திருவாசகம்-திருவண்டப் பகுதி


பண் :

பாடல் எண் : 1

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக் 15
கருத்துடைக் கடவுள் திருத்தகும்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன் நாள்தொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20
மதியின் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரின் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25
மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி யெனைப் பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்னே ரில்லோன் தானே காண்க 30
ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
கானப் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க 35
அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மைஇல் ஐயோன் காண்க 45
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க
நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க
மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க 50
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க 55
தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க 65
பரமா னந்தப் பழங்கட லதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையி லேறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
ஐம்புலப் பந்தனை வாளர விரிய 70
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து
முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன
ஆயிடை வானப் பேரியாற் றகவயின்
பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்து 85
ஊழூழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்து
உருவ அருள் நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90
மாப்புகைக் கறை சேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட உழவ ராரத் தந்த
அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க 95
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க
அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க 100
எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க
காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 105
நச்சர வாட்டிய நம்பன் போற்றி
பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇச் 110
சொற்பதங் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றெனக் கெளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் 125
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்
முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் 130
இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்
கத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் 135
ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்
தாள்தளை யிடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் 145
தன்னே ரில்லோன் தானேயான தன்மை
என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி ஆட்கொண் டருளி
மறையோர் கோலங் காட்டி யருளலும்
உளையா அன்பென் புருக வோலமிட்டு 150
அலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித்
தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்
கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் 155
ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித் தாங்கன்று
அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவ தறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு 165
அருளிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் 170
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாயுட லகத்தே
குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ 175
துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்
கள்ளூ றாக்கை யமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்
கருணை வான்தேன் கலக்க 180
அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன்மா லறியாப் பெற்றி யோனே.

பொழிப்புரை :

ஆராயுமிடத்து அண்டம் எனப்படும் பேருலகின் பகுதியாகிய, உருண்டை வடிவின் விளக்கமும் அளத்தற்கரிதாகிய தன்மையும் வளமான பெருங்காட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து நின்ற அழகைச் சொல்லுமிடத்து நூற்றொரு கோடியினும் மேற்பட்டு விரிந்துள்ளன, அவை, வீட்டில் நுழைகின்ற சூரிய கிரணத்தில் நெருங்கிய அணுக்களை நிகர்க்கச் சிறியவையாகும்படி பெரியவனாய் இருப்பவன்.
பிரமனும் அவனைச் சூழ்ந்தவரும் ஆகிய அவரது தொகுதி யோடு திருமாலும் அவரைச் சூழ்ந்தோரது மிக்க கூட்டமும் உலகத்தினது உற்பத்தியும் நிலைபேறும் ஆகியவற்றை இறுதியடையச்செய்த மிகப் பெரிய ஊழிக்காலமும், அவ்வூழியின் நீக்கமும் அந்நீக்கத்தின் பின் உலகம் முன்போலத் தோன்றி நிலைபெறுதலும் பெரிதாகவும் சிறிதாகவும் வீசுகின்ற சூறைக் காற்றாகிய வீசும் வளியில் அகப்பட்ட பொருள் போலச் சுழல, அவற்றை நிலை பெயர்க்கின்ற அழகன்.
எல்லாப் பொருள்களையும் படைக்கும் பிரமனைப் படைக் கின்ற பழையவன்.
படைக்கப்பட்ட பொருளைக் காப்போனாகிய திருமாலைக் காக்கின்ற கடவுள்.
காக்கப்பட்ட பொருளை அழிப்பவன்.
அழிக்கப்பட்டவற்றை நினையாத கருத்தையுடைய கடவுள்.
சிறப்புப் பொருந்திய அறுவகைப்பட்ட சமயத்தையுடைய, ஆறுவகை ஒழுக்கத்தை உடையவர்க்கும் முத்திப் பேறாய் நின்றும், தேவர் பகுதிகள் புழுக்களை ஒக்க நிற்கின்ற பெரியோன், தினந்தோறும் சூரியனில் ஒளியை அமைத்தவன்.
அழகு பொருந்திய சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன்.
வலிய வெற்றியையுடைய நெருப்பில் வெப்பத்தை உண்டாக்கினவன்.
உண்மையாகிய ஆகாயத்தில் வியாபிக்கும் தன்மையை வைத்தவன்.
மேன்மை பொருந்திய காற்றில் அசைவை அமைத்தவன்.
நிழல் பொருந்திய நீரினிடத்து இனிய சுவையை வைத்தவன்.
வெளிப்படையாக மண்ணிடத்து வலிமையை அமைத்தவன்.
இவ்வாறே எந்நாளிலும் எவ்வளவு பல கோடியாகிய எவ்வளவோ பல பிற பொருள்களிலும், அவற்றின் தன்மையை அவ்வப் பொருள்களில் அமைத்து வைத்தவன்.
அதுவன்றி எப்பொருட்கும் முன்னே உள்ளவன்.
முழுதும் நிறைந்தவன்.
தனக்கு நிகர் இல்லாதவன்.
பழைமையாகிய பன்றியின் பல்லை அணிந்தவன்.
புலியினது தோலை அரையில் உடுத்தவன்.
திருவெண்ணீற்றை அணிந்தவன்.
அவனது பிரிவை நினைக்கும்தோறும் பொறுக்கமாட்டேன்.
ஐயோ! நான் கெட்டொழிவேன்.
இனிய இசை வீணையில் பொருந்தியிருப்பது போல, உயிர்களில் நிறைந்து இருப்பவன்.
அப்படிப்பட்டதாகிய வீணை இசை ஒன்றை அவ்விடத்து அறிந்தவன்.
மேலோன்.
பழையவன்.
பிரமனும் திருமாலும் காணவொண்ணாத பெரியவன்.
வியத்தகு தன்மைகள் உடையவன்.
எல்லாப் பொருளுமாய் இருப்பவன்.
சொல்லின் நிலையைக் கடந்த பழையோன்.
மனம் சென்று பற்றாத தூரத்தில் இருப்பவன்.
பத்தியாகிய வலையில் அகப்படுவோன்.
ஒருவன் என்னும் சொல்லால் குறிப்பிடப்படும் ஒருவன்.
பரந்த உலகம் முழுவதுமாகிப் பரந்தவன்.
அணுப் போன்ற தன்மையினையுடைய நுண்ணியவன்.
ஒப்புச் சொல்லுதற்கு அரிய பொருள்யாதினும் அரிய பொருளாகிய அரியவன்.
பொருந்தி எல்லாப் பொருளையும் காப்பவன்.
நூலறிவால் உணரப்படாத நுட்பம் உடையவன்.
மேலும் கீழுமாகிய எவ்விடத்திலும் பரவி நிற்பவன்.
முடிவும் முதலும் நீங்கினவன்.
உயிர்கட்குப் பிறவியாகிய கட்டும், வீடுபேறும் உண்டாக்குவோன்.
இயங்காப் பொருளும் ஆனவன்.
கற்ப காலத்தையும் அதன் முடிவையும் கண்டவன்.
எல்லோரும் அடையும் பொருட்டு எழுந்தருளுகின்ற தலைவன்.
தேவரும் அறிய முடியாத சிவபெருமான்.
பெண் ஆண் அலி என்னும் பாகுபாடுகளில் கலந்துள்ள தன்மையன்.
அப்பெருமானை நானும் கண்ணால் கண்டேன்.
அருள் மிகவும் சுரக்கின்ற அமிர்தம்.
அப்பொருளினது பெருங்கருணையின் ஏற்றத்தைக் கண்டேன்.
அவன் தன் திருவடிகள் பூமியில் படும்படி எழுந்தருளி வந்தான்.
அவனைச் சிவபிரான் என்று நானும் தெளிந்து கொண்டேன்.
அவன் என்னை அடிமை கொண்டருளினன்.
நீலமலர் போலும் கண்களையுடைய உமாதேவியின் பாகன்.
அத்தகைய உமாதேவியும் தானும் பிரிவின்றியே இருப்பவன்.
மேன்மையான பேரின்பக் கடல் முழுவதுமே, சூல் கொண்ட கரிய பெருமேகம் போல வடிவெடுத்து, அழகு நிறைந்த திருப்பெருந்துறை என்னும் மலைமேல் ஏறித் தக்க அருளாகிய மின்னல் வெளிச்ச மானது ஒவ்வொரு திசையிலும் பரவ, ஐவகை வேட்கைப் பிணிப் பாகிய, வாள் போன்ற கொடிய பாம்புகள் கெட்டு ஓட, பிறவி என்னும் கடுந்துன்பமாகிய வேனிலானது தனது விரிந்த தலையை மறைத்துக் கொள்ள, மிகுந்த அழகுடைய தோன்றிச் செடி போலத் தோன்றிய ஆசிரியரது ஞானவொளி விளங்க, எங்கள் பிறவிகளாகிய தம்பலப் பூச்சிகள் செறிந்து தோன்ற, இறைவனின் இரக்கமானது இனிய முரசு அடித்தாற் போல முழக்கம் செய்ய, பூப்போன்றனவாயுள்ள அடியவர் கூப்பிய கைகள் காந்தள் மலர்போல விளங்க, குறையாத இன்பம் தரும் அருளானது சிறிய துளிகளின் வடிவத்தைக் கொள்ள, நேர்மையான பேரறிவாகிய வெள்ளம் திக்கெங்கும் பரவ, துன்பமாகிய குளம் கரையழிய, மலைச் சிகரமளவுக்குப் பொருந்துமாறு உயர்ந்தும், ஆறு சமயங்களாகிய கானல் நீரினை நீர் வேட்கையுண்டாக வந்த நீண்ட கண்களையுடைய மான் கூட்டம் போன்ற சிற்றறிவு உயிர்கள் தமது அகன்ற பெருவாயினால் பருகியும், நடந்த தளர்ச்சியும் மிகுந்த தாகமும் நீங்கப் பெறாமல் உழன்றன.
அத்தருணத்தில், அந்த வானப் பேராற்றின் உள்ளிடத்தே புகுந்து பெருகி, இன்பப் பெருஞ் சுழலினை உண்டாக்கி, மெய்யாகிய மணிகளை வாரிக் கொண்டு, எமது பாசக்கட்டாகிய கரைகளை மோதி அலைத்து உடைத்து, முறை முறையாய் வளர்ந்து வந்த எங்களுடைய நல்வினை தீவினை என்னும் இருவினைகளாகிய பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி மிகுந்து வந்த அழகுமிக்க அருள் வெள்ளத்தைச் செலுத்தித் தொண்டராகிய உழவர், கடத்தற்கரிய எல்லையையுடைய சாந்தம் என்னும் பெரிய அணையைக் கட்டி, தேனோடு விரிந்த வாசனையுடைய மலர் போன்ற இருதயமாகிய குளத்திற்கு உண்மையாகிய நீர் வாயினை அமைத்து, பொறியடக்கம் என்னும் சிறந்த அகிற் புகை சேரும் வரம்பினையுடைய ஓங்காரமாகிய வண்டு ஒலிக்கும் உள்ளமாகிய குளத்திலே அருள் வெள்ளமானது மிகுதியாக மேலும் மேலும் நிறைவதைப் பார்த்து, வழிபாடு என்னும் வயலுள் அன்பு என்னும் வித்தை விதைத்துச் சிவபோகமாகிய விளைவைத் துய்க்குமாறு உதவிய உலகெங்கும் பெறுதற்கரிய மேகம் போன்றவன் வாழ்க!
கரிய படமுடைய பாம்பைக் கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க.
அரிய தவத்தினருக்கு அருளுகின்ற முதல்வன் வாழ்க.
பிறவி அச்சத்தை நீக்கின வீரன் வாழ்க.
நாள்தோறும் அடியார்களை வலிய இழுத்து ஆட்கொள்வோன் வாழ்க.
எம்மை வளைத்துக் கொள்கின்ற பெருந்துன்பத்தை நீக்குவோன் வாழ்க.
தன்னை அடைந்தவர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க.
மிகுந்த இருளில் பல வகைக் கூத்தொடு நடிப்போன் வாழ்க.
பெரிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமாதேவிக்கு அன்பன் வாழ்க.
தன்னை வணங்காது அயலாய் இருப்பார்க்கு அயலவனாயிருக்கிற எம் தலைவன் வாழ்க.
அன்பர்க்கு இளைத்த காலத்தில் சேமநிதி போல்வான் வாழ்க.
நஞ்சையுடைய பாம்பை ஆட்டிய நம் பெருமானுக்கு வணக்கம்.
எம்மைத் தனது அருட்பித்தேற்றின பெரியவனுக்கு வணக்கம்.
திருவெண்ணீற்றுப் பூச்சொடு தோன்ற வல்லவனுக்கு வணக்கம்.
நான்கு திக்கிலும் நடப்பவற்றை நடத்தி கிடப்பவற்றைக் கிடத்தி, நிற்பவற்றை நிறுத்திச் சொல்லளவைக் கடந்த பழையோன்.
மன உணர்ச்சியால் கொள்ளப் படாதவன், கண் முதலாகிய பொறி களுக்குக் காணவும் படாதவன்.
ஆகாயம் முதலிய பூதங்களை வெளிப்படையாகத் தோன்றப் படைத்தவன்.
மலரின் மணம் போன்று ஓங்கி எவ்விடத்தும் நீக்கமில்லாமல் நிறைந்து பொருந்திய தன்மையை இப்பொழுது, அடியேனுக்கு எளிதாக வந்து உணர்த்தியருளி அழிகின்ற இவ்வுடம்பை ஒழியச் செய்த சிறந்த பொருளானவன்.
இன்று எனக்கு எளியவனாய் என் உள்ளத்தில் வீற்றிருந்தவனுக்கு வணக்கம்; கனிந்து உருகுகின்ற உடம்பை அருள் செய்தவனுக்கு வணக்கம்; இன்ப ஊற்றாயிருந்து மனத்தை மகிழ்விப்பவனுக்கு வணக்கம்.
தாங்க ஒண்ணாத இன்பவெள்ளம் பரவி அலை வீச அதனை ஏற்றுப் போற்றாத உடம்பைத் தாங்குதலை விரும்பேன்.
