் இந்திர ஞாலங் காட்டிய` என்க. `சாலம்` என்றாகற்பாலது, `ஞாலம்` என்றாயிற்று. இந்திர சாலம் - பெரிய மாயவித்தை. அஃது, அதுபோலும் பல அருள் விளையாடல்களைக் குறித்தது.
அடி 44-45
மதுரையில் குதிரைச் சேவகனாய் வந்தது, `சௌந்தர சாமந்தன்` என்னும் அமைச்சன் பொருட்டு எனப் பரஞ்சோதியார் திருவிளையாடல் கூறும்.
அடி 46-47
``ஆங்கது`` என்றது ஒருசொல் நீர்மைத்து. `அடியவள் வந்தியென்னும் பெயருடையாள்` எனக் கூறப்படுவதும் அவள் பொருட்டாக இறைவன் மண் சுமந்த வரலாறும் பலரும் அறிந்தவை. பாங்கு - செம்மை. செம்மையாய் மண் சுமந்தது, வந்தியின் பங்குக் கரையை நன்கு அடைத்தே சென்றது.
அடி 48-49
வித்தக வேடம் - ஞானாசிரியக் கோலம். தூண்டு சோதி (இறைவன்) தோற்றியபின்னர், அடிகள் தம் விருப்பின் வழியே மீளத் திருப்பெருந்துறை செல்லுங்கால், வழியில் உத்தரகோசமங்கையில், `இறைவன் இதுகாறும் திருப்பெருந்துறையுள் முன்போல இருந்து நம்மை ஏற்றருள்வானோ! ஏலாது விட்டுவிடுவானோ` என்னும் ஏக்கத்தால், நீத்தல் விண்ணப்பம் பாடி நின்றபொழுது, இறைவன் அடிகளை ஆட்கொண்ட அவ்வடிவிலே தோன்றி, `திருப்பெருந்துறைக்கு வருக` என அருளினான் என்பது கொள்ளற்பாலதாம். என்னை? ``திருவார் பெருந்துறை`` என வருகின்ற அதற்கு முன்னரே இதனை அருளினமையின். இதனைப் பின்னர் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறும்.
அடி 50-51
தூ வண்ண மேனி, பொன்னால் அமைக்கப்பட்ட திருமேனி. ``தொன்மை`` என்றதனால், இதன் வரலாறு, பரஞ்சோதியார் திருவிளையாடலுட் சொல்லப்பட்டவாறே கொள்ளத் தக்கது. இத்திருமேனியை அடிகள் திருப்பூவணத்தில் கண்டு வணங்கி மகிழ்ந்தார் என்க.
அடி 52-53
திருப்பெருந்துறைக்குச் செல்லும் முன்பு அடிகள் தமது திருவவதாரத் தலமாகிய திருவாதவூரில் சென்று சின்னாள் தங்கியிருந்தாராக, இறைவன் அவரைத் தனது பாதச் சிலம்பொலியைக் கேட்பித்து அங்குநின்றும் போதரச் செய்தான் என்பது ஈண்டுப் பெறப்படுவதாகும். இங்ஙனம் போதரச் செய்த கருணைப் பெருக்கையே அடிகள், `பண்பு` எனப் போற்றியருளிச் செய்தார். இதனை, இறைவன் குதிரை கொணர்ந்த காலத்து நிகழ்ந்ததாக, நம்பி திருவிளையாடல் கூறும். ``காட்டிய`` என்றது. `தோற்றுவித்த` என்றவாறு.
அடி 54-55
திருவார் பெருந்துறை - கடவுட்டன்மை நிறைந்த பெருந்துறையின்கண். செல்வன் - ஞான வள்ளல். ஆகி - ஆகி வீற்றிருந்து. ``கருவார் சோதி`` என்றது. `இறைவன் வெளிப்படுதற்கும் மறைவதற்கும் இடமாய் நிற்கும் ஒளிப்பிழம்பு` என, அதன் தன்மை கூறியவாறு. சிலரை யொழித்துச் சிலரொடு மாத்திரம் மறைந்து, மீண்டும் வெளிப்படாதொழிந்தமை பற்றி, ``கள்ளம்`` என்றார். திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் ஞானாசிரியனாய் வீற்றிருந்த இறைவன், `நீ தில்லைக்கு வருக` எனக் கட்டளையிட்டு, அவ்விடத்தே ஒளியைத் தோற்றுவித்து, அப்பொழுது அங்கிருந்த ஏனை அடியவர்களை அதனுட் புகச்செய்து, தானும் அதனுள் மறைந்தருளினான் என்க. பக்குவம் இன்மை நோக்கி இறைவன் சிலரை அப்பொழுது அங்கு இல்லாது நீங்கச் செய்தான் போலும்! இவ் வரலாற்றினைப் புராணங்கள் சிறிது வேறுபடக் கூறும்.
அடி 56-57
``பூவலம்`` என்றது, `பூப் பிரதட்சிணம்` என்னும் பொருட்டாய், அடிகளது சிவதல யாத்திரையைக் குறித்தது. `இல்` என்பது, `உண்ணுதற்கண் வந்தான்` என்பது போல, வினை செய்யிடத்தின்கண் வந்த ஏழனுருபு. இஃது உணராமையால், இதனை ஒரு தலத்தின் பெயராக மயங்குப. இறைவன் தம்மை உடன்கொண்டு செல்லாது, `தில்லைக்கு வருக` என்று சொல்லி மறைந்தது, தம் பாவத்தால் (வினையால்) எனவும், அவை அவன் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றிலும் சென்று வணங்கினமையால் கெட்டொழிந்தன எனவும் அடிகள் கருதினார் என்பது இவ்வடிகளால் விளங்கும். ``பொலிந்தினிதருளி`` என்றது, தலங்கள்தோறும் எழுந்தருளியிருந்து திருவருள் செய்தமையை.
இத்துணையும், இறைவன் தமக்கு அருள்புரிந்தமையைக் கூறியவாறு. பின்னர்ப் பிற தலங்களுட் செய்தவற்றைக் கூறுவாராகலின், மதுரையில் நிகழ்ந்தவற்றை முடித்தற்கு, குதிரைச் சேவகனாகியதனையும், மண் சுமந்ததனையும் இடையே பெய்துரைத்தார். இஃது உணராது, குதிரைச் சேவகன் ஆகியதை முன்னர் அடிகட்குச் செய்த அருளாகவே கொண்டு உரைப்பாரும் உளர். அடியவட்காக மண் சுமந்த வரலாற்றை அடிகள் வரலாற்றோடு வலிதிற் பிணைத்தமையும், இவ்வாற்றால் விளைந்ததேயாம். இனி, ஏனையோர் பலர்க்கு ஆங்காங்கும் அருள்புரிந்தமை கூறுவார்.
58-59. தண்ணீர்ப் பந்தர் வைத்தமை இன்ன இடத்து என்னாமையால், பின்னர் வரும், `திருவெண்காடு` என்றே கொள்ளப்படும். அதனானே, சயம் (வெற்றி) பெறச் செய்தது, சோழனையாம். இதனைப் பாண்டியன் பொருட்டு மதுரையிற் செய்ததாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறும். நன்னீர் - நல்ல நீர்மை. `சேவகன்` என்றது, தண்ணீரைத் தானே கொடுத்தமை பற்றி.
அடி 60-61
திருவெண்காட்டில் இறைவன் விருந்தினனாய் வந்து குருந்தமரத்தடியில் அமர்ந்திருந்த வரலாறு அறியப்படவில்லை.
அடி 62-63
இவ்வடிகளிற் குறிக்கப்பட்ட வரலாற்றைத் திருவிளையாடற் புராணங்களிற் காண்க.
அடி 64-67
இவற்றுட் குறிக்கப்பட்ட இருவரலாறுகளையும் மதுரையில் நிகழ்ந்தனவாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறும். எனினும், பட்டமங்கையில் நிகழ்ந்தனவாதல் வேண்டும்.
அடி 68-69
பார்ப் பாலகன் - மண்ணுலகக் குழந்தை. இருமை - பெருமை; அஃது, அருமைமேல் நின்றது, ``உகந்தினிதருளி`` என்றதனால், முன்னர் விருத்தனாய் வந்து, பின்பு கட்டிளைஞனாய் நின்றமையும் கொள்ளப்படும். படவே, விருத்தகுமார பாலரான திருவிளையாடலே இது என்றல் பொருந்துவதாம்.
அடி 70
ஈண்ட - மக்கள் பலரும் திரண்டு வந்து காண. இங்ஙனம் இறைவன் இங்கு வீற்றிருந்த வரலாறு அறியப்படவில்லை. எல்லாம் வல்ல சித்தரானது போல்வதொன்றாதல் வேண்டும்.
அடி 71-72
தென்பால் தீவு, இலங்கையேயாம். ஆகவே, ``தேவூர்`` என்றதனை அதற்கேற்பக் கொள்க. இராமேசுவரத்திற்கு, `தேவை` என்னும் பெயர் தாயுமானவர் பாடலில் `மலைவளர் காதலி` என்னும் பகுதியிற் காணப்படுகின்றது. கோவார் கோலம் - அரசத் தன்மை நிறைந்த வடிவம். ``கொண்ட`` என்றதனால், ஈழநாட்டில் அன்புடைய அரசன் ஒருவனுக்கு இறைவன் அரச வடிவத்தில் வந்து அரசியல் முறையை விளக்கி மறைந்தனன் என்று கொள்ளலாகும். இதுவே, திருவிளையாடற் புராணங்களில், சிவபெருமான் சௌந்தர பாண்டியனாய் இருந்து அரசளித்த வரலாறாக அமைந்தது.
அடி 73-74
ஞானம் நல்கியது அடியவர் பலர்க்காம். அதனானே, ஆரூர் அடியவர் திருக்கூட்டத்திற்கு இடமாயிற்று என்க.
அடி 75-76
ஈண்ட - அடியவர் புடைசூழ. படிமப் பாதம் - தவ நெறி. வைத்த - நிலைநிறுத்திய. என்றது, `தானே வழிபாடு செய்வோனாய் இருந்து வழிபட்டுக் காட்டிய தன்மை` என்றவாறு. திருவிடைமருதூர் இறைவன் தன்னைத் தானே பூசித்த தலமாதல் அறிக.
அடி 77-78
இயல்பாய் இருத்தல் - சுயம்பு லிங்கமாய் எழுந் தருளியிருத்தல். கச்சி ஏகம்பத்தில் அம்மையது தவத்திற்கு இரங்கி இறைவன் மாவடியில் சுயம்பு லிங்கமாய்த் தோன்றினமையைப் பெரிய புராணத்துட் சேக்கிழார் கூறினமை காண்க. பின்பு அம்மை செய்த வழிபாட்டின் பயனாக அவளை இறைவன் தனது இடப் பாகத்தில் இருத்திக் கொண்டனன் என்க.
அடி 79-80
மருவார் குழலி, உமையம்மை. அவளோடு மகிழ்ந்தது. அவளது வழிபாட்டினாலாம். அம்மை பூசித்த தலங்களாகச் சில தமிழ் நாட்டில் விளங்குதல் காண்க. இங்ஙனம் யாதானும் ஒரு சிறப்பு அம்மைக்கு உளதாய தலங்களில் மட்டுமே முதற்காலத்தில் அம்மைக்குத் தனிக்கோயில் இருந்ததென்பது, காஞ்சியில் காமக் கோட்டம் வேறோரிடத்தில் தனித்திருத்தலும், அங்குள்ள பல சிவாலயங்களுள் ஒன்றிலும் அம்மைக்குத் தனிக் கோயில் இல்லாமையும் பற்றி அறிந்து கொள்ளப்படும்.
அடி 81-82
சேவகன் - வீரன். சிலை - வில். இறைவன் வில் வீரனாய்த் தோன்றிச் செய்த வீரச் செயல்கள் பலவும் அவனுக்கு நாடகமாத்திரையாய் அமைதலின், அவற்றை, ``பாவகம்`` என்றார். இங்ஙனம் காட்டிய திருவிளையாடல், திருவிளையாடற் புராணங்களிற் காணப்படும். ஆயினும், அதனைத் திருவாஞ்சியத்தில் நிகழ்ந்தது எனக் கொள்க. இத்துணையும் ஆங்காங்கு அடியவர் பலர்க்கு அருளினமை கூறியவாறு. இனி, தலங்கள் பலவற்றில் இறைவன் எழுந்தருளியிருக்கும் திறத்தினையே கூறுவர்.
தானெழுந்தருளியும் என்பது முதலாக இதுகாறும் உம்மை கொடுத்து எண்ணிவந்தவைகள் அனைத்தையும், `ஆகிய இவை யெல்லாம் எந்தமை யாண்ட பரிசுகளாம்` எனப் பின்வரும் நூற்றிரண்டாம் அடியுடன் தொகுத்து முடிக்க.
அடி 89-91
இடம்பெற - நீங்காது விளங்க. ஈங்கோய் மலையில் உள்ள பெருமான் மரகத வடிவில் அழகுடன் விளங்குதல் காண்க. `சைவன்` என்பதும், `சிவன்` என்னும் பொருளதேயாம். இதற்கு வரலாறு ஒன்றனைக் கூறுவர் பலரும். `அருத்தி`- விருப்பம். வழுக்காது - நீங்காது. அறம்பல அருளியும் என்றது, ஆல் நிழற் கடவுளாய் வீற்றிருத்தலை. குறியாய் - குறியாக; அத்தலத்தில் இருத்தலே குறிக்கோளாக.
அடி 92-96
இவ்வடிகளில், இறைவன் தேவர்கள் முன்னே செய்த ஒரு திருவிளையாடல் குறிக்கப்படுகின்றது. அது வருமாறு:- தேவர் பலரும் கூடி ஒருகால் அசுரரை வென்று பெருமிதம் கொண்ட காலை, மால், அயன், இந்திரன், அக்கினி, வாயு முதலிய பலரும், `வெற்றி என்னால் விளைந்ததே` எனத் தனித்தனியே ஒவ்வொருவரும் கூறித் தம்முட் கலாய்த்தனர். அவ்விடத்தில் சிவபெருமான் அளவற்ற பேரழகுடன் ஓர் யட்சனாய்த் தோன்றி ஓரிடத்தில் துரும்பு ஒன்றை நட்டு, அதன் அருகில் இறுமாந்து அமர்ந்திருந்தார். அவ்யட்சனை இன்னான் என்று அறியாத தேவர்கள், `நீ யார்? உனக்கு இத்துணை இறுமாப்பிற்குக் காரணம் என்னை?` என்று வினவினர். சிவபெருமான் `நான் யாராயினும் ஆகுக; உங்களில் யாரேனும் இத்துரும்பை அசைத்தல் கூடுமோ?` என்று வினவினார். தேவர்கள் அவரது வினாவைக் கேட்டு நகைத்து அத்துரும்பை அசைக்க முயன்றனர். அஃது இயலவில்லை. இந்திரன் வச்சிராயுதத்தால் வெட்டியபொழுது, வச்சிராயுதமே கூர்மழுங்கிற்று. அக்கினிதேவன் அத் துரும்பை எரிக்க முயன்றான்; வாயுதேவன் அசைக்க முயன்றான்; பிறரும் வேறு வேறு முயன்றனர். ஒருவராலும் அத் துரும்பை ஒன்றும் செய்ய இயலவில்லை. அதனால், தேவர் பலரும் நாணமுற்றிருக்கையில் பெருமான் மறைந்தருளினான். `வந்தவன் யாவன்!` என்று, தேவர்கள் திகைத்தனர். அப்பொழுது அவர்கள்முன் அம்பிகை வெளிப்பட்டு நின்று, `வந்தவர் சிவபெருமானே` என்பதை அறிவித்து, `ஒரு துரும்பை அசைக்க மாட்டாத நீங்களோ அசுரரை வென்றீர்கள்; உங்களுக்கு வெற்றியைத் தந்தவன் சிவபெருமானே` எனக் கூறி மறைந்தாள். அதனால் தேவர்கள், `அவனன்றி ஓர் அணுவும் அசையாது` என்று உணர்ந்து தம் செருக்கு நீங்கினர். இது, கேனோப நிடதத்துச் சொல்லப்பட்டது. இதனைக் காஞ்சிப் புராணம் விரித்துக் கூறும். இவ் வரலாற்றையே இங்கு அடிகள் அருளியிருத்தலை, ஊன்றி நோக்கி உணர்க. ``சுந்தர வேடம்`` என்றது, அழகிய யட்ச வடிவத்தை. முதல் உருவு - தலைவன் வடிவம். இந்திர ஞாலம் போல வந்தது, தேவர் வியப்பப் பொருக்கெனத் தோன்றினமையாம். எவ்வெவர் தன்மையும் தன்வயிற்படுத்தமை - எல்லாத் தேவர்களது ஆற்றலும் தன்முன் மடங்கச் செய்தமை. தானேயாகியது - அனைத்திற்கும் முதல்வன் தானேயாதலை விளக்கினமை. இவ் வரலாற்றை இங்கு எடுத்தோதியது, அடுத்து வரும் திருவிளையாடல் இதனோடு ஒத்திருத்தல் பற்றியாம். ஆகவே, இஃது உடம்பொடு புணர்த்தலாயிற்று.
அடி 97-99
சந்திர தீபம், ஒரு தலம். அன்றி, `ஒரு தீவு` என்றலுமாம். சாத்திரன் - ஞானநூற் பொருளை யுணர்த்துவோன். `அந்தரத்தினின்றும் இழிந்து வந்து` என்க. பாலை, ஒரு மரம். அது தழையிலது ஆயினும், இறைவன் அமர்ந்திருந்தமையின் அழகுடையதாயிற்று. ``பாலையுள்`` என்றதில் `உள்` என்பது, `கீழ்` என்னும் பொருளது. சுந்தரத் தன்மை - அழகிய வடிவம். துதைந்து - நீங்காது பொருந்தி. இன்னதொரு வரலாறு இங்குக் குறிக்கப்பட்டது என்க.
அடி 100-102
ஆகமங்களையே, `மந்திரம்` என்றார். மகேந்திர மலை பற்றி மேலே (அடி.9-10) கூறப்பட்டது. ``எந்தமை`` என்றது, தம்மையும், பிற அடியார்களையுமாம். பரிசு - தன்மை; திருவருட் செயல்கள்.
`மகேந்திர வெற்பனாகிய அவ் வருளுடையண்ணல் (அடி 100-101) இருந்தும் (அடி 83), காட்டியும் (அடி 84)... ... ... துதைந்திருந்தருளியும் (அடி 99) `எந்தமை ஆண்ட பரிசது பகரின்` என்க. இவைகளால் இறைவனது திருவருட் செயல்களைச் சிறப்பு வகையிற் பல்லாற்றானும் அருளிச் செய்தவாறு. இனி, `பரிசது பகரின்` எனத் தொடங்கித் தசாங்கம் கூறுகின்றார்.
தசாங்கம் - பத்து உறுப்பு. அரசர்க்குரிய சிறப்புப் பொருள்களே, இங்கு, `உறுப்பு` எனப்படுகின்றன. அவை இங்கு, `கொடி, யாறு, முரசு, படைக்கலம், மாலை, ஊர்தி, நாடு, ஊர், பெயர், மலை` என்னும் முறையிற் கூறப்படுகின்றன. இவை, ``படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்`` (குறள் 381) என்ற முறையானன்றி, வேறொரு வகையாற் கூறுப்படுவன. இவைபற்றி அரசர்கள்மீது அகலக் கவிகளை இயற்றும் வழக்கம் பிற்காலத்தில் சிறந்து விளங்கியது. அதனால், அடிகள் இறைவனை அவ்வாற்றாற் பாடுகின்றார்.
அடி 103-104
`திருவுருவில் உள்ள` என்க. நீறு - திருநீறு. கொடி, `கோடி` என நீண்டது. `கொடீஇ` என்பதொரு பாடமும் உண்டு. பின்னர் வரும் `தசாங்கம்` என்னும் பகுதியுள் கூறப்படுவனவற்றோடு இங்குக் கூறப்படுவன சிறிது வேறுபடும். அங்ஙனம் படும் இடங்களில், இரண்டும் கொள்ளற்பாலனவாம். அவ்வாற்றால் இங்குத் திருநீற்றுக் கொடி கூறப்பட்டது; அங்கு ஏற்றுக் கொடி கூறுப. திருவுருவில் உள்ள திருநீற்றின் முக்குறித் தொகுதிபோல எழுதப்பட்ட வடிவத்தை, ``திருவுரு நீறு`` என்று அருளினார். ``நிமிர்ந்து`` என்றதனை, `நிமிர` எனத் திரிக்க. நிமிர்தல் - உயர்தல்.
இவற்றால், `இறைவனுக்கு, திருநீறே கொடி` என்பது, கூறப் பட்டது. இக்கொடி ஞானாசிரியனாய் இருக்கும் நிலையிலாம்.
அடி 103-106
ஊனம் - குறைகள்; துன்பங்கள். ஒருங்கு - ஒரு சேர. உடன் - விரைவாக. `துன்பங்கள் அனைத்தையும் வாராது ஒரு சேர நீக்கும் ஆனந்தம்` என்றதனால், அது பேரின்பமாயிற்று.
இவற்றால், `இறைவனுக்குப் பேரின்பமே யாறு` என்பது கூறப்பட்டது. எதுகை நயத்தை நோக்கும்வழி, `ஊனந்தம்மை` என்பதே பாடம்போலும் எனலாம்.
அடி 107-108
மாதிற் கூறுடை - உமையிடத்தில் ஒரு கூற்றை உடைய. நாதம் - சூக்குமை வாக்கு. இதுவே, வேதம் முதலிய நூல்கட் கெல்லாம் பிறப்பிடமாகலின், இறைவனுக்குச் சிறந்த பறையாயிற்று. ``பறை`` என்றது, முரசினை. நவின்று - தொடர்ந்து. கறங்கவும் என்ப தற்கு, `ஒலிக்கச் செய்தும்` என உரைக்க.
இவற்றால், `இறைவனுக்குச் சூக்குமை வாக்கே முரசு` என்பது கூறப்பட்டது.
அடி 109-110
அழுக்கு - குற்றம்; வினை; என்றது ஆகாமியத்தை. கழுக்கடை - முத்தலை வேல்; சூலம்.
இவற்றால், `இறைவனுக்குச் சூலமே படைக்கலம்` என்பது கூறப்பட்டது.
அடி 111-114
மூலம், பிறவிக்கு என்க. `அறுக்கும் சோதி, தூய மேனிச்சோதி` எனத் தனித்தனி இயையும். சோதி, இறைவன். காதலன்-பேரன்பன்; அருளாளன்; என்றது ஞானாசிரியனை. கழுநீர்- செங்கழுநீர்ப் பூ. ஏல் - ஏற்பு; முதனிலைத் தொழிற்பெயர்.
இவற்றால், `இறைவனுக்குச் செங்கழுநீர் மாலையே மாலை` என்பது கூறப்பட்டது. இதுவும், ஞானாசிரியக் கோலத்தில் என்க.
அடி 115-116
பரிமா - குதிரை. ``வண்ணமும்`` என்றாரேனும், `வண்ணனாகியும்` என உரைக்க.
இவற்றால், `இறைவனுக்குக் குதிரையே ஊர்தி` என்பது கூறப்பட்டது. இஃது அடிகள் தாம் கண்ட காட்சி பற்றிக் கூறியதாம்.
அடி 117-118
மீண்டு வாரா வழி - மறித்துப் பிறப்பில் வாராத நெறி; வீட்டு நெறி, ``மற்றீண்டு வாரா நெறி`` என்னுந் திருக்குறளை (356) நோக்குக. ``பதி`` என்றது நாட்டினை. இது முதலாக நான்கிடத்தும், `ஆகவும்` என்பதற்கு, `ஆகக் கொண்டும்` என உரைக்க.
இவற்றால், `இறைவனுக்குப் பாண்டிநாடே நாடு` என்பது கூறப்பட்டது. இதுவும், இறைவன் தம் பொருட்டுக் குதிரை வாணிகனாய் வந்தது முதலிய பெருங்கருணைத் திறம் பற்றிக் கூறியதாம்.
அடி 119-120
பரம்பரம் - மேலுள்ளதற்கு மேலுள்ளது; பரமுத்தி நிலை. ``அப்பாலைக் கப்பாலைப் பாடுதும்`` என்பர் தி.8 திருவம்மானையிலும் (11). உய்ப்பவன் - செலுத்துபவன்.
இவற்றால், `இறைவனுக்கு உத்தரகோச மங்கையே ஊர்` என்பது கூறப்பட்டது. இதன்கண் அடிகளுக்கு இறைவன் மீள ஞானாசிரியனாய் வெளிப்பட்டு அபயம் அளித்தமை மேலே (அடி. 48-49). காட்டப்பட்டது.
அடி 121-122
ஆதி மூர்த்திகள் - மும்மூர்த்திகள். இவர்களுக்குப் பரமசிவன் வெளிப்பட்டுத் தோன்றி, படைத்தல் முதலிய முத்தொழிலையும் இயற்றும் நிலையை வழங்கியதனையே, ``அருள் புரிந்தருளிய`` என்றார். ``ஆதி மூர்த்திகட்கு அருள் புரிந்தருளிய`` என்றது, `தேவ தேவன்` என்னும் பெயர்க் காரணத்தை விளக்கியவாறு. `தேவ தேவன்` என்பது, `தேவர்கட்குத் தேவன்` எனப் பொருள்படும். `மகாதேவன்` என்பதும் இப்பொருளது. `தேவ தேவன்` அதுவே திருப்பெயராகக் கொண்டும்` என்க.
அடி 123-124
இங்கு, `ஊர்தி` என்றது, மீதூர்ந்து ஓடுவதாகிய யாற்றைக் குறித்தது. ``ஊனந்தன்னை ஒருங்குடன் அறுக்கும் ஆனந்தம்`` என மேற்கூறியதனையே, இங்கு, ``இருள்கடிந்தருளிய இன்பம்`` என்றார். எனவே, `அப்பேரின்பமாகிய யாற்றை உண்டாக்கிய பெருமையையுடைய அருளையே மலையாகக் கொண்டும்` என்பது பொருளாயிற்று.
இவற்றால், `இறைவனுக்கு அவனது திருவருளே மலை` என்பது கூறப்பட்டது. இங்ஙனம் கொடி முதலாக, மலை ஈறாகப் பத்து உறுப்புக்களும் கூறப்பட்டமை காண்க.
அடி 125-126
``அப்பரிசதனால்`` என்றதை, ``எப்பெருந் தன்மையும்`` என்றதற்கு முன்னர் வைத்து, இங்ஙனம், `இத்தசாங்கங்களைக் கொண்டு விளங்கும் தன்மையாலே` என உரைக்க. தன்மை, இயற்கையும் செயற்கையுமாகிய நிலைகள். திறம், ஆற்றல். `உலக வேந்தர்கள் பத்து உறுப்புக்களோடும் கூடி நிற்றலால், எத்தகையோரையும் தம் ஆணைவழிப்படுத்து ஆளுதல் போல, ஞான வேந்தனாகிய இறைவன் எத்தகையோரையும் தன் அருள் வழிப்படுத்து ஆட் கொள்கின்றான்` என்றபடி. அதற்கு, அமைச்சராய் இருந்து ஆளான அடிகளே சான்றாவர். அத்தகையோரான மற்றும் பல அடியார்களை அடிகள் திருப்பெருந்துறையில் கண்டனர் என்பது, பின்வரும் அடிகளால் விளங்கும்.
அடி 127-131
``என்னை`` என்றதனை முதலில் வைத்து, `என் ஐ` எனப் பிரித்துப் பொருள் உரைக்க. `ஏற்ப` என்பது, பகரவுகரம் தொக, `ஏல` என நின்றது. `என் வினைக்கேற்ப` என்றவாறு. இதனை, ``நாயினேனை`` என்றதன் பின்னர்க் கூட்டுக. கோலம்-அழகு. பொது-சபை; அம்பலம். ஈங்கு-இவ்வுலகத்தில். உடன் சென்றது, சோதியிற் கலந்து என்க. அருள் பெறும் - திருவருளை முற்றப் பெறும் தகுதியுடைய. ஒன்ற - தன்னோடு ஒன்றுபட. `அஃதாவது, பிறிதொன் றனையும் அறியாது தன்னையே அறிந்து நிற்க` என்றபடி, இதுவே, `ஞாதுரு ஞான ஞேயங்கள் அற்ற நிலை, பேச்சற்ற நிலை` என்றெல்லாம் சொல்லப்படுவது. எனவே, பரமுத்தி நிலை என்பது பெறப்பட்டது. ``ஒன்ற ஒன்ற`` என்ற அடுக்கு, பன்மைபற்றி வந்தது. ``உடன் கலந்தருளி`` என்ற அடுக்கு, பன்மை பற்றி வந்தது. ``உடன் கலந்தருளி`` என்றதற்கு, `அவர்களோடு தானும் நீக்கமின்றிக் கலந்தும்` என்க. இது, தானும் சோதியிற் கரந்ததைக் குறித்தவாறு. இஃது, அவர்கட்குப் `போகமாய்த் தான் விளையும் பொற்பி`னைக் (சிவஞான போதம் - சூ. 11 அதி. 1) குறித்ததாம். ``கலந்தருளியும்`` என்றது `கலந்தருளிய பின்னும்` என்னும் பொருட்டு; உம்மை, எதிரது தழுவிய எச்சம்; என்னை? பின்வரும், `பாயவும்` என்பது முதலியவற்றைத் தழுவி நிற்றலின்.
அடி 132-139
எய்த - சோதியிற் கலத்தல் தமக்குக் கிடைக்கும்படி. வந்திலாதார் - ஆண்டு விரைந்து வாராதவர். மால் - பித்து. மயக்கம் - மூர்ச்சை. ``புரண்டு வீழ்ந்து`` என்றதனை, `வீழ்ந்து புரண்டு` என மாற்றிக் கொள்க. ``மண்டி, அரற்றி`` என்றவற்றின் பின்னரும், எண்ணும்மை விரிக்க. இறைவன் தோற்றுவித்த சோதியிற் கலக்கும் பேறில்லாதவர்கள், தீப்பாய்தல் முதலிய பலவாற்றால் அவன் திரு வடியை அடைந்தனர்; அது மாட்டாதார், உலக இன்பத்திலும் வெறுப்புடையராய் ஏக்கமுற்றனர் என்க.
பரம நாடகம் - மேலான கூத்து. இதம் - இன்பம்; இஃது உலகின்பத்தைக் குறித்தது. சலிப்பு - வெறுப்பு.
அடி 140-146
`ஒலிதரு கயிலை உயர்கிழவோன்`` என்றதை முதலிற் கூட்டுக. இமயத்து இயல்பு, பொன்மயமாய் நிற்றல். `அம் பொற் பொது` எனவும், `நடம் நவில் இறைவன்` எனவும் இயையும். புலியூர் - பெரும்பற்றப் புலியூர்; தில்லை. ``கனி தரு`` என்றதில் உள்ள தரு, உவம உருபு. உமைக்கு அருளிய நகை மகிழ்வு நகை எனவும், காளிக்கு அருளிய நகை வெகுளி நகை எனவும் கொள்க. இவற்றால் முறையே, அளியும், தெறலும் அருளப்பட்டன. காளிக்கு நகை அருளியது நடனப் போரிலாம். ஈண்டிய அடியவர், திருப்பெருந் துறையிற் பல்லாற்றானும் தன்னையடைந்து திரண்ட அடியவர். ``புக்கினி தருளினன்`` என்றதை, `இனிது புக்கருளினன்` என மாற்றி யுரைக்க. ஒலி, அரவொலி, ஆகம ஒலி, அறிவார் அறி தோத்திர ஒலி முதலியன. (தி. 7 ப.100 பா. 8) `கயிலையின்கண் உள்ள உயர்ந்த கிழவோன்` என்க. கிழவோன் - எல்லாப் பொருளையும் தனக்கு உரிமையாக உடையவன். `கயிலையில் உள்ளவனாயினும் புலியூரில் நடம் நவில் இறைவன் ஆதலின், புலியூர் புக்கருளினன்` என்றபடி. இங்ஙனமே திருநாவுக்கரசரும், புக்க திருத்தாண்டகத்தில், சிவ பெருமான் பல்வேறு தலங்களிற் காணப்படினும், புலியூர்சிற்றம்பலமே புக்கதாக அருளிச் செய்தல் காண்க. அன்றித் தம்மை, `கோலமார்தரு பொதுவினில் வருக` என்று அருளிப் போயினமை பற்றிக் கூறினார் என்றலுமாம்.
இனி இத்திருவகவலில், `தில்லை மூதூரில் ஆடிய திருவடியை யுடையான், பல்லுயிர்களிலும் பயின்றோனாகித் தனது எண்ணில்லாத பல குணங்களும் எழுச்சிபெறுமாறு விளங்கிநின்று, தோற்றல், அழித்தல் முதலியவற்றால் உயிர்களது அகவிருளை முற்றும் நீக்கி, அவைகளது உள்ளத்தில் அன்பு மீதூரும்படி அவ்வுள்ளங்களையே குடியாக் கொண்ட செயல்களும், அவற்றின் மேன்மைகளும் யாவை யெனின், ஆகமம் தோற்றுவித் தருளியும் ... ... ... ... ஆரியனாய் அமர்ந்தருளியும் இவ்வாறு மங்கையும் தானுமாய் வந்தருளி, அதன் பின், சாத்தாய்த் தானெழுந்தருளியது முதலாகப் பாவகம் பலபல காட்டிய பரிசு ஈறாக உள்ளனவாம். இனி அவற்றின்மேலும், கடம்பூர் முதலாகச் சந்திரதீபம் ஈறாகக் கூறிய தலங்களில் கோயில் கொண்டிருந்து, மகேந்திர வெற்பனாகிய அவ்வண்ணல் எங்களை ஆட்கொண்ட தன்மையை விளங்கக் கூறுமிடத்து, திருநீறாகிய கொடி முதலாகவும், திருவருளாகிய மலையீறாகவும் உள்ள பத்து உறுப்புக்களையும் கொண்டு நின்று, எத்தகையோரையும் தனது திருவருளின் வழிப்படுத்து ஆண்டுகொண்டு, அவர்களில் நாயினேனை, என் வினையிருந்தவாற்றிற்கு ஏற்ப, `தில்லையில் வருக` எனப் பணித்து விட்டுத் தகுதி மிக்க அடியார்களோடு தான் திருவுருக்கரந்தருளிய பின்னும், அப் பேறில்லாதவருட் சிலர் எரியிற் பாய்தல் முதலியவற்றால் தனது திருவடியை அடையவும், அவை மாட்டாதார் ஏக்கமுற்று நிற்கவும், கயிலை உயர்கிழவோனாகிய புலியூர்ப் பொதுவினில் நடம் நவிலும் அவ்விறைவன், அவ்விடத்து மீள வெளிப்படாதே, தன்னை அடைந்த அடியார்களோடும் புலியூரில் இனிது புகுந்தருளினான்` என்னும் வகையில் சொற்களை இயைத்துப் பொருள்கொள்க.
இங்ஙனம் இத்திருப்பாட்டில் இறைவனது திருவருள் விளையாட்டுக்களைப் பொது வகையானும், சிறப்பு வகையானும் அடிகள் அருளிச் செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 1

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10
எறியது வளியிற்
கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக் 15
கருத்துடைக் கடவுள் திருத்தகும்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன் நாள்தொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20
மதியின் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரின் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25
மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி யெனைப் பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்னே ரில்லோன் தானே காண்க 30
ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
கானப் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க 35
அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மைஇல் ஐயோன் காண்க 45
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க
நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க
மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க 50
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க 55
தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க 65
பரமா னந்தப் பழங்கட லதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையி லேறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
ஐம்புலப் பந்தனை வாளர விரிய 70
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து
முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன
ஆயிடை வானப் பேரியாற் றகவயின்
பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்து 85
ஊழூழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்து
உருவ அருள் நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90
மாப்புகைக் கறை சேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட உழவ ராரத் தந்த
அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க 95
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க
அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க 100
எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க
காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 105
நச்சர வாட்டிய நம்பன் போற்றி
பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇச் 110
சொற்பதங் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றெனக் கெளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் 125
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்
முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் 130
இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்
கத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் 135
ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்
தாள்தளை யிடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் 145
தன்னே ரில்லோன் தானேயான தன்மை
என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி ஆட்கொண் டருளி
மறையோர் கோலங் காட்டி யருளலும்
உளையா அன்பென் புருக வோலமிட்டு 150
அலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித்
தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்
கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் 155
ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித் தாங்கன்று
அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவ தறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு 165
அருளிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் 170
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாயுட லகத்தே
குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ 175
துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்
கள்ளூ றாக்கை யமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்
கருணை வான்தேன் கலக்க 180
அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன்மா லறியாப் பெற்றி யோனே.

பொழிப்புரை :

ஆராயுமிடத்து அண்டம் எனப்படும் பேருலகின் பகுதியாகிய, உருண்டை வடிவின் விளக்கமும் அளத்தற்கரிதாகிய தன்மையும் வளமான பெருங்காட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து நின்ற அழகைச் சொல்லுமிடத்து நூற்றொரு கோடியினும் மேற்பட்டு விரிந்துள்ளன, அவை, வீட்டில் நுழைகின்ற சூரிய கிரணத்தில் நெருங்கிய அணுக்களை நிகர்க்கச் சிறியவையாகும்படி பெரியவனாய் இருப்பவன்.
பிரமனும் அவனைச் சூழ்ந்தவரும் ஆகிய அவரது தொகுதி யோடு திருமாலும் அவரைச் சூழ்ந்தோரது மிக்க கூட்டமும் உலகத்தினது உற்பத்தியும் நிலைபேறும் ஆகியவற்றை இறுதியடையச்செய்த மிகப் பெரிய ஊழிக்காலமும், அவ்வூழியின் நீக்கமும் அந்நீக்கத்தின் பின் உலகம் முன்போலத் தோன்றி நிலைபெறுதலும் பெரிதாகவும் சிறிதாகவும் வீசுகின்ற சூறைக் காற்றாகிய வீசும் வளியில் அகப்பட்ட பொருள் போலச் சுழல, அவற்றை நிலை பெயர்க்கின்ற அழகன்.
எல்லாப் பொருள்களையும் படைக்கும் பிரமனைப் படைக் கின்ற பழையவன்.
படைக்கப்பட்ட பொருளைக் காப்போனாகிய திருமாலைக் காக்கின்ற கடவுள்.
காக்கப்பட்ட பொருளை அழிப்பவன்.
அழிக்கப்பட்டவற்றை நினையாத கருத்தையுடைய கடவுள்.
சிறப்புப் பொருந்திய அறுவகைப்பட்ட சமயத்தையுடைய, ஆறுவகை ஒழுக்கத்தை உடையவர்க்கும் முத்திப் பேறாய் நின்றும், தேவர் பகுதிகள் புழுக்களை ஒக்க நிற்கின்ற பெரியோன், தினந்தோறும் சூரியனில் ஒளியை அமைத்தவன்.
அழகு பொருந்திய சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன்.
வலிய வெற்றியையுடைய நெருப்பில் வெப்பத்தை உண்டாக்கினவன்.
உண்மையாகிய ஆகாயத்தில் வியாபிக்கும் தன்மையை வைத்தவன்.
மேன்மை பொருந்திய காற்றில் அசைவை அமைத்தவன்.
நிழல் பொருந்திய நீரினிடத்து இனிய சுவையை வைத்தவன்.
வெளிப்படையாக மண்ணிடத்து வலிமையை அமைத்தவன்.
இவ்வாறே எந்நாளிலும் எவ்வளவு பல கோடியாகிய எவ்வளவோ பல பிற பொருள்களிலும், அவற்றின் தன்மையை அவ்வப் பொருள்களில் அமைத்து வைத்தவன்.
அதுவன்றி எப்பொருட்கும் முன்னே உள்ளவன்.
முழுதும் நிறைந்தவன்.
தனக்கு நிகர் இல்லாதவன்.
பழைமையாகிய பன்றியின் பல்லை அணிந்தவன்.
புலியினது தோலை அரையில் உடுத்தவன்.
திருவெண்ணீற்றை அணிந்தவன்.
அவனது பிரிவை நினைக்கும்தோறும் பொறுக்கமாட்டேன்.
ஐயோ! நான் கெட்டொழிவேன்.
இனிய இசை வீணையில் பொருந்தியிருப்பது போல, உயிர்களில் நிறைந்து இருப்பவன்.
அப்படிப்பட்டதாகிய வீணை இசை ஒன்றை அவ்விடத்து அறிந்தவன்.
மேலோன்.
பழையவன்.
பிரமனும் திருமாலும் காணவொண்ணாத பெரியவன்.
வியத்தகு தன்மைகள் உடையவன்.
எல்லாப் பொருளுமாய் இருப்பவன்.
சொல்லின் நிலையைக் கடந்த பழையோன்.
மனம் சென்று பற்றாத தூரத்தில் இருப்பவன்.
பத்தியாகிய வலையில் அகப்படுவோன்.
ஒருவன் என்னும் சொல்லால் குறிப்பிடப்படும் ஒருவன்.
பரந்த உலகம் முழுவதுமாகிப் பரந்தவன்.
அணுப் போன்ற தன்மையினையுடைய நுண்ணியவன்.
ஒப்புச் சொல்லுதற்கு அரிய பொருள்யாதினும் அரிய பொருளாகிய அரியவன்.
பொருந்தி எல்லாப் பொருளையும் காப்பவன்.
நூலறிவால் உணரப்படாத நுட்பம் உடையவன்.
மேலும் கீழுமாகிய எவ்விடத்திலும் பரவி நிற்பவன்.
முடிவும் முதலும் நீங்கினவன்.
உயிர்கட்குப் பிறவியாகிய கட்டும், வீடுபேறும் உண்டாக்குவோன்.
இயங்காப் பொருளும் ஆனவன்.
கற்ப காலத்தையும் அதன் முடிவையும் கண்டவன்.
எல்லோரும் அடையும் பொருட்டு எழுந்தருளுகின்ற தலைவன்.
தேவரும் அறிய முடியாத சிவபெருமான்.
பெண் ஆண் அலி என்னும் பாகுபாடுகளில் கலந்துள்ள தன்மையன்.
அப்பெருமானை நானும் கண்ணால் கண்டேன்.
அருள் மிகவும் சுரக்கின்ற அமிர்தம்.
அப்பொருளினது பெருங்கருணையின் ஏற்றத்தைக் கண்டேன்.
அவன் தன் திருவடிகள் பூமியில் படும்படி எழுந்தருளி வந்தான்.
அவனைச் சிவபிரான் என்று நானும் தெளிந்து கொண்டேன்.
அவன் என்னை அடிமை கொண்டருளினன்.
நீலமலர் போலும் கண்களையுடைய உமாதேவியின் பாகன்.
அத்தகைய உமாதேவியும் தானும் பிரிவின்றியே இருப்பவன்.
மேன்மையான பேரின்பக் கடல் முழுவதுமே, சூல் கொண்ட கரிய பெருமேகம் போல வடிவெடுத்து, அழகு நிறைந்த திருப்பெருந்துறை என்னும் மலைமேல் ஏறித் தக்க அருளாகிய மின்னல் வெளிச்ச மானது ஒவ்வொரு திசையிலும் பரவ, ஐவகை வேட்கைப் பிணிப் பாகிய, வாள் போன்ற கொடிய பாம்புகள் கெட்டு ஓட, பிறவி என்னும் கடுந்துன்பமாகிய வேனிலானது தனது விரிந்த தலையை மறைத்துக் கொள்ள, மிகுந்த அழகுடைய தோன்றிச் செடி போலத் தோன்றிய ஆசிரியரது ஞானவொளி விளங்க, எங்கள் பிறவிகளாகிய தம்பலப் பூச்சிகள் செறிந்து தோன்ற, இறைவனின் இரக்கமானது இனிய முரசு அடித்தாற் போல முழக்கம் செய்ய, பூப்போன்றனவாயுள்ள அடியவர் கூப்பிய கைகள் காந்தள் மலர்போல விளங்க, குறையாத இன்பம் தரும் அருளானது சிறிய துளிகளின் வடிவத்தைக் கொள்ள, நேர்மையான பேரறிவாகிய வெள்ளம் திக்கெங்கும் பரவ, துன்பமாகிய குளம் கரையழிய, மலைச் சிகரமளவுக்குப் பொருந்துமாறு உயர்ந்தும், ஆறு சமயங்களாகிய கானல் நீரினை நீர் வேட்கையுண்டாக வந்த நீண்ட கண்களையுடைய மான் கூட்டம் போன்ற சிற்றறிவு உயிர்கள் தமது அகன்ற பெருவாயினால் பருகியும், நடந்த தளர்ச்சியும் மிகுந்த தாகமும் நீங்கப் பெறாமல் உழன்றன.
அத்தருணத்தில், அந்த வானப் பேராற்றின் உள்ளிடத்தே புகுந்து பெருகி, இன்பப் பெருஞ் சுழலினை உண்டாக்கி, மெய்யாகிய மணிகளை வாரிக் கொண்டு, எமது பாசக்கட்டாகிய கரைகளை மோதி அலைத்து உடைத்து, முறை முறையாய் வளர்ந்து வந்த எங்களுடைய நல்வினை தீவினை என்னும் இருவினைகளாகிய பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி மிகுந்து வந்த அழகுமிக்க அருள் வெள்ளத்தைச் செலுத்தித் தொண்டராகிய உழவர், கடத்தற்கரிய எல்லையையுடைய சாந்தம் என்னும் பெரிய அணையைக் கட்டி, தேனோடு விரிந்த வாசனையுடைய மலர் போன்ற இருதயமாகிய குளத்திற்கு உண்மையாகிய நீர் வாயினை அமைத்து, பொறியடக்கம் என்னும் சிறந்த அகிற் புகை சேரும் வரம்பினையுடைய ஓங்காரமாகிய வண்டு ஒலிக்கும் உள்ளமாகிய குளத்திலே அருள் வெள்ளமானது மிகுதியாக மேலும் மேலும் நிறைவதைப் பார்த்து, வழிபாடு என்னும் வயலுள் அன்பு என்னும் வித்தை விதைத்துச் சிவபோகமாகிய விளைவைத் துய்க்குமாறு உதவிய உலகெங்கும் பெறுதற்கரிய மேகம் போன்றவன் வாழ்க!
கரிய படமுடைய பாம்பைக் கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க.
அரிய தவத்தினருக்கு அருளுகின்ற முதல்வன் வாழ்க.
பிறவி அச்சத்தை நீக்கின வீரன் வாழ்க.
நாள்தோறும் அடியார்களை வலிய இழுத்து ஆட்கொள்வோன் வாழ்க.
எம்மை வளைத்துக் கொள்கின்ற பெருந்துன்பத்தை நீக்குவோன் வாழ்க.
தன்னை அடைந்தவர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க.
மிகுந்த இருளில் பல வகைக் கூத்தொடு நடிப்போன் வாழ்க.
பெரிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமாதேவிக்கு அன்பன் வாழ்க.
தன்னை வணங்காது அயலாய் இருப்பார்க்கு அயலவனாயிருக்கிற எம் தலைவன் வாழ்க.
அன்பர்க்கு இளைத்த காலத்தில் சேமநிதி போல்வான் வாழ்க.
நஞ்சையுடைய பாம்பை ஆட்டிய நம் பெருமானுக்கு வணக்கம்.
எம்மைத் தனது அருட்பித்தேற்றின பெரியவனுக்கு வணக்கம்.
திருவெண்ணீற்றுப் பூச்சொடு தோன்ற வல்லவனுக்கு வணக்கம்.
நான்கு திக்கிலும் நடப்பவற்றை நடத்தி கிடப்பவற்றைக் கிடத்தி, நிற்பவற்றை நிறுத்திச் சொல்லளவைக் கடந்த பழையோன்.
மன உணர்ச்சியால் கொள்ளப் படாதவன், கண் முதலாகிய பொறி களுக்குக் காணவும் படாதவன்.
ஆகாயம் முதலிய பூதங்களை வெளிப்படையாகத் தோன்றப் படைத்தவன்.
மலரின் மணம் போன்று ஓங்கி எவ்விடத்தும் நீக்கமில்லாமல் நிறைந்து பொருந்திய தன்மையை இப்பொழுது, அடியேனுக்கு எளிதாக வந்து உணர்த்தியருளி அழிகின்ற இவ்வுடம்பை ஒழியச் செய்த சிறந்த பொருளானவன்.
இன்று எனக்கு எளியவனாய் என் உள்ளத்தில் வீற்றிருந்தவனுக்கு வணக்கம்; கனிந்து உருகுகின்ற உடம்பை அருள் செய்தவனுக்கு வணக்கம்; இன்ப ஊற்றாயிருந்து மனத்தை மகிழ்விப்பவனுக்கு வணக்கம்.
தாங்க ஒண்ணாத இன்பவெள்ளம் பரவி அலை வீச அதனை ஏற்றுப் போற்றாத உடம்பைத் தாங்குதலை விரும்பேன்.
பச்சை மணியின் குவியலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும், மின்னலின் ஒளியைத் தன்னிடத்தே கொண்ட ஒரு பொன்னொளி போல் விளங்க, மேலும் கீழும் போய்த் தேடின பிரமனுக்கும் திருமாலுக்கும் மறைந்தும், யோக முறைப்படி ஒன்றி நின்று முயன்றவர்க்கு மறைந்தும், ஒருமைப்பாடு கொண்டு நோக்குகின்ற மனத்தையுடைய உறவினர் வருந்தும்படி உறுதியோடு இருப்பவர்க்கு மறைந்தும் வேதங்களின் பொருட் கூறுபாடுகளை ஆராய்ந்து பார்த்து வருந்தினவர்க்கு மறைந்தும், இவ்வுபாயம் வழியாகக் காண்போம் என்று இருந்தவர்க்கு, அவ்வுபாயத்தில், அவ்விடத்திலே மறைந்தும், கோபம் இல்லாமல் பார்த்து மிகுதியாகப் பற்றி, ஆண் போலத் தோன்றியும், அலிபோல இயங்கியும், ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண் போலக் காணப்படும் தன் இயல்பைக் காட்டாது மறைந்தும், தூரத்தில் ஐம்புலன்களைப் போக நீக்கி அரிய மலைதோறும் சென்று, பொருந்தின பற்றுகளை எல்லாம் விட்ட வெற்றுயிரோடு கூடிய உடம்பையுடைய அரிய தவத்தினர் நோக்குக்கும் செம்மையாக மறைந்தும், ஒரு பொருள் உண்டு என்றும் இல்லை என்றும் ஐயுற்ற அறிவுக்கு மறைந்தும், முன்னே பழகிய காலத்திலும் இப்பொழுது பழகுங்காலத்திலும் எப்பொழுதும் மறைகின்ற கள்ளனைக் கண்டோம்.
ஆரவாரியுங்கள்; ஆரவாரியுங்கள்; புதிய மலர் மாலைகளால் திருவடியைக் கட்டுங்கள்; சுற்றுங்கள்; சூழுங்கள்; பின் தொடருங்கள்; விடாதீர் பிடியுங்கள் என்று சொல்லியவர்களது பற்றுதலுக்கு முழுதும் மறைந்தும், தனக்கு நிகரில்லாதவன் தானேயாகிய தன்மையை என் போல்வார் கேட்கும்படி வந்து சொல்லி வலிந்து அழைத்து, அடிமை கொண்டருளி வேதியர் கோலத்தைக் காட்டியருளுதலும் வருந்தி என்பு உருக அன்பினால் முறையிட்டு, அசைகின்ற கடல் அலைகள் போல இடையறாது ஆரவாரித்து மேலெழுந்து தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அரற்றி, பித்தர் போல் மயங்கி, வெறி பிடித்தவர் போலக் களித்து, நாட்டார் மயக்கம் கொள்ளவும் கேட்டவர் வியப்புக் கொள்ளவும் மதயானையும் ஏற்கப் பெறாத மிகப்பெரிய மதத்தால் தரியேனாக, என் உறுப்புகளைத் தீஞ்சுவையினைத் தருகின்ற கொம்புத்தேன் கொண்டு ஆக்கினான்.
பகைவருடைய பழைய ஊராகிய மூன்று புரங்களை அழகிய நகையாகிய நெருப்பினால் அழித்தது போல, அக் காலத்தில் அருளாகிய பெரிய நெருப்பினால், அடியோங்களுக்கு உரிய குடிலாகிய உடம்பை ஒருத்தரேனும் தவறாதபடி அடங்கப் பண்ணினான்.
அடியேனுக்குப் பெரிய கையிலுள்ள நெல்லிக்கனி போன்றிருந்தான்.
இவ்வாறு எனக்கு எளி வந்த கருணையின் பெருமையை யான் சொல்லுமாறு அறியேன்.
அவன் வாழ்க.
அவன் என்னைச் செய்த நிலையை நாயினேன் ஆற்றேன்.
அதன் காரணத்தையும் அறிந்திலேன்.
இது எனக்குச் செய்யும் முறையோ? ஐயோ செத்தேன்; அடியேனுக்குச் செய்த அருளையும் அறியேன்.
சிறுகச் சிறுகக் குடித்தும் நிறைவு பெற்றிலேன்: முழுதுமாய் விழுங்கியும் பொறுக்க மாட்டேன்.
செழுமையாகிய குளிர்ந்த பாற்கடலின் அலைகளை உயரச்செய்து நிறைமதி நாளில் பெருகும் கடலில் பொருந்திய நீர்போல உள்ளத்தினுள்ளே பொங்க, சொல்லிறந்த அமுதமானது ஒவ்வொரு மயிர்க் காலிலும் நிறையச் செய்தனன்; நாயினேனது உடலின் கண்ணே இருக்கை கொண்டு கொடியேனுடைய மாமிசம் செழித்த ஒவ்வொரு மடையிலும், இனிய தேனைச் பாய்ச்சி நிறைந்த ஆச்சரியமான அமுத தாரைகளை எலும்புத் துளை தோறும் ஏறச் செய்தனன்.
உருகுவதாகிய மனத்தைக் கொண்டு ஓர் உருவம் அமைத்தாற் போல அடியேனுக்கு மிகுதியும் உருகுகின்ற உடம்பை அமைத்தான்.
இனிதாகிய கனியைத் தேடுகின்ற யானை போல இறுதியில், அடியேனையும் அவனையே நாடி இருப்பதாகச் செய்தருளினன்.
என்னுள்ளே அருளாகிய பெருந்தேன் பாயும்படி, அருளொடு எழுந்தருளி மிக்க அமுதத்தினையும் அமைத்தான்.
பிரமனும் திருமாலும் தேடியும் அறியாத தன்மையுடையான்.

குறிப்புரை :

இது தில்லையில் அருளிச்செய்யப்பட்டதாகவே, யாண்டும் கூறப்படுகின்றது.
`திருவண்டப் பகுதி` என்பது, முதற் குறிப்பாற் பெற்ற பெயர், `ஆத்திசூடி` முதலியனபோல.
இதன்கண் அடிகள் இறைவனது பெருமைகள் பலவற்றையும் விரித்துக் கூறி, அன்ன பெருமைகளையுடையவன், தமக்கு மிக எளிவந்து அருள் புரிந்தமையை வியந்து, வாழ்த்துதலும், போற்றுதலும் செய்கின்றார்.
`சிவனது தூல சூக்குமத்தை வியந்தது` என்னும் பழைய குறிப்பும் இதனை ஒருவாறு உணர்த்தும்.
தொல்காப்பியனார், `குட்டம் வந்த ஆசிரியம்` என்றதனைப் பிற்காலத்தார், `இணைக் குறள் ஆசிரியப்பா` என்றனர்.
1-6, அண்டப் பகுதி - அண்டங்களாகிய இடப் பகுதிகள்.
உருண்டை, `உண்டை` என மருவி, அத்தன்மைத்தாய வடிவத்தை உணர்த்திற்று.
பிறக்கம் - விளக்கம்; பொலிவு.
`அளப்பருந் தன்மையை யுடைய காட்சி` என்க; `காட்சியோடு` என உருபு விரிக்க.
``ஒன்றனுக் கொன்று`` என்றதன்பின், `பெரிதாய்` என்பது எஞ்சிநின்றது.
`நின்ற` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று.
எழில் - எழுச்சி; பரப்பு.
``நூற்றொரு கோடியின்`` என்றது, `ஒருநூறு கோடி` என்றவாறு.
``கோடி`` என்றது, அவ்வளவினதாகிய யோசனையைக் குறித்த ஆகுபெயர்.
`கோடியினின்றும் மிகுதிப்பட விரிந்தன` என்க.
`பிருதிவி தத்துவம் முதலாகத் தொடங்கி மேற்செல்லும் தத்துவங்களுள் பிருதிவி தத்துவத்தின் அண்டம் எப்பக்கத்திலும் நூறு கோடி யோசனை பரப்புடையது` என்றும், `அதன் மேல் மூலப் பகுதிகாறும் உள்ள அண்டங்களுள் ஒன்றுபோல மற்றொன்று பத்து மடங்கு பரப்புடையது` என்றும், `அவற்றிற்கு மேல், நூறு மடங்கு, ஆயிர மடங்கு என்று இவ்வாறு சிவதத்துவம் முடிய உள்ள தத்துவ அண்டங்கள் விரிந்து கிடக்கின்றன` என்றும் ஆகமங்கள் கூறுதலின், இவ்வாறு அருளிச் செய்தார்.
``விரிந்தன`` என்ற சொற் குறிப்பானும், இங்குப் பெருமை கூறுதலே கருத்தாகலானும், ``நூற்றொரு கோடி`` என்றது, விரிவையன்றித் தொகையை யன்றென்க.
``விரிந்தன`` என்றது `விரிந்தனவாம்` என வினைப்பெயர்.
இதன்பின், ``அவை`` என்னும் சுட்டுப் பெயர் வருவிக்க.
இல்நுழை கதிரில் துன் அணுப் புரைய - இல்லத்துள் புழைவழியாகப் புகும் ஞாயிற்றின் ஒளியில் நெருங்கித் தோன்றும் நுண்துகள் போல.
சிறிய ஆக - சிறியவாய்த் தோன்றும்படி.
பெரியோன் - பெரியோனாய் நிற்பவன்.
இறைவனது பெரு வடிவொடு நோக்க, மேற் கூறிய அண்டங்கள் சிறுதுகள்களாம் என்றபடி.
இதனானே, இந்நுண்துகள்கள் மேற்கூறிய அண்டங்கள் போலப் பெரியவாய்த் தோன்றும்படி அத்துணைச் சிறியோனாய் நிற்பவன் என்பதும் பெறப்படும்.
``அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்`` என்ற (பாயிரம்.7) பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம் காண்க.
இதனால், இறைவனது வியாபகத் தன்மை கூறியவாறு.
7-12. மேற்போந்த, `தெரியின்` என்பதனை இங்குக் கூட்டி, `அவனது பெருமைகளை ஆராயுமிடத்து` என உரைக்க.
வேதியன் - பிரமன்.
தொகை - கூட்டம்.
மிகுதி - பரப்பு.
பிரம விட்டுணுக்கள் இவ்வண்டத்தில் உள்ளவாறே ஏனைய பல்கோடி அண்டங்களினும் உளராகலின், அவர்களையே, ``தொகை`` என்றும், ``மிகுதி`` என்றும் அருளினார்.
இவ்வண்டத்தில் உள்ளாரோடு ஒத்த பிரம விட்டுணுக்களது கூட்டத்தை, இவர்களுடைய கூட்டம் என உடைமையாக்கி ஓதினார், இனம் பற்றி.
சிறப்பு - வளர்ச்சி; எனவே, நிலைத்தலாயிற்று.
`பிரமரது தொகுதியும், மாயோரது மிகுதியும் தோன்றுதலையும், நிற்றலையும், இறுதியோடே புணர்ந்த ஊழி` என்க.
`புணரிய ஊழி` என்பதில், பெயரெச்சம் காலப்பெயர் கொண்டது.
ஊழி, வடமொழியில், `கற்பம்` எனப்படும்.
பிரமனும், மாயோனும் செயலொழிந்து துயிலுங் காலம், அவரவர்க்கு `நித்திய கற்பம்` என்றும், அவர் இறந்துபடுங் காலம் அவரவர்க்கு, `மகாகற்பம்` என்றும் கூறப்படுமாகலின், அவற்றுள் அவர் இறந்துபடுங் காலமாகிய மகாகற்பம் என்பது அறிவித்தற்கு, ``மாப்பேரூழி`` என்றார்.
ஆகவே, அவற்றுள், `அவரது தோன்றல், நிற்றல், அழிதல்` என்னும் மூன்றும் நிகழ்ந்து முற்றுப் பெறுமாதலின், அதனை, ``தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய`` என்று விளக்கினார்.
`ஊழி` என்னும் அஃறிணை இயற்பெயர், ஈண்டுப் பன்மையின் மேலது.
``ஊழியும்`` என்றது, `ஊழியினது தோற்றமும்` என்றவாறு.
எனவே, பின்னர்க் குறித்த நீங்குதலும் (முடிவெய்துதலும்) நிலைத்தலும் (நிகழ்தலும்) ஊழியினுடையவேயாயின.
`முதலும் முடிவும்` எனக் கூறி, நடுவை இறுதிக்கட் கூறலும் மரபாகலின், நீக்கத்தை இடை வைத்தார்.
சூக்கமொடுதூலத்து - நுண்மையும், பருமையும் ஆய இருநிலைகளிடத்தும்; இதனை, ``கொட்க`` என வருவதனோடு இயைக்க.
நுண்மை, ஒடுக்கமும், பருமை, தோற்றம் நிகழ்ச்சி என்னும் இரண்டும் ஆதல் அறிக.
``சூறை மாருதத்து`` என்பதனை இதனோடே கூட்டி நாற்சீரடியாக்கி, ``எறியது வளியின்`` என்பதனை இருசீரடி ஆக்குவாரும் உளர்.
அகவற்பாவினுள் வரும் இருசீரடிக்கு மூவசைச் சீராதல், ஆசிரிய உரிச்சீராதல், இரண்டுமாதல் அடுத்துவந்து நிற்பதே இன்னோசை பயப்பதாகலின், அது பொருந்தாமையறிக.
இவ்வாறு அடிவரையறை செய்யவே, ஓசை வேறு பாட்டானும், ஈண்டுரைக்கப்படும் பொருளே தோன்றுதல் காண்க.
சூறை மாருதம் - சூறாவளி; சுழல்காற்று.
மாருதத்து - மாருத மான நிலையில்.
`எறி வளி` என இயையும்.
`அவ்வளி` எனச் சுட்டாக ஓதற்பாலதனை, `அது வளி` என இரு பெயரொட்டாக ஓதினார், `அது காலை, அது போழ்து` என்றற் றொடக்கத்தனபோல.
வளியின் - வளி போல.
இதனை, ``பெயர்க்கும்`` என வருவதனோடு இயைக்க.
`மாப் பேரூழிகளது தோற்றங்களும், நிகழ்ச்சிகளும், முடிவுகளும், `நுண்மை, பருமை` என்னும் இருவகை நிலைகளில் தமக்கு ஏற்ற நிலையிற் பொருந்திச் சுழன்று வருமாறு, சுழல் காற்றைப் போலச் சுழற்றுகின்ற குழகன்` என்க.
பிரம விட்டுணுக்கள் என்னும் காரணக் கடவுளர் முதலியோரையும், தோன்றி நின்று அழியச் செய்வது, ஊழி முதலிய பெயர்களைப் பெற்று விளங்கும் காலம்; அதனைத் தோன்றி நின்று அழியுமாறு செய்கின்றவன் இறைவன் என, அவனது முதன்மையை வியந்தவாறு.
மாப்பேரூழியது அளவை, சூறாவளியில் அகப்பட்டு விரையச் சுழலும் சிறு பொருள்களது சுழற்சியளவோடு ஒப்புமைப்படுத்தியது என்னையெனின், `அது தானும் நிலையுடையதன்றி மாறித் தோன்றுவதேயாம்` என அதனது நிலையாமையை இனிது விளக்குதற் பொருட்டென்க.
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
எனத் திருவள்ளுவ நாயனாரும் (குறள். 339.)
நிலையாமையை இவ்வாறு விளக்குதல் காண்க.
எல்லாவற்றையும் ஆக்கிக் காத்து அழித்துச் சுழற்றி நிற்பது காலம்; அதனை அங்ஙனம் சுழலச் செய்பவன் இறைவன் என்றதனால், அவற்றின்வழிச் சுழல்வனவற்றையும் அங்ஙனம் சுழற்றுபவன் அவனே என்பது, தெற்றென விளங்கிக் கிடந்தது.
எனவே காலத்துட்படாதவன் இறைவன் ஒருவனேயன்றிப் பிறர் இல்லை என்பது பெறப்பட்டது.
சிவபெருமான் காலனைக் காலால் உதைத்தமை, `அவன் காலத்தைத் தன்வழி நடாத்துபவன்` என்பதையும், மார்க்கண்டேயர் அப்பெருமானை வழிபட்டு என்றும் பதினாறு வயதாய் இருக்கப் பெற்றமை, அவனை அடைந்தவரே காலத்தைக் கடப்பவராவர் என்பதையும் விளக்குவனவாம்.
இவ்வரலாறு இங்ஙனம் உலகறிய வழங்கி வருவதாகவும், அப்பெருமானை வழிபடுதலினும் சிறப்பாக ஒன்பான் கோள்கள் முதலிய காலக் கடவுளரை வழிபட்டுக் காலம் போக்குவாரது நிலையை நாம் என்னென்பது! காலம் தன்வயம் உடையதன்று; இறைவன் ஒருவனே தன்வயம் உடையவன்; காலம் அவன்வழிப்பட்டதே என்பதை, காலமே கடவுளாகக் கண்டனம் தொழிலுக்கென்னிற்
காலமோ அறிவின் றாகும்; ஆயினும் காரியங்கள்
காலமே தரவே காண்டும்; காரணன் விதியினுக்குக்
காலமும் கடவுள் ஏவ லால்துணைக் கார ணங்கான்.
என விளக்குகின்றது, சிவஞான சித்தி (சூ.1.10.).
``குழகன்`` என்றார், எல்லாவற்றையும் கொட்கப் பெயர்ப்பினும் தான் அப்பெயர்ச்சியுட்படாது, என்றும் ஒரு பெற்றியனாயே நிற்பான் என்பது அறிவித்தற்கு.
எனவே, ``கொட்கப் பெயர்க்கும்`` என்றதனால், அவனது முடிவிலாற்றலையும், ``குழகன்`` என்றதனால் அவனது தன்வயமுடைமையையும் குறித்தவாறாயிற்று.
13-19. ``முழுவதும்`` என்றதனை இவற்றொடு கூட்டிப் பொருள் கொள்க.
``முழுவதும்`` என்றது, அவரவரது எல்லைக் குட்பட்டன எல்லாவற்றையும் என்றதாம்.
``படைப்போன், காப்போன்`` என்ற விடத்துச் சொல்லுவாரது குறிப்பு, பொருள் மாத்திரையன்றித் தொழிலொடு கூடிய பொருள் மேலதாதலின், அவை அத்தொழிலையுடைய பலர்க்கும் பொருந்துவனவாம்.
இவ்வாறு வருவதனை, ``ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும்
வருவகை தாமே வழக்கென மொழிப``
என்று அமைத்தார் தொல்காப்பியர் (பொருள்.222).
இதனை, `சாதியொருமை` என்ப.
``படைப்போன், காப்போன்`` என்றவற்றில் ஐயுருபு தொக்கு நிற்றல் வெளிப்படை.
``பழையோன்`` என்றதனால், அவனுக்கு முன்னே நின்று அவனைப் படைப்போர் ஒருவருமிலர் என்றவாறு ஆயிற்று.
இங்ஙனம் ஒருவராற் படைக்கப்படாது நிற்கும் நிலையை, `அனாதி` என்ப.
`காப்போனையும் காக்கும் முதல்வன்` என்றற்கு, ``காப்போற் காக்கும் கடவுள்`` என்றாராயினும், அதனானே, முன்னர் அவனைப் படைத்தலும் அடங்கிற்று.
கரப்போன் - அழிப்பவன்.
``படைப்போன், காப்போன்`` என்ற அவரோடொப்பக் கரப்போனாகிய உருத்திரனைச் சுட்டி, `கரப்போற் கரக்குங் கடவுள்` என்னாது, சிவபெருமானையே கரப்போனாக அருளிச்செய்தார்.
அவன் ஏனை இருவர் போலச் சகலருட்பட்டு மீளப் பிறத்தலின்றி, அதிகாரமல வாசனை, பின்பு போகமல வாசனையாயும் இலயமல வாசனையாயும் தேய்ந்தொழிய வீடெய்துவானாகலின்.
எனவே, `அழித்தல்` என்பது, மீளப் பிறப்பாரிடத்தே செய்யப்படுவதாம் என்பது தெளிக.
``கரப்பவைகருதா`` என்றதற்கு, `அழிக்கப்படும் அவற்றை அவை நிலையுறுதலுறுங் காலத்து அழிக்கக் கருதாத` எனப் பொருள் கூறுக.
இதனால், அழித்தலைத் தனது ஆற்றல் வெளிப்படுத்தல் கருதி யாதல், பிறிதொன்று கருதியாதல் தன் பொருட்டாகச் செய்யாது, உயிர் களின் பொருட்டாகவே செய்தல் பெறப்பட்டது.
படவே ``கருத்துடை`` என்றதற்கு, `அருளுள்ளத்தை யுடைய` என்பது பொருளாயிற்று.
அழித்தல் உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு என்பதனை, ``அழிப்பிளைப் பாற்றல்.............................. பார்த்திடில் அருளே எல்லாம்`` எனச் சிவஞான சித்தி விளக்குதல் காண்க (சூ.1.37.).
``கருதா`` என்றதற்கு இவ்வாறன்றி, `அழித்தவைகளை இளைப்பு நீங்குங்காறும் படைக்கக் கருதாதவன்` என உரைப்பாரும் உளர்; `கரந்தவை` என ஓதாது, ``கரப்பவை`` என ஓதினமையின், அது பொருந்தாமையறிக.
இனி, ``கருதா`` என்றதனை வினையெச்சமாக்கி, `கருத்துடை கடவுள்` எனப் பாடம் வேறாக ஓதி, `அழித்தலுட்பட்ட உயிர்கட்கு அருளக் கருதி, அவற்றின் பிறப்பை நீக்கும் கடவுள்` என்று உரைப்பாரும் உளர்.
17-19. திருத்தகும் என்றதனை இங்குக் கூட்டி, `சிறப்புத் தக்கிருக்கின்ற` என உரைக்க.
`அறுவகைச் சமயத்தால் அறுவகைப்பட்டோர்க்கும்` என்க.
ஒரோவொரு சமயத்தினும் கொள்கையும், ஒழுக்கமும் பற்றிய சிறுசிறு வேறுபாடுகள் உளவாதல்பற்றி, `ஆறு சமயம்` என்னாது, ``அறுவகைச் சமயம்`` என்று அருளினார்.
``திருத்தகும்``, எனச் சிறப்பித்தது, கடவுட் கொள்கையுடையவற்றையே பிரித்துணர்த்தற்கு.
அதனால், அவை, ஆருகதம், ஐரணிய கருப்பம், வைணவம், சௌரம், சௌமியம், வாமம்` என்றேனும், பிறவாறேனும் கொள்ளப்படும்.
அருகன், இரணிய கருப்பன் (பிரமன்), விண்டு (மாயோன்), சூரியன், சந்திரன், சத்தி என்போர் இச் சமயங்களின் தெய்வங்களாவர்.
`உலகாயதம், பௌத்தம், மீமாஞ்சை` என்னும் மதங்கள் கடவுட் கொள்கையில்லாதனவாதலாலும், வைசேடிகமும், நையாயிகமும் கடவுளையடைதல் முத்தி என்று கொள்ளாமையாலும், `காணாபத்தியம், கௌமாரம், சாத்தேயம், வைரவம், பாசுபதம், மாவிரதம்` என்னும் மதங்களின் தேவர்கள் இழித்துரைக்கற்பாலர் அல்லராதலாலும், மேற்கூறியவாறு ஏற்புடைய சமயங்களையே ஈண்டுக் கொள்க.
வாமமதத்தவர், `சத்தி` எனக் கூறுதல் சிவசத்தியை அன்று; விண்ணோர் குழுவுட் பெண் பாலார் சிலரையேயாம்; ஆதலின், அஃது ஈண்டுக் கொள்ளத்தகும் என்க.
இனி, ஒன்றிரண்டு குறைவனவாயினும், `அறுசமயம்` என்னும் வழக்குப்பற்றிக் கூறினார் எனக் கொண்டு, சிலவற்றையே கொள்ளினும் அமையும்.
பிரமன் மாயோன் இருவரது நிலை முன்னரே கூறப்பட்டமையின், மீண்டும் அவரை ஈண்டுக் கூறல் வேண்டா எனின், ஆண்டுக் காரணக் கடவுளராதல் பற்றி வேறெடுத்துக் கூறினார்; ஈண்டுச் சமயக் கடவுளராதல் பற்றிப் பிறதெய்வங்களோடொப்ப ஒருங்கெடுத்துக் கூறினார்.
அதனான் அஃது இழுக்கன்றென்க.
இக் கடவுளர்தாம் சிவபிரான்போல ஒருவரேயாகாது பலராதலின், `விண்ணோர்` என்று ஒழியாது, ``பகுதி`` என்றார்.
எல்லாச் சமயத்தவர்க்கும் அவரவர்கொண்ட முதற்பொருளே வீடுபேறாதல் அறிக.
எல்லா முதன்மையும் உடைய இறைவனொடு நோக்க, ஒரோவொரு முதன்மையையுடைய இக் கடவுளர்கள் மிகத் தாழ்ந்த புழுப் போல்வாராகலின், ``கீடம் புரையும்`` என்று அருளினார்.
கீடம் - புழு.
கிழவோன் - எல்லாப் பொருளையும் தனக்கு உரியனவாக உடையவன்; `முழுமுதற் கடவுள்` என்றபடி.
ஈண்டு, சிவபிரானை முதற்கடவுளாக உணரும் பேறில்லாது பிற கடவுளரையே முதற் கடவுளராக நினைந்து வழிபடுவாரது நிலைக்கு இரங்குதல் கருத்தன்றி மற்றைத் தேவரது இழிபுணர்த்துதல் கருத்தன்றாகலின், ``சமயம்`` என்றது, கடவுட்கொள்கையுடைய சமயங்களையே எனக் கொள்ளுதலே பொருந்துவதன்றி, எச் சமயத் தாராயினும் அவர் கொண்ட தத்துவத்தின் தலைவரே வீடுபேறாய் நிற்பராகலின், ``சமயம்`` என்றது, அனைத்துச் சமயங்களையுமாம் எனக் கொள்ளுதல் பொருந்தாமையறிக.
இனி, `வீடுபேறாய் நின்ற கிழவோன்` என இயைத்துரைப்பின் ``விண்ணோர் பகுதி கீடம்புரையும்`` என்பது, கவர்பொருட்டாய் இடை நிற்றல் பொருந்தாமையறிக.
இவற்றால் சிவபெருமானது முழுமுதற்றன்மை கூறியவாறு.
20-28. அருக்கன் - சூரியன்.
அவனது சோதி, நாள்தோறும் புதுவதாய்ப் புறப்பட்டு வருதலின், அதனை நாள்தோறும் அமைத்துத் தந்ததுபோலக் கூறினார்.
இறந்த காலத்தாற் கூறியது, முன் கண்ட நாள்களில் அது நன்கறியப்பட்டமை குறித்து, திருத்தகுமதி - அழகு தக்கிருக்கின்ற சந்திரன்.
திண்திறல் - இளையாத வலிமை; என்றது, எல்லாவற்றையும் நீறாக்கும் ஆற்றலை.
பொய் - பொய்த்தல்; இல்லை யாதல்.
இது, `விசும்பென்பது ஒன்று இல்லை என்பாரது கூற்று மெய்யாகாமை குறித்தது` விசும்பு, தனக்குக் கீழுள்ள எல்லாப் பொருட் கண்ணும் உளதாதல் அறிக.
அங்ஙனம் எல்லாவற்றிலும் நிறைந்திருத் தலையே `கலப்பு` என்றார்.
விசும்பேயன்றி ஏனைய பூதங்களும் தங் கீழ் உள்ளவற்றின் வியாபகம் உடையன என்க.
மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற.
காற்றிற்கு மேன்மை, விசும்போடு ஒருபுடை ஒத்து யாண்டும் சென்று இயங்குதலும், உயிர்கட்கு உடம்பை நிலைபெறுவித்தலுமாம்.
ஊக்கம் - கிளர்ச்சி; இயக்கம்.
கண்டோன் - ஆக்கினோன்.
நீரின்கண் பிறபொருள்களின் நிழல் தோன்றுதல் அதனது தூய்மையாலாதலின், அதனை எடுத்தோதினார்.
இன்சுவை என்றது மென்மையை.
இஃது இதனைச் செய்யும் ஆற்றல் மேல் நின்றது.
`நிகழ்த்தினோன்` எனற்பாலது, `நிகழ்ந்தோன்` எனத் தொகுக்கப்பட்டது.
திண்மை - தாங்கும் வலிமை.
ஏனைய பொருள்கள் போலன்றி உயிர்கட்கு நிலத்தின்மேல் நிற்றல் எஞ்ஞான்றும் இடையறவு படாமையின், அதனது திண்மைக் குணம் மிக வெளிப்படையாக அறியப்படுவதாயிற்று.
`என்றென்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று`.
எத்தனையோ பல கோடியாய தன்மைகளை எத்தனையோ பலவாகிய பிற பொருள்களில் அது அது அவ்வத்தன்மை யுடையதாம் படி அவற்றின்கண் பொருந்தச் செய்தோன்` என்க.
`அனைத்தனைத் தாக` என ஆக்கம் வருவித்துக்கொள்க.
`அவ்` என்னும் வகரவீற்றுச் சுட்டுப்பெயர், `வயின்` என்னும் ஏழனுருபு ஏற்று, `அவ்வயின்` என நின்றது.
அஃதான்று அதுவன்றி.
இவற்றால், படைப்பின் வியத்தகு நிலைகளை விரிக்கும் முகத்தால், இறைவனது திறப்பாட்டினை வியந்தவாறு.
29-65 இவ்வடிகள் பலவற்றினும் வரும், `காண்க` என்பன யாவும் அசைநிலைகள்.
29. கண்டாய், கண்டீர் முதலியன இறந்த காலத்தவாய் நின்ற அசையாகும்; இஃது எதிர்காலத்ததாய் நின்று அசையாயிற்று.
முன்னோன் எல்லாப் பொருள்கட்கும் முன்னிடத்தில் உள்ளவன்; தலைவன்.
முன், இடமுன்.
காலமுன், ``படைப்போற் படைக்கும் பழையோன்`` (அடி.13) என்றதனால் பெறப்பட்டது.
முழுதோன் - எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்பவன்.
30.தன் நேர் - தன்னோடு ஒக்கும் பொருள்.
``தானே`` என்றதில் தான், ஏ இரண்டும் அசைநிலைகள்.
31. ஏனம் - பன்றி.
அதனது தொன்மை, அதன் எயிற்றின் மேல் ஏற்றப்பட்டது.
எயிறு - பல்.
ஒருகால் பிரளய வெள்ளத்தில் அழுந்திய நிலத்தைத் திருமால் சுவேதவராக (வெள்ளைப்பன்றி) உருக்கொண்டு கொம்பின்மீது ஏற்றிக் காத்து, பின்னர் அச்செருக்கால் உயிர்கட்கு இடர் விளைக்க, சிவபிரான் அப்பன்றியை அழித்து, அதன் கொம்பினை மார்பில் அணிந்துகொண்டான் என்பது வரலாறு.
32.கானம் - காடு.
இஃது இனம்பற்றி வந்த அடை.
உரி - தோல்.
தாருகாவனத்து முனிவர்கள் விடுத்த புலியைச் சிவபிரான் அழித்து அதன் தோலை உடுத்துக்கொண்டனன் என்பது அறிக.
33-34. நீற்றோன் - திருநீற்றை அணிந்தவன்.
``நினை தொறும் கெடுவேன்`` என்றது, இடைக்கண் ஆற்றாமை மீதூரக் கூறியதாம்.
`அவனை நினைதோறும்` என்க.
ஆற்றேன் - அவனைக் காணாது நிற்கலாற்றேன்.
கெடுவேன் - இனி, யான் அழிந்தொழி வேன்.
35. ``இன்னிசை வீணையில்`` என்றதனை, `வீணை இன்னிசையில்` என மாற்றிப் பொருள்கொள்க.
வீணையில், இல் - போல.
இசைந்தோன் - எல்லாப் பொருளிலும் நுண்ணியனாய்க் கலந்தவன்.
முன்னர் வாளா, ``முழுதோன்`` என்றார், ஈண்டு அதனை உவமை முகத்தால் இனிது விளக்கினார்.
36. அன்னதொன்று - வீணைஇசைபோல்வதோர் இன்பம்.
அவ்வயின் - தான் நிறைந்து நின்ற அவ்விடத்து; என்றது உயிரையே எனக்கொள்க.
அறிந்தோன் - உயிர்கள் பொருட்டு அறிந்து நிற்பவன்.
இறைவன் பெத்தம் முத்தி இரண்டினும் உயிர்கட்கு விடயங்களை அறிவித்தலேயன்றி, அறிந்தும் நின்று உதவுவன் என்பதைச் சிவஞானபோதப் பதினொன்றாம் சூத்திரத்து முதல் அதிகரண பாடியத்துள் இனிது விளங்க விரித்துரைத்தமை காண்க.
37. பரமன் - மேலானவன்.
பழையோன் - மேன்மையை என்றுமே இயல்பாக உடையவன்.
39. அற்புதன் - பிறவிடத்துக் காணலாகாத தன்மைகளை யுடையவன்.
அநேகன் - பொருளால் ஒருவனாயினும், கலப்பினால் எண்ணில்லாதவனாய் இருப்பவன்.
இஃது ஒருவனே பல பொருளாய் இருத்தலை வியந்தவாறு. 40. சொற்பதம் - சூக்குமை வாக்கின் நிலை.
அது, நாத தத்துவம்.
சத்தப் பிரமவாதிகள் `நாதமே பிரமம்; அதனின் மேற்பட்ட பொருள் இல்லை` என்பர்; அஃது உண்மையன்று என்றற்கு, `அதனைக் கடந்த தொல்லோன் இறைவன்` என்று அருளினார்.
41. `சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்` சிவஞான சித்தி சூ 4.28. கூறுதல் வழக்கமாதலின், இங்கு, `சித்தம்` என்றது, உயிரினது அறிவையாம்.
அஃது அந்நாத தத்துவத்தையும் கடந்து தன்னையே பொருளாக உணர்ந்து நிற்பதாகும்.
இனி, ``சொல்`` என்றதை மத்திமை வைகரி வாக்குக்களாகக் கொள்ளின், சித்தம், அந் தக் கரணமேயாம்.
இப்பொருட்கு, `பதம், அளவு` என்றாகும்.
மாண், மாட்சி என வருதல்போல் சேண், `சேட்சி` என வந்தது.
சேண் - தொலைவு.
இதனை, `வலை` என்றது ஏகதேச உருவகமாகலின், அதனுள் அகப்படுகின்ற மான் ஆகின்றவன் என உரைக்க.
உரைக்கவே, அது பெரியோன் என்னும் பொருளையும் தோற்றுவித்தல் காண்க.
`முதற்பொருள் ஒன்றே` என்றல் அனைவர்க்கும் உடன்பாடாதலின், முழுமுதற் கடவுளாய சிவ பெருமானையே ``ஒருவன் (ஏகன்)`` என்று உபநிடதம் கூறுதல் பற்றி, (சுவேதாசுவதரம்.
), ``ஒருவன் என்னும் ஒருவன்`` என்று அருளினார்.
`ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர்மதிச் சடையன்` (திருவாய்மொழி) எனப் பிறரும் கூறினார்.
44. பொழில் - உலகம். முன்னர் ஒடுங்கிநின்று, பின்னர் விரிந்ததென்பார், ``விரிபொழில்`` என்றும், விரியுங்கால் தானே விரிய மாட்டாதாகலின், அதற்குப் பற்றுக்கோடாய் நின்று விரியச்செய்து, பின்னும் நீங்காது நிற்கின்றான் என்பார். ``முழுதாய் விரிந்தோன்`` என்றும் அருளினார். ``பற்றி யுலகை விடாதாய் போற்றி`` (தி.6.ப.55.பா.6) என்றருளியதும் இதுபற்றி. `பிரபஞ்சம்` என்னும் வட சொற்கும், `விரிவுடையது` என்பதே பொருளாதல் அறிக.
45. அணுத் தரும் தன்மை இல் - `ஆணவத்தால் தரப்படுகின்ற தன்மை இல்லாத; அதனால் பற்றப்படுதல் இல்லாத` என்றபடி. அணுத் தன்மையைச் செய்வதனை `அணு` என்றார். `ஐயன்` என்பது, `ஐயோன்` என்று ஆயிற்று.
ஐயன் - வியப்பினன். பிறர் எல்லாரும் அணுத் தன்மை எய்தியிருக்கத் தான் ஒருவனும் அதனை எய்தாதிருத்தலின் வியப்பாயிற்று.
46. இணைப்ப அரும் பெருமை இல் - தனது பெருமையோடு ஒப்பிப்பதொரு பெருமை இல்லாத.
47. ``அரியோன்`` என்றது, வாளா பெயராய் நின்றது.
48. மருவி - வேறறக் கலந்து நின்று. அறிவில் பொருள்களில் அவற்றின் குணங்களையும், அறிவுடைப் பொருளில் அவற்றின் அறிவுகளையும் வளர்க்கின்றான் ஆதலின், ``எப்பொருளும்`` என்றார்.
49. ``நூல்`` எனப் பொதுப்படக் கூறினும், ஈண்டுச் சமய நூல்களே கொள்ளப்படும். எல்லாப் பொருள்களையும் அறிதல்போல அவற்றால் அளவிட்டறிதற்கு வாராமையின், அவைபற்றி உணரும் உணர்விற்கு உணரவாரான் என்றார்.
``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ`(தி.3.ப.54.பா.3)
எனவும்,
``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான்புகில் அளவில்லை கிளக்க வேண்டா
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . எந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்``
(தி.3.ப.54.பா.4) எனவும்,
``ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர் விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்``
(தி.3 ப.54 பா.3, 4, 5) எனவும்,
``நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக`
(தி.11 அற்புதத் திருவந்தாதி-33) எனவும் பிற திருமுறைகளினும் இவ்வாறே அருளிச்செய்தல் காண்க.
50. மேலொடு கீழாய் விரிதல். எல்லாப் பொருளையும் தனது வியாபகத்துள் அடக்கிநிற்றல்.
51. அந்தம் - அழிவு. ஆதி - தோற்றம்.
52. பந்தம் - பிறப்பு நிலை. வீடு - அது நீங்கிய நிலை. இவ் விரண்டையும் உயிர்கட்கு உளவாக்குவோன் இறைவனே யாதல் அறிக. இவையே, `மறைத்தல். அருளல்` என்னும் இருதொழில்களாகக் கூறப்படுகின்றன; மறைத்தலின் விரிவே, படைத்தல் முதலிய மூன்றும்.
53. நிற்பது - அசரம். செல்வது - சரம். இவற்றால் பல்வகைப் பிறவிகளையும் குறித்தவாறு.
54. `கற்பம், ஊழி` என்பது முன்பே கூறப்பட்டது. அதன் நிகழ்ச்சி முழுவதையும், அதன் முடிவிற்குப் பின்னுள்ள நிலையையும் காண்பார் இறைவனையன்றிப் பிறர் இன்மையானும், அவை எண்ணில்லாதனவற்றை அவன் கண்டவன் ஆகலானும், ``கற்பமும் இறுதியும் கண்டோன்`` என்றார்.
55. யாவரும் பெற உறும் - முடிவில் யாவராலும் பெறுதற்கு உரியவனாய் நிற்கின்ற. முடிவு - அறியாமையால் உழன்றுதீர்தல். எனவே, `தேவராலும்` என்றது, அதற்கு இடையிலாயிற்று. `பெறுதல், உறுதல்` என வந்த சொற் குறிப்புக்களையும் ஓர்ந்துணர்க.
56. ``தேவரும்`` என்ற சிறப்பும்மையால் ஒருவரேனும் அறியாமை பெறப்பட்டது.
57. உயிரில் பொருளை, `அலி` என்றல் வடநூல் வழக்கு. இவ்வழக்குப்பற்றி அடிகள் சில விடங்களில் ஓதுதலைப் பின்னருங் காண்க. பெற்றி - தன்மை. உயிர்ப்பொருள்கள் பலவும் `பெண், ஆண்` என்னும் இருகூற்றனவாய்க் கூடிக்கலந்து வாழவும், உயிரில் பொருள்களை அவ்வாழ்விற்கு உதவவும் வைத்து. தான் அவையே யாய் நிற்கும் நிலையை, ``பெண் ஆண் அலி எனும் பெற்றியன்`` என்று வியந்தார். உயிர்ப்பொருளிடத்தே உள்ள, `அலி` என்பதொரு பிறப்பும் ஈண்டுக் கூறியதனுள் அடங்குதல் காண்க. உயிருடைய அலிப் பிறப்பு, இன்பமொழித்து ஒழிந்த புருடார்த்தங்களுள் அறத்தை யேனும், வீட்டையேனும் எய்துமாயின், வேறெண்ணப்படும்; இல்லையேல், உயிரில்லவற்றோடு ஒன்றாயொழியும் என்க;
58-65. `அத்தகையோனை யானும் கண்ணால் கண்டேன்` என உரைக்க. அவனைக் கண்ணால் கண்டவர் சிலர்; அவருள் யானும் ஒருவன் என்பது பொருளாகலின், உம்மை இறந்தது தழுவிற்றாம். ``சுரக்கும்`` எனக் குறிப்புருவகம் செய்து, சொற்பல்காவாறு ஓதினமை யின், `அவன் அருளாகிய அமுதத்தைச் சுரப்பதோர் ஊற்றென்றல் மெய்யேகாண்` என, தாம் கண்ணாற் கண்டு பெற்ற அநுபவத்தைக் கிளந்தோதியவாறாக உரைக்க. பின்வரும் தொடர்களும் அன்னவாம். அவற்றை, `அவனது கருணையின் பெருமை எத்தகையது என யான் கண்டேன்; அஃதாவது, தனது சிவந்த திருவடிகளை என் பொருட்டு நிலத்தில் தோயவைத்து வந்தான்; அவன் நம்மனோர் போலக் காணப்படினும், பிறப்பிற்பட்டுத் தோன்றாத அருட்டிரு மேனியே அவனது திருமேனி என்று யான் தெளிவாக உணர்ந்தேன்; ஆகவே, சிவபெருமான்தான் என்னை வந்து ஆட்கொண்டான்; அவன் மாதொரு கூறன்தான்; எஞ்ஞான்றும் அவளும் தானுமாகப் பிரியாது உடனாய் இருப்பவனே` என முடிக்க.
அடிகள், சிவபிரான் தம்மை வந்து ஆண்டுகொண்டருளிய உண்மையை அநுபவமாக மிகவும் தெளிவுபட இப்பகுதியில் இனி தெடுத்து அருளிச் செய்திருத்தல் நம்மனோர்க்கும் பெரிதும் பயன் தருவதாம். சிவபெருமான், பிறப்பிறப்பில்லாதவன் ஆகலானும், தம்மை ஆளவந்த திருமேனி நம்மனோரது உடம்புகள் போல எழு வகைத் தாதுக்களாலாயதாக் காணப்படாது, தண்ணிய சேயொளிப் பிழம்பாய்க் காணப்பட்டமையானும், சிவபெருமானே நேர்பட வந்து தம்மை ஆட்கொண்டான் என அடிகள் தெளிந்தார் எனவும், சிவபெருமான் மாதொரு கூறனாய் நிற்றல், தான் எத்துணையும் பெரியோனாயினும், எத்துணையும் சிறியவாய உயிர்கள் மாட்டுக் கைம்மாறு கருதாத பேரிரக்கமாகிய பண்பினையும், அது காரணமாக யாவரையும் அவரவரது நிலைக்கேற்ப இயைந்து நின்று ஆட்கொள்ளுதலாகிய செயலையும் உடையவன் என்பதை விளக்கு வதேயாகலானும், அப்பண்பையும், செயலையும், அடிகள் நேரே கண்டமையானும், தம்மை ஆட்கொண்ட பெருமான் மாதொரு கூறனாய், அவளோடு நீங்காதே நிற்பவன்தான் என்பதையும் தெற்றெனத் தெளிந்தார் எனவும் கொள்க. உடனாய் இருப்பவரை, ``உடன்`` என்று அருளினார். சிவபெருமான் மாதொரு கூறனாய் நிற்றல் மேற்கூறியவற்றையே வலியுறுத்தும் என்பதனை,
``தீதுறுவ னானால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொருகூ றல்லனோ மற்று``
(திருக்களிற்றுப்படியார்-42) என விளக்குதல் காண்க. ``உடனே`` என்றதன்பின், `ஆகலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, ``மேகன்`` என்னும் (அடி.95) வினைக்குறிப்போடு முடிக்க.
66-95. இப்பகுதியில், அடிகள், சிவபெருமான் தம்மைத் திருப்பெருந்துறையில் வந்து ஆட்கொண்டு அருள்புரிந்த சிறப்பினை நீண்டதொரு முற்றுருவகத்தால் மிக்க அழகுபட விரித்தருளுகின்றார்.
பரமானந்தம் - மேலான இன்பம்; பேரின்பம். அது, பகுதிப் பொருள் விகுதி. ஏகாரம், பிற பொருளினின்றும் பிரித்தலின், பிரி நிலை. கருமாமுகில், சிலேடையுருவகம்; `உருவமென்னும் சிறந்த சூல் கொண்ட கரிய மேகம்` என்பது பொருள். முகிலின் - முகிலாய், வரை- மலை. `திரு மின்` என இயைத்து, `அழகென்னும் மின்னல்` என உரைக்க, பந்தனை - கட்டு. `பந்தனையாகிய அரவு (பாம்பு)` என்க. வாள் - கொடிய. இரிய - அஞ்சி நீங்க. வெந்துயர் - கொடிய துன்பம். மா - பெரிய. `கோடை தனது பெரிய தலையை மறைத்துக்கொள்ள` என்க. பெரிய கோடை முழுதும் நீங்கினமையைப் பான்மை வழக்கால் இங்ஙனங் கூறினார். நீடு எழில் தோன்றி - பெருகும் இன்பமாகிய தோன்றிப் பூ. வாள் ஒளி மிளிர - மிக்க ஒளி விட்டு விளங்க. `துயர் கரப்ப` என்றமையால், தோன்ற வேண்டுவது இன்பமேயாம் ஆதலின், ``எழில்`` என்று, அதனைத் தருவதாய இன்பத்தைக் குறித்து. எமது பிறவியின்மேற் கோபம் மிகக் கொண்டு என்றது. மழைக்காலம், `இந்திர கோபம்` என்னும் வண்டினை மிகக் கொண்டிருத்தலைச் சிலேடை வகையாற் குறித்தவாறு. எனவே, இறைவன் அடிகளது பிறவிமேற்கொண்ட கோபமே இந்திர கோபமாக உருவகிக்கப்பட்ட வாறாயிற்று. முரசு எறிந்து - முர செறிந்தாற்போல. `முழங்கி` என்றது, அழைத்தருளினமையை; ``அறைகூவி ஆட்கொண்டு`` என்றல் காண்க.
அஞ்சலி - கூப்பிய கை. காந்தள் கைக்கு உவமையாதலும், மழைக்காலத்துத் தோன்றுவதாதலும் அறிக. ``பூ`` எனப்பட்ட உவமையாகிய தாமரையும், உருவகத்தின்கண் வந்த காந்தளும் அரும்பெனவே கொள்க. ``காட்ட`` என்றது, `தோன்ற` என்றபடி. எஞ்சா - குறையாத. ``அருள்`` என்றது, அருண்மொழியாகிய உபதேசத்தையும், திருநோக்கு பரிசம் முதலிய செயல்களையும். இவற்றை, `தீக்கை` என ஆகமங்கள் கூறும். துளிகொள்ள - குறிப்புருவகம். `பெய்ய` என்றவாறு. செஞ்சுடர் வெள்ளம், சிலேடை யுருவகம். `சிவந்த ஒளியை யுடைய வெள்ளம்` என்றும் `செவ்விய ஞானமாகிய வெள்ளம்` என்றும் பொருள் தந்தது. புதுவெள்ளம் சிவந்து தோன்றுதல் இயல்பு, தீக்கைகள் பலவாய் நிற்றலின் அவற்றை மழைத்துளிகளாகவும், அவை அனைத்தினாலும் விளங்கும் ஞானம் ஒன்றாய் மிக்கெழுதலின் உருவகம் செய்தார். திசை - இடம். `திசை தோறும்` என்க. `திசை` என்றது, அடியவரை, தெவிட்டுதல் - நிரம்புதல். வரையுற - மலைபோல; இதனை, ``ஓங்கி`` என்பதற்கு முன் கூட்டுக. கேதம் - குற்றங்கள். அவை, காமம், குரோதம் முதலியன. குட்டம் - பள்ளங்கள். கை அற - தூர்ந்து இடம் அற்றுப்போகுமாறு. ஓங்கி - மேலெழுந்து. இருமுச்சமயம், `உலகாயதம் பௌத்தம், மீமாஞ்சை , மாயாவாதம் , நையாயிகம், பாஞ்சராத்திரம்` என்னும் இவையென்க. இவைகளை அடிகள் சில விடங்களிற் கிளந்தோதுதல் அறிக. பேய்த்தேர் - கானல் நீர், சமயங்களைக் கானல் நீர் எனவே, `மான் கணம் எனப்பட்டோர், வீடுபேறு வேண்டி அவற்றில் நின்றோர் என்பது அமைந்து கிடந்தது. மான்களின் கண்கள் அழகும் மருண்ட பார்வையும் உடையனவாய் நுனித்து நோக்கும் இயல்பினவாதலின், ``நெடுங்கண்`` என்றார். அதனானே பொருட்கண்ணும், மெய்ப் பொருளை ஆராயும் ஆராய்ச்சியைத் தலைப்பட்டுப் பலநூல்பற்றிப் பலவாறாக ஐயுற்று நுனித்து ஆராயும் அவரது தன்மை பெறப்பட்டது. `தவமாகிய வாய்` என்க. வேட்கை மிகுதியால் பருகுதல் தோன்ற, `பெருவாய்` என்றார். அதனானே, ஞானத்திற்குத் தவமே சிறந்த வாயில் என்பதும் குறித்தவாறாயிற்று. பெருமணல்வெளியில் கடுங் கோடைக்கண் கானல் தம் அருகிலே நிரம்பத் தோன்றுமாதலின், அதனை மான்கள் வாய்வைத்துப் பருகும் என்க. பருகினும் வெறுந் தோற்ற மாவதன்றி, நீராய் வாயிடைப் புக்கு வேட்கையைத் தணியா மையின், ``அசைந்தன`` என்றார். அசைதல் - சோர்தல், அவம், தவத்திற்கு எதிரியதாதலை, ``தவம் செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார் - அவம் செய்வார்`` (குறள் - 266) என்றாற்போல்வன வற்றிற் காண்க. அஃதாவது பற்று நீங்காமை. தாபம் - நீர்வேட்கை. `அசைந்தனவாகிய அவ்விடத்து` என்க. இது காலத்தைக் குறித்தது. வானப் பேரியாற்று - பெரிய ஆகாய கங்கையைப் போல. அகவயின்-உள்ளிடத்து; என்றது அறிவினை. `அவ்விடத்தை மூடி மேலெழுந்து, இன்பமாகிய பெரிய சுழிகளை ஆங்காங்கு அழகுபடக் காட்டி` என்றது, `ஆன்ம போதத்தை விழுங்கிக் கொண்டு, பேரின்ப மாகிய கவர்ச்சியைப் பல நிலைகளிலும் தோற்றுவித்து` என்றதாம். சுழித்தல் - கோபித்தல். `சுளித்தல்` என வருவதும் இதுவே. பந்தம் - மயக்க உணர்வாகிய கட்டு. அஃது அறிவை ஏகதேசப்படுத்தலின், கரையாக உருவகம் செய்தார். `கரையை இடித்து` என்க. ``ஊழ் ஊழ் ஓங்கிய`` என்றது, `முறைமுறையாக வளர்ந்த` எனவும், `ஊழின் பயன் தோறும் உண்டாகிப் பெருகிய` எனவும் இருபொருள் தந்தது. மா மரம்-பெரிய மரத்தை. வேர் பறித்து - வேரோடு பறித்து வீழ்த்தி. எழுந்து - பெருகி. ``உருவ அருள் நீர்`` என்றதை, `அருள் உருவநீர்` எனப் பின் முன்னாக்கி உரைக்க. `அருள் உருவம்`` என்றது, திருக்கோயிலுள் இருக்கும் திருமேனியை. அஃது அதனைச் சிவனெனவே காணும் உணர்வையே குறித்தது. ஓட்டா - பல கால்கள் வழியாக எங்கும் ஓடப்பண்ணி. வெள்ளம் பிண்டமும், நீர் பிண்டிக்கப் பட்ட பொருளும் போலக் கோடலின், `வெள்ளம், நீரை ஓடப் பண்ணி யது` என்றார். இவ்வாறே,பொருளினும். சிவஞானம் பிண்டமும், திருமேனியைச் சிவனெனவே காணுதல் முதலியன பிண்டிக்கப்பட்ட பொருளுமாகக் கொள்க. `கால்கள்` பல தலங்கள் என்க. `அருவரைச் சந்தின்` என்றதனை, `சந்து அருவரையின்` என மாற்றி, இடை நிலங்களையுடைய அரிய மலைகள் போல என உரைக்க. வான் சிறை- பெரிய கரை; என்றது, கோயிலின் சுற்றுச் சுவர்களை. கட்டி - கட்டப் பட்டு; மட்டு அவிழ் - தேனோடு மலர்கின்ற. வெறி - வாசனை. குளவாய் - குளப் பரப்பு; என்றது கோயிலின் உள்ளிடத்தை. அங்கு மலர்கள் கொணர்ந்து நிறைக்கப் பெறுதலின், `மலரை யுடைய குளம்` என்றற்கு ஏற்புடையதாயிற்று. கோலி - வரையறுக்கப்பட்டு. கோயிலி னுள் எழுப்பப்படும் கரிய அகிற்புகையை வண்டாக உருவகித்தார். எனவே, ``குளம்`` என்றது திருக்கோயிலையாயிற்று. கறை - கறுப்பு. `கரைசேர்` என்பது பாடமன்று. மீக்கொள - மீக்கொள்ளுகையால். மகிழ்வார் - ஞானத்தைப் பெற்றவர். `அது நோக்கி` எனச் செயப்படு பொருள் வருவிக்க. சிவஞானத்தை அடைந்தோர் அதன்பின்னர்த் திருக்கோயில் வழிபாட்டினைச்செய்து, அதனால் அந்த ஞானம் பெருகி இன்பம் பயத்தலை அறிந்து மகிழ்தல் இயல்பாதலை யறிக. தொண்ட உழவர் - தொண்டராகிய உழவர். ``தொண்டர்`` என்றது, சத்திநிபாதத்து உத்தமராய் ஞானத்தைப் பெற விரும்புவோரை. இரு பெயரொட்டும், உயர்திணையாயின், புணரியல் நிலையிடை உணரத் தோன்றாது; (தொல் - எழுத்து 482.) ஏனெனில், `தொண்ட உழவன், தொண்ட உழத்தி, தொண்ட உழவர்` என்னுங்கால், நிலை மொழி, உயர்திணை முப்பாலையும் உணர்த்தி நிற்றலின் என்க. அண்டத்து அரும்பெறல் மேகன் - எவ்வண்டத்திலும் பெறுதற்கரிய மேகம் போன்றவனாயினான். இங்கு ``மேகம்போன்றவன்`` என உவமை வகையாற் கூறியதனை மேல், உருவக வகையால் ``கருமாமுகிலின் தோன்றி`` என்றாராகலின், கூறியது கூறலாகாமை யறிக.
இவ்வுருவகங்களைத் தொகுத்துக் காணுங்கால், `பேரின்ப மாகிய கடல், ஆசிரியக் கோலமாகிய மேகமாய்த் தோன்றித் திருப் பெருந்துறையாகிய மலையை அடைந்து, எமது பிறவியின் மேற் கோபம் மிகுத்து, முரசு எறிந்தாற்போல அழைப்பொலியாகிய இடி முழக்கத்தைச் செய்து, அருட்செயல்களும் அருள் மொழிகளுமாகிய நுண்டுளிகளைச் சொரிய, அதன்பயனாக செவ்விய ஞானமாகிய வெள்ளம் பலவிடத்தும் உள்ள அடியார்களாகிய இடங்களெல்லாம் நிறையும்படி மலைபோல ஓங்கியெழுந்து, எம் உள்ளத்திடத்துப் பாய்ந்து, இன்பமாகிய சுழிகளை ஆங்காங்கு உளவாக்கி, உருவ வழி பாட்டுணர்வாகிய நீரைப் பல தலங்களாகிய கால்களிலும் ஓடச்செய்து, திருக்கோயிலாகிய குளத்தில் நிறைய, அதனால் சிவஞானம் பெற்ற அப்பெரியோர் மேன்மேலும் மகிழ்ந்து இன்புறுதலின், அதனைக் கண்டு தொண்டர்களாகிய உழவர்கள், வழிபாடாகிய வயலுள், அன் பாகிய விதையை விதைத்து, சிவபோகமாகிய விளைவை நிரம்பத் துய்க்குமாறு அருள்புரிந்த மேகம் போன்றவனாயினான்` என்றாகும்.
இவற்றிடையே, அருளாகிய மழை பொழியுங்கால், திரு மேனியின் அழகாகிய மின்னலின் ஒளி எத்திசைகளிலும் விரிந்தன; அழைப்பொலியாகிய இடி முழக்கினால், ஐம்புல அவாவாகிய பாம்புகள் அஞ்சியோடின; அதன்பின் துன்பமாகிய கோடை முழுதும் ஒழிந்தது; இன்பமாகிய தோன்றிப் பூக்கள் அழகாக மலர்ந்தன; அடியவர்களது கூப்பிய கைகளாகிய காந்தள் அரும்புகள் காணப்பட்டன; ஞானமாகிய வெள்ளம் குற்றங்களாகிய பள்ளங் களைத் தூர்த்து, அறியாமையாகிய கரையைத் தாக்கி அலைத்து இடித்துவிட்டது; வினையாகிய பெரிய மரங்களை வேரோடு பறித்து வீழ்த்திற்று; நல்லோராகிய மான்களின் கூட்டம் ஆறு சமயங்களாகிய கானல் நீரைத் தம் தவமாகிய வாய் வழியே பருகியும் ஞானமாகிய நீரைப் பெற்று வீண்முயற்சிகளாகிய தாகம் தணியாது சோர்ந்திருக்குங் காலத்தில், இவையெல்லாம் எங்கள்பால் நிகழ்ந்தன` எனக் கூறப் பட்டது. இவற்றால், இறைவன் திருப்பெருந்துறையில் ஞானாசிரியனாய் வந்து அடிகளையுள்ளிட்ட அடியார் சிலர்க்கு ஞானத்தை அருளினமை, அவர்களேயன்றி, அஞ்ஞான்று பக்குவம் எய்தி னோரும், பின்னர்ப் பக்குவம் எய்துவோரும் ஆகிய ஏனைய அடியவர்களும் பயன்பெறுதற்கு ஏதுவாயினமையை விரித்தவாறு.
இங்ஙனம் இறைவன் அருளாகிய மழையைப் பொழிந்து அடியார்களை வாழ்வித்த சிறப்பினைப் பெரிதும் வியந்து, அவனை வாழ்த்திய அடிகள், இதனைத் தொடர்ந்து மேலும் பலவாற்றால் அவனுக்கு வாழ்த்தும், போற்றியும் கூறுகின்றார்.
96. பணம் - பாம்பின் படம்; அஃது ஆகுபெயராய், அதனையுடைய பாம்பைக் குறித்தது, முன்னின்ற, `கருமை` யென்னும் அடை, ஆகுபெயர்ப் பொருளாகிய பாம்பை விசேடித்தது, கரிய கச்சு அழகைத் தருவதாதல் அறிக.
97. ஆதி - முதல்வன்,
98. அச்சம் - பிறவிபற்றி வருவது. சேவகன் - வீரன்; இது, பிறர் அது மாட்டாமை உணர நின்றது.
99. நிச்சல் - நித்தல்; போலி. ஈர்த்து ஆளுதல், வலிய அழைத்து ஆட்கொள்ளுதல் பல்வேறிடங்களில், பல்வேறு அடியார்களைப் பல்வேறு வாயால் ஆட்கொள்ளுதலை, இடையறாது செய்தலின், `நிச்சலும்` என்றார். `அடியார்களை` என்பது வருவிக்க.
100. சிவஞானத்திற்குத் தடையாகப் பலவாற்றால் வரும் பிராரத்த கன்மங்களின் விளைவை, ``சூழ் இருந்துன்பம்`` என்றார். துடைத்தல், - விரைந்து வந்து நீக்குதல்; இஃது இப்பொருளதாலை, ``விழுமம் துடைத்தவர்`` (குறள் - 107.) என்பதன் உரையிற் காண்க.
101. எய்தினர் - தன்னை அடைந்தவர். ஆரமுது - தேவர் உலகத்திலும் கிடைத்தற்கரிய அமுதம்; பேரின்பம்.
102. கூர் இருள் - மிக்க இருளின்கண்; இது மகாசங்கார காலத்தை உணர்த்தும். கூத்தொடு - பலவகைப்பட்ட கூத்து நிலை களுடன். குனிப்போன் - நடிப்பவன்.
103. அமை - மூங்கில்,
104. ஏது - இயைபு. `தன்னோடு இயைதல் இல்லாதவர்க்குத் தானும் இயைதல் இல்லாத இறைவன்` என்க. தமக்கு அவ்வாறின்றிப் பெரிதும் இயைபுடைமை தோன்ற `` எம் இறைவன்`` என்றார்.
105. காதலர் - பேரன்புடையவர். எய்ப்பு - இளைத்தல்; இஃது இங்கு, கைப்பொருள் இன்றி வருந்துதலைக் குறித்தது. வைப்பு - இருப்பாக வைக்கப்பட்ட பொருள்; சேமநிதி. `பொருள் வரவு இல்லாது மெலிவுற்ற நிலையில், முன்பு வைத்துள்ள பொருள் உதவுதல் போல, அடியார்களுக்கு உதவுபவன்` என்றதாம். ``எய்ப்பினில் வைப்பு` என்றது உவம ஆகு பெயர்.
106. சிவபெருமான் உடம்பெங்கும் பாம்பை அணிந்திருப்பினும், ஒரு பாம்பைக் கையிற் பிடித்து ஆட்டுகின்றான் என்பது யாண்டும் கூறப்படும். ஆதலின், ``அரவு ஆட்டிய நம்பன்`` என்றார். இவ்வாறு கூறுதலைப் பின்னும், தேவாரம் முதலிய திருமுறைகளினும் காண்க. இது பிச்சைக் கோலத்தில் சிறப்பாகக் குறிக்கப்படும். இனி இதற்கு, `புறம்பயம்` என்னும் தலத்தில் சிவபெருமான் பாம்பாட்டி யாய் வந்து விடந்தீர்த்தான் என்பதொரு வரலாற்றினைப் பொருளாக உரைப்பாரும் உளர். நம்பன் - நம்புதற்கு (விரும்பதற்கு) உரியவன்.
107. அறிவை விழுங்கி யெழும் பேரன்பு பித்துப் போல நிற்றலின், அதனை, `பித்து` என வழங்குப. `எமைப் பித்தேற்றிய` என்றதை, `குடும்பத்தைக் குற்றம் மறைத்தான்` (குறள் - 1029) என்பது போலக் கொள்க.
108. நீறு - திருநீற்றுப் பூச்சு. இஃது இங்கு ஆசிரியக் கோலத்தைக் குறிப்பால் உணர்த்திற்று. ``வல்லோன்`` என்றது, `அவ்வாறு தோன்றி அடியார்களை ஆளவல்லவன்`` என்றபடி. `நாற்றிசை யின்கண்ணும்` என உருபும், முற்றும்மையும் விரிக்க.
109 - 110. நடப்பன - சரம்; நிற்பன - அசரம்; இவை இரண்டு உயிர் வகைகள். ``கிடப்பன`` என்றது, `செயல் இல்லன` என்னும் பொருட்டாய், உயிரில் பொருளைக் குறித்தது.
இஃது இறுதிக்கண் வைக்கற்பாலதாயினும், இசையின்பம் நோக்கி இடைக்கண் வைத்தார். `நட, கிட` என்னும் தன் வினைப் பகுதிகள், இறுதி நீண்டு அளபெடுத்து, பிறவினைப் பகுதிகளாயின. `எழூஉ, உறூஉ` முதலியனபோல. எனவே, ஈண்டுப் போந்த அளபெடைகள் யாவும் சொல்லிசை நிறைக்கவே வந்தனவாதல் அறிக. ``நடாஅய், கிடாஅய்`` என்றவற்றில், யகரமெய் வினையெச்ச விகுதி. `ஆய், போய்` என்பவற்றிற் போல. `நடப்பனவற்றை நடத்தி, கிடப்பனவற்றைக் கிடத்தி, நிற்பனவற்றை நிறுத்தி` என்றது, `பல்வேறு வகையான எல்லாப் பொருள்களையும் படைத்து` என்றவாறு.
111. இங்ஙனம், எல்லாவற்றையும் படைப்பினும், தான் அவற்றிற்கு அகப்படாது அப்பாற்பட்டவன் என்றற்கும், `அவை போலத் தோன்றி ஒடுங்குபவன் அல்லன்` என்றற்கும், `சொற்பதங் கடந்த`` என்றும், ``தொல்லோன்`` என்றும் கூறினார். ``சொற்பதம்`` என்றதற்குப் பொருள் மேலே உரைக்கப்பட்டது.
112. உள்ளத்து உணர்ச்சி - கருதலளவை. கொள்ளவும் - கருதவும். கொள்ளுதல், கருதுதல் ஆதலை, `கொள்கை, கோட்பாடு` என்பவற்றால் அறிக.
113. ``புலன்` என்றது, பொறியை. `காட்சி` என்பது, காணப் படுதலைக் குறித்து நிற்றலும் வழக்கேயாதலின், ஈண்டு அவ்வாறு நின்றது.
114. வெளிப்பட - தோன்றும்படி. வகுத்தோன் - வகைபடத் தோற்றுவித்தோன்.
115. உயர்ந்து - சிறந்து. பூவிற்கு நாற்றம் சிறந்தவாறு போல எல்லாப் பொருட்கும் சிறந்தவன் இறைவன் என்றபடி.
116-117. `பெருமை எளிவந்து` என, பண்பு பண்பியோடு சார்த்தி முடிக்கப்பட்டது. இவ்வாறன்றி, `இன்றெனக்கு எளிவந்து இருந்தனன்`` எனப் பின்னர் வருவதன் பொருளே இதற்கும் பொருளாக உரைப்பர்.
`எளிது` என்பது ஈறு குன்றி, `வருதல்` என்பதனோடு புணர்ந்து, `எளிவருதல்` என நிற்றல் செய்யுள் முடிபு. அவ்வாற்றானே இங்கு `எளிவந்து` என வந்தது என்க, ``அருளி`` என்றது, துணை வினை. இதனானே, எளிவந்தது, அருளால் என்பது போந்தது.
118. ஆக்கை - உடம்பு; என்றது, அதன் தன்மையை.
``யாக்கைத் - தன்பரிசும் வினையிரண்டும் சாரும்மலம் [மூன்றும் அற
அன்புபிழம் பாய்த்திரிவார்``
(தி.12 கண்ணப்பர் புரா. 154) என்று அருளிச்செய்தார் சேக்கிழார் நாயனாரும். ஒண்பொருள் - தூய்தாகிய பொருளாய் உள்ளவன். `ஆதலின், எனது யாக்கையின் மாசினை ஒழித்தான்` என்றதாம்.
119. ``இருந்தனன்`` என்றது வினையாகலின், `அவனுக்கு` என்பது வருவிக்க.
120. அளிதரல் - நெகிழ்தல்; இஃது அன்பினால் ஆவதாம். எனவே, மேல், ``அன்புபிழம்பாய்த் திரிவார்`` எனக் காட்டிய நிலையே அடிகள் மாட்டும் அமைந்தமையறிக.
121. ஊற்று இருந்து - இன்ப ஊற்றாய் உள்ளிருந்து, உள்ளம் - அடியார்களது உள்ளங்களை. களிப்போன் - களிக்கச் செய்வோன். `களிப்பிப்போன்` என்பது, `களிப்போன்` எனக் குறைந்து நின்றது. ``செய்தோன், களிப்போன்` என்பவற்றில் நான்கனுருபு தொகுத்தலாயிற்று.
122-123. மேல் இறைவனது பெருமையை விதந்தோதிப் போற்றியவர் இனி அவனது அருமையை விதந்தருளிச் செய்கின்றார். தாங்கற்கரிய பேரின்ப வெள்ளம் எங்கும் பரந்து அலையெறியாநிற்ப, அதனைப் பெற்றுப் பேணமாட்டாத மாசுடம்பினைச் சுமத்தலாகிய துன்ப நிலையை யான் விண்ணப்பித்திலேன்; `ஆயினும்` என்பது இவ்வடிகளின் பொருள். `ஆயினும்` என்பது சொல்லெச்சம். இது, `காட்டியருளலும்` என வருவதனோடு (அடி 149) முடியும்.
124-126. மரகதம் - பச்சைமணி. குவால் - குவியல். மா மணி- சிறந்த மணி. பிறக்கம் - மிகுதி; இதுவும் குவியல் என்றவாறாம். மரகதக் குவியலும் மாணிக்கக் குவியலும் இணைந்து மின்னுகின்ற ஒளியை உடைய ஓர் அழகிய ஒளி; சிவசோதி. இது, `சத்தியின் கூறாகிய நீல ஒளியையும், தன் கூறாகிய செவ்வொளியையும் கொண்டது` என்பதை `கிருஷ்ண பிங்களம்` என மகாநாராயணோபநிடதம் கூறுமாற்றால் அறிக.
திகழ - தம்முன் விளங்க. திசை, இங்குக் கீழும், மேலும். முகன், `முகம்` என்பதன் போலி, `பக்கம்` என்பது இதன் பொருள். சிவசோதியை, கீழும் மேலும் சென்று அதன் அடியையும் முடியையும் தேடினோர் திருமாலும், பிரமனும் என்பதும், அவர் அங்ஙனம் தேடிக் கண்டிலர் என்பதும் வெளிப்படை. இது முதலாக, ``ஒளித்தும்`` என வருவன பலவற்றுள்ளும் உள்ள உம்மைகள் உயர்வு சிறப்பினவாம். இது தேவர்க்கு அரியனாயினமையை அருளியவாறு.
127. முறையுளி - முறைப்படி. ஒற்றி - மனத்தைப் பொருத்தி. முயன்றவர் - சரியை கிரியைகளைச் செய்தவர், அவர்கட்கும் இறைவன் மறைந்து நின்றே பயன் தருதலின், ``ஒளித்தும்`` என்றார்.
128-129. யோகநெறியில் தியான சமாதிகளில் நிற்பவரை, ``ஒற்றுமைகொண்டு நோக்கும் உள்ளத்து உறைப்பவர்`` என்றார். உறைத்தல் - பிறழாது அழுந்தி நிற்றல். உலகருள் இவர் தம் சுற்றத்தார் இவரது செயலைக்கண்டு இரங்குவராதலின், ``உற்றவர் வருந்த`` என்றார். இவர்கள் இறைவனைக் காண்பதும் பாவனையே யாதலின், அவர்கட்கும் இறைவன் தோன்றானாயினான்.
130. மறைத்திறம் - வேதத்தினது கூறுபாடுகள். அவை, `கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம்` என்பன. இவை முறையே, வேள்வி முதலிய கன்மங்களையும் தகர வித்தை முதலிய உபாசனைகளையும், `தத்துவ ஞானம்` எனப்படும் மெய்ப்பொருள் உணர்வையும் கூறும். வேதத்தின் ஞான காண்டம் முதற்பொருளின் இயல்பைச் சூத்திரம்போலக் குறிப்பாற் கூறுதலல்லது, உரைபோல இனிது விளங்கக் கூறாமையின், அதன்வழியானும் இறைவனை உணர்தல் கூடாதாயிற்று. வேதத்தின் ஏனைய பகுதிகளின்வழி உணர லாகாமை வெளிப்படை. `மறைத்திறத்தால்` என, மூன்றாவது விரிக்க.
131-132. ``தந்திரம்`` என்றது, சிவாகமங்களல்லாத பிற ஆகமங்களை. காண்டும் - காண்போம். இன் இரண்டும் ஏதுப் பொருளவாய ஐந்தனுருபுகள். ``அவ்வயின்`` என்றது, முன்னர்ப்போந்த ``காண்டும்`` என்றதனைச் சுட்டிநிற்றலின், `அங்ஙனம் காணுதற்கண்` என உரைக்க. இதன்பின், ``ஒளித்தும்`` என்றது, சிறிதும் தோன்றாமையை. சிறிதும் தோன்றாது மறைதல், புத்த அருக ஆகமங்களின்வழிக் காணலுறுவார்க்காம். அவர் இறைவனைக் காண முயல்வாரல்லரெனின், அஃ து உண்மையாயினும், பேரா இயற்கை (குறள்- 370.)யாகிய வீடுபேற்றைப்பெற விழைந்து முயலுதலானும், வீடு சிவ பெருமானின் வேறன்றாதலானும் இங்ஙனம் கூறினார். தந்திரம், `நூல்` எனவும் பொருள் தருமாதலின், சாங்கியம் போல்வனவும் கொள்ளப்படும் என்க.
133-135. பாஞ்சராத்திரம், பாசுபதம் முதலிய ஆகமங்களின் வழிக் காண முயல்பவர்களில் சிலர்க்கு ஆண்வடிவாயும், சிலர்க்குப் பெண்வடிவாயும், சிலர்க்கு அஃறிணைப் பொருள் வடிவாயும் தோன்றி மறைந்து தனது உண்மை நிலையைக் காட்டாதொழிதலை இவற்றுட் குறித்தருளினார். ஆண் வடிவில் தோன்றுதல் பாஞ்ச ராத்திரம், பாசுபதம் முதலிய தந்திரங்களின்வழிக் காணப்புகுவார்க்கு எனவும், பெண்வடிவில் தோன்றுதல் யாமளம், வாமம், முதலிய தந்திரங்களின் வழிக் காணப்புகுவார்க்கு எனவும், அஃறிணைப் பொருள் வடிவில் தோன்றுதல் மிருதி முதலியவற்றின்வழிக் காணப் புகுவார்க்கு எனவும் கொள்க. மிருதி முதலியவற்றின்வழி நிற்போர் மந்திரங்கள், ஞாயிறு முதலிய சுடர்கள், கங்கை முதலிய பல தீர்த்தங்கள் முதலானவையே பயன் தருவன எனக்கருதி வழிபடு வோராதல் அறிக. இவர்களை இறைவன் புத்தர் முதலியோரைப்போல் வெறுத்தொதுக்காது, அருளோடு நோக்கி, இன்னும் தன்னை மிக அணுகிவருமாறு பற்றிக்கொண்டு, இவ்வாற்றாலெல்லாம் பயன் தருதலால், ``முனிவற நோக்கி நனிவரக் கௌவி`` என்றும், அவ்வாறு அருளினும் தனது உண்மை இயல்பை இவர்கட்குக் காட்டாமையின், ``ஒளித்தும்`` என்றும் அருளிச் செய்தார். எனவே, ``அவ்வயின் ஒளித்தும்`` என்றது, இத்தந்திரத்திற் காண்டும் என்று இருந்தோருள் ஒரு சாரார்க்கு என்பதும், தோன்றி, பெயர்ந்து ஒளித்தும்`` என்றது, அவருள் வேறு சில சாரார்க்கு என்பதும் போந்தன. இத்துணையும் மக்களுள் இல்லற நிலையில் நிற்பார்க்கு அரியனாயினமை கூறிய வாறு.
136-138. ``சேண்வயின்`` என்றதனை, இவற்றொடு கூட்டுக. ஐம்புலன் - ஐம்புல ஆசை; `அவற்றைச் சேண்வயின் நீங்கப் போக்கி` என்க. சேண்வயின் - சேயதாய இடம். அருவரை - ஏறுதற்கு அரிய மலை. துற்றவை - உண்டவை; நுகர்ந்த இன்பங்கள். ``துறந்த`` என்றது, `வெறுத்துநின்ற` என்றவாறு. `வெற்றாக்கை, உயிராக்கை` எனத் தனித்தனி இயையும். உணவைத் தானும் உண்ணாது விடுத்தலின், ``வெற்றாக்கை`` என்றார். `வெற்றாக்கை` என்றே ஒழியின், `உயிரில்லது` எனப் பொருள்படுமாகலின், `உயிராக்கை` என்றும் அருளினார். தவர் - நீர்பலகால் மூழ்கல் முதலிய நாலிருவழக்கினையுடைய தாபதர்கள் (புறப்பொருள் வெண்பா மாலை-168.). காட்சி - அறிவு. திருந்த - அறிவராய் (ஞானிகளாய்)த் திருந்துமாறு. இது, துறவற நிலையில் நின்றார்க்கு அரியனாயினமை அருளியவாறு. இவர் கிரியா குருவைப் பெற்று இந்நிலையில் நின்றதல்லது ஞான குருவைப் பெறாமையின், இவர்க்கு இறைவனது உண்மை இயல்பு விளங்காதாயிற்று.
139. அறிவு, அநுபவமுடைய நல்லாசிரியரால் அறிவுறுக்கப் பெற்ற உண்மைப் பொருளைப் பெற்ற அறிவு. அது, பின்னர் அப் பொருளை அளவைகளானும் பொருந்துமாற்றானும் ஆராய்தலை, ``ஒன்று உண்டு, இல்லை என்ற`` என்றார். `ஒன்றாகிய மெய்ப்பொருள் உண்டு என்றும், இல்லை என்றும் ஆராய்ந்த` என உரைக்க. இங்ஙனம் ஆராயுங்காலத்து, இறைவன் எல்லாமாய் நிற்கும் கலப்புநிலை விளங்குவதன்றி, அவன் தன்னியல்பில் நிற்கும் உண்மைநிலை விளங்காமையின், இறைவன் இவர்க்கும் ஒளிப்பவனேயாகின்றான். `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
140-145. பண்டு, சரியை கிரியை யோகங்களைச் செய்து போந்த காலம். நல்லாசிரியர்பாற் கேட்டுச் சிந்தித்தகாலத்தை, `இன்று` என்றனர் என்க. ஏகாரங்கள் இரண்டும் பிரிநிலை. அவற்றாற் பிரிக்கப் பட்டு நின்றவை, அவை அடுத்து நின்ற காலத்திற்குப் பிற்பட்ட காலங்கள். சோரன் - கள்வன். தெளிதல் உணர்வில் விளங்கிய அருள் நிலையைக் கண்டு, `கண்டனம்` என்றனர். எனினும், நிட்டை நிலையை அடையாமையின், தம்முனைப்பால் பல கூறுவாராயினர். ஆர்மின் - கட்டுங்கள். கள்வன் அகப்படிற் கட்டுதல் இயல்பு. அடுக்கு, விரைவுபற்றி வந்தது. எனவே, இந்நிலையிலும் ஒளிப்பான் எனக் கருதினமை பெறப்பட்டது. நாள் மலர்ப் பிணையல் - அன்றலர்ந்த மலர்களாலாகிய மாலை. தாள் - கால். தளை - விலங்கு. ஒளித்தல் பற்றி, `சோரன்` என்றார்களாயினும், அன்பாற் செய்யும் வழிபாட்டி னாலல்லது அவனை அகப்படுத்தல் இயலாது என்பதை உணர்வார் ஆதலின், `நாண்மலர்ப் பிணையலில் தாள்தளை இடுமின்` என்றனர். கட்டுதலும், தளையிடுதலும் வேறு வேறாதல் அறிக. இங்ஙனம் விரையவும், நீங்க முயலுதல்பற்றி, `சுற்றுமின்` (வளையுங்கள்) என்றும், அஃது இயலாமையின், `சூழ்மின் (என்செய்வதென்று ஆராயுங்கள்)` என்றும், அங்ஙனம் ஆராய்வதற்குள் நீங்கினமையின், `தொடர்மின், விடேன்மின், பற்றுமின்` என்றுங் கூறி அலமந்தனர். அவர் அங்ஙனம் அலமரவும். இறைவன் அவரது பற்றினின்று (பிடியினின்றும்) முற்ற ஒளித்தான். அஃதாவது அருள் நிலையைத் தந்ததன்றி, ஆனந்த நிலையைத் தாராதொழிந்தனன் என்றதாம். `பற்றின்` என, நீக்கப்பொருட்கண் வந்த இன்னுருபு விரிக்க. `முற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
``ஒளித்தும், ஒளித்தும்`` எனவந்த எச்சங்கள் எல்லாம், ``என்னேரனையோர் கேட்க வந்து`` என்றதில் `வந்து` என்றதனோடு முடியும். ``தன்னேரில்லோன்`` என்றது, `இறைவன்` என்னும் அளவாய் நின்றது, `மேற்கூறியவாறெல்லாம் முயன்றார் பலர்க்கும் தனது உண்மை நிலையைக் காட்டாது ஒளித்த இறைவன், அதனை என் போல்வார் கேட்டுணரும்படி நேரே எழுந்தருளி வந்து இயம்பியருளினான்` என்று அடிகள் அன்புமீதூரப்பெற்று அருளுதல் காண்க. ``நேரனையோர்`` ஒரு பொருட் பன்மொழி. `என்போல்வார்` என்றது, மேற்கூறிய முயற்சிகளுள் ஒன்றும் செய்யாது, உலகியலில் நின்றவர்களை. இறைவனது பெருங்கருணைத்திறத்தை அடிகள் இங்ஙனம் அருளிச் செய்தாராயினும், இவரது முன்னைத் தவமுதிர்ச்சியின் பயனே அங்ஙனம் இறைவன் நேர்நின்று ஆட்கொண்டது என்க. இஃது இத்திருமுறையுள் யாண்டும் ஒக்கும், முயலாது நின்ற நிலையில் வலிய வந்து ஆண்டருளியதையே ``அறைகூவி ஆட்கொண்டருளி`` என்று அருளிச் செய்தார். இயம்பி ஆட்கொண்ட பின்னரும் நீங்காது உடனிருந்தமை தோன்ற, `மறையோர் கோலத்தனாய் வந்து ஆட்கொண்டருளி` என்னாது, `வந்து ஆட்கொண்டருளி, `மறையோர் கோலம் காட்டியருளலும்` என்றார். `காட்டியருளலும் ஆற்றேனாக` என இயையும்.
150-157. உளையா அன்பு - வருந்திப்பெறாத - இயல்பாகத் தோன்றிய அன்பு. `உலையா அன்பு` என்பதே பாடமாகல்வேண்டும். `அன்பினால்` என உருபு விரிக்க, `என்பும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது. உருகும் இயல்பின்மை, எலும்பிற்கு இழிவு என்க. அலைகடல் - அலைகின்ற கடல்நீர். திரையின் - அலைகள் போல. ஆர்த்து - ஆரவாரித்து, கடலில் ஆரவாரம் செய்வன அலைகளேயாதல் அறிக. ஓங்கி - துள்ளி. தலை தடுமாறா - தலை கீழாம்படி. மத்தம் - உன்மத்தம். பித்து, தொடக்க நிலை; மத்தம், முதிர்ந்த நிலை. மதித்தல் - மத்திட்டுக் கலக்குதல்; இங்கு அதுபோல உலகில் உள்ளாரது உள்ளங்களை வியப்பாலும், அச்சத்தாலும் நிலை குலையச் செய்தமையைக் குறித்தது. ஆனேற்றை, ``ஏற்றா`` என்றார். ``தடப்பெரு`` ஒரு பொருட் பன்மொழி. ஆனேறுகளும் மதங்கொள்ளு தல் இயல்பு. `களிறு ஏற்றா இவற்றின் மிகப்பெருமதம் அவற்றால் ஆற்ற வொண்ணாமைபோல, இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற களிப்பை யான் ஆற்றேனாய் நிற்க என்க. ``ஆற்றேனாக`` என்றதன் பின், `அந்நிலையில்` என்பது வருவிக்க. ``அவயவம்`` என்றதற்கு, `என் உறுப்புக்களை` என உரைக்க. கோல் தேன் - கொம்புத்தேன். ``செய்தனன்`` என்றது, `செய்தாற்போல ஆக்கினன்` என்றபடி. அஃதாவது `உள்ளமும் உடலும் ஒருங்கே இன்பவெள்ளத்தில் மூழ்கச் செய்தனன்` என்றதாம்.
158-162. ஏற்றார் - தனது போரினை ஏற்றுக் கொண்டவர், ``மூதூர்`` என்றது, திரிபுரத்தை, `மூதூரை வீழ்வித்து` என இயையும். ஆங்கு, உவம உருபு. ``அன்று`` என்றதனை, முதற்கண், கூட்டுக. ``அருட்பெருந் தீ` என்றது, சோதியை, ``கருவார் சோதி`` (கீர்த்தி-55) என்றது காண்க. அடிக்குடில் - முதலிற் கிடைத்த சிறிய இல்லம்; உடம்பு. `வாழாமை` என்பது குறுகிநின்றது. `அடியோங்களது அடிக் குடிலுள் ஒருத்தரும் வாழாதபடி, அருட்பெருந்தீயின் ஒடுக்கினன்` என்க. ``எனக்கு`` எனப் பின்னர்த் தம்மை வேறு கூறலின், ``ஒருத்தரும்`` என்றது, அடிகளை ஒழிந்தோரையேயாம். ஆயினும், யானும் அக்குடிலில் இருக்க `என்னை ஒடுக்கா தொழிந்தனன்` என்பது தோன்ற, `அடியார் அடிக்குடில்` என்னாது, ``அடியோம் அடிக்குடில்`` என்றார். இறைவன் அந்தணனாய் வந்து நிகழ்த்தியன பலவுங் கூறுகின்றாராதலின், பிறர்க்கு அருளியவற்றையும் கூறினார் என்க. தடக் கை - பெரிய கை; என்றது, தடங்கண், தடஞ்சோலை முதலியன போல, அகன்ற அகங்கையைக் குறித்தது. சுவையுடைய பொருள்களில், கனிகள் சிறந்தவை. அது, ``கனியிருப்பக் காய் கவர்ந் தற்று``, (குறள்-100) ``கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரே`` (தி. 5. ப.91. பா. 7) என்றாற்போல்வனவற்றாலும் அறியப்படும். இனி, கனி களுள் நெல்லிக்கனி சிறந்தது என்பது, ஔவையார்க்கு அதியமான் நெல்லிக்கனியளித்தமை முதலியவற்றால் விளங்கும். அதனால், `அங்கை நெல்லிக்கனி` என்னும் உவமை, ``யானைதன் - கோட்டிடை வைத்த கவளம்`` (புறம் -101) என்பதுபோல, தப்பாது பயன் படுதலைக் குறிப்பதாம். ஆகவே, இப்பகுதியால், பலருக்கு ஒளித்த இறைவன், என்போல்வாரை அறைகூவியாட்கொள்ளுதலை மேற் கொண்டு, எனக்கும் ஆசிரியத் திருமேனியைக் காட்டி, உள்ளத்தையேயன்றி உடம்பையும் இன்ப வடிவாக்கி, பின் உடம்பளவில் நில்லாது எங்குமாய் நிறைந்து நுகரும் இன்பத்தினை ஒருதலையாக எய்துவிக்க இசைந்தனன் என்றவாறாயிற்று. இறைவன் தமக்கு எங்குமாய் நிறைந்து நுகரும் இன்பத்தினை எய்துவித்தல் ஒருதலை` என்பதை, அவன் வாளா செல்லாது, ``நலமலி தில்லையுட் கோலமார் தரு பொதுவினில் வருக`` (தி.8 கீர்த்தி-127-128) என்று அருளிச் சென்றமையால் உணர்ந்தார் என்க. இஃது உணர்ந்தாராயினும், `ஏனைய அடியார்கட்கு இறைவன் வாயுட் புக்க நெல்லிக் கனியாயினன்; எனக்குக் கையிற்புக்க நெல்லிக்கனியாயினன்` என்ற பொருளையும், `எனக்குத் தடக்கையின் நெல்லிக்கனியாயினன்` என்ற உவமையால் தோற்றுவித்தார். எனவே, இனி வருகின்ற ஐந்தடி களையும் தமக்கு அருளிய அருமையும், ஏனையோர்போல விரைந்து செல்ல அருளாமையும் என்னும் இருகருத்தும் பற்றியே வருவன வாகக் கொள்க.
163-167. வாழி, அசைநிலை. செய்தது - இந்நிலையினன் ஆக்கியது. `ஆவா, செத்தேன்` என்னும் இடைச்சொற்கள், `வியப்பும், அவலமும்` என்னும் இருகுறிப்பினும் வருவனவாம். ஒல்ல கில்லேன் - ஆற்றமாட்டேன்; முற்றப் பெற்றிலேன். `வாரிக் கொண்டு - விழுங்குகின்றேன் விக்கினேன்` (தி.8 அடைக்கலப் பத்து-10) என்று அருளுதலும் காண்க.
168-177. இனி, `அவயவம் கோற்றேன் கொண்டுசெய்தனன்` என மேல் தொகுத்துணர்த்தியதனை, ஈண்டு வகுத்து உணர்த்து கின்றார். புரைவித்து - ஒப்பாகச் செய்து. உவா - பௌர்ணமி. நள்ளுநீர் - மிகுகின்ற நீர். `உவா நாளிற் கடலின் கண் மிகுகின்ற நீர் போல, நெஞ்சிடமெல்லாம் நிறையும்படி` என்க. `இறந்த என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``வாக்கிறந் தமுதம்`` என்றதனை ``உவாக்கடல்`` என்ற அடியின் முன்னே கூட்டி, இரண்டனையும், ``செழுந்தண் பாற்கடல்`` என்பதற்கு முன்னே வைத்துரைக்க. வாக்கிறந்த அமுதம் - சொல்ல வாராத பேரின்பம். `அஃது உள்ளகத் தில் ததும்புமாறு பாற்கடல் திரைபோல் வித்து` என்க. உவாநாளிற் பொங்கக் காண்டல் நீர்க்கடலிடத்தே யாதலின், மிகுதற்கு அதனையே உவமை கூறினார். இனிமைக்குப் பாற்கடலை உவமை கூறினார். நாய் - நாய்போலும் எனது. குரம்பை - கட்டு; குடில். ``குரம்பைகொண்டு`` என்றது, `இடமாகக்கொண்டு` என்றபடி. குரம்பைதோறும் - உடம்பில் உள்ள பல கட்டுக்களில் எல்லாம். ``புன்புலால் யாக்கை புரைபுரை கனிய`` (தி.8 பிடித்த பத்து-10) எனப் பின்னரும் வருவது காண்க. ``குரம்பைதோறும்`` என்றதை, ``குரம்பை கொண்டு`` என்றதன் பின்னர்க் கூட்டுக. மேல், உள்ளத்தை நிறைத்தமை கூறினார்; இங்கு, உடம்பினுள் பல பகுதிகளை நிறைத்தமை கூறினார். `பாய்` என்னும் தன்வினைப் பகுதி, பிறவினை யுணர்த்தும் துவ்வீறு பெற்று, `பாய்த்து` என நிற்றலின், வினையெச்சத்தின்கண் இகர ஈறாயிற்று. இது, `பாய்ச்சி` என வருதல் பெரும்பான்மை. அற்புதம் - அதிசயம். என்பு - `எற்பு` எனத் திரிந்தது, `உருகும் உள்ளம் என்ற ஒன்று கொண்டே ஓர் உடம்பைச் செய்தாற் போல, அன்பு சுரந்து பெருகுகின்ற உடம்பை எனக்கு அமைத்தனன்` என்க. அன்பு பெருகும் வழியே இன்பமும் பெருகுமாதலின், இதனையும் அருளிச் செய்தார். அள் - மிகுதி.
178-181. `என்னையும் கடைமுறை களிறு என இருப்பதாக்கினன்` என இயைக்க. ``என்னையும்`` என்ற உம்மை, உயர்வு சிறப்பு. உயர்வு, மேற்கூறியவாற்றால், பொருளும், பேரன்பும், பேரின்பமும் பெற்றமை. ``ஒள்ளிய`` என்றது, `உணவாதற்குச் சிறந்த` என்றவாறு. கன்னல் - கரும்பு. கனி, வாழை முதலியனவாக ஏற்பன கொள்க. உம்மைத் தொகை திரிந்து முடிதலும் உண்மையின் ``கன்னற்கனி`` என நின்றது. தேர்தல் - தேடி உழலுதல். ``இருப்பது`` என்பது, தொழிற்பெயராய், வினைமுதற்கு ஆயிற்று. `இறைவன் பிறர்க்குப் போல எனக்கு அரியனாகாது எளியனாய் வந்து அருள் செய்தும், இறுதியில், தனது பெருவாயையும் பெருவயிற்றையும் நிரப்புதற்பொருட்டு இனிய உணவுகளையே எஞ்ஞான்றும் தேடித் திரிகின்ற யானையைப் போல், உணவைத் தேடி உண்டு இப்பூமியின்கண் இருக்கும்படி விட்டுச் சென்றான்` என்றபடி. ``இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் - கருவை யான் கண்டிலேன்`` (தி.8 திருச்சதகம்-41), ``பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்பதானேன்`` (தி.8 திருச்சதகம் -52) எனப் பின்னரும் கூறுதல் காண்க. ``இருப்பதாக்கினன்`` என்றதன்பின், `ஆகையால்` என்பது வருவிக்க. `என்னின் அமுதாக்கினன்` என இயையும். என்னின் - என்னால். கருணை வான் தேன் கலக்க - தனது திருவருளாகிய உயர்ந்ததேன் கலந்திருக்க. அருளொடு - அவ்வருள் நினைவோடே. பராவு - துதிக்கின்ற. அமுது - அமுதம் போன்ற பாடல்களை. ஆக்கினன் - உளவாகச் செய்தான். இதனால், திருவாசகம், திருக்கோவையார் என்னும் இருதிறத்துத் திருபாட்டுக்களும் வெளிவந்து உலகிற்குப் பெரும் பயன் தருதற் பொருட்டே அடிகளை இறைவன் இந்நிலவுலகத்திற் சிறிதுகாலம் எழுந்தருளியிருக்கும்படி விட்டுச்சென்றனன் என்பது நன்கு பெறப்படுதல் காண்க. இன்னும் இதனானே, மேல், ``பரமானந்தப் பழங்கடல்`` என்பது முதலாக உருவக வகையால் விரித்தோதி, இறுதியில், ``தொண்ட உழவர் ஆரத் தந்த`` என்றதும், அனைவரும் தன்னைப் பாடிப் பரவித் தனது திருவடிக்கண் அன்பு மிக்குத் தனது பேரின்பத்தைப் பெறுமாறு அடிகளது திருமொழியை இறைவன் உலகிற்கு அளித்தருளினான் என்பதனையே குறிப்பான் உணர்த்தியதாதல் பெறப்படும். இது கொண்டே சிவப்பிரகாச அடிகள், (நால்வர் நாண்மணி மாலை, பா.16) ``வலமழுவுயரிய`` என்னும் பாட்டினுள் ``திருவாசகம் எனும் பெருநீர்`` என உருவகித்து முன்னும் பின்னும் முற்றுருவக நலம் நனிசிறந்து விளங்க அடிகளது திருமொழியின் பெருமையை இனிது விளக்கினார் என்க. ``நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை`` (தி.8 திருக்கோத்தும்பி-12.) எனப் பின்னரும் வருதல் காணத்தக்கது. ``பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள் - பாமாலை பலபாடப் பயில்வித்தானை`` (தி. 6. ப.54. பா. 3) என்றருளிச்செய்தார். திருநாவுக்கரசு சுவாமிகளும். ஞானசம்பந்தரும், நம்பியாரூரரும் போல நாவுக்கரசரும், வாதவூரடிகளும் தம் திருமொழியின் பெருமை களைப் பலவிடத்தும் இனிது விளங்க எடுத்தோதியருளாது போயினும், இவ்வாறு ஒரோவிடத்துக் குறிப்பால் தோன்ற அருளிச் செய்தலைக் குறிக்கொண்டு உணர்தல் நம்மனோர்க்குத் தலையாய கடனாகும்.
182. பெற்றி - தன்மை ``பிரமன் மால் அறியாப் பெற்றி யோன்`` என்றது, `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. இதனை, ``ஓல்லகில்லேன்`` (அடி 167) என்றதன் பின்னர்க் கூட்டி, இதன் பின்னர், `இவ்வாறு` என்பது வருவித்துரைக்க.
இத்திருப்பாட்டில் சொற்கள் பொருள் இயைபுபட நிற்குமாறு:-
ஆறாம் அடியிற் போந்த, ``பெரியோன்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் எழுவாயாய் நின்று, பன்னிரண்டாம் அடியிற் போந்த ``குழகன்`` என்பது முதலாக, தொண்ணூற்றைந்தாம் அடியிற்போந்த, ``மேகன்`` என்பது ஈறாக நின்ற பெயர்ப் பயனிலைகளைக் கொண்டு முடிந்தது.
``மேகன்`` என்றதன்பின் எஞ்சி நின்ற `அவன்` என்பது முதலாக, நூற்றைந்தாம் அடியிற்போந்த, ``வைப்பு`` என்பது ஈறாக நின்ற பெயர்கள் பலவும் எழுவாயாய் நின்று, ஆங்காங்கே போந்த ``வாழ்க`` என்னும் வினைப்பயனிலையோடே முடிந்தன.
நூற்று ஆறாவது முதலிய மூன்றடிகளிலும் போந்த, ``நம்பன்`` முதலிய மூன்று பெயர்களும், தொக்கு நின்ற நான்கனுருபை ஏற்று, ஆங்காங்குப் போந்த, ``போற்றி`` என்ற தொழிற் பெயர்ப் பயனிலைகளோடு முடிந்தன. நான்கனுருபு பெயரோடு முடிதலும் இயல்பே.
நூற்றுப் பதினொன்றாம் அடியிற் போந்த, `தொல்லோன்` என்பது முதலாக, நூற்றுப் பதினெட்டாம் அடியிற் போந்த, ``ஒண்பொருள்`` என்பது ஈறாக நின்ற ஐந்து பெயர்களும் எழுவாயாய் நின்று, நூற்றுப் பத்தொன்பதாம் அடியிற் போந்த `இருந்தனன்` என்னும் வினைப்பயனிலையைக் கொண்டு முடிய அதன்பின் எஞ்சி நின்ற, `அவனுக்கு` என்பது, அவ்விடத்தே நின்ற, ``போற்றி`` என்பத னோடு முடிந்தது. நூற்றிருபது, இருபத்தொன்றாம் அடிகளின் முடிபுகளும் அவ்வாறாதல் வெளிப்படை.
நூற்று இருபத்திரண்டாவது முதலாக, நூற்று ஐம்பத்தேழாவது ஈறாக உள்ள அடிகளிற் போந்த சொற்கள், `யான்` புகலேனாகவும், தன்னேரில்லோன் பலர்க்கும் ஒளித்தும், என்னேரனையோர் கேட்க வந்து தானேயான தன்மையை இயம்பி ஆட்கொண்டருளி மறையோர் கோலம் காட்டியருளலும், யான் ஓலமிட்டு, ஆர்த்தார்த்து, ஓங்கி வீழ்ந்து புரண்டு, அலறி, மயங்கி, மதித்து ஆற்றேனாகும்படி, என் அவயவங்களைக் கோற்றேன் கொண்டு செய்தனன்` என முடிந்தன.
நூற்று ஐம்பத்தெட்டு முதலாக, நூற்று அறுபத்திரண்டு ஈறாக உள்ள அடிகளுக்கு மேற்போந்த பெயர்களே எழுவாயாய் நின்று, ``ஒடுக்கினன்``, ``ஆயினன்`` என்னும் வினைப் பயனிலைகளைக் கொண்டு முடிந்தன.
நூற்று அறுபத்துமூன்று முதலாக, நூற்று அறுபத்தேழு ஈறாக உள்ள அடிகளில், `யான்` என்பது தோன்றா எழுவாயாய் நின்று ``அறியேன்`` என்பது முதலாக ``ஒல்லகில்லேன்`` என்பது ஈறாகப் போந்த வினைப் பயனிலைகளைக் கொண்டு முடிந்தது.
ஈற்றடி, நூற்று அறுபத்தேழாம் அடியின் பின் வந்து நிற்ப, அதன்கண் உள்ள, ``பெற்றியோன்`` என்னும் பெயர் எழுவாயாய், நூற்று அறுபத்தெட்டாவது முதலாக, நூற்று எண்பத்தொன்றாவது ஈறாக உள்ள அடிகளிற் போந்த, ``புரைவித்து, தேக்கிடச்செய்தனன், இன்தேன் பாய்த்தி அமுத தாரைகள் ஏற்றினன், அள்ளூறாக்கை அமைத்தனன், என்னையும் இருப்பதாக்கினன், என்னின் பாரவமுது ஆக்கினன்`` என்னும் பயனிலைகளோடு முடிந்தன. ``கண்ணால் யானும் கண்டேன்`` என்பது முதலிய ஆறடிகளும் இடைநிலையாயும், அவற்றை அடுத்துப்போந்த இரண்டடிகளும், பின் வருவனவற்றிற்குத் தோற்றுவாயாயும் நின்றன. ``நினைதொறும் ஆற்றேன் அந்தோ கெடுவேன்`` என்றனவும் இடைநிலையேயாம். இங்ஙனமாகவே, இதனுள் முதற்கண் இறைவனது பெருமைகளை வியந்து கூறி, இடைக்கண் அவனை வாழ்த்துதலும், போற்றுதலும் செய்து, இறுதிக்கண் தமக்கு அவன் செய்த திருவருள் முறையினைக் கூறி முடித்தருளியவாறாதல் காண்க.

பண் :

பாடல் எண் : 1

நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
அடிமுடி யறியும் ஆதர வதனிற் 5
கடுமுரண் ஏன மாகி முன்கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் 10
யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் 20
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30
ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து
எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 35
பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்
நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம் பாய பலதுறைப் பிழைத்தும்
தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45
ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
விரத மேபர மாகவே தியரும் 50
சரத மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாத மென்னும்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து 55
உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத் 60
தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பிற்
பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றிச் 70
சதுரிழந் தறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா
தருபரத் தொருவன் அவனியில் வந்து 75
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80
அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச் 85
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95
மின்னா ருருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரைசேர் சரண விகிர்தா போற்றி 105
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி 115
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர் விறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி 125
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானோர் நோக்கி மணாளா போற்றி 135
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி
இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி 150
ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155
குற்றா லத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165
ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி 175
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநா டுடைய மன்னே போற்றி
கலையா ரரிகே சரியாய் போற்றி 190
திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி 195
தெரிவரி தாகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200
தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி
மந்தர மாமலை மேயாய் போற்றி 205
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210
படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுவீ றானாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 214
செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220
புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண
போற்ற போற்றி சயசய போற்றி. 225

பொழிப்புரை :

பிரமன் முதலாகத் தேவர்கள் யாவரும் தொழுது நிற்க, இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்து, நான்கு திக்கிலுள்ள முனிவர்களும் ஐம்புலன்களும் மகிழும்படி வணங்குகின்ற, ஒளி பொருந்திய திருமுடியையுடைய அழகிய நெடுமால், அந்நாளில் திருவடியின் முடிவையறிய வேண்டுமென்ற விருப்பத்தால், வேகமும் வலிமையுமுடைய பன்றியாகி முன்வந்து ஏழுலகங்களும் ஊடுருவும்படி தோண்டிச் சென்று பின்னே இளைத்து `ஊழியை நடத்தும் முதல்வனே வெல்க வெல்க` என்று துதித்தும் காணப் பெறாத தாமரை மலர் போலும் திருவடிகள், துதித்தற்கு எளிதாகி,நெடிய கடலாற் சூழப்பட்ட உலகத்தில்,
யானை முதலாக, எறும்பு இறுதியாகிய குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும், மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் அதனை அழித்தற்குச் செய்யும் குறை வில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுடைய கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும், இரண்டாம் மாதத்தில் விளைக்கின்ற விளைவினால் உருக்கெடுவதினின்று தப்பியும் மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும், பெரிய இருளுக்குத் தப்பியும், ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இருத்தலினின்று தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்றும் தப்பியும், ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும், எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்றும் தப்பியும், ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்று தப்பியும், குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்தில், தாய்படுகின்றதனோடு தான்படுகின்ற, கடல் போன்ற துயரத்தினின்று தப்பியும், பூமியிற் பிறந்த பின்பு, வளர்ச்சியடையும் வருடங்கள் தோறும் தாய் தந்தையர் முதலியோர் நெருக்கியும், அழுத்தியும் செய்கின்ற எத்தனையோ பல துன்பங்களில் தப்பியும் காலைப் பொழுதில் மலத்தாலும், உச்சிப் பொழுதில் பசியாலும், இராப்பொழுதில் தூக்கத்தாலும், ஊர்ப்பயணங்களாலும் உண்டா கின்ற துன்பங்களினின்று தப்பியும், கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும், வெண்மையாகிய பற்களையும், கார்காலத்து மயில் போலப் பொருந்திய. சாயலையும், நெருக்கமாகி உள்ளே களிப்புக் கொண்டு, கச்சு அறும்படி நிமிர்ந்து ஒளி பெற்று முன்னே பருத்து, இடை இளைத்து வருந்தும்படி எழுந்து பக்கங்களில் பரவி ஈர்க்குக் குச்சியும் இடையே நுழையப் பெறாத இளங்கொங்கைகளையும் உடைய மாதருடைய கூர்மையாகிய கண்களின் கொள்ளைக்குத் தப்பியும், மயக்கம் கொண்ட உலகினரது பெரிய மத்தக்களிறு என்று சொல்லத் தக்க ஆசைக்குத் தப்பியும், கல்விஎன்கின்ற பலவாகிய கடலுக்குத் தப்பியும், செல்வமென்கின்ற துன்பத்தினின்று தப்பியும், வறுமை என்கின்ற பழமையாகிய விடத்தினின்று தப்பியும், சிறிய எல்லைகளையுடைய பல வகைப்பட்ட முயற்சிகளில் தப்பியும்,
தெய்வம் உண்டு என்பதாகிய ஒரு நினைப்பு உண்டாகி, வெறுப்பில்லாததாகிய ஒரு பொருளை நாடுதலும்,ஆறுகோடியெனத் தக்கனவாய் மயக்கம் செய்யவல்ல சடவுலக ஆற்றல்கள், வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கினவாகவும், அயலா ராயினோரும் கடவுள் இல்லையென்று பொய் வழக்குப் பேசி நாவில் தழும்பேறப் பெற்றனர். உறவினர் என்கின்ற பசுக்கூட்டங்கள் பின் பற்றி அழைத்துப் பதறிப் பெருகவும், மறையோரும், விரதத்தையே மேன்மையான சாதனம் என்று தம் கொள்கை உண்மையாகும் படி நூற்பிரமாணங்களைக் காட்டினார்களாகவும், சமயவாதிகள் எல்லாம் தம்தம் மதங்களே ஏற்புடைய மதங்களாகும் எனச் சொல்லி ஆர வாரித்துப் பூசலிட்டார்களாகவும், உறுதியான மாயாவாதம் என்கிற பெருங்காற்றானது சுழன்று வீசி முழங்கவும், உலோகாயத மதம் என்கிற, ஒள்ளிய வலிமையுடைய பாம்பினது கலை வேறுபாடு களையுடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து அதிலுள்ள பெருஞ் சூழ்ச்சிகள் எத்தனையோ பலவாகச் சுற்றித் தொடரவும்,
முற்கூறிய அவற்றால் வழுவாது தாம் பிடித்த கொள்கையை விட்டு விடாமல், நெருப்பினிற் பட்ட மெழுகுபோல வணங்கி மனம் உருகி, அழுது உடல் நடுக்கமடைந்து ஆடுதல் செய்தும், அலறுதல் செய்தும், பாடுதல் செய்தும், வழிபட்டும், குறடும் மூடனும் தாம் பிடித்ததை விடா என்கிற முறைமையேயாகி நல்ல, இடையறாத கடவுள் பத்தியில் பச்சை மரத்தில் அடித்த ஆணி திண்மையாய்ப் பற்றி நிற்பது போல உறைத்து நின்று உருக்கம் மிகுந்து கடல் அலைபோல அலைவுற்று மனம் வாடி, அதற்கு ஏற்ப உடல் அசைவுற்று உலகவர் பேய் என்று தம்மை இகழ்ந்து சிரிக்க வெட்கமென்பது தவிர்ந்து, நாட்டில் உள்ளவர் கூறும் குறைச்சொற்களை அணியாக ஏற்று, மனம் கோணுதல் இல்லாமல், தமது திறமை ஒழிந்து, சிவஞானம் என்னும் உணர்வினால் அடையப் பெறுகின்ற மேலான வியப்பாகக் கருதி கன்றினை உடைய பசுவின் மனம் போல அலறியும் நடுங்கியும், வேறொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாமல், அரிய மேலான ஒருவன் பூமியில் வந்து குருமூர்த்தியாகி அருள் செய்த பெருமையை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாது திருவடிகள் இரண்டையும் உருவைவிட்டு அகலாத நிழலைப் போல வெறுக்காமல், முன்பின்னும் நீங்காது நின்று அந்தத் திசை நோக்கி நினைந்து எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கிப் பத்தியென்னும் நதியானது கரை புரண்டு ஒட, நல்ல புலனறிவு ஒருமைப்பட்டு, `நாதனே!` என்று கூவி அழைத்துச் சொற்கள் குழறி, மயிர்சிலிர்க்க, கைம்மலர் குவித்து நெஞ்சத் தாமரை விரிய, கண்கள் களிப்பு மிக நுண்ணிய துளிகள் அரும்பத் தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம்.
மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம். பொன்மயமா யிருக்கிற மதுரைக்கு அரசனே! வணக்கம். கூடற்பதியில் விளங்கு கின்ற நன்னிற மாணிக்கமே! வணக்கம். தென்தில்லையம்பலத்தில் ஆடுவோனே! வணக்கம். இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே! வணக்கம். கெடாத நான்கு வேதங்களுக்கும் முதல்வனே! வணக்கம். இடபம் பொருந்திய வெற்றிக் கொடியை உடைய சிவபிரானே! வணக்கம். மின்னல் ஒளி பொருந்திய பல அழகிய வேறுவேறு உருவங்களை உடையவனே! வணக்கம். கல்லில் நார் உரித்தது போல என் மனத்தை இளகச் செய்த கனியே! வணக்கம். பொன்மலை போன்றவனே! காத்தருள்வாய். வணக்கம். ஐயோ! எனக்கருள் செய்வாய். நினக்கு வணக்கங்கள். எல்லா உலகங்களையும் படைப் பவனே! காப்பவனே! ஒடுக்குபவனே! வணக்கம். பிறவித்துன்பத்தை நீக்கி அருள் புரிகின்ற எம் தந்தையே! வணக்கம். ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே! வணக்கம். ஒளியை வீசுகின்ற படிகத்தின் திரட்சியே! வணக்கம்.
தலைவனே! வணக்கம். சாவாமையைத் தரும் மருந்தான வனே! வணக்கம். நறுமணம் பொருந்திய திருவடியையுடைய நீதியாளனே! வணக்கம். வேதத்தை உடையவனே! வணக்கம். குற்ற மற்றவனே! வணக்கம். முதல்வனே! வணக்கம். அறிவாய் இருப் பவனே! வணக்கம், வீட்டு நெறியானவனே! வணக்கம். கனியின் சுவை போன்றவனே! வணக்கம். கங்கையாறு தங்கிய சிவந்த சடையை யுடைய நம்பனே! வணக்கம். எல்லாப் பொருள்களையும் உடைய வனே! வணக்கம். உயிர்களின் உணர்விற்கு உணர்வாய் இருப்பவனே! வணக்கம். கடையேனுடைய அடிமையைக் கடைக்கணித்து ஏற்றுக் கொண்டவனே! வணக்கம். பெரியோனே! வணக்கம். நுண்ணியனே! வணக்கம். சைவனே! வணக்கம், தலைவனே! வணக்கம், அனற் பிழம்பாகிய இலிங்கவடிவினனே! வணக்கம். எண்குணங்கள் உடையவனே! வணக்கம். நல்வழியானவனே! வணக்கம். உயிர்களின் நினைவில் கலந்துள்ளவனே! வணக்கம். தேவர்களுக்கும் அரிதாகிய மருந்தானவனே! வணக்கம். மற்றையோர்க்கு எளிமையான இறைவனே! வணக்கம். இருபத்தொரு தலை முறையில் வருகின்ற சுற்றத்தார் வலிய நரகத்தில் ஆழ்ந்து போகாமல் அருள் செய்கின்ற அரசனே! வணக்கம். தோழனே! வணக்கம். துணைபுரிபவனே! வணக்கம். என்னுடைய வாழ்வானவனே! வணக்கம். என் நிதியானவனே! வணக்கம். இயல்பாகவே பாசங்கள் இல்லாதவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். அப்பனே! வணக்கம். பாசத்தை அழிப்பவனே! வணக்கம். சொல்லையும் அறிவையும் கடந்த ஒப்பற்றவனே! வணக்கம். விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே! வணக்கம்.
அருமையாய் இருந்தும் எளிமையாய் வந்தருளும் அழகனே! வணக்கம். கார்மேகம் போல அருள் புரிகின்ற கண் போன்றவனே! வணக்கம். நிலைபெற்ற பெருங்கருணை மலையே! வணக்கம். என்னையும் ஓர் அடியவனாக்கிப் பெருமையாகிய திருவடியை என் தலையில் வைத்த வீரனே! வணக்கம். வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோனே! வணக்கம். அழிவில்லாத இன்பக்கடலே! வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் கடந்தவனே! வணக்கம். எல்லாம் கடந்த முதல்வனே! வணக்கம். மானை நிகர்த்த நோக்கத்தையுடைய உமா தேவியின் மணவாளனே! வணக்கம். விண்ணுலகத்திலுள்ள தேவர்களுக்குத் தாய் போன்றவனே! வணக்கம். பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே! வணக்கம். நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்து இருப்பவனே! வணக்கம். நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே! வணக்கம். காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து இருப்பவனே! வணக்கம். ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியவனே! வணக்கம். கனிபவருடைய மனத்தில் அமுதமாய் இருப்பவனே! வணக்கம். கனவிலும் தேவர்கட்கு அருமையானவனே! வணக்கம். நாய் போன்ற எனக்கு விழிப்பிலும் அருள் செய்தவனே! வணக்கம்.
திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் எம் அப்பனே! வணக்கம். சடையில் கங்கையைத் தாங்கியவனே! வணக்கம். திருவாரூரில் தங்கியருளிய தலைவனே! வணக்கம். சிறப்புப் பொருந்திய திருவையாற்றில் உள்ளவனே! வணக்கம். அண்ணாமலையிலுள்ள எம்மேலோனே! வணக்கம். கண்ணால் நுகரப்படும் அமுதக் கடலாய் உள்ளவனே! வணக்கம். திருவேகம்பத்தில் வாழ்கின்ற எந்தையே! வணக்கம். அங்கு ஒரு பாகம் பெண்ணுருவாகியவனே! வணக்கம். திருப்பராய்த் துறையில் பொருந்திய மேலோனே! வணக்கம். திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய சிவபிரானே! வணக்கம். இவ்விடத்து உன்னையன்றி மற்றொருபற்றையும் யான் அறிந்திலேன் ஆதலின் வணக்கம். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள எம் கூத்தனே! வணக்கம். திருப் பெருந்துறையில் பொருந்திய இறைவனே! வணக்கம். திரு ஈங்கோய் மலையில் வாழ்கின்ற எம் தந்தையே! வணக்கம். வனப்பு நிறைந்த திருப்பழனத்தில் உள்ள அழகனே! வணக்கம். திருக்கடம்பூரில் எழுந்தருளிய சுயம்புவே! வணக்கம்.
உன்னை அடுத்தவர்க்கு அருள் செய்கின்ற அப்பனே! வணக்கம். கல்லால மரத்தின் கீழ் இயக்கியர் அறுவருக்கும், வெள்ளானைக்கும் அருள் செய்த அரசனே! வணக்கம். மற்றும்பல தலங்கள் உள்ள தென்னாடுடைய சிவபிரானே! வணக்கம். வேறு பல நாட்டவர்களுக்கும் வழிபடு தெய்வமானவனே! வணக்கம். பன்றிக்குட்டிகளுக்குக் கருணை காட்டி அருளியவனே! வணக்கம். பெரிய கயிலாயமலையில் இருப்பவனே! வணக்கம். அம்மானே! அருள் செய்ய வேண்டும். அஞ்ஞான இருள் அழியும்படி அருள் செய்கின்ற இறைவனே! வணக்கம். அடியேன் துணையற்றவனாய்த் தளர்ச்சி அடைந்தேன்; வணக்கம்.
நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள்புரிவாய், வணக்கம். அஞ்சாதே என்று இப்பொழுது எனக்கு அருள் செய்ய வேண்டும்; வணக்கம். நஞ்சையே அமுதமாக விரும்பினவனே! வணக்கம், அப்பனே! வணக்கம், குருவே! வணக்கம். என்றும் உள்ளவனே! வணக்கம். குற்றம் அற்றவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே! வணக்கம். பெரியவனே! வணக்கம். வள்ளலே! வணக்கம், அரியவனே! வணக்கம். பாசம் இல்லாதவனே! வணக்கம். அந்தணர் கோலத்தோடு வந்து அருள் புரிந்த நீதியானவனே! வணக்கம். முறையோ பொறுக்க மாட்டேன். முதல்வனே! வணக்கம். சுற்றமானவனே! வணக்கம். உயிர்க்கு உயிராய் இருப்பவனே! வணக்கம். சிறந்த பொருளான வனே! வணக்கம். மங்கலப் பொருளானவனே! வணக்கம். ஆற்ற லுடையவனே! வணக்கம். அழகுடையவனே! வணக்கம். செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய பாதங்களை உடைய உமாதேவி பாகனே! வணக்கம். நாயினேன் வருத்த முற்றேன். நின் அடியவன் நினக்கு வணக்கம். விளங்குகின்ற ஒளியையுடைய எம் ஆண்டவனே! வணக்கம். கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே! வணக்கம். குவைப்பதி என்னும் ஊரிலே மகிழ்ந்து இருந்த இறைவனே! வணக்கம். மலைநாட்டை உடைய மன்னனே! வணக்கம். கல்வி மிகுந்த அரிகேசரி யென்னும் ஊரினை உடையாய்! வணக்கம். திருக்கழுக்குன்றிலுள்ள செல்வனே! வணக்கம். கயிலை மலையில் வீற்றிருக்கும், திருப்பூவணத் திலுள்ள பெருமானே! வணக்கம். அருவம் உருவம் என்னும் திருமேனிகளைக் கொண்டவனே! வணக்கம். என்னிடத்தில் வந்து பொருந்திய அருள் மலையே! வணக்கம்.
சாக்கிரம் முதலிய நான்கு நிலையும் கடந்த பேரறிவே! வணக்கம். அறிதற்கு அருமையாகிய தெளிவே! வணக்கம். துளைக்கப் படாத தூய முகத்தின் சோதியே! வணக்கம். அடிமையானவர்க்கு அன்பனே! வணக்கம். தெவிட்டாத அமுதமே! திருவருளே! வணக்கம். ஆயிரம் திருப்பெயர்களை உடைய பெருமானே! வணக்கம். நீண்ட தாளினையுடைய அறுகம்புல் கட்டிய மாலை அணிந் தவனே! வணக்கம். பேரொளி வடிவாகிய கூத்தப் பெருமானே! வணக்கம். சந்தனக் குழம்பை அணிந்த அழகனே! வணக்கம். நினைத்தற்கரிய சிவமே! வணக்கம். மந்திர நூல் வெளிப்பட்ட பெரிய மகேந்திர மலையில் வீற்றிருந்தவனே! வணக்கம். எங்களை உய்யும்படி ஆட்கொள்வோனே! வணக்கம். புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே! வணக்கம். அசையாநின்ற கடலின் மேல் நடந்தவனே! வணக்கம். கரிக் குருவிக்கு அன்று அருள் செய்தவனே! வணக்கம். வலிய ஐம்புல வேட்கைகள் அற்றொழியும் உள்ளம் பொருந்தி அருளினவனே! வணக்கம். நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்ற முடையவனே! வணக்கம். உலகத்திற்கு எல்லாம் முதலும் நடுவும் முடிவுமானவனே! வணக்கம். நாகம், விண்ணுலகம், நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி பாண்டியனுக்கு மேலான வீட்டுலகை நல்கி அருளியவனே! வணக்கம். எங்கும் நீக்கமற நிறைந்த ஒருவனே! வணக்கம். செழுமை மிக்க மலர் நிறைந்த திருப்பெருந்துறைத் தலைவனே! வணக்கம்.
செங்கழுநீர் மாலையை அணிந்த கடவுளே! வணக்கம். வணங்குவோருடைய மயக்கத்தை அறுப்பவனே! வணக்கம். தவறு யாது? பொருத்தம் யாது? என்று அறியாத நாயினேன் குழைந்து சொன்ன சொல் மாலையைக் கொண்டருள வேண்டும்; வணக்கம். மூன்றுபுரங்களை எரித்த பழையோனே! வணக்கம். மேலான ஒளியை உடைய மேலோனே! வணக்கம். பாம்பை அணிந்த பெரியோனே! வணக்கம். பழமையானவனே! எல்லாவற்றிற்கும் மூல காரணனே! வணக்கம். வணக்கம். வெற்றியுண்டாக வணக்கம்! வணக்கம்!.

குறிப்புரை :

போற்றித் திருஅகவல் - `போற்றி` என்னும் சொல்லையுடைய திரு அகவல். `போற்றுதலை உடைய` எனப் பொருள் மேல் வைத்துரைப்பின், அஃது ஏனைய பகுதிகட்கும் பிறவற்றிற்கும் பொதுவாதல் அறிக. இத் திருப்பாட்டில் இறைவனை அடிகள் பலபெயர்க் கோவையாற் போற்றுகின்றார்.
.
இதற்கு, `சகத்தின் உற்பத்தி` என முன்னோர் உரைத்த குறிப்பு, முதற் போற்றி வரையில் உள்ள பகுதி பற்றியே கூறியதாம். அங்ஙனம் கூறும் வழியும், `உலகம்` எனப் பொருள்தரும், `சகம்` என்பது, மக்களுலகையே குறித்துக் கூறியதாம்.
.
1-10. இதனுள் முதல் மூன்று அடிகளில் எண்ணலங்காரம் வந்தது, திருமால் காத்தற் கடவுளாதலின், போகத்தைத் தரும் கடவுளாவன். அதனால், ஐம்புலன்களும் நிரம்பக் கிடைத்தற் பொருட்டுப் போற்றப்படுவனாயினன். ஆகவே, இங்கு ``முனிவர்`` என்றது, சுவர்க்க இன்பத்தை வேண்டித் தவம் செய்வோரையாயிற்று. மலர - நிரம்ப உளவாதற் பொருட்டு. கதிர்முடி - மணிமுடி. கடவுளரிற் சிறந்தமையின், மாலை, `திருமால்` என்ப. அவன் கடவுளரிற் சிறந்தோனாதலை,
``தேவில் திருமால் எனச் சிறந்த``
என்னும் திருவள்ளுவ மாலையானும் (36) அறிக. இதில் `தே` என்பது அஃறிணைச் சொல்லாய், பன்மைமேல் நின்றது. `புருடோத்தமன்` என்றலும் இதுபற்றி. நிலங்கடந்த (உலகத்தை அளந்த) அண்ணல் என்பார், ``கதிர்முடி நெடுமால்`` என்று அருளினார். பிரமன், மால் இருவரும் சிவசோதியினது அடி, முடி, இரண்டையுங்காணவே புகுந்தனராதலின்,``அடி முடி அறியும் ஆதரவு`` என்றார். ஆதரவு - விருப்பம். அது, பகுதிப் பொருள் விகுதி. இன், ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு.
கடுமுரண் - மிக்க வலிமை. ஏனம் - பன்றி. முன் கலந்து - நிலத்தைச் சார்ந்து. ``முன்`` என்றது ஆகுபெயராய், முன்னே காணப்படும் நிலத்தைக் குறித்தது. ஆகாயம், அண்ணாந்து நோக்கிய வழியே காணப்படுமாதலின், அது முன்னர்க் காணப்படுவதன்றா யிற்று, ஏழ்தலம், கீழ் உலகம் ஏழு; அவை `அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதலம்` என்பன. உருவுதல் - கடந்து போதல். எய்த்தது, பிரகிருதியுடம்பு உடைமையின், பாதலத்திற்குக் கீழ்ச் செல்ல இயலாமையால் என்க. எய்த்தல் - இளைத்தல் ``ஊழி முதல்வன்`` என்றது, `காலத்தை நடத்துபவன்` என்றவாறு. எல்லாப் பொருளும் காலத்திற்கு உட்பட்டு நிற்றலின், `காலத்திற்கு முதல்வன்` என்றது, `எல்லாப் பொருட்கும் முதல்வன்` என்றவாறாம்.
சயசய - நீ வெல்க! வெல்க! வழுத்துதல் - துதித்தல். ``அடி இணைகள்`` என்றதனை, `இணை அடிகள்` என மாற்றிக்கொள்க. இணை அடிகள் சிவபிரானுடையன என்பது, திருமால் தேடிக் காணாத வரலாறு கூறியவதனால் பெறப் பட்டது.
``எளிது`` என்ற ஒருமை அப்பண்பின் மேல் நின்று ஆகு பெயராயிற்று. ``ஆய்`` என்ற வினையெச்சம் காரணப் பொருட் டாய்,`தாம் பிடித்தது சலியா`` (அடி.59) என்பது முதலியவற்றில் வரும் `சலியா` முதலிய வினைகளோடு இயைந்து நின்றது. வார் - நீண்ட.
.
11-12. இது முதலாகவரும் நாற்பத்தொன்பது அடிகளால் உயிர்கட்கு இறையுணர்வு உண்டாவதன் அருமையை விரித்தோதி யருளுகின்றார்.
யானையினும் பெரிய பிறவியும், எறும்பினும் சிறிய
பிறவியும் உளவாயினும் பெருமை சிறுமைகளின் எல்லைக்கு அவற்றைக்கூறும் வழக்குப் பற்றி அங்ஙனமே ஓதியருளினார். ஊனம் - குறைவு. `குறைவில்லாத` என்றது, `பலவாகிய` என்பதனைக் குறித்தது.
யோனி - பிறப்பின் வகைகள். இவ் வடசொல் முதற்கண் இகரம் பெற்று வந்தது. ஏழுவகைப் பிறப்பிலும் உள்ள யோனி பேதம் எண்பத்து நான்கு நூறாயிரம் என்பதை,
அண்டசம் சுவேத சங்கள்
உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நால்எண் பத்து
நான்குநூ றாயி ரத்தால்
உண்டுபல் யோனி எல்லாம்
ஒழித்துமா னுடத்து தித்தல்
கண்டிடிற் கடலைக் கையால்
நீந்தினன் காரி யங்காண்.
என்னும் சிவஞான சித்தியிலும் (சூ, 2. 89),
தோற்றியிடும் அண்டங்கள் சுவேதசங்கள் பாரில் துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றொ டுலவா
மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானுடர்ஒன் பதுமா
ஏற்றிஒரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
என்னும் சிவப்பிரகாசத்திலும் (47) காண்க. எண்பத்து நான்கிற்குச் சிவப்பிரகாசத்துட் கூறப்பட்ட வகையை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்ப்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில் சீர்த் தாவரம்நா லைந்து.
என (குறள்.62 - பரிமேலழகர் உரை)ச் சிறிது வேறுபடவும் கூறுவர் என்பது தோன்றவே சிவப்பிரகாசத்துள் `ஒரு தொகையதனில் இயம்புவர்`` என்று அருளினார் போலும்!
``யோனியினுள்`` என்றதன்பின், `செலுத்தும்` என்பது தொகுத்தலாய் நின்றது. `வினையினின்றும் பிழைத்தும்` என்க. பிழைத்தல் - தப்புதல். `` பிழைத்தும்`` என வரும் உம்மைகள் யாவும், வினைக்கண் வந்த எண்ணிடைச் சொற்கள். உயிர்கட்கு இறையுணர்வு உண்டாதற்கு உளவாகும் இடையூறுகள் பலவற்றையும் இங்கு முறைமைப்பட வைத்து அருளிச் செய்கின்றாராதலின், ``பிழைத்தும்`` என வருவனவற்றின் பின்னெல்லாம், `அதன்பின்` என்பது வருவித்து அம் முறைமை தோன்ற உரைக்க. ``பிழைத்து`` என வருவன பலவும், ``உண்டாகி`` (அடி.42) என்பதனோடே முடியும்.
.
13-14. உயிர்கள் நிலவுலகில் கருப்பையினுள் தோன்றும் பிறப்பிற்புகுங்கால், முதற்கண் தான் நின்ற நுண்ணுடம்போடு உணவு வழியாக ஆண் உடம்பிற் புகுந்து தங்கி, பின் அதனது வெண்ணீர் வழியாகப் பெண்ணினது வயிற்றில் உள்ள கருப்பையினுட் புகுந்து புல் நுனியில் நிற்கும் பனியினது சிறு திவலையினும் சிறிதாகிய நுண்டுளியளவில் கருவாகி நின்று,பின் சிறிது சிறிதாக வளர்ந்து நிரம்பும் பருவுடம்புடனே பிறக்கும். பெண்ணினது வயிற்றில் நுண்டுளியளவில் நின்று வளர்ந்து பிறத்தற்கு இடையே அதற்கு உண்டாகும் அழிவு நிலைகள் எத்துணையோ உளவாம். மக்களாய்ப் பிறக்கும் உயிர்களும், அத்துணை அழிவுகட்கும் தப்பியே பிறத்தல் வேண்டும் என்பதனை இது முதற்பதின்மூன்று அடிகளில் அருளிச் செய்கின்றார்.
உதரம் - வயிறு; அஃது இங்கு அதனிடத்துள்ள கருப்பையைக் குறித்தது. ஈனம் இல் - குன்றுதல் இல்லாத; என்றது, `பலவான` என்றபடி. எனவே அவற்றின் செருவிற்குத் தப்புதலின் அருமை குறித்தவாறாயிற்று. ``கிருமி`` என்றது, அக்கருவை உண்ண விரையும் அவற்றை. அவற்றினின்றும் தப்புதல், அவ்விடத்து அக்கிருமிகளை அழித்தொழிக்கும் நற்பொருள்களாலேயாம். அப்பொருள்கள் அவ்விடத்து உளவாதல் அக்கருவிடத்து உள்ள உயிரது நல்வினை யானேயாம் ஆதலின்; `அவ்வாற்றான் அவ்வுயிர் அவற்றது செருவி னின்றும் பிழைத்தும்` என்று அருளினார்.
.
15. ஒருமதி - ஒரு திங்கள் அளவில், ஈண்டு, `திங்கள்` என்பது, `சாந்திரமானம்` எனப்படும் மதியளவாகிய இருபத்தேழுநாட் காலமே யாம்; அது, `திங்கள்` என்பதனானே இனிது பெறப்படும். தான்றி - தான்றிக் காய்; என்றது, அவ்வளவினதாகிய வடிவத்தைக் குறித்தது. `தான்றியின் கண்` என ஏழாம் உருபு விரித்து, தான்றிக்காய் அளவினதாய வடிவம் பெறும் அளவில்` என உரைக்க. ``இருமை`` என்றது, இங்கு, சிதைவுறும் தன்மையைக் குறித்தது. இம் மெல்லிய நிலையிலே தாயது அறியாமை முதலிய பற்பல காரணங்களால் கருச்சிதைந்தொழிதல் எளிதாதலின்,` அதனின்றும் தப்பியும்` என்றார். இந்நிலையில் தப்புதல், தாயது வயிற்றில் நின்று அக்கருவை ஊட்டி வலியுற நிறுத்தும் நற்பொருள்களாலேயாம்.
.
16. இருமதி விளைவின் - இரண்டு திங்கள் என்னும் அளவில் உண்டாகின்ற வளர்ச்சிக்கண். ஒருமையின் பிழைத்தும் - ஒரு திங்கள் அளவில் இருந்தவாறே இருத்தலினின்றும் தப்பியும்; என்றது, முதற்றிங்களில் தான்றிக்காய் அளவாய் முட்டைபோற் பருத்து நின்ற கரு, இரண்டாந் திங்கள் முதலாக உறுப்புக்கள் பிரிந்து தோன்றும் நிலையைப்பெற்று வளர்ச்சியுறுமாகலானும், அந்நிலையில் அக்கரு அங்ஙனம் வளர்தற்கு வேண்டும் பொருள்கள் அதற்குக் கிடையா தொழியின், முதற்றிங்களில் நின்ற நிலையிலே நின்று கெட்டொழியு மாகலானும், `அங்ஙனம் கெடுதலினின்றும் தப்பியும்` என்றவாறு.
புல்நுனிமேல் பனித்திவலையினும் சிறிய நுண்டுளியாய் நிற்குமதுவே வித்தாயினும், நிலத்தின் கட்பதிந்து நீர் முதலியவற்றால் பதனெய்திய விதையே பின் முளையைத் தோற்றுவித்தல்போல, அந்நுண்டுளி ஒரு திங்கள் காறும் பருத்துத் தான்றிக்காயளவினதாய் நின்றபின்பே பின்னர்க் கழுத்து, தலை முதலிய உறுப்புக்களைத் தோற்றுவிக்குமாதலின், அதுகாறும் உள்ள நிலையை வித்தெனவே கொண்டு, பின்னர் இரண்டாந் திங்கள் முதலாக உறுப்பு முதலியவை தோன்றப்பெறும் நிலைகளையே, `விளைவு` என்று அருளினார். ஒருமை - ஒன்றன் தன்மை. `ஒன்று` என்று முன்னர் ஒருதிங்களாகிய காலத்தைக் குறித்து, பின்னர் அக்காலத்தில் நிகழும் நிகழ்ச்சியைக் குறித்தது.
.
17. மும்மதிதன்னுள் - மூன்று திங்கள் என்னும் அளவில். மதம் - மயக்கம். சூல்கொண்ட மகளிர் மூன்றாந் திங்களில் பித்தம் மிகப்பெற்று உணவேலாது மயக்கமுற்றுக் கிடக்கும் நிலையை, `மயற்கை` என வழங்குதல் பலரும் அறிந்ததாகலின் அதனை `அம்மதம்` எனப் பண்டறிசுட்டாற் சுட்டிப் போயினார். இம் மயற்கைக் காலத்தில் மகளிர், கருவைக் காத்துக்கொள்ளுதலில் கருத்தின்றி, புளிப்புப் பண்டங்களையே யன்றி மண்ணை உண்ணுதல் முதலிய வற்றையும் செய்வர், ஆதலின், அவற்றிற்கெல்லாம் அக் கரு, தப்பி வளர்தல் வேண்டும் என்று அருளிச் செய்தார். கருவுற்ற மகளிர் மண்ணை விரும்பியுண்டல்,
``1வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவ ருண்ணா வருமண் ணினையே`` -புறநானூறு, 20
எனக் கூறப்பட்டதும் காண்க.
.
18. ஈரிரு திங்கள் - நான்கு திங்களளவில். பேரிருள் - யாதும் அறியாமை. மூன்றாந் திங்களில் மயற்கையுற்ற மகளிர், நான்காந் திங்களில் அம்மயற்கை நீங்கப் பெறுவர். அந் நிலையில் முன்னர் உற்று நின்ற கரு மயற்கைக் காலத்துக் கெட்டொழியாது நிலைபெற்றதோ, அன்றி நிலைபெறாதே கெட்டொழிந்ததோ என எழும் ஐயத்தின்கண் யாதும் துணியப்படுதற்கு வழியின்றி நிற்குமாதலின், அந் நிலையையே, ``பேரிருள்`` என்றார். எனவே, அந்நிலையிலும் அக்கரு நிலைபெறாதொழிதல் கூடுமாகலின், `அவ்விடத்தும் கெடாது நிலை பெற்று` என்பார், `ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்` என்றார்.
.
19. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஞ்சு திங்கள் - ஐந்து திங்களின் என்னும் அளவில். முஞ்சுதல் - சாதல். தாயது வயிற்றினின்றும் போந்து நிலத்தையடைதற்குப் பத்துத் திங்களை எல்லையாக உடைய கருப்பைக் குழவி, அதனிற் பாதியளவினதாகிய ஐந்து திங்கள் காறும் பெரும்பான்மையும் நிலையாமையையே உடையதாம். அதனுள்ளும், மயற்கைக் காலத்து அழிந்தொழியாது நிலைபெற்று நான்காந் திங்களில் மெலிந்துநிற்கும் கருக்குழவியை, ஐந்தாந் திங்களிற் பல்லாற்றானும் குறிக்கொண்டு காவாதொழியின், வலுப்பெற்று முதிர மாட்டாது அழிந்தொழியும்; அதனால், ஐந்தாந் திங்களைக் கரு அழியுங் காலமாக அருளினார்.
.
20. ஆறு திங்களின் - ஆறு திங்கள் என்னும் அளவில். நூறு அலர் பிழைத்தும் - கருப்பையைக் கிழிக்கின்ற பூவினது செயலுக்குத் தப்பியும். அலர் - பூ. மரவகைகளிடத்துக் காய் தோன்றுதற்கு வழியாய் நிற்கும் பூப்போல, கருப்பையுள் கருவை ஏற்று ஈனும் பிறப்புக்களது கருப்பை யினுள், தாயினது செந்நீரில் குமிழிபோலத் தோன்றுவதொரு பொருள் உண்டு. அதற்கும் பூவைப்போல அரும்புதல், மலர்தல், கூம்புதல்கள் உள. அதனது மலர்ச்சிக் காலத்தில் பெண்ணிற்கு ஆணோடு கூட்டம் உண்டாயின், கரு வாய்க்கும். அக்காலத்தன்றி, அரும்பற் காலத்தும், கூம்பற் காலத்தும் உளவாம் கூட்டத்தாற் கருவுண்டாதல் இல்லை. கருவை ஏற்றலின்றி வாளா கூம்பிய பூ, சின்னாளில் கெட்டு வெளிப் போந்தொழியும், தாயது வயிற்றிற் பூவுண்டாயினமை அது புறத்துப் போந்துழியே அறியப்படுதலின், அதனையே, `பூப்பு` என வழங்குப முதற் பூ, கருவை ஏற்றலின்றி அழியற்பாலதே; ஏனெனின், அது கரு வந்தடைதற்கு வாயிலில்லாத காலத்தே உண்டாவது. அது கெட்டபின், தான் உள்ளே நில்லாது வெளிப்போதுங்கால், வாயிலை உண்டாக்கிப் போதருதலின், பின்னர்த் தோன்றும் பூக்கள் கருப் பெறுதற்கு உரியன வாம். முதற் பூத் தான் பயனின்றி ஒழியினும், பின்னர்த் தோன்றுவன அனைத்தும் பயனுடையவாதற்கு ஏதுவாய் வீழ்தலின், அவ் வீழ்ச்சியையே, சிறப்பாக, `பூப்பு` எனக் குறிப்பர். ஒரு பூ அரும்பி மலர்ந்து நிற்கும் காலம், முன்னைப் பூ வீழ்ந்த நாள் முதலாகப் பதினைந்து நாள் எல்லை என்பதும், அதன் பின்னர் அது கூம்புதல் உளதாம் என்பதும்,
``பூப்பின் புறப்பா டீராறு நாளும்``
என்பதனான் அறியப்படும் (தொல் - பொருள்; 185). `பூ வீழ்ந்த நாள்முதலாக மூன்று நாட்கள் பூப்பின் அகப்பாட்டு நாள்களாம்` என்பதனை அச்சூத்திர உரைகளான் அறிக.
கருப்பையுடைய பிறப்புக்களில் மக்கட் பிறப்பிலும் மாக்களுள் ஒருசார் பிறப்பிலும் உள்ள பெண்களது கருப்பையில் ஒரு முறையில் பெரும்பாலும் ஒரு பூவும் சிறுபான்மை சில முறைகளில் ஒன்றற்கு மேற்பட்ட பூக்களும் தோன்றும்; ஆதலின், அவற்றால் ஓர் ஈற்றில் பெரும்பான்மையும் ஒரு குழவியும், சிறுபான்மை ஒன்றற்கு மேற்பட்ட குழவிகளும் பிறக்கும்.
மாக்களுள் ஒரு சாரனவற்றுப் பெண்களது கருப்பையில் ஒருமுறையில் பல பூக்கள் தோன்றுதலின், அவற்றிடமாக ஓர் ஈற்றில் பல குழவிகள் பிறப்பனவாம். ஆகவே, கருப்பையுள் தோன்றும் கருவிற்கும், மரவகைகளிற்போல, அக்கருப்பையினுள் அரும்பி மலரும் பூவே காரணம் என்பது புலப்படும்.
இத்தகைய பூ, மக்கட் பிறப்பின் மகளிரிடத்துக் கருவை ஏற்றுக் குழவி உருவத்தைப் பெறத்தொடங்குவது, அஃது ஐந்தாந் திங்களிற் கெடாது வலியுற்று நின்ற பின்னரேயாம். அஃது அங்ஙனம் உருப்பெற்று வளர்கின்றுழி. அது கருப்பையைத் தாக்குதல் உளதாம். அக்காலத்து அத்தாக்குதலால் ஒரோவழி, கருப்பை கிழிந்து, அவ்வுருவம் அரையும் குறையுமாய் நிலத்தில் வீழ்தலும் உண்டு. அந் நிலையினும் குழவி தப்புதல் வேண்டும் என்பதனையே, ``ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும்`` என்று அருளிச்செய்தார். மக்களுள் மலடரல்லராயும், மகவை உருவோடு பெறும் நல்வினை இல்லாத மகளிர் தம் கருவை இழத்தல், பெரும்பான்மையும் இத்தன்மைத்தாய ஆறாந்திங்களிலேயாம். ஆதலின், அதனைக் கடந்த பின்னரே, சூல் காப்பு முதலிய சடங்குகளைச் செய்தல் முறைமையாயிற்று. நூறுதல் - சிதைத்தல். ``அலர்`` என்றது ஆகு பெயராய் அதனது தொழிலைக் குறித்தது. கருவை ஏற்ற பூ, காய் எனப்படுதல், குழவி உருவம் நிரம்பப் பெற்ற ஏழாந் திங்களிலே யாதலின், ஆறாந்திங்களில் நின்ற உருவத் தினை, ``பூ`` (அலர்) என்றே அருளினார்.
.
21. ஏழு திங்களில் - ஏழென்னும் திங்களளவில். புவி - நிலம். அஃது ஆகுபெயராய், அதனுள் தோன்றும் பிறப்புக்களை உணர்த் திற்று. கரு ஆறாந் திங்களில் வீழாதே நிற்பினும், குழவி நன்முறையில் வளராதொழியின், மக்கட்டன்மை நிரம்பப்பெறாது, ஏழாந் திங்களில் மாக்கள் போலப் பிறப்பதாம். அப்பிறப்பு வகைகளை,
``சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும் மருளும்``
என வந்த புறப்பாட்டுள் (28) `உறுப்பில் பிண்டம்` என்றது ஒழிந்தன எனக் கொள்க. இவ்வாறெல்லாம் பிறத்தல் மக்களுலகில் தொன்று தொட்டே காணப்படுவது என்பதனை,

``................ இவையெல்லாம்
பேதைமை யல்ல தூதிய மில்லென
முன்னும் அறிந்தோர் கூறினர்``
என அப்பாட்டுட் கிளந்தோதியவாற்றான் அறிக.
இனி மக்கள் வயிற்றினும் ஒரோவொருகால் மாக்களும் பாம்பு போலும் சில ஊர்வனவும், பிறவும் பிறத்தல் உள என்ப; அவை யெல்லாம் ஏழாந்திங்களில் குழவியது வளர்ச்சிக் குறைபாட்டால் நிகழ்வனவே யாதலின், மானுடப் பிறப்பினுட் புகுந்தும், தீவினை வயத்தால் அவ்வாறெல்லாம் ஆகாது தப்புதல் வேண்டும் என்ப தனையே, ``தாழ்புவி பிழைத்தும்`` என்று அருளினார், இஃது உண்டாகாமைப் பொருட்டும் ஏழாந் திங்களிற் கடவுட் பராவலை, அறிந்தோர் செய்ப.
இனி, மக்கட் குழவி பிறப்பது பெரும்பான்மையும் பத்தாம் திங்களிலேயாயினும், சிறுபான்மை அதற்கு முற்பட்ட ஒன்பது, எட்டு ஏழென்னும் திங்களிலும் பிறத்தல் நிகழ்ச்சிகள் உள. அவை ஒன்றினொ ன்று சிறுபான்மைத்தாக நிகழும். அவற்றுள் ஏழாம் திங்களிற் பிறக்குங் குழவி உயிரொடு பிறத்தல் சிறுபான்மை. உயிரொடு பிறந்த வழியும் பின்னர் நெடிது வாழ்தல் மிகச் சிறுபான்மை. அதனால், அங்ஙனம் ஏழாம் திங்களிற் பிறத்தலினும் தப்புதல் வேண்டும் என்பதனையே இவ்வடியுள் அருளினார் எனக் கொண்டு, அதற்கேற்ப `தாழ்புவி` என்றதனை `புவிதாழ்` என பின்முன்னாக மாற்றி ஏழாந் திங்களிற் றானே நிலத்தில் வந்து பிறத்தலினின்றுந் தப்பியும்` என உரைத்தலு மாம். இவ்விரண்டனையும் இவ்வடியின் பொருளாகக் கொள்க.
.
22. எட்டுத் திங்களில் - எட்டென்னும் திங்களளவில். கட்டம் - மெய்வருத்தம். அஃதாவது, ஏழாம் திங்களில் உருநிரம்பப் பெற்ற குழவி, அவ்வுருவம் நன்கு முதிர்ந்து வளரும் வளர்ச்சியால் கருப்பையினுட் கட்டுண்டு கிடக்கமாட்டாது வருந்தும் வருத்தமாம். இக்காலத்தில் அது, அக்கருப்பையோடே அசைவுறுதலும் உண்டு.
.
23. ``ஒன்பது``, ஆகுபெயர்; `ஒன்பது திங்கள் என்னும் அளவில்` என்றபடி. துன்பம் - மனக்கவலை. எட்டாம் திங்களில் நன்கு முதிர்ந்து வளர்ச்சியுற்ற குழவி, ஒன்பதாம் திங்களில் கருப்பையுட் கட்டுண்டு கிடக்கும் நிலையை உணர்ந்து ` இனி இதனினின்றும் புறப்படுமாறு எவ்வாறு` என நினைந்து கவலையுறும். `அக்காலை அஃது இனிப் பிறவி வாராமல் அருள வேண்டும் என இறைவனைக் கைகூப்பி வேண்டும்` எனவும் சொல்லுப. இவ் எட்டு ஒன்பதாம் திங்களில் உள வாகும் உடல் வருத்தம், மன வருத்தம் என்பவற்றைத் தாங்கும் உடல் வலிமையும், மனவலியும் இல்லாததாய் இருப்பின், குழவி அக் காலத்தே இறந்துபடுமாகலின், அவற்றினின்றுந் தப்புதல் வேண்டும் என்பார், `` எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்`` என்றும் ``ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்`` என்றும் அருளினார். ``கட்டமும் துன்பமும்` என்ற உம்மைகள் எச்சப் பொருள.
.
24-25. தக்க தச மதி - குழவி குறையின்றிப் பிறப்பதற்கு ஏற்புடைத்தாய பத்துத் திங்கள் என்னும் அளவில் ``தாயொடு`` என்ற ஒடு, எண்ணொடு. துக்க சாகாரத் துயர் - துக்கமாகிய. கடல்போலும் துயர். `துக்கம், துயர் ` என்பன ஒரு பொருளவாயினும், அடையடுத்து வந்தமையின், சிறப்பும் பொதுவுமாய் இருபெயரொட்டாய் நின்றன. குழவி பிறக்குங்கால் தாயும், குழவியும் படும் துன்பம் பெருந்துன்ப மாதல் வெளிப்படை. குழவிக்கும் தாய்க்கும் உளவாந் துன்பங்கள், குழவி தான் வெளிப்போதற்குச் செய்யும் முயற்சியால் வருவன
வாம். தாய் தனக்கு உளதாய துன்பமிகுதியால் குழவி இனிது பிறத்தற்கு ஏற்ப நில்லாமையானாதல், குழவி தனக்கு உண்டாய துன்ப மிகுதியால் வெளிப்போதும் முயற்சியிற் சோர்வுறுதலானாதல் குழவி பிறவாது வயிற்றிலே இறத்தலும் உண்டு.
அதனால், அவ்விருவகை இன்னலினும் தப்புதல் வேண்டு மாகலின், ``தாயொடு தான்படுந் துக்கசாகரத் துயரிடைப் பிழைத்தும்`` என்று அருளினார்.
.
26-27. `ஆண்டுகள் தோறும்`` என்றதனை, `` இருத்தியும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `பிறந்த பின்னர், தாயர் முதலியோர் தம்பால் நெருங்க அணைத்தும் ஓரிடத்தே இருக்க வைத்தும் ஆண்டு களின் வளர்ச்சிதோறும் அவர் செய்யும் எத்துணையோ பல செயல் களினின்றும் தப்பியும்` என்க.
`ஈண்டுவித்தும்` என்பது, தொகுத்தலாயிற்று. எனைப் பலவாவன, பாலூட்டல், நீராட்டல், மருந்தூட்டல், சீராட்டல் முதலியன, இவை குழவிக்கு நலஞ்செய்யுமாயினும், காலம் அளவு முதலியன ஒவ்வாதவழித் தீங்கு பயக்குமாதலானும், அவ்வொவ்வாமையை அவர் அறிதல் அரிதாகலானும், அவற்றினும் தப்புதல் வேண்டும் என்றார்.
.
28-29. மேலெல்லாம், உயிர், மக்கட் பிறப்பிற் புக்க வழியும் இனிது பிறவாதவாறும், பிறந்தபின் நன்கு வளராதவாறும் நிகழும் இடையூறுகளினின்றும் தப்புதல் கூறினார்; இனி, வளர்ந்த பின்னரும் உள்ளம் தெய்வத்தின் பாலன்றிப் பிறவற்றிற் செல்லுதற்கு வாயிலாவன வற்றினின்றுந் தப்புதல் கூறுகின்றார்.
``வேலை`` என்றதை, ``காலை``, ``கடும்பகல்`` என்ற வற்றிற்குங் கூட்டுக. வேலை - பொழுது, மலம் - வயிற்றில் உள்ள மலத் தால் உளதாம் துன்பம். இது காலைக்கண் பெரிதாம், பசி - பசித் துன்பம், நிசி - இரவு. நித்திரை - உறக்கம். இது நன்றாயினும் தெய்வத்தை நினைத்தற்கு இடங்கொடாது, தானே வந்து பற்றுதலின், தடையாயிற்று. `நித்திரை பிழைத்தும், யாத்திரை பிழைத்தும்` எனத் தனித்தனி கூட்டுக. நாள்தோறும் தவறாது நிகழும் மலம் முதலிய மூன்றனையும் ஒருங்கெண்ணி, `அவற்றிற் பிழைத்தும்` எனவும், இடையீடுற்று வேண்டுங்காலத்து நிகழும் யாத்திரையை வேறு வைத்து, ``யாத்திரை பிழைத்தும்`` எனவும் அருளினார் என்க. யாத்திரை - வழிச் செலவு. மலம், ஆகுபெயர்.
.
30-35. இப் பகுதியுள் மகளிரது அழகு ஆடவரது மனத்தைக் கொள்ளை கொள்ளுமாற்றினை விரித்தருளிச் செய்கின்றார். சிறப்பு பற்றி ஆடவரது உள்ளத்தையே கூறினாராயினும், இதனானே ஆடவரது அழகும் பெண்டிரது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுதலும் பெறப்படுவதேயாம், கார்மயில் - கார்காலத்து மயில், கார்காலத்தில் மயில் மேகத்தைக் கண்டு களித்தலும், அக் களிப்பினால் தோகையை விரித்து அழகுற ஆடுதலும் இயல்பு. ஒருங்கிய சாயல் - ஒழுங்கு பட்ட தோற்றம். பிற்கால வழக்கில் சாயல் என்னும் சொல் தோற்றம் எனப் பொருள் தரும் என்க. `மயில்போலும் சாயல்` என்க. நெருங்கி - ஒன்றை ஒன்று அணுகி. மதர்த்து - விம்மி. கதிர்த்து - அழகு மிக்கு, `முன்`என்றதனை, ``நிமிர்ந்து`` என்றதற்கு முன்னேகூட்டுக. பணைத்து - பருத்து. `இடை எய்த்து வருந்த` என்க. வருந்தல் பாரம் தாங்கமாட்டாமையானாம். எழுந்து - வளர்ச்சியுற்று. புடைபரந்து - மார்பிடம் எங்கும் பரவி. ``ஈர்க்கிடை போகா இளமுலை`` என்பது. பொருநராற்றுப் படையுள்ளும் (36) வந்தமை காண்க. `குழலையும், வாயையும், நகையையும், சாயலையும், முலையையும் உடைய மாதர் என்க. கூர்த்த - கூர்மை பெற்ற, நயனம் - கண். பிற உறுப்புக்களும் உள்ளத்தைக் கவருமாயினும், அவை நின்ற நிலையில் நிற்றலன்றிக் கண்போலப் புடைபெயர்ந்து அகப் படுத்த மாட்டாமையின் அக் கவர்ச்சிகள் சிறியவாக, கண் அவ்வாறன்றிப் புடைபெயர்ந்து அதனை அகப்படுத்தலின் அக்கவர்ச்சி பெரிதாதல்பற்றி அதனையே உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக அருளினார்.
.
36-37. பித்து,`பித்தம்` என நின்று, வேற்றுமைக்கன் இறுதி யொற்றுக் கெட்டது. உலகர் - உலக வாழ்க்கையையன்றிப் பிறி தொன்றை நோக்காதவர். அவ்வியல்பு அவரறிவின் கண் உள்ள மயக்கத்தாலாயிற்றாகலின், அதனை, `பித்து` என்றார். பெருந்துறைப் பரப்பு - பெரியவாகிய துறைகளையுடைய நீர்ப்பரப்பு. `பரப்பு` என்றது, வாழ்க்கையை, அதுதான், அரசாட்சியும் அமைச்சு முதலிய அரச வினைகளும், உழவும் வாணிபமும் முதலாகப் பற்பல துறை களையுடைமையின் `பெருந்துறைப் பரப்பு` என்றார். `துறை, பரப்பு` என்றவை குறிப்பு உருவகம். பெருமை, இங்கு, பன்மை குறித்தது. `பரப்பினுள் ` என்றதன் பின்,`நின்று கலக்கும்` என்பது வருவிக்க. `வாழ்க்கையாகிய நீர்ப்பரப்பினுள் நின்று அதனைக் கலக்கும் மத யானை என்று சொல்லத்தக்க ஆைu2970?` என்க. வாழ்க்கைக்கண் உளதாம் ஆசையாவது, பல தொழில் துறைகளில் நிற்குங்கால் அவற்றை இவை உடலோம்பல் மாத்திரைக்கே ஆவன` என்று அறிந்து புறத்தால் தழுவி, அகத்தில் பற்றின்றி யொழுகாது, அவையே உயிராகக் கருதி, அவற்றின்கண் மேன்மேல் உயர விரும்புதல். அவ் விருப்பம், அறிவை அறத்தையும் வீட்டையும் நோக்கவொட்டாது மயக்கி, அதனானே, வாழ்க்கைத் துறைகளிலும் பொய், களவு முதலிய பலவற்றைப் புரிந்து ஒழுகச் செய்தலின் அதனை நீர்ப்பரப்பைக் கலக்கும் மதயானையாக உருவகம் செய்தார் `அவாவிடை`` என்ற ஏழனுருபை ஐந்தனுருபாகத் திரிக்க.
.
38. `கல்வி கரையில`` (நாலடி - 135.) என்றபடி, கல்வி, அள வில்லாத துறைகளையுடைத்தாய், ஒவ்வொரு துறையும் மிகப் பரந்து கிடப்ப நிற்றலானும், அவை அனைத்திலும் வேட்கை செலுத்தின், நிரம்பப் பயன் எய்துதல் கூடாமையானும், நீர்வேட்கை கொண்டோன், அது தணிதற்கு வேண்டும் நீரை முகந்துண்டு தன் காரியத்திற் செல்லுதல்லது, தன் முன் காணப்படும் ஆறு, குளம் முதலியவற்றி லுள்ள நீரையெல்லாம் முகக்கக் கருதாமைபோல, பரந்துபட்ட கல்வியுள் உலகியலில் தமக்கு வேண்டுந்துணையே கற்று அமைந்து, உயிர்க்குறுதிதேட முயறலன்றி எல்லாக் கல்வியையும் முற்றக் கற்க முயலுதல் அறிவுடைமை யன்றாகலானும், ``கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்`` என்றார்.
.
39. ஈட்டல், காத்தல், அழித்தல் முதலிய எல்லாவற்றானும் பொருள் துன்பமே பயத்தலின், `செல்வம் என்னும் அல்லல்`` என்று அருளினார். அல்லலைத் தருவது, ``அல்லல்`` எனப்பட்டது. இதனின்றுந் தப்புதலாவது, இதன்கண் பற்றுச் செய்யாமையாம்.
.
40. நல்குரவு - வறுமை, விடம் - நஞ்சு. செல்வம் அல்லல் பயப்பினும், அறிவுடையார்க்காயின், அறத்தையும் உடன் பயக்கும், வறுமை அவ்வாறின்றி அவர்க்கும் இருமுது குரவர் முதலாயினாரை இனிது ஓம்பமாட்டாமை முதலிய பல குற்றங்களைப் பயந்து இருமையையுங் கெடுத்தலின், அதனை நஞ்சாக உருவகித்தார். இதனானே, வறுமையுட் பட்டார்க்கு அறிவு மெய்யுணர்தற்கட் செல்லாமையும் பெறப்பட்டது.
``வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பி``
(சூ. 2-91) என்றார் சித்தியாரினும். வறுமை இருமையையுங் கெடுத்தலை,
இன்மை யென ஒருபாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (-குறள், 1042)
என்பதனானும் அறிக. இவ்வாறு நல்குரவு இருமையுங் கெடுத்தலைப் பலரும் பண்டே அறிந்து அஞ்சப்படுவதென்பதனையே, ``தொல் விடம்`` என்றார் என்க.
இதனினின்றும் தப்புதல்.
தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாள்தந்த
துண்ணலி னூங்கினிய தில். -குறள், 1065
என்று மகிழ்ந்திருக்கும் பண்பு, தமக்கும், தம் சுற்றத்திற்கும் வாய்த் தலால் உண்டாவதாம்.
.
41. புல் வரம்பாய பல துறை - இழிந்த நிலையினவாகிய பல தொழில்கள். அவை, கள் விற்றல், மீன்படுத்தல், ஊன் விற்றல் போல்வன. இவை அறிவின்கண் நல்லன புகவொட்டாமையின், தெய்வ உணர்விற்கும் தடையாதல் அறிக. இத்தொழில்கள் தாமே சாதிகளாய் நிற்றலின்,
``தரைதனிற் கீழை விட்டுத் தவம்செய்சா தியினில் வந்து``
எனச் சிவஞானசித்தி (சூ 2-90) யுட் கூறப்பட்டது.
.
42-45. தெய்வம் என்பது ஓர் சித்தம் - கடவுள் என்று உணர்வ தோர் உணர்ச்சி. உண்டாகி - தோன்றப் பெற்று. முனிவிலாதது ஓர் பொருள் கருதலும் - எஞ்ஞான்றும் வெறுக்கப் படாததாகிய அவ் வொப்பற்ற பொருளை அடைய விரும்பிய அளவிலே. அளவில்லாத மாயையின் ஆற்றல்கள் தனித் தனியே தம் மயக்கும் செயல்களைச் செய்யத் தொடங்கிவிட்டன என்க.
தெய்வம், `கடவுள்` - பரம்பொருள் என்னும் பொருளதாய் நின்றது. `அம் முனிவிலாததோர் பொருள்` எனச் சுட்டு வருவித் துரைக்க. அதுபகுதிப் பொருள் விகுதி. ``மாயா சத்திகள்`` எனப் பட்டன. உலகியல்களாம். ``ஆறுகோடி`` என்றது, அளவின்மை குறித்தவாறாம். கோடி என்றே போகாது ``ஆறுகோடி `` என்றது மாயா காரியங்கள் அனைத்தும் `அத்துவா` எனப்படும், `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறாய் அடங்குதல் பற்றிப் போலும்! இனி, இதனை, `காமம், குரோதம்` முதலிய அகப் பகை ஆறென்றல் பற்றிக் கூறியதாக உரைப்பின், அவை ஆணவத்தின் காரியமாதலேயன்றி, மேல், மாதர்தம் மயக்கம் முதலாகக் கூறிய வற்றுள் அடங்கினவாதலும் அறிக.
மேல் கடவுளுணர்வு தோன்றுதற்குத் தடையாயுள்ளனவற்றை வகுத்தருளிச் செய்தார்; இனி, அது தோன்றிய பின்னரும், நிலை பெறாதொழிலைச் செய்வனவற்றை அவ்வாறருளிச் செய்வாராய், ``மாயா சத்திகள் தம் மாயைகள் தொடங்கின`` என்றார். எனவே, இனி வருவன அம் மாயா சத்திகளின் செயல்களே யாதல் அறிக.
உணர்வை, ``சித்தம்`` என்றார். உலகப் பொருள்கள் முன்னர் இனியவாய்த் தோன்றி விரும்பப்பட்டு, பின்னர் இன்னாதனவாய் வெறுக்கப்படுதல் போலன்றி, பரம்பொருள் எஞ்ஞான்றும் இனிதாயே நிற்றலின், அடையற்பாலது அஃது ஒன்றுமே என்பது உணர்த்து வார்,``முனிவிலாததோர் பொருள்` என்றார்.
.
46-47. `ஆத்தமானாரும் அயலவரும் கூடி` என்க. ஆத்தம்- மெய்ம்மை. ஆனார் - நீங்காதவர்; என்றது, `உறுதியுரைக்கும் நண்பர்` என்றவாறு. இனி. `ஆத்தம்` என்னும் பண்புப் பெயர், அதனை உடையார்மேல் நின்றதெனக் கொண்டு, `ஆத்தராயினார்` என்று உரைத்தலுமாம். அயலவரும் அவரொடு கூடியது அவர் கூற்றை வலியுறுத்தற்பொருட்டாம், இவர்கள் பேசும் நாத்திக உரைகளாவன, `இப்பொழுது கிடைத்துள்ள செல்வமும், மாடமாளிகையும், மகளிரும் முதலாய பொருள்களைத் துறந்து, இனி எய்தற் பாலதாய கடவுளை அடைதற்கு இப்பொழுது விரும்புதல் வேண்டா; பின்னர்ப் பார்த்துக் கொள்வோம் என்றாற் போல மெய்ந்நெறியினை நெகிழவிடக் கூறுவனவாம், கடவுளும் வினைப்பயனும் மறுபிறப்பும் போல்வன வற்றை, `இல்லை` என அழித்துரைக்கும் நாத்திகரைப் பின்னர்க் குறித் தருளுப. ``நாத்தழும் பேறினர்`` என்றதனால் இவற்றைப் பல்காலும் இடையறாது கூறி ஆமளவும் கடவுள் உணர்வை மாற்ற முயறல் குறிக்கப்பட்டது. ``நாத்தழும் பேறினர்`` என சினைவினை, முதல்மேல் நின்றது. ``பெருகவும் சூழவும்`` எனப் பின்னர் வருதலின், அவற்றிற் கேற்ப ஏனையிடங்களிலும், `நாத்தழும்பேறினராகவும், `சாத்திரங் காட்டினராகவும்` என்றாற்போல, ஆக்கமும், உம்மையும் விரித் துரைக்க.

48-49. சுற்றம் - உறவினர். கடவுள் நெறியது நலப் பாட்டினை அறியமாட்டாமையின், அதனை அடைய விரும்புவாரைத் தமக்கும் தம் தமர்க்கும் உறுதியுணராதவராக நினைத்து அவலம் எய்தலின், அத்தன்மையராய உறவினரை விலங்குகளோடு ஒப்பித்து, ``பசுக் குழாங்கள்`` என்று அருளிச் செய்தார். எனவே, சுற்றம் என்னும் குழாங்கள்`` என்றது இகழ்ச்சிக்கண் உயர்திணை அஃறிணையாய், பின் வரும், ``பதறினர்`` என்பதனோடு திணை மயக்கமாயிற்று என்க. இனி, `பதறின`` என்பதே பாடம் என்றலுமாம். தொன்று தொட்டு வந்த உறவுடையர் என்பார், `தொல்பசுக்குழாங்கள்`` என்றார். பற்றி அழைத்தல் - கை கால்களைப் பற்றிக்கொண்டு `அந்தோ! துறத்தல் வேண்டா` எனக் கூப்பீடு செய்தல். பதறுதல் - துன்பத்தால் விதிர் விதிர்த்தல். `பதறினராய்ப் பெருக` என்க. பெருகுதல், பலராய்ச் சூழ்ந்து கொள்ளுதல். உம்மை, வினைக்கண் வந்த எண்ணிடைச் சொல். ``சூழவும்`` எனப் பின்னர் (அடி 58) வருவதும் அது.
ஒருவர்க்கு ஒரு காரியம் பற்றிச் சொல்பவருள் ஆத்த நண்பர் முன்னிற்பராகலானும், அவர் தம் கருத்தை யுரைத்தலைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றுழி, அயலாரும் அவரோடு உடம்பட்டுச் சில சொல்லுபவாகலானும் அவ்விருவரையும் முன்னர் வைத்தும், அவர்தம் உரைப்படியேனும், அவற்றிற்கு மாறாக வேனும் செயலை மேற்கொள்ளும் வழியே, சுற்றத்தார் அறிந்து தாம் கூறுவனவற்றைக் கூறுவராகலின், அவரை அவ்விருவருக்கும் பின்னர் வைத்தும் அருளிச் செய்தார். இவரெல்லாம் உலகவராய் நீங்க, இனிச் சமயத்தார் செய்வனவற்றை அருளுவார்.
.
50-51. விரதம் - நோன்புகள், பரம் - மெய்ப்பொருள். `உயிர்கள் செய்யும் வினைகளே, அவற்றிற்கு நன்மை தீமைகளைப் பயக்கும்; உயிர்கட்கும், அவை செய்யும் வினைகட்கும் வேறாய் மூன்றாவதொரு பொருள் இல்லை என்பவர், வேதத்துட் கரும காண்டத்தையே சிறப்புடைய பகுதியாகக் கொண்டு. ஏனைய பகுதிகளைப் பொதுவகையால் தழுவுபவர். இவர், வேதத்தின் முற்பகுதியாகிய கரும காண்டம் ஒன்றனையுமே ஆராய்பவராகலின் `பூருவ மீமாஞ்சகர்` எனவும், கரும காண்டம் ஒன்றனையுமே சிறந்த பிரமாணமாகக் கொள்ளுதலின், `கருமகாண்டிகள்` எனவும், `கருமமே கடவுள்` என்றலின் `கருமப்பிரமவாதிகள்` எனவும் பெயர் கூறப்படுவர். எனவே, இங்கு, ``வேதியர்`` என்றது, இவர்களையே யாம்.
``ஆதிமறை ஓதி அதன்பயனொன் றும்மறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே``
என்றார், நெஞ்சுவிடு தூதினும் (116,117).
சரதம் - உண்மை. `சாத்திரம்` என்றது, இவரது நூலாகிய பூருவ மீமாஞ்சையை. இது, சைமினி முனிவரால் செய்யப்பட்டது. அந்நூல், இவர் தம் கொள்கையை மிகத் திறம்பட நிறுவலின், ``சரதமாகவே காட்டினர்`` என்று அருளினார், எவ்வாறுரைப்பினும், இவர் தம் கூற்று உண்மையல்ல என்பார், ``பரமாக`` எனவும், `சரதமாகவே``எனவும் ஈரிடத்தும் ஆக்கச் சொற்புணர்த்து அருளிச் செய்தார். ``ஆகவே`` என்றது, `போலத் தோன்றும்படியே` என்றவாறு. இன்னும், `உணர்த்தினர்` என்னாது, ``காட்டினர்`` என்றார், அஃது அறிவுடையோர் உணர்வைப் பற்றாது நீங்கலின். வேதத்துட் கரும காண்டம் முன் நிற்றல் பற்றி, இவரை முன்னர்க் கூறினார்.

52-53, ``சமய வாதிகள்`` என்றது, வேதத்துள் உபாசனா காண்டமும், அதுபோலும் பிற நூல்களும் பற்றி ஒரு தெய்வத்தை யாதல், பல தெய்வங்களையாதல் வழிபடும் கிரியா மார்க்கத்தவரை யாம். உபாசனா காண்டம், கரும காண்டத்தின் பின்னர்த்தாதல் பற்றி, இவரை மீமாஞ்சர்க்குப் பின்னர் வைத்து அருளிச்செய்தார். மதம் - தாம் தாம் தெய்வம் எனக் கொண்ட பொருள் பற்றிய கொள்கை. அமைதலுக்கு வினைமுதல், மேல் `பரம்`` என்றதேயாம். அதனால், அதனை இங்கும் இயைத்துரைக்க. இங்கும், ``அமைவதாக`` என்றார், பரம் பொருள் அவர் தம் மதங்களில் அமையாமையின். அமைதல் - அடங்குதல். ``அரற்றி`` என்றதும் அதுபற்றி. அரற்றுதல் - வாய் விட்டழுதல். இவருள் ஒருவர் கொண்ட தெய்வத்தை மற்றையோர் உடம்படாது மறுத்துரைத்துக் கலாய்த்தலின், `மலைந்தனர்` என்றும் அருளிச் செய்தார்.
.
54-55. மிண்டிய - வலிமைபெற்றெழுந்த. மாயாவாதம் - `உலகம் உள்பொருளன்று` என்னும் கூற்று. உலகம், கடவுள் போல என்றும் ஒருநிலையாய் நில்லாது, தோன்றி நின்று மறைதல் பற்றி, `பொய்` எனவும், `அசத்து` எனவும் ஆன்றோர் கூறினாராக, அக்கருத் துணராது, `கயிற்றில் அரவு போலவும் கானலின் நீர் போலவும் கடவுளிடத்தே தோன்றுவதொரு பொய்த் தோற்றமே உலகம்` எனவும், `அன்னதொரு தோற்றமே மாயை` எனவும் கொண்டு` `நாம் காண்பன அனைத்தும் மாயையே` என வாதித்தலின், அவ்வாதம், `மாயா வாதம்` எனப்பட்டது. இவ்வாதத்தினை வலியுறுத்தும் உத்தரமீமாஞ்சை யாகிய பிரம சூத்திரம் என்னும் முதனூலைச் செய்தவர் வேதவியாத முனிவராதலின், அதற்கு அந்நூலோடு இயைந்த உரையை வகுத்துப் பெருமைபெற்ற சங்கரர் காலத்திற்றான் இவ்வாதம் தோன்றிற்று என்றல் உண்மையுணராதார் கூற்றேயாமென்க,
இனி, மாயாவாதம் சங்கரர் காலத்திற்கு முன்னரே தோன் றிற்றாயினும், அது தமிழகத்திற் பரவியது, அவரது காலத்திற்றான் என்பது உண்மையேயாயினும், அடிகள் போன்ற பேரறிவுடை யார்க்குச் சங்கரர் காலத்திற்கு முன்னர் அதனை அறிதல் இயலா தென்றல் பொருந்துவதன்றாம், மாயாவாத நூல் வேதவியாத முனிவ ரால் செய்யப்பட்டது என்பதனை, `இங்ஙனம் நால்வேறு வகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்தவன் வியாதமுனிவன்` எனச் சிவஞானபாடி யத்துட் கூறியவாற்றான் உணர்க. ஏகான்மவாதவகை நான்கனுள் மாயாவாதமே தலையாயதென்பது வெளிப்படை.
இவ்வாற்றான், சிவநெறியாளர்க்கு வடமொழியில் சிவாகமமே சிறப்பு நூலாவதன்றிப் பிற நூல்களுள் யாதொன்றும் அன்னதாகாமை பெறப்பட்டது. இவ்வரையறையில் நில்லாது, வியாத முனிவரது ஏகான்ம நூலைச் சிவநெறி நூலாக மேற்கொண்டு உரை வகுக்கப் புகுந்தமையால், நீலகண்ட சிவாசாரியர் சைவசித்தாந்தத்தோடு உள்ளத்தால் முரணாராயும், உரையால் முரணி நிற்பாராயினார் என்க,
வேதத்தை வகைப்படுத்திப் பதினெண் புராணங்களையும் செய்த வியாத முனிவரது நூலை, இவ்வாறு பிரமாணம் அன்றென விலக்குதல் குற்றமாமன்றோ எனின், ஆகாது; எவ்வாறு எனின்,
``வேதந் துறைசெய்தான் மெய்துணியான் கைதுணிந்தான்``
எனப் பிற்காலத்தார் தாமே (குமரகுருபர அடிகள் - சிதம்பரச் செய்யுட் கோவை - 13.) ஓதினாராகலானும், அவர் அங்ஙனம் ஓதுதற்கு முதலாய்,
``கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற்
பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின்``
(சிவஞான முனிவர் மொழிபெயர்ப்பு; இதன் மூலம் சிவாசாரியர் பஞ்ச சுலோக வாக்கியம்) எனக் குறிக்கப்படும் பண்டை வரலாறு உண்மையானும், வேதவியாதர் குணவயப்பட்டு மயங்கினமை பெறப்படுதலான் என்க.
`மாயாவாதம் சங்கரர் காலத்திலன்றோ தோன்றியது என்பார்க்கு இங்ஙனம் செவ்வனே விடையிறுக்கமாட்டாதார், ஈண்டு அடிகள், `மாயாவாதம்`` என்றது, சூனியவாதமாகிய புத்த மதத்தை எனக் கூறி இடர்ப்படுவர், `மாயை` என்னும் வாய்பாடு வைதிக மதங்கட்கன்றி, அவற்றிற்குப் புறமாய மதங்கட்கு ஏலாமைதானே, அவர் கூற்றுப் பொருந்தாமையை இனிது விளக்கும். அன்றியும் அடிகள் ஈண்டு வைதிக மதங்களை எடுத்தோதியதன்றி அவைதிக மதங்களை எடுத்தோதினாரல்லர். ஓதினாரெனின், ஆருக மதத்தையும் கூறியிருத்தல் வேண்டும் என்க. உலகாயத மதம் ஏனை மதங்கள் அனைத்திற்குமே புறம்பாவதென்பதுணர்க.
இம் மாயாவாதம், கடவுட்கும் உயிர்க்கும் இடையே உள்ளதாய், யாண்டும் உயர்ந்தோர் பலராலும் போற்றிக் கொள்ளப்பட்டு வரும் ஆண்டான் அடிமைத் திறத்தினை, முனிவர் ஒருவரது நூலைத் துணைக்கொண்டு போக்க உறுதி கொண்டு நிற்றலின், ``மிண்டிய`` என அடைபுணர்த்தும், ஈன்று புறந்தந்து விளங்குவாளை, `இவள் மலடி` என்பார் கூற்றுப்போல, யாவராலும் உள்ளதாய்க் காணப்பட்டுப் பயன் தந்து வரும் உலகினை, விடாய் கொண்டோர்க்கு அதனைத் தணிக்க மாட்டாது வெறுந் தோற்றமாத்திரையாய் ஒழியும் கானல்நீர் முதலியவற்றோடு ஒப்பித்து, `இஃதோர் பொய்த் தோற்றம்`எனக் கூறும் தமது முருட்டு வாதத்தினை, `தற்கம், வாதம், செற்பம், விதண்டை, சலம், சாதி` முதலிய பாகுபாட்டுரைகளாற் சொற்சாலம் படவிரிக்கும் அவரது ஆரவார உரைகள், யாதுமறியா மக்களுள்ளத்தை மருட்சிக்குள்ளாக்குதலின், அதனை, சுழன்றடித்துப் பொருள்களைத் தலைதடுமாறாகப் புரட்டி மக்களை அல்லற்படுத்தும் பேய்க்காற்றின் செயலோடொப்பித்து, மாயாவாதமென்னும் சண்ட மாருதம் சுழித் தடித்து ஆஅர்த்து` என உருவகித்தும் அருளிச் செய்தார். `மாயாவாதிகள்` என அதனை உடையார் மேல் வைத்து அருளாது `மாயாவாதம்` என அவ்வாதத்தின் மேலே வைத்து அருளியதும், அதனது மயக்க மிகுதியைப் புலப்படுத்தற் பொருட்டாம். ``அதிற்பெரு மாயை எனைப் பல சூழவும்`` எனப் பின்னர் வருவதனை (அடி58) இதற்குங் கூட்டியுரைக்க.
இவ்வாதம், வேதத்துள் உபாசனா காண்டத்தின் பின்னர்த் தாய் இறுதியில் நிற்கும் ஞான காண்டத்தையே பற்றிநிற்றலின், மேற்கூறிய கிரியாமார்க்கச் சமயங்களின் பின்னர் வைத்து அருளினார். இதனானே, இதன்நூல், `உத்தர மீமாஞ்ைu2970?` எனவும், இம்மதம், `வேதாந்தம்` எனவும் பெயர் பெறுவவாயின. உபநிடதங்களுள் `அத்துவிதம்` எனவரும் சொல்லினைச் சிறப்பாகப் பற்றிக்கோடலின். `இவ்வாதிகள் தம் மதத்தினை` `அத்துவித மதம்` எனவும், தம்மை `அத்துவிதிகள்` எனவும் கூறிக்கொள்ளினும், `ஏகான்ம வாதம்` என்பது இதற்கு ஏற்புடைய பெயராகும், `மாயாவாதம்` என்பது சிவநெறியாளர் இதற்கு இட்ட பெயராம்.
உத்தர மீமாஞ்சை வேதத்தின் ஞானகாண்டத்தை ஆராய்வ தாயின், அதனை இகழ்தல் குற்றமாமன்றோ எனின் அன்றாம். என்னையெனின், வேதத்தின் பொருளை ஒருதலையாக இனிது விளங்க எழுந்தவையே சிவாகமங்களாதலின் அவற்றை இகழ்ந் தொதுக்கி, அவற்றொடு மாறுபட எழுந்த பிற நூல்களைக் கொள்வதே குற்றமாதலின் என்க, இதனை,
``............. நீண்மறையின் ஒழிபொருள், வேதாந்தத்
தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம்; பிறநூல்
திகழ்பூர்வம்; சிவாகமங்கள் சித்தாந்த மாகும்``
என்றும் (சிவஞான சித்தி - சூ. 8-15) ``வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்`` என்றும் (சிவப்பிரகாசம்-7.) சிவநெறியாசிரியன்மார் இனிது விளக்கிப் போந்தவாறறிக. இன்னும் அவர், சிவாகமங்களை யொழித்து வேதத்தின் சார்பாய் எழுந்த நுல்கள் அனைத்தும் பசுத்தன்மை யுடையோரால், தாம்தாம் அறிந்தவாற்றாற் செய்யப் பட்டன என்பதை,
அருமறை,ஆ கமம் முதல்நூல், அனைத்தும் உரைக்
கையினால்;
அளப்பரிதாம் அப்பொருளை; அரனருளால் அணுக்கள்
தருவர்கள்,பின் தனித்தனியே தாமறிந்த அளவில்
தர்க்கமொடுத் தரங்களினால் சமயம்சா தித்து
-சிவஞானசித்தி, சூ. 8-14
என எடுத்தோதியதுங் காண்க.

56-57. `உலகாயதர்` எனப் பன்மையாற் கூறாது ஒருமையாற் கூறினார். அவரது மதம் ஏனை எல்லா மதங்களினுங் கீழ்ப்பட்டதாய அதனது இழிபுணர்த்தற் பொருட்டு.
`காட்சி ஒன்றே அளவை; அதற்கு வாராதவாறு உரைப்பன வெல்லாம் போலிகள்; ஆகவே, முற்பிறப்பு மறு பிறப்பு, வீடுபேறு முதலியவற்றைக் கூறி, உலகத்தாரை, அலைக்கழித்தல் வேண்டா` என்பதே உலகாயதமதம். `நாத்திகம்` எனப்படுவதும் இதுவே. உலகாயதருள்ளும், `உடம்பே உயிர். மனமே உயர், பிராணவாயுவே உயிர்` என்றாற்போலும் வேறுபட்ட கொள்கை நூல்களையுடையார் உளராகலின், அந்நூல் வேறுபாடுகளை, ``கலாபேதம்`` என்றார், கலா- கலை; நூல். உலகாயதரது கொள்கைகள் பலவும் அந்நூல்களில் கிடைத்தலால், அந்நூற்பொருளை அம்மதமாகிய பாம்பினது கடிய விடமாக உருவகித்தார். கடுவிடம் - பெருநஞ்சு; `அஃதாவது மீளுதற்கரிய நஞ்சு` என்றவாறு. உலகாயதம், ஏனை மதங்கள்போல மக்களை உள்ளவாறு நெறிப்பட்டொழுகச் செய்யாது ``அச்சமே கீழ்கள தாசாரம்; எச்சம் - அவாவுண்டேல் உண்டாம் சிறிது`` (குறள் - 1075) என்றபடி அரசனாணையும், பிறவுமாகிய புறப்பொருள்கள் சார்பாக நெறிப்பட்டொழுகச் செய்தலால், உள்ளத்தால் பழி பாவங்கட்கு அஞ்சுதலைப் போக்கிக் கேடு பயத்தலின், அதனைக் கடுவிடமாக உருவகிப்பார், அதற்கேற்ப, அதனையுடையாரைப் பாம்பாக உருவகித்தார்,

58. உலகத்தைபொய்த்தோற்றம் எனவும், அதனால் கடவுட்கும், உயிர்க்கும் இடையே காணப்படும் ஆண்டவன் அடிமைத் திறமும் அன்னதே எனவும் உபதேசிக்கும் மாயாவாதிகளது உபதேச மொழியைக் கேட்டோர், கடவுளும், புண்ணிய பாவங்களும் சுவர்க்க நரகங்களும் இல்லை என்பதனை வலியுறுத்தி உணர்த்தும் உலகாய தரது நாத்திக மதத்தில் எளிதின் வீழ்ந்து கெடுவர் என்பது தோன்ற, அவர்களை மாயாவாதிகளை அடுக்க வைத்து அவர் கூற்றினைக் கடவுளுணர்விற்கு மாறாவன பலவற்றினும் நேர்மாறாவதெனக் குறிப்பான் உணர்த்தி முடித்தார். எய்தி - எய்துதலால், மாயை - மயக்கம். எனைப் பல - எத்துணையோ பல.

59. தப்பாமே - தவறிப்போகாதபடி. `தாம்பிடித்தது` எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. பிடித்தது, முன்னர்க் கூறிய, முனிவிலாத பொருளை அடையக் கருதிய. கருத்து (அடி.43). `சலியாது` என்பது ஈறு குறைந்தது. இதன்பின்னர். `நின்று` என்பது எஞ்சி நின்றது, ``ஆத்தமானார்`` (அடி.46) என்றது முதலாக இதுகாறும் வந்தவற்றை, ஏறவும், பெருகவும், காட்டவும், மலையவும், ஆர்த்தலால் சூழவும், எய்தலால் சூழவும், தாம் பிடித்தது தப்பாமே சலியாது நின்று` என முடிக்க. இதனுள் ``தாம்`` என்றது, பின்னர், ``தழைப்பவர்`` (அடி.86) எனப் படுவாரைக் குறித்தது,

60-61. ``தழலது`, ``மெழுகது`` என்றவற்றில் அது, பகுதிப் பொருள் விகுதி. `மெழுகுபோல உளம் உருகித் தொழுது` என மாற்றி உரைக்க. கம்பித்து - நடுங்கி. தொழுவது, சிவபெருமானை என்பது உய்த்துணர வைக்கப்பட்டது, ஞானத்தைத் தருபவன் அவனே என்பது வெளிப்படை என்பது தோன்றுதற் பொருட்டு.

62-64. பரவி - துதித்து., கொடிறு - `குறடு` என்னும் கருவி, ``விடாது``என்றதனைத் தனித்தனி கூட்டியுரைக்க, ``படியேயாகி`` என்றது, `இறுகப் பற்றிக் கொண்டு` என்றவாறு,

65-67. `ஆணி அறைந்தாற்போல`` என்றாராயினும், `அறைந்த ஆணிபோல` என்பதே கருத்து. `பசுமரத்தின் கண் அறையப் பட்ட ஆணிபோல இடையறாது நிற்கும் நல்ல அன்பினால் கசிவது` என்க. நல்லன்பு - மெய்யன்பு. கசிவது- துளிப்பதாகி. கண்ணீர், `அது பெருகிக் கடல் என்னும்படி மறுகப்பெற்று` என்க. மறுகுதல், இங்கு, வீழ்தலைக் குறித்தது, அகம் குழைந்து - மனம் கரைந்து; என்றது, `அந்தக் கரணங்களும் அன்பு வடிவாகப் பெற்று` என்றபடி. `அனுகுலமாய் அகங்குழைந்து`என மாறிக் கூட்டுக. `அனுகூலமாய்` என்றது குறுகிநின்றது, `அந்தக்கரணங்கள் முன்னர் மாறிநின்ற ஐம்புல வழியே தம்மை ஈர்த்து அலைத்தாற்போல அலையாது, தம்மோடு ஒத்துநிற்கப் பெற்று என்றவாறு. மெய்விதிர்த்து - உடல் நடுங்கி இவை யெல்லாம் இடையறாத நல்லன்பின் செயலாக அருளினமையின், முன்னர், உளம் உருகுதல் முதலாகப் பரவுதல் ஈறாக அருளியவை ஒரோவழி நிகழும் பொதுவன்பின் செயலாம் என்பது உணர்க.

68-71. சகம் - உலகம், `தம்மைப் பேய் என்று சிரிப்ப` என மாற்றிக் கொள்க. பேய் என்றலாவது, `அறிவை இழந்தார்` என்றலாம். சிரித்தல் - எள்ளி நகையாடுதல். `சகம் சிரிக்கும்படி நாண் நீங்கப் பெற்று` என்க. நாண் நீங்குதல் நன்றாமோ எனின், `அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டும் - மிகைமக்களான் மதிக்கற் பால` (நாலடி 163.) என்பவாகலின், உலகர் இகழ்ச்சிக்கு இறைவன் அடியார் நாணார் என்க. `நாடவர்`என்றது, `அவர்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. பூணாக - அணிகலனாய் நிற்ப, உலகத்தாரால் இகழப் பெறுதல் இறைவன் அடியார்க்குச் சிறுமையாகாமையே யன்றிப் பெருமையாயும் நிற்றலின்,`பழித்துரை பூணதுவாக` என்றார். நாணது, பூணது என்றவற்றில் அது, பகுதிப் பொருள் விகுதி, `பூணது` என ஒருமையாகக் கூறியது, `பூண்` என்னும் இனத்தை நோக்கி. கோணுதல் - மனம் திரிதல்; திரிவு, வெகுளியான் என்க, சதுர் - திறமை, அஃதாவது, அவர் போலத் தாமும் உலகியலில் வல்லராகல். அந்நிலை மனத்தினும் தோன்றாது ஒழிதலின், `இழந்து` என்றார். அறிமால் - அறிகின்ற மயக்கம்; அஃதாவதுஉலகியலை அறிந்தே அதனைப் பொருட்படுத்தாது நிற்றல். எனவே, பித்துக்கொண்டோர் உலகியலை அறியாது மயங்கி அலமரும் மயக்கம் போல்வதன்று என்றவாறாயிற்று. அறிவதையே, `மால்` என்றமையின், `அறி` என்னும் காலங்கரந்த பெயரெச்சம் வினைப் பெயர் கொண்டதாம், `அறிதுயில்` என்பதற்கும் இது பொருந்தும்.

72-87. சாருங் கதி - அடையத்தக்க நிலை; வீடுபேறு. `கதியது` என்றதில் அது, பகுதிப் பொருள்விகுதி. `கதியதனை` என இரண்டனுருபு விரித்து,` என வருவதனோடு முடிக்க. பரமா அதிசயமாக - மேலான பெருவியப்பாம்படி; இதனையும், அத னோடே முடிக்க. கற்றா - கன்று ஆ; கன்றையுடைய பசு. `கதறியும் பதறியும்` என்றது, `அன்பு மீதூரப் பெற்று` என்னும் பொருட்டாய், `மனமென` என்றதற்கு முடிபாயிற்று. இது, `நினையாது` என வரு வதில், நினைத்தல் வினையோடே முடிந்தது. எனவே, `பிறதெய் வங்களிடத்து அன்பு செலுத்துதலைச் செய்யாது` என்றவாறாயிற்று. இறைவன் குருவாகி அருளுதற்குமுன் முப்பொருள்களின் இயல்பு அனுபவமாய்த் தோன்றாமையின், அக்காலத்தில் ஏனைத் தெய்வங் களையும் சிவபெருமானோடு ஒப்பக்கொண்டு தொழுதல் உண்டாக, அவன் குருவாகிவந்து அருளியபின்பு அவை அனுபவமாய்த் தோன்ற லின், மற்றோர் தெய்வத்தைக் கனவிலும் நினையாத நிலை உளதாதல் பற்றி, `மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது - குருபரனாகிவந்து அருளிய பெருமை` என்று அருளினார்.
`நினையாது` என்றதனை, `நினையாமே` எனத் திரித்து, `நினையாமே வந்து அருளிய` என முடிக்க. `அரும்பரம்` என்பது,` அருபரம்` எனக் குறைந்துநின்றது. அரும்பரத்து ஒருவன் - அரிய பரம் பொருளாகிய இறைவன். `பரத்து` என்றதில் அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை. அவனி - பூமி, `வந்து குருபரனாகி அருளிய பெருமை` என்றதனை, `குருபரனாகி வந்து அருளிய பெருமை` என மாற்றியுரைக்க.
`பெருமை`, `சிறுமை` என்றன, அவ்வளவினவான கருணையைக் குறித்தது. பெருங்கருணையாவது, அருளப்படுவாரது தரத்தினளவாகாது, அதனின் மிகப் பெரிதாவது. அஃது ஏனக் குருளைக்குத் தாயாய் வந்து பால் கொடுத்தமை போல்வது. இதனை, `நாய்க்குத் தவிசிட்டாற் போல` என அடிகள் பலவிடத்தும் எடுத்தோதியருளுவார். அதனை அறியாது, `எம்தரத்திற்கு இஃது அவனாற் செயற்பாலதே என இகழாது` என்பார். `சிறுமையென்று இகழாதே` என்றார். தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிய பின்னர் ஒரோவழி உளம் உருகி ஆடிப் பாடித் தொழுதலும், அதன் பின்னர்ப் பலநாள் செல்ல, சகம் பேய் என்று தம்மைச் சிரித்தலைப் பொருட்படுத்தாது இடையறா அன்பின் இறைவனையே நாடி நிற்றலும் செய்யினும், அனாதி தொட்டு அளவிலா ஊழிக் காலங்காறும், ஓர் இமைப்பொழுதும் நீங்காது உயிர்க்குயிராய் உடன் நின்று நோக்கி உபகரித்து வந்த அவனது அருட்டிறத்தைச் சிறிதும் நினையாது மறந்தமையேயன்றி அதனை மறத்தலாகாது` என, அறிவோர் உரைத்த பல அருளுரைகளையும் அழித்துப் பேசிவந்த பெருங் குற்றத்தைச் சிறிதும் திருவுளத்தடையாது, இடையறா அன்பு தோன்றிய துணையானே வெளிநின்று அருள் புரிந்த திறத்தினை அங்ஙனம் அருளப் பட்டாரது தரத்தினளவானதே என்றல் எத்துணை ஓர் அறியாமையாதல் உணர்க.
இதனானே, முதற்கண் ஒரோவழி உளம் உருகித் தொழுதலும், பின்னர் இடையறா அன்பின் சதுர் இழந்து அறிமால் கொண்டு நிற்றலும் நிகழும் என்பதும், அது நிகழ்ந்தபின்னரே இறைவன் குருபரனாகி வந்து அருளுவான் என்பதும் போந்தன. குருபரனாகி அருளுவதற்குமுன் நிகழும் அந்நிலைகளே சத்திநிபாதமாவன. அவற்றுள், முன்னையது `மந்ததரம், மந்தம்` என இருவகைப்பட்டும், பின்னையது, `தீவிரம், தீவிரதரம்` என இருவகைப்பட்டும் நிகழும். அவற்றுள், `நாணது ஒழிந்து` என்றது முதல், `அறிமால் கொண்டு` என்றது ஈறாக அருளப்பட்டன தீவிரதர சத்திநிபாதமாம் என்க, `இகழாதே` என்பது முதலியன, இறைவன் குருபரனாகிவந்து அருளியதன் பின்னர் நிகழும் ஞானச் செய்திகளாம்.
`நிழலது` என்றதில் அது,பகுதிப் பொருள் விகுதி. `கரையது` என்றதும் அது. `அத்திசை முன்பின்னாகி` எனக் கூட்டுக, அத்திசை - அவ்விடத்து; என்றது, திருவடியுள்ள இடத்தை. அடியார்க்குத் துணையாவன ஆசிரியனது அடியிணையே யாதலின், அதனையே அருளிச் செய்தார், முன்பின் ஆகி - முன்னாதல் பின்னாதல் அணுகி. முனியாது - வெறாது நின்று; வெறுத்தல், மெய்வருத்தம் காரணமாக உளதாவது. அன்பு மீதூர்ந்தவிடத்து அவ்வருத்தந் தோன்றாமையின், `முனியாது` என்றார். அதனை,
`........... மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித்
திருக்கையிற் சிலையுந் தாங்கி
மைவரை என்ன ஐயர்
மருங்குநின் றகலா நின்றார்`
எனவும்,
சார்வருந் தவங்கள் செய்து
முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்துங்
காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா
அன்பினிற் கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார்
நீளிருள் நீங்க நின்றார்.
எனவும்,
`கருங்கடல் என்ன நின்று
கண்துயி லாத வீரர்`
எனவும்,
`எப்பொழுதும் மேன்மேல் வந் தெழும் அன்பால் காளத்தி
அப்பர்எதிர் அல்உறங்கார்; பகல் வேட்டை யாடுவார்`
எனவும்,
`கருமுகில் என்ன நின்ற
கண்படா வில்லி யார் தாம்`
எனவும் (தி.12 கண்ணப்பர் புராணம்-127,128,132, 151, 166.) சேக்கிழார் நாயனார் இனிது விளங்க அருளிச் செய்தமை யறிக,
இந்நிலை நோக்கியன்றே,
`கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்`
(தி.8 திருக்கோத்தும்பி - 4)என அடிகள் தாமே தம் நிலைக்கு இரங்கி யருளிச் செய்தார் என்க.
`நெக்கு நெக்கு` என்றதற்கு வினை முதலாகிய, `மனம்` என்பது வருவிக்க. `புலன்` என்றது, ஐம்புலன்கண்மேற் செல்லும் அறிவை, அஃது ஒன்றுதலாவது, அவற்றின்மேற் செல்லாது, ஆசான் மூர்த்தியையே அறிந்து நிற்றல், அவ்வழிக்காண்டல் கேட்டல் முதலியன அவன்பொருட்டே நிகழ்தலின், அங்ஙனம் ஒன்றும் தன்மை எய்திய அதனை, `நன்புலன்` எனச் சிறப்பித்தார், நாத - தலைவனே, அரற்றுதல், பிரிவுக் குறிப்புத் தோன்றிய பொழுதாம். மொட்டித்தல் - அரும்புதல்; என்றது, குவிதலை. கரம் மொட்டித்து இருதயம் மலர` என்றது நயம், `மலர்` என்றதனை இருதயத்திற்குங் கூட்டுக. இதனானே, முன்னர், இருதயம் மொட்டித்து, கரம் மலர்ந்திருந்தமை பெறப்பட்டது.
கண்களிகூர்தல், ஆசிரியத் திருமேனியைக் காணும் காட்சி யாலாம், `கண்` என முன்னர் வந்தமையின், பின்னர் வாளா, `நுண்துளி அரும்ப` என்றார். நிறுப்பவும் நில்லாது வெளிப்படுதல் தோன்ற, `நுண்துளி` எனவும், `அரும்ப` எனவும் அருளிச் செய்தார். `ஆர்வலர் புன்கணீர்` (குறள்-71) என்றார் திருவள்ளுவ நாயனாரும். கண்ணீரை நிறுத்த முயல்வது, மெய்யடியார் முன் தாமும் பேரன்புடைய அடியராய்த் தோன்றுதற்கு வெள்கி என்க.
சாயா - மெலியாத. தழைப்பவர் - பெருக நிற்பவர். பெருகுதல், ஆசான் மூர்த்தியைக் காண்டல், அவனது அருட்டிறத்தை நினைதல் முதலியவற்றால் இயல்பாகவே நிகழும் என்க. `தாயே` என்னும் பிரிநிலை ஏகாரம், சிறப்புணர்த்தி நின்றது. வளர்த்தது, ஞானத்தையாம். `வளர்த்தனை` என்றது வினையாலணையும் பெயர். அதன் பின்னர் நான்கனுருபு விரிக்க, போற்றி - வணக்கம்.
இதனுள் `உடல் கம்பித்து, அகம் குழைந்து, கரமலர் மொட்டித்து` என்றாற்போல வந்த பல சினைவினையும் குணவினை யும், அவற்றையுடைய முதல்மேலும், குணிமேலும் நின்றன,
`யானை முதலா` என்றது முதலாக இதுகாறும் வந்தன பலவற்றையும், பிறர்மேல் வைத்துப் பொதுப்பட அருளிச் செய்தாரா யினும் தம் அனுபவச் செயலையே அவ்வாறு அருளினார் என்பது உணர்ந்துகொள்க.

88, 89. மெய் - உண்மை ஞானம். `வேதியன்` என்றது, ஆசாரியனை. வினை, முன்னே செய்யப்பட்டுக் கிடந்தனவும், இஞ் ஞான்று செய்யப்படுவனவுமாம். இவை முறையே, `சஞ்சிதம்` எனவும், `ஆகாமியம்` எனவும் சொல்லப்படும். சஞ்சிதத்தினின்றும் இப் பிறப்பிற்கு நுகர்ச்சியாய் அமைந்தவை `பிராரத்தம்` எனப்படும். இவற்றுள் முன்வினையை அருட்பார்வையால், நெருப்புச் சேர்ந்த விறகுபோல அழிந்தொழியப் போக்கியும், இஞ்ஞான்றை வினையை, உணக்கிலாத வித்துப் போல மெலிவித்தும் கெடுத்தலால், சஞ்சிதத்தினின்று பிராரத்தம்; பிராரத்தத்தினின்று ஆகாமியம் என்று ஆகி, மீளவும் ஆகாமியம் சஞ்சிதமாய் வளர்தலாகிய தொடர்ச்சி அற்றொழிதலால், `வினை கெடக் கைதர வல்ல கடவுள்` என்றார். உற்றுழி உதவுதலை, `கை கொடுத்தல்` என்னும் வழக்குப்பற்றி, `கைதர வல்ல` என்றார். `பிறவிக் கடலின் ஆழாது, கைகொடுத்து ஏற்ற வல்ல` என்றது குறிப்பு. ஏனையோர் அது மாட்டாமையின், `வல்ல` என்றார். இறைவற்குக் கையாவது திருவருளே என்க.
முதற்கண் அன்பரை ஆட்கொள்ளும் முறையை விரிவாக எடுத்தோதிப் போற்றி, அப்பால், முன்னர் மதுரையிலும், இறுதியில் தில்லையிலும் தமக்கு அருள்புரிந்தும், புரியவும் நிற்கும் நிலையினை நினைந்து போற்றுகின்றார்,

90-91. ஆடக மதுரை - பொன்மயமான மதுரை. இது, செல்வச் சிறப்பை விளக்கிற்று, அரசு - தலைவன், அரசனாய் இருந் தான் எனக் கூறப்படும் வரலாற்றோடு இயைய உரைப்பாரும் உளர். மதுரையை, முதற்கண் கூறினமையின, அஃதே அடிகள் முன்னர் வாழ்ந்த இடம் என்பது பெறுதும். மதுரை கூடல், எனப் பெயர் பெற்றமைக்கு வரலாறு ஒன்று கூறப்படினும், `சங்கம் இருக்கும் இடம்` என்பதே பொருளாதல் வேண்டும். `உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்` என்று அருளுவார்.
திருக்கோவையாருள்ளும். `கூடல், கூட்டம்` என்பன ஒருபொருட் சொற்கள். சங்கத்தை, `புணர் கூட்டு` (மதுரைக் காஞ்சி - அடி.762) என்றார் மாங்குடி மருதனார். எனவே, `மதுரை` என்றது திருக்கோயிலில் இருத்தல் நோக்கியும், `கூடல்` என்றது, சங்கத்தில் இருத்தல் நோக்கியும் அருளியவாறாயிற்று. அல்லாக்கால், `மதுரை` என்றதனையே, மீளவும் பிறிதொரு பெயராற் குறித்தல் வேண்டாமையறிக. குருமணி - மேலான ஆசிரியன், சங்கத்தார்க்குத் தலைமை பூண்டு நின்றமை பற்றி, இவ்வாறு அருளிச் செய்தார்,

92-93. தமிழகம், பரதகண்டத்தின் தென்பகுதியாதல் பற்றி, அதன்கண் உள்ள தலங்களைத் தெற்கின்கண் உள்ளனவாகக் கூறுப; அதனால், `தென்தில்லை` என்றார். பின்னும் இவ்வாறு வருவன பல உள. இதற்கு, `தென் - அழகு` என்றே உரை கூறிப் போதலும் செய்ப. ஆடி - ஆடுபவன்; இப்பெயர் விளியேற்று நின்றது, இன்று - உன்னை யான் அடையப் பெற்ற இக்காலத்தில். `ஆரமுது` என்றது, அமுதம் கிடைத்தற்கரிய பொருளாதலை விதந்தவாறு. அதனால், இறைவன் காண்டற்கரியன் என்பது உணர்த்தப்பட்டது. `அமுது` முதலியன வாக இங்கு வருவன பலவும் உவம ஆகுபெயராதல் அறிக. இவ்விரு தலங்களையும் அருளிய பின்னர், அவனது பெருமைகளை எடுத் தோதிப் போற்றுகின்றார்.

94-95. மூவா - கெடாத. மறைகளை (வேதங்களை), `நான்கு` என்றல், `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் பொருள் பற்றிய வழக்கென்றலே பொருந்துவதாம், என்னையெனின் சொல்பற்றி `மூன்று` எனவும், `நான்கு` எனவும் `அளவில்லன` எனவும் பலவாறு கூறப்படுதலின், `மறை` என்பதற்கும், `வேதம்` என்பதற்கும் சொற் பொருள் யாதாயினும், `உண்மை முதனூல்` என்பதே பொருளாம். அஃது எக்காலத்திலும் எவ்விடத்திலும் எம்மொழியிலும் தோன்றுதல் கூடும். அத் தோற்றம் இறைவன் திருவருள் முன்னிற்றலானேயாம், ஆதலின், `மறைகள் ஈசன் சொல்` (சிவஞான சித்தி. சூ. 2.30) என்றல் பொருந்துவதேயாகும்.
`உற்ற குறியழியும் ஓதுங்காற் பாடைகளில் சற்றும் பொருள்தான் சலியாது`
(உண்மை விளக்கம்- 41. ) என்றபடி, சொல்லுக்கன்றிப் பொருட்கு அழிவின்மையின், `மூவா நான்மறை` என்று அருளினார். இனி, நான்மறையாவன இருக்கு முதலியவே எனினும், மூவாமை, பொருள் பற்றிக் கூறியதாமன்றிச் சொல் பற்றியதாகாமையறிக. `முதல்வன்`, `ஆக்கியோனும், அவற்றால்` உணர்த்தப்படும் தலைவனும் என்க.
சே ஆர் - இடபம் பொருந்திய. `வெல்கொடி` என்ற வினைத் தொகையில், `கொடி` என்பது, `ஆறு சென்றவியர்` என்பதில், `வியர்` என்பது போலக் காரியப் பெயர்.

96-97. `மின் ஆர்` எனப் பிரித்து, `ஒளி பொருந்திய` என்றும், `மின்னார்` என ஒரு சொல்லாகவே கொண்டு. `உமையை உடைய` என்றும் பொருள் கொள்க. விகிர்தன் - உலகியலின் வேறுபட்டவன். கல் - கல்லினின்றும். `வானத்தை வில்லா வளைத்தல், மணலைக் கயிறாத் திரித்தல்` என்பன போல `கல்லில் நார் உரித்தல்` என்பதும், செயற்கருஞ் செயலைச் செய்தலைக் குறித்து வழங்கப்படுவதோர் உவம வழக்கு. இதுவும் ஒட்டணியின் பாற்படும். எனவே, `கல்லில் நார் உரித்தது போலும் வியக்கத் தக்கதொரு செயலைச்செய்தவனே` என்பது பொருளாயிற்று. இது, தம்மை அன்பராக்கிய செயலைக் குறித்தே அருளியதாம். தம் வன்கண்மையை உணர்த்தத் தம்மை, `கல்` என்று அருளி, இறைவனது அருளுடைமையை உணர்த்த, `கனி` என்று அருளிச் செய்தார். `நார் என்பது, அன்பினையும் குறித்துநிற்றல்` காண்க.

98-99. `காவாய்` என்றது, `முன்னர்உலகியலின் நீக்கி அங்ஙனம் ஆண்டுகொண்டவாறே, இனியும் அதன்கண் செல்லாத வாறு காத்தருள்` என வேண்டியதாம். கனகம் - பொன். ஆ என்னும் இடைச்சொல் அடுக்கி, `ஆவா` என வந்தது, இஃது, `இரக்கம் வியப்பு` என்பவற்றைக் குறிக்கும் இடைச்சொல்; இங்கு இரக்கங்குறித்து நின்றது. `அருளாய்` என்றது, `உனது திருவடிப் பேற்றினை அளித் தருள்` என்றதாம். `ஆவா` என்றது, அது பெறாமையால் உளதாகும் வருத்தம் பற்றி. `எனக்கு` என்பது, `என்றனக்கு` எனச் சாரியை பெற்று வந்தது; `என்றெனக்கு` எனப் பாடம் ஓதுதலுமாம்.

100-101. `படைப்பாய்` முதலிய மூன்றும் விளிகள். இடர்- பந்தம்; அதனைக் களைதல் கூறவே, அஃது, `அருளல்` என்பதைக் கூறியதாயிற்று. எந்தாய் - எம் தந்தையே.

102-103. ஈசன் - ஐசுவரியம் உடையவன்; இவ் வட சொல்லைத் தமிழில், `செல்வன்` என்பர் ஆசிரியன்மார். இறைவன் - எப்பொருளிலும் தங்குவோன். `தேசு` எனக் குற்றியலுகர ஈறாய் நிற்கும் வடசொல், அம்முப்பெற்று, `தேசம்` என வந்தது. `குன்று, குன்றம்; மன்று மன்றம்` என்றற்றொடக்கத்தன போல. இன்னோரன்ன வற்றை, `குற்றிய லுகரம் அக்குச்சாரியை பெற்றன` (தொல் எழுத்து -418) என்பர் ஆசிரியர் தொல்காப்பியர். சிவபெருமான், தீத்திரள்போலும் திருமேனியையன்றித் தூய பளிங்குத் திரள் போலும் திருமேனியையும் உடையவனேயாம். இனி, இதனை, திருநீற்றுப் பூச்சுப் பற்றிக் கூறப்படுவதாகவும் உரைப்பர்.

104-105. அரைசு - அரசன். விரை - வாசனை. சரணம் - திருவடி. `விரைசேர்` என்றது, மலர்போறலைக் குறித்தது.

106-107, வேதி - வேதத்தை உடையவன். விமலன் - மாசில்லாதவன். ஆதி - எப்பொருட்கும் முதலானவன். அறிவு - அறிவே வடிவாயுள்ளவன்.

108-109. கதி - எவ்வுயிரும் சென்று சேரும் இடமாய் உள்ள வன். இன்பவடிவினனாதல் பற்றி, `கனியே` என்றார். நம்பன் - விரும்புதற்குரியவன்.

110-111. உடையான் - எப்பொருளையும் தனக்கு உடைமையாகவும், எவ்வுயிரையும் தனக்கு அடிமையாகவும் உடையவன். உணர்வு - உயிர்கட்கு அறிவைப் பயப்பவன். `கடையேனது அடிமைத் தன்மையையும் பொருட்படுத்தி நோக்கினாய்` என்றது, `அதனை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாய்` என்றபடி.

112-113. ஐயன் - வியக்கத் தக்கவன்; வியப்பு, பல்கோடி அண்டங்களையும் தன்னுள் அடக்கிநிற்கும் பெரியனாய் நிற்கும் நிலைபற்றித் தோன்றுவது. அணு - அவ்வாறே சிறியதிற் சிறியனு மாயவன். சைவன் - சிவம் (மங்கலம்) உடையவன். தலைவன் - யாவர்க்கும் தலைவன்.

114-115. குறி - உலகில் காணப்படும் ஆண் பெண் வடிவங் கள். குணம் - அவற்றிற்கு அமைந்த இயல்புகள். நெறி - அவற்றிற்கு அமைந்த ஒழுகலாறுகள். நினைவு - அவ்வொழுகலாறுகட்கிடையே அவற்றது உள்ளங்களில் எழும் எண்ணங்கள். இவை அனைத்திலும் இறைவன் கலந்து நிற்கும் கலப்புப் பற்றி அவனை அவையேயாக அருளினார். பின்னரும் இவ்வாறு அருளப் படுவனவற்றை அறிந்து கொள்க.

116-117. மருந்து - அமுதம். தேவர்கட்குக் கிடைத்துள்ள அமுதம் அன்று என்பார், `வானோர்க்கரிய மருந்து` என்றார். ஏனோர், மக்கள். வானோர், தம் சுவர்க்கபோகத்தில் மயங்கி வழி படாது காலங்கழித்தலின், இறைவன் அவர்கட்கு அரியனாயும், மக்கள் அவ்வாறன்றி உலகியலின் துன்பத்தை உணர்ந்து அதனை நீக்க வேண்டி வழிபட்டு நிற்றலின் அவர்க்கு எளியனாயும் நிற்கின்றான் என்க. `இப்பூமி - சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு` (தி.8 திருப்பள்ளி. 10) எனப் பின்னரும் அருளிச் செய்வார்.

118-119. சுற்றம் - வழித்தோன்றல்கள். மூவேழ் தலை முறையாவன, தன் தந்தைவழி, தாய்வழி, தன் மனைவிக்குத் தந்தைவழி என்பவற்றுள் ஒவ்வொன்றினும் ஏழாய் நிற்கும் தலை முறைகளாம். இவைகளைச் சென்றகாலம் பற்றியும், வருங்காலம் பற்றியும் கொள்க. ஒரு குடியுள் ஒருவன் செய்த நன்மை தீமைகள், முன்னும் பின்னும் அவனது இம் மூவேழ் தலைமுறையில் உள்ளாரை யும் சென்று பற்றும் என்பது வைதிக நூற்றுணிபு. அதனால், `தன்னால் ஆட்கொள்ளப்பட்ட அடியவரது மூவேழ் சுற்றங்களையும் நரகின்கண் அழுந்தாது மீட்டருள்வான்` என்று அருளிச் செய்தார். இவ்வாறே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்,
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்; மடநெஞ்சே, அரன்நாமம்
கேளாய்; நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம்அருளிக்
கேளாய நீக்குமவன் கோளிலிஎம் பெருமானே.
(தி.1. ப.62. பா.1) என அருளிச் செய்தல் காண்க.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
(குறள் - 62.) என்று அருளியதும், இதுபற்றி.
`மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்`
(குறள் - 456.) என்றமையால் நன்மக்கட்பேற்றிற்கு மனமொழி மெய்களின் தூய்மையும், தவமும் வேண்டும் என்பது விளங்கும். விளங்கவே,
`நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்`.
என்னும் அருமைத் திருக்குறளை(138)ப் பொன்னேபோற் பொதிந்து போற்றுதல் இன்றியமையாததொன்று என்பது போதரும். இவ்வாறு சுற்றத்தையும் காக்கும் வன்மையுடையன் என்பார், `அருள் அரே` என்று அருளினார். முரண் - வலிமை.

120-121. அடியவர், தம் அடிமைத் திறம் திறம்பாது நிற்பினும், இறைவன் தான் அவரொடு தோழமை முறையிலும், உடன் பிறந்தார் முறையிலும் எளியனாய் நின்று அருளுதலை, ``தோழா, துணைவா`` என்பவற்றால், அருளிச் செய்தார். வாழ்வு - நல்ல வாழ்க்கை. வைப்பு - சேம நிதி.

122-123. முத்தன் - பாசத்தினின்றும் நீங்கினவன். இஃது இயல்பாகவே நீங்கியதாம். இஃது,`அனாதி முத்தத் தன்மை` எனப்படும். முதல்வன் - எப்பொருட்கும் முன்னுள்ளவன். அத்தன் - தந்தை. அரன் - பாசங்களைத் தேய்ப்பவன்.

124-125. ``உரை`` என்பது, `பாச ஞானம்` எனவும், ``உணர்வு`` என்றது, `பசு ஞானம்` எனவும் கொள்ளப்படும். ``உரை யுணர்வு``, உம்மைத்தொகை. இறந்த - கடந்த. ஒருவன் - தனக்கு நிகராவது ஒரு பொருளும் இல்லாதவன். விளைவு - நிகழ்ச்சி; அஃது ஆகுபெயராய், அதனது காரணத்தின் மேல் நின்றது, காணப்படும் சிறப்புப் பற்றி, கடல் சூழ்ந்த உலகத்தையே எடுத்தோதினார்.

126-127. அருமை, காணலாகாத நிலை; அது, கருவி கரணங்களாகிய உடம்பொடு நிற்கும் நிலையாம், அதன் கண்ணே உள்ள எளிமையாவது, அந்நிலையிற்றானே கண்ணாற் காண எழுந் தருளி வருதலாம். அழகு - அழகிய திருமேனியையுடையவன்; இரு மடியாகுபெயர். `இன்பமாகிய மழையைப் பொழிதலின், கண்போலச் சிறந்து நிற்பவனே` என்பார், ``கருமுகிலாகிய கண்ணே`` என்றார்.

128-130. ஏனை மலைகளின் வேறுபடுத்தற்கு, ``மன்னிய`` எனவும், ``திருவருள்`` எனவும் அருளிச் செய்தார். ``மலை`` என்றது, பெருமை பற்றி வந்த உவமை. சேவகன் - வீரன். சேவகம், ஒரு சொல்லால் தம்மை வழிப்படுத்த திறல்; ``மன்ன என்னை ஓர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்`` (தி.8 செத்திலாப் பத்து-2) எனப் பின்னரும் அருளுப.

131-134. தொழுத கை - வணங்கிய உடன், `கை` என்பது இங்குக் காலத்தை உணர்த்திற்று. இனி, `தொழு தகை` என்றானும், `தொழுத கை` என்றானும் பிரித்து, `தொழுந் தகைமையுடையார், தொழுத கையினை யுடையார்` எனப்பொருள் கொள்ளலுமாம். துடைத்தல் - விரையச் சென்று முற்றத் தொலைத்தல், வாரி - கடல். முழுதும் - பசுக்களும், பாசங்களுமாகிய எல்லாப் பொருள் களையும்.

135-136. நோக்கி - பார்வையையுடையவள். தாய் - தாய்போலச் சிறந்தவள்.

137-142. பார் - நிலம். ஐந்து, `நாற்றம்,சுவை, உருவம், ஊறு, ஒலி` என்னும் குணங்கள். இவற்றுள் நாற்றம் முதல் ஒரோவொன்றாக முறையே நீக்கி, ஏனையவற்றை நீர் முதலிய ஏனை நான்கு பூதங் களினும் உள்ளன என்க. அளிபவர் - மனம் இளகுபவர்.

143-144. தமக்கு நனவிலும் வந்து அருளிய அருட்டிறம் இனிது விளங்க, கனவிலும் தேவர்க்கு அரியனாதலை, முன்னர் எடுத் தோதினார். இங்ஙனம் இறைவனை அவனது பெருமைகள் பல வற்றையும் விதந்து போற்றிய பின்னர், மதுரையும், தில்லையும் தவிர ஏனைய தலங்கள் பலவற்றிலும் எழுந்தருளியிருக்கும் நிலையை விதந்து போற்றுகின்றார்.

149-150. `அண்ணால்` என்பது, `அண்ணா` என மருவிற்று. கண் ஆர் - கண்ணால் பருகும். ஆர்தல் - நிறைதல். அஃது இங்கு நிறையப் பருகுதலைக் குறித்தது.
155. இஃது இடைநிலையாய் வந்தது. அன்பு மிகுதியால் இன்னோரன்னவை இடை இடையே அடிகள் வாக்கில் நிகழ்தல் காண்க.

159. பாங்கு - அழகு.

160. விடங்கன் - ஒருவராற் செய்யப்படாது, இயல்பாய் அமைந்த திருவுருவத்தை யுடையவன். `அழகன்` என்றுமாம்.

162-163. இத்தி - கல்லால மரம். இருமூவர், அட்டமா சித்தி வேண்டி நோற்ற மகளிர் அறுவர். அத்தி - வெள்ளானை. `மகளிர்க்கும், அத்திக்கும் அருளியவன்` என்க, இவ்வரலாறுகளைத் திருவிளை யாடற் புராணம் சிறிது வேறுபடக் கூறும்.

164-165. தென்னாடு - பாண்டிநாடு. தமக்கு அருளிய நிலை பற்றி, அதனையே அடிகள் இறைவனுக்கு உரிய நாடாகப் பல விடத்தும் அருளுவர். எனினும், எல்லா நாடும் அவனுடையனவே என்பது தெரித்தற்கு, அடுத்த, ``எந்நாட்டவர்க்கும் இறைவா`` என்று அருளினார். இறுதிக் கண் எந்நாட்டையும் எடுத்தோதி முடித்து, இனியும் முன்போலப் பிறவாற்றாற் போற்றுகின்றார்.

166-167. பன்றிக்குட்டிகட்கு இறைவன் தாய்ப் பன்றியாய்ச் சென்று பால் கொடுத்த வரலாற்றைத் திருவிளையாடற்புராணத்துட் காண்க. ஏனம் - பன்றி. குருளை - குட்டி. மானம் - பெருமை.

168-169. அம்மான் - தலைவன். இருள் - துன்பம்; நரகமு மாம்; உவமையாகுபெயர்.
171. களங்கொளக் கருத - உன்னை என் நெஞ்சார நினைக்கும்படி. நெஞ்சத்தையே இங்கு, `களம்` என்றார் என்க.

172. இங்கு - இப்பொழுது.

174-176. `அத்தன், ஐயன்` என்பன முன்னர்க் கூறப்பட்ட வாயினும், நித்தன் முதலாகப் பின்னர் வருவனவற்றோடு ஒருங்கு நின்று சிறப்பித்தற் பொருட்டு ஈண்டும் கூறினார். நித்தன் - அழி வில்லாதவன். நிமலன் - மலம் இல்லாதவன். பத்தா - தலைவன்; வட சொல்; இஃது இயல்பாய் நின்று, அண்மை விளி ஏற்றது, `பத்தன்` எனக் கொண்டு, `அன்புடையவன்` என்றும் உரைப்ப. பவன் - எவ்விடத்தும் தோன்றுபவன்; `எவையும் தோன்றுதற்கு இடமாயுள்ளவன்` என்றுமாம்,

177-178. பிரான் - கடவுள். அமலன் - மலம் இல்லாதவன்; `விமலன், அமலன், நிமலன்` என்பன ஒரு பொருட்சொற்களாயினும், பலவகையாகப் போற்றுதல் செய்யும் போற்றிக் கோவையில் பொருள் வகை ஒன்றானே போற்றுதல் வேண்டும் என்பதோர் யாப்புறவில்லை; சொல்வகையானும் பலவகையாகப் போற்றுதல் செய்யப்படும்; அதனால், இன்னோரன்ன சொற்களால் பன்முறையானும் போற்றினார் என்க.

179-180. கோலம் - வடிவம்; `அதனையுடைய நெறி யாளனே` என்க. நெறியாளன் - உய்யும் நெறியை உணர்த்துபவன்; ஞானாசிரியன். தரியேன் - இனிப் பொறேன்; `வீடுதந்தருள்` என்பது கருத்து. ``முறையோ`` என்ற முறையீட்டுச் சொல்லை, இதன்பின் கூட்டியுரைக்க. `முதல்வா` என்றதனை, `ஈண்டு எனது முறையீட்டைக் கேட்பது உனக்குக் கடப்பாடு` என்னுங் கருத்தாற் கூறினார்.

181-182. உறவு - உறவினன். உயிர் - உயிரின்கண் கலந்து நிற்பவன். சிறவு - சிறப்பு; சிறப்புடையவன். சிவம் - மங்கலம்; மங்கலம் உடையவன்.

183-184. `மைந்தன்` என்பது, `மஞ்சன்` எனப்போலி யாயிற்று. `வலிமை யுடையவன்` என்பது பொருள். மணாளன் - `மண வாளன்` என்பதன் மரூஉ. `கலியாணகோலம் உடையவன்` என்பது பொருள். சிவபிரான் வடிவங்களுள், கலியாண கோலமும் ஒன்றாதல் உணர்க. பஞ்சு ஏர் அடி - செம்பஞ்சினையும், அழகினையும் உடைய பாதம்.

185-186. அலந்தேன் - உழன்றேன், நாயேன் அடியேன் - நாய்போன்றேனாகிய அடியேன். இலங்கு சுடர்- விளங்குகின்ற விளக்குப்போலும்.

187-190. இந்நான்கடிகளிலும் சிவபிரான், தமிழ்நாடன்றிப் பிற நாடுகளிலும் கோயில் கொண்டிருத்தலை எடுத்தோதிப் போற்று கின்றார். `கவைத்தலை, குவைப்பதி, அரிகேசரி` என்பன தலங்களாம், அவை இக்காலத்து அறிதற்கரியவாயின. சேரநாடும் மலைநாடு எனப்படுமாயினும் இங்கு, ``மலைநாடு`` என்றது, இமயத்தைச் சார்ந்த நிலப்பகுதியையாம். அங்குக் கேதாரம், பசுபதீச்சரம், அனேகதங்காவதம், இந்திர நீலப் பருப்பதம் முதலிய சிவதலங்கள் இருத்தல் வெளிப்படை. ``கலை ஆர்`` என்றது, `நூல்கள் நிரம்பிய` என்றும், `மான் கூட்டங்கள் நிறைந்த` என்றும் பொருள் கொள்ளுதற்கு உரித்து. அத்தொடரால் சிறப்பிக்கப்பட்ட தலம் அறியப்படாமையின், அத்தொடர்க்கும் பொருள்காண்டல் அரிதாகும். கவைத்தலை முதலியவற்றைத் தலங்களாகக் கொள்ளாது, சொற்பொருள் கூறுவாரும் உளர்.

191-192. பிற நாட்டுத் தலங்களை நினைந்த தொடர்பானே, தமக்கு மீளவும் குருவடிவத்தைக் காட்டியருளிய திருக்கழுக் குன்றத்தையும், தமது பாண்டிநாட்டில் பொன்னுருவில் நின்று அருள் புரியும் திருப்பூவணத்தையும் நினைந்து, இவ்விரண்டடிகளிலும் போற்றி செய்தார்.

193-194. மூவகைத் திருமேனிகளுள் அருவத் திருமேனி, உருவத் திருமேனி என்னும் இரண்டனைக் கூறவே இடைநிற்கும் அருவுருவத் திருமேனியும் தானே பெறப்பட்டது. முன்னர், ``மன்னிய திருவருள் மலை`` (அடி.128) என்றார்; இங்கு, ``மருவிய கருணை மலை`` என்றார். மருவுதல் - அடியவர் உள்ளத்து நீங்காது பொருந்துதல்.

195-196. `நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப் படங்கல்` என்னும் ஐந்து நிலைகளும் வடமொழியில் முறையே, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்` எனப்படும். இவை, `இருள்நிலை, பொருள்நிலை, அருள்நிலை` என்னும் மூன்று நிலைகளிலும் நிகழ்வன. இருள்நிலையில், ஒன்றைவிட மற்றொன்றில இருள் (அறியாமை) மிகும்; பொருள் நிலையில், ஒன்றைவிட மற்றொன்றில் உலகப் பொருள் மிக்கு விளங்கும்; அருள்நிலையில் ஒன்றைவிட மற்றொன்றில் இறைவனது திருவருள் மிக்கு விளங்கும். அவற்றுள் அருள்நிலையில் உள்ள துரிய நிலையே இங்குக் குறிக்கப் பட்டது. அந்நிலையில் பேரின்பம் சிறிது அரும்புதலன்றி, வெள்ள மாய்ப் பெருகி உயிரை விழுங்கிக் கொள்ளும் நிலை உண்டாகாது. அதனால், இந்நிலையில் நின்றோர், பேரின்ப வெள்ளத்துள் மூழ்கித் திளைத்திருத்தலன்றி, உலகத்தை நோக்கி நிற்றலும் உடையராவர். இதனைக் கடந்த அதீத நிலையிலே அது கூடுவதாகும். அதனைப் பெற்றோரே சிவனது உண்மை நிலையைத் தலைப்பட்டவராவர். அவர்க்கு அந்நிலையினின்றும் மீட்சி இல்லை. ஆதலின், அப்பெரு மானை, ``துரியமும் இறந்த சுடர்` என்று அருளினார். இருள்நிலை முதலிய மூன்றும் முறையே. ``கேவலம், சகலம், சுத்தம்` எனப்படும், உம்மை, சிறப்பும்மை. தெளிவு அரிது - கருவிகளால் அறியப்படாதது. தெளிவு - அனுபவப்பொருள்.

197-198 தோளா - துளையிடாத. முத்தம் - முத்து. துளையிடாத முத்தில் ஒளி குறைபாடின்றி விளங்கும். மாணிக்கம் முதலிய பிறவற்றின் ஒளிகளினும், முத்தின் ஒளி தண்ணிதாதல் பற்றி, அதனையே உவமித்தார். திருநீற்றுப் பூச்சினால் விளங்கும் வெண்மை பற்றி உவமித்தார் என்றலுமாம். இறைவன் தனக்கு அடியரானார்க்கு அன்பனாதலை, ``தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி`` எனப் பின்னரும் (தி.8 திருச்சதகம்-69) அருளுவார்.

199-200. ஆராமை - நிரம்பாமை. பேர் - பெயர். ஆயிரம், மிகுதிக்கு ஓர் எண் காட்டியவாறு. எல்லாம் உடைய பெருமானாகலின் அவைபற்றி வரும் பெயர்கள் அளவிலவாயின. பெம்மான் - பெரியோன்.

201-202. தாளி அறுகு - தழைத்துப் படர்ந்த அறுகம்புல். இது, பனையினுள் ஒருவகை, `தாளிப்பனை` என்னும் பெயர்த்தாதல் பற்றி யும் அறியப்படும். `இதனைக் கன்றுகள் விரும்பி மேயும்` என்பதும், அவ்வாறு மேயப்பட்டு வேனிற் காலத்தில் பட்டுக்கிடப்பினும் மழைக் காலத்தில் செழித்துப்படரும் என்பதும் இதனை அங்ஙனமே வளர விட்டால், அரும்புவிட்டுப் பூக்கும் என்பதும், அப்பூ நீலநிறத்துடன் அழகியதாய் விளங்கும் என்பதும், அதனை, மணவினைக்காலத்தில் மணமகளுக்கு வாகை இலையொடு விரவத் தொடுத்து அணிவர் என்பதும், பின்வரும் அகநானூற்றுப் பாடலின் (136.) அடிகளால் அறியப்படும்.
``மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற் கீன்ற
மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத்
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டி.``
அறுகம் புல், பண்டைத் தமிழ்ச் செய்யுட்களில், `அறுகை` என வழங்கும். இதனால், இவ்வறுகு தமிழகத்தில் பண்டு கண்கவர் வனப் பினதாய்ச் சிறந்த ஒரு மங்கலப் பொருளாய் விளங்கினமை பெறப் படும். அதனானே வாழ்த்துக் கூறுவோர், மஞ்சளரிசியுடன் இதனை யும் சேர்த்துத் தூவி வாழ்த்துதல் பண்டை மரபாய் இருந்தது.
``அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்`` என்னும் வரி, சிலப் பதிகாரத்துள் (கனாத்திறம் உரைத்த காதை - 43) கடவுள் வழிபாடு கூறுமிடத்துக் காணப்படுகின்றது. இவ்வாற்றனே, ஞானாசிரியர்க்கு அவர்தம் அடியவர் தழைத்து வளர்ந்த அறுகம் புல்லாலாய மாலையை அணிவித்து அவரை வழிபட்டு நிற்றல் மரபாய் இருந்தமை பெறப் படும். செங்கழுநீர்ப் பூமாலையும் அவ்வாறு ஞானாசிரியர்க்கு அணியப்படுவதாம், அதனைப் பின்னர் (அடி.217) கூறுப. சிவபிரான் அடிமுடி தோன்றாத நீண்ட ஒளிப்பிழம்பாய்த் தோன்றியது, மால் அயன் முன்பு என்க. நிருத்தன் - நடனம் புரிபவன்.

203. இறைவன் தன் அடியவர் சாத்தும் சந்தனக் குழம்பினை அணிந்து அழகுடன் விளங்குதல் வெளிப்படை.
205-206. `மந்திர மாமலை, மகேந்திரமலை` என்பது, கீர்த்தித் திருவகவலில் காட்டப்பட்டது. உய்யக்கொள்வாய் - உய்யுமாறு உலகியலினின்றும் மீட்டுக் கொள்பவனே. ``எந்தமை`` என்றது, அடியவர்களை.

207-208. ``புலிமுலை புல்வாய்க்கு அருளினை``(அடி 207) என்ற இதுவும் ``கல்நார் உரித்த`` (அடி 97) என்றாற்போல `நினது அரிய திருவருளை எனக்கு வழங்கினாய் என, அன்னதொரு செயலைக் குறிப்பது. ``புலியொன்றைத் தாயை இழந்த மான்கன்று ஒன்றிற்குப் பால்கொடுக்கச் செய்தனன்`` என்ற வரலாறொன்றும் உண்டு. அலை கடல் - அலைகின்ற கடல்நீர். `இவ்வடி, வலைவீசிய திருவிளையாடலைக் குறித்தது` என்ப. ``மீமி`` எனவும், ``நடந்தாய்`` எனவும் போந்த சொற்கள், அங்ஙனம் பொருள்படுதற்கு ஏலாமையின், பிரளய வெள்ளத்துட்படாது நின்று, அதனுட்பட்டு அலந்த மாயோன் முதலியோர்க்குத் தோன்றி அருள்புரிந்தமையைக் குறித்தது என்றல் பொருந்தும்.

209-210. கரிக்குருவிக்கு அருள்புரிந்தமை திருவிளையாடற் புராணத்துட் கூறப்பட்டது. அதுவும், எளியோர்க்கு அருளுதலையே விளக்கி நிற்கும், இரும் புலன் - வரம்பில்லனவாய் எழும் ஐம்புல வேட்கைகள். நிரம்புதலை, `விடிதல்` என்னும் வழக்குப் பற்றி, புலர என்றார். அஃதாவது. `இனி இவை அமையும்` என்று ஒழிதல். இசைந் தனை - வந்து பொருந்தினாய். `உனக்கு வணக்கம்` என்க.

211-212. படி உறப் பயின்ற - நிலத்தின்கண்ணே பல நாள் எம்முடன் மிகப் பழகின. பாவக - வேடத்தையுடையவனே. இறைவன் குருவாகி வந்த கோலத்தை, `வேடம்` என்றார். தன்பொருட்டன்றிப் பிறர்பொருட்டுக் கொண்டதாகலின், ``ஒருவனே இராவணாதி பாவகம் உற்றாற் போல``(சிவஞான சித்தி, சூ. 1.67) என்றதும் காண்க. அடி நடு ஈறு - உலகத்தின் தோற்றம் நிலை இறுதி. அவற்றைச் செய்பவனை அவையாகவே அருளினார்.

213-214. நானிலம் - பூமி. `நாகலோகம் முதலிய மூவுலகத்தி லும் புகாமல்` என்றது `பிறவி எய்தாமல்` என்றபடி. பரகதி - மேலான நிலை; வீடுபேறு. பாண்டியற்கு அருளியது, அடிகள் நிமித்தமாக அவனும் காண எழுந்தருளிவந்தது.

215-216. ஒழிவு அற - எப்பொருளும் எஞ்சுதல் இல்லையாக. நிறைந்த - எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கின்ற. செழுமலர்ச் சிவபுரம்- உலகமாகிய கொடிக்குச் செம்மையான பூப்போலச் சிறந்து நிற்கும் சிவலோகம்; குறிப்புருவகம். திருக்கயிலையைச் சேக்கிழார் இங்ஙனம் (தி.12 திருமலைச் சிறப்பு. 3) சிறப்பித்தல் காண்க, ஒளிவடிவாய் நிற்றல் பற்றிச் செழுமை கூறினார்.

217-218. கழுநீர் மாலை பற்றி மேலே (அடி.201.) கூறப் பட்டது. மையல் - மயக்கம்; திரிபுணர்வு. துணித்தல் - அறுத்தல்.

219-220. பிழைப்பு - பொருந்தாதது. வாய்ப்பு - பொருந்து வது. இத்தொழிற் பெயர்கள் இரண்டும் ஆகுபெயராய் நின்று இவற்றை யுடைய பொருளைக் குறித்தன. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `குழைத்த` என்பது, உன்னைக் `குழைவித்தற்குச் செய்த` எனக் காரணத்தின்மேல் நின்றது. ``அன்போடியைந்த வழக்கு`` (குறள். 73). என்றதில், `இயைந்த` என்றதுபோல.

221- 222. திரிபுரம் வகையால் மூன்றாயினும், அதனுட்பட்ட நகரங்கள் பலவாதல் பற்றி, ``பல`` என்றார். அன்றி. ஒன்றல்லன வெல்லாம், `பல` எனப்படுதல் பற்றி, அவ்வாறு அருளினார் என்றலு மாம். புராணன் - பழையோன். பரம் பரஞ்சோதி - மேலானவற்றினும் மேலான ஒளி; பேரறிவு. `அதனையுடைய பரன்` என்க, ``பரன்`` என்றது, வாளா பெயராய் நின்றது.

223-225. புயங்கன் - பாம்பையணிந்தவன். `புயங்கம் என்ப தொருநடனத்தைச் செய்பவன்` எனவும் உரைப்ப. புராண காரணன் - காரணங்கள் பலவற்றிற்கும் காரணமாய் நிற்பவன். சயசய - வெல்க வெல்க.
இத் திருப்பாட்டும் கீர்த்தித்திருவகவலேபோல, நிலை மண்டில ஆசிரியம் என்க.

பண் :

பாடல் எண் : 1

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
யார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே. 

பொழிப்புரை :

எல்லாவற்றையும் உடையவனே! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக!

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

இப்பாட்டினை, `உடையாய், யான், உன் கழற்கு, மெய் மயிர் அரும்பி, விதிர்விதிர்த்து, கண் நீர் ததும்பி, உள்ளம் வெதும்பி, பொய் தவிர்ந்து, கை தலைவைத்து, `போற்றி! சய! சய! போற்றி` என்று உன்னைத் துதிக்கும் கையை நெகிழ விடேன்; ஆதலின் என்னை நீ கண்டுகொள்` என இயைத்து, வேண்டும் சொற்களை வருவித்துரைக்க. பின்னரும் இவ்வாறு, சொல்லெச்சமாயும், இசையெச்சமாயும் நிற்கும் சொற்களை வருவித்துரைத்தலை அறிந்து கொள்க.
`உனது திருவடிக்கண் நீங்காது அன்பு செய்து ஒழுகுகின்றேன்; எனக்கு இரங்கியருள்` என்பது இத் திருப்பாட்டின் திரண்ட பொருள். இதனுள், `மனம், மொழி, மெய்` என்னும் மூன்றும் அன்பு வழிய வாயினமை அமைந்து கிடந்தவாறறிக.
``மெய்தான்`` முதலிய நான்கிடத்தும் வந்த ``தான்` அசை நிலை. விதிர்விதிர்த்தல் - நடுநடுங்குதல். இதுவும் அன்பால் உளதாவதே. `துடிதுடித்தல்` என்பதுபோல, `விதிர்விதிர்த்தல்` என்பது இரட்டைக் கிளவி. விரை - வாசனை. இஃது அடியவர் சூட்டும் மலர்களால் ஆவது. கழற்கு - கழற் பெறுதற் பொருட்டு. இந்நான்கனுருபு பொருட்டுப் பொருளதன்று; ஏதுப் பொருளது. நான்கனுருபு இப்பொருட்டாய் வருதலை,
``அடிபுனை தொடுகழல் மையணற் காளைக்கென்
தொடிகழித் திடுதல்யான் யாய் அஞ்சுவலே``
(புறம்-83) என்றாற்போல்வனவற்றுள்ளுங் காண்க. ``கை`` இரண்டனுள், பின்னையது ஒழுக்கம். உள்ளம் வெதும்புதல் திருவடிப் பேறு கிடையாமையினாலாம். ``உன்னை`` என்பது ``என்னும்`` என்பதனுள் எஞ்சிநின்ற துதித்தல் வினையோடு முடிந்தது. கண்டுகொள் - எனது நிலையை நோக்கி அருள் செய்யத் திருவுளங்கொள்.
`அரும்பி, ததும்பி` என்பன, முன்னர், இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றனவாய், பின்னர், `விதிர்விதிர்த்து`, `வெதும்பி` என்பவற்றோடு ஒரு நிகரனவாய், சினை வினை முதல் மேல் நின்றனவாயின.

பண் :

பாடல் எண் : 2

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு
குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர
கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப்
பெறின்இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள்
உத்தமனே. 

பொழிப்புரை :

எங்கள் மேலோனே! தலைவனே! உன் திருவருளோடு கூடி இருக்கப் பெறுவேனாயின், இந்திரன், திருமால், பிரமன் ஆகிய இவர்களுடைய வாழ்வினைப் பொருளாக ஏற்க மாட்டேன். எனது குடி அழிந்தாலும் உன் அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக் கொள்ள மாட்டேன். நரகத்திற் புகுந்தாலும் அதனை இகழமாட்டேன். உன்னை அன்றி வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன்.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பொருள்கோள்:- `இறைவா, எங்கள் உத்தமனே, யான், உனது திருவருள் வழியே இருக்கப்பெறின், நரகம் புகினும் அதனை எள்ளேன்; அதனை மறந்து இருப்பதாயின், புரந்தரன், மால், அயன் முதலியோரது பதவிகளில் இருப்பதாயினும் அவற்றைக் கொள்ளேன்; யானன்றி என் குடியே கெடுவதாயினும், அடியாரொடல்லால் பிறரோடு நட்புச் செய்தலும், உன்னையல்லாது பிற தெய்வங்களைத் துணையாக எண்ணுதலும் செய்யேன்`.
`ஆதலின், என்னைக் கடைக்கணித்தருள்` என, மேலைத் திருப் பாட்டில் உள்ள, ``என்னைக் கண்டுகொள்`` என்றதனை, ஈண்டும் வருவித்து முடிக்க. `சிவஞானம் ஒன்றே பிறவித் துன்பத்தை நீக்குவ தாதலின், அதன்கண் விருப்பமும், அஃதல்லாத பிற எவையும் அத் துன்பத்தை ஆக்குவன ஆதலின் அவற்றின் கண் விருப்பம் இன்மை யும் கொண்ட தமது நிலையை இதனுள் எடுத்து விளக்கி வேண்டினார்.
புரந்தரன் - இந்திரன். `வாழ்வும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``குடி`` என்றதில் தொக்குநின்ற பிரிநிலை ஏகாரம் சிறப்புணர்த்தி நின்றது. ``கெடினும், புகினும்`` என்ற உம்மைகள், எதிர்மறை. இவற்றால், இறைவன் அடியரல்லாதவரோடு நட்புச் செய்யாமையால் குடிகெடுதலும், திருவருளை மறவாமையால் நரகம் புகுதலும் இல்லை என்பது போந்தது. ``நினது அடியார்` என, உயர்திணைக் கிழமைப் பொருளில் குவ்வுருபு வாராமல், அதுவுருபு வருதல் பிற்கால வழக்கு. எள்ளாமைக்கு, `திருவருளாலே இருக்கப் பெறுதலாகிய காரணத்தைக் கூறியவதனால், கொள்ளாமைக்கு, அதன் மறுதலையாகிய காரணம் பெறப்பட்டது. ``பிற தெய்வம்`` என்பதில், `தெய்வம்` என்றது, `உன்னையன்றிப் பிறரெல்லாம் எழுவகைப் பிறப்பினுள் ஒன்றாய தெய்வப் பிறப்பினர்` எனவும், `அதனால் அவரை எனக்குத் துணையாக நினையேன்` எனவும் குறிப்பினால் அருளிச்செய்தவாறு. `மேலானவன்` என்னும் பொருளதாகிய, `உத்தமன்` என்பது, இங்கு, `தலைவன்` என்னும் அளவாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 3

உத்தமன் அத்தன் உடையான் அடியே
நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன் என்ன
மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர்
திரிந்தெவருந்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல்
சாவதுவே. 

பொழிப்புரை :

உத்தமனும் எமது தந்தையும், எம்மை அடிமையாக உடையவனும் ஆகிய இறைவனது திருவடியைக் கருதி உருகி, உன் மத்தம் கொண்ட மனத்துடன் கூடிய பித்தன் இவன் எனக்கண்டோர் சொல்லவும், ஊர்தோறும் திரிந்து அவரவர் மனக் கருத்துக்கு இசைந் தனவாகிய பல சொற்களைச் சொல்லவும், யாவரும் தங்கள் தங்கள் மனத்துக்கு இசைந்தவற்றைப் பேசவும் கேட்டு மனம் இறக்கப் பெறுவது எக்காலமோ?

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பொருள்கோள்:- `உத்தமன்.....அடியேநினைந்து உருகி, கண்டோர், `இவன் மால்` என்னத் தம் மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட, மத்த மனத்தொடு ஊர் ஊர் திரிந்து, எவரும் தத்தம் மனத்தன பேசச் சாவது எஞ்ஞான்று`
``கொல்``, அசைநிலை. ``உடையான் அடியே` என்ற பிரி நிலை ஏகாரம், ``பிறிதொன்றையும் நினையாது` என்பதை விளக்கிற்று. மத்தம் - உன்மத்தம்; பித்து; என்றது பேரன்பினை. மால் - மயக்கம்; இஃது ஆகுபெயராய், `மால் கொண்டான் (அறிவு மயங்கினான்) எனப் பொருள்தந்தது. ``நினைவில்`` என்றது, ஏதுப்பொருளில்வந்த ஐந்தாம் வேற்றுமை. ``ஒத்தன`` என்றது, ``இவன் மால்`` என்னக் கருதிய அவ்வொருபொருளே பற்றிவரும் சொற்களையும், ``தத்தம் மனத்தன`` என்றது, நல்லனவும், தீயனவுமாய பல பொருள்களைப் பற்றிவரும் சொற்களையும் என்க. `ஊர்க்கண் ஊர்க்கண் திரிந்து` என உருபு விரிக்க. `பல ஊர்களில் திரிந்து` என்றவாறு. இங்ஙனம் திரிய வேண்டியது, உலகியலுள் அகப்படாமைப் பொருட்டு. அடிகள் உலகியலின் நீங்கியே நின்றாராயினும், `மீளவும் அதன்கண் அகப்படுவேங்கொல்லோ` என்னும் அச்சத்தினால் இங்ஙனந் திரியவேண்டினார் என்க. ``திரிந்து`` என்னும் எச்சம், எண்ணின்கண் வந்தது. `சாவது எஞ்ஞான்று` என்றது, சாவின்கண் உள்ள விருப்பத் தாலன்றி, உடம்பின்கண் உள்ள வெறுப்பினாலாகலின், அதற்கு. `இவ்வுடம்பு நீங்கப் பெறுதல் எஞ்ஞான்று என்பதே பொருளாயிற்று. ``ஊரூர் திரிந்து`` என்றதனால், மனநினைவில் ஒத்தன சொல்வார், அவ்வாறு திரியக் கண்டோர் என்பது பெறப்பட்டது. எவரும் - யாவரும். இறந்தவரைப் பற்றிப் பலரும் பல சொல்லுதல் இயல்பாத லறிக. உடம்புள்ள துணையும் உலகியலிற் றொடக்குண்ணாது நிற்கவும், உடம்பு விரைய நீங்கப் பெறவும் வேண்டியவாறு.

பண் :

பாடல் எண் : 4

சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று
நஞ்சம்அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா விடும்நம்
மவரவரே
மூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண்
ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந்
திரிதவரே. 

பொழிப்புரை :

முற்காலத்தில் தக்கனானவன் இறக்க, யாகத்தில் கொல்லப்பட்ட ஆட்டைத் தின்று, பாற்கடலில் தோன்றிய நஞ்சை அஞ்சி ஐயோ! எந்தையே! என்று முறையிட்ட நம்மவராகிய, அவர்கள் தாமே எம்பெருமானோடு, மூவர் என்று எண்ணப்பட்டு விண்ணுலகை ஆண்டு, மண்ணுலகில் தேவர் என்று சொல்லப்பட்டு, செருக்கடைந்து திரிகின்ற இறைவர்கள்? என்ன பாவமோ?

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பொருள்கோள்:- `முன் நாள், ஒருமுறை, தாம் சாவ, தக்கன் வேள்விக்கண் தகர் தின்று, மற்றொருமுறை நஞ்சத்திற்கு அஞ்சி, `எந்தாய்! ஆவா! அவிதா` என்று முறையிடும் நம்மனோராகிய அவரையே, `மூவர் கடவுளர்` என எம்பிரானொடும் வைத்து எண்ணி, அதன் பயனாக விண்ணாள்வதற்கு அமைந்து, `யாம் மண்மேல் தேவர்` என்றே இறுமாந்து `திரிதருவர் சிலர்; இஃது என்ன பாவம்!`
சாவ - சாமாறு. இது வீரபத்திரரால் நிகழ்ந்தது. ``தகர்தின்று`` என்றது, நஞ்சினை உண்ண மாட்டாமையையும், தக்கனைக் கடிய மாட்டாமையையும் உணர்த்தி நின்றது. `இவற்றாலும், முறையிட்டமையாலும் பசுவருக்கத்தினர் என்பது தெற்றென விளங்கவும், அவரைப் பதியாகிய சிவபெருமானோடு ஒருங்குவைத்தெண்ணுவர்` என்றவாறு. `அவிதா` என்பது, ஓர் முறையீட்டுச் சொல். `நம்மவர்` என்றது, `பசு வருக்கத்தினர்` என்றதாம். ``அவர்`` என்றதில் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. ``அவரே`` என்ற பிரிநிலை ஏகாரம், இழிவுணர்த்தி நின்றது. `ஆண்டு` என்பது, பான்மை வழக்கால். `ஆளுதற்கு அமைந்து` எனப் பொருள் தந்தது, ``அன்போடியைந்த வழக்கு`` (குறள்-73) என்பதில், `இயைந்த` என்பதுபோல. `பூசுரர்` என்பதை, `மண்மேல் தேவர்` என்று அருளினார். `நிலவுலகிற் காணப்படும் தேவர்` என்பது இதன்பொருள். எனவே, `ஆசிரியன்மார்` என்றதாம். இங்ஙனமாகவே, இவர், தாம் வீடடையாமையேயன்றிப் பிறரையும் அடையவொட்டாது மயக்கம் உறுவிக்கின்றனர் என்று இரங்கியவாறாயிற்று. என்ன பாவம் - என்னே அவர்தம் வினையிருந்தவாறு. `திரிதருவர்` என்பது தொகுத்தலாயிற்று. மக்கட்பிறப்பின் பயனாகிய வீடெய்தாது, அதனை வீண்போக்கலின், ``திரிதருவர்`` என்றார். இங்ஙனம் திரிதருவார், சிவாகமங்களைக் கொள்ளாது இகழ்ந்து, வேதம் ஒன்றையே போற்றும் வேதியர். சிறப்பு நூலைக் கொள்ளாது இகழ்ந்து பொதுநூல் ஒன்றனையே கொண்டு, அதற்குத் தாம் வேண்டியவாறே பொருள்கூறித் தருக்குதல் பற்றி, அவரை இவ்வாறு அருளிச் செய்வாராயினர்.
மண்மேல் தேவர் என்று இறுமாந்து திரிபவர், பூர்வ மீமாஞ்சகர், உத்தர மீமாஞ்சகர் என்னும் இருசாராருமே யாவர். அவருள், பூர்வ மீமாஞ்சகர், `வேதம், தெய்வம் உண்டு என்னும் பொருள் படக் கூறும் கூற்றுக்கள் புனைந்துரையன்றி உண்மையல்ல; ஆயினும், அக்கூற்றுக்கள் நல்வழி நிற்றற்கு உதவுவதால் உண்மை என்று கொள்ளத்தக்கன` என்பர் ஆதலாலும், உத்தர மீமாஞ்சகர், `பல் வேறு வகைப்பட்ட தேவர்கள், மற்றைய உயிர்கள், பலவகை உலகங்கள் ஆகிய யாவும், உண்மையில் கயிற்றில் அரவுபோலப் பொய்யே; ஆயினும், அவ்வுண்மையை உணரும் பக்குவம் வரும் வரையில் அவைகளை உண்மைபோலக் கொண்டு ஒழுகல் வேண்டும்` என்பர் ஆதலாலும், இவ்விருசாராரும் எல்லாத் தேவர்களையும் ஒரு தன்மையராகக் கொள்வதன்றி, அவருள் எவரையும் தனிச்சிறப்பு உடையராகக் கொள்ளார்; ஆகவே, `சிவபெருமான் ஒருவனே பதி; ஏனையோரெல்லாம் பசுவருக்கத்தினர்` என உணரும் உண்மை ஞானம் அவர்க்கு ஆகமங்களின் வழியேனும்; அநுபவத்தின் வழியேனும் உண்டாதற்கு ஏதுவின்மை யறிக.
`சிவபெருமான் ஒருவனே பதி` என்பது, வேதத்துள் குறிப்பாகவும், சிவாகமத்துள் வெளிப்படையாகவும் சொல்லப்படுதலை உணரமாட்டாராயினும், புராணங்களில் அது பல வரலாறுகள் வாயிலாக இனிதுணர்த்தப்படுதலின், அவைகளையேனும் உணர்கிலர் என்பார், தக்கன் வேள்வித் தகர்தின்றது, நஞ்சம் அஞ்சி அவிதா இட்டது ஆகிய புராண வரலாறுகளை உடம்பொடு புணர்த்துக் காட்டியருளினார். அதனால், `உலகிற்கு இந்திரன் முதலிய பலரும் முதல்வர்` எனவும், `மும்மூர்த்திகளும் முதல்வர்` எனவும் அனேகேசுரவாதங் கூறும் பௌராணிகர் கூற்றுப் பொருந்தாமை பெறப்பட்டது.
மூவருள் சிவபிரானோடு வைத்து எண்ணப்படும் ஏனையிருவர், மாலும் அயனும் என்பது வெளிப்படை. இவ்விருவரோடு ஒருவாற்றான் ஒப்பவைத்து எண்ணுதற்குரியவன் குணருத்திரனேயன்றி, குணாதீதனாகிய, `மகாருத்திரன்` எனப்படும் சிவபிரான் அல்லன் என்க.
இனி, இக்குணருத்திரன், மால், அயன் முதலியோருள் ஒரோவொருவரைப் பதியாகக் கருதும் பாசுபதர் முதலியோரை இங்குக் கூறாராயினார், அவர், முதல்வரல்லாதாரை முதல்வர் எனக் கருதலன்றிப் பலரையும் முதல்வர் என்னாமையானும், முதல்வரல்லாத சிலரையும், முதல்வனோடு ஒப்பவைத்து முதல்வர் எனக் கருதுதல் உண்மை ஞானத்திற்குப் பெரிதும் புறம்பாய் வீடுபயவாமைபற்றியே இரங்கி அருளிச்செய்கின்றாராக லானும் என்க.

பண் :

பாடல் எண் : 5

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்
டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை யேன்உனக்
கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின்
திருவடிக்காம்
பவமே யருளுகண் டாய்அடி யேற்கெம்
பரம்பரனே. 

பொழிப்புரை :

தவத்தையோ செய்திலேன்; குளிர்ந்த மலர்களால் அருச்சித்துக் குறைபாடின்றி வணங்க மாட்டேன், வீணாகவே பிறந்த பாதகன் நான்; பக்தர்களுக்குச் சொந்தமாகிய சிவபோதம் என்னும் அரிய செல்வத்தை நான் பெற்றிலேன்; உன்னை அடைவதற்கான நல்ல பிறவியை எனக்குத் தருவாயாக.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

`மேலானவர்க்கு மேலானவன்` எனப் பொருள்தரும், `பரம்பரன்` என்னும் தொகைச்சொல் ஒருசொல் நடைத்தாய், `கடவுள்` என்னும் அளவில் நின்று ``எம்`` என்றதற்கு முடிபாயிற்று. இத் தொடரை முதலில் வைத்து `யான்` என்னும் எழுவாய் வருவித் துரைக்க. மலரிட்டு இறைஞ்சுதலாகிய கிரியைத் தொண்டினைப் பின்னர்க் கூறுதலின், ``தவம்` என்றது யோகத்தையாயிற்று. சரியையும் கிரியையுள் அடங்கும். சரியையும், கிரியையும், `சிவதருமம்` என ஒன்றாகக் கூறப்படுதல் காண்க. சரியையை, ``புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன்`` என, அடிகள் பின்னர் அருளுதல் காண்க (தி.8 திருச்சதகம் பா.14). ``தவமே`` என்ற ஏகாரம், தேற்றப் பொருட்டாய், `சிறிதும்` எனப் பொருள்தந்தது, முட்டாது - தவறாது. `சரியை கிரியை யோகங்களைச் செய்யேன்` என்றது, அடிகள் அமைச்சராய் இருந்தமையைக் குறிக்கும். ``இறைஞ்சேன்` என்றதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. அவம் - வீண். ``அருவினையேன்`` என்றதன்பின், `ஆயினேன்` என்பது தொகுத்தலாயிற்று. `அவம்படவே பிறந்த வினையேனாகிவிட்டேன்` என்க. இனி, `வீண் என்பது உண்டாதற்கு இடமாகிய வினையேன் ஆகிவிட்டேன்` எனினுமாம். `இவ்வாற்றால் உன் அடியார் நடுவுள் இருக்கும் பேற்றினைப் பெற்றிலேன்` என்றார் என்க. சிவம் - நன்மை. திரு - நல்லூழ். `எனினும், உன் திருவடியிற் சேர்கின்ற பயனையே எனக்கு அருள வேண்டும்` என வேண்டுவார், அதற்குக் காரணமாக, `யானும் அவ்வடியவர்போல உன்னால் ஆட்கொள்ளப் பட்டவனன்றோ` என்பதனை, `அடியேற்கு` என உடம்பொடு புணர்த்தருளினார். பவம் - உண்மை. அது, செயல் நிகழ்தலைக் குறிக்கும். இது, `சம்பவம்` எனவும் வரும். ``அருளு`` என, ஏவற்கண் உகரச்சாரியை வந்தது. கண்டாய், அசைநிலை.

பண் :

பாடல் எண் : 6

பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாதடி
யேஇறைஞ்சி
இரந்தஎல் லாம்எமக் கேபெற லாம்என்னும்
அன்பருள்ளம்
கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற்
கன்பெனக்கும்
நிரந்தர மாய்அரு ளாய்நின்னை ஏத்த
முழுவதுமே. 

பொழிப்புரை :

பரவி, பலவகையாயிருக்கிற, ஆராய்ந்து எடுக்கப் பெற்ற மலர்களை உன் திருவடிகளில் இட்டு, குறைபாடின்றி, உன் திருவடிகளையே வணங்கி, வேண்டினவை எல்லாம் எங்களுக்கே பெறுதல் கூடும் என்று நிச்சயித்த அடியார்களுடைய மனத்தை ஒளித்து மற்றோரிடத்தில் நில்லாத கள்வா! பூரணமாக உன்னைத் துதிக்க, அடியேனுக்கும் உன் நெடிய கழலை அணிந்த திருவடிகளுக்குச் செய்ய வேண்டிய அன்பை இடையீடின்றி அருள் செய்வாயாக.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பரந்து - வலம் வந்து. ஆயப்படாத மலரினை இடுதலும், நாளும் செய்யாது இடை இடையே விட்டொழிதலும் கூடாமையின், ``ஆய்மலர் இட்டு முட்டாது இறைஞ்சி`` என்று அருளினார். இரந்த எல்லாம் - (தம் பிழையைப் பொறுக்குமாறு) வேண்டித் துதித்த செய்கைகள் யாவும். எமக்கே பெறல் ஆம் - நமக்கே பேறாவனவாம். என்னும் அன்பர் - என்று உணர்கின்ற மெய்யன்பினை உடைய வர்களது. `இறைவனை வழிபடப் பெறுதலே பெரும்பேறு என உணர்கின்றவரே மெய்யன்பர்` என, அவரது இயல்பினை விதந்தோதியவாறு. உள்ளம் - உள்ளத்தின்கண். `விளங்கிநிற்கின்ற பெருமானே` என்னாது, ``கரந்து நில்லாக் கள்வனே`` என்றது `அன்பரல்லாத பிறரது உள்ளத்தில் சிறிதும் விளங்காது நிற்பவன்` என்று கூறும் கருத்தி னாலாம். `யானும் நின்னை முழுவதும் ஏத்த`, `எனக்கும் நின்றன் வார் கழற்கு அன்பை நிரந்தரமாக அருளாய்` என்க. வார்கழல், அடையடுத்த ஆகுபெயர். நிரந்தரம் - இடைவிடாமை.

பண் :

பாடல் எண் : 7

முழுவதுங் கண்டவ னைப்படைத் தான்முடி
சாய்த்துமுன்னாள்
செழுமலர் கொண்டெங்குந் தேடஅப் பாலன்இப்
பால்எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடக மாடிக்
கதியிலியாய்
உழுவையின் தோலுடுத் துன்மத்தம் மேல்கொண்
டுழிதருமே.

பொழிப்புரை :

உலகம் முழுமையும் படைத்தவனாகிய பிரமனை படைத்தவனாகிய திருமாலும், தலைவளைத்து முற்காலத்தில் செழுமையாகிய மலர்களை ஏந்திக் கொண்டு எவ்விடத்தும் தேடி நிற்க, அப்பாற் பட்டிருந்தவன்; இவ்விடத்தில் எமக்கு உபகாரியாய் சுடுகாட்டில் பேய்களோடு கூடி நடனம் செய்து கதியில்லாதவனாகி புலித்தோலைத் தரித்து உன்மத்த குணத்தை மேற்கொண்டு திரிந்து நிற்பவன். இஃது என்ன ஆச்சரியம்?

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

முழுவதும் - உலகங்கள் எல்லாவற்றையும். கண்ட வன்-படைத்தவன்; பிரமதேவன். பிரமதேவனைப் படைத்தவன் திருமால். முடிசாய்த்து - தலைவணங்கி. தேடியது. வழிபடற் பொருட்டு. அப்பாலன் - அகப்படாது ஒளித்தவனாகிய எம்பிரான் என்க. திருமால் சிவபிரான் திருவடியைத் தேடிக் காணாமையேயன்றி. வழிபட விரும்பித் தேடியபொழுதும் அவர் காணாதவாறு சிவபிரான் ஒளித்த வரலாறு ஒன்றும் உண்டு என்பது, இதனாற் பெறப்படுகின்றது.
`அதர்வசிரசு` என்னும் உபநிடதத்திலும், இலிங்க புராணத்திலும், `தேவர்கள் தம்முன் காணப்பட்ட உருத்திரரை இன்னார் என்று அறியாது, `நீர் யார் ` என வினாவ, அவர் தமது பெருமைகளைக்கூறி மறைந்தார்; பின்பு தேவர்கள் `அவரைக் கண்டிலர்` என்று ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. `கண்டிலர்` என்பது, எதிர்ப்பட்டவர் உருத்திரரே என்று அறிந்த தேவர்கள் தமது அறியாமைக்கு வருந்தி, அவரை வழிபட விரும்பித் தேடியபொழுது கண்டிலர் என்னும் குறிப் புடையதேயாதல் வேண்டும். அவ்வரலாறே இங்குத் தேவர் என்னாது, திருமால் எனப்பட்டது போலும்! கழுது - பேய். நாடகம் - நடனம். கதியிலி - புகலிடம் இல்லாதவன். உழுவை - புலி. உன்மத்தம் - பித்து. உழி தரும் - திரிவான். `தேவருலகத்தில் திருமால் முதலியவர்கட்கு எட்டாதவன், இம் மண்ணுலகத்தில் மிக எளியனாய்க் காணப்படுகின்றான்` என்றபடி. தனக்கோர் ஆதாரம் இன்றித் தானே அனைத்திற்கும் ஆதாரமாய் நிற்றலை, ``கதியிலி` என்றும், உலகத்தாரொடும் ஒத்து நில்லாது வேறுபட்டு நிற்கும் நிலையை, ``உன்மத்தம்`` என்றும் பழிப்பதுபோலக் கூறிப் புகழ்ந்தருளினார். `கழுதொடு காட்டிடை நாடகம் ஆடுதல்` என்பது. உண்மையில் எல்லாவற்றையும் அழித்த நிலையில் உயிர்களோடு நின்று சூக்கும ஐந்தொழில் செய்வதேயாயினும், அந்நிலையை மக்கள் இவ்வுலகத்தில் சுடுகாட்டுள் ஆடுவானாகவே கண்டு வழிபட, அவர்க்கு அருள் புரிதல்பற்றி, ``இப்பால் உழிதரும்` என்று அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 8

உழிதரு காலும் கனலும் புனலொடு
மண்ணும்விண்ணும்
இழிதரு காலம்எக் காலம் வருவது
வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த
வல்வினையைக்
கழிதரு காலமு மாய்அவை காத்தெம்மைக்
காப்பவனே. 

பொழிப்புரை :

சஞ்சரிக்கிற வாயுவும் அக்கினியும் நீருடன் பூமியும் ஆகாயமும் நசிக்கின்ற காலமானது எக்காலத்துண்டாவது, அவ்வாறு அக்காலமுண்டான பின்பும், நீடு வாழ்கின்ற திருவடியையுடைய எம் தந்தையே! உன் தொண்டனேன் செய்த வலிய வினைகளை நீக்கி அருளுக. காலதத்துவங்களாகிய அவைகளைக் காத்து எங்களையும் காக்கின்ற இறைவனே!

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

சொற்கிடக்கை முறை வேறாயினும், ``எக்காலம் வருவது`` என்பதனை, `வருவது எக்காலம்` என மாற்றி இறுதியில் வைத்துரைத்தல் கருத்தாதல் அறிக. ``உழிதரு காலத்த`` என்றதனை முதலிற் கொள்க. உழிதரல் - நில்லாது பெயர்தல். இப்பண்பு காற்றிற்கும் காலத்திற்கும் உளதாதல் அறிக. கால் - காற்று. இழிதரல் - விட்டு நீங்குதல். `காலம் ` என்னும் முதனிலை அன்விகுதியோடு புணருமிடத்து இடையே அத்துச் சாரியை பெற்று, `காலத்தன்` என நின்று விளியேற்றது. `நில்லாது பெயர்கின்ற காலதத்துவமாய் நிற்பவனே` என்பது பொருள். ``வல்வினையைக் கழிதரு காலமு மாய்`` என்றது, `காலதத்துவமாய் நிற்பதனால், உன் அடியேனாகிய யான், பல பல பிறப்புக்களில் செய்த வல்வினையினின்று நீங்குகின்ற காலமுமாய் நின்று` என்றபடி. `அடியேன் கழிதரு` என இயையும். அவை - வல்வினைகளை. காத்து - வந்து பற்றாதவாறு தடுத்து. ``எம்மை`` என்றது, தம்மோடொத்த பிறரையும் உளப்படுத்து. `ஐம்பெரும் பூதங்கள் முதலிய தத்துவங்கள் என்னின் வேறாக என்னால் அறியப்பட்டு நீங்குங்காலமே என் வல்வினை கழியுங் காலம்; அதுபோது என்னை நீ உன் திருவடியிற் சேர்த்து உய்யக் கொள்வாய்; அத்தகைய காலம் எனக்கு வாய்ப்பது எப்பொழுது` என்பது இப்பாட்டின் திரண்ட கருத்து. பூதங்களையே கூறினாரா யினும், பிற தத்துவங்களையும் தழுவிக்கொள்ளுதல் கருத்தென்க.

பண் :

பாடல் எண் : 9

பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்
ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என்
சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி யேன்என்ன
இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி சாவ
தியம்புகவே. 

பொழிப்புரை :

பவன் என்னும் திருப்பெயர் உடையவன்; எமக்கு உபகாரகன்; குளிர்ச்சி பொருந்திய பெருமையமைந்த தலைமாலையை அணிந்தவன்; தேவர் பெருமான்; சிவன் என்னும் பெயர் உடையவன்; எமக்குபகார சீலன்; என் தாழ்வைக் கண்டு வைத்தும் என்னை ஆண்டு கொண்டருளினன். ஆதலால் இவ்வுலகத்தார் அவனே எமக்குத் தலைவன் என்றும் நான் அடியவன் என்றும் இவ்வாறே தெரியும் தன்மையைச் சொல்லுக.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

`பவனாகிய எம்பிரான், சிவனாகிய எம்பிரான்` என்க. இப்பரிசே எம்பிரான் தெரியும் பரிசாவது - இம் முறைமையிலே எம் இறைவன் என்னைக் கடைக்கணித்தற்குக் காரணத்தை. புவன் இயம்புக - இவ்வுலகம் அறிந்து கூறுவதாக. `அவனது பேரருளல்லது பிறிது காரணம் இல்லை` என்றவாறு. `புவனம்` என்பது கடைக் குறைந்துநின்றது.

பண் :

பாடல் எண் : 10

புகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல்
லாமணியே
தகவே எனைஉனக் காட்கொண்ட தன்மைஎப்
புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண்
ணாஅமுதே
நகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த
நாடகமே. 

பொழிப்புரை :

என் தொளைக்காத மாணிக்கமே! நான் உன் அடியார்களுக்கு இடையே வாழவும், தகுதி உடையவன் அல்லன். அங்ஙனமாக அடியேனை உனக்கு ஆளாக்கிக் கொண்ட தன்மை யானது தகுதியோ? எவ்வகைப் புன்மையோரையும் மிகவும் உயர்வித்துத் தேவர்களைப் பணியச் செய்கிறாய். கிடைக்கலாகாத அமிர்தமே! எம்பிரானே! என்னை நீ செய்த கூத்து நகைப்பதற்கு உரியதே ஆகும்.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பொருள்கோள்:- `என் பொல்லா மணியே, அண்ணா அமுதே, எம்பிரான், யான் உனக்கு அன்பருள் புகவே தகேன்; அங்ஙனமாக என்னை உனக்கு ஆளாகக் கொண்ட தன்மை தகவே? சிலபோது, நீ, எப்புன்மையரை மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; ஆதலின், என்னை நீ செய்த நாடகம் நகவே தகும்`. ஏகாரங்களுள் ``தகவே`` என்பது வினாப்பொருளிலும், ``நகவே`` என்பது பிரிநிலைப் பொருளிலும் வந்தன. ``புகவே, மிகவே`` என்பன, தேற்றப் பொருள. பொல்லா - பொள்ளா; துளை யிடாத. ``தோளா முத்தச் சுடரே`` என முன்னருங் கூறினார். (தி.8 போற்றித்- 197). எப் புன்மையர் - எத்துணைக் கீழானோரையும்; உம்மை, தொகுத்தல். பணித்தி - தாழ்விப்பாய். செய்த - இவ்வாறு ஆக்கிய. ``நாடகம்`` என்றது, இங்கு வினோதக் கூத்தைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 11

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே. 

பொழிப்புரை :

நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

இவ்விரண்டாம் பத்து, சிலவற்றை இறைவனிடமும், சிலவற்றை நெஞ்சினிடமும் கூறுவதாக அமைந்திருத்தலின், இதற்கு, `அறிவுறுத்தல்` எனக் குறிப்புரைத்தனர்போலும் முன்னோர்! `தரவு கொச்சகம்` என்பன தொல்காப்பியத்தும் காணப்படும். நடுவே - அவர்களுக்கு இடையில். ``வீடகத்து`` என்றது, `உனது இல்லத்தினுள்` என்ற நயத்தினையும் தோற்றுவித்தது. தக்கார் பலர் குழுமிப்புகும் ஓரிடத்து அவர்போல நடிப்பவனும் அவர்கட் கிடையே அங்குப்புக மிக விரைந்து செல்லுதல் உலகியல்பு. அவ் வியல்புபற்றிக் கூறியவதனால், அடிகளுக்கு வீடடைதற்கண் உள்ள விரைவு எத்துணையது என்பது புலனாகும். எய்த வந்திலாதார் எரியிற் பாய்ந்தமை(தி.8 கீர்த்தி - 132) முதலியவற்றைச் செய்ததுபோலத் தாம் செய்யாமை பற்றித் தமது செயலை நாடகம் என்று அருளினார். ஆடகச் சீர் மணி - பொன்னின்கண் பொருந்திய மணி. சீர்த்தல் - பொருந்துதல். உனக்கு - உன் பொருட்டு. ``ஊடகத்தே`` என்பதனை, `அகத்தூடே` என மாற்றிக்கொள்க. அகம் - மனம். நின்று - நிற்க. `அதனால் அஃது உருக` என்க. ``உருக`` என்ற செயவெனெச்சம், தொழிற்பெயர்ப் பொருளைத் தந்து நின்றது. `எம்மை உடையானே` என, இரண்டாவது விரிக்க. `உடையான்` தலைவன் எனக்கொண்டு, நான்காவது விரித்தலுமாம்.

பண் :

பாடல் எண் : 12

யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்
கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான்
மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம்
பெருமான்எம்
மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே
வருந்துவனே.

பொழிப்புரை :

நான் பிறவித் துன்பத்துக்கு அஞ்ச மாட்டேன். இறப்புத் துன்பத்துக்கு அஞ்சுகின்றிலேன். மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஆளவிரும்பேன். உன் திருவருளுக்கு உரியே னாகுங் காலம், எக்காலமோ என்று வருந்துவேன். ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

என் கடவேன் - என்ன கடப்பாடு உடையேன்; ஒன்றுமில்லை. எனவே, `இறப்பைப் பற்றியும் கவலையுறுகின்றிலேன்` என்றவாறு. ``வானேயும்`` என்றதில் ஏகாரமும், உம்மையுமாகிய இரண்டு இடைச் சொற்கள் ஒருங்குவந்தன. ஏகாரம் தேற்றமும், உம்மை உயர்வு சிறப்புமாய் நின்றன. தேன் ஏயும் - தேன் பொருந்திய. `மலர்க் கொன்றை` என்றதனை. `கொன்றை மலர்` என மாற்றி யுரைக்க. `பெருமான், மான்` என்றவற்றுள் ஒன்றற்கு, `தலைவன்` எனவும், மற்றொன்றற்கு, `பெரியோன்` எனவும் பொருள் உரைக்க. `பிறப்பு` இறப்புக்களாகிய துன்பங்களை நீக்கிக் கொள்வது எவ்வாறு என்றோ, சுவர்க்கபோகமும், இவ்வுலகத்தை ஆளும் செல்வமும் ஆகிய இன்பத்தைப் பெறுவது எவ்வாறு என்றோ யான் கவலையுறு கின்றேனல்லேன்; உன் அருளைப் பெறுவது எந்நாள் என்ற அவ் வொன்றை நினைந்தே நான் கவலையுறுகின்றேன்` என்றவாறு. `அருள்` என்றது, இவ்வுடம்பின் நீக்கித் தன்னோடு உடனாகச் செய்தலை.

பண் :

பாடல் எண் : 13

வருந்துவன்நின் மலர்ப்பாத மவைகாண்பான்
நாயடியேன்
இருந்துநல மலர்புனையேன் ஏத்தேன்நாத்
தழும்பேறப்
பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம்
புரியாயேல்
வருந்துவனத் தமியேன்மற் றென்னேநான்
ஆமாறே. 

பொழிப்புரை :

நான் உன் திருடியைக் காணும் பொருட்டு மலர் சூட்டேன்; நாத்தழும்பு உண்டாகத் துதியேன்; இவை காரணமாக நீ உன் அருளாகிய அமிர்தத்தைத் தந்தருளாயானால், நான் வருந்துதலே யன்றி உனக்காளாகும் விதம் யாது?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`வருந்துவன் நின் மலர்ப்பாதமவை காண்பான்` என மேற்போந்ததனையே மறித்துங் கூறினார், `அங்ஙனம் வருந்துலன்றி, அதற்கு ஆவனவற்றுள் ஒன்றும் செய்திலேன்` எனத் தமது ஏழைமையை விண்ணப்பித்தற்பொருட்டு. ``புனையேன்`` என்றதற்கு, `சாத்தி வழிபடேன்` என்றாயினும், `மாலை முதலியனவாகத் தொடேன்` என்றாயினும் உரைக்க. இவ்விரண்டும் இருந்து செய்யற் பாலனவாதல் அறிக. அதனைக் கிளந்தோதியது, `எனது உலகியல் நாட்டம் என்னை இவற்றின்கண் விடுகின்றிலது` என்பதைத் தெரிவித்தற் பொருட்டு. `நத் தமியேன்` எனப் பிரித்து, `மிகவும் தமியேனாகிய யான்` எனப் பொருள் உரைக்க. `ந` என்னும் இடைச் சொல் சிறப்புணர்த்தியும் வருமாகலின், அது, பின் வரும் தனிமையின் மிகுதியை உணர்த்திற்று. `அதுவன்றி நான் ஆமாறு மற்று என்` என்க. ஆமாறு - அடையும் நிலை.

பண் :

பாடல் எண் : 14

ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன்
அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன்
புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன்
கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே
சார்வானே.

பொழிப்புரை :

அறிஞர் அறிவுக்குப் புலப்படுவோனே! உன் திருவடிக்கு ஆளாகும் பொருட்டு மனம் உருகுதலும் அன்பு செலுத்து தலும், பூமாலை புனைந்தேத்துதலும், புகழ்ந்துரைத்தலும், திருக் கோயில் பெருக்குதலும், மெழுக்கிடுதலும் கூத்தாடுதலும் முதலியவற் றில் யாதும் செய்யேன். ஆயினும் இந்த உலக வாழ்வை நீக்கி உன் திரு வடியைப் பெற விரும்புகிறேன். உன் பெருங்கருணையால் என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`உன் திருவடிக்கு ஆமாறு` என மாற்றுக. ஏகாரம், அசை நிலை. `அன்பினால் அகம் குழையேன்; உருகேன்` என்க. குழைதல் - இளகல். உருகல் - ஓட்டெடுத்தல். `தூகேன்` என்பதற்கு, `தூ` என்பது முதனிலை. `விளக்குதல்` என்பது இதன் பொருள். இதனை, `திருவலகிடுதல்` என்றல் மரபு. ``விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்`` (தி.4.ப.77.பா.3) என்று அருளிச் செய்தமை காண்க. `சதுராலே சாமாறே விரைகின்றேன்` எனக் கூட்டி, `உலகியல் துழனிகளால் இறப்பதற்கே விரைந்து செல்லுகின்றேன்` என உரைக்க. `விரைகின்றேன்` எனத் தம் குறிப்பின்றி நிகழ்வதனைத் தம் குறிப்பொடு நிகழ்வது போல அருளினார். சார்வானே - எல்லாப் பொருட்கும் சார்பாய் நிற்பவனே. இப்பாட்டில் மூன்றாம் அடி ஐஞ்சீரடியாய் மயங்கிற்று.

பண் :

பாடல் எண் : 15

வானாகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக்
கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
வாழ்த்துவனே. 

