திருவாசகம்-திருவெம்பாவை


பண் :

பாடல் எண் : 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!

குறிப்புரை :

இதுமுதலாக மகளிர் விளையாட்டு வகையில் வருவன பலவும், பாடாண் கொற்ற வள்ளையோடு ஒத்த வகையினவாய் நிற்கும் கடவுட் பாட்டுக்களாம் என்பது, மேலெல்லாம் கூறியவாறு பற்றிக் கொள்ளக்கிடந்தமை காண்க.
இதன்கண்ணும் (தி.8, 7.திருவெம். பா.18), அடுத்து வரும் தி.8 திருவம்மானையிலும் (பா.10) ``அண்ணா மலையான்`` என எடுத்தோதியருளினமை பற்றி, இவ்விரண்டனையும் அடிகள், `திரு வண்ணாமலையில் அருளிச் செய்தார்` எனத் திருவாதவூரர் புராணங் கூறிற்று. அதனால், இவை, அங்ஙனமே கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், இதன்கண் ``சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி ... ... ... ஆடு`` (தி.8, 7.திருவெம்.பா.14) என்று அருளிச் செய்ததன்றி, `அண்ணா மலையானைப் பாடி ஆடு` என அடிகள் அருளிச் செய்திலர். திருவம் மானையில், ``அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்`` (தி.8, 8.திருவம்மானை.பா.10) என்று அருளினாராயினும், ``ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்`` (பா.13) என்றும், ``ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்`` (பா.17) என்றும், பிறவாறும் அருளிச் செய்தார். ஆதலின், இவையெல்லாம், ``தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானைப் ... ... பாடுதும்`` (தி.8 திருவம்மானை - பா. 19) என்றாற்போலத் தில்லைக்கண் இருந்து பாடுங்கால் நினைந்து பாடியனவாகக் கொள்ளுதற்கும் உரியனவேயாம். நம்பி திருவிளையாடல், `இவ்விரண்டும் திருப் பெருந்துறையில் அருளியவை` என்கின்றது.
இது முதல் எட்டுத் திருப்பாடல்கள், நீராடுதற்கு விடியலில் எழுந்து செல்லற்பாலராகிய மகளிருள் முன்னர் எழுந்தார் சிலர் ஒருங்குகூடி, எழாதார் வாயிலிற் சென்று அவரைத் துயிலுணர்த்து மாறாக அருளிச் செய்யப்பட்டன.
மகளிர் விளையாட்டுப் பாடல்களில் அவை இன்ன பாடல் வகை என்பதனை அறிவிக்கும் முறையால் அப்பாடல் பற்றிய சொல்லேனும், சொற்றொடரேனும் ஈற்றில் நின்று அப்பாடல்களை முடிக்கும். அதனால், `அவை அங்ஙனம் வருதல் மரபு` என்னும் அளவாய்ப் பாடலை நிரப்பி நிற்பதன்றி வேறு பொருள்படாமையின், அவையெல்லாம் அசைநிலை போலவே கொள்ளப்படும். படவே, இவ்விடத்தும், `ஏலோர் எம்பாவாய்` என்பதும் அவ்வாறே கொள்ளப் படும் என்பது, தானே பெறப்பட்டது.
இதனுள், ``மாதே`` என்றதனை முதலிற் கொள்க. சோதி - ஒளி வடிவினன்; ஆகுபெயர். உயர்ந்தோர் உறங்குதலை, `கண்வளர்தல்` என்றல் வழக்கு. இங்கு, எழாதவளை எள்ளுகின்றார்களாதலின், `கண் வளருதியோ` என்கின்றவர்கள், அக்கண்களை, `வாள் தடங்கண்` என்றும் சிறப்பித்துக் கூறினார்கள். வாள் தடங்கண் - வாள்போலும் பெரியகண்; இது, மகளிர் கண் நன்கமைந்திருத்தலைக் குறிக்கும் தொடர். இதனை இங்குக் கூறியது, `உன் கண்கள் நன்கமைந்திருத்தல் உறங்கிக் கிடத்தற்குத்தானோ` என்றற்காம். `இயல்பாய் விழிக்கற் பாலனவாகிய கண்கள் விழித்தில` `எனக் கண்களை இகழ்ந்தவர்கள்,` எழுப்பும் ஓசையைக் கேட்கற்பாலனவாகிய செவிகளும் கேளாது ஒழிந்தனவோ எனச் செவிகளையும் இகழ்வாராய், ``வன்செவியோ நின்செவிதான்`` என்றார்கள். வன்மை - ஓசையை ஏலாமை. இங்ஙனங் கூறியதனால், முன்னர், ``கேட்டேயும்`` என்றது, `தன்னை அழைக்க எனக் கருதியிருந்தாள்` என்னும் கருத்தினாற் கூறிய தாயிற்று. ``செவி`` என்றது, `செவிப்பொறி` என்னும் பொருளதாதலின், ``செவிதான்`` என ஒருமையாற் சொல்லப்பட்டது. தான் அசைநிலை.
இத்துணையும், சென்ற மகளிர் உறங்குவாளை நோக்கிக் கூறியன; இனி வருவன அவளைப் பற்றி அவர்கள் தங்களுள் நகை யாடிக் கூறுவன. இவையும், அவள் கேட்டு எழுந்து வருவாள் என்னும் கருத்தினாற் கூறுவனவேயாம். ``என்னே என்னே`` என்றதனை, ``பரிசு`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `நம் தோழி உறக்கத்தால் எழா திருக்கின்றாளல்லள்: நமது பாடல் வீதியில் எழும்பொழுதே அதனைக் கேட்டு மனம் உருகிப் படுக்கையிற்றானே மெய்ம்மறந்து கிடக் கின்றாள்; இவளது அன்பின் பெருமை எத்தகையது` என்பது இப் பகுதியின் திரண்ட பொருள். `மெய்ம்மறந்து புரண்டு` என இயையும். போது ஆர் அமளி - மலர் நிறைந்த படுக்கை. `இறைவன் பாடலைக் கேட்டு உருகுதற்கு அமளி இடம் அன்று` என்றற்கு அதனை இங்ஙனம் சிறப்பித்துக் கூறினார்கள். ``அமளியின் மேனின்றும் புரண்டு`` என்றது, `ஒருபால் நின்று மற்றொரு பாற் புரண்டு` என்றவாறு. `புரண்டு கீழே வீழ்ந்து` எனச் சில சொல் வருவித்து முடிப்பாரும் உளர். இங்ஙன்-இப் பொழுதைக்கு; என்றது, `நாம் மேற்கொண்ட செயலுக்கு` என்றபடி. ஏதேனும் ஆகாள் - சிறிதும் உதவாள். `ஆகாளாய்க் கிடந்தாள்` என்க. ``ஈதே`` என்ற ஏகாரம் தேற்றம். கூறுவார்களும், கேட்பார்களுமாயவர்களுள், கூறுகின்றவர்கள், உறங்குகின்றவளது இகழ்ச்சி தோன்ற, ``எம் தோழி`` எனத் தமக்கே உறவுடையாள் போலக் கூறினார்கள்.
இனி இப்பகுதிக்கு, ``எம் தோழி`` என்றது பிறள் ஒருத்தியை எனக்கொண்டு, அவளது மெய்யன்பின் சிறப்பை உறங்குகின்றவட்கு அறிவித்தவாறாகப் பொருள் உரைப்பர்; இறைவனிடத்து அன்புடைய வர்க்கு விடியலில் அவனைப் பாடும் பாட்டொலி கேட்கும்பொழுது விரைந்தெழுந்து பின்னர் அவனது அருட்குணங்களில் ஈடுபடுதல் இயல்பாமல்லது, எழாது, கிடந்த கிடையிலே விம்மி விம்மி அழுதல் முதலியன இயல்பாகாவாகலானும் ஆமெனினும் ஈண்டைக்கு அதனை எடுத்துக் கூறுதலாற் பயன் இன்மையானும், அது பயன்பட வேண்டு மாயின், கிடந்தமை மாத்திரையே கூறியொழியாது, பின்னர் எழுந்து வந்தமையையும் ஒருதலையாகக் கூறவேண்டுதலின், அங்ஙனங் கூறாமையானும், பிறவாற்றானும் அது பொருந்தாமை அறிக. மேற் கூறியவாறு பொருள் உரைப்பாருள், ``கிடந்தாள்`` என்றது முடியவே பிறள் ஒருத்தியைக் குறித்ததாக வைத்து, அதற்கு, `ஒருத்தி` என்பதோர் எழுவாயை வலிந்து வருவித்தும், ``எந்தோழி`` என்றது. முன்னிலைக் கண் படர்க்கை வந்த வழுவமைதியாக்கியும் உரைப்பாரும் உளர். சென்றவர்கள் இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள் என்க. பின் வருகின்ற பாடல்களிலும் இவ்வாறே கொள்க.