பச்சை மணியின் குவியலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும், மின்னலின் ஒளியைத் தன்னிடத்தே கொண்ட ஒரு பொன்னொளி போல் விளங்க, மேலும் கீழும் போய்த் தேடின பிரமனுக்கும் திருமாலுக்கும் மறைந்தும், யோக முறைப்படி ஒன்றி நின்று முயன்றவர்க்கு மறைந்தும், ஒருமைப்பாடு கொண்டு நோக்குகின்ற மனத்தையுடைய உறவினர் வருந்தும்படி உறுதியோடு இருப்பவர்க்கு மறைந்தும் வேதங்களின் பொருட் கூறுபாடுகளை ஆராய்ந்து பார்த்து வருந்தினவர்க்கு மறைந்தும், இவ்வுபாயம் வழியாகக் காண்போம் என்று இருந்தவர்க்கு, அவ்வுபாயத்தில், அவ்விடத்திலே மறைந்தும், கோபம் இல்லாமல் பார்த்து மிகுதியாகப் பற்றி, ஆண் போலத் தோன்றியும், அலிபோல இயங்கியும், ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண் போலக் காணப்படும் தன் இயல்பைக் காட்டாது மறைந்தும், தூரத்தில் ஐம்புலன்களைப் போக நீக்கி அரிய மலைதோறும் சென்று, பொருந்தின பற்றுகளை எல்லாம் விட்ட வெற்றுயிரோடு கூடிய உடம்பையுடைய அரிய தவத்தினர் நோக்குக்கும் செம்மையாக மறைந்தும், ஒரு பொருள் உண்டு என்றும் இல்லை என்றும் ஐயுற்ற அறிவுக்கு மறைந்தும், முன்னே பழகிய காலத்திலும் இப்பொழுது பழகுங்காலத்திலும் எப்பொழுதும் மறைகின்ற கள்ளனைக் கண்டோம்.
ஆரவாரியுங்கள்; ஆரவாரியுங்கள்; புதிய மலர் மாலைகளால் திருவடியைக் கட்டுங்கள்; சுற்றுங்கள்; சூழுங்கள்; பின் தொடருங்கள்; விடாதீர் பிடியுங்கள் என்று சொல்லியவர்களது பற்றுதலுக்கு முழுதும் மறைந்தும், தனக்கு நிகரில்லாதவன் தானேயாகிய தன்மையை என் போல்வார் கேட்கும்படி வந்து சொல்லி வலிந்து அழைத்து, அடிமை கொண்டருளி வேதியர் கோலத்தைக் காட்டியருளுதலும் வருந்தி என்பு உருக அன்பினால் முறையிட்டு, அசைகின்ற கடல் அலைகள் போல இடையறாது ஆரவாரித்து மேலெழுந்து தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அரற்றி, பித்தர் போல் மயங்கி, வெறி பிடித்தவர் போலக் களித்து, நாட்டார் மயக்கம் கொள்ளவும் கேட்டவர் வியப்புக் கொள்ளவும் மதயானையும் ஏற்கப் பெறாத மிகப்பெரிய மதத்தால் தரியேனாக, என் உறுப்புகளைத் தீஞ்சுவையினைத் தருகின்ற கொம்புத்தேன் கொண்டு ஆக்கினான்.
பகைவருடைய பழைய ஊராகிய மூன்று புரங்களை அழகிய நகையாகிய நெருப்பினால் அழித்தது போல, அக் காலத்தில் அருளாகிய பெரிய நெருப்பினால், அடியோங்களுக்கு உரிய குடிலாகிய உடம்பை ஒருத்தரேனும் தவறாதபடி அடங்கப் பண்ணினான்.
அடியேனுக்குப் பெரிய கையிலுள்ள நெல்லிக்கனி போன்றிருந்தான்.
இவ்வாறு எனக்கு எளி வந்த கருணையின் பெருமையை யான் சொல்லுமாறு அறியேன்.
அவன் வாழ்க.
அவன் என்னைச் செய்த நிலையை நாயினேன் ஆற்றேன்.
அதன் காரணத்தையும் அறிந்திலேன்.
இது எனக்குச் செய்யும் முறையோ? ஐயோ செத்தேன்; அடியேனுக்குச் செய்த அருளையும் அறியேன்.
சிறுகச் சிறுகக் குடித்தும் நிறைவு பெற்றிலேன்: முழுதுமாய் விழுங்கியும் பொறுக்க மாட்டேன்.
செழுமையாகிய குளிர்ந்த பாற்கடலின் அலைகளை உயரச்செய்து நிறைமதி நாளில் பெருகும் கடலில் பொருந்திய நீர்போல உள்ளத்தினுள்ளே பொங்க, சொல்லிறந்த அமுதமானது ஒவ்வொரு மயிர்க் காலிலும் நிறையச் செய்தனன்; நாயினேனது உடலின் கண்ணே இருக்கை கொண்டு கொடியேனுடைய மாமிசம் செழித்த ஒவ்வொரு மடையிலும், இனிய தேனைச் பாய்ச்சி நிறைந்த ஆச்சரியமான அமுத தாரைகளை எலும்புத் துளை தோறும் ஏறச் செய்தனன்.
உருகுவதாகிய மனத்தைக் கொண்டு ஓர் உருவம் அமைத்தாற் போல அடியேனுக்கு மிகுதியும் உருகுகின்ற உடம்பை அமைத்தான்.
இனிதாகிய கனியைத் தேடுகின்ற யானை போல இறுதியில், அடியேனையும் அவனையே நாடி இருப்பதாகச் செய்தருளினன்.
என்னுள்ளே அருளாகிய பெருந்தேன் பாயும்படி, அருளொடு எழுந்தருளி மிக்க அமுதத்தினையும் அமைத்தான்.
பிரமனும் திருமாலும் தேடியும் அறியாத தன்மையுடையான்.

குறிப்புரை :

இது தில்லையில் அருளிச்செய்யப்பட்டதாகவே, யாண்டும் கூறப்படுகின்றது.
`திருவண்டப் பகுதி` என்பது, முதற் குறிப்பாற் பெற்ற பெயர், `ஆத்திசூடி` முதலியனபோல.
இதன்கண் அடிகள் இறைவனது பெருமைகள் பலவற்றையும் விரித்துக் கூறி, அன்ன பெருமைகளையுடையவன், தமக்கு மிக எளிவந்து அருள் புரிந்தமையை வியந்து, வாழ்த்துதலும், போற்றுதலும் செய்கின்றார்.
`சிவனது தூல சூக்குமத்தை வியந்தது` என்னும் பழைய குறிப்பும் இதனை ஒருவாறு உணர்த்தும்.
தொல்காப்பியனார், `குட்டம் வந்த ஆசிரியம்` என்றதனைப் பிற்காலத்தார், `இணைக் குறள் ஆசிரியப்பா` என்றனர்.
1-6, அண்டப் பகுதி - அண்டங்களாகிய இடப் பகுதிகள்.
உருண்டை, `உண்டை` என மருவி, அத்தன்மைத்தாய வடிவத்தை உணர்த்திற்று.
பிறக்கம் - விளக்கம்; பொலிவு.
`அளப்பருந் தன்மையை யுடைய காட்சி` என்க; `காட்சியோடு` என உருபு விரிக்க.
``ஒன்றனுக் கொன்று`` என்றதன்பின், `பெரிதாய்` என்பது எஞ்சிநின்றது.
`நின்ற` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று.
எழில் - எழுச்சி; பரப்பு.
``நூற்றொரு கோடியின்`` என்றது, `ஒருநூறு கோடி` என்றவாறு.
``கோடி`` என்றது, அவ்வளவினதாகிய யோசனையைக் குறித்த ஆகுபெயர்.
`கோடியினின்றும் மிகுதிப்பட விரிந்தன` என்க.
`பிருதிவி தத்துவம் முதலாகத் தொடங்கி மேற்செல்லும் தத்துவங்களுள் பிருதிவி தத்துவத்தின் அண்டம் எப்பக்கத்திலும் நூறு கோடி யோசனை பரப்புடையது` என்றும், `அதன் மேல் மூலப் பகுதிகாறும் உள்ள அண்டங்களுள் ஒன்றுபோல மற்றொன்று பத்து மடங்கு பரப்புடையது` என்றும், `அவற்றிற்கு மேல், நூறு மடங்கு, ஆயிர மடங்கு என்று இவ்வாறு சிவதத்துவம் முடிய உள்ள தத்துவ அண்டங்கள் விரிந்து கிடக்கின்றன` என்றும் ஆகமங்கள் கூறுதலின், இவ்வாறு அருளிச் செய்தார்.
``விரிந்தன`` என்ற சொற் குறிப்பானும், இங்குப் பெருமை கூறுதலே கருத்தாகலானும், ``நூற்றொரு கோடி`` என்றது, விரிவையன்றித் தொகையை யன்றென்க.
``விரிந்தன`` என்றது `விரிந்தனவாம்` என வினைப்பெயர்.
இதன்பின், ``அவை`` என்னும் சுட்டுப் பெயர் வருவிக்க.
இல்நுழை கதிரில் துன் அணுப் புரைய - இல்லத்துள் புழைவழியாகப் புகும் ஞாயிற்றின் ஒளியில் நெருங்கித் தோன்றும் நுண்துகள் போல.
சிறிய ஆக - சிறியவாய்த் தோன்றும்படி.
பெரியோன் - பெரியோனாய் நிற்பவன்.
இறைவனது பெரு வடிவொடு நோக்க, மேற் கூறிய அண்டங்கள் சிறுதுகள்களாம் என்றபடி.
இதனானே, இந்நுண்துகள்கள் மேற்கூறிய அண்டங்கள் போலப் பெரியவாய்த் தோன்றும்படி அத்துணைச் சிறியோனாய் நிற்பவன் என்பதும் பெறப்படும்.
``அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்`` என்ற (பாயிரம்.7) பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம் காண்க.
இதனால், இறைவனது வியாபகத் தன்மை கூறியவாறு.
7-12. மேற்போந்த, `தெரியின்` என்பதனை இங்குக் கூட்டி, `அவனது பெருமைகளை ஆராயுமிடத்து` என உரைக்க.
வேதியன் - பிரமன்.
தொகை - கூட்டம்.
மிகுதி - பரப்பு.
பிரம விட்டுணுக்கள் இவ்வண்டத்தில் உள்ளவாறே ஏனைய பல்கோடி அண்டங்களினும் உளராகலின், அவர்களையே, ``தொகை`` என்றும், ``மிகுதி`` என்றும் அருளினார்.
இவ்வண்டத்தில் உள்ளாரோடு ஒத்த பிரம விட்டுணுக்களது கூட்டத்தை, இவர்களுடைய கூட்டம் என உடைமையாக்கி ஓதினார், இனம் பற்றி.
சிறப்பு - வளர்ச்சி; எனவே, நிலைத்தலாயிற்று.
`பிரமரது தொகுதியும், மாயோரது மிகுதியும் தோன்றுதலையும், நிற்றலையும், இறுதியோடே புணர்ந்த ஊழி` என்க.
`புணரிய ஊழி` என்பதில், பெயரெச்சம் காலப்பெயர் கொண்டது.
ஊழி, வடமொழியில், `கற்பம்` எனப்படும்.
பிரமனும், மாயோனும் செயலொழிந்து துயிலுங் காலம், அவரவர்க்கு `நித்திய கற்பம்` என்றும், அவர் இறந்துபடுங் காலம் அவரவர்க்கு, `மகாகற்பம்` என்றும் கூறப்படுமாகலின், அவற்றுள் அவர் இறந்துபடுங் காலமாகிய மகாகற்பம் என்பது அறிவித்தற்கு, ``மாப்பேரூழி`` என்றார்.
ஆகவே, அவற்றுள், `அவரது தோன்றல், நிற்றல், அழிதல்` என்னும் மூன்றும் நிகழ்ந்து முற்றுப் பெறுமாதலின், அதனை, ``தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய`` என்று விளக்கினார்.
`ஊழி` என்னும் அஃறிணை இயற்பெயர், ஈண்டுப் பன்மையின் மேலது.
``ஊழியும்`` என்றது, `ஊழியினது தோற்றமும்` என்றவாறு.
எனவே, பின்னர்க் குறித்த நீங்குதலும் (முடிவெய்துதலும்) நிலைத்தலும் (நிகழ்தலும்) ஊழியினுடையவேயாயின.
`முதலும் முடிவும்` எனக் கூறி, நடுவை இறுதிக்கட் கூறலும் மரபாகலின், நீக்கத்தை இடை வைத்தார்.
சூக்கமொடுதூலத்து - நுண்மையும், பருமையும் ஆய இருநிலைகளிடத்தும்; இதனை, ``கொட்க`` என வருவதனோடு இயைக்க.
நுண்மை, ஒடுக்கமும், பருமை, தோற்றம் நிகழ்ச்சி என்னும் இரண்டும் ஆதல் அறிக.
``சூறை மாருதத்து`` என்பதனை இதனோடே கூட்டி நாற்சீரடியாக்கி, ``எறியது வளியின்`` என்பதனை இருசீரடி ஆக்குவாரும் உளர்.
அகவற்பாவினுள் வரும் இருசீரடிக்கு மூவசைச் சீராதல், ஆசிரிய உரிச்சீராதல், இரண்டுமாதல் அடுத்துவந்து நிற்பதே இன்னோசை பயப்பதாகலின், அது பொருந்தாமையறிக.
இவ்வாறு அடிவரையறை செய்யவே, ஓசை வேறு பாட்டானும், ஈண்டுரைக்கப்படும் பொருளே தோன்றுதல் காண்க.
சூறை மாருதம் - சூறாவளி; சுழல்காற்று.
மாருதத்து - மாருத மான நிலையில்.
`எறி வளி` என இயையும்.
`அவ்வளி` எனச் சுட்டாக ஓதற்பாலதனை, `அது வளி` என இரு பெயரொட்டாக ஓதினார், `அது காலை, அது போழ்து` என்றற் றொடக்கத்தனபோல.
வளியின் - வளி போல.
இதனை, ``பெயர்க்கும்`` என வருவதனோடு இயைக்க.
`மாப் பேரூழிகளது தோற்றங்களும், நிகழ்ச்சிகளும், முடிவுகளும், `நுண்மை, பருமை` என்னும் இருவகை நிலைகளில் தமக்கு ஏற்ற நிலையிற் பொருந்திச் சுழன்று வருமாறு, சுழல் காற்றைப் போலச் சுழற்றுகின்ற குழகன்` என்க.
பிரம விட்டுணுக்கள் என்னும் காரணக் கடவுளர் முதலியோரையும், தோன்றி நின்று அழியச் செய்வது, ஊழி முதலிய பெயர்களைப் பெற்று விளங்கும் காலம்; அதனைத் தோன்றி நின்று அழியுமாறு செய்கின்றவன் இறைவன் என, அவனது முதன்மையை வியந்தவாறு.
மாப்பேரூழியது அளவை, சூறாவளியில் அகப்பட்டு விரையச் சுழலும் சிறு பொருள்களது சுழற்சியளவோடு ஒப்புமைப்படுத்தியது என்னையெனின், `அது தானும் நிலையுடையதன்றி மாறித் தோன்றுவதேயாம்` என அதனது நிலையாமையை இனிது விளக்குதற் பொருட்டென்க.