பொழிப்புரை :

ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

வளி - காற்று. ஒளி, ஞாயிறு முதலியவை. ஊன் - உடம்பு; ஆகுபெயர். `பூதங்களும், அவற்றின் காரியங்களும் ஆகி இருப்பவன்` என்றபடி. இறைவன் இப்பொருள்கள் எல்லாமாய் நிற்பது, உடலுயிர்போல வேறறக் கலந்து நிற்கும் கலப்பினாலாம். ``உண்மை, இன்மை`` என்றவை, அவற்றையுடைய பொருளைக் குறித்தன. இறைவன், அநுபவமாக உணர்வார்க்கு உள்பொருளா யும் அவ்வாறன்றி ஆய்ந்துணர்வார்க்கு இல்பொருளாயும் நிற்பான் என்க.
கோன் - எப்பொருட்கும் தலைவன். அவர் அவரை - ஒவ்வொருவரையும். ``யான் எனது என்று `` என்னும் எச்சம், ``ஆட்டு வான்`` என்னும் பிறவினையுள் தன்வினையொடு முடியும். எனவே, ``ஆட்டுவான்`` என்பது, `ஆடுமாறு செய்வான்` என இரு சொல் தன்மை எய்தி நின்றதாம். உலகியலை, `கூத்து` என்றது. நிலையற்றதாதல் கருதி, கூத்து, ஒரு கால எல்லையளவில் நிகழ்ந்து, பின் நீங்குவதாதல் அறிக. `ஒத்த சிறப்பினவாய் அளவின்றிக் கிடக்கும் உனது பெருமைகளுள் எவற்றைச் சொல்வேன்! எவற்றைச் சொல்லாது விடுவேன்!` என்பது இத்திருப்பாட்டின் தெளிபொருள்.

பண் :

பாடல் எண் : 16

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்
மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந்
தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை
நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானும்உன்னைப்
பரவுவனே. 

பொழிப்புரை :

தேவர் உன்னைத் துதிப்பது, தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழ விரும்பியேயாம். வண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே! நான் அப்படி யின்றி என் பிறவித் தளையை அறுத்துக் கொள்ள விரும்பியே உன்னைத் துதிக்கின்றேன்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

எல்லாம் - எல்லாரும். `சூழ்ந்து` என்பது வலித் தலாயிற்று. மதுகரம் - வண்டு. தாரோயை - மாலையை அணிந்த உன்னை. நாயடியேன் - நாய்போலும் அடியேன். `நாயடியேனாகிய யானும்` என, ``யானும்`` என்றதனை இதன் பின் கூட்டுக. பாழ்த்த - இன்பம் அற்ற. பரவுவன் - துதிப்பேன். `தேவர்களும் உன்னை வணங்குகின்றார்கள்; யானும் உன்னை வணங்குகின்றேன், தேவர்கள் போகத்தை வேண்டுகின்றனர்; எனக்கு அது வேண்டுவதில்லை; உனது திருவடி நிழலே வேண்டும்` என்பது கருத்து. இதனானே, `இதனை அருளுதல் உனக்கு இயல்பேயாய் இருத்தலின், எனக்கு விரைந்து அருள்புரிக` என்ற குறிப்பும் பெறப்பட்டது. இறைவன் போகத்தை வழங்குதல், உயிர்களின் இழிநிலை குறித்தன்றித் தன் விருப்பத்தினாலன்றாதலும், வீடுபேற்றைத் தருதலே அவனது கருத்தாதலும் அறிந்து கொள்க. உம்மைகள், எச்சப்பொருள.

பண் :

பாடல் எண் : 17

பரவுவார் இமையோர்கள் பாடுவன
நால்வேதம்
குரவுவார் குழல்மடவாள் கூறுடையாள்
ஒருபாகம்
விரவுவார் மெய்யன்பின் அடியார்கள்
மேன்மேல்உன்
அரவுவார் கழலிணைகள் காண்பாரோ
அரியானே.

பொழிப்புரை :

கடவுளே! உன் அருமை நோக்கித் தேவர் உன்னைப் பரவுகின்றனர். வேதங்கள் ஓதி மகிழ்கின்றன. உமாதேவி ஒரு பாகத்தை நீங்காது இருக்கின்றனள். மெய்யடியார்கள் கூடிக் காண்கின்றனர். நான் ஒன்றும் செய்திலேன். ஆயினும் என்னை உன் பெருங் கருணையால் ஆட்கொள்ள வேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

குரவு - குராமலரையணிந்த. அரவு - பாம்பை யணிந்த. ``வார்கழல்`` என்றது அடையடுத்த ஆகுபெயராய், `திருவடி` என்னும் பொருட்டாய் நின்றது. `கழலிணைகள் என்றதனை `இணையாகிய கழல்கள்` எனக்கொள்க. `உன் திருமுன்பில் தேவர்கள் உன்னைத் துதித்து நிற்பார்கள்; வேதங்கள் முழங்கும்; உமையம்மை உனது திருமேனியில் ஒரு கூறாய் விளங்குவாள்; ஆயினும், அடியார்களே மெய்யன்பினால் உன்னை அடைவார்கள்; ஆதலின், அவர்களே உனது திருவடிகளை மேன்மேலும் கண்டு இன்புறுவார்கள்போலும்` என்றவாறு. ஓகாரம் சிறப்புப் பொருட்டு. அம்மையும் இறைவனை வழிபடுதல் முதலியவற்றால் இறைவன் திருவடியைக் காண முயல்பவள்போலக் காணப்படுவதால், `தேவர், வேதங்கள்` என்னும் இவரோடு உடன் கூறினார். `அவள் இறைவனின் வேறாதலின்மை யின், கண்டு இன்புறுவாருள் ஒருத்தியாகாள்` என்றபடி. எனவே, `ஒரோவொருகாரணத்தால் இமையோர் முதலியவர் திருவடியைக் காணாராக, அடியார்களே அவற்றைக் கண்டு இன்புறுவார்` என்ற தாயிற்று. இமையவர்கட்கு மெய்யன்பு இன்மையானும், வேதம் மாயாகாரியமேயாகலானும் திருவடியைக் காணலாகாமை யறிக. அரியானே - யாவர்க்கும் காண்டற்கு அரியவனே.

பண் :

பாடல் எண் : 18

அரியானே யாவர்க்கும் அம்பரவா
அம்பலத்தெம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட
பெய்கழற்கீழ்
விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன்
நயந்துருகேன்
தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான்
சாவேனே. 

பொழிப்புரை :

கடவுளே! சிறியேனை ஆட்கொண்டருளின உன் திருவடியைப் பாடுதல், மலர் தூவி மகிழ்தல், வியந்து அலறல், நயந்து உருகுதல் முதலியவற்றைச் செய்து உய்யும் வகை அறியாமல் உயிர் வாழ்கின்றேன். எனவே நான் இறப்பதே தகுதியாகும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`யாவர்க்கும் அரியானே` என மாற்றுக. அம்பரம் - ஆகாயம். சிதம்பரம் - சிதாகாசம்; ஞானவெளி. அதனுள் விளங்குதல் பற்றி, `அம்பரவா` என்றார். அம்பலம் - மன்று; சபை, பெய்கழல் - கட்டப்பட்ட கழலையுடைய திருவடி, ``கீழ்`` என்றது ஏழனுருபு. அலறுதல் - கூப்பிடுதல், நயந்து - விரும்பி; அன்புகொண்டு. தரியேன்- அத்திருவடிகளை உள்ளத்துக்கொள்ளேன்; நினையேன். `ஆதலின், நான் ஆமாறு என்! நான் சாவேன்! சாவேன்!!` என்க. ``சாவேன்`` என்றது, `பயனின்றி இறப்பேன்` என்றபடி. அடுக்கு, துணிவுபற்றி வந்தது.

பண் :

பாடல் எண் : 19

வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச்செவ்
வாய்க்கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும்
பாழ்நெஞ்சே
ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான்
இன்றுபோய்
வானுளான் காணாய்நீ மாளாவாழ்
கின்றாயே. 

பொழிப்புரை :

நெஞ்சமே! மலர்க்கணைக்கும் மாதர்க்கும் பதைத்து உருகி நின்ற நீ, இறைவனது பிரிவுக்கு ஆற்றாது உருகியிறந்து படுவாய் அல்லை; ஆதலால் நீ பயன் அடையாது ஒழிகின்றனை.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

வேனில்வேள் - மன்மதன், அவன் வேனிற் காலத்தை உரிமையாக உடைமைபற்றி, `வேனில்வேள்` எனப்பட்டான். ``வெண்ணகைச் செவ்வாய்க்கரிய பானலார் கண்ணியர்`` என்றாரா யினும், `அவரது நகை முதலியவற்றுக்கு` என்று உரைத்தலே கருத் தென்க. குவ்வுருபுகளை ஆனுருபாகத் திரிக்க. ``இன்றுபோய், வான் உளான்`` என்றதனால், `புகுந்து ஆண்டது அன்று` என்பது பெறப் பட்டது. வான் - சிவலோகம், நீகாணாய் - அவன் பிரிந்து நிற்றற்கு ஏதுவாகிய உன் இழிநிலையை நீ நினைக்கின்றிலை; `அதனால் இறவாது உயிர் வாழ்கின்றாய்; உனது வன்மை இருந்தவாறு என்` என்க. இதன்கண் நெஞ்சினை உயிருடையது போல அருளினார்.

பண் :

பாடல் எண் : 20

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே
வல்வினைப்பட்
டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை
ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்
பல்காலும்
வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய
வெள்ளத்தே. 

பொழிப்புரை :

நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

``வாழாத நெஞ்சமே`` என்றதனை முதலில்வைத்து `இறைவனை அடைந்து வாழமாட்டாத மனமே` என உரைக்க, ``வாழ்கின்றாய்`` என்றது, வாழ்தலையோ செய்கின்றாய்` எனப் பொருள் தருதலை எடுத்தலோசையாற் கூறிக்காண்க. அங்ஙனம் பொருள் படவே; `இல்லை` என்பது அதன்பின் வருவிக்கப்படுவ தாம். ``உனக்கு`` என்றது முன்னரும் சென்று, `ஏத்தாதே உனக்குக் கேடு சூழ்கின்றாய்` என இயையும். `உனக்குப் பல்காலும் சொல்கின்றேன்` என மாற்றியுரைக்க, ``சொல்கின்றேன்` எனத் தொடங்கியதனையே, ஈற்றடியிற் சொல்லி முடித்தார். எனவே, ``உய்யப் பார்` என அறி வுறுத்தியவாறாயிற்று. அவலக் கடலாய வெள்ளம் - `துன்பக் கடல்` எனப் பெயர்பெற்ற வெள்ளம்.

பண் :

பாடல் எண் : 21

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே.

பொழிப்புரை :

கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே யாம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இம் மூன்றாம் பத்துள் முதல் திருப்பாட்டில் பேரன்பின் நிலையையும், எட்டாம் திருப்பாட்டில் இறைவன் தமக்கு வியாபக உணர்வு அளித்தமையையும், ஒன்பதாம் திருப்பாட்டில் இறைவனது பெருநிலையையும் குறித்திருத்தல் பற்றி இதற்கு, `சுட்டறுத்தல்` எனக் குறிப்புரைத்தனர்போலும் முன்னோர். சுட்டு - சுட்டுணர்வு. அஃது, ஒருகாலத்துப் பலவற்றை உணராது ஒன்றனை மட்டுமே உணர்தல். இஃது, `ஏகதேச உணர்வு` எனவும் படும். ஒருகாலத்தில் பலவற்றையும் ஒருங்குணர்தல், `வியாபக உணர்வாகும்`. உணர்வை, `ஞானம்` என்ப. இவையே, `சிற்றறிவு, முற்றறிவு` எனப்படுவனவாம். என - என்றுதுதிப்பவர் துதிக்க. வேட்ட - (உன்னைக் காண) அவாவிய. நெஞ்சு - நெஞ்சினர்; ஆகுபெயர். பள்ளம்தாழ் - பள்ளத்தின்கண் வீழ்கின்ற. உறுபுனலின் - மிகுந்த நீர்போல. `உறு புனலின் பதைத்து` என இயையும். ``கீழ்`` என்றது, கீழ் நிற்பனவாகிய கால்களை. பதைத்து - விரைந்து; ஓடி. ஓடுதல், இறைவன் வெளிப்படும் இடத்தை நாடியாம். அவர் - அத்தகைய பேரன்பர். ``நிற்க`` என்றது, உன்னைக் காணாது நிற்க எனவும், ``ஆண்டாய்`` என்றது, `எதிர் வந்து ஆண்டாய்` எனவும் பொருள்தந்தன, ஆண்டாய்க்கு - ஆண்ட உன்பொருட்டு. உடம்பு `முழுதும் நெஞ்சேயாய் உருக வேண்டியிருக்க, உள்ள நெஞ்சும் உருகவில்லை; உடம்பு முழுதும் கண்களேயாய் நீர்சொரிய வேண்டுவதாக, உள்ள கண்களும் சிறிதும் நீரைச் சிந்தவில்லை; இங்ஙனமாகவே, என் நெஞ்சு கல்லே; என் கண்கள் மரத்தின்கண் உள்ள கண்களே` என்ற படி. ``மரம்`` என்றது அதன் கண்களை. மரத்தின்கண் உள்ள துளைகட்கு, `கண்` என்னும் பெயருண்மை பற்றி, இகழப்படும் கண்களை, அவைகளாகக் கூறும் வழக்கினை, ``மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்`` என்னும் முத்தொள்ளாயிரச் செய்யுளால் உணர்க. `அண்ணால்` என்பது ``அண்ணா` என மருவிற்று.

பண் :

பாடல் எண் : 22

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
அனையநான் பாடேன்நின் றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோநான் ஆன வாறு
முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே. 

பொழிப்புரை :

தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே! வினைப் பாசத்தில் அகப்பட்டுக் கிடந்த என்பால் வலிய எதிர்ப்பட்டு வந்து நின்று, நீ வா, நான் வினையை ஒழிக்க வல்லேன் என்று கூறுவாய் போல, ``நான் இத்தன்மையன்`` என்று உன்னியல்பை எனக்கு அறி வுறுத்தியருளி, என்னை அடிமை கொண்டு, எமக்குத் தலைவனாய் நின்ற உன் பொருட்டு, இருப்பினாற் செய்த பதுமை போன்ற நான், நின்று கூத்தாட மாட்டேன்; முதல்வனே! நான் இவ்வாறாய முறையின் முடிவு என்ன என்று அறிய மாட்டேன்; இது முறையாகுமோ?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புகுந்து- எதிர்வந்து. போது - வா. வினைக் கேடன் - வினைகட்கு அழிவைச் செய்பவன். இனையன் - இன்னான்; உருகுந் தன்மை இல்லாமை பற்றித் தம்மை இருப்புப் பாவையோடு ஒப்பித்தார். உலறுதல் - வற்றுதல்; மெலிதல். சோர்தல் - நீங்குதல், முனைவன் - முன் (முதற்கண்) நிற்பவன். `நான் இங்ஙனம் ஆனவாறு முறையாகுமோ` என்க. முடிவு - (இவ்வாறு இருப்பதன்) விளைவு. ``கிடந்தேனை உன்னை அறிவித்து`` என்றது, ``களித்தானைக் காரணங்காட்டுதல்`` (குறள் 929) என்றதுபோல நின்றது.

பண் :

பாடல் எண் : 23

ஆயநான் மறையவனும் நீயே யாதல்
அறிந்தியான் யாவரினுங் கடைய னாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர்
பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே
எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே. 

பொழிப்புரை :

நான்கு வேதப் பொருளாய் இருப்பவன் நீ என்பதையும் எல்லாரினும் இழிந்தவன் நான் என்பதையும் அறிந்து உனக்கு நானும் ஓரடியான் என்றேன். ஆதலால், ஆண்டு கொண்டனை. அத்தனையே அன்றி, உனக்கு அடியார் இல்லாத குறையினால் அன்று, உன் பெருங்குணத்தைக் குறித்து நான் என்ன சொல்லிப் புகழ்வேன்?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆய - பெருகிய. நான்மறையவனும் - நான்கு வேதங்களையும் அருளினவனும்; என்றது, ஒழுக்க நெறிகள் பலவற்றையும், உலகிற்கு நன்கு உணர்த்தியவன்` என்றவாறு. ``நீயே`` என்ற ஏகாரம், பிரிநிலை. ``கடையன்`` என்றது. ``ஒழுக்க நெறிகளுள் ஒன்றிலும் நில்லாதவன்` என்றதாம். ``நோக்கி`` என்றது முன்னர், ``அறிந்து`` என்றதனோடு இயைய வைத்து எண்ணப்பட்டது. கண்டு- பின், உண்மையை உணர்ந்து. உண்மையாவது, `சிறியோர்க்கு இரங்குதல் பெரியோர்க்கு இயல்பு` என்பது. ``நாதனே, எம் பெருமான்`` என்ற இரண்டையும் முதலில் கூட்டுக. `நானும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. அன்பன் - அன்பனாதற்கு உரியவன். என்பேனாயினேன் - என்று எண்ணும் இயல்புடை யேனாயினேன். ஆதலால் - ஒழுக்க நெறிகளால் சான்றோனாகா விடினும், இவ்வாறு உன் பெருமையைச் சிறிதேனும் உணரப் பெற்றமையால். இதனால், இறைவன் குருவாகி வந்து ஆட் கொள்வதற்கு முன்பே அடிகள் இறைவன் திருவருளில் நாட்டமுற்று நின்றமை பெறப்படும். ``அடியார் தாம் இல்லையே`` என்றது, `உனக்கு அடியவர் இல்லையாயின் குறையோ` என்னும் பொருளது. ஏகாரம், வினா. ``அன்றி`` என்றதனை, இதற்கு முன்னே கூட்டுக. பெருமை - பெரியோரது தன்மை; அது, சிறியோரை இகழாது, குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டல். `ஓர் பேயனேன் மற்று என் சொல்லிப் பேசுகேன்` என இயையும். பேசுதல், இங்கு, `விளக்குதல்` என்னும் பொருட்டு. விளக்குதல், தம்மை ஆட்கொண்ட காரணத்தை என்க.

பண் :

பாடல் எண் : 24

பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்றென்றே பேசிப் பேசிப்
பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப்
போற்றியெம் பெருமானே என்று பின்றா
நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே. 

பொழிப்புரை :

இறைவனே, பேசும் பொழுதும் உன் திருப் பெயரைப் பேசியும் பூசும்பொழுதும் திருநீற்றையே நிறையப் பூசும் நல் அன்பரை ஆண்டருளும் இயல்பினை உடைய நீ, அன்பில்லாத என்னை ஆண்டருளினது வியக்கத் தக்கதாயிருக்கின்றது.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`தாம் பேசின்`. `தாம் பூசின்` என மாற்றுக. `பேசின், பூசின்` என்றவை, பேசுதல், பூசுதல் இவற்றின் அருமையைக் குறியாது, `பேசும் பொழுதெல்லாம், பூசும்பொழுதெல்லாம்` எனப் பொருள் தந்தன. பின்றா நேசம் - சலியாத அன்பு. கடந்தார் - கடந்தவராவார்; இது, துணிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாக வந்ததாம். துணிவு, தகுதி பற்றி வந்தது. `பின்றா நேசத்தாரை ஆண்டானே, நீ, அவா வெள்ளக் கள்வனேனை ஆட்கொண்ட வண்ணந்தான் என்னை` என வியந்தவாறு காண்க.

பண் :

பாடல் எண் : 25

வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்று
அநேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்கு
எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா றறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே. 

பொழிப்புரை :

தேவர்கள் உன் திறம் முதலானவற்றையும் உள் உருவம் ஒன்றா? பலவா? என்பதனையும் அறியாமல் தடுமாறி நிற்க, என்னைத் தடுத்து உன் வண்ணம்காட்டி, திருவடி காட்டி, வடிவு காட்டி என்னை ஆட்கொண்டனையே! உன்னைக் குறித்து என்னவென்று புகழ்வேன்?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``வண்ணம்``என்றதற்கு முன், `உன்` என்பதும் ``அனேகன்`` என்றதற்குமுன், `நீ` என்பதும் வருவித்து, அனேகன் முதலிய நான்கின்பின்னும் `அல்லை` என்பதைத் தனித்தனி விரித்தும் உரைக்க, ``சேயது, வெளிது`` என்றவை பண்பின்மேல் நின்றன. அணு-சிறியாய்; ஆகுபெயர். அணுவில் இறந்தாய் - பெரியாய், அங்கு-அறியப்புகும் அக்காலத்து. எண்ணம் - கொள்கை. தடு மாற்றம், அநுபவமாகாமையால் வந்தது. காட்டி - அநுபவமாகக் காணும்படி காட்டி. இப்பகுதியை, ``அதுபழச் சுவையென`` என்ற திருப்பாட்டின் (தி.8 திருப்பள்ளி.7) பகுதியோடு ஒருங்குவைத்துக் காண்க. வழி - உய்யும் வழி. `திண்ணமாக` என ஆக்கம் வருவிக்க. திண்ணமாவது, பிறவாமையே. ``தான்`` என வந்தன பலவும் அசை நிலைகள். சிந்திக்கேன் - நினைப்பேன். ``என்`` என்றதனை, ``சிந்திக்கேன்`` என்றதற்குங் கூட்டுக, `எச்சொல்லால் சொல்லி, எந் நினைவால் நினைப்பேன்! சொல்லுக்கும், நினைவுக்கும் அடங்காத தாய் உள்ளது உனது திருவருட் பெருமை` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 26

சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.

பொழிப்புரை :

கடவுளே! இருமை வகை தெரியாத என் மனத்தை நின்திருவுருக்காக்கி, கண்களை நின் திருவடிகளுக்கு ஆக்கி, வழி பாட்டையும் அம்மலர் அடிகளுக்கே ஆக்கி, வாக்கினை உன் திரு வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் பயனுற என்னை அடிமை கொண்ட உனது பெருங் குணத்தை என்ன வென்று புகழ்வேன்?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சிந்தனை - நினைத்தல்; இஃது இறைவன் வடிவம் முழுவதையும் பற்றி அகத்தே நிகழவேண்டுமாதலின், ``நின்றனக்கு ஆக்கி`` என்றும், ஏனைய காட்சியும், தொழுகையும் புறத்தில் திரு வடியை நோக்கிச் செய்தலே சிறப்பாகலின், `அவற்றைத் திருவடி மலர்க்கே ஆக்கி` எனவும் அருளினார். வார்த்தை - செய்தி; இங்குப் புகழைக் குறித்தது. அடிகள் புலமைத்திறம் முழுவதையும் இறைவன் புகழுக்கே ஆக்கினமை அறிக. ``மணி`` என்றது சிறப்புப்பற்றிக் கூறப்பட்டது. இறைவன்புகழே யாவர் புகழினும் சிறந்ததாதல் அறிக. இறைவன் புகழை இங்ஙனம், ``மணிவார்த்தை`` எனக் குறிப்பிட்டமை யானே, அஃதொன்றையே பாடியருளிய அடிகள், `மாணிக்கவாசகர்`` எனப் பெயர் பெற்றார் என்ப, ``ஆக்கி`` என்னும் எச்சங்கள், ``ஆர`` என்றதனோடு முடியும். அது, சினைவினையாயினும் முதல்மேல் நின்றதாகலின் அவ்வெச்சங்கட்கு முடிபாதற்கு இழுக்கின்று. `ஐம்புலன்களும்` என்னும் உம்மை தொகுத்தல்.
``புலன்கள்`` என்றது, பொறிகளை. ஆர - நிரம்ப; என்றது, `இன்புறுமாறு` என்றபடி; இஃது எதிர்காலத்ததாய் நின்றமையின், ``ஆக்கி`` என்னும் எச்சங்களும் `உழுது வருவான்` என்பது போல, எதிர்காலத்தனவாம். என்னை?
``செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்``
என்பது தொல்காப்பியமாகலின். (தொல் - சொல் 241.)
இறைவன் ஆசிரியத் திருமேனியனாய் வந்து உடன், இருந்த காலத்தில் அடிகள் முதலியோரது ஐம்பொறிகளுள் நாப்பொறி இன்பம் எய்தியது, அவன் அளித்து உண்பித்தசுவைப் பொருள்களாலாம். இனி, ``ஐம்புலன்கள்`` என்றது பெரும்பான்மைபற்றிக் கூறிய தெனினும் இழுக்காது; `இவ்வூனக் கண்களாலே காண வந்தாய்` என்பதே கருத்து.
``உணர்வின் நேர்பெற வருஞ்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர
அருளினை``
(தி.12 பெரி. பு. ஞான. சம். 161.) என்று அருளிச்செய்தது காண்க.
வந்தனை- எதிர்வந்தாய்; இஃது எச்சப்பொருட்டாய் நின்றது. விச்சை - வித்தை. மால் - மருட்கை; வியப்பு. `விச்சையை யுடைய, வியப்பைத் தருகின்ற அமுதப்பெருங்கடலே` என்க. தருதல், `தடையின்றிச் சார்ந்து இன்புறவைத்தல். இரண்டு; இகம், பரம். அவை இல்லையாயது, அவற்றிற்கேற்ற அறிவும், ஒழுக்கமும் இன்மை யினாலாம். தனியன் - பற்றுக்கோடில்லாதவன். `ஒரு பயனும் இன்றி யொழியற்பாலனாகிய எளியேனை, மிக மேலான பயனைப் பெறச் செய்தாய்` என்றபடி. `உனது கருணையை என்னென்று புகழ்வேன்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 27

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.

பொழிப்புரை :

தனியனாய்ப் பிறவிப் பெருங்கடலில் விழுந்து, பலவகைத் துன்பங்களாகிய அலைகளால் எறியப்பட்டு, மற்றோர் உதவியும் இன்றி, மாதர் என்னும் பெருங்காற்றால் கலங்கி, காமமாகிய பெருஞ்சுறாவின் வாயிற்சிக்கி, இனிப்பிழைக்கும் வழி யாதென்று சிந்தித்து, உன் ஐந்தெழுத்தாகிய புணையைப் பற்றிக் கிடக்கின்ற என்னை முத்தியாகிய கரையில் ஏற்றி அருளினை.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இதனுள், `பிறவி, துன்பம், மகளிர், காமம்; திருவைந் தெழுத்து, பிறப்பின்மை, என்னும் இவைகளை முறையே. `கடல், அலை, சூறாவளி, சுறாமீன், புணை, கரை, என்னும் இவைகளாக முற்றுருவகம்பட வைத்து அருளிச்செய்தவாறு காண்க. மல்லல் - வளம்.
மூர்க்கன் - கொண்டது விடாதவன். `எனக்கும் உண்மையை உணர்த்தி என்னை ஆட்கொண்டாய்` என்றபடி. `உனது சதுரப்பாடு இருந்தவாறு என்` என்பது குறிப்பெச்சம். ``கல்நாருரித்த கனியே`` (தி.8 போற்றித். 97) என முன்னரும் அருளிச் செய்தார், `இனி என்னே உய்யுமாறு என்று எண்ணி, அஞ்செழுத்தைத் துணையாகப் பற்றி யிருந்த தம்மை, ``மூர்க்கனேன்`` என்றது, மாதராசை துன்பந்தருவது என்று அறிந்தும் அதனை விடாது நின்றது பற்றியாம்.
இதனாலும், அடிகள், இறைவனால் ஆட்கொள்ளப் படுவதற்கு முன்னர், `சரியை, கிரியை, யோகம் என்னும் நிலைகளில் நின்றமை பெறப்படும். தனியனேனாய்க்கிடக்கின்ற என்னை, அவ்விடத்து மூர்க்கனேற்குக் கரையைக் காட்டி ஆட்கொண்டாய்` என முடிக்க. ``தனியனேன் என்றது கேவல நிலையைக் குறித்தது`, எனக் கொண்டு, `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளும் இதனுட் கூறப்பட்டன எனக் காட்டுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 28

கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்
கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. 

பொழிப்புரை :

ஒருவராலும் கேட்டு அறியாதவனும், தனக்கு ஒரு கேடில்லாதவனும், உறவு இல்லாதவனும், கேளாமலே எல்லாம் கேட்பவனும் ஆகிய இறைவன், என் சிறுமை நோக்காது நாய்க்குத் தவிசிட்டாற் போலத் (தவிசு - இருக்கை; ஆசனம்) தன் அருகில் இருத்தி, காட்டுதற்கரிய தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எக் காலத்திலும் கேட்காத வேத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பித்து, மீட்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட் கொண்டான். இது ஒரு விந்தையாகும்.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`ஆரும் கேட்டு அறியாதான்` என மாற்றுக. ``ஆரும்`` என்றது, சத்திநிபாதர்களைச் சுட்டியன்றி, உலகரைச் சுட்டியேயாம். இவர்களை, `நாடவர்` எனவும். `நாட்டார்` எனவும் அடிகள் குறித்தலையறிக. உலகரால் கேட்டறியப் படாமை, அவர்கள் அறிவிற்கு உணரவாராமையின் தமராய்ச் சொல்லுவார் இன்மை யினாலும், அறிவர் உரைக்கும் உரைகள் அவர்கட்குப் பொருள் படாமையினாலுமாம். கேடு - அழிவு. ஒன்று - சிறிது. `கேட்டாரும் அறியாமையால், இலனால் இல்லை` என்றபடி. கேளாதே எல்லாம் கேட்டான் - பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன். இது, கிளையின்மையால் அறியப்படும் என்பார், அதனை முற்கூறினார். கிளை, இருமுதுகுரவரும், பிறதமரும். இத் தன்மையனாகலின், பிறவாமற் காத்து ஆட்கொண்டான், என்பார், இவற்றை முதற்கண் கிளந்தோதினார். ஏக்கற்றுநின்றாரை, `விழித்து நின்றார்` என்றல் வழக்கு. அடிகள்பெற்ற பேற்றினையறிந்தபின், உலகவர் தமக்கு அஃது இன்மையை நினைந்து ஏக்கற்றனர் என்க. உயர்ந்தோர்க்குச் செய்யத்தக்கன, இழிந்தோர்க்குச் செய்யின், அதனை, `நாய் மேல் தவிசிட்டவாறு` என்றல் மரபு. தவிசு - இருக்கை. இஃது, யானையேறுவார் அதன்மேல் இடுவது. ``நாய்மேல் தவிசிடு மாறு`` (பழமொழி நானூறு - 105), எனவும் ``அடுகளிற் றெருத்தின் இட்ட - வண்ணப்பூந் தவிசுதன்னை ஞமலிமேல் இட்டதொக்கும்`` (சீவகசிந்தாமணி-202) எனவும் சொல்லப் பட்டமை காண்க. ``இவ்வாறாகவே, ``இட்டு`` என்றது, இட்டது போலும் செய்கையைச் செய்து` என்றவாறு. அச்செயலாவது, ஒரு மொழியாகிய ஐந்தெழுத்தின் உண்மையை அறிவுறுத்தியதாம். ``பின்னும்`` என்றதனை இதன்பின் கூட்டுக. ``நாயினேற்கே`` என்றது, `எனக்கே` என்னும் அளவாய் நின்றது. காட்டாதன, உணர்த்தியவாறே உணரும் உணர்வு மதுகை இல்லாதார்க்கு உணர்த்தலாகாதன. அவை, பொருட் பெற்றிகள்; இவற்றை, `தத்துவம்` என்ப. கேளாதன, உணர்த்தியவாறே ஒழுகும் ஆர்வம் இல்லாதவரால் கேட்கலாகாதன; இதற்கும், `சொல்லலாகாதன` என்பதே கருத்து. அவை, சாதனங்களும், அவற்றாற் சாதிக்கும் முறைகளுமாம். ``மீட்டேயும்`` என்றதில் உள்ள தேற்றேகாரத்தைப் பிரித்து, ``பிறவாமல்`` என்றதனோடு கூட்டுக. ``விச்சைதான்`` என்ற எழுவாய்க்குப் பயனிலையாகிய, `இது` என்பது எஞ்சி நின்றது. `இவையும் உயர்ந்தோர்க்கே செய்யற்பாலன; இவற்றையும் எனக்குச் செய்தான்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 29

விச்சைதான் இதுவொப்ப துண்டோ கேட்கின்
மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி
அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுதம் ஊறி
அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூர
அச்சன்ஆண் பெண்ணலிஆ காச மாகி
ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற
செச்சைமா மலர்புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே. 

பொழிப்புரை :

ஆண், பெண், அலி என்னும் உருவங்கள் இல்லாதவனாய் ஐம்பூத உருவினனாய், அவற்றுக்குக் காரணமாகிய மூலப் பகுதியாய், அதனையும் கடந்து நின்ற சிவபெருமான், சிறியேனைத் தன் அடியவன் ஆக்கிப் பிறவித்துன்பம் நீங்கும் வண்ணம் ஆட்கொண்டருளி, என் மனம் உருகும்படி அதனுள்ளே நுழைந்து நிலைத்திருந்தான். உலகத்தில் இது போன்ற விந்தையொன்று உண்டோ?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `அச்சன்......தேவர்கோ, (என்னை) ஆக்கி ஆட்கொண்டான்; அன்புகூர, அமுதம் ஊறி, அகம் நெகப் புகுந்து ஆண்டான்; கேட்கின், இது ஒப்பது விச்சை உண்டோ`.
கேட்டல் - ஆராய்தல். ``கேட்பான்புகில் அளவில்லை`, என் புழியும் (தி.3.ப.54பா.4) கேட்டல் என்பது, இப்பொருட்டாதல் அறிக. அச்சம், பிறவி பற்றியது. ``அமுதம்`` என்றது, இன்பத்தை. அன்பினாலும், இன்பத்தாலும் மனம் நெகிழப்பெறும் என்க. ``நெகவே`` என்னும் ஏகாரம், தேற்றம். புகுந்தது, அகத்து என்க. ``ஆண்டான்`` என்றது, `அருளினான்` என்னும் பொருட்டு. அச்சன் - தந்தை. பூதங்களுள் இரண்டைக் கூறவே, ஏனையவும் கொள்ளப் படும். அந்தத்தில் உள்ள நாத தத்துவத்தை, ``அந்தம்`` என்றார்; ஆகுபெயர். செச்சை - வெட்சி.

பண் :

பாடல் எண் : 30

தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தை
யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான்
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியார் அடியா ரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே. 

பொழிப்புரை :

தேவர்களால் அறியப் பெறாதவனும் மூவர் களுக்கும் மேலானவனும் ஆகிய இறைவன் தானே எழுந்தருளி என் சிறுமை கருதாது என்னைத் தடுத்தாட் கொண்டமையால், இனி நாம் யார்க்கும் குடிகளல்லோம்; எதற்கும் அஞ்சோம்; அவன் அடியார்க்கு அடியாரோடு சேர்ந்தோம். மேன்மேலும் ஆனந்தக் கடலில் குடைந் தாடுவோம்.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேவர் கோ - இந்திரன். பொழில்கள் - உலகங்கள். பயந்து - பெற்று; படைத்து. மற்றை - தன்னின் வேறாகிய, மூவர்: அயன், அரி, அரன். `இவர்கள் குணமூர்த்திகளாதலின், நிற்குண னாகிய பரமசிவனின் வேறே` எனவும், `அன்னராயினும், அவனது அதிகார சத்தியைப் பெறுதற்கு உரிமையுடையராயினமையின், ஏனைத் தேவரின் மேம்பட்டவர்` எனவும் உணர்த்தற்கு, ``மற்றை`` என்றார். இதனானே, மூவருள் ஒருவனாகிய உருத்திரன் பரமசிவனின் வேறென்பதும், பரமசிவனாகிய சிவபெருமான் இம் மூவரின் வேறாய நான்காவது பொருள் என்பதும் தெற்றென விளங்கும். மாண்டூக்யம் (1-7) என்ற உபநிடத வாக்கியத்தையும் நோக்குக. மூர்த்தி - மூவர் முதலிய பலரையும் தனது வடிவாக உடையவன். வாயிலை (அதிட்டானத்தை) வடிவு என்று பாற்படுத்துக் கூறுதல் மரபு. மூதாதை - பாட்டன்; என்றது, இம் மூவர்க்கும் மேற்பட்ட வித்தியேசுரர் முதலியோர்க்கும் முன்னோ னாதல்பற்றி. மாது ஆளும் பாகத்து - உமையம்மையால் ஆளப்படும் கூற்றினையுடைய. `யாவர்க்கும்` என்னும் குவ்வுருபும் உம்மையும் தொகுத்தலாயின. குடி - அடிமை. குடைந்து ஆடி - அவ்வின்பத்தில் மூழ்கி விளையாடி. ஆடுவோம் - களித்தாடுவோம். ``நாமார்க்குங் குடியல்லோம்`` என்னும் திருத் தாண்டகத்தை (தி.6.ப.98.பா.1) இதனுடன் ஒருங்குவைத்துக் காண்க.

பண் :

பாடல் எண் : 31

ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே. 

பொழிப்புரை :

நெஞ்சே! இறைவனது திருவடிக்கு அன்பு செய்கின்றிலை; அவ்வன்பின் மிகுதியால் கூத்தாடுதல் செய்கிலை; எலும்பு உருகும் வண்ணம் பாடுகின்றிலை; இவை எல்லாம் செய்ய வில்லையே என்று பதைப்பதும் செய்கிலை; திருவடி மலர்களைச் சூடவும் முயன்றிலை, சூட்டவும் முயன்றிலை; இறை புகழ் தேடலும் இல்லை; தேடித் தேடி அலையவும் இல்லை; நீ இப்படியான பின்பு, நான் செய்யும் வகை ஒன்றும் அறியவில்லை.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இதனுள், அடிகள் தம் தாழ்நிலையையே தம் நெஞ்சின் மேலும், தம்மேலும் வைத்துக் கூறியருளும் முகத்தால், அந்நிலையை நீக்கிக்கொள்ள முயலுதல்பற்றி, `ஆத்தும சுத்தி` என இதற்குக் குறிப்புரைத்தனர் போலும் முன்னோர். `பிண நெஞ்சே, உடையான் கழற்கு அன்பிலை` என் றெடுத்துக்கொண்டு, `அதனால் துணையிலி ஆகின்றாய்` `செய்வது ஒன்று அறியேன்` என முடிக்க. உடையான் - நம்மை ஆளாக உடையவன்; `அந்தணனாய் வந்து அறைகூவி ஆட்கொண்டருளியவன்` என்றபடி. இவ்வாறன்றி, `கூத்து உடையான்` என்றியைத் துரைத்தல் ஈண்டுச் சிறவாமை அறிக. ``கூத்து`` என்ற விதப்பு, `அஃது அன்பராயினார்க்கன்றிச் செய்யவாராது` என அதனது பெருமை யுணர்த்தியவாறு. பதைத்தல், செய்வதறியாமையான் வருவது. ``பாதமலர்` என்றது, முன்னும் சென்று இயையும். `அவனது பாதமலர்` எனவும், `அவனைத் தேடுகின்றிலை` எனவும் உரைக்க. ``மலர் சூடுகின்றிலை`` என்றதனால், `சென்னிமேற் கொள்கின்றிலை`` என்பது பொருளாயிற்று. சூட்டுதலுக்கு, `மலர்` என்னும் செயப்படு பொருள் வருவித்து, `அவற்றின்கண் சூட்டுகின்றதும் இலை` என்க. உம்மை, எச்சம். ``பிண நெஞ்சு``, உவமத்தொகை. உவமை, அறிவின்மை பற்றிக் கூறப்பட்டது. அவன் வந்து ஆட்கொள்வதற்கு முன்னர், அறியாமையால் அவனை நினையாதிருந்த குற்றம் பொறுக்கப்பட்டது; ஆட்கொண்ட பின்னரும் அவ்வாறிருப்பின் பொறுக்கப்படுமாறில்லை என்பார், ``செய்வதொன்றறியேன்`` என்று அருளினார்.
``தன்னை அறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழை`` (சிவஞானபோதம். சூ. 12. அதிகரணம்.4)
என்றது காண்க,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
(குறள்-110.) என்றது பற்றி எழுந்தவாறுமாம். ``இலை`` நின்ற ஐகாரம், முன்னிலை ஒருமை விகுதி; சாரியையன்று.

பண் :

பாடல் எண் : 32

அறிவி லாதஎ னைப்புகுந் தாண்டுகொண்
டறிவதை யருளிமேல்
நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப்
பந்தனை யறுப்பானைப்
பிறிவி லாதஇன் னருள்கள்பெற் றிருந்துமா
றாடுதி பிணநெஞ்சே
கிறியெ லாம்மிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத்
தாய்என்னைக் கெடுமாறே. 

பொழிப்புரை :

நெஞ்சமே! அறிவு இல்லாத என்னைத்தானே வலிய வந்து ஆண்டருளி மேலாகிய நெறிகளை எல்லாம் எனக்குப் புலப்படுத்தினவனும்; என் பிறவித்தளையை அறுப்பவனுமாகிய இறைவனை நினையாமல் மாறுபடுகின்றனை; ஆதலால் என்னைக் கெடுத்து விட்டாய்.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறிவு - மெய்யறிவு; என்றது, உள்ளவாறு உணரும் தன்மையை. ``அறிவதை`` என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. மேல் - பின். நெறி - அறியும் முறைமை. புலமாக்குதல் - அறிவித்தல். பந்தனை அறுத்தல் - பாசத்தைப் பற்றறத் துடைத்தல். இது, பின்னர் நிகழ்தற்பாலதாதலின், எதிர்காலத்தாற் கூறினார். `அறுப்பானைப் பிறி விலாத` என இயையும். பிறிவிலாத அருள் - பிரிவில்லாமைக்கு ஏது வாய அருள். தன்னை வேண்டாது, உலகின்பத்தை வேண்டுவார்க்கு அப்பயனையும் இறைவன் அருளுதலின், அது, பிரிவுடைய அருளாம். அவ்வாறன்றித் தன்னையே தருவது, பிரிவிலாத அருள் என்க. இதனை, ``இன்னருள்`` என்றார், ஏனையது இன்னாமையையும் விளைத்தல் பற்றி. இவ்வருள்தான், அருளும் முறைமையாற் பலவாதல் பற்றி, ``அருள்கள்`` எனப் பன்மையாற் கூறினார். அவற்றையே, ``பலவிதம் ஆசான் பாச மோசனந்தான் பண்ணும் படி`` (சிவஞானசித்தி - சூ. 8.3.) என ஓராற்றான் உணரக் கூறுப.
``உரையாடுதல், சொல்லாடுதல்` என்பனபோல, `மாறாடுதல்` என்பது ஒரு சொல்; `பிணங்குதல்` என்பது பொருள். அஃதாவது, `பிரிவிலாது நிற்க விரும்புகின்ற என்னோடு ஒருப்பட்டு நில்லாது, மாறு கொண்டு நிற்கின்றாய்` என்றபடி. இந்நிலை, மலவாதனையால் வருவது. இதனானே, இறைவனை அடைந்து இன்பத்துள் நீங்காது நிற்க விரும்புதலே உயிர்க்கு இயல்பென்பதும், அவ்விருப்பத்திற்கு மாறாய் அவனை அடையவொட்டாது தடுத்து அதனைத் துன்பத்துள் வீழ்த்துவது மலம் என்பதும் பெறப்படுமாறறிக.
கிறி - பொய்; என்றது, திரிபுணர்வை. அதுதான், உணரப் படும் பொருளாற் பலவாமாகலின், ``எல்லாம்`` என்றார். மிக - மேம்பட்டுத் தோன்ற. கீழ்ப்படுத்தாய் - அவற்றின்கீழ்க் கிடக்கச் செய்தாய். `கெடுமாற்றானே கெடுத்தாய்` என்க. கெடுமாற்றானே கெடுத்தலாவது, கெடும் வழி அறிந்து அவ்வழியிலே செலுத்திக் கெடுத்தல்; நெஞ்சினை அறிவுடையதுபோலக் கூறிய பான்மைக் கூற்று. `உனது மாறாட்டத்தால், என்னைக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய்` என்க. `அருளீமேல்` என மூவசைச் சீராதலே பாடம் போலும்.

பண் :

பாடல் எண் : 33

மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையைஎம்
மதியிலி மடநெஞ்சே
தேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச்
சிவனவன் திரள்தோள்மேல்
நீறு நின்றது கண்டனை யாயினும்
நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது
கேட்கவுங் கில்லேனே. 

பொழிப்புரை :

நெஞ்சே! நீ என்னோடு மாறுபட்டு இவ்வாறு கெடுத்த உன்னை உறுதியாகத் தெளிந்திலேன். சிவபெருமானது திரண்ட தோளின் மீதுள்ள திருவெண்ணீற்றின் அழகைக் கண்டு மகிழ்ந்தும் இனியும் உருகினாயல்லை; இந்தப் பாழுடம்பைக் கிழித் திலை; உன் தன்மையைக் கேட்கவும் சகிக்க மாட்டேன்.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`கெடுப்ப` என்பது, `கெட` எனத் தொகுத்தலாயிற்று. `கிடந்த` என்பதன் ஈற்று அகரமும் அன்னது. அனையை - அத்தன்மையை உடையை. `அனையையாகிய நெஞ்சே` என்க. `மடநெஞ்சு` என்பது, வாளா பெயராய் நின்றது. ``எம்`` என்ற பன்மை, `எனக்கேயன்றி என் குடியிலுள்ளார்க்கும் நலஞ்செய்ய அமைந்த நெஞ்சே` எனப் புகழ்தல் வாய்பாட்டால் இகழ்ந்தவாறு. `தேறுகின்றிலம்` என்றதும், தம் தமரையும் உளப்படுத்து. தேறுதல் - தெளிதல். சிக்கென - உறுதியாக. `சிக்கெனத் தேறுகின்றிலம்` என இயையும். `இனித் தேறுகின்றிலம்` என்றது முன்னர்ப் பலகாலும் தேறிக் கெட்டமை பற்றி. `கண்டனை; ஆயினும் நெக்கிலை` என இரு தொடராக்கியுரைக்க. சிவபிரான் திருமேனியில் உள்ள திருநீறு, தேவர் முதல் யாவரும், எப்பொருளும் நிலையாது ஒழிதலையும், அனைவரையும், அனைத்தையும் அவனே தாங்குபவனாதலையும் விளக்கி நிற்கும். `ஆதலின் அதனை உணர்ந்தும் அவனிடத்து அன்பு செய்கின்றாயில்லை` என்றவாறு. தாங்குதலை இனிது விளக்குதல் தோன்றத் தோள்மேல் உள்ளதை அருளினார். காயம் - உடம்பு. அதனைச் சிதைத்தல் பிரிவாற்றாமையாலாம். கெடுதற்கு ஏதுவாவதனை, ``கெடுவது`` என்றார். இது - இத்தன்மையை. கேட்கவும் கில்லேன் - ஏற்றுக்கொள்ளாமையேயன்றி, இவ்வாறானது என்று சொல்லுதலைச் செவியால் கேட்டுணரவும் பொறேன்.

பண் :

பாடல் எண் : 34

கிற்ற வாமன மேகெடு வாய்உடை
யான்அடி நாயேனை
விற்றெ லாம்மிக ஆள்வதற் குரியவன்
விரைமலர்த் திருப்பாதம்
முற்றி லாஇளந் தளிர்பிரிந் திருந்துநீ
உண்டன எல்லாம்முன்
அற்ற வாறும்நின் னறிவும்நின் பெருமையும்
அளவறுக் கில்லேனே. 

பொழிப்புரை :

மனமே! நீ கெடுவாய். இறைவனது திருவடியைப் பிரிந்து நீ அனுபவித்த விடய இன்பங்களையும், அவை அழிந்த விதத்தையும், உன் அறிவையும், உன் பெருமையையும் அளவு செய்ய வல்லேன் அல்லேன்.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`உடையானும், உரியவனும் ஆகியவனது திருப்பாதத் தளிர்` என்க. எல்லாம் - எல்லாவற்றானும். ``பிரிந்திருந்தும் நீ உண்டன`` என்றதனால், பிரிவுபற்றி வருந்தாதிருத்தலும், ``அற்றன`` என்றதனால், அவை அறாது நிற்கும் எனக் கருதி அவற்றை அவாவின மையும் குறிக்கப்பட்டன. நிலையாதவற்றை நிலையுடையன எனக் கருதிய அறியாமையை, ``அறிவு`` என்றும் அவற்றைப் பெற்ற அளவானே மகிழ்ந்து செருக்கும் சிறுமையை, ``பெருமை`` என்றும் அருளினார், இகழ்ச்சி தோன்றுதற் பொருட்டு. அறியாமை, சிறுமை என்பவற்றை உண்டவற்றோடு ஒருங்கெண்ணி, `அளவுபடா` என்றார், இவை அவ்வுண்டவைபற்றியே அறியப்படுதலின். கிற்றவா - நீ வல்ல வாறு; `இது` எனச் சொல்லெச்சம் வருவிக்க. கெடுவாய் - இச்செய்கையால் நீ கெட்டொழிதல் திண்ணம். ``கிற்றவா, கெடுவாய்`` என்றவற்றை இறுதியில் வைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 35

அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க்
கடியவர்க் கெளியான்நம்
களவ றுத்துநின் றாண்டமை கருத்தினுட்
கசிந்துணர்ந் திருந்தேயும்
உளக றுத்துனை நினைந்துளம் பெருங்களன்
செய்தது மிலைநெஞ்சே
பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை
பரகதி புகுவானே. 

பொழிப்புரை :

நெஞ்சே! தேவர்களும் அளவு செய்தற்கு அரியவன்; அடியார்க்கு எளியவன்; அத்தன்மையனாகிய இறைவன், நம்மையோர் பொருளாக்கி நமது குற்றம் களைந்து ஆண்டருளி னமையை அறிந்திருந்தும் பரகதியடைதற் பொருட்டு அவனது திருவடியை வணங்கினாயல்லை. உன் தன்மை இருந்தவாறு என்னை?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`இமையவர்க்கு அளவறுப்பதற்கு அரியவன்` என்க. இமையவர்க்கு அருமைகூறவே, ஏனையோர்க்கு அருமைகூற வேண்டாவாயிற்று. களவு - யான் எனது என்பன. இறைவன் செய்ததை, `யான் செய்தேன்` என்றும், இறைவனுடையதை `எனது` என்றும் கருதுதலின், களவாயிற்று. `கருத்தினுள் உணர்ந்து` என இயையும். `இருந்து ` என்பது துணைவினை. `உலகு` என்பது, எதுகை நோக்கி, `உளகு` எனத் திரிந்தது. பளகு - குற்றம். இறைவன் உன்னை ஆட்கொண்ட கருணையை நீ உணர்ந்திருந்தாயாயினும், உன்னை அவன் நினைந்து, இவ்வுலகத் தொடர்பை அறுத்து, உன் உள்ளத்தைத் தான் உறையும் பெரிய இடமாகச் செய்தமை காணப்படவில்லை, அஃது ஏன்? நீ அவ்வுணர்ச்சியளவில் நில்லாது, பரகதியிற் புக விரும்பி உன் குற்றங்களைக் களைந்து அவனது திருவடிகளை வணங்கும் செயலில் நின்றிலை` என்றவாறு. இதனால், மெய்யுணர்ந்து பின்னர், அதன்கண் உறைத்து நிற்க வேண்டுதல் பெறப்பட்டது. இறைவனால் மீள நினைக்கப்படுதல் முதலிய தம், செயல்களை நெஞ்சினுடையனபோல அருளிச்செய்தார். இதனுள், இறுதியிரண்டடிக்கும் பிறவாறு உரைப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 36

புகுவ தாவதும் போதர வில்லதும்
பொன்னகர் புகப்போதற்
குகுவ தாவதும் எந்தையெம் பிரான்என்னை
ஆண்டவன் கழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு
தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற்
கென்செய்கேன் வினையேனே. 

பொழிப்புரை :

சென்று அடைதற்கு உரியதும், சென்றால் மீளுத லில்லாததும் ஆகிய, சிவலோகம், புகுதற் பொருட்டுச் செல்லுவதற்குத் தடையான பற்றுக் கழல்வதும் எம் தந்தையும், எம் தலைவனும், என்னை ஆண்டருளினவனும் ஆகிய இறைவனது திருவடிக்கு அன்பினால் நெஞ்சம் உருகுதலும் நாள் தோறும், அமுதத்துடன் தேன் பால் கற்கண்டினும் மேற்பட்ட பேரின்பம் விளைவதும் இல்லை யாயின் இதற்குத் தீவினையுடையேன் யாது செய்ய வல்லேன்?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புகுவது முதலிய நான்கும் அவ்வத்தொழில்மேல் நின்றன. சிவலோகத்தைக் குறித்த. `பொன்னகர்` என்பதனை முதலிற் கூட்டுக. `ஆவது` என்பன பலவற்றிற்கும், `உண்டாதல்` எனப் பொருளுரைக்கப்படும். போதரவு - மீண்டு வருதல். `இல்லது, இன்று` என்பன அப்பண்பின்மேல் நின்றன. தாம் விரும்புவன பலவற்றையும் நினைந்து இரங்குகின்றாராகலின், புகுந்தபின் நிகழற்பாலதாகிய போதரவு இன்மையையும் அருளிச்செய்தார். உகுவது - நீங்குவது; இதற்கு, `உடம்பு` என்னும் வினைமுதல் வருவிக்க. நெகுவது - ஊறு வது. ஒடு. எண்ணிடைச்சொல். தேன் முதலிய மூன்றும் ஆகு பெய ராய், அவைபோலும் இன்பத்தைக் குறித்தன. மற்று, வினை மாற்று.

பண் :

பாடல் எண் : 37

வினைஎன் போல் உடை யார்பிறர் ஆர்உடை
யான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்
பன்றுமற் றதனாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான்
முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி
இன்னதென் றறியேனே.

பொழிப்புரை :

என்னைப் போலத் தீவினை உடையவர், பிறர் யாருளர்? என் முதல்வன் நாய் போன்ற அடியேனைத் தினையளவும், நீங்கியிருப்பது அவனது திருக்குறிப்பு அன்று; ஆதலால் இறைவனது திருவடியாகிய நல்ல மலரை, நானே நீங்கியிருந்தும் தலையைக் கல் முதலியவற்றில் முட்டிக் கொள்கிலேன்; பிளந்து கொள்ளேன்; இத் தன்மையேனாகிய என்னுடைய பாவனை இரும்பாகும்; மனமானது கல்லாகும்; காது இன்ன பொருள் என்று அறியேன்?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`உடையானுக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்த லாயிற்று. ``தினையின் பாகம்`` என்றது, `மிகச் சிறிது` என்னும் பொருட்டாய், அவ்வளவிற்றாகிய காலத்தை உணர்த்திற்று. மற்று அசைநிலை. `நான் பிரிந்து` என மாற்றி, `நானே` எனப் பிரிநிலை ஏகாரம் விரித்துரைக்க. ``அதனால்`` என்றது, இக்கூற்றிற்கே ஏது உணர்த்திநின்றது. `இருந்து` என்றே ஒழியாது, `இருந்தும்` என உம்மை விரித்து ஓதுதல் பாடமாகாமை அறிந்துகொள்க. ``தலை`` என்றது, முன்னரும் சென்று இயையும். முட்டுதல், கல் முதலியவற்றினும், கீறுதல், கருவியாலும் என்க. ``இருந்து முட்டிலேன் கீறேன்`` என்றாரா யினும், `முட்டாமலும், கீறாமலும் இருக்கின்றேன்` என்றலே கருத் தென்க. ``கீறிலேன்`` என்றதன்பின்னும் `ஆகலான்` என்னும் சொல் லெச்சம் வருவிக்க. இனையன் - இத்தன்மையுடையேனது. `வேடம்` எனப்பொருள் தரும் `பாவனை` என்பது, இங்கு, உடம்பைக் குறித்தது. ``இரும்பு, கல், இன்னது`` என்றன, `அவற்றான் இயன்றது` எனப் பொருள் தந்து நின்றன.

பண் :

பாடல் எண் : 38

ஏனை யாவரும் எய்திட லுற்றுமற்
றின்னதென் றறியாத
தேனை ஆன்நெயைக் கரும்பின்இன் தேறலைச்
சிவனைஎன் சிவலோகக்
கோனை மான்அன நோக்கிதன் கூறனைக்
குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யான்இருந் தோம்புகின் றேன்கெடு
வேன்உயிர் ஓயாதே.

பொழிப்புரை :

மற்றையோர் எல்லாரும் இன்னது என்று அறியப் படாத தேன் போல்வானும், பசுவின் நெய் போல்வானும், கரும்பின் இனிமையான சாறு போல்வானும், சிவனும் எனது சிவலோகத் தரசனும், பெண்மானின் நோக்கம் போன்ற திரு நோக்கத்தை யுடையவளாகிய உமாதேவியின் ஒரு பாகத்தை உடையவனும் ஆகிய இறைவனை அணுகிலேன். நீண்ட நாள்கள் இருந்து உடம்பை வளர்க்கின்றேன். கெடுவேனாகிய எனது உயிர் ஒழியவில்லையே!

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேன் முதலிய மூன்றும் ஆகுபெயராய், `அவை போல்பவன்` எனப் பொருள் தந்து, ``அறியாத`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயின. `சிவன்`` என்றது, இறைவனைச் சிறப்பு வகையாற் குறித்தவாறு. இதனை, ``கூறனை`` என்றதன் பின்னர் வைத்து, `சிவனை, ஏனை யாவரும் எய்திடலுற்றும், யான் நெடுங்காலம் குறுகிலேன், உயிர் ஓயாதே இருந்து ஊனை ஓம்புகின்றேன்; கெடு வேன்` எனக் கூட்டியுரைக்க. ஏனை யாவரும் - என்னை யொழித்து ஒழிந்த அடியவர் எல்லாரும். ``நெடுங்காலம்`` என்றதன்பின், செல்ல என்னும் பொருட்டாகிய, `ஆக` என்பதும், அதன்பின் உம்மையும் விரிக்க. கெடுவேன் என்றதன் பின்னும் இரக்கப் பொருட்டாகிய ஓகாரம் விரித்து, `இந்நிலையிற்றானே இருந்து, அழிந்தொழிவேன் போலும்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 39

ஓய்வி லாதன உவமனில் இறந்தன
ஒண்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும்
என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன்
தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்
செழுங்கடல் புகுவேனே. 

பொழிப்புரை :

அழியாததும் உவமை இல்லாததும் ஆகிய தன் திருவடியை அருள் செய்து, நாயினும் இழிந்தவனாகிய என்னை நல்வழி காட்டி ஆண்டருளி, தாயினும் சிறந்த அருள் செய்த இறை வனைக் காணாத நான், தீப்பாய்தல் முதலியவற்றைச் செய்திலேன். என்மன வலியிருந்தவாறு என்னை?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஓய்வு - மெலிதல்; `உயிர்களைத் தாங்குதலில் தளர்ச்சி யில்லாத` என்றபடி. `உவமம்` என்பது, ``உவமன்`` என ஈறு திரிந்தது. ``உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை`` (தொல், பொருள் - 274) என்றாங்கு, `எவ்விடத்தும், பொருளின் உவமம் சிறந்து காட்டுதல் மர பாய் இருக்க, இவை அவ்வாறன்றி, உவமம் யாதாயினும், அதனினும் சிறந்து நிற்பன` என வியந்தருளிச் செய்தவாறு. உவமம், தாமரைமலர், பொன், தளிர் முதலியன. `இலாதனவும், இறந்தனவும் ஆகிய தாள்` என்க.
`நாய்` என்பது, அதன் பண்பின்மேலும், `குலம்` என்றது, அதனிற் பிறந்த உயிரின்மேலும் நின்றன. `நாய் என்னும் அத்தன்மை யிற் பொருந்திய குலத்திற் பிறந்த அவ்வுயிரினும் கடைப்பட்ட` என்றபடி. ``என்னை`` என்றதை, `எனக்கு` எனத் திரிக்க. தாயில் ஆகிய இன்னருள் புரிந்த - தாயினது அன்பு போலச் சுரந்த இனிய திருவருளை விரும்பிச் செய்த. `நனி` என்னும் உரிச்சொல், `காணேன்` என்பதன் முதனிலையைச் சிறப்பித்தது; `இடையறாது கண்டிருக்கும் பேற்றைப் பெற்றிலேன்` என்றபடி. இதன்பின், `அதன்பொருட்டு` என்பது வருவிக்க. ``புகுவேனே`` என்றதில் உள்ள ஏகாரம் எதிர் மறையாகலின், `தீயில் விழமாட்டாதவனும், திண்வரையினின்றும் உருளமாட்டாதவனும் ஆகிய யான், செழுமையான கடலிலே புகுவேனோ; மாட்டேன்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 40

வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும்
அதுதனை நினையாதே
மான்நி லாவிய நோக்கியர் படிறிடை
மத்திடு தயிராகித்
தேன்நி லாவிய திருவருள் புரிந்தஎன்
சிவன்நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும்
உண்டுடுத் திருந்தேனே. 

பொழிப்புரை :

மாதர் மயக்கத்தில் சிக்கி, உழன்ற என்னை ஆட் கொண்டருளின இறைவனது சிவபுரத்தை அடையாமல், உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் பொருட்டு இன்னமும் உண்டும் உடுத்தும் இருந்தேன். என்னே என் நிலை?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேனில் வேள் - மன்மதன். மதி - சந்திரன். படிறு - வஞ்சனை, என்றது அன்னதாகிய பார்வையை என்பது, `நோக்கியர்` என்றதனால் பெறப்பட்டது. ``படிறிடை`` என்றதன்பின், `பட்டு` என ஒருசொல் வருவித்து, அதனையே ``நினையாது`` என்ற எச்சத்திற்கு முடிபாக்குக. `மகளிரது கடைக்கண் நோக்கில் அகப்படின், வேள் கணை கிழிக்கவும், மதிசுடவும் துயருறும் நிலை உண்டாம் என்பதனை நோக்காது அகப்பட்டேன்` என்றதாம். `மத்திடு தயிராகியதனால்` போகேனாய் இன்னும் இருந்தேன்` என்க.
மேல் ``உடையான் அடிநாயேனைத் தினையின் பாகமும் பிறிவது திருக் குறிப்பன்று`` (பாட்டு-41) என்றதனால், இறைவன் அடிகளை, ``கோலமார்தரு பொதுவினில் வருக`` என ஈங்கே நிறுத்தி, ஏனையடியார்களை மட்டில் அழைத்துச் சென்றதற்குக் காரணம், தமது கருத்து வகையேயன்றி, இறைவனது திருவுளப்பாங்கு அன்று என்பதை அருளிச்செய்தார். இதனுள் அக்கருத்து இன்னதென்பதை எடுத்தோதியருளினார். ``மான் நிலாவிய நோக்கியர்`` எனப் பொதுமையிற் கூறினாரேனும், அஃது அடிகள்மாட்டுப் பேரன்புடையராய் அவரையின்றியமையாராகிய ஒருவரையே குறிக்கும். அவரை அடிகள் தம் மனைவியார் என்றலே பொருந்துவதன்றிப் பிறவாறு கோடல் பொருந்தாது. அவரும் இறைவன் அடிகளை ஆட்கொள்வதற்கு அண்மைக் காலத்தே மணந்தவராதல் வேண்டும். அடிகளை அவர் இன்றியமையாதிருந் தமையையும், அந்நிலையை அடிகள் நினைந்து அவர் அறியாதே இறைவனோடு செல்லமாட்டாராயினமையையும் வருத்த மிகுதியால் காமம் காரணமாக அமைந்தனபோலத் தாம் அருளிச்செய்தாராயினும், அன்பினால் அமைந்தன என்றே கொள்ளப்படும். படவே, அடிகள் பாண்டியனை விட்டு நீங்கியபின்னும் இறைவன் `தில்லையில் வருக` என்று பணித்த பின்னும் சிறிது காலம் அவ்வம்மையாரோடு திருவாத வூரில் இருந்து, பின்னர் இறைவன் திருவருட்பேற்றின் பெருமையை அவர்க்கும் அறிவுறுத்தித் தில்லைக்குப் புறப்பட்டார் என்பதும் அவ் வம்மையாரும் வருத்தமின்றி, அடிகளையும் இறைவனையும் வழி பட்டிருந்து இறைவன் திருவடியை அடைந்தார் என்பதும் உய்த் துணர்ந்து கொள்ளற்பாலன.
அடிகள் தாம் இறைவனோடு செல்லாது நின்ற காரணத்தை, இனிவரும், ``முடித்தவாறும்`` என்ற திருப் பாடலிலும் அருளுவர், சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னரும் மனைவியார் இருவருடன் வாழ்ந்திருந்தமை நன்கறியப்பட்டதாகலின், அன்னதொரு நிலை அடிகட்கும் இருந்ததெனக் கொள்ளுதல் எவ்வாற்றானும் தவறுடைத்தாகாமையே யன்றி, இன்னோரன்ன அருட்டிரு மொழிகளை, மனம் உலகப் பற்றினாலும், பிறவாற்றாலும் சிறிதும் துயருறாதிருக்கவும், உற்றது போல, `மாதர் வலையில் அகப்பட்டு வருந்துகின்றேன்; ஆக்கைக்கு இரைதேடி அலைவதிலே காலம் கழிக்கின்றேன்` என்றெல்லாம் பாடுவார் சிலரது பாடல்களோடு ஒப்பவைத்துப் பொருள் செய்தல் குற்றமாதலும் அறிந்துகொள்க.
இங்ஙனம், சிறுபற்றுக் காரணமாக அடிகள் உலகில் நின்றபின், மீள இறைவன் திருவடி கூடுங்காலம் சிறிது நீட்டித்தமையின், அந் நீட்டிப்பைப்பொறாமையால், அடிகள், தம்மைத் தாமே பலகாலும் நொந்து பல பாடல்களை அருளிச்செய்தார்; அவ்வருளிச்செயல் உல கிற்குப் பேருபகாரமாய் முடிந்தது எனக் கொள்க.

பண் :

பாடல் எண் : 41

இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்
கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே
வருக வென்றுப ணித்தனை வானுளோர்க்கு
ஒருவ னேகிற்றி லேன் கிற்பன் உண்ணவே. 

பொழிப்புரை :

நீ என் மனத்தில் எழுந்தருளியிருந்து நான் துன்பம் நுகர்தற்கு இரங்கி, வருக என்று கட்டளை இட்டு அருளினை; அந்தச் சுகத்தை நான் அநுபவிக்கப் பெற்றிலேன்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

இப்பகுதிக்கு, `கைம்மாறு கொடுத்தல்` எனக் குறிப் புரைத்தனர் முன்னோர். `கொடுத்தல்` என்பது `கொடுத்தல் பற்றியது` என்னும் பொருட்டாய், கொடுத்தல் இயலாமையையே குறிக்கும். இஃது இப்பகுதியில் ஒன்பதாந் திருப்பாட்டின் பொருள் பற்றி உரைக்கப்பட்டது.
பொருள்கோள்: `வானுளோர்க்கு ஒருவனே, (நீ என்னை) வருக என்று பணித்தனை; (ஆயினும் யான்) அது செய்கின்றிலேன்; (மற்று) உண்ணவே கிற்பன்; (அதனால்,) யான் இருகை யானையை ஒத்திருந்து, என் உள்ளக் கருவைக் கண்டிலேன்; கண்டது எவ்வமே`.
இருகை யானை, இல்பொருள் உவமை. விலங்கொடு தமக்கு வேற்றுமை கையுடைமை என்பது கூறுவார், யானையாகிய விலங் கிற்கு கையுண்மை கருதி, அதனின் வேறு படுத்து, ``இருகை யானை யை ஒத்து`` என்றார். கரு - உட்பொருள். உள்ளத்தின்கண் உள்ள உட் பொருளாவது, முதற் பொருள்; சிவம். `கருவை`` என்றது, `கருவாகிய நின்னை` என்னும் பொருட்டாகலின், முன்னிலைக்கண் படர்க்கை வந்த மயக்கமாம். கிற்றிலேன் - வல்லேனல்லேன். கிற்பன்- வல்லேன்.

பண் :

பாடல் எண் : 42

உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. 

பொழிப்புரை :

மேலான பொருள் ஒன்று உண்டு என்று அறிந்தார்க்கும் அறிதற்கரிய நீ, எனக்கு உள்ளபடி எழுந்தருளிக் காட்சி தந்தருளினை. அப்படி காட்சி கொடுத்த உன்னைக் கண்டும் காணாத வன் போல மயங்குகின்றேன். இது என்ன கண்மாயம்?

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

ஒண்பொருள் - சிறந்த பொருள்; பரம்பொருள். உண்டு என்று உணர்வார் - உண்மை மாத்திரையின் உணர்வார். அவர், சிந்தனையறிவின்றிக் கேட்டலறிவு ஒன்றேயுடையார் என்க. அவர்க்கு அப்பொருளின் இயல்பு அறியவாராமையை, பெண்டிர் ஆண் அலியென்று அறிய ஒண்கிலை என்றார். எனவே ``பெண்டிர் ஆண் அலி`` என்றது, `இன்னது` என்னும் அளவாய் நின்றது. ``உள்ளவா`` என்றது, `நின் இயல்பு முழுதும் இனிது விளங்கும் வகையில்` என்றபடி. கண்டும் தோன்றியபொழுது அநுபவமாகக் கண்டும். கண்டிலேன் - பின்னர்க் காணவில்லை. `அவ்வநுபவம் நீங் காது நிற்கப் பெறுகிலேன்` என்றபடி. கண்மாயம் - கட்பொறி பற்றிய மாயம். அது நன்கு காணப்பட்ட பொருள் ஓர் இமைப் பொழுதில் விரைய மறைதல். கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரி தாதல் போல, (குறள். 377) அநுபவத்தைத் தலைப்பட்டும், நிலைக்கப் பெற்றிலேன்; இஃது ஓர் வினைப்பயன் இருந்தவாறு என்பதாம்.

பண் :

பாடல் எண் : 43

மேலை வானவ ரும்மறி யாததோர்
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேஇவை வந்துபோம்
கால மேஉனை யென்றுகொல் காண்பதே. 

பொழிப்புரை :

மேன்மையுடைய தேவர்களும் அறிய காட்சிக்கு எட்டாத திருவுருவத்தை உடைய நடராஜப் பெருமானே! நீ என்னை ஆட்கொண்டு உள்ளாய். பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக் கும் சாட்சியாய் இருக்கும் கால சொரூபம் நீ. உன்னை நான் எப்போது காண்பேன்?

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

``மேலை`` என்றதில் ஐ சாரியை. மேலை வானவர் - மேலிடத்துள்ள தேவர். எனவே. ``வானவர்`` என்றது, வாளா பெய ராய் நின்றதாம். கோலம் - வடிவம். அஃது ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது. வானவராலும் அறியப்படாமை கோலத் திற்கு அடையாதல் அறிக. ``கூத்தன்`` என்றது தான்செய்யும் செயலால் தொடக்குண்ணாதவன் என்பது குறித்து நின்றது. மண், விண் முதலிய எல்லாவற்றிலும் அவையேயாய்க் கலந்து நிற்றல்பற்றி இறைவனை அவையாகவே ஓதினார். அதனானே, பின்னர் அவைகளை `இவை` எனச் சுட்டினார். பின்னர், `காலமே` என்றதும் அது. ஏகாரத்தை எண்ணுப்பொருள தாக்குவாரும் உளர்; அவர், பின்னர், `காலமே` என்றதற்கு வேறு கூற மாட்டாதவராவர். போம் என்ற பெயரெச்சம் காலம் என்ற ஏதுப்பெயர் கொண்டது. `காலம்` என்பது காலப் பெயரன்றோவெனின், அன்று; என்னையெனின், ``நிலனே காலம் கருவி`` (தொல். சொல் - 113.) என்றவிடத்து, `காலம்` என்றது, அவ்வவ் வினைநிகழ்ச்சிக்குரிய சிறப்புக் காலத்தையன்றி, எல்லா வற்றிற்கும் ஏதுவெனப்படும் பொதுக்காலத்தை அன்றாகலானும், ஈண்டுக் கருதியது பொதுக் காலத்தையன்றிச் சிறப்புக் காலத்தை அன்றாகலானும், இப்பொதுக்காலம், பிறபொருள்களோடு ஒப்பப் பொருள் எனப்படுமாகலானும் என்க.

பண் :

பாடல் எண் : 44

காண லாம்பர மேகட்கி றந்ததோர்
வாணி லாம்பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறறி யேன்புலன் போற்றியே. 

பொழிப்புரை :

இறைவா! ஊனக் கண்ணால் அன்றி, ஞானக் கண்ணாலேயே காண்பதற்குரிய பரஞ்சோதி நீ! பறவைக் குஞ்சு கூட்டை விட்டுப் பறக்க முடியாது இருப்பது போன்று பாழாய்ப் போன நான் பொய்யுடலை விட்டுப் பிரிந்து உன்னோடு பொருந்தி இருக்கும் நெறியை அறியாது இருக்கிறேன். ஐம்புலன்களில் வைத்துள்ள பற்றுதலே அதற்குக் காரணம். பொறிவாயில் ஐந்தையும் எரிந்து போனவைகளாக ஒதுக்கி வைத்துப் பழகுவேனாக!

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

காணலாம் பரமே - ஞானக்கண்ணாலன்றி ஊனக் கண்ணாலும் காணத்தக்க பரம்பொருளே; இஃது அடியவர்க்கு அநுபவமாதல் குறித்தபடி. கட்கு இறந்தது ஓர் வாள் நிலாம் பொருளே-கண்ணொளியைக் கடந்ததாகிய ஒரு பேரொளி நிலை பெற்றுள்ள பொருளே; இஃது இறைவனது திருமேனியின் சிறப்புக் கூறியவாறு. `நிலாப் பொருள்` என்பது, பாடம் ஆகாமையறிக. பார்ப்பு - பறவைக்குஞ்சு. `பாழ்நனேன்` என்பது, எதுகை நோக்கி, `பாணனேன்` எனத் திரிந்துநின்றது. `பாழ்த்த பிறப்பு`` (தி.8 திருவாசகம் - 20) என்றாற்போல, `பாழ்` என்பது வினைப் பகுதியாயும் நிற்றலின், நகர இடைநிலை பெற்றது. `பாழாகின்ற யான்` என்பது பொருள். ``புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய`` (தி.8 சிவபுராணம் அடி 55) என்றாராகலின் அவ்வஞ்சனைக்கு இடமாகிய உடம்பை, ``படிற்று ஆக்கை`` என்று அருளினார். பூணுதல் - பொருந்தக் கொள்ளுதல். போற்றி - பாதுகாத்து; என்றது, `அவற்றை விடுக்குதலின்றி நின்று` என்றபடி. `பார்ப்பெனப் படிற்றாக் கையைவிட்டு உனைப் பூணுமாறு அறிகின்றிலேன்` என்க. `குடம்பை தனித்தொழியப் புள் பறத்தல் போல், (குறள் - 338) உடம்பு தனித்துக்கிடப்ப யான் அதனினின்றும் புறப்பட்டு` என்பார், ``பார்ப்பென ஆக்கையை விட்டு`` என்றார்.

பண் :

பாடல் எண் : 45

போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்
றாற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங்
கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே. 

பொழிப்புரை :

இறைவா! உன்னை வாயால் துதித்தும் உடம்பால் அங்கப் பிரதட்சணம் செய்தும் பல விதங்களில் புகழ்ந்துரைத்தும் பத்தியில் நிலை நின்று அந்த உறுதியான பக்தியின் வலிமையைக் கொண்டு உன்னை அழைக்கின்றேன் இல்லை. மார்க்கண்டேயனைப் பிடித்தல் பொருட்டு உன்னை எதிர்த்து வந்த கூற்றுவன் உன் திருவடியை அடைந்தான். என்னுடைய போக்கும் அத்தகையதாய் இருக்கிறது.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

போற்றி என்றல் - வணக்கங் கூறுதல். புரளுதல், ஆற்றாமைபற்றி. நின்று - அன்பு நெறியிலே நின்று. ``ஆற்றமிக்க``, ஒருபொருட் பன்மொழி. `ஆற்றல் மிக்க``, என்பது பாடமாயின், உன்னை யடைவிக்கும் `ஆற்றல் மிகுந்த` என உரைக்க. ``அழைக் கின்றிலேன்`` என்றதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. ``ஏற்று வந்து எதிர்`` என்றதை, `எதிரேற்று வந்து` என மாற்றிக்கொள்க. எதி ரேற்றல் - பகையாய் ஏற்றுக்கொள்ளுதல். கூற்றம் - இயமன்; என்றது அவனது செயலை. ``கொள்கை`` என்றதும், செயலையே. `உன்னை அன்பால் அழைத்து அடையப் பெறாது ஐம்புல இன்பங்களில் திளைத்திருக்கின்ற என்னை, நீ ஒறுத்துஉன்பால் அழைக்கவே உன்னை யான் பெறுவேன்போலும்` என்பார், இறைவனை அன்பால் வழிபட்டு அவன் திருவடியைப் பெறாது, பகையாய் வந்து அதனைப்பெற்ற கூற்றுவனது செயலை உவமை கூறினார். ``காலன் அறிந்தான் அறிதற் கரியான் கழலடியே`` (தி.4.ப.113.பா.11) என்றார், ஆளுடைய அரசுகளும்.

பண் :

பாடல் எண் : 46

கொள்ளுங் கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 

பொழிப்புரை :

கொன்றை மாலையை அணிந்த இறைவனே! எள்ளும் எண்ணெயும் போல எல்லாப் பொருள்களிலும் நீக்கமின்றி நிறைந்து இருப்பவனே! உன்னை அடையும் வழியை அறியாத என்னையும் உன் அன்பரைப் போலக் கூவி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

`கொள்ளுங்கில்` என்பது பிழைப்பட்ட பாடம். `எனையும்` என்ற உம்மை தொகுத்தலாயிற்று. அன்பரின் - ஏனைய அடியார்களைப்போல. கூய் - அழைத்து; `பணி கொள்ளுங் கொல்` என இயைக்க. நள் - நடு. `நடு, கீழ், மேல்` என்பன, அவ்வவ்விடத்தை யுணர்த்தி நின்றன.

பண் :

பாடல் எண் : 47

எந்தை யாய்எம்பி ரான்மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய்தம்பி ரான்தனக் கஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவருஞ்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.

பொழிப்புரை :

சிவன், எனக்குத் தந்தையும் தாயும் தலைவனும் ஆனவன். அவன் உயிர்கள் அனைத்துக்கும் தந்தையும் தாயும் தலைவனும் ஆகின்றான். மற்றுத் தனக்கு அம்முறை உரிமை ஒன்றும் இல்லாதவன். சொல்லால் மட்டும் அன்றி மனத்தாலும் யாராலும் அறிய முடியாத ஞானநற்செல்வத்தை உடையவன். அவனை நான் அறிதற்கு முன்பே அவன் என் உள்ளத்தில் குடிகொண்டு உள்ளான்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

``எந்தை, யாய், எம்பிரான்`` என்றது தமக்கும், ``தந்தை, தாய், தம்பிரான்`` என்றது பிறர்க்குமாம். `யாய்` என்றது, எனக்குத்தாய் என்னும் பொருளாதலை ``யாயும் ஞாயும் யாரா கியரோ`` (குறுந்தொகை-40) என்றதனானும் அறிக, அஃது - அம் முறைமை. முந்தி - தானே முற்பட்டு. ``முந்தி என்னுள் புகுந்தனன்`` என்றதை இறுதிக்கண் வைத்துரைக்க. `பிறர் முயன்றும் அடைதற் கரியவன், தானே வந்து என்னுள் புகுந்தனன்` என்றபடி. செல்வன் - எல்லாம் உடையவன்.

பண் :

பாடல் எண் : 48

செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 

பொழிப்புரை :

செல்வர்களுக்கு இடையிலும் வறியோர்களுக்கு இடையிலும் தேவர்களுக்கு இடையிலும் புழுப்போன்ற அற்ப உயிர்களுக்கு இடையிலும் புல் போன்ற தாவரங்களுக்கு இடையிலும் சிவனருள் பாகுபாடு இன்றி நிறைந்து இருக்கிறது. அந்த அகண்ட சொரூபத்தைக் காணப்பெற்ற பின்பும் அப்பெரு நிலையினின்றும் வழுவியவன் ஆனேன். முற்றிலும் மலபரிபாகம் அடையாததே இந்தக் துன்பநிலைக்குக் காரணம் ஆகும்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

``செல்வம், நல்குரவு`` என்றவை அவற்றை யுடைவரைக் குறித்தன. ``புழு, புல்`` என்றவற்றை, `தாழ்ந்த பிறவி` என ஒருபகுதியாகக் கொள்க. ``வரம்பு`` என்றது, `பாகுபாடு` என்னும் பொருட்டாய் நின்றது. `இறைவனை அறிதல் அறியாமைகட்கு, உலக முறை பற்றிக் காணப்படும் இப்பாகுபாடுகள் காரணமல்ல; அருள்வழி நிற்றலும், நில்லாமைகளுமே காரணம்` என்பார். உலகியலை எடுத் தோதி, ``யார்க்கும் அரும்பொருள்`` என்று அருளினார். விண்ணோரது உயர்வைக் குறித்தற்குப் புழுப் புற்களை எடுத்தோதி யதன்றிப் பிறிதின்மையின், `யாவர்க்கும்` என்பது கூறாராயினார். அரும்பொருளாகிய இறைவனை, ``அரும்பொருள்`` என்றது பான்மை வழக்கு. கல் வகை மனம் - கல்லென்னும் வகை போலும் மனம். ``வகை`` என்றது, அதனையுடைய பொருள் மேல் நின்றது. ``பட்ட கட்டம்`` என்னும் எழுவாய்க்குரிய `இது` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. `இது` என்பது, `இழிக்கத் தக்கது` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 49

கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீறு
இட்ட அன்பரொ டியாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண் டும்அறி யேனையே. 

பொழிப்புரை :

எண் மூர்த்திகளின் தத்துவத்தையும் அர்த்த நாரீசுவர தத்துவத்தையும் அறிந்து கொள்ளாத எனது பாசத் தளையைக் களைந்து, என்னை ஆட்கொண்டாய். அது மட்டுமன்று. திருநீறு பூசிய உன் மெய்யன்பர்கள் கூட்டத்தில் இருக்க நான் தகுதி வாய்ந்தவன் என்று உலகம் அறியும்படி என்னை அவர்களது சபையில் சேர்த்து வைத்தாய்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

கட்டு - பாசம். கண் ஆர நீறிடுதல் - காண்கின்ற கண்கள் மகிழ்வுறும்படி திருநீற்றை அணிதல். பட்டி மண்டபம் - கூட்ட மண்டபம்; என்றது, கேள்வி மண்டபத்தை. அஃதாவது, அறிவார் ஒருவர் உரைக்கும் அரும் பொருள்களைப் பலர் இருந்து கேட்கும் மண்டபம். இறைவன் திருப்பெருந்துறையில் ஆசிரியக் கோலத்துடன் குருந்த மரத்தடியில் அடியவர் பலருடன் வீற்றிருந்த நிலையையே அடிகள் இங்கு, ``பட்டி மண்டபம்`` என்றார் என்க. ``எட்டினோடு`` என்பதில் ஓடு, எண்ணிடைச்சொல். எனவே, ``எட்டினோடு இரண்டும்`` என்றது, `எட்டும் இரண்டும் கூட்டியுணரத் தெரியாதவன்` என்னும் பொருட்டாய், `கல்லாதவன்` என்பதைக் குறிக்கும். யோக நெறியில், அகார உகரங்களாகிய பிரணவத்தை உணராதவன் என்பதைக் குறிக்கும். உபதேச முறையில் எட்டும் இரண்டும் கூடிய பத்தென்னும் எண்ணினைக் குறிக்கும் யகரமாகிய எழுத்தின் பொருளை - ஆன்மா இயல்பை அறியாதவன் என்பதைக் குறிக்கும். இவற்றுள் அடிகள் அருளியது யோகநெறிப் பொருள் பற்றியேயாம், ஞானோபதேசத்திற்கு முற்பட்ட நிலை அதுவே யாகலின். `தவமே புரிந்திலன்`` என மேலும் ( பா. 9) அருளிச்செய்தமை யறிக. ``ஏற்றினை`` என வந்த இரண்டனுள், பின்னையதன்பொருள், `இடபவாகனத்தையுடைய நீ` என்பது. `அறியேனைப் பட்டி மண்டபம் ஏற்றினை; இது நின் கருணை இருந்தவாறு` என்க.

பண் :

பாடல் எண் : 50

அறிவ னேஅமு தேஅடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅரு ளீசனே.

பொழிப்புரை :

பேரறிவு சொரூபியே! அமிர்த சொரூபியே! அற்ப னாகிய என்னை ஒரு ஞானியாக்குதற் பொருட்டு அன்றோ, நீ, என்னை ஆட்கொண்டது. நீ ஆட்கொண்டதற்கு முன்பு நான் அறிவிலி யாய் இருந்தது வெளிப்படை. இன்று நான் ஞானியோ அல்லனோ. எனக்கு விளங்கவில்லை. என் நிலைமையைச் சற்றே கூர்ந்து தெளிவு செய்வாயாக!

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

பொருள்கோள்; `அறிவனே, அமுதே. ஈசனே, நீ என்னை ஆண்ட நாளில், அடிநாயினேன் அறிவனாகக் கொண்டோ ஆண்டது! (என்பால் நீ) கண்டது அறிவிலாமையன்றே! (அங்ஙனமாக, யான் என்றும்) அறிவனோ? அல்லனோ? அருள்`. இதனுள், ``அறிவு`` என வந்தன பலவற்றிற்கும், `பேரறிவு` என உரைக்க. இது, சொற்பொருட்பின் வருநிலையணி. `சிற்றறி வுடைமையே என் இயல்பாதல் அறிந்த நீ, என் பிழை கருதி என்னை விலக்கியது பொருந்துமோ`, என முறையிட்டவாறு. அருள் - சொல்லு.

பண் :

பாடல் எண் : 51

ஈசனே என் எம்மானே
எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமொன்று
அல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு
நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே
செய்வ தொன்றும் அறியேனே. 

பொழிப்புரை :

இறைவா! பெருமை வாய்ந்த எம் தந்தையே! நீ பிறவி நோயைப் போக்கியுள்ளாய். சிற்றம்பலச் செழுஞ்சுடரே! உடல் உணர்ச்சியில் உழன்று கிடந்த என்னை நீ, உயர்ந்த பேறும் அடையப் பெற்றவன் ஆக்கினாய். உன்னை விட்டுப் பிழைபடுகிற மனத்தை உடைய எனக்கு, என்ன செய்வது என்று விளங்கவில்லை.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இப் பகுதிக்கு முன்னோர் கூறிய குறிப்பு, `அநுபோக சுத்தி` என்பது, `தடையில்லாச்சிவாநுபவம்` என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். அடிகள் இப் பகுதியில் அதனையே விரும்பிப் பாடுதல் காணலாம். ``ஈசனே`` என்றதன்பின் உள்ள, ``என்`` என்றதனை இறுதிக் கண் கூட்டி, வினாவாக்கி, `இதற்குக் காரணம் என்` என உரைத்து, `என்மாட்டுள்ள மலமாசே காரணம்` என்பது கருத்தாக்குக. எந்தை பெருமான் - என் தந்தையாகிய பெருமானே. நாசன் - போக்குபவன். ``யாதும் ஒன்று`` என்றதனை, `யாதொன்றும்` என மாற்றியுரைக்க. `உலகில் உள்ள பொருள்களில் யாதொன்றும் ஆகாத நீசனேன்` என்க. யாதொன்றும் ஆகாமையாவது, எப்பொருளினும் யாதேனும் ஓர் குணம் உளதாகும்; என்னிடத்தில் குணம் யாதும் உண்டாயிற்றில்லை என்றபடி. இங்ஙனங் கூறியபின், ``பொல்லா நாயான நீசனேன்`` என்றது, இத்துணை இழிந்தவரை நாயோடு ஒப்புமைப் படுத்தும் வழக்கு நோக்கி. `அதுதானும் என் மாட்டு ஒவ்வாது` என்றற்கு, பொல்லா நாய் - நன்றியறிவில்லாத நாய் என் றார். இஃது இல்பொருள் உவமை. நீசன் - இழிந்தவன். ``ஆண்டாய் க்கு`` என்றதன்பின், `கைம் மாறாக` என்பது வருவிக்க. `நினைக்கவும்` என்ற உம்மை தொகுத்த லாயிற்று. கண்டாயே - இதனை நீ கண்டாயன்றோ. செய்வது - இதை நீக்குதற்குச் செய்யும் வழி. அறியேன் - அறியாது திகைக்கின்றேன்.

பண் :

பாடல் எண் : 52

செய்வ தறியாச் சிறுநாயேன்
செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும்
பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம்
மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்
கிருப்ப தானேன் போரேறே. 

பொழிப்புரை :

செய்ய வேண்டுவது இது என்று அறியாத நாயினேன் உன் திருவடியைக் காணாத பொய்யர் பெறும் பேறெல்லாம் பெறுதற்குரியேனாகி, உன் மெய்யன்பர் உன் திருவடியை அடையக் கண்டும் கேட்டும் அதனை அடைய முயலாமல் பொய்யனாய் உண்டும் உடுத்தும் காலம் கழிக்கின்றேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``செய்வது`` என்றது, அருள் பெற்றபின் செயற் பாலதனை. இது, அவ்வருட்கு முதல்வனாகிய இறைவனையன்றிப் பிறிதொன்றனை நாடாமையாம். `அதனை அறிந்திலேன்` என்றது, பின்னும் இவ்வுலகத்தை நாடினமைபற்றி. அதனானே, ``சிறுநாயேன்`` என வருந்தியுரைத்தார். சிறுமை, நாய்க்கு அடை. `அருள் பெற்றபின் செயற்பாலதனைச் செய்யாதொழிந்தமையின், அருள் பெறாதவரது நிலையையே நான் எய்தற்குரியனாயினேன்` என்பார், `பாதமலர் காணாப் பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்` என்றார். இதன் பின்னர், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, ``இருப்பதானேன்`` என்றதனோடு இயைத்து, `இஃதொரு வினையிருந்தவாறு` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. ``செம்பொற் பாதமலர், மலர்ப்பாதம்`` என்றவற்றிற்குமுன், `நின்` என்பது எஞ்சிநின்றது. பொய்யர் பெறும் இழப்பினை, `பேறு` என்றது இகழ்ச்சி பற்றி. வெறி - வாசனை. பொய் - உலகியல். மெய்- வீட்டு நெறி. மெய்யர் பாதம் மேவலை அடிகள் கேட்டது, கண்ணப்பர் முதலியோரது வரலாற்றில் என்க. `அக் கேள்வி யறிவேயும் அமையும், யான் இவ்வுலகியலைத் துறத்தற்கு` என்பார், அதனையும் உடன் கூறினார். இக் காட்சியறிவு கேள்வியறிவுகளாலும் என் உள்ளம் திருந்திற்றில்லை என்பார், ``உண்டு உடுத்து இருப்பதானேன்`` என்று அருளினார். உண்டலையும், உடுத்தலையும் எடுத்தோதியது, அவற்றைப் பெற்றதனோடு மகிழ்ந்து, பிறிது நாட்டமின்றியிருக்கின் றேன் என்றற்கு. ஏறு - சிங்க ஏறு, என்பது, `போர்` என்னும் அடை யாற் பெறுதும். தேவரின் மிக்கானாதல் கருதிச் சிவபெருமான், `சிங் கம்` எனப்படுதலை, ``மூவாச் சிங்கமே``` (தி.6.ப.99.பா.2), ``சிவனே தேவர் சிங்கமே`` (தி.7.ப.52.பா.1) என்றாற்போலுந் திருமொழி பற்றி அறிந்து கொள்க. ஏறு போல்வானை, ``ஏறு`` என்றது, உவமை யாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 53

போரே றேநின் பொன்னகர்வாய்
நீபோந் தருளி யிருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளோ
டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ்
சேரக் கண்டுங் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனோ
கொடியேன் உயிர்தான் உலவாதே. 

பொழிப்புரை :

இறைவனே! நீ உன் சிவபுரத்தில் நின்றும் எம் பிராட்டியோடும் இவ்விடத்து எழுந்தருளி அருள் செய்யப்பெற்ற உன் அன்பர், உன் திருவடியை அடையக் கண்டும், கண்கெட்ட ஊர் எருது போன்று இவ்வுலகத்தில் உழல்வேனோ? இத்தன்மையேனது உயிர் நீங்காதோ?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``போந்தருளி`` என்ற செய்தெனெச்சத்தை, `போந் தருள` எனத்திரித்தும், ``இருள்நீக்கி`` என்றதனை, ``உடன் வந்து`` என்றதன்பின்னர்க் கூட்டியும், `கொடியேன், உயிர் உலவாது, கண்கெட்ட ஊர் ஏறாய் இங்கு உழல்வேனோ` என மாற்றியும் பொருள் கொள்க. `நீ` என்றது, பின்னரும் சென்றியையும். `நீ நின் பொன்னகர் வாய் போந்தருளவும், அருள்பெற்ற சீரேறு அடியார் நின்பாதம் சேரவும் அவற்றைக் கண்டும் உயிர் உலவாது கொடியேன் இங்கு உழல்வேனோ` என வினைமுடிக்க.
``உடன்`` என்றதில், `உடனாய்` என ஆக்கம் வருவித் துரைக்க. திருப்பெருந்துறையில் இறைவன் ஆசான் மூர்த்தியாய் வந்த பொழுது அம்மையோடு உடனாய் இருந்திலனாயினும், அம்மை யாவாள் அருளன்றி வேறல்லளாகலானும், இறைவன் அருளன்றி யிலனாகலானும், அவளோடு உடனாய் வந்தருளியதாகப் பல விடத்தும் அருளுவர்; மேலும் அவ்வாறு அருளினமை காட்டப் பட்டது. இறைவன் அருளன்றி இலனாதலை,
``அருளுண்டா மீசற் கதுசத்தி யன்றே
அருளு மவனன்றி யில்லை - அருளின்
றவனன்றே இல்லை``
(சிவஞானபோதம் சூ-5. அதி-2) என்பதனால் அறிக. ஏறு - எருது. காட்டேற்றினின்றும் பிரித்தற்கு, ``ஊரேறு`` என்றார். ஊர் ஏறுகள் மேய்தற் பொருட்டுக் காட்டிற் செல்லுமாயினும், மேய்ந்த பின்னர் ஊரை அடையும். அவற்றுள் கண்கெட்ட, ஏறு ஒன்று இருக்குமாயின், அஃது ஏனையவற்றோடு கூடிச் செல்லமாட்டாது காட்டிலே கிடந்து தன் இனத்தையும், தலைவனையும் நினைந்து கதறி அலமருதலின், அதனை, அருளைப் பெறுதற் பொருட்டு இவ்வுலகில் வந்தவர் பலரும் அதனைப் பெற்றுச் சிவன் நகருக்குச் சென்றுவிட, அவர்களோடு செல்லாது இவ்வுலகில் நின்று அவர்களையும், இறைவனையும் நினைந்து அழுது அலமரும் தமக்கு உவமை கூறினார். `என் உயிர்` என்பது ஒற்றுமை வழக்காயினும், உறுப்புத் தற்கிழமை வழக்கோ டொத்தலின், `உலவாது` என்பது, சினைவினை முதல்மேல் நின்ற வாறு; இவ்வாறன்றி இதனை வேறு தொடராக்கி உரைத்தலுமாம்.

பண் :

பாடல் எண் : 54

உலவாக் காலந் தவமெய்தி
உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப்
பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க
மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன்
என்கொண் டெழுகேன் எம்மானே. 

பொழிப்புரை :

அளவில்லாத காலம் உடலை வெறுத்துத் தவம் புரிந்த பல முனிவரும் வருந்தி நிற்க, பாவியாகிய என்னைப் பணி கொண்டனை. அங்ஙனமாகவும் இந்தமல உடம்பை ஒழிக்க முயலேன். உன்னிடத்து அன்பு இல்லாத நான் இனி எவ்வகையால் உயர்வேன்?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மணியே, எம்மானே` உனைக் காண்பான், பல மாமுனிவர், உறுப்பும் வெறுத்து, இங்கு உலவாக் காலம் தவம் எய்தி நனிவாட, அவர்களைப் பணிகொள்ளாமல் உன்னைக் காணும்பொருட்டு யாதும் செய்யாத பாவியேனைப் பணி கொண்டாய்; (யானோ) உடம்பை நீக்கிக் கொள்ளும் விருப்பம் இல்லேன்; உன்னைக்காண விரும்பி அலைகின்ற அன்பும் இல்லேன்; எவ்வாற்றால் உன்னைத் தொடர்வேன்`.
தவம், உண்டி சுருக்கல் முதலாயின. உடம்பினை, `அங்கம்` என்னும் வடநூல் வழக்குப்பற்றி, ``உறுப்பு`` என்றார்.
``உறுப்பொத்தல் மக்கள்ஒப் பன்றால்``
(குறள்.993) எனவும்,
``குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்போ ரனையரால் வேறு``
(குறள்.704) எனவும் வருவனபோல்வனவற்றைக் காண்க.

பண் :

பாடல் எண் : 55

மானோர் நோக்கி உமையாள்
பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக்
கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தானேன் உடையானே. 

பொழிப்புரை :

மான்விழி போன்ற விழியினை உடைய அம்பிகையின் வலப்பாகா! சிதம்பர நாதா! நீ பரிபூரணப் பரம் பொருளாகத் தோன்றி உன் அடியார்க்கு அமிர்தம் ஆகின்றாய். உன்னை நினைவதே மானுட வாழ்க்கையின் குறிக்கோள் என்று நீ காட்டியருளியதை அறிந்து கொண்ட நின் அன்பர், உன்னையே நினைந்து உன்னை அடைந்தார். உன் உடைமையாகிய நானோ உடலையே நினைந்து நிலவுலகுக்கு உரியவன் ஆனேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கூடுவார் - பொருந்துபவர்; ஒத்து நடப்பவர். ``கூட`` என்றதன்பின், `கூடாதேனாகிய யான்` என்னும் எழுவாய் வருவிக்க. `இஃது என் வினையிருந்தவாறு` என்பது குறிப்பெச்சமாய், இறுதிக் கண் எஞ்சி நின்றது. ``உமையாள்,`` ``கரும்பின்`` என்பன மூவசை யிடத்து ஈரசை வந்த சீர் மயக்கம்.

பண் :

பாடல் எண் : 56

உடையா னேநின் றனைஉள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதஞ்
சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன்
கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தாக முடித்தாயே. 

பொழிப்புரை :

உயிர்கள் அனைத்தும், இறைவா! உனக்குச் சொந்தம் ஆயினும் பேரன்போடு உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என் நெஞ்சம் உருகவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. உள்ளக் கனிவு உண்டாகவில்லை. துர்நாற்றம் வீசும் உடலில் விருப்பம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாக இங்கு வாழ்ந்து இருக்கிறேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`உடையாயாகிய நின் பாதம்` என்க. ``கண்டும்`` என்னும் உம்மை தொக்கது. இஃது, ``இருப்பதாக`` என்றதில், `ஆக` என்பதனோடு முடியும். ஊர் நாய் - வளர்ப்பார் இல்லாத நாய்; `அஃதா யினும் தான் செய்தற்பாலதனைச் செய்யும்; யான் அஃதில்லேன்` என்பார், ``ஊர்நாயிற் கடையானேன்`` என்றார். ஊர் நாய் செய்வது, ஊரைக் காத்தல். ``கசியாதேன்`` முதலிய எழுவாய்கள், `இருப்பது` என்னும் தொழிற்பெயரொடு முடியும். ஆக - நிகழும்படி. முடித்தாய்- வரையறுத்தாய். ஏகாரம், தேற்றம். `இதுதான் என்னை வந்திங்காட் கொண்ட கருணைக்குரிய செயலோ` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 57

முடித்த வாறும் என்றனக்கே
தக்க தேமுன் னடியாரைப்
பிடித்த வாறும் சோராமற்
சோர னேன்இங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே
சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து
கேடென் றனக்கே சூழ்ந்தேனே. 

பொழிப்புரை :

நீ முடித்த விதம் எனக்குத் தக்கதே. நான் அடியவரைப்பற்றியிருந்தும், என்னை மாயையாகிய பெண் வருத்த வருந்தினேன். எனக்கு நானே கெடுதியுண்டாக்கிக் கொண்டேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``சோரனேன்`` என்பது முதலாக இறுதிகாறும் உள்ளவற்றை, எஞ்சிநின்ற, `ஆதலின்` என்பதனோடு முதலிற் கூட்டி, ``தக்கதே`` என்றதைப் பின்னும் இயைத்து, `அவருக்கு` என்பது வருவித்து, `முடித்தவாறும் என்றனக்கே தக்கதே; அடியாரைச் சோராமல் முன் பிடித்தவாறும் அவருக்கே தக்கதே` என உரைக்க. `அவரவருக்குச் செயற்பாலதனையே செய்தாய்; ஆதலின், யான் இங்கு நின்று துன்புறுவது நின்பிழை அன்று; என் பிழையே` என்ற வாறு. முன்னைத் திருப்பாட்டில், `இறைவன் செய்தது முறையன்று` என்பதுபோல அருளினமையின், இத் திருப்பாட்டில், `அது முறையே` என்றார் என்க. கழிபடர் (மிக்க துன்பம்) உற்றோர் இங்ஙனம் பல வகையாலுங் கூறி இரங்குதல் இயல்பென்க. ``ஒருத்தி`` என்றது, தம் மனைவியாரையேயாதல் வேண்டும் என்பது மேலே (தி.8. திருச்சத கம் பா. 44) கூறப்பட்டது. வாய்துடித்தமை முதலியவாகக் கூறியன, அடிகள் பிரிந்து வருங்காலத்து, அவ்வம்மையார்பால் நிகழ்ந்த ஆற்றா மைக் குறிப்பே என்றும், அங்ஙனம் ஆற்றாமை எய்திய அவரை, `விரைந்து வருதும்` என அடிகள் தேற்றிப்பிரிந்தார் என்றும், அதனால், இறைவன் தம்மைப் பிரிந்து செல்லும்பொழுது தாம் அத்தேற்றச் சொல்லைக் கடக்கமாட்டாராயினார் என்றும் கொள்ளற்பாலன.

பண் :

பாடல் எண் : 58

தேனைப் பாலைக் கன்னலின்
தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை
உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீஎன்னை
ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே யருளலாந்
தன்மை யாம்என் தன்மையே. 

பொழிப்புரை :

மனம் தெளிந்தவர்களுக்குப் பரமானந்தத்தை ஊட்டும் ஞானப் பிரகாசன் நீ. அவர்களுக்கு ஒப்பற்ற மேலாம் பொருள் நீ. மற்றுப் பக்குவம் அடையாத நான் உனக்கு அடிமை என்றும் நீ எனக்குத் தலைவன் என்றும், சொந்தம் பாராட்டினால் ஒரு புன்சிரிப்பின் மூலம் நீ அதை மறுப்பாய். உன் அருளுக்குத் தகுதியற்ற நான் அதற்குத் தகுதியுடையவன் என்று சொல்லுவது தகாது.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கன்னல் - கரும்பு; இஃது அதன் சாற்றைக் குறித்தது. உம்பர் - மேலிடம். உம்பரான் - மேலிடத்தில் இருப்பவன். `உம்பர் ஆனை` என இருசொல்லாக அறுத்து, `தேவர்ஆ (பசு - காமதேனு)` என்றும் உரைப்பர். என்றால் - என்று உறவு கூறினால். ``தானும் சிரித்து`` என்றது, `பிறர் சிரித்தலேயன்றி` என்னும் பொருளைத் தருத லின், உம்மை, எச்சப் பொருட்டு. சிரித்தல், `வருக என்று பணித்த போதும் வாராதொழிந்த இவன்தானோ என் அடியான்! இவனைத் தானோ நான் ஆண்டுகொண்டது! நன்றாயுள்ளது இவன் கூற்று!` என்னும் இகழ்ச்சிக் குறிப்பினாலாம். ``சிரித்தே`` என்ற ஏகாரம், தேற்றம். `அங்ஙனம் இகழினும், தனக்கு இயல்பாய அருட்டன்மை யால், முன்பு வந்து ஆண்டதுபோல, இனியும் என்னைத் தன்பால் கூவிக்கொள்வான்` என்பார், `சிரித்தே ஒழியலாம்` என்னாது, ``சிரித்தே அருளலாம்`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 59

தன்மை பிறரால் அறியாத
தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா
புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே
என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே. 

பொழிப்புரை :

உன்னுடைய இயல்பு, பிறர் பலராலும் அறியப் பெறாதது. அத்தகைய இறைவனே! புன்மையுடைய என்னை ஆண்டருளிப் புறத்தே செல்ல விடுகிறாயோ? நீயே அப்படிச் செய்தால் நான் என் செய்வேன்? எவ்விடத்தில் புகுவேன்? என்னை நோக்குவோர் யார்?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பிறர் - உன்னையொழிந்த மற்றையோர். சிவாநுபூதிச் செல்வராயினும், சிவனது தன்மை முற்றும் அறியப்படாமையறிக. அறியாத - அறியப்படாத. ``பொல்லாநாய்`` என்றதற்கு மேல் (பா. 55) உரைத்தாம். ``புன்மையேனை ஆண்டு விடுவாயோ`` என்றது, `என் புன்மை நோக்காது முன்பு என்னை ஆண்டுகொண்டு, பின்பு அது நோக்கி விட்டு விடுவாயோ` என்றவாறு. `அங்ஙனம் செய்யின், அஃது ஆண்டவற்கு அழகாகாது` என்பது குறிப்பு. ஓகாரம், இரக்கப் பொருட்டு. ``விடுவாயோ`` என்றதன்பின், `விடின்` என்பது எஞ்சி நின்றது. ``நோக்குவார்`` என்றது, `நோக்கி இரங்குவார்` என்னும் பொருட்டு. ``யாரே`` என்னும் ஏகாரம், அசைநிலை. ``பொன்`` என்றது, அதன் ஒளியை, ``எங்கு`` என்றது, `எவரிடத்தில்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 60

புகுவேன் எனதே நின்பாதம்
போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி
நாண மில்லா நாயினேன்
நெகும்அன் பில்லை நினைக்காண
நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே
எந்தாய் அந்தோ தரியேனே. 

பொழிப்புரை :

இறைவனே! உன் திருவடிகளில் சரண் புகுவேன். உன் அடியார் நடுவில் கூடியிருந்து நகைத்தல் ஒன்றுமே செய்வேன். ஆனால் சரியான அன்பிலேன். இத்தகையோனான என்னை நீ ஆண்டருளல் தகுதியாமோ?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`எந்தாய், நின் பாதத்தில் யான் புகுவேன்; (அதற்கு) அஃது என்னுடையதோ! (நீ கொடுக்க அன்றே பெறற்பாலது!) அதனை நீ கொடுத்து ஆண்டருள (ஏனைய அடியார்போல) அடியேனும் தகுவனோ? (தகேன்; ஏனெனில்,) நாணமில்லா நாயினேன், பண்டு, போற்றும் அடியாருள் நின்று நின் தோள்களை நோக்கி மகிழ்வேனாயினும், (இன்று எனக்கு) நினைக்காண நெகும் அன்பில்லை; அந்தோ, என் தன்மையை (யான்) தரியேன்` எனப் பொருள் கொள்க. இறைவன் திருப்பெருந்துறையில் ஆசான் மூர்த்தியாய் எழுந்தருளியிருந்த கோலம், அடியார் உள்ளத்தைக் கவருந் தன்மையதாய், இருந்தமையின் தம் உள்ளமும் அதனால் ஈர்ப்புண்டது என்பதை, ``பண்டு தோள்நோக்கி நகுவேன்`` என்றார். ``சிவனவன் திரள்தோள்மேல் - நீறு நின்றது கண்டனையாயினும் நெக்கிலை`` என முன்னரும் (தி. 8. திருச்சதகம் பா. 37) அருளினார். ``நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் - பேணாமை பேதை தொழில்`` (குறள்-833) என்பவாகலின், ``நாணமில்லா நாயினேன்`` என்றது, `பேதையேன்` என்னும் பொருளதாதலும், பெற்ற திருவருளைப் பேணுந்தன்மை இன்மையால், `பேதையேன்` என்றார் என்பதும் பெறப்படும். `பேணாது நின்றே பயன்பெற விழைகின்றேன்; அஃது இயல்வதோ` என்பார், `புகுவேன் எனதே நின்பாதம்` என்றார்.

பண் :

பாடல் எண் : 61

தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி. 

பொழிப்புரை :

கடவுளே! சங்கரனே! விருத்தனே! ஒப்பில்லாத தலைவனே! தேவர் தலைவனே! வணக்கம். இந்த உடம்போடு கூடி வாழும் வாழ்க்கையைச் சகித்திலேன். ஆதலால் இதனை ஒழித்து உன் திருவடியை அடைவிக்க வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இப்பகுதிக்கு, `காருணியத்திரங்கல்` என முன்னோர் உரைத்த குறிப்பு, `இறைவன் தனது கருணைத் தன்மையால் திருவுளம் இரங்குதலைக் குறித்தது` என்றே பொருள் கொள்ளற்பாற்று; என்னையெனின், இதனுள் அடிகள், `தரிக்கிலேன் காய வாழ்க்கை` என்று எடுத்துக் கொண்டு `உடல் இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்தருளு,ஒழித்திடு இவ்வாழ்வு, வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும்` என்றாற்போலப் பன்முறையும் வேண்டுகின்றா ராகலின். இதனானே, இதனுள், `போற்றி` என வருவன பலவும், அங்ஙனம் இரங்குமாறு வேண்டிக்கொள்ளும் வணக்கவுரையாதல் பெறப்படும்.
தரிக்கிலேன் - பொறுக்கமாட்டேன். `காய வாழ்க்கை தரிக்கிலேன்` என்க. வானம் - பரலோகம். `அதன்கண் உள்ள` என்க. நீ எவ்வாறும் ஆவாய் என்பார், `எங்கள் விருத்தனே, விடலையே` என்றார். விருத்தன் - முதியோன். விடலை- இளையோன். ``தம்பிரான்`` என்றதில் தம், சாரியை. பிரான் - தலைவன்.

பண் :

பாடல் எண் : 62

போற்றிஓம் நமச்சி வாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய
புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய
புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய
சயசய போற்றி போற்றி

பொழிப்புரை :

இறைவனே! போற்றி! போற்றி! இந்தப் பொய்யுலக வாசனையால் மயங்குகின்றேன். உன்னையன்றி எனக்கு வேறு புகலிடம் இல்லை. ஆதலால் என்னைக் கைவிடாமல் காத் தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``ஓம் நமச்சிவாய`` என்றது, `இம்மந்திரத்தின் பொருளாய் உள்ளவனே` என்றவாறு. `போற்றியோ` எனப் பிரித்து, ஓகாரத்தை, இரக்கப்பொருளது எனினுமாம். புயங்கம் - பாம்பு; `ஒரு வகை நடனம்` எனவும் கூறுப. மயங்குதல் - செய்வதறியாது திகைத்தல். `என்னைப் புறம் போக்கல்` என்க. கண்டாய், முன்னிலை அசை. சயசய - வெல்க வெல்க.

பண் :

பாடல் எண் : 63

போற்றிஎன் போலும் பொய்யர்
தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றிபோற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றிய மானன் வானம்
இருசுடர்க் கடவு ளானே

பொழிப்புரை :

பொய்யுடலில் ஆசை வைத்துள்ள என் போன்றவர்களுக்கு அருள் புரிவதால், நீ, வள்ளல் ஆகின்றாய். உன் கருணைக்குப் புதிய தேன் ஒப்பானது. ஐம்பெரும் பூதங்கள், சூரியன் சந்திரன், உயிர் ஆகிய எட்டு மூர்த்திகளாய் நீ இருக்கின்றாய். இப்படி யெல்லாம், இருக்கிற உனக்கு மேலும் மேலும் வணக்கம் கூறுகிறேன்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


``பொய்யர் தம்மை ஆட்கொள்ளும்`` என்றது. அருட்டிறத்தை அருளியவாறு. `கருணையாகிய புதுமது வெள்ளம்` என்றபடி. மது - தேன். புவனம் - நிலம். இயமானன் - உயிர். இருசுடர், ஞாயிறும் திங்களும். `இவ்வெட்டுமாய் நிற்கும் இறைவனே` என்றபடி. கடவுளான் - எல்லாவற்றையும் கடத்தலை உடையவன். `இறை, தெய்வம்` என்னும் தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக் கிளவிகள், `இறைவன், தேவன்` என உயர்திணை மருங்கிற் பால்பிரிந்திசைத்தல் போல, `கடவுள்` என்னும் பெயரும் `கடவுளான்` எனப் பால்பிரிந்து இசைத்தது என்க (தொல். சொல் -4).

பண் :

பாடல் எண் : 64

கடவுளே போற்றி என்னைக்
கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட் டொல்லை
உம்பர்தந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி

பொழிப்புரை :

நான் தகவிலன் என்பதை அறிந்து என்னை ஆட்கொள். என் உள்ளத்தை உருக்கி அதை இளகச் செய். உடலை ஒதுக்கிவிட்டு விரைவில் முத்தியடையும்படி செய். கங்காதரா! உன்னை நான் மீண்டும் வணங்குகிறேன். நான் தகாதவன் எனினும் நீ சங்கரன் ஆதலால் என்னை ஆட்கொண்டருள்க.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``கண்டுகொண்டு`` என்றதில் கொள், தற்பொருட்டுப் பொருண்மை விகுதி, `உனக்குள் நீதானே கண்டு` என்பது பொருள். `உன்னை வலிசெய்வார் ஒருவரிலர்; நீதானே இரங்குதல் வேண்டும்` என்றபடி. விட - (உலகப்பற்று) நீங்குமாறு. `என்னை உள்ளே உருக்கி ஆண்டிட வேண்டும்` என்க. உருக்கி - உருகப்பண்ணி. உம்பர் - மேலுலகம்; சிவலோகம். `அருள்` என்னும் முதனிலை, ஏவலிடத்து, உகரம் பெற்றது.

பண் :

பாடல் எண் : 65

சங்கரா போற்றி மற்றோர்
சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய்
வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி
மால்விடை யூர்தி போற்றி
இங்கிவாழ் வாற்ற கில்லேன்
எம்பிரான் இழித்திட் டேனே. 

பொழிப்புரை :

சங்கரனே! மங்கை பங்கனே! மால்விடை யுடையானே! வேறோர் புகலிடம் இல்லேன். இந்தப் பொய் வாழ்வைச் சகிக்கிலேன் ஆதலால், என்னைக் கைவிடல் உனக்குத் தகுதியன்று.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். சரண் - புகலிடம். பொங்கு அரா - சினம் மிகுகின்ற பாம்பு; இஃது ஆகுபெயராய் அதன் படத்தைக் குறித்தது. மால் விடை - பெரிய இடபம். `ஊர்தி` என்பதில் இகரம், செயப்படுபொருட் பொருளதாய் நின்று, `ஊரப்படுவது` எனவும், வினைமுதற் பொருளதாய் நின்று `ஊர்பவன்` என்னும் பொருளையும் தரும். இங்கு அஃது வினைமுதற் பொருளதாய் நின்றது. `இவ்வாழ்வு` என்னும் வகரம் தொகுத்தலாயிற்று. இழித் திட்டேன் - அருவருத்தேன். `ஆதலின், நீக்கியருள்` என்பது குறிப் பெச்சம்.

பண் :

பாடல் எண் : 66

இழித்தனன் என்னை யானே
எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ் வாழ்வு போற்றி
உம்பர்நாட் டெம்பி ரானே. 

பொழிப்புரை :

எம்பிரானே! என்னை நானே தாழ்த்துவது அன்றி உன்னை நிந்தித்திலேன். சிறியவர் செய்த குற்றங்களைப் பெரியவர் பொறுத்தல் கடமையாதலால் என் குற்றங்களைப் பொறுத்து, இந்தப் பொய் வாழ்க்கையை ஒழித்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


`யான் உன்னைப் பழித்திலேன்; என்னையே இழித் தனன்` என்க. இழித்தனன் - இகழ்ந்துகொண்டேன். பழித்திலேன் - பழிகூறிற்றிலேன். `என்னைப் பிரிவது உனக்குத் திருக்குறிப் பன்றாக வும், (தி.8. திருச்சதகம் பா. 41) யானே பிரிந்து நின்றேன்; சிறியோரது பிழையைப் பொறுத்து அவர்க்கு உதவுதல் பெரியோரது கடனாகலின், நீ எனது பிழையைப் பொறுத்து இவ்வாழ்வை ஒழித்திடல் வேண்டும்` என வேண்டியவாறு. உம்பர் நாடு - மேலுலகம்; `அதன்கண் உள்ள எம் பிரானே` என்க.

பண் :

பாடல் எண் : 67

எம்பிரான் போற்றி வானத்
தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை
கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி. 

பொழிப்புரை :

தேவர் பிரானே! உமாதேவி பாகனே! திரு வெண்ணீறு உடையவனே! செவ்விய பெருமானே! திருச்சிற்றம் பலத்தை உடையவனே! முத்தி உலகை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வானத்து அவரவர் - வானுலகில் உள்ள அவ்வவர்க்கு. ``அவரவர்`` என்றது, ஒவ்வொரு பகுதியிலும் உள்ளாரைக் குறித்து. ``ஏறு`` என்றது, ``தலைவன்` என்னும் பொருட்டாய் நின்றது.
தெய்வப் பகுதியினராவார், உலகை நடத்துதற்கண் ஒவ்வொரு தொழிற்கு உரியராய் நின்று, அவ்வவ்வளவில், `முதல்வர்` எனப்படுவராத லாலும், அம் முதன்மைகள் பலவும் `சிவபெருமானது` முழுமுதன்மை யின் ஒவ்வொரு கூறாய் நிற்பனவாதலாலும், அப்பெருமானை `வானத்து அவரவர் ஏறு` என்று அருளிச்செய்தார்.
கொம்பர் - பூங்கொம்பு. ஆர்- (அதன் தன்மை) பொருந்திய. `கொம்பர்போலப் பொருந்திய` என்று மாம், செம் பிரான் - சிவப்பு நிறக் கடவுள். பிரமனை, `பொன்னன்` என்றும், திருமாலை, `மாயோன்` என்றும் கூறுதல்போல, சிவபிரானை, ``செம்பிரான்`` என்றார். `உம்பர்` என்பதன் அடியாகத் தோன்றிய, `உம்பரான்` என்பது விளியேற்று, `உம்பரா` என நின்றது.

பண் :

பாடல் எண் : 68

ஒருவனே போற்றி ஒப்பில்
அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி
வருகஎன் றென்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே.

பொழிப்புரை :

பலவாகத் தோன்றும் பொழுதும் நீ ஒருவன்தான் இருக்கிறாய். உயிர்கள் அனைத்துக்கும் நீ சிறந்த தந்தையாய் இருக் கிறாய். தேவர்களுக்கெல்லாம் நீ மூத்தவன். உயிர்கள் உள்ளத்தில் நீ நித்திய திருவுருவத்தில் இருக்கிறாய். உனக்கும் எனக்கும் உள்ள உறவை நீ உறுதிப்படுத்து. என்னை உன் மயம் ஆக்குக. எனது உயிர் போதத்தை அகற்றி விடு. உனது மகிமையை நினைந்து நான் உன்னையே போற்றுகிறேன்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`ஒருவன்` என்பது, கடவுளைக் குறிப்பதொரு சொல். ஒப்பில் அப்பன் - `தந்தை` எனப்படுவாருள் ஒருவரும் ஒப்பில்லாத தந்தை. `குரவன்` என்பது, எதுகைநோக்கி, `குருவன்` என நின்றது. மக்களுக்கு உய்யும் நெறிகாட்டுவார் ஆசிரியராதல்போல, தேவர் கட்கு உய்யும் நெறிகாட்டுவான் சிவபெருமானே யாதல்பற்றி, `வானோர் குரவனே` என்றார்.
கோமளக் கொழுந்து - அழகின்மேல் எல்லை. சிவபிரானது அழகின் சிறு கூறுகளே ஏனைய யாவரிடத்தும், எப்பொருளிடத்தும் காணப்படும் அழகுகளாதல் தெளிவு.
இதனை, அப்பெருமான் பேரழகுடன் தோன்றிய வரலாறுகள் பல தெளிவுறுத்தும். `உடலினின்றும் பிரித்து ஏற்றுக்கொள்ளுதலை` ``வாங்கிட வேண்டும்`` என்றார். `தமியனேன் தனிமை தீர்த்து நின்பாதம் தருக` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 69

தீர்ந்தஅன் பாய அன்பர்க்
கவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும்என் பொய்ம்மை யாட்கொண்
டருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க்
கமுதம்ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற்
கருளிட வேண்டும் போற்றி

பொழிப்புரை :

அன்பரிடத்தில் மிகுந்த அன்பு செய்பவனே! என் பொய்ம்மை ஒழியும் வண்ணம் என்னை ஆண்டருளினவனே! விடத்தை உண்டு தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தவனே! உன் திருவடியை எனக்குத் தந்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தீர்ந்த அன்பு - முதிரவேண்டுமளவும் முதிர்ந்து முடிந்த அன்பு; `பேரன்பு` என்றவாறு. அன்பாய - அன்பே வடிவமாகிய; `அன்பு பிழம்பாய்த் திரிவார்`(தி.12 கண்ணப்பர் புரா. 154), `அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு` (தி.12 கண்ணப்பர் புரா. 157) என்றாற்போல வருவன காண்க. ``அன்பர்`` என்றது. `அடியவர்` என்னும் அளவாய் நின்றது. ``அவரினும் அன்பன்`` என்றது, அவரது அன்பளவினன்றிப் பன்மடங்கு பெரிதாய பேரருளை அவர்கட்கு வழங்குபவன் என்றவாறு.
அவ்வருளாவது, ஊனக்கண்ணைப் பெயர்த்தளித்த அன்பர்க்குப் பரிசாக, ``என் அன்புடைத் தோன்றல்`` (நக்கீரர் திருமறம்) என விளித்தும், தனது திருக்கையாலே அவரது திருக் கையைப் பிடித்தும், தன்னைப் பயன் கருதியன்றி அன்பே காரணமாக வணங்குவார் பலரும் அவரைத் தன்னினும் மேலாக வைத்து வணங்கு மாறு, தன் வலப்பக்கத்தே அவரை என்றும் நீங்காது நிற்கச்செய்தும் உயர்த்தினமை போல்வதாம்.
இது பற்றியன்றே, ``பேறினியிதன் மேலுண்டோ`` (தி.12 கண்ணப்பர் புரா. 185) என இச்சிறப்பினைப் போற்றிக் கூறியது! ``அற்றவர்க்கு அற்ற சிவன்`` என்று அருளிச் செய்தார் ஆளுடைய பிள்ளையாரும் (தி.3.ப.120.பா.2) என்க. `பேர்த்தும்` என்பது மெலிந்து நின்றது; `மீளவும்` என்பது பொருள். தம்மை ஆட் கொள்வதைத் தம்பொய்ம்மையை ஆட்கொள்வதாக அருளினார். முன்னர் இருந்த பொய்ம்மை, மெய்ந்நெறியிற்` செல்லாது உலகியலில் இருந்தது. பின்னர் உள்ள பொய்ம்மை, இறைவனுடன் செல்லாது இவ்வுலகில் நின்றது. `பெரியோனாகலின், மீளவும் பொறுத்து அருள்புரிவான் என்று துணியலாகும்` என்னும் கருத்தினால், ``ஆட்கொண்டருளிடும் பெருமை போற்றி`` என்றார். எனவே, இஃது எதிர்காலம் நோக்கிக் கூறியதாயிற்று.
இங்ஙனம் துணிதல் கூடுமாயினும், அவனது திருக்குறிப்பை வரையறுத்தல் கூடாமையின், ``நின்பாதம் நாயேற்கு அருளிட வேண்டும்`` என்று வேண்டினார்.
அங்ஙனம் வேண்டுகின்றவர் சிறியேனது குற்றத்தை எண்ணாத அவனது திருவருளின் பெருமையைக் குறித்தற்பொருட்டு, ``நஞ்சயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல்`` என்று அருளினார். வள்ளல், விளி. வார்ந்த - ஒழுகிய. ஆர்ந்த - (இன்பம்) நிறைந்த.

பண் :

பாடல் எண் : 70

போற்றிஇப் புவனம் நீர்தீக்
காலொடு வான மானாய்
போற்றிஎவ் வுயிர்க்குந் தோற்றம்
ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றிஎல் லாஉ யிர்க்கும்
ஈறாய்ஈ றின்மை யானாய்
போற்றிஐம் புலன்கள்நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கை யானே. 

பொழிப்புரை :

பஞ்ச பூதங்களாக இருப்பவனே! எல்லா உயிர் களுக்கும் பிறப்பிடமாய் இருப்பவனே! பிறப்பு இல்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் இறுதியும் உனக்கு இறுதி இன்மையும் ஆனவனே! ஐம்புலன்களும் தொடரப்பெறாத மாயத்தை உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``தோற்றமாகி``, ``ஈறாய்`` என்றவற்றில், `தோற்றம், ஈறு` என்றவை, `அவற்றிற்குக் காரணன்` எனப் பொருள் தந்தன.
``ஆனாய்`` எனவும், ``இல்லாய்`` எனவும் வந்தன, விளிகள். புணர்க்கை - புணர்ப்பு; சூழ்ச்சி; என்றது, வல்லமையை.

பண் :

பாடல் எண் : 71

புணர்ப்ப தொக்க எந்தை என்னை யாண்டு
பூண நோக்கினாய்
புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ
டென்னொ டென்னிதாம்
புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு
நின்க ழற்கணே
புணர்ப்ப தாக அங்க ணாள புங்க
மான போகமே.

பொழிப்புரை :

ஆண்டவனே! உன்னோடு மாறுபட்டுத் திரிகின்ற அடிமையை நால்வகை உபாயங்களாலும் உன்னடிமை என்று உன் னோடு கூட்டிக் கொள்வது போல, மெய்யடியார் குணங்கள் ஒன்றும் இல்லாத என்னை, ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளித் தடுத்து ஆட் கொண்டு மெய்யடியார் மீது வைக்கும் அருள் நோக்கத்தை அடியேன் உணர்வுக்கு உள்ளும் புறமுமாக வைத்தருளினை! பிரமாதிகளுக்கும் அரிய இவ்வருள் நோக்கம் அடியேனுக்குக் கிடைத்தல் அரிதென்று அதன் அருமை அறிந்தபோது எனதாயிருந்த சகசமலம் ஒன்றும் என்னை நின்னொடு இரண்டறக் கூட்டுவதாகவும், இப் பிரபஞ்சத்தின் மேல் நின்ற அன்பு உன் திருவடிக்கண் மீளாது நிற்பதாக வும் ஆயின. அழகிய கண்ணாளா! திருமால், பிரமன் அகியவருடைய உலக போகங் களையும் கடந்து இருக்கும் சிவானந்த போகமே! இந்தக் காருண்ணி யத்துக்கு நாயேனால் செய்யப்படுவதாகிய கைம்மாறும் உண்டோ?

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இப்பகுதியில் அடிகள் இறைவன் மாட்டு முறுகி எழும் பேரன்பினையே சிறப்பாக வேண்டிப் பாடுகின்றார். அன்பே இன்பிற்குக் காரணம் ஆதலின், இதற்கு, `ஆனந்தத்தழுந்தல்` எனக் குறிப்புரைத்தனர்போலும் முன்னோர்!
புணர்ப்பது ஒக்க - என்னை உன்னுடன் இரண்டறச் சேர்த்துக்கொள்வதுபோலவே. `ஒக்கவே` என்னும் தேற்றே காரம், தொகுத்தலாயிற்று. இதனால், இறைவன் மாட்டுக் குறையின்மை பெறப்பட்டது. பூண நோக்கினாய் - நிரம்பத் திருவருளை நல்கினாய். நோக்குதல் அருளுதலாதலை, `கண் பார்த்தல்` எனக் கூறும் வழக்குப் பற்றி உணர்க. ``புணர்ப்பது`` நான்கில் இடை இரண்டனுள் அது, பகுதிப்பொருள் விகுதி. இது புணர்ப்பன்று என்றபோது இது நின்னொடு என்னொடு என் ஆம் - இங்ஙனம் நல்கிய அருள் என்னை நின்னொடு ஒன்றாகச் செய்யும் உபாயம் அன்று எனப்பட்ட பொழுது. இவ்வருள் உன்னோடு என்னிடை என்ன பயனை உடையதாம்? `இஃது உபாயம் அன்று எனப்பட்டது` என்றது, அருள் புரிந்த உடனே இறைவனுடன் ஒன்றுபடாமல் உலகில் நின்று விட்டமையை யாவரும் அறிந்தமைபற்றி. இங்ஙனம் அருளியது அருளின் மாட்டாமை கூறியதன்று; தமது பக்குவம் இன்மை கூறியதாம். இது புணர்ப்பாக அன்றாக - இவ்வருள் என்னை உன்னோடு ஒன்று படுத்தும் உபாயமாகுக, அன்றாகுக; என்றது, இதற்குமேல் செயற்பாலதனை நோக்கல் வேண்டும் என்றபடி. அன்பு நின்கழற்கண் புங்கமான போகம் புணப்பதாக - இனி அன்பென்னும் உபாயமே உனது திருவடிக்கண் உண்டாகும் பேரின்ப நுகர்ச்சியில் என்னைச் சேர்ப்பதாக; `அத்தகைய அன்பினை எனக்கு அருளுதல் வேண்டும்` என்பது கருத்து. எனவே, `திருவருள் பயன்படுவது அன்புடையாரிடத் தேயாம் என்பது பெறப்பட்டது. அடிகள் அன்பில்லாதவரல்லர்; அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவரது (தி.8 கீர்த்தித் திருவகவல் - 130.) அன்பு போன்ற அன்பும், கண்ணப்பரது (தி.8 திருக்கோத்தும்பி - 4) அன்பு போன்ற அன்பும் தமக்கு இல்லை என்பதையே குறித்தருளுகின்றார். புங்கம் - உயர்ச்சி.

பண் :

பாடல் எண் : 72

போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த
ராதி இன்பமும்
ஏக நின்க ழல்இ ணைய லாதி
லேனென் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி
அஞ்ச லிக்கணே
ஆக என்கை கண்கள் தாரை ஆற
தாக ஐயனே. 

பொழிப்புரை :

ஐயனே! இந்திரன் முதலியோருடைய போகங் களையும் விரும்பிலேன். உன் திருவடியையன்றி மற்றோர் பற்று மிலேன். என்கைகள் உன்னை அஞ்சலிக்கவும் என் கண்களில் நீர் ஆறு போலப் பெருகவும் வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

போகம் வேண்டி - இன்பத்தை விரும்பி. `புரந்த ராதிகளது இன்பமும் வேண்டிலேன்` என்க. புரந்தரன் - இந்திரன். ``இன்பம்`` என்றது இன்ப வாழ்க்கையை. `மக்களுள் மன்னர் முதலியோரது வாழ்வையேயன்றி` எனப் பொருள் தருதலின், ``இன்பமும்`` என்ற உம்மை, இறந்தது தழுவிற்று. ஏக - ஏகனே. ``இலேன்`` என்றதற்கு, `பற்றுக்கோடு` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. இதன்பின் `ஆதலின்` என்பதும் எஞ்சிநின்றது. ஆகம் - உடம்பு. விண்டு - உருகி. கம்பம் - நடுக்கம். வந்து - வரப்பெற்று; இதனை, `வரப்பெற` எனத் திரித்துக்கொள்க. குஞ்சி - தலைமயிர். `என் கை குஞ்சிக்கண் அஞ்சலித்தற்கண் ஆக` என்க. அஞ்சலித்தல் - கும்பிடுதல். `என்கை குஞ்சிக்கண் அஞ்சலியாக` எனினுமாம். `கண் களில் தாரை ஆறதாக` என்க. `தாரை - இடையறாது விழும் வீழ்ச்சி. `அதனையுடைய ஆறு` என்க. அது, பகுதிப்பொருள் விகுதி. ``ஆறதாக`` என்றது பன்மை ஒருமை மயக்கம். `இந்திராதியரது இன்பங்களை உவர்த்து உனது திருவடியொன்றினையே பற்றுக் கோடாகக் கொண்டவரிடத்து இத்தகைய அன்பின் நிகழ்ச்சிகள் நிகழு மன்றே; அடியேன் அவை நிகழப் பெற்றிலேன்` என்று இரங்கி, அவற்றை வேண்டியவாறு. `கழலிணை` என, விகாரமின்றியே ஓதுதல் பாடமாகாமை யறிக.

பண் :

பாடல் எண் : 73

ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர்
பற்று வஞ்சனேன்
பொய்க லந்த தல்ல தில்லை பொய்ம்மை
யேன்என் எம்பிரான்
மைக லந்த கண்ணி பங்க வந்து
நின்க ழற்கணே
மெய்க லந்த அன்ப ரன்பெ னக்கு
மாக வேண்டுமே. 

பொழிப்புரை :

ஐயனே! உன்னையன்றி வேறொரு பற்றிலேன். நான் முழுப் பொய்யனாயினும் உன் திருவடியை அடைந்த மெய்யன்பரது அன்பு போன்ற அன்பை எனக்கு அருள் புரிய வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பற்று - துணை. பொய் - நிலையில்லாத உலக வாழ்க்கை, `அதனைக் கலந்ததல்லது வேறு பேறில்லேன்` என்றது, திருவடிப்பேற்றினைப் பெறாமைக் கருதி. பொய்ம்மை ஏன் - `எனக்கு உலகவாழ்க்கையில் பற்றில்லை` என்று சொல்லுகின்ற பொய்ம்மையை நான் ஏன் சொல்லவேண்டும்? சொல்லமாட்டேன்; `ஆதலின் எனக்குத் துணைபுரிய வேண்டும்` என்றபடி. `நின் கழற் கணே வந்து மெய்கலந்த அன்பர்` என்க.
மெய் - நிலைபெற்ற இன்பம். ஆக வேண்டும் - உண்டாக வேண்டும். முதற்றொடரை இறுதியிற் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 74

வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்ம்மை
தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ
என்ற ருளுநீ
பூண்டு கொண் டடிய னேனும் போற்றி
போற்றி யென்றுமென்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன
நின்வ ணங்கவே. 

பொழிப்புரை :

இறைவா! எனது உயிர்போதத்தை நீக்கிச்சிவ போதத்தை உறுதியாக்கி, என்மீது இரக்கம் வைத்து எனக்குப் பேரன்பைக் கொடுத்து அருளுக. பேரன்பு பூண்டு உன்னைப் போற்றும் வாய்ப்புக் கிடைக்கும் இடத்துப் பிறப்பு இறப்பு எத்தனை வந்தாலும் அதனால் எனக்குத்துன்பம் இல்லை.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மன்ன, நின் கழற்கண் அன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே வேண்டும்; அதன்பொருட்டு நீ நாயினேனை ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு; அடியனேனும், மாண்டு மாண்டு வந்து வந்து பூண்டுகொண்டு போற்றி போற்றி என்று மென்றும் நின் வணங்க` எனக் கூட்டியுரைக்க,
இஃது, `இப்பிறப்பில் அத்தகைய பேரன்பு அடியேனுக்கு எய்தாதாயின், பல பிறப்புக்கள் பிறந்தாயினும் அதனைப் பெறு வேனாக` என்றபடி. எனவே, ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு தலும் அப்பிறவிதோறும் என்பதாயிற்று.
ஆவ என்று - ஆஆ என்று இரங்கி. பூணுதல், அத்திருவரு ளை. `என்றென்று` என்னும் அடுக்குச் சிறப்பும்மையுடன் நின்றது. வண ங்க, அகர ஈற்று வியங்கோள். இதனால், இறைவன் திருவடிக்கண் பொய்யற்ற மெய்யன்பைப் பெறுதல் எத்துணை அரும்பேறு என்பது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 75

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம்
நான்கும் ஓலமிட்டு
உணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ
ருண்மை இன்மையின்
வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து
நின்ற ருளுதற்
கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ
லோநி னைப்பதே. 

பொழிப்புரை :

உமாதேவி பங்கனே! மண்ணுலகும் விண்ணுலகும் உன்னை வணங்கி நிற்கும். நான்கு வேதங்களும் உன்னையறிய முயன்று அறியவொண்ணாமையால் இளைக்கும். அவ்வாறான பின்பு, யாம் உன்னை வணங்கி உன் திருவடியை விடோம் என்று சொல்ல, நீ வந்து எமக்கு அருள் செய்தற்கு உன் திருவுளம் யாதோ?

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மங்கை பங்க, நின்னை மண்ணும் விண்ணும் வணங்கும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும்; இவற்றால், மற்றோர் மெய்ப்பொருள் இல்லாமை தெளியப்படுதலின், யாம் நின்னை எய்தலுற்று வணங்கி, `விடேங்கள்` என்று கூறி நிற்கவும், வந்துநின்று அருளுதற்கு நினைப்பது என்கொலோ`. `ஓலம் இடுதல்` என்பது இங்கு, `துதித்தல்` என்னும் பொருளது. உணங்கும் - இளைக்கும். `விடேம்` என்னும் தன்மைப் பன்மை முற்றுவினை,
`கள்` என்னும் விகுதிமேல் விகுதியைப் பெற்றது. `என்னவும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வந்து நின்று - மீளத் தோன்றிநின்று. அருளுதல் - பொய்ம்மை தீர்ந்த மெய்யன்பினைப் பெறச் செய்தல். இணங்கு - நெருங்கிய. நினைப்பது - நினைத்தல்; ஆராய்தல். `இனி உன்னை யாங்கள் பிரிவதில்லை என்று உறுதி கூறவும், எங்களுக்கு அருள் செய்ய ஆராய்வது என்னை` என்றபடி. இதனுள், தம்மைப் பன்மையாக அருளினார்.

பண் :

பாடல் எண் : 76

நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை
யேய வாக்கினால்
தினைத்த னையு மாவ தில்லை சொல்ல
லாவ கேட்பவே
அனைத்து லகு மாய நின்னை ஐம்பு
லன்கள் காண்கிலா
எனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை
பாத மெய்தவே.

பொழிப்புரை :

பரமனே! உலகனைத்தும் ஆகியிருக்கிறான். எனினும் அவனை அநுபூதியில் அடைவதற்கு மனம் உதவாது; வாக்கு உதவாது; ஐம்பொறிகளும் உதவமாட்டா. அந்தக் கரணங்கள் யாவும் பிரபஞ்சத்தை நுகர்வதற்கே உதவுகின்றன. பஞ்சபூதப் பொருளாகிய பரமனை வழிபடுதற்குச் சிறிதேனும் அவைகள் பயன்படா.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``நினைப்பதாக`` என்றதனை இறுதிக்கண் வைத்து உரைக்க. ஏய - பொருந்த. ``சொல்லல்`` என்றது, சொல்லப்படும் பொருள்களைக் குறித்தது. `ஆவன` என்பது, அன்பெறாது நின்றது. கேட்பவே - அறிந்தார் சொல்லக் கேட்பனவே; சொல்வோர் கேள்வியுணர்வே உடையவர் என்க.
காண்கிலா - காணமாட்டா; இதன்பின், `இங்ஙனமாகலின்` என்பது வருவிக்க. `எந்தை பாதம் எய்த எனைத்தெனைத்தது, எப்புறத்தது` எனக் கூட்டுக.
நினைப்பு அது ஆக - இவ்வாறாயினும், என் எண்ணம் நின்பாதத்தை எய்துதலாகிய அதுவேயாகுக. `நினைபஃதாக` எனப் பாடம் ஓதினும் அமையும். `மனம் செல்லும் அளவில், வாக்குச் செல்லாது. மற்று, அஃது உன்னைப்பற்றிப் பலவற்றைச் சொல்லுகின்றதே என்றால், அவையனைத்தும் பிறர் சொல்லியவற்றைக் கேட்டு அங்ஙனமே சொல்வனவன்றி வேறில்லை. ஐம்புலன்கள் அடியோடு உன்னை அணுகவே மாட்டாது நிற்கும் என்றால், உனது பாதத்தை உயிர்கள் அடைதல் என்பது எந்த அளவில் இயல்வது! எத்துணைச் சேய்மையில் உள்ளது! ஆயினும், எண்ணம் மாறாதிருப்பின் என்றேனும் எய்தலாம்` என்றபடி. ``வைத்த உள்ளம் மாற்ற வேண்டா, வம்மின்மனத் தீரே`` என ஆளுடைய நம்பிகளும் அருளிச்செய்தார் (தி.7.ப.7.பா.1).
``புலன்கள்`` என்றது பொறிகளை. அவை இறைவனை அணுக மாட்டாமைக்கு ஏதுக்கூறுவார், ``அனைத்துலகுமாய நின்னை`` என்றார். `அனைத்துலஃகும்` என்பதே பாடமாதல் வேண்டும்.
``எய்த`` என்ற வினையெச்சம் தொழிற் பெயர்ப் பொருள் தந்தது; `எய்தலே` என்பதே பாடம் எனினும் அமையும்.

பண் :

பாடல் எண் : 77

எய்த லாவ தென்று நின்னை எம்பி
ரான்இவ் வஞ்சனேற்கு
உய்த லாவ துன்க ணன்றி மற்றொ
ருண்மை யின்மையின்
பைத லாவ தென்று பாது காத்தி
ரங்கு பாவியேற்கு
ஈத லாது நின்க ணொன்றும் வண்ண
மில்லை யீசனே. 

பொழிப்புரை :

சிவனே! நான் உன்னை அடைய இருப்பது எப்பொழுதோ? எனக்கு உன்னையன்றி வேறு புகலிடம் இல்லாமை யால், என் துன்பத்தை நோக்கி இரங்கிக் காத்தருளல் வேண்டும். இவ்வாறு நீயே ஆட்கொண்டருளினாலன்றி, நான் உன்னை அடையும் வகையில்லை.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `எம்பிரான், ஈசனே, நின்னை யான் எய்தலாவது என்று? வஞ்சனேற்கு உய்தலாவது நின்கண் (ஒன்றுதலாகிய உண்மை) யன்றி மற்றொர் உண்மை இன்மையின் (நீ என்னைப் புறக்கணித்துவிட்டால்) ஆவது பைதல் என்று நினைந்து பாவியேற்கு இரங்கிப் பாதுகாத்தருள்; ஈதலாது (யான்) நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை`.
``ஆவது`` மூன்றில் முதலது, உண்டாவது; இடையது, இடைச்சொல், இறுதியது, விளைதல். பைதல் - துன்பம். ``பாதுகாத்து இரங்கு`` என்றதனை, `இரங்கிப் பாதுகா` எனப் பின் முன்னாக்கி உரைக்க. ``ஈது`` என்றது, இதனையே சுட்டிற்று.
ஒன்றும் வண்ணம் - ஒன்றாதற்கு வழி; அன்றி, `வண்ணம் ஒன்றும் இல்லை` என மாற்றி, `இதுவல்லது உன்னிடம் நான் வேண்டு வது ஒன்றும் இல்லை` என்று உரைத்தலுமாம். மூன்றாம் அடியில் ``பைதல்`` என்றதன் முதலெழுத்து ஒன்றரை மாத்திரையாய் நின்று எதுகையாயினமையின், நான்காம் அடியின் முதலெழுத்து இரண்டு மாத்திரையாய் நின்று எதுகையாயிற்று. மூன்றாமடியில், `பய்தல்` என்று பாடம் ஓதுதலும், அவ்விடத்து, `நான்காம் அடியின் முதலெழுத்து ஓசையொப்புமையான் எதுகையாயிற்று; இன்னோரன்னவை உயர்ந்தோர் செய்யுட் கண்வரும் ஒப்பியல் என்று உரைத்தலுமே சிறப்புடைய வாம். இவ்வொப்பியலை, `ஆரிடப் போலி` என்பர்.

பண் :

பாடல் எண் : 78

ஈச னேநீ அல்ல தில்லை இங்கும்
அங்கும் என்பதும்
பேசி னேனொர் பேத மின்மை பேதை
யேனென் எம்பிரான்
நீச னேனை ஆண்டு கொண்ட நின்ம
லாஓர் நின்னலால்
தேச னேஓர் தேவ ருண்மை சிந்தி
யாது சிந்தையே.

பொழிப்புரை :

இறைவா! இவ்வுலகம் அவ்வுலகம் ஆகிய எல்லாம் நீயே ஆகியிருப்பதால், உனக்கு வேறான பொருள் ஒன்றும் இல்லை என்று என் அறிவுக்கு எட்டியவாறு நான் கருதுவேன். அங்ஙனம் எண்ணவில்லையேல் நான் நீசன் ஆவேன். உனக்குப் புறம்பாக வேறு ஒரு பொருள் இல்லாததால் நீ பரம்பொருள். எங்கும் ஒரே ஒளிப்பிழம்பாக நீ இருப்பதால் நான் சிந்திப்பதற்கு மற்றோர் ஒளி வடிவம் ஏதும் இல்லை.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `ஈசனே, எம்பிரான், நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா, தேசனே, இங்கும் அங்கும் நீயல்லது இல்லை என்பதும், ஓர் பேதம் இன்மையும் பேதையேன் பேசினேன்; என் சிந்தை, ஓர் நின்னலால் ஓர் தேவர் உண்மை சிந்தியாது` எனக் கூட்டி, `ஆதலின் எனக்கு இரங்கியருள்` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
இங்கும் - உலக நிலையிலும். அங்கும் - வீட்டு நிலையிலும். இல்லை - வேறு துணை இல்லை. ஓர் பேதம் - சிறிது வேற்றுமை; என்றது, எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்றல்.
`ஓர் பேதமும்` என்னும் இழிவு சிறப்பும்மையும், `இன்மை யும்` என்னும் எண்ணும்மையும் தொகுத்தலாயின.
ஓர் நின்னலால் - ஒப்பற்ற உன்னையன்றி. `பேதமின்மையை எடுத்தோதியது` எல்லாவற்றையும் சிவமாகக் காணும் உணர்வு பெற்றமையைக் குறித்தற்கு.

பண் :

பாடல் எண் : 79

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில்
ஐம்பு லன்களான்
முந்தை யான காலம் நின்னை எய்தி
டாத மூர்க்கனேன்
வெந்தை யாவி ழுந்தி லேனென் உள்ளம்
வெள்கி விண்டிலேன்
எந்தை யாய நின்னை இன்னம் எய்த
லுற்றி ருப்பனே. 

பொழிப்புரை :

மனம் முதலியவற்றால் முற்காலத்தில் உன்னை அடையாத மூர்க்கனாகிய நான், வெந்தொழிந்தேனில்லை. என் மனம் குன்றி, வாய் விட்டலறினேனில்லை. இன்னும் உன்னையடைய நினைத்திருக்கிறேன்.

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இதனுள், ``செய்கை`` என்றது, அதற்குக் கருவியாகிய கன்மேந்திரியங்களைக் குறித்தன. இசை யோசையைக் கேட்கும் வழியன்றி எழுத்தோசையைக் கேட்கும் வழிச் செவி ஐம்பொறிகளின் வேறு வைத்து எண்ணப்படுமாகலின், அதனை, `கேள்வி` என வேறாக ஓதினார். சீர் இல் - சிறப்பில்லாத. இது தாப்பிசையாய், முன்னரும் சென்று இயையும். ``புலன்கள்`` என்றது பொறிகளை. மெய்ந்நெறியில் தொழிற்படும் கருவி கரணங்கள் சிறப்புடையன (வீட்டுநிலையின) ஆகலின், உலகியலிற் செல்லும் அவற்றை, `சிறப்பில்லன` என்றார். `சிறப்பில்லன` என்றது, `இழிவுடையன` என்னும் பொருட்டு. இழிவு, பிறவியில் வீழ்த்தல். இம் முதலடியில், அடிகள் இறைவனை அடைதற்குத் தடைசெய்தவற்றை விதந்தோதியருளினார், முந்தை யான காலம் - முதலாய் நின்ற காலம்; அஃது இறைவனால் ஆட் கொள்ளப்பட்ட காலமாம். இதற்கு, `ஆட்கொள்ளப்படுதற்கு முற்பட்ட காலம்` என உரைப்பாரும் உளர். அப்பொழுது எய்தாதொழிந் தமைக்கு அடிகள் இத்துணை இரங்குதற்கு ஓர் இயைபின்மையின், அஃது உரையாகாமை அறிக. விழுந்திலேன் - அழிந்திலேன். இனி, ``வெந்து விழுந்திலேன்`` என்றதனை, `விழுந்து வெந்திலேன்` எனப் பின் முன்னாக்கி, `தீயின்கண்` என்பதனை வருவித்து உரைப்பாரும் உளர். உள்ளம் வெள்கி விண்டிலேன் - நெஞ்சம் வெள்கிப் பிளந்திலேன். `நின்னை எய்தலுற்று இன்னம் இருப்பன்` என்க. எய்தலுற்று - எய்த விரும்பி. இருப்பன் - உயிர்வாழ்வேன். `அன்று நீ அழைத்த காலத்தில் அடையாது, இன்று அடைவதற்கு அவாவு கின்றேன்; இஃது என் அறியாமை இருந்தபடி` என்பதாம். முன்னர் இறைவனது குறிப்பின்வழிச் செல்லாது தம் குறிப்பின்படியே நின்றமை குறித்து, `மூர்க்கனேன்`` என்று அருளிச்செய்தார். `அம் மூர்க்கத் தன்மையின் பயனை இப்போது அடைகின்றேன்` என வருந்தியவாறு. இத் திருப்பாட்டு, அடிகளது உண்மையுள்ளத்தை எத்துணைத் தெளிவாகக் காட்டுகின்றது!

பண் :

பாடல் எண் : 80

இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை ஆண்டு
கொண்ட நின்னதாட்
கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க
லந்து போகவும்
நெருப்பு முண்டு யானு முண்டி ருந்த
துண்ட தாயினும்
விருப்பு முண்டு நின்கண் என்கண் என்ப
தென்ன விச்சையே.
 

பொழிப்புரை :

இரும்பு போலும் வன் மனத்தையுடைய நான், என்னை ஆண்டருளின உன் திருவடியைப் பிரிந்தும், தீப்பாய்ந்து மடிந்திலேன். இத்தன்மையேனாகிய என்னிடத்தில், உனக்குச் செய்ய வேண்டிய அன்பிருக்கின்றது என்பது என்ன மாய வித்தை?

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`நின` என்பது, விரித்தல்பெற்றது. ``தாள்`` என்றது, அதன்கண் எழும் இன்பத்தைக் குறித்தது. கருப்பு மட்டு - கருப்பஞ் சாறு. எனைக் கலந்து - என்னை அடைந்து; `எனக்குக் கிடைத்து` என்றபடி. `எனைக் கலந்து வாய்மடுத்து` என மாற்றி, `கலந்தமையால் யான் வாய்மடுத்த பின், நீங்கிப் போகவும்` என உரைக்க. `போகவும் இருந்தது` என இயையும். ``நெருப்பும் உண்டு` என்றதன்பின்னும், ``யானும் உண்டு`` என்றதன் பின்னும், `ஆக` என்பது வருவிக்க. `உண்டு` என்பது மூவிடத்திற்கும் பொதுவாய் வருதல், பிற்கால வழக்கு. இருந்தது - நெருப்பில் வீழாது உயிர்வாழ்ந்திருந்தது. அதாயினும் - அந்நிலை உண்டாய பின்னும். `அஃதாயினும்` எனப்பாடம் ஓதுதல் பொருந்தும். `என்கண் நின்கண் விருப்பும் உண்டு` என மாறுக. விருப்பு - அன்பு. `உயிர்வாழ்தலோடு இதுவும் உண்டு` எனப் பொருள் தருதலின், ``விருப்பும்`` என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சம். என்ன விச்சை - என்ன மாய வித்தை. ஒருவரது அன்பிற்குரிய பொருள் நீங்கியபின் அவர் உயிர்வாழ்தலும், ஒருபொருள் நீங்கியபின்னும் உயிர்வாழ்வார் அப்பொருள்மேல் அன்புடையர் எனப்படுதலும் இயல்வன அல்ல ஆகலின், ``நின்ன தாள் கருப்புமட்டுப் போகவும் யான் இருந்ததுண்டு; அதாயினும் என்கண் நின்கண் விருப்பும் உண்டு என்பது என்ன விச்சை`` என்றார். ``நெருப்பும் உண்டு; யானும் உண்டு`` என்றது, `யான் நெருப்பில் வீழாமைக்கு நின்பால் அன்பின்மையே காரணம்; பிறிதொரு காரணம் இல்லை` என்பதனை வலியுறுத்தவாறு. `என் அவிச்சை` எனப் பிரித்து, `உன்பால் எனக்கு அன்பு உண்டு என்பது என் அறியாமையே` என்று உரைப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 81

விச்சுக் கேடுபொய்க் காகா தென்றிங்
கெனைவைத்தாய்
இச்சைக் கானா ரெல்லாரும் வந்துன்
தாள்சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன்
ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்னான் செய்கேன்
பேசாயே. 

பொழிப்புரை :

இறைவனே! பொய்க்கு வேறொரு இடம் இல்லை என்று என்னை இங்கு வைத்தாய். உன் மெய்யன்பர் யாவரும் உன் திருவடியை அடைந்தார்கள். நான் பிறவி அச்சமாகிய கடலில் மூழ்குதலன்றி வேறு என்ன செய்யக் கடவேன்?

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

இப்பகுதியில் அடிகள், ஏனைய அடியார்கள் பெற்ற பெரும்பேற்றை நினைந்து தமக்கு அதுவாயாமைக்கு வருந்தி, அதனைத் தந்தருளுமாறு பல்லாற்றானும் வேண்டுகின்றார். இவ் வருத்தத்தினையே, `ஆனந்த பரவசம்` என்றனர் போலும் முன்னோர்!
விச்சு, `வித்து` என்பதன் போலி. கேடு - அழிவு. `பொய்ம்மைக்கு விதைக்கேடு உண்டாதல் கூடாது என்னும் கருத்தினால் என்னை இவ்வுலகத்தில் வைத்தாய்` என்க. எனவே, `பொய்ம்மைக்கு விதை தாமல்லது பிறரில்லை` என்றவாறாயிற்று. ``என்னை வகுத்திலை யேல்இடும் பைக்கிடம் யாது சொல்லே`` என்ற திருநாவுக்கரசர் திருமொழியையும் (தி.4.ப.105.பா.2) காண்க. பொய்ம்மையாவது, பிறவி. பிறக்கும் உயிர்கள் பல உளவேனும், அப் பிறவி நீங்கும் வாயிலைப் பெற்றபின்னும் அதன்வழியே பிறவியை ஒழிக்கக் கருதாது மீளப் பிறவிக்கு வாயிலைப் பற்றி நிற்பதோர் உயிரில்லை என்னும் கருத்தால், இவ்வாறு கூறினார். கூறவே, `அவ்வாயிலைப் பெற்ற ஏனைய அடியவர் பலரும் பிறவா நெறியை அடைந்தனர்; யான் அதனை அடைந்திலேன்` என்பது போதரலின், அதனையே இரண்டாம் அடியில் கிளந்தோதினர் என்க. இச்சைக்கு ஆனார் - உன் விருப்பத்திற்கு உடன்பட்டவர்கள்; என்றதனால், அடிகள் அதற்கு உடம்பட்டிலாமை பெறப்பட்டது. அச்சம், பிறவிபற்றியது. `இஃது இப்பொழுது உள்ள எனது நிலை` என்றபடி. `யான் செய்யத் தக்கதைச் சொல்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 82

பேசப் பட்டேன் நின்னடி யாரில்
திருநீறே
பூசப் பட்டேன் பூதல ரால்உன்
அடியானென்று
ஏசப் பட்டேன் இனிப்படு கின்ற
தமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன்
அடியேனே. 

பொழிப்புரை :

உன் அடியாருள் ஒருவனாகச் சொல்லப்பட்டேன். திருவெண்ணீற்றால் பூசப்பட்டேன். இறைவனே! உன் அடியவன் என்று உலகத்தோரால் இகழப்பட்டேன். இவ்வளவும் போதாது என்று மேலும் உனக்கு ஆசைப்பட்டேன். அடிமைப்பட்டேன்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

பொருள்கோள்: `திருநீறே (உன்னால்) பூசப்பட்டேன்; அதனால், பூதலரால் (முன்) உன் அடியாரில் (வைத்துப்) பேசப் பட்டேன்; (இப்பொழுது அவர்களால்) உன் அடியான் (படுகின்ற துன்பம் இது) என்று ஏசப்பட்டேன்; இனி (இத் துன்பத்தைப்) படுகின்றது (உன் அடியான் என்ற நிலைமைக்குப்) பொருந்தாது; (ஆதலின்) உனக்கு ஆட்பட்டேனாகிய உன் அடியேன், அவ்வடி யார்க்கு உரிய அந்நிலையைப் பெற ஆசைப்பட்டேன்.`
``திருநீறே பூசப்பட்டேன்`` என்றதில் உள்ள ஏகாரம், ஏனைய அடியார்கள்போல உடன்வரும் நிலைமையை அருளாமையைப் பிரித்து நின்றது. `அடியான்` என்னும் சொல், பிறிதொரு சொற் குறிப்பானன்றித் தானே இழிவுணர்த்தாமையின், இது தன்னையே இகழுரையாக உரைத்தல் பொருந்தாமையறிக. `ஏசப்பட்டேன்` என்றமையால், ``இனிப்படுகின்றது`` என்றது, துன்பத்தை என்பதும், ``உன் அடியேன்`` என்றதனால் ஆசைப்பட்டது அதற்கேற்ற நிலையை என்பதும் பெறப்பட்டன. `அதனைத் தந்தருள்` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 83

அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை
கொல்லோ
அடியா ரானா ரெல்லாரும் வந்துன்
தாள்சேர்ந்தார்
செடிசேர் உடலம்இது நீக்க மாட்டேன் எங்கள்
சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு
காணேனே. 

பொழிப்புரை :

நான் உன் அடியனல்லேனோ? நீ என்னை ஆட்கொண்டது இல்லையோ? உன் அடியார் எல்லோரும் உன் திருவடியை அடையவும் நான் இந்த உடம்பை ஒழியாதிருக்கிறேன். கொடியேன் உன்னைக் காணும் வழி கண்டிலேன்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

முதலடியை ஈற்றில் வைத்து உரைக்க. ``கடியேன்`` என்றதனை, ``சேர்ந்தார்`` என்றதன்பின்னர்க் கூட்டுக. செடி - துன்பம். காணுமாறு - காணும் வாயிலை. ``காணேன்`` என்றதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. ஆட்கொள்ளப்பட்டு அடியராயினார் பெற்ற பயன் தமக்கு எய்தாமையின், `இறைவன் தம்மை ஆட் கொண்டதாக நினைப்பது மயக்கமோ` என்று ஐயுறுவார்போல அருளி னார். பாவினங்களின் அடிகட்கும் பிற்காலத்தார் சீர்வரையறுத்தாரா யினும், அவற்றுள் சில அடிகள் சீர்மிக்கு வருதலும் முன்னைய வழக் கென்பது சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலியவற்றாலும் அறியப்படும்.
அவ்வாற்றானே இத்திருப்பாட்டுள் இரண்டாமடி யொழிந்தவை அறுசீரடியாயின. மேல் வருவனவற்றுள்ளும் சில பாடலிற் சிலவும், பலவும் இவ்வாறு வருதல் காண்க. பத்துத் திருப் பாடலையும் ஓரினச் செய்யுளாகவே செய்யப் புகுந்தமையின், நான்கடியும் அறுசீராயினவும் ஈண்டு, `கலித்துறை` என்றே கொள்ளப் படும்.

பண் :

பாடல் எண் : 84

காணு மாறு காணேன் உன்னை
அந்நாட்கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்ததென்ன
பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தாசெத்தே
போயினேன்
ஏணா ணில்லா நாயினேன் என்கொண்டெழுகேன்
எம்மானே. 

பொழிப்புரை :

பரஞ்சோதியே! ஆணே! பெண்ணே! ஆர் அமுதே! அத்தா! எம்மானே! உன்னை அடையும் மார்க்கத்தை நான் கண்டிலேன். அன்று உன்னைக் கண்டபின் நான் வீண்பேச்சுப் பேசி ஒரு நலனையும் அடைந்திலேன். செத்துப்போன நிலையில் இப்போது இருக்கிறேன். என் கீழ்மையைக் குறித்து நான் வெட்கப்பட வில்லை. மேல்நிலை அடைவதற்கான ஆற்றல் என்னிடத்து இல்லை. நான் எப்படி உய்வேன்?

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

`கண்டேனேனும்` என்பது `கண்டேனும்` எனத் தொகுத்தலாயிற்று. பாண் - பாணர் மொழி; இன்சொல். `உன்னை யான் அந் நாட்கண்டேனேனும் இன்று காணுமாற்றைக் காணேன்; அதனால், என்னை அன்று இன்சொற் பேசி உன்பாற் படுத்தது என் கருதி` என உரைக்க. `உனது காட்சியை முன்போல வழங்கி, ஏனையோர் போல என்னையும் அழைத்துச் செல்லவேண்டும்` என்பது கருத்து. இறைவன், `ஆண், பெண்` என்னும் இருவகைப் பிறப்பினையுடைய எல்லா உயிர்களிலும் கலந்துள்ளமை பற்றி, `ஆணே பெண்ணே` எனவும், `அருளாதொழியின் நான் அழிந் தொழிதல் திண்ணம்` என்றற்கு, ``செத்தேபோயினேன்`` எனவும் அருளினார். ஏண் - வலிமை. ``நாண்`` என்றதன்பின், `இரண்டும்` என்பது தொகுத்தலாயிற்று. என் கொண்டு - எதனைத் துணையாகக் கொண்டு. எழுகேன் - கரையேறுவேன்.

பண் :

பாடல் எண் : 85

மானேர் நோக்கி யுடையாள் பங்காமறையீ
றறியாமறையோனே
தேனே அமுதே சிந்தைக்கரியாய் சிறியேன்
பிழைபொறுக்குங்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன்
சிவமாநகர்குறுகப்
போனா ரடியார் யானும் பொய்யும்புறமே
போந்தோமே. 

பொழிப்புரை :

மான் விழி போன்ற விழிகளையுடைய உமாதேவி யாரின் பாகா! வேத வேதாந்தத்துக்கு எட்டாத மறைபொருளே! தேனே! அமிர்தமே! மனத்துக்கு எட்டாதவனே! என் குற்றத்தை மன்னித்து அருளும் அரசே! என் குறைபாட்டை நான் பரிந்து உன் னிடம் முறையிட்டேன். அதாவது உன் அடியார்கள் உனக்கு உரியவர் கள் ஆயினர். நானோ பொய்யாகிய பிரபஞ்சத்துக்கு உரியனாய், நானும் பிரபஞ்சமும் உனக்கு வேறாக இருந்து வருகிறோம்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

``கொடுமை`` என்றதில், பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபு விரிக்க. பறைந்தேன் - விரைந்தேன். `கொடுமை செய்வதற்குச் சிறிதே விரைந்தேன்` என்றபடி. இறைவன் தம் முன் இருந்து மறைந்த அந்நாளில் உடன் செல்ல மாட்டாதிருந்தமையையே அடிகள், சிறிது கொடுமை செய்ய விரைந்ததாக அருளினார். அஃது இறைவன் திருக்குறிப்பிற்கு மாறாதல்பற்றி, ``கொடுமை`` என்றார். எனினும், `பிழை` என்பதே பொருளாகக் கொள்ளற்பாற்று. `நீ அடியவர் செய்யும் பிழையைப் பொறுக்கும் தலைவனாதலின் பொறுத்தருளவேண்டும்` என்பார், ``சிறியேன் பிழைபொறுக்குங் கோனே`` என விளித்தார்.
`யான் அடியவரோடு சிவமாநகர் குறுகப் போகாமல், பொய்ம்மையோடு வேறோரிடம் குறுகப் போனேன்` என்பார், ``யானும் பொய்யும் புறமே போந்தோம்`` என்றார். இங்ஙனம் பொய்ம்மையைத் தம்மோடு ஒப்பவைத்து எண்ணியது, `அது வல்லது எனக்கு நட்புப் பிறிதில்லை` எனக் கூறுமுகத்தால், அப் பொய்ம்மையால் தமக்குக் கேடு விளைந்தமையைக் குறித்தற்கு. பொய்ம்மை, இறைவன் வழியையன்றித் தம்வழியைப் பொருளாகத் துணிந்தமை. சிவமாநகர்க்குப் புறமாவது இவ்வுலகு. `நின்னிற் சிறந்த பொருள் பிறிதில்லையாகவும் உளதாக எனது பேதைமையால் நினைந்தேன்` என்றற்பொருட்டே முதற்கண் இறைவனை, `தேனே! அமுதே!` என்றற்றொடக்கத்தனவாகப் பலவற்றான் விளித்தருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 86

புறமே போந்தோம் பொய்யும் யானும்
மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம்
பெற்றேன்யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
மற்றொன்றறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே
நின்தாள்சேர்ந்தாரே. 

பொழிப்புரை :

ஆன்மாவாகிய நானும் உலகம் ஆகிய மாயையும் உனக்குப் புறம்பானோம். உன்பால் பத்தி பண்ணுவதற்கான உறுதி யான தெய்வீகத் தன்மை என்னிடம் இல்லை. உன்னைத் தவிர வேறு எதையும் அறியாத பரிபக்குவ உயிர்கள் தங்கள் ஆன்ம போதத்தை அகற்றி உன்பால் இரண்டறக் கலந்தன. அதற்காக அவர்கள் பத்தி மார்க்கத்தைத் தீவிரமாகக் கையாண்டனர்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

வல்லேன் - மாட்டேன்; இது, `வல்லுதல்` என்னும் தொழிலடியாகப் பிறந்த எதிர்மறைவினை; `வன்மை` என்னும் பண்படியாகப் பிறந்ததாயின், `வன்மையுடையேன்` எனப் பொருள் படும். இதன்பின், `ஆதலின்` என்பது வருவித்து, `மாட்டாமையான் அல்லாத தன்மையை (பொய்யன்பை)ப் பெற்றேன்` என உரைக்க.
`இஃது என் தன்மை, நின்னை முற்றச் சார்ந்த அடியவரே உன்னை யன்றிப் பிறிதொன்றைப் பொருளாக அறியாதவர்; அதனால், வீடு பேற்றிற்குரியவற்றையே செய்து உனது திருவடியை அடைந்தார்` என்பது பின்னிரண்டடிகளின் பொருள். அறவே - முற்றிலும். சிறவு - சிறப்பு; வீடுபேறு; இஃது இதற்கு ஏதுவாய செயல்களைக் குறித்தது.
நிரம்பிய அடிமையை உடையவரது செயல்கள் இவை எனவே, இவற்றின் மறுதலையாயவை தமது செயல்கள் என்பதும், அதனால் தாம் இறைவன்தாள் சேராராயினார் என்பதும் கூறியவாறாயிற்று. ஆகவே, `யான் இங்குக் கிடந்து அலமருதல் என் குற்றமன்றி உன் குற்றம் அன்று` என்பதும் குறித்தவாறாம். ``என்னா லறியாப் பதந்தந்தாய் யான் அதறியாதே கெட்டேன் - உன்னால் ஒன்றுங் குறைவில்லை`` (தி.8 ஆனந்த மாலை 2.) எனப் பின்னர் வெளிப்படையாகவே அருளிச்செய்வர்.

பண் :

பாடல் எண் : 87

தாராய் உடையாய் அடியேற் குன்தா
ளிணையன்பு
பேரா உலகம் புக்கா ரடியார்
புறமேபோந்தேன்யான்
ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங்
குன்தாளிணையன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல்கொண்
டழுகேனே. 

பொழிப்புரை :

இறைவனே! அடியேன் உன் திருவடிக்கு அன்பு செய்யும்படிச் செய்தருள வேண்டும். அடியார் முத்தியுலகம் புக, யான் புறம் போந்தேன். ஊர்ப் பசுக்கள் மேய்தற்கு வரக் கூடவே குருட்டுப் பசுவும் வந்ததுபோல, அன்பர் உன் திருவடிகளுக்கு அன்பு செய்ய நானும் அன்பு செய்ய விரும்பி அழுகின்றேன்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. மிலைத்தல் - கனைத்தல். `ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்து` என்றது. ஊரிலுள்ள ஏனைய பசுக்கள் மாலைக்காலத்தில் தம் இல்லத்தை அணுகியபொழுது தம் கன்றுகளைக் கனைத்து அழைக்க, குருட்டுப் பசுவும் தன் இல்லத்தை அணிமையிற் கண்டது போலத் தன் கன் றினைக் கனைத்து அழைத்தலையாம். `மிலைத்து` என்றது, `மிலைத் தது` போன்ற செயலைச் செய்து` என உவமை குறித்து நின்றது. `கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன்`, `பனிநீராற் பரவை செயப் பாவித் தேன்` (தி.4.ப.5.பா.1,4) என்றாற்போல. இதனால், `மெய்யடியார்கள் நீ பேரின்பப் பொருளாதலை உணர்ந்து உன்னை, `தேனே அமுதே கரும்பின் தெளிவே, என்று இன்புற்றுப் புகழ, அதனைக் கண்டு யானும் அவ்வாறே புகழ்கின்றேன்` எனக் குறித்தவாறாம். `மிலைத்து ஆரா` என இயையும். மிலைத்து - மிலைத்தலால். ஆரா - பொருந்தாத; ஏற்புடையேனாகாத. வருகின்ற திருப்பாட்டு, `அழுகேன்` எனத் தொடங்குதலால், இப்பாட்டின் இறுதிச் சொல்லை, `எழுகேன்` என ஓதுதல் பாடமாகாமையறிக. ``மிலைத் திங்கு`` என்ற பாடத்தை, மிலைத்தாங்கு` என ஓதி, அதனை, அன்பு வேண்டி அழு தற்கு வந்த உவமையாக்கி உரைப்பாரும் உளர். ``மயல் கொண்டு`` என்றதற்கு, ``ஆசைப்பட்டு`` எனப் பொருள் உரைப்பாரும் உளர். மோனை கருதி, `போரா உலகம்` எனப் பாடம் ஓதி, `போதா` என்பது, ``போரா`` என மருவிற்று எனக் கொள்ளுதலும் உண்டு.

பண் :

பாடல் எண் : 88

அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய்
அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார்
கழல்கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந்
தொடராதே
பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப்
பணிகேனே.

பொழிப்புரை :

உன்னிடத்து மெய்யன்பு உடையவராய் ஒளி பொருந்திய பொன் போன்ற உன் திருவடிகளைக் கண்டு தீயில் இட்ட மெழுகை ஒத்தவராய் உன் அன்பர்கள் தொழுது உன்னைப் பின் பற்றினர். அவர்களைப் பின்பற்றாமல் நான் புன்மைக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன். எம்முறையைக் கையாண்டு நான் உன்னை வழுத்துவது என்று எனக்கு விளங்கவில்லை.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

`அழல்சேர்ந்த மெழுகே அன்னாராகிய தொடர்ந்தார்` என்க. `மெழுகே அன்னார் தொடர்ந்தார்; அவரோடும்` என ஓதற் பாலதனை இங்ஙனம் சுருங்க ஓதினார். பழுது - குற்றம். `பிறந்தேன்` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. என்கொண்டு - என்ன முறைமையைக் கொண்டு. ``பணிகேன்`` என்றது, `பணிந்து இரக்கேன்` என்னும் பொருளதாய் நின்றது. இரத்தல், பேரா உலகத்தையாம். அன்பாம் மனத்தோடு அழுதல் உண்மையே; ஆயினும், உன்னைத் தொடர்ந்தாரோடு கூடி உன்னைத் தொடராது நின்ற யான் இப்பொழுது என்ன முறைமைபற்றி என்னை உன்பால் அழைத்துக் கொள்ளும்படி உன்னை வேண்டுவேன்` என்றவாறு. ``பிறந்தேன்,`` வினையாலணையும் பெயர்.

பண் :

பாடல் எண் : 89

பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய
அடியார்க்குன்
அணியார் பாதங் கொடுத்தி அதுவும்
அரிதென்றால்
திணியார் மூங்கி லனையேன் வினையைப்
பொடியாக்கித்
தணியார் பாதம் வந்தொல்லை தாராய்
பொய்தீர்மெய்யானே. 

பொழிப்புரை :

இறைவனே! அடியவர்க்குப் பிறவிப் பிணியை நீக்கியருளி உன் திருவடியைத் தந்தருள்வது அருமையானால், மனக் கோட்டத்தை உடையவனாகிய என் வினைகளை நீறாக்கி உன் திருவடியை எனக்குத் தந்தருள்வது அருமையே. ஆயினும் எனக்கு உன்னை அன்றி வேறு புகலிடம் இல்லாமையால் என்னைத் திருத்தி ஆட்கொண்டு உன் திருவடியைத் தந்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

``பணிவார்`` என்றது முற்று. ``பழைய அடியார்`` எனப் பின்னர் வருகின்றமையின் வாளா, ``பணிவார்`` என்றார். எனவே, `பழைய அடியார் உன்னையே பணிவார்; அவர்க்குப் பிணி தீர்த்தருளி உன்பாதங் கொடுத்தி` என உரைத்தல் உரையாயிற்று. புனல் காலே உண்டியாக, கானின்று வற்றியும் புற்றெழுந்து செய்யும் தவங்களினும் இறைவனை வணங்குதல் எளிதிற் செயற்பாலதாகலின், ``அதுவும் அரிதென்றால்`` என்றார். ``யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை`` (தி.10 திருமந்திரம்-252) என்று அருளியதும் காண்க.
``வினையைப் பொடியாக்கி`` என்றதனால், `அதனையும் எனக்கு அரிதாகச் செய்தது என்வினை என்றால், அவ்வினையை முதற்கண் நீக்கி உன்னைப் பணியச்செய்து, பின்பு வந்து உன் பாதம் தாராய்` என்பது பொருளாயிற்று. ``ஒல்லை`` என்றதனை, ``பொடியாக்கி`` என்றதற்கு முன்னே கூட்டுக. பொய்தீர் மெய்யானே - பொய்யை நீக்கியருளுகின்ற மெய்ப்பொருளாய் உள்ளவனே.

பண் :

பாடல் எண் : 90

யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்
பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே
தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்
துறுமாறே. 

பொழிப்புரை :

இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்ம்மையுடையவர்கள் ஆனோம். ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

``யானே`` என்னும் பிரிநிலை ஏகாரம் சிறப்புணர்த்தி நின்றது. சிறப்பு, `உறுப்பும், பண்பும்` ஆகியவற்றிற்கு முதலாய் நிற்றல். ``நெஞ்சு`` என்றது நினைப்பினை. ``யானே பொய்`` என்றதனால், `நெஞ்சும் பொய், அன்பும் பொய்` என்றவை, வலியுறுத்தல் மாத்திரை யாய் நின்றன.
`இங்ஙனமாயின் வருந்தினால் மட்டும் உன்னைப் பெறுதல் கூடுமோ? கூடாதாகலின், அடியேன் உன்னை வந்து அடையும் வழியை அருளாய்` என்பது ஏனைய அடிகளின் பொருள். ``உருகுவது உள்ளங்கொண்டு ஒர்உருச் செய்தாங்கு எனக்கு அள்ளூறாக்கை அமைத்தனன்`` (தி.8 திருவண்ட-175-177.) ``மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து...கண்ணீரரும்பி....உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்`` (தி.8 திருச்சதகம்-1) என்றாற் போல் முன்னரும் இவ்வாறே பின்னரும் அடிகள் பல விடத்தும் அருளுதலின், அவர் இறைவன் மாட்டு உள்ளம் நெக்குருகி இடையறாது கண்ணீர் பெருக்கி நின்றமை தெளிவாதலின், அவர் அந் நிலையைப் பெறாது அதனையே அவாவி நின்றாராக வைத்து, ``பெறலாமே`` என்றதற்கு, `பெறுதல் கூடும்` என உடன்பாடாகப் பொருளுரைத்தல் பொருந்தாமையறிக.
இங்ஙனமாகவே, ``என் அன்பும் பொய்`` என்றது, மெய்விதிர்த்தல், கண்ணீரரும்புதல் முதலியவை நிகழாமை பற்றிக் கூறியதாகாது, ``முனைவன் பாதநன் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலைகீறேன்`` ``தீயில் வீழ்கிலேன் திண்வரையுருள்கிலேன்`` (தி.8 திருச்சதகம்-37,39) என்றாற் போல அருளிய நிலைபற்றியே வருந்தி அருளிச்செய்ததாதல் அறியப்படும்.
படவே, எய்தவந்திலாதார் எரியிற் பாய்ந்தமை (தி.8 கீர்த்தி-132) போல்வதொரு செயலால் இறைவன் திருவடியைப் பெறுதல் கூடு மன்றி, அதுமாட்டாது ஏங்கி அழுதலால் மட்டும் பெறுதல் கூடாது` என்பதனையே, ``அழுதால் உன்னைப் பெறலாமே`` என்று அருளினார் என்பது இனிது விளங்கும். இன்னும், `பெறுதல் கூடும்` என்பது கருத்தாயின், `ஆனாலும்` என உம்மை கொடுத்து ஓதுதல் வேண்டும் என்க.

பண் :

பாடல் எண் : 91

மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாக நோக்கியுங்
கீறி லாதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே. 

பொழிப்புரை :

இறைவனே! உன் மெய்யன்பர் முந்திவந்து உன் திருவடிக்கு அன்பு செய்து உன் மெய்ந்நிலையை அடைந்தார்கள். முடிவில்லாத பெரியோனாகிய நீ ஒளியையாகி எழுந்தருளி என்னைக் கடைக்கண் நோக்கியருளியும் மனமுருகாத நான் கடைப்பட்டேன். இது என் தீவினைப் பயனேயாம்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

முன்னைப் பகுதியில், இறைவன் பிரிவினால் உயிர் விடத் தக்க ஆற்றாமையைத் தரும் பேரன்பினை வேண்டிய அடிகள், இவ் இறுதிப் பகுதியில், அவ்வன்பின் முடிந்த பயனாகிய திருவடி கூடுதலையே வேண்டுகின்றார். இது பற்றியே இதற்கு, `ஆனந்தாதீதம்` எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். ஆனந்த அதீதம் - இன்பத்தை வேறாக உணரும் உணர்வும் அடங்கப் பெற்று, அவ்வின்பத்தில் அழுந்திநிற்கும் நிலை.
மாறுஇலாத - வற்றுதல் இல்லாத. ``வந்து முந்தி`` என்றதனை, உன் மெய்ம்மை மேவினார் என்றதற்கு முன்னர்க் கூட்டி ``உன்பால் வந்து, என்னின் முற்பட்டு` என உரைக்க; மலர்கொள் - மலர்தலைக் கொண்ட; எங்கும் நிறைந்த. `தாளிணையின்` என, நீக்கப் பொருட்கண் வந்த இன்னுருபு விரிக்க. வேறு இலாப் பதம் - வேறாதல் இல்லாத பக்குவம். பரிசு - தன்மை. மெய்ம்மை - நிலையான இன்பம்; ஆகுபெயர். `என் உடம்பு ஒளிசெய் மானுட மாம்படி நோக்கியும்` என உரைக்க. ஒளிசெய்தலை, ஞானத்தைத் தருதலாகக் கொண்டு இறை வற்கு ஆக்கின், `ஆக` என்றதனை, `ஆகி` என ஓதுதல் வேண்டும். கீறிலாத - கிழிக்க இயலாத; வலிய. `ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாம் அடங்காதவர், ஓதி உணராத பேதையாரினும் பெரும்பேதை யாராதல் போல, நீ எதிர்வந்து அருள்செய்யப்பெற்றும் உருகாத நெஞ் சத்தையுடைய நான், அவ்வாறு அருள்செய்யப்பெறாத கடையரினும் பெரிதும் கடையனாயினேன்` என்றதாம். `நான் பட்டகீழ்மை இது` எனப் பயனிலை வருவித்து முடிக்க. `இக்கீழ்மையை நீக்கி, உன் மெய்ம்மை அன்பர் பெற்ற நிலையை எனக்கும் அளித்தருள்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 92

மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ணம் என்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே. 

பொழிப்புரை :

இறைவனே! நீயே எழுந்தருளி என்னை ஆட்கொண்ட பிறகு உன்னை எளிதாய் நினைத்ததே அன்றி அரிதாய் நினைத்தேனில்லை. ஆயினும் உன் மெய்யடியார் உன் உண்மை நிலையையடைய, நானொருவனுமே இந்தவுலகத்தில் தங்கியிருக்க விட்டு நீ போவது உனக்குத் தகுதியாமோ?

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மழ - மழவு; குழவி. ``என்று`` என்றதனை, `என` என்று திரித்து, உவம உருபாக்குக. ``மழக் கையிலங்கு பொற்கிண்ணம் என்றலால்`` என ஓதினாரேனும், `கையிலங்கு பொற்கிண்ணத்தை மழவு எண்ணுதல் என அல்லால்` எனப் பொருளுக்கேற்ப மாறுதல் கருத்தாதல் அறிக. `பொற்கிண்ணம் குழவி கையிற் கிடைத்ததாயின், அதனை அஃது ஏனைய சில பொருள்களோடொப்ப எளிய பொருளாகக் கருதுதல் போலவே, என்முன் வந்து என்னைப் பணிகொண்ட உன்னை நான் ஏனைய சிலரோடொப்ப எளியையாகக் கருதினேனன்றி அரியையாகக் கருதிற்றிலேன்` என இதனை விரித்துரைத்துக்கொள்க. `என் இயல்பு இதுவாயிற்று` என்பார் இறந்த காலத்தாற் கூறாது, நிகழ்காலத்தாற் கூறினார். `எளியனாகக் கருதினேன்` என்றது, அழைத்தபொழுது செல்லாமல், `பின்னர்ச் சென்று அடைவோம்` என்று பிற்பட்டு நின்றமையை என்க. `உன் மெய்ம்மை அன்பர் இவ்வாறின்மையால், உன்னை முன்பே வந்து அடைந்து விட்டார்கள்; யான் பிற்பட்டு நின்றது எனது அறியாமையாலே என்பர், ``பொய் இலங்கு எனை`` என்றும், `யான் எனது அறியாமை காரணமாகப் பிற்பட்டு நிற்பினும், என்னை வற்புறுத்தி உடன்கொண்டு செல்லாது மீளவும் முன்போலவே உலகியலில் புகும்படி விட்டுப் போவது, அறைகூவி ஆட்கொண்ட உனது அருளுக்குப் பொருத்தமாகுமோ? சொல்` என்பார், `புகுதவிட்டு நீ போவதோ பொருத்தமாவது சொலாய்` என்றும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 93

பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன்
போத என்றெனைப் புரிந்து நோக்கவும்
வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன்
மாண்டி லேன்மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை
இருத்தி னாய்முறை யோஎ னெம்பிரான்
வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே. 

பொழிப்புரை :

பொய்யனாகிய என்னை விரும்பி நோக்கவும் நோக்கின உதவியை நினைந்து நான் வருந்தி மாண்டிலேன். இறைவனே! உன் அன்பரும் நீயும் சிவபுரத்துக்கு எழுந்தருளி என்னை இவ்வுலகத்தில் இருத்துதல் உனக்கு முறையாமோ? என் தீவினைக்கு இறுதி இல்லையோ!

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``பொய்ம்மை உண்மையேன்`` என்றதன்பின், `ஆயினும்` எனவும், `வஞ்சம் உண்மையேன்` என்றதன்பின், `ஆதலின்` எனவும் நின்ற சொல்லெச்சங்களை வருவித்துரைக்க. போத - போதுக; வருக. புரிந்து - விரும்பி. வஞ்சம் - வேறோர் எண்ணம்; என்றது, உலகியற் பற்றினை. ``மாண்டிலேன்`` என்றதற்கு, ``பிரிவாற்றாமையால்` என்னும் காரணம், ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. ``மலர்க் கமலம்`` என்பது. பின் முன்னாக நின்ற ஆறாவதன் தொகை. அரத்தம் - சிவப்பு. `அருள்செய் அன்பர்`` என்றது, செயப்படு பொருள்மேல், தொக்க வினைத்தொகை. ``அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி`` எனவும், `எனை இங்கு இருத்தினாய்` ``வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே`` எனவும் போந்த சொற்கள், அடிகளது ஆற்றாமை நனிமிக விளக்குவனவாம். முறையோ - நேர்மையோ. வம்பன் - பயனில்லாதவன்.

பண் :

பாடல் எண் : 94

இல்லை நின்கழற் கன்ப தென்கணே
ஏலம் ஏலுநற் குழலி பங்கனே
கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்
டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்
எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான்
ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லை யேயெனக் கின்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே. 

பொழிப்புரை :

இறைவனே! எனக்கு உன் திருவடிக் கண் அன்பு இல்லையாகவும், கல்லைக் குழைத்த வித்தையைக் கொண்டு என்னைத் திருத்தி உன் திருவடிக்கு அன்பனாக்கினாய். ஆதலால் உன் கருணைக்கு ஓர் எல்லை இல்லை.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``அன்பது`` என்றதில் அது, பகுதிப்பொருள் விகுதி. ஏலம் - மயிர்ச்சாந்து. ஏலும் - பொருந்தும். ``நற்குழலி`` என்றதில் நன்மை - அழகு. ஆக்கும் விச்சை - ஆக்குகின்ற வித்தை போல்வ தொரு வித்தை.
``கருணை`` என்றதில் நான்கனுருபு தொகுத்தலாயிற்று. ``நின்கருணைக்கு எல்லை இல்லை`` என மாற்றி, `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ``வல்லை`` என்றதை ``மீட்கவும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக.
மறு - குற்றம். குற்றமில்லாத வானம், சிவலோகம். `என்கணே நின்கழற்கு அன்பு இல்லையாகவும், நின் கருணைக்கு எல்லை இல்லை ஆதலின், கல்லை மென்கனியாக்கும் விச்சை கொண்டு என்னை முன்பு நின்கழற்கு அன்பனாக்கினாய்; அது போலவே, நான் இப்பொழுது ஏதுகொண்டு ஏது செய்யினும் இன்னும் எனக்கு உன்கழல்காட்டி மீட்கவும் வல்லையே` என்க. ``கொண்டு`` என்பது மூன்றாவதன் பொருள்தரும் இடைச் சொல்லாதலின், `எக் காரணத்தால் எதனைச் செய்யினும்` எனப் பொருள் கூறுக. ``வல்லையே`` என்றதில் உள்ள ஏகாரம் தேற்றம். எனவே, `இனியும் என்னை மீட்க நீ வல்லாய் என்னும் துணிவுடையேன்` என்பது பொருளாயிற்று. ``மீட்கவும்`` என்ற உம்மை, சிறப்பு.

பண் :

பாடல் எண் : 95

வான நாடரும் அறியொ ணாதநீ
மறையில் ஈறுமுன் தொடரொ ணாதநீ
ஏனை நாடருந் தெரியொ ணாதநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடு வித்தவா
உருகி நான்உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடு வித்தவா
நைய வையகத் துடைய விச்சையே. 

பொழிப்புரை :

இறைவனே! தேவர்கள், மறைகள், ஏனை நாட்டவர்கள் ஆகியோர்க்கும் அரியையான நீ, அடியேனை ஆட்கொள்ளுதல் முதலாயினவற்றை நோக்கும் இடத்தில், அஃது எனக்கு இவ்வுலக சம்பந்தமான அஞ்ஞானம் அழிதற்கேயாகும்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இறைவனது அருமை தோன்ற, ``நீ`` என்றதனைப் பலமுறை கூறினார். மறையில் ஈறும் - வேதத்தில் முடிவாயுள்ள பகுதியும். உம்மை, சிறப்பு. ஏனை நாடர் - தேவருலகிற்கு மேற்பட்ட சத்தியலோகம் முதலியவற்றில் உள்ளவர். அவர், பிரமன் முதலியோர். `இனிதாய்` என்பது, விரித்தலாயிற்று.
``ஆண்டுகொண்டவா`` என்றது முதலிய நான்கிடத்தும், `ஆறு` என்பது கடைக்குறைந்து நின்றது. அவற்றிலெல்லாம் எண்ணும்மை விரித்து, அவற்றை, எஞ்சிநின்ற, வியப்பைத் தருவன` என்பதனோடு முடிக்க. ஊனை - உடம்பை. உடம்பை ஆடச் செய்த நாடகம், உலகியல். ஞானநாடகம், ஆனந்தக் கூத்து, எனவே, `முன்பு உடம்பை ஊன நாடகம் ஆடுவித்தவாறும், பின்பு உயிரை ஞானநாடகம் ஆடுவித்தவாறும்` என்றதாயிற்று. `ஊன நாடகம்` எனப் பாடம் ஓதி, ஆடுவித்தமை இரண்டிற்கும், `என்னை` என்பதனைச் செயப்படுபொருளாகக் கொள்ளுதலே சிறக்கும்.
பருகுதல் - அனுபவித்தல். வையகத்து உடைய விச்சை நைய - உலகின்கண் யான் கொண்டிருந்த பாச ஞானம் கெட. இதனை, ``ஞான நாடகம் ஆடுவித்தவா` என்றதற்கு முன்னே கூட்டுக.
`இச்சை` எனப் பிரித்தல், அந்தாதிக்கு ஒவ்வாமையறிக.

பண் :

பாடல் எண் : 96

விச்ச தின்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும்
புலைய னேனைஉன் கோயில் வாயிலிற்
பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக்
குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர்
நச்சு மாமர மாயி னுங்கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே.

பொழிப்புரை :

இறைவனே! எல்லா உலகங்களையும் வித்தில்லாமல் தோற்றுவிப்பாய். என்னை உன் கோயில் வாயில் பித்தனாக்கி, உன் அன்பரது திருப்பணிக்கும் உரியேனாகச் செய் தனை. உலகத்தார், தாம் வளர்த்தது ஆதலின் நச்சு மரமாயினும் வெட்டார்; அடியேனும் உனக்கு அத்தன்மையேன்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

விச்சு - வித்து. `வித்தில்லாமலே விளைவை உண்டாக்குவாய்` என்றது, `அதுபோன்ற செயல்களைச் செய்வாய்` என்றபடி. ``விச்சின்றி நாறுசெய் வானும்`` (தி.4.ப.4.பா.2.) என்று அருளிச்செய்ததும் இவ்வாறாம்.
இறைவன் இங்ஙனம் செய்தல் என்பது, சில காரியங்களை அவற்றிற்குரிய நியத காரணம் இல்லையாகவும், பிற காரணமே காரணமாய் அமைய அவற்றை நிகழச் செய்தலாம். அது, நாவுக்கரசர்க்குக் கல்லே தெப்பமாய் அமையக் கடலைக் கடந்து கரையேறச் செய்தமை, ஞானசம்பந்தருக்கு ஆண்பனைகளே பெண் பனைகளாய்க் காய்தரச் செய்தமை, சுந்தரருக்குச் செங்கல்லே பொன் னாகிப் பயன்படச் செய்தமை போல்வனவாம்.
இவைபோலும் செயல்கள் பிறவும் கேட்கப்படுதலின், அவை பற்றியே அடிகள் இவ்வாறு அருளிச்செய்தாராவர். எனினும், தமக்கு இறைவனைக் காணும் முயற்சியின்றியும் அவன் தானே வந்து தம்மைத் தலையளித்தாட் கொண்டமையைக் குறிப்பிடுதலே கருத்தென்க. இனி இப்பகுதி, உயிர்களின் முதற்பிறப்பிற்கு வினையாகிய காரணம் இல்லையாகவும், அவைகட்கு முதற்கண் நுண்ணுடம்பைக் கொடுத்துப் பின் அதன்வழித் தோன்றிய வினைக்கீடான பிறவியைத் தருதலைக் குறிப்பதாகச் சிவஞானபோத மாபாடியத்துள் உரைக்கப்பட்ட வாற்றையும் அறிக. வைச்சு - வைத்து. வைப்பது உயிர்களிடம் என்க. கோயில், திருப்பெருந்துறையில் உள்ளது. ``திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி`` (தி.8. திருப்பள்ளி. 8) எனப் பின்னரும் அருளிச் செய்வர்.
பிச்சன் - பித்தன். உரியன் - அடியவன். ``தாம்`` என்றது மக்களை என்பது, பின்னர் வருவனவற்றால் விளங்கிக் கிடந்தது. ஓர்- ஒரு. இது சிறப்பின்மை குறித்தது. மா - பெரிய. `மா நச்சு மரம்` என மாற்றிக்கொள்க. `மிக்க நஞ்சாய மரம்` என்றது, காய் கனி முதலிய வற்றை உண்டாரை அப்பொழுதே கொல்லும் எட்டி மரம் போலும் மரங்களை. `அம்மரங்களால் தீங்கு உண்டாதல் அறிந்திருந்தாலும், வளர்த்தவர் வெட்டமாட்டார்கள்` என்றபடி. ``வளர்த்தது`` என்றதற்கு, `அறியாது வளர்த்தது` எனவும், ``ஆயினும்`` என்றதற்கு, `ஆதல்` அறியப்படினும்` எனவும் உரைப்பினும் அமையும். ``நானும் அங்ஙனே`` என்றது, `நானும் உனக்கு அத்தன்மையனே` என்றபடி. உவமைக்கண், வளர்த்தது, கொல்லுதல் என்றவற்றிற்கு ஏற்பப் பொருட்கண் கருதப்பட்டன, கோயில் வாயிலில் பிச்சனாக்கி அன்பருக்கு உரியனாக்கினமையையும், பின் கைவிடுதலையுமாம்.

பண் :

பாடல் எண் : 97

உடைய நாதனே போற்றி நின்னலால்
பற்று மற்றெனக் காவ தொன்றினி
உடைய னோபணி போற்றி உம்பரார்
தம்ப ராபரா போற்றி யாரினுங்
கடைய னாயினேன் போற்றி என்பெருங்
கருணை யாளனே போற்றி என்னைநின்
அடிய னாக்கினாய் போற்றி ஆதியும்
அந்த மாயினாய் போற்றி அப்பனே. 

பொழிப்புரை :

நீ என்னை உடையவன் ஆதலால் எனக்கு உன்னை அல்லது வேறு புகலிடம் ஏதேனும் உளதோ? பகர்ந்தருள் வாயாக. தேவர்களுக்கெல்லாம். மேலாகிய மேலோனே! உன்னை வணங்குகிறேன். இனி யானோ எவர்க்கும் கீழ்ப்பட்டவன். அத்தகைய என்னை உன் கருணையினால் உனக்கு அடிமை யாக்கினாய். எனக்குத் தொடக்கமும் முடிவும் நீயே. அத்தகைய அப்பனே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆவது - நன்மை தருவது. `எனக்கு ஆவது பற்று மற்று இனி ஒன்று உடையனோ` என்க.
பணி - சொல்லு. உம்பரார் - தேவர். பராபரன் - முன்னும் பின்னும் உள்ளவன். இத் திருப்பாட்டில் வணக்கமே கூறினார்.

பண் :

பாடல் எண் : 98

அப்ப னேயெனக் கமுத னேஆ
னந்த னேஅகம் நெகஅள் ளூறுதேன்
ஒப்ப னேஉனக் குரிய அன்பரில்
உரிய னாய்உனைப் பருக நின்றதோர்
துப்ப னேசுடர் முடிய னேதுணை
யாள னேதொழும் பாள ரெய்ப்பினில்
வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய்
நைய வையகத் தெங்கள் மன்னனே. 

பொழிப்புரை :

எனக்குத் தந்தையே! அமிர்தமே! ஆனந்தமே! உள்ளம் உருகுதற்கும் வாய் ஊறுதற்கும் ஏதுவாயுள்ள தேன் போன்றவனே! உனக்கு உரிமையுடைய மெய்யன்பரைப் போல நானும் உரிமையாளனாகி உன்னைப் புசித்து உயிர் வாழ்வதற்கான ஒப்பற்ற உணவே! ஒளி விளங்கும் திருமுடியை உடையவனே! மாறாத் துணையாய் இருப்பவனே! தொண்டர் தளர்வுற்று இருக்கும்பொழுது உதவும் செல்வமே! இப்பொய் உலக வாழ்க்கையில் நான் துன்புற்று இருக்கும்படி வைப்பது முறையாகுமோ? எங்கள் அரசே! கூறுவாயாக.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அள் ஊறு - உள்ளே சுரக்கின்ற. அன்பரில் - அன்பரைப்போல. துப்பன் - பற்றுக்கோடானவன். `என்னை வையகத்து நைய வைப்பதோ` என மாற்றி, `வைப்பதோ பொருத்தம்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 99

மன்ன எம்பிரான் வருக என்னெனை
மாலும் நான்முகத் தொருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என்னெனை
முழுதும் யாவையும் இறுதி யுற்றநாள்
பின்ன எம்பிரான் வருக என்னெனைப்
பெய்க ழற்கண்அன் பாயென் நாவினாற்
பன்ன எம்பிரான் வருக என்னெனைப்
பாவ நாசநின் சீர்கள் பாடவே. 

பொழிப்புரை :

என்றும் நிலை பேறுடைய எங்கள் தலைவனே! அடியேனை வருக என்று கட்டளை இடுவாயாக. திருமாலுக்கும் நான்முகனுக்கும் மூலப் பொருளே! என்னை வருக என்று ஏற்றுக் கொள்வாயாக. சம்கார காலத்தில், எல்லாம் ஒடுங்கி இருக்கும் போது எஞ்சித்தன்மயமாயிருக்கும் எம் தலைவ, என்னை வருக என்று அழைப்பாயாக. உன்னை வந்து அடைந்தவர்களது பாவத்தைப் போக்குபவனே! நான் உன்னைப் புகழவும் உனது சிறப்பினைப் பாடவும் என்னை உன்னோடு சேர்த்துக் கொள்வாயாக.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`மன்ன, முன்ன, பின்ன, பன்ன` எனவும், ``எம்பிரான்`` எனவும் வந்தன விளிகள். பன்னன் - துதிக்கப்பட்டவன். இத் திருப் பாட்டில், `நின் சீர்கள் பாட என்னை வருக என்று அழை` என்பதே அருளிச் செய்தார். பாடுதல், சிவலோகத்தில் என்க.

பண் :

பாடல் எண் : 1

கடையவ னேனைக் கருணையி னாற்கலந்
தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்
வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத்
தாங்கிக்கொள்ளே. 

பொழிப்புரை :

கடையேனைப் பெருங்கருணையால், வலிய வந்தடைந்து ஆண்டு கொண்டருளினை. இடபவாகனனே! அடி யேனை விட்டுவிடுவாயா? வலிமையுடைய, புலியின்தோலாகிய ஆடையை உடுத்தவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! சடையையுடையவனே! சோர்ந்தேன்; எம்பெருமானே! என்னைத் தாங்கிக் கொள்வாயாக.

குறிப்புரை :

``எம்பிரான்`` என்றதை, ``சடையவனே`` என்றதன் பின்னரும், ``விடுதிகண்டாய்`` என்றதை இதன்பின்னரும் கூட்டுக. விறல் - வெற்றி; வலிமையுமாம். உடையவன் - உடையை உடைய வன். `தோலாகிய உடையை உடையவன்` என்க. விட்டிடுதி - விடுகின்றாய். இகர ஈறு, இங்கு எதிர்காலத்தில் வந்தது. `கண்டாய்` என்னும் முன்னிலையசைச் சொல், `போலும்` என்னும் உரையசைப் பொருளில் நின்று, `விடாதி; விட்டாற் கெட்டொழிவேன்` என்னும் பொருளைத் தந்தது. இவை இப்பகுதியின் எல்லாத் திருப்பாட்டிலும் ஒக்கும். `கருணையினாற் கலந்தாண்டு கொண்ட` என்றதனால், `அக் கருணை இடையில் ஒழிதற்பாலதோ` என்பது திருவுள்ளமாயிற்று. இறைவன் தம்மை ஆட்கொண்ட பின்னர்ப் பாண்டியனிடம் தம்மைச் செல்லுமாறுவிடுத்து, நரியைப் பரியாக்கிக் கொணர்ந்தளித்து மறைந்ததனால், இந்நிலையிலேயே தம்மை இருக்க வைத்து விடுவானோ என்று அடிகள் ஐயுற்று வருந்தி இங்ஙனம் விண்ணப் பிக்கின்றார் என்க. அடிகள் திருப்பெருந்துறையை அடைந்தமையும், அங்கு இறைவன் முன்னைத் திருவுருவத்தோடும் விளங்கியிருந்து இவரை, `தில்லைக்கு வருக` என்று சொல்லி நிறுத்திவிட்டு, ஏனை அடியார்களோடு மறைந்தமையும், இதன்பின் நிகழ்ந்தன என்று கொள்ளுதலே பொருந்தும்; என்னை? `தில்லைக்கு வருக` என்று பணித்தபின் அடிகள் இத்துணை வருந்தி வேண்டாராகலின்.

பண் :

பாடல் எண் : 2

கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர்
கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின்
விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங்
கைக்கரசே
கள்ளேன் ஒழியவுங் கண்டுகொண் டாண்டதெக்
காரணமே.

பொழிப்புரை :

உத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கள்வனாகிய நான், உன்னை நீங்கி நிற்கப் பார்த்தும் என்னை அடிமை கொண்டது, எக்காரணத்தைக் கொண்டோ?. உன்னுடைய மேலாகிய தொண்டில் உள்ளேன்; அடியேன் புறத்தேன் அல்லேன்; மாதரது கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினை விடேனாயினும், விட்டு விடுவாயோ?.

குறிப்புரை :

``விடுதிகண்டாய்`` என்றதனை இறுதியிற் கூட்டி யுரைக்க. ``கொள் ஏர்`` என்றதனை, `ஏர் கொள்` என மாற்றிக் கொள்க. ஏர் - எழுச்சி. பிளவு அகலா - வேறாகி நீங்காத; `நெருங்கிய` என்ற படி. விள்ளேன் - நீங்கேன். விழுத் தொழும்பின் உள்ளேன் - உனது மேலான தொண்டிற்கு உள்ளாயினேன்; என்றது, உன்னால் `ஆட் கொள்ளப்பட்டு விட்டேன்` என்றதாம். அதனால், `இனிப் புறமாவே னல்லேன்` என்க. கள்ளேன் - களவுடையேனாய்; ஒழியவும் - உன்னை அணுகாதிருக்கவும். கண்டுகொண்டு - அருள்நோக்கம் செய்து. ஆண்டது எக்காரணம் - ஆட்கொண்டது எக்காரணத்தால்; `விடாது பற்றிக் கொள்ளுதற்கே யன்றோ` என்பது கருத்து. `காரணத் தால்` என்னும் உருபு, தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 3

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்
கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங்
குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை
வளர்ப்பவனே.

பொழிப்புரை :

புகழால் திகழும் திருவாரூரில் வீற்றிருப்பவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கச்சு அணியப் பெற்ற, ஆபரணங்களோடு கூடிய, கொங்கைகளையுடையவளாகிய உமாதேவியின் பாகனே! என்னைப் பாதுகாப்பவனே! கருமை மிகுந்த கண்களை உடைய மாதரது ஐம்புல இன்பத்தில் ஆற்றங்கரையிலே நிற் கின்ற மரம்போல, வேர் ஊன்றுகின்ற என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

கார்உறு - கருமை பொருந்திய. `கண்ணியரது ஐம் புலனில் வேர் உறுவேன்` என்க. ஐம்புலன் - கண்ணுக்குப் புலனாகின்ற அழகு முதலியன. வேர் உறுதல் - ஊன்றி நிற்றல். ``ஆற்றங்கரை மரமாய்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `ஆற்றங் கரையில் உள்ள மரம் அவ்விடத்தில் வேர் ஊன்றுதல் போல` என்பது பொருள். `இஃது அவ்வேர் நிலைபெறாது அவ்வாற்றுநீராலே அழிக்கப்படுதல் போல, யானும் அவரது ஐம்புல இன்பங்களாலே அழிக்கப் படுவேன்` என்பதை உணர்த்தி நிற்றலின், தொழில் பற்றி வந்த உவமை. வளர்ப்பவன் - முன்னர் அறிவை மிகுவித்துப் பின்னர் அதனால் அன்பையும், அதன்பின்னர் அவ்வன்பினால் இன்பத்தை யும் மிகுவிப்பவன்.

பண் :

பாடல் எண் : 4

வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும்
நீங்கிஇப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண்
மதிக்கொழுந்தொன்
றொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங்
கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச்
செழுஞ்சுடரே.

பொழிப்புரை :

வெண்மையாகிய ஓர் இளம் பிறையானது விளங்கு கின்ற, நீண்ட சடை முடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! தெளிகின்ற பொன்னையும், மின்னலையும் ஒத்த காட்சியையுடைய செழுமையாகிய சோதியே! வளர்ந்து கொண் டிருக்கிற, உனது கருணைக் கரத்தில் வளைத்துப் பிடிக்கவும் விலகி, இவ்வுலக வாழ்விலே புரளுகின்ற என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

வளர்கின்ற - எல்லா உயிர்களும் வளரும் இடமாகிய. கருணைக் கை, உருவகம். வாங்கவும் - எடுக்கவும். மிளிர்கின்ற - பிறழ்கின்ற; குதிக்கின்ற. தெளிகின்ற - விளங்குகின்ற.

பண் :

பாடல் எண் : 5

செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி
யாரிற்பன்னாள்
விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி
வாய்அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தர கோசமங்
கைக்கரசே
வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட
மறுத்தனனே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய வாயினையுடைய வண்டுகள், கிண்டுகின்ற மலரை அணிந்த, திருமுடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! வழியில் மறித்து நின்று, உன் அருளாகிய அரிய அமுதத்தை நீ உண்பிக்க, மறுத்தேன். வளர்கின்ற விளக்குத் தீயில் விழுகின்ற விட்டிற் பூச்சியைப் போல, சிலவாகிய மொழிகளை உடைய மகளிரிடத்துப் பலநாளும் விருப்பங் கொள்கின்ற அடியேனை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`செழிக்கின்ற` என்பது, இடைக் குறைந்து நின்றது. தீ- விளக்குத் தீ. விட்டில் - `விட்டில்` என்னும் வண்டு. விட்டிலின் - விட்டில் போல. சின்மொழி - சிலவாகிய மொழி; இது நாணத்தால் பல பேசாமையைக் குறித்தது. மொழியாரில் - மொழியாரிடத்து. ``பன்னாள் விழுகின்ற`` என்றதனால், உவமையிலும் பன்முறை வீழ்தல் பெறப்பட்டது. படவே, விட்டில் விளக்கினைக் கண்டு அவ் வொளியால் மயங்கி அணுகுந்தொறும் அதன் வெப்பத்தால் தாக் குண்டு, அங்ஙனம் தாக்குண்ட பின்னரும் விடாது சென்று முடிவில் அதன் கண்ணே வீழ்ந்து இறக்கும் தன்மை பொருளிலும் கொள்ளற் பாலதாயிற்று. வெறிவாய் - தேனின்கண். அறுகால் - வண்டு. வழிநின்று - யான் செல்லும் வழியில் வந்து நின்று. ``மறுத்தனனே`` என்ற தெற்றேகாரம், `என்னே என் அறியாமையின் மிகுதி` என இரக்கங் குறித்துநின்றது. மறுத்தது, உடன் செல்ல இயையாது நின்றது.

பண் :

பாடல் எண் : 6

மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையின்
என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை
யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம்
பொய்யினையே.

பொழிப்புரை :

என் மாணிக்கமே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நான் உன் திருவருளின் பெருமையை அறியாமல் அதனை வேண்டாவென்று மறுத்தேன்; நீ அதற்காக அடியேனை வெறுத்து விட்டு விடுவாயோ? மேலோர், சிறிய நாய் போல்வாரது குற்றத்தை மன்னிப்பார்கள் அல்லரோ? நீ என்னுடைய வினை அனைத் தையும் அழித்து, என்னை ஆண்டு கொண்டு அருள வேண்டும்.

குறிப்புரை :

`அறியாமையின் யான் உன் அருளை மறுத்தனன்` என்க. ஒறுத்து - அழித்து. ``நாய்கள்`` என்றது உவமையாகு பெயராய், `நாய்கள் போன்றவர்` எனப் பொருள் தந்தது. சிறுமை - இழிவு. ஈற்றடி, `வேற்றுப்பொருள் வைப்பு` என்னும் அணிபட வந்தது.

பண் :

பாடல் எண் : 7

பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று
பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட
முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந்
தீர்ப்பவனே. 

பொழிப்புரை :

நஞ்சுண்ட கண்டத்தில் கருமையையுடையவனே! நிலை பெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! செம்மேனி யனே! மங்கலப் பொருளானவனே! சிறியேனது பிறவியை நீக்கு வோனே! பொய்யவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி ஆண் டருளி, என் சிறுமையை மறைத்துக் கொண்ட உண்மைப் பொருளே! என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

`ஒன்று ஆண்டு` என மாற்றியுரைக்க. ஒன்று - ஒரு பொழுது. பொத்திக் கொண்ட மெய்யவன் - மறைத்துக் கொண்ட திரு மேனியை உடையவன். விடம் உண் - நஞ்சு உண்டதனாலாகிய. மிடற்று மை - கழுத்தின்கண் உள்ள கருமை நிறம். செய்யவன் - சிவப்பு நிறத்தை உடையவன். பவம் - பிறப்பு.

பண் :

பாடல் எண் : 8

தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரருள்
என்கொல்என்று
வேர்க்கின்ற என்னை விடுதிகண் டாய்விர
வார்வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தர கோசமங்
கைக்கரசே
ஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினை யேனை
இருதலையே. 

பொழிப்புரை :

பகைவர் அஞ்சும்படி ஒலிக்கின்ற, கிண்கிணி மாலை அணிந்த காளையையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! ஐம்புல ஆசைகளும் உன் திருவடியை நீங்குகின்ற அச்ச மும், தீவினையுடையேனை இரண்டு பக்கத்திலும், இழுக்கின்றன. ஆதலின் என் குற்றங்களை உன் பேரருளானது நீக்குகின்ற விதம் எவ்வாறு என்று மனம் புழுங்குகின்ற என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`வினையேனை அஞ்சொடு அச்சம் இருதலை ஈர்க் கின்ற; (அதனால்) என் பிழையை நின் சீர் அருள் தீர்க்கின்றவாறு என்கொல் என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய்` எனக் கூட்டுக. என்கொல் என்று - எவ்வாறோ என்று. வேர்த்தல் - இளைத்தல்; வருந்துதல். விரவார் - பகைவர். வெருவ - அஞ்சும்படி. ஆர்க்கின்ற தார் விடை - ஒலிக்கின்ற கிண்கிணி மாலையை அணிந்த இடபத்தையுடைய. அஞ்சு - ஐம்புல ஆசை. அச்சம், அவற்றின் வழிச் செல்ல அஞ்சுதல், `இந்த இரண்டும் இருமுகமாக மாறி மாறி ஈர்க் கின்றன` என்றபடி.

பண் :

பாடல் எண் : 9

இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து
நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன்
மூவுலகுக்
கொருதலை வா மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப்
பொலிபவனே. 

பொழிப்புரை :

பெருமை அமைந்த மூன்று உலகங்களுக்கும், ஒப் பற்ற முதல்வனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! போர்க்குரிய நுனியோடு கூடிய மூன்று இலை வடிவின தாகிய சூலத்தை, வலப்பக்கத்தில் தாங்கி விளங்குபவனே! இருபுறமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் உள்ளிடத்தே அகப்பட்ட எறும்பு போன்று துயருற்று உன்னை விட்டு நீங்கின என்னை, தலைவிரி கோலம் உடைய சடையோனே! விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

அடிகள் தாம் இருதலைக் கொள்ளியினுள் எறும்பை ஒத்திருத்தல் இவ்வாற்றால் என்பதை முன்னைத் திருப்பாட்டில் அருளிச் செய்தமையின், இதனுள் அதனை எடுத்தோதாராயினார். ``பிரிந்த`` என்றது, `பிரிந்து வருந்துகின்ற` என்னும் பொருளது.
விரிதலை - விரிந்த தலைமயிர்; இடவாகு பெயர். தலைமயிர் விரிந்து கிடத்தலைக் கூறியது. எங்கும் ஓடி அலமருதலைக் குறித்த குறிப்புமொழி. பொருது அலை - பகைவரொடு போர் செய்து அவரை வருத்துகின்ற. மூவிலை வேல் - சூலம். வலன் - வலப்பக்கம்.

பண் :

பாடல் எண் : 10

பொலிகின்ற நின்தாள் புகுதப்பெற் றாக்கையைப்
போக்கப்பெற்று
மெலிகின்ற என்னை விடுதிகண் டாய்அளி
தேர்விளரி
ஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங்
கைக்கரசே
வலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புரம்
மாறுபட்டே. 

பொழிப்புரை :

வண்டுகள், ஆராய்ந்து பாடுகின்ற, விளரி இசை யின் ஒலியோசை இடையறாது நிலைபெற்றிருக்கிற, பூஞ்சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பகைத்து முப் புரங்களை வலிமை நிலைத்த உறுதியான வில்லினால் அழித்தவனே! விளங்குகின்ற, உன் திருவடிகளில் புகப்பெற்று, உடம்பை உன்னுடையதாகவே கொடுக்கப் பெற்றும் வருந்துகின்ற அடியேனை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`புகுதப் பெற்ற` என்றதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. புகுதப் பெற்றமை, புகுந்துவணங்கப் பெற்றமை. போக்கப்பெற்று - உன்னால் விலக்கப்பட்டு; இதன்கண் ``பெற்று`` என்னும் வினைக்கு வினைமுதல் அடிகளாதலின், ``ஆக்கையை`` என்னும் இரண்டாவது, ``போக்க`` என்றதனோடு முடியும். `தில்லைக்கு வருக` என்று நிறுத்திச் சென்றதனை, `போக்க` என்றார்.
அளி - வண்டுகள். தேர் விளரி ஒலி - தேனை ஆராய்கின்ற, விளரி இசையினது ஓசை. எரித்தாய் - எரித்தவனே.

பண் :

பாடல் எண் : 11

மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன்
மணிமலர்த்தாள்
வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை
யேன்மனத்தே
ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
நீறுபட் டேஒளி காட்டும்பொன் மேனி
நெடுந்தகையே. 

பொழிப்புரை :

தீவினையேனது மனத்தின்கண் சுரக்கின்ற தேனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! திரு வெண்ணீறு பூசப்பட்டு ஒளியைச் செய்கின்ற பொன்போலும் திரு மேனியையுடைய பெருந்தன்மையனே! ஐம்பொறிகள் பகைத்து என்னை வஞ்சித்தலால் நான் உனது வீரக் கழலணிந்த தாமரை மலரை ஒத்த திருவடியை நீங்கினேன்; அத்தகைய என்னை அங்ஙனமே விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

அஞ்சு - ஐம்புலன். `தாளின் வேறுபட்டேனை` என்க. மட்டு - தேன். நீறுபட்டு - திருநீறு பொருந்தப்பட்டு.

பண் :

பாடல் எண் : 12

நெடுந்தகை நீஎன்னை ஆட்கொள்ள யான்ஐம்
புலன்கள்கொண்டு
விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர
வார்வெருவ
அடுந்தகை வேல்வல்ல உத்தர கோசமங்
கைக்கரசே
கடுந்தகை யேன்உண்ணுந் தெண்ணீர் அமுதப்
பெருங்கடலே. 

பொழிப்புரை :

பகைவர் அஞ்சும்படி கொல்லும் தன்மையுடைய வேற்போரில் வல்லவனாகிய திருவுத்தரகோச மங்கைக்குத் தலை வனே! கொடிய தன்மையுடையேன் பருகுதற்குரிய பெரிய அமுதக் கடலே! பெருந்தன்மையனே! நீ, என்னை அடிமை கொள்ளவும்; நான் ஐம்புலன்களின் ஆசை கொண்டு, அதனால் உன்னை விடும் தன்மையனாயினேன்; அத்தகைய என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

தகையேனை - தன்மையுடைய என்னை. அடும் தகை வேல் வல்ல - கொல்லும் தன்மையையுடைய சூலத்தை ஆளுதல் வல்ல. கடுந்தகையேன் - கடிய குணமுடைய யான்; `எனக்குத் தெண்ணீர் கிடைத்தல் அரிது` என்பது குறிப்பு. `தெண்ணீராகிய அமுதம்` என்க. நாவறட்சியைத் தணித்து உயிரை நிலைபெறுத்தலின், தெண்ணீர், `அமுது` எனப்பட்டது. இறைவனால் தணிக்கப்படுவது வினை வெப்பமாம்.

பண் :

பாடல் எண் : 13

கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக்
கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட
லில்லடியார்
உடலில மேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேயென்
மதுவெள்ளமே.

பொழிப்புரை :

உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டின் கண்ணே நிலைபெறுகின்ற, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`விடலரியேனை` என்றாரேனும், `முழுதும் மூழ்கும் படி விட்டுப் பருகாது, சிறிதே சுவைத்து ஒழிவேனை` என உவமைக்கேற்ப உரைத்தலே கருத்தென்க. உடல் இல்லம் - உடம்பாகிய வீடு, ``உடலிடங்கொண்டாய்`` (தி.8 கோயில்.10) என்றாற்போலப் பின்னரும் அருளிச் செய்வர். யாண்டும் `அடியவர் உடம்பில் நிற்கும் உள்ளத்தை இடமாகக் கொண்டிருப்பவன்` என்பதே பொருளாம்; ``நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந்தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற-கற்பகமே` (தி.6.ப.95.பா.4) என்ற அப்பர் திரு மொழியையும் காண்க.
மடலின் மட்டு - பூவிதழில் துளிக்கின்ற தேன். மதுவெள்ளம்- தேன் வெள்ளம். முன்னர்ச் சிறிதாயுள்ள தேனைக் கூறினார்; பின்பு அது பெருக்கெடுத்தலைக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 14

வெள்ளத்துள் நாவற் றியாங்குன் அருள்பெற்றுத்
துன்பத்தின்றும்
விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும்
பும்அடியார்
உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத
களியெனக்கே. 

பொழிப்புரை :

விரும்புகின்ற அடியாருடைய உள்ளத்தில் நிலைத்து இருப்பவனே! நிலை பெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நீர்ப் பெருக்கின் நடுவில் இருந்தே ஒருவன் நீர் பருகாது தாகத்தால் நா உலர்ந்து போனாற்போல, உன்னருள் பெற்றிருந்தே, துன்பத்தினின்றும் இப்பொழுதும் நீங்குவதற்கு ஆற்றல் இல்லாது இருக்கின்ற என்னை விட்டுவிடுவாயோ? வஞ்சகச் செய லுடையேனாகிய எனக்கு இதுகாறும் கண்டறியாத பேரின்பத்தைத் தந்தருள்க.

குறிப்புரை :

``வெள்ளத்துள் நாவற்றியாங்கு`` என்றது இல்பொருள் உவமை. `விள்ளகிலேனை` என்பது விரித்தல் பெற்றது. கள்ளத்து உளேற்கு - பொய்யன்பில் நிற்பேனுக்கு. களியாத களி - நான் இது காறும் மகிழ்ந்தறியாத மகிழ்ச்சி. ``அருளாய்`` என்றது இரட்டுற மொழிதலாய், முன்னர், `இரங்காய்` எனப் பொருள்தந்து, ``கள்ளத் துளேற்கு`` என்றதனோடும், பின்னர், `ஈவாய்` எனப் பொருள்தந்து, `எனக்கு` என்பதனோடும் இயைதற்குரித்தாயிற்று. ஈற்றில் நின்ற ஏகாரத்தைப் பிரித்து, ``களி`` என்றதனோடு கூட்டிப் பிரிநிலை யாக்கியுரைக்க.

பண் :

பாடல் எண் : 15

களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங்
கலந்தருள
வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச்
சுடருக்கெல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங்
கைக்கரசே
எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய
என்னப்பனே. 

பொழிப்புரை :

உண்மையான ஒளிகட்கெல்லாம், ஒளியைத் தந்த பொலிவாகிய திருவடியையுடைய திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! எனக்கு எளிதில் கிடைத்த எனக்குத் தந்தையும், தலைவனும் ஆகியவனே! என்னை அடிமையாகவுடைய என் ஞானத் தந்தையே! மகிழ்வோடு கூடிய மனத்தோடு, உன் திருவடியைக் காணப் பெற்றும், நீ என்னோடு கலந்து அருள் செய்யுமாறு உலகப் பற்றிலிருந் தும் வெளிவாராத என்னை, விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

வெளிவருதல் - புறப்படுதல்; `உலகியலைவிட்டுப் புறப்படுதல்` என்க. மெய்ச்சுடர் - உலகத்தவர்க்குக் கண்கூடாகக் காணப்படும் ஒளிகள்; அவை, `ஞாயிறு, திங்கள், விண்மீன், தீ, என்பன. வந்த - வருதற்குக் காரணமான; என்றது, `மிக்க ஒளியினை யுடைய` என்றவாறு. சொற்பொருள் இதுவாயினும், `அச்சுடருக் கெல்லாம் ஒளியைத் தருகின்ற` என்னும் பொருள்மேலும் இது நோக்குடைத்து.

பண் :

பாடல் எண் : 16

என்னைஅப் பாஅஞ்சல் என்பவர் இன்றிநின்
றெய்த்தலைந்தேன்
மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ
மிக்கின்மெய்யே
உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அன்னையொப் பாய்எனக் கத்தன்ஒப் பாய்என்
அரும்பொருளே. 

பொழிப்புரை :

உனது திருமேனிக்கு உவமை சொல்லின் மின்னலை ஒப்பாய், உனக்கு நீயே நிகராவாய், நிலை பெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! எனக்குத் தாயை ஒப்பாய், தந்தையை ஒப்பாய். எனக்குக் கிடைத்தற்கு அரிய பொருளேயாவாய். அடியேனை, ``அப்பா! பயப்படாதே!`` என்று சொல்லுவாரில்லாமல் நின்று இளைத்துத் திரிந்தேன்; ஆகையால் என்னை விட்டுவிடு வாயோ?

குறிப்புரை :

`என்னை அஞ்சல்` என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்; விடுதி கண்டாய்` என்றதனை ஈற்றில் தந்துரைக்க. `உவமிக்கின் மெய் மின்னை ஒப்பாய்` என இயையும். ``மெய்யே`` என்ற ஏகாரம், அசைநிலை. உன்னை ஒப்பாய் - உன்னை நீயே ஒப்பாய்; `ஒப்பார் பிறர் இல்லாதவனே` என்றபடி.

பண் :

பாடல் எண் : 17

பொருளே தமியேன் புகலிட மேநின்
புகழ்இகழ்வார்
வெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்ம்மை
யார்விழுங்கும்
அருளே அணிபொழில் உத்தர கோசமங்
கைக்கரசே
இருளே வெளியே இகபர மாகி
யிருந்தவனே. 

பொழிப்புரை :

உண்மை அன்பர் விழுங்கும் அருட்கனியே! அழகிய சோலை சூழ்ந்த, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! இருளாய் இருப்பவனே! ஒளியாய் இருப்பவனே! இம்மை மறுமை களாகி இருந்தவனே! உண்மைப் பொருளானவனே! தனியனாகிய எனக்குச் சரண் புகும் இடமே! உன் புகழை நிந்திப்பவர்கட்கு அச்சத் துக்கும் காரணமாய் இருப்பவனே! என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

பொருள் - `பொருள்` என்று சிறப்பித்துச் சொல்லுதற் குரிய பொருள்; மெய்ப்பொருள். `இகழ்வார்க்கு` என்னும் நான்க னுருபு தொகுத்தலாயிற்று. வெருள் - அச்சம்; அஃது, `அதனைத் தருவது` என்னும் பொருளதாய் நின்றது. ``விழுங்கும்`` என்றது. `ஆர்வத்தோடு முற்ற நுகரும்` என்றபடி. இது குறிப்புருவகம். இத னால், ``அருளே`` என்றது, `அருளாகிய அமுத உருவினனே` என்றதா யிற்று. இருள் - மறைப்பு; வெளி - விளக்கம்; இவை இரண்டும், முறையே கட்டு வீடுகளைக் குறித்தன. இகம் - இம்மை. பரம் -மறுமை.

பண் :

பாடல் எண் : 18

இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை
என்னினல்லால்
விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க
நஞ்சமுதா
அருந்தின னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு
மடங்கினர்க்கே. 

பொழிப்புரை :

மிகுதியாக நஞ்சை அமுதமாக உண்டவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பிறவியாகிய நோயிற் சிக்கி முடங்கிக் கிடந்தவர்க்கு மருந்தாய் இருப்பவனே! எழுந்தருளியிருந்து அடியேனை ஆண்டு கொள்வாய்; விற்றுக் கொள்வாய்; ஒற்றி வைப்பாய்; என்ற இவை போன்ற செயல்களில் என்னை உனக்கு உரியவனாகக் கொள்வதல்லது, புதிய அடியே னாகிய என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

`என்னின் இருந்து` எனக்கூட்டி `என்பால் வீற்றிருந்து` எனப் பொருள் கூறுக. இஃது, `என்னை ஏற்றுக் கொண்டு` என்றருளிய வாறு. ஆண்டுகொள் - உன் தொண்டில் ஈடுபடுத்திக்கொள். அல்லால்- இங்ஙனம் செய்யாது. `அல்லால் விடுதி கண்டாய்` என இயைத்து, வேறு தொடராக்குக. விருந்தினன் - புத்தடியேன். ``அல்லால்`` என்ற தன் பின், `வேறொன்றறியாத` என்பதனையும், ``இருந்து`` என்றதற்கு முன், `என்னுடன்` என்பதனையும் வருவித்து, சொற்களைக் கிடந்த வாறே வைத்து உரைப்பாரும் உளர். ``மடங்கினர்`` என்றது நோயுட் பட்டவர் செயலற்றுக் கிடத்தலைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 19

மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்னருள்
தீக்கொளுவும்
விடங்க என்றன்னை விடுதிகண் டாய்என்
பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங்
கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக்
கொம்பினையே. 

பொழிப்புரை :

திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கொடிய யானையாகிய மலையினை உரித்து வஞ்சிக் கொடி போன்ற உமையம்மையை அஞ்சுவித்தவனே! எனது கொடிய வினையாகிய காட்டினை அழியும்படி உனது நிலைபெற்ற அருளாகிய, நெருப்பை இட்டு எரிக்கின்ற வீரனே! என்னை விட்டுவிடுவாயோ? எனது பிறவி யாகிய மரத்தை வேரொடும் களைந்து ஆட் கொண்டருள்வாயாக.

குறிப்புரை :

மடங்குதல், இங்கு அழிதலின் மேற்று. மன் - நிலை பெற்ற. `அருளால்` என உருபு விரிக்க. தீக்கொளுவுதல் - எரித்தல். விடங்கன் - ஆண்மையுடையவன். ``வஞ்சிக்கொம்பு`` என்றது, உமை யம்மையை. யானையை உரித்த செயலைக் கண்டு அம்மை அஞ்சி னாள் என்க. `அஞ்சுவித்தாய்` என்னும் விளி, `உனக்கு என் வினையை அஞ்சப் பண்ணுதல் எளிது` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 20

கொம்பரில் லாக்கொடி போல்அல மந்தனன்
கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர்
நண்ணுகில்லா
உம்பருள் ளாய்மன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
அம்பர மேநில னேஅனல் காலொடப்
பானவனே. 

பொழிப்புரை :

தேவர்களும் அணுகக் கூடாத மேலிடத்து இருப் பவனே! நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! ஆகாயமே! பூமியே! நெருப்பு, காற்று என்பவைகளோடு நீரும் ஆனவனே! இளமை நலமுடையோனே! கொழு கொம்பில்லாத கொடியைப்போலச் சுழன்றேன்; இவ்வாறு வருந்துகின்ற என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

கொம்பர் - கொம்பு; போலி. அலமந்தனன் - அலைந் தேன்; இதனை எச்சமாக்கி, ``வெம்புகின்றேனை`` என்பதனோடு முடிக்க. கோமளம் - அழகு. `அழகனே` என்னாது, `அழகே` என்றது, `அழகே ஓர் வடிவங்கொண்டு நின்றாற் போல்பவனே` என அதன் மிகுதியுணர்த்தற்பொருட்டு. வெம்புதல் - வருந்துதல். உம்பர் - மேலி டம்; சிவலோகம். அம்பரம் - ஆகாயம். கால் - காற்று. அப்பு - நீர்.

பண் :

பாடல் எண் : 21

ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல
னால்அலைப்புண்
டேனையெந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை
யேன்மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலை யும்அமு
தத்தையும்ஓத்
தூனையும் என்பி னையும்உருக் காநின்ற
ஒண்மையனே. 

பொழிப்புரை :

என் அப்பனே! தீவினையேனது உள்ளத்தின்கண், தேனினையும், பாலினையும், கருப்பஞ்சாற்றையும், அமுதத்தினையும் நிகர்த்து உடம்பையும் உடம்பில் இருக்கும் எலும்பையும் உருகச் செய் கின்ற ஒளியுடையோனே! யானையினது கொடிய சண்டையில் அகப் பட்ட சிறு புதர் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

ஐம்புலன்களுக்கு உவமையாகக்கூறலின், ஆனைகளை ஐந்தாகக் கொள்க. குறுந்தூறு - சிறுபுதல். `ஐந்து யானைகள் தம்முள் மாறுபட்டுச் செய்யும் போர்க்கிடையில் ஒரு சிறுபுதல் அகப்பட்டுக் கொள்ளுமாயின், அஃது எவ்வாறு அவற்றால் மிதிப்புண்ணுமோ அதுபோல, ஐம்புலன்களின் மாறுபாட்டிற்கிடையில் அகப்பட்டுள்ள யான் அவற்றால் அலைப்புண்கின்றேன்` என்றபடி. கன்னல் - கரும்பு. ஒண்மையன் - ஞான வடிவினன்.

பண் :

பாடல் எண் : 22

ஒண்மைய னேதிரு நீற்றைஉத் தூளித்
தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய்
யடியவர்கட்
கண்மைய னேஎன்றுஞ் சேயாய் பிறற்கறி
தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை
ஆண்மைய னேஅலிப் பெற்றியனே.

பொழிப்புரை :

ஒளிப்பிழம்பாய் உள்ளவனே! திருவெண்ணீற்றை நிறையப் பூசி ஒளி மிளிரும் வெண்மை நிறம் உடையவனே! மெய்யடி யார்க்குப் பக்கத்தில் இருப்பவனே! அடியாரல்லாத ஏனையோர்க்கு எக்காலத்தும் தூரத்தில் இருப்பவனே! அறிதற்கரியதாகிய பொருளாய் இருப்பவனே! பெண்ணாய் இருப்பவனே! பழமையானவனே! ஆணாய் இருப்பவனே! அலித் தன்மையாய் இருப்பவனே! என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

உத்தூளித்தல் - மேலே பூசுதல். `மெய்யடியவர்கட்கு என்றும் அண்மையனே, பிறர்க்கு என்றும் சேயாய்` என்க. அரிதாம் - அரிய பொருளாகிய. பெண்மையன் முதலிய மூன்று பெயரானும் தனித்தனியே விளித்தாரேனும், `பெண்தன்மை, ஆண்தன்மை, அலித்தன்மை என்னும் இம்மூன்று தன்மைகளையும் உடையவனாய் இருப்பவனே` என்றலே கருத்து. ஒருவனே மூன்று தன்மைகளை உடையவனாய் இருத்தலின், இன்ன தன்மையன் என ஒரு பெற்றி யனாக அறிதல் அரிதாயிற்று. அறிதற்கு அரிதாதல், யாவர்க்கும் என்க. ஒருவனே மூன்று தன்மைகளையுடையவனாய் இருத்தலின், இவை அவனது பொதுவியல்பே என்பதும், உண்மை இயல்பு இவை அனைத் தினும் வேறு என்பதும் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 23

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச்
சுருக்குமன்பின்
வெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி
லோகெடுவேன்
மற்றடி யேன்றன்னைத் தாங்குநர் இல்லைஎன்
வாழ்முதலே
உற்றடி யேன்மிகத் தேறிநின் றேன்எனக்
குள்ளவனே. 

பொழிப்புரை :

என் வாழ்க்கைக்குக் காரணமான முதற் பொருளே! எனக்குப் பற்றுக்கோடாய் உள்ளவனே! உன்னை விட்டு விலகியதனால் வரும் துன்பத்தை அனுபவித்து, அடியேன் இவ்வுலகம் இத் தன்மையது என்பதை மிகவும் தெளிவாக அறிந்து நின்றேன். எனக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டு, குற்றத்தையே பெருகச் செய்து, அன்பைச் சுருங்கச் செய்கின்ற, பயனற்ற அடியேனை விட்டுவிடுவாயோ? விட்டு விட்டாலோ, அடியேனைத் தாங்குவோர், வேறு ஒருவரும் இல்லை. அதனால் நான் அழிவேன்.

குறிப்புரை :

பெற்றது, முன்பு உலகியலில் பெற்ற இன்பம். `பெற்றதே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். கொண்டு - மீளவும் பெற்று. ``பிழை`` என்றது, உலகியலை. ``அன்பு`` என்றதற்கு, `உன்திருவடிக்குச் செய்யும் அன்பு` என உரைக்க. வெற்றடியேன் - ஆட்கொண்டதனால் பயன் ஒன்றும் இல்லாத அடியேன். ``மற்று`` என்றதனை, ``இல்லை`` என்றதற்கு முன்னே கூட்டுக. `என் முதல்` என இயையும். ``வாழ் முதல்`` என்ற வினைத்தொகை, ஏதுப் பொருட்கண் வந்தது. உற்று - உலகியலிற் பொருந்தி. தேறிநின்றேன் - அதனால் தெளிவெய்தி நின்றேன். தெளிந்தது, `தாங்குநர் மற்றில்லை` என்பதையும், `விடிற் கெடுவேன்` என்பதையுமாம். ``தாங்குநர்`` என முன்னர் வந்தமையின், ``உள்ளவன்`` என்றதற்கு, `எனக்குப் பற்றுக் கோடாய் உள்ளவனே` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 24

உள்ளன வேநிற்க இல்லன செய்யும்மை
யற்றுழனி
வெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன்
மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத் துரியாய் புலன்நின்கட்
போதலொட்டா
மெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை
எறும்பெனவே. 

பொழிப்புரை :

மிகவும் பெரிய நீண்ட துதிக்கையின்கண், துளையினையுடைய அழகிய யானையின் தோலையுடையானே! ஐம்புலன்களும், உன்பால் செல்ல ஒட்டாமல், நெய்க்குடத்தை எறும்பு மொய்ப்பது போல, என்னை மெல்லென மொய்க்கின்றன; உண்மையானவை இருக்க, பொய்யாயினவற்றையே செய்கிற, மயக்கத்தையும் ஆரவாரத்தையும் உடைய தூயவன் அல்லாதவனாகிய என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

``உள்ளன, இல்லன`` என்றவற்றிற்கு, `பயன்` என்னும் வினைமுதல் வருவிக்க. பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, ``இல்லன`` என்றதனோடு கூட்டுக. மையல் - மயக்கம். `துழனி வெள்ளன்`` என்றதனை, `வெண்துழனியனை` எனப் பின் முன்னோக்கி, உருபு விரித்துரைக்க. வெண்துழனி - வெற்றார வாரம். அல்லேனை - மெய்ந்நெறிக்கு உரியனல்லாத என்னை. `வியன் உரி` எனவும், `மாவேழம்` எனவும் இயையும். கைப் பொள்ளல் - கையின்கண் உள்ள புழையையுடைய; சொற்கிடக்கை இவ்வாறாயினும், `பொள்ளற் கை` என்பதே பொருள் என்க, ``நல்வேழம்`` என்றதில் நன்மை, வலிமை மேல் நின்றது. `ஒட்டாது` என்னும் வினையெச்சம் ஈறு குறைந்தது; `முற்றே எச்சப் பொருட்டாயிற்று` என்றலுமாம். ``மொய்க்கும்`` எனப் பொருட்கண் கூறினமையின், உவமைக்கண், ``எறும்பெனவே`` வாளா கூறிப் போயினார். ஆதலின், `எறும்புகள் நெய்க்குடந்தன்னை மொய்த்தல் என, புலன்கள் என்னை மொய்க்கும்` என்பது பொருளாயிற்று. அற்றம் பார்த்து வருதலின், ``மெள்ளென`` என்றார், குறிப்புச் சொல். `செவ்வனம்` என்பதுபோல, `மெள்ளனம்` என வருதலன்றி, `மெள்ளன` என வாராதாகலின், `மெள்ளனவே` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 25

எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால்அரிப்
புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய
கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேஉணர் வுற்றவர்
உம்பரும்பர்
பெறும்பத மேஅடி யார்பெய ராத
பெருமையனே.

பொழிப்புரை :

கொடிய இயமன் ஒடுங்கும்படி, அவன் மேல் பொருந்திய மணம் நிறைந்த தாமரை மலர்களையொத்த உன் திருவடிகளாகிய அவற்றையே அழுத்தி அறிந்தவர்கள் பெறுகின்ற மிக மேலான பதவியாய் உள்ளவனே! அடியவராயினர், பின்பு உன்னை விட்டு நீங்காத பெருமையுடையவனே! எறும்புகட்கு இடையே அகப்பட்ட, நாங்கூழ் புழு அரிப்புண்டு வருந்தினாற்போல, புலன் களிடையே அரிப்புண்டு அரித்துத் தின்னப்பட்டு வருந்திய தனி யேனை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

பொருட்கண், ``அரிப்புண்டு`` என வருகின்றமையின், உவமைக்கண்ணும், `எறும்பிடை நாங்கூழ் அரிப்புண்டால் என` என்றுரைக்கப்படும். ``வெறுந்தமியேன்`` என்றது. `வெறுமையேனை, தமியேனை` என்றபடி. வெறுமை - பயனின்மை. தமி - துணை யின்மை. `கூற்று ஒடுங்குமாறு அவன் மேல் உறும்போது` என்க.
கடி - நறுமணம். போதுஅவையே - போதுகளாகிய அவற்றையே. போது - மலர்; என்றது திருவடியை. உம்பர் உம்பர் - தேவர்க்கும் மேலுள்ள இடம், `உம்பர் உம்பர்க்கண்` என உருபுவிரிக்க.
பதம் - நிலை; என்றது வீட்டினை. இறைவனே வீடாகலின், ``பதமே`` என்று அருளினார். அடியர் - அடியாராயினார். பெயராத - நீங்காத. நீங்காமைக்கு ஏது, பேரின்பம்.

``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``
(தி.12. பெரிய. புரா. கண்ணப். 174) என்றது காண்க. பெயராமையே பெருமை என்றலின், ``பெயராத பெருமை`` என்றதில், பெயரெச்சம் வினைப் பெயர் கொண்டதாம்.

பண் :

பாடல் எண் : 26

பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு
நினைப்பிரிந்து
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன்
கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி
வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக்
கொழுமணியே.

பொழிப்புரை :

பெரிய கங்கையாகிய பெருகுகின்ற நீரையுடைய பள்ளத்துள், எதிர்த்து நிற்றலையுடைய சிறிய தோணியின், தோற்றம் போல வெண்மை நிறமும் குளிர்ச்சியும் பொருந்திய பிறைச்சந்திரன் தவழ்கின்ற சடையினையுடைய, பரமாகாயத்திலுள்ள, செழுமை யாகிய மாணிக்கமே! மிகுந்த நீரானது வற்றிப்போக, சிறிய மீன்கள் வாடினாற்போல உன்னை விட்டு நீங்கிய என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

பெருமை, சிறுமை என்பன, இடமும், இடத்து நிகழ் பொருளுமாய் நிற்கும் அவற்றது இயல்புணர்த்தி நிற்றலின், இயை பின்மை நீக்கிய விசேடணங்களாம். துவளுதல் - மெலிதல். `வெருவு நீர்மை` என்பது குறைந்து நின்றது. வெருவுதல் - அஞ்சுதல்; அச்சம், ஐம்புலன் நோக்கி. உவமையோடு இயையாமையின், பிரிந்த` என்பது பாடம் அன்று. `கங்கை என்னும் பொங்கி வரும் நீராகிய மடு` எனவும், `மலைத்தலை (எதிர்த்தலை)யுடைய சிறுதோணி` எனவும் உரைக்க. வெள்ளைக் குரு நீர் - வெண்மை நிறமாகிய தன்மை. வானக் கொழு மணி - மேலுலகில் உள்ள சிறந்த இரத்தினம்; தலைமைக் கடவுள் என்றபடி.

பண் :

பாடல் எண் : 27

கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச்
சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம்
முழுதுங்கம்பித்
தழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண்
டருளிஎன்னைக்
கழுமணி யேஇன்னுங் காட்டுகண் டாய்நின்
புலன்கழலே. 

பொழிப்புரை :

உடல் முழுதும் நடுங்கப் பெற்று, அழுகின்ற அடியார் நடுவே, என்னைப் பொருத்தி வைத்து அடிமை கொண் டருளி, தூய்மை செய்த மாணிக்கமே! செழுமையாகிய முத்துப் போன்ற அழகிய பல்லினை உடைய மாதரது வலையில் போய் மயங்கி விழுகின்ற அடியேனை விட்டு விடுவாயோ? இனியும் முன்போல உனது ஞானமாகிய திருவடியை அடியேனுக்குக் காட்டுவாயாக.

குறிப்புரை :

``மெய்ம்முழுதும்`` என்றது முதலாக, ``கழுமணியே`` என்பது ஈறாக உள்ளவற்றை முதற்கண் வைத்துரைக்க. ``கொழுமணி`` என்றதில் மணி, முத்து. ``குன்றிடைச் சென்று குன்றி`` என்றது, சொற்பின் வருநிலை. ``குன்றிவிழும்`` என்றது, உடனிலைவகையால், அறிவு குன்றி விரும்புதலையும், மலையிடைச் சென்றோர் வலிமை குன்றி விழுதலையும் குறித்தது. கம்பித்தல் - நடுங்குதல்; இஃது அன்பினாலாம். ஆர்த்து வைத்தல் - அகலாதிருக்கச் செய்தல். கழுவுதல் - பாசத்தை நீக்குதல். ``கழுமணி``, இறந்தகால வினைத் தொகை. புலன் கழல் - ஞானத்தின் திருவுருவாகிய திருவடி. ``இன்னும் நின்கழல் காட்டு கண்டாய்`` என்ற இதனால் `இறைவன் முன்புபோல மற்றும் ஒருமுறை தோன்றியருளல் வேண்டும்` என அடிகள் விரும்பினார் என்பது பெறுதும்.

பண் :

பாடல் எண் : 28

புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர்
பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணும்
மண்ணுமெல்லாங்
கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு
ணாகரனே
துலங்குகின் றேன்அடி யேன்உடை யாய்என்
தொழுகுலமே. 

பொழிப்புரை :

விண்ணுலகமும் மண்ணுலகமும் முழுவதும், அஞ்சிக் கலக்கமுற்றபோது, கடலில் எழுந்த விடத்தை அமுதமாக உண்டவனே! அருட்கடலே! என்னை ஆளாக உடையவனே! என் வேதியனே! அடியேன் பிறப்புக்கு அஞ்சி நடுங்குகின்றேன். ஐம் புலன்களும், திகைக்கச் செய்ய, திகைப்பை அடைந்து, இவ்விடத்தில் ஒரு பொய் வழியிலே, உன்னை விட்டு விலகித் திரிகின்ற என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

``யானும்`` என்ற உம்மை, `உனக்கு அடியவன் ஆகிய யானும்` என்னும் சிறப்புணர்த்திற்று. ``நெறிக்கு`` என்ற நான்கனுருபை ஏழனுருபாகத் திரிக்க. விண், மண் என்பன அவ்விடத்து வாழ்வாரை உணர்த்தின. ``கலங்க`` என்றதன்பின் `கண்டு` என ஒருசொல் வருவிக்க. கருணாகரன் - அருளுக்கு இருப்பிடமாய் உள்ளவன். முன்பு, ``உற்றடியேன் மிகத் தேறிநின்றேன்`` (பா. 23) என்றதுபோல இங்கும் ``துலங்குகின்றேன்`` - (அறிவு விளங்கப் பெறுகிறேன்) என்றார். இதற்கு இவ்வாறன்றி, துளங்குகின்றேன் என்பது பொருளாக உரைப்பாரும் உளர்; அது பொருந்தாமை வெளிப்படை. தொழு குலம் - வணங்கப்படும் இனம். இஃது ஆகுபெயராய், அவ்வினத்தவரைக் குறித்தது; அவர், தாய், தந்தை, மூத்தோர், ஆசிரியன்மார், தெய்வங்கள். `எனக்கு இவரெல்லாருமாய் உள்ளவனே!` என்றபடி. திருநாவுக்கரசரும், ``அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ - அன்புடைய மாமனும் மாமியும்நீ`` (தி.6.ப.95.பா.1) என்று அருளிச் செய்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 29

குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற்
றச்சிலையாம்
விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின்
மின்னுகொன்றை
அலங்கலந் தாமரை மேனிஅப் பாஒப்
பிலாதவனே
மலங்களைந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு
மத்துறவே. 

பொழிப்புரை :

பொன்போல மின்னுகின்ற, கொன்றை மாலை அணிந்த, செந்தாமரை மலர் போன்ற திருமேனியை உடைய அப்பனே! ஒப்பற்றவனே! என் சுற்றத் தொடர்பை அறுத்தவனே! என்னைக் குற்றத்தினின்றும் நீக்கியவனே! வெற்றி வில்லாகிய மேருவையுடைய எந்தையே! கடைகின்ற மத்துப் பொருந்தினவுடன் சுழல்கின்ற தயிர்போல, ஐந்து மலங்களாலும் அலைவுற்று வருந்து வேன். என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

`என்னைக் குலம் களைந்தாய்; குற்றம் களைந்தாய்; என்க. சிலை - வில். விலங்கல் - மலை; மகாமேரு. ``கொற்றச் சிலை யாம் விலங்கல் எந்தாய்`` என்றாரேனும், `விலங்கலாம் கொற்றச் சிலை எந்தாய்` என்பதே கருத்தாம். `அலங்கலமேனி` எனவும், `அம் தாமரை மேனி` எனவும் தனித்தனி இயையும். ``தாமரை`` என்றது, செந்தாமரை மலரை. ``செந்தாமரைக்காடனைய மேனித் தனிச் சுடரே`` (தி.8 திருச்சதகம் 26) என முன்னரும் கூறினார். மலங்கள் ஐந்து; ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி. மலங்கள் ஐந்தாகக் கூறப்படுதலை,
``மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையின்
வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்
கீறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்
தாறாத வல்வினை யால்அடி யுண்ணுமே``
என்றாற்போலக் (தி.10 திருமந்திரம் 2160) கூறப்படுதல் காண்க. `பொருமத்துத் தயிரின் உறவே சுழல்வன்` எனக் கூட்டுக. பொருமத்து- கலக்குகின்ற மத்தினைக் கொண்ட. தயிரின் - தயிர் போல. உறவே - மிகவும்.

பண் :

பாடல் எண் : 30

மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது
வக்கலங்கி
வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண்
டலைமிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர்நெடு
மாலைசுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச்செஞ் சாந்தணி
சச்சையனே. 

பொழிப்புரை :

வெண்டலை மாலையை அணிந்து கொத்துக் களாகப் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி நெடு மாலையைச் சுற்றிப் பரவின திருவெண்ணீற்றுடன், சந்தனத்தின் செம்மையான சாந்தினை அணிந்த இளமையை உடைய தலைவனே! புலன்களாகிய நெருப்புப் பற்ற மத்துப் பொருந்திய குளிர்ந்த தயிரைப் போலக் கலங்கி, வேருறுவேனை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

தீக் கதுவ - நெருப்புப்போல வந்து பற்ற. இது வேறுவமை கூறியதாகலின், முன்னை யுவமைக்கு இழுக்கின்மை யுணர்க. வித்து - நடுக்கம். இது, `விதுப்பு` என்பது, முதனிலை மாத்திர மாய் நின்று ஒற்றிரட்டி இப்பொருள் தந்தது. இனி, ``அறிவு`` என்றானும், `அறிவுடையவன்` என்றானும் பொருள்படும் வட சொல்லாகக் கொண்டு, அதற்கேற்ப உரைத்தலும் ஆம். மிலைச்சி - தலையில் அணிந்து. தாருகாவன முனிவர்கள் விடுத்த வெண்டலையைச் சிவபிரான் தனது சடையில் அணிந்து கொண்டமை அறிக. போது - மலர். `குடர் போலும் மாலை` என்க. இது கணவிர (செவ் வலரி) மாலை. சுற்றியது, சடையில். வெண்டலை கிடத்தலின், அதனைச் சூழ்ந்துள்ள மாலையும் குடர்போலத் தோன்றுவதாயிற்று. தத்துறு - பரந்திருக்கின்ற. ஆரம் - சந்தனக்கட்டை. சாந்து - அதனைத் தேய்த்த தேய்வை. குங்குமப் பூக்கலத்தலால், சாந்து செம்மை நிறம் பெற்றது. `செச்சை` என்பது, மோனைநயம் நோக்கி, ``சச்சை`` எனத் திரிக்கப்பட்டது. செச்சை - வெட்சி. `வெட்சிப் பூப்போலும் திரு மேனியையுடையவனே` என்க. இதனுள், சிவபெருமான் திருக் கோலத்தில் செம்மையும், வெண்மையும் விரவிக் கிடத்தலை விதந்த வாறு காண்க.

பண் :

பாடல் எண் : 31

சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால்
நிலம்நெருப்பாம்
விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி
யாய்கரியாய்
பச்சைய னேசெய்ய மேனிய னேயொண்
படஅரவக்
கச்சைய னேகடந் தாய்தடந் தாள
அடற்கரியே. 

பொழிப்புரை :

இளமையுடைய தலைவனே! மிக்க குளிர்ச்சியுள்ள நீரும், ஆகாயமும், காற்றும், நிலமும், தீயுமாக நிற்கின்ற வித்தை யுடையவனே! வெண்மை நிறமுடையவனே! கருமை நிற முடையவனே! பசுமை நிறமுடையவனே! செம்மேனியுடையவனே! அழகிய படத்தையுடைய பாம்பாகிய அரைக் கச்சினை அணிந் தவனே! பெரிய அடிகளையுடைய வலி அமைந்த யானையை வென்ற வனே! விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

அந்தாதி யாதற்பொருட்டு, இங்கும் செச்சை, `சச்சை 2970?` எனப்பட்டது. புனல் - நீர். கால் - காற்று. விச்சை - வித்தை; வியத்தகு தன்மை. வெளியாய் - வெண்மை நிறம் உடையவனே. ``நிறங்கள் ஓர் ஐந்துடையாய்`` (தி.8. சிவபுராணம் 49) என்றதன் குறிப்பைக் காண்க. தடந் தாள அடல் கரி - பெரிய கால்களையுடைய வலிய யானை. `கரியைக் கடந்தாய்` என இயையும்; இதுவும் விளியே.

பண் :

பாடல் எண் : 32

அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி
அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத்
தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு
தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்குங்
கறைக்கண்டனே. 

பொழிப்புரை :

மேலாகிய அடியார்களுக்கு அல்லாது ஏனை யோர்க்குப் பற்றுதற்கு அருமையானவனே! ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே! சுடும் தீயாகிய ஒரு பூதமும் நிலைகலங்க, கடலின் கண் அருமையாய் உண்டாகிய நஞ்சை அமுதாக்கிய நீலகண்டப் பெருமானே! விடுதற்கு அருமையானவனே! வலி பொருந்திய யானையைப் போன்ற ஐம்புல ஆசைக்குப் பயந்து உள்ளம் ஒடுங்கிய என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

அழிந்த - வலி இழந்த. `என்னை விட்டிடுதி கண்டாய்` என இயையும். விடற்கு அரியாய் - உன்னைப் பற்றினோர், பின்னர் விடுதற்கு அரியவனே; `அவர்களை வசிகரித்துக் கொள்பவனே` என்றபடி. ``அடியார் பெயராத பெருமையனே`` என்றார் முன்னும் (பா. 25). அருமை, இங்கு இன்மைமேல் நின்றது. தொடல் - தீண்டல்; அணுகுதல். தீச் சுழல - நெருப்புப் பரக்குமாறு, ``கடற்கு`` என்றதனை, `கடற்கண்` எனத் திரிக்க. `கடத்தற்கு` என்பது குறைந்து நின்றது` எனினுமாம்.

பண் :

பாடல் எண் : 33

கண்டது செய்து கருணைமட் டுப்பரு
கிக்களித்து
மிண்டுகின் றேனை விடுதிகண் டாய்நின்
விரைமலர்த்தாள்
பண்டுதந் தாற்போற் பணித்துப் பணிசெயக்
கூவித்தென்னைக்
கொண்டென்எந் தாய்களை யாய்களை யாய்
குதுகுதுப்பே. 

பொழிப்புரை :

எம் தந்தையே! உன் கருணையாகிய தேனைப் பருகிக் களிப்படைந்து, மனம் போனவாறு செய்து, செருக்கித் திரி கின்ற என்னை விட்டு விடுவாயோ? உனது, மணம் அமைந்த தாமரை மலர் போன்ற திருவடியை முன்னே கொடுத்து அருளினாற் போல கொடுத்தருளி, உன் திருத்தொண்டினைச் செய்ய அழைப்பித்து என்னை ஏற்றுக் கொண்டு வீடுபேற்றுக்கு இடையூறாய் உள்ள களிப் பினைக் களைவாயாக.

குறிப்புரை :

கண்டது, அவ்வப்பொழுது மனத்திற்குத் தோன்றியது; `ஒரு நெறிப்படாத செயல்கள்` என்றபடி. இவ்வாறு செய்தல், எல்லாம் உனது அருள் வழியாக நினைத்து அதனை மறவாமையால் என்பார், `கருணை மட்டுப் பருகிக் களித்து`` என்றும், `அதனால் யாதோர் அச்சமும் இன்றி இருக்கின்றேன்` என்பார், ``மிண்டுகின்றேனை`` என்றும் அருளினார். மட்டு - தேன். மிண்டுதல் - திண்மையுறுதல். ``பண்டுதந்தாற்போல`` என்றதனால், ``பணித்து`` என்றதற்கு, `இன்றும் பணித்து` என உரைக்கப்படும். பணித்தல் - காணக் காட்டுதல். `கூவுவித்து` என்பது, கூவித்து எனக் குறைந்து நின்றது; `நீயே அழை யாது பிறரால் அழைப்பிப்பினும் நன்றே` என்பார், `கூவி` என்னாது, `கூவுவித்து என்றார். இதனால், அடியார்க்கு அடியராய் நிற்கவும் ஒருப்பட்டமை பெறப்படுகின்றது. கொண்டு - ஏற்றுக் கொண்டு. களையாய - (சிவபோதத்திற்குத்) தடையாய் உள்ள. குதுகுதுப்பு - அடக்கம் இன்மை; பரபரப்பு. இது, பேரறிவின்மையால் உளதாவது. இதனை, ``நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் - பேணாமை பேதை தொழில்`` (குறள் - 833) என்பதில், `நாடாமை` என்றார், திருவள்ளுவ நாயனார். இக்காலத்தார் இதனை, `குறுகுறுத்தல்` எனக் கூறுப. எனவே, இது மேல், `கண்டது செய்து` என்றதனையே குறித்த தாயிற்று. அடிகள் இறைவனை மீண்டுங் காண விரும்பினமை, இதனுள் வெளிப்படையாகவே அறியக் கிடக்கின்றது.

பண் :

பாடல் எண் : 34

குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து
நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை
யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின்
மனங்கனிவித்
தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப்
பரம்பரனே. 

பொழிப்புரை :

நிறைந்த மலர்களையுடைய கயிலையில் வாழ் கின்ற மிகமேலானவனே! உன் திருவுளக் கருத்திற்கியைய நடப்பதில் மகிழ்ச்சியின்றி நின்று என் குறிப்பின்படி செய்து, உன் குறிப்பினை அறிவதில் விரைகின்ற என்னை விட்டு விடுவாயோ? வாழைப் பழத்தைப் போல என்னை மனம் குழையச் செய்து, மணம் நிறைந்து இனிதாய் இருக்கின்ற ஓர் இனிமையில் மற்றோர் இனிமை கலந்தது போன்று நீ எதிர்ப்படுவது எக்காலம்?

குறிப்புரை :

`நின் குறிப்பில் குதுகுதுப்பின்றி` எனக் கூட்டுக. நின் குறிப்பு - உனது கருத்து. `உன் திருவுள்ளக் குறிப்பின் வழி நிற்றலில் விரைதல் இன்றி` என்றவாறு. என் குறிப்பு - எனது கருத்து; என்றது, `யான் கருதிய செயல்` என்றபடி. விதுவிதுப்பேன் - மிக்க விரைவினை உடையேன். விரைவு, இறைவனை அடைதற்கு என்க. `நின் குறிப்பின் வழி ஒழுகாமலே உன்னை அடைவதற்கு மிக விரைகின்றேன்` என்ற படி. ``மது` இரண்டனுள் முன்னது, நீர்; பின்னது, தேன். `விலாமிச்சை வேர் முதலிய வாசனைப் பொருள்கள் இடப்பட்டு இனிதாய நீரும், தேனும்போல நீ என் எதிர்வருதல் எப்போது` என்க. ``வாழைப் பழத்தின் மனம் கனிவித்து`` என்றதனை, ``விடுதிகண்டாய்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. பயில்வி - மிக்க தூய்மையையுடைய (கயிலை). இத்திருப்பாட்டிலும் முன்னைப் பாட்டிற் கூறிய கருத்து இனிது விளங்கிக் கிடத்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 35

பரம்பர னேநின் பழஅடி யாரொடும்
என்படிறு
விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென்
முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ
வாயரவம்
பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப்
பொதும்புறவே. 

பொழிப்புரை :

மெல்லிய மதிக்கொழுந்தையும், பாம்பையும் சமமாக வைத்து அணிந்தவனே! எம் பிரானே! தீவினையுடைய நான், மனம் நடுங்கிப் புகலிடம் அடையும்படி, பிறப்பாகிய ஐந்தலை நாகம் தாக்குகின்றது. மிக மேலானவனே! உன் பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடும், எனது வஞ்சத் தொண்டினையும் ஏற்றுக் கொள்ளுகின்ற சங்காரக் கடவுளே! என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

``பழ அடியார்`` என்றது ஆகு பெயராய், அவரது மெய்யன்பினைக் குறித்தது. மூன்றாம் பிறை முதற்கண் தோன்றுவ தாகலின், அதனை, ``அரும்பு`` என்றார். `அரா` என்பது, `அர` என நின்றது. நேர்வைத்து அணிதல் - எதிர் எதிராக வைத்து அணிதல். `சந்திரனும், பாம்பும் பகைப் பொருள்களாக, அவற்றைப் பகையின்றி இயைந்திருக்க வைத்து அணிந்தாய்` என்றபடி. `பாம்பும் மதியும் புனலும் தம்மிற் பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி`` எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் (தி.6.ப.5.பா.4) அருளினார். `பிறவியாகிய விடத்தைத் தருகின்ற ஐந்தலை அரவம்` என்க. அது, புலன்கள்மேல் செல்கின்ற அவா. அவா ஒன்றாயினும், புலன்கள் ஐந்தன் மேலும் செல்லுதலின், ``ஐவாய் அரவம்`` என்றார். பிறவியை விடம் என்னாமையின் ஏகதேச உருவகமும், `அவா` என்பதனை வெளிப்படக் கூறாது, வாளாதே, ``ஐவாய் அரவம்`` என்றமையின், குறிப்புருவகமும் வந்தனவாம். இனி, ``வாய்`` என்றது, பொறிகளை எனக் கொண்டு, அஃது ஆகுபெயராய்ப் புலன்களைக் குறித்தன எனினும் ஆம். இப்பொருட்கு, `அரவம், பன்மையாம், பொரும் - போர் செய்யும். `விடில் பொரும்` என்பதாம். பெருமான், விளி. ``பொதும்புஉற`` என்றதற்கு, `துன்பமாகிய காட்டில் புகும்படி` என உரைக்க. `பொதும்பு உறப்பொரும்` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 36

பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன்
தீக்கதுவ
வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை
யார்நறவந்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந்
தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வார்யி
தடலரைசே.

பொழிப்புரை :

மனம் நிறைந்த, தேன் ததும்புகின்ற மந்தார மலரில் தாரமாகிய வல்லிசையைப் பழகி, பின் மந்தமாகிய மெல்லிசையை ஒலிக்கின்ற, வண்டுகள் அழுந்தித் திளைக்கின்ற செழுமையாகிய தேனோடு கூடி விளங்குகின்ற சடையினையுடைய, பரமாகாயத்தி லுள்ள வலிமை மிக்க அரசனே! மரப்பொந்தினை அடைந்த நெருப்புப் போல, புகைந்து எரிகின்ற அந்தப் புலன்களாகிய நெருப்புப் பற்று தலால் வெப்பமுறுகின்ற என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

பொதும்பு - காடு ``பொதும்புறு தீப்போல்`` என்று அருளினாராயினும், `தீயுறு பொதும்புபோல்` என்றலே திருவுள்ள மாம். புகைந்து எரிதற்கு, `உள்ளம்` என்னும் வினை முதல் வருவிக்க. தீக் கதுவ - தீயனவாய் வந்து பற்ற. வெதும்புறுதல் - வருந்துதல். நறவம் - தேன். தாரம் - வல்லிசை. மந்தம் - மெல்லிசை. இவற்றிற்கு இடைப்பட்டதனை, `மத்திமம்` என்ப.
``மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்முறை யால்
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்``
(தி.12 பெரி. புரா. ஆனாய. 27) என்றதுங் காண்க. முரல் - ஒலிக்கின்ற. `அசும்பும்` என்பது, ``அதும்பும்`` எனத் திரிந்தது; `சிந்தும்` என்பது பொருள். வண்டினையும், தேனையும் உடைய `சடையாகிய வானம்` என்க. வானம், செவ்வானம்.

பண் :

பாடல் எண் : 37

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச
லென்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண்
நகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற்
பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்
தடர்வனவே. 

பொழிப்புரை :

வெண்மையான பல்லினையும், கருமையான கண்ணையும் உடைய, திருப்பாற்கடலில் தோன்றிய திருமகள் வணங்கிப் பொருந்திய அழகிய திருப்பாதங்களையுடைய, பாம் பணிந்த பெருமானே! அரசனே! மணம் பொருந்திய முடியினையுடை யவனே! மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போல, கொடிய வினைப் பயன்கள் வந்து தாக்குகின்றன. அறிவில்லாத சிறியேனது குற்றத் திற்குத் தீர்வாக, அஞ்சற்க என்று நீ அருள் செய்தல் அல்லாது விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

பிழைக்கு - பிழையை நீக்குதல் காரணமாக. `அஞ்சல் என்னின் அல்லால் வல்வினைதாம் வந்து அடர் வனவே` என இயையும். ``விடுதி கண்டாய்`` என்றதனை இறுதிக்கண் கூட்டி, இதற்கு முன், `அதனை அறிந்தும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. திரை சேர் மடந்தை - கங்கை. `கண்ணாகிய கடல் பொருந்திய மடந்தை` என்று உரைத்து, `உமையம்மையை மணந்த` என்றலுமாம். `மணந்த புயங்கா` என இயையும். வரைசேர்ந்து அடர்ந்தென்ன - மலைகள் பல ஒருங்கு கூடி நெருங்கினாற்போல.

பண் :

பாடல் எண் : 38

அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல்
லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந்
தேயெரியுஞ்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும்
பர்க்கமுதே
தொடர்வரி யாய்தமி யேன்தனி நீக்குந்
தனித்துணையே. 

பொழிப்புரை :

பரந்து எரிகின்ற நெருப்பை ஒத்தவனே! சுடு காட்டின் அரசனே! தொண்டர்க்கு அமுதமே! அணுகுதற்கு அரிய வனே! தனியேனது, தனிமையை நீக்குகின்ற தனித்துணையே! வருந்து கின்ற புலன்களால் உன்னைப் பிரிந்து அஞ்சி, இன்சொற்களையுடைய மாதர்களது மயக்கினை விட்டு நீங்கும் ஆற்றல் இல்லாத என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

அஞ்சுதல், பிறவிபற்றி. `அவ்வச்சம் ஒருபால் உளதா யினும், ஒருபால் மாதராசையும் நீங்கமாட்டாதவனாய் இருக்கின் றேன்` என்பார், ``அஞ்சி விடர் விடலேன்`` என்று அருளிச் செய்தார். ``அவர்தம்`` என வேற்றுமைத்தொகை பட அருளினமையின், பண்புத் தொகையாக உரைத்தல் ஏற்புடைத்தன்றாம். சுடர் - தீ; ஆகுபெயர். `பிறர்க்குத் தொடர்வரியாய்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 39

தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை
யால்நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை
யேனுடைய
மனத்துணை யேஎன் றன் வாழ்முத லேஎனக்
கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும்பொ றேன்துய ராக்கையின்
திண்வலையே. 

பொழிப்புரை :

வினையேனது, மனத்துக்குத் துணையே! என்னுடைய வாழ்வுக்குக் காரணமானவனே! எனக்கு இளைத்த காலத்தில் நிதியாய் இருப்பவனே! துன்பங்களுக்கு ஆதாரமாகிய உடம்பென்னும் திண்ணிய வலையிற் கிடப்பதைத் தினை அளவு நேரங்கூடப் பொறுக்கமாட்டேன். ஒப்பற்ற துணையாகிய நீ இருக்க, செருக்கடைந்து, தலையாலே நடந்த வினையைத் துணையாகவுடைய என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

தனித்துணை - ஒப்பற்ற துணைவன். `ஒப்பற்ற துணை வனாகிய நீ நிற்க உன் வழிநில்லாது, யான் தனியே என் ஆற்றலையே துணையாகக் கொண்டு செருக்குற்று முறைமாறாக நடந்தேன்; அதனால், எனக்கு அந்நடையின் பயனாக விளைந்த வினைதான் துணையாக முடிந்தது; என்னை விடுதிகண்டாய்` என்றபடி.
``நடந்த வினைத்துணையேன்`` என்ற வினைமுதற் பெயர் கொண்ட பெயரெச்சத்திற்கு முன்னர், ``யான்`` என எழுவாய் புணர்த்தமையின், `யான் தருக்கி நடந்தேன்; அங்ஙனம் நடந்த என்னை` என உரைக்க. பின்னரும் இவ்வாறு வருவன உள; அவற்றை அறிந்து கொள்க. ``ஆக்கையின்`` என்றதில் இன், அல்வழிக்கண்வந்த சாரியை.

பண் :

பாடல் எண் : 40

வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின்
வலையிற்பட்டு
மிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண்
மதியின்ஒற்றைக்
கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி
லாயமென்னும்
மலைத்தலை வாமலை யாள்மண வாளஎன்
வாழ்முதலே. 

பொழிப்புரை :

வெள்ளிய சந்திரனது ஒரு கலையைத் தலையில் அணிந்தவனே! கருணைக்கு இருப்பிடமானவனே! கயிலாயம் என்கிற மலைக்குத் தலைவனே! மலை மகளாகிய உமாதேவிக்கு மணாளனே! என் வாழ்வுக்கு மூலமே! வலையினிடத்து அகப்பட்ட மான் போன்ற கண்களை உடைய மாதரது பார்வையாகிய வலையிற்சிக்கி, மயங்கி அலைந்த என்னை விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

``வலைத்தலை`` என்றதில் தலை ஏழனுருபு. நோக்கு - பார்வை. ``நோக்கின்`` என்றதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை.
மிலைத்து - மேற்கொண்டு. மேற்கொண்டது, உலகியலை என்க. கலைத்தலையாய் - கலையை அணிந்த முடியையுடையவனே. மலையாள் - மலைமகள்.

பண் :

பாடல் எண் : 41

முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற்
கடிப்பமூழ்கி
விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக்
கூன்மிடைந்த
சிதலைச்செய் காயம் பொ றேன்சிவ னேமுறை
யோமுறையோ
திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன்
சிவகதியே. 

பொழிப்புரை :

தேமல் படர்ந்த அணி பூண்ட கொங்கைகளை யுடைய உமை பாகனே! என் இன்ப நெறியே! சிவபெருமானே! முதலைபோன்ற கொடுமையையுடைய, சிவந்த வாயைக் கொண்டுள்ள மாதரது ஆசையாகிய வெப்பம் மிகுந்த நீரில் ஆழ முழுகி, நடுக்கம் உறு கின்ற என்னை, விட்டு விடுவாயோ? புலால் நாற்றமுடைய தசை நிறைந்த, நோய்க்கு இடமாகிய உடம்பைத் தாங்க மாட்டேன். இந் நிலை தகுமோ? தகுமோ?

குறிப்புரை :

``முதலைச் செவ்வாய்ச்சியர்`` என்றதனை, `செவ்வாய்ச்சியர் முதலை` என மாற்றிக்கொள்க. வெந்நீர் - கொடிய நீர்; சுழலையுடைய நீர். கௌவுதலை, `கடித்தல்` என்றார். விதலை - நடுங்குதல். விடக்கு ஊன், ஒருபொருட் பன் மொழி.
சிதலை - நோய். `முறையோ` என்பது, முறையீட்டுச் சொல். திதலை - சுணங்கு (தேமல்). சிவகதி - நற்கதி; வீடு. முதல் அடி தவிர ஏனைய அடிகளின் முதற்சீரில் சகர ஒற்றுக்கள் விரித்தலாய் வந்தன.

பண் :

பாடல் எண் : 42

கதியடி யேற்குன் கழல்தந் தருளவும்
ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண் டாய்வெண்
டலைமுழையிற்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச்
சுருங்கஅஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை
மன்னவனே. 

பொழிப்புரை :

வெண்மையான தலையாகிய வளையை இருப்பிடமாக உடைய ஒளியையுடைய பாம்பானது, நோக்கிச் சற்றுப் படமெடுத்து அதனைச் சுருக்கிக் கொள்ளவும், பிறைச்சந்திரன், அதனைக் கண்டு பயந்து, கங்கையாகிய பெரிய நீர் நிலையில் மூழ்கி மறைந்து கொள்ளும் சடையையுடைய தலைவனே! அடியேனுக்கு உயர் ஞான நெறியை உன் திருவடிகள் கொடுத்தருளவும், உடல் நீங்கப் பெறவில்லை. ஊழ்வினையுடைய அடியேனை விட்டு விடு வாயோ?

குறிப்புரை :

`கதியாக` என, ஆக்கம் வருவிக்க. ஊன் கழியா - உடம்பை நீக்கமாட்டாத. விதி அடியேனை - வினையை உடைய என்னை. பதி உடை - பொருந்துதல் உடைய. வாள் அர - கொடிய பாம்பு. இறை பைத்து - சிறிது படம் எடுத்து. சுருங்க - பின் அவ் விடத்தே ஒடுங்க. ``அஞ்சி`` என்றதனை, ``மதி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. நெடுநீர் - கங்கையாகிய மிக்க நீர். மதி, நிறைவின்றிப் பிறையாய்த் தோன்றுதலின், பாம்பு அதன்பால் செல்லாதாயிற்று. எனவே, பார்த்தமை, நிரம்பினமை அறிதற்பொருட்டாயிற்று.

பண் :

பாடல் எண் : 43

மன்னவ னேஒன்று மாறறி யாச்சிறி
யேன்மகிழ்ச்சி
மின்னவ னேவிட் டிடுதிகண் டாய்மிக்க
வேதமெய்ந்நூல்
சொன்னவ னேசொற் கழிந்தவ னேகழி
யாத்தொழும்பர்
முன்னவ னேபின்னும் ஆனவ னேஇம்
முழுதையுமே. 

பொழிப்புரை :

மேலான வேதமாகிய உண்மை நூலினைச் சொன்னவனே! சொல்லினுக்கு அப்பாற்பட்டவனே! நீங்காத அடியார்க்கு முன் நிற்பவனே! அவர்க்கு ஆதரவாகப் பின் நிற்பவனும், இவ்வெல்லாமும் ஆனவனே! தலைவனே! உன்னை வந்து கலக்கும் விதத்தை அறியாத சிறியேனுக்கு இன்ப விளக்கமாய்த் திகழ்பவனே! விட்டு விடுவாயோ?

குறிப்புரை :

மாறு - பிழை. இஃது, உலகியல் வகையில் பிழை ஒன்றும் செய்யாமையைக் குறித்ததாம். `ஆறு` எனப்பிரித்து, `வழி` எனவும் பொருள் உரைப்பர். மின்னவன் - மின்னலைச் செய்தவன். இறைவன் தோன்றி மறைந்தமையின், `மகிழ்ச்சியாகிய மின்னலைச் செய்தவன்` என்று அருளினார். கழியா - விட்டு நீங்காத. முன்னவன்- கண்முன் தோன்றுபவன். ``பின்னும்`` என்றது, `மற்றும்` எனப் பொருள்தந்தது. இம் முழுதையும் ஆனவனே என மாற்றியுரைக்க. இகரச் சுட்டின் ஈற்றில் நின்ற வகரமெய், மகரமாய்த் திரிந்தது. ``முழுதையும்`` என்றதில் ஐ, சாரியை. `இவை முழுதும் ஆனவனே` என்பது பொருள். `நிலம் நீர் முதலாகக் காணப்படுவனவற்றை` ``இவ்`` எனச் சுட்டிக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 44

முழுதயில் வேற்கண் ணியரெனும் மூரித்
தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின்
வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வான்நற் றொழும்பரிற் கூட்டிடு
சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனைவி டேல்உடை யாய்உன்னைப்
பாடுவனே. 

பொழிப்புரை :

எம் பெருமானே! உடையவனே! முழுக் கூர்மையை உடைய வேற்படை போன்ற கண்களையுடைய மாதரார் என்கிற பெரு நெருப்பில் முழுகுகின்ற வெண்ணெய் போன்ற என்னை விட்டு விடுவாயோ? உன்னை நான் புகழ்ந்து பாடுவேன். உனது மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடியை வணங்கிச் செல்லுகின்ற பரவெளித் தொண்டரோடு சேர்ப்பாயாக. குற்றம் செய்யும் என்னைக் கைவிடாதே! வணக்கம்.

குறிப்புரை :

`முழுதும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``கண்ணியர்`` என்றது ஆகுபெயராய், அவர் மேற்செல்லும் ஆசையைக் குறித்தது. `முழுதும் முழுகும்` என இயையும்.
மூரித்தழல்- பெரிய நெருப்பு. விழுது - இழுது; வெண்ணெய். செல் - சென்ற. வான் நல் தொழும்பர் - வீட்டுலகத்தில் உள்ள நல்ல அடியார். அவர்களை, ``நற்றொழும்பர்`` என்றது, தாம் அன்ன ராகாமையை விளக்குதற்கு. சோத்து - வணக்கம்; இஃது இழிந்தோர் கூற்றாயே வரும். செய்வேன் என்றது செய்யும் இயல்பினேன் என்றதாம். `ஆயினும் உன்னைப் பாடுதல் செய்வேன்; ஆதலின், விடுதல் ஆகாது` என்பார், மறித்தும், ``விடேல்`` என விண்ணப்பித்தார்.

பண் :

பாடல் எண் : 45

பாடிற்றி லேன்பணி யேன்மணி நீஒளித்
தாய்க்குப்பச்சூன்
வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந்
தாங்கலறித்
தேடிற்றி லேன்சிவன் எவ்விடத் தான்எவர்
கண்டனர்என்
றோடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேன்நின்
றுழைத்தனனே.

பொழிப்புரை :

மாணிக்கமே! நின் புகழைப் பாடமாட்டேன். நின்னை வணங்கேன். எனக்கு ஒளித்துக் கொண்ட உன் பொருட்டே, பசிய ஊனுடம்பைத் தொலைத்திடாத என்னை விட்டுவிடுவாயோ? வியப்படைந்து அவ்விடத்தே, அலறித் தேடிற்றிலேன்; சிவபெருமான் எவ்விடத்திலுள்ளான்? யார் அவனைக் கண்டனர்? என்று கேட்டு ஓடிற்றிலேன். மனம் கசிந்து அன்பு செய்யேன்; வீணே நின்று வருந்தினேன்.

குறிப்புரை :

``வீடிற்றிலேனை`` என்றது, `வீடிற்றிலேன்; என்னை,` என இருசொற்பொருட்டாய் நின்றது. ``மணி`` என்றது, விளி. ``நீ விடுதிகண்டாய்`` என இயையும். வியந்து - மருண்டு. `மணியே` ஒளித்த உன் பொருட்டுப் பாடிற்றிலேன்; பணியேன்; வியந்து ... ... ... உருகேன்; பச்சூன் வீடிற்றிலேன்; நின்று உழைத்தனன்; என்னை நீ விடுதிகண்டாய்` என்க. `உயிர்நின்ற உடம்பு` என்பார், ``பச்சூன்`` என்று அருளினார். உழைத்தனன் - அலந்தேன்.

பண் :

பாடல் எண் : 46

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்
தீயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின்
வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன்
தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென் றறைவன்
பழிப்பினையே. 

பொழிப்புரை :

மான்போன்ற பார்வையையுடைய பெண்டிரது, கொங்கையின்கண் பலாக்கனியில் மொய்க்கும் ஈயை ஒத்து விரும் புகின்ற என்னை விட்டுவிடுவாயோ? விட்டுவிடுவாயாயின், கடல் விடமுண்ட மேகம் போன்ற கருமையான கழுத்தை உடையவன்; குணம் இல்லாதவன்; மானிடன்; குறைந்த அறிவுடையவன்; பழைய பெரிய பரதேசி; என்று அடிக்கடி உன் இகழ்ச்சியை எடுத்துச் சொல்வேன்.

குறிப்புரை :

உழை - மான். தரு, உவம உருபு. `கொங்கைக் கண்` என உருபு விரிக்க. ``ஈயின்`` என்றதில் இன், வேண்டா வழிச் சாரியை. பலாப்பழத்து ஈ, அதன்கண் வீழ்ந்து மீள மாட்டாது அழிதலாகிய தொழில்பற்றி வந்த உவமை. இதற்கு, கொங்கையைப் பலாப்பழத் தோடு உவமித்ததாக உரைத்து, அதன்மேலும் பல நயம் கூறுவாரும் உளர். `நஞ்சுண் கறைக்கண்டன் முதலிய சொற்களெல்லாம் பழிப் பினையே புலப்படுத்துவன` என்றபடி, நஞ்சுண்டல், பேரறிவில்லா தாரது செயல்; கண்டத்தில் கறுப்புண்மை உடல் அழகிற்கு ஓர் மறு; மானிடன் - தேவனல்லன். தேய் மதியன் - குறைந்த அறிவையுடைய வன். பழை - பழைமை. தரு - பொருந்திய; என்றது, `யாவராலும் அறியப்பட்ட` என்றபடி. மா அபரன் என்றே பிரித்து, மிகவும் கீழானவன்` என உரைக்க. இனி மா பரன் என்றே பிரித்து `யாவர்க்கும் மிக அயலான்` என்று உரைப்பினும் ஆம். `என்னை ஏன்று கொள்ளாது விட்டுவிடின், இப்பெயர்கள் எல்லாம் இங்ஙனம் கூறும் பொருளையே உடையனவாய் விடும்` என்றபடி. இங்ஙனம் இச்சொற்களை வேறு பொருள்பட வைத்தமை அடிகளது புலமைத் திறத்தையும் உணர்த்துகின்றது.
இப் பாட்டிலும், ``சிரிப்பிப்பன்`` எனப் பின்னர் வருகின்ற பாட்டிலும் அடிகள் தம்மை இறைவன் ஆட்கொண்ட உரிமையாற் சில கூறினமை அறிந்து இன்புறற்பாலது. குணம் இலி - மாயா குணங் களாகிய முக்குணங்களுள் ஒன்றும் இல்லாதவன். மான் இடன் - பெண்ணை அல்லது மானை இடப்பக்கத்தில் கொண்டவன். தேய் மதியன் - தேய்ந்த சந்திரனை அழிந்தொழியாதபடி அணிந்தவன். பழை தரு மா பரன் - அனாதியான பெரிய மேலானவன். இவையே இச்சொற்கள் குறிக்கும் உண்மைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 47

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி
விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண்
மணிப்பணிலங்
கொழித்துமந் தாரம்மந் தாகினி நுந்தும்பந்
தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு
தாரவனே. 

பொழிப்புரை :

ஆகாய கங்கை, வெண்மையான மணியாகிய முத்தினையும், சங்கினையும், ஒதுக்கி மந்தார மலர்களைத் தள்ளுகின்ற அணையாகிய பெருமையைப் பொருந்திய சிறைப்பட்ட அந்நீரில், பிறையாகிய தோணி சேர்தற்கிடமாகிய, கொன்றை மாலையை யுடையவனே! பழிப்பற்ற உன் திருவடியின் பழம் தொண்டினை அடைந்து, அது நழுவி விழ, உன்னை நிந்தித்துக் கொண்டு, திகைத் திருந்த என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

விழ - அஃது என்னிடத்தினின்றும் தவறிவிட. பழித்து- அதனால் என்னையே பழித்துக்கொண்டு. `பழித்து - பழிக்கப்பட்டு` எனினுமாம்.
வெண்மணி - முத்து. பணிலம் - சங்கு. மந்தாரம் - மந்தார மலர்; இஃது இறைவன் சடையில் உள்ளது. `நுந்தும் மந்தாகினி` என மாறுக. நுந்தும் - தள்ளுகின்ற. மந்தாகினி - கங்கை. `மந்தாகினியாகிய நீரில்` என்க. `பந்தப் பெருமை தழி` என்பதனை, ``வெண்மணி`` என்றதற்கு முன்னே கூட்டுக. பந்தப் பெருமை - (உன்னோடு) தொடர்புற்று வாழும் பெருமை. `தழீஇ` என்பது குறுகி நின்றது. சிறை நீரில் - தடுத்து வைக்கப்பட்ட நீரில். கலம் - மரக்கலம்; தோணி. தார் - மாலை. இது, கொன்றை மாலையே என்பது அறியப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

தாரகை போலுந் தலைத்தலை மாலைத்
தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடில்
என்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங்
கைக்கரசின்
சீரடி யாரடி யான்என்று நின்னைச்
சிரிப்பிப்பனே. 

பொழிப்புரை :

நட்சத்திரம் போல, தலையில் தலைமாலையை யும், நெருப்புப் போற்கொடிய பாம்பாகிய ஆபரணத்தையும் அணிந்த வீரனே! என்னை விட்டுவிடுவாயோ? விட்டுவிடில் மேலோர் என்னை நோக்கி, யாருடைய அடியான் என்று கேட்டால், திருவுத்தரகோச மங்கைக்கு வேந்தனாகிய சிவபிரானது சிறப்புடைய அடியாருக்கு அடியவன் என்று சொல்லி, அவர்கள் உன்னைச் சிரிக்கும்படி செய்வேன்.

குறிப்புரை :

தாரகை - விண்மீன். தாரகை போலும் தலையில் உள்ள தலைமாலையையும், தழல்போலக் கொடிய அரவமாகிய அணி கலத்தையும் உடைய வீரனே` என்க. ``தலைமாலை தலைக்கணிந்து`` (தி.4.ப.9.பா.1) எனவும், ``தலைக்குத் தலை மாலை அணிந்த தென்னே`` (தி.7.ப.4.பா.1) எனவும் வந்தனவற்றால், சிவபிரான் தலையிலும் தலைமாலை யணிந்திருத்தல் அறியப்படும். மிக்கார் - உயர்ந்தோர். ``ஆரடியான்`` என்றதற்கு `நீ` என்னும் எழுவாய் வரு விக்க. என்னின் - என்று வினாவின். என்று - என்று விடை சொல்லி. ``சிரிப்பிப்பன்`` என்றது. இவ்விடையைக் கேட்ட அளவில், `இவனை ஆட்கொண்டது இவ்வாறுதானோ` என்று நின்னை அவர்கள் எள்ளி நகையாடுவார்கள் என்றபடி. எனவே, `சிரிப்பிப்பன்` என்பதற்கு, `சிரித்தற்குக் காரணனாய் நிற்பேன்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 49

சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும்
ஈசற்கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின்
வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ் சூண்பிச்சன்
ஊர்ச்சுடுகாட்
டெரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்பிச் சன்என்
றேசுவனே. 

பொழிப்புரை :

என்னை நீ விட்டு விடுவாயோ? விட்டுவிட்டால், என்னை நீ சினந்து தள்ளிய குற்றத்தை, பிறர் நகையாடும்படி செய்வேன். எனது தொண்டையும் ஈசனுக்கே என்று எல்லோரும் சொல்லும்படி செய்வேன். கொடிய யானையின் தோலைப் பூண்ட பித்தன்; புலித்தோல் ஆடையணிந்த பித்தன்; விடத்தை உண்ட பித்தன்; ஊர்ச் சுடுகாட்டு நெருப்போடு ஆடும் பித்தன்; என்னையும் அடிமையாகக் கொண்ட பித்தன்; என்று உன்னை இகழ்ந்து உரைப்பேன்.

குறிப்புரை :

``என்னை விடுதிகண்டாய்; விடின்`` என்றதனை, ``முதலிலும், என்னையும் ஆளுடைப் பிச்சன்`` என்றதனை, `வெங்கரி யின்` என்றதற்கு முன்னும் கூட்டுக. `சீறும் பிழைப்பைச் சிரிப்பிப் பன்` என மாற்றிக் கொள்க. சீறும் பிழைப்பு - ஆட்கொண்டபின் என்னை வெறுக்கும் உனது தவறான செயலை. சிரிப்பிப்பன் - பிறர் இகழுமாறு செய்வன். தொழும்பையும் ஈசற்கு என்றே விரிப்பிப் பன்-`இவனது அடிமைத்திறமும் சிவபெருமானுக்குத் தான்` என்று பலரும் தம்முள் விரிவாக எடுத்துப் பேசும்படி செய்வேன். பிச்சன் - பித்தன். எரிப் பிச்சன் - தீயில் நின்று ஆடும் பித்தன். ``என்னையும்`` என்றதில் உள்ள உம்மை, `ஏனை அடியார்களோடு` என இறந்தது தழுவிற்று.

பண் :

பாடல் எண் : 50

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக்
கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம்
பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற்
றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக்
கடையவனே. 

பொழிப்புரை :

செந்நிறமுடைய பவள மலை போன்ற ஒளியுடைய திருமேனியனே! என்னை அடிமையாக உடையவனே! சிற்றறிவும் சிறுதொழிலுமுடைய தேவர்களுக்கு இரங்கி, அவர்கள் அமுதம் உண்ணுதற் பொருட்டு, கொல்லும் வேகத்தோடு எழுந்த ஆல கால விடத்தை உண்டவனே! கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், வாழ்த்தினாலும், எனது குற்றத்தின் பொருட்டே மனம் வாடி, துக்கப்படுவேன்; அவ்வாறுள்ள என்னை விட்டுவிடுவாயோ?

குறிப்புரை :

ஏசுதல் - இகழ்தல். ஏத்துதல் - புகழ்தல். பிழைக்கு - பிழை செய்தது கருதி. குழைந்து - மெலிந்து. வேசறுவேன் - வருந்து வேன். இங்கும், `வேசறுவேனை` என்றதற்கு, `வேசறுவேன்` `அத்தன்மையனாகிய என்னை` என இருசொற்பொருட்டாக உரைக்க. `சிற்றுயிர்` என்றது, இயைபின்மை நீக்கிய விசேடணம். இது தேவர் முதலிய யாவரையும் குறித்தது. எங்கும் பரந்து கொல்லத் தொடங்கிய செயலை, `காய்கின்ற சினம்` என்றார். ஆலம் - நஞ்சு. `சிற்றுயிர்க்கு இரங்கி, அவை அமுதுண்ணுதற் பொருட்டு ஆலமுண்டவனே` என்க. `கடையவன்` என்றது, முதற்கண் நின்ற, `யான்` என்றதனோடு இயையும். இதனால், இறுதிக்கண் சில திருப்பாட்டுக்களில் அடிகள் இறைவனை இகழ்வதுபோலக் கூறினமைக்கு வருந்தி `என் வாயினின்றும் எழுந்த சொற்கள், ஏசுதல், ஏத்துதல் என்பவற்றுள் எவ்வடிவில் அமைந்திருப்பினும், என் கருத்து, என் பிழையைக் கருதி வருந்துவதல்லது உன்னைப் பழிப்பதன்று என்பது நீ அறிந்ததன்றோ` என விண்ணப்பித்து, தம்மைக் கைவிடாது ஏற்றருளுமாறு வேண்டி னமை காண்க. ``ஆலம் உண்டாய்`` என்றதும், `பிழையைப் பொறுக்கற் பாலை`` என்னும் குறிப்பினதே. இத்திருப்பாட்டின் இறுதிச் சீர், முதல் திருப்பாட்டில் எடுத்த, `கடையவன்` என்னும் சொல்லேயாய், அதனோடு சென்றியைந்து மண்டலித்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!

குறிப்புரை :

இதுமுதலாக மகளிர் விளையாட்டு வகையில் வருவன பலவும், பாடாண் கொற்ற வள்ளையோடு ஒத்த வகையினவாய் நிற்கும் கடவுட் பாட்டுக்களாம் என்பது, மேலெல்லாம் கூறியவாறு பற்றிக் கொள்ளக்கிடந்தமை காண்க.
இதன்கண்ணும் (தி.8, 7.திருவெம். பா.18), அடுத்து வரும் தி.8 திருவம்மானையிலும் (பா.10) ``அண்ணா மலையான்`` என எடுத்தோதியருளினமை பற்றி, இவ்விரண்டனையும் அடிகள், `திரு வண்ணாமலையில் அருளிச் செய்தார்` எனத் திருவாதவூரர் புராணங் கூறிற்று. அதனால், இவை, அங்ஙனமே கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், இதன்கண் ``சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி ... ... ... ஆடு`` (தி.8, 7.திருவெம்.பா.14) என்று அருளிச் செய்ததன்றி, `அண்ணா மலையானைப் பாடி ஆடு` என அடிகள் அருளிச் செய்திலர். திருவம் மானையில், ``அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்`` (தி.8, 8.திருவம்மானை.பா.10) என்று அருளினாராயினும், ``ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்`` (பா.13) என்றும், ``ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்`` (பா.17) என்றும், பிறவாறும் அருளிச் செய்தார். ஆதலின், இவையெல்லாம், ``தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானைப் ... ... பாடுதும்`` (தி.8 திருவம்மானை - பா. 19) என்றாற்போலத் தில்லைக்கண் இருந்து பாடுங்கால் நினைந்து பாடியனவாகக் கொள்ளுதற்கும் உரியனவேயாம். நம்பி திருவிளையாடல், `இவ்விரண்டும் திருப் பெருந்துறையில் அருளியவை` என்கின்றது.
இது முதல் எட்டுத் திருப்பாடல்கள், நீராடுதற்கு விடியலில் எழுந்து செல்லற்பாலராகிய மகளிருள் முன்னர் எழுந்தார் சிலர் ஒருங்குகூடி, எழாதார் வாயிலிற் சென்று அவரைத் துயிலுணர்த்து மாறாக அருளிச் செய்யப்பட்டன.
மகளிர் விளையாட்டுப் பாடல்களில் அவை இன்ன பாடல் வகை என்பதனை அறிவிக்கும் முறையால் அப்பாடல் பற்றிய சொல்லேனும், சொற்றொடரேனும் ஈற்றில் நின்று அப்பாடல்களை முடிக்கும். அதனால், `அவை அங்ஙனம் வருதல் மரபு` என்னும் அளவாய்ப் பாடலை நிரப்பி நிற்பதன்றி வேறு பொருள்படாமையின், அவையெல்லாம் அசைநிலை போலவே கொள்ளப்படும். படவே, இவ்விடத்தும், `ஏலோர் எம்பாவாய்` என்பதும் அவ்வாறே கொள்ளப் படும் என்பது, தானே பெறப்பட்டது.
இதனுள், ``மாதே`` என்றதனை முதலிற் கொள்க. சோதி - ஒளி வடிவினன்; ஆகுபெயர். உயர்ந்தோர் உறங்குதலை, `கண்வளர்தல்` என்றல் வழக்கு. இங்கு, எழாதவளை எள்ளுகின்றார்களாதலின், `கண் வளருதியோ` என்கின்றவர்கள், அக்கண்களை, `வாள் தடங்கண்` என்றும் சிறப்பித்துக் கூறினார்கள். வாள் தடங்கண் - வாள்போலும் பெரியகண்; இது, மகளிர் கண் நன்கமைந்திருத்தலைக் குறிக்கும் தொடர். இதனை இங்குக் கூறியது, `உன் கண்கள் நன்கமைந்திருத்தல் உறங்கிக் கிடத்தற்குத்தானோ` என்றற்காம். `இயல்பாய் விழிக்கற் பாலனவாகிய கண்கள் விழித்தில` `எனக் கண்களை இகழ்ந்தவர்கள்,` எழுப்பும் ஓசையைக் கேட்கற்பாலனவாகிய செவிகளும் கேளாது ஒழிந்தனவோ எனச் செவிகளையும் இகழ்வாராய், ``வன்செவியோ நின்செவிதான்`` என்றார்கள். வன்மை - ஓசையை ஏலாமை. இங்ஙனங் கூறியதனால், முன்னர், ``கேட்டேயும்`` என்றது, `தன்னை அழைக்க எனக் கருதியிருந்தாள்` என்னும் கருத்தினாற் கூறிய தாயிற்று. ``செவி`` என்றது, `செவிப்பொறி` என்னும் பொருளதாதலின், ``செவிதான்`` என ஒருமையாற் சொல்லப்பட்டது. தான் அசைநிலை.
இத்துணையும், சென்ற மகளிர் உறங்குவாளை நோக்கிக் கூறியன; இனி வருவன அவளைப் பற்றி அவர்கள் தங்களுள் நகை யாடிக் கூறுவன. இவையும், அவள் கேட்டு எழுந்து வருவாள் என்னும் கருத்தினாற் கூறுவனவேயாம். ``என்னே என்னே`` என்றதனை, ``பரிசு`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `நம் தோழி உறக்கத்தால் எழா திருக்கின்றாளல்லள்: நமது பாடல் வீதியில் எழும்பொழுதே அதனைக் கேட்டு மனம் உருகிப் படுக்கையிற்றானே மெய்ம்மறந்து கிடக் கின்றாள்; இவளது அன்பின் பெருமை எத்தகையது` என்பது இப் பகுதியின் திரண்ட பொருள். `மெய்ம்மறந்து புரண்டு` என இயையும். போது ஆர் அமளி - மலர் நிறைந்த படுக்கை. `இறைவன் பாடலைக் கேட்டு உருகுதற்கு அமளி இடம் அன்று` என்றற்கு அதனை இங்ஙனம் சிறப்பித்துக் கூறினார்கள். ``அமளியின் மேனின்றும் புரண்டு`` என்றது, `ஒருபால் நின்று மற்றொரு பாற் புரண்டு` என்றவாறு. `புரண்டு கீழே வீழ்ந்து` எனச் சில சொல் வருவித்து முடிப்பாரும் உளர். இங்ஙன்-இப் பொழுதைக்கு; என்றது, `நாம் மேற்கொண்ட செயலுக்கு` என்றபடி. ஏதேனும் ஆகாள் - சிறிதும் உதவாள். `ஆகாளாய்க் கிடந்தாள்` என்க. ``ஈதே`` என்ற ஏகாரம் தேற்றம். கூறுவார்களும், கேட்பார்களுமாயவர்களுள், கூறுகின்றவர்கள், உறங்குகின்றவளது இகழ்ச்சி தோன்ற, ``எம் தோழி`` எனத் தமக்கே உறவுடையாள் போலக் கூறினார்கள்.
இனி இப்பகுதிக்கு, ``எம் தோழி`` என்றது பிறள் ஒருத்தியை எனக்கொண்டு, அவளது மெய்யன்பின் சிறப்பை உறங்குகின்றவட்கு அறிவித்தவாறாகப் பொருள் உரைப்பர்; இறைவனிடத்து அன்புடைய வர்க்கு விடியலில் அவனைப் பாடும் பாட்டொலி கேட்கும்பொழுது விரைந்தெழுந்து பின்னர் அவனது அருட்குணங்களில் ஈடுபடுதல் இயல்பாமல்லது, எழாது, கிடந்த கிடையிலே விம்மி விம்மி அழுதல் முதலியன இயல்பாகாவாகலானும் ஆமெனினும் ஈண்டைக்கு அதனை எடுத்துக் கூறுதலாற் பயன் இன்மையானும், அது பயன்பட வேண்டு மாயின், கிடந்தமை மாத்திரையே கூறியொழியாது, பின்னர் எழுந்து வந்தமையையும் ஒருதலையாகக் கூறவேண்டுதலின், அங்ஙனங் கூறாமையானும், பிறவாற்றானும் அது பொருந்தாமை அறிக. மேற் கூறியவாறு பொருள் உரைப்பாருள், ``கிடந்தாள்`` என்றது முடியவே பிறள் ஒருத்தியைக் குறித்ததாக வைத்து, அதற்கு, `ஒருத்தி` என்பதோர் எழுவாயை வலிந்து வருவித்தும், ``எந்தோழி`` என்றது. முன்னிலைக் கண் படர்க்கை வந்த வழுவமைதியாக்கியும் உரைப்பாரும் உளர். சென்றவர்கள் இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள் என்க. பின் வருகின்ற பாடல்களிலும் இவ்வாறே கொள்க.

பண் :

பாடல் எண் : 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை :

சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமை யாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என் னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

குறிப்புரை :

`நேரிழையாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது, அப்போது பரஞ்சோதிக்குப் பாசம் என்பாய்; இப்போது, ஆரமளிக்கே நேசமும் வைத்தனையோ` என்க. அன்பு `நார்` எனப் படுதல் பற்றி இங்கு அதனை, ``பாசம்`` என்று அருளினார்.
`பரஞ்சோதிக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்த லாயிற்று. இதன்பின், உரியது என்பதும், `எப்போது` என்றதன் பின்னர், `அப்போது` என்பதும் எஞ்சி நின்றன. ``இராப்பகல்`` என்றது, `இரவாக, பகலாக` என்றபடி. ஆரமளி - அரிய படுக்கை. `நேசமும்` என்ற சிறப்பும்மையால்` அன்பு முழுவதையும்` என்பது பெறப்பட்டது. `நீ, பாசம் பரஞ்சோதிக்கு` எனினும் உண்மையில் அது நேரிழைக்கே என்றற்கு, ``நேரிழையாய்`` என்றனர். இதுகாறும், சென்ற மகளிர் கூறியன.
இனி வருவன, இங்ஙனம் நகையாடிக் கூறியவர்களை நோக்கி உறங்கினவள் கூறுவன. தன்னை, `நேரிழையாய்` என்றவர் களைத் தானும் அவ்வாறு அழைத்தாள். `சீசீ` என்ற ஒரு சொல்லடுக் கில், பின்னின்றது, குறுக்கல் விகாரம் பெற்றது. `சீசீ` என்றே பாடம் ஓதுவாரும் உளர். எள்ளற் குறிப்பிடைச் சொல்லாகிய `சீ` என்பது, இங்குப் பெயர்த் தன்மைப்பட்டு, `சீ எனல்` எனப் பொருள் தந்தது. ``சீ ஏதும் இல்லாது என் செய்பணிகள் கொண்டருளும்`` (தி.8. திருக்கோத்தும்பி 12) என்னுமிடத்தும் இஃது இவ்வாறு நிற்றல் காண்க. இங்ஙனமாகவே, `சீசீ என்றலாகிய இவையும் சிலவோ` என்றது பொருளாயிற்று. சிலவோ - நண்பரிடத்துச் சொல்லுகின்ற சொற்களுள் சிலவோ. ``இடம்`` என்றது, பொழுதை. வாளா, `ஏசுமிடம்` என்னாது, ``விளையாடி ஏசுமிடம்`` என்றதனால், `நகை யாடிப் பேசுதற்கும் இது சமையமன்று` என்றதாம். கூசுதல் - நாணுதல்.
``நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே``
(தி. 5.ப.90.பா.9)என வந்தமை காண்க `நாணுதல்` என்பது, நாணிக் காட்டாதொழிதலாகிய தன் காரியந் தோன்ற நின்றது. `தேவர் களுக்குக் காட்டாது மறைக்கும் திருவடியை நமக்குத் தர வருபவன்` என்றபடி, ``ஈசனார்`` என்பது, ஒருமைப் பன்மை மயக்கம். `பாசம் பரஞ்சோதிக்கு` என்று சொல்லுபவள் `நான் மட்டும் அன்று; நம் எல்லோருந்தாம்` என்பாள், ``ஈசனார்க் கன்பார் யாம் ஆர்`` என்றாள். ``ஆர்`` என்றது, `அன்பரல்லது மற்று யார்` என்றபடியாம்.
இனி, `விண்ணோர்கள் ஏத்துதற்கு` என்பது முதலியவற்றை, சென்றோர் மறித்தும் கூறியவாறாக வைத்து, அதற்கேற்பத் தாம் தாம் வேண்டுஞ் சொற்கள் பலவற்றை வருவித்து உரைப்பாரும் உளர்.
`இவ்வாறு, ஒருவர் ஒன்றுகூற, மற்றொருவர் அதற்கு மாறு சொல்லுதலாக வரும் பொருள், கலிப்பாவினாற் பாடப்படும்` என்றும், அஃது, `உறழ் கலிப்பா` எனப்படும் என்றும் தொல்காப்பியர் கூறுதலை,
``ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே
கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே``
(தொல்.பொருள்.435) எனவும்,
``கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்து
போக்கின் றாகல் உறழ்கலிக் கியல்பே``
(தொல். பொருள். 458) எனவும் வரும் நூற்பாக்களான் அறிக.

பண் :

பாடல் எண் : 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்.

குறிப்புரை :

`பேசுவாய்` என்றதும், `பேசுகின்றவளே` என விளித்ததேயாம். இவ்வாறு விளித்தது முன்னாள் இவள், `நீவிர் வரும் முன்னமே நான் எழுந்திருந்து, நீவிர் வரும்பொழுது உங்கள் எதிரே வந்து இறைவனை மனம் உருகித் துதிப்பேன்` என்று சொல்லி, இது பொழுது அவ்வாறு செய்யாது உறங்கிக் கிடந்தமையைச் சுட்டியாம். ஆகவே, ``முன்வந்து எதிர்எழுந்து`` என்றது `முன் எழுந்து எதிர் வந்து` என மாற்றியுரைக்கற்பாலதாயிற்று. இதனானே, ``முத்தன்ன வெண்ணகையாய்`` என்றதும் `எதனையும் திட்பமின்றிப் பேதை நீரையாய்ச் சொல்லளவில் இனிமைப்படச் சிரித்துக்கொண்டு கூறுகின்றவளே` என்றவாறாம். கடை - வாயில். முதற்றொட்டு, `கடை திறவாய்` என்றதுகாறும் சென்றமகளிர் கூறியது. இதனை அடுத்து வரும் இரண்டடிகளும் உறங்கினவள் கூறுவன.
பத்து - அடியார்க்குரிய இலக்கணமாகிய பத்து. இவற்றை, `புறத்திலக்கணம் பத்து` எனவும், `அகத்திலக்கணம் பத்து` எனவும் இரண்டாக்கி உபதேச காண்டங்கூறும். அவற்றுள் புறத்திலக்கணம் பத்தாவன: திருநீறும் கண்டிகையும் அணிதல். பெரியோரை வணங்கல், சிவனைப் புகழ்ந்துபாடுதல், சிவநாமங்களை உச்சரித்தல், சிவபூஜை செய்தல், சிவபுண்ணியங்களைச் செய்தல், சிவபுராணங் களைக் கேட்டல், சிவாலயவழிபாடு செய்தல், சிவனடியாரிடத்தன்றி உண்ணாமை, சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல் என்பன.
அகத்திலக்கணம் பத்தாவன; சிவபெருமானது புகழைக் கேட்குங்கால் மிடறு விம்மல், நாத்தழுதழுத்தல், இதழ் துடித்தல், உடல் குலுங்கல், மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், சொல்லெழாமை, கண்ணீர் அரும்புதல், வாய்விட்டழுதல், மெய்ம்மறத்தல் என்பன.
``பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே`` (தி.4. ப.18. பா. 10) என்றருளினார் திருநாவுக்கரசரும். இவற்றை, சித்தாந்த நூல்களிற் காணப்படும் தசகாரியமாகவும் சொல்லுப. `பத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. இனி, `பற்று என்பது எதுகை நோக்கி, பத்தென ஆயிற்று` என்றும் உரைப்பர். பழைமை, புதுமைகளை முன் எழுதல், பின் எழுதல் பற்றிக் கூறினாள். பாங்கு - எல்லாம் நிரம்பிய தன்மை. `நீங்கள் தாம் நிரம்பிய அடியார்கள்` என, தன்னை நகைத்துரைத்தவர்களைத் தான் நகைத்துரைத்தாள் என்க. இகலிக் கூறுகின்றாளாகலின், தன்னோடொத்த பிறரையும் உளப்படுத்து, `அடியோம்` எனவும், `எமக்கு` எனவும் பன்மையாற் கூறினாள். புன்மை - குற்றம். பொல்லாது - தீமை; `தீமை உண்டோ` என உரைக்க. அடுத்து வரும் மூன்றடிகளும் சென்றோர் மறித்தும் கூறுவன.
`நின் அன்புடைமை எத்தோ` என மாற்றுக. எத்து-வஞ்சனை. ``எத்தனாகிவந் தில்புகுந்து`` (தி.8 சென்னிப். 4) என்றாற் போலப் பின்னரும் வருதல் காண்க. தங்களை, `மெய்யடியார்கள்` என்று அவள் நகையுள்ளுறுத்துக் கூறக்கேட்டவர்கள், `உன்னுடைய மெய்யன்பை நாங்கள் அறிந்திலமோ` என மறித்தும் நகைபடக் கூறிப் பின்னர், `உள்ளத்தில் மெய்யன்புடைய மகளிரானவர், விடியலில் எழுந்து நம்பெருமானைப் பாடமாட்டார்களோ` என வெளிப்படை யாகவே கழறினர். `விடியலில் எழுந்து` என்பது, இடத்தால் வந்து இயைந்தது. இதன்பின், உறங்கியிருந்தவள், `சிறிது அயர்த்துப் போய் விடியலில் எழாது துயின்று கிடந்த எனக்கு இத்துணையும் வேண்டுவது தான்` என்று தன் நெஞ்சோடே சொல்லிக் கொண்டு வந்து உடன் கலந்தாள். ஈற்றடியையும், சென்ற பெண்கள் கூற்றாகவே கொண்டு `இவ்வளவே எமக்கு வேண்டும்` எனவும் உரைப்பர்.

பண் :

பாடல் எண் : 4

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளான வனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.

குறிப்புரை :

``ஒள் நகை`` என இயையும். இது புன்முறுவலைக் குறிக்கும். புன்முறுவல் பெருமிதமுடையார் செயலாகலின், ``ஒள் நித்தில நகையாய்`` என்றது, பெருமிதமுடைமையைக் குறிப்பாற் கூறியவாறாம். இவளது பெருமிதத்திற்கு ஏற்ப, சென்ற மகளிர், `இன்னம் பொழுது புலர்ந்திலதோ` என்னும் துணையே கூறினர். அவளும் அதற்கேற்ப, `நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால், எல் லோரும் எழுந்து வந்து விட்டனர்; நான் மாத்திரமே எழாதிருக் கின்றேன் போலத் தோன்றுகின்றது` என்னும் பொருள்பட, ``வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ`` என்றாள். அங்ஙனங் கூறுகின்றவள், அதனிடையே, `உங்கள் பேச்சு மிக நன்றாய் இருக் கின்றது` என்று இகழ்வாள், பிறரைக் கூறுவாள் போல அவர்களது சொல்லைச் சிறப்பித்துக் கூறினாள். சென்ற மகளிர் அது கேட்டுக் கூறுவன ஏனைய பகுதி.
`கொண்டு` என்பது, `கொடு` என மருவிற்று. `உள்ளவாறு` என்பது கடைக்குறைந்து நின்றது. `சொல்லுகோமாக` என ஆக்கம் வருவித்து, `சொல்லிக்கொண்டிருக்க` என உரைக்க. அவ்வளவும் - அத்துணைக் காலமும். ``கண்ணை`` என்றதில் ஐ, பகுதிப் பொருள் விகுதி. அவமே - பயன்படாமலே. `போக்காது` என்னும் எச்சம் தேற்றேகாரம் பெற்று வந்தது. ``விண்`` என்றது விண்ணவரை. ஒரு மருந்து - ஒப்பற்ற அமுதம். `அவருக்குக் கிடைத்துள்ள அமுதத்தின் வேறுபட்டது` என்பதாம். கசிந்து - கண்ணீர் சிந்தி. `உள்ளம் உள் நின்று நெக்குருக` என மாற்றிக் கொள்க. `நீ காலத்தைப் போக்காமைப் பொருட்டும், நாங்கள் இறைவனைப் பாடி உருகுதற் பொருட்டும் அதனை (எண்ணிச் சொல்லுதலை)ச் செய்யமாட்டோம்` என்றனர் என்க. ``குறையில்`` என்றது, `வரற்பாலோர் வாராதிருப்பின்` என்ற வாறு. `நீ மீண்டு சென்று துயில் கொள்வாயாக` என்றது, துயிலில் உள்ள ஆர்வத்தினைச் சுட்டி இகழ்ந்தது. `பாடிக் கசிந்து உருக` என்றதும், `நீ அதற்கு ஆகாய்` என இகழ்ந்ததேயாம்.

பண் :

பாடல் எண் : 5

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?

குறிப்புரை :

``அறியா, காணா`` என்றவை, எதிர்மறைப் பெயரெச்ச அடுக்கு. மலை - மலைவடிவானவன். `மலை` என்றே கொண்டு, `அண்ணாமலையை` என்றலும் பொருந்துவதே. போல் அசைநிலை. உள்ள பொக்கங்கள் - உலகில் உள்ள பொய்களை எல்லாம். ``தேன்`` என்றதை, ``பால்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. பால், தேன் என்பன, மிக்க இனிமையைக் குறித்து நின்றன. படிறீ - பொய்ம்மை யுடையவளே; இது, வாளா பெயராய் நின்றது. இவள் சொற்சாலம் செய்பவள் என்பதை அனைவரும் எப்பொழுதும் அவள் அறியக் கூறுவர் என்பதும், அதுபற்றி இவள் சினந்து கொள்வதில்லை என்பதும், சென்ற மகளிர் இவளை இங்ஙனம் வெளிப்படையாகவே கூறி விளித்தமையாற் பெறப்படும். ``ஓலம் இடினும் உணராய் உணராய்`` என்றதும், அவளது எளிய நிலை கருதியேயாம். அவளது சொற்சாலத்துக்கு ஓர் எல்லையாகவே, `மாலறியா நான்முகனும் காணாமலையினை நாம் அறிவோம்` எனக் கூறுதலை எடுத்துக் காட்டினர். இதனானே, சிவபெருமானை ஏனைத் தேவரோடு ஒப்பவைத்துக் கூறுவாரது தன்மையும் அடிகள் புலப்படுத்தியவாறு பெறப்பட்டது.
கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகடல் என்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
(தி.5.ப.100.பா.5) என ஆளுடைய அரசுகள் அருளிச் செய்தலுங் காண்க ``ஞாலமே`` முதலிய மூன்று ஏகாரங்களும் எண்ணுப் பொருள. இவற்றால் எண்ணப்பட்டன, அவ்வவ்வுலகங்களாம். இவற்றின்பின், `ஆகிய உலகங்களால்` என்பது தொகுத்தலாயிற்று. கோதாட்டுதல் - திருத்துதல். `கோதுதலைச் செய்தல்` என்பது சொற் பொருள். சீலம் - செய்கை. உணராய் - துயில் நீங்காய். காண், முன்னிலை அசை. `ஏலக்குழலியாகிய உன் பரிசு இது` என, ஒருசொல் வருவித்து முடிக்க. ஏலம் - மயிர்ச்சாந்து. `வாயால் இனிமைபடப் பேசுதல்போலவே, உடலையும் நன்கு ஒப்பனை செய்து கொள்வாய்` என்பார், `ஏலக்குழலி` என்றனர்.

பண் :

பாடல் எண் : 6

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும். எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!

குறிப்புரை :

மானே - மான்போன்ற பார்வையை உடையவளே; `அச்சத்தால் பின்வருமாறு கூறினாய்` என்பார், இவ்வாறு விளித்தனர். நென்னல் - நேற்று; ஐகாரம், சாரியை. என்றலும் - என்று சொல்லிய செயலையும். `செயலையும்` என இரண்டனுருபு விரியாது, `செயலுக்கும்` என நான்கனுருபு விரிப்பின், பிற்கால வழக்காம். `நீ போன திசை பகராய்` என்க. திசை - இடம். பகராய் - சொல்லு. `நேற்றுச் சொன்ன சொற்படி நீ வந்து எங்களை எழுப்புதற்கு, இன்னும் பொழுது புலரவில்லை போலும்!` என நகைத்துக் கூறினர் என்க. ``வானே நிலனே பிறவே அறிவரியான்`` என்றதற்கு, மேல் உரைத்தாங்குரைக்க. தலையளித்து - தலையளிசெய்து; தலையளி - மேலான கருணை. அருளும் கழல் - தரப்படுகின்ற திருவடி. வாய் திறவாய் - ஒன்றும் மறுமாற்றம் கூறாது உறங்குகின்றாய். ஊனே உருகாய் - உடல் மெலியமாட்டாய். மெலிதல், நாணத்தினானாதல், அச்சத்தினானாதல் நிகழற்பாலது என்பதாம். உனக்கே உறும் - இவையெல்லாம் உனக்கே தகும். `இனியேனும் எழுந்து வந்து எங்களோடு இறைவனைப் பாடு` என இறுதியிற் கூறி முடித்தனர்.

பண் :

பாடல் எண் : 7

அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை :

தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.

குறிப்புரை :

இங்கு எழுப்பப்படுபவள் சிவபெருமானிடத்துப் பேரன்புடையள் என்பது, சென்ற மகளிர் பின்னர்க் கூறும் அவற்றான் இனிது விளங்கும். அதனால், இவளை அனைவரும் `அன்னையே` என்று விளித்தனர். செய்யுளாதலின், ``இவையும்`` என்ற சுட்டுப் பெயர் முன்வந்தது. இது, பின்வருகின்ற, மிக்க துயில், எழுப்பிய பொழுதும் வாய்வாளாது கிடத்தல் என்பவற்றைச் சுட்டிற்று. சிலவோ- உன் தன்மைகளிற் சிலவோ. ஒருவன் - ஒப்பற்றவன். இருஞ்சீரான் - `பெரிய புகழையுடையவன்`. அரியானும், ஒருவனும், சீரானும் ஆகியவனது சின்னங்கள் என்க. `விடியலில் திருச்சின்னங்கள் ஊதுதல் கேட்கப்படும்பொழுதே துயிலுணர்ந்து சிவ சிவ என்று சொல்லுவாய்; பின்பு, எழுந்த அடியவர்கள் பாண்டிநாட்டையுடைய பெருமானே என்று பாடுதற்கு முன்பே நெருப்பைச் சேர்ந்த மெழுகு போல உள்ளமும் உடலும் உருகுவாய்; ஆயினும், இன்று யாங்கள் உன்வாயிலில் வந்து, இறைவனைத் தனித்தனியே பலவாறாகப் பாடினோம்; இன்னமும் உறங்குகின்றாய்; இறைவனிடத்து அன் பில்லாத வலிய நெஞ்சத்தையுடைய பெண்டிர்போல வாயும் திறவாது கிடக்கின்றாய்; உறக்கத்தின் பெருமைதான் என்னே` என, எழுப்ப வந்த மகளிர் இவளது நிலையை எல்லாம் விரித்துக் கூறினர்.
`கேட்பவே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `துயிலுணர்ந்தபின் முதற் சொல்லாகத் திருவைந்தெழுத்தையே சொல்லுவாய்` என்றற்கு, ``சிவனென்றே வாய்திறப்பாய்`` என்றனர். ``தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்`` என்றது, `அம்பு படுமுன் தலை துணிந்தது` என்றல்போல, விரைவு மிகுதி குறித்தது. இதனை, `காரியம் முந்தூறூஉங் காரணநிலை` எனக்கூறி, ஏதுவணி யின்பாற் படுப்பர், அணிநூலுடையார். ``ஆனை`` என்றது, காதற் சொல். அரையன் - அரசன்; தலைவன். தனித்தனியே பாடினமையின் ``என்`` என ஒருமையாற் கூறினர். ``எல்லாம்`` என்பதே தன்மை யிடத்தை யுணர்த்துமாயினும், அது திரிபுடைத்து. `எல்லோம்` என்பது அதனைத் திரிபின்றி யுணர்த்தும். `எல்லாரும், எல்லீரும்` என்னும் படர்க்கை முன்னிலைப் பெயர்கள்போல, `எல்லோமும்` என்னும் தன்மைப் பெயரும், இறுதியில் உம்மையொடு நின்றது. ``கேள்`` என்றதனை` ``அன்னே`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `வெவ் வேறாய்ச் சொன்னோம்` என இயையும். `இன்னமும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. பேதையர் - பெண்டிர்; `அறிவில்லாதவர்` என்பதும் நயம். ``துயில்`` என்றதற்கு, `எல்லாரையும் ஆட்கொள்கின்ற உறக்கம்` என உரைக்க. ``பரிசு`` என்றது பெருமையை. கொடுமை யாகிய இழிவை, `பெருமை` என்றது இகழ்ச்சிப்பற்றி.

பண் :

பாடல் எண் : 8

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

கோழி கூவ, எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.

குறிப்புரை :

``வாழி`` என்றதனை முதலில் வைத்து, `வாழ்தலுடைய வளே` என உரைக்க. `நன்கு வாழ விரும்புபவளுக்கு இத்துணைப் பேருறக்கம் தகாது` என்பார், இவ்வாறு விளித்தனர். ``ஏழில்`` என்றதில் உள்ள, ``இல்`` என்னும் பெயரை இதன்பின்னருங் கூட்டுக. இல்லங்களில் கோழி கூவ, எவ்விடத்தும் பிற பறவைகள் ஒலிக்கின்றன. இல்லங்களில் ஏழிசைகளையுடைய இசைக்கருவிகள் ஒலிக்க, எவ்விடத்தும் சங்குகள் ஒலிக்கின்றன` என்க. ``ஏழ்`` என்றது, முன்னர் இசையையும், பின்னர் அவற்றை வெளியிடும் கருவியையும் உணர்த்தினமையின், இருமடியாகுபெயர். இசைக்கருவிகளுள் மிடற்றுக் கருவியும் ஒன்றாதலின், மிடற்றுப் பாடலும் அடங்கிற்று. திருப்பள்ளி எழுச்சி பாடுவாரும், இசை பயில்வோரும் விடியலில் பாடுதல் அறிந்து கொள்க. `ஏழில்` என்பதே ஒரு கருவியின் பெயராக வும் உரைப்ப.
கேழ் - உவமை. பரம் - மேன்மை. சோதியையும், கருணையையும் உடையவனை, `சோதி, கருணை` என்றது, ஆகு பெயர். `சோதியும், கருணையும் ஆயவனது பொருள்கள் பாடினோம்` என்க. பொருள்கள் - இயல்புகள். ``ஈதென்ன உறக்கமோ`` என்றது, `இத்துணை ஓசைகளாலும் நீங்காத இவ்வுறக்கம் எத்தன்மைத்தாய உறக்கமோ; அறிகின்றிலேம்` என்று இகழ்ந்தவாறு. ஆழியான் - மாயோன். அவனது அன்புபோலும் அன்பினை, ``ஆழியான் அன்பு`` என்றனர். `மாயோன் சிவபெருமானுக்குத் தன் கண்ணைப் பறித்துச் சாத்தச் சக்கரம் பெற்றமைபோல, யானும் நெறிமுறை பிழையாது அப் பெருமானை வழிபட்டுப் பெருவாழ்வு பெறுவேன்` என்று கூறுகின்றவள் இவள் என்பது, ``ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ`` என்ற ஏச்சுரையாற் பெறப்பட்டது. `நெறிமுறை பிறழாது சிவனை வழிபடுவேன்` என்ற நீதானோ, இத்துணை ஓசை எழவும் எழாது உறங்குகின்றாய்; `நீதானோ பெருவாழ்வு பெறப்போகின்றவள்` என்பது கருத்து. ``மாயோனது அன்பினை நீயும் பெறுதற்கு, அவன் எழாதே உறங்குதல்போல நீயும் உறங்குகின்றாய் போலும்`` என்பது உள்ளுறை நகை.
ஊழி முதல்வன் - ஊழிகள் பலவற்றிற்கும் முதல்வன்; `அவற்றால் தாக்குண்ணாத முதல்வன்` என்றபடி. ஏழை - பெண்; உமை. ``பங்காளனையே`` என்ற பிரிநிலை ஏகாரம், `நீ வழிபடுவேன் என்று சொல்லும் அவனையே பாடு என்கின்றோம்; பிறரைப் பாடு என்கின்றிலோம்` எனப் பொருள் தந்து நின்றது.
இத்துணையும் வந்த திருப்பாட்டுக்கள், மகளிருள் முன் எழுந்தோர், பின்னர் எழற்பாலாரை அவர்தம் வாயிலிற் சென்று அவரை எழுப்பியன. அடுத்துவரும் திருப்பாட்டு அவர் எல்லாரும் ஒருங்கு கூடியபின், முதற்கண் இறைவனைப் பரவுவது.

பண் :

பாடல் எண் : 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

முற்பட்டனவாகிய பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.

குறிப்புரை :

முன்னைப் பழம்பொருள் - முன்னே தோன்றிநின்று மறைந்த பொருள். மறையாது நிற்கும் பொருளும் இதன்கண் அடங்கும். இவை இரண்டற்கும் முன்னேயுள்ள பழையோன் இறைவன். பின்னைப் புதுமை - இனித் தோன்ற இருக்கின்ற புதுப் பொருள். இதற்கும் முற்கூறியதுபோலவே பின்னேயுள்ளவன் இறைவன். இறைவன் பொருள்களைத் தோற்றுவிக்குங்கால், காலத்தின் வழி முற்பிற்பாடு தோன்றத் தோற்றுவித்து, தான் அதற்கு அப்பாற்பட்டு நிற்றலையே இங்ஙனங் குறித்தனர். `உன்னையே` என்னும் பிரிநிலை ஏகாரம் விரிக்க. பிரான் - முதல்வன். பெறுதல், அறிவினால் என்க. பாங்கு - துணை. ஆவார் - ஆதற்கு உரியார். ``தொழும்பாய்`` என்றது, `மனத்தோடு பொருந்தி` என்றவாறு.
இதனால், கன்னிமையுடையராகிய இம் மகளிர், இளமைக் கண்ணே சிவபெருமானுக்கு அன்புடையராய் ஒழுகும் ஆடவரே தமக்குக் கணவராய் வாய்த்தல் வேண்டும் என அப்பெருமானை வேண்டினமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?

குறிப்புரை :

இத்திருப்பாட்டு இல்லங்களின்றும் எழுந்து சென்று குழாங்கூடிய மகளிர், சிவபிரானைப் பரவிய பின்னர் நீர்த்துறையை அடைந்து, அங்குத் தமக்கு முன்னே வந்துள்ள அப்பெருமான் கோயி லிற் பணிபுரியும் மகளிரைக் கண்டு அவர்களோடு கூடி அவன் புகழைப் பேசி மகிழ்ந்தது.
பொருள்கோள்: `கோதில் குலத்துத் தோன்றிய, அரன்றன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்! அவன்றன் பாதமலர் பாதாளம் ஏழினும் கீழ்; போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவு; அவன் திருமேனி ஒன்றல்லன்; ஒருபால் பேதை; வேத முதல்; விண் ணோரும் மண்ணும் துதித்தாலும், ஓத உலவா ஒரு தோழன்; தொண்டர் உளன்: ஆதலின், அவன் ஊர் ஏது? அவன் பேர் ஏது? அவனுக்கு ஆர் உற்றார்? ஆர் அயலார்? அவனைப் பாடும் பரிசு ஏது?`
திருக்கோயிற் பணிபுரியும் மகளிர் என்றும் கன்னிமை யுடையர். இந்நிலை, அவர் தாமே விரும்பி மேற்கொள்வது. அவரது மனநிலையை அறிந்து அவர்தம் பெற்றோரும் அதற்கிசைந்து விடை கொடுப்பர். பின்னர் கோயிற்கு அணித்தாய் உள்ள கன்னி மாடத்தில் தங்கிக் கோயிலினின்றும் பெறும் உணவு உடைகளால் வாழ்ந்து கோயிற் பணிகளையே செய்வர். இறைவன் ஆணைவழிப் பின்னர் நம்பியாரூரை மணந்த சங்கிலியார், முன்னர் மேற்கொண்டிருந்த நிலை இதுவே என்பதை, வரலாறு நோக்கி அறிந்து கொள்க. இவருள் இறுதிகாறும் கன்னியராய் இராது மணம் புரிந்து கொள்ளும் நிலை உண்டாகுமாயின், அங்ஙனம் செய்து கொள்ளுதலும் உண்டு என்பதற்கும் அவ்வரலாறே சான்றாம்.
சொற்கழிவு - சொல்செல்லாது நின்ற இடம். போது ஆர் - மலர் நிறைந்த. புனை - அழகிய. `முடிவும்` என்னும் உம்மை தொகுத்த லாயிற்று. முடிவும் - முடிவுமாகிய இடம். முடிவுக்கு மேல் உள்ள இடத்தையே ``முடிவு`` என்றார். ``சொற்கழிவு`` என்றதனால், பொருள் இன்மையையும், ``பொருள் முடிவு`` என்றதனால், சொல்செல்லா மையையும் உணரவைத்தார். இவற்றால் வியாபகத் தன்மை குறிக்கப் பட்டது. ``ஒன்று`` என்றது, ஒரு தன்மையை. திருமேனி ஒன்றாகாமைக்குக் காரணமாக, ``ஒருபால் பேதை`` என்றார். ``ஒருபால்`` என்றதற்கு, `திருமேனியின் ஒரு கூற்றில்` என்க. பேதை - பெண்; என்றது, பெண்ணுருவினை. இதன்பின் `உளது` என்பது எஞ்சி நின்றது. ``ஓருடம் பிருவ ராகி`` (தி.4.ப.22.பா.6) என்று அருளிச் செய்தார், திருநாவுக்கரசு சுவாமிகளும் வேத முதல் - வேதத்திற்கு முதல்வன். ``மண்`` என்றதும், மண்ணோரையே. துதித்தல் - புகழ்தல். `அவர் ஓத உலவா` என்க. ``ஓத`` என்றதும், `துதிக்க` என்றதாம். புகழது உலவாமையை அதனை உடையான்மேல் வைத்துக் கூறினார். உலத்தல் - முடிதல். ஒரு தோழன் - ஒப்பற்ற தோழன். இறைவனோடு ஆண்டான் அடிமைத் திறத்திலன்றித் தோழமை முறையிலும் அடியவர் உரிமை கொள்ளுதல் பற்றி இறைவனை, ``தோழன்`` என்றார். ``தோழா போற்றி`` (அடி 120) எனப் போற்றித்திருவகவலிலும் அருளிச் செய்தமை காண்க. ``விரும்பி நின்ற - பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம்`` (தி.6.ப.15.பா.2) என்ற திருநாவுக்கரசர் திருமொழியையும் காண்க. `ஒருதோழந் தொண்டருளன்` என்பதே பாடம் எனவும், `தோழம்` என்பது, `பேரெண்` எனப் பொருள்படும் எனவும் கூறுவாரும் உளர். அவர், `உளன்` என்றதற்கு `உடையன்` எனப் பொருள் உரைப்பர். தொண்டர் உளன் - அடியவர் உள்ளத்திலிருப்பவன். இதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `யாது` என்பது, `ஏது` என மருவி வழங்கும். இவ்வினா, ஈண்டுப் பல இடத்தும், யாதும் இன்மையைக் குறித்து நின்றது. ``பரிசு`` என்றது, வகையை. `கருவி கரணங்களால் ஏகதேசப்பட்டு நிற்பவர்க்கே ஊரும், பேரும், உற்றாரும், அயலாரும், பாடும் வகையும் உள்ளன; அவ்வாறன்றி வியாபகனாய் நிற்கும் இறைவனுக்கு அவை இலவாதலின், இயன்ற அளவிலே நாம் பாடுகின்றேம்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய வனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.