பண் :

பாடல் எண் : 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை :

சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமை யாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என் னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

குறிப்புரை :

`நேரிழையாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது, அப்போது பரஞ்சோதிக்குப் பாசம் என்பாய்; இப்போது, ஆரமளிக்கே நேசமும் வைத்தனையோ` என்க. அன்பு `நார்` எனப் படுதல் பற்றி இங்கு அதனை, ``பாசம்`` என்று அருளினார்.
`பரஞ்சோதிக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்த லாயிற்று. இதன்பின், உரியது என்பதும், `எப்போது` என்றதன் பின்னர், `அப்போது` என்பதும் எஞ்சி நின்றன. ``இராப்பகல்`` என்றது, `இரவாக, பகலாக` என்றபடி. ஆரமளி - அரிய படுக்கை. `நேசமும்` என்ற சிறப்பும்மையால்` அன்பு முழுவதையும்` என்பது பெறப்பட்டது. `நீ, பாசம் பரஞ்சோதிக்கு` எனினும் உண்மையில் அது நேரிழைக்கே என்றற்கு, ``நேரிழையாய்`` என்றனர். இதுகாறும், சென்ற மகளிர் கூறியன.
இனி வருவன, இங்ஙனம் நகையாடிக் கூறியவர்களை நோக்கி உறங்கினவள் கூறுவன. தன்னை, `நேரிழையாய்` என்றவர் களைத் தானும் அவ்வாறு அழைத்தாள். `சீசீ` என்ற ஒரு சொல்லடுக் கில், பின்னின்றது, குறுக்கல் விகாரம் பெற்றது. `சீசீ` என்றே பாடம் ஓதுவாரும் உளர். எள்ளற் குறிப்பிடைச் சொல்லாகிய `சீ` என்பது, இங்குப் பெயர்த் தன்மைப்பட்டு, `சீ எனல்` எனப் பொருள் தந்தது. ``சீ ஏதும் இல்லாது என் செய்பணிகள் கொண்டருளும்`` (தி.8. திருக்கோத்தும்பி 12) என்னுமிடத்தும் இஃது இவ்வாறு நிற்றல் காண்க. இங்ஙனமாகவே, `சீசீ என்றலாகிய இவையும் சிலவோ` என்றது பொருளாயிற்று. சிலவோ - நண்பரிடத்துச் சொல்லுகின்ற சொற்களுள் சிலவோ. ``இடம்`` என்றது, பொழுதை. வாளா, `ஏசுமிடம்` என்னாது, ``விளையாடி ஏசுமிடம்`` என்றதனால், `நகை யாடிப் பேசுதற்கும் இது சமையமன்று` என்றதாம். கூசுதல் - நாணுதல்.
``நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே``
(தி. 5.ப.90.பா.9)என வந்தமை காண்க `நாணுதல்` என்பது, நாணிக் காட்டாதொழிதலாகிய தன் காரியந் தோன்ற நின்றது. `தேவர் களுக்குக் காட்டாது மறைக்கும் திருவடியை நமக்குத் தர வருபவன்` என்றபடி, ``ஈசனார்`` என்பது, ஒருமைப் பன்மை மயக்கம். `பாசம் பரஞ்சோதிக்கு` என்று சொல்லுபவள் `நான் மட்டும் அன்று; நம் எல்லோருந்தாம்` என்பாள், ``ஈசனார்க் கன்பார் யாம் ஆர்`` என்றாள். ``ஆர்`` என்றது, `அன்பரல்லது மற்று யார்` என்றபடியாம்.
இனி, `விண்ணோர்கள் ஏத்துதற்கு` என்பது முதலியவற்றை, சென்றோர் மறித்தும் கூறியவாறாக வைத்து, அதற்கேற்பத் தாம் தாம் வேண்டுஞ் சொற்கள் பலவற்றை வருவித்து உரைப்பாரும் உளர்.
`இவ்வாறு, ஒருவர் ஒன்றுகூற, மற்றொருவர் அதற்கு மாறு சொல்லுதலாக வரும் பொருள், கலிப்பாவினாற் பாடப்படும்` என்றும், அஃது, `உறழ் கலிப்பா` எனப்படும் என்றும் தொல்காப்பியர் கூறுதலை,
``ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே
கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே``
(தொல்.பொருள்.435) எனவும்,
``கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்து
போக்கின் றாகல் உறழ்கலிக் கியல்பே``
(தொல். பொருள். 458) எனவும் வரும் நூற்பாக்களான் அறிக.

பண் :

பாடல் எண் : 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்.

குறிப்புரை :

`பேசுவாய்` என்றதும், `பேசுகின்றவளே` என விளித்ததேயாம். இவ்வாறு விளித்தது முன்னாள் இவள், `நீவிர் வரும் முன்னமே நான் எழுந்திருந்து, நீவிர் வரும்பொழுது உங்கள் எதிரே வந்து இறைவனை மனம் உருகித் துதிப்பேன்` என்று சொல்லி, இது பொழுது அவ்வாறு செய்யாது உறங்கிக் கிடந்தமையைச் சுட்டியாம். ஆகவே, ``முன்வந்து எதிர்எழுந்து`` என்றது `முன் எழுந்து எதிர் வந்து` என மாற்றியுரைக்கற்பாலதாயிற்று. இதனானே, ``முத்தன்ன வெண்ணகையாய்`` என்றதும் `எதனையும் திட்பமின்றிப் பேதை நீரையாய்ச் சொல்லளவில் இனிமைப்படச் சிரித்துக்கொண்டு கூறுகின்றவளே` என்றவாறாம். கடை - வாயில். முதற்றொட்டு, `கடை திறவாய்` என்றதுகாறும் சென்றமகளிர் கூறியது. இதனை அடுத்து வரும் இரண்டடிகளும் உறங்கினவள் கூறுவன.
பத்து - அடியார்க்குரிய இலக்கணமாகிய பத்து. இவற்றை, `புறத்திலக்கணம் பத்து` எனவும், `அகத்திலக்கணம் பத்து` எனவும் இரண்டாக்கி உபதேச காண்டங்கூறும். அவற்றுள் புறத்திலக்கணம் பத்தாவன: திருநீறும் கண்டிகையும் அணிதல். பெரியோரை வணங்கல், சிவனைப் புகழ்ந்துபாடுதல், சிவநாமங்களை உச்சரித்தல், சிவபூஜை செய்தல், சிவபுண்ணியங்களைச் செய்தல், சிவபுராணங் களைக் கேட்டல், சிவாலயவழிபாடு செய்தல், சிவனடியாரிடத்தன்றி உண்ணாமை, சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல் என்பன.
அகத்திலக்கணம் பத்தாவன; சிவபெருமானது புகழைக் கேட்குங்கால் மிடறு விம்மல், நாத்தழுதழுத்தல், இதழ் துடித்தல், உடல் குலுங்கல், மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், சொல்லெழாமை, கண்ணீர் அரும்புதல், வாய்விட்டழுதல், மெய்ம்மறத்தல் என்பன.
``பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே`` (தி.4. ப.18. பா. 10) என்றருளினார் திருநாவுக்கரசரும். இவற்றை, சித்தாந்த நூல்களிற் காணப்படும் தசகாரியமாகவும் சொல்லுப. `பத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. இனி, `பற்று என்பது எதுகை நோக்கி, பத்தென ஆயிற்று` என்றும் உரைப்பர். பழைமை, புதுமைகளை முன் எழுதல், பின் எழுதல் பற்றிக் கூறினாள். பாங்கு - எல்லாம் நிரம்பிய தன்மை. `நீங்கள் தாம் நிரம்பிய அடியார்கள்` என, தன்னை நகைத்துரைத்தவர்களைத் தான் நகைத்துரைத்தாள் என்க. இகலிக் கூறுகின்றாளாகலின், தன்னோடொத்த பிறரையும் உளப்படுத்து, `அடியோம்` எனவும், `எமக்கு` எனவும் பன்மையாற் கூறினாள். புன்மை - குற்றம். பொல்லாது - தீமை; `தீமை உண்டோ` என உரைக்க. அடுத்து வரும் மூன்றடிகளும் சென்றோர் மறித்தும் கூறுவன.
`நின் அன்புடைமை எத்தோ` என மாற்றுக. எத்து-வஞ்சனை. ``எத்தனாகிவந் தில்புகுந்து`` (தி.8 சென்னிப். 4) என்றாற் போலப் பின்னரும் வருதல் காண்க. தங்களை, `மெய்யடியார்கள்` என்று அவள் நகையுள்ளுறுத்துக் கூறக்கேட்டவர்கள், `உன்னுடைய மெய்யன்பை நாங்கள் அறிந்திலமோ` என மறித்தும் நகைபடக் கூறிப் பின்னர், `உள்ளத்தில் மெய்யன்புடைய மகளிரானவர், விடியலில் எழுந்து நம்பெருமானைப் பாடமாட்டார்களோ` என வெளிப்படை யாகவே கழறினர். `விடியலில் எழுந்து` என்பது, இடத்தால் வந்து இயைந்தது. இதன்பின், உறங்கியிருந்தவள், `சிறிது அயர்த்துப் போய் விடியலில் எழாது துயின்று கிடந்த எனக்கு இத்துணையும் வேண்டுவது தான்` என்று தன் நெஞ்சோடே சொல்லிக் கொண்டு வந்து உடன் கலந்தாள். ஈற்றடியையும், சென்ற பெண்கள் கூற்றாகவே கொண்டு `இவ்வளவே எமக்கு வேண்டும்` எனவும் உரைப்பர்.

பண் :

பாடல் எண் : 4

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளான வனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.