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
எனத் திருவள்ளுவ நாயனாரும் (குறள். 339.)
நிலையாமையை இவ்வாறு விளக்குதல் காண்க.
எல்லாவற்றையும் ஆக்கிக் காத்து அழித்துச் சுழற்றி நிற்பது காலம்; அதனை அங்ஙனம் சுழலச் செய்பவன் இறைவன் என்றதனால், அவற்றின்வழிச் சுழல்வனவற்றையும் அங்ஙனம் சுழற்றுபவன் அவனே என்பது, தெற்றென விளங்கிக் கிடந்தது.
எனவே காலத்துட்படாதவன் இறைவன் ஒருவனேயன்றிப் பிறர் இல்லை என்பது பெறப்பட்டது.
சிவபெருமான் காலனைக் காலால் உதைத்தமை, `அவன் காலத்தைத் தன்வழி நடாத்துபவன்` என்பதையும், மார்க்கண்டேயர் அப்பெருமானை வழிபட்டு என்றும் பதினாறு வயதாய் இருக்கப் பெற்றமை, அவனை அடைந்தவரே காலத்தைக் கடப்பவராவர் என்பதையும் விளக்குவனவாம்.
இவ்வரலாறு இங்ஙனம் உலகறிய வழங்கி வருவதாகவும், அப்பெருமானை வழிபடுதலினும் சிறப்பாக ஒன்பான் கோள்கள் முதலிய காலக் கடவுளரை வழிபட்டுக் காலம் போக்குவாரது நிலையை நாம் என்னென்பது! காலம் தன்வயம் உடையதன்று; இறைவன் ஒருவனே தன்வயம் உடையவன்; காலம் அவன்வழிப்பட்டதே என்பதை, காலமே கடவுளாகக் கண்டனம் தொழிலுக்கென்னிற்
காலமோ அறிவின் றாகும்; ஆயினும் காரியங்கள்
காலமே தரவே காண்டும்; காரணன் விதியினுக்குக்
காலமும் கடவுள் ஏவ லால்துணைக் கார ணங்கான்.
என விளக்குகின்றது, சிவஞான சித்தி (சூ.1.10.).
``குழகன்`` என்றார், எல்லாவற்றையும் கொட்கப் பெயர்ப்பினும் தான் அப்பெயர்ச்சியுட்படாது, என்றும் ஒரு பெற்றியனாயே நிற்பான் என்பது அறிவித்தற்கு.
எனவே, ``கொட்கப் பெயர்க்கும்`` என்றதனால், அவனது முடிவிலாற்றலையும், ``குழகன்`` என்றதனால் அவனது தன்வயமுடைமையையும் குறித்தவாறாயிற்று.
13-19. ``முழுவதும்`` என்றதனை இவற்றொடு கூட்டிப் பொருள் கொள்க.
``முழுவதும்`` என்றது, அவரவரது எல்லைக் குட்பட்டன எல்லாவற்றையும் என்றதாம்.
``படைப்போன், காப்போன்`` என்ற விடத்துச் சொல்லுவாரது குறிப்பு, பொருள் மாத்திரையன்றித் தொழிலொடு கூடிய பொருள் மேலதாதலின், அவை அத்தொழிலையுடைய பலர்க்கும் பொருந்துவனவாம்.
இவ்வாறு வருவதனை, ``ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும்
வருவகை தாமே வழக்கென மொழிப``
என்று அமைத்தார் தொல்காப்பியர் (பொருள்.222).
இதனை, `சாதியொருமை` என்ப.
``படைப்போன், காப்போன்`` என்றவற்றில் ஐயுருபு தொக்கு நிற்றல் வெளிப்படை.
``பழையோன்`` என்றதனால், அவனுக்கு முன்னே நின்று அவனைப் படைப்போர் ஒருவருமிலர் என்றவாறு ஆயிற்று.
இங்ஙனம் ஒருவராற் படைக்கப்படாது நிற்கும் நிலையை, `அனாதி` என்ப.
`காப்போனையும் காக்கும் முதல்வன்` என்றற்கு, ``காப்போற் காக்கும் கடவுள்`` என்றாராயினும், அதனானே, முன்னர் அவனைப் படைத்தலும் அடங்கிற்று.
கரப்போன் - அழிப்பவன்.
``படைப்போன், காப்போன்`` என்ற அவரோடொப்பக் கரப்போனாகிய உருத்திரனைச் சுட்டி, `கரப்போற் கரக்குங் கடவுள்` என்னாது, சிவபெருமானையே கரப்போனாக அருளிச்செய்தார்.
அவன் ஏனை இருவர் போலச் சகலருட்பட்டு மீளப் பிறத்தலின்றி, அதிகாரமல வாசனை, பின்பு போகமல வாசனையாயும் இலயமல வாசனையாயும் தேய்ந்தொழிய வீடெய்துவானாகலின்.
எனவே, `அழித்தல்` என்பது, மீளப் பிறப்பாரிடத்தே செய்யப்படுவதாம் என்பது தெளிக.
``கரப்பவைகருதா`` என்றதற்கு, `அழிக்கப்படும் அவற்றை அவை நிலையுறுதலுறுங் காலத்து அழிக்கக் கருதாத` எனப் பொருள் கூறுக.
இதனால், அழித்தலைத் தனது ஆற்றல் வெளிப்படுத்தல் கருதி யாதல், பிறிதொன்று கருதியாதல் தன் பொருட்டாகச் செய்யாது, உயிர் களின் பொருட்டாகவே செய்தல் பெறப்பட்டது.
படவே ``கருத்துடை`` என்றதற்கு, `அருளுள்ளத்தை யுடைய` என்பது பொருளாயிற்று.
அழித்தல் உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு என்பதனை, ``அழிப்பிளைப் பாற்றல்.............................. பார்த்திடில் அருளே எல்லாம்`` எனச் சிவஞான சித்தி விளக்குதல் காண்க (சூ.1.37.).
``கருதா`` என்றதற்கு இவ்வாறன்றி, `அழித்தவைகளை இளைப்பு நீங்குங்காறும் படைக்கக் கருதாதவன்` என உரைப்பாரும் உளர்; `கரந்தவை` என ஓதாது, ``கரப்பவை`` என ஓதினமையின், அது பொருந்தாமையறிக.
இனி, ``கருதா`` என்றதனை வினையெச்சமாக்கி, `கருத்துடை கடவுள்` எனப் பாடம் வேறாக ஓதி, `அழித்தலுட்பட்ட உயிர்கட்கு அருளக் கருதி, அவற்றின் பிறப்பை நீக்கும் கடவுள்` என்று உரைப்பாரும் உளர்.
17-19. திருத்தகும் என்றதனை இங்குக் கூட்டி, `சிறப்புத் தக்கிருக்கின்ற` என உரைக்க.
`அறுவகைச் சமயத்தால் அறுவகைப்பட்டோர்க்கும்` என்க.
ஒரோவொரு சமயத்தினும் கொள்கையும், ஒழுக்கமும் பற்றிய சிறுசிறு வேறுபாடுகள் உளவாதல்பற்றி, `ஆறு சமயம்` என்னாது, ``அறுவகைச் சமயம்`` என்று அருளினார்.
``திருத்தகும்``, எனச் சிறப்பித்தது, கடவுட் கொள்கையுடையவற்றையே பிரித்துணர்த்தற்கு.
அதனால், அவை, ஆருகதம், ஐரணிய கருப்பம், வைணவம், சௌரம், சௌமியம், வாமம்` என்றேனும், பிறவாறேனும் கொள்ளப்படும்.
அருகன், இரணிய கருப்பன் (பிரமன்), விண்டு (மாயோன்), சூரியன், சந்திரன், சத்தி என்போர் இச் சமயங்களின் தெய்வங்களாவர்.
`உலகாயதம், பௌத்தம், மீமாஞ்சை` என்னும் மதங்கள் கடவுட் கொள்கையில்லாதனவாதலாலும், வைசேடிகமும், நையாயிகமும் கடவுளையடைதல் முத்தி என்று கொள்ளாமையாலும், `காணாபத்தியம், கௌமாரம், சாத்தேயம், வைரவம், பாசுபதம், மாவிரதம்` என்னும் மதங்களின் தேவர்கள் இழித்துரைக்கற்பாலர் அல்லராதலாலும், மேற்கூறியவாறு ஏற்புடைய சமயங்களையே ஈண்டுக் கொள்க.
வாமமதத்தவர், `சத்தி` எனக் கூறுதல் சிவசத்தியை அன்று; விண்ணோர் குழுவுட் பெண் பாலார் சிலரையேயாம்; ஆதலின், அஃது ஈண்டுக் கொள்ளத்தகும் என்க.
இனி, ஒன்றிரண்டு குறைவனவாயினும், `அறுசமயம்` என்னும் வழக்குப்பற்றிக் கூறினார் எனக் கொண்டு, சிலவற்றையே கொள்ளினும் அமையும்.
பிரமன் மாயோன் இருவரது நிலை முன்னரே கூறப்பட்டமையின், மீண்டும் அவரை ஈண்டுக் கூறல் வேண்டா எனின், ஆண்டுக் காரணக் கடவுளராதல் பற்றி வேறெடுத்துக் கூறினார்; ஈண்டுச் சமயக் கடவுளராதல் பற்றிப் பிறதெய்வங்களோடொப்ப ஒருங்கெடுத்துக் கூறினார்.
அதனான் அஃது இழுக்கன்றென்க.
இக் கடவுளர்தாம் சிவபிரான்போல ஒருவரேயாகாது பலராதலின், `விண்ணோர்` என்று ஒழியாது, ``பகுதி`` என்றார்.
எல்லாச் சமயத்தவர்க்கும் அவரவர்கொண்ட முதற்பொருளே வீடுபேறாதல் அறிக.
எல்லா முதன்மையும் உடைய இறைவனொடு நோக்க, ஒரோவொரு முதன்மையையுடைய இக் கடவுளர்கள் மிகத் தாழ்ந்த புழுப் போல்வாராகலின், ``கீடம் புரையும்`` என்று அருளினார்.
கீடம் - புழு.
கிழவோன் - எல்லாப் பொருளையும் தனக்கு உரியனவாக உடையவன்; `முழுமுதற் கடவுள்` என்றபடி.
ஈண்டு, சிவபிரானை முதற்கடவுளாக உணரும் பேறில்லாது பிற கடவுளரையே முதற் கடவுளராக நினைந்து வழிபடுவாரது நிலைக்கு இரங்குதல் கருத்தன்றி மற்றைத் தேவரது இழிபுணர்த்துதல் கருத்தன்றாகலின், ``சமயம்`` என்றது, கடவுட்கொள்கையுடைய சமயங்களையே எனக் கொள்ளுதலே பொருந்துவதன்றி, எச் சமயத் தாராயினும் அவர் கொண்ட தத்துவத்தின் தலைவரே வீடுபேறாய் நிற்பராகலின், ``சமயம்`` என்றது, அனைத்துச் சமயங்களையுமாம் எனக் கொள்ளுதல் பொருந்தாமையறிக.
இனி, `வீடுபேறாய் நின்ற கிழவோன்` என இயைத்துரைப்பின் ``விண்ணோர் பகுதி கீடம்புரையும்`` என்பது, கவர்பொருட்டாய் இடை நிற்றல் பொருந்தாமையறிக.
இவற்றால் சிவபெருமானது முழுமுதற்றன்மை கூறியவாறு.
20-28. அருக்கன் - சூரியன்.
அவனது சோதி, நாள்தோறும் புதுவதாய்ப் புறப்பட்டு வருதலின், அதனை நாள்தோறும் அமைத்துத் தந்ததுபோலக் கூறினார்.
இறந்த காலத்தாற் கூறியது, முன் கண்ட நாள்களில் அது நன்கறியப்பட்டமை குறித்து, திருத்தகுமதி - அழகு தக்கிருக்கின்ற சந்திரன்.
திண்திறல் - இளையாத வலிமை; என்றது, எல்லாவற்றையும் நீறாக்கும் ஆற்றலை.
பொய் - பொய்த்தல்; இல்லை யாதல்.
இது, `விசும்பென்பது ஒன்று இல்லை என்பாரது கூற்று மெய்யாகாமை குறித்தது` விசும்பு, தனக்குக் கீழுள்ள எல்லாப் பொருட் கண்ணும் உளதாதல் அறிக.
அங்ஙனம் எல்லாவற்றிலும் நிறைந்திருத் தலையே `கலப்பு` என்றார்.
விசும்பேயன்றி ஏனைய பூதங்களும் தங் கீழ் உள்ளவற்றின் வியாபகம் உடையன என்க.
மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற.
காற்றிற்கு மேன்மை, விசும்போடு ஒருபுடை ஒத்து யாண்டும் சென்று இயங்குதலும், உயிர்கட்கு உடம்பை நிலைபெறுவித்தலுமாம்.
ஊக்கம் - கிளர்ச்சி; இயக்கம்.
கண்டோன் - ஆக்கினோன்.
நீரின்கண் பிறபொருள்களின் நிழல் தோன்றுதல் அதனது தூய்மையாலாதலின், அதனை எடுத்தோதினார்.
இன்சுவை என்றது மென்மையை.
இஃது இதனைச் செய்யும் ஆற்றல் மேல் நின்றது.
`நிகழ்த்தினோன்` எனற்பாலது, `நிகழ்ந்தோன்` எனத் தொகுக்கப்பட்டது.
திண்மை - தாங்கும் வலிமை.
ஏனைய பொருள்கள் போலன்றி உயிர்கட்கு நிலத்தின்மேல் நிற்றல் எஞ்ஞான்றும் இடையறவு படாமையின், அதனது திண்மைக் குணம் மிக வெளிப்படையாக அறியப்படுவதாயிற்று.
`என்றென்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று`.
எத்தனையோ பல கோடியாய தன்மைகளை எத்தனையோ பலவாகிய பிற பொருள்களில் அது அது அவ்வத்தன்மை யுடையதாம் படி அவற்றின்கண் பொருந்தச் செய்தோன்` என்க.
`அனைத்தனைத் தாக` என ஆக்கம் வருவித்துக்கொள்க.
`அவ்` என்னும் வகரவீற்றுச் சுட்டுப்பெயர், `வயின்` என்னும் ஏழனுருபு ஏற்று, `அவ்வயின்` என நின்றது.
அஃதான்று அதுவன்றி.
இவற்றால், படைப்பின் வியத்தகு நிலைகளை விரிக்கும் முகத்தால், இறைவனது திறப்பாட்டினை வியந்தவாறு.
29-65 இவ்வடிகள் பலவற்றினும் வரும், `காண்க` என்பன யாவும் அசைநிலைகள்.