குறிப்புரை :

விளிகளை எல்லாம் முதலிற் கூட்டி, `வழியடியோம் பொய்கை புக்கு முகேர் என்னக் குடைந்து உன் கழல்பாடி வாழ்ந் தோம்` எனவும், `நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்ந்தொழிந் தோம்; இனி எம்மை எய்யாமற் காப்பாய்` எனவும் வினைமுடிக்க. மொய் ஆர் - மொய்த்தல் (நெருங்குதல்) பொருந்திய. மொய்த்தலுக்கு வினைமுதல் நீராடுவோர். மலர்களை நாடி வரும் வண்டுகளையும் கொள்வர். தடம் பொய்கை - பெரிய குளம். ``முகேர்`` என்றது, ஒலிக்குறிப்பு. குடைதல் - துழாவுதல். பாடும் பொழுது நீரைக் கையால் துழாவிநிற்றல் இயல்பு. வழியடியோம் - குடிமுழுதுமாகத் தொன்றுதொட்டு அடியராயினோம். காண், முன்னிலை அசை. ``கழல்பாடி வாழ்ந்தோம்`` என்றது, `பாடுதலாகிய பேற்றைப் பெற்றோம்` என்றபடி. இவை, முன்னர் நிகழ்ந்தன. ஆரழல் போல் செய்யன் - அணுகுதற்கரிய தீப்போலச் சிவந்த திருமேனியை யுடையவன். ``ஆட்கொண்டருளும் விளையாட்டு`` என்றது, `படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என்னும் ஐந்தொழிலையுமாம் என்பது, வருகின்ற திருப்பாட்டுள், `காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி`` என்பதனால் விளங்கும். ஐந் தொழில்களுள் அருளலையன்றி ஏனையவற்றையும் ஆட்கொண் டருளுதலாக அருளிச் செய்தது, அவையெல்லாம் அருளலுக்கு ஏதுவாம் முறைமை பற்றியே செய்யப்படுதலாம். இத் தொழில்களை இறைவனுக்கு விளையாட்டு என்றல், `ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தற்கு விளையாட்டு` என்பது போல, எளிதிற் செய்தல் பற்றியே யாம் என்பதனை, மாதவச் சிவஞான யோகிகள் சிவஞான போத மாபாடியத்தும், சிவஞான சித்தி உரையிடத்தும் இனிது விளக்கிப் போந்தமை காண்க. உய்வார்கள் உய்யும் வகை, அவரவர் நிலைக் கேற்ப, மண்ணுலக இன்பங்களையும், விண்ணுலக இன்பங்களையும், வீட்டுலக்தில் உடம்பொடுநின்று நுகரும் இன்பங்களையும் பெறும் நிலைகளாம். வகை எல்லாம் - வகையால் எல்லாம். ``உய்ந்தொழிந் தோம்`` என்றதில் ஒழிதல், துணிவுப் பொருள்பற்றி வந்தது. எய்த்தல்- பிறவியிற் சென்று இளைத்தல். எனவே, மேற்கூறியவாறு உய்ந்தவை அனைத்தும் பிறவி நீங்கிய நிலையாகாமை பெறப்பட்டது. இங்ஙனம் எல்லாவற்றையும் வெறுத்து, பிறவியற்ற நிலையாகிய பரமுத்தியை வேண்டுதல் அடிகளது விருப்பமேயாம். எனினும், இதனைப் பெண்கள் கூற்றாக அவர் அருளிச் செய்தமையின், ``எய்யாமல் காப்பாய்`` என்றதற்கு, அப் பெண்கள் இந்நிலையினையே விரும்பும் ஆடவருக்கே தாம் வாழ்க்கைப்படுமாறு அருளுதல் வேண்டும் என வேண்டினார் என உரைத்துக்கொள்க. `காவாய்` என்னும் ஏவல் வினையை மரூஉ வழக்காக, `காப்பாய்` என முன்னிலை வினை போல அருளினார், இளமகளிர் கூற்றாதல் பற்றி. இத் திருப்பாட்டு, இல்லங்களினின்றும் போந்த மகளிர் நீராடுதற்கண் இறைவனைப் பரவியது.

பண் :

பாடல் எண் : 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

குறிப்புரை :

இது முதலாக வரும் நான்கு பாடல்கள், அன்ன மகளிர் இறைவனைப் பாடிக்கொண்டே நீராடுவன. இவற்றுள், ஒருவரை முன்னிலைப்படுத்தியேனும், பலரையும் உளப்படுத்தியேனும் சில சொல்லி ஆடுவர்.
ஆர்த்த - பிணித்துள்ள. `துயர்` என்றது வெப்பத்தை. ஆர்த்து- ஆரவாரித்து; `மகிழ்ந்து` என்றபடி. தீர்த்தன் - தீர்த்தமாய் உள்ளவன். தீ ஆடும் - தீயோடு ஆடுகின்ற. கூத்தப் பெருமான் திருக்கைகளில் ஒன்றில் தீயேந்தியிருத்தல் அறிக. குவலயம் - பூ மண்டலம். ``எல்லோமும்`` எனத்தன்மை யிடத்தால் ஓதினமையின், `நம் எல்லோரையும்` என்று உரைக்க. ``நம்`` என்றது மக்கள் எல்லாரையும் உளப்படுத்து. இவ்வாறு மக்கள் இனத்தை வேறு கூறினர், அவர் சிறப்புடைய உலகமாதல் பற்றி. `இறைவனால் ஆட்கொள்ளப்படும் பேற்றால், தேவரினும் மக்களே சிறப்புடையர்` என அடிகள் பல விடத்தும் ஓதியருளுதல் காண்க. ``விளையாடி`` என்றது, முன்னர், ``கூத்தன்`` என்றதனோடு இயைந்து நின்ற பெயர். `கூத்தனும், விளையாடியும் ஆகியவனது வார்த்தை` என்க. வார்த்தை - செய்தி; புகழ், `வார்த்தையும்` என்ற உம்மை சிறப்பு. சிலம்ப - ஒலிக்க. வார் - நீண்ட. மேகலைகளை, ``கலைகள்`` என்றது, முதற்குறை. ஆர்ப்பு - ஆரவாரிப்பு. அரவம் - ஒலி `ஆரவாரிப்பாகிய ஒலி` என்க. `குடைந்த பின்` என்பது, ``குடைந்து`` எனத் திரிந்து நின்றது. குடைந்து - முழுகி. ``உடையான் பொற்பாதம் ஏத்தி`` என்றதன்பின், வளைசிலம்புதல் முதலியவற்றைச் சுட்டும், `அவ்வாறு, என்பது வருவிக்க. நீராடு மகளிர், பொய்கை, சுனை, அருவி, மடு, யாறு, கடல் என்னும் அனைத்திலும் ஆடுதல் இயல்பு. அவற்றுள், இது சுனையாடுவார் கூறியது.

பண் :

பாடல் எண் : 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

பசுமையான குவளையின் கருமையான மலர் களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டுள், அன்ன மகளிர், தாம் ஆடச் சென்ற மடுவினை மாதொருகூறன் வடிவமாகக் கண்டு மகிழ்ந்து கூறுதல் சொல்லப்படுகின்றது.
கார் மலர் - கரிய மலர். குவளையின் கரியமலர் இறைவியது நிறத்தையும், செந்தாமரை மலர் இறைவனது நிறத்தையும் காட்டும். குருகு - பறவை; சொற் பொதுமையால் இது அம்மையது வளையையும் உடனிலையாகச் சுட்டிற்று. பின்னும் அரவத்தால் - மேலும் மேலும் எழுகின்ற ஒலியால். இதுவும் அவ்வாற்றால், இறைவன் மீது ஒன்றோடொன்று பொருந்தி ஊரும் பாம்பினைக் குறித்தது. ``மலம்`` என்றது, மடுவிற்கு ஆங்கால் உடல் அழுக்கையும், இறைவன் இறைவியர்க்கு ஆங்கால் உயிர் அழுக்கையும் குறிக்கும். இசைந்த - பொருந்திய. பொங்கு மடு - மிகுந்த மடு. கலந்து - ஏனைய காலணிகளுடன் சேர்ந்து. விளையாட்டு மகிழ்ச்சியால் உடல் பூரித்தலின், கொங்கைகளும் பூரிப்பவாயின. மடுவிலும் தாமரைகள் நிரம்பி இருக்குமாகலின், ``பங்கயப் பூம்புனல்`` என்று அருளினார். இது, மடுவாடுவார் கூறியது.

பண் :

பாடல் எண் : 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டுள், அன்ன மகளிர் இறைவனையும், இறைவியையும் பலபடியாகப் பாடி ஆடுதல் கூறப்படுகின்றது. ``சிற்றம்பலம் பாடி`` என்றது தொடங்கி, ``பாதத் திறம் பாடி`` என்றதுகாறும் உள்ளவற்றை முதற்கண் கூட்டுக. காது ஆர் - காதில் பொருந்திய. `பைங் கலன்` என இயையும். பசிய பொன்னாற் செய்யப்பட்டமையின், கலனும் பசுமையுடைத் தாயிற்று. `கலன்` என்பது பொதுச் சொல்லாதலின், ``பூண்கலன்`` என அடைபுணர்க்கப்பட்டது. பூண்கலன், வினைத்தொகை. கோதை - மாலை. `மாலை கூந்தலின்கண் ஆட` என்க. `கோதைக் குழலாட` எனவும் பாடம் ஓதுவர். சீதப் புனல் - தண்ணிய நீர். இஃது, `ஆடுதற்கு இனிதாம்` எனக்குறித்தவாறு. `புனலின்கண்` என ஏழாவது விரிக்க. வேதப் பொருள் - வேதத்துள் கூறப்பட்ட முதற் பொருளின் இயல்பு. அப்பொருள் - அவ்வியல்பையுடைய பொருள். ஆமாறு - ஆமாற் றினை; என்றது, `சிவபெருமானிடமே அவ்வியல்பு காணப்படுமாற் றினை` என்றபடி. ``ஆமாறு`` என்றதனை `ஆதி` என்றதற்கும், கூட்டுக. `சோதி` என்றது `சிவன்` என்னும் அளவாய் நின்றது. சூழ் - மார் பினைச் சூழ்ந்துள்ள. `தார்` என்றது, அதனது சிறப்பினை. ஆதியும், அந்தமும் ஆதல், `உலகிற்கு` என்க. பேதித்தல் - ஒருகாலைக் கொருகால் அறிவு வேறாகச் செய்தல். `வளர்த்து` என்றதனால், இது ஆக்க மாய வேறுபாட்டையே குறிக்கும். எடுத்த - உயர்த்திய. இறை வனது அருட் சத்தியே முன்னர் மறைப்புச் சத்தியாயும், பின்னர் விளக்கற் சத்தியாயும் நின்று அறிவை வளர்த்தலின், ``வளர்த்தெடுத்த பெய்வளை`` என்றார். மறைத்தல் அதற்கியல்பாகாது விளக்குதலே இயல்பாகலின், விளக்கத் தொடங்கும் நிலையே, `சத்திநிபாதம்` எனப்படுகின்றது. மறைத்தலேயன்றி, விளக்குதலாகிய சத்தி நிபாதமும், `மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம்` என நால்வகைப் பட்டு, அவற்றுள் ஒன்று நான்காயும், மற்றும் அவ்வாற்றால் பலவாயும் நிகழ்தலின், ``பேதித்து`` என்று அருளிச் செய்தார். புனல் ஆடி ஆடு - நீரின்கண் விளையாடி மூழ்கு. ``சிற்றம்பலம்பாடி`` என்றதனால், இது, கோயிற்றிருக்குளம் ஆடுவார் கூறியதாம். இத் திருக்குளம், `சிவகங்கை` எனப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டு, அன்னமகளிர், சிவபெருமானது பேரின்ப நிலையை வியந்து பாடி ஆடியது. ``வாருருவப் பூண்முலை யீர்`` என்றதனை முதலிற் கொள்க.
ஓரொருகால் - ஒரோவொரு சமயத்தில். எம்பெருமான் என்றென்றே - சிவபெருமான் என்று சொல்லியே. சித்தம் களிகூர - பின்பு உள்ளம் மகிழ்ச்சி மிக. கண் நெடுந்தாரை நீர் ஓவா பனிப்ப - கண்கள் இடையறாத தாரையாகிய நீரை ஒழியாது பெய்ய. நம் பெருமான் சீர் ஒருகால் வாய் ஓவாள் - சிவபெருமானது புகழை ஒரு காலும் வாயினின்றும் ஒழியாதவளாயின இவள். பாரொருகால் வந்தனையாள் - இப்பொழுது நிலத்தில் ஒருமுறையே வணங்கி எழாது கிடக்கின்றாள்.
விண்ணோரைப் பணியாள் - பிற தேவரை ஒருபோதும் வணங்காள். இங்ஙன் இவ்வண்ணம் ஒருவர் பேரரையற்குப் பித்தும் ஆமாறு - இவ்வுலகத்திலே இவ்வாறு ஒருவர் தம் கடவுள் பொருட்டுப் பித்தும் கொண்டவர் ஆகும்படி. ஆட்கொள்ளும் வித்தகர் ஆர் ஒருவர்-ஆட்கொண்டருளும் தேவர் யாரொருவர் உளர்; ஒருவரும் இலர்.
தாள் - (ஆதலின், இவ்வாறு ஆட்கொள்பவனாகிய நம் சிவ பெருமானது) திருவடிகளை. (நாம் வாயாரப் பாடிப் புனல் பாய்ந்து ஆடுவோம்).
`சிவபெருமானது பெயரை முதற்கண் சிலபொழுது பொதுவாகச் சொல்லியவள், பின்னர் அதன் பயனாகத் தன்னை மறந்த பேரன்புடையவளாயினாள்; இங்ஙனம் தன்னை அடைந்தவரை வசீகரித்துப் பேரருள் புரியும் தேவர் பிறர் யாவர் உளர்` என வியந்தபடி.
``சீரொருகால்`` என்றதில், `ஒருகாலும்` என்னும் உம்மை தொகுத்தல். ``விண்ணோரைத் தான்பணியாள்`` என்றதில் தான், அசை நிலை. ``ஆமாறும்`` என்ற சிறப்பும்மையை ``பித்து`` என்றதனோடு கூட்டுக. ``தாள்`` என்பதற்குமுன், `அவர்` என்பது வருவிக்க. ஏர் உருவப்புனல் - எழுந்து தோன்றுகின்ற உருவத்தையுடைய நீர்; என்றது அருவிநீரை. பூம்புனல் - அழகிய நீர். `ஆட` என்னும் வியங் கோளின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. இஃது அருவி யாடுவார் கூறியது.

பண் :

பாடல் எண் : 16

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டு, அன்ன மகளிர் உலக நலத்தின் பொருட்டு மழையை நோக்கி வேண்டியது. அங்ஙனம் வேண்டுங்கால், தம் பெண்மைக் கேற்ப, இறைவி தன் சிறப்பே தோன்றக் கூறி வேண்டுவர்.
இதனுள் ``மழை`` என்றதனை முதலிற் கொள்க. மழை - மேகம். முன் இக்கடலைச் சுருக்கி - முதற்கண் இக் கடல் நீரைக் குறையப்பண்ணி. குறையப்பண்ணுதல் - முகத்தல். உடையாள் - எப்பொருள்களையும் தனக்கு உரிமையாக உடையவள்; இறைவி. `இறைவி` என்றது அவளது திருமேனியை. எம்மை ஆளுடையாள் - எம்மை ஆளுதல் உடையவள்; என்றது, `உலகியலின் நீக்கித் தன்வழி ஒழுகச் செய்பவள்` என்றபடி. இது முதலாக இறைவியைக் குறித்து வரும் மூன்று பெயர்களும், இறுதியில் நிற்கும், `அவள்` என்பது போலச் சுட்டுப் பெயரளவேயாய் நின்றன. இட்டிடையின் - சிறிய இடைபோல. சிலை - வில். `குலவுவித்து` என்பது, `குலவி` என நின்றது. குலவுதல் - விளங்குதல். `தன்னின்` என்றதில் உள்ள தன், சாரியை. `எங்கோமான் தன் அன்பர்க்கு முன் அவள் நமக்கு முன்னிச் சுரக்கும் இன்னருள்` என இயைத்துக் கொள்க. அன்பர்க்கு முன் - அன்பர்க்குச் சுரக்குமுன். முன்னி - நினைத்து. நினைத்தது, பின் நிகழ்வதனை. `சுரக்கும்` என்றது, சுரந்து பொழிகின்ற எனத் தன் காரியந் தோன்ற நின்றது. `பொழியாய் மழை` என்றாராயினும், எம்பெருமானது அருளால் பொழியாய் என்பதே கருத்தாகும். ``இக்கடலை`` என்றமையால் இது, கடலாடுவார் கூறியதாம். மழையை நினைவு கூர்தல், அவர்க்கே பெரிதும் இயைவதாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 17

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டு, அன்ன மகளிர், இறைவன் தம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிவந்து அருள்செய்தலை நினைந்து உருகிப் பாடி ஆடியது.
இதனுள், ``கொங்குண் கருங்குழலி`` என்றதை முதலிற் கொள்க; இது விளி. கொங்கு உண் - வண்டுகள் தேனை உண்கின்ற.
செங்கணவன் - திருமால். `கண்ணவன்` என்பதில், ணகரம் தொகுக்கப்பட்டது. `கண்ணவன், தோளவன், நல்லவன்` என்றாற் போல, அகரம் புணர்ந்து வழங்குதல், பிற்கால வழக்கு. எங்கும் இலாததோர் இன்பம், வரம்பிலின்பம். நம்பாலதா - நம்மிடத்ததாதற் பொருட்டு. ``நந்தம்மைக் கோதாட்டி`` என்றதனை, ``எழுந்தருளி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இங்கு - இவ்வுலகத்தில். `இல்லங்கள் தோறும் எழுந்தருளிப் பொற்பாதம் தந்தருளும்` என, முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கையாகக் கூறினமையின், (தொல். சொல் 242) எழுந்தருளுதல், விழாக்காலத்திற் பலதிருவுருவங்களிலும், எழுந்தருளுதலாம். ``நின் அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே`` (தி.8 திருப்பள்ளி. 8) என்புழி, ``எழுந்தருளிய`` என, இறந்த காலத்தாற் கூறினமையின், அஃது அடியவர் இல்லத்தே தன்னைக் கண்டு வழிபட எழுந்தருளியிருத்தலைக் குறித்ததாம். இனி இவ் விரண்டும் முறையே, குரு சங்கமங்களில், வருதலையும், மதுரையில் இருந்த அடியவள் ஒருத்தி தன் இல்லத்திற் சென்று பிட்டுப் பெற்றமை போன்ற அருட்செயல்களையும் குறிக்கும். இவற்றிற்கு இவ்விரு வகைப் பொருளையும் கொள்க. கோதாட்டி - செம்மைப்படுத்தி. சேவகன் - வீரன். அங்கண் அரசு - அருளால் அழகுபெற்ற கண்களை யுடைய தலைவன். பங்கயப் பூம்புனல், தாமரைப் பூவையுடைய நீர்; வாளாதே, ``பங்கயப் பூம்புனல்`` என்றமையின், குளத்து நீர் எனக் கொள்ளப்படுமாகலின், இது பொய்கையாடுவார் கூறியதாம்.

பண் :

பாடல் எண் : 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.

குறிப்புரை :

இதனுள் சிவபெருமான் தேவதேவனாய உயர் வுடையனாதலை நினைந்து பேசுதல் கூறப்படுகின்றது.
வீறு - பெருமை; என்றது, ஒளியை. சிவபெருமானது இரு திருவடியினது ஒளியின்முன், தேவர் பலரது முடியின்கண்ணும் உள்ள அளவிறந்த மணிகளும் ஒருங்குகூடிய கூட்டத்து எழுந்த பேரொளியும் மழுங்கும் என்க. இங்குக் கூறியது பொருளுவமம்;
``பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பினஃதுவம மாகும்``
என்னும் உவமவியல் நூற்பாவினைக் காண்க. இதற்கு உரையாசிரியர் உரைத்த உரை பொருந்துவதன்று. இதனை அணி இயலார், `விபரீத உவமை` என்றும், `எதிர்நிலை உவமை` என்றும் கூறுவர். தேவர் பலரது முடிகளும் சிவபெருமானது திருவடியின் முன் குழுமுதல், அவர்கள் அப்பெருமானது அடியில் தங்கள் முடிபட வணங்குதலாம். கண் ஆர் இரவி - கண்ணுக்குத் துணையாய்ப் பொருந்துகின்ற கதிரவன். வந்து - வருதலால். கார் - கருமை; அஃது ஆகுபெயராய், இருளை உணர்த்திற்று. தண் ஆர் ஒளி - குளிர்ச்சி பொருந்திய ஒளி. தாரகைகள் - விண்மீன்கள். அகலுதல் - காணப்படாது மறைதல். ``பிறங்கொளி`` என்றதில் ஒளி என்றது, அதனையுடைய பொருள்களைக் குறித்தது. இறைவன் தன் கலப்பினை நோக்கிய வழி உலகமேயாயும், தன் தன்மையை நோக்கியவழி அதனின் வேறாயும் அறியப்படுதல்பற்றி, `பெண் முதலிய பலவுமாகி, இத்தனையும் வேறாகி` என்று அருளினார். கண் ஆர் அமுதம் - கண்ணால் பருகும் அமுதம்; இது, `தேவரமுதத்தின் வேறு என்றவாறு; இதனை விலக்குருவகத்தின் பாற்படுத்துக. `கண்ணாரமுதக் கடலே போற்றி` (தி.8 போற்றி. 150) என முன்னருங் கூறினார். மேற்கூறியவாறன்றி இவ்வாறும் ஆமென்றலின், ``அமுதமுமாய்`` என்ற உம்மை. இறந்தது தழுவிற்று, வாளாதே ``இப்பூம்புனல்`` என்றமையின், `கிடைத்த இந்நீரின்கண்` என்க. இது, விண்மீன்கள் ஒளி மழுங்கிக் கதிரவன் தோன்றுங் காலம் வருதலின், தீர்த்தமாயுள்ளவற்றிற் செல்லாது, கிடைத்த நீரில் ஆடுவார் கூறியது. தீர்த்தமன்மை குறிப்பார். ``இப்புனல்`` என்றும், தீர்த்தமன்றாயினும் ஆடப்படுதற்குரியதே என்பார், ``பூம்புனல்`` என்றுங் கூறினர்.

பண் :

பாடல் எண் : 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?

குறிப்புரை :

இஃது, அன்ன மகளிர், தமக்குச் சிவபெருமானிடத்து அன்புடையரல்லாத ஆடவர் கணவராய் வருதல் கூடாதவாறு அருளு மாறு இறைவனை வேண்டியது.
`உன்கை` என்பது, ``உங்கை`` என, எதுகை நோக்கித் திரிந்தது. இன எதுகையும் பொருந்தும் ஆகலின், `உன்கை என்பதே பாடம்` எனினும் ஆம். `உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்றாற்போல` என்பது, ஒரு பொருளைக் காப்பதில் தாமே பெரு விருப்புடையராகிய ஒருவரை நோக்கிப் பிறர், `நீவிர் இதனைக் குறிக் கொண்டு காப்பீராக` என வேண்டிக் கொள்ளுமிடத்து, `அவ்வேண்டு கோள் மிகை` என்பதை விளக்கப் பண்டைக் காலத்தில் கூறப்பட்டு வந்ததொரு பழமொழி என்பது, இங்கு அறியப்படுகின்றது.
``தாமே தரும்அவரைத் தம்வலியி னாற்கருத
லாமே இவனா ரதற்கு``
என்னும் திருவருட்பயனை (70) இங்கு இதனோடு ஒருவாற்றான் ஒப்பிடலாம். ஆகவே, ஒரு குழவியை, `கருத்தோடு பாதுகாக்க` என்று அதன் தாய்க்குப் பிறர் கூறுங் கூற்று இது என்பது விளங்கும். இதனை, மணவினை யிடத்து மணமகளை மணமகனிடத்துக் கையடையாகக் கொடுக்குங்காலத்து இருமுதுகுரவர் கூறுவதொரு சொற்றொடர் என்பாரும் உளர். இதனுட் கிடக்கும் சொற்கள் அவ்வாறு பொருள் படுதற்கு ஏலாமையானும், என்றுமே இறைவனிடத்து அடங்கிநின்று, அவனால் நன்கு புறந்தரப்படும் உயிர்களுட் சிலராகிய இம் மகளிர்க்கு, முதற்காலத்தில் இருமுதுகுரவர்க்கு உரியளாய் இருந்து பின்னர் மணமகன் முதலியோரது வேண்டுகோட்கிணங்கி அவனுக்கு அவரால் கொடுக்கப்படுகின்ற கன்னிகை உவமையாதல் கூடாமையானும், அவ்வாறு உரைத்தல் பொருந்தாமை அறிந்துகொள்க.
`என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அங்கு அச்சொல்` என்றது, ஒருசொல் நீர்மைத்து. புதுக்கும் அச்சம் - புதுக்குதலால் உளதாம் அச்சம். புதுக்குதல், அதனைத் தாம் பொருளுடையதாக்க முயலுதல். அது பொருளற்றதென யாவராலும் அறியப்பட்டுப் பொருந்தாததாகலின், இறைவற்கு வெகுளிதோன்றுங் கொல் என, மகளிர் அஞ்சுவாராயினர். ஆயினும், அவாமிகுதியால் அதனைச் செய்யவே துணிந்து, `எம் அறியாமை நோக்கி முனியாது எம் விண்ணப்பத்தைக் கேட்டருள்` என முன்னர் வேண்டிப் பின்னர்த் தாம் கூறக் கருதியவற்றைக் கூறுகின்றனர்.
நான்கு, ஐந்து, ஆறாம் அடிகளால், மகளிர், சிவபெருமா னிடத்து அன்புடையரல்லாத ஆடவர், தமக்கு எவ்வாற்றானும் கணவராய் அமைதல் கூடாது என்பதனையே பலவாற்றான் வேண்டி னர். பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து தன் சேவடியே சேர்ந்திருக்கும் (தி.11 அற்புதத் திருவந்தாதி - 1) மகளிரை அவர் தம் இயல்பிற்கு மாறாய இயல்பினையுடைய ஆடவர்க்கு உரியராக்க இறைவன் நினையானாயினும், தம் வினை காரணமாக ஒரோ வொருகால் அவ்வாறு நிகழினும் நிகழுமோ என்னும் அச்சத்தாலே இம்மகளிர் இங்ஙனம் வேண்டினர். இதனால், சிவபிரானுக்கு வழிவழி அடிமையாய் வருங் குடியிற் பிறந்த ஆடவர்க்காயினும், பெண்டிர்க் காயினும் ஒருவர்மாட்டு ஒருவர்க்குக் காதல் பிறத்தற்கு வாயிலாக முதற்கண் நிற்பது, அவர்க்குச் சிவபிரானிடத்துள்ள அன்பே என்பதும், மெய்ந்நிறைந்த அழகும், கைந்நிறைந்த பொருளும் முதலாயின வெல்லாம் அதன் பின்னிடத்தனவாம் என்பதும் நன்கு விளங்கும். நம்பியாரூரரோடு பரவையாரிடத்துக் காதல் நிகழ்ந்த விடத்தும், சங்கிலியாரைக் கண்டபொழுது அவர்பால் நம்பியாரூரர்க்குக் காதல் நிகழ்ந்தவிடத்தும் இதனையே காண்கின்றோம். இனிச் சங்கிலியாருக்கு நம்பியாரூரர் பால் காதல் பிறப்பிக்க அவரைப்பற்றி இறைவன் அருளியவற்றில், ``சால நம்பால் அன்புடையான்`` என்பதையே முதற்கண் அருளியதும் காணத் தக்கது. இத்தகைய நற்குடிப்பிறப்பே ஞானம் பெறுதற்கு வாயில் என்பதனையே, மெய்கண்ட தேவர்,

``... ... ... ... ... ... தவம்செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு``
(சூத். 8. அதி. 1) என்று அருளிச் செய்தார்.
``தரையினிற் கீழை விட்டுத்
தவம்செய்சா தியினில் வந்து
பரசம யங்கட் செல்லாப்
பாக்கியம் பண்ணொணாதே``
(சூ. 2.90) எனச் சிவஞானசித்தி கூறியதூஉம் இதுபற்றி.
ஒன்பதாம் திருப்பாட்டுள் மகளிர், `சிவபிரானுக்கு அன்புடை யவரைக் கணவராக அடைதல் வேண்டும்` என, உடம்பாட்டு முகத்தான் வேண்டினர். இதனுள், `அன்னரல்லாதாரைக் கணவராக அடைதல் கூடாது` என, அதனை மறைமுகத்தான் வேண்டினர்; இவை இவ்விரண்டிற்கும் வேற்றுமை.
சிவபிரானுக்கு அன்பரல்லாதவர்க்கு வாழ்க்கைப்படின், கைகள் பயனற்ற சில பணிகளைச் செய்தலும், கண்கள் பயனில்லாத சில காட்சிகளைக் காணுதலும் உடையனவாதல் கூடுமாகலின், அவற்றை வேண்டா எனக் கூறும் முகத்தால், அன்ன தன்மையர் கணவ ராய் வருதல் வேண்டாமையைக் குறித்தனர். முன்னர், ``உனக் கல்லாது`` என்றமையின், ``மற்றொன்றும்`` என்றதற்கும், `உன்னை யல்லாது மற்றொன்றும்` என்று உரைக்கப்படும். தெய்வங்களும் அஃறிணையாகக் கூறப்படுமாதலின், ``மற்றொன்று`` என்றதில் அவையும் அடங்கும். இங்கு - இவ்வுலகத்தில். இப்பரிசே - இவ் வாறே. ``எங்கோன்`` என்றது இடவழுவமைதி. நல்குதியேல் - அருள் செய்வாயாயின். `ஞாயிறு எங்கு எழில் எமக்கு என்` என்க. `எங்கெழி லென் ஞாயிறு` என்பது, கவலையற்றோர் கூறுவதொரு தொடர். கதிரவன் திசைமாறித் தோன்றுதல் முதலிய, இயற்கைக்கு மாறான செயல்கள் நிகழுமாயின், அவை உலகம் கெடுவது காட்டும் குறி (உற்பாதம்) என்பர். ஆதலின், ஒன்றானும் குறைவில்லாதோர், இவ்வாறு கூறுதல் வழக்கு.
``வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயிறு எளியோ மல்லோம்``
(தி.6.ப.95.பா.2) என்ற திருத்தாண்டகத்தையும், ``எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றி`
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம
எங்கெழிலென் ஞாயிறு எளியோ மல்லோம்``
(தி.6.ப.95.பா.2) என்ற திருத்தாண்டகத்தையும்,
``எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றி`
என்ற சிவஞான சித்தியையும் (சூ. 8. 31) காண்க.
``எங்கெழிலென் ஞாயிறென இன்னணம் வளர்ந்தேம்``
என்றாற்போலப் (சீவகசிந்தாமணி. கனகமாலை - 237) பிறவிடத்தும் வரும்.

பண் :

பாடல் எண் : 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டினுள், அன்ன மகளிர் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது.
முதல் இரண்டடிகளிலும் உள்ள, ``போற்றி அருளுக`` என்பவற்றை அவ்வவ்வடியின் இறுதிக்கண் கூட்டி இருதொடராக்குக. மேலைத் திருப்பாட்டில் உள்ள, ``எங்கள் பெருமான்`` என்னும் விளி, இதனுள்ளும் முதற்கண் வந்து இயையும். இதன்கண் திருவடியைக் குறிக்குமிடத்தெல்லாம் நான்காம் வேற்றுமை விரிக்கப்படும். போற்றி- வணக்கம். அருளுக - எமக்கு இரங்குவனவாகுக. இதற்கு `அவை` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. சத்தியே பாதமாகலின், அருளுதல் முதலியன பொருந்துமாறறிக. செந்தளிர், உவமையாகு பெயர். மூன்றாம் அடி முதலிய ஐந்தினும், முறையே, `உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என்னும் ஐந்தொழிலும் கூறப்பட்டமை காண்க. திருமந்திரம் தவிர ஏனைய திருமுறைகளுள் ஐந்தொழிலையும் இனிது விளங்கக் கூறும் திருப்பாட்டு இஃதொன்றேயாம். அதனால், இது சிவாகமங்களுள், `பஞ்சப்பிரம மந்திரம்` எனக் கூறப்படும் மந்திரங்களோடு ஒருங் கொத்தது. ஐந்தொழிலும் சகலநிலைபற்றிக் கூறப்படுவனவாகலின், `ஆதி` எனவும், `அந்தம்` எனவும் வந்தவை. முறையே, கேவல நிலையையும், சுத்த நிலையையும் கூறியவாறாம். சகல நிலைக்கு வாராத உயிர்களும் உளவாதலின், `ஆம்` என்றார். ஆகவே, எஞ் ஞான்றும் உலகிற்கு நிலைக்களம் இறைவனது திருவடியே என்பதனை இனிது விளங்க அருளிச் செய்தமை காண்க. ``வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம் - அத்தன்தாள் நிற்றல்`` என்று அருளிச் செய்தார் மெய்கண்ட தேவரும் (சிவஞானபோதம் - சூ. 1. அதி 2). பொன்மலர்கள் பொன்னால் ஆகிய மலர். மலராவது, தாமரை மலரே. `செந்தளிர்கள், புண்டரிகம், பொன்மலர்கள், என்பன உவமை யாகுபெயர்கள். `ஆதி, அந்தம்` என அவ்வந் நிலைக்கண் நிற்பன வற்றை அவையேயாகவும், `தோற்றம் போகம், ஈறு` என, அவற் றிற்குக் காரணமாய் நிற்பவற்றைக் காரியமாகவும் பாற்படுத்து ஓதி யருளினார். ``பொன்மலர்`` என்றதன்பின், `என` என்பது தொகுத் தலாயிற்று. இறுதிக்கண் நின்ற, `போற்றி` என்பது வினையெச்சம். மார்கழி நீர் - மார்கழியில் ஆடப்படும் நீர். `மார்கழி` என்பது, அம்மாதத்திற்கேயன்றி, `மிருகசீரிடம்` என்னும் நாண்மீனுக்கும் பெயர். அதனால், இஃது ஆதிரை மீனையும் குறிக்கும்; என்னை? மிருகசீரிடத்தோடு தொடர்புடைய ஆதிரையையே சிறந்ததெனக் கொள்ப ஆதலின். ஈண்டும், `ஆட` என்னும் வியங்கோள் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பொய்கை, சுனை முதலிய பலவற்றினும் ஆடுவார் கூற்றுக்களாக அனைத்தையும் கூறியது அங்ஙனம் அவற்றிற் சென்று ஆடுவார் பலர்க்கும் அத்திருப்பாடல்கள் ஏற்ற பெற்றியாற் பயன் தருதற் பொருட்டென்க. எனவே, இப்பகுதி முழுவதும், எல்லார்க்கும் எல்லாநாளினும் ஒருபெற்றியே நிகழ்வனவற்றைக் கூறியதாகாது, பலர்க்கும் பலநாளினும் பலவாறாக நிகழ்வனவற்றைக் கூறியதே யாதல் பெறப்படும்.
தலைவாயில் முகப்பு பதிகத் தலைப்பு

பண் :

பாடல் எண் : 1

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.

பொழிப்புரை :

திருமாலும் காண்பதற்கரிதாகிய திருவடி இந்தப் பூமியில் படும்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளி, எம்மையும் எம்மினத்தையும் ஆட்கொண்டு எமக்கு முத்தி நெறியையும் அருள் செய்தமையால் அந்த இறைவனது கருணையையும், திருவடியின் பெருமையையும் யாம் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

இப்பகுதியில், அடிகள் தமக்கு இறைவன் செய்த திருவருளின் பெருமையையே பாடிப் பரவசம் எய்துகின்றாராகலின், இதற்கு, `ஆனந்தக் களிப்பு` எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். ஆனந்தக் களிப்பு - இன்பத்தால் எழுந்த பெருமகிழ்ச்சி. இன்பம், இங்குப் பேரின்பம்.
பொருள்கோள்: `பெருந்துறையான், அங்கணன் அந்தணனாய், பாதம் பூதலத்தே போந்தருளி, அறைகூவி ஆட்கொண்டு, பிறப்பறுத் திட்டு வீடருளும் கருணை வார்கழலே அம்மானாய்ப் பாடுதும்`. ``போந்தருளி`` என்றதை, `போந்தருள` எனத் திரிக்க.
``சென்று இடந்தும்`` என்றதனை `இடந்து சென்றும்` என மாறுக. இடத்தல் - நிலத்தைக் கிண்டுதல். `பொங்கு பாதம்` என இயையும். பொங்கு - ஒளிமிகுகின்ற. தரம் - நிலை. ``ஆட்கொண்டு`` என்றது, இங்கு, `ஏற்றுக்கொண்டு` என்னும் பொருளதாய்நின்றது. தெங்கு - தென்னைமரம். `தென்னன்` என்பது, இங்கு, `தென் நன்` எனப் பிரித்து, `அழகிய நல்ல` எனப் பொருளுரைத்தலன்றிப் பிறவாறு உரைத்தற்கு ஏலாமை அறிக. அறை கூவி - வலிய அழைத்து. தாம் வேண்டாதமுன்பே வந்து அருள்செய்தான்` என்றபடி. காண், முன்னிலையசை. `அம்மானையாய்` என்பது, ``அம்மானாய்`` எனத் தொகுத்தலாயிற்று.
அம்மானை - அம்மானைப் பாட்டு. ``ஆய்`` என்றதனை, `ஆக` எனத் திரித்துக்கொள்க. ``அம்மானையாகப் பாடுதும்`` என இயையும். ``அம்மானாய்`` என்றது, `அம்மானை` என்றது விளியேற்று வந்தது எனக் கொண்டு, `விளித்தது முன்னின்றார்களை` எனவும், அம்மானைக் காயை எனவும் பலவாறு உரைப்பர்.

பண் :

பாடல் எண் : 2

பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

மண்ணுலகத்தார் விண்ணுலகத்தவர் முதலிய எல்லாராலும் காண்பதற்கரியனானவனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னைப் பித்தனாக்கினவனும், முத்தி வழியை அறிவித்தவனும், வலை வீசுதல் முதலிய திருவிளையாடல்களைச் செய்தவனும் கருணைக் கடலும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

`பார், விசும்பு, பாதாளம்` என்றது இவ்வண்டத்தைக் குறித்தும். `புறம்` என்றது, பிற அண்டங்களைக் குறித்துமாம். பேராளன் - புகழுடையவன். `பெருமையுடையவன்` என்பாரும் உளர். பித்து, `பிச்சு` என வந்தது. `ஏற்றி` என்றது, `ஏற்றியவன்` எனப் பெயர்; வினையெச்சமாகக்கொண்டு உரைத்தலும் ஆம்.
வாரா வழி - வீட்டு நெறி. ``மீன்`` என்றதில் நான்கனுருபு தொகுத்தல். விசுறுதற்கு, `வலை` என்னும் செயப்படுபொருள் எஞ்சிநின்றது. `ஆசை` என்பது, இங்கு, கருணையின்மேல் நின்றது. வாரியன் - கடலாய் உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 3

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

இந்திரன் முதலான தேவர்களும் முனிவர் முதலானோரும் விண்ணிலே நிற்க, எங்களை ஆட்கொள்ளும் பொருட்டுப் பூவுலகில் எழுந்தருளி, எங்கள் மனத்தை உருகச் செய்த திருப்பெருந்துறையான், எமக்கு அருள் செய்த முடிவற்ற இன்பத்தைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

`அந்தரத்தே` எனற்பாலதாகிய சாரியை சிறுபான்மை வாராதொழிதலும், ``புலம் புக்கனனே`` (புறம் - 258) என்றதனோடு ஒப்பக் கொள்ளப்படும். அந்தரம் - வானுலகம்; `நிலையின்றி வருந்த` என்பது நயம். `தோட்கொண்ட நீறு உள்ளத்தைக் கவர்தலுடையது` என்பது, மேலே உரைக்கப்பட்டது. (தி.8 திருச்சதகம் - 33.) `நீற்றனாய் வந்து சிந்தனையை உருக்கும்` என்க. பந்தம் பறிய - பாசம் நீங்குதலால். `பறியத் தந்த` என இயையும். ``பரிமேற்கொண்டான் தந்த ஆனந்தம்`, என்றது, அடிகள் பொருட்டே. இறைவன் குதிரைகொணர்ந் தனன் என்பதை இனிது விளக்கும். இதுபற்றியே, ``பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயன்`` (திருக்களிற்றுப் படியார் - 73) என்றது.

பண் :

பாடல் எண் : 4

வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

சாதாரண தேவர்களும், திருமால் பிரமன் இந்திரன் முதலான பெரிய தேவர்களும், காட்டில் சென்று கடுந் தவம் செய்தும் காண்பதற்கு அரியனாகிய சிவபெருமான் தானே வலிய வந்து, அடியேனைத் தாய்போலக் கருணை செய்து, என் உடல் உயிர்கள் உருகச் செய்தமையால், அவன் திருவடியைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

வான் வந்த தேவர் - விண்ணுலகில் தோன்றிய தேவர். கான் - காடும். `தேவர்களும் நிலவுலகத்திற்போந்து தவம் புரிகின்றனர்` என்றபடி. இந்திரன் சீகாழிப்பதியில் தங்கித் தவம் புரிந்தமையைக் கந்த புராணம் விரித்துரைத்தல் காண்க. ``தான்`` என்றது ``பரிமேற்கொண்டான்`` என மேற் கூறப்பட்ட அவன்`` என்ற படி. `ஊன் உரோமங்கள் வந்து` என மாறுக. வருதல், இங்கு, மேலெழு தல்; சிலிர்த்தல். இதனை, `வர` எனத் திரிக்க. உயிர்ப்பு - உயிர்த்தல்; மூச்செறிதல்; அன்பினால் இதுவும் உளதாகும். எய்து - எய்துதற்குக் காரணமான; இது, ``கழல்`` என்றதனோடு இயையும். `அமுதின் தெளிவின் தேன்வந்து ஒளிவந்த கழல்` என்க. தேன் வந்து - இனிமை மிகுந்து. வான் வந்த கழல் - பெருமை பொருந்திய திருவடி. வார் கழல், அடையடுத்த ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 5

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

கற்றறிவு இல்லாமையால் கடையாகிய என்னையும் ஒரு பொருளாய் மதித்து ஆட்கொண்டு, கல்லை நிகர்த்த என் மனத்தைக் குழைத்துத் தன் கருணைக் கடலில் அழுந்தும் படிசெய்து என் வினையை ஒழித்தருளிய நம் சிற்றம்பலவனைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

கல்லாம் மனம் - கல்போன்ற மனம். பிச்சேற்றி - பேரன்பு கொள்ளச் செய்து. ``ஏற்றி`` என்றது, `ஏற்றியதனால்` என்ற வாறு. ``கல்லைப் பிசைந்து கனியாக்கி`` என்றது. `அன்னதொரு செயலைச் செய்து` என்றபடி; ``கல்நார் உரித்த கனியே`` (தி.8 போற்றி -97.) என முன்னரும் அருளினார். இங்ஙனம் செய்தமைபற்றி, ``வல்லாளன்`` என்றார். ``கருணை`` என்றது, கருணையால் விளை கின்ற இன்பத்தை. ``பிச்சேற்றி`` கருணை வெள்ளத்தழுத்தி`` என்றதனால், `அன்பே இன்பத்திற்குக் காரணம்` என்பது போந்தது. என்றும் இருத்தலை, `புக்கு மன்னும்` என்றது, பான்மை வழக்கு. ஒல்லை விடை - விரையச் செல்லும் இடபம்.
இவ்வைந்து திருப்பாட்டுக்களும், பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியை ஆற்றுவித்தற்பொருட்டுத் தோழி தலைவனை இயற் பழித்தவழி, தலைவி இயற்பட மொழிந்தவாறாக அருளிச்செய்யப் பட்டன. பாடாண் பாட்டில் கைக்கிளை வகையேயன்றி ஐந்திணை வகை வருதலும் உண்டென்க. கடவுள் நெறியாகிய மெய்ந்நெறிப் பொருள் காமப் பொருளாய் வருமிடத்து, இறைவன் தலைவனும், உயிர் தலைவியும், நெஞ்சு தோழியும், பிற தத்துவங்களின் கூட்டம் ஆயத்தார் முதலிய பிறரது கூட்டமுமாய் அமையும். பிறவும் இங்ஙனம் ஏற்ற பெற்றியால் அறிந்து கொள்ளப்படும். இவ்விடத்து, இயற் பழித்தல் உலகியலின் வழிநின்று கூறுதலும், இயற்படமொழிதல் அனுபவம் பற்றிக் கூறுதலுமாம்.

பண் :

பாடல் எண் : 6

கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டி
தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

தோழி! திருப்பெருந்துறையான் காட்டாதன எல்லாம் காட்டி, சிவகதியைக் காட்டி, தன் திருவடியைக் காட்டி, தன் கருணையாகிய தேனைக் காட்டி, உலகத்தார் நகைக்கவும், யாம் மேன்மையாகிய முத்தியை அடையவும் எம்மை அடிமை கொண்ட வரலாற்றைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

தோழி, ஒருவன் என்னைக் கிறி செய்தவாறு கேட்டாயோ? கேட்டிலையேல் கேள்` எனத் தோற்றுவாய் செய்துரைக்க. பிரிவிடை ஆற்றாளாய்க் கூறுதலின், ``கிறி`` என்றாள். கிறி - வஞ்சனை. இஃது இயற்பழித்தது. `ஒருவனாவான் இவன்` என்பதை, ``பெருந்துறையான்`` என்று விளக்கினாள். ``காட்டாதன வெல்லாம் காட்டி`` (தி.8 திருச்சதகம் - 28) என்றது, முன்னும் கூறப்பட்டது. ``சிவம் காட்டி``; எனப் பின்னர் வருகின்றமையின், ``எல்லாம்`` என்றது அஃதொழிந்த பிறவற்றை என்க. சிவம் - மெய்ப்பொருள், உணர்த்திய முறைமை கூறுகின்றாராதலின், மெய்ப்பொருளை வேறு போலக் கூறினார். ``தாள் தாமரை காட்டி`` என்றது, `கொம்பரில்லாக் கொடி போலப் பற்றுக்கோடின்றித் தமியளாய் அலமந்த எனக்கு அவற்றைப் பற்றுக்கோடாகத் தந்து` என்றபடி. ``கருணைத் தேன்`` என்றது, அதனால்விளைகின்ற இன்பத்தை. நாட்டார் - உலகவர். அவர் நகைப்பது, அகலிடத்தார் ஆசாரத்தை அகன்றமை (தி. 6.ப.25. பா.7.) பற்றியாம். மேலை வீடு - முடிந்த நிலையாகிய வீடுபேறு; இதனை, `பரமுத்தி` என்ப. `நமக்குளதாகும் இப்பெறற்கரும் பேற்றினை அறியாமையால் நாட்டார் நகைக்கின்றாராதலின், அதனான் நமக்கு வருவதோர் தாழ்வில்லை` என்றபடி. ``ஆட்டான்`` என்றதில் தான், அசைநிலை. `ஆண்டான்`` அவ்வாற்றைப் பாடுதும்` என்க.
ஆண்டவாறே தன்னை அவன் உடன்கொண்டு போகாது நீத்தமையின், இத்துணைத் தலையளியையும், ``கிறி`` என்றாள். எனவே, இத் திருப்பாட்டு, `தலைவர் நம்மை மறந்தொழிவாரல்லர்` எனத் தோழி வற்புறுத்தியவழி, தலைவி வன்புறை எதிரழிந்து அவனை இயற்பழித்ததாம். தோழி தூது செல்வாளாவது இதன் பயன்.

பண் :

பாடல் எண் : 7

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

இடைவிடாமல் நினைப்பவர்களுடைய மனத்தில் தங்கியிருப்பவனும், நினையாதவர்க்குத் தூரமாய் இருப்பவனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனும் வேதங்களை ஓதுபவனும், பெண்பாகனும், எம்மை ஆட்கொண்ட தலைவனும், தாய் போலும் மெய்யன்பு உடையவனும், உலகு ஏழிலும் தானே நிறைந்து அவற்றை ஆள்பவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

ஓயாது - மெலியாது; `சலிப்பின்றி` என்றபடி. எனவே, ஒருகாலைக்கொருகால் இன்பம் மீதூரப்பெறுதல் பெறப்பட்டது. உள்ளான் - உள்ளீடாய் இருப்பவன். ``உள்ளத்தின் உள்ளேநின்ற கருவே`` (தி.6. ப.47. பா.1.) என அருளிச்செய்தார் திருநாவுக் கரசரும். `பிறர்க்குச் சேயான்` என்க.
பாதி - பாதியுடம்பு. தாய் - எல்லாப் பொருட்கும் பிறப்பிடம். தத்துவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன். ஆள்வான் - யாவரையும் அடியராகக் கொள்பவன்.

பண் :

பாடல் எண் : 8

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

அன்பர் பாடும் பாடலைப் பரிசிலாகக் கொண்டருள் கின்ற பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தவரும் புகழும்படியான புகழை உடையவனும், மண்ணுலகத் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள் கூடற் பதியில், மண் சுமந்து கொண்டு பாண்டியன் கைப்பிரம்படியால் புண் பட்ட பொன்போலும் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

`பாடற்குப் படைத்தருளும்` என்க. பரிசு - பரிசில்; என்றது, `இம்மை, மறுமை, வீடு` என்னும் மூன்றனையுமாம். `இசைப் பாடலால் பாடுவோர்க்குப் பேரருள் செய்வன் இறைவன்` என்பதனை இவ்வாறு அருளினார்.

`கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை
கூடும் வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும்
ஈசன்``
(தி.3.ப.71. பா.1.) என ஆளுடைய பிள்ளையாரும்,
``அளப்பில கீதம் சொன்னார்க்
கடிகள்தாம் அருளுமாறே``
(தி. 4.ப.77. பா.3) எனத் திருநாவுக்கரசரும் அருளிச்செய்தல் காண்க.
இனி, `அடிகள் இவ்வாறு அருளிச்செய்தது, மூவர் தேவாரத் திற்கும், பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் இவர் களது இசைக்கும் இறைவன் மகிழ்ந்து அருள் புரிந்தமை பற்றி` என்று உரைப்பாரும் உளர்; அவையெல்லாம், அடிகள், அவர்தம் காலத் திற்குப் பிற்பட்டவரென்பது துணியப்பட்ட வழியே பொருந்து வனவாம்.
விண்சுமந்த கீர்த்தி - விண்ணைச் சுமந்த புகழ்; என்றது, `வானளாவிய புகழ்` என்றபடி. `கீர்த்தியை யுடைய மண்டலம்` என்க. `தலம்` என்பது வடசொல்லாதலின், `மண்` என்பதன் ஈறு இயல் பாயிற்று.
எல்லாவுலகுக்கும் தலைவனாகிய இறைவனை, நிலவுலகத் திற்கே தலைவன்போலக் கூறியது, இங்குள்ளாரையே தான் வலிய வந்து ஆட்கொள்ளுதல் பற்றி. கலி - ஆரவாரம்.

பண் :

பாடல் எண் : 9

துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

பிறைச்சந்திரனை உடையவனும், வேதப் பொருளானவனும், திருப்பெருந்துறையானும், முப்புரி நூலை உடையவனும், இடபவாகனனும், நீலகண்டனும், சிவந்த திரு மேனியையுடையவனும், திருவெண்ணீற்றை உடையவனும், பஞ்ச பூதங்களின் பலனும் ஆகிய சிவபெருமான் தன் பழவடியார்க்கு முடி வற்ற இன்பத்தைக் கொடுத்தருள்பவன். ஆதலால் அவனது பெருங் குணத்தை உலகம் எல்லாம் அதிசயிக்கும்படி புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

கோல மா - அழகிய குதிரை. அண்ட முதல் - உலகிற்கு முதல். பழவடியார் - முன்னரே ஆட்கொள்ளப்பெற்ற அடியவர். அவர், தன்னால் ஆட்கொள்ளப்பட்ட பின்னரும் பிராரத்தம் காரணமாக உலகியலைத் தழுவி நிற்பாராயின் அப்பிராரத்தவினை ஒழிவில் அவர் மீளப் பிறவியிற் செல்லாதவாறு தடுத்துத் தனது வரம்பிலின்பத்தை அவர்க்கு அளித்தருளுதலையே இதன்கண் அருளிச்செய்தார் என்க.
இறைவன் தான் தன் அடியவரை ஆட்கொள்ளும் பொழுது, `அவர்க்கு அந்தமிலா ஆனந்தத்தை அளித்தருளுதும்` என்றே ஆட் கொண்டருளுவன் ஆதலின், அதனை, `பண்டைப் பரிசு` என்று அருளினார். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்கள் பிராரத்தம் கழிந்த பின் இங்ஙனம் அந்தமிலா ஆனந்தம் பெற்று உய்தலையே,
``காயமொழிந் தாற்சுத்த னாகி ஆன்மா
. . . . . . . . . . .
மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீழ் இருப்பன்,

மாறாத சிவாநுபவம் மருவிக் கொண்டே``
என்று விளக்கியது சிவஞான சித்தி (சூ.11.1.). இதனானே, அவர் தம் பிராரத்தவினையை நுகருங் காலத்து ஒருதலையாக விளைதற் பாலதாய ஆகாமிய வினையையும் அது முறுகிச் சஞ்சிதமாகாவாறு இறைவன் அழித்தொழிப்பான் என்பதும் பெறப்பட்டது. இதனையே,
``தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையு ஞானத்
தழலுற வழிந்து போமே``
எனச் சிவப்பிரகாசமும் (89),
ஏன்ற வினைஉடலோ டேகும்;இடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும்.
எனத் திருவருட்பயனும் (98) கூறின.
இனி, இறை இன்பமே உயிர்க்கு இயற்கையும், அதனைத் தடுத்து நின்றது அனாதி செயற்கையாகிய ஆணவமுமாகலின், அவ்வாணவம் நீங்கியபின் அடையும் இன்பத்தை, `பண்டைப் பரிசு` என்று அருளினார் என்றலுமாம்.
இப்பொருட்கு `பழவடியாராவார், இறைவன் தந்தருளிய திருவருளை மறவாது சிந்தித்தும், தெளிந்தும் நிட்டை கூடியவர்` என்று பொருள் உரைக்கப்படும். "பரிே 2970?" என்ற ஏகாரம், தேற்றம். ``ஈந்தருளும், வியப்புறும்`` என வந்த பெயரெச்சங்கள் அடுக்கி, ``ஆறு`` என்ற ஒருபெயர் கொண்டன.
அண்டம் - புவனம்; இஃது ஆகுபெயராய், அவற்றின் உள்ளாரைக் குறித்தது. வியப்புறுதல், `அவர்செய்த பாதகமும் பணி யாயது நோக்கியாம்.` இங்ஙனம் இவையெல்லாம் பிறரிடத்து நிகழ்வனபோல அருளிச் செய்தாராயினும், தம்மியல்பு கூறுதலே அடி கட்குக் கருத்தென்க.

பண் :

பாடல் எண் : 10

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

தேவதேவனும், அரசர்க்கரசனும், திருப்பாண்டி நாட்டை உடையவனும், பெண்பாகனும், அடியேனை ஆட்கொண்ட வனும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

மன்னவர்க்கு, அவர்க்கு உண்டாகின்ற மாண்பாகி நின்றானை` என்க. மாண்பு - பெருமை; என்றது நீதியால் விளையும் பயனை. அது,
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
(குறள் - 547.) என்றபடி, செங்கோல்முறை முட்டவந்துழியும் அதற்கு இளையாது, அதனை முட்டாமற் செலுத்திய வழி, அதனான் அப்பொழுது எய்தும் தீங்கினையும் எய்தாது நீக்குதல். இது மகனை முறைசெய்த சோழன், அதனால் இழந்த மைந்தன் உயிர்த்தெழப் பெற்றமையும், தன் கையைக் குறைத்துக்கொண்ட பாண்டியன், பின்னும் முன்போலக் கைவளரப் பெற்றமையும் போல்வனவற்றால் அறியப்பட்டது.
``நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே`` (தி.6.ப.38.பா.8)
``.....நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண்`` (தி.6.ப.87.பா.6)
``மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்`` (தி.6.ப.95. பா.7)
எனத் திருநாவுக்கரசரும் அருளிச்செய்தல் காண்க.
தமிழ்ச் சங்கத்தில் தானும் ஒரு புலவனாய் இருந்து தமிழை ஆராய்ந்தமை பற்றி, ``தமிழளிக்கும்`` என்றார்.
``சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என்
சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண்
தீந்தமிழ்``
எனத் தி.8 திருக்கோவை(20)யுள்ளும் அருளிச் செய்வார். ``அளிக்கும்`` என்றது, ``நாட்டான்`` என்றதன் இறுதிநிலையோடு முடியும். ``பேணு`` என்றது, `அடியவர்கள் விரும்பிப் போற்றுகின்ற` என வந்த அடையே; `பேணு பெருந்துறை` என்னுந் தலம் இதனின் வேறு . `பெருந்துறையில் நாயேனை ஆட்கொண்ட` என்றதற்கு, பெண்கள் கூற்றில் இப்பெண் அங்ஙனம் ஆட்கொள்ளப்பட்டவளாகப் பொருள்கொள்ளப்படும். பின்னர் இவ்வாறு வருவனவற்றிற்கும் இது பொருந்தும். இப்பெண்டிர்க்கெல்லாம் இயற்பெயர் கூறாமையின், இதுவும் பொருந்துவதேயாம்.

பண் :

பாடல் எண் : 11

செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

உமாதேவிபங்கனும், திருப்பெருந்துறையானும், திருவடியை அடைந்தவரின் மனம் உருக்கும் குணத்தை உடைய வனும், பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்கினவனும், தன் திருவடி யில் மனம் வைத்த அன்பர் மனத்தில் இருப்பவனும் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

செப்பு - கிண்ணம். ஆர், உவம உருபு. `தப்பாமே உருக்கும்` என இயையும். தப்பாமே - நீங்கிப்போகாதபடி; `தன்னை அடைந்தவரது நெஞ்சம் பிறிதொன்றை நினையாதவாறு இன்புறச் செய்பவன்` என்றதாம். `சங்கமிருந்தது முதலியவற்றால் பலராலும் நன்கறியப்பட்டது` என்பார், `அப்பாண்டிநாடு` என்றார். அதனைச் சிவலோகம் ஆக்குவித்தது, வலை வீசுதல், குதிரை கொணர்தல், மண் சுமத்தல் முதலிய திருவிளையாடலின் பொருட்டுத் தான் பலகாலும், பலவிடத்தும் எழுந்தருளி வந்தமையாலாம். இனி, `வரகுணன்` என்னும் பாண்டியனுக்கு மதுரையையே சிவலோகமாகக் காட்டிய திருவிளையாடல் ஒன்றும் பரஞ்சோதியார் திருவிளையாடலிற் காணப்படுகின்றது. அப்பு - நீர். ``ஒப்பு`` என்றது விலையை. ``தம் நெஞ்சை விற்றற்கு விலையாகப் பெறும் பொருள் கழலே யாகும்படி` என்றவாறு. ஒப்புவித்தல் - விற்றுவிடுதல். ``ஒப்பு`` என்றதனை, `ஒற்றிக்கலம்` எனக்கொண்டு `கழற்கே` என உருபு விரித்துரைப்பாரும் உளர்; `கழற்கே` எனினும் யாப்புக் கெடாதாக, அவ்வாறோதாமை யானும் அடியவர், தம் நெஞ்சினை இறைவனுக்கு மீளா அடிமை ஆக்குதல் அன்றி ஒற்றியாக வைத்தல் இலராகலானும், `ஒப்புவித்தல்` என்னும் சொல், `ஒற்றியாக வைத்தல்` எனப் பொருள்படாதாகலானும் அது பொருந்துவதன்றாம்.
``விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி யாட்பட்டேன்`` (தி. 7.ப.95. பா.2.)
என ஆளுடைய நம்பிகள் அருளிச்செய்ததனைக் காண்க. அப்பால் - மாயைக்கு அப்பால் உள்ளது; என்றது உயிரை. உலகத்தையும், உயிரறிவையும் கடந்து நிற்பவன் இறைவன் ஆதலின், ``அப்பாலுக் கப்பால்`` என்று அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 12

மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண் டினிப்பிறவா மேகாத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நம்சிவனைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

திருமால் முதலியோர் தேடி நிற்க, என்னையும் தனது இனிய அருளால் இந்தப் பிறப்பில் ஆட்கொண்டு இனிமேலும் பிறவாமல் காத்தவனாய் உண்மையாகிய இடத்தில் தோற்றுபவனாய், எல்லா உயிர்களுக்கும் தானே ஒருமுதற் பொருளாய், எல்லா உயிர் களுக்கும் வீடுபேற்றுக்கு ஏதுவாய் இருக்கிறவன் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

``எப்பிறவியும் தேட`` என்றது, பெரிதும் அருமை குறித்தவாறு. `இப்பிறவிக்கண்` என உருபு விரிக்க. ``காத்து`` என்ற வினையெச்சம், ``ஆகும்`` என்பதனோடு முடியும். இவ்வெச்சம் எண்ணின்கண் வந்தமையின், `காத்தவனும், வீடாகும் அப்பொருளு மாம் நம்சிவன்` என்பதே பொருளாம்.
மெய்ப்பொருளை அறிதற்கருவியாகிய மெய்யறிவை ஆகுபெயரால், ``மெய்ப் பொருள்`` என்றார்; ``பொன்னும் மெய்ப் பொருளும் தருவானை`` (தி.7.ப.59.பா.1) என்றதும் காண்க. ``தோற்றம்`` என்றது, அவ்வாற்றால், தோன்றுதலுடைய பொருள்மேல் நின்றது. மெய் - மெய்ம்மை; ஒருவாற்றானும் திரிபின்றி, என்றும் ஒரு படித்தாயிருத்தல். வடமொழியுள், `சத்து` எனப்படுவதும் இதுவே. ``நிலைபேறு`` என்றது, அதனையுடைய தன்மையைக் குறித்தது. ஒரு பொருட்குத் தன்னியல்பு என்றும் நீங்காது நிற்குமாதலின், அதனை, ``நிலைபேறு`` என்றார். எனவே, `சத்தாதற்றன்மையைத் தனக்கு இயல்பாக உடையதாய்` என்பது பொருளாயிற்று. `தன்னியல்பு, சுபாவம், இயற்கை` என்பன ஒருபொருட் சொற்கள். இதனை, `சொரூப லக்கணம்` எனவும், `உண்மை இயல்பு` எனவும் கூறுவர். ``எப்பொருட்கும்`` என்றதன்பின், `முதல்` என்பது எஞ்சிநின்றது. முதலாவது, நிலைக்களம்; இதனை, `தாரகம்` என்ப. `யாவற்றுக்கும்` என்னும் சாரியை தொகுத்தல். ``வீடாகும்`` என்பதனால், `யாவை` என்பது, அறிவுடைப் பொருளாகிய உயிர்களையே குறித்தது, வீடுபெறுதற்குரியன அவையேயாகலின். வீடாவது, பந்தத்தினின்றும் நீங்குதல். கயிறற்றமையால் அதனினின்றும் நீங்கிய ஊசற்குப் புகலிடம் நிலமன்றி வேறில்லாமைபோல, பந்தம் மெலியப் பெற்றமையால் அதனினின்றும் நீங்கிய உயிருக்குப் புகலிடம் இறைவனன்றி வேறில்லையாதலின், அவனை, ``யாவைக்கும் வீடாகும் அப் பொருள்`` என்றார். விடுதலின்பின் எய்தற்பாலதாய பொருளை, `வீடு` என்றல், காரியவாகுபெயராம். பந்தத்தினின்றும் நீங்கிய உயிர்க்குப் புகலிடம் இறைவன் திருவடியன்றி வேறில்லை என்பதை, மெய்கண்ட தேவ நாயனார்,
``விட்டு - அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே``
(சிவஞானபோதம் சூ.8.) எனவும்,
``இனி, இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமதுமுதல் சீபாதத்தை அணையும் என்றது.``
``ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாந் துணையான்`` (-சிவஞானபோதம்.சூ.8.அதி.4.)
எனவும் விளக்கினார். ``தோற்றமாய்`` எனவும், ``தானேயாய்`` எனவும் வந்த செய்தெனெச்சங்கள் காரணப் பொருளவாய் நின்று, பின்னர் வந்த, ``நிலைபேறாய்`` `வீடாகும்` என்றவற்றோடு முறையே முடிந்தன. இவற்றால், பொய்யறிவின்கண் தோன்றாது, மெய் யறிவின்கண் தோன்றுதலால், மெய்ம்மையையே தனக்கியல்பாக உடையதாயும், எப்பொருட்கும் முதல் தானேயாதலால், யாவைக்கும் வீடாயும் நிற்கும் என்றவாறறிக.
`பொய்ப்பொருளால் விளங்கிப் பொய்ப்பொருளையே அறிவது பொய்யறிவு` எனவும், `மெய்ப்பொருளால் விளங்கி மெய்ப்பொருளையே அறிவது மெய்யறிவு` எனவும் உணர்க. இவற்றை முறையே `பாசஞானம்` எனவும், `பதிஞானம்` எனவும் சைவசித்தாந்த நூல்களும் கூறும். இவ்விரண்டுமின்றிப் பசுஞான மாகிய உயிரறிவு தனித்து நில்லாதாகலின், அதனைத் தனித்து நிற்பதாக அறியும் பசுஞானமும் பொய்யறிவேயாதலறிக.
`பொய், மெய்` என்பன, நிலைபெறுதலும், நிலைபெறாமையு மாகிய இயல்புகளைக் குறிப்பனவன்றி, இன்மை உண்மை மாத்திரையே குறித்தொழிவனவல்ல.
மெய்ப்பொருட்கண் தோற்றமாதல் முதலியனவே பரம்பொரு ளின் இயல்பென்பது மறைகளின் முடிபு என்பார், `இத்தன்மை களையுடைய அப்பொருள்` என முன்னர் பொதுப்படச் சுட்டி, பின்னர், `சிவபெருமானையன்றிப் பரம்பொருளாவார் பிறரில்லை` என்னும் உண்மையை விளக்குவார், சிறப்பாக, ``நம் சிவனை`` என்று அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 13

கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

செந்நிறம் உடையவனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஒருவராலும் அறிய முடியாதவனும், அன்பர்க்கு மெய்யனும், அன்பர் அல்லாதார்க்குப் பொய்யனும், அந்தணனும், திருவையாற்றில் வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

மை ஆர் - மேகம்போலும். தேன், கூந்தலில் முடித்த பூவில் உள்ளது. `சிலம்ப, ஆட, ஒலிப்ப` என்பவற்றை, `ஆடி` என, ஒருசொல் வருவித்து முடிக்க. சேர்ந்தறியாக் கை - ஒரு பொருளிலும் தோய்ந்தறியாத ஒழுக்கம்; இது, பின், `எங்கும் செறிந்தானை` என்பதனோடு முரணிநின்று, `எப்பொருளிலும் நிறைந்திருப்பினும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்றலை உணர்த்திற்று.` ``செய்யானை`` என்றது முதலிய மூன்றடிகளிலும், முரண்தொடை அமையவே அடிகள் அருளிச் செய்திருத்தல் அறிக.
இங்ஙனமாகவும், ``சேர்ந்தறியாக் கையானை`` என்றதற்கு, `ஒருவரைத் தொழுதறியாத கைகளை யுடையவன்` எனப் பொரு ளுரைப்பாரும் உளர்; இறைவனுக்கு அப்பொருள் சிறப்புத் தாராமை யறிக. மெய்யான் - அநுபவப் பொருளாய் உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 14

ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

யானை முதலாகிய எல்லாப் பிறவிகளிலும் பிறந்தும் இறந்தும் இளைத்த என்னை உடலுருகச் செய்து, என்வினைகளை ஒழித்து, தேன் போல எனக்கு இனிமையைத் தந்து என்னைத் தன் திருத்தொண்டுக்கு உரியனாக்கின அச்சிவபெருமானது திருவடியைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

கீடம் - புழு. ஓட்டு - ஓட்டுதல். முதனிலைத் தொழிற் பெயர். `ஓட்டுதலை உகந்து` என்க. உகந்து - விரும்பி. கன்னல் - கரும்பு; என்றது, அதன் சாற்றை. இனிய கோன், ஞானாசிரியன். அவன், பகுதிப்பொருள் விகுதி.
இறைவன் கொண்ட வேடமாகலின், `கோனவன்போல்` என்று அருளினார். எனவே, `ஆசிரியனைப் போல் வேடங்கொண்டு வந்து` என்றவாறாயிற்று. இது, பெண்கள் கூற்றில், `இனிய தலைவன் தானேயாதல் தோன்ற` எனப் பொருள்தரும்.

பண் :

பாடல் எண் : 15

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்
தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

சந்திரன் உடலைத் தேய்த்தும் இந்திரனின் தோளை நெரித்தும் எச்சன் என்னும் போலித் தெய்வத்தின் தலையை அரிந்தும் சூரியனின் பல்லைத் தகர்த்தும் தேவர்களை விரட்டியும் தக்கன் யாகத்தில் அவமானப்படுத்தித் தண்டித்த சிவபெருமானது மந்தார மலர் மாலையைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

``தக்கன்றன் வேள்வியினில்`` என்றதை முதலிற் கொள்க. தக்கன் செய்த வேள்வியில் வீரபத்திரரைக்கொண்டு சிவபெருமான் தேவர் பலரையும் பலவாறு ஒறுத்தமை நன்கறியப்பட்ட வரலாறு. எச்சன் - வேள்வித் தெய்வம். `அந்தரத்தே` என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. அந்தரம் - ஆகாயம். அலர் கதிரோன் - விரிகின்ற பல கதிர்களையுடையவன். `தேவர்களைத் திசைதிசையே சிந்தி ஓட்டுகந்த` என்க. சிந்தி - சிதறி. ``ஓட்டு`` என்ற பிறவினை `ஓடச் செய்தல்`` எனப் பொருள்படுதலின், அதனுள் நின்ற, `ஓட` என்பது. ``சிந்தி`` என்னும் வினையெச்சத்திற்கு முடிபாயிற்று. இனி, சிந்துதல், `சிதறச்செய்தல்` எனவும் பொருள்படுமாகலின், அதனை இறைவற்கு ஆக்கி உரைத்தலுமாம். செம்மை, இங்கு அழகைக் குறித்தது. தார் - பூ. மந்தாரம், விண்ணுலகத் தருக்களில் ஒன்று. இதன் பூவால் இயன்ற மாலையைச் சிவபிரானுக்குக் கூறியது, `தேவர் தலைவன்` என்பதைக் குறிப்பிட்டு. `அவனையின்றித் தேவர் தக்கன் வேள்வியில் அவி யுண்ணச் சென்றமையின் அவரை ஒறுத்துத் தனது தலைமையை நிலைநிறுத்தினான்` என்பது உணர்த்துதற்கு. இஃது, இம்மாலையைப் பெற விரும்பினாள் கூற்றாதற்குச் சிறந்தது.

பண் :

பாடல் எண் : 16

ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழிஎமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.

பொழிப்புரை :

உடல், உயிர், உணர்வு, உருவங்களாகி, எம் முள்ளே கலந்திருந்து, தேன் போல இனிமை தந்து முத்தி நெறியை எமக்கு உணர்த்தியருளிய சிவபெருமான், அளவற்ற பல உயிர் களுக்கும் தலைவனாய் நின்ற விதத்தைப் புகழ்ந்து பேசுவோம்.

குறிப்புரை :

ஊன் - உடம்பு; ஆகுபெயர். சேவகன் - வீரன்; உயர்வுப்பன்மையாக, ``சேவகனார்`` என்றார். சீர் - சிறப்பு. ஒளி - விளக்கம். ஆனா - நீங்காத. `சீரொளிசேர் அறிவு, ஆனா அறிவு` எனத் தனித்தனி முடிக்க, இவ்வாறு முடியக் கூறினாரேனும், `சீரொளிசேர் அறிவாய் ஆனாது` என்றலே கருத்து எனக்கொண்டு, அத்தொடரை முதற்கண்ணே கூட்டியுரைக்க. இப்பத்துத் திருப்பாட்டுக்களும், முதல் ஐந்து திருப்பாட்டுக்கள் போல இயற்பட மொழிந்தனவேயாம்.

பண் :

பாடல் எண் : 17

சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று
ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனலேந்தி
ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்.

பொழிப்புரை :

கொன்றைமலர் மாலையைச் சூடிச் சிவபெருமான் திருத்தோள்களைக் கூடித் தழுவி மயங்கி நின்று பிணங்குவேன்; அவனது செவ்வாயின் பொருட்டு உருகுவேன்; மனமுருகி அவன் திருவடியைத் தேடிச் சிந்திப்பேன்; வாடுவேன்; மகிழ்வேன். இங்ஙன மெல்லாம் செய்து நாம் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

இதனுட் கூறப்படுவனவெல்லாம், சிவபெருமானைக் காணப்பெறின் நிகழும் என்னும் கருத்தினவாகலின், முதற்கண், `சிவன் வரின்` என்பதனை வருவித்து, `அவன் பூங்கொன்றை சூடுவேன்`, `அவன் திரள்தோள் கூடுவேன்` என்றாற்போல உரைக்க. ``ஆடுவான்`` என்றதற்கும், `ஆடுவானாகிய அப்பெருமானது` என்றே உரைக்க. ``முயங்கி`` என மறித்துங்கூறியது. `கவவுக்கை நெகிழாது நின்று` என்றபடி. மயங்குதல் - வசமழிதல். ``நின்று`` என்றதன் பின்னர், `பின்னொருகால்` என்பது எஞ்சிநின்றது. தலைவி ஊடுவது புறத்தேயாகலின், செவ்வாய்க்கு உருகுதல், அது போழ்து நெஞ்சி னுள்ளே நிகழ்வதாம். தேடுதல், தலைவி ஊடல் தனியாளாய் நின்ற பொழுது தலைவன் மறைந்தமையாலாம். கழலைச் சிந்தித்தல், அதற்குப் பணி செய்தற்கு உரியளாகத் தான் கொள்ளப்படவேண்டும் என்று கருதியாம். வாடுதல், `தன்னை அவன் இனி நோக்கான்` என்னும் கருத்தினாலும், மலர்தல், `அவன் தன்னைக் கைவிடான்` என்னும் துணிவினாலுமாம். ``மலர்வேன்`` என்றதன்பின், ``ஆதலின்`` என்பது வருவிக்க. அங்ஙனம் வருவித்துரைக்கவே, `அவனது சேவடியைப் பாடின் சிறிது ஆற்றுவேன்` என்பது கருத்தாம்.
இத் திருப்பாட்டினைக் காமப்பொருள் பற்றியே அருளிச் செய்தார், வரிப்பாட்டிற்கு அஃது இயல்பென்பது தோன்றுதற்கு. எனவே, இக்கூற்றினை நிகழ்த்தினாள், `சிவபெருமான்மேற் கொண்ட காதல் மீதூரப்பெற்றாள் ஒருத்தி` என்க. இங்ஙனம் இப்பொருளே பயப்ப அருளிச்செய்தாராயினும், அடிகள் தமக்கு இறைவன் மீளத் தோன்றி அருள்புரியின், அவனது திருவடியின்பத்தைச் சிறிதும் தடை யின்றி வேண்டியவாறே நுகர்தல் உளதாகும் என்னும் தம் விருப்பத் தினையே உள்ளுறுத்து அருளினார் என்க. எனவே, `கவவுக்கை நெகிழாது நின்று` என்றது, `இறைவனது திருவடி நிழலினின்றும் சிறிதும் மீளாது உறைத்து நின்று` என்றபடியாம். திருவடி நிழலிலிருந்து மீளுதலாவது, இறைவனை உணர்தல் ஒழிந்து, தன்னையும், பிற வற்றையும் உணர்தல். அங்ஙனம் உணரச் செய்வது மலத்தின் வாதனை. அஃது உண்டாயவிடத்து உளதாவது துன்பமே. `அதனால், எவ்வாற்றானும் திருவடியினின்றும் சிறிதும் பிரிதல் கூடாது` என்ப தனையே, ``முயங்கி`` என்பதனால் குறித்தருளினார். இதனானே, திருவள்ளுவ நாயனார், காமத்துப்பாலில்,
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். (-குறள்.1238)
எனவும்,
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். (-குறள்.1239)
``கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு`` -குறள்.1240
எனவும் ஓதியது, இம்மெய்ந்நெறியின் நுண்பொருளையும் அவை பற்றி உய்த்துணர்ந்துகொள்ளுதற் பொருட்டேயாம் என்பது பெறப் படும். அவற்றுள், `தண்வளி போழ - சிறுகாற்று ஊடறுக்க` என்றது, மலவாதனை சிறிதே புகுந்து உயிரைத் திருவடி நிழலினின்று பிரித் தலையும், கண் பசந்தன என்றது அப்பிரிவு நிகழ்ந்தவழி ஆன்ம அறிவு துன்புற்று மெலிதலையும் உணர்த்தும். இஃது `ஆற்றுவல்` என்றது.

பண் :

பாடல் எண் : 18

கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை
வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

கிளிமொழியாளாகிய உமாதேவி பாகனும், மால், அயன் என்போர் காண்பதற்கு அரிதாகிய அறிவுருவனும், அன்பர்க்குத் தெளிந்த தேன்போல்பவனும், திருப்பெருந்துறையில் எளிதில் வந்து எனக்கு அருள் செய்த அந்தணனும் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

கிளிவந்த - கிளியினது தன்மை வந்த. `மென் மொழியாளது கேழ்` என்க. கேழ் - நிறம். கிளரும் - விளங்கும். பாதி - பாதி உருவம். வெளிவந்த - `காண்போம்` என்று புறப்பட்ட. தெளி வந்த தேறல் - தெளிவு உண்டாகியதேன்; `வடித்தெடுத்ததேன்` என்ற படி. `இன்னருளால் எளிவந்து பெருந்துறையில் இருந்து என் உள்ளத் தின் ஒளி வந்து உள்ளே ஒளிதிகழ இரங்கி அளிவந்த அந்தணன்` எனக் கூட்டியுரைக்க. ஒளி இரண்டனுள், முன்னது, `தூய்மை` என்னும் பொருளையும், பின்னது `ஞானம்` என்னும் பொருளையும் குறித்தன. ``ஒளிவந்து`` என்றது, ஒளி வருதலால் எனக் காரணப் பொருட்டாய் நின்றது. அளிவந்த - அளித்தல் (ஆட்கொள்ளுதல்) பொருந்திய. அந்தணன் - அந்தணக்கோலம் உடையவன்.

பண் :

பாடல் எண் : 19

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பொழிப்புரை :

மூவர்க்கும் முதல்வனும், எல்லாம் தானேயான வனும், அவை அழிந்த பின்னே இருப்பவனும், திருப்பெருந்துறையில் நிலைபெற்றவனும், பெண்பாகனும், திருவானைக்காவில் எழுந்தருளி இருப்பவனும், பாண்டி நாட்டை உடையவனும், என் காளை போல் பவனும், என்னப்பன் என்று புகழ்வோர்க்கு இனிய அமிர்தம் போல் பவனும், எம் தந்தையும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடு வோம்.

குறிப்புரை :

`மூவர்க்கும் முன்னானை` என மாற்றிக் கொள்க. மூவரும் ஆதி மூர்த்திகள் (தி.8 கீர்த்தி - 121.) ஆதலின், `அவர்க்கு முன்னோன்` என்றது, `அநாதிமூர்த்தி` என்றவாறு. ``முற்றுக்கும் பின்னான்`` என்றதும், `அவர்கள் ஒடுங்கிய பின்னும் நிற்பவன்` என, இதனையே வேறோராற்றான் விளக்கியவாறு. இதனையே,
``அறுதியில் அரனே எல்லாம்
அழித்தலால் அவனால் இன்னும்
பெறுதும்நாம் ஆக்கம் நோக்கம்
பேரதி கரணத் தாலே``
எனச் சிவஞான சித்தி (சூ. 1-35) விளக்கிற்று. முற்றும் - தோற்றம் நிலை இறுதிகளையுடைய பொருள்கள் முழுதும். `மன்னனை` என்பது, நீட்டலாயிற்று. `மன்னானவனை` என்பது தொகுத்தலாயிற்று எனினுமாம். `என் ஆனை என் அப்பன்` என்பன, காதல்பற்றியெழும் சொற்கள். அன்னான் - ஒத்தவன். இனி, `இன்னமுதை` என்றதனை வேறு தொடராக்கி. `அன்னான் - `அன்னபெருமைகளையுடையவன்` என்று உரைத்தலுமாம். அன்ன பெருமைகள், மேற்கூறியனவாம்.

பண் :

பாடல் எண் : 20

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றிஇப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

தன் அடியார்க்கு அன்றித் தன் குணங்களை அள விடற்குப் பிறர்க்கரியனாகிய திருப்பெருந்துறையானும், குதிரைச் சேவகனாய் எழுந்தருளித் தன் அடியார் குற்றங்களை ஒழித்துக் குணத்தை ஏற்றுக் கொண்டு எம்மைச் சீராட்டி, சுற்றத்தவர் தொடர்பை விடுவித்தவனுமாகிய சிவபெருமானது புகழையே பற்றி, இப்பாசப் பற்றறும்படி நாம் பற்றின பேரின்பத்தைப் புகழ்ந்து பாடி இன்பம் அடைவோம்.

குறிப்புரை :

பெற்றி - தனது தன்மை. ``அடியார்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``பிறர்க்கு`` என்றார். `கோதாட்டுதல்` என்பதுதானே, `திருத்துதல்` எனப் பொருள் தருமாதலின், ``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு`` என்றது, `கோதாட்டுமாறு இவ்வாறு` என்பதனை விதந்தவாறாம். `மிகப்பெரிய சுற்றம்` என்பார். ``சுற்றிய சுற்றம்` என்றார். தொடர்வு - தொடர்பு; பற்று. ``அறுப்பான்`` என வேறொருவன் போலக் கூறினாராயினும், `அறுப்பானாகிய தனது` எனப் பொருள் உரைக்க. பற்றி - துணையாகப் பற்றி. `பற்றறச் செய்ய` என ஒரு சொல் வருவிக்க. அன்றி, ``பாசத்தை`` என்ற ஐகாரத்தை, `சாரியை` என்றலுமாம், நாம் பற்றுவான் - நம்மால் பற்றப்படுபவன். பற்றிய பேரானந்தம் - நம்மைப் பற்றியதனால் விளைந்த பேரின் பத்தை. இவையும் இயற்பட மொழிதல்.

பண் :

பாடல் எண் : 1

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

பொழிப்புரை :

தோழியர்களே! முத்துக்களாலாகிய நல்ல மாலையையும், பூமாலையையும் தொங்கவிட்டு முளைப் பாலிகையை யும், குங்குலியத் தூபத்தையும் நல்ல விளக்கையும் வையுங்கள். உருத்திராணியும், திருமகளும், நிலமகளும் கலை மகளோடு கூடித் திருப்பல்லாண்டு பாடுங்கள். கணபதியின் சத்தியும், கௌமாரியும், மகேசுவரியும், கங்காதேவியும், முன்வந்து வெண் சாமரை வீசுங்கள். எமது தந்தையும் திருவையாற்றை உடையவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவன் நிரம்ப அணிதற் பொருட்டுப் பொன் போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

முத்துநல் தாமம் - முத்தினாலாகிய நல்ல மாலை. தூக்கி- தொங்கவிட்டு. மாலை தூக்குதல் முதலியன, மனை எங்குமாம். சத்தி என்பது, உருத்திராணியைக் குறிக்கும். சோமி - திருமகள்; `சந்திரனுக்குப் பின் பிறந்தவள்` என்பது இப்பெயரின் பொருள். `பாற் கடல் கடையப்பட்ட பொழுது, சந்திரனும், திருமகளும் அதன்கண் தோன்றினர் என்பது புராணம். பார்மகள் - நிலமகள். திருமகள், நிலமகள் இருவரும் திருமாலுக்குத் தேவியராதலையும், நாமகள் நான்முகன் தேவியாதலையும் அறிக. இவரது பெயர்களெல்லாம் இங்குப் பெண்களுக்கு இடப்பட்டவை எனக் கொள்க. பல்லாண்டு, `பல்லாண்டுக் காலம் வாழ்க` என வாழ்த்திப் பாடும் பாடல். ``சித்தி`` முதலிய மூன்றும் உமையம்மைதன் பெயர்களே. அவற்றையுடைய வேறு வேறு மகளிர், இங்குக் குறிக்கப் பட்டனர். சித்தி - ஞான வடிவினள். கௌரி - செம்மைநிறம் உடையவள். `உமையம்மை ஒரு பொழுது செம்மை நிறமுடையளாய்த் தோன்றினாள்` என்பதும் புராணம். பார்ப்பதி - மலைமகள். ``ஐயாறன்`` என்றதன்பின், `ஆகிய` என்பது விரிக்க. `அவன் ஆட` எனச் சுட்டுப் பெயர் வருவித்துரைக்க. ஆட - மூழ்க; என்றது இங்கு நெய்பூசி மூழ்குதலைக் குறித்தது. நெய் பூசியபின், நறுஞ்சுண்ணம் திமிர்ந்து மூழ்குதல் அறிக.

பண் :

பாடல் எண் : 2

பூவியல் வார்சடை எம்பி ராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நி லாமே
குனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன்
தேவியுங் தானும்வந் தெம்மை யாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

அழகு பொருந்திய நீண்ட சடையுடைய எம் பெருமானுக்கு அழகிய பொற்சுண்ணத்தை இடிக்க வேண்டும். மாம் பிஞ்சின் பிளவை ஒத்த கண்களையுடைய பெண்களே! வாருங்கள்! வந்து விரைவிற் பாடுங்கள்! அடியார்கள் வெளியில் இல்லாதபடி அவர்களை அழையுங்கள்! ஆடுங்கள்! வணங்குங்கள். எமது இறை வனாகிய கூத்தப் பிரான் இறைவியும் தானுமாய் எழுந்தருளி வந்து எம் வழிபாட்டை ஏற்று எம்மை அடிமைகொள்ளும் பொருட்டுச் செம் பொன்போல ஒளிவிடும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

பூ இயல் - பூக்கள் பொருந்திய. பொன் திருச்சுண்ணம்- பொன் போலும் அழகிய சுண்ணம். ``இடிக்க`` என்பது, தொழிற் பெயர்ப் பொருள் தந்தது. கூவுமின் - அழையுங்கள். `தொண்டர் புறம் நில்லாதவாறு அவரை இங்கு அழையுங்கள்` என்க. குனிமின் - நடனம் செய்யுங்கள். ஆள - ஆளுதற்பொருட்டு. `வேண்டும்` என்பது, செய் வினை வாய்பாடாய் நின்று, ` வேண்டப்படும்` எனப் பொருள் தந்து இன்றியமையாமை குறிப்பதொரு செய்யுமென்முற்று. சொல் வார்க்கும், கேட்பார்க்கும் உள்ள தகுதி வேறுபாடுகளால், இஃது இரத்தற் குறிப்பையும், விதித்தற் குறிப்பையும் உடன் உணர்த்தி நிற்கும். இவ்வேறுபாட்டானே இது தன்மை முன்னிலைகளினும், படர்க்கைப் பலர்பாலினும் வருதல் பொருந்துவதாயிற்று. இஃது இயல் பாய் ஏனை வினைச் சொற்கள் போலவரும் `வேண்டும்` என்பதனின் வேறுபட்டதென்க.

பண் :

பாடல் எண் : 3

சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

அழகிய திருநீற்றை அணிந்து கொண்டு தரையை மெழுகுதல் செய்து மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நவமணி களைப் பரப்பி இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு எவ்விடத்தும் அழகிய தீபங்கள் வைத்துக்கொடிகளை ஏற்றுங்கள். விண்ணவர்க்குத் தலைவனும் பிரமனுக்கு முதல்வனும் சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும் அழகிய முருகனுக்குத் தந்தையும் எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற உமா தேவியின் கணவனுமாகிய இறைவனுக்குப் பொருந்திய பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

நீறணிதல், மகளிர் நெற்றியிலாம். `நீறணிந்தும் மெழுகி` என்ற மகர ஒற்று, விரித்தல். ``எங்கும்`` என்றதனை, ``மெழுகி`` என்ற தற்கு முன்னர்க் கூட்டுக. எங்கும் - மனையகமெல்லாம். அந்தரர் - விண்ணோர். ஆழியான் - திருமால். விண்ணோர் முதலிய மூவர்க்கும் தலைவன் என்பதை வலியுறுப்பார், பொருட்பின் வருநிலையாக, `கோன், பெருமான், நாதன்` என அப்பெயர்தோறும் தலைமைச் சொற் கொடுத்து அருளிச் செய்தார், `இன்ன பெருமானுக்குச் சுண்ணம் இடிக்கின்றோமாகலின், இந்திரன் கற்பகம் நமக்கு அரிதன்று, என்பாள், இந்திரன் கற்பகம் நாட்டுமின்` என்றாள். ``தாதை`` என்ற தன்பின் `ஆகிய` என்பது விரிக்க.

பண் :

பாடல் எண் : 4

காசணி மின்கள் உலக்கை யெல்லாங்
காம்பணி மின்கள் கறையுரலை
நேச முடைய அடிய வர்கள்
நின்று நிலாவுக என்று வாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடிப்
பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

உலக்கைகளுக்கெல்லாம் மணிவடங்களைக் கட்டுங்கள். கருமை நிறமுடைய உரல்களுக்குப் பட்டுத்துணியைச் சுற்றுங்கள். இறைவனிடத்து அன்புடைய அடியவர்கள் நிலைபெற்று விளங்குக என்று வாழ்த்தி உலகமெல்லாம் புகழ்ந்து கொண்டாடுகின்ற காஞ்சிமா நகரிலுள்ள திருவேகம்பனது செம்பொன்னால் செய்யப் பட்ட திருக்கோயிலைப் பாடி, தளையாகிய இரு வினைகளை நீக்கி நின்று திருவருளைப்பாடிப் பொன்போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

காசு - மணி, இரத்தினம். காம்பு - பட்டாடை. `கறுப்பு` என்னும் பொருளதாகிய, `கறை` என்பது, இங்கு அந்நிறத்தையுடைய கல்லைக் குறித்தது. ``தேசமெல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு வேகம்பம்`` என அடிகள் அருளிச் செய்தமை, அத்தலத்தின் பெருமை இனிது விளங்குதற் பொருட்டே என்பது, நன்குணர நிற்பதொன்று. இவ்விடத்தே, `அன்புடையவர்கள் என்றும் நின்று நிலாவுக` என அடியார்களை வாழ்த்தியதும், அடிகளை அங்கு நல்வரவேற்று வணங்கி மகிழ்ந்த அடியவர் குழாத்தினை நினைந்தே போலும்! இத் திருப்பாட்டில் இத்துணை வெளிப்படையான சொற்கள் பொருந்தி யிருப்பவும், அடுத்துவரும் திருப்பாட்டும் இவ்வாறாகவும் இப் பகுதியை இத்தலத்தில் அருளிச் செய்ததாக ஒருவருங்கூறாது போயது வியப்பேயாம். பாசவினை - வினை பாசத்தை என மாறிக் கூட்டுக. முன்னர், `கோயில்பாடி என்றமையின், இங்கு, ``பாடி`` என்றது, அவனது புகழ் முதலிய பிறவற்றையும் பாடி` என்றவாறாம்.

பண் :

பாடல் எண் : 5

அறுகெடுப் பார்அய னும்மரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர்
நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்
நம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்
செறிவுடை மும்மதில் எய்த வில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி
முறுவற்செவ் வாயினீர் முக்க ணப்பற்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

பொழிப்புரை :

பிரமனும் திருமாலும் அறுகம்புல்லை எடுத்த லாகிய பணியைச் செய்வார்கள். அவர்களைத் தவிர ஏனையோராகிய இந்திரன் முதலிய வானுலகத்தவர்களும் முணுமுணுக்கின்ற தேவர் கணங்களும் நமக்குப் பின் அல்லாமல் அவ்வறுகினை எடுக்கவிட மாட்டோம். நெருங்கிய முப்புரத்தை எய்து அழித்த வில்லையுடைய வனாகிய திருவேகம்பனது செம்பொன்னாலாகிய கோயிலைப் பாடி நகையோடு கூடிய சிவந்த வாயினையுடையீர்! மூன்று கண்களை யுடைய எம்தந்தைக்குப் பூசிக் கொள்ளும் பொருட்டுப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

அறுகு - அறுகம் புல். எடுப்பார் - எடுப்பதற்கு முற்படுவார். ஒருவரை மங்கல நீராட்டுவார் முதற்கண் அறுகம் புல்லை நெய்யில் தோய்த்து எடுத்து அதனால் நெய்யேற்றிப் பின் சுண்ணந்திமிர்ந்து நீராட்டுதல் மரபு. அவ்வாறு செய்யுமிடத்து நெய்யேற்றுதற்கண் முற்பிற்பாட்டு முறைமை அதனைச் செய்வாரது தகுதி வேறுபாட்டிற்கு ஏற்ப அமையும். அம்முறைமைக்கண், தகுதி வேறுபாடு தெற்றென விளங்காதாரிடையே பிணக்குண்டாதலும் உண்டு. அவ்வாற்றால் இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுதற்கண் நெய்யேற்றுதற்கு மக்களினும் தேவர் முற்பட்டு அறுகம் புல்லை எடுப்பார் என்பாள், ``அறுகெடுப்பார் அயனும் அரியும் ...... எல்லாம்` என்றாள். அன்றி - அவரன்றியும், ``இந்திரனோடு`` என்றதனால், ``அமரர்`` என்றது, ஏனைத் திசைக்காவலரை என்க. அயன், மால், திசைக்காவலர் என்னும் இவரிடைத் தகுதி வேறுபாடு தெற்றென விளங்கிக் கிடத்தலின், முற்பிற்பாட்டு முறைமைக்கண் இவர் மாட்டுப் பிணக்கு நிகழாமை பற்றி அவர்களை வாளாதே சுட்டி, ஏனைத் தேவரிடையே அவ்வேறுபாடு தெரித்துக்காட்ட வாராமையின், அவர்தங் குழாங்கட்கிடையே பிணக்கு நிகழும் என்பது பற்றி அக் குழாங்களை, ``நறுமுறுதேவர்கணங்கள்`` என்றாள். `நறுமுறுத்தல்`` என்பதை இக் காலத்தார், `முணுமுணுத்தல்` என்பர். இஃது உள்ளத் தெழுந்த வெகுளியைத் தெற்றென வெளிப்படுத்தமாட்டாதார் செய்வது, `தம்மில் பிணங்காதும், பிணங்கியும் முற்படும் தேவர் அனைவரும் நம்மைக் கண்டவழி அஞ்சி நமக்கும் பிற்படுவர்; அவ்வாறின்றி முற்படவே துணிவராயினும், நம் உரிமையை நாம் நிலைநிறுத்திக் கொள்ள வல்லோம்` என்பாள், ``எல்லாம் நம்மிற்பின் பல்ல தெடுக்கவொட்டோம்`` எனக்கூறினாள்.
இவள் இங்ஙனம் கூறியது, எப்புன்மையரையும் மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணிக்கும் (தி.8 திருச்சதகம்-10) தனது கருணைத் திறத்தினால், தேவர்க்கும் வழங்காத பெருநிலையைத் தங்கட்கு வழங்கி ஆட்கொண்ட அணுக்கம் பற்றியாம். ``நம்மின்`` எனத் தலைவியையும் உளப்படுத்திக் கூறினாளாதலின், தோழி, குற்றேவல் பிழைத்தாளல்லள் என்க. இஃது ஏனையிடங்கட்கும் ஒக்கும். ``எடுக்க ஒட்டோம்`` என்றதன்பின் `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, `சுண்ணத்தினைத் தாழாது இடிப்போம்` என உரைத்து முடிக்க. தேவர்க்கும் எட்டாத பெருமான் தமக்கு எளிவந்து அருளிய அருட்டிறத்தை இடையறாது எண்ணி எண்ணி நெஞ்சம் கரைந்துருகும் அடிகள், தம் உள்ளத்துணர்ச்சியை இத்திருப்பாட்டின் கண் செய்யுள் நலம்பொதுளத் தெளித்துள்ள அருமையை உணரின், நெஞ்சம் நெக்குருகாதார் யாவர்!

பண் :

பாடல் எண் : 6

உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெ லாம்உரல் போதா தென்றே
கலக்க அடியவர் வந்து நின்றார்
காண உலகங்கள் போதா தென்றே
நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

இவ்வுலகம் முழுவதும் உரல்களை வைப்பதற்கு இடம் போதாது என்று சொல்லும்படி பெரியவர் பலர் பல உலக்கை களைக் கொண்டு ஓங்கி இடிப்பார்கள். உலகங்கள் பலவும் இடம் போதமாட்டா என்னும்படி அடியவர் ஒன்று கூடிப் பார்ப்பதற்கு வந்து நின்றனர். நாம் நன்மையடைய, அடியார்களாகிய நம்மை ஆட் கொண்டருளி அன்றலர் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாம் சென்னிமேல் சூடிக்கொள்ளும்படி கொடுத்த இமவான் மருமகனாகிய பெருமானைப் பல்கால் பாடிக் களித்துப் பொன்போலும் நிறமுடைய வாசனைப் பொடியை இடிப்போம்.

குறிப்புரை :

பொருள்கோள்; `பெரியர் உலக்கை பலவற்றைக் கொணர்ந்து ஓச்சுவார்; அதனால், உலகமெலாம் உரலாயினும் போதாது என்று சொல்லி, அடியவர் நம்மோடு கலந்து பணிசெய்ய, காண உலகங்கள் போதா என்னும்படி வந்து நின்றார்; ஆதலின்...... நாம் பாடிப்பாடி மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும்`. சிவபெருமானது வருகையை முன் உணர்ந்தோர் அதனை முன்னிட்டு நிகழும் ஆர வாரங்களை நினைந்து கூறினராகலின், ``ஓச்சுவார்`` என எதிர்காலத் தாற் கூறினர். பெரியர் - அடியவர். `ஆயினும்` என்பது தொகுத்தல். நலக்க - நலம் அடைய.

பண் :

பாடல் எண் : 7

சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பரா பரனுக்
காடக மாமலை அன்ன கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

கைவளையும் தோள்வளையும் பலகாலும் ஒலிக்க, அடியார் கூட்டம் புறப்பட்டு அரகரவென்று அடிக்கடி முழங்க, நாட்டில் உள்ளார் நம் இயல்பினை நோக்கி நம்மை இகழ்ந்து சிரிக்க, நாமும் அவர்கள் அறியாமையை எண்ணி நகை செய்ய, கால் அணி மென்மையான பாதங்களில் ஒலிக்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவனாகிய எங்களுக்கு மிக மேலானவனும் பெரிய பொன் மலையை ஒத்த தலைவனுமாகிய இறைவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

சூடகம் - கை வளை. ``ஆர்ப்ப`` என்றன பலவும், நிகழ் காலத்தின் கண் வந்தன. நாடவர் ஆர்ப்ப, நாமும் ஆர்ப்ப` என்ற இரண்டிடத்தும் உள்ள ஆர்த்தல், `சிரித்தல் என்னும்` பொருள, நாடவர் அடியவரைச் சிரித்தல், சிற்றின்பத்தை இகழ்தல் பற்றி. அடியவர் நாடவரைச் சிரித்தல், பேரின்பத்தை இகழ்தல் பற்றி. அடுக்குக்கள், இடைவிடாமைப் பொருளன. பாடகம் ஒருவகைக் காலணி. `மெல்லடியின் கண் பாடகம் ஆர்க்கும் மங்கை` என்க. சிவபெருமான் பொன்னார் மேனியனாகலின். ``ஆடக மாமலை அன்னகோ`` என்றாள். ஆடகம் - பொன்,

பண் :

பாடல் எண் : 8

வாள்தடங் கண்மட மங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்தி லங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

வாள்போன்ற பெரிய கண்களையும் இளமையு முடைய மங்கைப் பருவப் பெண்களே! வரிகளையுடைய வளையல் கள் ஒலிக்கவும் வளப்பம் மிகுந்த தனங்கள் பூரிக்கவும், தோளிலும் நெற்றியிலும் திருநீறுபிரகாசிக்கவும் எம்பெருமானே வணக்கம் என்று பலகாற் கூறி அப்பொழுது பறித்த அன்றலர்ந்த மலர்கள் சூட்டப் பெற்ற திருவடியைக் காட்டி நாயினும் கீழ்ப்பட்ட நம்மை இப்பிறவியிலே ஆண்டுகொண்ட முறைகளைப் பலகாற் பாடி இறைவன் திருமுழுக் கிற்குப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

வரி - கீற்று; இஃது அழகிற்காக இடப்படுவது. பொங்க- பூரிக்க. துதைந்து இலங்குதலுக்கு. `நீறு` என்னும் வினைமுதல் வருவித்து, `தோளிலும், அழகிய நெற்றியிலும் திருநீறு நிறைந்து விளங்க` என உரைக்க. `எம்பிரானே சோத்து` என்க. நாட்கொண்ட - மலரும் நாளைப் பொருந்திய` `நாள மலர்` என்பதில், அகரம் தொகுத்தல். நாளம் - தாமரைத் தண்டு.

பண் :

பாடல் எண் : 9

வையகம் எல்லாம் உரல தாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந் துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாண னுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

உலகமுழுவதும் உரலாகக் கொண்டு மகாமேரு என்கிற உலக்கையை உள்ளத்திலே நிலைநாட்டி, உண்மை என்கிற மஞ்சளை நிறைய இட்டு மேன்மை தங்கிய அழகிய நல்ல திருப்பெருந்துறையில் இருப்பவனது செம்மையாகிய திருவடியைப் பலகாற்பாடிச் செம்பொன் மயமான உலக்கையை வலக்கையில் பிடித்துத் தலைவனாகிய அழகிய தில்லைவாணனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

``வையகம்`` என்றது முதலாக, ``அட்டி`` என்றது இறுதி யாக உள்ள பகுதியால், `மக்கள் இறைவன் பொருட்டுப் பொற் சுண்ணம் இடிக்குங்கால், உரலை நிலவுலகமாகவும், உலக்கையை மேருமலையாகவும், இடிக்கப்படும் பொருள்களை உண்மை அன்பாகவும் கருதிக்கொண்டு இடித்தல் வேண்டும்` என்பது குறிப் பிடப் பட்டது. இதனால். `இறைவன் ஆடுவது அன்பர் அன்பிலன்றி, அவர் ஆட்டும் பொருளில் அன்று` என்பது திருவுள்ளம். ``நேயமே நெய்யும் பாலா`` (தி.4.ப.76.பா.4) என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசு சுவாமிகளும். உண்மையன்பைப் பிற பொருட்கண் செலுத்தாது இறைவனிடத்திற் செலுத்துதலே, இடித்தல் தொழிலாம். ஆகவே, எல்லாவற்றையும் தாங்கும் நிலமும், அதற்கு உறுதியாய் நிற்கும் மேருமலையும் அத்தொழிற்கே துணைபுரிவனவாதல் வேண்டும் என்ற வாறு. மெய், ஆகுபெயர். ``மஞ்சள்`` என்றாரேனும், ஏனையவும் உடன் கொள்ளப்படும். மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற. ``காசணி மின்கள் உலக்கை எல்லாம்`` என்றமையின் அதற்குப் பொன்னணியும் பூட்டுதல் பெறப்படுதலின், ``செம்பொன்`` என்றதும் அதனினாய அணியை என்க. `செம்பொன்னாலாகிய உலக்கை` என்றே உரைப்பாரும் உளர். இருகையும், பணிசெய்ய வேண்டுதலின், `வலக்கை, வலிமையையுடைய கை` என்க.

பண் :

பாடல் எண் : 10

முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொ டாட ஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

முத்துவடமணிந்த தனங்கள் அசைந்து ஆடவும், நெருங்கிய கூந்தலிலுள்ள வண்டுக் கூட்டங்கள் எழுந்து ஆடவும், மனமானது சிவபெருமானிடத்தில் நீங்காதிருக்கவும், செங்கயல் மீன் போன்ற கண்கள் நீர்த்துளியை இடைவிடாது சிந்த, அன்பு எம்பெரு மானிடத்தில் மேன்மேற்பெருகவும் பிறவியானது உலகப் பற்றுள்ள பிறரோடும் சூழ்ந்து செல்லவும், எம் தந்தையாகிய சிவபெருமான் அருளோடு நம்முன் விளங்கித் தோன்றவும் அவன் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

முத்து அணி - முத்து மாலையை அணிந்த. `சூழலின் கண்` எனவும், `நம் சித்தம்` எனவும், `நம் செங்கயற்கண்களில்` எனவும், `நம் பித்து` எனவும், உரைக்க. கண் பனி ஆட`` என, இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின்மேல் நின்றது. பனி - பனித்தலை (சிந்துதலை) உடைய நீர். பித்து - பேரன்பு. `ஆட` என்பது, ``சிவனொடும் ஆட`` என்றாற் போல்வனவற்றில், `பொருந்த` என்னும் பொருளைத் தந்து நின்றது. ``பிறரொடும்`` என்ற இழிவு சிறப்பும்மையைப் பிரித்து, ``பிறவி`` என்றதனோடு கூட்டுக. உம்மை, பிறவிக்கு இடமின்மை காட்டி நின்றது. `அத்தன் ஆட` என இயையும்; இங்கு, ``ஆட`` என்றது, `மூழ்க` என்றதாம். இது, முன் வந்தவற்றோடு ஒரு நிகர்த்ததாகாது வேறாதலின், மும்முறை அடுக்கியருளினார். இங்கும் அடுக்குக்கள் மேல் வந்தனபோல நின்றன.

பண் :

பாடல் எண் : 11

மாடு நகைவாள் நிலாஎ றிப்ப
வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

பெண்களே! பக்கங்களில் பல்லினது ஒளி, நிலவு போன்று ஒளிவீசவும், அழகிய பவளம் போன்ற உதடுகள் துடிக்கவும், வாயைத் திறந்து பாடுங்கள். நம்மவன் ஆண்டு கொண்ட வழியையும் இறைபணியிலே நிற்கச் செய்ததையும் அவ்வாறு இடைவிடாது பாடி எம்பெருமானைத் தேடுங்கள். அவ்வாறு தேடி மனம் உன்மத்த நிலையையடைய, தடுமாறிப் பின்னர் மனம் தெளிந்து ஆடுங்கள். தில்லையம்பலத்தில் நடனஞ் செய்தவனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

மாடு - பக்கம். நகை வாள் - பற்களின் ஒளி. நிலா எறிப்ப - நிலவை வீச. ``வாய்திறந்து`` என்றதை, ``பாடுமின்`` என்றதற்கு முன்னே கூட்டுக. பவளம் போலும் இதழை, `பவளம்` என்றது உவமையாகுபெயர். `எறிப்ப, துடிப்ப` என்றவை `பாடுமின்` என்றதனோடு முடியும். `நந்தம்மை ஆண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் வாய்திறந்து பாடுமின்; பாடி எம், பெருமானைத் திகைத்துத் தேடுமின்; தேடித் தேறிச் சித்தங் களிப்ப ஆடுமின்` எனக் கூட்டியுரைக்க. பெருமான் வரவுணர்ந்து எல்லாம் செய்கின்றவள் நீட்டித்தல் நோக்கி,`பலதிசையினும் சென்றுபார்மின்` என்பாள், ``திகைத்துத் தேடுமின்`` என்றும், `அங்ஙனம் பார்க்குமிடத்து யாதேனும் ஒரு திசையில் பெருமான் வரக் காணின், அவ்விடத்து அவனை மகிழ்ச்சியோடு எதிர்கொண்மின்` என்பாள், ``தேறிச் சித்தங் களிப்ப ஆடுமின்`` என்றும் கூறினாள். ``தேடுமின், ஆடுமின்`` என்ற இரண்டும் ஆயத்தாருள் ஒரு சிலரை நோக்கிக் கூறியனவும், ஏனையவை பலரையும் நோக்கிக் கூறியனவுமாகலின், இவை தம்முள் இயையாமை இல்லை என்க. தேடச் செல்லுகின்றவர்களும் சிறிது நேரம் எம்முடன் பாடிப் பின்னர்ச் செல்லுக என்பாள், ``பாடித் தேடுமின்`` என்றாள். ``பாடிப் பாடி என்றதனை அடுக்காக்காது பிரித்து, ஒன்றனை, ``ஆண்ட வாறும்`` என்றதனோடு கூட்டுக. ``பாடி`` எனவும், ``தேடி`` எனவும் பெயர்த்துங் கூறியது, ``இது செய்த பின் இது செய்க` என முறைதெரித்தற் பொருட்டு. எனவே, அவை` பாடியபின், தேடியபின்` என்னும் பொருளவாம்.

பண் :

பாடல் எண் : 12

மையமர் கண்டனை வான நாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பி ரானை நம்மை
அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள்
பையர வல்குல் மடந்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

தாமரை மலர் போன்ற செவ்வரிபடர்ந்த இரண்டு கண்களையும் பொன் வளையணிந்த தோள்களையும் பாம்பின் படம் போன்ற அல்குலையுமுடைய மடந்தைப் பருவத்தையுடைய பெண்களே! கருமையமைந்த கழுத்தினையுடையவனும் விண்ணுலகத் தாருக்கு அமுதமாயிருப்பவனும் செம்மை நிறமுடைய கூத்தனும், தேவனும், தேவர்க்குத் தலைவனும் நம்மைத் தன் வசப்படுத்தி அடிமை கொண்டு தனது அரிய தன்மையைப் புலப்படுத்தினவனும் பொய்ம்மை யாளருக்குப் பொய்ம்மையானவனும் மெய்ம்மையாளருக்கு மெய்ம் மையானவனுமாகிய இறைவனைப் பாடிப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

மை - கருமை நிறம். வானநாடர் மருந்து - அமுதம். மாணிக்கக் கூத்து - மாணிக்கம் போலும் உயர்ந்த கூத்து. ஐயன் - தலைவன். ஐயர் - தேவர்; இதுவும், ஒரு சார் தலைமை பற்றி வந்த பெயரேயாம். அகப்படுத்து - தன்வழிப்படுத்து. அருமை காட்டும் - தனது அரியனாந் தன்மையைக் காட்டுகின்ற; என்றது, `நாம் பல்கால் வேண்டியும் எளிதின் வந்திலன்` என்றதாம், `முன்பு அகப்படுத்து ஆட்கொண்டு, இப்பொழுது அருமை காட்டுகின்றான்` என்றபடி. பொய்யன் - வெளிப்படாது நிற்பவன். மெய்யன் - வெளிப்பட்டு அருள் செய்பவன். `யாம் பொய்யரல்லேம்; மெய்யேமாகலின் வாரா தொழியான்` என்பது குறிப்பு. போது அரிக் கண் - பூப்போலும். வரிகளையுடைய கண்; `அவற்றது இணை` என்க. `பையரவல்குல்` என்பதில், `பையரவு` என்பது, `முன்றில்` என்பது போலப் பின் முன்னாகத் தொக்க ஆறாவதன் தொகை.

பண் :

பாடல் எண் : 13

மின்னிடைச் செந்துவர் வாய்க்க ருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமு தெங்க ளப்பன்
எம்பெரு மான்இம வான்ம கட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்த கப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

மின்னல் கொடி போன்ற இடையினையும் செம்பவளம் போன்ற இதழினையும் கருமையான கண்களையும் வெண்மையான பற்களையும் இசைபொருந்திய மென்மையான மொழியினையும் உடையவர்களே! பொன்னாபரணம் அணிந்த தனங்களையுடைய மங்கைப் பருவப் பெண்களே! என்னையுடைய அமுதம் போன்றவனும் எங்கள் அப்பனும் எம்பெருமானும் மலையரசன் மகளாகிய பார்வதிக்கு அவளை உடைய நாயகனும் மகனும் தந்தையும் முன்பிறந்தானுமாகிய எங்கள் கடவுளது திருவடி களைப் பாடிப் பொன் போலும் அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

பண் அமர் - பண்ணின் தன்மை பொருந்திய. தன் உடை- தன் உடைப் பொருளாகிய. ``தன்`` என்பது, இமவான் மகளை. `தன் உடைப்பொருளாகிய கேள்வன்` என்றது, கணவன் மனைவி யரிடையுள்ள இயைபை விதந்தோதியவாறு. ``பிறன் பொருளாள்`` என்னும் திருக்குறளில் (141) திருவள்ளுவரும், ஒருவன் மனைவியை, `அவனது உடைமைப் பொருள்` எனக் கூறினார். மனைவியை, `உரிமை ` என்னும் பெயராற் குறித்தலும் இதுபற்றியே யாம். `சிவத்தையும் சத்தியையும் முறையே தந்தையும் மகளுமாகக் கூறுதல், சிவமும், நாதமும் ஆகிய சிவபேதங்களினின்றும் முறையே சத்தியும், விந்துவுமாகிய சத்தி பேதங்கள் தோன்றுதல் பற்றியாம். சத்தியையும், சிவத்தையும் முறையே தாயும், மகனுமாகக் கூறுதல், சத்திபேதங்களுள் ஒன்றாகிய சத்தியினின்றும், நாதமாகிய சிவபேதம் தோன்றுதல் பற்றியாம். சிவத்தையும், சத்தியையும் முறையே தமை யனும், தங்கையுமாகக் கூறுதல், சத்தி பேதமாகிய விந்துவினின்றும், சிவபேதமாகிய சதாசிவன் முன்னும், சத்தி பேதமாகிய மனோன்மனி பின்னும் தோன்றுதல் பற்றியாம். சிவமும், சத்தியும் சதாசிவன், மனோன்மனி முதலிய சிவபேத சத்தி பேதங்களாய் நின்று எல்லாப் பொருள்களையும் பயத்தலின், அவ்விருவரும் கணவனும் மனைவியு மாகவும், உலகிற்கு அப்பனும் அம்மையுமாகவும் கூறப்படுவர்; இறுதியிற் கூறிய இஃது ஒன்றே பெரும்பான்மை. ``மனோன் மனியைப் பெற்ற - தாயிலானைத் தழுவும்என் ஆவியே`` (தி.5. ப.91. பா.1.) என்றருளியதில்,`மனோன்மனி` என்றது, பொதுமையில், `சத்தி` என்னும் பொருளதாம். இச் சிவபேத சத்தி பேதங்களின் இயல்பை எல்லாம் சிவஞானசித்தியினும், சிவ ஞானபோத மாபாடியத்தினும் தெளியக் காண்க; ஈண்டு விரிப்பிற் பெருகும்.
இத்தத்துவ முறைபற்றி இங்கு இவ்வாறருளிச் செய்த அடிகள், திருக்கோவையுள்ளும், ``தவளத்த நீறணியுந் தடந்தோள் அண்ணல், தன் ஒருபாலவள் அத்தனாம்; மகனாம்`` (தி.8 கோவையார்-12) என்று இங்ஙனமே அருளுதலையும், `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத் தினின்றும் சதாசிவதத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார், ``இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்`` என்பதூஉம் அப்பொருண் மேல் வந்தது`
என்று அதற்குப் பேராசிரியர் உரை உரைத்தலும் காண்க.
``வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.``
(தி.10 திருமந்திரம் - 1178) என்பது திருமூலர் திருவாய்மொழி.
``கனகமார் கவின்செய் மன்றில்
அனகநா டகற்கெம் அன்னை
மனைவிதாய் தங்கை மகள்``
எனக் குமரகுருபரரும் அருளிச் செய்தார்(சிதம்பரச் செய்யுட் கோவை-33)
``பூத்தவ ளேபுவ னம்பதி னான்கையும்
பூத்தவண்ணம்
காத்தவ ளேபின் கரந்தவ ளேகறைக்
கண்டனுக்கு
மூத்தவளே`` (-அபிராமியந்தாதி - 13)
எனவும்,
``தவளே இவள் எங்கள் சங்கர னார்மனை;
மங்கலமாம்
அவளே அவர்தமக் கன்னையு மாயினள்;`` (-அபிராமியந்தாதி - 44)
எனவும் கூறியதும் இதுபற்றி. ஒருவரையே இங்ஙனம் ஒவ்வாத பல முறையினராகக் கூறுதல், `இவையெல்லாம் ஒரு பயன் கருதி நாடக மாத்திரையால் அவர் மேற்கொள்வனவேயன்றி, உண்மையில் அவர் இவ்வாறு திரிபுற்று நிற்பவரல்லர்; அவர்தம் உண்மை இயல்பு, இவை அனைத்தினும் வேறு` என்பது உணர்த்துதற் பொருட்டேயாம். இதனை, ``ஒருவனே இராவணாதி பாவகம் உற்றாற் போலத் - தருவன் இவ்வடிவம் எல்லாம் தன்மையும் திரியானாகும்`` என விளக்குகின்றது சிவஞானசித்தி (சூ. 1-67).
இவற்றையெல்லாம், `அபரஞானம்` எனப்படும் நூலுணர் வினால் நம்மனோரும் பரக்கக் கூறுதல் கூடுமாயினும், பரஞானமாகிய அநுபூதியைப் பெற்ற அடிகள் போன்றவர்கட்கே இவையெல்லாம் உண்மையான் விளங்குவன என்பதையும் அந்நூல்,
``சிவம்சத்தி தன்னை ஈன்றும்
சத்திதான் சிவத்தை ஈன்றும்
உவந்திரு வரும்பு ணர்ந்திங்
குலகுயி ரெல்லாம் ஈன்றும்
பவன்பிரம சாரி யாகும்
பான்மொழி கன்னி யாகும்
தவந்தரு ஞானத் தோர்க்கித்
தன்மைதான் தெரியு மன்றே.``
என விளக்குகின்றது (சூ.2.77.). கேள்வன் முதலிய பெயர்களைச் செய்யுள் நோக்கி முறைபிறழ வைத்தார்.

பண் :

பாடல் எண் : 14

சங்கம் அரற்றச் சிலம்பொ லிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலை யாடச்
செங்கனி வாயித ழுந்து டிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம் பாடிக்
கங்கை இரைப்ப அராஇ ரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்க ழற்கே
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

செம்மையாகிய அணிகளையுடைய பெண்களே! சங்க வளையல் ஒலிக்கவும், காற்சிலம்பு ஒலிக்கவும், நெடிய கூந்தலில் சுற்றிய பூமாலை அசையவும், வாயில் உள்ள சிவந்த கொவ்வைக் கனிபோலும் உதடு துடிக்கவும், சிவபுரத்தின் பெருமையைப் பாடி, கங்கை வெள்ளம் ஒலிக்க, பாம்பு நடுங்கி ஒலிக்கின்ற திரட்சியான சடையையுடைய இறைவனது திருவடிக்கு மிகுந்த விருப்பத்தால் தனங்கள் விம்மப் பொன்போலும் அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

இரைப்ப - ஒலிக்க; இஃது உடனிகழ்ச்சியாகிய எதிர்காலத்தின்கண் வந்தது.
``நீரொலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்` (தி.12 பெ. பு. திருக்குறிப்பு. 113.) என்றதும் காணத்தக்கது. `கழற்கே பொங்கிய` என இயையும். `காதலால் கொங்கைகள் பொங்க` என்க. இக் காமப் பொருள், `இறைவன் திருவடியில் பேரன்புடையார்க்கு அது காரணமாக உடல் பூரிக்கும்` என்பதைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 15

ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

கருங்குவளை மலர் போன்ற பெரிய கண்களையுடைய இளம் பெண்களே! ஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தெளிவானவனும், அதன் பாகானவனும், தேடுவதற்கு அருமையான நன்மைப் பொருளானவனும், சுவை கெடாத தேனானவனும், முக்கனிகளின் சுவையானவனும், மனத்தில் புகுந்து இனிக்க வல்ல தலைவனும், பிறவித்தளையை அறுத்து ஆண்டுகொண்டருளின கூத்தப் பெருமானுமாகிய இறைவனை நாவில் வடுவுண்டாகும்படி, துதித்துப் பாடிப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

ஞானக் கரும்பு, உருவகம். தெளிவு - அதன் சாறு. பாகு-அச்சாற்றைக் காய்ச்சுவதனாலாவது. நாடல் - நினைத்தல். கிடைத்தல் கூடாமையால், நினைத்தற்கும் அரியதாயிற்று. நலம், அதனையுடைய பொருட்கு ஆகுபெயர். நந்தா - கெடாத. `சித்தம் புகுந்து தித்திக்க வல்ல தேனை` எனக் கூட்டுக. பானல் - நீலோற்பல மலர்.

பண் :

பாடல் எண் : 16

ஆவகை நாமும்வந் தன்பர் தம்மோடு
ஆட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல்
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொ டியான்
சிவபெரு மான்புரஞ் செற்ற கொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

நாமும் அன்பரோடு கூடி வந்து உய்யும் வகையில் பணிசெய்யும் வகைகளைப் பாடி விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் கனவிலும் கண்டறியாத செந்தாமரை மலர்போலும் திருவடிகளை எமக்குக் காட்டுகின்ற செல்வமாகிய காளையை அகத்தே கொண்ட வெற்றியையுடைய கொடியையுடையவனும் சிவபெருமானும், முப்புரங்களை அழித்த வெற்றியையுடைய வீரனுமாகிய இறைவன் திருநாமங்களைப் பரவிச் சிவந்த பொன் போல ஒளியைத் தருகின்ற வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

ஆவகை - உயர்வெய்தும் வகையில். வந்து - சென்று; இடவழுவமைதி.
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி``
(தி.8. போற்றித்திருவகவல் 143)
என முன்னரும் அருளிச் செய்தார். `பாதங்களை நமக்குக் காட்டும்` என்க. சே அகம் ஏந்திய கொடி - எருதைத் தன்னகத்துக் கொண்ட கொடி. கொற்றம் - வெற்றி. சேவகம் - வீரம்.

பண் :

பாடல் எண் : 17

தேனக மாமலர்க் கொன்றை பாடிச்
சிவபுரம் பாடித் திருச்ச டைமேல்
வானக மாமதிப் பிள்ளை பாடி
மால்விடை பாடி வலக்கை யேந்தும்
ஊனக மாமழுச் சூலம் பாடி
உம்பரும் இம்பரும் உய்ய அன்று
போனக மாகநஞ் சுண்டல் பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

சிவபெருமானது தேன்நிறைந்த உள்ளிடத்தை யுடைய பெருமை பொருந்திய கொன்றை மலரைப் பாடி, சிவ லோகத்தைப் பாடி, அழகிய சடையின் மேலுள்ள விண்ணிடத்து உலாவுகின்ற பெருமையமைந்த இளம்பிறையைப் பாடி, பெரிய இடபத்தைப் பாடி, வலக்கையில் தாங்கிய, தசை தன்னிடத்தில் பொருந்திய மழுவினையும் முத்தலை வேலினையும் பாடி, விண் ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் பிழைக்கும் வண்ணம் அந்நாளில் விடத்தை உணவாக உண்டதைப் பாடிப் பொன் போலும் அழகிய வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

தேன் அக மா மலர் - தேனை அகத்திலே உடைய சிறந்த மலர். `தேனகக் கொன்றை மலர்` என மாற்றிப் பொருள் கொள்க. வானகம் - விண்ணில் இயங்குதற்குரிய, மதிப்பிள்ளை - பிள்ளை மதி; மூன்றாம் பிறை. மால் விடை - பெரிய இடபம். ஊனகமாமழு - பகைவரது ஊனை அகத்திலே உடைய பெரிய மழு. உம்பர் - மேலுலகம். இம்பர் - கீழுலகம். போனகம் - உணவு.

பண் :

பாடல் எண் : 18

அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி
அருக்கன் எயிறு பறித்தல் பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
காலனைக் காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் பிரமன் தலையைக் கொய்து பந்தாடினமையைப் பாடி, சூரியனது பல்லைத் தகர்த்தமையைப் பாடி, யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டமையைப் பாடி, இயமனைக் காலால் உதைத்ததைப் பாடி, ஒருங்கே உலவிய திரிபுரங்களை அம்பால் எய்து அழித்தமையைப் பாடி, சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய எங்களை ஆட்கொண்ட நன்மையினைப் பாடி, பாடலுக்கேற்ப நின்று தொடர்ந்து ஆடி இறைவனுக்கு வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

பிரமன் தலைகளுள் ஒன்றைச் சிவபெருமான் கைந் நகத்தால் கிள்ளி எறிந்தபொழுது அதனைச் செண்டாடினார் என்பது இதனால் பெறப்படுகின்றது.
``அரி அயன்தலை வெட்டிவட் டாடினார்`` (தி.5.ப.85.பா.2.)
என்ற அப்பர் திருமொழியும் இங்கு நினைக்கத் தக்கது. அருக்கன் - சூரியன். இவனது பல்லைச் சிவபெருமான் பறித்தது தக்கன் வேள்வியில். கயம் - யானை. யானையுருக் கொண்ட அசுரன் கயாசுரன். இயைந்தன முப்புரம் - ஒருங்கு கூடி இயங்கிய மூன்று கோட்டைகள். நயம் - விருப்பம்; என்றது, திருவருளை.

பண் :

பாடல் எண் : 19

வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி
மத்தமும் பாடி மதியும் பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லை பாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக்
கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

சிவபெருமானது வட்ட வடிவாகிய கொன்றை மலர் மாலையைப் பாடி, ஊமத்தமலரையும் பாடி, பிறையையும் பாடிப் பெரியோர் வாழ்கின்ற அழகிய தில்லை நகரைப் பாடிச் சிற்றம்பலத்து ஞானசபையிலுள்ள எமது செல்வமாகிய பெருமானைப் பாடி, அரையிற் கட்டிய பாம்புக் கச்சையினைப் பாடி, கையிற் சுற்றியுள்ள கங்கணத்தைப் பாடி, மூடினகையின்மேல் வைக்கப்பட்டுப் பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைப் பாடி, இறைவனுக்கு வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

`வட்ட மாலை` என இயையும். இஃது இண்டையைக் குறித்தது. மத்தம் - ஊமத்த மலர். சிட்டர் - மேலோர்; இது தில்லை வாழந்தணர்களைக் கூறியதாம். செல்வம் - செல்வம் போல உள்ள சிவபெருமான். மாசுணம் - பாம்பு. கச்சை - அரையில் உடைமேல் இறுகக் கட்டுவது. ``மாசுணம்`` என்றது, ``கங்கணம்` என்றதனோடும் இயையும். சிவபெருமான் கையில் ஒரு பாம்பைத் தனியாக வைத்து ஆட்டுதலும் பலவிடங்களிற் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 20

வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயி னாருக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொழிப்புரை :

வேதநூலும் அவற்றுள் கூறப்படும் யாகங்களும் ஆனவரும், மெய்ப்பொருளும் பொய்ப் பொருளும் ஆனவரும், ஒளியுமாகி, இருளும் ஆனவரும், துன்பமுமாகி இன்பமும் ஆனவ ரும், பாதியுமாகி முழுதுமானவரும், உயிர்களுக்குப் பந்தமும் ஆகி வீடும் ஆனவரும், உலகுக்கு முதலும் முடிவுமானவரும் ஆகிய இறைவருக்கு, நீராடும் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை :

பின் வருவனபோல மறுதலைப் பொருள்பட, ``வேதம்`` என்றதற்கு,`வேதமுடிபினால் உணர்த்தப்படுவதாகிய ஞானம்` எனப்பொருள் கூறுக. ``வேள்வி`` என்றது, கன்ம காண்டத் துள் சொல்லப்பட்ட வேள்விகளையாம். மெய்ம்மை - நிலைத்த பொருள். பொய்ம்மை - நிலையாத பொருள். சோதி - ஒளி; ஞானம். இருள் - அஞ்ஞானம். பாதியாதல், ஒரு வடிவத்தில் பாதி வடிவமே தானாய் இருத்தல். மற்றைப் பாதி வடிவம் அம்மை என்க. இது, மாதொரு கூறானவடிவம். முற்றுமாதல், முழுவடிவமும் தானேயாதல்; இது உமாமகேசுரவடிவம் முதலாகப் பலவாம். இவ்வடிவங்களில், அம்மை தனித்துக் காணப்படுவாள்,
``பெண்உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்``
எனப் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தினும் இவ்விருவகை வடிவும் கூறப்பட்டன. பந்தம் - கட்டு; பிறப்பு நிலை. வீடு - பிறப்பு நீங்கிய நிலை.
இறைவன் மெய்ப்பொருளாதல் வெளிப்படை. எல்லாப் பொருளிலும் உடலில் உயிர்போலக் கலந்து நிற்றலால், நிலையாப் பொருளும் ஆகின்றான். ஞானம், இறைவனது இயற்கை தன்மை, அஞ்ஞானத்தைத் தருகின்ற ஆணவத்திலும் திரோதான சத்தியாய் இயைந்து நிற்றலின், அஞ்ஞானமும் ஆகின்றான். மறைத்தல் தொழிலால் பிறவித் துன்பத்தை விளைவித்தலின், துன்பமாகின்றான். இன்பம் - பேரின்பம். இஃது அவனிடத்தில் இயல்பாய் உள்ளது, பந்தம் - திரோதான சத்தி வாயிலாக ஆணவத்தின் சத்தியை நடத்தி உயிர்களைப் பிறப்பினுள் அழுத்தல். ஐந்தொழில்களுள், `மறைத்தல்` என்பது இதுவே. வீடாவான் இறைவனே என்பதும், அவனே உலகிற்கு ஆதியும், அந்தமும் என்பதும் வெளிப்படை. இவ்வாற்றால், `அவனையன்றி யாதும் இல்லை` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 1

பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! நீ, பிரமன், இந்திரன், சரசுவதி, திருமால், நான்கு வேதங்கள், முச்சுடர்கள், மற்றைத் தேவர்கள், ஆகிய எல்லாரும் அறியவொண்ணாத இடபவாகனனாகிய சிவபெருமானது திருவடியிற் போய் ஊதுவாயாக.

குறிப்புரை :

எல்லா இடத்தும், ``கோத்தும்பீ`` என வருவதனை முதலிற் கொள்க.
பூ ஏறு கோன் - தாமரை மலர்மேல் ஏறி வீற்றிருக்கும் தலைவன்; பிரமதேவன். பொற்பு - அழகு. நா ஏறு செல்வி - எல்லார் நாவிலும் சென்று தங்கும் அரசி; கலைமகள். மா - பெருமை. `ஏற்றுச் சோதி` எனற்பாலது, எதுகை நோக்கி, ``ஏறு சோதி`` என நின்றது; `இடபத்தினை உடைய ஒளி வடிவினன்; உருத்திரன்` என்பது இதன் பொருள். சே ஏறு சேவடி - இடபத்தின்கண் ஏறும் செவ்விய திருவடி. சேவடிக்கு - சேவடிக்கண்; உருபுமயக்கம். ஏகாரம் பிரிநிலை. பின்வருவனவற்றிற்கும் இவை பொருந்தும். `குணமூர்த்தியாகிய உருத்திரனுக்கும், நிற்குணமூர்த்தியாகிய பரமசிவனுக்கும் வடிவு, பெயர் முதலியன ஒருவகையினவாயினும், உருத்திரன் ஆன்ம வருக்கத்தினன் எனவும், பரமசிவன் யாவர்க்கும் பதியாகிய முதற் கடவுள் எனவும் பகுத்துணர்ந்து கோடல் வேண்டும் என்பது உணர்த்துதற்கு இருவர்க்கும் இடப வாகனம் உண்மையை விதந் தோதியருளினார். வானவரோடு உடன் வைத்து எண்ணினமை யானும், ``அறியா`` என்றதனானும், ``மா ஏறு சோதி`` உருத்திரன் என்பதும், `ஒருவரும் அறியாச் சேவடி` என்றமையால், அவை பரமசிவனுடையன என்பதும் இனிது விளங்கின.
வண்டினைப் பரமசிவன் பால் சென்று ஊது என ஏவுகின்றவள், ஏனையோரை அப்பெருமான் என எண்ணி மயங்காமைப் பொருட்டு, எல்லார் அடையாளங்களையும் தெரித்துக் கூறினாள். `அவ்வடையாளங்களுள், வானவரோடு ஒருங்கு நிற்றலும், அவர் அனைவரும் வணங்க அவர்கட்கு மேல் நிற்றலும் உருத்திரனோடு பரமசிவனிடையுள்ள வேற்றுமை` என்பதை உடம்பொடு புணர்த்திக் கூறினாள். இவற்றிடையே, `வானவரும் நாவேறு செவ்வியும், நான்மறையும் இசையைத் தந்து நிற்றல் உண்டாக்கலின், இசையில் விருப்புடைய நீ அவ்விடத்தும் மயங்கி யொழியற்க` என்பதையும் கூறினாள் என்க. சேவடி, செங்கமல மலர்போல்வன ஆகலின் அது வண்டிற்கு மிகவும் இன்பம் செய்யும் என்பது கருதி, `அவற்றின்கண் சென்று ஊது` என்றாள். இதனானே, `ஆன்மாக்களாகிய வண்டுகட்கு அச்சேவடி அறிவாகிய மணத்தினையும், ஆனந்தமாகிய தேனினை யும் அளித்துப் பிறிதொன்றனையும் அறியாது இன்பம் ஒன்றையே துய்த்துத் தம்மிடத்தே கிடக்கச்செய்யும்` என்பதும் போதரும்.
தும்பி சென்று ஊதும் பொழுதே அதனது நறுமணத்தாலும், பிறவற்றாலும் அது தன்னிடத்துத் தும்பி என்பதனை உணர்ந்து, தன்னை நினைந்து வருவான் என்னும் துணிவினளாதலின், `இன்னது சொல்` எனக் கூறாமல், ஊதுதலால் தும்பிக்கு உளதாகும் பயனை மட்டுமே குறித்து, ``ஊதாய்`` என்று ஒழிந்தாள். ஊதுதல் - ஒலித்தல்.

பண் :

பாடல் எண் : 2

நானார்என் உள்ளமார் ஞானங்க
ளாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை
ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில்
உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! தேவர் பெருமானாகிய இறைவன் வலிய வந்து என்னை ஆண்டருளாவிடின், நான் யார்? என் மனம் யார்? ஞானங்கள் யார்? என்னையறிவார் யார்? ஒன்றுமில்லையாய் முடியும். ஆதலால், நீ பிரம கபாலத்தில் உணவேற்கின்ற அம்பல வாணனது திருவடிக்கண்ணே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``வானோர் பிரான் மதிமயங்கி என்னை ஆண்டில னேல், நான் ஆர்.....யாரறிவார்`` என்க. ``ஆர்`` என்றது, `யார்` என்னும் வினா வினைக் குறிப்பின் மரூஉ. இஃது, உயர்திணை முப்பாற்கும் பொதுவாய் `எத்தன்மையன், எத்தன்மையள், எத் தன்மையர்` என்னும் மூன்று பொருள்களுள் ஒன்றை இடத்துக்கேற்பத் தந்துநிற்கும். இஃது இங்கு `நான் ஆர்` எனத் தன்மையில் வந்தது இட வழுவமைதி.
``ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்தெங்
கோதைகூட் டுண்ணிய தான்யார்மன் - போதெல்லாம்
தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு``
(தொல். சொல். சேனாவரையம் - 210.) என்றாற்போல அஃறிணைக் கண் வருதல் திணைவழுவமைதி. அவ்வாற்றான் இங்கு ``என்உள்ளம் ஆர்``, ``ஞானங்கள் ஆர்`` என வந்தது. இவையெல்லாம் பிற்கால வழக்கு. இவ்வாற்றால், ``நான் ஆர்`` என்றது, `நான் எத்தன்மை யேனாய் இருப்பேன்` எனவும், ``என் உள்ளம் ஆர்`` என்றது, என் மனம் எத்தன்மையதாய் இருக்கும்` எனவும், ``ஞானங்கள் ஆர்`` என்றது, `என் அறிவுகள் எத்தன்மையனவாய் இருக்கும்` எனவும் பொருள் தருமாறு அறிக. என்னை யார் அறிவார் - என்னை ஒரு மகனாக இவ்வுலகில் யாவர் அறிந்து நிற்பார். `ஆண்டிலனாயின் இவ்வாறு ஆம்` எனவே, `ஆண்டதனால் இப்பொழுது நான் இறை வனுக்குப் பேரன்பனாயினேன்; என் உள்ளம் அவனையே நினைந்து உருகுகின்றது; என் அறிவுகள் எல்லாம் அவனையே பொருளாக அறிந்து நிற்கின்றன; என்னை எல்லாரும் சிவனடியான் என்று அறிந்து நிற்கின்றனர்` என்பது தானே பெறப்பட்டது. தலைவி கூற்றில் இவை, தலைவனால் தமக்கு முதுக் குறைவுண்டாயிற்றாக ஊரெல்லாம் சொல்லப்படுதலைக் குறிக்கும். அறிவு ஒன்றேயாயினும், அறியப் பட்ட பொருள்பற்றி வேறுவேறாய்த் தோன்றலின், ``ஞானங்கள்`` எனப் பன்மையாற் கூறினார்.
இம் முதலடி ஐஞ்சீருடையதாய்க் கொச்சகக் கலிப்பாவின் கண் மயங்கி வந்தது, அஃது யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையதாகலின் (தொல்.செய்.452.).
``வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்
ஐஞ்சீ ரடியும் உளஎன மொழிப``
(தொல். பொருள்.369) என்றதனைக் கலிப்பாவின் இலக்கணமாகவே கொண்டார் பேராசிரியர்.
``அருகிக் கலியில் அகவன் மருங்கின்ஐஞ் சீரடியும்
வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர்``
(யாப்பருங்கலக்காரிகை)
எனப் பிற்காலத்தாரும், கலிப்பாவின்கண் சிறுபான்மை ஐஞ்சீரடி மயங்கிவரும் எனக் கூறினமை காண்க. சீர் மிகுதியாக வந்தமையின் இடையே வெண்டளையாதல், கலித்தளையாதல் வருதலின்றி ஆசிரியத்தளை வந்தது. பின்னரும் இக் கொச்சகக் கலிப்பாவில் ஐஞ்சீரடி வருவன உள; அவற்றை அறிந்துகொள்க.
``மதிமயங்கி`` என்றது, அருளது மிகுதியைக் குறித்தவாறு. இதனானே, இறைவற்கு மயக்கம் உண்மை கூறிய குற்றம் எய்தாதாயிற்று. இங்ஙனமாகவும், `மயங்கி` என்றதனைப் பெயர் எனக் கொண்டு அதனைப் பிரமனுக்கு ஆக்கி, பின்வரும், `ஊனார் உடைதலை` என்றதனை, `அத்தலை பிரமன் தலை` என விதந்த வாறாக உரைப்பாரும் உளர். புணர்ச்சிப் பத்தின் ஒன்பதாம் திருப் பாட்டுள், ``நாயேன்றனை ஆண்டபேதாய்`` என வருவதற்கு அவரும் வேறுரையாது, `அன்பினால் கூறியது` என்றே போதலின், ஈண்டும் அவ்வாறு உரைத்துப் போதலே தக்கது என்க. ``மதிமயங்கி, பேதை`` என்றாற் போல்வன சொல்வகையால் இறைவனை இகழ்ந்துரைப்பன போலத் தோன்றினும், கருத்துவகையால், `அவன் நம்மை ஆட் கொள்ளுதற்குரிய தகுதி ஒன்றேனும் நம்மிடத்தில்லா தொழியினும், தனது பேரருள் ஒன்றானே நம்மை ஆட்கொண்டருளினான்` என அவனது கருணையின் பெருமையைப் பெரிதும் புகழ்ந்துரைப்பனவே யாதலின். அவை குற்றமாதல் யாண்டையது என்க. இன்னோரன்ன வற்றைக் குற்றமெனின், தேவாரத் திருமுறையுள் இறைவனைப் ``பித்தா`` என்றும். ``மதியுடையவர் செய்கை செய்யீர்`` என்றும் (தி.7. ப.1.பா.1;ப.5.பா.3.) பிறவாறும் வந்தனவும், இங்கும்,
``வெங்கரியின் - உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்
சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
எரிப்பிச்சன்`` (தி.8 நீத்தல் விண்ணப்பம்.49)
என வந்தனவும், பிறவும் எல்லாம் குற்றமாயொழியும். அவை யெல்லாம் சிறிதே கடுமையுடையன; இஃது அன்னதன்றெனின், `இறைவனிடம் சிறு குற்றங்களைச் செய்தல் பிழையன்று` என்பது பட்டு முறைமையன்றாமென்றொழிக.
`என்னை இங்ஙனம் முதுக்குறைவு எய்தினாளாக ஊரவர் பலரும் சொல்லுமாறு வந்து கலந்த தலைவனை மீட்டும் அவ்வாறேயாக வருமாறு சென்று ஊது` என்கின்றாளாகலின், ``நானார்`` என்றது முதலியவை, `சென்று ஊதாய்`` என்பதனோடு இயைந்து நிற்றல் அறிக.
`ஊன் ஆர் தலை, உடை தலை` என்க. உடைதல் - சிதைதல். தலை ஓடு சிதைவில் வழி, பலிப்பாத்திரமாதற்கு ஏலாமை உணர்க. ``கமலம்`` என்றது, உருவக வகையால், திருவடியை உணர்த்திற்று. `கமலத்தே` என்னும் சாரியை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 3

தினைத்தனை உள்ளதோர்
பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும்
பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக
ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! நீ, மிகவும் சிறிதாகிய மலர்த்தேனை உண்ணாமல், நினைத்தல், காண்டல், பேசுதல் என்னும் இவற்றைச் செய்கிற, எல்லாக் காலங்களிலும் வலிய எலும்புகளும் உருகும்படி இன்பத்தேனைப் பொழிகின்ற கூத்தப்பிரானிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``பூவினில்`` என்றதனை முதலிற் கொள்க. உள்ளது - உள்ளதாகிய. ஓர் - சிறிய. ``உண்ணாதே``, `உண்ணாதை` என்பதன் மரூஉ. ஆனந்தத் தேன், உருவகம். குனிப்பு - நடனம். `என் சொற் கேட்பின், நின் முயற்சியினும் நீ பெரும்பயன் எய்துவாய்` என்பாள் இவ்வாறு கூறினாள். இதனுள், `பூ` என்றது உலகத்தையும், `தினைத் தனை உள்ள தோர் தேன்`` என்றது, அதன்கண் உள்ள சிற்றின்பத்தை யும் குறித்து நிற்றல் காண்க. இதனானே, திருவருள் பெற்ற பின்னரும் ஆன்மபோதம் உலக இன்பத்தை வேம்பு தின்ற புழுப்போல (சிவஞானபோதம். சூ.9.அதி.3.) மீண்டும் நோக்குதல் உண்மை பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! கண்ணப்பனது அன்பு போன்ற அன்பு என்னிடத் தில்லையாதலைக் கண்டும், என்மீதுள்ள பெருங் கருணையால் வாவென்று கூவியாட்கொண்ட சிவபெருமானிடம் சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

கண்ணப்பன், கண்ணப்ப நாயனார். அவரது வரலாறு நன்கறியப்பட்டது. `அவர்` இறைவனுக்குச், செய்தனவெல்லாம் அடியராவார்க்குச் சிறிதும் ஒவ்வாதனவேயாயினும் இறைவன் அவ்வொவ்வாச் செயல்களை நோக்காது அவரை மகிழ்ந்தேற்றுக் கொண்டது, அவரது ஒப்புயர்வற்ற அன்பு கருதியேயாம்; அங்ஙன மாக, என்னிடத்து உள்ள ஒவ்வாச் செயல்களை நோக்காது என்னை அவன் ஆட்கொள்ள வேண்டுமாயின், அவரது அன்புபோலும் அன்பு என்னிடத்தில் உண்டாதல் வேண்டும்; அஃது இல்லையாகவும், என்னை அவன் ஆட்கொண்டது வியப்பினும் வியப்பே` என்பது இத் திருப்பாட்டிற் குறிக்கப்பட்டது.
`அன்பு` எனப் பின்னர் வருகின்றமையின், `கண்ணப்பன்` என்றதும், ஆகுபெயரால், அவரது அன்பினையே குறிக்கும். ``என் ஒப்பு இல் என்னையும்`` என்றது, `குற்றம் புரிதலில் எனக்கு நிகர் வேறொருவர் இல்லாத என்னையும்` என்றபடி.
``உன்னைஎப் போதும் மறந்திட்
டுனக்கினி தாயிருக்கும்
என்னைஒப் பார்உள ரோசொல்லு
வாழி இறையவனே`` (தி.4.ப.112 பா.4).
என்ற அப்பர் திருமொழியை நோக்குக.
``வண்ணம் பணித்து`` என்பது வலிந்து நின்றது; `உய்யும் வகையை அருளிச்செய்து` என்பது பொருள். எல்லாரும், `வண்ண` எனச் செயவெனெச்சமாக்கி உரைத்தார்: இஃது அங்ஙனம் என ஆமாறு இன்றென்க. ``வா என்ற`` என்றது. `என்பால் வருக என அழைத்துத் தனக்கு அடிமையாக்கிக் கொண்ட` என்றவாறு, ``வருக என்று பணித்தனை`` (தி.8 திருச்சதகம்-41) என முன்னருங் கூறினார். சுண்ண நீறு - நீற்றுச் சுண்ணம்; `திருநீற்றையே நறுமணப் பொடியாகப் பூசிக் கொள்பவன்` என்றபடி. பொன் - அழகு, தலைவி கூற்றில் இது, `முன்பு அன்புடையேனாய்த் தோன்றிய அவர்க்கு யான் இன்று அன்பில்லாதவளாய்த் தோன்றுகின்றேன்` என்னும் கருத்தினதாம்.

பண் :

பாடல் எண் : 5

அத்தேவர் தேவர்
அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப்
புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென்
பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! அந்தத் தேவரே தேவர் என்று பொய்த்தேவரைப் புகழ்ந்து பேசிப் புலம்புகின்ற இவ்வுலகத்தில் என்பிறவித் தொடர்பு சிறிதும் இல்லாமல் ஒழியும்படி நான் பற்றி நிற்கின்ற மெய்த் தேவனாகிய சிவபிரானுக்கே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``தேவர், அவர்`` என்பன உயர்வின்கண் வந்த பன்மை. அத்தேவர் தேவர் - அந்தக்கடவுளே முதற்கடவுள். ``அவர்`` என்றது, முன்னர்க் கூறியவரைச் சுட்டியதன்று; வேறொருவரைச் சுட்டியதாம்; ``என்று இங்ஙன்`` என்றது, `என்று இவ்வாறு ஒரோவொரு கடவுளைச் சுட்டி` என்றவாறு. பொய்த்தேவு பேசி - பொய்யான கடவுட் டன்மையைக் கூறி. தேவு - கடவுட்டன்மை. `அவரெல்லாம் முதற் கடவுளராகாமை, வேதங்களாலும், புராணங்களாலும் இனிது விளங்கிக்கிடப்பது` என்பது திருவுள்ளம். பற்று, `பத்து` எனத்திரிந்தது. பற்று ஏதும் இல்லாது - வேறொரு துணையும் இல்லாது தான் ஒருவனுமே துணையாக. பற்றுஅற - எனது உலகப்பற்று நீங்கும் வண்ணம், `தேவர் தேவர்`` என்றது, `தேவர்க்குத் தேவர்` என்னும் பொருட்டாய், `முதற்கடவுள்` எனப்பொருள் தந்து, ``மெய்`` என்ற அடைபெற்று, `உண்மை முதற் கடவுள்` என்றவாறாயிற்று. `பலரும் பொய்த்தேவு பேசிப் பிறவிக் கடலினின்றும் ஏறமாட்டாது புலம்பு கின்ற இப்பூதலத்தே, நான் மெய்த்தேவை உணர்ந்து பற்றிக் கரை யேறும் பேறுடையனாயினேன்` என மகிழ்ந்தருளிச்செய்தவாறு, தலைவி கூற்றில் இது, வேற்று வரைவை விரும்பாமையைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 6

வைத்த நிதிபெண்டீர்
மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற்
பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக்
கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! செல்வம், மாதர், மக்கள், குலம், கல்வி என்று பிதற்றித்திரிகின்ற இந்தப் பித்தவுலகில், பிறப்பு இறப்பு என்கிற மனவிகாரக் கலக்கத்தை எனக்கு ஒழித்தருளின ஞானவுரு வனாகிய இறைவனிடத்திற்சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

`அச் சித்த விகாரம்` எனச் சுட்டு வருவித்துரைக்க. விகாரம் - திரிபு; மாற்றம். `விகாரமாகிய கலக்கம்` என்க. கலக்கம் - திகைப்பு. பிறப்போடு இறப்பு என்னும் கலக்கம் - பிறப்பிற்கும், இறப் பிற்கும் காரணமாகிய கலக்கம். வித்தகம் - திறல்; இது, பிறர் இது செய்யமாட்டாமை உணரநின்றது. ``தீரா நோய் தீர்த்தருள வல்லான் றன்னை`` (தி.6.ப.54.பா.8) என்று திருநாவுக்கரசரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 7

சட்டோ நினைக்க
மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ
கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித்
தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! மனத்துக்கு அமுதம் போலும் சிவ பெருமானை நினைத்தால் எமக்குச் சேதமுண்டாமோ? உண்டாகாது. ஆதலால், அவனை மறவேன். அவனை நினைத்தற் கிசையாத துட்டரை யாம் காணவும் அருவருப்போம். அந்தப் பெரியோனிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

`சங்கரனைச் சட்டோ நினைக்க மனத்து அமுதாம்; ஆதலின் அவனது திருவடியை மறப்பேனோ` என்க.
`சட்ட` என்பது, `சட்டோ` எனத் திரிந்து நின்றது.
``சுட்டி யுணர்வதனைச் சுட்டி அசத்தென்னச்
சட்ட இனியுளது சத்தேகாண்``
(சிவஞானபோதம் - சூ - 9. அதி - 2.) என்பதன் உரையில், ``சட்ட என்பது செப்பப் பொருட்டாயதோர் அகரவீற்றிடைச் சொல்; அது, `சட்டம்` என இழிவழக்கில் மகரவீறாய் மரீஇயிற்று` என மாபாடியம் உடையார் உரைத்தமை காண்க.
`சங்கரன்` என்பது, `இன்பத்தை செய்பவன்` என்னும் பொருளதாதலின், `உள்ளத்தில் அமுதம் ஊற்றெடுக்கச் செய்பவன்` என்பதனைக் கூறுமிடத்தில் இறைவனை அப்பெயராற் குறித் தருளினார். `கெட்டேன்` என்பது, அவலக் குறிப்பு உணர்த்துவதோர் இடைச்சொல். இதனை, ``அத்தனுக் கென்கொல் கெட்டேன் அடுத்தது`` (தி.12. பெ.புரா.கண்ணப்பர். 168.) என்றாற்போல் வனவற்றிற் காண்க. ஒட்டாத - அப்பெருமானிடத்து உள்ளம் பொருந்தாத. ``பாவி`` என்றது பன்மை யொருமை மயக்கம். தொழும்பர் - அடிமைகள். எல்லாரும் இறைவன் அடிமைகளே யாதலின், அவர் எல்லாரையும் தாங்கும் தன் கடனைச் செய்து நிற்கின்றான் இறைவன். ஆயினும், அவனது தாங்குதலைப் பெற்றும், தம் கடனாகிய பணியை (தி. 5. ப.19. பா.9.) அவனுக்குச் செய்யாது பிறதொழில்களைச் செய்தே காலம் கழிப்பவரை, ``பாவித் தொழும்பர்`` என்று அருளினார். உரு - பொருள். ``உருவாக` என ஆக்கம் வருவிக்க. அறியோம் - மதியோம். `சிட்டமாய` என்பதில், `அம்` என்பது குறைந்து நின்றது. சிட்டம் - மேன்மை. மேன்மையுடையாரை ஈண்டு, `மேன்மை` என்றதனை,
``இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்``
(குறள் - 627.) என்புழி, மேலோரை, `மேல்` என்றது போலக் கொள்க. கொள்ளவே, `சிட்டாய சிட்டன்` என்பது, `மேன்மையுடையாருள் மேன்மையுடையான்` என்றவாறாயிற்று. `பாவித் தொழும்பர்`` என்றது, தலைவி கூற்றில், இயற்பழித்தலும், தூது செல்லாமையும் உடைய தோழியைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 8

ஒன்றாய் முளைத்தெழுந்
தெத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை
நாய்சிவிகை ஏற்றுவித்த
என்றாதை தாதைக்கும்
எம்மனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! பிரபஞ்சத்திற்கு முதற்பொருளும், பிரபஞ்சரூபியும், ஒன்றுக்கும் பற்றாத சிறியேனைத் தன் அடியார் நடுவில் இருக்கச் செய்த என் தந்தையும், என் குடும்பத்திற்குத் தலைவனும், அழியாத செல்வமுடையவனுமாகிய சிவபெருமானிடத்துச் சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

`முளைத்தெழுந்து` எனவும், ``கவடுவிட்டு`` எனவும் வந்தமையின், ``ஒன்றாய்`` என்றது `ஒருமரமாய்` எனக் குறிப்புருவகமாயிற்று. இறைவன் தன்னியல்பில் ஒருவனேயாய் இருந்தும், உலகத்தைத் தொழிற்படுத்துதற்பொருட்டு அளவிறந்த வடிவும், பெயரும் உடைவனாய்த் தோன்றலின், ``ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு`` என்றார். `தம்மை ஆட்கொண்டதும் அத்துணைச் செயல்களுள் ஒன்று` என்றற்கு இதனை எடுத்துக் கூறினார். நன்று ஆக வைத்து - நன்மை உண்டாகும்படி திருத்தி. ``ஏற்று வித்த`` ``ஏற்றுவித்தது போலச் செய்வித்த`` என்னும் பொருட்டாக லின், அஃது, `என்னை` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
தாதை தாதை - தந்தைக்குத் தந்தை. அன்னையை வேறு கூறினார், அவளது குடிக்கும் பெருமானாயினமைபற்றி. ஒருவர்க்குத் தந்தைவழி, தாய்வழி இரண்டும் சிவநெறி வழியாதல் அருமை என்பதனை,
``மரபிரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையராய்``
(தி.12 திருஞான. 17.) என்ற சேக்கிழார் திருமொழியான் அறிக. குன்றாத செல்வம், அறிவும் இன்பமும்; இவற்றை `அருள்` எனினும் இழுக்காது.

பண் :

பாடல் எண் : 9

கரணங்கள் எல்லாங்
கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று
சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென்
றிவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! கரணங்களை எல்லாம் கடந்து நின்றவனும், தன் திருவடியை அடைதலும் என் இறப்புப் பிறப்புக் களை ஒழித்தவனும், கருணைக்கடலும் ஆகிய சிவபெருமானிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``கரணங்கள் எல்லாம்`` என்றது, ஞானேந்திரியம், கன்மேந்திரியங்களாகிய புறக்கரணங்களும், மனம் முதலிய அந்தக் கரணங்களும் ஆகிய அனைத்தும் அடங்கவாம். அராகம் முதலிய உள்ளந்தக் கரணங்களையும் குறித்தல் பொருந்துவதே. ``மயக்கு`` என்றது இங்கு இளைப்பினை. ``இரண்டின் மயக்கு`` என்ற ஆறாவதன் தொகை, `வாளது தழும்பு` என்பதுபோலக் காரியக் கிழமைப் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 10

நோயுற்று மூத்துநான்
நுந்துகன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம்
நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை
ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! பிறவிப் பிணியை அடைந்து முதிர்ந்து, இங்கு இருந்து - நான் தாய்ப் பசுவால் தள்ளப்பட்ட கன்று போல இவ்வுலகத்திலிருந்து வருந்தி நின்ற என்னைத் தாய் போலக் கருணை செய்தாண்டருளின இறைவனிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``நான் நுந்து கன்றாய் இங்கிருந்து`` என்றதனை முதலிற் கூட்டுக. ``உற்று, மூத்து`` என்ற எச்சங்கள், `அறியா`` என்றதனோடு முடிந்தன. நுந்துகன்று - தாய்ப்பசுவால் உதைத்துத் தள்ளப்பட்ட கன்று. ``செல்வம்`` என்றதன் பின், `போல` என்னும் உவம உருபு விரிக்க. ``குணுங்கர்நாய் பாற்சோற்றின் - செவ்வி கொளல் தேற்றாது`` (நாலடி-322), ``பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர் - எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்`` (நாலடி-345) என்றாற்போல்வன, நாய் நல்லனவற்றை அறியாமையைக் குறித்தல் காண்க. ``நாயுற்ற செல்வம் போல`` என்றாராயினும், `செல்வம் உற்றநாய் அதன் சிறப்பை அறியாதவாறுபோல` என்பதே கருத்தாம். `நயந்து` என்றதனை, `நயப்ப` எனத் திரித்து, உவம உருபாக்குக. அறியாதது, இறைவன் செய்த திருவருள் நலத்தையாம். ``அறியா`` என்றதனை `அழியா` எனப் பாடம் ஓதுதல் பொருந்துவது போலும். ``வண்ண மெல்லாம் சென்று ஊதாய்`` என இயைக்க. தாய் - தாயது தன்மை; பேரருள். `ஒளி` எனப் பொருள்தரும், `தேயு` என்னும் வட சொல்லின் ஈற்று உகரம் தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 11

வன்னெஞ்சக் கள்வன்
மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக்
கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னந் திளைக்கும்
அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! வலிய கல்லை நிகர்த்த மனத்தை உடையவனென்று வெறுக்காமல் என் வன்மனத்தை உருக்கித் தன் கருணையினால் என்னை ஆண்டு கொண்டருளின தில்லையம்பல வாணனது பொன்போலும் திருவடியின் கண்ணே சென்று ஊது வாயாக.

குறிப்புரை :

மன வலியன் - மனத்தால் வலியன். `வலிய மனம் உடையவன்` என்பது கருத்து. `கள்வன், வலியன்` என்பன ஆண்பாற் படர்க்கைச் சொல்லாயினும், தலைவி கூற்றில் தன்மை யொருமைச் சொற்களாகக் கொள்ளப்படும். `பொய்கைகளில் அன்னப்பறவைகள் ஆடி இன்புறும் தில்லை` என்க.

பண் :

பாடல் எண் : 12

நாயேனைத் தன்னடிகள்
பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப்
பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென்
செய்பணிகள் கொண்டருளுந்
தாயான ஈசற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! நாயினேனைக் கொண்டு தன்னைப் புகழ்வித்துக் கொண்டவனும், பேயினேனது மனக் குற்றங்களைப் பொறுக்கின்ற பெருமையுடையவனும் என் பணிவிடையை இகழாமல் ஏற்றுக் கொண்டருள்கின்ற தாய் போன்றவனும் ஆகிய இறைவனிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

இறைவன் அடிகளை, `கோலமார்தரு பொதுவினில் வருக` (கீர்த்தி - 128.) என இங்கு நிறுத்திச் சென்றமை யானே அவர் அவனைப் பாடும் நிலை உண்டாயினமைபற்றி, ``நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்`` என்று அருளினார். இது தலைவி கூற்றில் வள்ளை, ஊசல் முதலியவை பாடி இரங்குதலைக் குறிக்கும்.
உள்ளப் பிழை - மனக் குற்றம்; அது, அவனது திருவருளைப் பேணாமை. தலைவி கூற்றில் குறிவழிச் செல்லாமை முதலியனவாம். இகழ்ச்சிக் குறிப்பிடைச் சொல்லாகிய `சீ` என்பது, பெயர்த்தன்மைப் பட்டு நின்றமை மேலே (தி.8 திருவெம்பாவை. பா.2.) குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நான்தனக் கன்பின்மை
நானும்தா னும்அறிவோம்
தானென்னை ஆட்கொண்ட
தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும்
அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! இறைவனிடத்து நான் அன்புடையேன் அல்லாமை நானும் அவனும் அறிவோம். மற்றையர் அறியார். அவன் என்னை ஆட்கொண்டதை எல்லாரும் அறிவார். ஆதலால் என்னிடத்துண்டாகிய கருணையும் அவனதே. அவன் என்னை வந்து சேரும்படி நீ சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``அறிவோம்`` என்றதன்பின், `அவ்வாறாகவும்` என்பதும் ``அறிவார்`` என்றதன்பின், `ஆகலான்` என்பதும் ``அங்கு`` என்றதன்பின், `இன்றும்` என்பதும் வருவிக்க. ஆன - அன்று உண்டான. ``ஆன கருணையும்`` என்ற உம்மை சிறப்பு. அங்கு - அவ்வாறு. ``தான்`` என்றது அசைநிலை. `கோன் அவனே` என மாற்றிப் பொருள்கொள்க.

பண் :

பாடல் எண் : 14

கருவாய் உலகினுக்
கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல்
மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில்
அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! உலகத்துக்குப் பிறப்பிடமாய், அப்பாலாய், இவ்விடத்து எம்பெருமாட்டியோடும் எழுந்தருளி அருவாய் அந்தணனாகி, என்னை அடிமைகொண்ட அழகிய சிவ பெருமானிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

கரு - முதல். ``உலகினுக்கு`` என்றது தாப்பிசையாய், முன்னும் சென்றியையும். இப்புறம் - இவ்விடம்; நிலவுலகு. மாதி னொடும் வந்தாளுதல்பற்றி மேலே (தி. 8. திருவண்டப்பகுதி. அடி 63-65. உரை) கூறப்பட்டது. அரு வாய் மறை - அரிய, உண்மையான வேதம். திரு ஆன தேவன் - மங்கலம். என்றும் நீங்காது பொருந்தி யுள்ள இறைவன்; `சிவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 15

நானும்என் சிந்தையும்
நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலும்
தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும்
மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! சிவபெருமான் தானும் எம் பிராட்டியுமாக எழுந்தருளி என்னை ஆட்கொள்ளாவிடின், நானும் என் மனமும் இறைவனுக்கு உரியராதல் இயலாது. ஆதலால் ஆகாயம் முதலிய எல்லாப் பொருள்களும் தானேயாகிய சிவபெருமானது திருவடிக்கண்ணே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

எவ்விடத்தோம் - எத்துணைச் சேய்மையில் இருப் போம். அவ்வாறின்றித் தன் கருணை காரணமாக மிக அணியராம் வகை என்னை ஆண்டு கொண்ட அப்பெருமானது சேவடிக்கே சென்று ஊதாய்` என்க. சிந்தை-மனம். அதனை வேறுபோல அருளினார், தம் வழிப்படாது தன்வழியே செல்லுதலும் உடைமை பற்றி. இது தலைவி கூற்றிற்கும் பொருந்தும், ``பிரான்`` என்றதற்கு, `அப் பிரான்` எனச் சுட்டு வருவித்துரைக்க. தேன் உந்து - தேனைச் சொரிகின்ற; என்றது குறிப்புருவகம்.

பண் :

பாடல் எண் : 16

உள்ளப் படாத
திருவுருவை உள்ளுதலும்
கள்ளப் படாத
களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம்
பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! ஒருவராலும் நினைத்தறியப்படாத தன் திருவுருவத்தை நான் நினைத்தலும், கருணை வெள்ளமாகிய சிவபிரான் என்னைத் தனித்தடிமை கொண்டானாதலால், அந்த உபகாரியிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

உள்ளப்படாத - நினைக்கவாராது மறைந்து நிற்கின்ற. இது, தன்முனைப்பின்வழி நினைக்குமிடத்தாம். உள்ளுதல், அருள்வழி நின்று நினைத்தலாம். அவ்விடத்து அவன் கள்ளந்தீர்ந்து வெளிப்பட்டு இன்பம் தருதலை, ``கள்ளப்படாத களிவந்த வான் கருணை வெள்ளப் பிரான்`` என்று அருளினார். வேறே - தனியே; என்றது, தவம் முயலாதிருக்கும் பொழுதும் தானாகவே வந்து ஆண்டமையை. `கொள் அப்பிரான்` என்க.

பண் :

பாடல் எண் : 17

பொய்யாய செல்வத்தே
புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்
கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே
அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! பொய்யாகிய செல்வத்தின் கண்ணே சென்றழுந்தி அதனை மெய்யாகிய செல்வமென்று மதித்துக் கிடந்த என்னை, அடிமை கொண்ட ஐயனே! என் அரியவுயிரே! அம்பலவனே! என்று என்னால் தோத்திரம் பண்ணப்பட்ட அவனது செந்தாமரைமலர் போலும் திருவடிக்கண்ணே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

பொய்யாய - நிலையாத. ``செல்வத்தே புக்கழுந்தி`` என்றதனால், `அடிகள் பெருஞ்செல்வத்திருந்தார்` என்பது பெறப் படும். படவே, அமைச்சராயிருந்தார் என்றல் பொருந்துவதேயாயிற்று. தன் சொல்லை அவ்வாறே கூறப் பணிக்கின்றாளாதலின், ``என்னை ஆட்கொண்ட ஐயா! என் ஆருயிரே! அம்பலவா என்று ஊதாய்`` என்றாள்.

பண் :

பாடல் எண் : 18

தோலும் துகிலுங்
குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும்
பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க
வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! தோல், துகில், குழை, தோடு, நீறு, சாந்து, கிளி, சூலம், வளை என்பவற்றையுடைய இறைவனது திருக் கோலத்தை நோக்கிக் குளிர்ந்து ஊதுவாயாக.

குறிப்புரை :

இத் திருப்பாட்டு, இறைவன் மாதொரு கூறனாய் இருக்கும் நிலையை விளக்குகின்றது. தோல், குழை, வெள்ளை நீறு, சூலம் இவை வலப்பாகத்துக் காணப்படும் ஆணுருவத்தில் உள்ளவை. துகில், தோடு, சாந்து, வளை இவை இடப்பாகத்துக் காணப்படும் பெண்ணுருவில் உள்ளவை. பைங்கிளியும் அம்மை கையில் உள்ளதே. ஆதலின் அதனை, `பைங்கிளியும் தொக்கவளையும்` எனக் கூட்டி உரைக்க. தொக்க - கூடிய; `மிகுதியான` என்றபடி. இது, முதற்பொருள் சிவமும், சத்தியும் என இருதிறப்பட்டு இயைந்து நிற்கும் இயற்கை வடிவமாகலின், ``தொன்மைக் கோலம்`` என்றும், இதனைக் காணின் இன்பம் தானே பெருகும் என்றற்கு, ``குளிர்ந்து`` என்றும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 19

கள்வன் கடியன்
கலதிஇவன் என்னாதே
வள்ளல் வரவர
வந்தொழிந்தான் என்மனத்தே
உள்ளத் துறுதுயர்
ஒன்றொழியா வண்ணமெல்லாம்
தெள்ளுங் கழலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! என்னைக் கள்வனாகிய மூதேவி என்றிகழாமல் வள்ளலாகிய சிவபெருமான் என் மனத்தின் கண்ணே எழுந்தருளினான். ஆதலால் என் மனத்துயரம் எல்லாவற்றையும் அவனது திருவடிக் கண்ணே சென்று விண்ணப்பம் செய்து ஊதுவாயாக.

குறிப்புரை :

கள்வன் - வஞ்சகன். கடியன் - கடுமையுடையவன். கலதி - முகடி (மூதேவி). இது `நற்குணம் இல்லாதவன்` என்னும் பொருட்டு. இவை இப்பொருளவாயினும். தலைவி கூற்றில், முதல் இரண்டும் தன்மைக்கண் வந்த குறிப்பு வினைப் பெயராகவும், ``இவன்`` என்றது, `ஈவன்` என்னும் தன்மை வினை முற்றின் குறுக்கமாகவும் கொள்ளப்படும். ``வர வர`` என்றது, `மெல்ல மெல்ல` என்னும் பொருளதாய் நின்றது. `எல்லாவற்றையும் தெள்ளும்` என்க. தெள்ளுதல் - ஆராய்ந்து களைதல்.

பண் :

பாடல் எண் : 20

பூமேல் அயனோடு
மாலும் புகலரிதென்
றேமாறி நிற்க
அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு
நன்றாப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! பிரமவிட்டுணுக்கள் தடுமாறவும், நான் இறுமாந்திருக்கவும், நாய்க்கு ஆசனமிட்டாற்போல என்னைப் பொருள்படுத்தி அடிமை கொண்ட நெருப்புப் போலும் திருமேனியை யுடைய சிவபெருமானிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

புகல் - கிட்டுதல். அயன் மாலும் முடியையும், அடியையும் கண்டுவிட இயலும் என்று எண்ணிய தம் எண்ணத்தை இழந்தாராகலின், ``ஏமாறி நிற்க`` என்றார். ஏமாறுதல் - எண்ணம் இழத்தல். ``நாய்மேல் தவிசிட்டு`` என்றது, `அதுபோலும் செய்கையைச் செய்து` என்றபடி. நன்றாக - பெரிதும். தீமேனி - நெருப்புப் போலும் திருமேனி.

பண் :

பாடல் எண் : 1

திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.

பொழிப்புரை :

திருமாலும் வராகவுருவங் கொண்டு நிலத்தைப் பிளந்து சென்றும் அறியாத திருவடியை யாம் அறிந்துய்யும்படி ஒரு அந்தணனாய் எழுந்தருளி எம்மை ஆண்டு கொண்டவனும், திரு நாமங்கள், வடிவங்கள் இல்லாதவனுமாகிய சிவபெருமானுக்கு ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

``திருவடியை உரு அறிய`` என்றதில் ஐயுருபு, `குடும் பத்தைக் குற்றம் மறைப்பான்` (குறள் - 1029) என்பதிற்போல வந்தது. `திருவடியை அறிய` என்று கூறாது, ``உருவறிய`` என்றார். `நன்குணரப் பெற்றேம்` என்பது உணர்த்துதற்கு. நாமம் - பெயர். உருவம் - வடிவம். இவை இரண்டையுங் கூறவே, அவற்றிற்குரிய தொழிலும் உடன் கொள்ளப்படும். ஒன்றும் - சிறிதும். இறைவன், யாதொரு வடிவும், பெயரும், தொழிலும் இன்றி நிற்றல், உலகத்தை நோக்காது தன்னியல்பில் நிற்கும் நிலையிலாம். இதுவே அவனது `உண்மை இயல்பு - சொரூபலக்கணம்` எனப்படுவது. இவ்வியல்பில் நிற்பவன் உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலையில் அளவற்ற வடிவும், பெயரும், தொழிலும் உடையவனாய் நிற்றலின், `அவ னுக்கே ஆயிரம் திருநாமம்பாடி` என்றார். இது, `பொதுவியல்பு` எனப் படும் தடத்தலக்கணம். நாமம் கூறவே, ஏனைய வடிவும், தொழிலும் தாமே பெறப்பட்டன. `கொட்டுவாம்` என்பதில் முதனிலையீற்று உகர மும், இடைநிலை வகரமும் தொகுத்தலாயின. ஓகாரம், அசைநிலை. இவை, பின்னர் வருகின்ற `ஆடாமோ` என்றதற்கும் ஒக்கும். இவற் றிற்கு இவ்வாறே நன்னூற் காண்டிகையுரையுள் இலக்கணங் கூறினார் நாவலர். ஓகாரத்தை எதிர்மறை எனக் கொண்டு, `கொட்டாம், ஆடாம்` என்னும் எதிர்மறை வினைகள், பின்னர் வந்த ஓகாரத்தொடு கூடி உடன்பாட்டுப் பொருளைத் தந்தன எனக் கொள்ளின், அவ்வாறு வருதல் தேற்றத்தின்கணாதலானும், ஈண்டு ஐயமின்மையின் தேற்றுதல் வேண்டாமையானும் அவ்வாறுரைத்தல் பொருந்தாதாம்.

பண் :

பாடல் எண் : 2

திருவார் பெருந்துறை
மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின்
யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும்
ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் எழுந்தருளின சிவ பெருமான் என் பிறவியை வேரறுத்தபின், யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை. அருவாகியும் உருவாகியும் நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

கரு - முதல், பிறவிக்கு முதல் - பாசம். `அதனை வேரோடு அறுத்தான்` என்க. கண்டது - பொருளாக அறிந்தது ``அரு`` என்றது, `அகளம்` என்னும் பொருளிலும், ``உரு`` என்றது, `சகளம்` என்னும் பொருளிலும் வந்தன. அவை முறையே அவனது உண்மை இயல்பு, பொதுவியல்புகளை உணர்த்தும். அகளமாய் உள்ளவன், சகளமாய் வருதல் அருள்காரணத்தினாலாம். ஓர் இடத்திருந்து பாடுங்கால், முன்பு தாம் கண்டு வணங்கிய இடத்தும், வணங்க நினைக்கும் இடத்தும் உள்ள பெருமானது கோலத்தை நினைந்து பாடுதல் அடியவர்க்கு யாண்டும் இயல்பாதல், தேவாரத் திருமுறை களால் நன்கறியக் கிடத்தலின், ஈண்டும் அவ்வாறே, `திருவாரூர் பாடி` என்று அருளினார். திருக்கோவையுள்ளும் இவ்வாறு பல தலங்களும் கூறப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 3

அரிக்கும் பிரமற்கும்
அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி
நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும்
என்பதுகேட் டுலகமெல்லாம்
சிரிக்குந் திறம்பாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

திருமால் பிரமன் முதலியோர்க்கும் இன்னபடி யென்று தெரிவிக்கலாகாமல் நின்ற பரமசிவமே எழுந்தருளி நம்மை மனமுருகப் பண்ணி ஆண்டுகொள்ளும் என்னும் செய்தியைக் கேட்டு உலகத்தாரெல்லாரும் நகைக்கும் விதத்தைப்பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

தெரித்தல் - முற்றும் உணர வகுத்துக் கூறுதல். `இது கூடாது` எனவே, ஒரு சிறிதுணர்தல் பெறப்பட்டது. படி - நிலைமை. படித்து - நிலைமையையுடையது. ``சிவம்`` என்றது, `சிவமுதற் பொருள்` என்றவாறு. `நம்மை` என்பது, இசையெச்சத்தால், `ஒன்றற் கும் பற்றாத நம்மை` எனப் பொருள் தந்தது. `உருக்கிற்று, பணி கொண்டது` என இறந்த காலத்தாற் கூறற்பாலவற்றை, ``உருக்கும், பணிகொள்ளும்`` என எதிர்காலத்தால் அருளினார், அவை அச் செயலளவில் நில்லாது, `இன்னோரன்னவும் அம்முதற்பொருட்கு இயல்பாம்` என அதனது தன்மை உணர்த்தி நிற்றற்கு. எனவே, உலகமெல்லாம் சிரித்தல், `அப்பெரும்பொருட்கு இஃது இயல்பாமோ` எனக் கருதி என்பதாயிற்று. பரம்பொருளினது பேரருள் தன்மையை உலகர் உணராராகலின், இங்ஙனம் கருதிச் சிரிப்பாராயினர் என்க. இதனானே, `பரம்பொருளால் ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்ம னோர்க்கு இயல்வதோ என அயர்த்தொழியாது, அந்நிலையைப் பெறும் தவத்தின்கண் உறைத்து நிற்றல் வேண்டும்` என்பதும் பெறப் பட்டது. இவ்வுண்மையே, திருநாவுக்கரசரது திருக்கயிலை யாத்திரை யுள் இறைவன் முனிவர் வடிவிற் போந்து, ``கயிலை மால்வரையாவது காசினி மருங்கு - பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற் கெளிதோ``, ``மீளும் அத்தனை உமக்கினிக் கடன்`` என அயர்ப்பித்த வழியும் நாவுக்கரசர் அயராது, ``ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண் டல்லால் - மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்`` என மறுத்தவிடத்து இனிது விளங்கிநிற்கின்றது. புராண இதிகாசங்களிலும் இதுபோலும் நிகழ்ச்சிகள் கூறப்படுதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 4

அவமாய தேவர்
அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை
ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர்
நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

பிறவியை ஒழித்து என்னை ஆண்டருளின சிவபெருமான் தனது புதுமையாகிய ஒளியை எனக்குக் காட்டியருளு தலும், நாம் பயனற்ற தேவர்களுடைய துர்க்கதிகளில் அழுந்தாமல் சிவரூபமான விதத்தைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

அவம் - பயன் இன்மை. பிறவி நீங்கப் பெறுதலே, பயன்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த பயனாகலானும், சிவபெருமானை யன்றிப் பிற தேவராதல், அவர்தம் பதவியாதல் அதனை நீக்க மாட்டாமையானும் தேவரையும் அவர்தம் பதவியையும், ``அவமாய தேவர்` என்றும் ``அவகதி`` என்றும் அருளிச்செய்தார். பவம் - பிறப்பு. மாயம் - நிலையற்ற நிலைமை; சுழற்சி என்றபடி. காத்து - அஃது அணுகாவகை தடுத்து. நவமாய செஞ்சுடர் - புதிதாகிய செவ்விய ஒளி; என்றது சிவஞானத்தை. ``நாம்`` என்றதும், `நாம்` என்னும் உணர்வை; இதுவே, `செருக்கு` என்றும், `தன் முனைப்பு` என்றும் சொல்லப்படுவது. சிவமாயினமை, சிவத்தினது எண் குணங்களும் தம்மாட்டு விளங்கப் பெற்றமை. ``அடுத்தது காட்டும் பளிங்குபோல்`` (குறள் - 706.) என்றபடி, அடுத்து நிற்கின்ற பொருளின் தன்மையே தன் தன்மையாகக் கொண்டு காட்டுதல் பளிங்கிற்கு இயல்பாதல்போல, அடுத்த பொருளின் இயல்பே தன் இயல்பாகக்கொண்டு நிற்றல் ஆன்மாவிற்கு உள்ள இயல்பு. அதனால், அனாதியே பாசத்தின் தன்மையை எய்திப் பாசமாகியே கிடந்த உயிர், பாசம் நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தினது எண் குணங்களும் தன்னிடத்து இனிது விளங்கப்பெற்றுச் சிவமாகியே விளங்கும் என்க.

பண் :

பாடல் எண் : 5

அருமந்த தேவர்
அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர்
உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக்
கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.

பொழிப்புரை :

திருமால், பிரமன் என்னும் அருமையாகிய தேவர்களுக்கும் அருமையாகிய பரமசிவம் உலகத்துள்ளோர் வியப் படையும் வண்ணம் மானுடவுருவமாய் எழுந்தருளி என்னை அடிமை கொண்டு என்பிறவிக் காடுவெந்து நீறாகும்படி கடைக்கணித்து என் மனம் புகுந்ததனால் எனக்குளதாகிய பெருஞ்செல்வத்தைப் புகழ்ந்து பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`அருமருந்தன்ன` என்பது. ``அருமந்த`` என மருவிற்று. அருமருந்தை உண்ணும் அத்தேவர்` என்க. அருமருந்து - அமுதம். `தேவர், அயன், திருமால்` என்றது செவ்வெண்ணாகலானும், சிறப்புடையவரையே எடுத்து எண்ணினமையானும் ``திருமால்`` என்றதன்பின், `இவர்க்கும்` என, ஒரு பெயரும், சிறப்பும்மையும் விரிக்க. `உருவாய் வந்து` என ஆக்கம் வருவிக்க. உகப்பு - உயர்ச்சி. `தேவர்க்குக் கனவிலும் காண இயலாத பெருமான், மக்க ளுள்ளார்க்குத் தானே தோன்றி வந்து அருளுகின்றான்` என, அடிகள் பால் நிகழ்ந்த நிகழ்ச்சியால் மக்கள் உயர்வு படைத்தனர் என்க. இது, தலைவி கூற்றிற்குப் பெரிதும் பொருந்துவதாம். கொண்டருளி - நம்மை ஆட்கொண்டருளி. கரு - பிறப்பு, கடைக்கணித்தல் - கடைக்கண்ணால் நோக்குதல். இஃது அருளுதலைக் குறிப்பதொரு பான்மை வழக்கு. இதனை, `கடாட்சித்தல், என வடசொல்லாற் கூறுவர். புகுந்த திரு - புகுந்ததாகிய நன்மை. வந்தவாபாடி - கிடைத்த வாற்றைப்பாடி.

பண் :

பாடல் எண் : 6

அரையாடு நாகம்
அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன்
பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாடஉள் ளொளியாட
ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.

பொழிப்புரை :

திருவரையில் பாம்பைக் கச்சையாகக் கட்டின சிவபெருமான் பார்வதி தேவியாரோடும் பூமியில் எழுந்தருளி, எம்மை ஆண்டருளின விதத்தைச் சொற்கள் தடுமாறவும், அவனது பேரொளி என் மனத்தில் நிறையவும், கண்களில் நீர்ததும்பவும் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`ஆடு நாகம் அரை அசைத்த பிரான்` எனக் கூட்டுக. அசைத்தல் - கட்டுதல். வரை ஆடு மங்கை - மலையில் விளையாடிய (வளர்ந்த) நங்கை. உரை ஆட - நம் சொற்களில் பொருந்த, உள்ளொளி ஆட - ஞானம் மிக. இதன் மூன்றாம் அடியுள், கனிச்சீர் மயங்கி வந்தது. ``உரையாடஉள்`` என்றதில் டகரம் தனித்து நிற்கு மெனின், `உள்` என்பதனைக் கூனாக்குக.

பண் :

பாடல் எண் : 7

ஆவா அரிஅயன்இந்
திரன்வானோர்க் கரியசிவன்
வாவாஎன் றென்னையும்பூ
தலத்தேவலித் தாண்டுகொண்டான்
பூவார் அடிச்சுவடென்
தலைமேற்பொ றித்தலுமே
தேவான வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

திருமால், பிரமன் முதலியோர்க்கும் அருமை யாகிய பரமசிவம், ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் வலிந்தாண்டு கொண்டு, என் தலைமேல் தன் திருவடியைப் பதித்த அளவில் என் தலைக்கு ஓர் அழகுண்டான விதத்தைப் பாடித் தெள்ளேணம் கொட்டு வோம்.

குறிப்புரை :

``ஆவா` என்றது வியப்புக் குறிப்பு. அடுக்கு, விரைவுப் பொருட்டு. ``பூதலத்தே`` என வேண்டா கூறியது, இவ்வுலகின் சிறப்புத் தோன்றுதற்கு, வலித்து - ஈர்த்து. பூ ஆர் அடி - பூப்போலப் பொருந்திய பாதம். தே ஆனவா - சிவமாயினவாற்றை, இதன் கண்ணும் இரண்டாம் அடியில் கனிச்சீர் மயங்கிற்று.

பண் :

பாடல் எண் : 8

கறங்கோலை போல்வதோர்
காயப்பிறப்போ டிறப்பென்னும்
அறம்பாவம் என்றிரண்
டச்சந் தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான்
மறவா வண்ணம் நல்கியஅத்
திறம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.

பொழிப்புரை :

ஓலைச் சுருள் போல்வதாகிய உடம்பின் பிறப்பு, இறப்புகளால் நேரிடுகிற புண்ணிய பாவங்கள் என்கிற இரண்டு அச்சங் களையும் ஒழித்து என்னை ஆண்டு கொண்டவனாகிய சிவபெருமான் தன் திருவடியை நான் மறவாதபடி அருள் செய்த அவ்விதத்தைப்பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

கறங்கு - காற்றாடி, அதன்கண் உள்ள ஓலைகள் மாறி மாறி வருதல் விரைய நிகழ்தலின், அவை, அவ்வாறு வரும் பிறப்பிறப் பிற்கு உவமையாயின.
காயம் - உடம்பு, பிறப்பும், இறப்பும் உடற் கன்றி உயிர்க் கின்மையின், ``காயப் பிறப்போ டிறப்பு`` என்றார். அறமும் பிறப்பை விளைத்தலின், அஞ்சப்படுவதாயிற்று. ``என்று`` என்ற எண்ணிடைச் சொல் ஈற்றில் நின்று, முன்னதனோடும் இயைந்தது. இரண்டு அச்சம் - இரண்டனாலும் வரும் அச்சம். ``மறந்தேயும்`` என்றது, `சோர்ந்தும்` என்றவாறு.
``துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாடொறும்``
(தி. 3. ப.22. பா.1) எனத் திருஞானசம்பந்தரும்
``துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை``
(தி.5. ப.93. பா.8) எனத் திருநாவுக்கரசரும் அருளிச் செய்தல் காண்க. துஞ்சுதல் - உறங்குதல்; `உறங்குதல்` என்பது சுழுத்தி நிலையை ஆதலானும், சுழுத்தியில் மனம், புத்தி, அகங்காரம் என்பன இல்லையெனினும், சித்தம் உண்டு என்பது உண்மை நூல்களின் துணி பாகலானும் ஈண்டுக் கூறிய நினைவெல்லாம் சித்தத்தின் தொழிற் பாட்டினையாம். உறக்கத்தின் கண்ணும் சித்தம் தொழிற்படும் என்பது, உறங்கி எழுங்காலத்து, முன்னர்த் தெளியாதிருந்த ஒன்று தெளிவுற்று விளங்குதல் பற்றியும் அறிந்துகொள்ளப்படும். இதனானே, `பெரிதும் விரும்பப்படுகின்ற ஒன்றனைப் பற்றிய நினைவு உறக்கத்திலும் சித்தத்தைவிட்டு அகலாது நிற்கும்` என்பதும், `அதுவே, விழித் தெழுந்தவுடன் ஏனை அந்தக் கரணங்களினும் பொருந்தி விளங்கும்` என்பதும் பெறப்பட்டன. இவையெல்லாம் பற்றியே.
``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்``
(குறள் - 55) எனவும்,
``தம்மையே - சிந்தியா எழுவார்வினை தீர்ப்பரால்``
(தி.3. ப.54.பா.3.) எனவும்,
``எந்தையார் திருநாம நமச்சி வாய
என்றெழுவார்க் கிருவிசும்பில் இருக்கலாமே``
(தி.6.ப.93.பா.10) எனவும்,
``சிந்தித்தெழு வார்க்குநெல் லிக்கனியே``
(தி.7.ப.4.பா.3) எனவும்,
``தொழுதெழுவார் வினைவளம் நீறெழ``
(தி.8 திருக்கோவை. 118) எனவும் திருவாக்குக்கள் எழுந்தன. இறைவனையன்றிப் பிறிதொன்றிற் பற்றில்லாதவர்க்கன்றித் துயிலெழுங்காலத்து இறைவனைப் பற்றிய நினைவு தோன்றுதல் கூடாமை அறிக.
நல்கிய - அருள் செய்த. ``திறம்`` என்றது, கருணை. ``பாடல் பாடி` என்றது, ``உண்ணலும் உண்ணேன்`` (கலி - பாலை - 22) என்றாற்போல நின்றது. இதன் முதல் மூன்றடிகள் ஐஞ்சீராய் மயங்கின.

பண் :

பாடல் எண் : 9

கல்நா ருரித்தென்ன
என்னையுந்தன் கருணையினாற்
பொன்னார் கழல்பணித்
தாண்டபிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச்
செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னாதென் னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

கல்லில் நார் உரித்தாற்போல என்னையும் தன் பெருங்கருணையினால் தனது பொன்போலும் அருமையாகிய திருவடியைப் பணிவித்து ஆட்கொண்ட எம்பெருமானது பெரும் புகழைப் பாடி அக்களிப்பால் தென்னா தென்னாவென்று தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`உரித்தென்ன ஆண்டபிரான்` என இயையும். பணித்து - கொடுத்து`, `தென்னா தென்னா` என்பது, பாடற்கு இசை கூட்டும் முறை.

பண் :

பாடல் எண் : 10

கனவேயும் தேவர்கள்
காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத்
தோளியொடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட்
கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

தேவர்கள் கனவிலும் காண்பதற்கு அரிதாகிய திருவடியையுடைய இறைவன் உமாதேவியாரோடும் எழுந்தருளி நனவின் கண்ணே என்னை வலிந்து ஆட்கொண்ட விதத்தை மனத் தால் சிந்தித்து கண்களில் நீர் ததும்பத் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

கனவேயும் - கனவின்கண்ணேயும். ஏகாரம் பிரிநிலை; உம்மை, இழிவு சிறப்பு. புனம் - காடு. வேய் - மூங்கில், `வேயன தோளி` என இயையும். `நெஞ்சம் நயந்து` எனமாறுக.
நயத்தல் - விரும்புதல். சினம், வேலுக்கு அடை. பான்மை வழக்கால், உடையவரது சினத்தை வேலின்மேல் ஏற்றிக் கூறுப.

பண் :

பாடல் எண் : 11

கயல்மாண்ட கண்ணிதன்
பங்கன் எனைக்கலந் தாண்டலுமே
அயல்மாண் டருவினைச்
சுற்றமும்மாண் டவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள
வாசகம்மாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

உமாதேவி பங்கனாகிய சிவபெருமான் என்னை ஆட்கொள்ளுதலும் நான் அவனுக்கு அயலாம் தன்மை ஒழிந்து, சுற்றத்தாரை நீங்கி, பிரபஞ்ச ஆசை அற்று, மற்றுள்ள சொற்களெல்லாம் ஒழிந்து, என்னுடைய செயலற்றொழிந்த விதத்தைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`கயல்போல மாண்ட கண்ணி` என்க. ``மாண்ட`` எனவும், ``மாண்டு`` எனவும் வந்தன பலவற்றுள், முதற்கண் நின்ற தொன்றும் `மாண்` என்பது அடியாகவும், ஏனையவை, `மாள்` என்பது அடியாகவும் வந்தன. அயல் - (இறைவனுக்கு) அயலாம் தன்மை; இஃது அறியாமையால் உளதாவது. அருவினைச் சுற்றம் - நீக்குதற் கரிய வினையால் வந்த சுற்றம். மக்களுட் பலர் தம்முட் சுற்றமாய் இயைதல் வினைகாரணமாகவன்றிப் பிறிதின்மையின், இவ்வாறு அருளினார். அவனியின்மேல் மயல் - உலகத்தின்மேல் கொள்ளும் மோகம். `மனம், மொழி, மெய்` என்னும் மூன்றனுள், மயல் மனத்தின் கண்ணதாகலின், ஏனைய மொழி மெய்களின் கண்ணவாகிய சொல்லையும், செயலையும். ``மற்றுள்ள`` என்றார். இவற்றில், பசுகரணம் நீங்கிப் பதிகரணம் பெற்றவாறு குறிக்கப்பட்டது. ``என்னுடைய`` என்பது கடைநிலைத் தீவகமாய், முன்னின்றவற் றோடும் இயையும். இதன் முதலடி ஐஞ்சீரடியாய் வந்தது.

பண் :

பாடல் எண் : 12

முத்திக் குழன்று
முனிவர்குழாம் நனிவாட
அத்திக் கருளி
அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுட்
பதித்த பரஞ்சோதி
தித்திக்கு மாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

முனிவர் கூட்டம் முத்தியை விரும்பி உழன் றிருக்க, யானைக்கு அருள் செய்து அடியேனையும் ஆண்டு கொண் டருளி, என்னை, பத்தியாகிய கடலில் அழுந்துவித்த சிவபெருமான் எனக்கு இனிக்கும் விதத்தைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டு வோம்.

குறிப்புரை :

முத்திக்கு - வீடுபெறுதற்கு. உழன்று - வழிதேடி அலைந்து. ``வாட`` என்றது, `அவர்க்கு அருளாமல் வாடச் செய்து` என்றபடி, அத்தி - யானை. அடிகள், தம்மை`` இருகை யானை`` (தி.8 திருச்சதகம் - 41) எனக் கூறிக்கொள்வராகலின், `யானைக்கு அருள்செய்த வகையிலே எனக்கும் அருள்செய்தான்` என்றற்கு ``அத்திக்கருளி அடியேனை ஆண்டுகொண்டு`` என்றார். யானைக்கு அருள்செய்தது மதுரையிலும், மற்றும் திருவானைக்கா, திருக்காளத்தி என்னும் தலங்களிலும் நிகழ்ந்தமை வெளிப்படை. ``ஆண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த`` என்றதனான், இறைவனிடத்து அன்பு தோன்றுவது, அவன் அருள் வழியே` என்பதும், அதன்பின்னர், ``தித்திக்குமா பாடி`` என்றதனான். `அன்பினால் இன்பம் விளையும்` என்பதும் பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 13

பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

மண்ணுலகம், பாதாளம், விண்ணுலகம் என்னும் மூன்றுலகத்தாரிடத்தும் வேறுள்ள எவ்வுலகத்தாரிடத்தும், யான் சென்று பிறவாமல் என்னை ஆட்கொண்டருளின சிவபெருமானது நேர்மையையும் சீர்பாடலையும் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

``பாதாளர்`` எனவும், ``விண்ணோர்`` எனவும் பின்னர் வருதலின் அவற்றோடு இயைய, `பாரோர்` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று என்க; மூவுலகத்தாரையும் கூறிய வாறாயிற்று.
பாடு-பக்கம். ஆர் பாடும் சாராவகை அருளி, ஒருவரிடத்தும் சென்று அவரை வேண்டிக்கொள்ளாதபடி அருள்செய்து. நேர் - செம்மை; என்றது வெளிப்பட்டு நின்றமையை. இங்கும், ``பாடல்பாடி`` என்றதற்கு, மேல் (தி.8 திருத்தெள்ளேணம். பா.8) உரைத்தாங்கு உரைக்க. இதன் முதலடிக்கண், `பாடும் விண்ணோர்` என்றதில் மகர ஒற்றுக் குறுக்கமாய் அலகுபெறா தொழிதலின், ``பாடு`` என்றதனை நேர்பசையாகக் கொள்ள, அச்சீர் மூவசைச் சீராதல் அறிக. இனி, ``பாதாளர்`` என்றதனை, ``பாதாளத்தார்`` எனப் பாடம் ஓதி, இவ்வடியையும் ஐஞ்சீரடியாக்குவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 14

மாலே பிரமனே
மற்றொழிந்த தேவர்களே
நூலே நுழைவரியான்
நுண்ணியனாய் வந்தடியேன்
பாலே புகுந்து
பரிந்துருக்கும் பாவகத்தாற்
சேலேர்கண் நீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

திருமால் முதலியோர்க்கும் அரியனாகிய சிவபெருமான் என்னிடத்தே எழுந்தருளி என் மனத்தை உருகப் பண்ணிய பெருங்கருணையை நினைந்து கண்களில் நீர்ததும்பத் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

ஏகாரங்கள் எண்ணுப்பொருள. `ஒழிந்த மற்றுத் தேவர்கள்` என மாற்றி, `அவர் ஒழிந்த ஏனைத் தேவர்கள்` என உரைக்க. இனி, `மற்று, அசைநிலை` எனலுமாம். அணுகமாட்டாத இயைபுபற்றி, நூலையும் உடன் எண்ணினார். நுழைவு - அணுகுதல். ``அரியான்`` என்றது பெயர். நுண்ணியன் - நுண்பொருளை உணர்த்துபவன்; ஞானாசிரியன். பரிந்து - இரங்கி. பாவகம் - நினைவு. ``பாவகத்தால்`` என்றதில் ஆல் உருபு, ஒடு உருபின் பொருளில் வந்தது. ``தூங்கு கையான் ஓங்கு நடைய`` (புறம் - 22). என்றதிற் போல.

பண் :

பாடல் எண் : 15

உருகிப் பெருகி
உளங்குளிர முகந்துகொண்டு
பருகற் கினிய
பரங்கருணைத் தடங்கடலை
மருவித் திகழ்தென்னன்
வார்கழலே நினைந்தடியோம்
திருவைப் பரவிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

உருகுதல் முதலியவற்றைச் செய்து பருகுதற் கினிதாகிய பெருங் கருணைக் கடலாகிய சிவபெருமானது திருவடியையே சிந்தித்து, சிந்தித்தற்குரிய அடியோங்களுடைய பெரும் புண்ணியத்தைத் துதித்து நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

உருகி - மனம் நெகிழ்ந்து. பெருகி - அன்பு மிகுந்து. ``உருகி, பெருகி, முகந்துகொண்டு`` என்ற எச்சங்கள், ``பருகற்கு`` என்றதனோடு முடிந்தன. ``தென்னன்`` என்றதில் ஐயுருபு தொகுத்தல். ``வார்கழலே நினைந்து`` என்றதனை ``திருவை`` என்றதன் பின்னர்க் கூட்டுக. அடியோம் திரு - அடியோங்களது செல்வம். ஐயுருபுகள், ``பரவி`` என்றதனோடு முடியும்.

பண் :

பாடல் எண் : 16

புத்தன் புரந்தராதியர்
அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை
மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை
அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

புதுமையானவனும், இந்திராதியர் வணங்கும் படியாகிய பித்தனும், திருப்பெருந்துறையை உடையவனும், எமது பிறவியை ஒழித்தருளின அத்தனும், தில்லையம்பலத்தை உடையவனு மாகிய சிவபெருமானது அருவுருவமாகிய திருவடிகள் என் மனத்தில் தங்கியிருக்கும் விதத்தைப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டு வோம்.

குறிப்புரை :

`திருமால் புத்தனாய்த் திரிபுரத்தவரிடம் சென்று புத்த மதத்தைப் போதித்து, அவரது சிவபத்தியைப் போக்கியதனால் சூழ்ந்த பெரும்பாவத்தைச் சிவபூசை செய்து நீக்கிக் கொண்டான்` என்பது புராணமாகலின், அவ்வரலாற்றைக் குறிக்க, ``புத்தன்`` என வேறு கூறி, பின்னர்த், தேவர் பலராலும் வணங்கப்படுதலைக் குறிக்கும்வழி, ``மால்`` என்பதும் கூறினார். அதனால் அது, கூறியது கூறிற்றும், ஈண்டைக்கு இயைபின்மையுடையதும் ஆகாமை யறிக. இதற்குப் பிறரெல்லாம், `புதியோன்` என்றும், `ஞானம் உடையவன்` என்றும் உரைத்து, சிவபிரானுக்கே ஆக்கியுரைப்பாரும், `புத்த மதத்தின் ஆசிரியனை ஈண்டுக் கூறுதற்கு ஓர் இயைபின்று` என மறுப்பாரும் ஆயினர். `புத்த மதத்தை ஆக்கியவனும் மக்களுள் ஒருவனே` என இக் காலத்தார் கூறும் கருத்து அடிகட்கு இல்லாமை யறிக. புரந்தராதியர் - இந்திரன் முதலிய தேவர். `நம் சித்தம் புகுந்தவா` என்க. ``புகுந்தவா`` என்றதன்பின்னர், `பாடி` என்பது` எஞ்சிநின்றது.

பண் :

பாடல் எண் : 17

உவலைச் சமயங்கள்
ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல்உளனாய்க்
கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக்
கழலிணைகள் தந்தருளும்
செயலைப் பரவிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

பொய்ச்சமய சாத்திரக் கடலில் வீழ்ந்து தடுமாறுகின்ற என் துன்பத்தை ஒழித்துத் தன் திருவடியை எனக்குக் கொடுத்தருளின இறைவனது திருவருட்செயலைப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

உவலை - பொய். `உவலைச்சமயங்களது சாத்திரம்` என்க. ஒவ்வாத - பொருந்தாத. சவலை - மெலிவு. `மெலிவைத் தருகின்ற கடல்` என்க. ``கவலைக் கெடுத்து`` என்றதில் ககர ஒற்று, விரித்தல். அன்றி, `கவலுதலைக் கெடுத்து` என்றும் ஆம். இதனால், அடிகள் இறைவனால் ஆட்கொள்ளப்படுதற்கு முன்னர்ப் பல சமய சாத்திரங்களை ஆராய்ந்து, தெளிவு பெறாதிருந்தமை பெறப்படும். அவனது செயலை என எடுத்துக்கொண்டு உரைக்க.

பண் :

பாடல் எண் : 18

வான்கெட்டு மாருதம்
மாய்ந்தழல் நீர் மண்கெடினும்
தான்கெட்ட லின்றிச்
சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன்கெட் டுயிர்கெட்
டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

ஆகாயம் முதலாகிய பஞ்சபூதங்களும் அழிந்த காலத்தும் தான் அழியாதிருப்பவனாகிய சிவபெருமானைக் குறித்து, உடல், உயிர், உணர்வு என்பவை அழிந்து நான் என்பதும் அழிந்த விதத்தைப் பாடி தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

வான் - ஆகாயம், மாருதம் - காற்று. அழல் - நெருப்பு. அழிப்புக் காலத்தில் ஒன்றும் இன்றாதலை வலிவுறுத்தற்கு, கெடுதலை ஐம்பூதங்களிலும் தனித்தனி அருளிச்செய்தார். ``கெட்டலின்றி`` என்பதில் டகர ஒற்று விரித்தல். கெடுதல் - அழிதல். சலித்தல் - தளர்ச்சி யுறுதல். தன்மையனுக்கு - தன்மையன்பொருட்டு. ``உயிர்`` என்றது பிராணவாயுவை. ``கெட்டு`` என்பன, எண்ணின்கண் வந்த எச்சங்கள். ``நான்`` என்றதும், ``நாம்`` என்றதுபோல (தி.8. திருத்தெள்ளேணம். பா.4) ``நான்`` என்னும் உணர்வையேயாம்.

பண் :

பாடல் எண் : 19

விண்ணோர் முழுமுதல்
பாதாளத் தார்வித்து
மண்ணோர் மருந்தயன்
மாலுடைய வைப்படியோம்
கண்ணார வந்துநின்றான்
கருணைக் கழல்பாடித்
தென்னாதென் னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

தேவர் முதலானோர்க்கு முதல்வனும் பிரம விட்டுணுக்களுக்கு நிதிபோல்பவனும் எமது கண்ணுக்குப் புலப்பட்டு நின்றவனும் ஆகிய சிவபெருமானது திருவடியைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

இறைவன் தேவர்கட்கு ஒவ்வொரு தலைமையை வழங்கி அவர்கள் அனைவர்க்கும் தலைவனாய் இருத்தலின், ``விண் ணோர் முழுமுதல்`` என்றும், பாதல உலகத்தார் தம் பாவங்காரணமாக அவ்விடத்துக் கிடப்பராதலானும், அவரை அப்பாவத்தினின்று நீக்கி நல்வினையால் மேல் ஏறி இன்பம் பெறச் செய்தல் பற்றி, ``பாதாளத் தார் வித்து`` என்றும், மனிதரை ஆணவமலமாகிய மிருத்துவைக் கடந்து வீடுபெற்று என்றும் ஒரு பெற்றியராய் வாழுமாறு செய்தலின், ``மண்ணோர் மருந்து`` என்றும், (மருந்து - அமுதம்) அயன், மால் இருவரையும் அணுக்கராகக் கொண்டு, தானும் அவருள் ஒருவனாய், காரணக் கடவுளராகும் பெருந்தலைமையைத் தந்து மிக்க இன்பத்தைப் பயத்தலின், `அயன் மாலுடைய வைப்பு` என்றும், (வைப்பு - சேமநிதி) `இவ்வாறு அவரவர் தகுதிக்கேற்ப வேறுவேறுவகையாக அருள் புரிகின்ற அவன், யாதொரு தகுதியும் இல்லாத நமக்கு இவ்வூனக் கண்ணாலும் நிரம்பக் கண்டு இன்புறும்படி வந்து தங்கி அருள் புரிந்தான்` என்பார், ``அடியோம் கண்ணார வந்து நின்றான்`` என்றும், `அத்தகைய பேரருள் திறத்தை எஞ்ஞான்றும் மறவாது போற்றுவதன்றி நாம் அவனுக்குச் செய்யும் கைம்மாறு யாது` என்பார், ``கருணைக் கழல்பாடி....தெள்ளேணம் கொட்டாமோ`` என்றும் அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 20

குலம்பாடிக் கொக்கிற
கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட
வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

இறைவனது மேன்மையையும் குதிரைச் சேவகனாய் வந்த சிறப்பையும் உமாதேவியினது நன்மையையும் பாடி, இறைவன் நஞ்சுண்ட செய்தியைப் பாடி, தில்லையம்பலத்தில் நடிக்கின்ற திருவடிச்சிலம்பினது வெற்றியைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`குலம் - சிவபெருமானை வணங்கும் தேவர் கூட்ட மும், அடியார் கூட்டமும். கொக்கிறகு - கொக்குருவங்கொண்ட அசுரனை அழித்து, அதன் அடையாளமாகச் சிவபெருமான் தன் தலையில் அணிந்தது. இவ்வசுரனை, `குரண்டாசுரன்` எனக் குறிப்பிட்டு, இவ் வரலாற்றைக் கந்த புராணமும், உபதேச காண்டமும் கூறுதல் காண்க. இனி, `கொக்கிறகு` என்பது, `கொக்கு மந்தாரை` என்பதொரு மலரே என்பாரும் உளர். கோல்வளையாள் நலம் - உமையம்மையது திருமேனியழகு. ``நாள்தோறும் பாடி`` என முன்னே சென்று இயையும். ``நாள்தோறும் கொட்டாமோ`` என்றியைத்தலுமாம். அலம்பு ஆர் புனல் - ஒலித்தல் பொருந்திய நீர். `ஆடுகின்ற ஆடல்` என இயையும். சிலம்போடு கூடிய ஆடல்.

பண் :

பாடல் எண் : 1

பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ. 

பொழிப்புரை :

பூசுவது வெண்ணீறு; அணிவது பாம்பு; பேசுவது வேதம்; உங்கள் தெய்வத்தின் தன்மையிருந்தபடி என்னேடி? என்று புத்தன் வினாவ, பூசுவது, பூண்பது, பேசுவது என்னும் இவற்றைக் கொண்டு உனக்காகுங் காரியம் ஒன்றுமில்லை; அந்த பரமசிவன் எல்லா உயிர்களுக்கும் தக்க பயன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

இதனுள் எல்லா இடத்தும், ``ஏடீ`` என்றதனை முதலிற் கொள்க.
``பூண்பது`` என்றது, இனம் பற்றி ஒருமை. இயற்பழிக் கின்றாள் கூற்றாகலின், ``திருவாய்`` என்றது, பழித்தலை உட்கொண்ட தாம். மறை - பொருள் விளங்காத சொல். `வேதம்` என்பது, உண்மைப் பொருள். காண், முன்னிலை அசை. `ஏடி` என்பது தோழி முன்னிலைப் பெயர். கொண்டு - பற்றி. `இயல்பாய்` என ஆக்கம் வருவித்து, `அவன் இயல்பாய் எவ்வுயிர்க்கும் ஈசன் ஆனான்` என்க. ஈசன் - தலைவன், ``இயல்பாய்`` என்றது`அத்தலைமை அவனுக்குப் பிறர்தர வந்ததன்றி, தன்னோடு அவற்றிடை இயல்பாய் உள்ள ஏற்றத் தாழ்வுகளால் தானே அமைந்தது` என்றதாம். எனவே, பிறரது தலைமைபோல அவனது தலைமையை, பூசுவது, பூண்பது முதலியன கொண்டு அறியவேண்டு வது இல்லை என்றதாயிற்று.
`சிவன் சாந்தாகப் பூசுவதும் சாம்பல்; அணியாக அணிவதும் பாம்பு; சொல்வதும் பொருள் விளங்காத சொல் என்றால், அவன் உயர்ந்தோனாதல் எவ்வாறு?` என்பது இதனுள் எழுப்பப்பட்ட தடை,
`எல்லா உயிர்க்கும் அவனே தலைவன் என்பது யாவராலும் நன்கறியப்பட்டதானபொழுது, அவன் பூசுவது முதலியனபற்றி ஐயுற வேண்டுவது என்` என்பது மேல் நிகழ்த்தப்பட்ட தடைக்கு விடை.

பண் :

பாடல் எண் : 2

என்னப்பன் எம்பிரான்
எல்லார்க்குந் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக்
கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள்
மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச்
சாத்தினன்காண் சாழலோ.

பொழிப்புரை :

என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தலைவன், அப்படிப் பட்டவன் தைத்த துணியைக் கோவணமாகக் கொண்ட தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினவ, கலைகளையும், வேதங் களையும் சரடாகக் கொண்டமைந்த பொருளாகிய கோவணத்தைச் சாத்திக் கொண்டான் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

``தான்`` என்றதன்பின் தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தை விரிக்க, `அப்பனும், பிரானும், ஈசனுமாகிய, அவன்` என்க. இது தோழி கூறியதைத் தலைவி கொண்டு கூறியது, `அப்பன்` என்றது, `அன்பினால் அப்பன்போல்பவன்` என்றபடி. துன்னம் பெய் கோவணம் - கீளொடு பொருந்தத் தைத்த கோவணம். `கோவணமாகக் கொள்ளும் அது, என்றது, `கோவணத்தையே உடையாகக் கொள்ளு கின்ற அத்தன்மை` என்னும் பொருளது. மன்னுகலை துன்னுபொருள் மறை - நிலை பெற்ற நூல்களில் பொருந்திய பொருள்களையுடைய வேதம். இது, வேதத்தின் பொருளையே மற்றைய நூல்கொண்டு நிற் கின்றன என்றதாம். சரடு - கயிறு. அஃது இங்கு துறவர் கட்டும் கீளினைக் குறித்தல், ``வான் சரடு`` எனச் சிறப்பித்ததனால் பெறப் படும். தன்னையே - அப்பொருளையே. மறை பற்றுக்கோடும், பொருள் அதனைப் பற்றி நிற்பதும் ஆதல்பற்றி, அவை முறையே சரடும், கோவணமும் ஆயின.
`பூசுவது, பூண்பது முதலியன எவ்வாறாயினும், ஆடை இன்றி யமையாததன்றோ? அதுவும் இல்லாதவன் யாவர்க்கும் தலைவனாதல் எவ்வாறு` என்பது இதன்கண் நிகழ்த்திய தடை.
`அவனது சாங்க உபாங்கம் முதலியன பலவும் பிறர்போல அவன் தனக்கெனக் கொண்டனவன்றி, உயிர்கள் பொருட்டுக் கொண்டனவாகலின், அவை ஏற்ற பெற்றியான் எவ்வாறும் ஆம்` என்பது அதற்குக் கூறப்பட்ட விடை.

பண் :

பாடல் எண் : 3

கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங்
கற்பொடிகாண் சாழலோ.

பொழிப்புரை :

சுடுகாட்டைக் கோயிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்டான். அன்றியும் அவனுக்குத் தாய் தந்தை யரும் இல்லை; இத்தன்மையனோ உங்கள் கடவுள்? என்று புத்தன் வினாவ, எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், அவன் சினந்தால் உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

கோயில் - அரண்மனை; நல்லாடை - உயர்ந்த உடை. இதன்பின் `ஆகுக` என்பது வருவிக்க. ``தந்தை`` என்றவிடத்து எச்ச வும்மை தொகுத்தலாயிற்று. ``தாயும் இலி தந்தையும் இலி தான் தனியன்`` என்றது, ஒருவரும் துணையில்லாத தனிமையன்` என்று இகழ்ந்ததாம். காயில் - வெகுண்டால்.
`உன்னாற் புகழப்பட்ட தலைவனுக்குச் சுடுகாடே அரண் மனையும், புலித்தோலே பொன்னாடையுமாதல் ஒருபால் நிற்க; அவன், துணையற்ற தனியனாய் இருத்தல் பொருந்துமோ` என்பது தடை.
`அவன் வெகுண்டவழி முன்னிற்பது ஒன்றுமில்லையாதலின், அவனுக்குத் துணை வேண்டுவது எற்றுக்கு` என்பது விடை.
``தாயும் இலி தந்தை இலி`` என்றதனால் `பிறப்பற்றவன்` என் பது கூறப்பட்டது. ``தந்தையாரொடு தாயிலர்`` (தி.3 ப.54 பா.3) என்று அருளிச்செய்தார் ஞானசம்பந்தர். இதன் மூன்றாம் அடி, மடக்காய் வந்தது, இவ்வாறு இனி வரும் பாட்டுக்களினும் வருதல் காண்க.

பண் :

பாடல் எண் : 4

அயனை அநங்கனை
அந்தகனைச் சந்திரனை
வயனங்கண் மாயா
வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய
நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத்
தாழ்குழலாய் சாழலோ. 

பொழிப்புரை :

பிரமனையும், மன்மதனையும், யமனையும், சந்திரனையும் வடுப்படுத்தினன்; இதுதானோ உங்கள் கடவுளின் தன்மை? என்று புத்தன் வினாவ, முக்கண்ணனாகிய எமது கடவுளே தண்டித்தால், தேவர்களுக்கு அதுவும் வெற்றியன்றோ என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

வசனம், `வயனம்` என்றாயிற்று. `சொல்` என்னும் பொருட்டாகிய இது, இங்கு வசைச் சொல்லைக் குறித்து நின்றது. மாயா-கெடாத. வடு - அடையாளம். அயன் - பிரமன்; அவனை வடுச்செய்தது, அவன் தலைகளுள் ஒன்றைக் கிள்ளியது. அனங்கன் - மன்மதன்; அவனை வடுச் செய்தது, உருவிலி ஆக்கியது. `அனங்கன்` என்பதும் அதனாற் பெற்ற பெயரேயாம். அந்தகன் - கூற்றுவன். அவனை வடுச் செய்தது, காலால் உதைத்து உருட்டியது, இதனால், அவன் மார்பில் தழும்புடையனானான் என்றலுமாம். சந்திரனை வடுச்செய்தது, தக்கன் வேள்வியில் காலால் தேய்த்தது. இதுவே, அவனுக்கு மறுவாயிற்று என்றலுமாம். நயனம் - கண். ``நாயகனே`` என்ற பிரிநிலை ஏகாரம், சிறப்புணர்த்திற்று. `தன்னின் மெலியார் மாட்டு அன்பும், அருளும் இல்லாது அவரை நலிகின்றவன் தலைவனாதல் எவ்வாறு` என்பது தடை.
`தந்தை தாயர், தம் மக்களை ஒறுத்தல் அவரது நலத்தின் பொருட்டேயன்றிப் பிறிதில்லாமைபோல, சிவபெருமானும் அயன் முதலியோரை ஒறுத்தது அவர் தம் குற்றத்தின் நீங்கி உய்தி பெறற் பொருட்டேயாகலின், அஃது அவர்கட்கு நன்மை செய்ததேயாம்` என்பது விடை.
``கொன்றது வினையைக் கொன்று
நின்றஅக் குணம்என் றோரார்``
(-சிவஞானசித்தி. சூ.1.51)
எனவும்,
தந்தைதாய் பெற்ற தத்தம்
புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்
வந்திடா விடினு றுக்கி
வளாரினால் அடித்துத் தீய
பந்தமும் இடுவர்; எல்லாம்
பார்த்திடிற் பரிவே யாகும்;
இந்தநீர் முறைமை யன்றோ
ஈசனார் முனிவும் என்றும்.
-சிவஞானசித்தி. சூ.2.16
எனவும் கூறிய விளக்கங்களைக் காண்க. இவ்வாறு ஒறுக்கும் திருவருள், `மறக்கருணை` என்றும், வேண்டுவார்க்கு அவர் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கும் திருவருள், `அறக்கருணை` என்றும் சொல்லப்படும் என்க.
நெற்றிக்கண் வியாபக உணர்வாகிய ஞானத்தைக் குறிப்ப தாகலின், `அஃதுடையவன், அதனை இல்லாதவர்கட்குத் தலைவனாய் மறக்கருணை அறக்கருணைகளை அவர்கட்கு ஏற்ற பெற்றியாற் செய்து அவர்களை உய்யக்கொள்ளுதல் இயல்பு` என்பதைக் குறிப் பாற்பெற வைத்தமையின், `நயனங்கள் மூன்றுடைய நாயகன்` என்றது உடம்பொடு புணர்த்தல். நன்மையை, `வெற்றி` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 5

தக்கனையும் எச்சனையுந்
தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற்
றருளினன்காண் சாழலோ.

பொழிப்புரை :

தக்கனையும், யாகத்து அதிதேவரையும் தலை அரிந்து, கூடி வந்த தேவர்களையும் அழித்தது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ, தேவர்களை அழித்தாலும் மறுபடியும் அவர்களை உயிர் பெறச் செய்து, யாகத்தினை நடத்தியவனாகிய தக்கனுக்கு ஆட்டின் தலையை அருள் செய்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

குறிப்புரை :

எச்சன் - வேள்வித் தேவன். இவனைத் தக்கன் வேள்வி யில் வீரபத்திரர் தலையறுத்தமை,
மணனயர் சாலையில் மகத்தின் தெய்வதம்
பிணைஎன வெருக்கொடு பெயர்ந்து போதலும்
குணமிகு வரிசிலை குனித்து வீரன் ஓர்
கணைதொடுத்து அவன்தலை களத்தின் வீட்டினான்.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.37
``இரிந்திடு கின்றதோர் எச்சன் என்பவன்
சிரந்துணி படுதலும்`` -தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.38
எனக் கந்தபுராணத்துட் கூறப்பட்டமை காண்க. பிணை - மான். `வந்தவழி` என்பது, `வந்து` எனத்திரிந்து நின்றது. அவர் - அக்கணத்தவர். வேள்வி செய்பவனையும், வேள்வித் தெய்வத்தையும் குறிப்பதாய, `எச்சன்` என்னும் பல பொருள் ஒரு சொல், ``மிகைத்தலை மற்று அருளினன்`` எனப் பின்னர் வந்த குறிப்பினால், வேள்வி செய்தவனாகிய தக்கனையே சுட்டி நின்றது. மிகைத்தலை - வேண்டாத, (நாணத்தக்க) தலை; அஃது யாட்டுத்தலை. `மிகைத்தலையாக` என ஆக்கம் வருவிக்க. மற்று - மற்றொன்று (தேவர்க்குப் பொருந்தாத ஒன்று). தக்கன் வேள்வியில் தேவர்களை வீரபத்திரர் ஒறுத்தஞான்று, தக்கன் தலையை மட்டில் தீக்கிரை ஆக்கியதையும் அதனால் பின்பு சிவபெருமான் இறந்தவரை உயிர்பெற்றெழச் செய்தபொழுது தக்கன் எழாதொழிய, வேள்வியின் பொருட்டு வெட்டப்பட்ட யாட்டின் தலைகளுள் ஒன்றை அவன் உடலிற் பொருத்தி எழச் செய்ததையும் கந்தபுராணம்,
கண்டு மற்றது வீரபத் திரன்எனும் கடவுள்
கொண்ட சீற்றமொ டேகியே தக்கனைக் குறுகி
அண்ட ரோடுநீ ஈசனை இகழ்ந்தனை அதனால்
தண்டம் ஈதென வாள்கொடே அவன்தலை தடிந்தான்.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.50
அற்ற தோர்சென்னி வீழுமுன் இறைவன் அங்கையினால்
பற்றி ஆயிடை அலமரும் பாவகற் பாராத்
திற்றி ஈதெனக் கொடுத்தனன் கொடுத்தலும் செந்தீ
மற்றொர் மாத்திரைப் போதினில் மிசைந்தது மன்னோ.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.51
எனவும்,
வித்தக வலிகொள் பூதன்
வீரபத் திரன்றன் முன்னர்
உய்த்தலும் அதன்மேல் வேள்விக்
குண்டியாம் பசுவுள் வீந்த
மைத்தலை கண்டு சேர்த்தி
எழுகென்றான் மறைகள் போற்றும்
அத்தனை இகழும் நீரர்
ஆவர்இப் பரிசே என்னா.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.163
என்றலும் உயிர்பெற் றங்கண்
எழுந்தஅத் தக்கன் முன்னம்
நின்றதோர் வீரற் கண்டு
நெஞ்சுதுண் ணென்ன அஞ்சித்
தன்தக விழந்து பெற்ற
தலைகொடு வணங்கி நாணி
அன்றிசெய் நிலைமை நாடி
அரந்தையங் கடலுட் பட்டான்.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.164
எனவும் விளக்கிற்று. மை-யாடு. அரந்தை- துன்பம்.
யாவரும் உயிர்பெற்றெழுந்த பின்னர், வேள்வித்தேவன் முதலிய தேவர் பலருடன் தக்கனும் சிவபெருமானை வணங்கி அருள் பெற்றனன் என்பதையும்,
மீத்தகு விண்ணு ளோரும்,
வேள்வியந் தேவும், மாலும்,
பூத்திகழ் கமலத் தோனும்
புதல்வனும், முனிவர் தாமும்
ஏத்தினர் வணங்கி நிற்ப
எம்மைஆ ளுடைய முக்கண்
ஆத்தன்அங் கவரை நோக்கி
இவைசில அருளிச் செய்வான்.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.169.
என அவ்விடத்துக் கூறப்பட்டமை அறிக. புதல்வன் - பிரமன் மகன்; தக்கன்.
தக்கனையன்றிப் பிறர் ஒருவர்க்கும் சிவபெருமான் மாற்றுத் தலை அருளாமையின், இங்கு, இறுதிக்கண் வந்த ``எச்சன்``, என்றது, பிறர் ஒருவர்க்கும் ஆகாமை அறிக.
`வடுச்செய்தது பொருந்துமாயினும், பலரைக் கொன் றொழித்தது பொருந்துமோ` என்பது தடை.
`பலரைக் கொன்றொழித்துப் போயினான் அல்லன்; மீளவும் அவரை உயிர்பெற்றெழச் செய்து அருள்வழங்கியே சென்றான்; அவருள் முன்னின்றவனையும் அழித்தொழியாது எழச்செய்து, மாற்றுத்தலையால் அவனது குற்றத்தின் முதன்மை எஞ்ஞான்றும் விளங்கச் செய்தான்; அதனால், அவர் தம்மைத் தொலைத்தது மாத்திரையே கூறிப் பழித்தல் பொருந்தாது` என்பது விடை.
தக்கன் வேள்வி நிகழ்ச்சியை இவ் இருதிருப்பாட்டுக்களில் அடிகள் எடுத்தோதி வலியுறுத்ததனானே, பின்னர் ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் தம் திருப்பதிகங்களுள் இதனை யாண்டும் பயில எடுத்து அருளிச்செய்தனர்.

பண் :

பாடல் எண் : 6

அலரவனும் மாலவனும்
அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந்
தவிரார்காண் சாழலோ.

பொழிப்புரை :

பிரம விட்டுணுக்கள் அறிய வொண்ணாமல் நெருப் புருவாய் நின்றது யாதுக்கு? என்று புத்தன் வினாவ, அப்படி எம் மிறைவன் நில்லாவிடின், அவ்விருவரும் தமது ஆங்காரத்தை விடார் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

முதல் - அடி, அண்டத்திற்கு அப்பாற்பட்டதையே அண்டம் என்றார். `நிலத்தடியின்கீழும் அண்டத்திற்கு அப்பாலும் உற`- என்க.
சலம் - மிக்க வெகுளி. `சலமுகத்தாற்செய்த` என ஒரு சொல் வருவிக்க. முகம்-வாயில்; காரணம். `அகங்காரம் ஆங்காரம்` என மரு விற்று. இஃது ஆகுபெயராய், இதனால் விளைந்த போரை உணர்த் திற்று.
`அயனும், மாலும் ஒரு பிரமகற்பத் தொடக்கத்தில் தாங்களே உலகிற்கு முதல்வர் என்று தம்முட் கலாய்த்துச் செய்த போரினால் உலகம் பெரிதும் இன்னற்படுவதை அறிந்து தேவர்கள் செய்த முறை யீட்டிற்கிரங்கிய சிவபெருமான், பாதலத்தின் கீழும் அண்ட முகட்டின் மேலும் ஊடுருவி நிற்கும் ஒரு ஒளித்தம்பமாய்த் தோன்ற, அதனைக் கண்ட அவர்கள் அஞ்சி நின்று, `இதன் அடியையும், முடியையும் காண்பவரே உலகிற்கு முதல்வர்` எனத் தம்முள் முடிவு செய்து கொண்டு, திருமால் பன்றி வடிவங்கொண்டு நிலத்தின் கீழ்ச் சென்றும், அயன் அன்ன வடிவங்கொண்டு விண்ணின் மேற் சென்றும் அடி முடிகளைக் காண இயலாது மீண்டு வந்து, அது சிவபெருமான் கொண்ட வடிவமே என்பதறிந்து, அப்பெருமானை வணங்கித் தம் செருக்கொழிந்தனர்` என்னும் புராண வரலாறு நன்கறியப்பட்ட தொன்று.
இதனை இங்கு அடிகள் அருளிச்செய்தவாறே, கந்தபுராண ஆசிரியர், யாக சங்காரப் படலத்தையடுத்து, `அடி முடிதேடு படலம்` என அமைத்துக் கூறினமை காண்க. இவ்வரலாற்றை அடிகள் திருத் தோணோக்கத்துப் பன்னிரண்டாம் திருப்பாட்டுள் இன்னும் சிறிது விளக்கமாக அருளிச்செய்வார்.
இங்ஙனம் இவர் இதனைப் பல விடத்தும் பெரிதும் அருளிச் செய்ததனானே பின்வந்த இருபேராசிரியரும் (ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும்) இதனை முன்னை வரலாற்றினும் பெரும்பான்மை யாக ஆங்காங்கு எடுத்து அருளிச்செய்து போந்தனர்,
`சிலரை வெளிப்பட்டு நின்று ஒறுத்தல் பொருந்துவதாயினும், சிலரை மறைந்து நின்று மருட்டுதல் தலைவராயினார்க்குப் பொருந் துமோ` என்பது தடை.
`நோய்க்குத் தகவே மருத்துவன் மருந்து கொடுத்தல் போல, அவரவர்க்கு ஏற்ற முறையானே அவரவரைத் திருத்துதல் வேண்டு மாகலின், மறைந்து நின்று மருட்டித் திருத்துதலும் குற்றமாகாது` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 7

மலைமகளை யொருபாகம்
வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற்
பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற்
பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து
பெருங்கேடாஞ் சாழலோ.

பொழிப்புரை :

பார்வதியை ஒரு பாகத்தில் அமைத்துக் கொள்ளு தலும், மற்றொருத்தியாகிய கங்கை நீருருவாகி அவன் சடையில் பாய் வதற்குக் காரணம் யாதென்று? புத்தன் வினாவ, `நீருருவாகி அவ் விறைவனது சடையில் பாயாவிடின், பூமி முழுதும் பாதாளத்தில் வீழ்ந்துபெருங்கேடு அடையும்` என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

மலைமகள் - உமாதேவி. மற்றொருத்தி, கங்கை. சல முகத்தால் - நீர்வடிவமாய்; `வஞ்சனையால்` என்பது நயம்.
தரணி - பூமி. பிலம் - பாதாளத்திற்குச் செல்லும் வழி. பெருங்கேடு ஆம் - பேரழிவு உண்டாகும்; உண்டாகியிருக்கும்.
பகீரதன் பொருட்டு நிலவுலகத்திற்கு வந்த கங்கையைச் சிவ பெருமான் தனது சடையில் தாங்கி நின்றமை புராண வரலாறாதல் வெளிப்படை.
`ஒருத்தியை மணந்தபின் மற்றொருத்தியை அவளறியாமல் மறைத்து வைத்திருத்தல் உயர்ந்த தலைவராவார்க்குப் பொருந்துமோ` என்பது தடை.
`மற்றொருத்தியாவாள் உண்மையில் உலகை அழிக்க வந்தவளேயாகலானும், அவளைச் சடையில் வைத்திருத்தல் உலகத்தைக் காத்தற் பொருட்டேயன்றி, கரவினால் இன்பம் நுகர்தற் பொருட்டன்றாகலானும் அஃது அவற்குப் புகழாவதன்றிக் குற்றமாதல் எவ்வாறு` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 8

கோலால மாகிக்
குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான்
அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல்
அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம்
வீடுவர்காண் சாழலோ.

பொழிப்புரை :

அக்காலத்தில் பாற்கடலில் உண்டாகிய நஞ்சை யுண்டான்; அதற்குக் காரணம் யாதென்று? புத்தன் வினாவ, அந்த நஞ்சை எம்மிறைவன் உண்டிலனாயின் பிரம விட்டுணுக்கள் முதலான தேவர்கள் எல்லாரும் அன்றே மடிந்து ஒழிவார்கள் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

குறிப்புரை :

`கோலாகலம்` என்பது, `கோலாலம்` எனக் குறைந்து நின்றது, `ஆரவாரம்` என்பது பொருள். `ஆகியதன்பின்` என்பது, `ஆகி` எனத் திரிந்து நின்றது. `அமரரெல்லாம் ஆரவாரம் செய்து கடைந்தபொழுது` என்பதுபொருள்.
ஆலாலம் - நஞ்சு. ``ஆலாலம் உண்டான்`` என்றது `அமுதம் உண்ணாது நஞ்சம் உண்டான்` என்றவாறு. சதுர்- திறல். ``என்`` என்றது. `எத்தன்மைத்து` என இகழ்தற்குறிப்பாய் நின்றது. ``உள்ளிட்ட`` என்றது, `அயன், மால்` என்பவரது சிறப்புணர்த்தி நின்றது. வீடுவர் - அழிவர்; அழிந்திருப்பர்.
`கனியிருப்பக் காய்கவர்தல்போல, அமுதத்தை உண்ணாது நஞ்சினை உண்டது பித்தர் செயலாவதல்லது. அறிவுடையார் செய லாதல் எவ்வாறு` என்பது தடை.
`நஞ்சினை உண்டும் அவன் இறவாமையும், அமுதம் உண்டும் பிறர் இறத்தலும் கேட்கப்படுதலின், அச்செயல் அவன் அவர் களை முன்பே இறவாது காக்கச்செய்த அருட்செயலாதல் தெளிவு.
அதனால், அஃது அறிவும், அருளும் உடைமையாவதல்லது, பித்தாதல் யாங்ஙனம்` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 9

தென்பா லுகந்தாடுந்
தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான்
பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற்
பேதாய் இருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி
வீடுவர்காண் சாழலோ. 

பொழிப்புரை :

தென்திசை நோக்கி நடிக்கின்ற தில்லைச் சிற்றம் பலத்தான் பெண் பாகத்தை விரும்பினான், இவன் பெரும் பித்தனோ? என்று புத்தன் வினாவ, எம்மிறைவன் பெண்பாகத்தை விரும்பில னாயின், நிலவுலகத்தோர் யாவரும் யோகத்தை அடைந்து மேலுல கத்தைச் சேர்வார்கள் என்று ஊமைப்பெண் விடை கூறினாள்.

குறிப்புரை :

தென்பால் உகந்து - தென்றிசையை விரும்பி. இது, கூத்தப்பெருமான் தெற்குநோக்கி நிற்றலைக் குறித்தது. பெண் பால் உகந்தான் - ஒருத்தியைப் பக்கத்தே நீங்காது கொண்டான். உகத்தல் - விரும்புதல், அஃது எஞ்ஞான்றும் உடனாயிருக்கும் தன் காரியத்தைத் தோற்றி நின்றது, `ஆதலின் பெரும்பித்தன்` என்க. பேதாய் - பெண்ணே; `அறிவிலியே` என்பது நயம். ``விண்பால்`` என்றதன்பின், `நோக்கி` என்பது வருவிக்க. `யோகம்` என்பது, `யோகு` என நின்றது. ``நிலத்தோர்`` என்றது, `உலகிலுள்ளோர் அனைவரும்` என்றபடி.
``தவமும் தவமுடையார்க் காகும்; அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.``
(குறள் - 262.) என்றவாறு, துறவறத்திற்கு உரியரல்லாதவர் அதனை மேற்கொள்ளின் இரண்டறங்களையும் இழந்து கெடுவராதலின், ``இருநிலத்தோர், விண்பாலியோகெய்தி வீடுவர்`` என்று அருளினார். `உடலின் தொழிற்பாட்டிற்கு உயிரின் இயைபு இன்றியமையாத வாறுபோல, உயிர்களின் தொழிற்பாட்டிற்கு இறைவனது இயைபு இன்றியமையாமையின், அவன் அவரவருக்கு ஏற்றவாற்றான் இயைந்து நிற்றல் வேண்டும். அதனால், சிலர்க்குப் போகியாகியும், சிலருக்கு யோகியாகியும் நிற்பன்; இவ்வாறின்றி யோகியாயே நிற்பின், யோகத்திற்கு உரியவாகாது போகத்திற்கே உரியவாய உயிர் கள் கேடுறும்` என்பது இத்திருப்பாட்டின் கருத்து.
போகியாய் இருந்து யிர்க்குப்
போகத்தைப் புரிதல் ஓரார்;
யோகியாய் யோக முத்தி
உதவுத லதுவும் ஓரார்;
வேகியா னாற்போல் செய்த
வினையினை வீட்டல் ஓரார்;
ஊகியா மூட ரெல்லாம்
உம்பரின் ஒருவன் என்பர்.
(சிவஞானசித்தி சூ. 1,50.) என்றது காண்க.
இறைவன் போகியாய் இல்லாதொழியின் உயிர்கட்குப் போகம் அமையமாட்டாது என்பதை, `அவன் யோகியாய் இருந்து சன காதி நால்வர்க்கு ஞானத்தை அருளியபொழுது யாதோர் உயிர்க்கும் போகமில்லையாய்ப் பிரமனது படைப்புத்தொழிலும் இல்லை யாயிற்று` எனவும், `பின்னர் அவ்யோகம் நீங்கி மலைமகளை மணந்த பொழுதே உயிர்கட்குப்போகம் அமைந்தது` எனவும் வரும் கந்த புராண வரலாறு நன்கு உணர்த்தும். இன்னும், `போகத்தைப் பயப் பிக்கும் கடவுள் காமனேபோலத் தோன்றினும், உண்மையில் அவன் அதற்கு உரியவன் அல்லன்; எல்லார்க்கும் எல்லாவற்றையும் தரு பவன் சிவபெருமானே` என்பதும், அப்பெருமான் காமனை எரித் தமையைக்கூறும் அப்புராணத்தால் அறியப்படும். அதனால்,
கண்ணுதல் யோகி ருப்பக்
காமன்நின் றிடவேட் கைக்கு
விண்ணுறு தேவ ராதி
மெலிந்தமை ஓரார்; மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ
எரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப்
பேரின்பம் அளித்த தோரார்.

(சிவஞானசித்தி சூ.1.53.) என்றார் அருணந்தி சிவாசாரியார்.
`உலகவர்போல மனைவியை உடையனாய் இருப்பவன் கடவுளாவனோ` என்பது இங்கு எழுப்பப்பட்ட தடை.
`அவ்வாறிருத்தல் தன்பொருட்டன்றி உயிர்கள் பொருட்டே ஆகலானும், அங்ஙனமாகவே, அஃது இளஞ்சிறாரை மகிழ்விக்க அவரொடு விளையாட்டயரும் பெற்றோரது செயல்போல நாடக மாத்திரையான் மேற்கொள்வதாதலன்றி, உண்மையான் விரும்பிக் கொள்வதன்றாதல் இனிது விளங்குதலானும், அஃது உலகத்தை நடத்தும் இறைவற்கு இன்றியமையாததொரு செயலாவதன்றி, இறைமைத் தன்மையொடு மாறாதல் எங்ஙனம்` என்பது விடை.
இது, கடவுள் மாட்டு நயப்புற்றவளது கூற்றேயாகலின், கடவுட்டன்மைபற்றிக் கூறலும் பொருந்துவதாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 10

தானந்தம் இல்லான்
தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர்
வான்பொருள்காண் சாழலோ. 

பொழிப்புரை :

தான் முடிவு இல்லாதவனாயிருந்தும் தன்னை அடைந்த என்னை ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்தான், இது என்ன புதுமை? என்று புத்தன் வினாவ, ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

`தானோ` எனச் சிறப்பு ஓகாரம் விரித்து, `நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான்; அஃது எவ்வாறு` என இசையெச்சம் வருவித்து உரைக்க. ``தனையடைந்த`` என்றது, தலைவி தனக்கு வேட்கையுண்மையை உடம்பட்டும், அடிகள் தாம் தம்மை ஆளவந்த ஆசிரியன்வழி நின்றமையை உடம்பட்டும் கூறியதாம். உந்துதல் - செலுத்துதல்; அது. வலவன் ஏவா வான ஊர்தியை (புறம் - 27.) என்க. வான் பொருள் - எட்டாத பொருள். ஆனந்த வெள்ளத்து அழுத்துவிப்பன அவன் திருவடிகளே என்பது அனுவாத முகத்தாற் பெறவைத்துக் கூறலின், முதல்வனைப்பற்றி வினாவியவட்கு, அவனது திருவடிகளது சிறப்புக் கூறினமை விடைவழுவாகாமை அறிக. உயிர்கட்கு இன்பமாவது இறைவனது சத்தியாதலானும் திருவடியே உயிர்களை ஆனந்த வெள்ளத்து அழுத்துவிப்பனவாதல் அறிக. இத்திருப்பாட்டின் சொல்நடை ``ஆனந்த வெள்ளத் தழுந்துமொ ராருயிர்`` (தி.8 கோவையார் - 307) என்னும் பாட்டோடு ஒத்திருத்தல் அறியத்தக்கது.
``ஆதி அந்தம் இல்லாத கடவுள் மானிடப் பெண்டிர்க்கும் இன்பம் தருவானோ; தாரான் ஆதலின், எனக்குப் பேரின்பம் தந்தவன் அத்தகைய கடவுளாதல் எவ்வாறு` என்பது தலைவி கூற்றிற்கு இயைய எழுந்த தடை. `தகுதி` இல்லாதார்க்கும் வீடு தருவானோ` என்பது அடி களது அனுபவத்திற்கியைய இதன்கண் உள்ளுறையாய் அமைந்து நிற்பது.
`அவ்வாறு உனக்கு அவன் எதிர்வந்து பேரின்பம் அளித்தது அவன் கருணையாலே காண்; அக்கருணை உனது முன்னைத் தவத் தால் உனக்கு எளிதிற்கிடைத்ததாயினும், அது, வானத்திற் பறக்கும் தேவர்களுக்கும் எட்டாததொன்று` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 11

நங்காய் இதென்னதவம்
நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே
காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள்
காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத்
தரித்தனன்காண் சாழலோ.

பொழிப்புரை :

நரம்போடு கூடிய எலும்புக் கூட்டினை அணிந்து முழுவெலும்பைத் தோளில் சுமந்தான். இது என்ன தவமோ? என்று புத்தன் வினாவ முழுவெலும்பு வந்த விதத்தைக் கேள். கால, கால வேற்றுமையால் பிரம விட்டுணுக்கள் இறக்க, அவர்கள் எலும்புக் கூட்டினை தரித்தான் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

``தவம்`` என்றது ஆகுபெயரால், தவக்கோலத்தை உணர்த்திற்று, ``தவமறைந்தல்லவை செய்தல்`` (குறள்.274) என்புழிப்போல. பின்னர், ``தோள்மேல்`` என வருகின்றமையின், முன்னர் `மார்பின்மேல்` என்பது வருவிக்க, எலும்பை நரம்போடு அணிந்து என்றதனால், அவை நரம்பினால் தொடுக்கப்படும் என்பது பெறுதும். ``அணிந்து`` என்றதற்கு அணிந்த தன்றியும் என உரைக்க. கங்காளம் - எலும்புக்கூடு.
`மாயோன் ஒருவனது வாழ்நாளில் பிரமர் நூற்றுவர் தோன்றி வாழ்ந்து அழிவர்` என்பதும், `அவ்வழி நூறாவது எண்ணு முறைமைக் கண் வரும் பிரமன் இறக்குங்காலத்து மாலும் இறக்க, அவ்விருவரது எலும்புக் கூட்டினையும் சிவபெருமான் தனது இரு தோள்களிலும் ஏற்று நடம்புரிவன்` என்பதும் புராண வரலாறாதல்பற்றி எழுந்தவை, இத்திருப்பாட்டின்கண் உள்ள தடை விடைகள்.
ஆமா கேள் - அவனுக்கு ஏற்புடையவாயினவாற்றைக் கேள். அந்தரம் - முடிவு. ``காலாந்தரத்து`` என்றதனை, ``தரித்தனன்`` என்ற தற்கு முன்னர்க் கூட்டுக. ``இருவர்`` என்றது, தொகைக் குறிப்பாய், `அயன், மால்` என்பவரை உணர்த்திற்று. ``காலம்`` என்றதும், அதனது முடிவை. ``செய்ய`` என்ற பொதுவினை, `காட்ட` எனச் சிறப்பு வினை யாய் நின்றது. `அவர் காலாந்தரத்துத் தரித்தனன்` எனச் சுட்டுப்பெயர் வருவித்துரைக்க.
`சடை, கல்லாடை முதலியவற்றைக் கூறின், நீ அவை தவக் கோலம் என்பாய்; அருளுக்கு மாறாய நரம்போடு எலும்புகளும் அன்னவாயொழியினும், கங்காளமும் தவக்கோலமோ` என்பது தடை.
`கங்காளம் காதலித்தது, தவக்கோலம் அன்று; அயன், மால் என்பவரும் நிலையாமையுடையரே என்பது உணர்த்துதற் பொருட் டாம்` என்பது விடை.
இதனால், `சிவபிரானது திருவேடங்கள் பலவும், பலப்பல உண்மைகளை உணர்த்து முகத்தான், உண்மை ஞானத்தைப் பயக்கும் என்பது` போந்தது. இதனை, ``மருந்துவேண்டில் இவை` என்னும் திருந்துதேவன்குடிப் பதிகத்துள், (தி.3 ப.25) ஞானசம்பந்தர்,
``வீதிபோக் காவன, வினையைவீட் டுவ்வன,
ஓதிஓர்க் கப்படாப் பொருளைஓர் விப்பன
........அடிகள்வே டங்களே. ``
``விண்ணுலா வும்நெறி, வீடுகாட் டும்நெறி
மண்ணுலா வும்நெறி, மயக்கந்தீர்க் கும்நெறி
........அடிகள்வே டங்களே``
என்றாற்போலப் பலபட விளக்கியும், `இவ்வாற்றால் இவை பழித்தற்குரியனவல்ல; பெரிதும் புகழ்தற்குரியன` என்பதை,
``பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா,
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும்
....... .....அடிகள்வே டங்களே``
என வலியுறுத்தியும் அருளிச்செய்தல் காண்க. இங்கு அடிகள் எடுத்தோதி வலியுறுத்தருளிய இக் கங்காள வேடத்தின் வரலாற்றை,
பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும்,
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.
(தி.4 ப.112 பா.7). என அப்பரும் வலியுறுத்தருளுதல் காண்க.
அயன், மால் இருவரது காயத்தை (எலும்புக் கூட்டினை) மேலேற்றிக்கொள்ளுதல் பற்றிக் கங்காள மூர்த்தி, `காயா ரோகண மூர்த்தி` எனவும் படுவர்; அவர் சிறந்து விளங்குந்தலமும் `காயாரோகணம்` எனப்படும். காயாரோகணம் என்பதே `காரோணம்` என மருவி வழங்கும்.
அதனால், காஞ்சிப் புராணக் காயாரோகணப் படலத்துள் இவ்வரலாறு இனிது விளக்கப்படுகின்றது. அதனுள், ஈண்டைக்கு இன்றியமையாததொரு செய்யுள் வருமாறு.
இருவரும் ஒருங்கே இறவருங் காலம்
எந்தையே ஒடுக்கிஆங் கவர்தம்
உருவம்மீ தேற்றிக் கோடலால் காயா
ரோகணப் பெயர்அதற் குறுமால்;
வருமுறை இவ்வா றெண்ணிலா விரிஞ்சர்
மாயவர் காயம்மேல் தாங்கிக்
கருணையால் அங்கண் நடம்புரிந் தருளும்
காலமாய்க் காலமுங் கடந்தோன்.
-காஞ்சிப்புராணம்
இங்குக் காட்டிய சிறந்த பல மேற்கோள்களால் கங்காளத்தின் இயல்பு இனிது விளங்குதலின், `கங்காளமாவது, சிவபிரான் வாமனனை அழித்து, அவன் முதுகெலும்பைத் தண்டாகப் பற்றிய அதுவே` என்பாரது கூற்றுப் பொருந்தாமை அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 12

கானார் புலித்தோல்
உடைதலைஊண் காடுபதி
ஆனால் அவனுக்கிங்
காட்படுவார் ஆரேடீ
ஆனாலுங் கேளாய்
அயனுந் திருமாலும்
வானாடர் கோவும்
வழியடியார் சாழலோ. 

பொழிப்புரை :

புலித்தோலே ஆடையும், தலைஒடே உண் கலமும், மயானமே இடமும் ஆனால், அவனுக்கு அடிமைப் படுவோர் யாவர்? என்று புத்தன் வினாவ, புலித்தோல் முதலியவற்றை உடைய வனாயினும் பிரமன், திருமால், இந்திரன் என்பவர் அவனுக்கு வழித் தொண்டர் என்று ஊமைப் பெண் கூறினாள்.

குறிப்புரை :

கான் - காடு. தலை - தலை ஓடு. `தலையில் ஊண்` என்க. ஊண் - உண்ணுதல். இனி, `இஃது ஆகுபெயராய் உண்கலத்தை உணர்த்திற்று` எனினும் அமையும். காடு - சுடுகாடு. பதி - உறைவிடம்.
`உடை முதலியன இவ்வாறாக உடையவனை அன்பினால் அடைபவர் யார்` என்பது தடை,
`அவை அவ்வாறு இருப்பவும் உயர்ந்த தேவர் பலரும் தொன்றுதொட்ட அன்பராயிருத்தல் உண்மையானபின், அவை பற்றி ஐயம் என்` என்பது விடை.
முன்னர் (தி.8 திருச்சாழல் பா.3) ``காயில் உலகனைத்தும் கற்பொடிகாண்`` எனப் பலரும் அச்சத்தால் அடங்கி நிற்றல் கூறப்பட்டமையின், இங்கு, ``ஆட்படுவார்`` என்றது, அன்பினால் ஆட்படுவாரையேயாம்.
இதனானே, புலித்தோலாடை முதலியவைபற்றி மீண்டும் கூறியது பிறிதொரு கருத்துப் பற்றியாதலும் அறிந்துகொள்க.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ``
(தி.5 ப.23 பா.9) என்றருளிச்செய்தமையின், அடியராதல் அச்சமும், அன்பும் என்னும் இருவகையானல்லது இல்லாமையறிக. பயன் கருதிச் செய்யும் அன்பும், ``அன்பு`` என்றதன்கண் அடங்கும்.

பண் :

பாடல் எண் : 13

மலையரையன் பொற்பாவை
வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான்
என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா
தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங்
கலங்கிடுங்காண் சாழலோ. 

பொழிப்புரை :

மலையரசன் மகளாகிய உமாதேவியை, உலகம் அறியத் தீ முன்னே மணம் செய்தனன் என்பது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ, இறைவன் உலகமறிய மணம் செய்து கொள்ளாது ஒழிந்தால் உலகம் முழுதும் சாத்திரப் பொருள்களும் நிலைமாறிவிடும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

``பாவை`` முதலிய மூன்றும் ஒருபொருள்மேல் வந்த பலபெயர்கள். பெண்திரு - பெண்ணினத்தின் செல்வம். தீ வேட்டான்- தீ முன்னர் மணந்தான். என்னும் அது என் - என்று அறிந்தோர் சொல்லும் அச்செய்திக்குக் காரணம் யாது? கலை நவின்ற பொருள்கள் - மணமுறையைக் கூறும் நூல்களில் தான் சொல்லிய பொருள்கள். கலங்கிடும் - இனிது விளங்காதொழியும்.
`சிவபெருமானும் தன் தேவியைத் தீமுன்னர்ச் சடங்கு செய்து திருமணம் புரிந்தான் எனில், அங்கியங்கடவுள் முதலானவரன்றோ அனைவர்க்கும் சான்றாய் நிற்கும் கடவுளர்` என்பது தடை.
`சிவபெருமான் அங்ஙனம் செய்தது, கற்பிப்பான் ஒருவன் தான் கற்பிக்கும் கலை, மாணாக்கர்க்கு இனிது விளங்கித் தெளி வெய்துதற் பொருட்டுத் தானே அதனைப் பயிலுதல்போலத் தான் உலகர்க்கு வகுத்த விதி இனிது விளங்குதற்பொருட்டுத் தானே மேற் கொண்டு செய்துகாட்டியதன்றி வேறில்லையாதலின், அதுபற்றி அங்கியங்கடவுள் முதலானோர் அவனின் மிக்காராதல் இல்லை` என்பது விடை.
``பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப``
(தொல். பொருள் -143.) என்றதனால், மணமுறைச் சடங்குகள் முனி வராற் கட்டப்பட்டனவே என்பது இனிது விளங்கிக் கிடப்பவும், அவற்றைச் சிவபெருமானே செய்தனவாக வைத்துத் தடை விடை களான் ஆராய்ந்ததனால், `பற்றிகல் இன்றிச் செய்வாரது செயல்களை எல்லாம் இறைவன் தன்செயலாக ஏற்றுக்கொள்வன்` என்பது நல்லாசிரியரது துணிபு என்பது பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 14

தேன்புக்க தண்பணைசூழ்
தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம்
பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம்
பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக்
கூட்டாங்காண் சாழலோ.

பொழிப்புரை :

தில்லைச் சிற்றம்பலத்தான் நடனம் செய்தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினாவ, இறைவன் நடனம் செய்யாது ஒழிந்தால், உலகம் முழுதும் காளிக்கு உணவாய் விடும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

பணை - வயல். தான் புக்கு நட்டம் பயிலும் அது - தான் காளிமுன் ஒருநிகராய்ச் சென்று நடனம் செய்த அச்செயல். `காளிமுன்` என்பது ஆற்றலான் வந்து இயைந்தது. என் - என்ன காரணத்தால். தரணி - உலகம். ஊன் புக்க வேல் - அசுரரது புலால் பொருந்திய சூலம். ``ஊட்டு`` என்ற முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், ஊட்டப் படும் உணவைக் குறித்தது.
``தில்லைச் சிற்றம்பலவன்`` என்றதனால், `அடியார்கள் பொருட்டு ஆனந்த நடனத்தைச் செய்பவன்` என்பது போந்தது. போதரவே, `இத்தகையோன் ஒரு பெண்முன் சென்று அவளோடு நடனப் போரினை மேற்கொண்டு செய்தது ஏன்` என்பது தடையாயிற்று.
`காளி, தாரகன் என்னும் அசுரனை அழித்து அவன் உதிரத்தைக் குடித்த செருக்கினால் உலகினைத் துன்புறுத்த, சிவ பெருமான், அவள்முன் சென்று நடனப்போர் செய்து அச்செருக்கினை அடக்கினார்` என்பதே புராண வரலாறு ஆதலின், அதுவே இங்கு விடையாயினமை அறிக.
இவ்வரலாற்றைத் திருநாவுக்கரசர் தமது தசபுராணத் திருப் பதிகத்துள் (தி.4 ப.14 பா.4) எடுத்தோதுதல் காண்க. இவ்வரலாற்றை `நிசும்பன், சும்பன்` என்னும் அசுரரால் நிகழ்ந்த வரலாறாகவும் புராணங்கள் கூறும்.

பண் :

பாடல் எண் : 15

கடகரியும் பரிமாவும்
தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா
றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந்
தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான்
திருமால்காண் சாழலோ. 

பொழிப்புரை :

மதயானை குதிரை தேர் இவற்றின் மீது ஏறாமல் இடபத்தின் மீது சிவபெருமான் ஏறினதற்குக் காரணம் யாது என்று புத்தன் வினாவ, முப்புரங்களை எரித்த காலத்தில் தேரின் அச்சு முறியத் திருமால் இடப உருவாய்த் தாங்கினான் என்று ஊமைப்பெண் சொன்னாள்.

குறிப்புரை :

கட கரி - மதத்தை உடைய யானை. பரிமா - குதிரை. உகந்து - விரும்பி. திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் இடப உருவங் கொண்டு சிவபெருமானைத் தாங்கிய வரலாற்றினைக் கந்த புராண மும் குறிப்பிடுதல் (தட்சகாண்டம், ததீசி யுத்தரப் படலம் - 314.) காண்க.
`செல்வராவார்க்கு யானையும், குதிரையும், தேரும்போல் வனவன்றே ஊர்தியாவன? அவை இல்லாது எருதின்மேல் ஏறி வருபவன் செல்வனாவனோ` என்பது தடை.
`அஃது ஒருகாலத்து நிகழ்ந்த நிகழ்ச்சியாயினும், அக் காலத்தில் பணிபுரிந்த மாயோனுக்கு மகிழ்ச்சி உண்டாதற் பொருட்டு அதனையே தான் மேற்கொண்டான்` என்பது விடை.
இறைவனுக்கு உண்மையில் இடபமாய் இருப்பது அறக் கடவுளே. இதனையே கந்த புராணமும் விரித்துக் கூறிற்று. எனினும், இவ்வரலாற்றையே இங்கு விடையாகக் கூறியது, `அவ்வளவின் அவன் மகிழ்க` என்னும் நயம் பற்றிப் பருப்பொருளாய் எல்லார்க்கும் இனிது விளங்குதற் பொருட்டாம்.

பண் :

பாடல் எண் : 16

நன்றாக நால்வர்க்கு
நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்
கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங்
கறமுரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண் புரமூன்றுங்
கூட்டோடே சாழலோ. 

பொழிப்புரை :

சனகர் முதலிய நால்வருக்கும் நான்கு வேதங் களின் உட்பொருள்களை ஆலமர நீழலிருந்து சொன்னான், அது என்ன? என்று புத்தன் வினாவ, அன்று ஆலநீழலிருந்து அறங்கூறினா னாயினும் முப்புரங்களை வேரோடு அழித்தான் என்று ஊமைப் பெண் சொன்னாள்.

குறிப்புரை :

நால்வராவார் சனகாதியர் என்பர். அன்று - முற் காலத்தில். ஆல் - கல்லால மரம். `அறமாக` என ஆக்கம் வருவித்து உரைக்க. கொன்றான் - அழித்தான். கூட்டு - கூட்டம்; அசுரக் குழாம்.
`நால்வர் முனிவர்கட்கு ஆலின்கீழ் இருந்து அறம் கூறுவானா யினமையின், அவன் துறவோர்க்குத் துணையாய் வீடுதருதலல்லது, இல்வாழ்வார்க்குத் துணையாய்ப் பொருள் இன்பங்களைத் தாரான்; ஆதலின், இல்வாழ்வார், பிற தேவரையே அடைதல் வேண்டும்` என்பது தடை.
`அவன் அஃது ஒன்றே செய்தொழியாது, முப்புரத்தை அழித்துத் தேவர்கட்கு வாழ்வளித்தலையும் செய்தானாதலின், இல் வாழ்வார்க்கும் பொருள் இன்பங்களைத் தருபவனேகாண்` என்பது விடை.
`பொருள் இன்பங்களைத் தருவாராகப் பிறர் கூறும் தேவர் கட்கும் முப்புரத்தவராகிய பகையை அழித்து வாழ்வருளிய பெருமான் அவனேயாகலின், போகம். மோட்சம் இரண்டிற்கும் அவனையன்றி முதல்வர் யாவர் உளர்` என்பது திருவுள்ளம்.
மெய்கண்ட தேவரும் இவ்வாறே, ``கல்லால் நிழல் மலைவில்லார்`` (சிவஞானபோதம் - காப்பு) என இவ்விரண் டனையும் குறிப்பிட்டு, அவனது முழு முதல் தன்மையைக் குறிப்பித்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 17

அம்பலத்தே கூத்தாடி
அமுது செயப் பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று
நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள்
நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென்
றேத்தினகாண் சாழலோ. 

பொழிப்புரை :

அம்பலத்தில் கூத்தாடி, பிச்சை எடுத்துண்டு உழல் கின்ற சிவனையும் தேவனென்று அடைவது என்ன அறியாமை? என்று புத்தன் வினாவ, அவனை நான்மறைகள் அறியாதவைகளாய் எம் பெருமானே! ஈசனே! என்று துதித்தன என்று அவள் கூறினாள்.

குறிப்புரை :

அமுது செய - உணவைத் தேட. பலி - பிச்சை. `பலிக்கு` என நான்காவது விரிக்க. நம்பன் - சிவன். நண்ணுதல் - அடைதல். மூன்றாம் அடியில், ``நம்பனையும்`` என்ற உம்மையைப் பிரித்து, ``மறைகள்`` என்றதனோடு கூட்டுக.
இது சிறப்பும்மை. `நம்பனை நான் மறைகளும் தாம் அறியா; மற்று அவை ஆமாறு கேள்; எம்பெருமானே, ஈசா என்று துதித்து நிற்கும்` என உரைக்க. இஃது, ``ஈசானஸ் ஸர்வ வித்யானாம்`` என்று தொடங்கும் வேதமந்திரத்தை உட்கொண்டு அருளிச் செய்தது. ``அறியா`` என்றது, `அளவிட்டுணரமாட்டா` என்றபடி.
`பலருங் காண அம்பலத்திலே நின்று கூத்தாடி அவரை மகிழ்வித்தும், உணவின் பொருட்டுப் பிச்சைக்கு அலைந்தும் நிற்கின்ற சிவனையும் சிலர் கடவுள் என்று அடைவது என்` என்பது தடை.
`சிவனை வேதங்களும் அளவிட்டுணரமாட்டாவாய்த் துதித் தமைகின்றன என்றால், அவனை முதற் கடவுள் என்று அறிந்து அடைபவர் அறிவாற் பெரியோரேயன்றிப் பிறரல்லர் என்பது சொல்ல வேண்டுமோ` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 18

சலமுடைய சலந்தரன்றன்
உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன்
றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன்
நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி
அருளினன்காண் சாழலோ. 

பொழிப்புரை :

சலந்தரன் உடம்பைச் சேதித்த சக்கரத்தைத் திருமாலுக்குக் கொடுத்தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினாவ, திருமால் தன் கண்ணைப் பறித்து மலராகத் திருவடியிற் சாத்தினதால் கொடுத்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

குறிப்புரை :

சலம் - சினம். பிரமனது சீற்றத்திற் பிறந்த அசுரனே சலந்தராசுரன். இவனைச் சிவபெருமான் தாம் உண்டாக்கிய சக்கரப் படையால் அழியச்செய்தார்.
சலந்தராசுரனது தோற்றம் முதலிய வரலாறுகளையும், அவனை அழித்த சக்கரத்தைத் திருமால் சிவ பெருமானை வழிபட்டுப் பெற்றதையும் கந்த புராணத் ததீசி உத்தரப் படலத்துட் காண்க. நயனம்- கண். இடந்து - பெயர்த்து. அலராக - மலராக. ஆழி - சக்கரம்.
`தனக்கு வெற்றியைத் தந்த படைக்கலத்தைப் போற்றிக் கொள்ளாமல் எளிதாகப் பிறருக்கு அளித்தவனது செயல் எங்ஙனம் சிறந்ததாகும்` என்பது தடை.
`அச் செயல், தன்னை வழிபடுவார்க்கு அவர் வேண்டிய வற்றை வேண்டியவாறே கொடுக்கும் வள்ளன்மை உடையவன், தனக்கென ஒன்றையும் விரும்பாதவன் என்னும் உயர்வுகளை உணர்த்துமன்றித் தாழ்வினை உணர்த்துதல் எவ்வாறு` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 19

அம்பரமாம் புள்ளித்தோல்
ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர்
எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங்
கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத்
தன்மையன்காண் சாழலோ. 

பொழிப்புரை :

புலித்தோல் ஆடையாகும்; அமுது ஆலகால விடம் ஆகும்; இது என்ன தன்மை? என்று புத்தன் வினாவ, எம் பெருமான் எதை உடுத்து எதை அமுது செய்தாலும், தன் பெருமையைத்தான் அறியாத தன்மையன் என்று ஊமைப் பெண் கூறினாள்.

குறிப்புரை :

`புள்ளித்தோல் அம்பரமாம்` என்க. ``உண்ட`` என்றது, இங்கு, `அடைந்த` என்றும், ``சதுர்`` என்றது `பெருமை` என்றும் பொருள் தந்தன. அல்லாக்கால், ``உண்ட`` என்றது, ``அம்பரம்`` என்றதனோடு இயையுமாறு இல்லை. ``தம்`` என்றது, ஒருமை பன்மை மயக்கம். `தன் பெருமை` எனின், இனவெதுகையாய்ப் பொருந்துமாதலின் அதுவே பாடம் போலும். ``அறியாமை``, இங்கு, எண்ணாமை. எனவே, `தன்பெருமையை நோக்காது எளிவந்து எதனையும் செய்வான்` என்பது பொருளாயிற்று. `எம்பெருமான் எதனை உடுத்து எதனை உண்டாலும் அவற்றாலெல்லாம் அவன் தன் பெருமையைத் தான் அறியாத அருளாளனேயாவன்` என்றபடி.
``முழுதும் தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந் தலைமை`` (மகேந்திரகாண்டம். சூரன் அமைச்சியற்படலம் -128.) என்னும் கந்தபுராண அடியின் பொருள் யாதாயினும், ஈண்டு இதற்கு இதுவே பொருள் என்க.
`காயில் உலகனைத்தும் கற்பொடி` (தி.8 திருச்சாழல். பா.3) எனவும், `அயனும் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார்` (தி.8 திருச்சாழல். பா.12) எனவும், நீ சொல்லியவாறு அவன் பேராற்றலும், பெருந்தலைமையும் உடையவனாய் இருப்பினும், புலித்தோலை உடுப்பதும், நஞ்சை உண்பதும் போன்றவை (பிச்சை எடுத்தல் முதலியவை) அவனுக்குச் சிறிதும் பொருந்தாகாண்` என்பது மீட்டும் மேலன பற்றி எழுந்த தடை.
`தம் பெருமை ஒன்றே கருதிப் பிறருக்கு உதவி செய்யாத வன்கண்மை யுடையார்க்காயின் நீ சொல்வது பொருந்தும்; சிவ பெருமான் அவ்வாறு தன் பெருமை கருதாது பிறர் நலம் ஒன்றையே கருதுதலின், அவை அவனது பேரருட்கு அழகு செய்து நிற்பனவே காண்` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 20

அருந்தவருக் காலின்கீழ்
அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது
எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான்
கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை
தெரியாகாண் சாழலோ.

பொழிப்புரை :

சனகாதியர்க்கு ஆல மர நீழலிருந்து அறம் முதலியவற்றை அருள் செய்த வரலாறு எற்றுக்கு? என்று புத்தன் வினாவ, அறம் முதலியவற்றை இறைவன் அருள் செய்யாவிடின் அவர்கட்கு உலக இயற்கைகள் தெரியமாட்டா என்று அப்பெண் கூறினாள்.

குறிப்புரை :

`அருந்தவருக்கு ஆலின்கீழ் இருந்து, அறம் முதலாய நான்கனையும் அவருக்கு அருளும் அது` எனக் கூட்டுக. அருந் தவருக்கு இருந்து - அரிய தவத்தோர்க்கு அருள் செய்வதற்கென்று ஆசிரியக் கோலத்துடன் எழுந்தருளியிருந்து. ``அவர்க்கு`` என்றது, ``அத்தன்மையோர்க்கு`` என்னும் பொருட்டாய் மேற்போந்த (தி.8 திருச்சாழல் பா.16) நால்வரைக் குறித்தது. திருந்து அவருக்கு - நன்னெறியில் ஒழுக விரும்புபவர்க்கு.
உலகியற்கை - உலகுயிர்களின் ஒழுக்கநெறி. அஃது, `அறவொழுக்கம், பொருளொழுக்கம், இன்பவொழுக்கம், வீட் டொழுக்கம்` என நால்வகைப்படுதலின், ``தெரியா`` எனப் பன்மை யாற் கூறினார், `முதற்கண் இறைவன் ஆசிரியனாய் எழுந்தருளி யிருந்து தக்கார்க்கு ஒழுக்க நெறியை உணர்த்த, அவர்வழியாகவே உலகத்தில் ஒழுக்க நெறிகள் உளவாயின` என்பது நல்லாசிரியர் அனைவர்க்கும் ஒத்த துணிபு என்பதனை,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

என்னும் திருக்குறளான் (6) அறிக. இங்கு அடிகள் அருளிச் செய்த வாறே,
``அழிந்த சிந்தை அந்த ணாளர்க்
கறம்பொருளின்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி
மேயதுமுது குன்றே``
(தி.1ப.53பா.6) என்றாற்போல, மூவர் முதலிகளும் தம் திருப் பதிகங்களுள் இதனைப் பலவிடத்தும் தெளிய அருளிச் செய்தல் காண்க. `சிலருக்கு அறம் முதலியவற்றைக் கற்பிக்கும் ஆசிரியத் தொழிலுடையவன், உலகிற்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாதல் எவ்வாறு` என்பது தடை. `உலகிற்கு முதல்வனாவான் அன்றி, உலகிற்கு ஒழுக்க நெறியை உணர்த்துவோர் பிறர் யாவர்` என்பது விடை. அடிகள், சிவபுராணத்தால் இறைவனைத் துதிக்கும் முறையை வகுத்தும், கீர்த்தித் திருவகவலில் அவன் பலவிடத்தும் பலருக்கும் செய்த திருவருட் சிறப்புக்களையெல்லாம் தொகுத்தும், திருவண்டப் பகுதியில் அவனது ஏனை இயல்புகளை எல்லாம் விளக்கியும், இதனுள் புறச்சமயங்கள் பற்றியாதல், தமக்கே யாதல் நன்மக்கட்கு நிகழும் ஐயங்களைத் தடைவிடைகளால் அகற்றி, சிவபெருமானது முதன்மையை நிறுவியும், திருக்கோவையால் அகப்பொருள் வகையிலெல்லாம் சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் புகழ்ந்தும், மற்றும் பலவாற்றானும் பெரியதோர் இலக்கியக் கரு வூலத்தை அருளிச்செய்து, சிவநெறிக்குப் பெரியதோர் ஆக்கம் விளைத்தமையின், இந்நெறியின் பண்டைப் பேரருளாசிரியராய் விளங்குதலும், அவர்வழியே பின்னை ஆசிரியர்களும் சிவநெறியை நன்கு வளர்த்தமையும் ஈண்டு ஓர்ந்துணர்ந்து கொள்ளத் தக்கனவாம்.

பண் :

பாடல் எண் : 1

இணையார் திருவடிஎன்
தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.

பொழிப்புரை :

இரண்டாகிய அரிய திருவடியை, என் தலையின் மீது வைத்தவுடன், இதுவரையில் துணையென்று நினைத்திருந்த உறவினரெல்லாரையும், விட்டு நீங்கினேன். கரைகோலித் தடுக்கப் பட்ட நீர் சூழ்ந்த தில்லைநகர்க் கண்ணதாகிய, அம்பலத்தில் நடிக்கின்ற, நமதுபிறவிக் கடலுக்கு ஓர் மரக்கலம் போல்பவனாகிய சிவபெரு மானது பெருமையைப் புகழ்ந்து பாடி அல்லி மலர்களைப் பறிப்போம்.

குறிப்புரை :

இணை ஆர் - இணையாகப் பொருந்திய. இங்குக் கூறும் தலைவி சிவபெருமானிடத்தில் பேரின்பம் பெற்ற பெண்ணாக வும் கொள்ளப்படுதலின், திருவடி சென்னிமேற் சூட்டப்பெற்றதாகக் கூறலும் பொருந்துவதே.
துணையான - முன்பு எனக்குத் துணையாய் இருந்த; என்றது, `அவை துணையாதல் போலி` என்றபடி. ``துறந் தொழிந்தேன்`` என்றது ஒரு சொல் நீர்மைத்தாய், துணிவுப் பொருள் உணர்த்திற்று. இதன் பின், `ஆதலின்` என்பது எஞ்சிநின்றது.
அணை ஆர் - மடையினால் தடுக்கப்படுகின்ற. புணை யாளன் - திருவருளாகிய புணையை உடையவன். திருவருள் புணை யாதல், பிறவிக் கடலுக்காம். எனவே, ``புணை`` என்றது, சிறப்புருவக மாயிற்று. `அப் புணையாளன்` எனச் சுட்டு வருவித்துரைக்க. சீர் - புகழ். இதனுள் இறைவனது புகழ் பலவும் வருதல் காண்க. இங்கும், `கொய்வாமோ` என்பது, `கொய்யாமோ` என மருவியதாக உரைக்க.

பண் :

பாடல் எண் : 2

எந்தைஎந் தாய்சுற்றம்
மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை
ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில்
ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

எனது தந்தையும், எனது தாயும் உறவினரும், மற்றெல்லாப் பொருள்களும் என்னுடைய பிறவிக் கட்டைச் சேதித்து, என்னை ஆண்டருளின, பாண்டிப் பிரானே, ஆதலால் அந்தத் திருவிடை மருதூரின்கண், இன்பத்தேன் தங்கியிருந்த பொந்தினைத் துதித்து நாம் பூவல்லி கொய்யாமோ.

குறிப்புரை :

``எந்தை`` என்பதற்கு ``எம் தாய்`` என்றதனோடு இயைய, `எம் தந்தை` என உரைக்க. ``எம்`` என்றதனை, ``சுற்றம்`` என்றதற்கும் கூட்டி, `எம் மற்றுச் சுற்றம்` என மாற்றியுரைக்க. ``சுற்றம்`` என்றதன்பின், ``என்கின்ற`` என்பது வருவித்து, `எந்தை, எம்தாய், எம் மற்றுச் சுற்றம் என்கின்ற என்னுடைய பந்தம் எல்லாம் அறுத்து` எனக் கூட்டுக. அந்தம் - அழகு. `கொத்து, கொந்து` என்பன ஒரு பொருளவாய் நிற்றல் போல, `பொத்து, பொந்து` என்பன ஒரு பொருளவாய் நிற்கும். பொந்துகளிலும் தேன் ஈக்கள் தேனைச் சேர்த்து வைத்தல் உண்டு. `பாண்டிப்பிரானாகிய பொந்து` என்க.

பண் :

பாடல் எண் : 3

நாயிற் கடைப்பட்ட
நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுந்
தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுத்
தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

நாயினுங் கடையான, எங்களையும், ஓர் பொருளாக்கி, தாயினும், மிகவும் தயையுடையவனான, தம்பிரான், என் வலிய இருவினைகளின் வாயில், புழுதியைக் கொட்டி, மாயப்பிறவியைச் சேதித்து ஆண்டருளினன், ஆதலால் பூவல்லி கொய்யாமோ.

குறிப்புரை :

தயா - தயவு; கருணை. உயிர்களை, `தாம்` என்றல் மரபு என்பதை, `தம்பிரான்` என்னும் வழக்குப்பற்றி அறிந்து கொள்க. மாயம் - நிலையின்மை. ``ஆண்டான்`` என்றதன் பின், `ஆதலின்` என்பது எஞ்சிநின்றது.
பொடி - மண். அட்டி - சொரிந்து. எண்ணம் இழந்தவரை, `வாயில் மண்ணிட்டுக் கொண்டார்` என்னும் வழக்குப் பற்றி, ``வினையின் வாயில் பொடி அட்டி`` என்று அருளினார். இன்னோ ரன்னவை உவமவாயிற்படுத்துரைக்கும் பான்மை வழக்குக்கள். `வினையைத் தோல்வியடையச் செய்து` என்பது பொருள். இது, வினை தோற்றோடுமாறு இறைவன் புகழைப் பாடுதலைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 4

பண்பட்ட தில்லைப்
பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன்
அருக்கனெச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப்
படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

மதிப்புப் பெற்ற தக்கனும், சூரியனும், எச்சன் என்பவனும், சந்திரனும், அக்கினியும், அலங்கரித்தலமைந்த, தில்லை நகர்க்கு இறைவனாகிய சிவபெருமானை, துதியாதவர்களாய், மேன்மை பொருந்திய பூதப்படையையுடைய, வீரபத்திரக் கடவுளால் காயப்பட்ட விதத்தை எடுத்துப்பாடி, பூவல்லி கொய்யாமோ.

குறிப்புரை :

பண்படுதல் - செம்மைப் படுதல். எண்பட்ட - வேறோர் எண்ணத்தைப் பொருந்திய. அருக்கண் - சூரியன். எச்சன் - வேள்வித் தேவன். இந்து - சந்திரன். விண்பட்ட - வானத்தினின்றும் பாய்ந்த.

பண் :

பாடல் எண் : 5

தேனாடு கொன்றை
சடைக்கணிந்த சிவபெருமான்
ஊனாடி நாடிவந்
துள்புகுந்தான் உலகர் முன்னே
நானாடி ஆடிநின்
றோலமிட நடம்பயிலும்
வானாடர் கோவுக்கே
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

தேன் பொருந்திய கொன்றை மலர் மாலையை, சடையின்கண் தரித்த சிவபிரான் பலகால் மானுடவுடம்பெடுத்து வந்து, உலகத்தாருக்கு எதிரில் என் மனத்தில் புகுந்தான். அதனால் நான் ஆடியாடி நின்று, முறையிட, நடனம் செய்கிற தேவர் பிரானுக்கே பூவல்லி கொய்யாமோ.

குறிப்புரை :

தேன் நாடு - வண்டுகள் தேடி அடைகின்ற. ஊன் - உடம்பு. `என் ஊன்` என்க. ``நாடி நாடி`` என்ற அடுக்கு, பல முறை வந்தமை குறித்தது, பலமுறையாவன, திருப்பெருந்துறையிலும், மதுரையிலும், உத்தரகோச மங்கையிலும், கழுக்குன்றத்திலும், வந்தருளியனவாம். `உலகர் முன்னே வந்து` என முன்னே கூட்டுக. `இம்மைக்கண் வந்து அருள் புரிந்தான்` என்பார், ``ஊன் நாடி வந்து`` என்றார். நாடி ஆடி நின்று - தேடி அலைந்து நின்று. நடம் பயிலும் - நாடகம் புரியும்; என்றது, `முன்பு தானே வந்து ஆட்கொண் டருளினான்; இப்பொழுது, நான் நாடி ஆடி ஓலமிடவும் தோன்றாது நாடகம் செய்கின்றான்` என்றவாறு. ``கோவுக்கே`` என்றதன்பின், `பாடி` என ஒரு சொல் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 6

எரிமூன்று தேவர்க்
கிரங்கியருள் செய்தருளிச்
சிரமூன் றறத்தன்
திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்று மாகி
உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன் றெரித்தவா
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

மும்மூர்த்திகளாகி, அறிதற்கரிய பொருளாயுள்ள ஒருவனுமே, முத்தீயின் வழியாக அவியை ஏற்கின்ற தேவர்களுக்கு, இரங்கி அருள் செய்து, திரிபுரத்தவர்கள் தலை சுற்றி விழும்படி, தனது திருப்புருவத்தை வளைத்தருளி, மூன்று புரங்களையும் எரித்த விதத்தைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

எரி மூன்று தேவர் - முத்தீ வேள்வியை விரும்புகின்ற தேவர்கள். ``சிரம் மூன்று அற`` என்றது, `பெருவலியுடைய அசுரர் மூவர் அழிந்தொழிய`` எனப் பொதுப்பொருளே தந்து நின்றது. புருவம் நெரித்தல், சினத்தால் நிகழ்வது. உருமூன்று - மும்மூர்த்திகள். `அருவம் உருவம், அருவுருவம்` என்றும், `போகவடிவம், யோக வடிவம், வேகவடிவம்` என்றும் உரைப்பர். அரிதாம் - அரிய பொரு ளாகிய. ``ஒருவனும்`` என்ற உம்மை, முற்றும்மை. `ஒருவனே மூன்று புரங்களை அழித்தமை வியப்பு` என்றவாறு, ``எரித்தவா`` என்றதன் பின், `பாடி, என்பது எஞ்சிநின்றது. `தேவர்கள்மேல் இரக்கம் வைத்தும். மூவர் அசுரர்மேல் சினங்கொண்டும் ஒருவனே மூன்று புரங்களை எரித்தான்` என்பது இப்பாட்டின் திரண்டபொருள். இனி, மேற்போந்த (தி.8 திருப்பூவல்லி. பா-4) தக்கன்றன் வேள்வி நிகழ்ச்சியே இங்கும் முதல் இரண்டடிகளில் குறிக்கப்பட்டதெனக் கொண்டு, அதற்கியைய உரைப்பர் பிறரெல்லாம்.

பண் :

பாடல் எண் : 7

வணங்கத் தலைவைத்து
வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
இணங்கத்தன் சீரடியார்
கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொ டணிதில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.

பொழிப்புரை :

எம் இறைவன் தன்னை வணங்கும் பொருட்டு, எனக்குச் சிரசை அமைத்து, தன் பெரிய திருவடியைத் துதிக்கும் பொருட்டு எனக்கு வாயை அமைத்து அடியேன் நட்பமையும் பொருட்டு, தன் சிறப்பமைந்த அடியார் குழாத்தையும் அமைத்து அழ கோடு, அழகாகிய தில்லையம்பலத்தில் நடனம் செய்கின்ற கல்யாண குணத்தை மிகுதியாகப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

``எம் பெருமான்`` என்றதை முதலிற் கூட்டி, அதன்பின், `மக்களாய் உள்ளார்க்கு` என்பது வருவிக்க. ``வார்கழல்`` என்றது தாப்பிசையாய், முன்னரும் சென்று இயையும். ``வாய்`` என்றதனை, ``வாழ்த்த`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இணங்க - கூடியிருக்க. சீரடியார் - சிறப்புடைய அடியவர்; அவர், `கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறலினோர்` (தி.12 பெ.புரா. திருக்கூட்ட.8) என்க. அவரையும், `வைத்து` என்றதனால், அவர்கட்குத் தன் திருவடி கூடுதலை விரைய அருளாது இந்நிலவுலகில் சின்னாள் உலாவச் செய்தலும் உலக நலத்தின் பொருட்டென்பது போந்தது. இதனை,
``அன்ன தன்மையர் கயிலையை அணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற் பின்னையும் வழுத்த``
(தி.12 பெ. புரா. திருநாவுக்கரசர். 361) என்றதனானும் அறிக. அடிகளிடத்தும் இந்நிலை காணப்படுவது என்க.
``எம் பெருமான்`` என்றது, ``வைத்து`` என்றவற்றோடு முடியு மாகலின், ஆடுதலுக்கு, `தான்` என்னும் எழுவாய் வருவிக்க. அணங் கொடு - தேவியோடு. இதனை, ``அம்பலத்தே` என்றதன் பின்னர்க் கூட்டி, ஒடு, உருபினை `நின்று` என்பது வருவித்து முடிக்க. இவ்வாறு முடியாது, ``தொடியொடு - தொல்கவின் வாடிய தோள்`` (குறள் - 1235) என்றது போல, `ஒடு` வேறு வினைப் பொருளில் வந்தது` எனக் கொண்டு, `அணங்கு காண` என்பது கருத்தாக உரைப்பினும் அமையும். ``குணம்``என்றது அருளை. கூரப்பாடி - மிகப்பாடி. இத் திருப்பாட்டுள், இறைவன் உயிர்களை உய்விக்குமாறெல்லாம் வகுத்தோது முகத்தான், அவன் செய்வனவெல்லாம் உயிர்கள் பொருட்டேயாதலாகிய பேரருள் கூறப்பட்டது.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
(தி.5 ப.90 பா. 7) என்ற திருநாவுக்கரசர் திருமொழி இங்கு நினைக்கத் தக்கது.

பண் :

பாடல் எண் : 8

நெறிசெய் தருளித்தன்
சீரடியார் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை
ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை
முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.

பொழிப்புரை :

எனக்கு நல்வழியை உண்டாக்கியருளி, தன் சிறப்பை உடைய அடியார்களுடைய பொன்னடிகளுக்கே, இலக் காக்கிக் கொண்டு, என்னை ஆண்டருளின இறைவனது, மங்கள குணங்களைப் புகழ்ந்து, எம்மை முழுமையும் அடிமையாக்கி வருத்து கின்ற, பழவினைகளைப் பொய்யாக்கின (இல்லையாகச் செய்த) விதத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

``என்னை`` என்றதனை முதலிற் கொள்க. நெறி செய்து-நல்வழிப்படுத்தி. குறிசெய்து (உரிய பொருளாக்கத்) திரு வுளங்கொண்டு. கொண்டு - ஏற்றுக்கொண்டு. பரவி - பரவுதலால், `பரவிக் கிறிசெய்த` என இயையும். முறிசெய்து - ஆவணம் செய்து கொண்டு; ஆவணம், இங்கு, அடிமைப் பத்திரம். முழுது - அன்று தொட்டு இன்றுகாறும் இடைவிடாது நின்று. உடற்றும் - வருத்துகின்ற. கிறிசெய்து - பொய்யாக்கி; இல்லையாகச் செய்து. ``ஆண்டபிரான் குணம் பரவி வல்வினையைக் கிறிசெய்தவா` என்றதனால், இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு இருள்சேர் இருவினையும் சேராமை (குறள் - 5). பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பன்னாட் பரவிப்
பணிசெய்யப் பாதமலர்
என்ஆகம் துன்னவைத்த
பெரியோன் எழிற்சுடராய்க்
கல்நா ருரித்தென்னை
யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

யான், அநேகநாள் துதித்து, பணிவிடை செய்யும் படி, தன் திருவடி மலரை, என் மனத்தில் பொருந்த அமைத்த பெருமையையுடையான், அழகிய சோதியாகி, முற்படக் கல்லில் நார் உரித்த பிறகு என்னை ஆண்டருளினவனுடைய இரண்டு திருவடிகள் அழகியனவாயிருந்த விதத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

ஆகம் - மார்பு; அஃது இருதயத்தைக் குறித்தது. இனி, `அகம் என்பது நீட்டலாயிற்று` எனினுமாம், பெரியோனாகிய ஆண்டுகொண்டானது கழலிணைகள்` என்க. `கழலிணைகள்` எனப்பட்டது பற்றிய குறிப்பு மேலே (தி.8 திருத்தெள்ளேணம் பா.17) தரப்பட்டது. சுடர் - ஞான விளக்கு; என்றது, ஆசான மூர்த்தியை, பொன் - நிதி. `நமக்குப் பொன்னானவா` என்க.

பண் :

பாடல் எண் : 10

பேராசை யாமிந்தப்
பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடிஎன்
தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல் நஞ்சை
உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

பேராசையால் உண்டாகிய இந்த உடம்பின் தொடர்பு அற்றுப்போம்படி, திருப்பெருந்துறையை உடையானும், சிறப்பமைந்த திருவடியை, என்சிரசின் மேல் வைத்த பெருமானும், கருமை நிறைந்த பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டு மகிழ்ந்த காபாலியும் ஆகிய சிவபெருமானது போர்க்கிலக்காயிருந்த முப்புரத்தின் வரலாற்றைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

பிண்டம் - உடம்பு. உடம்பு ஆசையால் வருதலின். அதனை ஆசையாகவே ஒற்றுமைப்படுத்து ஓதியருளினார். `பிண்டம் அறப்பாடி` என இயைக்க. போர்ஆர்புரம் - போர் பொருந்திய ஊர்; தலங்கள். சிவபிரானது போர்ச் செயல்களைக் குறிக்கும் தலங்கள் எட்டு. அவை, `அட்ட வீரட்டம்` எனப்படும். அவற்றை, 1பூமன் சிரம் கண்டி2 அந்தகன் கோவல்
3புரம் அதிகை
4மாமன் பறியல் 5சலந்தரன் விற்குடி
6மா வழுவூர்
7காமன் குறுக்கை 8யமன் கட வூர்இந்தக்
காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன்
சேவகமே.
என்னும் தனிப்பாடலால் அறிக. சிவநெறியை அழித்துப் புத்தராய் நின்று பின் சிவபெருமானோடு போரேற்று அழிந்த அசுரரது திரி புரங்களை, அப்பெருமானிடத்து அன்புடையார் பாடாராகலின், ``புரம்`` என்றதற்கு, `திரிபுரம்` என உரைத்தல் பொருந்தாமை வெளிப் படை. `புரத்துப் போரார்தல்` என மாற்றி உரைத்தும் எனின், அது ``புர மூன்று எரித்தவா`` என மேலே (தி.8 திருப்பூவல்லி. பா-6.) கூறப்பட்டமை காண்க.
இனி, இவ்வாறன்றி, `பேரானந்தம் பாடி` (தி.8 திருப்பூவல்லி. பா-18.) எனப் பின்னர் மோனையின்றி வருதல்போல, ஈண்டும், `பேரார் புரம்` எனப் பாடம் ஓதி, `புகழ் பொருந்திய சிவலோகம்` என்று உரைப்பினுமாம்.

பண் :

பாடல் எண் : 11

பாலும் அமுதமுந்
தேனுடனாம் பராபரமாய்க்
கோலங் குளிர்ந்துள்ளங்
கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார்
நன்னெறியாம் அந்நெறியே
போலும் புகழ்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

பாலையும், அமிர்தத்தையும், தேனையும் ஒத்த பராபரப் பொருளாகி, குளிர்ச்சியாகிய திருவுருக் கொண்டு வந்து, என் மனத்தைக் கவர்ந்து கொண்ட இறைவனது ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த திருவடிகளை உலகத்தில் வழிபடுவோர்களுடைய நல்வழி யாகி, அவ்வழியையே நிகர்ப்பதாகிய, இறைவனது புகழைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?.

குறிப்புரை :

``தேன்`` என்றவிடத்தும் உம்மை விரிக்க. உடனாம் - ஒருங்கு கலந்தது போலும்.
பராபரமாய் - மிக மேலான இன்பமாய். ``கோலம் குளிர்ந்து`` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. `கோலத்தை இனிதாகக் கொண்டு` என்பது பொருள். `கழல்களை ஞாலத்துப் பரவுவார்` எனவும்`, பரவுவாரது நன்னெறியாகிய அந்நெறியானே புகழைப் பாடி` எனவும் உரைக்க .
``போலும்`` என்றது அசைநிலை. உண்மையான் நோக்குமிடத்து இறைவனது பேராற்றலுக்கு யாதொரு செயலும் அரியதன்றாதலின், ``போலும் புகழ்`` என்றார் என்றலுமாம்.

பண் :

பாடல் எண் : 12

வானவன் மாலயன்
மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவ னாய் நின்று
கூடலிலாக் குணக்குறியோன்
ஆன நெடுங்கடல்
ஆலாலம் அமுதுசெய்யப்
போனகம் ஆனவா
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

இந்திரன், திருமால், பிரமன் மற்றுமுண்டாகிய தேவர்கள் ஆகிய எல்லார்க்கும் அரசனாயிருந்தும், ஒருவரும் சென்றணுக வொண்ணாத குணங்குறிகளை உடையவன், நெடியபாற் கடலிலுண்டாகிய ஆலகால விஷத்தைத் திருவமுது செய்யவே, அது உணவாயினவாறென்ன வியப்பு என்று பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

``கோனவன்` என்றதில் ``அவன்``, பகுதிப் பொருள் விகுதி. ``கூடல் இலாக் குணக் குறியோன்`` என்றது, `அறிந்து அடைதற் கேற்ற குணமும், குறியும் இல்லாதவன்` என்றபடி. போனகம்- நல்உணவு. ஆன - பொருந்திய. இங்கும், ``ஆனவா`` என்றதன் பின், ``பாடி`` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 13

அன்றால நீழற்கீழ்
அருமறைகள் தானருளி
நன்றாக வானவர்
மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும்
நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

அக்காலத்தில் கல்லாலின் நீழலில் எழுந்தருளி, அருமையாகிய வேதப் பொருள்களை அருளிச் செய்து, தேவர்களும் பெரிய முனிவர்களும் தினந்தோறும் நிலைத்திருந்து வாயாரத் துதிக் கும்படியான நிறைகழலை அணிந்த திருவடிகளை உடையோன் அணிந்த கொன்றைப் பூவின் சிறப்பைப் புகழ்ந்து பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

``தான்`` என்றதனை முதற்கண்வைத்து எழுவாயாக்கி, அதனை, `அருளி, கழலோன்`` என்னும் பெயர்ப் பயனிலைகள் கொடுத்து முடித்து, `அவன் புனைகொன்றைப் பொன்தாது பாடி` எனச் சுட்டுப்பெயர் வருவித்துரைக்க. ``புனைகொன்றை``, வினைத் தொகை. `பொற்றாது` என்பது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது; பொன்போலும் தாது, மகரந்தம்.

பண் :

பாடல் எண் : 14

படமாக என்னுள்ளே
தன்னிணைப்போ தவையளித்திங்கு
இடமாகக் கொண்டிருந்
தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை
அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.

பொழிப்புரை :

என் மனமே எழுதுபடமாகத் தன்னிரண்டு திருவடி மலர்களைப் பதியவைத்து, இவ்விடத்தை இடமாகக் கொண்டிருந்தும் திருவேகம்பத்திலும் பொருந்தியிருந்த பெருமான், விசாலம் பொருந்திய மதில்சூழ்ந்த தில்லையம்பலத்தையே இடமாகக் கொண்டு, நடனம் செய்யும் முறைமையைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

படம் - ஓவியம். `உள்ளக்கிழியின் உருவெழுதி` (தி.6 ப.25 பா.1) என்றருளினார் திருநாவுக்கரசரும். ``போது`` என்றது, உவமையாகு பெயராய்த் திருவடியை உணர்த்திற்று. `இங்கு இருந்து` என இயையும். `இங்கு` என்றதனால் `நிலமே இடமாக` என்பது, தானேபோதரும், தடம் ஆர் - குளங்கள் நிறைந்த, தான், அசைநிலை.

பண் :

பாடல் எண் : 15

அங்கி அருக்கன்
இராவணன்அந் தகன்கூற்றன்
செங்கண் அரிஅயன்
இந்திரனுஞ் சந்திரனும்
பங்கமில் தக்கனும்
எச்சனுந்தம் பரிசழியப்
பொங்கியசீர் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

அக்கினித் தேவனும், சூரியனும், இராவணனும், சனியும், நமனும், செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலும், பிரமனும், தேவர்கோனும், சந்திரனும், அழிவற்ற தக்கனும், எச்சன் என்பவனும், தமது தன்மையழியும்படி, கோபித்த சிறப்பைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

அந்தகன் - அந்தகாசுரன், பரிசு - தன்மை; என்றது வலிமையை. பொங்கிய சீர் - மிக்குப் பரவிய புகழ். `பரிசு அழிந்த மையால் பொங்கிய சீர்` என்க. இங்குக் கூறப்பட்டவருள் இராவண னும், அந்தகாசுரனும் ஒழித்து ஒழிந்தோர் அனைவரும் தக்கன் வேள்வியில் ஒறுக்கப்பட்டவர் என்க.

பண் :

பாடல் எண் : 16

திண்போர் விடையான்
சிவபுரத்தார் போரேறு
மண்பால் மதுரையிற்
பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன்
தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

திடமான, போர்க்குரிய இடபத்தை உடையவன், சிவநகரத்தார்ப் போரேறாயிருப்பவன், அவன் மண்ணுலகில் மதுரைப் பதியில், பிட்டினைத் திருவமுது செய்தருளி, பிரப்பந் தண்டினால் பாண்டியன் தன்னைப் பணிகொண்டதனால் உண்டாகிய, புண்ணைப் பற்றிய பாடலைப் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

சிவபுரம் - சிவலோகம். அங்கு உள்ளார்க்குத் தலைவ னாய் நின்று இடர்களைதலின், ``சிவபுரத்தார் போர் ஏறு`` என்று அருளினார். மண்பால் - மண்ணுலகத்தில். அமுது செய்து - உண்டு. ``தண்டு`` என்றது பிரம்பினை. ``தன்னை`` என்றது, ``விடையான்`` எனவும், ``ஏறு`` எனவும் கூறப்பட்டவனைக் குறித்தது. `தன்னைப் பாண்டியன் தண்டாலே பணிகொண்ட புண்` என்க. பணிகொள்ளுதல் - ஏவல்கொள்ளுதல். `பணிகொண்ட புண்`` என்றது, `ஆறுசென்ற வியர்` என்பது போல நின்றது. ``பாடல் பாடி`` என்றதற்கு மேல் (தி.8 திருத்தெள்ளேணம். பா-8) உரைத்தவாறு உரைக்க.

பண் :

பாடல் எண் : 17

முன்னாய மாலயனும்
வானவருந் தானவரும்
பொன்னார் திருவடி
தாமறியார் போற்றுவதே
என்னாகம் உள்புகுந்
தாண்டுகொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

தேவர்களுக்குள் முன்னவர்களாகிய திருமாலும், பிரமனும், தேவர்களும், அவுணரும் பொன்போலும் அரிய திரு வடியைத்தாம் அறியமாட்டார்கள். அப்படியிருக்க எம்மால் வணங்கப் படுவதோ? என் மனத்தினுள்ளே புகுந்து என்னை ஆண்டு கொண்ட வனுடைய, ஆபரணமாகிய பல நாகங்களைப் புகழ்ந்து பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

முன் ஆய - தேவருள் முன்நிற்கின்ற. தானவர் - அசுரர். ``இலங்கு அணியாம் பன்னாகம்`` எனப் பின்னர் வருதலின், ``பொன்னார் திருவடி`` என்றவை, பன்னாகம் அணிந்த அப் பெருமானுடையவை ஆயின. `பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்` எனச் சிவபெருமானது திருவடிகளை, ``பொன்னார் திருவடி`` (தி.4 ப.109பா.1) என அப்பரும் அருளிச் செய்தார். `ஆகத்துக்கண் உள் புகுந்து` என்க. ``உள்`` என்றது, மனத்தை. ஆண்டு கொண்டானது அணி` என்பதாம். இலங்கு அணி - விளங்குகின்ற ஆபரணம். பல் நாகம் - பல பாம்புகள்.
தாருகாவன முனிவர்களது மனைவிமார்கள் முன் சிவ பெருமான் பிச்சைக்கோலத்துடன் சென்றபொழுது அம்மகளிர் அவரது அழகில் ஈடுபட்டுத் தம் கற்பினை இழந்தமை பற்றிச் சினந்த அம் முனிவர்கள் கொடுவேள்வி ஒன்றைச் செய்து அதனினின்றும் உண்டாக்கி அனுப்பிய பொருள்களுள், பாம்புகளும் சில; அவற்றை யும், காசிப முனிவர் மனைவியருள், `வினதை` என்பவள் பெற்ற மகனாகிய கருடனுக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்த, அம்முனிவர் மனைவியருள் மற்றொருத்தியாகிய கத்துரு என்பவள் பெற்ற பாம்புகளையும் சிவபெருமான் அணிகலங்களாக அணிந்து கொண்டனர் என்பது புராண வரலாறு.

பண் :

பாடல் எண் : 18

சீரார் திருவடித்
திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய்
அடியேன் அகமகிழத்
தேரார்ந்த வீதிப்
பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய திருவடி மேலணிந்த, திடமான சிலம்புகள், ஒலிக்கின்ற ஒலிக்கே, வெறுக்காத ஆசை கொண்டு அடிமையாகிய நான் மனமகிழுமாறு தேரோடுகிற தெருக்களோடு கூடிய திருப்பெருந்துறையை உடையவன் திரு நடனம் பண்ணுவதனால் உண்டாகிற பேரின்பத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

`திருவடிக்கண் அணிந்த சிலம்பு சிலம்பு ஒலி` என்க. சிலம்பு ஒலி - ஒலிக்கின்ற ஒலி. ஆசையது - ஆசையை உடையது. `ஆய` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. `ஆசையதாய அகம்` என்க. `அகம் மகிழ நடம்செய்` என இயையும். நடம்புரியும் பொழுது சிலம்பொலி கேட்கப்படுதலின், ஆசைப்பட்ட அகம், அது கேட்டு மகிழ்வதாயிற்று, செய் பேரானந்தம் - செய்ததனால் விளையும் பெரிய இன்பம்.

பண் :

பாடல் எண் : 19

அத்தி யுரித்தது
போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண்
டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதலுத்
தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

யானையை உரித்து, அந்தத் தோலைப் போர்த் தருளிய திருப்பெருந்துறையை உடையான், பித்த வேடங் கொண்டு இந்த உலகத்தில் சிலர்க்குப் பிள்ளையுமாகி, முத்தி முழுமுதற் பொருளுமா, திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளிய வள்ளலுமா இருக்கிறதனோடு அவன் என் மனத்துள் புகுந்த படியைப் புகழ்ந்து பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

அத்தி - யானை, ``அது`` என்றது, உரிக்கப்பட்ட தோலினை, தோலைப் போர்வையும், ஆடையுமாகக் கொண்டது முதலியவற்றையே, `பித்தவடிவு` என்றார். பிள்ளை - மகவு. சிவ பெருமான் மகவாய் வந்தமையை, ``ஓரி யூரின் உவந்தினி தருளிப் - பாரிரும் பாலக னாகிய பரிசும்`` (தி.8 கீர்த்தி - 68-69) என முன்னே அருளிச் செய்தார். ``பிள்ளையுமாம்`` என்ற உம்மையால், காளையு மாதல் தழுவப்பட்டது. தாருகாவன முனிவர் மனைவியர் முன் சென்றது முதலியவை காளைவடிவமாதல் அறிக. இவற்றால் இவை யனைத்தும் நாடகமாதலல்லது. அவனது உண்மை இயல்பு அன்றென்பது குறித்தவாறாம். இவ்வாற்றானே, அவன் முத்தி முழுமுதலாதல் தெளிவிக்கப்பட்டது. முத்தியாவது பிறவியற்ற நிலையாதலானும், சிவபிரான் ஒருவனே பிறப்பில்லாதவன் ஆதலானும், அவனல்லது அந்நிலையை அருள்வார் பிறர் இன்மையின், ``முத்தி முழுமுதல்`` என்று அருளிச் செய்தார். முழு முதல் - முடிந்த தலைவன். `ஏனையோர் பலரும் இடைநிலையாய சிலவற்றைத் தருபவரே` என்றதற்கு, இவ்வாறு அருளினார். ``புகுந்தவா பாடி`` என வருவித்துரைக்க.

பண் :

பாடல் எண் : 20

மாவார ஏறி
மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலந்
திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக்
குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

திருப் பெருந்துறையான், குதிரையைப் பொருந்த ஏறி, மதுரை நகரத்தில் புகுந்தருளி, தெய்வத்தன்மை பொருந்திய திருவுருவம் விளங்க, தலைவனாய் வந்து, எம்மை ஆட் கொண் டருளும், செந்தாமரை மலர் போலும் திருவடிகளைத் துதித்துப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?.

குறிப்புரை :

மா - குதிரையை. ஆர ஏறி - நன்கு ஊர்ந்து. ``புகுந்தருளி`` என்றது, ``கோவாகி`` என்றதனோடு முடியும். `குதிரை மேல் வந்தபொழுதும் அவனது உருவம் வியக்கத்தக்கதாய் இருந்தது` என்றதற்கு, ``தேவார்ந்த கோலம் திகழ`` என்றார். கோ - தலைவன். ``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்`` (சிவஞான போதம்-சூ. 10, அதி.2.) ஆதலின், அங்ஙனம் காக்க வந்த நிலையை, ``கோவாகி`` என்று அருளினார். இத் திருப்பாட்டினால், இறைவன் அடிகளைக் காத்தற்பொருட்டு மதுரை நகரில் குதிரை ஏறி வந்தமை இனிது பெறப்படும். பூ ஆர் - மலர் போலப் பொருந்திய. பூ, பொலிவுமாம். `பலரும் தூவி வணங்கும் மலர்கள் பொருந்திய கழல்` எனலுமாம். இப் பாட்டும், அடுத்துவரும் திருவுந்தியாரின் இறுதிப்பாட்டும் சில பிரதி களில் இல்லை என்பர்; அவ்வாற்றான் இவை இடைச் செருகலாயின், பத்தொன்பது பாட்டுக்களால் ஆயினமை பற்றியே இது, திருச்சாழலின் பின் வைத்துக் கோக்கப்பட்டதாகும்.

பண் :

பாடல் எண் : 1

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 

பொழிப்புரை :

இறைவனது வில் வளைந்தது; வளைதலும் போர் மூண்டது; மூளுதலும் முப்புரங்களும் ஒருமிக்க வெந்து நீறாயின. அந்தத் திரிபுரத்தை அழித்த நற் செய்தியை நினைத்தால் வியக்கத்தக்க தாக இருக்கிறது என்று உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

`வில்` என்பது. ஈற்றில் உகரம் பெற்று வந்தது. `வில் சிவ பெருமானுடையது` என்பதும், `பூசல் (போர்) அசுரருடையது என்பதும் ஆற்றலான் விளங்கின.
உளைந்தன - துயருற்றன. ``முப்புரம்`` என்றது இரட்டுற மொழிதலாய் முன்னர் அதன்கண் வாழ்வார் மேல் நின்று, உளைதல் வினையோடும், பின்னர் முப்புரத்தின் மேலதேயாய் வேதல் வினையோடும் இயைந்தது.
ஒருங்கு - ஒருசேர. ``உடன்`` என்றது. `நொடியில்` என விரைவு குறித்தவாறு. ``வெந்த வாறு`` என்றதன்பின், `பாடி` என்பது வருவிக்க. இதனுள் இனிவரும் திருப்பாட்டுக்களிலும் வேண்டு மிடங்களில் இவ்வாறே இதனை வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற. 

பொழிப்புரை :

இறைவர் திருக்கரத்தில் இரண்டு அம்பிருக்கக் கண்டிலேம்; கண்டது ஓரம்பே; அந்த ஓர் அம்பும் திரிபுரம் எரித்தற்கு அதிகமேயாயிற்று என்று உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

``ஏகம்பர் தங்கையில்`` என்றதனை முதலில் வைத்து. ``ஓரம்பே`` என்றதன்பின், `கண்டனம்` என்பது வருவிக்க, ``முப்புரம்`` என்று அருளினாராயினும், `புரம் மூன்று` என உரைத்தல் திருவுள்ள மாம். ஆகவே, `இறைவர் கையில் இருந்தது ஓரம்பே; பகையாய் எதிர்ந்த புரங்களோ மூன்று; எனினும், அவைகளை அழித்தற்கு அவ் ஓர் அம்புதானும் சிறிதும் வேண்டப்படாதாயிற்று` என்பது பொருளாதல் அறிக. சிவபெருமான் திரிபுரங்களை அம்பு முதலிய வற்றால் அழியாது, புன்சிரிப்பானே அழித்தமையின், அவ் ஓர் அம்பும் வேண்டப்படாததாயிற்று. இதனால், இறைவன், எல்லாவற்றையும் கரணத்தானன்றிச் சங்கற்பத்தானே செய்தலைக், கூறியவாறு. ``பெருமிகை`` என்றதன்பின், `என்று` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 3

தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.

பொழிப்புரை :

தேவர்கள் தேரினை இணைத்து விடுத்ததும், அத் தேரில் இறைவன் திருவடியை வைத்ததும், தேரினது அச்சு முறிந்தது; எனினும் முப்புரங்கள் அழிந்தன என்று உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

`தைத்து` என்பது `தச்சு` எனப் போலியாயிற்று. `தைத்தல், அழகுபடச்செய்தல் என்பது, ``வேலன் தைஇய வெறியயர் களனும்` (தி.11 திருமுருகா -222.) என்றற்றொடக்கத்தனவாக வருவனவற்றான் அறிக. மகளிர்க்கு, `தையலார்` என்னும் பெயரும், தம்மை ஒப்பனை செய்துகொள்ளுதலாகிய காரணம் பற்றிவந்ததாம். `தையல்` என ஒருமைக்கண் வருதல் ஆகுபெயர். இப்பொருட்டாகிய `தையல், தைத்தல்` என்பன பிற்காலத்தில், துன்னத்திற்கும், துன்னம் செய்தற்கும் உரியவாயின. ஒருவகைத் தொழிலை உணர்த்தும் `தச்சு` என்னும் பெயர்ச் சொல், இங்கு, வினையெச்சமாய் வந்த `தச்சு` என்பதனின் வேறு. `தச்சு` என்பது அடியாக, `தச்சன், தச்சர்` முதலிய ஒட்டுப் பெயர்கள் பிறக்கும். ``தச்சு`` என்றதற்கு, `தேர்` என்னும் செயப்படு பொருளும், அச்சுமுரிதலுக்கு, அஃது என்னும் எழுவாயும், வருவிக்க.
``தாம்`` என்றது, முன்னை திருப்பாட்டில், ``ஏகம்பர்`` எனக் குறிக்கப்பட்டவரை என்பது வெளிப்படை. `இடலும்` என்பது விரித்தல் விகாரம் பெற்றது. `அடியிட்டபொழுதே அச்சு முறிந்தமை அவரது வன்மையையும், பிறரது மென்மையையும் எளிதின் விளக்கும்` என்பதும், `தேர் அச்சு முறிந்ததாயினும் அவர் முப்புரத்தை அழிக்கக்கருதியது முடிந்தேவிட்டது` என்பதும் குறித்தவாறு. ``அழிந்தன`` என்றதற்குமுன், `ஆயினும்` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 4

உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.

பொழிப்புரை :

பிழைக்க வல்லவராயிருந்த மூவரையும் கயிலைக்குத் துவார பாலகராகச் செய்து முப்புரத்தை அம்பேவி எரிக்க வல்லவனாகிய உமாதேவி பாகனைக்குறித்து உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

உய்ய வல்லார் - யார் யார் எத்துணை மயக்க உரை களைக் கூறினும் அவற்றைக் கேளாது நன்னெறியைக் கடைப்பிடிக்க வல்லவர், ஒரு மூவராவார், `சுதன்மன், சுசீலன், சுபுத்தி` என்னும் பெய ருடைய அசுரர். இவர்கள் திரிபுரத்தில் வாழ்ந்தவர்கள். திரிபுரத் தலைவர்களாகிய, `தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி` என்பவர், முதலில் தாங்களும் சிவநெறியில் ஒழுகிப் பிறரையும் ஒழுகச்செய்து, பின்பு திருமால் புத்த வடிவம் கொண்டு நாரத முனிவ ருடன் சென்று புத்த சமயத்தைப் போதித்தபொழுது புத்தர்களாய்ச் சிவநெறியைக் கைவிட, ஏனையோரும் அவ்வாறே சிவநெறியைக் கைவிடவும், இம்மூவர் மட்டில் சிவநெறியிலே நின்றமைபற்றி இவரை, ``உய்ய வல்லார்`` என்றும், சிவபெருமான் திரிபுரத்தை எரித்த பொழுது இம்மூவரை மட்டில் அழியாதவாறு காத்து ஏனைய பலரை யும் அழித்தமை பற்றி ``ஒரு மூவரைக் காவல்கொண்டு எய்ய வல்லான்`` என்றும் அருளிச்செய்தார்.
``மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க் கருள்செய்தார்`` -தி.1 ப.69 பா.1
என இதனைத் திருஞானசம்பந்தரும் எடுத்தருளிச்செய்தல் காண்க. `திரிபுரங்கள் அழிக்கப்பட்ட பொழுது அழியாது பிழைத்தவர் மேற்குறித்த மூவரே` என்பதையும், பின்பு அவர்கள், சிவபெருமான் திருவருளால் அப்பெருமானது வாயில் காவலராயினர்` என்பதையும்,
முப்பு ரங்களின் மூவர் புத்தன்
மொழித்தி றத்தின் மயங்கிடாது
அப்ப ணிந்தவர் தாள்ப ணிந்தரு
ளாற்றின் நின்றனர் ஆதலால்
பொய்ப்பு ரந்தபு காலை நீற்றறை
நாவின் மன்னவர் போல்எரி
தப்பி வாழ்ந்தனர் ஈசன் ஆணையில்
நிற்ப வர்க்கிடர் சாருமோ.
சுதன்மன் என்று சுசீலன் என்று
சுபுத்தி என்று சொலப்படும்
அதன்மம் நீத்தஅம் மூவருக்கும்
அருள்சு ரந்துமை பாகனார்
இதம்வி ளங்க வரங்கள் வேட்ட
விளம்பு மின்என அங்கவர்
பதம்வ ணங்குபு நின்தி ருப்பணி
வாயில் காப்பருள் என்றனர்.
என்றற் றொடக்கத்துக் காஞ்சிப் புராணச் செய்யுட்காளான் அறிக. காஞ்சிப் புராணத்துள் இங்ஙனம் `வாயில் காப்பு` எனப் பொதுப்படக் கூறி இருப்பினும், `மூவருள் இருவர் வாயில் காவலரும், ஒருவன் இறைவனது திருக்கூத்திற்கு மத்தளம் முழக்குபவனும் ஆயினர்` என்பதை,
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங்காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவ்வருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூருளானே.
(தி.7 ப.55 பா.8) என்னும் சுந்தரர் திருமொழியான் உணர்க. `சுதன்மன், சுசீலன், சுபுத்தி` என்ற முறைபற்றி, `இறுதியிற் சொல்லப் படுபவனே மத்தளம் முழக்குவோனாயினன்` என்று கொள்ள இடம் உண்டு. வாயில் காவலரை இப்பொழுது, `திண்டி, முண்டி` என்கின்றனர். இவ்வசுரர்கள் சிவபெருமான் கோயிலில் வாயில் காவலர் ஆயினமையை அடிகளும் திருத்தோணோக்கத்து ஒன்பதாம் திருப்பாட்டில் குறித்தருளுதல் காண்க. ``வல்லானுக்கு`` என்றதும், ``என்று`` என்றதும் எஞ்சிநின்ற, `பாடி` என்பதனோடு முடியும். பாடுதலுக்கு இறைவனைச் செயப்படு பொருளாகவன்றிக் கொள்வோனாகக் கருதினமையின், ``வல்லானுக்கு`` எனக் குவ்வுருபு கொடுத்து ஓதினார்; பின்வருவனவற்றிற்கும் இது பொருந்தும். இத் திருப்பாட்டால், சிவபெருமானது அருளையும், ஆற்றலையும் வியந்தவாறு.

பண் :

பாடல் எண் : 5

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற. 

பொழிப்புரை :

தக்கனது யாகம் குலைதலும் தேவர்கள் ஓடின விதத்தைப் பாடி உந்தீபற; உருத்திர மூர்த்தியாகிய இறைவன் பொருட்டு உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

``சாடிய`` என்றது உடம்பொடு புணர்த்ததாகலின் `சாடியதனால்` என்பது கருத்தாயிற்று. இங்கு `வேள்வி` எனப்படுவது, தக்கனுடையதே என்பது இனிது விளங்கிக் கிடக்கும். உருத்திரநாதன், இருபெயரொட்டு. `உருத்திர நாதனுக்குப் பாடி` என இயையும். இனி, `உருத்திரநாதனாகிய ஒருவனுக்குத் தேவர் பலர் உடைந்தோடிய வாற்றைப் பாடி` என உரைப்பினுமாம்.

பண் :

பாடல் எண் : 6

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

பொழிப்புரை :

பிரம தேவனுக்குத் தந்தையாகிய, திருமாலானவன் தக்கன் வேள்வியில் அவியுணவைக் கொண்டு, அந்நாளில் வீரபத்திர ரால் பெரிதும் தாக்கப்பட்டு உயிர் ஒன்றையுமே உடையவனாய் இருந்தான் என்று சொல்லி, உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

ஆவா, இரக்கக் குறிப்பு; இதனை, ``இருந்தான்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``சாவாதிருந்தான்`` என்றது. `உயிர் போதல் ஒன்றொழிய ஏனை எல்லாத் துன்பங்களையும் எய்தினான்` என்றவாறு. வீரபத்திரரது தண்டத்தால் மார்பில் அடியுண்டு மூர்ச்சை யுற்றுக் கிடந்த நிலையை இவ்வாறு அருளிச் செய்தார். திருமால் எய்தியதாக யாண்டுங்காணப்படும் இந்நிலையையே அடிகள் அருளிச் செய்ததன்றி, அவன் தலையறுப்புண்டதாக ஒரோவிடத்துக் கூறப் படும். அதனை அடிகள் அருளிச்செய்திலர். `உலகையெல்லாம் படைப்பவனைப் படைத்த பெரியோன்` என அவனது பெருமையை எடுத்துக் கூறுவார், ``சதுர்முகன் தாதை`` என்று மறித்தும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 7

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

பொழிப்புரை :

கொடியவனாகிய அக்கினிதேவன் அவியுண்ண வளைத்த கையை வெட்டினான் என்று உந்தீபற, வெட்டுதலும் யாகம் கலங்கிற்று என்று உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

`வெம்மை யுடைவன்` என்னும் பொருளதாகிய, `வெய்யவன்` என்பது, `கொடியவன்` என்னும் நயத்தைத் தோற்று வித்து, ஒறுக்கப்படுதற்குரிய இயைபுணர்த்திநின்றது. `விருப்பமுடைய வனாய்` எனவும் உரைப்ப. திரட்டுதலுக்கு, `அவிப்பாகம்` என்னும் செயப்படுபொருள், முன்னைத் திருப்பாட்டினின்றும் வந்து இயையும்.

பண் :

பாடல் எண் : 8

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேஏடி யுந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

பொழிப்புரை :

பார்வதி தேவியைப் பகைத்துப் பேசின தக்கனை உயிரோடு வைத்துப் பார்ப்பதனால் சிவபெருமானுக்கு என்ன பயன்? என்று உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

`பர்வதம்` என்பது, `பருப்பதம்` என வருதல் போல, `பார்வதி` என்பது, `பார்ப்பதி` எனவந்தது. `மலைமகள்` என்பதே இதன் பொருள்; எனினும், இங்கு, `இறைவி` என்னும் பொருளதாய் நின்றது. பார்ப்பது - கண்ணோடுவது. `இறைவி என்று கருதாமல் ஏனையோர்போலக் கருதிய அறிவிலியாகிய அவன்மீது கண்ணோட்டஞ் செய்து இகழாதொழிதல் வேண்டா` என்றபடி. எனவே, `அவனை மிக இகழ்ந்தும், சிவனை மிகப்புகழ்ந்தும் பாடி ஆடு` என்றதாயிற்று. குற்றம் செய்தவரை ஒறுத்தல் அரசர்க்கு முறைமையாதல்போல, குற்றம் செய்தவரை இகழ்தலும் அறிவுடை யோர்க்கு முறைமையாதலின், இவ்வாறு அருளிச்செய்தார்

பண் :

பாடல் எண் : 9

புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற.

பொழிப்புரை :

இந்திரன் ஒரு குயில் உருக் கொண்டு ஒரு மரத்தில் ஏறினான்; அவன் தேவர்களுக்கு அரசன் என்று உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

புரந்தரன் - இந்திரன். பூ - அழகு. `தக்கன் வேள்வியில் வீரபத்திரருக்கு அஞ்சி இந்திரன் குயில் உருவங்கொண்டு ஓடி ஒளிந்தான்` என்பது வரலாறு. ``வானவர் கோன்`` என்றதும், முன்னர் ``சதுர்முகன் தாதை`` (தி.8 திருவுந்தியார். பா-6.) என்றதனோடு ஒப்பது. ``கோன்`` என்றது, பன்மை யொருமை மயக்கம்.

பண் :

பாடல் எண் : 10

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 

பொழிப்புரை :

கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

`வெஞ்சினத்தால் தொடங்கிய வேள்வியையுடைய வியாத்திரனார்` என்க. வெஞ்சினம், சிவபெருமான்மீதெழுந்தது. வியாத்திரன் - மாறுபட்ட செலவினையுடையவன்; தக்கன். ``மெச்சன் வியாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்`` (தி.6 ப.96 பா.9) என்னும் திருத்தாண்டகத் தொடருள், ``வேறாக`` என்றதனால், இப்பெயர் தக்கனைக் குறித்தல் இனிதுணரப்படும். துஞ்சுதல் - அழிதல். ஈண்டுச் சிவபெருமானது வெற்றியையே பெரிதும் பாடுதல் பற்றி, தக்கன் உயிர்த்தெழுந்தமையை அருளாது, அவன் துஞ்சியது மாத்திரையே அருளினார். தொடர்ந்த - பண்டுதொட்டு விடாது வந்த, `பிறப்பு அறப்பாடி` என இயையும்.

பண் :

பாடல் எண் : 11

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

பொழிப்புரை :

சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப் பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

விதி - சிறுவிதி; தக்கன். `சிறுவிதி` என்னும் பெயர், பிரமன் மகனாயினமை பற்றிக் கூறப்படுவது. யாட்டின் தலையை அமைத்ததும் ஒறுப்பேயாகலின், இதுவும் வெற்றி கூறியதேயாயிற்று.

பண் :

பாடல் எண் : 12

உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெலாம் உந்தீபற. 

பொழிப்புரை :

நமது பிறவி ஒழியும் வண்ணம் அவிர்பாகத்தை உண்ண வந்த பகனது கண்ணை அவன் ஓடாமற் பறித்த விதத்தைப் பாடி உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

`அவியை உண்ண` என வருவித்துரைக்க. பகன், ஆதித்தர் பன்னிருவருள் ஒருவன். `நாமெலாம் கருக்கெட` என மாற்றி, எஞ்சி நின்ற `பாடி` என்பதனோடு முடிக்க. ``கரு`` என்றது, `கருவில் வீழ்தல்` எனப் பொருள் தருதலின், `நாமெலாம் கருக் கெட` எனத் தொழில், முதலொடு சார்த்தி முடிக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 13

நாமகள்நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகன்னெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற. 

பொழிப்புரை :

நமது பழவினை ஒழிய, சரசுவதியின் மூக்கும் பிரமன் சிரமும் அற்று விழச் செய்து, சந்திரனைத் தேய்த்து, யாக பங்கம் செய்த செய்தியைக் குறித்துப் பாடி உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

``பட`` என்றதனை, ``நாசி`` என்றதனோடும் கூட்டி, `நாமகள் நாசி படவும், பிரமன் சிரம்படவும்` என உரைக்க. சோமன் - சந்திரன். முகன் - முகம்; போலி. னகரவொற்று விரித்தல். `முகம்` என்பது பாடமாயின், நகர வொற்று விரித்தலாம். `நெரித்தது` என்பது குறைந்து, `நெரித்து` என நின்றது. நெரித்தது - காலால் தேய்த்தது. இதன்பின், `பாடி` என்பது எஞ்சிநின்றது. `நெரிந்து` எனப்பாடம் ஓதி, அதனையும், `நெரிந்தது` எனக் கொண்டுரைத்தல் சிறக்கும். இதனுள், வீரபத்திரரால் நாமகள் மூக்கிழந்தும், பிரமன் தலையிழந்தும், சந்திரன் தேய்க்கப்பட்டும் போயினமை அருளப்பட்டது. இதனுள், ``பிரமன்` என்றது, முன்னர், ``விதி`` என்றதுபோல, தக்கனையே குறித்தது என்பாரும் உளர். தக்கனை, `சிறுவிதி` என்றல்போல, `சிறு பிரமன்` என்றல் வழக்கின்கண் இன்மையானும், தக்கன் தலையிழந்து மாற்றுத் தலை பெற்றமை முன்னர்க் கூறப்பட்டமை யானும் அது பொருந்து மாறில்லை.

பண் :

பாடல் எண் : 14

நான்மறை யோனு மகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியில் உந்தீபற. 

பொழிப்புரை :

பிரமனும் யாகாதிபனாகிய தக்கனும் இறந்து வீழ்தலும் இந்திரன் ஓடிப்போய் வழியைத் தேடுகிற விதத்தைக் குறித்து உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

``வேள்வியில்`` என்றதனை முதலிற்கொள்க. நான் மறையோன் - பிரமன். அகத்து இயமான் - நடுவிடத்தில் இருந்த தலைவன்; தக்கன். `இயமானன்` என்பது, குறைந்து நின்றது; இது வேட்போனைக் குறிக்கும் ஆரியச் சொற்சிதைவு. ``இயமானன்`` என்றதன்பின்னும் உம்மை விரிக்க. `மகத்தியமான்` எனவும் பிரிப்பர். `பட` என்பது, `பட்டமையால்` எனக் காரணப்பொருளில் வந்தது. `புரந்தரன் தேடுமாறு` என இயையும். முன்னர், ``இந்திரனைத் தோள் நெரித்திட்டு`` (தி.8 திருவம்மானை-15.) என்றமையால், இங்கு, `போம் வழிதேடுதல்` என்றது, அங்ஙனம் தோள் நெரிந்து மன வலியிழந்தமையையேயாம். ஆகவே, `நான் மறையோனும், அகத்தியமானும் பட` என்றது மனவலி இழத்தற்குக் காரணங்கூறும் அளவிற்றாய் வந்ததாம். `வேட்பிப்போனும், வேட்போனும் பட்டமையின், அவியைப் பெறுவோருள் முதல்வனாகிய இந்திரன் ஆங்கு நிற்க வல்லனோ` என்றபடி. முதற்கண் அவிபெறுவோனாகிய இந்திரனது எளிமை மிகுதியுணர்த்தற்கு அவன் குயிலாகி ஓடினமை முன்னர்க் கூறப்பட்டதாயினும், `தோள்நெரிந்த பின்னரே அவ்வாறு ஓடினான்` என்றற்கு, இதனை அருளிச்செய்தார் என்க.

பண் :

பாடல் எண் : 15

சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 

பொழிப்புரை :

சூரியனது பற்களைத் தகர்த்த விதத்தைக் குறித்தும் வேள்வி கலக்கமடைந்ததைக் குறித்தும் உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

`கண் பறிக்கப்பட்டான்` (தி.8 திருவுந்தியார். பா-12.) என முன்னர்க் கூறப்பட்ட சூரியன், `பகன் என்னும் பெயரினன் என்பது அங்கு எடுத்து ஓதப்பட்டது.
அதனால், இங்குப் பல் தகர்க்கப் பட்டவனாகக் குறிக்கப்படும் சூரியன் வேறொருவன் என்பது வெளிப்படை. இவன் பெயர், `பூடன்` எனப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 16

தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 

பொழிப்புரை :

தக்கன் தன் மக்களால் சூழப்பட்டிருந்தும் தலை யிழக்கப் பெற்றான் என்றும் வேள்வி அழிந்தது என்றும் உந்தீபறப் பாயாக!

குறிப்புரை :

``அன்றே என்பது, `முன்னரே` எனப் பொருள் தந்தது. `தக்கன் முன்னரே இறந்தமையால், வேள்வி, பின்னர் அவன் மக்களைச் சூழ நின்று மடிந்தது` என்க. மடிதல் உயிர்கட்கன்றிப் பிறவற்றிற்கின்மையின், வேள்வியில் வந்தாரது தொழில் வேள்வி மேல் ஏற்றி, ``மடிந்தது வேள்வி`` எனப்பட்டது. இதனானே, ``சூழநின்று`` என்றதும், அவ்வாற்றாற் கூறப்பட்டதேயாயிற்று.
இதனுடன் தக்கன் வேள்வி பற்றியவற்றை முடிக்கின்றா ராகலின், இறுதிக்கண் இவ்வாறு தொகுத்தருளிச்செய்தார். தக்கன் வேள்வி செய்த ஞான்று அவன் மைந்தர் ஆண்டிருந்திலர் என்பது கந்த புராணத்தால் அறியப்படுதல்பற்றி, ஈண்டு, ``மக்கள்`` எனப்பட்டார் பெண்மக்களே என்பர். எனினும், அடிகள் திருமொழிக்கு அவ் வரலாற்றினை அடியாகக்கொண்டு உரையாது, வேறுபட உரைத்தல் இழுக்காது.