குறிப்புரை :

``ஒள் நகை`` என இயையும். இது புன்முறுவலைக் குறிக்கும். புன்முறுவல் பெருமிதமுடையார் செயலாகலின், ``ஒள் நித்தில நகையாய்`` என்றது, பெருமிதமுடைமையைக் குறிப்பாற் கூறியவாறாம். இவளது பெருமிதத்திற்கு ஏற்ப, சென்ற மகளிர், `இன்னம் பொழுது புலர்ந்திலதோ` என்னும் துணையே கூறினர். அவளும் அதற்கேற்ப, `நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால், எல் லோரும் எழுந்து வந்து விட்டனர்; நான் மாத்திரமே எழாதிருக் கின்றேன் போலத் தோன்றுகின்றது` என்னும் பொருள்பட, ``வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ`` என்றாள். அங்ஙனங் கூறுகின்றவள், அதனிடையே, `உங்கள் பேச்சு மிக நன்றாய் இருக் கின்றது` என்று இகழ்வாள், பிறரைக் கூறுவாள் போல அவர்களது சொல்லைச் சிறப்பித்துக் கூறினாள். சென்ற மகளிர் அது கேட்டுக் கூறுவன ஏனைய பகுதி.
`கொண்டு` என்பது, `கொடு` என மருவிற்று. `உள்ளவாறு` என்பது கடைக்குறைந்து நின்றது. `சொல்லுகோமாக` என ஆக்கம் வருவித்து, `சொல்லிக்கொண்டிருக்க` என உரைக்க. அவ்வளவும் - அத்துணைக் காலமும். ``கண்ணை`` என்றதில் ஐ, பகுதிப் பொருள் விகுதி. அவமே - பயன்படாமலே. `போக்காது` என்னும் எச்சம் தேற்றேகாரம் பெற்று வந்தது. ``விண்`` என்றது விண்ணவரை. ஒரு மருந்து - ஒப்பற்ற அமுதம். `அவருக்குக் கிடைத்துள்ள அமுதத்தின் வேறுபட்டது` என்பதாம். கசிந்து - கண்ணீர் சிந்தி. `உள்ளம் உள் நின்று நெக்குருக` என மாற்றிக் கொள்க. `நீ காலத்தைப் போக்காமைப் பொருட்டும், நாங்கள் இறைவனைப் பாடி உருகுதற் பொருட்டும் அதனை (எண்ணிச் சொல்லுதலை)ச் செய்யமாட்டோம்` என்றனர் என்க. ``குறையில்`` என்றது, `வரற்பாலோர் வாராதிருப்பின்` என்ற வாறு. `நீ மீண்டு சென்று துயில் கொள்வாயாக` என்றது, துயிலில் உள்ள ஆர்வத்தினைச் சுட்டி இகழ்ந்தது. `பாடிக் கசிந்து உருக` என்றதும், `நீ அதற்கு ஆகாய்` என இகழ்ந்ததேயாம்.

பண் :

பாடல் எண் : 5

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?

குறிப்புரை :

``அறியா, காணா`` என்றவை, எதிர்மறைப் பெயரெச்ச அடுக்கு. மலை - மலைவடிவானவன். `மலை` என்றே கொண்டு, `அண்ணாமலையை` என்றலும் பொருந்துவதே. போல் அசைநிலை. உள்ள பொக்கங்கள் - உலகில் உள்ள பொய்களை எல்லாம். ``தேன்`` என்றதை, ``பால்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. பால், தேன் என்பன, மிக்க இனிமையைக் குறித்து நின்றன. படிறீ - பொய்ம்மை யுடையவளே; இது, வாளா பெயராய் நின்றது. இவள் சொற்சாலம் செய்பவள் என்பதை அனைவரும் எப்பொழுதும் அவள் அறியக் கூறுவர் என்பதும், அதுபற்றி இவள் சினந்து கொள்வதில்லை என்பதும், சென்ற மகளிர் இவளை இங்ஙனம் வெளிப்படையாகவே கூறி விளித்தமையாற் பெறப்படும். ``ஓலம் இடினும் உணராய் உணராய்`` என்றதும், அவளது எளிய நிலை கருதியேயாம். அவளது சொற்சாலத்துக்கு ஓர் எல்லையாகவே, `மாலறியா நான்முகனும் காணாமலையினை நாம் அறிவோம்` எனக் கூறுதலை எடுத்துக் காட்டினர். இதனானே, சிவபெருமானை ஏனைத் தேவரோடு ஒப்பவைத்துக் கூறுவாரது தன்மையும் அடிகள் புலப்படுத்தியவாறு பெறப்பட்டது.
கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகடல் என்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
(தி.5.ப.100.பா.5) என ஆளுடைய அரசுகள் அருளிச் செய்தலுங் காண்க ``ஞாலமே`` முதலிய மூன்று ஏகாரங்களும் எண்ணுப் பொருள. இவற்றால் எண்ணப்பட்டன, அவ்வவ்வுலகங்களாம். இவற்றின்பின், `ஆகிய உலகங்களால்` என்பது தொகுத்தலாயிற்று. கோதாட்டுதல் - திருத்துதல். `கோதுதலைச் செய்தல்` என்பது சொற் பொருள். சீலம் - செய்கை. உணராய் - துயில் நீங்காய். காண், முன்னிலை அசை. `ஏலக்குழலியாகிய உன் பரிசு இது` என, ஒருசொல் வருவித்து முடிக்க. ஏலம் - மயிர்ச்சாந்து. `வாயால் இனிமைபடப் பேசுதல்போலவே, உடலையும் நன்கு ஒப்பனை செய்து கொள்வாய்` என்பார், `ஏலக்குழலி` என்றனர்.

பண் :

பாடல் எண் : 6

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும். எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!

குறிப்புரை :

மானே - மான்போன்ற பார்வையை உடையவளே; `அச்சத்தால் பின்வருமாறு கூறினாய்` என்பார், இவ்வாறு விளித்தனர். நென்னல் - நேற்று; ஐகாரம், சாரியை. என்றலும் - என்று சொல்லிய செயலையும். `செயலையும்` என இரண்டனுருபு விரியாது, `செயலுக்கும்` என நான்கனுருபு விரிப்பின், பிற்கால வழக்காம். `நீ போன திசை பகராய்` என்க. திசை - இடம். பகராய் - சொல்லு. `நேற்றுச் சொன்ன சொற்படி நீ வந்து எங்களை எழுப்புதற்கு, இன்னும் பொழுது புலரவில்லை போலும்!` என நகைத்துக் கூறினர் என்க. ``வானே நிலனே பிறவே அறிவரியான்`` என்றதற்கு, மேல் உரைத்தாங்குரைக்க. தலையளித்து - தலையளிசெய்து; தலையளி - மேலான கருணை. அருளும் கழல் - தரப்படுகின்ற திருவடி. வாய் திறவாய் - ஒன்றும் மறுமாற்றம் கூறாது உறங்குகின்றாய். ஊனே உருகாய் - உடல் மெலியமாட்டாய். மெலிதல், நாணத்தினானாதல், அச்சத்தினானாதல் நிகழற்பாலது என்பதாம். உனக்கே உறும் - இவையெல்லாம் உனக்கே தகும். `இனியேனும் எழுந்து வந்து எங்களோடு இறைவனைப் பாடு` என இறுதியிற் கூறி முடித்தனர்.

பண் :

பாடல் எண் : 7

அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை :

தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.

குறிப்புரை :

இங்கு எழுப்பப்படுபவள் சிவபெருமானிடத்துப் பேரன்புடையள் என்பது, சென்ற மகளிர் பின்னர்க் கூறும் அவற்றான் இனிது விளங்கும். அதனால், இவளை அனைவரும் `அன்னையே` என்று விளித்தனர். செய்யுளாதலின், ``இவையும்`` என்ற சுட்டுப் பெயர் முன்வந்தது. இது, பின்வருகின்ற, மிக்க துயில், எழுப்பிய பொழுதும் வாய்வாளாது கிடத்தல் என்பவற்றைச் சுட்டிற்று. சிலவோ- உன் தன்மைகளிற் சிலவோ. ஒருவன் - ஒப்பற்றவன். இருஞ்சீரான் - `பெரிய புகழையுடையவன்`. அரியானும், ஒருவனும், சீரானும் ஆகியவனது சின்னங்கள் என்க. `விடியலில் திருச்சின்னங்கள் ஊதுதல் கேட்கப்படும்பொழுதே துயிலுணர்ந்து சிவ சிவ என்று சொல்லுவாய்; பின்பு, எழுந்த அடியவர்கள் பாண்டிநாட்டையுடைய பெருமானே என்று பாடுதற்கு முன்பே நெருப்பைச் சேர்ந்த மெழுகு போல உள்ளமும் உடலும் உருகுவாய்; ஆயினும், இன்று யாங்கள் உன்வாயிலில் வந்து, இறைவனைத் தனித்தனியே பலவாறாகப் பாடினோம்; இன்னமும் உறங்குகின்றாய்; இறைவனிடத்து அன் பில்லாத வலிய நெஞ்சத்தையுடைய பெண்டிர்போல வாயும் திறவாது கிடக்கின்றாய்; உறக்கத்தின் பெருமைதான் என்னே` என, எழுப்ப வந்த மகளிர் இவளது நிலையை எல்லாம் விரித்துக் கூறினர்.
`கேட்பவே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `துயிலுணர்ந்தபின் முதற் சொல்லாகத் திருவைந்தெழுத்தையே சொல்லுவாய்` என்றற்கு, ``சிவனென்றே வாய்திறப்பாய்`` என்றனர். ``தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்`` என்றது, `அம்பு படுமுன் தலை துணிந்தது` என்றல்போல, விரைவு மிகுதி குறித்தது. இதனை, `காரியம் முந்தூறூஉங் காரணநிலை` எனக்கூறி, ஏதுவணி யின்பாற் படுப்பர், அணிநூலுடையார். ``ஆனை`` என்றது, காதற் சொல். அரையன் - அரசன்; தலைவன். தனித்தனியே பாடினமையின் ``என்`` என ஒருமையாற் கூறினர். ``எல்லாம்`` என்பதே தன்மை யிடத்தை யுணர்த்துமாயினும், அது திரிபுடைத்து. `எல்லோம்` என்பது அதனைத் திரிபின்றி யுணர்த்தும். `எல்லாரும், எல்லீரும்` என்னும் படர்க்கை முன்னிலைப் பெயர்கள்போல, `எல்லோமும்` என்னும் தன்மைப் பெயரும், இறுதியில் உம்மையொடு நின்றது. ``கேள்`` என்றதனை` ``அன்னே`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `வெவ் வேறாய்ச் சொன்னோம்` என இயையும். `இன்னமும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. பேதையர் - பெண்டிர்; `அறிவில்லாதவர்` என்பதும் நயம். ``துயில்`` என்றதற்கு, `எல்லாரையும் ஆட்கொள்கின்ற உறக்கம்` என உரைக்க. ``பரிசு`` என்றது பெருமையை. கொடுமை யாகிய இழிவை, `பெருமை` என்றது இகழ்ச்சிப்பற்றி.