29. கண்டாய், கண்டீர் முதலியன இறந்த காலத்தவாய் நின்ற அசையாகும்; இஃது எதிர்காலத்ததாய் நின்று அசையாயிற்று.
முன்னோன் எல்லாப் பொருள்கட்கும் முன்னிடத்தில் உள்ளவன்; தலைவன்.
முன், இடமுன்.
காலமுன், ``படைப்போற் படைக்கும் பழையோன்`` (அடி.13) என்றதனால் பெறப்பட்டது.
முழுதோன் - எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்பவன்.
30.தன் நேர் - தன்னோடு ஒக்கும் பொருள்.
``தானே`` என்றதில் தான், ஏ இரண்டும் அசைநிலைகள்.
31. ஏனம் - பன்றி.
அதனது தொன்மை, அதன் எயிற்றின் மேல் ஏற்றப்பட்டது.
எயிறு - பல்.
ஒருகால் பிரளய வெள்ளத்தில் அழுந்திய நிலத்தைத் திருமால் சுவேதவராக (வெள்ளைப்பன்றி) உருக்கொண்டு கொம்பின்மீது ஏற்றிக் காத்து, பின்னர் அச்செருக்கால் உயிர்கட்கு இடர் விளைக்க, சிவபிரான் அப்பன்றியை அழித்து, அதன் கொம்பினை மார்பில் அணிந்துகொண்டான் என்பது வரலாறு.
32.கானம் - காடு.
இஃது இனம்பற்றி வந்த அடை.
உரி - தோல்.
தாருகாவனத்து முனிவர்கள் விடுத்த புலியைச் சிவபிரான் அழித்து அதன் தோலை உடுத்துக்கொண்டனன் என்பது அறிக.
33-34. நீற்றோன் - திருநீற்றை அணிந்தவன்.
``நினை தொறும் கெடுவேன்`` என்றது, இடைக்கண் ஆற்றாமை மீதூரக் கூறியதாம்.
`அவனை நினைதோறும்` என்க.
ஆற்றேன் - அவனைக் காணாது நிற்கலாற்றேன்.
கெடுவேன் - இனி, யான் அழிந்தொழி வேன்.
35. ``இன்னிசை வீணையில்`` என்றதனை, `வீணை இன்னிசையில்` என மாற்றிப் பொருள்கொள்க.
வீணையில், இல் - போல.
இசைந்தோன் - எல்லாப் பொருளிலும் நுண்ணியனாய்க் கலந்தவன்.
முன்னர் வாளா, ``முழுதோன்`` என்றார், ஈண்டு அதனை உவமை முகத்தால் இனிது விளக்கினார்.
36. அன்னதொன்று - வீணைஇசைபோல்வதோர் இன்பம்.
அவ்வயின் - தான் நிறைந்து நின்ற அவ்விடத்து; என்றது உயிரையே எனக்கொள்க.
அறிந்தோன் - உயிர்கள் பொருட்டு அறிந்து நிற்பவன்.
இறைவன் பெத்தம் முத்தி இரண்டினும் உயிர்கட்கு விடயங்களை அறிவித்தலேயன்றி, அறிந்தும் நின்று உதவுவன் என்பதைச் சிவஞானபோதப் பதினொன்றாம் சூத்திரத்து முதல் அதிகரண பாடியத்துள் இனிது விளங்க விரித்துரைத்தமை காண்க.
37. பரமன் - மேலானவன்.
பழையோன் - மேன்மையை என்றுமே இயல்பாக உடையவன்.
39. அற்புதன் - பிறவிடத்துக் காணலாகாத தன்மைகளை யுடையவன்.
அநேகன் - பொருளால் ஒருவனாயினும், கலப்பினால் எண்ணில்லாதவனாய் இருப்பவன்.
இஃது ஒருவனே பல பொருளாய் இருத்தலை வியந்தவாறு. 40. சொற்பதம் - சூக்குமை வாக்கின் நிலை.
அது, நாத தத்துவம்.
சத்தப் பிரமவாதிகள் `நாதமே பிரமம்; அதனின் மேற்பட்ட பொருள் இல்லை` என்பர்; அஃது உண்மையன்று என்றற்கு, `அதனைக் கடந்த தொல்லோன் இறைவன்` என்று அருளினார்.
41. `சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்` சிவஞான சித்தி சூ 4.28. கூறுதல் வழக்கமாதலின், இங்கு, `சித்தம்` என்றது, உயிரினது அறிவையாம்.
அஃது அந்நாத தத்துவத்தையும் கடந்து தன்னையே பொருளாக உணர்ந்து நிற்பதாகும்.
இனி, ``சொல்`` என்றதை மத்திமை வைகரி வாக்குக்களாகக் கொள்ளின், சித்தம், அந் தக் கரணமேயாம்.
இப்பொருட்கு, `பதம், அளவு` என்றாகும்.
மாண், மாட்சி என வருதல்போல் சேண், `சேட்சி` என வந்தது.
சேண் - தொலைவு.
இதனை, `வலை` என்றது ஏகதேச உருவகமாகலின், அதனுள் அகப்படுகின்ற மான் ஆகின்றவன் என உரைக்க.
உரைக்கவே, அது பெரியோன் என்னும் பொருளையும் தோற்றுவித்தல் காண்க.
`முதற்பொருள் ஒன்றே` என்றல் அனைவர்க்கும் உடன்பாடாதலின், முழுமுதற் கடவுளாய சிவ பெருமானையே ``ஒருவன் (ஏகன்)`` என்று உபநிடதம் கூறுதல் பற்றி, (சுவேதாசுவதரம்.
), ``ஒருவன் என்னும் ஒருவன்`` என்று அருளினார்.
`ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர்மதிச் சடையன்` (திருவாய்மொழி) எனப் பிறரும் கூறினார்.
44. பொழில் - உலகம். முன்னர் ஒடுங்கிநின்று, பின்னர் விரிந்ததென்பார், ``விரிபொழில்`` என்றும், விரியுங்கால் தானே விரிய மாட்டாதாகலின், அதற்குப் பற்றுக்கோடாய் நின்று விரியச்செய்து, பின்னும் நீங்காது நிற்கின்றான் என்பார். ``முழுதாய் விரிந்தோன்`` என்றும் அருளினார். ``பற்றி யுலகை விடாதாய் போற்றி`` (தி.6.ப.55.பா.6) என்றருளியதும் இதுபற்றி. `பிரபஞ்சம்` என்னும் வட சொற்கும், `விரிவுடையது` என்பதே பொருளாதல் அறிக.
45. அணுத் தரும் தன்மை இல் - `ஆணவத்தால் தரப்படுகின்ற தன்மை இல்லாத; அதனால் பற்றப்படுதல் இல்லாத` என்றபடி. அணுத் தன்மையைச் செய்வதனை `அணு` என்றார். `ஐயன்` என்பது, `ஐயோன்` என்று ஆயிற்று.
ஐயன் - வியப்பினன். பிறர் எல்லாரும் அணுத் தன்மை எய்தியிருக்கத் தான் ஒருவனும் அதனை எய்தாதிருத்தலின் வியப்பாயிற்று.
46. இணைப்ப அரும் பெருமை இல் - தனது பெருமையோடு ஒப்பிப்பதொரு பெருமை இல்லாத.
47. ``அரியோன்`` என்றது, வாளா பெயராய் நின்றது.
48. மருவி - வேறறக் கலந்து நின்று. அறிவில் பொருள்களில் அவற்றின் குணங்களையும், அறிவுடைப் பொருளில் அவற்றின் அறிவுகளையும் வளர்க்கின்றான் ஆதலின், ``எப்பொருளும்`` என்றார்.
49. ``நூல்`` எனப் பொதுப்படக் கூறினும், ஈண்டுச் சமய நூல்களே கொள்ளப்படும். எல்லாப் பொருள்களையும் அறிதல்போல அவற்றால் அளவிட்டறிதற்கு வாராமையின், அவைபற்றி உணரும் உணர்விற்கு உணரவாரான் என்றார்.
``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ`(தி.3.ப.54.பா.3)
எனவும்,
``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான்புகில் அளவில்லை கிளக்க வேண்டா
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . எந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்``
(தி.3.ப.54.பா.4) எனவும்,
``ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர் விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்``
(தி.3 ப.54 பா.3, 4, 5) எனவும்,
``நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக`
(தி.11 அற்புதத் திருவந்தாதி-33) எனவும் பிற திருமுறைகளினும் இவ்வாறே அருளிச்செய்தல் காண்க.
50. மேலொடு கீழாய் விரிதல். எல்லாப் பொருளையும் தனது வியாபகத்துள் அடக்கிநிற்றல்.
51. அந்தம் - அழிவு. ஆதி - தோற்றம்.
52. பந்தம் - பிறப்பு நிலை. வீடு - அது நீங்கிய நிலை. இவ் விரண்டையும் உயிர்கட்கு உளவாக்குவோன் இறைவனே யாதல் அறிக. இவையே, `மறைத்தல். அருளல்` என்னும் இருதொழில்களாகக் கூறப்படுகின்றன; மறைத்தலின் விரிவே, படைத்தல் முதலிய மூன்றும்.
53. நிற்பது - அசரம். செல்வது - சரம். இவற்றால் பல்வகைப் பிறவிகளையும் குறித்தவாறு.
54. `கற்பம், ஊழி` என்பது முன்பே கூறப்பட்டது. அதன் நிகழ்ச்சி முழுவதையும், அதன் முடிவிற்குப் பின்னுள்ள நிலையையும் காண்பார் இறைவனையன்றிப் பிறர் இன்மையானும், அவை எண்ணில்லாதனவற்றை அவன் கண்டவன் ஆகலானும், ``கற்பமும் இறுதியும் கண்டோன்`` என்றார்.
55. யாவரும் பெற உறும் - முடிவில் யாவராலும் பெறுதற்கு உரியவனாய் நிற்கின்ற. முடிவு - அறியாமையால் உழன்றுதீர்தல். எனவே, `தேவராலும்` என்றது, அதற்கு இடையிலாயிற்று. `பெறுதல், உறுதல்` என வந்த சொற் குறிப்புக்களையும் ஓர்ந்துணர்க.
56. ``தேவரும்`` என்ற சிறப்பும்மையால் ஒருவரேனும் அறியாமை பெறப்பட்டது.
57. உயிரில் பொருளை, `அலி` என்றல் வடநூல் வழக்கு. இவ்வழக்குப்பற்றி அடிகள் சில விடங்களில் ஓதுதலைப் பின்னருங் காண்க. பெற்றி - தன்மை. உயிர்ப்பொருள்கள் பலவும் `பெண், ஆண்` என்னும் இருகூற்றனவாய்க் கூடிக்கலந்து வாழவும், உயிரில் பொருள்களை அவ்வாழ்விற்கு உதவவும் வைத்து. தான் அவையே யாய் நிற்கும் நிலையை, ``பெண் ஆண் அலி எனும் பெற்றியன்`` என்று வியந்தார். உயிர்ப்பொருளிடத்தே உள்ள, `அலி` என்பதொரு பிறப்பும் ஈண்டுக் கூறியதனுள் அடங்குதல் காண்க. உயிருடைய அலிப் பிறப்பு, இன்பமொழித்து ஒழிந்த புருடார்த்தங்களுள் அறத்தை யேனும், வீட்டையேனும் எய்துமாயின், வேறெண்ணப்படும்; இல்லையேல், உயிரில்லவற்றோடு ஒன்றாயொழியும் என்க;
58-65. `அத்தகையோனை யானும் கண்ணால் கண்டேன்` என உரைக்க. அவனைக் கண்ணால் கண்டவர் சிலர்; அவருள் யானும் ஒருவன் என்பது பொருளாகலின், உம்மை இறந்தது தழுவிற்றாம். ``சுரக்கும்`` எனக் குறிப்புருவகம் செய்து, சொற்பல்காவாறு ஓதினமை யின், `அவன் அருளாகிய அமுதத்தைச் சுரப்பதோர் ஊற்றென்றல் மெய்யேகாண்` என, தாம் கண்ணாற் கண்டு பெற்ற அநுபவத்தைக் கிளந்தோதியவாறாக உரைக்க. பின்வரும் தொடர்களும் அன்னவாம். அவற்றை, `அவனது கருணையின் பெருமை எத்தகையது என யான் கண்டேன்; அஃதாவது, தனது சிவந்த திருவடிகளை என் பொருட்டு நிலத்தில் தோயவைத்து வந்தான்; அவன் நம்மனோர் போலக் காணப்படினும், பிறப்பிற்பட்டுத் தோன்றாத அருட்டிரு மேனியே அவனது திருமேனி என்று யான் தெளிவாக உணர்ந்தேன்; ஆகவே, சிவபெருமான்தான் என்னை வந்து ஆட்கொண்டான்; அவன் மாதொரு கூறன்தான்; எஞ்ஞான்றும் அவளும் தானுமாகப் பிரியாது உடனாய் இருப்பவனே` என முடிக்க.
அடிகள், சிவபிரான் தம்மை வந்து ஆண்டுகொண்டருளிய உண்மையை அநுபவமாக மிகவும் தெளிவுபட இப்பகுதியில் இனி தெடுத்து அருளிச் செய்திருத்தல் நம்மனோர்க்கும் பெரிதும் பயன் தருவதாம். சிவபெருமான், பிறப்பிறப்பில்லாதவன் ஆகலானும், தம்மை ஆளவந்த திருமேனி நம்மனோரது உடம்புகள் போல எழு வகைத் தாதுக்களாலாயதாக் காணப்படாது, தண்ணிய சேயொளிப் பிழம்பாய்க் காணப்பட்டமையானும், சிவபெருமானே நேர்பட வந்து தம்மை ஆட்கொண்டான் என அடிகள் தெளிந்தார் எனவும், சிவபெருமான் மாதொரு கூறனாய் நிற்றல், தான் எத்துணையும் பெரியோனாயினும், எத்துணையும் சிறியவாய உயிர்கள் மாட்டுக் கைம்மாறு கருதாத பேரிரக்கமாகிய பண்பினையும், அது காரணமாக யாவரையும் அவரவரது நிலைக்கேற்ப இயைந்து நின்று ஆட்கொள்ளுதலாகிய செயலையும் உடையவன் என்பதை விளக்கு வதேயாகலானும், அப்பண்பையும், செயலையும், அடிகள் நேரே கண்டமையானும், தம்மை ஆட்கொண்ட பெருமான் மாதொரு கூறனாய், அவளோடு நீங்காதே நிற்பவன்தான் என்பதையும் தெற்றெனத் தெளிந்தார் எனவும் கொள்க. உடனாய் இருப்பவரை, ``உடன்`` என்று அருளினார். சிவபெருமான் மாதொரு கூறனாய் நிற்றல் மேற்கூறியவற்றையே வலியுறுத்தும் என்பதனை,
``தீதுறுவ னானால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொருகூ றல்லனோ மற்று``
(திருக்களிற்றுப்படியார்-42) என விளக்குதல் காண்க. ``உடனே`` என்றதன்பின், `ஆகலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, ``மேகன்`` என்னும் (அடி.95) வினைக்குறிப்போடு முடிக்க.