பண் :

பாடல் எண் : 17

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 

பொழிப்புரை :

முன்னாளில் ஒரு பாலகனுக்குப் பாற்கடலைத் தந்தருளின சிவபெருமான் பொருட்டு உந்தீபற; குமரவேள் தந்தையின் பொருட்டு உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

பாலகனார், உபமன்னிய முனிவர். இவர் வியாக்கிர பாத முனிவர் மைந்தர். இவர் தம் தாய்மாமனாராகிய வசிட்ட முனிவர் இல்லத்தில் காமதேனுவின் பாலை உண்டு வளர்ந்து, பின் தம் தந்தையார் இல்லத்தை அடைந்தபொழுது பால் வேண்டி அழ, அவர், `சிவபெருமானை வேண்டி அழுக` என, அவ்வாறே வேண்டி அழுத பொழுது, சிவபெருமான் திருப்பாற்கடலையே அச்சிறு முனிவரிடம் வரச் செய்தார் என்பது புராண வரலாறு. இதனைக் கோயிற் புராணம் விரித்து விளக்கும். இது, ``பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற் கடல் ஈந்தபிரான்`` (தி.9 பா.9) எனத் திருப்பல்லாண்டினும், ``அத்தர் தந்த அருட் பாற் கடல்உண்டு - சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்`` (தி.12 திருமலைச் சிறப்பு. 15.) எனத் திருத்தொண்டர் புராணத்தினும் கூறப் பட்டது. கோலம் - அழகு. குமரன் - முருகன். `மகனைப் பெற்றவ னாதலின் மகவருமை அறிந்து அளித்தான்` என்றபடி. இரண்டிடத்தும், `பாடி` என்பது வருவிக்க. `பெரிதாகிய பாற்கடலைச் சிறுவர்பால் வருவித்தான்` என வெற்றி கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 18

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.

பொழிப்புரை :

பிரமனது சிரம் விரைவில் அரியப்பட்டது என்றும் அதுவும் சிவபெருமானது நகத்தால் அரியப்பட்டது என்றும் உந்தீபறப் பாயாக!

குறிப்புரை :

நன்மை - அழகு. `அழகிய மலரின்மேல் அழகுடன் வீற்றிருந்த அவன், தலை இழத்தலாகிய பேரிழிவை எய்தினான்` என்பது நயம். ஒல்லை - விரைவு. உகிர் - நகம். பிரமனும், திருமாலும் தாங்களே முதற்கடவுளர் எனத் தருக்கித் தம்மிற்போர் செய்தபொழுது சிவபெருமான் ஒரு சோதி வடிவாய்த் தோன்ற, திருமால் அவரை வணங்கினார். பிரமனோ, தனது ஐந்து தலைகளுள் உச்சித் தலையினால் சிவபெருமானை இகழ, சிவபெருமான் வைரவக் கடவுளைத் தோற்றுவித்து, அவரால் அவ்வுச்சித் தலையைக் கிள்ளி விடச் செய்தனர் என்னும் வரலாற்றைக் கந்த புராணம் ததீசி யுத்தரப் படலத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 19

தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற. 

பொழிப்புரை :

தன் தேரை நிறுத்திக் கயிலாய மலையைத் தூக்கின இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரிந்த விதத்தைக் குறித்து உந்தீபறப்பாயாக!

குறிப்புரை :

தேர் - புட்பக விமானம். இது, குபேரனிடத்தினின்றும் திக்குவிசயத்தில் கொண்டது. மலை, கயிலாயமலை. இராவணன் கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்தபொழுது சிவபெருமான் தமது திருவடிப் பெருவிரல் ஒன்றினால் சிறிது ஊன்ற, அவன் அம்மலையின் கீழ், பன்னாள் அழுதுகொண்டு கிடந்தான் என்னும் வரலாறு நன்கறியப் பட்டது. ``சிரம் ஈரைந்து`` என்றமையால், ``இருபது`` என்றது தோள்களாதல் வெளிப்படை. ``இருபதும்`` என ஒருங்கு தொகுத்தமையின் ``இற்றது`` என்று அருளினார்.
``பொருள்மன்ன னைப்பற்றிப் புட்பகங் கொண்ட
மருள்மன்ன னைஎற்றி`` (தி. 4 ப.17 பா. 11)
என்று திருநாவுக்கரசர் அருளிச்செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 20

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற் கப்பாலுங் காவலென் றுந்தீபற. 

பொழிப்புரை :

மேலாடை அணிந்துள்ள, முனிவர்கள் அழிந்து போகாமல், ஆகாயத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும், ஆகாயத் துக்கு அப்பாலுள்ளவர்க்கும் அவனே காவல் என்றும் உந்தீபறப் பாயாக!

குறிப்புரை :

ஏகாசம் - உத்தரீயம். `போர்வை` எனவுங் கூறுவர். முனிவர்கள் `சூரிய மண்டலத்தருகில் இயங்குவர் என்பதனால், `அங்கு அவர்களையும், அவர்கட்குமேல் உள்ள மற்றையோரையும் காப்பது சிவபெருமானது திருவருள்` என்பது இதன் திரண்டபொருள். முனிவர்கள் சூரிய மண்டலத்தருகில் இயங்குதலை, ``நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் - தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் - காலுண வாகச் சுடரொடு கொட்கும் - அவிர்சடை முனிவர்`` (புறம் - 43.) என்பதனானும் அறிக. `ஆகாசத்தில்` என உருபு விரிக்க. இரண்டிடத்தும் ``காவல்`` என்ற எழுவாய்க்கு `உள்ளது` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. ``அதற்கு`` என்றது, கூன்.

பண் :

பாடல் எண் : 1

பூத்தாரும் பொய்கைப்
புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
கூடும்வண்ணம் தோணோக்கம். 

பொழிப்புரை :

விளங்குகின்ற தில்லை அம்பலத்தின் கண்ணே திருநடனம் செய்கின்ற கூத்தனே! உனது செம்மையான திருவடியை அடையும்படி, மலர்கள் பூத்து நிரம்பி இருக்கின்ற தடாகநீர் இதுதான் என்று எண்ணிக் கானலை முகக்கின்ற அறிவிலியினது குணம், எங்களுக்கு உண்டாகாமல் நீக்கினவனே! என்று பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

``பூத்து ஆரும்`` என்றதற்கு, `பூக்கள்` என்னும் வினை முதல் வருவிக்க. இஃது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றவாறு.
பேய்த்தேர் - கானல். உறு, துணைவினை. பேதை குணம் - அறிவிலியின் தன்மை. `பேதைதன் குணம் எனக்கும் ஆகாமே எனது பேதைமையைத் தீர்த்தாய்` என்க. அஃதாவது `நிலை யில்லாத உலக இன்பத்தை நிலையானதாகக் கருதி நுகர விரும்பும் தன்மை உண்டாகாதபடி, அதற்கு ஏதுவாகிய பேதைமையைப் போக்கினாய்` என்றபடி. ``தோணோக்கம்`` என்னும் எழுவாய்க்குரிய, `ஆடப்படு கின்றது` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
எனவே, `உன் புகழையே பாடி ஆடுகின்றோம்` என்பது கருத்தாயிற்று. இது, முன்னிலைப் பரவல், இனி வருவன, படர்க்கைப் பரவல், ``ஏனை யொன்றே, தேவர்ப் பாராய முன்னிலைக் கண்ணே`` (தொல்.செய்.133.) என்றமைபற்றி, முன்னிலைக்கண் வருதலை. `பரவல்` என்றும், படர்க்கைக்கண் வருதலை, `புகழ்தல்` என்றும் வேறுபடுத்தும் கூறுப.

பண் :

பாடல் எண் : 2

என்றும் பிறந்திறந்
தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந்
தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை
அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர்
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

நெருங்கிப் பொருந்திய கூந்தலையுடையீர்! எக்காலத்தும் பிறந்தும் இறந்தும் துன்பக் கடலில் அழுந்தாமல் என்னை அடிமை கொண்டவனும், கன்றைக் கொண்டு விளங்கனியை எறிந்த வனாகிய திருமாலும் பிரமனும் காணுதற்கு அருமையான குறையாத பெருமையையுடைய தில்லை அம்பலத்தை உடையவனுமாகிய இறை வனது அருட்குணத்தைப் போற்றி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

`ஆண்டுகொண்டானாகிய அம்பலவன்` என்க. திரு மால் கண்ணணாய்த் தோன்றியிருந்தபொழுது கன்றால் விளங்கனியை எறிந்த வரலாற்றைக் கிருட்டின பாகவதத்துட் காண்க. துன்று ஆர் - நெருங்குதல் பொருந்திய.

பண் :

பாடல் எண் : 3

பொருட்பற்றிச் செய்கின்ற
பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி
வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார்
சேடறிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

வேடராகிய கண்ணப்பரது பெருமையை உலகம் அறிய அவரது செருப்பு அணிந்து சிறந்த அடியும் வாயாகிய குடமும் மாமிசமாகிய உணவும் ஆகமப் பொருள் பற்றிச் செய்கின்ற பூசைகள் போல விளங்கும்படி விருப்பமாய் ஏற்று இறைவன் திருமேனி குளிர, அப்பொழுதே அவர் திருவருள் பெற்று நின்ற வரலாற்றைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

`பொருள்பற்றி, அருள்பெற்று` என நிற்கற்பாலன; எதுகை நோக்கி, ளகரம் திரிந்து நின்றன. பொருள் - ஆகமங்களிற் சொல்லப்பட்ட விதிகள். `அவற்றிற்கு முரணாகக் குற்றம்படச்செய்தும் அருளைப்பெற்று நின்ற வியப்பைப் பாடி ஆடுவோம்` என்றபடி. `விளங்குமாறு அதனை விரும்பி` என உரைக்க. ``கலசம்`` என்றது, அதன்கண் நீரைக் குறித்தது. `அடி, கலசம், அமுதம்` என்ற செவ் வெண்ணின்பின், `இவை` என்னும் பெயரும், `இவற்றை` என்னும் உருபும் தொகுத்தலாயின. வாய்க்கலசம், இருபெயரொட்டு; உருவகம் அன்று, அமுதம் - உணவு. `வேடனார், கண்ணப்ப நாயனார்` என்பது வெளிப்படை. `வேடனாரது சேடு` என்க. சேடு - பெருமை, என்றது, அன்பின் சிறப்பை. ``அறிய`` என்றது, `மதிக்க` என்னும் பொருட்டாய், மகிழ்தலைக் குறித்தது. முன்னைத் திருப்பாட்டில், `தில்லை அம்பலவன்` என்றது இதற்கு எழுவாயாய் வந்து இயையும். காரணப் பொருளில் வந்த, ``அறிய`` என்ற எச்சம், ``பெற்றுநின்றவா`` என்ற வற்றோடு முடியும். மெய் - உடல். நின்றவா - என்றும் இறைவன் வலப் பக்கத்தில் மாறிலாது நின்றவகை. `கண்ணப்ப நாயனாரது அன்பின் சிறப்புக்கருதி அவரது பொருந்தாச் செயல்களை இறைவன் சிறந்த வேதாகம முறைப்படியே செய்கின்ற பூசைபோல ஏற்று மகிழ்ந்து அருள்புரிந்தான்` என, அன்பு ஒன்றையே விரும்பும் அவனது அருளின் பெருமையை வியந்தவாறு.

பண் :

பாடல் எண் : 4

கற்போலும் நெஞ்சங்
கசிந்துருகக் கருணையினால்
நிற்பானைப் போலஎன்
நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பாற் படுத்தென்னை
நாடறியத் தான்இங்ஙன்
சொற்பால தானவா
தோணோக்கம் ஆடாமோ.

பொழிப்புரை :

வலிமையான கல்லை ஒத்த என் மனமானது நைந்து உருக, கருணையினால் இறைவனைப் போலத் தோன்றி என் மனத்தின் கண்ணே நுழைந்தருளி என்னை நன்மைப் பகுதியிற்படுத்தி உலகம் அறியும் வண்ணம் பலரும் பேசும் நிலைமையை உடைய பொருள் ஆனாவற்றைச் சொல்லி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

`என் நெஞ்சம் கசிந்துருக` என உரைக்க. நிற்பானைப் போல - ஏனையோர்போல என்றும் புலப்பட்டு நிற்பவனைப் போல; இதற்கு, `வந்து` என்னும் முடிபு வருவிக்க. நற்பால் - நன்னெறி. `நாடறிய நற்பாற்படுத்து` என, முன்னே கூட்டுக. ``தான்`` என்றதும், தில்லை அம்பலவனையே என்பது வெளிப்படை. சொற்பாலது ஆனவா - சொல்லின்கண்ணதாம் பொருளானவாற்றை (ப்பாடி); `இது அவன் திருவுரு; இவன் அவன்` (தி.8 திருப்பள்ளி.7.) என உணர்ந்து சொல்லும்படி விளங்கியவாற்றைப்பாடி` என்றவாறு, `தான், என் நெஞ்சம் உருகும்படி கருணையினால் வந்து புகுந்தருளி என்னை நற்பாற் படுத்து இங்ஙன் ஆனவா` என வினைமுடிக்க.

பண் :

பாடல் எண் : 5

நிலம்நீர் நெருப்புயிர்
நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ
டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகே ழெனத்திசை
பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

இறைவன் ஒருவனே, நிலமும், நீரும் தீயும், வாயுவும், பெரிய ஆகாயமும், சந்திரனும் சூரியனும், அறிவுருவாய ஆன்மாவும் என்னும் எட்டு வகைப் பொருள்களாய் அவற்றோடு கலந்து இருப்பவனாய் ஏழுலகங்களும் திக்குகள் பத்தும் ஆகப் பல பொருள்களாக நின்ற வகையைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

உயிர் - காற்று. விசும்பு - ஆகாயம். நிலா - சந்திரன். பகலோன் - சூரியன். புலன் - புலம்; அறிவு; போலி. ஆன்மாவை, ``மைந்தன்`` என்றார், `புருடன்` என்னும் வடநூல் வழக்குப்பற்றி. `ஐம்பூதம், இருசுடர், ஆன்மா` என்னும் எட்டும் இறைவனுக்கு, `அட்ட மூர்த்தம் - எட்டுரு` எனப்படுதலின், ``எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்`` என்று அருளினார். திருநாவுக்கரசரும் இவ்வாறே,
``இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாய்எறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகி`` (தி.6 ப.94 பா.1)
என்று அருளிச்செய்தல் காண்க. `தான் ஒருவனுமே ஏழ் உலகெனப் பத்துத் திசையெனப் பலவாகி நின்றவா (பாடி)` என்க. ``என`` என்றவை, `எண்ணிடைச் சொற்கள்`.
ஈறாய்முத லொன்றாய்இரு பெண்ஆண்குணம் மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே.
என்ற திருஞானசம்பந்தரது திருமொழியை (தி.1 ப.11 பா.2) இங்கு உடன்வைத்து நோக்குக.

பண் :

பாடல் எண் : 6

புத்தன் முதலாய
புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில்
தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச்
செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால்
தோணோக்கம் ஆடாமோ.

பொழிப்புரை :

புத்தன் முதலான சிறு அறிவினையுடைய பல சமயத்தவர் தங்கள் தங்கள் சமயங்களில் தடுமாற்றம் அடைந்து நிற்க, என் சித்தத்தைச் சிவமயமாகச் செய்து யான் செய்த செயல்களையே, தவமாகச் செய்த எம் இறைவனது கருணையைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

திருவள்ளுவராற் செய்யப்பட்ட நூலை, `திருவள்ளுவர்` என்றல்போல, புத்தனால் ஆக்கப்பட்ட சமயத்தை, `புத்தன்` என்றது, கருத்தாவாகுபெயர். இதனை, ``வினை முதல் உரைக்கும் கிளவி`` என்பர் தொல்காப்பியர் (சொல். 115.).
மதம் - கொள்கை. தட்டுளுப்பு - நிலைதளர்தல்; அஃதாவது பயன்பெறா தொழிதல். சமயிகளது செயல், சமயங்களின்மேல் ஏற்றப் பட்டது. `நம் சித்தம்` எனவும், `நாம் செய்தன` எனவும் எடுத்துக் கொண்டு உரைக்க. சிவம் - சிவகரணம். கருணையினால் - கருணையைப் பாடும் பாட்டோடு.

பண் :

பாடல் எண் : 7

தீதில்லை மாணி
சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன்
தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன்
திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு
பற்றினவா தோணோக்கம். 

பொழிப்புரை :

தீமை சிறிதும் இல்லாத பிரமசாரியாகிய சண்டேசுர நாயனார் சிவபூஜையை அழித்தவனும் குலத்தால் அந்தணனும், முறையால் தந்தையுமாகிய எச்சதத்தனைக் கால்கள் இரண்டையும் வெட்ட அப்பாவச் செயலாலேயே இறைவனது திருவருளினால் தேவர்கள் தம்மை வணங்கும்படி இறைவனது பரிகலம் முதலிய வற்றைப் பெற்ற வரலாற்றைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

தீது - குற்றம். `இல்` என்பது, `இல்லென் கிளவி` என்னும் நூற்பாவின்வழி, (தொல் - எழுத்து. 373.) ஈற்றில் ஐகாரச் சாரியை பெற்றது. மாணி - பிரமசாரி; விசாரசருமர். இவரே பின் சண்டேசுர பதவியைப் பெற்றுச் சண்டேசுர நாயனாராயினார். இவரது வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்துள் விளங்கக் காண்க. ``மாணி`` என்றதில் தொக்குநின்ற ஆறனுருபு, `சாத்தனது செலவு` என்பது போல, வினைக் கிழமைக்கண் வந்தது. ``கருமம்`` என்றது, தொண்டினை. `சாதியாலும்` என்னும், ஏதுப் பொருட்டாகிய மூன்றாம் உருபு, தொகுத்தலாயிற்று. `வேதியனாகிய தாதை` என்க. ``சிதைத் தான், தாதை`` என்றவை, ஒருபொருள்மேற் பல பெயர். ``தாதை தனைத் தாள் இரண்டு சேதிப்ப`` என்றது, `யானையைக் கோடுகுறைத் தான்` என்பதுபோல நின்றது.
சேதித்தல் - வெட்டுதல். `அப்பாதகமே` எனச் சுட்டு வருவித்து, ``சேதிப்ப`` என்றதன் பின்னர்க் கூட்டுக. பாதகத்தைத் தரும் செயலை, ``பாதகம்`` என்றது, காரியவாகுபெயர். `கூழ்` என்பது போல, `சோறு` என்பதும் உணவைக் குறிப்பதொரு சொல்; அஃது இங்கு, `பயன்` என்னும் பொருட்டாய் நின்றது, இனி, `சிவபிரானுக்கு நிவேதிக்கப்பட்ட திருவமுதின் பகுதியையே குறித்தது` என்றலுமாம்; என்னை? இந்நாயனார்க்குச் சிவபெருமான்,
``நாம் - உண்டகலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காக`` (-தி.12 பெ.புரா.சண்டேசுரர்.56 )
என அருள் புரிந்தமையான் என்க. ``பாதகமே பற்றினவா`` எனக் கருவி வினைமுதல்போலக் கூறப்பட்டது. எனவே, `பாதகந்தானே சிறந்த நன்மையைப் பெறுதற்கு வழியாயினவாற்றைப் பாடி` என்பது பொருளாயிற்று.

பண் :

பாடல் எண் : 8

மானம் அழிந்தோம்
மதிமறந்தோம் மங்கைநல்லீர்
வானந் தொழுந்தென்னன்
வார்கழலே நினைந்தடியோம்
ஆனந்தக் கூத்தன்
அருள்பெறில்நாம் அவ்வணமே
ஆனந்த மாகிநின்
றாடாமோ தோணோக்கம். 

பொழிப்புரை :

மங்கைப் பருவத்தை உடைய நல்ல பெண்களே! அடியோங்கள் ஆனந்தத் தாண்டவம் செய்கின்ற இறைவனது திரு வருளைப் பெற்றுள்ளோம் என்றால் உலகியலில் மானம் அழிந்தோமா யினோம்; நம்மை மறந்தோமாயினோம்;
ஆகையால், நாம் அவ்வாறே விண்ணுலகத்தவர் வணங்குகின்ற தென்னவனாகிய அவனது நீண்ட வீரக்கழலை அணிந்த திருவடிகளையே நினைந்து ஆனந்தமே வடிவாய் நின்று தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

``மானம் அழிந்தோம்; மதிமறந்தோம்`` என்றதனை, ``அடியோம்`` என்றதன்பின்னர்க் கூட்டி, அதன் பின்னர், `இவ்வாறு` என்பது வருவிக்க. மானம், உலகத்தாரால் நன்கு மதிக்கப்படும் நிலை. மதி - அதனைப் பெறுதற்கு ஆவனவற்றை அறியும் அறிவு. தென்னன்- தென்னாட்டில் விளங்குபவன்.
நினைந்து - நினைதலால். ``பெறில்`` என்றது, ``நீரின் றமையா துலகெனின்`` (குறள் - 20) என்பதுபோல, `பெற்றது உண்மையாயின்` எனப் பொருள் தந்தது. அவ்வண்ணமே - அவ்வருள்வழியே.

பண் :

பாடல் எண் : 9

எண்ணுடை மூவர்
இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை
கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர்
எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர்
மாண்டனர்காண் தோணோக்கம். 

பொழிப்புரை :

உயர்வாக எண்ணத் தகுந்த மூவர், அரக்கர்கள் முப்புரம் எரித்த போது பிழைத்து, நெற்றிக்கண்ணை உடைய எம் தந்தையின், வாயிற்படியில் துவாரபாலகராய் நின்ற பிறகு அளவு கடந்த இந்திரர்களும், எத்தனையோ பிரமர்களும் இறந்தனர் என்று நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

எண் உடை - என்றும் சிவபெருமானை மறவாது நினைத்தலையுடைய. அசுரர்களை, ``இராக்கதர்`` என்று அருளினார். இவர், திரிபுரத்தில் அழியாது உய்ந்தவர். இவரைப் பற்றிய குறிப்பை மேலே (தி.8 திருவுந்தியார். பா.4- உரை.) காண்க. `எண்ணிலி` என்பதே ஓர் எண்போல அருளினார். மண் மிசை - மண்ணை உண்கின்ற. `மால்கள்` என்பதில் கள்விகுதி தொகுத்தலாயிற்று. இதனால், இறைவனது திருவருளைப் பெறாதோர் காலவயப்பட்டு இறத்தலையும், அதனைப் பெற்றோர் காலத்தைக் கடந்து வீடு பெறுதலையும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 10

பங்கயம் ஆயிரம்
பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன்
சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான்
சக்கரம்மாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம்
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

ஆயிரம் தாமரைமலர்களுள் ஒரு மலர் குறைய தமது கண்ணைத் தோண்டி, சிவபெருமானது திருவடி மீது சாத்தலும் சங்கரனாகிய எம்மிறைவன், திருமாலுக்குச் சக்கரப்படை அளித்த வரலாற்றை எங்கும் நாம் துதித்துத் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

``ஆயிரம்`` என்றதன்பின், `எனக்கொண்ட` என்பது வருவிக்க. `திருமால் சிவபெருமானிடம் சக்கரம் பெறுதற்கு நாள் தோறும் ஆயிரந் தாமரை மலர் கொண்டு அருச்சிப்பேன் எனக் கருதிக்கொண்டு அவ்வாறு அருச்சித்துவருகையில், ஒருநாள் ஒரு மலரைச் சிவபெருமான் மறைத்துவிட, அதற்கு ஈடாகத் திருமால் தனது கண்ணைப் பறித்து அருச்சித்ததனால் சிவபெருமான் மகிழ்ச்சியுற்றுச் சக்கரத்தை அளித்தருளினார்` என்பது புராண வரலாறு.
இதனை, காஞ்சிப் புராணத் திருமாற்றுதிப் படலத்திற் காண்க. இவ்வாறு தி.8 திருச்சாழல் பதினெட்டாம் திருப்பாட்டிலும் குறிக்கப் பட்டது. ``தம்கண்`` என்றது, ஒருமை பன்மை மயக்கம். `தன்கண்` என்றே பாடம் ஓதுதலுமாம். பரவி - துதித்து.

பண் :

பாடல் எண் : 11

காமன் உடலுயிர்
காலன்பல் காய்கதிரோன்
நாமகள் நாசிசிரம்
பிரமன் கரம்எரியைச்
சோமன் கலைதலை
தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

மன்மதனின் உடலையும் இயமனின் உயிரையும் சுடுகின்ற கிரகணங்களையுடைய சூரியனின் பல்லையும் கலைமகளின் மூக்கையும் பிரமனின் தலையையும் அக்கினி தேவனின் கைகளையும், சந்திரனின் கலைகளையும் தக்கனின் யாக தேவனின் தலையையும் நீக்கிப் பாவத்தைப் போக்கித் தூய்மை செய்த விதத்தைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

`காலன் உயிர், கதிரோன் பல், பிரமன் சிரம், எரியைக் கரம். தக்கனையும் எச்சனையும், தலை` என மாறிக் கூட்டுக. பிற இடங்களிலும் ஐயுருபுகள் தொகுத்தலாயின. அவை அனைத்தும், `தூய்மைகள் செய்த` என்பதனோடு முடியும்.
``எரியைக் கரம் தூய்மைகள் செய்த`` என்றது, `யானையைக் கோடு குறைத்த` என்பது போல நின்றது. `எச்சன், வேள்வித் தேவன்` என்பதும், `அவனும் தலையறுக்கப்பட்டான்` என்பதும் மேலே (தி.8 திருச்சாழல். பா.5-2-உரை.) கூறப்பட்டன. `தக்கன் வேள்வியிலும், பிறவிடங்களிலும் தேவர்கள் ஒறுக்கப்பட்டமையால், குற்றம் நீங்கித் தூயராயினர்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 12

பிரமன் அரியென்
றிருவருந்தம் பேதைமையால்
பரமம் யாம்பரம்
என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய்
அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா
தோணோக்கம் ஆடாமோ.

பொழிப்புரை :

பிரமன் திருமால் என்று சொல்லப்பட்ட அவ் விருவரும் தமது அறியாமையால் யாமே பரம்பொருள் என்று, வாது செய்தவர்களுடைய செருக்கு அடங்க, சிவபெருமான், நெருப்புரு வாகி அவ்விடத்தே அளவு கடந்து மேலான பொருளாகி நின்ற வரலாற்றைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

பரமம், பரம் - முதற்பொருள். `என்று அவர்கள்` எனப் பிரித்து, ``என்று`` என்றதனை, `என` எனத் திரிக்க. பதைப்பு - முனைப்பு. இதனுட் குறிக்கப்பட்ட வரலாறு முன்னர்த் திருச்சாழல் ஆறாம் திருப்பாட்டிலும் குறிக்கப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 13

ஏழைத் தொழும்பனேன்
எத்தனையோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன்
பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத
நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

அறிவில்லாத அடியவனாகிய நான் எத்தனையோ காலம் முழுதும் மேலான கடவுளை வணங்காமல் வீணாகக் கழித்தேன். அங்ஙனமிருந்தும் ஊழி முதல்வனும் அழியாத சிறந்த மாணிக்கம் போல்பவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து என் பிறவியின் வேரைப் பறித்து எறிந்த விதத்தைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

ஏழை - அறிவிலி. தொழும்பனேன் - தொண்டனேன். பாழ் - வறுநிலம். `பரம்பரனைப் பணியாதே பாழுக்கிறைத்தேன்` என இயைக்க. ``பாழுக்கிறைத்தேன்`` என்றது, `அன்ன செயலைச் செய்தேன்` என்ற பான்மை வழக்கு. அஃதாவது, `உலகியலில் நின்று உழைத்தேன்` என்றபடி. ஊழி முதல் - ஊழிக்கு முதலாய் நிற்கும் பொருள். சிந்தாத - கெடாத. தாழ் - பூட்டு. இது, தளையிடத்துள்ளது என்க. பறித்த - தகர்த்த. ``பாசமெனுந் தாழ் உருவி`` (தி.8 அச்சோ-7.) எனப் பின்னரும் அருளுவார்.

பண் :

பாடல் எண் : 14

உரைமாண்ட உள்ளொளி
உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்
பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
தோணோக்கம் ஆடாமோ. 

பொழிப்புரை :

சொற்கள் தம் ஆற்றல் அடங்குதற்குக் காரணமான உள்ளொளியாகிய உத்தமனாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து என் மனத்தில் புகுதலும் கரையற்ற ஆசையாகிய பெரிய கடலைத் தாண்டுதலும் தமக்கு உணவு அற்ற இந்திரியங்களாகிய பறவைகள் அஞ்சி ஓட, நமது தன் முனைப்புக் கெட்ட விதத்தைப் பாடி தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை :

உரை மாண்ட - சொல் அற்ற; என்றது, `அதற்கு அப்பாற்பட்ட` என்றபடி. `உள்ளொளியாகிய உத்தமன்` என்க. ஆன்மா ஒளியும், இறைவன் அதன் உள்ளொளியும் ஆதல் அறிக. ``சோதியுட் சோதி`` (தி.5 ப.97 பா.3) என்றலும் இதுபற்றி. கரை மாண்ட - கரை அற்ற. காமம் - ஆசை; உலகியல் பற்றித் தோன்றும் ஆசை. ஒருகாலும் நிரம்பாது மேன்மேல் வளர்வதாகலின், அது கரையற்ற கடல் போல்வதும், இறைவன் திருவருள் உணரப்பட்ட பின்னர், அவ்வாசை தீர்ந்தொழிதலின், அவ்வாற்றாற் கடக்கப் படுவதும் ஆயினவாறு கண்டுகொள்க. `இந்திரியமாகிய பறவைகட்கு இரை` என்றது, மனத்தை. உலகியல் ஆசையற்றபின் மனம் இந்திரியத் தின் வழிப்படாமையின், அப்பறவைகள் இரிந்தோடலாயின. இரிந்து - நீங்கி. `துரை, மிகுதிப்பாடு` (சிவஞான சித்தி. சூ.2.32. உரை.) என்பர், மாதவச் சிவஞான யோகிகள். எனவே, `தன் முனைப்பு` என்பது பொருளாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

போருக்கு அமைந்த கூரிய வேலையொத்த கண்களையுடைய பெண்களே! மேன்மை பொருந்திய பவளம் கால்களாகவும், முத்து வடம் கயிறு ஆகவும் உடைய, அழகு பொருந்திய பொன்னாலாகிய ஊஞ்சல் பலகையில் ஏறி இனிமையாய் இருந்து, திருமால் அறியாத அன்றலர்ந்த தாமரை போலும் திருவடியை நாய் போன்ற அடியேனுக்கு உறைவிடமாக தந்தருளிய திருவுத்தர கோச மங்கையில் எழுந்தருளியிருக்கிற தெவிட்டாத அமுதம் போன்ற வனது அருளாகிய இரண்டு திருவடியைப் புகழ்ந்து பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

``கால், கயிறு`` என்பவற்றின் பின் தனித்தனி எச்ச உம்மை விரித்து, அவற்றை ``ஆக`` என்றதனோடு முடிக்க. `ஆக, அமர்ந்து, பாடி ஆடாமோ` என வினைமுடிக்க. நாள் மலர் - அன்றலர்ந்த தாமரை மலர்போலும். ஊராக - வாழும் இடமாகும்படி.

பண் :

பாடல் எண் : 2

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொழிப்புரை :

மயிலைப் போன்ற சாயலைப் பெற்று, அன்னத்தைப் போன்ற நடையையுடைய பெண்களே! விளங்குகின்ற மூன்று கண்களை உடையவனும், கெடாத விண்ணுலகில் தங்கி யிருக்கும் தேவர்களும் காணமுடியாத தாமரை போன்ற திருவடி தேன் கலந்தது போன்று இனித்து அமுதாய் ஊற்றெடுத்து அது விளங்கி உடலில் பொருந்தி உருக்குகின்ற திருவுத்தர கோச மங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன் எழுந்தருளி இருக்கும் திருவிடை மருதூரைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடு வோம்.

குறிப்புரை :

`அங்கு இலங்கு மூன்றாகிய நயனத்தான்` என மாற்றி யுரைக்க. ``அங்கு`` என்றது பண்டறி சுட்டாய், ஆகாயத்தைக் குறித்தது. மூன்று, முச்சுடர். முச்சுடர்களுள் தீ நிலத்தின்கண் உள்ள தாயினும், பெரும்பான்மைபற்றி, ``அங்கு`` என்று அருளிச்செய்தார். `தேன் தங்கியாங்கு` எனவும், `அமுதூறியாங்கு` எனவும் உவம உருபு விரிக்க. ``தித்தித்து`` என்றதனை, `தித்திக்க` எனத் திரிக்க, தெளிந்து - தெளியப்பட்டு. `தான் தெளிந்து ஊன் தங்கி நின்று அங்கு அமுதூறி உருக்கும்கோன்` என இயைக்க.
குலம் - மேன்மை. `போன்ற` என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. ``போன்றங்கு`` என்றதில் ``அங்கு`` என்ற அசை நிலை இடைச்சொல், ``பொன்னூசல் ஆடாமோ`` என்றதன் முன்னர்க் கூட்டப்படும்.

பண் :

பாடல் எண் : 3

முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

பொன் பொருந்திய ஆபரணங்கள் அணிந்த முலை களையுடைய பெண்களே! நினைக்கப்பட்ட முடிவும் முதலும் இல்லாத வன் முனிவர் கூட்டமும் பல நூறுகோடி விண்ணவரும் காத்து நிற்க, தனது திருநீற்றை எனக்கு அளித்து, தனது அருள் வெள்ளத்திலே, மிகு தியாக யான் ஆழ்ந்து கிடக்கும்படி எழுந்தருளியிருக்கின்றவனுடைய அழகிய உத்தரகோச மங்கையில் மாடங்களையுடைய அகன்ற கோயி லைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

முன் - `நினைக்கப்படுகின்ற. `ஈறும் ஆதியும் இல்லானாகிய மணி` என்க. `முனிவர் குழாமும், பல்நூறுகோடி இமையவர்கள் தாமும் நிற்பத் தனது திருநீற்றை எனக்கு அருளித் தனது கருணையாகிய வெள்ளத்தில் யான் பெரிதும் ஊறிக் கிடக்குமாறு என் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கும் மாணிக்கம் போல்பவனது உத்தரகோச மங்கைத் தலத்தின் மாளிகையைப் பாடி ஆடாமோ` என்றபடி.
திருநீறு, சிவபெருமானது திருவருளின் வடிவாகலின், ``தன்நீறு`` என்று அருளினார். ``திருவடி நீறு`` (தி. 4 ப.109 பா.2) என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசரும். ``மணி`` உவமையாகு பெயர். மின் - ஒளி. ``மாளிகை`` என்றது, கோயிலை.

பண் :

பாடல் எண் : 4

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

தொகுதியாகப் பொருந்திய, வெண்மையான வளையலை அணிந்த பெண்களே! விடம் தங்கிய கண்டத்தை யுடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற மேல் மாடங்களையுடைய அழகிய திருவுத்தர கோச மங்கை யில் இனிய மொழியையுடைய உமாதேவியோடு கூடியவனும் அடி யாரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமுதம் சுரப்பவனும் இறப்புப் பிறப்புகளைத் தவிர்ப்பவனுமாகிய தூய்மையானவனின் புகழினைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

மஞ்சு - மேகம். இங்கும், ``அமுதம் ஊறி`` என்றதற்கு, மேல் (தி.8 திருப்பொன்னூசல். பா.2) உரைத்தவாறே உரைக்க. துஞ்சல் - இறத்தல். ``பிறப்பு`` என்றதும், `பிறத்தல்` என அத்தொழிலையே குறித்தது. புஞ்சம் - தொகுதி.

பண் :

பாடல் எண் : 5

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

ஆபரணங்கள் நிறைந்த அழகிய முலைகளை யுடைய பெண்களே! ஆண் இனமோ, அலி இனமோ, பெண் ணினமோ, என்று அயன் மாலாகிய இருவரும் காண முடியாத கட வுளும் தன் பெருங்கருணையால் தேவர் கூட்டம் நாணம் அடையாமல் பிழைக்கும்படி அடிமை கொண்டருளி, பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உணவாக உண்டருளியவனும், திருவுத்தர கோச மங்கையிலுள்ள, வளைவுள்ள பிறையணிந்த சடையையுடையவனு மாகிய இறைவனது குணத்தைத் துதித்து நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

அரிவை - பெண். ``இருவர்`` என்றது, தொகைக் குறிப்பாய், அயன் மாலைக் குறித்தது. `இருவர்தாமும்` என உயர்வு சிறப்பும்மை விரிக்க. அவர்தாமே காணாராயின பின், பிறர் காணாமை சொல்லவேண்டாவாயிற்று. ``நாணுதல்`` இங்குத் தோல்வியுறுதல். அது `தோற்று அழியாதபடி` எனப் பொருள்தந்தது. ``ஆட்கொண்டு`` என்றது, அபயம் அளித்தமையை. கோண் ஆர் - வளைவு பொருந்திய.

பண் :

பாடல் எண் : 6

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொழிப்புரை :

அரும்பு போன்ற அணிகளோடு கூடிய முலைகளையுடைய பெண்களே! மங்கை தங்கு பங்கையுடையவனும், திருவுத்தர கோச மங்கையிலுள்ள, மகரந்தங்களையுடைய கொன்றை மாலையை அணிந்த சடையையுடையவனும், தன்னடியார்களுள்ளே நாய் போன்ற என்னைச் சீராட்டி அடிமை கொண்டு என் முற்பிறப்பில் உண்டாகிய வினை மேலெழுந்து பற்றாதபடி, யான் ஞானத்தோடு விளங்கப் பிறவித் தளையை அறுப்பவனுமாகிய இறைவனது திருச்செவிகளில் ஆடுகின்ற குண்டலங்களைப் பாடி, அன்பால் உருகி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

முதற்கண் உள்ள ``ஆடு`` இரண்டும், `பொருந்திய` எனப் பொருள்தந்தன. `நாயேனை ஆட்கொண்டு தன் அடியாருள் வைத்துக் கோதாட்டி` என்க. பிறவித் தீது - பிறவிக்கு ஏதுவாய தீமை; என்றது ஆகாமிய வினையை, ஓடா வண்ணம் - கிளைக்காத நிலைமை; அஃதாவது, திருவடி ஞானம் அல்லது திருவருள் உணர்வு. திகழ - திகழ்தலால்; `அவ்வுணர்வு திகழுமாறு செய்பவனும் அவனே` என்றதாயிற்று. காதணி, இறைவற்கும், ஆசிரியர்க்கும் சிறப்புடைய தோர் அணிகலமாகலின், ``காதாடு குண்டலங்கள் பாடி`` என அதனையே விதந்தருளிச் செய்தார். போது - பூமாலை; ஆகு பெயர்.

பண் :

பாடல் எண் : 7

உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

அணிகளை அணிந்த பொன்னை நிகர்த்த தனங்களையுடைய பெண்களே! நினைத்தற்கரிய, திருவுத்தர கோச மங்கையில் நிலைபெற்று, விளங்குகின்ற பெருமையுடைய வேதி யனும் தனது புகழினையே பலகாலும் சொல்லித் தாழ்ந்து வணங்க, பாவங்களின் பிடிப்பை ஒழிப்பவனும், என் அப்பனும் என்னையும் ஒரு பொருளாக அடிமை கொண்டவனுமாகிய இறைவனது, அழகினைப்பாடி அன்னப்பறவையின் மீது ஏறி ஆடுகின்ற அழகிய மயிலைப் போன்று நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி இருந்து ஆடுவோம்.

குறிப்புரை :

மறையோன் - அந்தணன். `மறையோனும், அறுப் பானும், ஆட்கொண்டானும் ஆகிய அவனது எழிலைப்பாடி` என்க. நான்காம் அடியை, `பொன்னூசல்` என்றதற்கு முன்னர்க் கூட்டுக. இவ் வடி, இல்பொருள் உவமை. மெல்ல அசைந்தாடும் ஊசலுக்கு, அத் தன்மையான நடையை உடைய அன்னம் உவமையாயிற்று. `சுணங்கு` எனப்படும் அழகிய தேமலால், தனங்கள் பொன்போல விளங்குவ வாயின என்க.

பண் :

பாடல் எண் : 8

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 

பொழிப்புரை :

உலகம் உய்யும்படி அழகிய கயிலை மலையின் உச்சியினின்றும் குவலயத்து நிலவுலகில் இறங்கி வந்து, வந்தி தரும் பிட்டினை நிரம்ப உண்டும், மிக ஆழமான கடலில் வலைஞனாய்க் கட்டு மரத்தின் மீது ஏறியும் பரிமேலழகனாய்க் குதிரை மீது வந்தும், நம்மை ஆண்டருளினவனாகிய நல்லொழுக்கம் விளங்குகின்ற, திருவுத்தர கோச மங்கையிலுள்ள, திருமாலுக்கும் காணுதற்கு அருமையான இறைவனை நாம் வாய் நிரம்பப் பாடி உடல் பூரித்து, மனம் நெகிழ்ந்து, பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்.

குறிப்புரை :

கோலவரைக் குடுமி வந்து - அழகிய திருக்கயிலை மலைச் சிகரத்தினின்றும் போந்து. ``அமுது`` என்றது, வந்தி தந்த பிட்டினை. ``சிவபுரத்தார் போரேறு - மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளி`` (தி.8 திருப்பூவல்லி. பா.16) என முன்னர் அருளிச் செய்தது காண்க. கடலின் மீது எழுந்து சென்றது, வலைவீசிய திரு விளையாடலிலாம். `உண்டு, எழுந்து` என்ற எச்சங்கள், எண்ணின் கண் வந்தன. ஞாலம் மிக - மண்ணுலகமே மேலான உலகமாம்படி. ``பரிமேற்கொண்டு நமை ஆண்டான்`` என்றதனால், இறைவன் மதுரையில் குதிரை வாணிகனாய் வந்தது, அடிகள் பொருட்டே என்பது ஐயமின்றித் துணியப்படுவதாம். `ஆண்டானாகிய அரியானை` என்க. `பூரித்து` என்பது எதுகைநோக்கி, `பூலித்து` எனத் திரிந்தது. பூரித்தல் - மகிழ்தல்.

பண் :

பாடல் எண் : 9

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொழிப்புரை :

விளக்கம் பொருந்திய, ஆபரணங்களை அணிந்த முலைகளையுடைய பெண்களே! தென்னை மரங்கள் பரவியுள்ள சோலையையுடைய திருவுத்தர கோச மங்கையில் தங்குதல் பொருந்திய ஒளிமயமான, ஒப்பற்ற திருவுருவத்தை உடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியைத் தொலைத்து எம் போல் வாரையும் அடிமை கொள்ளும் பொருட்டு, ஒரு பாகமாகப் பொருந்திய மங்கையும் தானுமாய்த் தோன்றி, என் குற்றேவலைக் கொண்ட, மணம் தங்கிய கொன்றை மாலையணிந்த சடையை யுடையவனது குணத்தைப் புகழ்ந்து, நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்.

குறிப்புரை :

இதனுள், ``உலவு`` என்றன பலவும், `பொருந்திய` எனப் பொருள் தந்தன. தெங்கு - தென்னை மரம். தங்கு - தங்குதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``சோதி உருவம்`` என்றது, இலிங்க வடிவத்தை. ஆட்கொள்வான் - ஆட்கொள்ளுதற்பொருட்டு. `எங்களைப் பணிகொண்ட` என்க. ``கொண்ட`` என்றது, `கொண்டதுபோன்ற` என்னும் பொருளது. கொங்கு - தேன். திருவுத்தரகோச மங்கைத் தலத்தில் உள்ள இலிங்க மூர்த்தி முன்னர் நின்று, ``என்னை விடுதிகண்டாய்`` என அடிகள் வேண்டிய உடன் இறைவன் முன்போலவே ஆசிரியத் திருமேனியுடன் எழுந்தருளி வந்து அருள் செய்தமையின், அவ்வுருவமே வந்து பணிகொண்டது போன்ற கொன்றைச் சடையான்` என்று அருளிச்செய்தார். பொங்கு - பொங்குதல்; பூரித்தல்.

பண் :

பாடல் எண் : 1

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! வேதங்களாகிய சொல்லையுடையவர்; வெண்மையான திருநீற்றினை அணிந்தவர்; செம்மையான திரு மேனியை உடையவர்; நாதமாகிய பறையினையுடையவர் என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! நாதமாகிய பறையையுடைய இத் தலைவரே, பிரம விட்டுணுக்களுக்கும் தலைவராவார் என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

வேதமொழியர் - வேதமாகிய சொல்லை உடையவர்; என்றது, `அவரது சொல்லே வேதம்` என்றபடி. நாதப் பறையினர் - நாததத்துவமாகிய பறையை யுடையவர். இத்தத்துவம், வாக்கு களுக்குக் காரணமாதல்பற்றி, `பறை` என்றார். இதனானே, சிவபெரு மான் கரத்தில் துடியாய் இருப்பது இத்தத்துவமே என்பதும் பெறப் படும். பின்னர் வரும் இத்தொடருக்கு, `நாதப் பறையினராயதன் மேலும்` என வழிமொழிந்ததாக உரைக்க. `இந்நாதனார்` எனச் சுட்டியது உருவெளியை. இப்பெயர், மொழியர் முதலிய பயனிலை கட்கு எழுவாயாய் இறுதிக்கண் நின்றது. `இவ்வாறெல்லாம் தலைவி தனது காதல் மிகுதியால் தலைவனையே நினைந்து பிதற்றுகின்றாள்` எனப்படைத்து மொழியாலும், மெய்ந்நிலை வகையாலும் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கின்றாள் என்க. ``நான்முகன் மால்`` என்றதன் இறுதியில், `இருவர்` என்னும் தொகை எஞ்சி நின்றது`.

பண் :

பாடல் எண் : 2

கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! கண்ணில் தீட்டப்பட்ட மையையுடையவர்; கருணைக் கடலாயிருப்பவர்; உள்ளத்தில் நின்று உருக்குவர் என்று நின்மகள் சொல்லுவாள்; மேலும், தாயே! உள்ளத்தில் நின்று உருக்கி அழிவில்லாத ஆனந்தக் கண்ணீரை உண்டாக்குவர் என்று சொல்லு வாள்.

குறிப்புரை :

`எனது கண்ணில் தீட்டியுள்ள அஞ்சனத்தில் உள்ளார்` என்க. அஞ்சனம் - மை. மை தீட்டுதல் கண்ணினுள் ஆதலும், அவ் விடமே தலைவர் நிற்குமிடம் ஆதலும் பற்றி, ``கண் அஞ்சனத்தர்`` என்றாள். இதனை,
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.
(குறள் - 1127) என்பதனானும் அறிக. கருணைக் கடலினர் - கருணை யாகிய கடலை உடையவர்; என்றது, `கடல்போலும் கருணை யுடையவர்` என்றவாறாம். உலப்பு - கெடுதல்; வற்றுதல்.

பண் :

பாடல் எண் : 3

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! என்றும் மணவிழாக் கோலமுடையவர்; பேரழகை உடையவர்; என் மனத்தில் இருப்பவர் என்றும் நின்மகள் சொல்லுவாள்; மேலும், தாயே! என் மனத்தில் இருக்கின்ற அவர், தென்னாட்டில் உள்ள பெருந்துறைக் கடவுள் என்றும் சொல்லுவாள்.

குறிப்புரை :

நித்த மணாளர் - அழிவில்லாத மணவாளக்கோலம் உடையவர்; `என்றும் ஒருபெற்றியராய் உள்ளவர்` என்றபடி. அத்தர் - தலைவர்.

பண் :

பாடல் எண் : 4

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும்.

பொழிப்புரை :

தாயே! ஆபரணமாகிய ஆடும் பாம்பும், உடை யாகிய புலித்தோலும், பூசப்பட்டதாகிய திருநீறும் அமைந்த ஓர் ஒப்பற்ற வேடம் இருந்தவாறு என்னே? என்று நின் மகள் சொல்வாள்; மேலும், தாயே! வேடம் இருந்த விதத்தை நோக்கி நோக்கி, என் மனம் வாடுகின்றது; இது என்ன காரணம்? என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

`அரா` என்பதன் ஈற்று அகரம், செய்யுளிடத்துக் குறுகிநின்றது. `தோல் உடை` என்பது, பின்முன்னாகி நின்றது. `பூணும் உடையும் உடைய பொடிபூசிற்றோர் வேடம் இருந்தவாறு` என்க. ``பொடிப் பூசிற்று`` என்னும் பகரம் விரித்தல். வாடுதல், காதல் மிகுதி யாலாம். ``என்னே`` என்றதனை, முன்னுள்ள, ``இருந்தவாறு`` என்றதனோடும் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 5

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! நீண்ட கையினையுடையவர்; வளை வுடைய சடையை உடையவர்; நல்ல பாண்டிய நாட்டை உடையவர், என்று நின்மகள் சொல்லுவாள், மேலும் நல்ல பாண்டி நாட்டையுடைய அவர் விரிந்து செல்லுகின்ற மனத்தை அடக்கியாண்டு அருள் செய்வர் என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

``நீண்ட கரம்`` என்றது, நீட்டியதனால் நீண்டமையைக் குறித்தவாறு; இஃது ஆடல் நிகழ்த்தும் நிலையைக் குறித்தபடி. நெறி தல் -சுருளுதல். சடையையே இங்கு, `குஞ்சி - தலைமயிர்` என்றார். பரந்தெழு சிந்தை - பலவழியானும் ஓடுகின்ற உள்ளம். ஆளுதல் - ஒரு வழிப்படச் செலுத்துதல். ஆள்வோனும், ஆளப்படுவோருமாய் நிற்கும் இயைபுபற்றி இறைவனது அருளை, `அன்பு` எனினும் இழுக்காது என்னும் கருத்தால், ``அன்பு செய்வர்`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 6

உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்.

பொழிப்புரை :

தாயே! நினைத்தற்கு அருமையான சிறப்புப் பொருந்திய திருவுத்தரகோச மங்கையை உடையவர்; என் நெஞ்சில் நிலைபெற்றிருப்பார் என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! திருமால், அயனாலும் காணமுடியாதவர் என் நெஞ்சில் நிலைபெற்றிருப்பது என்ன ஆச்சரியம்? என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

`உத்தரகோச மங்கை` என்பதனை, ``உத்தர மங்கை`` எனத் தொகுத்து அருளிச் செய்தார். ``என்நெஞ்சில்`` என்றது, `இசை யெச்சத்தால்`, `நாயினுங் கடையேனாகிய எனது நெஞ்சில்` எனப் பொருள் தந்தது. மறித்து வந்த தொடர்க்கண், `என் நெஞ்சில் மன்னுவ தாக` என ஆக்கம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 7

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! வெள்ளை ஆடையையுடையவர்; வெள்ளிய திருநீறணிந்த நெற்றியையுடையவர்; குதிரையேற்றத்திற்கு உரிய சட்டையை அணிந்தவர் என்று நின்மகள் சொல்லுவாள். மேலும், தாயே! குதிரையேற்றத்திற்கு உரிய சட்டையை அணிந்தவர், பாய்ந்து செல்லும் குதிரைமேல் வந்து என் உள்ளம் கவர்வர் என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

கலிங்கம் - ஆடை. முண்டம் - நெற்றி. அது, திருநீற்றால் வெள்ளிதாயிற்று. பள்ளி - படுக்கையாதற்குரிய, குப்பாயம் - போர்வை. வெள்ளைக் கலிங்கமும், பள்ளிக் குப்பாயமும் சிவ பெருமான், குதிரைமேல் வந்த காலத்துக் காணப்பட்டவை என்க. எனவே, இத் திருப்பாட்டு, பாய்பரிமேல் வந்த திருக்கோலத்தின் இயல் புரைத்ததாயிற்று. குதிரை வாணிகர், தாம் தங்குமிடத்தில் தமது போர்வையையே நிலத்தின்மேல் விரித்து அதன்மேற் கிடந்து உறங்குதல் தோன்ற, ``பள்ளிக் குப்பாயத்தர்`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 8

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
தாள மிருந்தவா றன்னே என்னும்.

பொழிப்புரை :

தாயே! அறுகம் புல்லினால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவர்; சந்தனக் கலவையைப் பூசியவர்; அடிமையாக எங்களை ஆண்டருளுவர், என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! அடிமையாக எங்களை ஆண்டருளுகின்ற தலைவர் கையில் தாளம் இருந்த விதம் என்னே! என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

`தாளியறுகு` (தி.8 போற்றித் திருவகவல் - அடி-201. உரை) என்பது பற்றி மேலே கூறப்பட்டது `ஆளாக` என ஆக்கம் விரிக்க. அடிகளார் - தலைவர். தாளம், பிச்சைக் கோலத்திற் கொள்ளப் படுவது ``இருந்தவாறு`` என்றதன்பின், `என்னே` என்பது எஞ்சி நின்றது. `எம்மை ஆளாகக் கொண்டு ஆளுகின்ற தலைவர் எனப் படுவார், பிச்சைக் கோலத்தராய் நிற்றல் என்` என்று மருண்டவாறு.

பண் :

பாடல் எண் : 9

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
நையும்இது என்னே அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! பெண்ணை ஒரு பாகத்தில் உடையவர்; தவ வேடத்தை உடையவர்; பிச்சை ஏற்பவர் என்று, நின் மகள் சொல்லுவாள், மேலும், தாயே! அவர் பிச்சை எடுத்துத் தெருவில் போகும்போது என் மனம் வருந்தும் இது என்ன காரணம்? என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

தாபத வேடம் - துறவுக் கோலம். `வேடத்தராய்` என எச்சமாக்குக. ஐயம் புகுதல் - பிச்சைக்குச் செல்லுதல். `தையலோர் பங்கும், தாபத வேடமும் ஒன்றோடொன்றொவ்வாத கோலங்கள்; அவற்றை ஒருவனே உடையனாயிருத்தல் வியப்பு` என்றபடி, நைதல்- உருகுதல்.

பண் :

பாடல் எண் : 10

கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! கொன்றை மலரோடு பிறையும் வில்வத்தோடு ஊமத்தமும் பொருந்திய சடையை உடையவர் என்று நின் மகள் சொல்லுவாள், மேலும், தாயே! சடையில் பொருந்திய ஊமத்த மலர் இப்பொழுது எனக்குப் பெரும்பித்தை உண்டுபண்ணின வாறு என்னே? என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

``கொன்றை, கூவிளம்`` என்றவற்றில் உம்மை தொகுத்தலாயிற்று. கூவிளம் - வில்வம். துன்றிய - நெருங்கிய. மத்தம்-ஊமத்தம் பூ. உன்மத்தம் - பித்து; அஃது ஆகுபெயராய், அதற்கு ஏதுவைக் குறித்தது. ``ஆனவாறு`` என்றதன்பின், `என்னே` என்பது எஞ்சிநின்றது. `சிவபெருமானது சென்னியில் உள்ள ஊமத்த மலர், இன்று எனக்குப் பித்துத் தருவதாயினமை வியப்பு` என்றபடி. இதனால், பொருள் யாதாயினும், அதனை யுடையாரது தன்மையால் அதன் தன்மை வேறுபடும் என்பது பெறப்பட்டது. படவே, தலைவியது பித்திற்குச் சிவபெருமான் ஏதுவாயினமையால், அவன் அணிந்துள்ள ஊமத்த மலரும் அன்னதாயிற்று என்பது போதரும்.

பண் :

பாடல் எண் : 1

கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில்
பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற்
சொல்லிறந் துநின்ற தொன்மை
ஆதி குணமொன்று மில்லான
அந்தமி லான்வரக் கூவாய். 

பொழிப்புரை :

இசை இனிமையாய் உள்ள குயிலே! எம் பெருமான் திருவடி இரண்டும் எங்குள்ளன? எனக் கேட்டால், அவை கீழுலகம் ஏழினுக்கும் அப்பால் உள்ளன எனலாம். அவனது ஒளி பொருந்திய அழகிய திருமுடி எங்குளது? என்று சொல்லப்புகின், அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற பழமையுடையது எனப்படும். இவைகளைக் கேட்டாயாயின் முதலும் குணமும் இல்லாதவனும், முடிவு இல்லாதவனுமாகிய அவனை நீ இங்கு வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

``கேட்டியேல்`` என்றதனை, ``நின்ற`` என்றதன் பின்னரும், ``ஆதி`` என்றதனை, ``அந்தம்`` என்றதன் முன்னரும் கூட்டுக. கீதம் - இசை. ``இனிய`` என்ற பெயரெச்சக் குறிப்பு, இடப் பெயர் கொண்டது. கேட்டியேல் - இவற்றைக் கேட்டுணர்ந்தாயாயின் (அவன் வரக்கூவாய் என்க). `இரண்டு, முடி` என்றவை, அவற்றின் அளவைக் குறித்தன. பாதாளம், `பாதலம்` என்பதன் மரூஉ; `கீழுலகம்` என்பது பொருள். `அப்பாலும், இறந்தும்` என உம்மை விரித்து, அவற்றை, ``நின்ற`` என்றதனோடு முடிக்க. மணி - அழகு. தொன்மை- அனாதி. இஃது, ஒரு பெயர்த் தன்மைப்பட்டு நின்ற, ``ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தம் இல்லான்,`` என்றதனோடு, இரண்டாவதன் பொருள்படத் தொக்கது. `தொன்மை ஆதி` என்றே இயைத்து, `அதனையே வேறொரு பெயராகக்கொண்டு உணர்த்தலுமாம். குணம், மாயையின் காரியமாகிய குணம். ``ஒன்றும்`` என்றது, `ஒன்றேனும்` என்ற இழிவு சிறப்பு. எனவே, `சாத்துவிகம்` இராசதம், தாமதம்` என்னும் முக்குணங்களுள் ஒன்றேனும் இல்லாதவன் என்றதாம். முக் குணங்களுள் ஒன்றேனும் இல்லாதவன் என்றற்கே முதல்வனை, `நிற் குணன்` என்றதன்றி, அறுகுணம் அல்லது எண் குணம் எனப்படும் அருட்குணமும் இல்லாதவன் என்றற்கு அன்று. இஃதறியாதார் `நிற்குணம்` என்பது பற்றி, முதற்பொருட்கு குணகுணித்தன்மையால் வேறுபாடு கூறுதல் தானும் குற்றமாம்` எனவும், அதனால் அங்ஙனங் கூறுவோர் சகுணோபாசனையாகிய கீழ்நிலையில் நிற்பவர் எனவும் கூறித் தமது ஞானத்தின் தன்மையைப் புலப்படுப்பர்.

பண் :

பாடல் எண் : 2

ஏர்தரும் ஏழுல கேத்த
எவ்வுரு வுந்தன் னுருவாம்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை
அழகமர் வண்டோ தரிக்குப்
பேரரு ளின்ப மளித்த
பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே
தென்பாண்டி நாடனைக் கூவாய். 

பொழிப்புரை :

குயிலே! அழகுடன் விளங்கும் ஏழுலகத்தாரும் வணங்க எவ்வகை உருவங்களும், தன் உருவமாகவே உடைய வனாய், நிறைந்த முழக்கமுடைய கடல் சூழ்ந்த தென்னிலங்கையில், அழகு பொருந்திய இராவணன் மனைவியாகிய மண்டோதரிக்குப் பெருங்கருணையால் இன்பத்தைக் கொடுத்த, திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பெருமானைத் தென்பாண்டி நாட்டையுடைய வனைச் சிறந்த உன் வாயினால் கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

ஏர் தரும் - அழகைப் புலப்படுத்துகின்ற. எவ்வுருவும் தன் உருவாய் நிற்றலாவது, எப்பொருளிலும் தான் அவையேயாய்க் கலந்திருத்தல், ``உருவாய்`` என்ற வினையெச்சம், எண்ணின்கண் வந்தது, `உருவாம்` என்பதும் பாடம். ஆர்கலி - கடல். வண்டோதரி, இராவணன் மனைவி. தசக்கிரீவன் சிவபெருமானது கயிலாய மலையைப் பெயர்த்து அப்பெருமானால் ஒறுக்கப்பட்டுப் பின்னர்ச் சாமகானம் பாடி வாளொடுநாளும், `இராவணன்` என்னும் பெயரும் பெற்று மீண்டபின், இலங்கையில் சிவபூசையை விடாது செய்து வந்தமை, புராணங்களினும், இதிகாசங்களிலும் இனிது விளங்கிக் கிடப்பது. இராவணன் சிவபத்தன் ஆயினமையின், அவன் மனைவி மக்கள் முதலிய சுற்றத்தாரும், பிறரும் எல்லாம் சிவவழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை பெறப்படும். `அவ்வாற்றால் சிவபெருமானிடத்து அன்பு கொண்டிருந்த, இராவணன் மனைவி மண்டோதரி, அப் பெருமானைக் குழந்தை வடிவில் எடுத்தணைத்து இன்புற வேண்டி னாள்` எனவும், `அவ்வாறே ஒருநாள் சிவபெருமான் அவளுக்குக் குழந்தை வடிவில் காட்சியளிக்க, மண்டோதரி எடுத்தணைத்து இன்புற் றிருக்கும்பொழுது இராவணன் வர, அவனிடமும் சிவபெருமானது திருவருட் செயலைக்கூறிக் குழந்தையைக் கொடுக்க அவனும் எடுத் தணைத்து மகிழ்கையில் சிவபெருமான் மறைந்தருளினார்` எனவும் சொல்லப்படும் பழைய வரலாறு பற்றி, ``மண்டோதரிக்குப் பேரருள் இன்பம் அளித்தபிரான்`` என்று அருளிச்செய்தார். அடிகள் திரு மொழியுள்ளே இது காணப்படுதல் பற்றி, இவ்வரலாறு திருவுத்தரகோச மங்கைத்தலத்தோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகிறதுபோலும்! `சிவபெருமான் மண்டோதரிக்குக் குழந்தையாகத் தோன்றி அவளது குறையை நிரப்பி இன்பம் அடையச் செய்தார்` என்னும் இதனைப் புறச்சமயிகள், `காமாதுரராய் அவள் பாற்சென்று, இராவணன் வந்தபொழுது மறைந்தார்` எனத் திரித்துக் கூறுவர். திரி புரத்தவர்போலாது இராவணன் தான் சாங்காறும் சிவவழிபாடுடைய னாய் இருந்தனன் என்பதையும் அவர் நினைந்திலர் போலும்! அற நெறியிற் பிழைத்தவனை அழித்தமையால் புண்ணியம் ஒருபால் எய்திற்றாயினும், சிவவழிபாடுடையவனை அழித்தமையால் உளதாய பாதகமும் ஒருபால் வந்து பற்ற, அதனை நீக்கிக் கொள்ளுதற் பொருட்டு அத்தென்கடற் கரையிற்றானே, இராமன் தன் மனைவி முதலாயினாரோடும் சிவபிரானை வழிபட்டு நலம் பெற்றான் என யாண்டும் பெருவார்த்தையாய் விளங்கிவரும் வரலாற்றினை உடம் படமாட்டாது பிணங்குகின்ற அவர், இன்னோரன்னவற்றைப் படைத்துக் கொண்டு மொழிதல் வியப்பன்று. சிவபெருமான் காமனை எரித்தவர் என்பதையும், காமனுக்கு அத்தொழிலும் அப்பெருமானால் அளிக்கப்பட்டது என்பதையும் அவர் அறியார். ஈண்டு அடிகள், சிவ பெருமான் அளித்த இன்பத்தை, ``பேரின்பம்`` எனவும், ``அருள் இன்பம்`` எனவும் விதந்தருளிச் செய்தமையானும், திருவார்த்தைப் பகுதி இரண்டாம் திருப்பாட்டினுள், ``பந்தணை மெல்விரலாட்கு அருளும் பரிசு`` என்றே அருளிப் போதலானும் புறச் சமயிகளது கூற்றுப்பற்றி மயங்குதற்கு இடனின்மை அறிந்து கொள்க. அன்றியும், இது சிவபிரான் புகழ்ப்பாடலேயன்றி, வேறாகாமையும் நோக்கி யுணர்க.

பண் :

பாடல் எண் : 3

நீல உருவிற் குயிலே
நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகிற் றிகழுங்
கொடிமங்கை உள்ளுறை கோயிற்
சீலம் பெரிதும் இனிய
திருவுத் தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த
நாயக னைவரக் கூவாய். 

பொழிப்புரை :

நீல நிறத்தை உடைய குயிலே! நீள் மணிகள் பதித்த பெரிய மாடங்கள் விளங்குவதும், நல்லொழுக்கத்தால் மிக இனியது மான, திருவுத்தரகோச மங்கையில் பொருந்தியுள்ள திருக்கோயிலில் அழகிய வடிவில் விளங்கும் பூங்கொடி போன்ற உமாதேவியுடன் உலகத்திற்கு விளக்கம் உண்டாகும்படி வீற்றிருந்த தலைவனை வரும் படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

`நிலாவும் கோயில், உள்ளுறை கோயில், எனத் தனித் தனி முடிக்க. கோல அழகின் - அழகிய கோலத்துடன். கொடி மங்கை - பூங்கொடிபோலும் உமையம்மை. `அவள் உள்ளிடத்தே உறையும் கோயிலையுடைய உத்தரகோச மங்கைக்கண் இருந்த நாயகன்` என்க. இங்ஙனங் கூறவே, `அவ்வம்மை உடனாக இருந்தவன்` என்பது பெறப்பட்டது, இத்தலத்தில் நல்லொழுக்கம் சிறந்து விளங்குதலின், `சீலம் பெரிதும் இனிய திருவுத்தரகோச மங்கை`` என்று அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 4

தேன்பழச் சோலை பயிலுஞ்
சிறுகுயி லேஇது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து
மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென்
உணர்வது வாய ஒருத்தன்
மான்பழித் தாண்டமென் னோக்கி
மணாளனை நீவரக் கூவாய்.

பொழிப்புரை :

தேன் நிறைந்த பழங்களையுடைய சோலைகளில் வசிக்கின்ற சிறிய குயிலே! நீ இதனைக் கேட்பாயாக! விண்ணுலகத்தை விட்டு நீங்கி இம்மண்ணுலகத்து எழுந்தருளி, மக்களை அடிமை கொண்ட அருளாளனும் என் உடம்பினை இகழ்ந்து என் நெஞ்சினுள் புகுந்து, என் உணர்வில் கலந்த ஒப்பற்றவனும், மானினது பார்வையை இகழ்வதாயும், ஆளும் தன்மையுடையதாயும், இனிமையுடையதாயு முள்ள பார்வையையுடைய உமாதேவிக்கு நாயகனுமாகிய இறை வனை வரும்படி நீ கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

தேன்பழம், உம்மைத் தொகை. ``சோலை பயிலும்`` என ஏழாவதன் தொகைக்கண் வல்லினம் மிகாதாயிற்று. தேவர்களை ஆட்கொள்ளாமையால், ``வான்பழித்து`` என்று அருளினார். ஊன் பழித்து - உடம்பினை இழிந்தது எனச் சொல்லி. என் உணர்வு அது ஆய - என் அறிவாகிய அப்பொருளேயாய்க் கலந்துநின்ற. மான் பழித்து ஆண்ட - மானை வென்று அடிமைகொண்ட. மென்மை, இங்கு, தண்மை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 5

சுந்தரத் தின்பக் குயிலே
சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங்
கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு
மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச்
சேவக னைவரக் கூவாய்.

பொழிப்புரை :

அழகிய இன்பக் குயிலே! சூழ்ந்த கிரணங்களை யுடைய சூரியனைப் போல ஆகாயத்தினின்றும் இறங்கி இம் மண்ணுலகிலுள்ள அடியார்களுடைய பற்றுக்களை ஒழிப்பவனும் உலகத்திற்கு முதலும் இடையும் இறுதியும் ஆகியவனும் பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் அறியமுடியாத செஞ்சாந்து போன்ற சிவந்த திருவடியை உடையவனும் வீரனுமாகிய பெருமானை வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

சுந்தரம் - அழகு, வருமொழி பெயராய இரண்டாவதன் தொகைக்கண், `சுந்தரத்து` என அத்துச்சாரியை பெற்றது. சூழ் சுடர் ஞாயிறு - சுற்றிலும் பரவுகின்ற கதிர்களையுடைய கதிரவன். ஆசை யறுத்தல், பாசத்தை நீக்குமுகத்தான் என்க. முந்து முதலிய மூன்றும் உலகத்தினுடையன. அவற்றைச் செய்யும் பிரமன் முதலிய மூவரையும் அவையேயாக அருளினார். சிந்துரம் - செஞ்சாந்து. `அதுபோலும் செவ்விய வாய அடிகளை உடையவன்` என்க. சேவகன் - பாசங்களை அழிக்கும் வீரன்.

பண் :

பாடல் எண் : 6

இன்பந் தருவன் குயிலே
ஏழுல கும்முழு தாளி
அன்பன் அமுதளித் தூறும்
ஆனந்தன் வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ டொத்த
நற்பரி மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே
கோகழி நாதனைக் கூவாய். 

பொழிப்புரை :

குயிலே! மரக்கிளையில் இருந்து கூவுகின்ற குயிலே! உனக்கு இன்பத்தைச் செய்வேன். ஏழு உலகத்தையும் முற்றும் ஆள்வோனும், அன்பனும், இனிய அமுதத்தைப் பெய்து அடியார் உள்ளத்தே ஊறுகின்ற ஆனந்த வடிவானவனும், விண்ணினின்றும் எழுந்தருளிய தேவனும், உயர்ந்த பொன்னில் மாணிக்கங்களைப் பதித்தது போன்ற, நல்ல குதிரையின் மீது வந்தவனும், திருப்பெருந் துறைத் தலைவனுமாகிய பெருமானைக் கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

முதற்கண் நின்ற, ``குயிலே`` என்பதனை, `உனக்கு இன்பம் தருவன்` என்றும், இறுதிக்கண் நின்ற, ``குயிலே`` என்பதனை, ``கூவாய்`` என்றும் முடிக்க. `தருபவன் இவன்` என்பது பின்னர் வருகின்றமையின், `இன்பந் தருவன்` என்பது வாளா கூறப்பட்டது. ``ஏழுலகும்`` என்ற முற்றும்மை, அவ்வுலகங்களை எஞ்சாமல் ஆளு தலையும், `முழுது` என்றது, அவற்றுள் எல்லா இடங்களையும் எஞ்சாமல் ஆளுதலையும் குறித்தன. அன்பன் - அன்புடையவன். ``அமுது`` என்றது, இன்பப் பொருளாகிய அவனையேயாம். ஊறும் - மேன்மேல் மிகுகின்ற. ஆனந்தன் - இன்பவடிவினன். வான்வந்த தேவன் - வானத்தில் தேவர்களில் ஒருவனாயும் காணப்படுபவன். நன் பொன் மணிச்சுவடு - நல்ல பொன்னினது அழகிய உரை. இது, சிவபெருமானது திருமேனிக்கு உவமை. `அழகிய இடத்தில் இருந்து, இனிமையாகக் கூவ வல்லாய்` என்பாள், `கொம்பின் மிழற்றும் குயிலே` என மறித்துங் கூறினாள்.

பண் :

பாடல் எண் : 7

உன்னை உகப்பன் குயிலே
உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப்
புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த
வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன்
சீர்ப்புயங் கன்வரக் கூவாய்.

பொழிப்புரை :

குயிலே! உன்னை விரும்புவேன்; உனக்குத் துணை புரியும் தோழியுமாவேன்; பொன்னை வென்ற, அழகிய திருமேனியை யுடைய, புகழினால் விளங்குகின்ற, அழகனும் அரசனும் குதிரைமேல் ஏறிவந்த அருளாளனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பாண்டியனும், சேரனும், சோழனும், சிறந்த பாம்பு அணிகளை உடையவனுமாகிய பெருமானை வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

``உகப்பன், ஆவன்`` என்றவை, தன்மை வினை முற்றுக்கள். உகத்தல் - விரும்புதல். இங்குக் குயிலாவது, பெடைக் குயிலே, யாதலின், `உனக்குத் துணையாகிய தோழியும் ஆவேன்` என்றாள். பெடைக்குயில் என்பதனை, ``செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீ`` எனப் பின் வருகின்ற பகுதியுட் (தி.8 திருத்தசாங்கம் 4) கூறுமாற்றானும் அறிக. இனிச் சேவல் என்றே கொண்டு, ``துணை`` என்றது அதன் பெடையை என வைத்து, `உன் துணைக்குரிய தோழியும் ஆவன்` என உரைத்தலுமாம். இவற்றைப் படர்க்கை வினையாகக் கொண்டு, இறைவற்கு ஆக்கியும் உரைப்ப. ``புகழின் திகழும் அழகன்`` என்றது, `புகழையே அழகாக உடையவன்` என்றபடி. ``தென்னவன், சேரலன், சோழன்`` என்றது, `தமிழகத்தைச் சிறப்பிடமாகக் கொண்டவன்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 8

வாவிங்கே நீகுயிற் பிள்ளாய்
மாலொடு நான்முகன் தேடி
ஓவி யவர் உன்னி நிற்ப
ஒண்டழல் விண்பிளந் தோங்கி
மேவிஅன் றண்டங் கடந்து
விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன்
தாழ்சடை யோன்வரக் கூவாய். 

பொழிப்புரை :

இளங்குயிலே! நீ இவ்விடத்து வருவாயாக. திருமாலோடு பிரமனும், அடிமுடிகளைத் தேடி, தேடுவதை விட்டு அவ்விருவரும், தன்னைத் தியானித்து நிற்கும்படி அக்காலத்தில் ஒளி மிக்க அனற் பிழம்பாய், ஆகாயத்தைப் பிளந்து உயர்ந்து, பொருந்தி, விண்ணுலகங்களையும் தாண்டி, பரந்த சுடர்களை விட்டுக்கொண்டு நின்ற உண்மைப் பொருளானவனும், தாவி வருகின்ற குதிரைப் பாகனாயிருப்பவனும், நீண்ட சடையை உடையவனுமாகிய தலைவனை வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

பிள்ளைப் பறவைகளிற் குயிலும் ஒன்றாதல் பற்றி, ``குயிற் பிள்ளாய்`` என விளித்தாள். ``இங்கே வா`` என அருகில் அழைத்தது, `மறைபொருளைக் கேட்டற்குரிய நண்பினை` என்பது புலப்படவாம். தேடி ஓவி - தேடிக் காண மாட்டாது அத்தொழிலை விடுத்து, `பின்பு அவர் அன்பால் நினைந்து நிற்குமாறு` என்க. ``மேவி`` என்றதனை, `மேவ` எனத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 9

காருடைப் பொன்திகழ் மேனிக்
கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச் செங்கம லத்திற்
றிகழுரு வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப்
பாசம் அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி
அமுதினை நீவரக் கூவாய். 

பொழிப்புரை :

கரிய நிறத்தோடு பொன்னைப் போன்று ஒளி விளங்கும் உடம்பை உடைய, மணம் நிறைந்த சோலையில் வாழ்கின்ற குயிலே! சிறப்பினையுடைய செந்தாமரை போல விளங்குகின்ற திருமேனியையுடைய செல்வனும், நிலவுலகத்தில் திருவடிகளைக் காட்டிப்பற்றுக்களை ஒழித்து என்னை ஆண்டருளிய, ஆத்தி மாலையையுடைய அழகிய பொன்போலும் மேனியையுடைய அமுதம் போல்பவனுமாகிய எம் பெருமானை வரும்படி நீ கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

கார் - கருமை நிறம். `உடைய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பொன் - அழகு. `காருடை மேனி, பொன்திகழ் மேனி` எனத் தனித்தனி முடிக்க. கடி - நறுமணம். செங்கமலத்தின் - செந்தாமரை மலர்போல; ``செந்தாமரைக்காடு அனைய மேனித் தனிச் சுடரே`` (தி.8 திருச்சதகம்-26) என்று அருளினார். ஆர் - ஆத்தி மாலை.

பண் :

பாடல் எண் : 10

கொந்தண வும்பொழிற் சோலைக்
கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண னாகிவந் திங்கே
அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவன் என்றிங்
கென்னையும் ஆட்கொண் டருளும்
செந்தழல் போல்திரு மேனித்
தேவர் பிரான்வரக் கூவாய். 

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் நெருங்கிய பெரிதாகிய சோலையில் கூவுகின்ற குயிலே! நீ இதனைக் கேட்பாயாக. இங்கே அந்தணன் ஆகி வந்து அழகிய செம்மையாகிய திருவடியைக் காட்டி, என் அன்பரில் ஒருவனாம் இவன் என்று இவ்விடத்தில் என்னையும் அடிமை கொண்டருளிய சிவந்த தீப்போலும் திருமேனியையுடைய தேவர் பெருமான் வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

கொந்து - பூங்கொத்து. அணவும் - பொருந்திய. `கூவும்` என்னும் பெயரெச்சத்து உயிர்மெய் கெட்டது. எம்தமர் - எம் உறவினர். ``தமர்`` என்றது பன்மை யொருமை மயக்கம். என்று - என்று இரங்கி.

பண் :

பாடல் எண் : 1

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 

பொழிப்புரை :

அழகு பொருந்திய இளமையான கிளியே! எம்முடைய திருப்பெருந்துறை மன்னனது சிறப்புப் பொருந்திய திருப்பெயரைத் தூய தாமரை மலர் மேலிருக்கும் பிரமன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால், ஆகியோர் சொல்வதுபோல, திரு ஆரூரன்; சிவந்த திருமேனியையுடையவன்; எம்பிரான்; தேவர் பெருமான் என்று ஆராய்ந்து சொல்வாயாக.

குறிப்புரை :

தசாங்கத்துள் இது பெயர் கூறுகின்றது. தலைவனது பிரிவினால் ஆற்றாளாய தலைவி தலைவனது பெயர் முதலியவற்றைப் பிறர் சொல்லக்கேட்பினும் அவனைக்கூடி மகிழ்ந்தாற் போலும் இன்பம் உண்டாகும் என்னும் நினைவினளாய், அது கிடைக்கப் பெறாமையின், கிளியை நோக்கி அவற்றைக் கூறுமாறு வேண்டிக் கொள்கின்றாள். இவ்வாறே,
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவன்; மொய்பவளத் தொடுதரளம்
துறையாரும் கடல்தோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயோ.
-தி.1 ப.60 பா.10
என்றாற்போல தேவாரத் திருமுறைகளிலும் வருவன காண்க. ஏர் ஆர் - அழகு பொருந்திய. நாமம் - பெயர். ஆரூரன் - திருவாரூரில் எழுந்தருளியிருப்பவன். செம்பெருமான் - சிவந்த நிறத்தையுடைய பெருமான். வெண்மை, இங்கு, தூய்மைமேல் நின்றது. `கிளியே, மலரானும், பாற்கடலானும் செப்புவபோல நீ, பெருந்துறைக்கோனது திருநாமங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, ஆரூரன், செம்பெருமான், எம்பெருமான், தேவர்பிரான் என்று உரையாய்` என வினை முடிக்க. இங்ஙனம் பல பெயர்களைக் கூறினாராயினும், `தேவர்பிரான்` என்பதே முதன்மைப் பெயர் என்றல் திருவுள்ளமாதலை, `தேவதேவன் திருப்பெயராகவும்`` (தி.8 கீர்த்தி. 122) என முன்னே அருளிச்செய்தமையான் அறிக.

பண் :

பாடல் எண் : 2

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்
கன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி.

பொழிப்புரை :

குற்றமில்லாத இனிய சொல்லையுடைய மரகதம் போன்ற பச்சைக் கிளியே! தன்மீது அன்புள்ளவர்க்கு, அன்பினால் ஆட்கொண்டு, பிறவிக்கு மீண்டு வாராதபடி அருள் செய்வோனாகிய பெருமானது நாடாவது, எப்பொழுதும் தென்பாண்டி நாடேயாம்; இதனை நீ அறிவாயாக; அறிந்து ஏழுலகுக்கும் தலைவனும் நம்மை அடிமையாக வுடையவனுமாகிய அவனது நாட்டைச் சொல்வாயாக.

குறிப்புரை :

ஏதம் - குற்றம். `குற்றம் இல்லாத சொல்` என்க. ``மரகதம்`` என்றது உவமையாகுபெயராய்க் கிளியை உணர்த்திற்று. பொழில் - உலகம். `காதலவர்க்கு அருள்புரிவான்` என இயையும். `அன்பால் ஆண்டு` என மூன்றாம் உருபு விரிக்க. `நாடு உரையாய்; அங்ஙனம் உரைத்தற்கு அவன் நாடு யாதெனின்` என்று எடுத்துக்கொண்டு, `அவன் நாடு தென்பாண்டி நாடே` என முடிக்க. இது பின்வருவனவற்றிற்கும் பொருந்தும். ``தென்பாண்டி நாடு`` என்றதனை, `தென்குமரி` என்பதுபோலக் கொள்க. ``பாண்டி நாடே பழம்பதியாகவும்`` (தி.8 கீர்த்தி - 118) என்று முன்னரும் அருளினார்.

பண் :

பாடல் எண் : 3

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் - கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை ஊர்.

பொழிப்புரை :

மகரந்தம் பொருந்திய பூக்களையுடைய சோலையிலுள்ள கிளியே! நம்மை ஆண்டருள்கின்ற, உமாதேவி அமர்ந்த பாகத்தையுடையவன், வாழ்கின்ற ஊர் பூமியின்மேல் பத்தர் எல்லோரும் சீராட்டிச் சிவநகர் போலப் புகழ்ந்து போற்றும் திருவுத்தரகோச மங்கையாகிய ஊர் என்று சொல்வாயாக.

குறிப்புரை :

தாது ஆடு - மகரந்தம் நிறைந்த, தத்தை - கிளி. பதி - ஊர். என் - எது; இது, `மெய்யவற்குக் காட்டல்` என்னும் வினா. `உத்தரகோச மங்கையே அவனது ஊர்` என்க. அதனை அறிந்து சொல், என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 4

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநம் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காண்உடையான் ஆறு. 

பொழிப்புரை :

சிவந்த வாயினையும், பசுமையான சிறகினையும் உடைய செல்வியே! பெண்ணே! மேன்மை பொருந்திய சிந்தையிலே யுள்ள குற்றங்களைப் போக்க வந்து இறங்குகின்ற ஆனந்தமே, எம்மை ஆளாகவுடையவனது ஆறாகும். சிந்தையைச் சேர்ந்த தந்தையாகிய திருப்பெருந்துறையையுடைய அவனது அந்த ஆற்றினை உரைப் பாயாக.

குறிப்புரை :

``சிறகின்`` என, வருமொழி பெயராதலின், சாரியை நிற்க இரண்டாம் உருபு தொக்கது. ``செல்வி`` என்னும் பெயரின் இறுதி இகரம், விளியேற்றற்கண் நீண்டது, ``செல்வீ, தையலாய்`` என்றவை உயர்த்தற்கண் அஃறிணை உயர்திணையாயவாறு. வான் - உயர்வு. `உயர்வு வரப்பெற்ற சிந்தை` என்றது, ஞானம் கைவரப்பெற்ற உள்ளத்தை. `சிந்தையது மலத்தை` என்க. கழுவுதல் - பற்றறக் களைதல். ``ஆனந்தம்மே ஆறா`` (தி.8 கீர்த்தி. 106) என்றே முன்னரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 5

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்
திருளகல வாள்வீசி இன்பமரு முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.

பொழிப்புரை :

முருக்கம்பூப் போலச் சிவந்த வாயினையுடைய அழகிய கிளியே! அழிதல் இல்லாத திருப்பெருந்துறை மன்னனாகிய மேகம் போல்பவன், தங்கியிருக்கின்ற மலை, மனத்திலேயுள்ள அறியாமையாகிய இருள் நீங்க ஞானமாகிய ஒளியை வீசி இன்பம் நிலைத்திருக்கும் வீடுபேற்றினை அளிக்கின்ற அருளாகிய மலை என்பதை ஆராய்ந்து சொல்வாயாக.

குறிப்புரை :

கிஞ்சுகம் - முள்முருக்கு; அஃது ஆகுபெயராய், அதன் பூவைக் குறித்தது. அம் சுகம் - அழகிய கிளி. மஞ்சன், `மைந்தன்` என்பதன் போலி; `வலிமையுடையவன்` என்பது பொருள். வாள் - ஒளி. `இருள், ஒளி` என்பன முறையே, அஞ்ஞானத்தையும், ஞானத்தையும் உணர்த்தி நின்றன. ``அருளும்`` என்னும் பெய ரெச்சத்திற்கு முடிபாகிய `அருள்` என்பது தொகுத்தலாயிற்று. ``இருள் கடிந் தருளிய இன்ப ஊர்தி - அருளிய பெருமை அருள் மலையாக வும்`` (தி.8 கீர்த்தி. 123, 124) என்று முன்னர் அருளியவாறு அறிக. `அருளே, அறிவரால் ஆராய்ந்து மலை எனப்படுவது` என்க. ``காண்`` என்றதனை ஈண்டு அசையாக்காது, `மலை என்பதனை ஆய்ந்து காண்` என முடிப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 6

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி ஊரும் மகிழ்ந்து.

பொழிப்புரை :

எனது கிளியே! கூட்டில் புகாதே! உவமையில்லாத சிறப்பையுடைய பெருமான் ஊர்தியாகக் கொள்வது எது எனில், எக்காலத்தும் தெய்வப் பெண்கள் தேன்போலும் இனிய சிந்தனையை யுடையவராய், துதிபாட மகிழ்ச்சி கொண்டு பெருமையுடைய வேத மாகிய குதிரையை ஏறி அவன் வருவான். இவ்விடத்தே வந்து அதனைச் சொல்வாயாக.

குறிப்புரை :

இப்பாடு - இவ்விடம். ``இப்பாடே வந்து இயம்பு`` என்றதனை இறுதியிற் கூட்டுக. கூடுபுகல் - கூட்டினுள் புகுந்து விடாதே. ஒப்பு ஆடா - உவமை சொல்ல ஒண்ணாத. ஆடுதல், சொல்லாடுதல். சீர் - புகழ். ``தேன்புரையும் சிந்தை`` என்றது, `இன்பத்தையுடைய மனம்` என்றவாறு. `பெண்கள்` என்பதன் இறுதிநிலை தொகுக்கப்பட்டது. `புரவியை வானத்து ஊரும்` என்க. வானத்து ஊர்தல், வானகதியாகச் செலுத்துதல். அதனானே தெய்வ மகளிர் இன்புற்று ஏத்துவர் என்க. ``பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்`` (தி.8 கீர்த்தி. 116) என முன்னரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 7

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில்பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படைபகராய் - ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 

பொழிப்புரை :

கொம்புத் தேன் போன்ற இனிய மொழியையுடைய கிளியே! குற்றமில்லாத திருப்பெருந்துறைக்கு மன்னன், தனது கையில் ஏந்தும் ஆயுதம், தன்னால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடியவரது களங்கம் அடையாத மனம் உருகும்படி மும்மலங்களையும் அறுப்ப தான சூலமே. பகைவரை வெல்லுகின்ற அந்த ஆயுதத்தினைக் கூறு வாயாக.

குறிப்புரை :

கோல் தேன் - கொம்புத்தேன். ஏற்றார் - ஏற்றுக் கொள்ளப்பட்டார்; ஆட்கொள்ளப்பட்டார். `ஏற்றாரது நெஞ்சு உருக` என்க. `அவரதுருடைய மும்மலங்களின்மேல் பாயும்` என வேண்டுஞ் சொற் களை விரித்துரைக்க. கழுக்கடை - சூலம். ``கழுக்கடை தன்னைக் கொண்டருளியும்`` (தி.8 கீர்த்தி. 110) என்றே முன்னரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 8

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை. 

பொழிப்புரை :

இனிய பால்போன்ற மொழியினையுடைய கிளியே! எங்கள் திருப்பெருந்துறை மன்னனது முன்பு ஒலிக்கின்ற முரசினைப் பற்றிக் கூறுவாயாக. அன்பு காரணமாக அடியவரது பிறவி யாகிய பகை கலங்கி அழிய, பேரின்ப நிலையிலே மிக்கு ஒலிக்கும் பருமைமிகுந்த நாதமே பறையாகும்.

குறிப்புரை :

பால்மொழி - பால்போலும் சொல். முன்பால் - முன்பக்கத்தில். `முற்பால்` என்பது, மெலிந்து நின்றது. `முன்பு` எனப் பிரித்து, `ஆல், அசைநிலை` என்றலுமாம். பேரின்பத்து - பேரின்பத் துடன்; என்றது, `பேரின்பம் உண்டாக` என்றபடி. ஓங்கும் - மிக ஒலிக்கின்ற. பருமையை உணர்த்தும், `பரு` என்னும் உரிச்சொல், இங்குப் பெருமைமேல் நின்றது. நாதம் - நாத தத்துவம். இஃது ஏனை எல்லாத் தத்துவங்களினும் பெரிதாதலை அறிந்துகொள்க. ``நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்`` (தி.8 கீர்த்தி - 108) என முன்னரும் அருளிச் செய்தார். இதன் ஈற்றடி எதுகையின்றி வந்தது; இதனை, `இன்னிசை வெண்பா` என்பர்.

பண் :

பாடல் எண் : 9

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தார்என் - தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம்உவந்த தார். 

பொழிப்புரை :

இனிமை பொருந்திய மொழிகளையுடைய கிளியே! தீவினைகள் நாளும் அணுகா வண்ணம் நாயேனை ஆளாக உடையவன், விரும்பி அணிந்த மாலை அறுகம்புல் மாலையேயாம்; அதுவே, என்பும் உருகுகின்ற அன்பரிடத்துப் பொருந்துகின்ற திருப் பெருந்துறை மன்னனது உண்மையாகிய மாலை என்று சொல்வாயாக.

குறிப்புரை :

ஆய - கற்றதனால் உளதாய. அள் ஊறும் அன்பர் - மிகச் சுரக்கின்ற அன்பினை உடையவர். மெய் - திருமேனி. `அவன் உவந்த தார்` எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. முன்னர்க் `கழுநீர்மாலை` கூறியதற்குக் காரணம், ஆண்டு(தி.8 கீர்த்தி. 113)க் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங்
கோதிலா ஏறாம் கொடி. 

பொழிப்புரை :

சோலையில் வாழ்கின்ற பச்சைக் கிளியே! தூய்மையான நீர் சூழ்ந்த திருப்பெருந்துறை மன்னனது கொடியாவது, பகைவர் மிகவும் திடுக்கிட்டு அஞ்சும்படி மேலே விளங்கி, அழகைக் காட்டுகின்ற குற்றமில்லாத இடபமேயாகும். அழகு விளங்கும் அக்கொடியினைக் கூறுவாயாக.

குறிப்புரை :

ஏதிலார் - பகைவர். `சாலவும் துண்ணென்ன` என இயையும். துண்ணென் - மனம் நடுங்கல், ஏர் - அழகு. ஏறு - இடபம். `கொடி ஏறாம்` என்க. முன்னர் நீற்றுக் கொடி கூறியதற்கும் காரணம் ஆண்டு(தி.8 கீர்த்தி. 104)க் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பொழிப்புரை :

என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம் தலைவனே! வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

முதல் - நிதி. ``என்`` என்றது, ``முதல்`` என்றதனோடு இயைய, ``வாழ்`` என்றது இடைநிலையாய், ஏதுப் பொருண்மேல் வந்த வினைத்தொகை நிலைபட அதனோடு தொக்கது. இனி, ``வாழ்`` என்றதனை முதனிலைத் தொழிற் பெயராகக் கொண்டு, `வாழ்விற்கு` என உருபு விரித்தலுமாம். இப்பொருட்கு, முதல், `காரணம்` என்னும் பொருளதாம். `நின் பூங்கழற்கு இணையான துணைமலர்களைக் கையில் கொண்டு ஏற்றி` என்க. ``துணை`` என்றது கூட்டத்தை. ``மலர்கள்`` என்றது, பலவகை மலர்களையும். பொலிவு பற்றி எம் மலரும் இறைவனது திருவடிகளுக்கு ஒப்பாவனவாம். ஏற்றி - தூவி. மலரும் - வெளிப்படுகின்ற. `மலரைக் கொடுத்து, நகையைப் பெறு வோம்` என்பது நயம். `சேற்றின்கண் மலரும்` என இயையும். `ஏற்றுக் கொடி, உயர் கொடி` எனத் தனித்தனி இயைக்க. `முதலாகிய பொருளே, சிவபெருமானே,கொடி உடையாய், எனை உடையாய்,` எம்பெருமானே, போற்றி! (நீ எழுந்தருளினால் நாங்கள்) மலர் கொண்டு ஏற்றி, நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்; பள்ளி எழுந்தருளாய்` என வினைமுடிக்க. ``போற்றி`` என்றது, தலைவர்க்கு ஒரு காரியம் சொல்லுவார், முதற்கண் அவர்க்கு வாழ்த்தும், வணக்க மும் கூறுதலாகிய மரபுபற்றியாம். ``எனை உடையாய்`` என்றதனால், இஃது ஒருவர் கூற்றாகவே அருளிச் செய்யப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 2

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

பெரியோய்! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப் பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான். இருள் முழுதும் நீங்கிவிட்டது. உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்று கின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழுந்தோறும் உனது கண் போன்ற வாசனை பொருந்திய தாமரை விரிய, அவ்விடத்தில் பொருந் திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக! பள்ளி எழுந்தருள் வாயாக.

குறிப்புரை :

சூரிய உதயத்திற்கு முன்னர்த் தோன்றும் சிவந்த நிறத்தை, `அருணன்` என்றும், `அவன் சூரியனது தேரை ஓட்டுபவன்` என்றும், `அவன் கால் இல்லாதவன்` என்றும் கூறுதல் புராண வழக்கு. ``போய் அகன்றது`` என்றது, ஒரு பொருட்பன்மொழி. ``சூரியன்`` என்றதனை, இறுதியொற்றுக் கெட்டு நின்ற, ``உதயம்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `முகத்தினது` என்பதில், சாரியை நிற்க, உருபு தொக்கது. ஒப்புப் பொருட்கண் வந்த, ``கருணையின்`` என்னும் இன்னுருபின் ஈறு திரிந்த றகரம், ஓசையின்பம் நோக்கி மெலிந்து நின்றது. நயனக் கடிமலர் - உனது கண்போலும் விளக்கம் பொருந்திய தாமரை மலர். `உதயஞ் செய்த சூரியன், நின் திருமுகத்தினது கருணையைப் போல, மேன்மேல் எழுந்தோறும் தாமரை மலர் மேலும் மேலும் மலர்தலைச் செய்ய` என்பது பொருள். அண்ணல் - தலைமையையுடைய (அறுபதம்). முன்னர், `கோத்தும்பி` என்றது காண்க. இதனை விளியாக்கி, இறைவனைக் குறித்ததாக உரைப்பாரும் உளர். அங்கண் ஆம் - அவ்விடத்து அடைந்த. திரள் நிரை - திரண்ட வரிசைப்பட்ட. அறு பதம் - ஆறுகால்களையுடையவை; வண்டுகள். இவ்வாறே, ``அறுபதம் முரலும் வேணுபுரம்`` (தி.1 ப.128 அடி.25) எனத் திருஞானசம்பந்தரும் அருளிச்செய்தார், அலை கடல் - அலையும் கடல்; இஃது, உவம ஆகுபெயர். `புலரிக் காலமும் நீங்கி, அருணோதயமும், சூரியோதமும் ஆகித் தாமரை மலர்களும் மலர்ந்துவிட்டன; பெருமானே, பள்ளி எழுந்தருள்` என்பது இதன் திரண்ட பொருள்.

பண் :

பாடல் எண் : 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளியெழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

குருகுகள் - (பிற) பறவைகள். இயம்பின - ஒலித்தன. ஓவின - நீங்கின. தாரகை - விண்மீன். `தாரகைகள் ஒளி நீங்கின` என உரைக்க. `உதயத்து ஒளி ஒருப்படுகின்றது` என மாற்றிக் கொள்க. ஒருப்படுகின்றது - நிலத்தின்கண் வந்து பொருந்தாநின்றது. ``ஒருப் படுகின்றது`` என ஒருமையாற் கூறினமையின், ``ஒளி`` என்றதற்கு, `கதிர்கள்` என்றும், ``ஒருப்படுகின்றது`` என்றதற்கு, `ஒருங்கு திரண்டன` என்றும் உரைத்தல் கூடாமை யறிக.

பண் :

பாடல் எண் : 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை கொண்டு, இனிய அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசையையுடைய வீணையை யுடையவரும் யாழினையுடையவரும் ஒரு பக்கத்தில், வேதங்களோடு தோத்திரம் இயம்பினர் ஒருபக்கத்தில்; நெருங்கிய தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையை உடையவர் ஒரு பக்கத்தில்; வணங்குதலை உடையவரும், அழுகை உடையவரும், துவளுதலை யுடையவரும் சூழ்ந்து ஒரு பக்கத்தில்; தலையின் மீது, இருகைகளை யும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக் கெல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

இதனால், வீணையும், யாழும் வேறுவேறு என்பது விளங்கும். ``பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி`` என்ற திருநாவுக்கரசர் திருமொழியும் காண்க. ``இன்னிசை`` என்றது, இரண்டையுங் குறித்தேயாம்.
இருக்கு - வேதம். தோத்திரம் - பிற பாட்டுக்கள். `திருப் பதிகம்` என்னாது, பொதுப்பட, ``தோத்திரம்`` என்றமையால், இது, தேவாரத் திருமுறைகளைக் குறியாமை அறிக. துன்னிய - பிணைத்துக் கட்டிய. பிணை - மாலை. `மலர்ப் பிணைக் கையினர்` என மாற்றுக. ``ஒருபால்`` என்றதனை, ``தொழுகையர், அழுகையர்`` என்ப வற்றுக்கும் கூட்டுக. தொழுதல் - மார்பிற்கும், முகத்திற்கும் நேராகக் கைகுவித்துக் கும்பிடுதல். துவள்கை - மெலிதல்; இஃது அருள் பெறாமையால் வருவது. ஒருபால் என்பவற்றின் பின்னர், `நிற்கின்றனர்` என்பன, எஞ்சிநின்றன.

பண் :

பாடல் எண் : 5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப் பெருந்துறைக்கு அரசனே! நினைத்தற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற எம் பெருமானே! உன்னை, எல்லாப் பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், யாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

பின்னர், ``புலவோர்`` என்றலின், முதற்கண்` `பலரும்` என்பது வருவிக்கப்படும். இடைக்குறையாய் நின்ற, `நின்னை` என்பதை முதலிற் கூட்டுக. ``எனின்`` என்றதன் பின், `என்றல்` என்பது எஞ்சிநின்றது. ``புலவோர்`` என்றது, ஆடல் வல்லாரையும் குறித்தாதலின், வாளா, ``ஆடுதல்`` என்றார். ``அல்லால்`` இரண்டும், வினைக்குறிப்புச் செவ்வெண்ணாய் நின்றன.
``உனைக் கண்டறிவாரை`` என்றது, `ஏனைப் பொருள்களைக் கண்டறிதல் போல, பாச அறிவு பசு அறிவுகளால் உன்னையும் கண்டறிவாரை` என்றபடி. `இவ்வாறு சிந்தனைக்கும் அரியவனாய் இருப்பவனே, இருந்தும் எங்கள் முன்வந்து எம்மை ஆண்டு அருள்புரியும் எம்பெருமானே, பள்ளி எழுந்தருள்வாய்` என்க.

பண் :

பாடல் எண் : 6

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

`பரப்பு` என்பது இடைக்குறைந்து, `பப்பு` என நின்றது. பரப்பு - பரத்தல்; விரிதல், இதற்கு வினைமுதலாகிய `மனம்` என்பது வருவிக்க. `மனம் பரப்பற` எனவே, `குவிந்து ஒருவழிப்பட்டு` என்ற தாயிற்று. வீடு - வீட்டுநிலை; என்றது, நிட்டையை. வந்து - பிறந்து. `பிறந்து பந்தனை அறுத்தார்` என்றது, `பிறப்பின் பயனைப் பெற்றுவிட்டார்` என்றவாறு. இதன்பின், `அவ்வாறாயினும்` என்பது எஞ்சி நின்றது. மைப்பு - மைத்தல்; மைதீட்டப்படுதல். ``மைப்புறு கண்ணியர்`` என்றதன்பின், ஒடு உருபு விரிக்க. மானுடத்து இயல்பின்- மகளிர் மேல் நிகழும் மானுடரது இயல்பை உடையவராய்; என்றது, `காமத்தை வெறாதார் போல` என்றவாறு. இன்னோரன்ன வழி பாடுகள் எல்லாம், இல்லறத்தைத் துறவாது அதனோடு கூடி நிற்பார்க்கே இயல்வனவாகலின், அவ்வாற்றான் வந்துநின்ற அடியார் களைக் கண்டு, அவரது உண்மை நிலையையும் உற்றுணர்ந்து அடிகள் இவ்வாறு அருளிச் செய்தார் என்க. செப்பு உறு - கிண்ணத்தின் தன்மையை எய்தும் (தாமரை மலர்கள்). மலரும் - அவ்வாற்றான் மலர்கின்ற. இப்பிறப்பு - எடுத்துள்ள இவ்வுடம்பு. அதனை அறுத்துப் பரமுத்தியை அருளுதல் மேல் நிகழற்பாலதாகலின், ``அருள்புரியும்`` என எதிர்காலத்தாற் கூறியருளினார்.

பண் :

பாடல் எண் : 7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பொழிப்புரை :

பழம் பொருளானது கனியின் சுவைபோன்றது எனவும், அமுதத்தை ஒத்தது எனவும் அறிவதற்கு அருமையானது எனவும், அறிதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் எம்பெருமான் இருப்பார்; இதுவே அப்பரமனது திருவடிவம்; திருவுருக்கொண்டு வந்த சிவனே அப்பெருமான், என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும் படியாகவே, இவ்வுலகத்தில் எழுந்தருளுகின்ற, தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளி இருப்பவனே! திருப் பெருந்துறைக்கு அரசனே! எம் பெருமானே! எம்மைப் பணி கொளும் விதம் யாது? அதனைக் கேட்டு அதன்படி நடப்போம். பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

`முதற்பொருளை, `அது` என்றல் வடமொழி வழக்கும், `அவன்` என்றல் தமிழ் வழக்குமாதலின், `முதற்பொருள் பழத்தின் சுவைபோல்வது என்றாதல், அமுதம் போல்வது என்றாதல், அறிதற்கு அரியது என்றாதல், அறிதற்கு எளியது என்றாதல் தேவரும் அறியாராக, யாங்கள் அம்முதல்வன் இவனே என்றும், அவன் பெற்றியும் இதுவே என்றும் இனிதுணர்ந்து உரைக்குமாறு, இந்நில வுலகத்தின்கண்ணே எழுந்தருளிவந்து எங்களை ஆண்டுகொள்ளும், உத்தரகோசமங்கைக் கண் உள்ளவனே, திருப்பெருந்துறைத் தலைவனே, எம்பெருமானே, இன்று நீ எம்மைப் பணிகொள்ளுமாறு எதுவோ அதனைக் கேட்டு நாங்கள் மேற்கொள்வோம்; பள்ளி எழுந்தருள்` என்பது இத்திருப்பாட்டின் பொருளாயிற்று.
``பழச்சுவையென`` என்றது முதலிய நான்கும், `கறுப்பென்றோ சிவப்பென்றோ அறியேன்` என்பதுபோல, இன்னதென ஒருவாற்றானும் அறியாமையைக் குறிக்கும் குறிப்பு மொழிகளாய் நின்றன. அதனால், ``என`` நான்கும் விகற்பப் பொருளவாயின. `அறியாராக` என, ஆக்கம் வருவித்து உரைக்க. செய்யுட்கு ஏற்ப அருளிச் செய்தாராயினும், `அவன் , இவன்` என மாற்றி முன்னர் வைத்துரைத்தலும், `இங்கெழுந்தருளி எங்களை ஆண்டுகொள்ளும்` என மாற்றி உரைத்தலுமே கருத்தாதல் அறிந்து கொள்க. `அமரரும் அறியாராக இங்கு எழுந்தருளி எம்மை ஆண்டு கொள்ளும்` என்றது, அத்தகைய அவனது அருளின் பெருமையை விதந்தவாறு. இவ்வாறு திருவருளின் சிறப்பை விதந்தோதி, ` எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்` என, அத் திருவருளின் வழி நிற்றலையே பொருளாக வைத்து அருளிச் செய்தமையின், அங்ஙனம் நிற்க விரும்புவார்க்கு இப்பகுதியுள் இத்திருப்பாட்டு இன்றியமையாச் சிறப்பிற்றாதலை ஓர்ந்துணர்ந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 8

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

அருமையான அமுதமே! எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆனவனே! மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்; வேறு யாவர் அறியக்கூடியவர். பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுதோறும் எழுந்தருளின மேலானவனே! சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்தையும் காட்டித் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி, அழகிய தண்ணிய அருளாளன் ஆதலையும் காட்டி வந்து ஆட்கொண் டவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

முந்திய முதல் - முத்தொழில்களுள் முற்பட்ட தோற்றம். உலகிற்கு, `தோற்றம், நிலை, இறுதி` என்னும் முத்தொழிலையும் உளவாக்குதல் பற்றி இறைவனை அவையேயாக அருளிச் செய்தார். இதனானே, ஒருவனேயாய் நிற்கின்ற அவன், மூவராய் நிற்றலும் கூறியவாறாயிற்று. ஆகவே, ``மூவரும் அறிகிலர்`` எனப்பின்னர்க் கூறிய மூவர், அம் முத்தொழிலுள் ஒரோவொன்றைச் செய்யும் தொழிற்கடவுளராதல் இனிது விளங்கும். முத்தொழிலின் முதன் மையையும் ஒருங்குடைய முதல்வன் அருள்காரணமாக மூவராய் நிற்கும் நிலைகளை, `சம்பு பட்சம்` எனவும், புண்ணியங் காரணமாக முதற்கடவுளது தொழில்களுள் ஒரோவொன்றைப் பெற்றுநிற்கும் கடவுளர் பகுதியை, `அணு பட்சம்` என்றும் ஆகமங்கள் தெரித்துக் கூறும். அதனால்,
``ஆதி - அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய்அழிப்பவனும் தானே``, -ஞான உலா -5
``வீரன் அயன்அரி, வெற்பலர் நீர்,எரி பொன்எழிலார்
கார்,ஒண் கடுக்கை கமலம் துழாய்,விடை தொல்பறவை
பேர்,ஒண் பதி,நிறம்,தார்,இவர் ஊர்திவெவ் வேறென்பரால்
ஆரும் அறியா வகைஎங்கள் ஈசர் பரிசுகளே``
-தி.11 பொன்வண்ணத்தந்தாதி - 95
என்றாற்போலும் திருமொழிகள், சம்பு பட்சம் பற்றி வந்தனவும்,
``திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா தன்றங்
கருமா லுறஅழலாய் நின்ற - பெருமான்``
-ஞான உலா 1
என்றாற்போலும் திருமொழிகள் அணு பட்சம் பற்றி வந்தனவுமாதல் தெளிவாம்.
``மூவரும்`` என்ற உம்மை, சிறப்பு. ``அறிகிலர்`` என்றதன் பின், `எனின்` என்பது வருவித்து, `உன்னை மூவர்தாமே அறிய மாட்டார் எனின், மற்று யாவர் அறிய வல்லார்` என உரைக்க. இத் துணை அரியவனாகிய நீ, உன் அடியவரது எளிய குடில்தோறும் உன் தேவியோடும் சென்று வீற்றிருக்கின்றாய்` என்பார், ``பந்தணை விரலியும் ... ... எழுந்தருளிய பரனே`` என்று அருளினார். பந்து அணை விரலி - பந்தைப் பற்றி ஆடும் விரலை உடையவள். `பந்து - கை` எனக் கொண்டு, அதன்கண் பொருந்திய விரல் என்று உரைப் பினுமாம். இவ்வாறு உரைப்பின், கையினது அழகைப் புகழ்ந்த வாறாம். அடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளியிருத்தல், அங்கு அவர்கள் நாள்தோறும் வழிபடுமாறு திருவுருக்கொண்டு விளங்குதல். இவ்வுருவத்தை, `ஆன்மார்த்த மூர்த்தி` என ஆகமங்கள் கூறினும், இஃது அவ்வில்லத்துள்ளார் அனைவர்க்கும் அருள்புரிதற்கு எழுந் தருளிய மூர்த்தி என்பதே கருத்து என்க. இதனானே, `என்றும் உள்ள மூர்த்தியாக எழுந்தருள்வித்துச் செய்யும் ஆன்மார்த்த பூசை, இல்லறத் தார்க்கும், மாணாக்கர் வழிபட இருக்கும் ஆசிரியர்க்குமே உரியது` என்பதும், `ஏனையோர்க்கு அவ்வப்பொழுது அமைத்து வழிபட்டுப் பின் விடப்படும் திருவுருவத்திலும், திருக்கோயில்களில் விளங்கும் திருவுருவத்திலும் செய்யும் ஆன்மார்த்த பூசையே உரியது` என்பதும் பெறப்படும். இனி, `பழங்குடில்தொறும்` எழுந்தருளுதல், விழாக் காலத்து` என்றும் சொல்லுப; `எழுந்தருளிய` என இறந்த காலத்தாற் கூறினமையின், அது, பொருந்துமாறு இல்லை என்க. ``பழங்குடில் தொறும்`` என எஞ்சாது கொண்டு கூறினமையின், `இது, சில திரு விளையாடல்களைக் குறிக்கும்` என்றலும் பொருந்தாமை அறிக.
திருப்பெருந்துறையில் இறைவன் குருந்தமர நிழலில் எழுந்தருளியிருந்து அடிகட்குக் காட்சி வழங்கிய இடத்தையே அடிகள், ``திருப்பெருந்துறை உறைகோயில்`` என்று அருளினார்; இது, `திருப்பெருந்துறைக்கோயில்`என்னாது, ``திருப்பெருந்துறை உறைகோயில்`` என்றதனானே பெறப்படும். `திருப்பெருந்துறைக்கண் நீ எழுந்தருளியிருந்த கோயில்` என்பது இதன் பொருளாதல் வெளிப் படை. இவ்விடத்தையே பின்னர் அடிகள் கோயில் ஆக்கினார் என்க.

பண் :

பாடல் எண் : 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

விண்ணில் வாழும் தேவர்களும், அணுகவும் முடியாத, மேலான பொருளாயுள்ளவனே! உன்னுடைய தொண் டினைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே! பரம்பரை அடியாராகிய எங்களுடைய கண்ணில் களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே! கரும்பு போன்றவனே! அன்பு செய்கின்ற அடியவரது எண்ணத்தில் இருப்பவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! பள்ளியினின்றும் எழுந்தருள் வாயாக.

குறிப்புரை :

`அருள்பெற மாட்டாமையேயன்றி அணுகவும் மாட்டார்` என்றமையின், ``நண்ணவும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. விழுப்பொருள் - சீரிய பொருள். `தொழும்பு` என்னும் மென்றோடர்க் குற்றுகரத்தின் மெல்லெழுத்து, வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வல்லொற்றாய்த் திரிந்தது. `தொழும்பினை உடைய அடியோங்கள்` என்க. தொழும்பு - தொண்டு. ``வந்து`` என்னும் வினையெச்சம், `வருதலால்` எனக் காரணப்பொருட்டாய் நின்றது. எனவே, `வாழ்தற்பொருட்டு அடியோங்களை மண்ணகத்தே வரச்செய்தாய்` என்பது கருத்தாயிற்று. `மண்ணுலகத்திலன்றி விண்ணுலகத்தில் ஞானங் கூடாது` என்பதனை அடிகள் யாண்டும் குறிப்பித்தல் அறிக. களி - களிப்பு. `எண்` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், எண்ணுதற் கருவியாகிய மனத்தைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 10

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! திருமாலாகிய அவன், பூமியில் சென்று பிறவாமையினால் யாம் வீணாகவே நாளைக் கழிக்கின்றோம்; இந்தப் பூமியானது சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்கின்ற இடமென்று பார்த்து விருப்பத்தை அடையவும், பிரமன் ஆசைப்படவும் அர்ச்சிக்கவும் உனது பரந்த உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாகப் பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளி யினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

பொருள்கோள்: `திருப்பெருந்துறை உறைவாய், சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு இந்தப்பூமி; ஆதலின் புவனியில் போய்ப் பிறவாமையின், நாம் நாள் அவமே போக்குகின்றோம் என்று நோக்கித் திருமாலாம் ... ... எழுந்தருளாயே`.
புவனி - புவனம்; என்றது, மண்ணுலகத்தை. `இந்த` என்றது, அடிகள் தம் கூற்றாக அருளியது. இடத்தை, ``ஆறு`` என்றார், வாயிலாதல் பற்றி. அவர்தம் ஏக்கறவு மிகுதியை உணர்த்தற்கு, ``விருப்பெய்தவும், ஆசைப்படவும்`` எனத் தனி விதந்தோதி யருளினார். அலர்ந்த - பரந்த; மெய்ம்மை - நிலைபேறு. `கருணை யொடு` என அடையாக்காது, ``கருணையும்`` என வேறு பொருளாக ஓதினார், அதன் அருமை புலப்படுத்தற்கு. அவனி - மண்ணுலகு. பாசத்தை அறுத்து ஞானத்தை எய்துவிக்கும் திறன் நோக்கி. ``வல்லாய்`` என்றும், ஞானத்தை எய்தியபின், இன்ப உருவாய் விளங்குதல்பற்றி, ``ஆரமுதே`` என்றும் அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 1

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே. 

பொழிப்புரை :

பொற்சபையில் ஆடுகின்ற, எம் ஈறில்லா முதல்வனே! எம்மை ஆளாகவுடைய உமையம்மை, சொரூப நிலையில் உன்னிடையே அடங்கித் தோன்றுவாள்; உடையவளாகிய உமையம்மையினிடத்தே, தடத்த நிலையில் நீ அடங்கித் தோன்றுவாய்; அடியேன் இடையே நீங்கள் இருவீரும் இருப்பது உண்மையானால், என் எண்ணம் நிறைவேறும்படி எனக்கு முன்னே நின்று, அடியேனாகிய யான், உனது அடியார் நடுவில் இருக்கின்ற திருவருளைச் செய்வாயாக.

குறிப்புரை :

உடையாள் - எல்லாவற்றையும் தனக்கு அடிமை யாகவும், உடைமையாகவும் உடையவள்; இறைவி. அகத்தை ``நடு`` என்று அருளிச்செய்தார். `அகம், புறம்` என்பன முறையே, வியாப்பிய நிலையையும், வியாபக நிலையையும் குறிக்கும். ``உடையாள் உன்றன் நடுவிருக்கும்; உடையாள் நடுவுள் நீ இருத்தி`` என்றது, `சிவமும், சத்தியும் எவ்வாற்றானும் தம்முள் வேறல்ல` என்றற்கு. இதனை எடுத்தோதியது, இறைவன் பேரருளும், பேராற்றலும் உடைய னாதலைக் குறிப்பித்தற்கு. ``அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால்`` என்றது, பதிப்பொருள் எஞ்ஞான்றும் உயிரினிடத்து நீங்காது நிற்றலைக் குறித்தபடி. இதனை எடுத்தோதியது, அத்தன்மைய னாகிய இறைவன் தமக்கு அருள்புரிதற்கு இயைபுண்மையைக் குறித்தற் பொருட்டாம். ``இருப்பது`` என்பதன்பின் தொகுக்கப்பட்ட, `மெய்ம்மை` என்பது, இவ்விருதிறனும், `மெய்ம்மையானால்` எனப், பின்னர் வருவதனை வற்புறுத்தற்கு ஏதுவாய் நின்றது. ``அடியார்`` என்றது. தமக்கு முன்னே, இறைவனை அடைந்தவர்களை. `எம் முதல்` என இயையும். `அவர்கட்கு மட்டும் அன்றி எனக்கும் நீ தலைவன் ஆதலின், என்னையும் உன்பால் வருவித்துக் கொள்ளற்பாலை` என்பார், ``எம்முதலே`` என்று அழைத்தார். முடியா - அழியாத. `என் இக் கருத்து` எனச் சுட்டு வருவித்து உரைக்க. முன்நிற்றலாவது, முடித்தலை மேற்கொண்டு நிற்றல்.
``முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள்உளதோ``
என்றருளினார், சேக்கிழார் நாயனாரும் (தி.12 பெ.புரா.மநு-47). அதனுள், `பொருள்` என்றது, செயலை. இத்திருப்பாட்டுள், முதல் மூன்று தொடர்களையும் திருவைந்தெழுத்தின் (பஞ்சாக்கரத்தின்) பேதங்களைக் குறிக்கும் குழூஉக் குறியாக ஆள்வாரும் உளர். அவற்றுள் முதல் இரண்டு தொடர்களும், திருவைந்தெழுத்துள் சிவத்தைக் குறிக்கும் சிகாரமும், சத்தியைக் குறிக்கும் வகாரமுமாகிய இரண்டெழுத்துக்களாலாகிய சொல்லைப் பலமுறை சொல்லுங்கால் அமையும் நிலையைக் குறித்தற்கும், மூன்றாவது தொடர், அவ்விரண்டு எழுத்துக்களுடன், ஆன்மாவைக் குறிக்கும் யகாரத்தையும் உடன் சேர்த்துப் பலமுறை கூறுங்கால் அமையும் முறையைக் குறித்தற்கும் ஏற்புடையவாதல் அறிக. இனி, `சிவம், சத்தி, ஆன்மா` என்னும் மூன்றையும் குறிக்கும் சிகார வகார யகாரங்கட்குப் பின்னர் முதல் இரண்டெழுத்தைப் பின்முன்னாக மாற்றி வகார சிகாரங்களாக வைத்து ஒரு தொடராகக் கூறும் முறையும் உண்டு. இது, முதலிலும், முடிவிலும் சிவத்தைக் குறிக்கும் சிகாரத்தைக் கொண்டு நிற்றலால், `இருதலை மாணிக்கம்` என்றும், அதனுள் உள்ள எழுத்துக்களை முதற்றொடங்கி இறுதிகாறும் வரச்சொல்லினும், இறுதி தொடங்கி முதல்காறும் வரச் சொல்லினும், `விகடகவி` என்பதுபோல, வேறுபடாது ஒருவகையாகவே யமைதலின், அதனை, `விகடகவி` என்றும் குறியீடாக வழங்குவர்; அம்முறை, இத்தொடர்களில் யாண்டும் அமைந்திலது என்க.

பண் :

பாடல் எண் : 2

முன்னின் றாண்டாய் எனைமுன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
பொன்னம் பலக்கூத் துகந்தானே.

பொழிப்புரை :

பொற்சபையில் திருநடனம் செய்வதை விரும்பி யவனே! பெருமானே! முன்னே, என் எதிரே தோன்றி ஆட்கொண் டாய். நானும் அதன் பொருட்டாகவே முயன்று உன்வழியில் நின்று பணி செய்கின்றேன். ஆயினும் பின்னடைந்து விட்டேன். என்னை இன்று உன்பால் வரும்படி அருளி, `வா` என்று அழையாவிடில் அடிய வர் உன்னிடத்தில் நின்று, இவர் யார் என்று கேட்க மாட்டார்களோ?

குறிப்புரை :

முன்னம் - முன்பு. `முன்னம் என்னை முன்நின்று ஆண்டாய்` எனக் கூட்டுக. யானும் அதுவே முயல்வுற்று - நானும் அங்ஙனம் உனக்கு ஆளாய் இருக்கவே முயன்று. பின் நின்று - உன் வழி நின்று. ஏவல் செய்கின்றேன் - பணிபுரிந்து நிற்கின்றேன். இதன் பின், `ஆயினும்` என்பது எஞ்சிநின்றது. பிற்பட்டொழிந்தேன் - உன் அடியாரோடு உடன்செல்லாமல் பின்தங்கிவிட்டேன். இதன்பின், `ஆதலால்` என்பது வருவிக்க. என் - என்னை, `வர இன்று அருளி நின்று` என மாற்றுக. வர - உன்பால் வருமாறு. அருளிநின்று - அருள் செய்து. அடியார் - முன்பு உன்னுடன் வந்த அடியார்கள். உன் நின்று - உன்பால் நின்று. இவன் ஆர் என்னாரோ - இப்பொழுது இங்கு வருவதற்கு இவன் என்ன உரிமையுடையவன் என்று சொல்ல மாட்டார்களோ. `இந்நிலை நீ, என்னை இங்கு விட்டுச் சென்றதனால் உண்டாயது என்பது கருத்து. `ஆதலின், என்னை விரைந்து உன்பால் அழைத்துக்கொள்ளவேண்டும்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 3

உகந்தா னேஅன் புடைஅடிமைக்
குருகா உள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால்
தக்க வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார்
வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன்
பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 

பொழிப்புரை :

பொன்னம்பலத்தில் ஆடுகின்ற எங்கள் முழுமுதற் பொருளே! அன்போடு செய்யப்படும் தொண்டின் பொருட்டு, என்னை விரும்பி ஏற்றுக் கொண்டவனே! தம் உடலையே அவியாகத் தீயில் இட்டு, உன் வழியிலே வந்தவர்கள், பேரின்பத்தில் வாழும்படி எழுந்தருளி இருப்பவனே! உருகாத மனத்தையுடைய, அறிவு இல்லாத நான், உலகம் அறிய எனது துன்பத்தைச் சொல்லி முறையிட்டுக் கொண்டால், அருளாது ஒழிவது உனக்குத் தகுதி அன்று என்று உன் அடியார்கள் சொல்ல மாட்டார்களோ? அடியேனுக்கு உனது திரு முகத்தைக் காட்டாவிட்டால் யான் இறந்து படுவேன்.

குறிப்புரை :

`அன்புடை அடிமைக்கு உகந்தானே` என மாற்றி, குவ் வுருபை ஐயுருபாகத் திரிக்க. `நான், உருகா உள்ளத்து உணர்விலி யாதலின், என்னை நீ விடுத்துச் சென்றதைப் பலரிடமும் சொல்லி முறையிட்டால், அம்முறையீடு தகுதிவாய்ந்த முறையீடன்று என்று தான் சொல்வார்கள்; ஆதலின், நீயே என்னை மறித்து நோக்கி அழையாவிடில், யான், தீயில் வீழ்தல், திண்வரை பாய்தல் முதலிய வற்றைச் செய்து உயிரைப் போக்கிக் கொள்வேன்` என்பது இங்குக் கூறப்பட்டதாம். `தீயில் வீழ்தல் முதலியவற்றால் உயிரைத் துறத்தலும் ஒருவகை வேள்வியே` என்றும், `அங்ஙனம் செய்து நின்பால் வந்தாரும் சிலர் உளர்` என்றும் கூறுவார், ``மகந்தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய்`` என்று அருளினார். `எய்தவந்திலாதார் எரியிற் பாய்ந்து இறைவனை அடைந்தார்` என அடிகள் முன்னர் அருளிச்செய்தது காண்க (தி.8 கீர்த்தி. 132). முகம் தருதல் - புறங் காட்டாது திரும்பி நோக்குதல்.

பண் :

பாடல் எண் : 4

முழுமுத லேஐம் புலனுக்கும்
மூவர்க் கும்என்த னக்கும்
வழிமுத லேநின் பழவடி
யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே.

பொழிப்புரை :

பொற்சபையில் ஆடுகின்ற நாதனே! எல்லா வற்றுக்கும் ஆதியான பொருளே! ஐம்புலன்களுக்கும் முத்தேவர் களுக்கும், எனக்குச் செல்லும் வழிக்கும் முதலானவனே! உன்னுடைய பழைய அடியார் கூட்டத்தோடு பெருமை மிக்க சிவலோகத்தில் கூடி சேர்ந்திருத்தலைத் திருவருளால் கொடுத்தருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்?

குறிப்புரை :

மூவர் - `அயன், அரி, அரன்` என்பவர். முன் நிற்கற் பாலதாய, `மூவர்` என்பது. செய்யுள் நோக்கிப் பின் நின்றது. ``ஐம்புலன்`` என்றது, பூதம் முதலிய பிரகிருதி காரியம் அனைத்திற்கும் உபலக்கணமாய் நின்றது. ``மூவர்க்கும் ஐம்புலனுக்கும் முதல்`` என்றது, `செய்வார்க்கும், செயப்படுபொருட்கும் முதல்` என்றபடி. ``முழுமுதல்`` என்றது இரட்டுற மொழிதலாய், `பெருந் தலைவன்` எனவும். சிறந்த நிலைக்களம் (பரம ஆதாரம் - தாரகம்) எனவும், பொருள் தந்து, முறையே ``மூவர்`` என்றதனோடும், ``ஐம்புலன்`` என்றதனோடும் இயைந்தது. ``என்றனக்கும் வழி முதலே`` என்றது. `எனக்கும், வழிவழியாய் நின்ற தலைவனே` என்றபடி. ``என் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே`` (தி.8 பிடித்த பத்து 1) என்பர் பின்னரும். `திரளோடு` எனவும், `வானின்கண்` எனவும், `கெழு முதற்கு` எனவும், உருபுகள் விரிக்க. கெழுமுதல் - கூடுதல். ``தந் திருக்க`` என்றதில் இரு, அசைநிலை. ``மற்றென் செய்கேன்`` என்றது. `உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்` என்றவாறு. இத்திருப்பாட்டுள் அடியும் சீரும் வேறுவேறாய் வந்து மயங்கின.

பண் :

பாடல் எண் : 5

அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் னடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ.

பொழிப்புரை :

அரசனே! பொற்சபையில் நடிக்கின்ற அமுதே! என்று வாழ்த்தி உன் திருவருளை எதிர்பார்த்து, இரையைத் தேடுகின்ற கொக்கினைப் போன்று இரவும் பகலும் கவலைப் பட்டிருந்து இளைத் தேன். முத்திக்கரையை அடைந்த உன்னடியார் மகிழ்ந்திருப்ப, நீ காட்சி கொடுத்தருளி உன்னடியேனாகிய என்னிடத்தில், பிரை ஊற்றிய பாலில் நெய் இருப்பது போல, வெளிப்படாமல் மறைந்து இருந்தால் உலகத்தார் ஏச மாட்டார்களோ?

குறிப்புரை :

அருள் நோக்கி - அருள் வரும் என்று கருதி. ``இரை தேர் கொக்கொத்து`` என்றது, `பதைப்பின்றி அடங்கி இருந்து` என்ற படி. `கொக்கொக்க கூம்பும் பருவத்து` (குறள் - 490) என்றவாறு, பயன் கிடைக்கும் காலத்தை நோக்கியிருந்து அலுத்து விட்டேன்` என்றடி. ஏசறுதல் - வருந்துதல். வேசறுதல் - இளைத்தல். வேசறுதலை இக்காலத்தார். `வேசாறுதல்` என்ப. கரை - பிறவிக் கடலின் கரை; முத்தி. ``பிரைசேர் பால்`` என்றது, `முதிராத தயிர்` என்றபடி. இது, பிரையிட்ட உடனே காணப்படும் நிலை. பிரையிடாத பாலில் நெய் வெளிப்படும் என நோக்கப்படாமையின் வாளா, `பாலின் நெய் போல` என்னாது, இவ்வாறு அருளிச்செய்தார். ஆகவே, `பிரையிட்டு அது தோய்ந்து முதிர்ந்து வெண்ணெய் வெளிப்படும் என நோக்கியிருப்பார்முன், அஃது அங்ஙனம் முதிராது, பிரையிட்ட நிலையிலே இருப்பது போல இருக்கின்றாய்` என்றதாயிற்று. ஒன்றும் செய்யாதிருத்தலை, `பேசாதிருத்தல் - மௌனம் சாதித்தல்` என்றல் வழக்கு. `அடியராயினாருள் சிலருக்குக் காட்சி வழங்கிக் களிப்பையும், சிலருக்குப் பேசாதிருந்து துயரையும்தரின், நடுவு நிலையாளர் உன்னை ஏச மாட்டார்களோ` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

ஏசா நிற்பர் என்னைஉனக்கு
அடியான் என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும்
பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந்
திருவோ லக்கம் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும்
எந்தாய் இனித்தான் இரங்காயே. 

பொழிப்புரை :

ஒளியுருவானவனே! எல்லாம் உடையவனே! பொற்சபையில் நடிக்கின்ற எந்தையே! அடியேனை மற்றவர்கள் எல்லாம் அன்பில்லாதவன் என்று இகழ்வார்கள். உன்னருளையே விரும்பி நிற்கிறேன். ஆதலின் அடியார் சூழ்ந்திருக்கின்ற, உன் திருச் சபையைக் காண்பதற்கு, இனி இரங்கி அருள்வாயாக.

குறிப்புரை :

``ஏசாநிற்பர்`` என்று, எதிர்காலத்தில் நிகழ்காலம், ``பேணா`` என்றது, `செய்யா` என்னும் வினையெச்சம். ``இனித்தான்`` என்றதில், தான், அசைநிலை. திருவோலக்கம் - கொலு. பிறர் எல்லாம் - உலகத்தார் அனைவரும். `ஏசா நிற்பர்`` என்றதற்குமுன், `ஆதலின்` என்பது வருவித்துக் கூட்டி, அத்தொடரை, இரண்டாம் அடியின் இறுதிக்கண் வைத்து உரைக்க. தேசன் - ஒளியுடையவன். `உலகத்தார் எல்லாம் என்னை உனக்கு அடியவன் என்றே சொல்லுவர்; யானும் உனது அருள் ஒன்றையே விரும்பி நிற்பேன்; ஆதலின், யான் உன்னை அடையாது அல்லல் உறின், யாவரும் இருவரையும் ஏசுவர்; அவ்வாறாகாமல் உன் திருவோலக்கம் சேவிக்க இப்பொழுதே இரங்கியருள்` என்பது இதன் திரண்டபொருள்.

பண் :

பாடல் எண் : 7

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன்
என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும்
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள்
வாழ்வே வாவென் றருளாயே.

பொழிப்புரை :

எங்களது வாழ்வாயுள்ளவனே! அம்பலத்தாடும் பெருமான் நமக்கு அருள்புரிவான் என்று, பலகால் நினைந்து இன்புற்றிருக்கும் எளியேனை, அருமையான உபதேசத்தை அருள் செய்து ஆட்கொண்டாய். அவ்வாறு இருக்க, நான் இப்போது ஆள்வாரில்லாத செல்வம் போலப் பயனற்று ஒழிவேனோ? நெருங்கிய பழவடியார்களும் நீயும் நின்று விளங்கி விளையாடுகின்ற பக்கத்திலே நெருங்கி வரும்படி என்னை `வா` என்று அழைத்து அருள் செய்வாயாக.

குறிப்புரை :

பொருள்கோள்: `எங்கள் வாழ்வே, (என்னை முன்பு) அருங்கற்பனை கற்பித்து ஆண்டாய்; (இப்பொழுது) ஆள்வார், இலிமாடு ஆவேனோ! ஏமாந்திருப்பேனை வா என்று அருளாய்`. ஏமாந்து - களிப்புக்கொண்டு. அருங் கற்பனை - அரிய போதனை; அறிதற்கரிய உண்மையை உரைத்தல். மாடு - செல்வம். செல்வம் பயன்படும் பொருளாயினும், அதற்கு உரிமையுடையவர் அருகில் இல்லாதபொழுது அது பயனில்லாதவாறுபோல, என்னை உடையவனாகிய நீ என்னைப் புறக்கணித்திருப்பின் நான் கெடுவேன்` என்றது இவ்வுவமையின் பொருள். பசுக்களை, `மாடு` என வழங்குதல் உயர்ந்தோர் வழக்கிற் காணப்படாமையின், ``மாடு`` என்றதற்கு, `பசு` என்று உரைத்தல் ஆகாது என்க. ``ஆள்வார் இலி மாடு ஆவேனோ`` என்றதில் ஆக்கம் `உவமை குறித்தது` என்பர், மாதவச் சிவஞான யோகிகள் (சிவஞானபோதம்-சூ.7, அதி.3, சிவ ஞானசித்தி - சூ.8.29.) `ஏமாத்தல், ஏமாறுதல்` என்னும் சொற்களிடை வேறுபாடு அறியாதார் `ஏமாத்தல்` என்பதற்கும், `ஏமாறுதல்` என்பதன் பொருளே பொருளாக உரைப்பர்; அது பொருந்தாமையை, சான்றோர் செய்யுட்கள் நோக்கி அறிந்துகொள்க. `ஏமாறுதல்` என்பது, `ஏமம் மாறுதல்` என்பதன் மரூஉ. எனவே, இது, பிற்கால மரூஉ மொழிகளுள் ஒன்று என்க.

பண் :

பாடல் எண் : 8

அருளா தொழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ.

பொழிப்புரை :

என்னை ஒரு பொருளாகக் கொண்டு வலிய வந்து ஆட்கொண்ட பொன் போன்றவனே! பொற்சபையில் நடிக்கின்ற கூத்தனே! நீ அருள் செய்யாது ஒழிந்தனையாயின், என்னை இவ் வுலகில் அஞ்சாதே என்பவர் யாருளர்? மயக்கம் பொருந்திய மனத் துடன் உன்னைவிட்டு விலகித் துன்பப்படுகின்ற என்னை `வா` என்று அழைத்து உன் தெளிவு பொருந்திய கூட்டத்தைக் காட்டாவிடில், யான் இறந்து போனால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களோ?

குறிப்புரை :

மருள் ஆர் மனம் - மயக்கம் பொருந்திய மனம். ``தெருளார்`` என்றது, `தெளிவையுடைய அடியார்` என்னும் பொருட்டாய், ``உன்`` என்றதற்கு முடிபாயிற்று. ``செத்தே போனால்`` என்று, அனுவாதமாக அருளிச்செய்ததாகலின், `காட்டாயேல் செத்தே போவேன்; அவ்வாறு போனால் சிரியாரோ` என்று உரை உரைக்கப் படும். ``செத்தே`` என்ற ஏகாரம், தேற்றம். பிராரத்த கன்ம முடிவின் கண் சூக்கும உடம்பு நீங்காது தூல உடம்பு மாத்திரை நீங்குதலே, `சாதல்` எனப்படும். இரண்டு உடம்பும் ஒருங்கு நீங்குதல், `சாதல்` எனப்படாது; என்னையெனின், முன்னது ஒருபிறப்பை விடுத்து மற்றொரு பிறப்பிற் செல்வதேயாகலானும், பின்னது பிறவியிற் செல்லாது, வீடு பெறுதலேயாகலானும் என்க. எனவே, ``சாவா வரம் பெறுதல்`` என்பதற்கும், `மீளப் பிறக்கும்நிலையில் உடம்பு நீங்கப் பெறாத வரம்` என்பதே கருத்தாவதன்றி, எப்பொழுதும் உடம்பொடு கூடியிருத்தல் என்பது கருத்தன்றாம். என்னை? அறிவுடையோர், யாதானும் ஒருகாரணம் பற்றிச் சிலநாள் மிகுதியாக உடம்பொடு நிற்க விரும்புதலன்றி, எஞ்ஞான்றும் உடம்பொடுகூடி நிற்க விரும்பா ராதலின். `உடம்பு அருவருக்கத்தக்கதன்றி விரும்பத்தக்க பொருளன்று` என்பது மேல் இனிது விளக்கப்பட்டது. இவ்வாற்றால் அடிகள், `செத்தே போவேன்` என்றது, `நீ என்னைப் புறக்கணிப்பின், மீளப் பிறவியில் வீழ்வேன்; அதுகண்டு உன் அடியார்கள், அருள் பெற்ற பின்னரும் அதனைப் பேணாது பிறவியில் வீழ்ந்தான்; என்னே இவனது அறிவிருந்தவாறு என எள்ளி நகையாடுவாரல்லரோ` என்று அருளிச்செய்தவாறாம். இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார் பின்னர்ப் பிறவியில் வீழ்தல் எஞ்ஞான்றும் இல்லையாயினும், அடி களது வீடு பேற்று அவா, அவ்வாறு அவரை அஞ்சப்பண்ணியது என்க.

பண் :

பாடல் எண் : 9

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் திருநாமந்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே.

பொழிப்புரை :

தலைவனே! பழைய அடியார்கள் சிரிப்பார்கள்; மகிழ்வார்கள்; இன்புறுவார்கள்; கூடிக்கூடி உனது திருநாமத்தைக் கூறுவார்கள்; சிலர் கேட்பார்கள்; அதனைப் பாராட்டுவார்கள்; தனித்தனியே இருந்து உனது திருப்பெயரை மனத்திலே ஊன்று வார்கள்; பொற்சபையின் கண்ணே நடிக்கின்ற இறைவா என்று துதிப் பார்கள். அவர்கள் எதிரிலே நாய் போன்றவனாகிய யான் இகழ்ச்சி யுடையவனாய் இருப்பேனோ? இனியேனும் அருள் புரிவாயாக.

குறிப்புரை :

முன்னைத் திருப்பாட்டில் வந்ததனை இத்திருப்பாட்டில் வந்த, ``உன் தெருளார்`` என்பதனை இங்கும் உய்த்து, ``திரண்டு திரண்டு`` என்றதனை முதலில் வைத்துரைக்க. தேனிப்பார் - இன்புறுவார். இதனை, `தியானிப்பு` என்பதன் மரூஉ என்பாரும் உளர். `தியானித்தல்` என்பது, `சானித்தல்` என வருவதனையே காண்கின்றோம். ``ஒண்கருட சானத்தில் தீர்விடம்போல்``, ``கோதண்டம் சானிக்கில்`` (சிவஞானபோதம். சூத்.9. அதி.2.3.). வார்த்தை - புகழ். மெச்சுவார் - பாராட்டுவார். வெவ்வேறிருந்து - தனித்தனியே இருந்து, ``நாமம்``; திருவைந் தெழுத்து. தரித்தல், நாவினும், மனத்தினும். நரிப்பாய் - துன்பம் உடையவனாய். இறை உலகத்தை அடைந்த அடியார்கள் தூய உடம்பு உடையராய் எங்கும் இயங்குவராதலின், என்னைக் கண்டு இரங்குவர் என்பார், ``அவர்முன் நரிப்பாய் இருப்பேனோ`` என்று அருளிச் செய்தார். நரிப்பு - துன்பத்தால் தாக்கப்படுதல். இது, `நெரிப்பு` என்பதன் மரூஉப் போலும்! அன்றி ஒருதேய வழக்கெனினுமாம். ஓகாரம் இரக்கப்பொருட்டு. நல்காய் - இரங்காய்.

பண் :

பாடல் எண் : 10

நல்கா தொழியான் நமக்கென்றுன்
நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
யருளாய் என்னை உடையானே. 

பொழிப்புரை :

என்னை ஆளாக உடையவனே! நமக்கு இறைவன் அருள் புரியாது போகான் என்று எண்ணி, உனது திருநாமமாகிய அஞ்செழுத்தைப் பலகால் கூறி, கண்கள் நீர் பெருகி, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி, மனத்தினாலே எண்ணிக் கனிந்து, பலகாலும் உனது உருவத்தைத் தியானித்து பொற்சபை என்றே துதித்துத் தளர்வு உற்றிருக்கும் உயிராகிய எனக்கு இரங்கி அருள் புரிவாயாக.

குறிப்புரை :

`பொருளறிந்து நன்கு போற்றாது அறிந்த அளவில் எப்பொழுதும், எவ்விடத்தும் சொல்லுகின்றேன்` என்பார், ``பிதற்றி`` என்றார். ``மல்கா`` முதலிய நான்கும், ``செய்யா`` என்னும் வினையெச்சங்கள். பாவித்து - நினைத்து. பரவி - துதித்து. ஒல்கா நிற்கும் -மெலிகின்ற. தம்மையே தமது எளிமையும் அயன்மையும் தோன்ற, `உயிர்க்கு` எனத் திணையும், இடமும், வேறாக அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 1

மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடைய அன்பே. 

பொழிப்புரை :

தேனின் தெளிவானவனே! சிவபிரானே! திருப் பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவனே! அளவு இல்லாத பதவிகள் எல்லாவற்றையும் கடந்து நின்ற ஆனந்தமே! என்னுடைய அன்பு உருவமே! பகைத்து, என்னை மயக்கச் செய்யும் வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின், வாயில்களையும் அடைத்து அமுதமே சுரந்து நின்று என்னகத்தே தோன்றுகின்ற ஒளியே! உன்னை நான் உள்ளவாறு காணும்படி வந்தருள்வாயாக.

குறிப்புரை :

மாறிநின்று - தம்முள் ஒன்றோடு மற்றொன்று மாறுபட்டு நின்று; என்றது, `ஒன்று வந்து பற்றும்பொழுது, மற்றொன்று அதனை விலக்கி வந்து இவ்வாறு இடையறாது சூழ்ந்து` என்றபடி. இதற்கு இவ் வாறன்றி, `என்னோடு பகைத்து நின்று` என உரைப்பின், ``மயக்கிடும்`` எனவும் ``வஞ்சம்`` எனவும் வருவனவற்றாற் பெறப்படுவதற்கு வேறாய்ப் பெறப்படுவது ஒன்று இன்மை அறிக. வஞ்சம், அற்றம் பார்த்து வருதல். ``ஒருவனை வஞ்சிப்பதோரும் அவா`` (குறள்-366) என்றதும் காண்க. ``வழி`` என்றது, பொறிகளை; ``பொறிவாயில் ஐந்து`` என்றது காண்க (குறள்-6). ``அமுது`` என்றது, அதன் இன்பம் போலும் இன்பத்தை. ``அமுதே`` என்ற ஏகாரம், பிரிநிலை. ``ஊறி நின்று`` என்றதனை, `ஊறி நிற்க` எனத் திரிக்க. எழுதல் - தோன்றி வளர்தல். ஆசான் மூர்த்தியாய் வந்து ஆட்கொண்ட கோலம், இறைவனது இயற்கைக் கோலம் அன்றாதலின், இயற்கைக் கோலத்தில் காணுதலை, ``உள்ளவா காணுதல்`` என்றார். இக்காட்சி, சிவலோகத்தே காணப்படும்.
`சிவலோகம் அல்லது சிவபுரம்` என்பது, சுத்த தத்துவ புவனங்கள், அனைத்திற்கும் பெயர். இப்புவனங்கள் ஏனைய அசுத்த தத்துவ புவனங்கட்கு உள்ளீடாய் அவற்றோடு உடன் நிற்பனவும், அவை அனைத்திற்கும் மேலாய் அவற்றைக் கடந்து நிற்பனவும் என இரு கூறுபட்டு நிற்கும். அவ் இருகூற்றுள், அசுத்த தத்துவ புவனங் களோடு உடனாய் நிற்கும் சிவலோகம், `பதமுத்தித் தானம்` என்றும், அவற்றிக்கு அப்பாற்பட்டு நிற்கும் சிவலோகம், `அபரமுத்தித் தானம்` என்றும் சொல்லப்படும். அவற்றுள் பதமுத்தித்தானம், `சரியை, கிரியை, யோகம்` என்னும் மூன்று நிலைகளின் நின்றோர் சென்று அடையும் இடமும், அபரமுத்தித்தானம், ஞானத்தில், `கேட்டல், சிந்தித்தல், தெளிதல்` என்னும் நிலைகளில் நின்றோர் சென்று அடையும் இடமுமாம். நிட்டையை அடைந்து மீளாது நின்றோர், இவை அனைத்தையும் கடந்து சிவனோடு இரண்டறக் கலப்பர்.
நிட்டையிலே நிலைத்து நில்லாது மீட்சி எய்துவோர், அபரமுத்தித் தானத்திற் சென்று தடத்த சிவனை அடைந்து, அவனது அருள் வழியே பின்னர்ச் சொரூப சிவனை அடைவர், பதமுத்தித் தானத்தை அடைந்தோர் தாம் செய்த சரியை முதலியவாகிய தவத்தின் வன்மை மென்மைகட்கு ஏற்ப அங்கு நின்றே ஞானத்தை அடைந்து, அபரமுத்தி, பரமுத்திகளில் ஏற்ற பெற்றியாற் செல்லுதலும், மீள இந்நிலவுலகிற் பிறந்து ஞானத்தை அடைந்து, கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பவற்றால் பின்னர் அபரமுத்தி, பரமுத்தி களை அவ்வாற்றான், அடைதலும் உடையராவர். அபரமுத்தித் தானத்தை அடைந்தோருள் அசுத்தவுலகை நோக்குவோர் அரியராக லின், அவர்க்குப் பிறப்பு உண்டாதல் மிகச் சிறுபான்மையே. `அபர முத்தர்க்குப் பிறப்பில்லை` என்பதும் பெரும்பான்மை பற்றியேயாம். ஆயினும் நிட்டை கூடாதவழி, அசுத்த உலகை நோக்கும் நோக்கு ஒழியாது ஆகலானும், அந்நோக்கினை, கேட்டல் முதலிய மூன்று ஞானங்களும் மெலிவித்தலும், கெடுத்தலும் பெரும்பான்மை யாயினும், சிறுபான்மை அது தப்புதலும் கூடுமாகலின், பிறத்தல் அவர்க்கும் சிறுபான்மை உளதேயாம்.
`காண அருளாய்` என இயையும். வந்து - மீளத் தோன்றி, தேறல் - தேன். தெளிவு - வடித்தெடுத்து. ஈறிலாப் பதங்கள் - அள வில்லாத உலகங்கள். ``ஈறிலா`` என்றதனை, இன்பத்திற்கு அடை யாக்குவாரும் உளர். ``யாவையும்`` என்றதனால், அபர முத்தித் தானமாகிய சுத்த மாயா புவனங்களும் அடங்கின. `இவை அனைத்தை யும் கடந்த இன்பம்` என்றதனால், அது பரமுத்தி இன்பமாதல் வெளிப்படை. இவ்வின்பத்தைப் பயக்கும் அன்பு, `காண்பான், காட்சி, காட்சிப்பொருள்` என்னும் வேற்றுமை தோன்றாது காட்சிப் பொருளாகிய சிவம் ஒன்றே தோன்ற நிற்கும் அதீத நிலைக்கண்ண தாகிய பேரன்பாகலின், அதனை இறைவனின் வேறாக அருளாது. ``என்னுடைய அன்பே`` என, ஒன்றாகவே அருளிச்செய்தார். எனவே,
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவதும் ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
(தி.10 திருமந்திரம் - 270.) என்றருளிய அன்பும் இதுவேயாதல் பெறப்பட்டது.
அடிகள் இறைவனை இவ்வாறு விளித்தமையால் அவர் விரும்பியது பரமுத்தி இன்பத்தையன்றி வேறொன்றையன்று என்பது தெள்ளிதாதலின், அவர் பலவிடத்தும் தமக்குத் தருமாறு வேண்டும். சிவலோகம் அல்லது சிவபுரம் என்பது, அபரமுத்தித்தானத்தையன்றிப் பதமுத்தித் தானத்தையன்றென்பது இனிது விளங்கும். அன்னதா யினும், அடிகள் பரமுத்தியை வேண்டாது, அபர முத்தியையே வேண்டுதல் என்னையெனின், திருப்பெருந்துறையில் தம்மோடு உடன் இருந்து அருள்பெற்ற அடியார்கள் பலரும் அடைந்தது அபர முத்தியே என்னும் கருத்தினால், தமக்கும் அதுவே தரற்பாலது என்னும் உணர்வினாற்போலும் என்க. அபரமுத்தித் தானத்தில் அடை யும் நிலைகள் வாளா, `சாலோகம், சாமீபம், சாரூபம்` எனக் கூறப் படாது, `சுத்த சாலோகம், சுத்த சாமீபம், சுத்த சாரூபம்` என வேறு வைத்துக் கூறப்படும்; அந்நிலையே அடிகளால் குறிப்பிடப்படுவது என்க. அதனை அடிகள் வேண்டுவதும் அவற்றில் உள்ள விருப் பத்தால் அன்று; அதனையடைந்துவிடின், பின்னர்ப் பிறப்பில்லையாய் ஒழியும் என்னும் துணிவினாலேயாம் என்க.

பண் :

பாடல் எண் : 2

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யான்இதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் முன்னுமாய், பின்னுமாய் முழுதுமாய் வியாபித்த மலமற்றவனே! எல்லையற்ற பரம்பொருளே! அழகிய திருப்பெருந்துறையை உடையவனே! சிவபிரானே! சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே! அன்பின் மிகுதியால் அடியேனை உயிரோடு உடம்பும் இன்ப வெள்ளமாய்க் கசிந்து உருகும்படி என் நிலைக்குத் தகுதி இல்லாத இனிய அருளைப் புரிந்தாய். இந்தப் பேருதவிக்கு நான் உனக்குத் திரும்பச் செய்யக் கூடிய உதவி இல்லாதவனாய் இருக்கிறேன்.

குறிப்புரை :

ஆக்கை (உடம்பு) உயிரின் வழியே நிற்பதாகலின், அதனை, ``ஆவியோடு`` என, உயிரொடு சார்த்திக் கூறினார். பரம் - தரம்; தகுதி. ``முன்பு, பின்பு`` என்றவை, காலப் பெயராய், அவற்றின் கண்ணவாகிய பொருளைக் குறித்தன. ``பின்பும்`` என்றதன்பின்னும், `ஆய்` என்பது விரிக்க. இனி `முன்பும் பின்புமாய்` என மாறிக் கூட்ட லும் ஒன்று. ``முழுதும்`` என்றது, இடம்பற்றி. ``முன்புமாய்`` முதலிய வற்றை முதற்கண் கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 3

அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 

பொழிப்புரை :

அடியார்களுக்கு இறைவனே! அடியேனுடைய தந்தையே! உயிரோடு உடம்பும் அடுக்குத்தோறும் நெகிழ்ச்சி யுண்டாகும்படி உள்ளத்தே புகுந்து நின்று உருகச்செய்து, பொய்யாகிய அஞ்ஞானத்தைப் போக்கிய உண்மை ஞானமே! அலை மோதாது நிலையான அமுதமாகிய தெளிந்த கடலே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! வாக்கும் மனமும் கடந்து நின்று திருவருளால் உணரும்படி நான் உன்னைப் புகழ்ந்து உரைக்கின்ற வழியை உணர்த்துவாயாக.

குறிப்புரை :

`அன்பர்க்கு அரைசனே` எனக் கூட்டுக. அரைசன் - அரசன்; போலி. `காவல் குழவி கொள்பவரின் ஓம்பும்` (புறம்-5.) அரசர்போல, இறைவன் தன் அன்பரை ஓம்புதலின், அவனை அவர்க்கு அரசன் என்று அருளினார். ``உடைய`` என்றது, ஆறாம் வேற்றுமைப் பொருள் தருவதோர் இடைச்சொல்; அஃது இங்கு நான்காவதன் பொருட்கண் மயங்கி வந்தது. புரை - உள்ளறை. அஃது, ஆக்கையிடத்து, தூலதேகத்தின்கண் உள்ள சத்த தாதுக்களையும், மற்றும், சூக்கும தேகம், பரதேகம் என்பவற்றையும், உயிரிடத்து, பாச ஞான பசுஞான பதிஞானங்களையும் குறித்தற்பொருட்டு, அடுக்கி நின்றது. கனிய - இளகும்படி. பதிஞானத்தால் இறைவனை உணரும் பொழுதன்றியும், பாசஞானங்களால் உலகினை உணரும் பொழுதும் அன்பர்கட்கு வேண்டுவது இறையன்பே. இனி, ``புரைபுரை`` என்றதனை ஆக்கை ஒன்றிற்கே கொள்ளுதலுமாம். மிகுதலின், ஆவியும் புரை புரை கனிவதாக அருளிச்செய்தார். `இருள் - அறியாமை; ஆணவ மலம்` என்பதும், `அது முத்திக் காலத்தில் சத்தி கெட்டு நிற்கும் இயல் புடையதாதலின் இல்பொருள்போல வைத்துப் பொய் எனப்பட்டது` என்பதும் சிவஞானபோதத்து ஆறாம் சூத்திர மாபாடியத் தொடக் கத்துக் கூறப்பட்டமை காண்க. மெய்ச்சுடர் - அழிவில்லாத என்றும் நிலைபெற்று நிற்கும் ஒளி. `பொராது` என்னும் எதிர்மறை வினையெச் சத்து ஈறு கெட்டது. மன்னுதல் - நிலைபெறுதல். `திரை பொரா மன்னும் அமுதத் தெண்கடல்` என்னும் இல்பொருள் உவமப் பெயர், ஆகு பெயராய் உவமிக்கப்படும் பொருளை உணர்த்திற்று. இறைவன் என்றும் ஒருபெற்றியனாய் நிற்றலைக் குறிக்க, ``திரைபொரா மன்னும்`` என்றும், இன்ப மயனாதலைக் குறிக்க, ``அமுதம்`` என்றும், அறிவு வடிவினனாதலைக் குறிக்க. ``தெள்`` என்றும் அடைபுணர்த்து அருளிச்செய்தார். எனவே, இம்மூன்று அடைகளானும் முறையே, `சத்து, ஆனந்தம், சித்து` என்னும் இயல்புகள் குறிக்கப்பட்டவாறு அறிக. இது, மெய்ச் சுடராதலைப் பிறிதோராற்றான் இனிது விளக்கிய வாறு.
`உரையுணர்வு` என்னும் உம்மைத் தொகை, ``இறந்து`` என்றதனோடு இரண்டாவதன் பொருள்படத் தொக்கது. `இறைவன் வாக்குமனாதீதன்` என்பதில் `வாக்கு` என்பது பாசஞானத்தையும், `மனம்` என்பது பசுஞானத்தையுமே குறிக்கும் என்பது சிவஞான போதத்து ஆறாம் சூத்திரத்தின் இரண்டாம் அதிகரண மாபாடியத்தான் இனிது விளங்கிக் கிடப்பது. அதனால், இங்கு, ``உரை`` என்றது பாச ஞானத்தையும், ``உணர்வு`` என்றது பசுஞானத்தையுமாதல் தெளிவு. இறத்தல் - கடத்தல். இவ்விருஞானத்தானும் இறைவன் உணரப் படானாகலின், ``உரையுணர்வு இறந்து நின்று`` எனவும். இவற்றான் உணரப்படானாயினும், பதிஞானத்தால் உணரப்படுதலின், ``உணர்வது`` எனவும், அவன் இங்ஙனம் நிற்றல், சூக்கும சித்தாய் நிற்கும் தனது தனித் தன்மையாலாதலின், ``ஓர் உணர்வே`` என்றும் அருளிச்செய்தார். ``உணர்ந்தார்க்கு உணர் வரியோன்`` (தி.8 கோவையார் - 9) என்பதில், ``உணர்ந்தார்க்கு`` என்பதற்கு, `அருள்நிலையில் நின்று வேறாக உணர்ந்தார்க்கு` என்பதும், ``உணர்வரியோன்`` என்பதற்கு, `அங்ஙனம் வேறு நில்லாது அவரைத் தன் திருவடி வியாபகத்துள் அடக்கி ஆனந்தத்துள் திளைத்திருக்கச் செய்பவன்` என்பதுமே பொருளாகலின், அஃது இதனோடு மலையாமை அறிக. இத் திருக்கோவைப் பகுதிக்குப் பேராசிரியர் உரைத்த உரைக்கும் இதுவே கருத்தாதல் அறிந்துகொள்க. ``உணர்ந்தார்க்கு`` என்பதற்குப் பிறிதொரு பொருளும் அவர் இரண்டாவதாகவே உரைப்பார். `உரையுணர்வு இறந்தவனாதலின், உன்னை உரைக்குமாறு இல்லை` என்பார், ``யான் உன்னை உரைக்குமாறு உணர்த்து`` என்று அருளினார், எனவே, `இயன்ற அளவில் உன்னைப் பாடுவேன்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 4

உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்
உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே
குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்
குறிகினேற் கினியென்ன குறையே.

பொழிப்புரை :

கற்று உணர்ந்த, பெரிய முனிவரும், தேவருடன், ஏனையோரது உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் அருமையான பொருளே! ஒப்பில்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் உயிரானவனே! பிறப்புப் பிணியைப் போக்கி உய்விக்கின்ற மருந்து போன்றவனே! செறிந்த இருளில் தெளிவாய்க் காணப்பட்ட தூய ஒளியே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் பெருமானே! குணங்கள் இல்லாத ஆனந்தமே! உன்னை அடைந்த எனக்கு இனி என்ன குறை உள்ளது?

குறிப்புரை :

உணர்ந்த - கலைஞானத்தைப் பெற்ற. உம்பர் - தேவர். ஒழிந்தார் - ஏனையோர்; என்றது, அயன் மால் முதலியோரை. தேவர் பூதனாசரீரம் இன்றிப் பூதசார சரீரமே உடையராதலும், அயன் மால் முதலியோர் காரணக் கடவுளராதலும் பற்றி, அவர்தம் ``உணர்விற்கும் தெரிவரும் பொருளே`` என எடுத்தோதினார். இணங்கிலி - நிகரில் லாதவனே; அண்மை விளி. `இணங்கிலீ` எனப் பாடம் ஓதுதலுமாம். ``பிறப்பறுக்கும்`` என்றது, `ஆட்கொள்கின்ற` என்னும் பொருளது. பிறவி, நோயாகலின், `அதற்கு மருந்தாய் இருப்பவனே` என்றார். திணிந்தது - செறிந்தது. ஓர் இருள் - பேர் இருள். தெளிந்த - இனிது விளங்கிய. வெளி - ஒளி. இஃது உவமையாகுபெயர். எனவே, `செறிந்த இருளில் கிடந்து அலமருவோர்க்கு, அங்கு இனிது தோன்றிய ஒளிபோன்றவனே` என்பது பொருளாயிற்று. `அறியாமையில் மூழ்கி யிருந்த என்முன் நீ பொருக்கெனத் தோன்றி என்னை அறிவனாக் கினாய்` என்பதனை, இவ்வாறு அருளிச்செய்தார். குணங்கள் - முக் குணங்கள். இல்லா - கலவாத. முக் குணங்களுள் சாத்துவிகத்தால் தோன்றிப் பின் ஏனை இரண்டனாலும் வரும் துன்பத்தாலும் மயக்கத் தாலும் அழிவெய்தும் இன்பமன்றி, என்றும் நிலைபெற்று, துன்பம் மயக்கம் என்பவற்றோடு கலவாத பேரின்பமாகலின், ``குணங்கள்தாம் இல்லா இன்பமே`` என்றும் அருளினார். குறுகினேற்கு - அடைந்த எனக்கு. `என்ன` எனத் திரிந்து நின்ற, `எவன்` என்னும் வினாப் பெயர், இன்மை குறித்து நின்றது, ``கற்றதனாலாய பயனென்கொல்`` (குறள்-2.) என்புழிப்போல. பொன்மலையைச் சார்ந்த காக்கையும் பொன்னிறத்ததாவது போல, (``கனக மலையருகே - போயின காக்கையும். அன்றே படைத்தது பொன்வண்ணமே`` தி.11 பொன்வண்ணத் தந்தாதி - 100.) உன்னை அடைந்தோரும் உன்னைப்போலவே குணங்கள் தாம் இல்லா இன்ப வடிவினராவராதலின், உன்னை அடைந்த எனக்கு இனிப் பெறக்கடவதாய் எஞ்சிநிற்கும் பொருள் யாது உளது என்பார், ``உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறை`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 5

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே. 

பொழிப்புரை :

முடிவில்லாத செழிப்பான ஒளி மலையே! வேதமாகிய மறையின் பொருளாகி என்னுடைய மனத்தின்கண் வந்து, நிலை பெற்ற தலைவனே! கட்டுப்படுத்தப்படாத வெள்ளம் போல என் சித்தத்தின் கண் பாய்கின்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! ஆன்ம நாதனே! நீ இப்பிறவியிலேயே என் உடம்பையே கோயிலாகக் கொண்டாய். இனிமேல் உன்னை யான் வேண்டிக் கொள்வது என்ன இருக்கிறது?

குறிப்புரை :

எவ்வாற்றானும் யாதொரு பொருளையும் வேண்டுந் தன்மை இல்லாத பேரின்பமயன் என்பதை நன்கு வலியுறுத்தற் பொருட்டு, `நிறைவே` என்று போகாது, ``குறைவிலா நிறைவே`` என்று எதிர்மறை முகத்தானும் அருளினார். தீமை சிறிதும் இல்லாது நன்மையே வடிவாய பொருள் இறைவனையன்றிப் பிறிதில்லாமை அறிக. இதுபற்றியே இறைவனுக்குரிய பெயர்கள் பலவற்றுள்ளும், `சிவன்` என்னும் பெயர் தலையாயதாயிற்று. இப்பெயர் பிறர் ஒருவருக்கும் பொருந்தாமையை, ``சிவன் எனும் நாமம் தனக்கே யுடைய செம் மேனியெம்மான்`` (தி.4 ப.112 பா.9) என்று எடுத் தோதியருளினார் நாவுக்கரசர். ``குறைவிலா நிறைவே`` (தி. 7. ப.70. பா. 6.) என்னும் இவ்வரிய தொடரை ஆளுடைய நம்பிகளும் எடுத்தருளிச்செய்தல் அறிந்துகொள்ளத்தக்கது. கோது - பயன்படாத பகுதி; இஃது அமுதின்கண் இன்மையால், ``கோதிலா அமுதே`` என்றார். ஈறு - அழிவு. கொழுஞ் சுடர்க் குன்று - பேரொளியுடைய மலை; இஃது ஆகுபெயராய், ஞானமே உருவாய் உள்ள இறைவனைக் குறித்தது. ``மறை`` என்றது கலை ஞானத்தையும், ``மறையின் பொருள்`` என்றது அநுபவஞானத்தையுமாம். மன் - தலைவன். சிறை - அணை. ``நீர்`` என்றது, வெள்ளத்தை. தண்மையும் பெருமையும் பற்றிப் பேரின்ப வடிவினனாகிய இறைவனுக்கு வெள்ள நீர் உவமையாயிற்று. ``சிந்தைவாய்`` என்றதில் வாய், ஏழனுருபு. ``சிந்தை`` என்றது, தெளிவுபெற்ற சிந்தையை என்றது ஆற்றலான் விளங்கிற்று. உடல் என்றது உள்ளத்தை. ``நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற - கற்பகமே`` (தி.6 ப.95 பா.4) என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசரும். ``இனி உன்னை என் இரக்கேன்`` என்றது, `இன்பமே வடிவான நீ, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காது நின்றபின், உன்பால் யான் வேண்டிக் கொள்ளத் தக்கது யாதுளது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆய்அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே. 

பொழிப்புரை :

உன் திருவருளை இடைவிடாது வேண்டி உருகும் போது என்னுடைய மனத்தினுள்ளே தோன்றுகின்ற ஒளியே! தேவர்கள் தலைமீது விளங்குகின்ற தாமரைமலர் போன்ற திருவடியை உடையவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவ பெருமானே! எங்கும் நிறைந்து ஆகாசமும் நீரும் பூமியும், நெருப்பும், காற்றும் ஆகி, அவை அல்லாதவனாய் அவ்வாறு அருளாலன்றி காணப்படாத வடிவத்தை உடையவனே! இப்பொழுது உன்னைக் கண்ணாரக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

குறிப்புரை :

இரந்து இரந்து - முனைப்பு நீங்கி உன்னைப் பல்காலும் வேண்டிநின்று. உருக - அன்பு செய்ய. ``இரந்திரந்து`` என்று அடுக்கி னால், ``உருக`` என்றதனையும் அடுக்காக வைத்துரைத்தல் பெறப் பட்டது. அடுக்குக்களில் முன்னது பன்மைப் பொருளிலும், பின்னது தொறுப்பொருளிலும் வந்தன. இவற்றால் இறைவனை அனுபவமாகப் பெறுமாறு அருளிச் செய்யப்பட்டது. ``ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்-ஆரேனும் காணா அரன்`` (திருகளிற்றுப் படி-15) என்ற திருவாக்கினையும் நோக்குக. ``இமையோர் சிரந்தனிற் பொலியும் சேவடியாய்`` என்றதனால், அவர்க்கு ஒரோஒருகால் புறத்துக் காணப் படுவதன்றி, அகத்தே எஞ்ஞான்றும் நின்று நிலவும் அநுபவப் பொருளாகாமை பெறப்படும். நிரந்த - முறைப்பட்ட. இறுதிக்கண் நிற்றற்குரிய, ``ஆகாயம்`` என்பது, செய்யுள் நோக்கி முன் நின்றது, நீர், இரண்டாவதாகும், இறைவன் எல்லாப் பொருளிலும், கலப்பினால் அவையேயாயும், பொருள் தன்மையால் அவற்றின் வேறாகியும் நிற்றலின், `ஐம்பூதங்களாய் அல்லையாய்` என்றும், `இங்ஙனம் கலந்து நிற்பினும் ஒருவர்க்கும் தோன்றாதே நிற்கின்ற உன்னை நான் என் கண்ணாரக்கண்டு களித்தேன்` என்பார். ``ஆங்கே.....இன்றே`` என்றும் அருளிச்செய்தார். ஓர் உரு - ஒப்பற்ற பொருள்.

பண் :

பாடல் எண் : 7

இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே. 

பொழிப்புரை :

உன்னை அன்றி வேறு ஒரு பொருள் இல்லையாக. பிற எல்லாப் பொருளையும் விட்டுவிட்டு அணு அளவாய்க் குறுகிக் கூட்டப்படுகின்ற திருப்பெருந்துறை சிவனே! காணப்படுகின்ற ஒரு பொருளும் நீ அல்லை; உன்னை அல்லாது பிற பொருளும் இல்லை. யாவர் உன்னை அறிய வல்லவர்? இப்பொழுது எனக்கு அருள் புரிந்து அறியாமை இருளைப் போக்கி, மனத்தே தோன்றுகின்ற சூரியனே போல வெளிவந்து நின்ற உன்னுடைய இயல்பை, தற்போதத் தினையே எதிரிட்டு நினையாமல் அருள் வழியிலே நின்று நினைந்தேன்.

குறிப்புரை :

``சென்று சென்று`` என்பது முதலிய பகுதிகளை முதலிற் கூட்டி, `சிவனே, ஒன்றும் நீயல்லை; அன்றி ஒன்றில்லை; ஆதலின், உன்னை அறியகிற்பார் யார்? ஆயினும், நீ இன்று எனக்கு அருளி என் உள்ளத்து நின்ற நின்தன்மையால், நீயலால் பிறிது இன்மையை யான் நினைப்பற நினைந்து நின்றேன்` என வினை முடிக்க.
இன்று - எனக்கு அருளும் காலம் எய்திய இந்நாளில். எனக்கு அருளி - என்மேல் கருணைகூர்ந்து. ``இருள் கடிந்து`` என்றதனை, ``நின்ற`` என்பதற்கு முன்னே கூட்டுக. ``எழுகின்ற ஞாயிறு`` என்றமையால், பொருட்கண்ணும், `எழுந்து` என்பது பெறப்படும்.
முன்னைத் திருப்பாட்டில், இறைவன் தன் அடியார்களது உள்ளத்தில் தோன்றுகின்ற முறையை விளக்கியவாற்றிற் கேற்பவே இங்கும், `ஞாயிறே` என்னாது, ``எழுகின்ற ஞாயிறே போன்று`` எனக் காலையில் முளைத்தெழுந்து மேலே செல்லுகின்ற கதிரவனையே உவமையாகக் கூறினார். ``மன்னும் இருளை மதிதுரந்தவாறு`` என்னும் சிவஞானபோதத்தையும், (சூ.11.அதி.2.) அதன் உரையையும் காண்க. `உள்ளத்து எழுந்து நின்ற` என இயையும். ``தன்மை`` என்றது செயலை. `தன்மையால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. நினைப்பு அற - கருவிகளின்வழியும், தற்போதத்தின்வழியும் உணர்தல் அற்றுப் போக. நினைந்தேன் - உனது திருவருளின் வழியே உணரப் பெற் றேன். பிறிது - வேறொருபொருள். மற்று, அசைநிலை. ``இன்மை`` என்றவிடத்து இரண்டாம் வேற்றுமை இறுதிக் கண் தொக்கது. `நீயலால் பிறிது இன்மையை உணர்ந்தேன்` என்றது, உன்னையன்றிப் பிறிதொரு பொருளும் மெய்ப்பொருளாகாமையை உணர்ந்தேன்; அஃதாவது உண்மை ஞானத்தைப் பெற்றேன்` என்றவாறு. எனவே, ``காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே`` (தி.6 ப.95 பா.3) என்றதுபோல, இதுவும், `நீ கருணை கூர்ந்து என் உள்ளத்தில் தோன்றி அறியாமையைப் போக்கி நீங்காது நிலைபெற்றமையால், யான் நினது மெய்ம்மையை உணர்ந்தேனல்லாது, வேறு எவ்வாற்றான் உணர் வேன்` என்று அருளிச்செய்ததாம், `பிறிதொருபொருள் இல்லை` எனப் பொதுப்படக் கூறப்பட்டதாயினும், ``பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் - மருள்`` (குறள்-351.) என்புழிப்போல, `பிறிதொரு மெய்ப்பொருள்` என்று சிறப்பு வகையாகவே கொள்ளப்படும். அல்லாக்கால், ``எனக்கு அருளி`` ``இருள் கடிந்து``, ``நின்தன்மையை நான் நினைந்தேன்`` என்றற்றொடக்கத்துத் திருமொழிகள் பலவும் மாறுகொளக் கூறலாய் முடியும்.
சென்று சென்று - பாசக்கூட்டங்களினின்றும் நீங்கி நீங்கி; அடுக்கு, சிறிது சிறிதாக நீங்குதல்பற்றி வந்தது. ``யாதனின் யாதனின் நீங்கியான்`` (குறள் - 341) என்றார் திருவள்ளுவ நாயனாரும். `தேய்ந்து தேய்ந்து அணுவாய் ஒன்றாம்` என மாறிக்கூட்டுக. தேய்வதும், அணுவாவதும், ஒன்றாவதும் ஆன்மாவே என்க. ஆன்மா நித்தப்பொருளாதலின், தேய்தல் முதலியன அதன் வியாபாரமாம். முத்தி நிலையில் ஆன்மா இறைவனைத்தவிர பிறிதொரு பொருளை அறிதலும், இச்சித்தலும், அநுபவித்தலும் இன்றி, இறைவனையே அறிந்து, இறைவனையே இச்சித்து, இறைவனையே அநுபவித்து நிற்குமாதலின், அவ்விடத்து அஃது உலகை மறந்திருத்தலேயன்றித் தன்னையே தான் மறந்து நிற்கும். அதனால், அந்நிலையில் அதற்கு இறை அநுபவம் ஒன்றைத் தவிர்த்து, ஏனைய வியாபாரங்களுள் ஒன்றும் இல்லையாதல் அறிக. இந்நிலையில், ``உயிர்தானும் சிவாநுபவம் ஒன்றினுக்கும் உரித்தே`` (சிவஞானசித்தி சூ.11-10.) என்கின்றார் அருணந்தி சிவாசாரியார். இவ்வாறு ஆன்மா சிவனது திருவடி வியாபகத்துள் அடங்கித் தனித்த ஒரு முதலாய்க் காணப்படாது நிற்றலே ஆன்மா சிவத்தொடு ஒன்றாதல் அல்லது இரண்டறக் கலத்தல்` எனவும், `இவ்வாறன்றி, ஆன்மா முத்தியில்தானே பிரமமாம் என்னும் ஏகான்ம வாதம் முதலியன பொருள்படுமாறில்லை` எனவும் சித்தாந்த நூல்கள் பலவிடத்தும், பலபடியாக இனிது விளங்க விளக்குதலை அறிந்துகொள்க.
``சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்`` என்னும் தொடரை உமாபதிசிவனார், தமது சங்கற்ப நிராகரண நூலுள் சைவவாதி நிராகரணத்துள் எடுத்தோதினமையும், அதுவே, `பரம சித்தாந்தம்` எனச் சிவஞானபோதத்துப் பத்தாம் சூத்திர முதல் அதிகரண பாடியத்துள் கூறப்பட்டமையும் அவ்விடங்களிற் காண்க. இத்திருப்பாட்டுள் இங்ஙனம் பரம சித்தாந்தத்தை அருளிச் செய்தமையின், இதனை, `திருவாசகத்தின் இருதயமான பாட்டு` என்பர் அறிஞர்.
``அணு`` புலனாகாமைபற்றிக் கூறப்பட்ட உவமையாகு பெயர், சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் நிலையை, திருவைந்தெழுத்தை மூன்றெழுத்தாகவும், பின்னர் இரண்டெழுத்தாகவும், பின்னர் ஓர் எழுத்தாகவும் கணிக்கும் முறையில் வைத்து உணருமாறு அருளப்பட்டது என்பதும் அப் பாடியத்தே கூறினமை காண்க. திருவைந்தெழுத்தை ஓர் எழுத்தாகக் கணித்தல் இங்குப் பிறர்மதம் பற்றிக் கூறப்பட்டது. ``ஆம்`` என்னும் பெயரெச்சம், ``சிவன்`` என்னும் செயப்படுபொருட் பெயர் கொண்டது. `ஒன்றாதல்` என்பது, `ஒற்றித்து நின்று உணர்தல்` என்னும் பொருட்டாகலின், அதற்குச் செயப்படுபொருள் உண்மை அறிக.
எனவே, `இவ்வாற்றானன்றி வேறாய் நின்று அறியப்படு வாயல்லை` என்பதை எடுத்தோதி, `யார் உன்னை அறிய வல்லார்` என்றதாயிற்று. `யார்` என்னும் வினா. ஒருவருமிலர் எனப் பொருள் தந்ததாயினும் பெரிதும் அரியர் என்றல் திருவுள்ள மாதல் அறிக. இங்ஙனங் கூறவே, `பெரிதும் அரிய வருள் நாயேனையும் ஒருவ னாக்கிய நின் கருணையை என்னென்று புகழ்வேன்` என்பதும் பெறப் பட்டது. ``ஒன்றும் நீயல்லை, அன்றி ஒன்று இல்லை`` என்ற இரண்டிடத் தும், `ஆயினும்` என்பது வருவித்து, `நீ இவ்வுலகப் பொருள்களுள் ஒன்றும் அல்லையாயினும், நீ இல்லாத பொருளே இல்லை; ஆயினும், உன்னை காண்பவர் எவரேனும் உளரோ` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 8

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதீ.

பொழிப்புரை :

பூமியும் மேலே உள்ள பதங்களும் இவற்றை உள்ளடக்கிய பல்வேறு அண்டமும் ஆகிய எல்லாப் பொருளுமாய்த் தோன்றி விரிந்ததாகிய ஒளிப்பிழம்பே! நீரில் கலந்துள்ள நெருப்பு போன்றவனே! நினைப்பதற்கு அருமையான தூய பொருளே! உனது திருவருளாகிய வெள்ளம் பாய்கின்ற சிறப்புப் பொருந்திய சித்தத்தில் உண்டாகியதாகிய ஒப்பற்ற தேன் போன்றவனே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! எனக்கு இன்பத்தை உண்டாக்குகின்ற என்னொளியுடைய பொருளே! இவ்விடத்தில் உறவாயிருப்பவர் யார்? அயலாய் இருப்பவர் யார்?

குறிப்புரை :

பார் - பூமி, ``பதம்`` என்றது, சுவர்க்கத்தை. `தன் நிலையில் தான் ஒருவனேயாய் இருந்த இறைவன் நான் பலவாகு வேனாக எனச் சங்கற்பித்து, அனைத்தையும் உண்டாக்கி அவற்றினுள் நிறைந்து நின்றான்` என்பதே இறைவனது அருட்செயலாகச் சொல்லப் படுதலின், ``பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்த தோர் படரொளிப் பரப்பே`` என்று அருளினார்.
``தீயே`` என்றதனால், ``நீர்``, வெந்நீர் என்பது வெளிப்படை. தீ, வெந்நீரில் பொருளாய்ப் புலப்பட்டு நில்லாது, ஆற்றல் வடிவமாய்ப் புலப்படாது யாண்டும் நிறைந்து வேறற நிற்றல்போல, இறைவன் எல்லாப் பொருளிலும் புலப் பட்டு நில்லாது சத்தி வடிவமாய் யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றி, ``நீருறு தீயே`` என்றார்.
``எங்கும் எவையும் எரியுறு நீர்போல் ஏகம்
தங்குமவன் தானே தனி``
எனத் திருவருட் பயனும் (பா.8) கூறிற்று.
நினைவதேல் - நினைவது என்றால், `நின் அருள்வெள்ள மாகிய சீரிய பொருளின்கண் பொருந்திய சிந்தைக்கண் எழுந்த ஒப்பற்ற தேனே` என்க.
இங்கு - இவ்வுலகத்தில். `உறவினராதல் அயலவராதல் யார் உள்ளார்; ஒருவரும் இல்லை` எனவே, ``நீயே எனக்கு எல்லாம்`` என்பது குறிப்பெச்சமாயிற்று. ஆக்கும் - விளைக்கின்ற.

பண் :

பாடல் எண் : 9

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. 

பொழிப்புரை :

ஒளியாய்த் தோன்றும் உருவமே! உருவம் இல்லாத ஒப்பற்றவனே! வாக்கினால் சொல்லுவதற்கு அருமையான எப்பொருட்கும் முதலும் இடையும் கடையுமாய் உள்ளவனே! பிறவித் தளையை ஒழிக்கின்ற பேரின்பப் பெருங்கடலே! தீமை கலவாத நன்மையுடைய, திருவருள் மலையே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! குருவாய் எழுந்தருளி வந்து உன் திருவடியை எனக்கு அருளிய பின், நீ என்னை விட்டுப் போகின்ற வகை எங்ஙனம்? அதை எனக்குச் சொல்வாயாக.

குறிப்புரை :

இறைவன் கொள்ளுகின்ற திருமேனி ஒளிவடிவாய்த் தோன்றலின், ``சோதியாய்த் தோன்றும் உருவமே`` என்றார். அருவமே - அருவமாயும் நிற்பவனே. ``ஆதி`` முதலிய மூன்றும் ஒரு பொருள்மேற் பல பெயர்களாதலின், அவை அனைத்தும், ``அரிய`` என்றதற்கு முடிபாயின. அம்மூன்றும் அவற்றைச் செய்பவன் மேல்நின்றன. ``தீதிலா நன்மைத் திருவருட்குன்றே`` என்றது, மேல். ``குறைவிலா நிறைவே`` (தி.8 கோயில் திருப்பதிகம். பா.5), என்றாற் போல்வது. `வந்து நின் இணையடி தந்து நீ போவது ஓர்வகை யாது` எனக் கூட்டுக. இஃது, இறைவன் தம்மை இந்நிலவுலகில் விடுத்துப் போயினமை பற்றிய ஆற்றாமையால் அருளியது.

பண் :

பாடல் எண் : 10

தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே. 

பொழிப்புரை :

எனது சித்தத்தையே, திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய எம் தலைவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! எம் தந்தையே! ஈசனே! எனது உடலை இடமாகக் கொண்டவனே! சங்கரனே! எனக்கு நீ கொடுத்தது உன்னை; அதற்கு ஈடாக என்னை நீ ஏற்றுக் கொண்டாய்; யான் முடிவு இல்லாத பேரின்பத்தை அடைந்தேன். ஆயினும் நீ என்பால் பெற்றது என்ன? ஒன்றும் இல்லை. இக்கொள்ளல் கொடுத்தல்களைச் செய்த நம் இருவரில் திறமையுடையவர் யார்? இவ்வுதவிக்கு நான் ஒரு கைம்மாறும் செய்ய முடியாதவனாயினேன்.

குறிப்புரை :

இறைவன் தன் அடியார்க்குத் தன்னையே பரிசாகத் தருதலின், ``தந்தது உன்றன்னை`` என்றார். இங்ஙனம் அடியார் களுக்குத் தன்னையே தருகின்ற இறைவன், அவர்கள்மேல் வைத்த கருணை காரணமாக, `இவன் செய்தியெல்லாம் என் செய்தி` என்றும், இவனுக்குச் `செய்தது எனக்குச் செய்தது` என்றும் கொண்டு. பாதகத்தைச் செய்திடினும் அதனைப் பணியே யாக்கி (சிவஞான சித்தி. சூ.10-1.) அவர்க்கு வருவதொரு துன்பமும் இல்லாமல், அவர்தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தானே தன்னுடையனவாக ஏற்றுக்கொண்டு நிற்றலை ஈண்டு நயம்படக் கூறுதற் பொருட்டு, தன்னைத் தந்ததற்கு மாற்றாகத் தம்மைக் கொண்ட தாக அருளிச்செய்தார். இறைவன் தன் அடியார்களை இங்ஙனம் யாதொரு தொடக்கும் உறாமல் காத்தலையே, ``கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க் கல்லால் - எடுத்துச் சுமப்பானை இன்று`` என்றது திருவருட்பயன் (65). ``ஆர்கொலோ சதுரர்`` என்றதனை, ``என்பால்`` என்றதன் பின்னர் எஞ்சி நின்ற, `ஆதலின்` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``நீ`` எனவும், ``என்பால்`` எனவும் பின்னர் வருகின்றமையின், முன்னர், `யான்` என்பதும். `நின்பால்` என்பதும் வருவித்து `இப்பண்டமாற்றில் யான் நின்பால் அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; நீ என்பால் பெற்றது ஒன்று யாது? ஒன்றும் இல்லை; ஆதலின், நம்முள் சதுரர் யார்` என உரைக்கப்படுமாறு அறிக. `நெல்லைக் கொடுத்துப் பதரைப்பெற்ற பித்தன்போல் ஆயினை நீ` எனப் பழிப்பதுபோலக்கூறி, இறைவனது கைம்மாறு கருதாப் பெருங்கருணைத் திறத்தைப் போற்றியவாறு, கொல், ஓ இரண்டும் அசைநிலைகள். சதுரர் - திறல் படைத்தவர். ``சிந்தையே`` என்றதற்கு, `அடியவரது சிந்தையையே` எனவும், ``உடல் இடம் கொண்டாய்`` என்றதற்கு, `என் உடலையும் இடமாகக் கொண்டாய்` எனவும் உரைக்க. ``நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்`` (தி.5 ப.2 பா.1) எனவும். ``காலையும் மாலையும் கைதொழுவார் மனம் - ஆலையம் ஆரூர் அரனெறி யார்க்கே`` (தி.4 ப.17 பா.8) எனவும் அப்பரும் அருளிச்செய்தார். ``உடலிடங் கொண்டாய்`` என்பது பற்றி மேலே (22. தி.8 கோயில் திருப்பதிகம். பா-5.) கூறப்பட்டவைகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 1

பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும்
புதும லர்க்கழ லிணையடி பிரிந்துங்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்த னேஅயன் மாற்கறி யொண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

தலைவனே! மன்னனே! அருளையுடைய பெரிய கடலே! தந்தையே! பிரமன்மால் அறியமுடியாத சிவந்த திருமேனியை உடையவனே! திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே! பொய்யனாகிய என்னுடைய உள்ளம் நெகிழும்படி அதன்கண் புகுந்து அருள் செய்தாய். ஆயினும் அமுதம் சுரக்கின்ற அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற, வீரக்கண்டை அணிந்த இரண்டு திருவடிகளைப் பிரிந்தும், சிறியேனாகிய நான் இன்னும் சாகாமல் இருக்கிறேன். ஐயோ! கண் விழித்திருந்தும், மனத்தில் உள்ள நினைவை இழந்து விட்டேன். இனி செய்வது இன்னது என்று அறியேன்.

குறிப்புரை :

பொய்யனேன் - உண்மை அன்பு (நிரம்பிய அன்பு) இல்லாதவன். புகுந்ததும், அமுதம் ஊறுவதுபோல ஊறியதும் அகத்தே யாம். கையனேன் - சிறியனேன்; `வஞ்சன்` எனப்பொருள் தரும் திசைச்சொல் வேறு. `விழித்திருந்தும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. ``கருத்து`` என்றது, கருதப்பட்ட பொருள்மேல் நின்றது. `தூங்குவோர் தாம் விரும்பிய பொருளை இழந்து ஏமாறுதல் இயல்பு. நான் அவ்வாறின்றி விழித்திருந்தே இழந்தேன்` எனத் தம் ஊழ் வலியை நினைந்து நொந்துகொண்டவாறு. `தூங்குதல், விழித்தல்` என்பன, ஞானம்பெறாமையையும், பெற்றமையையும் குறித்து நின்றன. `இனி அதனைப் பெறுதற்குச் செய்யும் வகையை அறிந் திலேன்` என்க.

பண் :

பாடல் எண் : 2

புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் இருக்கும் பெருமானே! தேவரும், மற்றையோரும் தங்கள் உடம்பின்மேல் புற்று வளரப் பெற்றும் மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக அமைய மெலிந்து வாழும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போலும் திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல்லில் அகப்படுத்தி ஆட்கொண்டாய். இருந்தும், நெஞ்சம் துடிக்கமாட்டேன்; மனம் மிகவும் உருகமாட்டேன்; உன்னிடம் அன்பு செய்யமாட்டேன்; இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

குறிப்புரை :

தவம் செய்யுமிடத்துத் தம் உடம்பின் மேல் வளரும் புற்றுக்களுள்ளும், மரங்களுள்ளும் தம் உடம்பு மறைந்து கிடத்தல் பற்றி, அவரையே புற்றும், மரமும் ஆயினார்போலக் கூறினார். உம்மை, சிறப்பு. கால் - காற்று, ``உண்டியாய்`` என, செயப்படு பொருளின் தொழில் வினைமுதல்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. இவ்வாறன்றி, ``ஆய்`` என்றவற்றை எல்லாம் `ஆக` எனத் திரிப்பினு மாம். வற்றி - உடல் மெலிந்து. `வற்றியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தல். ஓர் வார்த்தை - ஒரு தொடர்மொழி. அது, திருவைந் தெழுத்து மந்திரம். அதன் கருத்து, `நீ என் அடியவன்` என்பது. `நம்பியாரூரர் திருமணத்தில் வல்வழக்கிட்டுச் சென்றபொழுது இறைவன் கூறியதும் அந்த வார்த்தையே என்பது, ``என் அடியான் - இந்நாவல்நகர் ஊரன்`` எனவும், அது முற்றிலும் பொருள் பொதிந்த மெய்ம்மொழியே என்பது,
``தேவரையும் மாலயன் முதல்திருவின் மிக்கார்
யாவரையும் வேறடிமை யாஉடைய எம்மான்``
(தி.12.தடுத்.பா.37) எனவும் அருளிய சேக்கிழார் திருமொழிகளால் நன்கு தெளிவாதல் காண்க. ``ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து`` எனச் சிவஞான போதமும், (சூ. 8) இதனையே குறிப்பிடுதலை அறிக. `இங்ஙனம் உணர்த்தாதமுன்னர் பதைத்தலும், உருகலும் போல்வன இல்லாமை குற்றமன்று; உணர்த்திய பின்னரும், அவை இல்லா திருக்கின்றேன்` என இரங்கியவாறு. பரிதல் - அன்பு மிகுதல். பரியா உடல் - அன்பிற்குரிய மெய்ப்பாடுகள் இல்லா

பண் :

பாடல் எண் : 3

புலைய னேனையும் பொருளென நினைந்துன்
அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையி னால்நடந் தேன்விடைப் பாகா
சங்க ராஎண்ணில் வானவர்க் கெல்லாம்
நிலைய னேஅலை நீர்விட முண்ட
நித்த னேஅடை யார்புர மெரித்த
சிலைய னேஎனைச் செத்திடப் பணியாய்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

இடபவாகனனே! சங்கரனே! எண்ணிறந்த தேவர் கட்கு எல்லாம், ஆதாரமானவனே! அலைகளை உடைய கடலில் தோன்றிய நஞ்சினை அருந்திய அழியாதவனே! பகைவரது திரி புரத்தை நீறாக்கின வில்லை உடையவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற பெருமானே! புல்லறிவாளனாகிய என்னையும் ஒரு பொருளாக எண்ணி உன்னுடைய திருவருளை அளித்தனை. அவ்வாறு கருணை காட்டிலும் தலையினால் நடப்பது போலச் செருக் குற்றேன். அடியேனை உடம்பினின்றும் நீங்கும்படி அருள்வாய்.

குறிப்புரை :

``தலையினால் நடந்தேன்`` என்றது, அன்னதொரு செயலைச் செய்தமையைக் குறித்து, ஒப்புமை பற்றிவந்த இலக்கணைச் சொல். இதனை, `தலைகால் தெரியாமல் களிக்கின்றான்` என்பர் உலகோர். ``அருள்புரிந்தனை புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன்`` என்று அடிகள் அருளிச் செய்தமையால், அவர், `தாம் விரும்புங் காலத்துத் தம்மை இறைவன் தன்பால் வருவித்துக் கொள்வான்` என்னும் துணிவினராய் இருந்தமையும், அதற்கு மாறாக அது நிகழ்தற்குக் காலம் பெரிதும் நீட்டித்தமையும் பெறப்படும். மேல் `தருக்கித் தலையால் நடந்த வினைத்துணையேன்` (தி.8 நீத்தல் விண்ணப்பம் - பா- 39.) என்றது, வேறொரு கருத்துப் பற்றி என்க. நிலையன் - நிலைபேற்றைத் தருபவன்; பற்றுக் கோடாய் இருப்பவன்.

பண் :

பாடல் எண் : 4

அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்
அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்ப ராய்நினை வார்எ னைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பொழிப்புரை :

அழகிய திருப்பராய்த்துறை என்னும் பதியை உடையவனே! சிவலோகனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! என் மனமானது, வலிய பராய் மரத்தின் கணுப் போன்றது. என் கண் மரத்தினால் ஆனது. என்னுடைய காது இரும்பைக் காட்டிலும் வன்மை உடையது. பிரமனும், திருமாலும், உன்னிடத்து அன்புடையவராகி, செய்தற்கு அரிய தவத்தைச் செய் கின்றனர். நெருப்பைச் சேர்ந்த மெழுகு போல உள்ளம் உருகுகின்ற வராய், எலும்பு வடிவினராய், உன்னை நினைப்பவர்கள் இன்னும் எத்தனையோ பேர் உளர். அவர் எல்லாம் இருக்க, இவ்விடத்து அடியேனை நீ எதற்காக ஆட்கொண்டருளினாய்?

குறிப்புரை :

பொருள்கோள்: `தென்பராய்த் துறையாய் ... ... சிவனே` என் சிந்தை வன்பராய் முருடொக்கும்; (என்கண்) மரக்கண்; என்செவி இரும்பினும் வலிது; (அங்ஙனமாக) அருந்தவம் முயல் வாராய அயனும் மாலும், அழலுறு மெழுகாம் என்பராய் நினைவார் மற்று எனைப் பலரும் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்? (ஆண்டதற்குக் காரணம் உண்டெனின், அக்காரணத்தானே இன்றும் என்னை நின்பால் வந்திடப்பணி).
``அழலுறு மெழுகாம் என்பராய்`` என்றது, `எலும்பும் உருகப் பெறும் நிலையினையுடையவராய்` என்றபடி. வன் பராய் - வலிய பராய் மரம். இது சிறிதும் செம்மையின்றி எங்கும் முடங்கியும், திருகி யும் முருடுபட்டிருக்கும் என்பது அறியப்படுகின்றது. `என்கண்` என்பது எஞ்சி நின்றது. ``கண்ணிணையும் மரமாம் தீவினை யினேற்கே`` (தி.8 திருச்சதகம். பா-21) என முன்னே வந்தது காண்க. ``மரக்கண்`` என்றது மரத்தின்கண் உள்ள துளையை. பராய்த்துறை, ஒருதலம். ``பராய்த் துறை மேவிய பரனே போற்றி`` (தி.8 போற்றித். 153) என்றார் முன்னரும்.

பண் :

பாடல் எண் : 5

ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்
ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
நாத னேஉனைப் பிரிவுறா அருளைக்
காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

தலைவனே! உலகத்தார் சொல்லுகின்ற பற்பல தேவர்களும், நாடி அடைவதற்கு அருமையான பொருளே! இறை வனே! தேவனே! கூட்டமான பல தேவர்களுக்குத் தலைவரான பெருந் தேவர் தலைவனே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உலகத்தை ஆட்டுகின்ற தேவரது கட்டளையை அறவே நீக்கி அன்பினால் எப்போது அடியேன் உன்னுடைய திருவருள் நெறியிலே நிற்பேன்? உன்னை விட்டு நீங்காத திருவருளை எனக்கு அளித்து, உன் திருவடிகளையும் கொடுத்து என் உடம்பாகிய பொய்யினைப் போக்கித் திருவருள் புரிவாயாக.

குறிப்புரை :

தேவர் தம் விதி - தேவரை வழிபட்டு அத்தேவராம் முறை; அவை சுவர்க்கபோகத்தைப் பயக்கும் காமிய வேள்விகள். அவற்றால் அப்பதவியை அடைந்தோரது இழிவினை உணர்த்துவார், ``ஆட்டுத் தேவர்`` என்று அருளினார். ஆட்டுத் தேவர் - ஆட்டினை உண்ணும் தேவர். ஆடு, வேள்வியில் தரப்படுவது. ``முன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்று`` (தி.8 திருச்சதகம்.பா.4.) என முன்னரும் அருளினார். அருள்வழி இருத்தலை, ``அன்பால்`` என்றமையின், தேவர் விதிவழிச் செல்லுதலுக்கு, ``ஆசையால்`` என்பது வருவிக்கப் படும். எனவே, `ஆசையால் கைக்கொள்ளப்படும் ஆட்டுத் தேவர் தம் விதிகளை ஒழித்து, அன்பால், உன்னையே ஐயனே - யாவர்க்கும் முதல்வனே என்று அழைத்து உன் அருள் வழியே இருப்பேனாகிய எனக்கு, முன்போலப் பிரிவுறும் அருளைக் காட்டாமல் என்றும் பிரிவுறா அருளைக் காட்டிக் காயமாயத்தைக் கழித்தருள் செய்யாய்` என வேண்டியவாறாயிற்று.
``கழலிணை காட்டி`` என்றது மீளவும் எதிர்ப்படுதலை. அதனால், அதனை, அருளைக் காட்டுதலுக்கு முற்பட வைத்துரைக்க. காய மாயம் - உடம்பாகிய இவ் அழிபொருளை. கழித்தருள் செய்யாய் - விரைவில் நீக்கியருள்,
நாட்டுத் தேவர் - நிலத் தேவர்; பூசுரர். ``மண்மேல் தேவர் என்றே இறுமாந்து`` (தி.8 திருச்சதகம்.பா.4.) என முன்னரும் கூறினார். காமியங்கருதி அவரையே தெய்வமாக மதிக்கும் உலகினர் கருத்துப் பற்றி, ``நாட்டுத் தேவரும்`` எனச் சிறப்பும்மை கொடுத்து, ஆட்டுத் தேவர் தம் விதிவழியன்றிப் பிறிதொன்றை அறியாராகிய அவர், ``ஆவ எந்தாய் என்று அவிதாவிடும் நம்மவராகிய அவரையே எம்பிரானொடும் தேவர் என, ஒருங்கு வைத்தெண்ணி உண்மை உணர்ந்தாராக இறுமாந்து ஒழிதலன்றிச் சிவபிரானைப் பொதுநீக்கி அறியும்பேறு சிறிதேனும் இலராதல் பற்றி, ``நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே`` என்றும் அருளிச் செய்தார். சேட்டைத் தேவர் - தொழிற்படும் தேவர். இவரை, ``பிரதி தேவர்`` என்பர். அவர்தம் தேவர். அதிதேவர்; இவர் தம் பிரதி தேவரைத் தொழிற்படுத்துவோர். மால் அயன் என்போரும் இவருள் அடங்குவர். சிவபெருமானை, `இவர் அனைவர்க்கும் பிரானே` என்று அழைத்து இன்புறுகின்றார் அடிகள். ``தேவர்பிரானே`` எனப் பொதுப்பட அருளிப்போகாது, ``சேட்டைத் தேவர் தம் தேவர் பிரானே`` என வகுத்தோதியருளினார், `பெருந்தேவர் எனப்படுவாரது இன்பமெல்லாம், தம்கீழ்ச் சிலரைத் தொழிற்படுத்தி அதனால் மகிழும் சிறிய இன்பமே` என்பது விளங்குதற் பொருட்டு. இவரைத்தான், `தேவர்` என எம்பிரானோடும் எண்ணித் தாமும் மயக்கத்தில் ஆழ்ந்து, பிறரையும் மயக்கத்தில் ஆழ்த்தியொழிகின்றது வேதியர் குழாம் என்றற்கே, ``நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே`` என முற்பட அருளிச் செய்தார். இத் திருப்பாட்டுள், ``தேவர்`` என வந்தன பலவற்றிற்குப் பலரும் பலப் பலவாறு உரைகாண்பர்; அவற்றையெல்லாம் அவரவர் உரையிற் காண்க.

பண் :

பாடல் எண் : 6

அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்
கார்கி லேன்திரு வருள்வகை யறியேன்
பொறுக்கி லேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கி லேன்உனைப் பிரிந்தினி திருக்க
என்செய் கேன்இது செய்கஎன் றருளாய்
சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பொழிப்புரை :

போரில் வல்ல விடையை ஊர்பவனே! வரம்பி னுள்ளே, நீர் நிலை பெற்ற வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் பொருந்திய பெருமானே! வணக்கம், வணக்கம். உடம்பு துண்டாகும் படி வெட்டமாட்டேன்; தீயின்கண் புகுந்து அமைதி பெறமாட்டேன்; திருவருளின் முறையையும் அறியமாட்டேன்; உடற் சுமையையும் தாங்க மாட்டேன்; இதனை விட்டு நீங்கி அடையும் இடத்தையும் காணேன்; உன்னை விட்டு நீங்கி உயிரையும் விடவில்லை; இன்பமாய் இருக்க யான் என்ன செய்யவேண்டும்? இதனைச் செய்க என்று அருள் புரிவாயாக.

குறிப்புரை :

`உடலைத் துணிபட அறுக்கிலேன்` என இயைக்க. ஆர்கிலேன் - நிறைவு பெறமாட்டேன். `திருவருளுக்கு வகை அறியேன்` என உருபு விரித்துரைக்க. `உடலைப் பொறுக்கிலேன்; உடல் போக்கிடங் காணேன் என்க. போக்கு இடம் - போதற்கு வழி. சிறைக்கண் - வரம்பின்மீது.

பண் :

பாடல் எண் : 7

மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

மாயம் செய்பவனே! அலைகள் மடங்கி வீழ்கின்ற கடலில் எழுந்த நஞ்சை உண்ட தேவனே! நீலகண்டத்தை உடைய எமது அமுதம் போன்றவனே! பிறை விளங்குகின்ற சடையுடைய தலைக்கோலமுடையவனே! திருப்பெருந்துறையில் பொருந்திய பெருமானே! தூரத்தில் உள்ளவனாகி நின்று, நான் கதறுவது முறை யாகுமோ? ஓலம். நாய் போன்ற நான் உன்னை மனத்தால் நினைக்கவும் மாட்டேன். நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை வாயினாற் கூறி உனது திருவடியை மெய்யினால் வணக்கம் செய்யாத பேய்த்தன்மை உடையேன். எனினும், முத்தி நெறியைக் காட்டியருள்வாயாக.

குறிப்புரை :

மாயனே - மாயம் செய்ய வல்லவனே; என்றது. கண்முன் தோன்றி மறைந்தருளி மீண்டும் தோன்றாதிருந்தமைபற்றி. பெருநெறி - வீடடையும் வழி. சேயன் - தூரத்தில் உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 8

போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக்
கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் [கூட்டாய்
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ
சீத வார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

தாமரைப் பூவில் உறைகின்ற பிரமன், அலைகள் மோதுகின்ற பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால், இந்திரன் முதலிய தேவர்கள் நிற்கவும், அடியேனைச் சீராட்டி ஆட்கொண்டவனே! குளிர்ச்சி பொருந்திய நீர் நிலை பெற்ற வயல் சூழ்ந்த, திருப்பெருந் துறையைப் பொருந்திய பெருமானே! அமுதமே! யாது செய்யத்தக்கது என்று திகைத்து இருக்கிறேன். அடியேன் துன்பப்படுவதும் நல்ல தாகுமோ? உன்னுடைய ஒலிக்கின்ற வீரக் கழல் அணிந்த திரு வடியைக் காட்டி, அத்திருவடியையே குறியாகக் கொள்வாய் என்றருளி என்னை உன் தொண்டரோடு சேர்ப்பாயாக.

குறிப்புரை :

`அயன் முதலியோர் நிற்க என்னைக் கோது மாட்டியவனே` என்க. கோது மாட்டுதல் - குற்றங்களைந்து ஆட் கொள்ளுதல். `குறிக்கொள்க` என்பது, தொண்டருக்கு இடும் ஆணை.
இருந்தேன் - திகைத்திருக்கின்றேன். மருந்தே - அமுதமே. `கோது மாட்டியவனே` மருந்தே, சிவனே, யான் யாது செய்வது என்று இருந்தனன்; உன் அடியேன் இவ்வாறு இடருள் அகப்பட்டுக் கிடத்தல் உனக்கு இன்பம் தருவதோ! நின் தொண்டரிற் கூட்டாய்` என வினை முடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 9

ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய்
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

இயமனது அரிய உயிரைக் கவர்ந்த தாமரைப் பூப்போன்ற திருவடியையுடையவனே! கங்கையைச் சடையில் தரித்தவனே! நெருப்பை ஏந்திய கையை உடையவனே! கெண்டை மீன் களும், நீல நிறமுடைய பூக்களும் பொருந்திய வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் பொருந்திய பெருமானே! உலகத்தவரும், தேவர் கோனும், பிரமனும், தேவரும், உன்னருளைப் பெற நிற்கவும், என்னை விரும்பி இனிமையாக ஆட்கொண்டருளினாய். திருமாலும் முறையிட்டுக் கதறுவதற்குரிய அப்பாதமலர்க்கே, மரக்கண் போன்ற கண்ணை உடைய என்னையும் வந்து சேரும்படி அருள் செய்வாயாக.

குறிப்புரை :

ஞாலம் - நிலவுலகத்துப் பெரியோர். `எனை நயந்தினி தாண்டாய்; ஆதலின், மாலும் ஓலம் இட்டு அலறும் அத்தகைய நின்மலர் போலும் திருவடி நிழற்கண்ணே, மரத்தினது கண்போன்று அன்பு நீர் மல்காத கண்களையுடைய என்னையும் வருமாறு பணித் தருள்: (விட்டிடாதே)` என முடிக்க.
நீலம் - நீலப் பூ; குவளை மலர்.

பண் :

பாடல் எண் : 10

வளைக்கை யானொடு மலரவன் அறியா
வான வாமலை மாதொரு பாகா
களிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே
அளித்து வந்தெனக் காவஎன் றருளி
அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில்
திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் பொருந்திய சிவனே! சங்கேந்திய கையினையுடைய திருமாலோடு பிரமனும், அறிய முடியாத தேவனே! மலைமகளை ஒரு பாகத்திலுடையவனே! பெரிய கயிலாய மலையின்கண் எழுந்தருளிய கருணைக்கடலே! அடி யேனுக்குக் கருணை செய்ய வந்து, ஐயோ என்றிரங்கியருளி என் அச்சத்தைப் போக்கிய உன்னருளாகிய பெரிய கடலினிடத்து மூழ்கி மகிழ்ந்தும், நிரம்ப இன்புற்றும் குடித்தும் மனம் உருகமாட்டேன். மகிழ்ச்சி முழுவதும் நீங்க அதிகமாகக் கலங்கப் பெற்றவனாகின்றேன்.

குறிப்புரை :

அளித்து - என்மேல் இரக்கங்கொண்டு, `ஆவ` என்னும் இரக்கச்சொல், `அஞ்சேல்` என அபயமளித்தலைக் குறித்தது. திளைத் தல் - மூழ்கி ஆடுதல். தேக்குதல் - உண்டு தேக்கெறிதல். உருகுதல், இங்கு, `இன்புறுதல்` என்னும் பொருளது. `நீ இரங்கிவந்து அருள் செய்தும், உனது பேரின்பத்தினை வேண்டியவாறு நுகரும் பேறு பெற்றிலேன்` என்றபடி. இத்தொடரைச் சிறப்பாகக் கொண்டே, இப்பகுதிக்கு, `சிவானந்தம் அளவறுக்கொணாமை` என்ற குறிப் பினைக் கூறினர் முன்னோர் என்க. வளை - சங்கு. ``களிப்பெலாம்`` என்ற எழுவாய்க்கு, `கெட` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. களிப்பு, இறைவன் கடிதே தம்மைத் தன் திருவடிக் கீழ்ச் சேர்த்துக் கொள்வான் என்னும் துணிவினால் நிகழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 1

செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந்
தமைந்த
பழுத்தமனத் தடியர்உடன் போயினர்யான்
பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி
ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன்
அடைக்கலமே.

பொழிப்புரை :

இறைவனே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைச் சேர்ந்த அடியார் உன்னோடு சென்றார்கள். புழுக்கள் வாழ்தற்கு இடமாகிய இழிந்த உடலுடன் கல்வியும் ஞானமும் இல்லாத பொல்லா அழுக்கு மனத்தை உடைய பாவியேனாகிய நானும் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இம் முதல் திருப்பாட்டு, நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா.
`செழுங்கமலம்` என்பது, எதுகை நோக்கி வலிந்து நின்றது. செழுங்கமலம் - செங்கமலம். `அடியார் போயினர்` என இயையும். உடன் - விரைவாக. போயினர் - சிவலோகம் சென்றனர். புழுக்கண் உடை - புழுக்கள் வாழ்வதற்கு இடத்தைக் கொண்டுள்ள. குரம்பை - குடில்போலும் உடம்பு. `குரம்பையை உடைய, பொல்லாத, அழுக்கு மனத்தை உடைய அடியேன்` என்க.

பண் :

பாடல் எண் : 2

வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின்
பெருமையினால்
பொறுப்பவ னேஅராப் பூண்பவ னேபொங்கு
கங்கைசடைச்
செறுப்பவ னேநின் திருவரு ளால்என்
பிறவியைவேர்
அறுப்பவ னேஉடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! தீமைகளையே செய்கின்ற என் இழிவை உன் பெருங்குணத்தால் பொறுப்பவனே! பாம்பைப் பூண்டிருப்பவனே! கங்கைச் சடையோனே; உன் திருவருள் என்னும் வாளால் என் பிறவியை வேரறுப்பவனே! அடியேன் உன் அடைக் கலமே!.

குறிப்புரை :

இவ்விரண்டாம் திருப்பாட்டு, முதலடி சிறிதே வேறுபடவந்த கட்டளைக் கலித்துறை. இங்ஙனம் சிறுபான்மை வேறுபட வரும் யாப்புக்களை, `ஒப்பியல்` என வழங்குவர். அவ் வாற்றான் இஃது, ஒப்பியற் கட்டளைக் கலித்துறையாம்.
சிறுமை - குற்றம். பெருமை - பிறர் குற்றத்தை உளங் கொள்ளாமை. கங்கை சடைச் செறுப்பவன் - கங்கை நீரைச் சடையில் தடுத்து நிறுத்துபவன்.

பண் :

பாடல் எண் : 3

பெரும்பெரு மான்என் பிறவியை வேரறுத்
துப்பெரும்பிச்சுத்
தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என்
மனத்தினுள்ளே
வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி
யாமல்நின்ற
அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! பெரிய பெருமானும், என் பிறவியை வேரறுத்து எனக்குப் பெரும் பித்தேற்றும் பெருமானும்; சதுரப் பெருமானும்; என் மனத்தில் எழுந்தருளும் பெருமானும்; பிரம விட்டுணுக்கள் அறியவொண்ணாமல் நின்ற அரும்பெருமானும் ஆகிய தலைவனே! அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இதுவும் முன்னைத் திருப்பாட்டுப் போன்றது.
``பெரும்பெருமான்`` என்றதில், ``பெருமான்`` என்றது, `கடவுள்` என்னும் பொருட்டாய், `பெருமை` என்னும் அடைபெற்று, `முதற் கடவுள்` எனப் பொருள் தந்தது. பிச்சு - பித்து. சதுர் - திறல். ``பெருமான்`` என வந்தன பலவும் விளிகளே.

பண் :

பாடல் எண் : 4

பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத் தில்நின்
கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான்
இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச்
சுறவெறிய
அழிகின் றனன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! துன்பப் பெருக்கில் உன் திருவடி யாகிய துணையைப் பற்றிக் கொண்டிறங்கின அன்பர் வானேறினர்; நான் துன்பப் பெருக்கின் சுழியில் அகப்பட்டு, மாதராகிய அலை மோத, காமமாகிய மகரமீன் எறிய அழிய நின்றேன். அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இதுமுதல் மூன்று திருப்பாட்டுக்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணம் நிரம்பின.
`துன்பப் புயல் பொழிகின்ற வெள்ளம்` என்க. துன்பப் புயல்- துன்பத்தைச் சொரிகின்ற மேகம்; இஃது இல்பொருள் பற்றிவந்த உருவகமாய் நின்றது. `துன்பத்தைச் சொரிகின்ற மேகம்` எனவே, `அதன் பொழிவால் உளதாகும் வெள்ளம் துன்ப வெள்ளமே` என்பது சொல்ல வேண்டாவாயிற்று. `வெள்ளத்தில் இழிகின்ற அன்பர்கள், நின் கழற்புணை கொண்டு வான் ஏறினர்` என்க. `இழிகின்ற அன்பர்கள்` என்னோடு ஒருங்கிருந்த அடியார்கள் என்னும் பொருளது. இதனுள் வானைக் கரையாக உருவகம் செய்யாமையின், இது வியநிலை உருவகத்தின் பாற்படும். `இடர்க்கடல்` என்பது, `அவ்வெள்ளம்` என்னும் பொருட்டாய் நின்றது. ``மாதர்`` என்றது ஆகுபெயராய் அவர் மேல் உள்ள ஆசையைக் குறித்து அஃறிணையாய் நின்றமையின், தகர ஒற்று மிக்கது,
தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு.
(தி.8 திருச்சதகம். பா-27.) என முன்னர் வந்ததனை நோக்குக.

பண் :

பாடல் எண் : 5

சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன்
திறம்மறந்திங்
கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன்
மைத்தடங்கண்
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண்
ணோர்பெருமான்
அருள்புரி யாய்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! மாதர் வஞ்சனையால் சிக்கி உன்னை மறந்து இவ்வுடம்பில் கிடந்து இளைத்தேன். வெருட்சி கொள்ளும் மான் போன்ற கண்ணிமைகளையுடைய உமையம்மையின் பங்கனே! விண்ணோர் பெருமானே! இனியாயினும் அருள் செய்யவேண்டும்.

குறிப்புரை :

சுருள் புரி - சுருளைச் செய்யும். கூழை - கூந்தல். இருள் - அறியாமை; மயக்கம். ``பெருமான்``, விளி.

பண் :

பாடல் எண் : 6

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்
திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்
தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள் வணங்குவன்
வல்வினையேன்
ஆழியப் பாஉடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! மாதர் மத்திட்டுக் கடையச் சிதறி மிடாவில் பரவிச் சுழல்கின்ற தயிர்போலச் சுழன்று தளர்ந்தேன். இனி எக்காலம் வந்து உன் திருவடியை வணங்குவேன். நின் திருவடி வாழ்க. யாவரினும் மேலானவனே அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

`மாழைக் கண், மை பாவு கண்` என்க. மாழை - மா வடு. ``மைப் பாவிய`` என்னும் பகரமெய், விரித்தல். `கண்ணியரது ஆசை யாகிய மத்து` என்றபடி. ``வாழி``, அசை. ஆழி அப்பன் - ஆழ்ந் திருக்கின்ற இறைவன். `பெரியோன்` என்றபடி. `பெரியோனாதலின், அடைக்கலம் என்று வந்தேனைக் கைவிடமாட்டாய்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 7

மின்கணினார் நுடங்கும்இடையார் வெகுளிவலையில்
அகப்பட்டுப்
புன்கண னாய்ப் புரள்வேனைப் புரளாமற்
புகுந்தருளி
என்கணிலே அமுதூறித் தித்தித்தென்
பிழைக்கிரங்கும்
அங்கணனே உடையாய் அடியேன்உன்
அடைக்கலமே.

பொழிப்புரை :

இறைவனே! மாதர் வசத்தில் அகப்பட்டுத் துன்பப்படுகின்ற என்னைத் துன்பத்தை ஒழித்து ஆண்டருளியும் இடையறாது என் கண்ணிலே நின் திருவுருவைக் காட்டியருளியும் அருள் வழங்கும் இனியவனே! என் பிழைக்கு இரங்குகின்ற அருள் நோக்கம் உடையவனே! அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இத் திருப்பாட்டு, ஒருவாற்றான் அமைந்த கொச்சகக் கலிப்பா.
மின்கண் - ஒளி வீசும் கண். ``வெகுளி`` என்றது ஊடலை. ``ஊடுதல் காமத்திற்கின்பம்`` (குறள் - 1330) ஆதலின், அஃது ஆடவரை அவரின் நீங்காது பிணிக்கும் வலையாயிற்று. புன்கண் - துன்பம். புரளுதல் - துடித்தல்; துன்புறுதல். ``அமுது`` என்றது முன்னர்க் கண்ட திருவுருவத்தின் தோற்றத்தை. இடையறாது நிற்றலை, ``ஊறுதல்`` என்றார். `இரங்கும்` என்றது, தெளிவின்கண் வந்த எதிர் காலவினை, ``இரங்கும் நமக்கம் பலக்கூத்தன்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம் - பா.7.) என்றாற்போல.

பண் :

பாடல் எண் : 8

மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின்
மலரடிக்கே
கூவிடுவாய் கும்பிக் கேயிடு வாய்நின்
குறிப்பறியேன்
பாவிடை யாடுகுழல் போற் கரந்து
பரந்ததுள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.

பொழிப்புரை :

இறைவனே! மாவடு வகிர் போலும் கண்ணை யுடைய உமாதேவி பங்கனே! என்னை உன் திருவடிக்கீழ் சேர்த்துக் கொள்; அன்றேல் நரகுக்கு ஆளாக்கு; உன் திருவுளக்குறிப்பை நான் அறிந்திலேன்; பாவின் கண் ஆடுகின்ற குழல்போல என் மனம் அலைந்து நின்றது. அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இதுவும், முதலடி சிறிதே சிதைந்த கட்டளைக் கலித்துறை.
``மலரடிக்கே கூவிடுவாய்; கும்பிக்கே இடுவாய்; என்ற விகற்பத் தொடர், `நீ என்னை எவ்வாறு செய்வதன்றி, நான் இன்னதே செய்க எனக் கட்டளை செய்ய உரியேனோ` என்றபடி. கூவுதல் - அழைத்தல். கும்பி - நரகம். குறிப்பு - திருவுள்ளம். பா - ஆடையாக்குதற்கண் நேரே நீண்டு கிடக்கும் இழைகளின் தொகுதி. குழல், அத் தொகுதியின் ஊடே குறுக்காக இழைகளைப் புகுத்தும் கருவி. இஃது ஒருபால் நில்லாது, ஆடை ஆக்குவோனது வலத்தினும் இடத்தினும் மாறி மாறி ஓடும். இஃது இங்ஙனம் ஓடினாலன்றி ஆடை தோன்றாதாகலின், ஆடை ஆக்குவோன் தன்னால் இயன்ற அளவில் இதனை விரைய ஓட்டுவான். அதனால், ஓரிடத்தில் நில்லாது விரைய ஓடும் இதனைத் தம் அலமரலுக்கு அடிகள் எடுத்துக்காட்டி இறைவன் பால் முறையிட்டருளினார். கரத்தலை, குழலுக்குப் பாவின் ஊடே கரந்து செல்லுதலாகவும், உள்ளத்திற்கு, மூவாசைகளின் மூழ்கிச் செல்லுதலாகவும் உரைக்க. பரத்தல் - சுழலல்.

பண் :

பாடல் எண் : 9

பிறிவறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல்
தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை
வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னை
யேஅறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! உன்னைப் பிரியாத அன்பர் உன் திருவடிப் பேற்றோடு முத்திச் செல்வத்தையும் அடைந்தார்கள். நான் உன்னைப் புகழும் வழியறியேன். உன்னையும் அறியேன். உன்னை அறியும் அறிவுமிலேன். ஆயினும் அடியேன் உன் அடைக்கலமே.

குறிப்புரை :

இதுவும், இறுதித் திருப்பாட்டும் கட்டளைக் கலித்துறைகளே.
`பிரிவு` என்பதில் றகரம் சிறுபான்மை உறழ்ந்து வரும். ``பிறிவறியா`` என்றது, `பிரிந்திருக்க மாட்டாத` எனப் பொருள் தந்தது. `அருள் தாள், பெய்கழல் தாள்` என்க. மறிவு - மீளுதல். ``வந்து`` என்ற தனை, ``கீழ்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. முன்னர், ``அன்பர்`` என்ற மையின், ``பெற்றார்`` என்றதன்பின், `யான்` என்பது கிளந் தெடுத்துக் கூறற்பாற்று. ``நின்னையே அறியும் அறிவு`` என்றது. `பிறி தொன்றை யும் அறியாது உன்னையே அறிந்து நிற்கும் அறிவு` என்றபடி. இதனையே கேட்டல் முதலியவற்றுள் நான்காவதாகிய, `நிட்டை` என்பர்.

பண் :

பாடல் எண் : 10

வழங்குகின் றாய்க்குன் அருளா ரமுதத்தை
வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கி னேன்வினை யேன்என்
விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந்
துய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! உன் அருளாகிய அமிர்தத்தை நீ கொடுக்க, நான் அள்ளியுண்டு நல்லூழின்மையால் விக்கி வருந்து கின்றேன். ஆதலால் எனக்குத் தேன் அன்ன உன் கருணையாகிய தண்ணீரைக் கொடுத்து உய்யக் கொண்டருள வேண்டும். அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

``வழங்குகின்றாய்க்கு`` என்ற நான்கனுருபை ஏழனுரு பாகத் திரிக்க. அருள் ஆர் அமுதம் - அருளாகிய அரிய உணவு. இறை வனது திருவருளை அடிகள் வாரிவிழுங்கியது, துன்ப மிகுதியாலாம். துன்பம், உலகியலைத் துறக்கமாட்டாத நிலையால் உண்டாயது. அதனால், ஏனை அடியார்களைப்போல உடன் செல்லாது, பின்னர் இறைவனை அடையக் கருதிய பேருரிமை எண்ணத்தையே, வாரிக்கொண்டு விழுங்கியதாகவும், தம் எண்ணத்தின்படி அடையமாட்டாது நிற்றலையே, விக்கியதாகவும் அருளிச் செய்தார். எனவே, `தண்ணீர்` என்பது, இறைவன் மீளத் தோன்றுதலையே யாயிற்று ``வழங்குகின்றாய், விழுங்குகின்றேன்`` என்றவை, இறந்த காலத்தில் நிகழ்காலம். விதி - ஊழ். `தழங்கு நீர்` என இயையும். தழங்குதல் - ஒலித்தல். அருந்தேன் - கிடைத்தற்கரிய தேன்; என்பது பெறுதும். உணவு மிடற்றுக்கிடையில் விக்கப்பெற்றவன், அதுபோழ்து கிடைக்கும் நீரை நீராக நினையாது, அரிய தேனாகவே நினைப்பான் என்பது தோன்ற, `அருந்தேன் அன்ன தண்ணீர்` என்று அருளினார். உணவு மிடற்றில் விக்கி இறவாதபடி பருகத் தண்ணீர் தந்து காப் பாற்றுதல், உண்ண உணவு இட்டவனுக்குக் கடமை என்பார், ``தண்ணீர் பருகத் தந்து உய்யக்கொள்ளாய்`` என்று அருளிச் செய்தார். இஃது, `ஒட்டு` என்னும் அணிவகையின் பாற்பட அருளியதாம்.

பண் :

பாடல் எண் : 1

கருடக் கொடியோன் காண மாட்டாக்
கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட
பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கேவா
வென்றங் கேகூவும்
அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! திருமாலும் காணவொண்ணாத திருவடி என்னும் பொருளை எனக்குக் கொடுத்து என்னை ஆண்டருளின பொல்லா மணியே! எனது அஞ்ஞான இருளைப் போக்கி இங்கே வாவென்று உன்னிடத்துக்கு அழைக்கும்படியான உன் அருளைப் பெறுதற்கு ஆசைப்பட்டேன்.

குறிப்புரை :

கருடக் கொடியோன், திருமால். பொல்லா மணி - துளையிடாத இரத்தினம். ``அங்கே`` என்றதன்பின், `வர` என்பது வருவிக்க. ``அங்கு`` என்றது சிவலோகத்தை.
ஆசைப்பட்டேன் - விருப்பத்துள் பொருந்தினேன்.

பண் :

பாடல் எண் : 2

மொய்ப்பால் நரம்பு கயிறாக
மூளை என்பு தோல்போர்த்த
குப்பா யம்புக் கிருக்ககில்லேன்
கூவிக் கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம்
என்னா ரமுதேயோ
அப்பா காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! நரம்பு முதலானவற்றால் செய்யப்பட்ட இந்த உடம்பில் தங்கி இருக்க மாட்டேன். என்னை அழைத்துக் கொள்ள வேண்டும். எவ்வகைப் பெருமை உடையார்க்கும் அறிய இயலாத என் ஆரமுதே! அப்பனே! உன்னைக் காண ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

மொய்ப்பால் நரம்பு - நெருங்கும் பகுதியவாகிய நரம்பு. `மூளை என்புகளைத் தோலால் போர்த்த` என்க. குப்பாயம் - போர்வை; உடம்பு. `உன்னைக் காண` என்க.

பண் :

பாடல் எண் : 3

சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ்
சிறுகுடி லிதுசிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட்
கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே
சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.

பொழிப்புரை :

அம்மானே! சீயொழுகி, ஈக்கள் மொய்த்து மலங்களுடன் கூடித் திரிகின்ற இந்த உடம்பழிய என்னை நீ அழைத்துக் கொள்ள வேண்டும். நீ என் முகத்தைப் பார்த்து ஐயோ என்றிரங்கும்படி ஆசைப்பட்டேன்.

குறிப்புரை :

வார்ந்து - ஒழுகப்பட்டு. மொய்த்து - மொய்க்கப்பட்டு. ஆ - அந்தோ. வா - வருக. என்ன - என்று என்னை அழைக்க. இனி, `ஆவா என இரங்கிக் கூற` என்றே உரைத்தலுமாம்.

பண் :

பாடல் எண் : 4

மிடைந்தெலும் பூத்தைமிக் கழுக்கூறல்
வீறிலி நடைக்கூடந்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
சோத்தம்எம் பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி
உன்திரு மலர்ப்பாதம்
அடைந்துநின் றிடுவான் ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! இந்த உடம்பு என்னைத் தொடர்ந்து வருதலால் வருந்தி நின்றேன். உனக்கு வணக்கம்; மனம் நெகிழ்ந்துருகி உன்னொளியை நோக்கி உன் திருவடியை அடைந்து நிற்க ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

மிடைந்து - நெருங்கி. மிடைந்து, மிக்கு என்னும் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. ஊத்தை - அழுக்கு. ``ஊறல்`` என்றதனால், ``அழுக்கு`` என்றது, அழுக்கு நீரையாயிற்று, `ஊறலை யுடைய கூடம்` என்க, வீறு இலி - பெருமை இலதாகிய (இழிவை உடைய கூடம்). நடைக் கூடம் - இயங்குதலையுடைய மாளிகை; உடம்பு. சோத்தம் - வணக்கம்.

பண் :

பாடல் எண் : 5

அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி
அடியே னுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்
விடையாய் பொடியாடீ
எளிவந் தென்னை ஆண்டு கொண்ட
என்னா ரமுதேயோ
அளியன் என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! இந்த உடம்பினை அருவருத்துப் புளியம் பழம் போன்று பிரிந்தேயிருந்தேன். எளிதாக வந்து என்னை ஆண்டருளின என் ஆர் அமுதே! நான் உன்னால் காக்கப்படுதற்கு உரியவனாகிய எளியவன் என்று கண்டோர் சொல்ல ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

: `யாக்கை` அகத்து உள்ள அளிந்த புண்ணைப் புறத்துத் தோலால் மூடியதனால் புளியம் பழம் ஒத்து என்க. புளியம் பழம், உள்ளே நைந்து அழகின்றியிருந்தும், வெளியே உறுதியுடையதுபோல அழகாகக் காணப்படுதலால், அதனை, உள்ளே உதிரம் முதலியவற்றோடு கூடிய மெல்லிய உறுப்புக்கள் அழகின்றிக் கிடப்பவும், வெளியே ஒன்றும் தோன்றாது அழகாகக் காணப்படும் உடம்பிற்கு உவமையாகக் கூறினார்.
``ஒத்து`` என்றதனை, `ஒப்ப` எனத் திரிக்க. இருந்தேன் - இதனுள் அருவருப்பின்றியிருந்தேன் (இது முன்னைய நிலை). `இருந்தும் எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என்னாரமுதே` என்க. `இப்பொழுது, அந்தோ? இவன் இரங்கத் தக்கவன் என்று நீ சொல்ல ஆசைப்பட்டேன்` என்றதாம். இப்பாட்டின் முதற்சீரில் உள்ள எழுத்துக்களை நோக்கினும், அளியேன்` என்பது பாடமாகாமை விளங்கும்.

பண் :

பாடல் எண் : 6

எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்க
கில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா
மலர்ச்சே வடியானே
முத்தா உன்தன் முகவொளி நோக்கி
முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! நாயேன் இளைத்தேன். இனி இங்கு இருக்கிலேன். இந்தப் பொய்யான வாழ்க்கையினின்றும் என்னை நீக்க வேண்டும். தேவர்களும் அறியாத திருவடியை உடையவனே! உன் முக ஒளியையும், உன் திருப்புன்னகையையும் காண ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

`வைத்தவனே வாங்குதல் வேண்டுமன்றிப் பிறர் யார் அது செய்வார்` என்பார், ``வைத்தாய் வாங்காய்`` என்று அருளினார்.
இவ்வுலக வாழ்க்கையை வைத்தல் படைத்தலும், வாங்கல் அருளலுமாகும். ``நகை`` என்றதும் ஒளியேயாம்.

பண் :

பாடல் எண் : 7

பாரோர் விண்ணோர் பரவி யேத்தும்
பரனே பரஞ்சோதீ
வாராய் வாரா உலகந் தந்து
வந்தாட் கொள்வானே
பேரா யிரமும் பரவித் திரிந்தெம்
பெருமான் எனஏத்த
ஆரா அமுதே ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தாரும், விண்ணுலகத்தாரும் வழி பட்டுத் துதிக்கின்ற மேலானவனே! முத்தியுலகைத் தந்து வந்தாட் கொள்வோனே! உன் திருப்பெயர்கள் ஆயிரத்தையும் உச்சரித்து எம் பெருமானே என்று துதிக்க ஆசைப்பட்டேன்.

குறிப்புரை :

``வாராய்`` என்பதனை இறுதியில் வைத்துரைக்க. ``வந்து தந்து ஆட்கொள்வோன்`` என்க. திரிந்து ஏத்துதல், சிவலோகத் திலாம்.

பண் :

பாடல் எண் : 8

கையால் தொழுதுன் கழற்சே வடிகள்
கழுமத் தழுவிக்கொண்
டெய்யா தென்றன் தலைமேல் வைத்தெம்
பெருமான் பெருமானென்
றையா என்றன் வாயா லரற்றி
அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற் றரசே ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.

பொழிப்புரை :

அம்மானே! உன் திருவடியைக் கையால் தழுவிக் கொண்டு, என் தலைமேல் வைத்துக் கொண்டு எம்பெருமானே! ஐயனே! என்று அரற்றித் தீயைச் சேர்ந்த மெழுகை நிகர்த்துருக ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

இதனுள் கூறப்படும் கையால் தொழுதல் முதலிய பலவும் சிவலோகத்தின்கண் வைத்து என்க. கழும - இறுக. எய்யாது - இளையாமல். ஒப்ப - ஒத்து நிற்க.

பண் :

பாடல் எண் : 9

செடியா ராக்கைத் திறமற வீசிச்
சிவபுர நகர்புக்குக்
கடியார் சோதி கண்டு கொண்டென்
கண்ணிணை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பர னேஉன்
பழஅடி யார்கூட்டம்
அடியேன் காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.

பொழிப்புரை :

அம்மானே! குற்றம் நிறைந்த இந்த உடம்பின் தொடர்பைப் பற்றற நீக்கி, சிவநகரில் புகுந்து விளக்கமாகிய ஒளியைக் கண்டு கொண்டு, என் இரண்டு கண்களும் மகிழ்ச்சி எய்தவும் உன் பழவடியார் கூட்டத்தைக் காணவும் அடியேன் ஆசைப்பட்டேன்.

குறிப்புரை :

செடி - குற்றம். திறம் - கூறுபாடு. அற வீசி - முற்றிலும் கழித்து. கடி - விளக்கம். சோதி - இறைவன் திருமேனி. படி - ஒப்பு.

பண் :

பாடல் எண் : 10

வெஞ்சே லனைய கண்ணார்தம்
வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே
நானோர் துணைகாணேன்
பஞ்சே ரடியாள் பாகத் தொருவா
பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! மாதரது வெகுளி வலையில் அகப் பட்டு நாயினேன் நைந்தேன்; ஞான சூரியனே! உமாதேவி பங்கனே! நான் ஒரு துணையையும் காணேன். ஆதலால் உன் பவளத் திரு வாயால் அஞ்ச வேண்டா என்று நீ சொல்லும்படி நான் ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

`வெங் கண்` என இயையும். ``வெகுளி வலையில் அகப்பட்டு`` (தி.8. அடைக்கலப்பத்து - பா.7.) என்பது, முன்னும் வந்தமை காண்க. நைஞ்சேன் - நைந்தேன்; வருந்தினேன்; போலி.

பண் :

பாடல் எண் : 1

வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று
மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள்
திறத்திடை நைவேனை
ஒப்பி லாதன உவமனி லிறந்தன
ஒண்மலர்த் திருப்பாதத்
தப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

எமக்கு இடம், செல்வம் முதலியனவையாய் இருப்பவன் சிவபெருமான் என்று மனத்தில் எண்ணியுருகாமல் மாதர் வஞ்சனையில் அகப்பட்டு வருந்துகின்றவனாகிய என்னை, உவமை யில்லாத திருவடியை உடைய எமது தந்தையாகிய இறைவன் ஆண்டு கொண்டு தன்னடியார் கூட்டத்தில் சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

வைப்பு மாடு - சேம வைப்பாக வைத்த செல்வம். என்றும் என்றும் என உம்மை கொடுத்து ஓதினுமாம். செப்பு - கிண்ணம். திறம் - கூறுபாடு; அவை கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று நின்று நுகரப்படுவன. ஒப்பு இலாதன - ஒருவாற்றாலேனும் ஒப் பாகக் கூறப்படும் பொருள் இல்லாதவாறு நிற்பன. உவமனில் இறந் தன - அரிதிற்கண்டு ஒருவாறு ஒப்புமைகூறும் பொருள்கள் அனைத் திற்கும் மேலாய் நிற்பன. கண்டாம் - கண்கூடாக யாம் கண்டோம். `மடவரலியர் திறத்தைத் துச்சமாக வெறுத்து, தன்னை வைப்பு மாடென்றும் மாணிக்கத்தொளியென்றும் நினைந்து மனம் உருகி நிற்கும் அடியவர் கூட்டத்தில், அவர்க்கு நேர்மாறான குணத்தை யுடைய என்னை இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 2

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை
என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
நிரந்தர மாய்நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

நீதியாய் இருப்பவனவற்றை நினையேன்; அவற்றை நினைப்பவர்களோடும் கூடேன்; துன்பத்துக்கே ஆளாகிப் பிறந்து இறந்து உழல்வேன்; இப்படிப்பட்ட என்னையும் இறைவன் தன்னடியான் எனக் கொண்டு ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்து வைத்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

``நீதி`` என்றது, உலகியலிலும், மெய் ஒழுக்கங்களை. ஏதமே (ஏதமாகவே) - துன்பமே மிகும்படி. நிரந்தரமாய் நின்ற ஆதி - என்றும் உள்ள பொருளாய் நிற்கும் முதல்வன். `ஒழுக்கம் மிக்காராகிய தன் அடியவர் கூட்டத்தில், ஒழுக்கத்தோடு சிறிதும் இயைபில்லாத என்னையும் இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 3

முன்னை என்னுடைய வல்வினை போயிட
முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
இளமதி யதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

நான் முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் நசிக்கும்படி, முக்கண்ணுடைய எந்தையும், யாவரும் அறிதற்கரியவனும், அடியார்க்கு எளியவனும் ஆகிய சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

`முன்னை உள்ள என்னுடை வல்வினை` என்க. `வல்வினை போயிட ஆண்டு` என இயையும். `அடியார்க்கு எளியன்` எனக் கூட்டுக. ``அன்னை`` என்றது, உவமைக் கண் வந்த பால்வழு வமைதி, `தவமிக்காராகிய தன் அடியவர் கூட்டத்தில், வினையே மிக்கோனாகிய என்னையும் இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர்
காரணம் இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருள் கூடிடும்
உபாயம தறியாமே
செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற்
கொருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 

பொழிப்புரை :

இறைவன் தனது திருவருளை அடைதற்குரிய உபாயத்தை அறியாமல், வீணாயிறந்து போய் நரகத்தில் வீழ்வதற்கு மனமிசைந்திருந்த என்னை அங்ஙனம் வீழவொட்டாமல் தடுத்தாட் கொண்டு தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம் அல்லவா? இதுதான் உலகத்தவர் என்னைப் பித்தனென்று சொல் வதற்குக் காரணமாய் இருந்தது.

குறிப்புரை :

முதலடியை இறுதியிற் கூட்டுக.
ஒத்துச் செல்லுதல் - நூல்களானும், உபதேசத்தானும் உணரப் பட்ட இறைவன் திருவுளக் குறிப்போடு இயைந்து நடத்தல். `இதுவே இறைவன் திருவருளைப் பெறும் முறை` என்பது உணர்த்தியவாறு. இதற்கு நேர்மாறான செயலே மூன்றாம் அடியுட் கூறப்பட்டது. எனவே, `திருவருளை அடையும் நெறியிற் சிறிதும் பிறழாது ஒழுகும் தன் அடியவர் கூட்டத்தில், அதற்கு நேர்மாறான ஒழுக்கத்தையே உடைய என்னை இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்ற வாறாயிற்று.
`இங்ஙனம் சேர்த்தருளிய அதிசயச் செயலால் நானும் இறை வனையே நினைத்து பிதற்றும் பித்துடையேனாயினேன்; அஃது அறி யாது உலகப் பித்தன்போல என்னையும் உலகவர் கருதுகின்றனர்` என்பது முதலடியின் பொருள்.
கேளீர் - அறிந்துகொண்மின். இது தம்மோடு ஒத்து நின்று தம் நிலையை அறிய விரும்பும் நன்மக்களை நோக்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 5

பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன்
பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார்குழ லார்திறத் தேநின்று
குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 

பொழிப்புரை :

அடியாரிடத்துச் சென்று சேர்கிலேன்; பல மலர் களைப் பறித்து அருச்சித்துத் துதியேன்; மாதர் விடயத்தில் சிக்கிக் குடி கெடா நின்ற என்னை, சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

பரவுதல் - துதித்தல்; இஃது இறைவனை என்க.
பாடு - பக்கம். குரவு - குராமலரை அணிந்த. `எரி நின்று ஆடிய` என மாற்றுக. அரவன் - பாம்பை அணிந்தவன். தன்னைத் துதித்தலும், பன்மலர் பறித்துத் தூவி வழிபடுதலுமே தொழிலாக உடைய தன் அடியவர் கூட்டத்தில், அத்தகையோர் அருகிலும் சென்ற றியாத என்னை இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 6

எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என்
ஏழைமை யதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற்
கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

இறைவனது திருநாமமாகிய ஐந்தெழுத்தையும் என் அறியாமையால் நினைந்திலேன்; அன்பரோடும் சேர்ந்திலேன்; நற்கருமங்களை விரும்பாமல் இவ்வுலகத்தில் பிறந்து இறந்து மண்ணா வதற்கு இசைகின்ற என்னை, பெரியோனாகிய சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

`திருநாமமாகிய அஞ்சு எழுத்தும்` என்க. ஏழைமை - அறியாமை. இத் திருநாமத்தின் பெருமையைக் கலைஞானிகளும் ஒருவாற்றான் உணர்ந்துரைப்பாராக, அவர் பாலும் அணுகிலேன்` என்றபடி. `நல்வினையைச் செய்ய விரும்பாது மண்ணாவதற்கு ஒருப்படுகின்றேன்` என்க. `அஞ்செழுத்தின் உண்மைப் பொருளை அறிந்து அந்நிலையிலே நிற்கும் தன் அடியவர் கூட்டத்தில், அதுபற்றிச் சிறிதும் அறிந்திலேனாகிய என்னையும் இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற்
சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதியங் கண்டாமே. 

பொழிப்புரை :

இந்தப் பொய்யுடம்பை மெய்யென நினைத்துத் துன்பக் கடலில் அழுந்தின என்னை, எம் தந்தையாகிய சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

`பொத்து` என்பது ஈற்றில் ஐகாரம் பெற்றது. `ஓட்டை` என்பது பொருள். இஃது அதனையுடையதற்காயிற்று. சுவர் - சுவர்களால் ஆகியது. இவை இரண்டும் ஒருபொருள்மேல் வந்த பெயர்கள். பொதிந்து - நிரம்பப் பெற்று. உளுத்து - உள்ளழிந்து. அசும்பு - மாசுகளின் கசிவு. பொய்க்கூரை - விரைவில் இடிந்து விழும் வீடு. இத்தை, `இதனை` என்பதன் மரூஉ.
மெய் - நிலையானது. முத்துமாமணி - முத்தென்னும் சிறந்த இரத்தினம். ``மாமணி`` முதலிய நான்கும், சோதி என்பதனோடு ஏற்ற பெற்றியான் வேற்றுமைத் தொகைநிலையாகவும், தொகா நிலையாகவும் தொடர்ந்தன. `சோதியை உடைய அத்தன்` என்க. சிவபிரான் திருநீற்றினால் வெள்ளொளியும் உடையனாய் இருத்தலின், முத்தின் ஒளியும், வயிரத்தின் ஒளியும் கூறப்பட்டன. `காயத்தின் மெய்ம்மையை உணர்ந்து அதன் கண் பற்றின்றி இருக்கும் தன் அடியவர் கூட்டத்தில், அதனையே மெய்யென்று கொண்டு திரிந்த என்னையும் இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 8

நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை
குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்
தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

என்னை ஆதியில் பிரிவித்து, இந்த உடம்பில் புகுத்தி, பரிபாக காலம் பார்த்து, ஒரு சொல்லைச் சொல்லி, என் பிறவித் துன்பத்தால் வந்த குற்றம் போக்கின ஒளியுருவனாகிய சிவ பெருமான், என்னையும் ஓர் பொருளாக்கி ஆண்டருளித் தன் அடியா ரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

`முன் என்னைத் தன்னொடு நில்லாவகை நீக்கிக் குரம்பையில் (உடம்பினுள்) புகப்பெய்து` என அடிகள் மிகத் தெளிவு பட இங்கு அருளிச் செய்தமையின், `இவர் முன்பு திருக்கயிலையில் உள்ள சிவகணநாதர்களுள் ஒருவராய் இருந்து, இறைவனது ஆணை யாலே இவ்வுலகில் தோன்றியவர்` என்பது நன்கு தெளிவாகின்றது. ஆதலின், இவரை, `கணநாதருள் ஒருவர்` எனத் திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறுதல், அங்ஙனமே கொள்ளத்தக்கதாம்.
இத்துணைத் தெளிவுபட எழுந்துள்ள இத் திருமொழிக்கு வேறு பொருளுரைத்துப் போக்குதல் நேர்மையாகாது. ``தன்னொடு நில்லாவகை நீக்கி`` என்றதற்கு, `கேவல நிலையினின்றும் சகலத்திற் செலுத்தி` என உரைத்தல் பொருந்தாமையை விளக்கவேண்டுவது இன்று. நோக்கி - என்னை ஆண்டுகொள்ளும் காலத்தை எதிர்நோக்கி யிருந்து. `நுண்ணியனவும், நொடியனவும் ஆகிய சொல்` என்க. பொருள்களின் நுட்பம் சொல்மேல் ஏற்றப்பட்டது. நொடியன- `நொடி` என்னும் கால அளவில் முடிவன; `மிகச் சுருங்கிய சொற்கள்` என்றபடி. `சொல் சொல்லி` என்னாது, ``சொற்செய்து`` என்றார். அவை, தாம் என்றும் கேட்டிராத புதுமையுடையனவாய் இருந்தமை பற்றி.
நுகம் - நுகத்தடி; இஃது ஏர் உழும் எருதுகள் இரண்டினையும் ஒருங்கிணைத்தற்கு அவற்றின் கழுத்தில் வைத்துப் பூட்டப்படுவது. விளாக்கை - உழுதல்; இது `விளாவுகை` என்பதன் மரூஉ. ``பாழ்ச்செய் விளாவி`` (தி.8 குலாப்பத்து - பா. 9.) எனப் பின்னரும் அருளிச் செய் வார். ``விளாக்கை`` என்னும் பெயரடியாகவே, விளாக்கைத்து என் னும் வினையெச்சம் பிறந்தது. எனவே `விளாவுகை செய்து - உழது` என்பது அதன் பொருளாயிற்று. நுகமின்றி உழுது என்றது, நுகத்தடி யின்றியே இரண்டெருதுகளை ஒன்றுபடப் பிணைத்து உழுதாற் போலப் பருப்பொருளாகிய கயிறு முதலியன இல்லாமலே என்னைத் தன் திருவடியை விட்டு நீங்காது அவற்றிடத்தே கட்டுண்டு கிடக்கச் செய்து நடத்தி` என்றதாம். தூக்கி - என்னை உலகியலினின்றும் எடுத்து.
முன் செய்த பொய் அற - அங்ஙனம் எடுப்பதற்கு முன்னே யான் செய்து கொண்டிருந்த பயனில்லாத முயற்சிகள் நீங்கி யொழியும் வண்ணம். துகள் அறுத்து - அம்முயற்சிகட்குக் காரணமாய் இருந்த அறியாமையாகிய குற்றத்தைப் போக்கி. எழுதரு சுடர்ச்சோதி - என் உள்ளத்தில் மேன்மேல் ஓங்கி எழுந்த ஒளியையுடைய விளக்காகிய இறைவன். ``அறுத்து எழுதரு`` என்றது, `சுவைத்து உண்டான்` என்பது போல உடனிகழ்ச்சி வினையென்க. சோதி, ஆகுபெயர். ஆக்கி - என்னைச் செப்பம் செய்து. `கிளவியாக்கம்` என்புழி (தொல்.சொல்.சூ.1 உரை) `ஆக்கம்` என்பதற்கு இவ்வாறே பொருளுரைப்பர் சேனாவரையர். `முன்னர்த் தன்னிடத்தினின்றும் நீக்கிப் பின்னர்த் தானே வந்து என்னை ஆட்கொண்ட செயல்கள் வியக்கத்தக்கன` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 9

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

பூவில் மணம்போல இந்தச் சரீரத்திலுள்ள மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாத இறைவனை நோக்காமல் இம்மைப் பயனையே நுகரும் பித்தர் சொல்லை நான் நம்பாதிருக்கும் படி, என்னை ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

உற்ற ஆக்கை - கிடைத்த உடம்பு; என்றது, மக்கள் உடம்பை. பரம்பொருளை உணரும் உணர்விற்கு மக்கட் பிறப்பினது இன்றியாமை உணர்த்துதற் பொருட்டு, ``உற்ற ஆக்கையின் உறுபொருள்`` என்றாரேனும், `அவ்வாக்கையின் கண்ணதாகிய உயிரினிடத்து உறுபொருள்` என்பதே கருத்தாம். நறிய மலரின்கண் எழுதரு நாற்றத்தை அம்மலரிடமாகப் பற்றி நுகர்தலன்றி வேறாகப் பற்றி நுகரவாராமைபோல, பரம்பொருளை உயிர் தன்னிடத்து உணர்ந்து பற்றுதலன்றித் தனக்கு வேறாக உணர்ந்து பற்றுதல் கூடாமை பற்றி, ``நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்`` என்று அருளினார். எனவே, ``நறுமலர் எழுதரு நாற்றம்போல்`` என்ற உவமை, வேறாக வைத்துப் பற்றலாகாமையை விளக்குதற்பொருட்டு வந்ததாம். இப்பொருளே,
``பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது``
என்ற தி.10 திருமந்திரத்தினும் (1459.) கூறப்பட்டது. ``ஆக்கையின் உறுபொருளும், பற்றலாவதொர் நிலையிலாப் பரம்பொருளும் ஆகிய அப்பொருள்`` என்க. ``அப்பொருள்`` என்ற சுட்டு, என்றும், உள்ளதாயப் பேரறிவாயும், பேரின்பமாயும் நிற்கும் அத்தன்மை யுடையது` என அதன் சிறப்பை எல்லாம் சுட்டி நின்ற பண்டறி சுட்டு; ஆதலின், `அதனைப் பாராதே பெற்றவா பெற்ற பயனது நுகர்வோரை, `பித்தர்` என்று அருளினார். `பெற்ற பயனைப் பெற்றவா நுகர்ந்திடும்` என மாறுக. பெற்றது வினைவழி யாகலின், `அது பின்னர் இடர் விளைப்பது` என்பதும் போந்தது. அது, பகுதிப் பொருள் விகுதி. பயன்தோறும் இவ்வாறே நின்று நுகர்தலின் ஒருமையாற் கூறினார். ``பெற்றவா`` என்றது, `அதன் மெய்ம்மை யறிந்து வெறுத்துப் பிறிது பயனுக்கு முயலாது` என்றபடி. இவ்வாறு வினைப்பயனையே நுகர்ந்திருப்போர் உலகர்.` `இப் பயனன்றிப் பிறிது பயன் உண்டு என்பதை யாவர் கண்டார்` என்பதே அவர் சொல்லும் சொல்லாதலின், அவர் சொல்வழி நில்லாதவாறு இறைவன் தம்மை ஆட்கொண்டருளினான் என்றார். `பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர் கூட்டத்தில் இருந்த என்னை, பற்றலாவதோர்` நிலையிலாப் பரம்பொருளாகிய தன்னைப் பற்றும் வண்ணம் செய்து, அத்தன்மையராகிய தன் அடியவர் கூட்டத்தில் இறைவன் சேர்த்தருளியது வியப்பு` என்றவாறு. இத்திருப்பாட்டுள் அருளப்பட்ட பரம்பொருளின் இயல்பைத் திருமுருகாற்றுப்படை உரை இறுதிக்கண் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டினமை காண்க.

பண் :

பாடல் எண் : 10

இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச்
சிறுகுடி லிதுஇத்தைப்
பொருளெ னக்களித் தருநர கத்திடை
விழப்புகு கின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

அஞ்ஞானவிருள் செறிந்த வலிய வினைகளால் எடுக்கப்பட்ட இந்தப் பொய்யுடம்பை மெய்யாகக் கருதிக்களித்து நரகுக்கு ஆளாகிய என்னைத் திரிபுராந்தகனாகிய பெருமான் பொய்ந் நெறியினின்று நீக்கி ஆண்டருளின அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

இருள் - அறியாமை; ஆணவம். திணிதல் - செறிதல். திணிந்து - திணிதலால் `எழுந்திட்டதோர் குடில்` என்க. `இதன் தன்மை இதுவாக இதனை உயர்ந்த பொருள் என்று எண்ணிக் களித்தேன்` என்றார். தெருளும் - பகைவரது புரமாதல் தெளியப்பட்ட. நொடி வரை - நொடி நேரத்துள். சினப் பதம் - வெகுளி நிலை. அருளும் - செலுத்திய. மெய்ந்நெறியைத் தருபவனை, பான்மை வழக்கால், `மெய்ந்நெறி` என்று அருளினார். பொய்ந்நெறி - நிலையாமையைச் சேர்ப்பிக்கும் நெறி. ``முப்புரமாவது மும்மல காரியம்`` (தி.10 திருமந்திரம்- 343) என்று அருளியபடி. இறைவன் முப்புரம் எரித்தமை அவன் உயிர்களின் மும்மலங்களைப் போக்குவோனாதலை விளக்குதல் பற்றி, இங்கு அவன் முப்புரம் எரித்தமையை விரித்தோதியருளினார். `முப்புரங்களையும் நொடிவரை இடிதர அழித்தாற்போல, இறைவன் எனது மலங்களையும் நொடிப்பொழுதில் நோக்கினமை வியப்பு` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 1

சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை
வாளா தொழும்புகந்து
கடைபட் டேனை ஆண்டு கொண்ட
கருணா லயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.

பொழிப்புரை :

ஒளிவிடுகின்ற பொன்மலையைப் போன்றவனும், துளைக்கப்படாத முத்தைப் போன்றவனும், காரணமின்றி, எனது தொண்டினை விரும்பக், கடையாய நிலையில் உள்ள என்னை, ஆட் கொண்டருளின கருணைக்கு இருப்பிடமானவனும், கரிய நிறமுடைய திருமாலும் பிரமனும் செருக்கில் அகப்பட்டு இன்னும் அடைய முடியாத தன்னை, எனக்கு அறியும்படி கொடுத்த அரிய அமுதம் போன்றவனும், செதுக்கப்படாத மாணிக்கம் போன்றவனுமாகிய இறைவனைச் சேர்ந்து அவனிடத்திலே பொருந்தியிருப்பது எந் நாளோ!

குறிப்புரை :

சுடர் பொற்குன்று - ஒருகாலைக் கொருகால் ஒளியை மிக விடுகின்ற பொன்மலை. இப்பொருள் தோன்றுதற் பொருட்டு, `சுடர்ப் பொற்குன்று` என வேற்றுமைத் தொகை பட ஓதாது, வினைத் தொகைபட ஓதியருளினார். அதனானே, ஏனைய மூன்று அடிகளினும் மிகுத்தோதற்பாலனவாய பகர ஒற்றுக்களையும் தொகுத்தோதியருளி னார். ``பொற்குன்று`` முதலிய பலவும், ஒருபொருள்மேல் வந்த பெயர்கள். வாளா தொழும்பு உகந்து - `தகுதி` என்னும் காரண மின்றியே எனது தொண்டினை விரும்பி; இதனை, ``கடைப் பட்டேனை`` என்றதன் பின்னர்க் கூட்டுக.
கருணாலயன் - அருளுக்கு இருப்பிடமானவன். தடை - மலத் தடை. பட்டு - அதனுட்படுதலால். `தன்னை எனக்குத் தந்த` என்க. ``புடைபட்டிருப்பது என்று கொல்லோ`` என்றதனை இறுதியில் வைத்து உரைக்க. இஃது ஏனைய திருப்பாட்டிற்கும் ஒக்கும். புணர்ந்து- தலைக்கூடி.

பண் :

பாடல் எண் : 2

ஆற்ற கில்லேன் அடியேன் அரசே
அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து
சிவனெம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக்
குள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.

பொழிப்புரை :

அடியேன், பூதலத்திலே ஐம்புலன்களாகிய சேற்றில் அழுந்தி, பொறுக்கமாட்டாதவனாய் உள்ளேன். எனது செதுக்கப் படாத மாணிக்கம் போன்ற இறைவனைச் சேர்ந்து அவனையே நினைத்து, அரசனே! சிவனே! எம்பெருமானே! என்று துதித்து ஊற்றினையுடைய மணலைப் போன்று நெகிழ்ந்து மனமானது உருகி, முறையிட்டு வணங்கி நிற்பது எந்நாளோ!

குறிப்புரை :

பொருள்கோள்: `ஐம்புலனாய சேற்றில் அழுந்தாது, என் பொல்லா மணியைப் புணர்ந்து சிந்தை செய்து, அரசே, சிவனே, எம்பெருமானே, அடியேன் அவனிதலத்து ஆற்றிகில்லேன் என்று ஏத்தி, உள்ளே நெக்கு உருகி, ஓலமிட்டுப் போற்றி நிற்பது என்று கொல்லோ`.
``ஆற்றகில்லேன்`` என்றது, இறந்தகால மறைவினை. எனவே, `அடியேன் நிலவுலகில் உன்னைப் பிரிந்து நின்று ஆற்ற மாட்டாதவனாயினேன்` என்பது பொருளாயிற்று, ஆகவே` என்னை அவ்வாறு நில்லாது நின்பால் வருவித்த நின்கருணைக்கு யாது கைம்மாறு செய்யவல்லேன்` என்று உருகி ஓலமிட்டுப் போற்றி நிற்றலை விரும்புதல் பெறப்பட்டது. ஊற்று மணல் - உள்ளே ஊற்றினை உடைய மணல்; இது செறிந்து நில்லாது நெக்குவிட்டுக் குழைதல் நன்கறியப்பட்டது. உள்ளே - உள்ளிடத்தே; மனத்தின்கண்.

பண் :

பாடல் எண் : 3

நீண்ட மாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை விருப்பி லேனை
ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை
அள்ளூ றுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட் டலறி
விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

நெடிய திருமாலும், பிரமனும் ஏனைய தேவரும் இந்திரனும் முன்னின்று துதிக்கும் பெருமையை உடையவனும் ஓங்கி நின்ற அழற்பிழம்பானவனும், தன்னிடத்து ஆசை இல்லாத என்னை ஆட்கொண்டருளின, என்னுடைய அருமையான அமுதம் போன்ற வனுமாகிய இறைவனை மிகுதியாக உருகுகின்ற மனத்தினை உடைய அடியவர்கள் முன்னிலையில் வேண்டுமளவும் வாய்திறந்து அரற்றி, மணம் பொருந்திய மலர்களை அருச்சித்து என் பொல்லா மணியைச் சேர்ந்து திருவடியைச் சிரமேற் கொண்டு கிடப்பது எந்நாளோ!

குறிப்புரை :

`நெடியவனினும் நெடியவன்` என்பார், `நீண்ட மாலும் வெருவ நீண்ட நெருப்பு` என்றார். மாயோன் நீண்டது, உலகினை அளக்க. விருப்பு - அன்பு. அள்ளூறு உள்ளம் - அன்புமிகவும் சுரக்கின்ற மனம். `அடியார்முன் அலறித் தூவிப் பூண்டுகிடப்பது` என இயையும். பூண்டு கிடத்தல் - திருவடியை விடாது பற்றிக்கொண்டு கிடத்தல்.

பண் :

பாடல் எண் : 4

அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர் கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறைஇன் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.

பொழிப்புரை :

அக இதழ்களை உடைய தாமரை மலரிலுள்ள பிரமனும், திருமாலும், தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றைத் தேவரும், சொல்லித் துதிக்கின்ற திருப்பெயரை உடையவனும், சொல்லுலகத்தையும் பொருளுலகத்தையும் கடந்த ஒளியானவனும், நெல்லிக் கனியைப் போன்றவனும், தேனையும், பாலையும் நிறைந்த இனிய அமுதத்தையும், அமுதத்தின் சுவையையும் ஒப்பவனும் என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைப் போன்றவனும் ஆகிய இறைவனைச் சேர்ந்து நான் தழுவி இருப்பது எந்நாளோ!

குறிப்புரை :

அல்லி - அகவிதழ். ``அல்லாதவரும்`` என்றதனை ``அமரர் கோனும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``பொருள்`` என்றது, சொல்லால் உணர்த்தப்படும் பொருளை. `சொல்லும், அதனான் உணர்த்தப்படும் பொருளும் சடமே யாகலின், சித்தாகிய இறைவன் அவற்றினுள் அகப்படான்` என்பார் ``சொல்லும் பொருளும் இறந்த சுடரை`` என்றார். இங்ஙனம் கூறியதனால், அயன், மால் முதலிய பலரும் பல நாமங்களால் சொல்லிப் பரவுவன எல்லாம், அம்புலியைப்பற்ற விரும்பும் குழவிக்குக் கண்ணாடியிற் காட்டித் தரப்படும் அதன் நிழல்போல்வனவாய பொது வியல்புகளையேயாம் என்பது போதரும். இனி, அவன் சொல்லையும், பொருளையும் இறந்து நின்று உணர்வார்க்கு அறிவினுள்ளே இன்னதென உரைக்க வாராத இன்ப ஊற்றாய் நின்று இனித்தலை உணர்த்துவார், ``நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறை இன்னமுதை அமுதின் சுவையை`` எனப் பலவாறு அருளிச் செய்தார். புல்லிப் புணர்வது - பற்றிக் கூடுவது. பற்றாது வேறுநின்று அளவளாவுதலும், ஈருடலும் ஓருடலாம்படி தழுவுதலும் என்னும் கூடுதல் இரண்டனுள் ஒன்றுபடத் தழுவுதலைக் குறிப்பார், ``புல்லிப் புணர்வது`` என்று அருளினார். இங்ஙனம் உலகியல் வாய்பாட்டான் அருளிச் செய்தாராயினும், `அப்பணைந்த உப்பேபோல் (சிவஞான சித்தி - சூ.11.12.) அவனாகியே நிற்கும் அத்துவித நிலையைப் பெறுவது என்று கொல்லோ` என்றலே திருவுள்ளம் என்க. ``புணர்ந்து புணர்வது`` என்றமையால், முன்னர்ச் சிவலோகத்தில் அடியார் குழாத்தொடு கூடி நின்று நுகரும் இன்பத்தை அடிகள் விரும்பினமை பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 5

திகழத் திகழும் அடியும் முடியுங்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலமுழுதும்
நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்
டாவா என்ற நீர்மை யெல்லாம்
புகழப் பெறுவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

மிகவும் விளங்குகின்ற திருவடியையும் திரு முடியையும் காணும் பொருட்டுக்கீழும் மேலுமாகத் திருமாலும் பிரம னும், மண்ணை அகழ்ந்தும் விண்ணில் பறந்தும் காணமுடியாத அந்தப் பெரியோன் இந்தப் பெரிய உலகம் முழுவதும் விளங்க, என்னை ஆளாகக் கொண்டு எனது தொண்டினை ஏற்று, அந்தோ என்று இரங் கின குணங்களை எல்லாம், என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கம் போன்ற அப்பெருமானைச் சேர்ந்து புகழ்ந்து பேசுவது எந்நாளோ!

குறிப்புரை :

திகழத் திகழும் - பிறபொருள்கள் யாவும் ஒளி மய மாய்த் திகழுமாறு விளங்கிய. ``அயனும் மாலும்`` என்றதை எதிர்நிரல் நிறையாகக் கொள்க. ``அகழ`` என்றதனை `அகழ்ந்து` எனத் திரித்து, தொகுக்கப்பட்ட உம்மையை விரிக்க. மாநில முழுதும் நிகழ்ந்தது, `பணிகொண்டான்` என்னும் சொல். புகழப்பெறுவது - நேர்நின்று புகழுதலைப் பெறுவது.

பண் :

பாடல் எண் : 6

பரிந்து வந்து பரமானந்தம்
பண்டே அடியேற் கருள்செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில்
அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர்
உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

பெருமான் விரும்பி வந்து, முன்னமே, அடி யேனுக்கு மேலான இன்பத்தை அருள் செய்யவும், பிரிந்து வந்து பெரிய நிலவுலகத்தில் பெரிய மயக்கத்தை அடைந்தேன். இதனைப் பலகால் எண்ணி, நீரைப் பொழியும் கண்கள் நீரைப் பொழிந்து கொண்டேயிருக்க, உள்ளன்பினால் மயிர்க்கூச் செறிய, மகிழ்ச்சியுற்று அன்போடு, என்னுடைய, செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்து விரும்பி நிற்பது எந்நாளோ!

குறிப்புரை :

பரிந்து - இரங்கி. `செய்யவும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பெருமாநிலம், ஒரு பொருட்பன்மொழி. அரு மால் - நீங்குதற்கு அரிய மயக்கம். சொரிய - சொரிந்தவாறே நிற்க. நீர்மை, நீர் என நின்றது. `உள்நீரால்` என உருபு விரிக்க. புரிந்து - பணிசெய்து.

பண் :

பாடல் எண் : 7

நினையப் பிறருக் கரிய நெருப்பை
நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை
நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டங்
கனையக் கண்ணீர் அருவி பாயக்
கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

அன்பரல்லாத பிறருக்கு நினைத்தற்கு அருமை யான நெருப்பு, நீர், காற்று, நிலம், விண் ஆகிய பொருளாகிய இறை வனைப் பார்த்து, என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கம் போன்ற அப்பெருமானைச் சேர்ந்து, உடல் பூரித்துத் தழுதழுத்த கண்டம் கனைக்க, கண்களினின்றும் நீர் அருவியாகப் பாய, கரங்களையும் குவித்து மணமுடைய மலர்களைக் கொண்டு அணியப் பெறுவது எந் நாளோ!

குறிப்புரை :

பிறர் - அயலார்; அடியரல்லாதவர். நெருப்பை முதலிய ஐந்தும் ``அரிய`` என்ற எச்சத்திற்குத் தனித்தனி முடிபாயின. தழைத்து- உடல் பூரித்து. `தழுதழுத்து` எனற்பாலது, `தழுத்து` என நின்றது. நாவிற்குரிய இதனைக் கண்டத்திற்கு ஏற்றினார். `கனைப்ப` எனற்பாலது ``கனைய`` என நின்றது. ``தழுத்த கண்டம் கனைய`` என்றதனால், சொற்கள் நன்கெழாமை குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நெக்கு நெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலுந் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து இடைவிடாது உருகி நின்றும் அமர்ந்தும், படுத்தும், எழுந்தும், சிரித்தும், அழுதும், வணங்கியும் வாயாரத் துதித்துப் பல வகையாகக் கூத்துக்களை இயற்றிச் செவ்வானம் போன்ற திருமேனியை விளங்கப் பார்த்து, மயிர் சிலிர்த்து, என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்து புகுந்து நிற்பது எந்நாளோ!

குறிப்புரை :

உள் நெக்கு நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து. நக்கும் - சிரித்தும். நானாவிதத்தால் - பற்பல வகையாக. நவிற்றி - செய்து. செக்கர் - செவ்வானம். திகழ நோக்கி - நன்கு பார்த்து. புக்கு நிற்பது - அடியவர் கூட்டத்துள் புகுந்து நிற்பது.

பண் :

பாடல் எண் : 9

தாதாய் மூவே ழுலகுக்குந்
தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில்க எப்போது
மேதா மணியே என்றென் றேத்தி
இரவும் பகலும் எழிலார் பாதப்
போதாய்ந் தணைவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

பழமையான ஏழு உலகங்களுக்கும் தந்தையான வனே! தாயானவனே! நாய் போன்ற என்னை ஆட்கொண்ட பித்துடையவனே! பிறவி நோய்க்கு ஒப்பற்ற மருந்து போன்றவனே! பேரறிவாளனே! என்று பலகால் துதித்து என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்து பேரின்பமாகிய மிக்க தேன் சிந்த இடைவிடாது இரவும் பகலும் அழகு நிறைந்து திருவடியாகிய தாமரை இதழ்களை ஆராய்ந்து சேர்வது எக்காலமோ!

குறிப்புரை :

தாதாய் - தாதையே. ``மூவேழுலகம்`` என்றதனை, `மூவுலகம். ஏழுலகம்` என இரண்டாக்கியுரைக்க. `ஈரேழுலகம்` என்னாது, `ஏழுலகம்` என்றே கூறும்வழி, அது பூலோகம் முதலாக மேலுள்ளனவற்றையே குறிக்கும். ``மூவுலகம்`` என்றவற்றுள் மேலுலகங்களும் அடங்குமாயினும், அவற்றைப் பின்னரும் வேறுபிரித்தோதினார், அவை கீழுலகங்களினும் பல்லாற்றாற் சிறந்துநிற்றல் கருதி. இனி, `மூத்த ஏழுலகங்கள்` என்று உரைப்பாரும் உளர். ``பேதாய்`` என்றது, `பேரருளுடையவனே` என்றும் பொருளைத் தந்து, பழிப்பதுபோலப் புகழ்ந்த குறிப்புச் சொல்லாய் நின்றது. பெருந்தேன் - குறையாது நிற்கும் தேன். பில்க - சிந்த. `ஏதும் ஆம் மணியே` என்பது, உம்மை தொக, `ஏதாம் மணியே` என நின்றது. `எப்போதும் ஏதும் ஆம் மணியே` என்றதனால், இறைவன், வேண்டுவார் வேண்டும் பொருளாய் நின்று பயன் தருதல் குறிக்கப்பட்டது. இனி, `மேதா மணியே` எனப் பிரிப்பின், மோனை நயம் கெடுதலேயன்றி, `பில்க` என்னும் எச்சத்திற்கும் முடிபு இன்றாம் என்க. `பாதப் போதினை ஆய்ந்து அணைவது என்றுகொல்லோ` என்க. ஆய்தல் - அவற்றின் பெருமையைப் பல்காலும் நினைத்தல்.

பண் :

பாடல் எண் : 10

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமாஎன்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போ தணைவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

எல்லா உலகத்தையும் காப்பவனே! படைப் பவனே! ஒடுக்குபவனே! பெருமை நிறைந்த விண்ணுலகிலுள்ள தேவர் களுக்கு எல்லாம் மூத்திருப்பவனே! முதுமை எய்தாத இளையோனாய் நின்ற முதல்வனே! முன்னே என்னை ஆட்கொண்டருளின எம் முடைய மேலோனே! என்று பலகால் பாடி வணங்கி என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்த பொலிவினையுடைய தாமரை மலரை அணுகப் பெறுவது எந்நாளோ!

குறிப்புரை :

இடைநிற்கற்பாலதாய, `காப்பாய்` என்பது, செய்யுள் நோக்கி முன் நின்றது. `முழுதும்`` என்றதில், இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. கண் ஆர் - இடம் நிறைந்த. மூப்பாய் - உயர்ந்து நிற்பவனே. இவ்விடத்து இச்சொற்கு இதுவே பொருளாகச் சிவஞானமுனிவரர், ``பேறிழ வின்பமோடு``(சிவஞானசித்தி செய்யுள் சூ.2.9.) என்னும் செய்யுள் உரையில் குறித்தல் காண்க. மூவா - கெடாத. மூத்தொழியும் முதல்களாய் நிற்பவரும் உளராகலான் அவரிற் பிரித்தற்கு, ``மூவா முதலாய் நின்ற முதல்வா`` என்று அருளிச்செய்தார். பார்ப்பானே - பார்ப்பன வேடம் பூண்டவனே. பூ - பொலிவு. இது, `பூம்போது` என மெல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி, இவ்வாறு வல்லொற்று மிக்கு முடிதலும் இலக்கணமாதல் உணர்க.

பண் :

பாடல் எண் : 1

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பொழிப்புரை :

மண்முதல் விண் ஈறாகக் கலந்து விளங்கும், எமது மேலோனே! சிறப்பொடு விளங்குகின்றவனே! சிவலோகநாதனே! திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவபெருமானே! என்னை ஆண்டருளின நீயே அருள் செய்யவில்லை என்றால் நான் யாரோடு நொந்து கொள்வேன்? யாரிடம் இதை எடுத்துச் சொல்வேன்? நான் வேறு பற்றுக் கோடு இல்லேன். நெடிய கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழ ஒருப்படேன்: என்னை வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!

குறிப்புரை :

பார் - பூமி. ``சீர்`` என்றது, செம்மையை. `என்றும் செம்மையோடு விளங்குபவனே` என்பது கருத்து. `நான்மற்றுப் பற்றிலேன்` என இயையும், `ஆண்ட நீ `அருளிலையானால் யாரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைக்கேன்` என்க. ``ஆண்ட நீ`` என்றதனால், `அயலாராகிய பிறர் யாரொடு` என்பது பெறப்படும். `உன்னைப் பிரிந்து வாழ்கிலேன்` என்க. கண்டாய், முன்னிலையசை.

பண் :

பாடல் எண் : 2

வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்
குணர்விறந் துலகமூ டுருவும்
செம்பெரு மானே சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எம்பெரு மானே என்னையாள் வானே
என்னைநீ கூவிக்கொண் டருளே. 

பொழிப்புரை :

வீணனாகிய என்னை ஆண்டருளின பெருமையை யுடைய மாணிக்கமே! தேவரும் அறிய முடியாத ஒருவனே! திருமால் பிரமனாகிய இருவருக்கும் உள்ள உணர்ச்சியைக் கடந்து, எல்லா உலகங்களிலும் ஊடுருவிச் சென்ற செம்மேனி அம்மானே! சிவலோக நாதனே! திருப் பெருந்துறையின் சிவனே! எம் தலைவனே! என்னை ஆளாக வுடையானே! நான் வேறு பற்றுக் கோடு இல்லேன்; அடியேனை, நீ அழைத்துக் கொண்டு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

வம்பன் - வீணன். `ஒன்றுக்கும் ஆகாத என்னை உயர்ந்தவனாகச் செய்த பெரியோனே` என்றபடி. இருவர், மாலும் அயனும். உணர்வு இறந்து - உணரும் நிலையைக் கடந்து. ``செம்பெரு மானே`` என்றது, `நெருப்புருவாகிய பெருமானே` என்றவாறு. கொண்டு - ஏற்றுக் கொண்டு.

பண் :

பாடல் எண் : 3

பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை
உணர்த்துவ துனக்கெனக் குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பொழிப்புரை :

சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! திருமால் புகழ்ந்து பாடுகின்ற உன்னு டைய திருவடியை அன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன். என்னைத் தேடிவந்து நீ ஆண்டருளினை; பிணங்குவது உன்னோடு, நான் மகிழ்வதும் உன்னையே; உன்னிடத்தில் நான் தெரிந்து கொள்வது என் உயிர்க்கு நன்மை ஆவதேயாம்; நான் துணை இன்மை யால் வாடியிருக்கிறேன்; இவ்வுலகில் வாழ ஒருப்படேன்; வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!.

குறிப்புரை :

`ஊடுவதும்` என்று உம்மை தொகுத்தல். ஊடுதல் - வருந்திப் பேசுதல். உவப்பது - மகிழ்ந்து புகழ்தல். `இவை யிரண்டிற்கும் புலனாவார் உன்னையன்றி எனக்குப் பிறர் இலர்` என்ற படி. `உறுதியே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தல். `உனக்கு யான் உணர்த்துவது, எனக்கு உறுதி (நன்மை) யாவனவற்றையே` என்க. நின் திருவுள்ளமும் எனக்கு உறுதியருள்வதே யாகலின், எனது வேண்டுகோளைக் கேட்டு அருள்செய்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 4

வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

விரைவிலே வாளை ஏந்திய அரக்கரது முப்புரங் களையும் நீறாக்கியவனே! தில்லையில் வீளங்குகின்ற கூத்தப் பெருமானே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! விண், நிலம், பாதலம் என்னும் எல்லைகளையுடைய மூன்று உலகத்தையும் கடந்து அக்காலத்தில், திருமால் பிரமனாகிய இருவரும் காணப்புகுந்த நாளில், முதலும் முடிவும் இன்றித் தோன்ற வல்லவனாய் வளர்ந்தவனே! நான் வேறு பற்றுக்கோடு இல்லேன். வாழமாட்டேன். வருவாய் என்று அழைத்து அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

`அரக்கர் புரத்தை வல்லை எரித்தோனே` என இயையும். வல்லை - விரைவில். `மூவுலகின் எல்லையையும் உருவி` என்க. `ஆதி ஈறு என்னும் இரண்டு இலனாக வல்லையாய்` என உரைக்க. இன்மை, ஆகுபெயர். `இன்மையாக` என ஆக்கம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 5

பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்
என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

பண்ணினை ஒத்த மொழியாளாகிய உமையம்மை யின் பங்கனே! என்னை உண்மையாகவே ஆட்கொண்டருளியவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னையன்றி நான் வேறு ஒரு பற்றுக் கோடு இல்லேன். என் நினைவு, மெய், வாய், நாசியொடு, செவிகளும், கண்களும் உன்னிடத்தே வைத்ததனால் மண்ணுலகத்தினிடம் நான் வாழ மாட்டேன். வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!.

குறிப்புரை :

``பண்ணின்`` என்றதில் இன், வேண்டாவழிச் சாரியை. திண்ணமே ஆண்டாய் - ஐயத்திற்கிடனின்றி என்னை உனக்கு அடியவ னாகக் கொண்டாய். ``ஆண்டாய்`` என்றது முற்று. இதன்பின், `ஆத லால்` என்பது வருவித்து, அதனை, ``வருக என்று அருள்புரியாய்`` என்றதனோடு முடிக்க. எண்ணம் - மனம். `மண்ணின்மேல் வாழினும், எண்ணம் முதலியவற்றை உன்பால் வைத்து வாழின் கேடில்லை; யான் அவ்வாறு வாழவல்லனல்லேன்; ஆதலின், நின்பால் வருக என்று அருள்புரியாய்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 6

பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பொழிப்புரை :

பஞ்சினும் மென்மையான பாதங்களை உடைய உமையம்மையின் பங்கனே! உன்னையன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன். மிகவும் செம்மையாகவே ஆண்டருளினை! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! நாய்போன்ற நான் பயப்படுகின்றேன். நீ ஆட்கொண்டு வழங்கிய கருணையை மயக்கத்தினால் மறந்த வஞ்சகனாகிய நான் இவ்வுலகில் வாழமாட்டேன். வருவாய் என்றழைத்து அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

செஞ்செவே - மிகச் செம்மையாக; ஒருபொருட் பன்மொழி. `அருளினை மறந்தமையால் மீளவும் முன்னை நிலையே ஆகுங்கொலோ என்று அஞ்சுகின்றேன்` என்பது பொருளாதல் அறிக. வஞ்சன் - நாடகமாத்திரையாக நடிப்பவன்.

பண் :

பாடல் எண் : 7

பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர் கோலச் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

சூரிய மண்டலத்தில் எழுந்தருளியிருக்கும் ஒளி வடிவானவனே! செல்வத்தாற்சிறந்த அழகிய சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உன் திருவடியை அன்றி நான் வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லேன்; நான் உன் திருவருளையே கருதி உள்ளம் கனிந்து உருகி உன்னோடு கலந்து, வாழும் வகையினை அறியாத மயக்க உணர்வினையுடையேன். இவ் வுலகத்தில் வாழமாட்டேன். ஆதலால், வருவாய் என்றழைத்து அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

பரிதி வாழ் - சூரிய மண்டலத்தின்கண் வாழ்கின்ற. ஒளியாய் - ஒளியுருவினனே, சூரிய மண்டலத்தின் நடுவில் `இறைவன் சதாசிவ மூர்த்தியாய் எழுந்தருளியுள்ளான்` என்பது, சைவாகமநூல் துணிபு. சைவர் பகலவன்பால், இம்மூர்த்தியை நோக்கியே வணங்குவர்.
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான் அரனுரு அல்லனோ``
(தி.5 ப.100 பா.8) என்ற அப்பர் திருமொழியையும் காண்க. `காயத்திரி மறையின் பொருளும் இம்மூர்த்தியேயல்லது, சூரியனல்லன்` என்பதை,
``இருக்கு நான்மறை ஈசனை யேதொழும்
கருத்தி னைநினை யார்கன் மனவரே``
என்னும் அத்திருப்பாட்டின் பிற்பகுதி உறுதிப்பட விளக்குகின்றது. இனி, `பரிதியினிடத்துள்ள ஒளிபோலும் உருவினனே` என உரைப் பாரும் உளர். திரு - அழகு. கோலம் - வடிவம். ``வாழுமாறு அறியா மருளனேன்`` என்றது, முன்னர் உடன்செல்ல ஒருப்படாது நின்றமையை.

பண் :

பாடல் எண் : 8

பந்தணை விரலாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே
ஆரமு தேஅடி யேனை
வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

பந்து பொருந்திய விரலினை உடைய உமையம்மை யின் பங்கனே! நீ அன்றி நான் வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லேன்; செம்மையான நெருப்புப் போன்றவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! அழிவில்லா அமுதமே! சுவை முடிவில்லா பரம்பொருளே! அருமையான அமுதமே! நீயே வந்து அடியேனை உய்யும் வண்ணம் ஆட்கொண் டருளினை. இவ்வுலகில் வாழமாட்டேன்; வருவாய் என்றழைத்து அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

``அந்தம் இல் அமுது``, ``ஆரமுது`` என்றவை, இல் பொருள் உவமைகள். அருமை, தேவரும் பெறுதற்கருமை. அஃது இனிது விளங்குதற்பொருட்டு இருதொடராக்கி அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 9

பாவநா சாஉன் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர்தந் தேவே சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழ லாய்நிமிர்ந் தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

பாவத்தை நீக்குபவனே! தேவர்தம் தலைவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! மூன்று உலகங்களும் ஊடுருவும் வண்ணம் திருமால் பிரமனாகிய இருவரும், கீழும் மேலுமாய்த் தேட ஒலிக்கின்ற அனற்பிழம்பாகி வளர்ந்தவனே! யானைத் தோலுடையானே! உன் திருவடியே அன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடு இல்லேன்; இவ்வுலகில் நான் வாழமாட்டேன்; வருவாய் என்றழைத்து அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

பாவநாசன் - பாவத்தை அழிப்பவன். சிவனை மறந்து செய்வன பலவும் பாவமே என்பதே சிவஞானியர் கருத்து. ``கீழ்மேலாய்`` என்றதனை, `கீழ்மேலாக` எனத்திரிக்க. மா - யானை.

பண் :

பாடல் எண் : 10

பழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர்
துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பொழிப்புரை :

குற்றம் இல்லாத தொன்மையான புகழை உடைய உமையம்மையின் பங்கனே! இளங்காளையை ஊர்தியாக உடையவனே! செழுமையதாகிய பிறையை அணிந்தவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னையன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன். ஆதலால், பிற தெய்வங்களை வணங்குவேனோ? வாயால் வாழ்த்துவேனோ? எனக்கு ஒரு துணை என்று மனத்தால் நினைப்பேனோ? சொல் வாயாக; இவ்வுலகத்தில் வாழமாட்டேன்; வருவாய் என்று அழைத்து அருள் புரிவாயாக!

குறிப்புரை :

பழுது, பதியைவிட்டு நீங்கியிருத்தல். அஃது உமை யம்மைக்கு எக்காலத்தும் இன்மையால், ``பழுதில்`` என்றும், அங்ஙனம் நிற்றல் அனாதியாகலின், அதனை, ``தொல்புகழ்`` என்றும் அருளிச் செய்தார். செழுமை - இளமை. `சொல்லாய்` என்றது, `இவ் வுறுதிப்பாடு நீ அறிந்ததேயன்றோ` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 1

சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

சோதிப் பிழம்பானவனே! ஒளிப் பிழம்பில் உள்ள கதிர்களாய் உள்ளவனே! சூழ்ந்த ஒளியை உடைய விளக்குப் போன்ற வனே! சுருண்ட கூந்தலை உடைய உமாதேவியின் பாகத்தை உடைய வனே! மேலானவனே! பாலினது நிறத்தைக் கொண்ட, வெண்ணீற்றை அணிந்தவனே! தாமரை மலரை இடமாக உடைய பிரமனும், திருமாலும் அறியமுடியாத நீதியானவனே! செல்வம் மிக்க திருப் பெருந்துறையில் நிறைந்த மலர்களையுடைய குருந்த மரநிழலில் பொருந்திய சிறப்புடைய முன்னவனே! அடியேனாகிய நான், உன்னை விரும்பி அழைத்தால், அதென்ன? என்று கேட்டு அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

சோதி - எல்லாவற்றையும் அடக்கி விளங்கும் பேரொளி. இஃது இறைவனது தன்னியல்பாகிய, `சிவம்` என்னும் நிலையைக் குறித்து அருளிச் செய்தது. சுடர் - அப்பேரொளியின் கூறு. இது, `சத்தி` என்னும் நிலையைக் குறித்து அருளிச்செய்தது. சூழ் ஒளி விளக்கு - ஓர் எல்லையளவில் பரவும் ஒளியை உடைய விளக்கு. இது சத்தியின் வியாபாரத்தால் வரும் பலவகை நிலைகளைக் குறித்து அருளிச் செய்தது. இம்மூன்றும் உவமையாகுபெயர்கள். சுரி குழல் - கடை குழன்ற கூந்தல். `மடந்தையது பாதியை உடையவனே` என்க. பால் கொள் - பாலினது தன்மையைக் கொண்ட, தன்மையாவது, நிறம். `மாலும்` என்னும் உம்மை தொகுத்தல். ``நீதி`` என்றது, `நீதியையே வடிவமாக உடைய கடவுள்` என்னும் பொருட்டாய் நின்ற ஆகுபெயர். எனவே, ``அறியா`` என்றது, ஆகுபெயர்ப் பொருளையே சிறப்பித்து நிற்றல் அறிக. செல்வம் - அருட் செல்வம். குருந்தம் - குருந்தமர நிழல். சீர் - புகழையுடைய. ஆதி - எப்பொருட்கும் முதல். ஆதரித்து - விரும்பி. ``அழைத்தால்`` என்றது, `அழைக்கின்றேனாதலின்` என்னும் பொருட்டு. அதெந்து` என்பது, `காரணம்` என்னும் பொருளையுடைய தோர் திசைச்சொல் என்ப. எனவே, `என் அழைப்புக் காரணம் உடையதே எனக் கருதி எனக்கு அருள் செய்` என்பது பொருளாம். இவ்வாறன்றி, `அதெந்துவே என்பது, அஃது என் என்னும் பொருளை யுடைய திசைச்சொல்` எனவும், `அஞ்சாதே என்னும் பொருளை யுடைய திசைச்சொல்` எனவும் பலவாறு கூறுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 2

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

கூத்தப் பெருமானே! மலம் இல்லாதவனே! வெண்ணீற்றை உடையானே! நெற்றிக்கண்ணை உடையானே! தேவர் பிரானே! ஒப்பற்றவனே! முறையிட்டு அரற்றி உலகம் முழுதும் தேடியும் உன்னை நான் பார்க்கவில்லை. தீர்த்தமாகிய பொய்கையை யுடைய திருப்பெருந்துறையின்கண் வளப்பமான மலர்களை உடைய குருந்தமர நிழலில் பொருந்திய சிறப்புடைய செல்வனே! தொண்ட னாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

நிருத்தன் - நடனம் புரிபவன். ஒருத்தன் - ஒப்பற்றவன். திருத்தம், `தீர்த்தம்` என்பதன் சிதைவு. அருத்தன் - மெய்ப்பொருளாய் உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 3

எங்கணா யகனே என்னுயிர்த் தலைவா
ஏலவார் குழலிமார் இருவர்
தங்கணா யகனே தக்கநற் காமன்
தனதுடல் தழலெழ விழித்த
செங்கணா யகனே திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பொழிப்புரை :

எங்கள் நாதனே! என்னுயிர்த் தலைவனே! மயிர்ச் சாந்தணிந்த நீண்ட கூந்தலையுடைய இருதேவியர்க்கு நாதனே! சிறந்த அழகுடைய மன்மதனது உடம்பு நெருப்பு எழும்படி பார்த்த செம்மை யாகிய கண்ணையுடைய நாயகனே! திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்தமர நிழலில் பொருந்திய சிறப்புடைய அழகிய கண்ணை உடையவனே! அடியேனாகிய நான் அன்புடன் அழைத்தால் அஞ்சாதே என்று அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

``எங்கள்`` என்றது, அடியவர் பலரையும். ஏலம் - மயிர்ச்சாந்து. இருவர், உமையும் கங்கையும். தக்க - மயக்குதல் தொழி லுக்குப் பொருந்திய. நற்காமன் - அழகிய மன்மதன். செங்கண் - நெருப்புருவாகிய கண். அங்கணன் - கருணையுடையவன்.

பண் :

பாடல் எண் : 4

கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்
கண்ணனும் நண்ணுதற் கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் கார் மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும் நண்ணுதற்கு அருமை யான தூயவனே! எங்களுக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்று வேண்ட பெரிய அழலுருவத்தில் இருந்து தோன்றிய எந்தையே! பேரொலியை உடைய நான்கு வேதங்களும் பயில்கின்ற பெருந்துறையின்கண் செழுமையான மலர்களை உடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய மாசு இல்லாதவனே! அடியே னாகிய நான் அன்பொடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

வெளிப்படாய் என்ன - வெளிப்பட்டு அருள் புரி வாயாக என்று வேண்ட. இங்ஙனம் வேண்டினோர் திருப்பெருந் துறையில் இருந்த அடியார்கள். எனவே இதற்கு, `அடியார்கள்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. வியன்தழல் - பெரிய நெருப்பு. இது திருப்பெருந்துறையில் தோன்றியது. இவ்வாறன்றி `நான்முகனும், கண்ணனும் வேண்ட அவர்கட்கு அவர் முன் நின்ற தழற்பிழம்பினின்றும் வெளிப்பட்ட` என்று உரைப்பாரும் உளர். திமிலம் - பேரொலி.

பண் :

பாடல் எண் : 5

துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பொழிப்புரை :

உடுக்கை வடிவம் கொண்ட நுண்ணிய இடையினை உடையாளாகிய சுருண்ட கூந்தலையுடைய உமையம்மையின் இரண்டு முலைக்கண்கள் அழுந்திய தழும்புகள், நீறுபூத்த, பெரிய நெருப்பின்மேல் உள்ள இரண்டு புள்ளிகளைப் போல மிக்க ஒளி பொருந்திய, மார்பை உடையவனே! செடிகள் அடர்ந்துள்ள, பெரிய சோலைகள் சூழ்ந்த பெருந்துறையின்கண் செழுமையான மலர்களை யுடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய கடவுளே! அடியேன் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

துடிகொள் - உடுக்கையின் தன்மையைக்கொண்ட, தன்மை, வடிவம். பொடி - சாம்பல். `நீறுபூத்த நெருப்பு` என்னும் இவ்வுவமை, திருநீற்றை யணிந்த சிவபெருமானது செம்மேனியின் தன்மையை விளக்க வந்தது. `நீறுபூத்த நெருப்பின்மேல் இரண்டிடத் தில் சிறிது அந்நீற்றினை நீக்கினால், முழுவதும் வெண்மையாய் உள்ள அந்நெருப்பின் நடுவில், இரண்டு மாணிக்கங்களைப் பதித்ததுபோன்ற இரண்டு செம்புள்ளிகள் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறு காணப் படுகின்றன, உமையம்மை தழுவிய வடுவினையுடைய சிவ பெருமானது திருநீற்றையணிந்த மார்பில் தோன்றும் செம்புள்ளிகள்` என அடிகள் அருமையாக வியந்தருளிச் செய்கின்றார். கச்சியம் பதியில் கம்பையாற்றில் உமையம்மை சிவபெருமானை இலிங்க உருவில் வழிபட்டிருக்குங்கால், சிவபெருமான் கம்பையாறு பெருக் கெடுத்து வரச்செய்ய, அதனைக்கண்ட அம்மை பெருமானது திரு மேனிக்கு யாது நேருமோ என அஞ்சித் தனது இரு கைகளாலும், மார்பினாலும் பெருமானை அணைத்துத் தழுவிக் கொண்டமையைக் காஞ்சிப் புராணத்தில் விளங்கக் காண்க. ``எழுந்ததிரை நதித்திவலை`` என்னும் திருத்தாண்டகத்துள் நாவுக்கரசரும், ``எள்க லின்றி இமை யவர் கோனை`` என்னும் திருப்பாடலுள் நம்பியாரூரரும் இவ்வர லாற்றை இனிதெடுத்து அருளிச்செய்திருத்தலை அறிக. செடி - புதல்.

பண் :

பாடல் எண் : 6

துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
துதைந்தெழு துளங்கொளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
உறுசுவை அளிக்கும்ஆ ரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

பவளம் போன்றவனே! தூய்மையானவனே! தூய்மையான வெண்ணீறு படிந்து தோன்றுகின்ற விளக்கமாகிய ஒளி, வயிரம் போன்று பிரகாசிப்பவனே! உன்னை இடைவிடாது நினைக்கின்றவர் மனத்தில் மிகுந்த சுவையைக் கொடுக்கின்ற அரிய அமுதமே! திருத்தமாகிய வேதங்கள் ஒலிக்கின்ற திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்த மரநிழலைப் பொருந்திய சிறந்த தந்தையே! அடியேன் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

துப்பன் - உயிர்கட்குத் துணைவலியாய் உள்ளவன். துதைந்து - நிறைதலால். துளங்கு ஒளி - வீசுகின்ற ஒளியானது. ``வயிரம்`` என்றது அதன் ஒளியை, ``வயிரத்து`` என்றதில் அத்து, `வேண்டாவழிச் சாரியை. உறுசுவை - மிக்க சுவை. `தேவர் அமுதம், உண்பார் நாவிலன்றி உள்குவார் மனத்தில் சுவைதாராமை போலாது, உள்குவார் மனத்தின் உறு சுவை அளிக்கும் அரிய அமுதம் நீ` என்ற படி. செப்பமாம் - திருத்தமாகிய.

பண் :

பாடல் எண் : 7

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பொழிப்புரை :

மெய்ப் பொருளானவனே! பலவடிவம் கொள் பவனே! மகாமேரு மலையையே வில்லாகக் கொண்டு பகைவரது கோட்டை மூன்றையும் எரித்து நீறாக்கின கையை உடையவனே! திருவடியால், காலனை உதைத்து, வெகுண்ட கடுமையான தீத்திரள் போன்ற உடலின் செந்நிறமுடையவனே! செல்வம் நிறைந்த திருப் பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய தலைவனே! அடியேன் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

விகிர்தன் - உலகியலின் வேறுபட்டவன். மேவலர் - பகைவர். வில் ஏந்தியது கையாகலின், அதுவே திரிபுரத்தை எரித்ததாக அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 8

முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யும்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவனே! முதல்வனே! மூன்று கண்களையுடையவனே! முனிவனே! அரும்புத் தன்மை நீங்காத மலர்களைப் பறித்து அருச்சித்து, அன்போடு நினைத்து வழிபடுவோர்க்கு, வீடுபேறு கொடுத்து அருள்கின்ற ஞானமயனே! செல்வம் நிறைந்த திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய தந்தையே! நான் அன்போடு அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

சிறந்த தவக்கோலம் உடைமை பற்றிச் சிவ பெருமானை, `முனிவன்` எனக்கூறுவர் பெரியோர் ``படர் புன்சடை - முனியாய் நீ உலகம் முழுதாளினும் - தனியாய்`` (தி.5 ப.96 பா.3) என்றாற்போலவரும் திருமொழிகளைக் காண்க. `` விஸ்வாதிகோ ருத்ரோ மகர்ஷி`` என உபநிடதமும் கூறும். மொட்டு - அரும்பு; என்றது போதினை (பேரரும்பை). `போதாய நிலையைக் கடவாத மலர்` என்க. கதி - முத்தி. சித்தன் - வியத்தகு செயலைச் செய்பவன்; தாழ்நிலையில் நின்றாரை உயர் நிலையில் வைத்தல்பற்றி இங்ஙனம் அருளிச்செய்தார். அத்தன் - அப்பன்; தலைவனுமாம்.

பண் :

பாடல் எண் : 9

மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவம்
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

மயங்கும் தன்மை உடையேனது மனத்தை, மயக்கம் தீர்ந்திருக்கக் கண்ணால் பார்த்து, மறுபிறவியையும் ஒழித்த மெய்ப் பொருளானவனே! தூய்மையானவனே! சீறுகின்ற வாள் அரவமாகிய கொடிய பாம்பும் கங்கையாறும் தங்கிய சிவந்த சடையை உடைய வனே! தெளிவையுண்டுபண்ணும், நான்கு மறைகள் ஒலிக்கின்ற திருப்பெருந் துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறந்த அருளை உடைய வனே! நான் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று அருள் வாயாக!.

குறிப்புரை :

நோக்குதல் - கருதுதல். மனத்தைக் கருதுதலாவது, `இஃது இவ்வாறு ஆகுக` என எண்ணுதல். இங்ஙனம் எண்ணுதலை, `மான தீக்கை` என்ப. மறுமை - மறு பிறப்பு. இப்பிறப்பைக் கெடுத்தலாவது, உலகியலில் உழலாது சீவன் முத்தத்தன்மையை அடையச் செய்தல். பொருளன் - பரம்பொருளானவன். அருளன் - அருளுடையவன்.

பண் :

பாடல் எண் : 10

திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்டு
என்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றரு ளாயே. 

பொழிப்புரை :

அரிய தவக்கோலத்தை உடையவனே! திருந்திய நீண்ட சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்த மர நிழலைப் பொருந்திய முறையை ஆராய்ந்து, வருந்தி என்னுடைய எம்பிரான் என்றென்று பலகாலும் நினைந்து அன்போடு அழைத்தால், அலைகடல் நடுவில் உள்ள உலகத்தினின்றும் அழைத்து, எனது கயிலாயத்தைச் சேரும் வழி இதுதான்; வருவாயாக! என்று சொல்லி அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

திருந்து - திருந்திய; அழகுபெற்ற. சீர் - நிலை. இருந்தவாறு - இருந்த படியை. ஏசறா நினைந்து - துன்புற்று நினைத்து. இட்டு, அசைநிலை. `என்றென்று பன்முறை நினைந்து` என்க. அருந் தவா - அரிய தவக்கோலத்தை உடையவனே. ``எண்ணி, நினைந்திட்டு, நினைந்து`` என்றவை வேறுவேறு பொருளைச் சார்ந்து வந்தமை அறிக. ``அலைகடல்`` என்றது, பெருந்துன்பத்தைக் குறித்த சிறப்புருவகம். அது, பகுதிப்பொருள் விகுதி. ``நின்று`` என்றது, நீக்கப் பொருளின் வரும் ஐந்தாம் வேற்றுமைப் பொருளதாகிய இடைச் சொல். எனவே, அலைகடலின் அகத்தினின்றும் வா` என்பது பொருளாயிற்று. ``கயிலை`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``பொருந்த வா`` என்றார். எனவே, `கயிலையைப் பொருந்த வா; அதன்கண் புகும் நெறி இது; அந்நெறியே போதராய் என்று அருளாய்` என்றதாயிற்று. ``இது`` என்றது. `இது எனக்காட்டி` என்றபடி. போதராய் - வருவாயாக.

பண் :

பாடல் எண் : 1

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

பெருந்துறைப் பெருமானே! உன் திருப் பெயர்களைப் புகழ்ந்து பேசுவோர்க்கு ஒப்பற்ற ஆனந்தமே! என் இருவினை ஒத்தபிறகு, என் பிறவி வித்து இனிமேல் முளையாதபடி, நீ திருக்கழுக் குன்றிலே எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

`பிணக்கிலாத பெருமான்` என இயையும். பிணக் கிலாமை, சிறியோரையும் ஆட்கொள்ளும் வள்ளன்மை. இணக்கு - இணங்குதல்; பிறிதொன்றனோடு நிகர்த்தல். `இன்பமே துன்பமே துடைத்து வரும்` என மாற்றியுரைக்க. ஏகாரம் இரண்டனுள் முன்னது பிரிநிலை; பின்னது தேற்றம். உணக்கிலாதது ஓர் வித்து - உலர்த்தப் படாத ஒரு விதை; `ஒன்று` என்பது, ஒருவகையைக் குறித்தது. `விளையாமையை ஒத்தபின்` என இயையும். `விளையாமல்` என்பது பாடமன்று. விதைகள் யாவும் விளைவின் பின்னர் ஈரம் புலர உலர்த்தப்பட்ட பின்பே முளையைத் தோற்றுவித்தற்குரிய பக்குவத்தை எய்தும்; அவ்வாறின்றி ஈரத்தோடே நிழலிலே கிடப்பின், அதன்கண் உள்ள முளைத்தற் சத்தி கெட்டொழியும். அவ்வாறே செய்யப்பட்ட வினையாகிய ஆகாமியம் அதன்கண் மேலும்மேலும் நிகழும் விருப்பு, வெறுப்புக்களால் முறுகி நின்ற வழியே பின்னர்ப் பிறவியைத் தோற்று விக்கும். இவ்விருப்பு வெறுப்புக்கள் அஞ்ஞானத்தால் நிகழ்வன. இறைவன், அருளிய ஞானத்தில் உறைத்து நிற்பின், அஞ்ஞானங்கெட, விருப்பு வெறுப்புக்கள் எழமாட்டா. அவை எழாதொழியவே, ஒரோ வழிப் பயிற்சி வயத்தால் செய்யப்படும் ஆகாமிய வினை முறுகிநின்று பின்னர்ப் பிறவியைத் தோற்றுவிக்கமாட்டாது கெட்டு விடுமாகலின், ``என்வினை உணக்கிலாததோர் வித்து மேல்விளையாமையை ஒத்தபின்`` என்று அருளிச்செய்தார்.
எனவே, அடிகள் தாம் முன்னைப் பயிற்சி காரணமாக இறைவன் அருள்வழியினின்றும் சிறிது நீங்கினமையால் விளைந்த குற்றம், கடிதில் அந்நிலையினின்றும் நீங்கி முன்போலவே அருளில் உறைத்து நின்றமையாற் கெட்டொழிந்த பின்னர், இறைவன் தமக்கு முன்போலத் தோன்றியருளினமையைத் தெரித்தவாறாயிற்று. சஞ்சித வினை கெடுதலுக்கு, காய்ந்த விதை வறுக்கப்படுதலை உவமையாகக் கூறுவர். அடிகள் இங்கு ஆகாமிய வினை கெடுதலுக்கு, விதை உணக்கப்படாதொழிதலை உவமை கூறினார். ஞானியர்க்கு, `சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம்` என்னும் மூவகை வினைகளும் கெடுமாற்றினை,
எல்லைஇல் பிறவி நல்கும்
இருவினை எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்; ஏன்ற
உடற்பழ வினைகள் ஊட்டும்
தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையு ஞானத்
தழல்உற அழிந்து போமே.
(சிவப்பிரகாசம் - 89) எனவும்,
``ஏன்ற வினைஉடலோ டேகும்இடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும்``
(திருவருட்பயன் - 98) எனவும் மெய்ந்நூல்கள் விளக்குதல் காண்க.
தன்னை அறிந்திடு ம் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே.
என்ற தி.10 திருமந்திரத்தையும் (2611) காண்க. முன்னை வினை, சஞ்சிதம். பின்னைவினை, ஆகாமியம். ``வினை ஒத்தபின்`` என்றதற்கு இவ்வாறன்றிப் பிராரத்த நுகர்ச்சிக்கண் வரும் இருவினை யொப்பினைப் பொருளாகக் கூறின், அது திருவருள் பெறுவதற்கு முன் நிகழ்ச்சியாதலின், அடிகள் நிலைக்குச் சிறிதும் ஒவ்வாமை யறிக. ``கணக்கு`` என்றது முதலும், முடிவுமாய எல்லையை. இறைவன் அடியார்களுக்கு அருட்டிருமேனிகொண்டு அருளுதல் என்றும் உள்ள செயலாதல் அறிக. இனி, `அளவில்லாத பெருமையையுடைய திருக்கோலம்` எனினுமாம். இறுதிக்கண், `இதற்கு யான் செய்யும் கைம்மாறு யாது` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. இஃது ஏனைய திருப்பாட்டிற்கும் ஒக்கும்.

பண் :

பாடல் எண் : 2

பிட்டு நேர்பட மண்சு மந்த
பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறைப் பெருமானே! உன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை அடைந்திலேன்; ஆயினும், நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளும் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

பிட்டு நேர்பட - உண்ட பிட்டுக்கு அளவொப்ப, `சட்ட` என்பது பற்றிமேலே (தி.8 திருக்கோத்தும்பி - பா.7- உரை) கூறப்பட் டது. நேர்பட (உன்னோடு நன்கு) தலைக்கூட, சழக்கன் - பொய்யன். சிட்டன் - உயர்ந்தோன்.
வெங் கட்டன் - கொடிய துன்பத்தை யுடையவன். இதனுள், காட்டுதலுக்குச் செயப்படு பொருளாகிய, `கோலம்` என்பதை, வேண்டும் இடங்களில் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 3

மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
மலங்கெ டுத்தபெ ருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.

பொழிப்புரை :

என் கண்ணீர் துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! நான் உன்னை விட்டு நீங்கினேன்; மேல் விளையும் காரியத்தை அறிந்திலேன்; உன் திருவடி இரண்டையும் வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக் கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

`மலங்கினேனது கண்ணின்நீர்` என்க. மலங்குதல் - மயங்குதல். ``கெடுத்த`` என்ற பெயரெச்சம், ``பெருந்துறை`` என்ற இடப்பெயர் கொண்டது. `பெருந்துறைக்கண் உன்னோடு வாராமல் நின்றுவிட்டேன்` என்க. வினைக்கேடன் - வினையாகிய கெடு நெறியை உடையேன். இனி - இப்பொழுது; இது, விலங்கினேன்; என்றதனோடு முடியும்.
மேல் விளைவது, நின் திருவடியைப் பெறுதல், பிறவிக்கடலில் வீழ்தல் என்னும் இரண்டில் இன்னது என்பது, `சேவடிகள் வைப்பிடம் இன்றி` என்றது, `நீ மீளத் தோன்றியருளும் இடம் கிடைக்கப்பெறாமல்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

பூணொ ணாததொ ரன்பு பூண்டு
பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
நடுக்கட லுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்
தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்க்கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

உன் அன்பர் உன்னிடத்தில் பேரன்பு பூண்டு வணங்கக் கண்டு, நான் மிக்க நாணம் அடைந்து, துன்பக் கடலில் அழுந்தி, திருப்பெருந்துறையாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தலும், நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, காணமுடியாத உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

பூணொணாததொர் அன்பு - என் தரத்திற்கு மேற்பட்ட ஓர் அன்பு. நாணொணாததோர் நாணம் - என் நிலைக்கு வேண்டாத ஓர் நாணம். `அந்நாணமாகிய கடல்` என்க, `பேணொணாத தோணி` என இயையும்.
பேணொணாத - எளிதில் பாதுகாத்துக் கொள்ளுதற்கு இயலாத. பெருந்துறைப் பெருந்தோணி - திருப்பெருந்துறைக்கண் கிடைத்த திருவருளாகிய தோணி.
உகைத்தல் - ஓட்டுதல். காணொணா-ஒருவர்க்கும் காண இயலாத. `யான் உன்மாட்டுப் பேரன்பு உடையேனாய் இருந்தும் உன்னொடு வரும் பேற்றினைப் பெறாமையால், அப்பேற்றினைப் பெற்றோர் எள்ளும் எள்ளலுக்குப் பெருநாணங்கொண்டு, அந்நிலை நீங்குதற்கு நீ திருப்பெருந்துறைக் கண், தில்லையில் வருக என்று அருளிச் செய்த திருவருளையே பற்றுக்கோடாகக் கொண்டு பல தலங்களிலும் சென்று உன்னை வணங்கிவர, திருக்கழுக்குன்றத்தில் உனது அரிய திருக்காட்சியை எனக்குக் காட்டியருளினாய்` என்பது இதன் திரண்ட பொருள். ``கடல்`` என்றது, துன்பத்தை எனினுமாம்.

பண் :

பாடல் எண் : 5

கோல மேனிவ ராக மேகுண
மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
நச்சி நச்சிட வந்திடும்
கால மேஉனை ஓதநீ வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

அழகிய திருவுருவம் உடையவனே! திருப்பெருந் துறைக் கொண்டலே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் மனத் தில் வைக்கப் பட்டிருக்கிற சிகாமணியே! உலகமே சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

கோல மேனி வராகமே - அழகிய திருமேனியைப் பன்றியுருவாகக் கொண்டவனே, இது பன்றிக்குட்டிகட்கு இறைவன் தாய்ப்பன்றியாய்ச் சென்று பால்கொடுத்த திருவிளையாடல் பற்றி வந்தது. `குணமாம் கொண்டலே` என இயையும். குணம், அருட் குணங்களாகிய தன்வயமுடைமை முதலியன. `குணமே வடிவாகிய கொண்டல்` என்க.
எனவே, `அக்கொண்டலால் தரப்படுவதும் குணமே` என்பது போந்தது. `என் சிந்தைதன் அகத்தே பொருந்த வைத்துக் கொண்ட சிகாமணியே` என்றபடி.
கரி - சான்று. நச்சுதல் - விரும்புதல். நச்சி - நச்சுதலால். அடிகள் இறைவனையன்றிப் பிறிதொன்றையும் விரும்பாமையை உலகம் அறியுமாகலின், `ஞாலமே கரியாக நான் உனை நச்சி` என்றார். ``நச்சி`` என்னும் எச்சம், ``வந்திடும்`` என்றதனோடு முடிந்தது. நச்சிட வந்திடும் காலமே - என்றும் இடையறாது அன்பு செய்யுமாறு உன்பால் யான் வருதற்குரிய காலத்திலே; ஏகாரம், பிரிநிலை. `காலமே காட்டினாய்` என இயையும். ஓத - இங்ஙனம் மகிழ்ந்து பாடும்படி.

பண் :

பாடல் எண் : 6

பேதம் இல்ல தொர்கற் பளித்த
பெருந்து றைப்பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை
ஏதி லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற
தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.

பொழிப்புரை :

வேறுபடுதல் இல்லாத ஒப்பற்ற கல்வியாகிய ஞானத்தை அருள்செய்த திருப்பெருந்துறை இன்பப் பெருக்கே! பல தீமைகள் பேசும்படி என்னை அயலார் முன்னே நீ என்ன காரியம் செய்து வைத்தாய்?. முடிவற்றனவும், தீங்கற்றனவுமாகின உன் திருவடிகளே எனக்குப் புகலிடம் எனக் கருதி ஆசையோடு உன்னைப் புகழும் வண்ணம் நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

பேதம் - வேறுபடுதல். கற்பு - கல்வி; என்றது ஞானத்தை, உண்மை ஞானம் என்றும் வேறுபடாது நிலைத்து நிற்பதாதல் அறிக. வெள்ளம் - இன்ப வெள்ளம். ஏதம் - குற்றம்; இஃது அடிகள்மேல் ஏதிலார் ஏற்றிக் கூறுவது.
ஏதிலார் - அயலார். இவர்கள் அடிகளது அன்பு நிலையையும், இறைவனது அருள் நிலையையும் அறியாராகலின், அடிகள் உலகியலின் நீங்கிய பின்னர் அல்லல் உறுவதை, அவர் செயத்தக்கது அறியாது செய்தமையால் விளைந்ததாக அவரைப் பழித்தனர் என்க. ``என்செய்தாய்`` என்றது, `தகாதது செய்தாய்` என்னும் பொருட்டு. தகாதது, தன் அடியவரை அல்லல் உறுவித்தது. ``என்செய்தாய்`` என்றதன் பின்னர், `ஆயினும்` என்பது வருவிக்க. ``சாதல் சாதல்`` என்ற அடுக்கு, பன்மை பற்றி வந்தது. `சாதலாகிய பொல்லாமை, என்க.
பொல்லாமை - தீங்கு. தனிச்சரண் - ஒப்பற்ற உனது திருவடியே. சரண் ஆம் என - நமக்குப் புகலிடமாகும் என்று. உனை ஓத - நான் உன்னைப் புகழ்ந்து பாடும்படி,

பண் :

பாடல் எண் : 7

இயக்கி மார்அறு பத்து நால்வரை
எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதோர் மும்ம லப்பழ
வல்வி னைக்குள் அழுந்தவும்
துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின்
தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்மு னேவந்து
காட்டினாய் கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

இயக்கிமார் அறுபத்து நால்வரைத் தன் ஞானோபதேசத்தால் எண்குணமும் அடையச் செய்த ஈசனே! மயக்கத்துக்கு ஏதுவாகிய மும்மல சம்பந்தமாகிய வல்வினைக் கடலில் அடியேன் அழுந்தி நிற்கவும் என் தளர்ச்சியை நீக்கி, என்னை ஆண்டருளி, உன் திருவடிகளைத் தந்து அடியார்களுக்கு எதிரில் திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

`யட்சன்` என்னும் ஆரியச்சொல், தமிழில், `இயக்கன்` எனத் திரிந்து வருதலின், `இயக்கிமார்` என்றது. தேவகணத்தவருள் ஒருவகையினராகிய `இயக்கர்` என்பவருள் பெண்பாலாரை என்பது வெளிப்படை. இம்மாதர் அறுபத்து நால்வருக்குச் சிவபெருமான் ஞானோபதேசம் செய்து, தனது எண்குணங்களையும் அடையச் செய்தான் என்பது, இத்திருப்பாட்டின் முதலடியிற் கூறப்பட்டது.
இத்தகைய வரலாறு ஒன்று உத்தரகோசமங்கைப் புராணத்தில் காணப்படுகின்றது. மயக்கத்தால் விளைந்ததனை, ``மயக்கம்`` என்றார். `மயக்கமாயதோர் வினை` என இயையும். மும்மல வினை, மும்மலங்களால் உண்டாக்கிய வினை. ``இருவினைப் பாசம் மும்மலக்கல் ஆர்த்தலின்` (தி.12 பெ. புரா. நாவுக். 129) என்புழிப்போல, மூலகன்மத்தை வேறு வைத்து, ``மும்மலம்`` என்று அருளினார். துயக்கு - மெலிவு. `தூமலர்` என வருதலேயன்றி, `தூய்மலர்` என வருதலும் வழக்கென்க. `கயங்க` என்பது வலிந்து நின்றது. கயங்குதல் - கலங்குதல். `அடியார் முன்னே கயக்க வைத்து` என்க. `முன்பு கயக்க வைத்து, இப்பொழுது காட்டினாய்` என்க.

பண் :

பாடல் எண் : 1

இந்திரிய வயமயங்கி
இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய்
அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச்
சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம்
அணிகொள்தில்லை கண்டேனே.

பொழிப்புரை :

பொறிகளின் வயப்பட்டு மயக்கமடைந்து அழிவதற்கே காரணாகிப் பல புவனங்களிலும் அலைந்து சென்று, கடத்தற்கருமையான நரகத்தில் வீழ்வேனாகிய எனக்கு, மனத்தைத் தூய்மையாக்கிச் சிவத்தன்மையை வெளிப்படுத்தி என்னை ஆண்டருளிய, முடிவில்லாத ஆனந்தமூர்த்தியை அழகிய தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

`இந்திரிய வயத்தால் மயங்கி` என்க. காரணமாய் - காரணம் உண்டாகப்பெற்று. அந்தரம் - வானுலகம். இஃது இயமன் உலகத்தைக் குறித்தது. வீழ்வேற்கு - வீழ்தற்கு உரியவனாய் இருந்த எனக்கு. ``தெளிவித்து`` என்றது, `தெளிவித்தலாகிய நலத்தைப் புரிந்து` என்னும் பொருட்டாய் நின்று, ``வீழ்வேற்கு`` என்னும் நான்கா வதற்கு முடிபாயிற்று. `எனைச் சிவமாக்கி ஆண்ட` என்க. ``சிவமாக்கி`` என வேறு போல அருளிச்செய்தாராயினும், `தானாக்கி` என்பதே கருத்தாதல் அறிக. ``ஆக்கி ஆண்ட`` என்றது, `ஓடி வந்தான்` என்பது போல, ஒருவினைப் பொருட்டு. ஆனந்தம் - ஆனந்த வடிவத்தை.

பண் :

பாடல் எண் : 2

வினைப்பிறவி என்கின்ற
வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே
தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென்
பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை
அம்பலத்தே கண்டேனே. 

பொழிப்புரை :

வினையினால் உண்டாகிய பிறவியாகிய துன்பத்தில் சிக்கி, இறைவனாகிய தன்னைச் சற்றும் நினையாமலேயே மெலிவடைந்து இருக்கும் என்னை, மிகப்பெரிதும் ஆட்கொண்டு என் பிறவித்தளையை நீக்கின ஒப்பிலாப் பெருமானை, எல்லா உலகங்களும் வணங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

வினைப் பிறவி - வினையால் வரும் பிறவி. எனைப் பெரிதும் - எத்துணையோ மிகுதியாக. மிகுதி, தம் தரம் நோக்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 3

உருத்தெரியாக் காலத்தே
உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக்
கருணையினால் ஆண்டு கொண்ட
திருத்துருத்தி மேயானைத்
தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன்
அணிகொள்தில்லை கண்டேனே.

பொழிப்புரை :

என்னுடைய உருவம் தோற்றப்பெறாத காலத்திலே என் உள்ளே புகுந்து என் மனத்தில் நிலைபெற்று, ஞானத்தைப் பதியச் செய்து உடம்பிற்புகுந்து தன் பெருங்கருணையினால் ஆட்கொண் டருளின, திருத்துருத்தி என்ற தலத்திலே எழுந்தருளியவனை, ஆசை யினால் நாய்போன்ற அடியேன் அழகு பொருந்திய தில்லையம் பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

உருத் தெரியாக் காலம் - தாய் வயிற்றில் உடம்பு உருப் பெறாதிருந்த தொடக்கக் காலம். ``காலத்தே`` என்ற ஏகாரம், பிரிநிலை.
உள்புகுந்து - கருவினுள் புகுந்து. உளம் - சூக்கும தேகமாய் நின்ற மனம் . கரு திருத்தி - பின்னர்க் கருவைச் செம்மையாக வளர்த்து. ஊன் புக்கு - பின் பிறந்து வளர்ந்த உடம்பினுள்ளும் நின்று; என்றது, `உலகியலில் உழன்ற காலத்தும் அதற்குத் துணையாய் நின்று` என்றபடி. இறைவனது திருமேனியை, `ஊன்` என்றல் பொருந்தாமை யின், ``ஊன்புக்கு`` என்றதற்கு ``ஆசான் மூர்த்தியாய் எழுந்தருளி வந்து` என உரைத்தல் கூடாமை அறிக. திருத்துருத்தி, சோழநாட்டுத் தலம். தித்திக்கும் - இனிக்கின்ற; என்றது, `இன்பம் மிகுகின்ற` என்ற படி. சிவபதத்தை - வீடு பேறாய் உள்ளவனை. அருத்தி - விருப்பம். இதனுள் அடிகள் கருவிலே திருவுடையராய் இருந்தமை புலப்படுதல் காண்க. ``கருவாய்க் கிடந்து உன்கழலே நினையும் கருத்துடையேன்`` (தி.4 ப.94 பா.6) என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 4

கல்லாத புல்லறிவிற்
கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து
வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோருங் காணஎன்றன்
பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை
அம்பலத்தே கண்டேனே.

பொழிப்புரை :

கல்லாத அற்ப அறிவினால் கடையவனாகிய நாய் போன்றவனை எல்லாம் வல்லானாய் வந்து திருவருள் பெற்றிருக்கும் படி பலரும் காண என்னுடைய ஆன்ம அறிவைப் பற்றியுள்ள மும் மலக்கட்டினையும் போக்கினவனை எல்லோரும் வந்து வணங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

புல்லறிவின் - புல்லறிவினால். வல்லாளனாய் - வலிதின் ஆளுதல் உடையவனாய். வனப்பு - அழகு; என்றது சிறப் பினை. `யான் வனப்பெய்தி இருக்கும் வண்ணம்` என உரைக்க. பசு பாசம் - பசுவாம் தன்மையைச் செய்யும் பாசம்.

பண் :

பாடல் எண் : 5

சாதிகுலம் பிறப்பென்னுஞ்
சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை
அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம்
யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில்அமு தானானைக்
குலாவுதில்லை கண்டேனே.

பொழிப்புரை :

சாதி, குலம், பிறவி என்கின்ற சூழலிலே அகப்பட்டு அறிவு கலங்குகின்ற அன்பில்லாத நாய் போன்ற எனது துன்பத்தினைக் களைந்து, அடிமை கொண்டு அறியாமைக் குணத்தையும் அன்னியருடைய வடிவம் என்ற எண்ணத்தையும் நான், எனது என்று சொல்லும் வார்த்தையையும் அறவே அழித்து, குற்றம் இல்லாத அமுதமானவனைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

அந்தணர் முதலிய நான்கு வருணங்களும், பிறப் பினாலும், ஒழுக்கத்தினாலும் உளவாகும். அவற்றுள் ஒழுக்கத்தினால் உளவாவனவற்றை, ``சாதி`` என்றார், அவ்வவ்வருணத்துள்ளும் அவ்வவ்வொழுக்கமுடையாரை, `சாதியந்தணர்` முதலியோராகக் கூறும் வழக்குப்பற்றி.
குலம் - குடிமை; இஃது ஒவ்வொரு வருணத்தினும் உள்ள பகுதி; இதனை, `கோத்திரம்` என்பர் வடமொழியாளர். பிறப்பு - பிறந்த வருணம். சுழிப்பட்டு - வெள்ளச் சுழலில் அகப்பட்டு. சாதி முதலிய மூன்றும் உலகியலில் தருக்கினை உண்டாக்கி அதனுள்ளே அழுந்தச் செய்தலின் இவற்றை, ``சுழி`` என்றார்.
ஆதம் - ஆதரவு. ``குணம்`` என்றது, தொழிலை. பேதையது தொழில், ஏதம் கொண்டு ஊதியம் போக விடல்(குறள் - 831), நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும் பேணாமை (குறள் - 833) முதலியன. ``பிறர் உருவம்`` என்றது, பிறர் எனக் கருதி உறவும், பகையும் கொள்ளுதற் கேற்ற உருவ வேறுபாட்டுணர்வினை. உரை - செருக்குச் சொல். `இவைகளை மாய்த்து` என்க.

பண் :

பாடல் எண் : 6

பிறவிதனை அறமாற்றிப்
பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென்
றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த்
திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும்
வணங்கிடநான் கண்டேனே.

பொழிப்புரை :

பிறவியை முற்றிலும் நீக்கி, நோய், முதுமை ஆகிய இவை இரண்டையும், சுற்றமாகிய பற்றோடுங் கூட நீங்கிப் போய் உலகத்தையுடைய ஒப்பற்ற முதல்வனை நெருங்கிய சோலை சூழ்ந்த தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தை அடைந்து அந்தணரும் தேவரும் தொழுதிட நான் கண்டேன்.

குறிப்புரை :

பிறவிக்கு ஏதுவாய மயக்கத்தை, `பிறவி` என்றார். உறவு - கிளைஞர்மேல் செய்யும் பற்று. மன்னி - பொருந்தி. மறைய வர், தில்லைவாழந்தணர். `மாற்றி, சென்று, மன்னி, ஒருமுதலை மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேன், என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 7

பத்திமையும் பரிசுமிலாப்
பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை
ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால்
திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
விளங்குதில்லை கண்டேனே. 

பொழிப்புரை :

அன்புடைமையும் நல்லொழுக்கமும் இல்லாமைக்கு ஏதுவாகிய, ஆன்ம அறிவைத் தடை செய்கின்ற பாசத்தை நீக்கி, அடியேனை இவன் பித்துப் பிடித்தவன் என்று கண்டோர் கூறும்படி செய்து, நான் தமது திருவடியை விட்டு அகலாமல் மனம் என்கிற திண்கயிற்றால் கட்டுண்டு கிடக்கும்படி செய்த ஞானவடிவினனாகிய சிவபெருமானது திருவிளையாடலைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

பத்திமை - அன்பு. பரிசு - பக்குவம்; தகுதி. `இவை இரண்டும் இல்லாமையாகிய பசுத்துவத்தைச் செய்யும் பாசம்` என்க. `பேராமே கட்டுவித்த` என இயையும். சித்தம் - மறவாத மனம். ``நாயகன் சேவடி தைவரும் சிந்தையும்`` (தி.12 பெ. புரா. நாவு. 140), என்றார் சேக்கிழாரும். `திருப்பாதத்தில் கட்டுவித்த` என்க.

பண் :

பாடல் எண் : 8

அளவிலாப் பாவகத்தால்
அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே
வெறுவியனாய்க் கிடப்பேனுக்
களவிலா ஆனந்தம்
அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந்
தொழுந்தில்லை கண்டேனே. 

பொழிப்புரை :

அளவற்ற எண்ணங்களால் அழுந்தப்பட்டு இவ் வுலகத்தில் அறிவில்லாமல் இனிமேல் நிகழப்போவதைச் சிறிதும் அறியாமல் பயனற்றவனாயிருக்கின்ற எனக்கு அளவற்ற இன்பத்தைக் கொடுத்து என்னை ஆண்டருளினவனை வஞ்சமில்லாத் தேவரும் வணங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

பாவகம் - நினைவு; இஃது உள்ளத்தின் பண்பு. இது, `தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அனைசுவரியம்` எனத் தொகையான் எட்டாகவும், வகையான் ஐம்பதாகவும் (சிவப்பிரகாசம் - 42) விரியான் அறுநூற்றுப் பன்னிரண்டாகவும் (சிவஞானமாபாடியம் சூ. 2. அதி. 2) ஒருவாற்றான் வரையறுத்துக் கூறப்படுமாயினும், அளவின்றி விரிவது என்பதே உண்மையாகலின், ``அளவிலாப் பாவகத்தால்`` என்றும், இந்நினைவுகள் பலவும் கறங்கோலையின் முனைபோல உள்ளத்துக் கண் மாறி மாறி இடையறாது தோன்றி உயிரைப் பந்தித்தலின், ``அமுக்குண்டு`` என்றும், இப் பந்தத்தான் உண்மை ஞானம் தோன்றுதற்கு வழி இல்லாது போதலின், ``அறிவின்றி`` என்றும் அருளினார்.
``அளவிலாப் பாவகம்`` என்றது அறுநூற்றுப் பன்னிரண்டாய பேரெண் பற்றியே எனச் சிவாகமங்களோடு ஒருங்கியைய உரைத்த லும் ஒன்று.
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
(குறள் 337) எனவும்,
``உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன``
(நல்வழி - 28) எனவும் பிறவிடங்களில் பொதுப்படவே கூறப்பட்டன. வெறுவியன் - ஒருபயனும் இல்லாதவன். களவு - நல்லோரை வஞ்சித்தல்.

பண் :

பாடல் எண் : 9

பாங்கினொடு பரிசொன்றும்
அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர
உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து
வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை
அம்பலத்தே கண்டேனே.

பொழிப்புரை :

இறைவனையடையக் கூடிய முறையோடு அதனால் வரும் பயன் சிறிதும் அறியாத நாய்போன்ற என்னை மனத்தின்கண் ஞானஒளி மிகுந்து வளர முடிவில்லாத அன்பினை அருளிச்செய்து, வினைப்பயன் என்னை அடையாதவாறு நீக்கி, ஆணவ மலத்தை அடக்கி மேலான கருணையைக் கொடுத்தவனை நான்கு வேதங்களும் முழங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

பாங்கு - நன்மை. பரிசு - அதனை அடையும் முறை. `ஒளி உள்ளத்து ஓங்கி வளர` என்க. வாங்குதல் - நீக்குதல். `வினை வாங்கி` என மாறிக் கூட்டுக. மலம் - ஆணவம். `அருமறை நான்கினோடு ஆறங்கமும் பயின்று வல்ல` (தி.12 பெ.புரா. தில்லைவாழ். 5) அந்தணர்கள் நிறைந்திருத்தலின், ``நான்கு மறை பயில் தில்லை`` என்றார்.

பண் :

பாடல் எண் : 10

பூதங்கள் ஐந்தாகிப்
புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
விளங்குதில்லை கண்டேனே. 

பொழிப்புரை :

ஐம்பூதங்களாகிச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களாகி ஏனைய எல்லாப் பொருள்களுமாகி, அவற்றிற் கேற்ப வேறுபாடுகளுமாய்த் தான் வேறுபடுதலில்லாத பெருமை யுடையவனாய்த் துன்பங்களைப் போக்கி எம்மை ஆண்டு அருளிய ஒளிப்பொருளானவனைப் பச்சைமணி போன்றவனை வேதங்கள் வணங்கித் துதிக்கின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

``புலன்`` என்றது, பொறியை. பொருள், `ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்` என்பவற்றை. பேதங்கள் உடையவற்றை, ``பேதங்கள்`` என்றார். எனவே, `பல்வேறு வகைப்பட்ட பொருள்கள் எல்லாமாகியும்` என்றதாயிற்று. பேதமிலாப் பெருமை, பேதங்களை யுடைய பொருள்கள் எல்லாவற்றிலும் அவையேயாய்க் கலந்து நிற்பினும், தன் தன்மை திரியாத பெருமை. கேதங்கள் - துன்பங்கள்.

பண் :

பாடல் எண் : 1

கலந்து நின்னடியா ரோடன்று
வாளா களித்தி ருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்து நின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே. 

பொழிப்புரை :

உடையவனே! நீ என்னை ஆட்கொண்ட அந்நாளில் உன் அடியார்களுடன் கூடியிருத்தலை மாத்திரம் செய்து வீணே களித்திருந்தேன். நாள்கள் கழிந்து போயின. பிற்காலத்தில் அவர்களை விட்டுப்பிரிந்ததும் துன்பம் புகுந்து நிலைபெற்றது. அதனால் வாடிப் போனேன். கெடாத இன்பத்தைத் தருகிற ஒளி வடிவினனாகிய உன்னைக் காணுபொருட்டு வருந்தினேன். அடியேனாகிய எனக்கு உன்மீது அன்பு மிகும்படி அருள் செய்வாயாக.