பண் :

பாடல் எண் : 8

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

கோழி கூவ, எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.

குறிப்புரை :

``வாழி`` என்றதனை முதலில் வைத்து, `வாழ்தலுடைய வளே` என உரைக்க. `நன்கு வாழ விரும்புபவளுக்கு இத்துணைப் பேருறக்கம் தகாது` என்பார், இவ்வாறு விளித்தனர். ``ஏழில்`` என்றதில் உள்ள, ``இல்`` என்னும் பெயரை இதன்பின்னருங் கூட்டுக. இல்லங்களில் கோழி கூவ, எவ்விடத்தும் பிற பறவைகள் ஒலிக்கின்றன. இல்லங்களில் ஏழிசைகளையுடைய இசைக்கருவிகள் ஒலிக்க, எவ்விடத்தும் சங்குகள் ஒலிக்கின்றன` என்க. ``ஏழ்`` என்றது, முன்னர் இசையையும், பின்னர் அவற்றை வெளியிடும் கருவியையும் உணர்த்தினமையின், இருமடியாகுபெயர். இசைக்கருவிகளுள் மிடற்றுக் கருவியும் ஒன்றாதலின், மிடற்றுப் பாடலும் அடங்கிற்று. திருப்பள்ளி எழுச்சி பாடுவாரும், இசை பயில்வோரும் விடியலில் பாடுதல் அறிந்து கொள்க. `ஏழில்` என்பதே ஒரு கருவியின் பெயராக வும் உரைப்ப.
கேழ் - உவமை. பரம் - மேன்மை. சோதியையும், கருணையையும் உடையவனை, `சோதி, கருணை` என்றது, ஆகு பெயர். `சோதியும், கருணையும் ஆயவனது பொருள்கள் பாடினோம்` என்க. பொருள்கள் - இயல்புகள். ``ஈதென்ன உறக்கமோ`` என்றது, `இத்துணை ஓசைகளாலும் நீங்காத இவ்வுறக்கம் எத்தன்மைத்தாய உறக்கமோ; அறிகின்றிலேம்` என்று இகழ்ந்தவாறு. ஆழியான் - மாயோன். அவனது அன்புபோலும் அன்பினை, ``ஆழியான் அன்பு`` என்றனர். `மாயோன் சிவபெருமானுக்குத் தன் கண்ணைப் பறித்துச் சாத்தச் சக்கரம் பெற்றமைபோல, யானும் நெறிமுறை பிழையாது அப் பெருமானை வழிபட்டுப் பெருவாழ்வு பெறுவேன்` என்று கூறுகின்றவள் இவள் என்பது, ``ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ`` என்ற ஏச்சுரையாற் பெறப்பட்டது. `நெறிமுறை பிறழாது சிவனை வழிபடுவேன்` என்ற நீதானோ, இத்துணை ஓசை எழவும் எழாது உறங்குகின்றாய்; `நீதானோ பெருவாழ்வு பெறப்போகின்றவள்` என்பது கருத்து. ``மாயோனது அன்பினை நீயும் பெறுதற்கு, அவன் எழாதே உறங்குதல்போல நீயும் உறங்குகின்றாய் போலும்`` என்பது உள்ளுறை நகை.
ஊழி முதல்வன் - ஊழிகள் பலவற்றிற்கும் முதல்வன்; `அவற்றால் தாக்குண்ணாத முதல்வன்` என்றபடி. ஏழை - பெண்; உமை. ``பங்காளனையே`` என்ற பிரிநிலை ஏகாரம், `நீ வழிபடுவேன் என்று சொல்லும் அவனையே பாடு என்கின்றோம்; பிறரைப் பாடு என்கின்றிலோம்` எனப் பொருள் தந்து நின்றது.
இத்துணையும் வந்த திருப்பாட்டுக்கள், மகளிருள் முன் எழுந்தோர், பின்னர் எழற்பாலாரை அவர்தம் வாயிலிற் சென்று அவரை எழுப்பியன. அடுத்துவரும் திருப்பாட்டு அவர் எல்லாரும் ஒருங்கு கூடியபின், முதற்கண் இறைவனைப் பரவுவது.

பண் :

பாடல் எண் : 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

முற்பட்டனவாகிய பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.

குறிப்புரை :

முன்னைப் பழம்பொருள் - முன்னே தோன்றிநின்று மறைந்த பொருள். மறையாது நிற்கும் பொருளும் இதன்கண் அடங்கும். இவை இரண்டற்கும் முன்னேயுள்ள பழையோன் இறைவன். பின்னைப் புதுமை - இனித் தோன்ற இருக்கின்ற புதுப் பொருள். இதற்கும் முற்கூறியதுபோலவே பின்னேயுள்ளவன் இறைவன். இறைவன் பொருள்களைத் தோற்றுவிக்குங்கால், காலத்தின் வழி முற்பிற்பாடு தோன்றத் தோற்றுவித்து, தான் அதற்கு அப்பாற்பட்டு நிற்றலையே இங்ஙனங் குறித்தனர். `உன்னையே` என்னும் பிரிநிலை ஏகாரம் விரிக்க. பிரான் - முதல்வன். பெறுதல், அறிவினால் என்க. பாங்கு - துணை. ஆவார் - ஆதற்கு உரியார். ``தொழும்பாய்`` என்றது, `மனத்தோடு பொருந்தி` என்றவாறு.
இதனால், கன்னிமையுடையராகிய இம் மகளிர், இளமைக் கண்ணே சிவபெருமானுக்கு அன்புடையராய் ஒழுகும் ஆடவரே தமக்குக் கணவராய் வாய்த்தல் வேண்டும் என அப்பெருமானை வேண்டினமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?

குறிப்புரை :

இத்திருப்பாட்டு இல்லங்களின்றும் எழுந்து சென்று குழாங்கூடிய மகளிர், சிவபிரானைப் பரவிய பின்னர் நீர்த்துறையை அடைந்து, அங்குத் தமக்கு முன்னே வந்துள்ள அப்பெருமான் கோயி லிற் பணிபுரியும் மகளிரைக் கண்டு அவர்களோடு கூடி அவன் புகழைப் பேசி மகிழ்ந்தது.
பொருள்கோள்: `கோதில் குலத்துத் தோன்றிய, அரன்றன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்! அவன்றன் பாதமலர் பாதாளம் ஏழினும் கீழ்; போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவு; அவன் திருமேனி ஒன்றல்லன்; ஒருபால் பேதை; வேத முதல்; விண் ணோரும் மண்ணும் துதித்தாலும், ஓத உலவா ஒரு தோழன்; தொண்டர் உளன்: ஆதலின், அவன் ஊர் ஏது? அவன் பேர் ஏது? அவனுக்கு ஆர் உற்றார்? ஆர் அயலார்? அவனைப் பாடும் பரிசு ஏது?`
திருக்கோயிற் பணிபுரியும் மகளிர் என்றும் கன்னிமை யுடையர். இந்நிலை, அவர் தாமே விரும்பி மேற்கொள்வது. அவரது மனநிலையை அறிந்து அவர்தம் பெற்றோரும் அதற்கிசைந்து விடை கொடுப்பர். பின்னர் கோயிற்கு அணித்தாய் உள்ள கன்னி மாடத்தில் தங்கிக் கோயிலினின்றும் பெறும் உணவு உடைகளால் வாழ்ந்து கோயிற் பணிகளையே செய்வர். இறைவன் ஆணைவழிப் பின்னர் நம்பியாரூரை மணந்த சங்கிலியார், முன்னர் மேற்கொண்டிருந்த நிலை இதுவே என்பதை, வரலாறு நோக்கி அறிந்து கொள்க. இவருள் இறுதிகாறும் கன்னியராய் இராது மணம் புரிந்து கொள்ளும் நிலை உண்டாகுமாயின், அங்ஙனம் செய்து கொள்ளுதலும் உண்டு என்பதற்கும் அவ்வரலாறே சான்றாம்.
சொற்கழிவு - சொல்செல்லாது நின்ற இடம். போது ஆர் - மலர் நிறைந்த. புனை - அழகிய. `முடிவும்` என்னும் உம்மை தொகுத்த லாயிற்று. முடிவும் - முடிவுமாகிய இடம். முடிவுக்கு மேல் உள்ள இடத்தையே ``முடிவு`` என்றார். ``சொற்கழிவு`` என்றதனால், பொருள் இன்மையையும், ``பொருள் முடிவு`` என்றதனால், சொல்செல்லா மையையும் உணரவைத்தார். இவற்றால் வியாபகத் தன்மை குறிக்கப் பட்டது. ``ஒன்று`` என்றது, ஒரு தன்மையை. திருமேனி ஒன்றாகாமைக்குக் காரணமாக, ``ஒருபால் பேதை`` என்றார். ``ஒருபால்`` என்றதற்கு, `திருமேனியின் ஒரு கூற்றில்` என்க. பேதை - பெண்; என்றது, பெண்ணுருவினை. இதன்பின் `உளது` என்பது எஞ்சி நின்றது. ``ஓருடம் பிருவ ராகி`` (தி.4.ப.22.பா.6) என்று அருளிச் செய்தார், திருநாவுக்கரசு சுவாமிகளும் வேத முதல் - வேதத்திற்கு முதல்வன். ``மண்`` என்றதும், மண்ணோரையே. துதித்தல் - புகழ்தல். `அவர் ஓத உலவா` என்க. ``ஓத`` என்றதும், `துதிக்க` என்றதாம். புகழது உலவாமையை அதனை உடையான்மேல் வைத்துக் கூறினார். உலத்தல் - முடிதல். ஒரு தோழன் - ஒப்பற்ற தோழன். இறைவனோடு ஆண்டான் அடிமைத் திறத்திலன்றித் தோழமை முறையிலும் அடியவர் உரிமை கொள்ளுதல் பற்றி இறைவனை, ``தோழன்`` என்றார். ``தோழா போற்றி`` (அடி 120) எனப் போற்றித்திருவகவலிலும் அருளிச் செய்தமை காண்க. ``விரும்பி நின்ற - பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம்`` (தி.6.ப.15.பா.2) என்ற திருநாவுக்கரசர் திருமொழியையும் காண்க. `ஒருதோழந் தொண்டருளன்` என்பதே பாடம் எனவும், `தோழம்` என்பது, `பேரெண்` எனப் பொருள்படும் எனவும் கூறுவாரும் உளர். அவர், `உளன்` என்றதற்கு `உடையன்` எனப் பொருள் உரைப்பர். தொண்டர் உளன் - அடியவர் உள்ளத்திலிருப்பவன். இதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `யாது` என்பது, `ஏது` என மருவி வழங்கும். இவ்வினா, ஈண்டுப் பல இடத்தும், யாதும் இன்மையைக் குறித்து நின்றது. ``பரிசு`` என்றது, வகையை. `கருவி கரணங்களால் ஏகதேசப்பட்டு நிற்பவர்க்கே ஊரும், பேரும், உற்றாரும், அயலாரும், பாடும் வகையும் உள்ளன; அவ்வாறன்றி வியாபகனாய் நிற்கும் இறைவனுக்கு அவை இலவாதலின், இயன்ற அளவிலே நாம் பாடுகின்றேம்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய வனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.