66-95. இப்பகுதியில், அடிகள், சிவபெருமான் தம்மைத் திருப்பெருந்துறையில் வந்து ஆட்கொண்டு அருள்புரிந்த சிறப்பினை நீண்டதொரு முற்றுருவகத்தால் மிக்க அழகுபட விரித்தருளுகின்றார்.
பரமானந்தம் - மேலான இன்பம்; பேரின்பம். அது, பகுதிப் பொருள் விகுதி. ஏகாரம், பிற பொருளினின்றும் பிரித்தலின், பிரி நிலை. கருமாமுகில், சிலேடையுருவகம்; `உருவமென்னும் சிறந்த சூல் கொண்ட கரிய மேகம்` என்பது பொருள். முகிலின் - முகிலாய், வரை- மலை. `திரு மின்` என இயைத்து, `அழகென்னும் மின்னல்` என உரைக்க, பந்தனை - கட்டு. `பந்தனையாகிய அரவு (பாம்பு)` என்க. வாள் - கொடிய. இரிய - அஞ்சி நீங்க. வெந்துயர் - கொடிய துன்பம். மா - பெரிய. `கோடை தனது பெரிய தலையை மறைத்துக்கொள்ள` என்க. பெரிய கோடை முழுதும் நீங்கினமையைப் பான்மை வழக்கால் இங்ஙனங் கூறினார். நீடு எழில் தோன்றி - பெருகும் இன்பமாகிய தோன்றிப் பூ. வாள் ஒளி மிளிர - மிக்க ஒளி விட்டு விளங்க. `துயர் கரப்ப` என்றமையால், தோன்ற வேண்டுவது இன்பமேயாம் ஆதலின், ``எழில்`` என்று, அதனைத் தருவதாய இன்பத்தைக் குறித்து. எமது பிறவியின்மேற் கோபம் மிகக் கொண்டு என்றது. மழைக்காலம், `இந்திர கோபம்` என்னும் வண்டினை மிகக் கொண்டிருத்தலைச் சிலேடை வகையாற் குறித்தவாறு. எனவே, இறைவன் அடிகளது பிறவிமேற்கொண்ட கோபமே இந்திர கோபமாக உருவகிக்கப்பட்ட வாறாயிற்று. முரசு எறிந்து - முர செறிந்தாற்போல. `முழங்கி` என்றது, அழைத்தருளினமையை; ``அறைகூவி ஆட்கொண்டு`` என்றல் காண்க.
அஞ்சலி - கூப்பிய கை. காந்தள் கைக்கு உவமையாதலும், மழைக்காலத்துத் தோன்றுவதாதலும் அறிக. ``பூ`` எனப்பட்ட உவமையாகிய தாமரையும், உருவகத்தின்கண் வந்த காந்தளும் அரும்பெனவே கொள்க. ``காட்ட`` என்றது, `தோன்ற` என்றபடி. எஞ்சா - குறையாத. ``அருள்`` என்றது, அருண்மொழியாகிய உபதேசத்தையும், திருநோக்கு பரிசம் முதலிய செயல்களையும். இவற்றை, `தீக்கை` என ஆகமங்கள் கூறும். துளிகொள்ள - குறிப்புருவகம். `பெய்ய` என்றவாறு. செஞ்சுடர் வெள்ளம், சிலேடை யுருவகம். `சிவந்த ஒளியை யுடைய வெள்ளம்` என்றும் `செவ்விய ஞானமாகிய வெள்ளம்` என்றும் பொருள் தந்தது. புதுவெள்ளம் சிவந்து தோன்றுதல் இயல்பு, தீக்கைகள் பலவாய் நிற்றலின் அவற்றை மழைத்துளிகளாகவும், அவை அனைத்தினாலும் விளங்கும் ஞானம் ஒன்றாய் மிக்கெழுதலின் உருவகம் செய்தார். திசை - இடம். `திசை தோறும்` என்க. `திசை` என்றது, அடியவரை, தெவிட்டுதல் - நிரம்புதல். வரையுற - மலைபோல; இதனை, ``ஓங்கி`` என்பதற்கு முன் கூட்டுக. கேதம் - குற்றங்கள். அவை, காமம், குரோதம் முதலியன. குட்டம் - பள்ளங்கள். கை அற - தூர்ந்து இடம் அற்றுப்போகுமாறு. ஓங்கி - மேலெழுந்து. இருமுச்சமயம், `உலகாயதம் பௌத்தம், மீமாஞ்சை , மாயாவாதம் , நையாயிகம், பாஞ்சராத்திரம்` என்னும் இவையென்க. இவைகளை அடிகள் சில விடங்களிற் கிளந்தோதுதல் அறிக. பேய்த்தேர் - கானல் நீர், சமயங்களைக் கானல் நீர் எனவே, `மான் கணம் எனப்பட்டோர், வீடுபேறு வேண்டி அவற்றில் நின்றோர் என்பது அமைந்து கிடந்தது. மான்களின் கண்கள் அழகும் மருண்ட பார்வையும் உடையனவாய் நுனித்து நோக்கும் இயல்பினவாதலின், ``நெடுங்கண்`` என்றார். அதனானே பொருட்கண்ணும், மெய்ப் பொருளை ஆராயும் ஆராய்ச்சியைத் தலைப்பட்டுப் பலநூல்பற்றிப் பலவாறாக ஐயுற்று நுனித்து ஆராயும் அவரது தன்மை பெறப்பட்டது. `தவமாகிய வாய்` என்க. வேட்கை மிகுதியால் பருகுதல் தோன்ற, `பெருவாய்` என்றார். அதனானே, ஞானத்திற்குத் தவமே சிறந்த வாயில் என்பதும் குறித்தவாறாயிற்று. பெருமணல்வெளியில் கடுங் கோடைக்கண் கானல் தம் அருகிலே நிரம்பத் தோன்றுமாதலின், அதனை மான்கள் வாய்வைத்துப் பருகும் என்க. பருகினும் வெறுந் தோற்ற மாவதன்றி, நீராய் வாயிடைப் புக்கு வேட்கையைத் தணியா மையின், ``அசைந்தன`` என்றார். அசைதல் - சோர்தல், அவம், தவத்திற்கு எதிரியதாதலை, ``தவம் செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார் - அவம் செய்வார்`` (குறள் - 266) என்றாற்போல்வன வற்றிற் காண்க. அஃதாவது பற்று நீங்காமை. தாபம் - நீர்வேட்கை. `அசைந்தனவாகிய அவ்விடத்து` என்க. இது காலத்தைக் குறித்தது. வானப் பேரியாற்று - பெரிய ஆகாய கங்கையைப் போல. அகவயின்-உள்ளிடத்து; என்றது அறிவினை. `அவ்விடத்தை மூடி மேலெழுந்து, இன்பமாகிய பெரிய சுழிகளை ஆங்காங்கு அழகுபடக் காட்டி` என்றது, `ஆன்ம போதத்தை விழுங்கிக் கொண்டு, பேரின்ப மாகிய கவர்ச்சியைப் பல நிலைகளிலும் தோற்றுவித்து` என்றதாம். சுழித்தல் - கோபித்தல். `சுளித்தல்` என வருவதும் இதுவே. பந்தம் - மயக்க உணர்வாகிய கட்டு. அஃது அறிவை ஏகதேசப்படுத்தலின், கரையாக உருவகம் செய்தார். `கரையை இடித்து` என்க. ``ஊழ் ஊழ் ஓங்கிய`` என்றது, `முறைமுறையாக வளர்ந்த` எனவும், `ஊழின் பயன் தோறும் உண்டாகிப் பெருகிய` எனவும் இருபொருள் தந்தது. மா மரம்-பெரிய மரத்தை. வேர் பறித்து - வேரோடு பறித்து வீழ்த்தி. எழுந்து - பெருகி. ``உருவ அருள் நீர்`` என்றதை, `அருள் உருவநீர்` எனப் பின் முன்னாக்கி உரைக்க. `அருள் உருவம்`` என்றது, திருக்கோயிலுள் இருக்கும் திருமேனியை. அஃது அதனைச் சிவனெனவே காணும் உணர்வையே குறித்தது. ஓட்டா - பல கால்கள் வழியாக எங்கும் ஓடப்பண்ணி. வெள்ளம் பிண்டமும், நீர் பிண்டிக்கப் பட்ட பொருளும் போலக் கோடலின், `வெள்ளம், நீரை ஓடப் பண்ணி யது` என்றார். இவ்வாறே,பொருளினும். சிவஞானம் பிண்டமும், திருமேனியைச் சிவனெனவே காணுதல் முதலியன பிண்டிக்கப்பட்ட பொருளுமாகக் கொள்க. `கால்கள்` பல தலங்கள் என்க. `அருவரைச் சந்தின்` என்றதனை, `சந்து அருவரையின்` என மாற்றி, இடை நிலங்களையுடைய அரிய மலைகள் போல என உரைக்க. வான் சிறை- பெரிய கரை; என்றது, கோயிலின் சுற்றுச் சுவர்களை. கட்டி - கட்டப் பட்டு; மட்டு அவிழ் - தேனோடு மலர்கின்ற. வெறி - வாசனை. குளவாய் - குளப் பரப்பு; என்றது கோயிலின் உள்ளிடத்தை. அங்கு மலர்கள் கொணர்ந்து நிறைக்கப் பெறுதலின், `மலரை யுடைய குளம்` என்றற்கு ஏற்புடையதாயிற்று. கோலி - வரையறுக்கப்பட்டு. கோயிலி னுள் எழுப்பப்படும் கரிய அகிற்புகையை வண்டாக உருவகித்தார். எனவே, ``குளம்`` என்றது திருக்கோயிலையாயிற்று. கறை - கறுப்பு. `கரைசேர்` என்பது பாடமன்று. மீக்கொள - மீக்கொள்ளுகையால். மகிழ்வார் - ஞானத்தைப் பெற்றவர். `அது நோக்கி` எனச் செயப்படு பொருள் வருவிக்க. சிவஞானத்தை அடைந்தோர் அதன்பின்னர்த் திருக்கோயில் வழிபாட்டினைச்செய்து, அதனால் அந்த ஞானம் பெருகி இன்பம் பயத்தலை அறிந்து மகிழ்தல் இயல்பாதலை யறிக. தொண்ட உழவர் - தொண்டராகிய உழவர். ``தொண்டர்`` என்றது, சத்திநிபாதத்து உத்தமராய் ஞானத்தைப் பெற விரும்புவோரை. இரு பெயரொட்டும், உயர்திணையாயின், புணரியல் நிலையிடை உணரத் தோன்றாது; (தொல் - எழுத்து 482.) ஏனெனில், `தொண்ட உழவன், தொண்ட உழத்தி, தொண்ட உழவர்` என்னுங்கால், நிலை மொழி, உயர்திணை முப்பாலையும் உணர்த்தி நிற்றலின் என்க. அண்டத்து அரும்பெறல் மேகன் - எவ்வண்டத்திலும் பெறுதற்கரிய மேகம் போன்றவனாயினான். இங்கு ``மேகம்போன்றவன்`` என உவமை வகையாற் கூறியதனை மேல், உருவக வகையால் ``கருமாமுகிலின் தோன்றி`` என்றாராகலின், கூறியது கூறலாகாமை யறிக.
இவ்வுருவகங்களைத் தொகுத்துக் காணுங்கால், `பேரின்ப மாகிய கடல், ஆசிரியக் கோலமாகிய மேகமாய்த் தோன்றித் திருப் பெருந்துறையாகிய மலையை அடைந்து, எமது பிறவியின் மேற் கோபம் மிகுத்து, முரசு எறிந்தாற்போல அழைப்பொலியாகிய இடி முழக்கத்தைச் செய்து, அருட்செயல்களும் அருள் மொழிகளுமாகிய நுண்டுளிகளைச் சொரிய, அதன்பயனாக செவ்விய ஞானமாகிய வெள்ளம் பலவிடத்தும் உள்ள அடியார்களாகிய இடங்களெல்லாம் நிறையும்படி மலைபோல ஓங்கியெழுந்து, எம் உள்ளத்திடத்துப் பாய்ந்து, இன்பமாகிய சுழிகளை ஆங்காங்கு உளவாக்கி, உருவ வழி பாட்டுணர்வாகிய நீரைப் பல தலங்களாகிய கால்களிலும் ஓடச்செய்து, திருக்கோயிலாகிய குளத்தில் நிறைய, அதனால் சிவஞானம் பெற்ற அப்பெரியோர் மேன்மேலும் மகிழ்ந்து இன்புறுதலின், அதனைக் கண்டு தொண்டர்களாகிய உழவர்கள், வழிபாடாகிய வயலுள், அன் பாகிய விதையை விதைத்து, சிவபோகமாகிய விளைவை நிரம்பத் துய்க்குமாறு அருள்புரிந்த மேகம் போன்றவனாயினான்` என்றாகும்.
இவற்றிடையே, அருளாகிய மழை பொழியுங்கால், திரு மேனியின் அழகாகிய மின்னலின் ஒளி எத்திசைகளிலும் விரிந்தன; அழைப்பொலியாகிய இடி முழக்கினால், ஐம்புல அவாவாகிய பாம்புகள் அஞ்சியோடின; அதன்பின் துன்பமாகிய கோடை முழுதும் ஒழிந்தது; இன்பமாகிய தோன்றிப் பூக்கள் அழகாக மலர்ந்தன; அடியவர்களது கூப்பிய கைகளாகிய காந்தள் அரும்புகள் காணப்பட்டன; ஞானமாகிய வெள்ளம் குற்றங்களாகிய பள்ளங் களைத் தூர்த்து, அறியாமையாகிய கரையைத் தாக்கி அலைத்து இடித்துவிட்டது; வினையாகிய பெரிய மரங்களை வேரோடு பறித்து வீழ்த்திற்று; நல்லோராகிய மான்களின் கூட்டம் ஆறு சமயங்களாகிய கானல் நீரைத் தம் தவமாகிய வாய் வழியே பருகியும் ஞானமாகிய நீரைப் பெற்று வீண்முயற்சிகளாகிய தாகம் தணியாது சோர்ந்திருக்குங் காலத்தில், இவையெல்லாம் எங்கள்பால் நிகழ்ந்தன` எனக் கூறப் பட்டது. இவற்றால், இறைவன் திருப்பெருந்துறையில் ஞானாசிரியனாய் வந்து அடிகளையுள்ளிட்ட அடியார் சிலர்க்கு ஞானத்தை அருளினமை, அவர்களேயன்றி, அஞ்ஞான்று பக்குவம் எய்தி னோரும், பின்னர்ப் பக்குவம் எய்துவோரும் ஆகிய ஏனைய அடியவர்களும் பயன்பெறுதற்கு ஏதுவாயினமையை விரித்தவாறு.