குறிப்புரை :

பொருள்கோள்: `உடையானே, அன்று நின் அடியா ரோடு கலந்து வாளா களித்திருந்தேன்; காலங்கள் புலர்ந்து போன; பின்னாள் இடர் புகுந்து நின்றது; அதனால், உலவா இன்பச் சுடர் காண்பான் அலந்து போனேன்` அடியேற்கு ஆர்வம் கூர அருள் செய்யாய்`.
அன்று - என்னை ஆட்கொண்ட அந்நாள். வாளா - கவலை யின்றி. இறைவன் ஆட்கொண்ட காலத்தில் அடிகள் அடியார் பலரோடும் கலந்து கவலையின்றிக் களித்திருந்ததாக அருளின மையால், பின்னே அவர் இறைவனோடு செல்லாது நின்றது, உலகியல் மயக்கத்தாலன்றிப் பிறர்மாட்டு வைத்த இரக்கத்தால் என்பது பெறப்படும். காலங்கள் புலர்ந்துபோன - இத்தகைய களிப்பு நிலை யிலே பல காலங்கள் கழிந்தன. பின்னாள் - நீ அடியாருடன் மறைந் தருளியதற்குப் பின்னாய நாட்களில். இடர் - உலகியல் துன்பம். உலர்ந்து போனேன் - உள்ளமும், உடலும் வலியற்றுப் போயினேன். ``இன்பச் சுடர்`` எனப் படர்க்கையாகச் சொல்லப்பட்டதாயினும், `இன்பச் சுடராகிய உன்னை` என்பதே பொருள். அலந்துபோனேன் - அலைந்துநின்றேன். ஆர்வம் கூர - உன்மாட்டு எனக்கு அன்பு மிக. `அன்பு மிகுமாயின் நான் உன்னை அடைதல் திண்ணம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 2

அடியார் சிலர்உன் அருள்பெற்றார்
ஆர்வங் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியே னுடைய கடுவினையைக்
களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவா துருக அருளாயே. 

பொழிப்புரை :

உடையவனே! உன் அடியார்களில் சிலர் உன் னிடத்தில் அன்புமிக உன்னுடைய அருளைப் பெற்றார்கள். அடியவ னாகிய நானோ வீணே முடைநாற்றமுடைய பிணத்தைப் போன்று அழிவின்றி வெறுப்பினால் வயதுமுதிர்கின்றேன். இளகாத மனமுடை யேனுடைய கொடுமையான வினைகளை நீக்கி அடியேனுடைய உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.

குறிப்புரை :

`ஆர்வம் கூர்தலால் அருள் பெற்றார்` என்க. அவமே மூக்கின்றேன் - வீணாக மூப்படைகின்றேன். பிணத்தின் - பிணத்தின் கண். வெறுப்புக் காரணமாக உடம்பை, `பிணம்` என்றார். `முடிவின்றி இருந்து` என ஒருசொல் வருவிக்க. முனிவால் - அந்த வெறுப்போடே. `கருணைக் கடல் பொங்குமாறு உருக` என்க. ``உருக`` என்றது, `உருக்கம் உண்டாக` எனப் பொருள்தந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 3

அருளா ரமுதப் பெருங்கடல்வாய்
அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
உடையாய் பெறநான் வேண்டுமே. 

பொழிப்புரை :

எம்பெருமானே! உடையவனே! திருவருளாகிய அரிய அமுதம் போன்ற பெரிய கடலின்கண் உன் அடியார்கள் எல்லாம் புகுந்து திளைத்திருக்க அறியாமை நிறைந்த உடம்பாகிய இதனைச் சுமந்து இளைத்தேன். மயக்கம் பொருந்திய மனத்தை யுடைய ஒருபித்தன் வருகிறான் என்று இவ்வுலகில் என்னைப் பார்ப்பவர்கள் அஞ்சாவண்ணம் நான் வீடுபேறடையும் பொருட்டு உண்மையான அன்பினைப் பெறவேண்டும்.

குறிப்புரை :

அருள் ஆரமுதப் பெருங்கடல்வாய் - அருளாகிய அரிய அமுதப் பெருங்கடலின்கண். `அமுதப் பெருங்கடல்` என்பது இல்பொருள் உவமையாய், அருளுக்கு உருவகமாயிற்று, உன்மத்தன்- பித்தன். `உன்னை அடையும் மெய்யன்பை யான் பெறாவிடில், உலகியலோடு தொடர்பின்றி ஒழுகும் எனது ஒழுக்கத்திற்குப் பயன், என்னைக் கண்டவர்கள், `இஃதோ பித்தன் ஒருவன் வருகின்றான்` என்று அஞ்சி ஓடுவதன்றி வேறில்லை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 4

வேண்டும் வேண்டு மெய்யடியா
ருள்ளே விரும்பி எனைஅருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த
அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய்
தொண்ட னேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே.

பொழிப்புரை :

உன்னை வேண்டுகின்ற மெய்யடியார்களிடையே கருணையால் என்னை முன்னம் ஆட்கொண்டருளினை. அதனால் அடியேனது துன்பத்தையும் நீக்கின அமுதே! அருமையான பெரிய மணியாகிய முத்தே! தூண்டாத விளக்கின் சுடர்க்கொழுந்து போன்றவனே! அடியேன், விரும்பத்தகாத ஒன்றையும் விரும்பாது மிகுந்த அன்பினையே பொருந்துதல் உண்டாகுமோ? அதுவே எனக்கு வேண்டும்.

குறிப்புரை :

``வேண்டும்`` இரண்டனுள், முன்னது விரும்புதற் பொருளையும், பின்னது இன்றியமையாமைப் பொருளையும் தந்தன. மெய்யடியாரை ஆட்கொள்ளுதலை இறைவன் தனக்கு இன்றியமை யாக கடனாகக் கொள்வன் என்க. இரண்டும் பெயரெச்சங்கள். `மெய்யடியாருள்ளே ஒருவனாக` என ஒரு சொல் வருவிக்க. ``அருளால் ஆண்டாய்`` என்றதனால், `தகுதியால் ஆண்டிலை` என்பது பெறப்பட்டது. `அவ்வாறு ஆண்டு இடர்களைந்த அமுதே` என்க. ``உண்டாங்கொல்`` என்றதனை இறுதிக்கண் கூட்டுக. கொல், அசைநிலை. ``வேண்டாதொன்றும்`` என்றதில், `வேண்டாத` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வேண்டாதது - பயனில்லா தது. வேண்டாது - விரும்பாமல். மேவுதல் - பொருந்துதல்.

பண் :

பாடல் எண் : 5

மேவும் உன்றன் அடியாருள்
விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள்
பங்கா உன்றன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்து
ஆவி யாக்கை யானெனதென்
றியாது மின்றி அறுதலே.

பொழிப்புரை :

நீலமலரின் தன்மையமைந்த மீன் போன்ற கண்ணையுடைய உமையம்மையின் பாகனே! பொருந்திய உன்னுடைய அடியார் நடுவில் ஒருவனாய் நானும் உண்மையையே விரும்பி உன்னுடைய திருவருளால் பேரின்பமாகிய பழையகடலை அடைந்து உயிரும் உடம்பும் நான் எனது என்னும் பற்றுக்களும் சிறிது மில்லாது அற்றுப்போதல் பாவியாகிய எனக்கும் உண்டாகுமோ?

குறிப்புரை :

பொருள்கோள்: காவிசேரும் கயற்கண்ணாள் பங்கா, உன்றன் கருணையினால், யானும் மெய்ம்மையே விரும்பி, மேவும் உன்றன் அடியாருள் பரமானந்தப் பழங்கடல் சேர்ந்து, ஆவி, யாக்கை, யான், எனது என்ற யாதும் இன்றி அறுதல் பாவியேற்கும் உண்டாமோ. மேவும் - (உன்னை உண்மையாகவே) விரும்புகின்ற. மெய்ம்மையே விரும்பி. மெய்யாகவே அன்பு செய்து. `காவியும் கயலும்போலும் கண்ணாள்` என்பதனை இவ்வாறு ஓதினார். காவி - நீலோற்பலம். `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``யானும்`` என்றது, ``அறுதல்`` என்ற தொழிற்பெயர் எழுவாய்க்கு அடையாய் வந்தது. `என்றவற்றுள் யாதும் இன்றி` என்க.

பண் :

பாடல் எண் : 6

அறவே பெற்றார் நின்னன்பர்
அந்த மின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன்
புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு
பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே.

பொழிப்புரை :

உடையவனே! உன் அன்பர்கள் நிலைபெயராத, நீங்காத வேறுபடாத, மறப்பும் நினைப்பும் இல்லாத, எல்லையில்லாத அழிவு இல்லாத பேரின்பக் கடலை முற்றிலும் பெற்றவர்களாய் முடிவின்றி மனம் உருகவும் கீழ்த்தன்மையுடைய நாய் போன்ற யான் அவர்கள் கூட்டத்துக்கு வெளியே கிடந்து வருந்துகின்றேன். ஆகையால் அவ்வின்பக் கடலைப் பெறுவதற்கு ஏதுவான உண்மை அன்பை யான் பெறவே வேண்டும்.

குறிப்புரை :

அறவே - முழுதும். `பெற்றாராகிய அன்பர்` என்க. பெறுதலுக்கு, `அருள்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. அந்தம் இன்றி - இடையறாது. `யான் மெய்யன்பு பெறவே வேண்டும்` என்க. ``பேரா`` முதலிய ஏழும் இன்பத்திற்கு அடை. பேர்தல், அடைந்தோர் பின் நீங்குதலும், ஒழிதல் தான் நீங்குதலுமாம். பிரிவு - வேறாதல். அளவு - எல்லை. மாளுதல் - அழிதல். ஏழ் அடையாலும், ஏழ் இன்பக் கடல் கூறியவாறாக இதற்கு நயம் உரைப்பர். ``கடலே`` என்றது, விளி. `அன்பைப் பெற்றால், அவ் வின்பக்கடலைப் பெறலாம்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 7

கடலே அனைய ஆனந்தம்
கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்றிங்
கிருத்த லழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளுதியென்
றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச்
சோதீ இனித்தான் துணியாயே. 

பொழிப்புரை :

உடையவனே! ஒளிப்பொருளானவனே! கடல் போன்ற அவ்வளவு பேரானந்தத்தை, உன்னைப் பார்த்த அடியார் எல்லோரும் அள்ளிப் பருக, அடிமையாகிய நாயேன், துன்பத்தையே அதிகரிக்கச் செய்து, வருந்தி இவ்வுலகத்தில் இருப்பது அழகாகுமோ? நீ தான் எனக்கு அருள் செய்வாய் என்று அறிந்து, அதுபற்றி உன்னிடம் வேண்டிக்கொள்ளாது இருந்து, பிரிந்துகெட்டேன். கதிரவன் போன்ற திருவருளால், என் அறியாமையாகிய இருள் நீங்கும்படி இனியாவது நீ திருவுளம் பற்றுவாயாக.

குறிப்புரை :

கண்டார், உன்னைக் கண்டவர். ``இடர்`` என்றது அதற்கு ஏதுவாவனவற்றை. ஏசற்று - துன்புற்று. நீயே அருளுதி என்று- நான் கேளாமல் நீயே தருவாய் என்று நினைத்து. உணர்த்தாதொழிந்து- கேளாமல்விட்டு.
கழிந்தொழிந்தேன் - இத்துணை நாளும் விலகி விட்டேன். ``சுடர் ஆர் அருளால்`` என்றதனை, `அருள் அருஞ் சுடரால்` எனப் பின்முன்னாக்கி உரைக்க.
இருள், `அறியாமையாகிய இருள்` எனச்சிறப்புருவகம். துணியாய் - சிதைத்துவிடு. அறியாமை நீங்கின், உளதாம் என்க.

பண் :

பாடல் எண் : 8

துணியா உருகா அருள்பெருகத்
தோன்றுந் தொண்ட ரிடைப்புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன்
சிவனே நின்று தேய்கின்றேன்
அணியா ரடியார் உனக்குள்ள
அன்புந் தாராய் அருளளியத்
தணியா தொல்லை வந்தருளித்
தளிர்பொற் பாதந் தாராயே. 

பொழிப்புரை :

சிவபெருமானே! துணிந்து, மனம் உருகி, உன் அருள் பெருகும்படி, விளங்கும் அடியாரிடையே கூடி, வலிமை பொருந்திய, மூங்கிலைப் போன்ற, சித்தத்தையுடைய யான், இருந்து மெலிகின்றேன். உன் உள்ளத்தில் அருள்மிகுந்து, கூட்டமாகப் பொருந்திய, உன் அடியார்கள் உன்பால் கொண்டுள்ள மெய்யன்பையும் எனக்குத் தருவாயாக. காலம் தாழ்த்தாது விரைவாக எழுந்தருளி, தளிர் போன்ற பொன்னடிகளையும் தருவாயாக.

குறிப்புரை :

துணியா - உன்னையே பொருளாகத் துணிந்து. உருகா- மனம் உருகி. அருள் பெருக - அதனால் உனது திருவருள் பெருகப் பெற்று. தோன்றும் - காணப்படுகின்ற. `இத்தகைய அடியாரிடையே அன்பில்லாத யான் புகுந்தேன்` என்றது, முன்பு ஆட்கொள்ளப் பட்டமையை. திணி ஆர் மூங்கில் - உட்டுளை இல்லாத மூங்கில்; இது வலிய மனத்திற்கு உவமையாயிற்று. உனக்கு உள்ள - உன் பொருட்டுக் கொண்டுள்ள. `அடியார்க்கு` என்பதே பாடம் போலும்! ``அன்பும்`` என்ற உம்மை எதிரது தழுவிய எச்சம். அருள் அளிய - உனது கருணை மிக்கு நிகழ. இதனைத் தாப்பிசையாய் முன்னுங்கூட்டி, முன்னர் எதிர்காலமாகவும், பின்னர் இறந்த காலமாகவும் உரைக்க. தணியாது- மெத்தென வாராது.

பண் :

பாடல் எண் : 9

தாரா அருளொன் றின்றியே
தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும்
அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத்
திருத்தி ஆண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை
வைக்க வேண்டும் பெருமானே.

பொழிப்புரை :

பெருமையுடையோனே! எமக்குத் தாராத அருள், ஒன்றும் இல்லாது முழுவதும் தந்தனையென்று, உன்னடியார் எல் லோரும் மகிழ்ந்திருந்தனர். அடியேனாகிய யான் மட்டும் வேற்றவர் போல, வருந்துவேனோ? சிறப்புப் பொருந்திய உன் திருவருளால், என் சித்தத்தைத் திருத்தி, ஆண்டருளின சிவலோக நாதனே! பேரின்பமான நிலையில் என்னை நீங்காமல் வைத்தல் வேண்டும்.

குறிப்புரை :

தமர் - சுற்றத்தார்; அடியவர். ஆராநின்றார் - இன்பத்தை நிரம்பத் துய்க்கின்றார்கள். அடியேனும் - அடியேன் ஒருவன் மட்டும். பேராமை - நீங்காமல்.

பண் :

பாடல் எண் : 10

மானோர் பங்கா வந்திப்பார்
மதுரக் கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால்
நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்தே
உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான்
கொடியேற் கென்றோ கூடுவதே.

பொழிப்புரை :

மானைப் போன்ற பார்வையையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனே! வந்திப்பார்க்கு அஃதாவது வணங்குவோர்க்கு இனிய கனி போன்று இன்பம் அளிப் பவனே! இறைவனே! நம்பியே! மனம் நெகிழாமல் நான் துளைக்கப் படாத ஒரு சுரைக்காயைப் போன்று இருந்தால், இதனால் நீ வாழ்ந்து விட்டாயோ? உடம்பிலே முன்னரே புகுந்த உன்னையறிந்து, இளகிப் பூரிக்கும் மனத்தை, நீ அருள் புரியும் காலமானது கொடுமையை யுடைய எனக்கு, கூடுவது எப்பொழுதோ?

குறிப்புரை :

மான் - பெண். வந்திப்பார் - வணங்குவார்க்கு, மனம் நெகா - மனம் உருகாது, தோளாச்சுரை - துளையிடாத சுரைக் குடுக்கை. இதனுள் ஒன்றும் புகாது; ஆதலின், அன்பும் அருளும் புகும் நிலையில்லாதவர்கட்கு இஃது உவமையாகச் சொல்லப்படும். நம்பி - நம்பியே. இத்தால் வாழ்ந்தாயே - என்னை இந்நிலையில் வைத்து விட்ட இதனால் நீ வாழ்ந்தே விட்டாய்போலும்! இஃது ஊடியுரைக்கும் சொல்.
``ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே``
(தி. 7 ப.95 பா.1) என்றார் நம்பியாரூரரும்.

பண் :

பாடல் எண் : 11

கூடிக் கூடி உன்னடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடி வாடி வழியற்றேன்
வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு
கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
ஆடி ஆடி ஆனந்தம்
அதுவே யாக அருள்கலந்தே. 

பொழிப்புரை :

உன் அடியார்கள், சேர்ந்து கூத்தாடுவர்; நகைப்பார்; களிப்பாராக; நெறி கெட்டவனாகிய நான் மட்டும் வாட்ட முற்று , பட்ட மரத்தைப் போன்று இருப்பேனோ? பிணங்கிப் பிணங்கி, உடையவனாகிய உன்னுடன், சேர்ந்து, மனமுருகி, பூரித்து, நெகிழ்ந்து, கூத்தாடிக் கூத்தாடி, ஆனந்தமயமாகும்படி, ஒன்றாய்க் கலந்து அருள் செய்வாயாக.

குறிப்புரை :

குனிப்பார் - கூத்தாடுவார். `களிப்பாராக` என்பது ஈறு கெட்டு நின்றது. வழியற்றேன் - பிழைக்கும் வழியாதும் இல்லாத யான். `வாடி வாடி வற்றல் மரம்போல் நிற்பேனோ` என்க. வற்றல் மரம் - உயிரற்றுக் காய்ந்துபோன மரம். `வற்றல்` என்பது மரவகைகளுள் ஒன்று எனவும், அவ்வகையினதாகிய மரம், தளிர் முதலியன இன்றி வறுங்கொம்பாகவே வளரும் எனவும் கூறுவாரும் உளர்.
ஓகாரம், இரக்கப் பொருட்டு. `உடையாயொடு ஊடி ஊடிக் கலந்து` என்க. உடையாயொடு - தலைவனாகிய உன்னோடு. ``ஊடுதல் காமத்திற் கின்பம்`` (குறள்- 1330.) என்பது பற்றி இறை இன்பத்தை அவ்வின்பத்தோடு ஒப்பிப்பார், இங்ஙனம் அருளிச் செய்தார். இறை இன்பத்தை இவ்வாறு காம இன்பத்தோடு ஒப்பித்துக் கூறுதல், உலகத்தார் உணரும் பேரின்பமாகிய அவ்வின்பத்தினியல்பு பற்றி, உண்மைப் பேரின்பமாகிய இறைவனின்பத்தினது சிறப்பை உணர்தற் பொருட்டாம். இறை இன்பத்தில் ஊடுதலாவது, ``உங்களுக்காள் செய்யமாட்டோம்`` (தி.7 ப.5 பா.2) என்றாற்போல, உரிமை தோன்றச் சிலவற்றை வலியுறுத்தி வேண்டல். ``அருள் கலந்து`` என்றதனை, `கலந்து அருள்` என மாற்றிப் பொருள் கொள்க. கலந்து - என் முன் தோன்றி. அருள் - அருள்செய். இதன் ஈற்றுச்சொல், முதல் திருப் பாட்டின் முதற்சொல்லாய் அமைந்து நிற்றல் காண்க.

பண் :

பாடல் எண் : 1

குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
அம்மா னேஉன் னடியேற்கே.
 

பொழிப்புரை :

உடையவனே, உமையம்மையின் தலைவனே! என்னை ஆள்பவனே! பிறை தங்கிய சடையையுடையவனே! தலைவனே! பழைய, கொடிய வினையாகிய நோய் என்னை வாட்டினால், நீ காத்தருளவில்லை. ஆதலால், கொடுமையான வினையையுடையேன் நானாக முயன்றால், நன்மை உண்டாகுமோ? நான் பிழை செய்தால் அதனை மன்னித்துக் காக்க வேண்டாவோ? முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தால் உன் அடியானாகிய எனக்கு, நீ அருள் செய்யாது போவது தகுதியோ?

குறிப்புரை :

`கொடுவினையேன் (உன்னைக்) குழைத்தால், பண்டைக் கொடுவினைநோய் காவாய்` எனக் கூட்டுக. குழைத்தால் - உன் உள்ளம் குழையுமாறு இரந்து வேண்டுவேனாயின்; என்றது, `அங்ஙனம் வேண்டி நிற்கின்றேனாதலின்` என்றபடி, வினைநோய் - வினையாகிய நோய். காவாய் - வந்து சாராதபடி தடுத்தருள். உழைத்தால் - அவ்வினையால் நான் துன்புறுவேனாயின். உறுதி உண்டோ - உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டோ. பிழைத்தால் - வினைவந்து மீளப் பற்றுதற்கு ஏதுவாக யான் பிழைசெய்துவிட்டேன் என்றால். அருளாதொழிவதே - கருணை செய்யாதுவிடுதல் பொருந்துவதோ. ``அம்மானே``, ``உன் அடியேற்கே`` என்ற அடிமையாகிய யான் பிழை செய்தால் அதனைப் பொறாதொழிதலும், முறையோ என்று அழைத்தால் கேளா தொழிதலும் தலைவனாகிய உனக்குப் பொருந்துவனவோ என்னும் குறிப்பினதாகிய உடம்பொடு புணர்த்தல்.

பண் :

பாடல் எண் : 2

அடியேன் அல்லல் எல்லாம்முன்
அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎம்
கோவே ஆஆ என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத
தெத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா
தொறுத்தால் ஒன்றும் போதுமே. 

பொழிப்புரை :

கொடி போன்ற இடையையுடைய உமையம்மை யின் பாகனே! எங்கள் தலைவனே! எங்கள் சிவலோக நாதனே! உடையவனே! அடியேனது துன்பங்கள் எல்லாம் நீங்கும்படி, முன்னே வந்து ஆண்டருளினை என்று எண்ணி மகிழ்ந்து இருந்தேன். அங்ஙனம் இருக்க ஐயோ என்று மனம் இரங்கி, துன்பத்தைத் தருகின்ற உடம்பை அழித்து இன்பத்தைத் தாராது இருத்தல் ஏன்? விரைவில் அழைத்து உன் பணியில் நிற்கச் செய்யாது, உடம்பிலே வைத்துத் துன்புறுத்தினால் மட்டும் போதுமோ?

குறிப்புரை :

``முன்`` என்றனை முதலிற் கூட்டுக. ``அல்லல் எல்லாம் அகல ஆண்டாய் என்று இருந்தேன்`` என்றது, `ஆண்டபின்பும் என்னை அல்லற்பட வைப்பாய் என்பதை அறிந்திலேன்` என்றபடி. எத்துக்கு, `எற்றுக்கு` என்பதன் மரூஉ. `அடிமையைக் குற்றம் நோக்கி ஒறுத்தலும், மற்றுப்பற்று இன்மை நோக்கி அருளுதலும் ஆகிய இரண்டும் செயற்பாலனவாக அவற்றுள் ஒறுத்தலாகிய ஒன்றைமட்டும் செய்தொழிவது தலைவராயினார்க்கு நிரம்புமோ` என்பார், ``கூவிப் பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமோ`` என்று அருளிச் செய்தார். ``ஒன்றும்`` என்றதற்கு முன்னர், `அஃது` என்னும் சுட்டுப் பெயர் வருவிக்க. `போது` என்பது, `நிரம்பு` என்பதனோடு ஒரு பொருட்டாய வினையடி. இதனினின்றும் பல வினைவிகற்பங்களும் பிறக்கும். இதற்கு, `பற்று` என்னும் முதனிலை ஒருபொருட் கிளவி யாகக் கூறப்படும். `போதாது, பற்றாது` என்பவற்றை, `காணாது` என வழங்குவர் இக்காலத்தார்.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றும் போதா நாயேனை
உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான்
ஏழை பங்கா எம்கோவே
குன்றே அனைய குற்றங்கள்
குணமாம் என்றே நீகொண்டால்
என்தான் கெட்ட திரங்கிடாய்
எண்தோள் முக்கண் எம்மானே. 

பொழிப்புரை :

உமையொரு பாகனே! எங்கள் தலைவனே! எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையுமுடைய எம் பெரியோனே! ஒன்றுக்கும் பற்றாத நாய் போன்ற என்னை அன்று உய்யக் கொண்டருளிய உன்னுடைய கருணையானது, இன்று இல்லாமற் போய்விட்டதோ? மலையைப் போன்ற தவறுகளையும், குணங்கள் என்றே நீ ஏற்றுக் கொண்டால், எனக்கு எதுவும் இல்லை. ஆகையால் இரங்கியருள்வாயாக.

குறிப்புரை :

`ஒன்றற்கும்` என உருபு விரிக்க. `ஒன்றற்கும் நிரம்பாத` என்றது, ஒரு பொருளோடும் ஒருநிகராதற்கு நிரம்பாத; எல்லாப் பொருளினும் கீழ்ப்பட்ட` என்றபடி. `இன்று இன்றிப் போய்த்தோ`` எனப் பின்னர் வருதலின், ``உய்யக் கொண்ட`` என்பதற்கு, `அன்று` என்பது வருவிக்கப்படும். `போயிற்று` என்பது `போயித்து` என மருவிப்பின் `போய்த்து` என்றாயிற்று. `ஆயிற்று` என்பதும் இவ்வாறே `ஆய்த்து` என வருதல் உண்டு. இவ்விரண்டும் இவ்வாறன்றி இடைக் கண் இன் பெறற்பாலன சிறுபான்மை தகர ஒற்றுப் பெற்று வந்தன என்றலும் ஒன்று. ஓவும், தானும் அசை நிலைகள். ஏழை - பெண், `எளியவர் என்பது நயம். `நீ கொண்டால் என்தான் கெட்டது` என்றது. இறைவனது தன்வயம் உடைமை மாத்திரையே குறித்ததன்றிக் கோட்ட முடையனாகக் கூறியதன்றாம். அஃது அவன் அங்ஙனங் கொள்ளாமை பற்றிக் கூறியவதனானே பெறப்படும். இறைவன் தன் அடியார்கள், `பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கிவிடும்` (சிவஞானசித்தி சூ.10.1.) என்பவாகலின், அவற்கும் கோட்டமுண்மை பெறப்படு மன்றோ எனின், படாது; என்னையெனின், பாதகத்தைச் செய்திடினும்` என்பது, அருள் வழிக் கண் தம்மிழப்பில் நின்று செய்தலையாக லானும் அவ்வாறு தம்மை இழவாது, `பிழையுளனபொறுத்திடுவர்` (தி.7ப.89பா.1) என்று கருதிப் பிழைப்பின் பொறாது, `ஒன்ன லரைக் கண்டாற்போல்` (தி.7ப.89பா.9) உதாசீனம் செய்து போதல் ஆளுடைய நம்பிகளிடத்து நிகழ்ந்த நிகழ்ச்சியான் நன்கறியப்படுத லானும் என்க. எனவே, அடிகள் தாம் செய்தனவாகக் கூறும் குற்றங்களைத் தம் வழியினின்று செய்தனவாகவே அவர் கூறுதலின், `அவற்றைக் குணமாகக் கொண்டால் கெடுவதொன்றில்லை` என்றது, இறைவனது தன்வயமுடைமை மாத்திரையே பற்றித் தமது ஆற்றாமை மிகுதியாற் கூறியதேயாம். அன்னதாயினும், முன்னும், பின்னும் உளவாகிய அவரது திருமொழிகள் அவர் திருவருள் வழிநிற்றலிற் பிறழாமை நன்குணரப்படுதலின், அவரைத் தற்போதமுடையரெனக் கருதி மலைதல் கூடாமையறிக. `கெடுவது` என்னும் எதிர்காலச் சொல், `கெட்டது` எனத் தெளிவு பற்றி இறந்த காலமாகச் சொல்லப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மானேர் நோக்கி மணவாளா
மன்னே நின்சீர் மறப்பித்திவ்
ஊனே புகஎன் றனைநூக்கி
உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை
அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளும்நாள்
என்றென் றுன்னைக் கூறுவதே. 

பொழிப்புரை :

மானைப் போன்ற பார்வையுடைய உமையம்மை யின் கணவனே! நிலைபெற்றவனே! தலைவனே! உனது பெருமையை, மறக்கும்படிசெய்து, இவ்வுடம்பின் கண்ணே புகுமாறு, என்னைத் தள்ளி, இவ்வுலகில் அலையும்படி செய்துவிட்டாய். உன் செயல் இதுவாயின் இனி நீயே அடியேனது பேதைமையை உணர்ந்து அருள் புரிந்து என்னை மீள உன்பால் அழைத்துக் கொள்ளும் நாள் எப்போது? அதன்பின் நான் உன்னைப் புகழ்ந்து பாடுவது எப்போது?

குறிப்புரை :

மன்னே - தலைவனே. சீர் - புகழ், என்றது, அதனைச் சொல்லுதலை. நூக்கி - வீழ்த்தி. மலசத்திகளைத் தூண்டிவிடுவதையும் இறைவனே செய்வதாகக் கூறுவர் ஆசிரியராகலின், ``நின்சீர் மறப்பித்து`` எனவும், `ஊனேபுக நூக்கி`` எனவும், `உழலப் பண்ணு வித்திட்டாய்`` எனவும் அருளிச் செய்தார்,
``சிந்தையைத் திகைப்பி யாதே
செறிவுடை அடிமை செய்ய(தி.4 ப.23 பா.4) எனவும்,
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ`` (தி.4 ப.23 பா.9)
எனவும்,
``நின்னை எப்போதும் நினையலொட் டாய்நீ
நினையப்புகின்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்தொன்று
நாடுவித்தி`` (தி.4 ப.112 பா.4)
எனவும் அருளிச் செய்தனவும் காண்க. இங்ஙனம் மலசத்திகளைத் தூண்டி, அவை உயிரினது அறிவை மறைக்குமாறு செய்யும் சத்தியையே, `திரோதான சத்தி` என்றும், அவ்வாற்றால் நிகழும் மறைப்பையே, ஐந்தொழில்களுள் ஒன்றாய மறைத்தல் என்றும் மெய்ந்நூல்கள் கூறும். ஆனால் - நிகழ்ச்சி இதுவாகுமாயின். ``என்று`` இரண்டனுள் பின்னதனை இறுதிக்கண் கூட்டுக. கூறுவது - மறவாது நின்று புகழ்வது.

பண் :

பாடல் எண் : 5

கூறும் நாவே முதலாகக்
கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்பும்நீ
தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா
திகைத்தால் தேற்ற வேண்டாவோ.

பொழிப்புரை :

சிவலோக நாதனே! பேசுகின்ற நாக்கு முதலாக சொல்லப்படுகின்ற கருவிகள் எல்லாம் நீயே! தெளிவடையும் வழியும் நீயே! தெளியாமல் திகைத்தலைச் செய்பவனும் நீயே! தீமை நன்மைகள் முழுவதும் நீயே! உண்மையாக உன்னைப் பற்றிச் சொன்னால் இவ்விடத்தில் வேறு ஒரு பொருள் சிறிதும் இல்லை. ஆதலால் நான் தெளிவை அடையும் வழி உன்னையன்றி ஏது? ஆகையால் யான் திகைப்படைந்தால், என்னை நீ தெளிவிக்க வேண்டாவோ?

குறிப்புரை :

``உன்னை விரித்துரைக்கில் `` என்றதனை, ``கூறும் நாவே`` என்றதற்கு முன்னர்க் கூட்டி, ``உன்னை`` என்றதற்கு, `உன் இயல்பை` என உரைக்க. ``உரைக்கில்`` என்றமையான், அங்ஙனம் உரைக்கும் நாவை முதலாவதாகக் கூறினார். `மனம், மொழி, மெய்` எனக் கரணம் மூன்றாகலின்` நாவொழிந்த பிற கரணங்கள் இவை என்பது உணர்க. `கரணம்` எனினும், `கருவி` எனினும் ஒக்கும்.
தேறுதல் - தெளிதல். வகை - வழி; உபாயம். திகைத்தல் - கலங்குதல், ``தேறும் வகை`` என்றதனால், ``திகைப்பு`` என்றதும். திகைக்கும் வழியையாயிற்று. முன்நிற்கற்பாலனவாகிய திகைப்பும் தீமையும், செய்யுள் நோக்கிப் பின்னின்றன. வேறு ஓர் பரிசு - உனக்கு வேறாய் நிற்பதொரு தன்மை. தன்மையுடையதனை, `தன்மை` என்றார்.
``ஒன்றில்லை`` என்றது `யாதும் இல்லை` என்னும் பொருட்டு; உம்மை. தொகுத்தல். ``மெய்ம்மை`` என்றதன்பின், `ஆதலின்` என்பது வருவித்து, `இஃது உண்மையாதலின், நீ தேற்றினா லன்றி யான் தேறும் வகையாது` என உரைக்க.
இதன்பின்னும், `அதனால்` என்பது வருவிக்க. ``தேற்ற`` என்ற செயவெனெச்சம் தொழிற்பெயர்ப் பொருள்தந்தது. ``வேண் டாவோ`` என்னும் எதிர்மறை வாய்பாடு, `உனக்கு இன்றியமையாக் கடனன்றோ, என்பதை விளக்கி நின்றது. இஃது இறைவனது எல்லாமாய் நிற்கும் இயல்பை எடுத்தோதி, தமது மயக்கத்தைப் போக்கியருள வேண்டும்` என வேண்டியது.

பண் :

பாடல் எண் : 6

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே. 

பொழிப்புரை :

உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே! மேலும் அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே! உன்னைக் காண விரும்பிய பிரமன், திருமால் என்பவருக்கும் அருமையாய் நின்ற வனாகிய நீ நீயாகவே விரும்பி, என்னையாளாகக் கொண்டனை. என் பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை; அதனையே யானும் விரும்புவதல்லது, நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உளதாகு மெனில் அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பே யன்றோ?

குறிப்புரை :

வேண்டத் தக்கது - இரந்து பெறத்தக்க பொருள். `தாம் சாவ மருந்துண்ணார்` என்பதுபோலத் தமக்கு நன்மை பயப்பதனை யன்றித் தீமை பயப்பதனை ஒருவரும் இறைவன்பால் வேண்டார் எனினும் தீமை பயப்பதனைத் தீமைபயப்பது என்று அறியும் ஆற்றல் இலராகலின், இறைவன்பால் வேண்டத் தக்கது இதுவென்பதனையும் அவனே அறிதலன்றி, உயிரினத்தவருள் ஒருவரும் அறியார் என்க. ``வேண்ட`` என்றது. `தம் அறியாமையால் உயிர்கள் எவற்றை வேண்டினும்` என்றவாறு. தீமைபயப்பதனையும் இறைவன் மறாது தருதல்` அவற்றின்கண் பற்று நீங்குதற்பொருட்டாம். வேண்டும் அயன் மால் - உன்னை அளவிட்டறிய விரும்பிய பிரமனும் மாலும். இவர்க்கு அரியனாதலைக் கூறியது, தமக்கு எளிவந்தமையைப் புலப்படுத்தற்கு. எனவே, `அரியோயாகிய நீ` என ஒரு சொற்றன்மைப் படுத்து உரைக்கப்படும். ``பணி கொண்டாய்`` என்றதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வேண்டி - எனக்கு உரியதாகக் கருதி. அருள் செய்தாய் - உணர்த்தியருளினாய். `அதுவே யானும் வேண்டினல்லால்` என மாற்றுக. வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் - பயிற்சிவயத்தால் ஒரோவொருகால் நான் உன்பால் இரக்கும் பொருள் வேறு ஒன்று இருக்குமாயின் அதுவும் உன்றன் விருப்பன்றே - அவ்வாறிருத்தலும் உன்றன் திருவருளே யன்றோ; என்றது, `வேண்டத் தக்கது அறிவோய் நீ என்பது முதலியவற்றை யான் அறிந்து உன் அருள்வழியே நிற்பேனாயினும், ஒரோவொருகால் பயிற்சி வயத்தால் அந்நிலையினின்றும் பிறழ்தலும் உனது திரோதான சத்தியின் செயலே` என்பதை விண்ணப்பித்து, `அக்குற்றத்தைப் பொறுத்து என்னை நின்பால் வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்` என வேண்டியதாம். இதன் இறுதிப் பகுதிக்கு மாதவச் சிவஞான யோகிகள் இவ்வாறே பொருள்கொள்ளுதல் காண்க. (சிவஞான சித்தி.சூ.10.3.)

பண் :

பாடல் எண் : 7

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
 

பொழிப்புரை :

எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய, எம் தலைவனே! மலையை ஒத்த பெரியோனே! என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும் உன்னுடையனவாக ஏற்றுக் கொள்ளவில்லையோ? அங்ஙனமாக இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ? உண்டாகாது. ஆதலின், எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும், தீமையே செய்வாய் எனினும் இத்தன்மைக்குத் தலைவன் யானோ?

குறிப்புரை :

``அன்றே`` என்றதனை இறுதிக்கண் கூட்டி, அதன்பின், `ஆதலின், நின் திருவுள்ளத்திற்கு ஏற்றது செய்க` என்னும் கையறு கிளவியாகிய குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. இவ்வாறன்றி, வலியுறுத்தற் பொருட்டு, `அன்றே, என்னை ஆட்கொண்ட போதே` என இருகாற் கூறினார் என்றலுமாம். ஆவியாவது, சீவபோதம். உடைமையாவது, பிராரத்தமும், ஆகாமியமும் ஆகிய வினைகள். இறைவனுக்கு ஆட்பட்டார் பிற உடைமையை முன்னரே துறந்தமை யின், அவர்க்கு உடைமையாவன இவையன்றி இல்லை என்க. சிறுபான்மை எக்காரணத்தாலேனும் பிற உடைமை உளவாயின், அவையும், `உடைமை` என்பதனுள் அடங்கும். உடைமையை, `பொருள்` என்று கூறி, `உடல், பொருள், ஆவி மூன்றையும் இறைவன் பால் ஆக்குவிப்பவரே ஞானியர்` என்பது வழக்கு. `ஆவியும் உன்னுடையதாயினமையின், இப்பொழுது எனக்கென்று வரும் இடையூறு ஒன்று இல்லை` எனவும், `வருகின்ற இடையூற்றைத் தடுத்தும், வந்த இடையூற்றைப் போக்கியும் என்னை நான் காத்துக்கொள்ளுதலும், காவாது தீமையுறுதலும் ஆகிய செயல்களும் எனக்கு இல்லை; எல்லாவற்றிற்கும் உரியவன் நீயே` எனவும் கூறுவார், இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ? நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகம்` என்றும் அருளினார்.
``செய்வாய்`` என்றவை, `உன் விருப்பப்படி செய்தற்குரியை` என்னும் பொருளன. நன்று, பிழை என்னும் இரண்டனுள் தம்பால் செய்யப்படுவது ஒன்றேயாதலின், ``இதற்கு`` என ஒருமையாற் கூறப்பட்டது. நாயகம் - தலைமை; இஃது ஆகுபெயராய், `தலைவன்` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 8

நாயிற் கடையாம் நாயேனை
நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான்
என்ன தோஇங் கதிகாரம்
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணையுடைய பெருமானே! நாயினும் கீழான, அடியேனை விரும்பி, நீயே அடிமை கொண்டாய். மாயா காரியமான இப்பிறப்பை உன்னிடம் ஒப்புவித்து உன் ஆணைவழி நடப்பதன்றி ஆராயும் தன்மை நானோ உடையேன்? இவ்விடத்தில் அதிகாரம் என்னுடையதோ? இல்லை; ஆதலால் என்னை நீ இந்த உடம்பில் வைப்பினும் வைப்பாய். உன்னுடைய திருவடி நீழலில் சேர்ப்பினும் சேர்ப்பாய். அஃது உன் விருப்பம்.

குறிப்புரை :

நயந்து - விரும்பி. `நீயே நயந்து முன்பு என்னை ஆட்கொண்டாய்; அதனால், இன்றும் நீ என்னைப் பிறப்பில் விடினும் விடுவாய்; உன் திருவடிநிழலில் இருத்தினும் இருத்துவாய்; ஆதலின், உடம்பையும் உனக்குரியதாகவே வைத்து நான் வாளா இருப்பதன்றி, என்னை என்னசெய்தல் வேண்டும் என்று ஆராய்ந்து முடிவு செய்தற்கு உரியவன் நான்தானோ? அதிகாரம் இங்கு என்னதோ? உன் விருப்பப் படி செய்தருள்` என்க. `உன் விருப்பப்படி செய்தருள்` என்பது குறிப்பெச்சம்.
மாயப் பிறவி - நிலையில்லாத உடம்பு. ஓகாரம் வினாப் பொருளிலும், தான் பிரிநிலை ஏகாரப் பொருளிலும் வந்தன. அதிகாரம் - தலைமை.

பண் :

பாடல் எண் : 9

கண்ணார் நுதலோய் கழலிணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நா
னவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே. 

பொழிப்புரை :

கண்ணமைந்த நெற்றியையுடையோனே! தலைவனே! என் கண்கள் இன்பம் மிகும்படி, உன் இரு திருவடிகளை யும் தரிசித்தேன். வேறொன்றையும் எண்ணாமல் இரவிலும் பகலிலும் யான் அந்தத் திருவடிகளையே நினைப்பதல்லாது உடம்பை மண்ணின்மீது கழித்தொழிக்கும் விதத்தையும், வந்து வந்து உன்னுடைய திருவடியில் சேரும் விதத்தையும் நினைக்க நான் உரிமையுடையேனோ? உடையேன் எனின், எனது அடிமைத் தன்மை மிகவும் அழகுடையது!

குறிப்புரை :

`கண்கள் களிகூரக் கண்டேன்` என்க. ``எண்ணாது`` என்றதற்கு, `வேறொன்றையும் எண்ணாது` எனச் செயப்படுபொருள் வருவித்துரைக்க. `யாக்கையை மண்மேல் விடுவது எவ்வாறு என்றும், நான் வானில் வந்து உன் கழற்குப் புகுவது எவ்வாறு என்றும் ஆராய்தற்கு உரிமை உடையேனோ? உடையேனாயின், நான் உன்னிடத்துப்பட்ட அடிமைத் தன்மை மிகவும் அழகுடைய தாமன்றோ` என்றபடி.
`இங்ஙனங் கூறவே, இவற்றை எண்ணி, பொருந்துவது செய்தற்குரியவன் தலைவனாகிய நீயே` என்பது பெறப்படும். ``கழற்கு`` என்றதனை, `கழற்கண்` எனத் திரிக்க. ``அழகுடைத்து`` என்றது, `அழகிலது` என்னும் குறிப்புமொழி.

பண் :

பாடல் எண் : 10

அழகே புரிந்திட் டடிநாயேன்
அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி
காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப்
புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே
கோனே என்னைக் குழைத்தாயே. 

பொழிப்புரை :

பழமையானவனே! அழகனே! அந்தணக் கோலம் உடையவனே! இறைவனே! உன்னுடைய அழகையே காண விரும்பி, உன் அடிமையாகிய யான் நாய் போன்று அழுகின்றேன். விளங்கு கின்ற உன்னுடைய திருமேனியைக் காட்டி, என்னையாளாகக் கொண்டாய். புகழை மிக உடைய உன் திருவடிப் பேற்றினை எனக்கு நீ கொடுத்தருளாமல் என்னை வாடச் செய்தாயே! இது முறையோ!

குறிப்புரை :

இங்கும், ``அழகு`` என்றது, அழகல்லாததையே என்க. புகழே பெரிய பதம் - புகழ் பெரிதாகிய நிலை; சிவலோகம். குழைத்தாய் - வாடச்செய்தாய்; `இது, பணி கொண்ட உனக்கு அழகோ` என்பது குறிப்பெச்சம். இதனுள் மூன்றாமெழுத்தெதுகை வந்தது. இடையிரண்டடிகளில் ஏனையடிகளின் மூன்றாமெழுத்து வந்தமையும் நோக்கற்பாற்று.

பண் :

பாடல் எண் : 1

பைந்நாப்பட அரவேரல்குல்
உமைபாகம தாய்என்
மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக்
கேடாவிடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த்
திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாள்களித் தெந்நாள்இறு
மாக்கேன் இனியானே.

பொழிப்புரை :

பசிய நாவினையுடைய, பாம்பினது, படம் போன்ற, அழகிய அல்குலையுடைய உமையம்மையினது பாகத்தை யுடையவனாய்; என் உடம்பைத் தினந்தோறும் விட்டு நீங்காது விளங்கி நிற்கின்ற வினையை அறுப்பவனே! காளையூர்தியை உடைய வனே! செம்மையான நாவன்மை யுடையோர், துதிக்கும் புகழை யுடைய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே! நான் இனிமேல், எந்நாளில் உன்னைக் கண்டு களித்து, எந்நாளில் இறுமாந் திருப்பேன்?

குறிப்புரை :

பைந் நா - பசிய நாக்கு. `அரவப் படவேரல்குல்` என்பது பின்முன்னாக மாறி நின்றது. ``பையரவல்குற்பாண்டி மாதேவி`` (தி. 3 ப.120 பா.5) `பையிள அரவல்குற் பாவை யொடும் உடனே`` (தி.7 ப.85 பா.2) என்று இங்ஙனம் வருதல் பெரும் பான்மை. ஏர், உவம உருபு. மெய் - உடல். வினைக் கேடா - வினையைக் கெடுத்தல் உடையவனே. செந்நாவலர் - செவ்விய நாவன்மையுடைய புலவர். இல்லது கூறிப் புகழாத நாவினை யுடையவர் என்பார், அவரது நாவினை, ``செந்நா`` என்றார். ``செய்யா கூறிக் கிளத்தல் - எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே`` (புறம்-148.) என்ற சான்றோர் செய்யுளும் காண்க. பரசும் - புகழ்கின்ற. அடிகட்குக் களிப்பும், இறுமாப்பும் சிவானந்த மேலீட்டாலன்றி உளவாகாவாகலின், `அதனைப் பெறுதல் எந்நாள்` என்பதே கருத்தாதல் தெளிவு. ``எந்நாள்`` என மறித்தும் கூறியது, களித்த பின்னும் இறுமாப்புண்டாதற்குச் சிறிது காலம் இடையிடுதலும் கூடும் என்னும் கருத்தினாலாம்.

பண் :

பாடல் எண் : 2

நானாரடி அணைவான்ஒரு
நாய்க்குத் தவிசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தான்உயிர்
கலந்தான்உளம் பிரியான்
தேனார்சடைமுடியான்மன்னு
திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர்
வளம்ஈந்தனன் எனக்கே.

பொழிப்புரை :

திருவடியைச் சேர்வதற்கு எனக்கு என்ன தகுதியுள்ளது? எனினும், தேன் வண்டு நிறைந்த சடையையுடைய வனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவன் நாய் ஒன்றிற்கு ஆசனம் கொடுத்தது போல எனக்கு அவன் திருவருளைக் கொடுத்து, இவ்விடத்தில், தசை பொதிந்த உடம்பின் கண் புகுந்தான். என் உயிரில் கலந்தான். என் மனத்தினின்றும் பிரிய மாட்டான். இவ்வாற்றால் தேவர்களும் அறிய முடியாததாகிய, ஒரு செல்வத்தை எனக்கு அவன் தந்தருளினான்.

குறிப்புரை :

பொருள்கோள்: `அடியணைவான் நான் ஆர்! திருப் பெருந்துறை உறைவான், ஒரு நாய்க்குத் தவிசிட்டது போன்று இங்கு எனக்கு வானோர்களும் அறியாததோர் வளம் ஈந்தனன்; உடல் புகுந்தான்; உயிர்கலந்தான்; உளம்பிரியான்; அதனால், அப்பேற்றைப் பெற உரியனானேன்`. அடி அணைவான் நான் ஆர் - அவனது திருவடியை அடைவதற்கு நான் என்ன உரிமையுடையேன்`. `அதனால் அப்பேற்றைப்பெற உரியனானேன்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 3

எனைநானென்ப தறியேன்பகல்
இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான்எனை
மத்தோன்மத்த னாக்கிச்
சினமால்விடை உடையான்மன்னு
திருப்பெருந்துறை உறையும்
பனவன்எனைச் செய்தபடி
றறியேன் பரஞ்சுடரே. 

பொழிப்புரை :

மனத்துக்கும், வாக்குக்கும் அப்பாற்பட்டவனும், கோபத்தையுடைய பெரிய இடபத்தையுடையவனும், நிலை பெற்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும், அந்தணனும், மேலான சுடரானவனுமாகிய இறைவன், அடியேனைப் பெரும் பித்தனாக்கி, எனக்குச் செய்த வஞ்சனையை அறியேன். என்னை, நான் என்று உணர்வது? அறியேன். பகல் இரவு செல்வதையும் அறியேன்.

குறிப்புரை :

நான் என்பது - நான் என்று உணர்வதை. பகல் இரவு ஆவது - பகல் இரவு என்னும் வேறுபாடு. `இங்ஙனம் ஏதும் தோன்றாத படி இறைவன் என்னைப் பெரும்பித்தனாகச் செய்து என்னை வேறுபடுத்த மாயத்தை யான் அறிகின்றிலேன்` என்க. உன்மத்தம், பித்து ஆகலின், மத்தோன்மத்தம், பெரும்பித்து. பனவன் - பார்ப்பான். ``செய்த`` என்றது, `வேறுபடுத்த` என்னும் பொருட்டு. ``படிறு`` என்றது, பழிப்பது போலப் புகழ்ந்தது. பரஞ்சுடர் - மேலான ஒளி; இதுவும் இறைவனையே குறித்தது.

பண் :

பாடல் எண் : 4

வினைக்கேடரும் உளரோபிறர்
சொல்லீர்விய னுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என
தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லேபெருந்
துறையில்உறை பெம்மான்
மனத்தான் கண்ணின்
அகத்தான்மறு மாற்றத்திடையானே. 

பொழிப்புரை :

பகலில் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற பெருமான், அடியேனைத் தானே எழுந்தருளி வந்து ஆண்டு கொண்டான். என்னுடைய என்பினது உள் துளைகளையும் உருகச் செய்து, மேலும் வந்து, என் மனத்தினுள்ளானாயினான். கண்ணிலும் உள்ளானாயினான். மற்றும் வாக்கினும் உள்ளானாயினான். பரந்த உலகத்தில் இவனைப் போல வினையைக் கெடுப்பவர் பிறரும் இருக்கின்றார்களோ? சொல்லுங்கள்.

குறிப்புரை :

வினைக்கேடரும் - வினையைக் கெடுப்பவரும்; `பிறர் உளரோ` என மாற்றுக. `வியனுலகில் உளரோ` என இயையும். புரை - துளை. பினைத்தான் புகுந்து - பின்னும் வந்து; எல்லே - பகலிற்றானே; என்றது, `யாங்கள் கனவிலன்றி நனவிலும் இனிது காணும்படி` என்ற வாறு.
`எல்லே பெருந்துறையில் உறைபெம்மான்` என்றதை, இரண்டாம் அடியின் முதலிற் கூட்டுக. மறு மாற்றம் - பின்னும் தொடர்ந்து எழும்சொல். ``மறு`` என்றதனை, `மற்று` என்பதன் இடைக் குறை என்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 5

பற்றாங்கவை அற்றீர்பற்றும்
பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற்
கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான்மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே. 

பொழிப்புரை :

உலகப் பற்றுக்களாகிய அவைகளை ஒழித்தவராய், இறைவனைப் பற்றுகின்ற, ஆதரவாகிய அதனைப் பிடித்து நல்லதோர் பதவியினை அடைய விரும்பினால், அந்தோ! ஓடி வாருங்கள். பின்னலையுடைய சடையையுடையவனும் நிலை பெற்ற திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனுமாகிய பெருமானது, புகழைக் கற்றவாறே அவனது திருவடியை, விரும்பினவராகிய அடியாரோடும், கலந்து அடைவீர்களாக!

குறிப்புரை :

பற்று அவை அற்றீர் - மனைவி, மக்கள் முதலிய பற்றுக் களாகிய அவை அனைத்தையும் விட்டவர்களே. பின்வரும் பற்றினை, ``பற்றும் பற்று`` என்றலின், இவை, பற்றலாகாத பற்றுக்கள் என்பது போந்தது. பற்றலாகாத பற்றுக்களாவன, தன்னைப் பற்றின வனை யாற்றுள் ஆழ்த்தும் அம்மிபோலப் பிறவிக் கடலுள் ஆழ்த்தும் பற்றுக்கள். `அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்`` (நல்வழி-20) என்பது காண்க. பற்றும் பற்றாவது, தன்னைப் பற்றினவனைக் கரை சேர்க்கும் புணைபோலப் பிறவிக் கடலைக் கடப்பிக்கும் பற்று, அஃது இறைவன் திருவடி. `யான்` என்னும் `அகப்பற்று`, பற்றற்றானது பற்றினைப் பற்றியன்றி நீங்கலாகாமை யின், `பற்றற்றீர்`` என்ற பற்றுக்கள் சிறுபான்மை அஃது இன்றியும் நிலையின்மை, தூய்மையின்மை முதலியவற்றை உணர்ந்த துணை யானே நீங்கற்பாலனவாய மனைவி, மக்கள் முதலாய எனது என்னும் புறப்பற்றுக்கள் சிலவேயாம். இரண்டிடத்தும், ``பற்று`` என்றது, பற்றப்படும் பொருளைக் குறித்தது, `நன்று` என்பது, ``நற்று`` என வலித்தல் பெற்றது. இனி ஒருமொழி முடிபு வரையறைப்படாமையின், `நல்` என்னும் முதனிலை யீற்று லகரம் றகரமாய்த் திரிதலும் உண்டு என்றலுமாம். அடைவோ மெனின் - நாம் அனைவரும் அடைய வேண்டுமாயின்; தம்மையும் அவர்களோடு வைத்து, இவ்வாறு ஓதினார். `அடைவோமெனின் வம்மின்` என இயையும். ``கெடுவீர்`` என்றது,
``விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்``
(தி. 5ப.86 பா.2)
``ஆவிதான் போயினபின் யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்``
(நல்வழி-22)
என்றாற்போலும் இடங்களில், ``பாவிகாள்`` என்றற்றொடக்கத்தன போல, இரக்கம் பற்றி வந்த வெஞ்சொல்; இன்னோரன்ன சொற்கள், வேம்பும் கடுவும்போல வெய்யவாயினும் (தொல் - பொருள் 427.) தாங்குதலின்றி வழிநனி பயத்தல்பற்றிப் பெருமக்களால் ஒரோ விடத்துக் கூறப்படுமாறுணர்க.
தெற்று ஆர் - பின்னுதல் பொருந்திய. பின்னுதல் - ஒன்றை யொன்று பற்றிக்கிடத்தல். சீர் - புகழ். கற்று - பல காலும் ஓதி. ``ஆங்கு`` மூன்றும் அசைநிலைகள். கலந்து கூடுமின்` என்க; இவை ஒருபொருட் சொற்கள். நிலையாமை முதலியவை நோக்கிச் சுற்றம் முதலியவை களைத் துறந்தோர், பின்னர்ப் பற்றற்றான் பற்றினைப் பற்ற நினையாது அவற்றைத் துறந்த அளவிலே நிற்பின், இகம், பரம் என்னும் இரண்டனையும் வீணே இழந்து நிற்பராதலின் அத்தன்மை யாரை நோக்கியிரங்கி இங்ஙனம் கூறினார்.
இத்தன்மையோரை, ``பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்`` (தி. 1 ப.110 பா.10) என ஞானசம்பந்தப் பெருமானார் அருளிச்செய்தல் காண்க. இது தம்மோடு ஒத்தாரது நிலைக்கு இரங்குமுகத்தான், தமது நிலையையும் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 6

கடலின்திரை யதுபோல்வரு
கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந்
தொழியாவணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய
திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள்
பரன்தான்செய்த படிறே.

பொழிப்புரை :

கடலின் அலைகள் போல ஓயாது வருகின்ற கலக்கச் செய்யும் பாசங்களைத் தொலைத்து, என் உடம்பிலும், என் உயிரிலும் நுழைந்து, ஓர் இடமும் எஞ்சி நில்லாதபடி நிறைந்தனன். இதுவே, ஒளிபரப்பும் கதிர்களையுடைய பிறையை அணிந்த திருப்பெருந் துறையில் வீற்றிருந்தருளும் விரிந்த சடையாகிய முடியையுடைய, எம் மேலோன் செய்த கள்ளம்.

குறிப்புரை :

கடலின் திரை, இடையறாது தொடர்ந்து வருதல் குறித்து வந்த வினையுவமை. கலக்கம் - துன்பம். `கலக்கமும் மலமும் அறுத்து` என்க. `உடலின்கண்ணும், உயிரின்கண்ணும்` என உருபு விரிக்க.
ஒழியா வண்ணம் - யாதோர் இடமும் எஞ்சாதபடி. சுடரும் சுடர் மதி - வீசுகின்ற ஒளியையுடைய சந்திரன். படிறு - மாய வித்தை. தாம் அறியாதவாறே தம்மிடத்து இவற்றைச் செய்தமையின், ``படிறு`` என்றார். `செய்த படிறு இது` என ஒருசொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 7

வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம்
வேண்டேன்மண் ணும்விண்ணும்
வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
புறம்போகலொட் டேனே. 

பொழிப்புரை :

நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால் புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை, ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந் தேன். அதனையே அணிந்து கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன்.

குறிப்புரை :

முதற்றொட்டு, ``பிறப்பிறப்பு`` என்றது காறும் உள்ள தொடர்களில் இரண்டாம் வேற்றுமையும், `சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை`` என்றதில் ஏழாம் வேற்றுமையும் இறுதிக்கண் தொக்கன. வேண்டேன் - விரும்பமாட்டேன். சிவம் - மங்கலமே உடையதாகிய முதற்பொருளை. நாளும் தீண்டேன் - எந்நாளும் மனத்தால் தீண்டேன்; இங்ஙனம் உரைப்பவே, மெய்யால் தீண்டாமை தானே பெறப்படும். `அங்கு இறைதாள் பூண்டேன்` என்க. பூணுதல் - மேற்கொள்ளுதல். `அதனால் நானும் அவற்றிற்குப் புறமாகச் செல்லேன்; அவற்றையும் எனக்குப் புறமாகச் செல்லவிடேன்` என்க. இதனுள், அடிகள் இம்மை மறுமை இன்பங்களைச் சிறிதும் விரும்பாத பெருமை இனிது பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கோற்றேன்எனக் கென்கோகுரை
கடல்வாய்அமு தென்கோ
ஆற்றேன்எங்கள் அரனேஅரு
மருந்தேஎன தரசே
சேற்றார்வயல் புடைசூழ்தரு
திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின்
மலனேஉனை யானே. 

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானே! அருமையான மருந்தே! எனக்கு அரசனே! சேற்றினால் நிறைந்த நன்செய் பக்கங்களில் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற, திருவெண்ணீற் றால் நிறைந்த, திருமேனியையுடைய, நின்மலனே! உன்னை அடியேன் எனக்குக் கிடைத்த கொம்புத்தேன் என்பேனோ? ஒலிக் கின்ற பாற்கடலில் தோன்றிய அமுதம் என்பேனோ? சொல்ல முடியா தவன் ஆயினேன்.

குறிப்புரை :

இதனுள், ``எங்கள் அரனே`` என்பது முதலாகத் தொடங்கி நேரே சென்று பொருள் உரைக்க. அங்ஙனம் உரைக்கும் வழி, ``எனக்கு`` என்றதனை, ``கோற்றேன்`` என்றதற்கு முன்னர் வைத் துரைக்க. கோல் தேன் - கொம்புத்தேன். என்கோ - என்று சொல் வேனோ. குரைகடல்வாய் - ஒலிக்கின்ற கடலின்கண் தோன்றிய. ஆற்றேன் - உனது இன்பத்தை முழுதும் துய்க்க வல்லேனல்லேன். அரன் - பாசத்தை அரிப்பவன். நீற்று ஆர்தரு - திருநீற்றினால் நிறைந்த.

பண் :

பாடல் எண் : 9

எச்சம்அறி வேன்நான்எனக்
கிருக்கின்றதை அறியேன்
அச்சோஎங்கள் அரனேஅரு
மருந்தேஎன தமுதே
செச்சைமலர் புரைமேனியன்
திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி
யானாகி நின்றானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானே! அருமையான மருந்தானவனே! என்னுடைய அமுதமானவனே! வெட்சி மலரைப் போன்ற செம்மேனியையுடையவனாகியும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்றவனாகியும், நாடோறும் என்னுடைய நெஞ்சத்தில் தங்கி, நானேயாய்க் கலந்து நின்றவனே! நான் எஞ்சிய பிறவற்றை அறிவேன். எனக்கு இருக்கின்ற குறைபாட்டை அறிய மாட்டேன். இது என்ன வியப்பு?

குறிப்புரை :

``எச்சம்`` என்றது முதலாக, ``அச்சோ`` என்பது ஈறாக உள்ள பகுதியை இறுதியிலும், மூன்றாம் அடியை முதலிலும் கூட்டுக. ஏகாரங்கள், தேற்றம். எச்சம் - பெறாத பொருள். இருக்கின்றது - பெற்றுள்ள பொருள். அச்சோ, வியப்பிடைச் சொல். செச்சை - வெட்சி, ``நித்தம்`` என்பது, ``நிச்சம்`` எனப் போலியாயிற்று. `திருப்பெருந்துறையில் உறையும் பெருமான் எனக்குப் பெருநலம் விளைப்பவன்; அவன் என் நெஞ்சில் மன்னித் தோன்றாது நிற்கின்றான்; இதனை நான் அறியாமல் துன்புறுகின்றேன்` என்பது இதன் திரண்ட பொருள்.
`சீவன் முத்தி நிலையில் இருப்பினும் அதனால் அமைதி பெறாமல், பரமுத்தியை விரும்புகின்றேன்` என்றபடி. இது சிறப்புடையதேயாயினும், உடம்புள்ள அளவும் இறைவன் அருள் வழியே அமைந்திராது, விரைந்து வலியுறுத்தி அவனை இரந்து நிற்கும் நிலைபற்றி இவ்வாறு கூறினார். பெற்றுள்ளதை அறியாத ஒன்றை வியப்பாகக் கொண்டு, `அச்சோ` என்றார்.

பண் :

பாடல் எண் : 10

வான்பாவிய உலகத்தவர்
தவமேசெய அவமே
ஊன்பாவிய உடலைச்சுமந்
தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு
திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால்உனை
நல்காய்என லாமே. 

பொழிப்புரை :

தேன் பெருகுகின்ற மலர்களையுடைய கொன்றை மரங்கள் நிறைந்து விளங்கும், திருப்பெருந்துறையில் வீற்றிருப் பவனே! விண்ணிலே பொருந்திய உலகத்தவராகிய தேவர்களும், தவத்தையே செய்து கொண்டிருக்க, வீணே, தசை பொருந்திய உடம்பைத் தாங்கி, காட்டில் உள்ள மரம் போல ஆகிவிட்டேன். நான் இவ்வாறு பாவியாகப் போய்விட்ட பின்பு, உன்னை அருளாதவன் என்று கூறுதல் கூடுமோ?

குறிப்புரை :

வான் பாவிய - விண்ணிற் பரந்துள்ள. `உலகத்தவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. தேவரும் உன்னை அடையத் தவம் செய்துநிற்க, நான், வாளாதே உன்னை அடைய முயன்று வேண்டுகின்றேன்; எனது தவமின்மை குறித்து அருள் பண்ணாதிருத்தல் முறையேயாக, நான் பாவியாகவே இருந்து கொண்டு, உன்னை மனம் இரங்காதவன் என்று வெறுத்தல் முறையோ` என்கின்றார். அடவி - காடு. காட்டில் உள்ள மரம் ஒன்றற்கும் பயன் படாது வீணே முதிர்ந்து வற்றி மட்கி மடியும்; அல்லது எரிந்தொழியும் என்க.

பண் :

பாடல் எண் : 1

புற்றில்வா ளரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

புற்றிலேயுள்ள கொடிய பாம்பிற்கும் அஞ்ச மாட்டேன். பொய்யர்களது மெய் போன்ற சொற்களுக்கும் அஞ்ச மாட்டேன். திரட்சியான நீண்ட சடையையுடைய, எம் பெரியோனாகிய, நெற்றிக் கண்ணையுடைய இறைவனது திருவடியை அடைந்தும், வேறொரு தெய்வத்தை இருப்பதாக எண்ணி, எம் பெருமானைப் போற்றாதாரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

புற்றில் அரவு - புற்றில் வாழும் பாம்பு. வாளரவு - கொடிய பாம்பு. மெய் - மெய்யென்று நாட்ட முயலும் சொல்; இச் சொல், தன்னைத் தெளிந்தாரை வஞ்சித்துக் கேட்டின்கண் வீழ்த்தலின் அஞ்சப்படுவதாயிற்று. `நண்ணியபின்` என்பது, `நண்ணி` எனத் திரிந்து நின்றது. தெய்வப் பிறவியை எய்தினோர் யாவரிடத்தும் உள்ள தெய்வத்தன்மைகள் பலவும் சிவபெருமானது அருளாற்றலின் கூறேயாதலின், அவனை உணர்ந்த பின்னர்ப் பிறிதொரு தெய்வத்தைச் சுதந்திரமாய் நின்று அருள்செய்வதாகக் கருதுதல் குற்றமாயிற்று. எனவே, பிறிதொரு தெய்வத்தை அவன் அருள்வழிநின்று அருள் செய்யும் அதிகார தெய்வமாகக் கருதின் குற்றமின்றாதல் பெறப்படும். இப் பகுதியின் எல்லாத் திருப்பாடல்களின் ஈற்றடியும் மோனை நயம் கெடாதே வருதலின், இங்கும், `பெம்மான் கற்றிலாதவர்` எனப் பாடங்கொண்டு, `அவனது பெருமையை உணராதவர்` என்று உரையாது, `பெம்மாற்கு அற்றிலாதவர்` என்றே பாடங்கொண்டு, `அவன் பொருட்டுப் பிற தெய்வங்களிடத்துள்ள பற்றுக்கள் நீங்கப் பெறாதவர்` என்றே உரைக்க. அம்ம, வியப்பிடைச்சொல். `அஞ்சு மாறு` பெரிது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. இதனானே, `அஞ்சேன்` என்றதும் `மிக அஞ்சேன்` என்னும் கருத்துடையதாம். முன்னர் `அஞ்சேன்` என்று கூறிப் பின்னர் `நாம் அஞ்சுமாறு` என்றது உயர்வுபற்றி வந்த பால்வழுவமைதி. உயர்வு, `அஞ்சுவது அஞ்சல்` (குறள் - 428). `இங்ஙனம்` நெறிபிறழாது நிற்கும்பேறு எமக்கு வாய்த்தது` என மகிழ்ந்தருளிச் செய்தவாறு. இதனுள் ``அஞ்சேன்`` என்பன பலவும், அவ்வச்சத்திற்குக் காரணமாகிய பொருள்களால் கெடுவது உடல் நலத்தைத்தரும் உலகியலேயன்றி உயிர்நலம் அன்றாதல் பற்றியும், ``அஞ்சுமாறுபெரிது`` என்றது, அவ்வச்சத்திற்குக் காரணமாகிய பொருள்கள் அவ்வாறன்றி உயிர் நலத்தைத் தரும் சிவஞானத்தை அழித்தல் பற்றியுமாதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 2

வெருவரேன் வேட்கை வந்தால்
வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
தேவர்எத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.

பொழிப்புரை :

ஆசை மிகுந்து வந்தாலும் அஞ்சமாட்டேன். வினை யாகிற கடல் என்னைச் சூழ்ந்து கொண்டாலும் அஞ்சமாட்டேன். பிரம விட்டுணுகளாகிய இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத, எம் தலைவனாகிய, இறைவனது திருவடிவத்தையே கண்டு களிப்பதன்றி, மற்றைய தேவர்களை என்ன தேவரென்று, அருவருப்புக் கொள்ளாத வரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அள வன்று.

குறிப்புரை :

வெருவரேன் - அஞ்சேன். வேட்கை - ஐம்புல ஆசை. ``வினை`` என்றது, பிராரத்தத்தை, அது. சிவஞானத்தில் உறைந்து நிற் பாரை யாதும் செய்யமாட்டாதாகலின், அது பற்றி எழும் ஐம்புல வேட்கையும் அவர்க்கு உடல் ஊழாயே கழியும்; ஆதலின், அகத்து நிற்கும் நுண் பொருளாகிய அவை இரண்டும் அத்துணையாக அஞ்சப் படாவாம். இனிச் சிவஞானிகள் அல்லாதாரது கூட்டுறவு உண்டாயின், அது புறத்துத்தூலமாய் நின்று சிவஞானத்தைக் கெடுக்குமாகலின், அது பெரிதும் அஞ்சத் தக்கதாம். `தேவருட் சிறந்தார் மூவர்` என்பது பலர்க்கும் உடன்பாடாக அவருள் ஏனை இருவரால் அளவிட்டறிய ஒண்ணாதவன் சிவபெருமான் என்பது தெரியப்பட்ட பின்னர், பிற தேவரைத் தலைவராக எண்ணுதல் என் என்பார், இருவரால் அறியப் படாமையை எடுத்தோதினார். சிவபெருமானை மூவருள் ஒருவனாக வைத்தெண்ணுவார் கொள்கைபற்றியே நோக்கினும், இவ்வரலாற்றால் அவனது முதன்மை தெற்றென விளங்கும் என்பது கருத்து. மாறு - பகைமை. `மாற்றின்கண்` என்னும் ஏழாம் வேற்றுமைத் தொகைக்கண் றகரம் இரட்டாமை இலேசினாற் கொள்க. எம் பிரான் - எமக்குத் தலை வன். தம்பிரான் - எல்லா உயிர்க்கும் தலைவன் ``தேவர்`` எனப் பின் னர் வருகின்றமையின், `திருவுருவே தேவரன்றி` என உரைக்க. சிவ பெருமானது சொரூபநிலை புறச் சமயிகளால் உணரவாராமையின், அவனது தடத்தமாகிய திருவுருவையே குறித்தருளினார். எத் தேவர் - என்ன முதன்மையுடைய தேவர். அருவருத்தல் - வெறுத்தல்.

பண் :

பாடல் எண் : 3

வன்புலால் வேலும் அஞ்சேன்
வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.

பொழிப்புரை :

வலிமையான மாமிசம் பொருந்திய வேற்படைக் கும் அஞ்சமாட்டேன். வளையலை அணிந்த பெண்களுடைய கடைக் கண் பார்வைக்கும் அஞ்சமாட்டேன். எலும்புகளெல்லாம் உருகும் படியாகப் பார்த்துப் பொன்னம்பலத்தில் நடிக்கின்ற, எனது துளை யிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பற்றவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

`வல் வேல்` என இயையும். புலால் - எதிர்ந்தவரது மார்பின் தசை. வளைக் கையார், மாதர்; என்றது, ஆடவர் பலரையும் வலிதின் மயக்கும் பொதுமகளிரை. அவர் கடைக்கண் அனைவராலும் பழிக்கப்படுதலின், அதன் மயக்கத்தின்கண் அகப்படாது நீங்குதல் எளிது; சிவபெருமானிடத்து அன்பில்லாதவர் அங்ஙனமன்றித் தம்மை உய்யும் நெறியுடையோராக மதித்துப் பிறர்க்கு உறுதிகூற முற்படு தலின், அவரது மயக்கின்கண் அகப்படாது நீங்குதல் அரிது` என்பது கருத்து. வளைக்கையார் கடைக்கணும் ஒருவகை வேலாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 4

கிளியனார் கிளவி அஞ்சேன்
அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

மொழியால் கிளி போன்ற மாதரது இனிய சொற்களுக்கு அஞ்சமாட்டேன். அவரது வஞ்சனையுடைய புன்சிரிப்புக்கும் அஞ்சமாட்டேன். வெண்மையான திருநீற்றில் மூழ்கிய திருமேனியையுடைய அந்தணனது திருவடியை அடைந்து நீர்த்துளிகள் சிந்துகின்ற கண்களையுடையவராய் வணங்கி அழுது, உள்ளம் நெகிழ்ந்து இவ்விடத்தில் கனிதல் இல்லாதவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

கிளவி - சொல். `மயக்கும் மகளிரது கிளிபோலும் மொழி` என்பதனை, கிளியனார் கிளவி எனச்சுருங்க ஓதினார். கிறி - பொய். முறுவல், அவர் சிரிப்பது, உண்மை மகிழ்ச்சி பற்றியன்றி, மயக்குதல் மாத்திரைக்கேயாகலின், ``கிறி முறுவல்`` என்று அருளினார். அவர்க்குக் கண்ணினும் இவை சிறந்தமையின், இவற்றை இங்கு வேறெடுத்தருளிச்செய்தார். அளி - அன்பு. முன்னைத் திருப் பாட்டில், அன்பு சிறிதும் இல்லாதவரைக் குறித்து அருளிச் செய்தார்; இதன்கண் பேரன்பு இல்லாதவரைக் குறித்து அருளிச்செய்தார் என்க. எனவே, இவரும் ஓராற்றான் அஞ்சுதற்கு உரியராதல் அறிக. பயனில் சொல்லை விலக்க வந்த திருவள்ளுவ நாயனாரும்,
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். -குறள் 198
என, சிறுபயன் தரும் சொல்லையும் விலக்கியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 5

பிணியெலாம் வரினும் அஞ்சேன்
பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

எல்லா வகையான நோய்களும் வந்தாலும் அஞ்ச மாட்டேன். பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்சமாட்டேன். துண்டப் பிறையை அணிகலனாகவுடைய சிவபெருமானது, தொண்டரோடு பொருந்தி, அத்திருமால், வலிமையான நிலத்தை அகழ்ந்தும் காண மாட்டாத சிவந்த திருவடியைத் துதித்து திருவெண்ணீறு அணியாத வரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அள வன்று.

குறிப்புரை :

துணி நிலா - துண்டாகிய சந்திரன். அழுந்தி - அன்பில் திளைத்து. மால் - திருமால்; ``அம்மால்`` என்றது, பண்டறிசுட்டு. `வெண்ணீறணிகிலாதவரைக் கூறுவார்` அதனை அணியும் முறையை விதந்தோதினார். எனவே, அம்முறையால் அணியாது, வாளா கோலஞ்செய்தல் மாத்திரையாக அணிபவரும் ஒருவாற்றான் அஞ்சத்தக்கவராதல் பெறப்படும். ``வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்``(தி.10 திருமந்திரம் - 240) என்று அருளிச் செய்தார் திருமூலரும். ``பயன்`` என்ற பொதுமையால், தமக்கும், பிறர்க்கும் பயன் படாமை பெறப்படும்; படவே, அப்பயனுக்கு அவர்தம் வேடம் ஓராற்றால் தடையாதலும் பெறுதும். திணி - திணிந்த; உறுதியான.

பண் :

பாடல் எண் : 6

வாளுலாம் எரியும் அஞ்சேன்
வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

ஒளிவீசுகின்ற நெருப்புக்கும் அஞ்சமாட்டேன். மலை, தலைகீழாகப் பிறழ்ந்திட்டாலும் அஞ்சமாட்டேன். தோள்களில் விளங்குகின்ற திருவெண்ணீற்றையுடையவனும், காளையை ஊர்தி யாக உடையவனும்,சொல் அளவையைக் கடந்த அப்பனுமாகிய இறைவனது திருவடித் தாமரைகளைத் துதித்து, பெருமை பொருந்திய மலர்களைச் சார்த்தி மனம் உருகுகின்ற அடிமைகள் அல்லாதவர் களைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அள வன்று.

குறிப்புரை :

வாள் - ஒளி. வரை - மலை, ``தாள`` என்ற அகரம், விரித்தல். பெருமையை உணர்த்தும் தட என்னும் உரிச்சொல், இங்கு மிகுதியை உணர்த்திற்று. நைதல் - உருகுதல். ``ஆள்`` என்றது, `அடிமை` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 7

தகைவிலாப் பழியும் அஞ்சேன்
சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.

பொழிப்புரை :

தவிர்க்க முடியாத பழிக்கும் அஞ்சமாட்டேன். இறத்தல் முதலானவற்றிற்கும் அஞ்சமாட்டேன். புகையைக் கொண்ட நெருப்பைக் கையிலே ஏந்தி வீசிக் கொண்டு, விளங்குகின்ற பொன்னம்பலத்தில் ஆடுகின்ற அரும்பு மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்த முதல்வனது திருவடியைத் துதித்து, மனம் நெகிழாதவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

தகைவு இலா - தடுக்கலாகாத; ஒருதலையாக வரற்பாலதாய. முன்னம் அஞ்சேன் - முதற்கண் அஞ்சேன்; என்றது, `யான் அஞ்சாத பொருள்களுள் அதுவே முதற் கண்ணது` என்றபடி. `முகந்த` என்பதன் ஈற்றகரம், தொகுத்தல். முகைநகை - அரும்பவிழ்கின்ற. இது வாயார வாழ்த்தாதவரைக் கூறியது,

பண் :

பாடல் எண் : 8

தறிசெறி களிறும் அஞ்சேன்
தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும் ஆண் யானைக்கும் அஞ்சமாட்டேன். நெருப்புப் போன்ற கண்களையுடைய புலிக்கும் அஞ்சமாட்டேன். மணம் வீசுகின்ற சடையையுடையவனும் தந்தையுமாகிய இறைவனது, தேவர்களாலும் அடைய முடியாத நெருங்கிய கழலணிந்த திருவடிகளைத் துதித்துச் சிறப்புற்று, இன்பமாக இருக்க மாட்டாத அறிவிலிகளைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

தறி செறி களிறு - தறியின்கண் கட்டிவைக்கப் படுகின்ற யானை; என்றது, `பெரும்பாலும் அவிழ்த்து ஓட்டப்படாத, அவிழ்த்து ஓட்டின்,கொலைத் தண்டத்திற்கு உரியார் மீது ஓட்டப்படுகின்ற கொலையானை` என்றபடி. இன்னதொன்றே பல்லவ மன்னன் ஆணையால் நாவுக்கரசர்மீது ஏவப் பட்டது. `தறிசெறு களிறு` என்பதே பாடம் என்பாரும் உளர். உழுவை - புலி. வெறி - வாசனை. `அப்பன் கழல்கள்` என இயையும். செறிதரு - கட்டப்பட்ட. `அப்பன், நண்ண மாட்டா` என்பன, `கழல்கள்` என்பதன் ஆகுபெயர்ப் பொருளையே சிறப்பித்தன. இது சிவஞானத்தால் இன்புற்றிருக்கமாட்டாதவரைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 9

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
திருமுண்டம் தீட்ட மாட்டா
தஞ்சுவா ரவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.

பொழிப்புரை :

மேகத்தில் உலாவுகின்ற இடிக்கும் அஞ்ச மாட்டேன். அரசரது நட்புக்கும் அஞ்சமாட்டேன். விடத்தையே அமுத மாக ஏற்றுக் கொண்ட இறைவனானவன், எம் தலைவனாகிச் செம்மை யாகவே எம்மை ஆட்கொண்டான். அவனது செல்வமாகிய திரு வெண்ணீற்றைத் தமது நெற்றியில் பூச மாட்டாமல் அஞ்சுவோராகிய அவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

மஞ்சு உலாம் - மேகத்தின்கண் பொருந்திய. உரும் - இடி. மன்னரோடு உறவு தீக்காய்தல் போல்வதொன்றாகலின், (குறள்- 691) அதுவும் அஞ்சப்படுவதாதல் அறிக. நம்பிரான் - பலர்க்கும் தலைவன். எம்பிரானாய் - எமக்குத் தலைவனாய் வந்து. ``செஞ் செவே`` (தி.8 வாழாப்பத்து. பா.6) என்றதனை முன்னரும் காண்க. ``திரு`` என்றது, `விபூதி` என்னும் பொருட்டாய், திருநீற்றை யுணர்த்திற்று.
முண்டம் - நெற்றியினிடத்து. தீட்டுதல் - பூசுதலாதலை, ``தீட்டார் மதில்`` (தி.8 திருவம்மானை.பா.6) என்றதனானும் அறிக. இனி, `முண்டம் என்பதே, ஆகுபெயராய், அதன்கண் தீட்டப்படும் திருநீற்றை உணர்த்தும்` என்பாரும் உளர். ``அஞ்சுவர்`` என்றது, `கூசுவார்` என்றபடி. முன்னர், ``வெண்ணீறு அணிகிலாதவரை`` (தி.8 அச்சப்பத்து. பா.5.) என்றது, அதனைப் புறக்கணித்திருப்பாரையும், இஃது, அதனை அணியக் கூசுவாரையும் கூறியன என்க.
திருவெண்ணீற்றை அணியக்கூசுதல், உலகவர் இகழ்ச்சிக்கு ஏதுவாய் நிற்கும் சாம்பலாதல் பற்றி.

பண் :

பாடல் எண் : 10

கோணிலா வாளி அஞ்சேன்
கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 

பொழிப்புரை :

கொலைத் தன்மை தங்கிய அம்புக்கு அஞ்ச மாட்டேன். இயமனது கோபத்துக்கும் அஞ்சமாட்டேன். நீண்ட பிறையாகிய, அணிகலத்தையுடைய சிவபெருமானை எண்ணிக் கசிந்து உருகி, நெகிழ்ந்து ஒளிபொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகத் துதித்து நின்று புகழ மாட்டாத ஆண்மை யுடையரல்லாரைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்புரை :

கோண் இலா வாளி - வளைதல் இல்லாத அம்பு. `கோள் நிலா வாளி` எனப் பிரித்து, `உயிரைக் கொள்ளுதல் பொருந்திய அம்பு` என்று உரைப்பாரும் உளர். நீள் - வளர்தற்குரிய. வாள் நிலாம் - ஒளி பொருந்திய. `நீர் சோர` என ஒரு சொல் வருவிக்க. ஆண் - புருடத்தன்மை; அஃது அதனையுடையாரைக் குறித்தது. சிறந்த புருடார்த்தத்தை அறியாமையின், சிவபெருமானை வாழ்த்தாதவரை, `புருடத்தன்மை உடையரல்லாதவர்` என்றார். எனவே, இது, மக்கட் பிறப்பின் பயனை அடைய நினையாதவரைக் குறித்தவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்
காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற்
போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட
சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி யாதென்றன்
உள்ளமதே. 

பொழிப்புரை :

பருமையான மலையரசனது பெண்ணாகிய உமையம்மையின், பாகரும், பாண்டிய மன்னனுக்கு அருமையான அமுதமாகிய ஒருவரும் பற்று ஒன்று இல்லாதவரும் தமது திருவடித் தாமரை மலரை வணங்கி, கண்டு மகிழும்படி வெளிப்பட்டு நின்று, மனத்தை உருக்கிக் குதிரையின் மேல் வந்த வீரருமாகிய சிவ பெருமான் ஒருவரையல்லாமல், என் மனமானது பிற தெய்வங் களின் வடிவத்தை அறியாது.

குறிப்புரை :

பருவரை - பரியதாகிய (பருத்த உருவினதாகிய) மலை. இதனுள் இறைவனைப் பன்மை வாய்பாட்டால் அருளிச் செய்கின்றார். பாண்டியனுக்குப் பேரின்பத்தை அளித்தமை பற்றி, ``பாண்டியற்கு ஆரமுதாம் ஒருவர்`` என்றார். மேல்,
``நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி``
(தி.8 போற்றித். 213 - 14) என்று அருளிச் செய்தமை காண்க. ஒருவர் - ஒப்பற்றவர். ஒன்றும் இலாதவர் - உயிரியல்புகளுள் ஒன்றும் இல்லாதவர். கழல் போது இறைஞ்சித் தெரிவர நின்று - மக்கள் தமது திருவடி மலரை வணங்கித் தம்மைக் கண்களால் காணுதல் உண்டாகும் படி வெளிநின்று. உருக்கி - அனைவரது உள்ளங்களையும் உருகச் செய்து. `சேவகனாராகிய ஒருவர்` என இருபெயரொட்டாக்குக. `உருவாக` என ஆக்கம் வருவிக்க. பொருளை, `உரு` என்றல் வழக்காதல் உணர்க. இனி, ஐயுருபை அதுவுருபாகக் கொண்டு, `ஒருவரது உருவை நினைதலன்றிப் பிறரது உருவத்தை என் உள்ளம் நினையாது` என்று உரைத்தலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 2

சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர்
சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை
கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி
கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட
மறித்திடுமே. 

பொழிப்புரை :

சூரியனையும் மறைக்கத்தக்க பேரொளி வடிவினனாகிய இறைவன் சூலத்தைக் கையில் ஏந்தி குதிரையின் மேல் வந்து சேர்வானாயின் அதனைக் காணச் சென்றவர் தம் பெருமையை மறந்து ஞானப்பித்தை அடைவார். ஏனெனில் மதுரையில் உள்ள வர்க்கு அரசனாகிய பாண்டியனது மறுபிறப்பு நீங்கும்படி இவ்வாறு வந்துதான் தடுத்தாட்கொண்டான். ஆகவே அவன் குதிரை மேல் வருகின்ற காட்சியைச் சென்று காண்பது நம் குடி கெடுவதற்கு ஏதுவாகும்: பறையறைந்தாற் போலக் கூறினோம். அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

பொருள்கோள்: `சோதி, மதுரையர் மன்னன் மறுபிறப்பு ஓட மறித்திடும்; ஆதலின், அவன் கழுக்கடை தன்னைக் கைப்பிடித்துக் குதிரையின்மேல் வந்து கூடிடுமேல் இங்குள்ளாரது குடிகெடுதலை நீயிருங் கண்டீர்; அதனால் சொன்னோம்; அவனைச் சார்ந்தவர் சதுரை மறந்து அறிமால் கொள்வர்`.
சதுரை மறந்து - தம் பெருமையை மறந்து. அறிமால் கொள் வர் - ஞானப் பித்துக் கொள்வார்கள். முன்னர், ``சதுரிழந் தறிமால் கொண்டு`` (தி.8 போற்றித் - 71) என்று அருளியது காண்க. சாற்றிச் சொன்னோம் - பறை சாற்றிச் சொல்கின்றோம். கதிரை மறைத்தன்ன சோதி - பகலவன் ஒளியை விழுங்கினாலொத்த பேரொளியை உடைய இறைவன். கழுக்கடை - சூலம். குடிகெடுதல், உலகியலைத் துறத்தலால் நிகழ்வது. மதுரையர் மன்னன் - பாண்டியன். `அவனை மறித்திடும்` என்க. மறித்தல் - தடுத்தாட்கொள்ளல். மறு பிறப்பு ஓட மறித்து ஆட்கொள்ளுதல் அவனது இயல்பாதலை விளக்க, `மறித்த னன்` என்னாது, ``மறித்திடும்`` என்று அருளினார். பழிப்பதுபோலப் புகழ்ந்த இது, தமது நிலையைப் பிறர்மேல் வைத்து அருளிச் செய்ததாம்.

பண் :

பாடல் எண் : 3

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற
நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட
பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை
உள்ளங்கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று
பேணுமினே. 

பொழிப்புரை :

நீர்மேல் எழுத்துப் போன்ற அழிந்து போகிற இன்ப வெள்ளத்துள், நீந்தித் திளைக்கின்ற மனத்தையுடையீர்! உலகோர் இன்ப வெள்ளத்தில் மூழ்கும்படி, குதிரையின்மேல் ஏறி வந்த பாண்டிய மன்னனாகிய சிவபெருமான் ஒப்பற்ற இன்ப வெள்ளமாய்த் தோன்றி அடியாரது மனத்தைக் கவர்ந்தான். அப்பேரின்பப் பெருக்கினுள் சென்றடைந்து அவன் வீரக் கழலணிந்த திருவடியையே வழிபடுவீராக!.

குறிப்புரை :

நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர் - வெயில் வெப்பம் நீங்க நீராகிய இனிய வெள்ளத்துள் விருப்பம்போல விளையாடி முழுகுகின்ற விருப்பத்தை உடையவர் களே; என்றது, `அஃதே அமையுமோ` என்றபடி. பார் - பூமியில் உள்ளவர்கள். கொள்ள - பெறும்படி, பாண்டி நாட்டை உடைமைபற்றி, ``பாண்டியனார்`` என்றார். `ஓர் உரு` என இயையும். ``தொண்டரை உள்ளங்கொண்டார்` என்றதனை, `யானையைக் கோடு குறைத்தான்` என்பதுபோலக் கொள்க. இது, தமது நிலையைப் பிறர்மேல் வைத்து அருளிச் செய்தது.

பண் :

பாடல் எண் : 4

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்
தென்னன்நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலம்இக் காலம்எக்
காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த
மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள
இருநிலத்தே. 

பொழிப்புரை :

நல்லவராயுள்ளவர், அடர்ந்து வருகின்ற பிறப் புக்குச் செல்லாதீர். எல்லாக் காலத்தையும்விட பாண்டியனது நன்மை மிகுந்த நாட்டுக்கு இறைவனாகிய சிவபெருமான், விளங்கியருளு கின்ற காலம், இந்தக் காலமேயாகும். ஞானமாகிய ஒளிக்கதிரை வீசு கின்ற வாளை, உறையினின்றும் எடுத்து ஆனந்தமாகிய குதிரையைச் செலுத்தி, பரந்த உலகத்திலே எதிர்ப்பட்டவரது பிறவியாகிய மரத்தைப்புரண்டு விழும்படி வெட்டிச் சாய்க்கின்றான். அவன்முன் செல்லுங்கள்.

குறிப்புரை :

பொருள்கோள்: `இறைவன், எக்காலத்துள்ளும் வாள் உறை கழித்து மாக்கடவி, எதிர்ந்தார் புரள இருநிலத்தே பிறப்பை எறியும்; ஆயினும், அவன் கிளர்கின்ற காலம் இக்காலம்; ஆதலின், பிறவிக்கு நல்லவர் அவன் எதிரில் செல்லன்மின்`
நல்லர் - நண்பர். செறியும் - நெருங்கிய. `அவன் காட்சியைக் காணாதார் பிறப்பில் வீழ்வர்` என்னும் இகழ்ச்சி தோன்ற, ``பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்`` என்றார். `தென்னன் நன்னாட்டுக்கு இறைவன்` என்க. கிளர்கின்ற காலம் - எழுச்சியோடு வருகின்ற காலம். எக்காலத்துள்ளும் - எப்பொழுதும். அறிவு ஒண்கதிர் வாள் - ஞான மாகிய ஒள்ளிய சுடரை உடையவாள். உறை கழித்தல் - வெளிப் படுத்தல். ஆனந்த மாக்கடவி - பேரின்பமாகிய குதிரையை ஊர்ந்து. திருவுருவம் இன்ப வெள்ளத்தின் இடைநிற்பதாகத் தோன்றலின், அதனைக் குதிரையாக உருவகம் செய்தார். ``பிறவி`` என்றதற்கு, `பிறவியாகிய பகைப் படையை` என உரைக்க. ``அறிவொண் கதிர் வாள் உறைகழித்து ஆனந்தமாக் கடவி`` என்ற உருவகங்கள், இஞ் ஞான்று அவன் உண்மையாகவே சூலத்தை ஏந்திக் குதிரைமேல் வரு தலை உட்கொண்டு நின்றது. எறியும் - வெட்டியொழிப்பான். எதிர்ந் தார் - தம் எதிரே வந்தவர். புரள - தன் அடியில் வீழ்ந்து பணியும்படி. ``பிறப்பு`` என்றது, `உடம்பு` எனவும், ``புரள`` என்றது, `மாண் டொழிய` எனவும் மற்றும் ஓரோர் பொருளைத் தோற்றுவித்தன. `எக் காலத்துள்ளும் இக்காலம் கிளர்கின்ற காலம்` என முன்னே கூட்டி உரைப்பாரும் உளர்; அவ்வாறுரைப்பின், உருவகங்களைக்கொண்ட இறுதி இரண்டடிகள் நின்று வற்றுதல் காண்க. ``பிறப்பிற்கு நல்லவர்`` என்றதும், ``செல்லன்மின்`` என்றதும், `எதிர்ந்தார் புரளப் பிறப்பை ஏறியும்` என்றதும், பழிப்பதுபோலப் புகழ்தல். இஃது இறைவன் குதிரைமேல் வருதலை முன் அறிந்து கூறுவார் ஒருவரது கூற்றாக அருளிச் செய்தது.

பண் :

பாடல் எண் : 5

காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின்
கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர்
நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன்
அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து
முந்துமினே. 

பொழிப்புரை :

நினைத்தற்கு அருமையான உலகத்தை உண்ட திரு மாலோடு, பிரமர், மற்றைய தேவர்களும் அடைதற்கு அரிய, அருமை யான நஞ்சத்தை அமுதாகக் கொண்டவனாகிய, எங்கள் பாண்டிப் பெருமானாகிய இறைவன் தன் அடியவர்களுக்குத் தனது முதற் கருவூலத்தைத் திறந்து அள்ளி வழங்குகின்றான். அதனைப் பெறு வதற்கு விரைவாக வந்து முந்திக் கொள்ளுங்கள். முன்னதாகவே, அவனிடத்தில் அன்பு செய்து பிழையுங்கள்.

குறிப்புரை :

காலம் உண்டாக - காலம் மிகவும் உளதாகும்படி; என்றது, `மிகவும் முன்னதாக` என்றதாம். ``வேண்டின் உண்டாகத் துறக்க`` (குறள் - 342) என்றார் திருவள்ளுவரும். இதனை, `காலை யில் எழுக` என்பதனை, `காலம் பெற எழுக` எனக்கூறும் வழக்குப் பற்றியும் அறிக. மூல பண்டாரம் - சேம நிதிக் கருவூலம்; இஃது ஆகு பெயராய், அதன்கண் உள்ள பொருளைக் குறித்தது. கருவூலத்தைத் திறந்து வாரி வழங்குதல் ஓரோர் சிறப்புக் காலத்திலன்றி எப்பொழுதும் அன்றாகலானும், அக்காலந்தான் விரைந்து நீங்கிப் பின்னர் வந்து கூடுதல் அரிதாகலானும், ``வந்து முந்துமின்`` என்று அருளிச் செய்தார். `இறைவனது மூல பண்டாரப் பொருள்` என்றது, அவனது திருவருட் செல்வத்தை. அதனை வழங்கும் சிறப்புக் காலம், அவன் மதுரையில் குதிரை மேல் வந்து நின்ற காலம். இஃது அவன் அவ்வாறு நின்ற பொழுதை எதிர்பெய்து கொண்டு அருளிச் செய்தது.

பண் :

பாடல் எண் : 6

ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு
ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல
வல்லன்அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல்
விரும்புமின்தாள்
பாண்டிய னார்அருள் செய்கின்ற முத்திப்
பரிசிதுவே. 

பொழிப்புரை :

நெருங்கிய, கெடாத அறியாமையாகிய இருள் விலகவும், எல்லாப் பொருள்களும் தெளிவாக விளங்கவும் அருளிய சோதிப் பிழம்பினைப் பாண்டிய மன்னனும், சொல்லக்கூடிய திறமையுடையவன் அல்லன். ஆயினும் விருப்பம் கொண்டபொழுது, அவனை அடையத் தடையில்லை. ஆகையால் அவன் திருவடியைப் பெறுதலை விரும்புங்கள். சோமசுந்தரப் பாண்டியனாராகிய இறைவர் அருள் செய்கின்ற முத்தியின் தன்மை இதுவேயாகும்.

குறிப்புரை :

ஈண்டிய - நெருங்கியுள்ள, மாயா இருள் - மாயையின் காரியங்களாகிய பொருளால் உண்டாகும் மயக்கம். தூண்டிய - மெய்யுணர்வை எழுப்பிய. சோதியை - ஒளியாகிய இறைவனை. மயக்கத்தை, ``இருள்`` என்றமைக்கேற்ப, இறைவனை, ``சோதி`` என்றார். மீனவன் - பாண்டியன். அவன், இறைவன் குதிரைமேல் நேரே வந்து நிற்கக்கண்ட பேறுடையனாகலின், ``பாண்டியனும்`` எனச் சிறப்பும்மை கொடுத்தோதினார். சொல்ல வல்லனல்லன் - இவன் இறைவன்தான் என்று அறிந்து போற்ற வல்லனல்லனாய் இருந்தான். இதன்பின், `ஆதலின்` என்பது வருவிக்க. வேண்டிய போதே வாய்தல் விலக்கிலை - அவன் அருள்செய்ய விரும்பும் பொழுதே அது நமக்குக் கைகூடுதற்குத் தடை இல்லை. தாள் விரும்பு மின் - அவனது திருவடியை விரும்பியிருங்கள். ``அருள்செய்கின்ற முத்திப் பரிசு இதுவே`` என்றாராயினும், `முத்தி அருள் செய்கின்ற பரிசு இதுவே` என்பது கருத்தென்க. ``இது`` என்றது, பாண்டியனுக்கு வந்து அருள்செய்ததுபோல, உரிய காலத்தில் தானே வந்து அருள் செய்தலை. இதனால், `என்றேனும் நமக்கு அருள் செய்தலை இறைவன் தனக்குக் கடனாகக் கொண்டிருத்தலின், என்றும் அவனது திருவடியை விரும்பியிருத்தலே நமக்குக் கடன்` என்பது உணர்த்திய வாறு.

பண் :

பாடல் எண் : 7

மாயவ னப்பரி மேல்கொண்டு மற்றவர்
கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள்
புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு
ளேஅருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி
சேர்மின்களே.

பொழிப்புரை :

தான் மாயமாகிய அழகிய குதிரையின் மேல் வர அதனை அறியாது, பிறர் எல்லாரும் அதனை உண்மை என்றே ஏற்றுக் கொண்டவுடன், இப்பிறவியாகிய பகைகள் அற்று ஒழிகின்றன. ஆகவே தன்னைச் சரணாக அடைந்தவருக்குப் பொருந்திய, அருமையான, பெரிய சிறப்பையுடைய தனது திருவருளையே அவன் கொடுத்தருளுவான் என்பது தெளிவாகியது. ஆதலின், செம்மையாகிய பெரிய கொடையையுடைய, தென்னாடுடைய அச்சிவபிரான் திருவடிகளையே புகலிடமாக அடையுங்கள்.

குறிப்புரை :

மாய வனப்பரி - மாயமான காட்டுக் குதிரை; என்றது, `நரியாகிய குதிரை` என்றபடி. இறைவன் ஏறி வந்தது வேறு குதிரை யாயினும், கொடுக்கக் கொணர்ந்தவை அன்னவாதல் பற்றி, அதனை யும் இதுவாகக் கூறினார். மற்றவர் கைக்கொளலும் - பிறர் அக் குதிரையைப் பெற்றுக்கொண்டவுடன். `அவருக்கு இப்பிறப்பென்னும் பகைகள் போயறும்` என்க. ``இப்பிறப்பு`` என்றது `இது போலும் பிறப்புக்கள்`, என்றவாறு; `போயறும்` என்றதன்பின், `எனின்` என்பது வருவித்து, `தென்னவன் சேவடி சேர்மின்கள்` என முடிக்க. புகுந்தவருக்கு - தன்னிடத்து அடைக்கலம் புகுந்தவர்க்கு. `இவ்வாறு தன் அருளையே அருளும் கொடைத் தென்னவன்` என்க. ஆய - பொருந்திய. சேய நெடுங்கொடை - அகன்ற பெரிய கொடை. ``தென்னவன்`` என்றது இறைவனை. இதனுள், ``மற்றவர்`` எனப் பாண்டியனையும், ``புகுந்தவருக்கு`` எனத் தம்மையும் பிறர்போலக் கூறினார். பாண்டியன் குதிரையைப் பெற்றுக்கொண்ட பின்னரும் சில நிகழ்ந்தன எனினும், அவை விரைய நிகழ்ந்தமை பற்றி, ``கைக்கொள லும் பிறப்பென்னும் பகைகள் போயறும்`` என்று அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 8

அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத்
திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய
வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப்
பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று
முந்துமினே.

பொழிப்புரை :

அழிவு இல்லாமல் நிலை பெற்றிருத்தலாகிய, ஓர் ஒப்பற்ற, பேரின்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்து நீங்காத அருளைப் புரிந்து, கொடுமையான இருவினைகளைப் போக்கிப் பழமையாகிய ஆணவ மலத்தை முழுதும் நீக்கி, ஆட்கொண்ட பாண்டி நாட்டுப் பெருமான் பாண்டி நாட்டு ஆட்சியாகிய பெரிய பதவியை மட்டுமோ, உலகம் முழுமையும் தந்தருளுவான். ஆதலின் அவனது பரிசிலைப் பெறுவதற்கே சென்று முந்துங்கள்.

குறிப்புரை :

அழுத்தி - அழுத்துமாற்றால். கழிவில் கருணை - என்றும் நீங்காத அருள். பாண்டிப் பெரும்பதம் - பாண்டி நாட்டு ஆட்சி யாகிய பெரிய நிலை. ``பதமே`` என்ற ஏகாரம், `அஃதொன்றோ` என்னும் எண்ணிடைச்சொல். முழுதுலகும் - எல்லா உலகங்களின் ஆட்சியையும். `அவன் கொடையே சென்று முந்துமின்` என்க. ``கொடையே`` என்றதில், `எதிர்` என்னும் பொருட்டாய கண்ணுருபு விரிக்க. இது, பாண்டியனுக்கு அருள் புரிந்தவாற்றை உட்கொண்டு அருளிச் செய்தது.

பண் :

பாடல் எண் : 9

விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந்
நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக் கும்பரம்
பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட
பூங்கொடியார்
மரவியன் மேல்கொண்டு தம்மையுந் தாம்அறி
யார்மறந்தே.

பொழிப்புரை :

கொடிய வினைகள் கலந்ததால் விளையும் இனி வரும் பிறவியாகிய, கடலைக் கடப்பதற்காக, வழிபட்ட அடியார் களை, எலும்பையும் உருகச் செய்கின்ற மேலான பாண்டிப் பிரானாராகிய இறைவர் குதிரையின் மேல் எழுந்தருளி வர அதனைக் கண்டு அக்காட்சியால், மனம் கவரப்பட்ட, பூங்கொடி போன்ற பெண்டிர் மரத்தின் தன்மையை அடைந்து எல்லாவற்றையும் மறந்து, தம்மையும் தாம் அறியாராயினார்.

குறிப்புரை :

விரவிய - பொருந்திய. `வினையும் பிறப்புமாகிய முந்நீர்` என்க. முந்நீர் - கடல். ``வினைக் கடல் கொளினும் அஞ்சேன்`` (தி.8 அச்சப்பத்து பா.2), என அடிகள் வினையையும் கடலாக உருவகித்தமை காண்க. கடக்க - கடத்தற்பொருட்டு. பரவிய - துதித்த. பரம் - மேலான பொருளாகிய. புரவி - குதிரை. புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் - அவ்வருகையால் உள்ளம் கொள்ளை கொளப்பட்ட பூங்கொடிபோலும் மகளிர். மரஇயல், நிலைபெயராது நிற்கும் தன்மை. `நாண் முதலிய பலவற்றையும் மறந்து தம்மையும் தாம் அறியார்` என்க. குதிரை மேல் வந்த இறைவனது திருமேனியழகினை இவ்வாறு புலப்படுத்தருளினார். முன்னர் வந்தன பலவற்றாலும், இதனாலும் இறைவன் குதிரைமேல் வந்து அளித்தருளிய காட்சி, எத்திறத்தோர் நெஞ்சையும் உருகச் செய்வதாய் இருந்ததென்பது இனிது பெறப் படுகின்றது.

பண் :

பாடல் எண் : 10

கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென்
றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும்ஓர்
மீனவன்பால்
ஏற்றுவந் தாருயிர் உண்ட திறல்ஒற்றைச்
சேவகனே
தேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச்
சேர்மின்களே.

பொழிப்புரை :

இயமனை வென்று அவ்வாறே ஐம்புலன்களாகிய அரசரையும் அடக்கிக் கொண்டு, பெரிய சத்தியும் தானுமாக, அழகாய் எழுந்தருளியிருந்தானாகிய இறைவன், ஒப்பற்ற பாண்டிய மன்னனுக்காக, எதிர்த்து வந்தவர்களது உயிரை வாங்கின வலிமையுள்ள ஓர் வீரனாயினான். ஆகையால் தெளிவில்லாதவர்கள் அவனது சிவந்த திருவடியை உறுதியாகச் சென்று பற்றிக் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`ஒற்றைச் சேவகனே, கூற்றைவென்று, ஐவர் கோக்களையும் வென்று, தானும் தேவியுமாய் வீற்றிருந்தான்; அவன் சேவடி சேர்மின்கள்` என்க. கோக்கள் - அரசர். `ஐவர் அரசர்` என்றது, ஐம்பொறிகளை. ``இருந்து`` என்றது, அசை நிலை. ஏற்று - குதிரை வாணிகனாய் வருதலை மேற்கொண்டு. ஆருயிர் உண்ட - அவனது அரிய உயிரை உண்ட; என்றது, `சீவபோதத்தை நீக்கிய` என்றபடி. திறல் - ஆற்றலையுடைய. ஒற்றைச் சேவகன் - தான் ஒருவனேயாகிய வீரன். `ஒருவனே பலரை வென்றது வியப்பன்றோ` என்றபடி. அப் பலருள் பாண்டியனையும் ஒருவனாக்குதற்பொருட்டு, ``ஆருயிர் உண்ட`` என்றார். தேற்றம் இலாதவர் - தெளிவில்லாதவர்களே, `தெளி வில்லாதவராகிய நீவிர் இந்நிகழ்ச்சிகளால் தெளிந்து சேர்மின்கள்` என்றபடி. சிக்கென - உறுதியாக.

பண் :

பாடல் எண் : 1

உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் றனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

தேவர்களுக்கு அரசனே! எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்திருப்பவனே! அழுக்கு உடம்பை உடையேனாகிய எனக்குப் புதிய பொருள்போலத் தோன்றி என் குடி முழுவதும் ஆண்டருளி, உலக வாழ்வு நீங்க சிவப்பேறு உண்டாகும்படி வாழ்வித்த அமுதமே! துணியப்பட்ட செம்பொருளே! சிறப்பை யுடைய திருவடியையுடையவனே! அருட் செல்வமாயிருப்பவனே! சிவபிரானே! எங்கள் பொருட்டாக உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது?

குறிப்புரை :

ஒழிவற - யாதொருபொருளும் எஞ்சாதவாறு எல்லாப் பொருளிலும். யோகம் - கலப்பு. கலப்புடைய பொருளை, `கலப்பு` என்றார். ஊற்றையேன் - அழுக்கினை உடையேன். `அழுக்கு` என்றது அழுக்குடைய உடம்பை. ஊத்தை, ஊற்றை எனத் திரிந்து வந்தது. `ஊத்தையேன்` என்றே ஓதினுமாம். வம்பு எனப் பழுத்து - புதிய பொருள் போல மிக்குத் தோன்றி. மிக்குத் தோன்றல் - வெளிநிற்றல். என்றும் உள் நின்று உணர்த்திவந்த பொருளேயாதலின், ``வம்பென`` என்றும், தம்மை ஆண்டமையால் தம் குடி முழுதும் உய்ந்தமையின், ``என் குடிமுழுதாண்டு`` என்றும் கூறினார். வாழ்வு அற - வினை வாழ்க்கை நீங்க. வாழ்வித்த - அருள் வாழ்வு வாழச் செய்த. மருந்து - அமுதம். செம்பொருள் துணிவு - மெய்ப்பொருளாகிய துணிபொருள். `துணிவு` என்னும் தொழிற்பெயர். துணியப்படும் பொருளுக்கு ஆகி வந்தது. `மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்வார் பலரானும் ஒருபடித் தாக மெய்ப்பொருள் என்று துணியப்படுபவனே` என்பது பொருள். கழல் - திருவடி. திருவடியையுடையவனை. `திருவடி` என்றது பான்மை வழக்கு. ``தில்லை மூதூர் ஆடிய திருவடி`` எனவும் (தி.8 கீர்த்தித். 1) ``ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி`` (தி.8 கீர்த்தித். 37) எனவும் முன்னரும் கூறப்பட்டன. இனி, ``சீருடைக் கடலே`` என்பதே பாடம் என்பாரும் உளர். செல்வமே - அடியார்க்குச் செல்வமானவனே, தம் குடி முழுது ஆண்டமையின், அவர் அனைவரையும் உளப்படுத்து, ``எம் பொருட்டு`` என்றார். எம் பொருட்டு - எமக்குத் தீங்கு உண்டாகாமைப் பொருட்டு. தீங்கு, வினையும், அது காரணமாக வரும் பிறப்பும். சிக்கென - உறுதியாக. `இனி எங்கு எழுந்தருளுவது` என்க. எழுந்தருளுவது - செல்வது. `என்னைவிட்டு இனி நீ எவ்வாறு நீங்க முடியும்? முடியாது` என்பது கருத்து. இங்ஙனம் தமது உறுதிப் பாட்டினைப் புலப்படுத்தியவாறு.
``அழலார் வண்ணத் தம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``.
(தி. 4 .ப. 15. பா.7)
``மேலை வானோர் பெருமானை
விருப்பால் விழுங்கி யிட்டேனே``
(தி. 4 .ப. 15. பா.8)
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்அடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.
(தி.11 அற்புதத் திருவந்தாதி - 96) எனப் பிறவிடங்களிலும் இவ்வாறே ஓதியருளுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 2

விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

இடபத்தை விடாமல் விரும்பின தேவர் பெரு மானே! வினையை உடையேனாகிய என் உண்மையான பொருளே! அடியேன் புலால் நாற்றம் நீங்காது முழுவதும் புழு நிறைந்த கூட்டினிற் கிடந்து, மிகவும் மூப்பு எய்திப் பாழாய்க் கீழ்மையடையா வகை தடுத்து என்னை ஆண்டருளின கருணையாகிய பெருங்கடலே! இடை யறாமல் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந் தருளிச் செல்வது?.

குறிப்புரை :

விடை விடாது - எருதை நீக்காமல். உகந்த - விரும்பிய. ஊர்தி வேண்டுவார் எருதை விரும்பாமை குறித்தவாறு. ``முடை`` என்றது, `முடை நாற்றம் உடைய உடம்பை. ``மண்ணாய்`` என்றது, `இறந்து` என்றபடி. பின் வருவன அடுத்த பிறப்பைக் குறிப்பன. `கடைப்படா` என்பது, தொகுத்தல் பெற்றது.

பண் :

பாடல் எண் : 3

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டாகிய அருமையான அமுதமே! பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து காலத்தை வீணாகக் கழிக்கின்ற புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, மிக மேன்மையான சிவபதத்தைக் கொடுத்தருளின அருட்செல்வமே! சிவபிரானே! இவ்வுலகிலேயே உன்னை உறுதி யாகப் பற்றினேன், நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

அம்மையும் அப்பனுமாதல் எவ்வுயிர்க்கும் என்க. ``ஆரமுது`` என்றது, இன்பத்தை. சிவபிரானிடத்தில் வைக்கும் அன்பின் விளைவே சிவானந்தமாதல் அறிந்துகொள்க. பொய்ம்மை - உலக வாழ்க்கை. சுருக்கும் - வீணாக்குகின்ற. புழுத்தலைப் புலையன் - புழுவையுடைய தலையையுடைய கீழ்மகன்; `உடலைத்தானும் தூய்மைசெய்து கொள்ளமாட்டாத கீழ்மகன்` என்றபடி. `புழுத்து அலை` எனப் பிரிப்பின் பகரம் மிகலாகாமையும், பொருள்படாமை யும் அறிக. செம்மை - மெய்ம்மை; திரிபின்மை. செம்மையுடைய தனை, ``செம்மை`` என்றார். சிவபதம் - இன்பநிலை. `செம்பொருளை ஆய்ந்துணர்தற்கு, `சிவ` என்னும் மந்திரத்தை உபதேசித்தருளிய செல்வமே` எனவும் உரைப்பர்.

பண் :

பாடல் எண் : 4

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

அளியையுடைய சுடரே! பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே! பேராற்றலையுடைய அருமையான தவத்தினையுடை யோர்க்கு, அரசனே! மெய்ப் பொருளை விளக்கும் நூலானவனே! நூல்கள் புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே! யோகக் காட்சியில் விளங்குகின்றவனே! தெளிவாகிய இடத்தையுடைய அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே! சிவபிரானே! இருள் நிறைந்த இவ் வுலகத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது.

குறிப்புரை :

இரக்கம் இல்லாத சுடரின் வேறுபடுத்தற்கு, `அருளுடைச் சுடரே` என்றார். ``சுடர்`` என்றது, அறிவு பற்றி. ``கனி`` என்றது, இன்பம் பற்றி. பொருளுடைக் கலை - மெய்ந்நூல்; `அவற்றின் பொருளாய் இருப்பவனே` என்றபடி. புகழ்ச்சி - `இவ்வாறு இருந்தது` என எடுத்துரைத்தல். யோகம் - ஒன்றிநிற்றல். பொலிவு - அவ்வாறு நிற்குமிடத்தில் விளங்குதல். தெருள் - தெளிவு. இருள் இடம் - அறியாமையை உடைய இவ்வுலகம்.

பண் :

பாடல் எண் : 5

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

உனக்கு ஒருவரும் நிகரில்லாத ஒருத்தனே! அடி யேனது மனத்தில் விளங்குகின்ற ஒளியே! உண்மையான நிலையை அறியாத பெருமையில்லா எனக்கு மேன்மையான பதத்தைக் கொடுத் ததாகிய ஒப்பற்ற அன்பானவனே! சொல்வதற்கு அருமையான வளமையான சுடர் வடிவினனே! அருட் செல்வமே! சிவபிரானே! இளைத்த இடத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கு எழுந் தருளிச் செல்வது?.

குறிப்புரை :

மெய்ப்பதம் - உண்மைப் பொருள். வீறு - பெருமை. விழுமியது - சிறப்புடைய பேறு. எய்ப்பிடத்து - இளைப்பின்கண். இளைப்பு, எல்லாப் பிறப்பும், பிறந்ததனாலாயது.

பண் :

பாடல் எண் : 6

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே கோயிலாகக் கொண்டு ஆட்கொண்டு எல்லையற்ற இன்பத்தை அளித்து என்னுடைய பிறப்பின் வேரைக் களைந்து என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்ட தலைக்கோலம் உடையவனே! பெருமை யான எமது மெய்ப்பொருளே! திறந்த வெளியிலே காணப்பட்ட காட்சிப் பொருளே! அடியேனது அருட்செல்வமே! சிவபிரானே! இறுதியிலே, உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

அறவை - துணையிலி. திறவு - திறப்பு; அறியாமை நீங்கிய நிலை. இறவு - அழிவு; பயனின்றிக் கெடும் நிலை. `உறு` என்பதடியாக, `உறவு` என வருதல் போல, `இறு` என்பதடியாக, `இறவு` என வந்தது.

பண் :

பாடல் எண் : 7

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

பற்றுக்களின் வேரைக் களைகின்ற பழமையான பொருளே! பற்றிக் கொள்கின்ற வழியை, அடியேனாகிய எனக்கு அருள் புரிந்து, எனது வழிபாட்டினை விரும்பி, என் சித்தத்துள் புகுந்து தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய மெய்ப்பொருளே! ஒளியையுடைய விளக்கே! விளக்கினுள் தோன்றும் வளமையான சுடர் போலும் வடிவினனே! அருட்செல்வமே! சிவபிரானே! இறைவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

`பாசவேர் அறுக்கும் பழம்பொருள்` என்பது, முன்னிலைக்கண் படர்க்கை வந்த இடவழுவமைதி. பூசனை, ஆசிரியக் கோலத்திற்கண்டு செய்தது. `பூங்கழல்` என்றது, பான்மை வழக்கால், அருள் இன்பத்தைக் குறித்தது. செழுஞ்சுடர் மூர்த்தி - பேரொளி வடிவே.

பண் :

பாடல் எண் : 8

அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

தந்தையே! தேவராயும் தேவர் உலகமாயும் நின்ற முதல்வனே! சிறிதும் முடிவு இல்லாத ஞானவடிவினனே! அடியார்கள் உறுதியாகப் பற்றின அருட் செல்வமே! சிவபிரானே! அன்பர் பால் பேரன்பு கொண்டவனே! எல்லா உயிர்களுமாய்க் கலந்து விளங்கியும் நீங்கி, அவையல்லாமல் தன்மையால் வேறாய் இருக்கின்ற மாயம் உடையவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

அண்டர் அண்டம் - தேவர் உலகம். ஆதி - முதல்வன். யாதும் - `இடம், காலம்` என்பவற்றுள் ஒன்றானும், சித்தன் - வியத்தகு நிலையினன். `அவை அல்லையாய்ப் பிழைத்து நிற்கும் எத்தனே` எனக் கூட்டுக. பிழைத்து நிற்றல் - அவற்றின் நீங்கி நிற்றல். எத்தன் - சூழ்ச்சியுடையவன்.

பண் :

பாடல் எண் : 9

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

பாலை, காலமறிந்து கொடுக்கின்ற தாயைக் காட்டிலும் மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து நான்கு புறங்களிலும் உடன் திரிந்த அருட்செல்வமே! சிவபிரானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதி யாகப் பற்றியுள்ளேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

நினைந்து ஊட்டுதல் - பச்சிளங் குழவிக்குக் கால மறிந்து தானே ஊட்டுதல். தாய் தனது முக்குண வேறுபாட்டால் ஒரோ வழித் தன் குழவியைப் புறக்கணித்தலும் உடையவளாதலின், அக் குணங்கள் இல்லாது அருள் வடிவினனாகிய இறைவன், தாயினும் மிகப் பரிவுடையனாதல் அறிக. ஊன் - உடம்பு; உள்ளமேயன்றி உடலும் அன்பினால் உருகப் பண்ணினமையின், ``ஊனினை உருக்கி`` என்று அருளிச் செய்தார். உள்ளொளி - ஒளியினுள் ஒளி. ஒளி - உயிரி னது அறிவு. அதனுள் ஒளியாய் நிற்பது சிவம். அதனைப் பெருக்கு தலாவது, இனிது விளங்கச் செய்தல்; `இவ்வாறு அருளிச் செய்யினும் உள்ளொளியாகிய உன்னை இனிது உணரச் செய்து` என்பதே கருத்து. உலப்பு - அழிவு. ``அழிவிலா ஆனந்த வாரி`` (தி.8 போற்றித் - 132) என முன்னரும் அருளிச் செய்தார். உலப்பிலா ஆனந்தத்தைத் தேனாக உருவகித்தது, அறிந்திலாத அதனியல்பை ஒருவாற்றான் அறிந்து கொள்ளுதற்பொருட்டு. தொடர்ந்து - முயன்று. முயற்சி, சிந்தித்தலும் தெளிதலும்.

பண் :

பாடல் எண் : 10

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

அற்பமாகிய புலால் உடம்பு, மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியையுடைய அது, பொன்னாலாகிய பெரிய கோயிலாகும் படி, அதனுள் எழுந்தருளியிருந்து, என்னுடைய எலும்புகளை யெல்லாம் உருகும்படி செய்து, எளியவனாகி ஆட்கொண்டருளிய ஆண்டவனே! குற்றமற்ற மாணிக்கமே! துன்பமும் பிறப்பும் இறப்பினோடு மயக்கமும் ஆகிய பற்றுக்களெல்லாம் அறுத்தருளின மேலான சோதியே! ஆனந்தமே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

``புரைபுரை கனிய`` (தி.8 கோயில் திருப்பதிகம். பா-3) என்றதை முன்னருங் காண்க. யாக்கையையே, ``கோயில்`` என்றார் என்க. ``காயமே கோயிலாக`` (தி. 4 ப.76 பா.4) என்று அருளினார் நாவுக்கரசரும், ``மயக்கு`` என்றதிலும், எண்ணேகாரம் விரிக்க. ``ஆம்`` என்றது எண்ணின் தொகைப் பொருட்டாய் நின்றது. தொடக்கு - கட்டு. நற்சோதி - ஞான ஒளி.

பண் :

பாடல் எண் : 1

இரும்புதரு மனத்தேனை
ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக்
காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை
உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா
றன்றேஉன் பேரருளே.

பொழிப்புரை :

அடங்கிய அலைகளையுடைய கங்கையின் நீர் ததும்புகின்ற சடையை உடையவனே! இரும்பு போன்ற வலிமையான நெஞ்சையுடையவனாகிய என்னைப் பலகாலும் உன் வசமாக இழுத்து என் எலும்பினை உருகும்படி செய்து உன் இரண்டு திருவடிகளில் கரும்பு தருகின்ற இனிமை போன்ற இனிமையை எனக்கு உண்டாக்கி யருளினாய். இத்தகைய உன்னுடைய பெருங்கருணை நரிகள் எல்லா வற்றையும் பெரிய குதிரைகளாக ஆக்கியது போன்றது அன்றோ?

குறிப்புரை :

தரும், உவம உருபு - `இணைக் கழல்கள்` என மாற்றிக்கொள்க. இரண்டாம் அடியில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. ஒருங்கு திரை - அடங்கியுள்ள அலை. உலவு - பொருந்திய. `இப்பேரருள்` எனச் சுட்டு வருவித்து, `உனது இப்பேரருள், நரிகளை எல்லாம் குதிரைகளாக்கிய அதனோடு ஒத்ததேயன்றோ` என உரைக்க. இறுதிக்கண், `அப்பேரருளின் பெருமையை முன்பு உணராது இப்பொழுது உணர்கின்றேன்` எனக் குறிப்பெச்சம் வருவித்து, ஏசறவாக முடிக்க. இஃது இதனுள் ஏற்குமிடங்கட்கும் பொருந்தும்.

பண் :

பாடல் எண் : 2

பண்ணார்ந்த மொழிமங்கை
பங்காநின் ஆளானார்க்
குண்ணார்ந்த ஆரமுதே
உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட்
டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா
றன்றேஉன் கழல்கண்டே. 

பொழிப்புரை :

இசை நிரம்பிய சொல்லையுடைய உமையம்மை யின் பாகனே! உனக்கு அடிமையானார்க்கு, உண்ணுதல் பொருந்திய அருமையான அமுதமே! உடையவனே! அடியேனை, மண்ணுலகில் பொருந்திய பிறப்புகளை அறுத்து, ஆட்கொள்ளும் பொருட்டு, நீ வருக என்று அழைத்ததனால் அன்றோ உன் திருவடிகளைக் கண் நிரம்பக் கண்டு அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது.

குறிப்புரை :

உண் ஆர்ந்த - உண்ணுதல் பொருந்திய. மண் ஆர்ந்த பிறப்பு - இப்பிறப்பு. ``மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய்`` என்றதை இறுதிக்கண் கூட்டுக. வா என்ன - வா என்று அழைத்தமை யால். `நான் உய்ந்தவாறு, நீ வா என்று அழைத்தலால் உன் கழல்கள் கண்ணாரக் கண்டன்றே` என்க. முன்னைத் திருப்பாட்டில் குறிப்பெச்ச மாக உரைத்ததனை இங்கு இறுதியடியின்பின் இசையெச்சமாக வைத்துரைக்க.

பண் :

பாடல் எண் : 3

ஆதமிலி யான்பிறப்
பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே
அழுந்துவேற்கு ஆஆவென்று
ஓதமலி நஞ்சுண்ட
உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா
றன்றேஎம் பரம்பரனே. 

பொழிப்புரை :

கடலிற் பெருகிய விடத்தை உண்ட கழுத்தை உடையவனே! எம் மேலோனே! அன்பில்லாதவனாகிச் சுற்றத்தார் ஒருவரும் இல்லாமலே, பிறப்பு இறப்பு என்கிற, தப்புதற்கு அருமை யான நரகத்தில் மூழ்குகின்றவனான என்பொருட்டு, ஐயோ என்று இரங்கி அடியேனாகிய எனக்கு உன் திருவடித் தாமரை மலரைக் காட்டிய வகையன்றோ உனது திருவருள்.

குறிப்புரை :

`யான் ஆதமிலி` எனத் தனித்தொடராக்குக. ஆதம் - ஆதரவு. நரகம்போலும் துன்பம் உடைமைபற்றிப் பிறப்பிறப்புக்களை நரகமாக உருவகம் செய்தார். `தமர் ஆரும் இன்றி` என மாற்றுக. ``அடியேற்கு`` என மறித்தும் கூறியது, தம் சிறுமையை வலியுறுத்தற்கு. `பாதமலர் காட்டியவாறு உன் அருளேயன்றோ` என, சில சொல் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 4

பச்சைத்தால் அரவாட்டீ
படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே
அடியேனை உய்யக்கொண்
டெச்சத்தார் சிறுதெய்வம்
ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா றுய்ந்தவா
றன்றே உன் திறம்நினைந்தே. 

பொழிப்புரை :

பசுமையான நாக்கினையுடைய பாம்பை ஆட்டு பவனே! விரிந்த சடையையுடையவனே! திருவடியைத் தம்முடைய உச்சியிலே கொண்டிருப்பவருடைய பெருமானே! அடியேனாகிய என்னை, உய்யக் கொண்டதனாலன்றோ, ஐயோ, குறைபாடுகள் நிறைந்த சிறிய தெய்வங்களை வழிபடாமல், உன்னுடைய அருள் திறத்தினையே எண்ணி, என் எண்ணத்தின்படியே யான் கடைத்தேறிய நிலை உண்டாயிற்று?

குறிப்புரை :

பச்சைத் தால் அரவு - பசிய நாவையுடைய பாம்பு. தால், `தாலு` என்னும் ஆரியச் சொற்சிதைவு. `பச்சைத்தாள் அரவு என்பது பாடம் ஆகாமையில்லை` எனக்கொண்டு, `தாள்` என்பதற்கு, `புற்று` என உரைத்துப்போவாரும் உளர். `பாதமலரை உச்சியில் உடையவர்` என்க. எச்சத்தார் - வேள்வியை உடையவர்கள்; இவர்கள் தேவர் பலரையும் வழிபடுவர். அச்சோ, வியப்பிடைச்சொல். சித்தத் தாறு - விருப்பப்படியே. `உய்ந்தவாறு உன் திறம் நினைந்தே யன்றோ` எனக் கூட்டுக. உய்ந்தவாறு - இறவாமல் பிழைத்திருக்கும் வகை. திறம் - முன்னே வந்து ஆண்ட திருவருள். இதன்கண் இறந்துபடாமையால் வந்த நாணம் புலப்படும்.

பண் :

பாடல் எண் : 5

கற்றறியேன் கலைஞானம்
கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம்
வாக்கியலால் வார்கழல்வந்
துற்றிறுமாந் திருந்தேன்எம்
பெருமானே அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமா
றன்றேநின் பொன்னருளே. 

பொழிப்புரை :

எம்பிரானே! ஞான நூல்களைப் படித்து அறியேன்; மனம் கசிந்து உருகவும் மாட்டேன்; ஆயினும் வாக்கின் தன்மையால் வேறு தெய்வங்களைத் துதித்து அறியேன்; அதனால் உன்னுடைய நீண்ட திருவடிகளை வந்து அடைந்து இறுமாப்பு கொண்டு இருந்தேன். அடியேனாகிய எனக்கு உன் பொன் போன்ற திருவருளைப் புரிந்த செயல் நாயினுக்குப் பொன்னாலாகிய ஆசனத்தை இட்டது போலன்றோ?

குறிப்புரை :

மற்று, அசைநிலை. `பிறதெய்வம் அறியேன்` என மாற்றி, அதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. வாக்கியலால் - உனது உபதேசத்தால். `அன்று இறுமாந்திருந்தேன்; இன்று இஃது இல்லை` என்றபடி. இறுமாப்பு. அரசனையும் மதியாமை. இங்கும், `அப் பொன்னருள்` எனச் சுட்டு வருவிக்க.

பண் :

பாடல் எண் : 6

பஞ்சாய அடிமடவார்
கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர
நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன்எம் பெருமானே
உடையானே அடியேனை
அஞ்சேலென் றாண்டவா
றன்றேஅம் பலத்தமுதே. 

பொழிப்புரை :

எம்பிரானே! உடையவனே! அம்பலத்திலாடுகின்ற அமுதமே! அடியேனை உனது திருவருளால் அஞ்சாதே என்று ஆட்கொண்ட முறைமையாலன்றோ, செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப் பெற்ற பாதத்தையுடைய பெண்டிரது, கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு நஞ்சு போன்ற துன்பம் மிக, நடுங்குகின்றவனாகிய நான் பிழைத்தேன்.

குறிப்புரை :

`அவ்வருளாவது, அஞ்சேல் என்று ஆண்டவாறன்றே` என்க.

பண் :

பாடல் எண் : 7

என்பாலைப் பிறப்பறுத்திங்
கிமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந்
துறையுறையுஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே
புகுந்தருளி ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவா
றன்றேஎம் பெருமானே. 

பொழிப்புரை :

எம்பிரானே! தேவர்களுக்கும் அறிய முடியாத, தென்திசையிலுள்ள திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவ பிரானாகிய நீ இவ்விடத்தில், என்னிடத்திலுள்ள பிறப்பை அறுத்து அன்பினால் என் மனம் நெகிழும் படியாகவே எழுந்தருளி ஆண்டு கொண்டது, என்னிடத்திலே திருவருள் நோக்கம் செய்ததனால் அன்றோ?

குறிப்புரை :

ஐகாரம் இரண்டும் சாரியை. சிவபெருமான், விளி. நோக்கியவாறு - கடைக்கண்ணால் பார்த்தபடி.
``அன்றே`` என்றதை, ``ஆட்கொண்டது`` என்றதன்பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 8

மூத்தானே மூவாத
முதலானே முடிவில்லா
ஓத்தானே பொருளானே
உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப்
புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா
றன்றேஎம் பெருமானே. 

பொழிப்புரை :

எம்பிரானே! எப்பொருட்கும் மூத்தவனே! மூப் படையாத முதல்வனே! எல்லையற்ற வேதமானவனே! அவ் வேதத்தின் பொருளுமானவனே! மெய்யர்க்கு மெய்யனாய் அல்லாத வர்க்கு அல்லாதவனாய்த் தோன்றினவனே! இவ்வுலகத்தில் உழல் கின்ற என்னை, நீ புகுந்தருளி, உழல்கின்ற நிலையை நீக்கி, ஆண்டருளியது உன்னுடைய கருணையினால் அன்றோ?

குறிப்புரை :

மூத்தான் - உயர்ந்தவன். மூவாத - மூப்படையாத. ஓத்து - வேதம். பொருள் - அதன் பொருள். உண்மை - உள்ள பொருளாய் அனுபவமாதல். இன்மை - இல்பொருள் போலக் கரந்து நிற்றல். பூத்தான் - விளங்குபவன். புரள்வேன் - கெடுவேன். பேர்த்து- உலகியலினின்று நீக்கி. `நீ ஆண்டவாறு கருணையினாலன்றே` என்க.

பண் :

பாடல் எண் : 9

மருவினிய மலர்ப்பாதம்
மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச்
சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத்
தடங்கடலிற் படிவாமா
றருளெனக்கிங் கிடைமருதே
இடங்கொண்ட அம்மானே. 

பொழிப்புரை :

திருவிடைமருதூரையே, ஊராகக் கொண்ட எம் தந்தையே! கூடுவதற்கு இனிமையான, தாமரை மலர் போன்ற திருவடி உள்ளத்தில் மலர்ந்து உள்ளம் உருக, தெருத்தோறும் மிகவும் ஓலமிட்டு அலறி, சிவபெருமானே என்று துதித்து நுகர்ந்த மேலான கருணை யாகிய பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம், அடியேனுக்கு இங்கு அருள் செய்வாயாக.

குறிப்புரை :

`மருவ இனிய பாதம்` என்க. வளர்ந்து - வளர்தலால். வளர்தல் - விளங்குதல். உள் உருக - உள்ளம் உருக. படிவு ஆமாறு - மூழ்குதல் உண்டாகும்படி. `படியுமாறு அருள்` என்றதும், ``படியுமாறு அறியாதவனாயினேன்`` என ஏசற்றதாம் என்க.

பண் :

பாடல் எண் : 10

நானேயோ தவஞ்செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த்
தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம்
புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே. 

பொழிப்புரை :

தேன்போன்றும், இனிமையான அமுதத்தைப் போன்றும் இனிக்கின்ற சிவபிரானானவன் தானே எழுந்தருளி வந்து, என் மனத்துள் புகுந்து உடம்போடு கூடிய உயிர் வாழ்க்கையை வெறுத்து நீக்கும்படி அடியேனாகிய எனக்கு அருள் புரிந்தான். அதனால் சூக்கும பஞ்சாக்கரத்தைச் சொல்லப் பெற்றேன். இப் பேற்றைப் பெறுவதற்கு நானோ முற்பிறப்பில் தவம் செய்தேன்?.

குறிப்புரை :

முதல் அடியை இறுதியிற் கூட்டுக. `உயிர் வாழ்க்கையை ஒறுத்து அன்றே வெறுத்திட அருள் செய்தான்; அதனால், சிவாயநம எனப் பெற்றேன்; அதற்கு அன்னதொரு தவத்தை நான் செய்தேனோ` என்க. ஒறுத்தல் - வருத்துதல்.

பண் :

பாடல் எண் : 1

பூங்கமலத் தயனொடுமால்
அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள்
கூறாவெண் ணீறாடீ
ஓங்கெயில்சூழ் திருவாரூர்
உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா
தெவையாதும் புகழேனே.

பொழிப்புரை :

அழகிய தாமரை மலரிலுள்ள பிரமனோடு, திருமாலும் அறியவொண்ணாத இயல்பையுடையவனே! கோங்க மலர் போன்ற குவிந்த தனங்களையுடைய உமையம்மையின் பாகனே! திருவெண்ணீறு அணிவோனே! உயர்ந்த மதில் சூழ்ந்த திருவாரூரை இடமாக உடையவனே! அடியேனாகிய நான் உனது, தாமரை மலர் போன்ற திருவடிகளாகிய அவற்றையன்றி வேறு எவற்றையும் ஒரு சிறிதும் புகழமாட்டேன்.

குறிப்புரை :

நெறி - நிலை. கோங்கலர் - கோங்கம் பூ. சேர், உவம உருபு. ஓங்கு எயில் - உயர்ந்த மதில். `எவற்றையும் சிறிதும் புகழேன்` என்க.

பண் :

பாடல் எண் : 2

சடையானே தழலாடீ
தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ
பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ்
பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா
துறுதுணைமற் றறியேனே.

பொழிப்புரை :

சடாபாரத்தையுடையவனே! அழலாடுவோனே! விளங்குகின்ற மூவிலைகளையுடைய சூலப்படையை யுடையவனே! மேலான சோதியே! பசுபதியே! இளமை பொருந்திய வெண்மையான இடபத்தை யுடையவனே! விரிந்த சோலை சூழ்ந்த திருப்பெருந் துறையில் வீற்றிருப்பவனே! உடையவனே! அடியேனாகிய நான் உன்னையன்றி, வேறு உற்ற துணையை அறிந்திடுவேன் அல்லேன்.

குறிப்புரை :

தயங்கும் - விளங்குகின்ற. மழ - இளமை. `அடியேனாகிய நான் உறுதுணை மற்று அறியேன்` என்க.

பண் :

பாடல் எண் : 3

உற்றாரை யான்வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே. 

பொழிப்புரை :

திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற, கூத்தப் பெருமானே! உறவினரை யான் விரும்புவேனல்லேன்; வாழ்வதற்கு ஊரை விரும்புவேன் அல்லேன்; புகழை விரும்புவேன் அல்லேன்; கல்வியை மட்டும் கற்றவரை யான் விரும்பமாட்டேன். கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும். உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிக்கண் கன்றையுடைய பசுவினது மனத்தைப் போலக் கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன்.

குறிப்புரை :

உற்றார் - கிளைஞர். வேண்டேன் - விரும்பமாட்டேன். ஊர் - யான் பிறந்த ஊர். பேர் - புகழ். கற்றார் - கல்வியைமட்டும் கற்று, அதன் பயனை அறியாதவர். கற்பன - கற்கத் தகும் நூல்கள். அமையும் - போதும். `கல்வியின் பயன் கிடைத்துவிட்டபின் கல்வி எதற்கு` என்றபடி. குரை கழல் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடி. கற்றா - கன்று ஆ; கன்றையுடைய பசு. `இதன் மனம் கன்றை நினைந்து கசிந்து உருகுதல்போல உருக விரும்புகின்றேன்` என்க.

பண் :

பாடல் எண் : 1

ஓடுங் கவந்தியுமே
உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ்
சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிருங்
குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

அடியேன் திருவோட்டையும் கோவணத்தையுமே, பற்றெனத் துணிந்து, மனம் கனிந்து, தேடுதற்குரிய பொருளும் சிவ பெருமானது திருவடியே என்று தேறி, உடம்பும், உயிரும், நிறைந்து தெவிட்ட வளைந்து ஆடி நடனம் செய்யும் செயல் விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனைப் பற்றிக் கொண்டே அல்லவா?

குறிப்புரை :

ஓடு - பிச்சைப் பாத்திரம். கவந்தி - கோவணம்; வட்டுடையுமாம். உறவு - பற்று; என்றது, ஒருபொருளிலும் பற்றில்லாமையைக் குறித்தது, தேடும்பொருள் - முயன்று பெறும் பொருள். ``கழலே`` என்னும் ஏகாரம், `பிறிதியாதும் அன்று` என்பதை விளக்கி நின்றது. கூடு - உடம்பு. குமண்டை - களியாட்டம். குனித்து - கூத்தாடி. குலாத் தில்லை - விளக்கத்தை உடைய தில்லை. கொண்டு - கொண்டேன்; பெற்றுவிட்டேன். இஃது இறந்தகாலத் தன்மையொருமை வினைமுற்று. `இஃது என் தவம் இருந்தவாறு` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. அன்றே, அசைநிலை.

பண் :

பாடல் எண் : 2

துடியேர் இடுகிடைத்
தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள்
எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன்
எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

என்னைத் தன் திருவடியின் கண் கூடும்படி செய்த விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா? ஆதலின், உடுக்கையை ஒத்த அழகிய சிறிய இடையையும், இனிய சொல்லையும் உடைய மாதரது தோள்களின் மேலுள்ள விருப்பத்தால் பாவம் மிகுவதற்குக் காரணமான தீய செயல்கள் எவ்வளவு செய்தாலும் நான் இனி இறக்க மாட்டேன். அதனால், பிறக்கவும் மாட்டேன்.

குறிப்புரை :

துடியேர் இடுகிடை - உடுக்கைபோலும் சுருங்கிய இடை. செடி ஏறு - குற்றம் மிகுதற்குக் காரணமான. `முடியேனாயும், பிறவேனாயும் தில்லை ஆண்டானைக் கொண்டேன்` என்க. முடிதல் இறத்தல். ``அடியேன்`` என்றதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 3

என்புள் ளுருக்கி
இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து
துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை
முழுதழிய உள்புகுந்த
அன்பன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

எலும்பையும் உள்ளே உருகச் செய்து இருவினை களாகிய சஞ்சிதம், பிராரத்தத்தின் வலியினை ஒழித்து அவற்றால் உண்டாகின்ற துன்பத்தைப் போக்கி, தொடர்புகளையும் அறுத்துப் பரிசுத்தமாக்கி முன்னேயுள்ள சஞ்சித வினை முற்றிலும் தொலையும் வண்ணம், என் நெஞ்சத்தே எழுந்தருளிய அன்பினையுடைய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

ஈடு - வலிமை. துவந்துவம் - பற்று. முன்பு உள்ள - முன்பு உள்ளன; அவை மலங் காரணமாக வந்த குற்றங்கள். அற்றை - அன்றே. `அன்பின் என்பது பாடமாயின், னகரம் திரிதல் வேண்டும்.

பண் :

பாடல் எண் : 4

குறியும் நெறியுங்
குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிறியும் மனத்தார்
பிறிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில்
உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.

பொழிப்புரை :

குறிக்கோளும் அதனையடையும் வழியும் அவ் வழியில் செல்லும் பண்பும் இல்லாதவருடைய கூட்டங்களைப் பிரிந்து வாழ்கின்ற மனத்தையுடைய மெய்யடியார்களைப் பிரியாத தன்மை யனும் அன்பு நிறைந்த உள்ளத்தில், உருக்கொண்டு அமுதம் போன்று இனிக்கும் சிவபதமாயிருப்பவனும், எல்லாவற்றையும் அறிகின்ற விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனுமாகிய இறைவனை அடி யேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

குறி - குறிக்கோள். செறியும் கருத்து - தன்னையே பற்றி நிற்கும் உள்ளம். உருத்து - உருப்பட்டுத் தோன்றி. அறியும் - எல்லா வற்றையும் அறிகின்ற. `அறியும் ஆண்டான்` என இயையும்.

பண் :

பாடல் எண் : 5

பேருங் குணமும்
பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத்
தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

இந்தப் பிறவிக் குழியைத் தூர்த்து இல்லையாய்ப் போகும் வண்ணம் குற்றங்களை நீக்கிக் கொண்டு அடியார் எல்லாம் இறைவனைக் கூடும் விதத்தால் சிவனது கருணையாகிய தேனை உண்டு நிறைவுறுகின்ற விளக்கம் மிக்க தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

பேர் - பெயர். இஃது உடம்பிற்கு இடப்படுவது. குணம், முக்குணம். இவை இரண்டும் உயிரைப் பிணித்தல் செய்வது, பிறவி யினாலாம். பேரால் வரும் பிணிப்பாவது, உடம்பையே தான் என மயங்கி நிற்றல். குறிப்புருவகமாதலின், ``பிறவி`` என்றதற்கு, `பிறவி யாகிய குழி` என உரைக்க. ``சிவன்`` என்றது, `தன்` என்றபடி. `சிவன் கருணைத் தேன் பருகிச் சேரும் வகையால்` என மாற்றியுரைக்க.

பண் :

பாடல் எண் : 6

கொம்பில் அரும்பாய்க்
குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம்
மாண்டிங்ஙன் போகாமே
நம்புமென் சிந்தை
நணுகும்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.

பொழிப்புரை :

இவ்வுடம்பு மரக்கிளையில் உண்டாகின்ற அரும்பு போல உருவெடுத்தும், முன் குவிந்திருந்து பின் மலர்ந்த மலர் போலப் பிறந்தும் காய் போல வளர்ந்தும், பழம் போல முதுமை அடைந்தும், வீணே, இவ்வாறு அழிந்து போகாத வண்ணம் எனக்குத் துணையாக, நான் விரும்புகின்ற என் மனமானது இறைவனைச் சேரும்படி, நான் அடைகின்ற அழகிய பொன்னாலாகிய விளக்கம் பொருந்திய தில்லைச் சிற்றம்பலத்து ஆண்டவனை அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

வாளா, `அரும்பாய்` என்ற வழிப் பொருள் இனிது விளங்காமையின், ``கொம்பில் அரும்பாய்`` என்று அருளினார். குவிமலராய் - முன்னர்ப் போதாய்க் குவிந்து நின்ற மலராய், `வம்பாக` என ஆக்கம் வருவிக்க. வம்பு - வீண். இங்ஙன் - இவ்வாறு. நணுகும் வகை - தன்னைச் சேரும்படி. `உலகத்தார் போல யானும் வளர்ந்து மூத்து வாளா இறந்தொழியாமல், யான் சேர்ந்திருக்கின்ற தில்லை ஆண்டான்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

மதிக்குந் திறலுடைய
வல்அரக்கன் தோள்நெரிய
மிதிக்குந் திருவடி
என்தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம்
ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

யாவரும் மதித்தற்குரிய வெற்றியையுடைய, வலிமை வாய்ந்த அரக்கனாகிய இராவணனது, தோள் நெரியும்படி ஊன்றின திருவடியானது, எனது தலைமேல் பொருந்தியிருக்க, பெருகுகின்ற பசுத் தன்மையை உண்டாக்குகின்ற பாசங்களில் யாதொன்றும் இல்லேமாயினோம் என்று மகிழ்ந்து இங்கு ஆரவாரித்தற்குக் காரணமாகிய விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

அரக்கன், இராவணன். `அவன் தோள் நெரிய மிதிக்கும் திருவடி` என்றது, `பசுபாசத்தை மேலெழாதவாறு அடர்க்கும் திருவடி` எனக் குறிப்பான் உணர்த்தியவாறு. வீற்றிருப்ப - வீற்றிருத்தலால். கதிக்கும் - மேல் எழுகின்ற. `களித்துக் கொண்டு` என இயையும். அதிர்த்தல், ஆடலில் சிலம்பை ஒலிப்பித்தல்.

பண் :

பாடல் எண் : 8

இடக்குங் கருமுருட்
டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி
என்தலைமேல் நட்டமையாற்
கடக்குந் திறல்ஐவர்
கண்டகர்தம் வல்லரட்டை
அடக்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

பூமியைத் தோண்டும் இயல்புடைய கருமையான முரட்டுத் தனமுள்ள பன்றியின் பின்னே, காட்டில் நடந்த திருவடிகளை என்னுடைய தலையின் மேல் இருக்க வைத்தமையால், என்னை வெல்லும் திறமையுடைய ஐம்பொறிகளாகிய கொடியவர்களுடைய வலிமையான சேட்டைகளை அடக்குகின்ற விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

இடக்கும் - நிலத்தைக் கிண்டுகின்ற, `முருடு` என்பதை, இக்காலத்தார், `முரடு` என வழங்குப. ஏனம் - பன்றி. இறைவன் கானகத்தில் பன்றிப் பின் சென்றது, அருச்சுனன் பொருட்டு. `நட்டமையால் கொண்டு` என முடிக்க. கண்டகர் - கொடியவர். ``ஐவர் கண்டகர்`` என்றது ஐம்பொறிகளை. வல் அரட்டு - வலிய குறும்பு. ``அரட்டர் ஐவர்`` (தி.5 ப.7 பா.5) என நாவுக்கரசரும் ஓதியருளுதல் காண்க. `வல்லாட்டை` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 9

பாழ்ச்செய் விளாவிப்
பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற்
கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச்
சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.

பொழிப்புரை :

விளையாத வயலை உழுது விளையச் செய்து பயன்பெறாமல் இருக்கின்ற எனக்கு, முற்பிறப்பில் செய்த தவத்தினால் புதையல் அகப்பட்டது போன்ற அருள் கிடைக்கப் பெற, திருவடி யாகிய சிவந்த தாமரை மலரையுடைய சைவனுக்கு எனது இழிவான தலையினால் அடிமை செய்து விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

செய் - வயல், விளாவி - உழுது. கீழ் - முற்பிறப்புக்கள். கிழி ஈடு - பொன் முடிப்பு வழியில் இடப்பட்டுக் கிடத்தல். நேர்பட்டு - எதிர்ப்பட்டாற்போல. தாள் - திருவடி. `தாளாகிய செய்ய தாமரை` என்க. சைவன் - சிவம் உடையவன். `சிவநெறித் தலைவன்` எனலு மாம். ஆட்செய்தல் - பணிசெய்தல்.

பண் :

பாடல் எண் : 10

கொம்மை வரிமுலைக்
கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால்
திருப்பணிகள் செய்வேனுக்
கிம்மை தரும்பயன்
இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

திரட்சியும் தேமலும் உள்ள தனங்களையுடைய பூங்கொம்பு போன்ற உமையம்மையின் பங்கை உடையவனுக்கு, அன்போடு கூடிய மனத்தினால் திருத்தொண்டுகள் செய்கின்ற எனக்கு, இப்பிறப்பில் உண்டாகக்கூடிய வினைப் பயன்கள் முழுமையையும் இவ்வுலகிலேயே ஒழிக்கவல்ல தாயாகிய விளக்கம் மிக்க தில்லை ஆண்டவனை, அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

கொம்மை - திரட்சி. வரி - சந்தனம் முதலியவற்றால் எழுதும் கோலம்; தேமலுமாம். இம்மை தரும் பயன் - இப் பிறப்போடு ஒழியும் பயன்கள்; அவை, ஐம்புல இன்பங்கள். அம்மை - தாய்.

பண் :

பாடல் எண் : 1

மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்
ஆழியுள் அகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான்
தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன்
பொன்னடி யிணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 

பொழிப்புரை :

மயக்கவுணர்ச்சியுடையவனாய் இந்த மண்ணுலக வாழ்வு என்கிற கடலில் அகப்பட்டுப் பெண்கள் என்கிற சுழலினிடத்துச் சிக்கி, நான் நிலை கெட்டுப் போகாதபடி, உண்மைப் பொருளாய்த் தோன்றித் தன் அழகிய திருவடிகள் இரண்டையும் யான் காணும்படி காட்டி, பொய்ப்பொருளெல்லாம் விட்டு நீங்கும் வண்ணம் திருவருள் புரிந்து, ஞான ஒளியைக் கொடுத்து எதிரே நின்றதாகிய ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேனல்லேன்.

குறிப்புரை :

மையல் - மயக்கம். ஆழி - கடல். சுழி - கடற்சுழி. தலை தடுமாறல் - நெறிபிறழ்ந்து நடத்தல். மெய்யனாய் - மெய்யுணர்வைத் தரும் ஆசிரியனாய். வெளி - பரவெளி. திருவருள் தருதல் முதலியவற்றிற்கு, `எம்பெருமான்` என்னும் வினைமுதல் வருவிக்க. விளம்பேன் - சொல்லும் வகையை அறியேன். `சொற்கு அடங்காதது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 2

ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர்
இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந்
தலைதடு மாறாகிப்
போந்தி யான்துயர் புகாவணம் அருள்செய்து
பொற்கழ லிணைகாட்டி
வேந்த னாய்வெளி யேஎன்முன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 

பொழிப்புரை :

பொருத்தமான சிறந்த பூக்களைத் தூவித் தடைப் படாதாகிய ஒரு தன்மையோடு வழிபடாமலே சந்தனக் குழம்பு பூசப் பெற்ற தனங்களையுடைய, பெண்களோடும், நிலை கலங்கிச் சேர்ந்து நான் துன்பம் அடையாதபடி, எங்கள் பெருமான், எனக்கு அருள் புரிந்து, அழகிய தனது திருவடியைக் காட்டித் தலைவனாய் எனக்கு எதிரே நின்றதாகிய ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேனல்லேன்.

குறிப்புரை :

ஏய்ந்த - பொருந்திய. வேந்தனாய் - ஞான அரசனாய்.

பண் :

பாடல் எண் : 3

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

மண்ணுலகத்தில் உண்மையுள்ளவன் போல நடித்துச் செயலில் பொய்யான பல காரியங்களைச் செய்து, யான், எனது என்கின்ற மயக்கமாகிய பாம்பு கடித்த வாயிலிருந்து முற் காலத்துச் செய்த வினையாகிய விடமானது மிகுதலால் புலம்பித் திரி கின்றவனும் தனக்கு அடியவனுமாகிய என்னை, அந்தப் பெரிய வேதங்கள் தேடியறியாத அரிய பொருளான எங்கள் பெருமான், முன் வந்து பிடித்துக் கொண்டு பலகாலும் அடித்துத் திருவருளாகிய சர்க்கரைக் கட்டியை முன் அருத்திய, அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

நடித்து - உண்மையுடையவன் போலக் காட்டி. மாயம் பொய்; அது பொய்யாகிய செருக்கினைக் குறித்தது. `மாயத்தினது வாய்` என்க. கடித்த வாய் - பல்லினால் இறுகப் பிடித்த வாய். மிக - மிக்கு விளைய. கழறுதல், இங்கு, பிதற்றலின்மேற்று. `அரும்பொருள் அடியேனை முன்னின்று பிடித்து` என மாற்றுக. அக்காரம் - கண்டம் (சர்க்கரை). முன் தீற்றிய - முன்பு (விரைந்து) தின்னச் செய்த. `மருந்தை அடித்தடித்து ஊட்டுவர்; இவன் இனிப்பை எனக்கு அடித் தடித்து ஊட்டினான்` என்றபடி. `அக்காரம்` என்றது, திருவடி இன்பத்தை. குற்றியலுகரம் உயிர்வரக்கெடாது, உடம்படுமெய் பெற்றது. அற்புதம் - அற்புதச் செயலுக்குக் காரணம். ``அறியேன்`` என்றது, `அருளல்லது வேறில்லை` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
பொய்களே புகன்றுபோய்க்
கருங்கு ழலினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத்
திருவொடும் அகலாதே
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

வருகின்ற இப்பிறப்பு இறப்புகளாகிய இவற்றின் துன்பநிலையை எண்ணாது, பொய்களையே சொல்லித் திரிந்து கரிய கூந்தலுடைய பெண்களது கண்களாகிய வேலினால் தாக்கப்பட்டு, கலக்கமுற்றுக் கிடக்கும் என்னை, எங்கள் பெருமான் திருத்தமாகிய திருவடியில் அணியப்பட்ட சிலம்புகளாகிய அவை ஒலித்திட உமையம்மையோடும் நீங்காது எனக்கு அருமையான துணைவனாகி ஆண்டுகொண்டருளின அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

``இவை`` என்றது, `இவற்றினால் விளையும் துன்பங்கள்` என்றபடி.
ஏறுண்டு - தாக்குண்டு. திரு - திருவருள்.

பண் :

பாடல் எண் : 5

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்
அற்புதம் அறியேனே.

பொழிப்புரை :

செல்வமும், உறவும் இன்னுமுள்ள அனுபவப் பொருள்களும் என்னும் இவைகளோடும், பெண்களோடும் சேர்ந்து அவ்விடங்களில் உள்ள தன்மைகளால் தாக்கப்பட்டு களித்துத் திரிகின்ற என்னை, எனக்கு அவற்றினின்றும் விடுபடுதலை அருளி எனது தீவினைகளை நீக்குதற் பொருட்டு, எங்கள் பெருமான், மென்மையான தாமரை மலர் போன்ற தன் திருவடியைக் காட்டி என் மனத்தில் புகுந்து ஆட்கொண்ட ஆனந்தத்தால் ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

மாடு - பொன்னும், மணியும். அங்குள குணங்கள் - அவரிடம் உள்ள தன்மைகள். ``மங்கையர்.......ஏறுண்டு`` என்றதை முதற்கண் கூட்டுக.
குலாவி - கொண்டாடி. வெந்தொழில், இங்குக் கூறியன. ஆடுதல், களிப்பினால் என்க. அகம் - மனம்.

பண் :

பாடல் எண் : 6

வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான்
பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல்
கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

யாவரும் கீழ்ப்படுதற்குரிய இத்தன்மையுடைய பிறப்பு இறப்புகளாகிய இவைகளை நீக்கும் வழியினை, எண்ணாது பெண்களோடும், சேர்ந்து, வாய் இதழில் ஊறும், பெரிய நீர்ப் பெருக்கில் முழுகித் திளைத்து மயங்கி அலைகின்ற என்னை, குணங் களும், அடையாளங்களுமில்லாத, அருட்கடலாகிய இறைவன், அழகுடைய வளாகிய உமையம்மையோடும் கூடி அணுகி வந்து ஆட் கொண்டருளின, அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

வணங்கும் - தாழ்கின்ற; இழிகின்ற. இதழ் - இதழூறல் நுகர்ச்சியால் விளையும் இன்பம். கோமளம் - அழகு; அஃது அம்மையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 7

இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான்
இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான்
தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை
மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

இப்பிறவியில் பொருத்தமான மலரைப் பறித்துத் திருவைந்தெழுத்தினைச் சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லிப் பிழைத்தல் இல்லாமல், அவனது பொன்னடிகள் மேல் சொரியாமல், பெரிய தனங்களையுடைய பெண்களது மை தீட்டுதல் பொருந்திய கண்ணாகிய வேலினால் எறியப்பட்டுக் கிடக்கின்றவனாகிய என்னை, என் தந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து தன் தாமரை மலர் போலும் திருவடியினைக் காட்டி ஆட்கொண்டருளின அதியச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

இணை மலர் - இணைத்தற்கு (தொடுத்தற்கு) உரிய பூ. தப்பிலாது - தவறாது.
மைப்பு உலாம் - மைதீட்டுதல் பொருந்திய. `கிடப்பேனை` என்றதை, `கிடப்பேற்கு` எனத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 8

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின
இருவினை அறுத்தென்னை
ஓசை யாலுணர் வார்க்குணர் வரியவன்
உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன்
பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய
அற்புதம் அறியேனே. 

பொழிப்புரை :

பிறப்பு இறப்புகளாகிய ஊசலில் வைத்து ஆட்டுகின்ற உடம்பின்கண் உள்ள உயிரிலே பொருந்திய நல்வினை தீவினை என்னும் இரண்டையும் களைந்து, அடியேனை, நூலறிவால் அறிய முற்படுவார்க்கு, அறிய முடியாதவனாகிய இறைவன், உயர்வாகிய தனது மேலான பெரிய கருணையால் ஞானத்தைக் கொடுத்து ஞானமயமாக்கி மும்மலக்கட்டுகளை அறவே தொலைத்து, அவாவையறுத்து, தன் அடியார்களது அடியின்கீழ்ச் சேர்த்த, அதியச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

`உடல் உயிராயினவற்றை ஊசல் ஆட்டும் இருவினை` என்க. `ஓை?` என்பது, `சொல்` என்னும் பொருளதாய், சொல்லாலாகிய நூலைக் குறித்தது.
ஒளி ஆக்கி - ஒளிப்பொருளாகிய மெய்ப்பொருளைத் தோற்றுவித்து. பரம் - மேன்மை. `உலகப் பற்றை அறுத்து அடிக்கீழ்க் கூட்டிய` என்க.

பண் :

பாடல் எண் : 9

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்
புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங்
கிணங்கியே திரிவேனை
இச்ச கத்தரி அயனுமெட் டாததன்
விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.

பொழிப்புரை :

காட்டை ஒத்த இப்பிறவியில் பொருந்தி யான் புழுப் பொருந்திய தலையினையுடைய நாய் போன்று பெண்களுக்கே அவர்கள் விரும்பிய பணிகளைச் செய்து அவர்களோடு, சேர்ந்து அலைகின்ற எனக்கு, யாவர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் திருமாலும் பிரமனும் காண மாட்டாத தன் மணம் பொருந்திய தாமரை மலர் போலும் திருவடிகளை இவ்வுலகத்தில் வந்து காட்டியருளி, அடியேனையும் ஒரு பொருளாக நினைத்து ஆட்கொண்டருளிய அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

பொச்சையான - காடாகிய. இருளும், பிற துன்பங் களும், பரப்பும் உடைமை பற்றிப் பிறப்பினைக் காடாக உருவகம் செய்தார். புழுத்தலை நாய் - புழுவையுடைய தலையையுடைய நாய். பிற உறுப்புக்களிற் புழுக் கொள்வதினும், தலையிற் புழுக்கொள்ளுதல், துன்பமும், இழிவும் தருவதாகலின், தலையையே கூறினார். `இனி, புழுத்து அலை நாய்` என்பாரும் உளர். ஏழையர்க்கு - ஏழையர்மாட்டு; உருபு மயக்கம். ஏழையர் - பெண்கள். இச் சகம் - இவ்வுலகம். `இச்ச கத்து` எனின், வாளாதே மோனை கெடுதலாலும். பொருட் சிறப்பும் இன்மையானும், `விச்சகத்து` என்பதே பாடம் போலும்! `விச்சையகத்து` என்பது தொகுத்தலாய், `விச்சகத்து` என வருதல் பொருந்துவதே. அச்சன் - தந்தை.

பண் :

பாடல் எண் : 10

செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
செறிகுழ லார்செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும்
உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன்
இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.

பொழிப்புரை :

நெருங்கி மேன்மேல் வரும், இப்பிறப்பு இறப்புகளாகிய இவைகளை நீக்கும் வழியை எண்ணாமல், அடர்ந்த கூந்தலை உடையவராகிய பெண்கள் செய்கின்ற பொய்ந் நடையை யும் தாழ்மையான தன்மையையும், கயல் மீன் போன்ற கண்களையும் நினைத்தே கிடக்கின்றவனாகிய என்னை, யாவர்க்கும் தலைவனாகிய எம் தலைவன் எல்லையற்ற. தனது திருவடித் தாமரைகள் இரண்டையுங் காட்டியருளி, உண்மை அறிவினைக் கொடுத்து ஆட்கொண்டருளிய, அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

குறிப்புரை :

செறியும் - அடர்ந்துள்ள. கிறி - பொய்ம்மை; அவை இன்மொழியும், இனிய செயலும் போல்வன. அவற்றுள் பார்வை சிறப்புடைமையின், அதனை வேறு கூறினார். கீழ்மை - நாணமின்றி யொழுகுதல்.

பண் :

பாடல் எண் : 1

தேவ தேவன்மெய்ச் சேவகன்
தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அரியொ ணாமுத
லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்ப ரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிச் சுடருமே. 

பொழிப்புரை :

தேவர் பிரானும், உண்மையான வீரனும் அழகிய திருப்பெருந்துறைக்குத் தலைவனும், மும்மூர்த்திகளாலும், அறிய முடியாத முதல்வனாகிய, இன்ப வடிவினனும் அன்பரல்லாத பிறர் எவராயினும் அவர்களால் அறியக் கூடாத செந்தாமரை மலர் போன்ற ஒளியையுடையவனும் ஆகிய இறைவனுடைய தூய்மையான சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலை பெற்று நின்று விளங்கும்.

குறிப்புரை :

தேவ தேவன் - தேவர்கட்குத் தேவன். மெய்ச் சேவகன் - உண்மை வீரன். உண்மை வீரமாவது அஞ்ஞானத்தை அழித்தல். யாவராயினும் - எத்துணை உயர்ந்தோராயினும். மன்னி - மன்னுதலால். சுடரும் - ஒளிவிடும். ``தூய`` என்றது, இனவெதுகை.

பண் :

பாடல் எண் : 2

அட்ட மூர்த்தி அழகன் இன்னமு
தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன்
தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர்
பாகம் வைத்த அழகன்றன்
வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.

பொழிப்புரை :

அட்ட மூர்த்தங்களையுடையவனும், அழகை யுடையவனும் இனிய அமுத மயமான பேரின்பக் கடலானவனும், மேலானவனும் அழியாத சிவபுரத்துக்குத் தலைவனும், அழகிய திருப்பெருந்துறையில் எழுந்தருளிய வீரனும் தேன் மணம் கமழும், கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தே வைத்த அழகனும் ஆகிய இறைவனது வட்ட வடிவமாகிய சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலை பெற்று நின்று பொலிவு பெற்று விளங்கும்.

குறிப்புரை :

சிட்டன் - மேலானவன். மட்டு - தேன். வட்டமாமலர் - தாமரை மலர். மலரும் - பொலிவுபெறும்.

பண் :

பாடல் எண் : 3

நங்கை மீரெனை நோக்கு மின்நங்கள்
நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை
மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங் கொண்டெம்
உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிப் பொலியுமே.

பொழிப்புரை :

பெண்களே! என்னைப் பாருங்கள். நம் எல்லோர்க்கும் தலைவனும் நம்முடைய தொண்டை ஏற்றுக் கொண்ட வனும் தென்னஞ்சோலைகள் சூழ்ந்த பெருந்துறையிற் பொருந்திய வீரனும் யாவர்க்கும் தலைவனும் பெண்களுடைய கையிலுள்ள வளையல்களையும் கவர்ந்து கொண்டு எம்முடைய உயிரையும் கொள்ளை கொண்டு எமது தொண்டினை ஏற்றுக் கொள்பவனும் ஆகிய பெருமானுடைய மலரைப் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நம்முடைய தலை நிலை பெற்று நின்று விளங்கும்.

குறிப்புரை :

இத்திருப்பாட்டு, அகப்பொருள் நெறிபற்றி அருளிச் செய்தது. மங்கைமார், தாருகாவன முனிவர் பத்தினியர். `அவர்பால் வளையே கொண்டொழிந்தான்; எம்பால் உயிரையே கொண்டான்` என்றாள். இஃது அடிகளை இறைவன் தன் அடிமையாக் கொண்டதைக் குறித்தது. முதற்கண், ``நம் பணி கொண்டவன்`` என்றது, பொதுவாகவும், இறுதியில் `எம்பணி கொள்வான்` என்றது சிறப்பாகவும் அருளிச் செய்தன. அன்றியும், ``எம் பணிகொள்வான்`` என்றது, எம்மை ஆட்கொள்வான்` என்னும் பொருளதேயாம். ஆயினும், ``நம் பணிகொண்டவன்` எனப் பாடம் ஓதாது, `அம்பணி கொண்டவன்` எனப் பாடம் ஓதி, `நீரை அணியாகக் கொண்டவன்` என்று உரைப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 4

பத்தர் சூழப் பராபரன்
பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான்
தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்த னாகிவந் தில்பு குந்தெமை
ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே.

பொழிப்புரை :

தில்லையாகிய பழமையான பதியிலே நிருத்தம் புரிபவனும், மிகவும் மேலானவனும் ஆகிய, சித்தர்கள் சூழ்ந்து வணங்கும் அந்தச் சிவபெருமான் அடியார் புடை சூழ, பூமியில் வந்து அந்தணக் கோலத்தோடு ஏமாற்றுபவனாய் வந்து எங்கள் வீடுகளில் புகுந்து எம்மை அடிமை கொண்டு எமது தொண்டினை ஏற்றுக் கொள்ளும் படியாகச் சூட்டிய சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று பொலிவு பெற்று விளங்கும்.

குறிப்புரை :

சித்தர் - யோகிகள்; பதஞ்சலி முதலியோர். வலிய வந்து ஆட்கொண்டமையை, ``இல் புகுந்து`` என்றார். வைத்த - சூட்டிய.

பண் :

பாடல் எண் : 5

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
மதித்தி டாவகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள்
திருப் பெருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூற ஊறநீ
கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.

பொழிப்புரை :

பொய்யான உலக வாழ்க்கையை உண்மையானது என்று நினைத்து அதனைப் பாராட்டாதபடி, எமக்கு ஞானத்தைக் கொடுத்தவனும் மூங்கிலை ஒத்த தோளினையுடைய உமையம்மை யின் பாகனும் எமது திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவன், எனது உடம்பினுள் அமுதம் இடைவிடாது பெருகு மாறு `நீ பார்` என்று காட்டி அருளிய சிறந்த செந்தாமரை மலர் போன்ற சிறந்த திருவடியின் கீழே, நம் தலை நிலைபெற்று நின்று விளங்கும்.

குறிப்புரை :

நல்கினான் - அருள்செய்தான், ``திருப்பெருந்துறை மேவினான்`` என்பது, `இறைவன்` என ஒருசொல் தன்மைப் பட்டு நின்று, ``எங்கள்`` என்றதனோடு நான்காவதன் பொருள் படத் தொக்கது. நிட்டை கைவந்த பின்னர், உடம்புள்ள பொழுதே உயிரினிடத்துச் சிவானந்தம் பெருகுமாதலின் அதனைக் காயத்துள் ஊறுவதாக அருளிச் செய்தார். கண்டு கொள் - இத்திருவடிகளின் இயல்பை அறிந்துகொள். சேய - செம்மையான.

பண் :

பாடல் எண் : 6

சித்த மேபுகுந் தெம்மை யாட்கொண்டு
தீவி னைகெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்க ழற்கணே
பன்ம லர்கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவு லகுக்கும்
அப்பு றத்தெமை வைத்திடு
மத்தன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 

பொழிப்புரை :

சித்தத்திலே புகுந்து எம்மை அடிமையாகக் கொண்டருளி, தீயவாகிய வினைகளை அழித்து உய்வதற்குரிய அன்பினைக் கொடுத்துத் தனது அழகிய திருவடியின் கண்ணே பல வகையான மலர்களைப் பறித்து இடுதலும், விடுதலையைக் கொடுத்து இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பால் எம்மைப் பேரின்பத்தில் வைக்கின்ற, ஊமத்தம்பூவை அணிகின்ற இறைவனது சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று பொலிவுபெற்று விளங்கும்.

குறிப்புரை :

``ஆம்`` என்றது பெயரெச்சம். அது, ``பத்தி``என்னும் கருவிப் பெயர்கொண்டது.
முத்தி - சீவன் முத்திநிலை. மத்தன் - ஊமத்த மலரைச் சூடியவன். மோனை கெடுதலின், `அத்தன்` எனப் பாடமோதுதல் சிறப் பன்று.

பண் :

பாடல் எண் : 7

பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன்
பேர ருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்க
ளருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக் கொண்ட
பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.

பொழிப்புரை :

பிறவியாகிய இந்தக் கடலை நீந்துவதற்குத் தன்னுடைய பேரருளாகிய தெப்பத்தை கொடுத்தருளினவனும், துணையில்லாதவன் என்று எண்ணி, அடியார்களுடைய அருட் கூட்டத்தில் புகுவித்து அவர்களோடு நல்ல உறவை உண்டாக்கி என்னைப் பிழைக்கும்படி ஆட்கொண்ட தலைவனுமாகிய இறை வனது உண்மையான பேரருளாகிய தனது வல்லமையைக் காட்டிய சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று விளங்கும்.

குறிப்புரை :

அறவை என்று - இவன் துணையிலி என்று இரங்கி. உண்மைப் பெருக்கமாம் திறமை - உண்மையினது மிகுதியாகிய ஆற்றல். அதனைக் காட்டினமை, சென்னியிற் சூட்டிய பொழுதே மயக்கெலாம் அற்று அன்பு பிழம்பாகச் செய்தது.

பண் :

பாடல் எண் : 8

புழுவி னாற்பொதிந் திடுகு ரம்பையிற்
பொய்த னையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன் எம்பிரான்
என்னுடை யப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் தூய்மலர்க்
கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவிலாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 

பொழிப்புரை :

புழுக்களால் நிறைந்துள்ள உடம்பில் பொருந்தி நிற்கும் நிலையற்ற வாழ்வை ஒழிக்கின்ற அழகையுடைய சோதியே! எம்மை ஆள்பவனே! எம்பெருமானே! என்னுடைய தந்தையே! என்று பலகால் சொல்லிக் கூப்பிய கையையுடையவராய், தூய்மையான தாமரை மலர் போன்ற கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரியும் அடியார்களுக்குத் தவறாது கிடைக்கின்ற தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின்கீழே, நமது தலை நிலை பெற்று நின்று பொலிவு பெற்று விளங்கும்.

குறிப்புரை :

பொதிந்து - நிறைத்து. இடு, துணைவினை. பொய் - நிலையாத வாழ்வு. வழுவிலா - தவறாத, ஒருதலையாகக் கிடைக்கின்ற.

பண் :

பாடல் எண் : 9

வம்ப னாய்த்திரி வேனை வாவென்று
வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப்
புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க் கருளி மெய்யடி
யார்கட் கின்பந் தழைத்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 

பொழிப்புரை :

வீணனாய்த் திரிகின்ற என்னை வா என்று அழைத்து வலிமையான வினையாகிய பகையினை அழிக்கின்ற மேலிடத்தில் உள்ளவனும் உலகங்களை எல்லாம் ஊடுருவிச் சென்று அப்பாற் பட்டவனாய எமது தலைவனும் அன்பர்களுக்கு இரங்கி அருள் செய்பவனுமாகிய இறைவனது உண்மையான அடியார்களுக்கு இன்பம் பெருக நிற்கின்ற செவ்விய பொன் போன்ற சிறந்த தாமரை மலர் போலச் சிவந்த திருவடியின் கீழே, நம்முடைய தலை நிலை பெற்று விளங்கும்.

குறிப்புரை :

வம்பன் - வீணன். ``அருளி`` என்றது பெயர். `அருளிதன் சேவடி` என்க.

பண் :

பாடல் எண் : 10

முத்த னைமுதற் சோதியை முக்கண்
அப்ப னைமுதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோக னைத்திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின் நீர்உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 

பொழிப்புரை :

இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனும் ஒளிப் பொருள்களுக்கெல்லாம் மூல ஒளியாய் உள்ளவனும் மூன்று கண்களையுடைய தந்தையும் காரணங்களுக்கெல்லாம் முன்னேயுள்ள காரணமானவனும் ஞான மயமானவனும் சிவபுரத்தவனும் ஆகிய இறைவன் திருப்பெயர்களைப் பரவித் திரிகின்ற அன்பர்களே! நீங்கள் இங்கு வாருங்கள். அவனை உங்களது பந்தங்கள் நீங்கும் பொருட்டு வணங்குங்கள். அங்ஙனம் வணங்கினால் உள்ளத்தில் நிறைந்த சிவந்த அவனது திருவடியின் கீழே நமது தலை நிலைபெற்று விளங்குதல் திண்ணம்.

குறிப்புரை :

முதற் சோதி - ஒளிப் பொருள்கட்கெல்லாம் ஒளி வழங்கும் ஒளி. இதனானே, `எவ்வுயிர்க்கும் அறிவைப் பயப்பிக்கும் அறிவு` என்பதும் முடிந்தது. முதல் வித்து - முதற் காரணன்; `பரம காரணன்` என்றபடி. இடைநிலைக் காரணர் பலர் உளராதல் அறிந்து கொள்க, ``பணிமின்`` என்றதன் பின், `என்னையெனின்` என்பது வருவிக்க. ஓகாரம், அசை நிலை. `என்றும் உள்ளத்திருக்கும் சேவடி, பணிவார்க்கு வெளிநிற்கும்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 1

மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கரு ணையடி
யார்குலாவுநீ திகுணமாக நல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறிவார் எம்பிரா னாவாரே.

பொழிப்புரை :

பெண் பொருந்திய பாகத்தனும், வேதம் சொன்ன மொழியையுடையவனும், உயர்ந்த இதய மலரில் வீற்றிருக்கும் ஒளிப்பிழம்பானவனும், குற்றமற்ற மேலான கருணையாளனும், அடியார்கள் கொண்டாடுகின்ற நீதியினையே குணமாக, அவர்களுக்கு அருள்புரியும், அரும்புகள் மலர்கின்ற சோலை சூழ்ந்த திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கும் எமது புண்ணியப் பொருளானவனும் ஆகிய இறைவன் மண்ணுலகத்தில் வந்து இறங்கி, எல்லாவற்றுக்கும் முதலாயுள்ள பெரும் பொருளாகிய தன் தன்மையை வெளிப்படுத்திய அருளின் அருமையை அறியவல்லவர்கள் எம் பிரான் ஆவார்கள்.

குறிப்புரை :

இவர் - மேம்பட்டு விளங்குகின்ற. வாசகன் - சொல்லை யுடையவன். `சோதி, நீதி` என்பனபோல, `கருணை` என்பதும் இறைவனையே குறித்தது. போது அலர் - போதுகள் மலர்கின்ற. `வந்திழிந்து` என அளபெடையின்றி ஓதுதல் பொருந்தாமையறிக. ஆதிப் பிரமம் - எல்லாவற்றிற்கும் முதலாகிய பெரும் பொருளை. வெளிப்படுத்த - எமக்குப் புலப்படுத்திய. இப்பெயரெச்சம். `அருள்` என்னும் காரணப்பெயர் கொண்டது. `அருளினது பெருமையை உணர்பவர் எமக்குக் கடவுளாவார்` என்க. இங்ஙனங் கூறியது, `அவரே சிவனடியார்` என்றபடி. ``கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பராகில் - அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே`` (தி. 6 ப.95 பா.10) என்னும் திருத்தாண்டகத்தைக்காண்க.

பண் :

பாடல் எண் : 2

மாலயன் வானவர் கோனும்வந்து
வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம தனிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாடநீடு
குலாவு மிடவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தேவர் பிரானாகிய இந்திரனும் வந்து வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த ஆண்டவன் உலகத்தின் கண்ணே வந்து தோன்றி நல்ல வழியினைக் காட்டி நன்மை விளங்குகின்ற அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்கள் நெடிது விளங்குகின்ற திருவிடை மருதூரில் இளம் பெண் ஒருத்திக்கு, ஒழுக்கம் விளங்கும்படி கருணைபுரிந்த தன்மையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

நீடு குலாவும் - நெடிது விளங்குகின்ற. `இடவை` என்பது, `வந்தி` என்பவள் வாழ்ந்த இடத்தின் பெயர் போலும்! வந்தி பொருட்டு இறைவன் மண்சுமந்த வரலாறு வெளிப்படை. `இடவை - இடைமருது` என உரைத்து, `அதன்கண் மடநல்லாட்கு அருள்புரிந்த வரலாறு அறியப்பட்டிலது` என்று போவாரும், இடைமருதில் வரகுணன் அன்பிற்காக இறைவன் அவன் மனைவியை ஏற்றதனைப் பொருத்துவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 3

அணிமுடி ஆதி அமரர்கோமான்
ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப்
பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறையெம்
பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும்
வகையறி வார் எம்பிரா னாவாரே.

பொழிப்புரை :

அழகிய சடைமுடியையுடைய முதல்வனும் தேவர் கட்குத் தலைவனும் ஆனந்தக் கூத்துடையவனும், அறு சமயங்களும் தன்னை வணங்கும்படியாகச் செய்து மண்ணுலகத்தாரும், விண் ணுலகத்தாரும், வாழ்த்தி வணங்க, பிறவி நோய் நீங்கும் வண்ணம் அவர்கட்கு அருள்செய்கின்ற திருப்பெருந்துறையிலுள்ள எம் பெருங் கருணையாளனுமாகிய இறைவன் வலைப்பெண்ணாய் வந்த உமையம்மையை மணக்க விரும்பித் தோணியில் ஏறி, அழகிய வலையைக் கொண்டு பெரிய கெளிற்று மீனைப் பிடித்த திறத்தை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

பிஞ்ஞகனாகலின், அவனது முடியை, ``அணிமுடி`` என்றார். ஆதி - முதல்வன். அறுசமயம், அகச்சமயங்கள். `அவை தன்னைப் பணியும் வகைசெய்து` என்றது, `அறுசமயங்களை` வகுத்து என்றபடி. படவை, இக்காலத்தார், `படகு` என்ப. மணி - அழகு. `வலைகொண்டு விசிறும்` என இயைக்க. வான் மீன் - பெரிய மீன். `மீன்மேல் விசிறும்` என்க. இறைவன் வலை வீசிய திருவிளையாடல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 4

வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
இயல்பறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனும் திருப்பெருந்துறையில் உள்ள முதல்வனும், `வேடுவனது உருவங் கொண்டு மகேந்திர மலையின்கண் மிக்க குறைகளையுடைய தேவர்கள் வந்து தன்னைத் தேடும்படியாய் மறைந்திருந்தவனுமாகிய சிவபெருமான் அடியேங்கள் உய்யும் வண்ணம் திருவுளங் கொண்டு அக்காலத்தில் ஆடலை விரும்பிய குதிரைமேல் ஏறி வந்து தோழர்களை எவ்விடத்தும் ஆட்கொண்டருளிய, தன்மையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

மிகு குறைவானவர் - மிக்க குறையுடைய தேவர். சிந்தனை செய்து - தனது திருவருளை நினைந்து. ஏடர்கள் - தோழர்கள்; அடியார்கள். `வானவர் தேட மகேந்திரத்து இருந்த சிவபெருமான், ஐயன், பெருந்துறை ஆதி, அடியோங்கள் சிந்தனை செய்து உய்ய, அந்நாள் வேடுருவாகி, பரிமா ஏறி எங்கும் ஏடர்களை ஆண்டு கொண்ட இயல்பு அறிவார் எம்பிரானாவார்` எனக் கொண்டு கூட்டி முடிக்க. குதிரை வீரன் வடிவத்தை, ``வேடுரு`` என்றார். சிவ பிரான் மதுரையில் குதிரை கொணர்ந்த திருவிளையாடல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 5

வந்திமை யோர்கள் வணங்கியேத்த
மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டற நல்கும்எங்கள்
பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன்
றோங்கு மதிலிலங் கைஅதனிற்
பந்தணை மெல்விர லாட்கருளும்
பரிசறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

தேவர்கள் வந்து வழிபட்டுத் துதிக்க, அவர் களுக்குப் பேரருள் புரியும் கடலாய், அடியவர்களது பாசக்கட்டு விட்டு நீங்கும்படி அருளுகின்ற எங்கள் மேலானாகிய திருப்பெருந்துறை முதல்வன் அக்காலத்தில் மேன்மேல் பரவுகின்ற அலைகளையுடைய கடலைத் தாண்டிச் சென்று உயர்ந்த மதிலையுடைய இலங்கையில் பந்து பொருந்திய மென்மையான விரல்களையுடைய மண்டோதரிக்கு அவள் நினைத்த அன்றே அருள் செய்த தன்மையை அறியக் கூடியவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

இலங்கையில் வண்டோதரிக்கு அருள்புரிந்த வரலாறு (தி.8 குயிற்பத்து பா.2 உரை) முன்னர்க் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே
எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
எந்தை பெருந்துறை ஆதிஅன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே.

பொழிப்புரை :

முப்புரம் தீயில் வெந்தொழிய அழித்த வில்லை யுடையவனும், ஆண்டவனும், எந்தையும் ஆகிய திருப்பெருந்துறை முதல்வன், பணியைச் செய்யும் தேவர்களது முன்னிலையில், கடிக் கின்ற நாய்கள் சூழ்ந்து வர, தான் வேடனாகிச் சென்ற காட்டிலே, அம்பு தைத்து இறந்த பன்றிக்குத் திருவுளம் இரங்கி அக்காலத்தில் அற்ப மாகிய தாய்ப்பன்றியாகி அதன் குட்டிகளுக்குப் பால்கொடுத்த திரு வுள்ளப் பாங்கை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை :

``வேடுவனாய்`` என்றது முதல், ``இயங்கு காட்டில்`` என்றது காறும் உள்ளவை, சிவபெருமான் அருச்சுனன் பொருட்டுப் பன்றிப்பின் வேடனாய்ச் சென்ற வரலாற்றைக் குறிப்பன. அக்காலத் தில் தேவர்கள் ஏவல் செய்யும் வேடுவராய் வந்தனர் என்பதும் வரலாறு. சிவபெருமான் பன்றிக் குட்டிகட்குப் பால் கொடுத்த காட்டினை, அருச்சுனன் பொருட்டுச் சென்ற காடாகக் கூறியது, `நீவிர் உண்ணும் சோறே யாம் உண்பதும்` என்றல்போல, `காடு` என்னும் பொதுமை பற்றி. ஏவுண்ட பன்றி - அம்பு தைக்கப்பட்டு இறந்த தாய்ப் பன்றி. கேவலம் - தனிமை; சிறப்புச் சிறிதும் இன்மை. `கேவலமாக` என ஆக்கம் வருவித்துரைக்க. இங்ஙனம் ஆக்க வினை தொகுக்கப் பட்ட தொகாநிலை யாதலின், ``கேவலங் கேழலாய்`` என, மகரம் இனமெல்லெழுத்தாய்த் திரிந்தது. கேழல் - பன்றி. `பன்றியுள் ஒருவகை கேழல்` என்பதன்றி, `கேழல் ஆண் பன்றி` என்றல் எங்கும் இல்லை. அதனால், `ஒருசாரார் அங்ஙனம் கூறுப` என்னும் துணையே குறித்துப்போவர் தொல்காப்பிய உரையாளர். கிடப்பு - கிடை. தாய்ப்பன்றி கிடந்தவழியன்றி அதன் இளங்குட்டிகள் பாலுண்ண மாட்டாமையறிக. ``கிடை`` என்றது, கிடத்தற்கு ஏதுவாய அருளைக் குறித்தது. இறைவன் பன்றிக் குட்டிகட்குப் பால் கொடுத்த திருவிளை யாடல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 7

நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல்லார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

வண்டின் ரீங்கார ஒலியையுடையதாகிய ஒப்பற்ற தாமரை மலரில் பொருந்திய கலைமகள் திருமகள் என்னும் மகளிர் இருவரும் வாழ்த்தி வணங்கி மலர் தூவி வழிபட, ஒளி மிகுகின்ற சோதி வடிவமான எமது ஆண்டவனும், நிலைபெற்ற மலர்கள் விரிகின்ற சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் எமது புண்ணிய மூர்த்தியுமாகிய இறைவன், பூமியில் வந்து காட்சி கொடுத்து, வேற்றுமைகளைக் களைந்து அருள் புரிகின்ற பெருமையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை :

நாதம் - வண்டுகளின் ஒலி. கமலப்போதினில் நண்ணிய நன்னுதலார் - திருமகளும், கலைமகளும். அவ்விருவரும் முறையே திருவாரூரிலும், திருக்கண்டியூரிலும் சிவபெருமானை வழிபட்டுத் தத்தம் கணவர் உயிர்பெற்றெழும் வரத்தைப் பெற்றமையை அவ்வத் தல புராணங்களுட் காண்க.
இவற்றுள், திருமகள் திருவாரூரில் வழிபட்டு வரம் பெற்ற வரலாறு பலரும் அறிந்தது. கண்டியூர் அட்ட வீரட்டங்களுள் ஒன்றாதலும், அது பிரமனது சிரத்தைக் கொய்த வீரட்டமாதலும் அறியற் பாலன. ``காபாலி - போரார் புரம் பாடிப் பூவல்லி கொய்யாமோ`` (தி.8 திருப்பூவல்லி-10) என்றதில், அடிகள் அட்ட வீரட்டங்களைக் குறித்தல் நினைவு கூரற் பாலது. மாலுக்கும், அயனுக்கும் சிவபெருமான் அருள்புரிந்தமையைப் பலவிடத்தும் அருளிச் செய்த அடிகள், இங்கு. அவர்தம் தேவியர்க்கு அருள் புரிந்தமையை அருளிச்செய்தார் என்க.

பண் :

பாடல் எண் : 8

பூவலர் கொன்றைய மாலைமார்பன்
போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

மலர்கள் விரிகின்ற அழகிய கொன்றை மாலையை அணிந்த, மார்பையுடையவனும் போர்த்தொழிலுக்குரிய நகங்களை யுடைய வலிமை மிகுந்த புலியைக் கொன்ற வீரனும், மாதரிற் சிறந்தவளாகிய உமையம்மையின் பாகனும், வளமையான சோலை சூழ்ந்த அழகிய திருப்பெருந்துறை அரசனும் ஆகிய குற்றமில்லாத பெரும் புகழையுடைய எங்கள் ஆண்டவன் பெரிய கடலில் வாழ்பவனாகிய வருணனுக்கு நெருப்பில் தோன்றிய சித்திரம் போன்ற பெண்களுடைய தோள்களைத் தழுவிய உருவத்தின் தன்மையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை :

`கொன்றைய பூ அலரும் மாலை` என்க. `போர்ப் புலி` என இயையும். `ஏதம் இல்` என்பது கடைக் குறைந்து, `ஏதில்` என்றா யிற்று. கடல் வாணன் - கடல் வாழ்க்கையுடையவன்; வலைஞன். தீயில் தோன்றும் - தீயிடத்துத் தோன்றிய. ஓவிய மங்கையர் - சித்திரம் போலும் அழகுடைய மகள். வலைஞர்கோனிடத்து மகளாயிருந்த உமையம்மையைச் சிவபிரான் வலைஞர் மகனாய்ச் சென்று மணந்த திருவிளையாடல் வெளிப்படை.
முன்பு மூன்றாம் திருப்பாட்டில், வலைவீசி நந்தி சாபத்தை நீக்கினமை கூறினார். இங்கு வலையர் மகளாகியிருந்த அம்மையை மணந்தமை கூறினார். இங்குக் குறிக்கப்பட்ட வரலாறு பற்றி யாதும் கூறாது போவார் போக, கூறப்புகுந்தோர் யாவரும் இங்குக் கூறிய இவ் வரலாற்றையே கூறினார்; எனினும், ``தீயில் தோன்றும்`` என்ற வேறுபாடு ஒருபால் நிற்பினும், ``மங்கையர்`` எனப் பன்மை கூறினமையின், இவ்வரலாறு இன்னும் ஆய்ந்துணரற்பாலதே. ``ஓவிய`` என்பது, நீங்கிய எனவும் பொருள்கொளற்குரியது. `மங்கைதன் தோள்` என்பது பாடமாயின் மேற்குறித்த வரலாற்றைக் கொள்ளத் தடையில்லை.

பண் :

பாடல் எண் : 9

தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே.

பொழிப்புரை :

தூய்மையான திருவெண்ணீற்றையணிந்த, எம்பிரானும், ஒளியையுடைய மகேந்திர மலைக்குத் தலைவனும் தேவர்கள் வந்து வணங்கும்படியான தன் திருவடியை அடியார்கள் மேல் வைத்தருளிய ஆண்டவனும் அழகிய நல்ல திருப்பெருந் துறையை ஆள்பவனும் ஆகிய இறைவன் அக்காலத்தில் எனக்கு அன்பு மிகும்படி, திருவருள் புரிந்து தன் திருவடியைக் காட்டியருளி, மனம் நைந்து உருகும்படி துன்பத்தை ஒழித்து என்னை ஆட்கொண்டருளின திருவுள்ளக் கிடக்கையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை :

`தேவர் தொழும் பாதத்தை எம் முடிமேல் வைத்த ஈசன்` என்க. கேதம் - துன்பம். ``ஆண்டருளும்`` என்றது, `இனியும் வந்து ஆட்கொண்டருளுகின்ற` என எதிர்காலச் சொல்லாம்.
கிடப்பு - கிடைப்பு. `கிடைப்பு` என்பதே பாடம் என்றலு மாம். இறைவன் தம்மைத் தில்லைக்கு வருக எனப்பணித்தமையின், காலம் நீட்டித் தொழியினும் என்றேனும் ஒருநாள் தோன்றித் தம்மை ஏற்றருளல் ஒரு தலை என்பது பற்றி இங்ஙனம் அருளிச் செய்தார். இதனால், அடிகளை இறுதிக் கண் இறைவன் எவ்வாற்றாலேனும் தானே நேர்நின்று தன்பால் அழைத்துக்கொண்டான் என முடித்தலே முடிபாமன்றி, அவரது வாழ்க்கை வரலாற்றினைப் பிறிதோராற்றால் முடித்தல் முடிபாகாது.
பிற முடிபே முடிபாயின், திருப்பெருந்துறையில் இறைவனு டன் செல்ல விரும்பிய அடிகளை, `தில்லைக்கு வருக` என இறைவன் பணித்த சொல்லும், அடிகள் திருவாசகம் முழுதும் தம்மை மீளத் தோன்றி அழைத்துக் கொள்ளல் வேண்டும் எனச் செய்து கொண்ட விண்ணப்ப மொழிகளும் எல்லாம் பயனில் சொற்களாய்ப் போமாறு அறிக.

பண் :

பாடல் எண் : 10

அங்கணன் எங்கள் அமரர்பெம்மான்
அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர
இகபர மாயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடுஞ்
சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த
வகையறிவார் எம்பிரா னாவாரே. 

பொழிப்புரை :

அழகிய கண்ணையுடையவனும், எங்கள் தேவ தேவனும் அடியவர்களுக்கு அமுதம் போன்றவனும் பூமியில் குரு வாகி வந்த எங்கள் பெருமானும் மிக்க திறமையுடையவனும் ஆகிய, திருப்பெருந்துறை இறைவன், பெரிய பாசம் நீங்கவும், இம்மை மறுமைப் பயனாய் இருப்பதாகிய ஒப்பற்ற ஆனந்தத்தையடையவும், அந்நாளில் சங்கினாலாகிய வளையல்களை முனிபத்தினியர்களிடம் கவர்ந்து கொண்டு வளமையான வணிகக் குழாத்தினோடும் வணிகப் பெண்டிர் நிறைந்துள்ள மதுரையம்பதியை அடைந்த தன்மையினை அறியக் கூடியவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை :

`(யாங்கள்) பாசந் தீரவும், இன்பம் எய்தவும் மதுரை சேர்ந்த வகை` என்க. சங்கம் - வளையல். `வளையலைக் கவர்ந்து` என்றது, `மங்கையரைக் காதல் கூரப் பண்ணினான்` என்றபடி. சாத்து- வாணிகக் குழாம். சதுரன் - திறமையுடையவன். நான்காம் திருப் பாட்டில் குதிரை கொணர்ந்தமையை அருளிச் செய்தார்; இதனுள், குதிரை வாணிகத் தலைவனாய் வந்த பொழுது காணப்பட்ட அவனது பேரழகினை அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 1

பாருரு வாய பிறப்பற வேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங்கம லம்மலர்போல்
ஆருரு வாயஎன் ஆரமு தேஉன்
அடியவர் தொகைநடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே.

பொழிப்புரை :

சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டருள் வாயாக.

குறிப்புரை :

பார் உரு - நிலவுலகத்திற்கு ஒத்த உடம்பு; என்றது, இப்பிறப்பினை. இஃது அற்றவழி இறைவன் திருவடி கூடுதல் திண்ண மாதலின், இப்பிறப்பறுதல் மாத்திரையே கூறினார். ``வேண்டும்`` என்றது, `இன்றிமையாதது` என்றதாம், பத்திமை பெறுதல், பிறப்பு அறுந்துணையும் என்க. இதனால், `பிறப்பு அற்றபின் பத்திமை வேண்டா` என்றதன்று. ஆண்டுப் பத்திமைக்குத் தடையின்மையின் அதுதானே நிகழும்; பிறப்பு உள்ளபொழுதே அஃது அரிதாகலின், அங்ஙனம் அரிதாகற்கு ஏதுவாய தடைகள் நீங்குதல் வேண்டும் என்றவாறு. சீர் உரு - சிறப்புடைய பொருள். `செங்கமல மலர் போல்` என விகாரமின்ற யோதுதல் பாடமாகாமையறிக. `செங்கமல மலர் போலும்` எனப் பாடம் ஓதுவாரும் உளர். ஆர் உரு - பொருந்திய வடிவம். ஓர் உரு - ஒப்பற்ற வடிவம். இறைவனது வடிவம் அருளே யாதலின், அதனை, ``திருவருள்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 2

உரியேன் அல்லேன் உனக்கடிமை
உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
பொய்யோ எங்கள் பெருமானே. 

பொழிப்புரை :

சங்கரனே! எம் தலைவனே! உனக்கு அடிமையா யிருப்பதற்கு உரிய தகுதியுடையேனல்லேன். எனினும் உன்னை விட்டு நீங்கி இவ்விடத்தில் ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன். இரக்கத்தால் பெரிய ஒப்பற்றவனாகிய நீ உன் கழலையணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டி உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ?. நாயனையான் அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன்.

குறிப்புரை :

`செய்ய` என ஒருசொல் வருவித்து, `உனக்கு அடிமை செய்ய உரியேன் அல்லேன்` என மாற்றிக்கொள்க. ``பொழுது`` என்றது மிகச்சிறிய நொடிப்பொழுதை. `இதற்குக் காரணம் இன்னது என்று அறியேன்` எனவும், நீ, கருணையினால் யான் பெரியோன் ஒருவன் கண்டுகொள்க என்று` எனவும் கொள்க. `என்றென்று` என்ற அடுக்கு வலியுறுத்தற்கண் வந்தது. தாம் வேண்டியும் வாராது பிரிந்து நிற்றலின், ``பிரியேன் என்று அருளிய அருளும் பொய்யோ`` என்றார்.

பண் :

பாடல் எண் : 3

என்பேஉருக நின்அருள் அளித்துன்
இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டு கொண்ட
முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர்
நாதா நின்னருள் நாணாமே. 

பொழிப்புரை :

என் எலும்புகளெல்லாம் உருகும் வண்ணம் உன் திருவருளைத் தந்து உன்னுடைய இரண்டு தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டி முன்னமே என்னை ஆட்கொண்ட முனிவனே! முனிவர்கட் கெல்லாம் முதற்பொருளானவனே! பேரின்பமே கொடுத் தருளி என்னை உருகுவித்து என் பசுபோதத்தை நீக்குகின்ற எங்கள் பெரியோனே! எனது உயிர்த் தலைவனே! உன்னுடைய திருவருளால் கூசாமல் உன்னுடைய நட்பை எனக்கு அருளிச் செய்யவேண்டும்.

குறிப்புரை :

முனிவன் - ஆசிரியன். முனிவர் முழுமுதல் - முற்றத் துறந்த முனிவர் பற்றும் முழுமுதற் கடவுள். ``உயிர்`` என்றது, அதன் போதத்தை. நண்பே - நண்பனே `நின் அருளை அடியேனுக்கு நீ நாணாமே அருளாய்` என்க. நாணுதல் இறைவன் தனது பெருமையை யும் இவரது சிறுமையையும் கருதியாம். ``நண்பே`` என்றது இன வெதுகை.

பண் :

பாடல் எண் : 4

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப் பாய்எம் பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வனே முறையோஎன்
றெத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே. 

பொழிப்புரை :

எம்பிரானே! முத்துப் போன்றவனே! மாணிக் கத்தைப் போன்றவனே! தலைவனே! முறையோவென்று எவ்வள வாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவனாகின்றேன். ஆதலின் பற்று இல்லாதவனாயினும், வணங்குதல் இல்லாதவனாயினும் உனது மேலான பசுமையான கழலையணிந்த திருவடிகளைக் காண்பற்கு விருப்பமில்லாதவனாயினும், துதித்திலேனாயினும் என் பிறவியைப் போக்கியருள்வாயாக.

குறிப்புரை :

பற்று, `பத்து` எனத் திரிந்தது. ``முத்தனையானே`` என்பது முதலியன வேறு தொடர். எத்தனை வகையானும் உன்னைத் தொடர்ந்து` என்க. பிரிந்து ஆற்றேன் - பிரிந்து ஆற்றேனாவேன்; என்றது, `பிரியேனாவேன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 5

காணும தொழிந்தேன் நின்திருப் பாதங்
கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன்
பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
காணவும் நாணுவனே. 

பொழிப்புரை :

எம் பிரானே! நிலையானவனே! உன் திருவடியைப் பிரிந்திருத்தலால் காண்பதை ஒழிந்தேன். கண்கள் களிப்பு மிகும்படி பார்த்துப் போற்றுவது ஒழிந்தேன். வாயால் துதிப்பதையும் விட்டேன். உன்னை எண்ணி உருகுகின்ற இயல்பும் என்னுடைய அற்பத் தன்மையால் தோன்றுதல் இல்லேனாயினேன். இவற்றால் பிறகு கெட்டேன். அதனால் நீ இனிமேல் என் முன் வந்தாலும் பார்ப்பதற்கும் கூசுவேன்.

குறிப்புரை :

``காணும் அது`` என்றற்றொடக்கத்தனவற்றுள், முற்றியலுகரமும் குற்றியலுகரம்போல உயிர்வருமிடத்துக் கெட்டது. `நின் திருப்பாதத்தைக் காணும் அது` எனவும், `உருகும் தன்மையைக் காணும் அது` எனவும், இயைக்க. ``என்புன்மைகளால்`` என்றது, ``ஒழிந்தேன்`` என்றன பலவற்றிற்குமாம். ``வரினும்`` என்ற உம்மை, எதிர்மறை, ``காணவும்`` என்ற உம்மை, இழிவு சிறப்பு. நாணுதல், முன்பெல்லாம் ஒழிந்தமை பற்றி.

பண் :

பாடல் எண் : 6

பாற்றிரு நீற்றெம் பரமனைப்
பரங்கரு ணையோடும் எதிர்ந்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ்
சோதியை நீதியிலேன்
போற்றியென் அமுதே எனநினைந் தேத்திப்
புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை
ஆவஎன் றருளாயே.

பொழிப்புரை :

என்னை அடிமையாக உடையவனே! பால்போல வெண்மையாகிய திருநீற்றையணிந்த எம் மேலோனும், மேலான கருணையோடும் எதிரே வந்து காணப்பட்டு உண்மை அடியவர் களுக்கு அருள் வழிநல்கும் ஒளிப்பிழம்பும், ஆகிய உன்னை அறநெறி யில்லாத யான் என் அமுதமே என்று எண்ணித் துதித்துப் போற்றி அழைத்து நின்று என் மனத்தில் ஆறுதல் அடையும்படி, அடியேனுக்கு ஐயோ என்று இரங்கி அருள் புரிவாயாக.

குறிப்புரை :

பால் திருநீறு - பால்போலும் திருநீறு. எதிர்ந்து தோற்றி- முன்வந்து தோன்றி. அருள் துறை - அருளாகிய திசை. ஆற்றுவனாக - ஆற்றுவேனாதலின். ``எம் பரமனை`` முதலியன, முன்னிலைக்கண் படர்க்கை வந்த இடவழுவமைதி.

பண் :

பாடல் எண் : 1

பூவார் சென்னி மன்னனெம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆஆ என்னப் பட்டன்பாய்
ஆட்பட்டீர்வந் தொருப் படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.

பொழிப்புரை :

மலர் நிறைந்த முடியையுடைய அரசனாகிய பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியவர்களாகிய நம்மை, இடை யறாமல் உள்ளத்தில் கலந்து உணர்வுருவாய் உருக்குகின்ற பெருகிய கருணையினால், ஐயோ என்று இரங்கியருளப்பட்டு அன்பு உருவாய் ஆட்பட்டவர், நிலையில்லாத வாழ்க்கையை விட்டு நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடையக் காலம் வந்துவிட்டது. போவோம். வந்து முற்படுங்கள்.

குறிப்புரை :

புயங்கம் - பாம்பு; `ஒருவகை நடனம்` எனவும் கூறுப. சிறியோமை ஓவாது - சிறியேங்களை விட்டு நீங்காது.
என்னப்பட்டு - என்று இரங்கி அருள் செய்யப்பட்டு. காண், முன்னிலையசை. பொய் - நிலையில்லாத உடம்பு. `ஆட்பட்டீர், பொய்விட்டு உடையான் கழல் புகக் காலம் வந்தது, போவோம்; ஒருப்படுமின்` என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

புகவே வேண்டா புலன்களில்நீர்
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து
நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத்
தளரா திருப்பார் தாந்தாமே. 

பொழிப்புரை :

நாட்டார் நகை செய்ய, உலகில் எழுந்தருளி நாயைப் போன்ற நம்மை ஆட்கொண்ட பெருமையையுடைய இறைவனை அடைந்தால் அவரவர் தளர்ச்சி நீங்கி இருப்பார்கள். ஆதலின் அடியவர்களே! நீங்கள் ஐம்புல விடயங்களில் செல்ல வேண்டா. பாம்பணிந்த பெருமானுடைய தாமரை மலரை ஒத்த திருவடிகளை மிகுதியாக நினையுங்கள். எஞ்சியவையெல்லாம் நமக்கு வேண்டா. அவைகளை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டு விடுங்கள்.

குறிப்புரை :

பின் இரண்டடிகளை முதலிற் கொள்க. மிக்க - எஞ்சியவை. நக - தன்னைத் தன் அடியார்கள் எல்லாம் நகைக்கும்படி. சார - சார்ந்தால், தாம் தாம் தளராது இருப்பார் - யாவரும் துன்பமின்றியிருப்பார்கள்; இவ்விடத்து; `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 3

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 

பொழிப்புரை :

ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர் களே! நீங்கள், நாம் யார்? எம்முடையது என்பது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து இவை நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய் வாழ்வை நீத்துப் பாம்பணிந்தவனும், எமையாள் வோனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

குறிப்புரை :

``தாமே`` என்றது, பொதுமையில் மக்களைச் சுட்டியது. அதனால், `அவரவரே அவரவர்க்கு உறவினரும், விதிமுறையும் ஆவர்` என்பது, முதல் அடியின் பொருளாகும். சுற்றத்தையும், விதியையும் கூறவே, `அவற்றின் மறுதலையாய பகையும், விலக்கும் அவரவர்க்கு அவரவரே` என்பதும் போந்தது. `பிறப்பு வீடு என்னும் இருவகைப் பயன்களையும் முறையே தருவனவாகிய வினையையும், தவத்தையும் செய்து அப்பயன்களைப் பெறுவார் அவரவரே` என்பதனை இவ்வாறு அருளிச் செய்தார்.
``பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்``
என்னும் திருக்குறளும் (505) இப்பொருளையுடையது.
இவ்வாறாயின், ``ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே`` (தி.6 ப.95 பா.3) என்றாற்போலும் திருமொழிகட்குக் கருத் தென்னையோ என்றெழும் ஐயப்பாட்டின்கண் பலர் பலபடத் தம் கருத்தினைப் புலப்படுப்பர். ஆட்டுவிப்பான் ஒருவன் பிறனை ஆட்டுவிக்கின்றுழி, ஆடுவான், முதற்கண்ணே ஆட்டுவிப்பான் குறிப்பின்வழியே ஆடல் இலக்கணம் எல்லாம் நிரம்ப ஆடுதல் இல்லை; முதற்கண் ஆட்டுவிப்பானது குறிப்பினின்றும் பெரிதும் வேறு பட ஆடிப் பின்னரே சிறிது சிறிதாக அவன் குறிப்பின் வழி நிற்கும் நிலையினைப் பெறுவன். அவ்வாறே ஈண்டுமாகலின், அதுபற்றி, ``தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்`` என்றற்கு இழுக்கென்னை என்க. இங்ஙனமல்லாக்கால், `ஆட்டுவிப்பான்` எனவும், `ஆடுவான்` எனவும் பொருள்களை இருவேறாகப் பகுத்துக் கூறுதற்குப் பயன் என்னையோ என்பது. எனவே, ``ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே`` என்றாற்போலும் திருமொழிகட்கு, `ஆடுந் தன்மையுடையானிடத்து அவ் வாடுதற்றொழில் ஆட்டுவிப்பானை யின்றி அமையாதவாறு போல, அறியுந்தன்மையும் செய்யுந் தன்மை யும் உடைய உயிர்களிடத்து அவ்வறிதலும் செய்தலும், அறிவிப் பவனும், செய்விப்பவனுமாகிய இறைவனையின்றி அமையா` என்பதும், `அவ்வாறாயினும், ஆடுதற்றொழிற்கண் உளவாகும் குறைவு நிறைவுகள் ஆடுவானுடையனவன்றி ஆட்டுவிப்பா னுடையனவாகாமை போல அறிதல் செய்தலின்கண் உளவாகும் தீமை நன்மைகள் உயிரினுடையனவன்றி இறைவனுடையன ஆகா` என்பதும், `அங்ஙனமாயினும், அறிவு செயல்களுக்கு இறைவனது அருள் இன்றியமையாமை பற்றி, அவற்றால் விளையும் தீமை நன்மைகளையும் அவனுடையன போல ஒரோவழி முகமனாகக் கூறுவர்` என்பதும், இறைவன் இவ்வாறு உயிர்களை அறிவித்தும், செய்வித்தும் நிற்பது அவற்றிற்கு எவ்வாற்றானும் நன்மை பயப்பதே யாதலின், அவற்றை அவன் எஞ்ஞான்றும் அங்ஙனம் செயற்படுத்தி நிற்பன்` என்பதுமே கருத்தாதல் அறிந்து கொள்க.
`யார்` என்பதன் மரூஉவாகிய `ஆர்` என்பன பலவும், `என்ன பொருள்` என்னும் கருத்தின. `இறைவன் முன்னே, உயிர்களும், அவைகள் `எமது` என்று பற்றுச் செய்தற்கு உரியனவும், அங்ஙனம் பற்றுச் செய்தற்கு ஏதுவாய் அவற்றை மறைத்து நிற்கும் பாசங்களும் பொருளோ` என்றதாம். என்ன மாயம் - இவையெல்லாம் எத்துணை மயக்கங்கள். உயிர், தன்னையே தலைமைப் பொருளாக நினைத்தல் மயக்க உணர்வேயாதல் பற்றி அதனையும், ``மாயம்`` என்றார். `இவை போகப் போமாறு` என இயையும். `பண்டைத் தொண்டர் முன்பே போயி னாராயினும், அவர் போயினவழியே போவோம்` என்பார், ``பண் டைத் தொண்டரொடும் போமாறு`` எனவும், `அவன்றன் குறிப்பு, நம் மைப் பிரிதல் அன்று` என்பார், ``அவன்றன் குறிப்பே குறிக் கொண்டு போமாறு`` எனவும் கூறினார். அமைமின் - ஒருப்படுங்கள். பொய், உலகியல்; `புயங்கனும் ஆள்வானும் ஆகியவனது பொன்னடி` என்க.

பண் :

பாடல் எண் : 4

அடியார் ஆனீர் எல்லீரும்
அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து
கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச்
சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே.

பொழிப்புரை :

அடியாராகிய நீங்கள் எல்லாரும் உலக இன்பங் களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள். மணம் தங்கிய திருவடியை வந்து பொருந்தி திருவுள்ளக் குறிப்பை உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள். திரு வெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய பாம்பணிந்த பெருமான் குற்றம் பொருந்திய உடம்பைப் போகும்படி நீக்கிச் சிவபுரத்தே நம்மை வைப்பான். தன் தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே புகும்படி செய்வான்.

குறிப்புரை :

விளையாட்டு - கவலையின்றிக் களித்திருத்தல். கடி - நறுமணம். கடைக்கொண்டு - கடைபோகக் கொண்டு. செடி - கீழ்மை. பொடி - திருவெண்ணீறு. `பொடிசேர் மேனிப் புயங்கன், நம்மை, முன்னர்ச் சிவலோகத்தே வைப்பான்; பின்னர்த் தன் கழற்கே புக விடுவான்` என்க. ``கழற்கு`` என்றது உருபு மயக்கம். ஏகாரம், பிரி நிலை. ``வைப்பான்; புகவிடும்`` என்றவை, `இவை நிகழ்தல் திண்ணம்` என்னும் பொருளன. அதனால், இறுதியிரண்டடிகளை முதலில் வைத்து, ``புகவிடும்`` என்றதன் பின்னர், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைத்தல் கருத்தாயிற்று.

பண் :

பாடல் எண் : 5

விடுமின் வெகுளி வேட்கைநோய்
மிகஓர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ
டுடன்போ வதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
அணியார் கதவ தடையாமே
புடைபட் டுருகிப் போற்றுவோம்
புயங்கன் ஆள்வான் புகழ்களையே. 

பொழிப்புரை :

மேன்மைப்படுவதற்கு இனிமேல் ஒருகாலம் கிடையாது. ஆகையால் சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி கோபத்தையும் காம நோயையும் விட்டு விடுங்கள். நம்மை உடைய பெருமானுடைய திருவடிக்கீழ் பெரிய கூட்டத்தோடு உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள். பாம்பை அணிந்தவனும் நம்மை ஆள்பவனுமாகிய இறைவனுடைய பெருமை களை எங்கும் சூழ்ந்து மனமுருகிப் போற்றுவோம். போற்றினால் சிவலோகத்தில் நாம் போய்ச் சேர்ந்து விடுவோம்.

குறிப்புரை :

`வெகுளியையும், வேட்கை நோயையும் விடுமின்`; எனவும், `சிவபுரத்துள் அடைவோம்; அதற்கு முன்னே அதன் அணி யார் கதவது அடையாமே, ஆள்வான் புகழ்களைப் போற்றுவோம்` எனவும் கொள்க. வேட்கை - ஆசை. மிக - நாம் உயர்வடைவதற்கு. சாத்து - கூட்டம். ``அடைவோம்`` என்றது, `அடைப்பதற்குள் அடை வோம்` என்றதாம். புடைபட்டு - அதன் அருகிற்பொருந்தி. ``புடை பட்டு உருகிப் போற்றுவோம்`` என்றது, `நுழைவோம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
புயங்கன் தாளே புந்திவைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையும்
இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச்
சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று
நெஞ்சம் உருகி நிற்போமே.

பொழிப்புரை :

நாம் இனிமேல் ஒரு துன்பம் வந்து சேராவண்ணம் விளங்குகின்ற சிறப்பமைந்த சிவபுரத்துக்குப் போய், சிவபெருமான் திருவடியை வணங்கி அங்கே வாழும் அடியார் முன்னே சென்று மனம் உருகி நிற்போம்; அதற்குப் பாம்பணிந்த பெருமான் திருவடியைப் புகழுங்கள்; வணங்குங்கள். அவைகளுக்கு மலர் சூட்டுங்கள்; அவற்றையே நினைவில் வைத்துக் கொண்டு பிற எல்லாத் துன்பங்களையும் இகழுங்கள்.

குறிப்புரை :

`புயங்கன் தாளே புந்தி வைத்திட்டுப் புகழ்மின்! தொழுமின்! பூப்புனைமின்!` எனவும், `எல்லா அல்லலையும் இகழ் மின்` எனவும் கூட்டுக. முன்னைத் திருப்பாட்டிலும், இத்திருப்பாட்டி லும், ``விடுமின்`` முதலிய பயனிலைகளை முதலில் வைத்து அருளிச் செய்தமை, உணர்ச்சி மீதூர்வினாலாதல் அறிக. அடையாமே - வாராதபடி; இது, ``சென்று`` என்பதனோடு முடியும். ``நிற்போம்`` என்றதும், ``அடியார் ஆனீர் எல்லாரும்`` என்ற திருப்பாட்டில், ``வைப்பான், புகவிடும்`` என்றன போல, `நிற்றல் திண்ணம்` என்னும் பொருளது. அதனால், இத்திருப்பாட்டிலும் ``இனியோர் இடையூ றடையாமே`` என்றது முதலாகத் தொடங்கி, ``நிற்போம்`` என்றதன் பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து மேலே கூட்டி யுரைத்தல் கருத்தாயிற்று. ஆகவே, புகழ்தல் முதலியன, இதுகாறும் பொதுப்படச் செய்துவந்தாற் போல்வனவாகாது, சிவபெருமான் தம்மைத் தன்பால் வருவிக்கத் திருவுளம்பற்றிய திருவருள் நோக்கிச் சிறப்புறச் செய்வனவாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 7

நிற்பார் நிற்கநில் லாவுலகில்
நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே
நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற்
பெறுதற் கரியன் பெருமானே. 

பொழிப்புரை :

அழகினால் தனக்குத் தானே நிகரான திருமேனியையுடைய, பாம்பணிந்த பெருமானது பொன் போன்ற திருவடியை அடைவதற்கு நிற்கின்றவர்களே! நிலையில்லாத உலகின் கண், விரும்புவார் நிற்கட்டும். நாம் இங்கு இனி நிற்க மாட்டோம்; சென்று விடுவோம்; செல்லாமல் தங்கி நின்று பின்பு மனம் வருந்தினால் எம் பெருமான் பெறுதற்கு அரியவனாவான். ஆதலால் எல்லோரும் காலந்தாழ்த்தாது நீங்கள் நினைந்தபடியே செல்ல மனம் இசையுங்கள்.

குறிப்புரை :

பொருள்கோள்: `நில்லா உலகில் நிற்பார் நிற்க; நாம் இனி நில்லோம்; ஆள்வான் பொன்னடிக்கே செல்வோம்; பிற்பால் நின்று பேழ்கணித்தால், பெருமான் பெறுதற்கரியன்; அதனால், நிற்பீர் எல்லாம் நிற்கும் பரிசே தாழாது ஒருப்படுமின்`
பொற்பு - அழகு. `அழகால் தன்னையே தான் ஒப்பாம் திரு மேனி` என்க. பால் - பகுதி; அது காலப் பகுதியை நோக்கிற்று. பேழ் கணித்தல் - கழிந்ததற்கு இரங்கல். நிற்பீர் - ஆள்வான் பொன்னடியே நோக்கிநிற்பீர். `அங்ஙனம் நிற்கும் பரிசுக்கே தாழாது ஒருப்படுமின்` என்க.
ஒருப்படுதல் - இசைதல். பொன்னடியையே பொதுவாக நோக்கி நிற்பினும், அதன்கீழ்ச் செல்லுதற்குச் சிறப்பாக ஒருப்படச் சிறிது தாழ்க்கினும், அவன் திருக்குறிப்பைப் பெற்ற காலம் கழிந் தொழியுமாதலின், ``தாழாதே ஒருப்படுமின்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 8

பெருமான் பேரா னந்தத்துப்
பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன்
திருத்தாள் சென்று சேர்வோமே.

பொழிப்புரை :

இறைவனது பேரின்பத்தில் பிரியாமல் மூழ்கி யிருக்கப் பெற்றவர்களே! நீங்கள் அருமையான மயக்கத்தில் பொருந்திப் பின்பு ஐயோ என்று, வருந்தி அலறாவண்ணம் அழகிய சிறந்த மணிகள் இழைக்கப் பெற்ற திருக்கதவு, திறந்திருக்கும் போதே, சிவபுரத்திலுள்ள, திருமாலறியாத, அழகிய பாம்பணிந்த பெருமானது திருவடியை நாம் சென்றடைவோம்.

குறிப்புரை :

``இருக்கப்பெற்றீர்கள்`` என்றது, `இருக்க விரும்பு தலைப் பெற்றீர்கள்` என்றவாறு. ``திருக்கதவம் திறந்த போதே`` என்றதனால், இறைவன் அடிகளைத் தன்பால் வரப்பணித்தமை பெறப் பட்டது. ``சிவபுரத்துத் திருத்தாள் சென்று சேர்வோம்`` என்றதனால், சிவலோகஞ் சேர்தலையும் திருவடி கூடுதலாக அடிகள் அருளிச் செய்தல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

சேரக் கருதிச் சிந்தனையைத்
திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள்
பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத
ஆர்வங் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே
பொய்யிற் கிடந்து புரளாதே. 

பொழிப்புரை :

போரில் விளங்குகின்ற வேல் போன்ற கண்களை யுடைய உமையம்மையின் பாகனும், பாம்பை அணிந்தவனுமாகிய இறைவனது திருவருள் அமுதத்தை நிரம்பப் பருகித் தணியாத ஆசை மிக மூழ்கியிருப்பவர்களே! பொய்யான வாழ்வில் கிடந்து புரளாமல் சிவபெருமானது திருவடியிலே அடைய விரும்புங்கள். அதனையடைய எண்ணிச் சித்தத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டு இடைவிடாமல் நினையுங்கள்.

குறிப்புரை :

இடையிரண்டடிகளை முதலிற் கொள்க.
போரிற் பொலியும் வேல், சிவந்த நிறத்தொடு நிற்கும். அழுந்துவீர் - பேரின்பத்தில் அழுந்துதற்குரியவர்களே. போர, `போத` என்பதன் மரூஉ. இதனை, `போதும்` என்பதனை, `போரும்` என்னும் வழக்கால் உணர்க. போத - மிகவும், புரிமின் - விரும்புங்கள். ``கழற்கே`` என்பதனை, `கழலையே` எனத் திரிக்க. பொய் - பொய்யான உலக வாழ்க்கை.

பண் :

பாடல் எண் : 10

புரள்வார் தொழுவார் புகழ்வாராய்
இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார்
மதிஉட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீ ராகில் இதுசெய்மின்
சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருள்ஆர் பெறுவார் அகலிடத்தே
அந்தோ அந்தோ அந்தோவே. 

பொழிப்புரை :

புரள்பவராயும் வணங்குபவராயும் இப்பொழுதே வந்து ஆட்படாதவர்களாய், மயங்குகின்றவர்களே! பின்பு, அறிவினும் கலக்கமடைந்து மயங்கியிருப்பீர்கள். உங்களை மதிப்பவர் யாவர்?. தெளிவடைய விரும்புவீரானால் எம்பெருமானிடம் ஆட்படுதலாகிய இதனைச் செய்யுங்கள். சிவலோக நாதனாகிய பாம்பணிந்த பெருமானது திருவருளை, அகன்ற உலகின்கண் யார் பெறவல்லார்கள்? ஐயோ! ஐயோ!! ஐயோ!!!.

குறிப்புரை :

புரளுதலும், அன்பினால் என்க. ``பூதலமதனிற் புரண்டு வீழ்ந்து`` (தி.8 கீர்த்தித். 134) என்றார் முன்னரும். விரையாது நிற்றல் நோக்கி, ``இன்றே வந்து ஆள் ஆகாதீர்`` என்றார். ஆகாதீர் - ஆகா திருப்பவர்களே. இதன்பின், `இவ்வாறிருப்பின்`` என்பது வருவித்து, `பின்னை மருள்வீர்; உம்மை மதிப்பார் ஆர்! மதி உட் கலங்கி மயங்கு வீர்!` என்க. `சிவலோகக் கோன், திருப்புயங்கன் அருள், அகலிடத்தே ஆர் பெறுவார்! அந்தோ! இஃது அரும்பெறற் பேறு என்பதனைத் தெருள்வீராகில், இதனையே (அவன் அழைக்கும் பொழுதே அவனை அடைதல் ஒன்றையே) செய்மின்` என்க. `அகலிடத்தே ஆர் பெறுவார்` என்றதனால், அடிகள் உலகத்தார் அறிய இறைவனை அடைந்தமை பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 1

ஞானவாள் ஏந்தும்ஐயர்
நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர்
மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம்
அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம்
மாயப்படை வாராமே. 

பொழிப்புரை :

ஞானமாகிய வாளைத் தாங்கிய இறைவரது பிரணவமாகிய நாதப்பறையை முழக்குங்கள்! பெருமையாகிய குதிரையை ஏறுகின்ற இறைவனை அறிகின்ற அறிவு என்கிற வெண்குடையைக் கவியுங்கள்! திருநீறாகிய கவசத்திற்குள் புகுந்து கொள்ளுங்கள்! இவ்வண்ணம் செய்வீர்களாயின் மாயப் படையை வென்று முத்தி உலகைக் கைக்கொள்ளலாம்.

குறிப்புரை :

``மாயப் படை வாராமே`` என்றதை முதற்கண் கூட்டுக.
அறியாமையும், மயக்க உணர்வும் ஆகிய பகையை அழிப்பது மெய்யறிவே யாதலின், அவ்வாற்றால் அவற்றைப் போக்குகின்ற இறைவனுக்கு, `ஞானமே வாள்` என்று அருளினார். `இறைவனுக்கு நாதமே பறை` (தி.8 கீர்த்தி. 108;தசாங்கம். 8) என முன்னர் அருளியவற்றைக் காண்க. அதனை அறைதலாவது, ``நமச்சிவாய வாழ்க`` என்றற் றொடக்கத்தன போல, வாழ்த்து வகையானும், வணக்க வகையானும், வெற்றி வகையானும் சிவநாமங்களை வானளாவ முழக்குதல். மான மா - பெருமையமைந்த குதிரை; இஃது அடிகள் தமக்கு வந்து அருள்செய்த வகைபற்றிக் கூறியது. மதிவெண்குடை, சிலேடை. வெண்மை கூறினமையின், மதி, மலந்தீர்ந்த உயிரினது அறிவு; அதனுள் இறைவன் சோதிக்குட் சோதியாய்த் தோன்றலின், அதனை அவற்குக் குடையாகக் கூறினார். ஆன - பொருந்திய. `கவசம் புகுமின்கள்` என இயையும். அடைய - முழுதும். `இவ்வாற்றால் நாம் வான ஊரைத் தப்பாது கொள்வோம்` என்க. வானம் - சிவலோகம். மாயப் படை - நிலையாமையாகிய படை.

பண் :

பாடல் எண் : 2

தொண்டர்காள் தூசிசெல்லீர்
பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்டிறல் யோகிகளே
பேரணி உந்தீர்கள்
திண்டிறல் சித்தர்களே
கடைக்கூழை சென்மின்கள்
அண்டர்நா டாள்வோம்நாம்
அல்லற்படை வாராமே. 

பொழிப்புரை :

தொண்டர்களே! நீங்கள் முன்னணியாய்ச் செல்லுங்கள்! பத்தர்களே! நீங்கள் சூழ்ந்து செல்லுங்கள்! யோகிகளே! நீங்கள் பெரிய அணியைச் செலுத்துங்கள்! சித்தர்களே, நீங்கள், பின்னணியாய்ச் செல்லுங்கள்! இப்படிச் செய்வீர்களாயின் நாம் தேவர் உலகத்தை ஆளலாம்.

குறிப்புரை :

இங்கும், ``அல்லற்படை வாராமே` என்றதை முதலிற் கூட்டுக.
தொண்டர்கள் - கைத்தொண்டு செய்வோர்; விரைந்து செயலாற்றுவதே தூசிப்படையாதலின், அதற்குத் தொண்டர்களை அமைத்தார். தூசிப் படை - முன்னணிப் படை. பத்தர்கள் - அன்பு மிக்கவர்கள். இறைவனது புகழைப் பாடுதலிலும், கேட்டலிலும், விரித்துரைத்தலிலும் ஆர்வம் மிக்கவர்கள். இவர்களை இருமருங்கும் அமைத்தார், படைஞர்கள் உள்ளம் அயராது வீறுகொண்டிருத்தற்கு. யோகிகள் - சிவயோகத்தில் இருப்பவர்கள்; இவர்கள் மனத்தைத் தம்வழி நிறுத்தும் வன்மையுடையராதலின், ``ஒண்திறல் யோகிகள்`` என்றார். இவ்வாற்றால் இவரை இறுதி வெற்றிக்குரிய நடுப்படை யாகிய பெரிய அணிகளில் நிறுத்தினார். `அணியை உந்தீர்கள்` என்றது, `அணி என்னும் முறையை நிகழ்த்துங்கள்` என்றபடி. சித்தர்கள் - இறைவனது அருளால் வியத்தகு செயல்கள் செய்து அவ் வருளின் பெருமையை உலகிற்கு உணர்த்துபவர்கள். இவர்களைப் பின்னணிப் படையில் நிறுத்தினார், பின்னிடுவார் உளராயின், அவரது தளர்ச்சியைப் போக்கி முன்செல்லச் செய்தற் பொருட்டு. கடைக் கூழை - பின்னணிப் படை. தூசிப் படைதானே வெல்லற்பாலதாயி னும், ஏனைப் படைகளும் முறைப்படி அமைத்தல் செயற்பாலதாக லின், இங்ஙனம் அனைத்தையும் வகுத்தமைத்தார் என்க. தொண்டர் முதலாக இங்குக் கூறப்பட்டோர் அனைவரும் ஞானநிலைக்கண் நிற்பவர்களேயன்றிப் பிறரல்லர் என்க. அண்டர் - சிவபெருமானார்; அவரது நாடு சிவலோகம். ``அண்டர்நாடு ஆள்வோம் நாம்`` என்றதற்கு, மேல், ``வானவூர் கொள்வோம் நாம்`` என்றதற்கு உரைத்தவாறு உரைக்க. அல்லற்படை - துன்பமாகிய படை.

பண் :

பாடல் எண் : 1

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் - செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையை உடையவனாகிய இறை வனை அடையாது இருந்தேன்; என் மனத்தில் கொடிய வினை ஒழிய உடல் உருகிப் பொய்யும் பொடியாகாதுள்ளது. இதற்கு நான் என் செய்வேன்?.

குறிப்புரை :

``செய்ய`` என்றது முதலாகத் தொடங்கியுரைக்க. மெய் - வடிவம். பொய் - பொய்யான உடல். `வினை கெட, உடல் தன்வடிவு கரைந்து பொடியாயிற்றில்லை; யான் என்செய்வேன்` என்க. செய்ய - செப்பமாகிய (திருப்பெருந்துறை). `பெருந்துறை யானாகிய தேன் உந்து செந்தீயை மனத்து மருவாதிருந்தேன்` என்க. `இவ்வாறிருந்தும் இறவாதிருக்கின்றேன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 2

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் -தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து.

பொழிப்புரை :

என்னோடு கூடி நின்று, இன்பப் பித்தேற்றுவான் திருப்பெருந்துறை இறைவனே என்று என்பால் தெளிவிப்பார் ஒருவர் உளராயின் அவரைப் பணிந்து ஆரவாரிப்பேனோ?. அரற்று வேனோ?. ஆடுவேனோ?. பாடுவேனோ?. நான் என் செய்து பாராட்டுவேன்?.

குறிப்புரை :

இங்கும், ``தீர்ப்பரிய`` என்றது முதலாகத் தொடங்கி உரைக்க. ``பரம்பரனே`` என்றது, இயல்பானே முன்னிற்கும்.
``ஆர்க்கோ`` என்றது முதலிய ஐந்தும், ஐயத்தின்கண் வந்த ஓகாரம் ஏற்ற, குவ்வீற்றுத் தன்மை யொருமை வினைமுற்றுக்கள். ஆர்த்தல் - புகழ்தல். அரற்றுதல் - அன்பினால் வாய்விட்டழுதல். பார்த்தல் - உற்றுநோக்குதல். என்செய்கேன்`` என்றது, களிப்பு மீதூர் வால் வந்த செயலறுதி. தீர்ப்பரிய மால் - நீக்குதற்கரிய பித்து. ஆனந்த மால் - பேரின்பப் பித்து. தான், அசைநிலை. ``ஆரொருவர்`` என்றதன் பின், `அவரை` என்பது எஞ்சிநின்றது. தாழ்ந்து - வணங்கி.

பண் :

பாடல் எண் : 3

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் - வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 

பொழிப்புரை :

திருப்பெருந்துறை இறைவன் தன் வேலை என் மனத்துக் கோத்தான்; இதற்குக் காரணமாக நான் செய்த பிழையை அறிந்திலேன்; அவனது திருவடியையே கைதொழுது உய்யும் வகையின் நிலையையும் அறிந்திலேன்.

குறிப்புரை :

பெருந்துறையில் மேயபிரான், வையத்து இருந்து உறையுள் இருந்த வேலை மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான்; யான் செய்த பிழையறியேன். உய்யும் வகையறியேன் உயிர்ப்பும் அறியேன்` என வினைமுடிக்க. இது, ஞானத்தை அருளினமையை, பழிப்பது போலப் புகழ்ந்தது.
உய்யும் வகை - பிழைக்கும் வழி; அதனினின்றும் தப்புமாறு. உயிர்ப்பு - சுவாசித்தல்; தற்போதம் எழுதல். ``உறை`` என்றது, திரோ தான சத்தியையும், ``வேல்`` என்றது. சிவஞானத்தையும் என்க. சிந்தனைக்கு, உருபு மயக்கம். சிந்தனை - மார்பு; மனம். மடுத்துக் கோத்தான் - நுழைத்து உருவச் செய்தான்.

பண் :

பாடல் எண் : 4

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் - தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 

பொழிப்புரை :

மேல்வரக் கடவனவாகிய பிறவிகளை நீக்கும் பெரி யோனும், தென்னனும், திருப்பெருந்துறையை உடையவனும், பெருங் கருணையாளனும், வரும் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாய் இருப் பவனும் ஆகிய சிவபெருமான், நான் முன்செய்தவினை இரண்டையும் வேரறுத்து எனக்கு எதிரே நின்றான்.

குறிப்புரை :

பொருள்கோள்: `பெருங்கருணையாளனாகிய இறைவன், முன்னின்றான்; பேராளன்; துயரந் தீர்க்கும் மருந்து`
பேராளன் - பெருமையுடையவன். வரும் துயரம் - இனி வரு கின்ற துன்பங்கள். ``துயரம் தீர்க்கும் மருந்து`` என்றது, ஏகதேச உருவகம்.

பண் :

பாடல் எண் : 5

அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலும்மால் கொள்ளும் - இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்நெஞ்சத் தின்று.

பொழிப்புரை :

அறியப் புகுவார்க்குச் சொல்லளவேயாமோ?. பிரமனும் திருமாலும் அறியாது மயக்கத்தை அடைகின்ற இறைவனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளினவனும் ஆகிய சிவபிரான், இன்று என் மனத்தில் தங்கி வாழ்கின்றான்.

குறிப்புரை :

`அறிவார்க்கு அறையோ` என மாற்றி, இறுதிக் கண் வைத்துரைக்க. அறையோ - அறைகூவல் விடுகின்றேன். மால் கொள்ளும் - காணாமல் மயங்குகின்ற. இன்று - இந்நாள். இறைவன் தம் நெஞ்சத்து உறைதலை அறிவுடையோர் எளிதில் உடன்படார் என்று கருதி `அவர்க்கு அறையோ` என்றார்.

பண் :

பாடல் எண் : 6

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை - அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறை இறைவன், வந்து என்னைப் பித்தேற்றுவான்; என் பிறவியை அறுப்பான்; துதித்தற்கு அரியனான இறைவன் என் மனத்தைக் களிப்படையச் செய்வான்.

குறிப்புரை :

``அத்தன்`` என்றது முதலாகத் தொடங்கி உரைக்க.
`என்னைப் பித்தேற்றும்` எனவும் `என் மனத்தைப் பேச்சரிதாம் மத்தம ஆக்கும்` எனவும் மாற்றுக. ``பித்து`` என்றது, அன்பை. மத்தம் - களிப்பு. ``அத்தன், பெருந்துறையான், மருந்து பேரின்பம்`` என்றவை, ஒரு பொருள் மேல் வந்த பல பெயர்கள்.

பண் :

பாடல் எண் : 7

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே - சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறை இறைவனும், என் மனத்தில் எழுந்தருளி இருக்கும் ஒருவனுமாகிய இறைவன் பெருக்கிய ஒளி வந்து இனிப் பிறவிக்கு வாராத வழியை அருளி, எனக்கு ஆராவமுதாக அமைந்து இருந்தது அன்றோ?.

குறிப்புரை :

`ஒளி அமைந்தன்று` என வினைமுடிக்க. அருளி - கொடுத்து `எனக்கு` என்றதை, `என்கண்` எனத் திரிக்க. `என்கண் வந்து மாறின்றி` என்க. மாறின்றி - நீங்காது நின்று. அமைந்தன்று - அமைந்தது. ஏகாரம், தேற்றம்.

பண் :

பாடல் எண் : 8

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்குங் கீழாம் அடியேனை - யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை. 

பொழிப்புரை :

எல்லார்க்கும் மேலாகிய இறைவன், எல்லா வற்றிலும் கீழாகிய என்னைப் பேரின்பத்துள் வைத்தான். அவனுக்குக் கைம்மாறு செய்யும் வகை அறியேன்.

குறிப்புரை :

``சீருடையான்`` என்றதும், விளி. ``எம்பெருமான்`` என்றது, `தலைவன்` என்னுந் துணையாய் நின்று, ``என் எம் பெருமான்`` என வந்தது. மற்று - மாறு; கைம்மாறு. `மற்றுச் செய்யும் வகை அறியேன்` என இயையும்.

பண் :

பாடல் எண் : 9

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவருங் காணாச் சிவபெருமான் - மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.

பொழிப்புரை :

மும்மூர்த்திகளும், முப்பத்து மூன்று தேவர்களும், மற்றைத் தேவர்களும் கண்டறியாத சிவபெருமானுடைய திருவடி களை வணங்கினால், உண்மையாகிய மனத்தின்கண் ஆனந்தம் திகழும்.

குறிப்புரை :

மூவர் - மும்மூர்த்திகள்; முப்பத்து மூவர் - உருத்திரர் பதினொருவர்; ஆதித்தர் பன்னிருவர்; மருத்துவர் இருவர்; வசுக்கள் எண்மர். மற்றொழிந்த தேவர், இவர்தம் பரிவாரங்களும், இந்திரன் முதலிய திசைக்காவலரும், இனி, பதினெண் கணங்களுட் சில கூட்டத் தினரும் தேவர் எனப்படுவர் என்க. மா - குதிரை. மெய்யகத்தே - உடம்பினிடத்திற்றானே, உடம்பின்கண் இன்பம் மிகுதல் கூறவே, உயிரின்கண் இன்பம் மிகுதல் சொல்லவேண்டாவாயிற்று.

பண் :

பாடல் எண் : 10

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்து
இருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாந் - தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 

பொழிப்புரை :

நெஞ்சே! என்னை ஆண்டருளினவனாகிய இறைவனது திருவடியைச் சிந்தித்துக் கொண்டிருந்து, வேண்டும் பொருள்களை எல்லாம் வேண்டிக் கொள். வேண்டினால் திருப்பெருந் துறையான் நீ வேண்டுவனவற்றை எல்லாம் தந்தருளுவான்.

குறிப்புரை :

``பெருந்துறையின் மேய`` என்றது தொடங்கி உரைக்க.
``ஆண்டான்`` என்றதனை முற்றாக்கி, `அவன் இணை யடியே` என எடுத்துக் கொண்டு உரைக்க ``கொள்`` என்றது, துணை வினை. `கொண்டால், எல்லாம் தரும்` என்க. காண், முன்னிலையசை. மருந்துருவாய் - அமுதமாய்.

பண் :

பாடல் எண் : 11

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றுந்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.

பொழிப்புரை :

திருப்பெருந்துறையான் ஆனந்தம் பெருகச் செய்து அஞ்ஞான இருளை அகற்றித் துன்பத்தை வேரறுத்துத் தன்னிடத்து அன்பையும் எனக்கு அருள் செய்து, என் மனத்தையே தனக்குத் திருக்கோயிலாகக் கொண்டான்.

குறிப்புரை :

பொருள்கோள்: `பெருந்துறையான், சோதியாய் இருளகற்றித் துன்பம் தொடர்வு அறுத்து, அன்பமைத்து இன்பம் பெருக்கி, என்னுடைய சிந்தையே உவந்து எஞ்ஞான்றும் ஊராகக் கொண்டான். தொடர்வு - தொடர்தல்.

பண் :

பாடல் எண் : 1

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லைக் கடையேனைத் - தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 

பொழிப்புரை :

நெஞ்சே! பழமையாகிய நான்கு வேதங்களும் பக்கத்தில் அணுகமாட்டா; திருமால் பிரமன் என்போரும் கண்டறி யார்; அப்படிப்பட்ட கோகழி எம்கோமான் கடையேனைத் தொண்டு கொண்டதற்கு நாம் செய்யும் கைம்மாறு உளதோ?

குறிப்புரை :

பண்டையதாய பொருளை, `பண்டு` என்றார், `அவன் பால் அணுகா` எனவும், `அவனைக் கண்டார் இல்லை` எனவும், செய்யுட்கண் முன்வரற்பாலனவாய சுட்டுப் பெயர்கள் வருவிக்க. ``கண்டாரும்`` என்ற உம்மை, இழிவு சிறப்பு. ``இல்லை`` என்றதன் பின், `அங்ஙனமாக` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 2

உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு.

பொழிப்புரை :

தொண்டர்களே! நமது மும்மலங்கள் கெடும்படி இன்பப் பெருந் தேனைச் சொரிகின்ற இறைவன் எழுந்தருளி இருக்கிற திருப்பெருந்துறையை வாழ்த்துங்கள்! வாழ்த்தினால் நம் பிறவிக்காடு வேரோடு கெடும்.

குறிப்புரை :

உள்ள மலம் - அறிவின்கண் பற்றிய மலம். மாய - கெட. `பிறவிக் காடு கருவும் கெடும்` என மாற்றுக. கருவுங் கெடுத லாவது, முதலும் இல்லாது அழிதல்.

பண் :

பாடல் எண் : 3

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 

பொழிப்புரை :

நெஞ்சே! காட்டில் வேடனாய் வந்தவனும், கடலில் வலையனாய் வந்தவனும், பாண்டி நாட்டில் குதிரைப் பாகனாய் வந்த வனும், நமது வினைகளைக் கெடுத்து நம்மை ஆண்டருள் செய்கின்ற திருப்பெருந்துறையானும் ஆகிய சிவபெருமான் திருவடியை நமது மருள் கெடும் வண்ணம் வாழ்த்துவாயாக!

குறிப்புரை :

காட்டகத்து வேடனாயது, அருச்சுனன் பொருட்டு, கடலில் வலைவாணனாயது, நந்திபெருமான், உமையம்மை இவர் களது சாபந்தீர்த்து ஏற்றருளுதற்பொருட்டு. பரி பாகன் (குதிரை செலுத்துவோன்) ஆயது அடிகட்கு அருளுதற் பொருட்டு. ``காடு`` என்றதில் குறிஞ்சியும் அடங்குதலின், `நானிலத்தும் தோன்றி அருள் செய்பவன்` என அருளிச்செய்தவாறு. நெஞ்சே அருளும் பெருந்துறை யான், வேடன்; வலைவாணன்; பரிபாகன்; அவன் அம் கமல பாதம் வாழ்த்து` என வினைமுடிக்க. மருள் - மயக்கம்; திரிபுணர்வு. ``மருளும்`` என்ற உம்மை, முன்போந்த. ``வினை`` என்றதைத் தழுவி நின்ற எச்சம்.

பண் :

பாடல் எண் : 4

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் - சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையை வணங்கித் துதிக்கின்ற அன்பர்கள், வாழ்ந்தோராவர்; வலிய வினைகளைக் கெடுப்பவர் களும், உலகம் வணங்கித் துதித்தற்கு உரியோரும் ஆவர்.

குறிப்புரை :

`உலகம் தாழ்ந்து ஏத்த` என்க. தாழ்தல் - வணங்குதல்.

பண் :

பாடல் எண் : 5

நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப் - பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 

பொழிப்புரை :

நெஞ்சே! கோகழிக்கு அரசனும், எம்பிராட்டியோடு திருவுத்தரகோச மங்கையில் நிலை பெற்று நீங்காது இருப்பவனுமாகிய சிவபெருமானைச் சிந்தித்து எழுவாயாக! வழிபடுவாயாக!

குறிப்புரை :

`நம் இடர்கள் போயகல எண்ணிப் பெருந்துறையை நண்ணி எழு கோகழிக்கரை` என்றது. `அப்பெருமானை` என்னும் பொருளதாய் நின்றது. ``கோகழிக்கரசனாயும், உத்தரகோசமங்கை மன்னிக் கழியாதிருந்தவனும் ஆகிய பெருமானைக் காண்` என்பதும் பொருள். `காணின், நலம் பெறலாம்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 6

காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 

பொழிப்புரை :

நெஞ்சே! கருவிகள் யாவும் பேரின்ப உருவமாய்ப் போற்றுகின்ற அடியார்கள் தம் பிறவி ஒழியும்படி வழிபடுகின்ற பெரியோனும் திருப்பெருந்துறையை எப்பொழுதும் பிரியாதவனு மாகிய பெருமானை வாயாரப் புகழ்ந்து பேசுவாயாக!

குறிப்புரை :

காணும் கரணங்கள் எல்லாம் - அறிதற்குரிய கருவிகள் யாவும். பேரின்பமெனப் பேணும் அடியார் - பேரின்பத்தை நுகரும் கருவிகளேயாகும் வண்ணம் குறிக்கொண்டு நிற்கும் அடியார்களது; என்றது, `பிராரத்த வினை நுகர்ச்சி தோன்றும்வழி அதனைத் தம் செயலும் பிறர் செயலுமாகக் கொண்டு நுகராது, முதல்வன் செயலேயாகக்கொண்டு நுகரும் அடியார்கள்` என்றபடி. அங்ஙனம் நுகரும்வழிப் பெற்ற சிற்றின்பந்தானே பேரின்பமாய் விளையு மாகலின் (தி.8 திருவுந்தியார் 33), அவர்க்கு ஆகாமியம் இல்லையாம். அஃது இல்லையாகவே பிறப்பும் இல்லாதொழியும். அங்ஙனம் செய்வது திருவருளேயாகலின், `அவரது பிறப்பு அகலக் காணும் பெரி யான்` என்று அருளிச்செய்தார். காணுதல் - நோக்குதல். பேரின்பம் நுகர்தற்கருவிகளை, பேரின்பம்`` என்றார். இவ்வநுபவ நிலைக்கு இத் திருப்பாட்டினைச் சிவஞானமா பாடியத்துள் (சூ.11, அதி.1.) எடுத்துக்காட்டினமை காண்க.

பண் :

பாடல் எண் : 7

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 

பொழிப்புரை :

நல்ல அமிர்தம் போல்பவனாகிய பெருமானது திருவடியை என்மனத்தில் இருத்திச் சொல்லளவைக் கடந்த, அவனது திருவார்த்தையைப் பேசி, அவன் திருப்பெருந்துறையை வாழ்த்தி என் பிறவித் தளையை ஒழித்தேன்.

குறிப்புரை :

பேசும் பொருளுக்கு - பேசுதற்குக் கொள்ளப்படும் பொருளின் இயல்பிற்கு. ``பொருள்`` என்றது அதன் இயல்பிற் காயிற்று. ``இலக்கியம்`` என்பது `இலக்கிதம்` என வந்தது. `இலக்கித மாம் மணி` என இயையும். எனவே, `மக்கள் தம் வாயாற் பேசுதற்கு உரிய பொருள் இறைவனே` என்றவாறாயிற்று. ``பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன்`` என்றதை இறுதிக்கண் கூட்டுக. பிறவியாகிய தீராப் பெரும் பிணியை நீக்கும் மருந்து ஆதலின், ``நல்ல மருந்து``, என்று அருளிச்செய்தார். ``அடி`` என்றது, மருந்திற்கும் ஏற்புடைய தாமாறு அறிக.

பண் :

பாடல் எண் : 1

கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே.

பொழிப்புரை :

மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன், எழுந்தருளித் தோன்றுவனாயின், இரண்டு கண்களும், அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை மகளிரொடு கூடிவாழ்வதில் முடிவு பெற்றுவிடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தை மறத்தல் ஆகாது போகுமோ? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன், ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளும் தன்மைகளைப் பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் தோன்றுதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

இதன்கண் எல்லாத் திருப்பாட்டுக்களிலும், ஈற்றடியை முதலிற்கொள்க.
ஆகாது - உண்டாகாது; நிகழாது. ``ஆகாதே`` என்றது, பன்மை ஒருமை மயக்கம். இவ்வாறு பின்னும் வருவன காண்க. ஏகாரம், எதிர்மறுத்துரைத்தற்கண் வந்த வினாப்பொருட்டு (தொல். சொல். 246.). இது, பின்வருவன பலவற்றிற்கும் ஒக்கும். வாழ்வில் - வாழ்வுபோல. கடைப்படும் - சுதந்திரமின்றி இறைவன் வழிப்படும். இதனைப் பெயரெச்சமாக்கி, `அது` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. இன்னோரன்ன வினைமுற்றுக்கள் பலவும், இங்குத் தொழிற் பெயர்ப் பொருள் தந்தன என்று போவாரும் உளர். பிறந்திடுமாற்றை மறத்தல், இனி அது நிகழாது என்னும் துணிவினாலாம். பாதம் வணங்குதலாக இங்கு அருளிச்செய்வன பலவும், `நேர்படக் கண்டு வணங்குதலாகிய அநுபவ வணக்கத்தையே என்க. அவற்றுள் இது, பாதம் மாலறியா அருமையுடைமையை நினைந்து அருளிச் செய்தது. ``வணங்குதும்`` என்றன்பின், `அஃது` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து, ``ஆகாதே`` என்றதனை வேறு தொடராக்கி உரைக்க. இவ் வாறும் வருவன பின்னும் உள. `களிகூர்தரு பண் பாடலொடு` என மாறுக. பயின்றிடும் - பயிலப்பட்டிடும். `பாண்டிநன்னாடுடை யானாகிய சிவபிரான், தன்தொண்டர்களாகிய படையை ஆளும் திறங்கள் பாடுதும்` என்க.
விண் - விண்ணோர். ``களி`` என்றது, வியப்பினை. வேதகம் - வேறுபடுத்தும் பொருள்; அஃது, இங்குத் திருவருள். அது வெளிப்படுதல் - தனது செயலைப் புலப்படுத்தல். விண்ணோர் வியத்தல், மண்ணோர், தம்மினும் மேலோராய் மாறினமை குறித்தாம். வலைவாணரை அடிகள் வேடர் எனவும் குறித்தலை, ``கிராத வேடமொடு`` (தி.8 கீர்த்தித். 15.) என்றவிடத்தும் காண்க.

பண் :

பாடல் எண் : 2

ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பறு மாகாதே
உன்னடி யார்அடி யார்அடி யோமென உய்ந்தன வாகாதே
கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
காரண மாகும் அனாதி குணங்கள் கருத்துறு மாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே
நாமுமெ லாம்அடி யாருட னேசெல நண்ணுது மாகாதே
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே.

பொழிப்புரை :

இடபவாகனத்தை உடையவனும், என்னை அடிமையாகவுடைய தலைவனுமாகிய சிவபெருமான் என்னுள்ளே புகுவானாயின், உயிரோடு உடம்பும் ஒப்பற்ற ஐம்பொறிகளோடு ஐம்புலன்களும் கலந்து உயிர்க்கும் தன்மை அறுதல் ஆகாது போகுமோ? இறைவனே! உன் அடியார்க்கு அடியோம் என்று சொல்லித் துன்பங்கள் பலவும் நீங்குதல் ஆகாது போகுமோ? கன்றை எண்ணி எழுகின்ற தாய்ப் பசுவைப் போல இறைவன் முன் வந்து உருகுகின்ற தன்மை ஆகாது போகுமோ? எல்லாச் செயல்களுக்கும் காரணமாகிய இறைவனுடைய குணங்கள் என் மனத்தில் பொருந்துதல் ஆகாது போகுமோ? இது நல்லது இது தீயது என்று ஆராய்ந்து அதனால் உண்டாகிய மனக் கலக்கம் நீங்குதல் ஆகாது போகுமோ? முன்னைய அடியார்களுடன் வீட்டுலகிற் சென்று சேர ஒன்று கூடுவதும் ஆகாது போகுமோ? எந்நாளும் எனது அன்பு நிறைந்த மேலான அமுதம் அடைவது ஆகாது போகுமோ?

குறிப்புரை :

ஒன்றினொடு ஒன்றும் - ஒன்றாகிய உயிரோடு பொருந்துகின்ற. ஐந்தினொடு ஐந்து - ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், உயிர்ப்பு அறும் - செயலறும். `அடியாரடி யோம்` என்னாது, ``அடியா ரடியா ரடியோம்`` என்றார், `தமது தகுதி அத்துணையதே` என்றற்கு. என - என்று சொல்லி. உய்ந்தன - உய்ந்த செயல்கள்; இது, துணிவினால் எதிர்காலம் இறந்தகாலம் ஆயவாறு; இவ்வாறு பின்னும் வருவன உள. வந்தவன் இறைவன். கணக்கு - நிலைமை. அது, பகுதிப்பொருள் விகுதி. காரணமாகும் - எப் பொருட்கும் காரணன் ஆகின்ற. அனாதி - ஆதியில்லாதவன்; இறைவன். `அவனது குணங்கள் எட்டு` என்பதனைப் பின்னர் (தி.8 திருப்படையாட்சி பா.7) அருளிச் செய்தல் காண்க. கருத்து உறும் - எம் உள்ளத்தில் பொருந்தும். ``இது`` என்றது, தாப்பிசையாய், முன்னரும் சென்று இயையும். நடுக்கம் - துன்பம்; அது, துன்பத்திற் ஏதுவாகிய விருப்பு வெறுப்புக்களைக் குறித்தது. நடந்தன - விலகுவன. செல - இறையுலகத்திற்குச் செல்ல. நண்ணுதும் - தொடங்குவோம். அன்பு நிறைந்த - அன்பு சென்று நிறைந்ததாகிய. பராவமுது - எங்கும் நிறைந்த இன்பம்.

பண் :

பாடல் எண் : 3

பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர் ஏகுவ தாகாதே
என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படு மாயிடிலே.

பொழிப்புரை :

என்னுடைய தலைவனாகிய ஈசன் எதிரே தோன்று வனாயின் பாசத் தொடர்பினால் உண்டாகும் மாறுபட்ட குணங்கள் அழிவதும் ஆகாது போகுமோ? பாவனை செய்கின்ற மனத்தினில் ஊறுகின்ற மேலான அமுதம் ஆகாது போகுமோ? எல்லையில்லாத உலகப் பொருள்களும் நமது உள்ளத்தில் அகப்படுதல் ஆகாது போகுமோ? எல்லாவற்றிக்கும் முதலான பரஞ்சுடர் நெருங்கும்படி ஆகாது போகுமோ? மிகச் சிவந்த வாயினையுடைய பெண்களால் வரும் துன்பங்களானவை ஒழிந்து போதல் ஆகாது போகுமோ? சேல் மீன் போன்ற கண்கள் அவனது திருமேனி அழகில் ஈடுபடுதல் ஆகாது போகுமோ? இந்திர சாலம் போன்ற மயக்குகின்ற பிறவித் துன்பம் ஒழிதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

பந்த விகார குணங்கள் - கட்டுண்டற்கு ஏதுவாகிய வேறுபட்ட குணங்கள்; அவை முக்குணங்கள். பறிந்து - தொடர்பு அற்று. மறிந்திடும் - வந்தவழியே நீங்கும். பாவனையாய கருத்து - பாவிப்பதாகிய உள்ளம். ``வந்த பராவமுது`` என்றதனை, `பராவமுது வந்தது` என மாற்றியுரைக்க.
வந்தது - அநுபவமாயது. அந்தம் - அழிவு. அகண்டம் - பூரணப் பொருள். உம்மை, சிறப்பு; `அது, நம்முள் அகப்பட்டுத் தோன்றும்` என்க. ஆதிமுதற் பரமாய பரஞ்சுடர் அண்ணுவது - எப்பொருட்கும் முதலும், எல்லா முதன்மையும் உடையதும் ஆகிய மேலான ஒளியை நாம் அணுகுவது. தம் கண்களை, ``சேலன கண்கள்`` என்றார், அவன் திருமேனி அழகு எம்மைப் பெண்மைப் படுத்தியது என்றற்கு.
`இந்திர ஞாலம் போலும் பிறவி` என்க, இது, கடிதின் மறைந்தும் தோன்றியும் வருதல் பற்றி வந்த உவமை. ``இடர்`` என்றது, பிறவியது தன்மையையும், ``துயர்`` என்றது அதனால் விளையும் நிலையையும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 4

என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
மாமறை யும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

என்னை ஆளாக உடைய பெருமானும், அருளு கின்ற ஈசனும் ஆகிய இறைவன் எழுந்தருளி வரப் பெற்றால் என்னுடைய அழகு பொருந்திய தனங்கள் இறைவனது திருமார்போடு பொருந்தி உடனாக இன்புறுதல் ஆகாது போகுமோ? பெரிய கருணைக் கடல் இனிது இன்பமாக ஆடுவதும் ஆகாதே போகுமோ? நல்ல மணி ஓசை என் உள்ளத்திலே பொருந்த அதனை நான் அடைதல் ஆகாது போகுமோ? இறைவனது அழகிய திருநீற்றை நாள்தோறும் அணிவது ஆகாது போகுமோ? நிலை பெற்ற அன்பரில் எனது பணி யானது முற்பட நிகழ்வது ஆகாது போகுமோ? பெருமை பொருந்திய வேதங்களும் அறிய முடியாத தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்குதலும் ஆகாது போகுமோ? இனிய தன்மையுடைய செங்கழு நீர்மலர் மாலை, என்மேல் பொருந்துதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

ஆகம் - இறைவனது மார்பு. அளைந்து - கலந்து; இதனை, `அளைய` எனத் திரிக்க. உடன் - ஒருங்கு. `யான் பெண்மை யுடையேனாய் அவனொடு கலந்தாற்போலும் இன்பத்தை அடையும் அத்தன்மை ஆகாதே` என்பது முதலடியின் பொருள். இதுவும், மேல் `சேலன கண்கள் அவன் திருமேனி திளைப்பன`` என்றாற்போல, இறைவன் திருமேனியது அழகைச் சிறப்பித்ததாம். ``நன்மணி ......நண்ணுவது`` என்றது, `யோகநிலை தானே கைவரும்` என்றதாம். நித்தலும் ``நண்ணுவது`` என்றது, நண்ணுதலாகிய அதன் பயன்மேல் நின்றது; அப்பயனாவது மும்மலங்களும் நீங்கப் பெறுதல். வைகுவது - பொருந்துவது. அடிகள் சிவபிரானுக்குச் செங்கழுநீர் மாலை கூறுவராகலின் (தி.8 கீர்த்தித். 113-114) அது நேரே தமக்குக் கிடைக்கப்பெறும் என்றார். பெறில் - அப்பேற்றினை யாம் பெற்றால்.

பண் :

பாடல் எண் : 5

மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
காதல்செ யும்அடி யார்மனம் இன்று களித்திடு மாகாதே
பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே
பேரறி யாத அநேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

என்னை ஆளாக உடைய பெருமானும் அருளு கின்ற ஈசனுமாகிய இறைவன் எழுந்தருளப் பெற்றால் உலகினில் மாயா காரியங்களை விரும்பிச் செய்ததனால் உண்டாகிய மயக்க உணர்ச்சியறுதலும் ஆகாது போகுமோ? தேவரும் அறிய முடியாத தாமரை மலர் போன்ற திருவடியை வழிபடுதல் ஆகாது போகுமோ? ஆணவ இருளில் அழுந்தி அழிவில்லாது கிடந்த காலம் முழுவதினும் வந்த கலக்கமானது அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? அன்பு செய்கின்ற அடியவரது மனமானது இப்பொழுது களிப்புற்றிருத்தல் ஆகாது போகுமோ? பெண் அலி ஆண் என்றும் நிலம், நீர் என்றும், உண்டாகிய மாறுபாடு அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? பெயர் களை அறியாத பல பிறவிகளினின்றும் தப்புதல் முடியாது போகுமோ? எண்ணிலாத அற்புதச் செயல்கள் வந்து என்னை அடைதல், ஆகாது போகுமோ?

குறிப்புரை :

இறைவன் மதித்து வகுத்த மாயா காரியங்களை, மாயையே மதித்து வகுத்ததுபோல அருளிச்செய்தார். இங்கு, பாதம், வானவரும் அறியாத அருமையுடைமையை நினைந்து அருளிச் செய்தார். கண் இலி - கண்ணோட்டம் இல்லாத கூற்றுவன். ``ஆட்பார்த் துழலும் அருளில் கூற்று`` (நாலடி - 20) என்றார் பிறரும். காலம் - இறுதிக்காலம். வந்த கலக்கு - வந்ததனால் உண்டாகிய கலக்கம். அடியார் மனம் களித்தல், தாம் பெற்ற பேறு தம் தமர்க்கும் கிடைத்தமை பற்றி. `பிறர்` என்பதனை ``பெண் அலி ஆண்`` என வகுத்தோதினார். உணர்வு அங்ஙனம் வேறுபடுதல் பற்றி. பிணக்கு - ஞானத்திற்கு மாறாய உணர்வு. பேர் அறியாத - இன்ன என அறிந்து சொல்ல இயலாத. இனி, பேர்தல், (நீங்குதல்) அறியாத என்றுமாம். பவங்கள் - பிறப்புக்கள். பிழைத்தன - தப்பிய செயல்கள். பிறவியினின்றும் நீங்கு தல் ஒன்றேயாயினும், பல பிறவிகட்கும் காரணமாய வினைகளை நோக்கப் பலவாம் என்பது பற்றி, `பிழைத்தன` என்றார். சித்திகள் தாமே வருவன என்க.

பண் :

பாடல் எண் : 6

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படு மாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
தன்னடி யார்அடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடி யோம்உட னேஉய வந்து தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

என்னை முன்னே ஆளாகவுடைய ஈசனும், தந்தையுமாகிய இறைவன் எழுந்தருளப் பெற்றால் பொன்னிறம் பொருந்திய திருமேனியில் திருவெண்ணீறு விளங்கித் தோன்றுதல் ஆகாது போகுமோ? பெரிய முனிவர்களுடைய கைகள் குவிக்கப் பெற்று மலர் மாரியைப் பெய்தல் ஆகாது போகுமோ? மின்னலைப் போன்று நுட்பமான இடையை உடைய பெண்ணினது வஞ்சனை யான எண்ணம் வெளிப்படுதல் ஆகாது போகுமோ? வீணையானது முழங்குதலால் உண்டாகின்ற ஒலியைப் போன்ற இன்பமானது மிகுந்திடுதல் ஆகாது போகுமோ? அவன் அடியாருடைய திருவடிகள் என் தலை மீது விளங்குதல் ஆகாது போகுமோ? அடியோங்கள் உய்தி பெறும்படி, தான் எழுந்தருளி வந்து எங்களுடன் கலத்தல் ஆகாது போகுமோ? எவ்விடத்தும் இனிய ஓசைகள் நிறைந்து இனிமையாக ஒலித்தல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

திருமேனி, இறைவனுடையது. பொலிந்திடும் - கண்முன் விளங்கும். `பூமழையைப் பொழிந்திடும்` என்க. நல்லன நிகழுங்கால், தேவரும், முனிவரும் பூமழை பொழிந்து வாழ்த்துவர் என்க. ``கருத்து`` என்றது, வஞ்சனையை. தான் - இறைவன். உடனே - ஒருசேர. தலைப்படுதல் - அளவளாவுதல். இயம் - வாச்சியம்.

பண் :

பாடல் எண் : 7

சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த பராபர மாகாதே
பண்டறி யாதப ராநுப வங்கள் பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

சந்திரனைத் தலைமணியாக அணிந்த பெருமான், எங்களை ஆளும்பொருட்டு எழுந்தருளப் பெற்றால் சொல்லுவதற்கு முடியாதபடி உண்டாகின்ற, தூய்மையான மணி ஓசை இன்பத்தைத் தருதல் ஆகாது போகுமோ? மிக விரைவாக, என் உள்ளத்தில் பொருந் திய சோதி இடைவிடாது வளர்தல் ஆகாது போகுமோ? பல வகையான மன அலைவு கெடும்படி வந்தருளின, பரம்பொருளினது பயன் உண்டாகாது, போகுமோ? முற்காலத்திலும் அறிந்திராத மேலான அனுபவங்கள் விரிந்து தோன்றுதலும் உண்டாகாது போகுமோ? வில்லைப் போன்ற அழகிய நெற்றியை உடைய பெண் களது ஆசை போன்றதோர் ஆசை, இப்பொழுது முடிவு உண்டாகாது போகுமோ? தேவரும் அறியாத மேன்மையான பொருள் இந்தப் பொருள்தான் என்ற உணர்வு தோன்றாது போகுமோ? வரம்பு இல்லாதனவாகிய எண் குணங்களானவை என்னிடத்துப் பொருந்துதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

சொல் இயலாது - சொல் நிகழ்ச்சி அற்றவிடத்து. `இயலாதவழி` என்பது, `இயலாது` எனத் திரிந்தது. தூமணி ஓசை - திருச்சிலம்பின் நாதம். இது நிராதார யோகத்திற் கேட்கப்படும் என்பதனை,
``ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசைவழி யேசென் றொத்தொடுங்கின்``
என்னும் திருக்களிற்றுப்படி(33)யான் உணர்க. துண்ணென - விரை வாக. பல்லியல்பு - மாயாகாரியங்களான் விளைவன. பராபரம் - மேலும் கீழுமாய் (எங்குமாய்) நிற்கும் பொருள். இங்கும், `பாரபரம் வந்தது` என மாற்றி உரைக்க. பர அநுபவங்கள் - மேலான அநுபவங்கள். `நன்னுதலார் மயல் போலும் மயல் எனக்கு விளைந்திடும்` என்றபடி. இஃது இறைவனிடத்தே தமக்கு உளதாகும் காதலைப் புலப்படுத்தியது. இப்பொருள் - இங்கு வந்து நிற்கும் பொருள். எல்லை இலாதன - அழிவில்லாத. எண் குணங்கள், `தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்ககையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், முடிவிலாற்ற லுடைமை, பேரருளுடைமை, வரம்பிலின்பமுடைமை` என்னும் இவை. இவை இறைவனுடைய அருட் குணங்களாகும்.
``எட்டு வான்குணத் தீசன்எம் மான்றனை`` -தி.5 ப.89 பா.8
எனவும்,
``இறையவனை மறையவனை எண்குணத்தி னானை``
-தி.7 ப.40 பா.3
எனவும் போந்த திருமொழிகளையும் காண்க.
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.-குறள்.9
எனத் திருவள்ளுவரும் கூறினார். இந்து சிகாமணி - சந்திரனைத் தலைமணியாகச் சூடியவன்.

பண் :

பாடல் எண் : 8

சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎ லாம்அடி யாரடி யோம்எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடி யார்கள் சிவாநு பவங்கள் தெரிந்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈறறி யாமறை யோன்எனை ஆள எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

முடிவு அறியப்படாத, மறையோனாகிய இறைவன், என்னை ஆளும் பொருட்டு எழுந்தருளப் பெற்றால் பல சங்குகள் ஒன்று சேர்ந்து முழங்கினால் எழுகின்ற ஓசையில் விளையும் இன்பம் போன்றதோர் இன்பம், மிகுதிப்படுதல் ஆகாது போகுமோ? பிறந்த இனம் பற்றி விடாது வருகிற தன்மைகள் நம்மிடம் இருந்து நீங்குதலும் ஆகாது போகுமோ? அப்பொழுது, இது நன்று, இது நன்று எனும் மயக்கம் தணிதல் ஆகாது போகுமோ? ஆசை முழுவதும் யாம் இறைவன் அடியார்க்கு அடியோம் என்னும் அவ்வளவே ஆகாது போகுமோ? சிவந்த கயல் மீன் போன்ற ஒளிமிக்க கண்களை உடைய, பெண்களது மனமானது நன்கு விளங்குதல் ஆகாது போகுமோ? சிறப்பினையுடைய அடியார்களது சிவாநுபவங்களை உணர்தல் ஆகாது போகுமோ? எவ்விடத்தும் நிறைந்து பேரின்பத்தைப் பொழிகின்ற மேலான சோதியை அடைதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

``சங்கு திரண்டு....தழைப்பன`` என்றதும், மேல், ``நன்மணி நாதம் முழங்கி`` (தி.8 திருப்படையாட்சி பா.4) என்றாற் போல, யோகப் பயனைக் கூறியதாம். சாதி விடாத குணங்கள் - சாதிபற்றி நீங்காதிருக்கின்ற குணங்கள். நம்மோடு - நம்பால். சலித்திடும் - தளர்ச்சி யெய்தும். அங்கு - அவை சலித்த விடத்து. ``இது, இது`` என வந்த சுட்டுக்கள் வேறு வேறு பொருளைச் சுட்டின. `அங்கது` எனப்பாடம் ஓதுதலே சிறக்கும். மாயை - மயக்கம். ``அத்தனை`` என்றது, `அதற்குமேற் செல்லாது` என்றவாறு. சிந்தை திளைத்தல் - எண்ணத்தை நன்குணர்தல். தெரிந்திடும் - நம் அறிவிலும் நன்கு விளங்கும்.

பண் :

பாடல் எண் : 1

மின்னே ரனைய பூங்கழல்க
ளடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக்
கூடும் வண்ணம் இயம்பாயே. 

பொழிப்புரை :

இறைவனே! உன் திருவடியை அடைந்த அன்பர்கள் இவ்வுலக மாயையைக் கடந்தார்கள். தேவர்கள் எல்லாம் மலர்களால் அருச்சித்து வணங்கி நின்றார்கள். அப்படி இருக்கும் போது, கல்லை நிகர்த்த மனத்தை உடையவனாய்க் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை அடையும் வகையைச் சொல்வாயாக.

குறிப்புரை :

மின் ஏர் அனைய - மின்னலினது அழகையொத்த. உலகம், மண்ணுலகம். பொன் ஏர் அனைய மலர் - பொன்னினது அழகையொத்த பூக்கள்; இவை கற்பகத் தருக்களில் உள்ளவை. அமரர் போற்றியது, அடியார்கள் அடைந்த பெரும்பேற்றினை. `கடை யேனாய்` என உயர்திணையாக ஓதற்பாலதனை, ``கடையாய்`` என அஃறிணையாக ஓதினார், இழிவு பற்றி. கழிப்புண்டு - உன்னால் நீக்கப் பட்டு. ``என்நேர் அனையேன்`` என்றது. `இழிவினால் எனக்கு ஒப்பார் பிறரின்றி, என்னையே ஒத்த யான்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 2

என்னால் அறியாப் பதம்தந்தாய்
யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடிய ரொடுங்கூடா
தென்னா யகமே பிற்பட்டிங்
கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே. 

பொழிப்புரை :

இறைவனே! என்னால் அறிய முடியாத பதவியைக் கொடுத்தாய்; நான் அதனை அறியாமல் கெட்டேன்; உன்னால் ஒரு குறைவும் இல்லை; அடியேனுக்குப் பற்று யாருளர்? எப்பொழுதும் உன்னைப் பணிந்து வழிபடுகின்ற உன் பழவடி யாரோடு கூடாமல் பின்னிட்டு நோய்களுக்கு விருந்தாக இங்கு இருந்தேன்

குறிப்புரை :

அறியா - அறிதற்கியலாத. பதம் - நிலை. `அஃது அறியாதே கெட்டேன்` என்றது, `மழக் கை இலங்கு பொற்கிண்ணத் தின் அருமையை அம்மழவு அறியாததுபோல (தி.8 திருச்சதகம்-92) அறியாது கெட்டேன்` என்றபடி. ``உன்னால் ஒன்றும் குறைவில்லை`` என்ற தனை, `தந்தாய்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `உனக்கு அடிமை செய்தற்கு நான் யார் (என்ன உரிமை யுடையேன்)` என்க. இவ்வாறன்றி, `உன் அடிமையாகிய எனக்குத் துணை யார்` என்பது பொருளாயின், இதனை இறுதிக்கண் கூட்டுக. மேலைப் பொருளே பொருளாயவழி, `என்செய்கேன்` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 3

சீல மின்றி நோன்பின்றிச்
செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி
வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே. 

பொழிப்புரை :

ஒழுக்கம் முதலானவை இல்லாமல் தோற்பாவை யின் கூத்தை நிகழ்த்திச் சுழன்று கிடக்கின்ற என்னைத் தன்னிடத்து அன்பு முதலியவற்றைக் கொடுத்து ஆண்டருளின இறைவனைக் கொடியேன் சேர்வது எந்நாளோ?

குறிப்புரை :

செறிவு - உறவு; அன்பு. சீலம் முதலிய நான்கும் சரியை முதலிய நான்குமாக உரைப்பாரும் உளர். மால் - அன்பு. வழி - ஞானம், ``மாலுங் காட்டி, வழி காட்டி`` என்றதனை, ``கோலங் காட்டி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``ஏற ஆண்டான்`` என இயையும். கோலம் - திருமேனி. ஏனையவற்றொடு நோக்க, `ஆண்டாயை` என்பதே பாடம் என்றல் கூடும்.

பண் :

பாடல் எண் : 4

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான்
பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே
காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
நன்றோ எங்கள் நாயகமே. 

பொழிப்புரை :

கெடுவேன், கெடுமாறு கெடுகின்றேன். கெடுதி இல்லாத நீ அதனால் பழியை அடைந்தாய்; படுதற்குரிய துன்பங்களை எல்லாம் நான் பட்டால் காட்டும் உனக்குப் பயன் என்னை? கொடிய நரகத்தில் ஆளாகாது காத்தருளும் குருவே! நீ நடுவு நிலைமையில் நில்லாது ஒழிந்தால் அது உனக்கு அழகாகுமோ!

குறிப்புரை :

`கெடும் இயல்புடையேனாகிய யான், அங்ஙனம் கெடுமாற்றானே கெடுகின்றேன்; அஃது என் குற்றமாயின், இக் குற்றமுடையேனை ஆட்கொண்டாய் என்ற பழியைக் கேடு சிறிதும் இல்லாத நீ பெற்றாயாவாய்; நான் படவேண்டுவனவாய துன்பங்கள் அனைத்தையும் பட்டுக்கிடப்பேனாயின், அதனால் உனக்கு உளதாம் பயன் யாது?` என்க. நடுவாய் நிற்றல் - ஆட்கொண்ட அடிமையை எவ்வாற்றாலேனும் அணைத்துக்கொள்ளல் வேண்டும் என்னும் முறைமைக்கண் வழுவாது நிற்றல்.

பண் :

பாடல் எண் : 5

தாயாய் முலையைத் தருவானே
தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன்
தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.

பொழிப்புரை :

தாயாகி முலை உண்பிப்போனே! முலை தாரா விடின் நாயேன் சவலையாய் ஒழிவேனோ? இனியாயினும் அருள் செய்வாய்; தாயே என்று உன் திருவடியை அடைந்தேன். நீ என் னிடத்து அருள் நிறைந்தவனாகி இருக்க வில்லையோ? நாயினேனது அடிமைத் திறம் வேண்டி என்னை ஆண்டருளினை; அடிமைத் திறமே யன்றி அடியேன் வேண்டாவோ?

குறிப்புரை :

தாயாய் - உயிர்கட்கெல்லாந் தாயாய்நின்று. முலையைத் தருவானே - அவள் பாலூட்டுதல்போல நலம் செய் பவனே. சவலையாய் - சவலைப் பிள்ளை - தாய் இருந்தும் அவள் பாலை உண்ணப் பெறாத பிள்ளை. தயா - தயவுடையவன்; ஆகு பெயர். இதன்பின், `தயாவாய்` என ஆக்கம் வருவிக்க. `இல்லையே` என்னும் ஏகாரம், தேற்றம். `நாயேனாகிய அடிமை உன் உடனாம்படி முன்பு ஆண்டாய்; இப்பொழுது நான் வேண்டாவோ` என்க.

பண் :

பாடல் எண் : 6

கோவே யருள வேண்டாவோ
கொடியேன் கெடவே அமையுமே
ஆவா என்னா விடில்என்னை
அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ
தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ
திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.

பொழிப்புரை :

இறைவனே! நீ அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமோ? அந்தோ! என்று நீ இரங்காவிடின் என்னை அஞ்சேல் என்பார் யாருளர்? பிறவிப்பயன் அடையாமல் இறப்பவர் எல்லாம் என்னளவு தானோ? என்னைக் கைவிடுதல் உனக்குத் தகுதி அன்று என்று ஒருவரும் சொல்லாரோ? நான் திகைத்தேன்; இனியா யினும் தெளிவிப்பாயாக.

குறிப்புரை :

கோவே - தலைவனே. கெடவே - கெடுதல்தான். அமையுமே - தகுமோ. சாவார் - உலகில் வாளா இறப்பவர். என் அளவோ - எனது நிலைமையினரோ; `உன்னால் ஆட்கொள்ளப்பட்ட வர்களோ` என்றபடி. `அல்லாராதலின்` அவர்களைப்போலவே நானும் இறத்தல் பொருந்துவதோ` என்பது குறிப்பு. `அவ்வாறு இறந்தால், உனது அருட்செயலுக்குப் பொருந்தும் முறைமை அன்று என்று உயர்ந்தோர் கூறமாட்டாரோ` என்க.

பண் :

பாடல் எண் : 7

நரியைக் குதிரைப் பரியாக்கி
ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்
பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவினாசி
அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ
செய்வ தொன்றும் அறியேனே.

பொழிப்புரை :

நரியைப் பரியாக்கி உலகம் எல்லாம் பரவச் செய்து, மதுரைப் பகுதி முழுதும் பித்தேற்றிய பெருந்துறைப் பெருமானே! அரும் பொருளே! அவினாசி அப்பனே! பாண்டி நாட்டின் கடலே! தெரிதற்கரிய மேலான ஒளியே! நான் உய்யும் பொருட்டு விடுப்ப தாகிய காரியத்தைச் சிறிதும் அறிந்திலேன்.

குறிப்புரை :

பரி - ஊர்தி. அவினாசி. கொங்குநாட்டுத் தலம். இனி, `அழிவில்லாதவன் என்றுமாம். பாண்டி - பாண்டிநாடு. வெள்ளம் - கருணை வெள்ளம்.

பண் :

பாடல் எண் : 1

முத்திநெறி அறியாத
மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப்
பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச்
சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

முத்தி வழியை அறியாத மூர்க்கரோடு கூடி அவர் வழியில் முயல்கின்ற எனக்குப் பத்தி வழியை அறிவித்து, என் பழவினைகள் ஓடும்படி மனமாசு அகற்றிச் சிவ வடிவமாக்கி என்னை ஆண்டருளினன், எமது தந்தையாகிய சிவபெருமான். அப்பெருமான் அருள் செய்த பேற்றைப் பெற வல்லவர் வேறு யாவர்?

குறிப்புரை :

முயலுதல் - செயல் செய்தல். மூர்க்கரோடு சேர்ந்து செய்யும் செயல் தீதாம் என்பது சொல்லவேண்டா. பாறும் வண்ணம் - அழியும்படி. சித்தம் - உள்ளம்; என்றது, அறிவை. `தானாக்கி` என்பதனை, `சிவமாக்கி` என்றார். ஆளுதல் - தன் இன்பத்தை நுகரச் செய்தல். `அருளிய முறைமையை இவ்வுலகில் யார் பெறுவார்` என்க. அச்சோ - இது வியப்பு.

பண் :

பாடல் எண் : 2

நெறியல்லா நெறிதன்னை
நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும் வண்ணம் அருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

பொழிப்புரை :

கெட்ட வழியை நல்ல வழியாக நினைக்கின்ற எனக்குத் தாழ்ந்த வழிகளில் சேராதபடி தன் திருவருளையே சேரும் வண்ணம் இறைவன் தன் திருவிளையாடலைச் செய்தான். அவ்விறைவன் அருளிய பேற்றைப் பெறவல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

குறி - அறிதற்குரிய அடையாளம்; அவை, உருவும் பெயரும் முதலாயின. `அவற்றுள் ஒன்றும் இல்லாத` என்றபடி. தன் கூத்து - தனது திருவிளையாட்டு; அஃது அனைவரையும் தானாகச் செய்யும் செயல். அறியும் வண்ணம் அருளியது - அஃது அநுபவமாம்படி செய்தது.

பண் :

பாடல் எண் : 3

பொய்யெல்லாம் மெய்யென்று
புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை
மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

பொய்யை மெய்யென்பது கருதி மாதர் இன்பத்தில் மயங்கி நின்ற என்னை, அழியாமல் காத்தருளித் தனது திருவடியையே அடையும் வண்ணம் இறைவன் அருள் பாலித்தான். எனக்கருள் செய்த இப்பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

பொய் - நிலையாதனவாய இவ்வுலகப் பொருள்கள். ``கழலே`` என்னும் ஏகாரம், பிரிநிலை. ``ஐயன்`` என்றதனை, ``பிரான்`` என்றதன்பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 4

மண்ணதனிற் பிறந்தெய்த்து
மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி
எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத்
தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

பொழிப்புரை :

மண்ணுலகில் பிறந்து இளைத்து மடிந்து விழக் கட வேனுக்கு அளவுபடாத அன்பை அருள் செய்து என்னை ஆண்டான். மேலும் எனக்குத் தன் திருவெண்ணீறு அணிவித்து, தூய்மையாகிய முத்தி நெறியை அடையும் வண்ணம் அருள்செய்தான். அவ்விறைவன் எனக்கு அருள் செய்த பேற்றைப் பெறவல்லவர் யாவர்?

குறிப்புரை :

எண்ணம் இலா அன்பு - நான் எதிர்பாராத அன்பு.

பண் :

பாடல் எண் : 5

பஞ்சாய அடிமடவார்
கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர
நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே
அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

பெண்ணுடைய கடைக்கண்ணால் துன்பம் அடைந்து நிற்கின்ற நான் உன்னருளைப் பெற்றேன். அதனால் பிழைத்தேன். அடியேனை வாவென்று அழைத்து அஞ்சேல் என்றருளின அப்பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

பஞ்சு ஆய - பஞ்சு பொருந்திய. நெஞ்சு ஆய - உள்ளத்திற் பொருந்திய. கூர - மிக்கெழ. `நீ எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார்` என்க.

பண் :

பாடல் எண் : 6

வெந்துவிழும் உடற்பிறவி
மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார்
குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு
பரிசறஎன் துரிசுமறுத்
தந்தமெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

இந்தப் பிறவியை மெய்யெனக் கருதித் தீவினைகளைப் பெருக்கிப் பெண்ணின் தனங்களின் மேல் விழுகின்ற என்பற்றினை நீக்கி என்னை ஆண்டருளி, என் குற்றங்களையும் அழித்தான். மற்றும் முடிவான பொருளை எனக்கு அருள் செய்தான். அவன் செய்த பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

`உடலாகிய இப்பிறவி` எனச் சுட்டு வருவிக்க. பரிசு - கைம்மாறு. துரிசு - குற்றம். அந்தம் - அருள வேண்டும் அளவு.

பண் :

பாடல் எண் : 7

தையலார் மையலிலே
தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து
பாசமெனுந் தாழுருவி
உய்யுநெறி காட்டுவித்திட்
டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

பெண்கள் மயக்கத்தில் தாழ்ந்து விழக் கடவேனாகிய என்னை, மெல்லக் கொண்டுவந்து பாசம் என்கிற தாழைக் கழற்றி, உய்யும் வழியைக் காட்டி, ஓங்காரப் பொருளையும் எனக்கு அருள் செய்தான். அப்பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

பையக் கொடுபோந்து - மெல்லத் தன்பால் வருவித்து; இது குதிரை வாங்குதல் முன்னிலையாகத் திருப்பெருந்துறையை அடையச் செய்தமையைக் குறித்தல் கூடும். தாழ் - பூட்டு; விலங்கு. உருவி - நீக்கி. ``தாள், தாழ்`` என வந்தது என்பாரும் உளர்; அதற்குப் `பாசத்தின்` என்னாது, ``பாசம் எனும்`` என்ற பாடம் ஏலாமை அறிக. ஓங்காரத்து உட்பொருள், உயிர்களின் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவிப்பவன்தானே (இறைவனே) என்னும் உண்மை. அருளியது, அநுபவமாக உணரச் செய்தது.

பண் :

பாடல் எண் : 8

சாதல்பிறப் பென்னுந்
தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார்
கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

பொழிப்புரை :

இறப்பும் பிறப்பும் என்கிற பெரிய சுழிகளில் சிக்கித் தடுமாறி பெண்கள் இன்பத்தில் வீழ்கின்ற நான், தன் திருவடியை அடையும் வண்ணம் இறைவன் அருள் செய்த பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

தடஞ்சுழி - பெரிய சுழல். ``ஆதி`` என்றதனை, ``பிரான்`` என்றதன் பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 9

செம்மைநலம் அறியாத
சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து
முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி
நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

பொழிப்புரை :

செப்பமாகிய நல்வழியை அறியாத அறிவிலி களோடு கூடித் திரிகின்ற என்னை முதல்வனாகிய பெருமான் மும்மலங்களையும் அறும்படி செய்து, எம்மையும் ஓர் பொருளாக்கி, இந்நாயைச் சிவிகையில் ஏற்றினான். எனக்கு அருள் செய்த பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

செம்மை நலம் - செப்பத்தின் நன்மை. செப்பமாவது, திருவருள் நெறி, இதற்கு மாறாவது, கொடுமை (கோணல்) அது, தற்போத நெறி. சிதடர் - குருடர்; ஞானம் இல்லாதவர் என்றபடி. ``மும்மை`` என்றது `மூன்று` என்னும் துணை நின்றது, ``தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்`` (பரிபாடல்-திரட்டு-4) என்புழிப்போல, முதலாய முதல்வன் - முதல்வர்க்கெல்லாம் முதல்வனாகிய முதல்வன்; ஏற்றுவித்த - ஏற்றுவித்தாற்போன்ற செயலைச் செய்த. அம்மை - தாய் போல்பவன்.

பண் :

பாடல் எண் : 1

திருவளர் தாமரை சீர்வளர்
காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி
னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்
கொடிபோன் றொளிர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:திருவளர் தாமரை திருவளருந் தாமரைப் பூவினையும்; சீர்வளர் காவிகள் அழகு வளரு நீலப் பூக்களையும்; ஈசர்தில்லைக் குருவளர் பூ குமிழ் ஈசர் தில்லைவரைப்பின் கணுண்டாகிய பூங்குமிழினது நிறம்வளரும் பூவினையும்; கோங்கு கோங்கரும்புகளையும்; பைங்காந்தள் கொண்டு செவ்விக் காந்தட்பூக்களையும் உறுப்பாகக் கொண்டு; ஓங்கு தெய்வ மரு வளர் மாலை ஒர் வல்லியின் ஒல்கி மேம்பட்ட தெய்வ மணம் வளரும் மாலை ஒருவல்லிபோல நுடங்கி; அன நடை வாய்ந்து அன்னத்தினடைபோல நடைவாய்ந்து; உரு வளர் காமன்தன் வென்றிக் கொடி போன்று ஒளிர்கின்றது வடிவுவளருங் காமனது வெற்றிக் கொடி போன்று விளங்காநின்றது; என்ன வியப்போ! என்றவாறு.
திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்றவாறு. திருமகடங்குந் தாமரையெனினுமமையும். பூங்குமி ழென்பது, முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்ற தோராகுபெயர். ஈசர் தில்லையென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. பல நிலங்கட்குமுரிய பூக்களைக் கூறியவதனால், நில மயக்கங் கூறியவாறாயிற்று. ஆகவே, பல நிலங்களினுஞ் சென்று துய்க்கு மின்பமெல்லாந் தில்லையின் வாழ்வார் ஆண்டிருந்தே துய்ப்ப ரென்பது போதரும். போதர, இம்மையின்பத்திற்குத் தில்லையே காரணமென்பது கூறியவாறாயிற்று. ஆகவே, ஈசர் தில்லை யென்றதனான், மறுமையின்பத்திற்குங் காரணமாதல் சொல்லாமையே விளங்கும். செய்யுளாதலாற் செவ்வெண்ணின்றொகை தொக்கு நின்றது. ஓங்கு மாலையெனவியையும். தெய்வ மருவளர்மாலை யென்றதனால், தாமரை முதலாயினவற்றானியன்ற பிறமாலையோடு இதற்கு வேற்றுமை கூறியவாறாம். வாய்ந்தென்பது நடையின் வினையாகலாற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்தது. உருவளர்காமன்றன் வென்றிக் கொடியென்றது நுதல் விழிக்குத்தோற்று உருவிழப்பதன் முன் மடியாவாணையனாய் நின்றுயர்த்த கொடியை. அன நடைவாய்ந்தென்பதற்கு அவ்வவ் வியல்பு வாய்ப்பப் பெற்றெனினுமமையும்.
திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மைநோக்க மென்றது அழகு. இஃதென் சொல்லியவாறோவெனின், யாவ னொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன்மேலவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்தவுருவும் நலனும் ஒளியுமெவ்வகையானும் பிறிதொன்றற்கில்லாமையால், திரு வென்றது அழகுக்கே பெயராயிற்று. அங்ஙனமாயின் இது செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; கோயிலைத் திருக்கோயிலென்றும், கோயில் வாயிலைத் திருவாயி லென்றும், அலகைத் திருவலகென்றும், பாதுகையைத் திருவடிநிலை யென்றும் வழங்கும் இத்தொடக்கத்தனவெல்லாந் திருமகளை நோக்கியெழுந்தனவல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே யெழுந்தது. ஆதலானுந் திருவென்பது அழகென்றே யறிக. அதனாற்றிருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமே. அல்லதூஉந் தான் கண்டவடிவின் பெருமையைப் பாராட்டுவானாகலான், ஒருத்தியிருந்த தவிசை இவளுக்கு முகமாகக் கூறுதல் வழுவாம். ஆதலாற் றான்கண்ட வடிவினுயர்ச்சியையே கூறினானாமெனக் கொள்க.
வளரென்பதற்கு வளருமென்றும்மைகொடுத்து உரை வாய்பாடு காட்டியதெற்றிற்கு மேலாலோ வளரக்கடவதென்பது கடா. அதற்குவிடை வளர்ந்த தாமரை வளராநின்ற தாமரையென்று கழிகாலத்தையும் நிகழ்காலத்தையுங்கூறாது, மேல்வருங்காலத்தைக் கூறவேண்டியது. கழிகாலத்தைக் கூறினாற் கழிந்ததனைக் கூறிற்றாம். நிகழ்காலத்தைக் கூறினால் முன்னும் பின்னுமின்றி இப்பொழு துள்ளதனைக் கூறிற்றாம். ஆகலான் வளருமென்று வருங்காலங் கூறியவாறன்று; மூன்று காலத்திற்கும் பொதுவாகிய சொற்றோன்றவே கூறினார். ஆயின் உம்மைச்சொன் மூன்று காலத்திற்கும் பொதுவாகி வந்தவாறென்னை?. இது செய்யுட் சொல்லாதலால் வந்தது. செய்யுளி னொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; அது ஞாயிறு திங்களியங்கும், யாறொழுகும், மலைநிற்கும் என்றற்றொடக்கத்தன வற்றானறிக. அன்றியும்,
முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை #9;
யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து ; ; ; ; ; மெய்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்
- தொல். சொல். வினை-43
என்றாராகலின், உம்மைச்சொல் வருங்காலத்தையே காட்டாது மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்குமென்றேயறிக.
இனித் திருமகடங்குந் தாமரை யெனினு மமையுமென்று அமைவுரைத்ததென்னை, இதனையுவமையாக்கக் குறையென்னை யெனின், திருமகளாலே தாமரையுயர்ந்ததாம். தாமரையினது சிறப்புக் கூறிற்றில்லையாம். என்னை, எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்குண்டாகையாலே திருமகளென்று பெயராயிற்று. அங்ஙனம் பெருமையுடையவளும் இதன் சிறப்பு நோக்கியேயிதனி லிருந்தாளல்லது தன்னாலேயிதற்குச் சிறப்புப்பெற வேண்டியிருந் தாளல்லள், ஆகலாற் றாமரைக் கொத்ததும் மிக்கதுமில்லை. அங்ஙனம் பெருமையுடையவளாலும் விரும்பப்பட்டதாகலான் திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்பது பெற்றாம்.
இனித் திருவளர்தாமரை சீர்வளர்காவி யென்றனபோல இதனையுங் குருவளர் குமிழென்னாது பூங்குமிழென்ற தெற்றிற் கெனின், முன்னும் பின்னும் வருகின்ற எண்ணிற் பூவைநோக்கியன்று, ஈண்டுச்செய்யுளின்பத்தை நோக்கியும் இதற்காகுபெயரை நோக்கியு மெனவறிக. அஃதென்போலவெனின், ``தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்`` (முல்லைக்கலி-1) என்பது போல. கோங்கென இதனை யொழிந்த நான்கிற்கு மடைகொடுத்து இதற்கடை கொடாதது பாலை நிலஞ் சொல்லுதனோக்கி. என்னை, பாலைக்கு நிலமின்றாகலான். ஆயின் மற்றைய நிலம்போலப் பாலைக்கு நிலமின் மையாற் கூறினாராகின்றார் மகளிர்க் குறுப்பிற் சிறந்தவுறுப்பாகிய முலைக்கு வமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடைகொடுக்கக் கடவதன்றோவெனின், அடைகொடுப்பிற் பிறவுறுப்புக்களுடன் இதனையுமொப்பித்ததாம். ஆகலான் இதற்கடைகொடாமையே முலைக்கேற்றத்தை விளக்கி நின்றது, அஃது முற்கூறிய வகையில் திருக்கோயில் திருவாயில் திருவலகு என்றவற்றிற்கு அடைகொடுத்து நாயகராகிய நாயனாரைத் திருநாயனாரென்னாதது போலவெனக் கொள்க.
இனி உடனிலைச் சிலேடையாவது ஒரு பாட்டிரண்டு வகையாற் பொருள் கொண்டு நிற்பது. அவ்விரண்டனுள்ளும் இத்திருக் கோவையின்கணுரைக்கின்ற பொருளாவது காமனது வென்றிக் கொடிபோன்று விளங்கி அன்னநடைத்தாய்த் தாமரையே நெய்தலே குமிழே கோங்கே காந்தளே யென்றிப்பூக்களாற் றொடுக்கப் பட்டோங்குந் தெய்வமருவளர்மாலையின் வரலாறு விரித்துரைக்கப் படுகின்றதென்பது. என்றது என்சொல்லியவாறோ வெனின், தாமரை மருதநிலத்துப்பூவாதலான் மருதமும், நெய்தல் நெய்தனிலத்துப் பூவாதலான் நெய்தலும், குமிழ் முல்லைநிலத்துப் பூவாதலான் முல்லையும், கோங்கு பாலைநிலத்துப் பூவாதலாற் பாலையும், காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூவாதலாற் குறிஞ்சியுமென இவ்வைந்து பூவினாலும் ஐந்திணையுஞ் சுட்டினார். ஆகலாற்றா மெடுத்துக் கொண்ட அகத்தமிழின் பெருமைகூறாது தில்லைநகரின் பெருமை கூறினார், நிலமயக்கங் கூறுதலான். அற்றன்று அஃதே கூறினார். என்னை, சொல்லின் முடிவினப் பொருண் முடித்த லென்னுந் தந்திரவுத்தியாற் புணர்தலும் புணர்தனிமித்தமுமாகிய குறிஞ்சியே கூறினார். என்னை, பைங்காந்தளென்று குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்தலான். அன்றியும் பூவினானே நிலமுணர்த்தியவாறு இத்திருக்கோவையின்கண் முன்னர்க் ``குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்`` (தி.8 கோவை பா.205) என்னும் பாட்டினுட் கண்டு கொள்க. அல்லதூஉஞ் ``சினையிற்கூறு முதலறிகிளவி`` (தொல் - வேற்றுமைமயங்கியல் - 31) என்னுமாகு பெயரானுமாம். ஆயின் குறிஞ்சியே கூறவமையாதோ நிலமயக்கங் கூறவேண்டியது எற்றிற்கெனின், ஓரிடத்தொரு கலியாணமுண்டா னால் எல்லாரிடத்து முண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத் துக்கூடி அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற்போலப் பல நிலங்களும் இக்குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன. உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையின், அன்பினானே நிகழ்ந்த காமப் பொருளைச்சுட்டினார். யாருங்கேட்போரின்றித் தன்னெஞ்சிற்குச் சொன்னமையின், கந்தருவரொழுக்கத்தையே யொத்த களவொழுக் கத்தையே சுட்டினார். ஈசர்தில்லை யென்றமையின், வீடுபேற்றின் பயத்ததெனச் சுட்டினார்.
களவொழுக்கமென்னும் பெயர்பெற்று வீடுபேற்றின் பயத்ததாய் அன்பினானிகழ்ந்த காமப்பொருணுதலிக் கந்தருவ ரொழுக்கத்தோடொத்துக் காமனது வென்றிக்கொடிபோன்று ஐந்திணையின்கண்ணும் வென்று விளங்காநின்ற கடிமலர்மாலையின் வரலாறு இத்திருக்கோவையின்கணுரைக்கப்படுகின்றதென்றவாறு. களவொழுக்கத்தினை ஒரு மாலையாகவுட்கொண்டு உருவகவாய் பாட்டா னுணர்த்தினாரென்பது. இன்பத்தை நுதலியதென்றா ராயினும், இன்பந் தலைக்கீடாக அறம் பொருள் இன்பம் வீடென நான்கு பொருளையும் நுதலிற்று. அவற்றுள் வீடுநுதலியவாறு மேலே சொன்னோம். ஒழிந்த மூன்றனையும் நுதலிய வாறென்னையெனின், ஈண்டுத் தலைமகனும் தலைமகளுமென்று நாட்டினார். இவனுக்கு ஆண்குழுவினுள் மிக்காருமொப்பாருமில்லை இழிந்தாரல்லது; இவளுமன்னள். இவர் ஒருவர்கண்ணொருவர் இன்றியமையாத அன்புடையராகலான், இவர்கண்ணே அம்மூன்றுமுளவாம். இவ் வொழுக்கத்தினது சுவைமிகுதி கேட்கவே விழைவு விடுத்த விழுமி யோருள்ளமும் விழைவின்கட்டாழுமாதலின், காமனது வென்றிக் கொடியெனவே வென்றிகொள்ளாநின்றது என்றானென்பது. முதற்கட் கிடந்த இப்பாட்டுக் காட்சியின்மேற்று. இப்பாட்டால் வேட்கை இவன்கணுண்டாயவாறென்னை பெறுமாறெனின், உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையிற் பெற்றாம்.
உவகைமிகுதியாற் சொன்னானாகலின், இப்பாட்டிற்கு மெய்ப்பாடு: உவகை. உவகையாவது சிருங்காரம்; அது காமப் பொருண் முதலாய வின்பத்தின்மேற்று. உவகையென்பது காரணக்குறி, உவப்பித்தலினுவகையாயிற்று. உவந்த நெஞ்சினனாய் அவளையோர் தெய்வப் பூமாலையாக வுருவகங்கொண்டு காமனது வென்றிக்கொடியோடுவமித்துச் சொன்னானென்பது. என்னை மாலையாமாறு,
பூப்புனை மாலையு மாலைபுனை மாதருந்
தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியுங்
கோச்சேரன் பெயருங் கோதையென் றாகும்
-திவாகரம், 11ஆவது
என்பதனாற் பெண்ணுக்கு மாலையென்று பெயராயிற்று. ஆயின் யாரொருவரையுங் கேசாதி பாதமாதல் பாதாதிகேசாமாதல் வருணிக்கவேண்டும். அவற்றுள், இது கேசாதிபாதமாக வருணிக்கப் பட்டது. என்னை, திருவளர் தாமரை யென்று முகமுதலாகவெடுத்துக் கொண்டு அன்னநடையென்று பாதத்திலே முடித்தலான். ஆயின், இதில் நடைகண்டானாயின் மேல் ஐயநிலையுணர்த்தல் வழுவா மெனின், இவன் நடைகண்டானல்லன், இம்மாலை நடக்குமாயின் அன்னநடையையொக்குமென்றான். வாய்ந்தென்பது நடையின் வினையாகலிற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்த தென்றது அன்னத்திற்குச்சினை கால், காலிற்கு வினை நடை, ஆகையால் முதலென்றது அன்னத்தை.
அங்ஙனமுவமித்துச் சொன்னதனாற் பயன் மகிழ்தல். என்னை, ``சொல்லெதிர் பெறாஅன் சொல்லியின் புறுதல், புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே`` (தொல். பொருள். அகத்திணை - 50) என்று அகத்திணையியற் சூத்திரத்திற் சொன்னாராகலினென்பது.
அஃதேல் உவகையென்னும் மெய்ப்பாட்டானே மகிழ்ச்சி பெற்றாம். இனியிச்சொற்கள் விசேடித்து மகிழ்வித்தவா றென்னை யெனின், நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து தான் வேட்ட பொருள் வயிற் றன்குறிப்பன்றியேயுஞ் சொன்னிகழும்; நிகழுந் தோறும் மகிழ்ச்சி தோன்றுமென்பது. என்போல வெனின், ஒருவன் தான்வழிபடுந் தெய்வத்தைப் பரவிய செய்யுட்களை யோதியுணர்ந் திருந்தானெனினும், அவற்றான் அத்தெய்வத்தை வழிபடும்போழ்து கண்ணீர்வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் காண்டும். அல்லதூஉஞ் சுற்றத்தாரது சாக்காடு முற்றவுணர்ந்தானேயெனினுஞ் செத்தாரிடனாக உரையாடினபொழுது துன்பமீதூரக் கலுழக்காண்டும்; இவை போலவென்பது. ஆகலின் நினைப்பின்வழியதுரையாயினும் நினைப்பின் உரைப்பயன் விசேடமுடைத்தென்பது.
நெஞ்சின்மிக்கது வாய்சோர்ந்து சொன்னிகழுமென்பதனை இக்கோவையின் எண்வகை மெய்ப்பாட்டின்கண்ணுந் தந்துரைத்துக் கொள்க. பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயினிகழ்ந்த சொல்லானெய்துவது. மெய்ப்பாடென்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின் கட்டோன்றிய விகாரத்தின் விளைவு. எழுவாய்க் கிடந்த இப்பாட்டு நுதலிய பொருள் பொழிப்பினாலுரைத்தாம். நுண்ணிதாக வுரைப்பான்புகின் வரம் பின்றிப் பெருகுமென்பது.

குறிப்புரை :

1.1. காட்சி
காட்சி என்பது தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃதொருவியப் பென்னென்றல். அதற்குச் செய்யுள்
1.1 மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர்வேலவன் கண்ணுற்றது.
திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி யெடுத்துக் கொண்டாரோவெனின்,
அறிவோ னறிவில தெனவிரண் டாகு
நெறியினிற் றொகைபெற்று நிரல்பட விரிந்த
மண்புன லனல்வளி மாவிசும் பெனாஅ
வெண்மதி செஞ்சுடர் வேட்போ னெனாஅ
வெண்வகை நிலைஇய வெவ்வகைப் பொருளுந்
தோற்றநிலை யிறுதி கட்டுவீ டென்னு
மாற்றருஞ் செயல்வழி மாறாது செயப்பட்டு
வெருவா வுள்ளத்து வேட்போன் றான்செய்
யிருவினைப் பயன்றுய்த்து மும்மல னொரீஇப்
பொருவறு சிவகதி பொற்பினிற் பொருந்தவு
மேனைய தத்தங் குணநிலை புணரவு
நிலைஇ யவ்வயி னிமித்த மாகி
யலகு தவிர்த்த பலவகை யண்டமு
மின்னுழை வெயிலின் றுன்னணுப் புரைந்து
தன்னு ளடங்கவுந் தானவற் றுள்ளு
நுண்ணுணர் வாயு நோக்கரு நுழையிற்
சிறுமை பெருமைக் கிருவரம் பெய்திப்
போக்கும் வரவும் புணர்வு மின்றி
யாக்கமுங் கேடு மாதியு மந்தமு
நடுவு மிகந்து ஞானத் திரளா
யடியு முடியு மளவா தயர்ந்து
நெடியோ னான்முக னான்மறை போற்ற
வெரிசுடர்க் கனலியி னீங்காது விரிசுடர்
வெப்பமும் விளக்கமு மொப்பவோர் பொழுதினிற்
றுப்புற வியற்றுவ தெனவெப் பொருளுங்
காண்டலு மியற்றலு மியல்பா மாண்டுடன்
றன்னினீங் காது தானவின்று விளங்கிய
வெண்ணெண் கலையுஞ் சிலம்புஞ் சிலம்படிப்
பண்ணமை தேமொழிப் பார்ப்பதி காண
வையா றதன்மிசை யெட்டுத்தலை யிட்ட
மையில் வான்கலை மெய்யுடன் பொருந்தித்
தில்லை மூதூர்ப் பொதுவினிற் றோன்றி
யெல்லையி லானந்த நடம்புரி கின்ற
பரம காரணன் றிருவரு ளதனால்
திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர்
ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச்
செம்புலச் செல்வ ராயினர் ஆதலின்
அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென
இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர்
ஆங்கவ் விரண்டனுள்
ஆகமநூல் வழியி னுதலிய ஞான
யோகநுண் பொருளினை யுணர்த்து தற்கரி
துலகநூல் வழியி னுதலிய பொருளெனு
மலகி றீம்பாற் பரவைக் கண்ணெம்
புலனெனுங் கொள்கலன் முகந்த வகைசிறி
துலையா மரபி னுரைக்கற் பாற்று.
அஃதியாதோவெனின், எழுவாய்க்கிடந்தபாட்டின் பொருளு ரைக்கவே விளங்கும். அஃதேல், இப்பாட்டென்னுதலிற்றோவெனின், அறம், பொருள், இன்பம், வீடென்னு நான்கு பொருளினும் இன்பத் தை நுதலி இத்திருக்கோவையின்கணுரைக்கின்ற களவியற் பொருளி னது பொழிப்பிலக்கணத்தையும், அதற்குறுப்பாகிய கைக்கிளைத் திணையின்கண் முதற்கிடந்த காட்சியென்னும் ஒருதலைக் காமத்தினையும், உடனிலைச் சிலேடையாகவுணர்த்துதனுதலிற்று.
திருவளர்தாமரை ... போன்றொளிர்கின்றதே.
மதிவாணுதல் ... கண்ணுற்றது.

பண் :

பாடல் எண் : 2

போதோ விசும்போ புனலோ
பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது
மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ
விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென
நின்றவர் வாழ்பதியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:யமன் விடுத்த தூதோ யமனால் விடுக்கப் பட்ட தூதோ; அனங்கன் துணையோ வசித்தற்கரியாரை வசித்தற்கு அனங்கற்குண்டாயிற்றோர் துணையோ; இணையிலி தொல்லைத் தில்லை மாதோ - ஒப்பில்லாதானது பழையதாகிய இத்தில்லைக்கண் வாழ்வாரோர்மாதரோ; மட மயிலோ என நின்றவர் வாழ்பதி - மடப்பத்தையுடைய மயிலோவென்று சொல்லும்வண்ணம் நின்றவரது வாழ்பதி; போதோ - தாமரைப்பூவோ; விசும்போ - ஆகாயமோ; புனலோ - நீரோ; பணிகளது பதியோ - பாம்புகளது பதியாகிய நாகருலகமோ; யாதோ ஏதும் அறிகுவது அரிது - யாதோ சிறிதுந் துணிதலரிது என்றவாறு.
யமன் தூதும், அனங்கன்றுணையும், மடமயிலும் ஐயநிலை யுவமைக்கணுவமையாய் நின்றன. தில்லைமாது: உவமிக்கப்படும் பொருள். ஐயநிகழ்ந்தது திருமகள் முதலாகிய தெய்வமோ மக்க ளுள்ளாளோவென்றென்க. மக்களுள்ளாளாதல் சிறுபான்மை யாகலிற் கூறிற்றிலர்.
தில்லைமாதோ வென்பதற்குத் தில்லைக்கண் வாழ்வாரோர் மானுடமாதரோ வென்றுரைப்பாருமுளர். தில்லைமானுடமாது மகளிர்க்குவமையாகப் புணர்க்கப்படுவனவற்றி னொன்றன்மையால் உவமையாகாது. உவமிக்கப்படும் பொருளெனின், ஐயமின்றித் துணிவாம். அதனால், தில்லைமாதோவென்பது மானுடம் தெய்வ மென்னும் வேறுபாடுகருதாது மகளிரென்னும் பொதுமை பற்றி நின்றது. தில்லை நின்றவரெனக் கூட்டினுமமையும்.
தெய்வமென்ன - தெய்வமோ அல்லளோவென.
மெய்ப்பாடு : உவகையைச் சார்ந்த மருட்கை. என்னை,
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு #9;
மதிமை சாலா மருட்கை நான்கே
- தொல். பொருள். மெய்ப்பாட்டியல் - 7
என்றாராகலின். ஈண்டு வனப்பினது பெருமையை வியந்தா னென்பது. அவ்வியப்பு மருட்கைப்பாற்படும். பயன்: ஐயந்தீர்தல்.

குறிப்புரை :

1.2. ஐயம்
ஐயம் என்பது கண்ணுற்ற பின்னர் இங்ஙனந் தோன்றாநின்ற இம்மாது திருமகள் முதலாகிய தெய்வமோ அன்றி மக்களுள்ளாள் கொல்லோ வென்றையுறாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.2. தெரியவரியதோர் தெய்வமென்ன
அருவரைநாடன் ஐயுற்றது.

பண் :

பாடல் எண் : 3

பாயும் விடையரன் றில்லையன்
னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:பாயும் விடை அரன் தில்லை அன்னாள் பாய்ந்து செல்லும் விடையையுடைய அரனது தில்லையை யொப்பாளுடைய; படைகண் இமைக்கும் படைபோலுங் கண்கள் இமையா நின்றன; நிலத்து அடி தோயும் நிலத்தின் கண் அடி தீண்டா நின்றன; தூமலர் வாடும் தூய மலர்கள் வாடா நின்றன, ஆதலின் துயரம் எய்தி ஆயும் மனனே துயரத்தையெய்தி ஆராயும் மனனே ; அம் மாமுலை சுமந்து அழகிய பெரியவாகிய முலைகளைச் சுமந்து; தேயும் மருங்குல் தேயாநின்ற மருங்குலையும்; பணை பெருந்தோள் பணைபோலும் பெரிய தோள்களையும் உடைய; இச்சிறு நுதல் அணங்கு அல்லள் இச்சிறு நுதல் தெய்வம் அல்லள் எ-று.
துயரமெய்தி யாயுமனனே யென்றதனால், தெளிதல் கூறப்பட்டதாம். மெய்ப்பாடு: மருட்கையின் நீங்கிய பெருமிதம். என்னை,
கல்வி தறுக ணிசைமை கொடையெனச் #9;
சொல்லப் பட்ட பெருமித நான்கே
-தொல். பொருள். மெய்ப்பாட்டியல் - 9
என்றாராகலின், தெளிதலுங் கல்வியின் பாற்படும். பயன்: தெளிதல்.
அவ்வகை தெய்வம் கொல்லோவென்றையுற்று நின்றான் இவ்வகை குறிகண்டு தெய்வமல்லள் மக்களுள்ளாளெனத் துணிந்தா னென்பது. எனவே, தெய்வமல்லளாதற்குக் காரணம் இனையன குறியே வேற்றுமை இல்லை என்பது துணிவு.

குறிப்புரை :

1.3. தெளிதல் தெளிதல் என்பது ஐயுற்றபின்னர் அவயவமியங்கக்கண்டு இவள் தெய்வமல்லளென்று தெளியாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.3 அணங்கல்லளென் றயில்வேலவன்
குணங்களைநோக்கிக் குறித்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

அகல்கின்ற வல்குற் றடமது
கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
னம்மன்ன பல்வளைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அகல்கின்ற அல்குல் தடம் அது அகலா நின்ற வல்குலாகிய தடம் அது; கொங்கை அவை முலை அவை; நெஞ்சு அவம் நீ புகல்கின்றது என்னை நெஞ்சே காரணமின்றி நீ சொல்லுகின்றதென்!; அடையார் புரங்கள் இகல் குன்றவில்லில் செற்றோன் அடையாதார் புரங்களது இகலைக் குன்றமாகிய வில்லாற் செற்றவன்; தில்லை ஈசன் தில்லைக்கணுளனாகிய வீசன்; எம்மான் எம்முடைய இறைவன்; எதிர்ந்த பகல் குன்ற பல் உகுத்தோன் மாறுபட்ட ஆதித்தனது பெருமை குன்றப் பல்லை உகுத்தோன்; பழனம் அன்ன பல்வளைக்கு இடை உண்டு அவனது திருப்பழனத்தை யொக்கும் பல்வளைக்கு இடையுண்டு எ-று.
தடம் உயர்ந்தவிடம். அல்குற்றடமது கொங்கையவை என்புழி அல்குற்பெருமையானும் முலைப்பெருமையானும் இடையுண்டு என்றவாறு அன்று; அல்குலும் முலையும் உண்மையான் இடை உண்டு என்றவாறு. அல்குற்றடமதுவென்றும் முலையவை யென்றும் பெருமை கூறியது அவை விளங்கித் தோன்றுதனோக்கி. இகல்குன்றவில்லிற் செற்றோனென்பதற்கு இகல்குறைய வில்லாற் செற்றோனெனினும் அமையும். நயந்த அண்ணல் - மக்களுள்ளா ளென்று துணிதலால் நயந்த அண்ணல். உள்ளியது - கூட்டத்தை நினைந்தது. மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை, வியந்துரைத்தலின். பயன்: ஐயந்தீர்ந்து மகிழ்தல்.
இந்நான்கு பாட்டும் ஒருவர் உள்ளக் கருத்தை ஒருவர் அறியாதவொருதலைக் காமம் ஆதலிற் கைக்கிளைப்பால. அகத் திணையின்கண் கைக்கிளை வருதல் திணைமயக்காம்பிறவெனின், கைக்கிளைமுதற் பெருந்திணை இறுவாய் எழுதிணையின்உள்ளும் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த புறமாயினும், கிளவிக்கோவையின் எடுத்துக்கோடற்கட் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமை நோக்கிக் கைக்கிளை தழீஇயினார். பெருந்திணை தழுவுதல் சிறப்பின்மையினீக்கினார். இது நலம் பாராட்டல்.

குறிப்புரை :

1.4. நயப்பு
நயப்பு என்பது தெய்வம் அல்லளென்று தெளிந்த பின்னர் மக்களுள்ளாள் என்று நயந்து இடை யில்லைகொலென்ற நெஞ்சிற்கு அல்குலும் முலையுங்காட்டி இடையுண்டென்று சென்றெய்த நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.4 வண்டமர் புரிகுழ லொண்டொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள் ளியது.

பண் :

பாடல் எண் : 5

அணியு மமிழ்துமென் னாவியு
மாயவன் றில்லைச்சிந்தா
மணியும்ப ராரறி யாமறை
யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும்
பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந்
தோளி படைக்கண்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின்னும் பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படை கண்கள் மின்னையும் பாம்பையுமொக்கும் இடையினையும் பெருந்தோளினையும் உடையாளது படைபோலும் கண்கள்; பிறழ பிறழ பிணியும் பிறழுந்தோறும் பிறழுந்தோறும் பொதுநோக்கத்தாற் பிணியும்; அதற்கு மருந்தும் உள்ளக் கருத்து வெளிப்படுக்கு நாணோடுகூடிய நோக்கத்தால் அதற்கு மருந்தும் ஆகாநின்றன எ-று.
அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் எனக்காபரணமும் அமிழ்தும் என்னுயிருமாயவன்; தில்லைச் சிந்தாமணி தில்லைக்கட் சிந்தாமணிபோல அன்பர்க்கு, நினைத்தவை கொடுப்போன்; உம்பரார் அறியாமறையோன் அன்பரல்லாத தேவர்களறியாத வந்தணன்; அடி வாழ்த்தலரின் பிணியும் அவனுடைய திருவடிகளை வழுத்தாதவரைப்போல உறும் பிணியுமெனக் கூட்டுக.
அணியென்றார் அழகு செய்தலான். அமிழ்தென்றார் கழி பெருஞ்சுவையோடு உறுதிபயத்தல் உடைமையான். ஆவி யென்றார் காதலிக்கப்படும் பொருள்களெல்லாவற்றினுஞ் சிறந்தமையான். ஈறிலின்பம் பயக்கும் இறைவனோடு சார்த்த அணியும் அமிழ்தும் ஆவியும் இறப்ப இழிந்தனவே ஆயினும்,
பொருளது புரைவே புணர்ப்போன் குறிப்பின்,
மருளற வரூஉ மரபிற் றென்ப
என்பதனான் ஈண்டுச் சொல்லுவானது கருத்து வகையானும், உலகத்துப் பொருள்களுள் அவற்றினூங்கு மிக்கனவின்மையானும், உயர்ந்தனவாயுவமையாயின. உம்பராலென்பது பாடமாயின், உம்பரானறியப் படாதவெனவுரைக்க. பிறழப் பிறழும் என்பது பாடமாயின், பிணியும் மருந்தும் மாறி மாறி வரப்படைக்கண்கள் பிறழும் என உரைக்க. இஃது உட்கோள். இவை ஐந்தும் கைக்கிளை.
திணை: குறிஞ்சி. கைகோள்: களவு. கூற்று: தலைமகன் கூற்று. கேட்பது: நெஞ்சு. நெஞ்சென்பது பாட்டின்கண் இல்லையாலோ வெனின் எஞ்சிற்றென்பதாம்; வறிதே கூறினா னெனினுமமையும். இடம்: முன்னிலை. காலம்: நிகழ்காலம். எச்சம்: இப்பெருந்தோளி படைக்கண்களென்புழி இவ்வென்னுஞ் சுட்டுச்சொல்லெஞ்சிற்று. மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம். ஈண்டு மெய்ப்பாட்டுப் பொருள்கோள் கண்ணினான் யாப்புறவறிதல். என்னை,
கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரு
முணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியி
னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே.
-தொல். பொருள். மெய்ப்பாட்டியல் - 27
என்றாராகலின். பயன்: தலைமகளது குறிப்பறிந்து மகிழ்தல். பிணியுமதற்கு மருந்துமாம் பெருந்தோளி படைக்கண்களென் றமையின், அவளுடம்பாட்டுக் குறிப்புஅவள் நாட்டத்தானுணர்ந்தா னென்பது. என்னை,
நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்.
-தொல். பொருள். களவியல் - 5
என்றாராகலின்.

குறிப்புரை :

1.5. உட்கோள்
உட்கோள் என்பது மக்களுள்ளாளென்று நயந்து சென்றெய்த நினையாநின்றவன் தன்னிடத்து அவளுக்குண்டா கிய காதல் அவள் கண்ணிற்கண்டு தன்னுட் கொள்ளாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.5. இறைதிருக் கரத்து மறிமா னோக்கி
யுள்ளக் கருத்து வள்ள லறிந்தது.

பண் :

பாடல் எண் : 6

வளைபயில் கீழ்கட னின்றிட
மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய
வேன்தெய்வ மிக்கனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வளை பயில் கீழ் கடல் நின்று இட சங்கு நெருங்கின கீழ்த்திசைக்கடலிலே நின்று இட; நேர்கழி மேல் கடல் வான் நுகத்தின் துளைவழி கோத்தென அவ்வொத்தகழி மேற்றிசைக் கடலில் இட்ட பெரிய நுகத்தினது துளைக்கட்சென்று கோத்தாற் போல; தில்லைத் தொல்லோன் கயிலை கிளை வயின் நீக்கி தில்லை யிடத்துப் பழையோனது கயிலைக்கண் ஆயத்தாரிடத்து நின்று நீக்கி; இ கெண்டை கண்ணியைக் கொண்டு தந்த விளைவை அல்லால் இக்கெண்டை போலும் கண்ணையுடையாளைக் கைக் கொண்டு தந்த நல்வினையின் விளைவாகிய தெய்வத்தை அல்லது; மிக்கன தெய்வம் வியவேன் நயவேன் மிக்கனவாகிய பிற தெய்வத்தை வியப்பதுஞ் செய்யேன்; நயப்பதுஞ் செய்யேன் எ-று.
கயிலைக்கட் கொண்டுதந்த வெனவியையும். இவளைத்தந்த தெய்வத்தையல்லது நயவேனென்று அவளது நலத்தை மிகுத்த மையின், இதுவும் நலம் பாராட்டல். பயந்தோர்ப்பழிச்சற் (தலைவி யின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்துதல்) பாற்படுத்தினுமமையும். மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை. பயன்: மகிழ்தல்.

குறிப்புரை :

1.6. தெய்வத்தை மகிழ்தல்
தெய்வத்தை மகிழ்தல் என்பது உட்கொண்டு நின்று, என்னிடத்து விருப்பத்தையுடைய இவளைத்தந்த தெய்வத்தை அல்லது வேறொரு தெய்வத்தை யான் வியவேனெனத் தெய்வத்தை மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.6 அன்ன மென்னடை அரிவையைத் தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

ஏழுடை யான்பொழி லெட்டுடை
யான்புய மென்னைமுன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன
பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும்
விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங்
காய்வந் தகப்பட்டதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:பொழில் ஏழு உடையான் பொழில் ஏழு உடையான்; புயம் எட்டு உடையான் புயம் எட்டுடையான்; முன் என்னை ஆள் ஊழ் உடையான் எனக்கு ஆட்படுந்தன்மை உண்டா வதற்கு முன்னே என்னை ஆள்வதொரு புதிதாகிய முறைமையை யுடையான்; புலியூர் அன்ன பொன் அவனது புலியூரையொக்கும் பொன்னனையாள்; இ உயர் பொழில் வாய் சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையாக இவ்வுயர்ந்த மொழிலிடத்து ஒருபொழுதும் விடாது சூழ்தலை உடைய ஆயத்தை நீக்குதற்குக் காரணமாகிய விதி துணையாக; மனனே மனமே; யாழ் உடையார் மணங்காண் அணங்கு ஆய் வந்து அகப்பட்டது கந்தருவர் மணங்காண் முன் வருத்துவதாய் வந்து அகப்பட்டது; இனிக் கூட்டத்துக்கு உடன்படு வாயாக என்றவாறு.
பொன்னீக்குமெனவியையும். ஆகவென்பது ஆ வென நின்ற செய்யுண்முடிபு; புறனடையாற் கொள்க. அணங்காய் வந்தென்றான், உள்ளஞ்செல்லவும் இது தகாதென்று விலக்குதலால் முன் வருத்தமாயினமையின். தெய்வத்தன்மை உடைத்தாய் வந்து எனினும் அமையும். அகப்பட்டதென்று இறந்த காலத்தாற் கூறினான், புணர்ச்சி துணிந்தமையான். இதுவும் உட்கோட்பாற்படும்.
இவை இரண்டும் ஒருதலைக்காம மல்லவெனினும் புணர்ச்சி நிகழாமையிற் கைக்கிளைப் பாற்படும். புணர்ச்சி நிகழாமை, தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது என்பதனானறிக. பேதையைப் புணர்ச்சி துணிந்தது, விதிதுணையாகக் கந்தருவர் மணம் ஒரு பெண் வடிவு கொண்டு எனக்கு எய்திற்று என்றமையின். இவனோடு இவளி டையுண்டாய அன்பிற்குக் காரணம் விதியல்லாமை ஈண்டுப் பெற்றாம். பாங்கற்கூட்டம் தோழியிற் கூட்டம் என்று இவற்றில் அவர் துணையாயவாறுபோல விதியும் இவரை ஆயத்தினீக்கிக் கூட்டின மாத்திரையே அன்றி அன்பிற்குக் காரணமன்றென்பது. அல்லதூஉம், விதியாவது செயப்படும் வினையினது நியதியன்றே, அதனானே அன்பு தோன்றிப் புணர்ந்தாரெனின், அதுவுஞ் செயற்கைப் புணர்ச்சியாய் முடியும், அது மறுத்தற் பொருட்டன்றே தொல்லோரி தனை இயற்கைப் புணர்ச்சியென்று குறியிட்டது. அல்லதூஉம், நல்வினை துய்த்தக்கால் முடிவெய்தும், இவர்களன்பு துய்த்தாலு முடிவெய்தாது எஞ்ஞான்றும் ஒருபெற்றியே நிற்கும் என்பது. அல்லதூஉம், ``பிறப்பா னடுப்பினும் பின்னுந் துன்னத்தகும் பெற்றியர்`` (திருக்கோவை, 205,) என்றலானும், இவர்கள் அன்பிற்குக் காரணம் விதியன்றென்பது. பலபிறப்பினும் ஒத்த அன்பென்றாராகலின், பலபிறப்பினு மொத்து நிற்பதோர் வினை யில்லை என்பது. அஃதேல், மேலைச் செய்யுளில் வினைவிளைவே கூட்டிற்றாக விசேடித்துச் சொல்ல வேண்டிய தென்னையெனின், இம்மையிற் பாங்கனையுந் தோழியையுங் குறையுற அவர்கள் தங்களினாகிய கூட்டம் கூட்டினார்கள். உம்மை நல்வினையைக் குறையுற்று வைத்து இம்மை அதனை மறந்தான்; மறப்புழியும், அது தான்மறவாது இவர்களையுங் கண்ணுறுவித்து இவர்க்குத் துப்பு மாயிற்றாகலான், விசேடிக்கப்பட்டது. அல்லதூஉம், ``பாங்கனை யானன்ன பண்பனை`` (தி.8 கோவை பா.19) என்று அவனை விசேடித்தும், ``முத்தகஞ்சேர் மென்னகைப் பெருந்தோளி`` (தி.8 கோவை பா.106) என்று அவளை விசேடித்தும், அவர்களினாலாய கூட்டத்திற்குக் கூறினமையின், நல்வினைப் பயனும் அம்மாத்திரையே விசேடித்தது என்பது.

குறிப்புரை :

1.7. புணர்ச்சி துணிதல்
புணர்ச்சி துணிதல் என்பது தெய்வத்தை மகிழாநின்றவன் இது நமக்குத் தெய்வப் புணர்ச்சி எனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி அவளோடு புணரத் துணியாநிற்றல். அதற்குச் செய்யுள் 1.7 கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.

பண் :

பாடல் எண் : 8

சொற்பா லமுதிவள் யான்சுவை
யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப்
புனிதன் பொதியில்வெற்பிற்
கற்பா வியவரை வாய்க்கடி
தோட்ட களவகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சொல்பால் அமுது இவள் யான் சுவை துணிந்து என்ன இங்ஙன் நல்பால் வினை தெய்வம் தந்து என்றது. சொல்லும் பகுதியில் அமுதிவள் யானதன் சுவையென்று துணிந்து சொல்ல இவ்வண்ணமே நல்ல கூற்றின் வினையாகிய தெய்வந்தர என்றவாறு. என்றது சுவையை உடைய பொருட்கும், சுவைக்கும் வேறுபாடு இல்லாதவாறு போல எனக்கும் இவட்கும் வேறுபாடில்லை என்றவாறு. இன்று நான் இவள் ஆம் பகுதி பொற்பு ஆர் அறிவார் என்றது. இவ்வாறு வேறுபாடில்லையாயினும், புணர்ச்சியான் வரும் இன்பம் துய்த்தற்பொருட்டாக இன்று யானென்றும் இவளென்றும் வேறுபாட்டோடு கூடிய அழகை யாரறிவார் இதனை அனுபவிக்கின்ற யானே அறியினல்லது! என்றவாறு. புலியூர் புனிதன் பொதியில் வெற் பில் கல்பாவிய வரைவாய் கடிதோட்டகளவகத்து என்றது. புலியூர்க் கணுளனாகிய தூயோனது பொதியிலாகிய வெற்பிற் கற்பரந்த தாள்வரையிடத்துக் காவலை வாங்கிய களவிடத்து என்றவாறு.
களவகத்துப் பொற்பெனக்கூட்டுக. தந்தென்பது தரவெனத் திரிக்கப்பட்டது. தந்தின்றென்பது தந்தது என்னும் பொருள்படாமை அறிந்து கொள்க. தந்தன்றென்பதூஉம் பாடம்போலும். கடிதோட்ட என்பதற்குக் கடியப்பட்ட தொகுதியை உடைய களவென்று உரைப்பினும் அமையும். தோட்டவென்றது தலைமகளாயத்தையுந் தன்னிளைஞரையும். கடிதொட்ட வென்பது பாடமாயின், மணந் தொடங்கிய களவென்றுரைக்க. கொடியிடையொடுகலவி கொடி யிடையோடு நிகழ்ந்த கலவி. மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்ச்சி; தலைமகளை மகிழ்வித்தலுமாம். நல்வினைத் தெய்வம் இவளைக் களவின்கட்கூட்ட அமுதமும் அதன்கட் கரந்து நின்ற சுவையுமென்ன என்னெஞ்சம் இவள்கண்ணே ஒடுங்க யானென்பதோர் தன்மை காணாதொழிய இருவர் உள்ளங்களும் ஒருவேமாமாறுகரப்ப ஒருவேமாகிய ஏகாந்தத்தின்கட் பிறந்த புணர்ச்சிப் பேரின்ப வெள்ளம் யாவரா னறிப்படுமென்று மகிழ்ந் துரைத்தான்; உரைப்பக்கேட்ட தலைமகளும் எம்பெருமான் என்கண் வைத்த அருளினானன்றோ இவ்வகை யருளியதென்று இறப்பவு மகிழ்வாளாம்.