குறிப்புரை :

விளிகளை எல்லாம் முதலிற் கூட்டி, `வழியடியோம் பொய்கை புக்கு முகேர் என்னக் குடைந்து உன் கழல்பாடி வாழ்ந் தோம்` எனவும், `நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்ந்தொழிந் தோம்; இனி எம்மை எய்யாமற் காப்பாய்` எனவும் வினைமுடிக்க. மொய் ஆர் - மொய்த்தல் (நெருங்குதல்) பொருந்திய. மொய்த்தலுக்கு வினைமுதல் நீராடுவோர். மலர்களை நாடி வரும் வண்டுகளையும் கொள்வர். தடம் பொய்கை - பெரிய குளம். ``முகேர்`` என்றது, ஒலிக்குறிப்பு. குடைதல் - துழாவுதல். பாடும் பொழுது நீரைக் கையால் துழாவிநிற்றல் இயல்பு. வழியடியோம் - குடிமுழுதுமாகத் தொன்றுதொட்டு அடியராயினோம். காண், முன்னிலை அசை. ``கழல்பாடி வாழ்ந்தோம்`` என்றது, `பாடுதலாகிய பேற்றைப் பெற்றோம்` என்றபடி. இவை, முன்னர் நிகழ்ந்தன. ஆரழல் போல் செய்யன் - அணுகுதற்கரிய தீப்போலச் சிவந்த திருமேனியை யுடையவன். ``ஆட்கொண்டருளும் விளையாட்டு`` என்றது, `படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என்னும் ஐந்தொழிலையுமாம் என்பது, வருகின்ற திருப்பாட்டுள், `காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி`` என்பதனால் விளங்கும். ஐந் தொழில்களுள் அருளலையன்றி ஏனையவற்றையும் ஆட்கொண் டருளுதலாக அருளிச் செய்தது, அவையெல்லாம் அருளலுக்கு ஏதுவாம் முறைமை பற்றியே செய்யப்படுதலாம். இத் தொழில்களை இறைவனுக்கு விளையாட்டு என்றல், `ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தற்கு விளையாட்டு` என்பது போல, எளிதிற் செய்தல் பற்றியே யாம் என்பதனை, மாதவச் சிவஞான யோகிகள் சிவஞான போத மாபாடியத்தும், சிவஞான சித்தி உரையிடத்தும் இனிது விளக்கிப் போந்தமை காண்க. உய்வார்கள் உய்யும் வகை, அவரவர் நிலைக் கேற்ப, மண்ணுலக இன்பங்களையும், விண்ணுலக இன்பங்களையும், வீட்டுலக்தில் உடம்பொடுநின்று நுகரும் இன்பங்களையும் பெறும் நிலைகளாம். வகை எல்லாம் - வகையால் எல்லாம். ``உய்ந்தொழிந் தோம்`` என்றதில் ஒழிதல், துணிவுப் பொருள்பற்றி வந்தது. எய்த்தல்- பிறவியிற் சென்று இளைத்தல். எனவே, மேற்கூறியவாறு உய்ந்தவை அனைத்தும் பிறவி நீங்கிய நிலையாகாமை பெறப்பட்டது. இங்ஙனம் எல்லாவற்றையும் வெறுத்து, பிறவியற்ற நிலையாகிய பரமுத்தியை வேண்டுதல் அடிகளது விருப்பமேயாம். எனினும், இதனைப் பெண்கள் கூற்றாக அவர் அருளிச் செய்தமையின், ``எய்யாமல் காப்பாய்`` என்றதற்கு, அப் பெண்கள் இந்நிலையினையே விரும்பும் ஆடவருக்கே தாம் வாழ்க்கைப்படுமாறு அருளுதல் வேண்டும் என வேண்டினார் என உரைத்துக்கொள்க. `காவாய்` என்னும் ஏவல் வினையை மரூஉ வழக்காக, `காப்பாய்` என முன்னிலை வினை போல அருளினார், இளமகளிர் கூற்றாதல் பற்றி. இத் திருப்பாட்டு, இல்லங்களினின்றும் போந்த மகளிர் நீராடுதற்கண் இறைவனைப் பரவியது.

பண் :

பாடல் எண் : 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

குறிப்புரை :

இது முதலாக வரும் நான்கு பாடல்கள், அன்ன மகளிர் இறைவனைப் பாடிக்கொண்டே நீராடுவன. இவற்றுள், ஒருவரை முன்னிலைப்படுத்தியேனும், பலரையும் உளப்படுத்தியேனும் சில சொல்லி ஆடுவர்.
ஆர்த்த - பிணித்துள்ள. `துயர்` என்றது வெப்பத்தை. ஆர்த்து- ஆரவாரித்து; `மகிழ்ந்து` என்றபடி. தீர்த்தன் - தீர்த்தமாய் உள்ளவன். தீ ஆடும் - தீயோடு ஆடுகின்ற. கூத்தப் பெருமான் திருக்கைகளில் ஒன்றில் தீயேந்தியிருத்தல் அறிக. குவலயம் - பூ மண்டலம். ``எல்லோமும்`` எனத்தன்மை யிடத்தால் ஓதினமையின், `நம் எல்லோரையும்` என்று உரைக்க. ``நம்`` என்றது மக்கள் எல்லாரையும் உளப்படுத்து. இவ்வாறு மக்கள் இனத்தை வேறு கூறினர், அவர் சிறப்புடைய உலகமாதல் பற்றி. `இறைவனால் ஆட்கொள்ளப்படும் பேற்றால், தேவரினும் மக்களே சிறப்புடையர்` என அடிகள் பல விடத்தும் ஓதியருளுதல் காண்க. ``விளையாடி`` என்றது, முன்னர், ``கூத்தன்`` என்றதனோடு இயைந்து நின்ற பெயர். `கூத்தனும், விளையாடியும் ஆகியவனது வார்த்தை` என்க. வார்த்தை - செய்தி; புகழ், `வார்த்தையும்` என்ற உம்மை சிறப்பு. சிலம்ப - ஒலிக்க. வார் - நீண்ட. மேகலைகளை, ``கலைகள்`` என்றது, முதற்குறை. ஆர்ப்பு - ஆரவாரிப்பு. அரவம் - ஒலி `ஆரவாரிப்பாகிய ஒலி` என்க. `குடைந்த பின்` என்பது, ``குடைந்து`` எனத் திரிந்து நின்றது. குடைந்து - முழுகி. ``உடையான் பொற்பாதம் ஏத்தி`` என்றதன்பின், வளைசிலம்புதல் முதலியவற்றைச் சுட்டும், `அவ்வாறு, என்பது வருவிக்க. நீராடு மகளிர், பொய்கை, சுனை, அருவி, மடு, யாறு, கடல் என்னும் அனைத்திலும் ஆடுதல் இயல்பு. அவற்றுள், இது சுனையாடுவார் கூறியது.