இங்ஙனம் இறைவன் அருளாகிய மழையைப் பொழிந்து அடியார்களை வாழ்வித்த சிறப்பினைப் பெரிதும் வியந்து, அவனை வாழ்த்திய அடிகள், இதனைத் தொடர்ந்து மேலும் பலவாற்றால் அவனுக்கு வாழ்த்தும், போற்றியும் கூறுகின்றார்.
96. பணம் - பாம்பின் படம்; அஃது ஆகுபெயராய், அதனையுடைய பாம்பைக் குறித்தது, முன்னின்ற, `கருமை` யென்னும் அடை, ஆகுபெயர்ப் பொருளாகிய பாம்பை விசேடித்தது, கரிய கச்சு அழகைத் தருவதாதல் அறிக.
97. ஆதி - முதல்வன்,
98. அச்சம் - பிறவிபற்றி வருவது. சேவகன் - வீரன்; இது, பிறர் அது மாட்டாமை உணர நின்றது.
99. நிச்சல் - நித்தல்; போலி. ஈர்த்து ஆளுதல், வலிய அழைத்து ஆட்கொள்ளுதல் பல்வேறிடங்களில், பல்வேறு அடியார்களைப் பல்வேறு வாயால் ஆட்கொள்ளுதலை, இடையறாது செய்தலின், `நிச்சலும்` என்றார். `அடியார்களை` என்பது வருவிக்க.
100. சிவஞானத்திற்குத் தடையாகப் பலவாற்றால் வரும் பிராரத்த கன்மங்களின் விளைவை, ``சூழ் இருந்துன்பம்`` என்றார். துடைத்தல், - விரைந்து வந்து நீக்குதல்; இஃது இப்பொருளதாலை, ``விழுமம் துடைத்தவர்`` (குறள் - 107.) என்பதன் உரையிற் காண்க.
101. எய்தினர் - தன்னை அடைந்தவர். ஆரமுது - தேவர் உலகத்திலும் கிடைத்தற்கரிய அமுதம்; பேரின்பம்.
102. கூர் இருள் - மிக்க இருளின்கண்; இது மகாசங்கார காலத்தை உணர்த்தும். கூத்தொடு - பலவகைப்பட்ட கூத்து நிலை களுடன். குனிப்போன் - நடிப்பவன்.
103. அமை - மூங்கில்,
104. ஏது - இயைபு. `தன்னோடு இயைதல் இல்லாதவர்க்குத் தானும் இயைதல் இல்லாத இறைவன்` என்க. தமக்கு அவ்வாறின்றிப் பெரிதும் இயைபுடைமை தோன்ற `` எம் இறைவன்`` என்றார்.
105. காதலர் - பேரன்புடையவர். எய்ப்பு - இளைத்தல்; இஃது இங்கு, கைப்பொருள் இன்றி வருந்துதலைக் குறித்தது. வைப்பு - இருப்பாக வைக்கப்பட்ட பொருள்; சேமநிதி. `பொருள் வரவு இல்லாது மெலிவுற்ற நிலையில், முன்பு வைத்துள்ள பொருள் உதவுதல் போல, அடியார்களுக்கு உதவுபவன்` என்றதாம். ``எய்ப்பினில் வைப்பு` என்றது உவம ஆகு பெயர்.
106. சிவபெருமான் உடம்பெங்கும் பாம்பை அணிந்திருப்பினும், ஒரு பாம்பைக் கையிற் பிடித்து ஆட்டுகின்றான் என்பது யாண்டும் கூறப்படும். ஆதலின், ``அரவு ஆட்டிய நம்பன்`` என்றார். இவ்வாறு கூறுதலைப் பின்னும், தேவாரம் முதலிய திருமுறைகளினும் காண்க. இது பிச்சைக் கோலத்தில் சிறப்பாகக் குறிக்கப்படும். இனி இதற்கு, `புறம்பயம்` என்னும் தலத்தில் சிவபெருமான் பாம்பாட்டி யாய் வந்து விடந்தீர்த்தான் என்பதொரு வரலாற்றினைப் பொருளாக உரைப்பாரும் உளர். நம்பன் - நம்புதற்கு (விரும்பதற்கு) உரியவன்.
107. அறிவை விழுங்கி யெழும் பேரன்பு பித்துப் போல நிற்றலின், அதனை, `பித்து` என வழங்குப. `எமைப் பித்தேற்றிய` என்றதை, `குடும்பத்தைக் குற்றம் மறைத்தான்` (குறள் - 1029) என்பது போலக் கொள்க.
108. நீறு - திருநீற்றுப் பூச்சு. இஃது இங்கு ஆசிரியக் கோலத்தைக் குறிப்பால் உணர்த்திற்று. ``வல்லோன்`` என்றது, `அவ்வாறு தோன்றி அடியார்களை ஆளவல்லவன்`` என்றபடி. `நாற்றிசை யின்கண்ணும்` என உருபும், முற்றும்மையும் விரிக்க.
109 - 110. நடப்பன - சரம்; நிற்பன - அசரம்; இவை இரண்டு உயிர் வகைகள். ``கிடப்பன`` என்றது, `செயல் இல்லன` என்னும் பொருட்டாய், உயிரில் பொருளைக் குறித்தது.
இஃது இறுதிக்கண் வைக்கற்பாலதாயினும், இசையின்பம் நோக்கி இடைக்கண் வைத்தார். `நட, கிட` என்னும் தன் வினைப் பகுதிகள், இறுதி நீண்டு அளபெடுத்து, பிறவினைப் பகுதிகளாயின. `எழூஉ, உறூஉ` முதலியனபோல. எனவே, ஈண்டுப் போந்த அளபெடைகள் யாவும் சொல்லிசை நிறைக்கவே வந்தனவாதல் அறிக. ``நடாஅய், கிடாஅய்`` என்றவற்றில், யகரமெய் வினையெச்ச விகுதி. `ஆய், போய்` என்பவற்றிற் போல. `நடப்பனவற்றை நடத்தி, கிடப்பனவற்றைக் கிடத்தி, நிற்பனவற்றை நிறுத்தி` என்றது, `பல்வேறு வகையான எல்லாப் பொருள்களையும் படைத்து` என்றவாறு.
111. இங்ஙனம், எல்லாவற்றையும் படைப்பினும், தான் அவற்றிற்கு அகப்படாது அப்பாற்பட்டவன் என்றற்கும், `அவை போலத் தோன்றி ஒடுங்குபவன் அல்லன்` என்றற்கும், `சொற்பதங் கடந்த`` என்றும், ``தொல்லோன்`` என்றும் கூறினார். ``சொற்பதம்`` என்றதற்குப் பொருள் மேலே உரைக்கப்பட்டது.
112. உள்ளத்து உணர்ச்சி - கருதலளவை. கொள்ளவும் - கருதவும். கொள்ளுதல், கருதுதல் ஆதலை, `கொள்கை, கோட்பாடு` என்பவற்றால் அறிக.
113. ``புலன்` என்றது, பொறியை. `காட்சி` என்பது, காணப் படுதலைக் குறித்து நிற்றலும் வழக்கேயாதலின், ஈண்டு அவ்வாறு நின்றது.
114. வெளிப்பட - தோன்றும்படி. வகுத்தோன் - வகைபடத் தோற்றுவித்தோன்.
115. உயர்ந்து - சிறந்து. பூவிற்கு நாற்றம் சிறந்தவாறு போல எல்லாப் பொருட்கும் சிறந்தவன் இறைவன் என்றபடி.
116-117. `பெருமை எளிவந்து` என, பண்பு பண்பியோடு சார்த்தி முடிக்கப்பட்டது. இவ்வாறன்றி, `இன்றெனக்கு எளிவந்து இருந்தனன்`` எனப் பின்னர் வருவதன் பொருளே இதற்கும் பொருளாக உரைப்பர்.
`எளிது` என்பது ஈறு குன்றி, `வருதல்` என்பதனோடு புணர்ந்து, `எளிவருதல்` என நிற்றல் செய்யுள் முடிபு. அவ்வாற்றானே இங்கு `எளிவந்து` என வந்தது என்க, ``அருளி`` என்றது, துணை வினை. இதனானே, எளிவந்தது, அருளால் என்பது போந்தது.
118. ஆக்கை - உடம்பு; என்றது, அதன் தன்மையை.
``யாக்கைத் - தன்பரிசும் வினையிரண்டும் சாரும்மலம் [மூன்றும் அற
அன்புபிழம் பாய்த்திரிவார்``
(தி.12 கண்ணப்பர் புரா. 154) என்று அருளிச்செய்தார் சேக்கிழார் நாயனாரும். ஒண்பொருள் - தூய்தாகிய பொருளாய் உள்ளவன். `ஆதலின், எனது யாக்கையின் மாசினை ஒழித்தான்` என்றதாம்.
119. ``இருந்தனன்`` என்றது வினையாகலின், `அவனுக்கு` என்பது வருவிக்க.
120. அளிதரல் - நெகிழ்தல்; இஃது அன்பினால் ஆவதாம். எனவே, மேல், ``அன்புபிழம்பாய்த் திரிவார்`` எனக் காட்டிய நிலையே அடிகள் மாட்டும் அமைந்தமையறிக.
121. ஊற்று இருந்து - இன்ப ஊற்றாய் உள்ளிருந்து, உள்ளம் - அடியார்களது உள்ளங்களை. களிப்போன் - களிக்கச் செய்வோன். `களிப்பிப்போன்` என்பது, `களிப்போன்` எனக் குறைந்து நின்றது. ``செய்தோன், களிப்போன்` என்பவற்றில் நான்கனுருபு தொகுத்தலாயிற்று.
122-123. மேல் இறைவனது பெருமையை விதந்தோதிப் போற்றியவர் இனி அவனது அருமையை விதந்தருளிச் செய்கின்றார். தாங்கற்கரிய பேரின்ப வெள்ளம் எங்கும் பரந்து அலையெறியாநிற்ப, அதனைப் பெற்றுப் பேணமாட்டாத மாசுடம்பினைச் சுமத்தலாகிய துன்ப நிலையை யான் விண்ணப்பித்திலேன்; `ஆயினும்` என்பது இவ்வடிகளின் பொருள். `ஆயினும்` என்பது சொல்லெச்சம். இது, `காட்டியருளலும்` என வருவதனோடு (அடி 149) முடியும்.
124-126. மரகதம் - பச்சைமணி. குவால் - குவியல். மா மணி- சிறந்த மணி. பிறக்கம் - மிகுதி; இதுவும் குவியல் என்றவாறாம். மரகதக் குவியலும் மாணிக்கக் குவியலும் இணைந்து மின்னுகின்ற ஒளியை உடைய ஓர் அழகிய ஒளி; சிவசோதி. இது, `சத்தியின் கூறாகிய நீல ஒளியையும், தன் கூறாகிய செவ்வொளியையும் கொண்டது` என்பதை `கிருஷ்ண பிங்களம்` என மகாநாராயணோபநிடதம் கூறுமாற்றால் அறிக.
திகழ - தம்முன் விளங்க. திசை, இங்குக் கீழும், மேலும். முகன், `முகம்` என்பதன் போலி, `பக்கம்` என்பது இதன் பொருள். சிவசோதியை, கீழும் மேலும் சென்று அதன் அடியையும் முடியையும் தேடினோர் திருமாலும், பிரமனும் என்பதும், அவர் அங்ஙனம் தேடிக் கண்டிலர் என்பதும் வெளிப்படை. இது முதலாக, ``ஒளித்தும்`` என வருவன பலவற்றுள்ளும் உள்ள உம்மைகள் உயர்வு சிறப்பினவாம். இது தேவர்க்கு அரியனாயினமையை அருளியவாறு.
127. முறையுளி - முறைப்படி. ஒற்றி - மனத்தைப் பொருத்தி. முயன்றவர் - சரியை கிரியைகளைச் செய்தவர், அவர்கட்கும் இறைவன் மறைந்து நின்றே பயன் தருதலின், ``ஒளித்தும்`` என்றார்.
128-129. யோகநெறியில் தியான சமாதிகளில் நிற்பவரை, ``ஒற்றுமைகொண்டு நோக்கும் உள்ளத்து உறைப்பவர்`` என்றார். உறைத்தல் - பிறழாது அழுந்தி நிற்றல். உலகருள் இவர் தம் சுற்றத்தார் இவரது செயலைக்கண்டு இரங்குவராதலின், ``உற்றவர் வருந்த`` என்றார். இவர்கள் இறைவனைக் காண்பதும் பாவனையே யாதலின், அவர்கட்கும் இறைவன் தோன்றானாயினான்.
130. மறைத்திறம் - வேதத்தினது கூறுபாடுகள். அவை, `கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம்` என்பன. இவை முறையே, வேள்வி முதலிய கன்மங்களையும் தகர வித்தை முதலிய உபாசனைகளையும், `தத்துவ ஞானம்` எனப்படும் மெய்ப்பொருள் உணர்வையும் கூறும். வேதத்தின் ஞான காண்டம் முதற்பொருளின் இயல்பைச் சூத்திரம்போலக் குறிப்பாற் கூறுதலல்லது, உரைபோல இனிது விளங்கக் கூறாமையின், அதன்வழியானும் இறைவனை உணர்தல் கூடாதாயிற்று. வேதத்தின் ஏனைய பகுதிகளின்வழி உணர லாகாமை வெளிப்படை. `மறைத்திறத்தால்` என, மூன்றாவது விரிக்க.
131-132. ``தந்திரம்`` என்றது, சிவாகமங்களல்லாத பிற ஆகமங்களை. காண்டும் - காண்போம். இன் இரண்டும் ஏதுப் பொருளவாய ஐந்தனுருபுகள். ``அவ்வயின்`` என்றது, முன்னர்ப்போந்த ``காண்டும்`` என்றதனைச் சுட்டிநிற்றலின், `அங்ஙனம் காணுதற்கண்` என உரைக்க. இதன்பின், ``ஒளித்தும்`` என்றது, சிறிதும் தோன்றாமையை. சிறிதும் தோன்றாது மறைதல், புத்த அருக ஆகமங்களின்வழிக் காணலுறுவார்க்காம். அவர் இறைவனைக் காண முயல்வாரல்லரெனின், அஃ து உண்மையாயினும், பேரா இயற்கை (குறள்- 370.)யாகிய வீடுபேற்றைப்பெற விழைந்து முயலுதலானும், வீடு சிவ பெருமானின் வேறன்றாதலானும் இங்ஙனம் கூறினார். தந்திரம், `நூல்` எனவும் பொருள் தருமாதலின், சாங்கியம் போல்வனவும் கொள்ளப்படும் என்க.