குறிப்புரை :

1.8. கலவியுரைத்தல்
கலவியுரைத்தல் என்பது தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன் புணர்ச்சி இன்பத்தின் இயல்பு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் 1.8 கொலைவேலவன் கொடியிடையொடு
கலவியின்பம் கட்டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச்
சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும்
போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
போல வளர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உணர்ந்த்தார்க்கு உணர்வு அரியோன் ஒருகால் தன்னை உணர்ந்தவர்கட்குப் பின்னுணர்தற்குக் கருவியாகிய சித்தவிருத்தியும் ஒடுங்குதலான் மீட்டு உணர்வரியோன்; தில்லைச் சிற்றம்பலத்து ஒருத்தன் தில்லையிற் சிற்றம்பலத்தின்கணுளனாகிய ஒப்பில்லாதான்; குணம் வெளிப்பட்ட கொவ்வை செவ்வாய் இ கொடி இடை தோள் புணர்ந்தால் அவனது குணமாகிய ஆனந்தம் வெளிப்பட்டாற்போலுங் கொவ்வைக் கனிபோலும் செவ்வாயை உடைய இக்கொடியிடை தோளைக் கூடினாலும்; புணரும் தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய் கூடுந்தோறும் பெரிதாகிய இன்பம் முன்புபோலப் பின்னும் புதிதாய் ; மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றது மணந்தங்கிய சுருண்ட குழலையுடையாளது அல்குல் போல வளராநின்றது எ-று.
உணர்ந்தார்க்குக் குணந்தான் வெளிப்பட்டவென இயைத் துரைப்பினுமமையும். உணர்ந்தார்க்குணர்வரியோ னென்பதற்குத் தவத்தானும் தியானத்தானும் எல்லாப் பொருள்களையும் உணர்ந்தார்க்கும் என உம்மை வருவித்து உரைக்கப்பட்டது. குணந்தான் வெளிப்பட்ட கொடியிடை என்புழி உவமையோடு பொருட் கொற்றுமை கருதி உவமைவினை உவமிக்கப்படும் பொருண்மேலேற்றப்பட்டது. புணர்ந்தாற் புதிதாயெனவியையும். புணர்ந்தாலுமென இதற்கும் உம்மை வருவித்து உரைக்கப்பட்டது. இன்பத்தன்பு - இன்பத்தான் வந்த செயற்கை அன்பு. மெய்ப்பாடும் பயனும்: அவை. புணர்ச்சிக்கட்டோன்றி ஒருகாலைக்கு ஒருகாற் பெருகாநின்ற பேரின்பவெள்ளத்தைத் தாங்கலாற்றாத தலைமகன் ஆற்றுதல் பயனெனினும் அமையும்.
வளர்கின்றது என்றமையிற் புணர்ந்ததனாற் பயனென்னை யெனின், புணராத முன்னின்ற வேட்கை புணர்ச்சிக்கட்குறைபடும், அக்குறைபாட்டைக் கூட்டத்தின்கட் டம்மிற்பெற்ற குணங்களினா னாகிய அன்பு நிறைக்கும், நிறைக்க எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நிற்குமென்பது. அல்குல்போல வளர்கின்ற தென்றவழி ஒருகாலைக்கு ஒருகால் வளருமென்றார் அல்லர். என்னை, குறைபாடு உள்ளதற்கு அன்றே வளர்ச்சியுண்டாவது; அல்லதூஉம் எஞ்ஞான்றும் வளருமெனின், அல்குற்கு வரம்பு இன்மையும் தோன்றும். மற்றென்னை கருதியதெனின், இயற்கைப்புணர்ச்சி புணர்கின்ற காலத்து இவள் பதினோர் ஆண்டும் பத்துத் திங்களும் புக்காள் ஆகலின் இவளது அல்குல் இலக்கணக் குறைபாடு இன்றியே வளராநின்றது. வளர்ந்து பன்னீராண்டு நிரம்பினால் ஒருபெற்றியே நிற்கும். அதுபோல இவன் காதலும் உள்ளம் உள்ளளவு நிறைந்து பின்னைக் குறைபாடின்றி ஒரு பெற்றியே நிற்குமென்பது.

குறிப்புரை :

1.9. இருவயினொத்தல்
இருவயினொத்தல் என்பது புணராத முன்னின்ற வேட்கை யன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நின்று வளர்ந்து சேற லால் தலைமகளை மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.9 ஆரா வின்பத் தன்பு மீதூர
வாரார் முலையை மகிழ்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 10

அளவியை யார்க்கு மறிவரி
யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங்
கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமை
தோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ வினிக்கிள்ளை
யார்வாயிற் கேட்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல் வான் கொங்கை வளவிய அளவை யார்க்கும் அறிவு அரியவனது தில்லையம்பலம் போலப் பெருங்கொங்கைகள் வளத்தையுடையன; தடங்கண் வாள் பெரிய கண்கள் வாளோ டொக்கும்; நுதல் மா மதியின் பிளவு இயல் நுதல் பெரிய மதியின் பாகத்தி னியல்பையுடைத்து; இடைமின் இடை மின்னோடொக்கும்; தோள் பெரு அமை தோள்கள் பெரிய வேயோடொக்கும்; பெற்றி இது என்றால் இவற்றது தன்மை இதுவானால்; கிள்ளையார் வாயில் கிளவியை இனி கேட்கின்றது என் கிள்ளைபோல்வாள் வாயின் மொழியை இனிக் கேட்க வேண்டுகின்றதுஎன்? இப்பெற்றிக்குத் தக்கதே இருக்கும் என்றவாறு.
துறவு துறவியென நின்றாற்போல அளவு அளவியென நின்றது. மொழி கிளிமொழியோ டொக்குமென்பது போதரக் கிள்ளையாரென் றான். வயினென்பது பாடமாயின், வாயினென்பது குறுகி நின்றதாக உரைக்க. வயின் இடமெனினும் அமையும். அவயங்கண்டென்புழி உறுதன் முதலாகிய நான்கையும் கண்டு என்றார். மெய்ப்பாடு: உவகை, பயன்: நயப்புணர்த்துதல்.

குறிப்புரை :

1.10. கிளவிவேட்டல்
கிளவி வேட்டல் என்பது இருவயினொத்து இன்புறாநின்ற தலைமகன் உறுதன்முதலாகிய நான்கு புணர்ச்சியும் பெற்றுச் செவிப் புணர்ச்சி பெறாமையின் ஒருசொல்வேட்டு வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள் 1.10 அன்னமன்னவ ளவயவங்கண்டு மென்மொழிகேட்க விருப்புற்றது.

பண் :

பாடல் எண் : 11

கூம்பலங் கைத்தலத் தன்பரென்
பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
காள்நும் அகன்பணையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:அளிகாள் நும் அகன் பணை வண்டுகாள் நுமதகன்ற மருதநிலத்து; தேம்பு சிற்றிடை ஈங்கிவள் தேம்புஞ் சிறிய விடையை உடைய இவளது; தீம் கனிவாய் கமழும் ஆம்பல்போது உளவோ இனியதாகிய கனிந்த வாய்போல நாறும் ஆம்பற் பூக்களுளவோ?; சொல்லுமின் என்றவாறு.
கூம்புகைத்தலத்து அன்பர் என்பு ஊடு உருக குனிக்கும் கூம்புங் கைத்தலங்களை உடைய அன்பரது என்பும் உள்ளுருகக் கூத்தாடா நின்ற; பாம்பு அலங்காரப் பரன் தில்லை அம்பலம் பாடலரின் தேம்பு பாம்பாகிய அணியை யுடைய பரமனது தில்லையம்பலத்தைப் பாடாதாரைப் போலத் தேம்புமெனக் கூட்டுக.
அல்லும் அம்மும்: அல்வழிச்சாரியை. பாம்பலங்காரம்: மெலிந்து நின்றது. ஈங்கிவளென்பது ஒருசொல். கனிவாய் கனிபோலும் வாயெனினும் அமையும். புனைநலம் என்றது புனையப் பட்ட இயற்கை நலத்தை. அயர்வு நீங்கியது - சொல்லாடாமையின் உண்டாகிய வருத்த நீங்கியது. மெய்ப்பாடு: உவகை. பயன்: நயப்புணர்த்துத்தல். இயற்கை அன்பினானும் அவள் குணங்களால் தோன்றிய செயற்கை அன்பினானும் கடாவப்பட்டு நின்ற தலைமகன் தனது அன்பு மிகுதியை உணர்த்துதல் நயப்புணர்த்துதல் என்பது.

குறிப்புரை :

1.11. நலம்புனைத்துரைத்தல்
நலம்புனைந்து உரைத்தல் என்பது கிளவிவேட்டு வருந்தக் கண்ட தலைமகள் மூரன் முறுவல் செய்ய, தலைமகன் அதுபெற்றுச் சொல்லாடாமையான் உண்டாகிய வருத்த நீங்கி, நுமதகன்ற மருத நிலத்துக் குறிஞ்சிநிலத்துஇவள் வாய்போல நாறும் ஆம்பற் பூக்களுளவோவென அந்நிலத்து வண்டோடு வினவா நிற்றல். அதற்குச் செய்யுள்- 1.11 பொங்கி ழையைப் புனைந லம்புகழ்ந்
தங்கதிர் வேலோன் அயர்வு நீங்கியது.

பண் :

பாடல் எண் : 12

சிந்தா மணிதெண் கடலமிர்
தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
வாட்டந் திருத்துவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:சிந்தாமணி தெள்கடல் அமிர்தம் தில்லையான் அருளால் வந்தால் ஒருவன் தவஞ்செய்து பெறும் சிந்தாமணியும் தெளிந்த கடலின் அமிர்தமும் வருத்தம் இன்றித் தில்லையான் அருளாற்றாமேவந்தால்; இகழப்படுமே அவை அவனாலிகழப் படுமா?; மட மான் விழி மயிலே மடமான் விழிபோலும் விழியை உடைய மயிலே! ; அம் தாமரை அன்னமே அழகிய தாமரைக்கண் வாழும் அன்னமே; நின்னை யான் அகன்று ஆற்றுவனோ நின்னை யான் பிரிந்து ஆற்றி உளனாவனோ?; சிந்தாகுலம் உற்று என்னை வாட்டந் திருத்துவது என்னோ சிந்தையின் மயக்கமுற்று என்னை வாட்டுவதென்னோ? என்றவாறு.
அந்தாமரை அன்னம் திரு என்பாருமுளர். நின்னை என்புழி உயிரினுஞ் சிறந்த நின்னையென் றும், யான் என்புழி இருதலைப் புள்ளினோருயிரேனாகிய யானென் றும், அச் சொற்களான் விளங்கின. வாட்டந்திருத்துவதே என்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய், வாட்டுவதே என்று பொருள் பட்டு, இரண்டாவதற்கு முடிபாயின. வாட்டத்திருத்துவது என்று பாட மாயின், வாட்டத்தின் கணிருத்துவது என்றுரைக்க. பயிர்ப்பு - பயிலாத பொருட்கண் வந்த அருவருப்பு. ஈண்டுப் பயிலாத பொருள் பிரிவு. பிரிவுணர்த்தல் - அகன்றாற்றுவனோ எனப் பிரிவென்பதும் ஒன்றுண்டு என்பதுபட மொழிதல். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவச்சம் உணர்த்துதல்.

குறிப்புரை :

1.12. பிரிவுணர்த்தல்
பிரிவுணர்த்தல் என்பது ஐவகைப்புணர்ச்சியும் (கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறிதல் என்பன) பெற்றுப் புணர்வதன் முன்னும் புணர்ந்தபின்னும் ஒத்தவன்பினனாய் நின்ற தலைமகன் பிரியுமாறு என்னையெனின், இப்புணர்ச்சி நெடுங்காலம் செல்லக்கடவதாக இருவரையுங் கூட்டிய தெய்வந்தானே பிரியாமற் பிரிவிக்கும். அது பிரிவிக்குமாறு, தலைமகன் தனது ஆதரவினான் நலம் பாராட்டக் கேட்டு, எம்பெருமான் முன்னின்று வாய்திறந்து பெரியதோர் நாணின்மை செய்தேனெனத் தலைமகள் நாணிவருந்தாநிற்ப, அதுகண்டு இவள் வருந்துகின்றது யான்பிரிவேனாக நினைந்தாக வேண்டுமென்று உட்கொண்டு, அவளுக்குத் தான் பிரிவின்மை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.12 பணிவள ரல்குலைப் பயிர்ப்பு றுத்திப்
பிணிமலர்த் தாரோன் பிரிவுணர்த் தியது.

பண் :

பாடல் எண் : 13

கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ
நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ
அறியே னயர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:கோங்கின் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் கோங்கின்கணுண்டாகிய பொலிந்த வரும்பையொக்கு முலையை உடையாளது பங்கையுடையான்; குறுகலர் ஊர் தீங்கில் புக செற்ற கொற்றவன் குறுகாதார் புரங்கள் பாசண்ட தருமமாகிய (வேதாசாரவிரோதம்) தீங்கிலே புகுதலான் அவற்றைக் கெடுத்த வெற்றியை உடையான்; சிற்றம்பலம் அனையாள் அயர்கின்றது நீங்கின்புணர்வு அரிது என்றோ அவனது திருச்சிற்றம்பலத்தை ஒப்பாள் வருந்துகின்றது பிரிந்தாற் கூடுதல் அரிதென்று நினைந்தோ; நெடிது இங்ஙன் இருந்தால் ஆங்கு இற்பழி ஆம் எனவோ நெடும் பொழுது இவ்வாறு இருந்தால் அவ்விடத்துக் குடிப்பழியாம் என்று நினைந்தோ; அறியேன் அறிகிலேன் என்றவாறு.
தீங்கிற்புக என்பதற்குத் துன்பம் அறியாதார் துன்பத்திற்புக எனினும் அமையும். ஆங்கென்றது சுற்றத்தாரிடத்தும் அயலா ரிடத்தும்; ஆங்கு அசை நிலை எனினும் அமையும். பிரியல் உறுகின்றான் ஆகலின், இற்பழி யாம் என்று வேறுபட்டாளாயின் நன்று என்பது கருத்து. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை. பயன்: ஐயந்தீர்தல். அவ்வகை தலைமகளது ஆற்றாமைத்தன்மை தலைமகற்குப் புலனாயிற்று; புலனாகத் தலை மகன் இவ்வகை தன்னெஞ்சோடுசாவி ஆற்றானாயினானென்பது.

குறிப்புரை :

1.13. பருவரலறிதல்
பருவரலறிதல் என்பது பிரிவின்மை கூறக்கேட்ட தலை மகள் பிரிவென்பதும் ஒன்று உண்டு போலும் என உட்கொண்டு முன்னாணினாற் சென்று எய்திய வருத்த நீங்கிப் பெரியதோர் வருத்தமெய்த அதுகண்டு, இவள் மேலும் மேலும் வருந்துகின்றது பிரிந்தாற் கூடுதல் அரிதென்று நினைந்தோ நெடும்பொழுது இவ்வாறிருந்தால் அவ்விடத்துக் குடிப்பழியாமென்று நினைந்தோ அறிகிலேனென அவள் வருத்தம் அறியா நிற்றல். அதற்குச் செய்யுள்
1.13 பிரிவுணர்ந்த பெண்கொடிதன்
பருவரலின் பரிசுநினைந்தது.

பண் :

பாடல் எண் : 14

தேவரிற் பெற்றநஞ் செல்வக்
கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
வாடிப் புலம்புவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:தேவரில் பெற்ற நம் செல்வக்கடி முயற்சியும் உளப்பாடும் இன்றித் தேவராலே பெற்ற நமது அழகிய மணத்தை; வடிவு ஆர் திருவே வடிவார்ந்த திருவே; இனி யாவரின் பெற்று யார் சிதைப்பார் இனிச் சிதைத்தற்கு ஈடாகிய தன்மையை யாவராலே பெற்று யாவர் சிதைப்பார் ; இமையாத முக்கண் மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி இமையாத மூன்று கண்ணையும் மூவராலே பெற்றவரது சிற்றம்பலத்தை அழகுசெய்த; மொய்பொழில் வாய் பூ அரில் பெற்ற குழலி செறிந்த பொழிலிடத் துளவாகிய பூக்களது பிணக்கத்தைப் பெற்ற குழலையுடையாய்; வாடி புலம்புவது என் நீ பொலிவழிந்து துன்பப்படுகின்றது என்னோ?. என்றவாறு.
மூவர் சந்திரர், ஆதித்தர், செந்தீக்கடவுள். பிரிவுணர்த்தினான் ஆகலின் பிரிந் தால் என்னாமென்னும் ஐயம் நீங்கக் கூறினான். இக் கடியையாவராற் பெற்றெனினும் அமையும். மெய்ப்பாடு: பெருமிதம், பயன்: வன் புறை. பெரியதோருவகை மீதூர இவ்வகை வற்புறீஇயி னான் என்பது.

குறிப்புரை :

1.14. அருட்குணமுரைத்தல்
அருட்குணமுரைத்தல் என்பது இற்பழியாமென்று நினைந்தோவென்று கூறக்கேட்ட தலைமகள் இது நந்தோழி அறியின் என்னாங்கொல்லோ என்று பிரிவுட்கொண்டு பிரிவாற் றாது வருந்தா நிற்ப, அக்குறிப்பு அறிந்து அவள் பிரிவு உடம்படு வது காரணமாகத் தலைமகன் யாம் பிரிந்தேமாயினும் பிரிவில் லை எனத் தெய்வத்தின் அருள் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
1.14 கூட்டிய தெய்வத் தின்ன ருட்குணம்
வாட்ட மின்மை வள்ள லுரைத்தது.

பண் :

பாடல் எண் : 15

வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி
யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
மேய்க்குங் கனங்குழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வரும் குன்றம் ஒன்று உரித்தோன் இயங்கு மலையொன்றை உரித்தவன்; தில்லை அம்பலவன் தில்லை அம்ப லத்தை உடையான்; மலயத்து இரு குன்ற வாணர் இளங் கொடியே அவனது பொதியின் மலையிடத்துப் பெரிய குன்றத்தின் கண் வாழ் வாருடைய மகளே; இடர் எய்தல் - வருத்தத்தை விடு; கனங்குழையே கனங்குழாய்; எம் ஊர் பரு குன்றம் மாளிகை நுண் களபத்து ஒளி பாய- எம்மூரிடத்துப் பெரிய குன்றம் போலும் மாளிகைகளின் நுண் ணிதாகிய சாந்தினொளி பரந்து; நும் ஊர் கரு குன்றம் வெள் நிறம் கஞ்சுகம் ஏய்க்கும் - நும்மூர்க்கணுண்டாகிய கரியகுன்றம் வெள்ளை நிறத்தை உடைய சட்டை இட்டதனோடு ஒக்கும் என்றவாறு.
கருங்குன்ற வெண்ணிறமென்பது பாடமாயின், நுண்கள பத்தொளி பரப்ப அவ்வொளி நும்மூர்க் கருங்குன்றத்திற்கு இட்ட வெண்ணிறக் கஞ்சுகத்தோடு ஒக்கும் என்று உரைக்க. ஈண்டுரைத்த வாற்றால், தலைமகன் மிக்கோனாதல் வேண்டும், வேண்டவே ஒப்பு என்னை பொருந்துமாறெனின், ``மிக்கோனாயினும் கடிவரை யின்றே`` (தொல். பொருள். களவியல்.2.) என்பதோத்தாகலிற் பொருந்து மென்க. வற்புறுத்தி - வலியுறுத்தி. இடமணித்தென்றலே வற்புறுத்தலாக உரைப்பினும் அமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடமணித்தென்று வற்புறுத்தல்.

குறிப்புரை :

1.15. இடமணித்துக் கூறி வற்புறுத்தல்
இடமணித்துக் கூறி வற்புறுத்தல் என்பது அருட்குணம் உரைத்து வற்புறுத்தவும் ஆற்றாமை நீங்காத தலைமகட்கு, நும் மூரிடத்திற்கு எம்மூரிடம் இத்தன்மைத்தெனத் தன்னூரி னணிமைகூறி வற்புறுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்
1.15 மடவரலை வற்புறுத்தி
இடமணித்தென் றவனியம்பியது.

பண் :

பாடல் எண் : 16

தெளிவளர் வான்சிலை செங்கனி
வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி
யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன்
கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங
னேவந்து தோன்றுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வளர் வான் சிலை செம் கனி வெள் முத்தம் திங்களின் வாய்ந்து அளி வளர் வல்லி அன்னாய் கால் நிமிர்ந்த பெரிய சிலைகளும் சிவந்த கொவ்வைக்கனியும் வெள்ளிய முத்தங் களும் ஒரு திங்களின்கண்ணே வாய்ப்ப அளிகள் தங்கும் வல்லியை ஒப்பாய்; தெளி யான் சொன்னவற்றைத் தெளிவாயாக; முன்னி ஆடு இனி முற்பட்டு விளையாடுவாயாக; ஒளி வளர் தில்லை அளவா ஒருவன் கயிலை உகுபெரு தேன் துளி வளர் சாரல் கரந்து ஒளிவளராநின்ற தில்லைக்கண் உளனாகிய அளக்கப்படாத ஒருவனது கயிலையிடத்து உகாநின்ற பெருந்தேன்றுளிகள் பெருகுஞ் சாரற் பொதும்பரி லொளித்து; யான் பின் உங்ஙன் வந்து தோன்று வன் யான் பின்னும் உவ்விடத்தே வந்து தோன்றுவேன் என்றவாறு.
தெளி வளர் வான்சிலை என்பதற்கு ஒளிவளரும் சிலை யென்று உரைப்பினும் அமையும். திங்களை வல்லிக் கண்ணதாகக் கொள்க. வாய்ந்து என்பது வாய்ப்ப என்பதன் திரிபாகலின், அளிவள ரென்னும் பிறவினை கொண்டது. சாரலென்பது: ஆகுபெயர். வன்புறையின் - வற்புறுத்தும் சொற்களால். மெய்ப்பாடு: அது. பயன்: இடம் குறித்து வற்புறுத்தல்.

குறிப்புரை :

1.16. ஆடிடத் துய்த்தல்
ஆடிடத் துய்த்தல் என்பது அணிமை கூறி யகலாநின்றவன், இனி நீ முற்பட்டு விளையாடு; யான் இங்ஙனம் போய் அங்ஙனம் வாராநின்றேன் என அவளை ஆடிடத்துச் செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.16 வன்புறையின் வற்புறுத்தி
அன்புறுமொழியை அருகுஅகன்றது.

பண் :

பாடல் எண் : 17

புணர்ப்போன் நிலனும் விசும்பும்
பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன்
னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ
அறியேன் புகுந்ததுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:போது இணர் அணி குழல் ஏழை தன் நீர்மை இந்நீர்மை என்றால் - பூங்கொத்துக்களை அணிந்த குழலையுடைய ஏழைதனது நீர்மை இத்தன்மையாயின்; நிலனும் விசும்பும் பொருப் பும் புணர்ப்போன் - மண்ணையும் விண்ணையும் மண்ணின் கண் உள்ள மலையையும் படைப்போன்; தன் பூ கழல் துணர்ப்போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தன்னுடைய பொலிவினை உடைய திருவடியாகிய துணர்ப்போதுகளை எனக்கு முடியணி யாக்கும் பழையோன்; தில்லை சூழ் பொழில் வாய் புகுந்தது அவனது தில்லைக்கண் உண்டாகிய சூழ்பொழிலிடத்து இவள் புகுந்தது; புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் மாயமோ கனவோ! இரண்டும் அன்றி வேறொன்றோ! இன்னதென்றறியேன் என்றவாறு.
பூங்கழலென்பது பூப்போலும் கழலென உவமைத் தொகையாய்க் கழலென்னும் துணையாய் நின்றது எனினும் அமையும், வீரக்கழலையுடைய துணர்ப்போதென்று உரைப்பினும் அமையும். பொழில்வாயிணர்ப்போதென்பாருமுளர். பிறிதோ வென்பதற்கு நனவோ என்பாருமுளர். புகுந்ததுவே என்பதில், வகாரம்: விகாரவகையான் வந்தது. சுற்றம் ஆயம். இடம் அந்நிலம். சூழல் - அந்நிலத்துள்ளும் புகுதற்கரிய அப்பொழில். மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகளது அருமையுணர்தல்.

குறிப்புரை :

1.17. அருமையறிதல்
அருமை அறிதல் என்பது ஆடிடத் துய்த்து அகலாநின்ற வன் ஆயவெள்ளத்தையும் அவ்விடத்தையும் நோக்கி, இவளை யான் எய்தினேன் என்பது மாயமோ? கனவோ? இன்னதென்று அறியேன்; இனியிவள் நமக்கு எய்தற்கு அரியவளென அவளது அருமை அறிந்து வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள் -
1.17 சுற்றமு மிடனுஞ் சூழலு நோக்கி
மற்றவ ளருமை மன்ன னறிந்தது.

பண் :

பாடல் எண் : 18

உயிரொன் றுளமுமொன் றொன்றே
சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென
லாகும் பணிமொழிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:என்னொடு இவட்கு உயிர் ஒன்று உளமும் ஒன்று சிறப்பு ஒன்று என்ன என்னோடு இவட்கு உயிருமொன்று மனமுமொன்று குரவர்களாற் செய்யப்படுஞ் சிறப்புக்களும் ஒன்றென்று சொல்லி; பணி மொழிக்கு தாழ்ந்த மொழியை உடையாட்கு; செவி உற நீள் படை கண்கள் சென்று பயில்கின்ற செவியுறும் வண்ணம் நீண்ட படைபோலும் கண்கள் இவள்கட் சென்று பயிலாநின்றன; அதனால் இவள் போலுமிவட்குச் சிறந்தாள் என்றவாறு.
விண் வாய் செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் விண்ணிடத்துக் குற்றத்தைப் பொருந்தின மூன்று புரத்தையும் கெடுத்தவன் தில்லை சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் இடை விடாது ஆடுகின்ற கூத்தையுடையான் அருள் எனல் ஆகும் பணிமொழிக்கு அவன் அருளென்று துணியலாம் பணிமொழிக்கு எனக் கூட்டுக.
அருளென்றது அருளான்வரும் ஆனந்தத்தை. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஆற்றாமை நீங்குதல்.
இப்பதினெட்டுப் பாட்டும் இயற்கைப்புணர்ச்சியையும் அது நிமித்தமாகிய கிளவியையும் நுதலின. இதனை இயற்கைப் புணர்ச்சியெனினும், தெய்வப்புணர்ச்சி எனினும், முன்னுறுபுணர்ச்சி எனினும், காமப்புணர்ச்சி எனினும் ஒக்கும்.

குறிப்புரை :

1.18. பாங்கியையறிதல்
பாங்கியை அறிதல் என்பது அருமையறிந்து வருந்தாநின்ற தலைமகன் ஆயத்தோடு செல்லாநின்ற தலைமகளை நோக்க, அந்நிலைமைக்கண் அவளும் இப்புணர்ச்சி இவளுக்குப் புலனாங்கொல்லோவென உட்கொண்டு எல்லாரையும் போல அன்றித் தன் காதல் தோழியைப் பல்காற் கடைக்கண்ணாற் பார்க்கக்கண்டு, இவள்போலும் இவட்குச் சிறந்தாள்; இதுவும் எனக்கோர் சார்பாமென உட்கொண்டு அவள் காதல் தோழியை அறியாநிற்றல். அதற்குச் செய்யுள்:
1.18 கடல்புரை யாயத்துக் காதற் றோழியை
மடவரல் காட்ட மன்ன னறிந்தது.

பண் :

பாடல் எண் : 1

பூங்கனை யார்புனற் றென்புலி
யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண் டாடும்
பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
பாவையை யெய்துதற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்: பூ கனை ஆர் புனல் தென் புலியூர் அம்பலத்து புரிந்து பூக்களையுடைத்தாய் முழங்குதனிறைந்த புனலையுடைத் தாகிய தென்புலியூரம்பலத்தின்கண் விரும்பி; ஆங்கு எனை ஆண்டு கொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே பாங்கனை அவ் வாறென்னை யாண்டுகொண்டு ஆடும் பிரானுடைய அடியாகிய தாமரைகட்கே பாங்காயுள்ளானை; யான் அன்ன பண்பனை என்னையொக்கு மியல்பையுடையானை; கண்டு இப்பரிசு உரைத்தால் கண்டு நிகழ்ந்த விப்பரிசையுரைத்தால்; மடம் பாவையை எய்துதற்கு ஈங்கு எனை தடுப்பார் யார் மடப் பாவையை எய்துதற்கு இவ்வுலகத்தின்கண் என்னைத்தடுப்பார் யாவர்? ஒருவருமில்லை எ -று.
அம்பலத்துளாடும் பிரானெனவியையும். தென்புலியூர் புரிந்தம்பலத்துளாங்கெனை யாண்டு கொண்டென்பதற்குப் பிறவு முரைப்ப. ஆங்கென்றார் ஆண்டவாறு சொல்லுதற் கருமையான். ஏழையினென்புழி. இன்: ஏழனுருபு; அது புறனடையாற் கொள்ளப் பட்டது. பையுள் - நோய்; மயக்கமெனினு மமையும். மெய்ப்பாடு: அசைவுபற்றி வந்த அழுகை. என்னை,
இளிவே யிழவே யசைவே வறுமையென
விளிவில் கொள்கை யழுகை நான்கே
-தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல்.5
என்றாராகலின். பயன்: ஆற்றாமை நீங்குதல். மேற்றோழியால் என்குறை முடிக்கலாமன்று கருதிப் பெயர்ந்த தலைமகன் பாங்கனால் முடிப்பலெனக்கருதினானென்பது. என்னை, தமரான் முடியாக் கரும முளவாயினன்றே பிறரைக் குறையுற வேண்டுவதென்பது.

குறிப்புரை :

2.1 பாங்கனை நினைதல்
பாங்கனை நினைதல் என்பது தெய்வப்புணர்ச்சிய திறுதிக்கட் சென்றெய்துதற் கருமைநினைந்து வருந்தாநின்ற தலைமகன் அவள் கண்ணாலறியப்பட்ட காதற்றோழியை நயந்து, இவள் அவட்குச்சிறந்த துணையன்றே; அத்துணை எனக்குச் சிறந்தாளல்லள்; எனக்குச் சிறந்தானைக்கண்டு இப்பரிசுரைத்தாற் பின்னிவளைச் சென்றெய்தக் குறையில்லையெனத் தன்காதற் பாங்கனை நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்
எய்துதற் கருமை யேழையிற் றோன்றப்
பையு ளுற்றவன் பாங்கனை நினைந்தது.

பண் :

பாடல் எண் : 2

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்: சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என்சிந்தையுள்ளும் உறைவான் காவலாயுள்ள மிக்க நீரையுடைய தில்லைச்சிற்றம்பலமாகிய நல்லவிடத்தும் என்னெஞ்சமாகிய தீயவிடத்தும் ஒப்பத்தங்குமவனது; உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒள் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ உயர்ந்த மதிலையுடைய கூடலின்கணாராய்ந்த ஒள்ளிய வினிய தமிழின்றுறைகளிடத்து நுழைந்தாயோ?; அன்றி ஏழிசை சூழல் புக்கோ அன்றி ஏழிசை யினது சூழலின்கட் புகுதலானோ; இறைவா இறைவனே; தடவரை தோட்கு புகுந்து எய்தியது என் கொலாம் பெரிய வரைபோலு நின்றோள்கட்கு மெலியப்புகுந்தெய்தியதென்னோ? எ-று.
தமிழின் றுறைகளாவன ஈண்டு அகமும் புறமுமாகிய பொருட்கூறு. ஏழிசை யாவன குரல் முதலாயின. சூழலென்றது அவற்றானியன்ற பண்ணும் பாடலு முதலாயினவற்றை. கொல்; கொலாமென வீறுதிரிந்தது; ஆம்: அசைநிலை யெனினுமமையும். கலி புகழான் வருமாரவாரம்; தழை த்த வெனினுமமையும். மெய்ப்பாடு: அணங்குபற்றிவந்த அச்சம். என்னை,
அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் #9;
பிணங்கல் சாலா வச்ச நான்கே #9;
-தொல். பொருள். மெய்ப்பாட்டியல் -8.
என்றாராகலின். பயன்: தலைமகற்கு உற்றதுணர்தல்.

குறிப்புரை :

2.2 பாங்கன் வினாதல்
பாங்கன் வினாதல் என்பது தன்னை நினைந்து வாராநின்ற தலைமகனைத் தான் எதிர்ப்பட்டு அடியிற்கொண்டு முடிகாறு நோக்கி, நின்னுடைய தோள்கள் மெலிந்து நீ யிவ்வாறாதற்குக் காரண மென்னோவென்று பாங்கன் முந்துற்று வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட
இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது.

பண் :

பாடல் எண் : 3

கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட
நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென்
னாற்ற லகற்றியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை ஓந்திக் கொதுங்கிப் புறப்பட்டிரைகவராத மயில்; குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பைப் பிடித்து படம் கிழித்தாங்கு குஞ்சரத்தைக் கோளிழைக்க வல்ல பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற்போல; மான் மடம் நோக்கிஅ பணை முலைக்கு தேம்பல் துடி இடை மானின் மடநோக்குப்போலும் நோக்கையுடையாளுடைய அப்பணை முலையானே தேய்தலையுடைய துடிபோலுமிடை; தில்லை சிவன் தாள் ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியது தில்லைக் கணுளனாகிய சிவனுடைய தாளாகிய பொன் போற் சிறப்புடைய பெரிய தாமரைப்பூவைச் சூடுகின்ற எனது வலியை நீக்கிற்று எ - று.
குஞ்சரம் தான் உவமையன்றி உவமைக்கடையாய் அதனாற் றல் விளக்கி நின்றது. தடமலர் தான் உவமிக்கப்படும் பொருளன்றி உவமிக்கப்படும் பொருட்கடையாய் அதனாற்றல் விளக்கி நின்றது. அப்பணைமுலைக்கே யென்றிழித்தது இவள் முலையை நோக்கி யன்று, முலையென்னுஞ் சாதியைநோக்கி. துடியிடையை யுடைய மான்மடநோக்கி என்னாற்ற லகற்றியது மஞ்ஞை பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற்போலுமெனக் கூட்டியுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: பாங்கற் குணர்த்துதல்.

குறிப்புரை :

2.3 உற்றதுரைத்தல்
உற்றதுரைத்தல் என்பது எதிர்ப்பட்டு வினாவாநின்ற பாங்கனுக்கு, நெருநலைநாட் கயிலைப்பொழிற்கட் சென்றேன்; அவ்விடத்து ஒரு சிற்றிடைச்சிறுமான்விழிக் குறத்தியால் இவ்வாறாயினேனெனத் தனக்குற்றது கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
மற்றவன் வினவ
உற்ற துரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

உளமாம் வகைநம்மை யுய்யவந்
தாண்டுசென் றும்பருய்யக்
களமாம் விடமமிர் தாக்கிய
தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
நின்றொர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
மண்ண லிரங்கியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:உளம் ஆம் வகை உய்ய வந்து நம்மை ஆண்டு உளமாயும் இலமாயும் மாறிவாராது நாமொருபடியே உளமாம் வண்ணம் பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தான்வந்து நம்மையாண்டு; உம்பர் சென்று உய்ய உம்பரெல்லாந் தன்கட்சென்று பிழைக்க; களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை மிடற்றின்கணுளதாகு நஞ்சை யமிர்தமாக்கிய தில்லைக் கணுளனாகிய பழையோனது கயிலையில்; வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற வளவிய மாஞ்சோலைக்கண் வருத்துவதென்றறியாமல் நின்று; வஞ்சி மருங்குல் ஒர் இளமான் விழித்தது என்றோ எம் அண்ணல் இன்று இரங்கியது வஞ்சிபோலு மருங்குலையுடைய தோரிளமான் விழித்ததென்றோ எம்மண்ணல் இன்றிரங்கியது! இது நின்பெருமைக்குத் தகாது எ-று. நம்மையென்றது தம்மைப் போல் வாரை. களமார்விட மென் பதூஉம் பாடம். மெய்ப்பாடு: எள்ளல்பற்றி வந்த நகை. என்னை,
எள்ள லிளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப
-தொல். பொருள். மெய்ப்பட்டியல்-4
என்றாராகலின். பயன்: கழறுதல்.

குறிப்புரை :

2.4 கழறியுரைத்தல்
கழறியுரைத்தல் என்பது உற்றதுரைப்பக்கேட்ட பாங்கன், இஃது இவன்றலைமைப் பாட்டிற்குப் போதாதென உட்கொண்டு, நீ ஒரு சிறுமான் விழிக்கு யான் இவ்வாறாயினேனென்றல் நின் கற்பனைக்குப் போதாதெனக் கழறிக்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
வெற்பனைத்தன் மெய்ப்பாங்கன்
கற்பனையிற் கழறியது.

பண் :

பாடல் எண் : 5

சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
மென்றோட் கரும்பினையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லைச் சிற்றம்பலத்து சேய்மைக்கண் விளங்கித் தோன்றாநின்ற செம்பொனா னியன்ற மாளிகையையுடைய தில்லைச் சிற்றம்பலத்தின்கணுள னாகிய; மாணிக்கம் கூத்தன் வட வான் கயிலை மயிலை மாணிக்கம் போலுங் கூத்தனது வடக்கின்கணுண்டாகிய பெரிய கயிலைக்கண் வாழுமயிலை; மன்னும் பூணின் பொலி கொங்கை ஆவியை பொருந்திய பூண்களாற் பொலிகின்ற கொங்கையையுடைய என்னுயிரை; ஓவியம் பொன் கொழுந்தை காணின் கழறலை ஓவியமாகிய பொற்கொழுந்தைக் கண்டனையாயிற் கழறாய்; மென்தோள் கரும்பினை கண்டிலை மென்றோளையுடைய கரும்பைக் கண்டிலை எ - று.
மாணிக்கக்கூத்தன் என்புழி மாணிக்கத்தைக் கூத்திற் குவமையாக வுரைப்பினுமமையும். பொற்கொழுந்து பொன்னை வண்ணமாகக் கொண்டெழுதிய கொழுந்து. மென்றோட் கரும்பினை யென்பதற்கு மெல்லிய தோளிலெழுதிய கரும்பையுடையாளை யெனினுமமையும்.
மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்து வருத்தம் பற்றிவந்த விளிவரல். என்னை,
மூப்பே பிணியே வருத்த மென்மையோ
டியாப்புற வந்த விளிவர னான்கே
-தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல்-6
என்றாராகலின். பயன்: பாங்கனை யுடம்படுவித்தல். பாங்கன் கழறவும் இவ்வகை மறுத்துரைத்தானென்பது.

குறிப்புரை :

2.5 கழற்றெதிர்மறுத்தல்
கழற்றெதிர்மறுத்தல் என்பது காதற்பாங்கன் கழறவும் கேளானாய்ப் பின்னும் வேட்கைவயத்தனாய்நின்று, என்னாற் காணப்பட்ட வடிவை நீ கண்டிலை; கண்டனையாயிற் கழறா யென்று அவனொடு மறுத்துரைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
வளந்தரு வெற்ப னுளந்தளர்ந் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

விலங்கலைக் கால்விண்டு மேன்மே
லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
லுள்ளந் துயர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட மலைகளைக் காற்றுப்பிளந்து மேலுமேலுமிட; விண்ணும் மண்ணும் முந்நீர் கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் வானுலகும் மண்ணுலகும் முந்நீராற் கலங்குதலையடைந்த விடத்துங் கலங்குந் தன்மையை யல்லை; கமழ் கொன்றை துன்றும் அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல் துலங்கலை சென்று கமழாநின்ற கொன்றைப்பூ நெருங்கிய மாலையை முடிமாலையாகச் சுற்றிய சிற்றம்பலத்தானது அருளையுடையரல்லதாரைப் போலத் துளங்குதலையடைந்து; வள்ளல் உள்ளம் துயர்கின்றது இது என் னோ - வள்ளலே, நினதுள்ளந் துயர்கின்றது இஃதென்னோ! எ - று.
விண்டென்பது பிளந்தென்பது போலச் செய்வதன் றொழிற்குஞ் செய்விப்பதன்றொழிற்கும் பொது. இவனது கலக்கத்திற்குக் காரணமாய் அதற்கு முன்னிகழ்தனோக்கிச் சென்ற வன்றுமென இறந்தகாலத்தாற் கூறினான். வள்ளலென்பது: ஈண்டு முன்னிலைக் கண்வந்தது. இதென்னோவென்பது வினாவுதல் கருதாது அவனது கவற்சியை விளக்கிநின்றது. கலக்கஞ் செய்பாங்கன் கலங்கிய பாங்கன்; தலைமகனைக்கலக்கிய பாங்கனெனினுமமையும். மெய்ப் பாடு: இளிவரல். பயன்: கழறுதல். மேற்பொது வகையாற் கழறினான், ஈண்டு விசேடவகையாற் கழறினானென்பது.

குறிப்புரை :

2.6 கவன்றுரைத்தல்
கவன்றுரைத்தல் என்பது மறுத்துரைத்து வருந்தாநிற்பக் கண்ட பாங்கன் ஒருகாலத்துங் கலங்காதவுள்ளம் இவ்வாறு கலங்குதற்குக் காரணமென்னோவெனத் தலைவனுடன் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
கொலைக்களிற் றண்ணல் குறைநயந் துரைப்பக்
கலக்கஞ்செய் பாங்கன் கவன்று ரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

தலைப்படு சால்பினுக் குந்தள
ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந்
தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
வுற்று மயங்கினனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:தலைப்படு சால்பினுக்கும் தளரேன் முன் தலைமையாய அமைதியானு முள்ளந் தளரேன்; சித்தம் பித்தன் என்று மலைத்து அறிவார் இல்லை பிறழவுணர்ந்தாயென்று மாறுபட்டறி வாருமில்லை; யாரையும் எத்துணையும் தேற்றுவன் பிறழவுணர்ந் தார் யாவரையும் மிகவுந் தெளிவியாநிற்பேன்; கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினன் இப்பொழுது ஒரு கலையாகிய சிறிய பிறையைச் சூடிய சிற்றம்பலவனது கயிலைமலைக்கணுண்டாகிய சிறுமானினது விழியால் அழிந்து மயங்கினேன் எ - று.
சால்பழிந்துள்ளந்தளரேனென்பான் சால்பினுக்குந் தளரே னென்றான். தலைப்படு சால்பென்பதற்கு எல்லாப் பொருளுஞ் சிவனைத்தலைப்பட்டுச் சென்றொடுங்கும் ஊழியிறுதி யென்றுரைப் பினுமமையும். நிறையும் பொறையுஞ் சால்பும் தலைப்படும் சால்பென்றதனாற்பெற்றாம். பித்தனென்று மலைத்தறி வாரில்லை யென்றதனால் தேற்றம் பெற்றாம். யாரையுந் தேற்றுவனென்றதனால் நீதிபெற்றாம், கலங்கினாரைத் தெளிவித்தல் நீதியாகலான். ஈண்டுத்தன்னை யுயர்த்தலென்னுங் குற்றந்தங்காது, சால்பு முதலாயின வற்றை இப்பொழுதுடையே னென்னாமையின். சால்பு ``அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ டைந்துசால் பூன்றிய தூண்`` (குறள் - 983) என்பத னானறிக. நோக்கிற்கு நோக்கினால். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்தல். இதுவும் மேலதேபோல மறுத்துரைத்தானென்பது.

குறிப்புரை :

2.7 வலியழிவுரைத்தல்
வலியழிவுரைத்தல் என்பது பாங்கன் கவன்றுரையா நிற்ப, முன்பு இத்தன்மையேனாகிய யான் இன்று ஒருசிறுமான் விழிக்கு இவ்வாறாயினேனெனத் தலைமகன் தன் வலியழிந்தமை கூறி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
நிறைபொறை தேற்றம் நீதியொடு சால்பு
மறியுறு நோக்கிற்கு வாடினே னென்றது.

பண் :

பாடல் எண் : 8

நல்வினை யும்நயந் தந்தின்று
வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும்
பாமென்று பாங்கன்சொல்ல வில்வினை மேருவில் வைத்தவன்
தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென
தாருயிர் துப்புறவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:கொல் வினை வல்லன நடுங்கு மின் மேல் கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல கொல்லுந் தொழிலை வல்லன நடுங்கு மின் மேலுண்டாகிய கோங்கரும்புகளாமென்று யான் பற்றுக்கோடாக நினைந்திருந்த பாங்கன்றானே இகழ்ந்து சொல்லு தலால்; வெள்கி தொல் வினையால் துயரும் எனது ஆர் உயிர் துப்புற நாணிப் பழையதாகிய தீவினையாற்றுயருறாநின்ற எனது அரிய வுயிர் வலியுறும்வண்ணம்; நல்வினையும் வந்து நயம் தந்தின்று யான் உம்மைச்செய்த நல்வினையும் வந்து பயன்றந்ததில்லை எ - று. வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி வில்லின்றொழிலினை மேருவின்கண் வைத்தவனது தில்லை தொழாதாரைப்போல வெள்கி யெனக்கூட்டுக.
உம்மை: எச்சவும்மை, கல்வியேயுமன்றி யென்றவாறு. நல்வினை தீவினையைக் கெடுக்குமாயினும் யான்செய்த நல்வினை அது செய்ததில்லையென்பது கருத்து. நாணினார் மேனி வெள்கு தலான் வெள்கியென்றான். துப்புறவென்னுமெச்சம் தந்தின்றென்பதில் தருதலென்பதனோடு முடிந்தது. துப்புறத் துயருமென்றியைத்து மிகவுந் துயருமென முற்றாகவுரைப்பினுமமையும். நல்வினையுந் நயந்தந்ததென்பது பாடமாயின், குறிப்பு நிலையாகக் கொள்க. மெய்ப்பாடும்பயனும்: அவை.

குறிப்புரை :

2.8 விதியொடுவெறுத்தல்
விதியொடுவெறுத்தல் என்பது வலியழிந்தமைகூறி வருந்தா நின்ற தலைமகன் பாங்கனொடுபுலந்து வெள்கி, யான் செய்த நல்வினையும் வந்து பயன்றந்ததில்லையெனத் தன் விதியொடு வெறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.

பண் :

பாடல் எண் : 9

ஆலத்தி னாலமிர் தாக்கிய
கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள் பொருட் டாக
வமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும்
மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா
தொழிவதென் தீவினையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம்போற் கோலத்தினாள் பொருட்டு ஆக நஞ்சால் அமிர்தத்தையுண்டாக்கிய இறைவனது தில்லையம்பலம்போலும் அழகையுடையாளொருத்தி காரணமாக; அமிர்தம் குணம் கெடினும் காலத்தினான் மழை மாறினும் அமிர்தம் தன்குணங்கெடினும் பெய்யுங் காலத்து மழை பெய்யாது மாறினும்; மாறாக் கவி கை நின் பொன் சீலத்தை மாறாதவண்மையை உடைய நினது பொன் போலப் பெறுதற்கரிய ஒழுக்கத்தை; நீயும் அறிவதறிந்த நீயும்; நினையாது ஒழிவது என் தீவினை அறியா தொழிகின்றது எனது தீவினைப் பயன் எ - று.
நஞ்சின்றன்மையொழித்து அமிர்தஞ்செய்யுங் காரியத்தைச் செய்தலின், அமிர்தாக்கியவென்றார். ஆலத்தினாலென்னு மூன்றா வது பாலாற்றயிராக்கிய வென்பது போல நின்றது. நஞ்சினாலோர் போனகத்தையுண்டாக்கிய வெனினுமமையும். அம்பலம் போலு மென்னு முவமை பட்டாங்கு சொல்லுதற்கண் வந்தது; புகழ்தற்கண் வந்ததென்பார் அம்பலம்போற் கோலத்தினாள் பொருட்டே யாயினுமாகவென முற்றாகவுரைப்ப. மாறாக்கவிகையென வண்மை மிகுத்துக்கூறினான், தானு மொன்றிரக்கின்றானாகலின். மாறாக் கவிகைநீயுமெனக் கூட்டினுமமையும். மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைமகனைத் தெருட்டல்.

குறிப்புரை :

2.9 பாங்கனொந்துரைத்தல் பாங்கனொந்துரைத்தல் என்பது விதியொடுவெறுத்து வருந்தாநிற்பக் கண்டபாங்கன், அமிர்தமும் மழையும் தங்குணங் கெடினும் நின்குணங்கெடாதநீ ஒருத்தி காரணமாக நின்சீலத்தை நினையாதவாறு இவ்வாறாகியது எனது தீவினையின் பயனாம் இத்தனையன்றோவெனத் தானும் அவனோடுகூட வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்
இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி
நின்னது தன்மை நினைந்திலை யென்றது.

பண் :

பாடல் எண் : 10

நின்னுடை நீர்மையும் நீயு
மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
னேசெய்த ஈர்ங்கொடிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:நின்னுடை நீர்மையும் இவ்வாறு நின் னுடைய வியல்பாகிய குணமும் இவ்வாறாயிற்று; நீயும் இவ்வாறு ஒருகாலத்துங் கலங்காத நீயும் இத்தன்மையையாயினாய் நினைத் தெருட்டும் என்னுடைய நீர்மையிது என் என்பதே; இனி நின்னைத் தெளிவிக்கும் என்னுடையவியல்பு யாதென்று சொல்வதோ! அது கிட க்க; சிலம்பா சிலம்பா; நின்னை இன்னே செய்த ஈர்ங் கொடிக்கு நின்னை யித்தன்மையையாகச் செய்த இனியகொடிக்கு; தில்லை ஏர் கொள் முக்கண் மன்னுடை மால்வரையோ மலரோ விசும்போ இடம் என் இயல் யாது தில்லைக்கணுளனாகிய அழகு பொருந்திய மூன்று கண்ணையுடைய மன்னனது பெரிய கயிலை மலையோ தாமரைப் பூவோ வானோ இடம் யாது? இயல் யாது? கூறுவாயாக எ-று.
என்னென்பதேயென்னும் ஏகாரம்: வினா; அசைநிலை யெனினுமமையும். பிறர்கண்போலாது மூன்றாயிருந்தனவாயினும் அவைதாம் ஓரழகுடையவென்னுங் கருத்தால், ஏர்கொண் முக்கணென்றார். கழுமல் மயக்கம். மெய்ப்பாடு: அச்சம். பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.

குறிப்புரை :

2.10 இயலிடங்கேட்டல் இயலிடங்கேட்டல் என்பது தலைமகனுடன்கூட வருந்தா நின்ற பாங்கன் யானும் இவனுடன்கூட வருந்தினால் இவனை ஆற்றுவிப்பாரில்லையென அது பற்றுக்கோடாகத் தானாற்றி நின்று, அது கிடக்க, நின்னாற்காணப்பட்ட வடிவுக்கு இயல் யாது? இடம் யாது? கூறுவாயாகவென அவளுடைய இயலும் இடமுங் கேளாநிற்றல். அதற்குச் செய்யுள் கழும லெய்திய காதற் றோழன்
செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.

பண் :

பாடல் எண் : 11

விழியாற் பிணையாம் விளங்கிய
லான்மயி லாம்மிழற்று
மொழியாற் கிளியாம் முதுவா
னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி
லாமெங் குலதெய்வமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:முது வானவர் தம் முடித் தொகைகள் கழியாக் கழல் தலைவராகிய இந்திரன் முதலாகிய தேவர்களுடைய முடித் திரள்கள் நீங்காத கழலையுடைய; தில்லைக் கூத்தன் கயிலை தில்லைக் கூத்தனது கயிலைமலையிடத்து; முத்தம் மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வம் முத்துக்களைப் பெருந்தேன் கொழித்து விளங்கும் பொழிற்கு அழகாம் எம்முடைய நல்லதெய்வம்; விழியான்பிணை ஆம் விழிகளாற் பிணையாம்; விளங்கு இயலான் மயில் ஆம் விளங்கா நின்ற இயலான் மயிலாம் மிழற்று மொழியான் கிளியாம் கொஞ்சு மொழியாற் கிளியாம் எ - று.
இயல் இன்னவென்றும் இடம் கயிலைப் பொழிலென்றுங் கூறப்பட்டனவாம். முத்தம் யானைக்கோட்டினும், வேயினும் பிறந்த முத்து. அழுங்கல் இரக்கம். செழுமை வளமை. மெய்ப்பாடு: உவகை. பயன் : பாங்கற் குணர்த்தல்.

குறிப்புரை :

2.11 இயலிடங்கூறல் இயலிடங்கூறல் என்பது இயலிடங்கேட்ட பாங்கனுக்குத் தான் அவளை யெய்தினாற் போலப் பெரியதோராற்று தலையுடையனாய் நின்று, என்னாற் காணப்பட்ட வடிவுக்கு இயல் இவை; இடம் இது; என்று இயலும் இடமுங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
அழுங்க லெய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.

பண் :

பாடல் எண் : 12

குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்
தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
காக்குங் கருங்கட்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டி யான்போய்
வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
நண்ணும் பளிக்கறையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:சிலம்ப சிலம்பனே; குயிலை குயிலை; சிலம்பு அடிக் கொம்பினை சிலம்படியையுடையதோர் கொம்பை; தில்லை எம் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பில் பைம் பூம்புனம் காக்கும் கரும் கண் செவ்வாய் மயிலை தில்லைக்கணுளனாகிய எம்முடைய கூத்தப்பிரானது கயிலையாகிய சிலம்பின்கட் பைம்பூம் புனத்தைக் காக்குங் கரிய கண்ணையுஞ் சிவந்த வாயையுமுடையதோர் மயிலை; வண் பூங் கொடிகள் பயிலச் சிலம்பு எதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கு அறை யான் போய் வனவிய பூவை உடைய கொடிகள் போலும் ஆயத்தார் நெருங்க அவரோடு சிலம்பிற் கெதிர் கூவித்தான் விளையாட்டைப் பொருந்தும் பளிக்கறைக்கண் யான் சென்று; கண்டு வருவன் கண்டு வருவேன்; நீ யாற்றுவாயாக எ-று.
கூத்தப்பிரான் என்பது கூத்தனாயினும் பிரானாயுள்ளான் என்றவாறு. பெயர்ந்துரைத்தல் - கழறமறுத்துரைத்தல்; ஆற்றாத் தன்மையனாய்ப் பெயர்ந்து இயலும் இடனுங் கூறியவெனினு மமையும். வயவென்னுமுரிச்சொல் விகார வகையால் வயமென நின்றது. சிறுபான்மை மெல்லெழுத்துப் பெற்றதெனினுமமையும். கெழு: சாரியை. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: வற்புறுத்தல்.

குறிப்புரை :

2.12 வற்புறுத்தல் வற்புறுத்தல் என்பது இயலிடங்கூறக் கேட்ட பாங்கன் நீ சொன்ன கயிலையிடத்தே சென்று இப்பெற்றியாளைக்கண்டு இப்பொழுதே வருவன்; அவ்வளவும் நீ யாற்றுவாயாதல் வேண்டுமெனத் தலைமகனை வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
பெயர்ந்து ரைத்த பெருவரை நாடனை
வயங்கெழு புகழோன் வற்புறுத் தியது.

பண் :

பாடல் எண் : 13

கொடுங்கால் குலவரை யேழேழ்
பொழிலெழில் குன்றுமன்று
நடுங்கா தவனை நடுங்க
நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
நீழலந் தண்புனத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:கொடுங் கால் குலவரை ஏழு ஏழ்பொழில் எழில் குன்றும் அன்றும் நடுங்காதவனைகொடியகாற்றாற் குலமலை களேழும் பொழிலேழும் அழகுகெடும் ஊழியிறுதியாகிய அன்றும் நடுங்காதவனை; நடுங்க நுடங்கும் நடு உடைய விடம் கால் அயிற்கண்ணி நடுங்குவிக்கும் இடையையுடைய நஞ்சைக் காலும் வேல் போலுங் கண்ணையுடையாள்; தில்லை ஈசன் வெற்பில் தடம் கார் தரு பெருவான் பொழில் நீழல் தண் புனத்து மேவும் கொலாம் தில்லைக்கணுளனாகிய ஈசனது வெற்பிடத்துப் பெரிய முகில்போலும் மிகவும் பெரிய பொழிலி னீழலையுடைய குளிர்ந்த புனத்தின்கண் மேவுமோ மேவாளோ? எ - று.
கொடுங்காலெனச் சந்தநோக்கித் திரியாது நின்றது. கொடுங் காலுமென வெண்ணினுமமையும். நடுங்க நுடங்குமென்னுஞ் சொற்கள் ஒருசொன்னீரவாய் நடுக்குமென்னும் பொருள் பட்டு இரண் டாவதற்கு முடிபாயின. ஐகாரம்: அசைநிலையெனினுமமையும். தருவென்பது ஓருவமைவாய்பாடு. தடங்கார் தருபெருவான் பொழிலென்பதற்குக் கார்தங்கும் பொழி லெனினுமையும். நிறை ஐம்பொறிகளையுமடக்குதல். மெய்ப்பாடு: பெருமிதஞ் சார்ந்த மருட்கை. பயன்: உசாவியுணர்தல்.

குறிப்புரை :

2.13 குறிவழிச்சேறல்
குறிவழிச்சேறல் என்பது தலைமகனை வற்புறுத்தி அவன் குறிவழிச் செல்லாநின்ற பாங்கன் இத்தன்மையாளை யான் அவ்விடத்துக்காணலாங் கொல்லோவென அந்நினைவோடு செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்
அறைகழ லண்ணல் அருளின வழியே
நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.

பண் :

பாடல் எண் : 14

வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி
சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண்
ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேயிவ
ளேஅப் பணிமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வடிக்கண் இவை அவன்கூறிய வடுவகிர் போலுங்கண்களும் இவையே; வஞ்சி அஞ்சும் இடை இது வஞ்சிக் கொம்பஞ்சு மிடையும் இதுவே; வெற்பன் சொற்பரிசே வெற்பன் சொற்பரிசே; வாய் பவளம் துடிக்கின்ற வா வாய் பவளந் துடித்தாற் போலத் துடிக்கின்றவாறென்! அதனால் யான் தொடர்ந்து விடா அடிச் சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல் படிச்சந்தமும் இதுவே ஓருணவுர்விமில்லாதயானும் பற்றிவிட மாட்டாத அடியாகிய சந்த மாமலரையுடைய தலைவனது விண்ணோர் வந்து வணங்கும் அம்பலம்போலும் ஒப்பும் இதுவே; அப்பணி மொழி இவளே அப்பணிமொழியும் இவளே! எ-று.
வெற்பன் சொற்பரிசே யென்றது இதனையவன் தப்பாமற் கூறியவாறென்னை என்றவாறு. வடியென்பது வடுவகிருக்கோர் பெயர். அதரத்திற்குத் துடித்தல் இயல்பாகக் கூறுப. பவளந் துடிக்கின்றவா என்பதற்குப் பவளம்போலப் பாடம் செய்கின்றவாறு என்னென்றுரைப்பாருமுளர். படிச்சந்தமென்பது வடமொழித்திரிபு. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தெளிதல்.

குறிப்புரை :

2.14 குறிவழிக்காண்டல்
குறிவழிக்காண்டல் என்பது குறிவழிச்சென்ற பாங்கன் தன்னை அவள் காணாமல் தானவளைக் காண்பதோரணிமைக் கணின்று, அவன் சொன்ன இடமும் இதுவே; இயலும் இவையே; இவளும் அவளே யென்று ஐயமறத் தெளியக்காணாநிற்றல். அதற்குச் செய்யுள்
குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
தளிர்புரை மெல்லடித் தையலைக் கண்டது.

பண் :

பாடல் எண் : 15

குவளைக் களத்தம் பலவன்
குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்
றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
யானிக் கடலிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:குவளைக் களத்து அம்பலவன் குரை கழல் போற் கமலத்தவளை குவளைப்பூப்போலுந் திருமிடற்றையுடைய அம்பலவனுடைய ஒலிக்குங் கழலையுடைய திருவடிபோலுந் தாமரைப் பூவிலிருக்குந் திருமகளை; பயங்கரம் ஆக நின்று ஆண்ட அவயவத்தின் இவளைக் கண்டு இங்குநின்று அங்கு வந்து தாமவட்குப் பயத்தைச் செய்வனவாக நின்று அடிமை கொண்ட உறுப்புக்களையுடைய இவளைக்கண்டு பிரிந்து இங்குநின்றும் அவ்விடத்து வந்து; அத்துணையும் பகர்ந்த கவளக் களிற்று அண்ணலே இக்கடலிடத்துத் திண்ணியான் யான் கழறவும் ஆற்றி அவ்வளவெல்லாங்கூறிய கவளக்களிற்றையுடைய அண்ணலே இவ்வுலகத்துத் திண்ணியான் எ - று.
இவளைக் கண்டென்றது இவளுடைய நலத்தைக் கொண்டடிய வாறன்று, முன்னங்கே தலைவனுடைய பொலிவழிவு கண்டு இங்கே வந்தவன் இங்கு மிவளுடைய பொலிவழிவுகண்டு கிலேசித்து இவளித்தன்மையளாக இங்கே இவளைப்பிரிந்து அங்கே வந்து அத்துணையும் பகர்ந்தவனே திண்ணியானென்று இருவருடைய அனுராகமுங் கூறியவாறு. கவளக்களிறு தான் விரும்புங் கவளம் பெற்று வளர்ந்த களிறு. நயந்த தலைமகனயந்த. மெய்ப்பாடு: மருட்கையைச்சார்ந்த அச்சம். பயன்: தலைமகனை வியத்தல்.

குறிப்புரை :

2.15 தலைவனை வியந்துரைத்தல்
தலைவனை வியந்துரைத்தல் என்பது குறிவழிக்கண்ட பாங்கன் இவ்வுறுப்புக்களையுடைய இவளைக்கண்டு பிரிந்து இங்கு நின்று அங்குவந்து யான்கழறவும் ஆற்றி அத்தனையுந் தப்பாமற் சொன்ன அண்ணலே திண்ணியானெனத் தலைமகனை வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் நயந்த வுருவும் நலனுங் கண்டு
வியந்த வனையே மிகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 16

பணந்தா ழரவரைச் சிற்றம்
பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி
யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண்
டேனொன்று நின்றதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வாய் நிணம் தாழ் சுடர் இலை வேல வாய்க் கணிணந்தங்கிய சுடரிலைவேலை யுடையாய்; பணம் தாழ் அரவு அரைச் சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை பணந்தாழ்ந்த அரவை யணிந்த அரையையுடைய சிற்றம்பலவரது பசும்பொன்னையுடைய கயிலைக்கண்; புணர்ந்து ஆங்கு அகன்ற பொருகரி உன்னி கூடி அவ்விடத்து நின்று மகன்ற பொருகரியை நினைந்து; புனத்து அயலே மணம் தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடி ஒன்று நின்றது கண்டேன் புனத்திற்கயலே மணந்தங்கிய பொழிற்கண் வடுவகிர் போலுங் கண்களைப்பரப்பி மடப்பிடியொன்று நின்றதனைக் கண்டேன் எ - று.
பணந்தாழ்தல் முடிந்துவிடுதலாற்றொங்கல் போலத் தாழ்தல்; தங்குதலெனினுமமையும். ஆங்ககன்றவென்புழி நின்றென ஐந்தாம் வேற்றுமைப் பொருளுணர நிற்பதோரிடைச் சொல் வருவித்துரைக்கப் பட்டது. புனத்தயலே யென்றான், புனத்து விளையாடும் ஆயத்தை நீங்கி நிற்றலின். வடிக்கண்பரப்பி யென்றான், இன்ன திசையால் வருமென்றறியாது சுற்றெங்கு நோக்குதலின். கயிலைக்கணென்பதூஉம், புனத்தயலென்பதூஉம், பொழிற்கணென்பதூஉம், நின்றதென்னுந் தொழிற்பெயரோடு முடியும். நின்றதுவேயென்புழி வகாரஞ்சந்த நோக்கி வந்தது; விரிக்கும்வழி விரித்தற்பாற்படும். மெய்ப்பாடு: உவகை பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.

குறிப்புரை :

2.16 கண்டமைகூறல்
கண்டமை கூறல் என்பது தலைமகனை வியந்துரைத்த பாங்கன் விரைந்து சென்று, தான் அவளைக் கண்டமை தலை மகனுக்குப் பிடிமிசைவைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
அடுதிற லண்ணற் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 17

கயலுள வேகம லத்தலர்
மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த
நிரையரன் அம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற்
பாநின தீர்ங்கொடிமேற்
புயலுள வேமலர் சூழ்ந்திருள்
தூங்கிப் புரள்வனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வெற்பா வெற்பா; நினது ஈர்ங் கொடி மேல் கமலத்து அலர் மீது கயல் உளவே நினது ஈர்ங்கொடிக்கண் தாமரைப் பூவின்மேற் கிடப்பன சிலகயல்களுளவே; கனி பவளத்து அயல் ஒத்த நிரை முத்தம் உளவே கனிந்த பவளத்திற்கயல் இனமொத்த நிரையாகிய முத்துக்களுளவே; இணைச்செப்பு அரன் அம்பலத்தின் இயல் உளவே இணையாகிய செப்பு அரனது அம்பலத்தி னியல்பை யுடையனவுளவே; மலர் சூழ்ந்து இருள் தூங்கிப் புரள்வன புயல் உளவே மாலைசூழ்ந்து இருள் செறிந்து கிடந்து புரள்வன புயலுள வே? உளவாயின் யான்கண்ட வுருவம் நீ கூறியவுருவமாம் எ - று. அரனம்பலத்தினியல்: ஆறாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. சூழ்ந்தென்பதூஉம், தூங்கியென்பதூஉம் சினைவினைப்பாற்பட்டு முதல்வினைகொண்டன. மலர்சினை போலக் குழற்கின்றியமையாமையிற் சினைப்பாற்பட்டது. புயல் திரண்டாற்போலுமென்பது போதரப் புரள்வனவெனப் பன்மையாற் கூறினான். மெய்ப்பாடும் பயனும் : அவை.

குறிப்புரை :

2.17 செவ்வி செப்பல்
செவ்வி செப்பல் என்பது பிடிமிசை வைத்துக் கூறக்கேட்ட தலைமகன் அது தனக்குச் செவ்விபோதாமையிற் பின்னும் ஆற்றாமை நீங்கானாயினான். அது கண்டு அவனை ஆற்று விப்பது காரணமாக அவனுக்கு அவளவயவங்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்
கவ்வுருக் கண்டவன் செவ்வி செப்பியது.

பண் :

பாடல் எண் : 18

எயிற்குல மூன்றிருந் தீயெய்த
வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
வாய்க்குளிர் முத்தநிரைத்
தயிற்குல வேல்கம லத்திற்
கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது
வென்னுடை மன்னுயிரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:எயில் குலம் மூன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து எயிற்சாதி மூன்றும் பெரிய தீயை யெய்த அவற்றை யெய்தவனது தில்லையை யொத்து; குயில் குலம் கொண்டு குயிலாகிய சாதியைக்கொண்டு; தொண்டைக் கனிவாய்க் குளிர் முத்தம் நிரைத்து தொண்டைக் கனியிடத்துக் குளிர்ந்த முத்தங்களை நிரைத்து; அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி கூர்மையையுடைய நல்ல வேலைக் கமலத்தின்கட்கிடத்தி; அனம் நடக்கும் மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிர் அன்னம்போல நடப்பதோர் மயிற்சாதி காணப்பட்டதுண்டாயின். அது எனது நிலை பெறுமுயிர் எ - று. எயிற்குலமூன்றென்றார், அவை இரும்பும், வெள்ளியும், பொன்னுமாகிய சாதி வேறுபாடுடைமையின். குயிற் குலங்கொண்டென்றான், மொழியாற் குயிற்றன்மையையுடைத்தாகலின். தொண்டைக் கனிவாயென்பதற்குத் தொண்டைக்கனி போலும் வாயென்பாருமுளர். மெய்ப்பாடு: உவகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
இவை நிற்க இடந்தலை தனக்குமாமாறு சொல்லுமாறு.

குறிப்புரை :

2.18 அவ்விடத்தேகல்
அவ்விடத் தேகல் என்பது செவ்விசெப்பக் கேட்ட தலை மகன் இவ்வாறு காணப்பட்டதுண்டாயின் அது வென்னுயிரெனத் தானவ்விடநோக்கிச் செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள் அரிவையதுநிலைமை யறிந்தவனுரைப்ப
எரிகதிர்வேலோ னேகியது.

பண் :

பாடல் எண் : 19

ஆவியன் னாய்கவ லேல்அக
லேமென் றளித்தொளித்த
ஆவியன் னார்மிக்க வாவின
ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ்
சேர்வர்கொ லம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
லாயத் தருவரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:அளித்து ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று ஒளித்த ஆவி அன்னார் தலையளிசெய்து ஆவியை யொப்பாய் கவலாதொழி நின்னை நீங்கேமென்று சொல்லி மறைந்த என்னாவியை யொப்பார்; மிக்க அவாவினர் ஆய்க் கெழுமற்கு அழிவுற்று மிக்க விருப்பத்தையுடையராய்க் கெழுமுதல் காரணமாக நெஞ்சழிதலான், இடமறியாது; அம்பலத்து எம் ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அருவரை அம்பலத்தின்கணுளனாகிய எம் மாவியையொப்பான் அடுத்து வாழுங் கயிலாயத்தின்கட் பிறரா னெய்துதற்கரிய தாழ்வரையிடத்து; ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர் கொல் ஆவியை யொக்கும் ஆயத்தார் நிலை பெற்று விளையாடும் அவ்விடத்து அவர்காண வந்து பொருந்துவரோ! எ-று.
அளித்தல்:பிரிகின்ற காலத்துச்செய்த தலையளியெனினு மமையும். மிக்கவென்பது: கடைக்குறைந்து நின்றது. ஆயத்திடை வருவர்கொல்லென ஐயத்துள் ஒருதலையே, கூறினாள், பெருநாணி னளாகலின். மெய்ப்பாடு: அச்சத்தைச்சார்ந்த மருட்கை. பயன்: உசாவி ஆற்றாமை நீங்குதல். ஆயவெள்ளத்துள்ளே வருவர்கொல் லோவென்னும் பெருநாணினானும், ஆற்றாமையான்இறந்து பட்டனர்கொல்லோவென்னும் பேரச்சத்தினானும் மீதூரப்பட்டுத் தன்றன்மையளன்றி நின்று இவ்வகை உசாவினா ளென்பது. #9;

குறிப்புரை :

2.19 மின்னிடை மெலிதல்
மின்னிடை மெலிதல் என்பது நெருநலைநாளில் தலையளி செய்து நின்னிற்பிரியேன், பிரியினும் ஆற்றேனென்று கூறிப்பிரிந் தவர் வேட்கைமிகுதியால் இடமறியாது ஆயத்திடைவருவார் கொல்லோவென்னும் பெருநாணினானும், ஆற்றாமையான் இறந்துபட்டார் கொல்லோ வென்னும் பேரச்சத்தினானும், யாருமில்லொருசிறைத் தனியேநின்று, தலைமகனை நினைந்து தலைமகள் மெலியாநிற்றல். அதற்குச் செய்யுள்
மன்னனை நினைந்து
மின்னிடை மெலிந்தது.

பண் :

பாடல் எண் : 20

காம்பிணை யாற்களி மாமயி
லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
லால்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
தோன்றுமென் சிந்தனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:காம்பு இணையால் வேயிணையானும்; களிமா மயிலால் களிப்பையுடைய கரிய மயிலானும் கதிர் மா மணி யால் ஒளியையுடைய பெரிய நீலமணியானும்; வாம் பிணையால் வாவும் பிணையானும்; வல்லி ஒல்குதலால் வல்லி நுடங்குதலானும்; கயிலைப் பயில் புனமும் என் சிந்தனைக்குத் தேம்பிணை வார் குழலாள் எனத் தோன்றும் கயிலைக்கணுண்டாகிய அவள் பயிலும் புனமும் இன்புறுத்துதலால் என்மனத்திற்குத் தேம்பிணையை யுடைய நெடிய குழலையுடையாளென்றே தோன்றா நின்றது எ-று.
மன்னும் அம்பலவன் பாம்பு இணையாக் குழை கொண்டோன் கயிலை நிலைபெறு மம்பலத்தையுடையவன் பாம்பை ஒன்று மொவ் வாத குழையாகக்கொண்டவன் அவனது கயிலை யெனக்கூட்டுக.
பாம்பையிணைத்துக் குழையாகக்கொண்டவ னெனினுமமை யும். தேம்பிணை தேனையுடையதொடை. தேம்பிணை வார்குழலா ளெனத் தோன்றுமென்பதற்கு அவளைப் போலப் புனமும் யானின் புறத் தோன்றாநின்ற தென்பாருமுளர். மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். நெருநலைநாளில் தலைமகளைக் கூடின பொழிலிடம் புகுந்து இவ்வகை சொன்னானென்பது.

குறிப்புரை :

2.20 பொழில்கண்டு மகிழ்தல்
பொழில்கண்டு மகிழ்தல் என்பது தலைமகளை நோக்கிச் செல்லாநின்ற தலைமகன் முன்னைஞான்று அவளைக்கண்ணுற்ற பொழிலைச் சென்றணைந்து, அப்பொழிலிடை அவளுறுப்புக்க ளைக் கண்டு, இப்பொழில் என்சிந்தனைக்கு அவள்தானேயெ னத் தோன்றாநின்றதென்று இன்புறாநிற்றல். அதற்கு செய்யுள் மணங்கமழ்பொழிலின் வடிவுகண்
டணங்கெனநினைந் தயர்வுநீங்கியது.

பண் :

பாடல் எண் : 21

நேயத்த தாய்நென்ன லென்னைப்
புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங்
காயர னம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய
தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி யிதோவந்து
நின்றதென் மன்னுயிரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:நென்னல்நேயத்தது ஆய் என்னைப் புணர்ந்து நெருநல் உள்ளநெகிழ்ச்சியையுடைத்தாய் என்னைக்கூடி; நெஞ்சம் நெகப் போய் பின் நேயமில்லதுபோல என்னெஞ் சுடையும் வண்ண நீங்கிப்போய்; ஆயத்தது ஆய் ஆயத்தின் கண்ணதாய்; அமிழ்து ஆய் இன்பத்தைச் செய்தலின் அமிர்தமாய்; அணங்கு ஆய் துன்பத்தைச் செய்தலின் அணங்காய்; அரன் அம்பலம் போல் தேயத்தது ஆய் புலப்பாட்டான் அரனதம்பலம் போலும் ஒளியை யுடைத்தாய்; என்றன் சிந்தையது ஆய் புலப்படாது வந்து என் சிந்தைக்கண்ணதாய்; தெரியின் பெரிதும் மாயத்தது ஆகி வந்து நின்றது இதோ என் மன் உயிர் ஆராயிற் பெரிதும் மாயத்தை யுடைத்தாய் வந்து நின்றது இதுவோ எனது மன்னுயிர் எ - று.
நேயமுடைமையும் நேயமின்மையும் இன்பஞ்செய்தலும் துன்பஞ் செய்தலும் புலப்படுதலும் புலப்படாமையும் ஒரு பொருட் கியையாமையின், பெரிதுமாயத்ததாகியென்றான். தேயம்: வட மொழிச்சிதைவு. அம்பலம்போலுந் தேசத்தின் கண்ணதா யென்றுரைப் பினுமமையும். ஓகாரம்: அசைநிலையெனினுமமையும். என்மாட் டருளுடைத்தாய் முற்காலத்து என்னைவந்துகூடி அருளில்லதுபோல என்னெஞ்சுடையும் வண்ணம்போய்த் தன் மெய்யடியார் குழாத்த தாய் நினைதோறும் அமிர்தம்போல இன்பஞ்செய்து கட்புலனாகாமை யிற் றுன்பஞ்செய்து அம்பலம் போலும் நல்ல தேசங்களின் கண்ணதாய் வந்து என்மனத்தகத்ததாய் இத்தன்மைத்தாகலிற் பெரிதும் மாயத்தை யுடைத்தாய் எனது நிலைபெறுமுயிர் வந்து தோன்றாநின்றதென வேறு மொருபொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. பொழிலின் வியன்பொதும்பர் பொழிலில் மரஞ்செறிந்தவிடம். மெய்ப்பாடும் பயனும்: அவை.

குறிப்புரை :

2.21 உயிரென வியத்தல்
உயிரென வியத்தல் என்பது பொழில்கண்டு மகிழ்ந்து அப்பொழிலிடைச்சென்று புக்கு, அவளைக்கண்டதுணையான் என்னுயிர் இவ்வாறு செய்தோநிற்பதென வியந்துகூறாநிற்றல். அதற்குச் செய்யுள் வெறியுறு பொழிலின் வியன்பொ தும்பரின்
நெறியுறு குழலி நிலைமை கண்டது.

பண் :

பாடல் எண் : 22

தாதிவர் போதுகொய் யார்தைய
லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந் தடியார்
சுனைப்புன லாடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல்
லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத்
தான்மலை யெய்துதற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:தாது இவர் போது கொய்யார் தாதுபரந்த பூக்களைக் கொய்கின்றிலர்; தையலார் அங்கை கூப்ப நின்று சோதி வரிப்பந்து அடியார் ஆயத்தாராகிய தையலார் அங்கைகளைக் கூப்பநின்று ஒளியையும் வரியையுமுடைய பந்தை அடிக்கின்றிலர்; சுனைப் புனல் ஆடல் செய்யார் சுனைப்புனலாடுதலைச் செய்கின்றிலர்; போது இவர் கற்பக நாடு புல்லென்னத்தம் பொன் அடிப்பாய் அம்பலத்தான்மலை எய்துதற்கு இவர் மாதவம் யாது அதனாற் போதுபரந்த கற்பகங்களையுடைய தேவருலகம் பொலி வழிய நிலந்தோயாத தமது பொன்போலுமடியை நிலத்தின்கட்பாவி அம்பலத்தானது கயிலையை யெய்துதற்கு இவர் செய்யக் கருதுகின்ற பெரியதவம் யாது! எ - று.
தவஞ்செய்வார் புறத்தொழில்களை விட்டு அகத்தா னொன்றையுன்னி மலைக்கட்டங்குவரன்றே, இவளும் பூக்கொய்தல் முதலாகிய தொழில்களைவிட்டு மனத்தாற்றன் னை நினைந்து வரையிடத்து நிற்றலான் யாதிவர் மாதவமென்றான். மெய்ப்பாடும் பயனும்: அவை.

குறிப்புரை :

2.22 தளர்வகன்றுரைத்தல்
தளர்வகன்றுரைத்தல் என்பது உயிரென வியந்துசென்று, பூக்கொய்தன் முதலிய விளையாட்டையொழிந்து யாருமில் லொரு சிறைத் தனியேநின்று இவர்செய்யாநின்ற பெரியதவம் யாதோவென அவளைப் பெரும்பான்மைகூறித் தளர்வு நீங்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
பனிமதி நுதலியைப் பைம்பொ ழிலிடைத்
தனிநிலை கண்டு தளர்வகன் றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

காவிநின் றேர்தரு கண்டர்வண்
தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன்
றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின்
வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங்
கேயின் றழிகின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:மா இயன்றன்ன மெல் நோக்கி மானோக்கத் தான் இயன்றாற்போலும் மெல்லிய நோக்கையுடையாய்; காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமலத் தேவி என்றே ஐயம் சென்றது அன்றே நஞ்சாகிய நீலப்பூ நின்று அழகைக் கொடுக்கும் மிடற்றையுடையவரது வளவிய தில்லைக்கணுண்டாகிய கண்ணி ற்கு ஆருந் தாமரைப்பூவின் வாழுந் தேவியோவென்று ஐயநிகழ்ந்தது; அறியச் சிறிது நின் வாய் திறவா விடின் தெளிந்தறியச் சிறிதாயினும் நின்வாய் திறவாதொழியின்; அமிழ்தே அமிழ்தமே; அணங்கே அணங்கே; இன்று அழிகின்றது என் ஆவி அன்றே இப்பொழுதழி கின்றது என்னுயிரன்றே, இதனை நீ கருதாதொழிகின்ற தென்னை! எ-று.
தேவியென்பது பெரும்பான்மையாகலின், தேவியென்றே யையஞ்சென்றதென ஐயத்துள் ஒருதலையே பற்றிக் கூறினான். அறியவென்னும் வினையெச்சமும் சிறிதென்னும் வினையெச்சமும் திறவாவிடி னென்னுமெதிர்மறையிற் றிறத்தலோடு முடிந்தன. அமி ழ்தே யணங்கேயென்றான், இன்பமுந் துன்பமும் ஒருங்கு நிகழ்தலின். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல்.

குறிப்புரை :

2.23 மொழிபெறவருந்தல்
மொழிபெற வருந்தல் என்பது தளர்வுநீங்கிய பின்னர்ச் சார்தலுறாநின்றவன் ஒருசொற் பெறுமுறையாற் சென்றுசார வேண்டிப் பின்னும் அவளைப்பெரும்பான்மைகூறி ஒரு சொல் வேண்டி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
கூடற் கரிதென
வாடி உரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

அகலிடந் தாவிய வானோ
னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்றொ
ழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
நையா வகையொ துங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
வாய்தரு பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் உலகத்தைத் தாவி யளந்த வானவன் வணங்கப்படுவதென்றறிந்து வணங்கும் அம்பலத்தின்கணுளனாகிய இகலையுடைய விடங்களிலே தாவும் விடையையுடைய ஈசனைத் தொழாதாரைப்போல; இன்னற்கு இடம் ஆய் உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை துன்பத்திற்கிடமாய் அழியுமளவைத் தானடைந்து எனதுயிர் நையாதவண்ணம்; பொழில் வாய் எழில் வாய்தரு பூங் கொடியே பொழிலிடத்துளவாகிய அழகுவாய்ந்த பூவை யுடையகொடியே; ஒதுங்கப் புகலிடம் தா யானொதுங்குதற்குப் புகலிடந் தருவாயாக எ-று.
உகலிடம் உகுதற்கிடம்; உகுதலையுடைய விடமெனினு மமையும். ஆயிடை தலைமகன் அவ்வாறு கூறியவிடத்து. தனி நின்று ஆற்றுவிப்பாரையின்றி நின்று. ஆற்றாது நாணினானாற்றாது. வேய் வேய்த்தன்மை. மெய்ப்பாடு: அச்சம். பயன்: ஆற்றாமை நீங்குதல்.

குறிப்புரை :

2.24 நாணிக்கண்புதைத்தல்
நாணிக்கண்புதைத்தல் என்பது தலைமகன் தன்முன்னின்று பெரும்பான்மை கூறக்கேட்ட தலைமகள் பெருநாணினளாதலின் அவன் முன்னிற்கலாகாது நாணி, ஒருகொடியினொதுங்கி, தன் கண்புதைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஆயிடைத் தனிநின் றாற்றா தழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.

பண் :

பாடல் எண் : 25

தாழச்செய் தார்முடி தன்னடிக்
கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை
தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
புதைநின்னை வாணுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:தாழச்செய்தார் முடி தன் அடிக்கீழ் வைத்து தன் கட்டாழ்ந்தவர்களுடைய முடிகளைத் தன் திருவடிக்கீழ் வைத்து; அவரை விண்ணோர் சூழச் செய்தான் அம்பலம் கைதொழாரின் அவர்களை விண்ணோர் பரிவாரமாய்ச் சூழும் வண்ணஞ் செய்த வனது அம்பலத்தைக் கைதொழாதாரைப் போல; உள்ளம் துளங்க போழச்செய்யாமல் வை வேல் கண்புதைத்து நெஞ்சந் துளங்கப் போழாமற் கூரிய வேல்போலுங் கண்களைப் புதைத்து; பொன்னே பொன்னே; நீ என்னை வாழச் செய்தாய் நீ என்னை வாழும் வண்ணஞ் செய்தாய்; வாள் நுதலே வாணுதலையுடையாய்; நின்னைச் சுற்று முற்றும் புதை என்னுள்ளந் துளங்காமை வேண்டின் நின்னைச் சுற்று முழுதும் புதைப்பாயாக எ - று.
தாழச்செய்தாரென்ப தனை ஒருசொல்லாக்காது தாழும் வண்ணம் முற்றவஞ் செய்தாரென் றானும், தம்மைச்செய்தாரென் றானும் ஒருசொல் வருவித்தும், போழச்செய்யாமலென்புழியும் போழும் வண்ணமொரு தொழிலைச் செய்யாமலென ஒரு சொல் வருவித்தும், விரித்துரைப்பினுமமையும். வாழச்செய்தாயென்பது: குறிப்புநிலை. புதைத்த வென்பதூஉம் பாடம். வேற்றருங்கண் வேல்போலுங்கண். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை யுணர்த்தல்.

குறிப்புரை :

2.25 கண்புதைக்கவருந்தல்
கண்புதைக்க வருந்தல் என்பது தலைமகள் நாணிக்கண் புதையாநிற்ப, இவள் கண் புதையாநின்றது தன்னுடைய கண்கள் என்னை வருத்தத்தைச் செய்யுமென் றாகாதேயென உட் கொண்டு, யான் வருந்தாதொழிய வேண்டுவையாயின் நின் மேனி முழுதும் புதைப்பாயாகவெனத் தலைமகன் தன்வருத்த மிகுதி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

வேற்றருங் கண்ணிணை மிளிர்வன வன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக் கென்றது.

பண் :

பாடல் எண் : 26

குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற்
பழகி யுடன்வளர்ந்த
அருநா ணளிய வழல்சேர்
மெழுகொத் தழிகின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:என் கண்மணி போன்று - இன்றியமையாமை யால் என் கண்மணியை யொத்து; உயிரின் பழகி உயிர் போலச் சிறப்புடைத்தாய்ப் பழகி; ஒருநாள் பிரியாது ஒருபொழுதும் பிரியாது; உடன் வளர்ந்த என்னுடனே வளர்ந்த; அரு அளிய நாண் பெறுதற்கரிய அளித்தாகிய நாண்; அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றது அழலைச்சேர்ந்த மெழுகையொத்து என்கணில்லாது அழியாநின்றது, அதனான் குரு நாள் மலர்ப் பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர் போல் வருநாள் பிறவற்க நிறத்தையுடையவாகிய நாண்மலர்களையுடைய பொழில்களாற் சூழப்பட்ட தில்லைக் கணுளனாகிய கூத்தனையேத்தாதார் துன்புறும் பிறவியிற் பிறப் பாரன்றே அவர்களைப் போல மேல் வரக்கடவநாளில் யான் இவ்வாறு பிறவாதொழிக எ-று.
வருநாள் பிறவற்க வென்பதற்கு ஏத்தாதாரைப்போல வருந்த இவ்வாறு பயின்றாரைப் பிரியவரு நாள்கள் உளவாகா தொழிகவெனி னுமமையும். வாழியென்பது இத்தன்மைத்தாகிய இடுக்கணின்றி இந் நாண் வாழ்வதாக வென்றவாறு. அரோவும் மற்றும்: அசைநிலை. ஆங்ஙனங் கண்டு - அவ்வாற்றானாகக் கண்டு. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

குறிப்புரை :

2.26 நாண்விடவருந்தல்
நாண்விட வருந்தல் என்பது தலைமகன் தனது ஆற்றாமை மிகுதிகூறக்கேட்டு, ஒருஞான்றுந் தன்னைவிட்டு நீங்காதநாண் அழலைச் சேர்ந்த மெழுகுபோலத் தன்னைவிட்டு நீங்காநிற்ப, தலைமகள் அதற்குப் பிரிவாற்றாது வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஆங்ங னம்கண் டாற்றா ளாகி
நீங்கின நாணொடு நேரிழை நின்றது.

பண் :

பாடல் எண் : 27

கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
லேஞ்சிவன் தில்லையன்னாள்
நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
ணாதுநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
காள்கொண்டை சார்வதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:கோலத் தனிக் கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர் தம் சீலத்தன கொங்கை அழகையுடைய தனியாகிய கொம்பின்மேலேறி அதனையே அடிக்கட் குறைப்பார் தமது தன்மையையுடையவாயிருந்தன கொங்கைகள்; தேற்றகிலேம் இவை இத்தன்மையவாயிருத்தலான் இது வாழுமென்றியாந் தெளிகின்றிலம், அதனால் வண்டுகாள் வண்டுகாள்; சிவன் தில்லை அன்னாள் நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது சிவனது தில்லையை யொப்பாளுடைய நுலை யொத்த நேரிய விடையினது நொய்ம்மையைக் கருதாது; நுண் தேன் நசையால் கொண்டை சார்வது சாலத்தகாது நுண்ணிய தேன்மேலுண்டாகிய நசையால் நீயிர்கொண்டையைச்சார்தல் மிகவுந் தகாது எ-று.
தேற்றகிலேமென்பது ``தேற்றாப் புன்சொ னோற்றிசின்`` (புறம் - 202) என்பதுபோலத் தெளிதற்கண் வந்தது. முலைகளைத் தெளிவிக்க மாட்டேமென்பாருமுளர். பின்வருமேதத்தை நோக்கின் நீயிர் பயனாக நினைக்கின்ற இஃது இறப்பச்சிறிதென்னுங் கருத்தால், நுண்டேனென்றான். கண்டீரென்பது: முன்னிலையசைச்சொல். அளிகுலம்: வடமொழிமுடிபு. விலக்கியணைந்தது விலக்கா நின்ற ணைந்தது. மெய்ப்பாடு: உவகை. பயன்: சார்தல். அவ்வகை நின்றமை குறிப்பினானுணர்ந்த தலைமகன் இவ்வகை சொல்லிச் சார்ந்தா னென்பது.

குறிப்புரை :

2.27 மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது தலைமகள் நாணிழந்து வருந்தா நிற்பச் சென்று சார்தலாகாமையின், தலைமகன் தன்னாதரவினால் அவ்வருத்தந்தணிப்பான் போன்று முலையொடுமுனிந்து, ஒரு கையால் இறுமருங்குறாங்கியும், ஒருகையால் அளிகுலம் விலக்கி அளகந்தொட்டும், சென்று அணையாநிற்றல். அதற்குச் செய்யுள் ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கிக்
கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது.

பண் :

பாடல் எண் : 28

நீங்கரும் பொற்கழற் சிற்றம்
பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு
மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு
மாட்கொண்ட கொங்கைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:நீங்கரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும் வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் விடுதற் கரிய பொன்னானியன்ற கழலையுடைத்தாகிய திருவடியையுடைய சிற்றம்பலவரது நெடிதாகிய தேவருலகையும் வளைந்த பெரிய தெண்கடலாற் சூழப்பட்ட நிலத்தையும் ஒருங்கு பெற வரினும்; தீம் கரும்பும் அமிழ்தும் செழு தேனும் பொதிந்து இனிய கரும்பின் சாற்றையும் அமிர்தத்தையும் கொழுவிய தேனையும் உள்ளடக்கி; செப்பும் கோங்கு அரும்பும் தொலைத்து செம்பையுங் கோங் கரும்பையும் வென்று; என்னையும் ஆட்கொண்ட கொங்கைகள் என்னையும் அடிமைகொண்ட கொங்கைகளை; யான் மறவேன் யான் மறவேன் எ - று.
விசும்பும் நிலனும் ஒருங்குபெற வரினும் இக்கொங்கைகளை மறந்து அதன்கண் முயலுமாறில்லையெனத் தன்னின்றியமையாமை கூறியவாறாயிற்று; என்னையுமென்ற வும்மை எச்சவும்மை. தொழிற்படுத்தலொற்றுமையால் தன்வினை யாயிற்று. மெய்ப்பாடு: அது. பயன்: நயப் புணர்த்துதல்.

குறிப்புரை :

2.28 இன்றியமையாமைகூறல்
இன்றியமையாமை கூறல் என்பது புணர்ச்சி யிறுதிக்கண் விசும்பும் நிலனும் ஒருங்குபெற வரினும் இக்கொங்கைகளை மறந்து அதன்கண் முயலேனெனப் பிரிவுதோன்றத் தலைமகன் தனது இன்றியமையாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
வென்றி வேலவன் மெல்லி யல்தனக்
கின்றி யமையாமை யெடுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 29

சூளா மணியும்பர்க் காயவன்
சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென் னாருயிர்
ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே
பலசொல்லி யென்னை துன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
லாயம் நணுகுகவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:உம்பர்க்குச் சூளாமணி ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு என் ஆர் உயிர் ஆளாயொழிந்தது வானவர்க்கு முடிமணியாயவனது சூழ்ந்த பொழிலையுடைய தில்லையையொக்கும் நினக்கு எனதாருயிர் அடியைாயிற்று; பல சொல்லி என்னை ஆதலாற் பலசொல்லிப் பெறுவதென்! ஆர் அமிழ்தே நிறைந்த வமிர்தே; அணங்கே அணங்கே; தோளா மணியே துளைக்கப்படாத மாணிக்கமே; பிணையே மான் பிணையே துன்னும் ஆர் நாள் மலர்ப் பொழில்வாய் எழில் ஆயம் நணுகுக; நீ பலகாலுஞ் சேர்ந்து விளையாடும் நிறைந்த நாண்மலரை யுடைய பொழிற்கண் விளையாடும் அழகிய ஆயத்தை இனிச் சேர்வாயாக எ - று.
அடுக்கிய விளிகளாற் காதற்சிறப்பு விளங்கும். பலசொல்லி யென்னையென்றது உயிர் நினக்கு ஆளாகியபின் வேறுபல சொல்லுதல் பயனில கூறலன்றே யென்றவாறு. சொல்லியென்னும் வினையெச்சத்திற்குப் பெறுவதென ஒருசொல் வருவித்துரைக்கப் பட்டது. பொழில்வாய் நணுகுகவென இயைப்பினு மமையும். மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: பிரியலுறுந் தலைமகன் வற்புறுத்தல்.

குறிப்புரை :

2.29 ஆயத்துய்த்தல்
ஆயத் துய்த்தல் என்பது இன்றியமையாமை கூறிப் பிரியலுறாநின்றவன், இனிப் பலசொல்லி யென்னை? என்னுயிர் நினக்கடிமையாயிற்று; இனிச்சென்று நின்னாயத்திடைச் சேர்வாயாக வெனத் தன் பிரிவின்மை கூறித் தலைமகளை ஆயத்துச் செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
தேங்கமழ் சிலம்பன்
பாங்கிற் கூட்டியது.

பண் :

பாடல் எண் : 30

பொய்யுடை யார்க்கரன் போலக
லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
காக்கும்பைம் பூம்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:மை உடை வாள்கண் மணி உடைப் பூண்முலை வாள் நுதல் மையையுடைய வாள்போலுங் கண்ணையும் மணியையுடைய பூணணிந்த முலையையுமுடைய வாணுதல் ; வான் பைஉடை வாள் அரவத்து அல்குல் பெரிய படத்தை யுடைத்தாகிய ஒளியையுடைய அரவுபோலும் அல்குலையுடையாள்; காக்கும் பூம் பைம்புனம் அவள் காக்கும் பூக்களையுடைய பசிய புனம் அகன்றால்; தன்னை யானகன்றால் பொய் உடையார்க்கு அரன் போல் அகலும் பொய்யையுடையவர்க்கு அரன்றுன்பத்தைச் செய்து சேயனாமாறுபோல மிக்க துயரத்தைச்செய்து எனக்குச்சேய்த்தாம்; புணரின் அணைந்தால்; மெய் உடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும் மெய்யையுடையவர்க்கு அவனது அம்பலம் பேரின்பத்தைச் செய்து அணித்தாமாறுபோலக் கழியுவகைசெய்து எனக்கு மிகவும் அணித்தாம். ஆதலான் நீங்குதல் பெரிதும் அரிது எ-று.
வாணுதலையு மென்றெண்ணினும் அமையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

குறிப்புரை :

2.30 நின்றுவருந்தல் நின்றுவருந்தல் என்பது தலைமகளை ஆயத்துய்த்துத் தான் அவ்விடத்தே நின்று அப்புனத்தியல்பு கூறித் தலைமகன் பிரிவாற்றாது வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள் பாங்கிற் கூட்டிப் பதிவயிற் பெயர்வோன்
நீங்கற் கருமை நின்று நினைந்தது.

பண் :

பாடல் எண் : 1

என்னறி வால்வந்த தன்றிது
முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொழிலிடைச்சேறல் ஒன்றும் இடந்தலைப்பாட்டிற்கே உரியது. இதனையும் மேலைப் பாங்கற் கூட்டம் உணர்த்திய சூத்திரத்தில் ``ஈங்கிவைநிற்க இடந்தலைதனக்கும்`` எனக் கூறியவாறே மின்னிடைமெலிதல் முதல் நின்றுவருந்துதல் ஈறாகக் கூறப்பட்ட கிளவிகளோடு கூட்டி இடந்தலைப் பாடாமென்று வகுத்துரைத்துக் கொள்க. அவை பாங்கற்கூட்டத்திற்கும், இடந் தலைப்பாட்டிற்கும் உரியவாமாறு என்னையெனின், பாங்கற்கூட்டம் நிகழாதாயின் இடந்தலைப்பாடு நிகழும், இடந்தலைப்பாடு நிகழாதாயின் பாங்கற்கூட்டம் நிகழும் ஆகலின்.
ஐயரிக் கண்ணியை யாடிடத் தேசென்
றெய்துவன் னெனநினைந் தேந்தல் சென்றது.
இதன் பொருள்:
இது முன்னும் என்னறிவால் வந்தது அன்று இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடு கூடிய முயற்சியான் வந்ததன்று; தெய்வந்தர வந்தது முயன்றால் மன் நெறி தந்தது தெய்வம் இன்னும் இருந்தன்று; இன்னுஞ் சிறிது முயன்றான் மன்னிய நெறியாகிய இவ்வொழுக்கத்தைத் தந்ததாகிய தெய்வம் இன்னும் இருந்தது; அது முடிக்கும், அதனான்; நெஞ்சே நெஞ்சமே; வருந்தல் வருந்தாதொழி; மின் எறி செஞ்சடைக் கூத்தப் பிரான் வியன் தில்லை முந்நீர் மின்னை வெல்கின்ற சிவந்த சடையை உடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடற்றிரை; பொன் எறி வார் துறைவாய் மின்தோய் பொழிலிடத்துச் சென்றும் பொன்னைக் கொணர்ந்து எறிகின்ற நெடிய துறையிடத்து மின்னையுடைய முகிலைத்தோயும் பொழிற்கட் செல்லுதும் எ-று.
இன்னும் இருந்தன்று எனக்கூட்டி முயன்றால் என்னும் வினையெச்சத்திற்கு முடிக்குமென ஒருசொல் வருவித்து உரைக்கப்பட்டது. மின்போலும் நெறித்த சடையெனினும் அமையும். கரையிற் பொன்னைத் திரையெறியும் துறையெனினும் அமையும். இருந்தின்று என்பது பாடமாயின், இருந்தின்றோவென ஓகாரம் வருவித்து இருந்ததில்லையோ என உரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடந்தலைப்படுதல். (இடத்திலே எதிர்ப்படுதல்; தலைவன் முன்னாட் கூடின இடத்திலே வந்து தலைவியை எதிர்ப்படுதல்)
இதற்கு மின்னிடைமெலிதன் முதலாக நின்று வருந்தல் ஈறாக வருங்கிளவி எல்லாம் எடுத்துரைத்துக்கொள்க. என்னை, இவ்விரண்டனுள்ளும் ஒன்றே நிகழுமாகலின்.

குறிப்புரை :

3.1 பொழிலிடைச் சேறல் பொழிலிடைச்சேறல் என்பது இயற்கைப்புணர்ச்சிய திறுதிக்கட் சென்றெய்துதற்கு அருமை நினைந்து வருந்தாநின்ற தலைமகன் இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடுகூடிய முயற்சியான் வந்ததன்று; தெய்வந்தர வந்தது. இன்னும் அத் தெய்வந் தானே தரும். யாம் அப்பொழிலிடைச் செல்வேமெனத் தன் நெஞ்சொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

பண் :

பாடல் எண் : 1

எளிதன் றினிக்கனி வாய்வல்லி
புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
பிரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு
வாழி யறிவிப்பனே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கனி வாய் வல்லி புல்லல் இனி எளிது அன்றுதொண்டைக்கனிபோலும் வாயையுடைய வல்லியைப் புல்லுதல் இனி எளிதன்று, அதனால் எழில் மதிக் கீற்று ஒளி சென்ற செம்சடைக் கூத்தப்பிரானை உன்னாரின் எழிலையுடைய மதியாகிய கீற்றி னொளிபரந்த சிவந்தசடையையுடைய கூத்தப்பிரானை நினை யாதாரைப்போல வருந்த; என்கண் தெளி சென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் என்னிடத்துத் தெளிதலையடைந்த வேல் போலுங் கண்கள் வருவித்த இன்னாமை முழுதையும்; அளி சென்ற பூ குழல் தோழிக்குத் தெளிவித்து அறிவிப்பன் வண்டடைந்த பூங்குழலை யுடைய தோழிக்குக் குறிப்பினாலே தெளிவியாநின்று சொல்லுவேன் எ - று.
இரண்டாவது விகாரவகையாற்றொக்கது; வல்லியது புல்லலெனினுமமையும். வருந்தவென வொருசொல் வருவித்து உரைக்கப்பட்டது. கண்ணோடாது பிறர்க்குத் துன்பஞ் செய்தலின், உன்னாதாரைக் கண்ணிற்கு உவமையாகவுரைப்பினு மமையும். செல்லலெல்லாந் தெளிவித்தென்பதற்குச் செல்லலெல்லா வற்றையு நீக்கிவென்பாருமுளர். வாழி: அசைநிலை. கரந்துறைகிளவி உள்ளக் குறிப்புக் கரந்துறைமொழி.மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: தோழிக்குணர்த்தி அவளான் முடிப்பலெனக் கருதி ஆற்றாமை நீங்குதல்.

குறிப்புரை :

4.1 பாங்கியிடைச்சேறல்
பாங்கியிடைச்சேறல் என்பது இரண்டனுள் ஒன்றாற் சென் றெய்திப் புணர்ந்து நீங்கிய தலைமகன் இனியிவளைச் சென்றெய்துதல் எளிதன்று; யாம் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதற்றோழிக்கு நங்குறையுள்ளது சொல்வேமென்று அவளை நோக்கிச் செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள் மதியுடம்படுத்தல் - இதன் பொருள்:பாங்கியிடைச் சேறல், குறையுறத் துணிதல், வேழம்வினாதல், கலைமான்வினாதல், வழிவினாதல், பதிவினாதல், பெயர்வினாதல், மொழிபெறாதுகூறல், கருத்தறிவித் தல், இடைவினாதல் என விவை பத்தும் மதியுடம்படுத்தலாம் எ - று. அவற்றுள்
கரந்துறை கிளவியிற் காதற் றோழியை
இரந்துகுறை யுறுவலென் றேந்தல் சென்றது.

பண் :

பாடல் எண் : 2

குவளைக் கருங்கட் கொடியே
ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச் சொல்லுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்: குவளை கருங் கண் கொடி ஏர் இடை இக் கொடி கடைக்கண் குவளைப்பூப்போலுங் கரியகண்ணினையுங் கொடியை யொத்த இடையினையுமுடைய இக்கொடியினது கடைக்கண்; உவளைத் தனது உயிர் என்றது உவளைத் தன்னுடைய வுயிரென்று சொல்லிற்று, அதனால்; தன்னோடு உவமை இல்லாதவளைத் தன் பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் துவளத் தலைவந்த இன்னல் தனக்கொப்பில்லாதவளைத் தன்னொருகூற்றின்கண் வைத்த சிற்றம்பலத்தானது அருளையுடையரல்லாதாரைப் போல் யான் வருந்தும்வண்ணம் என்னிடத்து வந்த இன்னாமையை; இனி இன்னே சொல்லுவன் இவட்கு இனி இப்பொழுதே சொல்லுவேன் எ - று.
கடைக்கணுவளை யுயிரென்றது எனக்கிவ்விடர் செய்த கடைக்கண் இடர் நீந்தும் வாயிலுந் தானே கூறிற்றென்றவாறு. இன்னேயென்பது இவர்கூடிய இப்பொழுதே என்றவாறு. இனியென்றது இவளிவட் கின்றியமையாமை யறிந்தபின் னென்பது படநின்றது. ஒருங்குகண்டு ஒருகாலத்துக் கண்டு. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: மதியுடம்படுத்தற் கொருப்படுதல்.

குறிப்புரை :

4.2 குறையுறத்துணிதல் குறையுறத் துணிதல் என்பது பாங்கியை நினைந்து செல்லா நின்றவன் தெய்வத்தினருளால் அவ்விருவரும் ஓரிடத்தெதிர் நிற்பக்கண்டு, இவள் இவட்குச் சிறந்தாள்; இனியென்குறை யுள்ளது சொல்லுவேனெனத் தன்குறைகூறத் துணியாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஓரிடத் தவரை யொருங்கு கண்டுதன்
பேரிடர் பெருந்தகை பேசத் துணிந்தது.

பண் :

பாடல் எண் : 3

இருங்களி யாயின் றியானிறு
மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாஅன லாடவல்
லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண்
டோவரக் கண்டதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்: பணிவோர் மருங்கு இரும் களியாய் யான் இன்று இறுமாப்ப இன்பம் அளியா அனல் ஆட வல்லோன் அடியவரிடத்தே அவரோடு கூடிப் பெரிய களிப்பை யுடையேனாய் யான் இன்றிறு மாக்கும் வண்ணம் இன்பத்தை யெனக்களித்துத் தீயாடவல்லோன்; தில்லையான் தில்லையான்; மலை ஈங்கு அவனது மலையின் இவ்விடத்து; அளி ஒருங்கு ஆர்ப்ப அளி களொருங்கார்ப்ப; உமிழ் மும்மதத்து இரு கோட்டு நீள் கரும் களி ஆர் ஒரு மதயானை வரக் கண்டது உண்டோ உமிழப்படா நின்ற மூன்று மதத்தையும் இரண்டு கோட்டையுமுடைய நீண்ட கரிய களி யார்ந்த ஒருமதயானை வாராநிற்பக் கண்டதுண்டோ? உரைமின் எ-று.
மருங்கிறுமாப்பவெனக் கூடிற்று. அனலாடவென்பது அன லோடாடவென விரியும். ஆர்ப்ப வரவெனக் கூட்டுக. ஆர்ப்பவு மிழுமெனினுமமையும். நீட்சி - விலங்குக்குண்டாகிய நெடுமை. களி உள்ளச்செருக்கு. மதயானை - மதமிடையறாத யானை.

குறிப்புரை :

4.3 வேழம்வினாதல் வேழம் வினாதல் என்பது குறைகூறத் துணியாநின்றவன் என்குறை யின்னதென்று இவளுக்கு வெளிப்படக் கூறுவேனா யின் இவள் மறுக்கவுங்கூடுமென உட்கொண்டு, என்குறை இன்னதென்று இவடானேயுணரு மளவும் கரந்தமொழியாற் சில சொல்லிப்பின் குறையுறுவதே காரியம் என, வேட்டை கருதிச் சென்றானாக அவ்விருவருழைச்சென்று நின்று, தன்காதறோன்ற இவ்விடத்தொரு மதயானைவரக் கண்டீரோ வென வேழம் வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஏழைய ரிருவரு மிருந்த செவ்வியுள்
வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.

பண் :

பாடல் எண் : 4

கருங்கண் ணனையறி யாமைநின்
றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும்
வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு
புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த
தீங்கொரு வான்கலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லைக்கார்ப் பொழில் வாய் கரியமாலை அவனறியாமற் றன்னை யொளித்து நின்றவனது தில்லை வரைப்பி னுண்டாகிய கரிய பொழிலிடத்து; வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இளவல்லி அன்னீர் புறப்படாநின்ற கள்ளாற் றம்மேனி நனையும் வண்ணம் வண்டுகளாடும் வளராநின்ற இளைய வல்லியை யொப்பீர்; இரும் கண் அனைய கணை பொரு புண் புணர் ஒரு வான் கலை அனையது இப்புனத்தின் மருங்கண் ஈங்கு வந்தது உண்டோ நும்முடைய பெரிய கண்கள் போலுங் கணைபொருதலாலுண்டாகிய புண்ணைப் புணர்ந்த ஒரு வான் கலை அத்தன்மையது இப்புனத்தின் மருங்கு ஈங்கு வந்ததுண்டோ? எ - று.
கண்ணன் என்பது: கரியோனென்னும் பொருளதோர் பாகதச் சிதைவு. அஃது அப்பண்பு குறியாது ஈண்டுப் பெயராய் நின்றமையின், கருங்கண்ணனென்றார். சேற்றிற்பங்கயமென்றாற் போல. அறியாமை நின்றோனென்னுஞ் சொற்கள் ஒருசொன்னீர வாய் ஒளித் தோனென்னும் பொருள்பட்டு, இரண்டாவதற்கு முடிபாயின. ஐகாரம்: அசைநிலை யெனினு மமையும். வருங் கண்ணனைய வென்பதற்கு உண்டாகக்கடவ கள்ளையுடைய அரும்புகளையுடை மையான் வண்டு காலம்பார்த்து ஆடுமாறு போல, நும் முள்ளத்து நெகிழ்ச்சி யுண்டாமளவும் நுமதுபக்கம் விடாது உழல்கின்றே னென்பது பயப்ப வருங்கண்ணனையையுடைய வென்றுரைப்பினுமமையும். மருங்கென்பது மருங்கண்ணென ஈறுதிரிந்து நின்றது. அணித்தாக வென்னும் பொருட்டாய், அணி அண்ணெனக் குறைந்து நின்றதெனினுமமையும். மருங்கண்ணனைய துண்டோ வென்பதற்கு மருங்கு அண்ணல் நையதென்று, புனத்தின் மருங்கு தலைமை நைதலையுடைய தெனினுமமையும்.

குறிப்புரை :

4.4 கலைமான்வினாதல் கலைமான் வினாதல் என்பது வேழம்வினாவி உட்புகுந்த பின்னர், தான் கண்ணாலிடர்ப்பட்டமை தோன்ற நின்று, நும்முடைய கண்கள் போலுங் கணைபொருதலா னுண்டாகிய புண்ணோடு இப்புனத்தின்கண் ஒருகலைமான் வரக் கண்டீரோ வென்று கலைமான் வினாவாநிற்றல். அதற்கு செய்யுள்
சிலைமா னண்ணல்
கலைமான் வினாயது.

பண் :

பாடல் எண் : 5

சிலம்பணி கொண்டசெஞ் சீறடி
பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங்
கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்
குரைமின்கள் சென்னெறியே.

பொழிப்புரை :

இதன் பொருள்: சிலம்பு அணி கொண்ட செம் சீறடி பங்கன் சிலம்புதானழகுபெற்ற செய்ய சிறிய அடியையுடையாளது கூற்றை யுடையான்; தன் சீர் அடியார் குலம் பணி கொள்ள எனைக் கொடுத்தோன் தன் மெய்யடியாரது கூட்டங் குற்றேவல் கொள்ள என்னைக்கொடுத்தவன்; தான் கொண்டு அணியும் கலம் பணி கொண்டு அம்பலம் இடம் கொண்டவன் தான் கொண்டணியும் அணிகலம் பாம்பாகக் கொண்டு அம்பலத்தை இடமாகக் கொண்டவன்; கார்க்கயிலைச் சிலம்பு அணி கொண்ட நும் சீறூர்க்குச் செல் நெறி உரைமின்கள் அவனது முகில்களையுடைய கயிலைக்கட் சிலம்பழகு பெற்ற நுமது சிறியவூர்க்குச் செல்லு நெறியை உரைமின் எ - று.
கொண்டுகொடுத்தோனென இயைப்பாருமுளர். தனக்குத் தக்க தையலை இடத்து வைத்தானென்றுந் தன்னடியார்க்குத் தகாத என்னை அவர்க்குக் கொடுத்தானென்றும், அணிதற்குத் தகாத பாம்பை அணிந்தானென்றும், தனக்குத் தகுமம்பலத்தை இடமாகக் கொண்டா னென்றும் மாறுபாட்டொழுக்கங் கூறியவாறாம். கருத்து வேறறிய வினாயதற்கு மறுமொழி பெறாது பின்னுமொன்றை வினவுதலான் இவன்கருத்து வேறென்று தோழியறிய. சின்னெறி யென்று பாட மாயின், சிறியநெறி யென்றுரைக்க. சின்னெறியென்பது அந்நிலத்துப் பண்பு.

குறிப்புரை :

4.5 வழிவினாதல் வழிவினாதல் என்பது கலைமான் வினாவாநின்றவன், இவன் கருத்து வேறென்று தோழியறிய, அதனோடு மாறுபடநின்று, அது கூறீராயின் நும்மூர்க்குச் செல்லுநெறி கூறுமினென்று வழிவினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
கலைமான் வினாய கருத்து வேறறிய
மலைமா னண்ணல் வழிவி னாயது.

பண் :

பாடல் எண் : 6

ஒருங்கட மூவெயி லொற்றைக்
கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
யோவிங்கு வாழ்பவர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்: மூவெயில் ஒருங்கு அட ஒற்றைக் கணைகொள் சிற்றம்பலவன் மூவெயிலையும் ஒருங்கே அடவேண்டித் தனியம்பைக் கொண்ட சிற்றம்பலவன்; கரும் கடம் மூன்று உகு நால்வாய்க் கரி உரித்தோன் கரிய மதமூன்று மொழுகாநின்ற நான்றவாயையுடைய கரியையுரித்தவன்; கயிலை இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே வருங்கள் அவனது கயிலைக்கட் பெரிய காட்டான் மூடப்படும் பொழிற்கணிற்கின்ற எழிலையுடைய கொம்பையொப்பீராகிய நீங்கள் இங்கேவாரும்; தம் ஊர் பகர்ந்தால் இங்கு வாழ்பவர்க்குப் பழியோ தமதூரை யுரைத்தால் இம்மலைவாழ்வார்க்குப் பழியாமோ? பழியாயின் உரைக்கற் பாலீரல்லீர் எ - று.
இரண்டு மதங் கடத்திற் பிறத்தலிற் பன்மைபற்றிக் கட மென்றார். கொம்பரன்னீர்களென்பது: முன்னிலைப் பெயர். இன்னே வருங்களென்பது எதிர்முகமாக்கியவாறு. வாருமென்பது குறுகி நின்றது

குறிப்புரை :

4.6 பதிவினாதல் பதி வினாதல் என்பது மாறுபடநின்று வழி வினாவவும் அதற்கு மறுமொழி கொடாதாரை எதிர்முகமாகநின்று, வழிகூறீரா யின் நும்பதி கூறுதல் பழியன்றே; அது கூறுவீராமினென்று அவர்பதி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
பதியொடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலிந்தது.

பண் :

பாடல் எண் : 7

தாரென்ன வோங்குஞ் சடைமுடி
மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற்
றம்பல வன்கயிலை
யூரென்ன வென்னவும் வாய்திற
வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை
யீர்ங்குழற் பேதையரே.

பொழிப்புரை :

இதன் பொருள்: ஓங்கும் சடை முடிமேல் தார் என்னத் தனித் திங்கள் வைத்த உயர்ந்த சடையானியன்ற முடிமேல் தாராக ஒருகலையாகிய திங்களை வைத்த; கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை கொண்டலென்று சொல்லும் வண்ணம் நிறைந்த கறுப்பையுடைத்தாகிய மிடற்றையுடைய அம்பலவனது கயிலைக்கண்; ஊர் என்ன என்னவும் வாய்திறவீர் நும்முடைய ஊர்கள் பெயர் முதலாயினவற்றான் எத்தன்மைய வென்று சொல்லவும் வாய்திறக்கின்றிலீர்; பழியேல் ஒழிவீர் ஊர் கூறுதல் பழியாயின் அதனையொழிமின்; பேர் என்னவோ விரை ஈர்ங் குழல் பேதையரே உரையீர் நும்முடைய பெயர்கள் எத்தன்மை யவோ நறுநாற்றத்தையும் நெய்ப்பையுமுடையவாகிய குழலை யுடைய பேதையீர், உரைப்பீராமின் எ - று.
தனித்திங்கள் ஒப்பில்லாத திங்களெனினுமமையும். ஓகாரம்: வினா. தலைமகளுந் தோழியும் ஓரூராரல்லரென்று கருதினான் போல ஊரென்னவெனப் பன்மையாற் கூறினான். என்னை,
இரந்து குறையுறாது கிழவியுந் தோழியு
மொருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
&#புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
மதியுடம் படுதற்கு முரியனென்ப. #9;
-இறையனாரகப்பொருள், 6
என்பதிலக்கணமாதலின். பேதையரேயெனச் சிறுபான்மை ஏகாரம் பெற்றது. ஊருஞ் சொல்லாதாரைப் பெயர்கேட்கவே வேறு கருத்து டையனென்பது விளங்கும். வாய் திறவா தொழிவீ ரென்பதூஉம் பாடம்.

குறிப்புரை :

4.7 பெயர்வினாதல் பெயர் வினாதல் என்பது பதிவினாவவும் அதற்கொன்றுங் கூறாதாரை, நும்பதிகூறுதல் பழியாயின் அதனையொழிமின்; நும்பெயர் கூறுதல் பழியன்றே, இதனைக்கூறுவீராமினென்று அவரது பெயர் வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
பேரமைத் தோளியர்
பேர்வி னாயது.

பண் :

பாடல் எண் : 8

இரத முடைய நடமாட்
டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை
யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
திறக்கிற் சலக்கென்பவே.

பொழிப்புரை :

இதன் பொருள்: இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் இனிமையையுடைய கூத்தாட்டையுடையவர்; எம் உடையர் எம்முடைய தலைவர்; வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இப் புனத்தார் விருந்தொடு பேச்சின்மை விரதம் உடையர் அவரது வரதமுடைய அழகிய தில்லையையொப்பாராகிய இப்புனத்துநின்ற இவர்கள் எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு பேசாமையை விரதமாகவுடையர்; அது அன்றேல் அதுவன்றாயின்; மீட்டு வாய்திறக்கின் சலக்கு என்ப மணி சரதம் உடையர் பின் வாய்திறக்கிற் சலக்கென விழுவன முத்தமணிகளை மெய்யாகவுடையர் எ - று.
இரதமென்றது நாட்டியச்சுவையையன்று, கட்கினிமையை. நடமென்றது நாட்டியத்தையன்று, கூத்தென்னும் பொதுமையை. மீட்டென்பது பிறிதுமொன்றுண் டென்பதுபட வினைமாற்றாய் நிற்பதோரிடைச்சொல். இவையாறற்கும் மெய்ப்பாடு: இனிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: மதியுடம்படுத்தல்.

குறிப்புரை :

4.8 மொழிபெறாதுகூறல் மொழிபெறாது கூறல் என்பது பெயர்வினாவவும் வாய் திறவாமையின், இப்புனத்தார் எதிர்கொள்ளத்தக்க விருந்தின ரோடு வாய்திறவாமையை விரதமாகவுடையராதல், அதுவன்றி வாய்திறக்கின் மணிசிந்து மென்பதனைச் சரதமாக வுடையராதல், இவ் விரண்டனு ளொன்று தப்பாதென்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
தேமொ ழியவர் வாய்மொழி பெறாது
மட்டவிழ் தாரோன் கட்டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

வின்னிற வாணுதல் வேனிறக்
கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின்
றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ
மணிநிறப் பூந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்லி யலை-வில்லினியல்பையுடைய வாணுதலையும் வேலினியல்பை யுடைய கண்களையுமுடைய மெல்லியலை; மல்லல் தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன் தனது அம்பலம்போல் அழகை யுடைய தன்றிரு மேனியொன்றின்கண் இருத்திநின்றவனது அம்பலத்தை யொக்கும்; மின் நிற நுண் இடைப் பேர் எழில் வெள்நகைப் பைந்தொடியீர் மின்னினியல்பையுடைய நுண்ணிய இடையையும் பெரிய வெழிலையும் வெள்ளிய முறுவலையுமுடைய பைந்தொடியீர்; மணி நிற பூந் தழை பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணியினது நிறத்தையுடைய இப்பூந்தழை நும் பொன்னிற அல்குலுக்குத் தகுமோ? தகுமாயின் அணிவீராமின் எ - று.
பொன்னிறத்திற்கு மணிநிறம் பொருத்தமுடைத்தென்பது கருத்து. பொன்னிறவல்குலென்று அல்குலின்றன்மை கூறியவதனான், முன்னமே புணர்ச்சி நிகழ்ந்தமையு முண்டென்பது கூறியவாறாயிற்று. ஆமோவென்ற ஓகாரம் கொடுப்பாரதுண் மகிழ்ச்சியையும் கொள்வாரது தலைமையையும் விளக்கி நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை.

குறிப்புரை :

4.9 கருத்தறிவித்தல் கருத்தறிவித்தல் என்பது நீயிர் வாய்திறவாமைக்குக் காரணமுடையீர்; அது கிடக்க, இத்தழை நும் மல்குற்குத் தகுமாயின் அணிவீராமினெனத் தழைகாட்டிநின்று தன்கருத்தை அறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்
உரைத்த துரையாது
கருத்தறி வித்தது.

பண் :

பாடல் எண் : 10

கலைக்கீ ழகலல்குற் பாரம
தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
எதுநுங்கள் சிற்றிடையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கலைக் கீழ் அகல் அல்குல் பாரமது மேகலைக்குக் கீழாகிய அகன்ற வல்குலாகிய பாரமது; ஆரம் கண் ஆர்ந்து இலங்கு முலைக் கீழ்ச் சிறிது இன்றி நிற்றல் முற்றாது முத்து வடம் கண்ணிற்கு ஆர்ந்திலங்காநின்ற முலையின்கீழ் இடைசிறி தின்றித்தானே நிற்றல் முடிவுபெறாது; அன்று இலங்கையர்கோன் மலைக்கீழ் விழச் செற்ற சிற்றம்பலவர் - இவ்வரையையெடுத்த அன்று இலங்கையர்கோன் இவ்வரைக்கீழ் வீழும்வண்ணஞ் செற்ற சிற்றம் பலவரது; வண் பூ கயிலைச் சிலைக் கீழ்க்கணை அன்ன கண்ணீர் வளவிய பொலிவையுடைய கயிலையினிற்கின்ற சிலையின் கீழ் வைத்த கணைபோலும் புருவத்தின் கீழுளவாகிய கண்ணையுடையீர்; நுங்கள் சிற்றிடை எது நும்முடைய சிற்றிடை யாது? கட்புலனா கின்றதில்லை எ - று. பாரமது நிற்றலெனவியையும். பாரம் அதுவென எழுவாயும் பயனிலையுமாக்கி, முலைக்கீழ்ச் சிறிதாயினும் ஒன்றின்றி இவ்வுரு நிற்றல் முற்றாதென்றுரைப்பாருமுளர். அதுவென்றும் எதுவென்றும் சாதிபற்றி ஒருமையாற்கூறினான். மெய்ப்பாடு அது. பயன்: விசேடவகையான் மதியுடம்படுத்தல்.
மேலைப் பாட்டாறனானும் வம்பமாக்கள் வினாவும் பெற்றியே கதுமெனத் தனது குறைதோன்றாவகை வினாவினான், இப் பாட்டிரண்டினாலும் இவன்குறை நங்கண்ணதேயென்பது தோழிக்குப் புலப்பட, இத்தழைநல்ல கொள்ளீரென்றும், நும்மிடை யாதென்றும் வினாவினானென்பது.

குறிப்புரை :

4.10 இடைவினாதல்
இடைவினாதல் என்பது தழைகாட்டித் தன்கருத்தறிவித்து அது வழியாகநின்று நும்மல்குலும் முலையும் அதிபாரமாயிரா நின்றன; இவை இவ்வாறு நிற்றற்குக்காரணம் யாதோவென்று அவரிடை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
வழிபதி பிறவினாய்
மொழிபல மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 1

பல்லில னாகப் பகலைவென்
றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்: பல் இலன் ஆகப் பகலை வென்றோன் தில்லை பாடலர்போல் எல் இலன் பல்லிலனாம்வண்ணம் பகலோனை வென்றவனது தில்லையைப் பாடாதாரைப் போல ஒளியையுடைய னல்லன்; வினா நாகத்தொடு ஏனம்ஆயினும் வினாவப்படுகின்றன யானையும் ஏனமுமாயிருந்தன; வில் இலன்வில்லையுடைய னல்லன்; கையில் நாகத் தழை கையின் நாக மரத்தின்றழை களாயினும்; கொண்டாட்டம் வேட்டை கொண்டாடப் படுகின்றது; வேட்டை மெய் ஓர் சொல் இலன்; கண்டவாற்றான் மெய்யா யிருப்பதொரு சொல்லையு முடையனல்லன் கற்ற வா ஆ; இவன் பொய்யுரைப்பக் கற்றவாறு என்! பொய்யுரைத்து வறிது போவானுமல்லன் இச் சுனை புனம் கடவான்; ஈண்டொரு குறையுடையான்போல இச்சுனைப் புனத்தைக் கடவான் இவன் யாவன் கொலாம்; இவன்யாவனோ? எ - று.
வினா வென்பது: ஆகுபெயர். ஆ: வியப்பின்கட்குறிப்பு. எல்லியன் ஆகத்தென்று பாடமோதி, ஆகத்தொளியில னெனவுரைப் பாருமுளர். வினாய் என்பது பாடமாயின், வாராநின்ற வென ஒருசொல்வருவித்து முடிக்க. வினாய்க் கடவானென்று கூட்டுவாரு முளர். தையல் புனையப்படுதல். மெய்ப்பாடு: மருட்கை. பயன் : உசாவி ஐயம் தீர்தல்.

குறிப்புரை :

5.1 ஐயுறுதல் ஐயுறுதல் என்பது தலைமகன் தழைகொண்டுநின்று கரந்த மொழியாற் றன்கருத்தறிவிக்க, மேனியொளியிலனாய் இப்புனத் தினின்றும் போகாது யானையோடு ஏனம் (மான்) வினாவி இவ்வாறு பொய்கூறாநின்ற இவன் யாவனோ எனத் தோழி அவனை ஐயுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
இருவருமள்வழி அவன்வரவுணர்தல் - இதன் பொருள் : ஐயுறுதல், அறிவுநாடல் எனவிவையிரண்டும் இருவருமுள்வழி அவன் வரவுணர்தலாம் எ - று. அவற்றுள்
அடற்கதிர் வேலோன் றொடர்ச்சி நோக்கித்
தையற் பாங்கி ஐய முற்றது.

பண் :

பாடல் எண் : 2

ஆழமன் னோவுடைத் திவ்வையர்
வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத்
தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
கழிந்தது வந்துவந்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்: முன் அநங்கன் நைந்து வீழ நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப் புனத்து முற்காலத்து அனங்கன் அழிந்து பொடியாய்வீழ நோக்கிய அம்பலத்தானது வெற்பின் இப் புனத்தின்கண்ணே கூறுவது; முன் வேழமாய் முன் வேழமாய்; கலையாய் பின் கலையாய்; பிறவாய் பின் வேறுசிலவாய்; பின்னும் மெல் தழையாய் பின்னும் மெல்லிய தழையாய்; வந்து வந்து வந்து வந்து; மாழை மெல் நோக்கி இடையாய்க் கழிந்தது முடிவிற் பேதைமையையுடைய மெல்லிய நோக்கத்தையுடையாளது இடையாய்விட்டது; இவ்வையர் வார்த்தை ஆழம் உடைத்து அத னான் இவ்வையர்வார்த்தை இருந்தவாற்றான் ஆழமுடைத்து எ - று.
மன்னும் ஓவும்: அசைநிலை. இப்புனத்தேயென்றது இவளிருந்தபுனத்தே யென்றவாறு. மெல்லிய நோக்கத்தையுடையாள் இடைபோலப் பொய்யாய்விட்ட தென்பாருமுளர். பின்னுமென்றது முன்னை வினாவே ஐயந்தாராநிற்பப் பின்னுமொன்று கூறினா னென்பதுபட நின்றது. தன்கண்வந்து முடிதலின் வந்து வந்தென்றாள். சொற்பதம் சொல்லளவு. அறிவு நாடியது - அறிவானாடி யது. மெய்ப்பாடு: மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன்: ஐயந் தீர்தல்.

குறிப்புரை :

5.2 அறிவுநாடல் அறிவு நாடல் என்பது இவன் யாவனோவென் றையுறா நின்ற தோழி பேராராய்ச்சியளாதலின், அவன் கூறியவழியே நாடாதுவந்து தங்களிடைக்கே முடிதலின், இவ்வையர்வார்த்தை இருந்தவாற்றான் ஆழமுடைத்தாயிருந்ததென்று அவனினை வறியா நிற்றல். அதற்குச் செய்யுள்
வெற்பன் வினாய சொற்பத நோக்கி
நெறிகுழற் பாங்கி யறிவு நாடியது.

பண் :

பாடல் எண் : 1

நிருத்தம் பயின்றவன் சிற்றம்
பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை
மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
மெல்லியல் வாடியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிற்றம்பலத்து நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்தின்கண் நிருத்தத்தை யிடைவிடாதே யாடியவன்; நெற்றித் தனிக்கண் ஒருத்தன் நெற்றியிலுண்டாகிய தனிக்கண்ணை யுடைய ஒப்பிலாதான்; பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி அவன் பயிலுங் கயிலையாகிய மலையினது உயர்ந்தவுச்சியில்; திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி புண்ணிய நீர் இடையறாது நிற்குஞ் சுனையைக் குடைந்தாடி; சிலம்பு எதிர் கூய் சிலம்பிற் கெதிரழைத்து; வருத்தம் பயின்று கொல்லோ இவ்வாறு வருத்தத்தைச் செய்யும் விளையாட்டைப் பயின்றோ பிறிதொன்றி னானோ; வல்லி மெல்லியல் வாடியது வல்லிபோலும் மெல்லிய வியல்பினை யுடையாள் வாடியது எ - று. வருத்தம் : ஆகுபெயர். மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகட்குற்ற வாட்டமுணர்தல். 62

குறிப்புரை :

6.1 வாட்டம் வினாதல்
வாட்டம் வினாதல் என்பது தலைமகன் மதியுடம்படுத்து வருந்தாநிற்பக் கண்டு, எம்பெருமான் என்பொருட்டான் இவ் வாறு இடர்ப்படா நின்றானெனத் தலைமகள் தன்னுள்ளே கவன்று வருந்தாநிற்க, அதுகண்டு, சுனையாடிச் சிலம்பெதிர ழைத்தோ பிறிதொன்றினானோ நீ வாடியதென்னோ வெனத் தோழி தலை மகளது வாட்டம் வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
6.1 மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 1

மடுக்கோ கடலின் விடுதிமி
லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்
காயகுற் றேவல்செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர்
மலர்நும் சுரிகுழற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
குறையுற்றுநிற்றல், அவன் குறிப்பறிதல், அவள் குறிப்பறிதல், இருவர்நினைவுமொருவழியுணர் தல் எனவிவை நான்கும் குறையுறவுணர்தலாம் எ - று . அவற்றுள்-
7.1 கறையுற்ற வேலவன்
குறை யுற்றது.
இதன் பொருள்: விடு திமில் கடலின் மடுக்கோ விடப்படுந் திமிலைக் கடலின்கட் செலுத்துவேனோ; அன்றி மறி திரை மீன் படுக்கோ அன்றிக் கீழ்மேலாந் திரையையுடைய கிளர்ந்த கடலிற்புக்கு மீனைப்படுப்பேனோ; பல பணிலம் குளிக்கோ ஒரு குளிப்பின்கட் பல பணிலங்களையு மெடுப்பேனோ; பரன் தில்லை முன்றில் வளை கொடுக்கோ பரனது தில்லைமுற்றத்திற் சென்று எல்லாருங்காணச் சங்கவளைகளை விற்பேனோ; மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ அன்றி நும்மையன்மார்க்குப் பொருந்தின குற்றேவல்களைச் செய்வேனோ; அணி ஈர் மலர் நும் சுரிகுழற்குத் தொடுக்கோ - அணியப்படுந் தேனாலீரிய மலரை நுஞ்சுரிகுழற்குத் தொடுப்பேனோ; பணியீர் - நீயிர்வேண்டியது சொல்லுமின் எ - று.
மற்று: வினைமாற்று. இவன் உயர்ந்த தலைமகனாதலின் அவர் தன்னை வேறுபடவுணராமைக் கூறியவாறு. முன்னிரந்து குறையுறுதற் கிடங்காட்டிக் குறையுற வுணர்தற்கு இயைபபுபடக் குறையுறுமாற்றை ஈண்டுக் கூறினான். இது திணைமயக்கம். என்னை, ``உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே`` (தொல். பொருள். அகத்திணை -13) எ-ம், ``புனவர் தட்டை புடைப்பி னயல, திறங்குகதி ரலமரு கழனியும், பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே`` (புறம் - 49) எ-ம் சொன்னாராகலின். மெய்ப்பாடு: இனிவரல். பயன்: குறையுறுதல். 63

குறிப்புரை :

7.1 குறையுற்றுநிற்றல் குறையுற்று நிற்றல் என்பது தலைமகளது வாட்டங்கண்டு ஐயுறாநின்ற தோழியிடைச்சென்று, யான் உங்களுக்கெல்லாத் தொழிலுக்கும் வல்லேன்; நீயிர் வேண்டுவதொன்று சொல்லுமின்! யான் அது செய்யக்குறையில்லையென இழிந்தசொல்லால் தலைமகன் தன்னினைவு தோன்ற ஐயுறக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

பண் :

பாடல் எண் : 2

அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
தோன்று மொளிமுகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அரன் தில்லை அன்னாள் மன்னும் கிளியை கடியச்செல்ல நிற்பின் அரனது தில்லையையொப்பாள் புனத்து மன்னுங்கிளியைக் கடிவதற்குச் சிறிதகல நிற்பினும்; கிளர் அளகத்து அளி அமர்ந்து ஏறின் இவளுடைய விளங்காநின்ற அளகத்தின்கண் வண்டுகள் மேவி யேறினும்; வறிதே இருப்பின் இவள் வாளா விருப்பினும்; ஒளி முகத்து பளிங்கு அடுத்த ஒளி அமர்ந்தாங்கு இவனதொளியையுடைய முகத்தின்கண்ணே பளிங்கு தன்னிறத்தை விட்டுத் தன்னையடுத்த நிறத்தை மேவினாற்போல; ஒன்று போன்று ஒன்று தோன்றும் முன் வேறொன்று போன்றிருந்து பின்னிவள் குறிப்பாகிய வேறொன்று தோன்றாநின்றது, அதனால் அளிய அண்ணல் எண் மன்னும் ஒன்று உடைத்து அளிய அண்ணலது குறிப்பு மன்னுமொன்றுடைத்து; அஃதிவள் கண்ணதே போலும் எ-று.
கிளியைமன்னுமென்புழி, மன்னும்: அசைநிலையெனினு மமையும். ஒன்றுபோன்றொன்று தோன்றுமென்றது கிளியைக் கடியச் சிறிது புடைபெயரின் நெட்டிடை கழிந்தாற்போல ஆற்றானாகலானும், வண்டுமூசப் பொறாளென்று வருந்தி வண்டையோச்சுவான் போலச் சேறலானும், வாளாவிருப்பிற் கண்டின்புறுதலானும், இவள் கண்ணிகழ்ச்சி இவன்முகத்தே புலப்படாநின்றது என்றவாறு. ஏறி வறிதேயிருப்பினென்பது பாடமாயின், அளியேறி அளகத்தின்கட் சிறிதிருப்பினுமெனவுரைக்க. ஒளிர்முகமே யென்பதூஉம் பாடம். 64

குறிப்புரை :

7.2 அவன் குறிப்பறிதல் அவன் குறிப்பறிதல் என்பது குறையுறாநின்றவன் முகத்தே தலைமகளது செயல் புலப்படக்கண்டு, இவ்வண்ணல் குறிப்பு இவளிடத்ததெனத் தோழி தலைமகனது நினைவு துணிந்துணரா நிற்றல். அதற்குச் செய்யுள்
7.2 பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப் பாங்கி
வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்ப றிந்தது.

பண் :

பாடல் எண் : 3

பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின்
றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம்
பயின்றஎம் மொண்ணுதல்மாந்
தழைகொண் டொருவனென் னாமுன்ன
முள்ளந் தழைத்திடுமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:பிழைகொண்டு ஒருவிக் கெடாது ஒருவன் அன்பு செய்யின் பிழைத்தலைப் பொருந்தித் தன்கட் செல்லாது நீங்கி இவ்வாறு கெடாதே ஒருவன் அன்புசெய்யுமாயின்; பிறவி என்னும் முழை கொண்டு செல்லாமை அவன் பிறவியென்னாநின்ற பாழி யையடைந்து செல்லாத வண்ணம்; அம்பலத்து நின்று ஆடும் முன்னோன் அம்பலத்தின்கணின்றாடும் எல்லாப்பொருட்கும் முன்னாயவனது; உழைகொண்டு உழைமானை மருணோக்கத் தாலொத்து; இரு நோக்கம் ஒருங்கு பயின்ற எம் ஒண்ணுதல் வெள்ளை நோக்கமும் அவ்வுழைக்கில்லாத கள்ளநோக்கமுமாகிய இருநோக்கத்தையும் ஒருங்கே செய்யக்கற்ற எம்முடைய ஒண்ணுதல்; மாந் தழைகொண்டு ஒருவன் என்னா முன்னம் மாந்தழையைக் கொண்டொருவனென்று சொல்லுவதன் முன்; உள்ளம் தழைத்திடும் உள்ளந் தழையாநின்றாள். அதனால் இவள் குறிப்பு இவன் கண்ணதேபோலும் எ - று.
அடைந்தார் பிழைப்பின், தலையாயினார் பிழையையுட் கொண்டமைதலும், இடையாயினார் அவரைத் துறத்தலும், கடையாயினார் அவரைக்கெடுத்தலும் உலகத்து உண்மையின், அம்மூவகையுஞ் செய்யாதெனினுமமையும். பிறிது உரைப்பாரு முளர். ஒருவியென்னும் வினையெச்சம் கெடாதென்னு மெதிர்மறை வினை யெச்சத்திற் கெடுதலோடு முடிந்தது. 65

குறிப்புரை :

7.3 அவள் குறிப்பறிதல் அவள் குறிப்பறிதல் என்பது தலைமகனது நினைவறிந்த தோழி இவளிடத்து இவனினைவேயன்றி இவனிடத்து இவள் நினைவுமுண்டோவெனத் தலைமகளை நோக்க, அவண்முகத் தேயும் அவன் செயல் புலப்படக்கண்டு, இவ்வொண்ணுதல் குறிப்பு மொன்றுடைத்தென அவணினைவுந் துணிந்துணரா நிற்றல். அதற்குச் செய்யுள்
7.3. ஆங்கவள் குறிப்புப்
பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 4

மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப
திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
தேனுண் டெழிறருமே.

பொழிப்புரை :

இதன் பொருள்: இறை புலியூர் அனையாள் மை ஏர் குவளைக் கண் வண்டு இனம் இறைவனது புலியூரையொப்பாளுடைய மையழகையுடைய குவளைபோலுங் கண்ணாகிய வண்டினம்; வாழும் செந்தாமரை வாய் தான் வாழ்தற்குத் தகும் இவன் முகமாகிய செந்தாமரை மலர்க்கண்; எய்யேம் எனினும் யாமறியேமாயினும்; குடைந்து இன்பத் தேன் உண்டு குடைந்து இன்பமாகிய தேனை யுண்டு; எழில் தரும் எழில்பெறாநின்றது. அதனால் இவற்கு மெய்யே வேட்டையின் மேல் மனம் இல்லை இவற்கு மெய்யாகவே வேட்டையின் மேல் உள்ளமில்லை இவளும் புனத்தினை காப்பது பொய்யே இவளும் புனத்தினையைக் காப்பது பொய்யே எ - று.
மீட்டென்பதற்கு மீட்ட தன்றே (தி.8 கோவை பா.57) லென்புழி உரைத்ததுரைக்க. ஏர்குவளை யென்னும் மியல்பு புறனடையாற் கொள்க. வண்டின மென்றாள், நோக்கத்தின் பன்மை கருதி. எய்யே மெனினு மென்பதற்கு ஒருவரை யொருவரறியே மென்றிருப்பினு மெனினுமமையும். எழிறருதல் எழிலைப் புலப் படுத்துதல். இன்புறு தோழி - இருவர் காதலையுங் கண்டின்புறுதோழி. ஐய நீங்கித் தெளிதலான் இன்புறுமெனினுமமையும். அன்றியும் இவளுடைய நலத்திற்கேற்ற நலத்தையுடைய தலைமகனைக் கண்டின்புறுந்தோழி. என்னை, களவொழுக்கத்தில் எழினலமுடையா னொரு வனைக்கண்டு இன்புறக் கடவளோ வெனின், எழினலமே யன்று, பின் அறத்தொடு நிலைநின்று கூட்டுகை அகத்தமிழின திலக்கண மாதலால் தன்குரவர் வினவத் தானறத்தொடு நிற்குமிடத்துக் குரவர் தாமேசென்று மகட்கொடுக்குங் குடிப்பிறப்பினால் உயர்ச்சியை யுடைனாதலாலும் இன்புற்றாள். இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: துணிந்துணர்தல். இவைமூன்றும் குறையுற வுணர்தல். என்னை,
இருவரு முள்வழி யவன்வர வுணர்தன்
முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தலென்
றம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி
- இறையனார் அகப்பொருள்,7
என்பவாகலின். ; 66

குறிப்புரை :

7.4 இருவர் நினைவு மொருவழியுணர்தல்
இருவர் நினைவு மொருவழி யுணர்தல் என்பது இருவர் நினைவுங்கண்டு இன்புறாநின்ற தோழி இவ்விருவரும் இவ்விடத்து வந்த காரியம் இவன் முகமாகிய தாமரைக்கண் இவள்கண்ணாகிய வண்டு இன்பத்தேனையுண்டு எழில்பெற வந்த இத்துணையல்லது பிறிதில்லையென அவ்விருவரது நினைவுந் துணிந்துணராநிற்றல். அதற்குச் செய்யுள்
7.4 அன்புறுநோக் காங்கறிந்
தின்புறுதோழி யெண்ணியது.

பண் :

பாடல் எண் : 1

மைவார் கருங்கண்ணி செங்கரங்
கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறுபிறைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மறந்தும் பொய் அவ் வானவரில் புகாது - மறந்தும் பொய்ம்மையையுடைய அவ்வானவரிடத்துப் புகாதே; தன் பொன் கழற்கே அடியேன் உய்வான் புக தன்னுடைய பொன்னா னியன்ற கழலையுடைய திருவடிகளிலே அடியேன் உய்ய வேண்டிப் புக; ஒளிர் தில்லை நின்றோன் சடைமேலது ஒத்து விளங்குந் தில்லைக்கட் கட்புலனாய் நின்றவனுடைய சடைக்கண்ணதாகிய பிறையையொத்து; செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறு பிறைக்கு செக்கர்வானை யடைந்த செவ்விக் கதிரையுடைய வெள்ளையாகிய சிறிய பிறைக்கு; மை வார் கருங்கண்
ணி மையையுடைய நெடிய கரிய கண்ணினையுடையாய்; செங்கரம் கூப்பு - நினது செய்ய கைகளைக் கூப்புவாயாக எ - று. மறந்து மென்பது ஈண்டு அறியாதுமென்னும் பொருட்டாய் நின்றது. மற்று: அசைநிலை. மற்றையென்பது பாட மாயின், அல்லாத பொய்வான வரென்றுரைக்க. இனமல்ல ராயினும் இனமாக உலகத்தாராற் கூறப்படுதலின் அவ்வாறு கூறினார். ``மூவரென்றே யெம் பிரானொடு மெண்ணி`` (தி.8 திருச்சதகம் பா.4) என்பதூஉம், அக்கருத்தே பற்றிவந்தது. பிறர்கூறும் பெருமை அவர்க்கின்மையிற் பொய்வானவரென்றார். எனக்குப் பொறியுணர் வல்ல தின்மையிற் கண் கவருந் திருமேனிகாட்டி என்னை வசித்தானென்னுங் கருத்தான், உய்வான் புகத்தில்லை நின்றோ னென்றார். சடை: செக்கர்வானத்திற் குவமை. 67

குறிப்புரை :

8.1 பிறைதொழுகென்றல்
பிறைதொழு கென்றல் என்றது பிறையைக்காட்டித் தான்றொழுதுநின்று, நீயும் இதனைத் தொழுவாயாகவெனத் தோழி தலைமகளது புணர்ச்சி நினை வறியாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.1. பிறைதொழு கென்று பேதை மாதரை
நறுநுதற் பாங்கி நாண நாட்டியது.

பண் :

பாடல் எண் : 2

அக்கின்ற வாமணி சேர்கண்டன்
அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகுமுனக்கவளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அக்கு தவா மணி சேர் கண்டன் அக்காகிய நல்ல மணிபொருந்திய மிடற்றையுடையான்; அம்பலவன் மலயத்து இக் குன்றவாணர் கொழுந்து செழும் இத்தண்புனம் உடையாள் அவனது பொதியின் மலயத்தின் கணுளராகிய இக்குன்ற வாணருடைய மகளாகிய வளவிய இத்தண்புனங் காவனுடையாள்; அக்குன்ற ஆறு அமர்ந்து ஆடச் சென்றாள் அக்குன்றத்தின்கணுண் டாகிய ஆற்றைமேவி ஆடப் போயினாள் ; அங்கம் அவ்வவையே ஒக்கின்ற ஆறு நின்னு றுப்புக்கள் அவளுறுப்புக்களாகிய அவற்றை யேயொக்கின்றபடி; அணங்கே என்னணங்கே; உனக்கு அவள் இணங்கு ஆகும் நினக்கு அவளிணங்காகும்; அதனால் அவளைக் கண்டு போவாயாக எ - று.
இன்: அல்வழிச் சாரியை. மலயத்திக் குன்றமென்று இயைப் பாருமுளர். 68

குறிப்புரை :

8.2 வேறுபடுத்துக் கூறல் வேறுபடுத்துக் கூறல் என்பது பிறைதொழாது தலைசாய்த்து நாணி நிலங்கிளையாநிற்பக் கண்டு, பின்னும் இவள் வழியே யொழுகி இதனையறிவோமென உட்கொண்டு, நீ போய்ச் சுனையாடிவா வென்ன, அவளும் அதற்கிசைந்துபோய் அவனோடு தலைப்பெய்துவர, அக்குறியறிந்து அவளை வரையணங்காகப் புனைந்து வேறுபடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.2. வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்
டாய்வளைத் தோழி யணங்ங் கென்றது.

பண் :

பாடல் எண் : 3

செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி
லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையுந்
தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங்
குடைவ னிருஞ்சுனையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செந் நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம்போல் செய்ய நிறத்தையுடைய மேனிக்கண் வெள்ளிய நீற்றை அணிவோனது தில்லை யம்பலத்தையொக்கும்; அம் நிறமேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் அழகிய நிறத்தையுடைத் தாகிய மேனியையுடைய நின்னுடைய கொங்கைகளில் அவ்விடத் தழிந்த குங்குமத்தையும்; மைநிற வார்குழல் மாலையும் - மையைப் போலு நிறத்தையுடைய நெடிய குழலின் மாலையையும்; தாதும் அளகத்தப்பிய தாதையும்; வளாய் மதம் சேர் இந் நிறமும் பெறின் மேனிமுழுதையுஞ் சூழ்ந்து மதத்தைச் சேர்ந்த இந் நிறத்தையும் பெறுவேனாயின்; இருஞ் சுனை யானும் குடைவன் நீ குடைந்த பெரிய சுனையை யானுங்குடைவேன் எ -று.
அம்பலம்போன்மேனியெனவியையும். அங்கழிகுங்கும மென்றது முயக்கத்தான்அழியும் அவ்விடத்தழிந்த குங்குமம் என்றவாறு. மைந்நிறவார்குழற்கண் மாலையுந் தாதும் வளாவ இதனையும் இதனையும் பெறினென எச்சந்திரித்துரைப்பினு மமையும். வளாவுதல் - புணர்ச்சிக் காலத்தில் மாலையின் முறிந்த மலரும் அளகத்தப்பிய தாதுஞ் சிதறிக் குங்குமத்தினழுந்தி வாங்குதற் கருமையாக விரவுதல். மதமென்றது காமக்களிப்பாலுண்டாகிய கதிர்ப்பை. 69

குறிப்புரை :

8.3 சுனையாடல்கூறிநகைத்தல்
சுனையாடல் கூறி நகைத்தல் என்பது வேறுபடுத்துக்கூற நாணல்கண்டு, சுனையாடினால் இவ்வாறு அழிந்தழியாத குங்குமமும் அளகத்தப்பிய தாதும் இந்நிறமுந்தருமாயின் யானுஞ் சுனையாடிக் காண்பேனெனத் தோழி தலைமகளோடு நகையாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.3. மாண நாட்டிய வார்குழற் பேதையை
நாண நாட்டி நகை செய்தது.

பண் :

பாடல் எண் : 4

பருங்கண் கவர்கொலை வேழப்
படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
றோமற்றவ் வான்சுனையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பருங் கண் கவர் கொலை வேழப் படையோன் பட பரிய கண்ணையும் விரும்பப்படுங் கொலையையுமுடைய கருப்புச் சிலையாகிய படையையுடையவன் மாள; படர் தீத் தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை வாய் செல்லுந் தீயைத்தருங் கண்ணையுடைத்தாகிய நுதலையுடைய தில்லையம் பலத்தானது பெரிய மால்வரையிடத்து; அவ் வான் சுனை நீயாடிய அப்பெரிய சுனை; கருங்கண் சிவப்ப கனிவாய் விளர்ப்ப கரியகண் சிவப்பத் தொண்டைக் கனிபோலும் வாய் விளர்ப்ப; அளி பின்வரும் கண் ஆர் கள் மலை மலர் சூட்டவற்றோ அளிகள் பின்றொடர்ந்து வருங் கண்ணிற்கு ஆருங் கள்ளையுடைய மலைமலரைச் சூட்ட வற்றோ? சொல்வாயாக எ - று.
பருங்கண்ணென மெலிந்துநின்றது. தடமும் மாலும் பெருமை யாகலின் மிகப்பெரியவென்பது விளங்கும். தடம் தாழ்வரை யெனினுமமையும். வருங்கண் வரைமலரென்பது பாடமாயின், அளி தொடரு மிடத்தையுடைய வரைமலரென்க. இடமென்றது பூவினேக தேசத்தை. இன்னும் வரைமலரென்பது ஒருபூவை முழுதுஞ்சூட்டினா னாயின் தலைவி அதனையறிந்து பேணவேண்டி வாங்குதலைக் கூடும். ஆகையால் இவளிஃதறியாமற் றோழியறிவது பயனாக ஒருபூவின் முறித்ததொருசிறிய விதழைச் சூட்டினான்; ஆகையான் வரைந்தமலரென்றாளாம். மற்று: அசைநிலை. இவை நான்கும் நாணநாட்டம். மெய்ப்பாடு: நகை. பயன்: கரவுநாடி யுணர்தல்.
இவை முன்னுற வுணர்தலின் விகற்பம். இவைநான்கும் பெருந்திணைப்பாற்படும். என்னை அகத்தமிழ்ச் சிதைவாகலான், என்னை, ``கைக்கிளை பெருந்திணை யகப்புற மாகும்``. இவற்றுள் கைக்கிளையென்பது ஒருதலைக்காமம். பெருந் திணை யென்பது பொருந்தாக் காமம். என்னை,
ஒப்பில் கூட்டமு மூத்தோர் முயக்கமுஞ்
செப்பிய வகத்தமிழ்ச் சிதைவும் பெருந்திணை
என்பவாகலின். நாணநாடலாகாமை: இவள் பெருநாணினளாத லான், தான் மறைந்து செய்த காரியத்தைப் பிறரறியின் இறந்துபடும்; ஆதலான், நாணநாட்டமாகாது. நடுங்கநாட்டமு மாகாது, இருவர்க்கும் உயிரொன்றாகலான் இறந்துபடுமாதலின். ஆதலால், அகத்தமிழிற்கு இவை வழுவாயின. இனி இதற்கு வழுவமைதி ``நன்னிலைநாணம்`` என்பதனானறிக. 70

குறிப்புரை :

8.4 புணர்ச்சியுரைத்தல்
புணர்ச்சி யுரைத்தல் என்பது சுனையாடல் கூறி நகையாடா நின்ற தோழி, அதுகிடக்க நீயாடிய அப்பெரிய சுனைதான் கண் சிவப்ப வாய்விளர்ப்ப அளிதொடரும் வரைமலரைச் சூட்டவற்றோ சொல்வாயாகவெனப் புணர்ச்சி உரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.4. மணக்குறி நோக்கிப்
புணர்ச்சி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

காகத் திருகண்ணிற் கொன்றே
மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம்
யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி
லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
வருமின்பத் துன்பங்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
யாவையும் ஆம் ஏகத்து ஒருவன் எல்லாப் பொருள்களுமாய் விரியும் ஒன்றையுடைய வொருவன்; இரும் பொழில் அம்பலவன் பெரிய பொழில்களாற் சூழப்பட்ட அம்பலத்தையுடையான்; மலையில் தோகைக்கும் தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் ஒன்றாய் வரும் அவனது மலையில் இத் தோகைக்கும் இத்தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் பொதுவாய் வாராநின்றன; அதனால் - காகத்து இரு கண்ணிற்கு மணி ஒன்றே கலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஓருயிர் யாம் இன்று கண்டனம் - காகத்தினிரண்டு கண்ணிற்கும் மணியொன்றே கலந்தாற்போல இருவர் யாக்கையுள் ஓருயிரை யாமின்று கண்டேம் எ - று.
யாவையுமாமேகம் - பராசத்தி. அம்பலவன் மலையில் இன்று யாங்கண்டன மென்று கூட்டி, வேறோரிடத்து வேெறாரு காலத்து வேறொருவர் இது கண்டறிவாரில்லையென்பது படவுரைப்பினு மமையும். கலந்தாரிருவரென்பது பாடமாயின், `காகத்திருகண்ணிற் கொன்றே மணி` யென்பதனை எடுத்துக்காட்டாக வுரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: மதியுடம்படுதல். ; 71

குறிப்புரை :

8.5 மதியுடம்படுதல்
மதியுடம் படுதல் என்பது பலபடியும் நாணநாடிக் கூட்ட முண்மையுணர்ந் தோழி இம்மலையிடத்து இவ்விருவர்க்கும் இன்பத் துன்பங்கள் பொதுவாய் வாராநின்றன; அதனால் இவ்விருவர்க்கும் உயிரொன்றேயென வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
8.5. அயில்வேற் கண்ணியொ டாடவன்றனக் குயிரொன்றென
மயிலியற் றோழி மதியுடம் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆவா விருவ ரறியா
அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
வாறின்றொ ராண்டகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இருவர் அறியா அடி மூவாயிரவர் வணங்கத் தில்லை அம்பலத்து நின்றோனை உன்னாரின் அயனும் அரியு மாகிய இருவரறியாத அடியை மூவாயிரவரந்தணர் வணங்கத் தில்லையம்பலத்து எளிவந்து நின்றவனை நினையாதாரைப்போல வருந்த; முன்னித் தீ வாய் உழுவை கிழித்தது எதிர்ப்பட்டுத் தன் கொடியவாயை உழுவை அங்காந்தது, அங்காப்ப; சிறிதே பிழைப் பித்து இன்று ஒர் ஆண்டகை மணிவேல் பணி கொண்ட ஆறு அதனைச் சிறிதே தப்புவித்து இன்றோராண்டகை மணியையுடைய வேலைப் பணிகொண்டவாறென் எ - று.
அயனும் அரியுந் தில்லையம்பலத்திற்சென்று வணங்கு மாறறிந் திலரென்னுங் கருத்தினராகலின், ஆவாவென்பது அருளின்கட் குறிப்பு. இரக்கத்தின்கட்குறிப்பாய்த் தீவாயுழுவை கிழித்த தென்பதனை நோக்கி நின்றதெனினும் அமையும். வருந்தஎன ஒருசொல் வருவித்துரைக்கப்பட்டது. கொடிய வுள்ளத்தராகலின் உன்னாதாரைப் புலிக்குவமையாக வுரைப்பினு மமையும். தீவாயை யுடைய வுழுவை அவனைக் கிழித்ததெனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறப்பட்டதெனினு மமையும். அந்தோவென்பது: இரக்கத்தின்கட்குறிப்பு. இறுதிக்கண் ஆவா வென்பது: வியப்பின்கட் குறிப்பு. இதனுள் தலைமகளை நடுங்க நாடியதெவ்வாறெனின், தன்கொடிய வாயைப் புலி அங்காந்தது, உழுவையினது தீவாயை வேறொன்று கிழித்தது. உழுவையினது தீவாய் பிறிதொன்றனைக் கிழித்தது என இம்மூன்றுபொருளும் படுகையான், இது நடுங்க நாட்டமாயிற்று. என்னை, தலைமகள் இங்ஙனம் நடுங்கியாராயும் வண்ணம் தோழி நாடுகையான். தீவாயுழுவை கிழித்ததென்ற இம்மூன்று பொருளும் வினா. இங்ஙனந் தோழியுரைப்பத் தலைமகள் நாடி நடுங்காநிற்கக்கண்டு, ஓராண்டகை வேலைப் பணிகொண்டவா றென்னென நடுக்கந் தீர்த்ததாயிற்று. இது கரவுநாடுதல். அஃதாவது வெளிப்படச் சொல்லுஞ் சொல்லன்றிப் பிறிதொன்றன் மேல்வைத்துச் சொல்லுதல். இதுவும் பெருந்திணைப்பாற்படும். மெய்ப்பாடு: நகை. பயன்: நடுங்கநாடிக் கரவுநாடியுணர்தல்.
நிருத்தம்பயின்றவன் (62) என்பது தொட்டு மெய்யேயிவற் கில்லை (66) என்பதன்காறும் வர ஐந்துபாட்டினும் முன்னுறவு உணர்தலையும் ஐயுறவாக்கி, இருவருமுள்வழி யவன்வரவுணர் வினைத் துணிந்துணர்வாக்கினார். மைவார் (67) என்பது தொட்டு இதன் காறும்வர இவையாறினும் முன்னுறவுணர்தல் குறையுற வுணர்தல் இருவருமுள்வழியவன்வரவுணர்தலென்னும் மூன்றனை யுந் துணிந்துணர்வாக்கினார். ஈண்டிவ்விகற்பங் கண்டுகொள்க. 72

குறிப்புரை :

9.1 நுடங்கிடைப் பாங்கி
நடுங்க நாடியது.

பண் :

பாடல் எண் : 1

பொருளா வெனைப்புகுந் தாண்டு
புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
தழியுமென் னாருயிரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புகுந்து என்னைப் பொருளா ஆண்டு தானேவந்து புகுந்து என்னைப் பொருளாக மதித்தாண்டு; புரந்தரன் மால் அயன்பால் இருளாய் இருக்கும் ஒளி நின்றசிற்றம்பலம் எனல் ஆம் இந்திரன் மால் அயனென்னும் அவர்களிடத்து இருளா யிருக்கின்ற ஒளி தங்கிய சிற்றம்பலமென்று சொல்லத்தகும்; சுருள் ஆர் கருங் குழல் வெள் நகைச் செவ்வாய்த் துடி இடையீர் சுருளார்ந்த கரிய குழலினையும் வெள்ளிய நகையினையுஞ் செய்ய வாயினையு முடைய துடியிடையீர்; அருளாதொழியின் என் ஆருயிர் ஒழியாது அழியும் நீயிர் அருளாதொழியின் எனதாருயிர் தப்பாமலழியும்; அதனான் அருளத்தகும் எ - று.
தொகையின்மையிற் பாலென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. சிற்றம்பலம் துடியிடையார்க்குவமை. மடற்றிறங் கூறுகின்றானாகலின், அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறுதல் கூறினான். சொல்லாற்றாது - சொல்லுதற்கும் ஆற்றாது. மெய்ப் பாடு: அழுகை, பயன்: ஆற்றாமையுணர்த்துதல். 73

குறிப்புரை :

10.1 ஆற்றாதுரைத்தல்
ஆற்றாதுரைத்தல் என்பது தலைமகண்மேன் மடற்றிறங் கூறுகின்றானாகலின் அதற்கியைவுபட அவ்விருவருழைச் சென்று நின்று, நீயிர் அருளாமையின் என்னுயிர் அழியாநின்றது; இதனை அறிமினெனத் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.1. மல்லற்றிரள் வரைத்தோளவன்
சொல்லாற்றாது சொல்லியது.

பண் :

பாடல் எண் : 2

காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
காய் சினவேல் அன்ன மின் இயல் கண்வலை காய்சினத்தையுடைய வேல்போலும் ஒளியியலுங் கண்ணகிய வலையை; கலந்து வீசினபோது உள்ளம் மீன் இழந்தார் மகளிர் கலந்து வீசினபோது அவ்வலைப்படுதலான் உள்ளமாகிய மீனையிழந்த வர்கள்; வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து பெரிய தென்புலியூர்க்கணுளனாகிய ஈசனுடைய நீற்றையும் எருக்கம்பூவையும் அணிந்து; ஓர் கிழி பிடித்து - ஒரு கிழியைக் கையிற்பிடித்து; பாய் சின மா எனப் பனை மடல் சீறூர் ஏறுவர் பாய வல்ல சினத்தையுடைய மாவெனப் பனைமடலைச் சீறூர்க்கணேறுவர், தம்முள்ளம் பெறுதற்கு வேறுபாய மில்லாதவிடத்து எ - று.
மின்னியல்வேலென்று கூட்டினு மமையும். இன்: அல்வழிச் சாரியை, கண்ணென்வலையென்பதூஉம் பாடம். மகளிரென ஒரு சொல் வருவியாது கருவி கருத்தாவாக உரைப்பினுமமையும். உள்ளமிழந்தவர் உள்ளம்பெறுமளவும் தம்வய மின்றி மடலின் வயத்தராய் நிற்றலால் கருவி கருத்தாவாகக் கொள்க. சாந்தும் எருக்கு மென இரண்டாகலின் ஈசனவெனப் பன்மையுருபு கொடுத்தார். பாய்சினமென்புழிச் சினம் உள்ளமிகுதி. உய்த்துரைத்தது குறிப் பாலுரைத்தது. 74

குறிப்புரை :

10.2 உலகின்மேல் வைத்துரைத்தல்
உலகின்மேல் வைத்துரைத்தல் என்பது ஆற்றாமைகூறி அது வழியாக நின்று, ஆடவர் தம்முள்ளமாகிய மீன் மகளிரது கண்வலைப்பட்டால் அதனைப் பெறுதற்கு வேறுபாயமில்லாத விடத்து மடலூர்ந்தும் அதனைப் பெறுவரென உலகின்மேல் வைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.2. புலவேலண்ணல் புனைமடலேற்
றுலகின்மேல்வைத் துய்த்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

விண்ணை மடங்க விரிநீர்
பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
பண்ணிற்றொர் பெண்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விண் மடங்க விண் மடங்கவும்; விரி நீர் பரந்து கரப்ப விரிநீர் பரத்தலான் வெற்பொளிப்பவும்; மண் மடங்க வரும் ஒருகாலத்தும் மன்னிநிற்கும் அண்ணல் - மண் மடங்கவும் வரும் ஊழியிறுதியாகிய ஒருகாலத்தின்கண்ணும் நிலைபெற்றுநிற்கும் அண்ணல்; மடங்கல் அதள் அம்பலவன் சிங்கத்தினது தோலை யுடைய அம்பலவன்; அருள் இலர் போல் பெண்ணை மடல்மிசை யான் வரப் பண்ணிற்று ஒர் பெண் கொடி அவனதருளில்லாதாரைப் போலப் பிறரிகழப் பனைமடன்மேல் யான் வரும் வண்ணம் அறிவின்மையைச் செய்தது ஒருபெண்கொடி எ - று.
விண்ணை மண்ணை என்புழி ஐகாரம்: அசைநிலை. மடங் குதல் தத்தங்காரணங்களினொடுங்குதல். மடங்கல் புலியெனினு மமையும். மானம் - கொண்டாட்டம்; வேலை யுடையவனது மானமாகிய குணம் வேன் மேலேற்றப் பட்ட தெனினுமமையும். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: இளிவரல். பயன்: ஆற்றாமை யுணர்த்துதல். 75

குறிப்புரை :

10.3 தன்துணிபுரைத்தல்
தன்துணிபுரைத்தல் என்பது முன்னுலகின்மேல் வைத் துணர்த்தி அதுவழியாக நின்று, என்னையும் ஒருபெண் கொடி பிறரிகழ மடலேறப்பண்ணாநின்றதென முன்னிலைப்புற மொழி யாகத் தன்றுணிபு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.3. மானவேலவன் மடன்மாமிசை
யானுமேறுவ னென்னவுரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

கழிகின்ற வென்னையும் நின்றநின்
கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
தெருவிடைப் போதுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கழிகின்ற என்னையும் கழியாநின்ற என்னையும்; நின்ற நின் கார் மயில் தன்னையும் யானத்தன்மை யனாகவுந் தன்றன்மையளாய்நின்ற நின்னுடைய கார் மயிறன்னை யும்; கிழி ஒன்ற நாடி எழுதி கிழிக்கட்பொருந்த ஆராய்ந்தெழுதி; யான் கைக்கொண்டு யான் அதனைக் கையிற் கொண்டு; என் பிறவி இன்று கெட்டு அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை என் பிறவியை இன்றுகெட்டழியாநின்றதாகச் செய்த தாளையுடைய. அம்பலவனது கயிலையின்; அம் தேன் பொழிகின்ற சாரல் நும் சீறூர்த் தெருவிடைப் போதுவன் அழகிய தேன்பொழியாநின்ற சாரற் கணுண்டாகிய நுமது சீரூர்த்தெருவின்கட்டிரிவேன்; பின்வருவது காண் எ - று.
தனக்கு அவளயலென்னுங் கருத்தினனாய், நின்கார் மயிலென் றான். என்னையும் நின் கார்மயிறன்னையும் மடலிடத்தெழுது வேனென்றதென்னை, கார்மயிலை யெழுதுவதன்றித் தன்னையு மெழுதுமோவெனின், மடலெழுதிக் கையிற்கொண்டால் உரையாடுகையின்றி இவனும் ஓவியமாகலின், மடலின்றலையிலே தன்னூரையுந் தன்பேரையும் அவளூரையும் அவள்பேரையும் எழுதுகையால் என்னையுமென்றான். கார்மயில் - கார்காலத்து மயில். அழிகின்றதென நிகழ்காலத்தாற் கூறினார், பிறத்தற்குக் காரணமாகிய மலங்கெட்டும் யாக்கைக்குக் காரணமாகிய மலத்துடனே வினை நின்றமையின். மெய்ப்பாடும் பயனும் அவை. 76

குறிப்புரை :

10.4 மடலேறும் வகையுரைத்தல்
மடலேறும் வகையுரைத்தல் என்பது துணிபுகூறவும் பெருநாணினளாதலிற் சொல்லாடாத தோழிக்கு வெளிப்படத் தான் நாணிழந்தமைதோன்ற நின்று, யான் நாளை நின்னூர்த்தெருவே மடலுங்கொண்டு வருவேன்; பின்வருவது காணெனத் தலைமகன் தான் மடலேறும்வகை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.4. அடல்வேலவ னழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை
நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை
மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும்
முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
தோமன்ன இன்னருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நடன் - கூத்தன்; நாம் வணங்கும் தொல்லோன் நாம் வணங்கும் பழையோன்; நான்முகன் மால் எல்லை அறியாக் கடன் ஆம் உருவத்து அரன் நான்முகனும் மாலும் முடியும் அடியுமாகிய எல்லைகளை அறியாத இயல்பாகிய வடிவையுடைய அரன்; தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை அவனது தில்லைக்கணுண்டாகிய வளத்தையுடைய கண்ணிற்கார்ந்த பெண்ணைக்கண்; உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து மடல் நாம் புனைதரின் உடனாகும் பெடை யோடும் ஒள்ளியசேவலையும் முட்டையையுங் காவலையழித்து மடலை நாம் பண்ணின்; மன்ன - மன்னனே; இன் அருள் யார் கண்ணது இனிய அருள் இவ்வுலகத்தில் யார்கண்ணதாம்? எ - று. அறியாவுருவமென வியையும். அறியாதஅக்கடனுளதாமுருவ மெனினுமமையும். மடல் விலக்கித் தழீஇக் கொள்கின்றாளாதலின், நாமென உளப்படுத்துக் கூறினாள். நின்னருளென்பது பாடமாயின், யார் கண்ணருளுவை யென்றுரைக்க. அண்ணல்: முன்னிலைக் கண் வந்தது. 77

குறிப்புரை :

10.5 அருளாலரிதெனவிலக்கல்
அருளாலரிதென விலக்கல் என்பது தலைமகன் வெளிப்பட நின்று மடலேறுவேனென்று கூறக்கேட்ட தோழி இனியிவன் மடலேறவுங்கூடுமென உட்கொண்டு, தன்னிடத்து நாணினை விட்டுவந்து, எதிர்நின்று, நீர்மடலேறினால் உம்முடைய அருள் யாரிடத்ததாமென்று அவனதருளை யெடுத்துக்கூறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
10.5. அடல்வேலண்ண லருளுடைமையின்
மடலேற்றுனக் கரிதென்றது.

பண் :

பாடல் எண் : 6

அடிச்சந்த மால்கண் டிலாதன
காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள
வோநும் பரிசகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சந்தம் மால் கண்டிலாதன அடி காட்டி வந்து ஆண்டு கொண்டு மறையும் மாலுங் கண்டறியாதனவாகிய அடிகளை எனக்குக் காட்டித் தானே வந்தாண்டு கொண்டு; என் முடிச்சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் அவ்வடிகளை என்முடிக்கு நிறத்தையுடைய பெரிய மலராகச் செய்யும் முன்னோனது புலியூரையொக்கும்; கடிச்சந்த யாழ் கற்ற மென்மொழி சிறந்த நிறத்தையுடைய யாழோசையின் றன்மையைக் கற்ற மென்மொழியையுடைய; கன்னி அன நடைக்கு கன்னியது அன்னத்தி னடைபோலு நடைக்கு; படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்து படிச்சந்தமாகப் பண்ணப்படும் படங்கள் உளவோ நுமது சித்திரசாலையின்கண் எ - று.
கடிச்சந்தயாழ்கற்ற மென்மொழியென்பதற்குச் சிறந்த வோசையையுடைய யாழ்வந்தினிதாக வொலித்தலைக்கற்ற மென்மொழி யென்றுரைப்பாருமுளர். படிச்சந்தமென்பது ஒன்றன் வடிவை யுடைத்தாய் அதுவென்றே கருதப்படுமியல்பையுடையது. படிச்சந்த மென்பது: பிரதிச்சந்தமென்னும் வடமொழிச் சிதைவு. 78

குறிப்புரை :

10.6 மொழிநடை யெழுதலரிதென விலக்கல் மொழிநடையெழுதலரிதென விலக்கல் என்பது அரு ளெடுத்து விலக்கவும் தன்வழி நில்லாமைகண்டு அவன் வழி யொழுகி விலக்குவாளாக, நுமதருள்கிடக்க மடலேறுவார் மட லேறுதல் மடலேறப்படுவாருருவெழுதிக் கொண்டன்றே; நுமக்கு அவள் மொழி நடையெழுதல் முடியாதாகலின் நீயிர் மடலேறுமா றென்னோவென விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
10.6. அவயவ மரிதின் அண்ணல் தீட்டினும்
இவையிவை தீட்ட லியலா தென்றது.

பண் :

பாடல் எண் : 7

யாழு மெழுதி யெழின்முத்
தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
டேற்கொண்டு போதுகவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
யாழும் எழுதி மொழியாக மொழியோ டொக்கும் ஓசையையுடைய யாழையுமெழுதி; எழில் முத்தும் எழுதி முறுவலாக எழிலையுடைய முத்துக்களையுமெழுதி ; இருளில் மென்பூச் சூழும் எழுதி குழலாக இருளின்கண் மெல்லிய பூவானி யன்ற சூழையு மெழுதி; ஒரு தொண்டையும் தீட்டி - வாயாக ஒரு தொண்டைக் கனியையு மெழுதி; இள மாம் போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கண்ணாக இளையதாகிய மாவடுவகிரையும் எழுதப்பட்டதோர் கொம்ப ருண்டாயின்; கொண்டு போதுக அதனைக்கொண்டு எம்மூர்க்கண் மடலேற வாரும் எ - று.
என் தொல் பிறவி ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இளமாம் போழும் என்னுடைய பழையவாகிய பிறவிகளேழையும் கூற்றுவன் தன் கணக்கிலெழுதாத வண்ணஞ் சிதைத்தவனது புலியூரிளமாம் போழுமெனக்கூட்டுக.
முத்துமென்னு மும்மை விகார வகையாற் றொக்குநின்றது. சூழென்றது சூழ்ந்த மாலையை. செய்தெனெச்சங்கள் எழுதிற்றென் னுந்தொழிற்பெயரின் எழுதுதலொடுமுடிந்தன. எழுதிற்றென்பது செயப்படுபொருளைச் செய்தது போலக் கூறிநின்றது. வினை யெச்சங்களும் அவ்வாறு நின்றவெனினு மமையும். மொழியும் இவளதாகலின், அவயவமென்றாள். இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: நகை. பயன்: மடல்விலக்குதல். 79

குறிப்புரை :

10.7 அவயவமெழுத லரிதென விலக்கல்
அவயவமெழுதலரிதென விலக்கல் என்பது அவளது மொழி நடை கிடக்க, இவைதாமெழுத முடியுமோ? முடியுமாயின் யான்சொன்ன படியே தப்பாமலெழுதிக்கொண்டு வந்தேறு மென்று அவளதவயவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.7. அவயவ மானவை
யிவையிவை யென்றது.

பண் :

பாடல் எண் : 8

ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
செய்க அறிந்தனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உயர் பெண்ணைத் திண் மடல் ஊர்வாய் உயர்ந்த பெண்ணையினது திண்ணிய மடலையூர்வாய்; ஒழிவாய் அன்றியொழிவாய்; சீர் வாய் சிலம்ப அழகுவாய்த்த சிலம்பை யுடையாய்; நின் குறிப்புத் திருத்த இருந்திலம் நின்கருத்தை யாந்திருத்த விருந்தேமல்லேம்; ஈசர் தில்லைக் கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி ஈசரது தில்லைக்கணுளளாகிய கருமைவாய்த்த குழலையுடையாட்கு உனது விருப்பத்தைச்சொல்லி; கற்பித்துக் கண்டால் இதற்கு அவளுடம்படும் வண்ணஞ் சிலவற்றைக் கற்பித்துப் பார்த்தால்; வாய்தரின் ஆர் அறிவார் இடந்தருமாயினும் யாரறிவார்; பின்னை அறிந்தன செய்க இடந்தாராளாயிற் பின் நீயறிந்தவற்றைச் செய்வாயாக எ - று.
கார்போலுங் குழலெனினு மமையும். வாய்தரினென்பதற்கு வாய்ப்பினெனினுமமையும். பின்னைச் செய்கவென்றது நீகுறித்தது செய்வாய் ஆயினும் என் குறிப்பிதுவென்றவாறு.80

குறிப்புரை :

10.8 உடம்படாதுவிலக்கல்
உடம்படாது விலக்கல் என்பது எழுதலாகாமை கூறிக் காட்டி, அதுகிடக்க, நும்மை யாம் விலக்குகின்றே மல்லேம்; யான் சென்று அவணினைவறிந்து வந்தாற் பின்னை நீயிர் வேண்டிற்றைச் செய்யும்; அவ்வளவும் நீயிர் வருந்தாதொழியு மெனத் தானுடம்படாது விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
10.8. அடுபடை யண்ணல் அழிதுய ரொழிகென
மடநடைத் தோழி மடல்விலக் கியது.

பண் :

பாடல் எண் : 9

பைந்நா ணரவன் படுகடல்
வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
லாட்கென்க ணின்னருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பை நாண் அரவன் பையையுடைய அரவாகிய நாணையுடையான்; படு கடல்வாய் படு நஞ்சு அமுது ஆம் மை நாண் மணிகண்டன் ஒலிக்குங் கடலிடத்துப்பட்ட நஞ்சம் அமுதாகும் மை நாணு நீலமணி போலுங் கண்டத்தையுடையான்; மன்னும் புலியூர் மணந்த பொன் அவன் மன்னும் புலியூரைப் பொருந்திய பொன் போல்வாள்; நாள் மொய் இம் முதுதிரை வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் நாட்காலத்தாடும் பெருமையையுடைய இம்முதியகடற்கண் யானழுந்தினேனாயினும் தான் என்னின் முற்பட்டழுந்தும்; மது வார் குழலாட்கு இன் அருள் இந்நாள் இது தேனையுடைய நெடிய குழலாட்கு என் கணுண்டாகிய இனிய அருள் இப்பொழுதித்தன்மைத்தாயிராநின்றது எ - று.
அமுதாமென்னும் பெயரெச்சம் கண்டமென்னு நிலப்பெயர் கொண்டது. மைந்நாணுங் கண்டமெனவியையும். மணிகண்ட னென்பது வடமொழி யிலக்கணத்தாற்றொக்குப் பின்றிரிந்து நின்றது. மொய் வலி; ஈண்டுப் பெருமைமேனின்றது. குற்றேவல் செய்வார்கட் பெரியோர்செய்யும் அருள் எக்காலத்து மொருதன்மைத்தாய் நிகழாதென்னுங் கருத்தான் இந்நாளிது வென்றாள். எனவே, தலை மகளது பெருமையுந் தன்முயற்சியது அருமையுங் கூறியவாறாயிற்று. அரா குரா வென்பன; குறுகி நின்றன. வருமென்பது: உவமைச்சொல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.81

குறிப்புரை :

10.9 உடம்பட்டு விலக்கல் உடம்பட்டு விலக்கல் என்பது உடம்படாது முன்பொதுப் பட விலக்கி முகங்கொண்டு, பின்னர்த் தன்னோடு அவளிடை வேற்றுமையின்மைகூறி, யான் நின்குறைமுடித்துத் தருவேன்; நீவருந்தவேண்டாவெனத் தோழி தானுடம்பட்டு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
10.9. அரவரு நுண்ணிடைக் குரவரு கூந்தலென்
உள்ளக் கருத்து விள்ளா ளென்றது.


பண் :

பாடல் எண் : 1

தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே
யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா
வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
வார்குழ லேந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாதே மாதே; தாது ஏய் மலர்க் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி தாதுபொருந்திய மலரையுடைய குஞ்சிகளின்கண் அழகிய சிறகையுடைய வண்டினங்கள் தண்டேனைப் பருகி; தேதே எனும் தில்லையோன் சேய் என தேதேயெனப்பாடுந் தில்லையையுடையானுடைய புதல்வனாகிய முருகவேளென்றே சொல்லும் வண்ணம்; சின வேல் ஒருவர் புனத்திடை வாளா வருவர் சினவேலையுடையாரொருவர் நம்புனத்தின்கண் வாளா பலகாலும் வாராநிற்பர்; வந்து யாதும் சொல்லார் வந்து நின்று ஒன்று முரையாடார்; மது வார்குழல் ஏந்திழையே மதுவார்ந்த குழலை யுடைய ஏந்திழாய்; செயத் தக்கது யாதே - அவரிடத்து நாஞ்செய்யத் தக்கது யாதென்றறிகின்றிலேன் எ-று.
குஞ்சி தில்லை வாழ்வார் குஞ்சி; மலரினது குஞ்சியென விரித்து அல்லியென்றுரைப்பி னுமமையும். சேயோடொத்தல் பண்பு வடிவுமுதலாயினவும், சினவேலேந்தி வரையிடத்து வருதலுமாம். வேட்டைமுதலாகிய பயன்கருதாது வருவரென்பாள், வாளா வருவரென்றாள். முகம்புகுகின்றாளாதலின், பின்னும் ஏந்திழையே யென்றாள். சேயென்புழி எண்ணேகாரந் தொக்குநின்றது; என்னை, மேலே ``புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள் கொல்`` (தி.8 கோவை பா.83) என வருதலான். யாதேயென்னு மேகாரம்: வினா. மாதே ஏந்திழையே என்புழி ஏகாரம்: விளியுருபு. அறிகுற்றவென்பது அறியவேண்டிய வென்னும் பொருட்கண் வந்த ஒரு மொழிமுடிபு. 82

குறிப்புரை :

11.1 குறிப்பறிதல்
குறிப்பறிதல் என்பது தலைமகனது குறைகூறத் துணியா நின்ற தோழி தெற்றெனக் கூறுவேனாயின் இவள் இதனை மறுக்கவுங் கூடுமென உட்கொண்டு, நம்புனத்தின்கட் சேயினது வடிவையுடையராய்ச் சினவேலேந்தி ஒருவர் பலகாலும் வாரா நின்றார்; வந்து நின்று ஒன்று சொல்லுவதுஞ் செய்கின்றிலர்; அவரிடத்து யாஞ்செய்யத்தக்க தியாதெனத் தான் அறியாதாள் போலத் தலைமகளோடு உசாவி, அவணினைவறியாநிற்றல். என்னை,
ஆங்குணர்ந் தல்லது கிழவோ டேத்துத்
தான்குறை யுறுத றோழிக் கில்லை
-இறையனாரகப்பொருள் - 8
என்பவாகலின். அதற்குச் செய்யுள்
11.1 நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்
குள்ளறி குற்ற வொள்ளிழை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன்
ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா
னொருவனித் தேம்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வரி சேர் தடங் கண்ணி வரிசேர்ந்த பெரிய கண்ணையுடையாய்; ஒருவன் மம்மர் கைம்மிக்கு ஒருவன் மயக்கங் கைம்மிக்கு; எரி சேர் தளிர் அன்ன மேனியன் எரியைச்சேர்ந்த தளிரையொக்கும் மேனியையுடையனுமாய்; ஈர்ந்தழையன் வாடாத தழையையுடையனுமாய்; இத் தேம்புனம் பிரியான் இத் தேம்புனத்தைப் பிரிகின்றிலன்; உரையான் ஒன்றுரைப்பதுஞ் செய்கின்றிலன்; புலியூர்ப் புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங் கணை வேள்கொல் என்னத் தெரியேம் அவன்றன்னைப் புலியூர்க் கணுளனாகிய புரிதலைச்சேர்ந்த சடையை யுடையோனுடைய புதல்வனோ பூவாகிய அம்பையுடைய காம வேளோவென்று யாந்துணிகின்றிலேம்; என்ன மாயம் கொலோ ஈதென்ன மாயமோ! எ - று.
அவ்வாறு இறப்பப் பெரியோன் இவ்வாறு எளிவந்தொழுகுதல் என்ன பொருத்தமுடைத்தென்னுங் கருத்தால், என்ன மாயங் கொலோவென்றாள். புலியூர்ப்புரிசேர் சடையோன் புதல்வன் கொலென்றதனால் நம்மையழிக்க வந்தானோவென்றும், பூங்கணை வேள்கொலென்றதனால் நம்மைக்காக்க வந்தானோ வென்றும் கூறியவாறாயிற்று. புரிசேர்சடையோன் புதல்வனென்றதனை மடற்குறிப்பென்றுணர்க. கொல்: ஐயம். மேனியன் தழைய னென்பன: வினையெச்சங்கள். மென்மொழி மொழிந்தது - மென் மொழியான் மொழிந்தது. 83

குறிப்புரை :

11.2 மென்மொழியாற்கூறல்
மென்மொழியாற் கூறல் என்பது நினைவறிந்து முகங் கொண்டு அதுவழியாகநின்று, ஒருபெரியோன் வாடிய மேனியனும் வாடாத தழையனுமாய் நம்புனத்தை விட்டுப் பேர்வதுஞ் செய்கின் றிலன்; தன்குறை இன்னதென்று வெளிப்படச் சொல்லுவதுஞ் செய்கின் றிலன்; இஃதென்ன மாயங்கொல்லோ அறிகின்றிலேனெனத் தோழி தான் அதற்கு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.2 ஒளிருறு வேலவன் றளர்வுறு கின்றமை
இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 3

நீகண் டனையெனின் வாழலை
நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ
ரலவன்றன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்
கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின்
றானப் பெருந்தகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நேர் இழை நேரிழாய்; அம்பலத்தான் சேய் கண்டனையன் அம்பலத்தான் புதல்வனைக்கண்டாற் போன்று இருக்கும் ஒருவன்; ஆங்கு ஒர் அலவன் தன் சீர்ப் பெடையின் வாய் வண்டு அனையது ஒர் நாவல் கனி சென்று நனி நல்கக் கண்டு அவ்விடத்து ஓரலவன் தனதழகையுடைய பெடையின் வாயின்கண் வண்டனையதொரு நாவற்கனியைச்சென்று மிகவுங் கொடுப்ப அதனைக்கண்டு; அப் பெருந்தகை பேய் கண்டனையது ஒன்று ஆகிநின்றான் அப்பெருந்தகை பேயாற் காணப்பட்டாற் போல்வ தோர் வேறுபாட்டை யுடையனாகி நின்றான்; நீ கண்டனை எனின் வாழலை அந்நிலையை நீகண்டாயாயின் உயிர் வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலின், அதனைக் கண்டும் ஆற்றியுளே னாயினேன் எ - று.
பேய்கண்டனைய தென்பதற்குப் பேயைக் கண்டாற்போல் வதோர் வேறுபாடென்றுரைப்பினு மமையும். பேய்கண்டனைய தொன்றையுடையனாயென்னாது ஒற்றுமைநயம் பற்றி ஒன்றாகி யென்றாள். நாவற்கனியை நனிநல்கக்கண்டு தன்னுணர்வொழியப் போயினான் இன்று வந்திலனென்னாது பேய்கண்டனையதொன்றாகி நின்றானென்று கூறினமையான் மென்மொழியும், சேய்கண்டனைய னென்றதனால் வன்மொழியும் விரவியதாயிற்று. மிகுத்தல் - ஆற்றா மைமிகுத்தல். இவை மூன்றற்கும் மெய்ப் பாடு: இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : தலைமகளை மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல். 9; 84

குறிப்புரை :

11.3 விரவிக்கூறல்
விரவிக் கூறல் என்பது வன்மொழியாற் கூறின் மனமெலியு மென்றஞ்சி, ஓரலவன் தன்பெடைக்கு நாவற்கனியை நல்கக் கண்டு ஒருபெருந்தகை பேய்கண்டாற்போல நின்றான்; அந்நிலைமையை நீ கண்டாயாயின் உயிர்வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலான் ஆற்றியுளேனாய்ப் போந்தேனென மென்மொழியோடு சிறிது வன்மொழிபடக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.3 வன்மொழி யின்மனம் மெலிவ தஞ்சி
மென்மொழி விரவி மிகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

சங்கந் தருமுத்தி யாம்பெற
வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி
னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
வானவன் நேர்வருமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏந்திழை - ஏந்திழாய்; பல் மா வங்கம் மலி தொல்லைக் கலி நீர் தில்லை வானவன் நேர் வரும் இத்தன் மைத்தாகலிற் பலவாய்ப் பெரியவாகிய மரக்கலங்கள் மிகப் பெற்ற பழையதாகிய கடல் தில்லைவானவற்கொப்பாம் எ - று.
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி சங்குதரு முத்துக்களை யாம்பெறப் பெரிய கழிகளைத் தான் பொருந்தி; பொங்கும் புனற் கங்கை தாங்கி பொங்கும் புனலையுடைய கங்கையைத் தாங்கி; பொலி கலிப் பாறு உலவு துங்கம் மலிதலை ஏந்தலின் பொலிந்த ஆரவாரத்தையுடைய பாறாகிய மரக்கலங்களி யங்குந் திரைகளின் மிகுதியை யுடைத்தாகலின், எனக் கடலிற்கேற் பவும்.
சங்கம் தரும் முத்தி யாம் பெற வான் கழி தான் கெழுமி திருவடிக்கணுண்டாகிய பற்றுத்தரும் முத்தியை யாம் பெறும் வண்ணம் எல்லாப்பொருளையும் அகப்படுத்து நிற்கும் ஆகாயத்தையுங் கடந்து நின்ற தான் ஒரு வடிவு கொண்டுவந்து பொருந்தி; பொங்கும் புனற் கங்கை தாங்கி பொங்கும் புனலையுடைய கங்கையைச் சூடி; பொலி கலிப்பாறு உலவு துங்கம் மலி தலை ஏந்தலின் மிக்க ஆரவாரத்தை யுடைய பாறாகிய புட்கள் சூழாநின்ற உயர்வுமிக்க தலையோட்டை யேந்துதலின், எனத் தில்லைவானவற் கேற்பவும் உரைக்க.
வான்கழி சிவலோக மெனினுமமையும். குறைநயப் பாற்றலைமகனிலைமை கேட்ட தலைமகள் பெருநாணினளாகலின், மறுமொழிகொடாது பிறிதொன்று கூறியவாறு. ஒருசொற்றொடர் இருபொருட்குச் சிலேடை யாயினவாறுபோலத் தோழிக்கும் ஓர்ந்துணரப்படும். ஓர்ந்துணர்தலாவது இவ்வொழுக்கங் கள வொழுக்கமாகையாலும், தலைமகள் பெருநாணினளாகையாலும், முன்றோழியாற் கூறப்பட்ட கூற்றுகட்கு வெளிப்படையாக மறுமொழி கொடாது, ஓர்ந்துகூட்டினால் மறுமொழியாம்படி கடலின் மேல் வைத்துக் கூறினாள். என்னை, முன்னர் நீ புரிசேர்சடையோன் புதல்வ னென்றும், பூங்கணைவேளென்றும் உயர்த்துக் கூறிய வெல்லாம் அவனுக்குரிய, அங்ஙனம் பெரியவன் தன்மாட்டுண்டான புணர்ச்சி யான பேரின்பத்தை நாம்பெறுகை காரணமாக இங்ஙன மெளிவந்து உன்னைவந்து சேர்ந்தான்; அஃதென்போலவெனின், பெறுதற்கரிய சங்கு தருகிற முத்தை நாம் பெறுவான் எளிதாகக் கடல் பெரிய கழியை வந்து பொருந்தினாற்போல, இனி உனக்கு வேண்டியது செய் வாயாகவென மறுமொழியாயிற்று. மெய்ப்பாடு: மருட்கை. தோழி சொன்ன குறையறியாள் போறலிற் பயன்: அறியாள்போறல். 85

குறிப்புரை :

11.4 அறியாள் போறல் அறியாள் போறல் என்பது பேய்கண்டாற்போல நின்றா னெனத் தலைமகனிலைமைகேட்ட தலைமகள் பெருநாணின ளாதலின் இதனையறியாதாளைப்போல, இஃதொரு கடல்வடி விருந்தவாறு காணாயெனத் தானொன்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.4. அறியாள் போன்று
குறியாள் கூறியது.

பண் :

பாடல் எண் : 5

புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புரம் கடந்தான் அடி காண்பான் புரங்களைக் கடந்தவனது அடிகளைக் காணவேண்டி; புவி விண்டு புக்கு அறியாது இரங்கிடு எந்தாய் என்று இரப்ப நெறி யல்லா நெறியான் நிலத்தைப் பிளந்துகொண்டு புக்குக் காணாது பின் வழிபட்டு நின்று எந்தாய் அருளவேண்டு மென்றிரப்ப; தன்ஈரடிக்கு என் இரண்டு கரங்கள் தந்தான் ஒன்று காட்ட தன்னுடைய இரண்டு திருவடிகளையுந் தொழுதற்கு என்னுடைய இரண்டு கரங்களையுந் தந்தவனாகிய அவன் சிறிதிரங்கி ஒரு திருவடியைக் காட்ட; மற்று ஆங்கதும் காட்டிடு என்று தில்லை அம்பல முன்றில் அம் மாயவன் வரம் கிடந்தான் மற்றதனையுங் காட்டிடல் வேண்டுமென்று தில்லையம்பல முற்றத்தின்கண் முன்னர் அவ்வாறு யானென்னுஞ் செருக்காற் காணலுற்ற மாயவன் வரங்கிடந்தாற்போலும் எ - று.
விண்டென்பதற்கு (தி.8 கோவை பா.24) முன்னுரைத்ததே யுரைக்க. மாயவன் முதலாயினார்க்கு அவ்வாறரியவாயினும் எம்மனோர்க்கு இவ்வாறெளிவந்தன வென்னுங் கருத்தால், தன்னடிக் கென்னிரண்டு கரங்கடந்தா னென்றார்.
ஆங்கதென்பது ஒருசொல். இன்னும் வரங்கிடக்கிறா னாகலின், முன்கண்டது ஒன்றுபோலுமென்பது கருத்து. புரங்கடந் தானடிகளைக் காணுமாறு வழிபட்டுக் காண்கையாவது அன்னத் திற்குத் தாமரையும், பன்றிக்குக் காடுமாதலால், இவரிங்ஙனந் தத்த நிலைப்பரிசேதேடுதல்.
இவ்வாறு தேடாது தமதகங்காரத்தினான் மாறு பட்டுப் பன்றி தாமரையும் அன்னங்காடுமாகப் படர்ந்து தேடுதலாற் கண்டிலர். இது நெறியல்லா நெறியாயினவாறு. இனி இது தோழிக்குத் தலைவி மறுமொழியாகக் கூறியவாறு: என்னை? ஒன்று காட்ட வென்றது முன்னர்ப் பாங்கற்கூட்டம் பெற்றான் அதன்பின் நின்னினாய கூட்டம் பெறுகை காரணமாக நின்னிடத்து வந்திரந்து குறையுறாநின்றான்; அஃதென்போலவெனின், மற்றாங்கதுங் காட்டிடென்று மால் வரங்கிடந்தாற்போல என்றவாறு.
வஞ்சித்தல் - மறுமொழியை வெளிப்படையாகக் கொடாது பிறிதொன்றாகக் கூறுதல். இவை யிவை - முன்னர்ப்பாட்டும் இப்பாட்டும். இதனைத் தோழி கூற்றாக வுரைப்பாருமுளர்; இவையிவை யென்னு மடுக்கானும் இனி ``உள்ளப்படுவ னவுள்ளி`` எனத் தலைமகளோடு புலந்து கூறுகின்றமையானும், இவ்விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தமுடைத்தென்ப தறிக. 86

குறிப்புரை :

11.5 வஞ்சித் துரைத்தல்
வஞ்சித்துரைத்தல் என்பது நாணினாற் குறை நேரமாட்டாது வருந்தாநின்ற தலைமகள் இவளும் பெருநாணினளாதலின் என்னைக் கொண்டே சொல்லுவித்துப்பின் முடிப்பாளாயிரா நின்றாள்; இதற்கியா னொன்றுஞ் சொல்லாதொழிந்தால் எம்பெருமான் இறந்துபடுவனென உட்கொண்டு, தன்னிடத்து நாணினை விட்டு, பாங்கற்கூட்டம் பெற்றுத் தோழியிற் கூட்டத்திற்குத் துவளாநின்றா னென்பது தோன்ற, பின்னும் வெளிப்படக் கூற மாட்டாது மாயவன்மேல் வைத்து வஞ்சித்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.5. நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித் திவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

உள்ளப் படுவன வுள்ளி
யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி
யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா
அரன்தில்லை காணலர்போற்
கொள்ளப் படாது மறப்ப
தறிவிலென் கூற்றுக்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உள்ளப் படுவன உள்ளி இதன் கண் ஆராயப் படுவனவற்றை ஆராய்ந்து; உரைத் தக்கவர்க்கு உரைத்து இதனை வெளிப் படவுரைத்தற்குத் தக்க நின் காதற்றோழியர்க்குரைத்து; படிறு மெள்ளத்துணி அவரோடுஞ் சூழ்ந்து நீ படிறென்று கருதிய இதனை மெள்ளத் துணிவாய்; துணியேல் அன்றித் துணியா தொழிவாய்; கள்ளப் படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல் நெஞ்சிற் கள்ளத்தையுடைய வஞ்சகர்க்கு அருள் செய்யாத அரனது தில்லையை ஒருகாற் காணாதாரைப்போல்; அறிவிலென் கூற்றுக்கள் கொள்ளப் படாது அறிவில்லாதேன் சொல்லிய சொற்களை உள்ளத்துக் கொள்ளத்தகாது; மறப்பது - அவற்றை மறப்பாயாக; யான் வேண்டுவல் இது யான் வேண்டுவதிதுவே எ - று.
தில்லை காணலர் தோழிகூற்றிற்குவமை. கொள்ளப்படா தென்பது வினைமுதன்மேலுஞ் செயப்படு பொருண் மேலுமன்றி வினைமேனின்ற முற்றுச்சொல், ``அகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும்`` (குறள். 824) என்பதுபோல. மறப்பதென்பது: வியங்கோள். வருந்திய சொல்லின் - வருத்தத்தை வெளிப்படுக்குஞ் சொல்லான். சொல்லி யென்பதூஉம் பாடம். வகுத்துரைத்தது - வெளிப்படச் சொல்ல வேண்டுஞ் சொற் கேட்குமளவுஞ் சொல்லுஞ் சொல்.
அஃதாவது நீ சொல்லத்தகுங் காதற் றோழியர்க்கு வெளிப்படச் சொல்லென்று புலந்து கூறியது. 9; 87

குறிப்புரை :

11.6 புலந்துகூறல்
புலந்து கூறல் என்பது வெளிப்படக் கூறாது வஞ்சித்துக் கூறுதலான் என்னோடிதனை வெளிப்படக் கூறாயாயின் நின்காதற் றோழியர்க்கு வெளிப்படச்சொல்லி அவரோடு சூழ்ந்து நினக்குற்றது செய்வாய்; யான்சொன்ன அறியாமையை நின்னுள்ளத்துக் கொள்ளாது மறப்பாயாக; யான் வேண்டுவ திதுவேயெனத் தோழி தலைமகளோடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.6. திருந்திய சொல்லிற் செவ்வி பெறாது
வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

மேவியந் தோலுடுக் குந்தில்லை
யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
னெழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன
பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட
லேறக்கொல் பாவித்ததே

பொழிப்புரை :

இதன் பொருள்:
மெய்யில் மேவி அம் தோல் உடுக்கும் தில்லை யான்பொடி மெய்க்கட் பூசியது விரும்பி நல்ல தோலைச் சாத்துந் தில்லையானுடைய நீறு; கையில் ஓவியம் தோன்றும் கிழி கையின்க ணுண்டாகியது சித்திரம் விளங்குங் கிழி; நின் எழில் என்று உரை உளது - அக்கிழிதான் நின் வடிவென்று உரையுமுளதா யிருந்தது; தூவி அம் தோகை அன்னாய் தூவியையுடைய அழகிய தோகையை யொப்பாய்; என்ன பாவம் இதற்குக் காரணமாகிய தீவினை யாதென்றறியேன்! ; சொல் ஆடல் செய்யான் ஒன்று முரையாடான்; பாவி இருந்தவாற்றான் அக்கொடியோன்; அந்தோ பனை மா மடல் ஏறக்கொல் பாவித்தது அந்தோ! பனையினது பெரிய மடலேறுதற்குப் போலு நினைந்தது எ - று.
கிழியென்றது கிழிக்கணெழுதிய வடிவை. தன்குறையுறவு கண்டு உயிர்தாங்கலேனாக அதன்மேலும் மடலேறுதலையுந் துணியாநின்றானென்னுங் கருத்தால், பாவியென்றாள். எனவே, அவனாற்றாமைக்குத் தானாற்றாளாகின்றமை கூறினாளாம். கமழலந் துறைவனென்பதற்கு, கூம்பலங் கைத்தல (தி.8 கோவை.பா.11) மென்பதற் குரைத்தது உரைக்க. இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்: வலிதாகச்சொல்லிக் குறைநயப்பித்தல். 88

குறிப்புரை :

11.7 வன்மொழியாற் கூறல்
வன்மொழியாற் கூறல் என்பது புலந்து கூறாநின்ற தோழி அக்கொடியோன் அருளுறாமையான் மெய்யிற் பொடியுங் கையிற்கிழியுமாய் மடலேறத் துணியாநின்றான்; அக்கிழிதான் நின்னுடைய வடிவென்று உரையுமுளதா யிருந்தது; இனி நீயும் நினக்குற்றது செய்வாயாக; யானறியேனென வன்மொழியாற் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.7. கடலுல கறியக் கமழலந் துறைவன்
மடலே றும்மென வன்மொழி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 8

பொன்னார் சடையோன் புலியூர்
புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன்
னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என பொன்போலும் நிறைந்த சடையையுடையவனது புலியூரைப் புகழாதாரைப்போல வருந்த; புரி நோய் என்னால் அறிவு இல்லை எனக்குப் புரிந்த நோய் என்னாலறியப்படுவதில்லை; யான் ஒன்று உரைக்கிலன் ஆயினும் இதன்றிறத்து யானொன்றுரைக்க மாட்டேன்; துணை மனனே எனக்குத் துணையாகிய மனனே; வந்து அயலார் சொன்னார் எனும் இத்துரிசு துன்னாமை அயலார் சொன்னாரென்று இவள் வந்து சொல்லுகின்ற இக்குற்றம் என்கண் வாராமல்; என் ஆழ் துயர்வல்லையேல் அவராற்றாமை கூறக் கேட்டலானுண்டாகிய என தாழ்துயரை உள்ளவாறு சொல்ல வல்லையாயின்; நீர்மை இனிய வர்க்குச் சொல்லு நீர்மையையுடைய இனியவர்க்கு நீ சொல்லு வாயாக எ-று.
புரிதல் மிகுதல். அயலார் சொன்னாரென்றது ``ஓவியந் தோன்றுங்கிழி நின்னெழிலென்றுரையுளதால்`` (திரு.8 கோவை பா.88) என்றதனைப் பற்றி. அயலார் சொன்னாரென்பதற்கு யானறியாதிருப்ப அவராற்றாமையை அயலார்வந்து சொன்னா ரென்னும் இக்குற்றமென்றுரைப்பினு மமையும். இப்பொருட்கு அயலாரென்றது தோழியை நோக்கி. ஆழ்துயர் ஆழ்தற்கிடமாந் துயர்.
இவ்வாறு அவராற்றாமைக்கு ஆற்றளாய் நிற்றலின், தோழி குறைநேர்ந்தமை யுணருமென்பது பெற்றாம்; ஆகவே இது தோழிக்கு வெளிப்பட மறுமொழி கூறியவாறாயிற்று. சொல்லுநீர்மையினியவர்க் கென்றவதனால் தன்றுயரமும் வெளிப்படக்கூறி மடலால் வருங் குற்றமுந் தன்னிடத்து வாராமல் விலக்கச் சொன்னாளாயிற்று.
மெய்ப்பாடு: அச்சம். ஆற்றானெனக் கேட்டலிற் பயன்: குறைநேர்தல். 89

குறிப்புரை :

11.8 மனத்தொடுநேர்தல்
மனத்தொடு நேர்தல் என்பது ஆற்றாமையான் மடலேறத் துணியாநின்றானெனத் தோழியால் வன்மொழி கூறக்கேட்ட தலைமகள் அதற்குத் தானாற்றாளாய், தலைமகனைக் காண வேண்டித் தன் மனத்தொடு கூறி நேராநிற்றல். அதற்குச் செய்யுள்
11.8. அடல்வேலவ னாற்றானெனக்
கடலமிழ்தன்னவள் காணலுற்றது.

பண் :

பாடல் எண் : 1

தேமென் கிளவிதன் பங்கத்
திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
வோமுற்றக் கற்றதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர் தேன்போலும் மெல்லிய மொழியையுடை யாடனது கூற்றையுடைய இறைவனுறையுந் தில்லையை யொப்பீர்; பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் யான் கொணர்ந்த பூவையுடைய மெல்லிய தழையையும் அழகிய பூக்களையுங் கொள்கின்றிலீர்; தமியேன் புலம்ப அருங் கொடும்பாடுகள் ஆம் என்று செய்து உணர்விழந்த யான் றனிமைப்படச் செய்யத்தகாத பொறுத்தற்கரிய கொடுமைகளைச் செய்யத்தகு மென்று துணிந்து செய்து; நும் கண் மலர் ஆம் காமன் கணை கொண்டு அலை கொள்ளவோ முற்றக் கற்றது நுங் கண்மலராகின்ற காமன் கணை கொண்டு அருளத்தக்காரை அலைத்தலையோ முடியக் கற்கப்பட்டது, நும்மால் அருளுமாறு கற்கப்பட்ட தில்லையோ! எ-று.
பங்கத்துறையிறை யென்பதூஉம் பாடம். தமியேன் புலம்ப வென்பதற்குத் துணையிலாதேன் வருந்தவெனினுமமையும். மேற் சேட்படை கூறுகின்றமையின் அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறவு கூறினான்.மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல். அவ்வகை தோழிக்குக் குறைநேர்ந்த நேரத்துத் தலைமகன் கையுறை யோடுஞ் சென்று இவ்வகை சொன்னானென்பது. 90

குறிப்புரை :

12.1 தழைகொண்டுசேறல்
தழைகொண்டுசேறல் என்பது மேற்சேட்படை கூறத் துணியா நின்ற தோழியிடைச்சென்று, அவளது குறிப்பறிந்து, பின்னுங் குறையுறவு தோன்றநின்று, நும்மாலருளத்தக்காரை அலையாதே இத்தழை வாங்கிக்கொண்டு என்குறை முடித்தருளு வீரா மென்று, மறுத்தற்கிடமற, சந்தனத்தழைகொண்டு தலை மகன் சொல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.1 கொய்ம்மலர்க் குழலி குறைந யந்தபின்
கையுறை யோடு காளை சென்றது.

பண் :

பாடல் எண் : 2

ஆரத் தழையராப் பூண்டம்
பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின்
றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா
லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா
ரெனவரும் ஐயுறவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆரத் தழை அராப் பூண்டு அம்பலத்து அனலோடி ஆரமாகிய தழைந்த அரவைப் பூண்டு அம்பலத்தின்கண் அனலோடாடி; அன்பர்க்கு ஆரத் தழை அன்பு அருளி நின்றோன் அன்பராயினார்க்குத் தானும் மிக்க அன்பைப் பெருகச் செய்து நின்றவன்; சென்ற மா மலயத்து ஆரத் தழை அண்ணல் தந்தால் சேர்ந்த பொதியின் மலையிடத்துளவாகிய சந்தனத் தழைகளை அண்ணல் தந்தால்; இவை அவள் அல்குற் கண்டால் இத்தழைகளைப் பிறர் அவளல்குற்கட் காணின்; அத் தழை கொடு வந்தார் ஆர் என ஐயுறவு வரும் ஈண்டில்லாத அத்தழை கொண்டுவந்தார் யாவரென ஐயமுண்டாம்; அதனால் இவை கொள்ளேம் எ - று.
ஆரத்தழையரா பூண்டகாலத்து ஆரத்தழைத்த அரவெனினு மமையும். அன்பர்க்காரத் தழையன்பருளி நின்றோ னென்பதற்கு அன்பர்க்கு அவர் நுகரும்வண்ணம் மிக்க அன்பைக் கொடுத்தோனெ னினுமமையும். அன்பான் வருங்காரியமேயன்றி அன்புதானும் ஓரின் பமாகலின் நுகர்ச்சியாயிற்று. அண்ணலென்பது ஈண்டு முன்னிலைக் கண் வந்தது. அத்தழையென்றது அம்மலயத் தழை என்றவாறு. 91

குறிப்புரை :

12.2 சந்தனத்தழை தகாதென்று மறுத்தல் சந்தனத்தழை தகாதென்று மறுத்தல் என்பது தலைமகன் சந்தனத்தழைகொண்டு செல்ல, அது வழியாக நின்று, சந்தனத் தழை இவர்க்கு வந்தவாறென்னோவென்று ஆராயப்படுதலான் இத்தழை எமக்காகாதெனத் தோழி மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.2. பிறைநுதற் பேதையைக் குறைநயப் பித்தபின்
வாட்படை யண்ணலைச் சேட்ப டுத்தது

பண் :

பாடல் எண் : 3

முன்றகர்த் தெல்லா விமையோரை
யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத்
தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்
ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து
மூடுமென் றெள்குதுமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முன் எல்லா இமையோரையும் தகர்த்து முன்வேள்விக்குச் சென்ற எல்லாத் தேவர்களையும் புடைத்து; பின்னைச் சென்று தக்கன் முத் தீ அகத்து இல்லாவகை சிதைத்தோன் பின்சென்று தக்கனுடைய மூன்று தீயையும் குண்டத்தின்கண் இல்லை யாம்வண்ணம் அழித்தவன்; திருந்து அம்பலவன் திருந்திய வம் பலத்தையுடையான்; குன்றகத்து இல்லாத் தழை அண்ணல் தந்தால் அவனுடைய இம்மலையிடத்தில்லாத தழையை அண்ணல் தந்தால்; கொடிச்சியருக்கு அகத்து இல்லாப் பழி இன்று வந்து மூடும் என்று எள்குதும் கொடிச்சியருக்கு இல்லின்கண் இல்லாதபழி இன்று வந்து மூடுமென்று கூசுதும்; அதனால் இத்தழை கொணரற்பாலீரல்லீர் எ- று.
குன்றகத்தில்லாத் தழையென்றது குறிஞ்சி நிலத்தார்க்கு உரிய வல்லாத தழை யென்றவாறு. அண்ணலென்பது முன்னிலைக் கண்ணும், கொடிச்சியரென்பது தன்மைக்கண்ணும் வந்தன. இல்லா வென்பது பாடமாயின், இல்லையாம் வண்ணம் முன்றகர்த் தென்றுரைக்க.92

குறிப்புரை :

12.3 நிலத்தின்மைகூறி மறுத்தல்
நிலத்தின்மை கூறி மறுத்தல் என்பது சந்தனத்தழை தகாதென்றதல்லது மறுத்துக் கூறியவாறன்றென மற்றொருதழை கொண்டுசெல்ல, அதுகண்டு, இக்குன்றிலில்லாத தழையை எமக்கு நீர்தந்தால் எங்குடிக்கு இப்பொழுதே பழியாம்; ஆதலான் அத்தழை யெமக்காகாதென்று மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.3. கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
எங்குலத் தாருக் கேலா தென்றது.

பண் :

பாடல் எண் : 4

யாழார் மொழிமங்கை பங்கத்
திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந்
தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ்
சிலம்ப தருந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் யாழோசைபோலும் மொழியையுடைய மங்கையது கூற்றையுடைய இறைவன்; எறி திரை நீர் ஏழ் ஆய் எழு பொழில் ஆய் இருந்தோன் எறியாநின்ற திரையையுடைய கடலேழுமாய் ஏழுபொழிலு மாயிருந்தவன்; நின்ற தில்லை அன்ன சூழ் ஆர் குழல் தொண்டை எழில் செவ்வாய் நவ்வி சொல் அறிந்தால் அவனின்ற தில்லையை ஒக்குஞ் சுருண்ட நிறைந்த குழலினையுந் தொண்டைக் கனிபோலும் எழிலையுடைய செவ்வாயினையுமுடைய நவ்வி போல்வாளது மாற்ற மறிந்தால்; சிலம்ப தரும் தழை தாழாது எதிர் வந்து கோடும் பின் சிலம்பனே நீ தருந்தழையைத் தாழாது நின்னெதிர்வந்து கொள்வேம்; அவள் சொல்வது அறியாது கொள்ள வஞ்சுதும் எ - று.
சூழாரென்புழிச் சூழ்தல் சூழ்ந்து முடித்தலெனினுமமையும். தில்லையன்ன நவ்வியெனவியையும். 93

குறிப்புரை :

12.4 நினைவறிவுகூறிமறுத்தல் நினைவறிவுகூறி மறுத்தல் என்பது இத்தழை தந்நிலத்துக் குரித்தன்றென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்றென உட் கொண்டு, அந்நிலத்திற்குரிய தழைகொண்டு செல்ல, அதுகண்டு தானுடம்பட்டாளாய், யான் சென்று அவணினைவறிந்தால் நின்னெதிர்வந்து கொள்வேன்; அதுவல்லது கொள்ள அஞ்சுவேனென மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்ந
12.4. மைதழைக் கண்ணி மனமறிந் தல்லது
கொய்தழை தந்தாற் கொள்ளே மென்றது.

பண் :

பாடல் எண் : 5

எழில்வா யிளவஞ்சி யும்விரும்
பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத்
தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல
தில்லையிப் பூந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் நின் பாற்றழை கோடற்கு யானேயன்றி எழில் வாய்த்த இளைய வஞ்சியையொப்பாளும் விரும்பும்; மற்று இறை குறை உண்டு ஆயினுஞ் சிறிது குறையுண்டு; அழல்வாய் அவிர் ஒளி அழலிடத்துளதாகிய விளங்கு மொளியாயுள்ளான்; அம்பலத்து ஆடும் அம்சோதி அம்பலத்தின்கணாடும் அழகிய சோதி; அம் தீம் குழல் வாய் மொழி மங்கை பங்கன் அழகிய வினிய குழலோசை போலும் மொழியையுடைய மங்கையது கூற்றை யுடையான்; குற்றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் அவனது குற்றாலத்தின் கணுளதாகிய அழகையுடைய அசோகப்பொழில் வாய்த்த; தடவரைவாய் அல்லது இப் பூந் தழை இல்லை பெரிய தாள் வரையிடத்தல்லது வேறோரிடத்து இப்பூந்தழையில்லை; அதனால் இத்தழை இவர்க்கு வந்தவாறென்னென்று ஆராயப்படும், ஆதலான் இவை கொள்ளேம் எ - று.
இத்தழையை யிளவஞ்சியும் விரும்பு மெனினுமமையும். அவிரொளியையுடைய அஞ்சோதியென்றியைப் பினுமமையும். பிறவிடத்து முள்ளதனை அவ்விடத்தல்லது இல்லை யென்றமையின், படைத்துமொழியாயிற்று. 94

குறிப்புரை :

12.5 படைத்து மொழியான் மறுத்தல்
படைத்து மொழியான் மறுத்தல் என்பது நினைவறிந் தல்லது ஏலேமென்று மறுத்துக்கூறியவாறன்று; நினைவறிந்தால் ஏற்பே மென்றவாறாமென உட்கொண்டு நிற்ப, சிறிது புடை பெயர்ந்து அவணினைவறிந்தாளாகச்சென்று, இத்தழை யானே யன்றி அவளும் விரும்பும்; ஆயினும் இது குற்றாலத்துத் தழையா தலான் இத்தழை இவர்க்கு வந்தவாறு என்னோவென்று ஆராயப் படும்; ஆதலான் இத் தழை யெமக்காகாதென்று மறுத்துக்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
12.5. அருந்தழை மேன்மேற் பெருந்தகை கொணரப்
படைத்துமொழி கிளவியிற் றடுத்தவண் மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 6

உறுங்கண்ணி வந்த கணையுர
வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
நாணுமிக் குன்றிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நிவந்த உறும் கள் கணை உரவோன் பொடியாய் ஒடுங்க எல்லார்கணையினும் உயர்ந்த மிகுந்த தேனையுடைய மலர்க்கணையையுடைய பெரிய வலியோன் நீறாய்க்கெட; தெறும்கண் நிவந்த சிற்றம்பலவன் தெறவல்ல கண்ணோங்கிய சிற்றம்பலவனது; மலைச் சிற்றிலின் வாய் மலைக்கணுண்டாகிய சிற்றிலிடத்து; நறுங் கண்ணி சூடினும் என் வாணுதல் நாணும் செவிலியர் சூட்டிய கண்ணிமேல் யானோர் நறுங்கண்ணியைச் சூட்டினும் அத்துணையானே என்னுடைய வாணுதல் புதிதென்று நாணாநிற்கும்; இக் குன்றிடத்து நாகத்து ஒண் பூங்குறுங் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் மகளிரைச் சொல்லுகின்றதென்! இக்குன்றிடத்து நாகமரத்தினது ஒள்ளிய பூக்களானியன்ற குறுங் கண்ணியைச்சூடி அச்சூடுதலான் இளமந்திகளும் நாணாநிற்கும் எ-று.
கண்ணிவந்தவென்பதற்குக் கள் மிக்க கணையெனினு மமையும். தெறுங்கண்ணிவந்தவென்றார், அக்கண் மற்றையவற்றிற்கு மேலாய்நிற்றலின். மேனோக்கி நிற்றலானெனினுமமையும்.
முதலொடு சினைக்கொற்றுமையுண்மையான் நிவந்த வென்னும் பெயரெச்சத்திற்குச் சிற்றம்பலவனென்பது வினைமுதற் பெயராய் நின்றது. மந்திகணாணுமென்பது பெயரெச்சமாக மலைக்கண் இக்குன்றிடத்துச் சிற்றிலின்வாயெனக் கூட்டியுரைப்பினு மமையும். இப்பொருட்குக் குன்றென்றது சிறுகுவட்டை. யானொன்று சூட்டினும் நாணும் பெருநாணினாள் நீர்கொணர்ந்த இக்கண்ணியை யாங்ஙனஞ் சூடுமென்பது கருத்து. நாணுதலுரைத்ததென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீர்மைப்பட்டு இரண்டாவதனையமைத்தன. 95

குறிப்புரை :

12.6 நாணுரைத்துமறுத்தல்
நாணுரைத்து மறுத்தல் என்பது பலபடியுந் தழைகொண்டு செல்ல மறுத்துக்கூறியவழி, இனித் தழையொழிந்து கண்ணியைக் கையுறையாகக் கொண்டுசென்றால் அவள் மறுக்கும் வகை யில்லை யெனக் கழுநீர்மலரைக் கண்ணியாகப் புனைந்து கொண்டு செல்ல, அதுகண்டு, செவிலியர் சூட்டிய கண்ணியின் மேல் யானொன்று சூட்டினும் நாணாநிற்பள்; நீர்கொணர்ந்த இந்தக் கண்ணியை யாங்ஙனஞ் சூடுமெனத் தலைமகள் நாணு ரைத்து மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.6. வாணுதற் பேதையை
நாணுத லுரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

நறமனை வேங்கையின் பூப்பயில்
பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி
யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ
டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம்
பலவன் நெடுவரையே .

பொழிப்புரை :

இதன் பொருள்:
நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி தேனிற்கிடமாகிய வேங்கைப் பூக்கள் பயின்ற பாறையை யானை சென்றணைந்து; மறம் மனைவேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா அதனைத் தறுகண்மைக்கிடமாகிய புலியென்று மிகவுமஞ்சும் மஞ்சாருஞ் சிலம்பையுடையாய்; நிறம் மன்வேங்கை அதள் அம்பலவன் நெடுவரை நிறந்தங்கிய புலி யதளையுடைய அம்பலவனது நெடிய இவ்வரைக்கண்; குறம் மனை வேங்கைச் சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ குறவர் மனையிலுளவாகிய வேங்கையினது சுணங்குபோலும் பூவோடு தெய்வத்திற்குரிய கழுநீர் முதலாகிய பூக்களைக் கூட்டுவரோ? கூட்டார் எ - று.
நறமனைவேங்கை யென்பதற்கு நறாமிக்கபூ வெனினு மமையும். குறமனை கூட்டுபவோ வென்பதற்குக் குறக்குடிகள் அவ்வாறு கூட்டுவரோ வென்றுரைப்பாருமுளர். நிறமனையென்புழி ஐகாரம்; அசைநிலை; வியப்பென் பாருமுளர். நிறம் அத்தன்மைத் தாகிய அதளெனினுமமையும். ஒன்றனை ஒன்றாக ஓர்க்கு நாடனாதலான் அணங்கலர் சூடாத எம்மைச் சூடுவேமாக ஓர்ந்தா யென்பது இறைச்சிப்பொருள். ஒப்புமையான் அஞ்சப்படாத தனையும் அஞ்சும் நிலமாகலான் எங்குலத்திற்கேலாத அணங்கலரை யாமஞ்சுதல் சொல்லவேண்டுமோ வென்பது இறைச்சியெனினு மமையும். இப்பொருட்கு ஒருநிலத்துத் தலைமகளாகக் கொள்க. வேங்கைபூவிற்குச் சுணங்கணிந்திருத்தல் குணமாதலால் சுணங் கணியப்பட்டதனைச் சுணங்கென்றே கூறினாள். ; 96

குறிப்புரை :

12.7 இசையாமை கூறி மறுத்தல்
இசையாமை கூறி மறுத்தல் என்பது தலைமகணாணுரைத்து மறுத்த தோழி அவணாணங்கிடக்க யாங்கள் வேங்கைமலரல்லது தெய்வத்திற்குரிய வெறிமலர்சூட அஞ்சுதும்; ஆதலான் இக்கண்ணி எங்குலத்திற் கிசையாதென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.7. வசைதீர் குலத்திற்
கிசையா தென்றது.

பண் :

பாடல் எண் : 8

கற்றில கண்டன்னம் மென்னடை
கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில
ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
யூரன்ன பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கண்டு அன்னம் மெல் நடை கற்றில - புடைபெயர்ந்து விளையாடாமையின் நடைகண்டு அன்னங்கள் மெல்லிய நடையைக் கற்கப்பெற்றனவில்லை; கண் மலர் நோக்கு அருள மென்பிணை பெற்றில தம்மாற் குறிக்கப்படுங் கண்மலர் நோக்குகளை அவள் கொடுப்ப மென்பிணைகள் பெற்றனவில்லை; பேச்சுக் கிள்ளை பெறா உரையாடாமையின் தாங் கருது மொழிகளைக் கிளிகள் பெற்றனவில்லை; பிள்ளை இன்று ஒன்று உற்றிலள் இருந்தவாற்றான் எம்பிள்ளை இன்றொரு விளை யாட்டின்கணுற்றிலள்; ஆகத்து ஒளிமிளிரும் புற்றில வாள் அரவன் அதுவேயுமன்றி ஆகத்தின் கட்கிடந்தொளி விளங்கும் புற்றின் கண்ணவாகிய ஒளியையுடைய பாம்பையுடையவனது; புலியூர் அன்ன பூங்கொடி பூலியூரையொக்கும் பூங்கொடி; உற்றது அறிந்திலள் என்னுழை நீர் வந்தவாறும் யானுமக்குக் குறைநேர்ந்த வாறும் இன்னுமறிந்திலள்; அதனாற் செவ்விபெற்றுச் சொல்லல் வேண்டும் எ - று.
கண்டென்பது கற்றலோடும், அருளவென்பது பெறுதலோடும் முடிந்தன. புற்றிலவென்பதற்கு வேள்வித்தீயிற் பிறந்து திரு மேனிக்கண் வாழ்தலாற் புற்றையுடையவல்லாத அரவென் றுரைப்பினு மமையும். ஆரத்தொளி யென்பதூஉம் பாடம். இவை யேழிற்கும் மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். முடியாதெனக் கருதுவாளாயின் இறந்துபடுமென்னும் அச்சமும் முடிக்கக் கருதலிற் பெருமிதமுமாயிற்று.
பயன்: செவ்விபெறுதல். மேற்றலைமகளைக் குறைநயப்பித்து அவளது கருத்துணர்ந்து தன்னினாகிய கூட்டங் கூட்டலுறுந்தோழி தலைமகன் றெருண்டு வரைந்தெய்துதல் வேண்டி, இவை முதலாக முன்னர் விண்ணிறந்தார் (தி.8 கோவை பா.107) என்னும் பாட்டீறாக இவையெல்லாங்கூறிச் சேட்படுத்தப்பெறுமென்பது. 97

குறிப்புரை :

12.8 செவ்வியிலளென்று மறுத்தல்
செவ்வியிலளென்று மறுத்தல் என்பது அணங்கலர் தங்குலத்திற் கிசையாதென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்றென மாந்தழையோடு மலர் கொண்டுசெல்ல, அவை கண்டு உடம் படாளாய், அன்னம் பிணை கிள்ளை தந்தொழில் பயில இன்று செவ்வி பெற்றனவில்லை; அதுகிடக்க என்னுழை நீர்வந்தவாறும் யானுமக்குக் குறைநேர்ந்தவாறும் இன்னுமறிந்திலள்; அதனாற் செவ்வி பெற்றாற் கொணருமென மறுத்துக்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.8. நவ்வி நோக்கி
செவ்வியில ளென்றது.

பண் :

பாடல் எண் : 9

முனிதரு மன்னையும் மென்னையர்
சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய
குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம்
பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
றான்சுடர்க் கொற்றவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுடர்க் கொற்றவன் சுடர்களுட்டலைவன்; தாழ்சடைமேல் பனிதரு திங்கள் அணி அம்பலவர் தாழ்ந்த சடைமேற் குளிர்ச்சியைத்தருந் திங்களைச் சூடிய அம்பலவர்; பகை செகுக்கும் குனிதரு திணிசிலைக் கோடு சென்றான் பகையைச் செகுக்கும் வளைந்த திண்ணிய சிலையாகிய மேருவினது கோட்டையடைந்தான்; அன்னையும் முனிதரும் இனித் தாழ்ப்பின் அன்னையும் முனியும்; என்னையர் சாலவும் மூர்க்கர் என்னையன்மாரும் மிகவும் ஆராயாது ஏதம் செய்யும் தன்மையர்; இன்னே தனி தரும் இவ்விடமும் இனியியங்குவாரின்மையின் இப்பொழுதே தனிமை யைத் தரும்; ஐய ஐயனே; குன்றமும் இந்நிலத்து அன்று நினது குன்றமும் இந்நிலத்தின் கண்ணதன்று; அதனால் ஈண்டுநிற்கத் தகாது எ - று.
அம்பலவர் பகைசெகுத்தற்குத் தக்க திண்மை முதலாகிய இயல்பு அதற்கெக்காலத்து முண்மையால், செகுக்குமென நிகழ்காலத்தாற் கூறினார். இந்நிலைத்தன்றென்பது பாடமாயின், இக்குன்றமும் இவ்வாறு மகளிரும் ஆடவருந் தலைப்பெய்து சொல்லாடு நிலைமைத் தன்றெனவுரைக்க. மெய்ப்பாடும் பயனும் அவை. இவ்விடம் மிக்க காவலையுடைத்து இங்குவாரன்மினென்றாளென, இவ்விடத் தருமையை மறையாது எனக்குரைப்பாளாயது என்கட்கிடந்த பரிவினானன்றே; இத்துணையும் பரிவுடையாள் எனதாற்றாமைக் கிரங்கி முடிக்குமென ஆற்றுமென்பது. 98

குறிப்புரை :

12.9 காப்புடைத்தென்றுமறுத்தல்
காப்புடைத்தென்று மறுத்தல் என்பது செவ்வியிலளென்றது செவ்விபெற்றாற் குறையில்லையென்றாளாமென உட்கொண்டு நிற்ப, கதிரவன் மறைந்தான்; இவ்விடம் காவலுடைத்து; நும் மிடமுஞ் சேய்த்து; எம்மையன்மாருங் கடியர்; யாந்தாழ்ப்பின் அன்னையு முனியும்; நீரும் போய் நாளைவாருமென இசையமறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
12.9. காப்புடைத் தென்று
சேட்ப டுத்தது.

பண் :

பாடல் எண் : 10

அந்தியின் வாயெழி லம்பலத்
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அந்தியின்வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் அந்தியின்கண் உண்டாகிய செவ்வானெ ழிலையுடைய அம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவனது அழகிய பொன்னையுடைய வெற்பிடத்து; பந்தியின்வாய்ப் பைந்தேனொடும் பலவின் சுளை பந்தியாகிய நிரையின்கட் செவ்வித்தேனோடும் பலாச்சுளையை; கடுவன் மந்தியின்வாய்க் கொடுத்து ஓம்பும் சிலம்ப கடுவன் மந்தியினது வாயில் அருந்தக்கொடுத்துப் பாதுகாக்குஞ் சிலம்பை யுடையாய்; மனம் கனிய முந்தி இன் வாய்மொழி அம் மொய் குழற்கு நீயே சென்றுமொழி அவள் மனநெகிழ விரைந்து இவ்வினிய வாய்மொழிகளை அம்மொய்த்த குழலையுடையாட்கு நீயே சென்று சொல்லுவாயாக எ - று.
எல்லாப்பொருளையுங் கடந்தானாயினும் எமக்கண்ணிய னென்னுங்கருத்தான், எம்பரனென்றார். வெற்பிற் சிலம்பவென வியையும். பந்தி பலாநிரையென்பாருமுளர். சிலம் பென்றது வெற்பினொருபக்கத்துளதாகிய சிறுகுவட்டை. வாய்மொழி மொழியென்னுந் துணையாய் நின்றது. மனங்கனியு மென்பதூஉம் நின்வாய்மொழி யென்பதூஉம் பாடம். மந்தி உயிர்வாழ்வதற்குக் காரணமாகியவற்றைக் கடுவன் தானேகொடுத்து மனமகிழ்வித்தாற் போல அவள் உயிர்வாழ்வதற்குக் காரணமாகிய நின் வார்த்தைகளை நீயேகூறி அவளைமனமகிழ்விப் பாயாகவென உள்ளுறையுவமங் கண்டுகொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை. 99

குறிப்புரை :

12.10 நீயேகூறென்றுமறுத்தல் நீயே கூறென்று மறுத்தல் என்பது இவள் இவ்விடத்து நிலைமையை மறையாது எனக்குரைப்பாளாயது என்கட்கிடந்த பரிவினானன்றே; இத்துணைப் பரிவுடையாள் எனக்கிது முடியாமை யில்லையெனத் தலைவன் உட்கொண்டுபோய்ப் பிற்றைஞான்று செல்ல, தோழி யான் குற்றேவன் மகளாகலிற் றுணிந்துசொல்ல மாட்டுகின்றிலேன்; இனி நீயே சென்று நின்குறையுள்ளது சொல்லெனத் தானுடம்படாது மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.10. அஞ்சுதும் பெரும பஞ்சின் மெல்லடியைக்
கூறுவ நீயே கூறு கென்றது.

பண் :

பாடல் எண் : 11

தெங்கம் பழங்கமு கின்குலை
சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர்
நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
சிறுமியெந் தேமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெங்கம்பழம் கமுகின் குலை சாடி மூக்கூழ்த்து விழுகின்ற தெங்கம்பழம் கமுகினது குலையை உதிர மோதி; கதலி செற்று வாழைகளை முறித்து; கொங்கம்பழனத்து ஒளிர் குளிர்நாட்டினை நீ பூந்தாதையுடைய பழனத்துக்கிடந்து விளங்குங் குளிர்ந்த நாட்டினுள்ளாய்நீ; எம் தேமொழி எம்முடைய தேமொழி; உமை கூர் பங்கு அம்பலவன் பரங்குன்றில் உமை சிறந்த பாகத்தை உடைய அம்பலவனது பாங்குன்றிடத்து குன்று அன்ன மா பதைப்பச் சிங்கம் திரிதரும் சீறூர்ச் சிறுமி; மலைபோலும் யானைகள் நடுங்கச் சிங்கங்கள் வேட்டந்திரியுஞ் சீறூர்க்கணுள்ளாள் ஓர் சிறியாள்; அதனால் எம்மோடு நீ சொல்லாடுதல் தகாது எ - று.
நாட்டினை யென்பதற்கு நாட்டையிடமாகவுடையையென இரண்டாவதன் பொருள்பட உரைப்பினுமமையும். பரங்குன்றிற் சீறூரெனவியையும். பெருங்காட்டிற் சிறுகுரம்பை யென்பது போதர, சிங்கந் திரிதரு சீறூரென்றாள். மெய்ப்பாடும் பயனும் அவை. 100

குறிப்புரை :

12.11 குலமுறை கூறிமறுத்தல் குலமுறை கூறிமறுத்தல் என்பது நீயே கூறெனச் சொல்லக் கேட்டு, உலகத்து ஒருவர்கண் ஒருவர் ஒருகுறை வேண்டிச் சென்றால் அக்குறை நீயே முடித்துக்கொள்ளென்பாரில்லை; அவ்வாறன்றி இவளிந்நாளெல்லாம் என்குறைமுடித்துத் தருவே னென்று என்னை யவமே யுழற்றி, இன்று நின்குறை நீயே முடித்துக் கொள்ளென்னாநின்றாளெனத் தலைமகன் ஆற்றாதுநிற்ப, அவனை யாற்றுவிப்பது காரணமாக, நீர் பெரியீர்; யாஞ்சிறியேம்; ஆகலான் எம்மோடு நுமக்குச் சொல்லாடுதல் தகாதெனக் குலமுறைகூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.11 தொழுகுலத்தீர் சொற்காகேம்
இழிகுலத்தே மெனவுரைத்தது.

பண் :

பாடல் எண் : 12

சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர்
கையிற் கொடுஞ்சிலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலை ஒன்று வாணுதல் பங்கன் சிலையை யொக்கும் வாணுதலையுடையாளது கூற்றையுடையான்; சிற்றம் பலவன் சிற்றம்பலவன்; கயிலை மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய்கணை மண் குளிக்கும் அவனது கயிலைக்கண் மலையை யொக்கும் யானை முகத்து எம்மையன்மார் எய்யுங்கணை அவற்றையுருவி மண்ணின்கட்குளிப்பக்காண்டும்; கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் அவ்வாறன்றி ஒருகலை இவரெய்த வெய்ய வம்பினோடு விரைந்தோடிற்றாயின்; ஐயர் கையில் கொடுஞ் சிலைகெட்டேன் கொலை ஒன்று திண்ணிய ஆறு இவ்வையர் கையில் வளைந்த சிலை, கெட்டேன், கொலையாகிய வொன்று திண்ணிய வாறென்! எ - று.
கயிலைக்கண் மண்குளிக்குமென வியையும். கொடுஞ்சர மென்பதூஉம் பாடம். #9; 101

குறிப்புரை :

12.12 நகையாடிமறுத்தல் நகையாடி மறுத்தல் என்பது இவள் குலமுறைகிளத்தலான் மறுத்துக்கூறியவாறன்றென மனமகிழ்ந்துநிற்ப, இனியிவனாற் றுவானென உட்கொண்டு, பின்னுந்தழையெதிராது, எம்மையன் மாரேவுங்கண்டறிவேம்; இவ்வையர் கையிலேப்போலக் கொலையாற்றிண்ணியது கண்டறியேமென அவனேவாடல் சொல்லி நகையொடு மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.12 வாட்டழை யெதிராது சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி யின்னகை செய்தது.

பண் :

பாடல் எண் : 13

மைத்தழை யாநின்ற மாமிடற்
றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
பாவம் பெரியவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே கருமை மிகாநின்ற கரியமிடற்றையுடைய அம்பலவனது கழற்கண்ணே; தழையாநின்ற மெய் அன்பினர் போல விதிர் விதிர்த்து பெருகாநின்ற மெய்யன்பை யுடையவரைப் போல மிகநடுங்கி; கை தழை ஏந்தி கைக்கண்ணே தழையை ஏந்தி; கடமா வினாய் இதனோடு மாறுபடக் கடமாவை வினாவி; கையில் வில் இன்றியே தன்கையில் வில்லின்றியே; பெரியவர் பித்தழையா நிற்பர்- இப்பெரியவர் பித்தழையாநின்றார்; என்ன பாவம் - இஃதென்ன தீவினையோ! எ - று.
மா கருமை. மாமிடறென்பது, பண்புத் தொகையாய் இன்னதிதுவென்னுந் துணையாய் நிற்றலானும், மைத்தழையா நின்ற வென்பது அக்கருமையது மிகுதியை உணர்த்தி நிற்றலானும், கூறியது கூறாலாகாமையறிக. அது ``தாமரைமீமிை\\\\\\\\u2970?`` எனவும், ``குழிந்தாழ்ந்த கண்ண`` (நாலடியார். தூய்தன்மை - 9) எனவும் இத்தன்மை பிறவும் வருவனபோல. மெய்த்தழையாநின்ற வன்பென்பதற்கு மெய்யாற்ற ழையாநின்ற அன்பெனினுமமையும். பித்தென்றது ஈண்டுப் பித்தாற் பிறந்த அழைப்பை. அழைப்பு - பொருள் புணராவோசை. 102

குறிப்புரை :

12.13 இரக்கத்தொடு மறுத்தல்
இரக்கத்தொடு மறுத்தல் என்பது இவள் என்னுடனே நகையாடுகின்றது தழைவாங்குதற்பொருட்டென உட்கொண்டு நிற்ப, பின்னையுந் தழையேலாது, இவ்வையர் இவ்வாறு மயங்கிப் பித்தழையாநிற்றற்குக் காரணமென்னோவென்று அதற்கிரங்கி மறுத்துக்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.13. கையுறை யெதிராது காதற் றோழி
யைய நீபெரி தயர்த்தனை யென்றது.

பண் :

பாடல் எண் : 14

அக்கும் அரவும் அணிமணிக்
கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
யாத வியல்பினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மஞ்சு ஆர் சிலம்பா மஞ்சார்ந்த சிலம்பை யுடையாய்; அக்கும் அரவும் அணி மணிக் கூத்தன் சிற்றம்பலம் ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி அக்கையும் அரவையும் அணியும் மாணிக்கம்போலுங் கூத்தனது சிற்றம்பலத்தை யொக்கும் இவளது விளங்காநின்ற வடிவையஞ்சி; கொக்கும் சுனையும் மாக்களுஞ் சுனைகளும்; குளிர் தளிரும் கொழும் போதுகளும் குளிர்ந்த தளிர்களுங் கொழுவிய போதுகளும்; இக்குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பின இக்குன்றில் எக்காலத்தும் விரிந்தறி யாத தன்மையையுடைய; அதனால் ஈண்டில்லாத இவற்றை யாமணி யிற் கண்டார் ஐயுறுவர் எ - று.
தளிர்மலர்ந்தறியாத வென்னுஞ் சினைவினை முதன்மேலேறி யும், போதுமலர்ந்தறியாத வென்னும் இடத்துநிகழ்பொருளின் வினை இடத்துமேலேறியும் நின்றன. 103

குறிப்புரை :

12.14 சிறப்பின்மை கூறிமறுத்தல்
சிறப்பின்மை கூறி மறுத்தல் என்பது என் வருத்தத்திற்குக் கவலாநின்றனள் இவளாதலின் எனக்கிது முடியாமை யில்லையென உட்கொண்டுநிற்ப, தோழி இக்குன்றிடத்து மாவுஞ் சுனையும் இவள் வடிவுக்கஞ்சி மலர்ந்தறியா, ஆதலான் ஈண்டில்லாதனவற்றை யாமணியிற் கண்டார் ஐயுறுவரென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.14 மாந்தளிரும் மலர்நீலமும்
ஏந்தலிம்மலை யில்லையென்றது.

பண் :

பாடல் எண் : 15

உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்
அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை
முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
னோவைய வோதுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உருகுதலைச் சென்ற உள்ளத்தும் அன்ப ருடைய உருகுதலையடைந்த உள்ளத்தின்கண்ணும்; அம்பலத்தும் அம்பலத்தின்கண்ணும்; ஒளி பெருகுதலைச் சென்று நின்றோன் இரண்டிடத்துமொப்ப ஒளிபெருகுதலையடைந்து நின்றவனது; பெருந்துறைப் பிள்ளை பெருந்துறைக்கணுளளாகிய எம் பிள்ளை யுடைய; கள் ஆர் முருகு தலைச்சென்ற கூழை முடியா தேனார்ந்த நறுநாற்றம் தம்மிடத்தடைந்த குழல்கள் முடிக்கப்படா; முலை பொடியா முலைகள் தோன்றா; ஒரு குதலைச் சின் மழலைக்கு - ஒரு குதலைச் சின்மழலை மொழியாட்கு; ஐய - ஐயனே; ஓதுவது என்னோ நீ சொல்லுகின்றவிது யாதாம்! சிறிதுமியைபுடைத்தன்று எ-று.
ஏகாரம்: அசைநிலை. கள்ளார் கூழையென வியையும். குதலைமை விளங்காமை. மழலை இளஞ்சொல். சின்மழலை திறத்தென நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்ததெனினு மமையும். இவை நான்கற்கும் மெய்ப் பாடும் பயனும் அவை. 104

குறிப்புரை :

12.15 இளமை கூறிமறுத்தல்
இளமை கூறி மறுத்தல் என்பது அவளது வடிவுக்கஞ்சி மலர்ந்தறியாவென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்று; சிறப் பின்மை கூறியவாறென உட்கொண்டு, சிறப்புடைத் தழை கொண்டு செல்ல, அதுகண்டு, குழலும் முலையுங் குவியாத குதலைச் சொல்லிக்கு நீ சொல்லுகின்ற காரியம் சிறிதுமியை புடைத் தன்றென அவளதிளமை கூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.15. முளையெயிற் றரிவை
விளைவில ளென்றது.

பண் :

பாடல் எண் : 16

பண்டா லியலு மிலைவளர்
பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந்
துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை
கொல்லோ கருதியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன் முற்காலத்து ஆலின்கணுளதாம் இலையின்கட்டுயின்ற பாலகனாகிய மாயோன்; பார் கிழித்து தொண்டால் இயலும் சுடர்க் கழலோன் நிலத்தைக் கிழித்துக் காணாமையிற் பின்றொண்டா லொழுகுஞ் சுடர்க் கழலையுடையானது; தொல்லைத் தில்லையின் வாய் வண்டு பழையதாகிய தில்லைவரைப்பி னுண்டாகிய வண்டுகள்; ஆல் இயலும் வளர் பூதுறைவ ஆலிப்போடு திரிதரும் மிக்க பூக்களையு டைய துறையை யுடையாய்; கண்டால் ஆராய்ந்தால்; என்னை மறைக்கின் கருதியது இயலும் கடன் இல்லை கொல் என்னை மறைப் பின் நீ கருதியது முடியு முறைமை யில்லை போலும் எ-று.
பண்டு தொண்டாலியலுமெனவும், தில்லை வரைப்பிற்றுறை யெனவுமியையும். தில்லைக்கட்டுறைவனெனினுமமையும். மெய்ப் பாடு: அச்சத்தைச் சார்ந்த நகை. இவள் நகுதலான் என்குறையின்ன தென உணர்ந்த ஞான்று தானே முடிக்குமென நினைந்து ஆற்று வானாவது பயன். 105

குறிப்புரை :

12.16 மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் என்பது இவளதிளமை கூறுகின்றது தழைவாங்குதற்பொருட்டன்றாகவேண்டும்; அதுவன்றி இந்நாளெல்லாமியைய மறுத்து இப்பொழுது இவளிளையளென்று இயையாமைகூறி மறுக்கவேண்டிய தென்னை? இனி யிவ்வொழுக்கம் இவளையொழிய வொழுகக் கடவேனென உட்கொண்டுநிற்ப, நீ யென்னை மறைத்தகாரியம் இனி நினக்கு முடியாதென அவனோடு நகைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.16. என்னைமறைத்தபின் எண்ணியதரிதென
நன்னுதல்தோழி நகைசெய்தது.

பண் :

பாடல் எண் : 17

மத்தகஞ் சேர்தனி நோக்கினன்
வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்
றோன்தில்லை யொத்திலங்கும்
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந்
தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன்
றோஎன் விழுத்துணையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மத்தகம் சேர் தனி நோக்கினன் நெற்றியைச் சேர்ந்த தனிக்கண்ணையுடையான்; வாக்கு இறந்து ஊறு அமுது ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் சொல்லளவைக் கடந்து ஊறுமமுதத்தையொத்து மனத்தைச் சேர்ந்து என்னை யுய்ய நின்றவன்; தில்லை ஒத்து இலங்கு அவனது தில்லையை யொத் திலங்கும்; முத்து அகம் சேர் மெல் நகைப் பெருந்தோளி முத்துப் போலும் எயிறுகளுள்ளடங்கிய மூரன்முறுவலையுடைய பெருந் தோளியது; முகமதியின் வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழுத்துணை முகமாகிய மதியின் கணுண்டாகிய சதுரப் பாட்டைச் சேர்ந்த மெல்லென்ற நோக்கமன்றோ எனது சிறந்ததுணை! அதனால் ஆற்றத்தகும் எ - று.
வாக்கிறந்தென்பதூஉம், அமுதொத்தென்பதூஉம், அகஞ் சேர்ந்தென்பதனோடியையும். உய்ய நின்றோனென்னுஞ் சொற்கள் உய்வித்தோனென்னும் பொருளவாய், ஒருசொன்னீர்மைப் பட்டு இரண்டாவதற்கு முடிபாயின. இலங்கு முகமதியென வியையும். மறுத்தாளாயினும் நங்கண் மலர்ந்த முகத்தளென்னுங் கருத்தான் இலங்குமுகமதியினென்றான். உள்ளக்குறிப்பை நுண்ணிதின் விளக்கலின், வித்தகஞ்சேர் மெல்லெனோக்கமென்றான். உள்ளக் குறிப்பென்றவாறென்னை? முன்னர்ச் ``சின்மழலைக் கென்னோ வையவோதுவ`` (தி.8 கோவை பா.104) தென்று இளையளென மறுத்தவிடத்து, இந் நாளெல்லா மியைய மறுத்து இப்பொழுது இவளிளையளென்று இயையாமை மறுத்தாள்; இவ்வொழுக்கம் இனி இவளை யொழிய வொழுகக் கடவேனென்று தலைமகன் தன்மனத்திற் குறித்தான்; அக்குறிப்பைத் தோழி அறிந்து கூறினமையின் வித்தகஞ்சேர் மெல்லெனோக்கமன்றோ எனக்குச் சிறந்ததுணை, பிறிதில்லையெனத் தனதாற்றாமை தோன்றக் கூறினான். மெய்ப்பாடு: உவகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 106

குறிப்புரை :

12.17 நகை கண்டு மகிழ்தல்
நகை கண்டு மகிழ்தல் என்பது இவள் தன்னை மறைத்தால் முடியா தென்றது மறையாதொழிந்தால் முடியு மென்றாளாமெனத் தலைமகன் உட்கொண்டுநின்று, உன்னுடைய சதுரப்பாட்டைச் சேர்ந்த மெல்லென்ற நோக்கமன்றோ எனக்குச் சிறந்த துணை; அல்லது வேறு துணையுண்டோவென அவளது நகை கண்டு மகிழாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.17. இன்னகைத் தோழி மென்னகை கண்டு
வண்ணக் கதிர்வே லண்ண லுரைத்தது.

பண் :

பாடல் எண் : 18

விண்ணிறந் தார்நிலம் விண்டவ
ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
தோமன்ன நின்னருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விண் இறந்தார் நிலம் விண்டவர் என்று மிக்கார் இருவர் கண் இறந்தார் விண்ணைக்கடந்தவர் நிலத்தைப் பிளந்தவ ரென்று சொல்லப்படும் பெரியோரிருவருடைய கண்ணைக்கடந்தார்; தில்லை அம்பலத்தார் தில்லையம்பலத்தின் கண்ணார்; கழுக்குன்றில் நின்று தண் நறுந் தாது இவர் சந்தனச் சோலைப் பந்து ஆடுகின்றார் எண் இறந்தார் அவரது கழுக்குன்றின்கணின்று தண்ணிதாகிய நறிய தாது பரந்த சந்தனச் சோலையிடத்துப் பந்தாடுகின்றார் இறப்பப்பலர்; மன்ன- மன்னனே; நின் அருள் அவர் யார் கண்ணதோ நினதருள் அவருள் யார்கண்ணதோ? கூறுவாயாக எ - று.
விண்டவரென்பதற்கு முன்னுரைத்தது (தி.8 கோவை பா.24) உரைக்க. அன்னோர்க்கு அரியராயினும் எம் மனோர்க்கு எளிய ரென்னுங் கருத்தால் தில்லை யம்பலத்தாரென்றார். சோலைக் கணின்றென்று கூட்டினுமமையும். எண்ணிறந்தார் பலரென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: மருட்கையைச் சார்ந்த பெருமிதம். நும்மாற் கருதப்படுவாளை அறியேனென்றாளாக, என்குறை இன்னாள் கண்ணதென அறிவித்தால் இவள் முடிக்குமென நினைந்து ஆற்று வானா மென்பது பயன். 107

குறிப்புரை :

12.18 அறியாள் போன்றுநினைவு கேட்டல்
அறியாள்போன்று நினைவுகேட்டல் என்பது தலைமகனது மகிழ்ச்சிகண்டு இவன் வாடாமற் றழைவாங்குவேனென உட்கொண்டு, என்னுடைய தோழியர் எண்ணிறந்தாருளர்; அவருள் நின்னுடைய நினைவு யார்கண்ணதோவெனத் தானறியாதாள் போன்று அவனினைவு கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.18. வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
வெறியார் கோதை யறியே னென்றது.

பண் :

பாடல் எண் : 19

குவவின கொங்கை குரும்பை
குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங்
கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்
சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர்
கின்ற தொளிமுகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்கு விரதங்களான் வருந்தாமற் றவத்தொழிலை நீக்கி அன்பர்க்கு இன்புறு நெறியருளியவனது தாழ்ந்த பொழிலையுடைய சிற்றம்பலத்தை யொப்பாட்கு; குவவின கொங்கை குரும்பை குவிந்த கொங்கைகள் குரும்பையையொக்கும்; குழல் கொன்றை குழல் கொன்றைப் பழத்தை யொக்கும்; செவ்வாய் கொவ்வை செவ்வாய் கொவ்வைக் கனியையொக்கும்; கவவின வாள் நகை வெண் முத்தம் அதனகத்திடப்பட்ட வாணகை வெண்முத்தை யொக்கும்; கண் மலர் செங்கழுநீர் கண்மலர்கள் செங்கழு நீரை யொக்கும்; ஒளிமுகம் உவவின நாள் மதிபோன்று ஒளிர்கின்றது ஒளிமுகம் உவாவின் கணுளதாகிய செவ்விமதி போன்றொளிரா நின்றது எ - று.
தவ வினை தீர்ப்பவனென்பதற்கு மிகவும் வினைகளைத் தீர்ப்பவனெனினுமமையும். உவவினநாண்மதியென்றது ``கால குருகு`` (குறுந்தொகை-25) என்பது போலப் பன்மை யொருமை மயக்கம். எப்பொழுதுந் தன்னுள்ளத்திடையறாது விளங்குதலின், ஒளிர்கின்ற தென நிகழ்காலத்தாற் கூறினான். உவவினமதி பலகலைகள்கூடி நிறைந்த தன்மையையுடைய மதி. நாண்மதி உவாவான நாளின்மதி. 108

குறிப்புரை :

12.19 அவயவங் கூறல் அவயவங் கூறல் என்பது இன்னும் அவளை யிவள் அறிந்திலள்; அறிந்தாளாயிற் றழைவாங்குவாளென உட்கொண்டு நின்று, என்னாற் கருதப்பட்டாளுக்கு அவயவம் இவையெனத் தோழிக்குத் தலைமகன் அவளுடைய அவயவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.19. அவயவ மவளுக்
கிவையிவை யென்றது.

பண் :

பாடல் எண் : 20

ஈசற் கியான்வைத்த வன்பி
னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற் காரென் றவன்தில்லை
யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத்
தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெரு
நீளம் பெருங்கண்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று ஈசனிடத்து யான் வைத்த அன்புபோல அகன்று; அவன் வாங்கிய என்பாசத்தின் காரென்று அவனால் வாங்கப்பட்ட எனது பாசம் போலக் கறுத்து; அவன் தில்லையின் ஒளி போன்று அவனது தில்லையினொளியையொத்து; அவன் தோள் பூசு அத்திருநீறு என வெளுத்து அவன்றோள்களிற் சாத்தும் அத்திரு நீறுபோலவெளுத்து; அவன் பூங்கழல் யாம் பேசு அத்திரு வார்த்தையின் பெருநீளம் பெருங்கண்கள் அவனுடைய பூப்போலுந் திருவடிகளை யாம் பேசும் அத்திருவார்த்தை போல மிகவும் நெடியவாயிருக்கும் என்னாற் காணப்பட்டவளுடைய பெரிய கண்கள் எ - று.
அன்பினகன்றென்பதற்குப் பிறிதுரைப்பாருமுளர். தில்லையி னொளிபோறல் தில்லையினொளிபோலும் ஒளியையுடைத்தாதல். ஆகவே தில்லையே உவமையாம். பூசத்திருநீறு வெள்ளிதாய்த் தோன்றுமாறுபோல வெளுத்தென்றும். பேசத்திருவார்த்தை நெடிய வாயினாற்போலப் பெருநீளமாமென்றும் வினையெச்சமாக்கி, சில சொல் வருவித்துரைப்பினும் அமையும். பெருநீளமாமென ஆக்கம் வருவித்துத் தொழிற்படவுரைக்க. கண்களாற் பெரிது மிடர்ப்பட்டா னாகலானும், தோழியைத் தனக்குக் காட்டின பேருதவியை உடையன ஆகலானும், முன்னர்க் கண்மலர் செங்கழுநீரென்றும் அமையாது, பின்னும் இவ்வாறு கூறினான். கண்ணிற்குப் பிறிதுவகையான் உவமங்கூறாது இங்ஙனம் அகல முதலாயின கூறவேண்டியது எற்றிற்கெனின், அவை கண்ணிற் கிலக்கணமுங் காட்டியவாறாம். என்னை இலக்கணமாமாறு?
கண்ணிற் கியல்பு கசடறக்கிளப்பின்
வெண்மை கருமை செம்மை யகல
நீள மொளியென நிகழ்த்துவர் புலவர்.1
ஆயின் இதனுட் செம்மை கண்டிலேமென்பார்க்குச் செம்மையுங் கூறிற்று. அவன்றோளிற் பூசத்திருநீறென்றதனால் சிவப்புஞ் சொல்லியதாயிற்று. அது செம்மையாற் றோன்றும் வரியெனவறிக. யான்பேசத் திருவார்த்தை யென்னாது யாமென்ற தென்னையெனின், திருவார்த்தை பேசுமன்பர் பலராகலான் யாமென்று பலராகக் கூறினான். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: ஐயமறுத்தல். ; 109

குறிப்புரை :

12.20 கண்ணயந்துரைத்தல்
கண்ணயந்துரைத்தல் என்பது அவயவங் கூறியவழிக் கூறி யும் அமையாது, தனக்கு அன்று தோழியைக் காட்டினமை நினை ந்து, பின்னுங் கண்ணயந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.20. கண்ணிணை பிறழ்வன
வண்ண முரைத்தது.


பண் :

பாடல் எண் : 21

தோலாக் கரிவென்ற தற்குந்
துவள்விற்கு மில்லின்தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி
யேலேம் இருஞ்சிலம்ப
மாலார்க் கரிய மலர்க்கழ
லம்பல வன்மலையிற்
கோலாப் பிரசமன் னாட்கைய
நீதந்த கொய்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இருஞ் சிலம்ப இருஞ்சிலம்பா; தோலாக் கரிவென்றதற்கும் எம்மை யேதஞ்செய்யவருந் தோலாக்கரியை நீவென்றதற்கும்; துவள்விற்கும் யான் குறைமறுப்பவும் போகாது பேரன்பினையுடையையாய் நீ விடாது துவண்ட துவட்சிக்கும்; இல்லின் தொன்மைக்கு ஏலாப் பரிசு உளவே எமது குடியின் பழமைக்கேலாத இயல்பையுடையவென்று எம்மாற் செய்யப்படாதன வுளவே ; ஐய ஐயனே; மாலார்க்கு அரிய மலர்க் கழல் அம்பலவன் மலையில் மாலார்க்குமரிய மலர்போலுங் கழலையுடைய அம்பல வனது மலையின்கண்; கோலாப் பிரசம் அன்னாட்கு நீ தந்த கொய் தழை வைக்கப்படாத தேனையொப்பாட்கு நீ தந்த கொய்தழையை; அன்றி ஏலேம் பிறிதோராற்றானேலேம் எ - று.
உளவே யென்னு மேகாரம்: எதிர்மறை. அஃதென்போல வெனின் ``தூற்றாதே தூர விடல்`` (நாலடியார் - 75) என்றது தூற்றுமென்று பொருள் பட்டவாறு போல வென்றறிக. அன்றியும், ஏலாப்பரிசுளவே யென்பதற்கு நாங்கள் இத்தழை வாங்குவதன் றென்றது கருத்து. எமது குடிப்பிறப்பின் பழமைபற்றி அது சுற்றத்தார் கூடி வாங்குவதொழிந்து நாங்களாக வாங்கினாற் குடிப்பிறப்புக்குப் பழிவருமென்பதனைப் பற்றியென்றவாறு. வழிபட்டுக் காணலு றாமையின், மாலாரென இழித்துக் கூறினாரெனினுமமையும், உளவேலன்றி லேயேமென்பது பாடமாயின், தழை வாங்குகின்றவழி என்பொருட்டால் நீர் நுங்குடிக் கேலாதனவற்றைச் செய்யாநின்றீ ரென்று தலைமகன் கூறியவழி, நீ செய்ததற்குக் கைம்மாறு செய்ய வேண்டுதுமாதலின் இற்பழியாங் குற்றம் இதற்குளவாயினல்லது இதனையேலே மென்று கூறினாளாக வுரைக்க. என்றது இற்பழியாங் குற்றம் இதற்குளவாகலான் ஏற்கின்றேம் நீ செய்தவுதவியைப் பற்றி அல்லதேலேமென்ற வாறெனவறிக. கோலாற்பிரச மென்பது பாடமாயின், கோலிடத் துப்பிரசம் என்றது கோற்றேன். இது சுவைமிகுதியுடைமை கூறியவாறென வுரைக்க. தோலாக்கரிவென்றது முதலாயின நிகழ்ச்சி செய்யுளின் கட் கண்டிலே மென்பார்க்கு இயற்கைப் புணர்ச்சியது நீக்கத்தின்கண் நிகழ்ந்தனவென வுரைக்க. அன்றியும் படைத்துமொழி வகுத்துரை யென்பனவற்றானுமறிக. அகறல் - அவன் கருத்திற்ககறல். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: குறைநேர்தல். 110

குறிப்புரை :

12.21 தழையெதிர்தல்
தழையெதிர்தல் என்பது கண்ணயந்துரைப்பக் கேட்ட தோழி இவ்வாறு ஏற்றல் எங்குடிக்கேலாவாயினும் நீ செய்தவுதவிக்கும் நின்பேரன்புக்கும் ஏலாநின்றேனெனக் கூறித் தலைமகன்மாட்டுத் தழையெதிராநிற்றல். அதற்குச் செய்யுள்
12.21. அகன்றவிடத் தாற்றாமைகண்டு
கவன்றதோழி கையுறையெதிர்ந்தது.

பண் :

பாடல் எண் : 22

கழைகாண் டலுஞ்சுளி யுங்களி
யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
காண்பனின் றம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகுமென்
நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாயறி
யேன் சொல்லும் ஈடவற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் - குத்துகோலைக் காண்டலும் வெகுளுங் களியானையை யொப்பானுடைய; கரத்தில் தழை காண்டலும் பொய் முன் தழைப்பக் காண்பன் கையிற் றழையைக் காண்டலும் அப்பொழுது சொல்லத் தகும் பொய்யை முன்பெருகக் காண்பேன்; அம்பலத்தான் உழைகாண்டலும் நினைப்பு ஆகும் மெல் நோக்கி அம்பலத்தா னுடைய கையிலுழைமானைக் காண்டலும் நினைவுண்டாம் மெல்லிய நோக்கத்தை யுடையாய்; மன் நோக்கம் கண்டால் அம்மன்ன னுடைய புன்கணோக்கத்தைக் கண்டால்; இழை காண் பணை முலையாய் இழைவிரும்பிக் காணப்படும் பெரிய முலையை யுடையாய்; இன்று அவற்குச் சொல்லும் ஈடு அறியேன் இன்று அவற்குப் பொய்சொல்லுநெறி யறிகின்றிலேன்; இனி யாது செய்வாம்? எ - று.
குத்துகோல் வரைத்தன்றி யானை களிவரைத்தாயினாற் போலக் கழறுவார் சொல்வயத்தனன்றி வேட்கை வயத்தனா யினானென்பது போதரக் கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை யன்னா னென்றாள். ஈண்டுக்கழறுவாரென்றது தோழி தன்னை. அதாவது கையுறை பலவற்றையும் ஆகாவென்று தான் மறுத்ததனை நோக்கி. தலைமகளை முகங்கோடற்கு இழைகாண் பணை முலையா யெனப் பின்னும் எதிர்முகமாக்கினாள். தழையெதிர்ந்தாளாயினும் தலைமகளது குறிப்பறியாமையின், அவனைக் கண்டிலள்போலக் கண்டாலென எதிர்காலத்தாற் கூறினாள். இதனை முகம்புகவுரைத்தல் எனினும் குறிப்பறிதல் எனினுமொக்கும். 111

குறிப்புரை :

12.22 குறிப்பறிதல்
குறிப்பறிதல் என்பது தலைமகன் மாட்டுத் தழை யெதிர்ந்த தோழி இவளுக்குத் தெற்றெனக் கூறுவேனாயின் இவள் மறுக்கவுங்கூடுமென உட்கொண்டு, இந்நாள்காறுந் தழையே லாமைக்குத் தக்க பொய்சொல்லி மறுத்தேன்; இன்று அவனது நோக்கங் கண்டபின் பொய்சொல்லுநெறி அறிந்திலேன்; இனிய வனுக்குச் சொல்லுமாறென்னோவெனத் தழையேற்பித்தற்குத் தலைமகளது குறிப்பறியாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.22. தழையெதிரா தொழிவதற்கோர்
சொல்லறியேனெனப் பல்வளைக்குரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

தவளத்த நீறணி யுந்தடந்
தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை
யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும்
பார்குழல் தூமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுரும்பு ஆர் குழல் தூ மொழி - சுரும்பார்ந்த குழலையுடைய தூமொழியாய்; தவளத்த நீறு அணியும் தடந் தோள் அண்ணல் வெண்மையையுடைய நீற்றைச் சாத்தும் பெரிய தோள்களையுடைய அண்ணல்; தன் ஒரு பாலவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் தனதொரு பாகத்துளளாகிய அவட்குத் தந்தையுமாய் மகனுமாந் தில்லையான்; அன்று உரித்தது அன்ன கவளத்த யானை அவன் அன்றுரித்த யானையை யொக்குங் கவளத்தையுடைய யானையை; கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் துவளத் தகுவனவோ நம்மேல் வாராமற் கடிந்தவருடைய கைய வாகிய கண்ணிற்காருந் தழையும் வாடத் தகுவனவோ? தகா எ - று.
தவளத்தநீறு கவளத்தயானை என்பன; பன்மையொருமை மயக்கம். சிவதத்துவத்தினின்றுஞ் சத்திதத்துவந் தோன்றலின் அவளத் தனாமென்றும், சத்திதத்துவத்தினின்றுஞ் சதாசிவதத்து வந்தோன்ற லின் மகனாமென்றும் கூறினார். ``இமவான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் றகப்பன்`` (தி.8 திருப்பொற்சுண்ணம் பா.13) என்பதூஉம் அப்பொருண்மேல் வந்தது. கவளத்தயானை யென்பத னால் தான் விரும்புங் கவளமுண்டு வளர்ந்த யானையென்பதூஉம் கூறப்பட்டதாம். அது ஒருவராற் கட்டப்பட்டு மிடிப்பட்டதன்றாகலான், அதனை வெல்வதரிது; அப்படிப்பட்ட யானையையும் வென்றவர். அங்ஙனம் யானை கடிந்த பேருதவியார் கையனவுந் துவளத் தகுவனவோ வென்றதனால், அவருள்ளமுந் துவளாமற் குறைமுடிக்க வேண்டுமென்பது குறிப்பாற் கூறினாள். உம்மை: சிறப்பும்மை. ஏழைக்குரைத்ததென வியையும். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: குறைநயப்பித்தல். 112

குறிப்புரை :

12.23 குறிப்பறிந்து கூறல்
குறிப்பறிந்து கூறல் என்பது குறிப்பறிந்து முகங்கொண்டு, அதுவழியாகநின்று, யானை கடிந்த பேருதவியார் கையிற்றழை யுந் துவளத்தகுமோ? அது துவளாமல் யாம் அவரது குறை முடிக்க வேண்டாவோவெனத் தோழி நயப்பக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.23. ஏழைக் கிருந்தழை
தோழிகொண் டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

ஏறும் பழிதழை யேற்பின்மற்
றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
மலைநம் மிரும்புனம் காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
யாஞ்செய்வ தேந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: ஏந்திழை - ஏந்திழாய்; தழை ஏற்பின் பழி ஏறும் தழையையேற்பின் தாமேயொரு நட்புச்செய்தாரென்று பிறரிடத்து நமக்குப் பழியேறும்; ஏலாவிடின் அவன் மடல் மா ஏறும் அதனையேலாதொழியின் பிறிதோருபாயமில்லையென்று அவன் மடலாகிய மாவையேறும்; இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் ஏறும் தருமவடிவாகிய இடபத்தைக் கொடியின் கண்வைத்து நமது பிறவித்துன்பத்தை நீக்க ஒருப்பட்டுவந்து அம்பலத்தின்கணேறும்; அரன் மன்னும் ஈங்கோய் மலை அரன் றங்கும் ஈங்கோய் மலையின்; நம் இரும் புனம் காய்ந்து நமது பெரிய புனத்தையழித்து; ஏறும் மலை தொலைத்தாற்கு நம்மை நோக்கி வந்தேறும் மலைபோலும் யானை யைத் தோற்பித்தவற்கு; யாம் செய்வது என்னை யாஞ்செய்வ தென்னோ? அதனை யறிகின்றிலேன் எ - று.
மற்று: வினைமாற்று. மடன்மாவேறுமவனென்று தழையே லாவிடினும் பழியேறுமென்பதுபடக் கூறினமையானும், ஏறுமலை தொலைத்தாற் கென அவன் செய்த உதவி கூறினமையானும், தழையேற்பதே கருமமென்பதுபடக் கூறினாளாம். அன்றியுந் தழையேற்றால் நமக்கேறும்பழியை அறத்தொடுநிலை முதலாயின கொண்டு தீர்க்கலாமென்றும், ஏலாவிடின் அவன் மடன்மாவை யேறுதலான் வரும்பழி ஒன்றானுந் தீர்க்கமுடியா தென்றும் கூறியவாறாயிற்று. வகுத்துரைத்தல் தழையேற்றலே கருமமென்று கூறுபடுத்துச் சொல்லுதல். #9; 113

குறிப்புரை :

12.24 வகுத்துரைத்தல்
வகுத்துரைத்தல் என்பது உதவிகூறவும் பெருநாணின ளாதலின் தழை வாங்கமாட்டாதுநிற்ப, அக்குறிப்பறிந்து, இருவகையானும் நமக்குப் பழியேறும்; அதுகிடக்க நமக்குதவி செய்தாற்கு நாமுமுதவி செய்யுமாறென்னோவெனத் தலைமகள் தழையேற்குமாறு வகுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.24. கடித்தழை கொணர்ந்த காதற் றோழி
மடக்கொடி மாதர்க்கு வகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 25

தெவ்வரை மெய்யெரி காய்சிலை
யாண்டென்னை யாண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம்
பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண்
டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி
திற்றந்த ஈர்ந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அருளான் - நம்மாட் டுண்டாகிய அருளான்; இவ்வரைமேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ந்தழை இம்மலைக்கட் சிலம்பன் எளிதாக்கொணர்ந்து தந்த வாடாத இத்தழை; செழும் கயிலை அவ்வரைமேல் அன்றி இல்லை வளவிய கயிலையாகிய அம்மலை யிடத்தல்லது பிறிதோரிடத்தில்லை; இதனைக் கொள் வாயாக எ-று.
உள்ளவாறென்பது யான் கூறிய இது மெய்ம்மை யென்றவாறு.
தெவ்வரை மெய் எரிகாய்சிலை ஆண்டு பகைவரை மெய்யெரித்த வரையாகிய காய்சிலையைப் பணி கொண்டு; என்னை ஆண்டு கொண்ட பின் என்னை யடிமை கொண்ட; செவ்வரை மேனியன் சிற்றம்பலவன் செழுங்கயிலை செவ்வரைபோலுந் திருமேனியையுடையனாகிய சிற்றம்பலவனது செழுங்கைலை யெனக் கூட்டுக.
மெய் எரியென்பன ஒருசொல்லாய்த் தெவ்வரையென்னும் இரண்டாவதற்கு முடிபாயின. மெய்யெரித்த காய்சிலை மெய்யெரி காய்சிலையென வினைத்தொகையாயிற்று. காய்சிலை: சாதியடை. ஐகாரத்தை அசைநிலையாக்கித் தெவ்வர் மெய்யெரித்தற்குக் காரண மாஞ்சிலையெனினு மமையும். வலியனவற்றை வயமாக்கிப் பயின்று பின் என்னையாண்டா னென்பது போதர, காய் சிலையாண் டென்னை யாண்டுகொண்ட வென்றார். என்னைத் தனக்கடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக்கல்லை வளைத்தான்; என்னெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கொருபகை யுண்டாய்ச் செய்ததன்றுபோலும் என்பது கருத்து. ``கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்டென்னை நின்கழற் கன்பனாக்கினாய்`` (தி.8 திருச்சதகம் பா.94.) என்பதுமது. கயிலைத் தழையை எளிதிற்றந்தா னென்றதனான் வரைவு வேண்டியவழித் தமர் மறுப்பின் வரைந்து கொள்ளுந் தாளாண்மையனென்பது கூறினாளாம். கண்டாயென்பது: முன்னிலையசைச்சொல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெரு மிதம். பயன்: கையுறையேற்பித்தல். 114

குறிப்புரை :

12.25 தழையேற்பித்தல்
தழை யேற்பித்தல் என்பது தழையேலாதொழியினும் பழியேறுமாயிற் றழையேற்பதே காரியமென உட்கொண்டுநிற்ப, அக்குறிப்பறிந்து, இத்தழை நமக்கெளிய தொன்றன்று; இதனை யேற்றுக்கொள்வாயாகவெனத் தோழி தலைமகளைத் தழை யேற்பியாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.25. கருங்குழன் மடந்தைக் கரும்பெறற் றோழி
இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.

பண் :

பாடல் எண் : 26

பாசத் தளையறுத் தாண்டுகொண்
டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலளன்றிச் செய்யா
தனவில்லை பூந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பாசத்தளை அறுத்து பாசமாகிய தளையிற் பட்டுக்கிடப்ப அத்தளையை யறுத்து; ஆண்டு கொண்டோன் தில்லை யம்பலம் சூழ் தேசத்தன தனக்குக் குற்றேவல் செய்ய என்னை யடிமைகொண்டவனது தில்லையம்பலத்தைச் சூழ்ந்த தேசத்தின் கணுள்ளன; செம்மல்! நீ தந்தன - அச்சிறப்பே யன்றிச் செம்மால் நின்னாற் றரப்பட்டன; சென்று யான் கொடுத்தேன் அவற்றைச் சென்று யான் கொடுத்தேன்; பேசில் பெருகும் கொடுப்ப ஆண்டு நிகழ்ந்தன வற்றைச் சொல்லுவேனாயிற் பெருகும்; சுருங்கு மருங்குல் சுருங்கிய மருங்குலையுடையாள்; பூந்தழை அப்பூந் தழையை; அரைத்துப் பூசிற்றிலள் அன்றிப் பெயர்ந்து செய்யாதன இல்லை அரைத்துத் தன்மேனியெங்கும் பூசிற்றிலளல்லது பெயர்த்துச் செய்யாதனவில்லை எ - று. என்றது இவை வாடுமென்று கருதாது அரைத்துப் பூசினாற் போலத் தன்மேனிமுழுதும் படுத்தாள் என்றவாறு. பெயர்த்தென்பது பெயர்ந்தென மெலிந்துநின்றது. பிசைந்தரைத்தென்று பாட மோதுவாருமுளர். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகனை யாற்றுவித்தல். 115

குறிப்புரை :

12.26 தழைவிருப்புரைத்தல் தழை விருப்புரைத்தல் என்பது தலைமகளைத் தழை யேற்பித்துத் தலைமகனுழைச் சென்று, நீ தந்த தழையை யான்சென்று கொடுத்தேன்; அதுகொண்டு அவள் செய்தது சொல்லிற் பெருகுமெனத் தலைமகளது விருப்பங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.26. விருப்பவள் தோழி
பொருப்பற் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 1

வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஓர் கார்ப்பொழில் ஒரு கரிய பொழில்; புறம் வெய்யோன் தான் நுழையா இருளாய் புறமெங்குங் கதிரோன் றான்சென்று நுழையாதவிருளாய்; நாப்பண் வண் தாரகை போல் தேன் நுழை நாகம் மலர்ந்து நடுவண் வளவிய வான் மீன்போலத் தேன்கள் நுழையும் நாகப்பூ மலர்ந்து; திகழ் பளிங்கான் திகழும் பளிங்கால்; மதியோன் கான் உழை வாழ்வு பெற்றாங்கு எழில் காட்டும் திங்கட்கடவுள் வானிடத்து வாழ்வையொழிந்து கானிடத்து வாழ்தலைப் பெற்றாற்போலத் தனதெழிலைப் புலப்படுத்தும் எ-று.
வான் உழை வாள் இருட்கு அப்பாலாகிய வானிடத் துண்டாகிய ஒளி; அம்பலத்து அரன் இவ்வண்ணஞ் சேயனாயினும் அணியனாய் அம்பலத்தின்கணுளனாகிய அரன்; குன்று என்று வட்கி வெய்யோன் தான் நுழையா அவனது மலையென்று கூசினாற்போல வெய்யவன் நுழையாவெனக்கூட்டுக. ``அண்ட மாரிரு ளூடு கடந்தும்ப - ருண்டு போலுமோரொண் சுடர்`` (தி.5 ப.97 பா.2) என்பதூஉம் அப்பொருண்மேல் வந்தது. வட்கி யென்பதனால் முன் பற்பறியுண்டானாதல் விளங்கும்.வானுழை வாளென்பதற்குக் கற்பவிறுதிக்கண் தோன்றிய முறை யானே வான்சென்றொடுங்கும் ஒளியென்றுரைப்பாருமுளர். புறம் இருளாயெனவும், நாகமலர்ந் தெனவும், சினைவினை முதன்மேலேறி நின்றன. புறம் இருளா யென்பது இடத்து நிகழ்பொருளின் வினை இடத்தின்மேலேறி நின்றது. இது குறிப்பெச்ச மாதலான், ஆண்டு வாவென்பது கருத்து. மெய்ப்பாடு: உவகை. பயன்: குறியிட முணர்த்துதல். 116

குறிப்புரை :

13.1 குறியிடங் கூறல்
குறியிடங் கூறல் என்பது தழைவிருப்புரைத்த தோழி ஆங்கவள் விளையாடுமிடத்து ஒரு கரியபொழில் கதிரவன் நுழையாவிருளாய் நடுவண் ஒரு பளிக்குப் பாறையையுடைத்தா யிருக்கும்; அவ்விடத்து வருவாயாகவென்று தலைமகனுக்குக் குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.1. 9; வாடிடத் தண்ணல் வண்தழை யெதிர்ந்தவள்
ஆடிடத் தின்னியல் பறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு
காதரந் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத்
தான்வரைத் தண்புனத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொன்னே பொன்னே; காதரம் தீர்த்து அருளும் தயல் வளர் மேனியன் பிறவி காரணமாகவரு மச்சத்தை நீக்கி அருள்செய்யுந் தையல் தங்குந் திருமேனியை யுடையவனாகிய; அம்பலத்தான் வரைத் தண் புனத்து அம்பலத்தானது மலையிற் குளிர்ந்த புனத்தின்கண்; புயல் வளர் ஊசல் முன் ஆடி புயல்தங்கு மூசலை முன்னாடி; பின்னைப் போய் பின்போய்; அயல்பொலியும் வளர் குன்றில் நின்று அருவி ஏற்றும் அதற்கயலாகிய பொலியும் உயர்ந்த குன்றின்கணின்று அருவியை ஏற்போம்; திரு உருவின்கயல் வளர் வாள் கண்ணி போதரு திருப்போலும் உருவினையும் கயல்போலும் வாட்கண்ணையுமுடையாய், நீ போதுவாயாக எ-று.
உயர்ந்த வழை மரத்திற் றொடுத்தலால், புயல் வளரூசலென்றாள், வளர்கண்ணெனவியையும், ஈண்டு வளர் என்பது: உவமையுருபு. வாள்: உவமை; ஒளியெனினுமமையும். தண்புனத்துப் போதருவென இயைப்பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம்; உவகையுமாம். பயன்: குறியிடத்துப் போதருதல். 117

குறிப்புரை :

13.2 ஆடிடம் படர்தல்
ஆடிடம் படர்தல் என்பது தலைமகனுக்குக் குறியிடங் கூறின தோழி யாம் புனத்தின்கட்போய் ஊசலாடி அருவியேற்று விளையாடுவேம் போதுவாயாகவெனத் தலைமகளை ஆயத் தொடுங் கொண்டு சென்று ஆடிடம் படராநிற்றல். அதற்குச் செய்யுள்
13.2. வண்தழை யெதிர்ந்த வொண்டொடிப் பாங்கி
நீடமைத் தோளியொ டாடிடம் படர்ந்தது.

பண் :

பாடல் எண் : 3

தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர்
கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி
யம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன
காண்டும் புனமயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்: தொழுது எழுவார் வினை வளம் நீறு எழ தொழா நின்று துயிலெழுவாருடைய வினையினது பெருக்கம் பொடியாக; நீறு அணி அம்பலவன்றன் வெற்பிற் தன் றிருமேனிக் கண் நீற்றையணியும் அம்பலவனது வெற்பில்; புனை வளர் கொம்பர் அன்னாய் கைபுனையப்பட்ட வளர்கொம்பையொப்பாய்; தினைவளம் காத்து தினையாகிய வளத்தைக் காத்து; சிலம்பு எதிர்கூஉய் சிலம்பிற் கெதிரழைத்து; சிற்றில் முற்று இழைத்து சிற்றிலை மிகவுமிழைத்து; சுனை வளம் பாய்ந்து சுனைப்புனலிற் பாய்ந்து; துணை மலர் கொய்து ஒத்த மலர்களைக் கொய்து; அன்ன புனமயில் காண்டும் அத்தன்மையவாகிய புனமயிலைக் காண்பேம் யாம் எ-று.
மலைக்கு வளமாதனோக்கித் தினைவளமென்றாள். தினையினது மிகுதியெனினுமமையும். தொழுதெழுவாரென்றது துயிலெழுங்காலத்தல்லது முன்னுணர்வின்மையான் உணர்வுள்ள காலத்து மறவாது நினைவார் என்றவாறு. நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்குமெழிலுடைமையான் அக்கோலந் தொழுதெழுவாருள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ளவினை நீறாமென்னுங் கருத்தால், வினைவள நீறெழ நீறணியம்பலவனென்றார். புதல்வனது பிணிக்குத் தாய் மருந்துண்டாற்போலத் தொழுதெழுவார் வினைக்குத் தானீறணிந்தானென்பாருமுளர். வெற்பினென்புழி வெற்பைத் தினைகாத்தல் முதலாகிய தொழிற்கு இடமாக வுரைப்பினுமமையும்.
அத்தன்மையவாகிய மயிலென்றது பொருளதி காரத்திற் கூறப்பட்ட தலைமகள் தான்றமியளாய் நின்று கண்ட மயிலை. இயற்கைப்புணர்ச்சிய திறுதிக்கட் டோழி தனது வாட்டத்தை வினவியபோது யானோரிள மயிலாலுவது கண்டேன்; அதனை நீயுங் காணப் பெற்றிலை யென வாடினே னென்று உரைப்பக் கேட்டாளாதலான், அதனைப் பற்றி அம்மயிலைக் காண்டு மென்றாளாயிற்று. மெய்ப்பாடு: அது. பயன்: ஆயம்பிரிதல். 118

குறிப்புரை :

13.3 குறியிடத்துக்கொண்டு சேறல்
குறியிடத்துக்கொண்டு சேறல் என்பது ஆடிடம்படர்ந்த தோழி தலைமகனுக்குத் தான்சொன்ன குறியிடத்து இவளைக் கொண்டு சென்றுய்க்கும்பொழுது, ஆயத்தாரைத் தம்மிடத்தி னின்று நீக்க வேண்டுதலின் தினைகாத்தல் முதலாகிய விளையாட்டுக்களைத் தான் கூறவே அவ்வவ்விளையாட்டிற் குரியார் தலைமகள் அவ்வவ் விடங்களிலே வருவளென்று கருதித்தோழி சொன்ன வகையே அவ்வவ் விளையாட்டு விருப்பினான் எல்லாரும் பிரிவர்; அவ்வகை ஆயவெள்ளத்தைப் பிரிவித்து, தமியளாய் நின்ற தலைமகளையுங் கொண்டு யாமும் போய் மயிலாடல் காண்பேமென அக்குறியிடத்துச் செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.3. அணிவள ராடிடத் தாய வெள்ள
மணிவளர் கொங்கையை மருங்க கன்றது.

பண் :

பாடல் எண் : 4

நரல்வே யினநின தோட்குடைந்
துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங்
கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கர்
தடமலர் கொண்டுவந்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உங்கே சென்று யான் உவ்விடத்தே சென்று; ஈர்ங்குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தடமலர் கொண்டு வந்து தேனானீரிய பூங்கொத்தைமூடிய அளிகள் முரலுந் தாதுநிறைந்த பெரியமலர்களைக் கொய்து கொண்டு வந்து; உன் வார் குழற்கு வேய்தருவன் நின்னுடைய நெடியகுழற்கண் வேய்வேன்; பரன் தில்லை அன்னாய் பரனது தில்லையை யொப்பாய்; நரல் வேய் இனம் நின தோட்கு உடைந்து உக்க நல்முத்தம் சிந்தி காற்றா னொன்றோடொன்று தேய்ந்து நரலும் வேய்த்திரள் உன்னுடைய தோள்கட்கஞ்சிப் பிளத்தலான் உக்க நல்ல முத்துக்கள் சிதறுதலால்; பரல் வேய் அறை பஞ்சு அடி உறைக்கும் பரல் மூடிய பாறை நினது பஞ்சடிக் கணுறைக்கும்; வரல் இங்கே நில் அதனான் என்னோடு ஆண்டு வரற்பாலையல்லை, ஈண்டு நிற்பாயாக எ-று.
யான்றருவன் நீ வேயென்றும் பிறவாற்றானு முரைப்பாரு முளர். குரலென்பது பூங்கொத்தை. தடமல ரென்பதற்குத் தடத்து மலரென்றுரைப்பாருமுளர். பரல்வேயறை யுறைக்கும் வரல்; வேய்தருவன்; இங்கேநில்லென்று தலைமகளைத் தோழி கூறி இவ்விடத்தே நில்லென்றாள். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்குதல். 119

குறிப்புரை :

13.4 இடத்துய்த்து நீங்கல்
இடத்துய்த்து நீங்கல் என்பது குறியிடைக் கொண்டு சென்ற தோழி யான் அவ்விடத்துச்சென்று நின்குழற்குப் பூக்கொய்து வருவேன்; அவ்விடம் வேய் முத்துதிர்தலான் நினது மெல்லடிக்குத் தகாதாதலான் நீ என்னோடு வாராது இங்கேநின்று பூக்கொய்வாயாக வெனத் தலைமகளைக் குறியிடத்து நிறுத்தித் தானீங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
13.4. மடத்தகை மாதரை இடத்தகத் துய்த்து
நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 5

படமா சுணப்பள்ளி யிக்குவ
டாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைகிற்றிவ் வார்பொழிற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வடம் ஆர் முலை மடவாய் வடமார்ந்த முலையையுடைய மடவாய்; தில்லை நின்றவன் ஈர்ங்கயிலை வார் பொழிற்கு வந்து வைகிற்று தில்லைக்கணின்றவனது குளிர்ந்த கயிலைக்கண் நீண்ட இப்பொழிலிடத்து வந்து தங்கியது; இக்குவடு படமாசுணப் பள்ளி ஆக்கி இக்குவட்டைப் படத்தையுடைய மாசுண மாகிய பள்ளியாக்கி; என்னைப் பங்கயக் கண் அந்நெடுமால் என நீ நினைந்தோ என்னை அம்மாசுணப்பள்ளியிற் றங்கும் பங்கயம் போலுங் கண்ணையுடைய அந்நெடியமாலென்று நீ நினைந்தோ; நெஞ்சத்தாமரையே இடம் ஆ இருக்கல் உற்றோ நெடுமாலின் மார்பினன்றித் தாமரையினுமிருத்தலான் யான் நீங்கினும் என்னெஞ்சமாகிய தாமரையே நினக்கிடமாக இருக்க நினைந்தோ?, கூறுவாயாக எ-று.
மாசுணப்பள்ளி மாசுணத் தானியன்ற பள்ளியெனினு மமையும். என்னெஞ்சத் தாமரைக் கணிருக்கலுற்றோ வென்றதனான், இப்பொழிற்கண் வந்து நின்றநிலை ஒருஞான்றும் என்னெஞ்சினின்று நீங்காதென உவந்து கூறினானாம். கயிலைமட வாயென்றியைப்பினு மமையும். வான்பொழிலென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளைக் கண்டு தன் காதன் மிகுதியாற்றோன்றிய பேருவகையை ஆற்றகில்லான் ஆற்றுதல்; தலைமகளை மகிழ்வித்தலுமாம். 120

குறிப்புரை :

13.5 உவந்துரைத்தல்
உவந்துரைத்தல் என்பது தோழி தலைமகளைக் குறியிடை நிறுத்தி நீங்காநிற்பத் தலைமகன் சென்றெதிர்ப்பட்டு, இக்குவட்டை மாசுணப்பள்ளியாகவும் என்னைத் திருமாலாகவும் நினைந்தோ நீ இப்பொழிற்கண் வந்து நின்றதெனத் தலைமகளை உவந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.5. களிமயிற் சாயலை யொருசிறைக் கண்ட
ஒளிமலர்த் தாரோ னுவந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்
லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் 9;
மூடித்தன் ஏரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தொத்து ஈன் மலர்ப் பொழில் தில்லைத் தொல்லோன் அருள் என்ன முன்னி - கொத்துக்களையீனும் மலர்ப் பொழில்களையுடைய தில்லையிற் றொல்லோனதருள்போல வந்தெதிர்ப்பட்டு; முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி கண்ணீர்த் துளியாகிய முத்தைவிடாநின்ற கண்ணாகிய குவளை களைக் கையாகிய மெல்லிய காந்தட்பூவான் மூடி; தன் ஏர் அளப்பாள் ஒத்து அதனோடு சார்த்தித் தன்னெழிலை யளவிடுவாள் போன்று; ஈர்ங்கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க குளிர்ந்த கொடியின்கண் நாணி மறைகின்றவளது மருங்குலடர்ப்புண்ண; பித்தீர் பணைமுலைகாள் பித்தையுடையீர் பணைமுலைகாள்; இன்னும் பெருக்கின்றது என்னுக்கு நும்பெருமைமேல் இன்னு நீர்பெருக்கின்ற தெற்றிற்கு? இது நன்றன்று எ-று.
தமக்காதார மென்று கருதாது அடர்க்கின்றமை நோக்கி, பித்தீரென்றான். பெருக்கின்ற தெற்றிற்கு நீர் பித்தையுடையீரென வினைக்குறிப்பு முற்றாகவுரைப்பினுமமையும். இவ்வாறு தானாதர வுரைத்து இறுமருங் குறாங்குவானாய்ச் சென்று சாருமென்பது. ஈன்கொடி, ஈன்பணை முலையென்பனவும் பாடம். ஈன்கொடி மலரீன்றகொடி. அரிவை யையென்பது பாடமாயின் நாணுதல் கண்ட வென்பனவற்றை ஒருசொல்லாக்கி முடிக்க. மெய்ப்பாடு: அது. பயன்: சார்தல் . 121

குறிப்புரை :

13.6 மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது உவந்துரைப்பக் கேட்ட தலைமகள் பெருநாணினளாதலிற் கண்புதைத்து ஒருகொடியி னொதுங்கி வருந்தாநிற்ப, சென்றுசார்தலாகாமையிற் றலைமகன் அவ்வருத்தந் தணிப்பான்போன்று, முலையொடு முனிந்து அவளிறுமருங்கு றாங்கி யணையாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.6. வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
கோதை வேலவன் ஆதர வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

அளிநீ டளகத்தின் அட்டிய
தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நீ தண் நறவு உண் களி எனச் செய்தவன் கடல் தில்லை அன்னாய் நீ குளிர்ந்த நறவையுண்ணுங் களிமகனென்று பிறர் சொல்லும் வண்ணம் ஓரின்பத்தை யெனக்குச் செய்தவனது கடலை யுடைய தில்லையையொப்பாய்; அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அளிகள் விடாது தங்கு மளகத்தின்கண் இட்டதாதும்; அணி அணியும் அணிந்தவணிகளும்; ஒளி நீள் சுரிகுழல்சூழ்ந்த ஒண் மாலையும் ஒளியையுடைய நீண்ட சுரிகுழல் இடத்துச் சுற்றிய நல்லமாலையும் இவையெல்லாம்; நீ அனைய பொன்னே பன்னு கோலம் நின்னோடொருதன்மையளாகிய நின்றோழி யாராய்ந்து செய்யுங் கோலமே; திரு நுதலே திருநுதலாய்; கலங்கல் யான்பிறிதோர் கோலஞ் செய்தேனென்று கலங்க வேண்டா; தெளி தெளிவாயாக எ-று.
தண்ணறவுண்களி நீயெனச் செய்தவ னென்பதற்குப் பிறிது ரைப்பாருமுளர். பொன்னேயென்னு மேகாரம்: பிரிநிலையேகாரம். அணிமணியுமென்பதூஉம் பாடம். பாங்கியறிவு பாங்கியவ் வொழுக்கத்தையறிந்த வறிவு. மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: பாங்கியறிந்தமை தலைமகட்குணர்த்துதல். 122

குறிப்புரை :

13.7 பாங்கியறிவுரைத்தல்
பாங்கி யறிவுரைத்தல் என்பது மருங்கணைவிறுதிக்கட் டலைமகளதையந்தீர, அவளைக்கோலஞ்செய்து, இது நின்றோழி செய்த கோலமே; நீ கலங்கா தொழிகெனத் தலைமகன் தான்றோழியொடு தலைப்பெய்தமை தோன்றக் கூறாநிற்றல் . அதற்குச் செய்யுள்
13.7. நெறிகுழற் பாங்கி
அறிவறி வித்தது.

பண் :

பாடல் எண் : 8

செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை யளிகுலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செழுநீர் `மதிக் கண்ணிச் சிற்றம்பலவன் திருக்கழலே வளவிய நீர்மையையுடைய மதியாகிய கண்ணியை யுடைய சிற்றம்பலவனது திருக்கழல்களையே; கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் பொருந்து நீர்மையான் உண்மகிழ்ந்து முகமலர்வது போலப் போதாகிய நிலைமையை விட்டு மலராம் நிலைமையையடைந்து சிறிதே மலரத்தொடங்கும்; கள் அகத்த கழுநீர்மலர் இவள் தேனை யகத்துடைய கழுநீர் மலர் இவள்; யான் அதன்கண் மருவிப் பிரியாக் கொழுநீர் நறப்பருகும் பெரு நீர்மை அளிகுலம் யான் அக்கழுநீர் மலர்க்கண் மருவி ஒருகாலும் பிரியாத கொழுவிய நீர்மையையுடைய அந்நறவைப்பருகும் பெருந்தன்மையையுடைய தோரளிசாதி எ-று.
செழுநீர்மதிக்கண்ணி யென்பதற்கு வளவியநீரு மதியாகிய கண்ணியுமென்பாருமுளர். திருக்கழலே யென்னுமேகாரம்: பிரிநிலை யேகாரம். செழுநீர்மையையுடைய கழுநீர் மலரென்றியைப்பினு மமையும். சென்று கிண்கிணிவாய்க் கொள்ளுமென்பதனால், பேதைப் பருவங் கடந்து இன்பப்பருவத்த ளாயினாளென்பது விளங்கும். கள்ளகத்தவென்பதனால், புலப்படா துண்ணிறைந்த காதலளென்பது விளங்கும். கள்ளகத்த கழுநீர் மலரென்பது ``காலகுருகு`` (குறுந் - 25) என்பதுபோல நின்றது; பெயரெச்ச மெனினுமமையும். யான் மருவிப் பிரியாத அளிகுலமெனினுமமையும். நறா: குறுகி நின்றது. பெரு நீர்மை அளிகுலமென்றான், கழுநீர் மலரல்ல தூதாமையின். அதனால், பிறிதோரிடத்துந் தன்னுள்ளஞ் செல்லாமை விளங்கும். மெய்ப்பாடு: உவகை. பயன்: நயப் புணர்த்துதல். 123

குறிப்புரை :

13.8 உண்மகிழ்ந்துரைத்தல்
உண்மகிழ்ந்துரைத்தல் என்பது பாங்கியறிவுரைப்பக் கேட்ட தலைமகள், இனி நமக்கொரு குறையில்லையென வுட்கொண்டு முகமலராநிற்ப, அம்முகமலர்ச்சி கண்டு, அவளைக் கழுநீர்மலராகவும், தான் அதனறவைப் பருகும் வண்டாகவும் புனைந்து, தலைமகன் றன்னுண்மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.8. தண்மலர்க் கோதையை
உண்மகிழ்ந் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில்
தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
சேர்க திருத்தகவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இப் பிறப்பில் அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் இப்பிறவியின்கணழுந்தா வண்ண மென்னையடிமை கொண்டவனது சிற்றம்பலத்தை யொப்பாய்; கொழுந்தாரகை முகை கொண்டல் பாசடை விண் மடுவில் கொழுவிய தாரகையாகிய முகையையுங் கொண்டலாகிய பசிய விலையையு முடைய விண்ணாகிய மடுவின்கண்; எழுந்து ஆர் மதிக் கமலம் எழில் தந்தென எழுந்து நிறைந்த மதியாகிய வெண்டாமரைப் பூத்தன தெழிலைப் புலப்படுத்தினாற்போல; செழுந் தாது அவிழ்பொழில் ஆயத்துத் திருத்தகச் சேர்க வளவிய தாதவிழாநின்ற பொழிற்கண் விளையாடுகின்ற ஆயத்தின்கட் பொலிவு தக இனிச்சேர்வாயாக எ-று.
முகையோடு தாரகைக்கொத்தபண்பு வெண்மையும் வடிவும் பன்மையும். தாரகையோ டாயத்தார்க்கொத்தபண்பு பன்மையும் ஒன்றற்குச் சுற்றமாய் அதனிற்றாழ்ந்து நிற்றலும். கமலத்தோடு மதிக்கொத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலியும். மதியோடு தலைமகட்கொத்தபண்பு கட்கினிமையும் சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும். இவ்வாறொத்தபண்பு வேறுபடுதலான் உவமைக் குவமை யாகாமை யறிந்துகொள்க. கொண்டலம் பாசடையென்புழி அம்முச்சாரியை அல்வழிக்கண் வந்தது; அம் - அழகெனினுமமை யும். புனைமடமான் கைபுனையப்பட்டமான். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: புறத்தாரறியாமைப் பிரிதல். 124

குறிப்புரை :

13.9 ஆயத்துய்த்தல்
ஆயத்துய்த்தல் என்பது மலரளிமேல்வைத்து மகிழ்வுற்றுப் பிரிய லுறாநின்ற தலைமகன், யாமித்தன்மையேமாதலின், நமக்குப் பிரிவில்லை, இனி யழகிய பொழிலிடத்து விளையாடும் ஆயம் பொலிவுபெறச் சென்று, அவரோடு சேர்ந்து விளையாடு வாயெனத் தலைமகளை யாயத்துச் செலுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.9. கனைகடலன்ன கார்மயிற்கணத்துப்
புனைமடமானைப் புகவிட்டது.

பண் :

பாடல் எண் : 10

பொன்னனை யான்தில்லைப் பொங்கர
வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர்
போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
தாழ்குழற் கேய்வனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆய் மறியே அசைந்த மான்மறிபோல்வாய்; பொன் அனையான் பொன்னையொப்பான்; தில்லைப் பொங்கு அரவம் புன்சடை மிடைந்த மின் அனையான் தில்லைக் கணுளனாகிய வெகுளாநின்ற வரவம் புல்லிய சடைக்கண் மிடைந்த மின்னையொப்பான்; அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த அவனதருளைப் பொருந்தாதாரைப் போல மெல்லிய விரல்கள் வருந்த; மெல் நனை பறியேல் மென்னனைகளைப் பறியா தொழிவாயாக; மணம் தாழ் குழற்கு ஏய்வன வெறி ஆர் மலர்கள் இன்னன யான் கொணர்ந்தேன் நின்மணந்தங்கிய குழற்குப் பொருந்துவனவாகிய நறுநாற்றநிறைந்த மலர்களித்தன்மையன வற்றை யான் கொணர்ந்தேன் எ-று.
மிடைந்த வென்னும் பெயரெச்சம் மின்னனையானென்று நிலப்பெயர்கொண்டது. அரவஞ்சடைமிடைதலை மின்மேலேற்றி, இல்பொருளுவமையாக வுரைப்பாருமுளர். இல்பொருளுவமை யெனினும் அபூதவுவமையெனினு மொக்கும். இவள் மலரைப் பறியாமல் மொட்டைப் பறிப்பானே னென்பதுகடா. அதற்கு விடை: இவள் தலைமகனைப் பிரிந்து அப்பிரி வாற்றாமையானும், தலைமகன் புணர்ச்சிநீக்கத்துக்கட் டன்னைக் கோலஞ்செய்த அக்கோலத்தைத் தோழி காணாநின்றாளென்னும் பெருநாணினானும் ஆற்றாளாய், மலரைப் பறிக்கின்றவள் மயங்கி மொட்டைப் பறித்தாளெனவறிக. மெல்லிய மொட்டுக்களைப் பறியாதொழி, இத்தன்மைய நறுமலரை நின்குழற்கணிதற்கு யான்கொணர்ந்தேனென்பதனான், இவ் வொழுக்கம் யானறியப்பட்டது காணென்றுடம்பாடு கூறிய வாறாயிற்று. என்னனையாய் கொணர்ந்தேனென்பதூஉம் பாடம். நின்றிடத்துய்த்து இடத்துய்த்து நீங்கிநின்று. பெயர்ந்து - மீண்டு சென்று. 125

குறிப்புரை :

13.10 தோழிவந்து கூடல்
தோழிவந்து கூடல் என்பது தலைமகனைப் பிரிந்த தலை மகடானும் பூக்கொய்யாநின்றாளாகப் பிரிவாற்றாமையானும் பெருநாணினானுந் தடுமாறி மொட்டுக்களைப் பறியாநிற்ப, யானின் குழற்காம் பூக்கொண்டு வந்தேன், நீ விரல்வருந்த மொட்டுக்களைப் பறிக்கவேண்டாவெனத் தோழிவந்து கூடா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.10. நெறியுறு குழலியை நின்றிடத் துய்த்துப்
பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 11

அறுகால் நிறைமல ரைம்பால்
நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா
வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
என் சிரத்தின் உறுகால் பிறர்க்கு மிக அரியோன் புலியூர் அன்ன ஒண்ணுதலே என்றலைக்கணுற்றகால் பிறர்க்கு மிகவரியவனது புலியூரை யொக்குமொண்ணுதலாய்; அணி ஆர் துறு கான் மலர்த் தொத்து அழகார்ந்த நெருங்கிய நறுநாற்றத்தையுடைய மலர்க்கொத்துக்களை; அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் வண்டுகணிறைந்த மலரையுடைய நின்னைம்பாற்கண் நிறைய வணிந்தேன்; தோகை தோகையையொப்பாய்; சிறு கால் மருங்குல் வருந்தாவகை சிறியவிடத்தையுடைய மருங்குல் வருந்தாவண்ணம்; தொல் ஆயம் மெல்லப் புகுக பழையதாகிய ஆயத்தின்கண் மெல்லப் புகுவாயாக எ-று.
அறுகானிறை மலரை யணிந்தே னென்றும், மலர்க் கொத்துக் களையுடைய தோகாயென்றும், உரைப்பாருமுளர். நிறைய வென்பது குறைந்துநின்றது. காலென்னுஞ்சினை பிறர்க்கரியோ னெனத்தன் வினைக்கேலாவெழுத்துக்கொண்டது. இவையிரண்டற்கும் மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றாமை நீக்குதல். 126

குறிப்புரை :

13.11 ஆடிடம் புகுதல்
ஆடிடம் புகுதல் என்பது கொய்துவந்த மலருங் குழற் கணிந்து, இனி நின்சிறுமருங்குல் வருந்தாமல் மெல்லச் செல்வாயாக வெனத் தோழி தலைமகளையுங்கொண்டு ஆடிடம் புகாநிற்றல். அதற்குச் செய்யுள் 13.11. தனிவிளை யாடிய தாழ்குழற் றோழி
பனிமதி நுதலியோ டாடிடம் படர்ந்தது.

பண் :

பாடல் எண் : 12

தழங்கு மருவியெஞ் சீறூர்
பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண்
டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடிதென்
தில்லை மணிநகர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பெரும பெரும; தழங்கும் அருவி இது எம் சீறூர் தழங்காநின்ற அருவியையுடைய விஃதெமது சீறூர்; மதுவும் கிழங்கும் அருந்தி இன்று எம்மொடு இருந்து இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு நீயுமருந்தி இன்றெம்மோடுதங்கி; குன்றர் கிளர்ந்து முழங்கும் குரவை இரவில் கண்டு மணி நகர்க்கு ஏகுக குன்றரெல்லாருமெழுந்து முழங்குமிந்நிலத்து விளையாட்டாகிய குரவையை யிரவிற்கண்டு நாளை நினது நல்ல நகர்க்கேகுவாயாக எ-று.
முத்தன் இயல்பாகவே முத்தன்; முத்தி வழங்கும் பிரான் முத்தியையேற்பார்க்கு வழங்குமுதல்வன்; எரியாடி ஊழித்தீயின் கணாடுவான் - தென்தில்லை மணிநகர் - அவனது தெற்கின் கட்டில்லையாகிய மணிநகரெனக் கூட்டுக. ஏற்பார்மாட்டொன்றுங் கருதாது கொடுத்தலின் வழங்கு மென்றார். உலகியல் கூறுவாள்போன்று ஒருகானீவந்து போந்துணை யாலிவளாற்றுந் தன்மையளல்லளென்பது பயப்பக்கூறி, வரைவு கடாயவாறு. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: குறிப்பினாற் பிரிவாற்றாமை கூறி வரைவுகடாதல். 127

குறிப்புரை :

13.12 தனிகண்டுரைத்தல்
தனிகண்டுரைத்தல் என்பது தலைமகளை யாயத்துய்த்துத் தலைமகனுழைச் சென்று, இஃதெம்மூர்; இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு நீயுமருந்தி, இன்றெம்மோடுதங்கி, நாளை நின்னூருக்குப் போவாயாகென உலகியல் கூறுவாள் போன்று, வரைவுபயப்பக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் 13.12. வேயோத்த தோளியை ஆயத் துய்த்துக்
குனிசிலை யண்ணலைத் தனிகண்டு ரைத்தது

பண் :

பாடல் எண் : 13

தள்ளி மணிசந்த முந்தித்
தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை
பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை
யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
போன்ற வனமுலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மணி தள்ளி மணிகளைத் தள்ளி; சந்தம் உந்தி சந்தனமரங்களை நூக்கி; தறுகட் கரி மருப்புத் தெள்ளி தறுகண்மை யையுடைய யானையின் மருப்புக்களைக் கொழித்து; நறவம் திசைதிசை பாயும் மலைச் சிலம்பா தேன் றிசைதோறும் பரக்கும் மலையையுடைய சிலம்பனே; வெள்ளி மலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும் தனது வெள்ளிமலையாகிய கயிலையையொக்கும் பெரியவிடையையுடையவனது புலியூர் போலவிளங்கும்; வள்ளி மருங்குல் கொடிச்சியது மருங்குலை; வனமுலைவருத்துவ போன்றன நல்ல முலைகள் வளராநின்ற படியால் வருத்துவன போன்றன; இனி வரைந்தெய்துவாயாக எ-று.
சிலம்பனென்பது அதனையுடையனென்னும் பொருணோக் காது ஈண்டுப் பெயராய் நின்றது. புலியூர் புரையு மென்பதூஉம் பாடம். யாவருமறியாவிவ்வரைக்கண்வைத்த தேன் முதிர்ந்துக்கு அருவி போன்றெல்லாருங்காணத் திசைதிசை பரந்தாற் போல, கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறுபாட்டாற் புறத்தார்க்குப் புலனாய் வெளிப் படாநின்றதென உள்ளுறையுவமை யாயினவாறு கண்டு கொள்க. மெய்ப்பாடு: அச்சம். இவ்வொழுக்கம் புறத்தாரறி யினி வளிறந்துபடும், இறந்துபட இவனுமிறந்து படுமென்னு நினைவி னளாதலால், பயன்: வரைவுகடாதல். 128

குறிப்புரை :

13.13 பருவங்கூறி வரவு விலக்கல்
பருவங்கூறி வரவு விலக்கல் என்பது உலகியல் கூறுவாள் போன்று குறிப்பால் வரைவுகடாவி, இனியிவ்வாறொழுகாது வரைவொடு வருவாயாக வெனத் தலைமகளது பருவங்கூறி, தலைமகனைத் தோழி வரவுவிலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
13.13. மாந்தளிர் மேனி யைவரைந் தெய்தா
தேந்த லிவ்வா றியங்க லென்றது.

பண் :

பாடல் எண் : 14

மாடஞ்செய் பொன்னக ரும்நிக
ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
றோநின்று கூறுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாடம் செய் பொன் நகரும் இம்மாதர்க்கு நிகர் இல்லை என்ன மாடமாகச் செய்யப்பட்ட பொன்னகராகிய அமராவதிக்கண்ணும் இம்மாதர்க் கொப்பில்லையென்று சொல்லும் வண்ணம்; பீடம் செய் தாமரையோன் பெற்ற பிள்ளையை பீடமாகச் செய்யப்பட்ட தாமரையையுடைய நான்முகன்பயந்த பிள்ளையை; கயிலைக் கூடம் செய் சாரற் கொடிச்சி என்றோ நின்று கூறுவது கயிலை மலைக்கட் கூடஞ்செய்யப்பட்ட சாரலிடத்து வாழுங் கொடிச்சியென்றோ நீ நின்றுசொல்லுவது? இவ்வாறு சொல்லற் பாலையல்லை எ-று.
உள்ளலரைக் கீடம் செய்து தன்னை நினையாதாரைப் புழுக்களாகச் செய்து; என் பிறப்புக் கெடத் தில்லை நின்றோன் கயிலை யான்றன்னை நினைவேனாகச் செய்து என் பிறப்புக்கெடத் தில்லைக்கணின்றவனது கயிலையெனக் கூட்டுக. கூட மென்றது மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டத்தை. கூடஞ் செய் சாரலென்பதற்கு மரத்திரளாற் கூடஞ்செய்தாற் போலுஞ் சாரலெனினு மமையும். கூடஞ்செய்தாற் போலுமுழைகளையுடைய சாரலெனினு மமையும். வரைவுடம் படாது மிகுத்துக் கூறியது மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைமகனது விருப்பு உணர்த்துதல். 129

குறிப்புரை :

13.14 வரைவுடம்படாதுமிகுத்துக்கூறல்
வரைவுடம்படாது மிகுத்துக் கூறல் என்பது பருவங்கூறி வரைவுகடாய தோழிக்கு, அமராவதிக்கண்ணும் இம்மாதர்க் கொப்பில்லையென நான்முகன் பயந்தபிள்ளையை யான்வரை யுந் துணையெளியளாக நீ கூறுகின்றதென்னோவெனத் தலை மகன் வரைவுடம்படாது தலைமகளை மிகுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.14. வரைவு கடாய வாணுதற் றோழிக்கு
விரைமலர்த் தாரோன் மிகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 15

வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ்
சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட
அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங்
காவலித் தாழ்வரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைங்கார் வரை மீன் பரப்பி வேயுண்டாக்கிய வெள்ளிய முத்துக்கள் சிந்திய சோலைகளாற் பசிய கரிய தாழ்வரை மீன்களைத் தன்கட்பரப்பி; சேய் தந்த வான் அகம் மானும் சிலம்ப சேய்மையைப் புலப்படுத்திய வானிடத்தை யொக்குஞ் சிலம்பையுடையாய்; தாய் தந்தை எமக்குத் தாயுந் தந்தையும்; தன் சேவடிக்கே ஆய் தந்த அன்பு தந்து தன்னுடைய சிவந்த திருவடிக்கே ஆராயப்பட்டவன்பைத் தந்து; ஆட்கொண்ட அம்பலவன் மலையிற் கானவர் என்னை யடிமைக் கொண்ட அம்பலவனது மலையிற் கானவரே; இத் தாழ் வரை ஏனல் எம் காவல் இத்தாழ்வரையினுண்டாகிய தினை யெமது காவலாயி ருக்கும்; அதனானீவரைவு வேண்டாமையிற் புனைந்து கூறவேண்டு வதில்லை எ-று.
வினைமுதலல்லாத கருவி முதலாயின அவ்வினைமுதல் வினைக்குச் செய்விப்பனவாமாதலில், பரப்பியெனச் செய்விப்பதாகக் கூறினார். சேவடிக்கே அன்புதந்தென வியையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: வரைவுகடாதல் . 130

குறிப்புரை :

13.15 உண்மைகூறிவரைவுகடாதல்
உண்மைகூறி வரைவுகடாதல் என்பது வரைவுடம்படாது மிகுத்துக்கூறிய தலைமகனுக்கு, எங்களுக்குத் தாயுந் தந்தையுங் கானவர்; யாங்கள் புனங்காப்போஞ் சிலர்; நீர் வரைவு வேண்டாமையி னெம்மைப்புனைந்துகூறல் வேண்டுவதில்லை யெனத் தோழி தங்களுண்மைகூறி வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.15. கல்வரை நாடன் இல்ல துரைப்ப
ஆங்கவ ளுண்மை பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 16

மன்னுந் திருவருந் தும்வரை
யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
வாடு திரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
னென்னப் புலம்புவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வரையா விடின் மன்னும் திருவருந்தும் வரையா தொழியிற் பெரும்பான்மையும் திருவை யொப்பாள் வருந்துவள்; நீர் வரைவு என்று உன்னுமதற்குத் தளர்ந்து ஒளி வாடுதிர் நீயிர் வரைவென்று நினைக்குமதற்கு மனந்தளர்ந்து மேனியொளி வாடா நின்றீர்; பொன்னங் கழல் வழுத்தார் புலன் என்னப் புலம்புவன் இவ்வாறு நும்முள்ளம் மாறுபட நிகழ்தலின் யான் பொன்னை யொக்குங் கழலை வாழ்த்தமாட்டாதாரறிவு போலத் தனிமையுற்று வருந்தாநின்றேன் எ-று.
உம்பர் எல்லாம் பன்னும் புகழ்ப் பரமன் அறிதற்கருமையான் உம்பரெல்லாமாராயும் புகழையுடைய பரமன்; பரஞ்சோதி எல்லாப்பொருட்கும் அப்பாலாகிய வொளி; சிற்றம்பலத்தான் ஆயினும் அன்பர்க்கு இப்பாலாய்ச் சிற்றம்பலத்தின்கண் ணாயவன்; பொன்னங் கழல் அவனுடைய பொன்னங் கழலெனக் கூட்டுக. மன்னு மென்பது ஓரிடைச்சொல். நிலைபெறுந் திருவென் றுரைப்பாருமுளர். முன்னர் இவட்குத் திருவையுவமங்கூறுதல் தக்கதன்றென்று, ஈண்டுவமித்த தென்னையெனின், ஆண்டுத் தெளியாமையிற் கூறலாகாமைகூறி, மக்களுள்ளாளென்று தெளிந்த பின்னர்க்கூறலா மென்பதனாற் கூறியதெனவுணர்க. பொன்னங் கழலென்பதற்குப் பொன்னானியன்ற கழலையுடை யதென அன்மொழித்தொகைப்பட வுரைப்பினு மமையும். புலனென்ன வென்பதற்குச் சுவைமுதலாகிய தம்பொருள் பெறாது வழுத்தா தாரைம்பொறியும் புலம்புமாறுபோல வெனினு மமையும், இருவருள்ள நிகழ்ச்சியுங் கூறுவாள் போன்று, தலைமகள தாற்றாமை கூறி வரைவு கடாயவாறு. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவுகடாதல் . 131

குறிப்புரை :

13.16 வருத்தங்கூறிவரைவுகடாதல்
வருத்தங்கூறி வரைவுகடாதல் என்பது உண்மையுரைத்து வரைவுகடாயதோழி, வரையாமை நினைந்து அவள் வருந்தா நின்றாள்; வரைவென்று நினைக்க நீயிர் வருந்தாநின்றீர்; இவ்வாறு நும்முள்ளம் மாறுபட நிகழ்தலின் இருவர்க்குமிடையே யான் வருந்தாநின்றேனெனத் தலைமகனுக்கு வருத்தங்கூறி வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.16. கனங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி
நிரைவளைத் தோளி வரைவு கடாயது.

பண் :

பாடல் எண் : 17

பனித்துண்டஞ் சூடும் படர்சடை
அம்பல வன்னுலகந்
தனித்துண் டவன்தொழுந் தாளோன்
கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
பாரிப்புக் கண்டழிவுற்
றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
கென்றஞ்சு மெம்மனையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பலவன் பனியையுடைய துண்டமாகிய பிறையைச்சூடும் பரப்பிய சடையை யுடைய வம்பலவன்; தனித்து உலகம் உண்டவன் தொழும் தாளோன் எஞ்சுவான்றானேயாய்த் தானல்லாத உலகமுழுதையு முண்டவன் றொழுந் தாளையுடையவன்; கயிலைப் பயில் சிலம்பா அவனது கயிலைக்கட்பயிலுஞ் சிலம்பனே; தொண்டைக் கனி வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டு தொண்டைக்கனி போலும் வாயை யுடையாளுடைய கதிர்முலைகளது ஒருப்பாட்டைக்கண்டு; அழிவு உற்று நெஞ்சழிந்து; எம் அன்னை சிற்றிடைக்கு இனிப்பற்றுக் கண்டிலம் என்று அஞ்சும் எம் மன்னை இவள் சிற்றிடைக்கு இனியொரு பற்றுக்கண்டிலமென்று அஞ்சாநின்றாள்; இனியடுப்பன வறியேன் எ-று.
துண்டம்: ஒரு பொருளினது கூறு. பாரிப்பு அடியிடுத லெனினுமமையும். இளமைப்பருவம் புகுந்தமையான் மகட்கூறு வார்க்கு அன்னைமறாதே கொடுக்கும்; நீ முற்பட்டு வரைவாயாக வென்று தோழியேற்கக் கூறியவாறு. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: செறிப்பறிவுறுத்து வரைவுகடாதல். 132

குறிப்புரை :

13.17 தாயச்சங்கூறிவரைவுகடாதல்
தாயச்சங்கூறி வரைவுகடாதல் என்பது வருத்தங்கூறி வரைவு கடாயதோழி, எம்முடையவன்னை அவள் முலைமுதிர்வு கண்டு இவள் சிற்றிடைக்கு ஒருபற்றுக் கண்டிலேமென்று அஞ்சா நின்றாள்; இனி மகட்பேசுவார்க்கு மறாதுகொடுக்கவுங் கூடுமெ னத் தாயச்சங் கூறி வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.17. மடத்தகை மாதர்க் கடுப்பன அறியா
வேற்கண் பாங்கி ஏற்க வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 18

ஈவிளை யாட நறவிளை
வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை
அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
யாடி திருமலைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஈவிளையாட நற விளைவு ஓர்ந்து தேனீக்கள் பறந்து விளையாட அவற்றினது விளையாட்டாற்றேனினது விளைவையோர்ந்தறிந்து; எமர் மால்பு இயற்றும் வேய் விளை யாடும் வெற்பா எம்முடைய தமர் கண்ணேணியைச் செய்யும் வேய் விளையாடும் வெற்பை யுடையாய்; உற்று நோக்கி குறித்து நோக்கி; அன்னை எம் மெல்லியலைத் திருமலைக்குப் போய் விளையாடல் என்றாள் அன்னை எம்முடைய மெல்லியலைத் திருமலைக் கட்புறம்போய் விளையாடவேண்டாவென்று கூறினாள்; இனி இற்செறிக்கும் போலும் எ-று.
அம்பலத்தான் அம்பலத்தின் கண்ணான்; புரத்தில் தீ விளையாட நின்று ஏ விளையாடி முப்புரத்தின்கட்டீ விளையாட நின்று ஏத்தொழிலால் விளையாடுவான்; திருமலை அவனது திரு மலையெனக்கூட்டுக. எமர் மால்பியற்றும் வெற்பா வென்றதனால், தாமந்நிலத்து மக்களாதலும் அவன்றலைவனாதலுங் கூறினாளாம். போய் விளையாடுகென்றாளென்பது பாடமாயின், உற்றுநோக்கி இன்றுபோய் விளையாடுக வென்றாள்; அக்குறிப்பால் நாளையிற் செறிப்பாள் போலுமெனவுரைக்க. ஈவிளையாட்டாற்றேன் விளைவை யோர்ந்து எமர் மால்பியற்றுமாறுபோல, கதிர்ப்பு வேறுபாட்டால் இவளுள்ளத்துக் கரந்த காமமுணர்ந்து மேற்செய்வனசெய்யக் கருதா நின்றாளென உள்ளுறைகாண்க. இற்செறிவித்ததென்பது பாட மாயின், இன்னார் கூற்றென்னாது துறைகூறிற்றாகவுரைக்க. #9; ; 133

குறிப்புரை :

13.18 இற்செறிவறிவித்துவரைவுகடாதல்
இற்செறி வறிவித்து வரைவுகடாதல் என்பது தாயச்சங்கூறி வரைவுகடாய தோழி, எம்மன்னை அவளை யுற்றுநோக்கி, திருமலைக்கட்புறம்போய் விளையாடவேண்டாவெனக் கூறினாள்; இனியிற்செறிப்பாள் போலுமென, இற்செறிவறிவித்து வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.18. விற்செறி நுதலியை
இற்செறி வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 19

சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்
பலவற் றொழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம்
பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை
யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர்
பகர்பெரு வார்த்தைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பா சிலம்பா; சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம்பலவற்றொழாது சுற்றப்பட்ட சடைத்திரளையுடைய சிற்றம்பலவனை முற்பிறவியிற் றொழாமையான்; கற்றும் தொல் சீர் அறியலரின் நூல்களைக் கற்றுவைத்தும் அவனது பழைய புகழை யறியாதாரைப்போல; இடை நைவது கண்டு முலைதாங்ககில்லா திடை வருந்துவதனைக்கண்டு; எற்றும் திரையின் அமிர்தை தமர் இற் செறிப்பார் எற்றுந்திரையையுடைய கடலிற்பிறந்த இனிய வமிர்தத்தையொப்பாளை இப்பொழுது தமர் இற்செறிப்பார்; மற்றும் சீறூர் பகர் பெருவார்த்தைகள் சில பல அதுவுமன்றி இச்சீறூராற் பகரப்படும் பெரியவார்த்தைகள் சிலபலவுள எ-று.
எற்றுந்திரை யென்பது சினையாகிய தன்பொருட் கேற்ற வடையடுத்து நின்றதோராகுபெயர். இச்செறிப்பா ரென்பது; ஆரீற்று முற்றுச்சொல். வினைப்பெய ரென்பாருஞ் செறிப்பரென்று பாடமோதுவாருமுளர். சிலபலவென்பது பத்தெட்டுளவென்பது போலத் துணிவின்மைக் கண்வந்தது. சீறூர்ப்பகரென்பதூஉம் பாடம். இவற்றிற்கு மெய்ப் பாடும் பயனும் அவை. இவற்றுண் மேலைப் பாட்டிற் குறிப்பினானே செறிப்பறிவுறுத்தாள். #9; 134

குறிப்புரை :

13.19 தமர்நினைவுரைத்து வரைவுகடாதல்
தமர்நினைவுரைத்து வரைவுகடாதல் என்பது இற்செறி வறிவித்து வரைவுகடாயதோழி, அவண்முலை தாங்கமாட்டா திடைவருந்து வதனைக்கண்டு எமரிற்செறிப்பாராக நினையா நின்றார்; அயலவருமகட்பேச நினையாநின்றாரெனத் தமர்நினை வுரைத்து வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.19. விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்
றொளிவே லவற்கு வெளியே யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 20

வழியும் அதுவன்னை யென்னின்
மகிழும்வந் தெந்தையும்நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல
வென்னோ கிளக்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வழியும் அது இவளை நீ யெய்துதற்கு முறைமையும் வரைவு வேண்டுதலே; அன்னை என்னின் மகிழும் இவணலத்திற்குத் தக்கானோர் கணவனை வேண்டுவாளாகலின் நீ வரைவுவேண்டுமிடத்து அன்னை யென்னைப்போல மகிழும்; வந்து எந்தையும் நின் மொழியின் வழி நிற்கும் உலகியலான் மறுத்தகன்று நின்றானாயினுந் தகுதிநோக்கிவந்து எந்தையு நின் மொழியைக் கடவாது அதன்வழியே நிற்கும்; முன்னே சுற்றம் வயம் இவளோடு நின்னிடைநிகழ்ந்தது குறிப்பானறிந்ததாகலின் நீ வரைவு வேண்டு வதன் முன்னே சுற்றம் நினக்கு வயமாயிருக்கும்; பல கிளக்கின்றது என் பல சொல்லுகின்றதென்; குழி உம்பர் ஏத்தும் அம்பலத்து எம் கூத்தன் திரண்டு உம்பரானேத்தப்படும் அம்பலத்தின் கணுளனாகிய எம்முடைய கூத்தனது; குற்றாலம் முற்றும் அறியக் கெழி உம்மவே பணைத்தோள் குற்றாலமுழுது மறியப்பொருந்திய உம்மனவே பணைத்தோள்கள்; ஐயுறவேண்டா எ-று.
வழியுமென்னு மும்மை: எச்சவும்மை, உபாயமாதலே யன்றி என்றவாறு. எந்தையு மென்பது இறந்தது தழீஇய வெச்ச வும்மை. முன்னே வயமென வேறுபடுத்துக் கூறுதலால், சுற்றமுமென வும்மைகொடாது கூறினாள். நலமுங்குலமு முதலாயினவற்றா னேராராயினும், வடுவஞ்சிநேர்வ ரென்பது பயப்ப, குற்றாலமுற்று மறியக்கெழீஇயவென்றாள். கெழீஇய வென்பது கெழியெனக் குறைந்துநின்றது. நின்மொழி யென்று உம்மவே என்றது
``என்னீரறியாதீர்போலவிவைகூற
னின்னீரவல்ல நெடுந்தகாய்``
-கலி. பாலை, 5
என்பதுபோல ஈண்டும் பன்மையு மொருமையு மயங்கி நின்றன. குற்றால முற்றுமறியக் கெழியென்பதற்கு மறைந்தொழுகா தெல்லாருமறிய வரைவொடு வருவாயாக என்றுரைப்பாருமுளர். இப்பொருட்குக் கெழுமுவென்பது விகாரவகையாற் கெழியென நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை. வரைவின்கட் டலைமகனை யொற்றுமை கொளுவுதலுமாம்.
தழங்குமருவி (பா.127) என்னும் பாட்டுத்தொட் டிதன்காறும் வர இப்பாட்டொன்பதுஞ் செறிப்பறி வுறுத்து வரைவுகடாயின வென்பது. இவையெல்லாந் தோழியிற் கூட்டமுந் தோழியிற் கூட்டத்தின் விகற்பமுமெனவறிக. 135

குறிப்புரை :

13.20 எதிர்கோள்கூறிவரைவுகடாதல்
எதிர்கோள்கூறி வரைவுகடாதல் என்பது தமர் நினைவு உரைத்து வரைவுகடாயதோழி, நீவரைவொடுவரின், அன்னையும் ஐயன்மாரும் அயலவரும் நின்வரவெதிர் கொள்ளாநிற்பர்; இனிப்பல நினையாது பலருமறிய வரைவொடு வருவாயாகவென எதிர்கோள் கூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.20. ஏந்திழைத்தோழி ஏந்தலைமுன்னிக்
கடியாமாறு நொடிகென்றது.