பண் :

பாடல் எண் : 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

பசுமையான குவளையின் கருமையான மலர் களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டுள், அன்ன மகளிர், தாம் ஆடச் சென்ற மடுவினை மாதொருகூறன் வடிவமாகக் கண்டு மகிழ்ந்து கூறுதல் சொல்லப்படுகின்றது.
கார் மலர் - கரிய மலர். குவளையின் கரியமலர் இறைவியது நிறத்தையும், செந்தாமரை மலர் இறைவனது நிறத்தையும் காட்டும். குருகு - பறவை; சொற் பொதுமையால் இது அம்மையது வளையையும் உடனிலையாகச் சுட்டிற்று. பின்னும் அரவத்தால் - மேலும் மேலும் எழுகின்ற ஒலியால். இதுவும் அவ்வாற்றால், இறைவன் மீது ஒன்றோடொன்று பொருந்தி ஊரும் பாம்பினைக் குறித்தது. ``மலம்`` என்றது, மடுவிற்கு ஆங்கால் உடல் அழுக்கையும், இறைவன் இறைவியர்க்கு ஆங்கால் உயிர் அழுக்கையும் குறிக்கும். இசைந்த - பொருந்திய. பொங்கு மடு - மிகுந்த மடு. கலந்து - ஏனைய காலணிகளுடன் சேர்ந்து. விளையாட்டு மகிழ்ச்சியால் உடல் பூரித்தலின், கொங்கைகளும் பூரிப்பவாயின. மடுவிலும் தாமரைகள் நிரம்பி இருக்குமாகலின், ``பங்கயப் பூம்புனல்`` என்று அருளினார். இது, மடுவாடுவார் கூறியது.

பண் :

பாடல் எண் : 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டுள், அன்ன மகளிர் இறைவனையும், இறைவியையும் பலபடியாகப் பாடி ஆடுதல் கூறப்படுகின்றது. ``சிற்றம்பலம் பாடி`` என்றது தொடங்கி, ``பாதத் திறம் பாடி`` என்றதுகாறும் உள்ளவற்றை முதற்கண் கூட்டுக. காது ஆர் - காதில் பொருந்திய. `பைங் கலன்` என இயையும். பசிய பொன்னாற் செய்யப்பட்டமையின், கலனும் பசுமையுடைத் தாயிற்று. `கலன்` என்பது பொதுச் சொல்லாதலின், ``பூண்கலன்`` என அடைபுணர்க்கப்பட்டது. பூண்கலன், வினைத்தொகை. கோதை - மாலை. `மாலை கூந்தலின்கண் ஆட` என்க. `கோதைக் குழலாட` எனவும் பாடம் ஓதுவர். சீதப் புனல் - தண்ணிய நீர். இஃது, `ஆடுதற்கு இனிதாம்` எனக்குறித்தவாறு. `புனலின்கண்` என ஏழாவது விரிக்க. வேதப் பொருள் - வேதத்துள் கூறப்பட்ட முதற் பொருளின் இயல்பு. அப்பொருள் - அவ்வியல்பையுடைய பொருள். ஆமாறு - ஆமாற் றினை; என்றது, `சிவபெருமானிடமே அவ்வியல்பு காணப்படுமாற் றினை` என்றபடி. ``ஆமாறு`` என்றதனை `ஆதி` என்றதற்கும், கூட்டுக. `சோதி` என்றது `சிவன்` என்னும் அளவாய் நின்றது. சூழ் - மார் பினைச் சூழ்ந்துள்ள. `தார்` என்றது, அதனது சிறப்பினை. ஆதியும், அந்தமும் ஆதல், `உலகிற்கு` என்க. பேதித்தல் - ஒருகாலைக் கொருகால் அறிவு வேறாகச் செய்தல். `வளர்த்து` என்றதனால், இது ஆக்க மாய வேறுபாட்டையே குறிக்கும். எடுத்த - உயர்த்திய. இறை வனது அருட் சத்தியே முன்னர் மறைப்புச் சத்தியாயும், பின்னர் விளக்கற் சத்தியாயும் நின்று அறிவை வளர்த்தலின், ``வளர்த்தெடுத்த பெய்வளை`` என்றார். மறைத்தல் அதற்கியல்பாகாது விளக்குதலே இயல்பாகலின், விளக்கத் தொடங்கும் நிலையே, `சத்திநிபாதம்` எனப்படுகின்றது. மறைத்தலேயன்றி, விளக்குதலாகிய சத்தி நிபாதமும், `மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம்` என நால்வகைப் பட்டு, அவற்றுள் ஒன்று நான்காயும், மற்றும் அவ்வாற்றால் பலவாயும் நிகழ்தலின், ``பேதித்து`` என்று அருளிச் செய்தார். புனல் ஆடி ஆடு - நீரின்கண் விளையாடி மூழ்கு. ``சிற்றம்பலம்பாடி`` என்றதனால், இது, கோயிற்றிருக்குளம் ஆடுவார் கூறியதாம். இத் திருக்குளம், `சிவகங்கை` எனப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டு, அன்னமகளிர், சிவபெருமானது பேரின்ப நிலையை வியந்து பாடி ஆடியது. ``வாருருவப் பூண்முலை யீர்`` என்றதனை முதலிற் கொள்க.
ஓரொருகால் - ஒரோவொரு சமயத்தில். எம்பெருமான் என்றென்றே - சிவபெருமான் என்று சொல்லியே. சித்தம் களிகூர - பின்பு உள்ளம் மகிழ்ச்சி மிக. கண் நெடுந்தாரை நீர் ஓவா பனிப்ப - கண்கள் இடையறாத தாரையாகிய நீரை ஒழியாது பெய்ய. நம் பெருமான் சீர் ஒருகால் வாய் ஓவாள் - சிவபெருமானது புகழை ஒரு காலும் வாயினின்றும் ஒழியாதவளாயின இவள். பாரொருகால் வந்தனையாள் - இப்பொழுது நிலத்தில் ஒருமுறையே வணங்கி எழாது கிடக்கின்றாள்.
விண்ணோரைப் பணியாள் - பிற தேவரை ஒருபோதும் வணங்காள். இங்ஙன் இவ்வண்ணம் ஒருவர் பேரரையற்குப் பித்தும் ஆமாறு - இவ்வுலகத்திலே இவ்வாறு ஒருவர் தம் கடவுள் பொருட்டுப் பித்தும் கொண்டவர் ஆகும்படி. ஆட்கொள்ளும் வித்தகர் ஆர் ஒருவர்-ஆட்கொண்டருளும் தேவர் யாரொருவர் உளர்; ஒருவரும் இலர்.
தாள் - (ஆதலின், இவ்வாறு ஆட்கொள்பவனாகிய நம் சிவ பெருமானது) திருவடிகளை. (நாம் வாயாரப் பாடிப் புனல் பாய்ந்து ஆடுவோம்).
`சிவபெருமானது பெயரை முதற்கண் சிலபொழுது பொதுவாகச் சொல்லியவள், பின்னர் அதன் பயனாகத் தன்னை மறந்த பேரன்புடையவளாயினாள்; இங்ஙனம் தன்னை அடைந்தவரை வசீகரித்துப் பேரருள் புரியும் தேவர் பிறர் யாவர் உளர்` என வியந்தபடி.
``சீரொருகால்`` என்றதில், `ஒருகாலும்` என்னும் உம்மை தொகுத்தல். ``விண்ணோரைத் தான்பணியாள்`` என்றதில் தான், அசை நிலை. ``ஆமாறும்`` என்ற சிறப்பும்மையை ``பித்து`` என்றதனோடு கூட்டுக. ``தாள்`` என்பதற்குமுன், `அவர்` என்பது வருவிக்க. ஏர் உருவப்புனல் - எழுந்து தோன்றுகின்ற உருவத்தையுடைய நீர்; என்றது அருவிநீரை. பூம்புனல் - அழகிய நீர். `ஆட` என்னும் வியங் கோளின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. இஃது அருவி யாடுவார் கூறியது.

பண் :

பாடல் எண் : 16

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டு, அன்ன மகளிர் உலக நலத்தின் பொருட்டு மழையை நோக்கி வேண்டியது. அங்ஙனம் வேண்டுங்கால், தம் பெண்மைக் கேற்ப, இறைவி தன் சிறப்பே தோன்றக் கூறி வேண்டுவர்.
இதனுள் ``மழை`` என்றதனை முதலிற் கொள்க. மழை - மேகம். முன் இக்கடலைச் சுருக்கி - முதற்கண் இக் கடல் நீரைக் குறையப்பண்ணி. குறையப்பண்ணுதல் - முகத்தல். உடையாள் - எப்பொருள்களையும் தனக்கு உரிமையாக உடையவள்; இறைவி. `இறைவி` என்றது அவளது திருமேனியை. எம்மை ஆளுடையாள் - எம்மை ஆளுதல் உடையவள்; என்றது, `உலகியலின் நீக்கித் தன்வழி ஒழுகச் செய்பவள்` என்றபடி. இது முதலாக இறைவியைக் குறித்து வரும் மூன்று பெயர்களும், இறுதியில் நிற்கும், `அவள்` என்பது போலச் சுட்டுப் பெயரளவேயாய் நின்றன. இட்டிடையின் - சிறிய இடைபோல. சிலை - வில். `குலவுவித்து` என்பது, `குலவி` என நின்றது. குலவுதல் - விளங்குதல். `தன்னின்` என்றதில் உள்ள தன், சாரியை. `எங்கோமான் தன் அன்பர்க்கு முன் அவள் நமக்கு முன்னிச் சுரக்கும் இன்னருள்` என இயைத்துக் கொள்க. அன்பர்க்கு முன் - அன்பர்க்குச் சுரக்குமுன். முன்னி - நினைத்து. நினைத்தது, பின் நிகழ்வதனை. `சுரக்கும்` என்றது, சுரந்து பொழிகின்ற எனத் தன் காரியந் தோன்ற நின்றது. `பொழியாய் மழை` என்றாராயினும், எம்பெருமானது அருளால் பொழியாய் என்பதே கருத்தாகும். ``இக்கடலை`` என்றமையால் இது, கடலாடுவார் கூறியதாம். மழையை நினைவு கூர்தல், அவர்க்கே பெரிதும் இயைவதாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 17