133-135. பாஞ்சராத்திரம், பாசுபதம் முதலிய ஆகமங்களின் வழிக் காண முயல்பவர்களில் சிலர்க்கு ஆண்வடிவாயும், சிலர்க்குப் பெண்வடிவாயும், சிலர்க்கு அஃறிணைப் பொருள் வடிவாயும் தோன்றி மறைந்து தனது உண்மை நிலையைக் காட்டாதொழிதலை இவற்றுட் குறித்தருளினார். ஆண் வடிவில் தோன்றுதல் பாஞ்ச ராத்திரம், பாசுபதம் முதலிய தந்திரங்களின்வழிக் காணப்புகுவார்க்கு எனவும், பெண்வடிவில் தோன்றுதல் யாமளம், வாமம், முதலிய தந்திரங்களின் வழிக் காணப்புகுவார்க்கு எனவும், அஃறிணைப் பொருள் வடிவில் தோன்றுதல் மிருதி முதலியவற்றின்வழிக் காணப் புகுவார்க்கு எனவும் கொள்க. மிருதி முதலியவற்றின்வழி நிற்போர் மந்திரங்கள், ஞாயிறு முதலிய சுடர்கள், கங்கை முதலிய பல தீர்த்தங்கள் முதலானவையே பயன் தருவன எனக்கருதி வழிபடு வோராதல் அறிக. இவர்களை இறைவன் புத்தர் முதலியோரைப்போல் வெறுத்தொதுக்காது, அருளோடு நோக்கி, இன்னும் தன்னை மிக அணுகிவருமாறு பற்றிக்கொண்டு, இவ்வாற்றாலெல்லாம் பயன் தருதலால், ``முனிவற நோக்கி நனிவரக் கௌவி`` என்றும், அவ்வாறு அருளினும் தனது உண்மை இயல்பை இவர்கட்குக் காட்டாமையின், ``ஒளித்தும்`` என்றும் அருளிச் செய்தார். எனவே, ``அவ்வயின் ஒளித்தும்`` என்றது, இத்தந்திரத்திற் காண்டும் என்று இருந்தோருள் ஒரு சாரார்க்கு என்பதும், தோன்றி, பெயர்ந்து ஒளித்தும்`` என்றது, அவருள் வேறு சில சாரார்க்கு என்பதும் போந்தன. இத்துணையும் மக்களுள் இல்லற நிலையில் நிற்பார்க்கு அரியனாயினமை கூறிய வாறு.
136-138. ``சேண்வயின்`` என்றதனை, இவற்றொடு கூட்டுக. ஐம்புலன் - ஐம்புல ஆசை; `அவற்றைச் சேண்வயின் நீங்கப் போக்கி` என்க. சேண்வயின் - சேயதாய இடம். அருவரை - ஏறுதற்கு அரிய மலை. துற்றவை - உண்டவை; நுகர்ந்த இன்பங்கள். ``துறந்த`` என்றது, `வெறுத்துநின்ற` என்றவாறு. `வெற்றாக்கை, உயிராக்கை` எனத் தனித்தனி இயையும். உணவைத் தானும் உண்ணாது விடுத்தலின், ``வெற்றாக்கை`` என்றார். `வெற்றாக்கை` என்றே ஒழியின், `உயிரில்லது` எனப் பொருள்படுமாகலின், `உயிராக்கை` என்றும் அருளினார். தவர் - நீர்பலகால் மூழ்கல் முதலிய நாலிருவழக்கினையுடைய தாபதர்கள் (புறப்பொருள் வெண்பா மாலை-168.). காட்சி - அறிவு. திருந்த - அறிவராய் (ஞானிகளாய்)த் திருந்துமாறு. இது, துறவற நிலையில் நின்றார்க்கு அரியனாயினமை அருளியவாறு. இவர் கிரியா குருவைப் பெற்று இந்நிலையில் நின்றதல்லது ஞான குருவைப் பெறாமையின், இவர்க்கு இறைவனது உண்மை இயல்பு விளங்காதாயிற்று.
139. அறிவு, அநுபவமுடைய நல்லாசிரியரால் அறிவுறுக்கப் பெற்ற உண்மைப் பொருளைப் பெற்ற அறிவு. அது, பின்னர் அப் பொருளை அளவைகளானும் பொருந்துமாற்றானும் ஆராய்தலை, ``ஒன்று உண்டு, இல்லை என்ற`` என்றார். `ஒன்றாகிய மெய்ப்பொருள் உண்டு என்றும், இல்லை என்றும் ஆராய்ந்த` என உரைக்க. இங்ஙனம் ஆராயுங்காலத்து, இறைவன் எல்லாமாய் நிற்கும் கலப்புநிலை விளங்குவதன்றி, அவன் தன்னியல்பில் நிற்கும் உண்மைநிலை விளங்காமையின், இறைவன் இவர்க்கும் ஒளிப்பவனேயாகின்றான். `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
140-145. பண்டு, சரியை கிரியை யோகங்களைச் செய்து போந்த காலம். நல்லாசிரியர்பாற் கேட்டுச் சிந்தித்தகாலத்தை, `இன்று` என்றனர் என்க. ஏகாரங்கள் இரண்டும் பிரிநிலை. அவற்றாற் பிரிக்கப் பட்டு நின்றவை, அவை அடுத்து நின்ற காலத்திற்குப் பிற்பட்ட காலங்கள். சோரன் - கள்வன். தெளிதல் உணர்வில் விளங்கிய அருள் நிலையைக் கண்டு, `கண்டனம்` என்றனர். எனினும், நிட்டை நிலையை அடையாமையின், தம்முனைப்பால் பல கூறுவாராயினர். ஆர்மின் - கட்டுங்கள். கள்வன் அகப்படிற் கட்டுதல் இயல்பு. அடுக்கு, விரைவுபற்றி வந்தது. எனவே, இந்நிலையிலும் ஒளிப்பான் எனக் கருதினமை பெறப்பட்டது. நாள் மலர்ப் பிணையல் - அன்றலர்ந்த மலர்களாலாகிய மாலை. தாள் - கால். தளை - விலங்கு. ஒளித்தல் பற்றி, `சோரன்` என்றார்களாயினும், அன்பாற் செய்யும் வழிபாட்டி னாலல்லது அவனை அகப்படுத்தல் இயலாது என்பதை உணர்வார் ஆதலின், `நாண்மலர்ப் பிணையலில் தாள்தளை இடுமின்` என்றனர். கட்டுதலும், தளையிடுதலும் வேறு வேறாதல் அறிக. இங்ஙனம் விரையவும், நீங்க முயலுதல்பற்றி, `சுற்றுமின்` (வளையுங்கள்) என்றும், அஃது இயலாமையின், `சூழ்மின் (என்செய்வதென்று ஆராயுங்கள்)` என்றும், அங்ஙனம் ஆராய்வதற்குள் நீங்கினமையின், `தொடர்மின், விடேன்மின், பற்றுமின்` என்றுங் கூறி அலமந்தனர். அவர் அங்ஙனம் அலமரவும். இறைவன் அவரது பற்றினின்று (பிடியினின்றும்) முற்ற ஒளித்தான். அஃதாவது அருள் நிலையைத் தந்ததன்றி, ஆனந்த நிலையைத் தாராதொழிந்தனன் என்றதாம். `பற்றின்` என, நீக்கப்பொருட்கண் வந்த இன்னுருபு விரிக்க. `முற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
``ஒளித்தும், ஒளித்தும்`` எனவந்த எச்சங்கள் எல்லாம், ``என்னேரனையோர் கேட்க வந்து`` என்றதில் `வந்து` என்றதனோடு முடியும். ``தன்னேரில்லோன்`` என்றது, `இறைவன்` என்னும் அளவாய் நின்றது, `மேற்கூறியவாறெல்லாம் முயன்றார் பலர்க்கும் தனது உண்மை நிலையைக் காட்டாது ஒளித்த இறைவன், அதனை என் போல்வார் கேட்டுணரும்படி நேரே எழுந்தருளி வந்து இயம்பியருளினான்` என்று அடிகள் அன்புமீதூரப்பெற்று அருளுதல் காண்க. ``நேரனையோர்`` ஒரு பொருட் பன்மொழி. `என்போல்வார்` என்றது, மேற்கூறிய முயற்சிகளுள் ஒன்றும் செய்யாது, உலகியலில் நின்றவர்களை. இறைவனது பெருங்கருணைத்திறத்தை அடிகள் இங்ஙனம் அருளிச் செய்தாராயினும், இவரது முன்னைத் தவமுதிர்ச்சியின் பயனே அங்ஙனம் இறைவன் நேர்நின்று ஆட்கொண்டது என்க. இஃது இத்திருமுறையுள் யாண்டும் ஒக்கும், முயலாது நின்ற நிலையில் வலிய வந்து ஆண்டருளியதையே ``அறைகூவி ஆட்கொண்டருளி`` என்று அருளிச் செய்தார். இயம்பி ஆட்கொண்ட பின்னரும் நீங்காது உடனிருந்தமை தோன்ற, `மறையோர் கோலத்தனாய் வந்து ஆட்கொண்டருளி` என்னாது, `வந்து ஆட்கொண்டருளி, `மறையோர் கோலம் காட்டியருளலும்` என்றார். `காட்டியருளலும் ஆற்றேனாக` என இயையும்.
150-157. உளையா அன்பு - வருந்திப்பெறாத - இயல்பாகத் தோன்றிய அன்பு. `உலையா அன்பு` என்பதே பாடமாகல்வேண்டும். `அன்பினால்` என உருபு விரிக்க, `என்பும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது. உருகும் இயல்பின்மை, எலும்பிற்கு இழிவு என்க. அலைகடல் - அலைகின்ற கடல்நீர். திரையின் - அலைகள் போல. ஆர்த்து - ஆரவாரித்து, கடலில் ஆரவாரம் செய்வன அலைகளேயாதல் அறிக. ஓங்கி - துள்ளி. தலை தடுமாறா - தலை கீழாம்படி. மத்தம் - உன்மத்தம். பித்து, தொடக்க நிலை; மத்தம், முதிர்ந்த நிலை. மதித்தல் - மத்திட்டுக் கலக்குதல்; இங்கு அதுபோல உலகில் உள்ளாரது உள்ளங்களை வியப்பாலும், அச்சத்தாலும் நிலை குலையச் செய்தமையைக் குறித்தது. ஆனேற்றை, ``ஏற்றா`` என்றார். ``தடப்பெரு`` ஒரு பொருட் பன்மொழி. ஆனேறுகளும் மதங்கொள்ளு தல் இயல்பு. `களிறு ஏற்றா இவற்றின் மிகப்பெருமதம் அவற்றால் ஆற்ற வொண்ணாமைபோல, இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற களிப்பை யான் ஆற்றேனாய் நிற்க என்க. ``ஆற்றேனாக`` என்றதன் பின், `அந்நிலையில்` என்பது வருவிக்க. ``அவயவம்`` என்றதற்கு, `என் உறுப்புக்களை` என உரைக்க. கோல் தேன் - கொம்புத்தேன். ``செய்தனன்`` என்றது, `செய்தாற்போல ஆக்கினன்` என்றபடி. அஃதாவது `உள்ளமும் உடலும் ஒருங்கே இன்பவெள்ளத்தில் மூழ்கச் செய்தனன்` என்றதாம்.
158-162. ஏற்றார் - தனது போரினை ஏற்றுக் கொண்டவர், ``மூதூர்`` என்றது, திரிபுரத்தை, `மூதூரை வீழ்வித்து` என இயையும். ஆங்கு, உவம உருபு. ``அன்று`` என்றதனை, முதற்கண், கூட்டுக. ``அருட்பெருந் தீ` என்றது, சோதியை, ``கருவார் சோதி`` (கீர்த்தி-55) என்றது காண்க. அடிக்குடில் - முதலிற் கிடைத்த சிறிய இல்லம்; உடம்பு. `வாழாமை` என்பது குறுகிநின்றது. `அடியோங்களது அடிக் குடிலுள் ஒருத்தரும் வாழாதபடி, அருட்பெருந்தீயின் ஒடுக்கினன்` என்க. ``எனக்கு`` எனப் பின்னர்த் தம்மை வேறு கூறலின், ``ஒருத்தரும்`` என்றது, அடிகளை ஒழிந்தோரையேயாம். ஆயினும், யானும் அக்குடிலில் இருக்க `என்னை ஒடுக்கா தொழிந்தனன்` என்பது தோன்ற, `அடியார் அடிக்குடில்` என்னாது, ``அடியோம் அடிக்குடில்`` என்றார். இறைவன் அந்தணனாய் வந்து நிகழ்த்தியன பலவுங் கூறுகின்றாராதலின், பிறர்க்கு அருளியவற்றையும் கூறினார் என்க. தடக் கை - பெரிய கை; என்றது, தடங்கண், தடஞ்சோலை முதலியன போல, அகன்ற அகங்கையைக் குறித்தது. சுவையுடைய பொருள்களில், கனிகள் சிறந்தவை. அது, ``கனியிருப்பக் காய் கவர்ந் தற்று``, (குறள்-100) ``கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரே`` (தி. 5. ப.91. பா. 7) என்றாற்போல்வனவற்றாலும் அறியப்படும். இனி, கனி களுள் நெல்லிக்கனி சிறந்தது என்பது, ஔவையார்க்கு அதியமான் நெல்லிக்கனியளித்தமை முதலியவற்றால் விளங்கும். அதனால், `அங்கை நெல்லிக்கனி` என்னும் உவமை, ``யானைதன் - கோட்டிடை வைத்த கவளம்`` (புறம் -101) என்பதுபோல, தப்பாது பயன் படுதலைக் குறிப்பதாம். ஆகவே, இப்பகுதியால், பலருக்கு ஒளித்த இறைவன், என்போல்வாரை அறைகூவியாட்கொள்ளுதலை மேற் கொண்டு, எனக்கும் ஆசிரியத் திருமேனியைக் காட்டி, உள்ளத்தையேயன்றி உடம்பையும் இன்ப வடிவாக்கி, பின் உடம்பளவில் நில்லாது எங்குமாய் நிறைந்து நுகரும் இன்பத்தினை ஒருதலையாக எய்துவிக்க இசைந்தனன் என்றவாறாயிற்று. இறைவன் தமக்கு எங்குமாய் நிறைந்து நுகரும் இன்பத்தினை எய்துவித்தல் ஒருதலை` என்பதை, அவன் வாளா செல்லாது, ``நலமலி தில்லையுட் கோலமார் தரு பொதுவினில் வருக`` (தி.8 கீர்த்தி-127-128) என்று அருளிச் சென்றமையால் உணர்ந்தார் என்க. இஃது உணர்ந்தாராயினும், `ஏனைய அடியார்கட்கு இறைவன் வாயுட் புக்க நெல்லிக் கனியாயினன்; எனக்குக் கையிற்புக்க நெல்லிக்கனியாயினன்` என்ற பொருளையும், `எனக்குத் தடக்கையின் நெல்லிக்கனியாயினன்` என்ற உவமையால் தோற்றுவித்தார். எனவே, இனி வருகின்ற ஐந்தடி களையும் தமக்கு அருளிய அருமையும், ஏனையோர்போல விரைந்து செல்ல அருளாமையும் என்னும் இருகருத்தும் பற்றியே வருவன வாகக் கொள்க.