பண் :

பாடல் எண் : 21

படையார் கருங்கண்ணி வண்ணப்
பயோதரப் பாரமும்நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க
ளீர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட்
டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது
போலு முருவினதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
படை ஆர் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும் படைக்கலம் போலுங் கரிய கண்ணையுடையாளுடைய நிறத்தையுடைய முலைகளின் பாரத்தையும்; நுண் இடையார் மெலிவும் கண்டு அப்பாரத்தைத் தாங்கலுறாநின்ற நுண்ணிய விடையாரது மெலிவையுங்கண்டு; அண்டர்கள் என்னையராகிய வாயர்; ஈர் முல்லை வேலி எம்மூர் ஈரிய முல்லையாகிய வேலியை யுடைய எம்மூரின்கண்; விடை ஆர் மருப்புத் திருத்திவிட்டார் விடையினது நிரம்பிய மருப்பைத் திருந்தச்செய்து விட்டார்கள்; வியன் தென் புலியூர் உடையார் கடவி வருவது போலும் உருவினது அவ்விடை அகன்ற தென்புலியூரை யுடையவர் செலுத்திவரும் விடைபோலுமுருவினையுடைத்து; இனியென்னிகழும்! எ-று.
இயல்வது மேற்கொள்ளாமையின் இடையாரென இழித்துக் கூறினாள். முல்லையையுடைய வேலியெனினுமமையும். அவ்வேறு கோள் நிகழ்வதன்முன் வரைந்தெய்துவாயாக வென்றவாறு. விடையார்மருப்புத் திருத்திவிட்டார் நினக்குற்றது செய்யென் பதனைக் கேட்டுத் தலைமகனுள்ளம் வாடினான்; அஃதெற்றிற் கெனின், ஏறுதழுவிக்கோடல் தங்குலத்திற்கு மரபாக லானும், தமக்குப் பொதுவர் பொதுவியரென்று பெயராகலானும், அவ்வேற்றைத் தன்னின் முற்பட்டானொருவன் றழுவவுந்தகு மென்றுள்ளம் வாடினான். அதனைத்தோழிகண்டு அவ்வேறு புலியூரு டையார் கடவிவருவது போலு முருவினதென்றாள்; என்றது அதன் வெம்மை சொன்னவாறன்று; இவ்வொழுக்கம் புலியூருடையாரதருளான் வந்ததாகலின், அவ்வேறுநினக்கே வயப்படுவதன்றி மற்றொருத்த ராலணுகுதற்கரிது; நீ கடிது விரைந்து செய்; அஞ்ச வேண்டாவென் றாளாயிற்று. இது முல்லைத்திணை. மெய்ப்பாடு: அது. பயன்: ஏறுகோளுணர்த்தி வரைவுகடாதல். 136

குறிப்புரை :

13.21 ஏறுகோள்கூறிவரைவுகடாதல்
ஏறுகோள்கூறி வரைவுகடாதல் என்பது எதிர்கோள்கூறி வரைவுகடாய தோழி, எம்முடைய வையன்மார் அவளுடைய முலையின் பெருமையும் இடையின் சிறுமையுங்கண்டு எம்மூர்க் கண் விடையின் மருப்பைத் திருத்திவிட்டார்; இனியடுப்பன வறியேனென ஏறுகோள்கூறி வரைவுகடாவாநிற்றல். ஈண்டுக் கூறுவானுதலுகின்றது முல்லைத்திணையாகலின், அந்த முல்லைத் திணைக்கு மரபாவது, ஓரிடத்தொரு பெண்பிறந்தால் அப்பெண்ணைப் பெற்றவர் தந்தொழுவில் அன்று பிறந்த சேங்கன்றுள்ளனவெல்லாந் தன்னூட்டியாக விட்டு வளர்த்து அப்பரிசினால் வளர்ந்த வேற்றைத் தழுவினானொருவனுக்கு அப்பெண்ணைக் கொடுத்தல் மரபென்க. அதற்குச் செய்யுள்
13.21. என்னை யர்துணி
வின்ன தென்றது.

பண் :

பாடல் எண் : 22

உருப்பனை அன்னகைக் குன்றொன்
றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை
யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன்
னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென் னோவினை
யேன்யான் புகல்வதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உருப்பனை அன்ன கைக்குன்று ஒன்று உரித்து வடிவு பனையையொக்குங் கையையுடைய குன்றொன்றையுரித்து; உரவு ஊர் எரித்த நெருப்பனை வலியையுடைய வூர்களையெரித்த நெருப்பையுடையானை; அம்பலத்து ஆதியை அம்பலத்தின் கணுளனாகிய வெல்லாப்பொருட்கு முதலாயவனை; உம்பர்சென்று ஏத்திநிற்கும் திருப்பனையூர் அனையாளை உம்பர்சென்று வாழ்த்தி நிற்றற்கிடமாந் திருப்பனையூரை யொப்பாளை; நாளைப் பொன் புனைதல் செப்பி அயலார் நாளைப் பொன்புனைதலைச் சொல்லி; வினையேன் யான் முன் நின்று பொருப்பனைப் புகல்வது என்னோ தீவினையேனாகிய யான்முன்னின்று பொருப்பனைச் சொல்லுவ தெவனோ? எ-று.
உரவூரெரித்தலை நெருப்பின் மேலேற்றுக. எரித்த நெருப்பனென்ற சொற்களினாற்றலான், எரித்தது நெருப்பானென்பது போதரும். புகல்வதென்றது வரைந்தெய்து வாயாகவென்று பின் சொல்லப்படுங் காரியத்தை. இது சிறைப்புறம். பொருப்ப னென்பது முன்னிலைக்கண் வந்ததென்று தலைமகன் முன்னிலையாகக் கூறினாளெனினுமமையும். அயலுரை தலை மகட்கியாதுமியை பில்லாதவுரை; அயலாரொருப்பட்டவுரை யெனினுமமையும். மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன்: வரைவு கடாதல். 137

குறிப்புரை :

13.22 அயலுரையுரைத்துவரைவுகடாதல்
அயலுரையுரைத்து வரைவு கடாதல் என்பது ஏறுகோள்கூறி வரைவு கடாயதோழி, அயலவர் நாளைப் பொன் புனையப் புகுதா நின்றார்; இதற்குத் தீவினையேன் சொல்லுவதென்னோவெனத் தான் முன்னிலைப் புறமொழியாக அயலுரையுரைத்து வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.22. கயல்புரை கண்ணியை
அயலுரை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

மாதிடங் கொண்டம் பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு
வித்தது தூமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்: தூ மொழி தூய மொழியையுடையாய்; மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் மாதை யிடப்பக்கத்துக் கொண்டெல்லாருங்காண அம்பலத்தின்கணின்ற பொருந்தா வொழுக்கத்தையுடையவனது; வட வான் கயிலைப் போது இடங்கொண்ட பொன் வேங்கை வடக்கின்கணுண்டாகிய பெரிய கயிலைமலைக் கணுளதாகிய பொருப்பிடங் கொண்ட பொன் போலு மலரையுடைய வேங்கை; தினைப்புனம் கொய்க என்று தாது இடங்கொண்டு தினைப்புனத்தைக் கொய்கவென்று தாதையிடத்தே கொண்டு; பொன் வீசி பொன்போலு மலரை யெல்லாங்கொடுத்து; தன் கள் வாய் சொரிய நின்று தனது தேனைப் பூத்தவிடஞ் சொரியநின்று; சோதிடம் கொண்டு இது எம்மைக் கெடுவித்தது சோதிடஞ்சொல்லுதலைப் பொருந்தி இஃதெமைக் கெடுத்தது; இனியென்செய்தும்? எ-று.
பொன்னைக் கொடுத்துப் பிறர்க்கடிமையாதலைப் பொருந்தித் தானிழிந்த சாதியாதலாற் றனக்குரியகள்ளை வாய்சொரிய நின்றெனச் சிலேடைவகையா னிழித்துக் கூறினாளாகவுமுரைக்க. சோதிடங் கொண்டிதெம்மைக் கெடக்கொண்டதென்பது பாடமாயிற்கெடக் கொண்டதென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய்க் கெடுத்ததென் னும் பொருள்பட்டு, எம்மையென்னு மிரண்டாவதனை முடித்தன வாக வுரைக்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செறிப்பறிவுறுத்தல். 138

குறிப்புரை :


13.23 தினைமுதிர்வுரைத்துவரைவு கடாதல்
தினைமுதிர்வுரைத்து வரைவுகடாதல் என்பது அயலுரை யுரைத்து வரைவுகடாய தோழி, இவ்வேங்கை, தினைப்புனங் கொய்கவென்று சோதிடஞ் சொல்லுதலைப் பொருந்தி, எம்மைக் கெடுவித்தது, இனி நமக்கேனல் விளையாட்டில்லையெனச் சிறைப் புறமாகத் தலைமகளோடு கூறுவாள் போன்று, தினைமுதிர் வுரைத்து வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.23. ஏனல் விளையாட் டினியில் லையென
மானற் றோழி மடந்தைக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

வடிவார் வயற்றில்லை யோன்மல
யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம்
பெருமஇத் தண்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து நின்றும் அழகார்ந்த வயல் சூழ்ந்த தில்லையை யுடையவனது பொதியிற் கணின்றுவைத்தும்; வரு தேன் கடிவார் களிவண்டு நின்று அலர் தூற்ற நறுநாற்றத்தால் வாராநின்ற தேன்களும் நாற்றத்தைத் தேரு நெடிய களிவண்டுகளும் நின்று அலர்களைக் குடைந்து தூற்ற; பெருங்கணியார் இனி நமக்கு நோதக நொடிவார் வேங்கையாகிய பெருங்கணியார் இப்பொழுது நமக்கு நோவுதகப் பருவஞ் சொல்லுவாராயிருந்தார்; யான் உமக்கு என் உரைக்கேன் யானுமக் கென்சொல்லுவேன்; எமர் தினை தடிவார் கணியார் சொல்லுதலால் எமர்தினையைத் தடிவாராயிருந்தார், அதனால், - பெரும பெரும; இத்தண்புனம் காவேம் இத்தண்புனத்தை யாமினிக்காவேம்; நீ பகல்வரவேண்டா எ-று.
வடிவார்தில்லை யென்றியைப்பினுமமையும். மலயத்து வாழ்வார் பிறர்க்கு வருத்தஞ் செய்யாராகலின், மலயத்து நின்றுமென்றும்மை கொடுத்தார். மலயத்துநின்றும் வருந்தே னென்றுரைப்பாருமுளர். இப்பொருட்கு வேங்கை மலயத்தை யணைந்ததோரிடத்து நின்றதாக வுரைக்க. கடி - புதுமையுமாம். வண்டொழுங்கினது நெடுமைபற்றி வார்களிவண் டென்றாள். இதுவுமதுவாகலான், அலர்தூற்ற வென்பதற்குத் தன்னோடு பயின் றாரைக் கண்ணோட்ட மின்றி வருத்தாநின்ற தென்று புறங்கூறவென்று முரைக்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறிவிலக்கல். 139

குறிப்புரை :

13.24 பகல்வரல்விலக்கிவரைவுகடாதல்
பகல்வரல் விலக்கி வரைவுகடாதல் என்பது சிறைப் புறமாகத் தினை முதிர்வுரைத்து வரைவுகடாயதோழி, எதிர்ப்பட்டு நின்று, இப்பெருங்கணியார் நமக்கு நோவுதகப் பருவஞ் சொல்லுவாராயிருந்தார்; எம்மையன்மார் இவர்சொற் கேட்டு இத்தினையைத் தடிவாராயிருந்தார்; எமக்குமினித் தினைப்புனங்காவலில்லை; நீரினிப்பகல்வரல் வேண்டாவெனப் பகல்வரல் விலக்கி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.24. அகல்வரை நாடனை
பகல்வர லென்றது.

பண் :

பாடல் எண் : 25

நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்
திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின்
மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட
தாகி விளைந்ததுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
என் நெஞ்சத்து இருந்து தன்னை நினைவித்து தானே வந்திருந்து திருத்த வேண்டுதலின் என்னெஞ்சத்துப் புகுந்திருந்து தன்னை யானினையும்வண்ணஞ்செய்து; அம்பலத்து நின்று அம்பலத்தின்கட்டன்றிருமேனி காட்டிநின்று; புனைவித்த ஈசன் பொதியின்மலைப் பொருப்பன் விருப்பின் என்னாற் றன்னைப் புகழ்வித்துக்கொண்ட ஈசனது பொதியின் மலைக்கணு ளனாகிய பொருப்பன் மேல்வைத்த விருப்பினால்; தினை வித்திக் காத்துச் சிறந்து நின்றேமுக்கு தினையை வித்தி அதனைக் காத்து உள்ளம் மலிந்து நின்ற எங்களுக்கு; சென்று சென்று வினைவித்திக் காத்து விளைவு உண்டதாகி விளைந்தது அத்தினையை வித்திக் காத்த காவல் போய்த் தீவினையை வித்தி அதனைக் காத்து அதன் விளைவையுமுண்டதாகி முடிந்தது எ-று.
நினைவித்துத் தன்னை யென்னெஞ்சத்திருந்தென்பதற்கு ஒரு காற்றன்னை நினைவேனாகவுஞ் செய்து அந்நினைவே பற்றுக் கோடாகத் தான் புகுந்திருந்தெனினுமமையும். பொருப்பன் விருப்பென்பதனை நீர் வேட்கை போலக் கொள்க. தினை வித்திய ஞான்று இத்தினைக்காவல் தலைக்கீடாக அவனை யெதிர்ப்படலா மென்று மகிழ்ந்து அதற்குடம்பட்டாராகலிற் றாம்வித்தினார்போலக் கூறினாள். புனத்தோடுதளர்வுற்று - புனத்தாற்றளர்வுற்று. 140

குறிப்புரை :

13.25 தினையொடுவெறுத்துவரைவுகடாதல்
தினையொடு வெறுத்து வரைவு கடாதல் என்பது பகல்வரல் விலக்கி வரைவுகடாயதோழி, இத்தினைக்காவறலைக்கீடாக நாமவனை யெதிர்ப்படலாமென்று நினைந்து தினையை வித்திக் காத்தோம்; அது போய்த் தீவினையை வித்திக்காத்து அதன் விளைவையுமுண்டதாகி முடிந்ததெனச் சிறைப்புறமாகத் தினை யொடு வெறுத்து வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.25. தண்புனத்தோடு தளர்வுற்றுப்
பண்புனைமொழிப் பாங்கிபகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 26

கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய் வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய் நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான் தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கனை கடற் செய்த நஞ்சு உண்டு ஒலியா நின்ற கடலின்க ணுண்டாக்கப்பட்ட நஞ்சை யுண்டுவைத்து; அம்பலத்துக் கண்டார்க்கு அமிழ்தாய் அம்பலத்தின்கணின்று கண்டார்க்கு அமிழ்தமாய்; வினைகெடச் செய்தவன் விண் தோய்கயிலை மயில் அனையாய் நம் வினைகெடும்வண்ணஞ் செய்தவனது விண்ணைத் தோயாநின்ற கயிலையின் மயிலை யொப்பாய்; நனைகெடச் செய்தனம் ஆயின் அரும்பியஞான்றே நனையைக் கெடும் வண்ணஞ் செய்தேமாயின்; நமைக் கெடச் செய்திடுவான் இத்திருக் கணிதினை கெடச் செய்திடுமாறும் உண்டோ நம்மைக் கெடுப்பான் வேண்டி இத்திருவாகிய கணி தினைகெட முயலுமாறுமுண்டோ? யாமது செய்யப்பெற்றிலேம் எ-று. கனைகடற்செய்த வென்றதனான் நஞ்சின்பெருமை கூறினார். செய்யாதநஞ்சிற் செய்தநஞ்சு கொடிதாகலின், அதன் கொடுமை விளங்க, செய்தநஞ்சென்றார். அமிழ்தாதல் அமிழ்தின் காரியத்தைச் செய்தல். கண்டார்க் கென்றதனான், அல்லாதவமிழ்தோடு இவ்வமிழ் திற்கு வேற்றுமை கூறியவாறாம். கெடச்செய்திடுவா னென்னுஞ் சொற்கள் ஒருசொன் னீரவாய், கெடுப்பானென்னும் பொருள்பட்டு, நம்மை யென்னு மிரண்டாவதற்கு முடிபாயின. வினைகெடச் செய்தவ னென்பது முதலாயினவற்றிற்கு மிவ்வாறுரைப்பினுமமையும். திரு: சாதிப் பெயர். கணி: தொழிற் பெயர். நல்லகணி யென்றிழித்துக் கூறி னாளாக வுரைப்பாருமுளர். 141

குறிப்புரை :

13.26 வேங்கையொடுவெறுத்துவரைவுகடாதல்
வேங்கையொடுவெறுத்து வரைவுகடாதல் என்பது தினையொடுவெறுத்து வரைவு கடாயதோழி, இவ்வேங்கை யரும்பிய ஞான்றே அரும்பறக் கொய்தேமாயின் இவர் இன்று நம்மைக்கெடுப்பான் வேண்டி இத்தினைகெட முயலுமாறு முண்டோ? யாமது செய்யப் பெற்றிலேமென வேங்கையொடு வெறுத்து வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள் 13.26. நீங்குகஇனி நெடுந்தகையென வேங்கைமேல் வைத்துவிளம்பியது.

பண் :

பாடல் எண் : 27

வழுவா இயலெம் மலையர்
விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல்
லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
தாவதித் தொல்புனத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வழுவா இயல் எம் மலையர் விதைப்ப விதைக்கும் பருவத்துங் கொய்யும்பருவத்தும் வழுவாது செய்யுமியல்பையுடைய எந்தமராகிய மலையர் விதைப்ப; யாம் வளர்த்த கொழுவார் தினையின் குழாங்களெல்லாம் யாம்வளர்த்த கொழுவிய நெடிய தினையின் திரட்களெல்லாம்; எம் குழாம் வணங்கும் செழுவார் கழல் தில்லைச் சிற்றம்பலவரை எமது குழாஞ்சென்று வணங்கும் வளவிய நெடிய கழலையுடைய தில்லையிற் சிற்றம்பலத்தையுடையானை; சென்று நின்று தொழுவார் வினை நிற்கிலே சென்று நின்று தொழுவாருடைய வினை அவர்கண் நிற்கிலே; இத்தொல் புனத்து நிற்பது ஆவது இப்பழைய புனத்தினிற்ப தாவது; இனிநில்லா எ-று.
குழாங்களெல்லா நிற்பதாவதெனக்கூட்டுக. நிற்பதென்பது நிற்றலென்னும் பொருட்டு. நிற்பதாவவென்பது பாடமாயின், ஆவவென்பதிரங்கற் குறிப்பாக வுரைக்க. நிற்பவென்பதூஉம் பாடம். குழுவார்தினையென்பதூஉம் பாடம். ; 142

குறிப்புரை :

13.27 இரக்கமுற்றுவரைவுகடாதல்
இரக்கமுற்று வரைவு கடாதல் என்பது வேங்கையொடு வெறுத்து வரைவுகடாயதோழி, யாமவனை யெதிர்ப்படலா மென்றின்புற்று வளர்த்த தினைத்திரள் இப்புனத்தின்கணில்லா வாயிருந்தன; இனி நாமவனை யெதிர்ப்படுமாறென்னோவெனச் சிறைப்புறமாகத் தலைமகனுக்கிரக்கமுற்று வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.27. செழுமலை நாடற்குக்
கழுமலுற் றிரங்கியது.

பண் :

பாடல் எண் : 28

பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம்
புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக்
கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
தின்றிக் கடிப்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எமக்குப் புகலாம் விருப்பர்க்கு எமக்குப் புகலிடமாதற்குக் காரணமாகிய விருப்பத்தையுடையவர்க்கு; யாவர்க்கும் மேலர்க்கு எல்லார்க்கு மேலாயவர்க்கு; மேல் வரும் ஊர் எரித்த நெருப்பர்க்கு ஆகாயத்தின்கட் செல்லுமூர்களையெரித்த நெருப்பையுடையவர்க்கு; நீடு அம்பலவருக்கு நிலைபெற்ற வம்பலத்தையுடையவர்க்கு; அன்பர் குலம் நிலத்துக்கருப்பற்று விட்டென அன்பராயினாருடைய குலங்கள் உலகத்துப் பிறவிக்கார ணத்தைப் பற்றுவிட்டகன்றாற் போல; இக்கடிப்புனம் இன்று கொய் தற்றது இக்காவலையுடைய புனம் இப்பொழுது தொடர்பறக் கொய் தற்றது. அதனால் - பொருப்பர்க்கு யாம் ஒன்றும் புகலமாட்டேம் பொருப்பர்க் கியாமொன்றுஞ் சொல்லமாட்டேம் எ-று.
யாமொரு குணமுமில்லேமாயினுந் தமது விருப்பினா லெமக்குப் புகலிடமாயினாரென்னுங் கருத்தால், புகலெமக்காம் விருப்பர்க் கென்றார். எம்மால் விரும்பப்படுவார்க் கென்பாருமுளர். வீடென வென்பதூஉம் பாடம். 143

குறிப்புரை :

13.28 கொய்தமைகூறி வரைவுகடாதல்
கொய்தமைகூறி வரைவுகடாதல் என்பது இரக்கமுற்று வரைவுகடாயதோழி எதிர்ப்பட்டு நின்று, இப்புனத்துத்தினையுள் ளது இன்றுதொடர்பறக்கொய்தற்றது; எமக்குமினிப்புனங்காவ லில்லை; யாமுமக்கறிவு சொல்லுகின்றேமல்லேம்; நீரேயறிவீ ரெனத்தினை கொய்தமைகூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.28. நீடிரும்புனத்தினி யாடேமென்று
வரைவுதோன்ற வுரைசெய்தது.

பண் :

பாடல் எண் : 29

பரிவுசெய் தாண்டம் பலத்துப்
பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க
பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
காட்டு மிளங்கிளியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பரிவு செய்து ஆண்டு எம்மைப் பரிந்தாண்டு; அம்பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் அம்பலத்தின்கட் பயில்வானது பரங்குன்றினிடத்து; அருவி செய்தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் அருவிநீராற் செய்யப்பட்ட தாழ்ந்த புனத்தின்கணுண் டாகிய ஐவனத்தைக் கொய்யவும்; இவ் வனத்து இருவிசெய் தாளின் இருந்து இக் காட்டின்கண் இருவியாகச் செய்யப்பட்ட தாளிலே யிருந்து; செய்தால் பேயொடும் பிரிவு அரிது நட்புச்செய்தாற் பேயோடாயினும் பிரிவரிது; கொள்க என்னும் பெற்றி இதனையுள்ளத்துக் கொள்கவென்னுந் தன்மையை; இளங்கிளி இன்று காட்டும் இளங்கிளிகள் இப்பொழுது காட்டாநின்றன எ-று.
பேயோடாயினும் பிரிவுசெய்தா லாற்றுதலரிதென் றுரைப் பினுமமையும். இருவியென்பது கதிர்கொய்த தட்டை. தாளென்பது கதிர்கொய்யாதமுன்னுஞ் சொல்வதோர்பெயர். இப்புனத்துப் பயின்ற கிளிகள் தமக்குத் துப்பாகாக்காலத்து மிதனைவிடாதிரா நின்றன; இனி நங்காதலர் நம்மாட்டென் செய்வ ரென்னுங் கருத்தான், மறைப்புறமாயிற்று. சிறைப்பட வுரைத்த தென்பது பாடமாயின், சிறைக்கண்வந்து நிற்பவென்றுரைக்க. 144

குறிப்புரை :

13.29 பிரிவருமைகூறி வரைவுகடாதல்
பிரிவருமை கூறி வரைவு கடாதல் என்பது கொய்தமைகூறி வரைவு கடாய தோழி, இப்புனத்துப் பயின்ற கிளிகள் தமக்குத் துப்பாகாக் காலத்துந் தினைத்தாளை விடாதிராநின்றன; நாம் போனால் நங்காதல ரிவ்விடத்தே வந்துநின்று நம்மைத்தேடுவர் கொல்லோ வெனச் சிறைப்புறமாகப் பிரிவருமைகூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.29. மறைப்புறக் கிளவியிற்
சிறைப்புறத் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 30

கணியார் கருத்தின்று முற்றிற்
றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண்
டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு
நீர்மைகள் சொல்லுமினே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கணியார் கருத்து இன்று முற்றிற்று கணியாரது நினைவு இன்று முடிந்தது; யாம் சென்றும் யாங்கள் போகா நின்றேம்; கார்ப் புனமே கரியபுனமே; மணி ஆர் பொழில்காள் மணிகளார்ந்த பொழில்காள்; மறத்திர் கண்டீர் வேங்கையொடு பயின்றீராகலின் நீரெம்மைமறப்பீர்; மன்னும் அம்பலத்தோன் அணி ஆர் கயிலை மயில்காள் நிலைபெறுமம்பலத்தையுடையவனது அழகார்ந்த கயிலையினின்றும் வந்த மயில்காள்; அயில் வேல் ஒருவர் வந்தால் அயில் வேல் துணையாகத் தனிவருமவர் ஈண்டுவந்தால்; துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லுமின் அன்புடையார் துணியாதனவற்றை அவர் துணிந்தாரென்னு நீர்மை களையவர்க்குச் சொல்லுமின் எ-று.
நீர்மை ஈண்டு வியப்பு. நீரிவ்வாறு சொன்னால் அவராற்று வாரென்பது கருத்து. பேரருளி னோன் கயிலையினுள்ளீராகலின் நீர் கண்ணோட்ட முடையீரென்பது கருத்து. கார்ப்புனமென்பதற்குக் கார் காலத்துப் பொலியும் புனமெனினுமமையும். துணியாதனவாவன பிரிதலும் வரையுந் துணையு மாற்றியிருத்தலும். புனமே பொழில்காள் மயில் காள் என்றுகூட்டி, நீரெம்மை மறப்பீராயினும் மறவாது சொல்லு மினென்றுரைப்பாருமுளர். இவையாறற்கும் மெய்ப்பாடும் பயனும் அவை. #9; #9; 145

குறிப்புரை :

13.30 மயிலொடு கூறி வரைவுகடாதல்
மயிலொடு கூறி வரைவுகடாதல் என்பது பிரிவருமைகூறி வரைவுகடாய தோழி, பிரிவாற்றாமையோடு தலைமகளையுங் கொண்டு புனங்காவலேறிப் போகாநின்றாள், கணியார்நினைவு இன்றுமுடிந்தது; யாங்கள் போகாநின்றோம்; இப்புனத்தொருவர் வந்தால் இங்கு நின்றும் போனவர்கள் துணியாதன துணிந்து போனாரென்று அவர்க்குச் சொல்லுமினென மயிலொடுகூறி வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
13.30. நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம்
பாங்கி பகர்ந்து பருவர லுற்றது.

பண் :

பாடல் எண் : 31

பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற
வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற்
றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
வாமற்றிவ் வான்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் அதுவோ விதுவோ வழி யென்றுமயங்கிப் பொதுவாக நின்ற நிலைமையை நீக்கி என்னையாண்டவன்; புலியூர் அரன் புலியூரிலரன்; பொருப்பே எனில் இது இன்று இருக்கின்றவாறு என் அவனது பொருப்பாய் யான்முன்பயின்ற விடமேயாயின் இஃதின்றிருக்கின்றவாறென்; எம் இரும் பொழிலே எம்முடைய பெரிய பொழிலே; நுமக்கு எய்தியது எது நுமக்குத்தான் இன்றுவந்த தியாது; என் உற்றனிர் நீரென்னுற்றீர்; இவ் வான் புனம் இதுவேயுமன்றி இப்பெரிய புனம்; அறை ஈண்டு அருவி மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா ஒலியாநின்ற பெருகிய வருவியாய் விழும் மதுவின்கண் அதனின்சுவையை மாற்றிக் கைப்பாகிய சுவையை வைத்தாலொத்தவாறென்! எ-று.
மற்றென்பது அசைநிலை. எல்லாரையு மாளும் பொதுவாகிய முறைமையினின்று நீக்கி என்னை யுளநெகிழ்விப்பதோரு பாயத்தானாண்டவ னென் றுரைப்பினுமமையும். இன்பஞ்செய்வதுந் துன்பஞ்செய்வது மொன்றாகமாட்டா தென்னுங் கருத்தாற் புலியூரரன் பொருப்பேயிது வெனிலென்றான். அறையீண்டருவி காள் நீரென்னுற்றீரென்றும், அறையீண்டருவிப் புனமென்றும் உரைப்பாருமுளர். 146

குறிப்புரை :

13.31 வறும்புனங்கண்டுவருந்தல்
வறும்புனங்கண்டு வருந்தல் என்பது தலைமகளும் தோழியும் புனங்காவலேறிப் போகாநிற்ப, தலைமகன் புனத்தி டைச் சென்று நின்று, இப்புனம் யாமுன்பயின்றதன்றோ? இஃதின் றிருக்கின்றவாறென்னோ வென்று, அதன் பொலிவழிவுகூறித் தலைமகளைத்தேடி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.31. மென்புனம்விடுத்து மெல்லியல்செல்ல
மின்பொலிவேலோன் மெலிவுற்றது.

பண் :

பாடல் எண் : 32

ஆனந்த மாக்கட லாடுசிற்
றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ
ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி
அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந்
தளர்ந்தனை நன்னெஞ்சமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆனந்த மாக் கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன ஆனந்தமாகிய நீரானிறைந்ததோர் பெரியகடல் நின்றாடுஞ் சிற்றம்பலத்தையொக்கும்; பொன்னின் தேன் உந்து மாமலைச் சீறூர் இது பொன்னினது தேன்றத்திப் பாயும் பெரிய மலைக்கணுண்டாகிய சீறூரிது; செய்யலாவது இல்லை இவ்வாறணித்தாயினு நம்மாற் செய்யலாவதொன்றில்லை, அதனால் வான் உந்தும் மாமதி வேண்டி அழும் மழப்போலும் வானின் கட்செல்லும் பெரிய மதியைக் கொள்ள வேண்டி அதனருமையறியா தழுங்குழவிபோல எய்துதற் கரியாளை விரும்பி; நல் நெஞ்சமே நல்ல நெஞ்சமே; நீயுந் தளர்ந்தனை நீயுந் தளர்ந்தாய்; நானும் தளர்ந்தனன் நீயவ்வரும் பொருள்விரும்புதலான் யானுந்தளர்ந்தேன் எ-று.
தேனையுமிழுமாமலையெனினு மமையும். மழவை நெஞ்சத்திற்கேயன்றித் தலைமகற்குவமையாக வுரைப்பினு மமையும். நெஞ்சத்தைத் தன்னோடுபடுத்தற்கு நன்னெஞ்சமெனப் புனைந்து கூறினான். இது தலைமகளை இற்செறிவிக்கின்றகாலத்து ஆற்றா னாகிய தலைமகன் றோழிகேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. மன்னுமோவும்: அசைநிலை. பதி - தலைமகன். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 147

குறிப்புரை :

13.32 பதிநோக்கிவருந்தல்
பதிநோக்கி வருந்தல் என்பது வறும்புனத்திடை வருந்தா நின்ற தலைமகன், இவ்வாறணித்தாயினும் நம்மாற் செய்யலாவ தொன்றில்லையென்று அவளிருந்த பதியைநோக்கித் தன்னெஞ் சோடுசாவி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
13.32. மதிநுத லரிவை பதிபுக லரிதென
மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது.

பண் :

பாடல் எண் : 1

மருந்துநம் மல்லற் பிறவிப்
பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும்
அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள்
தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ
ரதனுக்கு வெள்வளையே. 9;

பொழிப்புரை :

இதன் பொருள்: வெள்வளை வெள்வளையை யுடையாய்; குன்றினின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ மேகம் பொருந்தின குன்றின்கணின் றொலிக்கு மருவிகள்பாய்ந் தழகுவிளங்கும் வண்ணம் மேகம்வந்து பொருந்தின; அதனால், புதைந்து இருள் தூங்கும் புனை இறும்பின் உங்கள் சீறூரதனுக்கு யான் விருந்தினன் அம் மேகத்தின்கட் புதைந்திருள் செறியுஞ் செய்காட்டையுடைய நுமது சீறூரதற்கியான் விருந்தினன்; என்னை யேற்றுக் கொள்வாயாக எ-று.
நம் அல்லற் பிறவிப் பிணிக்கு மருந்து - நம்முடைய அல்லலைச் செய்யும் பிறவியாகிய பிணிக்கு அருந்து மருந்தாய் வைத்தும்; அம்பலத்து அமிர்தாய் இருந்தனர் குன்றின் அம்பலத் தின்கட் சுவையானமிர்தமுமாயிருந்தவரது குன்றினெனக் கூட்டுக.
மேகம் வந்து பொருந்தின வென்றதனால், தன்னூர்க்குப் போதலருமை கூறுவான்போன்று இரவுக்குறி மாட்சிமைப்படு மென்றானாம். இருடூங்கும் புனையிறும்பு என்றதனால், யாவருங் காணாராகலி னாண்டுவந்து நிற்கின்றேனென்றானாம். மாலை விருந்தினரை மாற்றுதலறனன்றென்பது தோன்ற விருந்தின னென்றான். குன்றினின்றேங்கு மருவியேர்திகழச்சென்று பொருந்தின மேகமென்க. அருவியேர்பெற மேகம்பொருந்தினவூர் நின்னூராக லான் என்னி னைப்பற்று யானுமேர்பெற நின்னைவந்து சேர்ந்தே னென்பது போதரும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இரவுக்குறி நேர்வித்தல். 148

குறிப்புரை :

14.1 இரவுக்குறிவேண்டல்
இரவுக்குறி வேண்டல் என்பது பதிநோக்கி வருந்தாநின்ற தலைமகன், இற்றையிரவிற்கியானுங்கள் சீறூர்க்கு விருந்து; என்னையேற்றுக் கொள்வாயாக வெனத் தோழியை யிரவுக்குறி வேண்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.1. நள்ளிருட் குறியை வள்ளல் நினைந்து
வீங்கு மென்முலைப் பாங்கிக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

விசும்பினுக் கேணி நெறியன்ன
சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:ஐய - ஐயனே; விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சின்னெறிமேல் விசும்பிற் கிட்டதோ ரேணிநெறி போலுஞ் சிறுநெறிமேல்; மழை தூங்கு அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் மழை யிடையறாது நிற்றலான் இடையிடையுண்டாகிய அசும்பின்கட் சென்று பொருந்தி யேறுமிடத்து இட்டிமையால் அளை நுழைந்தாற் போன்றிருக்கும்; எம் வாழ்பதி இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது - அதுவேயுமன்றி, எம் வாழ்பதி வழுக்கினான் மெய்யே சிந்தைக்குமேறுதற்கரிது; அதனாலாண்டுவரத்தகாது எ-று.
எழில் அம்பலத்துப் பசும் பனிக்கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதி எழிலையுடைய வம்பலத்தின்க ணுளனாகிய குளிர்ந்த பனியையுடைத்தாகிய பிறையைச்சூடியவனது மலயத்தின் கணுண்டாகிய வெம்வாழ்பதியெனக்கூட்டுக.
இசும்பு ஏற்றிழிவு முதலாயின குற்ற மென்பாருமுளர். அசும்பு சிறு திவலை. இசும்பினிற் சிந்தைக்கு மேறற்கரி தென்றவதனான், எமது வாழ்பதி யிவ்வொழுக்கத்தைச் சிறிதறியு மாயிற் சிந்தையாலு நினைத்தற்கரிய துயரத்தைத் தருமாதலால், தாஞ்செத்துலகாள்வாரில் லை; அதுபோல விவ்வொழுக்க மொழுகற் பாலீரல்லீரென்று மறுத்துக் கூறியவாறாயிற்று. பசுமை செவ்வியு மாம். அதனைக் கோட்டின் மேலேற்றுக. கோட்டையுடைமையாற் கோடெனப்பட்டது. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: இரவுக் குறிமறுத்தல். 149

குறிப்புரை :

14.2 வழியருமைகூறிமறுத்தல்
வழியருமை கூறி மறுத்தல் என்பது தலைமகனிரவுக்குறி வேண்டிநிற்ப, யாங்கள் வாழும்பதி ஏற்றிழிவுடைத்தாகலின் அவ் விடத்து நினக்குச் சிந்தைக்கு மேறற்கரிதெனத் தோழி வழியருமைகூறி மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.2 இரவர லேந்தல் கருதி யுரைப்பப்
பருவரற் பாங்கி யருமை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

மாற்றே னெனவந்த காலனை
யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாற்றேன் என வந்த காலனை ஒருவரானு மாற்றப்படேனென்று வழிபடுவோன துயிரைவௌவ வந்த காலனை; ஓலமிட அடர்த்த கோற்றேன் அவனோலமிடும் வண்ண மடர்த்த கோற்றேன்; குளிர்தில்லைக் கூத்தன் குளிர்ந்த தில்லைக் கணுளனாகிய கூத்தன்; கொடுங்குன்றின் நீள் குடுமிமேல் தேன் விரும்பும் முடவனைப் போல அவனுடைய கொடுங்குன்றினது நீண்ட குடுமியின்மேலுண்டாகிய தேனைவிரும்பு முடவனைப் போல; மெலியும் நெஞ்சே எய்துதற் கருமையை நினையாது மெலிகின்ற நெஞ்சமே; அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கு ஆற்றேன் அரியளாகிய வரிவையிடத்து நீயுண்டாக்கிய அன்பால் யானாற்றேன் எ-று.
மாற்றேனென்பது செயப்படுபொருட்கண் வந்தது. மாறே னென்பது விகாரவகையான் மாற்றேனென நின்றதெனினு மமையும். சுவைமிகுதி யுடைமையிற் கோற்றே னென்றார். நீ வன்கண்மையை யாதலின் இவ்வாறு மெலிந்து முயிர்வாழ்தி, யானத்தன்மை யேனல்லேன் இறந்துபடுவே னென்னுங் கருத்தான், மெலியுநெஞ்சே யானாற்றேனென்றான். நீங்கி விலங்காது - நீங்கியுள்ளஞ் செல்கின்ற செலவினின்றும் விலங்காது. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: இரவுக்குறி நயப்பித்தல். 150

குறிப்புரை :

14.3 நின்றுநெஞ்சுடைதல் நின்றுநெஞ்சுடைதல் என்பது வழியருமை கூறக்கேட்ட தலைமகன், எய்துதற்கரியாளை விரும்பி நீ மெலியாநின்றவிதற்கு யானாற்றேனெனக் கூறித் தனதிறந்துபாடு தோன்றநின்று தன்னெஞ்சுடைந்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.3. பாங்கி விலங்கப் பருவரை நாடன்
நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது.

பண் :

பாடல் எண் : 4

கூளி நிரைக்கநின் றம்பலத்
தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி
யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள்
தேரு மிரவில்வந்து
மீளியுரைத்தி வினையே
னுரைப்பதென் மெல்லியற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கூளி நிரைக்க நின்று கூத்தின்கட் சுவையாற் பேய்களும் போகாது நிரைத்துநிற்ப நின்று; அம்பலத்து ஆடி குரை கழற்கீழ்த் தூளி நிரைத்த சுடர் முடியோய் அம்பலத்தின் கணாடுவானது ஒலிக்குங் கழலையுடைய திருவடிக்கணுண்டாகிய தூளிமொய்த்த சுடர்முடியையுடையோய்; இவள் தோள்நசையால் இவடோண்மேலுண்டாகிய விருப்பினால்; ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து மீளி உரைத்தி ஆளிகள் ஊடுபோக்கற நிரைத்து வலியையுடைய யானைகளைத் தேடு மிரவின்கண்வந்து மீளுதலைச் சொல்லாநின்றாய்; மெல்லியற்கு வினையேன் உரைப்பது என் இனி மெல்லியற்குத் தீவினையேன் சொல்லுவதென்? உடன்படுவாயென்பேனோ மறுப்பாயென் பேனோ? எ-று.
இரவுக்குறியுடம்பட்டாளாகலின், தூளிநிரைத்த சுடர் முடியோ யென்றதனால், அரையிருளின்வருதலான் வருமேதத்தை அத்தூளி காக்குமென்று கூறினாளாம். குரைகழல்: அன்மொழிதொகை. மருடல் வெகுட லென்பன மருளி வெகுளி யென நின்றாற்போல, மீடலென்பது மீளியென நின்றது. வந்து மீளியென்பதற்கு, வந்து மீடலையுடைய இரவுக் குறி என்றுரைப்பாருமுளர். உடம்படவு மறுக்கவுமாட்டாதிடைநின்று வருந்துதலின் வினையேனென்றாள். ஆளி நிரைக்குமாற்றின்கண் நீ வருதற்குடம் படுதற்காகாதாயினுந் தோணசையாற் கூறுகின்ற விதனை மறுப்பின் நீ யாற்றாயென்பதனா லுடம்படாநின்றேனென்பது படக் கூறினமை யால், வகுத்துரைத்த லாயிற்று. மெய்ப்பாடு: அச்சம். பயன்: இரவுக்குறிநேர்தல். இறந்தகால வுட்கோள்: குறிப்பு நுட்பம். 151

குறிப்புரை :

14.4 இரவுக்குறிநேர்தல்
இரவுக்குறி நேர்தல் என்பது தலைமக னெஞ்சுடைந்து வருந்தாநிற்பக் கண்டு, இவனிறந்துபடவுங் கூடுமென வுட் கொண்டு, நீ யாளிக ணிரைத்துநின் றியானைகளைத்தேடு மிராவழியின் கண்வந்து மீள்வேனென்னாநின்றாய்; இதற்குத் தீவினையேன் சொல்லுவதெவனோ வென்று மறுத்த வாய் பாட்டாற் றோழி யிரவுக்குறி நேராநிற்றல். அதற்குச் செய்யுள்
14.4. தடவரை நாடன் தளர்வு தீர
மடநடைப் பாங்கி வகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

வரையன் றொருகா லிருகால்
வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின்
றோன்தில்லை யன்னநின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன
வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம்
பாவி யொளிர்வனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பா - சிலம்பா; நின் ஊர் நலம் பாவி ஒளிர்வன விரை என்ன நின்னூரின் நலம்பரந்து விளங்குவன வாகிய ஆண்டையார் பூசும் விரையெத்தன்மைய; மென்னிழல் என்ன அவர் விளையாடு மெல்லிய நிழலெத்தன்மைய; வெறி உறு தாது இவர்போது என்ன அவர்சூடு நறுநாற்றம் பொருந்திய தாதுபரந்த போதுகளெத்தன்மைய; உரை உரைப்பாயாக எ-று.
அன்று ஒருகால் வரை இருகால் வளைய நிமிர்த்து அன்றொருகால் வரையை யிரண்டுகாலும் வளையும்வண்ண மார்பையுந் தோளையுநிமிர்த்து; வட்கார் நிரை அழல் எழ அன்று எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர் பகைவரது நிரையை யழலெழும் வகை யன்றெய்து நின்றவனது தில்லையையொக்கு நின்னூரெனக்கூட்டுக.
மெல்லிய நிலத்தையுடைய நிழலை மென்நிழலென்றாள். நலம்பாவி யொளிர்வன என்பதனை யெல்லாவற்றோடுங் கூட்டுக. அன்று நிமிர்த்தெனவும், அன்றெய்து நின்றோனெனவுமியையும். இது குறிப்பெச்சம். வன்றழ லென்பதூஉம் பாடம். இவ்வாறு வினவத் தலைமகனொன்றனை யுட்கொள்ளுமென்று கருதிக் கூறினமையால், ஆங்கொரு சூழ லென்றார். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகற்குக் குறியிட முணர்த்துந் தோழி யவனாற்றன்னை வினவுவித்தல். 9; 152

குறிப்புரை :

14.5 உட்கொளவினாதல்
உட்கொள வினாதல் என்பது இரவுக்குறிநேர்ந்த தோழி, தங்கணிலத்து மக்கள் கோலத்தனாய் வருவதற்கு அவனுட் கொள்வது காரணமாக, நின்னூரிடத்தார் எம்மலர்சூடி எச்சாந் தணிந்து எம்மர நிழலின்கீழ் விளையாடுபவெனத் தலைமகனை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
14.5. நெறிவிலக் குற்றவ னுறுதுயர் நோக்கி
யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 6

செம்மல ராயிரந் தூய்க்கரு
மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
வாய்நும ராடுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்: அம் மலர் வாள் கண் நல்லாய் அழகிய மலர்போலுமொளியையுடையவாகிய கண்ணையுடைய நல்லாய்; செம்மலர் ஆயிரம் தூய் கருமால் திருக்கண் அணியும் செய்ய தாமரைமலர்க ளாயிரத்தைத் தூவி முன்வழிபட்டு ஒருஞான்று அவற்றுளொன்று குறைதலாற் கரியமால் அவற்றோடொக்குந் தனது திருக்கண்ணை யிடந்தணியும்; மொய்ம் மலர் ஈர்ங் கழல் அம்பலத்தோன் மன்னுதென் மலயத்து பெரிய மலர்போலும் நெய்த்த நிறத்தையுடையவாகிய திருவடியையுடைய வம்பலத் தான்றங்குந் தென்மலயத்திடத்து; எல்லிவாய் நுமர் ஆடுவது இராப் பொழுதின்கண் நுமர் விளையாடுவது; எம்மலர் சூடி நின்று எம்மலரைச் சூடிநின்று; எச்சாந்து அணிந்து எச்சாந்தையணிந்து; என்ன நல் நிழல்வாய் என்ன நன்னிழற்கீழ்? கூறுவாயாக எ-று.
வாள்: உவமையெனினுமமையும். நுமரென்றது அவரோ டொரு நிலத்தாராகிய மக்களை. திருமாலென்பதூஉம் பாடம். நிழல் அணியன் றெனினும், பன்மைபற்றி யணியென்றார். மெய்ப்பாடு : அது. பயன்: குறியிடமுணர்த்துதல். 153

குறிப்புரை :

14.6 உட்கொண்டுவினாதல்
உட்கொண்டு வினாதல் என்பது கேட்ட வினாவையுட் கொண்டு அந்நிலத்து மக்கள் கோலத்தனாய்ச் செல்வானாக, நின்னூரிடத்து இராப்பொழுது நுமர் எம்மலரைச்சூடி எச்சாந்தை யணிந்து என்ன மரநிழலின்கீழ் விளையாடுபவெனத் தலைமகன் றோழியை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.6. தன்னை வினவத் தானவள் குறிப்பறிந்
தென்னை நின்னாட் டியலணி யென்றது.

பண் :

பாடல் எண் : 7

பனைவளர் கைம்மாப் படாத்தம்
பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற்பொதியின்
மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
தோகை துயில்பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
றாடுஞ் செழும்பொழிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பனை வளர் கைம் மாப் படாத்து அம்பலத்து அரன்பாதம் பனைபோலுநெடிய கையையுடைய மாவினுரியாகிய படாத்தையுடைய வம்பலத்தரன்பாதங்களை; விண்ணோர் புனைவளர் சாரல் பொதியின் மலை விண்ணோர் பரவுதற்கிடமாகிய வளருஞ் சாரலையுடைய பொதியின்மலைக்கண்; பொலி சந்து அணிந்து பொலியுஞ் சந்தனச் சாந்தையணிந்து; சுனைவளர் காவிகள் சூடி சுனைக்கண் வளருங் காவிகளைச் சூடி; யாங்கள் நின்று ஆடும் செழும்பொழில் யாங்கணின்றாடும் வளவியபொழில்; பைந்தோகை துயில் பயிலும் சினை வளர் வேங்கைகள் பசிய மயில்கள் துயில்செய்யுங் கோடுவளரும் வேங்கைப் பொழில் எ-று.
என்றது சந்தனச் சாந்தணிந்து சுனைக்காவிசூடி வேங்கைப் பொழிற்கண் நீவந்துநின்று நின்வரவறிய மயிலெழுப்பு வாயாகவென்றவாறு. மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக்குறியிட முணர்த்துதல். #9; 154

குறிப்புரை :

14.7 குறியிடங்கூறல் குறியிடங்கூறல் என்பது உட்கொண்டு வினாவிய தலைமக னுக்கு, யாங்கள் சந்தனச்சாந்தணிந்து, சுனைக்காவிகள் சூடி, தோகைக டுயில்செய்யும் வேங்கைப் பொழிற்கண் விளையாடு வேம்; அவ்விடத்து நின்வரவறிய மயிலெழுப்புவாயாகவெனத் தோழி குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.7. இரவுக் குறியிவ ணென்று பாங்கி
அரவக் கழலவற் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

மலவன் குரம்பையை மாற்றியம்
மால்முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
கானலிற் சீர்ப்பெடைய
ோ டலவன் பயில்வது கண்டஞர்
கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன
தாங்கொன்மன் சேர்துயிலே

பொழிப்புரை :

இதன் பொருள்:
மல வன் குரம்பையை மாற்றி மலங்களை யுடைய வலிய யாக்கையாகிய குரம்பையைமாற்றி; மால் முதல் அவ்வானவர்க்கு அப்பால் செலவு அன்பர்க்கு ஓக்கும் மான் முதலாகிய அவ்வானவர்க்கப்பாற் செல்லுஞ் செலவை அன்பரா யினார்க்கென்றோக்கிவைக்கும்; சிவன் தில்லைக் கானலில் சிவனது தில்லையைச்சூழ்ந்த கானலிடத்து; சீர்ப்பெடையோடு அலவன் பயில்வது கண்டு நல்லபெடையோடலவன்பயின்று விளையாடுவ தனைக்கண்டு; அஞர் கூர்ந்து வருத்தமிக்கு; அயில் வேல் உரவோன் அயில்வேலையுடைய வுரவோன்; அந்திவாய்ச் செலக் கண்டனன் அந்திப் பொழுதின்கட்செல்ல அவனைக் கண்டேன்; மன் சேர் துயில் என்னதாங் கொல் பின் அம்மன்னனது சேர்துயி லெத்தன்மைத்தாம்! அறியேன் எ-று.
அப்பாற்செலவு மான் முதலாயினார்க்கு மேலாகிய பதங்கள். அன்பருட் போகவேட்கை யுடையார் அவற்றைப் பெற்றுப் போகந்துய்ப்பாராதலிற் செலவன் பர்க் கோக்கு மென்றார். பெடையொடும்பயிலு மலவனைக்கண்டு முயிர்தாங்கிச் சென்றா னாதலின் உரவோ னென்றாள். 155

குறிப்புரை :

14.8 இரவுக்குறியேற்பித்தல் இரவுக்குறி யேற்பித்தல் என்பது தலைமகனுக்குக் குறியிடங் கூறித் தலைமகளுழைச் சென்று, அந்திக்காலத் தோரலவன் றன்பெடையோடு பயிலக்கண்டு ஒருபெரியோன் வருத்தமிக்குச் சென்றான்; அதற்குப்பின் அவன் சேர்துயிலறிந் திலேனெனத் தோழி அவனதாற்றாமைகூறித் தலைமகளை யிரவுக்குறி யேற்பியாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.8. அரவக்கழலவ னாற்றானென
இரவுக்குறி யேற்பித்தது.
14.9. குரவரு குழலிக்
கிரவர வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்
தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி
வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு
வான்சொல்லு மெல்லியலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மெல்லியல் மெல்லியலாய்; மோட்டு அம்கதிர்முலைப் பங்கு உடைத்தில்லை முன்னோன் கழற்கே பெரிய வழகிய கதிர்முலையையுடைய தோர் கூற்றையுடைய தில்லைக் கணுளனாகிய எல்லாப்பொருட்கு முன்னாயவனுடையதிருவடி யொன்றற்குமே; கோட்டம் தரும் குருமுடி நம் வெற்பன் வணங்குதலைச் செய்யுங் குருமுடியையுடைய நம்வெற்பன்; மழை குழுமி நாட்டம் புதைத்தன்ன நள் இருள் முகில்கள் திரளுதலான் நாட்டத்தைப் புதைத்தாற் போன்றிருக்குஞ் செறிந்த விருட்கண்; நாகம் நடுங்கச் சிங்கம் வேட்டம் திரி சரிவாய் யானைகணடுங்கச் சிங்கம் வேட்டந்திரியு மலைச்சரியிடத்து; வருவான் சொல்லும் வரவேண்டிச் சொல்லாநின்றான்; இனியென்செயத்தகும்? எ-று.
குரு - நிறம். முன்னோன் கழற்கல்லது பிறிதோரிடத்துந் தாழ்ந்து நில்லாப் பெரியோன் தாழ்ந்து வேண்டுவதனை மறுத்தலரிதென்பது போதர, முன்னோன்கழற்கே கோட்டந்தரு நங்குரு முடிவெற்ப னென்றாள். ஆற்றின்கண் வருமேத மறியினும் அவனது வேட்கை மிகுதியா லென்னாலொன்றுங் கூறுவ தரிதாயிற்றென்பது போதர, நள்ளிரு ணாகநடுங்கச் சிங்கம்வேட்டந்திரி சரிவாயென்றாள். குரவெனவும் இரவெனவும் விகாரவகையாற் குறுகிநின்றது. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த விளிவரல். பயன்: தலைமகளை யிரவுக்குறி நேர்வித்தல். #9; 156

குறிப்புரை :

14.9 இரவரவுரைத்தல் இரவரவுரைத்தல் என்பது அலவன்மேல்வைத் திரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு அதுவழியாகநின்று, வேட்கைமிக வால் யானைகணடுங்கச் சிங்கந்திரியுமலைச்சரியிடத்து வரவேண்டிச் சொல்லாநின்றான்; இதற்கியாஞ் செய்வதென்னோ வெனத் தோழி தலைமகளுக்குத் தலைமகனிரவரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.9. குரவரு குழலிக்
கிரவர வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 10

செழுங்கார் முழவதிர் சிற்றம்
பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண
வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
மோவின்றெம் வள்ளலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செழுங்கார் முழவு அதிர் சிற்றம்பலத்து வளவிய கார்போலக் குடமுழா முழங்குஞ் சிற்றம்பலத்தின் கண்ணே; பெருந் திருமால் கான் கொழு மலர் இட பெரிய திருமால் நறுநாற்றத்தையுடைய கொழுவிய மலரையிட்டுப் பரவ; கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர்போல் கூத்தை விரும்பிச் செய் வானுடைய கழல்களை யேத்தாதாரைப்போல வருந்த; முழங்கு ஆர் அரி முரண் வாரணவேட்டை செய் மொய் இருள்வாய் முழங்கா நின்ற கிட்டுதற்கரிதாகிய சீயம் முரணையுடைய வாரணவேட்டையைச் செய்யும் வல்லிருட்கண்; வழங்கா அதரின் வழங்கும் எம் வள்ளலை இன்று என்றுமோ யாவரும் வழங்காத வழியிடத்து வழங்குவாயாக வென்று எம்முடைய வள்ளலை யின்று சொல்லுதுமோ! இவ்வாறு சொல்லுதறகுமோ! எ-று.
ஏத்தலரை யானைக்குவமையாக வுரைக்க. ஏத்தலர்போல் வழங்கென்றுமோவென்று கூட்டியுரைப்பாருமுளர். முழங்காரரி யென்பதற்கு முழங்குதலார்ந்த வரியென் பாருமுளர். தனக்கவன் செய்த தலையளியுமுதவியு நினையாநின்ற வுள்ளத்தளாகலின், வள்ளலென்றாள். மைந்தனையென்பது பாடமாயின், ஆண்மைத் தன்மை தோன்ற நின்றதாகவுரைப்பாருமுளர். ஆற்றினேதமுணர்ந்து மறுத்தாள் அவருழை யாஞ்சேற லொழிந்து அவரை வரச்சொல்லக் கடவேமோ வென்றவாறு. அலங்காரம்: எதிர்காலக் கூற்றிடத்துக் காரியத்தின்கண்வந்த இரங்கல்விலக்கு, உபாயவிலக்கு. மெய்ப்பாடு: அச்சம். பயன்: இரவுக்குறி மறுத்தல். 157

குறிப்புரை :

14.10 ஏதங்கூறிமறுத்தல்
ஏதங்கூறி மறுத்தல் என்பதுதலைமகனிரவரவுகேட்ட தலைமகள் தனக்கவன் செய்த தலையளியுமுதவியு நினையா நின்ற வுள்ளத்தளாய், அரிதிரண்டு நின்றியானைவேட்டஞ் செய்யும் வல்லிருட்கண் வள்ளலை வாவென்று சொல்லத்தகு மோவென ஏதங்கூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.10. இழுக்கம்பெரி திரவரினென
அழுக்கமெய்தி யரிவையுரைத்தது.


பண் :

பாடல் எண் : 11

ஓங்கு மொருவிட முண்டம்
பலத்தும்ப ருய்யவன்று
தாங்குமொருவன் தடவரை
வாய்த்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி
யேன்சொல்லும் வாசகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஓங்கும் ஒரு விடம் உண்டு உலகமுழுதையுஞ் சுடும் வண்ணம் மேன்மேலும் வளராநின்றதோர் விடத்தைத் தானுண்டு; உம்பர் உய்ய அன்று தாங்கும் அம்பலத்து ஒருவன் தடவரைவாய் உம்பரெல்லா முய்ய அன்று தாங்குமம்பலத் தொருவனது பெரியவரையிடத்து; தழங்கும் அருவி வீங்கும் சுனைப்புனல் ஒலியாநின்ற வருவியாற் பெருகுகின்ற சுனைப்புனற் கண்; அன்று வீழ்ந்து அழுங்கப் பிடித்தெடுத்து வாங்குமவர்க்கு அன்றியான் விழுந்து கெடப்புகப் பற்றியெடுத்துக் கரைக்கணுய்த்த பெரியோருக்கு; சிறியேன் சொல்லும் வாசகம் அறியேன் சிறியேனாகியயான் சொல்லுவதோர் மாற்றமறியேன் எ-று.
ஒருநஞ்சென்பதற்கு ஒப்பில்லாத நஞ்செனினுமமையும். தடவரைவாய் வீழ்ந்தழுங்கவென வியையும். சுனையென்றியைப் பினுமமையும். சுனைப்புனல்வாய் வீழ்ந்தழுங்க வன்று தாமே வந்தெடுத்துய்வித்தாற்போல வழங்காதவதரிற் றாம்வருதலான் எனக்கு வருமிடுக்கணையுந் தாமே நீக்கினல்லது யானறிவ தொன்றில்லை யென்னுங்கருத்தால், சுனைப்புனல் வீழ்ந்தன்றழுங்கப் பிடித்தெடுத்து வாங்குமவர்க்கென்றாள்; ஆற்றின்கணேத நினைந் திரவுக்குறி மறுத்த தலைமகள் அவன்செய்த வுதவிநினைந்து பின்னுடம்பட்டாளாதல் பொருந்தா மையறிந்து கொள்க. இக்கருத்தே பற்றி யுதவிநினைந்து குறைநயந்ததென்னாது அவனதாற்றாமை நிலைமை கேட்டுக் குறைநயந்த தென்றார். அவன் செய்த பேருதவி சொல்லுகையால் அவன்செய்த வுதவிக்குக் கைம்மாறாவது நானவனுழைச்சேறலே யென்றுடம்பாடாயிற்று. பிறவிக் குட்டத் தியான் விழுந்து கெடப்புகத் தாமேவந்து பிடித்தெடுத்து அதனி னின்றும் வாங்கிய பேருதவியார்க்குச் சிறியேனாகிய யான் சொல்வதறியே னென்று வேறுமொரு பொருடோன்றியவாறு கண்டு கொள்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: இரவுக்குறிநேர்தல். 158

குறிப்புரை :

14.11 குறைநேர்தல் குறைநேர்தல் என்பது ஏதங்கூறி மறுத்த தலைமகள், அவனாற்றானாகிய நிலைமைகேட்டு, யான் புனலிடைவீழ்ந்து கெடப்புக என்னுயிர் தந்த பெரியோர்க்குச் சிறியேன் சொல்லுவ தறியேனென உடம்பட்டு நேராநிற்றல். அதற்குச் செய்யுள்
14.11. அலைவே லண்ணல் நிலைமை கேட்டுக்
கொலைவேற் கண்ணி குறைந யந்தது.

பண் :

பாடல் எண் : 12

ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
யுறார்செல்லுஞ் செல்லல்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏனற் பசுங்கதிர் என்றூழ்க்கு அழிய தினையினது, பசியகதிர் கோடையாலழிய; எழிலி உன்னி அஃதழியாமன் மழைபெறக் கருதி; கானக் குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா கானத்துவாழுங் குறவர்கள் தெய்வத்திற்குப் பலி கொடுத்தாரவாரிக்கும் வம்பார்ந்த சிலம்பை யுடையாய்; இற்றையாமத்து யான் நின் அருண்மேல் நிற்கல் உற்று இற்றையிரவின்கண் யான் நின்னேவன்மேனிற்கவேண்டி; தேன்நக்க கொன்றையவன் தில்லை உறார் செல்லும் செல்லல்கள் சென்றேன் தேனோடுமலர்ந்த கொன்றையையுடையானது தில்லையைப் பொருந்தாதாரடையுந் துன்பத்தையடைந்தேன்; நீ கருதியதூஉ முடிந்தது எ-று.
வம்பு காலமல்லாதகாலத்து மழை. யாமமு மென்பது பாடமாயிற் பகலேயன்றியிரவுமெனவுரைக்க. யாமமு நின்னருளே என்பதூஉம் பாடம். கானக்குறவர்கள் தமக்குணவாகிய தினைக்கதிர் கோடையாலழியத் தெய்வத்தைப் பராவி மழை பெய்விக்க முயல்கின்றாற்போல, நினக்குத் துப்பாகிய இவணலம், அலர் முதலாயினவற்றாற் றொலையும்வழி அது தொலையாமன் முயன்று பாதுகாப்பாயென உள்ளுறையாமாறுகாண்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகற்குக் குறைநயந்தமை யுணர்த்துதல். 159

குறிப்புரை :

14.12 குறைநேர்ந்தமைகூறல்
குறைநேர்ந்தமை கூறல் என்பது தலைமகளைக் குறை நயப்பித்துத் தலைமகனுழைச் சென்று, இற்றையாமத்தெல்லாம் நின்னருண்மேனிற்கவேண்டித் துன்பமுற்றேன்; நீ கருதியதூஉ முடிந்ததெனத் தோழி தலைமகனுக்கு அவள்குறை நேர்ந்தமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.12. குறைந யந்தனள் நெறிகுழ லியென
எறிவே லண்ணற் கறிய வுரைத்தது.


பண் :

பாடல் எண் : 13

முன்னு மொருவ ரிரும்பொழில்
மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத்
தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந்
தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில்
பேரும் மயிலினமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இரும் பொழில் மூன்றற்கு முன்னும் ஒருவர் பெரியவுலகங்கண் மூன்று முளவாவதற்கு முன்னுந் தாமொரு வருமேயாகியுள்ளார்; முற்றும் இற்றால் பின்னும் ஒருவர் அவ் வுலகமுழுது மாய்ந்தாற் பின்னுந் தாமொருவருமேயாகி யுள்ளார்; சிற்றம் பலத்தார் சிற்றம்பலத்தின் கண்ணார்; தரும் பேரருள்போல் அவர் தரும் பெரிய வருள்போல; ஒரு இன்பம் துன்னும் என்று தம் தோகைக்கு ஓகை சொல்லுவபோல் இவ்வில்லின் கண் ஓரின்பம் வந்து பொருந்து மென்று தம்முடைய தோகைகட் கோகை சொல்லுவன போல; மன்னும் அரவத்தவாய் மயில் இனம் துயில் பேரும் இடைவிடாது நிகழு மாரவாரத்தை யுடையவாய் மயிலினந் துயில் பெயராநின்றன; இஃதென்னோ! எ-று.
சிற்றம்பலத் தாரென்பதற்கு, உலகங்களுளவாய்ச் செல்லுங் காலத்துச் சிற்றம் பலத்தின் கண்ணாரென்றுரைப்பினு மமையும். தன்றோகைக் கென்பது பாடமாயிற் பன்மையொருமை மயக்கமாகக் கொள்க. ஒருகால் வெருவித்தாமே துயிலெழுந்துணையன்று; இஃதவன் செய்த குறி யென்பது போதர, மன்னுமரவத்தவாயென்றாள். மெய்ப்பாடு அது, பயன்: தலைமகன் வரவுணர்த்துதல். 160

குறிப்புரை :

14.13 வரவுணர்ந்துரைத்தல்
வரவுணர்ந்துரைத்தல் என்பது தலைமகனுக்குக் குறை நயப்புக் கூறியதோழி, யாம் விளையாடாநின்ற பொழிலிடத்து வேங்கைமே லுண்டாகிய மயிலின மின்புற்றுத் துயில்பெயரா நின்றன; இதற்குக் காரணமென்னோவென அவன் வரவறிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.13. வளமயி லெடுப்ப இளமயிற் பாங்கி
செருவே லண்ணல் வரவு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 14

கூடார் அரண்எரி கூடக்
கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன்
னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கூடார் அரண் எரி கூட கூடாதாருடைய வரண்களை யெரிசென்று கூட; கொடும்சிலை கொண்ட அண்டன் சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் வளைந்த சிலையைக் கைக்கொண்ட அண்டனது பெருமையார்ந்த மதிலையும் வளத்தையு முடைய தில்லையையொப்பாய்; சிறுகண் பெரு வெண்கோடு ஆர் கரி சிறியகண்ணையுடைய பெரிய வெண்கோடு நிரம்பிய யானை; நம் சூழ்பொழிற்கு நமது சூழ்பொழிற்கண்; குரு மா மணி ஊசலைக் கோப்பு அழித்து நிறத்தையுடைய வுயர்ந்தமணிகளாற் செய்யப்பட்ட வூசலைச் சீரழித்து; தோடு ஆர் மதுமலர் நாகத்தை நூக்கும் இதழார்ந்த மதுமலர்களையுடைய அவ்வூசலைத்தொடுத்த நாகமரத்தை நூக்காநின்றது; இதற்கென் செய்வேம்? எ-று.
சூழ்பொழிற் கென்னு நான்கனுருபு ஏழாவதன் பொருட்கண் வந்தது. சூழ்பொழிலே யென்பதூஉம் பாடம். இவ்வாறு கூறவும் வாளாகிடப்பிற் றாய்துயின்றா ளென்றறிதல் பயன். அலங்காரம்: பரியாயம். மெய்ப்பாடு: அது. பயன்: இடையீடாராய்தல். 161

குறிப்புரை :

14.14 தாய்துயிலறிதல்
தாய்துயிலறிதல் என்பது தலைமகன் வரவுணர்ந்து தலைவியைக் கொண்டுசெல்லக் கருதாநின்றதோழி, யாம் விளையாடாநின்ற பொழிலிடத்து ஒரு யானை நின்று ஊசலைத் தள்ளாநின்றது; அதற்கியாஞ் செய்வதென்னோவெனத் தாயது துயிலறியாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.14. ஊசன்மிசைவைத் தொள்ளமளியில்
தாயதுதுயில் தானறிந்தது.

பண் :

பாடல் எண் : 15

விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்
தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின்
றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
வாழுங் கருங்குழலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வண்டு வாழும் கருங்குழல் வண்டுகள் வாழுங் கரிய குழலை யுடையாய்; விண்ணுக்கு மேல் எல்லாப் பொருட்கு மேலாகிய விண்ணுக்கு மேலாயவன்; வியன் பாதலக்கீழ் எல்லாப் பொருட்குங் கீழாகிய அகன்ற பாதாலத்திற்குங் கீழாயவன்; விரி நீர் உடுத்த மண்ணுக்கு நாப்பண் நடுவாகிய கடலையுடுத்த மண்ணிற்கு நடுவாயவன்; நயந்து தென் தில்லை நின்றோன் விரும்பித் தென்றில்லைக்கணின்றோன்; மிடற்றின் வண்ணக் குவளை மலர்கின்றன அவனது மிடற்றின் வண்ணத்தை யுடைய குவளைப் பூக்கண் மலர்கின்றவை; சின வாள் மிளிர்நின் கண் ஒக்குமேல் கண்டு காண் சினவாள் மிளிருமாறுபோல மிளிருநின் கண்களையொக்கு மாயிற் காண்பாயாக எ-று.
பாதாலம்: பாதலமெனக் குறுகி நின்றது. மண்ணினுள்ளு முளனாதலின், மண்ணுக்கு நாப்பணென்றார். மண் முழுதுக்குமிடைத் தில்லையை நயந்து அதன்கணின்றோனென் றுரைப்பாருமுளர். சினவாண்மிளிர் நின்கண்ணொக்குமேலென்புழி ஒத்தபண்பு வேறு பட்டமையான் உவமைக்குவமையன்றென்க. கண்டு காணென்ப தொருசொல். ஆய்தருபவள் - புறத்துக்கொடு போமுபாயமாராய் பவள். மெய்ப்பாடு அது. பயன்: தலைமகளைக் குறியிடத் துய்த்தல் அலங்காரம்: புகழுவமை. 162

குறிப்புரை :

14.15 துயிலெடுத்துச் சேறல்
துயிலெடுத்துச் சேறல் என்பது தாய்துயிலறிந்ததோழி, குவளைப்பூக்கள் மலராநின்றன; அவை நின்கண்ணை யொக்கு மாயிற் காண்பாயாகவெனத் துயிலெடுத்துச் செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.15. தாய் துயிலறிந் தாய்தருபவள்
மெல்லியற்குச் சொல்லியது.

பண் :

பாடல் எண் : 16

நந்தீ வரமென்னும் நாரணன்
நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை
யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி
வீயுந் தருகுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள் மலர்க் கண்ணிற்கு கண்ணையிடந்திட்டு நந்தீ வரந்தரவேண்டுமென்னு நாரணனது அந்நாண்மலர்போலுங் கண்ணிற்கு; எஃகம் தந்து ஈ வரன் புலியூர் அனையாய் ஓரெஃகத்தைப் படைத்துக் கொடுத்த தலை வனது புலியூரையொப்பாய்; இவை தடங் கண் கடந்த இந்தீவரம் இவை நின்பெரியகண்கள் கடந்த நீலங்கள்; காண் இவற்றைக்காண் பாயாக; நின் இருள் சேர் குழற்கு நினது கருமைசேர்ந்த குழற்கு; சந்து ஈ எழில் சேர் வர முறியும்வெறி வீயும் தருகுவன் சந்தனமரந்தரும் எழில்சேர்ந்த நல்ல முறிகளையும் நறுநாற்றத்தை யுடைய மலர்களையும் யான்கொணர்ந்து தருவேன்; நீ நீலப் பூக்களையுங் கண்டு ஈண்டு நிற்பாயாக எ-று.
நந்தியென்பது ஒரு திருநாமம். அனையாயுடைய தடங்கண்க ளென்றுரைப்பாரு முளர். இந்தீவரமிவை காணென்பதற்கு நின் கண்களைவென்ற இந்தீவரமாவன விவைகாணென்றுரைப்பினு மமையும். இது குறிப்பெச்சம். உய்த்திடத்து - இடத்துய்த்து. மெய்ப் பாடு - அது. பயன்: தலைமகளைக் குறியிடத்து நிறீஇ நீங்குதல். 163

குறிப்புரை :

9; 14.16 இடத்துய்த்து நீங்கல் இடத்துய்த்து நீங்கல் என்பது துயிலெடுத்துக்கொண்டு சென்று அக்குறியிடத்து நிறுத்தி, இவை நின்கண்கள் வென்ற குவளை மலர்; இவற்றைக்காண்பாயாக; யானின்குழற்குச் சந்தனத்தழை கொய்யாநின்றேனெனத் தான் சிறிதகலாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.16. மைத்தடங் கண்ணியை யுய்த்திடத் தொருபால்
நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 17

காமரை வென்றகண் ணோன்தில்லைப்
பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத
வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச்
சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத் தென் னோவந்து
வைகி நயந்ததுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
காமரை வென்ற கன்ணோன் தில்லை நிறையழிக்க வந்த காமனை வென்ற கண்ணையுடையவனது தில்லைக்கண்; பல்கதிரோன் அடைத்த தாமரை இல்லின் பல்கதிரோனாகிய வாயிலோன் அடைத்து வைத்த தாமரையாகிய நும் மில்லின்கண்; இதழ்க் கதவம் திறந்தோ இதழாகிய கதவத்தை அவ்வாயிலோன் வருவதன்முன் நீரே திறந்து கொண்டோ போந்தது? இதுகிடக்க, பாம் அரை மேகலை பற்றி பரந்தவரையின் மேகலையை யொலியாமற்பிடித்து; சிலம்பு ஒதுக்கி சிலம்புகளை மேலேறக் கடுக்கி; தமியே பைய அரையாமத்து நாம் வந்து வைகி நயந்தது என்னோ தனியே பைய அரையாமத்தின்கண் நாம் ஈண்டுவந்து தங்கி விரும்பிய தென்னோ? இதனைக் கூறுவீராமின் எ-று.
காமரென்னும் ரகரவீறு இழிவின்கண் வந்தது. தில்லைத் தாமரையென வியையும். கதவந் திறந்தோவென்னு மோகாரத்தை அசைநிலையாக்கியுரைப்பாருமுளர். பாவுமென்னு மீற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டுக் காலமயக்கமாய் நின்றது. எல்லா ரானுந் திருமகணயக்கப் படினல்லது திருமகடன்னானயக்கப் படுவதொன்றில்லை யென்னுங் கருத்தான், நாம் நயந்த தென்னோ வென்றார். நாமென்னு முன்னிலை யுளப்பாட் டுத் தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது. தடு - தடுத்தல். அரியன்பு பரியரை போலப் பண்புத்தொகை யாய் நின்றது. தடையருமன்பென்று பாடமோதுவாருமுளர். கண்ணியை யுரைத்ததெனவியையும். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளைக் கண்டு தோன்றிய வுவகையைப் பரிக்கலாற்றாத தலைமகனாற்றுதல்; தலைமகளை மகிழ்வித்தலுமாம். 164

குறிப்புரை :

14.17 தளர்வகன் றுரைத்தல்
தளர்வகன் றுரைத்தல் என்பது தோழி குறியிடை நிறுத்தி நீங்காநிற்ப, தலைமகனெதிர்ப்பட்டு, நும்முடைய கமலக்கோயில் கதிரவன் வருவதன்முன் நீரே திறந்துகொண்டோ போந்தது? இப்பொழிலிடை வந்து நயந்ததென்னோ வெனத் தலைமகளைப் பெரும்பான்மைகூறித் தன்றளர்வு நீங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
14.17. வடுவகி ரனைய வரிநெடுங் கண்ணியைத்
தடுவரி யன்பொடு தளர்வகன் றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 18

அகிலின் புகைவிம்மி ஆய்மலர்
வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத்
தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித்
தேம்ப லிடைஞெமியப்
புகிலு மிகஇங்ங னேயிறு
மாக்கும் புணர்முலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து குழற் கணகிற்புகை விம்ம ஆராயப்பட்ட மலர்களை வேய்ந்து; அஞ்சனம் எழுதத் தகிலும் கண்மலர்க் கஞ்சனமெழுதத் தகுவளாயினும்; தனிவடம் பூட்டத் தகாள் ஒரு தனி வடத்தைப் பூட்டத் தகுவாளல்லள்; சங்கரன் புலியூர் இகலும் அவரின் அதனைப் பூட்டுதலே யன்றிச் சங்கரனது புலியூரின் பெருமையை யுணராது அதனோடு மாறுபடுவாரைப்போல; தளரும் இத்தேம்பல் இடை ஞெமியப் புகிலும் தளராநின்ற இத்தேய்தலை யுடைய இடை நெரிந் தொடியப்புகினும்; புணர்முலை இங்ஙனே மிக இறுமாக்கும் அதனை யுணராது இப்புணர்ந்த முலைகள் இவ்வண்ணமே மிகவும் விம்மாநின்றன; இஃதென்னாய்முடியும்! எ-று.
தேம்பலிடை: இருபெயர்ப் பண்புத்தொகை யெனினுமமை யும். ஆய்மலராய்ந்தென்பது பாடமாயின், ஆராய்ந்து சூட்டி யெனச் சூட்டுதலை ஆற்றலான் வருவித்துரைக்க. புகலுமென்பது பாடமாயிற் புகுதலுமெனவுரைக்க. பிறபாட மோதுவாருமுளர். அளவளாயென் பது மிகுதிக்கணிரட்டித்து வந்தது. அளாயென்பதனைச் செய் தென்னும் பொருட்டாக்கி அளவுதலைச் செய் தென்றுரைப்பாரு முளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளைச் சார்தல். 165

குறிப்புரை :

14.18 மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது பெரும்பான்மை கூறக்கேட்ட தலைமகள் பெருநாணினளாதலிற் றன்முன்னிற்கலாது நாணித் தலை யிறைஞ்சி வருந்தாநிற்ப, சென்று சார்தலாகாமையிற் றனதாதரவு மிகவால் அவ்வருத்தந்தணிப்பான்போன்று, முலை யொடு முனிந்து, அவளிறுமருங்குறாங்கிச் சென்றணையாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.18. அன்பு மிகுதியி னளவளா யவளைப்
பொன்புனை வேலோன் புகழ்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 19

அழுந்தேன் நரகத் தியானென்
றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப்
புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
வானத் திளமதியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
யான் நரகத்து அழுந்தேன் என்று இருப்ப யானினி நரகத்திற் புக்கழுந்தேனென்று செம்மாந்திருக்கும்வண்ணம்; வந்து ஆண்டு கொண்ட செழுந்தேன் நிழல் பொழில் தில்லைப் புறவில் தானே வந்தாண்டுகொண்ட செழுந்தேன் போல்வானது விளங்கும் பொழிலையுடைய தில்லையைச்சூழ்ந்த இளங்காட்டில்; செறுவகத்த கொழுந்தேன் மலர் வாய்க்குமுதம் இவள் செய்யின் கண்ணவாகிய கொழுவியதேனையும் மலராநின்ற வாயையுமுடைய குமுதமலர் இவள்; யான் குரூஉச்சுடர் கொண்டு எழுந்து ஆங்கது மலர்த்தும் உயர் வானத்து இளமதி யான் நிறத்தையுடையை நிலாவைக்கொண் டெழுந்து அக்குமுதத்தை மலர்த்தும் உயர்ந்த வானத்தின்கட்டிகழும் முதிராமதி எ-று.
நரகமென்றது ஈண்டுப்பிறவியை; வீடுபேற்றின்பத்தோடு சார்த்த நரகமுஞ் சுவர்க்கமுமொருநிகரனவாகலின், நரகமென்றார். ஆண்டுகொண்டா னென்பது பாடமாயிற் செழுந்தேனைப் பொழிலின்மேலேற்றுக. செறு - நீர்நிலையுமாம். வாய் - முகம். மலர் வாய்க்குமுத மென்றது கிண்கிணிவாய்க் கொள்ளு நிலைமையை. அதனாலிவளது பருவம் விளங்கும். குரூஉச்சுடர் கொண்டு மலர்த்து மெனக் கூட்டிக் குரூஉச் சுடரான் மலர்த்துமென் றுரைப்பினு மமையும். அதனால், தலைப் பெய்தமையானன்றிக் கண்ட துணையான வண் மகிழ்தலைக் கூறினானாம். இவ்வின்பம் வழிமுறையாற் பெருகு மென்பது போதர, இளமதி யென்றான். மெய்ப்பாடு: அது. பயன்: நயப்புணர்த்துதல். 166

குறிப்புரை :

14.19 முகங்கண்டு மகிழ்தல் முகங்கண்டு மகிழ்தல் என்பது மருங்கணைவிறுதிக் கட் டலைமகளது முகமகிழ்ச்சிகண்டு, இவளும் யானும் மலருமதியு மெனத் தலைமகன் றன்னயப் புணர்த்தி மகிழாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.19. முகையவிழ்குழலி முகமதிகண்டு
திகழ்வேல்அண்ணல் மகிழ்வுற்றது.

பண் :

பாடல் எண் : 20

சுரும்புறு நீலங் கொய்யல்
தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறற் றோழியொ டாயத்து
நாப்ப ணமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி
வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம்
பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அமரர் ஒன்னார் இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளிப் புரிசை அமரர்க்குப் பகைவராயினாருடைய இரும்பு பொருந்திய பெரிய மதிலையுடையவூரும் பொன்னிஞ்சியை யுடையவூரும் வெள்ளிப்புரிசையை யுடையவூரும்; அன்று ஓர் துரும்பு உறச் செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லைச் சூழ் பொழிற்கு அன்று ஒரு துரும்பின் றன்மையையுற எரித்த வெற்றியையுடைய வெம்பிரானது தில்லைக்கட் சூழ்ந்த பொழிலிடத்து; தமி நின்று தனியே நின்று; சுரும்பு உறு நீலம் கொய்யல் சுரும்பு பொருந்து நீலப் பூக்களைக் கொய்யாதொழி; அரும் பெறல் தோழியோடு ஆயத்து நாப்பண் துயில் பயில் அரிய பெறுதலையுடைய நின்றோழியோடு ஆயத்தினிடைத் துயிலைப் பயில்வாயாக எ-று.
மோ: அசை. சுரும்புறுநீலம் - மேலாற்சுரும்புவந்து பொருந்து நீலமலர்; எதிர்காலவினை; ``மென்னனை யாய்மறியே பறியேல்`` (தி.8 கோவை பா.125) என்றது போலக் கொள்க. சூழ் பொழில் - தில்லையைச் சூழ்ந்த பொழில். பொழிற்கென்பது வேற்றுமை மயக்கம். பொழிலே யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: புறத்தாரறியாமைப் பிரிதல். 167

குறிப்புரை :

14.20 பள்ளியிடத் துய்த்தல்
பள்ளியிடத்துய்த்தல் என்பது மலர்மதிமேல்வைத்துக் கூறி மகிழ்வுற்றுப் பிரியலுறாநின்றவன், இப்பொழிலிடை யினித் தனியே நின்று நீலப்பூக்களைக் கொய்யாது, நின்னரியதோழி யோடு ஆயத்திடைச் சென்று துயில்பயில்வாயெனத் தலைமக ளைப் பள்ளியிடத்துச் செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.20. பிரிவது கருதிய பெருவரை நாடன்
ஒள்ளிழைப் பாங்கியொடு பள்ளிகொள் கென்றது.

பண் :

பாடல் எண் : 21

நற்பகற் சோமன் எரிதரு
நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத்
திவளின் மெய்யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர்
தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல்
நாடஇக் கல்லதரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வெற்பகச் சோலையின் வேய் வளர் தீ வெற்பிடத்துச் சோலையின்கணுண்டாகிய வேய்க்கட் பிறந்து வளருந்தீ; விண்ணின் நின்ற கற்பகச் சோலை சென்று கதுவும் கல் நாட விண்ணின்கணின்ற கற்பகச் சோலையைச் சென்று பற்று மலை நாடனே; இக் கல் அதர் இக்கல்லையுடைய சிறுநெறி; நல் பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லை அன்ன நல்ல ஞாயிறுந் திங்களுந் தீயுமுண்டாகிய மூன்று நாட்டத்தையுமுடையவனது தில்லையை யொக்கும்; வில் பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் வில்லைப் பகைத்து அதனின்மிகும் புருவத்தையுடைய இவள் காரணமாக; மெய்யே எளிது மெய்யாக வெளிதாயிற்று; ஆயினும், இனிநீ வரற்பாலையல்லை எ-று.
செவ்வெண்ணின்றொகை விகாரவகையாற் றொக்குநின்றது. உம்மைத்தொகை யெனினுமமையும். தில்லையன்னவிவளென வியையும். இவளின்மெய்யே யெளிதேயென்பதற்கு இவள் காரணமாக வெளிதாமோ எளிதன்றெனவெதிர்மறையாக்கி யுரைப்பினுமமையும். வேயிற்பிறந்ததீ ஆண்டடங்காது சென்று தேவருலகத்தினின்ற கற்பகச்சோலையைக் கதுவினாற்போல, நின்வரவினால் அயலாரிடத்துப்பிறந்த அலர்பெருகி நின்னூருமறியப் பரந்து நின்பெருமையைச் சிதைக்குமென உள்ளுறை வகையான் அலரறி வுறுத்தவாறு கண்டுகொள்க. இவனுக்குப் பெருமையாவது இவன் வழியிற் பிதிர்கள் கொண்டாட்டம். சிதைத்தலாவது இகலோக பரலோக மிரண்டையுஞ் சிதைத்தல். மூங்கிலிற்பிறந்ததீத் தன்னையுஞ் சுட்டுத் தன்னுடைய சுற்றத்தையுஞ் சுட்டுக் கற்பகச் சோலையைக் கதுவினாற்போல வென்க. நற்பகற் சோமன் விகார வகையான் வலிந்து நின்றது. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரவுவிலக்கி வரைவு கடாதல். 168

குறிப்புரை :

14.21 வரவுவிலக்கல் வரவுவிலக்கல் என்பது தோழி தலைமகளைப் பள்ளியிடத்துச் சேர்த்திச்சென்று, இக்கல்லதர் இவள் காரணமாக நினக் கெளிதாயிற்று; ஆயினும் இனியிவ்வாறொழுகற்பாலை யல்லையென வரைவு பயப்பக் கூறித் தலைமகனை வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
14.21. தெய்வமன் னாளைத் திருந்தமளி சேர்த்தி
மைவரை நாடனை வரவுவிலக் கியது.

பண் :

பாடல் எண் : 22

பைவா யரவரை அம்பலத்
தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
தென்றுமென் இன்னுயிரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பை வாய் அரவு அரை படத்தையும் பெரிய வாயையுமுடைய அரவையணிந்த வரையையுடைய; அம்பலத்து எம்பரன் பைங் கயிலை அம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய பரனது சோலையாற் பசிய கயிலைக்கணுளளாகிய; செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள் சிற்றிடைக்கொடியை செய்ய வாயையுங் கரிய கண்ணையும் பெரியபணை போலுந் தோள்களை யுஞ் சிறியவிடையையுமுடைய கொடிபோல்வாளை; மொய்வார் கமலத்து முற்றிழை பெரியதாகிய தாளானெடிய கமலத்துவாழுந் திருமகளாகிய முற்றிழை; முன்னை என் தவத்தால் முற்பிறப்பின்க ணுண்டாகிய எனது தவப்பயனால்; இன்று இவ்வாறு இருக்கும் என்றே எனக்கெய்தலாம்வண்ணம் இன்றிவ்வாறு கொடிச்சியா யிருக்குமென்று கருதியே; என் இன் உயிர் என்றும் நிற்பது என்னின்னுயிர் என்றும் நிற்பது; இத்தன்மையாளை யான்வரையுந் துணை யெளியளாக நீ கூறுகின்றதென்! எ-று.
எம்பரனென்பதற்கு முன்னுரைத்ததுரைக்க. (தி.8 கோவை பா.99) கயிலைக் கொடியெனவியையும். கொடியை யென்னு மிரண்டாவது என்று கருதியென வெஞ்சிநின்ற வினையொடு முடியும். மெய்ப்பாடு: உவகை. பயன்: வரைவுடம்படாமை. 169

குறிப்புரை :

14.22 ஆற்றாதுரைத்தல்
ஆற்றாதுரைத்தல் என்பது வரைவுகடாவி வரவுவிலக்கின தோழிக்கு வரைவுடம்படாது, பின்னுங் களவொழுக்கம் வேண்டி, யான் முன்செய்த தவப்பயனால் எனக்கெய்தலாம் வண்ணந் திருமக ளிவ்வாறு கொடிச்சியாயிருந்தாளெனக் கருதியே எனதின்னுயிர் நிற்பது; இத்தன்மையாளை யான் வரையுந் துணையெளியளாக நீ கூறுகின்ற தென்னெனத் தலைமகன் றனதாற்றாமை தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.22. வரைவு கடாய வாணுதற் றோழிக்
கருவரை நாடன் ஆற்றா துரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

பைவா யரவும் மறியும்
மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
நீண்முத்த மாலைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மன்ன மன்னனே; இச் சிறியாள் பெரு மலர்க்கண் மை வார் குவளை நீ செல்லு நெறிக்கண் நினக்கிடை யூறுண்டா மென்னு மச்சத்தால் இச்சிறியாளுடைய பெரிய மலர்போலுங் கண்களாகிய கருமையையுடைய நெடிய குவளைகள்; நீள் முத்த மாலைகள் விடும் நீண்ட முத்தமாலைகளைப் புறப்பட விடா நிற்கும், அதனான் நினக்கிடையூறின்மையை யிவளறிய; தில்லையின் முன்னினக் கால் நின்பதியாகிய தில்லையெல்லையிற் சென்று கிட்டினால்; செவ்வாய் கரு வயிர்ச் சேர்த்து - நின் செவ் வாயைக் கரிய கொம்பின்கட் சேர்த்தி யூதவேண்டும் எ-று.
பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் - படத்தையும் பெரிய வாயையு முடைய அரவும் மான்மறியும் மழுவாளும் விடாது நிகழும் - மலர்க்கை மொய் வார் சடை முடி முன்னவன் தில்லை - மலர்போலுங் கையையும் நெருங்கிய நெடிய சடைகளானியன்ற முடியையுமுடைய எல்லாப்பொருட்கு முன்னாயவனது தில்லையெனக் கூட்டுக.
குறிஞ்சிநிலத்திற்குரிய மக்கள் கோலத்தனாய் வருமாதலின், வயிர் கூறப்பட்டது. மலர்க்கணென்பது உவமை கருதாது கண்ணென்னுந் துணையாய் நின்றது. கண்ணாகிய குவளைப் பெருமலரென்று கூட்டு வாரும், மலர்தலையுடைய கண்ணென்பாரு முளர். மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவுகடாதல். #9; 170

குறிப்புரை :

14.23 இரக்கங்கூறி வரைவு கடாதல்
இரக்கங்கூறி வரைவு கடாதல் என்பது களவுவிரும்பி வரைவுடம்படாத தலைமகனுக்கு, நீ செல்லுநெறிக்கண் நினக் கிடை யூறுண்டாமென்னு மச்சத்தால் அவளழுதிரங்கா நின்றா ளென்று, நீ சென்றமையறிய நின்குறி காட்டுவாயெனத் தலைமகள திரக்கங் கூறி வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.23. அதிர்கழலவன் அகன்றவழி
யெதிர்வதறியா திரங்கி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

நாகந் தொழவெழில் அம்பலம்
நண்ணி நடம்நவில்வோன்
நாக மிதுமதி யேமதி
யேநவில் வேற்கையெங்கள்
நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில்
வாய்த்தநின் நாயகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நவில் வேற் கை எங்கள் நாகம் வர பயிலப்பட்ட வேலையேந்திய கையையுடைய எங்கள் யானை வர; நாம் எதிர் கொள்ளும் நள் இருள்வாய் நாங்களெதிர்கொள்ளுஞ் செறிந்த விருளிடத்து; நற ஆர் நாகம் மலி பொழில்வாய் எழில் வாய்த்த நின் நாயகம் அவ்விருளைச் சிதைத்துத் தேனார்ந்த நாகமலர் மலிந்த பொழிலிடத்துநின்று நீசெய்கின்ற அழகுவாய்த்த நினது முதன்மை; மதியே திங்காள்; மதியே நினக்கறிவே; நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் நாகம் இது பதஞ்சலியாகிய நாகந்தொழ எழிலையுடைய வம்பலத்தை நண்ணிக் கூத்தைப் பயில்வானது மலைகாணிஃது; இதனைக் கடைப் பிடிப்பாயாக எ-று.
நாகத்தான் விழுங்கப்படுநீ நாகந்தொழ வம்பலத்து நடம் பயில்வோனது மலைக்கட்புகுந்து விளங்கி வீற்றிருத்தல் நினக்கு நன்றி பயவாதென்பது கருத்து. அறிவென்பது ஈண்டறிந்து செய்யப்படும் காரியத்தை. தனிநாயகமென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: இடையீடறிவித்தல். 171

குறிப்புரை :

14.24 நிலவு வெளிப்பட வருந்தல்
நிலவு வெளிப்பட வருந்தல் என்பது இரக்கங்கூறி வரைவு கடாயதோழி, பிற்றைஞான்று அவனிரவுக்குறியிடைவந்து நிற்ப, நிலவு வெளிப்பட்டாற் சென்றெதிர்ப்படமாட்டாமற் றாங்கள் வருந்தாநின்றமை சிறைப்புறமாக மதியொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.24. தனிவே லவற்குத் தந்தளர் வறியப்
பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 25

மின்னங் கலருஞ் சடைமுடி
யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
துயிலா தழுங்கினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய் ஒளி யவ்விடத்துவிரியுஞ் சடையா னியன்ற முடியையுடையவனது அகன்ற தில்லையை யொப்பாய்; எழில் முத்தம் தொத்தி எழிலையுடைய அரும்பாகிய முத்தந்தொத்தி; அங்கு பொன் அலர் புன்னைச் சேக்கையின்வாய் அவ்விடத்துத் தாதாகிய பொன்மலரும் புன்னைக்கணுண்டாகிய தஞ்சேக்கை யிடத்து; அன்னம் முற்றும் புலம்புற்றுப் புலரும் அளவும் துயிலாது அழுங்கின அன்னமெல்லாம் துன்புற்றுப் புலருமளவுந் துயிலாது ஆரவாரித்தன; அங்கு எய்தியது அலமரல் என் - அவ்விடத் தெய்திய தாகிய அலமரலென்னாம்? அறிகின்றிலேன் எ-று.
மின்னங் கலரு மென்பதற்கு மின்னவ்விடத் தலர்ந்தாற் போலுஞ் சடையெனினு மமையும். என்னங்கலமரலெய்தியதோ வென்பதற்கு என்ன வலமர லாண்டெய்திற்றோ வென்று கூட்டியுரைப்பினுமமையும். இப் பொருட்கு என்னவென்பது கடைக்குறைந்து நின்றது. முத்தந் தொத்துதலும் பொன்மலர்தலுமாகிய உறுப்பின்றொழில் முதன் மேலேறி நின்றன. சேக்கையின் வாயழுங்கினவெனவியையும். நெடும்பொழுது துயின்றில வென்பாள் புலருமளவுமென்றாள். பிற்றைஞான்று பகற்குறிவந்து நிற்பக் கூறினாளெனினுமமையும். அழுங்கல் - இரக்க மெனினு மமையும். அறைப்புனல் - அறைதலை யுடைய புனல். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அல்லகுறிப்பட்டமை தலைமகற் குணர்த்துதல். இனித் திணைநெய்தல்.172

குறிப்புரை :

14.25 அல்லகுறியறிவித்தல்
அல்லகுறி யறிவித்தல் என்பது குறியல்லாதகுறி யெதிர்ப் பட்டு மீண்டமை, பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறம் வந்து நிற்ப, தோழி தலைமகளுக்குக் கூறுவாள்போன்று, அன்னத்தின் மேல்வைத்து அறிவியாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.25. வல்லி யன்னவ ளல்ல குறிப்பாடு
அறைப்புனற் றுறைவற்குச் சிறைப்புறத் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 26

சோத்துன் னடியமென் றோரைக்
குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன்தில்லை
யன்னா ளிவள்துவள
ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
மதியும் இழந்தவம்நீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி

நோக்காய் பெருங்கடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பெருங்கடலே - பெருங்கடலே; ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து முற்காலத்து மிவ்வா றொலித்து உன்னமிர்தத்தையுந் திருவையுந் திங்களையுமிழந்து வைத்தும்; நீ பேர்த்தும் அவம் இவள் துவள இரைப்பு ஒழியாய் பெயர்த்து மொருபயனின்றியே இவள்வாட இரையாநின்றாய்; பழி நோக்காய் காரணமின்றிப் பிறரை வருத்துதலான் வரும்பழியையு நோக்குகின்றிலை; நினக்கிதுநன்றோ? எ-று.
சோத்து உன் அடியம் என்றோரை சோத்தம் உன்னடியமென் றொருகாற் சொன்னாரை; தொல் வானவர் குழுமிச் சூழ்ந்து ஏத்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் பழையராகிய வானவர் குழுமிப் பரிவார மாய்ச் சூழ்ந்துநின் றேத்தும் வண்ணம் நிற்கு மவனது தில்லை யன்னாளாகிய இவளெனக் கூட்டுக.
சோத்தம் இழிந்தார் செய்யு மஞ்சலி; அது சோத்தெனக் கடைக்குறைந்து நின்றது. சோத்த மடிய மென்பதூஉம், அடியமெனிற் குழுமித் தொல்லை வானவ ரென்பதூஉம், குழீஇத்தொல்லை வானவர்சூழ்ந் தேத்தும் படிவைப்பவ னென்பதூஉம் பாடம். திருவு மதியு மென்பது செல்வமு மறிவுமென வேறு மொருபொருடோன்ற நின்ற தென்பாருமுளர். இரா குறுகி நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை. 173

குறிப்புரை :

14.26 கடலிடை வைத்துத் துயரறிவித்தல் கடலிடை வைத்துத் துயரறிவித்தல் என்பது தலைமகளி ரவுறுதுயரம், தலைமகன் சிறைப்புறமாக, இவள்வாட நீ யிரையாநின்றாய்; இது நினக்கு நன்றோவெனத் தோழி கடலொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.26. எறிகடல் மேல்வைத் திரவரு துயரம்
அறைக ழலவற் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 27

மாதுற்ற மேனி வரையுற்ற
வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
வோநன்மை செப்புமினே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் மாதுபொருந்திய மேனியையுடைய வரையாகிய மிக்கவில்லை யுடையவனது தில்லைநகரைச் சூழ்ந்த; போது உற்ற பூம் பொழில்காள் போதுபொருந்திய மலரினையுடைய பொழில்காள்; கழிகாள் - அப்பொழிலைச் சூழ்ந்த கழிகாள்; எழிற் புள்ளினங்காள் அக்கழிகளிற்பயிலு மெழிலையுடைய புள்ளினங்காள்; ஏது உற்று அழிதி என்னீர் என்னை நீங்கள் யாதனை யுற்றழிகின்றா யென்று ஒருகாற் கூறுகின்றிலீர்; ஈர்ந்துறைவர்க்கு இவள் தீது உற்றது என்னுக்கு என்னீர் குளிர்ந்த துறைவர்க்கு இவள் தீதுற்ற தெற்றிற்கென்று கூறுகின்றிலீர்; இதுவோ நன்மை இதுவோ நம்மாட்டு நுங்கா தன்மை; செப்புமின் சொல்லுமின் எ-று.
மாதுற்ற மேனியென்பது ஆகுபெயராய் மேனியை யுடையான்மே னின்றதெனினுமமையும். வரையுற்றவில்லியென்ப தற்கு வரைத் தன்மையைப் பொருந்திய வில்லையுடையா னெனினுமமையும். வரைத்தன்மையைப் பொருந்துதல் வரையா யிருத்தல். போது - பேரரும்பு. மன்னு மென்பதூஉம் இவளோ வென்னு மோகாரமும் அசைநிலை. மன்னுந்தீதுற்றதெனக் கூட்டிமிகுதிக்கண் வந்ததென்பாரு முளர். இதுவோ நன்மையென் பதற்குத் தில்லையைச் சூழ்ந்தவிடத் துள்ளீராகலின் உமக்குண்டாகிய சிறப்புடைமை யிதுவோ வெனினு மமையும். அழுதியென்பதூஉம் பாடம். ஏழையது கிளவியென வியையும்.174

குறிப்புரை :

14.27 காமமிக்க கழிபடர்கிளவி
காமமிக்க கழிபடர் கிளவி என்பது தலைமகனைக் காண லுற்று வருந்தாநின்ற தலைமகள், தனது வேட்கைமிகவாற் கேளாதன வற்றைக் கேட்பனவாக விளித்து, நீங்கள் என்னை ஏதுற்றழிகின்றா யென்று ஒருகால் வினவுகின்றிலீர்; இதுவோ நுங்காதன்மை யென அவற்றொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.27. தாம மிக்க தாழ்குழ லேழை
காம மிக்க கழிபடர் கிளவி.

பண் :

பாடல் எண் : 28

இன்னற வார்பொழிற் றில்லை
நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்குமில் லோருந்
துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
ஞாளி குரைதருமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இன் நறவு ஆர் பொழில் தில்லைநகர் இறை சீர் விழவில் இனிய நறவார்ந்த பொழிலையுடைய தில்லைநகர்க் கிறைவனாகியவனது சீரையுடைய விழவின்கண்; பல் நிறமாலைத் தொகை பகலாம் மாணிக்க முதலாயினவற்றாற் பல நிறத்தை யுடையவாகிய மாலைகளின்றொகைகளான் இராப்பொழுதும் பகலாகாநிற்கும்; பல் விளக்கு இருளின் துன் அற உய்க்கும் அதுவேயுமன்றிப் பலவாகிய விளக்கு இருளின் பொருந்துதலறத் துரக்கும்; இல்லோரும் துயிலின் இவ்விடையீடேயன்றி ஒருபொழுதும் துயிலாத இல்லோரு மொருகாற்றுயில்வராயின்; துறைவர் கொன்மிக்க நிற வேலொடு வந்திடின் துறைவர் அச்சத்தைச் செய்யு மிக்க நிறத்தையுடைய வேலோடொருகால் வருவராயின்; ஞாளி குரை தரும் அப்பொழுது நாய் குரையாநிற்கும்; அதனால், அவரை நாமெதிர்ப்படுத லரிதுபோலும் எ-று.
மாலைத்தொகையும் இராப் பகலாகாநிற்கும் பல்விளக்கும் இருளைத் துரக்குமென்றுரைப்பினுமமையும். இல்லோருந் துயிலி னென்றதனான், அதுவுமோ ரிடையீடு கூறப்பட்டதாம். மிக்கவே லென்றியைப்பினு மமையும். மெய்யுறுகாவல் பிழையாத மிக்க காவல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. இவற்றைத் தலைமகன் கேட்பின் வரைவானாம்; தோழி கேட்பின் வரைவுகடாவு வாளாம்; யாருங் கேட்பாரில்லையாயின் அயர் வுயிர்த்துத் தானே ஆற்றுதல் பயன். 175

குறிப்புரை :

14.28 காப்புச் சிறைமிக்க கையறுகிளவி
காப்புச் சிறைமிக்க கையறுகிளவி என்பது காமமிக் கெதிர்ப்பட விரும்பாநின்ற தலைமகள், இவ்விடையீடெல்லா நீந்தி ஒருவழியான் வந்தாராயினும் இஞ்ஞாளி குரைதரா நின்றமையின் யாமிவரை யெதிர்ப்படுதலரிதெனக் காப்புச்சிறை மிக்கு வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்
14.28. மெய்யுறு காவலிற்
கையறு கிளவி.

பண் :

பாடல் எண் : 29

தாருறு கொன்றையன் தில்லைச்
சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில
நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும்
அஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற்
பாற்றன்று தூங்கிருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தார் உறு கொன்றையன் தாராகிய மிக்க கொன்றையை யுடையவன்; தில்லைச் சடைமுடியோன் தில்லைக் கணுளனாகிய சடையானியன்ற முடியையுடையவன்; கயிலை நீர் உறுகான் யாறு அளவில நீந்தி வந்தால் அவனது கயிலையின் நீரான் மிக்க கான்யாறுக ளெண்ணிறந்தனவற்றை நீந்தி வந்தால்; வயப்பொங்கு உரும் நினது போர் உறு வேல் அஞ்சுக அவ்விடத்து வலியையுடைய பொங்குமிடியேறு நினது போர்மிக்க வேலையஞ்சி நின்பால் வாராதொழிக; மஞ்சு இவரும் சூர் உறு சோலையின் வாய் தூங்கு இருள் வரற்பாற்று அன்று ஆயினும் மஞ்சுபரக்குந் தெய்வம்பொருந்துஞ் சோலையிடத்துச் செறிந்த விருட்கண் வரும்பான்மைத்தன்று; அத்தெய்வங்களை யாமஞ்சுதும் எ-று.
தாருறை கொன்றைய னென்பது பாடமாயின், தார்தங்கு கொன் றையனென முதலாகிய தன்பொருட்கேற்ற வடையடுத்து நின்றதாக வுரைக்க. இப்பாடத்திற்கு ஏனைமூன்றடியும் உறையென் றோதுப. வரற்பாற்றன்றென்பது வினைமேனின்றது. நவ்விநோக்கியது கிளவி யென வியையும். மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல். 176

குறிப்புரை :

14.29 ஆறுபார்த்துற்ற வச்சக் கிளவி
ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி என்பது சிறைப்புறமாகத் தலைமகள் ஆற்றாமை கூறக்கேட்ட தலைமகன், குறியிடைச் சென்று நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, நீ கான்யாறுபலவு நீந்திக் கைவேல் துணையாக அஞ்சாது வந்தால், யாங்களிச் சோலையிடத் துண்டாகிய தெய்வத்துக்கஞ்சுவேம்; அதனாலிவ் விருளிடை வரற்பாலையல்லை யெனத் தங்களச்சங்கூறி வரவுவிலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
14.29. நாறு வார்குழ னவ்வி நோக்கி
ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.

பண் :

பாடல் எண் : 30

விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
யேற்கொரு வாசகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளங்கும் மண்டலமே கங்குல் முழுது மாகாயத்திடத்தை விளக்கு மண்டலமே; விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை விண்ணிடத்துள்ளா ராகிய வெல்லார்க்கும் வேந்தராயுள்ளாரது வளவிய தில்லை வரைப்பின்; மெல்லங் கழி சூழ் கண்டலே கரியா மெல்லிய கழிசூழ்ந்த கண்டலே சான்றாக; கன்னிப் புன்னைக் கலந்த கள்வர் இளையபுன்னைக்கண் என்னைக் கலந்த கள்வர்; வரக் கண்டிலையே ஒரு கால்வரக் கண்டிலையோ; தமியேற்கு ஒரு வாசகம் பணியாய் துணையில்லாதேற் கொருசொல் லருளாய் எ-று.
மெல்லங்கழி யென்பதூஉமொரு பண்புத்தொகை முடிபு. மென்மை நிலத்தின் மென்மை. கழிசூழ்புன்னையெனக் கூட்டுக. கண்டலையென்னு மைகாரம் அசைநிலை. கரியாகக்கொண்டென வொரு சொல் வருவித்து இரண்டாவதாக வுரைப்பினுமமையும். எஞ்ஞான்று மனத்ததொன்றாகத் தாமொன்று மொழிந்தாரென்னுங் கருத்தாற் கள்வரென்றாள். கள்வர்க்கண்டிலையே யென்பது பாட மாயின் உருபுவிரிக்க. கங்குலெல்லாங் கண்டிலையேயென்று கூட்டி யுரைப்பினுமமையும். கண்டே கூறுகின்றிலை யென்னுமுணர்வின ளாகலின், எய்திடுகிளவியாயிற்று. அந்நுண்மருங்குல் கிளவியென் றியையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அயர்வுயிர்த்தல். 177

குறிப்புரை :

14.30 தன்னுட்கையா றெய்திடுகிளவி
தன்னுட்கையா றெய்திடுகிளவி என்பது தலைமகனைக் காணலுற்று வருந்தாநின்ற தலைமகள், இக்கண்டல் சான்றாகக் கொண்டு இப்புன்னையிடத்துக் கலந்த கள்வரை இவ்விடத்து வரக்கண் டிலையோ? துணையில்லாதேற்கு ஒருசொல்லருளா யென்று, தன்னுட் கையாற்றை மதியொடுகூறி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.30. மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
தன்னுட் கையா றெய்திடு கிளவி.

பண் :

பாடல் எண் : 31

பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ
னெனநீ புகுந்துநின்றால்
மற்றுன்று மாமல ரிட்டுன்னை
வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
ளோமங்கை வாழ்வகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பற்று ஒன்று இலார் பற்றும் துறக்கப்படுவன வற்றின்மேற் பற்றொன்றுமில்லாதவர்கள் அறிந்து பற்றும்; தில்லைப் பரன் பரங்குன்றில் நின்ற தில்லைக்கணுளனாகிய பரனது பரங் குன்றின்கணின்ற புற்று ஒன்று அரவன் புதல்வன் என அப்புற் றொன்றரவனுடைய புதல்வனாகிய முருகவேளைப்போல; நீ புகுந்து நின்றால் நீ இல்வரைப்பிற் புகுந்து நின்றால்; மல் துன்று மாமலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி கண்டவர்கள் இந்நிலத்திற் குரியனாகிய முருகனென்றுகருதி வளத்தையுடைய நெருங்கிய பெரிய மலர்களை யிட்டு வாழ்த்தி நின்னை வணங்காதே; மற்று ஒன்று சிந்திப்பரேல் பிறிதொன்றை நினைவராயின்; மங்கை வாழ் வகை வல்லளோ மங்கை யுயிர்வாழும் வகை வல்லளோ? அதனாலிவ்வா றொழுகற்பாலையல்லை எ-று.
பரங்குன்றினின்ற புதல்வனென வியையும். மல்லல் கடைக் குறைந்து நின்றது. மற்றொன்று சிந்தித்தல் இவள் காரணமாக வந்தா னென்று கருதுதல். முருகனென்றலே பெரும் பான்மையாகலின், உண்மையுணர்தலை மற்றொன்றென்றாள். ஏதஞ் செய்யக் கருதுத லென்பாருமுளர். மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல். 178

குறிப்புரை :

14.31 நிலைகண்டுரைத்தல்
நிலைகண்டுரைத்தல் என்பது தலைமகள் தன்னுட் கையாற்றை மதியொடு கூறி வருந்தாநின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன், ஆற்றாமையான் இல்வரைப்பின்கட் புகுந்து நிற்ப, தோழியெதிர்ப்பட்டு, நீயிவ்வா றில்வரைப்பின்கட் புகுந்துநின்றாற் கண்டவர் நின்னைப் பெரும்பான்மை நினையாது மற்றொன்று நினைப்பராயின் அவளுயிர்வாழ வல்லளோ? இனியிவ்வா றொழுகற்பாலை யல்லையென வரைவு தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
14.31. நின்னி னழிந்தனள் மின்னிடை மாதென
வரைவுதோன்ற வுரைசெய்தது.

பண் :

பாடல் எண் : 32

பூங்கணை வேளைப் பொடியாய்
விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
ரோசென் றகன்றவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பூங் கணை வேளை பூவாகிய கணையை யுடைய வேளை; பொடியாய் விழ விழித்தோன் புலியூர் செறிகடலே பொடியாய் விழும் வண்ணம் விழித்தவனது புலியூர் வரைப்பிற் செறிந்த கடலே; ஓங்கு அணை மேவிப் புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு நீ யோங்கி யணைந்த கரையைப் பொருந்திப் புரண்டு விழுந்தெழுந்து கூப்பிட்டு; தீங்கு அணைந்து ஓர் அல்லும் கலங்கித் தேறாய் துன்பமுற்று ஓரிரவுங்கலங்கித் தெளிகின்றிலை, அதனால், அணைந்தார் நின்னையும் சென்று அகன்றவர் ஆங்கு உளரோ அணைந்தவர் நின்னையுமகன்று சென்றார் அவ்விடத் துளரோ? உரைப்பாயாக எ-று.
பொடியாய்விழ விழித்தோனென்னுஞ் சொற்கள் ஒரு சொன்நீரவாய்ப் பொடியாக்கினானென்னும் பொருளவாய், வேளை யென்னுமிரண்டாவதற்கு முடிபாயின. புலியூர்க் கடலே கலங்கித் தேறாயென்று கூட்டினுமமையும். செறிகட லென்புழிச் செறிவு எல்லை கடவாநிலைமை. பிரிவாற் றாதார்க்கு அணைமேவுதல் பஞ்சியணை மேவுதல். அணைந்தா ரென்பதூஉம் சென்றகன்றவ ரென்பதூஉம் அடுக்காய் உளரோவென் னும் பயனிலை கொண்டன. ஆங்கு: அசை நிலையுமாம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அயர்வுயிர்த்தல். 179

குறிப்புரை :

14.32 இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல்
14.32. எறிவேற் கண்ணி யிரவரு துயரஞ்
செறிக டலிடைச் சேர்த்தி யுரைத்தது.
இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல் என்பது தலைமகனை யெதிர்ப்படமாட்டாதுவருந்தாநின்ற தலைமகள், இற்றையிர வெல்லாம் என்னைப்போல நீயுந் துன்பமுற்றுக் கலங்கித் தெளி கின்றிலை; இவ்விடத்து நின்னையுமகன்று சென்றாருளரோ வெனத் தானுறுதுயரங் கடலொடு சேர்த்திக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

பண் :

பாடல் எண் : 33

அலரா யிரந்தந்து வந்தித்து
மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத்
தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
மிக்கைய மெய்யருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மால் அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் தாமரை மலராயிரத்தைக் கொண்டு சென்றிட்டு வணங்கி; ஆயிரம் கரத்தால் அலர் ஆர் கழல் வழிபாடு செய்தாற்கு தன்னாயிரங் கையானு மலர்போலுங் கழலை வழிபடுதலைச் செய்தவற்கு; அளவில் ஒளிகள் அலராவிருக்கும் படை கொடுத்தோன் - அளவில்லாத வொளிகள் விரியாநிற்கும் ஆழியாகிய படையைக் கொடுத்தவன்; தில்லையான் தில்லைக்கண்ணான்; அருள் போன்று அவனதருள் போல; ஐய ஐயனே; மெய் அருள் நின்னுடைய மெய்யாகிய வருள்; அம்பல் கைம்மிக்கு அலராய் விளைகின்றது அம்பல்கைம் மிக்கலராய் விளையாநின்றது; இனித்தக்கது செய்வாயாக எ-று.
அலராவிருக்கு மென்பது ஓர் நிகழ்காலச் சொல். தில்லையானருள் பெற்றார் உலகியல்பினராய் நில்லாமையின், அவ்வருளுலகத்தார்க் கலராமென்பது கருத்து.
``நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப``
(தி.8 திருப்பொற்சுண்ணம் பா. 7) என்பதூஉ மக்கருத்தேபற்றி வந்தது. அம்பல் - பரவாத களவு; என்னை?`` அம்பலு மலருங் களவு`` (இறையனாரகப் பொருள் - 22) என்றாராகலின். 180

குறிப்புரை :

14.33 அலரறிவுறுத்தல் அலரறிவுறுத்தல் என்பது தலைமகளிரவுறுதுயரங் கடலொடு சேர்த்தி வருந்தாநின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன், குறியிடைச் சென்று நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, நின்னருளாய் நின்றவிது எங்களுக் கலராகாநின்றது; இனி நீயிவ்வாறொழுகா தொழியவேண்டுமென அலரறிவுறுத்தி வரவுவிலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
14.33. 9; அலைவேலண்ணன் மனமகிழருள்
பலராலறியப் பட்டதென்றது.

பண் :

பாடல் எண் : 1

புகழும் பழியும் பெருக்கிற்
பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினல்
லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை
யாம்பழி சின்மொழிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புகழும் பழியும் காரணவசத்தாற்பிறந்த புகழும் பழியும்; பெருக்கின் பெருகும் அக்காரணங்களை மிகச் செய்தொருவன் வளர்க்குமாயிற் றாம்வளரும்; நிகழ்த்தின் அக்காரணங்களை யிடையறாமற்செய்து நிகழ்த்துவனாயின்; பெருகிநின்று நிகழும் அவ்வாறு வளர்ந்து நின்று மாயாதுளவாய்ச் செல்லும்; அல்லால் நிகழா இவ்வாறல்லது அவைதாமாக நிகழா; அதனான், இது நீ நினைப்பின் இப்பெற்றியை நீ கருதுவை யாயின்; அகழும் மதிலும் அணி தில்லையோன் அடிப்போது அகழையு மதிலையுமணிந்த தில்லைக்கண்ணானுடைய அடியாகிய போதுகள்; சென்னித் திகழுமவர் செல்லல் போல் தஞ்சென்னிக்கண் விளங்கும் பெரியோரது பிறவித்துன்பம்போல; சில்மொழிக்குப் பழி இல்லை யாம் இச்சின்மொழிக்குப்பழி யிப்பொழுதே யில்லையாம்; நீ நினையாமையிற் பழியாகாநின்றது எ-று.
நிகழுநிகழா நிகழ்த்தி னல்லாலென்புழி நிரனிறையாகக் கூட்டப்பட்டது. அகழுமதிலு மலங்காரநீர்மையவென்பது போதர, அணிதில்லை யென்றார். அகழுமதிலுமழகுசெய்தவென எழுவா யாக்கியுரைப்பினுமமையும். வழிவேறுபடுதல் இவளையெய்து முபாயங் களவன்றி வரைவாய் வேறுபடுதல். மன்னும்: அசைநிலை. பழிவேறுபடுதல் - பழித்தன்மை திரிந்து கெடுதல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அச்சம். பயன்: அலரறிவுறீஇ வரைவுகடாதல். 181

குறிப்புரை :

15.1 அகன்றணைவுகூறல்
அகன்றணைவுகூறல் என்பது அலரறிவுறுத்ததோழி, இத் தன்மையை நினைந்து நீ சிலநாளாகன்றணைவையாயின் அம்பலு மலருமடங்கி இப்பொழுதே அவளுக்குப் பழியில் லையா மெனத் தலைமகனுக்கிசைய அகன்றணைவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
5.1. வழிவேறு படமன்னும்
பழிவேறு படுமென்றது.

பண் :

பாடல் எண் : 2

ஆரம் பரந்து திரைபொரு
நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
சிறந்தார்க்குஞ் செறிகடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புலியூர்ப் புனிதன் சீர் அம்பர் சுற்றி புலியூர்க்கணுளனாகிய தூயோனது புகழையுடைய அம்பரைச் சூழ்ந்து; எற்றி கரையைமோதி; சிறந்து ஆர்க்கும் செறிகடலே மிக்கொலிக்கும் வரையிகவாத கடலே; ஆரம் பரந்து திரைபொரு நீர்- முத்துப்பரந்து திரைக டம்முட்பொருங் கடனீர்; முகில் மீன் பரப்பிச் சீர் அம்பரத்தின் திகழ்ந்து முகிலையு மீனையுந் தன்கட் பரப்பிச் சீர்த்த வாகாயமேபோல விளங்கி; ஒளிதோன்றும் துறைவர் ஒளிபுலப் படுத்துந் துறையையுடையவர்; சென்றார் நம்மைவிட்டுச் சென்றவர்; போரும் பரிசு புகன்றனரோ மீண்டுவரும்பரிசு உனக்குக் கூறினரோ? உரை எ-று.
பரப்பியென்னும் வினையெச்சம் சீரம்பரமென்னும் வினைத் தொகையின் முன்மொழியோடு முடிந்தது. பரப்பி விளங்குமென ஒருசொல் வருவித்து முடிப்பினுமமையும். பரப்பி யென்பதற்கு, முன் மீன்பரப்பி (தி.8 கோவை பா.130) யென்பதற்குரைத்ததுரைக்க. திகழ்ந்தென்றதனான் ஒளிமிகுதிவிளங்கும். போதருமென்பது போருமென இடைக்குறைந்து நின்றது. ஈண்டு ஏனையுவம முண்மையின், உள்ளுறையுவமமின்மையறிக. 182

குறிப்புரை :

15.2 கடலொடுவரவுகேட்டல் கடலொடுவரவு கேட்டல் என்பது ஒருவழித்தணத்தற் காற்றாது வருந்தாநின்ற தலைமகள், நம்மைவிட்டுப்போனவர் மீண்டுவரும்பரி சுனக்குரைத்தாரோவெனக் கடலொடு தலைமகன் வரவு கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.2. மணந்தவர் ஒருவழித் தணந்ததற் கிரங்கி
மறிதிரை சேரும் எறிகடற் கியம்பியது.

பண் :

பாடல் எண் : 3

பாணிகர் வண்டினம் பாடப்பைம்
பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
யூர்சுற்றும் போர்க்கடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே பூணையொக்குமொளியையுடைய அரவை யணிந்தவனது புலியூரைச்சூழ்ந்த கரைபொருதலையுடைய கடலே; பாண் நிகர் வண்டு இனம் பாட பாணரையொக்கும் வண்டினங்கள் சென்று பாட; பைம்பொன் தரு வெண் கிழி தாதாகிய பசும் பொன்னைப்புலப்படுத்தாநின்ற போதாகிய வெண்கிழியை; தம் சேண் நிகர்காவின் வழங்கும் புன்னைத் துறைச் சேர்ப்பர் தமது சேய்மைக்கண் விளங்குங் காவினின்று அவற்றிற்குக் கொடுக்கும் புன்னைகளையுடைய துறையையணைந்த சேர்ப்பையுடையராகிய; திங்கள் வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் திங்களினொளிபோலு மொளியையுடைய என்வெள்வளையைத் தம்மொடு கொண்டுபோனவரது திறத்தை; வாய்திறவாய் எமக்குக் கூறுகின்றிலை? நீ கூறாதொழிகின்றதென்! எ-று.
கிழிதமென்று கிழிக்குப்பெயராக வுரைப்பாருமுளர். வாய் திறவா யென்பதற்குக் கூறுவாயாகவென் றுரைப்பினுமமையும். 183

குறிப்புரை :

15.3 கடலொடுபுலத்தல் கடலொடு புலத்தல் என்பது கடலொடு வரவுகேட்ட தலைமகள், அது தனக்கு வாய்திறவாமையின் என்வளை கொண்டு போனார் திறம் யான்கேட்க நீ கூறாதொழிகின்ற தென்னெனப்பின்னும் அக்கடலொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.3. செறிவளைச் சின்மொழி
எறிகடற் கியம்பியது.

பண் :

பாடல் எண் : 4

பகன்தா மரைக்கண் கெடக்கடந்
தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு
நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
லோநம் மகன்றுறையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பகன் தாமரைக் கண் கெட பகன் என்னும் பெயரையுடைய ஆதித்தனது தாமரைபோலுங் கண்கெட; கடந்தோன் புலியூர்ப் பழனத்து அகன் தாமரை அன்னமே அவனை வென்றவனது புலியூரைச்சூழ்ந்த பழனத்தின் கணுண்டாகிய அகன்ற தாமரைக்கண்வாழும் அன்னமே; வண்டு நீல மணி அணிந்து வண்டாகிய நீலமணியை யணிந்து; செம்பொன் முத்து அணி - தாதாகிய செம்பொன்னையும் அரும்பாகிய முத்தையுமணிந்த; முகன் தாழ் குழைப் புன்னை முகத்துத் தாழ்ந்த குழையையுடைய புன்னை; இன்னும் உரையாது இந்நிலைமைக்கண்ணு மொன்றுசொல்லுகின்ற தில்லை; அகன்றார் நம் அகன்துறை அகன்றே யொழிவர் கொல்லோ அகன்றவர் நமதகன்றதுறையை யகன்றே விடுவாரோ? அறியேன்; நீயுரை எ-று.
முகன்றாழ் குழையென்பது இருபொருட்படநின்றது. யானித் தன்மை யேனாகவும் மணியணிந்தின்புற்று நிற்கின்ற புன்னை எனக்கொன்று சொல்லுமோ? அன்னமே, எனக்கு நீ கூறென்பது கருத்து. ஈண்டு நம்மோடு தாம்விளையாடும் விளையாட்டை மறந்தேவிடுவாரோ வென்னுங்கருத்தான், நம்மகன்றுறையை யகன்றேயொழிவர் கொல்லோ வென்றாள். #9; 184

குறிப்புரை :

15.4 அன்னமோடாய்தல் அன்னமோடாய்தல் என்பது கடலொடுபுலந்து கூறிய தலைமகள், புன்னையொடுபுலந்து, அகன்றவர் அகன்றே யொழிவரோ? யானறிகின்றிலேன்; நீயாயினுஞ் சொல்லுவாயாக வென அன்னமோடாய்ந்து வரவுகேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.4. மின்னிடை மடந்தை
யன்னமோ டாய்ந்தது.

பண் :

பாடல் எண் : 5

உள்ளு முருகி யுரோமஞ்
சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்
தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
ஆர்க்கும் பொருகடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புள்ளும் திரையும் பொரச் சங்கம் ஆர்க்கும் பொருகடலே புள்ளுந்திரையுந் தம்முட்பொரச் சங்கொலிக்குங் கரை பொருங்கடலே; உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உள்ளுமுருகி மெய்ம்மயிர் சிலிர்ப்ப; உடையவன் ஆட்கொள்ளுமவரில் ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் உடையவனாகிய தானாட்கொள்ளு மடியாருள் எமக்கோர் கூட்டத்தைத் தந்தவன் நின்று கூத்தாடும்; புலியூர் விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி புலியூரை நீங்கும்வண்ணஞ் சென்றவரது பெரிய தேர்போன வழியை; தூரல் கண்டாய் நின்றிரைகளாற் றூராதொழியவேண்டும்; எம்முயிர்க்குப் பற்றுக்கோடினியிதுவே எ-று.
உள்ளுமென்ற வும்மையாற் புறத்துக்கண்ணீர் தழுவப்பட்டது. ஆட்கொள்ளுமவர் பெருமை தோன்ற உடையவனென அவன் பெருமை விளக்கும் பெயராண்டுக்கூறினார். விள்ளுதல் செலவான் வருங் காரியமாதலின், விள்ளும் பரிசுசென்றாரென்றாள். கண்டா யென்பது முன்னிலையசைச்சொல். குனிக்கும் புலியூர் நுகர்ச்சியை நினையாது நீங்கிய வன்கண்மையார் இனிவருவரென்னு நசையிலம்; அவர் தேர்ச்சுவடாயினும் யாங்காண நீ யதனையழியாதொழி யென்பது கருத்து. விள்ளும்பரிசு சென்றாரென்பதற்குப் புலியூரை நீங்கினாற் போல யான்றுன்புறும்வண்ண மெனினுமமையும். விள்ளுதல் வாய்திறத்தலென்று, அலர்கூறி நகும்வண்ணஞ் சென்றவ ரெனினுமமையும். பொரச்சங்கமார்க்கு மென்புழிப் பொருஞ்சங் கொலியுமென வொருபொருடோன்றியவாறு கண்டு கொள்க. கூட்டந் தந்தாரென்று பாடமோதி ஆட்கொள்ளு மவரைப்போலின்புற எமக் கோர் புணர்ச்சியைத் தந்தாரெனத் தலைமகன் மேலேறவுரைப் பாருமுளர். அலங்காரம்: அல்பொருட்டற் குறிப்பேற்றம். #9; 185

குறிப்புரை :

15.5 தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் தேர்வழிநோக்கிக் கடலொடுகூறல் என்பது அன்னமொடு வரவுகேட்ட தலைமகள், அதுவும் வாய்திறவாமையின், இனியவர் வருகின்றாரல்லர்; எம்முயிர்க்குப் பற்றுக்கோடினி யிதுவே; இதனை நீ யழியாதொழிவாயென அவன்சென்ற தேர்வழி நோக்கிக் கடலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.5. மீன்றோய் துறைவர் மீளு மளவு
மான்றேர் வழியை யழியே லென்றது.

பண் :

பாடல் எண் : 6

ஆழி திருத்தும் புலியூ
ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின்
நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக்
கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி
யோவுள்ளம் வள்ளலையே

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து ஆழிசூழ்ந்த மண்முழுதையுந் திருத்தும் புலியூரை யுடைய வன தருள்போல இன்புறவளித்து; ஆழி திருத்தும் மணற் குன்றின் நீத்து அகன்றார் வருகென்று கடல்வந்து திருத்துமணற் குன்றின்கண் என்னை நீத்தகன்றவர் வரவேண்டுமென்று; ஆழி திருத்திச் சுழிக் கணக்கு ஓதி நையாமல் கூடலையிழைத்துச் சுழிக் கணக்கைச் சொல்லி யான்வருந்தாமல்; ஐய ஐயனே; வாழி வாழ் வாயாக; உள்ளம் திருத்தி வள்ளலைத் தரக்கிற்றியோ அவ னுள்ளத்தை நெகிழ்த்து வள்ளலையீண்டுத்தரவல்லை யாயின் யானிரக்கின்றேன் எ-று.
முதற்கணாழி: ஆகுபெயர். ஆழிதிருத்தும் புலியூரென்ப தற்குப் பிறவுமுரைப்ப. திரைவந்து பெயரும் பெருமணலடைகரையைப் பின்னினையாத கொடியோர் இனிவருதல் யாண்டைய தென்னுங் கருத்தான், ஆழிதிருத்து மணற்குன்றி னீத்தகன்றாரென்றாள். ஐயவென்றது கூடற்றெய்வத்தை. நீடலந்துறை யென்பதற்குக் கமழலந்துறைக் குரைத்தது (தி.8 கோவை பா.88) உரைக்க. 186

குறிப்புரை :

15.6 கூடலிழைத்தல் கூடலிழைத்தல் என்பது தேர்வழிநோக்கிக் கடலொடு கூறா நின்ற தலைமகள், இம்மணற்குன்றின்கண் நீத்தகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தர வல்லையோ வெனக் கூடற் றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
. 15.6. நீடலந் துறையிற்
கூடல் இழைத்தது.

பண் :

பாடல் எண் : 7

கார்த்தரங் கந்திரை தோணி
சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந்
துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
மாறென்கொ லாழ்சுடரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார்த் தரங்கம் கரியதிரையும்; திரை தோணி திரையாநின்றதோணியும்; சுறா சுறாவும்; மீன் எறிவோர் மீனெறி வோரும்; கடல் கடலும்; போர்த் தரு அங்கம் போரைத்தரு மங்கங்களையும்; துறை அக்களத்தையும்; மானும் துறைவர் போக்கும் - ஒக்குந் துறையையுடையவரது பிரிவும்; மிக்க தீர்த்தர் அங்கன் தில்லை் பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும் சிறந்த தூயோராகிய அரியயர்களுடைய வென்பையணிந்தவனது தில்லைவரைப்பினுண்டாகிய பல்பூம் பொழிற்கண் நின்னிற் பிரியே னென்று சொல்லும் வஞ்சினமும்; ஆர்த்தர் அங்கம் செய்யும் என் மேனியை நோயுற்றார் மேனியாகச் செய்யாநின்றன; ஆழ் சுடரே வீழாநின்ற சுடரே; உய்யுமாறு என் கொல் யானுய்யு நெறியென் னோ? கூறுவாயாக எ-று.
குதிரைத்திரள் தரங்கத்திற்கும், தேர் தோணிக்கும், யானை சுறாவிற்கும், காலாள் மீனெறிவோர்க்கும், போர்க்களங் கடற்கும் உவமையாகவுரைக்க. தரங்க முதலாயின வற்றாற் போரைத் தருமங்கத்தையுடைய களத்தை யொக்குந் துறை யென மூன்றாவது விரித்துரைப்பாருமுளர். இதற்கு அங்கத்துறை யென்றது மெலிந்து நின்றது. போரைத் தருமங்க மென்பதனைத் தொகுக்கும் வழித்தொகுத்தார். துறைவர்போக்கும் தில்லைவரைப்பிற் குளுறவும் என்னா மென்னு மச்சத்தளாய், ஆர்த்தரங்கஞ் செய்யுமென்றாள். 187

குறிப்புரை :

15.7 சுடரொடுபுலம்பல் சுடரொடு புலம்பல் என்பது கூடலிழைத்து வருந்தாநின்ற தலைமகள், துறைவர்போக்கும் அவர் சூளுறவும் என்னை வருத்தா நின்றன: அதன்மேல் நீயுமேகாநின்றாய்; யானினியுய்யுமா றென்னோ வெனச் செல்லாநின்ற சுடரொடு புலம்பாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.7. குணகட லெழுசுடர் குடகடற் குளிப்ப
மணமலி குழலி மனம்புலம் பியது.

பண் :

பாடல் எண் : 8

பகலோன் கரந்தனன் காப்பவர்
சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற்
சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
மீனுண்ட அன்னங்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பகலோன் கரந்தனன் கதிரவன் மறைந்தான்; காப்பவர் சேயர் இம்மாலைக்காலத்துவருந் துன்பத்தைக் காக்குமவர் சேயராயிருந்தார்; அகல் ஓங்கு இருங் கழிவாய் கொழுமீன் உண்ட அன்னங்கள் சேக்கைகள் நோக்கின அதுவேயுமன்றி இவ்வகலோங் கிருங்கழியிடத்துக் கொழுமீனை யுண்ட வன்னங்கடாமும் இவ்விடத்தைவிட்டுத் தஞ்சேக்கைகளை நோக்கின; இனியென் செய்வேன்! எ-று.
பற்று அற்றவர்க்குப் புகலோன் புலன்களிற் பற்றற்றவர்க்குப் புகலிடமாயுள்ளான்; புகுநர்க்குப் போக்கு அரியோன் தன்கட் புகுவார்க்குப் பின் போதரவரியவன்; எவரும் புகலத் தகலோன் எல்லாருமேத்தத் தகுதலையுடையவன்; பயில் தில்லைப் பைம் பொழிற் சேக்கைகள் அவன் பயிலுந் தில்லை வரைப்பிற் பைம் பொழில்களி னுளவாகிய சேக்கைகளெனக் கூட்டுக.
ஓங்குதல் ஓதமேறி நீருயர்தல். கொழுமீன் என்பது ஓர் சாதி. 188

குறிப்புரை :

15.8 பொழுதுகண்டுமயங்கல் பொழுதுகண்டு மயங்கல் என்பது சுடரொடு புலம்பா நின்றவள், கதிரவன் மறைந்தான்; காப்பவர் சேயர்; அதன்மேலிவ் விடத்து மீனுண்ட வன்னங்களும் போய்த் தஞ்சேக்கைகளை யடைந்தன; இனி யானாற்றுமாறென்னோவென மாலைப் பொழுது கண்டு மயங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
15.8. மயல்தரு மாலை வருவது கண்டு
கயல்தரு கண்ணி கவலை யுற்றது.

பண் :

பாடல் எண் : 9

பொன்னும் மணியும் பவளமும்
போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர்
விரவா தவரினுள்நோய்
இன்னு மறிகில வாலென்னை
பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
தேரும்வண் டானங்களே. 9;

பொழிப்புரை :

இதன் பொருள்:
இருங் கழிவாய் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்கள் என்னாற்றமைக்குப் பரிகாரமாவதி யாதுஞ் சிந்தியாது இருங்கழியிடத்துப் பகலேபுகுந்து விரும்பித் தமக்குணவு தேடும் வண்டானங்களாகிய குருகுகள்; உள் நோய் இன்னும் அறிகில என்னுண்ணோயை யிந்நிலைமைக்கண்ணு மறிகின்றன வில்லை; என்னை பாவம் இஃதென்னை பாவம்! எ-று.
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்து இலங்கி மின்னும் பொன்போலப் பொலிந்து மாணிக்கம்போல விட்டு விளங்கிப் பவளம்போலமின்னும்; சடையோன் புலியூர் விரவாதவரின் (உறும்) உள்நோய் சடையையுடையவனது புலியூரைக் கலவாதாரைப்போல யானுறுமுண்ணோ யெனக்கூட்டுக.
உறுமென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது. முன்னறிந் தனவில்லையாயினும் இனியறியவேண்டுமென்பது கருத்து. புலியூரை விரவாதார் கண்ணோட்டமிலராகலிற் புலியூரை விரவாத வரினின்னுமறிகில வென்றியைத் துரைப்பினு மமையும். நிரனிறை யாகக் கொள்ளாது எல்லாமெல்லாவற்றின்மேலு மேறவுரைப்பினு மமையும். மன்னும்: அசைநிலை. #9; #9; 189

குறிப்புரை :

15.9 பறவையொடு வருந்தல் பறவையொடு வருந்தல் என்பது பொழுதுகண்டு மயங்கா நின்ற தலைமகள், இந்நிலைமைக்கண்ணும் என்னுண்ணோயறி யாது கண்ணோட்டமின்றித் தம் வயிறோம்பாநின்றன; இஃதென்னை பாவமென வண்டானப் பறவையொடு வருந்திக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.9. செறிபிணி கைம்மிகச் சிற்றிடைப் பேதை
பறவைமேல் வைத்துப் பையுளெய் தியது.

பண் :

பாடல் எண் : 10

கருங்கழி காதற்பைங் கானலில்
தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில்
செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென்
றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
கூப்பும் மலர்க்கைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தில்லை எம் கண்டர் தில்லைக்கணுள ராகிய எம்முடைய கண்டர்; விண்டார் ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற- பகைவரொருங்கேயழியு மச்சத்தையுடைய மூவெயிலைச் செற்ற; ஒற்றைச் சிலை சூழ்ந்து தனிவில்லைச் சூழ்ந்து; அருங்கழி காதம் அகலும் என்றூழ் என்று அரியவாகிய மிக்ககாதங்களைப் போகாநின்றது என்றூழ் இனி யிவளெங்ஙனமாற்றுமென்று வருந்தி; கருங்கழி காதல் பைங்கானலின் அலந்து கண்ணீர் வரும் கருங்கழியின்கண்ணுங் காதலையுடைய பைங்கானலின் கண்ணுமுள வாகித் துன்புற்றுக் கண்ணீர்வாராநின்ற; கழிகாதல் வனசங்கள் கழிகாதலையுடைய தாமரைகள்; மலர்க்கைகள் கூப்பும் விரைந்துவர வேண்டுமென்று அஞ்ஞாயிற்றை நோக்கித் தம் மலராகிய கைகளைக் கூப்பியிரவாநின்றன; இவையென்மாட் டன்புடையன போலும் எ-று.
கானலின் வனசங்களெனவும், தில்லையெங்கண்டர் செற்றவெனவுங் கூட்டுக. கானலிற் கைகூப்புமென வியைப்பினு மமையும். கானற்பொய்கையின் வனசம் கானலின் வனசமெனப் பட்டன. அலந்து கண்ணீர்வருமென்பது இருபொருட்டாகலின், மலர்ந்து கள்ளாகிய நீர் வருமென்றுரைக்க. இப்பொருட்கு அலர்ந் தென்பதிடைக்குறைந்து நின்றதாகக் கொள்க. கதிரோன்றம்மைப் பிரிய வாற்றாது கடிது வரவேண்டுமென வனசங்கள் கைகூப்பா நின்றன வென்று அவற்றிற்கிரங்கினாளாக வுரைப்பினுமமையும். அலர்ந்த வென்பது பாடமாயின், அலர்ந்த வனசமென வியையும். 9; 190

குறிப்புரை :

15.10 பங்கயத்தோடுபரிவுற்றுரைத்தல் பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல் என்பது பறவையொடு வருந்தாநின்றவள், இவையென்வருத்தங்கண் இவள் வருந்தாமல் விரைய வரவேண்டுமென்று ஞாயிற்றை நோக்கித் தங்கை குவியாநின்றன; ஆதலால் என்மாட் டன்புடையன போலுமெனப் பங்கயத்தோடு பரிவுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.10. முருகவிழ் கான
லொடுபரி வுற்றது.

பண் :

பாடல் எண் : 11

மூவல் தழீஇய அருண்முத
லோன் தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந்
துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
தளிய களியன்னமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மூவல் தழீஇய அருள் முதலோன் மூவலைப் பொருந்திய அருளையுடைய முதல்வன்; தில்லைச் செல்வன் தில்லைக்க ணுளனாகிய செல்வன்; முந்நீர் நாவல் தழீஇய இந்நானிலம் துஞ்சும் அவனுடைய கடலாற்சூழப்பட்ட நாவலைப் பொருந்திய இந்நானிலமுழுதுந் துஞ்சாநின்றது; யான் துயிலாச் செயிர் எம்காவல் தழீஇயவர்க்கு ஓதாது இப்பொழுதினும் யான் றுயிலாமைக்குக் காரணமாகிய வருத்தத்தை எமது காவலைப் பொருந்தினவருக் குரையாதே; அளிய களி அன்னம் அளித்தாகிய களியன்னம்; சென்று இவ்விடத்து நின்றும்போய்; நயந்த இன்பச்சேவல் தழீஇத் தான் துஞ்சும் தானயந்த வின்பத்தைச் செய்யுஞ் சேவலைத்தழுவி ஒருகவற்சியின்றித் தான்றுயிலாநின்றது; இனியிது கூறுவார் யாவர்? எ-று.
மூவலென்பது ஒரு திருப்பதி. பாலைக்கு நிலமின்மையின், நானிலம் எனப்பட்டது. நயந்த சேவலைப்பொருந்திய களிப்பால் அன்னஞ் சென்றுரையாமை யல்லது அவரெம்மைக்காவாது விடா ரென்னுங் கருத்தான், எங்காவறழீஇயவர்க்கென்றாள். ஓதாதென்ப தனை முற்றாகவுரைப்பினு மமையும். நெய்தற்றிணை கூறுவார் சோத்துன்னடியம் (பா.173) என்பது தொட்டுப் புகழும் பழியும் (பா.181) என்னுங்காறும் வரப் பாட்டொன்பதும் இரங்கனிமித்த மாகக் கூறி, ஒருவழித்தணத்தற் றுறையிடத்து ஆரம்பரந்து (பா.182) என்பது தொட்டு இதன்காறும்வர இப்பாட்டுப் பத்தும் இரங்கலே கூறுதலான், திணை: நெய்தல்; என்னை? வாட்டம் உரிப்பொரு ளாதலின். கைகோள்: கற்பு. மெய்ப்பாடு: அழுகை. பயன்: அயர் வுயிர்த்தல். #9; #9; #9; #9; #9; #9; 191

குறிப்புரை :

15.11 அன்னமோடழிதல் அன்னமோடழிதல் என்பது பங்கயத்தை நோக்கிப் பரிவுறாநின்றவள், உலகமெல்லாந் துயிலாநின்ற விந்நிலைமைக் கண்ணும் யான்றுயிலாமைக்குக் காரணமாகிய என்வருத்தத்தைச் சென்று அவர்க்குச் சொல்லாது தான்றன் சேவலைப்பொருந்திக் கவற்சியின்றித் துயிலாநின்றதென அன்னத்தோடழிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.11. இன்னகையவ ளிரவருதுயரம்
அன்னத்தோ டழிந்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 12

நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எல் ஆர் மதியே ஒளியார்ந்த மதியே; தில்லைத் தொல்லோன் அருள்கள் இல்லாரின் சென்றார் சென்ற செல்லல் கண்டாய் தில்லைக்கணுளனாகிய தொல்லோனது அருளுடையா ரல்லாதாரைப்போலக் கண்ணோட்டமின்றிப் போனவர் போதலா லுண்டாகிய இன்னாமையை நீயேகண்டாய் யான் சொல்ல வேண்டுவதில்லை; வளை நில்லா வளைகணிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சம் நெக்கு உருகும் நெஞ்சு நெகிழ்ந்துருகாநின்றது; நெடுங்கண் துயிலக்கல்லா கதிர் முத்தம் காற்றும் நெடுங்கண் கடுயிலாவாய்க் கண்ணீர்த்துளியாகிய கதிர் முத்தங்களை விடாநின்றன; எனக் கட்டுரைக்க என்று அவர்க்குச் சொல்வாயாக; நின்னை யான் இன்று இரக்கின்றது இது நின்னை யானின்றிரக் கின்றதிது எ-று.
துயிலக்கல்லாவென்பது ஒருசொல். முத்தங்காலு மென்பதூஉம் பாடம். எல்லாமதியே யென்பது பாடமாயிற் செல்லலெல்லாமென்று கூட்டியுரைக்க. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவுகடாதல்.192

குறிப்புரை :

15.12 வரவுணர்ந்துரைத்தல் வரவுணர்ந் துரைத்தல் என்பது தலைமகளன்னத் தோடழிந்து வருந்தாநிற்ப, தலைமக னொருவழித்தணந்து வந்தமை சிறைப் புறமாகவுணர்ந்த தோழி, வளைகள் நிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சம் நெகிழ்ந்துருகாநின்றது; கண்கள் துயிலின்றிக் கலுழாநின்றன; இவை யெல்லாம் யான் சொல்ல வேண்டுவதில்லை; நீயேகண்டாய்; இதனைச்சென்று அவர்க்குச் சொல்லுவாயென மதியொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.12. சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 13

வளருங் கறியறி யாமந்தி
தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம்
பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும்
மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வளரும் கறி அறியா மந்தி தின்று வளராநின்ற மிளகு கொடியைத் தமக்கேற்றவுணவென்றறியாத இளையமந்தி தின்று; மம்மர்க்கு இடமாய்த் தளரும் தடவரைத் தண்சிலம்பா வருத்தத்திற்கிடமாய் நிலைதளரும் பெரியவரைகளை யுடைய தண்சிலம்பையுடையாய்; வெண் மா மதி நின்று ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள் நுதல் வெள்ளிய பெரிய மதி நின்று விளங்குஞ் சடையானியன்ற முடியையுடையவனது புலியூரையொக்குமொண்ணுதல்; தனது அங்கம் எங்கும் விளரும் தன் மேனிமுழுதும் பசக்கும்; விழும் அமளிக்கண் விழாநிற்கும்; எழும் எழாநிற்கும்; விம்மும் பொருமா நிற்கும்; மெலியும் நின்வன்கண்மையை நினைந்து மெலியாநிற்கும்; அதனாலின்ன நிலைமையளென்றென்னாற் சொல்லப்படாது எ-று.
வளருமிளங்கறி கண்ணிற்கினிதாயிருத்தலின் இது நமக்குத் துய்க்கப்படாதென்றுணராத இளமந்தி அதனைத்தின்று வருந்துமாறு போலக் கண்ணுமனமுமகிழு முருவினையாகிய நின்னை நின்பெருமையுணராதெதிர்ப்பட்டு வருந்தாநின்றாளென உள்ளுறை காண்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
இவ்வாறு ஒருவழித்தணந்து வந்து வரைவுமாட்சிமைப் படவும் பெறும். அன்றியும் உடன்போக்கு நிகழப்படும். 193

குறிப்புரை :

15.13 வருத்தமிகுதிகூறல் வருத்தமிகுதி கூறல் என்பது சிறைப்புறமாக மதியொடு வருத்தங்கூறிச் சென்றெதிர்ப்பட்டு வலஞ்செய்துநின்று, நீ போய், அவள் படாநின்ற வருத்தம் என்னாற்சொல்லுமளவல்லவென வரைவு தோன்றத் தலைமகளது வருத்தமிகுதி தோழி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
15.13. நீங்கி யணைந்தவற்குப்
பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 1

ஒராக மிரண்டெழி லாயொளிர்
வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஒரு ஆகம் இரண்டு எழில் ஆய் ஒளிர்வோன் தில்லை ஒள் நுதல் ஒருமேனி பெண்ணழகு மாணழகுமாகிய விரண்டழகாய் விளங்குமவனது தில்லைக் கணுளளாகிய வொண்ணு தலுடைய; அங்கராகம் பயின்று பூசப் படுவன பயின்று; அமிழ்தம் பொதிந்து அமிர்தத்தைப் பொதிந்து; ஈர்ஞ் சுணங்கு ஆடகத்தின் பராகம்சிதர்ந்த பயோதரம் நெய்த்த சுணங்காகிய செம்பொன்னின் பொடியைச் சிதறின முலைகள்; இப்பரிசே பணைத்த இராகம் கண்டால் இப்படியே பெருத்த கதிர்ப்பைக்கண்டால்; வள்ளலே வள்ளலே; எமர் எண்ணுவது இல்லையே இவண் மாட்டெமர் நினைப்பதில்லையே? சிலவுளவாம் எ-று.
இராகம் வடமொழிச்சிதைவு; ஈண்டு நிறமென்னும் பொருட்டு. இராகம் முடுகுதலென்பாருமுளர். தில்லையொண்ணுத லிராகமென வியையும். மெய்ப்பாடும் பயனும் அவை. 194

குறிப்புரை :

16.1 பருவங்கூறல் பருவங்கூறல் என்பது அலரறிவுறுத்த தோழி, இவண் முலை முதிர்வு கண்டமையான் மகட்பேசுவார்க்கு எமர் மாறாது கொடுக்கவுங் கூடும்; அதுபடாமனிற்பநீ முற்பட்டு வரைவாயாக வெனத் தலைமகனுக்குத் தலைமகளது பருவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.1. உருவது கண்டவள்
அருமை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

மணியக் கணியும் அரன்நஞ்ச
மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
மேன்மே லயலவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
துறைவா துறைவா; தில்லை அன்னாள் திறத்துத் துணியக் கருதுவது இன்றே துணி தில்லையையொப் பாடிறத்து நீ துணிந்து செய்யக்கருதுவதனை இன்றே துணிந்து செய்வாயாக; அயலவர் நிறை பொன் மேன்மேல் அணியக் கருது கின்றார் பலர் அயலவர் நிறைந்த பொன்னை மேன்மேலு மணியக் கருதுகின்றார் பலர் எ-று.
மணி அக்கு அணியும் அரன் மணியாகிய அக்கையணியு மரன்; நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணை தரும் பரன்- நஞ்சையஞ்சிக் கலங்கிச்சுழன்று தேவர் சென்று பணிய அந்நஞ்சான்வருமிடர்க்கு மருந்தாகத் தன் கருணையைக் கொடுக்கும் பரன்; தில்லை அவனது தில்லையெனக் கூட்டுக.
அக்குமணி யெனினுமமையும். அலங்காரம்: ஒற்றுமைக் கொளுவுதல். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: அது. #9; 195

குறிப்புரை :

16.2 மகட்பேச்சுரைத்தல் மகட் பேச்சுரைத்தல் என்பது பருவங்கூறிய தோழி, படைத்து மொழியான் அயலவர் பலரும் மேன்மேலும் பொன்னணியக் கருதாநின்றார்; நீ விரைய வரைவொடு வருவாயாதல் அன்றியுடன்கொண்டுபோவாயாதல் இரண்டினு ளொன்று துணிந்துசெய்யக் கருதுவாய்; அதனை யின்றே செய்வாயாகவெனத் தலைமகனுக்கு அயலவர் வந்து மகட்பேசல் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.2. படைத்துமொழி கிளவியிற் பணிமொழிப் பாங்கி
அடற்கதிர் வேலோற் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
தழங்கும் மணமுரசே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கமழ் பூந் துறைவ கமழ்பூந் துறைவனே; பாப்பணியோன் தில்லைப் பல் பூ மருவு சில் ஓதியை பாம்பாகிய வணியையுடையவனது தில்லைக்கணுளளாகிய பலவாகிய பூக்கள் பொருந்திய நுண்ணிய வோதியையுடையாளை; நல் காப்பு அணிந்தார் நல்ல காப்பை யணிந்தார்கள்; இனி பொன் அணிவார் இனிப் பொன்னையணிவார்; கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று கலியாணத்துக்குப் பொருந்திய கோப்புக்களை யணிந்த வானைத்தோயுங் கொடிகளையுடைய முன்றிற்கணின்று; மணமுரசு இவை ஏர் குழுமி மாப்பணிலங்கள் முழங்கத் தழங்கும் மணமுரசங்களிவை ஏரொடு குழுமிப் பெரியசங்கங்கள் முழங்கத்தா மொலியாநின்றன; இனியடுப்பது செய்வாயாக எ-று.
தில்லைப் பல்பூவென் றியைப்பினு மமையும். காப்பென்றது காவலை. அணிவாரென்றது முற்றுச்சொல். கோப்பணி முன்றிலென வியையும். மெய்ப்பாடும் பயனும் அவை. 196

குறிப்புரை :

16.3 பொன்னணிவுரைத்தல் பொன்னணி வுரைத்தல் என்பது படைத்து மொழியான் மகட்பேசல் கூறின தோழி, அறுதியாக முன்றிற்கணின்று முரசொடு பணில முழங்கக் காப்பணிந்து பொன்னணியப் புகுதா நின்றார்; இனி நின்கருத்தென்னோவெனத் தலைமகனுக்கு அயலவர் பொன்னணி வுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.3. பலபரி சினாலும் மலர்நெடுங் கண்ணியை
நன்னுதற் பாங்கி பொன்னணிவ ரென்றது.

பண் :

பாடல் எண் : 4

எலும்பா லணியிறை யம்பலத்
தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
யென்நீ கருதுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பா சிலம்பா; எலும்பால் அணி இறை எலும்புகளானலங்கரிக்கு மிறைவன்; அம்பலத்தோன் அம்பலத்தின் கண்ணான்; எல்லை செல்குறுவோர் நலம் பாவிய முற்றும் நல்கினும் அவனதெல்லைக்கட் செல்லக் கருதுவாரது நன்மைபரந்த வுலகமுழுதையும் நீ கொடுப்பினும்; கல் வரை நாடர் எம்முடைய தமராகிய கல்வரைநாடர்; வடிக்கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார் வடுவகிர்போலுங் கண்ணையுடையாளது சிறியவிடைக்கே விலையாகச் சொல்லுத லியையார்; கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவது கலம்பரந்த முலையின் விலையாகயாதனை நீ கருதுவது? ஒன்றற்கும் அவருடம்படார் எ-று.
எலும்பாற்செய்த வணியென்று ஒருசொல் வருவித் துரைப்பாரு முளர். எல்லை சேறல் அறிவா லவனை யணுகுதல். தில்லையெல்லை யெனினுமமையும். அவர் நலம்பாவா விடமின்மையின் எஞ்சாமை முழுதுமென்பார், நலம்பாவியமுற்று மென்றார்; என்றது அவர் சீவன்முத்தராயிருத்தல். அஃதாவது சீவனுடனிருக்கும்போதே முத்தியையடைந் திருத்தல். முத்தியாவது எங்குமொக்க வியாத்தியை யடைந்திருத்தல். இஃது அகண்டபரிபூரண ரென்றபடி. அம்மகேளென்னுங் குறிப்பின்கண்வந்தது. சிற்றிடைக்கே யென்னு மேகாரம்: பிரிநிலை. இவனுயர்ந்த தலைமகனாதலால், தன்றமரைக் கல்வரைநாடரென்றும், பேதையரென்றும் கூறினாள். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளதருமையுணர்த்தல். 197

குறிப்புரை :

16.4 அருவிலையுரைத்தல் அருவிலை யுரைத்தல் என்பது பொன்னணி வுரைப்பக் கேட்ட தலைமகன் யான் வரைவொடு வருதற்கு நீ முலைப்பரிசங் கூறுவாயாகவென, எல்லாவுலகமு நல்கினும் எமர் அவளுடைய சிறிய விடைக்கு விலையாகச் செப்பலொட்டார்; இனிப் பெரிய முலைக்கு நீ விலைகூறுவ தென்னோவெனத் தோழி விலை யருமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.4. பேதைய ரறிவு பேதைமை யுடைத்தென
ஆதரத் தோழி அருவிலை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

விசும்புற்ற திங்கட் கழும்மழப்
போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய்
கிடந்தரன் தில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற்
றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
தளர்கின்ற நன்னெஞ்சமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அரன் தில்லை அன்னாள் குயம் அரனது தில்லையை யொப்பாளுடையமுலை; புற்று அரவு இடை புற்றின் கண்வாழும் பாம்புபோலுமிடை; கூர் எயிற்று ஊறல் கூரிய வெயிற்றின் கணூறியநீர்; குழல் மொழியின் நயம் பற்றி குழலோசை போலுமொழி என விவற்றின்கட்கிடந்த இன்பத்தையே கருதி; நின்று நடுங்கித் தளர்கின்ற நல் நெஞ்சமே விடாது நின்று அவளதருமை கருதாயாய் நடுங்கி வருந்தாநின்ற நல்ல நெஞ்சமே; விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழப்போன்று விசும்பைப் பொருந்திய திங்களைத் தரவேண்டி யழுங் குழவியையொத்து; அசும்பு உற்ற கண்ணோடு விம்மி விம்மி இனிக் கிடந்து அலறாய் நீரறாமையைப் பொருந்திய கண்ணை யுடையையாய்ப் பொருமிப் பொருமி இனிக்கிடந்தலறு வாயாக எ-று.
குழன்மொழியினென்னும் இன்: பலபெயரும் மைத்தொகை யிறுதிக்கண்வந்த சாரியை இன். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 198

குறிப்புரை :

16.5 அருமைகேட்டழிதல் அருமை கேட்டழிதல் என்பது அருவிலைகேட்ட தலை மகன், நீயவளதருமை கருதாது அவளதவயங்களிலுண்டாகிய நயத்தைப் பற்றிவிடாது நடுங்காநின்றாய்; இனி மதியைப்பிடித் துத் தரவேண்டியழும் அறியாக் குழவியைப்போலக் கிடந்தரற்று வாயாக வெனத் தன்னெஞ்சோடழிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.5. பெருமைநாட் டத்தவள்
அருமைகேட் டழிந்தது.

பண் :

பாடல் எண் : 6

மைதயங் குந்திரை வாரியை
நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை
யும்மல்குற் பைந்தொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பை தயங்கும் அரவம் புரையும் அல்குற் பைந்தொடி படம் விளங்கும் பாம்பையொக்கும் அல்குலையுடைய பைந்தொடி; மை தயங்கும் திரை வாரியை நோக்கி கருமை விளங்குந் திரையையுடைய கடலையுநோக்கி; மடல் அவிழ் பூங்கைதை கானலை நோக்கி மடலவிழாநின்ற பூவையுடையவாகிய தாழையை யுடைய கானலையுநோக்கி; கண்ணீர் கொண்டு கண்ணீரைக் கொண்டு; எம் கண்டர் தில்லைப் பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள் - பின் எம்முடைய கண்டரது தில்லைக்கணுளராகிய பொய்யாதல் விளங்கும் நுண்ணிய மருங்குலையுடைய தன்னாயத்தாராகிய நல்லாரையெல்லாம் புல்லிக்கொண்டாள்; அவள்கருதிய தொன்றுண்டு போலும் எ-று.
கண்ணீர்கொண்டென்றது பெண்களுக் கியல்பான குண மொன்று, நெடுங்காலங் கூடமருவினாரை விட்டு நீங்குகின்ற துயரத்தாற் றோன்றிய தொன்று, இக்காலமெல்லாம் உங்களைச் சேர்ந்து போந்த பெருநலத்தான் இப்பெருநலம் பெற்றேனென்னு முவகைக் கண்ணீரொன்று. இப்பெருநல மென்றது உடன்போக்கை. ஆதலான், நல்லாரையெல்லாம் புல்லிக்கொண்டு கண்ணீர் கொண்டாள். பொய்போலு மசையு மருங்கு லெனினுமமையும். குறித்துரைத்தது கொண்டு நீங்கென்பது பயப்பவுரைத்தது. 199

குறிப்புரை :

16.6 தளர்வறிந்துரைத்தல் தளர்வறிந்துரைத்தல் என்பது வரைவுமாட்சிமைப் படா தாயின் நீயவளையுடன்கொண்டு போவென்பது பயப்ப, கடலை யுங்கானலையு நோக்கிக் கண்ணீர் கொண்டு தன்னாயத்தாரை யெல்லாம் புல்லிக்கொண்டாள்; அவள் கருதிய தின்னதென்று தெரியாதெனத் தோழி தலைமகளது வருத்தங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.6. தண்டுறைவன் தளர்வறிந்து
கொண்டுநீங்கெனக் குறித்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

மாவைவந் தாண்டமென் னோக்கிதன்
பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
தாளின்றென் பைந்தொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
என் பைந்தொடி என்னுடைய பைந்தொடி; இன்று என்னைப் புல்லிக்கொண்டு பூவை தந்தாள் இன்றென்னைப் புல்லிக்கொண்டு தன் பூவையை யென்கையிற் றந்தாள்; பொன் பந்து தந்தாள் பின் பொற்றகட்டாற் புனைந்த பந்தைத் தந்தாள்; பாவை தந்தாள் பின் றன் பாவையைத் தந்தாள்; பைங்கிளி அளித்தாள் பைங்கிளியையுமளித்தாள்; மாவை வந்து ஆண்ட மெல் நோக்கிதன் பங்கர் மானைச் சென்றடிமைக்கொண்ட மெல்லிய நோக்கை யுடையாளது கூற்றையுடையவரது; வண்தில்லை மல்லல் கோவை வந்து ஆண்ட செவ்வாய்க் கருங்கண்ணி குறிப்பு அறியேன் - வளவியதில்லை வரைப்பினுண்டாகிய வளத்தையுடைய கொவ்வைக் கனியைச் சென்றாண்ட செவ்வாயையுடைய இக்கருங்கண்ணியது கருத்தறிகின்றிலேன்; நின்னுடன் செல்லப்போலும் எ-று.
புல்லிக்கொண்டு பாவையைத் தந்தாளென்றியைத்து, பாவை மேலுள்ளவன்பால் அதனைத் தருவுழிப் புல்லிக்கொண்டு தந்தாளென் றுரைப்பாருமுளர். இவையிரண்டற்கு மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்குணர்த்துதல். 200

குறிப்புரை :

16.7 குறிப்புரைத்தல் குறிப்புரைத்தல் என்பது வருத்தங்கூறிப் போக்குணர்த்தி அதுவழியாக நின்று, என்னைப் புல்லிக்கொண்டு தன்னுடைய பூவையையும் பந்தையும், பாவையையுங் கிளியையும் இன்றென்கைத் தந்தாள்; அது நின்னோடுடன் போதலைக் கருதிப்போலுமெனத் தோழி தலைமகனுக்குத் தலைமகளது குறிப்புரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.7. நறைக் குழலி
குறிப் புரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

மெல்லியல் கொங்கை பெரியமின்
நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங்
கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை
சேய்த்தெம் அகல்நகரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வானம் எல்லாம் கற்றுச் சொல்லிய சீர் வானுல கெங்கும் ஆண்டையராற் கற்றுச்சொல்லப்பட்ட புகழையும்; சுடர் திங்கள் கண்ணித் தொல்லோன் புலியூர் சுடரை உடைய திங்களாகிய கண்ணியையுமுடைய பழையோனது புலியூரில்; அல்லி அம் கோதை நல்லாய் அல்லியங்கோதையையுடைய நல்லாய்; மெல்லியல் கொங்கை பெரிய - மெல்லியலுடைய கொங்கைகள் பெரிய; இடை மின் நேர் அவற்றைத் தாங்கு மிடைநுடக்கத்தான் மின்னுக்கு நேராயிருந்தது; மெல் அடி பூ மெல்லியவடிகள் பூவேயாயிருந்தன; கல் இயல் வெம்மைக் கடம் கடுந் தீ - கல்லின் கணுண்டாகிய வெம்மையையுடைய காடு அவ்வடிக்குத் தகாததாய்க் கடிய தீயாயிருந்தது; எம் அகல் நகர் எல்லை சேய்த்து அதன்மேல் எம்முடைய வகன்றநகரும் எல்லைசேய்த்தாயிருந்தது; அதனான் நீ கருதியது பெரிதுமரிது எ-று.
கல்லானியன்ற கடமென வியைப்பினுமமையும். எல்லை சேய்த்தென்பன ஒரு சொன்னீர்மைப் பட்டு அகனகரென்னு மெழுவாய்க்கு முடிபாயின. வானரெல்லா மென்பதூஉம் பாடம் இதுவென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைமகணிலை யுணர்த்துதல்.201

குறிப்புரை :

16.8 அருமையுரைத்தல் அருமையுரைத்தல் என்பது குறிப்புரைத்துப் போக்குடம் படுத்திய தோழிக்கு, கொங்கைபொறாது நடுங்காநின்ற இடையினை யுடையாளது மெல்லியவடிக்கு யான்செல்லும் வெஞ்சுரந்தகாது; அதன்மேலும் எம்பதியுஞ் சேய்த்து; அதனால் நீ கருதுகின்ற காரியமிகவுமருமையுடைத்தெனத் தலைமகன் போக்கருமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.8. கானின் கடுமையும் மானின் மென்மையும்
பதியின் சேட்சியும் இதுவென வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

பிணையுங் கலையும்வன் பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பிணையும் கலையும் - பிணையுங் கலையும்; பெரு நீர் நசையால் மிக்க நீர் வேட்கையால்; வன் பேய்த்தேரினை அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் பெரிய பேய்த்தேரினைச் சென்றணுகும் முரம்பா னிரம்பிய சுரமும்; ஐய ஐயனே; நின்னொடு ஏகின் மெய்யே எம் பைந்தொடிக்கு நின்னொடு சொல்லின் மெய்யாக எம்பைந்தொடிக்கு; இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லைப் பூந்தண் பணையும் தடமும் அன்றே ஒப்பு மெல்லையு மில்லாத இறையோனுறைகின்ற தில்லை வரைப்பிற் பூக்களையுடைய குளிர்ந்த மருதநிலமும் பொய்கையு மல்லவோ! நீயிவ்வாறு கூறுவதென்னை எ-று.
முரம்பு கல் விரவி யுயர்ந்திருக்குநிலம். ஏகினென்னும் வினையெச்சம் பணையுந்தடமு மாமென விரியுமாக்கத்தோடு முடிந்தது. அழல்தடம் தீக்காய்கலம். விகாரவகையால் தடா தடமென நின்றது. அழலானிறைந்த பொய்கையெனினுமமையும். அலங்காரம்: புகழாப்புகழ்ச்சி. 202

குறிப்புரை :

16.9 ஆதரங்கூறல் ஆதரங்கூறல் என்பது போக்கருமை கூறிய தலைமகனுக்கு, நின்னோடு போகப்பெறின் அவளுக்கு வெஞ்சுரமும் தண்சுரமாம்; நீ யருமைகூறாது அவளைக் கொண்டுபோவெனத் தோழி தலைமகள தாதரங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.9. அழல்தடம் புரையும் அருஞ்சுர மதுவும்
நிழல்தட மவட்கு நின்னொடேகி னென்றது.

பண் :

பாடல் எண் : 10

இங்கய லென்னீ பணிக்கின்ற
தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
லண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற்
கண்ணித் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இணைப்பது இல்லாக் கங்கை அம் செஞ்சடைக் கண் நுதல் அண்ணல் கடிகொள் தில்லை இணைக்கப் படுவதொரு பொருளுமில்லாத கங்கையையுடைய வழகிய செஞ்சடையையுங் கண்ணையுடைய நுதலையுமுடைய வண்ணலது காவலைப் பொருந்திய தில்லைவரப்பின்; பங்கயப் பாசடைப் பாய்தடம் நீ பங்கயத்தின் பசியவிலைகளையுடைய பரந்த பொய்கை நீ; கருங் கயல்கண் இத்திருநுதல் படர் தடத்துச் செங்கயல் அன்றே கருங்கயல்போலுங் கண்ணையுடைய இத்திருநுதல் அகன்றவப் பொய்கைக்கண்வாழுஞ் செங்கயலன்றோ, அதனால், ஏந்தல் ஏந்தால்; இங்கு நீ அயல் பணிக்கின்றது என் நின்னோடேகுமிடத்து வேறொன்றானொருதுன்பம் வருவதாக இவ்விடத்து நீயயன்மை கூறுகின்றதென்! செங்கயற்குப் பங்கயத் தடமல்லது வேறுவேண்டப் படுவதொன்றுண்டோ! எ-று.
கண்ணுதலாகிய வண்ணலெனினுமமையும். உடன்கொண்டு போகாயாயின், அலரானும் காவன்மிகுதியானு நின்னைத் தலைப்படுதலரிதாகலிற் றடந்துறந்த கயல்போல இவளிறந்துபடு மென்பது கருத்து. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்கு வற்புறுத்தல். 9; 203

குறிப்புரை :

16.10 இறந்துபாடுரைத்தல் இறந்துபாடுரைத்தல் என்பது ஆதரங்கூறிய தோழி, நீயுடன் கொண்டு போகாயாகில் அலரானுங் காவன்மிகுதியானும் நின்னையெதிர்ப்படுதலரிதாகலின், தடந்துறந்த கயல்போல இறந்து படுமெனத் தலைமகளதிறந்துபாடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.10. கார்த்தடமுங் கயலும்போன்றீர்
வார்த்தடமுலையு மன்னனுமென்றது.

பண் :

பாடல் எண் : 11

தாயிற் சிறந்தன்று நாண்தைய
லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
சிறந்த மதிநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஈங்கோயிற் சிறந்து சிற்றம்பலத்து ஆடும் ஈங்கோ யிடத்துப் பொலிந்து மேவிச் சிற்றம்பலத்தின்கணின்றாடும்; எம் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதி நுதல் எம்முடைய கூத்தனாகிய பிரானது வாயின்கண் எப்பொழுதும் வந்து சிறத்தற்குக் காரணமாகிய அறிவாற் சிறப்பையுடையையாகிய மதிநுதால்; தையலாருக்கு நாண் தாயின் சிறந்தன்று மகளிர்க்குப்பழி நீக்கிப் பாதுகாத்தலில் நாண் தாய்போலச் சிறந்தது; அந்நாண் அத்தன்மைத்தாகிய நாண்; தகை சால்வேயிற் சிறந்த மென்தோளி அழகமைந்த வேய்போலச்சிறந்த மெல்லிய தோள்களை யுடையாய் திண் கற்பின் விழுமிது அன்று திண்ணிய கற்புப்போலச் சீரிதன்று எ-று.
தாயினுஞ் சிறந்ததன்று நாணென்றுரைப்பினுமமையும். நாணென்பது ஒருபொருட் குரிமையாகலிற் றாயென வொருமை கூறினார். ``ஏவலிளையர் தாய்வயிறு கரிப்ப`` என்பதுபோல அமையுமாறு முடைத்து. அன்றியும்,
உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று

குறிப்புரை :

16.11 கற்பு நலனுரைத்தல் கற்பு நலனுரைத்தல் என்பது தலைமகனைப் போக்குடம் படுத்திய தோழி, தலைமகளுழைச்சென்று, மகளிர்க்குப் பாதுகாக்கப் படுவனவற்றுள் நாண்போலச் சிறந்தது பிறிதில்லை; அத்தன்மைத்தாகியநாணுங் கற்புப்போலச் சீரியதன்றென உலகியல் கூறுவாள்போன்று, அவள் உடன்போக்குத் துணியக் கற்புநலங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.11. பொய்யொத்தவிடை போக்குத்துணிய
வையத் திடை வழக்கு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 12

குறப்பாவை நின்குழல் வேங்கையம்
போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
னத்தகும் பெற்றியரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
குறப்பாவை குறப்பாவாய்; தம்பிரான் புலியூர் மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் தம்பிரானது புலியூரை மறக்கக்கூடுவதொரு தீவினைவிளைவுவருமாயின்; சென்று சென்று பிறப்பான் அடுப்பினும் பல யோனிகளினும் சென்று சென்று பிறக்கக் கூடினும்; பின்னுந் துன்னத்தகும் பெற்றியர் பின்னுஞ்சென்று சேரத் தகுந் தன்மையை யுடையவர் நின் குழல் வேங்கைப் போதொடு கோங்கம் விராய்; நின் குழலின்க ணுண்டாகிய வேங்கைப்பூவொடு கோங்கம் பூவை விரவி நறப் பாடலம் புனைவார் நினைவார்; தேனையுடைய பாதிரிமலரைப் புனைவாராக நினையாநின்றார் எ-று.
புனைவாரென்னு முற்றுச்சொல் செயவெ னெச்சமாகத் திரித்துரைக்கப்பட்டது. புனைவாரா யுடன்போதலை நினையா நின்றா ரென்றுரைப்பினுமமையும். நினைவாரென்னு மெதிர்காலத்து முற்றுச்சொல் நிகழ்காலத்துக்கண் வந்தது. கோங்கம் விராய்ப் பாடலம் புனைவார் நினைவாரென்றதனான், நீரிலாற்றிடை நின்னொடு செல்லலுற்றா ரென்பது கூறினாளாம். புலியூரை யுணர்ந்தார்க்குப் பின்னை மறத்த லரிதென்னுங் கருத்தான், மறப்பானடுப்பதொர் தீவினை வந்திடினென்றாள். புலியூரை யொருகாலுணர்ந்த துணையானே பிறவி கெடுமன்றே; அவ்வாறன்றி யதனைமறந்த வாற்றானே பிறக்கக்கூடினு மென்னுங் கருத்தால், பிறப்பானடுப்பினு மென்றாள். அலர்நாணி உடன் போகாது ஈண் டிற்செறிக்கப்பட்டு அவரை யெதிர்ப்படா திருத்தல் அன்பன்றென் னுங் கருத்தால், பிறப்பானடுப்பினும் பின்னுந் துன்னத்தகும் பெற்றிய ரென்றாள். பெற்றியரென்பதனை வினைக்குறிப்பு முற்றாகவுரைப் பினுமமையும். உன்னத்தகும் பெற்றியரென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகன் உடன்போக்கு நேர்ந்தமை யுணர்த்துதல். 205

குறிப்புரை :

16.12 துணிந்தமைகூறல் துணிந்தமை கூறல் என்பது உலகியல் கூறுவாள்போன்று கற்புவழி நிறுத்தி, எம்பெருமான் நின்னை நீரில்லாத வெய்ய சுரத்தே உடன்கொண்டு போவானாக நினையாநின்றான்; இதற்கு நின்கருத் தென்னோவெனத் தோழி தலைமகளுக்குத் தலைமகனி னைவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.12. பொருளவே லண்ணல் போக்குத் துணிந்தமை
செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது

பண் :

பாடல் எண் : 13

நிழற்றலை தீநெறி நீரில்லை
கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
பாகும்நங் கொற்றவர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நிழல் தலை தீ நெறி நீர் இல்லை நிழலிடந்தீந்த வழி நீருடைத்தன்று; ஓரிகத்தும் கானகம் அழல் தலை வெம்பரற்று என்பர் இருமருங்குமுண்டாகிய ஓரி கூப்பிடுங்காடு அழனுதிபோலு நுதியையுடைய வெய்ய பரலையுடைத்தென்று சொல்லுவர்; தில்லை அம்பலத்தான் கழல் தலை வைத்துக் கைப் போதுகள் கூப்பக் கல்லாதவர் போல் தில்லையம்பலத்தின் கண்ணானது கழல்களைத் தந்தலைமேல்வைத்துக் கையாகிய போதுகளைக் கூப்பப்பயிலாத வரைப்போல இத்தன்மைத்தாகிய நெறிக்கண்; குழல் தலைச்சொல்லி குழலிடத்துச் சொற்போலுஞ் சொல்லையுடையாய்; நம் கொற்ற வர்க்குச் செல்லக் குறிப்பு ஆகும் என்னோ நம் கொற்றவர்க்குச் செல்லக் குறிப்புண்டாகின்ற இஃதென்னோ! எ-று.
நீரில்லை யென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய் நெறியென்னுமெழுவாய்க்குப் பயனிலையாயின. நெறிக்கணீரில்லை யெனவிரிப்பினு மமையும். நிழலிடந் தீயோ டொக்குநெறி; அந்நெறி நீருடைத்தன்று; கானகமெங்கு மோரி கூப்பிடும்; அக்கானகம் அழற்றலை வெம்பரலை யுமுடைத்து என்றுரைப்பினுமமையும். இப்பொருட்குக் கானகமோரிகத்து மென்பதற்கு நெறி நீரில்லை யென்றதற் குரைத்த துரைக்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 206

குறிப்புரை :

16.13 துணிவொடு வினாவல் துணிவொடு வினாவல் என்பது தலைமகனினைவு கேட்ட தலைமகள் அவனினைவின்படியே துணிந்து நின்று, இந் நீரில்லாத வெய்யசுரத்தே யிப்பொழுதிவர் நம்மையுடன் கொண்டு போகைக்குக் காரணமென்னோவெனத் தோழியை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
16.13. சிலம்பன் றுணிவொடு செல்சுரம் நினைந்து
கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.

பண் :

பாடல் எண் : 14

காயமும் ஆவியும் நீங்கள்சிற்
றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவர
லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங்
கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம்
போக்குத் துணிவித்தவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நீங்கள் காயமும் ஆவியும் நீங்கள் உடம்பு முயிரும்போல ஒருவரையொருவரின்றி யமையாத வன்பை யுடையீர்; சிற்றம்பலவன் கயிலைச் சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் இத்தன்மைத்தாகிய நுங்காதலை நினையாது சிற்றம் பலத்தான் கயிலையிற் சீயத்தையும் அல்லாத கொடுவிலங்கையுமஞ்சி யானவனை வரற்பாலையல்லையென்று கூறுவேன்; செறி திரை நீர்த் தேயமும் யாவும் பெறினும் நமர் கொடார் அவ்வாறு வருதலை யொழிந்து வரைவுவேண்டின், நெருங்கிய திரைகளை யுடைய கடலாற்சூழப்பட்ட இந்நிலத்தையும் பொன்முதலாகிய வெல்லா வற்றையும் பெறினும் நமர் நின்னைக்கொடார்கள், அதனால் தோயமும் நாடும் இல்லாச் சுரம் போக்குத் துணிவித்த செப்பில் இன்ன நீரு மக்கள் வாழுமிடமுமில்லாத சுரங்களைப் போதலைத் துணிவித்தன சொல்லுமிடத்து இத்தன்மையனவன்றோ? எ-று.
நீங்கள் காயமு மாவியும் போல வின்றியமையாமையின் அவற்கு வருமேத நினதென்றஞ்சி அவன் வரவு விலக்குவே னென்றாளாக வுரைப்பினுமமையும். துணிவித்ததென்பது பாடமாயின், துணிவித்ததனைச் செப்பினின்னவெனக் கூட்டியுரைக்க. அறிய - இன்ன காரணத் தானென்றறிய. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்கு மாட்சிமைப் படுத்தல். 207

குறிப்புரை :

16.14 போக்கறிவித்தல் போக்கறிவித்தல் என்பது இப்பொழு தவர் போகைக்குக் காரணமென்னோவென்று கேட்ட தலைமகளுக்கு நீங்கள் உடம்பு முயிரும்போல ஒருவரையொருவரின்றியமையீராயினீர்; இத் தன்மைத்தாகிய நுங்காதலையறிந்து வைத்தும் அவற்குவரு மேதம் நினதென்றஞ்சி யானவனை வரவுவிலக்குவேன்; அவனு மவ்வாறு வருதலையொழிந்து வரைவொடுவரிற் பொன் முதலாகிய வெல்லாவற்றையு நினக்கு முலைப்பரிசம் பெறினும் நமர் நின்னைக் கொடார்; சொல்லுமிடத்து இதுவன்றோ நீரருஞ்சுரம் போகைக்குக் காரணமென்று தோழி தலைமகனது போக்கறிவியாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.14. பொருசுடர்வேலவன் போக்குத்துணிந்தமை
அரிவைக்கவள் அறியவுரைத்தது.

பண் :

பாடல் எண் : 15

மற்பாய் விடையோன் மகிழ்புலி
யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
வாழி எழுமையுமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் வளத்தையுடைய பாயும் விடையையுடையவன் விரும்பும் புலியூரில்; என்னொடும் வளர்ந்த பொற்பு ஆர் திருநாண் என்னோடுந் தோன்றி என்னோடொக்கவளர்ந்த பொலிவார்ந்த திருவையுடைய நாண்; பொருப்பர் விருப்புப் புகுந்து நுந்த பொருப்பர்மேல் யான் வைத்த விருப்பம் இடையேபுகுந்து தள்ள நின்றநிலை குலைந்து; கற்பு ஆர் கடுங் கால் கலக்கிப் பறித்து எறிய கற்பாகிய நிறைந்த கடிய காற்றலைத்துப் பிடுங்கி என்வயிற் கிடவாமைப் புறத் தெறிய; கழிக என்னைக் கழிவதாக; ஏழையர் எழுமையும் இற்பால் பிறவற்க இனி மகளிர் எழுபிறப்பின் கண்ணுங் குடியிற்பிறவா தொழிக எ-று.
நாண் கழிகவென வியையும். வாழி: அசைநிலை. கற்பாங் கடுங்காலென்பதூஉம் பாடம். முற்சிறந்தமையின் முன்னெண்ணச் சிறந்தமையின். மல்லல் மல்லெனக் கடைக்குறைந்து நின்றது. மெய்ப்பாடு: அது. பயன்: உடன்போக்கு வலித்தல். 208

குறிப்புரை :

16.15 நாணிழந்துவருந்தல் நாணிழந்து வருந்தல் என்பது உடன்கொண்டு போகைக் குக் காரணங்கேட்ட தலைமகள், ஒருநாளுமென்னை விட்டு நீங்காது என்னுடனே வளர்ந்த பொலிவுடைத்தாகிய நாண் கற்பினெதிர் நிற்கமாட்டாது தன்னைவிட்டு நீங்காத என்னைக் கழிவதாக; மகளிர் எழுபிறப்பின்கண்ணுங் குடியிற் பிறவாதொழி கவெனத் தானதற்குப் பிரிவாற்றாமையான் வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.15. கற்பு நாணினு முற்சிறந் தமையிற்
சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது.

பண் :

பாடல் எண் : 16

கம்பஞ் சிவந்த சலந்தரன்
ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
கும்மலர்ச் சீறடிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நம்பா நம்பா; அம்பு அஞ்சி ஆவம்புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள் அம்புக ளஞ்சித் தூணியிற்புக் கொளிப்ப மிக நீண்டு செவ்வரி சிதறிய கண்களையுடையாளுடைய; செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர்ச் சீறடிக்கு செம்பஞ்சியின் மிதிப்பினு நடுங்கும் மலர்போலுஞ் சிறியவடிக்கு; கல் சுரம் நல் தளிர் ஆகும் நீசெல்லுங் கல்லையுடைய சுரம் நல்லதளிராம்போலும் இவளது துணிவிருந்தவாற்றான் எ-று.
கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த அச்சத்தால் வரு நடுக்கத்தை வெகுண்ட சலந்தரன தாகத்தை முனிந்த; தில்லை நம்பன் சிவநகர் நல் தளிர் தில்லையினம் பனது சிவநகரின் நற்றளிரெனக் கூட்டுக.
சிவநகரென்பது ஒரு திருப்பதி. செம்பஞ்சியின் மிதிக்கிற் பதைக்கும் மலர்ச்சீறடியென்பன ஒருசொன்னீர்மைப்பட்டு நின்றன; இதனை யதிகாரப் புறனடையாற் கொள்க. அரிசிந்து கண்ணாளது என்னுமாறனுருபு தொகச்சொல்லாத விடத்துத் தொக்கு நின்றதெனினு மமையும். அரிசிந்து கண்ணாள் மலர்ச்சீறடியென்று கூட்டுவாரு முளர்.தொல்வரை - பெரியவரை. மெய்ப்பாடு: அது. பயன்: உடன்போக்கு வற்புறுத்தல். 209

குறிப்புரை :

16.16 துணிவெடுத்துரைத்தல் துணிவெடுத்துரைத்தல் என்பது தலைமகளைக் கற்புவழி நிறுத்திச் சென்று, நின்னோடு போதுமிடத்து நீ செல்லுங் கற்சுரம் அவளது சிற்றடிக்கு நற்றளிராம்போலுமெனத் தோழி தலை மகனுக்கு அவடுணிவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.16. செல்வ மாதர் செல்லத் துணிந்தமை
தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது.

பண் :

பாடல் எண் : 17

முன்னோன் மணிகண்ட மொத்தவன்
அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
யாம்விழை பொங்கிருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எனது உயிரே அன்னாள் அரும் பெறல் ஆவி அன்னாய் எனதுயிரை யொப்பாளது அரிய பெறுதலையுடைய ஆவியை யொப்பாய்; அருள் ஆசையினால் நினதருண்மேலுள்ள வாசையால்; பொன் ஆர் மணி மகிழ்ப் பூ விழ யாம் விழை பொங்கு இருள் பொன்போலும் நிறைந்த நல்ல மகிழின்பூவிழ அவை விழுகின்ற வோசையை நீ செய்யுங்குறியாக வோர்ந்து யாம் விரும்பும் மிக்கவிருள்; முன்னோன் மணிகண்டம் ஒத்து இக்காலத்துக் கருமையால் எல்லார்க்கு முன்னாயவன தழகிய மிடற்றையொத்து; அவன் அம்பலம் தம்முடி தாழ்த்து உன்னாதவர் வினைபோல் பரந்து ஓங்கும் அவன தம்பலத்தைத் தம்முடிகளைத் தாழ்த்து நினையாத வரது தீவினை போலக் கருமையோடு பரந்து மிகும் எ-று.
ஆவியன்னாய தருளென்றுரைப்பாருமுளர். மணிமகிழ் பூவிழவென்பது பாடமாயிற் பூவிழமென்னுஞ் சொற்கள் ஒருசொன்னீர்மைப்பட்டு மணிமகிழென்னு மெழுவாயை யமைத்தன வாக வுரைக்க. இனித்தாழாதிவ் விருட்காலத்துப் போகவேண்டு மென்றும் இரவுக்குறிக்கண் வரும் அரையிருட்கண் வந்து அக்குறி யிடத்து நில்லென்றுங் கூறினாளாம். துன்னியகுறி - நீ முன்பு வந்தி வளை யெதிர்ப்பட்ட குறியிடம். மெய்ப்பாடு: அது. பயன்: குறியிட முணர்த்துதல். 210

குறிப்புரை :

16.17 குறியிடங் கூறல் குறியிடங் கூறல் என்பது துணிவெடுத்துரைத்த தோழி, தாழாது இவ்விருட்காலத்துக் கொண்டுபோவாயாக; யானவளைக் கொண்டு வாராநின்றேன்; நீ முன்புவந்தெதிர்ப்பட்ட அக்குறியிடத்து வந்து நில்லெனத் தலைமகனுக்குக் குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.17. மன்னிய இருளில் துன்னிய குறியிற்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது.

பண் :

பாடல் எண் : 18

பனிச்சந் திரனொடு பாய்புனல்
சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி
யாவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
லாம்புகுந் தெய்துவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பனிச் சந்திரனொடு பாய் புனல் சூடும் குளிர்ச்சியையுடைய மதியோடு பரந்த புனலையுடைய கங்கையைச் சூடும்; பரன் புலியூர் அனிச்சம் திகழும் அம் சீறடி பரனது புலியூரில் அனிச்சப்பூப்போலு மழகிய சிறிய வடிகள்; ஆவ அன்னோ; அழல் பழுத்த கனிச் செந்திரள் அன்ன தீப்பழுத்த பழத்தினது சிவந்த திரள்போலும்; கல் கடம் போந்து கடக்கும் என்றால் கற்றிரளை யுடையகாட்டை இங்குநின்றும் போந்து கடக்குமாயின்; சந்த மேகலையாட்கு இனிப் புகுந்து எய்துவது என்கொல் நிறத்தை யுடைய மேகலையையுடையாட்கு இனி யென் காரணமாக வந்தெய்துந் துன்பம் வேறென்! எ-று.
ஆவ : இரங்கற்குறிப்பு. மெய்ப்பாடு: அழுகை. பயன்: நெஞ்சோடுசாவுதல். 211

குறிப்புரை :

16.18 அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல் அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல் என்பது தோழி குறியிடை நிறுத்திப் போகாநிற்ப, தலைமகன் அவ்விடத்தே நின்று, அனிச்சப்பூப் போலும் அழகிய வடிகள் அழற்கடம் போது மென்றால் இதற்கென்ன துன்பம் வந்தெய்துங்கொல்லோ வெனத் தலைமகளடியொடு தான் செல்லாநின்ற வழி நினைந்து, தன்னுள்ளம் வாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.18. நெறியுறு குழலியோடு நீங்கத் துணிந்த
உறுசுடர் வேலோ னுள்ளம் வாடியது.

பண் :

பாடல் எண் : 19

வைவந்த வேலவர் சூழ்வரத்
தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந்
துயிலுமிம் மூதெயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செழு மிடற்றின் மை வந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வளவிய மிடற்றின்கட் கருமை யுண்டாகிய கோனது தில்லையை வாழ்த்தாதாருடைய மனம்போல; முழுதும் இருள் தூங்கும் உலகமுழுதும் இருள்செறியாநின்றது; வழுத்துநர் போல் அத்தில்லையை வாழ்த்துவாருடைய மனம்போல; மொய் வந்த வாவி தெளியும் பெருமையுண்டாகிய பொய்கைகள் கலக்க மற்றுத் தெளியா நின்றன; இம் மூதெயில் துயிலும் இம்முதியவூர் துயிலாநின்றது, அதனால் வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல் கூர்மையுண்டாகிய வேலையுடைய விளையர் சூழத் தேரின் கண் வரும் வள்ளலே; உள்ளம் தெய்வம் தரும் நின துள்ளத்துக் கருதியதனைத் தெய்வம் இப்பொழுதே நினக்குத் தரும்; என்றோழியையுங் கொணர்ந்தேன்; காண்பாயாக எ-று.
வள்ளலென்பது ஈண்டு முன்னிலைக்கண் வந்ததெனக் கொண்டு, வள்ளலதுள்ளமென்று விரித்துரைப்பினுமமையும். சூழ்வரத் தேர்வரு மென்று பாடமோதி ஊர்காக்குமிளையர் ஊரைச் சூழ்வரும் வரவுமினி யொழியுமென்றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளைத் தலைமகனுடன்படுத்தல். 212

குறிப்புரை :

16.19 கொண்டுசென்றுய்த்தல் கொண்டுசென்றுய்த்தல் என்பது தலைமகன் குறியிடை நின்று, அடியொடு வழிநினைந்து, தன்னுள்ளம் வாடாநிற்ப, அந்நிலைமைக்கண், நின்னுள்ளத்துக் கருதியதனை இப்பொழுது நினக்குத் தெய்வந் தாராநின்றது; என்றோழியையுங் கொண்டு வந்தேன்; நீ யிவளைக் கைக்கொள்ளெனத் தோழி தலைமகளைக் கொண்டு சென்று, அவனொடு கூட்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.19. வண்டமர் குழலியைக்
கண்டுகொள் கென்றது.

பண் :

பாடல் எண் : 20

பறந்திருந் தும்பர் பதைப்பப்
படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன்
னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
வற்றுமிச் சேணிலத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பா சிலம்பா; இருந்து உம்பர் பதைப்பப் பறந்து படரும் புரம் கரப்ப இருந்து உம்பரிடை விடாது நடுங்கப் பறந்து செல்லும் புரங்கள் கெட; சிறந்து எரிஆடி தென் தில்லை அன்னாள் திறத்து பொலிந்து எரியான் விளையாடுமவனது தெற்கின்கணுண்டாகிய தில்லையை யொப்பாளிடத்து; அறம் திருந்து உன் அருளும் பிறிது ஆயின் அறந் திருந்துதற்குக் காரணமாகிய உனதருளும் வேறுபடுமாயின்; இச்சேண் நிலத்து இவ்வகன்ற நிலத்து; அருமறையின் திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் - அரிய மறைகளின் முறைமை பிறழக் கடலு மெஞ்சாது வற்றும் எ-று.
அறந்திரிந்தென்பது பாடமாயின், அறந்திரிந்தரு மறையின்றி றந்திரிந்தென மாற்றியுரைக்க. அறந்திரிந்தாற்போல நின்னருளும் பிறிதாயினென வொருசொல் வருவித்துரைப்பினு மமையும். அருமறையு மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஓம்படுத்தல். 213

குறிப்புரை :

16.20 ஓம்படுத்துரைத்தல் ஓம்படுத்துரைத்தல் என்பது கொண்டுசென்றுய்த்து இரு வரையும் வலஞ்செய்து நின்று, மறை நிலைதிரியினும் கடன் முழுதும் வற்றினும், இவளிடத்து நின்னரு டிரியாமற் பாதுகாப்பா யெனத் தோழி தலைமகளைத் தலைமகனுக் கோம்படுத் துரையா நிற்றல். அதற்குச் செய்யுள்
16.20. தேம்படு கோதையை
யோம்ப டுத்தது.

பண் :

பாடல் எண் : 21

ஈண்டொல்லை ஆயமும் ஔவையும்
நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எம்மைப் பிடித்து ஆண்டு எம்மை வலிந்து பிடித்தாண்டு; இன்று எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு இன்று எல்லையைநீங்கிய வின்பத்தைத் தந்தவனது சிற்றம்பலம் நிலைபெற்ற; சேண்தில்லை மா நகர்வாய் சேய்த்தாகிய தில்லை யாகிய பெரிய நகரிடத்து; திருத்தகச்சென்று சேர்க நீர் பொலிவு தகச்சென்று சேர்வீராமின்; ஆயமும் ஔவையும் ஈண்டு நீங்க ஆயமுமன்னையும் பின்வாராது இவ்விடத்தே நீங்க; இவ்வூர்க் கௌவை ஒல்லை தீர்த்து இவ்வூரின்க ணுண்டாகிய அலரை யொருவாற்றான் விரையநீக்கி; ஆண்டு நும்மை ஒல்லை கண்டிடக் கூடுக யானாண்டுவந்து நும்மை விரையக் காணக் கூடுவதாக எ-று.
சேண்டில்லை யென்பதற்கு மதின்முதலாயின வற்றான் னுயர்ந்த தில்லையெனினுமமையும். ஒல்லைக் கண்டிடவென விகார வகையான் வல்லெழுத்துப் பெறாது நின்றது. மெய்ப்பாடு: அழுகை. பயன்: அச்சந் தவிர்த்தல். 214

குறிப்புரை :

16.21 வழிப்படுத்துரைத்தல் வழிப்படுத்துரைத்தல் என்பது ஓம்படுத்துரைத்த தோழி, ஆயமுமன்னையும் பின்வாராமல் இவ்விடத்தே நிறுத்தி இவ்வூரிடத்தி லுள்ள அலரையு மொருவாற்றானீக்கி யானும்வந்து நுங்களைக் காண்பேனாக; நீயிருந் திருவொடுசென்று நும்பதியிடைச் சேர்வீராமி னென இருவரையும் வழிப்படுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.21. மதிநுதலியை வழிப்படுத்துப்
பதிவயிற்பெயரும் பாங்கிபகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 22

பேணத் திருத்திய சீறடி
மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும்முன்
னாமன்னு கானங்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பேரரவம் பூண பெரிய வரவங்களைப் பூணும்வண்ணம்; திருத்திய பொங்கு ஒளியோன் புலியூர் புரையும் அவற்றின் றீத்தொழிலை நீக்கிய பெருகுமொளியையுடையவனது புலியூரையொக்கும்; மாணத் திருத்திய வான்பதி இருமருங்கும் சேரும்மாட்சிமைப்படக் குற்றங்கடிந்து செய்யப்பட்ட பெரியவூர்கள் நாஞ்செல்லு நெறியி னிருபக்கமு மொன்றோடொன்று சேர்ந் திருக்கும்; முன்னா மன்னு கானங்கள் காணத்திருத்திய போலும்- முன்னுளவாகிய காடுகள் நாஞ்சென்று காணும்வண்ணந் திருந்தச் செய்யப்பட்டனபோலும், அதனால், பேணத் திருத்திய சீறடி- யான் விரும்பும் வண்ணங் கைபுனையப் பட்ட சிறிய வடியை யுடையாய்; மெல்லச் செல் பையச்செல்வாயாக எ-று.
பேணத்திருத்திய சீறடி யென்பது சினையாகிய தன்பொருட் கேற்ற வடையடுத்து நின்றது. அரவந் திருத்தியவென வியையும். வான்பதி சேருமென்பதற்குப் பதி நெறியைச் சேர்ந்திருக்கு மென்றுரைப்பினு மமையும். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளை அயர்வகற்றுதல். 215

குறிப்புரை :

16.22 மெல்லக்கொண்டேகல் மெல்லக்கொண்டேகல் என்பது தோழியை விட்டு உடன்கொண்டு போகாநின்ற தலைமகன் நின்னொடு சேறலான் இன்று இக்காடு திருந்தச் செய்யப்பட்டாற்போலக் குளிர்ச்சியை யுடைத்தா யிருந்தது; இனி நின் சீறடி வருந்தாமற் பையச் செல்வாயாக வெனத் தன்னாய வெள்ளத்தோடும் விளையாடு மாறு போலத் தலைமகளை மெல்லக்கொண்டு செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.22.பஞ்சிமெல்லடிப் பணைத்தோளியை
வெஞ்சுரத்திடை மெலிவகற்றியது.

பண் :

பாடல் எண் : 23

கொடித்தேர் மறவர் குழாம்வெங்
கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
விண்தோய் கனவரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: நின் ஐயர் என்னின் நின்னையன்மாராயின்; மன்னும் அம்பலத்தோன் அடித்தேரலர் என்ன அஞ்சுவன் நிலை பெறு மம்பலத்தின் கண்ணானுடைய அடிகளை யாராய்ந் துணரா தாரைப்போல அஞ்சுவேன், அல்லது, கொடித் தேர் கொடியை யுடைய தேரும்; மறவர் குழாம் வீரரது திரளும்; வெம் கரி நிரை வெய்யகரிநிரையும்; கூடின் அனைத்துந் திரண்டுவரினும்; என்கைவடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா என்கையில் வடிக்கப்பட் டழகுவிளங்காநின்ற எஃகினது வாய்க்கு இரையுதவ மாட்டா; மன்னும் கடித்தேர் குழல் மங்கை நிலைபெற்ற நறுநாற்றத் தை வண்டுகளாராய்ந்துவருங் குழலையுடைய மங்காய்; விண்தோய் இக் கனவரைக் கண்டிடு விண்ணினைத் தோயாநின்ற இப்பெரிய வரையிடத் தியான்செய்வதனைக் காண்பாயாக எ-று.
கூடினென்பதற்கு என்னைக் கிட்டினென்றுரைப்பினுமமையும். அடித்தேர்பவரென்பது பாடமாயின், என்ன வென்பதனை உவமவுரு பாக்காது இவரை யடித் தேர்பவரென்று பிறர் கருத வென்றுரைக்க. கண்டிடிரென்பதூஉம் பாடம். மன்னுங்கடி யென்பதற்கு வண்டென வொருசொல் வருவித்துரைக்க. வரிசிலையவர் வருகுவரென - வரிசிலையவர் வாராநின்றார் இவர் யாவரென. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தன்வலியுணர்த்தி யாற்றுவித்தல். இடைச்சுரத்து அவடமரெதிர்படை தொடர்ந்து நிற்ப வழிவருவார் விலக்கி வரைவித்துக்கொடுப்ப. என்னை
``இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக்
கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ ரெய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட
வப்பாற்பட்ட வொருதிறத் தானும்
(தொல். அகத்திணையியல் -41)
என்றார் தொல்காப்பியனார். 216

குறிப்புரை :

16.23 அடலெடுத்துரைத்தல் அடலெடுத்துரைத்தல் என்பது மெல்லக்கொண்டு செல்லா நின்றவன், சேய்த்தாகச் சிலரை வரக்கண்டு தலைமகளஞ்சாநிற்ப, நின்னையன்மாராயின் அஞ்சுவேன்; அல்லது நால்வகைத்தானை யுந் திரண்டுவரினும் என்கையில் வடித்திலங்காநின்ற எஃகின் வாய்க் கிரை போதாது; இதனை யிவ்விடத்தே காண்பாயாக வென்று, அவள தச்சந் தீரத் தன் னடலெடுத் துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.23. வரிசிலையவர் வருகுவரெனப்
புரிதருகுழலிக் கருளவனுரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

முன்னோ னருள்முன்னும் உன்னா
வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
மாடுசிற் றம்பலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முன்னோன் அருள் முன்னும் முன்னா எல்லார்க்கும் முன்னாயவனதருளை முற்பிறப்பின்கண்ணு நினையாத; வினையின் முனகர் துன்னும் இன்னாக் கடறு இது இப் போழ்தே கடந்து தீவினையையுடைய நீசர் சேருந் துன்பத்தைச் செய்யும் பாலைநில மிதனை யிப்பொழுதே கடந்து; பொன் ஆர் அணி மணி மாளிகைத் தென் புலியூர் பொன்னிறைந்த வழகையுடைய மணியால் விளங்கும் மாளிகையையுடைய தென்புலியூர்க்கண்; புகழ்வார் தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலம் புகழ்ந் துரைப்பார் தென்னனே யென்று புகழ என்னையுடையான் நின்று கூத்தாடுஞ் சிற்றம்பலத்தை; இன்று சென்று காண்டும் இன்று சென்று காண்பேம்; இதுவன்றோ நமக்கு வருகின்ற வின்பம்! எ-று.
தென்புலியூர்ச் சிற்றம்பலமென வியையும். உடையா ரென்பது பாடமாயின், தென்னனேயென்று புகழவொரு சிறப்புடை யாரென்றுரைப்பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளையயர்வகற்றுதல். அலங்காரம்: கூற்றிடத்திரு பொருட் கண் வந்த வுயர்ச்சி வேற்றுமை. 217

குறிப்புரை :

16.24 அயர்வகற்றல் அயர்வகற்றல் என்பது அடலெடுத்துரைத்து அச்சந் தீர்த்துக்கொண்டு போகாநின்றவன், இத்துன்பக்கடறு கடந்து சென்று இப்பொழுதே நாமின்பப்பதி காணப் புகாநின்றேம்; இனி நமக்கொரு குறைவில்லை யெனத் தலைமகளது வழிவருத்தந் தீரக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.24. இன்னல்வெங்கடத் தெறிவேலவன்
அன்னமன்னவள் அயர்வகற்றியது.

பண் :

பாடல் எண் : 25

விடலையுற் றாரில்லை வெம்முனை
வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
இன்றிக் கடுஞ்சுரமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விடலை விடலாய்; உற்றார் இல்லை இனிச் செல்லு நெறிக்கண் நன்மக்களில்லை; வெம்முனை வேடர் உள்ளார் வெய்ய முனையிடத்து வேடரே; தமியை நீ தனியை; மென் பூ மடலை உற்று ஆர் குழல் வாடினள் மெல்லிய பூவினிதழைப் பொருந்தி நிறைந்த குழலையுடையாள் வழிவந்த வருத்தத்தால் வாடினாள்; மன்னு சிற்றம்பலவர்க்கு அடலை உற்றாரின் நிலைபெற்ற சிற்றம்பலத்தையுடையவர்க் காட்படுந்தன்மையைப் பொருந்தினவர்க ளல்லாரைப்போல; எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கிக் கடலை உற்றான் விளக்கமொழிந்து அவ்விடத்து அருக்கன்றன் கதிர்களைச் சுருக்கிக் கடலைச் சென்றுற்றான்; இக் கடுஞ்சுரம் இன்று கடப்பார் இல்லை இக்கடிய சுரத்தை யிப்பொழுது கடப்பாருமில்லை; அதனாலீண்டுத் தங்குவாயாக எ-று.
வேடரொடு சாராத நன்மக்கள் இவர்க்கணியராதலின், அவரை உற்றா ரென்றார். வேடரி லுற்றாரில்லையென்று நன்றி செய்யாரென்பது பயப்பவுரைப்பினு மமையும். மடலென்றது தாழம்பூ மடலையென்பாருமுளர். சிற்றம்பலவர்க்கென்னு நான்கனுருபு பகைப்பொருட்கண் வந்தது. அருக்கன் பெருக்கி யென்றும் பெருகி யென்றும் பாடமாயின், கெடுதலை மங்கலமரபிற் கூறிற்றென்க. 218

குறிப்புரை :

16.25 நெறிவிலக்கிக்கூறல் நெறிவிலக்கிக் கூறல் என்பது அயர்வகற்றிக்கொண்டு செல்லாநின்ற தலைமகனை, இனிச்செல்லு நெறிக்கண் நன்மக்க ளில்லை; நீ தனியை; இவள் வாடினாள்; பொழுதுஞ் சென்றது; ஈண்டுத்தங்கிப் போவாயாகவென, அவ்விடத்துள்ளோர் வழிவிலக்கிக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.25. சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு
சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.

பண் :

பாடல் எண் : 26

அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்
ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி
போன்றொளிர் நாடகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் சிறுபுறமும் அசைநடையுங்காண்டற்கு அன்பானணைத்து அழகிய சொல்லையுடையாளது பின்னே ஆடவனொருகாற் செல்லாநின்றான்; அவன்றன்பின் பணைத்தோளி நீடுவரும் முன்செல்லநாணிப் புறக்கொடையும் வலிச்செலவுங் காண அவனது பின்னே வேய்போலுந் தோள்களையுடையாள் நெடும் பொழுது செல்லாநின்றாள்; இப்பெருஞ் சுரம் செல்வது அன்று இருந்த வாற்றான் இவரதுசெயல் இப்பெரிய சுரத்தைச் செல்கை யன்று; பொன்பணைத்தன்ன இறை உறைதில்லை பொன்னொரு வடிவு கொண்டு பெருத்தாற்போலு மிறை யுறைகின்ற தில்லை வரப்பின்; நண்பணைப் பொலி மலர்மேல் தண் நறவு உண் அளி போன்று நல்லபணையிற் பொலிந்த மலரிடத்துக் குளிர்ந்த நறவை யுண்ட வண்டுகளையொத்து; ஒளிர் நாடகம் இன்பக்களியான் மயங்கி விளங்குவதொரு நாடகம் எ-று.
பெருஞ்சுரஞ் செல்வதன்றென்பதற்குப் பெருஞ்சுரந் தொலை வதன்றெனினுமமையும். பொன்பணைத்தாற்போலுமிறை யென்பாரு முளர். கண்டார்க்கின்பஞ் செய்தலின், நாடக மென்றார். இவையிரண் டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: நெறிவிலக்குதல். 219

குறிப்புரை :

16.26 கண்டவர் மகிழ்தல் கண்டவர் மகிழ்தல் என்பது நெறிவிலக்குற்று வழிவருத்தந் தீர்ந்து ஒருவரையொருவர் காணலுற்று இன்புற்றுச் செல்லாநின்ற இருவரையுங்கண்டு, இவர்கள் செயலிருந்தவாற்றான் இப்பெருஞ் சுரஞ் செல்வதன்றுபோலும்; அதுகிடக்க இதுதானின் புறவுடைத்தாகிய தோர் நாடகச் சுவையுடைத்தா யிருந்ததென எதிர்வருவார் இன்புற்று மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.26. மண்டழற் கடத்துக்
கண்டவ ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 27

கண்கடம் மாற்பயன் கொண்டனங்
கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
பருக வருகஇன்னே
விண்கட நாயகன் தில்லையின்
மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
கானகந் தண்ணெனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கண்டு நெறிசெல் வருத்தத்தி னெகிழ்ந்த மேனியை யாகிய நின்னைக்கண்டு; கண்கள் தம்மால் பயன் கொண்டனம் கண்களாற் கொள்ளும் பயன் கொண்டனம்; காரிகை காரிகை நீர்மையாய்; இனி நின் பண் கட மென்மொழி ஆரப் பருக இன்னே வருக இனிச் சிறிதிருந்து நினது பண்ணினது முறைமையை யுடைய மெல்லிய மொழியைச் செவிநிறையப் பருகுவான் இவ் விடத்து வருவாயாக; விண்கள் தம் நாயகன் விண்ணுலகங்க டம்முடைய தலைவன்; தில்லையில் மெல்லியல் பங்கன் தில்லைக்கணுளனாகிய மெல்லியல் கூற்றையுடையான்; எம் கோன் எம்முடைய விறைவன்; தண் கடம்பைத் தடம்போல் கடுங்கானகம் தண்ணென அவனது குளிர்ந்த கடம்பையிற் பொய்கைபோலக் கடியகானகங் குளிருமளவும் எ-று.
தண்ணென வின்னே வருகவென வியையும். கடம்பை யென்பது ஒரு திருப்பதி. கடம்பைத் தடம்போற் கடுங் கானகங் குளிரும் வண்ணம் நின்மொழியைப் பருகவென்று கூட்டினுமமையும். மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். 220

குறிப்புரை :

16.27 வழிவிளையாடல் வழிவிளையாடல் என்பது கண்டவர் மகிழக் கொண்டு செல்லாநின்றவன், நெறிசெல்வருத்தத்தி னெகிழ்ந்த மேனியை யுடைய நின்னைக் கண்டு கண்கடம்மாற் கொள்ளும் பயன் கொண்டனம்; இனிச் சிறிதிருந்து இக்கடுங்கானகந் தண்ணெனு மளவுஞ் செவி நிறைய நின்மொழி பருக வருவாயாகவெனத் தலைமகளுடன் விளையாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.27. வன்றழற் கடத்து வடிவே லண்ணல்
மின்றங் கிடையொடு விளையா டியது.

பண் :

பாடல் எண் : 28

மின்றங் கிடையொடு நீவியன்
தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
சூழ்தரு சேண்நகரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின் தங்கு இடையொடு மின்போலு மிடையையுடையாளோடு; நீ வியன் தில்லைச் சிற்றம்பலவர் குன்றம் கடந்து சென்றால் நீயகன்ற தில்லையிற் சிற்றம்பலத்தையுடையவரது குன்றத்தைக்கடந்து அப்பாற் சிறிதுநெறியைச் சென்றால்; குரூஉக்கமலம் துன்று அம் கிடங்கும் நிறத்தையுடைய தாமரைப் பூ நெருங்கிய அழகிய கிடங்கும்; வள்ளை வெள்ளை நகையார் துறைதுறை சென்று அங்கு அடைதடமும் வள்ளைப் பாடலைப் பாடும் வெள்ளை முறுவலையுடைய மகளிர் துறைதொறுந் துறை தொறுந் சென்று அவ்விடத்துச்சேரும் பொய்கைகளும்; புடைசூழ்தரு சேண்நகர் பக்கத்துச்சூழ்ந்த அத்தில்லை யாகிய வுயர்ந்தநகர்; நின்று தோன்றும் இடையறாது தோன்றும்; அத்துணையுங் கடிது செல்வாயாக எ-று.
குழலியொடு கண்டவர் குழலியொடு தலைமகனைக் கண்டவர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடமணித்தென்றல். 221

குறிப்புரை :

16.28 நகரணிமை கூறல் நகரணிமை கூறல் என்பது இருவருந் தம்மு ளின்புற்றுச் செல்லாநின்றமை கண்டு, இனிச் சிறிது நெறிசென்று அக்குன்றத் தைக் கடந்தால் நும்பதியாகிய நகர் விளங்கித் தோன்றாநிற்கும்; அத்துணையுங்கடிது செல்வீராமினென எதிர்வருவார் அவர் நகரணிமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

16.28. வண்டமர் குழலியொடு
கண்டவ ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 29

மின்போல் கொடிநெடு வானக்
கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
தோன்றுநன் னீணகரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நின்போல் நடை அன்னம் துன்னி நின்னடை போலு நடையையுடைய அன்னங்கடுன்னி; மன்போல்பிறை அணி மாளிகை சூலத்தவாய் மன்னனைப் போலப் பிறையையணிந்த மாளிகைகள் அவனைப்போலச் சூலத்தவுமாய்; முன் தோன்று நல் நீள் நகர் முன்றோன்றுகின்ற நல்ல பெரிய நகர்; மடவாய் மடவாய்; மின் போல் கொடி நெடு வானக் கடலுள் திரை விரிப்ப - ஒளியானும் நுடக்கத்தானும் மின்னையொக்குங் கொடிகள் பெரியவானமாகிய கடலுட் டிரையைப் பரப்ப; பொன் புரிசை வடவரை காட்டப் பொலி புலியூர் பொன்னானியன்ற புரிசை மேருவைக் காட்டப் பொலியும் புலியூர் காண்; தொழுவாயாக எ-று.
போலென்பது அசைநிலை. நிறத்தாற் பொன்போலும் புரிசை யென்பாருமுளர். சூலத்தவாயென்னுஞ் சினைவினையெச்சம் முன்றோன்றுமென்னும் முதல்வினையோடு முடிந்தது. துன்னியென இடத்து நிகழ்பொருளின் வினை இடத்தின்மேலேறி நின்றது. 222

குறிப்புரை :

16.29 நகர்காட்டல் நகர்காட்டல் என்பது நகரணிமை கூறக்கேட்டு இன்புறக் கொண்டு செல்லாநின்ற தலைமகன், அன்னந்துன்னிப் பிறையணிந்து சூலத்தையுடைத்தாகிய மாளிகைமேற் கொடி நுடங்க மதில்தோன்றா நின்ற அப்பெரிய நகர்காண் நம்முடைய நகராவதெனத் தலைமகளுக்குத் தன்னுடைய நகர் காட்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.29. கொடுங்கடங் கடந்த குழைமுக மாதர்க்குத்
தடங்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது.

பண் :

பாடல் எண் : 30

செய்குன் றுவைஇவை சீர்மலர்
வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
வற்கிடம் ஏந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உவை செய் குன்று உவை செய்குன்றுகள்; இவை சீர் மலர் வாவி இவை நல்லமலரையுடைய வாவிகள்; அவை விசும்பு இயங்கி நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை விசும்பின்கணியங்குதலான் வருந்துந் திங்கள் அயர் வுயிர்க்கும் பொழில்கள்; உந்திடம் ஞாங்கர் எங்கும் பொய்குன்ற வேதியர் ஓதிடம் உவ்விடம் மிசையெங்கு முலகத்திற் பொய் முதலாகிய குற்றங்கெட மறையவர் மறைசொல்லுமிடம்; ஏந்திழை ஏந்திழாய்; இந்திடமும் எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம் இவ்விடமும் எய்தற்குக் கருவியாகிய குன்றமாகிய நீண்டவில்லை யுடைய அம்பலவற் கிருப்பிடம்; இத்தன்மைத்திவ்வூர் எ-று.
இவையென்பது தன் முன்னுள்ளவற்றை. உவை யென்பது முன்னின்றவற்றிற் சிறிது சேயவற்றை. அவையென்பது அவற்றினுஞ் சேயவற்றை. முன் சொல்லப்பட்டவையே யன்றி இதனையுங் கூறுகின்றேனென்பது கருத்தாகலின், இந்திடமுமென்னுமும்மை இறந்தது தழீஇயவெச்ச வும்மை. உந்திடம் இந்திடமெனச் சுட்டீறு திரிந்து நின்றன. பண்ணிவர் மொழி பண்போலுமொழி. இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடங் காட்டுதல். 223

குறிப்புரை :

16.30 பதிபரிசுரைத்தல் பதிபரிசுரைத்தல் என்பது நகர் காட்டிக்கொண்டு சென்று அந்நகரிடைப்புக்கு அவ்விடத்துள்ள குன்றுகள், வாவிகள், பொழில்கள், மாளிகைகள், தெய்வப்பதி இவையெல்லாந் தனித்தனி காட்டி, இதுகாண் நம்பதியாவதெனத் தலைமகளுக்குத் தலைமகன் பதிபரிசு காட்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.30. கண்ணிவர் வளநகர் கண்டுசென் றடைந்து
பண்ணிவர் மொழிக்குப் பதிபரி சுரைத்தது.

பண் :

பாடல் எண் : 31

மயிலெனப் பேர்ந்திள வல்லியி
னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்
கொலாமின் றயர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மயில் எனப் பேர்ந்து மயில்போலப் புடை பெயர்ந்து; இள வல்லியின் ஒல்கி இளைய கொடிபோல நுடங்கி; மெல் மான் விழித்து மெல்லிய மான்போல விழித்து; குயில் எனப் பேசும் எம் குட்டன் எங்குற்றது குயில்போலச் சொல்லும் எமது பிள்ளை யாண்டையது; என் நெஞ்சகத்தே பயில் என என் னெஞ்சின் கண்ணே தனக்குப் பயிற்சியென்று பலர் சொல்லும் வண்ணம்; பேர்ந்து அறியாதவன் தில்லைப் பல்பூங்குழலாய் என் னெஞ்சினின்று நீங்கியறியாதவனது தில்லையிற் பலவாகிய பூக்களையுடைய குழலையுடையாய்; அயில் எனப்பேரும் கண்ணாய் வேல் போலப் பிறழுங் கண்ணையுடையாய்; இன்று அயர்கின்றது என்கொலாம் நீ யின்று வருந்துகின்றதென்னோ? எ-று.
எங்குற்றதென்பது ஒருசொல். என்னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறியாதவனென் பதற்கு என்னெஞ்சின்கண்ணே நீ பயில வேண்டுமென்றொரு கால் யான் கூறப் பின்னீங்கியறியாதவனென் றுரைப்பினுமமையும். கண்ணிக்கென்பது பாடமாயின், அவள் காரணமாகப் போலும் இவள் வருந்துகின்றதென்று உய்த்துணர்ந்து அவட்கு நீ வருந்துகின்ற தென்னென வினாவிற்றாக வுரைக்க. மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகட்குற்றுதுணர்தல். 224

குறிப்புரை :

16.31 செவிலிதேடல் செவிலிதேடல் என்பது இருவரையும் வழிப்படுத்தி வந்து பிரிவாற்றாதுகவலாநின்ற தோழியை, எம்பிள்ளை எங்குற்றது? நீ கவலாநின்றாய்; இதற்குக்காரண மென்னோ வென்று வினாவிச் செவிலி தலைமகளைத் தேடாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.31. கவலை யுற்ற காதற் றோழியைச்
செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது.

பண் :

பாடல் எண் : 32

ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
யாவருக் கும்மெளிதாந்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா
ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
லாயத்தெம் வாணுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆள் அரிக்கும் அரிதாய் ஆட்செய்தல் அரிக்கு மரிதாய்; தில்லை யாவர்க்கும் எளிதாம் தாளர் இக்குன்றில் அவ்வாட் செய்தல் தில்லைக்க ணெல்லார்க்கு மெளிதாந் தாளை யுடையவரது இம்மலையிடத்து; தழல் திகழ் வேல் கோள் அரிக்கு தழல் விளங்கும் வேலையுடைய கோள்வல்ல அரிமாவிற்கு; நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர்த் தார் மறுதலை போல்வாரொருவரது நிறத்தையுடைய மலரானியன்றதாரை; வாள் அரிக் கண்ணி எம் வாள் நுதல் வாள் போலுஞ் செவ்வரி பரந்த கண்ணையுடையளாகிய எம்முடைய வாணுதல்; வண்டல் ஆயத்துத் தன்பாவைக்கு மேவிக் கொண்டாள் வண்டலைச் செய்யு மாயத்தின் கண்ணே தன்பாவைக்கென்று அமர்ந்துகொண்டாள்; இத்துணையு மறிவேன் எ-று.
ஆளரி ஒருகால் நரசிங்கமாகிய மாலெனினுமமையும். கோளரிக்கு நிகரன்னாரென்பதற்குக் கோளரிக்கொப்பாகிய அத்தன்மையரெனினுமமையும். இக்குன்றின்கண் வண்டலாயத்து மேவிக் கொண்டாளெனவியையும். தாளரிக்குன்றினென்றதனான், இது தெய்வந்தரவந்ததென்றும், பாவைக்கென்றதனான் அறியாப் பருவமென்றும், கோளரிக்கு நிகரன்னாரென்றதனான் இவட்குத் தக்காரென்றும், மேவியென்றதனாற் பயிர்ப்பு நீங்கிற்றென்றும், தாரென்றதனான் மெய்யுற்றதனோடொக்கு மென்றுங் கூறினாளாம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்குணர்த்துதல்.225

குறிப்புரை :

16.32 அறத்தொடுநிற்றல் அறத்தொடு நிற்றல் என்பது தேடாநின்ற செவிலிக்கு, நீ போய் விளையாடச்சொல்ல யாங்கள் போய்த் தெய்வக் குன்றிடத்தே யெல்லாருமொருங்கு விளையாடாநின்றேமாக, அவ்விடத்தொரு பெரியோன் வழியே தார்சூடிப்போயினான்; அதனைக்கண்டு நின் மகள் இத்தாரையென்பாவைக்குத் தாரு மென்றாள்; அவனும் வேண்டியது மறாது கொடுப்பானாதலிற் பிறிதொன்று சிந்தியாது கொடுத்து நீங்கினான்; அன்றறியாப் பருவத்து நிகழ்ந்ததனை ``உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்- கொண்டார்க் குரியர் கொடுத்தார்`` என்பதனையின் றுட்கொண் டாள் போலும்; யானித்துணையு மறிவேனென்று உடன்போக்குத் தோன்றக் கூறி, தோழி அறத்தொடு நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.32. சுடர்க்குழைப் பாங்கி படைத்துமொழி கிளவியிற்
சிறப்புடைச் செவிலிக் கறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 33

வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
யாவன எம்மனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்: வடுத்தான் வகிர் மலர் கண்ணிக்குத் தக்கின்று அறமேயாயினும் வடுத்தான் வகிரப்பட்டாற்போலும் மலர்ந்த கண்ணையுடையாட்கு இம்முதுக்குறைவு தகாது; ஆயினும், எம் அனைக்கு இனி ஆவன எம்மனைக்கு இனி நம்மாற் செய்யத் தகுவன; எடுத்தாற்கு இனியனவே எடுத்தாற்கினியனவே; வேறில்லை எ-று.
தக்கன் முத்தீக் கெடுத்தான் தக்கனது முத்தீயைக் கெடுத்தவன்; கெடல் இல் தொல்லோன் ஒருஞான்றுங் கேடில்லாத பழையோன்; தில்லைப் பல் மலர் கேழ்கிளர அவனது தில்லைக்கட் பலவாகியமலர் நிறங்கிளர; மடுத்தான் குடைந்து அன்று அழுங்க மடுவைத் தான் குடைந்து அன்று கெடப்புக; அழுங்கித் தழீஇமகிழ்வுற்று எடுத்தாற்கு அதுகண்டிரங்கி யணைத்து இவ்வாறுதவி செய்யப்பெறுதலான் மகிழ்ந்தெடுத்தாற்கெனக் கூட்டுக.
தில்லைக்கணெடுத்தாற்கெனவியையும். வகிர்மலர் கண்ணி யென்புழிச் செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறினார். வகிரென்னு முவமவினை ஒற்றுமை நயத்தால் உவமிக்கப்படும் பொருண்மேலேறிநின்றது. தானென்பதனை அசைநிலையாக்கி வடுவகிர்போலுங் கண்ணென் றுரைப்பாருமுளர். நீடாயழுங்கல் நெடிதா யழுங்கல். மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த அழுகை. பயன்: தலைமகளது கற்பினைப் பாராட்டி ஆற்றாமை நீங்குதல். 226

குறிப்புரை :

16.33 கற்புநிலைக்கிரங்கல் கற்புநிலைக்கிரங்கல் என்பது தோழி யறத்தொடுநிற்பக் கேட்டசெவிலி இஃதறமாயினும் இவள் பருவத்திற்குத்தகாது; இதுகிடக்க, இனியவளுக்கு நன்மையாவது அவனை வழிபடுவ தல்லது பிறிதில்லை யெனக் கற்புநிலைக் கிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
16.33. விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக்
கோடா யுள்ள நீடா யழுங்கியது.

பண் :

பாடல் எண் : 34

முறுவல்அக் கால்தந்து வந்தென்
முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
லாம்முழு துஞ்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன்
சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகந் தான்படர்
வானா மொளியிழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஒளி இழை ஒளியிழை; அக்கால் முறுவல் தந்து உள்ளத்தொன்றுடையளாதலின் அக்காலத்து முறுவலை யெனக்குத் தந்து; வந்து என் முலை முழுவித் தழுவி வந்து எனது முலையை முத்தங்கொண்டு என்னைப் புல்லி; சிறுவலக்காரங்கள் செய்த எல்லாம் அவ்வாறு சிறியவிரகுகள் செய்தவெல்லாம்; முழுதும் சிதையத் தெறு வலக் காலனைச் செற்றவன் சிலம்பலம் சிந்தியார் எல்லாப்பொருளுமழிய வெகுளுதல் வல்ல அக்காலனை வெகுண்ட வனது சிற்றம்பலத்தைக் கருதாதார்; உறு வலக்கானகம் தான் படர்வான் ஆம் சேரும் வலியகாட்டைத் தான் செல்லவேண்டிப் போலும்! அக்காலத்திஃதறிந்திலேன்! எ-று.
எனக்கு வெளிப்படாமற் பிரிவார்செய்வன செய்தா ளென்னுங் கருத்தான் வலக்கார மென்றாள். குறித்துணர்வார்க்கு வெளிப்படு மென்னுங் கருத்தாற் சிறுமைப்படுத்தாள். தெறும் வெற்றியையுடைய காலனெனிமமையும். 227

குறிப்புரை :

16.34 கவன்றுரைத்தல் கவன்றுரைத்தல் என்பது கற்புநிலைக் கிரங்காநின்ற செவிலி, நெருநலைநாள் முறுவலைத்தந்து முலைமுழுவித் தழுவி நீ சிறிய விரகுகள் செய்தவெல்லாம் இன்றவ் வலியகாட்டைச் செல்ல வேண்டிப் போலும்; இதனை யப்பொழுதே யறியப்பெற்றி லேனென்று அவணிலை நினைந்து கவலாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.34. அவள்நிலை நினைந்து
செவிலி கவன்றது.

பண் :

பாடல் எண் : 35

தாமே தமக்கொப்பு மற்றில்
லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற்
கானிற் சிலம்படிபாய்
ஆமே நடக்க அருவினை
யேன்பெற்ற அம்மனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தாமே தமக்கொப்பாக வேறோரொப்பில்லாதவரது தில்லையில்; தண் அனிச்சப் பூமேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் குளிர்ந்த வனிச்சப்பூவின்மேன் மிதிப்பினும் நடுங்கித் தன்னடிகள் பண்டு கொப்புட்கொள்ளும் நங்காய்; எரியும் தீமேல் அயில்போல் செறி பரல் கானில் எரியாநின்ற தீயின்மேற் பதித்த வேல்போலச் செறிந்த பரலையுடைய காட்டின்கண்; சிலம்பு அடி பாய் சிலம்பை யுடைய அவ்வடியைப்பாவி; அருவினையேன் பெற்ற அம் மனைக்கு அரியவினையையுடையேன் பெற்ற அன்னைக்கு; நடக்க ஆமே இன்று நடக்க வியலுமோ! ஆண்டென் செய்கின்றாள்! எ-று.
செறிவு ஒத்தபண்பன்று. நிலத்தைச் செறிந்த பரலெனினு மமையும். அயில்போல் செறிபரலென்பது பாடமாயின், அயில் போலுஞ் செறிபரலென்றுரைக்க, இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 228

குறிப்புரை :

16.35 அடிநினைந்திரங்கல் அடிநினைந்திரங்கல் என்பது நிலைமை நினைந்து கவலாநின்ற செவிலி, அனிச்சப்பூமேன் மிதிப்பினும் ஆற்றாது பதைத்துப் பொங்காநின்ற வடிகள் இன்று செறிந்த பரலையுடைய காட்டின்கட் பாவியவாறென்னோவென அவளடி நினைந் திரங்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
16.35. வெஞ்சுர மும்மவள் பஞ்சிமெல் லடியுஞ்
செவிலி நினைந்து கவலை யுற்றது.

பண் :

பாடல் எண் : 36

தழுவின கையிறை சோரின்
தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
பேதை யறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்டம்
பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
யாலுற்றுத் தேய்வித்ததே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தழுவின கை இறை சோரின் தன்னைத் தழுவின என்கை சிறிதுசோருமாயின்; தமியம் என்றே நையாத் தளர்வுற்று நாந்தமிய மென்றேகருதி நைந்து உள்ளந்தளர்ந்து; அழுவினை செய்யும் அம் சொல் பேதை அறிவு அழுந்தொழிலைச் செய்யும் அழகிய சொல்லையுடைய பேதையதறிவு; விண்ணோர் குழுவினை உய்ய நஞ்சு உண்டு விண்ணோரது திரள்பிழைக்கத் தானஞ்சை யுண்டு; அம்பலத்துக் குனிக்கும் பிரான் செழுவின தாள் அம்பலத்தினின்று கூத்தாடு மிறைவனுடைய வளவியதாள்களை; பணியார் பிணியால் உற்றுத் தேய்வித்தது பணியாதார் பிணிபோலும் பிணியான் மிக்கு என்னைக் குறைவித்தது எ-று.
உய்ய நஞ்சுண்டென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீர்மைப் பட்டு உய்வித்து என்னும் பொருளவாய், குழுவினை யென்னு மிரண்டா வதற்கு முடிபாயின. அறிவைக்கருத்தாவாகவும் பிணியைக் கருவியாகவுங் கொள்க. முன்னியது - வந்தது. மெய்ப்பாடும் பயனும் அவை. #9; #9; #9; #9; #9; 229

குறிப்புரை :

16.36 நற்றாய்க்குரைத்தல் நற்றாய்க்குரைத்தல் என்பது அடிநினைந் திரங்காநின்ற செவிலி, கற்புமுதிர்வு தோன்ற நின்று என்னை யிடைவிடா மற்றேடி யழாநின்ற பேதையறிவு இன்றென்னைத் தேய்வியா நின்றதென்று அவள் உடன்போனமை ஆற்றாது நற்றாய்க்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.36. முகிழ்முலை மடந்தைக்கு முன்னிய தறியத்
திகழ்மனைக் கிழத்திக்குச் செவிலி செப்பியது.

பண் :

பாடல் எண் : 37

யாழியன் மென்மொழி வன்மனப்
பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென்
றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
யாரின் அருஞ்சுரமே.

பொழிப்புரை :

இதன் பொருள்: யாழ் இயல் மென் மொழி வல் மனப் பேதை யாழோசையினியல்பு போலும் இயல்பையுடைய மெல்லிய மொழியையும் வலியமனத்தையுமுடையபேதை; ஒரு ஏதிலன் பின் ஒரு நொதுமலன்பின்னே; தோழியை நீத்து தன்றோழியைவிட்டு; என்னை முன்னே துறந்து என்னை முற்காலத்தே நீங்கி; இம் மூதூர் மறுக இம்மூதூரிலுள்ளார் அலரெடுத்துக் கலங்க; துன்னார்கள் முன்னே சேராதார் முன்னே; மால் வணங்க அன்று ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் திருமால் வணங்குதலான் அன்றாழியைக் கொடுத்தவனது அம்பலத்தைப் பணியாதாரைப்போல; அரும் சுரம் சென்றாள் அரிய சுரத்தைச் சென்றாள்; இனி யெங்ஙனமாற்றுகேன் எ-று.
இற்செறிக்கப்பட்ட பின்னர்ப் பராமுகத்த ளென்பதனை உடன் போன பின்ன ருணர்ந்தாளாகலின், என்னை முன்னே துறந்தென் றாள். வாழி: அசைநிலை. மெய்ப்பாடும், பயனும் அவையே. 230

குறிப்புரை :

16.37 நற்றாய்வருந்தல் நற்றாய் வருந்தல் என்பது உடன்போனமைகேட்டு உண் மகிழ்வோடு நின்று, ஓரேதிலன் பின்னே தன் தோழியை விட்டு, என்னையு முன்னே துறந்து, சேராதார் முன்னே ஊர் அலர் தூற்ற அருஞ்சுரம் போயினாள்; இனி யானெங்ஙனமாற்றுவேனென நற்றாய் பிரிவாற்றாது வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.37. கோடாய் கூற
நீடாய் வாடியது.

பண் :

பாடல் எண் : 38

கொன்னுனை வேல்அம் பலவற்
றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ்
சேரு மெனஅயரா
என்னனை போயினள் யாண்டைய
ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென்
னுள்ளத்தை யீர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கொல் நுனை வேல் அம்பலவற் றொழாரின் கொற்றொழிலமைந்த நுனையையுடைத்தாகிய சூல வேலையுடைய அம்பலவனை வணங்காதாரைப்போல; கொடியோள் குன்றம் என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என கொடியாள் மலைநெறியை யெவ்வண்ணஞ்சென்றாள் ஆண்டெவ் வண்ணந் தங்குமென்றியான்கூற; அயரா தன்றாய் செலவுணர்ந்து மயங்கி; என் அனை போயினள் என்னுடைய அன்னை போயினாள்; யாண்டையள் அவளெவ்விடத்தாள்; என்னைப் பருந்து அடும் என்று இனி யென்னைப் பருந்து கொல்லு மென்று சொல்லி; என் அனை போக்கு அன்றிக் கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றது என்னுடைய வன்னை போக்கொழிய அவள் கிளியென் னெஞ்சை யீராநின்றது எ-று.
என்னணஞ் சென்றனள் என்னணஞ் சேருமென்று நினைந்த யராவெனக் கிளிமேலேறவுரைப்பினு மமையும். என்னன்னை போக்கன்று ஈர்கின்ற திக்கிள்ளையென மறுத்துரைப்பினு மமையும். மெய்த்தகை - மெய்யாகிய கற்பு; புனையாவழகுமாம். மெய்ப்பாடும் பயனும் அவை. 231

குறிப்புரை :

16.38 கிளிமொழிக்கிரங்கல் கிளிமொழிக்கிரங்கல் என்பது பிரிவாற்றாது வருந்தா நின்றவள் அவள்போன போக்கன்றி, இக்கிள்ளை என்னெஞ்சை யீராநின்றதெனத் தன்றாய் செலவுணர்ந்து வருந்தாநின்ற கிளியினது மொழிகேட் டிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
16.38. மெய்த்தகை மாது வெஞ்சுரஞ் செல்லத்
தத்தையை நோக்கித் தாய்புலம் பியது.

பண் :

பாடல் எண் : 39

பெற்றே னொடுங்கிள்ளை வாட
முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந்
தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந்
தேன்சுடர் வானவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுடர் வானவனே சுடராகிய வானவனே; பெற்றேனொடும் கிள்ளை வாட பெற்றவென்னோடுந்தன் கிளியிரு ந்து வருந்த இதனையுந்துறந்து; முதுக்குறை பெற்றிமிக்கு அறிவு முதிர்ந்த வியல்புமிக்கு; நல் தேன் மொழி நல்ல தேன்போலு மொழியை யுடையாள்; அழல் கான் நடந்தாள் முகம் அழலை யுடைய காட்டின் கணடந்தவளது முகத்தை; மல்தேன் மலரின் மலர்த்து நின்வெங்கதிர்களான் வாட்டாது வளவியவண்டை யுடைய தாமரைமலர்போல மலர்த்துவாயாக; இரந்தேன் நின்னை யானி ரந்தே னிதனை எ-று.
அணுகப் பெற்றேன் நான் ஒருவாற்றாற் றன்னையணுகப் பெற்றேனாகியயான்; பிறவி பெறாமல் செய்தோன் தில்லைத்தேன் பிறங்கு மற்றேன்மலர் பின் பிறவியைப் பெறாத வண்ணஞ் செய் தவனது தில்லையின் மதுமிகு மற்றேன் மலரெனக் கூட்டுக.
பெற்றேனொடுமென்பது எண்ணொடுவுமாம். தணிக்க வென்னு மிறுதியகரங் குறைந்துநின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை. 232

குறிப்புரை :

16.39 சுடரோடிரத்தல் சுடரோடிரத்தல் என்பது கிளிமொழி கேட்டிரங்கா நின்ற வள், பெற்றவென்னோடு தன்கிளியிருந்து வருந்த இதனையுந் துறந்து அறிவுமுதிர்ந்து, அழற்கடஞ் சென்றாண்முகத்தை நின் கதிர்களான் வாட்டாது தாமரைமலர்போல மலர்த்துவாயாக வெனச் சுடரோடிரந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.39. வெஞ்சுரந் தணிக்கெனச் செஞ்சுட ரவற்கு
வேயமர் தோளி தாயர் பராயது.

பண் :

பாடல் எண் : 40

வைம்மலர் வாட்படை யூரற்குச்
செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
லாந்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
றெண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ராற்கண் புதைத்துப்
பதைக்குமெங் கார்மயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தில்லையான் மலை வாய் தில்லையா னுடைய இம்மலையிடத்து; மொய்ம் மலர்க் காந்தளைப் பாந்தள் என்று எண்ணி மொய்ம்மலர்க் காந்தளது பூவினைப் பெரும்பாம் பென்று கருதி; துண்ணென்று ஒளித்து துண்ணென்று மறைந்து; கைம் மலரால் கண் புதைத்துப் பதைக்கும் கைம் மலர்களாற் கண்புதைத்து நடுங்கும்; எம் கார் மயில் என் மைம்மலர் வாள் கண்ணி எம்முடைய கார்மயிலாகிய என்னுடைய மையழகு பெற்ற வாள்போலுங் கண்ணையுடையாள்; வைம்மலர் வாள் படை ஊரற்கு கூர்மை யையுடைய மலரணிந்த வாளாகிய படைக்கலத்தையுடைய வூரனுக்கு; செய்யும் குற்றேவல் வல்லள்கொல் தான்செய்யத்தகுங் குற்றேவல்களைக் கற்பிக்கு முதுபெண்டிருமின்றித் தானே செய்ய வல்லளாமோ! ஆண்டென் செய்கின்றாள்! எ-று.
மற்றென்பது அசை. மொய்ம்மலர்க்காந்தள் முதலாகிய தன் பொருட்கேற்ற வடையடுத்து நின்றது. பிரிவினான் மகண்மேற் செல்லுங் கழிபெருங் காதலளாதலின், எங்கார்மயிலென்றும் என்வாட் கண்ணி யென்றும், பல்காற்றன்னோடடுத்துக் கூறினாள். தில்லையான் மலைவாய்ப் பதைக்குமெனவியையும். நோக்கென்னு மலங்காரமாய்ப் பாம்பிற் கஞ்சுமயிலென இல்குணமடுத்து வந்ததென்பாரு முளர். மெய்ப்பாடும் பயனும் அவையே. 233

குறிப்புரை :

16.40 பருவ நினைந்து கவறல் பருவ நினைந்து கவறல் என்பது சுடரோடிரந்து வருந்தா நின்றவள், கற்பிக்குமுதுபெண்டீரு மின்றித் தானவனுக்குச் செய்யத் தகுங் குற்றேவல் செய்யவல்லள்கொல்லோ வென்று அவளது பருவ நினைந்து கவலாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.40. முற்றா முலைக்கு
நற்றாய் கவன்றது

பண் :

பாடல் எண் : 41

வேயின தோளி மெலியல்விண்
ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண்
ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
நாடுவன் பொன்னினையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: விண்ணோர் விண்ணவர்; தக்கன் வேள்வியின் வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத்தானைப் பழித்து தக்கனது வேள்வியின்கட் பரந்த புகழையுடையனாகிய அம்பலத்தானை யிகழ்ந்துகூறி; மும்மைத் தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து மூன்றன்றொகுதியாகிய தீயினது வலியையுந் தலையையுங் கண்ணையுமிழந்து; திசை திசை தாம் போயின எல்லை எல்லாம் புக்கு திசை திசை தோறுந் தாம்போயின வெல்லையெல்லாம் புக்கு; பொன்னினை நாடுவன் பொன்னினைத் தேடுவேன்; வேயின தோளி வேயின் றன்மைய வாகிய தோள்களையுடையாய்; மெலியல் நீ மெலியவேண்டா எ-று.
தொக்கபொருட்குந் தொகுதிக்கு மொற்றுமையுண்மையின், ஆற்றன் முதலாயினவற்றை யிழத்தலை விண்ணோர் மேலேற்றினார். திகைதிகை யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: நற்றாயை யாற்றுவித்தல்.
``ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்
தாமே செல்லுந் தாயருமுளரே``
-தொல். அகத்திணை. 40
என்றாராகலிற் செவிலிதேடப் பெறும். அலங்காரம்: முயற்சி விலக்கு. 234

குறிப்புரை :

16.41 நாடத் துணிதல் நாடத்துணிதல் என்பது பருவநினைந்து கவலாநின்ற தாய்க்கு, நீ கவன்று மெலியவேண்டா, யான் அவள் புக்கவிடம் புக்குத் தேடுவேனெனக் கூறி, செவிலி அவளை நாடத் துணியாநிற்றல். அதற்குச்செய்யுள்
16.41. கோடாய் மடந்தையை
நாடத் துணிந்தது.

பண் :

பாடல் எண் : 42

பணங்களஞ் சாலும் பருவர
வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
இன்னே வரக்கரைந்தால்
உணங்கலஞ் சாதுண்ண லாமொள்
நிணப்பலி யோக்குவல்மாக்
குணங்களஞ் சாற்பொலி யுந்நல
சேட்டைக் குலக்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாக் குணங்கள் அஞ்சாற் பொலியும் நல சேட்டைக் குலக்கொடியே பெரியகுணங்களைந்தான் விளங்கும் நல்ல சேட்டையையுடைய சீரியகொடியே; பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன படங்க ளைந்து ஆடாநிற்கும் பரிய வரவைச் சாத்தியவனது தில்லையைப் போலும்; மணம் கொள் அம் சாயலும் மன்னனும் நறுநாற்றம் பொருந்திய அழகிய மென்மையை யுடையாளும் மன்னனும்; இன்னே வரக் கரைந்தால் இப்பொழுதே வரும்வண்ணம் நீயழைத்தால்; உணங்கல் அஞ்சாது உண்ணலாம் யா மோப்பாமையின் உணங்கலை யஞ்சாதிருந்து நினக்குண்ணலாம்; ஒண்நிணப் பலி ஓக்குவல் தெய்வத்திற்குக் கொடுத்த நல்ல நிணத்தையுடைய பலியையும் நினக்கே வரைந்து வைப்பேன்; அவ்வாறு கரைவாயாக எ-று.
ஓக்குவ லென்பதற்குத் தருவேனென் றுரைப்பினுமமையும். குணங்கள் ஐந்தாவன மறைந்த புணர்ச்சித்தாதலும், கலங்காமையும், பொழுதிறவா திடம்புகுதலும், நெடுகக் காண்டலும், மடியின்மையும், சேட்டை உறுப்பைப் புடைபெயர்த்தல். கொடி காக்கை. நல சேட்டை குலக்கொடியே யென்று பாடமோதி, சேட்டையாகிய தெய்வத்தின் நல்ல கொடியேயென் றுரைப்பாருமுளர். சொற்புட்ப ராயது வருவது சொல்லுதலையுடைய புள்ளை வேண்டிக் கொண்டது. 235

குறிப்புரை :

16.42 கொடிக்குறிபார்த்தல் கொடிக்குறி பார்த்தல் என்பது செவிலி நாடத்துணியாநிற்ப, அவ்விருவரையு மிப்பொழுதே வரும்வண்ணம் நீ கரைந்தால், நினக்கு உணங்கலை யஞ்சாதிருந் துண்ணலாம்; அதுவன்றித் தெய்வத்திற்கு வைத்த நிணத்தை யுடைய பலியையும் நினக்கே வரைந்து வைப்பேன்; அவ்வாறு கரைவாயாகவென நற்றாய் கொடிக்குறி பாராநிற்றல். அதற்குச் செய்யுள்
16.42. நற்றாய் நயந்து
சொற்புட் பராயது.

பண் :

பாடல் எண் : 43

முன்னுங் கடுவிட முண்டதென்
தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக்
கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
நான்மறை யுத்தமரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால் பரந்து செல்லுங் கடியவிடத்தையுண்ட தென்றில்லைக் கண்ணானாகிய எல்லார்க்கு முன்னாயவன தருளால்; இக்கடிமனைக்குக் கடி யாம் அயர இக்காவலையுடைய மனையின் கண் மணத்தை யாஞ்செய்ய; மன்னும் கடிமலர்க் கூந்தலை இன்னும் தான் பெறுமாறும் உண்டேல் நிலைபெற்ற கடிமலரையுடைய கூந்தலையுடையாளை இன்னுந் தான் பெறுமாறு முண்டாயின்; நால்மறை உத்தமரே நான்மறையையுடைய தலைவீர்; உன்னுங்கள் நும் முள்ளத்தானாராய்மின்கள்; தீது இன்றி ஓதுங்கள் ஆராய்ந்து குற்றந்தீரச் சொல்லுமின்கள் எ-று.
அருளாற் பெறுமாறுமுண்டேலென வியையும். தேவர் சென்றிரப்ப நஞ்சை நினைத்தலுங் கைம்மலர்க்கண் வந்திருந்த தாகலின், கருதப் படும் வெவ்விட மெனினுமமையும். யாங்கடியயரத் தான் கடிமலர்க் கூந்தலைப் பெறுமாறு முண்டேலென்றுரைப்பினு மமையும். இப் பொருட்குத் தானென்றது தலைமகனை. தீதின்றியுன் னுங்களெனினுமமையும். உய்த்துணர்வோரை வெளிப்படாத பொருளையேதுக்களாலுணர்வோரை. இவையிரண்டற்கும் மெய்ப் பாடு: மருட்கை. பயன்: எதிர்காலச் செய்கை யுணர்தல். 236

குறிப்புரை :

16.43 சோதிடங் கேட்டல் சோதிடங் கேட்டல் என்பது கொடிநிமித்தம் பெற்று, இக்காவன் மனையின்கண்ணே யாங்கள் மணஞ்செய்ய அவ்விரு வரையும் இன்னும் பெறுமாறுண்டாயின், ஆராய்ந்து சொல்லுமினென அறிவாளரைக் கிட்டிச் செவிலி சோதிடங் கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.43. சித்தந் தளர்ந்து தேடுங் கோடாய்
உய்த்துணர் வோரை உரைமி னென்றது.

பண் :

பாடல் எண் : 44

தெள்வன் புனற்சென்னி யோன்அம்
பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
யென்று கருதுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர் தெள்ளிய பெரியபுனலையுடைத்தாகிய சென்னியை யுடையவன தம்பலத்தைக் கருதாதாரது இனஞ்சேரும்; முள்வன் பரல் முரம்பத்தின் இங்கிவை முள்ளையும் வலியபரலையு முடைய இம்முரம்பின்கட்கிடந்த இவை; முன்செய் வினையேன் எடுத்த ஒள்வன் படைக் கண்ணி சீறடி முற்காலத்துச் செய்யப்பட்ட தீவினையையுடைய யானெடுத்து வளர்த்த ஒள்ளிய வலிய படைபோலுங் கண்ணினையுடையாளுடைய சிறிய வடிச்சுவடாம்; உங்குவை அக் கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவன் இனி உவற்றை அக்கள்வனாகிய பகடுபோலும் வலியை யுடையானுடைய அடிச்சுவடென்றுய்த்துணரா நின்றேன் எ-று.
இங்கிவை உங்குவை யென்பன ஒருசொல். 237

குறிப்புரை :

16.44 சுவடுகண்டறிதல் சுவடுகண்டறிதல் என்பது சோதிடம் பெற்றுச் செல்லா நின்றவள், இம்முரம்பின்கட் கிடந்த இவை தீவினையே னெடுத்து வளர்த்த மாணிழை சீறடி: உவை அக்கள்வ னடியாமெனச் சுவடு கண்டறியாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.44. சுவடுபடு கடத்துச்
செவிலிகண் டறிந்தது.

பண் :

பாடல் எண் : 45

பாலொத்த நீற்றம் பலவன்
கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
மாணிழை கால்மலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கோலத் தவிசின் மிதிக்கின் கோலத்தையுடைய தவிசின்மேன் மிதிப்பினும்; பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய் பாலொத்த நீற்றையுடைய அம்பலவனது கழல் களைப் பணியாதாரது வருத்தம்போலும் வருத்தம்வாய்ப்ப; பதைத்து அடி கொப்புள் கொள்ளும் நடுங்கி அவ்வடிகள் பண்டு கொப்புளங் கொள்ளும்; வினையேன் பெற்ற மாண் இழை கால்மலர் தீவினை யேன் பெற்ற மாணிழையுடைய அத்தன்மையவாகிய காலாகிய மலர்கள்; இன்று வேல் ஒத்த வெம் பரற் கானத்தின் ஓர் விடலைபின் போம் கால் ஒத்தன இன்று வேலையொத்த வெய்யபரலையுடைய காட்டின்கண் ஒருவிடலை பின் போதற்குத் தகுங்காலை யொத்தன; இதனையெவ்வாறு ஆற்றவல்லவாயின! எ-று.
தவிசு தடுக்குமுதலாயின. கான்மலரென அவற்றை மலராகக் கூறினமையாற் காலொத்தனவென வுவமித்தாள். பிணியாயென்றும், பிணிபோலென்றும், காலொத்திராவென்றும் பாடமோதுவாருமுளர். காலென்றது அடியை. 238

குறிப்புரை :

16.45 சுவடுகண்டிரங்கல் சுவடு கண்டிரங்கல் என்பது சுவடுகண்டறிந்து அவ்விடத் தே நின்று தவிசின்மேன் மிதிப்பினும் பதைத்துக் கொப்புட் கொள்ளாநின்ற இக்கான்மலர், இன்றொரு விடலைபின்னே போதற்குத் தகுங்காலை எவ்வாறொத்தனவென அடிச்சுவடுகண் டிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
16.45. கடத்திடைக் காரிகை அடித்தலங் கண்டு
மன்னருட் கோடா யின்ன லெய்தியது.

பண் :

பாடல் எண் : 46

பேதைப் பருவம் பின்சென்
றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின்
றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப்
பற்குரற் பொற்றொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
போதிற் பொலியும் தொழில் புலிப்பற் குரல் பொற்றொடி பூவின்கட்பொலியுந் தொழிலினையும் புலிப்பல்லை யுடைய கழுத்தினையுமுடைய பொற்றொடியாய்; பேதைப் பருவம் சென்றது பின் பேதையாகிய பருவங்கழிந்தது சுரம் போந்தபின்; முன்றில் எனைப் பிரிந்தால் ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் இவ்வாறறியாப் பருவத்தளாய் முன்றிற்க ணென்னைச் சிறிது நீங்கிற் றமியளாய் நடுங்குதலான் ஊதையாற் சுழலும் வல்லியை யொப்பாள்; முத்தன் தில்லை அன்னாள் முத்தனது தில்லையை யொப்பாள்; ஏதில் சுரத்து அயலானொடு இன்று ஏகினள் அவள் வெம்மை முதலாயினவற்றாற் றனக்கென்று மியல்பில்லாத சுரத்தின் கண் அயலானொருவனோடு இன்றுபோயினாள்; கண்டனையே அவளை நீ கண்டாயோ? அவளெவ்வண்ணம்போயினாள்? எ-று.
தில்லையுன்னாரென்பதூஉம் பாடம். பெற்று வினாய தென்பதூஉம் பாடம். 239

குறிப்புரை :

16.46 வேட்டமாதரைக் கேட்டல் வேட்டமாதரைக் கேட்டல் என்பது சுவடுகண்டிரங்கா நின்று, அதுவழியாகச் செல்லாநின்றவள், இவ்வாறு அறியாப் பருவத்தளாய்த் தனக்கியைபில்லாத சுரத்தின்கண் அயலா னொருவனுடன் போந்தாள்; அவளை நீ கண்டாயோவென வேட்ட மாதரைக் கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.46. மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப்
பின்வரு செவிலி பெற்றி வினாயது.

பண் :

பாடல் எண் : 47

புயலன் றலர்சடை ஏற்றவன்
தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை
வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று
வாழி எழிற்புறவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புயல் அன்று அலர் சடை ஏற்றவன் நீரை அன்று விரிந்த சடையின்கணேற்றவன்; தில்லைப் பொருப்பரசி பயலன் தில்லைக்கணுளனாகிய பொருப்பிற் கரசியது கூற்றையுடையான்; தனைப் பணியாதவர் போல் மிகு பாவம் செய்தேற்கு அவன் றன்னைப் பணியாதாரைப் போல மிக்க பாவத்தைச் செய்தேற்கு; அயலன் தமியன் அம் சொல் துணை மாதர் வெஞ்சுரம் சென்றால் ஏதிலனுமாய்த் தமியனுமா யவனது அழகியசொல்லே துணையாக மாதர் வெய்ய சுரத்தைச் சென்றால்; எழில் புறவே எழிலையுடைய புறவே; இயல் அன்று எனக்கிற்றில்லை இது தகுதி யன்றென்று கூறிற்றிலை; வாழி வாழ்வாயாக எ-று.
இது கூறிற்றாயின் அவள் செல்லாளென்பது கருத்து பொருப்பரையன் மகளாதலிற் பொருப்பரசியெனத் தந்தை கிழமை மகட்குக் கூறப்பட்டது. பாவஞ் செய்தேற்கியலன்றெனக்கிற்றிலை யெனக்கூட்டுக. வெஞ்சுரமாதல் கண்டாலென்பது பாடமாயின், ஆதலென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. வெஞ்சுரம் போதல் கண்டாலென்பதூஉம் பாடம். 240

குறிப்புரை :

16.47 புறவொடு புலத்தல் புறவொடு புலத்தல் என்பது வேட்டமாதரைக் கேட்டு அது வழியாகச் செல்லாநின்றவள், ஏதிலனுமாய்த் தமியனுமாயவன் சொற்றுணையாக வெய்ய சுரத்தே மாதர் சென்றால், எழிலையுடைய புறவே, இது நினக்குத் தகுதியன்றென்று கூறிற்றிலை; நீ வாழ்வா யாகவெனப் புறவொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.47. காட்டுப் புறவொடு
வாட்ட முரைத்தது.

பண் :

பாடல் எண் : 48

பாயும் விடையோன் புலியூ
ரனையவென் பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக்
கடப்பவுங் கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில்
வீசவண் டோலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று
நிலாவிடும் நீள்குரவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
குழை எழில் வீச குழை எழிலைச் செய்ய; வண்டு ஓலுறுத்த வண்டுகள் நின்பாவையையோலுறுத்த; நின் பாவையும் நீயும் நின்று நிலாவிடும் நீள் குரவே அப்பாவையு நீயும் நின்று நிலாவும் பெருங்குரவே; பாயும் விடையோன் புலியூர் அனைய என்பாவை பாய்ந்து செல்லும் விடையையுடையவனது புலியூரை யொக்கும் என்னுடைய பாவை; முன்னே காயும் கடத்திடை ஆடிக் கடப்பவும் கண்டு நின்று நின்முன்னே கொதிக்குங் கடத்தின் கண் அசைந்து அதனைக்கடப்பவும் விலக்காது கண்டு நின்று; வாயும் திறவாய் அத்துணையேயன்றி இன்னவாறு நிகழ்ந்ததென்று எனக்கு வாயுந் திறக்கின்றில்லை; இது நினக்குத்தகுமோ! எ-று.
நிலாவினையென்பது பாடமாயின், வழிச்சுரஞ் செல்லக் கண்டும் வாய்திறந்து ஒன்றுங்கூறாது குழையெழில்வீச வண்டோ லுறுத்த நின்று விளங்கினையென்று கூட்டியுரைக்க. குழையெழில் வீச வண்டோலுறுத்த வென்பன அணியாகிய குழைவிளங்க வென்பதூஉஞ் செவிலிய ரோலாட்ட வென்பதூஉந் தோன்ற நின்றன. இப்பாட்டைந் திற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 241

குறிப்புரை :

16.48 குரவொடு வருந்தல் குரவொடு வருந்தல் என்பது புறவொடு புலந்து போகா நின்றவள், என்னுடைய பாவை நின்னுடைய முன்னே இக்கொதிக் குங் கடத்தைக் கடப்பக்கண்டுநின்றும், இன்னவாறு போனாளெ ன்று எனக்கு வாயுந் திறக்கின்றிலை; இது நினக்கு நன்றோவெனக் குரவொடுவாடி யுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.48. தேடிச் சென்ற செவிலித் தாயர்
ஆடற் குரவொடு வாடி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 49

சுத்திய பொக்கணத் தென்பணி
கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
மோவொர் பெருந்தகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுத்திய பொக்கணத்து சுத்தியை யுடைத்தாகிய பொக்கணத்தையும்; என்பு அணி என்பாகிய வணியையும்; கட்டங்கம் கட்டங்கமென்னும் படைக்கலத்தையும்; சூழ்சடை சூழ்ந்த சடையினையும்; பொத்திய வெண் கோலத்தினீர் மெய்ம் முழுதும் மூடிய வெண்கோலத்தையு முடையீர்; புலியூர் அம்பலவர்க்கு உற்ற பத்தியர் போல புலியூர்க்க ணுண்டாகிய அம்பலத்தையுடை யவர்கண் மிக்க பத்தியையுடையாரைப் போல; பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர் பித்தி பெருத்திறுமாந்த முலைகளையுடைய ளொருபேதை; தன் பின்வர ஓர் பெருந்தகை முன் வருமோ தனக்குப் பின்வர ஒருபெருந்தகை முன்னே வருமோ? உரைமின் எ-று.
சுத்தி பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பிவடிவாகத் தலையோட்டா னமைக்கப்படுவதொன்று. என்பணி யென்புழி இயல்பும், கட்டங்கமென்புழித் திரிபும் விகாரவகையாற் கொள்க. கடங்கமென்பது மழு. இது கட்டங்கமென நின்றது. வெண்கோலம் நீறணிந்த கோலம். பத்தியர்க்குப் பணைத்தல் உள்ளத்து நிகழும் இன்புறவால் மேனிக்கண்வரு மொளியும், ஒடுங்காமையும். இறுமாத்தல் தாழாதவுள்ளத்தராய்ச் செம்மாத்தல். முலைக்குப் பணைத்தல் பெருத்தல்; இறுமாத்தல் ஏந்துதல். வெண்பத்திய கோலத்தினீரென்ற பாடத்திற்கு வெண்ணீற்றாற் பத்திபட விட்ட முண்டத்தையுடைய கோலமென்றுரைக்க.

குறிப்புரை :

16.49 விரதியரை வினாவல் விரதியரை வினாவல் என்பது குரவொடுவருந்திச் செல்லா நின்றவள், பத்தியர்போல ஒருபித்தி தன் பின்னேவர ஒரு பெருந்தகை முன்னே செல்லக் கண்டீரோவென விரதியரை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.49. வழிவரு கின்ற மாவிர தியரை
மொழிமின்க ளென்று முன்னி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 50

வெதிரேய் கரத்துமென் தோலேய்
சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
வெறுப்பவொ ரேந்தலொடே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வெதிர் ஏய் கரத்து மூங்கிற்றண்டு பொருந்திய கையினையும்; மெல் தோல் ஏய் சுவல் மெல்லிய கலைத் தோலியைந்த சுவலினையும்; வெள்ளை நூலின் வெள்ளை நூலினையும்; கொண்மூ அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் கொண்மூவினது முழக்கம்போலு மறையொலியினையுமுடைய இந்நெறிச் செல்வீர்; ஒரு மான் ஒருமான்; தில்லை அம்பலத்துக் கதிர் ஏய் சடையோன் கரமான் என தில்லையம்பலத்தின் கணுளனாகிய மதிசேர்ந்த சடையையுடையவனது கரத்தின்மான் போல மருண்ட நோக்கத்தளாய்; மயில்போல் மயில்போல வசைந்த சாயலாளாய்; சுரமே வெறுப்ப ஒரு ஏந்தலொடு எதிரே வருமே வருத்துஞ் சுரந்தானே கண்டுதுன்புற ஓரேந்தலோடு நும்மெதிரே வந்தாளோ? உரைமின் எ-று.
தோலேய்ந்த சுவலின்கணுண்டாகிய வெள்ளை நூலினையு மெனினுமமையும். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு அது. பயன்: தலைமகளைக் காண்டல். 243

குறிப்புரை :

16.50 வேதியரை வினாவல்
வேதியரை வினாவல் என்பது விரதியரை வினாவி, அதுவழியாகச் செல்லாநின்றவள், மான்போலு நோக்கினையும், மயில் போலுஞ் சாயலையுமுடைய மான் ஓரேந்தலோடு நும்மெதிரே வரக்கண்டீரோவென வேதியரை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.50. மாதின்பின் வருஞ்செவிலி
வேதியரை விரும்பிவினாயது.

பண் :

பாடல் எண் : 51

மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
யோஅன்னை சொல்லியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நும்மைக்கண்டு மீண்டார் என உவந்தேன் நும்மைக்கண்டு என்னாற் றேடப்படுகின்றார் மீண்டாரென்றுகருதி மகிழ்ந்தேன்; இம் மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே இவ்வாறு நும்மோடொத்த மேதகவையுடைத்தாகிய இவ்வொழுக் கத்தையே பூண்டார் இருவர் முன்னே போயினரோ? உரைமின் எ-று.
புலியூர் எனை நின்று ஆண்டான் அருவரை ஆளி அன்னானைக் கண்டேன் புலியூர்க்கண் ஒரு பொருளாக மதித்து என்னை நின்றாண்டவனது கிட்டுதற்கரிய மலையில் ஆளியை யொப்பானை யான் கண்டேன்; தூண்டா விளக்கு அனையாய் தூண்ட வேண்டாத விளக்கையொப்பாய்; அயல் அன்னை சொல்லியது என்னையோ அவனதயல் அன்னைசொல்லியதி யாது? அதனையவட்குச் சொல்லுவாயாக எ-று.
அருவரைக்கட் கண்டேனெனக் கூட்டினு மமையும். ஆளியன்னா னென்றதனால், நின்மகட்கு வருவதோரிடையூ றில்லையெனக் கூறினானாம். தூண்டா விளக்கு: இல்பொருளுவமை. மணிவிளக்கெனினு மமையும். அணங்கமர் கோதையை தெய்வ நாற்றமமர்ந்த கோதையை யுடையாளை. ஆராய்ந்தது வினாயது. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்தவுவகை. பயன்: அது.244

குறிப்புரை :

16.51 புணர்த்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல் புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல் என்பது வேதியரை வினாவி, அதுவழியாகச் செல்லாநின்றவள், நும்மைக் கண்டு, என்னாற்றேடப்படுகின்றார் மீண்டார்களென்று கருதி மகிழ்ந்தேன்; அதுகிடக்க, இவ்வாறு நும்மோடொத்த வொழுக் கத்தினராய் முன்னே யிருவரைப் போகக்கண்டீரோவெனப் புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.51. புணர்ந்துடன்வரும்புரவல னொருபால்
அணங்கமர்கோதையை யாராய்ந்தது.

பண் :

பாடல் எண் : 52

பூங்கயி லாயப் பொருப்பன்
திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
திண்டிற லாண்டகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பூங் கயிலாயப் பொருப்பன் திருப்புலியூரது என்ன பொலிவினையுடைய கைலாயமாகிய பொருப்பையுடைய வனது திருப்புலியூரதனைப்போல; தீங்கை இலாச் சிறியாள் நின்றது இவ்விடம் குற்றத்தையுடையவளல்லாத என் சிறியாள் நின்றது இவ்விடத்து; சென்று சென்று; எதிர்ந்த வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து தன்னோடெதிர்ந்த புலியின்வாயின்கட் பெரிய கையைமடுத்து; கிடந்து அலற விழுந்து கிடந் தலறும் வண்ணம்; திண் திறல் ஆண்டகை அயிலால் பணிகொண்டது ஆங்கு திண்ணிய திறலையுடைய ஆண்டகை வேலாற் பணிகொண்டது அவ்விடத்து; அதனால், அவர் போயின நெறியிதுவே எ-று.
தீங்கையிலாவென்புழி இன்மை உடைமைக்கு மறுதலை யாகிய வின்மை. மகளடிச்சுவடுகிடந்தவழிச் சென்று நின்றனளாதலின், அதனை இவ்விடமென்றும், வேங்கைபட்ட விடத்தை யவ்விட மென்றுங் கூறினாள். வேங்கை தன் காதலியையணுகாமல் அதுவரும் வழிச் சென்றேற்றானாதலிற் சென்றென்றாள். சென்று பணி கொண்ட தென வியையும். மெய்ப்பாடு அது. பயன்: ஆற்றாமை நீங்குதல். 245

குறிப்புரை :

16.52 வியந்துரைத்தல் வியந்துரைத்தல் என்பது புணர்ந்துடன் வருவோரை வினாவி, அதுவழியாகப் போகாநின்றவள், தன்மகணின்ற நிலையையும், அவன்கையின் வேலினால் வேங்கைபட்டுக் கிடந்த கிடையையுங்கண்டு, வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.52. வேங்கைபட்டதும் பூங்கொடிநிலையும்
நாடாவருங் கோடாய்கூறியது.

பண் :

பாடல் எண் : 53

மின்றொத் திடுகழல் நூபுரம்
வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
நீசொன்ன கொள்கையரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அன்னை அன்னாய்; நீ சொன்ன கொள்கையர் குன்றத்திடைக் கண்டனம் நீ கூறிய கோட்பாட்டை யுடையாரைக் குன்றத்திடைக் கண்டேம்; மின் தொத்து இடுகழல் நூபுரம் அவ்விருவரு மியைந்து சேறலின், மின்றிரளுண்டாகாநின்ற அவனது கழலும் அவளது சிலம்பும்; வெள்ளை செம்பட்டு அவனது வெண்பட்டும் அவளது செம்பட்டும்; மின்ன விளங்க; ஒன்று ஒத்திட- ஒருவடிவை யொத்தலான்; உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்று எல்லாவற்றையு முடையளாகிய தன்காதலியோ டொருவடிவாய் விளையாடும் புலியூரனென்றேகருதி; ஒத்து நன்று எழிலைத் தொழ உற்றனம் யாங்களெல்லாமொத்துப் பெரிது மவ்வழகைத் தொழ நினைந்தேம்; என்னது ஓர் நன்மைதான் அந்நன்மை யெத்தன்மையதோர் நன்மைதான்! அது சொல்லலாவ தொன்றன்று எ-று.
என்னதோர் நன்மையென்றதனான், அஃதறமாதலுங் கூறப்பட்டதாம். தானென்பது அசைநிலை. கொள்கையரை யென்னு முருபு விகாரவகையாற் றொக்கது. என்ன நன்மையதா மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: செவிலியை யெதிர்வருவார் ஆற்றுவித்தல். 9; 9; 246

குறிப்புரை :

16.53 இயைபெடுத்துரைத்தல் இயைபெடுத்துரைத்தல் என்பது வேங்கைபட்டது கண்டு வியந்து, அதுவழியாகச் செல்லாநின்றவள், எதிர்வருவாரை வினாவ, அவர் நீ கூறாநின்றவரைக் குன்றத்திடைக்கண்டோம்; அவ்விருவருந் தம்முளியைந்து செல்லாநின்றமைகண்டு, எல்லாவற்றையு முடைய ளாகிய தன் காதலியோடு ஒருவடிவாய் விளையாடும் புலியூர னென்றே கருதி, யாங்களெல்லாமொத்து, மிகவும் அவ்வெழிலைத் தொழ நினைந்தோம்; அந்நன்மை சொல்லலாவ தொன்றன்றென எதிர்வருவார் அவரியைபெடுத் துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.53. சேயிழை யோடு செம்மல் போதர
ஆயிழை பங்கனென் றயிர்த்தே மென்றது.

பண் :

பாடல் எண் : 54

மீள்வது செல்வதன் றன்னையிவ்
வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந்
நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையி
னெல்லை யணுகுவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கிளர் கெண்டை அன்ன நீள்வது செய்த கண்ணாள் புடை பெயராநின்ற கெண்டைபோலும் நீடலைச் செய்த கண்ணையுடையாள்; இவ்வெங்கடத்து வெய்ய விச்சுரத்தின் கண்; அக்கடமாக்கீள்வது செய்த கிழவோனொடும் அத்தன்மைத் தாகிய கடமாவைப் பிளத்தலைச் செய்த கிழவோனோடும்; இந்நெடுஞ்சுரம் நீந்தி இந்நெடியசுரத்தை நீந்தி அவ்விருவரும் ஓரிடுக்கணின்றிப் போய்; எம்மை ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவர் எம்மை யாளுதலைச் செய்தவனது தில்லையினெல்லையைச் சென்றணைவர், அதனால், அன்னை அன்னாய்; மீள்வது செயற் பாலது மீள்வதே; செல்வது அன்று சேறலன்று எ-று.
சுரங் கடத்தல் இருவர்க்கு மொக்குமெனினும், நீள்வது செய்த கண்ணாணீந்தியெனத் தலைமகண்மேற் கூறினார், வெஞ்சுரத்திற்கவள், பஞ்சின் மெல்லடி தகாவாகலின். அணுகுவரென்புழித்தலைமகள் தொழிலுமுண்மையின், நீந்தியென்னுமெச்சம், வினைமுதல் வினை கொண்டதாம்; திரித்துரைப்பாருமுளர். கிழவோனொடு மென்றதனால், அவன் பற்றுக்கோடாக நீந்தினாளென்பது விளக்கினார். இனி ஒடுவை எண்ணொடுவாக்கி யுரைப்பினுமமையும். உம்மை: அசைநிலை. 247

குறிப்புரை :

16.54 மீளவுரைத்தல் மீளவுரைத்தல் என்பது இயைபெடுத்துரைத்தவர், அவ் விருவரும் ஓரிடுக்கணின்றிப்போய்த் தில்லையினெல்லையைச் சென்றணைவர்; இனி நீ செல்வதன்று, மீள்வதே காரியமெனத் தேடிச் செல்லாநின்ற செவிலியை, மீளக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.54. கடுங்கடங் கடந்தமை கைத்தாய்க் குரைத்து
நடுங்கன்மின் மீண்டும் நடமி னென்றது.

பண் :

பாடல் எண் : 55

சுரும்பிவர் சந்துந் தொடுகடல்
முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
நீர்மையர் காணுநர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுரும்பு இவர் சந்தும் நறுநாற்றத்தாற் சுரும்பு சென்று பரக்குஞ் சந்தனமும்; தொடு கடல் முத்தும் தோட்கப் பட்ட கடலின் முத்தும்; வெண் சங்கும் வெண்சங்கும்; எங்கும் விரும்பினர்பால் சென்று மெய்க்கு அணியாம் எத்தேயத்துந் தாம்பிறந்த விடங்கட்கு யாதும் பயன்படாது தம்மை விரும்பி யணிவாரிடத்தே சென்று அவர்மெய்க்கு அணியாகா நிற்கும்; வியன்கங்கை என்னும் பெரும்புனல் சூடும் பிரான் அகன்ற கங்கை யென்னாநின்ற பெரும் புனலைச் சூடும் பிரான்; சிவன் சிவன்; சிற்றம்பலம் அனைய கரும்பு அன மென்மொழியாரும் அவனது சிற்றம்பலத்தை யொக்குங் கரும்பு போலும் மெல்லிய மொழியினை யுடைய மகளிரும்; காணுநர்க்கு அந் நீர்மையர் ஆராய்வார்க் கத்தன்மையர்; நீ கவலவேண்டா எ-று.
சங்கு மணியாயும் வளையாயும் அணியாம். எங்குமணியா மெனவியையும். சிற்றம் பலத்து மன்னுங் கரும்பன மென்மொழி யாரென்பது பாடமாயின், சிற்றம்பலத்தையுடைய தில்லையினுளதாங் கரும்புபோலு மென் மொழியை யுடையாரென்றுரைக்க. 248

குறிப்புரை :

16.55 உலகியல்புரைத்தல் உலகியல்புரைத்தல் என்பது மீளக்கூறவும் மீளாது கவலா நின்ற செவிலிக்கு, சந்தனமு முத்துஞ் சங்கும் தாம் பிறந்தவிடங்கட்கு யாதும் பயன்படாது, தம்மைவிரும்பி யணிவாரிடத்தே சென்று பயன்படாநிற்கும்; அதுபோல மகளிருந் தாம் பிறந்த விடத்துப் பயன்படார்; நீ கவலவேண்டாவென, உலகியல்பு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.55. செவிலியது கவலைதீர
மன்னியஉலகியன் முன்னியுரைத்தது.

பண் :

பாடல் எண் : 56

ஆண்டி லெடுத்தவ ராமிவர்
தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
கீழும் பழனங்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இவர் தாம் ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவ்விடத்து இல்லின்கணெடுத்து வளர்த்தவர் போலும்; தீண்டில் யாவராயினுந் தம்மையணுகில்; எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய் அவர் நரகத்தழுந்தாமலெடுத்து அவ ரது தீவினையைத் தீர்ப்பவனது தில்லையின்கண்; தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற தூண்டிலைவிழுங்கிய வரால் தெங்கொடு மோத; பழம் விழுந்து அதன் பழம் விழுந்து; பாண்டில் எடுத்தபல் தாமரை கீழும் பழனங்கள் கிண்ணம்போலும் பூக்களையுயர்த்திய பலவாகிய தாமரையைக் கிழிக்கும் பழனங்களை; அவர் போய் அல்குவர் அவர்சென்று சேர்வர்; இனியோரிடரில்லை எ-று.
தில்லையின்வாய்ப் பழனங்களெனவியையும். ஆண்டி லெடுத்தவராமிவர் தாமென்று தம்முட்கூறிப் பின் செவிலிக்குக் கூறினாராக வுரைக்க. இவ்வாறு பகராது, செவிலிகேட்ப முழுவதூஉந் தம்முட் கூறினாராக வுரைப்பினுமமையும். தூண்டிலானெடுக்கப்பட்ட வராலெனினுமமையும். இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: செவிலிக்கியல்பு கூறி அவளை மீள்வித்தல். நில்லாவளை (பா.192) தொட்டு இதுகாறும்வரப் பாலைத் திணை கூறியவா றறிக. 249

குறிப்புரை :

16.56 அழுங்குதாய்க் குரைத்தல் அழுங்குதாய்க் குரைத்தல் என்பது உலகியல்பு கூறவும் மீளாது நின்று, தானெடுத்து வளர்த்தமை சொல்லிக் கவலாநின்ற செவிலியை, முன்னிலைப்புறமொழியாக, இவர் தாம் இல்லின்க ணெடுத்து வளர்த்தவர் போலும்; அவர்போய்த் தம்மை யிருவரையுங் கூட்டுவித்த தெய்வப்பதியாகிய தில்லையிடத்துப் பழனங்களைச் சென்றணைவரெனத் தம்முட் கூறுவார்போன்று கூறி, மீட்டுக்கொண்டு போகாநிற்றல். அதற்குச் செய்யுள்
16.56. செழும்பணை யணைந்தமை
அழுங்குதாய்க் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 1

எழுங்குலை வாழையின் இன்கனி
தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
னோநின் னருள்வகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எழும் குலை வாழையின் இன் கனி தின்று எழாநின்ற குலைகளை யுடைய வாழைத்திரளின்கணுண்டாகிய இனிய கனிகளைத் தின்று; இள மந்தி இளைய மந்தி; செழுங்குலை வாழை அம் தண் நிழலில் துயில் சிலம்பா வளவிய குலையையுடைய அவ்வாழைத்திரளினது நல்ல குளிர்ந்த நிழற்கண் வெருவுதலின்றித் துஞ்சுஞ் சிலம்பை யுடையாய்; முனைமேல் உழும் கொலை வேல் திருச்சிற்றம்பலவரை உன்னலர் போல் போரிடத் துழுங் கொலை வேலையுடைய திருச்சிற்றம்பலவரை நினையாதாரைப் போல; அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு வருந்தாநின்ற உலைத் தொழிலமைந்த வேல்போலுங் கண்ணை யுடையாட்கு; நின் அருள் வகை என்னோ நினதருட்கூறியாதோ? இவளதாற்றாமைக்கு மருந்தன்று எ - று.
நின்னருள்வகை யென்னோவென்பதற்கு இவ்வாறு வருந்துமிவடிறத்து இனி நீ செய்யக்கருதிய வகை யாதோவெனினு மமையும். அழுங்கொலைவேலென்பது பாடமாயின், அழாநின்ற கொலை வேல்போலுங் கண்ணையுடையாட்கென் றுரைக்க. எழுங் குலை இளங்குலை. செழுங்குலை முதிர்ந்த குலை. எழுங் குலையு முதிர்ந்த குலையு முடைமையான் இடையறாது பழுக்கும் வாழைத் திரளின்கணுண்டாகிய கனியை நுகர்ந்து, மந்தி வேறொன்றான் வெருவாது அவ்வாழை நிழலின்கீழின்புற்றுத் துயிலுமாறுபோல, ஆராவின்ப மிடையிட்டு நுகராது நீ வரைந்து கோடலான் இடையறாத பேரின்பந்துய்த்து, அன்னைசொல்லா லுண்ணடுங்காது நின் றாணிழற் கீழ் இவளின்புற்று வாழ்தல் வேண்டுமென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவுகடாதல். #9; #9; 250

குறிப்புரை :

17.1 வருத்தமிகுதிகூறி வரைவுகடாதல் வருத்தமிகுதிகூறி வரைவுகடாதல் என்பது அலரறிவுறுத்த தோழி, அலரானுங் காவன்மிகுதியானு நின்னை யெதிர்ப்பட மாட்டாதழுது வருந்தாநின்றவளிடத்து நின்னருளிருக்கின்றவா றென்னோவெனத் தலைமகளது வருத்தமிகுதிகூறித் தலை மகனை வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.1. இரவுக் குறியிடத் தேந்திழைப் பாங்கி
வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

பரம்பயன் தன்னடி யேனுக்குப்
பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இக் குன்றிடத்தே தோன்றும் இடம் இக்குன்றிடத்துத் தோன்றுமிடம்; தில்லை வானவன் வானகம் சேர் அரம்பையர் தம் இடமோ தில்லையின் வானவனது வானகத்தைச் சேர்ந்த தெய்வமகளிர் தமதிடமோ; அன்றி வேழத்தின் என்பு நட்ட குரம்பையர் தம் இடமோ அன்றி யானையினென்பை வேலியாக நட்ட குரம்பைகளையுடைய குறத்தியர் இடமோ? நீ கூறுவாயாக எ-று.
பரம் எல்லாப்பொருட்கும் அப்பாலாயவன்; தன் அடியேனுக்குப் பயன் ஆயினுந் தன்னடியேற்குப் பெறும்பயனா யுள்ளான்; பார் விசும்பு ஊடுருவி வரம்பு அயன் மால் அறியாத் தில்லை வானவன் பாரையும் விசும்பையு மூடுருவிநிற்றலாற் றன்னெல்லையை அயனு மாலு மறியாத தில்லையின் வானவனெனக் கூட்டுக.
என்றது அவளை யெட்டவுஞ் சுட்டவும் படாத தெய்வமென் றிருத்தலான், அவள் வாழு மிடத்தை அரம்பையரிடமென்றே கருதுவல், அன்றாயி னுரையென வரைவுடம்படாது கூறியவாறு. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: இரவுக்குறியிடமுணர்த்துதல்.251

குறிப்புரை :

17.2 பெரும்பான்மைகூறி மறுத்தல் பெரும்பான்மைகூறி மறுத்தல் என்பது வரைவுகடாவிய தோழிக்கு, யானவளைத் தெய்வமானுடமென்றறிந்து வரைந்து கோடற்கு இக்குன்றிடத்துத் தோன்றாநின்ற விடம் தெய்வமகளிர திடமோ, அன்றிக் குறத்தியரிடமோ, கூறுவாயாகவெனத் தலைமகன் றலைமகளைப் பெரும்பான்மை கூறி மறுத்துரையா நிற்றல். அதற்குச் செய்யுள்
17.2. குலம்புரி கொம்பர்க்குச்
சிலம்பன் செப்பியது.

பண் :

பாடல் எண் : 3

சிறார்கவண் வாய்த்த மணியிற்
சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில்
உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற்
றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக்
காத்தும் பெரும்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெருந்தேன் சிறார்கையிற் கவண் தப்பாமல் அதுவிட்ட மணியாற் சிதைந்த பெருந்தேன்; இழு மென்று இழுமென்னு மோசையை யுடைத்தாய்; இறால் கழிவுற்று எம் சிறுகுடில் உந்தும் இடம் இது இறாலினின்றுங் கழிதலையுற்று எமது சிறு குடிலைத் தள்ளுமிவ்விடம்; எந்தை உறாவரை எந்தையது முற்றூட்டு; உற்றார் குறவர் எமக்குற்றார் குறவர்; பெற்றாளும் கொடிச்சி எம்மைப்பெற்றாளுங் கொடிச்சியே; உம்பர் பெறா அருள் அம்பலவன் மலைப்பெரும் புனம் காத்தும் யாமும் தன்னன்பரல்லது உம்பர்பெறாத வருளையுடைய அம்பலவனது மலைக்கட் பெரும்புனத்தைக்காத்தும்; அதனால் நீயிர் வரைவுவேண்டாமையி னெம்மைப் புனைந்துரைக்க வேண்டுவ தில்லை எ - று.
``கோவையுந் தொகையு மாவயின் வரையார்`` என்பதனான், இது தொடர்நிலைச் செய்யுளாதலிற் குரம்பையர் தம்மிடமோவென்று வினாவப்பட்ட விடம் எஞ்சிறுகுடிலுந்துமிட மெனவும் ஒருபுனத்தைச் சுட்டி இதெந்தையுறாவரை யெனவுங் கூறினாளாக வுரைப்பினு மமையும். சிறாரெறிந்த மணியாற் பெருந்தேன் சிதைந்து அவ் விறாலைவிட்டுக் கழிந்து, சிறுகுடிலிற் பரந்தாற் போல, அயலார் கூறும் அலரான் நுமது மறைந்தவொழுக்கம் நும் வயினடங்காது பலருமறிய வெளிப்படாநின்றதென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: குறியிடமுணர்த்துதல். 252

குறிப்புரை :

17.3 உள்ளது கூறிவரைவு கடாதல் உள்ளதுகூறி வரைவுகடாதல் என்பது பெரும்பான்மை கூறி மறுத்த தலைமகனுக்கு, இவ்விடம் எந்தையது முற்றூட்டு; எமக்குற்றார் குறவரே; எம்மைப்பெற்றாளுங் கொடிச்சியே; யாங்களும் புனங்காப்போஞ்சிலர்; நீ வரைவு வேண்டாமையின் எம்மைப் புனைந்துரைக்கவேண்டுவதில்லையெனப் பின்னும் வரைவு தோன்றத் தோழி தங்களுண்மை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.3. இன்மை யுரைத்த மன்ன னுக்கு
மாழை நோக்கி தோழி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

கடந்தொறும் வாரண வல்சியின்
நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு
நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறுந் தீஅர வன்னம்
பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப
நின்னருள் தோன்றுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பல் சீயம் வாரண வல்சியின் நாடி பலவாகிய சீயம் வாரணமாகிய வல்சி காரணமாகத்தேடி; கங்குல் கடம் தொறும் இடம் பார்க்கும் இயவு கங்குற் பொழுதின்கட் காடுக டோறுங் காட்டினிடங்கடோறுஞ் சென்று பார்க்கு நெறியின்கண்; ஒரு நீ எழில் வேலின் வந்தால் தனியையாகிய நீ எழிலையுடைய வேல் துணையாக வந்தால்; அன்ப அன்பனே; நின் அருள் எம்மைத் தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே தோன்றுவது எம்மிடத்துண்டாகிய நின்னருள் எம்மைவிடாதே தொடர்ந்தொறுக்குந் துன்பமென்னு முணர்வே எமக்குத் தோன்றுவது எ - று.
படம் தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை ஒறும் படந்தொறுமுண்டாகிய தீயையுடைய அரவை யணிந்தவன தம்பலத்தைப் பணியாதாரைப் போல வருந்த எம்மை யொறுக்கு மெனக்கூட்டுக.
என்றது, எமக்கு நீ செய்யுந் தலையளியை யாங்கள் துன்பமாகவே யுணராநின்றோம் என்றவாறு. நாடுதல் மனத்தா லாராய்தல். பார்த்தல் கண்ணா னோக்குதல். வேலினென்னு மைந்தாவது ஏதுவின்கண் வந்தது. ஒறுக்குமென்பது ஒறுமென விடைக் குறைந்து நின்றது. எம்மை நீ விடாது தொடருந்தொறு மெனினுமமையும். இதற்குத் தொடரு மென்பது இடைக்குறைந்து நின்றது. நின்னரு ளென்னு மெழுவாய் துன்பமென்னும் பயனிலை கொண்டது. மெய்ப்பாடு: அச்சம். பயன்: இரவுக்குறிய தேதங்காட்டி வரைவு கடாதல். 253

குறிப்புரை :

17.4 ஏதங்கூறியிரவரவுவிலக்கல் ஏதங்கூறியிரவரவுவிலக்கல் என்பது உண்மையுரைத்து வரைவுகடாய தோழி, நீ வரைவொடு வாராயாயிற் சிங்கந் திர ண்டு தனக்கியானையாகிய வுணவுகளைத்தேடு மிருளின்கண், நினது கைவேல் துணையாக நீவந்தருளாநின்ற விஃதே எங்களுக்குத் துன்பமாகத் தோன்றாநின்றது; இனியிவ்விருளிடை வாரா தொழிவாயென ஏதங்கூறித் தலைமகனை யிரவரவு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
17.4. இரவரு துயரம் ஏந்தலுக் கெண்ணிப்
பருவர லெய்திப் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 5

களிறுற்ற செல்லல் களைவயிற்
பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
நாட பெடைநடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகன்
நீசெய்யும் மெய்யருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
களிறு உற்ற செல்லல் பெண் களைவயின் அசும்பின்கட்பட்டுக் களிறுற்ற வருத்தத்தைப் பிடி தீர்க்கின்ற விடத்து; மரம் கைஞ் ஞெமிர்த்துப் பிளிறு உற்ற வானப் பெருவரை நாட மரத்தைக் கையான் முறித்துப் பிளிறுதலை யுற்ற வானத்தைத்தோயும் பெரியவரையையுடைய நாடனே; பெடை நடையோடு ஒளிறு உற்ற மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் அன்னப்பெடை யினது நடைபோலு நடையையுடையாளொடுகூடி விளங்குதலை யுற்ற மேனியையுடையவனது சிற்றம்பலத்தை நெஞ்சா லுறாதாரைப் போல யாமிடர்ப்பட; வெளிறு உற்ற வான் பழியாம் வெளிப் படுதலையுற்ற பெரிய பழியாகாநின்றது; நீ பகல் செய்யும் மெய் அருள் நீ பகல்வந்து எமக்குச் செய்யும் மெய்யாகியவருள் எ - று.
மெய்யருளென்றது மெய்யாக வருளுகின்றாயேனு மென்ற வாறு. வழியல்லாவழிச் சேறலான் அசும்பிற் பட்ட களிற்றினை வாங்குதற்குப் பிடி முயல்கின்றாற்போல, இவளை யெய்துதற் குபாயமல்லாத விவ்வொழுக்கத்தினை விரும்பு நின்னை இதனி னின்று மாற்றுதற்கு யான் முயலாநின்றேனென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறிவிலக்கி வரைவு கடாதல். 254

குறிப்புரை :

17.5 பழிவரவுரைத்துப்பகல்வரவுவிலக்கல் பழிவரவுரைத்துப் பகல்வரவு விலக்கல் என்பது இவ்விருளிடை வாராதொழிகென்றது பகல்வரச் சொன்னவாறா மென வுட்கொண்டு, பகற்குறிச் சென்று நிற்ப, தோழி யெதிர்ப்பட் டுப் பகல் வந்து எமக்குச் செய்யாநின்ற மெய்யாகியவருள் புறத்தாரறிந்து வெளிப்பட்டுப் பழியாகப் புகுதாநின்றது; இனிப் பகல்வர வொழிவாயாகவெனப் பழிவருதல் கூறிப் பகல் வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
17.5. ஆங்ஙனம் ஒழுகும் அடல்வே லண்ணலைப்
பாங்கி ஐய பகல்வர லென்றது.

பண் :

பாடல் எண் : 6

கழிகட் டலைமலை வோன்புலி
யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇஅரி
யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலின்
துவளு மிவள்பொருட்டே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொழிகட் புயலின் மயிலின் துவளும் இவள் பொருட்டு பொழியாநின்ற கண்ணிற் புனலையுடையதோர் மயில்போலத் துவளாநின்ற விவள் காரணமாக; அரியாளி வெரீஇ அரியையும் யாளியையும் வெருவி; குழி கண் களிறு குழிந்த கண்ணை யுடையவாகிய யானைகள்; குழீஇ ஓரிடத்தே திரண்டு நின்று; வழங்கா அவ்விடத்து நின்றும் புடைபெயராத; கழி கட்டிரவின் வரல் சிறந்த வச்சத்தைச் செய்யு மிரவின்கண் வாரா தொழிவாயாக; கழல் கை தொழுது இரந்தேன் நின்கழல்களைக் கையாற்றொழுது நின்னையிரந்தே னிதனை எ - று.
கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல் வெரீஇ கழிந்த கண்ணையுடைய தலைமாலையைச் சூடுவோனது புலியூரைக் கருதாதாரைப்போல வெருவியெனக்கூட்டுக.
குழிவழங்காவென்று பாடமோதி, அரியையும் யாளியையுங் குழியையும் வெருவி வழங்காவென்றுரைப்பாருமுளர். கழி அச்சத் தைச்செய்யு மியல்பாற் சிறத்தல். கழிகட்டி ரவினென்பதற்குக் கழி சிறப்பின்கண் வந்து அரையிரவின்கணென்பது பட நின்றதெனினு மமையும். பொழிகட் புயலின் மயிலிற் றுவளு மென்றதனால், இவ் வாறிவளாற்றாளெனினும் நீ வரற்பாலையல்லையென்று கூறி வரைவு கடாவினாளாம். வழியிடை வரு மேதங் குறித்து இவ்வாறாகின்ற விவள்பொருட்டென் றுரைப்பினுமமையும். கருதார் மனம்போல் என்பது பாடமாயின், மனம்போலுங் கழிகட்டிரவெனவியையும். மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக்குறிவிலக்கி வரைவு கடாதல். 255

குறிப்புரை :

17.6 தொழுதிரந்துகூறல் தொழுதிரந்து கூறல் என்பது பகல்வரவு விலக்கின தோழி, இவனிரவுவரவுங் கூடுமென வுட்கொண்டு, நின்னை யெதிர்ப்பட வேண்டி அழுது வருந்தாநின்ற இவள் காரணமாக, அரிக்கும் யாளிக்கும் வெருவி யானைகள் திரண்டு புடைபெயராத மிக்க விருளின்கண் வாராதொழிவாயாக வென்று, நின் கழல்களைக் கையாற்றொழுது, நின்னை யிரந்தேனென வரைவு தோன்றத் தலைமகனைத் தொழுதிரந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.6. இரவரவின் ஏதமஞ்சிச்
சுரிதருகுழற் றோழிசொல்லியது.

பண் :

பாடல் எண் : 7

விண்ணுஞ் செலவறி யாவெறி
யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
கானல் அரையிரவின்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
நோக்கினள் கார்மயிலே. 9;

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார் மயிலே கார்காலத்து மயிலை யொப்பாய்; தில்லை மல் எழில் கானல் தில்லையில் வளவிய வெழிலையுடைய கானலிடத்து; அரை இரவின் மணி அண்ணல் நெடுந் தேர் வந்தது உண்டாம் என அரையிரவின்கண் மணிகளை யுடைய தலையாய தொரு நெடுந்தேர் வந்ததுண்டாகக்கூடுமென வுட்கொண்டு; அன்னை சிறிது கண்ணும் சிவந்து அன்னை சிறிதே கண்ணுஞ்சிவந்து; என்னையும் நோக்கினள் என்னையும் பார்த்தனள்; இருந்த வாற்றான் இவ்வொழுக்கத்தினை யறிந்தாள் போலும்! எ - று.
விண்ணும் செலவு அறியா விண்ணுளாரானும் எல்லாப் பொருளையுங் கடந்தப்பாற்சென்ற செலவையறியப்படாத; வெறி ஆர் கழல் வீழ் சடைத் தீ வண்ணன் நறு நாற்றமார்ந்த கழலினையுந் தாழ்ந்த சடையினையுமுடைய தீவண்ணன்; சிவன் சிவன்; தில்லை- அவனது தில்லையெனக் கூட்டுக.
எல்லாப் பொருளையுங்கடந்து நின்றனவாயினும், அன்பர்க் கணியவாய் அவரிட்ட நறுமலரான் வெறிகமழுமென்பது போதர வெறியார் கழ லென்றார். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: படைத்து மொழியால் வரைவுகடாதல். 256

குறிப்புரை :

17.7 தாயறிவுகூறல் தாயறிவு கூறல் என்பது தொழுதிரந்து கூறவும், வேட்கை மிகவாற் பின்னுங் குறியிடைச்சென்று நிற்ப, அக்குறிப்பறிந்து, நங்கானலிடத்து அரையிரவின்கண் ஒரு தேர்வந்த துண்டாகக் கூடுமெனவுட்கொண்டு, அன்னை சிறிதே கண்ணுஞ்சிவந்து என்னையும் பார்த்தாள்; இருந்தவாற்றான் இவ்வொழுக்கத்தை யறிந்தாள்போலுமெனத் தோழி தலைமகளுக்குக் கூறுவாள் போன்று சிறைப்புறமாகத் தலைமகனுக்கு வரைவுதோன்றத் தாயறிவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.7. சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப
வெறிக்குழற் பாங்கி மெல்லியற் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

வான்றோய் பொழிலெழின் மாங்கனி
மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர்
போலும் வரிவளையே. 9;

பொழிப்புரை :

இதன் பொருள்:
நீள் திருமுடிமேல் மீன் தோய் புனல் பெண்ணை வைத்து நீண்ட திருமுடிக்கண் மீனைப்பொருந்திய புனலாகிய பெண்ணை வைத்து; உடையாளையும் மேனி வைத்தான் வான் தோய் மதில் தில்லை மாநகர் போலும் வரிவளை எல்லாவற்றையு முடையவளையுந் திருமேனிக்கண் வைத்தவனது வானைத்தோயு மதிலையுடைய தில்லையாகிய பெரியநகரை யொக்கும் வரிவளை; வான் தோய் பொழில் எழில் மாங்கனி வானைத் தோயும் பொழிலின் கணுண்டாகிய நல்லமாங்கனியை; கடுவன் தேன் தோய்த்து மந்தியின் வாய் அருத்தி மகிழ்வ கண்டாள் கடுவன் தேனின் கட்டோய்த்து மந்தியின்வாய்க் கொடுத்து நுகர்வித்துத் தம்மு ளின்புறுமவற்றைக் கண்டாள் எ - று.
என்றதனால், துணைபுறங் காக்குங் கடுவனைக்கண்டு, விலங்குகளுமிவ்வாறு செய்யாநின்றன; இது நங்காதலர்க்கு நம் மாட்டரிதாயிற்றென நீ வரையாமையை நினைந்தாற்றாளாயினா ளென்றாளாம். அருத்தி என்பதற்கு நெடுஞ் சுரநீந்தி (தி.8 கோவை பா. 247) என்றதற் குரைத்ததுரைக்க. கான்றோய் பொழிலென்பதூஉம் பாடம். வரிவளையை வரைவு - வரிவளையை வரைதல். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: வரைவுகடாதல். 257

குறிப்புரை :

17.8 மந்திமேல்வைத்து வரைவுகடாதல் மந்திமேல்வைத்து வரைவுகடாதல் என்பது சிறைப்புறமா கத் தாயறிவுகூறிச் சென்றெதிர்ப்பட்டு, ஒரு கடுவன் றன்மந்திக்கு மாங்கனியைத் தேனின்கட்டோய்த்துக் கொடுத்து நுகர்வித்துத் தம்முளின்புறுவதுகண்டு, இது நங்காதலர்க்கு நம்மாட்டரிதாயிற் றென நீ வரையாமையை நினைந்தாற்றாளாயினாளென மந்தி மேல் வைத்துத் தலைமகளது வருத்தங்கூறி வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்
17.8. வரிவளையை வரைவுகடாவி
அரிவைதோழி உரைபகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 9

நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும்
படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
படாது கலங்கினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நறை கள் மலி கொன்றையோன் நறு நாற்றத்தையுடைய தேன்மலிந்த கொன்றையையுடையவன்; நின்று நாடகம் ஆடு தில்லைச் சிறைக்கண் நின்று கூத்தாடுந் தில்லையாகிய சிறையிடத்து; மலி புனல் சீர் நகர் காக்கும் அது பொறாமன் மிகும்புனலையுடைய சீரியநகரை இராப்பொழுதின்கட் காக்கும்; செவ்வேல் இளைஞர் பறைக்கண் படும் படும் தோறும் செவ்வேலை யுடைய இறைஞரது பறைக்கண் படுந்தோறும் படுந்தோறும்; படா முலைப் பைந்தொடியாள் படக்கடவவல்லாத முலையையுடைய பைந்தொடியாளுடைய; கறை கண் மலி கதிர் வேற் கண் கறை தன்கண் மிக்க கதிர்வேல் போலுங்கண்கள்; படாது கலங்கின ஒரு காலும் படாவாய் வருந்தின எ-று.
நாடகமென்றது ஈண்டுக் கூத்தென்னுந் துணையாய் நின்றது. கலங்கினவென்பதற்குத் துயிலாமையான் நிறம்பெயர்ந்தன வென்றும் அழுதுகலங்கினவென்று முரைப்பாருமுளர். காவன்மிகுதியும் அவளதாற்றாமையுங்கூறி வரைவுகடாயவாறு. இஃதின்னார் கூற்றென்னாது துறை கூறிய கருத்து. மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவுகடாதல். 258

குறிப்புரை :

17.9 காவன்மேல்வைத்துக் கண்டுயிலாமைகூறல் காவன்மேல்வைத்துக் கண்டுயிலாமை கூறல் என்பது மந்திமேல்வைத்து வரைவுகடாவப்பட்ட தலைமகன், இது நங்காதலி யிடத்து நமக்கரிதாயிற்றெனத் தானுமாற்றானாய், இரவுக்குறிச் சென்று நிற்ப, அந்நிலைமைக்கண் இவ்விடத்துள் ளார், இவள் காவற்பறை கேட்குந் தோறுங் கண்டுயிலாமைக்குக் காரணமென்னோவெனத் தம்முட் கூறாநிற்றல். இதுவுஞ் சிறைப் புறமாக வரைவுகடாதலைப் பயக்கும். அதற்குச் செய்யுள்
17.9. நகர் காவலின்
மிகுகழி காதல்.

பண் :

பாடல் எண் : 10

கலரா யினர்நினை யாத்தில்லை
அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள்
தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா
மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை
யோநும் வரையிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கலர் ஆயினர் நினையாத் தில்லை அம்பலத்தான் கழற்கு தீமக்களாயுள்ளார் கருதாத தில்லையம்பலத்தா னுடைய திருவடிகட்கு; அன்பு இலர் ஆயினர் வினைபோல் இருள் தூங்கிப் புலரா இரவும் அன்புடையரல்லாதாரது தீவினை போல இருள் செறிந்து புலராதவிரவும்; மின்னி முழங்கிப் பொழியா மழையும் மின்னி முழங்கிப் பொழிவது போன்று பொழியாத மழையும்; புண்ணில் நுழை வேல் மலரா வரும் எமக்குப் புண்ணின்க ணுழையும்வேல் மலராம்வண்ணங் கொடியவாய் வாராநின்றன; மருந்தும் இல்லையோ நும் வரையிடத்து இதற்கொரு மருந்து மில்லையோ நும்வரையிடத்து! எ - று.
மருந்தென்றமையான் வரையிடத்தென்றாள். ஒரு நிலத்துத் தலைமகனாதலின், நும்வரையாகிய இவ்விடத்திதற்கோர் மருந் தில்லையோவென ஓருலக வழக்காகவுரைப்பினுமமையும். வருத்துதலேயன்றித் தணித்தலு முண்டோவென்பதுபட நின்றமையின், மருந்து மென்னுமும்மை: எச்சவும்மை. இரவின்கண் வந்தொழுகா நிற்பவும், இரவுறு துயரந் தீர்க்கு மருந்தில்லையோ வென்று கூறினமையான், வரைவல்லது இவ்வாறொழுகுதல் அதற்கு மருந்தன்றென்று கூறினாளாம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: இரவுக்குறி விலக்குதல். 259

குறிப்புரை :

17.10 பகலுடம்பட்டாள் போன்று இரவரவுவிலக்கல் பகலுடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல் என்பது சிறைப்புறமாகக் கண்டுயிலாமைகேட்ட தலைமகன், ஆதரவு மிகவாலெதிர்ப்படலுற்றுநிற்பத் தோழி யெதிர்ப்பட்டு, நீவந் தொழுகா நின்ற இப் புலராவிரவும் பொழியாமழையும் புண்ணின்க ணுழையும் வேல்மலராம்படியெங்களை வருத்தா நின்றன; இதற்கொரு மருந்தில்லையோ நும்வரையிடத்தெனப் பகலுடம்பட்டாள் போன்றிர வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
17.10. விரைதரு தாரோய்
இரவர லென்றது.

பண் :

பாடல் எண் : 11

இறவரை உம்பர்க் கடவுட்
பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை
நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல
ராம்பக லுன்னருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இற தொடர்ந்து பெய்யாதிறுதலான்; எழிலி உன்னி எழிலிபெய்தலை நினைந்து; வரை உம்பர்க் கடவுள் பராய்- மலைமேலுறையுந் தெய்வங்களைப் பராவி; குறவர் நின்று ஆர்க்கும் குளிர் வரை நாட குறவர் நின்றார்ப்பரவஞ்செய்யுங் குளிர்ந்த வரைமே லுண்டாகிய நாட்டை யுடையாய்; கொழும் பவள நிறவரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் உற கொழுவிய பவளமாகிய நிறத்தையுடைய வரை போலுந் திருமேனியை யுடையவனது சிற்றம்பலத்தை நினையாதவரைப்போல வருந்த; அரை மேகலையாட்குப் பகல் உன் அருள் அலராம் அரைக்கணிந்த மேகலையையுடையாட்குப் பகலுண்டாமுனதருள் மிக்க வலராகா நின்றது; அதனானீவாரல் எ - று.
குறவரையென்புழி, ஐகாரம்; அசைநிலை. அசைநிலை யென்னாது குறமலையென் றுரைப்பாரு முளர். வரையையுடைய நாடெனினு மமையும். குறவர் பரவும் பருவத்துத் தெய்வத்தைப் பரவாது, பின் மழை மறுத்தலா னிடர்ப்பட்டு அதனை முயல்கின்றாற் போல, நீயும் வரையுங்காலத்து வரையாது, இவளை யெய்துதற்கரி தாகியவிடத்துத் துன்புற்று வரைய முயல்வையென உள்ளுறை காண்க.
``உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக்
கொள்ளு மென்ப குறியறிந் தோரே``
(தொல். அகத்திணையியல் - 50) என்பவாகலிற் றெய்வத்தை நீக்கி யுவமைகொள்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறி விலக்குதல்.260

குறிப்புரை :

17.11 இரவுடம்பட்டாள்போன்றுபகல்வரவு விலக்கல் இரவுடம் பட்டாள்போன்று பகல்வரவு விலக்கல் என்பது இவள் மருந்தில்லையோவென்றது, யான் இரவுக்குறிச்செல்லின் மழைக்காலிருளானெதிர்ப்படலருமையான் வேட்கை யுற்றுப் பகற்குறி யுடம்பட்டாளென வுட்கொண்டு, பகற்குறிச் செல்லா நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, பகல்வந்தருளாநின்றது அவளுக்கு வருத்தமுறும் படியாக மிக்க வலராகாநின்றது; அதனாற் பகற்குறி வரற்பாலை யல்லையென, இரவுக்குறி யுடம்பட்டாள் போன்று பகற்குறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
17.11. இகலடு வேலோய்
பகல்வர லென்றது.

பண் :

பாடல் எண் : 12

சுழியா வருபெரு நீர்சென்னி
வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ
லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரின் நீயிர
வேதும் பயனில்லையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஐய ஐயனே; நீ பகல் வரின் புரி மென்குழலாள் திறத்து மெய்யே பழியாம் நீ பகல்வரிற் சுருண்ட மெல்லிய குழலையுடையாடிறத்து மெய்யாகவே அலருண்டாம்; இரவு ஏதும் பயன் இல்லை இராவரின் எதிர்ப்படுத லருமையாற் சிறிதும் பயனில்லை; அதனான் நீயிருபொழுதும் வாரல் எ - று.
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து சுழியாநின்று வரும் பெரியநீரைச் சென்னியின்கண் வைத்து; தன் தொழும்பின் என்னைக் கழியா அருள் வைத்த தனக்குத் தொண்டுபடுதற்கண் என்னை நீங்காத தன்னருளான்வைத்த; சிற்றம்பலவன் கரம்தரும் மான் விழியா வரும் புரி மென்குழலாள் சிற்றம்பலவனது கரத்தின்கண் வைக்கப் பட்ட மான்போல விழித்துவரும் புரிமென்குழலாளெனக் கூட்டுக.
பரந்துவரும் பெரும்புனலை வேகந்தணித்துத் தன் சென்னியின்கண் வைத்தாற் போல நில்லாது பரக்கு நெஞ்சை யுடையேனைத் தன்னருட்க ணடக்கினானென்பது கருத்து. தன்றொழும்பினின்றும் யானீங்காமைக்குக் காரணமாகிய அருட்க ணென்னை வைத்தவனெனினு மமையும். மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக் குறியும் பகற்குறியும் விலக்கி வரைவுகடாதல். 261

குறிப்புரை :

17.12 இரவும்பகலும் வரவுவிலக்கல் இரவும்பகலும் வரவுவிலக்கல் என்பது இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலக்கின தோழி, நீ பகல்வரின் அலர்மிகுதி யானெங்களுக்கு மிக்கபழி வந்தெய்தும்; இராவரின் எவ்வாற் றானு நின்னை யெதிர்ப்படுதலருமையாற் சிறிதும் பயனில்லை; அதனால் நீ யிருபொழுதும் வரற்பாலையல்லையென இரவும் பகலும் வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
17.12. இரவும் பகலும்
வரவொழி கென்றது.

பண் :

பாடல் எண் : 13

மையார் கதலி வனத்து
வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத்
தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
மாலையின் முன்னினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மை ஆர் கதலி வனத்து வருக்கைப் பழம் விழுதேன் இருளார்ந்த வாழைக்காட்டின்கண் வருக்கைப்பலாவின் பழம்விழுதலா னுண்டாகியதேனை; இள மந்திகள் எய்யாது அயின்று சோரும் இருஞ் சிலம்பா இளையமந்திகளறியாதே யுண்டு பின் களியாற் சோரும் பெரிய சிலம்பையுடையாய்; மதி ஊர்கொள் மதி நிரம்பாநின்றது; அம்பலத்தான் வெற்பின் அம்பலத்தானுடைய இவ்வெற்பின்கண்; மொய் ஆர் வளர் இளவேங்கை பொன் மாலையின் முன்னின செறிவார்ந்த வளராநின்ற விளைய வேங்கைகள் பூத்துப் பொன்மாலைபோலத் தோன்றின; மெய்யா அரியது என் இனி மெய்யாக வுனக்கரிய தியாது! எ - று.
கதலிவனத்துண்டாகிய தேனென்றதனாற் கதலிக்கனியொடு கூடுதல் பெற்றாம். ஊர்கோடல் குறைவின்றி மண்டலமாக வொளிபரத்தல். அல்லதூஉம் பரிவேடித்தலெனினுமமையும். நின்மலைக்கண் விலங்குகளு மித்தன்மைத்தாகிய தேனைக் குறியாதுண்டு இன்புறாநின்றனவாகலிற் குறித்தவற்றினினக்கரிய தியாது இதுவன்றோ பருவமுமென வரைவு பயப்பக் கூறியவாறாயிற்று. மந்திகடேருமென்பது பாடமாயின், தேனை யறியாதுண்டு அதன் சுவை மிகுதியாற் பின்னதனைத் தேர்ந்துணரு மென்றுரைக்க. வேட்ட பொருள் உள்ளத்து முற்பட்டுத் தோன்றுதலின், வரைவை முந்தியபொருளென்றாள். வரைதருகிளவி வரையுங் கிளவி. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: வரைவுகடாதல். 262

குறிப்புரை :

17.13 காலங்கூறி வரைவுகடாதல் காலங்கூறி வரைவுகடாதல் என்பது இருபொழுதும் வரவு விலக்கின தோழி, மதி நிரம்பாநின்றது; வேங்கை பூவாநின்றன; இனி நினக்கு வரைவொடு வருதற்குக் காலமிதுவெனக் காலங்கூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.13. முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து
வரைதரு கிளவியில் தெரிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 14

தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்
பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்
னாஞ்சொல்லுந் தன்மைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேமாம் பொழில் தில்லைச் சிற்றம்பலத்து தேமாம் பொழிலையுடைய தில்லைச் சிற்றம்பலத்தின்கண்; விண்ணோர் வணங்க நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின் விண்ணோர்வணங்கவும் நாம் விரும்பவுங் கூத்தைச் செய்வானைச் சேராதாரைப்போல வருந்த; வாம் மாண்கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் அழகு மாட்சிமைப்பட்ட மேகலை கழலும் வண்ணங் கண்டு தலையளி செய்யாது நின்றவர் பெருகிக் கிடந்த நம்மல்லலைக்கண்டால்; தாமா அறிகிலர் ஆயின் நம்மாற் றலையளிக்கப்படுவார் இவ்வாறு வருந்துதறகாதென்று தாமாகவறிகின்றிலராயின்; நாம் சொல்லும் தன்மைகள் என் நாஞ்சொல்லுமியல்புகளென்! எ - று.
வாமம் வாமென விடைக் குறைந்து நின்றது. அலரான்வரு நாணினையுங், காணாமையான் வருமாற்றாமையையும் பற்றிக் கிடந்த நம்மல்லலென்றாள். ஒத்ததொவ்வா தென்பதனை ஒத்து மொவ்வாம லெனத் திரிக்க. அஃதாவது இராவருதலுடம்பட்டாள் போன்று பகல்வார லென்றலும், பகல்வருத லுடம்பட்டாள் போன்று இராவார லென்றலும், பின் இருபொழுதையு மறுத்தலும். 263

குறிப்புரை :

17.14 கூறுவிக்குற்றல் கூறுவிக்குற்றல் என்பது காலங் கூறி வரைவு கடாவவும் வரைவுடம்படாமையின் அவடன்னைக் கொண்டே கூறுவிப் பாளாக, அலரான் வருநாணினையுங் காணாமையான் வருமாற் றாமையையும் பற்றிக் கிடந்த நம்மல்லலை நம்மாற் றலையளிக் கப்படுவார் இவ்வாறு வருந்துத றகாதெனத் தாமாகவறி கின்றிலராயின் நாஞ்சொல்லுந் தன்மைகளென்னோவெனப் புலந்து, நீயாகிலுஞ்சென்று கூறென்பது குறிப்பாற்றோன்றத் தலைமகன் வரைவுடம்படாமையைத் தோழி தலைமகட்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.14. ஒத்த தொவ்வா துரைத்த தோழி
கொத்தவிழ் கோதையாற் கூறுவிக் குற்றது.

பண் :

பாடல் எண் : 15

வல்சியி னெண்கு வளர்புற்
றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம்
பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா
வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென்
பவர்ப்பெறிற் கார்மயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார் மயிலே கார்காலத்து மயிலை யொப்பாய்; சிற்றம்பலவரைச் சேரலர் போல் சிற்றம்பலவரைச் சேராதாரைப் போல வருந்த; சீயம் கொல் கரி குறுகாவகை பிடி தான் இடைச் செல் கல்லதர் சீயங் கொல்கரியைச் சென்றணையாத வண்ணம் பிடி தானிரண்டற்கு மிடையே சென்று புகுங் கல்லதரின்கண்; வந்தவாறு என் என்பவர்ப் பெறின் நீர் வந்தவா றெங்ஙனேயென்று சொல்லுவாரைப் பெற்றேமாயின்; வல்சியின் எண்கு வளர்புற்று அகழ மல்கும் இருள்வாய் குரும்பியாகிய வுணவுகாரணமாகக் கரடி உயர்ந்த புற்றை யகழாநிற்ப மிகாநின்ற விருளின்கண்; செல்வு அரிதன்று மன் அவரிருந்த வழிச்சேறலரிதன்று; சென்றேமாயினும் அவ்வாறு சொல்லுவாரில்லை எ - று.
செல்வரிதென்பது செல்வுழிக்க ணென்பதுபோல மெய்யீற்றுடம் படுமெய். செல்லவென்பது கடைக்குறைந்து நின்றதெனினுமமையும். மன்: ஒழியிசைக்கண் வந்தது. கல்லதர் கற்கண்ணதர். கல்லதரி னென்பது பாடமாயின், வந்தவாறென்னென ஒருசொல் வருவித் துரைக்க. பணிமொழி மொழிந்தென்பதனை மொழியவெனத் திரித்து, சிறைப்புறக்கிளவி யாயிற்றெனவொருசொல் வருவித்துரைக்க. சிறைப் புறக் கிளவி யாயிற்றெனவே, சிறைப்புற மாதல் குறித்தாளல்ல ளென்பது பெற்றாம். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த விளிவரல். பயன்: அது. 9; 264

குறிப்புரை :

17.15 செலவுநினைந்துரைத்தல் செலவுநினைந் துரைத்தல் என்பது வரைவுடம்படாமையிற் றோழி தலைமகனோடு புலந்து கூறக்கேட்டு, அக்குறிப்பறிந்து, இக்கல்லதரின்க ணீர்வந்தவா றென்னோவென்று வினவுவாரைப் பெற்றேமாயின் இத்தன்மையையுடைத்தாகிய மிக்க விருளின்கண் யாமவருழைச்சேறலரிதன்று; சென்றேமாயினும் அவ்வாறு சொல்வா ரில்லையெனத் தலைமகள் செலவுநினைந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.15. பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
தேங்கமழ் சிலம்பற்குச் சிறைப்புறக் கிளவி.

பண் :

பாடல் எண் : 16

வாரிக் களிற்றின் மருப்புகு
முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
களிற்றின் மருப்பு உகு முத்தம் களிற்றின் மருப்புக்களினின்று முக்க முத்துக்களை; வரை மகளிர் வேரிக்கு வாரி அளிக்கும் விழுமலை நாட வரையின்வாழுமகளிர் வேரிக்கு விலையாக முகந்துகொடுக்குஞ் சிறந்த மலைக்கணுண்டாகிய நாட்டையுடையாய்; விரி திரையின் நாரிக்கு அளிக்க அமர் விரியுந் திரையையுடைய யாறாகிய பெண்ணிற்குக் கொடுத்தற்குப் பொருந்திய; நல் மாச் சடைமுடி நம்பர் தில்லை ஏர் இக்களிக் கரு மஞ்ஞை நல்ல பெரிய சடைமுடியையுடைய நம்பரது தில்லை யினுளளாகிய ஏரை யுடைய இக்களிக் கரு மஞ்ஞையை யொப்பாள்; இந்நீர்மை எய்துவதுஎன் தன்றன்மையை யிழந்து இத்தன்மையை யெய்துவதென்? நீயுரை எ - று.
மலையையுடைய நாடெனினுமமையும். விரிதிரையி னென்பது அல்வழிச்சாரியை. விரிதிரையையுடைய நாரியெனினு மமையும். நாரிக்களித்தம ரென்பது பாடமாயின், நாரிக்களித்தலான் அவளமருஞ்சடை யென்றுரைக்க. களிக்கரு மஞ்ஞை களியை யுடைய கரிய மஞ்ஞை. அணைதற்கரிய களிற்றின் மருப்பினின்று முக்க முத்தத்தின தருமையைக் கருதாது தமக்கின்பஞ் செய்யும் வேரிக்குக் கொடுத்தாற் போல, என்னையரது காவலை நீவி நின்வயத்தளாகிய விவளதருமை கருதாது நினக்கின்பஞ் செய்யுங் களவொழுக்கங் காரணமாக இகழ்ந்து மதித்தாயென உள்ளுறை காண்க. மெய்ப்பாடும் பயனும் அவை. ; 265

குறிப்புரை :

17.16 பொலிவழிவுரைத்துவரைவுகடாதல் பொலிவழிவுரைத்து வரைவுகடாதல் என்பது தலைமகள் தன்னை யெதிர்ப்படலுற்று வருந்தாநின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன் குறியிடைவந்து நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, என்னையரது காவலை நீவி நின்வயத்தளாய் நின்று பொலிவழிந்து வருந்தா நின்றவளை நீ வரைந்துகொள்ளாது இவ்வாறிகழ்ந்து மதித்தற்குக் காரணமென்னோவெனத் தலைமகளது பொலிவழிவு கூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
17.16. வரைவு விரும்பு மன்னுயிர்ப் பாங்கி
விரைதரு குழலி மெலிவு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 1

குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும்
நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
யோமெய்ம்மை யோதுநர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
குறைவிற்கும் வரைவுவேண்டி நீயெம் மாட்டுக் குறை யுடையையாய் நிற்குமதனானும்; கல்விக்கும் கல்வி மிகுதியானும்; செல்விற்கும் செல்வானும்; நின் குலத்திற்கும் தங்குலத்திற்கேற்ற நின்குலத்தானும்; வந்தோர் நிறைவிற்கும் நீ விடுக்க வந்த சான்றோரது நிறைவானும்; மேதகு நீதிக்கும் மேவுதற்குத் தகு நீதியானும்; ஏற்பின் அல்லால் நின்வரவை யெமரேற்றுக்கொளி னல்லது விலை கூறுவராயின்; நினையின் மெய்ம்மை ஓதுநர்க்கு ஆராயுமிடத்து மெய்ம்மை சொல்லு வார்க்கு; உறை வில் குலா நுதலாள் ஏழ்பொழிலும் விலையோ விற்போல வளைந்த நுதலை யுடையாட்கு ஏழுலகும் விலையாமோ! விலைக் குறையாம் எ-று.
இறை எல்லாப் பொருட்கு மிறைவன்; வில் குலா வரை ஏந்தி வில்லாகிய வளைதலையுடைய வரையை யேந்துவான்; வண் தில்லையன் வளவிய தில்லைக்கண்ணான்; ஏழ்பொழிலும் அவனுடைய ஏழ்பொழிலுமெனக் கூட்டுக.
செல்வு இருமுதுகுரவராற் கொண்டாடப்படுதல். நிறைவு அறிவோடுகூடிய வொழுக்கம். நீதி உள்ளப்பொருத்த முள்வழி மறாது கொடுத்தல். உறைவிலென்பதற்கு உறையையுடைய வில்லெனினுமமையும். 266

குறிப்புரை :

18.1 முலைவிலை கூறல் முலைவிலை கூறல் என்பது வரைவு முடுக்கப்பட்ட தலைமகன், யான் வரைவொடு வருதற்கு நீ சென்று அவளையன் மாரை முலைவிலை கேட்பாயாகவென, எல்லாவற்றானு நின்வரவை எமரேற்றுக்கொளினல்லது விலை கூறுவராயின் அவளுக்கேழுலகும் விலைபோதாதெனத் தோழி முலைவிலை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.1. 9; கொலைவேற் கண்ணிக்கு
விலையிலை யென்றது.

பண் :

பாடல் எண் : 2

வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண்
ணித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழ லீசர்சிற்
றம்பலந் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா
திரவின்நின் னாரருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
என்னைத் தன் தொழும்பிற் படுத்த நல்நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் என்னைத் தன்னடிமைக்கட்படுவித்த நல்ல நீண்ட கழலையுடைய வீசரது சிற்றம்பலத்தை; தாம் பணியார்க்கு அடுத்தன தாம் வரின் தாம் பணியாதார்க்குத் தக்கனவாகிய தீதுகள் உனக்கு வரக்கூடு மாயின்; இரவின் நின் ஆர் அருள் பொல்லாது இரவின் கணுண்டாகிய நின்னாரருள் எமக்குப் பொல்லாது; அதனான், வடுத்தன நீள் வகிர்க் கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு வடுவனவாகிய நீண்ட வகிர்போலுங் கண்ணையுடை யாளது தூய முத்துப் போலு மொளியை யுடைய முறுவலுக்கு; தொடுத்தன நீ விடுத்து எய்தத் துணி எமராற் றொடுக்கப்பட்டன வாகிய பொருள்களை நீ வரவிட்டு வரைந்தெய்தத் துணிவாயாக எ - று.
நீள்வகிர்க் கண்ணியாகிய வெண்ணித்தில வாணகைக் கென்றுரைப்பினு மமையும். தொடுத்தன பலவாக வகுக்கப்பட்டன. படுத்தன நீள்கழலென்பதூஉம் பாடம். சிற்றம்பலந்தாம் பணியார்க் கடுத்தன தாம் வருகையாவது கெர்ப்பம் வருகை. அடுத்தன தாம் வரினென்பதற்கு நீ வரினெமக்கடுத்தனதா முளவா மென்று பொருளுரைப்பாருமுளர். அடுத்தனதான் வரினென்பது பாட மாயின், தானென்பது அசைநிலை. இவை இரண்டிற்கும் மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: அது. 267

குறிப்புரை :

18.2 வருமதுகூறி வரைவுடம்படுத்தல் வருமது கூறி வரைவுடம்படுத்தல் என்பது முலைவிலை கூறிய தோழி, நீ வரைவொடு வாராது இரவருள் செய்யாநின்ற விதுகெர்ப்பத்துக் கேதுவானால் நம்மெல்லார்க்கும் பொல்லா தாம்; அது படாமல் எமராற் றொடுக்கப்பட்ட அருங்கலங்களை விரைய வரவிட்டு அவளை வரைந்தெய்துவாயாகவென மேல் வருமிடுக்கண் கூறித் தலைமகனை வரைவுடம்படுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.2. தொடுத்தன விடுத்துத் தோகைதோளெய்
திடுக்கண்பெரி திரவரினென்றது.

பண் :

பாடல் எண் : 3

குன்றங் கிடையுங் கடந்துமர்
கூறும் நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும் மையும்வந்து
மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
வகைசெப்பு தேமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின் தங்கு இடை மின்போலுமிடையை யுடையாய்; குன்றங் கிடையும் கடந்து இனிக் குன்றக்கிடப்புக்களை யுடைய சுரத்தையுங் கடந்துபோய்; உமர் கூறும் நிதி கொணர்ந்து நுமர்சொல்லு நிதியத்தைத் தேடிக்கொணர்ந்து; நும்மையும் வந்து மேவுவன் நும்மையும் வந்து மேவுவேன்; தேமொழியே தேமொழியினையுடையாய்; சென்று நீ சென்று; அம்பலம் சேர் மன் தங்கு அம்பலத்தைச் சேர்ந்த மன்னன்றங்கும்; இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை இடைமருது ஏகம்பம் வாஞ்சிய மாகிய இவற்றை யொக்கும் பொன்னை; இடை கொண்டு வாடா வகை இடைகொண்டு வாடாத வண்ணம்; அங்குச் செப்பு அவ் விடத்துச் சொல்ல வேண்டுவன சொல்லுவாயாக எ - று.
குன்றக்கிடையென்பது மெலிந்து நின்றதெனினுமமையும். நும்வயி னென்பதூஉம் பாடம். எண்ணப்பட்டவற்றோடு படாது அம்பலஞ் சேர் மன்னனெனக் கறியவதனால், அம்பலமே யவர்க்கிட மாதல் கூறினார். இடைகொண் டென்புழி இடை காலம். மெய்ப்பாடு: அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன்: வரைபொருட் பிரியுந் தலைமகன் ஆற்றுவித்தல். 268

குறிப்புரை :

18.3 வரைபொருட்பிரிவை யுரையெனக் கூறல் வரைபொருட்பிரிவை யுரையெனக் கூறல் என்பது மேல்வருமது கூறி வரைவுடம்படுத்தின தோழிக்கு, யான் போய் நுமர் கூறு நிதியமுந் தேடிக்கொண்டு நும்மையும் வந்து மேவுவேன்; நீ சென்று அவள் வாடாத வண்ணம் யான் பிரிந்தமை கூறி ஆற்றுவித்துக்கொண்டிருப்பாயாகவெனத் தலைமகன் றான் வரைபொருட்குப் பிரிகின்றமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.3. ஆங்க வள்வயின் நீங்க லுற்றவன்
இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 4

கேழே வரையுமில் லோன்புலி
யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி
னும்பகற் சேறியென்று
வாழே னெனவிருக் கும்வரிக்
கண்ணியை நீ வருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி
யேகு தனிவள்ளலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தனி வள்ளலே ஒப்பில்லாத வள்ளலே; கேழ் ஏவரையும் இல்லோன் புலியூர்ப் பயில் கிள்ளை அன்ன யாழ் ஏர் மொழியாள் தனக்குவமையாக யாவரையுமுடையனல்லாதவனது புலியூர்க்கட்பயிலுங் கிளியையொக்கும் யாழோசைபோலு மொழியையுடையாள்; இரவரினும் பகல் சேறி என்று இரவினீவரினும் பகற்பிரிந்து செல்வையென்று அதனையே யுட்கொண்டு; வாழேன் என இருக்கும் வரிக் கண்ணியை நின்னோடுகூடிய வப்பொழுதும் யானுயிர்வாழேனென்று நினைந் திருக்கும் வரிக்கண்ணினை யுடையாளை; வருட்டி இடைக்கண் தாழேன் என நீ சொல்லி ஏகு வசமாக்கிப் பெற்றதோர் செவ்வியில் தாழேனென்னும் உரை முன்னாக நின்பிரிவை நீயே சொல்லி யேகுவாயாக எ - று.
கிளி மென்மையும் மென்மொழியுடைமையும்பற்றி, மென் மொழியையுடையாட் குவமையாய் வந்தது. யாழோசை செவிக் கினிதாதல் பற்றி மொழிக்குவமையாய் வந்தது. புலியூர்ப் பயிலுமொழியாளெனவியையும். வாழேனென விருக்கு மென்ப தனை முற்றாக்கி மொழியாளிவ்வாறு செய்யும். அவ்வரிக் கண்ணியை யென ஒரு சுட்டு வருவித்துரைப்பினுமமையும். வருடி வருட்டியென மிக்கு நின்றது. வாழேனெனவிருக்கு மென்றதனான், இத்தன்மைத்தாகிய விவளது பிரிவாற்றாமையை மறவாதொழிய வேண்டு மென்றாளாம். இடைக்கணென்றது இவ்வொழுக்கத்தால் நினக்கு வருமேத நினைந்து ஆற்றாளாஞ் செவ்விபெற்றென்றவாறு. வடிக்கண்ணியை யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அச்சம். பயன்: தலைமகள தாற்றாமை யுணர்த்துதல்.269

குறிப்புரை :

18.4 நீயே கூறென்றல் நீயே கூறென்றல் என்பது பிரிவறிவிப்பக் கூறின தலைமகனுக்கு, நீ யிரவுவரினும் பகற்பிரிந்து செல்வையென வுட்கொண்டு நின்னொடு கூடிய வப்பொழுதும் யானுயிர்வாழே னென்று நினைந்திருப்பாளுக்குத் தாழேனென்னு முரைமுன்னாக நின்பிரிவை நீயே சொல்லிப் போவாயாகவென அவன் விரையவருவது காரணமாகத் தோழி தலைமகளது பிரிவாற்றாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.4. காய்கதிர்வேலோய் கனங்குழையவட்கு
நீயேயுரை நின்செலவென்றது.