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டு, அன்ன மகளிர், இறைவன் தம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிவந்து அருள்செய்தலை நினைந்து உருகிப் பாடி ஆடியது.
இதனுள், ``கொங்குண் கருங்குழலி`` என்றதை முதலிற் கொள்க; இது விளி. கொங்கு உண் - வண்டுகள் தேனை உண்கின்ற.
செங்கணவன் - திருமால். `கண்ணவன்` என்பதில், ணகரம் தொகுக்கப்பட்டது. `கண்ணவன், தோளவன், நல்லவன்` என்றாற் போல, அகரம் புணர்ந்து வழங்குதல், பிற்கால வழக்கு. எங்கும் இலாததோர் இன்பம், வரம்பிலின்பம். நம்பாலதா - நம்மிடத்ததாதற் பொருட்டு. ``நந்தம்மைக் கோதாட்டி`` என்றதனை, ``எழுந்தருளி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இங்கு - இவ்வுலகத்தில். `இல்லங்கள் தோறும் எழுந்தருளிப் பொற்பாதம் தந்தருளும்` என, முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கையாகக் கூறினமையின், (தொல். சொல் 242) எழுந்தருளுதல், விழாக்காலத்திற் பலதிருவுருவங்களிலும், எழுந்தருளுதலாம். ``நின் அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே`` (தி.8 திருப்பள்ளி. 8) என்புழி, ``எழுந்தருளிய`` என, இறந்த காலத்தாற் கூறினமையின், அஃது அடியவர் இல்லத்தே தன்னைக் கண்டு வழிபட எழுந்தருளியிருத்தலைக் குறித்ததாம். இனி இவ் விரண்டும் முறையே, குரு சங்கமங்களில், வருதலையும், மதுரையில் இருந்த அடியவள் ஒருத்தி தன் இல்லத்திற் சென்று பிட்டுப் பெற்றமை போன்ற அருட்செயல்களையும் குறிக்கும். இவற்றிற்கு இவ்விரு வகைப் பொருளையும் கொள்க. கோதாட்டி - செம்மைப்படுத்தி. சேவகன் - வீரன். அங்கண் அரசு - அருளால் அழகுபெற்ற கண்களை யுடைய தலைவன். பங்கயப் பூம்புனல், தாமரைப் பூவையுடைய நீர்; வாளாதே, ``பங்கயப் பூம்புனல்`` என்றமையின், குளத்து நீர் எனக் கொள்ளப்படுமாகலின், இது பொய்கையாடுவார் கூறியதாம்.

பண் :

பாடல் எண் : 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.

குறிப்புரை :

இதனுள் சிவபெருமான் தேவதேவனாய உயர் வுடையனாதலை நினைந்து பேசுதல் கூறப்படுகின்றது.
வீறு - பெருமை; என்றது, ஒளியை. சிவபெருமானது இரு திருவடியினது ஒளியின்முன், தேவர் பலரது முடியின்கண்ணும் உள்ள அளவிறந்த மணிகளும் ஒருங்குகூடிய கூட்டத்து எழுந்த பேரொளியும் மழுங்கும் என்க. இங்குக் கூறியது பொருளுவமம்;
``பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பினஃதுவம மாகும்``
என்னும் உவமவியல் நூற்பாவினைக் காண்க. இதற்கு உரையாசிரியர் உரைத்த உரை பொருந்துவதன்று. இதனை அணி இயலார், `விபரீத உவமை` என்றும், `எதிர்நிலை உவமை` என்றும் கூறுவர். தேவர் பலரது முடிகளும் சிவபெருமானது திருவடியின் முன் குழுமுதல், அவர்கள் அப்பெருமானது அடியில் தங்கள் முடிபட வணங்குதலாம். கண் ஆர் இரவி - கண்ணுக்குத் துணையாய்ப் பொருந்துகின்ற கதிரவன். வந்து - வருதலால். கார் - கருமை; அஃது ஆகுபெயராய், இருளை உணர்த்திற்று. தண் ஆர் ஒளி - குளிர்ச்சி பொருந்திய ஒளி. தாரகைகள் - விண்மீன்கள். அகலுதல் - காணப்படாது மறைதல். ``பிறங்கொளி`` என்றதில் ஒளி என்றது, அதனையுடைய பொருள்களைக் குறித்தது. இறைவன் தன் கலப்பினை நோக்கிய வழி உலகமேயாயும், தன் தன்மையை நோக்கியவழி அதனின் வேறாயும் அறியப்படுதல்பற்றி, `பெண் முதலிய பலவுமாகி, இத்தனையும் வேறாகி` என்று அருளினார். கண் ஆர் அமுதம் - கண்ணால் பருகும் அமுதம்; இது, `தேவரமுதத்தின் வேறு என்றவாறு; இதனை விலக்குருவகத்தின் பாற்படுத்துக. `கண்ணாரமுதக் கடலே போற்றி` (தி.8 போற்றி. 150) என முன்னருங் கூறினார். மேற்கூறியவாறன்றி இவ்வாறும் ஆமென்றலின், ``அமுதமுமாய்`` என்ற உம்மை. இறந்தது தழுவிற்று, வாளாதே ``இப்பூம்புனல்`` என்றமையின், `கிடைத்த இந்நீரின்கண்` என்க. இது, விண்மீன்கள் ஒளி மழுங்கிக் கதிரவன் தோன்றுங் காலம் வருதலின், தீர்த்தமாயுள்ளவற்றிற் செல்லாது, கிடைத்த நீரில் ஆடுவார் கூறியது. தீர்த்தமன்மை குறிப்பார். ``இப்புனல்`` என்றும், தீர்த்தமன்றாயினும் ஆடப்படுதற்குரியதே என்பார், ``பூம்புனல்`` என்றுங் கூறினர்.

பண் :

பாடல் எண் : 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?

குறிப்புரை :

இஃது, அன்ன மகளிர், தமக்குச் சிவபெருமானிடத்து அன்புடையரல்லாத ஆடவர் கணவராய் வருதல் கூடாதவாறு அருளு மாறு இறைவனை வேண்டியது.
`உன்கை` என்பது, ``உங்கை`` என, எதுகை நோக்கித் திரிந்தது. இன எதுகையும் பொருந்தும் ஆகலின், `உன்கை என்பதே பாடம்` எனினும் ஆம். `உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்றாற்போல` என்பது, ஒரு பொருளைக் காப்பதில் தாமே பெரு விருப்புடையராகிய ஒருவரை நோக்கிப் பிறர், `நீவிர் இதனைக் குறிக் கொண்டு காப்பீராக` என வேண்டிக் கொள்ளுமிடத்து, `அவ்வேண்டு கோள் மிகை` என்பதை விளக்கப் பண்டைக் காலத்தில் கூறப்பட்டு வந்ததொரு பழமொழி என்பது, இங்கு அறியப்படுகின்றது.
``தாமே தரும்அவரைத் தம்வலியி னாற்கருத
லாமே இவனா ரதற்கு``
என்னும் திருவருட்பயனை (70) இங்கு இதனோடு ஒருவாற்றான் ஒப்பிடலாம். ஆகவே, ஒரு குழவியை, `கருத்தோடு பாதுகாக்க` என்று அதன் தாய்க்குப் பிறர் கூறுங் கூற்று இது என்பது விளங்கும். இதனை, மணவினை யிடத்து மணமகளை மணமகனிடத்துக் கையடையாகக் கொடுக்குங்காலத்து இருமுதுகுரவர் கூறுவதொரு சொற்றொடர் என்பாரும் உளர். இதனுட் கிடக்கும் சொற்கள் அவ்வாறு பொருள் படுதற்கு ஏலாமையானும், என்றுமே இறைவனிடத்து அடங்கிநின்று, அவனால் நன்கு புறந்தரப்படும் உயிர்களுட் சிலராகிய இம் மகளிர்க்கு, முதற்காலத்தில் இருமுதுகுரவர்க்கு உரியளாய் இருந்து பின்னர் மணமகன் முதலியோரது வேண்டுகோட்கிணங்கி அவனுக்கு அவரால் கொடுக்கப்படுகின்ற கன்னிகை உவமையாதல் கூடாமையானும், அவ்வாறு உரைத்தல் பொருந்தாமை அறிந்துகொள்க.
`என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அங்கு அச்சொல்` என்றது, ஒருசொல் நீர்மைத்து. புதுக்கும் அச்சம் - புதுக்குதலால் உளதாம் அச்சம். புதுக்குதல், அதனைத் தாம் பொருளுடையதாக்க முயலுதல். அது பொருளற்றதென யாவராலும் அறியப்பட்டுப் பொருந்தாததாகலின், இறைவற்கு வெகுளிதோன்றுங் கொல் என, மகளிர் அஞ்சுவாராயினர். ஆயினும், அவாமிகுதியால் அதனைச் செய்யவே துணிந்து, `எம் அறியாமை நோக்கி முனியாது எம் விண்ணப்பத்தைக் கேட்டருள்` என முன்னர் வேண்டிப் பின்னர்த் தாம் கூறக் கருதியவற்றைக் கூறுகின்றனர்.
நான்கு, ஐந்து, ஆறாம் அடிகளால், மகளிர், சிவபெருமா னிடத்து அன்புடையரல்லாத ஆடவர், தமக்கு எவ்வாற்றானும் கணவராய் அமைதல் கூடாது என்பதனையே பலவாற்றான் வேண்டி னர். பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து தன் சேவடியே சேர்ந்திருக்கும் (தி.11 அற்புதத் திருவந்தாதி - 1) மகளிரை அவர் தம் இயல்பிற்கு மாறாய இயல்பினையுடைய ஆடவர்க்கு உரியராக்க இறைவன் நினையானாயினும், தம் வினை காரணமாக ஒரோ வொருகால் அவ்வாறு நிகழினும் நிகழுமோ என்னும் அச்சத்தாலே இம்மகளிர் இங்ஙனம் வேண்டினர். இதனால், சிவபிரானுக்கு வழிவழி அடிமையாய் வருங் குடியிற் பிறந்த ஆடவர்க்காயினும், பெண்டிர்க் காயினும் ஒருவர்மாட்டு ஒருவர்க்குக் காதல் பிறத்தற்கு வாயிலாக முதற்கண் நிற்பது, அவர்க்குச் சிவபிரானிடத்துள்ள அன்பே என்பதும், மெய்ந்நிறைந்த அழகும், கைந்நிறைந்த பொருளும் முதலாயின வெல்லாம் அதன் பின்னிடத்தனவாம் என்பதும் நன்கு விளங்கும். நம்பியாரூரரோடு பரவையாரிடத்துக் காதல் நிகழ்ந்த விடத்தும், சங்கிலியாரைக் கண்டபொழுது அவர்பால் நம்பியாரூரர்க்குக் காதல் நிகழ்ந்தவிடத்தும் இதனையே காண்கின்றோம். இனிச் சங்கிலியாருக்கு நம்பியாரூரர் பால் காதல் பிறப்பிக்க அவரைப்பற்றி இறைவன் அருளியவற்றில், ``சால நம்பால் அன்புடையான்`` என்பதையே முதற்கண் அருளியதும் காணத் தக்கது. இத்தகைய நற்குடிப்பிறப்பே ஞானம் பெறுதற்கு வாயில் என்பதனையே, மெய்கண்ட தேவர்,