163-167. வாழி, அசைநிலை. செய்தது - இந்நிலையினன் ஆக்கியது. `ஆவா, செத்தேன்` என்னும் இடைச்சொற்கள், `வியப்பும், அவலமும்` என்னும் இருகுறிப்பினும் வருவனவாம். ஒல்ல கில்லேன் - ஆற்றமாட்டேன்; முற்றப் பெற்றிலேன். `வாரிக் கொண்டு - விழுங்குகின்றேன் விக்கினேன்` (தி.8 அடைக்கலப் பத்து-10) என்று அருளுதலும் காண்க.
168-177. இனி, `அவயவம் கோற்றேன் கொண்டுசெய்தனன்` என மேல் தொகுத்துணர்த்தியதனை, ஈண்டு வகுத்து உணர்த்து கின்றார். புரைவித்து - ஒப்பாகச் செய்து. உவா - பௌர்ணமி. நள்ளுநீர் - மிகுகின்ற நீர். `உவா நாளிற் கடலின் கண் மிகுகின்ற நீர் போல, நெஞ்சிடமெல்லாம் நிறையும்படி` என்க. `இறந்த என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``வாக்கிறந் தமுதம்`` என்றதனை ``உவாக்கடல்`` என்ற அடியின் முன்னே கூட்டி, இரண்டனையும், ``செழுந்தண் பாற்கடல்`` என்பதற்கு முன்னே வைத்துரைக்க. வாக்கிறந்த அமுதம் - சொல்ல வாராத பேரின்பம். `அஃது உள்ளகத் தில் ததும்புமாறு பாற்கடல் திரைபோல் வித்து` என்க. உவாநாளிற் பொங்கக் காண்டல் நீர்க்கடலிடத்தே யாதலின், மிகுதற்கு அதனையே உவமை கூறினார். இனிமைக்குப் பாற்கடலை உவமை கூறினார். நாய் - நாய்போலும் எனது. குரம்பை - கட்டு; குடில். ``குரம்பைகொண்டு`` என்றது, `இடமாகக்கொண்டு` என்றபடி. குரம்பைதோறும் - உடம்பில் உள்ள பல கட்டுக்களில் எல்லாம். ``புன்புலால் யாக்கை புரைபுரை கனிய`` (தி.8 பிடித்த பத்து-10) எனப் பின்னரும் வருவது காண்க. ``குரம்பைதோறும்`` என்றதை, ``குரம்பை கொண்டு`` என்றதன் பின்னர்க் கூட்டுக. மேல், உள்ளத்தை நிறைத்தமை கூறினார்; இங்கு, உடம்பினுள் பல பகுதிகளை நிறைத்தமை கூறினார். `பாய்` என்னும் தன்வினைப் பகுதி, பிறவினை யுணர்த்தும் துவ்வீறு பெற்று, `பாய்த்து` என நிற்றலின், வினையெச்சத்தின்கண் இகர ஈறாயிற்று. இது, `பாய்ச்சி` என வருதல் பெரும்பான்மை. அற்புதம் - அதிசயம். என்பு - `எற்பு` எனத் திரிந்தது, `உருகும் உள்ளம் என்ற ஒன்று கொண்டே ஓர் உடம்பைச் செய்தாற் போல, அன்பு சுரந்து பெருகுகின்ற உடம்பை எனக்கு அமைத்தனன்` என்க. அன்பு பெருகும் வழியே இன்பமும் பெருகுமாதலின், இதனையும் அருளிச் செய்தார். அள் - மிகுதி.
178-181. `என்னையும் கடைமுறை களிறு என இருப்பதாக்கினன்` என இயைக்க. ``என்னையும்`` என்ற உம்மை, உயர்வு சிறப்பு. உயர்வு, மேற்கூறியவாற்றால், பொருளும், பேரன்பும், பேரின்பமும் பெற்றமை. ``ஒள்ளிய`` என்றது, `உணவாதற்குச் சிறந்த` என்றவாறு. கன்னல் - கரும்பு. கனி, வாழை முதலியனவாக ஏற்பன கொள்க. உம்மைத் தொகை திரிந்து முடிதலும் உண்மையின் ``கன்னற்கனி`` என நின்றது. தேர்தல் - தேடி உழலுதல். ``இருப்பது`` என்பது, தொழிற்பெயராய், வினைமுதற்கு ஆயிற்று. `இறைவன் பிறர்க்குப் போல எனக்கு அரியனாகாது எளியனாய் வந்து அருள் செய்தும், இறுதியில், தனது பெருவாயையும் பெருவயிற்றையும் நிரப்புதற்பொருட்டு இனிய உணவுகளையே எஞ்ஞான்றும் தேடித் திரிகின்ற யானையைப் போல், உணவைத் தேடி உண்டு இப்பூமியின்கண் இருக்கும்படி விட்டுச் சென்றான்` என்றபடி. ``இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் - கருவை யான் கண்டிலேன்`` (தி.8 திருச்சதகம்-41), ``பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்பதானேன்`` (தி.8 திருச்சதகம் -52) எனப் பின்னரும் கூறுதல் காண்க. ``இருப்பதாக்கினன்`` என்றதன்பின், `ஆகையால்` என்பது வருவிக்க. `என்னின் அமுதாக்கினன்` என இயையும். என்னின் - என்னால். கருணை வான் தேன் கலக்க - தனது திருவருளாகிய உயர்ந்ததேன் கலந்திருக்க. அருளொடு - அவ்வருள் நினைவோடே. பராவு - துதிக்கின்ற. அமுது - அமுதம் போன்ற பாடல்களை. ஆக்கினன் - உளவாகச் செய்தான். இதனால், திருவாசகம், திருக்கோவையார் என்னும் இருதிறத்துத் திருபாட்டுக்களும் வெளிவந்து உலகிற்குப் பெரும் பயன் தருதற் பொருட்டே அடிகளை இறைவன் இந்நிலவுலகத்திற் சிறிதுகாலம் எழுந்தருளியிருக்கும்படி விட்டுச்சென்றனன் என்பது நன்கு பெறப்படுதல் காண்க. இன்னும் இதனானே, மேல், ``பரமானந்தப் பழங்கடல்`` என்பது முதலாக உருவக வகையால் விரித்தோதி, இறுதியில், ``தொண்ட உழவர் ஆரத் தந்த`` என்றதும், அனைவரும் தன்னைப் பாடிப் பரவித் தனது திருவடிக்கண் அன்பு மிக்குத் தனது பேரின்பத்தைப் பெறுமாறு அடிகளது திருமொழியை இறைவன் உலகிற்கு அளித்தருளினான் என்பதனையே குறிப்பான் உணர்த்தியதாதல் பெறப்படும். இது கொண்டே சிவப்பிரகாச அடிகள், (நால்வர் நாண்மணி மாலை, பா.16) ``வலமழுவுயரிய`` என்னும் பாட்டினுள் ``திருவாசகம் எனும் பெருநீர்`` என உருவகித்து முன்னும் பின்னும் முற்றுருவக நலம் நனிசிறந்து விளங்க அடிகளது திருமொழியின் பெருமையை இனிது விளக்கினார் என்க. ``நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை`` (தி.8 திருக்கோத்தும்பி-12.) எனப் பின்னரும் வருதல் காணத்தக்கது. ``பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள் - பாமாலை பலபாடப் பயில்வித்தானை`` (தி. 6. ப.54. பா. 3) என்றருளிச்செய்தார். திருநாவுக்கரசு சுவாமிகளும். ஞானசம்பந்தரும், நம்பியாரூரரும் போல நாவுக்கரசரும், வாதவூரடிகளும் தம் திருமொழியின் பெருமை களைப் பலவிடத்தும் இனிது விளங்க எடுத்தோதியருளாது போயினும், இவ்வாறு ஒரோவிடத்துக் குறிப்பால் தோன்ற அருளிச் செய்தலைக் குறிக்கொண்டு உணர்தல் நம்மனோர்க்குத் தலையாய கடனாகும்.
182. பெற்றி - தன்மை ``பிரமன் மால் அறியாப் பெற்றி யோன்`` என்றது, `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. இதனை, ``ஓல்லகில்லேன்`` (அடி 167) என்றதன் பின்னர்க் கூட்டி, இதன் பின்னர், `இவ்வாறு` என்பது வருவித்துரைக்க.
இத்திருப்பாட்டில் சொற்கள் பொருள் இயைபுபட நிற்குமாறு:-
ஆறாம் அடியிற் போந்த, ``பெரியோன்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் எழுவாயாய் நின்று, பன்னிரண்டாம் அடியிற் போந்த ``குழகன்`` என்பது முதலாக, தொண்ணூற்றைந்தாம் அடியிற்போந்த, ``மேகன்`` என்பது ஈறாக நின்ற பெயர்ப் பயனிலைகளைக் கொண்டு முடிந்தது.
``மேகன்`` என்றதன்பின் எஞ்சி நின்ற `அவன்` என்பது முதலாக, நூற்றைந்தாம் அடியிற்போந்த, ``வைப்பு`` என்பது ஈறாக நின்ற பெயர்கள் பலவும் எழுவாயாய் நின்று, ஆங்காங்கே போந்த ``வாழ்க`` என்னும் வினைப்பயனிலையோடே முடிந்தன.
நூற்று ஆறாவது முதலிய மூன்றடிகளிலும் போந்த, ``நம்பன்`` முதலிய மூன்று பெயர்களும், தொக்கு நின்ற நான்கனுருபை ஏற்று, ஆங்காங்குப் போந்த, ``போற்றி`` என்ற தொழிற் பெயர்ப் பயனிலைகளோடு முடிந்தன. நான்கனுருபு பெயரோடு முடிதலும் இயல்பே.
நூற்றுப் பதினொன்றாம் அடியிற் போந்த, `தொல்லோன்` என்பது முதலாக, நூற்றுப் பதினெட்டாம் அடியிற் போந்த, ``ஒண்பொருள்`` என்பது ஈறாக நின்ற ஐந்து பெயர்களும் எழுவாயாய் நின்று, நூற்றுப் பத்தொன்பதாம் அடியிற் போந்த `இருந்தனன்` என்னும் வினைப்பயனிலையைக் கொண்டு முடிய அதன்பின் எஞ்சி நின்ற, `அவனுக்கு` என்பது, அவ்விடத்தே நின்ற, ``போற்றி`` என்பத னோடு முடிந்தது. நூற்றிருபது, இருபத்தொன்றாம் அடிகளின் முடிபுகளும் அவ்வாறாதல் வெளிப்படை.
நூற்று இருபத்திரண்டாவது முதலாக, நூற்று ஐம்பத்தேழாவது ஈறாக உள்ள அடிகளிற் போந்த சொற்கள், `யான்` புகலேனாகவும், தன்னேரில்லோன் பலர்க்கும் ஒளித்தும், என்னேரனையோர் கேட்க வந்து தானேயான தன்மையை இயம்பி ஆட்கொண்டருளி மறையோர் கோலம் காட்டியருளலும், யான் ஓலமிட்டு, ஆர்த்தார்த்து, ஓங்கி வீழ்ந்து புரண்டு, அலறி, மயங்கி, மதித்து ஆற்றேனாகும்படி, என் அவயவங்களைக் கோற்றேன் கொண்டு செய்தனன்` என முடிந்தன.
நூற்று ஐம்பத்தெட்டு முதலாக, நூற்று அறுபத்திரண்டு ஈறாக உள்ள அடிகளுக்கு மேற்போந்த பெயர்களே எழுவாயாய் நின்று, ``ஒடுக்கினன்``, ``ஆயினன்`` என்னும் வினைப் பயனிலைகளைக் கொண்டு முடிந்தன.
நூற்று அறுபத்துமூன்று முதலாக, நூற்று அறுபத்தேழு ஈறாக உள்ள அடிகளில், `யான்` என்பது தோன்றா எழுவாயாய் நின்று ``அறியேன்`` என்பது முதலாக ``ஒல்லகில்லேன்`` என்பது ஈறாகப் போந்த வினைப் பயனிலைகளைக் கொண்டு முடிந்தது.
ஈற்றடி, நூற்று அறுபத்தேழாம் அடியின் பின் வந்து நிற்ப, அதன்கண் உள்ள, ``பெற்றியோன்`` என்னும் பெயர் எழுவாயாய், நூற்று அறுபத்தெட்டாவது முதலாக, நூற்று எண்பத்தொன்றாவது ஈறாக உள்ள அடிகளிற் போந்த, ``புரைவித்து, தேக்கிடச்செய்தனன், இன்தேன் பாய்த்தி அமுத தாரைகள் ஏற்றினன், அள்ளூறாக்கை அமைத்தனன், என்னையும் இருப்பதாக்கினன், என்னின் பாரவமுது ஆக்கினன்`` என்னும் பயனிலைகளோடு முடிந்தன. ``கண்ணால் யானும் கண்டேன்`` என்பது முதலிய ஆறடிகளும் இடைநிலையாயும், அவற்றை அடுத்துப்போந்த இரண்டடிகளும், பின் வருவனவற்றிற்குத் தோற்றுவாயாயும் நின்றன. ``நினைதொறும் ஆற்றேன் அந்தோ கெடுவேன்`` என்றனவும் இடைநிலையேயாம். இங்ஙனமாகவே, இதனுள் முதற்கண் இறைவனது பெருமைகளை வியந்து கூறி, இடைக்கண் அவனை வாழ்த்துதலும், போற்றுதலும் செய்து, இறுதிக்கண் தமக்கு அவன் செய்த திருவருள் முறையினைக் கூறி முடித்தருளியவாறாதல் காண்க.
சிற்பி