பண் :

பாடல் எண் : 5

வருட்டின் திகைக்கும் வசிக்கின்
துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வருட்டின் திகைக்கும் நுதலுந் தோளு முதலாயினவற்றைத் தைவந்து ஒன்று சொல்லக் குறிப்பேனாயின் இஃதென் கருதிச் செய்கின்றானென்று மயங்காநிற்கும்; வசிக்கின் துளங்கும் இன்சொல்லின் வசித்து ஒன்று சொல்லலுறுவேனாயின் அக்குறிப் பறிந்து உண்ணடுங்காநிற்கும்; தெருட்டின் மன மகிழ்ந்து தெளியலள் இனி வெளிப்படப் பிரிவுணர்த்திப் பொருண்முடித்துக் கடிதின் வருவலென்று சூளுற்றுத் தெளிவிப்பேனாயின் மன மகிழ்ந்து அதனைத் தேறாள்; செப்பும் வகை இல்லை இவ்வாறொழிய அறிவிக்கும் வகை வேறில்லை; அதனான், புரி குழலாட்கு எங்ஙன் சொல்லி ஏகுவன் சுருண்ட குழலை யுடையாட்குப் பிரிவை எவ் வண்ணஞ் சொல்லிப் போவேன்! ஒருவாற்றானுமரிது எ - று.
சீர் அருக்கன் குருட்டின் புகச் செற்ற கோன் புலியூர் பெருமையையுடைய அருக்கன் குருடாகிய இழிபிறப்பிற் புகும் வண்ணம் அவனை வெகுண்ட தலைவனது புலியூரை; குறுகார் மனம் போன்று இருட்டின் புரிகுழல் அணுகாதார் மனம் போன்று இருட்டுதலையுடைய புரிகுழலெனக் கூட்டுக.
வருடினென்பது வருட்டினென நின்றது. ஏகுவதே யென்பதூ உம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவு மாட்சிமைப் படுத்துதற்குப் பிரிதல். 270

குறிப்புரை :

18.5 சொல்லாதேகல் சொல்லாதேகல் என்பது நீயேகூறென்ற தோழிக்கு, யானெவ்வாறு கூறினும் அவள் பிரிவுடம்படாளாதலின் ஒருகாலும் வரைந்துகொள்கையில்லை; யான் விரைய வரு வேன்; அவ்வளவும் நீயாற்றுவித்துக் கொண்டிருப்பாயாகவெனக் கூறித் தலைமகன் றலைமகளுக்குச் சொல்லாது பிரியாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.5. நிரைவளை வாட
உரையா தகன்றது.

பண் :

பாடல் எண் : 6

நல்லாய் நமக்குற்ற தென்னென்
றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
றார்நம் சிறந்தவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நம் சிறந்தவர் நமக்குச் சிறந்த அவர்; நமர் தொடுத்த எல்லா நிதியும் உடன் விடுப்பான் நமராற் றொடுக்கப்பட்ட வெல்லா நிதியத்தையும் ஒருங்கே வரவிடுவான் வேண்டி; இமை யோர் இறைஞ்சும் மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை இமையோர் சென்று வணங்கும் வளமார்ந்த கழலையுடைய அழல் வண்ணரது வளவிய தில்லையை; தொழார்கள் அல்லால் செல்லா அழல் கடம் இன்று சென்றார் தொழாதாரல்லது நம்போல்வார் செல்லாத அழலையுடைய சுரத்தை இன்று சென்றார்; அதனான், நல்லாய் நல்லாய்; நமக்கு உற்றது என்னென்று உரைக்கேன் நமக்கு வந்ததனை யாதென்று சொல்லுவேன்! எ-று.
என்னென் றுரைக்கேனென்றதனான், தொடுத்தது விடுப்பச் சென்றாராகலின் இன்பமென்பேனோ? அழற்கடஞ் சென்றமையாற் றுன்பமென் பேனோவெனப் பொதுப்படக் கூறுவாள் போன்று, வரைவு காரணமாகப் பிரிந்தாராகலின் இது நமக்கின்பமே யென்றாற்று வித்தாளாம். தொழார்களல்லார் செல்லா வென்று பாட மோதுவாரு முளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவு நீட்டியாமை யுணர்த்துதல். 271

குறிப்புரை :

18.6 பிரிந்தமை கூறல் பிரிந்தமை கூறல் என்பது தலைமகன், முன்னின்று பிரிவுணர்த்த மாட்டாமையிற் சொல்லாது பிரியாநிற்ப, தோழி சென்று, நமராற் றொடுக்கப்பட்ட வெல்லா நிதியத்தையும் ஒருங்கு வரவிட்டு நின்னை வரைந்துகொள்வானாக அழற்கட நெறியே பொருள் தேடப் போனான்; அப்போக்கு, அழற்கடஞ் சென்றமையான் நமக்குத் துன்பமென்பேனோ? வரைவு காரணமாகப் பிரிந்தானாதலின் நமக்கின்பமென்பேனோவெனப் பொதுப் படக் கூறி, வரைவு காரணமாகப் பிரிந்தானாதலின், இது நமக்கின்பமே யெனத் தலைமகள் வருந்தாமல் அவன் பிரிந்தமை கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
18.6. தேங்கமழ் குழலிக்குப்
பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 7

அருந்தும் விடமணி யாம்மணி
கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
யாமினி வாழ்வகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் உண்ணப்பட்ட நஞ்சநின்று அலங்காரமாய நீலமணிபோலுங் கண்டத்தை யுடையவன்; அண்டர்க்கு எல்லாம் மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தேவர்க்கெல்லா முறுதிபயக்கு மருந்தும் இன்சுவையையுடைய வமிர்தமு மாகாநிற்கும் முன்னோன்; தில்லை வாழ்த்தும்வள்ளல் அவனது தில்லையை வாழ்த்தும் நம்வள்ளல்; திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால் நமக்கேதம் பயக்கு மொழுக்க மொழிந்து குற்றந்தீர்ந் திருக்கு முறைமையாகிய இந்நெறியைச் செல்கின்ற இந்நீதி நம்மைக் கெடுக்குமென்று நீகருதின்; வருந்தும் மட நெஞ்சமே வருந்துகின்ற வறிவில்லாத நெஞ்சமே; யாம் இனி வாழ் வகை என்ன யாமின்புற்று வாழுமுபாயம் வேறியாது! எ - று.
அருந்துமென்பது காலமயக்கம்; அருந்துதற்றொழின் முடிவதன் முன் நஞ்சங்கண்டத்து நிறுத்தப்பட் டணியாயிற்றாகலின், நிகழ்காலத்தாற் கூறப்பட்டதெனினு மமையும். மற்று: அசைநிலை. திருந்துங் கடனெறியென்பது தித்திக்குந் தேனென்பதுபோல இத்தன்மைத்தென்னு நிகழ்காலம்பட நின்றது. திருந்துங் கடனெறியைச் செல்லுமென்றும், களவாகிய விவ்வாற்றைச் சிதைக்கு மென்றும் முற்றாக அறுத்துரைப்பாருமுளர். 272

குறிப்புரை :

18.7 நெஞ்சொடு கூறல் நெஞ்சொடு கூறல் என்பது பிரிந்தமை கூறக் கேட்டு வருந்தா நின்ற நெஞ்சிற்கு, நமக்கேதம் பயக்கு மொழுக்க மொழிந்து குற்றந் தீர்ந்த முறைமையாகிய வொழுக்கத்துப் பிரிந்தவிது நம்மைக் கெடுக்குமென்று நீ கருதின், இது வொழிய நமக்கின்புற்று வாழு முபாயம் வேறுளதோ வெனத் தலைமகள் நெஞ்சினது வருத்தந் தீரக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.7. கல்வரை நாடன் சொல்லா தகல
மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்தது.

பண் :

பாடல் எண் : 8

ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென்
கொலாமின்று செய்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏர்ப் பின்னை தோள் முன் மணந்தவன் ஏத்த அழகையுடைய பின்னையென்கின்ற தேவியுடைய தோள்களை முற்காலத்துக் கலந்த மாயோன் நின்றுபரவ; எழில் திகழும் சீர்ப் பொன்னை வென்ற செறி கழலோன் தில்லைச் சூழ்பொழில் வாய் எழில்விளங்குஞ் செம்பொன்னை வென்ற திருவடிகளையுடைய வனது தில்லைக்கட் சூழ்ந்த பொழிலிடத்து; கார்ப் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கரியபுன்னை பொன் போல மலராநின்ற முத்துப்போலு மணலையுடைய தோரிடத்து; கலந்து அகன்றார் கூடி நீங்கினவரது; தேர்ப்பின்னைச் சென்றஎன் நெஞ்சு இன்று செய்கின்றது என்கொலாம் தேர்ப்பின் சென்றான் என்னெஞ்சம் இவ்விடத்தின்று செய்கின்றதென்னோ! அறிகின்றிலேன்! எ - று.
ஏத்தவெழிறிகழுமெனவியையும். என்னோடு நில்லாது அவர் தேர்ப்பின்போன நெஞ்சம் இன்றென்னை வருத்துகின்ற விஃதென்னென்று நெஞ்சொடு நொந்து கூறினாளாக வுரைப்பினு மமையும். செறிகழலும் முத்தமணலும்: அன்மொழித்தொகை. தேய்கின்ற தேயென்பது பாடமாயின், அன்றவரை விடாது சென்ற நெஞ்சம், செல்லாது ஈண்டிருக்கு மென்னைப்போல், இன்று தேய்கின்ற தென்னென்று கூறினாளாகவுரைக்க. இவை யிரண்டற்கும் மெய்ப் பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 273

குறிப்புரை :

18.8 நெஞ்சொடுவருந்தல் நெஞ்சொடுவருந்தல் என்பது பிரிந்தமை கூறக்கேட்ட தலைமகள், அன்றவரை விடாது என்னைவிட்டு அவரது தேர்ப்பின் சென்றநெஞ்சம் இன்றுமவ்வாறு செய்யாது என்னை வருத்தா நின்றதெனத் தன்னெஞ்சொடு வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.8. வெற்பன் நீங்கப்
பொற்பு வாடியது.

பண் :

பாடல் எண் : 9

கானமர் குன்றர் செவியுற
வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென
மான்நல் தொடைமடக்கும்
வானமர் வெற்பர்வண் தில்லையின்
மன்னை வணங்கலர்போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல்
செல்லல் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேன் அமர் சொல்லி தேனைப்பொருந்துஞ் சொல்லையுடையாய்; கான் அமர் குன்றர் செவி உற வாங்குகணை கானின்க ணமருங் குன்றவர் செவியுறுவண்ணம் வலித்த கணையை; துணையாம் மான் அமர் நோக்கியர் நோக்கென மான் நல்தொடை மடக்கும் தாமெய்யக் குறித்தவற்றினோக்குந் தந்துணைவியராகிய மானைப்பொருந்திய நோக்கத்தையுடையவரது நோக்கோடொக்கு மென்று கருதி அம்மானைக் குறித்த நல்ல தொடையை மடக்கும்; வான் அமர் வெற்பர் செல்லார் முகி றங்கும் வெற்பர் செல்கின்றாரல்லர்; வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் வளவிய தில்லையின் மன்னனை வணங்காதாரைப் போல; திருநுதல் திருநுதால்; செல்லல் செல்லல் இன்னாமையையடையாதொழிவாய் எ - று.
தொடைமடக்குமென்னுஞ் சொற்கள் இயைந்து ஒரு சொல்லாய்க் குன்றவ ரென்னு மெழுவாய்க்குங் கணையையென்னு மிரண்டாவதற்கும் முடிபாயின. துணையாமென்பது ``ஏவலிளையர் தாய்`` என்பதுபோல மயக்கமாய் நின்றது. மானமர் நோக்கியர் நோக்கென்பதனை உறழ்வா லுவமைப்பாற்படுக்க. கொலைத் தொழிலாளருந் தந்துணைவியரோ டொப்பனவற்றிற்கு மிடர் செய்யாத வெற்பராதலின், நீ யிவ்வாறு வருந்த நீட்டியாரென்பது கருத்து. 274

குறிப்புரை :

18.9 வருத்தங்கண்டுரைத்தல் வருத்தங்கண்டுரைத்தல் என்பது தலைமகள் தன்னெஞ் சொடுவருந்தாநிற்பக் கண்ட தோழி, இத் தன்மைத்தாகிய வெற்பராகலிற் றாழாது விரைய வரைவொடுவருவர்; ஆதலால் நீ யின்னாமையையடையாதொழிவாயாக வென்று அவள் வருத்தந் தீரக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.9. அழலுறு கோதையின் விழுமுறு பேதையை
நீங்கல ரென்னப் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 10

மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
வாறென்ப ரேந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மது மலர்ச்சோலையும் அவரைப் புதுவது கண்ணுற்ற மதுமலரையுடைய சோலையையும்; வாய்மையும் அன்று நின்னிற்பிரியேன் பிரியினாற்றேனென்று கூறிய வஞ்சினத்தினது மெய்ம்மையையும்; அன்பும் வழிமுறைபெருகிய வன்பையும்; மருவி வெங்கான் கதுமெனப் போக்கும் நம்மோடு மருவி வைத்துப் பின் கதுமென வெங்கானிற்போகிய போக்கையும்; நிதியின் அருக்கும்- போய்த்தேடு நிதியினது செய்தற்கருமையையும்; முன்னிக் கலுழ்ந்தால் நினைந்து நீ கலுழ்ந்தால்; ஏந்திழை ஏந்திழாய்; நொதுமலர் ஏதிலர்; மலர்ப்பாவைக்கு இது வந்தவாறு என்னோ என்பர் மலர்ப்பாவையன்னாட்கு இவ்வேறுபாடு வந்தவாறென்னோ வென்றையுவறுவர்; அதனானீயாற்றுவாயாக எ - று.
நோக்கம் ஓர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல் வந்தவாறு என்னோ கண்களொருமூன்றையுடையவனது தில்லையைக் கருதாதார்போல வந்தாவாறென்னோவெனக் கூட்டுக.
அன்பு வழிமுறையாற் சுருங்காது கடிது சுருங்கிற்றென்னுங் கருத்தாற் கதுமெனப் போக்கு மென்றாள். அருக்குமென்றதனால் நீட்டித்தல் கருதினாளாம். வழி யொழுகி யாற்றுவிக்கவேண்டு மளவாகலின், ஆற்றாமைக்கு காரணமாகியவற்றை மிகுத்துக் கூறினாளாம். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 275

குறிப்புரை :

18.10 வழியொழுகிவற்புறுத்தல் வழியொழுகி வற்புறுத்தல் என்பது தலைமகளது வருத்தங் கண்ட தோழி, அவளை வழியொழுகியாற்றுவிக்கவேண்டு மளவாகலின், ஆற்றாமைக்குக் காரணமாகியவற்றைக் கூறித் தானும் அவளோடு வருத்தமுற்று, அதுகிடக்க, இம்மலர்ப்பாவை யை யன்னாட்கு இவ்வேறுபாடு வந்தாவாறென்னோவென்று அயலவர் ஐயுறாநிற்ப ராதலான் நீ யாற்றவேண்டு மென்று அவள்வழி யொழுகி வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.10. சூழிருங் கூந்தலைத்
தோழி தெருட்டியது.

பண் :

பாடல் எண் : 11

வந்தாய் பவரையில் லாமயில்
முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
நையுந் திருவினர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கொந்தார் நறுங் கொன்றைக் கூத்தன் தென் தில்லை தொழார் குழுப்போல் கொத்தார்ந்த நறிய கொன்றையை யணிந்த கூத்தனது தெற்கின்கணுண்டாகிய தில்லையை வணங்காதாரது திரள்போல; சிந்தாகுலம் உற்றுப் பற்று இன்றி நையும் திருவினர்க்கு மனக்கலக்கத்தையுற்றுத் தமக்கோர் பற்றுக்கோடின்றி வருந்துந் திருவினையுடையவர்க்கு; வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை சென்றாராய்வாரை யுடைத்தல்லாத மயிலின் முட்டையை; இளைய மந்தி பந்தாடு இரும் பொழில் பல்வரை நாடன் பண்போ இளைய மந்தி பந்தாடிவிளையாடும் பெரிய பொழிலையுடைய பலவாகிய வரைகளை யுடைய நாட்டை யுடையவன தியல்போ; இனிது இனிது எ - று.
நையுந்திருவினர்க்கென்றது நையுந்துணையா யிறந்துபடா திருந்து அவனளிபெற்ற ஞான்று இன்புறவெய்தும் நல்வினை யாட்டியர்க் கென்றவாறு. எனவே, யானது பெறுமாறில்லை யென்றாளாம். உற்றதாராய்ந் தோம்புவாரில்லாத மயிலினது முட்டையால் ஈன்ற வருத்தமறியாத விளமந்தி, மயிலின் வருத்தமும் முட்டையின் மென்மையும் பாராது பந்தாடுகின்றாற்போலக் காதலரான் வினவப்படாத என் காமத்தை நீ யிஃதுற்றறியாமையான் எனது வருத்தமும் காமத்தினது மென்மையும் பாராது, இவ்வா றுரைக்கின்றாயென உள்ளுறை வகையாற் றோழியை நெருங்கி வன்புறை யெதிரழிந்தவாறு கண்டுகொள்க. அல்லதூஉம், வந்தாய்பவர் தோழியாகவும், இளமந்தி தலைமகனாகவும், பந்தாடுதல் தலைமகளது வருத்தம் பாராது தான் வேண்டியவா றொழுகு மவனதொழுக்கமாகவும் உரைப்பினு மமையும். திருவி னெற்கே யென்பது பாடமாயின், இவ்வாறு வன்கண்மை யேனாய் வாழுந் திருவையுடையேற்கென வுரைக்க. இதற்குத் திரு: ஆகுபெயர். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: அது. 276

குறிப்புரை :

18.11 வன்புறையெதிரழிந்திரங்கல் வன்புறையெதிரழிந்திரங்கல் என்பது, வழியொழுகி வற்புறுத்தின தோழியோடு, தலைமகன் வரைவு நீடுதலாற் றமக்கோர் பற்றுக்கோடின்றி வருந்துந் திருவினையுடையார்க்கு அவன் வரைவு மிகவுமினிது; யானாற்றேனெனத் தலைமகள் வன்புறை யெதிரழிந் திரங்காநிற்றல். அதற்கு செய்யுள்
18.11. வன்கறை வேலோன் வரைவு நீட
வன்புறை யழிந்தவள் மனமழுங் கியது.

பண் :

பாடல் எண் : 12

மொய்யென் பதேஇழை கொண்டவ
னென்னைத்தன் மொய்கழற்காட்
செய்யென் பதேசெய் தவன்தில்லைச்
சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற்
புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
லாமிவ் வியலிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மொய் என்பதே இழை கொண்டவன் வலிமையை யுடைய என்புதனையே தனக்கணியாகக் கொண்டவன்; என்னைத் தன் மொய் கழற்கு ஆள் செய் என்பதே செய்தவன் என்னைத் தன்னுடைய வலிய திருவடிக் காட்செய்யென்று வெளிப் பட்டுநின்று சொல்லுதலையே செய்தவன்; தில்லைச் சூழ்கடல் சேர்ப்பர் சொல்லும் அவனது தில்லைவரைப்பினுண்டாகிய சூழ்ந்த கடலை யுடைத்தாகிய சேர்ப்பையுடையவரது சொல்லும்; பொய் என்பதே கருத்து ஆயின் பொய்யென்பதே நினக்குக் கருத்தாயின்; புரிகுழல் பொற்றொடியாய் சுருண்டகுழலை யுடைய பொற்றொடியாய்; இவ் வியல் இடத்து மெய் என்பது ஏதும் இல்லை கொலாம் இவ்வுலகத்து மெய்யென்பது சிறிது மில்லைபோலும்! எ-று.
அரிமுதலாயினாரென்பாகலின், மொய்யென்பென்றார். இழிந்தன கைக்கொள்வானாகலின், என்பை யணியாகவும் என்னை யடிமையாகவுங் கொண்டானென்பது கருத்து. மெய்ப்பாடும் பயனும் அவை. 277

குறிப்புரை :

18.12 வாய்மை கூறி வருத்தந் தணித்தல் வாய்மை கூறி வருத்தந் தணித்தல் என்பது வரைவு நீடு தலான் வன்புறை யெதிரழிந்து வருந்தாநின்ற தலைமகளுக்கு, அவர் சொன்ன வார்த்தை நினக்குப் பொய் யென்பதே கருத்தாயின் இவ் வுலகத்து மெய்யென்பது சிறிதுமில்லையெனத் தோழி தலைமகனது வாய்மை கூறி, அவள் வருத்தந் தணியாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.12. வேற்றடங் கண்ணியை
ஆற்று வித்தது.

பண் :

பாடல் எண் : 13

மன்செய்த முன்னாள் மொழிவழியே
அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
நீர்மைகொல் மொய்குழலே.

பொழிப்புரை :

இதன் பொருள்: மொய் குழலே மொய்த்த குழலை யுடையாய்; முன் நாள் மன் செய்த மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் முற்காலத்து மன்னன் நமக்குதவிய மொழியின்படியே அத்தன்மைத் தாகிய மெய்ம்மையைக் கண்டுவைத்தும்; நெஞ்சும் நிறையும் நில்லா- என்னெஞ்சமுநிறையு மென்வரையவாய் நிற்கின்றில; என் செய்த இவையென்செய்தன; எனது இன் உயிரும் அதுவேயுமன்றி எனதினிய வுயிரும்; பொன் செய்த மேனியன் தில்லை உறாரின் பொறை அரிதாம் பொன்னையொத்த மேனியை யுடையவனது தில்லையை யுறாதாரைப்போல வருத்தம் பொறுத்த லரிதாகா நின்றது; முன் செய்த தீங்கு கொல் இவை யிவ்வாறாதற்குக் காரணம் யான் முன்செய்த தீவினையோ; காலத்து நீர்மை கொல் அன்றிப் பிரியுங் காலமல்லாத விக்காலத்தி னியல்போ? அறிகின்றிலன் எ-று.
மொழிவழியே கண்டுமெனவியையும். நெஞ்சநில்லாமை யாவது நம்மாட்டு அவரதன்பு எத்தன்மைத்தோவென் றையப்படுதல். நிறை நில்லாமையாவது பொறுத்தலருமையான் அந்நோய் புறத் தார்க்குப் புலனாதல். நில்லாதென்பது பாடமாயிற் றனித்தனி கூட்டுக.
பொன்செய்த வென்புழிச் செய்தவென்பது உவமச் சொல். உயிர் துன்ப முழத்தற்குக் காரணமாதலின், அதனையுந் துன்பமாக நினைந்து இன்னுயிரும் பொறையரிதாமென்றாள். மெய்ப்பாடு: மருட்கை. பயன்: ஆற்றுவித்தல். 278

குறிப்புரை :

18.13 தேறாது புலம்பல் தேறாதுபுலம்பல் என்பது தலைமகனது வாய்மைகூறி வருத்தந் தணியாநின்ற தோழிக்கு, யானவர் கூறிய மொழியின்படியே மெய்ம்மையைக்கண்டு வைத்தும், என்னெஞ்சமு நிறையும் என்வயமாய் நிற்கின்றன வில்லை; அதுவேயு மன்றி, என்னுயிரும் பொறுத்தற்கரிதாகாநின்றது. இவை யிவ்வாறாதற்குக் காரணம் யாதென்றறிகின்றிலேனெனத் தான் றேறாமைகூறிப் புலம்பாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.13. தீதறு கண்ணி தேற்றத் தேறாது
போதுறு குழலி புலம் பியது.

பண் :

பாடல் எண் : 14

கருந்தினை யோம்பக் கடவுட்
பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்பரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வெள் வளை வெள்வளையையுடையாய்; கருந்தினை ஓம்பக் கடவுட் பராவி நமர் கலிப்ப கரியதினையை யோம்பவேண்டிக் கடவுளைப்பராவி நமராரவாரிப்ப; கொண்மூச் சொரிந்தன அக்கடவுளாணையாற் கொண்மூக்கள் காலமன்றியு நீரைச் சொரிந்தன; காரென அதனைக்காரென்று கருதி; பரங் குன்றின் காந்தள் துன்றி விரிந்தன இப்பரங்குன்றின்கட் காந்த ணெருங்கி யலர்ந்தன; அதனான் நீ காரென் றஞ்சவேண்டா எ - று.
சுரந்ததன் பேரருளான் பொறுத்தற்கரிதாகச் சுரந்த தனது பெரிய வருளான்; தொழும்பில் பரிந்து எனை ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றின் அடிமைக்குத் தகாதவென்னைத் தன்னடிமைக்கண்ணே கூட்டி நடுவுநிலைமையின்றிப் பரிந்தாண்ட சிற்றம்பலத் தானது பரங்குன்றினெனக் கூட்டுக.
கடவுண்மழை கடவுளாற் றரப்பட்ட மழை. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஆற்றுவித்தல். 279

குறிப்புரை :

18.14 காலமறைத்துரைத்தல் காலமறைத்துரைத்தல் என்பது தேறாமைகூறிப் புலம்பா நின்ற தலைமகள், காந்தள் கருவுறக்கண்டு, இஃதவர் வரவுகுறித்த காலமென்று கலங்காநிற்ப, நம்முடைய வையன்மார் தினைக்கதிர் காரணமாகக் கடவுளைப்பராவ, அக்கடவுளதாணையாற் கால மன்றியுங் கார் நீரைச்சொரிய, அதனையறியாது, காலமென்று இக்காந்தண் மலர்ந்தன; நீயதனைக் காலமென்று கலங்கவேண்டா வெனத் தோழி, அவளை யாற்றுவித்தற்குக் கால மறைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.14. காந்தள் கருவுறக் கடவுண் மழைக்கென்
றேந்திழைப் பாங்கி இனிதியம் பியது.

பண் :

பாடல் எண் : 15

வென்றவர் முப்புரஞ் சிற்றம்
பலத்துள்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக்
கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந்
தேமையுஞ் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
தோன்றும் நிரைவளையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நிரை வளை நிரைவளையையுடையாய்; வந்து தோன்றும் ஒரு தூதுவந்து தோன்றாநின்றது; குன்றா அருள் தரக் கூடினர் நம் அகன்று சென்றவர் தூது கொல்லோ இது குன்றாத அருள்கொணர்ந்துதர வந்துகூடிப் பின் னம்மைப் பிரிந்துசென்றவர் தூதோ; இருந்தேமையும் செல்லல் செப்பா நின்றவர் தூது கொல்லோ அன்றி அவர் பிரியவிருந்தோமிடத்தும் இன்னாமையைச் சொல்லா நின்ற வேதிலார்தூதோ? அறியேன் எ-று.
முப்புரம் வென்றவர் முப்புரத்தை வென்றவர்; சிற்றம்பலத்துள் நின்று ஆடும் வெள்ளிக் குன்றவர் சிற்றம்பலத்தின்கணின்றாடும் வெள்ளிக்குன்றை யுடையவர்; குன்றா அருள் அவரது குன்றாத வருளெனக் கூட்டுக.
கூடினரென்பது பெயர்படநின்றதெனினு மமையும். இருந் தேமையென்னு மிரண்டாவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. இரண்டாவதாயேநின்று இன்னாமையைச் சொல்லாநின்றவரென்னுந் தொழிற்பெயரோடு முடிந்ததென்பாரு முளர். ஆங்கொரு தூது ஏதிலார் தூது. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை. பயன்: ஐயந்தீர்தல். 280

குறிப்புரை :

18.15 தூதுவரவுரைத்தல் தூதுவர வுரைத்தல் என்பது காலமறைத்த தோழி, ஒரு தூது வந்து தோன்றாநின்றது; அஃதின்னார் தூதென்று தெரியாதெனத் தானின்புறவோடு நின்று அவள் மனமகிழும்படி தலைமகளுக்குத் தூதுவரவுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.15. ஆங்கொரு தூதுவரப்
பாங்கிகண் டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 16

வருவன செல்வன தூதுகள்
ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக்
கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய்
வானின் றிருக்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏதில தூதுகள் வருவன செல்வன ஏதிலவாகிய தூதுகள் வருவன போவனவா யிராநின்றன; வான் புலியூர் ஒருவனது அன்பரின் வாலிய புலியூர்க்கணுளனாகிய ஒப்பில்லா தானது அன்பையுடையவரைப்போல; உள் உருகத் தருவன இன்பக் கலவிகள் செய்து யானின்புற வுள்ளுருகும் வண்ணந் தரப்படுவன வாகிய இன்பக்கலவிகளைமுன்செய்து; எனது ஆவி கொண்டு ஏகி பின்னெனதாவியைத் தாங்கொண்டுபோய்; என் நெஞ்சில் தம்மை இருவின காதலர் என்னெஞ்சத்தின் கட்டம்மையிருத்தின காதலர்; இன்று இருக்கின்றது ஏது செய்வேன் இன்றுவாளாவிருக்கின்றது ஏதுசெய்யக்கருதி? எ-று.
ஒருவனதன்பு ஒருவன்கணன்பு. உள்ளுருகத் தருவன வென்பதற்கு உள்ளுருகும் வண்ணஞ் சிலவற்றைத் தருவனவாகிய கலவியென்றுரைப்பினு மமையும். தன்மெய்யன்பர் போல யானுமின்புற வுள்ளுருகுங் கலவிகளை முன்செய்து பின்னென தாவி போயினாற்போலத் தாம் பிரிந்துபோய் ஒருஞான்றுங் கட்புலனாகாது யானினைந்து வருந்தச் செய்த காதலர் இன்று ஏது செய்ய விருக்கின்றாரென வேறுமொரு பொருடோன்றிய வாறு கண்டு கொள்க. அயல் - அயன்மை. மெய்ப்பாடும் பயனும் அவை. 281

குறிப்புரை :

18.16 தூதுகண்டழுங்கல் தூதுகண்டழுங்கல் என்பது தூதுவரவுரைப்பக் கேட்ட தலைமகள் மனமகிழ்வோடு நின்று, இஃதயலார் தூதாகலான் இவை வருவன செல்வன வாகாநின்றன; காதலர்தூது இன்று வாராதிருக்கின்றது என்செய்யக்கருதி யென்றறிகின்றிலே னென்று ஏதிலார் தூதுகண் டழுங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
18.16. அயலுற்ற தூதுவரக்
கயலுற்றகண்ணி மயலுற்றது.

பண் :

பாடல் எண் : 17

வேயின மென்தோள் மெலிந்தொளி
வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள்
அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்
கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன
ளாம்இத் திருந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வேய் இன மென்றோள் மெலிந்து வேய்க் கினமாகிய மென்றோண்மெலிந்து; ஒளி வாடி கதிர்ப்புவாடி; விழி பிறிதாய் விழி தன்னியல்பிழந்து வேறாய் பாயின மேகலை பண்டைய ளல்லள்; பரந்த மேகலையையுடையாள் பண்டைத் தன்மையளல்லாளாயினாள், அதனால், இத் திருந்திழை இத்திருந் திழை; சேயினது ஆட்சியின் பட்டனளாம் சேயினதாட்சி யாகிய விடத்துப் பட்டாள் போலும் எ - று.
பவளச் செவ்வி ஆயின ஈசன் திருமேனி பவளத்தினது செவ்வியாகிய வீசன்; அமரர்க்கு அமரன் தேவர்க்குத் தேவன்; சிற்றம்பலத்தான் சிற்றம்பலத்தின் கண்ணான்; சேய் அவனுடைய சேயெனக்கூட்டுக.
ஒளிவாடி யென்பதூஉம், விழிபிறிதாயென்பதூஉம் சினை வினைப்பாற்படும். பாயினமேகலை யென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீர்மைப்படுதலின், ஆகுபெயரெனப்படும். செவ்வி கருகுதலும் வெளுக்குதலுமில்லாத நிறம். ஆட்சி அவன தாணை யான் மக்களுக் கணையலாகாத விடம். 282

குறிப்புரை :

18.17 மெலிவுகண்டு செவிலிகூறல் மெலிவுகண்டு செவிலிகூறல் என்பது ஏதிலார் தூதுகண் டழுங்காநின்ற தலைமகளைச் செவிலி யெதிர்ப்பட்டு, அடியிற் கொண்டு முடிகாறுநோக்கி, இவள் பண்டைத் தன்மையளல்லள்; இவ்வாறு மெலிதற்குச் சேயினதாட்சியிற் பட்டனள் போலுமென்றறிகின்றிலே னென்று அவளது மெலிவுகண்டு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.17. வண்டமர் புரிகுழ லொண்டொடி மெலிய
வாடா நின்ற கோடாய் கூறியது.

பண் :

பாடல் எண் : 18

சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்
றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவமு
றாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம்
பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை
யாடுமின் அன்னையரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சுணங்கைப் பொருந்திய கொங்கைகள் சூதின்றன்மையையுற்றன வில்லை; சொல் தெளிவு உற்றில சொற்கள் குதலைமை நீங்கி விளங்குதலையுற்றனவில்லை; குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் நன்மையுந் தீமையு மறியும் பெதும்பைப் பருவத்தை யிப்பொழுதைக்குறாள்; இவளிளமை இதுவாயிருந்தது அன்னையரே; அன்னைமீர் அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடுமின்; இவ்வணங்குற்ற நோயைத் தெளியவறிந்து சொல்லுவீராமின் எ - று.
குறுகா அசுரர் நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் அணங்குற்ற சென்று சேராத வசுரருடைய நிணத்தைக் குற்ற சூலவேலையுடைய சிவனது சிற்றம்பலத்தை நெஞ்சாலுறாதாரைப் போல அணங்குற்றவெனக் கூட்டுக.
இளமைகூறிய வதனாற் பிறிதொன்று சிந்திக்கப்பட்டா ளென்பது கூறினாளாம். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகட்குற்ற துணர்த்தல். 283

குறிப்புரை :

18.18 கட்டுவைப்பித்தல் கட்டுவைப்பித்தல் என்பது மெலிவுகண்ட செவிலி, அவளது பருவங்கூறி, இவ்வணங்குற்ற நோயைத் தெரியவறிந்து சொல்லுமி னெனக் கட்டுவித்திக் குரைத்துக் கட்டுவைப்பியா நிற்றல் அதற்குச் செய்யுள்
18.18. மால்கொண்ட கட்டுக்
கால் கொண்டது.

பண் :

பாடல் எண் : 19

மாட்டியன் றேயெம் வயிற்பெரு
நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய
வாறிவ ளுள்ளமெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி
யாதன வாய்திறந்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இவள் உள்ளம் ஓடியவாறு எல்லாம் காட்டி இவளுள்ளமோடியவாறு முழுதையும் புலப்படுத்தி; அன்றே நின்ற தில்லைத் தொல்லோனைக் கல்லாதவர் போல் வாட்டி அன்று தொட்டு நின்ற தில்லைக்க ணுளனாகிய பழையோனைக் குருமுகத்தா லறியாதாரைப்போல வருந்த நம்மை வாட்டி; ஏர் குழலார் அன்று மொழியாதன வாய் திறந்து அலர்தூற்றி அவ்வேர்குழலாராகிய வயலார் அன்று மொழியாத பழியையும் வெளிப்படச்சொல்லி; இனி எம் வயின் பெரு நாண் மாட்டி அன்றே இப்பொழு தெம்மிடத் துண்டாகிய பெரு நாணினை மாள்வித்தல்லவே; மாக் குடிமாசு ஊட்டி அன்றே நிற்பது எம்பெருங்குடியைக் குற்றப்படுத்தியல்லவே இக்கட்டுவித்தி நிற்பது! இனியென்செய்தும்! எ - று.
மூள்வித்தற்கண் மூட்டியென நின்றவாறுபோல மாள்வித்தற் கண் மாட்டியென நின்றது. தள்ளியென்னும் பொருள்பட நின்றதென்பாருமுளர். நிற்ப தென்றதனை முன்னையதனோடுங் கூட்டுக. இவளென்றது கட்டுவித்தியை யென்று, இவணிற்ப தெனக் கூட்டித் தலைமகள் கூற்றாக வுரைப்பினுமமையும். தில்லைக்கணின்ற நாள் இந்நாளென்றுணரலாகாமையின், அன்றே நின்றவென்றார். தெய்வம் - கட்டுக்குரிய தெய்வம். மெய்ப் பாடு: இளிவரல். பயன்: அறத்தொடு நிற்றற் கொருப்படுத்தல். 284

குறிப்புரை :

18.19 கலக்கமுற்றுநிற்றல் கலக்கமுற்று நிற்றல் என்பது செவிலி கட்டுவைப்பியா நிற்ப, இவளுள்ள மோடியவாறு முழுதையும் புலப்படுத்தி, நம்மை வருத்தி, அயலார் அன்று மொழியாத பழியையும் வெளிப்படச் சொல்லி, எம்மிடத்துண்டாகிய நாணினையுந்தள்ளி, எங்குடியி னையுங் குற்றப்படுத்தியல்லவே இக்கட்டுவித்தி நிற்கப் புகுகின்ற தெனத் தோழி கலக்கமுற்று நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.19. தெய்வத்தில் தெரியுமென
எவ்வத்தின் மெலிவுற்றது.

பண் :

பாடல் எண் : 20

குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி
கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா
இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
றோன்று மவன்வடிவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இது குயில் அன்றே என்னலாம் சொல்லி கூறன் இது குயிலோசையாமென்று சொல்லலாகுஞ் சொல்லை யுடையாளது கூற்றையுடையான்; சிற்றம்பலத்தான் சிற்றம்பலத்தின் கண்ணான்; இயல் இது அன்றே என்னல் ஆகா இறை அவனது தன்மை யிதுவாமென்று கூறமுடியாத விறைவன்; விறல் சேய் கடவும் மயில் இது அன்றே அவனுடைய விறலையுடைய சேயூரு மயிலிது வல்லவே; கொடி வாரணம் காண்க அதுவேயுமன்றி, அவன் கொடிக்கணுளதாகிய கோழியையும் எல்லீருங் காண்க; வன் சூர் தடிந்த அயில் இது அன்றே அதுவேயுமன்றி, வலியனாகிய சூரைக்குறைத்த அயில்தானிது வல்லவே? இவையெல்லாஞ் சொல்லுகின்றதென்; நெல்லில் தோன்றும் அவன் வடிவு இப்பரப்பிய நெல்லிக்கண்வந்து தோன்றுகின்றது அவனதுருவமாம்; இது அன்றே இதுவல்லவே? காண்மின் எ - று.
முருகனெனவே, முருகணங்கினாளென்று கூறினாளாம். சூர் மாமரமாய் நின்றமையாற் றடிந்தவென்றாள். மெய்ப்பாடு: பெருமிதம். பயன் தன் கரும முற்றுதல். கட்டுவித்தியை வினவ, அவளறியாதாள் போல இக்கருமமுடித்தற் பொருட்டிவ்வகை சொன்னாள். என்னை? வரைபொருட்குத் தலைமகன் போக, அவன் வரவு நீட்டித்தலான், இவளதாற்றாமையானுண்டாகிய நோயை முருகனால் வந்த தென்றிவள் கூறலாமோ? இஃதங்ஙனமாயிற் குறியென்பதனைத்தும் பொய்யேயாமென்பது கடா. அதற்கு விடை: குறியும் பொய்யன்று: இவளும் பொய் கூறினாளல்லள்: அஃதெங்ஙனமெனின்:- குறிபார்க்கச் சென்றிருக்கும்போழுதே தெய்வ முன்னிலையாகக் கொண்டிருத்தலான், அத்தெய்வத்தின் வெளிப் பாட்டானே தலைமகனுடன் புணர்ச்சியுண்மையை யறிந்தாள்.
இவளிங்ஙன மறிந்தாளென்பதனை நாமறிந்த வாறியாதினா லெனின், இக்கள வொழுக்கந் தெய்வமிடைநிற்பப் பான்மை வழியோடி நடக்கு மொழுக்கமாதலானும், சிற்றம்பலத்தானியல்பு தெரிந்திராதே யென்றிவள் சொல்லுதலானும் அறிந்தாம், இப்படி வருமொழுக்கம் அகத்தமிழொழுக்கமென்பதனை முதுபெண்டீரு மறிந்துபோதுகையானும், இவளுரைக்கின்றுழி முதுபெண்டீரை முகநோக்கியே சிற்றம்பலத்தானியல்பு தெரியாதென வுரைத்தாள், அவரு மக்கருத்தே பற்றியும் அதனையுணர்ந்தார், இக்கருத்தினாலு நாமறியப்பட்டது, இனியயலாரையுஞ் சுற்றத்தாரையும் நீக்கவேண்டுகையாலும், இக்களவொழுக்க முடியுமிடத்து வேலனைக் கூவுகையும், வெறித்தொழில் கொள்கையும், அவ்வெறித்தொழிலை யறத்தொடு நின்று விலக்குகை யும், அகத்தமிழிலக்கண மாகையின், முருகணங் கென்றே கூறப்பட் டது. கூறியவாறாவது: குறிக்கிலக்கணம் நென் மூன்று மிரண்டு மொன்றும் படுகை. அஃதாவது அடியுங் கொடியு முவகையும். இதனில், அடியாவது மயில், கொடியாவது கோழி, உவகையாவது வேல். ஆதலான் முருகணங்கெனவே கூறப் பட்டதெனவறிக. 285

குறிப்புரை :

18.20 கட்டுவித்திகூறல் கட்டுவித்தி கூறல் என்பது தோழி கலக்கமுற்று நில்லா நிற்ப, இருவரையு நன்மையாகக் கூட்டுவித்த தெய்வம் புறத்தார்க் கிவ் வொழுக்கம் புலப்படாமல் தானிட்ட நெல்லின்கண் முருகணங்கு காட்ட, இதனை யெல்லீருங் காண்மின்; இவளுக்கு முருகணங் கொழியப் பிறிதொன்று மில்லையெனக் கட்டுவித்தி நெற்குறி காட்டிக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.20. கட்டு வித்தி
விட்டு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 21

வேலன் புகுந்து வெறியா
டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல்
வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா
னிருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின்
நிற்பித்த பண்பினுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லைநின்ற மேலன் தன்னையடைந்த அந்தணனை ஏதஞ் செய்யக்குறித்து அவ்விடத்துப் புகுந்த காலன் வலிகெட ஒரு கழலை வைத்து எழிலை யுடைய தில்லைக்க ணின்ற எல்லாப் பொருட்கு மேலாயுள்ளான்; புகுந்து என்கண் நின்றான் புகுந் தணியனா யென்னிடத்து நின்றவன்; இருந்த வெண்காடு அனைய பாலன் புகுந்து- அவனிருந்த வெண்காட்டை யொக்கும் இப்பிள்ளை இக்குடியிற் பிறந்து; இப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கு வெறியாடு வித்தலாகிய இம்முறைமைக்கணெம்மை நிற்பித்த பண்பால்; வேலன் புகுந்து வெறி ஆடுக வேலனீண்டுப் புகுந்து வெறியாடுவானாக; வெண்மறி அறுக்க பலியாக வெள்ளிய மறியையு மறுக்க எ - று.
வெறியாடுதலேயன்றி இதுவுந் தகாதென்னுங் கருத்தால், மறியறுக்க வெனப் பிரித்துக் கூறினாளாம். கழல் வைத்தென்றாள், எளிதாகச் செய்தலான். பாலனென்னும் பான்மயக்கம் அதிகாரப் புறனடையாற் கொள்க. பரிசினி னிற்பித்தவென்புழி ஐந்தாவது ஏழாவதன் பொருட் கண் வந்து, சிறுபான்மை இன்சாரியை பெற்று நின்றது. ஏழாவதற்கு இன்னென்பதோருருபு புறனடையாற் கொள்ளினுமமையும். மெய்ப் பாடு: இளி வரல். பயன்: தலைமகளது வேறுபாடு நீக்குதல். 286

குறிப்புரை :

18.21 வேலனையழைத்தல் வேலனை யழைத்தல் என்பது கட்டுவித்தி முருகணங்கென்று கூறக்கேட்டு, இப்பால னிக்குடியின்கட்பிறந்து நம்மையிவ்வாறு நிற்பித்த பண்பினுக்கு வேலன் புகுந்து வெறியு மாடுக; அதன்மேன் மறியு மறுக்கவெனத் தாயர் வேலனை யழையா நிற்றல். அதற்குச் செய்யுள்
18.21. வெறியாடிய வேலனைக்கூஉய்
நெறியார்குழலி தாயர்நின்றது.

பண் :

பாடல் எண் : 22

அயர்ந்தும் வெறிமறி ஆவி
செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான
தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதி னொழியினென்
ஆதுந் துறைவனுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வெறி அயர்ந்தும் மறி ஆவி செகுத்தும் பெயர்ந்தும் விளர்ப்பு ஒழியாவிடின் வெறியை விரும்பியாடியும் மறியின தாவியைக்கெடுத்தும் பின்னு நிறவேறுபா டொழியா தாயின்; அயலார் பேசுவ என்னை அயலார் கூறுவனவென்னாம்; பிறிதின் ஒழியின் வெறியாட்டாகிய பிறிதினால் இவ்விளர்ப் பொழியுமாயின்; துயர்ந்தும் துறைவனுக்கு என் ஆதும் துயர முற்றும் அத்துறைவனுக்கு நாமென்னாதும்! இருவாற்றானு முயிர்வாழ்த லரிது எ-று.
இருவர் பேர்ந்து உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின் துயர்ந்தும் யான்றலைவன் யான்றலைவனென்று தம்முண் மாறுபட்ட பிரமனு மாலுமாகிய விருவர் அந்நிலைமை யினின்றும் பெயர்ந்து தழற் பிழம்பாகிய தன்வடிவை யறியலுற்று ஆகாயத்தின் மேற் சென்றுயர்ந்தும் நிலத்தின்கீழ்ப்புக்குத் தாழ்ந்தும் அறியப்படாதவன தம்பலத்தை நினையாதாரைப்போலத் துயரமுற்று மெனக்கூட்டுக.
மறியறுத்தற்கு முன்னுரைத்ததுரைக்க. பெயர்ந்து மென மெலிந்து நின்றது. உணரானென்றது செயப்படுபொருட்கண் வந்தது. தன்னைப்பிரிதல், துன்பமாய் இன்றியமையாத யாம் இத்தன்மைய மாகவும், அளிக்கின்றிலனெனவுட்கொண்டு, அவனை நாம் முன்னம் நெருங்கமுயங்கு மன்பாமாறெல்லாம் இன்றென்னா மென்னுங் கருத்தால், என்னாது மென்றாள். பிறிதுமொழியினென்பது பாட மாயின், வெறியினாற்றணி யாதாதலின் இந்நோய் பிறிதென்று பிறர் மொழியினென்றுரைக்க. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை. பயன்: தலைமகள் தன்னெஞ்சொடு சொல்லி யாற்றுதல்.287

குறிப்புரை :

18.22 இன்னலெய்தல் இன்னலெய்தல் என்பது வெறியாடுதற்குத் தாயர் வேலனை யழைப்பக் கேட்ட தலைமகள், இருவாற்றானும் நமக்குயிர்வாழு நெறியில்லையெனத் தன்னுள்ளே கூறி, இன்ன லெய்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.22. ஆடிய வெறியிற் கூடுவ தறியாது
நன்னறுங் கோதை இன்ன லெய்தியது.

பண் :

பாடல் எண் : 23

சென்றார் திருத்திய செல்லல்நின்
றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை
தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன்
உரைப்பனிக் கூர்மறையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இறை தில்லை தொழாரின் நைந்தும் - இறைவனது தில்லையைத் தொழாதாரைப்போல வருந்தியும்; ஒன்றாம் இவட்கும் மொழிதல்கில்லேன் நாணினா லென்னோ டொன்றாயிருக்கும் என்றோழியாகிய விவட்கு மொழிய மாட்டுகிலேன்; மொழியாதும் உய்யேன் மொழியாதொழிந்தாலும் வேறோராற்றா னுயிர்வாழேன், ஆயினும், குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் இனி மணற்குன்றுகளார்ந்த துறையையுடையவர்க்குச் சிறந்தயான்; இக்கூர் மறை உரைப்பன் இம்மிக்க மறையை யிவட்குரைப்பேன்; சென்றார் திருத்திய செல்லல் சிதைப்பர் நின்றார் கள் என்றால் புணர்ந்துபோயினார் மிகவுமுண்டாக்கிய இந் நோயைத்தீர்ப்பர் முருகனாகப் பிறராக இதற்கியாது மியைபிலாதார் சிலராயின்; நன்றா அழகிது அன்றே இது பெரிது மழகிது எ-று.
நன்றாவழகிதன்றேயென்பது குறிப்புநிலை. குன்றார் துறைவர்க் குறுவேனென்றவதனால், நாண்டுறந்தும் மறையுரைத் தற்குக் காரணங் கூறினாளாம். இந்நோயை யேதிலார் சிதைப்ப விடேன், மறையுரைத்தாயினும் வெறிவிலக்குவேனென்னுங் கருத்தால், நன்றா வழகிதன்றே யென்றாள். மயறருமென - வருத்த நமக்குண்டாமென. மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த நகை. பயன்: வெறிவிலக்குதற் கொருப்படுதல். 288

குறிப்புரை :

18.23 வெறிவிலக்குவிக்க நினைதல் வெறிவிலக்குவிக்க நினைதல் என்பது இருவாற்றானு நமக்குயிர்வாழு நெறியில்லை யாதலாற் றுறைவற்குற்ற நோயைப் பிறர் சிதைக்கப்படின், நாண்டுறந்தும் வெறிவிலக்குவிப்ப னெனத் தலைமகள் தோழியைக்கொண்டு வெறிவிலக்குவிக்க நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.23. அயறருவெறியின் மயறருமென
விலக்கலுற்ற குலக்கொடிநினைந்தது.

பண் :

பாடல் எண் : 24

யாயுந் தெறுக அயலவ
ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
தருவன் சுடர்க்குழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுடர்க் குழை சுடர்க்குழையையுடையாய்; என்னுடைய வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல் தூயன் எனதுவாயையு மனத்தையும் பிரியாத விறைவனது தில்லையை வாழ்த்துவாரைப்போலத் தூயேன்; நினக்குக் கடுஞ் சூள் தருவன் நீதேறாயாயின் நினக்குக்கடிய குளுறவையுந் தருவேன்; அயலவர் ஏசுக அயலாரேசுக; ஊர் நகுக ஊர் நகுவதாக; யாயுந் தெறுக அவற்றின்மேலே யாயும் வெகுள்வாளாக; நீயும்முனிக அதுவேயுமன்றி நீயுமென்னை முனிவாயாக; நிகழ்ந்தது கூறுவல் புகுந்ததனை யான் கூறுவேன்; கேட்பாயாக எ-று.
தூயேனென்றது தீங்குகரந்த வுள்ளத்தேனல்லேனென்றவாறு. தூயனெனக் கென்பது பாடமாயின், எனக்கியான்றூயே னென்றுரைக்க. அறத்தொடுநின்ற - அறத்தொடுகூடிநின்ற. வெரீஇ யுரைத்ததென வியையும். அலங்காரம்: பரியாயம்; பொருண்முரணு மாம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: அறத்தொடு நிற்றல். 289

குறிப்புரை :

18.24 அறத்தொடுநிற்றலையுரைத்தல் அறத்தொடு நிற்றலையுரைத்தல் என்பது நாண்டுறந்தும் மறையுரைத்தும் வெறிவிலக்குவிக்க நினையாநின்ற தலைமகள், மேலறத்தொடு நிற்பாளாக, அயலாரேசுக; ஊர்நகுக; அதுவேயு மன்றி, யாயும்வெகுள்வளாக, அதன்மேல் நீயுமென்னை முனிவாயாக; நீ தேறாயாகிற் சூளுற்றுத்தருவேன்; யான் சொல்லு கின்ற விதனைக் கேட்பாயாக எனத் தோழிக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.24. வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்
கறத்தொடு நின்ற ஆயிழை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 25

வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர்
போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர
எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
றானொர் கழலவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வண்டல் உற்றேம் எங்கண் விளையாட்டைப் பொருந்தினேமாகிய வெம்மிடத்து; ஒரு தோன்றல் ஒருதோன்றல்; வரி வளையீர் உண்டல் உற்றேம் என்று வந்து நின்றது ஓர் போழ்து வரிவளையை யுடையீர் நும்வண்டல் மனைக்கு விருந்தாய் நாமுண்ணத் கருதினோமென்று சொல்லிவந்து நின்றதோர் பொழுதின்கண்; உடையான் புலியூர்க் கொண்டல் உற்று ஏறும் கடல் வர உடையானது புலியூர்வரைப்பிற் கீழ்காற்று மிகுதலாற் கரை மேலேவந்தேறுங் கடல் எம்மேல்வர; எம் உயிர் கொண்டு தந்து அதன்கணழுந்தாமல் எம்முயிரைக் கைக்கொண்டு எமக்குத்தந்து; ஒர் கழலவன் கண்டல் உற்று ஏர் நின்ற சேரிச் சென்றான் அவ்வொரு கழலவன் கண்டலாகிய மரமிக்கு அழகுநின்ற அச்சேரியின்கட் சென்றான்; இனித் தக்கது செய்வாயாக எ - று.
வண்டலுற்றேமங்கணென்பது பாடமாயின், அங்க ணென்பதனை ஏழாம் வேற்றுமைப் பொருள்பட நின்றதோ ரிடைச்சொல்லாக வுரைக்க. புலியூர்க் கடலென வியையும். தேரிற் சென்றானென்பது பாடமாயின், நம்மைக் காண்டல் விரும்பித் தேர்மேலேறிச் சென்றானென்றுரைக்க. தேரினென்பது கருவிப் பொருட்கண் வந்த வைந்தாமுருபெனினு மமையும். இதற்குக் காண்ட லுற்றென்பது குறுகி நின்றது. தோன்றல் கழலவன் என்றதனால், அவனது பெருமையும், எம்முயிர் கொண்டு தந்தென்றதனால் மெய்யுறவுங் கூறினாளாம். மெய்ப்பாடும் பயனும் அவை. 290

குறிப்புரை :

18.25 அறத்தொடு நிற்றல் அறத்தொடு நிற்றல் என்பது அறத்தொடு நிற்பாளாக முன்றோற்றுவாய் செய்து, எம்பெருமாற்குப் பழி வருங்கொல் லோவென்னுமையத்தோடு நின்று, யாமுன்பொருநாள் கடற்கரை யிடத்தே வண்டல்செய்து விளையாடாநின்றே மாக அந்நேரத் தொருதோன்றல், நும் வண்டல் மனைக்கு யாம் விருந்தென்று வந்து நின்றபொழுது, நீ பூக்கொய்யச் சிறிது புடைபெயர்ந்தாய்; அந்நிலைமைக்கட் கீழ்காற்று மிகுதலாற் கரைமேலேறுங்கடல் மேல்வந்துற்றது; உற, யான் றோழியோ தோழியோ வென்று நின்னை விளித்தேன்; அதுகண்டிரங்கி, அவனருளொடுவந்து தன் கையைத் தந்தான்; யானு மயக்கத்தாலே யதனை நின்கையென்று தொட்டேன்; அவனும் பிறிதொன்றுஞ் சிந்தியாது, என்னுயிர் கொண்டுதந்து, என்னைக் கரைக்கணுய்த்துப் போயினான்; அன்று என்னாணினால் நினக்கதனைச் சொல்லமாட்டிற்றிலேன்; இன்றிவ்வாறாயினபின் இது கூறினேன்; இனி நினக்கடுப்பது செய்வாயாகவெனத் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நில்லா நிற்றல். அதற்குச் செய்யுள்
18.25. செய்த வெறியி னெய்துவ தறியாது
நிறத்தொடித் தோழிக் கறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 26

குடிக்கலர் கூறினுங் கூறா
வியன்தில்லைக் கூத்தனதாள்
முடிக்கல ராக்குமொய் பூந்துறை
வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம்
மறைக்கும் பரிசுகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முரி புருவ வடிக்கு அலர் வேல் கண்ணி முரிந்த புருவத்தை யுடைய வடுவகிரிற் பரந்த வேல்போலுங் கண்ணை யுடையாய்; கூறா வியன் தில்லைக் கூத்தன தாள் கூறலாகாத அகன்ற தில்லையிற் கூத்தனுடைய தாள்களை; முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூந் துறைவற்கு வந்தன தன்முடிக்குப் பூவாக்கும் மொய்த்த பூவையுடைய துறையை யுடையவனுக்கு வந்த பழிகளை; சென்று நம் யாய் அறியும் அவைபோய்ப் பரத்தலான் நம்முடைய யாயுமறியும்; படிக்கு அலர் ஆம் அதுவேயு மன்றி, உலகத்திற் கெல்லா மலராம்; அதனான், குடிக்கு அலர் கூறினும் நங்குடிக் கலர் கூறினேமாயினும்; இவை நாம் மறைக்கும் பரிசுகள் என் இவற்றை நாம் மறைத்துச் சொல்லும் பரிசுகளென்னோ! எ - று.
கூறாத்தாளெனவியையும். வடுவகிரோடு பிறபண்பாலொக்கு மாயினும், பெருமையானொவ்வாதென்னுங் கருத்தான், வடிக்கலர் கண்ணென்றாள். வடிக்கென்னு நான்காவது ஐந்தாவதன் பொருட் கண் வந்தது. வடித்தலான் விளங்கும் வேலெனினுமமையும். அறத்தொடு நிற்குமிடத்து எம்பெருமாற்குப் பழிபடக் கூறுமோ வென்றையுறுந் தலைமகட்கு, நங்குடிக்கலர் கூறினுந் துறைவற்குப் பழிபடக் கூறே னென்பதுபடக் கூறித்தோழியறத்தொடு நிற்றலை யுடம்படுவித்த வாறு. கூறாவென்பதற்குக் கூத்தனதாள் தனக்குக் கூறாகவென்றும், யாயறியும்படிக்கலராமென்பதற்கு யாயுமறியும் படியாகச் சென்றலரா மென்று முரைப்பாருமுளர்.மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலை மகளை யாற்றுவித்தல்.291

குறிப்புரை :

18.26 ஐயந்தீரக்கூறல் ஐயந்தீரக்கூறல் என்பது எம்பெருமாற்குப் பழிவருங் கொல்லோவென் றையுற்று அறத்தொடு நின்ற தலைமகளது குறிப்பறிந்த தோழி, அவளையந்தீர, நங்குடிக்குப் பழிவரினும், அவற்குப் பழிவாராமல் மறைத்துக்கூறுமா றென்னோவெனத் தான் றலைமகளைப் பாதுகாத்தல் தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.26. விலங்குதல் விரும்பு மேதகு தோழி
அலங்கற் குழலிக் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 27

விதியுடை யாருண்க வேரி
விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற்
பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
கொல்இனி வையகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விதியுடையார் உண்க வேரி இவ்வெறியாட்டு விழவின் வேரியுண்ண விதியுடையவர்கள் வேரியுண்ணவமையும்; விலக்கலம் யாமதனைவிலக்கேம், அதுகிடக்க, அம்பலத்துப் பதி உடையான் பரங்குன்றினின் பாய் புனல் யாம் ஒழுக அம்பலமாகிய விருப்பிடத்தையுடையானது பரங்குன்றி னிடத்துப் பரந்த புனலோடே யாமொழுக; கதி உடையான் கதிர்த் தோள் நிற்க எடுத்தற்பொருட்டு ஆண்டுவரவையுடையவனாயவனுடைய ஒளியையுடைய தோள் கணிற்க; வேறு கருது நின்னின் மதி உடையார் இந்நோய் தீர்த்தற்கு வேறோருபாயத்தைக் கருது நின்னைப் போல் அறிவுடையார்; தெய்வமே தெய்வமே; வையகத்து இனி இல்லை கொல் இவ் வுலக்துஇப்போழ் தில்லை போலும் எ - று.
இவ்வாறு கூறவே, நீ கூறியதென்னென்று கேட்ப அறத்தொடு நிற்பாளாவது பயன். அம்பலத்தென அத்துச்சாரியை அல்வழிக்கண் வந்தது. ஓரிடத்தா னொதுக்கப்படாமையிற் பதியுடையவனென்று சொல்லப்படாதவன் அம்பலத்தின்கண் வந்து பதியுடையனாயினா னென்பதுபட வுரைப்பினுமமையும். பாங்குன்றினினென்பதற்குப் `பாலன் புகுந்திப் பரிசினி னிற்பித்த` (தி.8 கோவை பா.286) என்றதற் குரைத்ததுரைக்க. ஒழுக வென்னும் வினையெச்சம் கதியையுடையா னென்னு மாக்கத்தையுட்கொண்ட வினைக்குறிப்புப் பெயரோடு முடியும். கதி ஆண்டுச்சென்ற செலவு. கதிர்த் தோணிற்கவென்பதற்கு எடுத்தற் பொருட்டு அவன்றோள் வந்து நிற்க வென்று பொருளுரைத்து, அவ்வெச்சத்திற்கு முடிபாக்கினுமமையும். மதியுடையாரில்லைகொல் லென்பது குறிப்பு நிலை, அறத்தொடு நின்ற திறத்தினில் அறத்தோடு நின்ற தன்மைத்தாக. பிறிது புனலிடையவன் வந்துதவினவுதவி. மெய்ப்பாடு: பெருமிதத்தைச் சார்ந்த நகை. பயன்: குறிப்பினால் வெறிவிலக்குதல். 292

குறிப்புரை :

18.27 வெறிவிலக்கல் வெறிவிலக்கல் என்பது தலைமகளை ஐயந்தீர்த்து வெறிக் களத்தே சென்று, வேலனை நோக்கி, புனலிடைவீழ்ந்து கெடப் புக வந்தெடுத்துய்த்த கதிர்த்தோணிற்க, இந்நோய் தீர்த்தற்குப் பிறிதோருபாயத்தைக் கருது நின்னைப்போல, இவ்வுலகத்தின் கண் அறிவுடையாரில்லையென, மேலறத்தொடு நிற்பாளாகத் தோழி வெறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
18.27. அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி
வெறிவி லக்கிப் பிறிது ரைத்தது.

பண் :

பாடல் எண் : 28

மனக்களி யாய்இன் றியான்மகிழ்
தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா
ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
சாரற் பொருப்பிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மனக் களியாய் இன்று யான் மகிழ் தூங்க உள்ளக்களிப்புண்டாய் இன்றியான் மகிழ்தூங்கும் வண்ணம்; தன் வார்கழல்கள் எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இருந் தண்கயிலை எனக்குத் தன்னுடைய நீண்டகழலையுடைய திருவடிகளை யளியாநிற்கும் அம்பலத்தானது பெரிதாகிய குளிர்ந்த கயிலைக்கண்; புனச் செவ் வாய்ப் பசிய கிளி யாம் கடியும் வரைச் சாரல் பொருப்பிடத்து எம்புனத்தின்கண்வருஞ் செவ்வாயை யுடைய பசியகிளிகளை யாங்கடியும் வரையடியினுண்டாகிய பொருப் பிடத்தின்கண்வந்து; ஒருவர் ஒருவர்; சினக்களி யானை கடிந்தார் எம்மேல்வருஞ் சினத்தையுடைய களியானையை மாற்றி ளார்; இனியடுப்பது செய்வாயாக எ - று.
கயிலையென்றது கயிலையையணைந்த விடத்தை. கடியும் பொருப்பென வியையும். வரை உயர்ந்தவரை. பொருப்பு பக்க மலை. கிளிகடியும் பருவமென்ற தனாற் கற்பினோடு மாறு கொள்ளாமை முதலாயின கூறினாளாம். மெய்ப்பாடு: அது. பயன்: வெளிப்படையாலறத்தொடு நிற்றல். 293

குறிப்புரை :

18.28 செவிலிக்குத் தோழி யறத்தொடுநிற்றல் செவிலிக்குத் தோழி யறத்தொடு நிற்றல் என்பது வெறிவிலக்கி நிற்ப, நீ வெறிவிலக்குதற்குக் காரணமென் னோவென்று கேட்ட செவிலிக்கு, நீ போய்ப் புனங்காக்கச் சொல்ல, யாங்கள் போய்த்தினைக்கிளி கடியாநின்றோம்; அவ்விடத்தொரு யானைவந்து நின்மகளை யேதஞ்செய்யப் புக்கது; அதுகண்டு அருளுடையானொருவன் ஓடி வந்தணைத்துப் பிறிதொன்றும் சிந்தியாமல் யானையைக் கடிந்து அவளதுயிர்கொடுத்துப் போயினான்; அறியாப்பருவத்து நிகழ்ந்ததனை இன்றறியும் பருவ மாதலான். ``உற்றார்க்கு குரியர் பொற்றொடி மகளிர்`` என்பதனை யுட்கொண்டு, இவ்வாறுண் மெலியாநின்றாள்; இனியடுப்பது செய்வாயாகவெனத் தோழி அறத்தொடு நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.28. சிறப்புடைச் செவிலிக்
கறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 29

இளையா ளிவளையென் சொல்லிப்
பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
சிற்றம் பலத்துமன்னன்
திளையா வருமரு விக்கயி
லைப்பயில் செல்வியையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இமையோர் முடி சாய்த்து இமையோர் தம்முடியைச் சாய்த்து; வளையா வழுத்தாவரு திருச்சிற்றம்பலத்து மன்னன் வணங்கியும் வாழ்த்தியும் வருந் திருச்சிற்றம்பலத்தின்கண் உளனாகிய மன்னனது; திளையாவரும் அருவிக்கயிலைப் பயில் செல்வியை திளைத்துவரு மருவியையுடைய கயிலைக்கட் பயிலுந் திருவாட்டியை; இளையாள் இவளை இளையாளாகிய விவளை; என் சொல்லிப் பரவுதும் என்சொல்லிப் புகழ்வோம்; ஈர் எயிறு முளையா அளவின் முதுக்குறைந்தாள் முன்னெழு மிரண்டெயிறு முளையாத விளமைக்கண் அறிவுமுதிர்ந்தாள் எ - று.
திளைத்தல் ஈண்டிடைவிடாது அவ்விடத்தோடு பயிறல். கற்பினின்வழாமை நிற்பித் தெடுத்தோள் கற்பினின் வழுவாமலறிவு கொளுத்தி வளர்த்தவள். மெய்ப்பாடு: உவகை. பயன்: நற்றாய்க்கறத்தொடு நிற்றல். 294

குறிப்புரை :

18.29 நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு நிற்றல் நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு நிற்றல் என்பது தோழி யறத்தொடு நிற்பக்கேட்ட செவிலி, இளையளாகிய இல்வாழ்க் கைச் செல்வத்தையுடைய விவளை என்சொல்லிப் புகழுவோம்? முன்னெழுமிரண்டெயிறு முளையாத விளமைப்பருவத்தே அறிவு முதிர்ந்தாளெனத் தலைமகளது கற்புமிகுதி தோன்ற நற்றாய்க் கறத்தொடு நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.29. கற்பினின் வழாமை நிற்பித் தெடுத்தோள்
குலக்கொடி தாயர்க் கறத்தொடு நின்றது.

பண் :

பாடல் எண் : 30

கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை
யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
தேரின்று மெல்லியலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மெல்லியல் மெல்லியால்; கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லைக் கார்க் கடல் வாய் கள்ளை வண்டினங்களார்த்துண்ணும் வளவிய கொன்றைப் பூவையுடையவனது தில்லையை யணைந்த கரியகட லிடத்து; புள் இனம் ஆர்ப்ப ஆண்டுப் படியும் புள்ளினங்களார்ப்ப; பொருதிரை ஆர்ப்ப கரையைப்பொருந் திரைகளார்ப்ப; புலவர்கள் தம் வள் இனம் ஆர்ப்ப அவ்வாரவாரத்தோடு மங்கலங்கூறும் புலவர்க டமது வள்ளிய வினமார்ப்ப; மதுகரம் ஆர்ப்ப நறுவிரையால் வண்டுக ளார்ப்ப; வலம்புரியின் வெள் இனம் ஆர்ப்ப வலம்புரியினது வெள்ளிய வினமார்ப்ப; இன்று பெருந்தேர் வரும் இன்று நங்காதலர் பெருந்தேர் வாராநின்றது எ - று.
கரந்தவொழுக்கத்து மணியொலியவித்து வந்ததேர், வரைந் தெய்த இவ்வரவத்தோடு வருமென மகிழ்ந்து கூறியவாறு. கள் என்பது வண்டினுளொரு சாதியென்பாரு முளர். புள்ளினத்தையும் பொருதிரையையும் அவன் வரவிற்கு உவந்தார்ப்பனபோலக் கூறினாள். இதனை மிகைமொழிப்பாற் படுத்திக் கொள்க. முன்னர்த் தலைமகன் பிரிந்தகாலத்துத் தலைமகளதாற்றாமையைத் தாமாற்றுவிக்க மாட்டாது பொறுத்துக் கண்டிருந்த புள்ளினமுங் கடலும் அவனது தேர்வரவுகண்டு, இனிப்பிரிவும் பிரிவாற்றாமையு மில்லையென்று மகிழ்வுற்றார்த்தனவென்றறிக. அணிதினின் வரும் - அணித்தாகவரும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல்; வரைவுமலிந்தமை யுணர்த்தலுமாம்.295

குறிப்புரை :

18.30 தேர்வரவுகூறல் தேர்வரவு கூறல் என்பது நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு நில்லாநிற்ப, அந்நிலைமைக்கட் டலைமகனது தேரொலி கேட்ட தோழி, உவகையோடு சென்று, தலைமகளுக்கு அதன் வரவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.30. மணிநெடுந் தேரோன் அணிதினின் வருமென
யாழியன் மொழிக்குத் தோழி சொல்லியது

பண் :

பாடல் எண் : 31

பூரண பொற்குடம் வைக்க
மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
றேங்கும் மணமுரசே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தொல் மால் அயற்குங் காரணன் பழையராகிய அரியயனுக்குங் காரணனாயுள்ளான்; ஏர் அணி கண் நுதலோன் அழகுண்டாகிய கண்ணையுடைய நுதலையுடையான்; கடல் தில்லை அன்ன அவனது கடலையடைந்த தில்லையை யொக்கும்; வார் அணவும் முலை மன்றல் என்று மணமுரசு ஏங்கும் வாராற்கட்டப்படு மளவைச் சென்றணவும் முலையையுடையாளது மணமென்று மணமுர சேங்காநின்றது. அதனால், பூரண பொற் குடம் வைக்க வாயில்கடோறும் நீரானிறைக்கப்பட்ட பொற்குடத்தை வைக்க; மணி முத்தம் பொன் பொதிந்த தோரணம் நீடுக மணியு முத்தும் பொன்னின்கணழுத்திய தோரணம் எங்குமோங்குவதாக; தூரியம் ஆர்க்க தூரியங்கணின் றார்ப்பனவாக எ-று.
வாரணவுமுலை யென்பதற்கு வாரைப்பொருந்து முலை யெனினுமமையும். மெய்ப் பாடு: உவகை. பயன்: நகரி யலங்கரித்தல்.296

குறிப்புரை :

18.31 மணமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல் மணமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல் என்பது தோழி தலைமகளுக்குத் தேர்வரவு கூறாநின்ற அந்நிலைமைக்கண் மணமுரசு கேட்டு மனையிலுள்ளார், இஃதிவளை நோக்கி யொலியாநின்றது மணமுரசென வுட்கொண்டு யாம் பூரண பொற்குடந் தோரண முதலாயினவற்றான் மனையை யலங்கரிப் போமென மகிழ்வொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.31. நிலங்காவலர் நீண்மணத்தின்
நலங்கண்டவர் நயந்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 32

அடற்களி யாவர்க்கு மன்பர்க்
களிப்பவன் துன்பவின்பம்
படக்களி யாவண் டறைபொழிற்
றில்லைப் பரமன்வெற்பிற்
கடக்களி யானை கடிந்தவர்க்
கோவன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநக
ரார்க்கும் வியன்முரசே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விடக் களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசு மிகவுங் களிப்புண்டாய நமது சிறந்த வில்லின்கண் முழங்காநின்ற இப்பெரியமுரசம்; வெற்பின் கடக் களியானை கடிந்தவர்க்கோ வெற்பின்கண் மதத்தையுடைய களியானையை நம்மேல் வராமல் மாற்றினவர்க்கோ; அன்றி நின்றவர்க்கோ அன்றியாது மியைபில்லாதவர்க்கோ? அறிகின்றிலேன் எ - று.
துன்ப இன்பம் பட அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் பிறவியான் வருந் துன்பமுமின்பமுங் கெட இயல்பாகிய பேரின்பத்தை யாவராயினு மன்பராயினார்க்கு வரையாது கொடுப்போன்; களியா வண்டு அறை பொழில் தில்லைப் பரமன் களித்து வண்டுக ளொலிக்கும் பொழிலையுடைய தில்லைக்கணுளனாகிய பரமன்; வெற்பின் அவனது வெற்பினெனக் கூட்டுக.
அடற்களி அடுதல் செய்யாத பேரின்பம். அடக்களி யென்பது பாடமாயின், பேரின்பம் யானென்னு முணர்வினைக் கெடுப்ப வென்றுரைக்க. மெய்ப்பாடு: அச்சத்தைச்சார்ந்த மருட்கை. பயன்: ஐயந்தீர்தல். 297

குறிப்புரை :

18.32 ஐயுற்றுக்கலங்கல் ஐயுற்றுக் கலங்கல் என்பது மணமுரசு கேட்டவள் மகிழ் வொடு நின்று மனையை யலங்கரியா நிற்ப, மிகவுங் களிப்பை யுடைத்தாய நமது சிறந்த நகரின்கண் முழங்காநின்ற இப்பெரிய முரசம், யான் எவற்கோ அறிகின்றிலேனெனத் தலைமகள் கலக்க முற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
18.32. நல்லவர்முரசுமற் றல்லவர்முரசெனத்
தெரிவரிதென அரிவைகலங்கியது.

பண் :

பாடல் எண் : 33

என்கடைக் கண்ணினும் யான்பிற
வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை
கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து
தோன்றும் முழுநிதியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கடை என் கண்ணினும் கடையாகிய வென்னிடத்தும்; யான் பிற ஏத்தா வகை இரங்கித் தன் கடைக்கண் வைத்த யான் பிறதெய்வங்களை யேத்தாதவண்ண மிரங்கித் தனது கடைக்கண்ணைவைத்த; தண் தில்லைச் சங்கரன் தாழ்கயிலை குளிர்ந்த தில்லைக்கணுளனாகிய சங்கரன் மேவுங்கயிலை யிடத்து; கொன்கடைக்கண் தரும் யானை கடிந்தார் தமக்கொரு பயன் கருதாது நமக்கிறுதியைப்பயக்கும் யானையை யன்றுகடிந்தவர்; கொணர்ந்து இறுத்தார் கொணர்ந்து விட்டார் விட; கடைக்கண் முன்வந்து தோன்றும் முழுநிதி நங்கடைமுன் வந்து தோன்றும் குறைவில்லாத நிதி; இது காண் இதனைக்காண்பாயாக எ - று.
என்கடைக்கண்ணினு மென்பதற்கு மொழிமாற்றாது எனது கடையாகிய நிலைமைக்கண்ணுமென் றுரைப்பினுமமையும். கண்ணகன்ஞாலமென்புழிப்போலக் கண்ணென்பது ஈண்டுப் பெயராகலின் ஏழனுருபு விரித்துரைக்க. கடைக்கண்ணினு மென்னும் வேற்றுமைச்சொல்லும், ஏத்தாவகையென்னும் வினையெச்சமுங் கடைக்கண் வைத்த வென்னும் வினைகொண்டன. கடைக்க ணென்பதனை முடிவாக்கி, என் முடிவுகாலத்தும் பிறவேத்தா வகையென்றுரைப்பாருமுளர். கொன்கடைக் கண்டரும்யானை யென்பதற்கு, அச்சத்தைக் கடைக்கண்டரும் யானையென்றுரைப்பாரு முளர். வண்புகழ் அறத்தொடுநின்று கற்புக்காத்தலான் வந்த புகழ். மெய்ப்பாடு: உவகை. பயன்: ஐயந்தீர்தல். 298

குறிப்புரை :

18.33 நிதிவரவு கூறாநிற்றல் நிதிவரவு கூறாநிற்றல் என்பது முரசொலிகேட்டு ஐயுற்றுக் கலங்காநின்ற தலைமகளுக்கு, நமர் வேண்டினபடியே அருங்கலங் கொடுத்து நின்னை வரைந்துகொள்வாராக, யானைகடிந்தார் நமது கடைமுன் கொணர்ந்திறுத்தார் குறைவில்லாத நிதி; இதனை நீ காண்பாயாகவெனத் தோழி மகிழ்தருமனத்தொடு நின்று நிதி வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
18.33. மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி
திகழ்நிதி மடந்தைக்குத் தெரிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 1

பிரசந் திகழும் வரைபுரை
யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம்
நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும்
பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர்
தீரப் புகுந்துநின்றே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சந்த புரை மேகலையாய் நிறத்தையுடைய வுயர்ந்த மேகலையையுடையாய்; எவர்க்கும் முன்னாம் அரசு அரியயன் முதலாகிய யாவர்க்கும் முன்னாயிருக்குமரசு; அம்பலத்து நின்று ஆடும் பிரான் இவ்வாறு பெரியனாயினும் எளியனாய் அம்பலத்தின்கண் எல்லாருங்காண நின்றாடுமுதல்வன்; அருள் பெற்றவரின் துயர் தீர அவனதருளுடையவரைப்போல நாந்துயர்தீர; புகுந்து நின்று நம்மில்லின்கட் புகுந்துநின்று; பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார் முரசம் திகழும் பெருந்தேன் றிகழு மலை போலும் யானையினது வலியை நங்காரணமாக வழித்தவரது முரசு முழங்கி விளங்காநின்றது; முருகியம் நீங்கும் அதுவேயுமன்றி, வெறி காரணமாக ஒலிக்கும் முருகியமும் நீங்காநின்றது; இனியென்ன குறையுடையோம் ? எ-று.
புகுந்துநின்று திகழுமெனக் கூட்டுக. வரையுயர்யானை யென்பதூஉம் பாடம். முருகுங் கமழுமென்று பாடமோதி, கலியாணத்திற் குறுப்பாம் நறுவிரை நாறாநின்றனவென் றுரைப்பாரு முளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை மகிழ்வித்தல். 299

குறிப்புரை :

19.1 மணமுரசு கூறல் மணமுரசு கூறல் என்பது வரைபொருட் பிரிந்துவந்த பின்னர் அருங்கலம் விடுத்தற்கு முன்றிற்கணின்று தலைமகனது முரசு முழங்காநிற்பக் கண்டு மகிழ்வுறாநின்ற தோழி, நாந்துயர் தீர நம்மில்லின்கட் புகுந்து நின்று யானைகடிந்தார் முரசு முழங்காநின்றது; இனி யென்ன குறையுடையோ மென வரைவு தோன்ற நின்று, தலைமகளுக்கு மணமுரசு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.1. வரைவுதோன்ற மகிழ்வுறுதோழி
நிரைவளைக்கு நின்றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

இருந்துதி யென்வயிற் கொண்டவன்
யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
சிலம்பன் அருந்தழையே

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பன் அரும் தழை சிலம்பன்றந்த பெறுதற்கரிய தழைகள்; முன் எரி வலம் செய்து இப்பொழுது முன்றீயை வலங்கொண்டு; இடப்பால் அருந்துதி காணும் அளவும் பின் வசிட்டனிடப்பக்கத்துத் தோன்றும் அருந்ததியைக் காணும் அளவும்; தில்லை வாழ்த்தினர் போல் இருந்து திவண்டன தில்லையை வாழ்த்தினரைப்போல வாடாதிருந்து விளங்கின எ - று.
இருந்துதி என் வயின் கொண்டவன் அன்பர் துதிப்ப அவர் வயிற் றான்கொள்ளும் பெருந்துதியை என்வயினுண்டாக்கிக் கொண்டவன்; யான் எப்பொழுதும் உன்னும் மருந்து யானெப் பொழுது முன்னும் வண்ணஞ் சுவையுடைத்தாயதோர் மருந்து; திசைமுகன் மாற்கு அரியோன் இவ்வாறெனக்கெளியனாயினுந் திசை முகற்கும் மாற்கு மரியான்; தில்லை அவனது தில்லையெனக் கூட்டுக.
என்றது தழைகளை வாடாமல் வைத்து, அத்தழையே பற்றுக்கோடாக ஆற்றியிருந்தாளெனத் தலைமகளை மகிழ்ந்து கூறியவாறு. திவண்டன வென்பதற்கு வாடாதிருந்து இவளைத் தீண்டியின்புறுத்தினவென்றுரைப்பினுமமையும். தழை வாடா திருந்தனவென்றது முன்னர்த் தான் அவன்றந்த தழையையேற்ற முகூர்த்தத்தைக் கொண்டாடியவாறு. மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். வேயினமென்றோள் (பா.282) என்னுமதுதொட்டு இதுகாறும் வர இப்பாட்டுப் பத்தொன்பதும் அறத்தொடு நிலையினையும், அதன் பின்னர் வரைதலையும் நுதலினவென்பது. அகத்தினையின் மிகத் திகழும் இன்பக் கலவி இன்பக் களவு முற்றிற்று. எண்பத்தொராம் பாட்டு முதல் இப்பாட்டீறாகத் தோழி யாலாய கூட்டம்.300

குறிப்புரை :

19.2 மகிழ்ந்துரைத்தல் மகிழ்ந்துரைத்தல் என்பது மணமுரசொலி கேட்ட தோழி, சிலம்பன்றந்த பெறுதற்கரிய தழைகளை வாடாமல்வைத்து, அத்தழையே பற்றுக்கோடாக ஆற்றியிருந்தாளெனத் தலை மகளைத் தன்னுள்ளே மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.2 மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை
நன்னுதற் றோழி தன்னின் மகிழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 3

சீரியல் ஆவியும் யாக்கையும்
என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந்
தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
வணங்குமெங் காவலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அன்னே அன்னாய்; கார் இயல் கண்டர் வண்தில்லை வணங்கும் எம் காவலர் கார்போலுங் கண்டத்தை யுடையவரது வளவிய தில்லையைவணங்கு மெம்முடைய காவலர்; சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையால் சீர்மையியலு முயிருமுடம்பும்போல ஒருவரையொருவர் இன்றியமையாமையால்; கார் இயல் வாள் கண்ணி எண் அகலார் கரியவியல்பை யுடைய வாள் போலுங் கண்ணையுடையாளது கருத்தைக்கடவார்; கமலம் கலந்த வேரியும் சந்தும் வியல் தந்தென தாமரைப் பூவைச் சேர்ந்த தேனுஞ் சந்தனமரமும் இடத்துநிகழ் பொருளுமிடமுமாய் இயைந்து தம்பெருமையைப் புலப்படுத்தினாற் போல இயைந்து; கற்பின் நிற்பர் இவளது வழிபாட்டின் கண்ணே நிற்பர் எ - று.
எண்ணகலா ரென்றதனாற் காதலியாதலும், கற்பினிற்ப ரென்றதனால் வாழ்க்கைத்துணையாதலுங் கூறப்பட்டன. ஆவியும் வேரியும் தலைமகட் குவமையாகவும், யாக்கையுஞ் சந்தும் தலைமகற்குவமையாகவுமுரைக்க. பிரித்துவமையாக்காது, இவரது கூட்டத்திற்கு அவற்றது கூட்டமுவமையாக வுரைப்பினுமமையும், காரியல் கண்டர்வண்டில்லை வணங்கு மென்றதனான், இவரதில்வாழ்க்கை இன்றுபோல என்றும் நிகழு மென்பது கூறினாளாம். இன்னேயென்பது பாடமாயின், இப்பொழுதே யென்றுரைக்க. மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்வித்தல். 301

குறிப்புரை :

19.3 வழிபாடு கூறல் வழிபாடுகூறல் என்பது மணஞ்செய்த பின்னர் மணமனை காணவந்த செவிலிக்கு, காவலர் உடம்புமுயிரும்போல ஒருவரை யொருவர் இன்றியமையாமையால் இவள் கருத்தைக் கடவார்; கமலங் கலந்த தேனுஞ் சந்தனமரமும் போல வியைந்து இவள் கற்புவழி நிற்றலையுடையராய் இவள் வழியே நின்றொழுகா நின்றாரெனத் தோழி தலைமகன் றலைமகள் வழி யொழுகா நின்றமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.3. மணமனை காண வந்தசெவி லிக்குத்
துணைமலர்க் குழலி தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 4

தொண்டின மேவுஞ் சுடர்க்கழ
லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன்
யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலா
ளயல்மன்னும் இவ்வயலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தொண்டினம் மேவும் சுடர்க் கழலோன் தில்லைத் தொல் நகரில் - தொண்டர தினத்தைப் பொருந்துஞ் சுடர்க்கழலை யுடையவனது தில்லையாகிய பழையநகரிடத்தில்; கண்ட இல் மேவு நம் இல் யான்கண்ட அவளதில்லம் மேவப்படு நமதில்லத் தோடொக்கும்; அவள் நீ அவள் நின்னோடொக்கும்; தண்டு இனம் மேவும் செழு மெல் திண் தோளவன் நின் கொழுநன் தண்டாகிய வினத்தையொக்கும் வளவியவாய் மெல்லியவாகிய திண்ணிய தோள்களையுடையான் நின்கொழுநனோ டொக்கும்; அவள் தற் பணிவோள் யான் அவடன்னைப்பணிந்து குற்றேவல் செய்வாள் என்னோடொக்கும்; வண்டினம் மேவும் குழலாள் அயல் இவ்வயல் - வண்டினம் பொருந்துங் குழலையுடையாளதயல் இவ்வயலோ டொக்கும்; வேறுசொல்லலாவதில்லை எ-று.
கண்டவென்பது கடைக்குறைந்து நின்றது. பெண்டீர்க்கு ஊறினி தாதனோக்கித் தோளிற்கு மென்மைகூறினாள். தண்டின மென்புழி இனமென்றது சாதியை. மன்னும்: அசைநிலை; பெரும் பான்மையுமென்பதுபட நின்றதெனினுமமையும். கண்டென்பதனைத் தன்மைவினை யென்று, அவளில்வாழ்க்கையேர் கண்டேனென முன் பொதுவகையாற் கூறிப் பின் சிறப்புவகையாற் கூறிற்றாக வுரைப்பாருமுளர். மெய்ப்பாடும், பயனும் அவை. 302

குறிப்புரை :

19.4 வாழ்க்கைநலங் கூறல் வாழ்க்கை நலங்கூறல் என்பது மணமனைகண்ட செவிலி, மகிழ்வோடு சென்று, நின்மகளுடைய இல்வாழ்க்கை நலத்திற்கு உவமைகூறில், நின்னுடைய இல்வாழ்க்கை நலமல்லது வேறுவமை யில்லையென நற்றாய்க்குத் தலைமகளது வாழ்க்கைநலங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.4. மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி
அணிமனைக் கிழத்திக் கதன்சிறப் புரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

பொட்டணி யான்நுதல் போயிறும்
பொய்போ லிடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல
ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான்
மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடையோன்தில்லை
போலிதன் காதலனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலன் மகுடமாகக் கட்டப்பட்ட அழகிய நீண்ட சடையை யுடையவனது தில்லையையொப்பாடன்னுடைய காதலன்; பொய் போல் இடை போய் இறும் எனப் பூண் இட்டு அணியான் பொய்போலுமிடை போயிறுமென்று கருதிப் பூணைப் பூட்டி யணியான்; தவிசின் மலர் அன்றி மிதிப்பக் கொடான் மெல்லடி நோதலஞ்சித் தவிசின் மிதிப்புழியும் மலரினன்றி மிதிப்பவிடான்; வண்டு உறுதல் அஞ்சி மட்டு அணிவார் குழல் மலர் வையான் வண்டுற்று மொய்த்தலஞ்சித் தேனையுடைய வழகிய வார்குழலிடத்து மலர்களை வையான்; இவை சொல்லுகின்றதென்; நுதல் பொட்டு அணியான் பொறையாமென்று நுதலின்கட் பொட்டையுமிடான் எ-று.
கட்டணி வார்சடையென்பதற்கு மிக்க அழகையுடைய சடையெ னினுமமையும். தவிசின் மிசையென்று பாடமோது வாருமுளர். 303

குறிப்புரை :

19.5 காதல் கட்டுரைத்தல் காதல் கட்டுரைத்தல் என்பது அவளில்வாழ்க்கை நலங் கிடக்க, அவன் அவண்மேல்வைத்த காதலான் இவையேயன்றிப் பொறையாமென்று கருதி நுதலின்கண் இன்றியமையாத காப்பாகிய பொட்டையு மணியான்; இஃதவன் காதலெனத் தலைமகனது காதன்மிகுதி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.5. சோதி வேலவன்
காதல்கட் டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

தெய்வம் பணிகழ லோன்தில்லைச்
சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று
நின்று திறைவழங்காத்
தெவ்வம் பணியச்சென் றாலுமன்
வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார்
பரிசின்ன பான்மைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெய்வம் பணி கழலோன் தில்லைச் சிற்றம்பலம் அனையாள் பிறரான் வழிபடப்படுந் தெய்வங்கள் வணங்குந் திருவடிகளையுடையவனது தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாள்; என்றும் தெய்வம் பணிந்து அறியாள் எஞ்ஞான்றும் வேறொரு தெய்வத்தைப் பணிந்தறியாள்; நின்று திறை வழங்காத் தெவ்வம் பணியச் சென்றாலும் முன்னின்று திறைகொடாத பகைவர் வந்து பணியும்வண்ணம் வினைவயிற் சென்றாலும்; மன் வந்து அன்றிச் சேர்ந்து அறியான் அம்மன்னவன் அவளதில்லத்து வந்தல்லது ஆண்டுத்தங்கியறியான்; பௌவம் பணிமணி அன்னார் பரிசு இன்ன பான்மைகள் பௌவந்தந்த மணிபோலப் பெருங் குலத்துப்பிறந்த தூயோரதியல்பு இன்ன முறைமைகளை யுடைய எ-று.
தெவ்வு: தெவ்வமென விரிக்கும்வழி விரித்து நின்றது. தெவ்வம்பணியச் சென்றாலு மென்பதற்குத் தெவ்வர் அம்பையணிய வென்றும், பௌவம் பணி மணி யென்பதற்குக் கடலிடத்தும் பாம்பிடத்து முளவாகிய முத்தும் மாணிக்கமுமென்று முரைப்பாரு முளர். விற்பொலி நுதலி விற்போலு நுதலி. 304

குறிப்புரை :

19.6 கற்பறிவித்தல் கற்பறிவித்தல் என்பது தலைமகனது காதன்மிகுதி கூறின செவிலி, அதுகிடக்க, அவளவனையொழிய வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாளாதலான், அவன் றன்னைவணங்காத பகைவரைச் சென்று கிட்டித் திறைகொள்ளச் சென்றாலுந் திறை கொண்டுவந்து அவளதில்லத்தல்லது ஆண்டுத் தங்கியறியான்; இஃதவரதியல்பெனக் கூறி நற்றாய்க்குத் தலைமகளது கற்பறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்
19.6. விற்பொலி நுதலி
கற்பறி வித்தது.

பண் :

பாடல் எண் : 7

சிற்பந் திகழ்தரு திண்மதில்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங்
கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
லாதவ னீர்ங்களிறே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிற்பம் திகழ்தரு திண் மதில் தில்லை நுண்டொழில் விளங்குந் திண்ணிய மதிலையுடைய தில்லையின்; சிற்றம்பலத்துப் பொற் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின் கற்பு சிற்றம்பலத்தின்கணுளனாகிய பொற்றகட்டு நிரைபோலுஞ் சடையையுடையவனது பூவணத்தையொக்கும் பொன்னினது கற்பு; அந்தி வாய் வடமீனும் கடக்கும் அந்திக் காலத்துளதாகிய வடமீனையும் வெல்லும்; அதனான், அவன் ஈர்ங்களிறு எடுத்துக்கொண்டவினையை யிடையூறின்றி யினிதின் முடித்து அவனூரும் மதத்தானீரியகளிறு; படி கடந்தும் இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது நிலத்தைக்கடந்தும் இல்லின்கட்டன் பந்தியிடத்தல்லது தங்காது எ -று.
பொற்பந்தியன்ன சடையென்பதற்கு அழகிய அந்திவானம் போலுஞ் சடையென்பாருமுளர். அந்திக்காலத் துக் கற்புடைமகளிராற் றொழப்படுதலின், அந்திவாய் வடமீனென் றாள். கற்புப்பயந்த வற்புதமாவது படிகடந்துங் கடிது வரும்வண்ணம் எடுத்துக் கொண்ட வினையை யிடையூறின்றி யினிது முடித்தல். 305

குறிப்புரை :

19.7 கற்புப் பயப்புரைத்தல் கற்புப் பயப்புரைத்தல் என்பது கற்பறிவித்த செவிலி, அவள் அவனையொழிய வணங்காமையின் அவனூருங்களிறும் வினைவயிற்சென்றால் அவ்வினை முடித்துக் கொடுத்து வந்து தன் பந்தியிடத்தல்லது ஆண்டுத்தங்காதாதலான், அவளது கற்பு, அந்திக் காலத்து வடமீனையும் வெல்லுமென அவளது கற்புப் பயந்தமை நற்றாய்க்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.7. கற்புப் பயந்த
அற்புத முரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
றோர்தெய்வ முன்னலளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மன்னவன் தெம் முனை மேல் செல்லும் ஆயினும்மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்; மால் அரி ஏறு அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலை யினல்லது புறத்துத் தங்காது; வரகுணன் ஆம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான்; மற்றைத் தேவர்க்கு எல்லாம் முன்னவன் தானல்லாத வரியயன்முதலாகிய தேவர்க்கெல்லாம் முன்னே யுள்ளான்; மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலள் அவளது மூவலை யொப்பாளும் வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாள் எ - று.
மற்றெத் தேவர்கட்கு மென்பதூஉம் பாடம். 306

குறிப்புரை :

19.8 மருவுதலுரைத்தல் மருவுதலுரைத்தல் என்பது கற்புப் பயப்புரைத்த செவிலி, வேந்தற்குற்றுழிப் பிரியினும் அவனூருந்தேரும் வினைமுடித்துத் தன்னிலையி னல்லது புறத்துத் தங்காது; அவளும் அவனை யொழிய மற்றோர் தெய்வமும் மனத்தானு நினைந்தறியாள்; இஃதிவர் காதலென அவ்விருவர்காதலு மருவுதல் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.8. இருவர் காதலும்
மருவுத லுரைத்தது,

பண் :

பாடல் எண் : 9

ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்
ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத்
தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ
லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
றாதிவ் வணிநலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆர் உயிர் இருவரது காதலுங்களிப்பும் இன்பவெள்ளத்திடையழுந்தப் புகுகின்ற தோருயிர்; ஈர் உருக்கொண்டு ஆனந்த வெள்ளத்திடைத் திளைத்தால் ஒக்கும் ஓருடம்பாற்றுய்த்தலாராமையின் இரண் டுடம்பைக் கொண்டு அவ்வின்ப வெள்ளத்திடைக் கிடந்து திளைத்ததனோ டொக்கும்; அதுவேயு மன்றி, அம்பலம் சேர் ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின் அம்பலத்தைச் சேர்ந்த வின்பவெள்ளத்தைச் செய்யு மொலிக்குங் கழலையுடைத்தாகிய திருவடியையுடைய வனதருளைப் பெற்றவரின்பம் போல; ஆனந்த வெள்ளம் வற்றாது இவ்வின்ப வெள்ளமும் ஒருகாலத்துங் குறைவு படாது; இவ்வணிநலம் முற்றாது இவ்வணிநலமு முதிராது எ-று.
இவை யைந்திற்கும் மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். 307

குறிப்புரை :

19.9 கலவியின்பங் கூறல் கலவியின்பங் கூறல் என்பது இருவர்காதலு மருவுதல் கூறின செவிலி, இவ்விருவருடைய காதலுங் களிப்பும், இன்பவெள்ளத்திடை யழுந்தப் புகுகின்றதோ ருயிர் ஓருடம்பாற் றுய்த்தலாராமையான் இரண்டுடம்பைக் கொண்டு, அவ்வின்ப வெள்ளத்திடைக் கிடந்து, திளைத்ததனோடொக்கும், அதுவன்றி அவ்வின்ப வெள்ளம் ஒருகாலத்தும் வற்றுவதும் முற்றுவதுஞ் செய்யாதென நற்றாய்க்கு அவரது கலவி யின்பங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.9. நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
மகிழ்தூங் குளத்தோ டிகுளை கூறியது.

பண் :

பாடல் எண் : 1

சீரள வில்லாத் திகழ்தரு
கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென்
றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின
ராகுவ ரேந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏந்திழை ஏந்திழையாய்; சீர் அளவு இல்லாத் திகழ்தரு கல்விச் செம்பொன் வரையின் ஆரளவு இல்லா அளவு சென்றார் நன்மைக்கெல்லையில்லாத விளங்குங் கல்வி யாகிய மேருக் குன்றத்தினது மிக்கவளவில்லாத வெல்லையை யடைந்தவர்கள்; அம்பலத்துள் நின்ற ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் அம்பலத்தின்கணின்ற ஓரளவையுமில்லாத ஒப்பில்லாதானுடைய பெரிய திருவடிகளையறிந்து நினைந்தவரைப் போல; ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர் - நன்மைக் கெல்லை யில்லாத தன்மையராவர் எ - று.
செம்பொன் வரை யென்றான், தூய்மையும் பெருமையுங் கலங்காமையுமுடைமையால். கற்றதின் மேலுங் கற்க நினைக்கின்றா னாதலான், ஆரளவில்லா வளவு சென்றா ரென்றான். ஆரளவு காதமும் புகையு முதலாயின அளவு. ஓரளவென்பது காட்சியும் அனுமானமு முதலாயினவளவு. இது குறிப்பெச்சம். செல்வத்தவர் இல்வாழ்க்கைச் செல்வத்தவர். அறிவறிவித்தது அறியப்படுவதனை யறிவித்தது. பாங்கியறிவறி வித்ததென்பது பாடமாயின், தலைமகனது குறிப்பைக் கண்டு தோழி தலைமகட்குக் குறிப்பினாற் கூறினாளாகவுரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன் பிரிவுணர்த்தல்.308

குறிப்புரை :

20.1 கல்விநலங்கூறல் கல்விநலங் கூறல் என்பது வரைந்துகொண்ட பின்னர் ஓதற்குப் பிரிய லுறாநின்ற தலைமகன், தலைமகளுக்குப் பிரிவு ணர்த்துவானாக மிகவுங் கூற்றாற் கற்றோர் நன்மைக்கெல்லை யில்லாத தன்மைய ராவரெனத் தோழிக்குக் கல்விநலங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
20.1. கல்விக் ககல்வர் செல்வத் தவரெனச்
செறிகுழற் பாங்கிக் கறிவறி வித்தது.

பண் :

பாடல் எண் : 2

வீதலுற் றார்தலை மாலையன்
தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற்
றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை
யுற்ற புரவலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செல்வீ செல்வீ; வீதல் உற்றார் தலை மாலையன் கெடுதலையடைந்தவர் தலையானியன்ற மாலையை யுடையான்; தில்லைமிக்கோன் தில்லைக் கணுளனாகிய பெரியோன்; கழற்கே காதல் உற்றார் நன்மை கல்வி தரும் என்பது கொண்டு அவனுடைய திருவடிக்கே யன்புற்றாரது நன்மையைக் கல்வி தருமென்பதனைக் கருதி; ஓதல் உற்றார் உற்று ஓதுதலான் மிக்காரைக் கிடைத்து; உணர்தல் உற்றார் எல்லா நூல்களையு முணர்தலுற்று; நின்புணர் முலை உற்ற புரவலர் நின்புணர் முலையைச் சேர்ந்த புரவலர்; செல்லல் மல் அழல் கான் போதல் உற்றார்- இன்னாமையைச் செய்யும் மிக்க வழலையுடைய கானகத்தைப் போகநினைந்தார் எ- று.
ஓத்தான் உயர்ந்தாரைக் கிடைத்து அவரோடுசாவித் தமது கல்விமிகுதியை யறியலுற்றா ரென்றுரைப்பாருமுளர். உணர்தலுற்றா ரென்பதனை முற்றாகவுரைப் பினுமமையும். நின்புணர் முலையுற்ற வென்றதனான், முலையிடத்துத் துயிலை நினைந்து நீட்டியாது வருவரென்றும், புரவலரென்றதனான். நின்னலந் தொலையாமற் காப்பரென்றுங் கூறிப் பிரிவுடம்படுத்தாளாம். செல்வத்தவரென்றது ஈண்டுத் தலைமகனை. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுணர்த்துதல். 309

குறிப்புரை :

20.2 பிரிவு நினைவுரைத்தல் பிரிவுநினைவுரைத்தல் என்பது கல்விநலங் கேட்ட தோழிஅவன் பிரிதற் குறிப்பறிந்து, மிகவுங் கற்றோர் நன்மைக் கெதிரில்லாத தன்மையராவரென்பதனை யுட்கொண்டு, நின்புணர்முலையுற்றபுரவலர், அழற்கானத்தே போய்க் கல்வியான் மிக்காரைக் கிட்டி அவரோடு உசாவித் தங்கல்வி மிகுதி புலப்படுத்தப் பிரியா நின்றாரெனத் தலைமகன் ஓதுதற்குப் பிரிவு நினைந்தமை தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
20.2. கல்விக் ககல்வர் செல்வத் தவரெனப்
பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 3

கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கல் பா மதில் தில்லைச் சிற்றம்பலமது காதல் செய்த கல்லாற் செய்யப்பட்ட பரந்த மதிலையுடைய தில்லைக்கட் சிற்றம்பலமதனைக் காதலித்த; வில் பா விலங்கல் எங்கோனை விரும்பலர் போல வில்லாகச் செய்யப்பட்ட பரந்த மலையையுடைய எம்முடையகோனை விரும்பாதாரைப் போல; அன்பர் சொல் பா விரும்பினர் என்ன நம்மன்பர் சொல்லானியன்ற பாவாகிய நூல்களைக் கற்க விரும்பினாரென்று சொல்ல; மெல்லோதி செவிப் புறத்து அச்சொல் மெல்லோதியையுடையாளது செவிக்கண்; கொல் பா இலங்கு இலை வேல் குளித்தாங்குக் குறுகியது கொற்றொழில் பரந்த விளங்குமிலையையுடைய வேல் சென்று மூழ்கினாற்போலச் சென்றெய்திற்று; இனிப் பிரிவை யெங்ஙனமாற்றுமோ! எ - று.
பொருப்புவில்லி மேல் விருப்புடையார் கல்விக் கடனீந்தி வருந்தாமையின் விரும்பலர்போலச் சொற்பாவிரும்பின ரென்றாள். இனி வருந்தவென்பதோர் சொல்லைவிரித்து விரும்பலர் போல வருந்த அச்சொற்குறுகியதென் றுரைப்பினுமமையும். பூங்கொடி கலக்கம் பாங்கி தன்னுள்ளே சொல்லியது; தலைமகற்குக் கூறியதென் றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்கு வித்தல். 310

குறிப்புரை :

20.3 கலக்கங்கண்டுரைத்தல் கலக்கங்கண்டுரைத்தல் என்பது பிரிவுநினை வுரைப்பக் கேட்ட தலைமகளது கலக்கங்கண்ட தோழி, அன்பர் சொற்பா விரும்பினரென்ன, அச்சொல் இவள் செவிக்கட் காய்ந்தவேல் போலச் சென்றெய்திற்று; இனி மற்றுள்ள பிரிவை எங்ஙனமாற்று வளெனத் தன்னுள்ளே கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
20.3. ஓதற் ககல்வர் மேதக் கவரெனப்
பூங்கொடி கலக்கம் பாங்கிகண் டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

பிரியா மையுமுயி ரொன்றா
வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப்
பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி
யென்னாம் புகல்வதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தையல் மெய்யின் பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேரியல் ஊரர் தையலாடனது திருமேனியி னின்றும் பிரியாமையைச் செய்து நின்றவனது தில்லையிற் பெருந்தன்மையை யுடைய வூரர்; பிரியாமையும் நம்மிற்பிரியாமையையும்; உயிர் ஒன்றாவதும் இருவருக்கு முயிரொன்றாதலையும்; பிரியின் பெரிதும் தரியாமையும் பிரியிற்பெரிதுமாற்றாமையையும்; ஒருங்கே நின்று சாற்றினர் ஒருங்கே அக்காலத்து நம் முன்னின்று கூறினார்; அன்ன புரியாமையும் இதுவே இப்பொழுது அவற்றுட் பிரியாமை பொய்யாகக் கண்டமையின் உயிர் வேறுபடக்கருதுதலும் பிரிவாற்றுதலுமாகிய அன்னவற்றைச் செய்யாமையும் இப் பிரியாமையோடொக்கும்; இனி நாம் புகல்வது என் இனிநாஞ் சொல்வதென்! எ - று.
தையன்மெய்யிற் பிரியாத பேரன்பினோனது தில்லைக்கட் பயின்றும் அன்புபேணாது பிரிதல் எங்ஙனம் வல்லராயினாரென்னுங் கருத்தால், பிரியாமைசெய்து நின்றோன் றில்லைப் பேரியலூர ரென்றாள். பிரிவுகாணப்பட்டமையின், அன்னவென்றது ஒழிந்த விரண்டையுமேயாம். அன்னபுரியாமையு மிதுவேயென்பதற்குப் பிரிவுமுதலாகிய நமக்கின்னாதவற்றைத் தாம் செய்யாமையுமிதுவே யாயிருந்ததெனி னு மமையும். இன்னல் பிரியாமையுமிதுவேயென்று பாடமோதுவாரு முளர். மெய்ப்பாடும், பயனும் அவை. 311

குறிப்புரை :

20.4 வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் என்பது கலக்கங் கண்டுரைத்த தோழிக்கு, முன்னிலைப்புறமொழியாக நின்னிற் பிரியேன் பிரிவுமாற்றேனென்று சொன்னவர் தாமே பிரிவராயின், இதற்கு நாஞ்சொல்லுவதென்னோவெனத் தலைமகனது வாய் மொழி கூறித் தலைமகள் வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
20.4. தீதறுகல்விக்குச் செல்வன்செல்லுமெனப்
போதுறுகுழலி புலம்பியது.

பண் :

பாடல் எண் : 1

மூப்பான் இளையவன் முன்னவன்
பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு
ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி
தாழ்குழற் பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார்க் கயற் கண் பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ்குழல் பூங்கொடி கரியகயல்போலுங் கண்ணினையும் பூவின்கண் நறுநாற்றமுடைமை யாகிய நன்மைவிளங்குஞ் சுருண்ட தாழ்ந்த குழலையுமுடைய பூங்கொடியை யொப்பாய்; மூப்பான் எல்லார் யாக்கைக்கும் முன்னே தனதிச்சையாற் கொள்ளப்பட்ட திருமேனியையுடைய னாதலின் எல்லார்க்குந் தான் மூப்பான்; இளையவன் பின்றோன்றிய யாக்கையை யுடையாரெல்லாரும் மூப்பவும் தான் நிலைபெற்ற விளமையை யுடையனாதலின் எல்லார்க்கும் மிளையான்; முன்னவன் உலகத்திற்கு முன் னுள்ளோன்; பின்னவன் அதற்குப் பின்னுமுள்ளோன்; முப்புரங்கள் வீப்பான் மூன்று புரங்களையுங் கெடுப்பான்; வியன் தில்லையான்- அகன்ற தில்லைக்கண்ணான்; அருளால் நமர் விரி நீர் உலகம் காப்பான் பிரியக் கருதுகின்றார் அவனதேவலால் நமர் விரிந்த நீராற் சூழப்பட்ட வுலகத்தைக் காக்கவேண்டிப் பிரியக்கருதா நின்றார் எ-று.
தில்லையா னேவலாவது எல்லா வுயிர்களையு மரசன் காக்க வென்னுந் தருமநூல் விதி. காத்தலாவது தன் வினைசெய் வாரானுங்கள்வரானும் பகைவரானும் உயிர்கட்கு வருமச்சத்தை நீக்குதல். தில்லையானருளா லென்பதற்கு அவனதருளா னுலகத்தைக் காக்குந் தன்மையை யெய்தினானாதலின் அக்காவற்குப் பிரிகின்றா னென்றுரைப்பினு மமையும். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: காவற்குப் பிரியும் பிரிவுணர்த்துதல். ; 312

குறிப்புரை :

21.1 பிரிவறிவித்தல்
பிரிவறிவித்தல் என்பது தருமநூல் விதியால் நமர் உலகத்தைப் பாதுகாப்பான் பிரியக் கருதாநின்றாரெனத் தலைமகன் காவலுக்குப் பிரியக் கருதாநின்றமை தோழி தலைமகளுக் கறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்
21.1. இருநிலங் காவற் கேகுவர் நமரெனப்
பொருசுடர் வேலோன் போக்கறி வித்தது.

பண் :

பாடல் எண் : 2

சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கள் துறு புரி குழலாய் பூவிற்றேனை யுடைய நெருங்கிய சுருண்ட குழலையுடையாய்; சிறுகண் சிறிய கண்ணினையும்; பெருங்கை பெரிய கையினையும்; திண் கோடு திண்ணியகோட்டினையும்; குழை செவி குழைந்த செவியினையும்; செம்முக மாத் தெறு கட்டு அழிய முன் உய்யச் செய்தோர் சிவந்த முகத்தினையு முடைய யானையினது வருத்தும் வளைப்புக்கெடக் குரவராற் பாதுகாக்கப்படு முற்காலத்து நம்மை யுய்வித்தவர்; கருப்புச் சிலையோன் உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்ன லரின் கருப்பு வில்லையுடையவனைச் சென்றுற்ற கண்ணிற்றீயை யுடையவனுறையும் அம்பலத்தை யுன்னாதாரைப் போல; இன்று சூழ்கின்றது இதுவோ கண்ணோட்ட மின்றித் தம்மல்ல தில்லாத இக்காலத்து நினைக்கின்றதிதுவோ! இது தகுமோ! எ-று.
கருப்புச்சிலையோ னென்பதனை எழுவாயாக்கி யுரைப்பினு மமையும். தெறுகட்டழீஇ முன்னமுய்யச் செய்தோரென்பது பாட மாயின், தெறுகின்றவிடத்துத் தழுவி முன்னம்மையுய்வித்தவரென்று ரைக்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்கு வித்தல். 313

குறிப்புரை :

21.2 பிரிவுகேட்டிரங்கல் பிரிவுகேட்டிரங்கல் என்பது பிரிவறிவித்த தோழிக்கு, முற்காலத்துக் குரவர்களாற் பாதுகாக்கப்படு நம்மை வந்து யானை தெறப்புக, அதனைவிலக்கி நம்முயிர் தந்தவர், இன்று தம்மல்ல தில்லாத இக்காலத்துத் தாம் நினைந்திருக்கின்ற திதுவோ? இது தமக்குத் தகுமோவெனத் தலைமகனது பிரிவுகேட்டுத் தலைமக ளிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
21.2. மன்னவன் பிரிவு நன்னுத லறிந்து
பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது.

பண் :

பாடல் எண் : 1

மிகைதணித் தற்கரி தாமிரு
வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
தாழ்தரு மொய்குழலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பல் பிறவித் தொகை தணித்தற்கு என்னை ஆண்டு கொண்டோன் தில்லை பேரருளினராதலின் தாமளிக்கு மிடத்துப் பல பிறவித்தொகையான் வருங் கழிபெருந் துன்ப முடையாரையே வேண்டுதலின் என்னையடிமைக் கொண்டவனது தில்லைக்கண்; சூழ்பொழில் வாய் முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ் தரு மொய் குழல் சூழ்ந்த பொழிலிடத்துளவாகிய போதுகளாற் றனது நறுநாற்ற மாற்றுதற் கரிதாஞ் சுருண்ட தாழ்ந்த நெருங்கிய குழலை யுடையாய்; மிகை தணித்தற்கு அரிதாம் ஒருவருள்ள மிகுதியை ஒருவர்தணித்தற் கரிதாகாநின்ற; இருவேந்தர் வெம்போர் மிடைந்த பகை தணித்தற்கு நமர் படர்தல் உற்றார் இருவேந்தரது வெய்யபோர் நெருங்கிய பகையை மாற்றுதற்கு நமர் போக நினைந்தார் எ - று.
எளிதினிற் சந்து செய்வித்துக் கடிதின் மீள்வரென்பது பயப்ப, மிகைதணித்தற்கரிதா மிருவேந்த ரென்றதனால் ஒத்த வலியின ராதலும், வெம்போர்மிடைந்த வென்றதனால் ஒத்த தொலைவின ராதலுங் கூறினாளாம். மிகை தணித்தற்கரிதாம் பகையென வியையும். மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன்: பகை தணிவினையிடைப் பிரிவுணர்த்துதல். 314

குறிப்புரை :

22.1 பிரிவுகூறல் பிரிவுகூறல் என்பது ஒருவரதுள்ளமிகுதியை ஒருவர் தணித்தற்கரிதாகிய இருவேந்தர் தம்முட்பகைத்து உடன்மடியப் புகுதா நின்றாரெனக் கேட்டு, அவ்விருவரையு மடக்கவல்ல திறலுடைய ராதலின், அவரைப் பகைதணித்து அவர் தம்மிலொன்றுபட வேண்டி நின்னைப்பிரியக் கருதாநின்றாரெனத் தலைமகன் பகைதணிக்கப் பிரியலுறாநின்றமை தோழி தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
22.1. துன்னுபகை தணிப்ப மன்னவன் பிரிவு
நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 2

நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மிக்க விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து தன்கண் மிக்க விருப்புறுமவரை விண்ணோரினு மிகச் செய்து; நண்ணார் கழியத் திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திருநுதல் பகைவர் மாய விதிர்க்கப்படுஞ் சூலவேலையுடையவனது தில்லையை யொக்குந் திருநுதால்!; பொருப்பு உறு தோகை பொருப்பைச்சேர்ந்த மயில்போல்வாய்; நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என தீயையுற்ற வெண்ணெயும் நீரையுற்றவுப்பும் போல; இங்ஙனே புலம்புறல் இவ்வாறுருகித் தனிமையுறாதொழி; அன்பர் போக்குப் பொய் அன்பர்போக்குப் பொய் எ - று.
மிகுத்தென்னும் வினையெச்சம் திருப்புறுசூல மென்புழித் திருப்பென்பதனோடு முடிந்தது. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 315

குறிப்புரை :

22.2 வருத்தந்தணித்தல் வருத்தந்தணித்தல் என்பது தலைமகனது பிரிவுகேட்டு உள்ளுடைந்து தனிமையுற்று வருந்தாநின்ற தலைமகளை, நின்னை விட்டு அவர் பிரியார்; நீ நெருப்பையுற்ற வெண்ணெயும் நீரையுற்ற உப்பும்போல இவ்வாறுருகித் தனிமையுற்று வருந்தாதொழியெனத் தோழி அவளது வருத்தந் தணியாநிற்றல். அதற்குச் செய்யுள்
22.2. மணிப்பூண் மன்னவன் தணப்ப தில்லை
அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.


பண் :

பாடல் எண் : 1

போது குலாய புனைமுடி
வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி
லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய்விளை கின்றதின்
றொன்னா ரிடுமதிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாது குலாய மெல் நோக்கி மடவழகு பெற்ற மெல்லிய நோக்கத்தையுடையாய்; போது குலாய புனைமுடி வேந்தர் தம் போர் முனைமேல் பூவழகுபெற்ற பேணிச் செய்யப்பட்ட முடியையுடைய வேந்தர்தமது போரையுடைய பாசறைமேல்; நமர் சென்றார் நமர் சென்றார்; வண் புலியூர்க் காது குலாய குழை எழிலோனைக் கருதலர் போல் வளவிய புலியூரிற் காதழகு பெற்ற குழையாலுண்டாகிய எழிலையுடையவனைக் கருதாதாரைப்போல; ஒன்னார் இடும் மதில் இன்று ஏதாய் விளைகின்றது ஒன்னாரா லிடப்பட்ட மதில் இன்றியாதாய் முடியுமோ! எ - று.
வினைமுடித்துக் கடிதுமீள்வரென்பதுபயப்ப, ஒன்னாரிடுமதி லின்றேயழியுமென்று கூறினாளாம். கொல்லென்பது அசைநிலை. சென்றாரெனத் துணிவு பற்றி இறந்தகாலத்தாற் கூறினாள். திறல் வேந்த ரென்றது, சாதிபற்றியன்று; தலைமை பற்றி. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: வேந்தற்குற்றுழிப் பிரிவுணர்த்துதல். 316

குறிப்புரை :

23.1 பிரிந்தமைகூறல் பிரிந்தமைகூறல் என்பது தம்மைவந்தடைந்த வேந்தனுக் குத் தாமுதவிசெய்வாராக வெய்ய போரையுடைய பாசறைமேல் நமர் சென்றார்; இனி யவ்வேந்தன் பகைவரா லிடப்பட்ட மதில் இன்றென்னாய் முடியுமோவெனத் தலைமகன் வேந்தற்குற்றுழிப் பிரிந்தமை தோழி தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.1. விறல்வேந்தர் வெம்முனைக்கண்
திறல்வேந்தர் செல்வரென்றது.

பண் :

பாடல் எண் : 2

பொன்னி வளைத்த புனல்சூழ்
நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை
யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர்
கவரும் வியன்முகிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொன்னி வளைத்த புனல் சூழ் நிலவிப் பொலி புலியூர் பொன்னி சுற்றுதலானுண்டாகிய புனலாற் சூழப்பட்ட நிலைபெற்றுப் பொலிகின்ற புலியூரில்; வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல் வன்னித்தளிராற் சூழப்பட்ட நெடிய சடையையுடையவனை வணங்காதாரைப்போல; துன்னி வளைத்த நம் தோன்றற்கு இடர்ப்படப் பகைவரைக்கிட்டிச் சூழ்போகிய நம்முடைய தோன்றற்கு; மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகில் மின்னி யுலகத்தை வந்துவளைத்துப் பரந்த கடலைப்பருகும் பெரியமுகில்; பாசறைத் தோன்றும் கொல் பாசறைக்கண்ணே சென்று தோன்றுமோ! எ - று.
வளைத்தலை விரிநீர்மேலேற்றினுமமையும். தோன்றுமாயின் அவர் ஆற்றாராவரென யானாற்றேனாகின்றேனென்பது கருத்து. பொன்னிவளைத்த புனலென்பதற்குப் பொன்னியாற்றகையப்பட்ட புனலென்றும், வன்னிவளைத்த சடையென்பதற்குத் தீயை வளைத்தாற் போலுஞ் சடையென்று முரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றுவித்தல். 317

குறிப்புரை :

23.2 பிரிவாற்றாமைகார்மிசைவைத்தல் பிரிவாற்றாமைகார்மிசைவைத்தல் என்பது பிரிவுகேட்ட தலைமகள், தனது வருத்தங்கண்டு காதலர் வினைவயிற்பிரிய நீ வருந்தினால் வினைமுடியுமாறென்னோ வென்ற தோழிக்கு, யானவர் பிரிந்ததற்கு வருந்துகின்றேனல்லேன்; இக்கார்முகில் சென்று அப்பாசறைக்கண்ணே தோன்றுமாயின், நம்மை நினைந்தாற்றாராய், அவ்வினை முடிக்கமாட்டாரென்று அதற்கு வருந்துகின்றே னெனக் கார்மிசைவைத்துத் தனது வருத்தங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.2. 9; வேந்தற் குற்றுழி விறலோன் பிரிய
ஏந்திழை பாங்கிக் கெடுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

கோலித் திகழ்சிற கொன்றி
னொடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு
சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை
யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன
தாங்கொலென் போதரவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பார்ப்பொடு பெடைக் குருகு திகழ் சிறகு ஒன்றின் கோலி ஒடுக்கிப் பாலித்து பார்ப்புக்களோடு பெடைக்குருகை விளங்காநின்ற சிறகொன்றினாற் கோலியொடுக்கிப் பாதுகாத்து; இரும் பனி சேவல் பயில் இரவின் கொண்டற்றுவலையால் வரும் மிக்ககுளிரைச் சேவல் தானுழக்கு மிரவின்கண்; மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே போலித் திருநுதலாட்கு மாலாற் சிறிது மறியாத அந்தணனுறையும் அம்பலத்தைப்போல் வாளாகிய திருநுதலாட்கு; என் போதரவு என்னதாம் கொல் எனது போதரவு எத்தன்மையதாகுமோ! எ - று.
இரவினென்னதாமென வியையும். நாம் இக்காலத்து நங்காதலிக்குப் பனிமருந்தாயிற்றிலேமென்னும் உள்ளத்தனாகலின், பெடை யொடுக்கிய சிறகைத் திகழ்சிறகெனப் புனைந்து கூறினான். போலித்திருநுதலாட்கென்பதற்கு அம்பலம்போலும் இத்திருநுதலாட் கென்றுரைப்பினு மமையும். இத்திருநுதலாளென்றான் தன்னெஞ்சத்த ளாகலின். மெய்ப்பாடு: அச்சம். பயன்: மீடற்கொருப்படுதல். 318

குறிப்புரை :

23.3 வானோக்கிவருந்தல் வானோக்கிவருந்தல் என்பது உற்றுழிப்பிரிந்த தலைமகன், பார்ப்புக்களோடு பெடைக்குருகைச் சேவல் தன் சிறகானொடுக் கிப் பனியான்வரும் மிக்க குளிரைப் பாதுகாக்கின்ற இரவின்கண் எனது போதரவு அவளுக்கென்னாங் கொல்லோவெனத் தலை மகளது வடிவை நினைந்து வானை நோக்கி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.3. மானோக்கி வடிவுநினைந்தோன்
வானோக்கி வருந்தியது.

பண் :

பாடல் எண் : 4

கருப்பினம் மேவும் பொழிற்றில்லை
மன்னன்கண் ணாரருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென்
றல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மாலெழில்
தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பின மேறித் தமியரைப்
பார்க்கும் புயலினமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வீழ் பனிவாய் நெருப்பினம் மேய் விழா நின்ற பனியிடத்து எல்லாரும் நெருப்புத்திரளை மேவாநிற்ப; நெடுமால் எழில் தோன்றச் சென்று நெடிய மாயவனதெழில் கண்டார்க்குப் புலப்படச்சென்று; ஆங்கு நின்ற பொருப்பினம் ஏறி அவ்விடத்து நின்ற மலைத்திரளையேறி; தமியரைப் பார்க்கும் புயலினம் துணை யில்லாதாரைத் தேடும் புயலினங்கள்; கருப்பினம் மேவும் பொழில் தில்லை மன்னன்கண் ஆர் அருளால் கருப்புத்திரள் பொருந்தும் பொழிலையுடைய தில்லையின் மன்னவன்கணுண்டாகிய மிக்கவரு ளான்; விருப்பு இனம் மேவச் சென்றார்க்கும் சென்று அல்கும் கொல் விருப்பையுடைய தம்மினந் தம்மா லுதவிபெற்றுப் பொருந்தும் வண்ணஞ் சென்றார்க்குஞ் சென்றுதங்குமோ! எ - று.
அல்குதலான் வருந் துயருறுதனோக்கிச் சென்றார்க்குமென நான்காவதனாற் கூறினாள். நெருப்பினமே யென்பதனைப் புயன் மேலேற்றி இடிநெருப்பென்றும், சென்றென்பதனை மலைமேலேற்றி உயர்ந் தென்று உரைப்பினுமமையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: தோழியை யாற்று வித்தல். 319

குறிப்புரை :

23.4 கூதிர்கண்டு கவறல் கூதிர்கண்டு கவறல் என்பது விழாநின்ற பனியிடத்து எல்லாரும் நெருப்புத்திரளை மேவாநிற்ப, மலைத்திரளையேறித் துணையில்லாதாரைத் தேடும் புயலினம் நமக்கேயன்றித் தம்மை யடைந்தார்க் குதவிசெய்யச் சென்றார்க்குஞ் சென்று பொருந் துமோ? பொருந்துமாயின், நம்மை நினைந்து ஆற்றாராய், அவ்வினை முடிக்கமாட்டாரெனத் தலைமகள் கூதிர்கண்டு கவலாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.4. இருங்கூதிர் எதிர்வுகண்டு
கருங்குழலி கவலையுற்றது.

பண் :

பாடல் எண் : 5

சுற்றின வீழ்பனி தூங்கத்
துவண்டு துயர்கவென்று
பெற்றவ ளேயெனைப் பெற்றாள்
பெடைசிற கானொடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப்
புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
பெறுமிம் மயங்கிருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புற்றில வாள் அரவன் தில்லைப் புள்ளும் புற்றையுடையவல்லாத ஒளியையுடைய பாம்பையணிந்தவனது தில்லையின் மக்களேயன்றிப் புள்ளும்; பெடை சிறகான் ஒடுக்கி பெடையைச் சிறகானொடுக்கி; தம்பிள்ளை தழீஇ தம் பிள்ளைகளையுந் தழுவி; இனம் சூழ்ந்து துயிலப் பெறும் இம் மயங்கு இருள் இனஞ்சூழ்ந்து துயிலப் பெறும் இச் செறிந்த விருட்கண்ணே; சுற்றின மேனி யெங்குஞ்சுற்றி; வீழ் பனி தூங்க வீழாநின்ற பனி இடையறாதுநிற்ப; துவண்டு துயர்க என்று அதற்கோர் மருந்தின்றித் துயர்வாயாகவென்று; எனைப் பெற்றவளே பெற்றாள் என்னை யீன்றவளே ஈன்றாள்; இனி யான் யாரைநோவது! எ - று.
சுற்றின தூங்கவென வியையும். மயங்கிருட்கட்டுயர்வாயாக வெனக் கூட்டுக. சுற்றினவென்பது பெயரெச்சமுமாம். மற்று: அசை நிலை. புற்றிலவாள ரவ னென்பதற்கு முன்னுரைத்த (தி.8 கோவை பா.97) துரைக்க. மெய்ப்பாடு: அது. பயன்: ஆற்றாமை நீங்குதல். 320

குறிப்புரை :

23.5 முன்பனிக்கு நொந்துரைத்தல் முன்பனிக்கு நொந்துரைத்தல் என்பது மக்களேயன்றிப் புள்ளுந் தம்பெடையைச் சிறகானொடுக்கிப் பிள்ளைகளையுந் தழுவி இனஞ்சூழ வெருவாது துயிலப்பெறுகின்ற இம்மயங் கிருட்கண், இடையறாது விழாநின்ற பனியிடைக்கிடந்து வாடித் துயர்வாயாக வென்று என்னைப்பெற்றவளை நோவதல்லது யான் யாரை நோவேனென முன்பனிக்காற்றாது தாயொடு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.5.ஆன்றபனிக் காற்றாதழிந்
தீன்றவளை ஏழைநொந்தது.

பண் :

பாடல் எண் : 6

புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இரும் பனி வையம் எங்கும் பரந்து பாரித்தவா பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு; தில்லைச் சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று; மிக்க தமியருக்கு மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி; அன்றி உயிர்கவர வெகுண்டு; வான் சரம் தருமேல் வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும் அதனோடொக்கும் எ - று.
புரம் அயர அன்று பொருப்புவில் ஏந்தி புரம்வருந்த அன்று பொருப்பாகிய வில்லை யேந்தி; புத்தேளிர் நாப்பண் தேவர்நடுவே; அயனை அன்று சிரம் செற்றோன் தில்லைச் சிற்றம்பலம் அவர்க்குத் தலைவனாகிய அயனையன்று சிரமரிந்த வனது தில்லைச் சிற்றம்பல மெனக் கூட்டுக.
பரந்தெங்குந் தருமேலென்றியைப்பினுமமையும். (அன்று வானென்பது பாட மாயின் வையத்தை யன்றி அவ்வானமுமென உரைக்க) இக்காலத்து அவளாற்றாமை சொல்லவேண்டுமோ எனக்கு மாற்றுதலரி தென்பது போதரத் தமியருக்கெனப் பொதுமையாற் கூறினான். இதனைத் தோழி கூற்றாகவுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 321

குறிப்புரை :

23.6 பின்பனிநினைந்திரங்கல் பின்பனி நினைந்திரங்கல் என்பது இப்பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு அவள் பொறுக்குமளவன்று; அவளைச் சொல்லுகின்றதென்! எனக்கு மாற்றுதலரிதென்பது போதர, மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி, வான் சரத்தைத் தருமாயின், அதனோடொக்குமெனத் தலைமகன் தலைமகளது துயரநினைந் திரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
23.6. இரும் பனியின் எதிர்வு கண்டு
சுரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.

பண் :

பாடல் எண் : 7

வாழும் படியொன்றுங் கண்டிலம்
வாழியிம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்றிரு
ளாநின்ற கோகிலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அம் தொண்டைக் கனிவாய் அழகிய தொண்டைக்கனி போலும் வாயினையும்; யாழின் மொழி மங்கை பங்கன் சிற்றம்பலம் ஆதரியா யாழோசைபோலு மினிய மொழியினையுமுடைய மங்கையது கூற்றையுடையானது சிற்றம் பலத்தை விரும்பாத; கூழின் மலி மனம் போன்று உணவாற் செருக்கு மனம் போல; இருளா நின்ற கோகிலம் ஒரு காலைக் கொருகால் நிறம் பெற்றிருளாநின்ற குயில்கள்; இம்மாம் பொழில் தேன் சூழும்முகச் சுற்றும் பற்றின இம் மாம் பொழிற்கட் குடைதலாற் றேன் சுற்று முகமெங்கும் வந்துபற்றின; வாழும் படி ஒன்றும் கண்டிலம் இனி யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலேம் எ - று.
வாழியென்றது வாழ்வாயாகவென்னும் பொருட்டாய் எதிர் முகமாக்கி நின்றது. தேன் சூழுமுகைச்சுற்றும் பற்றினவென்பது பாடமாயின், மலருமளவுங் காலம் பார்த்துத் தேன்கள் சூழுமுகை யென்க. மெய்ப்பாடு அது. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
கிழவி நிலையே வினையிடத் துரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்
(தொல் - பொருள். கற்பியல் - 45) என்பதனான், இக்கிளவியைந்தும் காலங்காட்ட வேண்டி இத்துறையுட் கூறினாரென்பது கருத்தாகக் கொள்க. 322

குறிப்புரை :

23.7 இளவேனில் கண்டின்ன லெய்தல் இளவேனில்கண்டின்னலெய்தல் என்பது மேன்மேலும் நிறம் பெற்றிருளாநின்ற இக்குயில்கள், மாம்பொழிலைச் சுற்றும் வந்து பற்றின; இனி யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலே னெனத் தலைமகள் இளவேனில்கண் டின்னலெய்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.7. இன்னிள வேனில் முன்னுவது கண்டு
மென்னகைப் பேதை இன்ன லெய்தியது.

பண் :

பாடல் எண் : 8

பூண்பதென் றே கொண்ட பாம்பன்
புலியூ ரரன்மிடற்றின்
மாண்பதென் றேயெண வானின்
மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங்
கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாயெழில்
வாய்த்த பனிமுகிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார் மலர்த் தேன் பாண் பதன் தேர் குழலாய் கார்காலத்து மலரை யூதுந்தேன் பாட்டினது செவ்வியை யாராயுங் குழலையுடையாய்; பூண்பது என்றே கொண்ட பாம்பன் பூணப்படு மணியென்றே கொள்ளப்பட்ட பாம்பினை யுடையான்; புலியூர் அரன் புலியூரரன்; மிடற்றின் மாண்பது என்றே எண அவனது மிடற்றி னழகதாமென்று கருதும்வண்ணம்; எழில் வாய்த்த பனிமுகில் வானின் மலரும் எழில்வாய்த்தலையுடையவாகிய பனிமுகில்கள் வானிடத்துப் பரவாநிற்கின்றன; அதனான், மணந்தவர் தேர் இன்று நாளை இங்கே வரக் காண்பது அன்றே நம்மைக்கலந்தவரது தேர் இன்றாக நாளையாக இங்கே வாராநிற்பக் காணப்படுவதல்லவே? இனி யாற்றாயாகற்பாலையல்லை எ - று.
தேரிங்கே வருவதனைக் காணுமதல்லவே இனியுள்ளதென மொழிமாற்றியுரைப்பினுமமையும். கான்மலரென்பதூஉம், எழில்வாய வென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை வற்புறுத்தல். 323

குறிப்புரை :

23.8 பருவங்காட்டி வற்புறுத்தல் பருவங்காட்டி வற்புறுத்தல் என்பது தலைமகன் தான் வருதற்குக் குறித்துப்போகிய கார்ப்பருவத்தினது வரவுகண்டு கலங்காநின்ற தலைமகளுக்கு, இக்கார்வந்து வானிடத்துப் பரந்தமையான், நம்மைக் கலந்தவரது தேர் இன்றாக நாளையாக இங்கே வாராநிற்பக் காணப்படுவதே இனியுள்ளதெனத் தோழி அப்பருவந் தன்னையே காட்டி, அவளை வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.8. கார்வருமெனக் கலங்குமாதரைக்
தேர்வருமெனத் தெளிவித்தது.

பண் :

பாடல் எண் : 9

தெளிதரல் காரெனச் சீரனஞ்
சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட
மாடக்கண் ணார்முழவந்
துளிதரற் காரென ஆர்த்தன
ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்
றளிதரக் காந்தளும் பாந்தளைப்
பாரித் தலர்ந்தனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அடியேன் களி தர அடியேன் களிப்பை யுண்டாக்க; சிற்றம்பலத்துக் கார் மிடற்றோன் நடம் ஆட சிற்றம்பலத்தின்கண்ணே கரிய மிடற்றையுடையவன் கூத்தாடா நிற்ப; கண் ஆர் முழவம் துளி தரல் கார் என ஆர்த்தன முகமமைந்த முழவங்கள் துளியைத்தருதலையுடைய முகில்போல முழங்கின; ஆர்ப்ப காந்தளும் தொக்கு உன் குழல் போன்று முழங்க அவற்றை முழவமென் றுணராது காந்தளுந் திரண்டு உன்குழலையொத்து; அளி தரப் பாந்தளைப் பாரித்து அலர்ந்தன நறுநாற்ற மளிகளைக் கொணர்தரப் பாம்புபோலுந் துடுப்புக்களைப் பரப்பி அலர்ந்தன; அதனால், சீர் அனம் சீரையுடைய அன்னமே; கார் எனத் தெளிதரல்- இதனைக் காரென்று தெளியற்பாலையல்லை எ - று.
களித்தரவென்பது களிதரவென்று நின்றதெனினுமமையும். பாரித்தென்பது உவமச்சொல்லெனினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை வற்புறுத்தல். 324

குறிப்புரை :

23.9 பருவமன்றென்று கூறல் பருவமன்றென்று கூறல் என்பது காரும் வந்தது; காந்தளும் மலராநின்றன; காதலர் வாராதிருந்த தென்னோ வென்று கலங்காநின்ற தலைமகளுக்கு, சிற்றம்பலத்தின்கண்ணே குடமுழா முழங்க அதனையறியாது காரென்றுகொண்டு இக்காந் தண்மலர்ந்தன; நீ யிதனைப் பருவமென்று கலங்காதொழியெனத் தலைமகன் வரவு நீட்டித்தலால் தோழி அவள் கலக்கந்தீரப் பருவத்தைப் பருவ மன்றென்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.9. காரெனக் கலங்கும் ஏரெழிற் கண்ணிக்கு
இன்றுணை தோழி யன்றென்று மறுத்தது.

பண் :

பாடல் எண் : 10

தேன்றிக் கிலங்கு கழலழல்
வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண் டோட்கொண்டற்
கண்டன் குழையெழில்நாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
யோமெய்யிற் றோன்றுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேன் தேனையொப்பான்; திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் திசைகளிலே விளங்காநின்ற வீரக்கழலை யுடைய அழல்வண்ணன்; சிற்றம்பலத்து எம் கோன் சிற்றம்பலத்தின் கணுளனாகிய வெங்கோன்; திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் திசைகளிலே விளங்காநின்ற திண்ணிய தோள்களையுங் கொண்டல்போலுங் கண்டத்தையுமுடையான்; குழை எழில் நாண் போன்று அவனுடைய குழையும் எழிலையுடைய நாணுமாகிய பாம்பையொத்து; இக் கடி மலர்க் காந்தளும் போந்து இக்கடிமலர்க் காந்தளினது துடுப்புக்களும் புறப்பட்டு; அவன் கை அனல் போல் அவனதுகையிற் றீயைப் போல; தோன்றிக் கடி மலரும் மெய்யின் தோன்றுவது பொய்ம்மையோ தோன்றியினது புதுமலரும் மெய்யாகத் தோன்றுகின்ற விது பொய்யோ! எ - று.
கடியென்பது நாற்றம். கடிமலர் முதலாகிய தன்பொருட் கேற்றவடை. மெய்யிற்றோன்றுவ தென்பதற்கு மெய்போலத் தோன்றுவதெனினு மமையும். காந்தளு மின்றென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமைநீங்குதல். 325

குறிப்புரை :

23.10 மறுத்துக் கூறல் மறுத்துக்கூறல் என்பது பருவமன்றென்ற தோழிக்கு, காந்தளேயன்றி இதுவும் பொய்யோவெனத் தோன்றியினது மலரைக் காட்டி, இது பருவமேயென்று அவளோடு தலைமகள் மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.10. பருவமன் றென்று பாங்கி பகர
மருவமர் கோதை மறுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 11

திருமா லறியாச் செறிகழல்
தில்லைச்சிற் றம்பலத்தெங்
கருமால் விடையுடை யோன்கண்டம்
போற்கொண்ட லெண்டிசையும்
வருமா லுடன்மன் பொருந்தல்
திருந்த மணந்தவர்தேர்
பொருமா லயிற்கண்நல் லாயின்று
தோன்றுநம் பொன்னகர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
திருமால் அறியா திருமாலறியப்படாத; செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்து எம் கரு மால் விடை உடையோன் கண்டம் போல் செறிந்த வீரக்கழலையுடைய திருவடியையுடைய தில்லையிற் சிற்றம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய கரிய மாலாகிய விடையையுடையவனது கண்டம்போல விருண்டு; கொண்டல் எண் திசையும் வரும் கொண்டல்கள் எட்டுத் திசைக்கண்ணும் வாரா நின்றன; அதனால், பொரும் மால் அயில் கண் நல்லாய் தம்மிற்பொரும் பெரியவேல்போலுங் கண்ணையுடைய நல்லாய்; மணந்தவர் தேர் நம்மைக் கலந்தவரது தேர்; உடல் மன் பொருந்தல் திருந்த உடன்றமன்னர் தம்முட் பொருந்துதல் திருந்துதலால்; நம் பொன் நகர்க்கு இன்று தோன்றும் நம் பொன்னையுடைய வில்லின்கண் இன்று வந்து தோன்றும் எ - று.
உடன்மன்பொருந்தறிருந்த மணந்தவரென்பதற்கு மன்னர் பொருந் தும்வண்ணம் அவரைச் சென்று கூடினவரென்றுரைப் பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 326
23.12 வினைமுற்றிநினைதல்

குறிப்புரை :

23.11தேர்வரவு கூறல் தேர்வரவு கூறல் என்பது மறுத்துக்கூறின தலைமகளுக்கு, கொண்டல்கள் எட்டுத்திசைக்கண்ணும் வாராநின்றமையின், இது பருவமே; இனியுடன்றமன்னர் தம்முட் பொருந்துதலான் நம் மைக் கலந்தவர் தேர் நம்மில்லின்க ணின்று வந்து தோன்றுமென்று அவள் கலக்கந்தீரத் தோழி தலைமகனது தேர்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.11. பூங்கொடி மருளப்
பாங்கி தெருட்டியது.

பண் :

பாடல் எண் : 12

புயலோங் கலர்சடை ஏற்றவன்
சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை
வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின்
இன்றோர் திருமுகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் செய்தலையுடைய உயர்ந்த மதிலை எரியாக்கியபின்; இன்று ஓர் திருமுகம் இன்று திருவையுடைய தொருமுகம்; கயல் கயல் போலுங் கண்ணையும்; ஓங்கு இருஞ்சிலை கொண்டு மிகப் பெரிய விற்போலும் புருவத்தையுமுடைத்தாய்; மன் கோபமும் காட்டி வரும்- தங்கிய விந்திரகோபம் போலும் வாயையுங் காட்டி வாராநின்றது; இனிக் கடிதுபோதும் எ று.
புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும் நீரை உயர்ந்த விரிசடையின்கணேற்றவனது சிற்றம்பலத்தையே பரவும்; மயல் ஓங்கு இருங் களி யானை வரகுணன் வெற்பின் வைத்த கயல் மயக்கத்தையுடைய உயர்ந்த பெரிய களியானையையுடைய வரகுணன் இமயத்தின்கண் வைத்த கயலெனக் கூட்டுக.
இன்று ஓராணையோலை அரையன்பொறியாகிய கயலையும் வில்லையுமுடைத்தாய் மன்னன் முனிவையுங்காட்டி வாராநின்ற தெனச் சிலேடை வகையான் ஒருபொருடோன்றிய வாறறிக. மெய்ப்பாடு: அச்சம். பயன்: தேர்ப்பாகன் கேட்டுக் கடிதூர்தல். 327

குறிப்புரை :

23.12 வினைமுற்றிநினைதல் வினைமுற்றிநினைதல் என்பது வேந்தற்குற்றுழிப் பிரிந்த தலைமகன், வினைமுற்றியபின்னர், கயலையும் வில்லையுங் கொண்டு மன்கோபமுங்காட்டி ஒரு திருமுகம் வாராநின்றது; இனிக் கடிதுபோதுமெனத் தேர்ப்பாகன் கேட்பத் தலைமகளது முகநினைந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
23.12. பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன்
மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.

பண் :

பாடல் எண் : 13

சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம்
பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பிற் றுனைந்து பெருகுக
தேர்பிறங் கும்மொளியார்
நிறப்பொற் புரிசை மறுகினின்
துன்னி மடநடைப்புள்
இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை
தேரும் எழில்நகர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பிறங்கும் ஒளி ஆர் நிறப் பொன் புரிசை மறுகினின் மிக்க வொளியார்ந்த நிறத்தையுடைய செம்பொன்னா னியன்ற உயர்ந்த மதிலையுடைய வூரிற்றெருவின்கண்; துன்னி சேர்ந்து விளையாடி; மட நடைப் புள் மென்னடையையுடைய மாடப்புறாக்கள்; இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் இறப்பின்கட் டுயின்று முற்றத்தின்க ணிரைதேர்ந்துண்ணும்; எழில் நகர்க்கு அவளிருந்த வெழிலையுடைய இல்லத்திற்கு; சிறப்பின் திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர் தம் பிறப்பின் சிறப்புக்களாற் பொலியுஞ் சிவனது சிற்றம்பலத்தைச் சென்றடைந்தவர்கடம் பிறவிபோல; துனைந்து பெருகுக தேர் விரைந்து முடுகுவதாக இத்தேர் எ - று.
புறாக்கள் துணையோடு துயின்று முன்றிலின்கண் விளையாடு வனகண்டு ஆற்றகில்லாளென்பது போதர, இறப்பிற்றுயின்று முற்றத்திரைதேரு மென்றான். சிற்றம்பலஞ் சென்று சேர்ந்தவர் பிறவியிறுதிக்கட் பேரின்ப மெய்துமாறுபோல யானுஞ் சுரஞ் செலலிறுதிக்கட் பெருந்தோண் முயங்குவலென்னுங் கருத்தாற் பிறப்பிற் றுனைந்து பெருகுக தேரென்றான். துன்னுமென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: கேட்ட பாகன் விரைந்து தேர் பண்ணுவானாதல். 328

குறிப்புரை :

23.13 நிலைமைநினைந்து கூறல் நிலைமைநினைந்து கூறல் என்பது வினை முற்றியபின்னர் அவள் முகங்கண்டு வாராநின்றவன், புறாக்கள் தந்துணையோடு துயின்று முன்றிற்கண் விளையாடுவகண்டு இது நமக்கரிதாயிற் றென்று என்னிலைமை நினைந் தாற்றகில்லாளாவள்; நீ விரையத் தேரைச் செலுத்துவாயாகவெனத் தலைமகளது நிலைமை நினைந்து தேர்ப்பாகனுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.13. பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து
திருந்துதேர்ப் பாகற்கு வருந்துபு புகன்றது.

பண் :

பாடல் எண் : 14

அருந்தே ரழிந்தனம் ஆலமென்
றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன்
மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண்
தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல்
முழங்கேல் வளமுகிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆலம் அருந்து நஞ்சையருந்த வேண்டும்; ஏர் அழிந்தனம் என்று ஓலம் இடும் இமையோர் மருந்து இதனானழ கழிந்தோமென்று முறையிடுந்தேவர்க்கு அந்நஞ்சால் வரும் இடர்க்கு மருந்தாயவன்; ஏர் அணி அம்பலத்தோன் அழகையுடைய அம்பலத்தின்கண்ணான்; மலர்த்தாள் வணங்கலர் போல் அவனது மலர்போலுந்தாளை வணங்காதாரைப்போல; திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் திருந்திய வழகெல்லாமழிந்து துன்பத்தை யுண்டாக்கும்; செல்வி சீர் நகர்க்கு இல்வாழ்க்கைச் செல்வத்தை யுடையவளது அழகையுடைய வூரின்கண்; வளமுகிலே வளமுகிலே; வரும் என் தேர் இதன்முன் வழங்கேல் வாராநின்ற வெனது தேரிதனின் முற்பட்டுச் சென்றியங்கா தொழிய வேண்டும்; முழங்கேல் இயங்கினும் அத்தமியள் கேட்ப முழங்காதொழிய வேண்டும் எ-று.
ஏரணியென்பதற்கு மிக்கவழகென்றும், பழங்கண்டருமென் பதற்கு துன்பத்தையெனக்குத் தருமென்று முரைப்பினுமமையும். வழங்கே லென்பதற்குப் பெய்யவேண்டாெவன்றுரைப்பாருமுளர். நகர் இல்லெனினுமமையும். முனைவன் இறைவன். மெய்ப்பாடு: அது. பயன்: கேட்டபாகன் றேர்விரைந்து கடாவுதல். 329

குறிப்புரை :

23.14 முகிலோடுகூறல் முகிலொடு கூறல் என்பது காரோட்டங்கண்ட பாகன் அதனோடு விரையத் தேரோட்டாநிற்பான், பிரிதலால் திருந்திய வழகெல்லாம் அழிந்து துன்புறாநின்றவளது சீரிய நகரின்கண், வாராநின்ற வெனது தேரின்முற்பட்டுச் சென்றியங்காதொழிய வேண்டும்; இயங்கினும், அத்தமியாள்கேட்ப முழங்காதொழிய வேண்டுமெனத் தலைமகன், முந்துற்றுச் செல்லாநின்ற முகிலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
23.14. முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன்
கழும லெய்திச் செழுமுகிற் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 15

பணிவார் குழையெழி லோன்தில்லைச்
சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே
பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர்
சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும்
மாவோ டணுகினரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பணி வார் குழை எழிலோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய பணியாகி நீண்ட குழையானுண்டாகிய அழகையுடையவனது தில்லைச்சிற்றம்பலத்தையொக்கும்; மணிவார் குழல் மட மாதே நீலமணிபோலு நீண்ட குழலையுடைய மடப்பத்தை யுடைய மாதே; பொலிக பொலிக; நம்மன்னர் நம்முடைய மன்னர்; பணிவார் திறையும் வந்து வணங்குவாராக வுடம்பட்டவர் கொடுத்த திறையையும்; பகைத்தவர் சின்னமும் பணியாது மாறு பட்டவரடையாளங்களையும்; வண் தேர் முன்னாக்கொண்டு தமது வண்டேர்க்கு முன்னாகக் கொண்டு; அணிவார் முரசினொடு அணியப்பட்ட வாரையுடைய வீரமுரசினோடும்; ஆலிக்கும் மாவோடு ஆலியாநிற்கு மாவினோடும்; அணுகினர் வந்தணுகினார் எ - று.
வண்டேரொடென்பதனைத் தொகுக்கும்வழித் தொகுத்துக் கூறினாரெனினு மமையும். இப்பொருட்கு முன்னாக வந்து பணிவாரென்றுரைக்க. மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளை மகிழ்வித்தல். 330

குறிப்புரை :

23.15 வரவெடுத்துரைத்தல் வரவெடுத்துரைத்தல் என்பது தலைமகன் முகிலொடு வாரா நிற்பக்கண்ட தோழி, வணங்குவாராக வுடம்பட்டவர் கொடுத்த திறையையும் வணங்காது மாறுபட்டவரடையாளங் களையும் தமது தேருக்கு முன்னாகக்கொண்டு, வீரமுரசார்ப்ப, ஆலியாநின்ற மாவினோடும் வந்தணுகினார்; இனி நமக்கொரு குறையில்லை யெனத் தலைமகளுக்கு அவன்வரவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் .
23.15. வினை முற்றிய வேந்தன் வரவு
புனையிழைத் தோழி பொற்றொடிக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 16

கருங்குவ ளைக்கடி மாமலர்
முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
றிலள்நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண
ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை
நீடிய வைகலுமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நான்முகனோடு ஒருங்கு வளைக் கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய் நான்முகனோடுங்கூடச் சங்கை யேந்திய கையையுடையவனு மறியாதவனது தில்லையை யொப்பாய்; மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலும் முனை மருங்கு சூழ்ந்து மன்னனது பாசறைக்கண் யான்றாழ்த்த வைகற்கண்ணும்; கருங்குவளைக் கடிமா மலர் முத்தம் கலந்து இலங்க நின்று கண்ணாகிய கருங்குவளையது புதியபெரியமலர் கண்ணீ ராகிய முத்தத்தைக்கலந்து விளங்க நின்று; நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள் நெருங்கின வளையையுடைய இக்கிளியை யொப்பாள் ஒரு காலமு மென்னைவிட்டு நீங்கிற்றிலள்; அதனாற் பிரிவில்லை எ-று.
வைகலுமென்பதற்கு வைகறோறு மென்றுரைப்பாருமுளர். மெய்ப்பாடும்: பயனும் அவை. 331

குறிப்புரை :

23.16 மறவாமை கூறல் மறவாமைகூறல் என்பது வினைமுற்றிவந்து தலைமக ளோடு பள்ளியிடத்தானாகிய தலைமகன், நீயிர் வினையிடத் தெம்மை மறந்தீரேயென்ற தோழிக்கு, யான் பாசறைக்கட் டாழ்த்தவிடத்தும், கண் முத்திலங்க நின்று, இவள் என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்கிற்றிலள்; ஆதலால், யான் மறக்குமாறென் னோவெனத் தானவளைமறவாமை கூறாநிற்றல், அதற்குச் செய்யுள்
23.16. பாசறை முற்றிப் பைந்தொடியோ டிருந்து
மாசறு தோழிக்கு வள்ள லுரைத்தது.

பண் :

பாடல் எண் : 1

முனிவரும் மன்னரும் முன்னுவ
பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச்
சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி தென்னென்று
தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோவென்று
வந்திக்கும் நன்னுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என துறந்தாரு மரசரும் கருதுவனவாகிய மறுமையு மிம்மையும் பொருளான் முற்றுப்பெறுமென்று பொது வகையாற் கூற; கண் பனி வரும் அக்குறிப்பறிந்து கண்கள் பனிவாரா நின்றன, இவ்வாறு, பனிவருங்கண்ணோடு அறிவழிந்து வருந்திய விடத்து; பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய் பரமனது திருச் சிற்றம்பலத்தை யொப்பாய்; துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப நீ துன்பம் வருந்தன்மை இஃதென்ன காரணத்தான் வந்தது யான்பிரியேனென்று தூய நீரைத் தெளித்துத் தலையளிசெய்ய அறிவு பெற்று அறிவழிந்த காலத்தைப் பிரிந்த காலமாகவே கருதி; நனி வரும் நாள் இதுவோ என்று நன்னுதல் வந்திக்கும் நீர் நனிதாழ்த்து வருநாளிதுவோவென்று நன்னுதலாள் வணங்கி நின்றாள்; இனி நீயுணர்த்துமாற்றானுணர்த்து எ-று.
பரமன் றிருச்சிற்றம்பலமனையா ளென்று பாடமோதுவாரு முளர். நீயெனவுந் தாழ்த்தெனவு மொருசொல் வருவித்துரைக்கப் பட்டது. நனிவந்திக்குமெனினுமமையும். துறந்தார் கருதுவதாகிய மறுமையின்பமும், அரசர் கருதுவதாகிய விம்மையின்பமு மென்று, நிரனிறையாகக் கொண்டு, அவரிருவருங் கருதுவனவாகிய இப் பொருளிரண்டையும் பொருண்முடிக்குமென்று பொது வகையாற் கூறினானெனக் கொள்க மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுணர்த்துதல். 332

குறிப்புரை :

24.1 வாட்டங்கூறல் வாட்டங்கூறல் என்பது பொருள்வயிற் பிரியலுறாநின்ற தலைமகன், இருமையும் பொருளானே முற்றுப்பெறுமென்று யான் பொதுவகையாற்கூற, அக்குறிப்பறிந்து கண்பனிவர, இத்தன்மையளாய் வாடினாள்; இனி யென்னாற் பிரிவுரைத்த லரிது; நீ யுணர்த்து மாற்றானுணர்த்தெனத் தோழிக்குத் தலை மகளது வாட்டங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
24.1. பிரிவு கேட்ட வரிவை வாட்டம்
நீங்க லுற்றவன் பாங்கிக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

வறியா ரிருமை யறியா
ரெனமன்னும் மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற்
றார்நமர் நீண்டிருவர்
அறியா வளவுநின் றோன் தில்லைச்
சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இருவர் அறியா அளவு நீண்டு நின்றோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய மாலும் பிரமனுமாகிய விருவர் அடியும் முடியும் அறியாத எல்லையின்கண் நீண்டு நின்றவனது திருச்சிற்றம்பலத்தையொக்கும்; செறி வார் கருங் குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதல் செறிந்த நீண்டகரியகுழலினையும் வெள்ளிய நகையினையுஞ் செய்யவாயினையுமுடைய திரு நுதால்; வறியார் பொருளில்லாதார்; இருமை அறியார் என இம்மையு மறுமையு மாகிய இருமையின்கண்வரும் இன்பமு மறியா ரென்று கருதி; மன்னும் மா நிதிக்கு தொலையாது நிலைபெறும் பெரிய வரும் பொருடேடுதற்கு; நெறிஆர் அரும் சுரம் நமர் செல்லல் உற்றார் வழியறிதற்கரிய அருஞ்சுரத்தை நமர் போகலுற்றார் எ-று.
செறியா ரென்பதூஉம் பாடம். சிறுகானெறி பலவாகிய வருஞ்சுர மெனினுமமையும். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுடம்படுத்தல். 333

குறிப்புரை :

24.2 பிரிவுநினைவுரைத்தல் பிரிவுநினைவுரைத்தல் என்பது வாட்டங் கேட்ட தோழி, பொருளில்லாதார் இருமையின் கண்வரு மின்பமும் அறியாரெனவுட் கொண்டு, அருஞ்சுரம்போய், நமர் பொருடேட நினையாநின்றா ரெனத் தலைமகளுக்குத் தலைமகனது பிரிவுநினை வுரையா நிற்றல். அதற்குச் செய்யுள்
24.2. பொருள்வயிற் பிரியும் பொருவே லவனெனச்
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 3

சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ்
சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி
எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்
அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென்
றம்ம கொடியவளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தோழி கொடியவள் தோழியாகிய கொடியவள்; அஞ்சனம் எழுதிற் கரப்பதற்கே ஒழிகுவது அறிவாள் அஞ்சன மெழுதின் எழுதுகின்ற கால மத்துணையுங் காதலர் தோன்றாமையான் அவ்வஞ்சனத்தை யொழிவதறிவாள்; அம்பலவர்ப் பணியார் குறி வாழ் நெறி அன்பர் செல்வர் என்று அம்பலவரை வணங்காதார் அவ்வணங்காமைக்குக் குறியாக வாழுந் தீயநெறியை அன்பர் செல்வரென்று; வாள்சிறு உகிர் உற்று உறாமுன்னம் சின்னப்படும் குவளைக்கு ஒளியையுடைய சிறியவுகிர் சிறிதுறாமுன்னம் பொடிபடுங் குவளைப் பூவிற்கு; எறிவாள் கழித்தனள் எறிதற்குக் கருவியாகிய வாளையுறைகழித்தாள்; யான்கூறுவதுண்டோ! எ-று.
கொடியவரே யென்பது பாடமாயிற் கொடியராகிய வன்பரெனக் கூட்டுக. அம்ம: அசைநிலை. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செல வழுங்குவித்தல். 334

குறிப்புரை :

24.3 ஆற்றாது புலம்பல் ஆற்றாது புலம்பல் என்பது பிரிவுநினைவுரைப்பக்கேட்ட தலைமகள், இத்தோழியாகிய கொடியவள், இத்தன்மையை யறிந்திருந்தும், அன்பர் பிரிவரெனக் குவளைப்பூ வெறிதற்கு வாளுறைகழித்தாற்போலக் கூறினாள்; இதற்கியான் கூறுவதுண்டோ வென ஆற்றாது புலம்பாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.3. பொருள்தரப் பிரியும் அருள்தரு பவனெனப்
பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.

பண் :

பாடல் எண் : 4

வானக்கடிமதில் தில்லையெங்
கூத்தனை ஏத்தலர் போற்
கானக் கடஞ்செல்வர் காதல
ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க்
கண்கள்முத் தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ
இனிச்சென்று தேர்பொருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வானக் கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் முகில்களையுடைத்தாகிய காவலையுடைய மதிலாற் சூழப்பட்ட தில்லையில் எங்கூத்தனை வாழ்த்தாதார் போல; காதலர் கானக் கடம் செல்வர் என்ன காதலர் கானகத்தையுடைய சுரத்தைச் செல்வரென்று சொல்ல; கதிர் முலைகள் மானக் கனகம் தரும் ஒளியையுடைய முலைகள் கொண்டாடப்படும் பொன்னைத்தாரா நின்றன; மலர்க் கண்கள் முத்தம் வளர்க்கும் மலர் போன்ற கண்கள் முத்தத்தைப் பெருக உண்டாக்கா நின்றன; அதனான், தேன் நக்க தார் மன்னன் தேனோடு மலர்ந்த தாரையுடைய மன்னன்; இனிச் சென்று தேர் பொருள் என் இனிச் சேட்சென்று தேடும் பொருள் யாது! எ-று.
மானமென்றது அளவை. அளவையென்றது பிரமாணம். மாற்றாணிப்பொன்னென்றுரைப்பினு மமையும், மன்னனென்பது ஈண்டு முன்னிலைக்கண் வந்தது; இயல்புவிளி யென்பாருமுளர். மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம், பயன்: அது. 335

குறிப்புரை :

24.4 ஆற்றாமைகூறல் ஆற்றாமைகூறல் என்பது தலைமகளது வருத்தங்கண்ட தோழி, காதலர் கானகத்தையுடைய சுரத்தைப் போய்ப் பொரு டேட நினையாநின்றாரென்றுயான் சொல்லுமளவில், அவளது முலையுங் கண்ணும் பொன்னும் முத்துந் தாராநின்றன: இனி நீ சேட்சென்று தேடும் பொருள் யாதோவெனத் தோழி தலைமக னுக்கு அவளது பிரிவாற்றாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.4. ஏழை யழுங்கத்
தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 5

சுருடரு செஞ்சடை வெண்சுட
ரம்பல வன்மலயத்
திருடரு பூம்பொழில் இன்னுயிர்
போலக் கலந்திசைத்த
அருடரு மின்சொற்க ளத்தனை
யும்மறந் தத்தஞ்சென்றோ
பொருடரக் கிற்கின் றதுவினை
யேற்குப் புரவலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுருள் தரு செஞ்சடைவெண் சுடர் அம்பலவன் மலயத்து சுருண்ட செஞ்சடைக்கணணிந்த வெண்சுடரை யுடைத் தாகிய மதியையுடைய வம்பலவனது பொதியின் மலைக்கண்; இருள் தரு பூம் பொழில் இருண்ட பூவையுடைய பொழிலிடத்து; இன் உயிர் போலக் கலந்து இன்னுயிர்போல இனியராய் ஒன்றுபட்டு வந்து கூடி; இசைத்த அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து நமக்குச் சொன்ன அருளைப் புலப்படுத்தும் இனிய சொற்கள் எல்லா வற்றையும் மறந்து; அத்தம் சென்றோ தாம் அருஞ்சுரஞ் சென்றோ; புரவலர் காவலர்; வினையேற்குப் பொருள் தரக்கிற் கின்றது தீவினை யேற்குப் பொருளைத்தரத் தொடங்குகின்றது! இது தகுமோ! எ-று.
இருளைத்தருமென் றுரைப்பினு மமையும். உடம் போடுயிர் கலக்குமாறு போலக் கலந்தெனினு மமையும். திணை பெயர்த்திடுதல் பிரிவுள்ளிப் பாலைநிலத்தனாகியானை மருதநிலத்த னாக்குதல். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்குவித்தல். 336

குறிப்புரை :

24.5 திணைபெயர்த்துரைத்தல் திணை பெயர்த்துரைத்தல் என்பது யான் அவர்க்கு நின தாற்றாமை கூறினேன், இனியவர் நினைவறியேனென்ற தோழிக்கு, தாம் எனக்கருளைப் புலப்படுத்திய சொற்களத் தனையு மறந்தோ காவலர் தீவினையேற்குப் பொருளைத்தரத் தொடங்குகின்ற தெனப் பிரிவுள்ளிப் பாலைநிலத்தனாகிய தலை மகனை மருதநிலத்தனாக்கித் தலைமகள் புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் .
24.5. துணைவன் பிரியத் துயருறு மனத்தொடு
திணைபெயர்த் திட்டுத் தேமொழி மொழிந்தது.


பண் :

பாடல் எண் : 6

மூவர்நின் றேத்த முதலவன்
ஆடமுப்பத்து மும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன் தில்லை
யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக
மனைய புனையழற்கான்
போவர்நங் காதல ரென்நாம்
உரைப்பது பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மூவர் நின்று ஏத்த நான்முகனும் மாலும் இந்திரனுமாகிய மூவர்நின்றுபரவ; முதலவன் ஆட எல்லாப் பொருட்குங் காரணமாகியவ னாடாநிற்ப; முப்பத்து மும்மைத் தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லையம்பலம் சீர் வழுத்தா முப்பத்து மும்மையாகிய எண்ணையுடைய தேவர்கள் சென்று வழுத்துஞ் சிவனது தில்லை யம்பலத்தை நன்மைபுகழாத; பாவர் சென்று அல்கும் நரகம் அனைய தீவினையார் சென்று தங்கு நரகத்தையொக்கும்; புனை அழல் கான் போவார் நம் காதலர் செய்தாற்போலு மழலையுடைய காட்டைப் போவர் போன்றிருந்தார் நங்காதலர்; பூங்கொடி பூங்கொடி போல்வாய்; நாம் உரைப்பது என் இனி நாஞ் சொல்லுவதுண்டோ! எ-று.
முப்பத்துமும்மை முப்பத்து மூவரது தொகுதியெனினு மமையும். சீர்வழுத்தா வென்பன ஒருசொன் னீர்மைப்பட்டு அம்பலத்தையென்னு மிரண்டாவதற்கு முடிபாயின. பொருத்தம் உள்ளத்து நிகழ்ச்சி. சொல்லாது பொருள்வயிற் பிரிவோன் கருத் தறிந்து தோழி சொல்லியது. மெய்ப்பாடும், பயனும் அவை. 337

குறிப்புரை :

24.6 பொருத்த மறிந்துரைத்தல் பொருத்தமறிந்துரைத்தல் என்பது திணைபெயர்த்துக் கூறின தலைமகளுக்கு, யாமெல்லாஞ் சொன்னேமாயினுங் காதலர்க்கு நினைவு பொருண்மேலேயாயிருந்தது: இனி யாஞ் சொல்லுவ தென்னோவெனத் தோழி தலைமகனது பொருத்த மறிந்து, தானதற்கு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.6. பொருள்வயிற் பிரிவோன் பொருத்த நினைந்து
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 7

தென்மாத் திசைவசை தீர்தரத்
தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி
யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப்

பூவணம் அன்னபொன்னே வன்மாக் களிற்றொடு சென்றனர்
இன்றுநம் மன்னவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தென் மாத் திசை வசை தீர்தர தெற்காகிய பெரிய திசை குற்றநீங்க; என்மாத் தலைக் கழல் வைத்து எனது கருந்தலைக்கட் கழல்களை வைத்து; தில்லைச் சிற்றம்பலத்து தில்லைச் சிற்றம்பலத்தின்கண்; எரி ஆடும் இறை திகழும் பொன் மாப் புரிசைப் பொழில் திருப் பூவணம் அன்ன பொன்னே எரியோடாடு மிறைவனது விளங்கும் பொன்னானியன்ற பெரியமதிலாற் சூழப்பட்ட பொழிலையுடைய திருப் பூவணத்தை யொக்கும் பொன்னே; நம் மன்னவர் வன் மாக்களிற்றொடு இன்று சென்றனர் நம்மன்னர் வலிய பெரிய களிறுகளோடும் வினைகுறித்து இன்று சென்றார் எ-று.
நால்வகைத்தானையோடுஞ் சென்றா ரெனினு மமையும். மதிற்கால்சாய்த்தற்குக் களிறு சிறந்தமையின் அதனையே கூறினார். வினைவயிற்பிரிவுழிக் களிற்றுத்தானை சிறந்தமையின், ஒடு: உயர் பின்வழி வந்ததாம்; வேறுவினை யொடுவாய்க் களிற்றையுடை யராய்ச் சென்றாரென்பதுபட நின்றதெனினு மமையும். ஊர்ந்தகளி றென்று ஒடு கருவிப் பொருட்கண் வந்ததெனினு மமையும். செல்வ ரென்னாது சென்றாரென்றமையான், சொல்லாது பிரிந்தானாம். மா வென்பது விலங்கென்று நாய்த்தலை யென்றுரைப்பாரு முளர். வாடுதற்கு - வாடுதலான். மெய்ப்பாடு: அழுகை. பயன்: பிரிவுணர்த் துதல்.338

குறிப்புரை :

24.7 பிரிந்தமைகூறல் பிரிந்தமை கூறல் என்பது பொதுவகையானுணர்த்தினே மாயின், இனித்தீயது பிற காண்கின்றோமெனத் தலைமகனுணர்த்தாது பிரியாநிற்ப, நின்முன்னின்று பிரிவுணர்த்தினால் நீ மேனியொளி வாடுவையென வுட்கொண்டு, பொருண்முடித்துக் கடிதின் மீள்வாராக நால்வகைத்தானையோடு நம்மன்னர் வினைவயிற்சென்றாரெனத் தோழி, தலைமகளுக்குத் தலைமகன் பிரிந்தமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.7. எதிர்நின்று பிரியிற் கதிர்நீ வாடுதற்
குணர்த்தா தகன்றான் மணித்தேரோ னென்றது.

பண் :

பாடல் எண் : 8

ஆழியொன் றீரடி யும்மிலன்
பாகன்முக் கட்டில்லையோன்
ஊழியொன் றாதன நான்குமைம்
பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்மெண்
டிசையுந் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந்
தேர்வந்து வைகுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:

ஆழி ஒன்று காலுள்ள தொன்று; பாகன் ஈரடியும் இலன் பாகன் இரண்டடியுமுடையனல்லன், இவ்வுறுப்புக் குறையோடு; ஐம் பூதமும் ஆறு ஒடுங்கும் முக்கண் தில்லையோன் ஊழி ஒன்றாதன நான்கும் ஐந்துபூதமுந் தோன்றியவாறொடுங்கும் மூன்றுகண்ணையுடைய தில்லையானுடைய ஊழியுமொவ்வாத பெருமையையுடைய நான்கியாமத்தின்கண்ணும்; ஏழ் இயன்ற ஆழ் கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து அன்றோ ஏழாயியன்ற ஆழ்ந்த கடல்களையும் எட்டுத்திசைகளையுந் திரிந்திளைத்தன்றோ; அருக்கன் பெருந்தேர் வந்து வைகுவது அருக்கனது பெருந்தேர் ஈண்டுவந்து தங்குவது; அதனான் அதன் வரவு யாண்டையது! இவளாற்றுதல் யாண்டையது! எ-று.
ஈரடியுமென்பதனை எழுவாயாக்கினு மமையும். நான்குந் திரிந்தெனவியையும். இயன்றவென்பது கடைக்குறைந்து நின்றது. வாழி அசைநிலை. ஒன்றாதன வென்பதனை நான்கு மென்னு மெழுவாய்க்குப் பயனிலையாக்கி யுரைப்பினுமமையும். ஐம்பூதமும் ஆறுகளொடுங்கும் ஏழ்கடலுமென்றெண்ணிக் கடலோ டருக்கற்கியை புண்மையான், ஐம்பூதத்திற் பிரித்துக் கூறினாரென்பாருமுளர். இரவும்பகலு மொப்பவருமாயினும் இரவுறுதுயரத்திற் காற்றாமை யான், இராப்பொழுது பலகால் வருவதுபோலப் பயிறருமிரவென் றாள். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்குவித்தல். 339

குறிப்புரை :

24.8 இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல் இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல் என்பது பிரிவு கேட்ட தலைமகள தாற்றாமுகங் கண்ட தோழி, இவ்வுறுப்புக்குறையோ டெங்குந் திரிந்திளைத்து, அருக்கனது தேர் வருதல் யாண்டை யது? இவளாற்றுதல் யாண்டையதென, அவளிரவுறு துயரத்திற் குத் தானிரக்கமுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.8. அயில்தரு கண்ணியைப் பயில்தரு மிரவினுள்
தாங்குவ தரிதெனப் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 9

பிரியாரென இகழ்ந்தேன் முன்னம்
யான்பின்னை எற்பிரியின்
தரியா ளென இகழ்ந் தார்மன்னர்
தாந்தக்கன் வேள்விமிக்க
எரியா ரெழிலழிக் கும்மெழி
லம்பலத் தோனெவர்க்கும்
அரியா னருளிலர் போலன்ன
என்னை யழிவித்தவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முன்னம் பிரியார் என யான் இகழ்ந்தேன் முற்காலத்து அவருலகின் மேல்வைத்துக் கூறியவழி நீட்டித்துப் பிரிவராயினும் இப்பொழுது பிரியாரென யானிகழ்ந்திருந்தேன்; எற்பிரியின் தரியாள் என மன்னர் தாம் பின்னை இகழ்ந்தார் என்னைத் தாம் பிரிகின்றாராக வுணரின் இவளுயிர் தாங்காளென மன்னர் தாம் பின்னுணர்த்துதலை யிகழ்ந்தார்; அன்ன அத்தமைய வாகிய இரண்டிகழ்ச்சியும்; தக்கன் வேள்வி எரி ஆர் மிக்க எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் தக்கனது வேள்வியின் முத்தீ நிறைந்த மிக்கவழகையழித்த எழிலையுடைய அம்பலத்தான்; எவர்க்கும் அரியான் யாவர்க்குமரியவன்; அருள் இலர் போல் என்னை அழிவித்த அவனதருளில்லாதாரைப் போல வருந்த என்னை யழிவித்தன எ-று.
உண்மையாற் காரணமாவனவும், உணரப்பட்டாற் காரண மாவனவும் எனக் காரணமிருதிறத்தன. அவற்றுட் பிரிவு தரியாமைக்கு உணரப்பட்டாற் காரணமாமாகலின் பிரியினென்புழிப் பிரிகின்றாராக வுணரினென்பது ஆற்றலாற் பெற்றாம், புலிவரினஞ்சு மென்புழிப் போல. எரியாரெழிலழிக்குமென்பதற்கு எரியின தெழிலழிக்கு மென்பார், ஆரைக்கிளவிகொடுத் திழித்துக் கூறினாரெனினு மமையும். அழிக்குமென்பது காலமயக்கம். கற்பந்தோறும் அவ்வாறு செய்தலின் நிகழ்காலத்தாற் கூறினாரெனினுமமையும். உணர்த்தாது பிரியினும் ஒருவாற்றானுணர்ந்து பின்னுமாற்றா ளாவளாலெனின், தீயதுபிற காணப்படுமென்பதாகலானும், முன்னின் றுணர்த்தல் வல்லனல்லாமையானும் அவ்வாறு பிரியுமென்க. மெய்ப்பாடு: அது. பயன்: ஆற்றாமை நீங்குதல். 340

குறிப்புரை :

24.9 இகழ்ச்சிநினைந்தழிதல் இகழ்ச்சி நினைந்தழிதல் என்பது தோழி இரக்கமுற்றுக் கூறாநிற்ப, முற்காலத்து அவருலகின் மேல்வைத் துணர்த்தியவழி நீட்டித்துப் பிரிவாராயினும், இப்பொழுதைக்கிவர் பிரியாரென யான் அவர் பிரிவிகழ்ந்திருந்தேன்; முன்னின்று பிரிவுணர்த்தின் இவளுயிர் தரியாளென்று அவருணர்த்துதலை யிகழ்ந்து போனார்; அத்தன்மைய வாகிய இரண்டிகழ்ச்சியும், என்னை யித்தன்மைத்தாக வழிவியா நின்றனவெனத் தலைமகள் இகழ்ச்சிநினைந் தழியா நிற்றல். அதற்குச் செய்யுள்
24.9. உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ்குழலி வாடியது.

பண் :

பாடல் எண் : 10

சேணுந் திகழ்மதிற் சிற்றம்
பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்
சூணுந் திருத்து மொருவன்
திருத்தும் உலகினெல்லாங்
காணுந் திசைதொறுங் கார்க்கய
லுஞ்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு
தோன்றுமொர் பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் சேய்மைக் கண்ணும் விளங்கும் மதிலையுடைய சிற்றம்பலத்தை யுடையான்; தெள் நீர்க் கடல் நஞ்சு ஊணும் திருத்தும் ஒருவன் தெளிந்த நீரையுடைய கடலினஞ்சை உணவாகவுஞ் செய்யு மொப்பிலாதான்; திருத்தும் உலகின் எல்லாம் அவனாற் செய்யப்படு முலகினெங்கும்; காணும் திசை தொறும் பார்க்குந் திசைதோறும்; கார்க் கயலும் கண்ணாகிய கரியகயல்களையும்; செங்கனியொடு வாயாகிய செய்யகனி யோடும்; பைம் பூணும் பசும்பொன்னா னியன்ற பூணையும்; புணர் முலையும் கொண்டு தம்முட் புணர்ந்த முலைகளையுமுடைத்தாய்; ஓர் பூங்கொடி தோன்றும் ஒருபூங்கொடி தோன்றா நின்றது எ-று.
நஞ்சுண்டலையுங் குற்றநீக்குமெனவுரைப்பினுமமையும். ஊணுந் திருத்துமென்பது அதுசெய்யுந் தன்மையனென்னும் பொருட் டாகலின், நிகழ்காலத்தாற் கூறினார். 341

குறிப்புரை :

24.10 உருவுவெளிப்பட்டுநிற்றல் உருவுவெளிப்பட்டு நிற்றல் என்பது தலைமகள் இகழ்ச்சி நினைந்தழியாநிற்ப, தானுணர்த்தாது பிரிந்தமையுட் கொண்ட பொருள் வலித்த நெஞ்சொடு செல்லாநின்ற தலைமகன், காணுந்திசைதோறுங் கயலையும் வில்லையுஞ் சிவந்த கனியையு முலையையுங் கொண்டு ஒரு பூங்கொடி தோன்றாநின்றதெனத் தலைமகளதுருவை நினைந்து மேற்போகமாட்டாது மீளலுற்றுச் சுரத்திடை நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.10. பொருள்வயிற் பிரிந்த ஒளியுறு வேலவன்
ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது.

பண் :

பாடல் எண் : 11

பொன்னணி யீட்டிய ஓட்டரும்
நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப
தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக
ரன்ன அன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
கோநீ விரைகின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் பொற்றிரளை யீட்டுவா னோட்டந்தருநெஞ்சமே; நீ விரைகின்றது இப்பொழுது நீ விரைகின்றது; இமையோர் இறைஞ்சும் மன் அணி தில்லை வளநகர் அன்ன இமையோர் சென்று வணங்கும் மன்னனது அழகிய தில்லையாகிய வளநகரையொக்கும்; அன்ன நடையாள் மின் அணி நுண் இடைக்கோ அன்னத்தினடை போலு நடையை யுடையாளது மின் போலும் நுண்ணிய விடைக்கோ; பொருட்கோ எடுத்துக்கொண்ட பொருட்கோ, இரண்டற்குமல்லவோ; இப் பொங்கு வெங்கானின் நணி நிற்குமிது என் என்பது இவ்வழல் பொங்கு வெங்கானத்தைச் சேர்ந்து போவதும் மீள்வதுஞ் செய்யாது நிற்கின்ற விஃதியாதென்று சொல்லப்படுவது? எ - று.
நண்ணியென்பது நணியென விடைக்குறைந்து நின்றது. அணியென்று பிரித்து வெங்கானின்கணணித்தாக நிற்பதென்றுரைப் பினுமமையும். இமையோரிறைஞ்சுந் தில்லைவளநகரெனவியை யும். 342

குறிப்புரை :

24.11 நெஞ்சொடு நோதல் நெஞ்சொடு நோதல் என்பது மீள நினைந்த தலைமகன், பின்னும் பொருண்மேற் செல்லாநின்ற வுள்ளத்தனாய் நின்று மீளமாட்டாது, இவ்விரண்டனுள் இப்பொழுது நீ யேதுக்குப்போக முயல்கின்றாயெனத் தன்னெஞ்சொடு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.11. வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.

பண் :

பாடல் எண் : 12

நாய்வயி னுள்ள குணமுமில்
லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம்
பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும்
பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத்
தக்க துன் சிக்கனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நாய் வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட நாயினிடத்துள்ள நன்மையுமில்லாத வென்னை நல்ல தொண்டாகக்கொண்ட; தீவயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில் மொழியை தீயிடத்து நிறம்போலு நிறத்தை யுடையவனது சிற்றம்பலத்தையொக்குஞ் சிலவாகிய மொழியை யுடையாளிடத்து; பேய் வயினும் அரிதாகும் பிரிவு எளிதாக்குவித்து; பேயினிடத்துஞ் செய்தலரிதாம்பிரிவை எளிதாக்குவித்து சேய் வயின் போந்த நெஞ்சே - சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த நெஞ்சமே; உன் சிக்கனவு அஞ்சத்தக்கது உனது திண்ணனவு அஞ்சத்தக்கது எ -று.
நற்றொண்டென்புழி நன்மை: சாதியடை. சின்மொழியை யென்னு மிரண்டாவது ஏழாவதன்பொருட்கண் வந்தது. 343

குறிப்புரை :

24.12 நெஞ்சொடு புலத்தல் நெஞ்சொடு புலத்தல் என்பது நெஞ்சொடு நொந்து கூறாநின்றவன், பேயிடத்துஞ்செய்தலரிதாம்பிரிவை இவளிடத் தே யெளிதாக்குவித்துச் சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த நினது சிக்கனவு அஞ்சத்தக்கதெனப் பின்னும் அந்நெஞ்சொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.12. அழற்கடத் தழுக்கமிக்கு
நிழற்கதிர்வேலோன் நீடுவாடியது.

பண் :

பாடல் எண் : 13

தீமே வியநிருத் தன்திருச்
சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன்
தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க வொழிந்தனம்
யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்
தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நெஞ்சம் நெஞ்சமே; தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய தீயைப்பொருந்திய நிருத்தத்தை யுடையவனது திருச் சிற்றம்பலத்தை யொக்கும்; பூ மேவிய பொன்னை விட்டுப் பொன் தேடி பூவின்கண்மேவிய பொன்னை விட்டு வேறு பொன்னைத் தேடாநின்று; இப் பொங்கு வெங்கான் நாமே நடக்க இவ்வழல்பொங்கும் வெங்கானின் நாமே நடப்பீராமின்; யாம் ஒழிந்தனம் யாமொழிந்தேம்; பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பது பொருடேடி யெம்மை வாழச் செய்வது; வஞ்சி அன்ன வாம் மேகலையை விட்டோ வஞ்சியையொக்கு மழகிய மேகலையையுடையாளை விட்டோ? யாமிதற்குடம்படேம் எ -று.
இதுவும் பெருந்திணைப்பாற்படும். மீளநினைந்த துணை யல்லது மீண்டிலனென்பார் மீணெறியை யுள்ளத்தாற் சென்ற தென்றுரைப்ப. இப்பாட்டு நான்கிற்கும் மெய்ப்பாடு: அச்சம். பயன்: செலவழுங்குவித்தல். 344

குறிப்புரை :

24.13 நெஞ்சொடுமறுத்தல் நெஞ்சொடு மறுத்தல் என்பது நெஞ்சொடு புலந்து கூறிப் பின்னும் பொருண்மேற் செல்லாநின்ற வுள்ளத்தோடு தலைமகளை நினைந்து, இத்தன்மைத்தாகிய பொன்னைவிட்டு வேறு பொன்றேடியோ எம்மை வாழச்செய்வது? இதற்கியா முடம்படேம்; நாமே நடக்கவெனச் செலவுடம்படாது பொருள் வலித்த நெஞ்சொடு மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.13. நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன்
சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.

பண் :

பாடல் எண் : 14

தெண்ணீ ரணிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தி யாதவரிற்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள்
எய்தப் பனித்தடங்க
ணுண்ணீர் உகவொளி வாடிட
நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நில னுங்குழி
யும்விர லிட்டறவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின் தெண்ணீரைச் சூடிய சிவனது சிற்றம்பலத்தைச் சிந்தியாதவரைப்போல வருந்த; பண் நீர் மொழி இவளைப் பையுள் எய்த பண்ணீர்மையையுடைய மொழியையுடையவிவளை நோய் பொருந்த; பனித் தடங் கண்ணுள் நீர் உக குளிர்ச்சியையுடைய பெரியகண்ணகத்து நீர்வார; ஒளி வாடிட மேனியொளிவாட; நீடு சென்றார் சென்ற நாள் காலநீடப் பிரிந்தவர் பிரிந்தநாளை; எண் நீர்மையின் இட்டு விரல் அற நிலனும் குழியும் எண்ணுந்தன்மையாற் பலகாலிடுதலின் விரல்தேய நிலனுங்குழியும்! இனியெங்ஙன மாற்றும்! எ - று.
ஒளிவாடினளென்பது பாடமாயின், விரலிட்டென்பதனைத் தோழிமேலேற்றுக. மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 345

குறிப்புரை :

24.14 நாளெண்ணிவருந்தல் நாளெண்ணி வருந்தல் என்பது தலைமகனது வரவுநீட்ட நினைந்து வருந்தாநின்ற தலைமகளது வருத்தங்கண்ட தோழி, இவளை நோய்பொருந்தச் சென்றவர் சென்றநாளை எண்ணுந் தன்மையாற் பலகாலிடுதலின் நிலனுங்குழிந்து விரலுந்தேய்ந்த தென, அவன் சென்றநாளெண்ணி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.14. சென்றவர் திறத்து நின்றுநனி வாடுஞ்
சூழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது.

பண் :

பாடல் எண் : 15

சுற்றம் பலமின்மை காட்டித்தன்
தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர
மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும்
பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் லேறுசெல்
லாநின்ற கூர்ஞ்செக்கரே.

பொழிப்புரை :

இதன் பொருள்
திண் கோட்டின் வண்ணப் புற்று உதர்ந்து திண்ணிய கோட்டான் நிறத்தையுடைய புற்றையிடந்து; பொன் ஆர் மணி புலம்ப இரும்பார்ந்த மணியொலிப்ப; கொற்றம் மருவு கொல் ஏறு வெற்றியைப் பொருந்தின கொலல்வல்ல ஆனேறு; நல் நாகொடும் செல்லாநின்ற நல்ல நாகோடும் ஊர்வயிற் செல்லா நின்ற; கூர்ஞ் செக்கர் சிறக்குஞ் செக்கர்வானையுடைய மாலை; சுற்றம் பலம் இன்மை காட்டி சுற்றத்தாற் பயனின்மையையறிவித்து; தன் தொல் கழல் தந்த தொல்லோன் சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று பிறவிமருந்தாதற்குப் பழையவாய் வருகின்ற தன்கழல்களை யெனக்குத் தந்த பழையோனது சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று; இனியென்னாகுவள்! எ -று.
சுற்றம் பயனையுடைத்தன்மையெனினு மமையும். மண்ணப் புற்றென்பதூஉம் பாடம். நேடியபொன்னி னென்பது பாடமாயின், நேடுதல் - தேடுதல். மெய்ப்பாடு: அச்சம். பயன்: தேர்ப்பாகன் மீள்வதற்கொருப் படுதல். 346

குறிப்புரை :

24.15 ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல் ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல் என்பது பொருண்முற்றி மீளலுறாநின்ற தலைமகன், மாலைக்காலத்து நாகொடுவாரா நின்ற ஏறுவரவுகண்டு, இச்சிறந்த செக்கர்மாலை அவள் பொறுக்குமளவன் றென இரங்கிக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் -
24.15. நீடியபொன்னின் நெஞ்சம்நெகிழ்ந்து
வாடியவன் வரவுற்றது.

பண் :

பாடல் எண் : 16

கண்ணுழை யாதுவிண் மேகங்
கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன
ளாங்கொல்மன் பாவியற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விண் மேகம் கலந்து கண் நுழையாது விண்ணிடத்து முகில்கள் ஒன்றோடொன்று விரவுதலாற் கண் சென்று நுழையமாட்டாது; இன மலர் வாய் இனமலரையுடைய விட மெங்கும்; கண மயில் தொக்கு எண் நுழையாத்தழை கோலி நின்று ஆலும் மயிலினங்கள் திரண்டு எண் சென்றுபுகாத பீலியை விரித்து நின்றாடாநிற்கும்; மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல் மண்ணிடத்தெல்லாவுயிர்களுமறியுந் தில்லையின் மன்னனது இனியவருள் போலும்; பண் நுழையா மொழியாள் பாவி யற்கு என்னள் ஆம் கொல் பண்ணணையாத தேமொழியையுடை யாள் தீவினையேற்கு எத்தன்மையளாமோ! அறிகின்றிலேன்! எ-று.
எண்ணென்பது உணவாகிய வெண்ணென்பாருமுளர். பண்ணுழையாமொழி யென்பதற்குப் பண்ணப்பட்ட வுழையாகிய நரம்புபோலும் மொழியாளெனினுமமையும். மன்: அசைநிலை. மன்னிய பருவ முன்னிய செலவின் இன்னலெய்தி - நிலைபெற்ற பருவத்து முற்பட்ட செலவினான் வருத்தமெய்தி. மெய்ப்பாடும், பயனும் அவை.347

குறிப்புரை :

24.16 பருவங்கண்டிரங்கல் பருவங்கண்டிரங்கல் என்பது ஏறுவரவுகண் டிரக்கமுற்று வாராநின்ற தலைமகன், இம்முகில்கள் ஒன்றோடொன்று தம்மில் விரவுதலாற் பொழில்கடோறும் மயில்கள் திரண்டாடாநின்ற இக் கார்காலத்து, அவளென்னை நினைந்தாற்றாளாங் கொல்லோ வென அப்பருவங்கண் டிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
24.16. மன்னிய பருவ முன்னிய செலவின்
இன்ன லெய்தி மன்னனே கியது.

பண் :

பாடல் எண் : 17

அற்படு காட்டில்நின் றாடிசிற்
றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகி லென்னின்முன்
னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல்
தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய
ராநிற்கும் நீள்நகர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அல் படு காட்டில் நின்று ஆடி மாலைக் காலத்து இருளுண்டாகா நின்ற புறங்காட்டின்கண் நின்றாடுவான்; சிற்றம் பலத்தான் சிற்றம்பலத்தின்கண்ணான்; மிடற்றின் முற்படு நீள் முகில் அவனது மிடறுபோல விருண்டு முற்படாநின்ற நீண்ட முகிலே; முதுவோர் குழுமி இவ்விடத்தெல்லாம் முற்பட்டாயாயினும், முது பெண்டீர் திரண்டு; வில்படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விற்றாழுமொளிநுதலாளது இன்னாமையை நீக்கவேண்டி; விரை மலர் தூய் நறுநாற்றத்தையுடை மலர்களைத்தூவி; நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கு நெல் விரவிய தூய பலியைக் கொடுத்து இல்லுறைகடவுட்குப் பூசனைசெய்யாநிற்கும் பெரிய வில்லத்திற்கு; என்னின் முன்னேல் என்னின் முற்படாதொழி எ-று.
வான்பலிசெய் தயராநிற்கு மென்பதற்குப் பலிகொடுத்து விரிச்சி யயராநிற்குமெனினுமமையும். ஆடுசிற்றம்பலவனென்ப தூஉம் பாடம். துனைக்கார் விரைவையுடைய கார். துணைக்கா ரென்பது பாடமாயின், இனத்தையுடைய முகிலென்றுரைக்க. மெய்ப்பாடு: அது. பயன்: பாகன் றேரை விரையக் கடாவுதல். 348

குறிப்புரை :

24.17 முகிலொடு கூறல் முகிலொடு கூறல் என்பது பருவங்கண்டிரங்கி விரைவோடு வாராநின்ற தலைமகன், இவ்விடத்தெல்லாம் முற்பட்டா யாயினும் முதுபெண்டீர் திரண்டு அவளின்னாமையை நீக்கற்கு இல்லுறை கடவுட்குப் பூசனைசெய்யாநிற்கும் நீணகரத்திற்கு என்னின் முற்படாதொழிவாயாகவென, முந்துற்றுச் செல்லாநின்ற முகிலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.17. எனைப்பல துயரமோ டேகா நின்றவன்
துனைக்கா ரதற்குத் துணிந்துசொல் லியது.

பண் :

பாடல் எண் : 18

பாவியை வெல்லும் பரிசில்லை
யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
போழ்தத்தி னம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோ
னருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோடன்பர்
தேர்வந்து மேவினதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முகில் பாவை அம் சீர் ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின் முகில் பாவையதழகிய சீர்மையையுடைய வுயிரைச் செகுப்பான் கறாநின்ற பொழுதின்கண்; அம்பலத்துக் காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் அம்பலத்தின்கணுள னாகிய நீலப்பூவைவெல்லு மிடற்றையுடையவனதருள் போல; போய் மேவிய மாநிதி யோடு போய்த்தேடிய பெரு நிதியோடு; அன்பர் தேர் கதுமென வந்து மேவினது அன்பர் தேர் கதுமென வந்து பொருந்திற்று, அதனால்,பாவியை வெல்லும் பரிசு இல்லையே வரக்கடவதனை வெல்லுமாறில்லையே போலும் எ - று.
இனி ஒருவாற்றானும் இவளுயிர்வாழ்த லரிதென்றிருந்தனம் இதுபாவியாதலின் இற்றைப்பொழுதிகவாது தேர்வந்ததென்னுங் கருத்தாற் பாவியைவெல்லும் பரிசில்லையே யென்றாள். தமியரை அற்றம் பார்த்து வெல்லக்கருதிச் சிலர் வெகுள்கின்ற காலத்து அத்தமியார்க்குத் துணையாயதொருதேர்வந்து காத்ததென வேறுமொரு பொருள் விளங்கினவாறறிக. அருளின் மேவினதென வியையும். அருளான்வந்து மேவிற்றெனினுமமையும். மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: ஆற்றுவித்தல். 349

குறிப்புரை :

24.18 தேர்வரவு கூறல் தேர்வரவு கூறல் என்பது பொருள்வயிற் பிரிந்த தலைமகன் முகிலொடுவந்து புகாநிற்ப, இம்முகில் இவளதாவியை வெகுளா நின்ற காலத்து ஒரு தேர்வந்து காத்தமையான் இனிவரக் கடவதனை வெல்லுமாறில்லையெனத் தோழி தலைமகளுக்குத் தேர்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் 24.18. வேந்தன் பொருளொடு விரும்பி வருமென
ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.

பண் :

பாடல் எண் : 19

யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலத் தானமைத்த
ஊழின் வலியதொன் றென்னை
ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல்
ஆவிசெல் லாதமுன்னே
சூழுந் தொகுநிதி யோடன்பர்
தேர்வந்து தோன்றியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஒளி மேகலை உகளும் ஒளியையுடைய மேகலை தன்னிலையினின்றும் போகாநின்றது; வரி வளை வீழும் வரியை யுடைய வளைகள் கழன்று வீழாநின்றன; மெல்லியல் ஆவி செல்லாத முன்னே இந்நிலைமைக்கண் மெல்லிய லுயிர் செல்வதற்கு முன்னே; சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியது சூழ்ந்துவருந் திரண்டநிதியோடு அன்பரது தேர் வந்து தோன்றிற்று, அதனான், யாழின் மொழி மங்கை பங்கன் யாழோசைபோலு மினிய மொழியையுடய மங்கையது கூற்றை யுடையான்; சிற்றம்பலத்தான் சிற்றம்பலத்தின்கண்ணான்; அமைத்த ஊழின் வலியது ஒன்று என்னை அவனாலமைக்கப்பட்ட ஊழின் வலியதொன்றியாது! எ-று.
மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல். 350

குறிப்புரை :

24.19 இளையரெதிர் கோடல் இளையரெதிர்கோடல் என்பது தோழி தலைமகட்குத் தேர் வரவு கூறாநிற்ப, இந்நிலைமைக்கண், இவளாவிசெல்வதற்கு முன்னே, சூழுந்தொகுநிதியோடு அன்பர் தேர்வந்து தோன்றிற்று; இனி யூழின்வலியது வேறொன்றுமில்லையெனப் பொருண் முடித்து வாராநின்ற தலைமகனைச் சென்று இளையர் எதிர் கொள்ளாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.19. செறிக ழலவன் திருநகர் புகுதர
எறிவேல் இளைஞர் எதிர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 20

மயின்மன்னு சாயலிம் மானைப்
பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்
லாம்விடை யோன்புலியூர்க்
குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென்
அங்கத் திடைக்குளிப்பத்
துயின்மன்னு பூவணை மேலணை
யாமுன் துவளுற்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மயில் மன்னு சாயல் இம்மானைப் பிரிந்து மயில்போலு மென்மையையுடைய இம்மானைப் பிரிந்து; பொருள் வளர்ப்பான் வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றது எல்லாம் பொருளை யீட்டுவான் வெயினிலைபெற்ற வெய்யசுரத்தைச் சென்ற துன்ப மெல்லாம்; விடையோன் புலியூர் குயில் மன்னு சொல்லி மென் கொங்கை விடையையுடையவனது புலியூரிடத்துளவாகிய குயிலோசைபோலுஞ் சொல்லையுடையாளுடைய மெல்லிய கொங்கைகள்; என் அங்கத் திடைக் குளிப்ப என்னுறுப்புக்களிடை மூழ்கும் வகை; துயில் மன்னு பூ அணைமேல் அணையாமுன் துவளுற்றது துயினிலைபெறும் பூவணையிடத் தணைவதன்முன்னம் மாய்ந்தது எ-று.
இம்மானென்றது, பிரிதற்கரிய வித்தன்மைய ளென்றவாறு. எல்லாமென்பது முழுதுமென்னும் பொருள்பட நிற்பதோருரிச் சொல். பன்மையொருமை மயக்கமென்பாருமுளர். மெய்ப்பாடும், பயனும் அவை. பயன்: மகிழ்வித்தலுமாம்.

குறிப்புரை :

24.20 உண்மகிழ்ந்துரைத்தல் உண்மகிழ்ந்துரைத்தல் என்பது பொருண்முடித்து இளைஞ ரெதிர்கொள்ளவந்து புகுந்து தலைமகன், தலைலமகளுடன் பள்ளி யிடத்தனாயிருந்து, இம்மானைப்பிரிந்து பொருள்தேட யான் வெய்ய சுரஞ்சென்ற துன்பமெல்லாம் இவள் கொங்கைகள் என்னுறுப்புக் களிடை மூழ்க இப்பூவணைமே லணையாமுன்னம் துவள்வுற்றதெனத்தன்னுள்ளே மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.20. பெருநிதி யோடு திருமனை புகுந்தவன்
வளமனைக் கிழத்தியோ டுளமகிழ்ந் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 1

உடுத்தணி வாளர வன்தில்லை
யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை
யார்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு
வச்சிலை கண்மலரம்
படுத்தணி வாளிளை யோர்சுற்றும்
பற்றினர் மாதிரமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வரகச்சாகவும் உடுத்து அணியாகவுமணிந்த வாளரவை யுடையவனது தில்லைக்கணுளனாகிய வூரன் இவ்வீதிக்கண்வர; எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப தெரிந்தணியப்பட்ட கைக்கணுளவாகிய இனவளைகளொலிப்ப; இள மயில் ஏர் கடுத்து இளமயிலதெழிலை யொத்து; அணி காமர் கரும்புருவச் சிலை கண் மலர் அம்பு அடுத்து மிக்கவழகையுடைய கரியபுருவமாகிய வில்லோடு கண் மலராகிய வம்பைச்சேர்த்தி; அணிவாள் இளையோர் ஒருங்கே சுற்றும் மாதிரம் பற்றினர் அணிகளுண்டாகிய வொளியையுடைய மகளிர் ஒருங்கே சுற்றுந்திசைகளைப்பற்றினர்; இஃதிவன் காதலிமாட்டென்னாம்! எ-று.
அணி காமர் என்பன ஒருபொருட்கிளவியாய், மிகுதிதோன்ற நின்றன. ஒன்றாகவெழுந்து அணியினுங் கையினுமுளவாகிய சங்கொலிப்ப இளமைக்கணுண்டாகிய வுள்ளவெழுச்சிமிக்கு வில்லோடம்பையடுத்துப் பற்றி அரைக்கணியப் பட்ட வுடைவாளையுடைய இளையோர் திசைமுழுதுஞ் சூழ்ந்து பற்றினரெனப் பிறிதுமோர் பொருடோன்றி நின்றவாறு கண்டுகொள்க. கருப்புருவச் சிலை என்பது பாடமாயின் புருவமாகிய காமனது உட்கை உடைய கருப்புச்சிலையோடு கண்ணாகிய கள்ளையுடைய மலரம்பை யடுத்தென்றுரைக்க. சுற்றும்பற்றிய மாதிரமென்பது பாடமாயின், சுற்றும்பற்றி மேவாநிற்ப, அவ்விடத்து நகைக்குறிப் பாலெடுக்கப்பட்டு இவர் கைகள் வளையொலிப்பத் தலைமேலேறின வெனக் கூட்டி யுரைக்க. இதற்குச் சுற்றும் பற்றிப் போர்செய்யாநிற்பப் படைக்கல மெடுத்துச் சங்கொலிப்ப அணியுங்கையு மொருங் கெழுந்தனவெனப் பிறிது மொரு பொருளாகக் கொள்க. இதற்குப் பிறவுரைப்பாருமுளர். உரத்தகு வேல் உரத்தாற்றக்கவேல். மெய்ப்பாடு: மருட்கை. வியப்பாகலின், பயன்: பிரிவுணர்த்துதல். 352

குறிப்புரை :

25.1 கண்டவர்கூறல் கண்டவர் கூறல் என்பது தலைமகன் பரத்தையர் சேரிக்கட் செல்லாநிற்ப, அப்பரத்தையர் அவனை ஒருங்கெதிர்கொண்டு சுற்றும்பற்றிப் போர்செய்யா நின்றமையின், இஃதிவன் காதலிமாட் டென்னாமென அவ்விடத்துக் கண்டவர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.1. உரத்தகு வேலோன் பரத்தையிற் பிரியத்
திண்டேர் வீதியிற் கண்டோ ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

சுரும்புறு கொன்றையன் தொல்புலி
யூர்ச்சுருங் கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று
பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென் னாவியுந்
தேய்வுற் றழிகின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பேரொலி நீர்க் கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று பெரிய வொலிக்கு நீரையுடைய கரும்புதங்கு மூரை யுடையவன் கலந்துவைத்து நீங்கினானென்று கருதுதலான்; கண்மணியும் அரும் பொறை ஆகும் என்கண்மணியும் பயனின்மை யாற் றாங்குதற்கரிய பாரமாகாநின்றன; என்ஆவியும் தேய்வுற்று அழிகின்றது எனதுயிருந் தேய்ந்தழியா நின்றது; பெரும் பொறை யாட்டியை என் இன்று பேசுவ யானிவ்வாறாகவுங் கலங்காது நின்ற பெரும்பொறையையுடையவளை யான் இன்று பேசுவனவென்! எ-று.
சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர்ச் சுருங்கும் மருங்குல் பெரும் பொறையாட்டியை சுரும்புகள் வாழுங் கொன்றைப் பூவினை யுடையானது பழையதாகிய புலியூரிற் சுருங்கின மருங்குலையுடைய பெரும்பொறையாட்டியையெனக் கூட்டுக.
என் கண்மணியுந் தேய்வுற்றழியாநின்றது ஆவியுமரும் பொறையாகாநின்ற தென்று கூட்டுவாருமுளர். உள்ளவிழ் பொறை நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாத பொறை. மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்த வுவகை. பயன்: தலை மகளைவியத்தல். 353

குறிப்புரை :

25.2 பொறையுவந்துரைத்தல் பொறையுவந்துரைத்தல் என்பது தலைமகனைப் பரத்தை யரெதிர்கொண்டமை கேட்ட தலைமகள் நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாமற் பொறுத்தமை கண்ட தோழி, யானிவ்வாறாகவும் கலங்காது நின்ற பெரும்பொறையாட்டியை யான் இன்று பேசுவன என்னென்று அவளையுவந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.2. கள்ளவிழ் கோதையைக் காதற் றோழி
உள்ளவிழ் பொறைகண் டுவந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

அப்புற்ற சென்னியன் தில்லை
யுறாரி னவர்உறுநோய்
ஒப்புற் றெழில்நல மூரன்
கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொ
லாருயிர் தேய்பவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் நீரடைந்த சென்னியையுடையவனது தில்லையை மனமொழி மெய்க ளாலணுகாதாரைப்போல; எழில் நலம் ஊரன் கவர கண்ணோட்ட மின்றி எழிலையுடைய நலத்தை ஊரன் கவர்ந்து கொள்ள; அவர் உறுநோய் ஒப்புற்று உள்ளும் புறம்பும் வெப்புற்று அத் தில்லையை யுறாதாருறுநோயையொத்து அகத்தும் புறத்தும் வெப் பத்தையுற்று; வெய்துயிர்ப்புற்று வெய்தாகவுயிர்த் தலையுற்று; தம் மெல் அணையே துணையா வேறு துணையின்மையிற்றமது மெல் லணையே தமக்குத் துணையாக; செப்பு உற்ற கொங்கையர் ஆருயிர் தேய்பவர் யாவர் கொல் செப்புப்போலுங் கொங்கையை யுடைய மகளிர் ஆருயிர் தேய்வார் பிறர் யாரோ யானல்லது? எ-று.
இத்தன்மையராய் என் போல இனி யாருயிர்தேய்வார் யாரோவெனப் பரத்தையர்க்கிரங்குவாள்போன்று, தலைமகனது கொடுமை கூறினாளாகவுரைக்க. தில்லை யுறாதவருறு நோயென்பது பாட மாயின், எழினலமூரன்கவரத் தில்லையையுறாத அத்தீவினை யாருறு நோயையொத்தென்றுரைக்க. ஊரனோடிருந்து வாடியது - ஊரன் குறைகளை நினைந்து அதனோடிருந்து வாடியது. மெய்ப்பாடு: அழுகை, பயன்: ஆற்றாமை நீங்குதல். 354

குறிப்புரை :

25.3 பொதுப்படக்கூறி வாடியழுங்கல் பொதுப்படக் கூறி வாடியழுங்கல் என்பது பொறையு வந்துரைத்த தோழிக்கு, முன்னிலைப்புறமொழியாக, தமதுநலங் கவரக்கொடுத்து வேறுதுணை யின்மையிற் றம தணையையே தமக்குத் துணையாகக்கொண்டு கிடந்து என்னைப்போல வுயிர்தேய்வார் இனியாவரோவெனப் பொதுப்படப் பரத்தை யர்க் கிரங்குவாள் போன்று, தலைமகனது கொடுமைநினைந்து வாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.3. பொற்றிக ழரவன் மற்றிகழ் தில்லைப்
பிரிந்த வூரனோ டிருந்துவா டியது.


பண் :

பாடல் எண் : 4

தேவா சுரரிறைஞ் சுங்கழ
லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன்
தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
தேனரும் பாவியனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நலம் பாய் பாவாய் நலம் பரந்த பாவாய்; அமளியின் மேல் பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர அமளியின் கண்மாலையையுடைய மார்பை ஊரன்வந்துதர; புலம்பாய் அவனோடு மேவாமையிற் பின்னுந்தனிமையாய்; நனவு என்று தழுவிற்றிலேன் நனவென்று மயங்கித் தவறுநினைந்து புல்லிற்றி லேன்; அரும் பாவியேன் விழித்தேன் அத்துணையேயன்றிப் பொறுத்தற்கரிய தீவினையையுடையேன் விழிப்பதுஞ் செய்தேன், அதனால், தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல் தேவருமசுரரு மிறைஞ்சுங் கழலையுடையவனது தில்லையைச் சேராதாரைப்போல; ஆவா கனவும் இழந்தேன் ஐயோ! கனவான் வரு மின்பத்தையு மிழந்தேன் எ-று.
தில்லைசேரலர்போ லென்புழி ஒத்தபண்பு துன்பமுறுதலும் இன்பமிழத்தலுமாம். 355

குறிப்புரை :

25.4 கனவிழந்துரைத்தல் கனவிழந்துரைத்தல் என்பது தலைமகனது கொடுமை நினைந்து கிடந்து வாடாநின்ற தலைமகள், கனவிடைவந்து அவன் மார்புதரத்தானதனை நனவென்று மயங்கிப் புலந்து அவனோடு புணராதிழந்தமையைத் தோழிக்குச் சொல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.4. சினவிற் றடக்கைத் தீம்புன லூரனைக்
கனவிற் கண்ட காரிகை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

செய்ம்முக நீல மலர்தில்லைச்
சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி
யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங்
கீழும் நெடுஞ்சுடரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நெய்ம்முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடுஞ்சுடரே நெய்ம்முகத்தைப் பருகி இருண்முகத்தைக் கிழிக்கும் நெடியசுடரே; கலந்தவர்க்குப் பொய்ம் முகம் காட்டிக் கரத்தல் பொருத்தம் அன்று என்றிலை எம்மைக்கலந்தவர்க்குப் பொய்யை யுடைய முகத்தைக்காட்டித் தெளிந்தாரை வஞ்சித்தல் தகுதி யன்றென்று கூறிற்றிலையே? வேறு கூறுவார் யாவர்? எ-று.
செய்ம்முகம் நீலம் மலர் தில்லைச் சிற்றம்பலத்து அரற்கு செய்ம் முகத்துளவாகிய நீலப்பூ மலராநின்ற தில்லையிற் சிற்றம்பலத்தின் கணுளனாகிய அரனுக்கு; கைம்முகம் கூம்பக் கழல் பணியாரின் கரத் தல் கைம்முகங் குவியக் கழலைப்பணியாதாரைப் போலக் கண்ணோ ட்ட மும் மெய்ம்மை யுமின்றிக் கரத்தலெனக் கூட்டுக.
செய்ம்முகம் செய்ம்முன். கைம்முகம் கைத்தலம். கரத்தல் மறைத்தலெனினுமமையும். நெய்ம்முகம் சுடரையணைந்த விடம். நெய்ம்முகமாந்தி யிருண்முகங்கீழு நெடுஞ்சுடரே என்றது உணவாகிய நெய்யை மாந்தி மேனியொளியை யுடையையாய்ப் பகைசெகுக்கும் பெருமையை யுடையையாதலின் அக்களிப்பினாற் கண்டது கூறிற்றிலை என்றவாறு. இவை யிரண்டற்கும் மெய்ப்பாடும், பயனும் அவை. 356

குறிப்புரை :

25.5 விளக்கொடுவெறுத்தல் விளக்கொடு வெறுத்தல் என்பது கனவிழந்தமை கூறி வருந்தாநின்ற தலைமகள், நீயாயினுங் கலந்தவர்க்குப் பொய்ம் முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன்றென்றிலையேயென விளக்கொடு வெறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.5. பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி
அன்பனோ டழுங்கிச் செஞ்சுடர்க் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

பூங்குவ ளைப்பொலி மாலையும்
ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
கொள்கநள் ளார்அரணந்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
தோமன் உறாவரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பூங் குவளைப் பொலி மாலையும் பொலிவையுடைய குவளைப் பூவானியன்ற பெரியமாலையையும்; ஊரன் பொன் தோள் இணையும் ஊரனுடைய பொன்போலுந் தோளிணையையும்; ஆங்கு வளைத்து வைத்து ஆரேனும் கொள்க தம்மில்லத்து வளைத்துவைத்து வேண்டியார் கொள்வாராக; நள்ளார் அரணம் தீங்கு வளைத்த வில்லோன் தில்லை பகைவரதரணந் தீங்கெய்த வளைக்கப்பட்ட வில்லையுடையவனது தில்லையின்; சிற்றம்பலத்து அயல்வாய் ஓங்கு வளைக் கரத்தார்க்கு சிற்றம்பலத்துக் கயலாகியவிடத்துவாழும் உயர்ந்த வளையையுடைய கையை யுடையார்க்கு; மன் உறாவரை அடுத்தோம் மன்னனை உறாவரை யாகக் கொடுத்தோம் எ-று.
உறாவரை முற்றூட்டு. தீங்குவளைத்த வில்லோ னென்பதற்குத் தீங்கெய்தவென ஒருசொல் வருவியாது அரணத்தைத் தீங்கு வளைத்தற்குக் காரணமாகிய வில்லென்றுரைப்பினுமமையும். ஓங்கு வளைக்கரத்தாரென்புழி ஓங்குதலை வளைக்கரத்தார் மேலேற்றுக. விலையானுயர்ந்தவளை யெனினுமமையும். அடுத்தோ மென்றத னால், தனதுரிமை கூறினாளாம். மன்: அசைநிலையாக்கி, மாலை யையுந் தோளையு மடுத்தோ மெனினுமமையும். மெய்ப்பாடும் பயனும் அவையே. 357

குறிப்புரை :

25.6 வாரம்பகர்ந்துவாயின்மறுத்துரைத்தல் வாரம் பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல் என்பது விளக் கொடு வெறுத்து வருந்தாநின்ற தலைமகள், தலைமகன் பரத்தை யிற் பிரிந்துவந்து வாயிற்கணிற்ப, வண்டோரனையர் ஆடவர், பூவோரனையர் மகளிராதலான், நாமும் அவன்றலையளிபெற்ற பொழுது ஏற்றுக்கொள்வதன்றோ நமக்குக் காரியம்; நாம் அவனோடு புலக்கற்பாலேமல்லேமென்று வாயினேர்வித்தார் க்கு, ஊரனுடைய மாலையுந் தோளும் அவ்விடத்து வளைத்து வைத்து வேண்டினார் கொள்ள வமையும்; யான் மன்னனைப் பரத்தையர்க்கு உறாவரை யாகக் கொடுத்தேனென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.6. வார்புன லூரன் ஏர்திகழ் தோள்வயிற்
கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 7

தவஞ்செய் திலாதவெந் தீவினை
யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந்
தொடல்விடு நற்கலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அத்தன் உலகத்துள்ளாரெல்லார்க்குந் தந்தை; முத்தன் இயல்பாகவே பாசங்களி னீங்கியவன்; சிவன் எவ்வுயிர்க்கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன்; செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர அவனாற்செய்யப்பட்ட சீரிய வருணிறைந்த தில்லையிலூரனே; தவம் செய்திலாத வெம் தீவினையேம் முற்காலத்துத் தவத்தைச்செய்யாத வெய்ய தீவினையையுடையயாம்; புன்மைத் தன்மைக்கு எள்ளாது நின்னாலாதரிக்கப்படாத எமது புன்மைத் தன்மைகாரணமாக எம்மையே யிகழாது; எவம் செய்து நின்று இன்று இனி உனை நோவது என் நினக்குத் துன்பத்தைச் செய்யாநின்று இப்பொழுது இனி நின்னை நோதலென்னாம்! அது கிடக்க; நின் சேயிழைாயர் நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் நின்னுடைய சேயிழையார் நினக்குப் புதிதாகச் செய்த புல்லுதல்களை யாமாட்டோம், அதனால், நற்கலை தொடல் எமது நல்ல மேகலையைத் தொடாதொழி; விடு விடு வாயாக எ-று.
எவ்வம் எவமென நின்றது. காதலில்லை யாயினுங் கண்ணோட்ட முடைமையான் இகழ்ந்து வாளாவிருப்பமாட்டா மையின், எம்புலவியான் நினக்குத் துன்பமாந்துணையே யுள்ள தென்னுங் கருத்தான், எவஞ்செய்து நின்றென்றாள். இனி யென்பது நீயிவ்வாறாயினபின் னென்னும் பொருட்டாய் நின்றது. சிவன்செய்த சீரருளார் தில்லையூர வென்றதனான், நின்னாற் காயப்பட்டாரானுங் காதலிக்கப்படாநின்றா யெனவும், தவஞ்செய்திலாதவெந்தீவினையே மென்றதனான், எம்மாற் காதலிக்கப்பட்டாரானுங் காயப்படா நின்றேமெனவுங் கூறியவாறாம். புல்லென்பது புல்லமென விரிந்த நின்றது. புல்லமென்பதனைப் புன்மையென்று நின்சேயிழையார் புதிதாகச் செய்த குறிகளைப் பொறுக்கமாட்டே மென்றுரைப்பினு மமையும். எவன்செய்து நின்றெனப் பாடமோதி, தவஞ் செய்திலா வெந் தீவினையேம் இன்றுன்னை நோவது என்செய்து நின்றென்றும் என்னத்தனென்று முரைப்பாருமுளர். எள்கா தென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: புணர்தல். 358

குறிப்புரை :

25.7 பள்ளியிடத்தூடல் பள்ளியிடத்தூடல் என்பது வாயின்மறுத்த தலைமகள், ஆற்றாமையே வாயிலாகப் புக்குப் பள்ளியிடத்தானாகிய தலைமகனோடு, நின்னை யிடைவிடாது நுகர்தற்கு முற்காலத்துத் தவத்தைச் செய்யாத தீவினையேமை நோவாது, இன்றிவ் வாறாகிய நின்னை நோவதென்னோ? அதுகிடக்க, நின்காதலி மார் புறமே கற்று நினக்குப் புதிதாகச் செய்த அப்புல்லுதலை யாஞ்செய்ய மாட்டேம்; அதனாலெம்மைத் தொடாதே; எங்கலையை விடுவாயாக வெனக் கலவி கருதிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.7. பீடிவர் கற்பிற் றோடிவர் கோதை
ஆடவன் றன்னோ டூடி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

தணியுறப் பொங்குமிக் கொங்கைகள்
தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென் றின்றெய்து
மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை
யார்கள் பயின்மனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அரவும் பிறையும் அணியுறக் கொண்டவன் தில்லை பிறைக்குப் பகையாகிய அரவையும் பிறையையும் அழகுறத் தனக்கணியாகக் கொண்டவனது தில்லையின்; தொல் ஆயம் நல்லார்கள் முன்னே பழைய இவளாயத்தி னுள்ளாராகிய நல்லார் கண் முன்னே; பணி உறத் தோன்றும் நுடங்கு இடையார்கள் பயில் மனைக்கு அரவுபோலத் தோன்று நுடங்குமிடையை யுடையார்கள் நெருங்கும் பரத்தையர் மனைக்கண்; தணி உறப் பொங்கும் இக்கொங்கைகள் தாங்கி தணிதலுறும் வண்ணம் வளராநின்ற இக் கொங்கைகளைத் தாங்கி; தளர் மருங்குல் பிணியுறப் பேதை இன்று சென்று எய்தும் ஆல் தளராநின்ற மருங்குலையுடைய இவள் வருந்த இப்பேதை இன்றுசென்றெய்தும்; ஆயிற் பெரிதும் இஃதிளி வரவுடைத்து எ-று.
இதற்குப் பிறிதுரைப்பாருமுளர். பாற்செலு மொழியார் ... புகன்றது கேட்டார்க்குப் பாலின் கணுணர்வு செல்லு மொழியை யுடைய மகளிர் மேற்சென்று தூதுவிட விரும்பல் பொல்லாதென இல்லோர் கூறியது. பால்போலு மொழியெனினு மமையும். ஈண்டுச் செல்லுமென்பது உவமைச்சொல். பேதையென்பது செவ்வணி யணிந்து செல்கின்ற மாதரை. மெய்ப்பாடு: நகை, எள்ளற் பொருட்டாகலின். பயன்: தலைமகனைச் செலவழுங்குவித்தல். சிறைப்புறத்தானாக, இல்லோர் சொல்லியது. 359

குறிப்புரை :

25.8 செவ்வணிவிடுக்கவில்லோர் கூறல் செவ்வணிவிடுக்கவில்லோர் கூறல் என்பது இக் கொங்கைகள் தாங்கித் தளராநின்ற மருங்குலையுடைய இவள் வருந்த, இவ்வாயத்தார் முன்னே,அப்பரத்தையர் மனைக்கண் இப்பேதை இக்குறியறிவிக்கச் செல்லாநின்ற விது நமக்கு மிகவு மிளிவரவுடைத் தெனச் செவ்வணிவிடுக்க விரையாநின்ற வில்லோர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.8. பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல்
பொல்லா தென்ன இல்லோர் புகன்றது.

பண் :

பாடல் எண் : 9

இரவணை யும்மதி யேர்நுத
லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்கிவ
ளால்இக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்தில்லை
யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின
வாறுநந் தன்மைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இரவு அணையும் மதி ஏர் நுதலார்நுதி இரவைச் சேரும் பிறைபோலு நுதலை யுடையாரது முன்; கோலம் செய்து செவ்வணியாகிய கோலத்தைச் செய்து; குரவு அணையும் குழல் இங்கிவளால் இக் குறி அறிவித்து குரவம்பூச் சேருங் குழலையுடைய இவளால் இக்குறியையறிவித்து; அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை பாம்புசேருஞ் சடையையுடையவனது தில்லையி லூரனை; ஆங்கு ஒருத்தி தர பின் அவ்விடத்து ஒருத்தி நமக்குத் தர; அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகள் நாமவனை யெய்தும்படி யாயினவாறென் நம்முடைய பெண்டன்மைகள்! எ-று.
நுதலார்நுதியறிவித்தென வியையும். குறி - பூப்புநிகழ்தற் குறி. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 360

குறிப்புரை :

25.9 அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல் அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல் என்பது இல்லோர் செவ்வணிவிடுக்க நினையாநிற்ப, அயலார்முன்னே இவளால் இக்குறியறிந்த விடத்து ஒருத்தி நமக்குத்தர நாமவனை யெய்தும் படியாயிற்று நம்முடைய பெண்டன்மையென அயலறிவுரைத்துத் தலைமகள் அழுக்கமுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.9. உலகிய லறியச் செலவிட லுற்ற
விழுத்தகை மாதர்க் கழுக்கஞ் சென்றது.

பண் :

பாடல் எண் : 10

சிவந்தபொன் மேனி மணிதிருச்
சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி யூரற்
குலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப்
பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின
வந்து திருமனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிவந்த பொன் மேனி மணி செம்பொன் போலு மேனியையுடையமணி; திருச்சிற்றம்பலம் உடையான் திருச்சிற்றம் பலத்தை யுடையான்; சிவந்த அம் தாள் அணி ஊரற்கு அவனது சிவந்தவழகிய தாள்களை முடிக்கணியாக்கும் ஊரற்கு; உலகியலாறு உரைப்பான் உலகியனெறியை யறிவிப்பான் வேண்டி; திரு மனைக்கு நமது திருவையுடைய மனைக்கண்; சிவந்த பைம்போதும் சிவந்த செவ்விப் பூவும்; அம் செம் மலர்ப் பட்டும் அழகிய செய்ய பூத்தொழிற் பட்டும்; கட்டு ஆர் முலைமேல் அம் சிவந்த சாந்தும் கட்டுதலார்ந்த முலைமேலுண்டாகிய வழகிய செய்ய சாந்தமும்; வந்து தோன்றின வந்துதோன்றின; இனித் தருமக்குறை வாராமல் ஊரற்கும் ஏகல்வேண்டும் எ-று.
உலகியலாறு பூப்பு. உரைத்தாற்போலச் செவ்வணியா லறிவித்தலின் உரைப்பா னென்றார். தாளிணை யூரற்கென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: பூப்புணர்த்துதல். 361

குறிப்புரை :

25.10 செவ்வணிகண்டவாயிலவர் கூறல் செவ்வணிகண்டவாயிலவர்கூறல் என்பது தலைமக ளிடத்து நின்றுஞ் செவ்வணிசெல்லக்கண்டு, நம்மூரற்கு உலகியலாறுரைப்பான் வேண்டி, செம்மலருஞ் செம்பட்டும் செஞ்சாந்தும் நமது திருவை யுடைய மனையின்கண் வந்து தோன்றினவெனப் பரத்தை வாயிலவர் தம்முண் மதித்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

25.10. மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.

பண் :

பாடல் எண் : 11

குராப்பயில் கூழை யிவளின்மிக்
கம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங்
காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை
யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன்
புகுமிக் கடிமனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பண்டு இராப்பகல் நின்று உணங்கு ஈர்ங்கடை முற்காலத்து இரவும்பகலுந் தான் வாயில்பெறாது நின்று வாடும் இக்குளிர்ச்சியையுடைய கடையை; இத்துணைப் போழ்தின் சென்று நீட்டியாது இத்துணைக்காலத்திற் கழிந்து; கராப்பயில் பூம் புனல் ஊரன் இக்கடி மனைக்குப் புகும் கராம்பயில்கின்ற பூம்புனலை யுடைய வூரையுடையான் இக்காவலையுடைய மனைக்கட்புகா நின்றான், அதனான், குராப்பயில் கூழை இவளின் மிக்கு குராப்பூப் பயின்ற குழலையுடைய இவளினும் மேம்பட்டு; அம்பலத்தான் குழையாம் அராப் பயில் நுண் இடையார் அடங்கார் எவர் அம்பலத்தான் குழையாகிய அரவுபோலும் நுண்ணிய விடையினை யுடையார் புலந்தடங்காதார் இனி யாவர்! மனைக்கடன் பூண்டலான் எல்லாருமடங்குவர் எ-று.
கராம்பயிலென்பது கராப்பயிலென வலிந்து நின்றது. மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல். 362

குறிப்புரை :

25.11மனைபுகல்கண்டவாயிலவர்கூறல் மனைபுகல்கண்டவாயிலவர்கூறல் என்பது செவ்வணி கண்ட தலைமகன் பரத்தையிடத்தினின்றும் வந்து தடையின்றி மனைவயிற்புகுதாநிற்ப, பண்டிரவும்பகலும் வாயில்பெறாது நின்றுணங்கும் இக்காவலையுடைய கடையை இத்துணைக் காலத்திற் கழிந்து வாயிலின்றிப் புகுதாநின்றான், மனைக்கடன் பூண்டலான் இனிப் புலந்து அடங்காதார் ஒருவருமில்லை யெனத் தலைமகள் வாயிலவர் தம்முட்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.11. கடனறிந் தூரன் கடிமனை புகுதர
வாய்ந்த வாயிலவ ராய்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 12

வந்தான் வயலணி யூர
னெனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செல்வி சென்றசிற்
றம்பல வன்னருளான்
முந்தா யினவியன் நோக்கெதிர்
நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள்
சூழ்ந்து பயின்றனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வந்தான் வயல் அணி ஊரன் என வந்தான் வயலணிந்த வூரனென்று சொல்லுமளவில்; சின வாள் மலர்க்கண் செந்தாமரைச் செவ்வி சென்ற சினவாள் போலுமலர்க்கண்கள் சிவந்த தாமரைப்பூவினது செவ்வியையடைந்தன; சிற்றம்பலவன் அருளான் முந்தாயின வியன் நோக்கு எதிர்நோக்க சிற்றம்பலவன தருளான் முன்னுண்டாகிய பெரிய அப்புலவி நோக்கெதிர் காதல னோக்க; முக மடுவின் பைந்தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றன கதுமெனப் பின் முகமாகிய மடுவிற் பைந்தாளையுடைய குவளைப்பூக்கள் மலர்ந்திருண்டு நெருங்கின; என்னவில்லறக் கிழத்தியோ! எ-று.
இயனோக்கென்றுபிரித்து முன்னுண்டாகிய துனித்த லியல்பை யுடைய நோக்கென் றுரைப்பினு மமையும். கண்களது பிறழ்ச்சிப் பன்மையாற் குவளைப்பூக்கள் பல கூடினாற் போன்றிருந்தன வென்பது போதர, பயின்றனவென்றார். காதலனோடு பழகின வெனினுமமையும். தலைமகற்குப் புலவிக் காலத்து வருந்துன்ப மிகுதியும் புலவிநீக்கத்துவரு மின்பமிகுதியும் நோக்கி, சிற்றம்பலவ னருளாலெனக் காரணத்தை மிகுத்துக் கூறினார். மெய்ப்பாடும், பயனும் அவை. 363

குறிப்புரை :

25.12 முகமலர்ச்சிகூறல் முகமலர்ச்சிகூறல் என்பது பரத்தையிற்பிரிந்த தலைமகன் செவ்வணிகண்டு வந்தானென்று சொல்லுமளவில், தலைமகள் கண்கள் சிவந்தன; அப்புலவி நோக்கத்தெதிர் காதலனோக்க, அச்சிவப்பாறி முகமலர்ந்தமையை அவ்விடத்துக்கண்டவர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.12. பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
தேம்புனை கோதை திறம்பிற ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 13

வில்லிகைப் போதின் விரும்பா
அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை
யோன்தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்
டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய
லூரற் கெதிர்கொண்டதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வில்லி கைப் போதின் விரும்பா அரும்பாவிய வர்கள் அன்பிற் செல்லி காமன் கையி லம்பாகிய பூக்களில் ஆதரமில்லாத அரிய குறிப்பை யுடையவர்கள் தனக்குச் செய்த அன்பின்கண் வேட்டுச்செல்வோன்; கைப் போதின் எரி உடையோன் கையாகிய பூவின்கணுளதாகிய எரியையுடையான்; தில்லைம்பலம் சூழ் மல்லிகைப் போதின் வெண் சங்கம் வண்டு ஊத அவனது தில்லையம்பலத்தைச் சூழ்ந்த மல்லிகையின் போதாகிய வெண்சங்கை வண்டுகளூத; விண் தோய் பிறையோடுஎல்லி விண்ணையடைந்த பிறையோடு இராப்பொழுது; கைப் போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டது கையாகிய பூவின்கணியலும் வேலையுடைய வயலூரற்கு மாறு கொண்டது எ-று.
என்றது வண்டூதுமல்லிகைப்போதானும் அந்திப்பிறை யானுங் கங்குற் பொழுதானும் ஆற்றானாய்ப் புகுதராநின்றான்; இனி நீ புலக்கற்பாலையல்லையென வாயினேர்வித்தவாறு. வில்லிகைப் போதாற் புலன்களை விரும்பாத அரும்பாவியரெனினுமமையும். கைப்போதின்கண்ணே யெரியையுடையானெனினுமமையும். இகழ்தல் தலைமகனாற்றா மை நீங்காதிருத்தல். எல்லி ஊரற்கு வாயிலாக வேற்றுக்கொண்டது புலவாதுண்ணெகிழ்ந்தாளென்றி வளை நாமிகழ்கின்றதென் இது வன்றோ பொழுதென உழையர் தம்முட்புறங் கூறினாராகவுரைப் பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலை மகளைச் சிவப்பாற்றுவித்தல். 364

குறிப்புரை :

25.13 காலநிகழ்வுரைத்தல் காலநிகழ்வுரைத்தல் என்பது பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனது ஆற்றாமையைத் தலைமகள் நீக்காதிருப்ப, வண்டூது மல்லிகைப்போதானும் அந்திப் பிறையானுங் கங்குற் பொழுதானும் ஆற்றானாய்ப் புகுதராநின்றான்; இனி நீ புலக்கற் பாலையல்லையென உழையர் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.13. இகழ்வ தெவன்கொல் நிகழ்வதிவ் வாறெனச்
செழுமலர் கோதை உழையர் உரைத்தது.

பண் :

பாடல் எண் : 14

புலவித் திரைபொரச் சீறடிப்
பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
கலவிக் கடலுட் கலிங்கஞ்சென்
றெய்திக் கதிர்கொண்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்தம்
பலத்துநின் றோனருள்போன்
றுலவிய லாத்தனஞ் சென்றெய்த
லாயின வூரனுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புலவித் திரை பொர புலவியாகிய திரைவந்து மாறுபட; சீறடிப் பூங்கலம் சென்னி உய்ப்ப காதலி சிற்றடியாகிய பொலிவினையுடைய வணியைத் தன்சென்னியி லுய்த்தலான் அப்புலவிநீங்க; கலவிக் கடலுள் கலிங்கம் சென்று எய்தி கலவியாகிய கடலுள் துகிலைச் சென்று பற்றி; கதிர்கொள் முத்தம் நிலவி நிறை மது ஆர்ந்து எயிறாகிய வொளிபொருந்தின முத்தின்கட் பொருந்தி நிறைந்த நீராகிய மதுவைப்பருகி; அம்பலத்து நின்றோன் அருள் போன்று உலவு இயலாத் தனம் அம்பலத்து நின்றவனதருளை யொத்து ஒருஞான்றுந் தளர்தலில்லாத முலைகள்; ஊரனுக்குச் சென்று எய்தல் ஆயின ஊரற்குச் சென்று பெறலாயின எ-று.
புலவுநாறித் திரைகள் வந்துமோதச் சிறியவடியையுடைய பொலிவையுடைய மரக்கலத்தைக் கடலின் சென்னியிலே செலுத்தக் கடலுட்கலந்து கலிங்கமாகிய தேயத்தைச்சென்றெய்தி ஒளி பொருந்திய முத்துக்கள் தன்கண்வந்து நிலைபெற அவ்விடத்துள்ள மதுக்களை நுகர்ந்து அம்பலத்து நின்றவனதருளையொத்து ஒரு ஞான்றுங் கேடில்லாதபொருள் சென்றெய்தலாயினவென வேறு மொருபொருள் விளங்கியவாறறிக. சீரியலுலகிற் றிகழ்தரக்கூடி சீர்மையியன்ற வுலகினுள்ள வின்பமெல்லாவற்றினும் விளங்கக்கூடி. சீரியலுலகு தேவருலகுமாம். இதுவுந் துறைகூறிய கருத்து. மகிழ்வுற்ற தென இன்னார் கூற்றென்னாது துறைகூறினார். மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல். 365

குறிப்புரை :

25.14 எய்தலெடுத்துரைத்தல் எய்தலெடுத்துரைத்தல் என்பது பரத்தையிற்பிரிந்துவந்த தலைமகன் பூப்பு நிகழ்ந்த கிழத்தியைப் புலவிதீர்த்து இன்புறப் பண்ணி எய்தலுற்று மகிழ்ந்தமையை அவ்விடத்துள்ளார் எடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.14. சீரிய லுலகிற் றிகழ்தரக் கூடி
வார்புன லூரன் மகிழ் வுற்றது.

பண் :

பாடல் எண் : 15

செவ்வாய் துடிப்பக் கருங்கண்
பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன் அருளின்
முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக்
கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகு
மெனநினைந் தின்னகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இன் நகை இன்னகையையுடையாள்; செவ்வாய் துடிப்ப செய்ய வாய் துடிப்ப; கருங்கண் பிறழ கரிய கண்கள் பிறழ; சிற்றம்பலத்து எம் மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் சிற்றம்பலத்தின்கணுளனாகிய எம் முடைய நெருங்கிய நீண்ட சடையையுடையவன தருள்பெற்றவர் போல முயங்கி இன்பக்களியின் மயங்குகின்றவள்; இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இவ்வாறு நமக்கருளுமருள் ஒருஞான்று பிறர்க்குமாமென ஒன்றனையுட்கொண்டு; வெவ்வாய் உயிர்ப்போடு விம்மிக் கலுழ்ந்து வெய்ய விடத்தையுடைய நெட்டுயிர்ப்போடு பொருமியழுது; புலந்து நைந்தாள் புலந்து வருந்தினாள் எ-று.
அருளின் முயங்குகின்றாளென்புழி அருள் பெற்றவர் உவமையாதல் ஆற்றலான்வந்தது. அருளான் முயங்கி யென்பாரு முளர். வெவ்வாயுயிர்ப்பென்பது ``கலுழ்கட் சின்னீர்`` என்பதுபோல நின்றது. தவறுபற்றிப் புலப்பளென்று நீ கூறுதி; இதுவன்றோ இவள் புலக்கின்றவாறெனத் தோழிக்குத் தலைமகன் கூறியது.மன்னிய வுலகிற்றுன்னிய வன்பொடு - நிலைபெற்ற வுலகத்தின் வைத்துச் செறிந்த வன்போடு. இதுவுந் துறைகூறிய கருத்து. மெய்ப்பாடு: உவகையைச்சார்ந்த வெகுளி; பெருமிதமு மாம். பயன்: அது. 366

குறிப்புரை :

25.15 கலவிகருதிப்புலத்தல் கலவிகருதிப்புலத்தல் என்பது புலவிதீர்த்து இன்புறப் புணரப்பட்டு மயங்காநின்ற தலைமகள், தனக்கவன்செய்த தலையளியை நினைந்து, இவ்வாறருளுமருள் ஒருஞான்று பிறர்க்குமா மெனவுட்கொண்டு பொருமியழுது, பின்னு மவனோடு கலவிகருதிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.15. மன்னிய வுலகில் துன்னிய அன்பொடு
கலவி கருதிப் புலவி யெய்தியது.

பண் :

பாடல் எண் : 16

மலரைப் பொறாவடி மானுந்
தமியள்மன் னன்ஒருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின்
றாள்பள்ளி காமனெய்த
அலரைப் பொறாதன் றழல்விழித்
தோனம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாளென்னை
கொல்லோ கருதியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மன்னன் ஒருவன் மன்னன் ஒருவன்; மலரைப் பொறாஅடி மானும் தமியள் மென்மையான் மலரையும் பொறாத வடியையுடைய மானுந்தமியளே; ஆயினும், பள்ளி பலரைப் பொறாது என்று இழிந்து நின்றாள் இப்பள்ளி பலரைத்தாங்கா தென்றுகூறிப் பள்ளியினின்று மிழிந்துநின்றாள்; காமன் எய்த அலரைப் பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம்வணங்கா காமனெய்த அலரம்பை வெகுண்டு அன்றழலாகிய கண்ணை விழித்தவனதம்பலத்தை வணங்காத; கலரைப் பொறாச் சிறியாள் கருதியது என்னை கொல் தீய மக்களைப் பொறாத சிறியவள் இந்நிலைமைக்கட் கருதியதென்னோ! எ-று.
இழிந்துநின்றாளென்பது விரையவிழிந்தாளென்பதுபட நின்றது. கலரைப்பொறாச்சிறியாளென்றது தீமக்களென்று சொல்லும் வார்த்தையையும் பொறாதவள் தீமக்கள்செய்யும் காரியத்தைச் செய்தாளென்றவாறு. குறிப்பினிற்குறிப்பென்றது இவ்வாறருள் பிறர்க்காமென நினைந்து இன்னகைபுலந்தாளென்று தலைமகன் கூறிய கூற்றையே தவறாக நினைந்து நம்மை யொழிந்து பிறருமுண் டாகக் கூறினானாகலான் இந்த வமளி பலரைப் பொறா தெனப் புலந்தாள், குறிப்பாலே தலைமகனது குறிப்பையறிந்து. இவ்வகை தலைமகள் புலம்ப வாயில்க டம்முட் சொல்லியது. இதுவுமது. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: ஐயந் தீர்தல். பள்ளியிடத்தாளாகிய தலைமகள் நுண்ணிதாகியதோர் காரணம் பற்றி இவ்வகையுரைத்து ஊடக்கண்டதோழி தன்னெஞ்சோடு சாவினாளென்பது. தலைமகன் றன்னெஞ்சோ டுசாவினானெனின், அது பொருந்தாது. 367

குறிப்புரை :

25.16 குறிப்பறிந்து புலந்தமை கூறல் குறிப்பறிந்து புலந்தமை கூறல் என்பது புலவி தீர்ந்து கலுழ்ந்து புணர்ந்து தானுமவனுமேயாய்ப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், பின்னுமொருகுறிப்பு வேறுபாடுகண்டு புலந்து, இப்பள்ளிபலரைப் பொறா தென்றிழிய, இப்பொழுது இவ ளிவ்வா றிழிதற்குக் கருதிய குறிப்பென்னை கொல்லோவென உழையர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.16. குறிப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி
மலர்நெடுங் கண்ணி புலவி யுற்றது.

பண் :

பாடல் எண் : 17

வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
யால்நின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
யேதக்க வாய்மையனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வில்லைப் பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து விற்போலுநுதலையும் வேல்போலுங் கண்களை யுமுடையாளது வாட்டமறிந்து; வல்லைப் பொலிவொடு வந்தமையான் விரைய இவளது பொலிவோடு வந்தமையால்; வான் நின்று வழுத்தும்; வானத்துள்ளார் நின்றுவழுத்தும் தில்லைப் பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் தில்லைக்கட் பொலியும் சிவனது சிற்றம்பலத்தைக் கருதுவாரைப்போல; மல்லைப் பொலி வயல் ஊரன் வளத்தாற் பொலியும் வயலையுடைய வூரை யுடையவன்; மெய்யே தக்க வாய்மையன் மெய்யாக நல்ல மெய்ம்மையன் எ-று.
வில்லையென்னுமைகாரம் இசைநிறையாய் வந்தது. காதலன் வர இவள் இடையின்றிப் பொலிந்தமையாற் பொலிவொடென ஒடுக்கொடுத்துக் கூறினார். பொலி சிற்றம்பலமென வியையும். மல்லல்: கடைக்குறைந்து ஐகாரம் விரிந்துநின்றது. மல்லற் பொலி யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். 368

குறிப்புரை :

25.17 வாயிலவர் வாழ்த்தல் வாயிலவர் வாழ்த்தல் என்பது செவ்வணிவிடுக்கப் பூப்பி யற் செவ்விகெடாமல் மெலிவறிந்து இவளது பொலிவோடு வந்தமையான் இவன் மெய்யே தக்கவாய்மையனெனத் தலை மகனை வாயிலவர் வாழ்த்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.17. தலைமகனது தகவுடைமை
நிலைதகுவாயில் நின்றோருரைத்தது.

பண் :

பாடல் எண் : 18

சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்
கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்
குதர்செம்ம லூரன்திண்டோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத்
தில்லை யானருளே
போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது
வாய்ந்த புதுப்புனலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சூன் முதிர் துள்ளு நடைப் பெடைக்கு சூன்முதிர்ந்த துள்ளுநடையை யுடைத்தாகிய பெடைக்கு; இல் செய்வான் துணைச் சேவல் ஈனுமில்லைச் செய்யவேண்டித் துணையாகியசேவல்; தேன் முதிர்வேழத்தின் மென்பூக் குதர் தேன் போலுஞ் சாறுமுதிர்ந்த கரும்பினது மெல்லிய பூவைக்கோதும்; செம்மல் ஊரன் திண் தோள் தலைமையை யுடையவூரனது திண்ணிய தோள்களை; மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ மானினது நோக்கம்போலு நோக்கினையுடைய நல்லார்கூடி இன்புற; தில்லையான் அருளே போல் முதிர் பொய்கையில் வாய்ந்த புதுப் புனல் பாய்ந்தது தில்லையான தருளை யொத்து நீர் முதிர்ந்த பொய்கையுள் நல்ல புதுப்புனல் பாய்ந்தது; இனிப் புனலாட்டினாற் றன்காதலியைச் சிவப்பிக்கும்போலும் எ-று.
சூன்முதிர்தலாற் குறுகவடியிடுதலிற் றுள்ளு நடையென்றார். தில்லையானருள் பெற்றவர் போல நல்லார் மகிழவென்றுரைப்பாரு முளர். சேவலன்னந் தன் சூன்முதிர்ந்தபெடைக்கு ஈனில் லிழைத்துப் பாதுகாக்கின்றாற் போல இவனுந் தன்காதலிக்கு வேண்டுவன செய்து மனைவயிற்றங்கி யின்புறுகின்றானென உள்ளுறை காண்க. துன்னு நடையென்று பாடமோதி, சூன் முதிர்தலாற் பயில அடியிடுநடை யென்றுரைப்பாரு முளர். வெண்பூவென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: பிரிவுணர்த்துதல். 369

குறிப்புரை :

25.18 புனல் வரவுரைத்தல் புனல் வரவுரைத்தல் என்பது தலைமகளுடன் மனை வயிற்றங்கி யின்புறா நின்றவனது தோள்களைப் பரத்தையர்பொருந்தி மகிழப் புதுப்புனல் வந்து பரந்தது; இனிப் புனலாட்டினால் இவன்காதலி புலக்கும்போலுமென, வையத்தார் தம்முட் புனல்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.18. புனலா டுகவெனப் புனைந்து கொண்டு
மனைபுகுந் தவனை வைய முரைத்தது.

பண் :

பாடல் எண் : 19

சேயே யெனமன்னு தீம்புன
லூரன்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
தீர்சுடர் கின்றகொலந்
தீயே யெனமன்னு சிற்றம்
பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனஅடி யீர்நெடுந்
தேர்வந்து மேவினதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுடர்கின்ற கொலம் தீயே என மன்னு சுடரா நின்றவடிவு தீயேயென்றுசொல்ல நிலைபெற்ற; சிற்றம்பலவர் தில்லைநகர்வாய் வீயே என அடியீர் சிற்றம்பலவரது தில்லைநகரிடத் துள்ளீராகிய பூவையொக்கு மடியையுடையீர்; நெடுந் தேர் வந்து மேவினது நெடியதேர் ஈண்டுவந்து மேவிற்று; புணர் தவம் தொன்மை செய்தீர் இவனைப் புணர்தற்குத் தக்கதவத்தை முற்காலத்துச் செய்தீர்கள்; சேயே என மன்னு தீம் புனல் ஊரன்திண் தோள் இணைகள் தோயீர் வடிவு முருகவேளேயென்று சொல்ல நிலைபெறா நின்ற இனிய புனலையுடைத்தாகிய வூரையுடையவனது திண்ணிய தோளிணைகளையினியணைமின் எ-று.
ஒன்றற் கொன்றிணையாயிருத்தலின் இணையெனத் தனித்தனி கூறப்பட்டன. இதுவும் ஊடனிமித்தம். கோலமெனற்பாலது கொலமெனக் குறுகி நின்றது. கயன்மணிக்கண்ணியென்பது பாடமாயின், பரத்தையர் சேரிக்கட்டலைமகனது தேர்செல்லத் தலைமகணொந் துரைத்ததாம். இப்பொருட்கு நெடுந்தேர் நுமது சேரிக்கண்வந்து தங்கிற்றென் றுரைக்க. மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகன்வரவு சேரிப் பரத்தையர்க்குப் பாங்காயினார் அவர்க் குணர்த்துதல். 370

குறிப்புரை :

25.19 தேர்வரவுகண்டு மகிழ்ந்து கூறல் தேர்வரவுகண்டு மகிழ்ந்து கூறல் என்பது புனல் வரவு கேட்ட தலைமகன் புனலாட்டு விழவிற்குப் பரத்தையர் சேரிக்கட் செல்லாநிற்ப, இவனைப் புணர்தற்குத் தக்க தவத்தினை முற்காலத்தே செய்தீர்கள்; தேர்வந்து தோன்றிற்று; இனிச்சென்று இவனது தோளிணையைத் தோய்மினெனத் தேர்வரவு கண்டு பரத்தையர் தம்முண் மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.19. பயின்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக்
கயன்மணிக் கண்ணியர் கட்டு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 20

அரமங் கையரென வந்து
விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு
கும்மவ ளன்றுகிராற்
சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதைய
காத்துநம் பொற்பரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அரமங்கையர் என வந்து விழாப் புகும் அவ்வவர் அரமங்கையரைப்போல வந்து புனலாட்டு விழவின்கட் புகாநின்ற அவரவரே; வான் அரமங்கையர் என அவள் வந்து அணுகும் நாமெல்லாம் இத்தன்மையேமாக, வானிடத் தரமங்கைய ரென்று கருதும்வண்ணம் அவள் வந்தணுகாநின்றாள், அணுகித் தன்னிடத் திவரைத்திரிப்ப; அன்று அங்கு உகிரான் அயனைச் சிரஞ்செற்றோன் தில்லை அன்று அவ்விடத்து உகிரால் அயனைச் சிரந் தடிந்தவனது தில்லையின் சிற்றம்பலம் வழுத்தாப் புர மங்கையரின் நையாது; சிற்றம்பலத்தை வழுத்தாத புரங்களின் மங்கையரைப் போலப் பின்வருந்தாது நம் பொற்பரை ஐய காத்தும் நம் பொற்பரை வியப்ப முன்னுடைத்தாகக் காப்பேம் எ-று.
அரமங்கையர் தேவப் பெண்களுக்குப் பொதுப்பெயர். வானரமங்கையரென்றது அவரின்மேலாகிய உருப்பசி திலோத்தமை முதலாயினாரை. வானரமங்கையை ரென்றது சாதியை நோக்கி நின்றது. ஐயபொற்பரையெனக் கூட்டினுமமையும். அவளென்றதும் சேயிழையென்றதும் பரத்தையரிற் றலைவியாகிய இற்பரத்தையை.
பரத்தைவாயி லெனவிரு கூற்றுங்
கிழவோட் சுட்டாக் கிளப்புப்பய னிலவே
(தொல் - பொருள் - செய்யுள் - 190) என்பதனால் இதுகிழவோட் சுட்டாக் கிளப்பாயினும், இப்பரத்தையரது மாறுபாடு தலைமகளூடு தற்கு நிமித்தமாகலிற் பயனுடைத்தாம். மெய்ப்பாடு: அச்சம், பயன்: தலைமகனைத் தங்கட்டாழ் வித்தல். 371

குறிப்புரை :

25.20 புனல் விளையாட்டிற்றம்முளுரைத்தல் புனல்விளையாட்டிற் றம்முளுரைத்தல் என்பது தலைமகனு டன் புனலாடாநின்ற பரத்தையர் சேடிமார் அரமங்கையரைப் போலப்புனலாடாநின்ற அவ்வவரேயென்று விளித்து, நாமெல்லாமித்தன்மையேமாக வானரமங்கையரென்று சொல் லும்வண்ணம் மற்றொருத்திவந்து இவனைத் திரித்துக் கொள்ளக்கொடுத்துப் பின் வருந்தாது முன்னுறக்காப் போமெனத் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.20. தீம்புனல் வாயிற் சேயிழை வருமெனக்
காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 21

கனலூர் கணைதுணை யூர்கெடச்
செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோ னருள்பெற்
றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பா
லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
லூர்கணப் பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கனல் ஊர் கணை துணை ஊர் கெடச் செற்ற கனல் பரந்தகணையான் ஒத்தவூர்கெட வெகுண்ட; சிற்றம்பலத்து எம் அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் சிற்றம்பலத்தின்க ணுளனாகிய எம்முடைய அனலை யொக்குஞ் சடையை யுடையவனதருளைப் பெற்றவர்போலச் செம்மாந்து; அமரப் புல்லும் மினல் ஊர் நகையவர் தம்பால் அருள் விலக்கா விடின் அவனைச் செறியப்புல்லாநின்ற ஒளிபரந்த நகையையுடைய வர் தம்மிடத்து அவனருள்செல்லாமை விலக்கேனாயின்; யான் புனல் ஊரனை பிரியும் புனல் ஊர்கண் அப்பூங்கொடி யான் புனலூரனைப் பிரிந்திருக்கும் புனல் பரக்குங் கண்ணையுடைய அவன்மனைக் கிழத்தியாகிய அப்பூங்கொடி யாகின்றேன் எ-று.
கணைதுணை யெனச் செய்யுளின்ப நோக்கி மிகாதுநின்றது. கணையென்பதனை யெழுவாயாக்கி யுரைப்பாருமுளர்.
``பரத்தையிற்பிரிவே நிலத்திரி வின்றே``
(இறையனாகப் பொருள் - 42) என்பதனால், இவரதில்லந் தம்மில் வேறுபாடில்லாமையறிக. மெய்ப்பாடு: வெகுளி. பயன்: தனது பீடுணர்த்தல். 372

குறிப்புரை :

25.21 தன்னை வியந்துரைத்தல் தன்னை வியந்துரைத்தல் என்பது சேடிமார் பின் வருந்தாது முன்னுறக் காப்பேமென்று தம்முட் கூறுவதனைக் கேட்டு, இவனை அமரப் புல்லும் பரத்தையர்மாட்டு இவனருள் செல்லாமல் விலக்கேனாயின் என்மாட்டிவனைத் தந்தழாநின்ற இவன் மனைக்கிழத்தியாகின்றேனெனப் பரத்தைத்தலைவி தன்னைவியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.21. அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி
முனிவு தோன்ற நனிபு கன்றது.

பண் :

பாடல் எண் : 22

இறுமாப் பொழியுமன் றேதங்கை
தோன்றினென் னெங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத்
தான்தில்லை யூரன்திண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
குப்பெற்ற பெற்றியினோ
டிறுமாப் பொழிய இறுமாப்
பொழிந்த இணைமுலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அங் கைச் சிறுமான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண்தோள் அங்கைக்கண்ணே சிறிய மானைத்தரித்த சிற்றம்பலத்தானது தில்லைக்கணுளனாகிய ஊரனுடைய திண்ணிய தோள்களை; பெறு மாத்தொடும் பெறுதலானுண்டாகிய பெருமை யோடும்; தன்ன பேர் அணுக்குப் பெற்ற பெற்றியினோடு தன்ன வாகிய அவனோ டுண்டாகிய பெரிய அணுக்கைப்பெற்ற தன்மைக ளோடும்; இறுமாப்பு ஒழிய தான் செம்மாத்தலையொழிய; இணை முலை இறுமாப்பு ஒழிந்த இணைமுலைகள் ஏந்துதலை யொழியப் புகாநின்றன. தங்கை தோன்றின் இனித் தனக்கொரு தங்கை தோன்றின்; என் எங்கை இறுமாப்பு ஒழியும் அன்றே என்னுடைய வெங்கையும் செம்மாத்தலை யொழியுமன்றே; அதனான் வருவ தறியாது தன்னைப் புகழ்கின்றாள் எ-று.
எங்கையென்றது என்றங்கை யென்றவாறாயினும், என் னெங்கையென இயைபு மிகுதிகூறி நகையாடினாள். மாத்து தலை மகற்குரியளாய் நிற்றலான் உண்டாகிய வரிசை. பெற்றி அணுக் காற்றன்னை மதித்தல். தன்னபெற்றியென வியையும். பெற்றி யினோடு மென்னு மும்மை தொக்கு நின்றது. ஒழிந்தவென்னு மிறந்த காலம் விரைவுபற்றி வந்தது. மெய்ப்பாடு: வெகுளியைச்சார்ந்த வழுகை. பயன்: பரத்தையது சிறுமையுணர்த்துதல். அவ்வகை பரத்தைகூறிய வஞ்சினம் தன்பாங்காயினாராற்கேட்ட தலைமகள் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப இவ்வகைசொன்னாளென் பது.373

குறிப்புரை :

25.22 நகைத்துரைத்தல் நகைத்துரைத்தல் என்பது பரத்தைத்தலைவி தன்னை வியந்து கூறினாளென்று கேட்ட தலைமகள், எங்கைச்சியார் தமக்கும் ஒரு தங்கைச்சியார் தோன்றினபொழுதே தம்மிறு மாப்பொழியத் தம்முடைய இணைமுலைகளின திறுமாப்பும் ஒழியப் புகாநின்றது; இதனை யறியாது தம்மைத்தாம் வியக்கின்ற தென்னோவெனப் பரத்தையை நோக்கி நகைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.22. வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
பரத்தையை நோக்கி விரித்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

வேயாது செப்பின் அடைத்துத்
தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம்பலமனை
யாள்தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென்
கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற்
பால வியல்புகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வேயாது செப்பின் அடைத்துத் தமி வைகும் வீயின் அன்ன சூடாது செப்பின்க ணிட்டடைப்பத் தனியே வைகும் பூவைப்போலும்; தீயாடி சிற்றம்பலம் அனையாள் தீயின் கண்ணாடுவானது சிற்றம்பலத்தை யொப்பாள்; தில்லை ஊரனுக்கு இன்று ஏயாப்பழி என நாணி தில்லையூரனுக்கு இன்று தகாதபழியா மெனக்கருதி நாணி; என்கண் இங்ஙனே மறைத்தாள் தனதாற் றாமையை என்னிடத்தும் இவ்வண்ணமே மறைத்தாள், அதனால், இவள் கற்பு யாய் ஆம் இயல்பு இவளது கற்பு நமக்குத் தாயாமியல் பையுடைத்து; இயல்புகள் நல் பால இவளுடைய நாணமுதலாகிய வியல்புகள் நல்லகூற்றன எ-று.
தமிவைகும்வீ அக்காலத்தினிகழ்ந்த வேறுபாட்டிற்குவமை. அம்பலம் இயற்கை நலத்திற்குவமை. பாணனுரைத்ததென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகளது பெருமை யுணர்த்துதல். 374

குறிப்புரை :

25.23 நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல் நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல் என்பது தலைமகனைப் பரத்தையர்வசம் புனலாடவிட்டுச் சூடுவாரின்றிச் செப்பின்க ணிட்டடைத்துத் தமியே வைகும் பூப்போல்வாள் இஃதவனுக்குத் தகாத பழியாமெனக் கருதி நாணி அதனை மறைத்திருந்தமை கண்ட தோழி, இவளது கற்பும் நலனும் நல்ல பகுதியையுடை யனவாயிருந்தனவென அவள் நலத்தை மிகுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.23. மன்னவன் பிரிய நன்மனைக் கிழத்தியை
நாணுதல் கண்ட வாணுத லுரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

விறலியும் பாணனும் வேந்தற்குத்
தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை
மாமரம் போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி
யோமை யறிந்திலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விறலியும் பாணனும் விறலியும் பாணனும்; தில்லை இறை அமைத்த திறல் இயல் யாழ் தில்லை யிறையா லமைக்கப்பட்ட வெற்றி யியலும் யாழை; வேந்தற்குக் கொண்டு வந்து நின்றார் நம் வேந்தற்குத் துயிலெழுமங்கலம் பாடக் கொண்டுவந்து நின்றார்கள்; அறல் இயல் கூழை நல்லாய் அறல் போலுங் கூழையை யுடைய நல்லாய்; இராச்சென்று திசைபோம் பறல் இயல் வாவல் இராப்பொழுதின்கட் சென்று திசையைக் கடக்கும் பறத்தலாகிய வியல்பினையுடைய வாவல்; பகல் உறை மா மரம் போலும் தமியோமை அறிந்திலர் இரைதேருங் காலமன்மையாற் பகற் பொழுதின்கணுறையும் பெரியமரம்போலும் இராப்பொழுதிற் றுணையில்லாதோமை இவரறிந்திலர் போலும் எ-று.
வெற்றி வீணைகளுட்டலையாதல். ``எம்மிறை நல்வீணை வாசிக்குமே`` (நாவுக்கரசர் தேவாரம். தனித்திருவிருத்தம். பொது 7) என்பவாகலின் இறையமைத்த யாழென்றார். சென்று பகலுறை மாமரமென் றியைப்பினு மமையும். பறத்தல் பறலென இடைக் குறைந்து நின்றது. போல�

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 25

திக்கின் இலங்குதிண் டோளிறை
தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக தணிந்துநின்
றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய
அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
வேலெந் தனிவள்ளலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
திக்கின் இலங்கு திண் தோள் இறை திக்கின்கண் விளங்காநின்ற திண்ணிய தோள்களையுடைய விறைவன்; தில்லைச் சிற்றம்பலத்துக் கொக்கின் இறகது அணிந்து நின்றாடி தில்லையிற் சிற்றம்பலத்தின்கட் கொக்கி னிறகதனை யணிந்து நின்றாடுவான்; தென் கூடல் அன்ன அவனது தெற்கின்க ணுண்டாகிய கூடலை யொக்கும்; அக்கு இன் நகை இவள் நைய அயல்வயின் நல்குதலால் அக்குமணிபோலும் இனியநகையை யுடைய இவள் வருந்த அயலாரிடத்து நல்குதலால்; நின்றசெவ்வேல் எம் தனி வள்ளல் எல்லாரானுமறியப்பட்டு நின்ற செவ்வேலை யுடைய எம்முடைய வொப்பில்லாத வள்ளல்; இன்று தக்கிருந் திலன் இன்றுதக்கிருந் திலன் எ-று.
அயல்வயி னென்பதற்குப் பொருணசை யுள்ளத்தராகலிற் காமத்திற் கயலென்றுரைப்பினுமமையும். தலைமகனது தகவின்மை யென்பதூஉம் பாடம். #9; 376

குறிப்புரை :

25.25 தோழியியற் பழித்தல் தோழி யியற்பழித்தல் என்பது பாணன் வரவுரைத்த தோழி, இவள் வருந்த அயலாரிடத்து நல்குதலால் எம்முடைய வள்ளல் இன்று தக்கிருந்திலனெனத் தலைமகனை யியற்பழித்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.25. தலைமகனைத் தகவிலனெனச்
சிலைநுதற்பாங்கி தீங்குசெப்பியது.

பண் :

பாடல் எண் : 26

அன்புடை நெஞ்சத் திவள்பே
துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின்
றாடி யிருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்
தன்னஞ் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய
லூரன் வரம்பிலனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அடியார் என்பிடை அமிழ்து வந்து ஊற அடியவ ரென்புகளிடையே அமிழ்தம் வந்தூற; அம்பலத்து நின்றாடி இருஞ் சுழியல் அம்பலத்தின்கண்ணே நின்றாடுவானதுபெரிய சுழியலின் கண்; தன்பெடை நையத் தகவு அழிந்து தன் பெடை வருந்தத் தகுதிகெட்டு; அன்னம் சலஞ்சலத்தின் வன்பெடைமேல் துயிலும் அன்னஞ் சலஞ்சலத்தினது வலியபெடைமேற் கிடந் துறங்கும்; வயல் ஊரன் வயலாற் சூழப்பட்ட ஊரையுடையவன்; அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற தன் மாட்டன்பையுடைய நெஞ்சத்தை யுடைய இவள் மயங்காநிற்ப இதற்குப் பரியாமையின்; வரம்பு இலன் தகவிலன் எ-று.
அன்புடை நெஞ்சத்திவளென்றதனால், பரத்தையர தன் பின்மை கூறப்பட்டதாம். இருஞ்சுழியலூரெனவியையும். சுழிய லென்பது ஒரு திருப்பதி. வன்பெடை யென்றதனாற் பரத்தையரது வன்கண்மை விளங்கும். ஒருசொல் வருவியாது பேதுறுதலான் வரம்பிலனென்றுரைப்பாருமுளர். உள்ளுறையுவமம் வெளிப்பட நின்றது. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த நகை. பயன்: தலைமகனை யியற்பழித்துத் தலைமகளை யாற்று வித்தல்.377

குறிப்புரை :

25.26 உழையரியற்பழித்தல் உழையரியற்பழித்தல் என்பது தோழி தலைமகனை யியற்பழித்துக் கூறாநிற்பக் கேட்டு, தன்மாட்டன்புடை நெஞ்சத் தையுடைய விவள்பேதுற இதற்குப் பரியாமையின் வயலூரன் வரம்பிலனென உழையர் அவனை யியற்பழித்துக்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
25.26. அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
குழைமுகத் தவளுக் குழைய ருரைத்தது.

பண் :

பாடல் எண் : 27

அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்
பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை
யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார்
நனவு கனவுமுண்டேற்
பஞ்சா ரமளிப் பிரிதலுண்
டோவெம் பயோதரமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம்தண் கயிலை இறைவனென்று உட்காதாருடைய புரங்களைக் கெடுத்த சிற்றம்பலவரது அழகிய குளிர்ந்த கயிலைக்கண்; மஞ்சு ஆர் புனத்து மஞ்சார்ந்த புனத்திண்கண்; அன்று மாந்தழை ஏந்தி வந்தார் அவர் நனவு என் நெஞ்சார் அன்று மாந்தழையை யேந்திவந்தாராகிய அவர் இன்று நனவின் என்னெஞ்சத்தின்கண்ணார்; விலக்கினும் நீங்கார் யான் றடுப்பினும் அவ்விடத்தினின்று நீங்கார்; கனவும் உண்டேல் துயலு முண்டாயின்; பஞ்சு ஆர் அமளி எம் பயோதரம் பிரிதல் உண்டோ பஞ்சார்ந்த வமளிக்கண் எம்பயோதரத்தைப் பிரித லுண்டோ! நீர் கொடுமைகூறுகின்றதென்! எ-று.
அஞ்சார் தறுகண்ணரெனினுமமையும். தழையேந்திவந்தா ரென்பதனை முற்றென்று, இளிவந்தன செய்து நம்மைப் பாதுகாத்தார் இன்றிவ்வா றொழுகுவரென் றுரைப்பினு மமையும். கனவு முண்டேலென்பதற்குத் துயில்பெற்றுக் கனாக்காணினென்றுரைப் பினுமமையும். எனது நெஞ்சாரென்பதூஉம், ஊரனைப் பரிசுபழித்த வென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகனை யியற்படமொழிந்தாற்றுதல். 378

குறிப்புரை :

25.27 இயற்பட மொழிதல் இயற்பட மொழிதல் என்பது தலைமகனை யியற்பழித்த வர்க்கு, அன்று நம் பொருட்டாக நம்புனத்தின் கண்ணே மாந்தழை யேந்தி வந்தார் இன்று என்னெஞ்சத்தின்கண்ணார்; அது கிடக்க, மறந் துறங்கினேனாயின் அமளியிடத்துவந்து என்பயோதரத்தைப் பிரியாதார்; இத்தன்மையாரை நீங்கள் கொடுமை கூறுகின்ற தென்னோ வெனத் தலைமகள் அவனை யியற்பட மொழியாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.27. வரிசிலை யூரன் பரிசு பழித்த
உழையர் கேட்ப எழில்நகை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 28

தெள்ளம் புனற்கங்கை தங்குஞ்
சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா
இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகுமொரு காற்பிரி
யாதுள்ளி யுள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்றகத்
தேவரும் பான்மையளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் தெள்ளிய நல்லபுனலையுடைய கங்கை தங்குஞ் சடையை யுடையவன்; சிற்றம்பலத்தான் சிற்றம்பலத்தின்கண்ணான்; கள்ளம் புகு நெஞ்சர் காணா இறை பொய் நுழையு நெஞ்சத்தையுடையவர் ஒரு ஞான்றுங் காணாத விறைவன்; உறை காழி அன்னாள் அவனுறைகின்ற காழியையொப்பாள்; உள்ளி ஒருகால் பிரியாது உள்ளம் புகும் யான்றன்னை நினையாது வேறொன்றன் மேலுள்ளத்தைச் செலுத்தும்வழியும் தானென்னை நினைந்து ஒருகாலும் பிரியாது என்னுள்ளம் புகாநின்றாள்; உள்ளுதொறும் அவ்வாறன்றி யான்றன்னை நினையுந்தோறும்; பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையள் உயர்ந்த விடத்தினின்றும் பள்ளத்திற்புகும் புனலை யொத்துத் தடுப்பரியளாய் என் மனத்தின் கண்வரு முறைமையளாகா நின்றாள்; அதனாற் பிரிந்தீண்டிருத்தல் அரிதுபோலும் எ-று.
தெள்ளம்புனல் மெல்லம்புலம்பு போல்வதோர் பண்புத் தொகை. மெய்ப்பாடு: மருட்கை. பயன்: பரத்தையீனீங்கித் தலை மகளிடத்தனாதல். 379

குறிப்புரை :

25.28 நினைந்துவியந்துரைத்தல் நினைந்து வியந்துரைத்தல் என்பது புனலாடப் பிரிந்து பரத்தையிடத் தொழுகாநின்ற தலைமகன், யான் றன்னை நினையாது வேறொன்றன்மேல் உள்ளத்தைச் செலுத்தும்வழியும் தானென்னை நினைந்து என்னுள்ளம் புகாநின்றாள்; அவ்வாறன்றி யான்றன்னை நினையுந்தோறும் பள்ளத்துப் புகும்புனல்போல நிறுத்த நில்லாது என் மனத்தா ளாகாநின்றாள்; ஆதலாற் பிரிந்து ஈண்டிருத்தல் மிகவு மரிதெனத் தலைமகளை நினைந்து வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.28. மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன்
அல்லியங் கோதையை அகனமர்ந் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 29

தேன்வண் டுறைதரு கொன்றையன்
சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன்
மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு
தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ்
வாறுகொ னண்ணுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும் தேனும் வண்டு முறையும் கொன்றைப் பூவையணிந்தவனது சிற்றம்பலத்தை வழுத்தும்; வான் வள்துறை தரு வாய்மையன் வானிடத்துளவாகிய வளவிய விடங்களை எனக்குத் தரு மெய்ம்மையையுடையான்; மன்னு குதலை இன்வாயான் நிலைபெற்ற குதலையை யுடைய இனிய வாயையுடையான்; வள் துறை தரு மால் அமுது அன்னவன் வளவிய கடல் தந்த பெருமையை யுடைய அமிர்தத்தை யொப்பான்; வந்து அணையான் அவன் என்னை வந்தணைகின்றிலன்; வண்டு உறைதரு கொங்கை நான் நண்ணுவது எவ்வாறு கொல் நறுநாற்றத்தால் வண்டுகளுறையுங் கொங்கையையுடையாளை யான்பொருந்துவது இனியெவ்வாறோ! எ-று.
தேனை நுகரும் வண்டெனினுமமையும். வழுத்துவார்பெறும் வானென்பது வழுத்தும் வானென இடத்து நிகழ்பொருளின்றொழில் இடத்துமேலேறிற்று. இப்பொழுது குதலையையுடைத்தாகிய வாயான் மேல்வளவிய நூற்றுறைகளைச் சொல்லி எனக்கின்பத்தைச் செய்யும் அமிழ்தன்னவ னென்றுரைப்பினுமமையும். வாயிலின் வாயிலால். மெய்ப்பாடு: அழுகை. பயன்: வாயில்கோடல். நெஞ்சோடு சொல்லியது. 380

குறிப்புரை :

25.29 வாயில்பெறாது மகன்றிற நினைதல் வாயில் பெறாது மகன்றிற நினைதல் என்பது பரத்தையிற் பிரிந்து நினைவோடுவந்த தலைமகன் வாயிற்கணின்று, இத் தன்மையான் என்னைவந் தணைகின்றிலன்; யான் இனி வண்டுறையுங் கொங்கையை எவ்வாறு நண்ணுவதென்று வாயில்பெறாது மகன்றிற நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.29. பொற்றொடி மாதர் நற்கடை குறுகி
நீடிய வாயிலின் வாடினன் மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 30

கயல்வந்த கண்ணியர் கண்ணினை
யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா
விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத்
தோனம் பலம்நிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன்
னாட்டுப் பொலிபவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வந்த ஆடரவு மா மதியின் அயல் ஆட வைத்தோன் அம்பலம் நிலவு ஏதங்குறித்துவந்த ஆடரவைப் பெருமையையுடைய பிறையின்பக்கத்து அதனை வருந்தாமற் செய்து ஆடவைத்தவனது அம்பலம் நிலைபெற்ற; புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டுப் பொலிபவர் புயல்தங்கிய பெரிய மதிலை யுடைய தில்லையைச் சூழ்ந்த நல்லநாட்டிற் பொலியும் மகளிர்; கயல் வந்த கண்ணியர் கண் இணையால் கயல் போலுங் கண்ணை யுடையவர் கண்ணிணையால்; மிகு காதரத்தான் மயல் வந்த வாட்டம் ஒருகாலைக் கொருகால் மிகாநின்ற அச்சத்தால் வந்த மயக்கத்தாலுண்டாகிய வாட்டத்தை; அகற்றா விரதம் என் நீக்காத இவ்விரதம் யாதாம் எ-று.
தில்லை நன்னாட்டுப் பொலிபவர் அகற்றாதவென வியையும். பொலிபவர்க்கு என்னு நான்கனுருபு விகாரவகையாற் றொக்கதெனி னுமமையும். இது முன்னிலைப்புறமொழி. இதனுள் கயல் வந்த கண்ணியரென்றது தலைமகளை. தில்லை நன்னாட்டுப் பொலிபவ ரென்றது தோழியை.
இனி மதிக்குவமை தலைமகளும் அரவிற்குவமை தலைமகனும் ஈசனுக்குவமை தோழியுமென்றாக்கி, அவ்வகைத் தாகிய பாம்பையும் மதியையும் தம்மிற்பகையறுத்து ஓரிடத்தே விளக்கவைத்தாற்போல என்னுடன் அவட்குண்டாகிய வெறுப்பைத் தீர்த்து விளங்கவைத்தல் உனக்குங் கடனென்றா னாயிற்றென உள்ளுறை காண்க. மதியையர வேதங் குறித்து வந்தாற்போலத் தலைமகளைத் தலைமக னேதங்குறித்து வருதலாவது தலைமகளுக்கு ஊடல் புலவி துனியென்னும் வெறுப்புத் தோன்றுதற்குத் தக்க காரணங்களைத் தலைமகன் உண்டாக்கிக் கொண்டு வருதல். அரவைக் கண்டு மதிக்கச்சந்தோன்றி னாற்போலத் தலைமகனைக் கண்டு தலைமகளுக்கு ஊடல் புலவி துனியென்னும் வெறுப்புத்தோன்றிற்று; ஆதலால் அத்தலைமகனை யும் தலைமகளையும் மதிக்குமரவுக்குமொப்பச் சிலேடித்த சிலேடைக்கு மறுதலையாகாது, ``தேவ ரனையர் கயவர்`` என்றாற் போல வாமென்க. (குறள் - 1073) கயல்வந்த கண்ணியர் கண்ணி ணையால் வந்த அச்சத்தால் வந்த மயக்கத்தால் வந்த வாட்டம் இவனுக்கு வருதற்குக் காரணம் தலைவி பராமுகஞ் செய்யும்படி தான் வருந்தல்.
இதனைத் தீர்த்தல் தில்லை நன்னாட்டுப் பொலியுமகளிர்க்குக் கடனென்றா னென்க. அது ``பிணிக்கு மருந்து பிறம னணியிழை - தன்னோய்க்குத் தானே மருந்து`` (குறள் - 1102) என்றும், ``துறைமேய்வலம்புரி தோய்ந்துமணலுழுத தோற்ற மாய்வான் - பொறை மலிபூம் புன்னைப் பூவுதிர் நுண்டாது போர்க்குங்கான - னிறைமதிவாண் முகத்து நீள்கயற்கண் செய்த - வுறைமலி யுய்யாநோ யூர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும்`` (சிலப்பதிகாரம் - கானல்வரி - 8) என்றும், சொல்லியவாறுபோலக் கண்ணாலுண்டாகிய நோய்க்குக் கண்ணே மருந்தாமென்று சொல்லியவாறாமெனக் கொள்க. மெய்ப்பாடும், பயனும் அவை. தோழியை வாயில்கோடற் கிவ்வகை சொன்னானென்பது. 381

குறிப்புரை :

25.30 வாயிற்கண் நின்று தோழிக்குரைத்தல் வாயிற்கண்நின்று தோழிக்குரைத்தல் என்பது வாயில் பெறாது மகன்றிற நினையாநின்ற தலைமகன், நல்லநாட்டுப் பொலியும் மகளிர் தங்கண்ணிணையான் வந்த அச்சத்தால் வந்த மயக்கத்தால் உண்டாகிய வாட்டத்தை நீக்காத இவ்விரதம் யாதாமென வாயில் வேண்டித் தோழிக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.30. பெருந்தகை வாயில் பெறாது நின்று
அருந்தகைப் பாங்கிக் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 31

கூற்றாயினசின ஆளியெண்
ணீர்கண்கள் கோளிழித்தாற்
போற்றான் செறியிருட் பொக்கமெண்
ணீர்கன் றகன்றபுனிற்
றீற்றா வெனநீர் வருவது
பண்டின்றெம் மீசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியிற்
போதிர்அத் தேர்மிசையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கூற்றாயின சின ஆளி எண்ணீர் கூற்றம் போலக் கொடியவாகிய சினத்தையுடைய யாளிகளை ஊறுசெய்வன வாகக் கருதாது; கண்கள் கோள் இழித்தால் போல் தான் செறி இருள் பொக்கம் எண்ணீர் கண்களைக் கோளிழித்தாற் போலச் செறிந்த விருளின் மிகுதியைத்தான் இடையூறாகநினையாது; கன்று அகன்ற புனிற்று ஈற்றா எனப் பண்டு நீர் வருவது கன்றை யகன்ற ஈன்றணிமை யையுடைய ஈற்றாவையொத்துப் பண்டு நீர் எம்மாட்டு வருவது; இன்று எம் ஈசர் தில்லைத் தேற்றார் கொடி நெடுவீதியில் இன்று எம்முடைய வீசரது தில்லையிலே எம் பொருந்தாதாரது கொடியையுடைய நெடிய வீதியில்; அத் தேர்மிசைப் போதிர் எம்மாட்டூர்ந்துவந்த தேர் மேலேறிப் போகாநின்றீர்; இதுவன்றோ எம்மாட்டு நும்மருளாயினவாறு எ-று.
ஆளியெண்ணீர் பொக்க மெண்ணீர் என்பனவற்றை முற்றாக வுரைப்பினுமமையும். கண்களுக்குக் கோளென்றது பார்வை. இதனை இழித்தலென்பது கண்மணியைவாங்குதல். தானென்பது அதுவன்றி இதுவொன் றென்பதுபட நின்றதோரிடைச் சொல்; அசைநிலை யெனினுமமையும். ஈற்றாவென்றது கடுஞ்சூல் நாகன்றிப் பலகாலீன்ற ஆவை. மெய்ப்பாடு: வெகுளி. பயன்: வாயின் மறுத்தல். 382

குறிப்புரை :

25.31 வாயில் வேண்டத் தோழி கூறல் வாயில்வேண்டத் தோழி கூறல் என்பது வாயில் வேண்டிய தலைமகனுக்கு, பண்டு நீர் வரும் வழியிடை வருமேதமும் இருளுமெண்ணாது கன்றையகன்ற ஈற்றாவையொத்து எம்மாட்டு வருதிர்; இன்று எம்பொருந்தாதார் தெருவே அன்று எம்மாட்டூர்ந்து வந்த தேர்மேலேறிப் போகாநின்றீர்; இதுவன்றோ எம்மாட்டு நுமதருளெனத் தோழி அவன்செய்தி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.31. வைவேல் அண்ணல் வாயில் வேண்டப்
பையர வல்குற் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 32

வியந்தலை நீர்வையம் மெய்யே
யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற
வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர்
அரனிருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த
விருந்தினர் கார்மயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார்மயிலே கார்காலத்து மயிலை யொப்பாய்; வந்த வாள் அரக்கன் புயம் தலை தீர வரையை யெடுக்க வந்த வாளினையுடைய அரக்கன் கையுந் தலையும் உடலினீங்க; புலியூர் அரன் இருக்கும் பொருப்பின் புலியூரரன் வாளாவிருக்குங் கயிலைப் பொருப்பின்கண்; கயம் தலை யானை கடிந்த விருந்தினர் மெல்லிய தலையையுடைய யானையை நம்மேல்வாராமல் அன்று மாற்றிய நம் விருந்தினர்; விண் தோய் குடைக் கீழ் தமது விண்ணைத் தோயாநின்ற குடைக்கீழ்; அலை நீர் வையம் வியந்து மெய்யே இறைஞ்ச கடலாற் சூழப்பட்ட வுலகத்துள்ளா ரெல்லாரும் வியந்து சென்று அகனமர்ந்திறைஞ்ச; வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய் திறவார் தாந்தமது பெருமைநினையாது நங்கடைவந்து நின்று வேட்கைப்பெருக்கந்தம்மிடத்துச் சிறப்ப ஒன்றுஞ் சொல்லுகின்றிலர்; இனி மறுத்தலரிது எ-று.
விண்டோய்குடைக்கீழிறைஞ்சவென வியையும். வயா: வய மெனநின்றது. இருந்த துணையல்லது ஒருமுயற்சி தோன்றாமையின், இருக்குமென்றார். சிற்றிலிழைத்து விளையாடும்வழி விருந்தாய்ச் சென்று நின்றானாகலின், விருந்தினரென்றாள். இற் செறிக்கப்பட்ட விடத்து ஊண்காலத்து விருந்தாய்ச் சென்றானாகலின் விருந்தின ரென்றாளெனினுமமையும், ``புகா அக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்- பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்`` (தொல் - பொருள் - களவு-17) என்பது இலக்கணமாதலின். கார்ப்புனத்தே யென்பதூஉம் பாடம். மெய்ப் பாடு: இளிவரல். பயன்: தலைமகளைச் சிவப் பாற்றுவித்தல். 383

குறிப்புரை :

25.32 தோழிவாயில் வேண்டல் தோழிவாயில் வேண்டல் என்பது தலைமகளுக்கு அவன் செய்தது கூறிச் சென்று, அன்று நம்புனத்தின்கண்ணேவந்து யானை கடிந்தவிருந்தினர் தாந்தம் பெருமையை நினையாது இன்று நம் வாயிற்கண்வந்து, வேட்கைப் பெருக்கந் தம்மிடத்துச் சிறப்பநின்று ஒன்றும் வாய்திறக்கின்றிலர்; இதற்கியாஞ் செய்யுமாறென்னோ வெனத் தலைமகளைத் தோழி வாயில் வேண்டாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.32. வாயில் பெறாது மன்னவ னிற்ப
ஆயிழை யவட்குத் தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 33

தேவியங் கண்திகழ் மேனியன்
சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணு
தலாள் தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந்
தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
வௌவுதல் கற்றனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தேவி அங்கண் திகழ் மேனியன் சிற்றம்பலத்து எழுதும் தேவியவ்விடத்து விளங்குமேனியை யுடையவனது சிற்றம்பலத்தின்கண் எழுதப்பட்ட; ஓவியம் கண்டன்ன ஒண்ணுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் ஓவியத்தைக் கண்டாற் போலும் ஒண்ணுதலையுடையாள் தனக்கு ஓகைகொண்டு செல்ல வேண்டி; வந்தனன் மேவு இயம் கண்டனையோ என வெய்துயிர்த்து காதலன் வந்தான் வந்து பொருந்துகின்ற இயவொலி கேட்டனையோ வென்று கண்டார் வந்துசொல்லக்கேட்டு வெய்தாகவுயிர்த்து; காவியங்கண் கழுநீர்ச் செவ்வி வௌவுதல் கற்றன குவளைப் பூப்போலுங் கண்கள் கழுநீர் மலர்ச் செவ்வியை வௌவுதல் வல்லவாயின. இனியென்னி கழும்! எ-று.
அங்கட்டிகழ் மேனி யென்பது மெலிந்து நின்றது. தேவியுடைய வழகியகண்மலர்கள் சென்றுவிளங்கு மேனியை யுடையவனெனினு மமையும். மேவியங்கண்டனையோ வந்தன னெனவென்பதற்கு, அழகிய கண்டன் வந்தானென்று மேவியுரைப்ப வெனினு மமையும். ஐயோவென்றது உவகைக்கண் வந்தது. வெய்துயிர்த்தற்கு வினை முதல் உயிர்த்தற்குக் கருவியாகிய பொறியெனினு மமையும். மெய்ப் பாடு: அழுகை. பயன்: தலைமகள் வாயினேராமை யுணர்த்துதல். 384

குறிப்புரை :

25.33 மனையவர் மகிழ்தல் மனையவர் மகிழ்தல் என்பது தோழி வாயில்வேண்டத் தலைமகள் துனித்த நோக்கங்கண்டு, ஓகைகொண்டு செல்ல வேண்டிக் காதலன் வந்தானென்று சொல்லுமளவில் இவளுடைய காவியங் கண்கள் கழுநீர்ச் செவ்வியைவௌவுதல் கற்றனவென மனையவர் தம்முண் மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.33. கன்னிமா னோக்கி கனன்று நோக்க
மன்னிய மனையவர் மகிழ்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 34

உடைமணிகட்டிச் சிறுதே
ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன்
நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென்
தோகையன் னார்கண்முன்னங்
கடைமணி வாள்நகை யாயின்று
கண்டனர் காதலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மணி வாள் நகையாய் முத்துப்போலு மொளியையுடைய நகையையுடையாய்; உடை மணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத்தரும் உடைமணியை யரையிற்கட்டிச் சிறுதேரை யுருட்டி உலாவும்; இந்நடை மணியைத் தந்த பின்னர் இவ்வியங்கு தலையுடைய இந்தமணியை நமக்குத்தந்த பின்; முன் நான்முகன் மால் அறியா முற்காலத்து நான்முகனுமாலுந் தேடியுமறியாத; விடை மணிகண்டர் வண் தில்லை மென்தோகை அன்னார்கள் முன் விடையையுடைய மணிகண்டரது வளவியதில்லையின் மெல்லிய மயிலையொப்பார்கண் முன்னே; நம் கடை காதலர் இன்று கண்டனர் நங்கடையைக் காதலர் இன்று கண்டார்; இதுவன்றோ நம்மாட்டு அவரருள் எ-று.
கட்டியென்பது ஈண்டுத் தாங்கியென்னும் பொருட்டாய் நின்றது. நடைமணியென்றது புதல்வனை. விடமணி கண்ட ரென்பதூ உம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: வாயின் மறுத்தல். 385

குறிப்புரை :

25.34 வாயின் மறுத்துரைத்தல் வாயின் மறுத்துரைத்தல் என்பது மனையவர் துனிகண்டு மகிழாநிற்ப, இவனை நமக்குத் தந்தபின்னர் நம்முடைய வாயத்தார் முன்னே நங்காதலர் இன்று நங் கடையைக்கண்டார்; இதுவன்றோ நம்மாட்டு அவரருளெனத் தோழிக்குத் தலைமகள் வாயின் மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.34. மடவரற் றோழி வாயில் வேண்ட
அடல்வே லவனா ரருளு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 35

மைகொண்ட கண்டர் வயல்கொண்ட
தில்லைமல் கூரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பின ரென்பதென்
விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட வூசிகொல் சேரியின்
விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை
ஆத்தின்னி போந்ததுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் கருமையைப் பொருந்திய கண்டத்தை யுடையவரது வயலைப்பொருந்திய தில்லைக்கண்ணுளராகிய வளமல்கிய யூரையுடையவர்; நின்வாய் மெய் கொண்ட அன்பினர் என்பதென் நின்கண் மெய்ம்மையைப் பொருந்திய வன்மை யுடையரென்று நீசொல்லவேண்டுமோ; விள்ளா அருள் பெரியர் அவர் எம்மிடத்து நீங்காத வருள் பெரியரன்றோ? அதுகிடக்க; வை கொண்ட ஊசி சொல் சேரியின் விற்று கூர்மையைப் பொருந்திய ஊசியைக் கொற்சேரியின்கண் விற்று; எம் இல் வண்ண வண்ணப் பொய் கொண்டு நிற்கல் உற்றோ எம்மில்லத்து நின்னுடைய நல்லநல்ல பொய்ம்மையைப் பொருந்தி நிற்கலுற்றோ; புலை யாத்தின்னி புலையனாகிய ஆத்தின்னி; போந்தது ஈண்டு நீ போந்தது! இதுசாலநன்று! எ-று.
மெய்கொண்ட வன்பினரென்று சொல்லுகின்றதென்? நின் வாயிலவர் விள்ளாவருள்பெரியரன்றோ வென்றுரைப்பினுமமையும். ஊசிகொற் சேரியின்விற்றென உவமவினை உவமிக்கப்படும் பொருண்மேலேறி நின்றது. அடுக்கு பன்மைக்கண் வந்தது. ஆத் தின்னியென்பதனை முன்னிலைக்கண் வந்ததாக வுரைப்பினு மமையும். விற்குநின்னென்பதூஉம் பாடம். மெய்ப்பாடும், பயனும் அவை. 386

குறிப்புரை :

25.35 பாணனொடுவெகுளுதல் பாணனொடு வெகுளுதல் என்பது தோழிக்கு வாயின்மறுத்த தலைமகள், நின்னிடத்து அவர்நீங்காத வருள்பெரியரென்று நீ சொல்லவேண்டுமோ? அதுகிடக்க, கொற்சேரியி லூசிவிற்றுப் புலையா எம்மில்லத்து நின்னுடைய நல்லநல்ல பொய்யைப் பொருந்தி நிற்கலுற்றோ நீ போந்ததென வாயில்வேண்டிய பாணனொடு வெகுண்டு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.35. மன்னியாழ்ப் பாணன் வாயில் வேண்ட
மின்னிடை மடந்தை வெகுண்டு ரைத்தது.

பண் :

பாடல் எண் : 36

கொல்லாண் டிலங்கு மழுப்படை
யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம்
நெரியச் செவ் வாய்துடிப்பக்
கல்லாண் டெடேல்கருங் கண்சிவப்
பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியேன் அடிவலங்
கொள்வன் பணிமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கொல் ஆண்டு இலங்கு மழுப் படையோன் குளிர்தில்லை அன்னாய் கொற்றொழில் அவ்விடத்து விளங்கும் மழு வாகிய படையையுடையவனது குளிர்ந்த தில்லையையொப்பாய்; வில் ஆண்டு இலங்கு புருவம் நெரியச் செவ்வாய் துடிப்ப வில்லையடிமைக் கொண்டு விளங்காநின்ற புருவநெரியச் செவ்வாய்துடிப்ப; கல் ஆண்டு எடேல் எறிதற்குக் கல்லை அவ்விடத்தெடுக்கவேண்டா; கருங்கண் சிவப்பு ஆற்று கரிய கண்களைச் சிவப்பாற்றுவாயாக; கறுப்பது அன்று வெகுளப் படுவதன்று; பல்லாண்டு நினக்குப் பல்லாண்டுகள் உளவாக வேண்டும்; பணிமொழி பணிமொழியையுடையாய்; அடியேன் அடி வலங்கொள்வன் யான்வேண்டிய தேயத்துக்குப் போக அடியேன் நின்னடியை வலங்கொள்ளாநின்றேன் எ - று.
கருங்கண்ணினது சிவப்பெனினுமமையும். பல்லாண் டென்றது தலைமகனுடனுண்டாகிய வெறுப்புத் தீர்ந்து கூடியிரு மென்று சொல்லியது நுமக்குத் தவறாயிற்றாயின் பல்லாண்டும் இப்படியிருப்பீ ரென்றான். இப்படியிருப்பீரென்றது பல்லாண்டு மிப்படித் தனித் திருப்பீரென்று வளமாகத் தன்பாணவார்த்தை சொல்லிய வாறென்றறிக. புருவநெறிக்கவென்பதூஉம் வெவ்வா யென்பதூஉ ம் பாடம். புரி - நரம்பு. மெய்ப்பாடு: அச்சம். பயன்: சிவப்பாற்று வித்தல். 387

குறிப்புரை :

25.36 பாணன்புலந்துரைத்தல் பாணன்புலந்துரைத்தல் என்பது தலைமகள் வெகுண் டுரையா நிற்ப, நின்புருவநெரிய வாய்துடிப்ப என்னை யெறிதற்குக் கல்லெடுக்க வேண்டா; நினது கரியகண்களின் சிவப்பாற்றுவாயாக; நீ வெகுளப்படுவதன்று; நினக்குப் பல்லாண்டு செல்வதாக; யான் வேண்டியவிடத்துப் போக நின்னடியை வலங்கொள்ளாநின்றேனென வாயில்பெறாமையிற் பாணன் புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.36. கருமலர்க் கண்ணி கனன்று கட்டுரைப்பப்
புரியாழ்ப் பாணன் புறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 37

மத்தக் கரியுரி யோன்தில்லை
யூரன் வரவெனலுந்
தத்தைக் கிளவி முகத்தா
மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்குங் கழுநீர்
விருந்தொடென் னாதமுன்னங்
கித்தக் கருங்குவ ளைச்செவ்வி
யோடிக் கெழுமினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மத்தக் கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும் களிப்பையுடைத்தாகிய யானையின்றோலையுடைய வனது தில்லையூரனது வரவென்று சொல்லத் தொடங்குதலும்; தத்தைக் கிளவி முகத் தாமரைத் தழல் வேல் மிளிர்ந்து கிளியின் மொழி போலும் மொழியையுடையாளது முகமாகிய தாமரைக் கண்ணே தழலையுடையவேல் போலப் பிறழ்ந்து; முத்தம் பயக்கும் கழுநீர் நீர்த்துளியாகிய முத்தத்தையுண்டாக்காநின்ற கண்ணாகிய செங்கழுநீர் மலர்; விருந்தொடு என்னாத முன்னம் விருந்தோ டென்று சொல்லு வதற்கு முன்; கித்தக் கருங்குவளைச் செவ்வி ஓடிக் கெழுமின விரையப் பண்டைநிறமாகிய கரிய குவளைச் செவ்வி பரந்து மேவின! என்னமனையறக்கிழத்தியோ! எ-று.
மத்தம் மதமென்பாரு முளர். ஊரன்வரவென வினையெச்ச மாகப் பிரிப்பினுமமையும். கித்தமென் பதனைச் செய்யப்பட்ட தென்னும் பொருளதோர் வடமொழித் திரிபென்பாரு முளர். விருந்து வாயிலாகப் புக்கவழி இல்லோர் சொல்லியது. மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல். 388

குறிப்புரை :

25.37 விருந்தொடுசெல்லத்து1ணிந்தமை கூறல் விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் என்பது வாயில் பெறாதுபாணன் புலந்து நீங்காநிற்ப, யாவர்க்கும் வாயினேராது வெகுண்டுரைத்தலாற் றழல்வேல்போல மிளிர்ந்து முத்தம் பயக்கு மிவளுடையகண்கள் விருந்தொடு வந்தானென்று சொல்லுமளவிற் பண்டைநிறமாகிய கருங்குவளையது செவ்வி பரந்த; என்ன மனையறக் கிழத்தியோவென இல்லோர்தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.37. பல்வளை பரிசுகண்டு
இல்லோர் இயம்பியது.

பண் :

பாடல் எண் : 38

கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் தில்லையன்
னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்றல்
துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
பாலை யரசனுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கவலம் கொள் பேய்த் தொகை பாய்தர - கவற்சி கொள்ளுதற்கேதுவாகிய பேய்த்திரள் கரணங்களைப் பாயாநிற்ப - காட்டிடை ஆட்டு உவந்த - புறங்காட்டின்கண் ஆடுதலை விரும்பிய - தவல் அங்கு இலாச் சிவன் தில்லை அன்னாய் - கேடங்கில்லாத சிவனது தில்லையையொப்பாய் - தழுவி முழுவி சுவல் அங்கு இருந்த - தழுவி முத்தங்கொண்டு சுவலிடத்தேறியிருந்த - நம் தோன்றல் துணை எனத் தோன்றுதலால் - நம்முடைய தோன்றலைத் தமக்குத் துணையெனக்கருதி வந்து தோன்றுதலான் - அவலம் களைந்து அரசனுக்குப் பணி செயற்பாலை - நினதுள்ளத்துக் கவற்சியைநீக்கி இனியரசற்குக் குற்றேவல் செயற்பாலை எ - று.
தழுவிமுழுவித்தோன்றுதலாலென வியையும். சுவற்கணங் கிருந்தவெனினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல். ; ; ; ; 389

குறிப்புரை :

25.38 ஊடல் தணிவித்தல் ஊடல் தணிவித்தல் என்பது விருந்தேற்றுக்கொண்ட தலைமகளுழைச் சென்று, நம்முடைய தோன்றலைத் தனக்குத் துணையாகக் கொண்டுவந்து தோன்றுதலான் நினதுளத்துக் கவற்சியை யொழிந்து இனி நம்மரசற்குக் குற்றவேல் செய்வாயாகவெனத் தோழி அவளை யூடறணிவியாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.38. தோன்றலைத் துணையொடு தோழி கண்டு
வான்றகை மடந்தையை வருத்தந் தணித்தது.

பண் :

பாடல் எண் : 39

சேறான் திகழ்வயற் சிற்றம்
பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார்
வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம்
மேவும் படிறுவவேங்
காறான் தொடல்தொட ரேல்விடு
தீண்டலெங் கைத்தலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சேல் திகழ் வயல் சேல்விளங்கும் வயலை யுடைய; சிற்றம்பலவர் தில்லை நகர்வாய் வேல் திகழ் கண் இளையார் சிற்றம்பலவரது தில்லைநகரிடத்துளராகிய வேல் போலுங் கண்ணையுடைய நின்காதலிமாராகிய விளையவர்; வெகுள்வர் நீ செய்கின்ற விதனை யறியின் நின்னை வெகுள்வர். அதுவேயுமன்றி, மெய் பாலன் செய்த பால் திகழும் பரிசினம் மேனி சிறுவனாலுண்டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையையுடையே மாதலின் நினக்குத் தகேம்; மேவும் படிறு உவவேம் இதன் மேலே யாமும் நீயும் மேவுநாணின்மையோடு கூடிய கள்ளத்தை விரும்பேம்; கால் தொடல் அதனால் எங்காலைத் தொடா தொழி; தொடரேல் எம்மைத் தொடரவேண்டா; எம் கைத்தலம் தீண்டல் எங்கைத் தலத்தைத் தீண்டற்பாலையல்லை; விடு விடுவாயாக எ-று.
திகழ்வயற்றில்லையெனவியையும். பால் திகழுமென்னும் இடத்து நிகழ் பொருளின்வினை மெய்யாகிய விடத்துமேலேறி நின்றது. நான்கிடத்தும் தானென்பது அசைநிலை. பரிசினமேனு மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: ஊடனீங்குதல். 390

குறிப்புரை :

25.39 அணைந்தவழியூடல் அணைந்தவழியூடல் என்பது தோழியாலூடல் தணிவிக்கப் பட்டுப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், நீ செய்கின்ற விதனை யறியின் நின் காதலிமார் நின்னைவெகுள்வர்; அதுகிடக்க, யாம் மேனி முழுதுஞ் சிறுவனாலுண்டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையை யுடையேம்; அதன்மேல் யாமும் நீ செய்கின்றவிக் கள்ளத்தை விரும்பேம்; அதனால் எங்காலைத் தொடாதொழி; எங்கையை விடுவாயாக எனத் தலைமகன் றன்னையணைந்தவழி ஊடாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.39. தெளிபுன லூரன் சென்றணைந் தவழி
ஒளிமதி நுதலி யூடி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 40

செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கால்
அயிற்படைக் கொற்றவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கொந்து ஆர் தடந்தோள் விடம் கால் அயில் படைக்கொற்றவர் கொத்துமாலைநிறைந்த பெரிய தோளினையும் நஞ்சைக் காலுங் கூரிய படையினையுமுடைய கொற்றவர்; பாவி யெற்கு என் வள மனையின் நிற்குமாறு தீவினையேற்கு எனது வளமனையில்வந்து நிற்கின்றபடி; ஓர் பந்து ஆர் விரலியைப் பாய் புனல் ஆட்டி பந்துபயின்ற விரலாளொருத்தியைப் பாய்ந்த புனலையாட்டுவித்து; வந்தார் பரிசும் அன்றாய் - வெளிப்படத் தவறு செய்து வந்தார் சிலர் நிற்கும் பரிசுமன்றாய் மனத்தவறு செய்யாதார் வந்து நிற்குமாறு வந்து நின்றாராயின், அது பொறுத்த லரிது எ - று.
செந் தார் நறுங் கொன்றைச் சிற்றம்பலவர் தில்லை நகர் பாய்புனலாட்டி செய்ய தாராகிய நறிய கொன்றைப் பூவினை யுடைய சிற்றம்பலவரது தில்லையாகிய நகர்வரைப்பிற் பாயும் புனலையாட்டி யெனக்கூட்டுக.
தில்லைநகரோர் பந்தார் விரலியென வியைப்பினுமமையும். மன்: ஒழியிசைக்கண்வந்தது; அசைநிலையெனினுமமையும். ஒருத்தியைப் புனலாட்டி வந்தார் பரிசுமன்றாய்க் கொற்றவர் மனைக்கண் வந்து நிற்குமாறென்னென்று கூட்டியுரைப்பினுமமையும் கொத்துமாலை பலவாயொன்றாகியமாலை. ஆங்கதனுக்கு அப்படிற்று நிலையால். விட்டுரைத்தது வெளிப்படவுரைத்தது. மெய்ப்பாடும் பயனும் அவை. 391

குறிப்புரை :

25.40 புனலாட்டுவித்தமை கூறிப்புலத்தல் புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல் என்பது அணைந்த வழியூடாநின்ற தலைமகள் ஊடறீராநின்ற தலைமகனோடு, இவர் செய்த பிழையெல்லாம் பொறுக்கலாம்; பலருமறிய வொருத்தியைப் புனலாட்டுவித்து அது செய்யாதார்போல என்மனையின்கணிவர் வந்து நிற்கின்றவிது எனக்குப் பொறுத்தலரிதெனத் தணிக்கத் தணியாது பரத்தையைப் புனலாட்டுவித்தமை கூறிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.40. ஆங்கதனுக் கழுக்கமெய்தி
வீங்குமென்முலை விட்டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 41

மின்றுன் னியசெஞ் சடைவெண்
மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
பலவன்தென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம
தில்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை
சாலுமன் னெங்களுக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின் துன்னிய செஞ்சடை வெண் மதியன் மின்னையொத்த செஞ்சடைக்கண்வைத்த வெண்பிறையை யுடையான்; விதியுடையோர் சென்று உன்னிய கழல் சிற்றம் பலவன் நற்பாலையுடையோர் சிற்றின்பத்திற்குக் காரணமான புலன்களை விட்டுச் சென்று நினைந்த கழலையுடைய சிற்றம் பலவன்; தென்னம் பொதியில் எமது இல்லம் நன்றும் சிறியவர் இல் அவனது தெற்கின்கணுண்டாகிய பொதியிலிடத்து எமது குடி பெரிதுஞ் சிறியவரதுகுடி; அதனான், நல் ஊர நல்ல ஊரையுடையாய்; இன்று உன் திருவருள் எங்களுக்கு இத்துணை சாலும் முற்காலத்து நின்றலையளி வேண்டுது மாயினும் இப்பொழுது உனது திருவருள் எங்கட்கு நீ வந்தவித்துணையுமமையும்; நீ தலையளி செய்ய வேண்டுவ துண்டோ? எ-று.
மன்னும் ஓவும்: அசை நிலை. சாலுமன்னென்புழி மன்னும் அசைநிலைபோலும். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: புலத்தல்; புலவி நீங்கியதூஉமாம். 392

குறிப்புரை :

25.41 கலவிகருதிப் புலத்தல் கலவிகருதிப் புலத்தல் என்பது புனலாட்டுவித்தமைகூறிப் புலவாநின்ற தலைமகள், ஊடறீர்க்க நுதலுந்தோளு முதலாயின வற்றைத் தைவந்து வருடித் தலையளி செய்யாநின்ற தலைமகனோடு, எம்முடைய சிறிய வில்லின்கண்வந்து அன்று நீயிர்செய்த தலையளி எங்கட்கு அன்று வேண்டுதுமாயினும் இன்று உமது திருவருள் எங்கட்கு நீயிர்வந்த இத்துணையு மமையும்; வேறு நீயிர் தலையளி செய்ய வேண்டுவதில்லை யெனக் கலவிகருதிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.41.கலைவள ரல்குல் தலைமகன் றன்னொடு
கலவி கருதிப் புலவி புகன்றது

பண் :

பாடல் எண் : 42

செழுமிய மாளிகைச் சிற்றம்
பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி
லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய
நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன
வாறு விரும்புவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
செழுமிய மாளிகைச் சிற்றம்பலவர் வளவிய மாளிகைகளாற் சூழப்பட்ட சிற்றம்பலத்தையுடையார்; அன்பர் சிந்தைச் சென்று கழுமிய கூத்தர் அன்பர் சிந்தைக்கட் சென்று பொருந்திய கூத்தர்; கடி பொழில் ஏழினும் அவரது காவலையுடைய வுலகமேழினுள்ளும்; விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக் குடியீர் சிறந்தநாட்டின்கட் சிறந்தநல்லவூரிற் சிறந்தகுடியிலுள்ளீர்; இன்னவாறு விரும்புவது விழுமிய அல்ல கொல்லோ எம்போல் வாரிடத்து இத்தன்மையவாகிய நெறியை விரும்புதல் உமக்குச் சிறந்தனவல்லபோலும் எ-று.
வாழியும் அரோவும் : அசைநிலை. விரும்புவ தென்புழி, இன்னவாறு விரும்புவ போல்வன வென்பது கருத்தாகலின், ஒருமைப் பன்மைமயக்கம் அமையுமாறு முடைத்து. இன்னவா றென்பதற்கு இன்ன வண்ணம் விரும்புத லெனினுமமையும். விரும்புத லென்ப தூஉம் பாடம். ஆடல் - நுடக்கம். மெய்ப்பாடும் பயனும்.393

குறிப்புரை :

25.42 மிகுத்துரைத்தூடல் மிகுத்துரைத்தூடல் என்பது கலவிகருதிப் புலவாநின்ற தலைமகள், புணர்தலுறாநின்ற தலைமகனுடன் நீர் விழுமிய நாட்டு விழுமியநல்லூர் விழுமியகுடியிலுள்ளீர்; எம்போல் வாரிடத்து இவ்வாறு புணர்தல் விரும்புதல் நுமக்கு விழுமிய வல்லவென மிகுத்துரைத்தூடா நிற்றல். அதற்குச் செய்யுள்
25.42. நாடும் ஊரும் இல்லுஞ் சுட்டி
ஆடற் பூங்கொடி யூடி யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 43

திருந்தேன் உயநின்ற சிற்றம்
பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க்
கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
வருவதொர் வஞ்சனையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில் ஒருவாற்றானுந் திருந்தாத யான் பிறவித் துன்பத்திற் பிழைக்கவந்து நின்ற சிற்றம்பலவரது தெற்கின்கணுள தாகிய பொதியிலிடத்து; இருந்தேன் உய வந்து ஒரு முயற்சியுமின்றி யிருந்த யானுய்யும்வண்ணம் வந்து; இணைமலர்க் கண்ணின் இன் நோக்கு அருளி தன்னுடைய இணைந்த மலர்போலுங் கண்களினது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தும் நாணோடுகூடிய நோக்கமாகிய இனிய கடைக்கணோக்கத்தை முன்னெனக்குத் தந்து; பெருந்தேன் என நெஞ்சு உகப் பிடித்து ஆண்ட பெருந்தேன் போலவினிதாய் என்னெஞ்சமுருக என்னைப் பிடித்துத் தன்வயமாக்கிய; நம் பெண் அமிழ்தம் அது அன்று நமது பெண்வடிவையுடைய அமிழ்தமாகிய அது இதுவன்று; இதுவோ வருவது ஒர் வஞ்சனை இதுவோ வருவதொருமாயம்; வருந்தேல் அதனான் நீ வருந்தாதொழி எ-று.
ஓகாரம்: ஒழியிசைக்கண் வந்தது. தன்னைநோக்கி யொரு முயற்சியுமில்லாத யான் பிறவித்துன்பத்திற் பிழைக்கத் தானே வந்து தன்னிணைமலர்க்கண்ணின தினிய கடைக்கணோக்கத்தைத் தந்து பெருந்தேன் போன்றினிதாய், என் வன்மனநெகிழ என்னை வலிந்து பிடித்தடிமைக்கொண்ட பெண்ணமிழ்தமென வேறுமொரு பொருள் விளங்கியவாறு கண்டுகொள்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல். 394

குறிப்புரை :

25.43 ஊடல் நீடவாடியுரைத்தல் ஊடல்நீட வாடியுரைத்தல் என்பது தணிக்கத் தணியாது மிகுத்துரைத்துத் தலைமகள் மேன்மேலு மூடாநிற்ப, அன்று அம்மலையிடத்துத் தன்னையெய்துதற்கோ ருபாய மின்றி வருந்தா நிற்ப யானுய்யும் வண்ணந் தன்னிணை மலர்க்கண் ணினது இனிய நோக்கத்தைத் தந்தருளி என்னைத்தன்வயமாக் கிய நம்பெண்ணமுதம் அதுவன்று; இது நம்மைவருத்துவதோர் மாயமாமெனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி ஊடனீடத் தலைமகன் வாடாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.43. வாடா வூடல்
நீடா வாடியது.

பண் :

பாடல் எண் : 44

இயன்மன்னும் அன்புதந் தார்க்கென்
நிலையிமை யோரிறைஞ்சுஞ்
செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம்
பலவர்தென் னம்பொதியிற்
புயன்மன்னு குன்றிற் பொருவேல்
துணையாப்பொம் மென்இருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி
தேரும் அதரகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இமையோர் இறைஞ்சும் செயல் மன்னும் சீர்க் கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில் இமையோரிறைஞ்சும் நுண் செயல்தங்கிய நல்ல வீரக்கழலணிந்த திருவடியையுடைய சிற்றம்பலவரது தெற்கின்கணுளதாகிய பொதியிலிடத்து; புயல் மன்னு குன்றில் பொம்மென் இருள்வாய் புயறங்கிய இக்குன்றிற்செறிந்த விருளின்கண்ணே; அயல் மன்னும் யானை துரந்து பக்கத்துத்தங்கும் யானைகளையோட்டி; அரி தேரும் அதரகத்து அரிமா அவைபுக்க விடந்தேடும் வழியகத்து; பொருவேல் துணையா தமது பொரு வேலே துணையாக வந்து; இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு இயல்பாகிய நிலை பெற்றவன்பை நமக்குத் தந்தவர்க்கு; நிலை என் யானிவ்வாறுடம்படாது நிற்குநிலை என்னாம்! இது தகாது எ - று.
பெயரெச்சத்திற்கும் பெயர்க்கும் ஒருசொன்னீர்மைப் பாடுண்மையின், இயன்மன்னுமன்பெனத் தொக்கவாறறிக. இயல்பைப் பொருந்தியவன்பெனினு மமையும். அதரகத்து வந்தென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது. புயன்மன்னு குன்றிலன்பு தந்தார்க்கெனக் கூட்டுக.
தகுதியின் தகுதியான். மிகுபதம் ஆற்றாமை மிக்க வளவு. தகுதியி லூரனெனப் பாடமாயின், தகுதியில்லாத மிகுபத மென்க. மெய்ப்பாடு: அச்சம். பயன்: சிவப்பாற்றுதல். 395

குறிப்புரை :

25.44 துனியொழிந்துரைத்தல் துனியொழிந்துரைத்தல் என்பது ஊடனீடலால் தலைமகன தாற்றாவாயில் கண்ட தலைமகள், அன்று நங்குன்றிடத்து மிக்க விருளின்கண்ணே அரிதிரண்டுயானை வேட்டஞ்செய்யும் அதரகத்துத் தமது வேலே துணையாகவந்து இயல்பைப் பொருந்தியவன்பை நமக்குத் தந்தவர்க்கு இன்று நாமுடம்படாது நிற்குமிந்நிலைமை என்னாமெனத் துனியொழிந்து அவனோடு புணர்ச்சிக் குடம்படா நிற்றல். அதற்குச் செய்யுள்
25.44. தகுதியி னூரன் மிகுபத நோக்கிப்
பனிமலர்க் கோதை துனியொ ழிந்தது.

பண் :

பாடல் எண் : 45

கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை
மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா
எம்மைப் பூசிப்பதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மதுத் தங்கிய கொன்றை வார் சடை ஈசர் இமையோர் இறைஞ்சும் வள் தில்லை நல்லார் பொதுத் தம்பலம் கொணர்ந்தோ தேன்றங்கிய கொன்றைப்பூவையுடைய நீண்ட சடையையுடைய வீசரது இமையோரால் வணங்கப்படும் வளவிய தில்லையிலுளராகிய நல்லா ரெல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டுவந்தோ; புதல்வா புதல்வா; எம்மைப் பூசிப்பது நீ யெம்மைக்கொண்டாடுவது? அதுநிற்க, கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களைக் கண் பிழைப்பித்து இது நினக்குத் தருகின்றவிடத்து நின்றந்தை ஒளிவிட்ட முறுவல்பொருந்திய நின் சிறிய வன்னைமாரைக் கண்ணைத்தப்புவித்து; எதிர்த்து எங்கு நின்று எப்பரிசு அளித்தான் அவர் காணாதவண்ணம் ஒருவாற்றானின்னை யெதிர்ப்பட்டு எவ்விடத்து நின்று எவ்வண்ணமிதனை நினக்குத் தந்தான்? நீயிது சொல்ல வேண்டும் எ - று.
மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த நகை. பயன்: ஊடனீங்கு தல். 396

குறிப்புரை :

25.45 புதல்வன்மேல்வைத்துப் புலவிதீர்தல் புதல்வன்மேல்வைத்துப் புலவிதீர்தல் என்பது துனியொ ழித்துக்கூடிப் பிரிந்தவழிப் பின்னும் பரத்தைமாட்டுப் பிரிந்தா னென்று கேட்டுப் புலந்து வாயின்மறுக்க, வாயிற்கணின்று விளையாடாநின்ற புதல்வனை யெடுத்தணைத்துத் தம்பலமிட்டு முத்தங்கொடுத்து அதுவாயிலாகக் கொண்டு தலைமகன் செல்லா நிற்ப, அப்புதல்வனை வாங்கி யணைத்துக் கொண்டு, அவன் வாயிற்றம்பலந் தன்மெய்யிற் படுதலான் எல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டுவந்தோ நீ யெம்மைக் கொண்டாடுவது? அதுகிடக்க, இதனை நினக்குத் தந்தவாறு சொல்லுவாயாகவெனப் புதல்வன்மேல் வைத்துத் தலைமகள் புலவி தீராநிற்றல். அதற்குச் செய்யுள்
25.45. புதல்வனது திறம்புகன்று
மதரரிக்கண்ணி வாட்டந்தவிர்ந்தது.

பண் :

பாடல் எண் : 46

சிலைமலி வாணுத லெங்கைய
தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந்
தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற்
கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
மாலை கலுழ்ந்தனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மலை மலி செழும் பூண்மார்பின் உதைப்ப யான் வெகுண்டு மலைபோலும் வளவிய பூணையுடைய தன் மார்பகத்து மிதிப்ப; சிலை மலி வாணுதல் எங்கையது ஆகம் எனத் தலை தந்தான் அவ்வாகத்தைச் சிலைபோலும் வாணுதலையுடைய எங்கையதென்றே கருதித் தன்சென்னியைத் தந்தனன்; அதனான், மன்னர் தில்லை உலை மலி வேற்படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி மன்னனது தில்லையில் உலையிடத்துண்டாகிய தொழிலான் மிக்க வேலாகிய படையையுடைய வூரனைப்போலக் கள்வரில்லை யென்று கருதி; கலை மலி காரிகை கண் முத்த மாலைகலுழ்ந்தன மகளிர்க்குத்தக்க யாழ்முதலாகிய கலைகளான் மிக்க காரிகை நீர்மையையுடையாளுடைய கண்கள் கண்ணீர்த் துளித் தாரையாகிய முத்தமாலையைப் பொருந்தின; அதனான், இவள் புலத்தற்குக் காரணம் வேண்டுவ தில்லைபோலும் எ-று.
இதுவுந் துறைகூறிய கருத்து. மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த நகை. பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல். பிள்ளை வாயிலாகப் புக்க தலைமகனை யேற்றுக்கொண்டு பள்ளியிடத்தாளாக மேற்சொன்ன வகையே உண்ணின்றெழுந்த பொறாமை காரணம் பெற்றுத் தோன்றியது; தோன்றத் தலைமகன் ஆற்றானாயின் அவ்வாற் றாமைகண்டு சிவப்பாற்றுவித்தல். தலைமகளிடத்தும் தலை மகனிடத்தும் இவ்வகை நிகழ்ந்தது கண்டு தோழியிது சொன்னா ளென்பது. தலைமகன்றான் சொன்னா னெனினுமமையும். என்னை? ``மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு - நினையுங் காலைப் புலவியு ளுரிய`` (தொல். பொருளியல். 31) என்றார் தொல்காப்பியனார். தலைமகளவ்வகை செய்யவும் பெறுமென்பது. 397

குறிப்புரை :

25.46 கலவியிடத்தூடல் கலவியிடத்தூடல் என்பது புதல்வனை வாயிலாகப்புக்குப் புலவிதீர்த்துப் புணர்தலுறாநின்ற தலைமகனைத் தலைமகள் ஒரு காரணத்தால் வெகுண்டு, அவன் மார்பகத்துதைப்ப, அவ் வெகுடல் தீர வேண்டி அவனவள்காலைத் தன்றலை மேலேற்றுக் கொள்ள, அது குறையாக அவள் புலந்தழாநின்றமையை அவ்விடத்து உழையர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.46. சீறடிக் குடைந்த நாறிணர்த் தாரவன்
தன்மை கண்டு பின்னுந் தளர்ந்தது.

பண் :

பாடல் எண் : 47

ஆறூர் சடைமுடி அம்பலத்
தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
கங்குற் சிறிதுயிலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஊர் மழ விடையாய் தவழாநின்ற இளைய வேற்றையுடையாய்; ஆறு ஊர் சடைமுடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும் ஆறுபரந்த சடைமுடியையுடைய அம்பலத்தின் கணுளராகிய அண்டரதண்டமுழுதையும் யாம் பெறினும்; வண்கதிர் வெதுப்பு நீறு ஊர் கொடு நெறி சென்று ஞாயிற்றினுடைய வளவிய கதிர்கள் வெதுப்பிய நீறுபரந்த கொடியநெறியைச் சென்று; இச் செறி மென்முலை நெருங்க இச்செறிந்த மெல்லிய முலைகள் எம்முடைய மார்பினிடை வந்தடர; சீறூர் மரை அதளின் தங்கு கங்குல் சிறுதுயில் மாறு கண்டிலம் நெறியாற்சிறிய வூரின்கண் மரையதட் பள்ளி யிற்றங்கிய இரவிற் சிறிய துயிற்குமாறு கண்டிலம்; அதனை நீ யுள்ளியுமறிதியோ? எ -று.

அண்டரதண்டமுழுதும் பெறுதலால் வருமின்பமும் அத்துயி லான்வந்த வின்பத்திற்கு மாறில்லையென்ற வாறு. இளவேறு - புதல்வன். தமக்குத்தக்க பள்ளியுமிடமு மின்மையிற் சிறுதுயிலென்றான். துயிலும்பொழுதிற்றுயிலாப் பொழுது பெரிதாகலின் அவ்வாறு கூறினானெனினுமமையும். துயிற்கென்னு நான்கனுருபு விகாரவகை யாற்றொக்கு நின்றது. முன்னிகழ்ந்தது கூறுவானாய் உண்ணின்ற சிவப்பாற்று வித்தது. ஞெமுங்க வென்பதூஉம், மரவத ளென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளை மகிழ்வித்தல்.398

குறிப்புரை :

25.47 முன்னிகழ்வுரைத்தூடறீர்த்தல் முன்னிகழ்வுரைத்தூடறீர்த்தல் என்பது கலவியிடத்தூடா நின்ற தலைமகளுக்கு, யாங்கொடிய நெறியைச் சென்று சிறியவூரின்கண் மரையதட்பள்ளியின் இச்செறிந்த மெல்லிய முலைகள் என்மார்பிடை வந்தடர்க்கத் தங்கிய சிறிய துயிற்கு மாறுகண்டிலம்; அதனை நீ யுள்ளியுமறிதியோவென முன்னிகழ்வுரைத்துத் தலைமகன் அவளை யூடறீராநிற்றல். அதற்குச் செய்யுள்
25.47. 9; முன்னி கழ்ந்தது நன்னுதற் குரைத்து
மன்னு புனலூ ரன்மகிழ் வுற்றது.

பண் :

பாடல் எண் : 48

ஐயுற வாய்நம் அகன்கடைக்
கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாம்இதுன் னில்லே
வருகெனவெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
யூரன்ன காரிகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நம் அகன் கடைக் கண்டு ஐயுறவாய் நமதகன்ற கடைக்கட் கண்டு நின்மகனென்றையுற்று; வள் தேர் உருட்டும் மை உறு வாள் கண் மழவைத் தழுவ வளவிய சிறு தேரையுருட்டும் மையுற்ற வாட்கண்ணையுடைய புதல்வனைத் தான்வந்துதழுவ, அதனைக் கண்டு; உன் மகனே அவன் உன் மகனே; மெய் உறவாம் உறவு மெய்யாகிய வுறவே; இது உன் இல்லே இதுவும் நினதில்லமே; வருகென ஈண்டு வருவாயாக வென் றியான்கூற; கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகை கையைப் பொருந்திய மான்மறியையுடையவனது புலியூரைப் போலுங் காரிகை; வெள்கிச் சென்றாள் நாணிப்பெயர்ந்தாள்; அதனான், யானவளை யறியா தேனாக நீ நினைத்து மாயங் கூறவேண்டுவதில்லை எ-று.
ஐயுறவாகவெனத் திரித்துக்கொள்க. அரத்தகு நெடுவே லென்பது பாடமாயின், அரத்தொழிலாற்றக்க நெடுவேலெனவுரைக்க. மெய்ப்பாடு: நகை. பயன்: சிவப்பாற்றுதல். ஆற்றாமையே வாயி லாகப் புக்க தலைமகன் தலைமகளைச் சிவப்பாற்றுவிப்பான் நின்னின் வேறுசிலரெனக் கில்லையால் நீ வெகுளற்க வென்றாற் குத் தலைமகளிவ்வகை சொன்னாளென்பது. 399

குறிப்புரை :

25.48 பரத்தையைக் கண்டமைகூறிப் புலத்தல் பரத்தையைக்கண்டமை கூறிப்புலத்தல் என்பது முன்னிகழ் வுரைத் தூடறீர்த்து இன்புறப்புணரப்பட்ட தலைமகள் பிறர்க்கும் நீ இவ்வாறின்பஞ் செய்தியென்றுகூற, நின்னையொழிய யான் வேறொருத்தியையு மறியேனென்ற தலைமகனுக்கு, நின்பரத்தை போகாநின்றவள் நம்வாயிற்கணின்று தேருருட்டி விளையாடா நின்ற புதல்வனைக் கண்டு நின்மகனென்றையுற்றுத் தழுவ, நீயையுற வேண்டா; அவன் உன்மகன்; உறவு மெய்யாகிய வுறவே; ஈதும் உனதில்லமே; ஈண்டுவருவாயாகவென் றியான்கூற, அது கேட்டுத் தானாணிப் போயினாள்; யானவளை யறியேனாக நீ மாயம் கூற வேண்டுவதில்லை யெனத் தான் பரத்தையைக் கண்டமை கூறிப் பின்னு மவனொடு புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.48. பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
அரத்த நெடுவேல் அண்ணற் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 49

காரணி கற்பகங் கற்றவர்
நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி
தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்
தஞ்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க் கூரன்மற்
றியாவர்க்கும் ஊதியமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஊரன் கார் ஊரன் வேண்டாமைக் கொடுத்தலிற் காரோடொக்கும்; அணி கற்பகம் வேண்டக் கொடுத்தலின் அழகிய கற்பகத்தோடொக்கும்; கற்றவர் நல்துணை நுண்ணிய கல்வியனா கலிற் கற்றவர்க்கு நல்லவுசாத் துணை; பாணர் ஒக்கல் இசையுணர் வானுங் கெழுதகைமையானும் பாணர்க்கு அவர் சுற்றத்தோடொக்கும்; சீர் அணி சிந்தாமணி நினைத்ததுகொடுத்தலிற் சீரையுடைய நல்ல சிந்தாமணியோடொக்கும்; அணி தில்லைச் சிவனடிக்குத் தார் அணி கொன்றையன் அழகிய தில்லைக்கட் சிவனது திருவடிக்குத் தாராகி அவனாலணியப்படுங் கொன்றைப் பூவின்றன்மையையுடையன்; தக்கோர்தம் சங்கநிதி சான்றோர் தமக்குத் தொலையாத நிதியாயி ருத்தலிற் சங்கநிதியோடொக்கும்; விதி நாட்டார்க்கும் பகைவர்க்குந் தப்பாது பயன்கொடுத்தலின் விதியொடொக்கும்; உற்றவர்க்குச் சேர் ஊருணி சுற்றத்தார்க்கு அவர்வேண்டிய செய்ய விருத்தலின் அணித்தாகிய வூருணியோ டொக்கும்; யாவர்க்கும் ஊதியம் அதனான் வரைவின்றி எல்லார்க்கும் இவன் பெறும் பயன் எ-று.
தாரணிகொன்றையனென்பது குரங்கனென்பதுபோல உவமைப்பொருட்பட நின்றதெனினுமமையும். விதிசேரூருணி யென்பதற்கு முறைமையாற் சேரப்படுமூருணி யெனினுமமையும். தக்கார்க்குஞ் சுற்றத்தார்க்குங் கொடுத்தல் வண்மையன்மையின் அவரை வேறுபிரித்துக் கூறினாள். ஊடறீர்ந்து கூடியவழித் தலை மகட்கு உண்ணின்றசிவப்பு ஒருகாரணத்தாற் சிறிது புலப்பட, ஊரன் யாவர்க்கு மூதியமாகலின் அன்பானன்றி அருளாற் பரத்தையர்க்குந் தலையளிசெய்யுமன்றே; அதனான் நீ புலக்கற் பாலையல்லையென்று குறிப்பினாற் றோழி சிவப்பாற்று வித்தது. மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல்.
இவ்வகை கூத்தர் மகிழ்ந்து இன்னபோல்வன தலைமகன் குணங்களைப் பாராட்டினாரென்பது. என்னை? ``தொல்லவை யுரைத்தலு நுகர்ச்சி யேற்றலும் - பல்லாற் றானு மூடலிற் றணித்தலு - முறுதி காட்டலு மறியுமெய்ந் நிறுத்தலு - மேதுவிலுணர்த் தலுந் துணியக் காட்டலு - மணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன`` (தொல். பொருள் கற்பு - 27) என்றார் தொல்காப்பியனார். இப்பாட்டு ஐவகைத் திணைக்கும் உரித்தாகலிற் பொதுவகைத்தெனப் பெறுமென்பது.400

குறிப்புரை :

25.49 ஊதியமெடுத்துரைத் தூடறீர்த்தல் ஊதியமெடுத்துரைத்தூடறீர்த்தல் என்பது பரத்தையைக் கண்டமைகூறிப் புலந்து வேறுபட்ட தலைமகளுக்கு, இத் தன்மையனாய் யாவர்க்கு மூதியமாகலின், அன்பானன்றியருளாற் பரத்தையர்க்குந் தலையளிசெய்ய வேண்டுமன்றே; புறப்பெண்டீரைப் போல யாமவனோடு புலக்கற்பாலேமல்லேம்; அவன் வரும்பொழுது எதிர்தொழுதும் போம்பொழுது புறந்தொழுதும், புதல்வனைப் பயந்திருக்கையன்றோ நமக்குக் கடனாவதெனத் தோழி தலைமகன தூதிய மெடுத்துரைத்து அவளையூடறீர்த்து, அவனோடு பொருந்தப் பண்ணாநிற்றல். அதற்குச் செய்யுள்
25.49. இரும்பரிசில் ஏற்றவர்க்கருளி
விரும்பினர்மகிழ மேவுதலுரைத்தது.

பண் :

பாடல் எண் : 100

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.

பொழிப்புரை :

இறைவனே! நான் உன்னைப் பாடுதல் வேண்டும். பாடிப்பாடி நைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும். நான் அம்பலத்தாடும் நின் மலர்க்கழல் அடையும்படி செய்தல் வேண்டும். நீ இந்த உடம்பை ஒழித்து வீடு தந்தருளல் வேண்டும். உனக்கு வணக்கம் செய்கிறேன்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
`நான் நின்னையே பாட வேண்டும்` எனக் கூட்டுக. பிறவும் அங்ஙனம் கூட்டற்பாலன. போது - மலர். புழுக்கூடு - புழுக்களுக்கு உறைவிடமான இடம்; உடம்பு. `புழுக்கூட்டினை நீக்கு` என்றது, `உன்பால் சேர்த்துக்கொள்` என்னும் பொருளதாதலின், ``எனை`` என்ற இரண்டாவதற்கு முடிபாயிற்று. வீடவேண்டும் - நீங்க வேண்டும். பொய் - உலகப் பற்று. மெய்யர் மெய்யன் - மெய்யன்பர்களுக்கு மெய்ப்பொருளாய் உள்ளவன். இத் திருப்பாட்டில் தம் விருப்பங்கள் பலவற்றையும் பன்முறை வணக்கங்கூறி விண்ணப்பித்துக் கொண்டார். முதல் திருப்பாட்டின் முதற் சொல்லாகிய, `மெய்` என்பதனாலே இவ்விறுதித் திருப்பாட்டு முடிந் திருத்தல் அறியத்தக்கது.
சிற்பி