``... ... ... ... ... ... தவம்செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு``
(சூத். 8. அதி. 1) என்று அருளிச் செய்தார்.
``தரையினிற் கீழை விட்டுத்
தவம்செய்சா தியினில் வந்து
பரசம யங்கட் செல்லாப்
பாக்கியம் பண்ணொணாதே``
(சூ. 2.90) எனச் சிவஞானசித்தி கூறியதூஉம் இதுபற்றி.
ஒன்பதாம் திருப்பாட்டுள் மகளிர், `சிவபிரானுக்கு அன்புடை யவரைக் கணவராக அடைதல் வேண்டும்` என, உடம்பாட்டு முகத்தான் வேண்டினர். இதனுள், `அன்னரல்லாதாரைக் கணவராக அடைதல் கூடாது` என, அதனை மறைமுகத்தான் வேண்டினர்; இவை இவ்விரண்டிற்கும் வேற்றுமை.
சிவபிரானுக்கு அன்பரல்லாதவர்க்கு வாழ்க்கைப்படின், கைகள் பயனற்ற சில பணிகளைச் செய்தலும், கண்கள் பயனில்லாத சில காட்சிகளைக் காணுதலும் உடையனவாதல் கூடுமாகலின், அவற்றை வேண்டா எனக் கூறும் முகத்தால், அன்ன தன்மையர் கணவ ராய் வருதல் வேண்டாமையைக் குறித்தனர். முன்னர், ``உனக் கல்லாது`` என்றமையின், ``மற்றொன்றும்`` என்றதற்கும், `உன்னை யல்லாது மற்றொன்றும்` என்று உரைக்கப்படும். தெய்வங்களும் அஃறிணையாகக் கூறப்படுமாதலின், ``மற்றொன்று`` என்றதில் அவையும் அடங்கும். இங்கு - இவ்வுலகத்தில். இப்பரிசே - இவ் வாறே. ``எங்கோன்`` என்றது இடவழுவமைதி. நல்குதியேல் - அருள் செய்வாயாயின். `ஞாயிறு எங்கு எழில் எமக்கு என்` என்க. `எங்கெழி லென் ஞாயிறு` என்பது, கவலையற்றோர் கூறுவதொரு தொடர். கதிரவன் திசைமாறித் தோன்றுதல் முதலிய, இயற்கைக்கு மாறான செயல்கள் நிகழுமாயின், அவை உலகம் கெடுவது காட்டும் குறி (உற்பாதம்) என்பர். ஆதலின், ஒன்றானும் குறைவில்லாதோர், இவ்வாறு கூறுதல் வழக்கு.
``வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயிறு எளியோ மல்லோம்``
(தி.6.ப.95.பா.2) என்ற திருத்தாண்டகத்தையும், ``எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றி`
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம
எங்கெழிலென் ஞாயிறு எளியோ மல்லோம்``
(தி.6.ப.95.பா.2) என்ற திருத்தாண்டகத்தையும்,
``எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றி`
என்ற சிவஞான சித்தியையும் (சூ. 8. 31) காண்க.
``எங்கெழிலென் ஞாயிறென இன்னணம் வளர்ந்தேம்``
என்றாற்போலப் (சீவகசிந்தாமணி. கனகமாலை - 237) பிறவிடத்தும் வரும்.

பண் :

பாடல் எண் : 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய். 

பொழிப்புரை :

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டினுள், அன்ன மகளிர் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது.
முதல் இரண்டடிகளிலும் உள்ள, ``போற்றி அருளுக`` என்பவற்றை அவ்வவ்வடியின் இறுதிக்கண் கூட்டி இருதொடராக்குக. மேலைத் திருப்பாட்டில் உள்ள, ``எங்கள் பெருமான்`` என்னும் விளி, இதனுள்ளும் முதற்கண் வந்து இயையும். இதன்கண் திருவடியைக் குறிக்குமிடத்தெல்லாம் நான்காம் வேற்றுமை விரிக்கப்படும். போற்றி- வணக்கம். அருளுக - எமக்கு இரங்குவனவாகுக. இதற்கு `அவை` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. சத்தியே பாதமாகலின், அருளுதல் முதலியன பொருந்துமாறறிக. செந்தளிர், உவமையாகு பெயர். மூன்றாம் அடி முதலிய ஐந்தினும், முறையே, `உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என்னும் ஐந்தொழிலும் கூறப்பட்டமை காண்க. திருமந்திரம் தவிர ஏனைய திருமுறைகளுள் ஐந்தொழிலையும் இனிது விளங்கக் கூறும் திருப்பாட்டு இஃதொன்றேயாம். அதனால், இது சிவாகமங்களுள், `பஞ்சப்பிரம மந்திரம்` எனக் கூறப்படும் மந்திரங்களோடு ஒருங் கொத்தது. ஐந்தொழிலும் சகலநிலைபற்றிக் கூறப்படுவனவாகலின், `ஆதி` எனவும், `அந்தம்` எனவும் வந்தவை. முறையே, கேவல நிலையையும், சுத்த நிலையையும் கூறியவாறாம். சகல நிலைக்கு வாராத உயிர்களும் உளவாதலின், `ஆம்` என்றார். ஆகவே, எஞ் ஞான்றும் உலகிற்கு நிலைக்களம் இறைவனது திருவடியே என்பதனை இனிது விளங்க அருளிச் செய்தமை காண்க. ``வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம் - அத்தன்தாள் நிற்றல்`` என்று அருளிச் செய்தார் மெய்கண்ட தேவரும் (சிவஞானபோதம் - சூ. 1. அதி 2). பொன்மலர்கள் பொன்னால் ஆகிய மலர். மலராவது, தாமரை மலரே. `செந்தளிர்கள், புண்டரிகம், பொன்மலர்கள், என்பன உவமை யாகுபெயர்கள். `ஆதி, அந்தம்` என அவ்வந் நிலைக்கண் நிற்பன வற்றை அவையேயாகவும், `தோற்றம் போகம், ஈறு` என, அவற் றிற்குக் காரணமாய் நிற்பவற்றைக் காரியமாகவும் பாற்படுத்து ஓதி யருளினார். ``பொன்மலர்`` என்றதன்பின், `என` என்பது தொகுத் தலாயிற்று. இறுதிக்கண் நின்ற, `போற்றி` என்பது வினையெச்சம். மார்கழி நீர் - மார்கழியில் ஆடப்படும் நீர். `மார்கழி` என்பது, அம்மாதத்திற்கேயன்றி, `மிருகசீரிடம்` என்னும் நாண்மீனுக்கும் பெயர். அதனால், இஃது ஆதிரை மீனையும் குறிக்கும்; என்னை? மிருகசீரிடத்தோடு தொடர்புடைய ஆதிரையையே சிறந்ததெனக் கொள்ப ஆதலின். ஈண்டும், `ஆட` என்னும் வியங்கோள் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பொய்கை, சுனை முதலிய பலவற்றினும் ஆடுவார் கூற்றுக்களாக அனைத்தையும் கூறியது அங்ஙனம் அவற்றிற் சென்று ஆடுவார் பலர்க்கும் அத்திருப்பாடல்கள் ஏற்ற பெற்றியாற் பயன் தருதற் பொருட்டென்க. எனவே, இப்பகுதி முழுவதும், எல்லார்க்கும் எல்லாநாளினும் ஒருபெற்றியே நிகழ்வனவற்றைக் கூறியதாகாது, பலர்க்கும் பலநாளினும் பலவாறாக நிகழ்வனவற்றைக் கூறியதே யாதல் பெறப்படும்.
தலைவாயில் முகப்பு பதிகத் தலைப்பு
சிற்பி